Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

நவீனன்

வரையறுக்கப்பட்ட அனுமதி
 • Posts

  85,545
 • Joined

 • Last visited

 • Days Won

  480

நவீனன் last won the day on August 10 2018

நவீனன் had the most liked content!

Profile Information

 • Gender
  Male
 • Interests
  cricket,internet,

Recent Profile Visitors

45,063 profile views

நவீனன்'s Achievements

Grand Master

Grand Master (14/14)

 • Week One Done
 • One Month Later
 • One Year In
 • Conversation Starter
 • First Post

Recent Badges

1k

Reputation

 1. அருமையான வறுத்த மீன் குருமா அ-அ+ சப்பாத்தி, பூரி, நாண், புலாவ், இடியாப்பம், இட்லிக்கு தொட்டுக்கொள்ள இந்த வறுத்த மீன் குருமா அருமையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மீன் துண்டுகள் - அரை கிலோ (முள் இல்லாத மீன்) பச்சை மிளகாய் - 3 வெங்காயம் - 1 தக்காளி - 2 கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - தேவையான அளவு சோம்பு - அரை டீஸ்பூன் பட்டை - மிகச் சிறிய துண்டு இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 +1/2 டீஸ்பூன் மல்லித்தூள் - 2-3 டீஸ்பூன் உப்பு - தேவைக்கு. அரைக்க.... தேங்காய்த் துருவல் - 5 டேபிள்ஸ்பூன் முந்திரிபருப்பு 10 செய்முறை : மீன் துண்டுகளை சுத்தமாக கழுவி துண்டுகளாக வெட்டி வைக்கவும். மீனுடன் மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன், தேவைக்கு உப்பு சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு நான்ஸ்டிக் கடாயில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்து வரும் பொழுது மீன் போட்டு பொரித்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் விடவும், சோம்பு பட்டை போட்டு தாளித்த பின்னர் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் தக்காளி, சிறிது உப்பு சேர்த்து மூடி போட்டு சிறிது வதங்க விடவும். தக்காளி நன்கு வதங்கிய பின்பு மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து நன்கு ஒரு சேர வதக்கவும். அடுத்து அதில் ஒன்னரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். அடுத்து அதில் வறுத்து வைத்துள்ள மீன் துண்டுகளை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினா சேர்த்து இறக்கவும். வறுத்த மீன் குருமா ரெடி. இந்த குருமாவிற்கு முள் அதிகமில்லாத மீன் துண்டுகள் சேர்த்து செய்தால் அருமையாக இருக்கும். சீலா, வாவல், பாறை மீன் பொருத்தமாக இருக்கும். https://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2018/09/27151812/1194156/fried-fish-korma.vpf
 2. 131. பூர்ணாஹுதி அற்புதங்கள் அதனதன் இயல்பில், தோற்றத்தில், விதிப்பில், வார்ப்பில் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. ஒரு சூரியன் உதிப்பதைக் காட்டிலும், ஒரு பெருமழையைக் காட்டிலும் அற்புதமென்று இன்னொன்று இருந்துவிட இயலாது. ஆனால் மனித மனத்தின் விசித்திர மூலைகளை இந்த அற்புதங்களின் பக்கம் நாம் திருப்பி வைப்பதேயில்லை. ஒரு விடியலை நின்று அனுபவிப்பவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்? நான் ஒரு சமயம் இரவெல்லாம் ஒரு பூச்செடியின் அருகே நாற்காலி போட்டு அமர்ந்து, ஒரு மொட்டு மலரும் கணத்துக்காகக் காத்திருந்தேன். அது மலரத்தான் செய்தது. ஆனால் மலர்ந்ததைத்தான் கண்டேனே தவிர, மலரும் செயலை அவதானிக்க இயலவில்லை. என் கண்ணெதிரேயேதான் அது மெல்ல மெல்ல விரிந்து முழு மலராகியிருக்க வேண்டும். ஆனாலும் எனக்கு அது தட்டுப்படவில்லை. குவிந்த வடிவத்தைக் கண்டேன். முழுதும் விரிந்த இதழ்களைப் பார்த்தேன். இடையில் நிகழ்ந்த அற்புதம் எனக்கானதல்ல என்று இயற்கை சொல்லாமல் சொல்லிவிட்டுப் போனது. நான் அதைத் தலை வணங்கி ஏற்றுக்கொண்டேன். காம்புக்கும் காற்றுக்குமான கலவியின் குழந்தையென அந்தப் பூவைத் தொட்டு முத்தமிட்டு எழுந்து சென்றேன். சட்டென்று அந்தச் சம்பவம் எனக்கு நினைவுக்கு வந்துவிட்டது. என்னை மீறிப் புன்னகை செய்தேன். பதிலுக்கு அந்த நாய் சிரித்ததா என்று எனக்குத் தெரியவில்லை. அது மீண்டும் கேட்டது, ‘அவன் வந்துவிட்டானா?’ நான் சற்றும் பதறாமல், சிறிதளவு அதிசய உணர்வையும் வெளிக்காட்டாமல் பதில் சொன்னேன், ‘அதை நீங்கள் என்னைக் கேட்டுத்தான் தெரிந்துகொள்ள வேண்டுமா?’ ‘ஆம். இந்த வடிவில் எனது சில சக்திகள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன’. ‘அப்படியானால் சரி. அண்ணா இதுவரை எங்கள் கண்ணில் படவில்லை. எப்படியும் வருவான் என்று நினைக்கிறேன்’. ‘நல்லது. நீ சுகமாக இருக்கிறாயா?’ ‘நிச்சயமாக ஐயா. எனது சுதந்திரமே என் சுகம். அது குறைபட நான் அனுமதிப்பதில்லை’. ‘சரி நீ போகலாம்’ என்று அது விடைகொடுத்தது. சிறிது தூரம் சென்றதும் நான் அந்த நாயைத் திரும்பிப் பார்த்தேன். அது அங்கேயேதான் நின்றுகொண்டிருந்தது. ஆனால் வேறெங்கோ பார்த்துக்கொண்டிருந்தது. சட்டென்று அந்தக் கணத்தில் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. அது சம்சுதீன் பக்கிரியாகத்தான் இருக்கும் என்று ஏன் நினைத்தேன்? அது ஏன் சொரிமுத்துவாகவோ வேறு யாராவதாகவோ இருக்கக் கூடாது? தர்காவின் அருகே கண்டதால் அது சம்சுதீனாகத்தான் இருக்க வேண்டும் என்று இயல்பாகவே தோன்றிவிட்டது. கேட்டுத் தெளிவு படுத்திக்கொண்டுவிடலாம் என்று எண்ணினேன். என் சகோதரர்களிடம் இந்தச் சம்பவத்தைச் சொல்லும்போது இன்னும் சரியான தகவலுடன் சொல்ல முடியும். நான் மீண்டும் அந்த நாயை நெருங்கினேன். அது என்னைத் திரும்பிப் பார்த்தது. ‘ஐயா, நீங்கள் இந்த தர்கா வாசலில் இருந்த சம்சுதீன்தானே?’ என்று கேட்டேன். நாய் பதில் சொல்லவில்லை. மீண்டும் வேறெங்கோ பார்த்தது. ‘நீங்கள் பேசியதில் நான் வியப்படையவில்லை. வாழ்வில் நிறைய சித்தர்களைப் பார்க்க நேரிட்டுவிட்டதால், எனக்கு இத்தகைய அதிசயங்கள் வியப்பளிப்பதில்லை. இவை அதிசயம் என்றும் தோன்றுவதில்லை. ஒரு சிறு சந்தேக நிவர்த்திக்காகவே கேட்கிறேன். ஒருவேளை நீங்கள் சொரிமுத்துவாக இருந்தால் உங்களைக் கட்டித் தழுவி ஒரு முத்தமிட்டுவிட்டுப் போய்விடுவேன்’ என்று சொன்னேன். காதிலேயே விழாததுபோல அந்த நாய் நகர்ந்து போனது. சட்டென எனக்கு வேறொரு சந்தேகம் வந்துவிட்டது. ஒருவேளை என்னுடன் பேசிய நாய் எங்கோ சென்று, வேறொரு நாய் வந்திருக்கிறதோ? இருளில் அதன் நிறத்தை நான் சரியாகக் கவனித்திருக்கவில்லை. கண்களை மட்டும்தான் பார்த்தேன். இருளில் சுடரும் எல்லா நாய்களின் கண்களைப்போலத்தான் அவையும் இருந்தன. சற்றும் எதிர்பாராத விதமாக முன்னொரு காலத்தில் அண்ணாவைத் தேடி நான் தென்காசிக்குச் சென்றபோது, எனக்கு முன்னால் வழி காட்டிக்கொண்டு போன நாயின் நினைவு வந்தது. நாய் நடந்தது. நானும் நடந்தேன். ஆனால் அண்ணாவைப் பார்க்க முடியவில்லை. இத்தனை வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு நாய். மீண்டும் நான். மீண்டும் அண்ணா. ஒரே வித்தியாசம், நான் கேட்டிருக்க வேண்டியதை அந்த நாய் என்னிடம் முந்திக்கொண்டு கேட்டுவிட்டது. சரி பரவாயில்லை. ‘நான் போய் வருகிறேன் ஐயா’ என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தேன். இன்னொரு அற்புதம் நிகழும் சாத்தியம் ஏதும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அம்மாவைக் கடைத்தேற்றிவிட்டுப் போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான். என் சகோதரர்கள் படுத்திருந்த இடத்துக்கு நான் வந்து சேர்ந்தபோது வினோத் எழுந்து அமர்ந்திருந்ததைக் கண்டேன். வினய் மட்டும் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தான். என்னைக் கண்டதும் வினோத் சிரித்தான். ‘எங்கே போனாய்?’ என்று கேட்டான். ‘சும்மா தர்கா வரை போயிருந்தேன். தூக்கம் வரவில்லை’. ‘என்னாலும் சரியாக உறங்க முடியவில்லை விமல்’. ‘ஆனால் நான் கிளம்பிச் சென்றபோது நீங்கள் இருவருமே அடித்துப் போட்டாற்போலத்தான் கிடந்தீர்கள்’. ‘ஆம். கால் வலி எனக்கு. சிறிது தூங்கினேன். ஆனால் விழிப்பு வந்துவிட்டது’. ‘அது பரவாயில்லை விடு. ஒரு நல்ல கதை சொல்கிறேன், கேட்கிறாயா?’ என்று சிரித்தபடி கேட்டுவிட்டு, தர்காவின் அருகில் நிகழ்ந்த சம்பவத்தைச் சொன்னேன். வினோத் அதிர்ச்சியில் பேச்சற்றுப் போய்விட்டான். உண்மையாகவா உண்மையாகவா என்று திரும்பத் திரும்பக் கேட்டான். ‘நான் பொய் சொல்வதில்லை வினோத். அது ஒரு முதலையைப் புணர்வது போன்றது. நினைவில் மிகவும் வலித்துக்கொண்டே இருக்கும்’. ‘இல்லை. நீ இதை மிகவும் சாதாரண தொனியில் சொல்கிறாய். உண்மையில் உனக்கு நடந்தது மிகவும் அசாதாரணமானது’. ‘இதில் என்ன அசாதாரணம்? சம்சுதீனோ, சொரிமுத்துவோ நாயாகவும் நரியாகவும், ஏன் நாமாகவும்கூட மாறக்கூடியவர்களே அல்லவா? அல்லது ஒரு நாயின் உடலுக்குள் போய் சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு வருவதும் ஒன்றும் அவர்களுக்குப் பெரிய விஷயமல்ல’. ‘இருந்தாலும்..’ ‘மன்னித்துவிடு வினோத். என்னால் வியக்க முடியவில்லை’. ‘இல்லை. நான் அவரைப் பார்க்க வேண்டும்’ என்று சொல்லிவிட்டுச் சட்டென்று எழுந்தான். நான் சிரித்தேன். ‘ஏன் சிரிக்கிறாய்?’ ‘அவர் உன்னைச் சந்திக்க விரும்பவேண்டுமல்லவா? இல்லாவிட்டால் நீ போய் வீணாகத் திரும்பவேண்டி இருக்கும்’. ‘ஆம்’ என்று மீண்டும் அமர்ந்தான். ‘நானே இரண்டாம் முறை பேச்சுக் கொடுத்தபோது அவர் பதில் சொல்லவில்லை. அல்லது அவர் அந்த நாயில் இருந்து வெளியேறிவிட்டார்’. வினோத் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து யோசித்துக்கொண்டிருந்தான். திடீரென்று, ‘அவனது வருகை அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது அல்லவா?’ என்று கேட்டான். ‘இதிலென்ன சந்தேகம். மூத்தவன். கொள்ளி வைக்க வேண்டியவன். வரத்தான் வேண்டுமல்லவா?’ ‘வேறு எதுவும் காரணம் இருக்காது என்கிறாயா?’ ‘என்னவாக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. நாம் நமது அனுமதியின்றி பிராமண குலத்தில் பிறந்தவர்கள். எனவே குல வழக்கப்படி, கடைசிப் பையனாக நான் சில சடங்குகள் செய்யவேண்டி இருக்கும் என்று நினைக்கிறேன். அதுவும் அம்மா என்பதால்’. ‘எனக்கு அதுவும் இல்லை’. ‘ஆம். நீ கொடுத்து வைத்தவன். வெறும் பார்வையாளன். தொந்தரவின்றி ஒரு மரணத்தை நெருக்கமாக அமர்ந்து நீ கவனிக்கலாம். யாரும் உன்னைத் தொந்தரவு செய்யமாட்டார்கள்’. அவன் சட்டென்று கேட்டான், ‘ஒருவேளை நான் அழுவேனோ?’ ‘ஒரு தவறும் இல்லை. அழுகை வரும்போது உன் கிருஷ்ணனை நினைத்துக்கொண்டுவிடு. அதற்குக்கூட உதவாமல் அவன் எதற்கு தண்டத்துக்கு?’ ‘நீ மிகவும் வறண்டுவிட்டாய் என்று நினைக்கிறேன்’. ‘அப்படியா தோன்றுகிறது? மரணம் தவிர்க்க முடியாதது வினோத். மரணத்துக்கான கண்ணீர் என்பது உறவுக்கான ரசீது மட்டுமே. அறுத்துக்கொண்டு போனவனிடம் ரசீது எப்படி இருக்கும்?’ வினோத் வெடித்து அழத் தொடங்கினான், ‘நான் தோற்றுவிட்டேன் விமல். என்னால் எதையுமே அறுக்க முடியவில்லை. மனத்துக்குள் நான் இன்னும் வீட்டுக்குள்ளேயேதான் இருக்கிறேன். என்னை அங்கிருந்து வெளியேற்றச் சொல்லி இன்றுவரை கிருஷ்ணனிடம் மன்றாடிக்கொண்டிருக்கிறேன். அவன் அதைச் செய்வதில்லை’. நான் அவனை அன்புடன் அரவணைத்துக்கொண்டேன். சிறிது நேரம் அவன் கரங்களை இறுக்கிப் பிடித்துக்கொண்டிருந்துவிட்டுப் பிறகு சொன்னேன், ‘பக்தி மனத்தின் பிரச்னையே இதுதான். ஒன்றைப் பற்றிக்கொண்டால் விடவே விடாது’. ‘நான் போயிருக்கவே கூடாதோ?’ ‘அதை நீ எப்படி தீர்மானிப்பாய்? உன் விதி உன்னை வீட்டை விட்டு வெளியேற்றியது. நீ அதற்கு அடிபணிந்துதான் தீர வேண்டும்’. ‘நாத்திகனான நீ விதியைக் குறித்துப் பேசுவது விநோதமாக இருக்கிறது’. ‘நான் நாத்திகன் என்று யார் சொன்னது?’ ‘நீதானே சொன்னாய்?’ ‘இல்லை. நீ தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறாய். எனக்குக் கடவுள்தான் கிடையாதே தவிர, நான் ஒரு நல்ல ஆன்மிகவாதி’. அவனுக்குப் புரியவில்லை. சிறிது நேரம் அமைதியாக இருந்தான். ‘உன் விதி உன்னை சன்னியாசியாக்கியது. உன் குற்ற உணர்வு உன் பார்வையில் இருந்து கிருஷ்ணனை மறைத்து வைத்தது. வினய்யின் கஞ்சாவுக்கும் உனது கிருஷ்ண ஜபத்துக்கும் வித்தியாசமில்லை. இரண்டுமே கடந்த காலம் மறப்பதற்கு உதவும் வெறும் கருவிகள்’ என்று சொன்னேன். அவனால் அதைத் தாங்கிக்கொள்ளவோ, ஏற்கவோ இயலவில்லை. மறுக்க நினைத்தாலும் அது முடியாமல் மேலும் குமுறி அழுதான். அவன் அழுது ஓயும்வரை காத்திருந்தேன். பிறகு சொன்னேன், ‘அம்மாவின் மரணம் உனக்கொரு வெறுமையின் உலகை தரிசனமாகத் தரும். அந்த வெறுமைக்குள் நீ கிருஷ்ணனைக் காண்பாய். கிருஷ்ணனே உனக்கு வெறுமையின் ரூபமாக நிற்பான். கிருஷ்ணனும் வெறுமைதான் என்பது புரியும்போது நீ ஒரு பூரண சன்னியாசி ஆகிவிடுவாய்!’ (தொடரும்) http://www.dinamani.com/junction/yathi/2018/sep/17/131-பூர்ணாஹுதி-3001473.html
 3. 130. நாயர் கங்காதரன் கிளம்பிப் போனபின் நாங்கள் நெடுநேரம் கடற்கரை மணலில் படுத்துக் கிடந்தோம். பகல் முழுதும் நல்ல வெயில் அடித்திருக்க வேண்டும். கடல் காற்றின் குளுமையை ஊடுருவி மணல் பரப்பின் வெதுவெதுப்பை உணர முடிந்தது. எனக்கு தர்கா வரை போய் வரலாம் என்று தோன்றியது. கோவளத்தில் கால் வைத்தது முதல் எனக்கு அந்தப் பக்கிரியின் நினைவுதான் திரும்பத் திரும்ப வந்துகொண்டிருந்தது. நான் ஓடிப்போவேன் என்று சொன்ன மனிதர். திருவானைக்கா சித்தனுடன் அவருக்குத் தொடர்பு இருந்திருக்கிறது. அண்ணாவுடன் தொடர்பு இருந்திருக்கிறது. எல்லோரும் ஏதோ ஒரு கண்ணில் ஒருங்கிணைந்திருக்கிறார்கள். என்னை, வினய்யை, வினோத்தை நெருக்கமாகக் கவனித்திருக்கிறார்கள். தற்செயலாகவோ, திட்டமிட்டோ பறவை உதிர்த்த எச்சம் போல எங்களை மறந்து போய்விட்டார்கள். ஒருவேளை அவர்கள் விரும்பிய வழியில் நாங்கள் போயிருந்தால் தொடர்பு நிலைத்திருக்குமோ என்னவோ. ஆனால் நாளை என்ன ஆவோம் என்று அறிந்த மனிதர்களுக்கு நாங்கள் இப்படித்தான் ஆவோம் என்பது தெரியாமலா இருந்திருக்கும்? படுத்திருந்த என் சகோதரர்களை நான் திரும்பிப் பார்த்தேன். இருவருமே நன்றாக உறங்கிக்கொண்டிருந்தார்கள். வினய் தார்ப்பாய்ச்சிக் கட்டிய அரை வேட்டியுடன் அப்படியே மல்லாக்கக் கிடந்தான். மேல் சட்டை இல்லை. கீழே போட்டுக்கொள்ளச் சொல்லி வினோத் கொடுத்த துண்டைக்கூட மறுத்துவிட்டான். பசியும் அலைச்சலும் தவமும் கஞ்சாவுமாகச் சேர்ந்து அவனது தேகத்தை ஒரு துணி மூடிய எலும்புக்கூடாக்கியிருந்ததைக் கண்டேன். எந்த இடத்திலும் பிடித்துக் கிள்ளமுடியாத உடல். கடல் காற்றின் குளுமை எனக்குக் கணம் தோறும் சிலிர்ப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. ஆனால் அவன் சிறிதும் அசையாமல் ஒரு பொருளைப் போலக் கிடந்தான். மாறாக வினோத், ஒரு குழந்தையைப் போலச் சுருண்டு படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தான். ஒரு காவித் துண்டை மப்ளர் போலக் கழுத்து முதல் தலைவரை காது மறைத்துச் சுற்றிச் சொருகிக்கொண்டு, கைகளை இறுக்கி மூடிக்கொண்டு அவன் உறங்குவதைப் பார்க்கவே சிரிப்பாக இருந்தது. மெல்லிய குறட்டைச் சத்தமும் கேட்டது. உறக்கத்தில் யாரும் துறவியாக இருப்பதில்லை. எப்படி உறங்கும்போது யாரும் ராஜனாகவும் இருப்பதில்லையோ அப்படி. ஆனால் கட்டறுத்துப் பொங்கும் மனம், உறங்கும்போது துறவிகளை எப்படித் துன்புறுத்தும் என்று எளிதில் விளக்கிவிட முடியாது. உலக சரித்திரத்தில் எந்த ஒரு துறவியும் தன் உறக்கத்தில் வரும் கனவுகளை உண்மையாக எடுத்துச்சொன்னதாக நான் அறிந்ததில்லை. நானும்கூடச் சொன்னதில்லை. உறங்கத் தொடங்குவதற்கு முன்னால் இதை நான் குறிப்பிட்டபோது, ‘அதனால்தான் நான் உறங்குவதற்கு முன் ஆயிரத்தெட்டு முறை கிருஷ்ண ஜபம் செய்துவிட்டுப் படுப்பேன். கனவு வராது’ என்று வினோத் சொன்னான். நான் சிரித்துக்கொண்டேன். கனவில் கண்ட ஓர் ஒளிதான் அவனை இத்தனை தூரத்துக்கு இழுத்துச் சென்றிருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்துவிடாதிருக்க எத்தனை மெனக்கெட்டிருப்பான்! அது கனவாக இருந்துவிடக்கூடாது என்று எவ்வளவு நாள் வேண்டிக்கொண்டிருந்திருப்பான்! எனக்கென்னவோ வினோத் கிருஷ்ண பக்தர்களோடு போய்ச் சேர்ந்ததைக் காட்டிலும் ராமலிங்க அடிகளாரிடம் சரணடைந்திருந்தால் இன்னமும் உருப்பட்டிருப்பான் என்று தோன்றியது. இனி எண்ணி என்ன? அவரவர் ரேகைகளின் அழியாத வழித்தடங்கள் இட்டுச் செல்லும் எல்லைகளின் விளிம்பை நோக்கி ஓடத்தொடங்கி எத்தனையோ காலமாகிவிட்டது. திரும்பிப் பார்க்கவும் நின்று மூச்சு விட்டுக்கொள்ளவும் அவகாசம் இருப்பதில்லை, பெரும்பாலும். பாதையைப் பரிசீலிப்பதற்கு விருப்பம் என்ற ஒன்று யாருக்கும் இல்லை. கிருஷ்ணனிடம் பேரம் பேசி, காமரூபிணியைச் சரிக்கட்ட விரும்புவதாகச் சொன்ன வினய்யின் நேர்மையை நான் மிகவும் ரசித்தேன். அவன் வேறு என்னவாக இருந்தாலும் அவன் வினய்யாக இருக்க முடியாது என்று தோன்றியது. அவன் ஏன் வினய்யாக இருக்கிறான் என்பது வேண்டுமானால் விடையற்ற பெருவினாவாக இருக்கலாம். நான் எழுந்துகொண்டேன். உறங்குபவர்களைக் கலைக்க விருப்பமின்றி தர்காவை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். எத்தனை வருடங்கள் ஓடியே போய்விட்டன! திருவானைக்காவில் இருந்து நான் அண்ணாவைத் தேடிக்கொண்டு தென்காசிக்குக் கிளம்பும்போதுதான் கடைசியாகக் கோவளம் பக்கிரியை நினைத்தேன். வாழ்வில் அவரைத் திரும்ப நினைவுகூர எனக்கு அவசியமே இல்லாமல் போய்விட்டது. வினய்யைச் சந்தித்தபின், அவனது கதையைக் கேட்டபோதுதான் மீண்டும் அவரது நினைவு வந்தது. மனிதர் நிச்சயம் காலமாகியிருப்பார் என்றுதான் தோன்றியது. என் சிறு வயதில் நான் அவரைச் சந்தித்தபோதே அவருக்கு சொரிமுத்துச் சித்தன் வயதுதான் இருக்கும். அவர் பெயர் சம்சுதீன் என்பதே சொரிமுத்து சொல்லித்தான் எனக்குத் தெரியும். இடைப்பட்ட காலத்தில் அவர் அம்மாவைத் திரும்பச் சந்தித்திருப்பாரா? எங்களைப் பற்றிப் பேசியிருப்பாரா? இதுதான் எங்கள் விதி என்று அவளுக்குத் தெரிவித்திருப்பாரா? அம்மா அதை எப்படி உள்வாங்கியிருப்பாள்? சராசரிகளின் இயல்பான எழிலைக் கொண்ட குணம்தான் அம்மாவுக்கு. எந்த வகையிலும் இன்னொரு பெண்ணில் இருந்து அவளை வேறுபடுத்திப் பார்க்க இயலாது. மனைவி ஆனதால் கடமைகள். அம்மா ஆனதால் பாசம். ரேஷன் கார்டில் குடும்பத் தலைவி ஆனதால் பொறுப்புகள், சுமைகள். சுமந்து முடித்து இறக்கி வைத்துவிட்டுப் படுத்துவிட்டாள். இன்றைய தினம் விடிந்து, இருண்டு மீண்டும் ஒருநாள் விடிந்து இருளும்போது போய்ச் சேர்ந்துவிடுவாள். வழியனுப்பி வைப்பதற்கு எத்தனை வழிகள் கடந்து வரவேண்டியிருக்கிறது. தர்கா அருகே நான் போய்ச் சேர்ந்தபோது காற்றின் வேகம் கூடியிருந்தது. யாருமற்ற மணல் பரப்பில் இருளில் கரைந்து நடப்பது சுகமாக இருந்தது. ஒன்றிரண்டு நாய்கள் இருக்கும் என்று நினைத்தேன். ஏனோ இல்லை. எனக்கு ஓர் அதிர்ஷ்டம் உண்டு. எத்தனையோ இடங்களில் எவ்வளவோ முறை இம்மாதிரி இருளில் தனியே நடந்திருக்கிறேன். எங்கும் வாழும் நாய்கள், எப்போதும் இரவில் நடமாட்டம் கண்டால் குரைக்கும் நாய்கள் ஏனோ என்னைக் கண்டு குரைப்பதில்லை. இது ஒருமுறை இருமுறையல்ல. லட்சம் முறை எனக்கு நடந்திருக்கிறது. எனது சீடர்களே இதை அடிக்கடிச் சொல்லி வியப்பார்கள். எந்த நாயும் குரைக்காது. யாரையும் எச்சரிக்க நினைக்காது. என்னை மிரட்டப் பார்க்காது. இத்தனைக்கும் நான் நாய்களுடன் சிநேகமானவனெல்லாம் இல்லை. யாருக்குமே நான் சிநேகிதனில்லை. என்னைத் தவிர. ஒரு ஆபத்தற்ற உயிரினம் என்று நாய்கள் உணரும் விதத்தில் என் தோற்றத்தில் ஏதோ ஒன்று இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். ஒரு சமயம் மடிகேரியில் இருட்டில் தெரியாமல் ஒரு நாயை மிதித்தே விட்டேன். அப்போதுகூட அது லேசாக முனகிக்கொண்டு நகர்ந்து ஓடியதே தவிர, பதிலுக்குத் தனது எதிர்ப்பைக் காட்டவில்லை. என் சிறு வயதுகளில் கோவளம் தர்காவுக்கு வரும்போதெல்லாம் அங்கு ஏழெட்டு நாய்கள் சுற்றிக்கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். தர்காவுக்கு வந்துவிட்டுப் போகும் பக்தர்கள், பொறை பிஸ்கட் வாங்கிப் போடுவார்கள். அது இல்லாவிட்டாலும் கடலோரக் கருவாட்டுத் துண்டுகளுக்காக அவை அந்த இடத்தை விட்டு நகரவே நகராது. எங்கே போய்விட்டன அந்த நாய்களும் அவற்றின் வம்சமும்? நான் தர்காவைச் சுற்றிக்கொண்டு முன்பக்கம் வந்தேன். யாருமில்லை. வெறும் அமைதியும் அதை மூடிய இருளும் மட்டுமே நிறைந்திருந்தது. நான் அங்கே சிறிது நேரம் அமரலாம் என்று நினைத்தேன். ஏனோ சம்சுதீனின் நினைவு திரும்பத் திரும்ப வந்துகொண்டிருந்தது. அவர் ஒரு சித்தர் என்பது இறுதிவரை அந்தப் பிராந்தியத்தில் வசித்த யாருக்கும் தெரியாது என்பது வியப்பாக இருந்தது. ஒரு தர்கா வாசல் பிச்சைக்காரனாகவே இருந்துவிட்டுப் போயிருக்கிறார். ஒருவேளை நான் ஊரைவிட்டுப் போன பிற்பாடு தெரிய வந்திருக்கலாம். அநேகமாக அது நடந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றியது. அம்மாவே அவரை வயிற்று வலிக்கு மந்திரிக்கும் பக்கிரியாக மட்டும்தான் எண்ணியிருந்தாள். வீட்டுக்குப் போகும்போது அம்மாவிடம் சம்சுதீனைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். ஒருவேளை அம்மா பேசும் நிலையில் இருந்தால் நிச்சயம் அவரைப் பற்றிச் சொல்வதற்கு அவளிடம் கொஞ்சமாவது இருக்கும் என்று தோன்றியது. ஒரு பத்து நிமிடங்கள் அங்கு அமர்ந்திருந்துவிட்டு எழுந்து நடக்க ஆரம்பித்தேன். இப்போது என்னெதிரே ஒரு நாய் வந்தது. நான் புன்னகை செய்தேன். அப்படியே அசையாது நின்றேன். அதுவும் என் எதிரே வந்து நின்றது. என்னை உற்றுப் பார்த்தது. இருளில் அந்த நாயின் கண்கள் கருநீலத்தில் பளபளத்தன. ‘நான் போகவேண்டும், வழியை விடு’ என்று சொல்லிவிட்டு நான் நடக்க ஆரம்பித்தபோது, ‘உன் அண்ணன் வந்துட்டானா’ என்று அது கேட்டது. (தொடரும்) http://www.dinamani.com/junction/yathi/2018/sep/14/130-நாயர்-2999992.html
