Jump to content

மெசொபொத்தேமியா சுமேரியர்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8447
  • Joined

  • Days Won

    41

Everything posted by மெசொபொத்தேமியா சுமேரியர்

  1. ஒருவர் 40 கிலோ கொண்டு செல்லலாம் என்றதில் இருவருக்கும் 80 கிலோ அனுமதி. அதைவிட 7 கிலோ கையில் கொண்டுபோகலாம். இரு பெரிய சூட்கேஸ் முழுதும் அங்குள்ளவர்களுக்குக் கொடுப்பதற்கான ஆடைகள், சொக்களற், ஓட்ஸ், கப் சூப்பக்கற், பிஸ்கட் இப்படி கண்டதை எல்லாம் வாங்கி நிரப்பி அதிலும் கிலோ கூடி ஒரு நான்கு கிலோ சொக்ளற்றும் மடிக் கணனியும் மகளிடன் திரும்பக் கொடுத்து ஒருவாறு விமானத்தில் ஏறி அமர்ந்தாயிற்று. மிகப் பெரிய விமானத்துள் ஆயிரம் பேருக்கும் அதிகமாக இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். வலது பக்கமாக உணவு கொடுத்து முடிந்த பின் ஒரு மணி நேரத்தின் பின்னரே எமக்கான உணவு வந்து சேர்ந்தது. பக்கத்து இருக்கைக்கு உணவு வரும்போது வயிறும் மனமும் தயாரானாலும் உணவு வராத கடுப்பும் ஏமாற்றமும் சேர்ந்து இன்னும் பசியை அதிகரிக்க நன்றி கூடச் சொல்லாமல் உணவை வாங்கி உண்டு கோபத்தைக் குறைத்துக்கொண்டேன். முன்னர் எமிரேட்ஸின் கவனிப்பு மிகையாகவும் உணவும் தரமாக இருக்கும். இம்முறை மிகுந்த ஏமாற்றம்தான். இம்முறை எனது தம்பியும் எம்முடன் வந்திருந்தான். அவன் 39 ஆண்டுகளாக தாயகம் செல்லவில்லை. முன்னர் ஆனையிறவில் கைதாகி ஒருவாரம் சிறையில் இருந்தவன். தடைசெய்யப்பட்ட பட்டியலில் அப்பாவின் பெயர் போட்டபோது இலங்கை பாதுகாப்புப் பிரிவினரின் இணையத்தளத்தில் அவனும் நானும் லண்டனில் இருக்கிறோம் என்பது வரை பெயர் விபரங்களுடன் போட்டிருந்தார்கள். அதைப் பார்த்ததில் இருந்து அந்தப் பக்கமே போகமாட்டேன் என்று இருந்தவனை, நான் உன்னோடு வாறன். எது நடந்தாலும் நான் பார்த்துக் கொள்ளுவன் என்னும் நம்பிக்கையில் என்னோடு வந்திருந்தான். விமானத்தை விட்டு இறங்கி ஒன்லைன் விசாப் படிவத்தைக் காட்டி எனக்கும் கணவருக்கும் ஒருமாத விசா வழங்கியபின்னும் எமக்கு முன்னால் போனவனை நிறுத்திவைத்துவிட்டு உள்ளே ஒரு அறைக்கு அழைத்துப் போக நானும் கணவரும் சேர்ந்தே போக, எம்மை இருக்கச் சொல்லிவிட்டு தம்பியை மட்டும் அழைத்து அவனின் பாஸ்ட்டை திரும்பத்திரும்பப் பார்ப்பதும் வெளியே போவதும் வருவதுமாக இருக்க, எதனால் பிந்துகிறது என்கிறேன். “இவர் 39 ஆண்டுகளாக இந்தப் பக்கம் வரவில்லை. இவரின் பழைய கடவுச்சீட்டு இருக்கிறதா” அது அவனிடம் இல்லை என்றாலும் வெளியே காட்டிக்கொள்ளாது “எதற்காக நாம் பழைய கடவுச் சீட்டை கொண்டுவரப் போகிறோம்” என்கிறேன். கணவர் காதுக்குள் கொஞ்சம் நைசா கதை என்கிறார். “அது இல்லாமல் இவர் எப்பிடி இந்த நாட்டை விட்டுப் போனார் என்று எங்களுக்குத் தெரியணும் இல்லையா. அதோட இத்தனைகாலம் ஏன் வரவில்லை” என்கிறார். உடனே நான் “எங்கள் குடும்பத்தவர் எல்லோருமே வெளிநாட்டில் தான். அதனால் தம்பி வரவில்லை. இம்முறை எமது ஊரையும் நாட்டையும் பார்க்கத்தான் வந்தவன்” என்கிறேன். “இந்த நாட்டை விட்டுப் போறவைக்கு இங்க பதிவிருக்கோணும்” “இதுக்கு முதல் நிறையப்பேர் பதிவே இல்லாமல் வந்திருக்கினமே” “அது முந்தி. இப்ப