Jump to content

மெசொபொத்தேமியா சுமேரியர்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8471
  • Joined

  • Days Won

    41

Everything posted by மெசொபொத்தேமியா சுமேரியர்

  1. அவர்கள் யாரும் யாழுக்கு வந்து நான் எழுதுவதைப் பார்க்கமாட்டார்கள் என்ற துணிவுதான் அக்கா. லண்டனில் 68 இல் தான் பென்ஷன். வீட்டுக்காரர் பென்ஷன் எடுத்த பிறகு போய் என்ன பயன். இன்னும் ஆறு ஆண்டுகள் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. போதும் என்ற மனம் வந்துவிட்டபடியாலும் பிள்ளைகள் படித்து முடித்து வேலை பார்ப்பதாலும் அவர்களுடனேயே இருக்கவேண்டும் என்பதில்லையே அக்கா. ஆறு மாதங்கள் தான் தொடந்து அங்கு இருக்கலாம். எனவே ஆறுமாததுக்கு ஒருதடவை வந்து வந்து போகவேண்டியதுதான். அதெப்படி ???😀
  2. உண்மைதான் பலரிடம் உண்மைத்தன்மை இல்லை. எமக்கு ஒன்றும் தெரியாது என்று நினைப்பதுதான் கொடுமை. அது இனிவரும் 😀 எழுதுறன் அதுபற்றியும் 😀😀
  3. ஆட்களை மட்டுமல்ல வீட்டு விலையைக் கூட்டுவதும் அவர்கள்தான். நன்றி அதே பெரிய வேலை. இங்கும் கணவரின் காணிக்கு அதுவும் நடந்தது. அதை வாங்கிவிட்டுப் படுற பாடு இருக்கே எழுதினபிறகு சொல்லுறியள் 😀
  4. பதினாறு அடுத்தநாளே பழைய காணித் தரகர் போன் செய்கிறார். தம்பி எங்களுக்குக் காணி ஒன்றும் வேண்டாம். இனிமேல் காணி பார்க்கக் கூப்பிடவேண்டாம் என்கிறேன். இல்லை அக்கா. இந்தக் காணியைப் பார்த்தால் உங்களுக்கும் அண்ணருக்கும் கட்டாயம் பிடிக்கும். உங்களுக்குப் பிடிக்காட்டில் இதோட நான் கேட்க மாட்டன் என்கிறார். சரி அதையும் ஒருக்காப் பார்த்திடுவம் என்று நானும் கணவரும் மகளும் செல்ல பின்னாலேயே தங்கையின் கணவரும் வருகிறார். இணுவிலில் இருந்து இருபது நிமிடம் ஓட்டோவில் செல்ல தரகர் எமக்காகப் பார்த்துக்கொண்டு நிற்கிறார். கேற்றைத் திறந்துகொண்டு உள்ளே சென்றால் பெரிய வளவு. தென்னை மரங்கள், மாமரங்கள், பாலாமரங்கள், வாழைத்தோட்டம் என நான் எதிர்பார்த்தவாறு காணி இருக்க நட்டநடுவே ட வடிவில் பழைய வீடு ஒன்றும் இருக்க எம் எல்லோருக்கும் பிடித்துவிடுகிறது. தங்கையின் கணவரிடம் எம் விருப்பத்தைக் கூற, நீங்கள் வாயத் திறக்கவேண்டா ம். நானே கதைத்துக்கொள்கிறேன் என்கிறார். வீட்டினுள்ளே சென்று பார்த்தால் அறைகள் நான்குமீற்றர் உயரத்துடன் இருக்கின்றன. மூன்று அறைகள், குசினி, சுவாமி அறை என்பவற்றுடன் நீளமான வரவேற்பறையும் குசினிக்குச் செல்வதற்கு நீண்ட தாள்வாரமும் இருக்கின்றன. எந்தவிதத் திருத்தவேலைகளும் தேவை இல்லை எனத்தெரிய இதை வாங்குவது என்று தீர்மானித்து 14 பரப்புக்காணியும் வீடும் ஒன்றேகால் கோடி என்கின்றனர். வீடு கட்டவே இப்ப ஒருகோடி முடியும் என்கிறார் இன்னொரு தரகர். எல்லாமாக நான்கு தரகர்கள் ஒவ்வொருத்தராக வந்து சேர, ஏன் இத்தனை தரகர்கள் என்றதற்கு இந்தக் காணி ஒருவர் இன்னொருவருக்குச் சொல்லிக் அவர் மற்றவருக்குச் சொல்லி இப்பிடித்தான் கூட்டி வருவார்கள். அதனால் தான் கனபேர் என்கிறார். ஒரு கிழமையில உங்களால் இங்கு பணத்தை எடுக்க முடியுமா என்று கேட்க ஓம் என்கிறார் கணவர். ஆறுமாதம் அவர்கள் வாடகை இல்லாமல் இந்த வீட்டில் இருப்பதற்குக் கேட்கிறார்கள். என்ன சொல்கிறீர்கள் என்று தரகர் கேட்க அதற்கென்ன இருக்கட்டும். ஆனால் நான் வீட்டுக்குள் வரமாட்டேன். காணியைத் துப்பரவு செய்ய, வேலி அடைக்க ஆட்களைக் கூட்டிக்கொண்டு வருவேன் அதற்குச் சம்மதமா என்று கேளுங்கள் என்றுகூற, ஒரு முப்பத்தைந்து மதிக்கத்தக்க வீட்டின் உரிமையாளர் சம்மதம் என்கிறார். நான் காலை வேலைக்குச் சென்றால் வர இரவாகும். மற்ற இரண்டு பேரும்தான் இருப்பினம். எனக்குப் பிரச்சனை இல்லை என்கிறார். ஒரு கோடிக்கு பேசி முடிக்க தங்கையின் கணவர் நீங்கள் பணம் ஏதும் வைத்திருக்கிறீர்களா? இருந்தால் இன்றே அட்வான்ஸ் குடுக்கலாம் என்கிறார். என்னிடம் இருபதாயிரம் தான் இருக்கு என்கிறேன். அண்ணரிடம் கொடுங்கோ என்றுவிட்டு அவரையும் கூட்டிக்கொண்டு புரோக்கர்மார் நிற்குமிடம் சென்று காணி உரிமையாளரையும் கூப்பிட்டு பணத்தைக் கொடுத்து அடுத்த கிழமையே எழுத்தலாம் என்றுவிட்டு மகிழ்வோடு வீடு திரும்புகிறோம். இரண்டு நாட்களில் கணவரும் மகளும் லண்டனுக்குத் திரும்ப நானே தனிய ஓட்டோவில் சென்று அலுவல்கள் பார்த்து ஒரு வாரத்தில் எழுத்துவேலை எல்லாம் முடிய எனது சித்தியையும் மச்சாளையும் கூட்டிக்கொண்டு இரண்டாம் தடவை வீட்டுக்குச் செல்கிறேன். காணியைப் பார்த்ததும் என் சித்திக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஒரு ஐந்து நிமிடத்தில் வளவைச் சுற்றிப் பார்த்தவர் 44 தென்னை நிக்குது. தேங்காய் நல்ல விலைக்கு விக்கலாம் என்றவுடன் நான் சிரிக்கிறேன். மச்சாளின் முகத்தில் எந்த உணர்வையும் காண முடியவில்லை. இணுவிலில் இருந்து போக வர ஓட்டோவுக்கு 2000 ரூபாய்கள். நான்கு புறமும் வேலிகள் எல்லாம் உயிர்வேலிகள். தென்னைகளில் 14 தென்னைகள் தறிக்கவேணும். உயரமாகி சோடைபோய்விட்டது என்கிறா சித்தி. மச்சாளும் அதை ஆமோதிக்க யாரையாவது பிடித்துவிடுங்கள் என்று அவர்களிடமே கேட்கிறேன். இணுவிலில இருந்து ஆர் இவ்வளவு தூரத்துக்கு வேலை செய்ய வரப்போகின்றனர் என்கின்றனர் இருவரும். நான்கு பக்கமும் மதில் கட்ட எக்கச்சக்கம் முடியப்போகுது என்கிறா சித்தி. பேசாமல் தகர வேலி அடியுங்கோ என்கிறா மச்சாள். கணவரிடம் கேட்க, கனக்கப் பணத்தை வீணாக்காதே என்கிறார். தங்கையின் கணவரைக் கேட்க இங்கிருந்து ஒருத்தரும் வரமாட்டார்கள் அக்கா. நீங்கள் உங்கே அயலட்டையில் விசாரித்துப் பாருங்கள் என்கிறார். தென்னை மரங்கள் வெட்டுவதற்கு யாரிடம் விசாரித்தும் சரியானவர்கள் அகப்படவே இல்லை. என் வளவுக்குப் பின்னால் மூன்று வீடுகள். அவர்களிடம் சென்று விசாரித்தால் எல்லாரும் வேலைக்குப் போறவை. வரீனமோ தெரியாது என்று என் தொலைபேசி இலக்கத்தை வாங்கிக்கொண்டு விட்டதோடு சரி. என் நண்பனின் அம்மாவுடன் கதைத்தபோது தன்னிடம் வேலை செய்யும் இருவர் இருக்கின்றனர். அனுப்பிவிடுகிறேன் என்று கூற நானும் சரி என்கிறேன். அவர்கள் வந்ததும் அவர்களைப் பார்க்க ஒரு நம்பிக்கை வருகிறது. ஒரு தென்னை மரம் வெட்ட நான்காயிரம் என்கின்றனர். அவர்கள் கதைக்கும்போது என் ஓட்டோக் காரரும் நிற்க, துண்டுபோடுவதற்குத்தான் உந்த விலை. இது முழுசாகவே வெட்டி விழுத்தலாம். மூவாயிரம் கேளுங்கள் என்கிறார். அவர்களும் சம்மதிக்க அன்றே பதினாலு தென்னைகளையும் வெட்டி வீழ்த்திவிட காணி பார்க்கமுடியாமல் இருக்கு. மாலை வீடு திரும்பும்போது ஓட்டுனரை எங்கே அகற்றுவது என்று கேட்கிறேன். தேடித்தான் பார்க்கவேணும். சிலவேளை மரங்கள் சிலாகைக்காய் அறுப்பதற்கு எடுப்பாங்கள். ஆனால் நீங்கள் வெட்டிப்போட்டுக் கூப்பிட்டால் உடன வரமாட்டினம். எதுக்கும் உவங்களைக்கொண்டு துண்டுபோட்டு எங்காவது அகத்திவிடுங்கோ என்கிறார். அடுத்தநாள் அவர்கள் எல்லாவற்றையும் துண்டுபோட்டுக்கொண்டு நிற்க இரண்டு மூன்று பேர் வந்து தாம் அந்தக் குற்றிகளை விறகுக்கு எடுக்கலாமா என்கின்றனர். தாராளமாக எடுத்துப் போகலாம் என்கின்றேன். அதில் இருவர் வந்து மூன்றில் இரு பகுதியை பெட்டி பூட்டிய உளவு இயந்திரத்தைக் கொண்டுவந்து எடுத்துச் செல்கின்றனர். மூன்றாவதாய் எடுப்பதாகக் கூறியவர்களை மூன்றுநாட்கள் ஆகியும் காணவில்லை. தொலைபேசியை அடித்தாலும் எடுக்காமல் இருக்க பின்னால் உள்ள வீடுகளில் ஒன்றுக்குச் சென்று உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் தென்னங்குற்றிகள் இருக்கு. தேவை என்றால் சொல்லி விடுங்கள் என்றுசொல்ல தாமே எடுக்கிறோம் என்றும் ஆனால் தமக்கு அதை ஏற்றிவிட ஆட்கள் இல்லை என்கின்றனர். சரி நானே ஆட்களைத் தருகிறேன் என்றுவிட்டு இரு கூலி 6000 கொடுத்து காணிக்குள் வெட்டிய தென்னைமரங்களை எல்லாம் அகற்றியாச்சு.
