Jump to content

போக்குவரத்து

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    533
  • Joined

  • Last visited

  • Days Won

    8

Blog Entries posted by போக்குவரத்து

  1. போக்குவரத்து
    வாகனம் ஓடுவதற்கான சாரதி அனுமதி பத்திரம் பெறும் போது வீதி பரீட்சையில் சித்தி பெறுவது பலருக்கு மிகுந்த சிரமமாகவும், மன அழுத்தத்தை ஏற்படுத்தும் விசயமாகவும் காணப்படுகின்றது. பலர் நான்கு, ஐந்து, எட்டு தடவைகளுக்கு மேல் பரீட்சையில் தோற்றியும் சித்தி பெற முடியாது சிரமப்படுகின்றனர்.

    இது சம்மந்தமாக சில உதவி குறிப்புக்களை இங்கு தருகின்றோம்.

    1-வீதி பரீட்சையில் ஒரு போதும் அதிர்ஸ்டத்தின் அடிப்படையில் அல்லது முறைகேடுகள் செய்து சித்தி பெற நினைக்காதீர்கள். வாகனம் ஓடுவது என்பது உங்கள் அனுபவம்,ஆற்றல், திறமை, கவனம் என பல விடயங்களில் தங்கி உள்ளது. முறையாக ஓடத்தெரியாமல் சாரதி அனுமதி பத்திரம் பெறுவது எதிர் காலத்தில் நீங்கள் வீதி விபத்துக்களில் சிக்கி பல ஆபத்துக்களை எதிர்கொள்வதற்கு வழி வகுக்கலாம். ஆகவே, முறையாக பயின்று, நன்றாக பயிற்சி செய்து உங்கள் அனுபவம், திறமை, ஆற்றல், கவனம் இவற்றின் அடிப்படையில் வீதி பரீட்சையில் சித்தி பெற முயற்சி செய்யுங்கள்.

    2-எவ்வளவிற்கு எவ்வளவு நீங்கள் அதிகளவு பயிற்சி செய்கின்றீர்களோ அவ்வளவிற்கு நீங்கள் உங்கள் அனுபவத்தை பெருக்கி கொள்ள முடியும். வீதி பரீட்சைக்கு செல்ல முன்னர் இயலுமான அளவு பயிற்சியை, கிரமமாக (frequently) பெறுங்கள்.


    வேகம்: தெருவிற்கு நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் செல்லுங்கள். பாடசாலை உள்ள இடத்தில் மேலதிக கவனம் தேவை. ஹைவேயில் நுழையும் போது அளவுக்கு அதிகமாக வேகத்தை கூட்டாதீர்கள்.

    இடைவெளி: முன்னால் செல்லும் வாகனத்திற்கும், உங்கள் வாகனத்திற்கும் இடையில் போதியளவு இடைவெளி விடுங்கள். உள்ளூர் வீதிகளில் இரண்டு செக்கன்கள் இடைவெளி, ஹைவேயில் மூன்று செக்கன்கள் இடைவெளி ஆகக் குறைந்தது இருக்க வேண்டும். மோசமான காலநிலை நிலவும் போது மேலதிக இடைவெளி விட வேண்டும்.

    முழுமையான நிறுத்தம்: சந்திகளில் வாகனத்தை நிறுத்தும் போது வெள்ளை கோட்டிற்கு பின்னால் நிறுத்தம் செய்ய வேண்டும். வெள்ளை கோட்டின் மீது ஏறக்கூடாது. நிறுத்தம் முழுமையானதாக வர வேண்டும். சில்லு சிறுதளவு கூட உருள கூடாது என்பது முக்கியம். stop, stop all-way ஆகியவற்றில் அண்ணளவாக மூன்று செக்கன்கள் முழுமையான நிறுத்தம் எதிர்பார்க்கப்படுகின்றது.

    முழுமையான நோட்டம் விடுதல்/scanning: சந்திகளை அடையும் போது சந்தியை முழுமையாக நோட்டம் இடுவது முக்கியம். இடது பக்கம், வலது பக்கம், நேரே, மீண்டும் இடது பக்கம் நோட்டம் இடுங்கள். பாதுகாப்பாக சந்தியை கடக்க முடியும் என்று கண்டறியும் போது கடவுங்கள். சிக்னல் இல்லாத சந்திகளில் பாதசாரிகளுக்கே முன்னுரிமை உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். பாதசாரிகள் எவராது நீங்கள் செல்லும் பாதையின் குறுக்காக கடக்க முயற்சித்தால் அல்லது கடந்தால் நீங்கள் அவர்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

    உங்கள் தோளின் மேலாக திரும்பி பார்த்தல் (shoulder check): சந்தியில் நீங்கள் திரும்பும் போதும், ஒழுங்கை மாற்றம் செய்யும் போதும் கண்ணாடியை பார்த்தல், சிக்னல் போடுதல், உங்கள் தோளிற்கு மேலாக திரும்பி பார்த்தல் ஆகிய மூன்று விடயங்களையும் கட்டாயம் செய்ய வேண்டும். நீங்கள் செல்லும் அதே பாதையில் வரக்கூடிய சைக்கிளில் செல்பவர்கள், பாதசாரிகள், ஏனைய வீதி பாவனை செய்பவர்களை கண்டறிய இதை செய்ய வேண்டும். வலது பக்கமாக திரும்பும் போது மேலதிக அவதானம் தேவை.

    சீரான திருப்பம்: திருப்பத்தை மேற்கொள்ளும் போது முழுமையாக உங்கள் ஒழுங்கையினுள் வாகனத்தை வைத்து இருங்கள். உங்கள் வாகனத்தை ஒழுங்கையில் முறையான இடத்தில் பேணுங்கள். ஆகவும் அகலமான திருப்பத்தையோ அல்லது மிகவும் ஒடுக்கமான திருப்பமாகவோ செய்யாதீர்கள். திருப்பம் செய்யும் போது வேக கட்டுப்பாடு அவசியம். மிகவும் வேகமாக திருப்பத்தை செய்ய கூடாது. திருப்பம் செய்யும் போது பாதசாரிகளை கவனிக்க வேண்டும்.

    பயிற்சி ஒன்றின் மூலம் மட்டுமே வாகனம் ஓட்டுவதில் தேர்ச்சி பெற முடியும். அது ஓரிரு நாளில் ஒரு இரவினுள் சாத்தியப்படும் விசயம் இல்லை. வெவ்வேறு காலநிலைகள், வெவ்வேறு வீதி நிலமைகள் ஆகிய சந்தர்ப்பங்களில் பயிற்சி பெறுங்கள்.

    வீதி பரீட்சை: இதில் மூன்று பகுதிகள் உள்ளன.

    1-பயணத்தின் முன்னாக சரி பார்த்தல்: வாகனத்தின் சிக்னல்களை போட்டு காட்டுதல், வாகனத்தின் விளக்கை போட்டு காட்டுதல், நிறுத்தம் செய்யும் பிரேக்கை (parking brake) சரி பார்த்தல். உங்கள் வாகனம் பாதுகாப்பாக ஓடப்பட முடியும் என உங்களை பரீட்சிப்பவரினால் உறுதி செய்யப்பட்ட பின்னரே தொடர்ந்து பரீட்சையை செய்ய முடியும்.

    2-பரீட்சிப்பவர் கூறும் உத்தரவுகளுக்கு அமைய நீங்கள் வாகனத்தை ஓடிக்காட்ட வேண்டும். வெவ்வேறு விதமான வீதிகள், வெவ்வேறு விதமான சந்திகள், வெவ்வேறு விதமான சிக்னல்கள், சைகைகள் உள்ள வீதிகள், வெவ்வேறு விதமான வேக கட்டுப்பாடு உள்ள வீதிகள் இவற்றின் ஊடாக பரீட்சிப்பவர் உங்களை செல்லுமாறு கூறுவார்.

    பரீட்சிப்பவர் ஒரு போதும் உங்களுக்கு சட்டவிரோதமான உத்தரவுகளை தர மாட்டார். பரீட்சிப்பவர் ஒரு போதும் உங்களை பேக்காட்டி பரீட்சையில் சித்தி பெற முடியாதவாறு செய்ய மாட்டார். அவர் ஒரு சந்தியில் வலது அல்லது இடது பக்கம் திரும்ப வேண்டும் என்றால் முன்கூட்டியே உங்களுக்கு உத்தரவு தருவார். அவர் ஏதும் கூறாவிட்டால் நீங்கள் வீதியின் வழியே அது போகும் பாதையிலேயே ஓடுங்கள்.

    3-பின்னூட்டம் பெறுதல்: பரீட்சையின் முடிவில் பரீட்சிப்பவர் நீங்கள் வாகனம் ஓடும் போது எடுக்கப்பட்ட பல்வேறு குறிப்புக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வார். நீங்கள் பரீட்சையில் தோல்வி அடைந்தால் அதற்கான காரணத்தையும் தெளிவாக குறிப்பிட்டு சொல்வார்.

    குறிப்பு: கனடா அல்லாத வேறு நாடுகளில் உள்ளவர்கள் வலது, இடது ஆகிய பக்கங்களை உங்கள் நாட்டு வீதி அமைப்பு முறையுக்கு ஏற்ப இங்கு புரிந்து கொள்ளுங்கள்.

    ஆக்கம்: போக்குவரத்து
    http://CarDriving.Ca

    மேலதிக உதவி குறிப்புக்கள் கீழே பின்னர் தரப்படும்.
  2. போக்குவரத்து
    சரியான வழிகாட்டுதல், முறையான போதியளவு பயிற்சி, தன்னம்பிக்கை இவை உங்களிடம் காணப்பட்டால் எமது மாணவர்கள் போல் உங்களினாலும் முதல் தடவையிலேயே சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான வீதி பரீட்சையில் சித்தி அடைய முடியும்.













    தகவல்: போக்குவரத்து
    Htttp://CarDriving.CA
  3. போக்குவரத்து
    அங்கீகாரம் பெற்ற சாரதி பயிற்சி பயிற்றுனர்கள் வழங்கும் சேவை மருத்துவர்கள் செய்யும் சேவைக்கு ஒப்பானது.

