Jump to content

நவீனன்

வரையறுக்கப்பட்ட அனுமதி
 • Content Count

  85,545
 • Joined

 • Last visited

 • Days Won

  480

Posts posted by நவீனன்

 1. ராஜீவ் - லலித் சந்திப்பு
  என்.கே. அஷோக்பரன் /

  தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 159)

  லலித் அத்துலத்முதலி எனும் ஆட்சி நிபுணன்

  ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவை, இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு இந்தியப் பிரதமர், இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஊடாக வழங்கிய அழைப்பை, ஜே.ஆர் நேரடியாக மறுதலிக்காது ஏற்றுக்கொண்டார். 

  இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியுடன், தனக்குப் பதிலாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலியை, டெல்லிக்கு அனுப்பி வைத்தார்.  

   இன்னொரு வழியில் பார்த்தால், ராஜீவின் அழைப்பை, ஜே.ஆர், மறுத்திருந்தார் என்றும் பொருள் கொள்ள முடியும். ராஜீவ் காந்தி தலைமையிலான புதிய அரசாங்கம் பதவிக்கு வந்திருந்த சூழ்நிலையில், இந்தியாவுடனான உறவைச் சுமுகமான உறவாக, புதிதாக வடிவமைக்கவே ஜே.ஆர் விரும்பியிருந்தார்.  
   ஆகவே, அந்த உறவில், தன்னுடைய நிலையைப் பலப்படுத்த அவர் விரும்பியிருக்கலாம். அதற்கான இராஜதந்திர நகர்வாகக் கூட, இதைப் பொருள் கொள்ளலாம்.   

  மேலும், லலித் அத்துலத்முதலி தேர்ந்ததொரு புலமையாளராக அறியப்பட்டவர். பாடசாலைக் காலத்திலிருந்தே, கல்வியில் பெருஞ்சாதனையாளராகத் திகழ்ந்தவர். கொழும்பு றோயல் கல்லூரியில், அதிக பரிசில்களை வென்ற மாணவன் என்ற சாதனைக்கு, இன்றுவரை இவரே சொந்தக்காரர்.  

  றோயல் கல்லூரியில் பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் இளமாணி, முதுமாணிப் பட்டக்கல்வியைப் பெற்றுக்கொண்டதுடன், பிரபல்யமிக்க ஒக்ஸ்போர்ட் ஒன்றியத்தின் தலைவராகவும் பதவி வகித்தார். ஒக்ஸ்போர்ட் ஒன்றியத்தின் தலைவரான முதலாவது இலங்கையர் இவராவார்.   

  ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதுமாணிக் கல்வியைத் தொடர்ந்து, ஐக்கிய அமெரிக்காவின் புகழ்பூத்த ஹாவர்ட் பல்கலைக்கழகத்திலும் சட்டத்துறை முதுமாணிக் கற்கையை பூர்த்திசெய்தார்.

   அதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை விரிவுரையாளராகப் பணியாற்றியவர், இஸ்‌ரேலின் ஹீப்ரு பல்கலைக்கழகம், ஸ்கொட்லாந்தின் எடின்பரோ பல்கலைக்கழகம், இந்தியாவின் அலஹபாத் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் வருகைதரு விரிவுரையாளராகப் பணியாற்றியிருந்தார்.   

  இஸ்‌ரேல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய காலத்தில்தான், இஸ்‌ரேலுடனான இவரது உறவு பலமடைந்தது என்று சிலர் கருத்துரைக்கிறார்கள். 

  குறுகியகாலக் கற்பித்தல் பணியைத் தொடர்ந்து, இலங்கை வந்து சட்டத்தரணியாகப் பணியாற்றத் தொடங்கியவர், 1970களின் ஆரம்பத்தில், ஐக்கிய தேசியக் கட்சியினூடாக அரசியலில் நுழைந்தார்.   

  பெரும் புலமையாளராக, அரசியலில் நுழைந்த அத்துலத்முதலி, அரசியல்வாதியாக (politician) அல்லாது ஆட்சிநிபுணனாகவே (statesman) அறியப்பட்டார்.   

  ஆனால், அத்துலத்முதலியின் மறுமுகம் வித்தியாசமானதாக இருந்தது. யுத்தம் என்று வந்தபோது, அவர் மனவுணர்ச்சிகளுக்கு  இடம் தரவில்லையென்றும், தேசிய பாதுகாப்பு அமைச்சராக, யுத்தத்தை இரக்க உணர்ச்சியற்ற திடத்துடன் முன்னெடுத்துச் சென்றார் என்றும், ப்ரூஸ் பலிங் தன்னுடைய கட்டுரையொன்றில் குறிப்பிடுகிறார்.   

  முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சந்திப்புக்கு, அத்துலத்முதலியை அனுப்பிவைக்க, ஜே.ஆர் எடுத்த முடிவுக்கு, அத்துலத்முதலியின் புலமை, மொழியாற்றல், சர்வதேச ரீதியிலான அங்கிகாரம், மதிப்பு என்பவற்றை முக்கிய காரணங்களாக அடையாளப்படுத்த முடியும்.   

  குறித்த சந்திப்புக்காக அத்துலத்முதலி, 1985 பெப்ரவரி ஒன்பதாம் திகதி இரவு, கொழும்பிலிருந்து பொம்பே ஊடாக டெல்லி சென்றிருந்தார்.  

  புதியதோர் ஆரம்பம்

  ராஜீவ் காந்தி, அத்துலத்முதலி ஆகியோருக்கு இடையேயான பேச்சுவார்த்தை, ஏறத்தாழ இரண்டு மணி நேரமளவு நீடித்தது. 

  இந்தியாவுடனான புதிய அணுகுமுறையை, இந்திரா காந்தி காலத்தேய அணுகுமுறையிலிருந்து விலத்தி, இலங்கைக்குச் சாதகமான அணுகுமுறையாக மாற்றச் செய்வதுதான், அத்துலத்முதலியின் முன்பிருந்த பெரிய சவால் ஆகும்.   

  ராஜீவ் காந்தியின் மிகப் பெரும் தேர்தல் வெற்றிக்கான வாழ்த்துரையோடு, பேச்சுவார்த்தையைத் தொடங்கிய அத்துலத்முதலி, “இலங்கை விவகாரத்தில், இதுவரைகாலமும் இந்தியாவின் வற்புறுத்தல் தன்மையான போக்கு, இலங்கையின் பெரும்பான்மையின சிங்கள மக்களிடையே, இந்திய விரோத மனப்பான்மையையும் இந்திய ஆக்கிரமிப்பு அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது”, என்று குறிப்பிட்டார்.   

  அத்துலத்முதலியின் நோக்கமானது, இந்தியா, இராணுவ ரீதியிலான ஆக்கிரமிப்பை, இலங்கை மீது செய்யாது என்ற உறுதிமொழியை ஜே.ஆர், இந்திரா காந்தியிடம்  பெற்றுக் கொண்டதைப் போல, ராஜீவிடமிருந்தும் அந்த உறுதிமொழியைப் பெற்றுக்கொள்வதாக இருந்தது.   

  அதற்கேற்றாற் போல, ராஜீவ் காந்தியும் “இந்தியா ஒருபோதும், இலங்கை மீது ஆக்கிரமிப்புச் செய்யாது” என்று உறுதியளித்தார்.   

  1984 நவம்பரில், ராஜீவ் காந்தியைச் சந்தித்த ஜே.ஆர், புதியதோர் ஆரம்பம் பற்றிப் பேசியும் இணங்கியும் இருந்தார். 

  இலங்கை விவகாரத்தில், பேச்சுவார்த்தைகளைப் புதிதாக ஆரம்பிப்பதற்கு, இதுவரை காலமும் இலங்கை விவகாரத்தை, இந்தியா சார்பாகக் கையாண்ட கோபால்சாமி பார்த்தசாரதியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை, அத்துலத்முதலி சார்பில் முன்வைக்கப்பட்டது.   

  சர்வகட்சி மாநாடு தோல்வியடைந்ததைப் பற்றிய தன்னுடைய கவலையை ராஜீவ் காந்தி பகிர்ந்த போது, அதற்குப் பதிலளித்த அத்துலத்முதலி, “அரசாங்கத்தால், சிங்கள மக்களை இந்த விடயத்தில் அணைத்துச் செல்ல முடியாது போயுள்ளது” என்று  கூறினார்.   

   பிரதான எதிர்க்கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் அதன் தலைவி சிறிமாவோ பண்டாரநாயக்கவும் ‘அனெக்சர் -சி’ முன்மொழிவுகளைக் கடுமையாக எதிர்த்தமையும் அந்த முன்மொழிவுகள் ஜே.ஆரின் விருப்பமின்றி, பார்த்தசாரதியால் திணிக்கப்பட்டமையும்தான், சர்வகட்சி மாநாடு, இந்த முடிவை எட்டக் காரணம் என்ற தொனியில் கருத்துரைத்தார்.   

  மேலும், “சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வொன்று அடையப் பெறவேண்டுமானால், இந்தச் செயற்பாடு, மீண்டும் புதிதாக ஆரம்பிக்கப்பட வேண்டும். சிங்கள மக்கள் பார்த்தசாரதியை, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு சார்பான நபராகக் கருதுவதால், புதிய செயற்பாடுகள் ஆரம்பிக்கும் போது, பார்த்தசாரதி அதில் இல்லாதிருப்பது, உசிதம்” என்று, நாசூக்காக வேண்டிக் கொண்டார்.  

  ஏற்கெனவே பார்த்தசாரதிக்கும், ராஜீவ் காந்திக்கும் இடையிலான அணுகுமுறை வேறுபாடுகள், அவர்களது உறவைப் பலமிழக்கச் செய்திருந்த நிலையில், அத்துலத்முதலியின் இந்தக் கோரிக்கைக்கு இணங்குவதில், ராஜீவ் காந்திக்கு எந்தத் தயக்கமும் இருந்திருக்க வாய்ப்பில்லை.   

  அத்துலத்முதலியின், புதிய ஆரம்பமொன்றுக்கான கோரிக்கைக்கு இணங்கிய ராஜீவ், இந்தியா பக்கசார்பின்றி, நடுநிலையுடன் செயற்படும் என்று உறுதியளித்ததுடன், இனி, பேச்சுவார்த்தைகள் இந்தியா சார்பில், புதிய வௌியுறவுச் செயலாளர் ரோமேஷ் பண்டாரியால் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். முதல் இரண்டு கோரிக்கைகளும் அத்துலத்முதலிக்கு சாதகமாக அமைந்தன.  

  மாவட்ட சபைகள் போதும்

  அடுத்ததாக, அதிகாரப் பகிர்வு முறை பற்றி விவரமாக, ராஜீவ் காந்தியும் அத்துலத்முதலியும் பேச்சுவார்த்தை நடத்தினர். 

  தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி கேட்கும், பிராந்திய சபைகளை, இலங்கை அரசாங்கத்தால் வழங்க முடியாது என்று குறிப்பிட்ட அத்துலத்முதலி, தம்மாலியன்ற மிகச்சிறந்த அதிகாரப் பகிர்வுக் கூறு, மாவட்ட சபைகள்தான் என்று, தௌிவாகக் குறிப்பிட்டார்.  அதிகளவு அதிகாரங்களைப் பகிர்வதற்குத் தாம் தயார், எனினும், அதிகாரப் பகிர்வுக் கூறாக, மாவட்ட சபைகளை விட, பரந்த அமைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதில், அத்துலத்முதலி விடாப்பிடியாக இருந்தார்.   

  மாவட்ட சபைகளைத் தாண்டிய, பிராந்திய, மாகாண சபைகளை அடிப்படையாகக் கொண்ட தீர்வையே, இந்திரா காந்தி முன்னிறுத்தியிருந்தார். 

  ஆனால், அத்துலத்முதலியின் மாவட்ட சபையை அடிப்படையாகக் கொண்ட தீர்வுக்கு, ராஜீவ் காந்தி இணங்கியதாகவும் அதிகாரப்பகிர்வு தொடர்பில் மாவட்டங்கள் இணைக்கப்பட வேண்டியதில்லை என்று ராஜீவ் காந்தி கருதியதாகவும் தங்களுடைய நூலில் கே.எம்.டி.சில்வாவும் ஹவட் றிக்கின்ஸும் குறிப்பிடுகின்றனர்.   

  அத்தோடு, அதிகளவு அதிகாரங்கள் மாவட்ட சபைகளுக்குப் பகிரப்படவேண்டும் என்பதில் ராஜீவ் காந்தியும் அத்துலத்முதலியும் உடன்பட்டாலும், சட்டவொழுங்கு அதிகாரங்கள், பகிரப்படவேண்டியதில்லை என்பதிலும் இருவரும் இணங்கியிருந்தனர். 

  இந்தச் சட்டவொழுங்கு அதிகாரப் பகிர்வுதான், பஞ்சாப் மாநிலம் தொடர்பாக பிரச்சினைக்கான காரணங்களில் ஒன்று என்று, ராஜீவ் காந்தி கருதியதாக, டி சில்வாவும் றிக்கின்ஸும் கருத்துரைக்கின்றனர். இந்த விடயமும் அத்துலத்முதலிக்குச் சாதகமாகவே அமைந்தது.  

  இணக்கத்துக்கு மேல் இணக்கம்

  அடுத்ததாக, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கான ஆதரவை, இந்தியா நிறுத்தவேண்டும் என்று, அத்துலத்முதலி கேட்டுக் கொண்டிருந்தார். 

  தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை, பஞ்சாப் பிரிவினை அமைப்பான அகாலி தள்ளுக்கு ஒப்பிட்ட ராஜீவ் காந்தி, இந்திய அரசாங்கத்துடன், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு இருந்த நேரடிச் செல்வாக்கு குறைக்கப்படும் என்ற உறுதிமொழியை, அத்துலத்முதலிக்கு வழங்கியதுடன், இலங்கை அரசாங்கம் தமிழ்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். இதுவும் அத்துலத்முதலிக்குச் சாதகமாகவே அமைந்து, அவருக்கு நிறைந்த மகிழ்வைத் தந்தது.   

  அடுத்ததாக, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், தமிழ் நாட்டிலிருந்து செயற்படுவதையும் அவற்றின் பயிற்சிமுகாம்கள் அங்கு இயங்குவதையும் விவரமான தகவல்கள், ஆதாரத்துடன் ராஜீவ் காந்தியிடம், அத்துலத்முதலி சமர்ப்பித்தார். இதன் நோக்கம், இந்தத் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் பின்னணியில், இந்தியா இருக்கிறது என்பதை, இலங்கை அறியும் என்று சுட்டிக்காட்டுவதோடு, மறைமுகமாக, இத்தகைய ஆதரவுகளை, இந்தியா நிறுத்தவேண்டும் என்று அறிவுறுத்துவதாகும்.   

  இதைப்பற்றி, தான் அறிந்திருக்கவில்லை என்று குறிப்பிட்ட ராஜீவ் காந்தி, இந்த விவகாரத்தில், தான் கரிசனை செலுத்துவதாக உறுதியளித்ததாக, ரீ.சபாரட்ணம் பதிவுசெய்கிறார்.   

  இலங்கையிலிருந்து, தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கும் அகதிகள் பிரச்சினை பற்றித் தன்னுடைய கவலையை வௌியிட்ட ராஜீவ் காந்தி, “இது, தமிழ்நாட்டில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கும்” என்று குறிப்பிட்டார்.   

  மேலும், இந்திய மீனவர்கள், இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது, சுட்டுக்கொல்லப்படுவது பற்றிய தன்னுடைய கரிசனையையும் அத்துலத்முதலியிடம், ராஜீவ் முன்வைத்தார்.  

   இலங்கை-இந்தியா இடையேயான கடற்பரப்பில் இந்திய, இலங்கைக் கடற்படைகள் இணைந்த ரோந்துச் செயற்பாட்டை முன்னெடுக்கவேண்டும் என்பது, ஜே.ஆரின் விருப்பமாக இருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில், அந்த முன்மொழிவை ராஜீவ் காந்தி முன்பு, அத்துலத்முதலி சமர்ப்பித்தார். அதனைத் தான் பரிசீலிப்பதாக, ராஜீவ் காந்தி உறுதியளித்தார்.   

  பேச்சுவார்த்தையின் இறுதியில், இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்மித்த நாடுகள் அனைத்துடனும் நல்லுறவைப் பேணத் தான் விரும்புவதாகத் தெரிவித்த ராஜீவ் காந்தி, ஜே.ஆர் ஜெயவர்தனவை, அவருக்கு வசதியாக பொழுதில், இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு, தான் அழைப்பு விடுப்பதாக அத்துலத்முதலியிடம் குறிப்பிட்டார்.   

  அத்துலத்முதலியைப் பொறுத்தவரை, இந்தப் பேச்சுவார்த்தைகள், அவர் எதிர்பார்த்ததைவிடப் பெரிய வெற்றியாகவே அமைந்தது எனலாம். குறிப்பாக, மாவட்ட சபைகளை அடிப்படையாகக் கொண்ட தீர்வொன்றுக்கு, ராஜீவ் காந்தி இணங்கியமை, இலங்கை தொடர்பிலான இந்திய நிலைப்பாட்டில் ஏற்பட்ட, முக்கிய மாற்றமாக இலங்கை கருதியது.   

  இந்தியாவின் அணுகுமுறையில் ஏற்பட்ட இந்த மாற்றம், ஜே.ஆர் அரசாங்கத்துக்கு மிகச் சாதகமாக அமைந்திருந்தது. அதன் பின்னர், இருதரப்பும் வௌியிட்ட அறிக்கைகள் வாயிலாகவும் பேச்சுவார்த்தைகள் நடந்த அதேதினம், இடம்பெற்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சம்பவம் ஊடாகவும் இந்த மாற்றம் மிகத்தௌிவாக வௌிப்பட்டது.   

  (அடுத்த திங்கட்கிழமை தொடரும்)  

  http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ராஜீவ்-லலித்-சந்திப்பு/91-221111

 2. 111. தரிசனம்

   

   

  கயாவில் அண்ணாவைச் சந்தித்த கதையை வினோத் முக்கால் மணி நேரம் எங்களுக்குச் சொன்னான். பிராட்வே பேருந்து நிறுத்த ஜன நெரிசலோ, துர்நாற்றமோ, ஓயாத பெரும் சத்தமோ எங்களுக்கு ஒரு பொருட்டாக இல்லை. ஒரு பெஞ்சில் நாங்கள் மூவரும் சென்று அமர்ந்துகொண்டோம். சிறிது நேரம் வினோத் என்னைப் பற்றியும் வினய்யைப் பற்றியும் விசாரித்துவிட்டு அவன் அண்ணாவைச் சந்தித்த கதையைச் சொல்ல ஆரம்பித்தான்.

  அவனுக்கு அப்போது அப்பா காலமான விவரம் தெரியாது. அவனது சக கிருஷ்ண பக்தி இயக்கத் தோழமை சன்னியாசிகள் இருவரோடு கயாவுக்கு சுற்றுலாவாகச் சென்றிருக்கிறான். அங்கே ஒரு ஸ்டால் அமைப்பதற்கு அவர்கள் முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். சொந்தமாக ஓரிடம். பின்னால் விரிவாக்கம் செய்துகொள்ளலாம். அது பிரச்னையில்லை. முதலில் சிறிய அளவில் ஒரு கடை. புத்தகங்கள், போட்டோக்கள், ஜப மாலைகள், கோபி சந்தனம், ஊதுபத்தி விற்பனை. இந்த உலகில் தன்னார்வலர்களுக்குப் பஞ்சமே இல்லாத ஒரே இயக்கம் கிருஷ்ண பக்தி இயக்கம்தான் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. ஒரு பொட்டு நெருப்பை எடுத்து ஓரிடத்தில் வைத்துவிட்டால் போதும். ஊர் முழுக்க அதைப் பரவச் செய்துவிடத் தெரிந்த வல்லவர்கள். பக்தியைக் கேளிக்கையாகவும் கொண்டாட்டமாகவும் ஆக்கிவிடும்போது, சராசரி மனங்கள் அதை எளிதில் விரும்ப ஆரம்பித்துவிடும். கேளிக்கையின் உச்சத்தில் பக்தியை நகர்த்தி வைத்துவிட்டாலும், கூடிய கூட்டம் நகராமல் நிற்கும். ரஜனீஷ் அதனைத்தான் செய்தார்.

  ‘ஆனால் நாங்கள் கேளிக்கையை நிராகரிக்கிறோம் விமல். கொண்டாட்டம் என்பது மட்டும் சரி. பக்தி, கொண்டாடப்பட வேண்டியதுதான்’ என்று வினோத் சொன்னான்.

  கயாவில் அவர்கள் ஓரிடத்தைப் பார்த்து விலை பேசி முடித்துவிட்டு, கடை அமைக்க ஏற்பாடு செய்துகொண்டிருந்தபோது ஒருநாள் வினோத் கங்கைக் கரையில் தன் தோழர்களோடு காலை நடை சென்றுகொண்டிருந்தான். அப்போதுதான் அண்ணாவை அவன் பார்த்தான்.

  முதலில் அவனுக்கு அது அண்ணாதானா என்று சந்தேகமாக இருந்தது. தடதடவென்று அருகே ஓடிச் சென்று உற்றுப் பார்த்திருக்கிறான். அண்ணாதான். நீருக்குள் நின்றுகொண்டு தர்ப்பணம் செய்துகொண்டிருந்தான். ‘விஜய், விஜய்’ என்று அவன் இரண்டு முறை உரக்க அழைத்தும் அவன் திரும்பவில்லை.

  ‘அவர் யார்? உங்களுக்குத் தெரிந்தவரா?’ என்று வினோத்தின் நண்பர்கள் கேட்டார்கள்.

  ‘ஆம். அவன் என் அண்ணா’.

  அவர்களால் நம்பவே முடியவில்லை. விஜய் அப்போது இடுப்பு வரை நீண்ட சடாமுடியும் மழித்த முகமுமாக இருந்தான். இடையில் ஒரு கோவணம் மட்டும் கட்டி, இரு தோள்பட்டைகளிலும் ஏதோ மணிக்கயிறு அணிந்திருந்தான். கழுத்தில் ஒன்றுமில்லை. பூணூல் அணிந்திருக்கவில்லை. நதியில் நீரோட்டம் அதிகம் இருந்தது. நின்றால் நகர்த்திவிடும் அளவுக்குத் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. அவன் தனது வலுவான கால்களால் புவியை அழுத்திக்கொண்டு நின்று நீர்க்கடமை ஆற்றிக்கொண்டிருந்தான். பத்து நிமிடங்கள் அவன் அசையவில்லை, திரும்பவில்லை. முடித்துவிட்டு ஒரு முக்குப் போட்டு எழுந்தான். சூரியனைப் பார்த்துக் கும்பிட்டான். பிறகு கரைக்குத் திரும்பி வந்தான்.

  தாங்க முடியாத வியப்புடன் வினோத் அவனை நோக்கி ஓடி, ‘விஜய், நீயா!’ என்றான்.

  அண்ணா புன்னகை செய்தான்.

  ‘எப்படி இருக்கிறாய்? இங்கேதான் இருக்கிறாயா?’

  ‘இல்லை. நேற்றிரவு அப்பா காலமாகிவிட்டார். அவருக்குச் செய்ய வேண்டியதைச் செய்து முடிப்பதற்காக இங்கே வந்தேன்’ என்று சாதாரணமாகச் சொன்னான்.

  வினோத்துக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. சில விநாடிகள் பேச்சற்று நின்றுவிட்டான். பிறகு சட்டென்று அங்கேயே அமர்ந்து அப்பாவுக்காகச் சில நிமிடங்கள் தியானம் செய்தான். அவன் கண் விழித்து எழும்வரை அண்ணா அமைதியாக நின்றுகொண்டிருந்தான். எழுந்தபின், ‘எப்படி இருக்கிறாய்?’ என்று கேட்டான்.

  ‘நீ?’

  அவன் பதில் சொல்லவில்லை. சிரித்தான்.

  ‘நான் உன்னை இப்படிக் கற்பனை செய்திருக்கவில்லை’ என்று வினோத் சொன்னான்.

  ‘ஆனால் நான் நினைத்த மாதிரிதான் நீ உருப்பெற்றிருக்கிறாய்’.

  ‘நீ என்ன நினைத்தாய்?’

  ‘நீ ஒரு சிறந்த கிருஷ்ண பக்தனாவாய் என்று நினைத்தேன்’.

  ‘எப்போது?’

  ‘சிறு வயதிலேயே. உனக்கு சிவலிங்கம் கிடைத்ததே. அப்போதே’.

  வினய்க்கு அது ஆச்சரியமாக இருந்தது. ‘எனக்கு லிங்கம் கிடைத்தது உனக்கு எப்படித் தெரியும்?’ என்று கேட்டான்.

  ‘இது ஒரு பெரிய விஷயமா? திருவானைக்காவில் என் நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் சொன்னார்’.

  ‘எனக்கு லிங்கம் கிடைத்தது அவருக்கு எப்படித் தெரியும்?’

  ‘அதெல்லாம் அவ்வளவு முக்கியமா? உன் கிருஷ்ணனை நீ பார்த்துவிட்டாயா? அதைச் சொல்’.

  வினோத் தனது நண்பர்களைத் திரும்பிப் பார்த்தான். அவர்களை அழைத்து அண்ணாவுக்கு அறிமுகம் செய்துவைத்தான். அண்ணா அவர்களுக்கு வணக்கம் சொன்னான்.

  சிறு வயதிலேயே அண்ணா வீட்டை விட்டு வெளியேறிச் சென்ற கதையை வினோத் சுருக்கமாக அவர்களுக்கு எடுத்துச் சொன்னதும், அவர்களுக்கு அண்ணாவின் மீது பெருமதிப்பு உருவானது. ‘இப்போது எங்கே இருக்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள்.

  ‘எங்கும் இருப்பதில்லை. சுற்றிக்கொண்டே இருப்பேன். பெரும்பாலும் இமயச் சாரல்களில். எப்போதாவது காசியில்’.

  வினோத் கேட்டான், ‘விஜய், எனக்காவது சொல். உன் குரு யார்? எந்த சக்தி உன்னை வீட்டை விட்டு அழைத்துச் சென்றது?’

  ‘நான் கபிலரின் மாணவன்’ என்றுதான் அண்ணா அவனிடமும் சொல்லியிருக்கிறான்.

  ‘கபிலரா?’

  ‘ஆம். திருவிடந்தை அல்லிக் குளத்தின் அடியில் அப்போது அவர் தவம் புரிந்துகொண்டிருந்தார். நான் அவரை தினமும் சந்தித்தேன். அவரிடம்தான் யோகாப்பியாசங்கள் கற்றேன்’.

  நம்புவதற்கு சிரமம் தரக்கூடிய அந்தத் தகவல்களை வினோத்தின் நண்பர்கள் உணர்ச்சியற்ற பாவத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார்கள். வினோத்துக்கு அந்த விதமான உரையாடலைத் தொடருவதா வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டது. எனவே சட்டென்று பேச்சை மாற்றி, ‘நீ எங்கே தங்கியிருக்கிறாய்? வா போகலாம்’ என்று சொன்னான். அண்ணா புன்னகை செய்து வினோத்தின் நண்பர்களைப் பார்த்து இடக்கையை உயர்த்தி ஆசி சொன்னான். அது அவர்களுக்குச் சற்று அதிர்ச்சியளித்தது. பொதுவாக சன்னியாசிகளுக்கு யாரும் ஆசி சொல்வதில்லை. குரு ஸ்தானத்தில் உள்ளவர்களும் மிக மூத்த துறவிகளும் மட்டுமே அதைச் செய்வார்கள். அண்ணாவுக்கு மிஞ்சினால் என்ன வயது இருக்கும்? அந்த கிருஷ்ண பக்தத் துறவிகளுக்கும் கிட்டத்தட்ட அதே வயதுதான். எனவே அவன் கையை உயர்த்தி ஆசி சொன்னதும் அவர்கள் சற்றுத் திகைத்துவிட்டார்கள்.

  அண்ணா புன்னகை செய்தான், ‘நீங்கள் வைணவத் துறவிகள் அல்லவா? நான் வணங்கியதும் நீங்களும் என்னை வணங்கினீர்கள். அதேபோல் நான் ஆசி சொன்னதும் நீங்கள் சொல்ல வேண்டாமா?’ என்று கேட்டான்.

  ‘ஏன் நீங்கள் வைணவர் இல்லையா?’ என்று வினோத்தின் நண்பர் ஒருவர் கேட்டதும் அண்ணா மீண்டும் சிரித்தான். இல்லை என்று சொன்னான்.

  ‘பிறகு? உங்கள் குரு கபிலரே ஒரு வைணவர்தானே?’

  அண்ணா இப்போது வாய்விட்டுச் சிரித்துவிட்டான். வெகு நேரம் சிரித்தான். மூச்சு விடாமல், கண்ணில் நீர் வரும் அளவுக்குச் சிரித்தான். பிறகு, ‘உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். கபிலர் ஒரு நாத்திகர்’.

  என்ன, என்ன என்று அவர்கள் அதிர்ச்சியடைந்து பரபரப்பானார்கள். அண்ணா சிரித்துக்கொண்டே சொன்னான், ‘பிறகெப்படி அவர் சாங்கியத் தத்துவத்தை முன்வைப்பார்? பௌதிகப் பிரபஞ்சத்தின் தன்மையையும் அடிப்படைகளையும் பேசுவதல்லவா சாங்கியம்? பகுத்தறியாமல் மெட்டாஃபிசிக்ஸ் ஏது?’

  அவர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தார்கள். ‘இல்லை. நீங்கள் சொல்வது தவறு. கபிலர் மகாவிஷ்ணுவின் அம்சம். அவதாரம் என்றே சொல்வார்கள்’.

  ‘இருந்துவிட்டுப் போகட்டும். எனக்குக் கபிலரைவிட ஜடத்துக்கும் சேதனத்துக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கும் அவரது தத்துவம்தான் முக்கியம்’ என்று சொன்னான்.

  ‘அதுதான் அதுதான்! ஜடத்துக்கும் சேதனத்துக்கும் உள்ள வேறுபாட்டின் புரிதலே பக்தியில்தானே நிகழ்கிறது?’

  ‘இல்லை. ஞானத்தில்’ என்று சொல்லிவிட்டு அண்ணா வினோத்தின் கையைப் பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். ‘நீங்கள் நமது இருப்பிடத்துக்குச் செல்லுங்கள். நான் சிறிது நேரத்தில் வருகிறேன்’ என்று வினோத் தனது நண்பர்களிடம் சொல்லிக்கொண்டு அண்ணாவோடு நடக்க ஆரம்பித்தான்.

  நகருக்கு வெளியே ஒரு கானகத்துக்குள் அண்ணா அவனை அழைத்துச் சென்றான்.

  ‘நீ இங்கேயா இருக்கிறாய்?’

  ‘கயாவுக்கு வந்தால் இங்கே தங்குவேன்’ என்று சொல்லிவிட்டு ஒரு சிறிய குகைக்குள் அவன் வினோத்தை அழைத்துச் சென்றான். மிகச் சிறிய குகை. இயற்கையான குகை போல அது இல்லை. சாதுக்கள் யாரோ தமது சௌகரியத்துக்கு ஆள் வைத்து உருவாக்கிய குகை போலிருந்தது. நான்கு புறமும் பாறைகள் அடைத்து, இடைவெளிகளை சிமெண்டால் பூசியிருந்தார்கள். தரை மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. அண்ணா ஒரு நீண்ட மரப்பலகையை எடுத்துப் போட்டு, உட்கார் என்று சொன்னான்.

  வினோத் உட்கார்ந்தான். ‘ஏதாவது சாப்பிடுகிறாயா?’ என்று கேட்டான்.

  ‘என்ன இருக்கிறது?’

  ‘பழங்கள் இருக்கின்றன. மாமிசம் இருக்கிறது. ஆனால் அதை நீ சாப்பிட மாட்டாய்!’

  ‘நீ மாமிசம் உண்பாயா?’

  அண்ணா புன்னகை செய்தான். ‘பதினெட்டு நாள்களுக்கு ஒருமுறை நான் உணவு உட்கொள்வேன். அப்போது என்ன கிடைக்கிறதோ அதுதான் உணவு’.

  ‘என்னால் நம்பவே முடியவில்லை. மாமிசம் தவ நெறிக்கு முரணானதல்லவா?’

  ‘உடலுக்குத்தானே உணவு. உடலே தவத்துக்கு ஒரு ஊறுதான்’.

  ‘மடக்கிவிடும்படி பதில் சொல்லித் தப்பிக்க நினைக்காதே. உயிர்க்கொலை பாவம்’.

  ‘ஆம். ஆனால் நான் கொல்வதில்லை’.

  ‘பிறகு?’

  ‘இறந்தவற்றைத்தான் உட்கொள்வேன்’.

  வினோத் அதிர்ச்சியடைந்தான். 'எதுவானாலுமா?'