  5. நீங்கள் விட்டுக் கொடுத்திருக்கலாம் என்கிறியள். 😀 அது எமக்கு நேராகச் சொல்லப்படவில்லை. ஆனால் மகளுக்குச் சொன்னர்களாம். வெளிநாட்டில இருக்கிறியள். இங்க வந்து இருக்கப்போறியளோ. உங்கட அப்பாவுக்குப் பேராசை என்று.😀😂 நாங்கள் அன்ன தண்ணி இல்லாமல் எப்பிடி எழுதமுடியும் ???
  6. பலருக்கும் மனச்சாட்சி என்பதே இல்லை. என் கவனமின்மையை நினைக்கச் சிரிப்பாக இருக்கு. எல்லோரும் சோழவரி என்று சொல்ல நானும் அதுதான் என்று நினைத்துவிட்டேன். படிவத்தில் சரியாகத்தான் எழுதியிருப்பார்கள். அதைக்கூட நான் கவனிக்கவில்லை.
  7. பதினைந்து இரவு கொழும்பு சொய்சா புரத்தில் இருந்து 10 மணிக்கு வெளிக்கிட்ட சொகுசு பஸ் விடிகாலை 4.30 க்கு இணுவிலுக்கு வந்துவிட்டது. ஒருவருக்கு 4500 ரூபாய்கள். நல்ல வசதியான பஸ்தான். ஓட்டுனர் சிங்களத்திலும் தமிழிலும் மாறிமாறிக் கதைக்க அவர் சிங்களவரா தமிழரா என்றுகூட மட்டுக்கட்ட முடியவில்லை. அடுத்தநாள் எல்லோரும் வரவேற்பறையில் இருந்து கதைத்துக்கொண்டிருக்க காணிகள் பார்த்த கதையும் வருகிறது. வேறு காணிகள் பார்க்கவில்லையோ என்கிறா மச்சாள். பார்த்துப் பார்த்து களைத்துவிட்டது. மிஞ்சிப்போனால் உதயனின் காணி இருக்குத்தானே. அதற்குள் ஒரு சிறிய வீட்டைக் கட்டிக்கொண்டாவது இருக்கலாம் தானே என்கிறேன். உடனே கணவரின் தங்கை மகள் “தோட்டக் காணிக்குள் எப்பிடி நீங்கள் வீடு கட்ட முடியும்? நாங்கள் விடவே மாட்டோம்” என்கிறா. கணவர் இதைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போய் நிற்க எனக்குக் கோபம் வருகிறது. “எம்மை வீடு கட்ட வேண்டாம் என்று எப்படி நீங்கள் சொல்ல முடியும். உங்கள் அம்மா சொன்னாக்கூடப் பரவாயில்லை” என்கிறேன். “ ஏன் அவள் இந்த வீட்டுப் பிள்ளை தானே. அவளுக்குக் கதைப்பதற்கு எல்லா உரிமையும் இருக்கு” என்கிறா. இருக்கட்டும். எனக்குச் சொந்தமான காணியில் நான் எதுவும் செய்ய முடியும் என்கிறார் கணவர். இல்லை அண்ணா சுற்றிவர மற்றவர்கள் தோட்டம் செய்யும் போது அவர்கள் ஓம் என்று சொல்லாமல் நீங்கள் எதுவும் செய்ய முடியாது என்கிறா தங்கை. அப்படியும் இருக்குமோ என்று நான் எண்ணிவிட்டுப் பேசாமல் இருக்க, அப்ப நீயே இந்தக் காணியையும் எடுத்துக்கொண்டு காசைத் தா என்கிறார் கணவர். உடனே அவ்வளவு பணம் என்னிடம் இல்லை. ஒரு இரண்டு ஆண்டுகள் செல்ல வாங்குவதைப்பற்றி யோசிக்கிறேன். அதுவும் நான் தான் விலையைச் சொல்வேனே தவிர நீங்கள் சொல்லும் விலைக்கு நான் வாங்கமாட்டேன் என்கிறா. எம்மை விட அவர்களிடம் பணம் இருப்பது ஊருக்கே தெரிந்த விடயம். என் மகள் என்னை நிமிர்ந்து பார்த்து ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு இருக்கிறாள். இத்தனை நேரம் சும்மா பார்த்துக்கொண்டிருந்த தங்கையின் கணவர் சரிசரி தேவையில்லாமல் உந்தக் கதையள் எதுக்கு நிப்பாட்டுங்கோ என்று கூறிய பின் யாரும் எதுவும் பேசாது எழுந்து செல்கிறோம். எனக்கு மனதுள்ளே கனன்றுகொண்டிருக்கிறது. கணவர் இதை எதிர்பார்க்கவே இல்லை என்பது அவர் என்னிடம் ஆதங்கத்தில் மீண்டும் மீண்டும் புலம்பியதில் இருந்து புரிய, என் தங்கையின் கணவருக்கு போன் செய்து உங்களுக்குத் தெரிந்த லோயர் யாராவது இருந்தால் கூறுங்கள் என்கிறேன். தனக்கு நன்கு தெரிந்தவர் மணிவண்ணன். நான் சொல்லி விடுகிறேன். போய்ப் பாருங்கள் என்கிறார். அடுத்தநாள் காலையே செல்வோம் என எண்ணிப் போன் செய்தால் மாலைதான் தாம் திறப்பதாக கூற மாலை 5.30 இக்குப் போய் காவலிருக்கிறோம். திறந்தவுடன் இன்னொரு ஆணும் ஒரு பெண் வக்கீலும் இருக்கின்றனர். மணிவண்ணன் வர ஏழரை ஆகும் என்கிறார். எனக்கு ஒருவிதமான கூச்சமாகவும் இருக்கு. அந்தப் பெண் வக்கீலிடம் விபரம் கேட்க, உங்கள் பெயரில் காணி இருந்தால் நீங்கள் என்னவும் செய்யலாம். யாருக்கும் விற்கலாம். என்கிறா. கணவரின் முகத்தில் விளக்கெரிகிறது. ஆனாலும் காணி உங்கள் பெயரில் இருந்தாலும் அவர்கள் சோழவரியை இருபது ஆண்டுகளுக்குமேல் கட்டியிருந்தால் அவர்களுக்குக் காணி சொந்தமாவதற்குரிய சட்டங்கள் இந்த நாட்டில் இருக்கு. எனவே உங்கள் பெயரில் சோழவரி கட்டுவதற்குரிய ஏற்பாட்டைப் பாருங்கள் என்கிறார். அடுத்தநாளே பிரதேச சபைக்குச் சென்று கணவரின் பெயரில் சோழவரியை மாற்றுவதற்குரிய படிவத்தைக் கேட்டால் படிவம் 300 ரூபாய்கள். அத்துடன் அந்த நிலத்துக்குரிய திட்டம் மற்றும் தாய் உறுதி, காணி உறுதி என்பன கட்டாயம் வேண்டும் என்கின்றனர். ஏற்கனவே காணிக்குத் திட்ட வரைபு இருக்கிறதா என்று கேட்க கணவர் தெரியாது என்கிறார். தங்கையிடம் தான் கேட்கவேண்டும். கணவனோ நீயே கேள் என்கிறார். எனக்கோ சங்கடமாக இருக்கு. ஆனாலும் என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டு இருக்க, என் நல்ல நேரம் வீட்டுக்குச் சோழவரி கட்டும் விலைப் பட்டியலை ஒருவர் மணி அடித்துத் தந்துவிட்டுப் போக என்ன உது என்கிறேன் மச்சாளிடம். சோழவரி கட்டவேண்டும். அதுதான் என்கிறா. கடிதம்போடாமல் கொண்டு வந்தா தருவார்கள் என்கிறேன் நம்பாமல். இது வெளிநாடில்லை. இங்க வீடுவீடாக கொண்டுபோய் குடுப்பினம் என்றவுடன் தோட்டத்தின் சோழவரியும் அப்படித்தானோ என்கிறேன். :தோட்டத்தின்ர சோழவரி உங்கள் பெயரிலோ இருக்கு? :இல்லை அம்மாவின் பெயரில் தான் தொடர்ந்து கட்டிக்கொண்டு இருக்கிறம். :இனிமேல் நீங்களே கட்டிக்கொண்டிருக்காமல் உதயனின் பெயருக்கு மாத்தி விடுவம். :அது கன காசு சிலவு மச்சாள். பேசாமல் அம்மாவின் பெயரிலேயே இருக்கட்டும். :என்ன சிலவு ? :பிளான் எல்லாம் கீற வேணும். அதுக்கு கன காசு. போக சேவையர்மார் செய்து முடிக்க நாலைஞ்சு மாசம் செல்லும். அதுக்குள்ள அண்ணா திரும்பப் போயிடுவார் எல்லோ. :காசு பிரச்சனைஇல்லை. அதை நாங்கள் குடுப்பம். ஆரும் இருந்தாச் சொல்லுங்கோ. :எனக்கு ஒருத்தரையும் தெரியாது. :உங்கள் மகனும் கட்டட அளவையாளர்தானே. அவருக்கு கட்டாயம் தெரிஞ்சிருக்கும் தானே. :அவன் போன் செய்யேக்குள்ள கேட்டுப்பாக்கிறன். :தோட்டத்துக்கு சோழவரி கட்டுற துண்டை ஒருக்கா தாங்கோ பார்ப்பம். :தேடித்தான் எடுக்கவேணும். இவர் வந்ததும் கேட்டுப் பார்க்கிறன். :சரி. மச்சாளுக்கு நாம் காணி அளப்பது பிடிக்கவில்லை என்று தெரிந்ததும் உதை உப்பிடியே விடுவம். உங்கள் அம்மாவின் பெயரில் தான் சோழ வரி கட்டுறதாலை எந்தப் பிரச்சனையும் இல்லை என்கிறேன். நீ குழப்பாதை. பிளானைக் கீறி எடுத்தால்தான் உவவுக்கு கொஞ்சம் பயம் வரும் என்கிறார். அடுத்த நாளே என் தங்கையின் கணவர் ஒரு நில அளவையாளரைத் தொடர்புகொண்டு வார இறுதியில் வருவதாகக் கூற தங்கையிடமும் கூற தங்களுக்கு ஒரு சாமத்தியவீடு இருப்பதாகவும் அதனால் தாங்கள் நிற்கமாட்டோம் என்றும் கூற அடுத்த வார இறுதிக்கு அது ஒத்திவைக்கப்படுகிறது. கணவர் இன்னும் ஒரு எட்டு நாட்கள் தான் நிற்பார். அவரில்லாது