    வாகனம் ஓடுபவர்கள் எதிர்காலத்தில் தமக்கு உடல், உயிர் பொருட்சேதங்கள் ஏற்படாமல் தப்புவதற்கு முறையாக வாகனம் ஓடுவதற்கு கற்றுக்கொள்வதோடு, அதை சரியான முறையில் தொடர்ந்து பயிற்சி செய்து, தமது அனுபவங்கள் மூலமும், ஆர்வம் மூலமும் வாகனம் ஓடுதலில் அறிவை பெருக்கி கொள்ள வேண்டும். எதிர்பாராது நடைபெறும் சம்பவங்கள் நீங்கலாய் ஏனைய எல்லா சந்தர்ப்பத்திலும் சவாரியின் செளகரியமும், பாதுகாப்பும் வாகனத்தை ஓடுகிற சாரதியின் கைகளிலேயே தங்கி இருக்கிறது.

    சாரதி பயிற்சி நெறியை பெற்று கொள்வது தொடர்பாய் எமது நிறுவனத்திற்கு தினமும் ஏராளம் தொலைபேசி அழைப்புக்கள் வரும். அதில் பெருன்பான்மையின "விலை விசாரிப்பதாய்" அமையும்.

    சாரதி பயிற்சி நெறி என்பது சந்தையில் தக்காளி, கத்தரிக்காய் கிலோ எவ்வளவு என்று கேட்டு வாங்கி கூடையில் போடுகிற கொடுக்கல் வாங்கல் போன்றது அல்ல என்று பலருக்கும் தெரிவது இல்லை. சாரதி பயிற்சி நெறி வாகனம் ஓடுபவர்களினதும், பாதசாரிகள், தெருவை பாவிக்கிற அனைவரினதும் உடல், உயிர், வாழ்க்கை, எதிர்காலம் சம்மந்தப்பட்டது.

    இங்கு போனில் (தொலைபேசி) எம்மிடம் கேட்கக்கூடாத அல்லது தவிர்க்கப்படவேண்டிய சில வினாக்களை தருகிறோம். "கேட்ககூடாததன்" என்பதன் அர்த்தம் என்ன என்றால் தவறான அணுகு முறையை குறிக்கிறது.

    கேள்வி 01: நான் எவ்வளவு காலத்தில் லைசன்ஸ் எடுக்கலாம்?

    குறிப்பிட்ட ஒரு மாணவனை நேரில் கண்டு அவர் வாகனம் ஓடுவதை மதிப்பீடு செய்யாதவரை ஒருவரது ஆற்றலை போன் ஊடாக எதிர்வு கூற முடியாது. சிலர் உடனடியாக விடயங்களை பிடித்து கற்று கொள்வார்கள், சிலர் அதிகளவு பயிற்சி வழங்கப்பட்டதன் பின்னரே வாகனத்தை முறையாக ஓடும் நிலைக்கு முன்னேறுவார்கள். சிலருக்கு வாகனம் ஓட தெரிந்தாலும் போக்குவரத்து விதிமுறைகளை அனுசரித்து அதற்கேற்ப வாகனம் ஓடுவதற்கு தெரியாமல் இருக்கும்.

    வீதி பரீட்சையில் உங்களுக்கு வாகனம் ஓட தெரியுமா என்று பரீட்சிப்பது இல்லை. பரீட்சை விதி முறைகளுக்கு அமைய போக்குவரத்து விதிமுறைகளை அனுசரித்து உங்களுக்கு வாகனம் ஓட தெரியுமா என்றே பரீட்சிக்கப்படுகிறது. நீங்கள் எவ்வளவு திறமையான சாரதியாக காணப்பட்டாலும், எத்தனை வருடங்கள் அனுபவம் இருந்தாலும் வீதி பரீட்சையில் எதிர்பார்க்கப்படும் வகையில் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையில் வாகனத்தை சரியாக ஓடி காண்பிக்க தெரியாவிட்டால் உங்களால் சாரதி அனுமதி பத்திரத்தை பெற்று கொள்ள முடியாது, சோதனையில் தோல்வியே கிடைக்கும்.

    எவ்வளவு காலத்தில் ஒருவர் லைசன்ஸ் எடுக்கலாம் என்பது அவரவர் தனி தன்மைகளுக்கு ஏற்ப வேறுபடும்.



    தொடரும்.............


    தகவல்: போக்குவரத்து
    http://CarDriving.CA
  4. போக்குவரத்து
    எமது மாணவர் ஒருவர் அண்மையில் வாகன சாரதி அனுமதி பத்திரத்தை பெற்று கொண்டார். இதில் விசேசம் என்ன என்றால் அவருக்கு தற்போது வயது எண்பத்து ஆறு 86.

    முறையான வழிகாட்டல், பயிற்சியுடன், உங்களுக்கு ஆர்வமும் காணப்பட்டால் வாகன அனுமதி பத்திரம் பெறுவதற்கு வயது ஒரு தடையாக அமையாது.

    வீதி பரீட்சையில் சித்தி பெற்ற பின்னர் வீடியோவில் அவர் தனது நன்றியை தெரிவிக்கிறார்.



    தகவல்: போக்குவரத்து
    http://www.cardriving.ca
  5. போக்குவரத்து
    வாகனத்தின் பின் இருக்கையில் உள்ளவர்கள் இருக்கை பட்டி (Seat Belt) அணிய தேவையில்லை என்று பலரும் நினைக்கிறார்கள். அனுபவம் வாய்ந்த சாரதிகளும், நீண்டகாலமாக வாகனத்தில் பயணம் செய்பவர்களும் இவ்வாறு நினைக்கிறார்கள். வாகனத்தின் பின் இருக்கையில் உள்ளவர்கள் இருக்கை பட்டி அணிய தேவையில்லை என்று நினைப்பது சரியானதா?

    இல்லை, மிக தவறானது. வாகனத்தில் உள்ள அனைவரும் இருக்கை பட்டி அணிய வேண்டும் என்பதே சரியானது.

    இருக்கை பட்டியின் முக்கியத்துவம் எவை?

    ஒரு விபத்து ஏற்படும்போது அல்லது வாகனம் விரைவாக நிறுத்தம் செய்யப்படும் போது விபத்தின் அல்லது உடனடி நிறுத்தத்தின் தாக்கம் காரணமாக (Impact) வாகனத்தின் உட்பகுதியுடன் உங்கள் உடல் விரைவாக சென்று எதிர்பாராமல் மோதல் அடைவதை இருக்கை பட்டி தடுக்கிறது.

    உதாரணமாக, ஓடும் வாகனத்தில் திடீரென விரைவாக பிரேக் பிடிக்கப்படும் போது பின் இருக்கையில் உள்ள நீங்கள் வாகனத்தின் முன் இருக்கையை நோக்கி உதறி எறியப்படக்கூடும். இதன்போது உங்கள் தலை, கை, நெஞ்சுப்பகுதி போன்றவை அடிபட்டு காயம் ஏற்படலாம். ஆனால், இருக்கை பட்டி அணிந்தால் அது உங்கள் உடல் உதறப்பட்டு வாகனத்தின் உட்பகுதிகளுடன் மோதுவதை தடுக்கிறது.

    இவ்வாறே, இருக்கை பட்டி அணியாவிட்டால் விபத்தின் போது உங்கள் தலை மிக வேகமாக வாகனத்தின் யன்னல் கண்ணாடியுடன் அடிபட்டு மோசமான காயம் ஏற்படலாம். ஆனால், இருக்கை பட்டி அணியும்போது உங்கள் உடல் உதறப்பட்டு வாகனத்தின் பகுதிகளுடன் முட்டி மோதுவது தடுக்கப்படுகிறது.

    அதிகளவு விபத்துக்களில் வாகனத்தின் கதவு திறபடுகிறது. நீங்கள் இருக்கை பட்டி அணியாவிட்டால் விபத்தின் தாக்கம் காரணமாக தானாக திறபடும் கதவூடாக நீங்கள் தெருவில் தூக்கி எறியப்பட்டு மோசமான காயங்கள் ஏற்படலாம். பல வீதி விபத்துக்களில் பயணிகள் வாகனத்தின் கதவூடாக வீதியில் தூக்கி வீசப்பட்டு உடல் உருண்டு பலத்த காயங்களினால் உடனடியாகவே மரணம் அடைவதை அன்றாடம் செய்திகளில் காண்கிறோம். ஆனால், இருக்கை பட்டி அணியும்போது இருக்கை பட்டி வாகனத்தின் கதவு விபத்தின்போது திறபட்டாலும் நீங்கள் வெளியே உதறி எறியப்படாதவாறு உங்கள் உடலை இருக்கிப்பிடித்து உங்களை காப்பாற்றுகிறது.

    இருக்கை பட்டி அணிவது காவல்துறையை திருப்திப்படுத்துவதற்காக அல்ல, ஆனால், உங்கள் உயிரை காப்பாற்றுவதற்காக என்பதை நினைவில் வையுங்கள். சரியான முறையில் இருக்கை பட்டி அணிவது உங்கள் உயிரை காப்பாற்றும்.

    நீங்கள் எவ்வளவோ திறமைசாலியான சாரதியாக காணப்படலாம். ஆனால், விபத்திலிருந்து திறமைசாலிகளும் 100% தப்பிக்க முடியாது. உங்கள் வாழ்க்கை, உங்களை நம்பி வாகனத்தில் ஏறுகின்ற பயணிகளின் வாழ்க்கை சோம்பேறித்தனம் காரணமாக அல்லது உதாசீனம் காரணமாக இருக்கை பட்டி அணியாமல் விபத்தில் மோசமாக பாதிக்கப்படுவதற்கு அல்லது உயிரிழப்பு ஏற்படுவதற்கு சந்தர்ப்பத்தை உருவாக்காதீர்கள். ஓடும் வாகனத்தில் உள்ள அனைவரும் இருக்கை பட்டியை முறையாக அணிந்துள்ளதை உறுதி செய்யுங்கள்.