  ‘ஆம். பிணத்தில் என்ன பேதம்? ஆடு, கோழி, மாடு, பன்றி, மான், மனிதன், மயில், குயில், காகம் எல்லாம் ஒன்றுதான்’.

  ‘ஹரே கிருஷ்ணா. நீ நர மாமிசம் உண்பாயா?’

  ‘இல்லை என்று பொய் சொல்ல மாட்டேன். அது ஒரு சுத்திகரிப்பு. உனக்குப் புரியாது. புரியவும் வேண்டாம். நீ எப்படி இருக்கிறாய்? அதைச் சொல்’.

  ‘மிகவும் அதிர்ச்சியடைந்திருக்கிறேன்’.

  ‘வினோத், உறவை அறுத்ததுபோல உணவை அறுப்பது யோகிகளுக்கு முக்கியம். ஆனால் அப்பா இறந்ததை அறிந்ததும் தர்ப்பணம் செய்தேன் பார், அந்த மாதிரி பசிக்கும் நேரம் எதையாவது தின்னவேண்டி இருக்கிறது. ஒரு யோகிக்கு உணவில் தேர்வு சாத்தியங்கள் இல்லை’.

  ‘அப்பா இறந்துவிட்டதாக நீ சொன்னபோது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது’.

  ‘ஒரு தெருநாய் அடிபட்டு இறக்கும்போதும் அந்த வருத்தம் வருமானால் நீ சரியாக இருக்கிறாய் என்று அர்த்தம்’.

  ‘ஆம். அப்படித்தான் வருந்துகிறேன்’.

  ‘நல்லது. பழம் சாப்பிடு’ என்று சொல்லிவிட்டு, ஒரு ஓரமாக துணி சுற்றி வைத்திருந்த நான்கு வாழைப்பழங்களை எடுத்துவந்து கொடுத்தான். வினோத் அதைச் சாப்பிட்டதும் ‘குடிக்க நீர் வேண்டுமா?’ என்று கேட்டான். பிறகு அவனே வெளியே சென்று ஒரு மண் குடுவையில் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தான்.

  ‘உன்னை இன்று சந்திக்க வேண்டும் என்பது எனக்கு இடப்பட்ட கட்டளை’ என்று சொன்னான்.

  ‘யார் இட்ட கட்டளை?’

  ‘அது சொன்னால் உனக்குப் புரியாது. ஆனால் உன் மனத்துக்குள் நான் ஒரு செய்தியை விதைக்க வேண்டும். அது உனக்குள் இறங்க வேண்டுமானால் நீ பசியற்று இருக்க வேண்டும். அதனால்தான் முதலில் சாப்பிடச் சொன்னேன்’.

  ‘புரியவில்லை’.

  ‘புரியவேண்டாம். சற்று நேரம் கண்ணை மூடிக்கொண்டு அமைதியாக இரு. கிருஷ்ணனை நினைத்துக்கொண்டிரு’ என்று சொன்னான்.

  வினோத் அதற்குக் கட்டுப்பட்டு பத்மாசனமிட்டு அமர்ந்தான். கண்ணை மூடிக்கொண்டான். அண்ணா அவன் எதிரே அமர்ந்துகொண்டு அவனையே சிறிது நேரம் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். எவ்வளவு நேரம் ஆகியிருக்கும் என்று தெரியவில்லை. வினோத் கண்ணைத் திறந்தபோது அண்ணாவின் நடு நெற்றியில் சிறியதாக ஓர் உருவம் தெரிந்தது. ஒரு யோகியின் உருவம். அது கபிலர்தான் என்று வினோத்துக்குத் தோன்றியது.

  (தொடரும்)

  http://www.dinamani.com/junction/yathi/2018/aug/20/111-தரிசனம்-2983789.html

  • Like 1
 3. இரண்டில் ஒரு பெண்ணைப் பாதிக்கும் அனீமியா... தப்பிப்பது எப்படி? #Anemia

   
  இரண்டில் ஒரு பெண்ணைப் பாதிக்கும் அனீமியா... தப்பிப்பது எப்படி? #Anemia
   

  `ஏண்டி எப்பப் பார்த்தாலும் ரூமுக்குள்ளயே கிடக்குற, வா... ஜாலியா வெளியில் போயிட்டு வரலாம் ` என்னும் தோழியின் அழைப்புக்கு, `இல்லடி எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு நீங்க போயிட்டு வாங்க' என்று பதில் சொல்லும் பெண்கள் எல்லா கேங்கிலும் இருப்பார்கள். உடலுக்குத் தேவையான ஓய்வு இல்லாதபோது உடல் சோர்வு இயல்பானதுதான். ஆனால் எவ்வளவு ஓய்வெடுத்தாலும் சோர்வு தொடர்ந்தால் அது `அனீமியா' பாதிப்பாக இருக்கலாம். 

  அனீமியா

   `சாரி சார், நீங்க மட்டும் ரத்ததானம் பண்ண முடியாது, உங்களுக்கு ரத்தச்சோகை இருக்கு' - நண்பர்களுடன்  ரத்ததானம் கொடுக்கச் சென்று, உங்களுக்கு இப்படி ஒரு பதில் கிடைத்தால் எவ்வளவு அதிர்ச்சியாக இருக்கும். உடலில் சில பாதிப்புகள் இருப்பது ஏதாவது ஒரு பரிசோதனையில்தான் தெரியவரும். அப்படி, ரத்தப்பரிசோதனை செய்யும்போது பெரும்பாலானோர் தெரிந்துகொள்ளும் ஒரு பாதிப்பு ரத்தசோகை என்று சொல்லக்கூடிய அனீமியா. 

   

   

  ரத்தச்சோகை சாதாரணமாகக் கடந்து விடக்கூடிய ஒரு பாதிப்பல்ல. சரியான நேரத்தில் கண்டறிந்து அதைச் சரிசெய்துவிடவேண்டும். காலம் கடந்தால் உயிரையே பறித்துவிடும் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். ஒட்டு மொத்த இந்திய மக்கள்தொகையில் 32.7 சதவிகிதம் பேருக்கு ரத்தச்சோகை பாதிப்பு இருப்பது, இந்தியச் சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் சமீபத்தில் நடத்திய ஓர் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. கருவுற்ற பெண்களில் 34.6 சதவிகிதம் பேருக்கும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 48.5 சதவிகிதம் பேருக்கும் அனீமியா பாதிப்பு இருக்கிறது.

   

   

  அதென்ன அனீமியா?

  நாம் உயிர்வாழ ஆக்சிஜன் மிக அவசியமென்பது அனைவருக்கும் தெரியும். நம் உடலில் உள்ள ஒவ்வோர் உறுப்புக்கும் ஆக்சிஜன் தேவை. சரி, உடலில் உள்ள உறுப்புகளுக்கு எப்படிச் செல்கிறது ஆக்சிஜன்?

  ரத்த சிகப்பணுக்கள்

  நம் உடலில் ஓடும் ரத்தத்தின் வழியாகத்தான். ரத்தத்தில், சிகப்பணுக்கள், வெள்ளையணுக்கள், தட்டணுக்கள் என மூன்று வகை இருக்கின்றன. இவற்றில், ரத்த சிகப்பணுக்கள்தாம் ஒவ்வோர் உறுப்புக்கும் ஆக்சிஜனைக் கொண்டு செல்கின்றன. இதைத்தான் `ஹீமோகுளோபின்' என்று சொல்கிறோம். `ஹீமோகுளோபின்' எண்ணிக்கை, சராசரி அளவைவிடக் குறைந்தால் அதை, அனீமியா என்கிறோம். `ஹீமோகுளோபின்' எண்ணிக்கை குறையும்போது உறுப்புகளுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காது. அதனால் பல உடல் நலப்பாதிப்புகள் உண்டாகும்.

   

   

  ஆண்களுக்கு, ஒரு டெசி லிட்டர் ரத்தத்தில் 13.5 கிராம் முதல் 17.5 கிராம் வரை, பெண்களுக்கு 12 கிராம் முதல் 16 கிராம் வரை  ஹீமோகுளோபின் இருக்கவேண்டும். இதுவே சராசரி அளவு. ஆண்களுக்கு 13.5 கிராமுக்குக் கீழும், பெண்களுக்கு 12 கிராமுக்குக் கீழும் ஹீமோகுளோபின் எண்ணிக்கை இருந்தால் ரத்தச்சோகையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். 

   ``  ரத்த சிவப்பணுக்கள் நம் உடலில் உள்ள எலும்பு மஜ்ஜையில் உருவாகும். பின்னர், ரத்தத்தில் கலந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு மண்ணீரலில் கரையும். ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி சராசரியான அளவை விடக் குறைவாக உற்பத்தியாகும் போது ரத்தச்சோகை பாதிப்பு ஏற்படும். அதுதவிர, உற்பத்தியான சிவப்பணுக்கள் மூன்று மாதங்களுக்கு முன்பாக அழிந்துவிட்டாலும், உடலில் ஏதேனும் ரத்தக் கசிவு பாதிப்பு இருந்தாலும் ரத்தசோகை பாதிப்பு ஏற்படும். சிவப்பணுக்கள் உற்பத்தியாகின்ற எலும்பு மஜ்ஜையில் ஏதேனும் பாதிப்பிருந்தாலும் ரத்தசோகை வரலாம்.

  நம் நாட்டைப் பொறுத்தவரை வைட்டமின் பி 12, இரும்புச்சத்து குறைபாட்டின் காரணமாக, ரத்த சிகப்பணுக்கள் குறைவாக உற்பத்தியாவதால் ரத்தச்சோகை பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. 

  ரத்தசோகை

  சோர்வு, பசியின்மை, சுவையின்மை, நகங்கள் உடைதல், முகம் மற்றும் நாக்கு வெளுத்துப் போதல், படபடப்பு, மூச்சுத் திணறல், முடி உதிர்தல் ஆகியவை அனீமியாவின் பொதுவான அறிகுறிகள். ஆண்களைவிட பெண்களையேஅனீமியா அதிகமாகப் பாதிக்கிறது`` என்கிறார் ரத்தவியல் நிபுணர் பிரபு. 

  ஆம், இந்தியாவில் ரத்த சோகையால் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருப்பது பெண்கள்தாம். 2016 -ம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு நடத்திய ஓர் ஆய்வில், இரண்டில் ஒரு பெண்ணுக்கு ரத்தச்சோகை பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. 2,18,200 மாதிரித் தரவுகளை வைத்து ஆய்வுசெய்ததில் இது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகத்திலும் ரத்தச்சோகையால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. `2005-06 -ல் இதன் தாக்கம் 53.2 சதவிகிதமாக இருந்தது. 2015-16 ஆண்டில் 55 சதவிகிதமாக உயர்ந்துள்ளது` எனத் தேசிய குடும்ப சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.

  `` மாதவிடாய் , கர்ப்பகாலத்தில் உண்டாகும் உதிரப் போக்கு, ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகிய மூன்றும் தான் பெண்களுக்கு ரத்தச்சோகை உண்டாவதற்கான முக்கியக் காரணங்கள். மாதவிலக்கின் போதே ஒவ்வொரு பெண்ணின் உடம்பிலிருந்தும் சராசரியாக 35 மி.லி முதல் 80 மிலிட்டர் ரத்தம் வெளியேறுகிறது. அதில் 35 கிராம் ஹீமோகுளோபின் இருக்கிறது`` என்கிறார் ரத்தவியல் நிபுணர் ரேவதி ராஜ். 

  மாதவிடாய்

  ``பெரும்பாலான பெண்கள் இரும்புச் சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதே இல்லை. அப்படியே சாப்பிட்டாலும் அடிக்கடி டீ குடிக்கும்ரேவதி ராஜ் பழக்கம் இருந்தால், உடலுக்கு  இரும்புச் சத்தை உட்கிரகிக்கும் தன்மை குறைந்துவிடும். இரும்புச் சத்தை உடல் முழுமையாக உட்கிரகிக்க இரும்புச் சத்துள்ள உணவுகளோடு, வைட்டமின் `சி' சத்துள்ள உணவுகளையும் சேர்த்துச் சாப்பிடவேண்டும். உதாரணமாக, சாப்பாட்டில் கீரை எடுத்துக்கொண்டால், சாப்பிட்டு முடித்ததும் பழங்கள் சாப்பிடவேண்டும். பழங்களில் வைட்டமின் சி அதிகமாக இருக்கிறது. சப்பாத்தி, வெல்லம் போன்றவற்றை அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

  வைட்டமின் பி 12 குறைபாடும் அனீமியா வருவதற்கு முக்கியக் காரணியாக இருக்கிறது. இது ரத்தச்சோகை பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல். நரம்பு தொடர்பான பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. பி 12 குறைபாட்டைத் தவிர்ப்பதற்கு முளைக்கட்டிய பயறு, முட்டை ஆகியவற்றைக் கண்டிப்பாக உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும், புதிதாகப் பிறக்கும் பத்தாயிரம் குழந்தைகளுக்குத் தாயிடமிருந்து அனீமியா பாதிப்பு ஒட்டிக்கொள்கிறது. பெரும்பாலும் மலைப் பகுதிகளையொட்டி வாழும் மக்களுக்கும், சைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் மக்களுக்கும் அதிகமாக இந்தப் பாதிப்பு உண்டாகிறது.
  அல்சர், குடற்புழு, மூலநோய். சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு போன்ற பிரச்னைகள் இருந்தாலும் அனீமியா உண்டாகும். பாதிப்புகளைக் கண்டறிந்து அதற்கான முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் அனீமியாவிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். `` என்கிறார் மருத்துவர் ரேவதிராஜ்.

  ரத்தத்தில் ஹீமோகுளோபினின் எண்ணிக்கை 10 கிராம் முதல் 11 கிராம் இருந்தால் லகுவானது என்றும், 7 கிராமிலிருந்து 10 கிராம் இருந்தால் மிதமானது என்றும், 4 கிராமிலிருந்து 7 கிராம் இருந்தால் தீவிரமானது என்றும், 4 கிராமுக்கும் குறைவாக இருந்தால் மிகத்தீவிரமானது என்றும் ரத்தச்சோகை பாதிப்பை வகைப்படுத்தி வைத்திருக்கிறது இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம். 
   `` அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வரும் பெரும்பாலான பெண்களுக்கு `ஹீமோகுளோபின்' எண்ணிக்கை 8 கிராமுக்கும் குறைவாகத்தான் இருக்கிறது. அதற்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஒரு காரணம். சுகாதாரக் குறைபாட்டின் காரணமாக  குடற்புழு உண்டாகி அதன் காரணமாகவும் ரத்தச்சோகை ஏற்படுகிறது`` என்கிறார் மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர் அனுரத்னா.

  குடற்புழு

   `` மண்ணில் நின்று வேலை செய்பவர்களுக்குக் குடற்புழு பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புண்டு. அதுதவிர, திறந்தவெளியிலோ மருத்துவர் அனுரத்னாபொதுக் கழிப்பிடத்திலோ மலம் கழிப்பதாலும் குடற்புழு பாதிப்பு ஏற்படும். குடற்புழுக்கள் கூட்டமாகத்தான் வசிக்கும். ஒரு நாளைக்கு ஒரு புழு சராசரியாக 0.05 மி.லி ரத்தத்தை உறிஞ்சி விடும். குடற்புழுக்களைச் சரியான நேரத்தில் கண்டறிந்து அழிக்காவிட்டால் அதிகளவில் ரத்தத்தை உறிஞ்சிவிடும். 

  ஹீமோகுளோபின் அளவு 4 கிராமுக்கும் குறைவாகப் போனால் உடல் கட்டுப்பாட்டில் இருக்காது. கை, கால், முகம் எல்லாம் வீங்கிவிடும். உறுப்புகளுக்குச் செல்லக்கூடிய ஆக்சிஜன் குறைந்து ஒவ்வொரு உறுப்பாகச் செயலிழக்கத் தொடங்கிவிடும். நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்துவிடும். எப்போதும் சோர்வாகவே இருப்பார்கள். இதயம் பலகீனமாகி மரணம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.  

  ரத்தச்சோகை அதிகரித்தால் படிப்பில் மந்தம் ,விளையாட்டில் ஆர்வமின்மை, கருத்தரிப்பதில் சிக்கல், கருக்கலைவு, குறைப்பிரசவத்தில் குழந்தை பிறத்தல் போன்ற பல பாதிப்புகள் ஏற்படும். அனீமியா பாதிப்புள்ள பெண்களுக்குப் பிரசவ நேரத்தில் கர்ப்பப்பை சுருங்கி விரியாமல் அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டு மரணம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. 

  குடற்புழுக்கள் ஏற்படாமல் தவிர்க்க கை, கால்களை அடிக்கடி கழுவவேண்டும். மலம் கழித்த பின்னர் கண்டிப்பாகக் கைகளை நன்றாகக் கழுவவேண்டும். நகம் வளர்க்கக் கூடாது. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை குடற்புழு மாத்திரைகள் எடுத்துக்கொள்ளவேண்டும்.`` என்கிறார் மருத்துவர் அனுரத்னா.

  ரத்தசோகை

  ஒவ்வொரு பள்ளிகளிலும் வியாழக்கிழமை தோறும் இலவசமாக இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கும் திட்டம் இருக்கிறது. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அங்கன்வாடி பணியாளர்களின் மூலமாகவும், கிராம சுகாதாரப் பணியாளர்களின் மூலமாகவும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் திட்டமும் இருக்கிறது. ஆனால், இந்தத் திட்டங்கள் யாவும் முறையாகச் செயல்படுத்தப்படுவதில்லை என்பதுதான் சோகம்!

  https://www.vikatan.com/news/health/135348-anemia-causes-types-symptoms-diet-and-treatment.html

 4. இது அவகாடோ ஸ்பெஷல்!

   

   

  89p1_1534921382.jpg

  ``பட்டர் ஃபுரூட், ஆனைக்கொய்யா, வெண்ணெய் பழம் என்றெல்லாம் அழைக்கப்படும் அவகாடோ, இப்போது பெரும்பாலான நகரங்களில் அனைத்து சீசன்களிலும் கிடைக்கும் பழமாகிவிட்டது. அன்றாட நார்ச்சத்து தேவையில் 40 சதவிகிதத்தை இப்பழம் பூர்த்தி செய்கிறது. அதோடு, ரத்த அழுத்தப் பிரச்னையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது. புற்றுநோயை எதிர்க்கிறது. ஆர்த்ரிடிஸ் வராமல் பாதுகாக்கிறது. சிறுநீரகப் பாதிப்பைத் தடுக்கிறது.

   

  இதன் ருசி இனிப்பாகவோ, துவர்ப்பாகவோ, புளிப்பாகவோ இருக்காது. இனிப்பில்லா பப்பாளிப் பழம் போன்ற புதிய சுவையையும் வெண்ணெய் சாப்பிடுவது போன்ற உணர்வையும் அளிக்கும். வீட்டிலேயே செய்யும் வகையில் வித்தியாசமான அவகாடோ ரெசிப்பிகளை வண்ணமயமான படங்களுடன் அளிக்கிறார் ஷார்ஜாவைச் சேர்ந்த சமையல் கலைஞர் லக்ஷ்மி வெங்கடேஷ்.

  இது ஃபுரூட்ஃபுல் சமையல்!


  89p2_1534921508.jpg

  அவகாடோ...  சில குறிப்புகள்

  அவகாடோ பழம் பச்சை நிறத்தில் உருண்டை வடிவம் முதல் பெயார்ஸ் காய் வடிவம் வரை பலவிதங்களில் கிடைக்கிறது. இதில் நல்ல கொழுப்புகள், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற சத்துகள் உள்ளன.
  ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை இப்பழம் அதிக அளவில் விற்பனைக்கு வருகிறது.

  அவகாடோவை தேர்ந்து எடுக்கும் முறை: பழத்தின் மேல் தோல் கரும்பச்சை நிறத்திலோ, பிரவுன் நிறத்திலோ இருக்க வேண்டும். பழுக்கிறபோது தோல் கருத்து வரும். சதைப் பகுதி பச்சை நிறமாக இருக்க வேண்டும். தொட்டுப் பார்க்கும்போது பழம் சற்றுக் கனமாக இருக்க வேண்டும்.  `பொதபொத’ என்று அழுந்தக்கூடாது. பழத்தின் காம்பைச் சற்று அகற்றிப் பார்த்தால் சதைப் பகுதி பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். பழத்தின் தோல் இலைப் பச்சை நிறத்தில் இருந்தால் காயாக இருக்க வாய்ப்புள்ளது.

  பயன் படுத்தும் முறை: மாம்பழத்தை நறுக்குவது போல இரண்டு பாகமாக நறுக்கினால் உள்ளே ஒரு எலுமிச்சை அளவுக்குக் கொட்டை இருக்கும். இதனை நீக்கிவிட்டு, பழத்தின் சதைப் பகுதியை ஒரு ஸ்பூனால் வழித்து எடுக்க வேண்டும். தோல் மிகவும் மெலிதாக இருக்கும். சதைப் பகுதியை மட்டும்தான் சமையலில் பயன்படுத்த வேண்டும்.


  89p3_1534921526.jpg

  அவகாடோ சப்பாத்தி வித் அவகாடோ கிரேவி

  தேவையானவை - சப்பாத்தி செய்ய:

  கோதுமை மாவு - ஒரு கப்
  அவகாடோ விழுது - ஒரு கப்
  பச்சை மிளகாய் - 2
  எண்ணெய், உப்பு - தேவையான அளவு

  கிரேவி செய்ய:

  அவகாடோ  காய் - ஒன்று (தோல் சீவி, கொட்டை நீக்கி, பெரிய துண்டுகளாக நறுக்கவும்)
  வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
  தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)
  மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள் - தலா ஒரு டீஸ்பூன்
  எண்ணெய், உப்பு - தேவையான அளவு

  செய்முறை:

  அவகாடோ விழுதுடன் பச்சை மிளகாய் சேர்த்து, தண்ணீர்விடாமல் மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். இதனுடன் கோதுமை மாவு, உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு மாவைச் சிறிய உருண்டைகளாக்கி, மெல்லிய சப்பாத்திகளாகத் தேய்க்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, சப்பாத்திகளைப் போட்டுச் சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

  வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.   அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கவும். பிறகு அவகாடோ துண்டுகள், சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்துக் கிளறி, மூடிபோட்டு ஐந்து நிமிடங்கள் வேகவைத்து இறக்கவும். இந்த கிரேவியை அவகாடோ சப்பாத்தியுடன் பரிமாறவும்.


  89p4_1534921542.jpg

  அவகாடோ மஃபின் வித் அவகாடோ ஃக்ரீம் சீஸ் ஃப்ரோஸ்டிங்

  தேவையானவை:

   கோதுமை மாவு - ஒரு கப்
   மைதா மாவு - ஒன்றே கால் கப்
   பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்
   பேக்கிங் சோடா - ஒரு டீஸ்பூன்
   அவகாடோ விழுது - ஒரு கப்
   முட்டை - 2
   சர்க்கரை - ஒரு கப்
   மோர் - ஒரு கப்
   வெண்ணெய் - கால் கப்
   தண்ணீர் - அரை கப்
   வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்
   உப்பு - அரை டீஸ்பூன்

  ஃப்ரோஸ்டிங் செய்ய

   குளிர்ந்த விப்பிங் க்ரீம் - கால் கப்
   க்ரீம் சீஸ் - 2 கப்
   அவகாடோ விழுது - ஒரு கப்
   ஐசிங் சுகர் - 3 கப்
   எலுமிச்சைத் தோல் துருவல் - ஒரு பழத்தின் துருவல் (பழத்தின் தோலை மேலாகத் துருவவும். கீழே இருக்கும் வெள்ளை பாகத்தைத் துருவக் கூடாது)
   எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்
   வெனிலா எசென்ஸ் - அரை டீஸ்பூன் (விரும்பினால்)

  செய்முறை:

  பேக்கிங் அவனை 80 டிகிரியில் 20 நிமிடங்கள் `ப்ரீஹீட்’ செய்யவும்.  மஃபின் ட்ரேயில்  மஃபின் பேப்பர் கப்புகளைப் போட்டு வைக்கவும். மைதா மாவுடன் கோதுமை மாவு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து இரண்டு முறை சலித்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும். அதனுடன் வெண்ணெய், மோர், அவகாடோ விழுது, சர்க்கரை, வெனிலா எசென்ஸ் தண்ணீர் சேர்த்து எக் பீட்டரால் நன்கு அடிக்கவும். மாவுக் கலவையை முட்டைக் கலவையுடன் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கட்டி தட்டாமல் மெதுவாகக் கலக்கவும்.  பிறகு, மாவுக் கலவையை மஃபின் கப்களில் பாதியளவுக்கு ஊற்றவும்.  இதை ப்ரீஹீட் செய்த பேக்கிங் அவனுக்குள் (baking oven) வைத்து 8 முதல் 20 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும் (டூத்பிக்கால் மஃபின் நடுவே குத்தி வெந்துவிட்டதா எனப் பார்க்கவும். டூத்பிக்கில் மாவு ஒட்டாமல் வந்தால், மஃபின் வெந்துவிட்டது என்று அறியலாம்). பிறகு வெளியே எடுத்து 20 நிமிடங்கள் ஆறவிடவும்.  

  ஃப்ரோஸ்டிங் செய்யக் கொடுத்துள்ள க்ரீமை எலெக்ட்ரிக் பீட்டரால் 5 நிமிடங்கள் நன்றாக அடிக்கவும். அதனுடன் ஐசிங் சுகர், அவகாடோ விழுது, எலுமிச்சைத் தோல் துருவல், எலுமிச்சைச் சாறு, வெனிலா எசென்ஸ் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் நன்றாக அடித்து எடுக்கவும். இதை `பைப்பிங் பேக்’கில் ஊற்றி, ஆறிய மஃபின்கள் மீது பைப் செய்து பரிமாறவும்.


  89p5_1534921573.jpg

  அவகாடோ க்ரீம்

  தேவையானவை:

   குளிர்ந்த விப்பிங் க்ரீம் - 500 மில்லி
   ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு கப்
   அவகாடோ விழுது - ஒரு கப்
   அவகாடோ துண்டுகள் - கால் கப்
   ஐசிங் சுகர் - ஒரு கப்
   வெனிலா எசென்ஸ் - அரை  டீஸ்பூன் (விரும்பினால்)

  செய்முறை:

  விப்பிங் க்ரீமை எலெக்ட்ரிக் பீட்டரால் நன்கு அடிக்கவும். சிறிது நேரம் கழித்து  அதனுடன் ஐசிங் சுகர் சேர்த்து, பஞ்சு போல வரும் வரை அடித்து எடுக்கவும் (ஒரு தட்டில் வைத்துத் தலைகீழாக கவிழ்த்தால் அது கீழே விழாமல் இருக்க வேண்டும்). அதனுடன் ஃப்ரெஷ் க்ரீம், அவகாடோ விழுது, வெனிலா எசென்ஸ் சேர்த்து மீண்டும் அடிக்கவும். இந்தக் கலவையை ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும். பிறகு அதனுடன் அவகாடோ துண்டுகள் சேர்த்து கட் அண்டு ஃபோல்டு முறையில் மெதுவாகக் கலக்கவும் (நன்கு அழுத்தாமல் மென்மையாகக் கலக்கவும்).

  விருப்பம்போல் நறுக்கிய அவகாடோ பழத்துண்டுகளை மேலே வைத்து அலங்கரித்தும் பரிமாறலாம்.

  குறிப்பு:

  அவகாடோவைப் பாதியாக நறுக்கி, உள்ளிருக்கும் கொட்டைகளை நீக்கி,  உள்ளிருக்கும் சதைப்பகுதியை ஒரு ஸ்பூனால் ஸ்கூப் செய்து எடுக்கவும். அவகோடா விழுது தயாரிக்க அவகாடோவின் சதைப்பகுதியுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து எடுக்கவும்.


  89p6_1534921590.jpg

  அவகாடோ ஸ்பினச் லச்சா பராத்தா

  தேவையானவை:

   கோதுமை மாவு - ஒரு கப்
   அவகாடோ விழுது - ஒரு கப்
   பாலக்கீரை - ஒரு கட்டு (நறுக்கவும்)
   பச்சை மிளகாய் - 2
   ஓமம் - கால் டீஸ்பூன்
   வறுத்த சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
   நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு

  செய்முறை:

  பாலக்கீரையுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேகவைத்து வடியவிடவும். அதனுடன் அவகாடோ விழுது, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். கோதுமை மாவுடன், உப்பு, சீரகத்தூள், ஓமம், நெய், அரைத்த விழுது, தேவையானால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும். பிறகு, மாவைச் சிறிய உருண்டைகளாக்கி மெல்லிய சப்பாத்திகளாகத் திரட்டவும். அதன் மீது எண்ணெய் அல்லது நெய் தடவி, சிறிதளவு கோதுமை மாவைத் தூவவும். சப்பாத்தியின் இரு ஓரங்களையும் பிடித்துக்கொண்டு விசிறி போல மடித்து வட்டமாகச் சுருட்டவும். பிறகு, உருண்டைகளை உள்ளங்கையில் வைத்து அழுத்தி, சற்றுக் கனமான பராத்தாக்களாகத் திரட்டவும். தோசைக்கல்லைக் காயவைத்துத் திரட்டிய பராத்தாக்களைப் போட்டுச் சுற்றிலும் நெய் அல்லது எண்ணெய்விட்டு, இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். சூடாகப் பரிமாறவும்.


  89p7_1534921605.jpg

  அவகாடோ ஐஸ்க்ரீம்

  தேவையானவை:

   அவகாடோ விழுது - ஒரு  கப்
   குளிர்ந்த விப்பிங் க்ரீம் - ஒரு கப்
   சர்க்கரை - ஒரு கப்
   வெனிலா எசென்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
   பொடியாக நறுக்கிய நட்ஸ் கலவை (பாதாம், பிஸ்தா, வால்நட்) - கால் கப்

  செய்முறை:

  சிறிதளவு நட்ஸ் கலவையை அலங்கரிக்க தனியாக எடுத்து வைக்கவும். விப்பிங் க்ரீமை எலெக்ட்ரிக் பீட்டரால் நன்கு அடிக்கவும். சிறிது சிறிதாக சர்க்கரை சேர்த்து, பஞ்சு போல வரும் வரை மேலும் அடிக்கவும் (ஒரு தட்டில் வைத்துத் தலைகீழாக கவிழ்த்தால் அது கீழே விழக் கூடாது). அதனுடன் அவகாடோ விழுது, வெனிலா எசென்ஸ் சேர்த்து மீண்டும் அடிக்கவும். பிறகு நட்ஸ் சேர்த்து கட் அண்டு ஃபோல்டு முறையில் மெதுவாகக் கலக்கவும் (நன்கு அழுத்தாமல் மென்மையாகக் கலக்கவும்).

  இதனை மூடி ஃப்ரீசரில் ஆறு மணி நேரம் வைத்து எடுக்கவும். ஐஸ்க்ரீம் ஸ்கூப்பரால் பந்து போல் உருட்டி எடுத்து ஐஸ்க்ரீம் பவுலில் வைத்து, மேலே அலங்கரிக்க வைத்துள்ள நட்ஸ் தூவிப் பரிமாறவும்.


  89p8_1534921621.jpg

  சேவரி அவகாடோ பேன்கேக்

  தேவையானவை:

   கோதுமை மாவு - ஒன்றரை கப்
   மைதா மாவு - கால் கப்
   அவகாடோ விழுது -  ஒரு  கப்
   கேரட் துருவல் - அரை கப்
   பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
   மோர் - 2 கப்
   மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
   பேக்கிங் பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன்
   பேக்கிங் சோடா – அரை  டேபிள்ஸ்பூன்
   எண்ணெய், உப்பு - தேவையான அளவு

  செய்முறை:

  வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு வெங்காயம், கேரட், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கி இறக்கி ஆறவிடவும். கோதுமை மாவுடன் மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலக்கவும். அதனுடன் அவகாடோ விழுது, வதக்கிய கலவை, மோர் சேர்த்து நன்கு கெட்டியாகக் கலக்கவும்.  தோசைக்கல்லைக் காயவிட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவைச் சிறிய தோசைகளாக ஊற்றிச் சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.


  89p9_1534921635.jpg

  க்ரீன் டிடோக்ஸ் ஸ்மூத்தி

  தேவையானவை:

   அவகாடோ  - பாதியளவு
   வெள்ளரிக்காய் - பாதியளவு (தோலுரித்து, துண்டுகளாக்கவும்)
   பாலக்கீரை - அரை கப்
   தோல் சீவிய இஞ்சி - அரை இன்ச் துண்டு
   நறுக்கிய கொத்தமல்லித்தழை - கால் கப்
   ஆளிவிதை (Flaxseeds) பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்
   வறுத்த சீரகத்தூள், மிளகுத்தூள் - தலா அரை டீஸ்பூன்
   எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்
   ஐஸ் க்யூப்ஸ் - சிறிதளவு
   குளிர்ந்த தண்ணீர் - ஒரு கப்
   உப்பு - தேவையான அளவு

  செய்முறை:

  அவகாடோவின் சதைப்பகுதியுடன் வெள்ளரிக்காய், பாலக்கீரை,   இஞ்சி, கொத்தமல்லித்தழை, ஆளிவிதைப் பொடி, உப்பு,   சீரகத்தூள், மிளகுத்தூள்   ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். அதனுடன் எலுமிச்சைச் சாறு, குளிர்ந்த தண்ணீர், ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து மீண்டும் ஒரு சுற்று அடித்து எடுத்து, டம்ளரில் ஊற்றிப் பரிமாறவும்.