 4. ஒரு முறை மாரடைப்பு ஏற்பட்டால் ஒரு முறை மாரடைப்பு ஏற்பட்டால் அவர்கள் தங்களின் ஆயுளில் ஒன்பதரை ஆண்டுகளை இழக்கிறார்கள் என்று அண்மைய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. தற்போது எம்மில் பலரும் வாழ்க்கை நடைமுறைமாற்றத்தை விரும்பியோ அல்லது விரும்பாமலோ ஏற்றுக்கொண்டிருக்கிறோம். நேரத்திற்கு சாப்பிடாதது, சத்துள்ளவற்றை போதிய அளவிற்கு சாப்பிடாதது. உடற்பயிற்சியோ அல்லது நடைபயிற்சியையோ நாளாந்தம் மேற்கொள்வது கிடையாது. அத்துடன் அதிக கலோரிகளைக் கொண்ட உணவுகளை விரும்பி சாப்பிடுகிறோம். அளவிற்குமேல் சாப்பிடுகிறோம். இதனால் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகி, இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் கொழுப்பு தங்கி, இரத்தம் செல்ல வழியில்லாமல் மாரடைப்பு ஏற்படுகிறது. மாரடைப்பை குணப்படுத்த பல்வேறு நவீன சிகிச்சை இருக்கிறது. ஆனால் மக்கள் மாரடைப்பிற்கு சிகிச்சைப் பெற்ற பின்னரும், அதாவது வைத்தியர்களாலும், வைத்திய தொழில்நுட்பத்தாலும் குணமடைந்த பின்னரும், வைத்தியர்கள் சொல்லும் வழிகாட்டலை பின்பற்றாமல் அலட்சியப்படுத்துகின்றனர். இதனால் அவர்களுக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்படுகிறது. பல தருணங்களில் அவர்கள் அபாயத்தையும் எதிர்கொள்கிறார்கள். ஒரு முறை மாரடைப்பு வந்துவிட்டாலே அவர்கள் தங்களின் ஆயுளில் ஒன்பதரை ஆண்டுகளை இழந்துவிடுகிறார்கள். இதனை உணர்ந்து மாரடைப்பு வராமல் தற்காத்துக் கொள்ளவேண்டும். குறைந்த பட்சம் வந்த பிறகாவது வைத்தியர்கள் சொல்லும் வழிமுறைகளை பின்பற்றி வாழ்க்கை நடைமுறையை மாற்றி ஆரோக்கியமாக வாழ வேண்டும். டொக்டர் ராஜேஷ் தொகுப்பு அனுஷா. http://www.virakesari.lk/article/40932 இதயநோய் வருவதற்கான காரணமும்.... தீர்க்கும் வழிமுறையும்.. அ-அ+ இதய நோய் ஏற்படுவதற்கு வாழ்க்கைமுறையும், உணவு பழக்கவழக்கங்களும் முக்கிய காரணமாக இருக்கின்றன. இளம் பருவத்தினர் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு செய்ய வேண்டிய விஷயங்களை பார்க்கலாம். இந்தியாவில் ஆண்டுதோறும் இதய நோய்களால் 30 லட்சம் பேர் இறக்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட இளம் வயதினரும் மாரடைப்புக்கு ஆளாவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைமுறையும், உணவு பழக்கவழக்கங்களும் அதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. இளம் பருவத்தினர் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்: ஆரோக்கியமான உடல் எடையை தீர்மானிப்பதில் கொழுப்பு, குளுக்கோஸ், ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கு முக்கிய பங்கு இருக்கின்றன. அவை சீராக இருப்பதற்கு சத்தான தானிய உணவு வகைகளை தினமும் சாப்பிட வேண்டும். இதயத்தின் ஆரோக்கியம் மேம்படுவதற்கு வாரத்தில் 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சியோ அல்லது 75 நிமிடங்கள் தீவிர உடற்பயிற்சியோ செய்து வருவது அவசியமானது. ஜிம்மிற்கு சென்றுதான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றில்லை. நடைப்பயிற்சியும், ஓட்டப்பயிற்சியும் மேற்கொள்வது ரத்த அழுத்தம், கொழுப்பு, நீரிழிவு போன்ற பாதிப்புகளிலிருந்து உடலை பாதுகாக்கும். இதயத்திற்கும் நலம் சேர்க்கும். புகைப்பழக்கம் இதய நோய் பாதிப்பை மூன்று மடங்கு அதிகப்படுத்திவிடும். மாரடைப்பு ஏற்படுவதற்கு மரபணு ரீதியிலும் தொடர்பு இருக்கிறது. தந்தையோ அல்லது சகோதரரோ 55 வயதுக்குள் மாரடைப்பு பாதிப்புக்கு ஆளாகி இருந்தால், அது முதல் தலைமுறையை சேர்ந்த ஆணுக்கு 50 சதவீதம் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. மன அழுத்தத்திற்கும், மாரடைப்புக்கும் நேரடி தொடர்பு இல்லை. எனினும் திடீரென்று மன அழுத்தம் அதிகரிக்கும்போது இதய நோய் சம்பந்தப்பட்ட பாதிப்பு ஏற்பட வழிவகுக்கும். ரத்த அழுத்தத்தையும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவையும் அடிக்கடி சரிபார்த்து வர வேண்டும். அவ்வாறு சரிபார்த்து அவைகளை சீராக வைத்துக்கொள்வது இதய நோய் பாதிப்பிலிருந்து விடுவிக்க வழிவகை செய்யும். https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/09/26083237/1193801/heart-problem-solving-method.vpf
 5. 129. மருந்து நள்ளிரவு வரை நாங்கள் செல்லியம்மன் கோயில் வாசலிலேயேதான் கிடந்தோம். எழுந்து வீட்டுக்குப் போகவே தோன்றவில்லை. கோயில் வாசலில் கால் நீட்டி உட்கார்ந்து கதை பேசிக்கொண்டிருக்கும் மூன்று பரதேசிகள் யார் என்று விசாரிக்க அந்தப் பக்கம் யாரும் வரவும் இல்லை. பூசாரி கோயில் கதவைப் பூட்டிவிட்டுக் கிளம்பும்போது எங்களைப் பார்த்துவிட்டு சிறிது தயங்கினார். என்ன நினைத்தாரோ, அருகே வந்து ஒரு கும்பிடு போட்டுவிட்டுப் போய்விட்டார். வினய் நெடு நேரம் அண்ணாவைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தான். அவன் தன்னை உடன் அழைத்துச் சென்றிருக்கலாம் என்று நினைக்கிறானோ என்று எனக்குச் சந்தேகமாக இருந்தது. ஆனால் திரும்பத் திரும்ப எனக்குத் தோன்றியது இதுதான். வினய் ஒரு விதத்தில் அண்ணாவைக் காட்டிலும் பெரிய சன்னியாசி. தெரிந்தும் தெரியாமலும் அவன் செய்த தவறுகள் நிறைய இருக்கலாம். ஆனால் அனைத்திலிருந்தும் அவனால் மிக எளிதாக வெளியேறிவிட முடிந்திருக்கிறது. இதை ஏன் அவனால் உணரமுடியவில்லை? ‘இல்லை. என்னால் பெண்ணிலிருந்து வெளியேற முடியவில்லையே?’ என்று அவன் சொன்னான். ‘தினமும் இன்பம் துய்ப்பவன் போலல்லவா பேசுகிறாய்?’ ‘இதுவரை முப்பது முறை நான் புணர்ந்திருக்கிறேன். ஆனால் அந்த நினைவு இப்போதுவரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது’. ‘அது பரவாயில்லை. இப்போது ஒரு பெண் அகப்பட்டால்?’ ‘நிச்சயமாக ஏறிட்டுப் பார்க்கமாட்டேன்’. ‘அதைத்தான் சொல்கிறேன். நீ முப்பது முறை பார்த்துவிட்டதால்தான் இது உனக்கு சாத்தியமாகிறது. ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன். தப்பித்தவறி வினோத் ஒரு பெண்ணிடம் அகப்பட்டுக்கொண்டால் கிழவனாகும்வரை விடமாட்டான்’. வினோத்துக்கு இந்தப் பேச்சு பிடிக்கவில்லை. என்ன சொல்லி என் வாயை அடைக்கலாம் என்று யோசித்து, ‘நீ சன்னியாசியோ இல்லையோ, நீ ஒரு சரியான வைஷ்ணவன்’ என்று சொன்னான். நான் சிரித்துவிட்டேன். ‘சேச்சே. நாடி நரம்பெல்லாம் தளர்ந்து போகும்ரை சுகபோகம் அனுபவித்துவிட்டு சன்னியாச ஆசிரமத்தை ஏற்பது எனக்கு உடன்பாடல்ல. நடு வயதுக்குள் அனைத்தையும் ருசித்து முடித்துவிட வேண்டும்’ என்று சொன்னேன். ‘ஒன்று கவனித்தாயா? நாம் நான்கு பேருமே வைணவக் குடும்பத்தில் பிறந்து வைணவத்தை விட்டு வெகுவாக விலகி வந்துவிட்டோம்!’ ‘ஆம் வினோத். எனக்கு உட்காரும்போதுகூட சாய்ந்து உட்காரப் பிடிக்காது. முதுகு வலிக்கும்வரை நேராக உட்கார்ந்துவிட்டு, வலிக்க ஆரம்பிக்கும்போது படுத்துவிடுவேன்’ என்று சொன்னேன். ‘சரி நாம் எப்போது வீட்டுக்குப் போவது?’ என்று வினய் கேட்டான். ‘என்ன அவசரம்? விடியட்டுமே?’ என்று வினோத் சொன்னான். ஒரு முழு நாள் கழிந்து அடுத்த நாள் இரவுதான் அம்மா காலமாவாள் என்று அவன் சொல்லியிருந்ததை நானும் எண்ணிக்கொண்டேன். இரு நாள் முன்னதாக வீட்டுக்குப் போவதற்கு என்னவோ போல இருந்தது. பாசம் அல்லது அதைப் போன்ற எந்த ஒரு உணர்வும் மனத்தில் எட்டிப் பார்க்கவில்லை என்பது நிம்மதியாக இருந்தது. வினய், வினோத் இருவருமே அப்படித்தான் சொன்னார்கள். என் கவலையெல்லாம் ஒன்றுதான். ஒரு மரணத்தை அருகே இருந்து வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பதை இந்த உலகம் ஒருபோதும் விரும்பாது. ஒரு துளி கண்ணீரையாவது அது கேட்கும். நான் கண்ணீருக்கு எங்கே போவேன்? ‘நமக்குச் சேர்த்து கேசவன் மாமா அழுவார் கவலைப்படாதே’ என்று வினய் சொன்னான். ‘ஆம். அவர் நம்மை நினைத்தும் அழுவார்’ என்றான் வினோத். ‘நல்ல மனிதர். சுத்த ஆத்மா. அழுதுவிட்டுப் போகட்டும். நாம் ஏன் இங்கே உட்கார்ந்திருக்க வேண்டும்? சிறிது தூரம் நடந்து கடற்கரைக்குப் போய்விடலாமே?’ என்று கேட்டேன். இருவரும் எழுந்துகொண்டார்கள். ஆளரவமற்ற சாலையில் நாங்கள் மூவரும் கோவளம் கடற்கரையை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். வழி முழுதும் என்னென்னவோ பேசிக்கொண்டே போனோம். நாங்கள் பேசுவதற்கு இவ்வளவு இருக்கிறது என்பதே எங்களுக்கு அப்போதுதான் தெரிந்தது. வினோத், மாயாப்பூரில் இருந்த அனுபவங்களைச் சொன்னான். அங்கிருந்து அவனை பெங்களூருக்கு அனுப்பியபோது, கொழும்பில் இருந்து அவன் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டதற்குத் தண்டனையாக ஒரு வாரம் அங்கே யாருமே அவனுடன் பேசவில்லை. பிறகு தலைமை சன்னியாசியின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டு சகஜ நிலைக்கு மீட்டிருக்கிறான். ‘எங்களுக்கு கிருஷ்ணன் வேறு ஒழுக்கம் வேறல்ல’ என்று வினோத் சொன்னான். பேசியபடி நாங்கள் நடந்துகொண்டிருந்தபோது எதிரே கங்காதரன் வந்தான். ‘நீங்க இன்னும் வீட்டுக்குப் போகலியா?’ என்று கேட்டான். நான் வெறுமனே சிரித்தேன். ‘நீ எங்கே போய்விட்டு வருகிறாய்?’ என்று வினோத் கேட்டான். ‘சாமி வரச் சொல்லியிருந்திச்சி. போயிட்டு வர நேரமாயிருச்சி. பஸ்ஸு கிடைக்காம ஒரு லாரி புடிச்சி வந்தேன்’ என்று சொன்னான். ‘இவ்வளவு தாமதமாக வீட்டுக்குப் போனால் உன் மனைவி திட்டமாட்டாளா?’ ‘சேச்சே. சாமிய பாத்துட்டு வரேன்னு சொன்னா ஒண்ணியும் சொல்லமாட்டா’. எனக்கு அந்தச் சாமியைப் பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருந்தது. சிறு வயதில் பார்த்திருக்கிறேன். ஒரு நாட்டு வைத்தியராக ஸ்கவுட் ஆசிரியர் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டவர். காலம்தான் எப்படி மனிதர்களை சாமியாக்கிவிடுகிறது! ‘அவர் லேசுப்பட்ட ஆளில்ல பாத்துக்கோ. அவருகிட்டே நூறு கோடியோ, நூத்தம்பது கோடியோ சொத்து இருக்குன்னு ஊருக்குள்ள பேச்சு இருக்குது’ என்று கங்காதரன் சொன்னான். சித்த வைத்தியரிடம் நூறு கோடி சொத்தா? இதைக் கேட்டதும் கங்காதரன் சுவாரசியமாகிவிட்டான். சாமியைப் பற்றிப் பேச ஆரம்பித்தான். அவர் நம்ப முடியாத அளவுக்கு நல்ல மனம் படைத்தவர். ஆயிரம் இரண்டாயிரம் என்றாலும் அவன் கேட்கும்போதெல்லாம் பணம் தர மறுக்காத சாமி. அவரது வைத்தியசாலையின் பின்புறக் கூரைச் சரிவில் கிளிக்கூண்டுக்குப் பக்கத்தில் சொருகியிருக்கும் பச்சை நிற சுருக்குப் பையை என்றாவது ஒருநாள் எடுத்துப் பார்த்துவிட வேண்டும் என்று கங்காதரனுக்கு அங்கே போகும்போதெல்லாம் தோன்றும். சாமி அதிலிருந்துதான் பணத்தை எடுக்கும். எப்போது அதில் பணம் வைக்கப்படும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் கேட்கும்போதெல்லாம் அதிலிருந்தே எடுக்கும். காது குடையும் பேப்பர்ச் சுருள் மாதிரி சுருட்டி வைக்கப்படும் ஐம்பதுகளும் நூறுகளும். சாமிக்குப் பிரம்புக்கூடையில் பணம் வருகிறது என்று ஊருக்குள் ஒரு பேச்சு இருக்கிறது. யார் கொண்டுவருகிறார்கள் என்று யாருக்கும் தெரிந்ததில்லை. யாரிடமிருந்து வருகிறது என்றும் தெரிந்ததில்லை. வைத்தியசாலையில் அவன் பிரம்புக்கூடைகளையும் பார்த்ததில்லை. அகன்ற விசாலமான காரை பூசிய வீடு. முன்பக்கத்துத் தாழ்வாரத்தில்தான் சாமி இருக்கும். செப்பும் தாமிரமும் பூசிக்கொண்டு அதனைச் சுற்றியிருக்கும் கிண்ணங்களெல்லாம் உண்மையில் தங்கக்கிண்ணங்கள் என்றும் ஒரு பேச்சு இருக்கிறது. அதுவும் ஊர்ஜிதமாகாத வதந்திதான். சாமி அவற்றில் கலர் கலராக மருந்துகளைக் குழைத்து வைத்துக்கொண்டு வருகிறவர்களுக்கெல்லாம் கண்ணை மூடி மந்திரம் சொல்லி ஆ திறக்கச் சொல்லி வாயில் ஒரு ஸ்பூன் விடும். சிஷ்யர்கள் இருக்கிறார்கள். வீட்டின் இரண்டாம் கட்டு இருட்டில், பிறவி எடுத்ததே மருந்து இடிக்கத்தான் என்பதுபோல் எப்போதும் இடித்துக்கொண்டிருக்கிற பையன்கள். சாமி அவர்களுடன் அதிகம் பேசி கங்காதரன் பார்த்ததில்லை. அவர் மூலிகை பறிக்க ஏதாவது மலைப் பகுதிக்குக் கிளம்பிப் போகும்போது, சிஷ்யர்கள் உலகைப் பார்க்க வருவார்கள். அகப்படும் சந்துகளில் ஒதுங்கி நின்று அவசரமாக சொக்கலால் ராம்சேட் பீடி குடிப்பார்கள். நாலு இழுப்பு இழுத்துவிட்டு, கற்பூரவல்லி இலைகள் நாலை மென்றபடி திரும்பி வருவார்கள். பறிக்கும் மூலிகைகளை சாமி ஈரத் துணியில்தான் முடிந்து எடுத்து வரும். வைத்தியசாலையின் கம்பியடித்த முற்றத்தில் அவற்றை மொத்தமாகக் கொட்டி, இனம் பிரித்துக் காயவைக்கும். மருந்து இடிப்பது ஒரு வேள்வி என்று அடிக்கடி சொல்லும். ஒருவேளை சாமி ரகசியமாக கஞ்சா பயிரிட்டு விற்கிறதோ என்று கங்காதரனுக்கு அடிக்கடி தோன்றும். வைத்தியசாலைக்குப் போகும்போதெல்லாம் மூலிகைகளை உற்று உற்றுப் பார்ப்பான். எடுத்துக் கசக்கி முகர்ந்து பார்ப்பான். ஓரிரு சமயங்களில் கையில் கொஞ்சம் அள்ளி வந்து தனியே பிரித்தும் ஆராய்ந்திருக்கிறான். இன்றுவரை எந்த யூகமும் சாமி விஷயத்தில் மெய்யென்று நிரூபணமானதில்லை. கங்காதரன் தன்னிஷ்டத்துக்குப் பேசிக்கொண்டே எங்களோடு நடந்து வந்தான். இன்றிரவு நிச்சயம் அவனும் வீடு போய்ச் சேரப்போவதில்லை என்று தெரிந்துவிட்டது. விடிந்ததும் தனக்கு நிச்சயமாக சாமியை அறிமுகப்படுத்தி வைக்க வேண்டும் என்று வினய் அவனிடம் கேட்டுக்கொண்டான். ‘அதுக்கென்ன, போலாம். ஆனா எதுக்கு?’ ‘எனக்கு கஞ்சா வேண்டும்’ என்று வினய் சொன்னபோது, கங்காதரன் மிரட்சியுடன் அவனைப் பார்த்தான். ‘பயப்படாதே. கொஞ்சம் போதும்’. ‘அவரு அதெல்லாம் வெச்சிருக்கறதில்லைன்னுதான் நினைக்கறேன்’. ‘அது பரவாயில்லை. ஆளைப் பார்த்தால் அவரிடம் உண்டா இல்லையா என்று நான் கண்டுபிடித்துவிடுவேன்’ என்று வினய் சொன்னான். ‘அதெப்படி கண்டுபிடிப்பே? எத்தினியோ வருசமா நான் சாமிகூட இருக்கேன். அவருக்குப் பணம் எங்கேருந்து வருதுன்னே என்னாலயே கண்டுபிடிக்க முடிஞ்சதில்ல தெரியுமா?’ ‘அப்படியா?’ ‘இதக் கேளு. ஒருக்கா செல்லியம்மன் கோயில் பூசாரி, சாமியோட கணக்குப்பிள்ளைய மடக்கி இந்த சமாசாரத்த கேட்டாப்டி’. ‘எந்த சமாசாரம்?’ ‘அட பணம் வர்ற சமாசாரம்தான். முழுக்கக் கேளு’ என்றான். அதற்குமேல் நாங்கள் அவன் பேச்சில் குறுக்கிட விரும்பவில்லை. சாமிக்கு மருந்து பிசினஸ் தவிர வேறெந்தத் தொழிலும் இல்லை என்று அவரது கணக்குப் பிள்ளை சூடம் அணைத்து சத்தியம் செய்திருக்கிறார். ‘யோவ், பயப்படாதய்யா. நான் யாராண்டயும் சொல்லமாட்டேன். சும்மா ஒரு இதுக்குதான் கேக்குறது. நாட்ல எந்த மருந்து விக்கிற வைத்தியனத் தேடி காருலயும் தேருலயும் பணக்காரங்க வருதாங்க? சிட்டுக்குருவி லேகியம் வாங்க வாரவன்னாக்கூட திருட்டு முழி காட்டிக்குடுத்துரும். அப்பிடி அதுதான் தேவைன்னு நினைக்கறவன் வேலக்காரன அனுப்பாம அவனேவா காரு ஏறி வரப்போறான்? சாமி என்ன தம்பிய இளுத்தி வெச்சி சர்ஜரி பண்ணி பெரிசாக்கியா விடுதாரு? தபாரு.. நாலாநாள் நைட்டு ரெண்டு மணிக்கு குவாலிஸ்ல ஆறு பேர் வந்தாங்கல்ல? அவுங்க யாரு? அத்த மட்டுமானா சொல்லிடு’. ‘நீ ரெண்டு மணிக்கு அங்க எதுக்கு வந்த?’ என்று கேட்டார் கணக்கப்பிள்ளை. ‘மோகினி புடிச்சி இட்டாந்துச்சி. அதா முக்கியம்? ஆறு பேர் வந்தாங்கல்ல? கையில பெருசா சூட்கேசு இருந்திச்சில்ல? அதுக்குள்ளார பணம்தான?’ அவர்கள் பபுவா நியூகினியாவிலிருந்து வந்த கப்பலில் இருந்து மூலிகை எடுத்து வந்தவர்கள்தான் என்று அடித்துச் சொல்லிவிட்டுக் கணக்கப்பிள்ளை திரும்பிப் பாராமல் போய்விட்டார். மறுநாள் கங்காதரனைத் தற்செயலாகப் தையூர் சந்தையில் பார்த்தபோது இதைச் சொல்லிப் புலம்பினார். ‘நாட்ல நல்லவனா ஒருத்தன நடமாட விடமாட்டேங்குறானுக கங்காதரா. சாமி சொக்கத் தங்கம். முப்பது வருசமா அதுங்கூட இருக்கேன். ஒரு தப்புதண்டா கிடையாது. அதிர்ந்து ஒரு வார்த்த பேசாது. தா உண்டு, மருந்துக உண்டு, சூரணம் உண்டு, வெளக்கு வெச்சா திருவருட்பா உண்டுன்னு கெடக்குது. பெரிய எடத்து மனுசங்கள்ளாம் பாக்க வாராகன்னா, அது சாமியோட வித்தைக்கு இருக்கற மகிமை. ஒண்ணு சொல்லுறேன் கேட்டுக்க. சோறு போடறவனையும் சொஸ்தமாக்குறவனையும் சுத்திவர எப்பமும் ஒரு கூட்டம் இருக்கத்தாஞ்செய்யும். இந்த ரெண்டுதாண்டா எல்லாத்துக்கும் அடிப்படெ. இது புரியல நம்மூரு சோம்பேறிகளுக்கு’. கங்காதரன் வேறுபுறம் திரும்பிச் சிரித்துக்கொண்டான். முப்பது வருடங்களாகக் கூட இருக்கும் கணக்குப் பிள்ளைக்கு மட்டுமல்ல. சாமிக்கு இரண்டு வருஷம் தள்ளிப் பிறந்த அதன் தம்பிக்குக்கூட சாமியைப் பற்றி ஏதும் தெரியாது. தனக்கு மட்டும் தெரியுமா என்ன? கொஞ்சம் தெரியும். தன்னைப் போல் சிலருக்குக் கொஞ்சம் கொஞ்சம் தெரிந்திருக்கும். அந்தச் சிலர் யார் என்று அவர்கள் ஒருவருக்கொருவர் தெரியாது. தனக்கு, தன்னைத் தவிர வேறு யார் யார் என்று இன்றுவரை தெரியாதது போல. யாருக்கும் முழுக்கத் தெரியாது. பெரும்பாலானவர்களுக்கு சுத்தமாகத் தெரியாது. ரங்கநாத ஆச்சாரிக்குக் கொஞ்சம் கூடுதலாகத் தெரிந்திருக்கலாம். ஆனால் கண்டுபிடிக்க முடியாது. செவிட்டு முண்டம். கேட்கிற எதுவும் காதில் விழாது. சாமியின் உத்தரவுகளை மட்டும் கொண்டுவந்து கொட்டிவிட்டுப் போய்விடும். சாமி பெரிய ஆள்தான். ரங்கநாத ஆச்சாரி மாதிரி ஒரு ஆளைத் தனது பர்சனல் அசிஸ்டெண்டாக வைத்துக்கொள்ள வேறு யாருக்குத் தோன்றும்? கங்காதரன் இன்னும் என்னென்னமோ சொல்லிக்கொண்டே இருந்தான். பிறகு திடீரென்று வீட்டு ஞாபகம் வந்து, ‘நாளைக்கிப் பாப்பம்டா’ என்று சொல்லிவிட்டுப் போனான். ‘விமல், நீங்கள் இருவரும் விடிந்ததும் வீட்டுக்குப் போய்விடுங்கள். நான் நீலாங்கரை சென்று அந்த சாமியைப் பார்த்துவிட்டு வருகிறேன்’ என்று வினய் சொன்னான். (தொடரும்) http://www.dinamani.com/junction/yathi/2018/sep/13/129-மருந்து-2998999.html
