Jump to content

யாழிணையம்

கருத்துக்கள நிர்வாகம்
  • Posts

    39
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Everything posted by யாழிணையம்

  1. நேற்றைய தினம் எனும் திரியில் கள உறுப்பினர்களுக்கும் முக்கியமாக @goshan_che அவர்களுக்கும் நிர்வாகத்தினைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் இடம் பெற்ற கருத்தாடலில் கள உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட அசெளகரியங்களுக்கு நிர்வாகம் தனது வருத்தத்தினைத் தெரிவிக்கின்றது.
  2. அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 25ஆவது ஆண்டினை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2024) 26ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. கருத்தாளர்களே யாழ் இணையத்தின் மிகப் பெரும் பலம். அந்த வகையில் யாழ் இணையத்தின் கருத்தாளர்கள் ஒவ்வொருவருக்கும் சமூகப் பொறுப்பு மற்றும் சகிப்புத் தன்மை இன்னும் மேலதிகமாக இருக்க வேண்டும் என்றும் யாழ் இணையம் விரும்புகின்றது. கருத்தாளர்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கருத்தாட வேண்டும் என்றும் அவ்வாறு நிபந்தனைக்கு உட்படும் போது கருத்தாடல்கள் ஆரோக்கியமாக அமையும் என்பதுடன் தேவையற்ற கசப்புணர்வுகள் தவிர்க்கப்படும் என்பது உங்களுக்கு சொல்லித் தெரியத் தேவையில்லை. தவிர மட்டுறுத்துனர்களும் மட்டுறுத்தலுக்கு பெரும் நேரம் தொடர்ந்தும் செலவழிக்க வேண்டிய தேவையிருக்காது. வெகுவிரைவில் இந்தியாவில் தேர்தல் வருகின்றது. முன் போலவே யாழ் இணையம் தமிழக மண்ணில் தேர்தலில் பங்கேற்கும் எந்த ஒரு கட்சி சார்ந்து சார்பானதான அல்லது எதிரான நிலைப்பாட்டினையோ எடுப்பதை முற்றாகத் தவிர்த்துக் கொள்கின்றது. தாய் தமிழகத்தினை எமக்கான பலமாக நாம் கருதி அந்த மக்களின் முடிவுக்கு கட்டுப்படுகின்றோம். கட்சி சார்பில்லாது அனைத்து தமிழக உறவுகளையும் நாம் நேசிக்கின்றோம் என்பதையும் இங்கு பதிவு செய்து கொள்கின்றோம். அதேவேளை ஈழத்தமிழர்களை தமது நலன் சார்ந்து போலிப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதை எதிர்ப்போம் என்பதையும் பதிவு செய்து கொள்கின்றோம். காலங்காலமாக எமது தமிழினம் மோசடியாக இலங்கை அரசினாலும் தமது நலன்சார்ந்த உலகத்தினாலும் ஏமாற்றப்பட்டுக் கொண்டே வருவது எமக்குத் தெரிந்ததே. தற்போது கூட இருக்கும் சில தமிழர்களாலும் மாவீரர்களை அவமரியாதை செய்யும் வகையில் தவறான தகவல் பரப்புரைகள் மேற்கொள்ளப்டுவதுடன் அவை உண்மை என்று நிரூபிக்க கடும் முயற்சிகள் பரவலாக மேற்கொள்ளப்படுவதையும் அவதானத்துடன் இருந்து அவற்றை முறியடிக்க வேண்டிய தேவையுள்ளது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். இவைகளுக்கு துணைபோகாது நாம் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டிய தேவைகள் உள்ளது. மேலும் எமது மக்களின் நேர்மையான போராட்டங்களுக்கு ஒன்றுபட்டு எமது ஆதரவினை வழங்க வேண்டும் என்பதையும் எமது வேண்டுகோளாக உங்கள் முன் வைக்கின்றோம். யாழ் இணையம் 26 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் இந்நாளினைச் சிறப்பிக்கும் முகமாக முன்னைய வருடங்கள் போன்று யாழ் இணைய உறவுகள் பலரும் மிகவும் உற்சாகமாகச் சுயமான ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்துள்ளனர். எல்லோருக்கும் பாராட்டுக்களுடன் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம். யாழ் செழிப்புற வேண்டும் என பல்வேறு வகையில் ஆலோசனைகளைத் தந்து கொண்டு இருப்பவர்களுக்கும் மற்றும் காலநேரம் பாராது பல்வேறு சுமைகளுக்கு மத்தியிலும் களத்தினை வழிநடத்தும் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தொடர்ந்தும் உங்கள் ஆலோசனைகளை எமக்கு தெரியப்படுத்துங்கள். இந்த 26வருடத்தில் இன்னும் புதியவர்களை உள்வாங்க வேண்டும் என்று விரும்புகின்றோம். யாழ் இணையப் பாவனையாளர்கள் உங்களைச் சார்ந்தோருக்கு யாழ் இணையத்தினை அறிமுகம் செய்து வையுங்கள். கடந்த காலங்களில் கூறியது போன்றே எமது மண்ணோடும், எமது மக்களோடும் நாம் என்றும் இணைந்திருப்போம். உறுதுணையாய், துணையாய் ஒற்றுமையாய் பயணிப்போம். "நாமார்க்கும் குடியல்லோம்" நன்றி யாழ் இணைய நிர்வாகம்