    கீழுள்ள வீடியோக்களை பாருங்கள். இருக்கை பட்டி அணியும் போதும் இருக்கை பட்டி அணியாதபோதும் விபத்து ஏற்பட்டால் எப்படியான விளைவுகள் ஏற்படுகிறது என்பதை காண்பிக்கின்றன:







    ஆக்கம்: போக்குவரத்து
    http://www.CarDriving.CA
  6. போக்குவரத்து
    கடுகதி பாதையில் உங்கள் வாகனம் தீடீரென பழுதடைந்து விட்டால் என்ன செய்வது? (வட அமெரிக்கா)

    ----------------------------------------
    பதற்றம் அடையாதீர்கள்.
    ----------------------------------------

    1. வாகனத்தை வீதி ஓரமாக நகர்த்துங்கள்:

    Emergency Signalஐ போடுங்கள். விரைவாகவும், பாதுகாப்பாகவும், அவதானத்துடனும் பழுதடைந்த வாகனத்தை வீதி ஓரமாக நகர்த்துங்கள். இயலுமானவரை நேர்மட்டமான பாதையில் நிறுத்துங்கள். நீங்கள் இடதுபக்கமாக வாகனத்தை நகர்த்தவேண்டி ஏற்பட்டால் மற்றைய வாகனங்கள் உங்கள் வாகனத்துடன் மோதமுடியாதபடி போதியளவு இடம் தெருஓரம் உள்ளதை இயலுமானவரை உறுதிப்படுத்துங்கள்.

    2. நீங்கள் நிற்கின்ற இடத்தை குறித்துக்கொள்ளுங்கள்:

    உங்கள் வாகனத்திற்கு மிக அண்மையாகவுள்ள பிரதான Exit - வெளியேற்று பாதை எது என்பதை அறிந்துகொள்ளுங்கள். அருகில் கடைகள், விடுதிகள், எரிபொருள் நிரப்பு நிலையம், வீதி குறியீட்டு இலக்கங்கள், வேறு ஏதாவது குறிப்பிட்டு இனம்காட்டக்கூடிய அடையாளங்கள் தென்படின் அவற்றை குறித்துக்கொள்ளுங்கள்.

    3. வாகனத்தின் பிரச்சனையை கண்டறியுங்கள்:

    அ. ஏதாவது வித்தியாசமான சத்தங்கள் கேட்பின், வழமையில் இல்லாதபடி வித்தியாசமாக வாகனத்தின் ஏதாவது பகுதி தோன்றினால்/ ஏதாவது பகுதியை வித்தியாசமாக நீங்கள் உணர்ந்தால், அத்துடன் புகை, தீ இவை ஏதாவது தோன்றினால், வாகனத்தின் முன்பக்க மூடியின் கீழாக ஏதாவது தோன்றினால் அவற்றை அறிந்துகொள்ளுங்கள்.

    ஆ. தவிர்க்க முடியாத சூழ்நிலையில், உதாரணமாக தீ காரணமாக வாகனத்தை விட்டு வெளியேறவேண்டி ஏற்பட்டால் உங்களை நோக்கி வரக்கூடிய வாகனங்கள் பற்றி அதி உயர் எச்சரிக்கையாக இருங்கள். அத்துடன் இருள்/இரவு, மற்றும் காலநிலை - மழை, கடுங்குளிர், சுழல்காற்று, சீரற்ற தரை மட்டங்கள் - பள்ளம், இடுக்கு, குழிகள், வழுக்குதல் இவை பற்றியும் எச்சரிக்கையுடன் செயற்படுங்கள்.

    இ. வாகனத்தைவிட்டு வெளியேறும்போது மற்றைய வாகனங்கள் வருகின்ற பக்கமாக வெளியேறாமால் உங்களை நோக்கி வரும் வாகனங்களுக்கு எதிர்ப்புறமாக உள்ள கதவை திறந்து வெளியேறுங்கள்.

    ஈ. ஒருபோதும் உங்கள் வாகனத்திற்கு நேரே முன்னாலோ அல்லது பின்னாலோ நிற்காதீர்கள். நீங்கள் மறைப்பதால் அல்லது உங்களை காணாதபடியால் மற்றைய வாகனங்கள் உங்கள் மீது மோதக்கூடும்.

    உங்களால் வாகனத்தை வீதி ஓரமாக நகர்த்த முடியாவிட்டால்...

    அ. Emergency Signal, ஆபத்து கால வெளிச்சங்களை உடனடியாக போடுவதற்கு மறவாதீர்கள்.

    ஆ. பிரயத்தனப்பட்டு தெரு ஓரமாக வாகனத்தை நகர்த்த முற்பட்டு விபத்தில் சிக்கி கொள்ளாதீர்கள்.

    இ. உங்களுக்கு வாகனத்தின் பாதுகாப்பு பற்றி குழப்பமாக காணப்பட்டால், அதாவது உங்கள் வாகனத்துடன் பின்னால் வரும் வாகனங்கள் ஏதும் மோதும் எனக்கருதினால் ஒருபோதும் வாகனத்தினுள் இருக்காதீர்கள். மிகவும் அவதானத்துடன், பாதுகாப்பாக வாகனத்தைவிட்டு வெளியேறி தெருவில் இருந்து விலகிச்சென்று பாதுக்காப்பான ஓர் இடத்திற்கு செல்லுங்கள்.

    4. மற்றைய வாகனங்களின் பார்வையில் உங்கள் வாகனம் தென்படுவதை உறுதி செய்யுங்கள்:

    Emergency Signalஐ போடுவதோடு, உங்களிடம் ஏதாவது துணிகள், கைக்குட்டை, உடற்போர்வை, ஜாக்கெட் போன்றவை இருந்தால் அவற்றை மற்றைய வாகனங்களுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் வாகனத்தின் சாளரத்தில், கதவு கைப்பிடியில் அல்லது Anrtennaஇல் கட்டி/செருகி விடுங்கள்.

    5. தேவையேற்படின் அவசர கால சேவை 911ஐ அழையுங்கள் :

    வாகனத்தின் பிரயாணிகள் எல்லோரும் தெருவிலிருந்து விலகி பாதுகாப்பான இடத்திற்கு சென்றதும் அவசரகால சேவையை - காவல்துறையை அழையுங்கள். அவர்கள் நீங்கள் என்ன செய்யவேண்டும் என உங்களுக்கு தேவையான மேலதிக அறிவுத்தல்களை வழங்குவார்கள்.

    6. வாகனத்தை விட்டு வெளியேறுதல் :

    நீங்கள் வானகத்தை விட்டு வெளியேற எண்ணினால்...

    அ. சுற்றுப்புறங்கள் பற்றி எச்சரிக்கை அடையுங்கள்.

    ஆ. முக்கியமாக இரவில் பாதுகாப்பிற்காக ஒளி விளக்கை/Flashing Light வாகனத்தினுள் கொண்டு செல்லுங்கள்.

    இ. எவராது தெருவில் செல்லும் வாகனத்தின் சாரதிகள் தாமாக உதவி செய்வதற்கு முன்வந்தால் அவர்களின் பெயர், தொலைபேசி இலக்கம், வீட்டு முகவரி என்பனவற்றை முதலில் கேட்டுத்தெரிந்து குறித்து வைத்த பின்னரே உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள். அறிமுகம் பெறாது முன்பின் தெரியாமல் உதவியை பெறுவது ஆபத்தானது. நீங்கள் பிரயாணிகளை விட்டு முன்பின் தெரியாதவர்களுடன் உதவியை பெறுவதற்காக எங்காவது சென்றால் (உதாரணமாக அயலில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு செல்லுதல்) உதவி செய்பவரின் விபரத்தை வாகனத்தின் பிரயாணிகளிடம் கொடுத்து, நீங்கள் ஏன் அவருடன் செல்கின்றீர்கள் என்பதற்கான காரணத்தையும் சொல்லிச் செல்லுங்கள்.

    ஈ. வாகனத்தைவிட்டு வெளியேறும்போது எப்போதும் உங்களை நோக்கி மற்றைய வாகனங்கள் வருகின்ற பக்கமாக அல்லாது எதிர்ப்புறமாக உள்ள கதவு வழியாகவே நீங்கள் வெளியேற வேண்டும்.

    7. வாகனத்தினுள்ளேயே தங்குதல் :

    அ. நீங்கள் வாகனத்தினுள்ளேயே வெளி உதவி கிடைக்கும் வரை தங்குவதற்கு தீர்மானித்தால் உங்கள் வாகனத்தின் கண்ணாடி, கதவு ஆகியவறை பூட்டிவிடுங்கள்.

    ஆ. சாரளத்தின் கண்ணாடியையோ அல்லது கதவையோ அறிமுகம் இல்லாதவர்களுக்கு திறக்காதீர்கள். உங்களுக்கு உதவுவதற்கு அவர்கள் வந்தால், உங்களிடம் தொலைபேசி காணப்படாவிட்டால் அவர்களிடம் 911இற்கு அல்லது அவசரகால வீதி உதவி சேவைக்கு (Emergency Road Service) அழைக்குமாறு கேளுங்கள்.

    இ. எவர் மூலமாவது உங்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் உடனடியாக 911ஐ அழையுங்கள். உங்கள் வாகனத்தின் Horn ஐ தொடர்ச்சியாக சத்தமாக போடுங்கள். எச்சரிக்கை ஒலியை எழுப்புவதற்காக வாகனத்தின் சாவியில் உள்ள Panic Button ஐயும் சொடுக்கலாம்.

    ஈ. வெப்பத்தை அல்லது குளிரை பெறுவதற்காக வாகனத்தின் இயந்திரத்தை நீங்கள் தொடர்ச்சியாக இயக்காமல் இடையிடையே இயந்திரத்தை நிறுத்துங்கள். வாகனத்தின் இயந்திரம் தொடர்ச்சியாக இயங்கும்போது COவாயு காரணமாக வாகனத்தில் உள்ளவர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்படலாம்.

    8. அவசரகால வீதிச்சேவை பிரிவினருடன் / வாகன திருத்தகத்தில் உரையாடுதல் :

    அ. உங்கள் அங்கத்துவ அடையாள இலக்கத்தை கொடுங்கள். உதாரணம் - CAA membership no.

    ஆ. உங்கள் தொலைபேசி இலக்கம், வாகனம் தற்போதுள்ள இடம் இவற்றை கூறுங்கள்.

    இ. வாகனத்தின் பழுது பற்றிய விபரம், பிரச்சனையின் தன்மை என்பனவற்றை சொல்லுங்கள்.