 6. 128. விட்டகுறை பேருந்து கேளம்பாக்கத்தை நெருங்கியபோது இரவு மணி ஒன்பதுக்கு மேல் ஆகிவிட்டது. இதற்குமேல் இன்னொரு வண்டிக்காகக் காத்திருக்க வேண்டாம் என்று வினோத் சொன்னான். திருவிடந்தைவரை நடந்தே போய்விடலாம் என்று முடிவு செய்து, நாங்கள் மன்னார் ஓட்டல் வழியாக இரட்டைக் குளத்தைத் தாண்டிக் கோவளம் சாலையில் நடக்க ஆரம்பித்தோம். குளமெல்லாம் ஒரு காலத்தில் இருந்ததுதான். இப்போது அந்த இடமெல்லாம் கட்டடங்களாகிவிட்டன. உப்பளங்கள் வெகுவாகக் குறைந்து நிறைய அடுக்குமாடி வீடுகள் வரத் தொடங்கியிருந்தன. அழகான சாலையும் சாலை விளக்குகளும் சாலையோர நடைபாதை வசதியும் நடைபாதைச் செடிகளும் பிரமிப்பளித்தன. நாங்கள் அறிந்த கிராமச் சூழல் அங்கு முற்றிலும் இல்லாது போயிருந்தது. எங்கள் சிறு வயதுகளில் கேளம்பாக்கத்தில் இருந்து திருவிடந்தை வருவதற்குச் சாலை கிடையாது. உப்பளங்களுக்கு இடையே பாத்தி கட்டியது போலப் போடப்பட்டிருக்கும் மண் மேட்டின் மீதுதான் நடந்து செல்ல வேண்டும். உப்பள முதலாளிகளும் அந்த ஒற்றையடிப் பாதையில்தான் குடை பிடித்துக்கொண்டு நடந்து சென்று மேற்பார்வை பார்ப்பார்கள். சில சமயம் அபூர்வமாக யாராவது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அங்கே வந்துவிடுவார்கள். உடனே ராஜமாணிக்க முதலியார் உப்பு குடோனின் பின்புறம் கவிழ்த்துப் போடப்பட்டிருக்கும் கட்டுமரத்தை எடுத்துத் தண்ணீரில் விட்டு, அதில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு கடலோரம் வரை ஓர் உலா போய்விட்டு வருவார்கள். தலையில் வட்டவடிவமாகப் பெரிய குல்லாய் போட்டுக்கொண்டு சுருட்டு பிடித்துக்கொண்டு கட்டுமரத்தில் போகும் வெள்ளைக்காரர்களின் தோற்றம், அந்நாள்களில் எங்களுக்குப் பெரும் ஏக்கம் தரும். எத்தனை இன்பமான வாழ்வு இந்த வெள்ளைக்காரர்களுக்கு! விடிந்ததும் வீட்டுப்பாடம் செய்யும் நிர்ப்பந்தமில்லை. அடித்துப் பிடித்துக்கொண்டு பள்ளிக்கும் வேலைக்கும் ஓடும் அவசரமில்லை. ரேஷன் கடையில் கருங்கல் வைத்து இடம் பிடித்து நிற்கும் அவசியமில்லை. முடிவற்ற நீர்ப்பரப்பில் கட்டுமரம் ஏறி எங்கு வேண்டுமானாலும் சுற்றிக்கொண்டே இருக்கலாம். அடுத்த ஜென்மத்தில் நான் ஒரு வெள்ளைக்காரனாகப் பிறக்க வேண்டும் என்று எத்தனையோ முறை எண்ணியிருக்கிறேன். இதனை நினைவுகூர்ந்து நான் சொன்னபோது வினய் சிரித்தான். அப்படியொரு வெள்ளைக்காரத் துரை சுருட்டு பிடிப்பதைப் பார்த்த பின்புதான் முதல் முதலில் அவனுக்கும் புகைப்பிடித்துப் பார்க்கும் ஆசை உண்டானது என்று சொன்னான். தையூரில் சுருட்டு கிடைக்காததால்தான் அன்றைக்கு பீடி வாங்கிக் குடித்ததாகவும் சொன்னான். ‘இப்போது உண்டா அந்தப் பழக்கம்?’ என்று வினோத் கேட்டான். ‘கஞ்சாவுக்காக மட்டும் பயன்படுத்துகிறேன்’ என்று வினய் சொன்னான். ‘கஞ்சாவா!’ ‘ஆம். தியானத்தின்போது அது அவசியம் எனக்கு’. வினோத் அதன்பின் அந்த விஷயத்தைப் பற்றிப் பேசவில்லை. கோவளம் சாலையில் நாங்கள் நடந்துகொண்டிருந்தபோது, சிறிது தூரத்தில் இருந்து லவுட் ஸ்பீக்கரில் அம்மன் பாடல் ஒலிக்கும் சத்தம் கேட்டது. ‘விமல், உனக்கு நினைவிருக்கிறதா? சிறு வயதில் நாம் செல்லியம்மன் கோயிலுக்கு வருடம் ஒருமுறை போய்வருவோம்’ என்று வினோத் சொன்னான். எப்படி மறப்பேன்? அன்றைக்குச் செல்லியம்மன் கோயில்தான் பிராந்தியத்திலேயே மிக அழகான இடம். சுற்றிலும் வேப்ப மரங்கள் அடர்ந்த நிலப்பரப்பின் நடுவே நிறைய வெட்டவெளி இடம் விட்டுக் கோயிலைக் கட்டியிருந்தார்கள். சிறிய கோயில்தான். ஆனால் வருடா வருடம் அங்கு நடைபெறும் ஆடித் திருவிழா, படூர் மயான கொள்ளைத் திருவிழாவைக் காட்டிலும் விசேடமானது. தெற்கே செங்கல்பட்டு முதல் வடக்கே திருவான்மியூர் வரை உள்ள எல்லா கிராமங்களில் இருந்தும் சனம் வந்துகொண்டே இருக்கும். மாட்டு வண்டிகளிலும் சைக்கிள்களிலும் ஜட்கா வண்டிகளிலும் வந்து சேரும் கூட்டம் கோயிலைச் சுற்றியுள்ள வெட்ட வெளியிலேயே இரண்டு மூன்று நாள்களுக்குத் தங்கிவிடும். பொங்கல் வைப்பார்கள். ஆடு, கோழி பலி கொடுப்பார்கள். சாமி வந்து ஆடுவார்கள். கரகம் நடக்கும். ஒயிலாட்டம் நடக்கும். பத்து நாள் திருவிழா அமர்க்களப்படும். அம்மாவிடம் தலா ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு நாங்கள் நான்கு பேரும் திருவிழாவுக்கு மாலை வேளைகளில் போவோம். கோயில் பூசாரி ஆறுமுகப் படையாச்சியின் மகன் கங்காதரன் அண்ணாவின் வகுப்புத் தோழன் என்பதால் எங்களுக்குப் பிரசாதமெல்லாம் தனியே பார்சலாக வரும். அண்ணாவுக்குக் கேசவன் மாமாவைச் சீண்டுவதற்கு அந்த ஒரு விஷயம் போதும். ‘மாமா, ஆயிரம் சொல்லுங்கோ. செல்லியம்மன் கோயில் பொங்கலாட்டம் உங்களோடது இல்லே’. ‘சீ போடா’ என்பார் கேசவன் மாமா. அண்ணா வீட்டை விட்டுப் போன பிறகு நாங்கள் வீதியை விட்டு வெளியேறுவதே குறைந்து போனது. வினய் வெளியேறியதும் அம்மா என்னையும் வினோத்தையும் பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே தான் வைத்திருந்தாள். கடைக்குப் போகவேண்டுமென்றால்கூட அவளேதான் போவாள். அல்லது மாமாவைப் போகச் சொல்லுவாள். ஆபீஸ் போய்வருவது தவிர வேறெந்த வேலையும் தனக்குரியதல்ல என்று எண்ணிய அப்பாவே பல சமயம் சைக்கிள் எடுத்துக்கொண்டு மார்க்கெட்டுக்குப் போய்வருவாரே தவிர, என்னையோ வினோத்தையோ வெளியே போகச் சொன்னதில்லை. நான் போன பின்பு அம்மாதிரியான நெருக்கடி ஏதும் தனக்கு வீட்டில் இருக்கவில்லை என்று வினோத் சொன்னான். அம்மாவும் அப்பாவும் சோர்ந்துபோயிருப்பார்கள். இழுத்துப் பிடிப்பதன் மீதான நம்பிக்கை விட்டுப்போயிருக்கும். அதனால்தான் வினோத் திருமணக் காலம் வரை வீட்டிலேயே இருந்தானோ என்னவோ? வினய்தான் சொன்னான், ‘எத்தனை வருடங்கள் ஆனால் என்ன? இதெல்லாம் நமக்கு மறப்பதே இல்லை அல்லவா?’ எப்படி மறக்கும்? ‘நாம் செல்லியம்மன் கோயிலுக்குப் போய்விட்டுப் போகலாமா?’ என்று கேட்டான். நான் உடனே சரி என்று சொன்னேன். கோயிலுக்குச் செல்வதற்கு நாங்கள் அறிந்த பாதை அப்போது இல்லை. வழித்தடங்கள் வெகுவாக மாறிவிட்டிருந்தன. வேப்பமரம் ஒன்றுகூடக் கண்ணில் தென்படவில்லை என்பது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அந்தப் பகுதி முழுவதும் வீடுகள் நிறைந்திருந்தன. செல்லியம்மனே ஒரு வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கத் தொடங்கிவிட்டாளோ என்ற சந்தேகம் வந்தது. ஆனால் திருவிழா நடக்கிறது. அதில் சந்தேகமில்லை. வேட்டுச் சத்தம் இடைவிடாமல் கேட்டது. லவுட் ஸ்பீக்கர் அம்மன் பாடல்கள் அவள் அங்கேதான் இருக்கிறாள் என்பதைத் தெரியப்படுத்தின. நாங்கள் கோயிலை நெருங்கியபோது ஒரே ஒரு வேப்பமரம் மட்டும் மிச்சம் இருந்ததைக் கண்டோம். அது சற்று ஆறுதலாக இருந்தது. அம்மனை அங்கே கொண்டுவந்து அமர்த்தியிருந்தார்கள். சுற்றிலும் மக்கள் கூட்டம். சொல் புரியாத மொத்த சத்தம். இலக்கின்றி அலைந்துகொண்டிருந்த கூட்டத்துக்குள் நுழைந்து நாங்கள் வேப்பமரத்தடியை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தோம். நல்ல இருட்டு, குறைவான வெளிச்சம் என்பதால் எங்களை யாரும் சரியாகப் பார்த்திருக்க முடியாது என்று தோன்றியது. ‘பார்த்தால் மட்டும் உடனே அடையாளம் தெரிந்துவிடுமா என்ன?’ என்று வினோத் கேட்டான். அதுவும் நியாயம்தான். ஆனால் மூன்று பேர் காவி உடையில் நடமாடினால் கண்டிப்பாக அது கவனம் ஈர்க்கும். அதன்பொருட்டாவது திரும்பிப் பார்ப்பார்கள். அப்படிப் பார்ப்பவர்களுள் எத்தனை பேருக்கு எங்களைத் தெரிந்திருக்கும்? யாரும் கவனிக்காதிருந்தால் மகிழ்ச்சி என்று நான் சொன்னேன். நாங்கள் வேப்பமரத்தடியில் அம்மன் வீற்றிருந்த இடத்துக்குப் பத்தடி தூரத்தில் இருந்த தண்ணீர்த் தொட்டியின் அடியில் சென்று நின்றுகொண்டு கவனிக்க ஆரம்பித்தோம். அன்றைய திருவிழா நிகழ்ச்சிகள் முடிவுக்கு வந்துகொண்டிருந்தன. பூசாரி மணியடித்து, கற்பூரம் காட்டிக்கொண்டிருந்தது தெரிந்தது. மக்கள் கலைய ஆரம்பித்திருந்தார்கள். நாங்கள் பார்த்துக்கொண்டே இருந்தபோது வினய்க்கு இடது புறம் இருந்து ஒருவன் எங்களை நோக்கி நடந்து வந்தான். அவன் அருகே வந்தபோது நாங்கள் உற்றுப் பார்த்தோம். அவனும் நின்று எங்களைக் கவனித்தான். ‘டேய், நீ கங்காதரன்தானே?’ என்று வினய் கேட்டான். ‘ஆமா நீங்க...’ என்று அவன் சந்தேகத்தோடு எங்கள் மூவரையும் மீண்டும் உற்றுப் பார்த்தான். பிறகு அவனே அடையாளம் தெரிந்துகொண்டு, ‘நீங்க விஜய் தம்பி வினய் இல்லே?’ என்றான். வினய் புன்னகை செய்தான். ‘அப்ப இவன்?’ ‘வினோத். நான் விமல்’ என்று சொன்னேன். அவனால் நம்பவே முடியவில்லை. வயதும் தோற்றமும் வாழ்வும் வேறு வேறாகிவிட்டிருந்தாலும், நினைவில் பெயர்களும் உருவங்களும் ஒருவாறு உட்கார்ந்துவிடத்தான் செய்கின்றன. கங்காதரன் மகிழ்ச்சியோடு வினய்யை நெருங்கிக் கட்டியணைக்க வந்தான். என்ன நினைத்தானோ. சட்டென்று நிறுத்திக்கொண்டு, ‘சாமி ஆயிட்டியா?’ என்று கேட்டான். வினய் சிரித்தான். ‘ஊருக்கே தெரியும்டா உங்க கதையெல்லாம். பாவம் உங்கம்மாதான் உசிரும் போகாம, கெடக்கவும் முடியாம இளுத்துகிட்டுக் கெடக்குறா. போய் பாத்திங்களா?’ என்று கேட்டான். ‘இல்லை. இப்போதுதான் வருகிறோம்’. ‘விஜய் வந்திருக்கானா?’ என்று கேட்டான். ‘தெரியவில்லை. வருவான்’ என்று வினோத் சொன்னான். ‘எப்பிடி மாறிப் போயிட்டிங்கடா எல்லாரும்! நல்லாருக்கிங்கல்ல?’ என்று அன்போடு விசாரித்தான். நாங்கள் புன்னகை செய்தோம். அவனைக் குறித்தும் அவனது அப்பா அம்மா குறித்தும் விசாரித்தோம். ‘அவங்கல்லாம் இல்லே. போய்ச் சேந்தாச்சு’ என்று சொன்னான். அவனுக்குத் திருமணமாகி ஒரு பெண் பிறந்து அவளுக்கும் திருமணமாகி ஒரு பெண் குழந்தை பிறந்து நாவலூரில் இருப்பதாகச் சொன்னான். ‘நீதான் இப்பவும் இங்க பூசாரியா?’ என்று வினய் கேட்டான். ‘அப்பா காலத்தோட முடிஞ்சிது அதெல்லாம். நமக்கு தையூர்ல பலசரக்கு வியாபாரம் இருக்கில்ல?’ என்று சொன்னான். எங்களை அவசியம் வீட்டுக்கு வரச்சொல்லி அவன் கேட்டுக்கொண்டிருந்தபோது, யாரோ அவன் பேரைச் சொல்லி உரக்க அழைத்தபடி வருவது தெரிந்தது. ‘தோ வர்றேன் ஆச்சாரி’ என்று பதிலுக்குக் குரல் கொடுத்துவிட்டு, ‘அடையாளம் தெரியுதா பாரு. ரங்கநாத ஆச்சாரி’ என்று சொல்லிச் சிரித்தான். ஒரு எழுபது வயதுக் கிழவர் நெருங்கி வந்தார். எங்கள் மூவருக்குமே அவரை அடையாளம் தெரியவில்லை. ‘தெரியலியா? நம்ம நீலாங்கர வைத்தியர்ட்ட அசிஸ்டெண்டா இருந்தவருடா. ஆயிரம் பேரக் கொன்னு இவரும் அர வைத்தியராயிட்டாரு’ என்று சொல்லிவிட்டுச் சிரித்தான். ‘யாரு?’ என்றார் அந்தக் கிழவர். ‘ஆச்சாரி, இவுக திருவிடந்தப் பசங்க. அண்ணந்தம்பிங்க நாலு பேரு வீட்ட விட்டு ஓடிப்போனாங்களே.. இப்பம்பாருங்க, சாமியாருங்களா திரும்பி வந்திருக்கானுக’. ‘ஓ...’ என்று சொல்லிவிட்டு, ‘மூணுல ஆருடா விஜய்?’ என்று கேட்டார். மூன்று பேருமே அவனில்லை என்று சொன்னோம். அண்ணாவை இவர்கள் யாரும் இன்றுவரை மறக்கவில்லை என்பது வியப்பாக இருந்தது. இத்தனைக்கும், அவன் ஊரில் இருந்த காலத்தில் யாருடனும் அதிகம் பேசிப் பழகி நாங்கள் அறிந்ததில்லை. எப்படியோ ஒரு நினைவுச் சின்னமாகிவிடுவதும் ஒரு கலைதான் என்று தோன்றியது. ‘செரி. உங்களாண்ட அப்பறமா பேசிக்குறேன். இங்கதானே இருப்பிங்க?’ ஆம் என்று சொன்னோம். 67செரி. டேய் கங்காதரா, இந்தா. சாமி உன்னாண்ட இந்த லெட்ர குடுக்க சொல்லிச்சி’ என்று சொல்லி அவன் கையில் ஒரு துண்டுச் சீட்டை வைத்துவிட்டுக் கிழவர் நகர்ந்து போனார். ‘எந்த சாமி?’ என்று வினய் உடனே கேட்டான். ‘நீலாங்கர வைத்தியருதான்’ என்று கங்காதரன் சொன்னான். 67அவர் எப்போது சாமி ஆனார்?’ ‘சும்மா சொல்றதுதான். சாமியாரெல்லாம் இல்லே’ என்று சொல்லிவிட்டு கெக்கெக்கே என்று சிரித்தான். விளக்கு வெளிச்சத்தில் அந்தக் கடிதத்தைத் தூக்கிப் பிடித்துப் படித்தான். பிறகு என்ன நினைத்தானோ, ‘டேய், நாளைக்குப் பாப்பம்டா. இப்பம் ஒரு அவசர சோலி’ என்று சொல்லிவிட்டு சட்டென்று கிளம்பிப் போனான். அவன் போனபின்பு வினய் சொன்னான். அந்தக் கடிதத்தில் ஒரு வரிதான் எழுதியிருந்தது. ஒரு பெரிய காரியம் ஆகவேண்டி இருக்கிறது, உடனே வரவும். ‘நீ எப்படிப் படித்தாய்?’ ‘முடியும். விட்ட குறை’ என்று சொன்னான். (தொடரும்) http://www.dinamani.com/junction/yathi/2018/sep/12/128-விட்டகுறை-2998289.html
 7. சூப்பரான ஆட்டு மூளை பொரியல் அ-அ+ ஆட்டு மூளையில் கொழுப்பு மிகவும் குறைவு. அதில் உள்ள பாஸ்பரஸ் கிட்னியில் உள்ள கசடுகளை சுத்தம் பண்ணுவதால் உடலுக்கு மிகவும் நல்லது. தேவையான பொருள்கள்: ஆட்டு மூளை - 2 மிளகாய்தூள் - 1 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன் ப.மிளகாய் - 1 கொத்தமல்லி - சிறிதளவு வெங்காயம் - 1 வெங்காயம் - 1/2 கப் சோம்பு - 1/2 ஸ்பூன் எண்ணெய் - 3 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை : வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும். ஆட்டு மூளை மேல் பகுதியை தண்ணீரில் ஊற்றி மெதுவாக கழுவி ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி வேகவிடவும். அடிக்கடி மூளையைப் புரட்டி போடவேண்டும். இல்லாவிட்டால் அடியில் பிடித்து விடும். மூளை நன்றாக வெந்தபின் இறக்கி ஆறவைத்து துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதோடு மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பை கலந்து மெதுவாக குலுக்கி வைக்கவும். வாணலியில் அடுப்பில் வைத்து அதில் எண்ணைய் விட்டு காய்ந்தவுடன் நறுக்கிய வெங்காயம்.ப.மிளகாயை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் வேக வைத்த மூளையை இந்த மசாலாவுடன் சேர்த்து மிகவும் மெதுவாக கிளறவேண்டும். மசாலா அனைத்து ஒன்றாக சேர்ந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பறிமாறலாம். சூப்பரான ஆட்டு மூளை பொரியல் ரெடி. https://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2018/09/22131331/1193043/Mutton-Brain-Fry.vpf சத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல் அ-அ+ கீரை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு கீரையில் சட்னி, துவையல் செய்து கொடுக்கலாம். இன்று முருங்கைக் கீரை துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : முருங்கைக்கீரை - 1 கைப்பிடி, காய்ந்த மிளகாய் - 4, புளி - கொட்டைப்பாக்களவு, உளுந்தம் பருப்பு - 2 ஸ்பூன், கடலைப்பருப்பு - 1 ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், கடுகு - தாளிக்க, எண்ணெய் - சிறிது, உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை : முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும் கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்தம் பருப்பு, கடலைபருப்பு, புளி, காய்ந்த மிளகாய் - 3 சேர்த்து நன்றாக வதங்கிய பின்னர் கீரையை சேர்த்து வதக்கவும். கீரை சற்று வதங்கியதும் ஆறவைக்கவும். நன்றாக ஆறியதும் உப்பு, சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், 1 காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து துவையலில் சேர்த்து கலந்து பரிமாறவும். சூப்பரான முருங்கைக் கீரை துவையல் ரெடி. https://www.maalaimalar.com/Health/HealthyRecipes/2018/09/24101623/1193331/Murungai-Keerai-Thogayal.vpf
 8. 127. கடத்தல் அந்தப் பெண் அவன் எதிரே அமர்ந்திருந்தாள். அவளது தோழி அவனுக்குப் பக்கத்தில் இருந்தாள். வினய் தன்னெதிரே அமர்ந்திருந்தவளின் கண்களையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். நான்கு விநாடிகளுக்கு ஒருமுறை அவள் இமைப்பது அவனுக்கு இடைஞ்சலாக இருந்தது. ‘சிறிது நேரம் இமைக்காதிருக்க முயற்சி செய்’ என்று சொல்லவும் செய்தான். ஆனால் அது அவளால் முடியவில்லை. சிரமப்பட்டாள். அவளது தோழி, ‘நான் முயற்சி செய்கிறேன் சுவாமிஜி’ என்று சொன்னாள். எனவே, இமைக்கும் பெண்ணைத் தன்னருகே அமர்த்திக்கொண்டு, இரண்டாமவளை எதிரே வந்து அமரச் சொன்னான். அவளால் ஏழெட்டு விநாடிகள் இமைக்காதிருக்க முடிந்தது. அதற்கு மேல் முடியவில்லை. வினய் யோசித்தான். பிறகு இருவரையுமே அருகருகே அமர்த்தி, கண்களை மூடிக்கொள்ளும்படி சொன்னான். அவர்களும் அப்படியே செய்தார்கள். வினய் தனது தீட்சண்யம் பொருந்திய பார்வையை அவர்கள் இருவரது புருவ மத்தியிலும் கொண்டு நிறுத்தினான். இதற்காகத் தனது கண்ணை ஒண்ணரைக் கண்ணாகச் செய்துகொண்டான். பிறகு மெல்ல மந்திரங்களை முணுமுணுக்க ஆரம்பித்தான். நெடுநேரம் அவன் தனது பார்வையைப் பிளந்து இரு புருவ மத்தியிலும் வைத்திருந்தபடியால் அவனுக்குத் தலை வலிக்க ஆரம்பித்தது. அடக்கிக்கொண்டு, தொடர்ந்து மந்திர உச்சாடனம் செய்துகொண்டிருந்தான். இரவு ஒன்பது மணிக்கு ஆரம்பித்தது நள்ளிரவு ஒரு மணி வரை இடைவெளியின்றி நீண்டுகொண்டே சென்றது. வினய் முதலில் அந்தப் பெண்களின் முகங்களை தியானம் செய்தான். பிறகு அங்கங்களைத் தனித்தனியே உற்று நோக்கி தியானம் செய்யத் தொடங்கினான். கழுத்தைக் கடந்து மார்பங்களின் மீது அவனது பார்வை படிய வந்தபோது, அவனே கைகளை நீட்டி அவர்கள் அணிந்திருந்த துப்பட்டாவை விலக்கிவிட்டான். கிட்டத்தட்ட ஆழ்மன உறக்கத்தின் நெருக்கத்தில் சென்றிருந்த அந்தப் பெண்கள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இயற்கையின் மிக வினோதமான படைப்புகளில் ஒன்று பெண்களின் மார்பகங்கள் என்று அவனுக்குத் தோன்றியது. ஆப்பிள் பயிரைத் தவிர வேறெதையும் அதற்கு உதாரணமாகச் சொல்லிவிட முடியாது. ஐந்தடி, ஆறடி உயரம் வளர்ந்த ஆப்பிள் மரங்களின் கிளைகள் மிகவும் மெலிதாக இருப்பதை அவன் உதகமண்டலத்தில் கண்டிருக்கிறான். ஒரு குருவி அதன் மீது அமர்ந்தாலும் லேசாக அசைந்துகொடுக்கக்கூடிய அளவுக்கு மெலிதாக அவை இருக்கும். ஆனால் அதில்தான் கொத்துக் கொத்தாக எத்தனை கனிகள் உருவாகின்றன. காற்றில் அசைந்தாலும் விழுவதில்லை. அசையும்போதெல்லாம் ஒவ்வொரு ஆப்பிளும் ஒரு பெண்ணைப்போல அவனுக்குத் தோன்றியிருக்கிறது. படைப்பின் உச்சம் என்று பெண்ணின் மார்பகங்களை மட்டுமே சொல்ல முடியும். அதன் மென்மையும் மிருதுத்தன்மையும் சுண்டி ஈர்க்கும் சுபாவமும். சட்டென்று கூடு விட்டுக் கூடு பாய்வதுபோல ஒரு பெண்ணின் கண்ணுக்குள் நுழைந்து நெஞ்சம் வரை இறங்கி உட்புறம் பார்த்துவிட முடிந்தால், அது எப்பேர்ப்பட்ட அனுபவமாக இருக்கும். நரம்புகள் ஊடோடும் சதைக் கோளம். கொதகொதவென்று முழுதும் பாய்ந்து நிரம்பிய உதிரம். எதுவும் வெளித்தெரியாதபடி போர்த்தப்பட்ட ஆயிரமாயிரம் அணுத்துகள்களால் நெய்த சதைப் பரப்பு. கோலத்தின் நடுவே பூவை வைத்தாற்போல அதன் நட்டநடுவில் சொருகப்பட்ட முலைக்காம்பு. உதிரம் பாலாகும் அவசியமில்லாது போயிருந்தால், காம்புக்கு அவசியமிருந்திருக்காது. அப்போது முலை ஒரு மொண்ணைத்தன்மை எய்தியிருக்கும். காம்பற்ற முலைகள் கவனம் தொடுமா? தெரியவில்லை. வினய் மேலும் அதை தியானித்தான். இதே பெண்கள் இன்னும் நாற்பது வருடங்களுக்குப் பிறகு எப்படி இருப்பார்கள்? வளர்ந்து செழித்து, பூரித்து நிற்கும் இந்த முலைகள் அப்போது எப்படி இருக்கும்? வாடி உதிர்ந்த ஆப்பிள்களுக்கு வடிவ சேதாரம் பெரிதாக இராது. ஆனால் முலைகள் அப்படியா? ஒரு சுருக்குப் பையில் அடைத்த பொருள்களை ஒவ்வொன்றாக உருவி வெளியே எடுக்கும்போது எய்தும் தோற்றத்தையல்லவா அது பெறவிருக்கிறது? சுருங்கிய சதைகள். முனை மழுங்கிய காம்புகள். கூர்மையற்ற வெளித்தோற்றத்தைக் கடந்து அப்போது உள்ளே போக முடியுமானால் அதே ரத்தம், அதே நரம்புகள். ஆனால் அதே வீரியம் இராது. பிராணன் விலகியோடிக்கொண்டிருக்கும் தருணத்தில், அவயவங்களின் அலங்கார பூஷித சேதாரம் தவிர்க்க இயலாதது. ஆக சுண்டியிழுக்கச் செய்வது முலைகளா, பிராணனா? உதிரம் கெட்டு நரம்புகள் வலுவிழந்து கிருமிகளின் வாசஸ்தலமாக உடல் மாறக்கூடுமானால், இந்தக் கவர்ந்திழுக்கும் முலைகளின் உட்புற வாயிலைத் திறக்கத் தோன்றுமா? சட்டென்று அவன் தன்னெதிரே இருந்த இரு பெண்களின் ஒருத்தியின் விழிகளுக்குள் நுழைந்து அவள் நெஞ்சத்தை நெருங்கி அதை அழுகிய நிலையில் காண முற்பட்டான். நெளியும் புழுக்களும் குடலைப் புரட்டும் நெடியும். உதிரம் முழுவதும் கரேலென்று சாக்கடைத் திரவமாக மாறிப் பாய்ந்துகொண்டிருந்த நிலையில், வினய் அதில் மெல்ல மெல்ல இடுப்பளவு ஆழத்தில் நடந்து அவளது முலைகளின் மையத்தைத் தொடச் சென்றான். புழுக்கள் அவன் மீது ஏறி நெளிந்தன. சாக்கடைத் திரவம் அவனது நாசித் துவாரங்கள் வழியே உட்புகுந்து மூளை முழுவதையும் சுற்றி வரத் தொடங்கியது. அதன் நெடி அவன் நினைவெங்கும் படர்ந்து குமட்ட ஆரம்பித்தது. சகித்துக்கொண்டு அவன் மையத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தான். தலை சுற்றியது. கண்கள் இருண்டு போயின. கால்கள் படர்ந்து புதைந்த இடமெங்கும் மலக்கிடங்கே போலத் தோன்றின. இன்னும் சில கணங்களில் தொட்டுவிடுவோம் என்று அவனுக்குத் தெரிந்த நேரத்தில் அவனது கரங்கள் அவளது முலைகளை வருடிக்கொண்டிருந்தன. ‘சுவாமிஜி...’ என்று அவள் மெல்ல அழைத்தாள். அவன் அப்படியே அவளை இழுத்துத் தன் மடியின் மீது கிடத்திக்கொண்டான். குனிந்து அவள் பின்கழுத்தில் முத்தமிட்டான். இப்போது துர்நாற்றங்கள் மறைந்தன. அவளது கூந்தல் மிகவும் வாசனையாகத் தெரிந்தது. வியர்வை கலந்த அவளது சருமத்தின் நெடியும் கூந்தல் தைலத்தின் நெடியும் இணைந்து புதுவித போதையளித்தன. அவன் நெடு நேரம் அவளை முகர்ந்துகொண்டே இருந்தான். அப்படியே இருவரும் சுருண்டு தரையில் விழுந்து புரளத் தொடங்கினார்கள். இப்போது அவன் அவளது மார்பகங்களை வருடியபோது ரத்தமோ சதையோ நரம்புகளோ நெளியும் புழுக்களோ அவனுக்குத் தெரியவில்லை. மேகத்தின் பொதியில் இருந்து பிய்த்தெடுத்த ஒரு துண்டின் உலகில் அவன் தன்னை மறந்து திளைக்கத் தொடங்கியிருந்தான். எவ்வளவு நேரம் அவன் அப்படியே இருந்தானோ தெரியாது. சுய உணர்வடைந்து மீண்டபோது, அவன் அந்தப் பெண்ணின் மீதும், அவன் மீது அவளது தோழியும் படுத்துக் கிடப்பதை உணர்ந்தான். வினய் இந்தச் சம்பவத்தைச் சொல்லிவிட்டுக் குமுறிக் குமுறி அழுதான். ‘நான் கல்கத்தாவில் இருந்த காலத்தில் எப்படியாவது பெண்ணுடலைக் கடந்து சென்றுவிட மிகவும் ஏங்கினேன். ஆனால் ஒவ்வொரு முறை நான் முயற்சி செய்தபோதும் சறுக்கினேன். அது என் சுய தீட்சைக்கான தண்டனை என்று எண்ணிக்கொண்டேன்’ என்று சொன்னான். ‘அழாதே’ என்று சொல்லிவிட்டு வினோத் அவன் கழுத்தின் பின்புறமாகத் தனது வலக்கரத்தை நீட்டி அவன் நெற்றிப் பொட்டைத் தொட்டான். அந்தக் காட்சி திருமணங்களில் மணமகன், பெண்ணுக்குத் திலகமிடும் காட்சியைப்போல எனக்குத் தோன்றியது. பிறகு கண்ணை மூடிக்கொண்டு ஏதோ ஜபித்தான். சில விநாடிகள்தாம். பிறகு கையை எடுத்துவிட்டு, ‘வினய், எனக்குத் திரும்பத் திரும்பத் தோன்றுவதெல்லாம் ஒன்றுதான். கிருஷ்ணனைத் தவிர உனக்கு மீட்சியளிக்கக்கூடியவன் வேறு யாருமில்லை’ என்று சொன்னான். ‘இனி நான் மீள முடியும் என்று எனக்கே நம்பிக்கையில்லையே?’ ‘அப்படி இல்லை. கணம்தோறும் நாம் பிறக்கிறோம். உன் பிறப்புக்கான நேரத்தை நீயே குறி. கிருஷ்ணனைப் பக்கத்தில் வைத்துக்கொள். மிச்சத்தை அவன் பார்த்துக்கொள்வான்’. மெட்ராஸில் அப்போது டிஜிஎஸ் தினகரன் என்றொரு கிறிஸ்தவப் பிரசங்கி பிரபலமாகிக்கொண்டிருந்தார். எனது சீடர்களுள் ஒருவன் அவரது பிரசங்க கேசட் ஒன்றை எனக்கு அனுப்பி, இதைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டிருந்தான். நான் அந்த கேசட்டைப் பொறுமையாகக் கேட்டேன். எனக்கு தினகரனின் பிரசங்கம் மிகவும் பிடித்திருந்தது. இயேசு வருகிறார் என்று எல்லோரும் சொல்லிக்கொண்டிருந்தபோது, அவர் வந்தேவிட்டது போன்ற தோற்ற மயக்கத்தை அவரது பிரசங்கம் செய்வதை உணர்ந்தேன். அது சட்டென்று நினைவுக்கு வந்து, ‘வினோத், நீ ஒரு நல்ல தினகரன்’ என்று சொன்னேன். அவனுக்கு அது புரியவில்லை. (தொடரும்) http://www.dinamani.com/junction/yathi/2018/sep/11/127-கடத்தல்-2997640.html