காணி அளப்பது சரியானதாக இருக்காது என்பதனால் அடுத்த வாரமும் அவர்கள் ஏதும் சாட்டுச் சொல்லி தட்டிக்கழித்தால் என்ன செய்வது என்று யோசனை ஓடுகிறது. நில அளவையாளர் பக்கத்துக் காணிக்காரரின் பெயர்களும் தேவை என்கின்றார். சகோதரியும் கணவரும் தமக்குத் தெரியாது என்கின்றனர். என்ன நீங்கள். இங்கேயே இருக்கிறியள். பக்கத்து காணிக்காரரைத் தெரியாமல் இருக்கிறியளா? என்கிறார் கணவர். நல்ல காலத்துக்கு கணவரின் அண்ணா ஒருவர். அவருக்கு காணிக்காரரின் பெயர்கள் தெரிந்தபடியால் அலைச்சலின்றி பெயரை அளவையாளரிடம் கொடுக்க அவரும் காணி அளப்பதற்கு வருகிறார். எல்லாமாக மூன்றுபேர் வருகின்றனர். இரண்டு மணி நேரத்தின் பின் தங்கையின் எட்டுப் பரப்புப் போக எமக்கு ஐந்து பரப்பு வருகின்றது என்கிறார் அளவையாளர். தங்கையின் கணவருக்கு டென்ஷன் ஏற்பட அதெப்படி வரும். எங்கட காணியில குறைச்சு அளந்திட்டியளோ என்று கோபமாகக் கேட்கிறார். அதற்கு அந்த நில அளவையாளருடன் வந்தவர் “தம்பி நீங்கள் உப்பிடிக்க கதைக்கக் கூடாது. நாங்கள் பத்து ஆண்டுகளாகத் தொழில் செய்கிறம். ஒருவரும் உப்பிடிச் சொன்னதில்லை. முந்தி காணியளை காலாலைதான் அளக்கிறது. கூடக் குறைய வாறது தான் “ என்றவுடன் சயிக்கிளை எடுத்துக்கொண்டு அவர் தன் வீட்டுக்குப் போகிறார். என்னடா இது என்று எமக்குக் குழப்பமாக இருக்க அளவையாளர் சொல்கிறார் கூட இருப்பதை இரண்டாகப் பிரித்துவிடவோ என்று. ஓம் அப்பிடிக்க செய்யுங்கோ பிரச்சனை இல்லை என்று நான் கூற, நீ வாயை மூடிக்கொண்டு இரு. இது என்ர காணி. நானே முடிவை எடுக்கிறன். அஞ்சு நிமிஷம் பொறுங்கோ என்றுவிட்டு பக்கத்தில் இருக்கும் அண்ணாவின் வீட்டுக்குச் செல்கிறார். நானும் மற்றவர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள “இது எனக்குத்தான் கெட்டபெயர். நான் தான் தடுத்திட்டன் என்று தங்கச்சியார் நினைக்கப்போறா, இந்தாள் ஏன் இப்பிடிச் செய்யுது” என்கிறேன். “அவை சகோதரங்கள். கதைச்சு முடிவெடுக்கட்டும் அக்கா. நீங்கள் தலையிடாதேங்கோ” என்கிறார் அளவையாளர். சிறிது நேரத்தில் கணவரும் தமையனும் ஒருபக்கத்தால் வர மறுபக்கம் தங்கையின் கணவரும் வருகிறார். தங்கையின் கணவர் "இவர் குடும்பத்தைப் பார்த்ததுக்கு மாமி நாலேகால் பரப்பு மட்டும்தான் எழுதினவா. ஆனபடியால் மிகுதி எங்களுக்குத்தான் சேரவேண்டும். நான் இரண்டு மூண்டு பேரிட்டை இப்ப விசாரிச்சிட்டுத்தான் வாறன் " என்கிறார். உடனே தமையன் "இல்லை உங்களுக்கு வீடுவளவும் காணியும் சீதனம் தந்தபடியால் சீதனக் காணி தவிர மிகுதி தம்பிக்குத்தான் சேரவேணும். நீங்கள் கதைப்பதற்கு ஒன்றும் இல்லை" என்றவுடன் "எனக்கு இவை அளந்ததில நம்பிக்கை இல்லை. திரும்ப வேறு யாரையும் கொண்டு அளவுங்கோ" என்று கூற சேவையருக்குக் கோபம் வந்துவிட்டது. என் கணவரைப் பார்த்து உங்களுக்கு வேறை யாரையும் கொண்டு அளக்கவேணும் என்றால் அளவுங்கோ என்கிறார். எனக்கு நாலேகால் பரப்பில் கால் பரப்பு குறைந்தால் இவர்கள் எனக்குத் தரவா போகிறார்கள். நீங்கள் அளந்ததில் எனக்கு எந்தக் குறையுமில்லை. நீக்கள் எங்கள் காணிக்குரிய பிளானை கீறி ரெஜிஸ்டர் பண்ணித் தாங்கோ. மச்சான் நீங்கள் வேறு ஒருவரைப் பிடித்து உங்கள் காணி எட்டுப் பரப்பும் இருக்கிறதா என்று பாருங்கள் என்றவுடன் அளவையாளர்கள் எல்லைக் கற்களை நான்குபுறமும் கிண்டித் தாட்டுவிட்டுச் செல்கின்றனர்.
  8. எல்லாம் ஓட்ட முடியாது. காரும் ஸ்கூட்டியும் கட்டாயம் ஓடலாம். இனி எழுதும்போது குறிப்பிடுகிறேன். நன்றி அது நேராக ஓட்டும் மட்டும் ஓகே. திருப்புவது மிகக் கடினம். சிறிது நேரம் ஒட்டிவிட்டு மீண்டும் அவரிடம் கொடுத்ததில் தப்பித்தது.
  9. A1, A,B, G1 இந்த நான்கும்தான் ஓடமுடியும். அதையும் எங்கே என்று சொன்னால் நானும் போய் பார்க்கலாம். நீங்கள் லைசென்ஸ் எடுக்கும்போதும் இதே தொகைதான் அறவிட்டார்களா ?? எனது லைசென்சுக்கு ஓட்டோ ஓட்ட முடியாது. ஆனால் முன்பே அதற்க்கும் சேர்த்துப் போடுங்கக்கள் என்றாள் தந்திருப்பார்களாம். அது எனக்குத் தெரியவில்லை.
  10. பதிநான்கு அதற்குள் மகள் என்னை யாழ்ப்பாணத்தில் மட்டும் ஒரு மாதமாக அடைத்து வைத்திருக்கிறீர்கள். எப்ப வேறு இடங்கள் பார்க்கப் போவது என்கிறாள். இணுவிலில் இருந்து தொடருந்தில் கிளம்பி வவுனியா போய் அங்கு இரு குடும்பங்களைக் கண்டு தங்கி அங்கிருந்து வவுனிக்குளம் என்னும் இடத்தில் என் ஒன்றுவிட்ட அண்ணா சிறிய வீடு ஒன்று கட்டி ஐந்து ஏக்கர் நிலத்தை பக்கத்திலுள்ளவர்களுக்கு குத்தகைக்கு விட்டுவிட்டு ஆறுமாதம் இங்கு, ஆறு மாதம் கனடாவிலுமாக வாழ்கிறார். அவரின் அழைப்பின் பேரில் அங்கும் ஒருநாள் நிற்க அந்தப் பக்கம் காணிகள் வாங்குவோமா என்னும் எண்ணமும் எழுந்தது. என் அண்ணருக்கும் எனக்கும் பொருந்தவே பொருந்தாது. ஏனெனில் அவர் அமிர்தலிங்கத்தின் வால். போக என்னுடன் புலிகளுக்கு எதிராகவே எப்போதும் கதைத்து வாக்குவாதப் பட்டுக்கொண்டு இருப்பார். அத்தோடு அந்தப் பகுதியில் யானைகள் குரங்குகளின் ஆட்டக்காசமும்அப்பப்ப இருக்குமாம் என்றதுடன் அவருக்கு அருகில் இருப்பது சரிவாராது என்று முடிவுசெய்து யாழ்ப்பாணத்தில் காணி வாங்குவதே நல்லது என்கிறேன். அங்கிருந்து பஸ்சில் திருகோணமலை சென்றது. கோணேசரத்துக்கு 2017 இலும் சென்றது. இப்ப மகளுக்காக அவரையும் கூட்டிச் சென்றோம்.அங்கு முதலிலே மகள் ஹோட்டல் புக் செய்திருந்தார். மூவர் தங்க 6000 ரூபாய்கள். அங்கிருந்தே கன்னியா வென்நீர் ஊற்று பார்ப்பதற்கு போய்வர ஓட்டோ 2000 ரூபாய்கள். கோணேஸ்வரர் கோவிலுக்குச் செல்லும்போது சிங்களவர்களின் கடைகளைப் பார்த்து முன்னர் வந்த கோபம் இப்ப வரவில்லை. ஏனெனில் இங்கு வசிக்கும் மக்களே எதுவும் செய்ய முடியாதிருக்கும்போது நாம் கோபம் கொண்டோ மனம் வருந்தியோ எதுவும் ஆகப்போவதில்லை எனும் கையாலாகாத்தனம். அது முடிய புறாத்தீவு. சிறிய வள்ளத்தில் நாம் தனியாகக் செல்வதானால் 5000 ரூபாய்கள் என்றனர். சரி என்று புறப்படும்போது ஒரு சிங்கள சோடி வர அவர்களையும் ஏற்றிக்கொண்டு போவோம் நீங்கள் நான்காயிரம் அவர்கள் நான்காயிரம் தரட்டும் என்றனர். இது என்ன கணக்கு என்று நான் குளம்ப, அம்மா அவர்கள் எம்மிடம் எவ்வளவு கறக்க முடியுமோ கறப்பார்கள். பேசாமல் இருங்கள் என்றதும் நானும் எதுவும் கதைக்கவில்லை. தீவுக்குள் நுழைவதற்கு, பின்னர் எம்மை கடலுக்கடியில் பவளப்பாறைகள் காட்டுவதற்கு என்று நானும் கணவரும் இலங்கையின் பழைய அடையாள அட்டை வைத்திருந்ததனால் குறைவான காசும் மகள் வெளிநாடு என்பதனால் டொலரில் 10,15,25 என்று மகளுக்குமட்டும் 16000 ரூபாய்களை அறவிட்டனர். அது மிக அற்புதமான அனுபவம்தான். பின்னர் அடுத்தநாள் காலை மீண்டும் பஸ்சில் வெளிக்கிட்டு எல்லா, நுவரெலியா என்று பின்னர் கண்டி போவதாக ஏற்பாடு ஆனால் கண்டி