    ஈ. வாகனம் இழுத்துச்செல்லவேண்டிய தேவை ஏற்பட்டால், அதிகளவு பிரயாணிகள் காணப்பட்டால், குழந்தைகள், சிசுக்கள் காணப்பட்டால், மருத்துவ உதவிகள் தேவைப்பட்டால், வாகனத்திற்கு விசேடமான எரிபொருள் ஏதாவது தேவைப்பட்டால் இவை பற்றிய விபரங்களை தயங்காது கூறுங்கள்.

    உ. நீங்கள் 911ஐ அழைப்பின் அதுபற்றியும் அறிவியுங்கள்

    9. உங்கள் உரிமைகளும் பொறுப்புக்களும் :

    காப்புறுதி நிறுவனம் அல்லது Emergency Road Service மூலம் எப்படியான உதவிகள் கிடைக்கும், பெறப்படவேண்டும் என்பவை உங்கள் பொறுப்பாகும். ஆபத்து காலங்களில் இவை மூலம் எப்படியான உதவிகள் கிடைக்கும், எவ்வாறான சேவைகள் உங்களுக்கு உள்ளக்கப்பட்டுள்ளன என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளுங்கள்.

    இவை எல்லாவற்றுக்கும் மேலாக காலம், சூழ்நிலைக்கு ஏற்றபடி புத்திசாதூர்யமாக / சமயோசிதமாக நடந்துகொள்ளுங்கள். உங்கள் பொது அறிவை, common senseஐ பயன்படுத்துங்கள். உங்களினதும், வாகனத்தில் உள்ள பிரயாணிகளினதும், தெருவை பயன்படுத்தும் ஏனையோரினதும் பாதுக்காப்பே முக்கியமானது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். நீங்கள் எடுக்கின்ற தவறான முடிவுகள் உயிர் ஆபத்தினையும், அழிவையும் ஏற்படுத்தலாம் என்பதை மறவாதீர்கள்.

    ஆக்கம் : போக்குவரத்து
    http://www.cardriving.ca

    உசாத்துணை : caasco.com
  7. போக்குவரத்து
    சந்தியில் இடது புறமாக திருப்பத்தை மேற்கொள்ளும் போது கவனிக்க வேண்டிய சில முக்கிய விடயங்கள்:

    1-இடது பக்கதிற்கு என தனியாக Light சிக்னல் காணப்பட்டால் நீங்கள் அந்த பிரத்தியேக சிக்னலில் பச்சை நிறம் அல்லது பச்சை அம்புக்குறி தோன்றும் போது மட்டுமே இடது பக்கமாக திருப்பத்தை மேற்கொள்ள வேண்டும். நேராக செல்வதற்கான Light சிக்னலில் பச்சை நிறம் காட்டினால் அதேசமயம் இடது புறத்திற்கான பிரத்தியேக சிக்னலில் சிவப்பு நிறம் காட்டினால், எதிர் புறமாக வாகனங்கள் வராவிட்டாலும் நீங்கள் இடது புறமாக திருப்பத்தை மேற்கொண்டால் அது சட்ட விரோதமானது ஆகும்.

    2-இடது பக்கத்திற்கு என பிரத்தியேகமாக Light சிக்னல் இல்லாமல் சந்தியின் நடுவில் உள்ள Light சிக்னலிலேயே பச்சை நிறமான அம்புக்குறி மூலம் இடது பக்கமாக திரும்புவதற்கு காட்டப்பட்டால் பச்சை நிற அம்புக்குறி தோன்றும் போது இடது பக்கமாக திருப்பத்தை மேற்கொள்ள வேண்டும்.

    3-இடது பக்கத்திற்கு என பிரத்தியேகமாக Light சிக்னல் இல்லாமல் சந்தியின் நடுவில் உள்ள Light சிக்னலிலேயே பச்சை நிறமாக விட்டு விட்டு எரிந்தால் (Flashing) நீங்கள் பச்சை நிறமாக சிக்னல் விட்டு விட்டு எரியும் போது இடது பக்கமாக திருப்பத்தை மேற்கொள்ள வேண்டும்.

    4-இடது பக்கத்திற்கு என பிரத்தியேகமாக Light சிக்னல் இல்லாமல் சந்தியின் நடுவில் உள்ள Light சிக்னலிலும் பச்சை அம்பு குறியோ அல்லது விட்டு விட்டு பச்சையாக எரியும் சிக்னலோ இல்லாவிட்டால் சிக்னலில் வழமையான பச்சை நிறம் தோன்றும் போது, எதிர் புறமாக வாகனம் எதுவும் உடனடியாக வராவிட்டால் நீங்கள் அவதானத்துடன் திருப்பத்தை மேற்கொள்ளலாம்.

    5-மேலே இலக்கம்4இல் கூறப்பட்டவாறு இடது புறமாக திருப்பத்தை மேற்கொள்ளும் போது ஒரு வாகனம் மட்டுமே சந்தியில் பாதசாரிகளின் எல்லைக்கோட்டினை தாண்டி சந்தியினுள் இடது புறமாக திருப்பத்தை மேற்கொள்வதற்கு காத்திருக்க முடியும். உடனடியாக அதன் பின்னால் இரண்டாவது வாகனமாக சந்தியினுள் நீங்கள் இடது புறமாக திரும்புவதற்கு நிற்பது கூடாது. உங்களுக்கு முன்னால் அந்த வாகனம் இடது புறமாக திரும்புவதற்கு நின்றால் நீங்கள் பாதசாரிகள் கடக்கும் கடவை கோட்டின் பின்னாலேயே நிற்க வேண்டும். குறிப்பிட்ட வாகனம் இடது புறமாக திரும்பி சென்ற பின்னரே தொடர்ந்தும் பச்சை நிறம் காட்டினால் நீங்கள் சந்தியினுள் பாதசாரி கடவை கோட்டை தாண்டி முன்னே இடது புறமாக திரும்புவதற்கு நகர வேண்டும்.

    6-மேலே இலக்கம் 4,5 இல் கூறப்பட்டவாறு இடது பக்கமாக திருப்பத்தை மேற்கொள்ள முயலும் போது சிக்னல் பச்சை நிறமாக உள்ளபோது திருப்பத்தை மேற்கொள்ள முடியாமல் போய் பச்சை நிறம் மாறி அது செம்மஞ்சள் நிறமாக மாறினால் எதிர்ப்புறமாக வாகனம் எதுவும் வரவில்லை என்பதை அவதானமாக உறுதி செய்த பின்னரே நீங்கள் இடது புறமாக திருப்பத்தை மேற்கொள்ள வேண்டும்.

    7-பல வீதி விபத்துக்கள் ஏற்படுவதற்கும், பல உயிர், உடல், பொருள் சேதங்கள் ஏற்படுவதற்கும் மேலே இலக்கம் 6 இல் கூறப்படும் வகையான திருப்பத்தில் பலர் "இப்போது பச்சை நிறம் செம்மஞ்சள் நிறமாக மாறுகிறது எனவே இப்போது நான் இடது புறமாக திருப்பத்தை மேற்கொள்ள முடியும் எதுவித பிரச்சனையும் இல்லை" என நினைத்து செயற்படுவதே காரணம் ஆகும். பச்சை நிறம், செம்மஞ்சளாக மாறி, பின்னர் சிவப்பாக மாறிய பின்னரும் உங்கள் எதிர்ப்புறமாக ஒருவர் சட்டவிரோதமாக வரக்கூடும். அவர் மது போதையில் கூட வாகனம் ஓடக்கூடும். எனவே, எப்போதும் எதிர்ப்புறமாக ஒரு வாகனமும் வரவில்லை என்பதை உறுதி செய்த பின்னரே இடது புறமாக திருப்பத்தை மேற்கொள்ள வேண்டும்.

    8-உங்களிற்கு மற்றைய வாகனத்தின் நகர்வு பற்றி அது என்ன செய்யப்போகிறது என்று தெரியாமல் சந்தேகம் தோன்றினால் அல்லது மற்றைய வாகனம் ஓடுபவரின் கவனத்தை ஈர்ப்பதற்கு சத்தமாக ஹோனை அடித்து எச்சரிக்கலாம்/கவனத்தை ஈர்க்கலாம். மற்றைய வாகன சாரதிகளுடன் eye contact மேற்கொள்வது/ஹோன் அடிப்பது பாதுகாப்பாக திரும்புவதற்கு உதவும்.

    9-நீங்கள் இடது புறமாக திரும்புவதற்கு சந்தியினுள் பாதசாரிகள் கடவையை தாண்டி முன்னே நிற்கும் போது பாதுகாப்பாக இடது புறமாக திருப்பத்தை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்காவிட்டால், சிக்னலும் சிவப்பாக மாறிவிட்டால் பதற்றம் அடையாது சத்தமாக ஹோனை அடித்து கொண்டு, சந்தியில் உள்ள மற்றைய வாகன சாரதிகளின் கவனத்தை எடுத்துக்கொண்டு இடது பக்கமாக திருப்பத்தை மேற் கொள்ளுங்கள். அதுவும் சாத்தியப்படாமல் அந்த நேரத்தில் இடது புறமாக திரும்ப முடியாதவாறு மற்றைய வாகனங்கள் நகரத்தொடங்கி விட்டால் உங்கள் வாகனத்தில் உள்ள Emergency Signal ஐ போட்டு விட்டு அந்த இடத்திலேயே நகராமல் நில்லுங்கள், மற்றைய வாகனங்களிற்கு எச்சரிக்கை கொடுப்பதற்கு ஹோனையும் அடிக்கலாம். மீண்டும் சிக்னல்கள் மாறிய பின் வழமை போல் இடது புறமாக திருப்பத்தை மேற்கொள்ளுங்கள்.

    10-இடது புறமாக நீங்கள் திரும்புவதற்கு சந்தியில் நிற்கும்போது எதிர்ப்புறமாக வரும் சில வாகனங்கள் வலது பக்கமாக திரும்புவதற்கு தமது வாகனத்தில் சிக்னலை போடக்கூடும். ஆனால் வலது புறமாக சிக்னலை அவை போட்டாலும் வலது புறமாக திரும்பி செல்லாமல் நேராகவே வந்து சந்தியை கடந்து செல்லவும் கூடும். எனவே எதிர்ப்புறமாக வரும் வாகனம் வலது பக்கமாக திரும்புவதற்கு சிக்னலை போட்டாலும் அது தொடர்ந்து உங்கள் எதிர்ப்புறமாக வரவில்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னரே இடது புறமாக திருப்பத்தை மேற்கொள்ளுங்கள்.