  3. யாழ் இணைய உறவுகளுக்கு வணக்கம், உலகத் தமிழரை இணையவெளியில் ஒன்றிணைத்து, தமிழ்மொழியில் தனித்துவமாகக் கருத்தாடுவதை ஓர் உன்னதமான நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட யாழ் இணையம் தற்போது அகவை 25 இல் நடைபோடுகின்றது. எனினும்: யாழ் இணையத்தில் கருத்தாடும் கருத்தாளர்களின் எண்ணிக்கையிலும், திரிகளைப் பார்வையிடுவோரின் எண்ணிக்கையிலும் பாரிய சரிவு நிலை ஏற்பட்டுள்ளது என்பதை அண்மைய தரவுகள் காட்டுகின்றன. தாயகத்தில் வசிப்போர் அதிகளவு பிற சமூகவலைத் தளங்களைப் பாவித்தபோதிலும், விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே யாழ் கருத்துக்களத்தில் உறுப்பினர்களாக இணைந்து கருத்தாடல்களில் ஈடுபடுகின்றனர். இது யாழ் இணையம் தாயக மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும், யாழ் இணையம் தாயகத்தில் தமிழர்களின் அரசியல் பார்வையை செதுக்குவதில் மிகவும் குறைவான பங்களிப்பை செலுத்துகின்றது அல்லது முற்றாகவே இல்லை என்பதையும் காட்டுகின்றது. முகநூல், ற்விற்றர், வாட்ஸப் குழுமங்கள் போன்ற சமூகவலைத் தளங்களில் வருகையினால் கருத்தாடல்களின் கண்ணியம் குறைந்தது ஒரு சமூகமாற்றமாகவே உள்ளது. அத்தகைய கண்ணியமில்லாத கருத்துக்களும் யாழ் கருத்துக்களத்தில் தொடர்ச்சியாக வந்துகொண்டிருப்பதும், காத்திரமான விவாதங்கள் இல்லாதததும் கண்கூடு. கருத்தாடல் என்பது ஒரு விடயத்தை ஆக்கபூர்வமான வகையில் விவாதித்து தெளிவுபடுத்துவதை நோக்காக் கொண்டது. ஆயினும் கருத்துக்களத்தில் நடைபெறும் கருத்தாடல்கள் அநேகமானவை சீண்டல்கள் நிறைந்த வெறும் விதண்டாவாதமாகவும், குழப்பும் நோக்கிலான அரட்டையாகவும் அண்மைக்காலத்தில் மாறியுள்ளது. களவிதிகளை மீறும் பதிவுகளை நிர்வாகத்திற்குச் சுட்டிக்காட்ட ஒவ்வொரு பதிவுகளிலும் முறைப்பாடு வசதி உள்ளது. எனினும் கள உறுப்பினர்கள் விதிகளை மீறும் பதிவுகளை முறைப்பாடு செய்வது ஏறக்குறைய பூச்சியமாகவே உள்ளது. மாறாக, சில கள உறுப்பினர்கள் களவிதிகளை மீறும் பதிவுகள் உள்ள திரிகளில் தொடர்ச்சியாக விதிகளை மீறும் பதிவுகளை இடுவதும், அவை நிர்வாகத்தின் பார்வைக்கு வந்து மட்டுறுத்தப்பட்டால் நிர்வாகத்தைக் குற்றம் சாட்டுவதையும் ஒரு வழமையாகக்கொண்டிருக்கின்றனர். மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் தம்மின்னுயிரை ஈந்த மாவீர்கள் பற்றி ஒரு உறுப்பினரின் ஆவணக்கட்டுக்களை தவிர வேறு நினைவுப் பதிவுகள், வரலாற்று நிகழ்வுகள் பற்றிய குறிப்புக்கள் பிறரால் இணைக்கப்படுவது அருகிவிட்டன. இவ்வாறான யதார்த்த நிலைகளைப் புரிந்துகொண்டுள்ளதால் யாழ் கருத்துக்களத்தினை பரீட்சார்த்தமாக இன்னும் மூன்று மாதங்கள் வரை (31 ஜூலை 2023) தொடர நிர்வாகம் முடிவு செய்துள்ளது. எனினும் திண்ணை வசதி மீளவும் வழங்கப்படமாட்டாது. கருத்துக்கள விதிமுறைகளுக்கு உட்பட்டு சுதந்திரமான கருத்தாடலை செய்ய இங்கு அனுமதியுண்டு. கருத்துக்கள விதிமுறைகளை இதுவரை வாசிக்காதவர்கள் மீண்டும் ஒருமுறை வாசியுங்கள். கருத்துக்கள விதிமுறைகளில் உங்களுக்கு உடன்பாடு இல்லையெனின் கருத்துக்களத்தில் இருந்து விலகிக் கொள்ளலாம் அல்லது கருத்துக்களை எழுதாமல் தவிர்த்துக்கொள்ளலாம். 31 ஜூலை 2023 வரை கருத்தாடல் கண்ணியமான முறையிலும், ஆக்கபூர்வமான முறையிலும் நடைபெறுகின்றதா என மட்டுறுத்தினர்களால் கண்காணிக்கப்படும். கருத்துக்கள விதிமுறைகளுக்கு முரணாகவும், மலினத்தனமாகவும் கருத்துக்களை வைப்பவர்கள் மீதும் இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவை நிரந்தர மட்டுறுத்துனர் பார்வையாகவோ, நிரந்தரத் தடையாகவோ கூட இருக்கலாம். எனவே, யாழ் கருத்துக்களம் தொடர்ந்தும் இயங்குவது யாழ் கள உறுப்பினர்களின் கருத்தாடற்பண்பில் ஏற்படும் முன்னேற்றத்தில்தான் உள்ளது என்பதை இத்தருணத்தில் குறிப்பிட விரும்புகின்றோம். "நாமார்க்கும் குடியல்லோம்" நன்றி யாழ் இணைய நிர்வாகம்
