Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  9,637
 • Joined

 • Days Won

  2

Everything posted by பிழம்பு

 1. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் லை 2021 பட மூலாதாரம்,AMAZON PRIME VIDEO நடிகர்கள்: ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் ஒளிப்பதிவு: முரளி.ஜி.; இசை: சந்தோஷ் நாராயணன்; இயக்கம்: பா. ரஞ்சித்; வெளியீடு: அமெஸான் பிரைம். விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் படங்கள், இயக்குனர்களுக்கு மிகச் சவாலானவை. படம் பார்ப்பவர்களுக்கு அந்த விளையாட்டு அறிமுகமில்லாவிட்டால், துவக்கத்திலேயே ஆர்வமில்லாமல் போகக்கூடும். அப்படி ஒரு சவாலை ஏற்று களமிறங்கியிருக்கும் பா. ரஞ்சித், முதல் காட்சியிலேயே அந்த சவாலைக் கடந்துவிடுகிறார் என்பதுதான் இந்தப் படத்தின் ஆச்சரியம். 1975ன் பிற்பகுதியில் நடக்கிறது கதை. அந்த காலகட்டத்தில், வடசென்னையில் சார்பட்டா பரம்பரை - இடியாப்ப பரம்பரை என்ற இரண்டு குத்து சண்டைக் குழுக்களிடையே நிலவும் பகைமைதான் படத்தின் அடிப்படை. சார்பட்டா பரம்பரையைச் சேர்ந்த ரங்கன் வாத்தியாருக்கு, (பசுபதி) இடியாப்ப பரம்பரை சவால் விடுக்கிறது. அந்த சவாலை ரங்கன் வாத்தியார் எதிர்கொள்வதற்கு உதவும் சிஷ்யனாக வருகிறான் கபிலன் (ஆர்யா). இரு குழுக்களிடையிலான இந்தப் பந்தையத்தில் இறுதியாக ஜெயிப்பதற்கு முன்பாக கபிலன் எதையெல்லாம் ஜெயிக்க வேண்டியிருக்கிறது என்பதே படம். வட சென்னை, குத்துச் சண்டை என்றவுடன் மனதில் தோன்றும் வழக்கமான டெம்ப்ளேட்களை கலைத்துப் போட்டபடி துவங்குகிறது படம். ஆரம்பித்து ஐந்து நிமிடங்களிலேயே மிக வேகமாக உச்சகட்டத்தை நோக்கி நகர ஆரம்பிக்கிறது திரைக்கதை. அடுத்த ஒரு மணி நேரம் 'அட்ரிலின் ரஷ்'தான். அதற்குப் பிறகு, சற்று தொய்வைச் சந்திக்கும் திரைக்கதை, அரை மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் வேகமெடுத்து, ஒரு அட்டகாசமான உச்சகட்ட காட்சியில் நிறைவடைகிறது. குத்துச் சண்டையை அடிப்படையாக வைத்துவந்த படங்களை Rockyயோடு ஒப்பிடுவார்கள். ஆனால், இந்தப் படத்தில் வரும் குறியீடுகளும் நுண்ணுணர்வும் காட்சிகளில் தென்பட்டு மறையும் அரசியலும் சார்பட்டா பரம்பரையை Rockyஐவிட ஒருபடி மேலே நிறுத்துகிறது. தமிழ்த் திரைப்படங்களில் பல வருடங்களாகவே கதாநாயகன் - வில்லன் என்ற இரண்டு பாத்திரங்களைத் தவிர்த்து மற்ற பாத்திரங்கள் எந்த முகமுமின்றி, கதாநாயகன் அல்லது வில்லனின் துணைப் பாத்திரங்களாகவே வந்து போவார்கள். இந்தப் படத்தில் மாரியம்மாள், ரங்கன் வாத்தியார், பாக்கியம், வெற்றிச் செல்வன், டாடி, ராமன், டான்சிங் ரோஸ், வேம்புலி, தணிகை என ஒவ்வொரு பாத்திரமும் ஏதோ ஒரு காட்சியில் கதாநாயகனாகவோ வில்லனாகவோ மிளிர்கிறார்கள். படத்தில் பிரதானமாக வரும் ரங்கன் வாத்தியார் பாத்திரத்தை விட்டுவிட்டுப் பார்த்தால்கூட, டாடி, ராமன், வேம்புலி என ஒவ்வொருவருக்கும் கதையில் ஒரு தருணம் இருக்கிறது. 'டான்சிங் ரோஸ்' என்ற பாத்திரம் படத்தின் சில காட்சிகளில் மட்டுமே வருகிறது. ஆனால், படம் முடிந்த பிறகும் மறக்கமுடியாத பாத்திரமாக அமைந்துவிடுகிறது. டான்சிங் ரோஸை மையமாக வைத்தே ஒரு படம் எடுக்கலாமே என்று தோன்றுகிறது. அதேபோலத்தான் ஜான் விஜய் ஏற்று நடித்திருக்கும் 'டாடி' என்ற பாத்திரம். ஆங்கிலமும் தமிழும் கலந்துபேசும் ஆங்கிலோ இந்தியன் பாத்திரத்தில் வரும் ஜான் விஜய், பல தருணங்களில் ஃப்ரேமில் உள்ள மற்றவர்களைத் தாண்டிப் பிரகாசிக்கிறார். இந்தப் படத்திற்கு கடும் உழைப்பைச் செலுத்தியிருக்கிறார் ஆர்யா. படத்தின் முதல் ஒரு மணி நேரத்தில் அதற்கான பலன் தெரிகிறது. அவருடைய கேரியரில் இது முக்கியமான படமாக இருக்கக்கூடும். ரங்கன் வாத்தியாராக வரும் பசுபதி, அந்த பாத்திரமாகவே பிறந்தவர் போல இருக்கிறார். பட மூலாதாரம்,AMAZON PRIME VIDEO சற்றே குழப்பமான பாத்திரம் என்றால் கலை நடித்திருக்கும் வெற்றிச்செல்வன் பாத்திரம்தான். தி.மு.க. - அ.தி.மு.க., நல்லவன் - பொறாமைக்காரன் என்ற இருமைகளுக்குள் சிக்கித் தவிக்கிறது இந்தப் பாத்திரம். கபிலனின் மனைவியாக வரும் துஷாரா விஜயனுக்கு ஒரு சிறப்பான அறிமுகம் இந்தப் படம். 1975ல் நெருக்கடி நிலை காலப் பின்னணியில் நடக்கிறது கதை. படத்தில் வரும் பல பாத்திரங்கள் அரசியல் சார்புடன் இருக்கின்றன. மஞ்சா கண்ணன் என்று ஒரு பாத்திரம் வருகிறது. அப்படி ஒரு பாத்திரத்தை உருவாக்க, நிச்சயம் துணிச்சல் தேவைப்படும். வடசென்னைக்காரர்கள், அந்தப் பாத்திரத்தின் சாயல், தற்போது யார் முகத்தில் படிந்திருக்கிறது என்பதை எளிதில் கண்டுபிடித்துவிடுவார்கள். இந்தப் படத்தில் தனி மனிதர்கள் கோபமடைவதும் சமாதானமாவதும் வேகமாக நடப்பதுபோலத் தோன்றுகிறது. ஒருவகையில் அதுதான் இந்தப் படத்தின் பலமும்கூட. இரண்டே முக்கால் மணி நேரம் ஓடும் இந்தப் படத்தை இன்னும் சற்று சுருக்கியிருக்கலாம் என்று தோன்றுகிறது. சந்தோஷ் நாராயணனின் இசையும் கலை இயக்குனரின் திறமையும் படத்தை வேறு தளத்திற்கு நகர்த்தியிருக்கின்றன. வசனங்கள் பல இடங்களில் அசர வைக்கின்றன. பா. ரஞ்சித், இந்தப் படத்தின் மூலம் அவருடைய ஆரம்ப காலப் படங்கள் ஏற்படுத்திய பரவசத்தைவிட கூடுதலான உணர்வுகளை ஏற்படுத்துகிறார். சார்பட்டா பரம்பரை நிச்சயமாக இந்த ஆண்டின் சிறந்த இந்தியத் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும். சார்பட்டா பரம்பரை - சினிமா விமர்சனம் - BBC News தமிழ்
 2. ஐ.நா மனித உரிமை பேரவையில் 2012 இல் இருந்து இலங்கை தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சீனா எதிரான நிலைப்பாட்டை மிக வெளிப்படையாக எடுத்திருக்கின்றது. ஆகவே தமிழ் மக்களை பெறுத்தவரையில் ஜனநாயகம் பேணப்படவேண்டும் என்று குரல் கொடுக்கின்ற வகையிலே சீனாவினுடைய செல்வாக்கு இலங்கையில் அதிகரிப்தை நாங்கள் விரும்பவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாகரசபை முதல்வர் ரி.சரவணபவான் மாநகசைபை ஆணையாளருக்கு எதிரா நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு விசாணைக்கு இன்று வியாழக்கிழமை (22) ஆஜரான பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அரசுக்கு எதிரான இந்த போராட்டங்களை கடந்த பெப்ரவரி மாதம் நாங்கள் தான் ஆரம்பித்து வைத்தோம். ஆகவே மக்களுடைய போராட்டங்கள் அனைத்துக்கும் எங்களுடைய ஆதரவு இருக்கின்றது அரசாங்கம் நாங்கள் எதிர்பார்த்ததைவிட அவசரமாக மக்களிடம் இருந்த செல்வாக்கை முழுமையாக இழந்து நிற்கின்றது. நாங்கள் எந்த நாட்டுக்கும் சாந்தவர்கள் அல்ல எதிரானவர்களும் அல்ல ஆனால் இலங்கைவாழ் தமிழ் மக்களை பெறுத்தளவிலே எங்களுடைய அரசியல் பிரச்சனை சம்மந்தமாக இந்தியா தமிழ் மக்கள் சார்பிலே சர்வதேச உடன்படிக்கையை 1987 ம் ஆண்டு கைச்சாத்திட்டது அது முழுமையாக அமுல்படுத்தவேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை. அதன்காரணமாக நாங்கள் இந்தியாவுடன் நெருங்கி செயற்படுகின்றோம் இந்திய அரசும் தொடர்சியாக அதிலே உள்ள விடையங்கள் நிறைவேற்றப்படவேண்டும் என்று தங்களுடைய கருத்தை மிகவும் ஆணித்தரமாக சொல்லிவருகின்றனர். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பகையிருப்பது எல்லோருக்கும் தெரிந்த விடையம் இந்தியாவினுடைய கரை எல்லை இலங்கை கரை எல்லை 30 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கின்றது. இந்தியாவினுடைய பாதுகாப்பு நிமிர்த்தமாக இந்தியா கரிசனையாக இருப்பது எவரும் ஏற்றுக் கொள்ள கூடிய விடயம். அதேவேளையில் சீனா இலங்கைக்குள் வந்து காலடி எடுத்து வைக்கும் விடையமாக மற்றைய நாடுகள் விசேடமாக ஜனநாயகத்தை பேணுகின்ற மனித உரிமையை மதிக்கின்ற நாடுகள் இங்கே வந்து இலங்கை அரசாங்கத்தோடு நட்புறவு பேணி தங்களுடைய விழுமியங்களை பரப்புவது நல்ல விடையம். ஆனால் சீனாவை பெறுத்தவரையில் அங்கு ஜனநாயகம் இருப்பது எவருக்கும் தெரியாத விடையம் ஒரு கட்சி ஆட்சி. மாற்று கருத்துக்களுக்கு இடமில்லை மனித உரிமைகள் என்றால் அது என்னவென்று கேட்கின்ற அளவுக்குதான் சீனாவினுடைய நிலைப்பாடு. ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக 2012 இருந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சீனா அந்த தீர்மானங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மிக வெளிப்படையாக எடுத்திருக்கின்றது. ஆகவே தமிழ் மக்களை பெறுத்தவரையில் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் மனித உரிமை மீறல்களுக்கு அதிகமாக முகம் கொடுக்கின்றவர்கள் என்ற வகையில். ஜனநாயகம் பேனப்படவேண்டும் என்று குரல் கொடுக்கின்ற வகையில். சீனாவினுடைய செல்வாக்கு இலங்கையில் அதிகரிப்தை நாங்கள் விரும்பவில்லை ஆகவே நாங்கள் உயரியதாக கருதுகின்ற விழுமியங்களை கொண்ட நாடுகள் இலங்கைக்கு அறிவுரை கூறுவது இலங்கையில் ஈடுபடுவது வரவேற்க தக்கவிடையம் என்றார். சீனாவின் செல்வாக்கு இலங்கையில் அதிகரிப்பதை தமிழ் மக்கள் விரும்பவில்லை - எம். சுமந்திரன் | Virakesari.lk
 3. டக்ளஸின் பரிந்துரையில் வேலனையில் 100 நகரத் திட்டம் - ஆரம்பித்து வைக்கிறார் பிரதமர் மஹிந்த Published by T. Saranya on 2021-07-21 15:27:57 நூறு நகரங்கள் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை ஆரம்பிக்கும் தேசிய நிகழ்வு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பரிந்துரைக்கு அமைய யாழ். வேலனையில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 31 ஆம் திகதி நடைபெறவுள்ள குறித்த நிகழ்வில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ளார். எதிர்வரும் ஜீலை 31 மற்றும் ஆகஸ்ட் 01 ஆகிய தினங்களில் யாழ்ப்பாணத்திற்கான இரண்டு நாள் விஜயத்தினை மேற்கொள்ளவுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாவற்குழி ரஜமகா விஹாரயின் கோபுரத்தினை திறந்து வைக்கவுள்ளதுடன் மீள்குடியேற்ற அமைச்சின் மூலம் செயற்படுத்தப்படுகின்ற 182 வீடுகளுக்கான உரிமங்களை பயனாளர்களுக்கு வழங்கவுள்ளதுடன், 34 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விலும் பங்குபற்றவுள்ளார். அதனைத் தொடர்ந்து, காங்கேசன்துறைக்கு செல்லவுள்ள பிரதமர், காங்கேசன்துறை திஸ்ஸ மஹா விகாரையின் பிக்குமாருக்கான விடுதித் திறப்பு மற்றும் குறைந்த வருமானம் கொண்ட இரண்டு குடும்பங்களுக்கான வீடுகளையும் கையளிக்கவுள்ளார். பின்னர், வேலனைக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ள பிரதமர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கு அமைய நூறு நகரத் திட்டத்தின் இரண்டாம் கட்ட தேசிய நிகழ்வை வேலனையில் ஆரம்பித்து வைக்கவுள்ளார். மறுநாளான ஞாயிற்றுக்கிழமை நல்லூர் கந்தசாமி கோயில் மற்றும் நயினாதீவு நாகவிகாரை ஆகியவற்றில் பிரதமர் மஹிந்த ராஜக்ஷ மத வழிபாடுகளில் கலந்து கொள்ளவுள்ளார். பின்னர், நயினாதீவு மக்களுக்கான நீர் வழங்கல் திட்டம், யாழ். நகர நீர் சுத்திகரிப்பு பணிகள் ஆகியவற்றையும் ஆரம்பித்து வைக்கவுள்ள பிரதமர், தாளையடி நீர்த் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்திலும் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. டக்ளஸின் பரிந்துரையில் வேலனையில் 100 நகரத் திட்டம் - ஆரம்பித்து வைக்கிறார் பிரதமர் மஹிந்த | Virakesari.lk