  89p10_1534921651.jpg

  அவகாடோ ஸ்வீட் லஸ்ஸி

  தேவையானவை:

   அவகாடோ - ஒன்று (தோல், கொட்டை நீக்கி, சதைப்பகுதியை எடுக்கவும்)
   சர்க்கரை - 5 டேபிள்ஸ்பூன்
   காய்ச்சி ஆறவிட்டு, குளிரவைத்த பால் - ஒரு கப்
   குளிர்ந்த நீர் - ஒரு கப்
   ஐஸ் க்யூப்ஸ் - சிறிதளவு

  செய்முறை:

  அவகாடோ சதைப்பகுதியுடன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். அதனுடன் பால், குளிர்ந்த நீர், ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து மீண்டும் ஒரு சுற்று அடித்து, டம்ளரில் ஊற்றிப் பரிமாறவும்.


  89p11_1534921665.jpg

  அவகாடோ கேசடியா

   தேவையானவை - மேல் மாவு செய்ய:
   மைதா மாவு -  2 கப்
   உப்பு - தேவையான அளவு
   ஸ்டஃபிங்க் செய்ய:
   அவகாடோ - ஒன்று (தோல் சீவி, கொட்டை நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கவும்)
   உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட் - தலா ஒன்று (தோல் சீவி, துண்டுகளாக்கவும்)
   வேகவைத்த ராஜ்மா - கால் கப்
   எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
   மோசரெல்லா சீஸ் துருவல் - அரை கப்
   மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
   டொமேட்டோ கெட்சப் - 3 டீஸ்பூன்
   மயோனைஸ் - 3 டீஸ்பூன்
   புதினா சட்னி - 3 டேபிள்ஸ்பூன்
   உப்பு - தேவையான அளவு

  புதினா சட்னி செய்ய:

   புதினா - கால் கட்டு
   கொத்தமல்லித்தழை - ஒரு கட்டு
   பச்சை மிளகாய் - 2
   க்ரீம் சீஸ் (அ) தயிர் - 3 டேபிள்ஸ்பூன்
   சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
   உப்பு - தேவையான அளவு

  செய்முறை:

  புதினாவுடன் கொத்தமல்லித்தழை, சீரகத்தூள், பச்சை மிளகாய் சேர்த்துச் சிறிதளவு தண்ணீர் தெளித்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். அதனுடன் உப்பு, க்ரீம் சீஸ் அல்லது தயிரைச் சேர்த்து, மீண்டும் சட்னி பதத்துக்கு அரைத்தெடுக்கவும்.  இதுவே புதினா சட்னி. மைதா மாவுடன் உப்பு, சிறிதளவு நீர் சேர்த்துச் சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். மயோனைஸுடன் டொமேட்டோ கெட்சப் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

  பிசைந்த மாவைச் சிறிய உருண்டைகளாக்கி மெல்லிய சப்பாத்திகளாகத் தேய்க்கவும். தோசைக்கல்லைச் சூடாக்கி எண்ணெய்விட்டு, தேய்த்த சப்பாத்திகளைப் போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். காய்கறிகளுடன் உப்பு சேர்த்து வேகவிடவும். உருளைக்கிழங்கை நன்றாக மசிக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், வேவைத்த ராஜ்மா, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். ஒரு சப்பாத்தியின் மீது 2 டேபிள்ஸ்பூன் புதினா சட்னி தடவவும். மற்றொரு சப்பாத்தியின் மீது 2 டேபிள்ஸ்பூன் கெட்சப் கலவையைப் பரப்பவும். அதன் மீது தேவையான அளவு வேகவைத்த காய்கறி கலவை, அவகாடோ துண்டுகள் வைத்து, மேலே சிறிதளவு சீஸ் துருவலை தூவவும். இதன் மீது புதினா தடவிய சப்பாத்தியை வைத்து மூடவும். அதன் மேலே சிறிதளவு வெண்ணெய் தடவவும். இதை கிரில் செய்து டூபிக்கால் குத்திப் பரிமாறவும்.


  89p12_1534921683.jpg

  குயாகாமோல்

  தேவையானவை:

   நன்கு பழுத்த அவகாடோ - ஒன்று (தோல், கொட்டை நீக்கி, சதைப்பகுதியை எடுக்கவும்)
   எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்
   வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
   நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
   பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
   உப்பு - தேவையான அளவு

  செய்முறை:

  அவகாடோ சதைப்பகுதியைக் கரண்டியால் நன்கு மசிக்கவும். அதனுடன் உப்பு, எலுமிச்சைச் சாறு, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கவும். இதனை சப்பாத்தி, பிரெட் உடன் பரிமாறவும்.


  89p13_1534921700.jpg

  அவகாடோ கேசரி

  தேவையானவை:

   ரவை - அரை கப்
   அவகாடோ விழுது - ஒரு கப்
   சர்க்கரை - ஒன்றேகால் கப்
   வெந்நீர் - ஒன்றரை கப்
   பச்சை ஃபுட் கலர் - கால் டீஸ்பூன்
   டூட்டி ஃப்ரூட்டி - 2 டீஸ்பூன்
   ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
   நெய் - கால் கப்

  செய்முறை:

  தண்ணீரை நன்கு கொதிக்கவிடவும். அடிகனமான பாத்திரத்தில் நெய்விட்டுச் சூடாக்கி, ரவையைச் சேர்த்து வறுக்கவும். பிறகு அடுப்பை சிறு தீயில் வைத்து, வெந்நீர் ஊற்றிக் கிளறவும். அதனுடன் அவகாடோ விழுது சேர்த்துக் கட்டிகள் இல்லாமல் கிளறி வேகவிடவும். பிறகு சர்க்கரை, ஏலக்காய்த்தூள், பச்சை ஃபுட் கலர் சேர்த்துக் கிளறவும். அவகாடோ கேசரி வெந்து பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது டூட்டி ஃப்ரூட்டி தூவிக் கிளறி இறக்கவும்.

  89p14_1534920962.jpg

  https://www.vikatan.com

 5. 110. உறவறுக்கும் நேரம்

   

   

  ‘தயவுசெய்து அண்ணாவை கேலி செய்து பேசாதே’ என்று வினோத் என்னிடம் சொன்னான். உண்மையில் என் நோக்கம் அதுவல்ல என்றாலும், வினோத்துக்கு அவன் மீதிருந்த லயிப்பும் சிலிர்ப்பும் நிச்சயமாக எனக்கு இல்லை என்பதை அவனுக்குத் தெரியப்படுத்திவிட விரும்பினேன். ஆனால், ஒவ்வொரு முறை நான் அதைச் சொல்ல ஆரம்பிக்கும்போதும் அவன் அண்ணாவைப் பற்றி என்னவாவது ஒரு கதையை எடுத்து விரித்துவிடத் தயாராக இருந்தான்.

  ஒரு சமயம் அவன் தங்கியிருந்த மாயாபூர் கோயிலையும் அதனை ஒட்டிய இஸ்கான் கட்டடங்களையும் விஸ்தரிக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஆரம்பத்தில் எல்லாம் முன்புற ஓலைச் சரிவு போடப்பட்ட எளிய கட்டடங்களாகத்தான் இருந்தன என்று வினோத் சொன்னான். பிறகு பக்தர்கள் பெருகத் தொடங்கினார்கள். வெளிநாட்டு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. அதனை ஒட்டிப் பணவரவும் அதிகரித்தது. கிருஷ்ணரையும் பலராமரையும் ராதையையும் இன்னும் சற்று வசதியாக வாழவைக்கலாமே. கட்டுமான வேலைகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஓர் இளம் சன்னியாசியாக வினோத் தனது சக கிருஷ்ண பக்த சன்னியாசிகளோடு சேர்ந்து அதனை மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்திருக்கிறான். பகல் முழுதும் வெயிலில் நின்றுவிட்டு களைத்துப் போய் மதியம் மூன்று மணி சுமாருக்கு ஒரு மரத்தடியில் வந்து அமர்ந்தான். அது ஒரு அரச மரம். ஆனால், அவன் அம்மரத்தடியில் அமர்ந்தவுடன் மரத்தின் மீதிருந்து ஒரு மாம்பழம் விழுந்ததாக வினோத் சொன்னான்.

  திடுக்கிட்டு அவன் மேலே பார்த்தபோது அங்கு யாரும் இல்லை. அரச மரத்தில் மாம்பழம் பழுக்கவும் வாய்ப்பில்லை. என்றால் பழம் எங்கிருந்து வந்திருக்கும்? அதிக நேரம் யோசித்துக்கொண்டிருக்கப் பசி இடம் தராததால், அவன் பழத்தை எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தான். சாப்பிட்டு முடிக்கும்வரை அவனுக்கு அந்த வியப்புத் தீரவில்லை. அது கிருஷ்ணரே அளித்த உணவு என்றுதான் நினைத்தான். ஆனால் உண்டு முடித்தபின் அவனை நோக்கி ஒரு காகித அம்பு பறந்து வந்து விழுந்திருக்கிறது. எடுத்துப் பார்த்தால் அது ஒரு ஒற்றை வரிக் கடிதம்.

  ‘நீ பசித்திருக்கிறாய். ஆனால் ஆசிரமத்தில் உணவு தீர்ந்துவிட்டது. அதனால்தான் பழத்தை அனுப்பிவைத்தேன். இரவு உனக்குரிய சப்பாத்திகள் கிடைக்கும்போது மறக்காமல் அதில் இரண்டை வீதியில் காத்திருக்கும் பிச்சைக்காரனுக்குப் போட்டுவிடு’ என்று எழுதியிருக்கிறது.

  ‘அந்தக் கணம் அந்தக் கடிதத்தை எழுதியது அண்ணாதான் என்று என் மனத்துக்குள் தீர்மானமாகத் தெரிந்துவிட்டது’ என்று வினோத் சொன்னான்.

  ‘இது என்ன அநியாயம்? அது ஏன் கிருஷ்ண பரமாத்வாவாகவே இருக்கக் கூடாது?’

  ‘இல்லை. என் மனத்தில் எப்போதாவது இப்படி ஒன்று தோன்றும். அது சரியாக இருக்கும். திருமணத்துக்கு முதல் நாள் உறக்கத்தில் கிருஷ்ணனைப் பார்த்தேன் என்றேனே, அதுவும் இப்படித்தான்’.

  ‘எப்படி?’

  ‘உறக்கத்தில் ஒரு பெரிய ஒளிக்கோளம் எனக்குத் தென்பட்டது’ என்று அவன் ஆரம்பித்ததுமே, ‘அது ஏன் சிவனாக இருக்கக் கூடாது?’ என்று வினய் கேட்டான்.

  ‘இல்லை. அதைத்தான் சொல்ல வருகிறேன். அந்த ஒளிக்கோளம் என் கண்ணில் தென்பட்டதுமே அது கிருஷ்ணன் என்று என் மனத்தில் ஒரு குறிப்பு உண்டாகிவிட்டது. எனவே அதை நான் கிருஷ்ணனாக மட்டுமே பார்த்தேன்’.

  ‘அவன் கையில் குழல் இருந்ததா? தலையில் மயிலிறகு சொருகியிருந்தானா? உண்மையிலேயே அவன் நீலமாகத்தான் இருந்தானா?’

  ‘எதுவுமே இல்லை. வெறும் ஒளி. ஒளிப்பந்து. அவ்வளவுதான். இறைவனுக்கு நாம் எப்படி உருவம் தர இயலும்? நாம் தரும் உருவத்தை மனிதப் பிறவியல்லாத இன்னொரு உயிரினம் எப்படிக் கொடுக்கும்?’

  ‘நியாயம். அதனால்தான் அவன் பன்றிகளுக்கு வராகமாகவும் நாய்களுக்கு பைரவராகவும் காட்டு மிருகங்களுக்கு நரசிம்மமாகவும் கடல்வாழ் உயிரினங்களுக்கு மச்சமாகவும் ரெடிமேட் அவதாரங்கள் எடுத்து வைத்திருக்கிறான்’.

  ‘கிண்டல் வேண்டாம்’ என்று வினோத் மீண்டும் சொன்னான்.

  ‘ஆனால் உங்கள் இயக்கத்தில் உருவ வழிபாடுதானே நடக்கிறது? எனக்கென்னவோ வடக்கத்தி உருவச் சிலைகளைக் கண்டால் பக்தியே வருவதில்லை’ என்று வினய் சொன்னான்.

  ‘உணர்ந்தவனுக்கு உருவம் அநாவசியம். உணரும் வரை எல்லாமே அவசியம்’ என்று வினோத் சொன்னான்.

  வேறொரு சமயம் அவன் கல்கத்தாவில் ஹூப்ளி நதிக்கரை ஓரம் நடந்துகொண்டிருந்தபோது இளம் துறவி ஒருவரைச் சந்தித்திருக்கிறான். மிஞ்சினால் பத்தொன்பது அல்லது இருபது வயதுக்கு மேல் அவருக்கு இராது. கரையோரம் அமர்ந்துகொண்டிருந்த அந்த இளம் துறவி, சட்டென்று எழுந்து நதிப்பரப்பின் மீது நடந்துசெல்ல ஆரம்பித்ததும் வினோத் திகைத்துவிட்டான். அதற்கு மேல் அவனால் நடக்க முடியவில்லை. நீரின் மீது நடந்துசெல்லும் துறவியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு நின்றிருக்கிறான். அவரும் நடைப்பயிற்சிக்காகத்தான் வந்திருக்க வேண்டும். ஒரு மாறுதலுக்குத் தண்ணீரின் மீது நடந்துவிட்டு அரை மணியில் கரை திரும்பிவிட்டார்.

  ஆர்வம் தாங்கமாட்டாமல் வினோத் அவரிடம் ஓடிச் சென்று, ‘சுவாமி..’ என்று அழைத்தான்.

  திரும்பிப் பார்த்துப் புன்னகை செய்த அந்த இளம் துறவி, ‘நீங்கள் யதுநந்தன தாஸ் அல்லவா? வாருங்கள். உங்களுக்காகத்தான் காத்திருக்கிறேன்’ என்று சொன்னார். வினோத்தால் நம்பவே முடியவில்லை. ‘எனக்காகவா? என்னை எப்படி நீங்கள் அறிவீர்கள்?’

  ‘உங்கள் அண்ணா சொல்லியிருக்கிறார்’ என்று அவர் சொன்னார்.

  ‘அண்ணாவை உங்களுக்குத் தெரியுமா?’

  ‘நான் அவரது மாணவன்’.

  ‘அப்படியா? நீங்கள் நீரின் மீது நடப்பதைக் கண்டேன்’.

  அவர் புன்னகை செய்தார். ‘இது சில மூச்சுப் பயிற்சிகளின் மூலம் சாத்தியமாவது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் அனைத்தையும் மூச்சுக் காற்றின் மூலம் கட்டி ஆளலாம். ஆனால், யோகம் என்பது அதைத் தாண்டி நெடுந்தூரம் செல்ல வேண்டியது. நான் வெறும் பாலகன்’.

  ‘அண்ணா எப்படி இருக்கிறான்? அவன் எங்கே இருக்கிறான் என்று தெரியுமா? என்னை அழைத்துச் செல்வீர்களா?’

  ‘மன்னியுங்கள். எனக்கு அதற்கு அனுமதியில்லை. ஆனால் உங்கள் அண்ணா உங்களை ஒருவாரம் திட உணவு எதையும் உட்கொள்ள வேண்டாம் என்று சொல்லச் சொன்னார்’,

  வினோத்துக்கு வியப்பாகிவிட்டது. ‘ஏன்?’ என்று கேட்டான்.

  ‘உங்களுக்கு ஒரு விஷக்காய்ச்சல் வரவிருக்கிறது. மருந்து சாப்பிட்டு, ஓய்வெடுத்து குணப்படுத்தப் பார்த்தால், ஒரு மாத காலத்துக்கு அது இருந்துவிட்டுப் போகும். மாற்று வழியாக நாளை முதல் ஒரு வார காலத்துக்கு துளசி தீர்த்தம் மட்டும் குடித்து வந்தால், எட்டாம் நாள் அது சரியாகிவிடும் என்று அவர் சொல்லச் சொன்னார்’.

  ‘அப்படியா? வெறும் நீர் அருந்தி என்னால் பிழைத்திருக்க முடியுமா? அதுவும் ஒருவாரம்’.

  ‘முடியும். உங்களுக்கு மட்டுமல்ல. உங்களுடைய இன்னொரு சகோதரருக்கும் நாளை முதல் அதே காய்ச்சல் தாக்கும்’ என்று அந்த இளம் துறவி சொன்னதாக வினோத் சொன்னபோது, வினய், ‘டேய் அது நாந்தான்’ என்று கத்தினான்.

  நான் சிரித்துவிட்டேன்.

  ‘வினய், என்ன ஒரு ஓரவஞ்சனை பார். அவனுக்கு வைத்தியம் சொன்னவன் உன்னை அம்போவென்று விட்டுவிட்டான்’.

  ‘உண்மையாகவா? உனக்கும் விஷக்காய்ச்சல் வந்ததா?’ என்று வினோத் கேட்டான்.

  ‘ஆம். ஒரு மாதம். சரியாக ஒரு மாதம். கிட்டத்தட்ட இறந்து மீண்டேன்’ என்று வினய் சொன்னான்.

  ‘ஆனால் நான் அண்ணா சொன்ன துளசி தீர்த்தத்தை மட்டுமே ஒரு வாரம் அருந்தி வந்தேன். எட்டாம் நாள் காய்ச்சல் போய்விட்டது’ என்று சொன்னான்.

  ‘அந்த இளம் துறவியை நீ மீண்டும் சந்தித்தாயா? அண்ணாவிடம் உன்னைக் கூட்டிச் சென்றானா?’ என்று கேட்டேன்.

  ‘இல்லை. அப்போது அது நடக்கவில்லை. ஆனால் நான் அண்ணாவை வேறொரு சந்தர்ப்பத்தில் சந்தித்தேன்’.

  ‘எங்கே? எப்போது?’

  ‘கயாவில் அவன் அப்பாவுக்கு சிராத்தம் செய்ய வந்திருந்தான்’.

  எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்பாவுக்கு சிராத்தம் செய்திருக்கிறான். தம்பிகளை எந்நேரமும் கண்காணித்துக்கொண்டிருந்திருக்கிறான். என்னை மட்டும் கண்டுகொள்ளவில்லை என்றாலும் மற்ற அனைவரையும் அவன் பொருட்படுத்தாமல் இல்லை. யார் கண்டது? கேசவன் மாமாவுக்குக்கூட அவன் ஏதேனும் செய்திருக்கலாம். அம்மாவுக்கும்கூட.

  ‘வினோத், இப்போதும் சொல்கிறேன். எனக்கென்னவோ அவன் யோகியாகித் தவம் செய்யப் போனவனாகத் தோன்றுவதே இல்லை. அரபு தேசத்தில் வேலை கிடைத்துப் போய் அங்கிருந்து பணம் அனுப்பும் ஒரு நல்ல மூத்த மகனாகத்தான் தோற்றமளிக்கிறான். கல்யாணம் மட்டும்தான் பண்ணிக்கொள்ளவில்லை. மற்றபடி நம் அப்பா அம்மாவைவிட அவன் பெரிய குடும்பி என்றுதான் தோன்றுகிறது’.

  ‘இல்லை விமல். நீ நினைப்பது தவறு. அவன் பெரிய யோகி. மிகப்பெரிய மகான். முக்காலமும் அறிந்தவன். ஒன்று தெரியுமா? அம்மாவின் மரணத்தை அவன் எனக்குப் பத்து வருடங்களுக்கு முன்னதாகத் தெரிவித்திருக்கிறான். தேதி, நாள், கிழமை, நேரம் உள்பட’.

  ‘அப்படியா? அம்மா எப்போது இறப்பாள்?’

  ‘இன்று செவ்வாய் அல்லவா? வியாழன் இரவு பதினொன்று இருபத்தெட்டுக்கு அவள் காலமாவாள். வெள்ளி காலை ஏழு மணிக்குத் தகனம் நடக்கும்’.

  நானும் வினய்யும் பேச்சற்றுப் போனோம். வினய்தான் முதலில் சுதாரித்து, மெல்லக் கேட்டான், ‘அவன் வருவானல்லவா?’

  ‘நிச்சயமாக வருவான். அவளுக்குக் கொள்ளி வைப்பதோடு குடும்ப உறுப்பினர்களுடனான தொடர்பு முடிந்துவிடும் என்று சொல்லியிருக்கிறான்’.

  (தொடரும்)

  http://www.dinamani.com/junction/yathi/2018/aug/17/110-உறவறுக்கும்-நேரம்-2982199.html

 6. ரத்த மகுடம் : பிரமாண்டமான சரித்திரத் தொடர்

   

   

  கே.என்.சிவராமன் - 16

  ஓவியம்: ஸ்யாம்

  வாளைச் சுழற்றியபடியே தன் புரவியை சிவகாமி திருப்பினாள். அவளுக்குப் பக்கவாட்டில் இருந்த குதிரையின் மீது முண்டமாக ஒருவன்  சாய்ந்தான்... தரையில் விழுந்தான். கழுத்திலிருந்து பெருகிய குருதி புற் களைச் சிவப்பாக்கியது.அவனைத் தொடர்ந்து வந்த நான்கு  வீரர்களை சில கணங்களில் கரிகாலன் செயலிழக்க வைத்து விரட்டினான். ஆயுதங்களைப் பறிகொடுத்து தலைதெறிக்க அவர்கள்  குதிரைகளில் பறப்பதைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது.இருவரும் தத்தம் புரவிகளில் அமர்ந்தபடி வட்டமாகச் சுற்றினார்கள். சருகுகள்  மிதிபடும் ஓசையைத் தவிர அமைதியே அங்கு நிலவியது. பறவைகள் ஏதும் சடசடவென மிரண்டு பறக்கவில்லை. கரிகாலன்  புன்னகையுடன் சிவகாமியை ஏறிட்டான். ‘‘நளினமும் ரவுத்திரமும் உன் வாள் வீச்சில் தெரிகிறது!’’‘‘பெருமை எல்லாம் கற்றுத் தந்த  ஆசானுக்குப் போய்ச் சேர வேண்டும்...’’ பதிலளித்த சிவகாமியின் குரலிலும் முகத்திலும் ஒருசேர கடுமை பரவியது.
  6.jpg
  கொதிப்பவளை ஆற்றுப்படுத்த புரவியுடன் நெருங்க முற்பட்டான். ஆமாம், முயன்றான். அதற்குள் அவனைச் சுமந்த குதிரையும் சிவகாமி  அமர்ந்திருந்த புரவியும் ஒருசேர தலையை உயர்த்தி கனைத்தன.இருவருக்கும் வரும் சிக்கல் புரிந்தது. அவர்களது புரவிகள் அதை  உணர்த்தின. தங்களுக்கு வரும் ஆபத்தை மட்டுமல்ல, பருவநிலை மாற்றங்களையும் தாவரங்களாலும் விலங்குகளாலும் உணர முடியும்.  தங்கள் ‘சகஹிருதயர்களுக்கு’ அவற்றைத் தெரிவிக்கவும் முடியும்.படைப்பின் ரகசியம் இது. இத்தனைக்கும் தாவரங்களின் வேர்கள்  தனித்தனிதான். இரு மரங்கள் போதுமான இடைவெளிவிட்டு ஒன்றை ஒன்று தொடாமல், நெருங்காமல் வளர்ந்திருக்கும்தான். என்றாலும்  ஒரு மரம் வெட்டப்படும்போது, தனக்கு வந்திருக்கும் ஆபத்தை குறிப்பிட்ட தொலைவு வரை வளர்ந்திருக்கும் அனைத்து மரங்களுக்கும் அது  அறிவிக்கும். அதுநாள்வரை, தான் சேமித்து வைத்திருந்த சக்திகளை உடனே மற்றவற்றுக்கு கடத்தும். அவற்றைத் தப்பிக்கச் சொல்லி  செய்தி அனுப்பும்.

  இதே தன்மை விலங்குகளுக்கும் உண்டு. குறிப்பாக, மனிதர்களால் வளர்க்கப்படும் விலங்குகளுக்கு. இவை தங்களுக்கு வரும் ஆபத்தை மட்டுமல்ல... தங்கள் எஜமானர்களுக்கு வரும் சிக்கல்களையும் முன்கூட்டியே உணர்ந்து எச்சரிக்கும். போலவே, தங்களைப்  போன்ற சக விலங்குகளுக்கு ஓர் ஆபத்து அல்லது நோய் என்றால் அதை முதன்முதலில் உணர்பவையும் இவைதான்.கரிகாலனும் சிவகாமியும் அமர்ந்திருந்த புரவிகள் அந்த நேரத்தில் கனைத்தது இதன் ஒருபகுதிதான். இருவருமே அசுவசாஸ்திரிகளாக  இருந்ததால் குதிரைகளின் மொழி அவர்களுக்குப் புரிந்தது. எனவே, வருவது ஆபத்தல்ல... மாறாக, ஏதோ ஒரு புரவிக்கு சிக்கல்  எழுந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு இறங்கினார்கள். தங்கள் வாட்களை இடுப்பில் சொருகிக் கொண்டார்கள். உன்னிப்பாகத்  தங்களைச் சுற்றிலும் நோட்டமிட்டார்கள்.

  கணங்கள் கடந்தன. அவர்கள் ஏறி வந்த புரவிகள் நிலைகொள்ளாமல் தவித்தன. எட்டு கால்களையும் முன்னும் பின்னுமாக நகர்த்தின.  கனைப்பின் வேகம் அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்தன.கரிகாலனும் சிவகாமியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ‘‘இரு... என்னவென்று பார்த்து வருகிறேன்!’’ அவளிடம் சொல்லி விட்டு அடர்ந்த வனத்துக்குள் அவன் நகர முற்பட்டபோது, எதிரே இருந்த  புதர் பக்கம் சலசலப்பு எழுந்தது. இருவரும் தங்கள் பார்வையை அந்தத் திக்கில் பதித்தார்கள். தள்ளாட்டத்துடன் குதிரை ஒன்று மெல்ல  மெல்ல இரண்டாள் உயர செடி, கொடிகளை விலக்கியபடி வந்தது. அதன் மீது வயதான ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். வயது அறுபதுக்கு  மேல் இருக்கும். மார்பு வரை வெண்மை நிறத் தாடி புரண்டிருந்தது. அதனுடன் போட்டி போடும் வகையில் வெள்ளை நிற தலைக் கேசம்.

  அவர் கண்களில் மரணபயம் தென்படவில்லை. ஆனால், தான் அமர்ந்திருக்கும் புரவியின் நிலை அவருக்குப் புரிந்திருந்தது. எப்போது  வேண்டுமானாலும் தன்னை அது தரையில் தள்ளிவிடலாம் என்பதை உணர்ந்திருந்தார். அக்குறிப்பு அவர் வதனத்தில் நீக்கமற  நிறைந்திருந்தது.கண் எதிரே சற்றே வெட்டவெளி தென்படுவதையும், ஆணும் பெண்ணுமாக இருவர் புரவிகளுடன் அங்கிருப்பதையும்,  இருவரது தோற்றமும் பல்லவர்கள் போல காணப்பட்டதும், அவர்களது இடுப்பிலிருந்த மெல்லிய கூர்மையான வாளும் அந்தப்  பெரியவருக்கு நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும். கைகளை உயர்த்தி, ‘‘செ - லி நா - லோ - செங் - கியா பா - தோ - பா -  மோ...’’ எனக் கத்தினார்.

  கரிகாலனும் சிவகாமியும் அதிர்ந்தார்கள். இது ரகசியச் சொல். செ - லி என்றால் ஸ்ரீ. நா - லோ - செங் - கியா என்றால் நரசிம்ம. பா -  தோ - பா - மோ என்றால் போத்தவர்மன். மொத்தமாகச் சேர்த்தால் ஸ்ரீநரசிம்ம போத்தவர்மன். இரண்டாம் நரசிம்ம வர்மரான பல்லவ  இளவல் ராஜசிம்மரை சீனர்கள் இப்படித்தான் அழைப்பார்கள். இதையேதான் சங்கேதச் சொல்லால் ரகசியங்களைப் பரிமாறிக் கொள்ளவும்,  பரஸ்பர நம்பிக்கையுடன் பணியாற்றவும் பல்லவ நலம் விரும்பிகள் தங்களுக்குள் உபயோகித்தார்கள். அதனால்தான் கரிகாலனை  முதன்முதலில் சந்தித்தபோது சிவகாமி இதையே உச்சரித்தாள். இதற்குக் கட்டுப்பட்டுத்தான் எந்த வினாவும் தொடுக்காமல் அவளுடன்  பயணப்படுகிறான்.

  அந்தளவுக்கு சக்தி மிக்க அச்சொல்லை புரவியில் அமர்ந்திருந்த பெரியவர் உச்சரித்ததும் கரிகாலனும் சிவகாமியும் தாமதிக்கவில்லை. எந்த  மனிதராக இருந்தாலும் ஆபத்துக் காலத்தில் உதவுவது மனிதப் பண்பு என்று நினைக்கும் அவர்கள் இருவரும் தங்களைச் சேர்ந்தவர்கள்  என்று தெரிந்தபிறகு சும்மா இருப்பார்களா..?பாய்ந்து சென்று கைத்தாங்கலாய் அப்பெரியவரை இறக்கினார்கள்.‘‘புரவிக்கு என்ன ஆனதென்று  தெரியவில்லை. திடீரென்று அது தள்ளாட ஆரம்பித்தது...’’ சுட்டிக் காட்டியபடி சொன்ன பெரியவர், ‘முதலில்அதைக் கவனியுங்கள்... பிறகு  நாம் உரையாடுவோம்...’ என்பதைக் குறிப்பால் உணர்த்தினார்.ஆனால், பெரியவர் இப்படிச் சொல்வதற்கு முன்பாகவே, அவரைத் தரையில்  இறக்கிய கையோடு சிவகாமி அப்புரவியை நெருங்கி யிருந்தாள்.

  அடர் மாநிறப் புரவி. மூக்கு வரை தண்ணீருக்குள் மூழ்கி நீரைக் குடிக்கும். பலமான தேகம். அச்சு அசல் சத்திரிய சாதிக் குதிரை என  பார்த்ததுமே தெரிந்தது. எனில் பராக்கிரமும் கோபமும் சம அளவில் இதற்கு இருக்கும். எதிரிகளுடன் போர் செய்ய ஏற்றது. தன்  எஜமானருக்கு வெற்றியைத் தேடித் தரும் வல்லமை படைத்தது. சத்ருக்களிடம் தன் எஜமானரைச் சிக்க விடாது. ஒருவேளை அகப்படும்  சூழல் வந்தால் தன் முன்னங்கால்களை உயர்த்தி எதிரிகளைத் தடுத்து நிறுத்தும். பற்களால் சத்ருக்களின் தேகத்தைக் கடித்துக்குதறும்; துண்டாக்கும். இதுபோன்ற புரவி கிடைப்பது அதிர்ஷ்டம்.

  மெல்ல அதைத் தட்டிக் கொடுத்தாள். அதன் நெற்றியைத் தடவி தன் அன்பை சிவகாமி பகிர்ந்துகொண்டாள். ஆரம்பத்தில் முரண்டு பிடித்த  புரவி இதன்பிறகு அவளுக்குக் கட்டுப்பட்டது. குழந்தையைப்போல் அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் துணை புரிந்தது.தனக்கு அப்புரவி  வசப்பட்டதும் அதன் நாடித் துடிப்பை அறிய முற்பட்டாள். மனிதர்கள் போலவேதான் அசுவங்களும். எப்படி மனிதர்களின் நோய்களை நாடித்  துடிப்பின் வழியே கண்டறிகிறோமோ அப்படி புரவிகளுக்கு ஏற்பட்டிருக்கும் வியாதியின் தன்மை அறிய அசுவசாஸ்திரிகள் அதன் நாடியைப்  பார்ப்பார்கள். அதாவது குதிரையின் செவி, கண்கள், வாய், அக்குள் ஆகிய நான்கையும் பரிசோதிப்பதுதான் அதற்கு நாடி பார்ப்பது. நகுல  சகாதேவர் அருளிய ‘அசுவ சாஸ்திரம்’ பயின்றிருந்த சிவகாமிக்கு இச்சிகிச்சை எல்லாம் தண்ணீர்பட்ட பாடு.  தன் பெரு விரலைத்தவிர  மற்ற நான்கு விரல்களையும் வரிசையாக ஒன்றாகச் சேர்த்து அப்புரவியின் செவியை மெதுவாக சிவகாமி பார்த்தாள். அப்பகுதி சூடாக  இருந்தால் ஜுரம். குளுமையாக இருந்தால் சீதளம். சூடும் குளுமையும் கலந்திருந்தால் நோயும் கலந்திருக்கிறது என்று அர்த்தம்.

