மலையக தமிழ் மக்களுக்கான இன்றைய தேவை என்ன ....?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இற்றைக்கு 159 ஆண்டுகளுக்கு முன் 05 .02 .1866 ஆம் ஆண்டு மன்னார் படகுத்துறையிலிருந்து கொழும்பு துறைமுகத்திற்கு 120 தொழிலாளர்களையும் 150 டன் சரக்குகளையும் ஏற்றிக் கொண்டு புறப்பட்ட ஆதிலட்சுமி என்ற பெயர் கொண்ட கப்பல் நான்கு மைல் தூரம் சென்ற நிலையில் கடும் சுழிக்காற்றில் சிக்கி அள்ளுண்டு தூக்கி எறியப்பட்டு கடலில் கவிழ்ந்த போது அதில் பயணித்த நூற்றி இருபது தொழிலாளர்கள் கடலில் மூழ்கி மாண்டு போனார்கள் . இருந்தும் கப்பலின் மாலுமிகள் மற்றும் சேவையாளர்கள் 14 பேர் காப்பாற்றப்பட்டனர் என்று "தி ஒப் சேர்வர் " பத்திரிகை செய்தி வெளியிட்டு இருந்தது. இந்த செய்தியிலிருந்து ஒரு விடயம் தெளிவாக தெரிகிறது . அந்தக் கப்பலில் பிரயாணித்த ஒட்டுமொத்த சேவையாளர்கள் 14 பேர் காப்பாற்றப்பட்டிருந்த போதும் ஏன் ஒரு தொழிலாளர் கூட காப்பாற்றப்படவில்லை என்பதற்கு காரணம் அந்த தொழிலாளர்களும் அந்தக் கப்பலில் ஏற்றி வரப்பட்ட 150 டன் பண்டங்களாகவே கருதப்பட்டு மூழ்கடிக்கப்பட்டுள்ளனர் என்பதாகும். இப்படி நூற்றுக்கணக்கான கப்பல்களும் படகுகளும் தோணிகளும் கடலில் மூழ்கி ஆயிரக்கணக்கானோர் மாண்டொழிந்து போயிருந்தாலும் இன்று அவர்களைப் பற்றி சிந்தித்து கவலைப்படுவோர் யாரும் இல்லை.
ஆனால் அத்தகைய மரணங்களில் இருந்து தப்பி பிழைத்து கண்டிச்சீமை நோக்கி வந்தவர்கள் தான், ஆரம்பத்தில் கோப்பி பயிர்செய்கை, அதன் பின்னர் தேயிலை , தென்னை , ரப்பர் ஆகிய பயிர்ச்செய்கைகளில் ஈடுபட்டு இன்று வரை மிகப் பெரிய அளவில் அந்நிய செலாவணி வருமானத்தை பெற்றுக் கொடுத்து இந்த நாட்டை வளம் கொழிக்க செய்தார்கள். நேற்று வரை இந்த நாட்டின் பொருளாதாரம் செல்வ செழிப்புடன் இருந்திருக்கிறது என்றால் அதற்கு எமது மக்களின் கடின உழைப்புதான் காரணம். ஆனால் அதற்குப் பிரதி உபகாரமாக இந் நாட்டை அடுத்தடுத்து ஆட்சி செய்த எந்த அரசாங்கமும் அவர்களுக்கென ஒன்றையும் வழங்கவில்லை மாறாக அவர்களின் பிரஜா உரிமையை பறித்து 40 ஆண்டுகாலம் நாடற்றவர்களாக ஆக்கினார்கள். அதன் பின்னர் சிறிமா - சாஸ்திரி என்ற ஒப்பந்தத்தை கொண்டு வந்து அவர்கள் அனைவரையும் இந்தியாவுக்கே துரத்தி விட முயற்சி செய்தார்கள் . அடுத்தடுத்து முடுக்கி விடப்பட்ட வன்முறைகளால் அவர்களது உயிர்கள் , உடைமைகள், வீடுகளை எரித்து சித்திரவதை செய்தார்கள்.