 4. 'மகளின் மரணத்தில் நூறுவீதம் சந்தேகம் நிலவுகிறது': சிறுமி ஹிஷாலினியின் பெற்றோர் தெரிவிப்பு (எம்.மனோசித்ரா) சிறிய தீயைக் கண்டால் கூட அச்சப்படும் என்னுடைய மகள் தானாகவே தீ மூட்டிக் கொள்ளுமளவிற்கு தைரியமானவர் அல்ல. எனவே அவருக்கு யாரேனும் தீ வைத்திருப்பார்கள் என்று நூறுவீதம் சந்தேகிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடைய வீட்டில் பணிக்கமர்த்தப்பட்டு தீ காயங்களுடன் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் பெற்றோர் தெரிவித்தனர். தங்களின் மகள் தொலைபேசியில் தம்முடன் பேசும்போது, தன்னை அங்குள்ளவர்கள் தும்புதடியால் தாக்குவதாகவும் தன்னால் அங்கு தொடர்ந்தும் இருக்க முடியாது என்பதால் உடனடியாக வந்து அழைத்துச் செல்லுமாறும் ஹிஷாலினி கூறியதாகவும் அவரது பெற்றோர் தெரிவித்தனர். கண்டியில் நேற்று செவ்வாய்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து ஹிஷாலினியில் தந்தை ஜெயராஜ் ஜூட்குமார் மற்றும் தாய் ஆர்.ரஞ்சனி ஆகியோர் இவ்வாறு தெரிவித்தனர். அவர்கள் தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஜெயராஜ் ஜூட்குமார் - சிறுமியின் தந்தை தொழிலுக்குச் செல்லுமாறு நாம் அவரை பலவந்தப்படுத்தவில்லை. அவர் விரும்பியே சென்றார். ஆண்களைப் பார்த்தால் விலகிச் செல்லும் பெண்பிள்ளை அவர். அவருக்கு என்ன நடந்தது என்று எமக்குத் தெரியாது. எனது மகள் சிறிய தீயைக் கண்டால் கூட அஞ்சுபவர். நாம் வீட்டில் தீ மூட்டினால் கூட அருகில் இருக்க மாட்டார். இவ்வாறு அச்சப்படுபவர் எவ்வாறு தனக்கு தானே தீ மூட்டிக் கொள்வார் என்பதில் எமக்கு பாரிய சந்தேகம் நிலவுகிறது. அவர் தீ மூட்டிக் கொண்டிருக்க மாட்டார். யாரேனுமொருவரால் தான் தீ மூட்டப்பட்டிருக்கும். அவருக்கு தீ வைத்திருக்கிறார் என்று நூற்றுக்கு நூறுவீதம் நாம் சந்தேகிக்கின்றோம். கொரோனாவினால் எனக்கு தொழில் இல்லை. தொழில்புரிவதற்கு இடமில்லை. எனக்கு காலில் உபாதை காணரமாக கஷ்டப்பட்டு தொழில் செய்ய முடியாது. ஆர்.ரஞ்சனி - சிறுமியின் தாய் கொவிட் நெருக்கடி நிலைமையால் நான் பெரும் கடன் சுமைகளுக்கு உள்ளானேன். என்னுடைய கணவர் மற்றும் மகன் ஆகிய இருவருமே தொழில் இன்றியே காணப்பட்டனர். இதன் காரணமாகவே நான் கடன் சுமைக்கு உள்ளானேன். மகளை அனுப்பி வைப்பதற்காக தங்க நகையை அடகு வைத்து 30,000 பணம் வைத்திருந்தேன். நீங்கள் பணிக்கு சென்றால் பிள்ளைகளை பராமறிப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் மகளை பணிக்கு அனுப்பி வைக்குமாறு, அவரை அழைத்துச் சென்ற நபர் கூறினார். அதன் போது வாங்கிய கடனை திருப்பி செலுத்தாவிட்டால் கடன் வழங்கியவர்கள் வீட்டு முற்றத்தில் வந்து கூச்சலிடுவார்கள். எனவே நான் தொழிலுக்குச் சென்று கடனை மீள செலுத்த உதவுவதாகவும் சகோதரனுக்கு மாத்திரம் இதனை செய்ய முடியாது என்று கூறியே என்னுடைய மகள் தொழிலுக்குச் சென்றார். உண்பதற்கு கூட உணவின்றி கஷ்டப்பட்டோம். எனினும் அங்கு சென்றதன் பின்னர் எனது மகள் என்னுடன் பேசும் போது, 'அம்மா என்னால் இங்கிருக்க முடியாது. என்னை அழைத்துச் செல்லுங்கள். இங்குள்ளவர்கள் என்னை தும்புதடியால் தாக்குகின்றனர்.' என்று கூறினார். ' ஏன் அவ்வாறு செய்கின்றார்' என்று நான் மகளிடம் வினவிய போது , அங்கிருந்தவர்கள் என்னுடைய மகள் வீட்டாரிடம் (மெடம்) மரியாதையின்றி நடந்து கொள்வதாகக் கூறினார்கள். அத்தோடு ' உங்களுடைய மகள் பணிப்பெண் அல்லவா? எனவே வீட்டாரிடம் மரியாதையாக பேசுமாறு உங்கள் மகளிடம் கூறுங்கள் ' என்றும் தெரிவித்தனர். என்னுடைய மகள் சிறியவர். அவரை தாக்க வேண்டாம் என்று அந்த வீட்டாரிடம் நான் கூறினேன். அவ்வாறிருக்கையில் இம்மாதம் 3 ஆம் திகதி மாலை 3 மணியளவில் என்னுடைய மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்கள். 4 ஆம் திகதி சென்று நாம் மகளைப் பார்த்த போது அவர் மோசமான நிலையில் இருந்தார். மேலதிகமாக பணம் பெற்றுள்ளதால் நான் தொழிலுக்கு வருவதாகக் கூறினேன். 21 ஆம் திகதி போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் காலை அங்கு இருப்பேன் என்று கூறினேன். என்னுடைய மகள் அவராகவே ஏதேனும் செய்து கொண்டிருப்பார் என்றால் அந்த வீட்டில் ஏதேனும் நடந்திருக்க வேண்டும். இவ்வாறு மற்றொரு பிள்ளைக்கும் நடந்துவிடக் கூடாது. வறுமையின் காரணமாகவே என்னைப் போன்ற தாய்மார் இவ்வாறான தவறை இழைக்கின்றனர். எனவே குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நான் வணங்கிக் கேட்டுக் கொள்கின்றேன். கேள்வி : உங்களுடைய மகள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறுகின்றனர். அவ்வாறு இடம்பெற்றிருக்க வாய்ப்புள்ளதா ? பதில் : இல்லை. அவ்வாறு செய்து கொள்வதற்கான காரணிகள் காணப்பட்டாலும் தொலைபேசியில் அவர் யாருடனாவது பேசியிருக்க வேண்டும். அவ்வாறில்லை எனில் தாய் என்ற ரீதியில் எம்மிடம் ஏதேனும் கூறியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. கேள்வி : 'மெடம் ' என்று யாரைக் கூறுகின்றீர்கள் ? பதில் : ரிஷாத் பதியுதீனுடைய குடும்பத்தார். 'மகளின் மரணத்தில் நூறுவீதம் சந்தேகம் நிலவுகிறது': சிறுமி ஹிஷாலினியின் பெற்றோர் தெரிவிப்பு | Virakesari.lk
 5. கனகராசா சரவணன் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 14 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என பொலிஸ் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார். அத்துடன், சிறுவர்களுக்கு எதிரான 63 வன்முறைச் சம்பவங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான 1,513 குடும்ப வன்முறை சம்பவங்கள் தொடர்பில் மாவட்டத்திலுள்ள 12 பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்றும் குறிப்பிட்டார். இந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் கடந்த மாதம் 31ஆ ம் திகதிவரையிலான 6 மாதங்களில் மாவட்டத்திலுள்ள 12 பொலிஸ் நிலையங்களில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக முயற்சி, சிறுவர்கடத்தல் போன்ற 31 பெருங்குற்றங்களும், 32 சிறுகுற்றங்களுமாக 63 குற்றங்கள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அதேவேளை, பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தொடர்பாக ஆகக்கூடியதாக ஏறாவூர் பொலிஸ் பிரிவில் 322 முறைப்பாடுகளும், களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் 186 முறைப்பாடுகளும் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் 160 முறைப்பாடுகளுமாக 1,513 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதுடன், பெண்களுக்கு எதிராக 7 பெருங்குற்றங்களும் 71 சிறுகுற்றங்களும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன. சிறுவர்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறை சம்பவங்கள் இந்த கொரோனா காலத்திலும் கூட அதிகரித்துள்ளமை கவலைக்குரிய விடயம் என்று தெரிவித்த அவர், பிள்ளைகளை மிகுந்த அவதானித்து கண்காணித்து விழிப்புடன் செயற்படுமாறு பெற்றோரை அறிவுறுத்தினார். Tamilmirror Online || மட்டக்களப்பில் 16 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம்
 6. ‘தொடர்ச்சியாக பல தடவைகள் இஷாலினி வன்புணர்வு’ முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்குச் சொந்தமான கொழும்பிலுள்ள வீட்டிலில் பணிப்பெண்ணாக வேலைசெய்த ஜூட் குமார் இஷாலினி என்ற சிறுமி, பலமாதங்களாக, நேரம் கிடைக்கும் போதெல்லாம் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. எரிகாயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மரணமடைந்த ஜூட் குமார் இஷாலினியின் நீதிமன்ற வைத்திய அறிக்கையிலேயே மேற்கண்ட விவரம் வெளியாகியுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரியவின் முன்னிலையில், பொரளை பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற வைத்திய பரிசோதனை அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு தடயவியல் மருத்துவர் எம்.என் ராஹூல் ஹக்வின் கையொப்பத்துடன் இவ்வறிக்கை, பொரளை பொலிஸாரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இறந்த சிறுமி, தாக்கப்படவில்லை. சித்திரவதை செய்யப்படவில்லை. எனினும், எரிகாயங்களால், உடல் 72 சதவீதம் எரிந்துள்ளதென அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்சிறுமி கர்ப்பமடையாது, நேரம் கிடைக்காத போதெல்லாம் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயினால் உடலின் மேல் பகுதியில் ஏற்பட்ட எரிகாயங்களில் கிருமிகள் தொற்றியமையால், ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாகவே இச்சிறுமி மரணமடைந்துள்ளார் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எரிகாயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மரணமடைந்த, தலவாக்கலை- டயகமவைச் சேர்ந்த, ஜூட் குமார் இஷாலினிக்கு (வயது 16) நீதி கோரி, அவருடைய சொந்த ஊரான டயகமவில், இன்று (20) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. Tamilmirror Online || ‘தொடர்ச்சியாக பல தடவைகள் இஷாலினி வன்புணர்வு’