    11-இடது புறமாக திரும்புவதற்கு என பிரத்தியேகமான ஒழுங்கை (Left Turn Lane) காணப்பட்டால் குறிப்பிட்ட ஒழுங்கையினுள் அவதானமாக பிரவேசித்து சந்தர்ப்பம் கிடைக்கும் போது திருப்பத்தை மேற்கொள்ளுங்கள்.

    12-நீங்கள் இடதுபுறமாக திருப்பத்தை மேற்கொண்டு புதிய ஒழுங்கையினுள் பிரவேசிக்கும் போது பாதசாரிகள், துவிச்சக்கர வண்டிகள் அந்த ஒழுங்கையை ஊடறுத்து நடந்து, நகர்ந்து செல்ல கூடும். பாதசாரிகள், துவிச்சக்கர வண்டிகள் கடக்கின்றார்களா என்பதை கவனித்து அவதானத்துடன் செயற்படுவது அவசியம் ஆகும்.

    கீழே மாணவர்கள் இடது புறமாக திருப்பத்தை செய்கிறார்கள்:



    இடது புறமாக திரும்புவதற்கு பிரத்தியேக ஒழுங்கையினுள் காத்திருக்கும் மாணவன்:



    ஆக்கம்: போக்குவரத்து
    http://CarDriving.Ca
  8. போக்குவரத்து
    பல நுட்பங்கள் உள்ளன. ஒரு வழி சுருக்கமாக:

    1-மற்றைய வாகனத்திற்கு மிக அருகாக உங்கள் வாகனத்தை சமாந்தரமாக கொண்டு வந்த பின்னர் உங்கள் வாகனத்தின் முன் சில்லுகளை நேராக்குங்கள்.

    2-உங்கள் வலப்பக்கமாக பாருங்கள் (இடது பக்கமாக மற்றைய வாகனம் இருந்தால் இடது பக்கமாக பார்க்க வேண்டும்). ரிவர்ஸ் கியருக்கு மாற்றிவிட்டு மெதுவாக உங்கள் வாகனத்தின் முன் சில்லுகள் மற்றைய வாகனத்தின் பின் சில்லுகளுக்கு சமாந்தரமாக வரும் வரை ரிவர்ஸ் செய்யுங்கள்.

    3-இப்போது steering ஐ வலது பக்கமாக முழுவதுமாக சுற்றுங்கள் (இடது பக்கமாக மற்றைய வாகனம் இருந்தால் இடது பக்கமாக சுற்ற வேண்டும்). இனி தொடர்ந்து மிக மெதுவாக ரிவர்ஸ் செய்யுங்கள்.

    4-உங்கள் வாகனத்தின் முன் கதவு மற்றைய வாகனத்தின் bumper க்கு அருகாக வரும்போது steering ஐ இடது பக்கமாக முழுவதுமாக சுற்றுங்கள் (இடது பக்கமாக மற்றைய வாகனம் இருந்தால் வலது பக்கமாக சுற்ற வேண்டும்). தொடர்ந்து ரிவர்ஸ் செய்யுங்கள்.

    5-மற்றைய வாகனத்திற்கு பின்னால் முழுவதுமாக வந்த பின்னர் முன் சில்லுகளை மீண்டும் நேராக்குங்கள்.

    6- தவறு நிகழ்ந்தால் மீண்டும் படி ஒன்றில் தொடங்கி தொடருங்கள். வாகனத்தை நகர்த்தும் போது பாதசாரிகள், வேறு வாகனங்கள் வருகிறார்களா என்பதை அவதானியுங்கள். வந்தால் உங்கள் வாகனத்தை நிறுத்தி, கவனம் எடுத்து செயல்படுங்கள்.

    7-முன்னே செல்ல வேண்டுமானால் மீண்டும் கியரை மாற்றுவதற்கு மறவாதீர்கள்.

    கீழே வேறு ஒரு வகையில் மாணவர் சமாந்தரமாக வாகனத்தை தரிக்கிறார்:



    ஆக்கம்-போக்குவரத்து
    http://cardriving.ca
  9. போக்குவரத்து
    பதற்றம் அடையாதீர்கள்:

    1-காயப்பட்டவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
    2-விபத்தில் எவராவது காயம் அடைந்தால் அல்லது வாகனத்திற்கு அதிக சேதம் ஏற்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு (மாநகரசபை/மாகாண) அறிவியுங்கள்.
    3-ஒருவருக்கும் காயம் ஏதும் ஏற்படாவிட்டால், வாகனமும் ஓடக்கூடிய நிலையில் காணப்பட்டால் போக்குவரத்திற்கு தடங்கல் ஏற்படுத்தாது வாகனத்தை அவதானத்துடன் வீதி ஓரமாக நகர்த்துங்கள்.
    4-விபத்திற்கான காரணம் மதுபோதை/போதைப்பொருள்/குற்றச் செயல் என சந்தேகம் கொண்டால் உடனடியாக காவல்துறைக்கு அறிவியுங்கள்.

    விபரத்தை திரட்டுங்கள்:

    1-சாட்சிகள்: பெயர்/முகவரி/தொலைபேசி இல./வாகன தகடு இல. காவல்துறை அதிகாரி பெயர்/badge இல.
    2-வாகனம்: சாரதி பெயர்/வயது/முகவரி/தொலைபேசி இல./வாகன தகடு இல./வாகனம் model/வாகனம் தயாரிப்பு வருடம்/மாகாணம்/உரிமையாளர் பெயர்/உரிமையாளர் முகவரி/காப்புறுதி நிறுவனம்/காப்புறுதி இல./காப்புறுதி முகவர்
    3-காயமடைந்தோர்: பெயர்/முகவரி/காயம் விபரம்/வயது/பால்/சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படும் இடம்
    4-வாகன சேதம்: சம்பவம் நடைபெற்ற இடம்/திகதி/நேரம்/தெரு விபரம்/நீங்கள் வாகனம் ஓடிய வேகம்/மற்றைய சாரதி அல்லது சாரதிகள் வாகனம் ஓடிய வேகம்./உங்கள் வாகனத்தின் சேத விபரம்/மற்றைய வாகனத்தின் அல்லது வாகனங்களின் சேத விபரம்
    5-விளக்க படம் வரையுங்கள்: சம்மந்தப்பட்ட தெருக்களின் பெயர்/சிக்னல்,sign விபரங்கள்/இடம்/Directions/சம்மந்தப்பட்ட objects (வாகனங்கள்/பாதசாரிகள்/post/wall/மரங்கள்/பிராணிகள்/விலங்குகள்)

    6-விரிவான விபரம்:
    வீதி: நேர் பாதை/வளைவான வீதி/மட்டமான வீதி/ஏற்றம் இறக்கம் உள்ள வீதி/திருத்த வேலைகள் நடைபெறுதல்
    வீதியின் பரப்பு: ஈரம்/உலர்ந்தது/சகதியானது/பனி கொட்டியது/வழுக்குவது
    வீதி குறைபாடுகள் : வீதி ஓரமாக குறைபாடுகள்/ஓட்டைகள்/குழிகள்/மேடுகள்/மேற்பரப்பு கடினம் இல்லாமல் இருத்தல்/வீதி மீது அசையக்கூடிய பொருட்கள்(கற்கள்/தகரம்/கண்ணாடி துண்டுகள்)
    போக்குவரத்து கட்டுப்பாடு: stop sign/stop light/கட்டுப்பாட்டு அலுவலர்/கொடி காட்டுபவர்/எதுவித வீதி கட்டுபாடும் இல்லை
    வெளிச்சம்: காலை நேரம்/புழுதி/மாலை நேரம்/இருள்/வீதி விளக்குகள் உள்ளது/வீதி விளக்குகள் இல்லாதது
    காலநிலை: மழை/பனி/புகார்/தெளிவான காலநிலை

    7-வாகனம் ஓடப்பட்ட முறை:நீங்கள்/மற்றைய சாரதி அல்லது சாரதிகள்

    மதுபோதை/போதை பொருட்கள்/இதர மருந்து வகைகள் பாவித்து இருந்தமை: ஆம்/இல்லை
    வீதிக்கு நிர்ணயிக்கப்பட்ட வேகத்திலும் அதிக வேகத்தில் ஓடியமை: ஆம்/இல்லை
    வாகனத்திற்கு முன்னுரிமை/right of way கொடுக்கவில்லை: ஆம்/இல்லை
    பாதசாரிகளுக்கு முன்னுரிமை/right of way கொடுக்கவில்லை: ஆம்/இல்லை
    மற்றைய வாகனத்தின் பின்னால் மிக அருகாக தொடர்ந்து சென்றமை: ஆம்/இல்லை
    தவறான முறையில் ஒழுங்கை மாற்றம் செய்தமை: ஆம்/இல்லை
    தவறான வழியில் வந்தமை (wrong side of the road): ஆம்/இல்லை
    வாகனத்தில் தேவையான சிக்னலை போடாமை: ஆம்/இல்லை
    தவறான திருப்பம்: ஆம்/இல்லை
    நிறுத்துவதற்கான சிக்னலிற்கு (stop light) நிற்காமை: ஆம்/இல்லை
    நிறுத்துவதற்கான சைகையுக்கு (stop sign) நிற்காமை: ஆம்/இல்லை
    ஏனைய ஏதாவது போக்குவரத்து கட்டுபாட்டுக்கு இசையாமை: ஆம்/இல்லை
    நிறுத்தம் செய்யப்பட்ட வாகனத்தை தவறான வகையில் ஓட ஆரம்பித்தமை: ஆம்/இல்லை
    தவறான முறையில்/இடத்தில் நிறுத்தம் செய்தமை: ஆம்/இல்லை
    கண்ணாடி அணிந்திருக்கவில்லை: ஆம்/இல்லை
    சரியான முறையில் வாகனம் ஓடியமை: ஆம்/இல்லை

    தமிழ் ஆக்கம்: போக்குவரத்து
    Http://CarDriving.Ca
    உதவி: DaimlerChrysler Canada கையேடு
  10. போக்குவரத்து
    தூக்க கலக்கத்தில் வாகனம் ஓடுவது மதுபோதையில் வாகனம் ஓடுவது போல் அதிகளவு ஆபத்தானது. போதியளவு தூக்கம் இல்லாமல் வாகனம் ஓடினால் மதுபோதையில் வாகனம் ஓடும்போது உள்ளதுபோல வீதி விபத்தில் நீங்கள் சிக்குவதற்கு அதிகளவு சாத்தியம் உள்ளது.