செல்லாமலே கொழும்பு சென்றாச்சு. ஏனெனில் கணவரும் மகளும் இன்னும் ஒரு வாரத்தில் திரும்பச் செல்லவேண்டி இருந்ததால் கணவரின் காணி விடயம் ஒன்று முடிக்கவேண்டி இருந்தது ஒன்று. அடுத்தது நான் தொடர்ந்து நிற்பதனால் எனக்கு ஒரு வருட விசா எடுக்கவேண்டியும் இருந்தது. மூன்றாவது பஸ் பயணம் எனக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. றெயின் பஸ் என்று டாய்லெட் பிரச்சனை ஒருபுறம். அதனால் இனிமேல் வருவதானல் ஒருகாரையோ அல்லது வானையோதான் காசைப் பார்க்காமல் பிடித்துக்கொண்டு திரிய வேண்டும் என்னும் என் விருப்பத்தை மகளோ கணவரோ ஏற்றுக்கொள்ளவில்லை. இப்படித் திரிவதுதான் அவர்கள் இருவருக்கும் ஏற்றதாக இருக்க, இனிமேல் நீங்கள் இருவரும் தனியத் திரியுங்கள் என்றுவிட்டேன். அத்தோடு கொழும்பில் கோட்டலில் ஒரு நாள் மூன்று பேர் தங்கும் அறை 8000 ரூபாய்களுக்கு எடுத்து அடுத்தநாள் காலைவரை தங்கிவிட்டு மகள் தான் அங்கேயே இருக்கிறேன் என்று கூற எனக்கோ அவளைத் தனிய விட்டுவிட்டுப் போகவும் மனமில்லை. கவனமாக இருங்கோ என்று பலதடவை சொல்ல அம்மா நான் சின்னப் பிள்ளை இல்லை அம்மா என்று சிரிக்கிறாள். கோட்டலுக்கு முன்னால் நிற்கும் ஓட்டோக்களைக் காணவில்லை. அதனால் அங்கு வேலை செய்யும் பையன் வீதியில் ஒரு ஓட்டோவை எமக்காக மறிக்க மீற்றர் போடுகிறேன் என்கிறார். சரி என நானும் கணவரும் ஏறிக்கொள்கிறோம். விசா எடுப்பதற்கு பிறகு செல்வோம். முதலில் லைசென்ஸ் மாற்றுவோம் என எண்ணி அங்கு சென்றால் எக்கச்சக்கமான சனம். அத்தனை தூரம் சென்றதற்கு ஓட்டோக்காரர் 1200 ரூபாய்களைத்தான் எடுத்தார். அதுவே யாழ்ப்பாணத்தில் என்றால் 2000 ரூபாய் கொடுக்கவேண்டும். நாம் யூக்கேயில் இருப்பதனால் ஒரே பக்கம் staring என்பதனால் uk இல் main post office இல் ஒரு வருட லைசென்ஸ் எடுத்துக்கொண்டு போய் இலங்கையில் ஒரு ஆண்டுகள் வாகனங்கள் ஓட முடியும். நாம் அதை மறந்துபோய் வந்துவிட்டோம். ஆகவே நான் தொடர்ந்து அங்கு நிற்பதனால் எடுப்போம் என்று யாழ்ப்பாணத்தில் கச்சேரிக்குச் சென்றால் காத்திருப்புக்குப் பின் வரிசையில் நின்று ஒருவரிடம் செல்கிறோம். அவர் மெடிக்கல் எடுத்துக்கொண்டு வரவேண்டும் என்றும் வேறு எவற்றைக் கொண்டுவரவேண்டும் என்று கூறி எனது அடையாள அட்டையைக் கேட்கிறார். அது நான் படிக்கும் காலத்தில் எடுத்தது. அதைப் பார்த்ததுமே அவருக்கு விளங்கிவிட்டது போல. வெளிநாடோ? என்கிறார். ஓம் என்று கூற வெளிநாடு என்றால் நீங்கள் சுண்டுக்குளி லேடீஸ் ஸ்கூல் இற்குப் பின்னால் இருக்கும் ஒரு கண் வைத்தியரோ அல்லது கண்ணாடிக் கடையோ தெரியவில்லை. அங்கு சென்று தான் எடுக்க வேண்டும்.என்று முகவரி தந்ததோடு மட்டுமன்றி 8000 ரூபாய்கள் என்கிறார். நாமும் சரி என்று வெளியே வந்து முன்னால் சென்ற ஓட்டோ ஒன்றை மறித்து அவரிடம் விடயத்தைக் கூறுகிறேன். மெடிக்கல் எடுக்கும் இடம் கச்சேரிக்குப் பின்னால் இருக்கே. நீங்கள் வெளிநாடோ என்கிறார். ஓம் என்றதற்கு அதுதான் உங்களிட்டைக் காசு பிடுங்க நினைக்கிறார் என்று எம்மை பின்னாலே உள்ள இடத்துக்குக் கூட்டிச் செல்கிறார். அவருக்கு நன்றி கூறிவிட்டு உள்ளே சென்றால் ஒரு 20 நிமிடத்தில் 800 ரூபாய்கள் பெற்றுக்கொண்டு சான்றிதழ் தருகின்றனர். வெளியே வர அந்த ஓட்டோக்காரர் எமக்காகப் பார்த்துக்கொண்டு நிற்க யாழ்ப்பாணத்திலிருந்து பஸ்சில் வந்த நாம் அவருடன் யாழ்ப்பாணம் செல்கிறோம். கொழும்பில் லைசென்ஸ் மாற்றும் இடத்துக்குச் சென்ற பின்னர் தான் கணவர் தன் லைசென்சைக் காணவில்லை என்கிறார். இனி என்ன செய்வது யாழ்ப்பாணத்தில் இருந்தால் மீண்டும் கொழும்பு வரும்போது எடுப்போம் என்று கூறி அவரை வெளியே இருக்கும்படி கூறிவிட்டு நான் உள்ளே செல்கிறேன். வரிசையில் நின்று ஒருவரிடம் சென்று எமது விபரங்களைக் கொடுக்க அவர் எல்லாத் தகவல்களையும் ரைப் செய்து இன்னொருவரிடம் அனுப்புகிறார். கன நேரமாக என்னைக் காக்கவைத்துவிட்டுப் போன் செய்து சிங்களத்தில் கதைத்தபடி இருக்கிறார். எனக்கு கடுப்பானாலும் எதுவும் செய்யமுடியாமல் இருக்கிறேன். பின்னர் அவர் எல்லாவற்றையும் சரிபார்த்துவிட்டு வெளிநாட்டவர்களுக்கு 11000 ரூபாய் என்றும் தூரத்தில் இருக்கும் கவுண்டரில் பணத்தைச் செலுத்திவிட்டு வரும்படி கூறுகிறார். நேரம் 12.30. கவுண்டருக்குச் சென்றால் அங்கும் வரிசை நீள்கிறது. ஒரு பத்து நிமிடக் காத்திருப்புக்குப் பின் எனக்கு முன்னால் இருவரும் பின்னால் ஐவரும் இருக்க வேலை செய்பவர் வெளியே சென்றவர் திரும்பிவரவில்லை. அவர்கள் தமக்குள் சிங்களத்தில் அமளிப்படுகிறார்கள். என்ன என்று நான் கேட்க அவர் லஞ்ச் பிரேக் என்கின்றனர். எப்ப வருவார் என்றதற்கு தமக்கும் தெரியாது என்கின்றனர். மற்றவர்கள் வேறு கவுண்டருக்குப் போக நான் என்ன செய்வது என்று தெரியாமல் நிற்க ஒருவர் வந்து ஏன் நிற்கிறாய் என்று கேட்க நான் விபரத்தைக் கூற அவர் வா என்று என்னைக் கூட்டிச் சென்று உள்ளே வேறொருவரிடம் விடயத்தைக் கூறி foreign என்றுவிட்டுப் போக அவர் என்னிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு இன்னொரு கவுண்டருக்குப் போய் என் லைசென்சைப் பெற்றுக்கொள்ளுமாறு கூற அங்கே செல்கிறேன். ஒரு சிங்களப் பெண் என் பாஸ்போட்டையும் பணம் கட்டிய பற்றுச்சீட்டையும் வாங்கிப் பார்த்துவிட்டு, நீ வெளிநாடு என்றதனால் இன்னும் 8000 ரூபாய்கள் கட்ட வேண்டும் என்று வெளியே உள்ள வேறொரு கவுண்டர் ஒன்றுக்குப் போகுமாறு கூற ஏன் இங்கு கட்ட முடியாதா என்கிறேன். அவர்கள் உன்னை வெளியேதான் அனுப்பியிருக்கவேண்டும். மாறி அனுப்பிவிட்டார்கள் என்கிறார். ஒன்றுக்கு இரண்டு பேர் 11000 ரூபாய்கள் என்றுகூற இவ இன்னும் 8000 காட்டச் சொல்கிறா. அதுவும் வெளியே உள்ள கவுன்டரில் என்று கணவரிடம் சொல்லிக் கோபப்பட, நாம் வேறு சிங்களம் தெரிந்தவர்களைக் கூடிக்கொண்டு வந்திருக்க வேண்டும். இனி உவர்களுடன் நின்று வாக்குவாதப்பட்டு பிரயோசனமில்லை. போய் கட்டிப்போட்டு வா என்கிறார். எனக்கோ இவவை விடக்கூடாது என்று இருந்தாலும் எதுவும் செய்யமுடியாது என்று தெரிகிறது.. வெளியே சென்று காட்டிவிட்டு வர மூன்றுமணிக்கு வெளியே உள்ள இடம் ஒன்றைக் காட்டி அங்கு வந்து லைசென்சைப் பெற்றுக்கொள்ளும்படி கூற நானும் கணவரும் வெளியே சென்று உணவருந்திவிட்டு வந்து காத்திருக்க எட்டு ஆண்டுகளுக்கான லைசென்ஸ் கைக்கு வருகிறது.
  11. ஒட்டுமொத்தமாக எல்லோரும் அப்படி என்று சொல்ல முடியாது உண்மைதான் அண்ணா. சினிமா போல் எம்மை ஏமாற்றுகிறார்கள். மிகுதியையும் வாசித்துவிட்டுச் சொல்லுங்கள்😀 எனக்கு ஏற்பட்டது போல உங்களுக்கும் ஏற்படும் என்றில்லை. எதற்கும் இரண்டு பண்ணைக்களைப் போய்ப் பாருங்கள். நம்பிக்கையானவர்களிடம் தெரிந்தவர்களூடாக ஒரு வக்கீலை வைத்து எழுதி செய்தால் பிரச்சனை வராது.