  கண்களைச் சுருக்கி ஒரு கணம் யோசித்த சிவகாமி, பிறகு குதிரையின் கண்களை விரித்துப் பார்த்தாள். இரத்தம் வெளுத்து தண்ணீர் அங்கு  ததும்பிக் கொண்டிருந்தால் புரவிக்கு வெட்டை அதிகரித்து சூடேறியிருக்கிறது என்று பொருள். மாறாக, கண்கள் மஞ்சள் நிறத்திலோ வான  நிறத்திலோ கலந்து தோன்றினால் அதற்கு பித்த ஜுரம் என்று அர்த்தம். அதுவே பச்சை இரத்தம் புள்ளியாக விழுந்திருந்தால் ஜன்னி  பிடித்திருப்பதாகக் கொள்ளலாம். கண்கள் இரத்தச் சிவப்பாகக் காணப்பட்டால் வாயு அதிகரித்திருக்கிறது என்றும்; கண்கள் சிவந்து  கீழ்வயிறும் அண்டமும் வீங்கியிருந்தால் ஜகர்பாத்து உண்டாகி இருக்கிறதென்றும் பொருள்.

  இதை ஆராய்ந்துவிட்டு சிவகாமி முழங்காலிட்டு புரவியின் வாய் பக்கம் வந்தாள். உதடு வெளுத்து பச்சை நரம்புகள் விம்மி கால்களில் எந்த ஓரு அசைவுமில்லாமல் நீண்டு கண்களில் நீர் இருந்தால் ஜவுகீறா பிறந்திருப்பதாகவும்; வயிறு வீங்கி மலசலங் கட்டுப்பட்டுப்  படுப்பதும் எழுந்திருப்பதுமாக இருந்தால் பர்கீறா பிறந்திருப்பதாகவும்; தாகம் அதிகரித்து கொள்ளும் புல்லும் கொஞ்சமாகத் தின்று  பெருமூச்செறிந்தால் ஆப்கீறா பிறந்திருக்கிறது என்றும்; தேகம் முழுவதும் சூடேறி மார்பு கனத்து புற்களைத் தின்னாமல் கண்களில் நீர்  ததும்பிக் கொண்டு தலையைக் கீழே போட்டுவிடுமானால் குளுமை பிறந்திருக்கிறது என்றும் உணர வேண்டும் என்கிறது ‘அசுவ  சாஸ்திரம்’.

  அந்த வெட்ட வெளியில் தண்ணீருக்கும் கொள்ளுக்கும் வாய்ப்பில்லை. ஆனால், புற்கள் நிறைந்திருக்கின்றன. அதைக் கொண்டு  அப்புரவிக்கு வந்திருக்கும் நோயின் தன்மையை அறிய முற்பட்ட சிவகாமி இறுதியாக அக்குள் பக்கம் வந்தாள்.இதற்காக கிட்டத்தட்ட  தரையில் படுத்து அக்குதிரையின் முன்னங்கால் இடுக்கை நெருங்கி அதன் துடிப்பைக் கண்காணித்தாள். மெலிந்து மெதுவாகத் துடித்தால்  குளிர்மை; வேகமாக துடித்தால் சூடு. இரண்டு முன்னங்கால் இடுக்கிலும் - அக்குளிலும் - மெலிந்து மெதுவாகத் துடித்தால் அதிக  குளிர்மை; இரு அக்குளிலும் வேகமாகத் துடித்தால் அதிக சூடு. நடக்கவே முடியாமல் புரவி தள்ளாடும்...தெளிவுடன் லாவகமாகப்  படுத்தவாறே அசைந்து குதிரைக்கு வெளியே வந்த சிவகாமி எழுந்து நின்றாள். ‘‘குணப்படுத்தி விடலாம்... ஒன்றும் பிரச்னையில்லை...’’  என்று சொன்னபடியே தன் பின்னால் திரும்பி கரிகாலனையும் அப்பெரியவரையும் பார்த்த சிவகாமி அதிர்ந்தாள்.காரணம், கரிகாலனின்  பார்வை அந்தப் பெரியவரின் இடுப்பில் பதிந்திருந்தது. அங்கு வாள் ஒன்றை பெரியவர் சொருகியிருந்தார். அந்த வாள், சற்று முன்னர்  சுரங்கத்தில் அவர்கள் பார்த்த நாக விஷம் தோய்ந்த வாட்களில் ஒன்று!
   

  (தொடரும்)

  http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14128&id1=6&issue=20180831

 7. 109. மூவர்

   

   

  சிறு வயதில் வினோத் சற்று நிறமாக இருப்பான். அதாவது அண்ணா, வினய், என்னைக் காட்டிலும் சற்று வெளிறிய தோல். இப்போது அவனுக்கு நாற்பத்தொன்பது வயது. என்னைவிட ஒரு வயது மூத்தவன் என்பதால் யோசிக்காமல் அதைச் சொல்லிவிடுவேன். அவனது நிறம் மங்கி என்னைக் காட்டிலும் கறுத்திருந்தான். ஆனால் தலைமுடியும் தாடியும் முற்றிலும் வெளுத்திருந்தது. மாதம் ஒருமுறை மொத்தமாகச் சவரம் செய்துவிடுவான் போலிருக்கிறது. தலையிலும் முகத்திலும் முள் முள்ளாக முடி குத்தி நின்றது. பின்னந்தலையில் சிகை விட்டிருந்தான். கண்ணாடி அணிந்திருந்தான். அரைக்கை வைத்த ஜிப்பாவும் கச்சம் வைத்த வேட்டியும் அணிந்திருந்தான். கழுத்தை ஒட்டி ஒரு துளசி மாலை. நெற்றியில் கோபி சந்தனத் திருமண்.

  ‘உனக்கு ஏதோ சிவலிங்கம் கிடைத்தது என்று விமல் சொன்னான்’ வினய்தான் ஆரம்பித்தது.

  வினோத் சிரித்தான். ‘ஆம். ஆனால் அது இப்போது என்னுடன் இல்லை’.

  ‘தூக்கிப் போட்டுவிட்டாயா?’ என்று கேட்டேன்.

  ‘இல்லை. அது தேவைப்பட்ட ஒருவருக்குத் தந்துவிட்டேன்’.

  ‘எனக்கு இது வியப்பாக இருக்கிறது வினோத். நீ ஒரு பயங்கரமான சிவபக்த சிரோமணியாக வருவாய் என்று எதிர்பார்த்திருந்தேன். எப்போது ஹரே கிருஷ்ணாவுக்கு மாறினாய்?’

  அவன் நெடுநேரம் அமைதியாக இருந்தான். என்ன சொல்லலாம் என்பதைவிட எதையெல்லாம் தவிர்க்கலாம் என்று அவன் யோசிப்பது போல எனக்குத் தோன்றியது. எதையுமே சொல்லாவிட்டாலும் பிரச்னை இல்லை என்று சொல்லிவிடலாமா என்று நினைத்தேன்.

  அவன் சட்டென்று, ‘அம்மா இன்னும் இருக்கிறாள் அல்லவா?’ என்று கேட்டான்.

  ‘அப்படித்தான் நினைக்கிறோம். ஆனால் அதிக நாள் இருக்கமாட்டாள் என்று கேசவன் மாமா தந்தி கொடுத்திருந்தார்’.

  ‘அதனால்தான் வந்தேன்’.

  ‘நீ மாமாவோடு பேசினாயா?’

  ‘ஆம். போன் செய்து பேசினேன்’.

  ‘அட, பரவாயில்லையே? எத்தனை வருடங்களுக்குப் பிறகு?’

  ‘விட்டுச் சென்று இருபத்து ஏழு வருடங்கள் ஆகிவிட்டன’.

  ‘எப்படிப் பிடித்தாய்?’

  ‘டெலிபோன் டைரக்டரியில் கோயில் நம்பரைக் கண்டுபிடித்துப் பேசினேன்’.

  ‘அதைவிடு. உனக்கு எப்படித் தகவல் கிடைத்தது?’ என்று வினய் கேட்டான்.

  ‘அண்ணா சொன்னான்’ என்று அவன் உடனே பதில் சொன்னதும் சிரித்துவிட்டேன்.

  ‘வேண்டாம். அவனைப் பற்றிப் பேச்செடுக்காதே. விமல் உன்னைக் கடித்துக் குதறிவிடுவான்’.

  ‘ஏன்?’

  ‘இவன் வந்திருப்பது அம்மாவின் இறுதிச் சடங்குக்கல்ல. அண்ணாவைக் கொலை செய்துவிட்டுப் போவதற்காக. அத்தனைக் கோபத்தில் இருக்கிறான்’.

  வினோத் என்னை வியப்புடன் பார்த்தான். ‘அவன் ஒரு யோகி. அனைத்தும் அறிந்தவன். காலம் கடந்தவன். மரணமற்றவன். அவன்மீது உனக்கென்ன கோபம்?’ என்று கேட்டான்.

  ‘அதெல்லாம் இல்லை வினோத். வினய் சற்று மிகையாகச் சொல்கிறான். ஒரு சில கெட்ட வார்த்தைகளைப் பிரயோகித்துவிட்டால் போதும். என் கோபம் தணிந்துவிடும்’ என்று சிரித்துக்கொண்டே சொன்னேன். அவன் கண்ணை மூடிக்கொண்டு ஹரே கிருஷ்ணா என்று சொன்னான்.

  ‘சரி வினய் கேட்டதற்கு பதில் சொல். எப்போது நீ மதம் மாறினாய்?’

  அவன் எங்கள் இருவரையும் புன்னகையுடன் ஒரு பார்வை பார்த்தான். பிறகு தொலைவில் எங்கோ வெறித்துப் பார்த்தபடி சொன்னான், ‘திருமணத்துக்கு ஒருநாள் முன்பு’.

  ‘அப்படியா? உன் ஜானவாசத்தன்று உனக்கு சிவன் காட்சி கொடுத்து கடத்திக்கொண்டு போய்விட்டான் என்று நினைத்தேனே?’

  ‘காட்சி கிடைத்தது உண்மை. ஆனால் சிவனல்ல. கிருஷ்ணன்’ என்று சொன்னான்.

  எனக்கு அது ஆச்சரியமாக இருந்தது. காவிரியில் அவனுக்கு லிங்கம் கிடைத்ததற்கு சாட்சியாக இருந்தவன் நான். அன்றிரவே அவன் விட்டுச் சென்றுவிடுவான் என்று நினைத்திருந்தேன். அது நடக்கவில்லை. வினய் சென்று, நானும் சென்று, பல ஆண்டுகள் வீட்டுப் பிள்ளையாக இருந்து, அம்மாவின் சந்தோஷத்துக்குத் திருமணம் செய்துகொள்ளச் சம்மதித்து, அந்த நாளைத் தவிர்த்துவிட்டு ஓடிப் போயிருக்கிறான். அந்தக் கொலை பாதகத்துக்கு சிவன் தான் காரணம் என்று நினைத்திருந்தேன். கள்ளப் பயல் கண்ணன் ஏன் முந்திக்கொண்டான்?

  ‘அது ஒரு அதிசயம். நான் எண்ணிப் பார்த்திராத அதிசயம்’ என்று அவன் சொன்னான்.

  நாங்கள் செண்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்ததும் வினய் பல் துலக்க வேண்டும் என்று சொன்னான். ஒரு கடையில் பிரஷ்ஷும் பேஸ்டும் வாங்கினோம். ‘எங்கள் இருவரிடமும் பணம் இல்லை. உன்னிடம் இருக்கிறதா?’ என்று வினோத்தைக் கேட்டேன். அவன் சிரித்தபடி பணம் எடுத்துக் கொடுத்தான்.

  ‘பார்த்தாயா வினய்? இதைத்தான் சொன்னேன். இதைத்தான் நான் செய்கிறேன். இன்று மட்டுமல்ல. என்றும். எப்போதும்’.

  வினய் ஒரு குழந்தையைப் போலச் சிரித்தான். உண்மையில் நெடுங்காலம் கழித்து அவன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது போல எனக்குத் தோன்றியது. ஆனால் அதை எப்படி வெளிப்படையாகச் சொல்ல முடியும்? ஒரு மரணத்தை தரிசிக்க நுழைவுச் சீட்டுடன் வந்திருப்பவர்கள் நாங்கள். உயிரோடு இருந்து, கண் திறந்து பார்த்து, ஓரிரு சொற்கள் பேசவும் கூடிய நிலையில் அம்மா இருப்பாளேயானால் உண்மையில் அவளும் மகிழ்ச்சியே அடைவாள்.

  ‘எனக்கென்னவோ இது பேராசை என்று தோன்றுகிறது’ என்று வினய் சொன்னான்.

  ‘ஆசையெல்லாம் இல்லை. இப்படியே என்னைத் திரும்பிப் போகச் சொன்னால்கூடப் போய்விடுவேன்’ என்று சொன்னேன்.

  ‘அது நம் அனைவருக்குமே முடியும். இப்போது தோன்றுகிறது. என் துறவின் ஆகப்பெரிய லாபம், என்னால் உறவுச் சிடுக்குகளில் இருந்து முற்றிலுமாக விடுபட முடிந்திருப்பதுதான். அம்மா சாகக் கிடக்கிறாள் என்ற செய்தி எனக்கு எந்தச் சலனத்தையும் தரவில்லை’ என்று வினய் சொன்னான்.

  நான் வினோத்தைப் பார்த்தேன். ‘இல்லை. எனக்குச் சற்று வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் நாம் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. கிருஷ்ணனின் பாதாரவிந்தங்களில் அவள் சென்று சேரப் பிரார்த்தனை செய்வது தவிர. நான் வந்ததே அதற்குத்தான். ஒரு சிறிய பிரார்த்தனை. அதை மட்டும் செய்துவிட்டுப் போய்விடுவேன்’ என்று சொன்னான்.

  ‘அந்தப் பிரார்த்தனையை நீ இருந்த இடத்தில் இருந்தபடியே நிகழ்த்த முடியாதா?’

  ‘முடியும். ஆனாலும் அம்மா அல்லவா?’

  நான் சிரித்தேன். அவன் தோளைத் தட்டி, ‘சும்மா கேட்டேன்’ என்று சொன்னேன்.

  நாங்கள் பல் துலக்கி முகம் கழுவினோம். ரயில் நிலையத்திலேயே இருந்த ஒரு உணவகத்துக்குள் சென்று அமர்ந்தோம்.

  ‘மூன்று பேர் ஏதாவது சாப்பிடும் அளவுக்கு நீ பணம் வைத்திருக்கிறாயா?’ என்று வினய், வினோத்திடம் கேட்டான். வினோத் தன் ஜிப்பா பாக்கெட்டில் கைவிட்டு இருந்ததை எடுத்து எண்ணிப் பார்த்துக்கொண்டு, ‘இருக்கிறது’ என்று சொன்னான்.

  ‘உன் இடாகினியை நீ போகவிட்டிருக்கக்கூடாது வினய். அது இருந்திருந்தால் இப்போது மிகவும் உதவியிருக்கும்’ என்றேன். அவன் என்னை முறைத்தான். நாங்கள் ஆளுக்கு இரண்டு இட்லி சாப்பிட்டுவிட்டு காப்பி குடித்தோம்.

  ‘நீ ஏன் இப்படி இருக்கிறாய்? ஏன் இந்தக் கோலம்?’ என்று வினோத், வினய்யைப் பார்த்துக் கேட்டான். அவன் சிரித்தான். தார்ப்பாய்ச்சிக் கட்டிய நான்கு முழ அழுக்கு வேட்டி மட்டுமே அவன் அணிந்திருந்தான். வெற்று மார்பில் பாதிக்குமேல் முடியெல்லாம் நரைத்திருந்தது. முகம் மண்டிய தாடியும் சிடுக்கு விழுந்த தலைமுடியும் அழுக்கேறிய நகங்களும் அவனை உறுத்தியிருக்க வேண்டும்.

  ‘எனக்கு இதுவே அதிகம்’ என்று வினய் சொன்னான். ‘அதைவிடு. அண்ணாவை நீ நடுவில் பார்த்தாயா?’

  ‘ஓ. ஒருமுறை பார்த்தேன்’.

  ‘எங்கே?’

  ‘நான் மாயாபூரில் இருந்தபோது அவன் அங்கே வந்தான். அன்றைக்கு ஜென்மாஷ்டமி. எங்கள் கோயிலில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தார்கள். பாட்டும் நடனமும் பஜனையும் பாராயணமுமாக அன்று முழுவதும் நாங்கள் கொண்டாடித் தீர்த்துக்கொண்டிருந்தோம். எல்லாம் முடிந்து நள்ளிரவுக்குப் பிறகுதான் நான் சாப்பிட்டுவிட்டுக் கைகழுவப் போனேன். அண்ணா அங்கே நின்றுகொண்டிருந்தான்’.

  ‘எங்கே?’

  ‘எங்கள் கோயிலுக்குப் பின்புறம் இருந்த குழாயடியில்’.

  ‘எதற்கு வந்தான்?’

  ‘என்னைப் பார்க்கத்தான்’.

  ‘என்ன சொன்னான்?’

  'அப்பா இறந்துவிட்டார் என்று சொன்னான்.'

  எனக்கு நினைவுக்கு வந்தது. அப்பா ஒரு கிருஷ்ண ஜெயந்தி அன்றுதான் இறந்ததாக கேசவன் மாமா சொன்னார். எனக்கு அவர் சொன்னதை நான் வினய்க்குச் சொல்லியிருந்தேன். இவனுக்கு மட்டும் அண்ணாவே நேரில் போய் எதற்குச் சொல்ல வேண்டும்?

  ‘நான் கிருஷ்ணனால் தேர்ந்தெடுக்கப்பட்டேன். என் மூலமாக அப்பாவுக்கு நற்கதி கிடைக்கச் செய்ய அவன் நினைத்திருப்பான்’ என்று வினோத் சொன்னதும் நான் உரக்கச் சிரித்தேன்.

  ‘வினய், சொரிமுத்துவைக் காட்டிலும் இவன் பெரிய டிராவல் ஏஜெண்டாக இருப்பான் போலிருக்கிறதே?’ என்றேன். வினய்யும் சிரித்தான். சட்டென்று வினோத்திடம், ‘நீ திருவானைக்கா சொரிமுத்துவிடம் போனாயா?’ என்று கேட்டான்.

  ‘யார் அது?’

  ‘சரி. இவன் மட்டும் தப்பித்தான்’.

  நாங்கள் சாப்பிட்டு முடித்து ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தோம். வினோத் ஒரு பிளாட்பாரத் துணிக்கடையில் ஒரே ஒரு காவி வேட்டியும் துண்டும் வாங்கி வினய்யிடம் கொடுத்தான். அது டிசம்பர் மாதம் என்பதால் எங்கெங்கும் ஐயப்ப பக்தர்கள் நிறைந்திருந்தார்கள். எல்லா கடைகளிலும் காவி வேட்டி எளிதாகக் கிடைத்தது. வினய், நடுச் சாலையிலேயே அதை விரித்து உதறிக் கட்டிக்கொண்டு, தனது பழைய அழுக்கு வேட்டியை உருவி சுருட்டி எறிந்தான். நாங்கள் பேசியபடியே செண்ட்ரலில் இருந்து பிராட்வேக்கு நடக்க ஆரம்பித்தோம்.

  ‘பரவாயில்லை வினோத். நீ ஒரு பணமுள்ள சன்னியாசியாக இருக்கிறாய். உன் கிருஷ்ணன் உன்னை சௌக்கியமாக வைத்திருக்கிறான் என்று நினைக்கிறேன்’ என்று வினய் சொன்னான்.

  ‘சௌக்கியத்துக்கு என்ன குறை? ஆனால் நான் ஒரு அமைப்பில் சிக்கிக்கொண்டதில் அண்ணாவுக்குச் சற்று வருத்தம்தான்’.

  ‘வெளியேறச் சொல்கிறானா? செய்துவிடாதே. அவன் ஒரு சர்வ அயோக்கியன். அவன் பேச்சைக் கேட்டால் நீ இவனைப் போலாகிவிடுவாய்’ என்று சொன்னேன்.

  வினய் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான். வினோத்துக்கு அது புரியவில்லை.

  (தொடரும்)

  http://www.dinamani.com/junction/yathi/2018/aug/16/109-மூவர்-2981135.html

 8. உடல் எனும் இயந்திரம் 38: அறிவு தரும் அமைச்சகம்!

   

   
  udaljpg

  மனித மூளையைத் ‘தலைமைச் செயலகம்’ என்று சொன்னோம். ஒரு தலைமைச் செயலகத்தில் அரசுப் பணிகளைக் கவனிப்பதற்குத் தனித்தனியாகப் பல்வேறு அமைச்சகங்கள் இருப்பதைப்போல், உடலில் நிகழும் பலதரப்பட்ட செயல்பாடுகளைக் கவனிக்கவும் கட்டுப்படுத்தவும் மூளையில் தனித்தனி அமைப்புகள் இருக்கின்றன.

  அப்படி, மனிதனை மற்ற விலங்குகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் ‘ஆறாம் அறிவு’ உள்ளிட்ட உடலின் மேம்பட்ட இயக்கங்களைக் கவனிப்பதற்கு ஓர் ‘அமைச்சகம்’ உள்ளது. அதுதான் ‘முன் மூளை’ (Forebrain) என்று அழைக்கப்படும் பெருமூளை (Cerebrum). இதுவே மூளையில் 85% இடத்தை அடைத்துக்கொண்டுள்ள மிகப் பெரிய பகுதி. தலாமஸ் (Thalamus), ஹைப்போதலாமஸ் (Hypothalamus) என இன்னும் இரண்டு பகுதிகளும் இதில் உண்டு.

   

  ஒரு பெரிய பப்பாளிப் பழத்தை இரண்டாக வெட்டியதுபோல், பெருமூளையானது வலது பக்கம் ஒன்று, இடது பக்கம் ஒன்று என இரண்டு அரைக்கோளங்களாக உள்ளது. மூளையின் அடிப்புறத்தில், நான்கு அங்குல நீளத்தில் இருக்கும் ஒரு நரம்புப் பட்டை (Corpus callosum) இந்த இரண்டையும் இணைக்கிறது.

  இதன் வழியாகவே வலது மூளையிலிருந்து கிளம்பும் நரம்புகள் உடலின் இடது பக்கத்துக்கும், இடது மூளையிலிருந்து கிளம்பும் நரம்புகள் உடலின் வலது பக்கத்துக்கும் தடம் மாறிச் செல்கின்றன, இதன் பலனால், உடலின் இடது பக்கத்தைப் பெருமூளையின் வலது அரைக்கோளமும், வலது பக்கத்தை இடது அரைக்கோளமும் கட்டுப்படுத்துகின்றன.

  அதுபோல், இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு வலது அரைக்கோளமும், வலது கை பழக்கம் உள்ளவர்களுக்கு இடது அரைக்கோளமும் முன்னின்று பணி செய்கின்றன. இடது மூளை எந்த ஒரு செயலையும் பகுப்பாய்வு செய்து பார்க்கிறது. கற்பனை வளத்தைப் பயன்படுத்திப் படைப்பாக்கத்தை ஊக்கப்படுத்துகிறது, வலது மூளை.

  பெருமூளையின் ஒவ்வோர் அரைக்கோளமும் முன் மடல் (Frontal lobe), பின் மடல் (Occipital lobe), பக்க மடல் (Parietal lobe), பொட்டு மடல் (Temporal lobe) என நான்கு சுளைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பெருமூளையைக் குறுக்காகப் பார்த்தால், மரத்துக்குப் பட்டை இருப்பதுபோல் ‘பெருமூளைப் புறணி’ (Cerebral cortex) எனும் வெளிப்பகுதி இருக்கிறது. கால் அங்குலத்துக்கும் குறைவாகவே இதன் கனம் இருக்கும்; பார்ப்பதற்கு மடிப்பு மடிப்பாக இருக்கும்.

  இந்த மடிப்புக்கு ‘மூளை மடிப்புச் சுருள்’ (Gyrus) என்றும், மடிப்புகளுக்கு இடையில் இருக்கிற குழிக்கு ‘மூளைப் பள்ளம்’ (Sulcus) என்றும் பெயர். இந்த மடிப்புகளால் மூளைக்குள் செயல்படக்கூடிய பகுதியின் பரப்பு அதிகரிக்கிறது. இந்த மெல்லிய வெளிப்பகுதிக்குக் கீழே உள்ளது ‘பெருமூளை அகணி’ (Cerebral medulla).

  பெருமூளையில் சாம்பல் பொருள் (Gray matter), வெண் பொருள் (White matter) என இரண்டு வகை நரம்புத் திசுக்கள் உள்ளன. சாம்பல் பொருள் புறணியிலும், வெண் பொருள் அகணியிலும் காணப்படுகின்றன. இவை தண்டுவடத்திலும் இருக்கின்றன. மேலும், நரம்பணுக்களில் நரம்புறை உள்ள வேரிழைகளில் (Axons), வெண் பொருளும், நரம்புறை இல்லாதவற்றில் சாம்பல் பொருளும் உள்ளன.

  பெருமூளைக்குள் ஆயிரம் கோடி நரம்பணுக்களும் 16,000 கி.மீ. நரம்பு நூல்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. இங்குள்ள நரம்பணுக்களைச் சுற்றி ஐந்து வகை ‘கோந்து அணுக்கள்’ (Glial cells) உள்ளன. இவற்றின் எண்ணிக்கை நரம்பணுக்களைவிடப் பல மடங்கு அதிகம். இவை நரம்பணுக்களுக்குத் தேவையான உணவைத் தருவதோடு பாதுகாப்பையும் தருகின்றன.

  மூளைக்குள் நரம்பணுக்கள் இல்லாத இடங்களும் உண்டு. அவை ‘மூளை உட்குழிகள்’ (Ventricles). ஒன்றுக்கொன்று தொடர்புடைய 4 குழிப்பகுதிகள் இவை. இவற்றில் முதன்மையான இரண்டு குழிகள் பெருமூளையிலும், மூன்றாவது தலாமஸிலும், நான்காவது பின் மூளையிலும் அமைந்துள்ளன.

  இவற்றின் முக்கியத்துவம் என்னவென்றால், இந்தக் குழிகளில் காணப்படும் ‘கோராய்டு பின்னல் அணுக்க’ளில் (Choroid plexus) தினமும் சராசரியாக 550 மி.லி. தண்டுவடத் திரவம் (CSF) சுரக்கிறது. இதில் 150 மி.லி. மட்டும் நம் நரம்பு மண்டலத்தில் எப்போதும் நிலையாக இருக்கிறது; தண்ணீரில் மிதக்கும் பந்துபோல மூளை இதில் மிதந்துகொண்டிருப்பதால், திடீர் அதிர்வுகள் மூளையைப் பாதிப்பதைத் தடுத்துப் பாதுகாப்பு தருகிறது.

  ஓர் அமைச்சகத்தில் செயலர், உதவிச் செயலர், இயக்குநர், இணை இயக்குநர் எனப் பலரும் பணிகளைப் பிரித்துப் பார்ப்பதைப்போல, பெருமூளை எனும் அமைச்சகத்திலும் பார்வைக்கு, பேச்சுக்கு, மூச்சுக்கு, வாசனைக்கு, செவிஉணர்வுக்கு, நடையோட்டத்துக்கு என ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் தனித்தனிப் பணிமையம் உள்ளது. அவை ஒவ்வொன்றும் தனக்குரிய பணிகளை மட்டும் செய்கின்றன.

  idam%202jpg

  பெருமூளையின் முன் மடலில் புத்திசாலித்தனத்துக்கான பணிமையம் உள்ளது. சிந்தனா சக்தி, பகுத்தறிதல், ஆராய்ச்சி உள்ளிட்ட ‘ஆறாம் அறிவு’ தரும் பணிமையம் இது. தனிமனித நடத்தையும் ஆளுமையும் இதன் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன.

  நாம் உணர்ந்து செய்யும் கை, கால் அசைவுகள் போன்ற தசை இயக்கங்களைக் கவனிக்க ‘பிராட்மேன் பகுதி’ (Brodmann area) உள்ளது. ஒரு செயலைச் செய்ய முடிவெடுத்தல், திட்டமிடுதல், அதில் கவனம் செலுத்துதல், பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் ஆகியவையும் முன் மடலின் கட்டளைப்படியே நிகழ்கின்றன. பேச்சை உருவாக்குவதற்கு என்றே ’புரோக்கா பகுதி’ (Broca’s area) உள்ளது.

  தொடுதல், வெப்பம், வலி ஆகிய உணர்வுகளைப் புரிந்துகொள்வதற்குப் பக்க மடல் உதவுகிறது. பார்க்கும் பொருள்களின் பிம்பங்களையும் வண்ணங்களையும் தெரிந்துகொள்வதற்குப் பின் மடல் தேவைப்படுகிறது. ஒலிகளைக் கேட்டு உணர்வதற்கும், மொழி மற்றும் வார்த்தைகளைப் புரிந்து கொள்வதற்கும் பொட்டு மடலில் உள்ள ‘வெர்னிக் பகுதி’ (Wernicke’s area) துணை செய்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, நம் நினைவாற்றலுக்கு ஆதாரமாக இருப்பதும் பொட்டு மடல்தான்.

  பொதுவாக, நாம் ஒரு பிரச்சினையை அமைச்சரிடம் தெரிவிக்க வேண்டுமானால், முதலில் அவரது உதவியாளரிடம் அனுமதி பெற வேண்டும். நாம் யார், எதற்காக வந்திருக்கிறோம் என்பது போன்ற விவரங்களை உதவியாளர் தெரிந்துகொண்ட பின்னரே அமைச்சரைச் சந்திக்க அனுமதிப்பார். இந்த மாதிரியான ஓர் ஏற்பாடு நம் மூளையிலும் உள்ளது.

  பார்வை, செவி உணர்வு, தொடுஉணர்வு போன்ற முக்கியத் தகவல்கள் நேரடியாக அவற்றின் முதன்மைப் பணிமையங்களுக்குச் (Primary areas) செல்லாது. மாறாக, அவற்றுக்குரிய இணைமையங்களுக்குச் (Associated areas) செல்லும். அவை அந்தத் தகவல்களைப் பிரித்து, ஆராய்ந்து, பழைய நினைவுகளோடு ஒப்பிட்டுப் பார்த்து, திருப்தி அடைந்தால் மட்டுமே முதன்மைப் பணிமையத்துக்கு அனுப்பி பதில் பெறும்.

  இதன் பலனால், தேவையற்ற தகவல்களுக்குப் பெருமூளை பதில் கொடுப்பது தவிர்க்கப்படும். மூளையின் வேலைப்பளு குறையும்.

  (இன்னும் அறிவோம்)
  கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்

  https://tamil.thehindu.com

 9. 108. பசித்தவன்

   

   

  பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்துக்குச் சற்று முன்னதாக வண்டி நின்றுகொண்டிருந்தது. சிக்னல் கிடைக்கவில்லை அல்லது சிக்னலில் ஏதோ கோளாறு. முக்கால் மணி நேரமாக ரயில் ஒரே இடத்தில் நின்றது எரிச்சலாக இருந்தது. ‘நாம் இறங்கி நடந்து சென்றுவிடலாமா?’ என்று வினய்யிடம் கேட்டேன். அவன் உடனே சரி என்று சொன்னான்.

  இருவரும் வண்டியை விட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தோம். நான் சென்னையைப் பார்த்துப் பல வருடங்கள் ஆகிவிட்டன. இடையில் வாய்ப்பு வந்தபோதெல்லாம்கூட கவனமாகத் தவிர்த்து வந்தேன். இது ஏன் என்று எனக்குப் புரியவேயில்லை. நான் யாரிடமும் அச்சம் கொண்டிருக்கவில்லை. யாருக்கும் கடன் பட்டிருக்கவும் இல்லை. யாரைக் கண்டும் ஓடி ஒளிய அவசியமற்றவன். இருந்தபோதிலும் அந்தத் தயக்கம் எனக்கு இருந்தது. இத்தனைக்கும் சென்னையில் இருந்து திருவிடந்தை நாற்பத்து ஐந்து கிலோமீட்டர் தள்ளி இருக்கும் இடம். ஊர்க்காரர்களுக்கு டவுன் என்றால் திருப்போரூர். இன்னும் பெரிய டவுன் வேண்டுமென்றால் செங்கல்பட்டுக்குத்தான் போவார்கள். அவர்களுடைய சென்னை அதிகபட்சம் அடையாறில் முடிந்துவிடும். ஆனாலும் எனக்கு சென்னைக்கு வர தயக்கமாகவே இருந்தது.