 9. வேற்றுமையில் ஒற்றுமை என்.கே. அஷோக்பரன் / தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 162) பிரிந்து நின்றவர்கள் நோக்கம் ஒன்று; ஆனால், அதை அடைவதற்காகப் பல பாதைகளில் புறப்பட்ட பல அமைப்புகள் ஒன்றோடொன்றும், தமக்குள்ளும் முரண்பட்டு, எதிரும் புதிருமாகத் திசைமாறிப் பயணிக்க ஆரம்பித்தன. ஈழத் தமிழ் மக்களுக்காகத் தனிநாடொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக, ஆயுதப்போராட்டமே ஒரேவழி எனத் தீர்மானித்த தமிழ் இளைஞர், ஆயுதம் தரித்த அமைப்புகளாக இயங்கினார்கள். இவை ஒவ்வொன்றினதும் உருவாக்கம், செயற்பாடுகள், பின்புலம் என்பன, தனித்து ஆராயப்படவேண்டியதொரு விடயம். அவற்றின் அடிப்படை நோக்கம், ஒன்றாக இருப்பினும், அதன் அரசியல், ஆதரவுப் பின்புலங்கள், அவை கொண்டிருந்த அரசியல் கொள்கைகள், கரிசனைகள் வேறுபட்டிருந்தன. இது பற்றிக் கருத்துரைக்கும் சிலர், இவற்றில் சில அமைப்புகள், முழுமையாக இந்திய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததாகச் சுட்டிக் காட்டுவதுடன், சில அமைப்புகள் இந்திய எதிர்ப்புப் போக்கைக் கொண்டிருந்ததாகவும் குறிப்பிடுகிறார்கள். மேலும், இந்த இயக்கங்களுக்கு இடையேயான எதிர்ப்பிலும், முரண்பாட்டிலும் பல உயிர்கள் பலியானதும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது. அவை, வரலாற்றில் கறுப்புப் பக்கங்களாக இடம்பிடித்து விட்டன. இந்தியா பற்றிய இந்த இயக்கங்களின் நிலைப்பாடுகள், எவ்வாறு இருந்தாலும், கிட்டத்தட்ட எல்லா அமைப்புகளுமே, தென்னிந்தியாவில், தமிழகத்தை மய்யமாகக் கொண்டே செயற்பட்டுக் கொண்டிருந்தன. இந்திய அரசாங்கத்தினது பின்புலமும், தமிழகத்தின் ஆதரவும், இந்திய உளவுத்துறையின் அரவணைப்புமின்றி இது சாத்தியமாகி இருக்காது. அரசியல் தந்திரோபாய ரீதியில் நோக்கினால், ஒன்றுக்கொன்று முரணான ஆயுதக் குழுக்களை வளர்த்துவிடுவது, ஆதரிப்பது இந்திய நலன்களுக்குச் சாதகமானதாகவே இருக்கும். ஏனெனில், இந்தியா ஒரேயோர் இயக்கத்தை நம்பியிருக்க வேண்டியதில்லை. இப்படியாக, ஈழத் தமிழரின் விடுதலை என்றொரு குறிக்கோளை முன்வைத்து, உருவான தமிழ் இளைஞர் ஆயுத அமைப்புகளுக்குள் 1985களில், தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), ஈழப் புரட்சிகர மாணவர் இயக்கம் (ஈரோஸ்), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரீ.ரீ.ஈ) ஆகியவை பலம் பொருந்திய, முக்கிய தமிழ் இளைஞர் ஆயுத அமைப்புகளாக விளங்கின. இவற்றில், 1984ஆம் ஆண்டு ஏப்ரல் காலப்பகுதியில், ஸ்ரீ சபாரட்ணம் தலைமையிலான ‘டொலோ’, பாலகுமாரன் தலைமையிலான ‘ஈரோஸ்’, பத்மநாபா தலைமையிலான ‘ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய மூன்று அமைப்புகளும் ஒன்றிணைந்து, ‘ஈழத் தேசிய விடுதலை முன்னணி’ என்ற ஒன்றுபட்ட முன்னணியை ஸ்தாபித்திருந்தன. 1984ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே, தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள் பிரிந்து, தனித்துச் செயற்படுவதைவிட, ஒன்றிணைந்து ஒரே நிகழ்ச்சி நிரலில் செயற்படுவது தான், அக்காலப்பகுதியில் எழுந்திருந்த சூழலை, எதிர்கொள்வதற்கேற்ற பொருத்தமான தந்திரோபாயம் என்று, அவை கருதியிருக்கக்கூடும். மேலும், இதுபற்றித் தன்னுடைய நூலொன்றில் கருத்துரைக்கும் நாராயண்சுவாமி, ‘ஈழத் தேசிய விடுதலை முன்னணி என்ற இந்தக் முன்னணியானது, இந்திய உளவுத்துறையான ‘றோ’வினுடைய குழந்தை என்று குறிப்பிடுகிறார். தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களை ஒருங்கிணைப்பதில், நிறையச் சிக்கல்கள் இருந்ததாகவும் அதை நிவர்த்திக்கும் வகையில், அனைத்து அமைப்புகளையும் ஒரே குடையின் கீழ், ஒரு புள்ளியில் ஒன்றிணைக்கத் திட்டமிட்டு, ‘றோ’ அமைப்பே, இந்த முன்னணியை ஸ்தாபித்ததாக அவர் குறிப்பிடுகிறார். இந்த அமைப்பு உருவானபோது, அது பற்றிக் கருத்துரைத்த, ‘ஈரோஸ்’ இயக்கத்தின் தலைவர் பாலகுமாரன், “அரசியல்வாதிகளின் தலையீடுகளின்றி, தமிழ் இளைஞர் ஆயுத அமைப்புகளால் உருவாக்கப்பட்டது” என்று கூறியிருந்தார். “தமிழ்ப் போராளிகளிடையே ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்ற கருத்து உருவானபோது, பாக்கு நீரிணையின் இரு மருங்கிலுமுள்ள அரசியல்வாதிகளின் தலையீடு, அதில் நிறையவே ஏற்படத் தொடங்கியது. இந்த அரசியல்வாதிகளை, இதிலிருந்து தள்ளி வைக்க, நாம் உறுதி கொண்டிருந்தோம். அவர்களுக்குத் தேவைப்பட்டதெல்லாம், இந்த ஒற்றுமையை உருவாக்கியது ‘நான்தான்’ என்று சொல்வதனூடாக, அரசியல் இலாபத்தைப் பெற்றுக் கொள்வது மட்டும்தான்” என்று பாலகுமாரன் மேலும் குறிப்பிட்டிருந்தார். 1984இல் இந்த முன்னணி உருவானபோது, இதில் மிக முக்கியமான இரண்டு அமைப்புகளான வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் அமைப்பும், உமா மகேஸ்வரன் தலைமையிலான ‘புளொட்’ அமைப்பும் இணைந்திருக்கவில்லை. அவற்றை இணைத்துக்கொள்வதில் நிறையச் சிக்கல்கள் இருந்தன. ஆரம்பத்தில், இதுதொடர்பில் விடுதலைப் புலிகள் அமைப்பை அணுகுவதைவிட, ‘புளோட்’ அமைப்பை அணுகுவது, இலகுவாக இருந்தாக, பாலகுமாரன் குறிப்பிட்டதாகத் தன்னுடைய கட்டுரையொன்றில், அனிதா பிரதாப் மேற்கோள் காட்டுகிறார். விடுதலைப் புலிகள் அமைப்பைப் பொறுத்தவரையில், அவர்கள் இந்த ஒற்றுமையை வரவேற்றிருந்தாலும், தம்மைப் பலம்வாய்ந்த அமைப்பாகக் கருதியதுடன், தனித்துப் போராடும் எண்ணத்திலேயே இருந்தார்கள் என அனிதா பிரதாப் குறிப்பிடுகிறார். மேலும், ‘டெலோ’வுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே நேரடி முரண்பாடுகள் நிறைய இருந்தன. ஆகவே, விடுதலைப் புலிகள் அமைப்போடு, ஓரளவு இணக்கமான உறவைக் கொண்டிருந்த ‘ஈரோஸ்’, ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்புகளே, விடுதலைப் புலிகளுடன் பேச வேண்டிய நிலையில் இருந்தன. மேலும், விடுதலைப் புலிகள், ‘புளொட்’ ஆகிய இரண்டு அமைப்புகளையும் இந்த முன்னணிக்குள் கொண்டு வருவது சாத்தியமாக இருக்கவில்லை. இதற்கு அந்த அமைப்புகளின் தலைவர்களான வேலுப்பிள்ளை பிரபாகரன், உமா மகேஸ்வரன் ஆகியோருக்கு இடையிலான தனிப்பட்ட வேறுபாடுகள், பகைமை உருவாகக் காரணங்களாகின என்று கூறப்படுகிறது. இந்தக் காரணங்கள், அனைவருக்கும் மிக வெளிப்படையாகத் தெரிந்தவையாகும். பிரபாகரனும் உமா மகேஸ்வரனும் விடுதலைப் புலிகள் அமைப்பிலேயே ஆரம்பத்தில் இருந்தார்கள். விடுதலைப் புலிகள் அமைப்பின் இராணுவத் தளபதியாகப் பிரபாகரன் இருந்தபோது, 1977 முதல் 1980 வரை, அந்த அமைப்பின் மத்திய குழுவின் தலைவராக (தவிசாளராக) உமா மகேஸ்வரன் இருந்தார். இருவரிடையேயும் தனிப்பட்ட ரீதியில் உருவான முரண்பாட்டின் விளைவாக, அந்த அமைப்பிலிருந்து விலகிய உமா மகேஸ்வரன், 1982இல் ‘புளொட்’ அமைப்பை உருவாக்கியிருந்தார். இவர்களுக்கு இடையேயான பகையின் வௌிப்பாடு, 1982 மே 19ஆம் திகதி, சென்னை, பாண்டிபஸார் பகுதியில் நேரடியாகத் துப்பாக்கிச் சூட்டு மோதலுக்கும் வழிவகுத்தது. இந்தப் பகையின் காரணமாக, இந்த இரு அமைப்புகளையும் ஒன்றிணைப்பதென்பது சாத்தியக் குறைவானதொரு விடயமாகவே இருந்தது. கைகோர்த்துக் கொண்டார்கள் 1985இன் ஆரம்பப் பகுதியில், இலங்கை விவகாரம் தொடர்பில், ராஜீவ் காந்தியின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டிருந்தமையானது, தமிழ் இளைஞர் ஆயுதக்குழுக்கள் தொடர்பிலான, இந்தியாவின் ஆதரவு நிலைப்பாட்டையும் சற்றே மாற்றியிருந்தது. தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் முழுமையாக ஒன்றிணையாவிட்டாலும், குறைந்தபட்சம் அவை ஒருங்கிணைந்து செயற்பட வேண்டிய தேவையை, புதிதாக எழுந்துள்ள சூழல், உருவாக்கியிருந்தது. இந்தச் சூழலில்தான், 1985 ஏப்ரல் 10ஆம் திகதி, வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, ஈழத் தேசிய விடுதலை முன்னணியில் இணைந்து கொண்டது. தமிழகத்தின் சென்னையில் பாலகுமாரன், ஸ்ரீ சபாரட்ணம், பத்மநாபா, பிரபாகரன் ஆகியோர் இந்த அமைப்பின் கீழ் கைகோர்த்துக் கொண்டனர். இது தொடர்பில், அவர்கள் வௌியிட்டிருந்த ஊடக அறிக்கையில், ‘அதிகரித்து வந்த அரச பயங்கரவாதமும், இன அழிப்பும் நாம் ஒன்றாக வேண்டிய தேவையை உருவாக்கியுள்ளதுடன், ஒன்றுபட்ட இராணுவ, அரசியல் தந்திரோபாயத்துக்கான அவசியத்தையும் உருவாக்கியுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஒன்றுபட்ட அமைப்பின் நிகழ்ச்சி நிரலானது, மூன்று அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டமைந்ததாக, தன்னுடைய கட்டுரையொன்றில் அனிதா பிரதாப் விவரிக்கிறார். முதலாவது, ஆயுதப் போராட்டம் மூலமாக, விடுதலைக்கான தந்திரோபாயத்தை, இணைந்து முன்னெடுத்தல். இரண்டாவது, அதன் மூலம் சுதந்திர தனிநாட்டை ஸ்தாபித்தல். மூன்றாவது, அந்தச் சுதந்திர நாட்டை, சோஷலிச நாடாக வடிவமைத்தல் என்பனவாகும். விடுதலைப் புலிகள் அமைப்பு, ஈழத் தேசிய விடுதலை முன்னணியில் இணைந்தது பற்றி, தன்னுடைய நூலொன்றில் விவரிக்கும் அடேல் பாலசிங்கம், ‘அதிகரித்து வந்த இந்தியாவின் அழுத்தமும், இந்திய அரசாங்கத்துக்கும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கும் இடையில் அதிகரித்து வந்த கருத்து வேற்றுமைகளும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தி இருந்தன என்று, விடுதலைப் புலிகள் அமைப்பின் தத்துவாசிரியரான அன்டன் பாலசிங்கம் உணர்ந்ததாகவும், மேலும், இந்தியாவிடமிருந்து எதிர்காலத்தில் வரக்கூடிய அரசியல், இராஜதந்திர அழுத்தங்களையும் சவால்களையும் விடுதலைப்புலிகள் அமைப்பால் தனித்து எதிர்கொள்வது சாத்தியமில்லை என்று அவர் கருதியதாகவும் அதனால், ஏலவே உருவாகியிருந்த ஈழத் தேசிய விடுதலை முன்னணியில் இணைந்துகொள்வதன் மூலம், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்துக்கு வலுச்சேர்க்க முடியுமென்றும், அந்த ஒற்றுமையே இந்தியாவால் வரக்கூடிய அரசியல், இராஜதந்திர சவாலுக்கேற்ற கேடயமாக அமையுமென்றும் அன்டன் பாலசிங்கம் கருதியதாகப் பதிவு செய்கிறார். ஆகவே, இந்த ஒருங்கிணைப்பானது காலச்சூழலின் தேவை கருதி அமைக்கப்பட்டது என்பது வௌிப்படையாகிறது. எது எவ்வாறாயினும், ஈழத் தேசிய விடுதலை முன்னணியில், ‘புளொட்’ அமைப்பு இணைத்துக் கொள்ளப்படவில்லை. இதற்குப் பரவலாக, இருவேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஈழத் தேசிய விடுதலை முன்னணி என்பது, இந்திய உளவுத்துறையின் உருவாக்கம் என்று கருத்துரைப்பவர்கள், இந்தியா, ‘புளொட்’ அமைப்பை விரும்பி இருக்கவில்லை என்றும், இதற்கு அவர்களிடையே இருந்த, பரஸ்பர வெறுப்புணர்வு காரணமாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்கள். மறுபுறத்தில், உமா மகேஸ்வரன் தலைமையிலான ‘புளொட்’ அமைப்பு, ஈழத் தேசிய விடுதலை முன்னணியில் இணைவதை, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் விரும்பி இருக்கவில்லை என்று, சிலர் கருத்துரைக்கிறார்கள். அரசியல் முக்கியத்துவம் தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களின் இந்த ஒருங்கிணைவு பற்றி, சற்றேனும் விவரமாக இங்கு ஆராய்ந்தமைக்கான முக்கிய காரணம், இந்தக் கட்டுரைத் தொடரின் நோக்கமான, ‘இலங்கைத் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன?’ என்ற தேடலில், அந்த அபிலாஷைகளை வரையறுத்ததில், இந்தத் தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களின் பங்கு மிக முக்கியமானது. அவை, 1985இல் திம்புவில் வரையறுத்த நான்கு அடிப்படைக் கொள்கைகள்தான் இன்று வரை, தமிழ் மக்கள் முன்னெடுக்கும் அரசியலின் அடிநாதமாக இருந்து வருகின்றன. ஆகவே, இந்தத் தேடலில், தமிழ் இளைஞர் ஆயுத அமைப்புகளின் இந்த அரசியல் பங்களிப்பு, முக்கியமானது மட்டுமல்லாது தவிர்க்க முடியாததும் ஆகும். (அடுத்த திங்கட்கிழமை தொடரும்) http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வேற்றுமையில்-ஒற்றுமை/91-222443
 10. இதயநோய்களைத் தடுக்க சர்க்கரை நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்? சர்க்கரை நோயாளிகள், இதய நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி? இதயம்... உள்ளங்கை அளவுடையது என்றாலும் மனித உடலின் செயல்பாட்டுக்கு இதன் பங்கும் செயலும் அளவிடற்கரியது. நம் உடலில் மிகவும் உறுதியான தசையான இதயத் தசைதான் நம் பிறப்பு முதல் இறப்பு வரை ஓய்வில்லாமல் துடித்துக் கொண்டிருக்கிறது. இந்தத் துடிப்புதான், நாம் உயிருடன் இருப்பதற்கான சாட்சியும் ஆதாரமும் என்றால், அது மிகையாகாது. ஒவ்வொரு துடிப்பின்போதும் இதயமானது அதன் சுழற்சிக்காக பிராணவாயு மற்றும் சத்துகள் நிறைந்த ரத்தத்தை, ரத்தக்குழாய்கள் மூலம் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் கொண்டு சேர்க்கிறது. அப்படி இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு, இதயத்துக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறைந்தாலோ, கடுமையாகத் தடைப்பட்டாலோ இதயத் துடிப்பும் அதன் செயல்பாடும் மாறுபடும். இதன் விளைவாக, மாரடைப்பு (இதயச் செயலிழப்பு) ஏற்படக் கூடும். அதுபற்றி விரிவாகப் பேசுகிறார் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் ஆர்.எஸ்.ஹரிஹரன். ``மனிதன் ஆரோக்கியமான உணவை உண்டபோதும் நல்ல உணர்வுகளைக் கொண்டிருந்தபோதும் ஆரோக்கியமான காற்றைச் சுவாசித்தபோதும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைக் கொண்டிருந்தபோதும் உடலுழைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டபோதும் இதயமும் 100 வயதைத் தாண்டி துடித்ததற்கான ஆதாரங்கள் ஏராளம் உண்டு. ஆனால், இன்றைய சூழலில் ஆரோக்கியமான காற்றும் உணவும் கிடைக்கவில்லை. குறிப்பாகப் பெண்கள் தங்கள் உடலைக் கவனித்துக்கொள்ள ஒதுக்கும் நேரம் மிக மிகக் குறைவு. இதன் விளைவாக பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டுக் கிடக்கிறோம். இதுபற்றி ஆராய்ந்தால் எத்தனையோ காரணங்கள் நம் கண்முன் விரிகின்றன. குறிப்பாக, இதயநோய் ஏற்படுவதற்கான முதன்மையான காரணிகளுள் சர்க்கரைநோய் முக்கிய பங்கு வகிக்கிறது. 1990-ம் ஆண்டுக்குமுன் சர்க்கரை நோயும் இதயம் சார்ந்த நோய்களும் இவ்வளவு நெருக்கமாக இருந்ததில்லை. ஆனால், இதய நோய்க்குச் சர்க்கரை நோய் முக்கியக் காரணமாக இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் இதய நோய்களுக்கான காரணிகளை ஆராய்ந்தால், அவற்றை இரண்டாகப் பிரிக்கலாம். 1) மாறுதலுக்கு உட்பட்ட காரணங்களாக உடல் பருமன், மது அருந்துதல், புகைப்பிடித்தல், உடல் உழைப்பின்மை, உயர் ரத்த அழுத்தம், கட்டுக்குள் இல்லாத கொழுப்புச் சத்து, கட்டுக்குள் இல்லாத சர்க்கரை அளவு, அதிக டிரைகிளிசரைடு அளவு, கல்லீரல் சார்ந்த பிரச்னைகளைச் சொல்லலாம். 2) மாறுதலுக்கு உட்படுத்த இயலாத காரணங்களாக வயது, பாலினம், மரபணு, உடல் முதலியவை சொல்லப்படுகிறது. இதயம் சார்ந்த நோய்களின் வகைகள் மாரடைப்பு நம் இதயம் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான பிராணவாயு மற்றும் சத்துப் பொருள்களைக் கொண்டு சேர்ப்பதே `கரோனரி ஆர்ட்டரி' (Coronary Artery) எனப்படும் ரத்தக்குழாய். இந்த ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு, இதயத்துக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் சத்துகள் கிடைக்கவில்லை என்றால் சில நொடிகளிலேயே இதயத்துக்கு நிரந்தர பாதிப்பு ஏற்படக்கூடும். இந்த அடைப்பு அதிவேகமாக ஒரு நொடியில் நிகழ்ந்தால் மாரடைப்பு (Heart attack) எனப்படும். ரத்தக்குழாயில் ஏற்படும் இந்த அடைப்பு ரத்த ஓட்டத்தை முழுமையாகத் தடை செய்யாமல், இதயத்துக்குச் செல்லும் ரத்தத்தின் அளவைக் குறைத்தால் நெஞ்சுவலி ஏற்படக்கூடும். இதுவே ஆஞ்சினா (Angina) எனப்படும். ரத்தக்குழாயில் கொழுப்பு சேர்ந்து ரத்த ஓட்டத்தைப் பாதிக்கும் நிலையை அதிரோஸ்கிளிரோசிஸ் (Atherosclerosis) எனப்படும். இதயச் செயலிழப்பு (Heart Failure) நம் முழு உடம்புக்கும் ரத்தத்தை `பம்ப்' செய்து அனுப்புவது இதயத்தின் இடது கீழறை (Left Ventricle) ஆகும். இந்த அறையின்‌ தசைகள் நீண்டநாள் சர்க்கரை நோய் காரணமாகவும் `கரோனரி ஹார்ட் டிசீஸ்' (Coronary heart disease)‌ காரணமாகவும் பாதிப்படையக்கூடும். இதனால், முழு உடலுக்கும் ரத்தத்தைச் சரியாக `பம்ப்' செய்ய இயலாது. இதைத்தான் `இதயச் செயலிழப்பு' என்பார்கள். இதயச் செயலிழப்பின் முக்கிய அறிகுறி மூச்சுத்திணறல் என்பது குறிப்பிடத்தக்கது. இதய அடைப்பு (Heart block) நமது இதயத்தில், மின் பரிமாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கும். இந்த மின் பரிமாற்றத்தின்போது ஏதேனும் கோளாறோ அல்லது மாற்றமோ நிகழ்ந்தால் `பல்ஸ் ரேட்' குறையும். இந்த நிலைதான் இதய அடைப்பு எனப்படுகிறது. கரோனரி ஆர்ட்டரி டிசீஸ் - சர்க்கரை நோய் கரோனரி ஆர்ட்டரி டிசீஸ், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகத் தீவிரமாகக் காணப்படும். இந்நோய் மற்றவர்களைக் காட்டிலும் சர்க்கரை நோயாளிகளை நான்கு மடங்கு அதிகமாகப் பாதிக்கிறது. மாரடைப்பைப் பொறுத்தவரை, சர்க்கரை நோய் இல்லாதவர்களைக் காட்டிலும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதமே அதிகமாக உள்ளது. தமனியின் வயது (Arterial age) தமனிக்கு எத்தனை வயதோ அதுதான் நமக்கும் வயது. சர்க்கரை நோயாளியை எடுத்துக்கொண்டால், அவரது தமனியின் வயது = அவருடைய வயது + அவருக்குச் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட கால அளவு. எடுத்துக்காட்டாக, ஒருவரின் வயது 50 என வைத்துக் கொள்வோம். அவர் தன்னுடைய 40-வது வயதிலிருந்து சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டால் அவரது வயது 50. ஆனால் அவரது தமனியின் வயது 50+10 =60. இப்படியாகச் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தமனி விரைந்து முதுமையடைகிறது. சர்க்கரை நோய் தமனி முதுமை அடைவதை வேகப்படுத்துகிறது. பெண்கள் மற்றும் மெனோபாஸ் (Women and menopause) ப்ரீ மெனோபாஸ் (Pre-menopause) எனப்படும் முன் மாதவிடாய்க் காலத்தில், ஒரு பெண் தன் சமவயது ஆணைவிட‌ 10 ஆண்டுகள் இளையவராகக் கருதப்படுகிறார். இது பெண்களின் ஹார்மோன் செயல்பாட்டின் விளைவு. எனவே இந்தக் காலகட்டத்தில், ஆண்களைவிடப் பெண்களுக்கு இதயம் சார்ந்த நோய்கள் வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. ஆனால், சர்க்கரை நோய் பாதித்தால் இந்த நல்ல வாய்ப்பு முற்றிலும் அகன்றுவிடும். சர்க்கரை நோய் உள்ள பெண்களுக்கு ஆண்களைப்போலவே இதயம் சார்ந்த நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மாதவிடாய்க்குப் பின்னர் (Post menopause) பொதுவாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் இதய பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்பு சரிசமம் தான். ஆனால், சர்க்கரை நோய் உள்ள பெண்களுக்கு இதயம் சார்ந்த நோய்கள் வருவதற்கான வாய்ப்பு ஆண்களைவிட அதிகம். எனவே கூடுதல் கவனம் தேவை. மற்றவர்களைக் காட்டிலும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்த சுழற்சி மற்றும் ரத்தக் குழாய் சார்ந்த நோய்களான மாரடைப்பு, மூளை முடக்குவாதம் (Brain Stroke), பெரிபெரல் வஸ்குலர் டிசீஸ் (Peripheral Vascular disease) போன்றவை 10 ஆண்டுகள் முன்னதாகவே ஏற்படக்கூடும். சர்க்கரை நோயாளிகளுக்கு மாரடைப்பின் அறிகுறிகள்! நெஞ்சுவலி மற்றும் வியர்வை, மிகக் குறைந்த அளவு வலி, இடது மார்பைச் சுற்றிய பகுதிகளில் விநோதமான வலி, சில நேரங்களில் உடல் முழுவதும் வியர்ப்பது போன்றவை மாரடைப்பின் அறிகுறியாக இருக்கக்கூடும். இதனை வலியற்ற மாரடைப்பு (Painless heart attack) என்கின்றனர். இதயத்துடிப்பில் மாற்றம், அதீத படபடப்பு, திடீர் மூச்சுத்திணறல், அதீத சோர்வு போன்றவை மட்டுமல்லாமல் திடீர் மரணமும் மாரடைப்பின் அறிகுறியாகவே கருதப்படுகிறது. ஏனென்றால் பல நேரங்களில் மின்சாரத் தூண்டல் மூலம் மீண்டும் இதயம் துடிக்கக்கூடும். வாழ்வியல் மாற்றங்களே அடிப்படை இத்தகைய இதயம் சார்ந்த நோய்களில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள அல்லது நோய் அணுகுவதிலிருந்து தள்ளிப்போட நம் வாழ்வியல் முறையில் மாற்றத்தைக் கொண்டுவருவதே முதற்படியாக இருக்கவேண்டும். இத்தகைய மாற்றத்தை முதலில் உணவு முறைகளிலிருந்தே தொடங்க வேண்டும். அதிக கலோரிகள் உள்ள உணவுகளைத் தவிர்த்தல் வேண்டும். கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. எண்ணெய், நெய் ஆகியவற்றில் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஆவியில் வேக வைத்த உணவுகளை உண்பது மிகவும் நல்லது. அதிகமாக உப்பு சேர்த்துக் கொள்வதைத் தவிர்க்கவேண்டும். இது உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவும். உடலுழைப்பு அவசியம். தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வது உடலுக்கும், உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் நீச்சல் பயிற்சி மிகவும் ஆரோக்கியமானது. அசைவ உணவைப் பொறுத்தவரையில், ஆடு மற்றும் மாட்டு இறைச்சியைவிட கோழியின் இறைச்சி உகந்தது. கோழி இறைச்சியைவிட மீன் உகந்தது. மீன்களிலும் பெரிய மீன்களைவிடச் சிறிய மீன்கள் சிறந்தவை. தாவரங்களிலிருந்து பெறப்படும் எண்ணெய்களைப் பயன்படுத்துவதே சிறந்தது. தேங்காய் எண்ணெய், பனை எண்ணெய், டால்டா ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. எண்ணெய்யை மீண்டும் மீண்டும் சூடுபடுத்திப் பயன்படுத்தக் கூடாது. ரத்தத்தில் டிரைகிளிசரைடு அளவு அதிகமாக உள்ளவர்கள் மது பான வகைகளை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். புகை மற்றும் மதுப்பழக்கம் உள்ளவர்கள், அதைச் சிறிது சிறிதாக நிறுத்த முயற்சி செய்ய வேண்டும். உடல் பருமனைக் குறைக்க, தேவையான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். ஐ.டி துறையில் பணியாற்றுபவர்கள், இரவுவேளை பார்ப்பவர்கள், ஒரே இடத்தில் அசையாமல் அமர்ந்து வேலை செய்பவர்கள் (வங்கிப் பணி, கால் சென்டர்), அதிக மன உளைச்சல் மற்றும் மன அழுத்தத்துக்கு ஆளாவோர் தங்கள் வாழ்க்கைமுறையை மாற்றியமைக்க முடிவெடுத்துச் செயல்பட வேண்டும். உதாரணமாக யோகா, கார்டனிங், புத்தகம் வாசித்தல், இசை கேட்டல், சிறு பயணம் போன்றவற்றில் ஈடுபடுவது இதய நோய், சர்க்கரை நோய் வரும் வாய்ப்பைத் தடுக்கும் என்பதே மருத்துவர்கள் தரும் அறிவுரை. https://www.vikatan.com/news/health/137774-preventing-cardiovascular-disease-in-diabetic-patients.html