 7. செளதிக் பிஸ்வாஸ் பிபிசி நியூஸ் இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலத்தில் 40 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. முந்தைய சில ஆண்டுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை விட கொரோனா காலகட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறது என்பதை ஒப்பிட்டு இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது. இந்தப் பெருந்தொற்று காலத்தில் இறந்தவர்களில் கோவிட்-19 பாதிப்பால் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதைக் கூறுவது கடினமென்றாலும், அந்தத் தொற்றால் ஏற்பட்ட ஒட்டுமொத்த பாதிப்பை அளவிடுவதற்கான எண்ணிக்கையாக இது உள்ளது. இதுவரை இந்தியாவில் 4,14,000-க்கும் அதிகமானவர்கள் கோவிட்-19 தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர் என்று அரசின் அலுவல்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா காலத்தில் கூடுதலாக இறந்தவர்களின் எண்ணிக்கை என்ன என்பதை கணக்கிடாத மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. அமெரிக்காவில் இருந்து இயங்கும் சென்டர் ஃபார் க்ளோபல் டெவலப்மென்ட் எனும் அமைப்பின் ஆய்வாளர்கள், இந்தியாவில் அனைத்து காரணங்களாலும் கூடுதலாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை இந்த ஆண்டு ஜூன் 21-ஆம் தேதி வரை கணக்கிட்டனர். இந்திய மக்கள்தொகையில் பாதி பேரை கொண்டுள்ள ஏழு மாநிலங்களில் மரணங்கள் கணக்கிடப்பட்டு, அந்த எண்ணிக்கையின் விகிதம் ஒட்டுமொத்த நாட்டுக்கும் இருந்தால் எவ்வளவு இருக்கும் என்று கணக்கிடப்பட்டதன் அடிப்படையில் இந்த எண்ணிக்கை கிடைத்துள்ளது. இந்தியா ஆண்டுதோறும் இறந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிடும் பணியை மேற்கொள்கிறது. ஆனால் இந்த எண்ணிக்கை 2019ஆவது ஆண்டு வரை மட்டுமே புதிப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக எந்தெந்த வயதினரின் இறப்பு விகிதம் எவ்வளவு உள்ளது என்ற சர்வதேச கணக்கீடுகளையும் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த ஆய்வாளர்கள் பயன்படுத்தியுள்ளனர். பட மூலாதாரம்,REUTERS இது மட்டுமல்லாமல். 1,77,000 குடும்பங்களைச் சேர்ந்த 8,68,000 ஆயிரம் பேர் சமீபத்தில் கலந்துகொண்ட ஒரு நுகர்வோர் கருத்துக் கணிப்பையும் இந்தியாவில் கூடுதலாக இறந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிட இந்த ஆய்வாளர்கள் பயன்படுத்தியுள்ளனர். இந்த கருத்துக்கணிப்பில் கடந்த 4 மாதங்களில், கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் இறந்தனரா என்ற கேள்வியும் கேட்கப்பட்டது. இந்த அனைத்து தரவுகளையும் வைத்துப் பார்க்கும்போது இந்தியாவில் இந்த பெருந்தொற்று காலத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்திலிருந்து 47 லட்சம் வரை இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை கோவிட்-19 தொற்று காரணமாக இறந்தவர்களின் அலுவல்பூர்வ எண்ணிக்கையை விட சுமார் 10 மடங்கு அதிகமாகும். நோய்த்தொற்றியல் வல்லுநர்களின் கணக்குப்படி, இந்தியாவில் கொரோனா காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை அரசின் அலுவல்பூர்வ தரவுகளை விட ஐந்து முதல் ஏழு மடங்கு அதிகமாக இருக்கலாம். ஆனால் இந்த ஆய்வின் மதிப்பீடு அதை விட அதிகமாக உள்ளது. இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரும் இந்தியாவின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகருமான, அரவிந்த் சுப்ரமணியம் இந்த எல்லா மரணங்களும் கோவிட்-19 தொற்று காரணமாக நிகழ்ந்தவை அல்ல. நோய் வாரியாக இந்த மரணங்களை கணக்கிடுவது மிகவும் கடினமானது என்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் எத்தனை பேரின் உடலில் கொரோனா நோய் எதிர்ப்பு அணுக்கள் இருக்கலாம் என்பது குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்க எந்த அளவு வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்த பல சர்வதேச அனுமானங்கள் உள்ளன. இந்தியாவில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கைக்கு, சர்வதேச அளவில் உள்ள உயிரிழப்பு விகிதத்தைக் கணக்கிட்டால் எந்த அளவு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இருக்கும் என்பதையும் இந்த ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர். பட மூலாதாரம்,REUTERS ஒவ்வொரு வயது பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த கணக்கீடு மேற்கொள்ளப்பட்டது. அதாவது இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட வயது பிரிவில் இருந்தவர்கள் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற எண்ணிக்கையும் சர்வதேச அளவில் அந்த வயது பிரிவில் தொற்றால் பாதிக்கப்பட்ட பின் இறப்பதற்கான விகிதம் என்ன என்பதையும் இந்த ஆய்வாளர்கள் கணக்கிட்டனர். இதன் மூலம் பெற்ற முடிவுகள் அடிப்படையில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் 40 லட்சம் இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என்று அரவிந்த் சுப்ரமணியம் தெரிவிக்கிறார். அரவிந்த் சுப்ரமணியம் மற்றும் இந்த ஆய்வில் பங்கெடுத்த ஆய்வாளர்களான சென்டர் ஃபார் க்ளோபல் டெவலப்மென்ட்-இன் ஜஸ்டின் சேன்ட்ஃபர், ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் அபிஷேக் ஆனந்த் ஆகியோர், பொதுமக்கள் பரவலாக நினைப்பதை விட கொரோனா முதல் அலை மிகவும் மோசமானதாக இருந்தது என்கின்றனர். இறந்தவர்களின் எண்ணிக்கை மிதமானதாக இருந்ததாக கருதப்படுவதற்கு காரணம் உயிரிழப்புகளுக்கு இடையே இருந்த நேரம் மற்றும் தூர இடைவெளியாகும் என்று அவர்கள் கூறுகிறார்கள். இதை விவரிக்கும் அரவிந்த் சுப்ரமணியம், "உண்மையான உயிரிழப்புகள் பல பத்து லட்சங்களாக இருப்பதற்கும் வாய்ப்பு உண்டு. இந்திய பிரிவினை மற்றும் சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் நடந்த மிகப் பெரிய மனிதப் பேரவலமாக இது இருக்கலாம்," என கூறுகிறார்.கொரோனா காலத்தில் இந்தியாவில் இறந்த 40 லட்சம் பேர் - அமெரிக்க நிறுவன ஆய்வு - BBC News தமிழ்
 8. (எம்.மனோசித்ரா) இலங்கைப் பிரஜைகளின் திருமணம் மற்றும் விவாகரத்து நிர்வகிக்கப்படும் பொதுச் சட்டத்தின் கீழ் முஸ்லிம் சமூகத்தவர்களின் திருமணம் மற்றும் விவாகரத்துக்களும் உள்ளடக்கப்படும் வகையில் குடியியல் சட்டக் கோவையின் திருமண வழக்குகள் தொடர்பான நடைமுறைகளைத் திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இனம், மதம், மொழி, சாதி, பால், அரசியற் கொள்கை அல்லது பிறப்பிடம் காரணமாக அல்லது அத்தகைய காரணங்களுள் எந்தவொன்று காரணமாகவும் எந்தப் பிரஜைக்கும் ஓரங்கட்டுதல் ஆகாது என அரசியலமைப்பின் 12 ஆவது சரத்தில் ஏற்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், முஸ்லிம்களின் திருமணம் மற்றும் விவாகரத்து நிர்வகிக்கப்படும் முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் பெண்கள் ஓரங்கட்டப்படும் ஒரு சில ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், அவ்வாறான ஏற்பாடுகளை சட்டத்திலிருந்து நீக்குவதற்கான தேவையை பல்வேறு மகளிர் அமைப்புக்கள், முஸ்லிம் சமூகத்தவர்கள் மற்றும் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதனால், இலங்கைப் பிரஜைகளின் திருமணம் மற்றும் விவாகரத்து நிர்வகிக்கப்படும் பொதுச் சட்டத்தின் கீழ் முஸ்லிம் சமூகத்தவர்களின் திருமணம் மற்றும் விவாகரத்து நிர்வகிக்கப்படும் மாற்று வழிகளை அவர்களுக்கு வழங்குவது உகந்ததெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்கள் திருமணப் பதிவுக் கட்டளைச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்வதற்கு எதிர்பார்ப்பதாயின், அவர்களுக்கு குறித்த கட்டளைச் சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் வகையில் குடியியல் சட்டக் கோவை மற்றும் குடியியல் நடவடிக்கைமுறை சட்டக் கோவையில் உள்வாங்கப்பட்டுள்ள திருமண வழக்குகள் தொடர்பான நடைமுறைகளைத் திருத்தம் செய்வதற்காக நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. முஸ்லிம் திருமணம், விவாகரத்துக்களை உள்ளடக்கி குடியியல் சட்டக் கோவை திருத்தம் | Virakesari.lk
 9. டயகம சிறுமிக்கு நீதி கோரி ரிஷாத் வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் (எம்.மனோசித்ரா) பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து எரிகாயங்களுக்குள்ளான நிலையில் உயிரிழந்த டயகம பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமிக்கு நியாயம் கோரி இன்று செவ்வாய்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு - பௌத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்திற்கு முன்பாக புதிய ஜனநாயக மக்கள் முன்னணியினரால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் எஸ்.இராஜேந்திரன், வறுமை நிலையிலுள்ள பெற்றோர் தமது பிள்ளைகளை இவ்வாறு வீடுகளில் பணிக்கு அமர்த்துகின்றனர். இவ்வருடத்தில் மாத்திரம் இது போன்று 10 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே இந்த சம்பவம் தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். வறுமையிலுள்ள குடும்ப பிள்ளைகளுக்கு இவ்வாறு அநீதி இழைக்கப்படுவதை எம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவே உயிரிழந்த சிறுமிக்கு நியாயம் கிடைக்கும் வரை எமது போராட்டத்தை நாம் கைவிடப் போவதில்லை. பாராளுமன்றத்திலுள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இந்த சிறுமி குறித்து கருத்து வெளியிடவில்லை. தேர்தல் காலங்களில் சென்று வாக்கு கேட்கும் இவர்கள் , பாராளுமன்றத்தில் ஒன்றாக அமர்ந்து உணவு உண்பதன் காரணமாகவா இது தொடர்பில் கருத்து வெளியிடவில்லை என்று கேள்வியெழுப்புகின்றோம். எனவே அரசாங்கமும் பொலிஸ் திணைக்களமும் இதற்கான நீதியை வழங்க வேண்டும் என்றார். டயகம சிறுமிக்கு நீதி கோரி ரிஷாத் வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் | Virakesari.lk
 10. நீங்கள் ஆதரிக்கும் போதே தெரியும் முடிவு என்ன மாதிரி போகும் என்று. வடக்கு கிழக்கு அரசியலைக் கூட செய்ய தெரியாது உங்களுக்கு ஏன் தெற்கு அரசியல்?