  4. வணக்கம், முற்றிலும் பக்கச்சார்பான செய்திகளையும், பிரச்சார நோக்கில் சோடிக்கப்பட்ட தகவல்களையும் தொடர்ச்சியாகப் பிரசுரித்து வந்தமையால் RT News பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. அத்தோடு RT News இன் நேரடி இணைய இணைப்பும் பல இணைய வழங்கிகளால் தடுக்கப்பட்டுள்ளது. யாழ் இணையம் நம்பகத்தன்மையையான தகவல்களையே அனுமதிக்கும் என்பதால் RT News கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆகவே, RT News இலிருந்து நேரிடையாகவோ அல்லது அதன் செய்திகளை பிரதியிடும் வேறு தளங்களில் இருந்து செய்திகள் யாழில் காவப்படுவதும், பிரசுரிப்பதும் களவிதிகளை மீறிய செயற்பாடுகளாக கருதப்படும் என்றும், இவ்வறிவித்தலை சட்டைசெய்யாது செயற்படுவர்கள் மட்டுறுத்துனர் பார்வைக்குள் கொண்டுவரப்படுவார்கள் என அறியத்தருகின்றோம். நன்றி
  5. மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு இன்று (30.03.2023) யாழ் இணையம் 24 அகவைகளைப் பூர்த்திசெய்து தனது 25 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. உலகத் தமிழரை இணையவெளியில் ஒன்றிணைத்து, தமிழ்மொழியில் தனித்துவமாகக் கருத்தாடுவதை ஓர் உன்னதமான நோக்காகக் கொண்டு, 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் மென்பொருள் சிற்பி மோகன் அவர்களால் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்றும் தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் இருக்கின்றது. முதலாவது கருத்துக்களம் பாமினி எழுத்துருவில் அமைந்திருந்தது. அதனால் பாமினி எழுத்துருவில் பரிச்சயமானவர்கள் மட்டுமே கருத்தாடலில் ஈடுபடக்கூடியதாக இருந்தது. எனினும் மென்பொருள் சிற்பி மோகன் அவர்களின் நீண்ட கடும் முயற்சியின் பயனாக 2003ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் நாள் ஒருங்குறி எழுத்துருவிலமைந்த இரண்டாவது கருத்துக்களம் திறக்கப்பட்டது. இந்த இரண்டாவது களத்தினை உருவாக்க அக்காலகட்டத்தில் உறுப்பினர்களாக இருந்த பலரின் ஒத்துழைப்பு கூடியவரை பிழைகளைத் தவிர்க்கவும், பிரிவுகளை செம்மையாக்கவும், களவிதிகளை மேம்படுத்தவும் உதவியது. கருத்துக்களத்தில் மட்டுறுத்துதல் அறிமுகப்படுத்தப்பட்டு தமிழ் மொழியில் பண்புடன் விவாதிக்கும் கலாச்சாரம் இணையத்தில் உருவாக்கப்பட்டது. பின்னர் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தற்போதைய யாழ் இணையம், இயங்குதளம், தரவுத் தளம், கருத்துக்கள மென்பொருள், முகப்பு மென்பொருள் என பல்வேறு சிக்கலான அடுக்குகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்டு அடிக்கடி மேம்படுத்தப்படுகின்றது. எதுவித வர்த்தக நோக்கங்களும் இன்றி முற்றிலும் சேவை நோக்கைக் கொண்டே யாழ் இணையம் தொடர்ந்தும் இயங்கிவருகின்றது. யாழ் இணையம் ஆரம்பித்த நாள் தொட்டே பல்வேறு தரப்பினரையும் தன் வசம் ஈர்த்துக்கொண்டு தனக்கே உரிய தனித்துவத்துடன் வளர்ச்சி கொண்டது. இணையத்தில் நீண்ட பல காலம் தொடர்ந்து இயங்குகின்ற இணையத்தளங்களில் யாழ் இணையமும் ஒன்று என்பதை யாராலும் மறுக்க முடியாது. தமிழ் மொழியில் மாத்திரம் எழுதிப் பலர் பங்குகொண்டு ஆக்கபூர்வமான கருத்தாடல்களில் ஈடுபடக்கூடிய தமிழ் இணையத்தளம் யாழ் இணையம் ஒன்றே. யாழ் கருத்துக்களம் உலகில் பல மூலைகளிலும் வாழும் தமிழர் இணையம் மூலம் கைகோர்க்கும் இடம். எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கமிக்கிற இடமும் இதுதான். மாணவர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், பல்வேறு துறைசார்ந்தவர்களும் கூடுகிற இடமும் இதுதான். நம்பிக்கையோடு கதை, கவிதை என படைப்பாக்கங்களை எழுதப் பழகுகிற பயிற்சிக் கூடமும் இதுதான். தமிழில் மூர்க்கமாக விவாதிக்கவும், நட்போடு பழகிடவும், செல்லமாகச் சண்டைகள் போடவும், ஊடல் கொள்ளவும், தேடல் கொள்ளவும், பாடல் போடவும், கவிதை படிக்கவும் ஒரு இடம் உண்டென்றால் - அது யாழ் கருத்துக்களம் தான். இதற்கும் மேலாகத் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும், தமிழ்த் தேசியத்துக்கும் துணைநிற்பதோடு அதுசார்ந்த கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரவேற்கிறது. தமிழ்த் தேசியச் சிந்தனையை வலுப்படுத்தி, தமிழர்களின் வரலாற்றைத் திரிபுகள் இன்றி அடுத்த அடுத்த சந்ததிகளுக்கும் பரவச் செய்து, தமிழர்களை நமது தாயகத்தில் தலைநிமிர்ந்து