 11. 126. களையும் கலை பேருந்து எல்.ஐ.சி.யைத் தாண்டும்வரை யாரும் எதுவும் பேசவில்லை. எனக்கு லேசாகத் தூக்கம் வந்து கண்ணை மூடத் தொடங்கியபோது, ‘விமல், உனக்கு என்றைக்காவது குற்ற உணர்வு போல ஏதேனும் தோன்றியிருக்கிறதா?’ என்று வினோத் கேட்டான். எனக்கு எதற்குக் குற்ற உணர்வு ஏற்பட வேண்டும்? இந்த உலகில் பாவமே செய்யாத ஒரு பிறப்பு உண்டென்றால் அது நான்தான். என் சுதந்திரத்தின் பூரணத்துவத்தில் திளைப்பது எப்படி ஒரு குற்றமாகும்? ‘இல்லை. நீ சன்னியாசம் என்னும் புனிதமான தருமத்தை உன் வாயிற்கதவுத் தாழ்ப்பாளாக வைத்துக்கொண்டு உள்ளுக்குள் ஒரு சராசரியாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறாய் என்று தோன்றுகிறது’. நான் புன்னகை செய்தேன். ‘நான் எதையும் துறந்ததாக என்றுமே சொன்னதில்லையே?’ ‘பிறகு எதற்கு உனக்கு தீட்சையும் காவியும்?’ ‘நல்ல கதையாக இருக்கிறதே. தீட்சை, நான் பயின்று எழுதிய தேர்வுக்கான சான்றிதழ். காவி எனக்குப் பிடித்த நிறம். ஒரு கோட் சூட் உடையைக் காட்டிலும் இது தருகிற சௌகரியங்களும் மரியாதையும் அதிகம்’. ‘எனக்கு இது சரியாகப் படவில்லை’. ‘அதனால் என்ன? நீ என் சகோதரன். நீ சொல்வதற்கெல்லாம் நான் வருத்தப்பட மாட்டேன்’. அதன்பின் வினோத் நெடுநேரம் அமைதியாகவே இருந்தான். மீண்டும் திடீரென்று, ‘காமம் துறப்பதை நீ முக்கியமென்று நினைத்ததே இல்லையா?’ ‘ஐயோ, இயற்கையை நான் எவ்வாறு நிராகரிப்பேன்? என்னால் என் சிறுநீரைத் துறக்க முடியும்போது காமத்தையும் துறப்பேன் என்று நினைக்கிறேன்’. ‘ஹரே கிருஷ்ணா. நீ ஒரு தவறான மனிதரிடம் பயின்றிருக்கிறாய்’. நான் சிரித்துவிட்டேன். ‘வினோத் என் குருநாதர் எதையும் சொல்லிக் கொடுத்ததில்லை. நானும் அவரிடம் இருந்து எதையும் கற்கவில்லை. மாறாக நாங்கள் எங்கள் மனங்களின் இண்டு இடுக்குகள் வரை திறந்துவைத்து அடுத்தவர் நுழைந்து மீள அனுமதித்துக்கொண்டோம். அதுதான் என் படிப்பு. அதில் பெற்றதுதான் என் ஞானம்’. ‘தெய்வமும் ஒழுக்கமும் அற்ற ஒரு துறவை என்னால் எண்ணிப் பார்க்கவே முடியவில்லை’ என்று வினோத் சொன்னான். ‘ஒழுக்கம் என்பதே அடுத்தவர் அபிப்பிராயம்தானே? அதற்கொரு பெயர் கொடுத்தால் தெய்வமாகிவிடுகிறது. எனக்கு அடுத்தவர் அபிப்பிராயம் முக்கியமாக இல்லை என்பதால் தெய்வமும் என்னிடத்தில் முக்கியத்துவம் இழந்துவிடுகிறது’. ‘நீ உன்னிடம் வரும் பெண்களைத் தவறாகப் பயன்படுத்துகிறாய் அல்லவா?’ ‘யார் சொன்னது?’ ‘எங்களுடைய பெங்களூர் கிளையில் அப்படியொரு பேச்சு ஒரு சமயம் எழுந்தது’. ‘கிருஷ்ண பக்தர்கள் பேசுவதற்கு வேறு சங்கதியே இல்லையா?’ ‘இல்லை. நீ அம்மாநிலத்தில் இருப்பவன். உனது புகழ் அம்மாநிலம் முழுதும் பரவியிருப்பது. உன்னைப் பற்றிய உரையாடல்கள் இயல்பானவை’. இதற்கு என்ன பதில் சொல்வதென்று யோசித்தேன். உண்மையில் நான் எந்தப் பெண்ணையும் என்னிடத்தில் அழைத்ததில்லை. விரும்பி வருகிற யாரையும் நிராகரித்ததும் இல்லை. ஒரு சமயம், எனது கூட்டத்துக்கு வந்திருந்த பெண்களுள் வெண் குஷ்டம் பாதித்த பெண்ணொருத்தி வந்திருந்தாள். அவளை நான் அதற்குமுன் சந்தித்ததில்லை. ஊருக்குப் புதியவள் என்று நினைத்தேன். பிறகு ஏற்கெனவே எனக்கு அறிமுகமான இன்னொரு பெண்தான் அவளை அழைத்து வந்திருக்கிறாள் என்று தெரிந்தது. ‘குருஜி, இவள் என் தோழி. மூன்று வருடங்களாக வீட்டை விட்டு வெளியே வராமலே இருந்தவளை வலுக்கட்டாயமாக உங்களிடம் இழுத்து வந்தேன்’ என்று சொன்னாள். ‘மூன்று வருடங்கள்! எத்தனைக் கொடிய சிறைத்தண்டனை! ஏன் அப்படி இருந்தாய்?’ என்று அவளிடம் கேட்டேன். ‘என் நோய் என்னை வெளியே போகவிடாமல் செய்துவிட்டது’ என்று அவள் சொன்னாள். எனக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது. அன்றைய சொற்பொழிவு முடிந்ததும் நான் அந்தப் பெண்ணை என் அறைக்கு வரச் சொன்னேன். அவள் பேரழகி இல்லை. ஆனால் எளிதில் பிடிபடாததொரு லட்சணம் அவள் முகத்தில் இருந்தது. துரதிருஷ்டவசமாக அவளது நடு மூக்கு மட்டும் வெளுத்து, கன்னங்கள், நெற்றியெல்லாம் இயல்பான நிறத்தில் இருந்தன. காது மடல்கள் வெளுத்திருந்தன. கழுத்து, கைகள் வெளுத்திருந்தன. பின் கழுத்து வெளுத்திருந்தது. வெண் திட்டுகளின் இடையே பழுப்பு நிறத்தில் புள்ளிகள் நிறைய உண்டாகியிருந்தன. அவள் என்னைக் கண்டதும் விம்மி விம்மி அழுதாள். ஏனோ அழத் தோன்றுகிறது என்று இடையிடையே சொல்லிக்கொண்டே அழுதாள். அதனால் பரவாயில்லை; அழு என்று நானும் அமைதியாக இருந்தேன். அவள் அழுது முடித்துவிட்டு, ‘என் வீட்டில் எனக்குத் திருமணத்துக்குப் பார்க்கத் தொடங்கிய நேரம் எனக்கு இப்படியாகிவிட்டது. இதன்பின்பு எனக்குத் திருமணம் நடக்க வாய்ப்பே இல்லை என்று என் பெற்றோர் முயற்சியைக் கைவிட்டுவிட்டார்கள்’ என்று சொன்னாள். ‘தொல்லை விட்டது என்று எண்ணிக்கொள். திருமணம் ஒரு மகிழ்ச்சியல்ல’. ‘ஆனால் குருஜி, நானும் ஓர் உயிரினம் அல்லவா? இயல்பான உணர்ச்சிகள் எனக்கும் உண்டல்லவா? என்னை நெருங்கி முத்தமிடும் ஒரு ஆண் மகனுக்காக என் வாழ்நாள் முழுதையும் நான் அர்ப்பணிக்கத் தயாராக இருக்கிறேன்’. ‘வாழ்நாள் முழுதும்?’ ‘ஆம். வாழ்நாள் முழுதும்’. பிறகு அவள் என் ஆசிரமத்தின் நிர்வாகப் பணிகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பைத் தானே எடுத்துக்கொண்டுவிட்டாள். ‘நீ அவளை முத்தமிட்டாயா?’ என்று வினய் கேட்டான். ‘ஆம். ஓரிரவு முழுவதும் அவளது தேகத்தின் ஒவ்வொரு அணுத்துகளிலும் படுவதுபோல முத்தமிட்டுக்கொண்டே இருந்தேன். விடியும்வரை முத்தமிட்டேன். விடிந்தபின் நாங்கள் கலவி கொண்டோம். அன்று பகல் முழுதும் அவள் நிம்மதியாகத் தூங்கினாள். நான் அவளுக்குக் கால் அமுக்கிவிட்டுக்கொண்டிருந்தேன்’. இதைச் சொன்னதும் வினோத் சற்று நகர்ந்து அமர்ந்துகொண்டான். எனக்குச் சிரிப்பு வந்தது. ‘நீ ஒரு காமாந்தகன்’ என்று வினய் சொன்னான். ‘இல்லை வினய். அந்தகம் என்பது தவறான சொல். காமம் அழிவல்ல. காமத்தால் ஆக்கத்தான் முடியுமே தவிர அழிக்க இயலாது. தவிர காமம் மட்டுமே என் நோக்கமும் அல்ல. உனக்குத் தெரியுமா? பதினேழு வருடங்கள் நான் காமம் துறந்து வாழ்ந்திருக்கிறேன்’. ‘மனத்தாலும் எண்ணாமல்?’ ‘ஆம். நான் துறந்திருக்கிறேன் என்ற நினைவையே அழித்துவிட்டு வாழ்ந்தேன். எனக்கு எதுவுமே வேண்டுமென்றால் வேண்டும். வேண்டாமெனில் வேண்டாம்’. ‘வினய், நீ அவனோடு சேராதே. அவன் சொல்கிற எதையும் கேட்காதே. அவன் வழி நமக்குச் சரிப்படாது’ என்று வினோத் சொன்னான். ‘டேய், இவன் வழியே உனக்குச் சரிப்படாதே?’ என்று நான் சிரித்துக்கொண்டே கேட்டேன். ‘ஆம். ஆனால் வினய்யை சரி செய்துவிட முடியும். அவனது சிக்கல்கள் எளியவை. பேரானந்தக் கடலின் ஒரு துளி அவன் உச்சந்தலையில் விழுந்தால் போதும்’. ‘உனக்கு விழுந்திருக்கிறதா?’ என்று கேட்டேன். வினோத் அதிர்ச்சியடைந்துவிட்டான். சில விநாடிகள் யோசித்துவிட்டு, ‘கிருஷ்ண ஜபம் ஒன்றே என் ஆனந்தம்’ என்று சொன்னான். எத்தனை எளிய வாழ்க்கை! ஜபங்கள். நாம சங்கீர்த்தனங்கள். பண்டிகைகள், திருவிழாக்கள், தேரோட்டம். ஆனால் சகோதரா, என் கேள்வி இதுவல்ல. இவை எதுவுமல்ல. உன் கிருஷ்ணனை நீ பார்த்தாயா? ஏனெனில், என் கடவுளான என் சுதந்திரத்தை நான் ஒவ்வொரு கணமும் தரிசித்துக்கொண்டிருக்கிறேன். அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். இதைத்தான் என் துறவு எனக்கு சாத்தியமாக்கியது. அந்த வகையில் உன் துறவு உனக்கு மூன்று வேளை சாதம்தான் இப்போதுவரை போட்டுக்கொண்டிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்வாயா? நான் கேட்கவில்லை. சிரித்துவிட்டு அமைதியாக இருந்துவிட்டேன். அவன் வினய்க்கு எப்படியாவது மீட்சி கொடுத்துவிட வேண்டும் என்று தீவிரமாக எண்ணிக்கொண்டிருந்தான். ஒரு லட்சத்து எட்டு கிருஷ்ண ஜபத்தின் இறுதியில், வினய்யும் ஒரு கிருஷ்ண பக்தனாகிவிடுவான் என்று தீவிரமாக நம்பிக்கொண்டிருந்தான். வாழ்வில் எவ்வளவோ முயற்சிகளைச் செய்து பார்த்துவிட்டுத் தோற்றதாக முடிவுக்கு வந்திருந்த வினய், இன்னொரு முயற்சியாகக் கிருஷ்ணனைக் கூப்பிட்டுப் பார்க்க முடிவு செய்திருந்ததையும் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இவர்கள் இருவரும் சந்தித்திருக்கவே கூடாது என்று சொல்ல நினைத்தேன். குறைந்தபட்சம் வினய் தனது கதையையாவது அவனுக்குச் சொல்லாதிருந்திருக்கலாம். ‘ஏன்?’ என்று வினய் கேட்டான். ‘ஐம்பது வயது தாண்டிய அண்ணன் தம்பிகள் அடித்துக்கொண்டு செத்தால் நன்றாக இராதல்லவா? அதனால் சொன்னேன். தவிர இரண்டு சன்னியாசிகள் வெட்டிக்கொண்டு இறந்தால் இந்த உலகம் அதைத் தாங்காது’. ‘நீ பேசாதே’ என்று வினோத் சொன்னான். சிரித்தேன். பிறகு அவனே என்ன நினைத்தானோ, ‘காமம் களைவது ஒரு கலை’ என்று சொன்னான். ‘ஆம். சந்தேகமில்லை. ஆனால் காமத்தினும் உயர்ந்ததாக அதைச் சொல்ல முடியாது’. ‘அப்படியா நினைக்கிறாய்?’ ‘உன்னை ஒன்று கேட்கிறேன். ராதை உடனில்லாத ஒரு கிருஷ்ணனை உன்னால் எண்ணிப் பார்க்க இயலுமா?’ ‘சேச்சே. அது வெறும் தத்துவம்’. ‘தத்துவத்துக்கே ஒரு பெண் வடிவம் வேண்டியிருக்கிறது வினோத். வாழ்க்கைக்கு இல்லாமல் எப்படி? ஒன்று கேட்கிறேன். இத்தனை ஆண்டுகள் நீ ஒரு பெண்ணைத் தொடாதிருந்திருக்கலாம். ஆனால் நினைக்காதிருந்திருப்பாயா?’ அவன் என்னை உற்றுப் பார்த்தான். பிறகு தலை குனிந்து, ‘ஆம். அது முடிந்ததில்லை. என் கட்டுப்பாட்டை மீறி எப்போதாவது நினைத்துவிடுகிறேன்’. ‘அதைத்தான் சொல்கிறேன். முகத்தை மட்டும் நினைத்தால் நீ பரமஹம்சராகிவிட முடியும். ஆனால் முலையைத்தான் உன்னால் நினைக்க முடியும்’. ‘இல்லை. இல்லை. நிச்சயமாக இல்லை’ என்று அவன் அலறினான். ‘என்ன இல்லை? நீ முலையை நினைத்ததே இல்லையா?’ ‘அப்படிச் சொல்லமாட்டேன். ஆனால் அது மட்டுமே அல்ல. பல வருடங்களுக்கு முன்னர், நான் பக்குவமடையாமல் இருந்த காலத்தில் அதெல்லாம் உண்டு. இப்போது இல்லை’. நான் அவன் கரங்களை அன்போடு பற்றிக்கொண்டேன். ‘வினோத்! கிருஷ்ணன் சந்தோஷங்களின் கடவுள். எளிய இச்சைகளின் மீது நிகழ்வதே அவனது காளிங்க நடனம். இச்சைகளை ஒழிக்க நினைப்பது கிருஷ்ண விரோதம். இச்சைகளைக் கடப்பதே அவனது தரிசனத்துக்கு வழி செய்யும்’. ‘புரியவில்லை’. ‘ஒழித்துவிட்ட ஒன்றை எப்படிக் கடக்க முடியும்? இருந்தால்தான் நுழைந்து வெளியேற முடியும்’ என்று நான் சொன்னதும், வினய் பாய்ந்து என்னைக் கட்டியணைத்துக்கொண்டு, ‘இதுதான். இதுதான் நான் முயற்சி செய்தது. இதில்தான் நான் தோற்றேன். இங்கேதான் நான் இறந்தேன்’ என்று சொன்னான். அவன் கண்கள் கலங்கிவிட்டிருந்தன. (தொடரும்) http://www.dinamani.com/junction/yathi/2018/sep/10/126-களையும்-கலை-2996602.html
 12. இதயம் காக்கும் இதமான உணவுகள் - 30 வகை செம்பருத்திப்பூ பானம் தேவை: சுத்தம் செய்த ஒற்றை நாட்டுச் செம்பருத்திப்பூ இதழ்கள் - 15 பாதாம் பிசின் - ஒரு டீஸ்பூன் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். முதல் நாளே ஊறவைக்கவும்) நாட்டுச் சர்க்கரை (அ) பனங்கற்கண்டு - 2 டேபிள்ஸ்பூன் எலுமிச்சைப் பழம் - ஒன்று (சாறு பிழியவும்) தண்ணீர் - 500 மில்லி. செய்முறை: செம்பருத்திப்பூ இதழ்களுடன் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். கருஞ்சிவப்பு நிறம் வந்ததும் இறக்கவும். அதனுடன் நாட்டுச் சர்க்கரை (அ) பனங்கற்கண்டு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து மூடி வைக்கவும். ஆறியதும் வடிகட்டவும். அதனுடன் பாதாம் பிசின் சேர்த்துக் கலந்து பருகவும். பயன்: ரத்தக் கொதிப்பு, மன அழுத்தம், பதற்றம், அதிக கோபம் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் தருகிறது. கோபத்தைத் தூண்டும் ஹார்மோனைச் சமன் செய்கிறது. இதயத்துடிப்பைச் சீராக்குகிறது. இதில் இரும்புச்சத்து மிகுந்து காணப்படுவதால் இதயத்துக்கு வலுவூட்டுகிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவுகிறது. வாயு முறுக்கி பால் தேவை: பூண்டு - 3 பல் சிறிது தண்ணீர்விட்டுக் காய்ச்சிய பால் - 200 மில்லி பனங்கற்கண்டு - ஒரு டீஸ்பூன் மருதம்பட்டைப் பொடி - கால் டீஸ்பூன். செய்முறை: பாலை நன்றாகக் காய்ச்சவும். அதனுடன் பூண்டு, பனங்கற்கண்டு, மருதம்பட்டைப் பொடி சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கி இளஞ்சூடாகப் பருகலாம். இதை இரவு படுக்கைக்குச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு பருகலாம். பயன்: இது ஒரு சிறந்த வாயு முறுக்கியாகச் செயல்படும். அதாவது உடலில் உள்ள வாயுக்களை நீக்கும். கபத்தைக் குறைக்கும். பித்தத்தைச் சமன் செய்யும். வாயு பிரச்னையால் வரும் நெஞ்சுவலிக்கு இது ஒரு சிறந்த நிவாரணியாகும். கொள்ளு சூப் தேவை: கொள்ளு - 50 கிராம் பூண்டு - 8 பல் தோல் சீவி துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் சின்ன வெங்காயம் - 5 கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா கலவை - ஒரு கைப்பிடி அளவு மிளகு - சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன் எலுமிச்சைப்பழம் - பாதியளவு (சாறு பிழியவும்) தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்) இந்துப்பு - 2 சிட்டிகை அரிசி கழுவிய நீர் - 3 கப். செய்முறை: கொள்ளுப்பயறை 8 மணி நேரம் ஊறவைக்கவும். மறுநாள் குக்கரில் ஊறவைத்த கொள்ளு, பூண்டு, இஞ்சித் துருவல், மஞ்சள்தூள், இந்துப்பு, தோலுரித்த சின்ன வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா, மிளகு - சீரகத்தூள், அரிசி கழுவிய தண்ணீர் சேர்த்து மூடி, அடுப்பை மிதமான தீயில் வைத்து 3 முதல் 5 விசில் வரை விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கியதும் திறந்து மத்தால் நன்கு கடையவும். அதனுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலந்து சூடாகப் பருகவும். பயன்: இந்தச் சூப்பை வாரத்தில் மூன்று நாள்கள் பருகிவர தேவையற்ற கொழுப்பு நீங்கி, ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். கபத்தைக் குறைத்து நுரையீரல் சரிவர இயங்க உதவும். கெட்ட கொழுப்பைக் கரைப்பதன் மூலம் இதயத்துடிப்பு சீராக இயங்கும். உடலில் உள்ள தேவையற்ற நச்சுகளை வெளியேற்றும். புரோக்கோலி சூப் தேவை: நறுக்கிய புரோக்கோலி - ஒரு கப் பூண்டு - 10 பல் தோல் சீவி துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன் அரிசி கழுவிய தண்ணீர் - 4 கப் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா கலவை - ஒரு கைப்பிடி அளவு இந்துப்பு, வெள்ளை மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா கால் டீஸ்பூன் ஆரிகானோ - ஒரு டீஸ்பூன் அல்லது காய்ந்த துளசி இலை - சிறிதளவு எலுமிச்சைப் பழம் - பாதி அளவு (சாறு பிழியவும்) பட்டை - 2 சிறிய துண்டு சின்ன வெங்காயம் - 5 (தோலுரிக்கவும்) தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்). செய்முறை: குக்கரில் புரோக்கோலியுடன் தக்காளி, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சித் துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா, இந்துப்பு, பட்டை, அரிசி கழுவிய தண்ணீர் சேர்த்து மூடி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூன்று விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து மத்தால் ஒரு சுற்று கடையவும். அதனுடன் வெள்ளை மிளகுத்தூள், சீரகத்தூள், ஆரிகானோ, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து வடிகட்டாமல் இளம் சூடாகப் பருகலாம். பயன்: காலை உணவுக்குப் பதிலாக அல்லது 11 மணியளவில் இதைப் பருகலாம். புரோக்கோலி உயர் ரத்த அழுத்தத்துக்கு மருந்தாகிறது; கொலஸ்ட்ரால் அதிகரிப்பைத் தடுக்கிறது. இதில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இதயம் வலிமை பெற மிகவும் துணைபுரிகிறது. இதில் அதிக கால்சியம், நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கலைத் தடுக்கும். ஹார்ட் ஸ்பெஷல் கிரீன் டீ தேவை: கிரீன் டீ இலைகள் - ஒரு டீஸ்பூன் ஏலக்காய் - ஒன்று நெல்லிமுள்ளி - 10 கிராம் வெட்டி வேர் - 5 கிராம் தண்ணீர் - 200 மில்லி. செய்முறை: பாத்திரத்தில் தண்ணீருடன் ஏலக்காய், வெட்டி வேர், நெல்லிமுள்ளி சேர்த்து 3 நிமிடங்கள் கொதிக்கவிடவும். அதனுடன் கிரீன் டீ இலைகள் சேர்த்து மூடி வைக்கவும். 5 நிமிடங்கள் கழித்து வடிகட்டிப் பருகலாம் (நெல்லிமுள்ளி சேர்க்காவிட்டால் வடிகட்டிய பிறகு பாதியளவு எலுமிச்சைப் பழத்தைச் சாறு பிழிந்து சேர்த்துக் கலக்கவும்). விரும்பினால் சிறிதளவு தேன் சேர்த்துப் பருகலாம். இதை உணவுக்குப்பின் 60 மில்லி வரை வாரம் மூன்று நாள்கள் பருகலாம். பயன்: இந்த டீ இதயப் படபடப்பை சரி செய்யும். நாம் உண்ட உணவில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கக் கூடியது. தேவையற்ற எடை அதிகரிப்பைத் தடுக்கும். வெட்டி வேரின் நறுமணம் மன அமைதிக்கு உதவும். ஏலக்காய், சிறுமூளை பாதிப்பைத் தடுக்கும். இதயம் காக்கும் பொடி தேவை: தாமரைப்பூப் பொடி, ஒற்றை நாட்டுச் செம்பருத்திப்பூப் பொடி, மருதம்பட்டைப் பொடி, அமுக்கிராகிழங்குப் பொடி, சுத்தமான விரளி மஞ்சள் பொடி - தலா 10 கிராம் தேன் - அரை டீஸ்பூன். செய்முறை: தாமரை, செம்பருத்தி, மருதம் பட்டை, அமுக்கிராக்கிழங்கு, மஞ்சள் பொடி வகைகளை ஒன்றாகக் கலக்கவும். இந்தப் பொடியில் ஒரு டீஸ்பூன் எடுத்து, அரை டீஸ்பூன் தேன் சேர்த்துக் குழைத்துத் தினமும் இரவு படுப்பதற்கு முன் உண்ணலாம். 