    நீண்ட பயணங்களின் போது வாகனம் ஓடும் முன்னர் போதியளவு தூக்கம் கிடைக்காது என நீங்கள் கருதினால் வாகனத்தை நீங்கள் ஓடாது வேறு பயண வழிமுறைகளை கையாளுங்கள்.

    குறுகிய தூர பயணங்களாயினும் போதியளவு தூக்கம் கிடைக்கவில்லையாயின் வாகனத்தை நீங்கள் ஓடாது வேறு போக்குவரத்து முறைகளை பயன்படுத்துங்கள், உதாரணமாக பொது பேருந்து சேவை, டாக்சி போன்றவை.

    வாகனம் ஒரு இயந்திரம் என்பதை நினைவில் வையுங்கள். இயந்திரத்தை நீங்கள் இயக்கும் போது உங்கள் கவனம் அங்கு குவிக்கப்படாவிட்டால் அது மோசமான வீதி விபத்துக்களில் முடியலாம். அவ்விபத்துக்களில் உங்களுக்கு உடலியல் ரீதியான பாதிப்பு ஏற்படாவிட்டாலும் ஏனைய வீதி பாவனையாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் கவன குறைவுடன் வாகனம் ஓட்டியதற்காக உங்களுக்கு சிறை தண்டனையும் கிடைக்கலாம். உங்கள் வாகனத்தினுள் உள்ள யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டால் அது ஆயுள் முழுவதும் உங்களுக்கு மன அழுத்தத்திற்கு காரணமாக அமையலாம்.

    அண்மைய ஆய்வு தகவல்களின்படி போதியளவு தூக்கம் இல்லாமல் வாகனத்தை ஓடுவதனால் மோசமான பல வீதி விபத்துகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    சில மருந்து வகைகள் தூக்கம், சோம்பலை ஏற்படுத்தக்கூடியன. நீங்கள் மருந்துகளை உட்கொள்ள முன்னர் வைத்தியரிடம் அவற்றினால் ஏற்படக்கூடிய விளைவுகளை முழுமையாக கேட்டு அறியுங்கள். தூக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மருந்து எதையாவது உள்ளெடுத்தால் அந்த மருந்தின் தாக்கம் நீங்கும் வரை வாகனம் ஓடுவதை கண்டிப்பாக நிறுத்தி வையுங்கள்.

    தூக்க கலக்கத்தில் வாகனம் ஓடுவது உங்கள் இனிமையான பயணத்தையும் கெடுத்துவிடும் என்பதை மறவாதீர்கள்.

    வாகனம் வீதியில் நகர்கின்ற ஒரு இயந்திரம். அதற்கு தன்னை இயக்குபவர் தூங்குகின்றாரா அல்லது விழித்துள்ளாரா என்று எல்லாம் தெரியாது. தூக்க கலக்கத்தினால் ஒரு சில நொடிகள் உங்கள் கவனம் சிதறுவது உங்கள் வாழ்க்கையையே மோசமான முறையில் தலைகீழாக மாற்றக்கூடும்.

    ஆக்கம்: போக்குவரத்து
    http://cardriving.ca
  11. போக்குவரத்து
    பின்வரும் விடயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்:

    அமைப்பு-

    1-இங்கு நிர்ணயிக்கப்பட்ட வேகம் பொதுவாக 80கிலோமீற்றர்/மணி.
    2-இவை கரடுமுரடாக அழுத்தம் இல்லாமல் காணப்படும் (unpaved roads).
    3-ஏறுகின்ற குன்று பாதைகளாகவோ இறங்குகின்ற பள்ள பாதைகளாகவோ காணப்படலாம்.
    4-சேற்று, சகதி நிறைந்த பாதையாக காணப்படலாம் (Muddy).
    5-சரளைக்கற்களால் ஏற்படுத்தப்பட்ட மட்டமற்ற பாதையாக காணப்படும் (Gravel).
    6-மிகவும் ஒடுங்கிய பாதையாக காணப்படலாம்.
    7-பொதுவாக நடுவில் பிரிக்கப்படாத ஒழுங்கைகளாகவும், இருவழி பாதையாகவும் அமையும்.
    8-வீதி நடுவில் மஞ்சள் கோட்டினால் கீறப்பட்டு காணப்படும். வீதி நடுவில் உள்ள கோடு முறிந்த கோடாகவோ அல்லது முறியாத கோடாகவோ காணப்படும். (முறியாத கோடு என்றால் மற்றைய ஒழுங்கையினுள் மாற்றம் - lane change செய்ய முடியாது)
    9-Down hill ஒரு பக்கம் முறிந்த கோடாகவும், Up hill மறுபக்கம் முறியாத கோடாகவும் அமையும்.

    குறிப்புக்கள்-

    1-மிக மெதுவாக செல்லும் வாகனங்கள் இங்கு பயணிக்ககூடும்.
    2-முன்னால் செல்லும் வாகனத்தை முந்தி செல்ல முயற்சிக்கும்போது தரை மட்டத்தின் ஏற்ற தாழ்வுகளையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
    3-புகையிரத கடவை உள்ள இடங்களில் மிகுந்த அவதானம் அவசியம்.
    4-நாட்டுபுற பாதைகளில் அதிகளவு விபத்துக்கள் ஏற்படுவது வழமை.
    5-இங்கு காவல்துறையினரின் கண்காணிப்பு மிக அரிதாகவே காணப்படும்.
    6-வாகன சாரதிகள் இங்கு முறைகேடாகவும், மோசமாகவும் வாகனங்களை ஓடக்கூடும்.
    7-விலங்குகளின் எச்சரிக்கை குறியீடுகளை அவதானித்து ஓடுங்கள். இரவு நேரங்களில் உங்கள் வாகனத்தின் முன்விளக்குகளை நோக்கி கவரப்பட்டு விலங்குகள் வரக்கூடும்.
    8-விலங்குகளுடன் மோதி விபத்து ஏற்படுவது மிகவும் ஆபத்தானது. இதனால் உங்களுக்கும் உங்கள் வாகனத்திற்கும் பாரதூரமான சேதங்கள் ஏற்படலாம்.
    9-அதிகளவு பார ஊர்திகள் விவசாய போக்குவரத்து தேவைகளை நிறைவேற்றுவதற்காக நாட்டு புற சாலைகளை அதிகளவில் பயன்படுத்துகின்றன.
    10-இங்கு அதிகளவில் ஏற்படும் வாகன விபத்துக்கள் ஒன்றுடன் ஒன்று எதிரும் புதிருமாக நேரடியாக மோதி ஏற்படுகின்றன (Head On Collision).

    பாதுகாப்பு எச்சரிக்கைகள்-

    1-மிகுந்த அவதானத்துடன் வாகனத்தை ஓட்டுங்கள்.
    2-முன்னால் செல்லும் வாகனத்திற்கு பின்னால் அதிகளவு இடைவெளி விட்டு ஓடுங்கள்.
    3-வீதி சரியாய் வழுக்குவதாகவும், சகதியாகவும் காணப்படலாம். எனவே அவதானம் தேவை.
    4-மழை காலங்களில், பனிகொட்டும் காலங்களில் மற்றும் மோசமான காலநிலை உள்ள வேளைகளில் வீதிநிலமை அதிக ஆபத்தானதாக காணப்படலாம்.
    5-ஓடும்போது ஸ்ரியரிங்கை சற்று அழுத்தமாக இறுக்கிப் பிடியுங்கள். வழமையாக ஓடும் உள்ளூர் வீதிகளில் ஸ்ரியரிங்கை மென்மையாக பிடிப்பது போன்று பிடிக்காதீர்கள்.
    6-அளவில் பெரிதான கிடங்குகள், குழிகள் உள்ள இடங்களில் (pothloes) சுற்றி ஓடாதீர்கள். அவற்றுக்கு கிட்டவாக செல்வதை முற்றாக தவிர்த்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் ஸ்ரியரிங்க் கைவழுக்கி கிடங்கினுள் வாகனம் மாட்டக்கூடும்.



    ஆக்கம்: போக்குவரத்து
    http://cardriving.ca
  12. போக்குவரத்து
    Toronto மாநகரில் பாதசாரிகள் பயன்படுத்துவதற்கு மிக ஆபத்தான சந்திகள் எவை என்று உங்களுக்கு தெரியுமா?

    Toroonto இல் ஏறத்தாள 1,337 சந்திகள் உள்ளதாகவும், அவை ஒவ்வொன்றையும் தினமும் ஏறக்குறைய 500 பாதசாரிகள் பயன்படுத்துவதாகவும் சொல்லப்படுகின்றது. கடந்த பத்து வருடங்களில் பாதசாரிகள் சம்மந்தப்பட்ட விபத்துக்களின் புள்ளிவிபர தகவல் அடிப்படையில்

    Toronto மாநகரில் மோசமான பத்து சந்திகள்:
    Markham Road & Tuxedo Court
    Albion Road & Finch Ave. W.
    Milliken Blvd. & Finch Ave. E.
    Neilson Rd. & Mclevin Ave.
    Alton Towers & McCowan Rd.
    Finch Ave. W. & Tobermory Dr.
    McCowan Rd & Eglinton Ave. E.
    Don Mills Rd. & Gateway Blvd.
    Finch Ave. E. & Sandhurst Circle
    Finch Ave. E. & Bridletowne Circle

    மேலுள்ள பத்து சந்திகளில் Markham Road & Tuxedo Court சந்தியே முதல் இடத்தை பெற்றுள்ளது. தினமும் ஏறக்குறைய 700 பாதசாரிகள் இந்த சந்தியை பயன்படுத்துவதாகவும், வருடத்திற்கு இரண்டு பாதசாரிகள் இந்த சந்தியில் மோசமான விபத்துக்கு உள்ளாவதாகவும் புள்ளிவிபர தகவல் சொல்கின்றது.