பெருமையுடன் வாழ வைக்கவேண்டியதற்கான வேலைகளைச் செய்வதற்குத் தொடர்ந்தும் துணைபுரிகின்றது. அடக்குமுறைகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட மக்களின் குரலாகவும், கருத்துச்சுதந்திரம், அனைவருக்கும் சமத்துவம், சமவுரிமை, மனிதநேயம், சுரண்டல்கள் அற்ற சமூகம் என்ற முற்போக்கு சிந்தனைகளை முன்னகர்த்தும் கருத்துக்களை விதைக்கும் இடமாகவும், யாழ் இணையம் இருக்க விளைகின்றது. அந்த வகையில் யாழ் கருத்துக்களம் தரமானதும், சமூகத்திற்குத் தேவையானதும், பண்பானதுமான கருத்தாடல்களையே தொடர்ந்தும் எதிர்பார்க்கிறது. போர் முற்றுப்பெற்ற 2009 இன் பின்னர், யாழ் கள உறுப்பினர்களின் பங்களிப்புடன் போரினால் பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற தாயக மக்களுக்கு சிறு துளியான உதவிகளையும் புரிந்தது. எனினும் இத்தகைய உதவிகளை தாயகத்தில் தொடர்ந்தும் செயற்படுத்த முடியாத நிலையினால் இவை இடைநிறுத்தப்பட்டன. கடந்த சில வருடங்களாக உலகம் கோவிட்-19, உக்கிரேன் மீதான ரஷ்யாவின் யுத்தம், பாரிய பொருளாதார வீழ்ச்சி எனப் பல நெருக்குவாரங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றது. இவ்வாறான நெருக்கடி மிகுந்த உலகில், போலிச் செய்திகளும், சதிக்கோட்பாட்டை பரப்பும் தகவல்களும் பரவலாகவே பரவி சாதாரண மக்களை குழப்பத்திற்குள் உள்ளாக்குகின்றன. தவறான கருத்தியல்களைத் திணிக்கின்றன. யாழ் கருத்துக்களம் மூலமாகவும் நம்பகத்தன்மையற்ற தகவல்களை இடையிடையே ஒரு சிலர் தெரிந்தோ தெரியாமலோ பரப்ப முயற்சிக்கின்றபோதிலும், அவை அவதானிக்கப்பட்டு நீக்கப்படுகின்றன. யாழ் களம் தொடர்ந்தும் நம்பகத்தன்மையான செய்திகளையும், தகவல்களையும் பகிரும் இடமாகவே இருக்கும் என்பதில் உறுதியாக உள்ளது. யாழ் இணையம் என்கிற இந்த மிகச் சிறப்பான இணையத்தளத்தை உருவாக்கி, அதை நெறிப்படுத்தி வந்த மென்பொருள் சிற்பி மோகன் எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல், விளம்பரங்களும் இல்லாமல், எவருடைய பணஉதவியும் இல்லாமல், தனது பணத்தை செலவிட்டு, தனது குடும்பம், வேலை, பிற வேலைகள் என பலவற்றுக்கு மத்தியிலும், நேர நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும் தொடர்ந்தும் இந்தத் தளத்தை கடந்த வருட நடுப்பகுதி வரை நிர்வகித்தார். யாழ் இணையத்தை மாறிவரும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தொடர்ந்தும் புதுப்பித்து, உலகத் தமிழரின் காலக்கண்ணாடியாக யாழ் இணையம் விளங்க தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்த மோகனுக்கு யாழ் இணைய நிர்வாகத்தினரினதும், உறுப்பினர்களினதும் நன்றிகள் என்றென்றும் இருக்கும். "நாமார்க்கும் குடியல்லோம்"
  6. யாழிணைய உறவுகளுக்கு வணக்கம், கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக யாழிணையம் தொழில்நுட்பச் சிக்கல்களால் இயங்கவில்லை. யாழிணையத்தின் சேவைகளை தொடர்ச்சியாகக் கொடுக்கமுடியாமல் போனமைக்காக வருந்துகின்றோம். யாழிணையமானது இயங்குதளம், தரவுத் தளம், கருத்துக்கள மென்பொருள், முகப்பு மென்பொருள் என பல்வேறு சிக்கலான அடுக்குகளைக் கொண்டது. அத்தோடு யாழிணையம் ஆரம்பித்த காலத்திலிருந்து உள்ள கருத்தாடல்களை வெவ்வேறு கருத்துக்கள மென்பொருள் பதிப்புக்களில் வைத்திருக்கவேண்டிய தேவையும் உள்ளது. மேலதிகமாக சேமிக்கப்பட்ட கருத்தாடல்களையும், படிமங்களையும் தொடர்ச்சியாகப் பிரதியெடுக்கவும் வேண்டும். எனினும் கடந்த சில வாரங்களாக கருத்துக்களத் தரவுகளை (data) பிரதியெடுப்பதில் (backup) சிக்கல்கள் தோன்றியிருந்தன. இப்பிரச்சினையால் தரவுகளை பிரதியெடுப்பது கடந்த 19 நவம்பருடன் நின்றுவிட்டது. அப்பிரச்சினைக்குத் தீர்வுகாணமுன்னரே சடுதியாக தரவுத் தளத்தில் ஏற்பட்ட சிக்கல்களால் கடந்த வெள்ளி நள்ளிரவுடன் (03 டிசம்பர் 00:33) இணைய வழங்கி முற்றாகச் செயலிழந்துவிட்டது. இணையவழங்கியின் தரவுச் சீரழிவினால் (data corruption) இயங்குதளம், தரவுத் தளம், கருத்துக்கள மென்பொருள் எல்லாவற்றையுமே மீளவும் கட்டமைக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் இறுதிவரை இருந்த தரவுகளை மீட்கமுடியாததனால் 19 நவம்பர் அன்று