இவர்களது உழைப்பினாலேயே கொழும்பு துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்தும் ஏற்படுத்தப்பட்டது. இலங்கை முழுவதும் பெருந்தெருக்கள் அமைக்கப்பட்டன. ரயில்வே போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது. இத்தகைய ரயில் பாதைகளும் விருந்தெருக்களையும் சார்ந்ததாக பெரும் பாலங்களும் குகைவழிப் போக்குவரத்தும் உருவாக்கப்பட்டது. இவற்றை அமைக்கும் பணியில் நேரடியாகவே இம்மக்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நாட்டில் பொது வேலை திணைக்களம் அன்று முதல் முதலாக ஆரம்பிக்கப்பட்டு இலங்கையின் அனைத்து நகரங்களிலும் நகர சுத்தி தொழிலாளர்கள் என்போர் குடியமர்த்தப்பட்டனர். இலங்கையில் சிறு முதலாளித்துவ பிரிவினர் என்ற ஒரு வர்க்கம் உருவாகி அவர்கள் தேசிய முதலாளிகள் என்ற பெரும் உள்ளூர் வர்த்தகர்களாக உருவாகினர். அவர்களில் இருந்து தோன்றியவர்களே இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரித்தானியை எதிர்ப்பு இயக்கத்திற்கும் காரணமாகினர்.
இலங்கையின் சிறு முதலாளித்துவம் உருவாக்கப்பட்டதன் காரணமாகவே அவர்களின் பரம்பரையிலிருந்து தோன்றியவர்கள் இங்கிலாந்துக்கும் பிற நாடுகளுக்கும் சென்று ஆங்கில கல்வி கற்று திரும்பி வந்து இந்த நாட்டுக்கு அரசியல் தலைமைத்துவத்தை தந்தார்கள். இவர்களது உழைப்பால் உருவானதே தேயிலை பொருளாதாரம் என்ற " சிலோன் டீ " என்ற வர்த்தக நாமமும் அது மட்டுமன்றி தேயிலையை மையமாகக் கொண்டு பல்வேறு சேவைகளும் உப வர்த்தக பிரிவுகளும் உருவாகின.
காடுகளை அழிக்கும் ஒப்பந்தக்காரர்கள், தொழிலாளர்களை அழைத்து வந்து வழங்கும் ஒப்பந்தக்காரர்கள் , பெருந்தோ ட்டங்களுக்கான உணவு வகைகளை அனுப்பி வைக்கும் ஒப்பந்தக்காரர்கள் , சில்லரை, மொத்தவிற்பனை, கட்டிட நிர்மாணம் , சாராய மற்றும் கள் தவறனைகள் இப்படி பல்வேறு வர்த்தகத் துறைகள் வளர்ச்சி அடைந்தபோது மேட்டுக்குடியினர் என்ற ஒரு வர்க்கமும் இந்த நாட்டில் உருவானது . பின்னர் அவர்களே நாட்டின் அரசியல் நிர்வாகத்தை கட்டுப்படுத்தும் சக்தியாக மாறினார்கள்.
என்ற போதும் இவற்றையெல்லாம் தாண்டி இன்று இந்த நாட்டில் மலையகத் தமிழர் ஒரு தனியான தேசிய இனமாக உருவாகி இருக்கின்றனர். அவர்களது சனத்தொகை அண்ணலவாக 18 லட்சமாக காணப்படுகிறது என்று ஒரு உத்தியோகபூர்வமற்ற கணிப்பீடு காட்டுகிறது . எனவே அவர்கள் மேலும் தாமதிக்காது ஒரு தேசிய இனம் என்ற தோரணையில் தமக்கான அரசியல் உரிமைகளை பெற்றுக் கொள்ள முற்பட வேண்டும் . மேற்படி சனத்தொகைக்கு ஏற்றபடி பாராளுமன்றத்திற்கு அதிக உறுப்பினர்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகளை அவர்களே செய்து கொள்ள வேண்டும் . தேசிய அரசியல், மாகாண அரசியல், உள்ளூராட்சி மன்றங்கள், மாவட்ட செயலாளர் , தமிழ் பிரதேசங்களுக்காண கல்வி அதிகாரிகள், முக்கியமான அரசு சேவைகளில் தம்மை இணைத்துக் கொள்ளுதல், சனத்தொகைக்கு ஏற்ப கிராம சேவையாளர்கள் , சுகாதாரம் , கல்வி, போன்றவற்றில் தமது வகி பாகத்தை பெற்றுக் கொள்ளுதல் போன்ற விடைய பரப்பளவுகளில் அவர்கள் முனைந்து போராடி செயல்பட்டு நமது உரிமை களைப் பெற்றுக் கொள்ளுதல் என்ற இலக்கை அடைதலே அவர்களது இன்றைய தேவையாக இருக்கிறது என்பதனை இத் தருணத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.