200 மில்லி தண்ணீருடன் ஒரு டீஸ்பூன் இந்தப் பொடியைச் சேர்த்துக் காய்ச்சி 100 மில்லி ஆகும் வரை கொதிக்கவிட்டு இறக்கி, வடிகட்டி தேன் சேர்த்துக் காலையில் குடிக்கலாம். பயன்: மேலே கூறிய அனைத்துப் பொடிகளிலும் இதயம் காக்கும் சத்துகள் அடங்கியுள்ளன. இதயம் திறம்படச் செயல்பட இந்தப் பொடி உதவும். பசலைக்கீரை ஆளிவிதை பானம் தேவை: நறுக்கிய பசலைக்கீரை - 2 கைப்பிடி அளவு வறுத்துப் பொடித்த ஆளிவிதைப் பொடி - அரை டீஸ்பூன் எலுமிச்சைப் பழம் - பாதியளவு (சாறு பிழியவும்) புதினா இலைகள் - ஒரு கைப்பிடி அளவு வெள்ளை மிளகுத்தூள் - கால் டீஸ்பூன் இந்துப்பு - ஒரு சிட்டிகை தண்ணீர் - தேவையான அளவு. செய்முறை: பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். அதனுடன் பசலைக்கீரை, புதினா இலைகள் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். ஆறியதும் அப்படியே மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். அதனுடன் ஆளிவிதைப் பொடி, இந்துப்பு. எலுமிச்சைச் சாறு, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை 100 மில்லி அளவு பருகலாம். பயன்: இதய நோயாளிகளுக்கான சிறந்த காலை உணவு இந்தப் பானம். இதில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் நார்ச்சத்து நிறைவாக உள்ளது. இது எடை அதிகரிப்பைத் தடுக்கும். மேலும், இரும்புச்சத்து, போலிக் அமிலம் இதில் அதிகமுள்ளதால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்பை நீக்கும். நல்ல கொழுப்பை அதிகரிக்கும்; கெட்ட கொழுப்பைக் குறைக்கும். இஞ்சி பூண்டு வடிநீர் தேவை: தோல் சீவிய இஞ்சி, தோலுரித்த பூண்டு - தலா 100 கிராம் எலுமிச்சைப் பழம் - ஒன்று (சாறு பிழியவும்) தேன் - ஒரு டீஸ்பூன் தண்ணீர் - 3 டம்ளர். செய்முறை: இஞ்சியுடன் பூண்டு சேர்த்து இடிக்கவும். அதனுடன் 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு ஒரு டம்ளராக வற்றியதும் இறக்கி வடிகட்டவும். அதனுடன் எலுமிச்சைச் சாறு, தேன் சேர்த்துக் கலக்கவும். தினமும் காலை இந்த வடிநீரை, இளம் சூடாக வெறும் வயிற்றில் 2 டேபிள்ஸ்பூன் பருகி வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது. பயன்: ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கும். கெட்ட கொழுப்பைக் குறைக்கும். செரிமான மண்டலத்தைச் சுத்தம் செய்யும். அஜீரணப் பிரச்னையால் வரும் வாயுத் தொல்லை மற்றும் வாயு பிடிப்பால் வரும் இதயவலிக்கான சிறந்த நிவாரணியாக விளங்கும். இதயத்துக்கு ரத்த ஓட்டம் தடைபடாமல் நடைபெற உறுதுணை புரியும். நெல்லிக்காய் கறிவேப்பிலை சாரம் தேவை: பெரிய நெல்லிக்காய் - 2 கறிவேப்பிலை - 2 கைப்பிடி அளவு வறுத்துப் பொடித்த ஆளிவிதைப் பொடி - கால் டீஸ்பூன் தேன் (விரும்பினால்) – ஒரு டீஸ்பூன் தண்ணீர் - 200 மில்லி. செய்முறை: நெல்லிக்காயுடன் கறிவேப்பிலை, தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். அதனுடன் ஆளிவிதைப் பொடி சேர்த்து நன்கு கலக்கவும். இதைக் காலை, மாலை என இருவேளையும் 100 மில்லி பருகலாம். விரும்பினால் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்துப் பருகலாம். பயன்: இது ஒரு காயகல்பமாகும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும்; ரத்தக் கொதிப்பைச் சீராக்கும். புற்றுநோயைத் தடுக்கும். ரத்த சோகையை விரட்டும். கெட்ட கொழுப்பைக் குறைக்கும். மாரடைப்பு வராமல் தடுக்கும். நெல்லிக்காயில் வைட்டமின் சி-யும், கறிவேப்பிலையில் இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது. ஹெல்த்தி மோர் தேவை: நன்கு நீர்விட்டுக் கடைந்த மோர் - 200 மில்லி தோலுடன் சேர்த்து அரைத்த வெள்ளரிக்காய்ச்சாறு - 50 மில்லி சீரகத்தூள், ஆளிவிதைப் பொடி - தலா கால் டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, புதினா கலவை - ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை: நீர் மோருடன் வெள்ளரிக்காய்ச்சாறு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் கொத்தமல்லித்தழை, புதினா, கறிவேப்பிலை, சீரகத்தூள், ஆளிவிதைப் பொடி சேர்த்துக் கலக்கவும். விருப்பப்பட்டால் அரை டீஸ்பூன் உப்பு சேர்க்கலாம். 100 மில்லி முதல் 200 மில்லி வரை காலை 11 மணி அளவிலும் அல்லது மாலை 4 மணி அளவிலும் பருகலாம். பயன்: இதில் நுண்ணுட்டச்சத்துகள் அதிகம். மாரடைப்பு வராமல் தடுக்கும். உச்சிமுதல் பாதம் வரை உள்ள அனைத்து செல்களுக்கும் புத்துயிர் கொடுக்கும். இதில் உள்ள தாது உப்புகள் மற்றும் புரோட்டீன், அமினோ அமிலங்கள், நோய் எதிர்ப்புக் காரணியாக விளங்கும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். மெனோபாஸ் நேரத்தில் வரும் பிரச்னைகளுக்கும் தீர்வாகும். கெட்ட கொழுப்பைக் கரைக்கும்; நல்ல கொழுப்பை அதிகரிக்கும். அகத்திக்கீரை நீர்ச்சாறு தேவை: அகத்திக்கீரை - ஒரு கப் சின்ன வெங்காயம் - 12 (தோலுரிக்கவும்) மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்) சீரகம், மிளகுத்தூள் - தலா கால் டீஸ்பூன் பச்சை மிளகாய் - ஒன்று (இரண்டாகக் கீறவும்) பூண்டு - 5 பல் இந்துப்பு - கால் டீஸ்பூன் அரிசி கழுவிய தண்ணீர் - 4 கப். தாளிக்க: ஆலிவ் எண்ணெய் - ஒரு டீஸ்பூன் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, வெந்தயம் - தலா கால் டீஸ்பூன். செய்முறை: குக்கரில் அகத்திக்கீரையுடன் சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், பச்சை மிளகாய், இந்துப்பு, பூண்டு, மிளகுத்தூள், சீரகம், அரிசி கழுவிய தண்ணீர் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, நான்கு விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கியதும் திறந்து மத்தால் கடையவும். வாணலியில் ஆலிவ் எண்ணெய்விட்டுத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்துக் கீரையுடன் கலக்கவும். இதனை அப்படியே ஒரு கப் சாப்பிடலாம். அல்லது சாதம், சப்பாத்தி, இட்லி போன்ற வற்றுக்குத் தொட்டுக்கொள்ளலாம். பயன்: அகத்திக்கீரை பித்த சூட்டைக் குறைக்கும். தோல் நோய்களுக்கும் மருந்தாகும். இதில் நிறைய நார்ச்சத்து உள்ளதால், வயிற்றுப்புண்ணை ஆற்றும். ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தும். வாயுத்தொல்லை நீங்கும்; நெஞ்சடைப்பு அகலும்; மலச்சிக்கல் சீராகும். முருங்கைக்கீரை மசியல் தேவை: முருங்கைக்கீரை (பூக்களுடன்) - ஒரு கப் துவரம்பருப்பு, பாசிப்பருப்பு - தலா கால் கப் சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கவும்) தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்) பூண்டு - 5 பல் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை சாம்பார் பொடி - 2 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 (இரண்டாகக் கீறவும்) இந்துப்பு - தேவையான அளவு தண்ணீர் - தேவையான அளவு. தாளிக்க: ஆலிவ் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், சீரகம், கடலைப்பருப்பு - தலா கால் டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2. செய்முறை: துவரம்பருப்புடன் பாசிப்பருப்பைச் சேர்த்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் ஆலிவ் எண்ணெய்விட்டுத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு பச்சை மிளகாய், தக்காளி, முருங்கைக்கீரை, முருங்கைப்பூ, பருப்பு வகைகள், தேவையான அளவு தண்ணீர், சாம்பார் பொடி, பெருங்காயத்தூள், இந்துப்பு சேர்த்துக் கலந்து மூடி, 2 விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் கரண்டியால் நன்கு மசிக்கவும். சூடான, சுவையான, சத்தான, ஆரோக்கியமான முருங்கைக்கீரை மசியல் தயார். பயன்: இரும்புச்சத்து, கால்சியம், புரோட்டீன் போன்ற முக்கிய ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவாகும். ரத்தத்தில் உள்ள கொழுப்பு படிமானங்களைக் கரைக்கும். இதயத்துக்குப் பாதுகாப்பாக அமையும். ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்; நரம்பு சம்பந்தமான நோய்கள் வராமல் பாதுகாக்கும். ஸ்ட்ரெஸ் கிளியரன்ஸ் டிரிங்க் தேவை: தூய்மையான விரளி மஞ்சள்தூள் - 4 கிராம் தூய்மையான சந்தனம் - 4 கிராம் தண்ணீர்விட்டான்கிழங்குப் பொடி - 4 கிராம் அதிமதுரப் பொடி - 4 கிராம் அமுக்கிராக்கிழங்குப் பொடி - 5 கிராம் உலர் திராட்சை - 5 தண்ணீர் - 200 மில்லி. செய்முறை: பாத்திரத்தில் தண்ணீரைச் சூடாக்கவும். அதனுடன் மஞ்சள்தூள், சந்தனம், தண்ணீர்விட்டான்கிழங்குப் பொடி, அதிமதுரப் பொடி, அமுக்கிராக் கிழங்குப் பொடி சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு 100 மில்லியாக வற்றியதும் இறக்கி வடிகட்டவும். அதனுடன் உலர் திராட்சை சேர்த்துக் கலக்கவும். இதை 30 முதல் 50 மில்லி அளவு உணவுக்குப் பிறகு அருந்தி வரலாம். பயன்: மன அழுத்தம், பதற்றம் போன்றவை ஏற்படாமல் இருக்கப் பெரிதும் துணைபுரியும். ஹார்ட் அட்டாக் வருவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று ஸ்ட்ரெஸ் ஆகும். இதைச் சரிசெய்ய இந்த டிரிங்க் உதவும். குறிப்பு: தேவையான பொருள்களில் கொடுத்துள்ள அனைத்து பொருள்களும் 50 கிராம் அளவில் வாங்கி ஒன்றாகக் கலக்கவும். அதிலிருந்து ஒரு டீஸ்பூன் அளவு 200 மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்தும் பருகலாம். ஹெர்பல் பொடி மிக்ஸ் தேவை: மருதம்பட்டைப் பொடி, அமுக்கிராக்கிழங்குப் பொடி, கோரைக் கிழங்குப் பொடி, தண்ணீர்விட்டான்கிழங்குப் பொடி, சீதாப்பழ இலை பொடி, சுத்தமான மஞ்சள்தூள் - தலா 10 கிராம் தேன் - ஒரு டீஸ்பூன். செய்முறை: மருதம்பட்டைப் பொடி, அமுக்கிராக்கிழங்குப் பொடி, கோரைக் கிழங்குப் பொடி, தண்ணீர்விட்டான்கிழங்குப் பொடி, சீதாப்பழ இலை பொடி, சுத்தமான மஞ்சள்தூள் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து சேகரிக்கவும். அரை டீஸ்பூன் பொடியுடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்துச் சாப்பிடலாம். பயன்: இந்தப் பொடியைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர, இதயம் பலவீனம் அடைவதைத் தடுக்கும். சீதாப்பழ இலை பொடியில் பொட்டாசியம் மிகுந்து காணப்படுகிறது. இது உடலில் உள்ள அதிகப்படியான சோடியத்தை (உப்பு) உறிஞ்சி ரத்த அழுத்தத்தைச் சீராகப் பராமரிக்க உதவுகிறது. ரத்த அழுத்தம் சீராக இருக்கும்போது இதயத்தின் செயல்பாடும் திறம்பட இருக்கும். தாமரைப்பூ சர்பத் தேவை: வெண்தாமரை (அ) செந்தாமரைப்பூ - ஒன்று (இதழ்கள் மட்டும்) பனங்கற்கண்டு - ஒரு டேபிள்ஸ்பூன் பாதாம் பிசின் - ஒரு டீஸ்பூன் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். முதல் நாளே ஊறவைக்கவும்) தண்ணீர் - 200 மில்லி மருதம்பட்டைப் பொடி - 10 கிராம். செய்முறை: பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றிக் கொதிக்கவிடவும். அதனுடன் தாமரைப்பூ இதழ்கள், பனங்கற்கண்டு சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு வடிகட்டி ஆறவிடவும். அதனுடன் மருதம்பட்டைப் பொடி, பாதாம் பிசின் சேர்த்து வாரம் இருமுறை 100 மில்லி அளவு பருகி வரலாம். பயன்: இதயம் பலப்படும். இதயம் சம்பந்தமான நோய்கள் விலகும். கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். இது எந்தப் பக்கவிளைவுகளும் இல்லாத மருந்தாக அமைந்த உணவாகும். இதைத் தயாரிக்க வெண்தாமரைப்பூவே சிறந்தது. மருதம்பட்டை பானம் தேவை: மருதம்பட்டை - 10 கிராம் தண்ணீர் - 200 மில்லி சுக்குத்தூள் - ஒரு டீஸ்பூன் தனியாத்தூள் (மல்லித்தூள்) - ஒரு டீஸ்பூன் சீரகத்தூள் - அரை டீஸ்பூன் காய்ந்த ரோஜா இதழ்கள் - ஒரு டீஸ்பூன் பனை வெல்லம் அல்லது தேன் - ஒரு டீஸ்பூன். செய்முறை: பாத்திரத்தில் 200 மில்லி தண்ணீருடன் மருதம்பட்டை, சுக்குத்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், காய்ந்த ரோஜா இதழ்கள் சேர்த்துக் குறைந்த தீயில் கொதிக்கவைத்து 100 மில்லியாக வற்றியதும் வடிகட்டவும். இத்துடன் பனை வெல்லம் அல்லது தேன் சேர்த்து நன்கு கலந்து பருகவும். இதன் சுவை சற்றுச் துவர்ப்பாக இருந்தாலும் உடல் ஆரோக்கியத்தைப் பலப்படுத்தும் பானமாக அமையும். பயன்: ரத்த அழுத்தம் இயல்பு நிலைக்குவரும். ரத்தத்தில் உள்ள நச்சுகளை நீங்கும். மருதம்பட்டை மற்றும் ரோஜா சேர்ந்த கலவை மன அமைதிக்கும் ஆழ்ந்த உறக்கத்துக்கும் உதவும். இதயப் படபடப்பை நீக்கும். உடல் எடை மற்றும் வயிற்றுப்பகுதி சதையைக் குறையும். இதய இயக்கம் சீராகி, உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும். சீரகப் பொடி பானம் தேவை: சீரகப் பொடி - ஒரு டீஸ்பூன் துளசி இலைகள் - 5 பட்டை - 2 சிறிய துண்டு ஏலக்காய் - 2 பனங்கற்கண்டு - ஒரு டீஸ்பூன் தண்ணீர் - 200 மில்லி. செய்முறை: பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி லேசாகச் சூடு செய்யவும். அதனுடன் சீரகப் பொடி, துளசி இலைகள், பட்டை, ஏலக்காய் சேர்த்து அடுப்பைச் சிறு தீயில் வைத்து 5 நிமிடங்கள் சூடு செய்து இறக்கி மூடிவைக்கவும். 2 மணி நேரம் கழித்து மீண்டும் லேசாக ஒரு நிமிடம் சூடு செய்து வடிகட்டவும். அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து மாலை அல்லது இரவு நேரத்தில் தூங்கச் செல்லும் முன் குடிக்கலாம். பயன்: நுரையீரல் சம்பந்தமான நோய்கள் விலகும். நல்ல ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும். நல்ல தூக்கம் மற்றும் நுரையீரல் திறம்பட செயல்படுதல் இவை இரண்டுமே இதயத்துக்கு முக்கியமான செயல்பாடுகளாகும். எனவே, இந்தச் சீரகப் பொடி பானம் இதயத்தை வலுவூட்டி, திறம்படச் செயல்பட வைக்கும். மேலும், ரத்தக் கொதிப்பும் சீராகும். திராட்சை கோசம்பி தேவை: விதையுள்ள பன்னீர் திராட்சை - ஒரு கப் சீரகத்தூள், வெள்ளை மிளகுத்தூள், ஓமம் - தலா கால் டீஸ்பூன் தண்ணீர் - தேவையான அளவு. செய்முறை: பன்னீர் திராட்சையுடன் சீரகத்தூள், வெள்ளை மிளகுத்தூள், ஓமம், தண்ணீர் சேர்த்து அரைத்தெடுத்து வடிகட்டாமல் பருகவும். இதில் சுவைக்காக உப்பு, சர்க்கரை சேர்க்கக் கூடாது. ஏனென்றால் இது மருந்தாகும் உணவாகும். இதனை அப்படியே உண்ணும்போது முழுப் பயனையும் நம் இதயம் பெறும். பயன்: இது வைட்டமின் பி, சி மற்றும் போலிக் ஆசிட், இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பல சத்துகளைப் பெற்றுள்ளது. இதயத்துக்கு வலுவூட்டவும், ரத்த குழாய் அடைப்பைச் சரி செய்யவும் இது உதவுகிறது. அறுகம்புல் சாறு தேவை: புதிதாகப் பறிக்கப்பட்ட அறுகம்புல் - அரை கட்டு தேன் - ஒரு டீஸ்பூன் எலுமிச்சைப் பழம் - பாதியளவு (சாறு பிழியவும்) இந்துப்பு - ஒரு சிட்டிகை சீரகத்தூள் - ஒரு சிட்டிகை தண்ணீர் - தேவையான அளவு. செய்முறை: அறுகம்புல்லை நன்றாகச் சுத்தம் செய்து, தேவையான அளவு தண்ணீர்விட்டு நன்கு அரைத்து வடிகட்டவும். அதனுடன் மேலும் இரண்டு பங்கு தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். பிறகு எலுமிச்சைச் சாறு, இந்துப்பு, சீரகத்தூள், தேன் சேர்த்துக் கலக்கவும். இதைத் தினமும் 100 மில்லி குடித்து வர, இதயம் வலுப்பெறும். பயன்: அறுகம்புல்லில் நார்ச்சத்தும் பல நுண் ஊட்டச்சத்துகளும் உள்ளன. இவை கொழுப்பைக் கரைக்கவும் ரத்தத்தில் உள்ள நச்சுகளை முறிக்கவும் பெருந்துணை புரிகின்றன. இதய படபடப்பு குறையவும், ரத்த சுத்திகரிப்புக்கும், இதய தசைகளில் படிந்துள்ள கொழுப்பு படிமானங்களை அகற்றவும் இது உதவுகிறது. துளசி மஞ்சள் சாரம் தேவை: துளசி இலைகள் - ஒரு கைப்பிடி அளவு சுத்தமான விரளி மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் தண்ணீர் - 200 மில்லி சீரகம் - கால் டீஸ்பூன். செய்முறை: பாத்திரத்தில் தண்ணீர்விட்டுச் சூடாக்கவும். அதனுடன் துளசி இலைகள், மஞ்சள்தூள், சீரகம் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டவும். இதைத் தினமும் காலை அல்லது மாலை வேளையில் 100 மில்லி வரை குடிக்கலாம். பயன்: துளசி மற்றும் மஞ்சளில் ஏராளமான மருத்துவக் குணங்கள் உள்ளன. நுரையீரல் நோய்த்தொற்றைச் சரிசெய்து, ரத்த ஓட்டத்தைச் சீராக்கி இதயத் துடிப்புக்கு மிகவும் உறுதுணை புரிகிறது. மூளை செல்கள் சிதைவடையாமல் காத்து மன அமைதிக்கும் வழிவகுக்கிறது. செரிமான மண்டலத்தைச் சீர் செய்கிறது. மனச்சோர்வை நீக்குகிறது. இதயத்தின் படபடப்பை நீக்குகிறது. குழந்தைகளுக்கு துளசி - மஞ்சள் சாரத்துடன் சிறிதளவு பால் கலந்தும் கொடுக்கலாம். நெல்லிக்காய் சர்பத் தேவை: பெரிய நெல்லிக்காய் - 2 தோல் சீவிய இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு எலுமிச்சை (விரும்பினால்) - பாதி அளவு (சாறு பிழியவும்) தேன் - ஒரு டேபிள்ஸ்பூன் புதினா இலைகள் - ஒரு கைப்பிடி அளவு இந்துப்பு - ஒரு சிட்டிகை ஊறவைத்த சப்ஜா விதை - கால் டீஸ்பூன் தண்ணீர் - 250 மில்லி. செய்முறை: நெல்லிக்காய்களின் கொட்டைகளை நீக்கவும். அதனுடன் இஞ்சி, இந்துப்பு, புதினா, தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுத்து வடிகட்டவும். தேன், சப்ஜா விதைகள் சேர்த்துக் கலந்து பருகலாம். விரும்பினால் எலுமிச்சைச்சாறு சேர்க்கலாம். பயன்: இதில் அதிகளவில் உள்ள வைட்டமின் சி எலும்புக்கு மிகவும் நல்லது. இதில் உள்ள பாஸ்பரஸ், இரும்புச் சத்துகள் இதயத்துக்கு இதமளித்து, ரத்தத்தில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது. உடலில் பிராண வாயுவை அதிகரித்துச் செல்களுக்கும் மூளைக்கும் புத்துணர்வு அளிப்பதால், இதயம் சீராகச் செயல்பட உறுதுணை புரிகிறது. மோர்க் கற்றாழை தேவை: கடைந்த நீர் மோர் - 200 மில்லி சோற்றுக்கற்றாழை - ஒரு மடல் இந்துப்பு - ஒரு சிட்டிகை கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு. செய்முறை: சோற்றுக்கற்றாழையின் உள்ளே உள்ள ஜெல்லிப் பகுதியை ஐந்து முதல் ஏழு தடவை வரை நன்றாகக் கழுவி மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்றுச் சுற்றவும். அதனுடன் கொத்தமல்லித்தழை, இந்துப்பு சேர்த்து நன்றாக அடிக்கவும். இறுதியாக மோர் சேர்த்து நன்கு அடித்து எடுத்து உடனே பருக வேண்டும். பயன்: இது தேவையற்ற கொழுப்பைக் கரைப்பதில் உறுதுணை புரியும். உடல் சூட்டைத் தணிக்கும். நாம் உண்ட உணவில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கி, நல்ல கொழுப்பை அதிகரித்து இதயத்துக்கு வலுவூட்டும். ரோஜாப்பூ இயற்கை லேகியம் தேவை: நாட்டுப் பன்னீர் ரோஜா இதழ்கள் - 3 கைப்பிடி அளவு பனங்கற்கண்டுத்தூள் (அ) நாட்டுச் சர்க்கரை - 100 கிராம் தேன் - ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை: சுத்தம் செய்த ரோஜா இதழ்களை ஜாடியில் போடவும். அதன் மீது பனங்கற்கண்டுத்தூள் அல்லது நாட்டுச் சர்க்கரை, மீண்டும் ரோஜா இதழ்கள் என மாற்றி மாற்றி நிரப்பவும். பிறகு ஜாடியைச் சுத்தமான துணியால் மூடி கட்டவும். தினமும் குலுக்கிவிடவும். மூன்றாவது நாள் காலையில் நன்கு கலந்து வெயிலில் துணி கட்டியபடியே ஒருநாள் வைத்து எடுக்கவும். அதனுடன் தேன் சேர்த்துக் கலந்து காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். இயற்கை முறையில் செய்த ரோஜாப்பூ லேகியம் தயார். பயன்: இந்த லேகியம் மூளையில் செரடோனின், மெலடோனின் போன்றவை சரியான நிலையில் உற்பத்தியாக உதவுகிறது. இது மன அமைதிக்கு உதவுகிறது. மேலும், ரத்த ஓட்டத்தைச் சமன் செய்து இதயம் சீராகச் செயல்பட உதவுகிறது. ரத்தத்தில் உள்ள நச்சுகளை முறிக்கிறது. அங்காயப் பொடி தேவை: மணத்தக்காளி வற்றல், சுண்டைக்காய் வற்றல், சுக்கு, வேப்பம்பூ - தலா 20 கிராம் தனியா (மல்லி) - 50 கிராம் மிளகு, சீரகம் - தலா 25 கிராம் காய்ந்த கறிவேப்பிலை - 2 கைப்பிடி அளவு கல் உப்பு - தேவையான அளவு. செய்முறை: வெறும் வாணலியில் மணத்தக்காளி வற்றல், சுண்டைக்காய் வற்றல், சுக்கு, தனியா, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, வேப்பம்பூ ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்தெடுக்கவும். ஆறியதும் அதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். இதைக் காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்து வைக்கவும். இந்தப் பொடியை ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்துச் சிறிதளவு நல்லெண்ணெய்விட்டுச் சூடான சாதம் அல்லது இட்லியுடன் சேர்த்து உண்ணலாம். பயன்: இதில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்துப் பொருள்களுமே மருத்துவக் குணம் கொண்டவை. இவை இதயம் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கும். மேலும் ரத்தத்தைச் சுத்திகரித்து, ரத்த ஓட்டத்தைச் சீர் செய்யும்; கெட்ட கொழுப்பை கரைக்கும். வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்றவற்றைச் சரி செய்யும். நரம்புகளுக்கு வலுவூட்டும். ரத்தத்தில் உள்ள நச்சுகளை வெளியேற்றும். தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும். பன்னீர் ரோஜா வெற்றிலைத் துவையல் தேவை: வெற்றிலை - 10 (காம்பு, நுனி கிள்ளவும்) பன்னீர் ரோஜாப்பூ - 3 (இதழ்கள் மட்டும்) உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன் தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு பச்சை மிளகாய் - 5 (அல்லது காரத்துக்கேற்ப) எலுமிச்சைப்பழம் - பாதியளவு (சாறு பிழியவும்) கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - தலா ஒரு கைப்பிடி அளவு