Jump to content

chinnavan

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Posts

    2863
  • Joined

  • Last visited

Everything posted by chinnavan

  1. 2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் நாள் மட்டக்களப்பில் தனது வீட்டில் இருந்து காலை பணிக்குச் சென்றுகொண்டிருந்தபோது இவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் படுகொலை செய்யப்பட்டபோது அகவை 50 ஆகும். யாழ்ப்பாணம் நெல்லியடியில் பிறந்து வளர்ந்த ஜி.நடேசன் மட்டக்களப்பில் பல ஆண்டுகள் வாழ்ந்ததுடன், தென் தமிழீழ மக்கள் மீதும், அந்த மண் மீதும் அளப்பரிய பற்றுக்கொண்டிருந்தார். நீண்ட காலம் ஊடகப் பணி செய்து அனுபவம் பெற்றிருந்த இவர், ஊடகத்துறையில் முழு நேரமாகப் பணியாற்றாது விட்டாலும், ஒரு முழுநேர ஊடகவியலாளன் ஆற்றும் பணிக்கு ஈடாக, அல்லது அதற்கு மேலாகவும் தனது ஊடப்பணியை செவ்வனே ஆற்றி வந்தவர். இவரது பணிக்கு சாகித்திய விருது, சிறந்த ஊடகவியலாளர் விருது (2000), ஆளுநர் விருது போன்ற பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டமை, அவரது ஊடகப் பணிக்கு கிடைத்த சான்றுகளாகும். இவர் படுகொலை செய்யப்பட்ட பின்னர்கூட தனது தலைசிறந்த ஊடகப்பணிக்காக மதிப்பளிக்கப்பட்டவர். 20 வருடங்களுக்கு மேலாக கொழும்பு வீரகேசரி பத்திரிகையின் செய்தியாளராகவும், ‘நெல்லை நடேசன்’ என்ற பெயரில் பத்தி எழுத்தாளராகவும் இருந்த இவர், 1997ஆம் ஆண்டு முதல் லண்டனை தளமாகக் கொண்டியங்கிய ஐ.பி.சி வானொலி, கொழும்பு சக்தி தொலைக்காட்சி உட்பட ஏனைய பல ஊடகங்களுக்கு தனது இறுதி மூச்சுவரை பணியாற்றியவர்.மட்டக்களப்பு மக்கள் மட்டுமன்றி, இன அழிப்பை அதிகம் எதிர்கொண்ட தென் தமிழீழ மக்கள் மீதான இனப்படுகொலைகள் பற்றிய விபரங்களை விரல் நுனியில் வைத்திருந்த இவர், அந்த மக்கள் நினைவுகூரப்பட வேண்டும் என்பதிலும், அந்தப் படுகொலை பற்றிய விபரங்களை ஏனையவர்கள், குறிப்பாக இளையோர் அறிந்திருக்க வேண்டும் என்பதிலும் கரிசனை கொண்டிருந்தவர். இனப் படுகொலைகள் மட்டுமன்றி மட்டக்களப்பு பற்றியும், தென் தமிழீழம் பற்றியும் எப்பொழுது எந்தத் தகவல் கேட்டாலும் உடனே சொல்லும் ஆற்றல் கொண்டிருந்த இவர், சொல்வதுடன் நிறுத்தி விடாது அவற்றை எழுதி தொலைநகலில் அனுப்பியும் வைப்பார். ஏதாவது ஒரு படுகொலை அல்லது முக்கிய விடயங்கள் பற்றி ஊடகங்கள் கேட்க மறந்து விட்டால்கூட அதனை ஞாபகம் ஊட்டி உடனே அனுப்பி வைப்பார். எதனையும் நேருக்கு நேர் பேசும் இவரது நடைமுறை காரணமாக, உண்மையை அல்லது மக்களிற்கு பாதகமான விடயங்களைக் கடியும் இவரது குணாம்சம் காரணமாக, பல தடவைகள் பல்வேறு எதிர்புகளையும், இன்னல்களையும் எதிர்கொண்டவர். பல தடவைகள் நேரடியாகவும், தொலைபேசி ஊடகவும் கொலை மிரட்டல், அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்த போதிலும், ஏன் வீட்டின் மீது குண்டுத் தாக்குதல் (2000ஆம் ஆண்டு) இடம்பெற்ற போதிலும்கூட, அஞ்சாது தனது குடும்பத்துடன் இறுதிவரை மட்டு மண்ணில் இருந்து மக்களிற்காகக் குரல்கொடுத்த ஒரு சிறந்த ஊடகன். மட்டக்களப்பில் சிறீலங்கா படையினரது கட்டுப்பாட்டில் இருந்த நகர் பிரதேசத்தல் வாழ்ந்த போதிலும், அவ்வப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் நிருவாகக் கட்டமைப்புக்குள் ஏனைய தென் தமிழீழ ஊடகவியலாளர்களுடன் சென்று அங்குள்ள மக்களின் பிரச்சினைகளையும், கஸ்ரங்களையும் வெளிக்கொண்டு வந்தவர். பல இக்கட்டான காலங்களில்கூட இவர் போன்ற ஊடகவிலாளர்கள் (தற்பொழுது நாட்டில் வாழ முடியாது புலம்பெயர்ந்துள்ளவர்கள் உட்பட) மக்களிற்காகவும், அவர்களில் நல்வாழ்விற்காகவும், உரிமைகளுக்காவும் ஆற்றிய, ஆற்றிக்கொண்டிருக்கும் பணிகளை புலம்பெயர்ந்த மக்கள் மறந்துவிடக்கூடாது. நாட்டுப்பற்றாளர் என ஐய்யத்துரை நடேசன் அவர்கள் மதிப்பளிக்கப்பட்டதன் மூலம் அவர் ஆற்றிய பணியை நாம் எடைபோட முடியும். “நாட்டுப்பற்றாளர் ஐய்யாத்துரை நடேசன் அவர்களின் வீரவனக்கதில் தமிழீழ மக்கள்” ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஜி.நடேசன், மாமனிதர் சிவராம், மயில்வாகன் நிமலராஜன், லசந்த விக்கிரதுங்க என டிச்சர்ட் டி சொய்சா முதல் இன்றுவரை முப்பதிற்கும் மேற்பட்ட ஊடகர்கள் இதுவரை படுகொலை செயப்பட்டுள்ளனர். இவர்களைப் படுகொலை செய்தவர்கள் யார் என்று தெரிந்திருந்தும், அவர்கள் தண்டிக்கப்படவும் இல்லை. இழக்கப்பட்ட உயிர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவும் இல்லை. ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன் அவர்களுடன் (தொலைபேசி ஊடாக) இணைந்து பணியாற்றியதால் பெற்றுக்கொண்ட அனுபவத்திற்கும், ஊடக அறிவிற்கும் அவரது இந்த நினைவுநாளில் நன்றி தெரிவிக்கும் அதேவேளை, அவரது இழப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி, என இதயபூர்வ அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன். ஊடகத்துறைக்கு தன்னை அர்ப்பணித்த தந்தையை இழந்து துடிக்கும் நடேசன் அண்ணாவின் பிள்ளைகளுக்கும், கணவனை இழந்து துயரப்படும் அவரது மனைவிக்கும், மீண்டும் ஒரு தடவை ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்ளுகின்றேன். பரா பிரபா ஊடகவியலாளர் http://thaaitamil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/
  2. யாழ்ப்பாணம் அரியாலை ஆனந்தன் வடலி வீதியில் மயில்வாகனம் திலகவதி தம்பதிகளுக்கு 1975 ஆம் ஆண்டு யூன் மாதம் 29; அன்று ஆறாவது புதல்வனாக பிறந்தவன் தான் லெப் கேணல் சிந்து. இவனது இயற்பெயர் தயாளன். இவன் ஆரம்பக் கல்வியை அரியாலை ஸ்ரீபார்வதி வித்தியாசாலையில் பயின்று வந்தவன், இளமைக்காலத்தில் கல்வியில் கணிசமாகவும், விளையாட்டில் மிகச்சிறந்தும் விளங்கினான். இவன் பாடசாலை இல்ல விளையாட்டுகளிலும் சரி, கழக விளையாட்டுக்களிலும் சரி தனது தனித்திறமையை வெளிக்காட்டினான். தாச்சிப்போட்டி, கரப்பந்தாட்டம் போன்றவற்றில் தன் திறமையை பெரிதும் வெளிப்படுத்தினான். தயா இறங்கி தாச்சி மறித்தால் யாரும் கோடுதாண்டி போகமாட்டார்கள் என்பார்கள் அவனது நண்பர்களும் அயலவர்களும் அறிந்ததொன்று. எல்லோரது கரவொலியும் அவனுக்காகவே ஓங்கி ஒலிக்கும். கலைநிகழ்வுகளில் அதாவது தமது ஊர் சிறார்களின் கல்வி மேம்பாட்டிற்காக சுய முயற்சியில் உதயகுமாரி (வதனி) அவர்களால் நடாத்தப்பட்ட சரஸ்வதி கலையகத்தில் தானும் இணைந்து படித்துக்கொண்டு அவர்களால் அரங்கேற்றப்படும் கலைநிகழ்வுகளிலும் பங்குபற்றிச் சிறப்பித்தான். ஊரில் தனது அருணோதயா சனசமூகநிலையத்தின் கலைநிகழ்வுகளிலும் குறிப்பாக “ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி” போன்ற வரலாற்று நாடகங்களிலும் பங்குபற்றிச் சிறப்பித்தான். அது மட்டுமல்ல வதனி அவர்களின் தயாரிப்பில் உருவான ~நாடகம்ஹ என்ற நகைச்சுவை நாடகத்தில் அசட்டுப்பையனாக நடித்து அருணோதயா முன்றலில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான அத்தனை மனிதர்களையும் வயிறு குலுங்கிச் சிரிக்க வைத்தது அவன் கலையார்வத்துக்கு மட்டுமல்ல குருபக்திக்கும் எடுத்துக்காட்டு! அத்தோடு தனது கலைத்திறமையைப் பயன்படுத்தி இளைஞர்களுடன் சேர்ந்து வாசிகசாலை, கோவில் வளர்ச்சிக்காக கரோல் போன்றவற்றை நடாத்துவதன் மூலம் அவ்வூர் வளர்ச்சிக்காக தானும் பாடுபட்டான். பல பொதுப்பணிகளில் முன்னின்று செயற்பட்டான். இவ்வாறாக இவனது இளமைக்காலம் நகர்ந்து கொண்டிருந்தது. அவ்வப்போது இவனது குடும்ப பொருளாதார நிலை காரணமாக பாடசாலை செல்லும் வயதிலேயே அரியாலை தபாற்கட்டைச் சந்தியில் அமைத்திருந்த ‘மணியண்ணைஹ (அவன் அப்படித்தான் அழைப்பான்) கடையில் பணிபுரிந்து அதிகாலை வேளையில் பத்திரிகை போடுவதும் உதவி செய்வதுமென சிறிய பணம் ஈட்டி வந்தான். அந்தப்பணத்தில் சீட்டுப்பிடித்து சேகரித்து தன் தாயின் கழுத்தினை சிறிய பொன்னகை போட்டு மகிழ்வித்து மகிழ்ந்த நல்ல மகன் அவன். குடும்பநிலையை மனதில் கொண்டு தனது பெற்றோரின் வாழ்விற்காகவும் ஏனைய சகோதரர்களின் படிப்புக்காகவும் தனது கல்வியை பத்தாம் தரத்துடன் நிறுத்திவிட்டு குடும்ப சுமையை தானே பொறுப்பெடுத்து கடின உழைப்பிற்கூடாக நல்ல நிலைக்கு கொண்டுவந்தான். இக்காலகட்டத்தில்தான் பலாலியில் இருந்து வலிகாமத்தை நோக்கி சிங்கள இராணுவத்தால் 1995 ம் ஆண்டு “றிவிறேச’’ என்னும் பாரிய இனஅழிப்பு ஆக்கிரமிப்பு யுத்தம் அரங்கேற்றப்பட்டது. இதனால் பெருமளவில் மக்கள்; கொல்லப்பட்டு பாரியளவில் மக்கள்; இடம்பெயர்ந்தார்கள். அதில் பெரும்பாலான மக்கள் அரியாலைப் பிரதேசங்களில் அடைக்கலம் புகுந்தார்கள். குடும்பநிலை உணர்ந்து சிறுவயதிலேயே தனது குடும்பச் சுமையைச் சுமந்தவனால் மற்றவர்களின் துன்பம் புரியாதா என்ன? எனவே பலஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்து சிரமப்படுவதைப் பார்த்துக்கொண்டு இவனால் சும்மா இருக்கமுடியவில்லை. இரவு, பகல் பாராது வெயில் மழைபாராது அவர்களுக்கான உணவுகளை எடுத்துக் கொடுப்பதில் இருந்து அவர்களுக்கு தேவையான வசதிகளை அவ்வூர் அரசியல் துறையுடன் இணைந்து செய்தான். இந்த இராணுவ நடவடிக்கைக்கு எதிராக தமிழீழ விடுதலைப்புலிகளால் “புலிப்பாய்ச்சல்” என்ற பாரிய முறியடிப்புத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு பாரிய இழப்புக்கள் மத்தியில் அவனது இராணுவநடவடிக்கை கைவிடப்படுகிறது. இதை ஏற்றுக்கொள்ளாத சிங்கள ஏகாதிபத்தியம் மக்கள் செறிவாக வாழ்ந்த இடங்களில் விமானத் தாக்குதல்களை மேற்கொண்டது. அதன் உச்சக்கட்டம்தான் யாழ் சென்பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமானத்தாக்குதல். இதில் பல தமிழ்மக்கள் உடல் சிதறிப் பலியாகினார்கள். இதை இவன் பார்த்து கொதித்தெழுகின்றான். ‘‘இப்படி ஈவிரக்கமின்றி எம்மக்களைக் கொல்கிறதே சிங்கள இராணுவம்.. இதுதானே எங்களுக்கும்? இவன் இப்படியே எம்மை அழித்து தனது இன அழிப்பைச் செய்துமுடிப்பான்“ என்பதை உணர்கின்றான். இதைத் தடுக்கவேண்டும் எனின் போராடவேண்டும் என முடிவெடுக்கின்றான். தன்னை நம்பி வாழ்ந்துகொண்டிருக்கின்ற குடும்பத்தைவிட ஈவிரக்கமின்றிக் கொல்லப்படுகின்ற தமிழ்மக்களின் அவல நிலை இவனை ஒரு போராளியாக மாற்றுகிறது. 1995ம் ஆண்டு 8ம் மாதம் 8ம் திகதி நல்லூர் அரசியல்துறையில் போராட்டத்திற்காக தன்னை முழுமையாக இணைத்துக்கொள்கிறான். இதன் இடையே இவனுடன் பிறந்த அண்ணன் 2ம் லெப்ரினன் பழனி ஏற்கனவே போராட்டத்தில் இணைந்து வீரச்சாவைத் தழுவிக்கொண்டதால் இவன் வீடு செல்லுமாறு பணிக்கப்பட்டான். ஆனால் இவன் அன்பாக மறுத்து ஏனைய நண்பர்களுடன் பயிற்சிப்பாசறை நோக்கி நகர்கின்றான். மணலாறு மாவட்டத்தின் அதன் காட்டுப்பகுதியில் இயங்கிவந்த ஜீவன் பயிற்சி முகாமில் இம்ரான் பாண்டியன் படையணியின் கெனடி 01 என்ற பயிற்சிப் பாசறையில் புதுப் புலியாக புதுவேகம் எடுக்கின்றான். இவன் பயிற்சிக்காலங்களில் பயிற்சிகளிலும், கலைநிகழ்வுகளிலும,; விளையாட்டுகளிலும் திறம்படச் செயற்பட்டான். இக்காலகட்டப் பகுதியில்தான் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்காக, சிங்கள இராணுவத்தால் பல நாடுகளிடம் வாங்கிக் குவிக்கப்பட்ட இராணுவத் தளபாடங்களைப் பயன்படுத்தி “சூரியக்கதிர்’’ என்ற பாரிய இனஅழிப்பு, நில ஆக்கிரமிப்பு யுத்தம் எமது மக்களைக் கொன்று குவிக்க நடாத்திக் கொண்டிருக்கப்பட்டது. இதனது எதிர்ச் சமரிற்காக இவனது பயிற்சிப்பாசறையில் இருந்து திறம்படச் செயற்பட்ட போராளிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதில் இவனும் தெரிவுசெய்யப்படுகிறான். ஆகவே மீண்டும் யாழ் களமுனை நோக்கி ஒரு புதுப்புலியாக கன்னிச்சமரை T56-2 என்ற AK ரகத்துப்பாக்கியுடன் எதிர்கொள்ளச் செல்கின்றான். இவர்களைச் சமருக்காக விடப்பட்ட இடம் யாழ் பல்கலைக்கழகம். அப்போது இவன் “டேய் மச்சான் அம்மா எல்லோரும் அடிக்கடிச் சொல்வார்கள் நீ படித்து கம்பஸ் போகவேண்டும் என்று ஆனால் அதை சிங்களவன் செய்யவிடவில்லை இப்ப இயக்கம் கொண்டுவந்து விட்டிருக்கு‘‘ எனச் சிரித்தவாறே சொன்ன அவன் ‘‘இதை சிங்களவனிடம் விட்டிடக்கூடாது‘‘ என ஆவேசத்துடன் சொல்லிமுடித்தான். அதன் ஆவேசம் அவனது கன்னிச்சமரில் ஒரு முதிர்ந்த கள அனுபவமுள்ள போராளியைப் போல் களமாட வைத்தது. இவனது திறமையை இவனது பொறுப்புநிலை அதிகாரிகள் கண்டு வியந்தனர். யாழ்மாவட்டம் முற்றுமுழுதாக நில ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் வரை நின்று திறம்படக் களமாடினான். பின் பயிற்சிகளை நிறைவுசெய்வதற்காக மீண்டும் பயிற்சிமுகாம் வந்து சேர்ந்தான். யாழை இழந்தபின் முல்லைத்தீவைக் கைப்பற்றுவதற்கான சமரிற்கு