 11. எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினார் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 91 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக 152 வாக்குகளும் ஆதரவாக 61 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான பிரேரணை தோற்கடிப்பு | Virakesari.lk
 12. கணவரின் கணினியில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகள், ஆவணங்கள், செய்திகள் அல்லது வேறேதும் தகவல்களை, கண்காணிப்பு சாதனங்களைக் கொண்டு சேகரிப்பதற்கு, அவரின் மனைவிக்கு தடையுத்தரவு பிறப்பித்து கல்கிஸை மாவட்ட நீமன்றம் கட்டளையிட்டுள்ளது. தான் வீ்ட்டில் இல்லாத சந்தர்ப்பங்களில் சட்டத்துக்குப் புறம்பான வகையில் தனது தனிப்பட்ட கணினியிலுள்ள தகவல்களை தன்னுடைய மனைவி ஆராய்கிறார் என குற்றஞ்சுமத்தி கணவரொருவரால் கல்கிஸை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது மனைவிக்கும் தனக்கும் இடையேயான விவாகரத்து வழக்கு இதே நீதிமன்றத்தில் நிலுவவையில் உள்ள நிலையில், தனது பல்வேறுபட்ட தகவல்களையும் தொலைபேசி உரையாடல்ளையும் தனது அறையில் ஒலி கண்காணிப்பு சாதனத்தைப் பொருத்தி, தன்னுடைய மனைவி தரவிறக்கம் செய்துள்ளார் என கணவர் குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பிலுள்ள அரச வைத்தியசாலையில் தான் வைத்தியராக கடமையாற்றுவதாகவும் தனது மனைவி வட மாகாணத்திலுள்ள அரச வைத்தியசாலையொன்றில் வைத்தியராகக் கடமையாற்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த கல்கிஸை மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதிபதி டி.எம்.கொடித்துவக்கு, கணினியில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகள், ஆவணங்கள், செய்திகள் அல்லது வேறேதும் தகவல்களை, கண்காணிப்பு சாதனங்களைக் கொண்டு சேகரிப்பதற்கு எதிர்வரும் 20 ஆம் திகதிவரை தடையுத்தரவு பிறப்பித்து கட்டளையிட்டார். Tamilmirror Online || கணவரின் கணினியை ஆராய மனைவிக்கு தடை
 13. ஐக்கிய அமெரிக்க டொலர், பிரச்சினையிலிருந்து இருந்து அரசாங்கத்தால் தலையை தூக்கிக்கொள்ள முடியவில்லையெனத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பியான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கம்டொலரை விழுங்கிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.“டொலர், கைவசம் இன்மையால், கொழும்பு துறைமுகத்துக்கு வந்திருக்கும் எரிபொருள் அடங்கிய கப்பலும் சிக்கிக்கொண்டுள்ளது” என்றும் தெரிவித்துள்ளார். எரிபொருள்களுடன் வந்திருக்கும் அந்தக் கப்பலுக்கு டொலரை செலுத்தாவிடின், எரிபொருள்களை எடுத்துக்கொண்டு திரும்பிச் சென்றுவிடும் என்றும் எச்சரித்துள்ளார்.இலங்கை தற்போது அந்நிய செலாவணி பற்றாக்குறையை மையமாகக் கொண்ட பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. தற்போது நமது அந்நிய செலாவணி இருப்பு 4 பில்லியன் டொலர்களாகும். ஆண்டின் நடுப்பகுதியில் 1 பில்லியன் டொலர் பத்திரக் கடனைசெலுத்தவேண்டும். அதனை செலுத்திய பின்னர், கருவூலத்தில் 3 பில்லியன் டொலர் இருப்பு மட்டுமே உள்ளது என்றார். Tamilmirror Online || ‘டொலரை அரசாங்கம் விழுங்கிவிட்டது’
 14. நடிகர் விஜய் 9 ஆண்டுகளுக்கு முன்பு இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரியும் அபராதமும் செலுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, அவர் வரி ஏய்ப்பு செய்ததாக சர்ச்சை எழுந்த நிலையில், அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டியிருக்கிறார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் திரைப்பட இயக்குநருமான சீமான். நடிகர் விஜய்க்கு பெருகும் ஆதரவு 2012ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கு நுழைவு வரி கட்ட விலக்கு வேண்டும் என நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். ஏற்கெனவே இறக்குமதி வரி செலுத்திவிட்ட நிலையில், காருக்கான நுழைவு வரி கட்டுவதில் இருந்து விலக்கு வேண்டும் என கேட்டிருந்தார். கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு பிறகு இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், "நடிகர்கள் ரீல் ஹீரோவாக இருக்க வேண்டாம்; ரியல் ஹீரோவாக இருங்கள்" என கூறி "வரி என்பது நாட்டு குடிமக்கள் ஒவ்வொருவருடைய கடமை, வரி ஏய்ப்பு செய்ய நினைப்பது தேசதுரோகம்," எனவும் குறிப்பிட்டிருந்தார்.இந்த தீர்ப்பு வெளியானதும், சமூக வலைதளங்களில் நடிகர் விஜய்யை தாக்கியும் அவருக்கு ஆதரவு அளித்தும் நிறைய கருத்துகள் பார்க்க முடிந்தது. அதில் நடிகர் விஜய் காருக்கான அனைத்து வரிகளும் கட்டிவிட்டார் எனவும் பொதுவாக ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் வாங்குபவர்களுக்கான நுழைவு வரி அதிகமாக இருக்கும் என்பதால் நீதிமன்றத்தில் இதுபோன்று வழக்கு தொடுப்பது வழக்கம் எனவும் நிறைய பதிவுகள் சமூக வலைதளங்களில் உலவின. இந்த நிலையில், நடிகர் விஜய் நுழைவு வரி விலக்கு உண்டா என்றுதான் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தாரே தவிர அவர் வரி கட்ட மாட்டேன் என்று சொல்லவில்லை. அப்படி இருக்கும் போது, வரி விலக்கு உண்டு இல்லை என்பதை மட்டும் குறிப்பிடாமல் விஜய்யின் நடிப்பு தொழிலை குறிப்பிட்டு ரீல் ஹீரோ, ரியல் ஹீரோ என நீதிமன்றம் சொல்ல வேண்டிய அவசியம் என்ன எனவும் நிறைய பேர் கேள்வி எழுப்பியிருந்தார்கள். சீமான் தந்த ஆதரவு இந்த நிலையில்தான் இயக்குநரும் 'நாம் தமிழர் கட்சி'யின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது. துணிந்து நில் தம்பி இது அவதூறுதானே தவிர குற்றம் கிடையாது. உன் படத்தில் வரும் 'நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு' பாடல் வரிகள் போல மன உறுதியோடு முன்னேறி வா தம்பி எனக்குறிப்பிட்டு நான்கு பக்கள் கொண்ட கடிதத்தை வெளியிட்டுள்ளார். அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, மகிழுந்திற்கு நுழைவு வரி விலக்கு கேட்டு வழக்கு தொடுத்ததற்காக தம்பி விஜய்யை வசைபாடுவதும், பழிவாங்கும் நோக்கோடு அவதூறு பரப்புவதும் ஏற்று கொள்ளக்கூடியதல்ல. மேலும் நீதிமன்ற தீர்ப்பு வரிவிலக்கு தீர்ப்புதானே தவிர வரி ஏய்ப்பு செய்து விட்டார் என்பதல்ல. அவர் வரி ஏய்ப்பு செய்துவிட்டதை போல போலியான கருத்துருவாக்கும் வலதுசாரிக்கும்பல் அவரை குறிவைத்து தாக்க முற்படுவது கண்டனத்துக்குரியது என குறிப்பிட்டுள்ளார். அரசியல் வன்மத்தின் வெளிப்பாடு பட மூலாதாரம்,VIJAY கடந்த வருடம் 'மாஸ்டர்' படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் வீட்டில் வருமானவரி சோதனை நடந்ததை குறிப்பிடும் அவர், இது அவரை அச்சுறுத்தும் உள்நோக்கத்தோடு நடத்தப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் திரைப்படங்களில் பாஜகவின் ஆட்சி முறையை சாடியதற்காகவே அவருக்கெதிராக பொய்யுரைகள் பரப்புவது அரசியல் வன்மத்தின் வெளிப்பாடு எனவும் நடிகர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார் சீமான். தனக்கான நீதியைப் பெறுவது என்பது அரசியலமைப்பு ஒவ்வொரு தனிமனிதருக்கும் வழங்கிய உரிமை. அதைத்தான் தம்பி விஜய்யும் செய்திருக்கிறார். தற்போது நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை அவர் ஏற்கலாம் அல்லது மேல்முறையீடு செய்யலாம். கடந்த ஆண்டுகளில் மட்டைப்பந்து வீரர்களுக்கு இவ்வாறு வரிச்சலுகை அளிக்கப்படிருக்கிறது என, கிரிக்கெட் வீரர் சச்சின் தனது ஃபெராரி காருக்கு வரிவிலக்கு கேட்டு பெற்றதை குறிப்பிட்டுள்ளார் சீமான். மக்களை சுரண்டுவதற்கான கருவி வரி பட மூலாதாரம்,ACTOR VIJAY அரசாங்கத்தை ஏமாற்ற நினைக்கும் எவரும் நீதிமன்றம் செல்ல மாட்டார்கள் என அந்த கடிதத்தில் கூறியுள்ள சீமான், இந்த நாட்டில் 'வரி' மக்களை சுரண்டுவதற்கான அரசின் கருவி எனவும் சாடியுள்ளார். மேலும் நாட்டில் வாழும் ஒவ்வொரு தனிமனிதனும் எதிர்கொள்ளும் பிரச்சினையாக வரி விலக்கு முறைகள் இருக்கிறது. அதனால், அது யாவற்றையும் மக்களை சுரண்டாத வகையில் மாற்றி அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். நாமக்கல்லை சேர்ந்த சிறுமி மித்ராவின் மருத்துவ உதவிகளுக்கு தேவையான பணத்துக்கு கட்ட வேண்டிய வரியை கூட கேட்டு விலக்கு பெற வேண்டிய கொடுஞ்சூழலில் உள்ளோம் என கூறியுள்ள சீமான், மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் சுருட்டிய லலித் மோடியும், விஜய் மல்லையாவும் நாட்டை விட்டு தப்பும்போது தப்பிக்க விட்ட மோதி அரசை ஏன் விமர்சிக்கவில்லை? அதேபோல, அம்பானி, அதானி போன்ற பெரு முதலாளிகளுக்கு வழங்கப்படும் சலுகை பற்றியும் எவரும் கேட்பதில்லை. அப்படி இருக்கும் போது விஜயின் வரிவிலக்கு சலுகை வழக்குக்கு பொங்குவது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளார். இப்படி வரி போன்ற அரசின் கொள்கை முடிவுகள் மக்களுக்கு எதிராக இருக்கும் போது குடிமகனுக்கு நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு என்ன வழி இருக்க முடியும்? அதனால் தம்பி விஜய் நீதிமன்றத்தை நாடியதில் தவறில்லை. அவர் மத்தியில் ஆளும் பாஜக அரசை கடந்த காலங்களில் திரைப்படங்களில் சாடியதற்காக தற்போதைய சூழலை பயன்படுத்தி அவரை பழிவாங்க துடிப்பது மலிவான அரசியல். அவருக்கு நிச்சயம் நான் துணை நிற்பேன். 'நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு' என அவரது படத்தில் வரும் பாடல் வரிகள் போல அவர் முன்னேறி வர வேண்டும் என தனது விருப்பத்தையும் தெரிவித்துள்ளார் சீமான். சீமான்: 'தம்பி விஜய் இந்த அவதூறிலிருந்து வெளிவர அவருக்கு துணையாக நிற்பேன்' - BBC News தமிழ்
 15. கிளிநொச்சி, அறிவியல்நகர் யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்கு, புலிக்குளத்திலிருந்து தண்ணீரை வாய்க்கால் மூலம் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா உறுதிசெய்தார். முன்னதாக 2013 ஆம் ஆண்டு, யாழ் பல்கலைக்கழகத்துக்கென அறிவியல்நகர் பகுதியில் 568 ஏக்கர் காணியை அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் பேசிப் பெற்றுக்கொடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தற்போது பல்கலைக்கழகத்துக்கான நீர் விநியோகத்துக்கான ஏற்பாடுகளையும் செய்துகொடுத்துள்ளார். புலிக்குளத்திலிருந்து அறிவியல்நகர் வளாகத்துக்கு வாய்க்கால் மூலம் தண்ணீர் பெற்றுக்கொள்ளும் திட்டத்திற்கான கோரிக்கை, அறிவியல்நகர் யாழ் பல்கலைக்கழக வளாகத்தினரால் யாழ் பல்கலைககழக பேரவை உறுப்பினரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரின் மேலதிக இணைப்பாளருமான கோ.றுஷாங்கன் மூலம், ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்தக் கோரிக்கையை நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷவிடம் கடந்த ஏப்ரல் மாதம் சமர்ப்பித்து அதற்கான அனுமதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெற்றிருந்தார். இந்தத் திட்டம் பின்னர் கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சிடம் அமைச்சர் சமல் ராஜபக்ஷவால் ஒப்படைக்கப்பட்டு, குறித்த அமைச்சின் செயலாளர் அண்மையில் புலிக்குளம் பகுதிக்கு நேரில் சென்று குளத்தைப் புனரமைப்பதற்கான திட்டம் குறித்து ஆராய்ந்திருந்தார். 