  வினய்யிடம் இதனைச் சொன்னபோது, ‘நீ நகரத்தை அம்மாவாக உருவகித்துக்கொள்கிறாய் என்று நினைக்கிறேன். அதனால்தான் நெருங்க அச்சப்படுகிறாய்’ என்று சொன்னான்.

  இருக்கலாம் என்று தோன்றியது. அப்பா இறந்த செய்தி கிடைத்தபோது ஊருக்குப் போகலாம் என்று ஒருநாள் முழுதும் தோன்றிக்கொண்டே இருந்தது. மறுநாள் காலை வேண்டாம் என்று தோன்றிவிட்டது. மரணங்களில் இருந்து முற்றிலுமாக நகர்ந்து நிற்கவே நான் விரும்பினேன். மனிதர்களிடம் இருந்தும்கூட.

  ‘ஆனால் நீ கூட்டங்களின் நாயகன் அல்லவா?’

  நான் சிரித்தேன். ‘உண்மை. என் குரலை, என் சிந்தனையைக் கூட்டங்களில் உலவவிட்டுவிட்டு நான் நகர்ந்து சென்று வெளியே அமர்ந்துவிடுவேன்’.

  ‘அது எப்படி முடியும்? உன்னைச் சுற்றி எப்போதும் கூட்டம் இருக்கும் அல்லவா?’

  ‘அதைத்தான் சொல்கிறேன். என் சொற்கள் அவர்களுக்குப் போதும். நான் தேவையில்லை’.

  ‘நீயும் உன் சொற்களும் வேறா?’

  ‘இதில் என்ன சந்தேகம்? நூறு சதம் ஒன்றாக இருக்க வாய்ப்பே இல்லை’.

  ‘மறுபடியும் நீ ஒரு சன்னியாசி இல்லை என்று சொல்லத் தோன்றுகிறது’.

  மீண்டும் சிரித்தேன். ‘வினய், என் சன்னியாசம் முற்றிலும் சுயநலம் சார்ந்தது. என் சுதந்திரமே என் விழைவு. என் மகிழ்ச்சியே என் தியானப் பொருள். என் தேவைகளைத் தீர்த்துவைக்க மட்டுமே எனக்கு மனிதர்கள் வேண்டியிருக்கிறார்கள். என் தேவைகள் விரிந்து பரந்தவை என்பதால், உலகெங்கும் நான் அவர்களை விதைத்து வைக்கிறேன்’.

  ‘இதை உன் குரு அறிவாரா?’

  ‘நிச்சயமாக. நான் அவரிடம் எதையுமே மறைத்ததில்லை’.

  ‘அவர் உன்னை ஏற்றுக்கொண்டாரா?’

  சிறிது யோசித்தேன். ‘அநேகமாக இல்லை என்றே நினைக்கிறேன். எனக்கும் அவருக்கும் பொருந்திப்போன விஷயங்கள் பல உண்டு. ஆனால் சில குறைந்தபட்ச சன்னியாச ஒழுக்கங்களைக்கூட நான் கடைப்பிடிப்பதில்லை என்பதில் அவருக்கு மிகுந்த வருத்தம் உண்டு’.

  ‘அதில் உனக்கு என்ன கஷ்டம்?’

  ‘அதுவும் ஒரு நிபந்தனையாகி விடுகிறதல்லவா? சுதந்திரம் என்பது எந்தத் தளையும் இல்லாதது. சன்னியாசத்தின் தளை உள்பட’.

  அவன் அமைதியாக யோசித்தபடி நடந்துகொண்டிருந்தான். ரயில் பாதையில் நடக்கச் சற்று சிரமமாக இருந்தது. இருவருமே செருப்பு அணிந்திருந்தோம் என்றாலும், சரளைக் கற்களின் மீது நடக்கக் கஷ்டமாக இருந்தது. பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தை அடைந்துவிட்டால் அங்கிருந்து மின்சார ரயில் பிடித்து சென்ட்ரலுக்குப் போய்விடலாம் என்று நினைத்துத்தான் நடக்க ஆரம்பித்தோம். ஆனால் நாங்கள் ரயில் நிலையத்தை அடைவதற்கு முன்னால் சிக்னல் கிடைத்து வண்டியே கிளம்பிவிடுமோ என்று இப்போது தோன்றியது.

  ‘ஒருவிதத்தில் நாம் இருவருமே கடவுளைத் தொந்தரவு செய்ய விரும்பாதவர்களாக இருந்திருக்கிறோம்’ என்று வினய் சொன்னான்.

  ‘ஆமாம். ஆனால் என்னைவிட இந்த விஷயத்தில் நீதான் சிறந்தவன்’.

  ‘எப்படிச் சொல்கிறாய்?’

  ‘நான் நம்பாதவன். நான் தொந்தரவு செய்யாதது இயல்பானது. ஆனால் நீ கடவுள் நம்பிக்கை உள்ளவன். அப்படி இருந்தும் போய்க் காலில் விழாதிருப்பது பெரிய விஷயம்’.

  ‘உண்மைதான். என்னவோ ஒரு வெறுப்பு. ஒரு கோபம்’.

  ‘கடவுள் மீதா?’

  ‘ஆம். என்னைச் சக்கையாகப் பழிவாங்கிவிட்டான் பரதேசி’.

  நான் சிரித்தேன். ‘அவனைத் தப்பு சொல்லாதே. நீ அவன் பழிவாங்க இடம் கொடுத்திருக்கிறாய். அது உன் தவறு’.

  ‘உண்மைதான். அண்ணா எனக்கு இன்னொரு வழியும் சொன்னான். மத்தியப் பிரதேசத்தில் ஏதோ ஒரு மலைக்குகை. இப்போது அதன் பெயர் மறந்துவிட்டது. அங்கே சென்று ஒரு வாரம் தங்கியிருக்கச் சொன்னான்’.

  ‘எதற்கு?’

  ‘எனக்கு ஒரு பாதை புலப்பட்டுவிடும் என்று சொன்னான்’.

  ‘அங்கே யாராவது சித்தர் இருந்தாரா?’

  ‘அதெல்லாம் இல்லை. ஆனால் பல சித்தர்களுக்கு அந்தக் குகை ஒரு அடைக்கல ஸ்தலம் என்று அவன் சொன்னான். அங்கே போனால் வெளிச்சம் பிறக்குமாம்’.

  ‘போக வேண்டியதுதானே?’

  ‘இதைத்தான் சொன்னேன், தக்க சமயத்தில் கடவுள் என்னைப் பழிவாங்கிவிடுவான் என்று’.

  ‘ஏன்? என்ன ஆயிற்று?’

  ‘அப்போது நான் அஸ்ஸாமில் இருந்தேன். அங்கிருந்து மத்தியப் பிரதேசம் போய்ச் சேரக் கையில் பணம் இல்லை’.

  ‘ஆனால் உன் இடாகினி உதவியிருக்க முடியுமே?’

  ‘அந்தப் பேச்சை எடுக்காதே. யாரும் உதவவில்லை என்பதுதான் இறுதி லாபம்’.

  ‘சரி. டிக்கெட் இல்லாமல் பயணம் செய்திருக்கலாமே?’

  ‘அதற்கு விருப்பமில்லாமல் நடந்தே போக முடிவுசெய்து கிளம்பினேன்’.

  ‘அதுவும் நல்ல வழிதான்’.

  ‘அதுதான் முடியாமல் போய்விட்டது. வழியில் எனக்குக் காய்ச்சல் வந்தது. ஒரு மாதம் எழுந்திருக்கவே முடியாதபடி அடித்துப் போட்டுவிட்டது. உடல் எடை முப்பத்து ஒன்பது கிலோவுக்கு இறங்கிவிட்டது’.

  ‘அடப்பாவமே’.

  ‘ஒருவேளை மருந்தும் உட்கொள்ளவில்லை. ஒரு மாத காலமும் தண்ணீர் மட்டுமே குடித்துக்கொண்டிருந்தேன். எப்போதாவது ஒன்றிரண்டு வாழைப்பழம். வேறு உணவும் இல்லை’.

  ‘ஐயோ’.

  ‘கையில் ஒரு காசுகூட இல்லை. பிச்சை எடுக்கப் பிடிக்கவில்லை. திருட மனம் வரவில்லை. வேறு என்னதான் செய்வேன்?’

  ‘என்னதான் செய்தாய்?’

  ‘பயணத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு காசிக்குப் போய் தங்கிவிட்டேன். ஏதாவது ஒரு தரும சத்திரத்தில் உணவு கிடைத்துவிடும். நதிக்கரையில் கட்டையைச் சாய்த்தால் கேட்பாரில்லை’.

  நான் சிரித்தேன். ‘நினைவிருக்கிறதா வினய்? அண்ணா உணவை உத்தேசித்து திருப்பதிக்கு ஓடிப்போயிருப்பான் என்று நீதான் சொன்னாய்!’

  ‘ஆம். நான் உணவை உத்தேசித்துத்தான் காசிக்குப் போனேன். மூன்று வேளையும் அங்கே திருப்தியாகச் சாப்பிட்டேன். ஒரு கட்டத்தில், உணவுதான் பரம்பொருள் என்று நினைத்துவிட்டேன் என்றால் பார்த்துக்கொள்’.

  எனக்கு அவன் மீது மிகவும் பரிவு உண்டானது. என் உடன் பிறந்தவனாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. இந்த உலகில் யார் ஒருவனுக்கு இப்படிப்பட்ட தோல்வி ஏற்பட்டிருந்தாலும் நான் இப்படித்தான் வருந்துவேன் என்று தோன்றியது. இந்தக் காரணத்தாலேயே எனக்கு அண்ணாவின் மீது கட்டுக்கடங்காத கோபம் உண்டானது. எத்தனை பெரிய மடத்தனம் செய்திருக்கிறான்! வினய்யை அவன் வீட்டை விட்டு நகர்த்தியதில் இருந்து ஒரு கோடி பிழைகள். தன்னுடனாவது அவனை வைத்துக்கொண்டிருக்கலாம். அருகே இருந்து சொல்லிக்கொடுத்து ஏதாவது ஒரு வழியில் திருப்பிவிட்டிருக்கலாம். இப்படிப் பாதி வாழ்க்கை முடிந்த வயதில், புறப்பட்ட இடத்தில் இருந்து ஓரடி கூட முன்னேறாதிருப்பதன் அவலம் எத்தனை பெரிது!

  ‘அவன் வர வேண்டும் வினய். நான் அவனைச் சந்தித்தே தீர வேண்டும். நாக்கைப் பிடுங்கிக்கொள்கிறாற்போலக் கேட்கப்போகிறேன்’ என்று சொன்னேன்.

  வினய் சிரித்தான்.

  ‘ஏன் சிரிக்கிறாய்?’

  ‘பிழை என்னுடையது. தவறுகளும் குற்றங்களும் என்னுடையவை. இதில் அவன் என்ன செய்ய முடியும்?’

  ‘பிழைபட்ட ஒரு வழியில் நீ போகத் தொடங்கியதுமே தடுத்திருக்க வேண்டும். அந்தக் கடமை தனக்கு இல்லை என்று நினைத்திருந்தால் உன் பக்கமே முதலில் இருந்து அவன் திரும்பியிருக்கக் கூடாது’.

  ‘அதெப்படி? உன்னைக்கூட அந்தத் திருவானைக்கா சித்தன் பக்கம் அவன்தானே திருப்பினான்?’

  ‘யார் சொன்னது? என்னைப் பற்றி அவன் சொரிமுத்துவிடம் சொல்லியிருக்கிறான். அவ்வளவுதான். கோயிலில் சொரிமுத்து என்னைக் கண்டது தற்செயல். கண்ட மாத்திரத்தில் அவன் என்னை அழைத்துக்கொண்டு போய்விட்டான்’.

  ‘எனக்கென்னவோ வினோத்தும் சொரிமுத்துவைப் பார்த்திருப்பான் என்றுதான் தோன்றுகிறது’.

  இதற்கு நான் வாய்விட்டுச் சிரித்தேன். ‘இருக்கலாம். நம் குடும்பத்தின் நம்பகமான டிராவல் ஏஜெண்ட்’.

  வினய்யும் சிரித்தான்.

  ‘அவன் மட்டும் சாகாதிருப்பானேயானால், நிச்சயமாக நான் திருச்சிக்குச் சென்று அவனைச் சந்தித்துவிட்டுத்தான் ஊர் திரும்புவேன்’ என்று சொன்னேன்.

  ‘சந்தித்தால் என்ன கேட்பாய்?’

  ‘கேட்க என்ன இருக்கிறது? அவனுக்கு ஆசி வழங்கிவிட்டுப் போவேன். அடுத்த பிறப்பிலாவது அவன் திருந்தி வாழப் பிரார்த்தனை செய்வேன். அவ்வளவுதான்’.

  வினய் அதிர்ச்சியோடு என்னைப் பார்த்தான்.

  ‘ஏன் அப்படிப் பார்க்கிறாய்? சன்னியாசம் என்பது ஒரு மனநிலை. ஒரு ஏடு சொல்லிவிட்டது என்பதற்காக நான்கு பேர் மீது அதனைத் திணிப்பது நியாயமான செயலே அல்ல’ என்று சொன்னேன்.

  ‘திணிக்கப்பட்டதாகவா நீ உணர்கிறாய்?’

  ‘என்னை விடு. என் வழி வேறு. இது நான் விரும்பி அடைந்தது. ஆனால் நீ அப்படியல்ல. நிச்சயமாக அல்ல’.

  ‘அண்ணாவும் விரும்பித்தானே போனான்?’

  &யார் கண்டது? சிறு வயதிலேயே அவனை யாராவது மூளைச் சலவை செய்திருக்கலாம்’.

  ‘அப்படிச் சொல்லாதே. அவன் ஒரு யோகி’.

  ‘வரட்டும் பேசிக்கொள்கிறேன்’.

  நாங்கள் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தை அடைந்து களைப்புத் தீர சிறிது நேரம் அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தோம். அங்கிருந்த குழாயில் தண்ணீர் பிடித்துக் குடித்தோம். முகம் கழுவிக்கொண்டு ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டோம்.

  ‘எனக்கு வியப்பாக இருக்கிறது. இங்கே உன்னை அடையாளம் கண்டுகொண்டு இதுவரை யாருமே அருகே வரவில்லை’ என்று வினய் சொன்னான்.

  ‘சொன்னேனே. தமிழ்நாட்டில் நான் பிரபலம் இல்லை’.

  ‘இருந்தாலும் முகம்கூடவா தெரிந்திருக்காது?’'

  ‘தெரியாத வரை சந்தோஷம். வா போகலாம்’ என்று கிளம்பினேன். அரக்கோணத்தில் இருந்து சென்ட்ரல் வரை செல்லும் ரயில் ஒன்று வந்து நின்றது. நாங்கள் அதில் ஏறப்போன சமயம், அந்த ரயிலில் இருந்து வினோத் இறங்கினான்.

  அது வினோத் தானா என்று எனக்குச் சிறிது சந்தேகம் உண்டானது. வினய் பார்த்ததுமே ‘வினோத்’ என்று கத்திவிட்டான். அவனால் நம்பவே முடியவில்லை. வினோத்தும் எங்களைப் பார்த்தான். எத்தனை வயதானால் என்ன, வருடங்கள் ஆனால் என்ன? ஒரு புன்னகையில் உதிர்ந்த காலங்களை எழுப்பிக் கட்டிவிட முடிகிறது.

  வினோத் எங்களை நெருங்கி வந்தான். புன்னகை செய்தான். ஹரே கிருஷ்ணா என்று சொன்னான்.

  (தொடரும்)

  http://www.dinamani.com/junction/yathi/2018/aug/15/108-பசித்தவன்-2980510.html

 10. 107. வழியனுப்பல்

   

   

  அண்ணாவைக் குறித்துத் தவம் இருந்ததாக வினய் சொன்னது திரும்பத் திரும்ப என்னைத் தொந்தரவு செய்துகொண்டே இருந்தது. அவனை நினைத்தேன்; அவன் என்னோடு பேசினான் என்று சொல்லியிருந்தால் எனக்கு அத்தனை பாதிப்பு இருந்திருக்காது. தவம் என்ற சொல் தடுக்கிச் சற்று எரிச்சலானேன். என் குருநாதர் மூலம் எனக்கு அறிமுகமான பிருத்வி பாபாவைப் பற்றிச் சொன்னேன் அல்லவா? அவர் மடிகேரியில் தங்கியிருந்த நாள்களில் ஒரு சம்பவம் நடந்தது. அதைத்தான் நினைத்துக்கொண்டேன்.

  மடிகேரியில் அப்போது ருத்ரம்மா என்றொரு மூதாட்டி வசித்து வந்தாள். அவளுக்குக் குடும்பம் குழந்தை குட்டியெல்லாம் கிடையாது. புனித மார்க் தேவாலயத்துக்கு அருகே ஒரு இடிந்துபோன கட்டடத்தின் பின்புறம் மிச்சமிருந்த மூடிய பகுதியைத் தனது வசிப்பிடமாக வைத்திருந்தாள். அந்த இடத்தில் எப்போதும் இரண்டு கோணிப் பைகளைத் திரைச் சீலையாகத் தொங்கவிட்டிருப்பாள். இன்னொரு கோணிப்பையைத் தரையில் விரித்துப் படுத்திருப்பாள். அவளுக்கு என்னவோ ஒரு வியாதி இருந்தது. அது என்ன என்று யாருக்கும் தெரியாது. பொதுவாக ருத்ரம்மா யாருடனும் பேசுவதில்லை என்பதால் அவளை நினைப்பதற்கு யாருக்கும் அங்கே நியாயம் இருந்ததில்லை. பசிக்கும்போது தேவாலயத்தின் வாசலுக்குப் போய் நிற்பாள். யாராவது பாதிரி அவளுக்கு இரண்டு ரொட்டிகளைக் கொடுத்துவிட்டுப் போவார்கள். அவளுக்கு அது போதும். எப்போதாவது நினைத்துக்கொண்டு ஊரைச் சுற்றி வருவாள். வழியில் விழுந்து கிடக்கும் பேரிக்காய், ப்ளம் போன்ற பழங்களைப் பொறுக்கி மடியில் கட்டிக்கொண்டு போவாள். உணவுத்தேவை என்ற ஒன்று இல்லாவிட்டால் நடமாட்டமே அவசியமில்லை என்று நினைப்பவளாக இருந்தாள்.

  எங்கள் ஆசிரமம் இருந்த பகுதிக்கு ஒருநாள் அவள் வந்தபோது, குருநாதர் அவளை உள்ளே வந்து சாப்பிட்டுவிட்டுப் போகச் சொன்னார். அவளுக்கு அது புரியவில்லையா அல்லது விருப்பமில்லையா என்று தெரியவில்லை. ஆசிரமத்துக்கு வெளியிலேயே உட்கார்ந்து விட்டாள். திரும்பத் திரும்ப உள்ளே வரச் சொல்லிக் கூப்பிட்டும் அவள் அதைக் கண்டுகொள்ளவேயில்லை. 'சரி அவளுக்கு அங்கேயே சாப்பிட ஏதாவது கொடுங்கள்' என்று குருநாதர் சொன்னார். நாங்கள் அவளுக்கு அன்று ஒரு தட்டு நிறைய எலுமிச்சை சாதமும் சுட்ட அப்பளமும் வைத்துக் கொடுத்தோம். அவள் அந்த சாதத்தையும் அப்படியே இடுப்புத் துணியில் கொட்டி முடிந்துகொண்டு கிளம்பிவிட்டாள்.

  வேறொரு சமயம் குருநாதரோடு காலை நடைக்குச் சென்றபோதும் வழியில் அவளைச் சந்தித்தேன். அம்முறை அவள் ஒரு மூங்கிலில் துளை போடும் முயற்சியில் இருந்தாள். ஆணி போல் எதையோ ஒன்றை வைத்து ஒரு மூங்கில் கழியைத் துருவிக்கொண்டிருந்தவளிடம் நெருங்கி, 'உனக்கு என்ன பிரச்னை?' என்று குருநாதர் கேட்டார். அவள் நிமிர்ந்து பார்த்தாள். சட்டென்று சிரித்தாள். மரியாதை கருதி எழுந்து நிற்கவும் செய்தாள். அவள் பைத்தியமில்லை என்று அப்போதுதான் எனக்குத் தெரிந்தது.

  ‘சொல்லம்மா. உனக்கு என்ன பிரச்னை?’ என்று குரு மீண்டும் கேட்டார்.

  ‘உடம்பு சரியில்லை’ என்று அவள் சொன்னாள்.

  ‘என்ன உடம்புக்கு?’

  ‘தெரியவில்லை. ஆனால் சாகவிடாமல் எதுவோ தடுத்துக்கொண்டிருக்கிறது’ என்று சொன்னாள். அந்தப் பதில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. சாவை எதிர்நோக்கி இருக்கிறோம் என்பதைத்தான் அவள் அப்படிச் சொல்கிறாளோ என்று நினைத்தேன். மேற்கொண்டு நாங்கள் எதுவும் பேசவில்லை. குருநாதர் அவளுக்கு ஆசி கூறிவிட்டு மேற்கொண்டு நடக்க ஆரம்பித்துவிட்டபடியால் நானும் அவரோடு போய்விட்டேன்.

  பிருத்வி பாபா மடிகேரிக்கு வந்தபோது குருநாதர் சரியாக ஞாபகம் வைத்திருந்து, ருத்ரம்மாவை அழைத்து வரச் சொல்லி என்னை அனுப்பினார்.

  அவள் தங்கியிருந்த இடத்துக்குச் சென்று நான் குரு சொன்னதைத் தெரிவித்தபோது அவள் மறுப்பு சொல்லவில்லை. என்ன விஷயம் என்று கேட்கவில்லை. குருநாதர் அழைத்து வரச் சொன்னார் என்றதுமே எழுந்து, ‘வா போகலாம்’ என்று சொன்னாள்.

  பிருத்வி பாபா தங்கியிருந்த ஆதிவாசிக் குடியிருப்புக்கு நாங்கள் சென்று சேர்ந்தபோது அபூர்வமாக வெயில் அடிக்க ஆரம்பித்திருந்தது. அது நல்ல குளிர்காலம். அநேகமாக நாங்கள் வெயிலைப் பார்த்தே பல நாள்களாகியிருந்தன. எனவே பாபா தங்கியிருந்த குடிசைக்கு வெளியிலேயே நாங்கள் தரையில் ஒரு கோரைப் பாய் விரித்து அமர்ந்துகொண்டோம். குருநாதர் மட்டும் ருத்ரம்மாவை அழைத்துக்கொண்டு பாபாவைப் பார்க்க வீட்டுக்குள் சென்றார்.

  இருபது நிமிடங்கள் அவர்கள் உள்ளே இருந்தார்கள். அதன்பின் ருத்ரம்மா மட்டும் வெளியே வந்தாள். என்னைப் பார்த்ததும் சிரித்தாள்.

  ‘என்ன சொன்னார்?’ என்று கேட்டேன்.

  ‘பத்து நாளில் அனுப்பிவைத்துவிடுவதாகச் சொன்னார்’ என்று சொல்லிவிட்டு அவள் மகிழ்ச்சியுடன் போய்விட்டாள்.

  எனக்கு அது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. உடனே எழுந்து குடிசைக்குள் சென்றேன். ‘அவளைப் பத்து நாளில் அனுப்பிவைப்பதாகச் சொன்னீர்களாமே?’ என்று கேட்டேன்.

  ‘ஆம்’ என்று பாபா தலையசைத்தார்.

  ‘அவளுக்கு என்ன வியாதி? அதைக் குணப்படுத்த உங்களால் முடியாதா?’

  ‘அவள் அதைக் கேட்கவில்லையே. போக வேண்டும் என்றுதான் சொன்னாள்’.

  ‘இதென்ன மடத்தனம்? நோயின் தீவிரத்தில் வருடக்கணக்காக அவதிப்படுபவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். அதைத் தீர்த்து வைக்க முடிந்தால் அதைச் செய்வதை விடுத்து, அனுப்பிவைக்கிறேன் என்று சொல்வது எப்படிச் சரி?’

  ‘அட என்னப்பா நீ. அவளது நோயே உயிரோடு இருப்பதுதான். அதுவும் காலம் முடிந்த பின்பும் இருப்பது எத்தனைக் கொடுமை தெரியுமா? நியாயமாக அவள் ஏழு வருடங்களுக்கு முன்பே இறந்திருக்க வேண்டும்’.

  எனக்கு அவர் பேசியது புரியவேயில்லை. ஆனால் அவர் செய்வது தவறு என்று நிச்சயமாகத் தோன்றியது. எனது அதிருப்தியை பகிரங்கமாக அவரிடம் தெரிவித்தேன். ‘நீங்கள் ஒன்றும் செய்யாமல் இருந்தாலே போதும். விதித்தபடி அவள் இருந்துவிட்டுப் போகட்டும்’ என்று சொன்னேன்.

  ‘ஏன் இத்தனை உணர்ச்சிவசப்படுகிறாய்? பாபாவுக்குத் தெரியும் விமல்’ என்று குருநாதர் சொன்னார்.

  ‘என்ன தெரியும்? பார்சல் செய்து அனுப்பத் தெரிவதெல்லாம் ஒரு மகானின் சிறப்பியல்பு ஆகுமா? முடிந்தால் அவளைச் சிறிது காலமாவது மகிழ்ச்சியுடன் வாழ வைக்கச் சொல்லுங்கள்’.

  ‘ஆம். நீ சொல்வது சரி. இந்தப் பத்து நாளும் அவள் மகிழ்ச்சியுடன் இருப்பாள்’ என்று பிருத்வி பாபா சொன்னார். அந்தப் பத்து நாளும் குருநாதரை மட்டும் தன்னோடு தங்கியிருக்கச் சொல்லிவிட்டு எங்களை மட்டும் ஆசிரமத்துக்குத் திருப்பி அனுப்பிவிட்டார்.

  அதன்பின் நடந்ததுதான் வியப்புக்குரியது. மடிகேரிக்குச் சுற்றுலா வந்திருந்த யாரோ ஒரு வங்காளத் தம்பதி தற்செயலாக ருத்ரம்மாவைச் சந்தித்திருக்கிறார்கள். என்ன காரணத்தாலோ அவர்களுக்கு அவளைப் பிடித்துப் போக, ருத்ரம்மாவைத் தாங்கள் தங்கியிருந்த நட்சத்திர விடுதிக்கு அழைத்துச் சென்று அங்கேயே தங்க வைத்தார்கள். மூன்று வேளையும் ராஜ போஜனம். வெந்நீர்க் குளியல். கணப்புச் சட்டிக் கதகதப்புடன் கூடிய படுக்கை வசதி. தவிர அவர்கள் கார் வைத்துக்கொண்டு ஊர் சுற்றியபோதெல்லாம் ருத்ரம்மாவை உடன் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அவளுக்குப் பிடித்தமான புடைவைகளை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். அவள் விரும்பிய கழுத்தணிகள், செருப்பு, ஒரு கைக்கடிகாரம் என்று அவள் ஆசைப்பட்டுக் கேட்ட அனைத்தையும் சற்றும் யோசிக்காமல் செய்து தந்திருக்கிறார்கள். ஒருநாள் ருத்ரம்மா, மைசூருக்குப் போய் அரண்மனையைச் சுற்றிப் பார்க்க விரும்புவதாகச் சொல்லப் போக, ஏற்கெனவே மைசூர் அரண்மனையைப் பார்த்துவிட்டு மடிகேரிக்கு வந்திருந்தாலும் அவர்கள் சற்றும் முகம் சுளிக்காமல் அவளுக்காக கார் வைத்துக்கொண்டு இன்னொரு முறை மைசூருக்குப் போய்விட்டு வந்திருக்கிறார்கள்.

  சரியாகப் பத்து நாள். வாழ்வில் அதற்குமுன் எதற்கெல்லாம் அவள் ஆசைப்பட்டிருக்கிறாளோ, அவை அனைத்துமே அவளுக்குக் கிடைத்துவிட்டன. அந்த வங்காளத் தம்பதி யார், அவர்களுக்கு ஏன் ருத்ரம்மாவை அவ்வளவு பிடித்துப் போனது என்றெல்லாம் எனக்குத் தெரியாது. அந்தப் பத்தாம் நாள் காலை நான் ருத்ரம்மாவைச் சந்தித்தபோது, எதிர்பாராவிதமாக அவளே என்னுடன் பேசினாள். ‘இவ்வளவு திருப்தியாக நான் என்றுமே இருந்ததில்லை தம்பி. என்னை அவர்கள் சொந்தத் தாயைப் போலப் பார்த்துக்கொண்டார்கள். யாரோ என்னமோ. எங்கிருந்தாலும் அவர்கள் நன்றாக இருக்கட்டும்’ என்று சொன்னாள்.

  மறுநாள் காலை விடிந்தபோதே செய்தி தெரிந்துவிட்டது. இரவு மாரடைப்பால் அவள் மரணமடைந்திருந்தாள். புனித மார்க் தேவாலயத்துப் பாதிரிகள் ஏற்பாட்டின் பேரில் அவளது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

  அன்று மாலை குருநாதர் ஆசிரமத்துக்குத் திரும்பி வந்தார். ருத்ரம்மா காலமாகிவிட்ட விவரத்தை நாங்கள் தெரிவித்தபோது, ‘எதிர்பார்த்தேன்’ என்று மட்டும் சொன்னார்.

  ‘குரூரமான பாபா பத்து நாள் அவளுக்கு சந்தோஷத்தைக் காட்டிவிட்டு சாகடித்துவிட்டார்’ என்று நான் குற்றம் சாட்டினேன். குருநாதர் சிரித்தார்.

  ‘ஏன் சிரிக்கிறீர்கள்?’

  ‘இந்தப் பத்து தினங்களும் பாபா உண்ணவில்லை. தண்ணீர் அருந்தவில்லை. உறங்கவில்லை. பேசவில்லை. இருநூற்று நாற்பது மணி நேரங்கள் முள் பலகையின் மீது நின்று தவம் புரிந்துகொண்டிருந்தார். அவளை அனுப்பிவைப்பதற்காக மட்டும்’ என்று சொன்னார்.

  ‘என்ன?’

  ‘ஆம் விமல். ஒரு பலகையின் மீது முட்களைப் பரப்பி அதன் மீது நின்று அவர் தவம் புரிந்தார். வாழ்ந்தது போதும் என்று அவள் திருப்தியடையும் வரை அவரது தவம் நீடித்தது. திருப்தியை அவள் மனம் உணர்ந்த மறுகணமே அவளை அனுப்பிவைத்துவிட்டார்’ என்று சொன்னார்.

  எனக்குப் பேச்சே இல்லாமல் போனது. நெடு நேரம் தனியே போய் அமைதியாக அமர்ந்திருந்தேன். எப்படி யோசித்தாலும் அந்தச் செயல்பாட்டின் நியாயம் எனக்குப் புரியாதிருந்தது. குருநாதரிடமே கேட்டேன். ‘அப்படியென்ன அவள் முக்கியம்?’

  ‘அவள் முக்கியம் என்று யார் சொன்னது? அவர் முன்னால் அவள் வந்து நின்றுவிட்டாள் அல்லவா? தன் பிரச்னையைத் தெரியப்படுத்திவிட்டாள் அல்லவா? கேட்டதைச் செய்துகொடுப்பது அவரது தருமம். நீ கேட்டாலும் அவர் இதைத்தான் செய்வார்’ என்று சொன்னார்.

  அதற்குமேல் என்னால் அங்கு இருக்க முடியவில்லை. பிருத்வி பாபா தங்கியிருந்த இடத்துக்கு ஓட்டமாய் ஓடினேன். பாபா அப்போது குடிசைக்கு வெளியே ஒரு கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தார். அவரது கால்களில் முள் குத்தி ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. அவர் அதைப் பொருட்படுத்தாமல் வானத்தில் நகர்ந்துகொண்டிருந்த மேகங்களையே பார்த்தவாறு மல்லாக்கக் கிடந்தார்.

  அருகே சென்று நான் அவரை வணங்கினேன்.

  ‘என்ன?’ என்று கேட்டார்.

  ‘எனக்கும் ஒரு பிரார்த்தனை உண்டு. நிறைவேற்றி வைப்பீர்களா?’

  அவர் சிரித்தார்.

  ‘நீங்கள் இன்றே மடிகேரியை விட்டுப் போய்விட வேண்டும். இம்மாதிரி அற்புதங்கள் நிகழாதிருப்பதே உலகுக்கு நல்லது’ என்று சொல்லிவிட்டு திரும்பிப் பாராமல் போய்விட்டேன்.

  இதைப் பற்றி குருநாதரிடமோ என் நண்பர்களிடமோ நான் சொல்லவில்லை. அது அவசியம் என்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால் மறுநாள் பிருத்வி பாபா அந்த ஆதிவாசிக் குடியிருப்பில் இல்லை என்று தெரிந்தது. நிம்மதியாக இருந்தது.