இவனுக்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் போர்த்தந்திரங்களில் ஒன்றான புதிய தாக்குதல்களில் புதிய மூலோபாயமாக புதியஇராணுவ வழங்களைப் பயன்படுத்தவது வழமை ஆகவே இத்தாக்குதலின் மூலோபாய வளங்களில் ஒன்றாக புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்ட 120MM (5இஞ்சி) எறிகணைகளைப் பயன்படுத்தத் திட்டமிடுகிறார். அந்த வகையில் இம்ரான் பாண்டியன் படையணியின் 120MM எறிகணை அணிகளுக்கு இரகசியம் காப்பதுடன் செயற்திறன் மிக்க போராளிகள் வரிசையில் இவனும் தேர்ந்தெடுக்கப்படுகிறான். அதன்படி ஓயாதஅலைகள் 01 நடவடிக்கையில் 5இஞ்சியுடன் நின்று சிறப்புடன் களமாடுகிறான். இவனது களத்திறமை இவனை ஒரு 5இஞ்சி அணிக்கு பொறுப்பாளராக மாற்றுகிறது. இவன் அவ்வணிக்கு பொறுப்பாளராக சிறிது காலம் கடமையாற்றிக் கொண்டிருக்கும் போது விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்காக இம்ரான் பாண்டியன் படையணியின் கவச அணிக்குள் உள்வாங்கப்படுகிறான். இவனிடம் அசாத்தியதிறமை இருப்பதை இனங்கண்ட பொறுப்பதிகாரியால் 23MM கனோன் வகை ஆயுதம் பொருத்தப்பட்ட தென்னாபிரிக்க நாட்டுத்தயாரிப்பின் விசேட பவள் கவச வாகனத்திற்கு சாரதியாக நியமிக்கப்படுகிறான். 106MM(RCL) பின்னுதைப்பற்ற ஆயுதங்களுடனும் களமாடினான். போராட்டத்தின் அடுத்தகட்ட எந்தவொரு வளர்ச்சியிலும் தலைவர் அவர்களின் நேரடிப்பார்வை இருக்கும். அந்தவகையில் பவள் கவச அணியின் செயற்திறனை நேரடியாக பார்வையிட்டபோது அவ்வணிப் போராளிகள் தலைவரால் பாராட்டப்படுகிறார்கள.; அந்த அணியில் இவனும் ஒருவனாக இருந்தான். 23MM ஆயுதம் பொருத்தப்பட்ட கவச வாகனத்தை மிகவும் சாதுரியமாக ஓட்டிச் சென்று ஆயுதச் சூட்டாளருக்கு ஏற்ற வகையில் எந்தக் கடினமான பிரதேசத்திலும் சொல்கிற இடத்தில் கொண்டுசென்று நிறுத்துவதுடன் தனது வாகன இருக்கையில் இருந்தபடி தனது சிறுரக ஆயதத்தால் களமாடி மீண்டும் பவள்கவசவாகனத்தை தனது இருப்பிடம் நோக்கி கொண்டுவந்து சேர்ப்பான். இவ்வாறு மன்னார் களமுனைகளில் பல தாக்குதல்களிலும் nஐயசிக்குறுவுக்கு எதிரான பல எதிர் சமர்களிலும் பங்கு கொண்டான். இவனது வாகனம் செலுத்தும் திறமையை மட்டுமல்ல போரிடும் ஆற்றலையும் கண்ட பொறுப்பாளர்கள்;, எம்மால் பூனகரி “தவளைப்பாய்ச்சல்”; நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட T55 டாங்கிக்கு, இவனை சாரதியாக நியமிக்கின்றார்கள். அதன் பின் அவன் சாரதியாக மட்டுமல்லாது டாங்கியின் சகல பகுதிகளையும் கற்றுத் தேறுகிறான். இக்காலகட்டத்தின் போது எதிரியின் குகைக்குள் உள்நுளைந்து தாக்குதலை மேற்கொள்ளும் கரும்புலிகள் அணிக்கும், விசேட அணி போராளிகளுக்கும் ஒரு டாங்கியை கைப்பற்றினால் அதை எவ்வாறு ஓட்டிக்கொண்டு வருவது தொடர்பான பட்டறிவுகளையும் வழங்கினான். இவனது விடுதலைப்போராட்ட வாழ்க்கையில் டாங்கியோடு களமாடிய சமர்களே அதிகம். ஓயாத அலைகள் 02,03,04 ,போன்ற எமது வெற்றிச் சமர்களில் எல்லாம் டாங்கியைக் கொண்டு சென்று எதிரியை திகைப்பூட்டி கொன்றான். அதே போல் எதிரியின் ராங்குகள் எம்மவர்களால் தாக்கியழிக்கப்பட்டால் அவ்விடத்திற்கு சிந்துவும் சென்றுவிடுவான். ஏனெனில் எங்களது ராங்கிற்கு ஏதாவது பாகங்கள் களற்றமுடியுமா என பாhர்த்து அதை எவ்வளவு எதிரியின் தாக்குதலுக்கும் மத்தியிலும் களற்றிவருவான். இவ்வாறு தனது பொறுப்பாளருடன் சேர்ந்து தங்களது கவச அணியை எவ்வளவுதூரம் விடுதலைப் போராட்டத்தில் வளர்க்கமுடியுமோ அந்தளவுக்கு வளர்த்தும் பாதுகாத்தும் வந்தான். ஓயாத அலைகள் 03 நடவடிக்கையின் போது பரந்தன் இரசாயனத் தொழிற்சாலைக்குள் பதுங்கியிருந்து தாக்குதலை மேற்கொண்ட இராணுவத்தின் மீது நாம் டாங்கித் தாக்குதலை மேற்கொண்டபோது அவ்விடத்தில் டாங்கி புதைந்து விடுகிறது. அப்போது எதிரிக்கும் டாங்கிக்கும் இடையே சொற்ப தூரம்தான் இருந்தது. எதிரியும் பலவழிகளில் எமது டாங்கியை அழிக்க முயன்றான். அவற்றிற்கெல்லாம் எதிராக களமாடிக்கொண்டு சக போராளிகளுடன் இந்த டாங்கிக்கு ஏதாவது நடப்பதாக இருந்தால் தனது வீரச்சாவிற்குப் பிறகுதான் நடக்கும் என அவ்விடத்தில் இருந்து நகராது பலமணி நேர சிரமத்தின் மத்தியில் அந்த ராங்கியை பாதுகாப்பாக ஏனைய போராளிகளுடன் வெளியே எடுக்கிறான். அந்த அளவிற்கு தனது உயிரிலும் மேலாக தனது டாங்கியை நேசித்தான். காலை எழுந்ததும் பிள்ளையாரைக் கும்பிட்டுத்தான் ஏனைய கடைமைகளைச் செய்வான். நான் இங்கு பிள்ளையார் என்று கடவுளைக் கூறவில்லை டாங்கிக்கு எம்மவர்களால் வைக்கப்பட்ட பெயர்தான் பிள்ளையார். இவ்வறாக இவன் பல சமர்களை சந்தித்த பின்பும் கடலோரத்தில் எதிரியின் கடற்கலங்களின் அச்சுறுத்தல்கள் அதிகரிக்கவே கடற்கரைப் பாதுகாப்பிற்காக ஏனைய காலங்களில் கண்விழித்து ராங்கியுடன் கடமையாற்றினான். இக்கால கட்டத்தில்தான் இவனைத் திருமணம் செய்யுமாறு பணிக்கப்படுகிறது. அதன்படி 18.05.2005 அன்று திருமணம் செய்து கொள்கிறான். இதன் பின் எம்மவர்களின் பாரிய தாக்குதல் திட்டத்திற்காக மாசார்பகுதியில் நிலைகொண்டிருந்த போது டாங்கியைப் பயன் படுத்துவதற்காக முகமாலையில் எதிரியின் முன்னணிக் காவலரணைப் பார்வையிட்டு வரும் வழியில் இவனையும் இவனைப் போன்ற பலரையும் டாங்கியணிக்காக வளர்த்தெடுத்த தளபதியும் டாங்கியணியின் முதல் மூத்த உறுப்பினரும், இம்ரான் பாண்டியன் படையணியின் தளபதியுமான லெப்.கேணல் பார்த்திபன் என்ற தான் நேசித்த ஒரு தளபதியை விபத்தின் போது இழக்கின்றான். டாங்கியணிக்காக வளர்த்தெடுத்த தளபதியும் டாங்கியணியின் முதல் மூத்த உறுப்பினரும், இம்ரான் பாண்டியன் படையணியின் தளபதியுமான பார்த்திபன். லெப் கேணல் சிந்து. ஒரு விடுதலை வீரன் வீழ்கின்றபோது அவனது கடமைகளை ஏனைய போராளிகள் தாங்குகின்றார்கள். அதே போன்று அத்தளபதி விட்டுச் சென்ற கடமைகளை செய்து முடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இரவு பகல் பாராது தனது புதிய குடும்பத்திற்கும் மேலாக கடமையில் தீவிரம் காட்டுகிறான். இதற்காக எம்மைக் குறிவைத்துக் காத்திருக்கும் சூனியப் பிரதேசத்திற்குள்ளும் சென்றுவந்தான். சத்தம் கேட்டால் உயிர் போகும் என்று அறிந்திருந்தும் எம்மவர்களால் தாக்கி சேதமாக்கப்பட்டு எம்மாலும் எடுக்கமுடியாமலும் அவனாலும் எடுக்கமுடியாத இடத்தில் இரவில் சென்று சத்தம் இன்றி ஏனைய போராளிகளுடன் மிகச் சாதுரியமாக பாகங்களைக் களற்றி