80 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டிருந்த இந்தத் திட்டத்தை உடனடியாக கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தும் வகையில், முதற்கட்டமாக குளத்திலிருந்து அறிவியல்நகர் பல்கலைக்கழக வளாகம் வரையிலான வாய்க்காலை புனரமைப்பது என தீர்மானிக்கப்பட்டு, இதற்கென 15 மில்லியன் ரூபா இராஜாங்க அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுமார் இரண்டு கிலோமீற்றர் நீளத்துக்கு இவ்வாறு வாய்க்கால் மூலம் நீர் அறிவியல்நகர் பல்கலைக்கழக வளாகத்துக்கு எடுத்துவரப்படும்போது, இடையில் உள்ள மலையாளபுரம், பொன்னகர் ஆகிய கிராமங்களின் நிலத்தடி நீர்வளமும் அதிகரித்து கிணறுகளில் நீர்க்கொள்ளளவும் கூடும். இந்தத் திட்டத்தின் முன்னேற்ற நிலை குறித்து, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, கிிளநொச்சி மாவட்டச் செயலகத்தில் நேற்று முன்தினம்(14.07.2021) செவ்வாய்க்கிழமை விசேட கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியிருந்தார். கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் றூபவதி கேதீஸ்வரன், யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல், விவசாய, தொழில்நுட்ப பீடங்களின் பீடாதிபதிகள், முன்னாள் பீடாதிபதிகள், தோட்ட முகாமையாளர் உள்ளிட்டவர்களுடன், மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர், கமநலசேவைத் திணைக்கள உதவி ஆணையாளர், பிராந்திய விவசாய ஆராய்ச்சி மையப் பிரதிப் பணிப்பாளர், துணுக்காய் பிரதேச செயலாளர் உள்ளிட்டோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு முன்னேற்ற நிலை குறித்த விளக்கங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கினர். இதன்போது, புலிக்குளத்திலிருந்து அறிவியல்நகர் வளாகத்துக்குப் பெறப்படும் நீர், விவசாய பீடத்தின் விவசாய முயற்சிகளுடன், பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும், விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களின் குடிநீர் தேவையையும் நிறைவுசெய்யும் வகையில் திட்டமிடப்படவேண்டும் என்று, பிராந்திய விவசாய ஆராய்ச்சி நிலையப் பிரதிப் பணிப்பாளர், விஞ்ஞானி கலாநிதி அரசகேசரி சுட்டிக்காட்டியதை, பல்கலைக்கழக பீடாதிபதிகள் உள்ளிட்ட அனைவரும் ஏற்றுக்கொண்டனர். ஏற்கனவே அறிவியல்நகர் பல்கலைக்கழகத்தில் உள்ள நிலத்தடி நீரைப் பெற்றுக்கொள்ளும் வசதிகள் கோடைகாலத்தில் தடைப்பட்டு சிரமங்கள் எதிர்கொள்ளப்பட்டு வருவதால், புலிக்குளத்திலிருந்து பெறப்படும் நீரைக் குடிநீர்த் தேவைக்கும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் நீர் சுத்தீகரிப்புத் தொகுதியும் அமைக்கப்படவேண்டும் என்று இதன்போது வலியுறுத்தப்பட்டது. இதற்கு மேலதிகமாக, புலிக்குளத்தை அண்டிய விவசாய வயல் நிலமான சுமார் 150 ஏக்கர் நிலப்பரப்பையும் அறிவியல்நகர் பல்கலைக்கழக வளாகத்துக்கே வழங்கி, பொதுமக்களுடன் இணைந்த விவசாய நடவடிக்கையில் பல்கலைக்கழகம் ஈடுபடுவது என்றும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. தற்போது விவசாயபீடத்தின் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் காணியின் மண் தரத்தை அதிகரிப்பதற்கென கிளிநொச்சி அம்பாள்நகர் அல்லது பொருத்தமான பகுதியிலிருந்து சுமார் 50 டிப்பர் கொள்ளளவு வளமான மண்ணைப் பெற்றுக்கொடுப்பதற்கு நீர்ப்பாசன திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் ராஜகோபு மற்றும் கமலநசேவைகள் பிரதி ஆணையாளர் தேவரதன் ஆகியோர் இதன்போது இணக்கம் தெரிவித்தனர். மேலும், விவசாயபீடத்தின் பயிர்ச்செய்கை நடவடிக்கையை மேற்கொள்வதற்குத் தேவையான ஆளணியை அதிகரிக்கவேண்டுமென விவசாயபீட தோட்ட முகாமையாளர் ஸ்ரீதரன் கோரிக்கை விடுத்தார். குறித்த கலந்துரையாடலின்போது, பிரஸ்தாபிக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் எழுத்து மூலம் இந்த வாரத்துக்குள் சமர்ப்பிக்குமாறும், அதனை சம்மந்தப்பட்ட அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று தேவையான ஏற்பாடுகளை செய்துதருவதாகவும் இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல்கலைக்கழக பீடாதிபதிகளிடம் உறுதியளித்தார். இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும்போது, அறிவியல்நகர் பல்கலைக்கழக சமூகம் மாத்திரமன்றி, அயல் கிராமங்களான பொன்னநகர் மற்றும் மலையாளபுரம் ஆகிய பகுதிகளின் நீர்வளமும் அதிகரித்து, அந்தக் கிராமங்களின் மக்களும் அதிக பயனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சி யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்கு தண்ணீரை பெற்றுக்கொள்ள ஏற்பாடு | Virakesari.lk
 16. ஆறுமுகம் திட்டம் மீண்டும் வருகிறது -நடராசா கிருஸ்ணகுமார், சுப்பிரமணியம் பாஸ்கரன் இரணைமடு, கல்மடு, விசுவமடு, உடையார்கட்டு போன்ற குளங்களில் இருந்து வழிந்தோடி விரயமாகின்ற நீரை பயன்படுத்தி, யாழ். மாவட்டத்துக்கான நன்னீரை பெறறுக்கொள்ளுகின்ற ஆறுமுகம் திட்டத்தை மீண்டும் செயற்படுத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில், நேற்று (13) இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த திட்டம் தொடர்பாக 1962ஆம் ஆண்டு காலப் பகுதியில் பிரஸ்தாபிக்கப்பட்ட போதிலும், ஆனையிறவு கடல் நீரேரியில் பருவகால மீன்பிடிதொழிலில் ஈடுபடுவோரின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டடிருந்தது. இந்நிலையில், குறித்த திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி, ஆனையிறவு கடல் நீரேரியில் 23 சதவீதமான பகுதியை மறித்து அணை அமைத்து, இந்தத் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக தற்போதைய அரசாங்கத்தால் பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், பிரதேச மக்கள் மற்றும் சம்மந்தப்பட்ட தரப்புக்களுக்கு, புதிய திட்டம் தொடர்பாக தெளிவுபடுத்தி, கருத்துகளை அறிந்துகொள்ளும் வகையில், இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது, நெதர்லாந்து அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் மறுசீரமைக்கப்பட்ட திட்டம் தொடர்பாக கிளிநொச்சிப் பிராந்திய பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் த.இராஜகோபு தெளிவுபடுத்தியமை குறிப்பிடத்தக்கது. Tamilmirror Online || ஆறுமுகம் திட்டம் மீண்டும் வருகிறது
 17. இலவச கல்விக்கு விடுக்கப்படும் பாரிய அச்சுறுத்தல்; நடவடிக்கை எடுப்போம் - சஜித் (எம்.ஆர்.எம்.வசீம்) உத்தேச கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் இலவச கல்விக்கு விடுக்கப்படும் பாரிய அச்சறுத்தலாகும். அதனை தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்கும் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் தொடர்பாக விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்படுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின் தேசியப் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும் ஊக்குவிப்பதற்கும் தேவையான உயர் கல்வியை வழங்குவதற்காக சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை மேலும் வலுப்படுத்த வேண்டியது தேசிய ரீதியிலான தேவையாக இருப்பதை நாங்கள் அனுமதிக்கின்றோம். என்றாலும் அந்த அடிப்படை தேவைக்கு அப்பாற்சென்று இலவசக் கல்வியை அழிப்பதற்கு உயர் கல்வி கட்டமைப்பிற்கு அப்பால் ஒரு நிறுவனம் ஸ்தாபிக்கப்படுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். அரசாங்கம் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையின் மூலம் உயர் கல்வியின் ஆராேக்கிய தன்மை தரம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இறையாண்மை முழுமையாக இல்லாமல்போவதுடன் இலவசக்கல்வியும் பாரிய பிரச்சினைக்கு ஆளாகும். அதேபோன்று அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் பல்கலைக்கழக கட்டமைப்பின் அறிவுசார் சுதந்திரம் மற்றும் சுயாதீனத்தன்மை அச்சுறுத்தலுக்கு ஆளாவதுடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நிர்வாகத்துக்கு அப்பாற்சென்ற உயர் கல்வி நிறுவனங்கள் அமையலாம். அதனால் இலவசக்கல்வி மற்றும் அதன் உரிமையாயாளர்களின் சுதந்திரம் மற்றும் போராட்டங்களின் பெயரால் உத்தேச சட்டமூலத்தை தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். இலவச கல்விக்கு விடுக்கப்படும் பாரிய அச்சுறுத்தல்; நடவடிக்கை எடுப்போம் - சஜித் | Virakesari.lk
 18. (நமது நிருபர்) அண்மைக்காலத்தில் இடம்பெற்று வரும் எதேச்சையதிகாரமும் இராணுவமயமாக்கலும் எமது ஜனநாயகத்தின் அடித்தளத்தை ஆட்டம் காண செய்துள்ளன. இவை அனைத்தும் எமது அன்றாட வாழ்வில் இடம்பெறும் வன்முறைகளுக்கு எதிராக எம்மை மரத்துப்போக செய்துள்ளதுடன் எமது பிரஜைளின் ஒரு பகுதியினர் இலக்கு வைக்கப்படும் போதும் கூட எம்மை மௌனம் காக்க வைத்துள்ளன என்று பல்கலைகழக விரிவுரையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஹிஸ்புல்லா மற்றும் ஜஸீமின் தடுப்புகாவலானது நன்றாக திட்டமிடப்பட்ட முஸ்லீம்களுக்கு எதிரான பின்புலத்தில் ஒரு அணிதிரட்டல் செயற்பாடாக அந்த சமூகத்திற்கு களங்கம் ஏற்படுத்துவதையும் மற்றும் தனிமைப்படுத்துவதையும் நோக்காகக் கொண்டு இடம்பெறுகிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நாட்டின் பல்கலைக்கழகங்களின் 96 விரிவுரையாளர்கள் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதுடன் இன்றைய தினம் இணைய வழியில் ஊடக மாநாடு ஒன்றையும் நடத்தினர். இந்நிலையில் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பல தசாப்தகால பெரும்பான்மை அரசியல் மற்றும் அண்மைக்காலத்தில் இடம்பெற்று வரும் எதேச்சையதிகாரமும் இராணுவமயமாக்கலும் எமது ஜனநாயகத்தின் அடித்தளத்தை ஆட்டம் காண செய்துள்ளன. இவை அனைத்தும் எமது அன்றாட வாழ்வில் இடம்பெறும் வன்முறைகளுக்கு எதிராக எம்மை மரத்துப்போக செய்துள்ளதுடன் எமது பிரஜைளின் ஒரு பகுதியினர் இலக்கு வைக்கப்படும் போதும் கூட எம்மை மௌனம் காக்க வைத்துள்ளன. ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் அஹ்னப் ஜஸீம் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மனித உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு தொடர்பான வழக்கறிஞர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாகுற்றவியல் புலனாய்வு திணைக்களத்தினால் ஏப்ரல் 14, 2020 அன்று கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் பிரிவு 9 இற்கு அமைய 10 மாதங்களுக்கு மேலாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். கைது செய்யப்படும்போது அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களாவன உயிர்த்த ஞாயிறு தாக்குதாரர்களுக்கு“உதவி புரிந்து உடந்தையாக செயற்பட்டார்” என்பதாகும். தற்போது இவர் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் பிரிவு 2(1)(h) இற்கு அமையவும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சட்டத்தின் பிரிவு 3(1) இற்கு அமையவும் பேச்சு தொடர்புடைய குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வாறு இவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் அனைத்தும் வயதுக்கு வராதவர்களால் குற்றவியல் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டிருந்தன. ஆனால் அந்த சிறுவர்கள் தங்களை அச்சுறுத்தலுக்கும் கட்டாயத்திற்கும் உட்படுத்தி தகவல்கள் பெறப்பட்டதாக கூறுகிறார்கள். மே 16 2020 அன்று பொலிஸ் பயங்கரவாத எதிர்ப்பு விசாரணைப் பிரிவினால் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞரும் ஆசிரியருமான அஹ்னப் ஜஸீம் என்பவர் கைது செய்யப்பட்டார். ஜஸீமினுடைய கைதிற்கான குற்றச்சாட்டு இவருடைய நூலான நவரசம் இனவாதத்தைத் தூண்டும் கருத்துக்களை உள்ளடக்கியது என்பதுடன் மாணவர்கள் மத்தியில் இனவாத கருத்துக்களை போதித்தார் என்பதாகும். பல்கலைக் கழகத்துடன் தொடர்புடையசில மனோதத்துவ வைத்தியர்களை உள்ளடக்கிய“வல்லுனர்கள் குழு” ஒன்றினால் இக்கவிதைகள் தொடர்பாக பல தெளிவற்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவ்விமர்சனத்தின் படி, இந்நூலின் உள்ளடக்கமானது வன்முறை,வெறுப்பு மற்றும் தற்கொலை எண்ணங்களைத் தூண்டும் கருத்துக்களை கொண்டிருப்பதாகும்,இவர்களுடைய அறிக்கையானது மேற்கூறப்பட்ட முடிவுகள் தொடர்பான நியாயப்படுத்தலை வழங்க தவறியதுடன் மேலும் இவ் ஏற்பாட்டில் இரண்டு வெவ்வேறு விதமான முரண்பட்ட மொழிபெயர்ப்புகளும் (சிங்கள மற்றும் ஆங்கிலம்) உள்ளடங்கியுள்ளன என்றும் கூறப்பட்டது. இவ்முரண்பட்ட தன்மையானது இவர்களுடைய இந்த செயற்பாட்டை கேள்விக்குள்ளாக்கியிருக்க வேண்டும். பொலிஸ் பயங்கரவாத எதிர்ப்பு விசாரணைப் பிரிவினால் கூறப்பட்ட விடயங்களிற்கு முரண்பட்ட வகையில், இந்த கவிதைகள் வன்முறை சம்பந்தமான விடயங்களை ஆழமாக விமர்சிக்கின்றன என்பதை அண்மைய மொழிபெயர்ப்புக்கள் எடுத்துக் காட்டுகின்றன. ஹிஸ்புல்லாவின் கைதும் தொடர்ச்சியான தடுப்புக்காவலும் சட்டத்தரணிகளின் உரிமைகளுக்கும் சட்ட ஆட்சிக்கும் எதிரான தாக்குதலாகும். அவ்வாறே, ஜஸீமினுடைய கைதானது ஒருவரின் தனிப்பட்ட கருத்து சுதந்திரம் மற்றும் பன்மைத்துவம் மீதான ஒரு தாக்குதல் என்பதுடன் எண்ணங்களின் மீதான ஒரு பரந்த போர் என்பதனை தெளிவாகப் புலப்படுத்துகிறது.