  (தொடரும்)

  http://www.dinamani.com/junction/yathi/2018/aug/14/107-வழியனுப்பல்-2979819.html

 11. உள்ளரங்க காற்று மாசு  குறித்து விழிப்புணர்வு

   

  உள்ளரங்க காற்று மாசு பற்றி விளக்கம் தருகிறார் வைத்தியர் கிருஷ்ணகுமார்.

  இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

  நாம் திறந்த வெளியில் பயணிப்பதை விட உள்ளரங்க சூழலில் இருக்கும் நேரம் அதிகம். இந்நிலையில் உள்ளரங்க சூழலில் இருக்கும் காற்று மாசு அல்லது மாசடைந்த காற்றால் எம்முடைய ஆரோக்கியத்திற்கு நாமே வேட்டு வைத்துக் கொள்கிறோம். அதாவது நாம் இருக்கும் இடத்திலுள்ள காற்றை மாசாக்குகிறோம் அல்லது மாசடைந்த காற்றை சுவாசிக்கிறோம் அல்லது சுத்திகரிக்கப்படாத உள்ளரங்க காற்று மாசால் பாதிக்கப்படுகிறோம்.

  உடனே எம்மில் பலர் இது தவிர்க்கமுடியாது என்பர். ஆனால் சுத்திகரிக்கப்படாத அல்லது மாசடைந்த உள்ளரங்க காற்றால் சுவாசப்பாதை அழற்சி மற்றும் நுரையீரல் தொடர்பான இனம் கண்டறிய இயலாத பாதிப்பு அதிகரித்து வருகிறது. 

  தெற்காசியாவில் சுவாசப்பாதை அழற்சி, ஆஸ்மா பாதிப்பால் மரணமடைவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் மில்லியன் கணக்கில் இருந்து வருகிறது. இதனை குறைப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டிய தருணம் வந்துவிட்டது. 

  news_image_health_24818.jpg

  நாம் பயன்படுத்தும் உள்ளரங்கத்தை அல்லது உள்ளரங்கத்திலுள்ள காற்றை மாசில்லாமல் பாதுகாப்போம். அதற்குரிய அனைத்து வழிவகைகளையும் காண்போம். முதலில் இது குறித்து விழிப்புணர்வு பெறுவோம்.

  (Hypersensitivity Pneumonitis Allergic Asthma) போன்ற பாதிப்பிலிருந்து அடுத்த தலைமுறையினரை காக்கவேண்டும் என்றால் திறந்தவெளியில் உள்ள காற்று மாசை கட்டுப்படுத்துவதைப் போல் அல்லது திறந்த வெளியிலான காற்று மாசு படாமல் இருப்பதற்கான நடவடிக்கையை எடுப்பது போல் உள்ளரங்க காற்று மாசினையும் கட்டுப்படுத்தவேண்டும். 

  இதற்காக அறிமுகமாகியிருக்கும் மருத்துவ உபகரணங்களையும் பயன்படுத்தலாம். அத்துடன் எமக்கு தெரிந்த வகையிலான தற்காப்பு வலையினையும் பயன்படுத்தலாம். இது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கும் வழிமுறைகளையும் கடைபிடிக்கலாம்.

  http://www.virakesari.lk/article/39082

   

   

  “கால் ஆணி” எனும் பாதிப்பு

   

  எம்மில் சிலருக்கு அவர்களுடைய பாதங்களில் சிறிய புண் போன்றோ அல்லது சிறிய கட்டி போன்றோ ஒரு பாதிப்பு உருவாகிவிடும். 

  healtha.jpg

  இதற்கு கால் ஆணி என்று குறிப்பிடுவதுண்டு.

  பொதுவாக கால் ஆணி பாதிப்பை கால் ஆணி, காய்ப்பு, மரு என்று மூன்று வகையாக பிரித்து உணரவேண்டும். இந்த மூன்றும் ஒரே அறிகுறியுடன் இருந்தாலும் இந்த மூன்றிற்கும் வெவ்வேறான சிகிச்சைகள் வழங்கப்பட்டு குணப்படுத்தப்படுகின்றன.

  நாம் தற்போது வணிக வளாகங்களிலும், பூங்கா அல்லது கடற்கரை போன்ற மிகக்குறைவான இடங்களில் மட்டுமே நடக்கிறோம். இதன்போது எதிர்பாராதவிதமாக பாதங்களில் கடினமான பொருள்கள் குத்திவிட்டால், அங்கே சிறிய அளவிலான துளை ஏற்படுகிறது. 

  உடனடியாக எம்முள் இருக்கும் நோயெதிர்ப்பு சக்தியானது அங்கு தோலை வளரச் செய்யும். இது எதிர்பாராதவிதமாக உள்நோக்கி வளரத் தொடங்கினால் அதைத்தான் கால்ஆணி என்று குறிப்பிடுகிறோம். 

  சிலர் இத்தகைய தருணங்களில் தங்களின் பாதத்தை தவறாகவோ அல்லது இயல்பிற்கு மீறிய நிலையிலோ பயன்படுத்தினால் இவை வலியுடன் கூடிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.

  சிலர் இதனை குணப்படுத்திக்கொள்கிறேன் என்று கூறி சுய மருத்துவம் செய்து கொண்டு, வலியை அதிகரித்துக் கொள்வர். அத்துடன் தொடர்ந்து நடக்கக்கூட இயலாமல் முடங்கிவிடுவர். இத்தகைய தருணத்தில் அதனை மின்கதிர் சிகிச்சை மூலம் குணமாக்கலாம். ஆனால் அதன் பிறகு வைத்தியர்கள் பரிந்துரைக்கும் பிரத்யேக காலணிகளை அவர் அறிவுறுத்தும் காலகட்டம் வரைக்கும் அணிந்திருக்கவேண்டும்.

  டொக்டர் பார்த்திபன்

  தொகுப்பு அனுஷா.

  http://www.virakesari.lk/article/38976

   

   

  தூங்குவதில் கவனம் தேவை

   

  ஒருவர் அவருடைய உடல் நலத்திற்கு தேவையான உறக்கத்தை விட அதிக நேரம் தூங்கினால் அதைத்தான் ‘ஹைப்பர்சோம்னியா ’ என்று குறிப்பிடுகிறனர்.

  sleep.jpg

   மூளைப்பகுதியில் உள்ள ஹைப்போதாலமஸ் என்ற பகுதிதான் தூக்கத்தையும், பசியையும் கட்டுப்படுத்துகிறது. 

  இப்பகுதியில் வேறு சில காரணங்களால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதிகப் பசியும், அதிக தூக்கமும் உண்டாகும். சிலருக்கு உரிய பரிசோதனைக்கு பிறகு அவருக்கு ஏற்பட்டிருப்பது கிளைன் லெவின் சிண்ட்ரோம் பாதிப்பா? அல்லது ஹைப்பர்சோம்னியாவா? என்பதை உறுதிப்படுத்துவர்.

  இதற்குரிய சிகிச்சை எம்முடைய உறக்கத்தை ஒரு ஒழுங்குமுறைக்குள் கொண்டுவருவது தான். தொடக்கத்தில் சிரமமாக இருந்தாலும், தொடர் பயிற்சி, உடல் எடையை சீராக பராமரித்தல், உறக்கத்தை தரும் உணவுகளையும், உடற்பயிற்சிகளையும் வைத்தியர்களின் ஆலோசனையின் பேரில் செய்வது போன்றவற்றை பின்பற்றினால் இதனை கட்டுப்படுத்தலாம். 

  இதனை அலட்சியப்படுத்தினால் இந்த பாதிப்பு தீவிரமாகி எப்போதும் வேண்டுமானாலும் பெருந்தூக்கம் ஏற்பட்டு, அதனால் மோசமான விளைவுகளும் ஏற்படக்கூடும்.

  அதனால் சரியான தூக்கத்தை மேற்கொள்ளவேண்டும். அதனை இரவில் தான் மேற்கொள்ளவேண்டும். அதிகபட்சமாக எட்டு மணி நேரமும், குறைந்த பட்சமாக ஆறு மணி நேரமும் தூங்கவேண்டும்.

  டொக்டர் ராமகிருஷ்ணன்.

   

  தொகுப்பு அனுஷா.

  http://www.virakesari.lk/article/38901

 12. வன்முறையுடன் தொடங்கிய 1985
  என்.கே. அஷோக்பரன் /

  தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 158)

  பயங்கரவாத ஒழிப்பும் அச்சுவேலித் தாக்குதலும்

  1985 ஜனவரியில் ஜே.ஆர். ஜெயவர்தனவின் இராணு ரீதியான அணுகுமுறை, அதனுடைய முழுவடிவத்தைப் பெறத்தொடங்கியது.   

  ‘தேசிய பாதுகாப்பு’ என்பது, சகல நிலைகளிலும் முக்கியத்துவம் மிக்கதொன்றாக மாற்றப்பட்டது. ‘பயங்கரவாத ஒழிப்பு’ என்பது, அரசாங்கத்தின் வேதவாக்கானது.   

  தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி தலைமையில், இந்தச் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை, களையெடுக்கும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டது.   

  இதன்படி, 1985 ஜனவரி முதல்வாரத்திலேயே, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருக்கோணமலை, வவுனியா, அக்கரைப்பற்று என, வடக்கு, கிழக்கு எங்கும் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதல்களில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார்கள்.  

  1985 ஜனவரி ஒன்பதாம் திகதி, யாழ். அச்சுவேலிப் பகுதியில், இலங்கை இராணுவம், விடுதலைப் புலிகள் அமைப்பின் மறைவிடம் ஒன்றின் மீது, தாக்குதல் நடத்தியதில், அந்த அமைப்பின் யாழ்ப்பாணத் தளபதி கொல்லப்பட்டார்.  

  இது, அரச படைகளுக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்தது. ஜே.ஆர் அரசாங்கம், இதைக் குறிப்பிடத்தக்க வெற்றியாகக் கருதியதுடன், தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றது.   

  இந்தத் தாக்குதல் ஜே.ஆருக்கு, தான் தேர்ந்தெடுத்த ‘பயங்கரவாத ஒழிப்பு’ என்ற, இராணுவ ரீதியான அணுகுமுறை மீதான, நம்பிக்கைக்கு உரமூட்டியது. பெப்ரவரி நான்காம் திகதி, ஜே.ஆர் ஆற்றிய சுதந்திரதின உரையில், “பயங்கரவாத அச்சுறுத்தலை நாம் வெற்றிகொள்வோம்” என்று, உறுதியுடன் குறிப்பிட்டிருந்தார்.   

  இந்த வெற்றியை, அரச படைகளின் மிகப்பெரிய ஊடறுப்பு என்று, சிலாகித்துப் பேசிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி, உளவுத்தகவலின் அடிப்படையிலேயே, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், தான் தேசிய பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பேற்றதன் பின்னர், நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இது என்றும், குறிப்பிட்டிருந்தார்.   

  இந்தத் தாக்குதல் வெற்றியைத் தொடர்ந்து, தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திலிருந்து, குறித்த தமிழ் இளைஞர் ஆயுதக் குழுவினர், வசம் இருந்த ஆயுதங்கள் பலவும் மீட்கப்பட்டன.   

  அதன் மூலம், குறித்த ஆயுதங்கள் இந்தியாவால் வழங்கப்பட்டன என்று, அடையாளம் காணப்பட்டதாகத் தனது நூலில், ரீ.சபாரட்ணம் குறிப்பிடுகிறார்.   

  இதுவரை, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு, தான் ஆதரவு வழங்குவதை, இந்தியா நேரடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இலங்கை அரசாங்கம், இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தபோதெல்லாம் இந்தியா, அதை மறுத்து வந்துள்ளது.   

  இந்த நிலைப்பாட்டைத் தனது நூலொன்றில் ஜே.என். திக்ஸிட் பின்வருமாறு விமர்சிக்கிறார். ‘இந்தக் குற்றச்சாட்டை இந்தியா, வௌிப்படையாக மறுத்திருக்க வேண்டியதில்லை. மாறாகக் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில், அமைதி காப்பதுடன், பதில் சொல்ல வேண்டுமானால், இலங்கையில் ஆயுதக் குழுக்கள் உருவாகியுள்ளதெனில், அது இலங்கை அரசாங்கத்தின் தமிழர்கள் மீதான பாகுபாட்டு கொள்கைகளால் உருவானது என்று குறிப்பிட்டிருக்கலாம்’ என்று அவர் தனது நூலில் கருத்துரைக்கிறார்.   

  இந்தியா, இந்தக் குற்றச்சாட்டை மறுப்பதில் உள்ள சிக்கல், இதில் இந்தியாவின் பங்கை வௌிப்படுத்தத்தக்க ஆதாரங்கள் கிடைக்கும் போது, அது இராஜதந்திர ரீதியில் இந்தியாவைச் சங்கடத்துக்கு உட்படுத்தும் என்பதுடன், இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியாவுடன் பேரம் பேசத்தக்க பலத்தை வழங்குவதாக அமையும்.   

  மறுபுறத்தில் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிராக அதிகரித்த கைதுகள், மற்றும் தொடர்ந்த வன்முறைத் தாக்குதல்கள் தொடர்பில், தமிழ்த் தலைமைகள் தமது கண்டனத்தைப் பதிவு செய்தனர். அவர்களுக்கு இந்தியாவை விட, வேறு நாதியிருக்கவில்லை.  

  தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான எம்.சிவசிதம்பரம், “தமிழர்கள் இனி, இந்தியாவிடம்தான் தமது பாதுகாப்புக்குக் கையேந்தவேண்டும்” என்று கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.  

  பதிலடித் தாக்குதல்கள்

  அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிரான, பதிலடியை வழங்கத் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் தயாராகின. 1985 ஜனவரி 19ஆம் திகதி, தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) யாழிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணமான ‘யாழ்தேவி’ ரயில் மீது, முறிகண்டிப் பிரதேசத்தில் வைத்து, குண்டுத் தாக்குதலொன்றை நடத்தியது.   

  இந்தத் தாக்குதலில், 22 இராணுவ வீரர்கள் உட்பட, 34 பேர் கொல்லப்பட்டதாக ‘போரும் சமாதானமும்’ என்ற நூலில், அன்டன் பாலசிங்கம் குறிப்பிடுகிறார். 

  இந்தத் தாக்குதல், இலங்கை அரசாங்கத்துக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருந்தாலும், இது பயங்கரவாதத்துக்கு எதிரான, இலங்கை அரசாங்கத்தின் கருத்துருவாக்கத்துக்கு வலுச்சேர்ப்பதாக இருந்தது.   

  இலங்கை அரசாங்கம், தன்னுடைய பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையை, இன்னும் வலுவாக முன்னெடுக்கத் தொடங்கியது. இந்தத் தாக்குதலின் எதிர்வினையாக, இலங்கை அரசாங்கம் கொழும்பிலும் வடக்கு, கிழக்கிலும் தமிழ் மக்களுக்கு எதிராகப் பெரும் சுற்றி வளைப்புத் தேடுதல்களையும் கைதுகளையும் அரங்கேற்றியது.   

  வடக்கு, கிழக்கில் பாதுகாப்பு படைகள், பொதுமக்கள் மீதான துப்பாக்கிச் சூடுகளையும் நடத்தியிருந்தனர். வடக்கு, கிழக்கு முழுமையான யுத்த பூமியாக மாறத் தொடங்கியிருந்தது. சுற்றி வளைப்புகள், தாக்குதல்கள், கைதுகள், காணாமல் போதல் என இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்வு, அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது.  இதனால் வடக்கு, கிழக்கை சேர்ந்த பெருமளவு தமிழர்கள், உள்நாட்டில் இடம்பெயர்ந்தும், வௌிநாட்டுக்குக் குறிப்பாகத் தென்னிந்தியாவுக்கு அகதிகளாகச் செல்லத்தொடங்கினர்.  

   1983 ‘கறுப்பு ஜூலை’யைத் தொடர்ந்து, இந்தியாவில் தஞ்சமடைந்து வந்த ஈழ அகதிகளின் எண்ணிக்கை, தற்போது பெருமளவு அதிகரிக்கத் தொடங்கியது. இந்தியாவுக்கு புதியதொரு சவாலாக, இது உருவெடுத்திருந்தது. மேலும், இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையே, கடல் மார்க்கமாகப் பயங்கரவாதிகள் பயணிப்பதையும் ஆயுதக்கடத்தலைத் தடுக்கவும் பாக்கு நீரிணை பாதுகாப்பு நடவடிக்கையை முடுக்கிவிட்டிருந்தது. இந்தப் பாதுகாப்பு நடவடிக்கையில், இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய (குறிப்பாக தமிழக) மீனவர்கள், இலங்கைக் கடற்படையின் தாக்குதலுக்கும் கைதுகளுக்கும் உள்ளானார்கள். இது, இந்தியாவுக்கு இன்னொரு தீராத தலைவலியாக உருவெடுத்திருந்தது.   

  திட்டமிட்ட குடியேற்றமும் கொக்கிளாய்த் தாக்குதலும்

  1985 ஜனவரி முழுவதும், இடம்பெற்ற தாக்குதல்கள், பெப்ரவரி மாதமும் தொடர்ந்தது. தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கும், அரச படைகளுக்கும் இடையிலான போர், வலுத்துக் கொண்டிருந்த நிலையில்தான், பெப்ரவரி இரண்டாவது வாரம், ராஜீவ் காந்தியின் அழைப்பின் பேரில், தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலியை, ராஜீவ் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்த, ஜே.ஆர், இந்தியா அனுப்பி வைத்தார்.   

  மறுபுறத்தில் வடக்கு, கிழக்கின் எல்லைகளில், சிங்களக் குடியேற்றங்களை உருவாக்குவதில், ஜே.ஆர் அரசாங்கம் கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்டுக் கொண்டிருந்தது.   

  ஜே.ஆர், இந்தக் குடியேற்றங்கள் தொடர்பில், மிக உறுதியாக இருந்தார். இலங்கைத் தீவுக்குள், ஒரு பகுதியை எந்தவொரு தனிப்பட்ட மக்கள் கூட்டமும், தம்முடைய தாயகமாகக் கருதமுடியாது என்றும், அத்தகைய தாயகக் கோரிக்கையை, அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்றும், நாட்டின் ஒட்டுமொத்த இன விகிதாசாரம் பேணப்படும் வகையில் குடியேற்றங்கள் அமைக்கப்படும் என்றும், அவர் ஜனவரி இறுதிப்பகுதியில் தெரிவித்திருந்தார்.   

  வன்னிப் பகுதியில், ஏறத்தாழ 30,000 சிங்கள மக்களைத் தெற்கிலிருந்து அழைத்து வந்து குடியேற்றுதல், அவர்களுக்கும், அந்தக் குடியேற்றங்களுக்கும் பாதுகாப்பு வழங்குதல் என்ற திட்டத்தை, ஜே.ஆர் முன்வைத்திருந்தார்.   

  இந்தக் குடியேற்றங்கள் பற்றிக் கருத்துரைத்த அமைச்சர் காமினி திசாநாயக்க, இந்தக் குடியேற்றங்களின் இராணுவ ரீதியான முக்கியத்துவத்தை, இஸ்‌ரேலின் மேற்கு எல்லைப்புறக் குடியேற்றங்களுடன் ஒப்பிட்டார்.   இது, ஜே.ஆர், அத்துலத்முதலி ஆகியோரின் இராணுவ நடவடிக்கைகள், இஸ்‌ரேலிய ஆலோசனையின்படி, நடத்தப்படுகிறது என்ற சிலரது கருத்துக்கு, வலுச்சேர்ப்பதாக அமைந்தது.   

  இந்த நிலையில்தான், அச்சுவேலித் தாக்குதலுக்கான பதிலடித் தாக்குதலொன்றை, இதே காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கம் நடத்தியிருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில், அரசாங்கம் உருவாக்கியிருந்த திட்டமிட்ட குடியேற்றங்களைப் பாதுகாப்பதற்காக, முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பகுதியில், ஓர் இராணுவ முகாமொன்று ஸ்தாபிக்கப்பட்டது.   

  1985 பெப்ரவரி 13ஆம் திகதி, விடுதலைப் புலிகள் அமைப்பினர், இந்த இராணுவ முகாம் மீது, தாக்குதலொன்றை நடத்தியிருந்தனர். இந்தத் தாக்குதலில், இருதரப்பு இழப்புப் பற்றியும் இருதரப்பும் முரணான புள்ளிவிவரங்களை வௌியிட்டிருந்தனர்.  

  யுத்தமொன்றின் போது ஒரு தரப்பு, தன்தரப்பு இழப்புகளைக் குறைத்தும், எதிர்த்தரப்பின் இழப்பை அதிகப்படுத்தியும் குறிப்பிடுவது புதியவிடயமல்ல. ஆகவேதான், இந்த இழப்பு குறித்த தகவல்கள் ஏற்புடைமை ஐயத்துக்கு உரியதாகின்றன. இரு தரப்பு இழப்புகள் எவ்வாறிருப்பினும், இந்தத் தாக்குதல் இலங்கை அரசாங்கத்துக்கு, இன்னொரு வகையில் அதிர்ச்சியைக் கொடுப்பதாக அமைந்திருந்தது.   

  இலங்கையில் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், ‘கெரில்லா யுத்தம்’ என்ற நிலையிலிருந்து மாறி, மரபுவழி யுத்தத்தின் அம்சங்களை நோக்கி நகர்ந்தமை, இந்தத் தாக்குதலில் தௌிவானதாக, சிலர் பதிவு செய்கிறார்கள்.   

  அதாவது, இந்தத் தாக்குதலில் விடுதலைப் புலிகள் இயக்கம், நவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி இருந்ததும், போராளிகள் இராணுவ சீருடையை ஒத்த சீருடையை அணிந்திருந்தமையும் யுத்தத்தில் ஈடுபடும் இராணுத்தினர் கொண்டுள்ளதைப் போல, உணவுப்பொதி, நீர்க்குடுவை, மருந்துகள் என்பவற்றையும் தம்முடன் கொண்டிருந்தமையும் இராணுவ முகாமொன்றின் மீது, நேரடி யுத்தத்தில் ஈடுபட்டமையும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், கெரில்லாப் போர் முறையைத் தாண்டி, மரபுவழிப் போருக்குத் தயாராகி விட்டார்கள் என்பதை, உணர்த்துவதாக அமைந்ததாகச் சிலர் குறிப்பிடுகிறார்கள்.   

  இது இலங்கை அரசாங்கத்தினது, குறிப்பாக பாதுகாப்புச் சபையினது கவனத்தை ஈர்த்திருந்தது. இனி அரசாங்கமும், தன்னுடைய யுத்த அணுகுமுறையை, இதற்கேற்றாற்போல மாற்ற வேண்டிய தேவை உருவாகியிருந்தது.   

  விடுதலைப் புலிகள் இயக்கம் நடத்திய கொக்கிளாய் தாக்குதலுக்கு பதிலாக, குறித்த தாக்குதல் நடந்த இரண்டாம் நாள், முல்லைத்தீவுப் பகுதியில், அரசபடைகள் கடுமையான சுற்றிவளைப்புத் தாக்குதலொன்றை நடத்தியிருந்தனர். இதில், 52 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.   

  தமிழ்த் தரப்பில், “கொல்லப்பட்டவர்கள் அப்பாவிப் பொதுமக்கள்” என்று தெரிவித்தபோது, இலங்கை அரசாங்கம், “கொல்லப்பட்டவர்கள், தமிழ்ப் பிரிவினைவாதிகள்” என்று குறிப்பிட்டிருந்தது.   

  சென்னையிலிருந்த அமிர்தலிங்கம், செய்வதறியாது திகைத்துப்போயிருந்தார் என்று சொன்னால், அது மிகையல்ல. அப்பாவிப் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டிப்பதுடன், மீண்டும் இந்திய அரசாங்கத்திடம் மண்டாடுவதையே அவர் செய்தார்.   

  “1970-71 காலப்பகுதியில், மேற்கு வங்கத்தில் உருவானதைப் போன்றதொரு சூழல்தான், தற்போது இலங்கையின் வடக்கு, கிழக்கில் நிலவிவருகிறது. தமிழர் பிரதேசங்களில் இன அழிப்பைத் தடுக்க, இந்தியா நேரடியாகத் தலையிட வேண்டும்” என்று அமிர்தலிங்கம், ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய அரசாங்கத்திடம், கோரிக்கை விடுத்தார்.   

  ஆனால், ராஜீவ் காந்தி மற்றும் அத்துலத்முதலி ஆகியோரிடையே பெப்ரவரி இரண்டாவது வாரத்தில் இடம்பெற்றிருந்த பேச்சுவார்த்தைகளில், அத்துலத்முதலியின் கோரிக்கைகளுக்கு ராஜீவ் காந்தி சாதகமான பதிலை வழங்கியிருந்தார் என்பதுதான் நிதர்சனமாக இருந்தது.  

   (அடுத்த திங்கட்கிழமை தொடரும்)

  http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வன்முறையுடன்-தொடங்கிய-1985/91-220793

 13. உடல் எனும் இயந்திரம் 37: உடலின் தலைமைச் செயலகம்!

   

   
  udaljpg

  உடலின் உச்சியில் இருக்கிறது, மூளை. உடலில் உள்ள செல்கள் எல்லாமே நரம்புகள் மூலம் மூளையுடன் இணைந்துள்ளன. அவற்றின் வழியாக 24 மணி நேரமும் உடலில் இருந்து மூளைக்குத் தகவல்கள் செல்வதும், மூளை அந்தத் தகவல்களை ஒரு தேர்ந்த கணினிபோல் உடனடியாக அலசி, ஆராய்ந்து, உடல் பகுதிகளுக்குத் தகுந்த பதில்களை அனுப்புவதும் நடைபெற்றுக்கொண்டே இருப்பதால்தான், உடலின் உள்/வெளி இயக்கங்களும் உயிர் வாழ்தலும் சாத்தியப்படுகின்றன.

  உடலில் எந்த ஒரு செயலும் மூளை/அதோடு இணைந்த தண்டுவடத்தின் கட்டளைப்படிதான் நிகழ்கிறது. அதனால்தான் மூளையை உடலின் ‘தலைமைச் செயலகம்’ என்கிறோம். அதோடு, முக்கியமானத் தகவல்களைத் தன்னிடம் சேமித்துக்கொள்ளும் திறன் மூளைக்கு இருப்பதால், நினைவாற்றலை வளர்ப்பதும், கற்றுக்கொள்ளும் ஆற்றலைப் பெருக்குவதும், அறிவுத் திறனை மேம்படுத்துவதும் நம்மால் முடிகிறது.

   

  இவை தவிர, மூளை நம் எண்ணங்களின் மையமாகவும் இருக்கிறது. நமக்குள் உண்டாகும் ஆனந்தம், அழுகை, சிரிப்பு, வியப்பு, கவலை, கோபம் போன்ற பலதரப்பட்ட உணர்ச்சிகளுக்கும் மனநிலைகளுக்கும் மூளைதான் காரணம். மனித மூளைக்குப் பேச்சுத் திறனும், சிந்தித்துச் செயல்படும் ஆற்றலும் உள்ளதால்தான் முதுகெலும்புள்ள மற்ற விலங்குகளிலிருந்து முன்னேறிய உயிரினமாக மனித இனம் கருதப்படுகிறது.

  பூச்சிகள், புழுக்கள் போன்ற முதுகெலும்பு இல்லாத உயிரினங்களுக்கு ‘மூளை’ எனத் தனி ஓர் உறுப்பு இல்லை. பதிலாக, ‘நரம்பு முடிச்சுகள்’ (Ganglia) அவற்றின் உடலியக்கங்களை முறைப்படுத்துகின்றன; கட்டுப்படுத்துகின்றன. அந்த உயிரினங்களில் ஆக்டோபஸுக்கு மட்டுமே ஓரளவு வளர்ச்சி பெற்ற மூளை இருக்கிறது. பாலூட்டிகளில் பரிணாம வளர்ச்சிப்படி மனித மூளைக்கு அடுத்தபடியாக சிம்பன்ஸி, கொரில்லா போன்ற வாலில்லா குரங்குகளுக்கும், டால்பின் மற்றும் திமிங்கிலத்துக்கும் உயர் வளர்ச்சி பெற்ற மூளை இருக்கிறது.

  மூளையின் அளவு என்ன?

  பிறக்கும் குழந்தைக்கு மூளையின் எடை அரை கிலோவுக்கும் குறைவாகவே இருக்கிறது. பெரியவர்களுக்குச் சராசரியாக 1.4 கிலோ. நம் உடல் எடையோடு ஒப்பிடும்போது இது 2 சதவீதம்தான். ஆனால், உடல் மொத்தமும் பயன்படுத்தும் ஆக்ஸிஜன் அளவில் 20% மூளையின் செயல்பாடுகளுக்குத் தேவை. காரணம், அவ்வளவு வேலை! விலங்குகளில் திமிங்கிலத்தின் (Sperm whale) மூளைதான் அதிக எடை கொண்டது, 7.8 கிலோ! ஆனால், அதன் உடல் எடையில் இது 0.06% மட்டுமே.

  மூளையின் அளவு ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபடுகிறது. பெண்களுக்கு  அளவு சற்றே குறைவு. ஆனால், அவர்களின் மூளையில் நரம்பணுக்கள் மிக நெருக்கமாக இருப்பதால், ஆண்களைவிடப் பெண்களுக்கு 10% நரம்பணுக்கள் எண்ணிக்கையில் அதிகம். ஒருவருடைய மூளையின் கனத்துக்கும் புத்திசாலித் தனத்துக்கும் தொடர்பில்லை. அப்படி இருந்தால், உலகில் எஸ்கிமோக்கள்தான் அதிபுத்திசாலிகளாக இருந்திருக்க வேண்டும். காரணம், மனிதர்களில் அவர்களின் மூளைதான் அதிக கனம்.

  மூளை எப்படி இருக்கும்?

  ஒரு தலைப்பாகைபோல் காணப்படுகிற மூளை ஊதா கலந்த சாம்பல் நிறத்தில் இருக்கும் (Greyish pink). இதன் மேற்பரப்பு ஒரே தளமாக இல்லாமல், கசங்கிய துணிபோல் மடிப்பு மடிப்பாகவும், பாளம் பாளமாகவும் இருக்கிறது. இந்த மடிப்புகளில் ஓர் ஒழுங்கு இருப்பதில்லை. இவை எல்லோருக்கும் ஒரே மாதிரியாகவும் இருப்பதில்லை. இந்த மடிப்புகளால் மூளையின் பரப்பளவு அதிகமாவது ஒரு நன்மை. மேலும், இந்த மடிப்புகளை வைத்து மூளையை வலது, இடது என இரண்டு பாதியாகவும், அந்த இரண்டு பாதிகளை முன் பக்கம், பின் பக்கம், இரண்டு பக்கப் பகுதிகள் என நான்கு சுளைகளாகவும் பிரிக்க முடிகிறது.

  ‘கபாலம்’ (Cranium) எனும் மண்டை ஓட்டுக்குள் பாதுகாப்பாக இருக்கிறது, மூளை. என்றாலும், நாட்டில் முக்கியத் தலைவர்களுக்குச் சிறப்புப் பாதுகாப்பு கொடுப்பதுபோல், மூளைக்கும் மூன்றடுக்குப் பாதுகாப்பு கிடைக்கிறது. இப்படி மூளையைப் போர்த்திப் பாதுகாக்கிற உறைகளுக்கு ‘மூளையுறைகள்’ (Meninges) என்பது பொதுவான பெயர்.

  udal%202jpg
   

  அவற்றுக்கு வன்வெளிச்சவ்வு (Dura mater), சிலந்தியுருச் சவ்வு (Arachnoid mater), மென்உள்சவ்வு (Pia mater) எனத் தனிப் பெயர்களும் உண்டு. வன்வெளிச்சவ்வு கபாலத்தை ஒட்டியும் மூளையின் வெளியுறையாகவும் அமைந்துள்ளது. மென்உள்சவ்வு மூளையின் உட்பகுதியைப் போர்த்தியுள்ளது.

  இந்த இரண்டுக்கும் இடையில் சிலந்தியுருச் சவ்வு இருக்கிறது. இந்த மூன்று சவ்வுகளும் மூளையை மட்டுமல்லாமல், தண்டுவடத்தையும் போர்த்திப் பாதுகாக்கின்றன.

  நாட்டில் மாநில முதல்வருக்குச் சிறப்புப் பாதுகாப்பு உள்ளதுபோல் மூளைக்கும் உண்டு. சிலந்தியுருச் சவ்வுக்கும் மென்உள்சவ்வுக்கும் நடுவில் ‘சிலந்தியுருச் சவ்வு இடைவெளி’ (Subarachnoid space) இருக்கிறது. அதில் ‘மூளைத் தண்டுவடத் திரவம்’ (Cerebrospinal fluid) பயணிக்கிறது.

  இது ஒரு குஷன்போல் அமைந்து, தலையில் லேசாக அடிபடும்போது வலுவான கபால எலும்பால் மென்மையான மூளைத் திசுக்கள் அமுக்கப்படுவதைத் தடுத்து, மூளையின் பாதுகாப்பை மேம்படுத்துகிறது.