வந்தான். இவனது திறமையையும் ஆர்வத்தையும் கண்டுகொண்ட சிறப்புத்;தளபதி இவனை கவச அணியின் எமது தாக்குதல் உத்திக்கு ஏற்ப தயார்ப்படுத்தப்படும் கவசவாகனப் பகுதிக்கும், அதன் திருத்தப் பகுதிக்கும் பொறுப்பாக நியமிக்கின்றார். VMB கவசவாகனத்தில் ஏற்பட்டுள்ள பிழைகளைத் திருத்தி அதில் உள்ள ஆயதத்தை தாக்குதலுக்காக தயார்ப்படுத்தி எமது தேசியத்தலைவரின் விடுதலைப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கவேண்டும் எனத் துடித்தான். அதற்காக பலதரப்பட்டவர்களை அணுகி பலதரப்பட்ட பொருட்களைத் தானே தேடி அதை செய்துமுடித்தான். அதே நேரம் பவள் கவசவாகனத்தில் விசேடவகை கனோன் கனரக ஆயுதத்தை பொருத்துவதற்கு ஏற்றவகையில் அதை வடிவமைத்து அதில் கனரகஆயுதத்தைப் பூட்டி அதைத் தாக்குதலுக்காக கொடுக்கும் பணியை பொறுப்பேற்று அதை பலதரப்பட்ட படையணிகளின் போராளிகளுடன் அணுகி திறம்படச் செய்துமுடிக்கிறான். அப்போதுதான் இவனது நிர்வாகத்திறமையையும், ஆளுமையையும் நாம் கண்டுகொள்கின்றோம். இக்காலகட்டத்தில்தான் பல நாட்டு உதவிகளுடன் எம்மை அழிப்பதற்கான பாரிய யுத்தத்தை எதிரி மன்னாரில் இருந்து தொடங்குகின்றான். இதன்போது எமது பிரதேசங்கள் இனஅழிப்பு ஆக்கிரமிப்பு யுத்தம் அரங்கேற்றப்பட்டது. இதனால் பல இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தார்கள். இதனால் மக்கள் ஒரு நேர உணவுக்குக்கூட அவதிப்பட்டார்கள். இதனைப்பார்த்து மிகவும் வேதனைப்பட்டான். இவன் தன்னிடம் இருப்பவற்றை மக்களுக்குக் கொடுத்தான். இதன் போது தொடர்ந்து டாங்கியுடனும், MBயுடனும் இவ்வினவெறி இராணுவத்திற்கு எதிராகப் போரிட்டான். அதே நேரம் எதிரியால் மேற்கொள்ளப்படும் விமானத்தாக்குதலில் இருந்தும், எறிகணைத்தாக்குதலில் இருந்தும் எமது கவசவாகனங்களை மிகந்த சிரமங்களுக்கும் மத்தியில் இயன்றளவு ஏனைய போராளிகளுடன் சேர்ந்து பாதுகாத்துவந்தான். இராணுவம் பல நாட்டு உதவி ஆலோசனைகளுடன் பலமுனைகளில் நவீன இரசாயன ஆயுதங்களுடன் எமது மக்களைக் கொன்று எமது சமர்க்களங்களை புதுக்குடியிருப்புவரை பின்னகர்த்தியிருந்தான். இங்கு நாம் எது செய்தாலும் எதிரியின் வேவு விமானம் கண்டுவிடும் அப்படியிருந்தும் எதிரியின் வேவுவிமானங்களுக்குத் தெரியாத வகையில் டாங்கியை சாதுரியமாக நகர்த்தி புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு திரும்ப கொண்டுவந்துவிடப்பட்ட இடம் எதிரிக்கு ஏதோ ஒருவகையில் தெரியவந்து அவ்விடத்தில் கிபீர், மிக்27 ஆகிய விமானத் தாக்குதல்கள் மற்றும் எறிகணைத்தாக்குதலால் டாங்கி மறுபக்கம் கவிழ்ந்து அச்சதுப்புநிலத்தில் புதைந்துவிடுகிறது. இதை எப்படியாவது எடுத்துவிடவேண்டும் என்று இராணுவம் டாங்கியை அண்மிக்கும் வரை ஊணுறக்கமின்றி இடருற்றான். என்ன செய்யமுடியும் அதை வெளியே எடுப்பதற்கான வசதி அப்போது எம்மவர்களின் கைகளில் இருக்கவில்லை எனவே அதை தகர்ப்பது என தலமை முடிவெடுக்கின்றது. இதை கேள்வியுற்றவன் அழுதே விட்டான். இதை தன்னால் பார்க்கமுடியாது என சக போராளிகளிடம் விட்டுவிட்டு தனது மற்ற வாகனமான VMB யுடன் முள்ளிவாய்க்கால் செல்கின்றான். அங்கே VMB யை எங்கே விடுவது. நகரமுடியாதஅளவுக்கு மக்கள் கூட்டம். இதை எங்கு விட்டாலும் அந்த மக்களுக்கும் ஏதாவது நடந்துவிடும் என்பது அவனுக்கு தெரியும். எனவே தனது குடும்பத்துடனேயே வைத்திருந்தான். இதை எதிரி வேவு விமானம் கண்டால் நிச்சயம் தாக்கியழிக்க முற்படுவான். இதனால் சுற்றியிருக்கிற மக்களுக்கு பாதிப்புவரும் என்பதால் மிகவும் அவதானமாக இருந்தான். இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சிறிலங்கா இராணுவம் எமது மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து சரமாரியான முப்படை தாக்குதலினால் பல ஆயிரம் மக்களை கொன்றது. இவ்வாறான இராணுவத்தின் தாக்குதலில் இவனும் இவனது குடும்பத்தில் இரண்டு பேரையும் இழக்கின்றோம். அதுமட்டுமல்லாது ஏனையவர்கள் படுகாயமடைந்து யாரை யார் காப்பாற்றுவது என தெரியாது தவித்;தார்கள். இவ்வாறக தான் நேசித்த மக்களுடனும், உறவுகளுடனும் இந்த கவசஅணி வீரன் விதையாகின்றான். ஒரு ஆண்மகவுக்கும் பெண்குழந்தைக்கும் தந்தையான சிந்து தன் இறுதிக்குழந்தையுடன் அதிக நாட்கள் கூட வாழக் கிடைக்கவில்லை. 11.05.2009 அன்று எதிரியின் எறிகணைத்தாக்குதலில் இந்த கவசப் புலி வீரச்சாவைத்தழுவிக் கொள்கிறான். தன்வலியைவிட மற்றவர் வலிகண்டு தன்குடும்பம், சுற்றம், சூழல் துறந்து இவன் போன்றவர்களது போராட்டவாழ்க்கை எமது அடுத்தகட்ட போராட்டத்திற்கான திறவுகோலாகப் போடப்பட்டிருக்கிறது. நிச்சயம் இவன் போன்ற ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் கனவுகள் நனவாகும் வரை மீண்டும் மீண்டும் எழுவோம் என உறுதியெடுத்துக் கொள்வோம். http://www.sangathie.com/news/19741/64//d,fullart.aspx
  3. ஈழத்தின் புகழ்மிக்க ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் 7ம் ஆண்டு நினைவாக’ ஈழத்து ஊடகப் பரப்பில் எத்தனையோ ஊடகவியலாளர்கள் தமது பங்களிப்பை தாம் சார்ந்த சமூகத்துக்கும் ஊடகத்துறைக்கும் வழங்கியுள்ள போதிலும், சிவராமுக்கு இணையாக எவரும் இல்லையென்றே கூறுமளவிற்கு அவரது வெற்றிடம் அவர் எமைவிட்டுப் பிரிந்து ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் இன்னமும் நிரப்பப்படாமலேயே உள்ளது. தனது சொந்த நலத்தைப் பொருட்டாக மதிக்காமல் தான் சார்ந்த சமூகத்தின் நலத்தைப் பெரிதாகக் கருதிச் செயற்பட்டமையினாலேயே அவர் சக ஊடகவியலாளர்களால் மட்டுமன்றி, தமிழ்த் தேசியத்தின்பால் வாஞ்ஞை கொண்ட அனைவராலும் நினைக்கப்படும், மதிக்கப்படும் ஒருவராகத் திகழ்கின்றார். இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் கூற்றில் சிறி லங்காவில் இன முரண்பாடு உச்சத்தைத் தொட்டபோது அகிம்சையும் வாய்ப் பேச்சும் தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தராது என்ற புரிதல் இளைஞர் மத்தியிலே உருவாகி அவர்கள் ஆயுதப் போராட்டத்தைத் தமது மார்க்கமாகத் தேர்ந்தேடுத்த போது இன உணர்வு மிக்க ஒவ்வொரு தமிழ் இளைஞனும் விடுதலைப் போராட்டத்தோடு தன்னை இணைத்துக் கொண்டான். பார்வையாளனாக இருப்பதைவிட பங்காளியாக மாறுவதே மேல் என்ற கொள்கையுடன் தனது வரலாற்றுப் பாத்திரத்தை உணர்ந்து சிவராம் எடுத்த