இரண்டு வழக்குகளினதும் போக்கினை பார்க்கும்போது தெளிவாக புலப்படுவது யாதெனில் ஹிஸ்புல்லா மற்றும் அஹ்னப் ஆகியோரின் உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்பதாகும். இழிவான மற்றும் கேள்விக்குரிய உத்திகள் பல அவர்களுக்கு எதிரான வழக்குகளை உருவாக்க தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மேலும் தடுப்புக்காவலில் அவர்களுடைய சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான அடிப்படை உரிமைகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லா மற்றும் ஜஸீமின் தடுப்புகாவலானது நன்றாக திட்டமிடப்பட்ட முஸ்லீம்களுக்கு எதிரான பின்புலத்தில் ஒரு அணிதிரட்டல் செயற்பாடாக அந்த சமூகத்திற்கு களங்கம் ஏற்படுத்துவதையும் மற்றும் தனிமை படுத்துவதையும் நோக்காகக் கொண்டு இடம்பெறுகிறது.இச் சமூகத்திற்கு எதிரான வன்முறைகள் மற்றும் அச்சுறுத்தல் நடவடிக்கைகள் அரசினால்“தேசிய பாதுகாப்பு” என்ற பெயரில் வலுப்படுத்தவும்படுகிறது. மார்ச் 2021இல் 1000 மத்ரசா பாடசாலைகள்; மூடுதல் மற்றும் புர்காவை தடை செய்தல் போன்ற திட்டங்கள் பொதுப் பாதுகாப்பு அமைச்சரினால் முன்மொழியப்பட்டது. ஒரு மாத காலத்திற்குப் பின் அமைச்சரவையினால் பொதுவெளியில் அனைத்துவிதமான முகக்கவசங்களைஅணிவதற்கான தடைக்குஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும் மே மாதத்தில் சுங்கத் திணைக்கள உப பணிப்பாளரினால் நாட்டிற்கு கொண்டு வரப்படும் அனைத்து விதமான இஸ்லாமிய சமய தொடர்புடைய நூல்களும் பாதுகாப்பு அமைச்சினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்ற அறிவித்தலும் வழங்கப்பட்டது. இவ்வாறான செயற்பாடுகள் முஸ்லீம், என்ற காரணத்திற்காக ஒருவர் குற்றவாளியாக்கப்படுவதைபுலப்படுத்துவதுடன் மேலும் எமது ஜனநாயக சுதந்திரத்தின் மீதான ஒரு தாக்குதல் என்பதையும் காட்டி நிற்கிறது. முஸ்லீம்களுக்கு எதிரான செயற்பாடுகள் கொவிட்நிலைமைகளிலும் பிரதிபலிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கொவிட் தொற்று உச்சக்கட்டத்தில் இருந்த நிலையில் சுகாதார அமைச்சினால் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தல்களுக்கு முரண்பட்ட விதத்தில்கொவிட் தொற்றினால் இறந்த உடல்களை தகனம் செய்வது தொடர்பான ஒரு கட்டாய சட்டம் கொண்டுவரப்பட்டது. பல்கலைக் கழகத்துடன் தொடர்புடைய சிலர் உள்ளடங்கலாகபல நிபுணர்களால் ஆதாரமற்ற பொது சுகாதார விதிகள் குறிப்பிடப்பட்டு இவ் கட்டாய சட்டமானது ஆதரிக்கப்பட்டது. மேலும் இது முஸ்லீம்களால் பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வரும் அவர்களது இறப்பு தொடர்பான சடங்குகளைஅலட்சியம் செய்யும் அல்லது அவமதிக்கும் ஒரு செயற்பாடாகும். இன்று தகனத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும் முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியான ஓட்டமாவடிஇ மட்டக்களப்பு பிரதேசத்தில் மட்டுமே இது அனுமதிக்கப்பட்டுள்ளது. இறந்த உடல்களை தகனம் செய்வது தொடர்பான சிக்கல்கள் புலப்படுத்துவது யாதெனில் கொவிட் தொற்றினை முஸ்லீம்களுக்கு எதிரான ஒரு ஆயதமாக பயன்படுத்தும் ஒரு வெளிப்படையான முயற்சி என்பதாகும.;வைத்தியர்கள், சுகாதார பரிசோதகர்கள், அரசியல்வாதிகள், இராணுவத்தினர்,அரச கட்டுப்பாட்டுக்குள் உள்ள ஊடகத்தின் அறிக்கைகள் மற்றும் செயற்பாடுகள் மூலம் முஸ்லீம்களே இவ் வைரஸ் பரவலுக்கு முக்கிய காரணம் என்ற ஒரு பிம்பம் உருவாக்கப் பட்டுள்ளது. இப்போக்கு ஒன்றும் புதியதல்ல. ஒரு தசாப்தத்திற்கு மேலாக முஸ்லீம்களுக்கு எதிராக இடம்பெறும் உச்சக்கட்ட வன்முறையின் ஒரு தொடர்ச்சியே இதுவாகும். 2012 இல் ஆரம்பித்த ஹலாலிற்கு எதிரான பிரச்சாரம்;, அளுத்கம மற்றும் திகனவில் இடம்பெற்ற கலவரம்,பள்ளிவாசல்கள் மீது இடம்பெற்ற திட்டமிடப்பட்ட தாக்குதல் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிரான பிரச்சாரங்கள் உள்ளடங்கலாக பல செயற்பாடுகள் இதற்கு ஆதாரமாகும். மேலும், அரசியல் மயமாக்கப்பட்ட பிரச்சாரங்கள் பல முஸ்லீம் தனிமனிதர்களை குறிவைத்து இடம்பெற்றுள்ளன. உதாரணமாக வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் கட்டாய கருத்தடையில் ஈடுபட்டமை என்ற குற்றச்சாட்டின் மூலம் கைது செய்யப்பட்டார். மற்றும் செயற்பாட்டாளர்றம்ஷி றஷீக்உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்குப்பின்முஸ்லீம்;களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மீது கண்டனம் தெரிவித்தமைக்காக கைது செய்யப்பட்டார். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்புடைய அரச துறைகள் இவ்வாறான வழக்குகளை வேகமாக முன்னெடுக்கும் நிலமையுடன் ஒப்பிட்டு பார்க்கும்போதுமுஸ்லீம்களுக்கு எதிராக இடம்பெறும் பல வன்முறைகளை தடுக்க தவறியதுடன் ஒருவரையும் பொறுப்புக்கூற வைக்கவில்லை. எதேச்சையதிகாரம் மற்றும் இராணுவமயமாக்கல் வேகப்படுத்தும் மத்தியில்தான் முஸ்லீம் மக்கள் குறிவைக்கப்படுவதுடன் ஐனநாயக அமைப்புக்களும் பலவீனமாக்கப்படுகின்றன. பல உயர் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் விசாரணைக்குட்படுத்திய குற்றவிசாரணைப்பிரின் அதிகாரியான சானி அபயசேகர மற்றும் பௌத்தமதத்தை விமர்சித்து எழுதியது என்று குற்றஞ்சாட்டப்பட்ட சக்திகா சத்குமார போன்ற பலர் கைது செய்யப்பட்டார்கள். பயங்கரவாத தடைச்சட்டம், அவசரகால ஒழுங்குகள் அரசியல்மயமாக்கப்பட்ட கருவிகளாக அதிகாரத்தால் பயன்படுத்தப்படுகின்றன. அரச நிறுவனங்களையும் நீதித்துறையையும் கேள்விக்கு உட்படுத்தும் விதத்தில் இந்தச் சட்டங்கள் சிறுபான்மையினருக்கு எதிரான பெரும்பான்மை அணிதிரட்டல்கள், ஆட்சியாளர்களை எதிர்போரை தாக்குவதற்கும் மற்றும் மாற்றுக்கருத்தை நொருக்குவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. கல்வித்துறையில் உள்ள அனைவரும் தமது பேச்சு சுதந்திரத்தை பயன்படுத்தி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எதிராக இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் கேள்வி எழுப்புவது அவசியமாகும். அத்துடன் பொது உயர் கல்வி நிறுவனங்களின் அங்கத்தவர்கள் என்ற முறையில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பவேண்டும். நியாயமின்மை, பெரும்பான்மை அரசியல், இனவாதம் போன்றவை ஏற்படுத்திய அழிவுகள் மூலம் கற்றுக்கொண்டவையை அடிப்படையாக வைத்தும் நாளாந்தம் எமது சமூகத்தின் ஒரு பகுதியினர் அச்சத்துடனும் பாதுகாப்பின்மையுடனும் வாழ்வதை வைத்தும் நாம் அனைவரும் இவ் தாக்குதல்களுக்கு எதிராக செயல்பட வேண்டும்.தீங்கான செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறுவது அனைவர் மீதும் நிச்சயமாக பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்எனநாங்கள் நம்புகிறோம். ஹிஸ்புல்லா மற்றும் ஜஸீம்; ஆகியோர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அத்துடன்; இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது முஸ்லிம்களுக்கு எதிராக அணிதிரட்டும் பின்னணியில் இடம்பெற்றுள்ளது என்பதையும் புலப்படுத்துகிறது.மேலும் குற்றவியல் நீதி முறைமையின் சீரழிவு மற்றும் அரச துறையின் வீழ்ச்சி சமூகத்;தின் அடிப்படையான ஐனநாயகத் தளங்களை சீர்குலைக்கிறது என்ற ஆழ்ந்த கவலை எங்களுக்குண்டு. ஆகவே நாங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ஜனநாயகவிரோத செயற்பாடுகளை நிறுத்தவும் ஜனநாயகத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் அதுபோன்றஏனைய சட்டங்களை இரத்து செய்யுமாறு கோருகிறோம். இறுதியாகஎமது கல்விச் சுதந்திரத்தை பயன்படுத்தி இப்போராட்டத்தை விரிவு படுத்துவதன் மூலம்அனைவர் சார்பிலும் ஜனநாயகத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்கு அனைத்து கல்வி சார் சமூகத்திற்கும் அழைப்பு விடுக்கிறோம். ஹிஸ்புல்லா, ஜஸீமை உடன் விடுதலை செய்யுங்கள் - பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கோரிக்கை | Virakesari.lk
 19. (இராஜதுரை ஹஷான்) புதிய நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள பஷில் ராஜபக்ஷவிற்கு இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்த்து கடிதத்தை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவை நேரில் சந்தித்து கையளித்துள்ளார். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் பின்னர் உலகளாவிய பொருளாதார மீட்சி என்ற பின்னணியில் பொருளாதாரத்துறையில் பரஸ்பர நலன்களுடன் தொடர்புடைய பல்வேறு விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர். நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர் சந்திக்கும் வெளிநாட்டு இராஜதந்திரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. கொவிட் -19 வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பூகோளிய பொருளாதாரத்தில் இருந்து மீள்வது குறித்து இலங்கை அதிக கவனம் செலுத்தியுள்ள நிலையில் பொருளாதார விடயங்களில் ஆசிய வலய நாடுகள் பரஸ்பர ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நிதியமைச்சர் உள்ளார். அவ்வாறானதொரு பின்னணியில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை முக்கியமானதாகும். நிதியமைச்சர் பஷிலுக்கு டெல்லியிலிருந்து வாழ்த்து கடிதம் | Virakesari.lk
 20. கிளிநொச்சி - பூநகரி பகுதியிலுள்ள சீன நிறுவனத்தின் கடலட்டைப் பண்ணையை அரசாங்கம் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், வடபகுதி மீனவர்களுடன் இணைந்து, சட்டவிரோதமான கடலட்டைப் பண்ணைகளை அமைப்போமென, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்தார். யாழில், இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், பூநகரி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சீன நிறுவனத்தின் கடலட்டைப் பண்ணை இன்னும் அகற்றப்படவில்லை எனவும் ஆகவே, இன்றிலிருந்து இன்னும் 2 வாரங்களுக்குள் அந்தப் பண்ணையை அகற்றுவதற்கான நடவடிக்கையை எடுக்க அரசாங்கம் தவறினால், தாங்களும் கடற்றொழிலாளர்களின் உதவியுடன் சட்டவிரோதமான பண்ணைகளை நிறுவுவோமெனவும் எச்சரித்தார். "அதன் பின்னர் வரும் விளைவுகளை சந்திக்கவும் நாம் தயாராக இருக்கின்றோம். மேலும் சீனா இதனூடாக கடலை பிடிப்பதற்கு முயற்சி செய்கிறது என்பதனை இந்தியா உள்ளிட்ட நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும்” எனவும் சிவாஜிலிங்கம் கூறினார். Tamilmirror Online || ’பூநகரி பண்ணையை அகற்றாவிட்டால் நாம் பண்ணை அமைப்போம்’