இறுதியாக சேமிக்கப்பட்ட தரவுத்தளத்துடன் யாழிணையத்தை மீளவும் இயங்கவைக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் 19 நவம்பர் முதல் 02 டிசம்பர் வரையான இரு வாரகாலத்தில் பதியப்பட்ட கருத்துக்கள், சேமிக்கப்பட்ட படிமங்கள், பிற தரவுகள் இல்லாமல் போய்விட்டன. அவற்றினை மீள எடுக்கமுடியாமைக்கு வருந்துகின்றோம். இரு கணிணி விற்பன்னர்களின் கடின உழைப்பினால் மீளவும் இயங்கவைக்கப்பட்டுள்ள யாழிணையம் தொடர்ச்சியாகச் செயற்பட கள உறுப்பினர்களின் காத்திரமான, கண்ணியமான கருத்துக்களின் பங்களிப்பும், ஒத்துழைப்பும் மிகவும் அவசியமானது என்பதை இத்தருணத்தில் குறிப்பிட விரும்புகின்றோம். "நாமார்க்கும் குடியல்லோம்" நன்றி யாழ் இணைய நிர்வாகம்
  7. யாழ் இணைய உறவுகளுக்கு வணக்கம், உலகத் தமிழரை இணையவெளியில் ஒன்றிணைத்து, தமிழ்மொழியில் தனித்துவமாகக் கருத்தாடுவதை ஓர் உன்னதமான நோக்காகக் கொண்டு யாழ் இணையம் எனும் கருத்துக்களத்தை, கடந்த 24 வருடங்களுக்கு மேலாக பல்லாயிரம் மணித்துளிகளைச் செலவழித்து கட்டியமைத்த சிற்பி மோகன் அவர்கள் யாழ் இணைய நிர்வாகத்தில் இருந்து முழுமையாக ஒதுங்கியுள்ளார். யாழ் இணையத்தை மாறிவரும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தொடர்ந்தும் புதுப்பித்து, உலகத் தமிழரின் காலக்கண்ணாடியாக யாழ் இணையம் விளங்க தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்த மோகனுக்கு எமது நன்றிகள் என்றென்றும் இருக்கும். கடந்த மாதத்தின் இறுதியுடன் யாழ் கருத்துக்களத்தை முற்றாக மூடி வாசிப்புக்கு மாத்திரம் திறந்து வைத்திருக்க முடிவு எடுத்திருந்தும், அது தொடர்பான கள உறுப்பினர்களின் ஆதங்கங்களை உள்வாங்கிக்கொண்டு, கருத்துக்களத்தை மூடுவதை தற்காலிகமாக ஒத்திவைத்ததும் யாழ் இணைய உறுப்பினர்கள் ஏலவே அறிந்த விடயம். பல்வேறு சமூகவலைத் தளங்கள் உலவும் இன்றைய ஆசுவாசமற்ற அவசர உலகில், ஆழமானதும், காத்திரமானதுமான உரையாடல்களை எதிர்பார்ப்பாகக்கொண்ட யாழ் இணையமானது தனது சேவையின் அந்திமக் காலத்தை நெருங்கிக்கொண்டுவருகின்றது என்பது ஓர் கசப்பான யதார்த்தம். முகநூல், ற்விற்றர் போன்ற சமூகவலைத் தளங்களில் வருகையினால் கருத்தாடல்களின் கண்ணியம் குறைந்தது ஒரு சமூகமாற்றமாகவே உள்ளது. அத்தகைய கண்ணியமில்லாத கருத்துக்களும் யாழ் கருத்துக்களத்தில் தொடர்ச்சியாக வந்துகொண்டிருப்பதும், காத்திரமான விவாதங்கள் இல்லாதததும், யாழ் இணையத்தின் ஆக்கற்களத்தில் கள உறுப்பினர்களின் படைப்புக்கள் அருகிவருவதும் கண்கூடு. களவிதிகளை மீறும் பதிவுகளை நிர்வாகத்திற்குச் சுட்டிக்காட்ட ஒவ்வொரு பதிவுகளிலும் முறைப்பாடு வசதி உள்ளது. எனினும் கள உறுப்பினர்கள் விதிகளை மீறும் பதிவுகளை முறைப்பாடு செய்வது ஏறக்குறைய பூச்சியமாகவே உள்ளது. மாறாக, சில கள உறுப்பினர்கள் களவிதிகளை மீறும் பதிவுகள் உள்ள திரிகளில் தொடர்ச்சியாக விதிகளை மீறும் பதிவுகளை இடுவதும், அவை நிர்வாகத்தின் பார்வைக்கு வந்து மட்டுறுத்தப்பட்டால் நிர்வாகத்தைக் குற்றம் சாட்டுவதையும் ஒரு வழமையாகக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறான சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்வதற்கு முக்கிய காரணம் யாழ் கருத்துக்கள விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் வாசிக்காமல் உள்ளமைதான். அத்தோடு யாழ் இணையத்தின் பார்வையாளர்களிலும், கருத்தாடலில் பங்குகொள்ளும் உறுப்பினர்களின் எண்ணிக்கையிலும் சரிவு தொடர்ந்துகொண்டிருக்கின்றது. மேலும், யாழ் கருத்துக்களம் மூடப்படும் என அறிவித்தல் விடுக்கப்பட்டபோது, தொடர்ந்தும் நடாத்தவேண்டும் என விரும்பிய கள உறுப்பினர்களில் பலர்கூட கருத்தாடலில் பங்குகொள்ளாமல் பார்வையாளர்களாக அல்லது யாழ் இணையத்தைப் பார்க்காமலேயே உள்ளனர். நேரமின்மை என்பதுதான் முக்கிய காரணம் என்பதை நிர்வாகம் உணர்ந்துகொள்கின்றது. இதே நேரமின்மையால்தான் நிர்வாகமும் களவிதிகளை மீறும் பதிவுகளை மட்டுறுத்தமுடியாமல் உள்ளது. இவ்வாறான யதார்த்த நிலைகளைப் புரிந்திருந்தும், தமிழில் விவாதிக்கவும், நட்போடு பழகிடவும், தேடல் கொள்ளவும், யாழ் கருத்துக்களம் பிற