சீரகம் - ஒரு டீஸ்பூன் வெல்லம் - ஒரு சிறிய துண்டு (பொடிக்கவும்) எண்ணெய் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு. தாளிக்க: நல்லெண்ணெய் (அ) ஆலிவ் எண்ணெய் - ஒரு டீஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2. செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து வறுக்கவும். அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். இறுதியாக வெற்றிலை, ரோஜாப்பூ இதழ்கள் சேர்த்து ஒரு புரட்டு புரட்டி இறக்கவும். ஆறியதும் அதனுடன் உப்பு சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். பிறகு வெல்லம், எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்கு கலக்கவும். அதே வாணலியில் எண்ணெய்விட்டுத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்து, அரைத்தெடுத்த துவையலில் சேர்க்கவும். சாதம், இட்லி, தோசை என அனைத்துக்கும் இது சூப்பர் காம்பினேஷன். பயன்: வெற்றிலை மற்றும் ரோஜாப்பூவில் உள்ள மருத்துவக் குணங்கள் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பை நீக்கி இதயத்தைப் பாதுகாத்து, பலப்படுத்தும். ரத்த ஓட்டத்தைச் சரி செய்யும். நுரையீரல், இதயம் சரிவர இயங்கத் துணை புரியும். துளசி நெல்லித் துவையல் தேவை: துளசி இலைகள் - 2 கைப்பிடி அளவு பெரிய நெல்லிக்காய் - ஒன்று (கொட்டை நீக்கி நறுக்கவும்) சின்ன வெங்காயம் - 5 (தோலுரிக்கவும்) பூண்டு - 5 பல் சீரகம் - ஒரு டீஸ்பூன் கறுப்பு உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன் பச்சை மிளகாய் - 3 (அ) மிளகு - ஒரு டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு. தாளிக்க: ஆலிவ் எண்ணெய் - தேவையான அளவு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன். செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு கறுப்பு உளுத்தம்பருப்பு சேர்த்து வறுக்கவும். அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், பச்சை மிளகாய் அல்லது மிளகு சேர்த்து வதக்கவும். பிறகு நெல்லிக்காய் சேர்த்து வதக்கவும். இறுதியாக துளசி இலைகள் சேர்த்து ஒரு புரட்டு புரட்டி இறக்கவும். ஆறியதும் அதனுடன் உப்பு சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். வாணலியில் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்து அரைத்து வைத்த துவையலில் கலக்கவும். கமகமவென்ற மணத்துடன், உடலுக்கும் மனத்துக்கும் ஆரோக்கியம் தரும் துவையல் தயார். பயன்: துளசியும் நெல்லிக்காயும் பல்வேறு சத்துகள் கொண்டவை. இவை இரண்டும் சேர்ந்து ஓர் உணவாகும்போது அது மருந்தாக வேலை செய்கிறது. நுரையீரல் மற்றும் இதயம் இவை இரண்டுக்கும் நன்மை செய்யும் விதமாக அமைகிறது. வெந்தய மல்லி பானம் தேவை: வெந்தயம், மல்லி (தனியா), சுக்கு, விரளி மஞ்சள், சீரகம் - தலா 100 கிராம் பட்டை - 50 கிராம் எலுமிச்சைப்பழம் - பாதியளவு (சாறு பிழியவும்) தண்ணீர் - 200 மில்லி. செய்முறை: வெறும் வாணலியில் வெந்தயம், மல்லி, சுக்கு, மஞ்சள், சீரகம், பட்டை ஆகியவற்றைத் தனித்தனியே வறுத்தெடுக்கவும். ஆறியதும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் நன்கு பொடித்து, காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். தண்ணீருடன் அரைத்த பொடி 2 டீஸ்பூன் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு 100 மில்லியாகக் குறைந்ததும் இறக்கி வடிகட்டவும். அதனுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து இளம் சூடாகப் பருகவும். இதை உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு அருந்தலாம். பயன்: நாம் உண்ட உணவில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கவும், கலோரிகளை எரிக்கவும், அதிக எடை போடாமல் தடுக்கவும் இந்தப் பானம் உதவுகிறது. மாரடைப்புக்கு முக்கிய காரணங்கள் உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவை ஆகும். இவற்றைச் சரி செய்து மாரடைப்பு வராமல் பாதுகாக்க இந்த வெந்தய மல்லி பானம் உதவுகிறது. அமுக்கிராக்கிழங்குப் பொடி பால் தேவை: அமுக்கிராக்கிழங்குப் பொடி - 10 கிராம் பால் - 200 மில்லி பூசணி விதை - 10 கிராம் நாட்டுச் சர்க்கரை (அ) பனங்கற்கண்டு - 20 கிராம் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன். செய்முறை: பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். அதனுடன் அமுக்கிராக் கிழங்குப் பொடி, பூசணி விதை, பனங்கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரை, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலந்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டாமல் அருந்தவும். பயன்: உயர் ரத்த அழுத்தத்தைச் சரி செய்யும். இதயம் சீராக இயங்க உதவும். தூக்கமின்மையைப் போக்கும். உடல் சோர்வு நீக்கும். மலச்சிக்கலைப் போக்கும். உடல் வெப்பத்தைச் சீர் செய்யும். ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். சுரைக்காய் சாரம் தேவை: சுரைக்காய்த் துண்டுகள் - ஒரு கப் தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்) சின்ன வெங்காயம் - 10 பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்) இந்துப்பு - தேவையான அளவு புதினா, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை கலவை - ஒரு கைப்பிடி அளவு பூண்டு - 10 பல் தண்ணீர் - 2 கப். தாளிக்க: ஆலிவ் எண்ணெய் - ஒரு டீஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2. செய்முறை: குக்கரில் சுரைக்காய்த் துண்டுகளுடன் சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, பூண்டு, இந்துப்பு, தண்ணீர் சேர்த்து மூடி, இரண்டு விசில்விட்டு இறக்கவும். வாணலியில் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்து சுரைக்காய்க் கலவையுடன் சேர்த்துக் கலந்து பரிமாறவும். இதை பிரவுன் ரைஸ் அல்லது சிறுதானிய சாத வகைகளுடன் மதிய உணவாகச் சாப்பிடலாம். அல்லது காலை நேரங்களில் பிரவுன் அல்லது கோதுமை பிரெட்டுடன் சாப்பிடலாம். பயன்: சுரைக்காயில் நீர்ச்சத்து, கனிமச்சத்துகள், உயிர்ச்சத்துகள் கூடுதலாக உள்ளன. இவையனைத்தும் உடலின் தேவையற்ற கொழுப்பை எரிக்கவல்லவை. ரத்த ஓட்டத்தைச் சீர்ப்படுத்தி இதயம் சீராக இயங்க உதவுபவை. செம்பருத்திப்பூ தோசை தேவை: ஒற்றை நாட்டுச் செம்பருத்திப்பூ இதழ்கள் - 15 முதல் 20 (பொடியாக நறுக்கவும்) வரகு பச்சரிசி - 200 கிராம் இட்லி அரிசி - 50 கிராம் கறுப்பு உளுத்தம்பருப்பு - 50 கிராம் வெந்தயம் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு. தாளிக்க: ஆலிவ் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு காய்ந்த மிளகாய் - 2. செய்முறை: வரகு பச்சரிசியுடன் இட்லி அரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் சேர்த்து 6 மணிநேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து அரைத்தெடுத்து உப்பு சேர்த்துக் கரைத்து 6 மணிநேரம் புளிக்கவிடவும். வாணலியில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் பொடியாகக் கிள்ளிய செம்பருத்திப்பூ இதழ்களைச் சேர்த்து வதக்கி மாவுடன் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவைத் தோசைகளாக ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுக்க செம்பருத்திப்பூ தோசை ரெடி. இதற்குப் பன்னீர் ரோஜா வெற்றிலைத் துவையல் அல்லது துளசி நெல்லித் துவையல் நல்ல காம்பினேஷன். பயன்: இது இதயத்துக்கு இதமளிக்கும். இதில் உள்ள காசி பால் எனும் பொருள் ஹார்மோனை சமன் செய்யும். ரத்த விருத்தியை ஏற்படுத்தும். ரத்த நாளங்களில் உள்ள அடைப்பைச் சீர் செய்யும். அவசர யுகத்துக்கு அவசிய உணவுகள் இன்றைய அவசர உலகில் நோய்களும் அவசர அவசரமாக நம்மைத் தாக்குகின்றன. வயோதிகத்தில் நம்மைத் தாக்குமோ என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்த நோய்கள் பலவும் வாலிபப் பருவத்திலேயே வாட்டி வதைக்கின்றன. குறிப்பாக, இதயம் சார்ந்த நோய்கள் நம்மைப் பெரிதும் அச்சுறுத்துவதாக உள்ளன. இதற்கு முக்கிய காரணங்கள் வாழ்க்கை முறை மாற்றம், சுற்றுச்சூழல் சீர்கேடு, உணவுப் பழக்க மாற்றம். இதயம் சார்ந்த நோய்களிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள நல்ல தூக்கம், உடற்பயிற்சி, முறையான உணவுப் பழக்கம் அவசியம். இதயம் காக்கும் முயற்சியில் இறங்கி, நாம் உண்ணும் உணவேயே மருந்தாக, அதிலும் இதயத்துக்கு உறுதியளிக்கும் மருந்தாக விளங்கும் விதத்தில் தோசை, சூப், துவையல், மசியல், சர்பத் என வகை வகையாகத் தயாரித்து விருந்து படைக்கிறார், ஓசூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் எஸ்.சாந்தி. ``இங்கே வழங்கப்பட்டுள்ள உணவு வகைகள் இதயம் சம்பந்தப்பட்டவை என்பதால் சோடியத்தை (உப்பு) குறைத்து பொட்டாசியத்தை (காய்கறி, பழங்கள் மற்றும் இயற்கை பொருள்கள் மூலம்) அதிகரித்து வழங்கப்பட்டுள்ளன. இயற்கை முறையில், அதே நேரம் அனைவரும் சமைத்து உண்ணும் விதமாகவும் அமைந்துள்ளன. இவை நம் குடும்பத்தினரின் ஆரோக்கியம் சிறக்க உறுதுணைபுரியும்’’ என்கிறார் ஓசூர் சாந்தி. https://www.vikatan.com
 13. 125. லட்சத்து எட்டு வினோத் என்ன நினைத்து அதைச் செய்தான் என்று உண்மையிலேயே எனக்குத் தெரியாது. ஆனால் வினய் தனது ஜனாதிபதி மாளிகை அனுபவத்தைச் சொல்லி முடித்தபோது வினோத்துக்குக் கண் கலங்கிவிட்டிருந்தது. மிகவும் பரிவுடனும் துயரத்துடனும் அவன் வினய்யை நோக்கினான். சட்டென்று தனது தோள் பைக்குள் கையைவிட்டு எதையோ தேடினான். அவன் தேடிய பொருள் அவன் கைக்கு அகப்பட்டுவிட்டதை அவன் முகபாவத்தில் தெரிந்துகொண்டேன். ஆனால் கையை வெளியே எடுக்காமல் அவன் வினய்யிடம் சொன்னான், ‘வினய், நீ என்ன நினைத்துக்கொள்வாய் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. நீ சிரிக்கலாம். என்னுடைய இந்தச் செய்கையைக் கேலி பேசலாம். அல்லது இதைத் தூக்கிப் போடலாம். அது உன் விருப்பம். ஆனால் உன்னிடம் சொல்ல எனக்கு ஒன்று உள்ளது’. ‘என்ன?’ என்று வினய் கேட்டான். ‘இந்தா’ என்று அவன் ஒரு ஜப மாலையை எடுத்து வினய்யிடம் கொடுத்தான். ‘எனக்கு எதற்கு இது?’ ‘உன் இலக்குகள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். உன் தெய்வம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். உன் பாதை என்னுடைய பாதைக்கு முற்றிலும் எதிரானதாகவே இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் எனக்காக ஒன்று செய். நீ செய்து முடித்த மறுவிநாடி நீ நினைப்பது நடக்கும்’. ‘என்ன செய்ய வேண்டும்?’ ‘தனியே போ. யாருமில்லாத ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து லட்சத்து எட்டு முறை கிருஷ்ண மந்திரத்தைச் சொல். உனக்கு கிருஷ்ண பக்தி வேண்டாம். நான் கேட்பது மந்திர உச்சாடனம் மட்டும்’. ‘சரி. சொன்னால்?’ ‘சொல்லிவிட்டுப் பிறகு கேள். இந்த உலகில் கிருஷ்ண ஜபத்தைக் காட்டிலும் உயர்ந்த வலி நிவாரணி வேறில்லை’ என்று வினோத் சொன்னான். ‘அப்படியா?’ ‘சந்தேகப்படாதே. என் ஊசலாட்டம் குறித்து உனக்குச் சொன்னேன் அல்லவா? அப்போது அந்தப் பெண் துறவி எனக்குச் சொல்லித்தந்த வழி அது’. ‘ஏன், நீதான் ஏற்கெனவே ஹரே கிருஷ்ணாவில் இருந்தவனாயிற்றே? அவள் என்ன புதிதாகச் சொல்லிக் கொடுத்துவிட்டாள்?’ என்று நான் கேட்டேன். ‘ஆம். நான் ஏற்கெனவே கிருஷ்ண ஜபம் செய்துகொண்டிருந்தவன்தான். ஆனால், அந்தப் பெண் கிருஷ்ணனை எனக்கு வேறொரு கோணத்தில் அறிமுகப்படுத்தினாள்’. ‘எப்படி?’ ‘குறிப்பிட்ட நோக்கம் வேண்டும். அதைத் தெளிவாக அவனிடம் சொல்லிவிட்டு ஜபத்தில் அமர வேண்டும். லட்சத்து எட்டு உருப்படி முடியும்வரை என்ன ஆனாலும் அசையக் கூடாது’. ‘சரி. பிறகு?’ ‘நான் கேட்டதை நீ செய்து கொடுத்தால், ‘உனக்கு நான் இன்னது செய்கிறேன்’ என்று ஒரு வாக்குறுதி அளிக்க வேண்டும்’. நான் சிரித்துவிட்டேன். ‘டேய், இதன் பெயர் பேரம்’. ‘ஆம். பேரம்தான். வியாபாரம் என்றும் சொல்லலாம். தவறில்லை. ஆனால் கிருஷ்ணன் நம்பகமானவன். நாம் சொன்னதைச் செய்தால், அவன் நாம் கேட்டதைத் தந்துவிடுவான்’. ‘உண்மையாகவா?’ என்று வினய் கேட்டான். ‘எனக்கு நடந்திருக்கிறது’. ‘என்ன?’ ‘இனி நான் சிவனை நினைக்கவே கூடாது என்று வேண்டுதல் வைத்து கிருஷ்ணனை நோக்கித் தவமிருந்தேன். லட்சமல்ல. ஒரு கோடி முறை கிருஷ்ண நாமத்தை ஜபித்தேன். ஒருவார காலம் இடத்தை விட்டு அசையாமல் அதைச் செய்தேன்’. ‘உண்மையாகவா?’ ‘ஆம். அதன்பின் சிவன் நேரில் வந்து என்னிடம் விடைபெற்றுப் போய்விட்டார். திரும்ப வரவேயில்லை’. அவன் சொன்ன விஷயமல்ல; அதைச் சொன்னபோது அவன் முகத்தில் தெரிந்த தீவிரத்தை நான் மிகவும் ரசித்தேன். இடைவிடாமல் ஒரு கோடி முறை ஒரு பெயரை உச்சரித்துக்கொண்டே இருந்தால், அது நினைவின் ஆதார சுருதியாகிவிடாதா? அதன்பின் சிவனென்ன, எவனும் உள்ளே நுழைய முடியாதே? ஆனால் நான் அதை அவனிடம் சொல்லவில்லை. வெறுமனே கேட்டுக்கொண்டிருந்தேன். ஆனால், வினய் மிகவும் கவனமுடன் அவன் பேசியதைக் கேட்டான். நெடு நேரம் யோசித்துக்கொண்டே இருந்தான். ‘நம்பிக்கை வை வினய். பாதி வாழ்க்கை வீண் என்று நீ அழுதது என்னைக் கலங்கச் செய்துவிட்டது. உன் மீதி வாழ்க்கை உன் விருப்பப்படி அமைவதற்கு கிருஷ்ணன் உதவுவான்’. ‘சரி. ஆனால் நான் என்றுமே ஒரு கிருஷ்ண பக்தன் ஆக முடியாது. அதை முதலில் சொல்லிவிடுகிறேன்’. ‘அவசியமில்லை. அவன் அதை எதிர்பார்க்கவும் மாட்டான்’. ‘லட்சத்து எட்டு முறை ஜபித்தபின் கிருஷ்ணன் எனக்குத் தரிசனமானால், அவனிடம் நான் காமரூபிணியைக் காட்டித்தரச் சொல்லித்தான் கேட்பேன். எனக்கு வேண்டியது அவளது அனுக்கிரகம்தான். கிருஷ்ணனுடையது அல்ல’. ‘சரி. பரவாயில்லை’. ‘அவன் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டால்?’ ‘அவன் அப்படிச் சொல்லமாட்டான்’. ‘அவன் உதவாமல் போய்விட்டால்?’ ‘அதற்கு வாய்ப்பே இல்லை’. ‘வெறும் லட்சத்து எட்டு போதுமா?’ ‘கண்டிப்பாகப் போதும். என்னை நம்பு. நீ நினைப்பது நடக்கும்’. அந்தக் கணம் வினய் கண்ணை மூடிக்கொண்டு, அதர்வத்தில் இருந்து ஒரு சூக்தத்தைச் சொல்லத் தொடங்கினான். ஆயிரமாயிரம் பேர் நடமாடிக்கொண்டிருந்த பேருந்து நிறுத்தத்தில் அவனது குரல் கம்பீரமாகக் காற்றில் நிறைந்து விரிந்தது. அத்தனை பேரும் அவனைப் பார்த்துக்கொண்டே போனார்கள். அங்கே உலவிக்கொண்டிருந்த ஒரு நாய் சட்டென்று ஓடிவந்து அவன் காலருகே அமர்ந்துகொண்டு அவனையே உற்றுப் பார்க்க ஆரம்பித்தது. புறப்பட்டுச் சென்ற பேருந்துகளில் இருந்தவர்களெல்லாம் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தபடி போனார்கள். மூன்று நிமிடங்கள் நீடித்த அவனது உச்சாடனம், அதன்பின் மெல்ல ஓய்ந்து அடங்கியது. வினய் கண்ணைத் திறந்தான். வினோத் அவனைப் பார்த்துப் புன்னகை செய்தான். ‘என்ன இது?’ ‘அதர்வத்தில் ஒரு மந்திரம். எங்கள் மரபுக்கு மாறானதொன்றைச் செய்ய நேர்ந்தால் இதனைச் சொல்லிவிட்டே ஆரம்பிப்போம்’. ‘இதைச் சொன்னால் என்ன ஆகும்?’ என்று நான் கேட்டேன். ‘ஒன்றுமில்லை. உக்கிரதேவதைகள் கோபம் கொள்ளாதிருக்க இது வழி செய்யும்’. ‘ஓ. கிருஷ்ண ஜபம் செய்தால் அவர்கள் கோபித்துக்கொண்டுவிடுவார்களா?’ அவன் அதற்குப் பதில் சொல்லவில்லை. நெடு நேரம் அமைதியாக யோசித்துக்கொண்டிருந்துவிட்டு, பிறகு வாய் திறந்தான். ‘விமல்! நான் பெற்றதைவிட இழந்தவை அதிகம். ஒரு எள்ளுருண்டையில் திசை மாறிய என் வாழ்க்கை என்னை எங்கெங்கோ கொண்டு போய்ச் சேர்த்துவிட்டது. நான் அதில் இருந்து விடுபட விரும்பவில்லை. அதே சமயம் என் பாதையின் எல்லையைப் பார்த்துவிட ஆசைப்படுகிறேன்’. ‘பேராசை’ என்று சொன்னேன். ‘ஆம். பேராசைதான். இந்த உலகின் அசைக்க முடியாத சக்தி படைத்த பிரகிருதியாக நான் ஆகியே தீர வேண்டும். அதைச் செய்யாமல் நான் சாகமாட்டேன்’. ‘நல்லது. கிருஷ்ணன் உனக்கு உதவட்டும்’ என்று சொன்னேன். ‘கிண்டல் செய்யாதே. கிருஷ்ணன் நிச்சயம் உதவுவான்’ என்று வினோத் சொன்னான். இப்போது வினய்க்கு வீட்டுக்குப் போவதா வேண்டாமா என்ற குழப்பம் வந்துவிட்டது. ‘நான் இப்படியே திரும்பிப் போய்விடவா?’ என்று கேட்டான். ‘முட்டாள். நாம் எதற்காக வந்திருக்கிறோம்?’ ‘ஆம். தவறுதான்’. ‘இரண்டு நாள் கழித்து ஜபித்தால் கிருஷ்ணன் ஒன்றும் வேண்டாம் என்று சொல்லப்போவதில்லை. அம்மாவைக் கடைத்தேற்றிவிட்டுக் கிளம்பிப் போய் ஆரம்பி’ என்று சொன்னேன். அவன் என்னை உற்று நோக்கினான். ‘நீ பேசுகிற அனைத்துமே எனக்குக் கிண்டலாகத் தோன்றுகின்றன’. ‘அப்படியானால் நான் சரியாகப் பேசுகிறேன் என்று பொருள். ஆம். நான் கிண்டல்தான் செய்கிறேன்’ என்று சொன்னேன். ‘என்றுமே உனக்கு என் வலிகள் புரியாது விமல்’ என்றான். அவன் கண்கள் கலங்கியிருந்தன. நான் அன்போடு அவன் கரங்களைப் பிடித்துக்கொண்டேன். ‘நீ என் சகோதரன். வாழ்வில் முட்டி மோதி தோற்றுவிட்டதாகச் சொன்னவன். ஒரு சிறந்த வெற்றி உன்னைச் சேர வேண்டும் என்று எனக்கும் தோன்றத்தான் செய்கிறது. ஆனால் அதை உனக்கு நீயேதான் அளித்துக்கொள்ள வேண்டுமே தவிர, கிருஷ்ணனைப் போன்ற ஒருவன் தருவான் என்று நம்புவதை என்னால் ஏற்க இயலவில்லை. என்னை மன்னித்துக்கொள்’. ‘பரவாயில்லை. உன்னளவில் நீ தெளிவாக இருக்கிறாய். உன் சித்தாந்தத்தின் நுனியில் உன்னால் நின்று விளையாட முடிகிறது. என்னைப் பார். காமரூபிணியின் கடாட்சத்துக்குக்கூட ஒரு புரோக்கர் தேடவேண்டி இருக்கிறது’. வினோத் துடித்துப் போய்விட்டான். ‘ஹரே கிருஷ்ணா! வேண்டாம் வினய். அப்படியெல்லாம் சொல்லாதே. அவன் பரம்பொருள். உன் காமரூபிணியெல்லாம் அவனுக்குள் ஒடுங்கியிருப்பவள்தான்’. ‘மன்னித்துக்கொள். உன் நம்பிக்கை உனக்கு. என்னுடையது எனக்கு. ஆனால் பேரம் பேரம்தான். அதில் மாற்றமில்லை. நான் கிருஷ்ண மந்திரம் ஜபிக்கப்போகிறேன். அது பலன் தராவிட்டால் உன்னை உதைப்பேன்’. வினோத் சிரித்தான். ‘தந்தே தீரும்’. நான் உடனே கேட்டேன். ‘பதிலுக்கு கிருஷ்ணனுக்கு நீ என்ன தருவதாக உத்தேசம்? அது முக்கியம் என்று இவன் சொன்னானே?’ ‘அவன் என்ன கேட்டாலும் தருவேன்’. ‘அவன் கேட்கமாட்டான். உன்னால் முடிந்ததை நீயேதான் முன்வந்து சொல்ல வேண்டும்’ என்று வினோத் சொன்னான். ‘ஆனால் சொன்னதைச் செய்தே தீர வேண்டும்’. ‘சரி. இழப்பதற்கு என்னிடம் ஒன்றுமில்லை. பெற வேண்டியவைதான் ஏராளமாக உள்ளன. அவன் என்னையே வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும். அதற்குமுன் நான் நினைத்ததை சாதித்துவிட்டால் போதும்’ என்று சொன்னான். வெகுநேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருந்ததில் எங்களுக்குக் கால்கள் மரத்துப்போயின. கழுத்து, தோள்பட்டையெல்லாம் வலிக்கத் தொடங்கியது. ‘நாம் கிளம்பலாமா?’ என்று வினோத் கேட்டான். உடனே நான் எழுந்துகொண்டேன். ‘போகத்தான் வேண்டும் அல்லவா?’ என்றான் வினய். ‘வா’ என்று அவன் கையைப் பிடித்து வினோத் எழுப்பினான். அடுத்து வந்த மகாபலிபுரம் செல்லும் பேருந்தில் நாங்கள் ஏறிக்கொண்டோம். மூன்று பேர் அமரும் ஒரு நீண்ட இருக்கையில் நாங்கள் ஒன்றாக அமர்ந்தோம். நடத்துநர் அருகே வந்தபோது வினோத், ‘மூணு திருவிடந்தை’ என்று சொல்லிப் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கினான். அந்தப் பேருந்து அதற்குமுன் மூன்று சன்னியாசிகளை மொத்தமாகக் கண்டிருக்காது. வண்டி புறப்பட்டதுமே வினய் சொன்னான், ‘அம்மா நாளை மறுநாள்தானே மரணமடைவாள் என்று சொன்னாய்? நான் அந்த லட்சத்து எட்டு கிருஷ்ண ஜபத்தை நாளையே செய்து முடித்துவிடுகிறேன்’. (தொடரும்) http://www.dinamani.com/junction/yathi/2018/sep/07/125-லட்சத்து-எட்டு-2995457.html