    விரிவான தகவல்களை அறிய: கனடா குளோபல் செய்திகள்
    வழங்கல்: போக்குவரத்து
    http://cardriving.ca
  13. போக்குவரத்து
    ஒழுங்கை மாற்றம் போக்குவரத்து நிலவரம், சூழ்நிலைக்கு ஏற்ப தேவைப்படுகின்றது. வாகனம் ஓடும்போது ஒழுங்கை மாற்றம் அடிக்கடி செய்ய வேண்டி ஏற்படலாம் அல்லது 20 நிமிடம் அளவிற்கு கூட அது தேவைப்படாதும் போகலாம். வலது பக்கமாக உள்ள ஒழுங்கையில் இயலுமான வரை ஓடவேண்டும் என்பதே பொதுவான போக்குவரத்து விதியாகும் (வட அமெரிக்கா).

    எப்போது ஒழுங்கை மாற்றம் செய்ய வேண்டும்?

    1-உங்கள் பார்வை முன்னால் செல்கின்ற பெரிய வாகனங்கள் மூலம் (பார ஊர்தி, பேருந்து) தடைப்படுமாயின்
    2-உங்களுக்கு முன்னால் செல்லும் வாகனம் காரணம் இல்லாமல் மெதுவாக செல்லுமாயின்
    3-நீங்கள் ஓடுகின்ற வலது அல்லது இடது ஒழுங்கை முடிவடையப் போகுமாயின்
    4-நீங்கள் ஓடுகின்ற ஒழுங்கையில் வீதி திருத்த வேலைகள் நடைபெறுமாயின்
    5-நீங்கள் சந்தியில் வலது அல்லது இடது பக்கத்திற்கு திரும்ப வேண்டி ஏற்படுமாயின்
    6-போக்குவரத்து அதிகாரி அல்லது காவல்துறையினரால் கட்டளையிடப்படுமாயின்
    7-pavement markings மூலம் அறிவுறுத்தப்படுமாயின்
    8-Emergency வாகனங்கள் வருமாயின்
    9-ஒரு சந்தியில் இடது புறமாக திருப்பத்தை மேற்கொண்ட பின்னர்
    10-ஒரு வாகனம் மூலம் நீங்கள் அருகாக பின் தொடரப்பட்டால் (being Tailgated) (வீதிக்கு நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை முதலில் கணக்கில் எடுங்கள்).

    எப்போது ஒழுங்கை மாற்றம் செய்ய கூடாது?

    1-காரணம் இல்லாமல், பாதுகாப்பு இல்லாமல் மற்றைய வாகனங்களை முந்தி செல்வதற்காக ஒழுங்கை மாற்றத்தை மேற்கொள்ளாதீர்கள்.
    2-Snowplowவாகனத்தை ஒருபோதும் முந்தக்கூடாது.
    3-பாதசாரிகள் கடவைக்கு (pedestrian crossing) 30மீற்றர் தூரத்திற்கு அருகாக (within) ஒழுங்கை மாற்றம் செய்ய கூடாது.
    4-சந்திகளில் ஒழுங்கை மாற்றம் செய்ய கூடாது. புகையிரத கடவைகளுக்கு அருகாக ஒழுங்கை மாற்றம் செய்ய கூடாது.
    5-முன்னால்/பின்னால் தெளிவாக பார்க்க முடியாதவாறு உங்கள் பார்வை (visibility) தடைப்படுமாயின் ஒழுங்கை மாற்றம் செய்ய கூடாது.
    6-உங்கள் blind spot இல் ஏதாவது வாகனம் நிற்குமாயின் ஒழுங்கை மாற்றம் செய்ய கூடாது.
    7-அருகாக அல்லது பின்னால் வரும் வாகனம் நீங்கள் செல்ல விரும்பும் அதே ஒழுங்கையினுள் ஒழுங்கை மாற்றம் செய்து வர முயற்சிக்குமாயின் நீங்கள் ஒழுங்கை மாற்றம் செய்ய கூடாது.
    8-குறுகிய பாலம், சுரங்கப்பாதை உள்ள இடத்தில் ஒழுங்கை மாற்றம் செய்ய கூடாது.
    9-வீதியில் ஒழுங்கை மாற்றம் செய்ய கூடாது என Sign ஏதாவது போடப்பட்டு இருந்தால் ஒழுங்கை மாற்றம் செய்ய கூடாது.
    10-உங்களுக்கு முன்னால் உள்ள வாகனம் நிறுத்தப்பட்டு இருக்குமாயின் போக்குவரத்து, நிலவரத்தின் அடிப்படையில் பாதுகாப்பாக ஒழுங்கை மாற்றம் செய்ய வேண்டிய தேவை இருப்பின் மட்டும் ஒழுங்கை மாற்றம் செய்யலாம்.
    11-pavement markings ஐ (வீதியில் கீறப்பட்டுள்ள அடையாளங்களை) கவனியுங்கள். solid line (முறிவு இல்லாத கோடு) ஒழுங்கை மாற்றம் செய்யகூடாது என்பதை அறிவுறுத்துகின்றது.

    எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் Common Sense ஐ பாவியுங்கள், அத்துடன் பாதுகாப்பிற்கு (safety) முக்கியத்துவம் கொடுங்கள்.



    ஆக்கம் : போக்குவரத்து
    http://CarDriving.CA
  14. போக்குவரத்து
    மின்னணு உறுதி கட்டுப்பாடு (Electronic stability control) என்பது

    நீங்கள் வாகனம் ஓடும்போது இந்த பொறிமுறை பாவனையில் இருக்குமாயின் ஸ்ரியரிங்க் மூலம் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாத தருணங்களில் வாகனம் உங்களின் கட்டுபாட்டினுள் வருவதற்கு ஏற்ற முறையில் தானாகவே உங்கள் வாகனத்தின் நான்கு சில்லுகளினதும் பிரேக்குகள் தனித்தனியாக தேவையான அளவு பிடிக்கப்படும். அத்துடன் தேவைக்கு தகுந்த படி எஞ்சினின் சக்தியும் கட்டுப்படுத்தப்படும்.

    சுருக்கமாக இது...

    1-வாகனம் வழுக்கி (skids) செல்லும் போது அதை கட்டுப்படுத்துவதற்கான ஒரு பொறிமுறை.
    2-குறிப்பிட்ட சில வாகனங்களிலேயே இந்த தொழில்நுட்பம் உள்ளது.
    3-Anti-lock braking system (ABS)உடன் இணைந்து பிரயோகம் செய்யப்படும் தொழில்நுட்பம்.
    4-வீதியில் ஓடுகின்ற எல்லா வாகனங்களிலும் இந்த பொறிமுறை காணப்படுமாயின் வருடத்திற்கு ஏறக்குறைய 10,000 உயிர்களை காப்பாற்றவும், 600,000 வாகன விபத்துக்களை தவிர்க்கவும் முடியும் என்று சொல்லப்படுகின்றது.
    5-இந்த தொழில்நுட்பம் உங்கள் வாகனத்தில் காணப்பட்டால் விபத்தை 50%இனால் குறைக்க முடியும் என்று கருதப்படுகின்றது.

    சில தவிர, எல்லா வாகனங்களிற்கும் இந்த பொறிமுறை இல்லை. வெவ்வேறு வாகன தயாரிப்பாளர்கள், வெவ்வேறு வாகன வடிவமைப்புக்களிற்கு ஏற்ப இந்த பொறிமுறையில் ஒன்றுக்கு ஒன்று சிறிதளவு மாற்றங்கள் காணப்படும்.

    ஆக்கம் : போக்குவரத்து
    http://CarDriving.CA
  15. போக்குவரத்து
    வீதியை கடக்கும் போது கவனிக்க வேண்டிய சில முக்கிய விசயங்கள் :



    1-பாதசாரிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள கடவையை ( pedestrians cross ) பாவியுங்கள்.

    2-பாதசாரிகளுக்கான சிக்னலை ( Pedestrian signals ) பாவியுங்கள். நீங்கள் கடப்பதற்கான சிக்னல் தோன்றுவதற்கு அதில் உள்ள பொத்தானை ( pedestrian push buttons ) அழுத்துங்கள்.



    3-நீங்கள் வீதியை குறுக்காக கடக்கும் போது மற்றைய ஒழுங்கையின் ஊடாக இடது, வலது புறமாக திரும்புகின்ற வாகனங்கள் உங்களை நோக்கி வரக்கூடும். அந்த வாகனத்தின் சாரதிகள் நீங்கள் வீதியை கடப்பதை அவதானிக்கலாம், அவதானிக்காமலும் விடலாம். எனவே, நீங்கள் வீதியின் குறுக்காக நடக்கும் போது இடது, வலது புறமாக திரும்பும் வாகனங்கள் உங்களை கவனித்துள்ளதை உறுதி செய்யுங்கள்.

    4-வீதியை கடப்பதற்கு உங்களுக்கு உரிய சிக்னல் காட்டப்படும் போது இடது, வலது புறமாக திரும்பும் வாகனங்கள் உங்களை நோக்கி தொடர்ந்து வந்தால் அவதானமாக செயற்படுங்கள்.

    5-நீங்கள் வீதியை கடக்கும் போது இடது, வலது புறமாக அல்லது நேராக வரும் வாகனங்கள் ஏதாவது அவதானம் இல்லாமல் செயற்பட்டால், சட்ட விரோதமாக ஓடினால் அவற்றின் இலக்க தகடினை ( Plate number ) குறித்து வையுங்கள். தேவை ஏற்படின் காவல் துறைக்கு அந்த இலக்கத்தை அறிவியுங்கள் (சம்பவம் நடந்த இடம், நேரம், வாகனத்தின் நிறம், model, சாரதியின் தோற்றம் இவற்றையும் குறித்து வைக்க வேண்டும், அருகில் யாராவது சாட்சி/witness கிடைத்தால் அவர்கள் விபரமும்)

    6-நீங்கள் வீதியை பாதுகாப்பாக கடப்பதற்கான சிக்னல் காட்டப்படும் போது குறிப்பிட்ட ஒரு வாகனம் உங்களை நோக்கி தொடர்ந்து வரும் என சந்தேகம் தோன்றினால் அந்த வாகனத்தின் சாரதியுடன் eye contact செய்வது முக்கியம், அத்துடன் நீங்கள் வீதியை கடக்கும் வரை நகராது நிற்குமாறு கைகளை உயர்த்தி காட்டலாம்.