முடிவும் அவர் பயணித்த பாதையில் அவருக்குக் கிட்டிய அனுபவமும், அதனால் சம்பாதித்துக் கொண்ட அறிவுமே பிற்காலத்தில் ஊடகத்துறையில் அவர் தனக்கெனத் தனியான முத்திரை பதிக்க பெரிதும் உதவியது. போராளியாக இருந்த காலத்தில் கூட பத்தோடு பதினொன்றாக இருந்துவிட்டுப்போக அவர் விரும்பவில்லை என்பது அவரது முன்னாள் தோழர்கள் தற்போதும் நினைவு கூரும் ஒரு விடயம். இலக்கியத் துறையின்மீது இருந்த அதீத ஈடுபாடு காரணமாகவே பொதுவாழ்வுக்குள் பிரவேசித்த சிவராம் ஆரம்பம் முதலே கடைப்பிடித்துவரும் தீவிர விமர்சனக் கண்ணோட்டம் அவரது பிற்கால எழுத்துக்களில் நன்கு பரிணமித்தமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தில் சிவராமின் பங்கு எனும் தலைப்பிலே ஆய்வு செய்யப் புறப்படும் ஒருவர் சிவராமை வகைப்படுத்துவதில் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்வார் என்பது நிச்சயம். ஏனெனில் சிவராமின் ஆளுமையும் இயங்குதளமும் அத்துணை விசாலமானது. ஒரு ஊடகவியலாளராகவே சிவராம் வெளிச்சத்துக்கு வந்தார். ‘தராகி’ என்ற புனைபெயருடன் சிங்கள இனத்துவேசத்தைக் கக்கும் பத்திரிகை என வர்ணிக்கப்படும் ‘தி ஐலண்ட்’ பத்திரிகையிலேயே அவர் பத்தி எழுத்தாளராக அறிமுகமானார். தீவிரத் தமிழ்த் தேசியவாதியான சிவராம் ஒரு சிங்கள இனவெறிப் பத்திரிகையில் எழுதுவதனூடாகத் தனது எழுத்துலக வாழ்வை ஆரம்பித்தமை ஒரு முரண்நகையே. ஆரம்ப காலங்களில் சிவராமின் எழுத்து கவனிக்கப்படாது விடப்பட்ட போதிலும் தான் சார்ந்த விடுதலை இயக்கமான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துடனான தொடர்புகளைத் துண்டித்த பின்னர் அவரின் எழுத்துக்களில் புதிய உத்வேகமும் சடுதியான மாற்றமும் ஏற்பட்டன. ஆனால், சிவராமின் கருத்தின்படி 90 களின் நடுப்பகுதியில் அவர் வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு மேற்கொண்டிருந்த பயணமே அவரின் பிற்கால வாழ்க்கைக்கான செல்நெறியைத் தீர்மானித்தது எனலாம். இடதுசாரிக் கருத்துக்களில் நம்பிக்கை கொண்டவராக அறியப்பட்ட சிவராம் தீவிர தேசியவாதத்தைக் கைக்கொள்ளக் காரணமான இந்த பயணத்தின் விளைவு சிவராமுடைய எழுத்தின் போக்கை மட்டுமன்றி அன்றைய காலகட்டத்தில் பணியாற்றிய பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்களின் போக்கையும் மாற்றியமைத்தது. தமிழர்களின் போராட்டம் ஒரு ‘நியாயமற்ற, காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதம்’ எனச் சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் சிங்கள மக்களுக்குப் போதித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழர்களின் போராட்ட நியாயத்தையும், அவர்களுக்கு உரிமைகள் வழங்கப்படுவதால் மாத்திரமே இலங்கைத் தீவில் அமைதி நிலவும் என்ற யதார்த்தத்தையும் தர்க்க நியாயங்களோடு சிங்களவர்களுக்கும் புரியக் கூடியவாறு சிவராம் ஆங்கிலத்தில விளக்கினார். எவருமே துணிந்து செய்ய முன்வராத ஒரு காரியத்தை கொழும்பில் இருந்து கொண்டே செய்ய முன்வந்த சிவராமின் துணிச்சல் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. பத்திரிகைகளில் அவர் எழுதிய கட்டுரைகளுக்கு அப்பால் சிங்களத் தேசியம் பேசிய ஊடகவியலாளர்களுடனும் அவர் திரைமறைவில் தர்க்கிக்க வேண்டியிருந்தது. தான் பத்திரிகைகளில் முன்வைத்த கருத்துக்களுக்காக நேரில் கேள்வி எழுப்பப்பட்ட போதுகளில் அவற்றுக்கு அவர் ஆணித்தரமாகப் பதில் கூறவேண்டி ஏற்பட்டது. தனது கருத்துக்களுக்காக சிங்கள ஊடகவியலாளர்களுடன் மோதவேண்டிய சூழல் உருவான போதிலும் அவர்களுடனான தொழில்முறை உறவை வளர்த்துக் கொள்ள சிவராம் தவறவில்லை. அது மட்டுமன்றி சிங்களப் பேரினவாதத்தை எதிர்த்து நிற்கும் மாற்றின ஊடகவியலாளர்களுடனும் பல்வேறு தளங்களில் அவர் கரங் கோர்த்துக் கொண்டார். மறுபுறம், தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கிய பல பிரச்சினைகள் சிங்கள ஊடக அமைப்புக்களால் ‘கண்டு கொள்ளாமல்’ விடப்பட்டபோது ‘இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்’ என்ற அமைப்பை உருவாக்குவதில் முன்னோடியாக நின்றும் செயற்பட்டார். ஊடகவிலாளர்கள் தமது ஊடகப் பணிக்கு அப்பால் எத்தகைய சமூகப்பணியை ஆற்ற முடியும் என்பதற்கு இலக்கணம் வகுத்த சிவராம் செய்தி அளிக்கை தொடர்பிலும் ஒரு புதிய மாதிரியை அறிமுகஞ் செய்தார். அவரால் தொடங்கப்பட்ட ‘தமிழ்நெற்’ இணையத்தளம், ‘நோர்த் ஈஸ்ரன் ஹெரல்ட்’ ஆங்கில வாரப்பத்திரிகை ஆகியவை எழுத்தில் புதிய மாதிரியையும், பரிபூரண அளிக்கையின் பெறுமானத்தையும் அறிமுகஞ் செய்தன. ஊடகவியலாளராக சிவராம் மேற்கொண்ட பணிகளுக்கு அப்பால் ஒரு தமிழ்த் தேசியவாதியாக அவர் மேற்கொண்ட துணிகரச் செயற்பாடுகளே அவரது உயிருக்கு உலை வைத்தது. தமிழ் மக்களின் தலைமை அரசியற் சக்தியாகத் திகழ்ந்த விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடம் அழிக்கப்பட்டதன் பின்னான இன்றைய காலகட்டத்தில் தமிழர்களின் அரசியல் தலைமையை ஏற்றுச் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிவராமின் சாதனைகளுள் ஒன்று எனக் கூறினால் அது மிகையாகாது. ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம் தன்னளவில் மகத்தான சாதனைகளைப் படைத்த போதிலும் அது மக்கள் சார்ந்த போராட்டமாகப் பரிணமிப்பதில் சில பின்னடைவுகள் இருந்தே வந்தன. எனினும் சிவராமைப் போன்றோரின் முயற்சிகள் இப் போராட்டத்திற்கு குடிமக்கள் சார்பு முகத்தைத் தந்திருந்தது. பொங்குதமிழ் போன்ற எழுச்சி நிகழ்வுகளாகட்டும், கடையடைப்பு போன்ற எதிர்ப்பு நிகழ்வுகளாகட்டும் அவற்றை ஏற்பாடு செய்வதிலும் நேரடியாகச் சென்று பங்கெடுத்துக் கொள்வதிலும் அவை தொடர்பிலான செய்திகளை அளிக்கை செய்வதிலும் சிவராம் எடுத்துக் கொண்ட சிரத்தை அபரிமிதமானது. இது தவிர, இலங்கைத் தீவில் கொடூரமான சட்டங்களே அமுலில் இருந்த போதிலும் அவை குடிமக்களுக்கு வழங்கியுள்ள அற்ப சொற்ப பாதுகாப்பு நெறிமுறைகளை அறிந்து கொண்டு அவற்றை மக்களுக்குத் தெரியப்படுத்துவதன் ஊடாக, கொடுமைகளையும் அநீதிகளையும் தட்டிக் கேட்கும் வல்லமையுள்ள ஒரு சமூகத்தைப் படைக்க வேண்டும் என்ற ஆவல் சிவராமிடம் நிறையவே இருந்தது. அதன் விளைவாக மட்டக்களப்பில் உதயமான தமிழர் மறுமலர்ச்சிக் கழகம் செயற்பாடுகளில் குறைவாகவே வெளிப்படுத்தப்பட்ட