 14. ரத்த மகுடம் பிரமாண்டமான சரித்திரத் தொடர் - 19 திறந்த சிவகாமியின் அதரங்களை தன் உதடுகளால் கரிகாலன் மூடினான்! இருவரது அமிர்தங்களும் இரண்டறக் கலந்தன. சங்கமித்துப் பெருகின. ஒற்றியதை விலக்காமல் தன்இரு கரங்களால் அவள் வதனத்தை ஏந்தினான். போருக்கு ஆயத்தமாகும் படைக்கலன்களைப் போல் இருவரது உடல் ரோமங்களும் குத்திட்டு நின்றன. ஆற்றுப்படுத்தவும் பரஸ்பர துணையின் அவசியத்தை உணர்த்தவும் இருவருக்குமே அந்தக் கணம் தேவைப்பட்டது. தங்களைப் பூரணமாக அதற்கு ஒப்புக் கொடுத்தார்கள். தன் அதரத்தைத் தவிர வேறு எங்கும் அவன் உதடுகள் நுழையாதது இன்பத்தையும் நிம்மதியையும் வெறுமையையும் ஒருசேர சிவகாமிக்கு அளித்தது. இன்பத்துக்குக் காரணம், ஹிரண்யவர்மர் தன்மீதான ஐயங்களைக் கிளப்பியபிறகும் கரிகாலன் அவளை நம்புவதை அவன் உடல் வெளிப்படுத்தியது. நிம்மதிக்குக் காரணம், பெருக்கெடுக்கும் வெள்ளத்திலும் கரைகள் உடையாதபடி பார்த்துக் கொள்ளும் அவன் கண்ணியம். வெறுமைக்குக் காரணம், கரைகள் உடைந்தால்தான் என்ன... எதற்காக இவ்வளவு கட்டுப்பாடுடன் அதற்கு அணை போட வேண்டும்... என்ற கேள்வி. பூத்த மூன்று உணர்ச்சிகளிலும் வெறுமையே ஜெயித்தது! அதை வெளிப்படுத்தும் விதமாக அடிவயிற்றிலிருந்து பெருமூச்சை வெளியேற்றினாள். இதன் விளைவாக மூச்சை உள்ளுக்கு இழுத்தபோது எலும்புகளுடன் ஒட்டிய அவள் ஸ்தனங்கள், சுவாசத்தை வெளியேற்றும்போது அளவுக்கு மீறி வளர்ந்து கச்சையின் முடிச்சைத் தளர்த்தின! தனது உடல் தன் வசத்தில் இல்லை என்பதை வெள்ளத்தில் மூழ்கத் தொடங்கிய அந்நிலையிலும் உணர்ந்தாள். இச்சூழலில் தன் முகக்குறிப்பை அவன் கண்டால் என்ன நினைப்பான்..? தாங்க முடியாமல் அதரங்களை விலக்கியவள், என்ன ஏது என கரிகாலன் பார்வையால் வினவுவதற்குள் கிளைகளில் அமர்ந்திருந்த அவன் மடியில் சாய்ந்தாள். நல்லவேளை... குப்புறப் படுத்திருக்கிறோம். வதனத்தில் பீறிட்டு ஓடும் குருதியோட்டத்தை அவன் காணவில்லை என்று நினைக்கும்போதே... குழையத் தொடங்கிய அவள் உடலின் வெப்பம், அவன் தொடைகளில் அழுத்தத் தொடங்கிய தன் ஸ்தனங்களின் வழியே கரிகாலனின் உடலுக்குள் ஊடுருவுவதை உணர்ந்தாள்! கையறு நிலையில் சிவகாமி தவித்தது எத்தனை யுகங்களோ... தலைக்கு மேல் பாய்ந்த வெள்ளம் எத்தனை அடிக்கு உயர்ந்தால்தான் என்ன... என்ற முடிவுக்கு அவள் வந்தபோது அவள் செவிக்குள் அவன் சுவாசம் பாய்ந்தது! கண்களுக்குத் தெரியாமல் இருந்த அவள் உடல் ரோமங்களும் புலப்படத் தொடங்கின! இமைகளை மூடினாள்.‘‘சிவகாமி...’’ அவள் பெயர்தான். பலமுறை அழைத்துப் பழக்கப்பட்ட நாமகரணம்தான். ஆனால், அப்போது அதை உச்சரிப்பதற்குள் கரிகாலனுக்கு வியர்த்துவிட்டது! படர்ந்த கொடியைத் தாங்கும் வல்லமை அவன் உடல் என்னும் மரத்துக்கு இருந்தது. ஆனால், ஏனோ அக்கணத்தில் கொடியே மலையாகக் கனத்தது. பாரம் தாங்காமல் நிமிர்ந்தான் கரிகாலனின் தடுமாற்றம் சிவகாமிக்கு சிரிப்பை வரவழைத்தது. ஆணின் பலவீனம், பெண்ணின் உடல் குழைவதைக் காண்பதுதான் என்பதை அனுபவபூர்வமாக அப்போது உணர்ந்தாள். அறிவையும் வலுவையும் செயல்படுத்த முடியாமல் தன் முன் ஒடுங்கி நிற்பவனைப் பார்க்க பாவமாக இருந்தது! முகத்தைச் சாய்த்து இமைகளைப் பிரித்து தன் பார்வைக் கணையை அவன் நெஞ்சில் பாய்ச்சினாள்! ‘‘அழைத்தீர்களா...’’ ‘‘ம்...’’ ‘‘எதற்கு..?’’என்னவென்று சொல்லுவான்..? அவள் இடுப்பில் தன் கரங்களைத் தவழவிட்டான். தொடு உணர்ச்சி தாங்காமல் அசைந்தாள். அவர்கள் அமர்ந்திருந்த கிளையும் அசைந்து இருவரையும் நடப்புக்கு அழைத்து வந்தது. கரிகாலன் சட்டென்று கிளைகளை லேசாக விரித்து கீழே பார்த்தான். ‘‘யாராவது வந்துவிட்டார்களா..?’’ கேட்டபடி எழுந்திருக்க முற்பட்ட சிவகாமியைத் தடுத்து, முன்பு போலவே படுக்க வைத்தான். ‘‘இல்லை...’’ ‘‘சாளுக்கிய வீரர்கள் வரவில்லையா..?’’‘‘இல்லை என்றேனே...’’ காரணமில்லாமல் எரிந்து விழுந்தான். சிவகாமிக்குச் சிரிப்பு வந்தது. ‘‘அதற்கு...’’‘‘ம்...’’ இருவருக்குமே வார்த்தைகள் வரவில்லை. எந்த சாளுக்கிய வீரனும் சந்தேகப்பட்டு இங்கு வராததால் நாம் இப்படியே இருக்கப் போகிறோமா... என்று கேட்க நினைத்தாள். வார்த்தைகள் வெளிவர மறுத்தன. அவன் கை விரல்கள் தன் முதுகில் கோடு கிழிக்கத் தொடங்கியதும் பார்வையைத் தாழ்த்தினாள். ‘‘சிவகாமி...’’இப்போது ‘ம்’ கொட்டுவது அவள் முறையானது. ‘‘ம்...’’‘‘எதற்காக உன்னை அழைத்தேன் என்று கேட்டாய் அல்லவா..?’’ எப்போது கேட்டாள்... ஆம். சில கணங்களுக்கு முன். ஏன் கேட்டாள்... அவன் விரல்கள் ஏன் இப்படி முதுகில் ஊர்கின்றன... கச்சையின் முடிச்சுப் பக்கமாக நகர்கிறதே... முடிச்சை நிமிண்டுகிறானே... ஏற்கனவே முடிச்சின் இறுக்கம் தளர்ந்திருக்கிறதே... ஒருவேளை... ‘‘ஆம் கேட்டேன்...’’‘‘பதில் தெரிய வேண்டாமா..?’’ எந்த பதில்..? தளர்ந்த கச்சையின் உட்புறத்துக்குள் விரல் நுழையப் போகிறதா... இந்த இடம்... இச்சூழல்... ‘‘சொல்லுங்கள்...’’ ‘‘எதைச் சொல்ல வேண்டும்..?’’பித்து நிலை. மாறி மாறிப் பிதற்றுவதை இருவரும் அறிந்தே இருந்தார்கள். உடல்களின் மொழி அதன் போக்கில் உரையாடலைத் தொடர... பேச்சு மொழி தொடர்பற்று ஒலித்துக் கொண்டிருந்தது. ‘‘எதற்காக என்னை அழைத்தீர்கள் என்பதை..!’’ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இதை உச்சரித்தாள். ஆனால், அதுவே அதுவரை மறைந்திருந்த அனைத்தையும் கரிகாலனுக்கு நினைவுபடுத்திவிட்டது! குறிப்பாக மரத்தின் மீது தாங்கள் அமர்ந்திருக்கும் காரணத்தை. கச்சையின் முடிச்சை தன் கை கட்டை விரலாலும் ஆள்காட்டி விரலாலும் உருட்டிக்கொண்டிருந்த கரிகாலன், நிதானத்துக்கு வந்தான். அதுவரை தன் வெற்று முதுகில் அளைந்துகொண்டிருந்த அவன் விரல்கள் ஒரு நிலைக்கு வந்ததிலிருந்து அவனது மனப்போக்கை சிவகாமி ஊகித்துவிட்டாள். மேற்கொண்டு உரையாடலைத் தொடர்ந்த அவனது குரலின் தொனியும் அவன் மனநிலை மாறிவிட்டதை வெளிப்படுத்தியது.‘‘வனத்தைச் சுற்றி சாளுக்கிய வீரர்கள் இருக்கிறார்கள். அப்படி யிருக்க இங்கிருந்து எப்படி வெளியேறப் போகிறோம்... பல்லவ இளவலைச் சந்திக்கப் போகிறோம்... என்று கேட்டாய் அல்லவா..?’’அவள் வினவியது, ‘எப்படி வனத்திலிருந்து வெளியேறுவது..?’ என்று மட்டும்தான். ஆனால், அவள் சொல்லாமல் விட்ட சகலத்தையும் கரிகாலன் சொல்லிவிட்டான். எனில், ஏதோ திட்டம் வகுத்திருக்கிறான் என்று அர்த்தம். அதைக் கேட்பதற்காக எழுந்திருக்க முற்பட்டாள். ‘‘எதுவாக இருந்தாலும் இப்படியே கேள்...’’ கரிகாலன் அதட்டினான். ‘‘இ..ப்..ப..டி..யே..வா..?’’‘‘ஆம். இப்படியே...’’ சொன்ன கரிகாலன் மீண்டும் அவள் முதுகில் தன் விரல்களைப் படரவிட்டான். முன்பு அவன் விரல்கள் படர்ந்து அளைந்தன என்றால் இப்போது அதே விரல்கள் யாழை மீட்டுவதுபோல் அவள் சருமத்தை வருடின. அதை அனுபவித்தபடியே தொடர்ந்தாள். ‘‘ஆம்... எப்படி வெளியேறப் போகிறோம் என்று கேட்டேன்... வழி கிடைத்துவிட்டதா..?’’ ‘‘கிடைத்துவிட்டது...’’ சொன்ன கரிகாலன் இமை மூடித் திறப்பதற்குள் தளர்ந்திருந்த அவளது கச்சையின் முடிச்சை அவிழ்த்தான்! அதிர்ந்துபோய் முகத்தைத் திருப்பி அவனைப் பார்க்க அவள் முற்படுவதற்குள், கச்சையை இறுக்கி முடிச்சிட்டான். தன்னை பிரமையுடன் ஏறிட்டவளின் அதரங்களை நோக்கிக் குனிந்தவன் தன் உதடுகளால் அவளை அழுத்தி முத்தமிட்டுவிட்டு நிமிர்ந்தான். அவள் முதுகைத் தடவிக்கொண்டிருந்த இடது கை, அவள் தலையைக் கோதத் தொடங்கியது. அங்கிருந்து நகர்ந்து அவள் கன்னங்களைத் தடவிவிட்டு பழையபடி முதுகுக்கு வந்தது. ‘‘சிவகாமி, நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் தெரியுமா..?’’லேசாகப் புரண்டு தன் ஸ்தனங்களை இன்னும் அழுத்தமாக அவன் தொடையில் பதித்தபடி, வந்த சிரிப்பை வாயைப் பொத்தி அடக்கினாள். ‘‘கள்ளி!’’ அவள் கன்னத்தைக் கிள்ளி அதே இடத்தில் முத்தமிட்டுவிட்டு நிமிர்ந்தான். ‘‘மல்லை மாநகரத்துக்கு வடமேற்கே...’’ சொன்ன கரிகாலன் மீண்டும் கிளைகளை விலக்கி கீழேயும் பக்கவாட்டிலும் ஆராய்ந்தான். சாளுக்கிய வீரர்கள் சல்லடை யிட்டுச் சலித்துக் கொண்டிருந்தார்கள். உதட்டோரம் புன்னகை வழிய அவளை ஏறிட்டவன் அவள் இடுப்பு முடிச்சைத் தளர்த்தி ஆடையை சற்றே கீழிறக்கினான். தடுக்க உயர்ந்த அவள் கரங்களை கெட்டியாகப் பிடித்தான்.‘‘கவனி சிவகாமி... ஏனெனில் மறுமுறை சொல்ல நேரம் இருக்காது...’’‘‘அப்படியானால் அமர்ந்து கொள்கிறேன்... ’’‘‘தேவையில்லை... செவிகளைத் திறந்து வை... தவிர உன் உடலில் நான் வரையப் போகும் கோடுகளை நன்றாக உள்வாங்கு...’’ இரு கரங்களையும் முன்னோக்கி நகர்த்தி சிவகாமியை நன்றாக தன்னை நோக்கி இழுத்தான். கச்சையின் முடிச்சிலிருந்து இடுப்பைத் தளர்த்தி, தான் வெளிப்படுத்திய பிரதேசம் வரை தன் வலது உள்ளங்கையால் நன்றாகத் தேய்த்தான். பின்னர் அப்பகுதியின் நான்கு புறங்களிலும் தன் ஆள்காட்டி விரலால் கோடு இழுத்தான்.‘‘இதுதான் தொண்டை மண்டலம் சிவகாமி. வடக்கில் இருப்பது வேங்கடம். கிழக்கில் உள்ளது கெடிலநதிக்கரை. இதைக் கடந்தால் நடுநாடு. அங்கிருந்து சோழநாடு. தென்பக்கத்து எல்லை வழியாக மட்டுமல்ல, மேற்குப் பக்கமாகவும் கொங்குப் பகுதிக்குள் நுழையலாம். பெரும்பாலும் குன்றுகளும் மலைகளும்தான்...’’ என்றபடியே அவள் பின்புற மேட்டின் பக்கம் தன் விரல்களைக் கொண்டு சென்றவன், ‘‘ம்...’’ என சிவகாமி அதட்டியதும் கண்களைச் சிமிட்டி விட்டு தொடர்ந்தான். ‘‘தொண்டை மண்டலத்தின் வடக்குப் பாகம் குன்றுகள் அடர்ந்தது. அழகானது. கிழக்கு, தெற்குப் பாகங்கள் தட்டையானவை. சாரமுள்ள பூமி. அதனாலேயே வேளாண்மை நடைபெற்று வருகிறது. குன்றுகள் அடர்ந்திருந்தாலும் இயற்கையாகவே பள்ளத்தாக்குகள் அனேக இடங்களில் இருப்பதால் ஏரி, குளங்களை வெட்டி பல்லவர்கள் நீர்ப்பாசனத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். காவேரிப்பாக்கமும், மாமண்டூரும் எப்போதும் நீருள்ள ஏரிகள். தொண்டை மண்டலத்தில் பாயும் நதிகளில் முக்கியமானது பாலாறு. இதன் வடக்குப் பாகம் வடசுபா. தெற்குப் பாகம் தென் சுபா. இங்குள்ள மலைகள் தென்மேற்கிலுள்ள கங்குந்தியில் நுழைந்து வடக்கு நோக்கிச் சென்று கொஞ்சம் கொஞ்சமாக வேங்கடம் வரை கிழக்கு நோக்கிச் செல்கின்றன. கரகம்பாடி, மாமண்டூர் கிராமங்கள் வழியாக வடக்கு நோக்கி கடப்பைக்கு போகும் ஒரு நீண்ட பள்ளத்தாக்கினால் இம்மலைத்தொடர்ச்சி பிளக்கப்பட்டு, மாமண்டூர் பள்ளத்தாக்கில் மறுபடியும் மேலெழும்பி காளஹஸ்தி என்கிற காயலா ஸ்தலத்தில் இருந்து வட கிழக்காகச் செல்கிறது...’’ நிறுத்திய கரிகாலன் அவள் எதிர்பாராத நேரத்தில் குனிந்து அவள் அதரங்களை முத்தமிட்டு விட்டு தொடர்ந்தான். ‘‘இங்கு கீழிருந்து மேலாகச் செல்ல ஏராளமான கணவாய்கள் உண்டு. ஆனால், வண்டிகள் போகக் கூடியவை கல்லூர், மொகிலி, செய்னகுந்தா ஆகிய மூன்று கணவாய்களே! சந்திரகிரியிலுள்ள கல்லூர் கணவாய், கடப்பைப் பியலூருக்குள் நுழைந்து தாமல்செருவு பள்ளத்தாக்கை ஒட்டிச் செல்கிறது. செய்னகுந்தா கணவாய் பழமானேரிக்குச் சென்று மொகிலியிலிருந்து வரும் செங்குத்தான பாதையுடன் இணைகிறது...’’ மூச்சுவிடாமல் பல்லவ நாட்டின் எல்லைகளைக் குறிப்பிட்டபடியே வந்த கரிகாலனின் குரல் சட்டென உணர்ச்சிவசப்பட்டது.‘‘தொண்டை மண்டலத்தின் சிறப்பு என ஜவ்வாது குன்றுகளைச் சொல்லலாம். அது இங்கிருக்கிறது...’’ என சிவகாமியின் கச்சையி லிருந்து கீழ்நோக்கிக் கோடிழுத்தான். அவன் விரலுக்கும் தன் ஸ்தனத்துக்கும் அதிக தூரமில்லை என்பதை உணர்ந்த சிவகாமியின் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.‘‘பல்லவ நாட்டின் தென் மேற்கில் இவை இருக்கின்றன. இவற்றை பள்ளத்தாக்கு ஒன்று பிரிக்கிறது. இப்பள்ளத்தாக்கு பின்னர் குறுகி மலையுடன் இணைந்து கொங்குப் பகுதியில் பெரிதாகிறது. வேங்கட மலை வழியே பல சிறு மலைத் தொடர்கள் வடக்கு, மேற்கு என தனித்தனியே நகர்கின்றன. வடக்கில் இருக்கும் சிறுமலையின் அகன்ற பள்ளத்தாக்குக்குக் கிழக்கே காளஹஸ்தியில் வடக்கு நோக்கி நகரிக் குன்றுகளால் அடைக்கப்பட்டிருக்கிறது. இங்கிருக்கும் மூங்கில் காடுகளுக்குத்தான் நாம் செல்ல வேண்டும்....’’ கரிகாலன் சொல்லச் சொல்ல சிவகாமியின் கண்கள் விரிந்தன. ‘‘இங்குதான் பல்லவ இளவல் ராஜசிம்மர் இருக்கிறாரா..?’’‘‘இல்லை...’’ கரிகாலனின் குரல் அழுத்தமாக ஒலித்தது. ‘‘பின் எதற்காக அங்கு செல்லவேண்டும்..?’’ ‘‘அங்குதான் ஹிரண்யவர்மர் நமக்காகச் சேகரித்து வைத்திருக்கும் ஆயுதங்கள் இருக்கின்றன!’’ (தொடரும்) - கே.என்.சிவராமன் ஓவியம்: ஸ்யாம் http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14250&id1=6&issue=20180921
 15. 124. இரண்டு இட்லிகள் அந்தக் குடியரசு தின தேநீர் விருந்தை வினய்யால் மறக்கவே முடியாது. அவனது இடாகினி அவனை ஜனாதிபதி மாளிகையில் வேலை பார்க்கும் ஓர் அதிகாரியின் தோற்றத்துக்கு மாற்றியிருந்தது. கோட் சூட் அணிந்து, பளபளக்கும் ஷூக்கள் அணிந்து ஒரு விலை உயர்ந்த காரில் அவன் முன்னதாக மூன்று மணிக்கே ஜனாதிபதி மாளிகைக்குள் சென்றுவிட்டிருந்தான். இடாகினி தெளிவான உத்தரவுகள் கொடுத்திருந்தது. அவன் பேசக் கூடாது. அவனுக்குப் பதிலாக அது பேசும். அதன் குரல் ஒலிக்கும்போதெல்லாம் பொருத்தமாக அவன் வாயசைத்தால் போதும். யாரைக் கண்டாலும் சிறிதாக ஒரு புன்னகை. எதிராளி வணங்கினால் பதிலுக்கு வணக்கம் சொல்ல வேண்டும். அவர் கறாராகப் பேசினால், அதற்கேற்ற முகபாவத்தைக் கொண்டு வர வேண்டும். ஆனால் பேச வேண்டிய பொறுப்பு அதனுடையது. ‘உன்னை நான் ஓர் அறைக்குள் அழைத்துச் சென்று அமர வைத்துவிடுவேன். போன் அடித்தால் எடுத்துக் காதில் வைத்துக்கொள். பேசவேண்டியதை நான் பார்த்துக்கொள்கிறேன். யாராவது வந்தால் அவர் கண்ணை மட்டும் நேராக உற்றுப் பார்த்தால் போதும். என் குரலுக்கு வாயசைத்துவிட்டு அமைதியாக இருந்துவிடு’ என்று சொன்னது. ‘நான் என்ன உத்தியோகமா பார்க்கப் போகிறேன்?’ ‘விருந்து நேரம் தொடங்கும்வரை அங்கே இருந்தாக வேண்டுமே’. ‘ஐயோ பாவம் யாரந்த அதிகாரி? அவரை என்ன செய்தாய்?’ ‘ஒன்றுமில்லை. விருந்து முடிந்ததும் அவர் வீட்டுக்குப் போய்விடுவார். கவலைப்படாதே’ என்று இடாகினி சொன்னது. மாலை ஐந்தரை மணி முதல் ஜனாதிபதியின் விருந்தினர்கள் மாளிகைக்கு வரத் தொடங்கினார்கள். பெரிய பெரிய கார்கள் வந்து நின்று சென்றுகொண்டே இருந்தன. ஊழியர்கள் சலாமிட்டு அவர்களை சிவப்புக் கம்பளத்தில் நடத்தி அழைத்துக்கொண்டு போனார்கள். வினய்க்கு அந்தக் காட்சியே பிரமிப்பாக இருந்தது. அவனால் அன்று மாளிகை முழுவதும் சுதந்திரமாக சுற்றித் திரிய முடிந்தது. யாரும் எதுவும் கேட்கவில்லை. யாருக்கும் எந்தச் சந்தேகமும் எழவில்லை. அவனை அணுகிப் பேசிய ஒவ்வொருவருக்கும், அவன் சார்பில் இடாகினி பதில் சொல்லிக்கொண்டிருந்தது. அவன் வெறுமனே வாயசைத்தும் புன்னகை செய்தும் சமாளித்தான். உயர்ந்த சுவர்களும் பாறைகளைப் போல உருண்டு திரண்டு தொங்கிக்கொண்டிருந்த மேநாட்டு விளக்கு அலங்காரங்களும் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட திரைச் சீலைகளும் மேசை விரிப்புகளும் கம்பளங்களும் கலையழகோடு வடிவமைக்கப்பட்ட பாத்திரங்களும் சீசாக்களும் பார்க்கப் பார்க்கப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்போல் இருந்தது. உண்மையில் அவன் சாப்பிட ஆசைப்பட்டுத்தான் அங்கு சென்றான். ஆனால் சாப்பிடவே தோன்றவில்லை. விருந்து தொடங்கி, ஜனாதிபதி சிறிதாக ஓர் உரையாற்றியபின் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாகப் பிரமுகர்கள் கூடி நின்று தமக்குள் பேசிக்கொள்ளத் தொடங்கினார்கள். ஜனாதிபதியும் அவரது மனைவியும் மரியாதை நிமித்தம் ஒவ்வொருவரையும் அணுகி சில வார்த்தைகள் பேசிவிட்டு அடுத்தவரை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தார்கள். செய்தித்தாள்களில் மட்டுமே பார்த்திருந்த பல முகங்களை வினய் அன்று நேரில் கண்டான். கால் வலிக்குமளவுக்கு அங்கே சுற்றிச் சுற்றி வந்தான். விருந்து இரவு பத்து மணி வரை நீடித்தது. விருந்தினர்கள் ஒவ்வொருவராகக் கலைந்துபோகத் தொடங்கியபோது, வினய்க்கு சாப்பிடலாம் என்று தோன்றியது. இஷ்டப்பட்ட பலகாரங்களை எடுத்து ஒரு தட்டில் வைத்துக்கொண்டு திருப்தியாக உண்டான். ஜனாதிபதி மாளிகை ஊழியர்கள் மிகவும் மரியாதையுடன் அவனை உட்காரச் சொல்லி, அவர்களே எடுத்துவந்து பரிமாறினார்கள். உண்டு முடித்ததும், விருந்தின் ஞாபகார்த்தமாக அனைவருக்கும் ஒரு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. வினய்க்கும் அந்தப் பரிசு கிடைத்தது. அழகான பரிசுப் பொதியாகக் கட்டப்பட்ட ஏதோ ஒன்று. அவனுக்கு அதெல்லாம் முக்கியமாகவே படவில்லை. திரும்பத் திரும்ப ஒன்றைத்தான் அவன் சிந்தித்துக்கொண்டிருந்தான். இந்த மனிதர் இந்த மாளிகைக்குள் நுழைய எத்தனை ஆண்டுக் காலம் அரசியல் ஊறி உழைத்திருப்பார்! வந்திருந்த ஒவ்வொரு விருந்தினருமே அப்படித்தான். அன்றைய விருந்துக்கு இரண்டு மூன்று வெளிநாட்டு அதிபர்களும் வந்திருந்தார்கள். இருபதாண்டுகள், முப்பதாண்டுகள் அரசியலில் போராடி மேலே வந்திருக்கக்கூடியவர்களால் மட்டுமே நுழைய முடியக்கூடிய இடம். எத்தனை சுலபத்தில் என்னால் இந்த விருந்தில் கலந்துகொள்ள முடிந்துவிட்டது! ஒரு கட்டத்தில் அவன், வந்திருந்த விருந்தினர் யாரோ ஒருவரின் கேள்விக்குப் பதில் சொல்லிக்கொண்டிருந்தபோது, ஜனாதிபதி அவன் அருகே வந்துவிட்டார். ‘திவாரி! நீங்கள் வெகுநேரமாக வேலை செய்துகொண்டே இருக்கிறீர்கள். சிறிது ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்’ என்று மிகுந்த வாஞ்சையுடன் அவர் சொன்னபோது வினய் புன்னகை செய்து, மரியாதையுடன் அவரது அன்பை ஏற்றான். அந்தத் திவாரி யார் என்றுகூட அவன் கண்டதில்லை. அந்தப் பெயரையே அப்போதுதான் முதல் முதலில் கேள்விப்படுகிறான். ஒரு நிலைக்கண்ணாடி இருக்குமானால், திவாரி எப்படி இருப்பார் என்று எதிரே நின்று பார்த்துக்கொள்ளலாம். மாளிகையில் அவன் சுற்றிவந்த இடங்களில் எங்கும் ஒரு நிலைக்கண்ணாடி தென்படவில்லை. அறைகளுக்குள் இருக்கும். அவனுக்கு அங்கேயெல்லாம் செல்ல விருப்பமில்லை. யாருடைய அந்தரங்கத்துக்கும் இடையூறாக இருந்துவிடக் கூடாது என்று நினைத்தான். அவன் சாப்பிட்டு ஆனதும், கிளம்பலாமா என்று இடாகினி கேட்டது. ‘இரவு இங்கேயே படுத்து உறங்க முடிந்தால் நன்றாக இருக்கும்’ என்று வினய் சொன்னான். சில விநாடிகள் யோசித்துவிட்டு, ‘உறங்குவதில் சிக்கல் இல்லை. ஆனால், விடிந்ததும் அந்தத் திவாரி இங்கேதான் ஓடி வருவான். அப்போது நீ இங்கே இருக்கக்கூடாதே' என்று இடாகினி சொன்னது. ‘அதுவும் சரிதான். பாவம் அந்த மனிதர். ஒரு நல்ல விருந்தை இழந்துவிட்டார்’. ‘உனக்குத் திருப்திதானே?’ ‘மிகவும்’. ‘எனக்கு அது போதும்’ என்று சொன்னது. சில விநாடிகளில் அவன் புறப்பட வேண்டிய காரை அதுவே ஓட்டிக்கொண்டு வந்து நிறுத்தியது. வினய் ஏறிக்கொண்டதும் கார் புறப்பட்டது. கரோல் பாக் வரை ஓடிய கார், யுஎன்ஐ செய்தி நிறுவன வாசலில் சென்று நின்றது. ‘இங்கே ஏன் நிறுத்தினாய்?’ ‘இதுதான் நாம் இறங்க வேண்டிய இடம்’. ‘அப்படியா?’ ‘ஆம். திவாரி தனது காரை இங்கேதான் நிறுத்திவிட்டு உள்ளே போனார். நான் எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன்’. வினய் சிரித்துக்கொண்டே காரை விட்டு இறங்கினான். இடாகினியை எடுத்து மீண்டும் கட்டை விரலுக்குள் பொருத்தி, துணியை வைத்து இறுக்கிக் கட்டினான். தனது கோட் சூட்களைக் கழட்டி காரிலேயே போட்டுவிட்டு பழைய நான்கு முழம் வேட்டிக்கு மாறினான். காரின் கண்ணாடியில் அவன் முகம் பார்த்தபோது, அவன் வினய்யாகவே இருந்ததைக் கண்டான். திருப்தியாக இருந்தது. போதும் போ என்று நடக்க ஆரம்பித்தான். மறுநாள் செய்தித்தாள்களில் ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் கார் திருடுபோனது பற்றிய செய்தி சிறிதாக வந்திருந்தது. ஆனால், திருடுபோன கார் திரும்ப வந்து அதே இடத்தில் நின்ற செய்தி அதற்கு அடுத்த நாள் வந்ததா என்று வினய்க்குத் தெரியவில்லை. அவன் அன்று டெல்லியில் இருந்து புறப்பட்டு குருக்ஷேத்திரத்துக்குப் போய்விட்டிருந்தான். வினய் எனக்குச் சொன்ன இந்த சம்பவத்தை நான் வினோத்திடம் சொன்னபோது அவன் சட்டென்று கேட்டான், ‘இதில் என்ன சாதித்தாய்?’ ‘உனக்குப் புரியாது வினோத். எனக்கு ஜனாதிபதி மாளிகையின் அமைப்பும் வழிகளும் இப்போது மனப்பாடம். ஆயிரம் மைல்கள் தள்ளி அமர்ந்துகொண்டு என்னால் அங்கே சில காரியங்களைச் செய்ய முடியும்’. ‘இதற்கும் ஆன்மிகத்துக்கும் என்ன சம்மந்தம்?’ என்று வினோத் கேட்டபோது நான் சிரித்தேன். ‘பிரச்னையே அதுதான் வினோத். ஆன்மிகம் என்று அவன் நம்பிச் சென்று விழுந்த இடம் இது’ என்று சொன்னேன். ‘இல்லை. இது அதர்வத்தில் ஒரு பகுதியாக வருகிற கலை. என் மனோசக்தியைத் தூர உள்ள பிரபஞ்சப் பொருள்களின் மீது செலுத்தி அவற்றை என் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர என்னால் முடியும்’. ‘பொருள்களை மட்டும்தானே’. வினய் சிறிது யோசித்தான். ‘ஆம். பொருள்களைத்தான். சிறிது முயற்சி செய்தால் மனிதர்களையும் செய்யலாம்’. ‘என்ன லாபம் அதில்?’ ‘நீ பசி பார்த்திருக்க மாட்டாய் வினோத். அதான் இப்படிக் கேட்கிறாய். நான் மாதக்கணக்கில் பட்டினி கிடந்தவன். இரண்டு இட்லிக்காக ஒரு பெரிய தெருச்சண்டை போட்டிருக்கிறேன். ஒரு சமயம், ஒரு டீக்கடை பாய்லரைத் தூக்கிப்போட்டு உடைத்திருக்கிறேன்’ என்று வினய் சொன்னான். எனக்கு அது மிகவும் பரிதாபமாக இருந்தது. ‘தவறு செய்துவிட்டாய் வினய். ஜனாதிபதி மாளிகையில் உள்ள பூச்செண்டை உன்னால் உன்னிடத்துக்கு வரவழைக்க முடியும் என்றால், இரண்டு இட்லிகளை வரவழைத்துத் தின்ன முடியாதா?’ ‘முடியும். ஆனால் அது தவறு. அதை நான் செய்தால் என் சக்திகள் என்னைவிட்டுப் போய்விடும்’. ‘அப்படியா?’ ‘ஆம்’ என்று சொல்லிவிட்டுச் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். பிறகு, ‘நான் அனைத்தையும் இழந்ததே அப்படி ஒரு தருணத்தில்தான்’ என்று சொன்னான். (தொடரும்) http://www.dinamani.com/junction/yathi/2018/sep/06/124-இரண்டு-இட்லிகள்-2994769.html
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.