இணையச் செய்திகளினதும், ஆக்கங்களினதும் திரட்டியாக மட்டும் இல்லாது தமிழ் சமூகத்திற்கு தேவையான ஆக்கபூர்வமானதும் தரமானதுமான கருத்தாடல் தளமாகவும் ஓர் குறிப்பிட்ட காலம் வரை தொடர நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இம்முடிவு பற்றிய முக்கிய குறிப்புக்கள்: யாழ் கருத்துக்களம் 25ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கும் நாள் (30.03.2023) வரை இப்போது உள்ள யாழ் கருத்துக்கள விதிமுறைகள் பதிப்பு 4.0 க்கு அமைய நடாத்தப்படும். கருத்துக்களத்தில் தொடர்ந்தும் கருத்தாடலை அனுமதிப்பதா அல்லது தனியே பார்வைக்கு மட்டும் அனுமதிப்பதா என்பது பற்றிய தீர்மானம் யாழ் களம் 25 ஆவது அகவைக்குள் செல்லும் நாளில் (30.03.2023) தெரியப்படுத்தப்படும். யாழ் கருத்துக்களத்தின் போக்கு, கருத்துக்களின் பார்வை எண்ணிக்கை, கருத்தாடல்களின் தரவுகளின் அடிப்படையில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்படும். இணையவன், நிழலியுடன், நியானியும் யாழ் கருத்துக்களப் பொறுப்பாளர்களாக இருப்பார்கள். நுணாவிலான் தொடர்ந்தும் கருத்துக்கள நிர்வாகத்தில் இருந்து மட்டுறுத்தலுக்கு துணைபுரிவார். யாழ் இணையத்தை நடாத்த கள உறுப்பினர்களிடம் இருந்து பண உதவி ஏதும் கோரப்படமாட்டாது. கள உறுப்பினர்கள் கட்டண விளம்பரங்களைப் பெற்றுக்கொள்ள உதவ முடிந்தால் நன்றியுடன் ஏற்றுக்கொள்ளப்படும். கருத்தாடலில் கண்ணியத்தைக் கடைப்பிடிக்காமலும், களவிதிகளை மதிக்காமலும் கருத்துக்கள் வைக்கும் கள உறுப்பினர்கள் மீது இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவை நிரந்தர மட்டுறுத்துனர் பார்வையாகவோ, நிரந்தரத் தடையாகவோ கூட இருக்கலாம். யாழ் கருத்துக்களம் தொடர்ந்தும் இயங்க யாழ் கள உறவுகளின் பங்களிப்பும், ஒத்துழைப்பும் மிகவும் அவசியமானது என்பதை இத்தருணத்தில் குறிப்பிட விரும்புகின்றோம். "நாமார்க்கும் குடியல்லோம்" நன்றி யாழ் இணைய நிர்வாகம்
  8. முப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக, 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் கிராமத்தில் நிகழ்ந்த சமர் கணிக்கப்படுகின்றது.விடுதலைப்புலிகள் எதிர்பார்த்தற்கு மாறாக – பாரிய ஆள் இழப்புக்களுக்கு பின்னரும் – தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான சிங்கள தேசத்தின் படைவீரர்கள் களத்திற்கு அனுப்பப்பட்டிருந்தனர். அதேவேளை விடுதலைப்புலிகளுக்கான படைக்கல வளங்கள் தமிழீழ கடற்பரப்பினூடாக தாயகத்திற்கு கொண்டுசெல்லப்படுவதை தடுப்பதற்கான முழுமையான ”கடற்தடுப்புச் சுவரை” வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள தேசம் அமைத்திருந்தது. அத்தோடு பாரிய படைக்கல பிரயோகத்துடனும் வல்லாதிக்க அரசுகளின் புலனாய்வு தகவல்களையும் உள்வாங்கியவாறு சிங்கள தேசத்தின் இராணுவ பூதம் தமிழீழ தாயகத்தை முழுமையாக அழிக்கும் வகையில் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. வரையறுக்கப்பட்ட போர்த் தளபாடங்களுடனும் ஆட்பல வளத்துடனும் போரிட்ட தமிழர் சேனை வன்னிப்பெருநிலத்தின் பெரும்பகுதியை கைவிட்டு பின்வாங்கியிருந்தது. எனினும் இறுதிவரை ஏதோ ஒரு இடத்திலிருந்து மீண்டும் – ஆக்கிரமித்து வரும் படைகளை தடுத்து – முறியடிப்பு தாக்குதலை செய்து தமிழீழ தாயகத்தை மீட்டுவிடலாம் என்றே அனைத்து மக்களும் நம்பியிருந்தனர். புதுக்குடியிருப்பு பிரதேசம் சிறிலங்கா படைகளிடம் வீழ்ந்தபோது, தமிழீழ விடுதலைப் புலிகளின் அசாத்திய பலத்தை முழுமையாக நம்பிய மக்களும் விடுதலைப் புலிகளும் தங்களுக்கு ஒரு சிறிய இடைவெளி கிடைத்தாலும் அதனை சாதகமாக பயன்படுத்தி வெற்றியை பெற்றுவிடமுடியும் என்றே முழுமையாக நம்பியிருந்தனர். அந்தவகையில் தான் ஆனந்தபுரம் பகுதியில் – இறுதியாக அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்திற்கு வெளிப்புறமாக – விடுதலைப்புலிகளின் இறுதிப்போருக்கான அவசர போரரங்கு ஒழுங்குபடுத்தப்பட்டது. தமிழீழ தேசிய தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் உட்பட விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகள் பலரும் அடங்கலாக தளம் அமைத்து பெருமளவிலான முறியடிப்பு