போதிலும் கழகத்தின் அறிக்கைகள் சிவராமின் கைவண்ணத்தில் அர்த்தம் பொதிந்தவையாகவும் அறிவூட்டக் கூடியவையாகவும் அமைந்திருந்தமையை மறுப்பதற்கில்லை. ‘ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைத் திருப்பிக் காட்டு’ என்ற தத்துவத்தில் சிவராமுக்கு என்றுமே நம்பிக்கை இருந்ததில்லை. வன்முறைக்கு வன்முறையே தீர்வு என்பதே அவரின் நிலைப்பாடு. படைத்துறை வெற்றிகளே தமிழர்களின் நியாயங்களை எதிரிக்குப் புரிய வைக்கும் என்பதில் அவர் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார். சிவராமின் வகிபாகம் தமிழர் அரசியலைப் பொறுத்தவரை எவ்வளவு காத்திரமானதாக விளங்கியதோ, அவ்வளவுக்கு அவ்வளவு எதிரிகளைப் பொறுத்தவரை அது அவர்களது செயற்பாடுகளுக்குப் பெருந்தடையாக விளங்கியது. தனது உயிருக்கு இருந்த அச்சுறுத்தல்கள் பற்றி நன்கு தெரிந்து வைத்திருந்த சிவராம் தனது பாதுகாப்பு விடயத்தில் கூடுதல் அக்கறை கொண்டிருந்தார். ஆனாலும் கூட அவரது உயிர் கொடூரமாகப் பறிக்கப்பட்டு விட்டது. சிவராமைக் கொலை செய்வதன் ஊடாக அவரின் சிந்தனைகளை தமிழர் மத்தியில் இருந்து அகற்றிவிட முடியும் எனக் கொலைகாரர்கள் மனப்பால் குடித்தனர். ஆனால், சிவராமின் எழுத்துக்கள் இன்றும் உயிர்வாழும் நிலையில் அவரைக் கொலை செய்தவர்களுக்கு சிவராமின் மரணம் ஒரு தோல்வியே அன்றி வேறில்லை. http://thaaitamil.com/?p=17295
  4. அன்னை பூபதி என்று அழைக்கப்படும் தாய் இந்தியப் படைகளுக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நாள். யார் இந்த அன்னைபூபதியென்று சுருக்கமாகப் பார்க்கும் பதிவிது. இப்பதிவை எழுதுவதற்கு நட்சத்திரக் கிழமையில் எனக்கு வாய்ப்புக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி. சில சங்கடங்களைத் தாண்டி எழுதப்பட்டே ஆகவேண்டிய பதிவிது.பூபதியம்மாவின் கணவர் பெயர் கணபதிப்பிள்ளை. பத்துப்பிள்ளைகளின் தாய். மட்டு – அம்பாறை அன்னையர் முன்னணியின் துடிப்புள்ள முன்னணிச் செயற்பாட்டாளர். புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் சண்டை நடந்துகொண்டிருந்த காலம். இந்தியப்படை கிட்டத்தட்ட மக்கள் வாழிடங்கள் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டிருந்த காலம். அந்த இடைபட்ட காலத்துள் நடந்த கொடுமைகளை விவரிக்கவோ விளங்கப்படுத்தவோ தேவையில்லை. இந்நிலையில் தான் இந்தியப்படைக்கெதிராக குரல் கொடுக்க, சாத்வீக போராட்டங்களை நடத்த மட்டு-அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி முடிவு செய்தது. அவர்கள் இரண்டு கோரிக்கையை வைத்து இந்திய அரசுக்கெதிராக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். அவையாவன, 1.உடனடியாக யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்த வேண்டும். 2. புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும். அன்னையர் முன்னணியின் கோரிக்கைகள் எதுவுமே இந்தியப்படையினரின் கவனத்தையீர்க்கவில்லை. ஆனால் தமிழ்ப் பெண்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் அணிதிரண்ட நிலையில் 1988ம் ஆண்டு ஜனவரி 4ம் திகதி அன்னையர் முன்னணியைத் திருமலைக்குப் பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கமைய சென்ற அன்னையர் முன்னணிக் குழுவினருடன் இந்தியப் படையின் உயர் அதிகாரியான “பிரிக்கேடியர் சண்டேஸ்” பேச்சுக்கள் நடத்தினார். இந்தப் பேச்சுக்களின்போது அன்னையர் முன்வைத்த இரு கோரிக்கைகளையுமே மீளவும் நினைவூட்டினர். ஆனால் கோரிக்கைகள் எதுவும் நிறை வேற்றப்படவில்லை. போராட்டம் தொடர்ந்து நடந்தது. இந்நிலையில் 1988 ம் ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதி அன்னையர் முன்னணியின் நிருவாகக் குழுவினரை இந்தியா பேச்சு வார்த்தைக்கு மீண்டும் அழைத்தது. இதற்கமைய கொழும்பு சென்ற அன்னையர் முன்னணியின் நிருவாகக் குழுவினருடன் பேச்சுக்களை மேற்கொண்ட இந்திய அதிகாரிகள் விடுதலைப் புலிகள் இந்தியப் படையிடம் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனைக் கடுமையாகக் கண்டித்த அன்னையர் முன்னணியினர், விடுதலைப்புலிகள் எங்கள் பாதுகாவலர்கள், நீங்கள்தான் போர் நிறுத்த உடன் பாட்டுக்கு வரவேண்டுமெனத் தெரிவித்தபோது அந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட இந்தியத் தூதுவர் டிக்சீத் அன்னையர் முன்னணி மீது கடுமையாக ஆத்திரத்தைக் கொட்டி தீர்த்துள்ளார். நிலமை மோசமாகிக்கொண்டே சென்ற நிலையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடக்கத் தீர்மானித்தனர். அப்போது பலர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பதற்காக முன்வந்தனர். இறுதியில் குலுக்கல் முறையில் தேர்வு இடம் பெற்றது.முதலில் “அன்னம்மா டேவிட்” தெரிவு செய்யப்பட்டார். 1988ஆம் ஆண்டு பெப்ரவரி 16ஆம் நாள் அன்னம்மா டேவிட் அன்னையர் முன்னணி சார்பாக உண்ணாவிரதத்தில் குதித்தார். அமிர்தகழி மாமாங்கேஸ்வர் ஆலய குருந்தை மரநிழலில் அன்னம்மாவின் உண்ணாவிரதப்போராட்டம் தொடங்கப்பட்டது. இந்திய அரசோ, இந்தியப்படையோ அன்னம்மாவின் போராட்டத்துக்குச் செவிசாய்க்கவில்லை. மக்கள் அமிர்தகழி குருந்தை மரம் நோக்கி அணி அணியாகத் திரண்டனர். உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவர இந்தியப்படை திட்டமிட்டது. பல்வேறு மிரட்டல், கெடுபிடிகளுக்கு மத்தியில் போராட்டம் தொடர்ந்தது. இறுதியில் சதித்திட்டம் வரைந்தது இந்தியப் படை. அன்னம்மாவின் பிள்ளைகளைக் கைது செய்தனர். அவர்களை மிரட்டி ‘பலாத்கார அச்சுறுத்தல் காரணமாகவே அன்னம்மா உண்ணா விரதமாயிருக்கிறார்’ என்ற ஒரு கடிதத்தைக் கையொப்பத்துடன் வாங்கி, அதனைச் சாட்டாக வைத்து அன்னம்மாவைக் காப்பாற்றுவது போல் உண்ணாவிரத மேடையில் இருந்தவரைக் கடத்திச் சென்றனர். இந்தநிலையில்தான் பூபதியம்மாள் தன்போராட்டத்தைத் தொடங்க எண்ணினார். முன்னெச்சரிக்கையாக “சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமாயிருக்கிறேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது” எனக் கடிதம் எழுதி வைத்தார். உண்ணாவிரதப் போராட்டம் 19.03.1988 அன்று மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் அதேயிடத்தில் தொடங்கியது. நீர் மட்டும் அருந்தி சாகும்வரை போராட்டம். இடையில் பல