  12. பதின்மூன்று உறவினர்களின் வீடுகளுக்குச் செல்லச் செல்ல கணவருக்கு மட்டுமல்ல எனக்கு மகளுக்குக் கூட எமக்கு என்று ஒரு வீடு இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றவாரம்பித்துவிட்டது. கணவருக்கு ஒரு நாலரைப் பரப்புக் காணி தங்கையின் காணியுடன் சேர்ந்து இருக்கு. பத்து ஆண்டுகளாக கணவர் குடும்பத்தைப் பார்த்து, தங்கைக்கு வீடுகட்டி சீதனம் கொடுத்து திருமணம் செய்து வைத்து தமையனை ஐந்து தடவை வெளிநாடு செல்லக் காசு அனுப்பி, தம்பியை ஒரு ஆண்டுகளாக மாமி சிங்கபூரில் வைத்திருந்து பணம் முழுவதும் செலுத்தி லண்டன் அனுப்பி, இப்பிடி எல்லாம் குடும்பத்துக்காக உழைத்ததில் மாமி ஐந்து பரப்பு வீட்டுக்காணியும் எட்டுப் பரப்பு தோட்டக் காணியும் ஐந்து இலட்சம் காசும் மகளுக்குக் கொடுத்து மிகுதி இருந்த நாலேகால் பரப்புக் காணியை குடும்பத்தைப் பார்த்ததுக்காக கணவர் பெயரில் எழுதிவிட்டார். 90 ம் ஆண்டிலிருந்து தங்கையே குத்தகைக்கு விட்டு அதையும் அனுபவித்து வருகிறார். நான் போகும்போதே வன்னியில் காணி வாங்கி ஆட்களை வைத்து ஒரு பண்ணையோ அன்றி கோழி ஆடுமாடுகளுக்கான இயற்கை உணவு தயாரிப்பதையோ அல்லது விளையும் நெல்களை விவசாயிகளுக்கு உதவும் பொ ருட்டு வாங்கிக் களஞ்சியப்படுத்தி பின் விற்கும் ஒரு சிறு செயலையோ ஆரம்பிக்கலாம் என எண்ணி இரண்டு மூன்று இது தொடர்பானவர்களிடம் முன்னரே கதைத்து பல சூம் மீற்றிங்கில் ஆலோசித்து, பலரும் நீங்கள் வாருங்கள் நாம் உதவுகிறோம் என்றனர். ஆனால் பிரபாவின் அனுபவமும் வேறு சிலருடன் நேரில் சென்று தொடர்ந்து கதைத்தபோது வெளிநாட்டில் இருக்கும் நான் தனித்து அவற்றைச் செய்வதில் பல இடற்பாடுகள் இருப்பதை அறிய முடிய, எம் ஊர் என்றால் கூட பலர் எமக்கு உதவ இருப்பார்கள். தெரியாத வன்னியில் நான் தனியாக எதுவும் செய்வது ஆபத்தானது என்று தெரிய, முதலில் சிறிதாக ஏதும் தொடங்கி உன் ஆசைக்கு செய்துபார். இரண்டு மூன்று ஆண்டுகளில் நாம் இங்கு வந்து தொடர்ந்து இருக்கும்போது ஏதாவது பெரிதாகச் செய்யலாம் என்றார் கணவர். அவர் கூறுவது சரியாகப் பட சிறிதாக ஒரு ஒருங்கிணைந்த பண்ணை ஆரம்பித்தால் தெரியும் என்று எண்ணி லண்டனில் யூ டியூபில் பார்த்த ஒரு பெண் ஆசிரியர் நடாத்தும் பண்டைத்தரிப்புப் பண்ணையை போய்ப் பார்த்தால் வீடியோவில் பார்ப்பது எதுவும் உண்மையானதாக இருக்காது என்று தெரிந்தது. சிறிய குளம் போன்று ஒன்று அமைத்து அதில் தாராக்கள், அன்னம் எல்லாம் அந்தப் பண்ணையில் இருப்பதாகக் காட்டினார்கள். எத்னையோ கோழிகள், ஆடுகள் இருக்கும் என்று வந்தால் ஒரு சிலதைத் தவிர வேறு எதையும் பண்ணையில் காணவில்லை. என்ன இப்படி வெறுமையாக இருக்கிறதே என்றால் எல்லாம் விலைப்பட்டுவிட்டன என்கிறார். அப்ப நீங்கள் எதுவும் பெருக்குவதில்லையா என்றதற்கு தன் மகனே தயாரித்தது என்று ஒரு பெரிய இயந்திரத்தைக் காட்டினார். கூடுகள் கிளீன் பண்ணிக்கொண்டு இருக்கிறம். நாளைக்கு வேறெங்கோ இருந்து கோழிக்குஞ்சுகள் வருகின்றன. ஒரே நேரத்தில் 400 குஞ்சுகள் பொரிக்க வைக்க முடியும் என்றதுடன் வெளிநாட்டில் இருந்து வரும்போது வாத்து முட்டைகள் ஒரு பெட்டி கொண்டுவந்து தருகிறீர்களோ என்றார். பார்ப்போம் என்றுவிட்டு வருகிறேன். முன்னர் புலிகளின் பொருண்மிய மேம்பாட்டு பேரவையின் கீழ் வேலை செய்ததாகக் கூறிய ஒருவர் உடுப்பிட்டியில் ஒரு மாதிரிப் பண்ணையை நடத்துகிறார் என்று ஒரு வீடியோ. அதில் தான் 13 பண்ணைகளை காரைநகரில் நடத்துவதாகவும் ஊடுப்பிட்டியில் நான்கு கனடாவில் வாழும் தமிழர்கள் சேர்ந்து நடத்துவதாகவும் அதை இவர் தற்காலிகமாகப் பாராமரிப்பதாகவும் கூற லண்டனில் இருந்தே அவருக்கு தொலைபேசியில் அழைத்துக் கதைத்திருந்தேன். என் நண்பன் ஒருவரின் வீடு காரைநகரில். அவர்களும் அப்போது வெளிநாட்டில் இருந்து அங்கு வந்திருந்தனர். எம்மை வரும்படி அழைத்ததன்பேரில் நானும் கணவரும் மட்டும் சென்று உரையாடும்போது பண்ணை பற்றி விசாரித்தால் அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. இளந்திரையனையும் தெரியவில்லை. நான் உடனே தொலைபேசியில் அழைக்க சுகம் விசாரிக்கிறார். நான் விபரத்தைக் கூறி உங்கள் பண்ணைகளில் ஒன்றையாவது நான் பார்க்கவேண்டும். என் நண்பர்களைக் கேட்டால் அவர்களுக்கு விளங்கவில்லை. ஒருக்கா அவர்களுக்கு உங்கள் பண்ணை எங்கு இருக்கு என்று கூறமுடியுமா என்கிறேன். நான் பார்க்க ஆட்கள் இல்லாததால் என் பண்ணைகளை மூடிவிட்டேன் என்கிறார். அப்ப சரி நாளை உடுப்பிட்டிப் பண்ணையைப் பார்க்க வருகிறோம் என்கிறேன். அந்தப் பண்ணையும் இப்ப மூடியாச்சு. கனடாக்காரர் நாலுபேருக்கும் பிரச்சனை. நான் இப்ப ஊரெழுவில் ஒரு பண்ணையைப் பாராமரிக்கிறேன் என்கிறார். மூன்று மாதங்களில் 14 பண்ணைகளை எதனால் மூடினீர்கள் என்று கேட்க நேரில வாங்கோ கதைபம் என்கிறார். நண்பர்கள் உம்மை நல்லாத்தான் ஏமாத்தியிருக்கிறார் என்று சிரிக்க என்னை மட்டுமா ??? என எண்ணி அவமானமாகவும் கோபமாகவும் இருக்கு. அடுத்த இரண்டு நாட்கள் வேறு அலுவல்களால் போகமுடியாதிருக்க போன் செய்துவிட்டு அவர் ஊரெழுவிலாவது நிற்கிறாரா என்று உறுதிப்படுத்திக்கொண்டு நானும் கணவரும் செல்கிறோம். ஒரு நான்கு பரப்புக்காணி இருக்கும். இரு பக்கமும் மாட்டுத் தீவனப் புற்கள் மற்றும் சோளம் என்பன நடப்பட்டிருக்கு. உள்ளே சென்றால் பெரிய கொட்டில் ஒன்று போடப்பட்டு ஆறு பால்மாடுகள் கட்டப்பட்டிருக்கு. இன்னொரு பக்கம் ஒரு பத்து ஆடுகள் மேல் தட்டில் நிற்கின்றன. ஒரு நான்கு கூடுகளில் நல்ல ஆரோக்கியமான கோழிகள் இருக்க பார்க்க ஆசையாகத்தான் இருக்கு. எம்மைக் கண்டுவிட்டு வந்து கதைக்கிறார். இதுவும் ஒரு கனடாக்காரரின் காணிதான். எல்லாமாக இருபது பரப்பு. இப்ப இவ்வளவும் தான் செய்யிறம். போகப்போக பெரிதாக்கலாம் என்று இருக்கிறம் என்கிறார். உங்கள் பண்ணைகள் ஏன் மூடினீர்கள் என்றதற்கு, நாங்கள் நாங்கள் நின்றால்தான் பண்ணையை ஒழுங்காகப் பாராமரிக்கலாம். நான் மற்றவர்கள் பண்ணையைக் கவனிக்க வந்தவுடன் அங்கு வேலை செய்பவர்களும் கவனம் இல்லை. கோழிகள் எல்லாம் நோய் வந்து செத்துவிட்டன. இப்ப நான் இதை மட்டும் தான் பார்க்கிறேன் என்றவுடன் அவர் சொல்லாமலே பல விடயங்கள் எனக்குப் புரிகின்றன. எதுவும் பேசாமல் அவரிடம் இருந்து விடைபெற்று வர, என்ர போன் நம்பர் இருக்குத் தானே அக்கா. பண்ணை போட உதவிகள் தேவை என்றால் அடியுங்கோ என்கிறார். உங்களுக்கு அடித்துவிட்டுத்தான் மறுவேலை என்று மனதுள் சொல்லியபடி வருகிறேன். நான் ஒரு முன்மாதிரிப் பண்ணையை உருவாக்கி இவர்களுக்குக் காட்டவேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. சில பெண்கள் வன்னியில் பண்ணைகளை நடத்துகிறனர். அதையும் பாருங்கள் என்று ஒருவர் முன்மொழிகிறார். ஏற்கனவே பார்த்தவைபோல்தான் இவையும் இருக்கும் என்னும் எண்ணத்தில் இனி எதையும் பாற்பதில்லை என்று முடிவுசெய்கிறேன். இணுவிலில் எந்தக் காணியுமே விற்பனைக்கு இலை. இருப்பது இரண்டு மூன்று பரப்பு மட்டுமே. அதுவும் ஒரு பரப்பு 30-40 லட்சம் என்று போகிறது. எனவே இணுவிலில் என்றில்லை நல்லகாணி இணுவிலுக்கு அருகில் இருந்தால் வாங்குவோம் என்று முடிவெடுத்து புரோக்கர்மாரிடம் கூறினால் ஒவ்வொரு நாளும் அந்தக் காணி இன்ன விலை என்று ஒரே தொல்லை. ஒரு பத்து தோட்டக்காணிகள் ,கலட்டுக் காணிகள், வெறுங்காணிகள் என்று பார்த்து வெறுத்துவிட்டது. எதுவும் நான் நினைத்ததுபோல் அமையவில்லை. கடைசியில் ஒரு காணி சுற்றிவர வீடுகள் பதின்மூன்று பரப்பு . கொஞ்சம் உள்ளுக்குப் போகவேண்டும். எங்கள் ஊரின் எல்லையில் எனக்குப் பிடித்துவிட பேரம் பேசுகிறோம். காணி உரிமையாளர் சுவிஸில். ஒரு காணிக்கு ஒரு புரோக்கர் இருக்கமாட்டார். கடைசி நான்கு பேராவது வருவார்கள். அது ஏன் என்றும் தெரியவில்லை.நானும் கணவரும் நான்கு புரோக்கரும் காணிக்காரரின் தமையனும் சுற்றிவர இருக்க ஒரு பரப்பு 15 லட்சம் என்கின்றனர். இதுக்கு 15 லட்சம் அதிகம். 11 லட்சம் என்றால் வாங்குகிறோம் என்கிறார் கணவர். கிணறு இல்லை. மதிலோ வேலியோ இல்லை. எனவே இந்த விலை அதிகம் என்கிறார். கடைசியில் புரோக்கர் பதின்மூன்று இலட்சம் என்று இறங்கி வர கணவர் 12 லட்சம் என்றால் சொல்லுங்கள் முடிக்கலாம் என்கிறார். காணிக்காரரின் தமையன் எதுக்கும் தம்பிக்குப் போன் அடிப்பம். அவர் என்ன சொல்லுறார் என்று பார்ப்பம் என்று விட்டு போன் செய்ய, அழைப்பில் வருகிறார் தம்பியார். எடுத்த எடுப்பிலேயே பதின்மூன்று என்றால் வாங்கட்டும். இல்லாட்டில் போகட்டும் என்று கூற கோபத்துடன் நானும் கணவரும் எழுகிறோம். எம்மைக் கூட்டி வந்து புரோக்கர் இருங்கோ கதைச்சுப் பார்ப்பம் என்கிறார். உவரிட்டை காணி வாங்கத் தேவை இல்லை என்றுவிட்டு விடுவிடு என்று சென்றுவிடுகிறோம். இனிமேல் காணி ஒன்றும் பார்ப்பதில்லை என்று முடிவெடுத்து போனில் வரும் புரோகர்களின் தொலைபேசியை எடுக்காமல் விடுகிறேன்.