தாக்குதல் ஒன்றை திட்டமிட்டுக்கொண்டிருந்தனர். விடுதலைப்புலிகளின் பிரதான போர்க்கலங்கள் அனைத்தையும் உள்வாங்கி திட்டமிடப்பட்ட இத்தாக்குதலுக்காக பெருமளவு விடுதலைப் புலிகளும் நிலைப்படுத்தப்பட்டிருந்தனர். தொலைதூர தாக்குதலுக்கேயென வடிவமைக்கப்பட்ட போர்க்கலங்கள் அனைத்தும் குறுந்தூர தாக்குதலுக்காக நிலைப்படுத்தப்பட்டு இருந்தது. விடுதலைப்புலிகளின் இத்திட்டமிடலை ஏதோ ஒரு வகையில் அறிந்துகொண்ட சிறிலங்கா படையினர் எத்தனை இழப்பை சந்தித்தேனும் தடை செய்யப்பட்ட போர் ஆயுதங்களை பயன்படுத்தி என்றாலும், அத்தாக்குதலை முறியடிக்க முடிவெடுத்திருந்தார்கள். அதன்படி ஆனந்தபுரம் பகுதியை சுற்றிவளைத்து அப்பகுதியில் நிலைகொண்டிருந்த விடுதலைப்புலிகளை தனிமைப்படுத்தி முற்றுகை பாணியிலான தாக்குதலை சிறிலங்கா படைகள் முன்னெடுத்தன. தமிழீழ தேசிய தலைவரை பாதுகாப்பாக பின்னகர்த்திய விடுதலைப் புலிகள், சிறிலங்கா படைகளின் முற்றுகையை முறியடிப்பதற்காக உறுதியுடன் போர் செய்துகொண்டிருந்தார்கள். இத்தளத்தில் நிலைகொண்டு இறுதிவரை உறுதியோடு போரிட்டு பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் ஆதவன் / கடாபி, பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா உட்பட விடுதலைப் புலிகளின் பல முக்கிய தளபதிகள் உட்பட பல நூற்றுக்கணக்கான போராளிகள் மாவீரர்களாக ஆனந்தபுரம் மண்ணில் வீழ்ந்து தமிழீழ தாயகத்தின் விடிவெள்ளிகளாக போனார்கள். விடுதலைப்புலிகளின் மூத்த தளபதியான பிரிகேடியர் தீபன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு ஒப்புயர்வற்ற தளபதி. ஜெயசிக்குறு போர்க்களத்தில் சிறிலங்கா படைகளுக்கு சிம்மசொப்பனமாக அறியப்பட்ட தளபதி பிரிகேடியர் தீபன். வவுனியாவிலிருந்து முன்னேறி, கிளிநொச்சியிலுள்ள படைகளுடன் இணைப்பை செய்து, வன்னி பெருநிலத்தை கூறுபோடும் திட்டத்துடன், முன்னேறிய சிறிலங்கா இராணுவத்தை, புளியங்குளத்தில் – 1997 ஆம் ஆண்டில் – தடுத்துநிறுத்தி புளியங்குளத்தை புலிகளின் புரட்சிக்குளமாக்கிய தளபதிதான் பிரிகேடியர் தீபன். புளியங்குளத்தை சுற்றிவளைத்து அதற்கான வழங்கல் பாதைகளை துண்டித்தபோதும், தளராமல் நாங்கள் ”இங்கேயே சமைத்து சாப்பிடுவோம். ஆனால் ஒரு போதும் பின்வாங்ககூடாது.” என உறுதியோடு கூறி அங்கேயே நிலைகொண்டிருந்து முன்னேறிவந்த டாங்கிகளையும் தகர்த்து ஒரு துருப்புக்காவி கவசவாகனத்தையும் கையகப்படுத்தினார். அதற்கு பின்னர் நடைபெற்ற ஓயாத அலைகள் – 2 நடவடிக்கையிலும் போர்த்தளபதி பிரிகேடியர் தீபனின் தந்திரோபாயமான படைநகர்த்தல் மிகப்பிரசித்தமானது.சிறிலங்கா படைகள் இன்றுவரை அமைத்த முன்னரங்க பாதுகாப்பு நிலைக் கட்டமைப்புக்குள், மிகவும் பாதுகாப்பானதும் அதற்குள் ஊடுருவி தாக்குதலை செய்வது என்பது சாத்தியமற்றது என்ற நிலையிலான பலமான பாதுகாப்பு அரணாக அன்றைய கிளிநொச்சி சிறிலங்கா இராணுவ தளம் இருந்தது. அப்படியான இறுக்கமான தளத்தை கைப்பற்றும் சமரை வழிநடத்தியவர் தளபதி தீபன் அண்ணை. அதற்கு பின்னர் ஓயாத அலைகள் – 3 படைநடவடிக்கையின்போது பரந்தன் படைத்தளத்தை கைப்பற்றும் நடவடிக்கையின்போது பட்டப்பகலில் மரபுவழி இராணுவமாக தமிழர் சேனையை வழிநடத்தி பல மூத்ததளபதிகளின் பாராட்டை பெற்றவர். ஆனந்தபுரம் தளத்தை தக்கவைக்கவேண்டும் அல்லது அங்கேயே வீரமரணம் அடையவேண்டிவரும் என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு இறுதிவரை உறுதியுடன் போரிட்ட தளபதியின் இறுதி மூச்சும் ஆனந்தபுரம் மண்ணில் அமைதியாய் போனது. பிரிகேடியர் ஆதவன் அல்லது கடாபி அவர்கள் விடுதலைப் புலிகளின் இன்னொரு முக்கிய தளபதி. சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக தமிழீழ தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான கரும்புலி தாக்குதல்களை திட்டமிட்டு நெறிப்படுத்திய சிறப்புநடவடிக்கைக்கான தளபதி. தமிழீழ தேசிய தலைவரின் பாதுகாப்பு பணிகளுக்காக தனது போராட்ட வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவழித்த இத்தளபதி, படைக்கட்டுமானங்களான தொடக்கப்பயிற்சி கல்லூரிகளையும் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிகளையும் நிர்வகித்து வந்திருந்தார். தமிழீழ தாயகத்தை விடுவிக்கும் போரில், குறைந்தளவு ஆளணி வளங்களுடன் சமரை வெல்வதற்காக, தமிழீழ தாயகத்திலிருந்த எதிரிகளின் தளத்திற்குள், ஆழ ஊடுருவி மேற்கொள்ளப்படும் கரும்புலித்தாக்குதல்கள் பெரும்பாலும் இவரது நெறிப்படுத்தலிலேயே நடந்திருக்கிறது. நவீன மரபு வழிக்கட்டமைப்புகளுக்கு அமைவாக சிறப்பு இராணுவ நடவடிக்கைகளை நெறிப்படுத்திய இத்தளபதி புதிய போராளிகளை உருவாக்கும் பயிற்சிக் கல்லூரிகளையும் நேரடியாக கண்காணித்துவந்தார். வன்னியில் போர் இறுக்கமான கட்டத்தை அடைந்தபோது களமுனையிலிருந்தே நேரடியாக படை நகர்த்தலை மேற்கொண்ட இத்தளபதியும் ஆனந்தபுரம் சமரில் விழுப்புண் அடைந்தார். பின்னர் களமுனையிலிருந்து இவரை அகற்றுவதற்கு போராளிகள் பலத்த முயற்சிகள் மேற்கொண்டபோதும் அதுமுடியாமல்போக தமிழீழ தாயகத்தை விடுவிக்கும் போரில் தன்னுயிரையும் அர்ப்பணித்துக்கொண்டார். விடுதலைப்புலிகளின் போராட்டவலுவை அடுத்த கட்ட பரிணாமத்திற்குள் நகர்த்திய மோட்டார் பீரங்கிகளும் ஆட்லறி பீரங்கிகளும் தான், ஆட்லறி பீரங்கிப்படையணி தளபதி பிரிகேடியர் மணிவண்ணனின் போராட்டவாழ்க்கையாக இருந்தது.“ஐஞ்சிஞ்சி” என செல்லமாக அழைக்கப்பட்ட 120 மிமீ பீரங்கிகள் தான் ஓயாத அலைகள் – I நடவடிக்கையின் போது பாரிய படைக்கல சக்தியாக விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்தது. முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட 122 மிமீ ஆட்லறிகளுடன் ஆரம்பமான விடுதலைப்புலிகளின் கேணல் கிட்டு ஆட்லறி படையணி வெளிநாடுகளில் கொள்வனவு செய்யப்பட்ட இன்னும் பல ஆட்லறிகளுடன் பெருவளர்ச்சி கண்டிருந்தது. இரண்டு ஆட்லறிகளுடன் ஆரம்பித்த ஆட்லறிபடையணி பல பத்து ஆட்லறிகளை கொண்டதாக வளர்ச்சியடைந்தபோதும், அதனை சரியான முறையில் பயன்படுத்தி தமிழீழ போராட்டத்தை முழுமையான மரபு வழி இராணுவமாக்கி முழுமைப்படுத்திய பெருமை இத்தளபதிக்கு சேரும். மரபுவழியான முறையில் ஆட்லறிகளை பயன்படுத்தினாலும் நேரடிச் சூடுகளை வழங்கி எதிரிகள் மீது திகைப்புத்தாக்குதலை நடத்தி தரைவழியாக முன்னேறும் புலிகளுக்கு காப்பரணாக ஆட்லறிகளை பயன்படுத்தியமை இப்படையணியின் சிறப்பாகும். ஆனந்தபுரத்தில் நடைபெற்ற அந்தச்சமரின்போது ஆட்லறிப்படையணியை உருவாக்கி வளர்த்தெடுத்த பிரிகேடியர் மணிவண்ணன் அவர்களும் தமிழீழ காற்றோடு காற்றாக கலந்துபோனார். தமிழீழ பெண்களின் போர்முகத்தை உலகத்திற்கு காட்டிய விடுதலைப்புலிகளின் மகளிர் படையணிகளின் மூத்த தளபதிகளான 2ஆம் லெப்ரினன்ற் மாலதி படையணியின் சிறப்புதளபதியுமான பிரிகேடியர் விதுசா அவர்களும், மேஜர் சோதியா சிறப்பு படையணியின் சிறப்புத்தளபதியான துர்க்கா அவர்களும் விடுதலைப்புலிகளின் பெரும்பாலான அனைத்து போரங்குகளிலும் தமது படையணிகளை நேரடியாக வழிநடத்தியிருந்தார்கள். ஆனையை அடக்கிய அரியாத்தை என வரலாறு தேடிக்கொண்டிருக்கும் எம்மவர் மத்தியில் அரியாத்தைகளையே உருவாக்கி காட்டிய பெருமை இவ்விரு தளபதிகளையுமே முக்கியமாக சேரும். ஆண் போராளிகளுக்கு நிகராக பெண் போராளிகளையும் போர்க்களத்தில் நகர்த்திய இப்போர்த்தளபதிகள், தமிழீழ தேசிய தலைவரின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து, உலகப் பெண்களுக்கு முன்னுதாரணமாக தமிழீழ பெண்களை உருவாக்கினார்கள். ஆனந்தபுரம் சமரின்போது இவர்களும் ஆனந்தபுரத்தின் விடிவெள்ளிகளாக தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்து வீரகாவியம் படைத்தார்கள்.ஆனந்தபுரம் சமரில் மூத்த தளபதிகள் பலரையும் களமுனைத்தளபதிகள் பலரையும் நூற்றுக்கணக்கான போராளிகளையும் இழந்த அந்தச்சமர் தமிழ் மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. தமிழீழ விடுதலைப் போரினை வழிநடத்திய தலைவனையும் போராளிகளையும் உலுப்பிவிட்ட, அந்த இழப்பு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இராணுவ சமநிலையை எதிரிக்கு சாதகமாக்கி விடுதலைக்காக விரைந்த பயணத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.
  9. தமிழீழ விடுதலைப் புலிகளின் சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் அவர்களின் வீரவணக்க நாள்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.