 21. கொரோனா தடுப்பூசி போடும்போது இரு வேறு தயாரிப்பு மருந்துகளை போடுவது ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸை தடுக்கும் நோக்குடன் உலக அளவில் பல்வேறு நாடுகளில் உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் மற்றும் உள்நாட்டில் மருத்துவ அமைப்பால் ஒப்புதல் தரப்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சில இடங்களில் இரு வகை தடுப்பூசி மருந்துகளை போட்டுக் கொண்டால் கொரோனா எதிர்ப்புத்திறன் பெருகுவதாக தகவல் வெளியானது. சமீபத்தில் தாய்லாந்து அரசு கூட தமது குடிமக்களுக்கு இரு வேறு தயாரிப்பு கொரோனா தடுப்பூசி போட ஏதுவாக அதன் தடுப்பூசி கொள்கையில் மாற்றம் செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள செளமியா சுவாமிநாதன், "இப்படி போடப்படும் தடுப்பூசிகளால் ஏற்படும் தாக்கம் பற்றி மிகவும் சொற்ப அளவிலேயே தரவு கிடைத்துள்ளது," என்றார். இது மிகவும் ஆபத்தான போக்கு. இரு வேறு வகை கொரோனா தடுப்பூசியை போடுவது நிச்சயம் கவலை தரக்கூடிய விஷமே. இதை தொடர்படுத்த நம்மிடம் வலுவான அறிவியல்பூர்வ தரவு கிடையாது என்று தெரிவித்தார். கொரோனா தடுப்பூசியில் எந்த வகையை எப்படி போடுவது, எதை போடுவது என்பதையும் தீர்மானிப்பது சாதாரண மக்களாக இருந்தால் அது நிச்சயம் குழப்பமான சூழ்நிலைக்கே வழிவகுக்கும் என்று செளமியா சுவாமிநாதன் தெரிவித்தார். இரு வகை கொரோனா தடுப்பூசி போடுவது ஆபத்தானது: WHO தலைமை விஞ்ஞானி - தமிழில் செய்திகள் (bbc.com)
 22. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவித்த குற்றச்சாட்டுக்காக 41 வயதுடைய நபர் ஒருவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். திருகோணமலை பகுதியைச் சேர்ந்த அவர், 2019 ஆம் ஆண்டு கட்டாருக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும், பின்னர் அவரை கைதுசெய்ய இன்டர்போல் நீல நோட்டீஸ் அனுப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி சந்தேக நபர் கட்டாரில் கைதுசெய்யப்பட்டு, இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். தற்சமயம் சந்தேக நபர் முல்லியவலை தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் அவருக்கு எதிராக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வார்கள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார். விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது | Virakesari.lk
 23. தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வலியுறுத்தி எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே எஸ் மஸ்தான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் கே எஸ் மஸ்தான் தெரிவித்ததாவது, ' தமிழகத்தில் உள்ள 108 அகதி முகாம்களில், 106 முகாம்களில் இலங்கைத் தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்களுக்கான அடிப்படை வசதிகள் கிடைக்கப் பெற்றார்களா..? என அண்மையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அவர்களின் கோரிக்கைகளை ஏற்று, இவர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 5.42 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரின் ஆளுநர் உரையில்,' இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க தேவையான சட்டங்களும், திருத்தங்களும் மேற்கொள்ள மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்' என கூறப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்கள் முகாமை விட்டு வெளியே சென்று வீடு திரும்புவதற்காக உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி, அவர்களுக்கு கால அவகாசம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும்' என்றார். தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை கோரி தீர்மானம் - அமைச்சர் மஸ்தான் | Virakesari.lk
 24. அமோல் ராஜன் ஊடக ஆசிரியர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சுந்தர் பிச்சை, தலைமை செயல் அதிகாரி - கூகுள் மற்றும் ஆல்ஃபபெட் நிறுவனங்கள் உலக அளவில் தடையற்ற மற்றும் வெளிப்படையான இன்டர்நெட் சேவை தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாக எச்சரித்துள்ளார், கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை. பல நாடுகள் தகவல்களின் வேகத்தை கட்டுப்படுத்துகின்றன என்றும் எந்த நோக்கத்துக்காக 'இன்டர்நெட்' மாடல் உருவாக்கப்பட்டதோ அதை தங்களுக்கு ஆதாயமாக அந்த நாடுகள் அடிக்கடி பயன்படுத்திக் கொள்வதாக அவர் கூறியுள்ளார். பிபிசியுடனான ஓரு விரிவான நேர்காணலில் தன்னைச் சுற்றியுள்ள வரி சர்ச்சை, தனியுரிமை மற்றும் தரவுகள் குறித்தும் அவர் பேசினார். நெருப்பு, மின்சாரம் அல்லது இன்டர்நெட்டை விட செயற்கை நுண்ணறிவு மிகவும் ஆழமானது என்றும் அவர் வாதிட்டார். சுந்தர் பிச்சை, உலக வரலாற்றிலேயே மிகவும் நுட்பமான மற்றும் செல்வ வளம் கொழித்த நிறுவனங்களில் ஒன்றான கூகுளின் தலைமை செயல் அதிகாரி. அடுத்த புரட்சி அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் உள்ள கூகுள் தலைமையகத்தில் நான் அவருடன் பேசினேன். பிபிசிக்காக உலகப் பிரபலங்கள் என்ற தலைப்பிலான எனது தொடரின் அங்கமாக அவரை சந்தித்தேன். கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட் ஆகியவற்றுடன், வேஸ் ஃபிட்பிட், டீப்மைண்ட் போன்ற செயற்கை நுண்ணறிவு முன்னோடி நிறுவனங்களின் தலைமை அதிகாரியாக இருப்பவர் சுந்தர் பிச்சை. கூகுள் நிறுவனத்தில் மட்டும் இவர் ஜிமெயில், கூகுள் க்ரோம், கூகுள் மேப்ஸ், கூகுள் எர்த், கூகுள் டாக்ஸ், கூகுள் ஃபோட்டோஸ், ஆண்ட்ராய்டு உள்பட பலதரப்பட்ட தயாரிப்புகளை மேற்பார்வையிட்டு வருகிறார். ஆனால், இவை எல்லாவற்றை விட மிகவும் பிரபலமானது கூகுள் சர்ச் என்ற தேடுதல் பொறி. கூகுளின் அர்த்தமாகவே அந்த தேடுபொறி ஆகியிருக்கிறது. நாம் இன்று கையாளும் சுதந்திரமான மற்றும் வெளிப்படையான இன்டர்நெட் பயன்பாட்டை கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக, உலகில் வேறு எந்த நிறுவனத்தையும் விட கூகுள் நிறுவனமே அதிகமாக மேம்படுத்தியிருக்கிறது என்று கூற வேண்டும். சுந்தர் பிச்சையைப் பொருத்தவரை, நமது உலகில் மேலும் புரட்சிகரமான இரண்டு பிற முன்னேற்றங்கள் அடுத்த இருபத்து ஐந்து ஆண்டுகளில் நடக்கக்கூடும். ஒன்று ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு. மற்றொன்று குவான்ட்டம் கம்ப்யூட்டிங். படர்ந்து விரிந்த சிலிக்கான் வேலியில் உள்ள கூகுள் தலைமையகத்தில் இந்த செயற்கை நுண்ணறிவு எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதை விவரித்தார் சுந்தர் பிச்சை. "மனித குலம் எப்போதும் வளர்ச்சியடைந்து செயல்படும்போது, அதனுடன் கலந்த மிக ஆழமான தொழில்நுட்பமாக செயற்கை நுண்ணறிவு இருக்கும் என நான் கருதுகிறேன்," என்று அவர் கூறினார். "நெருப்பு அல்லது மின்சாரம் அல்லது இன்டர்நெட் எப்படி உள்ளதோ, அதை விட மிகவும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது செயற்கை நுண்ணறிவு." செயற்கை நுண்ணறிவு என்பது அடிப்படையில் மனித அறிவாற்றலை ஒத்துப் புனையும் ஒரு முயற்சியே. பல வகை செயற்கை நுண்ணறிவு தளங்கள் ஏற்கெனவே மனிதர்களை விட அதிநுட்பமாக பிரச்னைகளை தீர்க்கக் கூடியவையாக உள்ளன. குவான்ட்டம் கம்ப்யூட்டிங் என்பது முற்றிலும் மாறுபட்ட ஒன்று. சாதாரண கம்ப்யூட்டிங் என்பது பைனரி அடிப்படையிலானது: 0 அல்லது 1. அதற்கு இடையே எதுவும் இல்லை. இந்த நிலைகளை 'பிட்கள்' என்று அழைக்கிறோம். ஆனால் குவான்டம், அல்லது துணை அணு மட்டத்தில், ஒரு பொருளின் தன்மை மாறுபட்டதாக இருக்கும். அது ஒரே நேரத்தில் 0 அல்லது 1 ஆக இருக்கலாம் - அல்லது இரண்டிற்கும் இடையிலான ஸ்பெக்ட்ரமாக இருக்கலாம். குவான்டம் கணினிகள் குவிட்ஸால் கட்டமைக்கப்பட்டவை. அதனால்தான் அதன் தன்மை மாறுபட்டுக் கொண்டே இருக்கிறது. இது சிந்தனையைத் தூண்டும் விஷயம் ஆனால், உலகை மாற்றக்கூடிய திறன் படைத்தது. சுந்தர் பிச்சையும் பிற முன்னோடி தொழில்நுட்பவியலாளர்களும் இதை தீவிரமாக்கும் சாத்தியங்களையே ஆராய்ந்து வருகிறார்கள். எல்லா நேரத்திலும் குவான்டம் உதவப்போவது கிடையாது. இன்று நாம் கடைப்பிடிக்கும் கம்ப்யூட்டிங் முறை எப்போதும் சிறந்ததாக இருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்த புது வகை தீர்வு என வரும்போது அதற்கான கதவுகளை திறக்கக்கூடிய சாவி குவான்டம் கம்ப்யூட்டிங்கிடமே உள்ளது. கூகுள் நிறுவனத்தில் பல நிலைகளில் பணியாற்றி, மிகவும் திறமையான, பிரபலமான மதிப்புமிக்க ஆற்றலை வெளிப்படுத்தும் மேலாளராக உயர்ந்தார் சுந்தர் பிச்சை. குரோம், கூகுள் ப்ரெளசர், ஆன்ட்ராய்டு அல்லது செல்பேசி செயலி போன்ற எதுவும் சுந்தர் பிச்சையின் சிந்தனை கிடையாது. ஆனால், அந்த தயாரிப்புகளை வழிநடத்தியவர் சுந்தர் பிச்சை. கூகுள் நிறுவனர்களின் கண்காணிப்பின்கீழ் உலகை கட்டிப்போடும் செல்வாக்கு மிக்க தயாரிப்புகளாக அவற்றை உயர்த்தியவர் சுந்தர் பிச்சை. ஒரு விதத்தில், அவர் இப்போது AI மற்றும் குவான்டம் கம்ப்யூட்டிங் ஆகியவற்றின் எல்லையற்ற பெரிய சவால்களை நிர்வகிக்கிறார். அதில் குறிப்பிட்டு மூன்று பிரச்னைகளை சொல்வதென்றால் ஒன்று வரி, தனியுரிமை மற்றும் ஏகபோக அந்தஸ்து குற்றச்சாட்டு வரி ஏய்ப்பு சர்ச்சை வரி தொடர்பான விஷயங்களில் கூகுள் தமது செயல்பாட்டை நியாயப்படுத்துகிறது. பல ஆண்டுகளாக, கூகுள் நிறுவனம் தமது வரி செலுத்தும் கடமைகளை சட்டபூர்வமாக குறைப்பதற்காக கணக்காளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு பெரும் தொகையை செலுத்தியுள்ளது. உதாரணமாக, 2017ஆம் ஆண்டில், கூகுள் "டபுள் ஐரிஷ், டச்சு சாண்ட்விச்" என்று அழைக்கப்படும் உத்தியின் ஒரு பகுதியாக, டச்சு நிறுவனம் ஒன்றின் மூலம் பெர்முடாவுக்கு 20 பில்லியனுக்கும் அதிகமான தொகையை அனுப்பியது. இந்த கேள்வியை சுந்தர் பிச்சையிடம் முன்வைத்தேன். அவரோ, "அந்த திட்டம் நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லை. இன்று உலகிலேயே மிகப்பெரிய அளவில் வரி செலுத்தும் நிறுவனமாக கூகுள் உள்ளது. அது செயல்படும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ளூர் சட்டங்களை மதித்துச் செயல்படுகிறது" என்று பதிலளித்தார். கூகுள் அந்த திட்டத்தை பயன்படுத்துவதில்லை. உலகின் மிகப்பெரிய வரி செலுத்தும் நிறுவனங்களில் ஒன்று கூகுள் என்றும் அது செயல்படும் ஒவ்வொரு நாட்டிலும் வரிச் சட்டங்களுக்கு இணங்கி நடக்கிறது என்றும் சுந்தர் பிச்சை தெரிவித்தார். அவரது பதிலே, பிரச்னையை வெளிப்படுத்துவதாக உள்ளது என்று நான் குறிப்பிட்டேன். உண்மை என்னவெனில், இது சட்டபூர்வ பிரச்னை மட்டுமின்றி தார்மீக ரீதியிலான ஒன்று என்றேன். வறிய நிலையில் இருப்பவர்கள் எவரும் வரித்தொகையை குறைவாக செலுத்தவும் தங்களுடைய கணக்கு வழக்குகளை கையாளவும் கணக்காளர்களை வைத்திருக்க மாட்டார்கள். மிகப்பெரிய அளவில் வரி செலுத்தாமல் தவிர்ப்பது உலகின் மிகப்பெரிய செல்வந்தர்கள் மட்டுமே. இதை சுந்தர் பிச்சையிடம் குறிப்பிட்டு, இப்படி செயல்படுவது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக பிறர் நியாயமாக செலுத்த ஈடுபாடு காட்டும் கூட்டு தியாகத்தை பலவீனப்படுத்தும் தானே என்றேன். வரி செலுத்தாமல் தவிர்த்த கூகுள் நிறுவனத்தின் செயல்பாடு பற்றி அவரது பதில்களுக்கு இடைமறித்து நான் உடனுக்குடன் கேள்வி எழுப்பியபோது அவற்றுக்கு பதில் தர அவர் விரும்பவில்லை. பட மூலாதாரம்,GOOGLE படக்குறிப்பு, சான்டா பார்பரா கூடத்தில் குவான்டம் கம்ப்யூட்டிங் செயல்முறையை சுந்தர் பிச்சையிடம் விளக்கும் மூத்த ஆராய்ச்சியாளர் டேனியல் சாங்க். அதே சமயம், உலகளாவிய கார்பரேட்டுகளின் குறைவான வரி என்ற கருத்தாக்கம் பற்றிய விவாதத்தை தாம் ஊக்குவிப்பதாக அவர் தெரிவித்தார். இதன் மூலம் வரிகளை எளிமைப்படுத்தி மேலும் அதைச் செலுத்தும் முறையை வலுப்படுத்த ஆட்சியில் உள்ள கொள்கை வகுப்பாளர்களிடம் கூகுள் பேசி வருவது தெளிவாகத்தெரிகிறது. தங்களுடைய ஆராய்ச்சி மற்றும் வருவாயில் பெரும் பகுதியை தாம் அதிகமாக வரி செலுத்தும் அமெரிக்காவிலேயே கூகுள் முதலீடு செய்வதும் உண்மை என்பது நமக்குப் புரிந்தது. எனினும், கடந்த பத்து ஆண்டுகளில் வேறு எந்த நிறுவனத்தையும் விட 20 சதவீதம் வரியை கூடுதலாகவே செலுத்தியிருப்பதாக கூகுள் கூறியிருக்கிறது. உலகம் முழுவதும் பெருந்தொற்றை சமாளிக்க, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு வாங்கப்படும் கடன்கள், அவை செலவிடப்படும் முறை போன்றவை சாதாரண மக்கள் செலுத்திய வரிப்பணத்தின் அங்கமே. அத்தகைய வரிப்பணத்தை பிரபல நிறுவனங்கள் செலுத்தாமல் தவிர்ப்பதும் ஒருவித சுமையாகவே தோன்றுகிறது. கூகுள் சந்திக்கும் மற்றொரு மிகப்பெரிய பிரச்னை, அதைச் சுற்றி உலாவரும் தரவுகள் கண்காணிப்பு, தனியுரிமை போன்றவைதான். உலகில் வேறு தேடுபொறிகளை விட கூகுள் தேடுபொறியே ஆதிக்கம் நிறைந்து ஏகபோகம் செலுத்தி வருகிறது. இருந்தபோதும், "கூகுள் ஒரு இலவச தயாரிப்பு. அதை யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்," என்கிறார் சுந்தர் பிச்சை. பேஸ்புக் பயன்படுத்திய அதே வாதமும் இதுதான், கடந்த மாதம் வாஷிங்டன் டி.சி.யின் நீதிபதி ஜேம்ஸ் போஸ்பெர்க்கிடமிருந்து மார்க் ஜக்கர்பெர்க்கின் நிறுவனம் ஒரு வலுவான ஒப்புதலைப் பெற்றது. அந்த சமூக ஊடக நிறுவனம் மீதான நம்பிக்கை விரோத வழக்குகளை நிராகரித்த நீதிபதி, ஏகபோகம் என்ற விளக்கத்துக்கான வரம்புக்குள் ஃபேஸ்புக் வரவில்லை என்று தீர்ப்பளித்தார். தொழிற்துறை மரியாதை பட மூலாதாரம்,GOOGLE படக்குறிப்பு, 1998ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தை உருவாக்கிய லார்ரி பேஜ், செர்கே ப்ரின். இவர்களுடன் ஆறு ஆண்டுகள் கழித்து சேர்ந்தார் சுந்தர் பிச்சை. நேர்காணலுக்கான தயாரிப்பு நடவடிக்கையின்போது, கூகுள் நிறுவனத்தின் இந்நாள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் உள்ள மற்ற மூத்த நிர்வாகிகள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் தொழில்நுட்பத் துறை வல்லுநர்களுடன் கலந்துரையாடினேன். ஒவ்வொரு முகாமுக்குள்ளும் வலுவான கருத்தும் ஒருமித்த கருத்தும் இருப்பதை அறிந்தேன். தொழில்நுட்ப துறையில் பணிபுரிபவர்கள், சுந்தர் பிச்சையின் கீழ் உள்ள கூகுள் நிறுவனத்தில் அதன் பங்கு விலையின் வளர்ச்சி பற்றி நீங்கள் வாதிட முடியாது என்று கூறினர். காரணம், அது அவரது தலைமையின்கீழ் மும்மடங்கானது. அது ஒரு தனித்துவமான செயல்திறன். நுகர்வோர் நடத்தையில் சாதகமாக நிலவும் சூழலே இதற்கு காரணம் என விளக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய மற்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் எங்கெல்லாம் சிக்கினவோ, அங்கெல்லாம் தமது செயல்திறனை நிரூபித்தார் சுந்தர் பிச்சை. அமெரிக்க நாடாளுமன்ற குழு முன்பு அவர் பல முறை ஆஜராகி சாட்சியம் அளித்தபோதும் கூட, அது கூகுள் நிறுவன பங்குகளில் சரிவை ஏற்படுத்தவில்லை. மேலும், கடினமான சூழ்நிலைகளில் கூட தமது நேர்த்தியான செயல்பாட்டால் எல்லாவற்றையும் எதிர்கொண்டார் அவர். தலைமை நெறிகள் அதிகாரி சுந்தர் பிச்சையுடன் பணிபுரிந்தவர்களிடமிருந்தோ அல்லது அவருக்காகவோ பணியாற்றியவர்களிடம் இருந்தோ பொதுவான ஒரு விஷயத்தை நான் கேள்விப்பட்டேன். உலக அளவில் விதிவிலக்கான, சிந்தனைமிக்க, அக்கறையுள்ள தலைவராக சுந்தர் பிச்சை கருதப்படுகிறார். ஊழியர்கள் மீது கனிவு மிக்கவராக அவர் அழைக்கப்படுகிறார். அவரை அறிந்த பலரிடம் நான் பேசிபோது, நெறிசார்ந்த பணியை செய்பவருக்கு உதாரணமாக அவர் விளங்கினார் என்று அவர்கள் தெரிவித்தனர். வாழ்கால தரத்தை முன்னேற்றும்போது தொழில்நுட்ப தாக்கத்துக்கு ஈடுகொடுக்கக் கூடிய நபராக அவர் விளங்கியதாக அவர்கள் தெரிவித்தார். அதற்கு உதவியது அவரது ஆணிவேராக அமைந்த பூர்விகம் என அறிந்தேன். அது பற்றி விரிவாக நான் அவரிடம் பேசினேன். பட மூலாதாரம்,SUNDAR PICHAI படக்குறிப்பு, அமெரிக்காவில் தரையிறங்கி பிறகு தமது தோழி அஞ்சலியுடன் கைகோர்த்த சுந்தர் பிச்சை பிறகு அவரை மணம் முடித்தார். இந்தியாவின் தமிழ்நாட்டில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தார் சுந்தர் பிச்சை. பல தொழில்நுட்பங்களின் மாற்றம் அவரிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. கை விரலில் எண்களை சுழன்று பயன்படுத்தும் தொலைபேசிக்காக வரிசையில் காத்திருந்தது முதல், மாதாந்திர இரவு விருந்துக்காக ஒரே ஸ்கூட்டரில் குடும்பமாக பயணம் செய்தது வரை என பலதையும் அவர் நினைவுகூர்ந்தார். கூகுள் நிறுவனத்தில் அவர் பொறியாளர்களையும் மென்பொருள் உருவாக்குநர்களின் மனங்களையும் வென்றார். அடிப்படையில் அவர் ஒரு உலோகவியல் பொறியியலாளர். மூளையில் சிறந்தவர்கள் பணியாற்றிய கூகுளில் அங்குள்ளவர்களை வெல்வது சாதாரண விஷயமல்ல. பூமியின் மிகப்பெரிய தலை கணம் படைத்தவர்களின் முகமையாக அந்தஇடம் இருந்தபோதும், அந்த மூளைகள், சுந்தர் பிச்சைக்கு வெகுவாகவே மரியாதை கொடுத்தன. பட மூலாதாரம்,SUNDAR PICHAI படக்குறிப்பு, 1994ஆம் ஆண்டில் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் விடுதி அறையில் சுந்தர் பிச்சை காரணம், உலகில் வேறெந்த பெரிய நிறுவனங்களின் செயல் அதிகாரிகளாலும் தங்களால் தான் அந்த நிறுவனத்தின் பங்குகள் ட்ரில்லியன் டாலர்கள் அளவுக்கு உயர்ந்தன என்று மார்தட்டிக் கொள்ள முடியாது. ஆனால், கூகுளின் முன்னாள் ஊழியர்கள் மற்றும் அதன் வளர்ச்சியை உன்னிப்பாக கவனிப்பவர்கள் இதை வேறு விதமாக பார்க்கிறார்கள். முதலாவதாக, கூகுள் - தற்போது பார்க்கப்படுவது போல மிகவும் எச்சரிக்கையாக இருக்கும் நிறுவனமாக முன்பு இருக்கவில்லை. கூகுள் இதை ஏற்க மறுக்கலாம். ஆனால், அப்படி கவனமாக இருப்பது நல்லதுதான் என்று மற்றவர்கள் கூறுகிறார்கள். இரண்டாவதாக, அசல் சிந்தனைகளைக் கடந்து 'நானும் தான்' என்ற உணர்வுடன் கூகுளின் சில வகை தயாரிப்புகள் உள்ளன. பிற பெரிய கண்டுபிடிப்புகளைப் பார்க்கும் கூகுள், பிறகு தமது பொறியாளர்களின் துணையுடன் அதே போன்ற மேம்பட்ட தயாரிப்பை உருவாக்குகிறது. மூன்றாவதாக, வெற்றிகள் பல குவித்த சுந்தர் பிச்சைக்கும் கூகுள் கிளாஸ், கூகுள் பிளஸ், கூகுள் வேவ், பிராஜெக்ட் லூன் போன்ற பல தோல்விகள் இருந்துள்ளன. பரிசோதனையிலும் தோல்வியிலும் ஒன்றை கற்றுக் கொள்வதாக கூகுள் கூறுகிறது. கூகுளின் மிகப்பெரிய மனித குல பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சி பலவீனமடைந்து வருகிறது. உலகின் தலைசிறந்த கணிப்பொறி முனைவர்களைக் கொண்ட நிறுவனத்தால் உலகளாவிய பருவநிலை மாற்ற விளைவை மாற்றியமைக்க முடியுமா, புற்றுநோய்க்கு தீர்வு காண முடியுமா போன்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடைசியாக, மிகப்பெரிய ஆள் பலத்தை கொண்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சுந்தர் பிச்சைக்கு அனுதாபமும் கிடைக்கிறது. காரணம், கலாசார ரீதியிலான யுகத்தில் சிக்கியிருக்கும் கூகுளில் இப்போதும் பரவலாக அதன் ஊழியர்கள், சம்பளத்தில் ஏற்றத்தாழ்வு, தங்களின் அடையாளத்தை சுற்றிய சர்ச்சைகள் என பல காரணங்களை கூறி வெளியேறுகிறார்கள். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றும் கூகுளில், பெரும்பாலானவர்கள் தங்களுடைய கருத்துகளை மெசேஜ் போர்டுகள் எனப்படும் பலகையில் வெளிப்படுத்துகிறார்கள். உலக அளவில் பன்முகப்பட்ட நபர்களை தங்களுடைய அணியில் சேர்த்திருப்பதன் பெரும் பிரச்னையை உண்மையாகவே கூகுள் எதிர்கொண்டு வருகிறது. அதே சமயம், ஒரு நிறுவனமாக குறிப்பிட்ட பிரச்னைகளுக்காக கைகோர்க்கவும் சுந்தர் பிச்சையின் ஆளுமை தவறுவதில்லை. வேகம் பட மூலாதாரம்,SUNDAR PICHAI படக்குறிப்பு, சென்னையில் வாழ்ந்த காலத்தில் தமது சகோதரருடன் சுந்தர் பிச்சை (வலது) மேற்கூறிய அனைத்தும் கூகுள் நிறுவனம் வேகமாக முன்னேற வேண்டும் என்ற நபர்களின் கவலைகள். பன்முகப்பட்ட ஜனநாயக நாடுகளில் பலரும் இதுபோன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனம் வளரக்கூடாது என்றே நினைப்பார்கள். சிலிக்கான் வேலியில் நான் செலவிட்ட நேரத்தில் அந்த நிறுவனத்தின் வளர்ச்சி வேகம் குறைந்து வருவதை பார்க்கவே என்னால் முடியவில்லை. சீனாவின் இன்டர்நெட் மாடல் பற்றியும் அது ஏகாதிபத்தியம் மற்றும் மிகப்பெரிய கண்காணிப்புக்கு அடையாமாகிறதா என்று அவரிடம் கேட்டபோது, சுந்தர் பிச்சை கொடுத்த பதில் இதுதான்: "சுதந்திரமான மற்றும் வெளிப்படையான இன்டர்நெட் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறது." முக்கியமாக சீனாவை அவர் நேரடியாக குறிப்பிடாமல் பதில் அளித்தார். அதே சமயம், "எங்களுடைய எந்தவொரு தயாரிப்பும் சீனாவில் கிடைக்காது," என்று அவர் கூறினார். உலக அளவில் சட்டமியற்றும் உறுப்பினர்களும் ஒழுங்குமுறை அமைப்புகளும் வேகம் குறைந்த, வலுவற்ற மற்றும் மெதுவாக செயல்பட அவற்றின் இடத்தை பெருந்தொற்று பிடித்துக் கொண்ட நிலையில், ஜனநாயக மேற்கு நாடுகள், நம்மைப் போன்றோர் எதை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற முடிவை சுந்தர் பிச்சை போன்றோர் எடுக்க விட்டு விட்டதாகவே கருதப்படுகிறது. ஆனால், சுந்தர் பிச்சையைப் பொருத்தவரை, தனக்கு அந்த பொறுப்பு எல்லாம் இருக்க வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா?'கூகுள்' சுந்தர் பிச்சை: "சுதந்திரமான இன்டர்நெட் மீது அதிகரிக்கும் தாக்குதல்கள்" - BBC News தமிழ் 'கூகுள்' சுந்தர் பிச்சை: "சுதந்திரமான இன்டர்நெட் மீது அதிகரிக்கும் தாக்குதல்கள்" - BBC News தமிழ்
 25. ரஜினிகாந்த்: ``ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு; அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை’’ - அறிக்கை வெளியீடு! சென்னை ராகவேந்திரா மணடபத்தில் நடைபெற்றுவரும் இந்தச் சந்திப்பில் ரஜினி மக்கள் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்திவருகிறார். நீண்ட நாள்களுக்குப் பிறகு இன்று ரஜினி தனது மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்திவருகிறார். சென்னை ராகவேந்திரா மணடபத்தில் நடைபெற்றுவரும் இந்தச் சந்திப்பில் ரஜினி மக்கள் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்திவருகிறார். தேர்தலுக்கு முன்பு கட்சி தொடங்குவது தொடர்பாக இங்கு ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் பிறகு கட்சி தொடங்கப்போவதில்லை என அறிவித்தார் ரஜினிகாந்த். அதைத் தொடர்ந்து மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலர் வேறு கட்சிகளில் இணைந்தனர். 7/7 1/7 2/7 3/7 4/7 5/7 6/7 7/7 1/7 சிலர் ரஜினி தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனத் தெரிவித்தனர். இந்தநிலையில், இன்று மன்ற நிர்வாகிகளைச் சந்திப்பதற்கு முன்பாகப் பேசிய ரஜினி, `` `அண்ணாத்த’ ஷூட்டிங், கொரோனா, தேர்தல் அதன் பிறகு மெடிக்கல் செக்கப் இவற்றால் ரசிகர்களை, மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்திக்க முடியாமல் போனது. மக்கள் மன்றத்தின் பணி என்ன, அதைத் தொடரலாமா என்ற கேள்விகள் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் ரசிகர்களுக்கும் உள்ளது. எதிர்காலத்தில் நான் அரசியலுக்கு வருவேனா என்பது குறித்து ரசிகர்களிடம் குழப்பம் உள்ளது; எனவே, அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்பது குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசிக்கவிருக்கிறேன்!" எனத் தெரிவித்தார். ``வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கில்லை’’ என ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். ரஜினிகாந்த்: ``ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு; அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை’’ - அறிக்கை வெளியீடு! Rajini kanth Meets Rajini makkal mandram cadre (vikatan.com)
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.