  13. உது ரூமச் 😃 உங்கள் ஊக்குவிபிபுக்கு நன்றி அண்ணா பண்ணாகம் தான். பண்ணாகத்தில் எனக்கு தெரிந்த எழுத்தாளர் ராணி சீதரன் இருக்கிறார். அவரிடமும் மீண்டும் ஒருதடவை சென்றேன். மிக்க நன்றி பாலபத்திரரே
  14. பன்னிரண்டு முதன் முதல் கீரிமலைக் கடற்கரைக்கு குளிப்பதற்கு என்று போனால் கடற்கரை முழுதும் பழுப்பு நிறமாக ஊத்தையாக இருக்க” உந்தக் கடலுக்கை சரியான கல்லு, நீங்கள் கேணீக்கை தான் குளிக்கவேண்டும் “ என்றார்எம்மைக் கவனித்துக்கொண்டு நின்ற ஒருவர். மகளும் நானும் சென்று கேணியைப் பார்த்தால் ஒரு நான்கு இளம் பெண்கள் விளையாடிக்கொண்டு இருக்கினம். அதற்குள் சென்று வடிவாக நீந்த முடியாது என்று தெரிந்துவிட காங்கேசன் துறைக்கே போகலாம் என்று முடிவெடுக்கிறோம். முன்னர் கீரிமலையில் ஒரு மடம் இருந்தது. நாம் சிறுவர்களாய் இருந்த நாட்தொட்டு வெளிநாடு வரும்வரை ஆண்டில் ஒரு தடவை கீரிமலைக்குப் போவோம். அந்த மடத்தில் நன்னீர் கிணறும் உண்டு. அங்கு சென்று குளித்து, மடத்தில் அசுவாசமாக இருந்து உண்டு குடித்து மகிழ்ந்து வருவோம். இப்ப அந்த மடம் இடிபாடுகளுடன் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. எம்மூரைச் சேர்ந்த ஆறு திருமுருகன் என்பவர் பெரிய மண்டபம் ஒன்றும், வயோதிபர்களுக்காக மடம் ஒன்றும் வெளிநாட்டவர் போனால் கூடத் தங்குவதற்கு வசதியாக மண்டபத்துடன் கூடிய அறைகளும் கட்டியுள்ளார். மறு பக்கம் ஒரு சிறு கோவில். அதில் ஒரு இளம் ஐயர் நின்றுகொண்டு வாங்கோ, அரிச்சனை செய்துவிட்டுப் போங்கோ என்கிறார். நாம் போகவில்லை. நகுலேச்சுரம் என்று சொல்லப்படும் இலங்கையின் ஐந்து ஈச்சரங்களில் ஒன்றான அது புதுப்பிக்கப்பட்டு அழகாகக் காட்சி தருகிறது. நாம் உள்ளே செல்ல யாரும் கோவிலின் உள்ளே இல்லை. மூலஸ்தானம் பூட்டப்பட்டு இருக்க நாம், சுற்றிக் கும்பிட்டுவிட்டு வெளியே வருகிறோம். அங்கிருந்து பஸ்சில் போவதற்காக பஸ்ராண்டுக்குப் போனால் அரை மணி செல்லும் பஸ் வெளிக்கிட என்கிறார் காத்திருந்த ஒருவர். கண்ணில் அம்மாச்சி உணவகம் பட அங்கு சென்றுவிட்டுச் செல்வோம் என்கிறேன். அந்தப் பகுதிகளிலோ அல்லது காங்கேசன் துறையிலோ அதுபோல உணவகம் இல்லாததால் மனிசன் ஓம் என்று சம்மதிக்கிறார். நாம் உள்ளே செல்ல கொஞ்ச சிங்களச் சனம் இருந்து உணவு உண்கிறது. நாம் வடைக்கும் தேனீருக்கும் ஓடர் கொடுத்துவிட்டு சென்று அமர்கிறோம். கிளிநொச்சி மற்றும் கோண்டாவிலில் இருக்கும் அம்மாச்சியில் நாம் தான் வாங்கிக்கொண்டு சென்று அமர வேண்டும். இது நன்றாக சுத்தமாக இருக்கு. சுத்தம் செய்வதற்கு என்று ஒரு பெண் முண் பகுதியில் நிற்கிறார். நாம் ஓடர் செய்தபோது வடை சுட்டுத் தருகிறோம். போய் இருங்கள் என்று சொன்னதனால் வந்து இருந்தோம். சிறிது நேரத்தில் ஒரு சுற்றுலாப் பயணிகளுடன் பஸ் வந்து நிற்க தப தப என எல்லோரும் உள்ளே வருகின்றனர். உள்ளே போதிய இடம் இல்லாததால் சிலர் திரும்பவும் பஸ்சுக்குள் போகின்றனர். பத்து நிமிடமாகியும் எமக்கு வடையோ தேநீரோ வரவில்லை. பிறகு வந்தவர்கள் சுற்றி நின்று ஓடர் செய்வதும் வாங்கிச் சென்று சென்று உண்பதுமாக இருக்க போய் கேளுங்கப்பா என்கிறேன். வரும் தானே பொறு என்று கூறிவிட்டு பார்த்துக்கொண்டிருக்க கடுப்பாகி நான் எழுந்து சென்று, தங்கச்சி வடையும் தேனீரும் கேட்டனாங்கள் இன்னும் வரேல்லை என்கிறேன். அந்தப் பெண் என்னை கவனிக்காததுபோல் நின்று அவர்களுக்கே கொடுத்துக்கொண்டு நிற்க, நான் திரும்பி வந்து எழும்புங்கோ போவம் என்கிறேன். கொஞ்சம் பொறுமையாய் இரன் என்று மனிசன் சொல்லி வெளியே நின்ற பெண்ணைப் பார்க்கிறார். அந்தப் பெண் நாம் வந்ததையும் இத்தனைநேரம் இருந்ததையும் கவனித்துக்கொண்டுதான் இருந்தார். உடனே பொறுங்கோ நான் எடுத்துக்கொண்டு வாறன் என்று கூறி ஐந்து நிமிடத்தில் எமக்கு வடையும் தேனீரும் கொண்டுவந்து தர நான் நன்றி என்கிறேன். வடை கோபத்தில் கூட மிகச் சுவையாக இருக்கிறது. தேனீரும் தான். வேறு ஏதும் வேணுமா என்றும் கேட்க, மோதகமும் கடலை வடையும் உளுந்து வடையும் போண்டாவும் ஆறு ஆறு பார்சல் தர முடியுமா என்று கேட்க இருங்கோ கட்டிக்கொண்டு வாறன் என்று செல்லிவிட்டுச் செல்கிறார். ஒரு பத்து நிமிடங்களில் பார்சலையும் கையால் எழுதிய பில்லையும் கொண்டு வர நான் எழுந்து பில்லுக்குரிய பணத்தைக் கொடுத்துவிட்டு இந்தாங்கோ நீங்கள் வச்சுக்கொள்ளுங்கோ என்று ஆயிரம் ரூபாய்த் தாளைக் கொடுக்க வேண்டாம் என்று மறுக்கிறார். நான் அவர் மறுக்க மறுக்க அவர் பொக்கற்றில் வைத்துவிட்டு நீங்கள் செய்தது பெரிய உதவி என்றுவிட்டு வர, கெதியா ஓடிவா பஸ் வெளிக்கிடுதுபோல என்றபடி ஓடிச் சென்று மனிசன் மறிக்க நானும் மகளும் அவர் பின் ஏறுகிறோம். பஸ்சில் நான்குபேரே இருக்க நாம் முன்பக்கம் சென்று அமர்கிறோம். எங்கும் வெறிச்சோடி வீடுவாசல்கள் பெரிதாக இல்லாமல் இருக்கு. காங்கேசன்துறை கடற்கரை முன்னர் 2017,19 களில் சென்றபோது நன்றாகச் சுத்தமாக இருந்தது. இப்ப சிறிது பொலிதீன், பெட்டிகள் என்று ஆங்காங்கே குப்பைகள் சேரத் தொடங்கிவிட்டன. வாரநாட்களில் சென்றால் ஆட்கள் நடமாட்டமே இன்றி இரண்டு மணிநேரம் தனியாகவே நாம் மட்டும் நீந்திவிட்டு வந்தோம். ஒரு சனிக்கிழமை சென்றால் எம்மவர்கள் குடும்பம் குடும்பமாக, நண்பர்கள் கூட்டம், ஆண்களும் பெண்களும் ஒருபுறம் திருவிழாவுக்கு வந்ததுபோல் அத்தனை சனம். சிலர் பட்டம்கூட விட்டுக்கொண்டு நின்றனர். அன்று ஆட்களைப் பார்ப்பதும் அவர்களின் கூத்துக்களைப் பார்ப்பதிலுமே நேரம் போய்விட்டது. ஆட்கள் சாய்ந்து இருப்பதற்கு வசதியாக பெரிதாக எதுவும் இல்லை. கடைகளும் நிறைய இல்லை. இருக்கும் இரு கடைகளும் சிங்களவர்களே வைத்திருக்கின்றனர் என்றார் ஒருவர். வெயில் மட்டும் சொல்லி முடியாது. மற்றப்படி நீந்துவதற்கு ஏற்ற கடற்கரை. அங்கு பயணிகள் விடுதிகூட இருக்கு.ராஜபக்க்ஷவின் என்று கேள்வி. கசூரினா கடற்கரையில் கிழமை நாட்களில் பெரிதாக ஆட்கள் இல்லை. உள்ளே போனால் மட்டுமே நன்றாக நீந்தலாம். ஒரு ஐம்பது நூறு மீற்றர் வரை முழங்காலளவு தண்ணீர்தான். ஒருநாள் வான் பிடித்துக்கொண்டு இருபது பேர் போய் வந்தோம். வானுக்கு 10000 ரூபாய். உணவுகள் வீட்டிலிருந்தே செய்துகொண்டு போனோம். எனக்குக் கடையில் வாங்கும் உணவுகள் பிடிப்பதே இல்லை. அதனால் ஆட்டிறைச்சிக் கறி, சம்பல் சொதியுடன் இடியப்பமும் அவித்து பாணும் வாங்கிச் சென்றோம். முதல் நாள் நானும் மச்சாளும் பிள்ளைகளும் சேர்ந்து ரோள்ஸ் செய்ததில் கடினமாக இருக்கவில்லை. ஃபிரிஜ் இல் வைத்துவிட்டு கலை எழுந்து பொரித்து, ஆக யூஸ், மிக்சர், தண்ணீர் மட்டுமே வெளியில் வாங்கியது. திரும்ப வரும்போது எல்லாமே காலி. உறவுகளுடன் கூடி மகிழ்ந்து உண்டது என்பது எமக்கு மனதுக்கு அத்தனை மகிழ்வைத் தந்தது. இடையில் பண்ணாகத்தில் நிறுத்தி கடையில் ஐஸ்கிரீம், யூஸ் என வாங்கிக் குடித்து ஊர் வந்து சேர்ந்தோம்.