  அடுத்து, பிரதமர், குடியரசுத் தலைவர் போன்ற மிக முக்கியத் தலைவர்களுக்கு ராணுவப் பாதுகாப்பு தரப்படுவதைப்போல் மூளைக்கும் தனிச் சிறப்புப் பாதுகாப்பு கிடைக்கிறது. அதற்கு ‘மூளை ரத்த வேலி’ (Blood brain barrier) என்று பெயர்.

  மூளைக்கு ரத்தம் கொடுக்கும் தந்துகிகளில் (Capillaries) மட்டுமே காணப்படும் ஒரு சிறப்பு ஏற்பாடு இது. எப்படி? இங்குள்ள செல்கள் மிகவும் நெருக்கமாக அமைந்துள்ளதால், மற்ற தந்துகிகளில் ரத்தப் பொருட்கள் கடத்தப்படுவதுபோல் அவ்வளவு எளிதாக இங்கே கடத்த முடியாது.

  இந்த அமைப்பானது மூளைக்குத் தேவையான ஆக்ஸிஜன், தண்ணீர், சில வாயுக்கள், ஊட்டச் சத்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே மூளைக்குள் அனுப்பும். மூளையைப் பாதிக்கிற பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள், நச்சுப் பொருட்கள், அந்நியப் பொருட்கள் போன்றவற்றைச் சாமானியமாக மூளைக்குள் நுழைய விடாது.

  மூளைக்குள் சதா நுழையும் இன்னும் பல ஆபத்தான பொருட்களையும் இது சல்லடைபோல் வடிகட்டிவிடும். இதன் பலனால், மூளைக்கு ஏற்படக்கூடிய பல பாதிப்புகள் தாமாகவே குறைந்துவிடும். எனவேதான் இதை மூளைக்குக் கிடைத்துள்ள ‘ராணுவப் பாதுகாப்பு’ என்கிறோம்.

  மருத்துவர்கள் மூளையை முன் மூளை (Forebrain), நடு மூளை (Midbrain), பின் மூளை (Hindbrain) என மூன்று முக்கியப் பகுதிகளாகப் பிரிக்கின்றனர். ஏன்? எதற்கு? அடுத்த வாரம் தெரிந்துகொள்வோம்.

  (இன்னும் அறிவோம்)
  கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்

  https://tamil.thehindu.com/

 14. 106. கண்ணீரின் பனிக்குடம்

   

   

  ‘ஒருநாள் நான் அண்ணாவைக் குறித்துத் தவமிருந்தேன்’ என்று வினய் சொன்னான். எனக்குத் தூக்கிவாரிப் போட்டுவிட்டது.

  ‘என்ன?’ என்று மீண்டும் கேட்டேன்.

  ‘என்ன செய்து மீளலாம் என்று தெரியாத சூழ்நிலையில் உணர்ச்சி மேலிட்டு ஒருநாள் அவனை நினைத்துத் தவம் இருந்தேன். அவன் நேரில் வந்து உதவி செய்வான் என்று நினைத்தேன்’.

  நான் சிரித்துவிட்டேன். ‘அவன் என்ன செய்ய முடியும்? வேண்டுமானால், உன் காதில் ஓங்காரம் ஓதி உட்கார வைத்துவிட்டுப் போவான். அதற்கு அவன் எதற்கு? சுயமாக தீட்சை வழங்கிக்கொள்ள முடிந்தவனுக்கு சுய மந்திரோபதேசமா சிரமம்?’ என்று கேட்டேன்.

  ‘இல்லை. அவன் என்னைச் சரிசெய்ய முடியும் என்று அப்போது நான் தீவிரமாக நம்பினேன்’.

  ‘சரி. உன் தவத்துக்குப் பலனாக அவன் வந்தானா?’

  ‘வரவில்லை. ஆனால் பேசினான்’.

  ‘ஓ. என்ன சொன்னான்?’

  ‘என்னை இமயமலைக்குப் போகச் சொன்னான். சிரமப்பட்டாவது மானசரோவரத்தின் கரையைச் சென்றடைந்துவிடச் சொன்னான்’.

  ‘பிறகு?’

  ‘ஒரு பரிக்ரமாவை முடித்துவிட்டு மானசரோவரத்திலேயே அமர்ந்து எட்டு நாள் தவம் செய்யச் சொன்னான்’.

  ‘செய்தாயா?’

  ‘இல்லை’.

  ‘ஏன்?’

  ‘என்னால் நேபாளத்துக்கு மேலே போக முடியவில்லை. நடப்பது சிரமமாக இருந்தது. மூச்சு விட முடியவில்லை’.

  ‘அங்கேயே உட்கார்ந்து அவனைத் திரும்பக் கூப்பிட்டுப் பிரச்னையைச் சொல்ல வேண்டியதுதானே? ஆஞ்சநேயர் மாதிரி யாரையாவது அனுப்பி, தூக்கிக்கொண்டு போய் இறக்கிவிடச் சொல்லியிருப்பானே’.

  ‘நீ கிண்டல் செய்கிறாய்’.

  ‘வினய், வேறென்ன செய்ய முடியும் சொல். நீ இவ்வளவு அப்பாவியாக இருக்கக் கூடாது. உனக்கு உன் பிரச்னை என்ன என்பதிலேயே நிறையக் குழப்பங்கள் இருக்கின்றன’.

  ‘எனக்கு ஒரே ஒரு பிரச்னைதான். நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்பதுதான் அது’.

  ‘காரணம், நீ உன் இயல்பில் பயணம் செய்யவேயில்லை. அப்பா சந்தோஷத்துக்காகக் காஞ்சீபுரம் மடத்துக்குப் போய்ச் சேர்ந்தாய். வழியில் அண்ணாவைப் பார்த்துப் பரவசமாகி, அவன் காட்டிய பாதையில் போனாய். சொரிமுத்து செய்து காட்டிய சித்து வேலைகளில் லயித்து அவனுக்குச் சீடனானாய். யாரோ ஒரு துலுக்கனைக் கொன்றாயே, அதுகூட அவனால் செய்ய முடிவதை நம்மால் செய்ய முடியவில்லையே என்ற சுய ஏக்கத்தின் விளைவுதான்’.

  அவன் நெடுநேரம் கண்ணிமைக்காமல் என்னையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான்.

  ‘வினய், நான் சொன்னேனே சுதந்திரம், அதன் முதல் விதியே அடுத்தவனை நினைக்காதிருப்பதும் அவன் சொற்படி வாழாதிருப்பதும்தான்’.

  ‘நீ அப்படித்தான் இருக்கிறாயா?’

  ‘சந்தேகமில்லாமல். நான் என் குருவோடு இருந்த காலத்தில்கூட ஒருநாளும் அவர் சொன்னதைக் கேட்டதில்லை’.

  ‘இது ஒரு அகங்கார நிலையல்லவா?’

  ‘சன்னியாசம் என்பதே அகங்கார வெளிப்பாடல்லவா?’

  ‘ஐயோ’ என்றான்.

  ‘என்ன ஐயோ? நம் நான்கு பேரில் உச்சபட்ச அகங்காரி அண்ணாதான். அவனுக்கு அவன்தான் முக்கியமாக இருந்தான். அவன் அடைய வேண்டிய இலக்கு முக்கியமாக இருந்தது. அவனது சாதகங்கள், அவனது தவம், அவனது மீட்சி. வீட்டைத் தூக்கியெறிந்துவிட்டுப் போனவன் சும்மா போய்ச் சேராமல் உன்னையும் உருப்படாமல் ஆக்கிவிட்டுப் போனான். சுயநலம் என்பது அகங்காரத்தின் வெளிப்பாடுதான்’.

  ‘இல்லை. நீ முற்றிலும் பிழையாகப் புரிந்துகொண்டிருக்கிறாய். துறவில் அகங்காரம் கிடையாது. இன்னும் புரியும்படிச் சொல்கிறேன். எனக்கு அகங்காரம் கிடையாது. ஆனால் நான் சன்னியாசியா என்கிற சந்தேகம் அவ்வப்போது வந்துவிடுகிறது’.

  ‘அதுதான். நான் சொல்ல வருவதும் அதுதான். அகங்காரம் இருந்திருந்தால் நீ சன்னியாசியாகியிருப்பாய். அல்லது அதை உணர்ந்திருப்பாய்’.

  ‘மன்னித்துக்கொள் விமல். நான் அடைய விரும்பும் தெளிவு வேறு. நீ அடைந்ததாக எண்ணியிருக்கும் தெளிவு வேறு. இது என்றுமே சேராது’ என்று அவன் சொன்னான்.

  உண்மைதான். இதை முதல் முதலில் நான் ஶ்ரீரங்கப்பட்டணத்து முக்கூடல் சங்கமத்தில் அவனைச் சந்தித்த அன்றே உணர்ந்தேன். சொன்னால் வருத்தப்படுவான் என்பதால் சொல்லாமல் இருந்துவிட்டேன். எந்தவிதத்திலாவது அவனுக்கு உதவ முடிந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் எனக்கு ஒரு சிறு அச்சம் இருந்தது. நாங்கள் வீடு போய்ச் சேரும் நேரம் அம்மா பிராணனை விட்டுவிட்டால், அதோடு வினய் தனது துறவை விட்டுவிடும் அபாயம் இருப்பதாக ஏனோ எனக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது. துறவியானால் என்ன, யாரானால் என்ன? மனிதப் பிறப்பின் ஆதார விருப்பங்களுள் ஒன்று பழி வாங்குவது. அவன் தன்னைப் பழிவாங்கிக்கொள்ளத் தன் துறவைக் களைந்துவிடுவான் என்று நினைத்தேன். ஒன்றுக்கு இரண்டு திருமணங்கள் செய்துகொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. என்னைக் கேட்டால் அவன் அப்படிப் போவதே நல்லது என்பேன். ஆனால் அதைச் சொல்ல இதுவல்ல தருணம். முதலில் ஊர் போய்ச் சேர வேண்டும்.

  பயணம் மிக நீண்டதாகவும் களைப்பூட்டக்கூடியதாகவும் இருந்தது. பேசிக்கொண்டு வந்ததால் ஓரளவு களைப்பு மறந்திருக்க முடிந்தது. அண்ணா தன்னோடு பேசினான் என்று அவன் சொன்ன பின்பு அந்தக் களைப்பு பூதாகாரமாகப் பெருகத் தொடங்கிவிட்டது. அவன் என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறான் தன் மனத்தில்? என்னைத் தவிர எல்லோருடனும் எப்போதும் பேசிக்கொண்டுதான் இருந்திருக்கிறான். வினோத் என்னவானான் என்று அதுவரை எனக்குத் தெரிந்திருக்கவில்லை. நிச்சயமாக அவனோடும் அண்ணா தொடர்பில் இருந்திருப்பான். வழி நடத்தியிருப்பான். பேசியிருப்பான். சந்தித்திருந்தால்கூட வியப்பதற்கில்லை.

  நான் வினய்யிடம் கேட்டேன். ‘வினோத்தைப் பற்றி உனக்கும் ஒன்றுமே தெரியாதா?’

  ‘தெரியவில்லை. எனக்கு அவன் முகமே மறந்துவிட்டது’ என்று அவன் சொன்னான். அதெப்படி மறக்கும்? எனக்குச் சிறு வயது முகங்கள் அனைத்தும் அப்படி அப்படியே நினைவில் இருக்கின்றன. என் உடன் பிறந்தவர்களின் முகங்கள் மட்டுமல்ல. திருவிடந்தையில் நான் பார்த்த அத்தனை பேரின் முகங்களும் நினைவில் உள்ளன. தற்கொலை செய்துகொண்டு இறந்த சித்ராவின் முகம் பார்க்க விகாரமாக இருந்தது என்று கேசவன் மாமா என்னிடம் சொல்லியிருந்தார். என் மனத்தில் இருந்த சித்ராவின் முகம் ஓர் அகல் விளக்கை நிகர்த்த அழகு கொண்டது. வினய்யிடம் நான் அதை நினைவுகூர்ந்தபோது, ‘ஆம். அவள் அழகிதான். வினோத் அவளைத் திருமணம் செய்துகொண்டிருக்கலாம்’ என்று சொன்னான்.

  ‘எதற்கு? முகமது குட்டியைத் தேடிச் சென்று கொலை செய்ததுபோல அவனையும் உன் கையால் மோட்சத்துக்கு அனுப்புவதற்கா?’

  ‘சேச்சே. எனக்கு அப்படியொரு பொறாமை எழ வாய்ப்பில்லை விமல்’.

  ‘அது அந்தத் திருமணம் நின்றுபோனதால் ஏற்பட்ட உணர்வு. அவள் தற்கொலை செய்துகொண்டதாலும் வினோத் ஓடிப்போய்விட்டதனாலும் நீ சொல்லும் சொற்கள்’.

  ‘அப்படியா நினைக்கிறாய்? தெரியவில்லை. ஆனால், விடிந்தால் திருமணம் என்ற நிலையில் ஒருவன் அனைத்தையும் துறந்துவிட்டுப்போவது என்பது பயங்கரம்’.

  ‘துறவு மனப்பான்மை திட்டமிட்டு வராது அல்லவா? அது ஒரு தற்செயல்’.

  ‘ஆம். தற்செயல்தான். ஆனாலும் எதுவோ ஒன்று தூண்டிவிட்டுக் கொண்டிருக்கும்’.

  ‘என்னை எதுவும் தூண்டவில்லை’.

  ‘இல்லை. நீ அண்ணாவைத் தேடி அலைந்துகொண்டிருந்தாய். அலைதலின் சுகமே உன் சன்னியாசத்தின் தூண்டுதல்’ என்று அவன் சொன்னான்.

  யோசித்துப் பார்த்தேன். பகுதியளவில் அவன் சொல்வது உண்மை என்றே தோன்றியது. ஆனால் நான் அப்படியொன்றும் அலைதலில் விருப்பம் கொண்டவனல்ல. என் அலைச்சலுக்கோ, அசையாதிருக்கும் நிலைக்கோ யாருக்கும் விளக்கம் தர விரும்பாத மனமே அடிப்படைக் காரணம்.

  ‘வினய், இந்த உலகில் நான் அச்சப்படும் ஒரே விஷயம் கண்ணீர். உண்மையில் நான் கண்ணீருக்கு பயந்துதான் ஓடினேன். என் சன்னியாசம் ஒரு பயத்தில் இருந்து பிறந்ததுதான்’ என்று சொன்னேன்.

  ‘உண்மையாகவா?’

  ‘ஆம். என்னால் அம்மாவின் கண்ணீரைத் தாங்கவே முடியவில்லை. அவள் அழாதிருந்தபோதும் அவள் கண்ணீரின் பாரம் என் தலையில் ஒரு பனிப்பாறையாகத் திரும்பத் திரும்ப விழுந்துகொண்டே இருந்தது. நான் விட்டுச் சென்றதற்கு அந்த வலிதான் முக்கியமான காரணம்’.

  சிறிது நேரம் இடைவெளிவிட்டு அவன் கேட்டான், ‘அந்தக் கண்ணீரைத் துடைக்க உனக்குத் தோன்றவில்லை அல்லவா?’

  நான் சிரித்துவிட்டேன். அப்படித் துடைக்க நினைத்தவன்தான் இன்னொரு குடும்பத்தையும் சேர்த்து அழ வைத்துவிட்டுப் போனான்.

  ‘வினய், நாம் இருந்த பனிக்குடத்தில் கண்ணீரே நிறைந்திருந்திருக்கிறது. துடைப்பதற்கு நம்மில் யார் கையை நீட்டினாலும் மேலும் கண்ணீரையே பூசிவிட நேரும். என் நோக்கம் வெளியேறிய கண்ணீரைக் காய விடுவதுதானே தவிர, காய்ந்த ஊற்றைப் பீறிட வைப்பதல்ல’.

  அவன் புன்னகை செய்தான். என்னை அப்படியே கட்டித் தழுவிக்கொண்டான். ‘நான் சொன்னதைத் திரும்பப் பெறுகிறேன். நீ சன்னியாசிதான்’ என்று சொன்னான்.

  மீண்டும் அவன் தவறாகத்தான் புரிந்துகொண்டான் என்பதை நான் சொல்லவில்லை.

  (தொடரும்)

  http://www.dinamani.com/junction/yathi/2018/aug/13/106-கண்ணீரின்-பனிக்குடம்-2978613.html

 15. சுவரொட்டி கறி பிரட்டல்

   
  அ-அ+

  ஆட்டு மண்ணீரலில் (சுவரொட்டி) அதிகளவு இரும்புசத்து நிறைந்துள்ளது. இன்று இந்த சுவரொட்டி கறி பிரட்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

   
   
   
   
  சுவரொட்டி கறி பிரட்டல்
   
  தேவையான பொருட்கள்

  ஆட்டு சுவரொட்டி - கால் கிலோ
  சின்ன வெங்காயம் - 150 கிராம்
  பச்சை மிளகாய் - 2

  அரைக்க

  தேங்காய் - 2 துண்டு
  மிளகு - இரண்டு தேக்கரண்டி
  சீரகம் - ஒரு தேக்கரண்டி
  நல்லெண்ணெய் - தேவைக்கு
   
  201808251404421723_1_Mutton-Spleen-Curry._L_styvpf.jpg

  செய்முறை :

  அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

  ஆட்டு சுவரொட்டியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

  சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை சற்று தூக்கலாக விட்டு சூடானதும் சுத்தம் செய்த ஆட்டு சுவரொட்டியை போட்டு நன்கு வதக்கவும்.

  பிறகு பொதியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை  மிளகாய் சேர்த்து லேசாக தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

  சிறிது வாசம் வந்ததும் அரைத்த தேங்காய் விழுதுகளைச் சேர்த்து பச்சை வாசம் போனபிறகு இறக்கி பரிமாறவும்.
   
  சூப்பரான சுவரொட்டி கறி பிரட்டல் ரெடி.

  https://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2018/08/25140442/1186452/Mutton-Spleen-Curry.vpf

 16. ரத்த மகுடம்

   

   

  பிரமாண்டமான சரித்திரத் தொடர் - 15

  அந்த இடத்திலேயே ஸ்ரீ ராமபுண்ய வல்லபர் மடிந்தார் என்றுதான் அதுவரை நடந்ததை எல்லாம் திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்த  ஹிரண்ய வர்மர் நினைத்தார்.கனல் கக்கும் கண்களுடன் வாளை உயர்த்தியபடி சாளுக்கிய போர் அமைச்சரை சிவகாமி நெருங்கியதை யார்  கண்டாலும் அப்படிப்பட்ட முடிவுக்குத்தான் வருவார்கள்.ஆனால், உயர்த்திய வாளை ஸ்ரீ ராமபுண்ய வல்லபரின் மார்பிலோ தலையிலோ  சிவகாமி இறக்கவில்லை. மாறாக, அவரது பின்னால் நின்றபடி தன் வாளின் நுனியை அவர் கழுத்தில் பதித்தாள். கணத்துக்கும் குறைவான  நேரம் கரிகாலனின் நயனங்களைச் சந்தித்தாள்.
  26.jpg
  அதில் வெளிப்பட்ட செய்தி கரிகாலனுக்கு நன்றாகவே புரிந்தது. ‘கடந்த காலங்களில் எடுத்ததற்கெல்லாம் எதிராளியை வெட்ட  முற்பட்டதுபோல் இம்முறை செய்யமாட்டேன். என்னைத் தடுத்து நிறுத்தும் பணியையும் உங்களுக்கு வழங்க மாட்டேன்...’‘‘ஆண்களுக்கு இன்பம் அளிக்க மட்டுமே பெண்கள் படைக்கப்படவில்லை என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் என  நினைக்கிறேன்...’’ ஸ்ரீ ராமபுண்ய வல்லபரிடம் நிதானமாகச் சொன்னாள் சிவகாமி. ‘‘ஒட்டுமொத்தமாக பெண்களைத் தரக்குறைவாக நீங்கள்  பேசியதாகத் தென்பட்டாலும் அது முழுக்க முழுக்க என்னைக் குறி வைத்தது என்பது பிறக்கவிருக்கும் சிசுவுக்கும் தெரியும். என்றாலும்  உங்களை மரியாதையாக அழைக்கவும் நடத்தவுமே விரும்புகிறேன்!

  வயது மட்டுமே அதற்குக் காரணமல்ல. ஒரு தேசத்தின் அமைச்சர் பொறுப்பில் நீங்கள் இருப்பதே பிரதான காரணம். நீங்கள் வகிக்கும்  பதவிக்கு உரிய மரியாதையை அளிக்கவேண்டியது பல்லவ மன்னரின் மகளாக நடத்தப்படும் இந்தப் ‘பெண்ணின்’ கடமை. அதிலிருந்து  நழுவுவது பல்லவ நாட்டையே அவமதிப்பதற்குச் சமம். ஒருபோதும் அப்படிப்பட்ட செயலில் இறங்க மாட்டேன்...’’அழுத்தம்திருத்தமாகச்  சொன்ன சிவகாமி, கடைசி வாக்கியத்தை உச்சரிக்கும்போது கரிகாலனை நோக்கினாள். இது தனக்காகச் சொல்லப்பட்டது என்பதை அவனும்  உணர்ந்தான். ‘என்னைக் குறித்து யார் என்ன சொன்னாலும் நம்ப வேண்டாம். பல்லவ நாட்டுக்கு ஒருபோதும் நான் துரோகம் இழைக்க  மாட்டேன்...’

  ‘‘அளிக்கும் மரியாதையை ஏற்று நீங்கள் அமைதியாக இருப்பீர்கள் என நம்புகிறோம். மாறாக ஏதேனும் செய்ய முற்பட்டால் நாக விஷம்  தோய்ந்த இந்த வாள்...’’ வாக்கியத்தை முடிக்காமல் ஸ்ரீ ராமபுண்ய வல்லபரின் தொண்டைக் குழியைத் தடவினாள்.அங்கிருந்த  அனைவருக்குமே நிலைமை புரிந்தது. குறிப்பாக சாளுக்கிய போர் அமைச்சருக்கு. உடன் வந்த வீரர்களில் ஒருவர் கூட தன்னைக்  காப்பாற்றும் நிலையில் இல்லை என்பதை உணர அவருக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. என்றாலும் ஒரு நம்பிக்கை இருந்தது. அது  புன்முறுவலாகவும் வெளிப்பட்டது.

  கரிகாலனின் கருவிழிகளில் மிதந்த அக்காட்சியை ஸ்ரீ ராமபுண்ய வல்லபரின் பின்னால் நின்றிருந்த சிவகாமி கண்டாள். ஏளனச் சிரிப்பு  அவள் முகத்தில் பூத்தது. இதன்பிறகு நடந்தது சாளுக்கிய போர் அமைச்சர் கனவிலும் நினைத்துப் பார்க்காதது.சிவகாமியின் ஒரு கரத்தில்  இருந்த வாள், அவரது கழுத்தைத் தடவிக் கொண்டிருக்க... மறுகரத்தை இமைக்கும் பொழுதில் சாளுக்கிய போர் அமைச்சரின் இடுப்புக்கு  கொண்டு வந்தாள். வேட்டியின் மடிப்பில் பதுங்கியிருந்த மூங்கில் குழலை லாவகமாக எடுத்து ஊதினாள்.மறுகணம் நூறுக்கும் மேற்பட்ட  வராகங்கள் ஒருசேர குரல் கொடுப்பது போன்ற ஒலி பிறந்தது.

  இதனைத் தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட சாளுக்கிய வீரர்கள் ஈட்டிகளுடன் சுரங்கத்துக்குள் இறங்கினார்கள். கண் முன் விரிந்த  காட்சியைக் கண்டு திகைத்து நின்றார்கள்!மாகாளியாக வாய்விட்டுச் சிரித்தாள் சிவகாமி. ‘‘நிச்சயம் வெளியில் கொஞ்சம் ஆட்களை  நிறுத்தி வைத்திருப்பீர்கள் என்பதை ஊகித்தேன். எந்த போர் அமைச்சரும், தான் அழைத்து வரும் வீரர்களை பகுதி பகுதியாகப் பிரித்தே  எதிரிகளைச் சுற்றி வளைக்க முற்படுவார் என்பது யுத்த தந்திரத்தின் பால பாடம். நீங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?!பதுங்கி இருக்கும்  வீரர்களை நீங்கள் அழைக்கும் விதம் என்னவாக இருக்கும் என்பதை அறியவேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் ஒரு மூங்கில்  குழாயை எடுத்து ஊதுவதுதான் சாளுக்கிய வீரர்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றம் என்பதை புலவர் தண்டி ஏற்கனவே  சொல்லியிருக்கிறார்!’’

  அலட்சியத்துடன் முன்னால் நின்ற சாளுக்கிய வீரர்களைப் பார்த்தாள். ‘‘கட்டளையிட்டால்தான் செய்வீர்களா? கையிலிருக்கும் ஈட்டிகளைத்  தரையில் போடுங்கள். சிறிய தந்தையே... சுரங்கத்தின் ஈசான்ய மூலையில் கொடிகள் படர்ந்திருக்கின்றன. அக்கொடிகளை வெட்டி இந்த  ஈட்டிகளை ஒன்றாகக் கட்டுங்கள். மீதிக் கொடியைக் கொண்டு இந்த வீரர்களின் கால்களைப் பிணையுங்கள்...’’கரிகாலனின் பார்வை  சமிக்ஞையை ஏற்று சிவகாமியின் கட்டளையை ஹிரண்ய வர்மர் நிறைவேற்றினார்.இதற்குள் ஸ்ரீ ராமபுண்ய வல்லபரின் தோளில் இருந்த  அங்கவஸ்திரத்தை எடுத்து சிவகாமி அவரது கைகளைப் பின்புறமாகக் கட்டினாள். இடுப்பு வேட்டி அவிழாமல் இருக்க அவர் கட்டியிருந்த  சிறிய வஸ்திரத்தை அவிழ்த்து அவர் வாயில் அடைத்தவள், எல்லாவற்றையும் அசையாமல் பார்த்துக் கொண்டிருந்த கரிகாலனை  நெருங்கினாள். அவளும் எதுவும் பேசவில்லை. அவனும் உரையாடலைத் தொடங்கவில்லை. இருவரது கண்களும் பல்வேறு விஷயங்களை  அலசின; ஆராய்ந்தன.

  கனைப்புச் சத்தம் கேட்டு இருவரும் திரும்பினார்கள். ஹிரண்ய வர்மர் தன் பணியை முடித்திருந்தார்.அதுவரை அமைதியாக இருந்த  கரிகாலன் இம்முறை அதைக் கலைத்தான். ‘‘பல்லவ நாட்டுக்கு மிகப்பெரிய உதவியைச் செய்திருக்கிறீர்கள். இதற்காக ஒவ்வொரு பல்லவ  வீரனும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறான். இந்த ஆயுதங்களைப் பெற்று உரிய இடத்துக்குக் கொண்டு செல்லும் பொறுப்பை புலவர்  தண்டி எங்களிடம் ஒப்படைக்கவில்லை. உங்களிடம் அவர் அப்படிக் கூறியிருந்தாலும் எங்களுக்கு இடப்பட்ட கட்டளை வேறு. அதை  நிறைவேற்ற நாங்கள் புறப்படுகிறோம். எப்படியும் இன்னும் சிறிது நேரத்தில் புலவரால் அனுப்பப்பட்டவர்கள் இங்கு வருவார்கள்.  அவர்களிடம் ஆயுதங்களை நீங்கள் ஒப்படைக்கலாம்...’’‘‘நல்லது கரிகாலா! இவர்களை என்ன செய்வது?’’

  ‘‘எதுவும் செய்ய வேண்டாம் மன்னா! ஆயுதங்கள் அப்புறப்படுத்தப்பட்டதும் சுரங்கத்தை மூடாமல் சென்று விடுங்கள். எப்படியும் சாளுக்கிய  போர் அமைச்சரைத் தேடி வீரர்கள் வருவார்கள். அவர்கள் இவர்களைக் காப்பாற்றி அழைத்துச் செல்வார்கள்...’’சொன்ன கரிகாலன் ஹிரண்ய  வர்மரை நெருங்கி வணங்கினான்.அவனை அள்ளி அணைத்தவர், சிவகாமியைப் பார்த்தபடி அவனிடம் சொன்னார். ‘‘வெற்றி மங்கை  எப்போதும் உன் பக்கத்தில் இருக்கிறாள். செல்லும் காரியம் மட்டுமல்ல... செய்யப் போகும் காரியங்களிலும் ஜெயம் உனக்கே..!’’
  தலையசைத்துவிட்டு கரிகாலன் தள்ளி நின்றான். புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக தன் சிறிய தந்தையின் காலைத் தொட்டு சிவகாமி  நமஸ்கரித்தாள்.அவளது தோள்களைத் தொட்டு ஹிரண்ய வர்மர் எழுப்பினார். ‘‘ஸ்ரீ சக்கர நாயகியை உன் உருவில் காண்கிறேன் சிவகாமி!  ஆண்கள் கூட துணிந்து செய்யத் தயங்கும் விஷயங்களை அநாவசியமாகச் செய்கிறாய். உன்னைப் போன்ற வீராங்கனைகள் இருக்கும் வரை  பல்லவ நாடு யாரிடமும் அடிமைப்பட்டு விடாது. சென்று வென்று வா...’’

  இருவருக்கும் விடைகொடுத்தபோது அவரையும் அறியாமல் அவர் கண்கள் கலங்கின.கட்டப்பட்ட நிலையில் இருந்த சாளுக்கிய போர்  அமைச்சரிடம் கரிகாலன் சென்றான். ‘‘உங்கள் வீரர்களை அழித்ததும், உங்களுக்குப் பாதுகாப்பாக வந்தவர்களை இப்படிக் கட்டி உருட்டியதும்  நானல்ல. வீரர் கூட்டமும் அல்ல. மாறாக, ‘ஆண்களுக்கு இன்பம் அளிக்கத்தானே பெண்களைப் படைத்திருக்கிறான்..?’ என உங்களால்  ஏளனமாகச் சுட்டப்பட்ட ஒரு பெண்தான் மகத்தான் இந்தச் செயலை தன்னந்தனியாகச் செய்திருக்கிறாள்! இதுதான் பல்லவ வீரம். இதுதான்  தமிழகப் பெண்களின் உரம். மீண்டும் நாம் யுத்தகளத்தில் சந்திப்போம்!’’ சொல்லிவிட்டு விடுவிடுவென்று வெளியேறினான்.

  சிவகாமி எதுவும் சொல்லாமல் இரு வாட்களை எடுத்துக் கொண்டு ஸ்ரீ ராமபுண்ய வல்லபருக்கு ஒரு புன்னகையை மட்டும் பரிசாக  வழங்கிவிட்டு கரிகாலனைத் தொடர்ந்தாள்.இருவரும் சுரங்கத்தை விட்டு வெளியே வந்தார்கள். ஒரு வாளை அவனிடம் கொடுத்தாள்.  பெற்று தன் இடுப்பில் அதைக் கட்டிக் கொண்ட கரிகாலன் சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு தன் உதட்டைக் குவித்து விநோதமான ஒலி  ஒன்றை எழுப்பினான். இரு புரவிகள் புதர்களை விலக்கிவிட்டு அவர்கள் அருகில் வந்தன.இருவருமே தத்தம் குதிரைகளை  நெருங்கினார்கள். ஏறவில்லை. மாறாக அதன் நெற்றியை முத்தமிட்டார்கள். இடுப்பைத் தடவிக் கொடுத்தார்கள். கால்களைப்  பிடித்துவிட்டார்கள்.

  புரவிகள் இரண்டும் கூச்சத்தில் நெளிந்து அவர்களது கன்னங்களைத் தடவி தங்கள் அன்பை வெளிப்படுத்தின.அதன்பிறகு இருவரும்  தாமதிக்கவில்லை. தாவி தத்தம் புரவிகளில் ஏறினார்கள்.‘‘வட திசையா?’’ சிவகாமி கேட்டாள்.கரிகாலன் பதிலொன்றும் சொல்லவில்லை.‘‘நம்பிக்கை இல்லையென்றால் சொல்ல வேண்டாம். முன்னால் செல்லுங்கள். பின்னால் வருகிறேன்!’’‘‘வடமேற்குத் திசை!’’ சட்டென்று  கரிகாலன் பதிலளித்தான்.‘‘நல்லது! முன்னால் செல்கிறேன். பின்தொடர்ந்து வாருங்கள். என்னைக் கண்காணிக்கவும் வசதியாக இருக்கும்!’’  சொன்ன சிவகாமி குனிந்து அசுவத்தின் செவியில் எதையோ முணுமுணுத்தாள். புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக அதுவும் தன்  பிடரியைக் குலுக்கியது.நிதானமான வேகத்துடன் இரு அசுவசாஸ்திரிகளும் ஒருவர் பின் ஒருவராகப் பறந்தார்கள்.