தடங்கல்கள் வந்தன. இந்தியப்படையால் அன்னையர் முன்னணியினரிற் சிலர் வெருட்டப்பட்டனர். உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி பூபதியம்மாள் வற்புறுத்தப்பட்டாள். உண்ணாவிரதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய முக்கியஸ்தர்களையும் அன்னை பூபதியின் பிள்ளைகள் சிலரையும் இந்திய இராணுவம் கைது செய்தது. ஆயினும் போராட்டம் நிறுத்தப்படவில்லை. அவர் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார். கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் சரியாக ஒருமாத்தின்பின் 19.04.1988 அன்று உயிர்நீத்தார். அவரது உடலைக் கைப்பற்ற இந்திய இராணுவம் எடுத்த முயற்சிக்கெதிராக மக்கள் கடுமையாகப்போராடி உடலைக் காத்தனர். ஏற்கனவே திலீபன் இந்திய அரசுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாமல் பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து சாவடைந்தார். அதற்குப்பின்னும் உண்ணாநோன்பிருந்த பூபதியின் செயல் முட்டாள் தனமானது என்றுகூட அவர்மீது சிலர் விமர்சனங்கள் வைப்பதுண்டு. ஆனால் பொதுமக்களிடமிருந்து தன்னிச்சையாக எழுந்த ஒரு போராட்டமிது. திலீபனின் சாவின் பின்னும் இந்திய அரசிடம் அவர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்று கருதமுடியுமா என்று தெரியவில்லை. சொல்லப்போனால் திலீபனை விடவும் பூபதியம்மாவின் சாவு உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று என்றே நினைக்கிறேன். ஆனாலும் தங்கள் எதிர்ப்பைக் காட்ட அவர்கள் எடுத்த ஆயுதம் அது. அன்றைய நேரத்தில் மட்டுமன்றி, பின்னாட்களிற்கூட அகிம்சை பற்றி எங்களுக்கு யாரும் போதிக்கமுன் யோசிக்க வைக்கும் ஓர் ஆயுதம்தான் அன்னைபூபதியுடையது. சாவு பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்பிராயம். அதன்மீதான பார்வையும் பெறுமதியும் சூழலைப்பொறுத்து மாறுபடும். சாவைத் தேர்ந்தெடுத்தலென்பது அப்படியொன்றும் இமாலயச் சாதனையாகவோ செய்ய முடியாத தியாகமாகவோ பார்க்கும் நிலையைத்தாண்டி வந்தாயிற்று. ஆனால் அவை தெரிவுசெய்யப்படும் விதம் பற்றி இருக்கும் மதிப்பீடுகள்தான் வித்தியாசமானவை. அவ்விதத்தில் அன்னை பூபதியுடைய, திலீபனுடைய வடிவங்கள் எம்மால் நெருங்க முடியாத, செய்ய முடியாத வடிவங்களாகப் பார்க்கிறேன். ஒவ்வொரு முறை திலீபன் நினைவுநாளுக்கும் உண்ணாமலிருப்பது பலரது வழக்கம். அன்றைக்குத் தெரியும் உண்ணாநோன்பின் வேதனை. (சிலநேரங்களில் இரண்டுநேரம் உணவின்றி வெறும் தண்ணியோடு சைக்கிளில் திரிந்த நிலைகூட உண்டு. ஆனால் அந்தநேரங்களில் வராத துன்பம், ஓரிடத்தில் இருந்து உண்ணாநோன்பென்று செய்தால் வந்துவிடும்) பன்னிரண்டு நாட்கள் ஒருதுளி நீர்கூட அருந்தாது தன்னையொறுத்து -அணுவணுவாக என்று சொல்வார்களே- அப்படிச் செத்துப்போன திலீபனின் சாவை நினைத்துப்பார்க்கவும் முடியாது. அன்னை பூபதியின் சாவும் அப்படியே. அன்னை பூபதியின் நினைவுநாளே ‘தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்’ என்றும் நினைவு கூரப்படுகிறது. “ஈழத்தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத இன்னொருநாள் இன்று. தமிழ் மக்களைக் கொன்றொழித்து, சொத்துக்களை நாசமாக்கி,இலட்சக்கணக்காண தமிழ் மக்களை அகதிகளாக்கிய ‘சூரியக்கதிர்-02’ எனும் குறியீட்டுப்பெயர் கொண்ட இராணுவ நடவடிக்கையை 19.04.1996 அன்று சிறீலங்கா அரசபடைகள் தொடக்கின. ஏற்கெனவே ‘சூரியக்கதிர்-01′ என்ற பெயரில் வலிகாமத்தைக் கைப்பற்றியிருந்த அரசபடை, யாழ்ப்பாணத்தை முழுவதும் கைப்பற்றவென தன் இரண்டாவது நகர்வைத் தொடங்கிய நாள் இன்றாகும். ஆயிரக்கணக்கான மக்கள் வன்னிவர கிழாலிக்கடற்கரையிற் காத்திருந்தும் பயனில்லை. அவர்கள் மீதும் வான்படை தாக்குதல் நடத்தியது.” http://thaaitamil.com/?p=16116
  5. கலையழகன் என நினைக்கும் போது, என்றும் மாறாத புன்னகை பூத்த முகமே எல்லோருக்கும் நினைவிற்கு வரும். கள்ளம் கபடமற்ற சிரிப்பும்எல்லோருடனும் அன்பாக, பண்பாக பழகும் தன்மையும், அனைவரையும் உபசரிக்கும் இயல்பும் அவனது இலட்சணங்கள். ஆனால் அவனுக்குள் இருந்த அற்புதமான திறமையும், ஆழமான ஆளுமையும், பன்முகத்தன்மையும் பலருக்குத் தெரியாது. குழந்தைத்தனமான முகத்திற்கு சொந்தக்காரன் பல்வேறு பொறுப்புக்களை தோளில் சுமந்து திரிந்த ஒரு அற்புதமான போராளி என்பது சிலருக்கும் மட்டும் தெரியும். தொடக்கப் பயிற்சியை முடித்துக்கொண்ட கலையழகன், 1994ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேசியத்தலைவர் அவர்களால் தொடங்கப்பட்ட கேணல் கிட்டு அரசறிவியல் கல்லூரி மாணவனாக இணைத்துக் கொள்ளப்பட்டான். தலைவர் அவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப அரசறிவியலும், படையப்பயிற்சியும் இக்கல்லூரி மாணவர்களிற்கு மாறிமாறி வழங்கப்பட்டது. அக்கல்லூரியின் முதன்மை மாணவர்களில் ஒருவனாக மாவீரன் கலையழகன் திகழ்ந்தான். பேச்சாற்றல், நுட்பமாகப் பதில் கொடுக்கும் தன்மையினை கல்லூரியில் அவன் வளர்த்துகொண்டான். அங்கு அவனது ஒழுக்கம், கட்டுப்பாடு, மற்றவர்களோடு பழகும் தன்மை, எல்லோருக்கும் உதவும் பண்பு, நேர்மை என்பன அவனைத் தூய்மையான போராளியாக வெளிச்சம் போட்டுக்காட்டியது. நான்கு வருடங்களிற்கு மேலாக அரசறிவியல் கற்ற கலையழகன் தேசியத்தலைவர் அவர்களது கருத்துரைகளினாலும், தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் தொடர் வகுப்புக்களினாலும் முழுமையான போராளியாகப் புடம் போடப்பட்டான். இந்தக்காலப் பகுதியில் கொமாண்டோப் பயிற்சியிலிருந்து கனரகப்பீரங்கிப் பயிற்சி வரைக்குமான பல்வேறு வகையான படையப்பயிற்சிகளை அவன் பெற்றான். 