  15. பதினொன்று எங்கள் ஊர் முழுதும் மாடிவீடுகள் பல இந்த நான்கு ஆண்டுகளில் முளைத்திருந்தன. பல வீடுகளில் ஆட்கள் இல்லை என்பது வேறு. ஒரு நாள் நயினாதீவுப் பயணம். காலையில் எழு மணிக்கே புறப்பட்டு யாழ்ப்பாணம் சென்று அங்கிருந்து குறிக்கட்டுவான் செல்லும் பஸ்சில் நானும் மகளும் ஒவ்வொரு இருக்கையில் அமர ஒரு அரைமணி நேரம் கணவர் நின்றபடியே பயணம் செய்ய பின் இருக்கை கிடைத்துவிட்டது. பஸ் குறிக்கட்டுவானில் நின்றவுடன் முன்னர் நேரே படகில் ஏறமுடியும். இப்போது ஒரு சிறிய கட்டடம்போல் வரிசையாக இருந்து இருந்து நகர்வதற்கு வாங்கு போன்றும் கட்டியுள்ளனர். அன்று பார்த்து எக்கச்சக்கமான சிங்களச் சனம். பஸ் நின்றவுடன் பலரும் அடித்துப் பிடித்து ஓட நானும் விரைவாகச் செல்ல ஏனம்மா அவசரப்படுகிறீர்கள் என்கிறாள் மகள். அந்தக் கட்டடத்தில் முக்கால்வாசி நிரம்பியிருக்கு. நாம் போய் கடைசி வரிசையில் அமர்கிறோம். சிங்கள மக்களுக்கு விகாரைகளிலேயே இலவச பேருந்துகள் ஒழுங்கு செய்யப்பட்டு நயினாதீவு, கீரிமலை போன்ற இடங்களைப் பார்வையிட ஒரு டூர் போல் ஒழுங்கு செய்கிறார்கள். எங்கள் கோவில்கள் ஏதாவது இப்பிடி எங்களுக்குச் செய்யுமா என்று ஒருவர் அங்கலாய்த்துக் கொண்டு இருந்தார். எம்மை விலத்திக்கொண்டு சிங்களப் பெண்கள் முன்னே செல்கின்றனர். எல்லோரும் எதுவும் பேசாமல் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ஒருபத்து நிமிடமாக நானும் பொறுமையாகப் பார்த்துக்கொண்டிருக்க இன்னும் மூன்று பேர் வர நான் காலை நீட்டி அவர்கள் செல்லாதவாறு மறித்தபடி நாமும் வரிசையில் காத்திருக்கிறோம் என்கிறேன். அம்மா பேசாமல் இருங்கோ என்கிறாள் மகள். அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் முன்னால் பார்த்து ஏதோ சிங்களத்தில் சொல்கிறார்கள். ஒரு பெண் என்னைப் பார்த்து மன்னித்துவிடுங்கள், அவர்களுக்கு எதுவும் தெரியாது. நாம் குழுவாக வந்தோம் என்றவுடன் ஓகே என்று நான் காலை எடுக்கிறேன். ஆனாலும் மனம் குமைக்கிறது. குழுவாக வந்தாலும் ஒழுங்காகப் போகலாம் தானே. தமிழர்களின் நிலை எதுவும் பேசாமல் பார்த்துக்கொண்டு இருக்கும்படி ஆகிவிட்டாதே என்று எண்ணுகிறேன். 20 நிமிடத்தில் நாம் முன் வரிசையின் தொங்கலுக்குச் சென்றுவிட சரி இன்னும் ஒரு பத்து நிமிடம் ஆகும் என சலிப்புடன் எண்ணியிருக்க நாம் இருந்த பக்கத்துக் கதவு திறந்து தமிழ் ஆட்களெல்லாம் அந்தக் கதவால் இடித்துக்கொண்டு செல்ல குழுவாக வந்தவர்கள் எந்தப் பக்கம் போவது எனக் குழம்பி நிற்க நாமும் கடகடவென சென்று லைஃப் ஜக்கற் எடுத்து அணிந்துகொண்டு கடைசி ஆட்களாக இயந்திரப்படக்கில் ஏறுகிறோம். அவர்கள் நிற்கஎம்மவர்கள் வந்து எறிவிட்டார்கள் என்று மனதில் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. நாம் கடைசியாக ஏறியபடியால் முன்பக்க இருக்கை இருக்கும் பக்கம் நிற்கிறோம். நடுவில் ஒரு சிங்கள மதகுரு இருக்கிறார். அவரின் இரு பக்கமும் இரு இருக்கைகள் வெறுமையாக இருக்கின்றன. எனக்குப் பக்கத்தில் இருப்பவரை தள்ளி இருக்கும்படி கூற அவரோ பிக்குவையும் என்னையும் மாறி மாறிப் பரிதாபப் பார்வை பார்க்கிறார். நான் மீண்டும் கூற பிக்குவுக்கு விளங்கியதோ என்னவோ தன்பக்கம் வரும்படி கையால் அவருக்கு சைகை செய்ய அவர் தள்ளி இருக்க நான் அமர்கிறேன். படகு நகர கணவரும் மகளும் நின்று வீடியோ எடுக்கின்றனர். மகளுக்கு அந்தப் பயணம் நன்கு பிடித்துப்போகிறது. நாம் சென்றபோது நேரம் 11.15. 12.30 இக்குத்தான் பூசை. நாம் கால்களைக் கழுவி கோவிலைச் சுற்றிக் கும்பிட்டு அர்ச்சனைத் தட்டும் வாங்கி வந்து அரிச்சனைத் தட்டைக் கொடுப்பதற்காகக் காத்திருக்க எனக்கு முன்னால் உள்ளவரின் தட்டுவரை வாங்கி கிட்டத்தட்ட முப்பது தட்டுகளை ஒன்றாகப் பக்கம்பக்கம் அடுக்கி வைத்துவிட்டு தேங்காய்களை எடுத்துவிட்டு பாதித் தேங்காய்களை வைத்து விபூதி சந்தனச் சரையையும் வைக்கின்றனர் இருவர். தீபம் காட்டி மந்திரம்ஓதிவிட்டு ஐயர் தீபத்தைக் கொண்டுவர முண்டியடித்து எல்லோரும் வணக்குகின்றனர். அதன்பின் எல்லோரும் அரிச்சனைத் தட்டுகளை மறுபுறத்தால் சென்று எடுக்கின்றனர். எல்லாம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான தட்டுகள் தானே. தாம் கொடுத்த தட்டுத்தான் அது என எண்ணாமல் எடுத்துப் போகின்றனர். ஒரு ஐயர் வந்து முதலாவதாக எனது தட்டை வாங்க, கொடுத்துவிட்டு அடுத்த பக்கம் போய் நிற்கிறேன். எனக்குப் பின்னர் வந்தவர்கள் என் பின்னால் போய் நிற்க என கணவரும் மகளும் அருகில் நிற்கின்றனர். ஐந்தோ ஆறாவதாய் ஒரு பெண் வந்து என் மகளை இடித்துக்கொண்டு எனக்கு முன்னால் வரப் பார்க்கிறார். நான் மெதுவாக தங்கச்சி இவ்வளவு பேர் நிக்கிறம். இடிக்காமல் பின்னால போய் நில்லுங்கோ. ஐயர் அங்கையும் தீபம் கொண்டு வருவார் என்றதும் என்னை எரிக்கும் பார்வை பார்த்துவிட்டு அப்பெண் அங்காலே போகிறது. மனிசன் நக்கலாய் ஆரிட்டை என்றுவிட்டு நமட்டுச் சிரிப்பு சிரிக்க, நான் ஏதோ இடையில வந்தது போலயல்லோ நீங்கள் சிரிக்கிறீர்கள் என்கிறேன். தீபம் கொண்டு ஐயர் வந்து எல்லாருக்கும் காட்டிவிட்டு நாம் கொடுக்கும் தட்சணையை வாங்கிக்கொண்டு அரிச்சனைத் தட்டுகளுக்குத் தண்ணீர் தெளித்துவிட்டுப் போக நான் சென்று நான் வைத்த அரிச்சனைத்தட்டை எடுக்கிறேன். முதலாவதாகக் கொடுத்து முதலாவதாகப் போய் எடுத்தது எனக்கு ஓட்டப்போட்டியில் முதலாம் இடம் கிடைத்ததுபோல் மகிழ்ச்சி ஏற்படுகிறது. வெளியே வந்து நாகதம்பிரானுக்கு நாகமும் பாலும் வாங்கி வைத்துக்கொண்டு நான்காவதாக நிற்க அந்தப் பக்கத்தாலும் சிலர் வந்து நிற்கின்றனர். இங்கு இவர்களும் எதற்காக நிற்கிறார்கள் எனும் யோசனையின்றி தாம் முதலில் போகவேண்டும்போல் முன்னே நகர, கலோ கியூ இந்தப் பக்கம் என்று அவர்களைக் கூப்பிடுகிறேன். கோயிலுக்கு வந்தாலும் உனக்குச் சண்டை தானோ என்கிறார் இந்தாள். அப்ப எல்லாரையும் போக விட்டிட்டு எப்ப ஒருத்தருமில்லையோ அப்ப போவமோ என்கிறேன். பிள்ளைகளின் நட்சத்திரங்களைச் சொல்லி மூவரும் பாலூற்றிவிட்டு வர, அன்னதானம் உண்டுவிட்டுப் போவோம் என்கிறார் மனிசன். சிறுவயதில் வரும்போது உண்டதுண்டு. வெளிநாடு வந்தபின் மூன்று தடவைகள் அங்கு சென்றிருந்தாலும் ஒருநாளும் அன்னதானம் செய்யுமிடத்தில் உண்டதில்லை. இம்முறை சம்மதித்து சென்று அமர்ந்து உணவு உண்ண மனதில் ஒரு நின்மதி எழுகிறது. அம்மா அங்க எப்பிடி சாப்பிட்டவா என்கிறாள் மகள். உவளுக்குப் பசி என்கிறார் மனிசன். உண்டபின் நயினாதீவைச் சுற்றிப் பார்க்கிறோம் என்று நடந்து சென்று விட்டு வர நேரம் போய்விடுகிறது. இன்னும் பத்து நிமிடத்தில் படகு புறப்பட்டுவிடும். எல்லோருக்கும் பதட்டம் தொற்றிககொள்கிறது. உடனே அங்கு நின்ற ஓட்டோ ஒன்றைப் பிடித்து விபரத்தைக் கூற அவர் விரைவாகக் கொண்டுவர இடையில் மறித்து வைத்துள்ளனர். அதற்கு அப்பால் வாகனங்கள் செல்ல முடியாது. நடந்துதான் செல்ல வேண்டும். ஓட்டோக்காரர் விடயத்தைக் கூற அவர் போகும்படி கூறி கயிற்றை மேலே இழுத்து தடியை உயர்த்தி அனுமதிக்க ஓட்டோ படகுக்குக் கிட்டச்சென்று எம்மையும் ஏற்றும்படி கையைக் காட்டுகிறார். நாம் முன்னே ஓட கணவர் ஓட்டோ காறருக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு ஓடிவருகிறார். எம்மைக் கண்டுவிட்டு நிறுத்தி எம்மையும் ஏற்றிச் செல்கிறது படகு. படபடப்பு நீங்கி எமக்கு நின்மதி ஏற்படுகிறது. பின் பஸ் பிடிக்க ஓடிப் போனால் இரண்டு பஸ்கள் நிற்கின்றன. ஒன்று சிவப்பு அரச பஸ். மற்றது பச்சை தனியார் பஸ். எதில் ஏறுவது என்று நாம் குழம்பியபடி நிற்க, தனியார் வண்டி வேகமாகப் போவாங்கள். சிவப்பில போங்கோ என்கிறார் ஒருவர்.அதில் போய் ஏற கடைசி சீற்றில் தான் இடம் கிடைக்கிறது. பஸ்ஸும் கடைசி என்பதனால் வேறு எங்கோ இருந்து வரும் படக்குக்காகவும் காத்திருந்து அரை மணி நேரத்தின் பின்னர் புறப்படுகிறது. அவ்வளவு சனம். கால்கள் மிதிபட்டும் நெருக்கியடித்தும் தூங்கி வழிந்தும் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தால் இன்னும் அரை மணித்தியாலத்தில் தான் கடைசி பஸ் வெளிக்கிடும் என்கின்றனர். அதுவரை காத்திருக்க முடியாது என்று ஓட்டோ பிடித்து வீடு வருக்கிறோம். மின்வெட்டு வேறு. வீதிகள் இருண்டு சனநடமாட்டம் அற்று இருக்கு. மனதில் ஒரு பயமும் ஏற்படுகிறதுதான். அடுத்த நாள் காலை எழுந்து குளித்து முடித்து காலை உணவு உண்ண வந்து மேசையில் அமர்கிறோம். இடியப்பம், சம்பல், உருளைக்கிழங்குப் பிரட்டல், சொதி. தற்செயலாக என் விரலைப் பார்த்த நான் அதிசயிக்கிறேன். என் நடுவிரலில் இருபது ஆண்டுகளாக இருந்து வளர்வதும் நான் வெட்டுவதுமாக என்னைத் தொல்லை செய்த சாம்பல் நிறக் காய்(உண்ணி) காணாமல் போயிருந்தது. நாகபூசணி அம்மனின் அருள்தான் என்கிறார் என் மச்சாள்.