  புரவியிடம் தென்பட்ட நிதானம் சிவகாமியின் உள்ளத்தில் இல்லை. மனமென்னும் அக்னிக் குஞ்சில் அவள் தேகம் தகித்துக்  கொண்டிருந்தது. கரிகாலன் இன்னமும் தன்னை நம்பவில்லை என்ற உண்மை அவளை எரித்து எரித்துச் சாம்பலாக்கியது. எந்தவொரு  பெண்ணும் நம்பிக்கைக்குரிய ஆணிடம்தான் தன்னையே ஒப்படைப்பாள். வாழ்க்கைச் சூழல் காரணமாக பரத்தைத் தொழிலை  மேற்கொள்பவளாக அவள் இருந்தாலும் அவளது நேசத்துக்கு உரியவன் என ஒருவன் இருப்பான். அவனிடம் மட்டுமே அவளால் பூரணமாக  ஒன்ற முடியும்.அப்படியொரு தருணம் தங்கள் இருவரது வாழ்க்கையிலும் வந்து போயிருக்கிறது. ஹிரண்ய வர்மர் மட்டும் வராமல்  இருந்திருந்தால் கரை உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்திருக்கும்.

  இதை கரிகாலன் உணரவில்லை என்றாலும் அவன் தேகம் புரிந்து கொண்டிருக்கும். பூரணத்தை உணரும் சக்தியற்றதா அவன் உடல்..?  அப்படியிருந்தும் சந்தேகத்தின் மேகம் அவனைச் சூழ்ந்திருக்கிறதே...நினைக்க நினைக்க பிரளயகாலத்தின் அலைகளாக அவள் மனம்  சீறியது. இந்த ஆவேசம்தான் சற்று முன் சுரங்கத்தில் ருத்ர தாண்டவம் நடத்தியது. அப்படியும் அடங்காமல் இப்போதும் பொங்குகிறது. ஓர்  அணைப்பு... ‘பரிபூரணமாக உன்னை நம்புகிறேன்...’ என்பதை வெளிக்காட்டும் பார்வை... போதும். பிரளயம் அடங்கிவிடும். ஆனால்,  நடக்குமா..?சிவகாமி நினைத்து முடிப்பதற்குள் கரிகாலனின் புரவி அவளை அணைத்தாற்போல் மறித்து நின்றது.பரவசத்துடன் அவனை  ஏறிட்டாள். எதிர்பார்த்தது எதிரில் இருந்த நயனங்களில் வழியவில்லை. ஏமாற்றம் மூர்க்கத்தை அதிகரித்தது. தன் கால்களால் குதிரையைத்  தட்டி முன்செல்ல கட்டளையிட்டாள்.

  ‘‘பொறு...’’ அவளுக்கு மட்டும் கேட்கும் விதத்தில் முணுமுணுத்த கரிகாலன், அவள் புரவியின் கடிவாளத்தைப் பிடித்து இழுத்தான்.‘என்ன..?’’பதில் சொல்லாமல் அண்ணாந்து பார்த்தான்.சிவகாமியின் பார்வையும் மேல்நோக்கிச் சென்றது.பறவைகள் படபடப்புடன்  கிறீச்சிட்டபடி அங்கும் இங்கும் பறந்தன.சட்டென சிவகாமிக்கு விபரீதம் புரிந்தது. இடுப்பிலிருந்து வாளை உருவினாள்.ஜாடை மூலம்  அவளை முன்னால் செல்லும்படி கரிகாலன் செய்கை செய்தான்.முன்பு போலவே அதே நிதானத்துடன் தன் குதிரையைச் செலுத்தினாள்.  கருவிழிகளில் எச்சரிக்கை குடிகொண்டது. சருகுகளை மிதித்தபடி கரிகாலன் அமர்ந்திருக்கும் புரவியின் குளம்போசையைக் கேட்டாள்.  மெல்ல மெல்ல குளம்புகளின் ஒலி அதிகரித்தது. எனில், நான்குக்கும் மேற்பட்ட புரவிகள் தங்களைப் பின்தொடர்கின்றன. கணக்கிட்ட  சிவகாமி, தான் அமர்ந்திருக்கும் புரவியின் பிடரி ரோமம் கொஞ்சம் கொஞ்சமாகக் குத்திட்டு நிற்பதைக் கண்டாள்.அடுத்த கணம், தன்  வாளை வலதும் இடதுமாகச் சுழற்றினாள்.சாளுக்கிய வீரன் ஒருவன் வெட்டுப்பட்ட தலையுடன் அந்தரத்தில் பறந்தான்!
   

  (தொடரும்)
  - கே.என்.சிவராமன்

  http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14114&id1=6&issue=20180824

 17. குழந்தைகளுக்கு விருப்பமான சிக்கன் பக்கோடா

   
  அ-அ+

  குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மாலை நேரத்தில் சாப்பிட சூப்பரான சிக்கன் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

   
   
   
   
  குழந்தைகளுக்கு விருப்பமான சிக்கன் பக்கோடா
   
  தேவையான பொருட்கள் :

  எலும்பில்லாத சிக்கன் - கால் கிலோ  
  மிளகாய் தூள் - தேவைக்கு
  மஞ்சள் தூள் - சிறிதளவு
  பஜ்ஜி மாவு - 3 டேபிள்ஸ்பூன்
  அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்
  கொத்தமல்லி தழை - சிறிதளவு
  கறிவேப்பிலை - சிறிதளவு
  எண்ணெய், தண்ணீர் - தேவைக்கு
  உப்பு - தேவைக்கு
  எலுமிச்சை சாறு - சிறிதளவு
   
  201808241411553484_1_chicken-pakora._L_styvpf.jpg

  செய்முறை :

  கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

  சுத்தம் செய்த சிக்கனுடன் சிறிதளவு மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

  பின்னர் அதனுடன் அரிசி மாவு, பஜ்ஜி மாவு, மிளகாய் தூள், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை, தண்ணீர் சேர்த்து கெட்டி பதத்துக்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

  வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் மாவு கலவையை சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு பக்கோடாவாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

  சூப்பரான சிக்கன் பக்கோடா ரெடி.

  https://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2018/08/24141155/1186167/chicken-pakora.vpf

 18. 105. வன்மத்தின் வண்ணம்

   

   

  சூழ்ச்சியின்றி அரசியல் இல்லை. சூழ்ச்சியின்றி சுழற்சியில்லை. சூழ்ச்சியின்றி எதுவுமில்லை. அரசியல்வாதிகளுடன் பழகத் தொடங்கிய பின்பு நான் பயின்ற முதல் பெரும் பாடம் இதுதான். ஒரு சன்னியாசியாக இருப்பதன் ஆகப்பெரிய சௌகரியம் இத்தகு சூழ்ச்சிகளின் வலைப்பின்னல்களுக்குள் சென்று சிக்க வேண்டாம் என்பதுதான். உறவுகளும் பகையும் அற்று இருத்தல். அது அத்தனை எளிதல்ல. ஆனால் அதன் சொகுசு அபாரமானது. விவரிப்புக்கு அப்பாற்பட்டது. காற்றில் பறக்கும் ஒரு இறகைப் போல இலக்கின்றி அலைந்து திரிந்து விரும்பினால் அடங்கி இருக்கலாம். அல்லது மேலும் அலைந்து திரிந்துகொண்டே போகலாம். எனக்குப் பிரதம மந்திரி எப்படியோ அப்படித்தான் அந்த எதிர்த் தரப்புத் தலைவரும். வேண்டுதல் வேண்டாமை எனக்குத் தனிப்பட்ட முறையில் இருவரிடமும் இல்லை. ஆனால் அவருக்கு உதவ வேண்டும் என்று எனக்குத் தோன்றியதன் காரணம் மிக எளிது. அவரைப் பழிவாங்க நினைத்த ஆளும் தரப்பின் காரணங்கள் அற்பமானவை. கட்சி மாறாத அரசியல்வாதி யார்? காலை வாரிவிடாத நபர்கள் யார்? மனித குலத்தின் ஆதார இயல்புகள் அனைத்தும் வன்மம் சார்ந்தவை. வக்கிரம் பூசியவை. குரூரத்தின் தடம் பிடித்து ஓடித் திரியும் வேட்கை மிகக் கொண்டவை. அன்பும் அரவணைப்பும் பெருந்தன்மை உள்ளிட்ட வேறெந்த நற்குணமும் மேலான பாவனையே. இதில் எனக்கு சந்தேகமே இல்லை.

  என் குருநாதர் நான் இதைக் குறித்துப் பேச்செடுக்கும்போதெல்லாம் புத்தர், ராமலிங்க அடிகள், காந்தியின் பெயரை எடுப்பார்.

  ‘மன்னித்துவிடுங்கள் குருஜி. அவர்கள் மூவருமே அருங்காட்சியக மனிதர்கள்’ என்று ஒரு சமயம் அவரிடம் சொன்னேன்.

  ‘அன்பு இயல்பானதல்ல என்கிறாயா?’

  ‘இருக்க வாய்ப்பே இல்லை என்கிறேன். காதலைச் சொல்லுங்கள். ஒப்புக்கொள்கிறேன். காமத்தைச் சொல்லுங்கள். கேள்வியே கேட்காமல் சரி என்பேன். அன்பு ஒரு மாயை. குளிருக்குப் போர்வை போல மனத்தின் பலவீனமான கணங்களுக்கு அது ஒரு கணப்புச் சட்டி. யாராவது செலுத்தும் அன்புக்காக ஏங்குவது சரி, செலுத்தப்படும் அன்பை ஏந்திக் கொள்வதும் சரி; ஒரு மாய யதார்த்தம். உண்மையில் அன்பற்ற உலகில் நாம் இன்னும் பிழைகளற்று வாழ்வோம் என்றே நினைக்கிறேன்’.

  அவர் என்னை மறுத்துப் பேசியதில்லை. ஆனால் ‘அங்கேயே தேங்கிவிடாதே. தொடர்ந்து சிந்தித்துக்கொண்டிரு’ என்று சொல்வார். அரசியல்வாதிகளின் பரிச்சயம் ஏற்பட ஆரம்பித்த பின்பு நான் அதைக் குறித்து சிந்திக்க வேண்டிய அவசியமே எனக்கு இருக்கவில்லை. அன்பு ஒரு மாய யதார்த்தம் மட்டுமே. வன்மம் ஒன்றே அடிப்படை மனிதப் பண்பு. இதில் ஆண் பெண் பேதமில்லை. பெரியவர், சிறியவர் பேதமில்லை. படித்தவர், படிக்காதோர் பேதமில்லை. ஜாதி மத இன பேதமும் அறவே இல்லை.

  வன்மத்தை எப்படி அன்பால் வெல்ல முடியும்? வெல்லலாம். இறுதியில் குண்டடி பட்டு செத்துப் போகத் தயாராயிருக்க வேண்டும். தரையில் கால் ஊன்றி நிற்பதே நிலத்தின் மீது நிகழ்த்தப்படும் ஒரு வன்முறையல்லவா? பறவையின் சிறகடிப்பு, காற்றின் மீதான வன்முறை. ஒரு புன்னகையைக் காட்டிலும் பெரிய வன்முறை வேறென்ன இருந்துவிட முடியும்?

  அந்தத் தலைவரை நான் பத்து நாள் இடைவெளியில் மீண்டும் சந்தித்தேன். அவரிடம் ஒரு தகவலைச் சொன்னேன். அது நிதித் துறை அமைச்சகத்தில் மிக மேல் மட்டத்தில் உள்ள ஒரு தவிர்க்க முடியாத நபரின் மகளும் அவளது கணவரும் சேர்ந்து செய்யும் ஒரு ரகசிய வியாபாரம் குறித்த தகவல். என்னிடம் இருந்த தகவலுக்கு ஒரு ஆதாரமும் இருந்தது. அதையும் சேர்த்தேதான் அவரிடம் அளித்தேன்.

  ‘ஐயா, இதற்குமேல் இந்த விஷயத்தில் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. இந்த ஆதாரத்தைச் சொல்லி அந்த நபரிடம் பேசுங்கள். பிரதமரை அவர் சமாளித்துக்கொள்வார். வருமான வரித் துறை தாற்காலிகமாக உங்களை மறக்கும்’ என்று சொன்னேன்.

  நான் சொன்னவாறு அவர் செயல்பட்டிருந்தால் நிச்சயமாக வழக்கில் இருந்து தப்பித்திருப்பார். அவர் அரசியல்வாதியல்லவா? நான் அளித்த ஆதாரத்துடன் நேரடியாகப் பிரதம மந்திரிக்கே மிரட்டல் விடுத்தார். என்னை மடக்கப் பார்த்தால் உமது பெயரைக் கெடுக்க நான் தயாராகிவிட்டேன் என்று மறைமுகமாகத் தெரிவித்திருக்கிறார். பிரதமருக்கு என்ன போயிற்று? சம்பந்தப்பட்ட நபரை இரவோடு இரவாக யாரோ இல்லாமல் செய்துவிட்டார்கள். ஒரு எளிய விபத்தில் அனைத்தையும் சரி செய்துவிட முடிவது எப்பேர்ப்பட்ட வசதி?

  அந்தத் தலைவர் இதை எதிர்பார்க்கவில்லை. என்ன செய்யலாம் என்று என்னிடமே வந்து கேட்டார். நான் யோசிக்கவேயில்லை. வருமான வரித் துறை கவனத்துக்கு வராத அவரது வேறு இரு வருமானக் கால்வாய்களின் வழித்தடத்தை நானே பிரதமருக்கு எடுத்துச் சொல்லிவிட்டு ஊருக்குப் போய்ச் சேர்ந்தேன். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு பிரதம மந்திரி கர்நாடகத்துக்கு வரும்போதெல்லாம் என்னைச் சந்திக்கத் தவறியதே இல்லை. பல இடங்களுக்கு என்னை நல்லெண்ணத் தூதுவராக அவர் அனுப்பிவைத்திருக்கிறார்.

  இந்தச் சம்பவத்தை நான் வினய்யிடம் விவரித்தபோது அவன் பயந்துவிட்டான். ‘நிச்சயமாக நீ சன்னியாசி இல்லை. நீ ஒரு கிரிமினல்’ என்று சொன்னான்.

  ‘இல்லை வினய். நீ தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறாய். முட்டாள்கள் நிறைந்த உலகத்தில் நான் வாழ விதிக்கப்பட்டிருப்பது என் துரதிருஷ்டம். அதற்காக நான் முட்டாளாகிவிட முடியாது. என் சுதந்திரம் என்பது முட்டாள்த்தனத்தை அனுமதிக்காதது. அபத்தங்களுக்கு அங்கு இடமில்லை. அற்பத்தனங்களுக்கு இடமில்லை. நான் அரசியல்வாதிகளுக்கு உதவி செய்பவனல்ல. என்னிடம் உதவி கேட்கும் யாருக்கு வேண்டுமானாலும் என் அறிவின் துளியைக் கிள்ளித்தருவதே என் தருமம். ஆனால் அதை ஏந்தும் பாத்திரம் சரியாக இருக்க வேண்டும். சிந்துவது என் பிழையல்ல’.

  ‘நீ ஒரு வியாபாரி’ என்று வினய் சொன்னான்.

  ‘யார் சொன்னது? யாரிடமும் ஒரு பைசா நான் வாங்குவதில்லை. சேவைகளைச் சேவைகளாக மட்டுமே செய்கிறேன். கையேந்துவதில்லை’.

  ‘உண்மையாகவா?’

  ‘என் பலம் அதுதான். பணத்தை நான் தொட்டதே இல்லை என்றால் நம்புவாயா? இந்த உலகில் என்னைக் காட்டிலும் எளியவன் யாருமில்லை வினய். இந்தப் பயணத்தில் நான் உண்ணும் வாழைப்பழங்கள்கூட என் சீடர்கள் வாங்கித் தந்தவை. இந்தக் கணம் என்னை அடித்துப் போட்டால் உன்னால் எட்டணாகூட என்னிடமிருந்து எடுக்க முடியாது’.

  அவனுக்குப் புரியவில்லை. ‘நீ என்னிடம் மறைக்கிறாய்’ என்று சொன்னான்.

  ‘நான் எதையுமே மறைப்பதில்லை. ஏனென்றால் மறைக்க என்னிடம் ஒன்றுமில்லை. யோசித்துப் பார்த்தால் வாழ்வில் நான் மறைத்த ஒரே விஷயம் அண்ணா வீட்டைவிட்டுப் போன சம்பவம் மட்டும்தான். அவனை ஓரளவு அப்போது அறிந்தவன் என்ற முறையில் அம்மாவிடம் நான் அதைச் சொல்லியிருக்கலாம். அன்றைய பக்குவம் அதற்கு இடம் தரவில்லை’ என்று சொன்னேன்.

  அவன் நெடு நேரம் அமைதியாக இருந்தான். யோசித்துக்கொண்டிருப்பான் என்று தோன்றியது. இருபது வருடங்கள் ஒரு குருவுக்காகத் தேடியலைந்து இறுதியில் சுய தீட்சை அளித்துக்கொண்டு சன்னியாசியானவன் அவன். தேவர்களையும் கந்தர்வர்களையும் தெய்வங்களையும் உத்தேசித்து, பேய்களிடமும் குட்டிச்சாத்தான்களிடமும் சரணாகதியடைந்தவன். அவன் வளர்த்து வந்த இடாகினிப் பேய் ஒன்று ஒருநாள் அவனிடம் சொன்னதாம், ‘உனக்கு என்னைப் பயன்படுத்தத் தெரியவில்லை’.

  அந்த அவமானத்தில் அதை அவிழ்த்துவிட்டு ஓடிப் போகச் சொல்லிவிட்டு கோதாவரி நதியில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளப் போயிருக்கிறான். ஒரு கட்டுமரக்காரன் காப்பாற்றிக் கரை சேர்த்து, தனது குடிசையிலேயே அவனைப் பத்து நாள்களுக்குத் தங்க வைத்து சோறு போட்டிருக்கிறான்.

  ‘புறப்படும்போது அவனுக்கு ஒரு தங்கக் காப்பை அன்பளிப்பாகத் தந்துவிட்டுப் போக நினைத்தேன் விமல். ஆனால் என் சக்திகள் என்னைக் கைவிட்டுப் போயிருந்தன. என்னால் ஒரு துரும்பைக்கூட என் வசப்படுத்த முடியாமல் போனது’ என்று சொன்னான்.

  என்னால் அவனைப் புரிந்துகொள்ள முடிந்தது. வாழ்வில் சரி பாதியை அவன் வீணடித்திருக்கிறான். சொரிமுத்துச் சித்தனை விட்டு அவன் போயிருக்கவே கூடாது. அல்லது அவனிடமே திரும்பிச் சென்றிருக்க வேண்டும். அதை ஏன் அவன் செய்யாமல் போனான்?

  ‘தெரியவில்லை. ஏனோ எனக்கு மீண்டும் அவனிடம் போகத் தோன்றவேயில்லை. இந்நேரம் அவன் இறந்திருப்பான் அல்லவா? அப்போதே அவன் கிழவன்’ என்று சொன்னான்.

  இறந்திருக்கலாம். அல்லது உயிரோடும் இருக்கலாம். சித்தர்கள் தமது மரணத்தைக் காரண காரியங்களுடன் மட்டுமே தீர்மானிக்கிறார்கள். இருந்தது போதும் என்பதல்ல; இல்லாமல் இருப்பதன் அவசியம் உணரப்படும்போது மட்டுமே அவர்கள் மறைகிறார்கள்.

  நான் வினய்யிடம் சொன்னேன், ‘வருத்தப்படாதே. இன்றுவரை நீ தோற்றிருந்தாலும் இன்றுவரை நீ முயற்சி செய்யாமல் இல்லை. உனக்குத் தெரியுமா? சன்னியாசம் என்பது இறுதிவரை முயற்சியும் பயிற்சியும் மட்டுமே’.

  ‘என்றால் தேர்ச்சி?’

  இதே வினாவை நான் ஒரு சமயம் என் குருநாதரிடம் கேட்டபோது மரணத்தை எதிர்கொள்ளும் விதத்தில்தான் ஒரு சன்னியாசி மற்றவர்களிடம் இருந்து வேறுபடுவான் என்று சொன்னார். எப்படி என்று நான் அவரிடம் கேட்டேன். ஆனால் துரதிருஷ்டவசமாக அவர் சொன்ன பதிலை என்னால் வினய்யிடம் சொல்ல முடியவில்லை.

  சொன்னால் அவன் அந்தக் கணமே இறந்துவிடுவான் என்று தோன்றியதுதான் காரணம்.

  (தொடரும்)

  http://www.dinamani.com/junction/yathi/2018/aug/10/105-வன்மத்தின்-வண்ணம்-2977238.html

 19. சூப்பரான ஸ்நாக்ஸ் மட்டன் வடை

   
  அ-அ+

  குழந்தைகள் மட்டன் என்றால் சாப்பிட மறுப்பார்கள். இன்று மட்டனை வைத்து குழந்தைகள் சாப்பிடும் வகையில் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

   
   
   
   
  சூப்பரான ஸ்நாக்ஸ் மட்டன் வடை
   
  தேவையான பொருட்கள் :

  எலும்பில்லாமல் கொத்திய மட்டன் - 200 கிராம்
  கடலைப்பருப்பு - 50 கிராம்
  சோம்பு - 10 கிராம்
  கரம்மசாலாத் தூள் - 2 கிராம்
  பூண்டு - 50 கிராம்
  பச்சைமிளகாய் - 3
  கறிவேப்பிலை - 3 ஈர்க்கு
  கொத்தமல்லித்தழை - சிறிதளவு
  சீரகம் - 5 கிராம்
  வெங்காயம் - 25 கிராம்
  பொட்டுக்கடலை (லேசாகப் பொடிக்கவும்) - 20 கிராம்
  எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
  பெருங்காயம் - சிறிதளவு
  உப்பு - தேவையான அளவு
   
  201808231403393204_1_mutton-vadai._L_styvpf.jpg

  செய்முறை :

  எலும்பில்லாமல் கொத்திய மட்டனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

  வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  ஒரு பவுலில் கடலைப்பருப்பு, சோம்பு, சீரகம், பச்சைமிளகாய் சேர்த்து ஊறவைத்து பின்பு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

  அரைத்த விழுதுடன் கொத்திய ஆட்டுக்கறியையும் போட்டு அரைத்து தனியாக வைக்கவும்.

  பொட்டுக்கடலை, கரம் மசாலாத்தூள், பெருங்காயம் சேர்த்து தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

  ஒரு பாத்திரத்தில் அரைத்த மட்டன் விழுது, பொட்டுக்கடலை விழுது, உப்பு சேர்த்து ஒன்றாகக் கலந்து சிறு உருண்டைகளாகப் பிடித்து, தட்டையாகத் தட்டவும். இவ்வாறு அனைத்து மாவிலும் செய்து வைக்கவும்.

  கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள உருண்டைகளை வடைகளாக தட்டி போட்டு எண்ணெயில் போட்டு பொரித்து சூடாகப் பரிமாறவும்.
   
  சூப்பரான ஸ்நாக்ஸ் மட்டன் வடை ரெடி.

  https://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2018/08/23140339/1185894/mutton-vadai.vpf

 20. சிறுநீரக கல் பிரச்சினைக்குரிய தீர்வு

   

   
   

  பொதுவாக எம்மில் பலரும் வயிறு வலி வந்தால் அது குறித்து தீவிர கவனம் கொள்ளாமல் ‘அதுவா வரும் அதுவா சரியாகும்’ என்று எண்ணிவிடுகிறார்கள்.

   வயிற்று வலியை ஒருபோதும் அலட்சியம் செய்யாதீர்கள் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

  சிலர் இது சாதாரண வயிற்று வலி என்று எண்ணி மருந்து கடைகளில் மருந்து அல்லது மாத்திரைகளை வாங்கி எடுத்துவிட்டு உடனடி நிவாரணம் தேடிக் கொள்கிறார்கள். 

  ஆனால் வைத்தியர்கள் வயிற்று வலி என்றால், அது எந்த பகுதியில் வருகிறது என்பதையும், எப்போதெல்லாம் வருகிறது? எம்மாதிரியான வலியுடன் வருகிறது ? என்பதை பொறுத்து தான் வைத்தியர்கள் பரிசோதனை செய்து, எவ்வகையினதான பாதிப்பு என்பதை உறுதி செய்துக் கொண்டு அதனை குணமாக்க மருந்துகளையும், மாத்திரைகளையும் வழங்குவார்கள். 

  thumb_large_kidney-stones.jpg

  அத்துடன் சிலருக்கு அடிவயிற்றின் வலது பக்க பகுதியில் வலி எடுத்தால் அது சாதாரண வயிற்று வலி அல்ல என்றும், அது குடல்வால் அழற்சி அல்லது சிறுநீர் குழாயில் கல் இருப்பதற்கான அறிகுறி என்றும் தெரிந்துகொள்ளவேண்டும்.

   உடனே எம்மில் பலர் சிறுநீர் குழாய் கல்லைப் பற்றி சொன்னால், எமக்கு சிறுநீரக கல் பிரச்சினை இல்லை என்று மறுப்பார்கள். ஆனால் அவர்களுக்கு இரைப்பை எண்டாஸ்கோப்பி, இசிஜி, அல்ட்ரா சவுண்ட், கொலேனோஸ்கோப்பி, சிடி ஸ்கேன், சிறுநீர், இரத்தம், மலம் ஆகியவற்றை பரிசோதனை செய்தால் இவற்றில் எவ்வகையான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

  சிறுநீரக கல் என்பதற்கும், சிறுநீரக குழாய் கல் என்பதற்கு என்ன வேறுபாடு என்றால், சிறுநீரகத்தில் உருவாகும் கல் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைப் பொருத்து அதன் பெயர் மாறுபடும். சிறுநீரகத்தில் இருந்தால் அது சிறுநீரக கல் என்றும், சிறுநீர் பிரியும் பாதையில் உள்ள குழாயில் கல் இருந்தால் அதற்கு சிறுநீர் குழாய் கல் என்றும் குறிப்பிடுகிறார்கள். 

  இவ்விரண்டு கற்கள் இருந்தாலும் பாதிப்பு வயிற்றுவலியில் தான் தொடங்குகிறது. அதனால் வயிற்று வலி வந்தால் அதனை புறகணிக்காமல் வைத்தியர்களிடம் சென்று உரிய பரிசோதனைகளைச் செய்துக் கொண்டு பாதிப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். 

  அதனைத் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று குணமடையலாம். இதற்கான நவீன சத்திர சிகிச்சையும், சத்திர சிகிச்சையற்ற புதிய சிகிச்சை முறையும் அறிமுகமாகியிருக்கிறது.  இதற்காகவே சிலர் ஆண்டுதோறும் அல்லது சீரான இடைவெளியில் முழு உடற் பரிசோதனையை செய்து கொண்டு முன் எச்சரிக்கையாகவும், தற்காப்புடனும் ஆரோக்கியமாக வலம் வருகிறார்கள்.

  http://www.virakesari.lk/article/38691

   

   

  இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் உணவு முறைகள்

   

  இன்றைய திகதியில் யாரேனும் இருவர் எதிர்பாராத விதமாக சந்தித்துக் கொண்டால் அவர்களின் பேச்சில் நீங்கள் என்ன வகையினதான உணவு முறையை கடைபிடிக்கிறீர்கள்? என்பது இடம்பெறுவது தவிர்க்கமுடியாததாகிவிட்டது. 

  news_image_health_20818.jpg

  இணையதளத்தின் வழியாக இன்று இருபதிற்கும் மேற்பட்ட உணவு முறைகளை மக்கள் பின்பற்றுகிறார்கள். இதில் சிலர் மட்டுமே உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணரின் பரிந்துரையின் அடிப்படையில் தங்களுக்கு ஏற்ற உணவு முறையை கடைபிடிக்கிறார்கள். 

  ஏனையோர் எல்லாம் தாங்களாகவே தங்களுக்கு பிடித்த உணவு முறையை பின்பற்றுகின்றனர். இது தவறு என்று ஊட்டச்சத்து நிபுணர்களும், வைத்தியர்களும் எச்சரிக்கிறார்கள்.

  அதே சமயத்தில் ஒருவரின் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரோல், நீரிழிவு போன்ற பாதிப்புகளை குறைக்கவேண்டும் என்று விரும்பினால் வைத்திய நிபுணர்களின் வழிகாட்டலுடன் மேக்ரோபயாட்டீக் உணவு முறையை பின்பற்றுமாறு பரிந்துரைக்கிறார்கள். 

  அதிலும் இரத்த அழுத்தம் சீரடையவேண்டும் என்றால் அல்லது இரத்த அழுத்தம் அதிகரிக்காமல் இருக்கவேண்டும் என்றால் அல்லது இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டிற்குள் இருக்கவேண்டும் என்றால் அல்லது இரத்த அழுத்தம் முழுமையாக குணமடையவேண்டும் என்றால் இந்த உணவு முறையை கடைபிடிக்கலாம். 

  இதில் கொழுப்பு சத்து குறைந்த, கலோரிகள் குறைந்த பச்சை காய்கறிகள் அடங்கிய உணவை அதிகமாக எடுத்துக் கொள்வார்கள். இயற்கையான உரங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கீரைகள், பழங்கள், காய்கள் ஆகியவற்றையும், பழுப்பு அரிசி, ஓட்ஸ், பார்லி ஆகியவற்றையும் இத்தகைய உணவு முறையை கடைபிடிப்பவர்கள் சாப்பிடுகிறார்கள். 

  இதன் மூலம் அவர்களுக்கு கொழுப்பு சத்து குறைக்கப்பட்டு, அதனூடாக இரத்த அழுத்தமும் குறைகிறது. அத்துடன் இரத்த சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கிறது.

  டொக்டர் ஸ்ரீதேவி

  தொகுப்பு அனுஷா.

  http://www.virakesari.lk/article/38838

 21. விதம்விதமான வெளிநாட்டு விருந்து:

  லெபனான் ஃபலாஃபல்

   

   
  lebanonjpg

  என்னென்ன தேவை?

  வெள்ளைக் கொண்டைக்கடலை – 1 கப்

   

  பேசில் இலைகள் – சிறிதளவு

  உப்பு, எண்ணெய் – தேவைக்கு

  மிளகுத் தூள் – தேவைக்கு

  கெட்டித் தயிர் – அரை கப்

  சிறிதாக நறுக்கிய பூண்டு – 2 டீஸ்பூன்

  சில்லி சாஸ் – 2 டீஸ்பூன்

  எப்படிச் செய்வது?

  கொண்டைக்கடலையை ஐந்து மணி நேரம் ஊறவைத்து, வேகவையுங்கள். அதனுடன் உப்பு, மிளகுத் தூள், பேசில் இலைகள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். தவாவில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள விழுதை வடைபோல் தட்டிப் போடுங்கள்.  இருபுறமும் நன்றாக வேகவைத்து எடுங்கள். 

  ஒரு கிண்ணத்தில் தயிர், சிறிதளவு உப்பு, பொடியாக நறுக்கிய பூண்டு, சில்லி சாஸ் சேர்த்து, பொரித்து வைத்துள்ள வடைகளை அதில் சேர்த்துப் பரிமாறுங்கள். பேசில் இலைகள் கிடைக்கவில்லை என்றால் துளசி, கொத்தமல்லித் தழைகளைச் சேர்த்தும் இதைச் செய்யலாம்.

  மெக்சிகன் கேசரினாஸ்

  mexicanjpg

  என்னென்ன தேவை?

  மைதா – 1 கப்

   

  வெண்ணெய் – 2 டீஸ்பூன்

  நீள்வாக்கில் மெலிதாக அரிந்த முட்டைகோஸ், தக்காளி, குடைமிளகாய் – தலா கால் கப்

  துருவிய சீஸ் – கால் கப்

  வெள்ளை மிளகுத் தூள் - 4 டீஸ்பூன்

  உப்பு – தேவைக்கு

  எப்படிச் செய்வது?

  மைதா மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவுபோல் பிசைந்து இரண்டு மணி நேரம் ஊறவையுங்கள். ஒரு அகலமான பாத்திரத்தில் மெலிதாக அரிந்த காய்கறிகள், சீஸ் துருவல், உப்பு, வெள்ளை மிளகுத் தூள், சிறிதளவு சில்லி சாஸ்  ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.

  பிசைந்து வைத்துள்ள மைதா மாவை அப்பளம் போல்  மெலிதாகத் திரட்டி ஒருபக்கம் மட்டும் தவாவில் போட்டு, சுட்டு எடுத்துக்கொள்ளுங்கள். கலந்து வைத்துள்ள காய்கறிக் கலவையைச் சுட்டு வைத்துள்ள ஒரு பக்க மாவின் மீது வைத்து மூடி, ஓரங்களை ஒன்றாகச் சேர்த்து ஒட்டிவிடுங்கள். இதை மீண்டும் தவாவில் போட்டு மேல் பகுதி மொறுமொறுவென வெந்த பிறகு எடுத்துப் பரிமாறுங்கள்.

  https://tamil.thehindu.com

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.