1995ஆம் ஆண்டு மாதகலில் ஆரம்பித்த அவனது போர் நடவடிக்கைகள் ரிவிரச, சத்ஜெய, ஜெயசிக்குறு, ஓயாத அலைகள்-03, ஆனையிறவுச்சமர் என நீண்டது. அண்மைய முகமாலை தாக்குதல் களத்திலும் அவன் பங்குபற்றியிருந்தான். இக்கல்லூரியின் முதலாவது அணி மாணவர்களின் பட்டப்படிப்பு நிறைவடைந்த போது, மிகச்சிறந்த மாணவர்கள் சிலரில் ஒருவனாக கலையழகன் தெரிவு செய்யப்பட்டு தலைவர் அவர்களினால் சிறப்புப் பரிசும் “திறவோர்“ எனும் பட்ட வழங்கி மதிப்பளிக்கப்பட்டான். அரசியல் அறிவும், படைய அறிவும் ஒருங்கே இணைந்து தலைவர் அவர்கள் எதிர்பார்த்த பல்துறைசார் போராளியாக அவன் இந்தக் காலகட்டத்தில் வளர்ந்திருந்தான். கல்லூரிக் காலங்களில் பகுதி நேரமாக கலையழகன் தொலைத்தொடர்பாளனாக செயற்பட்டான். பின்பு சிறிது காலம் மொழிபெயர்ப்பு அறிவினை பெறுவதற்கான கல்வியையும், பாதுகாப்பு பயிற்சியையும் பெற்ற கலையழகனுக்கு தேசியத்தலைவர் அவர்களைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகளை ஆவணமாக்கும் பணியில் ஈடுபடும் வாய்ப்பு கிடைத்தது. இவ்வரிய வாய்ப்பினை தனது வாழ்நாளில் தனக்கு கிடைத்த பெரும் பேறாகவே அவன் கருதியிருந்தான். கால ஓட்டத்தில் அவனுக்கு வேலைச்சுமை அதிகரித்த போதும் தலைவர் அவர்களின் வரலாற்றை ஆவணமாக்கும் பணியினை தானே செய்யவேண்டும் என்ற ஆர்வமும் துடிப்பும் அவனுக்கிருந்தது. தலைவர் அவர்களது தொடக்க கால நிகழ்வுகளை தேடி எடுத்து தொகுப்பதிலும், தலைவர் அவர்களின் தொடக்க காலத் தோழர்களிடமும், ஆதரவாளர்களிடமும் தகவல்களைத் திரட்டி அதனைச் சரிபார்த்து ஆவணமாக்குவதிலும் அவன் அதிக ஆர்வம் செலுத்தியிருந்தான், வேறு சில தேசப்பற்றாளர்களுடன் சேர்ந்து கலையழகனின் கடும் உழைப்பின் பயனாகவே “Leader for All Season” என்ற தலைவர் அவர்களைப்பற்றிய புகைப்பட ஆவணநூலும், “விடுதலைப் பேரொளி” என்ற தலைவர் அவர்களைப்பற்றிய தொகுப்பு நூலும் வெளிவந்தன. செஞ்சோலை, காந்தரூபன் சிறார்களுக்கான எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைவதற்காக, அவர்களிற்கான அழகான, அமைதியான இருப்பிடங்களை அமைத்துக்கொடுக்க வேண்டுமென்ற தலைவர் அவர்களின் பெருவிருப்பத்தினை நிறைவேற்றும் பொறுப்பு கலையழகனிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தப்பணியை விரும்பி ஏற்றுக்கொண்ட கலையழகன் அதற்காக கடுமையாக உழைத்தான் . புலம் பெயர்ந்த மக்கள், அமைப்புக்கள், மத்தியில் இதற்கான நிதி வளங்களை திரட்டுவதற்காக கடும் முயற்சியெடுத்தான். ஏராளமானோரை அவன் சந்தித்தான், கதைத்தான், திட்டங்களை வழங்கினான். இறுதியில் அவன் இந்தப்பணியில் முழுமையாக வெற்றியடைந்திருந்தான். செஞ்சோலை – காந்தரூபன் சிறார்களுக்கான இருப்பிடங்கள் அமைக்கப்பட்டு தலைவர் அவர்களால் அவை திறந்து வைக்கப்பட்டமை அவனுக்குப் பெரும் மன மகிழ்வையும் திருப்தியையும் தந்திருந்தது. அவனது ஆன்மா அன்று நிறைவடைந்திருந்தது. இதே போலவே நவம் அறிவுக்கூட போராளிகளிற்கான அமைவிடத்திற்கும் கலையழகனின் பங்கு கணிசமானதாக இருந்தது. எமது தேசத்திற்கான வெளிநாட்டுத் தொடர்புகளை, அனைத்துலக பணிகளை செய்வதற்கான தயார்ப்படுத்தலுக்காக கலையழகன் பல்வேறு நாடுகளிற்கு அனுப்பப்பட்டான். வெளிநாட்டுப் பயணமானது அவன் கல்லூரியில் கற்ற பல விடயங்களை நேரில் பார்த்து அறியக்கூடியதாக இருந்தது. புலம்பெயர்ந்து வாழும் எமது மக்களின் தாயகப்பற்று, விடுதலையுணர்வு, வாழ்க்கைநிலை என்பவற்றை அவன் அறிந்து கொண்டான். எமது பொறுப்பாளர்கள், செயற்பாட்டாளர்களின் கடின உழைப்புப் பற்றியும், எதிர் கொள்கின்ற பிரச்சினை குறித்தும் இங்கு சகதோழர்களிற்கு எடுத்துரைத்தான். அதே நேரம் தேசியத்தலைவர், விடுதலைப் போராட்டம் குறித்த தெளிவான கருத்துக்களை அவன் செல்லுமிடமெல்லாம் முன்வைத்தான். நட்பு ரீதியாக நிறையப் பேருடன் உறவாடி தொடர்புகளைப் பேணிவந்தான். புலம்பெயர்ந்த எமது உறவுகளின் தாயகம் தொடர்பான பிரச்சினைகளை அந்த மக்களின் நிலையில் நின்று பார்க்க வேண்டுமென்று வலியுறுத்தியவன். குறிப்பாக கனடாவில் வாழும் தமிழர்களிற்கான தாயகப்பணிகளை ஒருங்கிணைப்பதில் அவன் கடுமையாக உழைத்தான். புலம்பெயர் தமிழர்களின் பலத்தை, வளத்தை ஒருங்கிணைப்பதில் அவன் ஆற்றிய பணி அளப்பரியது. அவை வரலாற்றில் பொறிக்கப்படவேண்டியவை. 2006ம் ஆண்டு நடுப்பகுதியில் கலையழகன் அனைத்துலகத் தொடர்பக துணைப்பொறுப்பாளராக நியமிக்கப்பட்டான். இதற்கு இவனது பண்பும், ஆளுமையும், விடயங்களை இலகுவாகக் கையாளும் ஆற்றலும் காரணமாக இருந்தன. சக போராளித் தோழர்களை மதித்து, அவர்களோடு மனம் திறந்து பழகி, அனுசரித்து, அவர்களது தேவைகளை விளங்கி பூர்த்தி செய்யும் பக்குவம் அவனுக்கிருந்தது. போராளிகளை வளர்க்க வேண்டும், வேலைகளுக்குள்ளால் உள்வாங்க வேண்டும், நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டுமென்று அவன் விரும்பிச் செயற்பட்டான். அவனை விட வயதில் கூடியவர்களும், அனுபவசாலிகளும் இருக்குமிடத்தில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தன்மை அவனிடமிருந்தது. அந்தக் கவர்ச்சி மிக்க ஆளுமை எல்லோரையும் அவன் பால் ஈர்த்தது. குறுகிய காலத்தில் அவன் மிக வேகமாக வளர்ந்தான். அவனது ஆற்றல், ஆளுமையின் வீச்சு, முதிர்ச்சியடைந்த தன்மை என்பவை மூலம் ஒரு பெரிய பொறுப்பைத் தனியே செய்யக்கூடிய நிலையினை அவன் அடைந்திருந்தான் . அவன் நல்லவனாக மட்டுமல்லாமல் வல்லவனாகவும் திகழ்ந்தான் என்பது தான் உண்மை. இவ்வாறான நேரத்தில் தான் 18.04.2007 அன்று எதிர்பாராத வெடிவிபத்தில் கலையழகன் வீரச்சாவு என்ற செய்தி வந்தவுடன் நாம் எல்லோரும் துடிதுடித்துப் பதறிப்போனோம். ஆழிப்பேரலை வந்து தாக்கியது மாதிரியான உணர்வு, பூமியதிர்ந்து நிலம் பிளந்து போன மாதிரியான நிலை, இதயத்தை யாரோ சம்மட்டியால் அடித்த அதிர்வு. வார்த்தைகளில் வடிக்க முடியாத துயரமும் வலியும். வேதனைச்சகதியில் சிக்கித் தவிக்கின்ற சோகம் . ஏன் இவ்வளவு வேகமாக எமை விட்டுப்பிரிந்தான் என்று மனதில் ஆழமான வலியுடன் எழும்பும் வினா. கலையின் இழப்பின் பெறுமதி, இழப்பின் இதயவலி, அதன் ஒட்டுமொத்தப் பரிமாணம் எனக்கே முழுமையாகத் தெரிந்திருந்தது. என்னையே முழுமையாகத் தாக்கியிருந்தது. அவன் அழகானவன், பண்பானவன், பழகுவதற்கு இனிமையானவன், கள்ளம்கபடமற்ற வெள்ளையுள்ளம் படைத்தவன். ஆளுமையெடுத்து செயற்கரிய பணிகளைச் செய்தவன். முதல் நாள் உயிரோடு வலம் வந்தவனை மறுநாள் விதைகுழியில் விதைத்துவிட்டு வந்தோம். இது எவ்வளவு துயரமாக, கொடுமையாக இருந்தது. ஆனாலும் எவ்வளவு இழப்புவரினும், இடர்வரினும் உறுதி தளரோம். லெப். கேணல் கலையழகனது தலைவர் மீதான பற்றும் பாசமும், விடுதலை வேட்கையும், தேசிய உணர்வும் கொண்ட எண்ணங்களை நெஞ்சினில் சுமந்து அவனது இலட்சியக் கனவை நனவாக்குவோம் என அவனது விதைகுழி மீது சத்தியம் செய்கின்றோம். - மணிவண்ணன்(காஸ்ரோ) (அனைத்துலக தொடர்பகப் பொறுப்பாளர்.) http://thaaitamil.com/?p=14789
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.