    7-ஒரு போதும் வாகனத்தின் சாரதிகளுடன் வீதியை கடக்கும் போது வாய் தகராற்றில் ஈடுபடாதீர்கள். ஏதாவது வாகனம் சட்ட விரோதமாக ஓடி உங்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினால் குறிப்பிட்ட வாகனத்தின் இலக்க தகடினை ( Plate number ) குறித்து வைத்து அதை காவல் துறைக்கு அறிவியுங்கள்.

    8-அளவில் பெரிய ஊர்திகள் ( உ+ம் Truck ) உங்கள் அருகாக நிற்கும் போது அல்லது திரும்பும் போது மிக அவதானமாக செயற்படுங்கள்.

    9-பாதசாரிகளுக்கான சிக்னல் காட்டப்படும் போது தனியாக இல்லாமல் ஏனைய பாதசாரிகளுடன் குழுவாக வீதியை கடக்க நேர்ந்தால் நெரிசல் மூலம் உங்களுக்கு பாதிப்பு ஏதும் வராத வகையில் பார்த்து கொள்ளுங்கள்.

    10-வயோதிபர்கள், குழந்தைகளை உங்களுடன் அழைத்து கொண்டு வீதியை கடக்கும் போது மேலதிக அவதானத்துடன் செயற்படுவது அவசியம். குழந்தைகள் பாதுகாப்பு இல்லாமல் ஓடாதபடி பார்த்து கொள்ளுங்கள். பாதசாரிகளுக்கான சிக்னனில் போதிய கால அவகாசம் காட்டப்படும் போது மட்டுமே கடவுங்கள்.

    11-மிகவும் அகன்ற பல அடுக்கு ஒழுங்கைகள் ஊடாக கடக்கும் போது விரைவாக நடக்காவிட்டால் வீதியை முழுவதுமாக கடக்க நேர அவகாசம் போதாமல் வரலாம்.

    12-ஏற்றங்கள், இறக்கங்கள், வளைவுகள் உள்ள வீதிகளை கடக்கும் போது மேலதிக அவதானத்துடன் செயற்படுவது அவசியம்.

    சிக்னல் இல்லாத சந்தியாக காணப்பட்டால் ( ) வாகனங்களின் சாரதிகள் நீங்கள் கடப்பதை கண்டுள்ளதை ( eye contact with the driver ) உறுதிப்படுத்துவது உங்களுக்கு பாதுகாப்பானது.

    படங்கள் ( MTO web )

    ஆக்கம் : போக்குவரத்து
    http://CarDriving.Ca
  16. போக்குவரத்து
    1-இது கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் நடைமுறையில் உள்ள போக்குவரத்து சம்மந்தமான யாப்பு அமைப்பு ஆகும்.

    2-இதில் ஒன்றாரியோவில் மாகாண ரீதியாக எல்லா வகையான தெருக்களிலும் ஓடப்படும் எல்லா வகையான வாகனங்களின் பாவனையும் உள்ளடக்கப்படுகின்றது: கார், trucks, motorcycle, off-road vehicles, farm equipment, construction equipment, பேருந்து, motor home vehicles, and non-motorized bikes.

    3-வாகனங்களை பதிவு செய்தல்/ சாரதி அனுமதி பத்திரம் வழங்குதல், போக்குவரத்து குற்றச் செயல்களை வகைப்படுத்துதல், நிர்வாக நடைமுறைகள், வாகனங்களை வகைப்படுத்துதல், இதர போக்குவரத்து சம்மந்தமான விடயங்கள் இதில் அடங்குகின்றன.

    4-முதன் முதலாக 1923ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு அதன் பின்னர் காலத்திற்கு காலம் மாற்றங்கள் பெற்று வருகின்றது.

    5-வாகனங்கள் ஓடும்போது செய்யவேண்டிய, செய்யக்கூடாத பல்வேறு விடயங்களை, அறிவுறுத்தல்களை இந்த யாப்பு அமைப்பு வழங்குகின்றது.

    6-காவல்துறையினர் உங்களுக்கு ரிக்கட் தரும்போது/குற்றம் சாட்டும்போது இந்த யாப்பு அமைப்பின் அறிவுறுத்தல்களிற்கு இணங்கவே/ வழிகாட்டலின் அடிப்படையிலேயே செயற்படுகின்றார்கள்.

    ஒரு உதாரணம்:

    HTAஇல் EQUIPMENT சம்மந்தமான பகுதி 6: சரத்து 61. (1)இல் வாகனத்தின் விளக்குகள் சம்மந்தமாக இவ்வாறு வரைவிலக்கணம் கூறப்படுகின்றது:

    Lamps required on all motor vehicles except motorcycles

    When on a highway at any time from one-half hour before sunset to one-half hour after sunrise and at any other time when, due to insufficient light or unfavourable atmospheric conditions, persons and vehicles on the highway are not clearly discernible at a distance of 150 metres or less, every motor vehicle other than a motorcycle shall carry three lighted lamps in a conspicuous position, one on each side of the front of the vehicle which shall display a white or amber light only, and one on the rear of the vehicle which shall display a red light only. R.S.O. 1990, c. H.8, s. 62 (1).

    ஆக்கம்: போக்குவரத்து
    http://cardriving.ca
  17. போக்குவரத்து
    வீடியோ: Toronto Police

    சாரதி வாகனத்தை ஓடும்போது கைதொலைபேசியை பாவித்தல் சட்டவிரோதமானது. அபராதம் : $125, மூன்று வருடங்கள் குற்றச்செயல் பதிவில் இருக்கும், காப்புறுதி நிறுவனத்தினரும் இது பற்றி அறியலாம்.

    விதிவிலக்கு:

    1-கைதொலைபேசி Hands Free (புளூதூத், ஹெட்போன்) என்றால் பாவிக்கலாம்.
    2-911 ஐ அழைப்பதற்கு சாரதி வாகனம் ஓடும்போது கைதொலைபேசியை பாவிக்கலாம்
    3-வீதி ஓரமாக (ஹைவே அல்லாத தெருக்கள் மட்டும்) வாகனத்தை நிறுத்திவிட்டு கைதொலைபேசியை பாவிக்கலாம்.

    கைதொலைபேசி பானையால் ஏற்படும் விபத்துக்களில் அதிகமானவை வாகனத்தின் பின்பக்கத்தில் (Rear-end collision) ஏற்படும் விபத்துக்கள் என்று சொல்லப்படுகின்றது.

    http://CarDriving.Ca
  18. போக்குவரத்து
    1-முழுமையான நிறுத்தம் செய்யவேண்டிய இடத்தில் (Stop Sign) வாகனத்தை முழுமையாக நிறுத்தம் செய்யவில்லை.
    2-மற்றைய வாகனத்திற்கு முன்னுரிமை Right-of-Way கொடுக்கவில்லை.
    3-சற்று பெரிய அளவிலான வாகனம் (15பேரை காவிச்செல்லக்கூடிய van) ஓடுவதற்கு கனடாவில் முறையாக சாரதி அனுமதிப்பத்திரம் பெற்று இருக்கவில்லை.

    விளைவு?

    பதினொரு பேர் நேற்று முன்தினம் தென்மேற்கு Ontarioஇல் பரிதாபகரமாக மரணம் அடைந்தார்கள். மூவர் படுகாயம் அடைந்துள்ளார்கள்.

    மரணம் அடைந்தவர்களில் பெரும்பாலானோர் தென் அமெரிக்காவை சேர்ந்தவர்கள். அதில் சிலர் மிக அண்மையிலேயே கனடாவுக்கு வந்தார்கள். சரியான முறையில் வாகனம் ஓட்டிய மோதுப்பட்ட மற்றைய வாகனமான பார ஊர்தியின் சாரதி தனது பதினொராவது வருட திருமண நினைவுநாள் அன்று உயிர் இழந்துள்ளார்.

    மேலுள்ள விடயங்களுடன் மோதிய குறிப்பிட்ட வகை பயணிகள் வாகனம் இலகுவில் குடைசாயக்கூடியது என்பதால் அமெரிக்காவிலும், கனடாவின் சில மாகாணங்களிலும் தடை செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

    விபத்தின் தாக்கம் காரணமாக (impact) மோதுப்பட்ட பயணிகள் வாகனம் நாற்பது மீற்றர் தூரத்திற்கு இழுத்து எறியப்பட்டு நொருங்கியதாக சொல்லப்படுகின்றது.

    முறையாக கற்று சாரதி அனுமதி பத்திரத்தை பெற்று வாகனத்தை அவதானத்துடன் ஓடுவது உங்கள் உயிரை மட்டும் அல்ல மற்றவர்களினதும் உயிரையும் பாதுகாக்கும் என்பதை நினைவில் வையுங்கள்.

    ஆக்கம் : போக்குவரத்து
    தகவல் : கனடா செய்திகள்
    http://CarDriving.Ca
  19. போக்குவரத்து
    1-ஹைவேயை நோக்கிய வளைவினுள் நுழையும் போது வளைவுக்குரிய அதன் வேகத்தை பார்த்து ஓடுங்கள்.
    2-ஆர்முடுகும் ஒழுங்கையின் (acceleration lane) நீளத்தை (length of the lane) கவனியுங்கள்.
    3-நுழைய வேண்டிய ஒழுங்கையினுள் போதுமான அளவு இடைவெளியை (adequate gap) பாருங்கள்.
    4-எந்த இடைவெளியினுள் (இரண்டு வாகனங்களுக்கு இடையிலான) நீங்கள் நுழைய போகின்றீர்கள் என்பதை தீர்மானியுங்கள்.
    5-நேரே பாருங்கள், கண்ணாடியை பாருங்கள், நுழையும் பக்கத்திற்குரிய சிக்னலை போடுங்கள், blind spotஐ பாருங்கள், குறிப்பிட்ட இடைவெளியினுள் பாதுகாப்பாக நுழைந்து ஹைவே போக்குவரத்துடன் இணையுங்கள்.
    6-ஹைவேயின் ஆர்முடுகும் ஒழுங்கையில் காரணம் இல்லாமல் வேகத்தை குறைக்காதீர்கள்.
    7-ஹைவேயுக்கு நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் (பொதுவாக 100km/h) வாகனத்தை ஓடுங்கள்.

    ஆக்கம்: போக்குவரத்து
    http://CarDriving.CA
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.