  16. உங்களுக்கு நல்லாத் தெரிஞ்சிருக்கு. 😃😀 நாம் அவர்களை ஊக்குவிப்பதற்காகவே அங்கு செல்கிறோம். ஆனால் முதல் முறைநாம் செல்லும்போது இப்படி நடந்தால் பரவாயில்லை. இது சுத்தமில்லை என்றுவிட்டுக் கடந்து போகலாம். ஆனால் முன்னர் இருதடவைகள் சென்றபோது இருந்த சுத்தத்துக்கும் கண்ணியத்துக்கும் இப்ப எத்தனையோ மாற்றம். எத்தனை அடிபட்டால் என்ன??? அவர்களுக்கு வருமானத்துக்கு ஒரு வழி ஏற்படுத்தினால் அதை மனமாய் செய்யவேண்டும் தானே ????? ஏனோதானோ என நடப்பது தவறல்லவோ. சரி சரி 😃
  17. நாம் பிறந்து வளர்ந்த ஊர் தானே. மற்றவர்கள் கூறுவதை வைத்து அங்கு போய் இருக்க முடியாது. ஒரு மூன்று மாதங்களாவது போய் நின்று பாருங்கள். முக்கியமாக உங்கள் மனைவியும் உங்களுடன் வந்து இருந்தால்தான் உங்களால் தொடர்ந்து இருக்க முடியும். உறவுகளைநம்பிப் போக எண்ணாதீர்கள். பார்ப்போம்.
  18. பத்து ஓட்டோவில் போகும்போதே ஒரு பெரிய குளம் தெரிகிறது. அதன் பெயர் ஓட்டோக்காரருக்கே தெரியவில்லை என்கிறார். பெரிதாக சன நடமாட்டமே இல்லாத பகுதியாக இருக்கிறது. அக்கராயன் குளமாக இருக்கலாம் என்கிறார் இவர். நீர் நிறைந்துபோய் காணப்படுகிறது. அதில் இறங்கிக் காலை நனைத்துவிட்டு மேலேவந்து மீண்டும் பயணத்தைத் தொடர்கிறோம். இரணைமடுக் குளத்தையும் பார்க்கப் போவோம் என்று கணவர் கூற அங்கே பெரிதாகத்தண்ணீர் இப்ப இல்லை என்கிறார் ஒட்டுனர். பரவாயில்லை போவோம் என்கிறார். போகும் வழிகளில் எல்லாம் காய்ந்துபோய் நிலம் வரண்டுபோய் இருக்கு. வெப்பமும் அதிகமாக இருக்கு. கிட்டப் போக ஏமாற்றமாகவே இருக்கு. அந்த வெயிலில் இறங்கிக் குடை பிடித்துக்கொண்டு ஏற காவலுக்கு இருப்பவர் இப்ப போக ஏலாது என்கிறார். நாம் போக முடியாதவாறு கயிறு கட்டப்பட்டிருக்கு. எரிச்சலுடன் 2003 வந்தபோது வான் கதவுகள் இருக்கும் இடம்வரை சென்றோமே என்கிறேன். இப்ப போக விடுவதில்லை என்கிறார் மீண்டும். மழை பெய்து வான்பாயும்போது தான் திறந்து விடுவார்கள் பார்க்க என்கிறார். எங்கு பார்த்தாலும் வெயிலின் உக்கிரம். ஒரு ஐந்து ஏக்கர் காணி வாங்கி ஒரு நல்ல பண்ணையை உருவாக்கிக் காட்டவேண்டும் என்கிறேன். இந்த வெயிலைத் தாங்க ஏலாமல் துடிக்கிறாய். அதில திரும்பவும் பண்ணைக் கதையோ என்று சிரிக்கிறார் மனிசன். அம்மா நீங்க ள் இந்த வெயிலுக்குள்ள இருக்க மாட்டியள் என்று மகள் வேறு சிரிக்கிறாள். ஐந்து சதம் காசும் உனக்குத் தரமாட்டேன் என்கிறார். இப்ப எதுவும் கதைக்கக் கூடாது என்று வாயை மூடிக் கொள்கிறேன். ஓட்டோக்காரரிடம் கேட்க தான் ஒரு நல்ல உணவகத்தைக் காட்டுவதாகக் கூறி கொண்டுசென்று விடுகிறார். மரங்கள் நிறைந்திருக்க ஓலையால் வேய்ந்த ஒரு இடமும் வீடுமாய் பார்க்க வெயிலுக்கு இதமாய் இருக்க நன்றி கூறி அவருக்கு எவ்வளவு ஓட்டோவுக்கு என்கிறோம். பிரபா தான் தருவதாகக் கூறினார் என்கிறார். இல்லை நான் பிரபாவிடம் சொல்கிறேன் என்று அவரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு நிமிர வாருங்கள் என்று சிரிதபடியே இருவர் நிற்கின்றனர். நாம் சென்று ஓரிடத்தில் அமர்கிறோம். இளையவர்கள் சேர்ந்து அந்த உணவகத்தை ஆரம்பித்திருப்பதாகக் கூறினார் ஓட்டோக்காரர். சிறிது நேரத்தில் மெனு காட்டைக் கொண்டு வருகிறார் ஒரு 20, 22 மதிக்கத்தக்க பொடியன். மகள் துருவித் துருவி உணவுகள் பற்றிக் கேட்டுவிட நாம் ஓடர் செய்கிறோம். முதலில் பிரெஸ் யூஸ் கொண்டுவரும்படி கூற ஒரு பத்து நிமிடத்தில் அழகிய கண்ணாடிக் குவளைகளில் யூஸ் வருகிறது.சிறிது நேரத்தில் வெறும் தட்டுகளைத் நீருடன் கொண்டுவந்து வைக்க தம்பி ரிசு கொண்டுவாங்கோ என்கிறேன். அம்மா பெடியனை ஏன் பயப்படுத்துகிறீர்கள் என்று சிரிக்கிறாள் மகள். பெடி ரிசு கொண்டுவந்து நீட்ட வாங்கியபடி “தட்டுகளைக் கொண்டுவந்து வைக்கும்போது துடைத்துவிட்டுக் கொண்டுவந்தால் நன்றாக இருக்கும்” என்று சிரித்தபடி கூற ஓம் என்று தலையாட்டிவிட்டு போகிறார். சீ பூட் பிரைட் ரைஸ், மீன் குழம்பு, இறால்ப் பொரியல், மட்டன் புரியாணி என்று எடுத்து கலந்து உண்கிறோம். மிகச் சுவையாகவே இருக்கிறது. வயிறும் மனதும் நிறைந்துபோய் இருக்கிறது. 4400 பில் வர ஐயாயிரம் ரூபாய்களை வைத்துவிட்டு மிகுதியை டிப்சாக வைத்துவிட்டு வருகிறோம். ஆனால் எமக்கு உணவு பரிமாறிய பையனுக்குப் பதிலாக வேறொருவர் வந்து அதை எடுத்துப் போகிறார். தன்னுடன் வளர்ந்தவர்கள் தெரிந்தவர்கள் வீடுகள் இன்னும் இருக்கின்றன. அங்கு சென்றுவிட்டு நாளை செல்வோம் என்கிறார். நீங்கள் தனியாக வந்து உங்களுக்குத் தெரிந்தவர் வீடுகளுக்குச் செல்லுங்கள். நாங்கள் இந்த வெயிலில் வீடுவீடாக வர முடியாது என்று நானும் மகளும் மறுத்துவிட 3.30 ரெயினுக்கு யாழ்ப்பாணம் போகலாம் என முடிவெடுக்கிறோம். நாம் ரெயினை விட்டு இறங்கும்போதே மாலையில் எத்தனைக்கு றெயின் என்று பார்த்துவிட்டு வந்ததனால் அருகில் இருக்கும் தமிழ்க்கவி அக்கா வீட்டிற்குச் சென்றால் அங்கே அவரில்லை. மீண்டும் கோட்டலுக்குச் சென்று ஆடிப்பாடிப் பொதிகளை எடுத்துக்கொண்டு கீழே வந்தால் அந்தப் பெண் வரவேற்பறையில் இருக்கிறார். நாங்கள் போகிறோம் என்றதும் 6000 ரூபாய்கள் என்கிறார். நாங்கள் போன் செய்தபோது 5000 ரூபாய்கள் என்றுதானே சொன்னார் கதைத்தவர் என்றபடி அவருக்குப் போன் செய்ய, அவர் போனை அந்தப் பெண்ணிடம் கொடுக்கும்படிகூறுகிறார். அந்தப் பெண்ணும் கதைத்துவிட்டு 5000 என்கிறார். பணத்தைக் கொடுத்துவிட்டு ஓட்டோ பிடித்து ஸ்டேஷன் வந்து டிக்கட் எடுப்பதற்கு கவுன்டரில் போய் நின்றால் அவர் உள்ளே உண்டுகொண்டிருக்கிறார். எம்மை திரும்பிப் பார்க்கவுமில்லை. எதுவும் சொல்லவுமில்லை. நான் திரும்பி வந்து இருக்கையில் அமர்கிறேன். மீண்டும் ஒரு பதினைந்து நிமிடம் செல்ல சென்று பார்த்தால் அவரைக் காணவில்லை. இரண்டே முக்கால் ஆகிவிட மீண்டும் போனால் அவர் கண்டும் காணாததுபோல் இருக்க excuse me என்று சொல்லத் திரும்பிப் பார்க்கிறார். டிக்கட் எடுக்க வேண்டும் என்கிறேன். இன்னும் நேரம் இருக்கு என்றுவிட்டு தன் அலுவலைப் பார்க்கிறார். கோபத்துடன் நான் திரும்ப வந்து டிக்கற்றைத் தந்தால் நாங்கள் நின்மதியாய் இருப்பமே என்றபடி அமர்கிறேன். பேமென்டில் இரண்டுமூன்று இளஞர்கள் கதிரையிலும் மேசையிலுமிருந்து சிங்களத்தில் கதைத்துச் சிரித்தபடி இருக்கின்றனர். அவர்கள் அங்கு வேலை செய்பவர்களாக இருக்கவேண்டும். தமிழ்ப் பகுதியில் தமிழர்கள் அல்லாதவர் வேலை செய்வது கொடுமையாக இருக்கிறது. நான் கணவரிடம் இதுபற்றிக் கதைத்துக்கொண்டு இருந்தபோது பக்கத்தில் இருந்த ஒருவர் எங்கடை தமிழ்ப் பெடியள் இப்பிடியான வேலையளுக்கு வாறதை விரும்பிறதில்லை. அவங்கள்ளையும் பிழை சொல்ல ஏலாது என்றார். றெயின் வார 15 நிமிடம் இருக்க டிக்கட் வாங்க மீண்டும் போனால் றெயின் ஒன்றரை மணி நேரம் லேட். பரவாயில்லை டிக்கற்றைத் தாருங்கள் என்று கூறி வாங்கிக் கொண்டுவந்து அமர்கிறோம். அதன்பின்தான் அறிவிக்கிறார்கள் பிந்தி றெயின் வரும் என்பதை. குறிப்பு நான் இப்படியே எழுதிக்கொண்டு போனால் எனக்கும் நேரம் போதாது. உங்களுக்கும் சலிப்பாகிவிடும் என்பதால் முக்கியமானவற்றை மட்டும் எழுதலாம் என்று இருக்கிறேன்.
  19. நல்லாக் கொழுவி விடுறியள😂் எல்லாரும் நல்லாக் கதை சொல்லலாம். அனுபவப்பட்டாத்தான் தெரியும். பிரபா எங்களுக்கு புறொபோசல்,பிளான் எல்லாம் கூட எழுதித் தந்தார். 😂
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.