கட்டாயம் பதிவு இருக்கவேணும்” நான் எதுவும் பேசாமல் இருக்கிறேன். ஒரு ஐந்து நிமிடம் அவர் கணனியைப் பார்த்துக்கொண்டு இருக்க எனக்குப் பொறுமை போகிறது. “எங்களை அழைத்துப் போக வந்து வெளியே காத்துக்கொண்டிருக்கிறார்கள்” “இவரை நாங்கள் வடிவா விசாரிக்க வேணும். ஒரு ஐந்து ஆறு மணித்தியாலம் செல்லும்” “சரி என்ன செய்யலாம் சொல்லுங்கள்” நான் இறங்கிப் போய் கேட்கிறேன். அவமானமாக இருந்தாலும் வேறு வழி தெரியவில்லை. “கொஞ்சம் பொறுங்க” என்றுவிட்டு யாருக்கோ போன் செய்ய ஒருவன் வருகிறான். பார்த்தால் தமிழன் போல இருந்தாலும் ஆங்கிலத்தில் கதைக்கிறான். இதில யார் கூட கதைக்கிறது என்கிறான். என்னோடு கதையுங்கள் என்று நான் கூற “வாங்க” என்று தமிழில் சொல்ல நான் எழுந்து செல்கிறேன். அறைக்கு வெளியே வந்ததும் கொஞ்சம் பணம் கொடுத்தா எல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார் என்கிறான். நாங்கள் லீகலா விசா எடுத்துத்தானே வந்தது என்கிறேன். “எவ்வளவு வச்சிருக்கிறீங்க” என்கிறான். நாம் பணம் ஒன்றும் கொண்டுவரவில்லை. பாங்க் காட் தான் இருக்கு என்கிறேன். “ஒரு நாற்பது எடுத்துத் தாங்க” “எங்கே எடுப்பது? “நான் கூட்டீற்றுப் போறன்” நான் கணவரிடம் சென்று காட்டை எடுத்துக்கொண்டு வர, என்னைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்று வெளியே இருக்கும் ATM இல் பணம் எடுத்தபின் உள்ளே அழைத்து வர அறைக்குள் போக முன்னரே பணத்தை வாங்கிக்கொண்டு உள்ளே சென்று அவரிடம் கூற அவர் உடனே தம்பியின் கடவுச் சீட்டை அவனிடம் கொடுக்க அவனே எம்மை அழைத்துச் சென்று தம்பிக்கு விசாவைக் குத்தி வெளியே விடுகிறான். கோபம் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலையை எண்ணி மனதை அடக்கிக்கொண்டு வெளியே வர வேறு வழியில்லை என்று மனம் தெளிகிறது. எமக்காக வந்த வான் ஓட்டுனர் வெளியே காத்திருக்க மனம் நிம்மதியடைகிறது. போன இரண்டு நாட்களில் நெருங்கிய உறவினர்களிடம் சென்று பின் எமது வீட்டை சுற்றி கமரா பூட்டி, எனது செடிகளுக்கு சொட்டுநீர் பாசனக் குழாய்கள் பூட்டி முடிய ஒன்றரை வாரங்கள் போய்விட, அதன்பின்னர்தான் இந்தியா போனால் அந்த வங்கி அலுவலையும் ஒருக்காப் பார்க்கலாம் என்று நான் நினைவுபடுத்த, சரி நானும் வாறன். எனக்கும் சேர்த்து டிக்கற் போடு என்று மனிசன் சொல்ல எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகின்றது. பலாலியால் போவோமா என்று மனிசன் கேட்க, கொழும்பு போய் போவதே அதிக கிலோ கொண்டு வரலாம் என்கிறேன். பாலாலியால் போனவர்கள் உளவு இயந்திரத்தில் போனதுபோல் இருந்ததாகக் கூறியதும் ஒரு காரணம். அடுத்த நாளே விமானச் சீட்டுப் பெற்றுக்கொண்டதும் அடுத்த மூன்று நாட்களில் சென்னை செல்ல ஆயத்தம் ஆயாச்சு. ஒருவருக்கு போகவர 69 ஆயிரம் ரூபாய்கள். ஒன்லைனில் சென்னை T நகரில் ஒரு நாளுக்கு 3000 இந்திய ரூபாய்களுக்கு கோட்டல் புக் செய்து ஒருவாறு போய் இறங்கியாச்சு. அந்தக் கோட்டலுக்கு அண்மையில் சில உணவகங்களும் இருந்ததில் மூன்று நேரமும் மிகச் சுவையான உணவுகள் உண்டுவிட்டு கடைகளை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு ஒன்றுக்கு இரண்டு தேநீரும் குடித்துவிட்டு மனநிறைவுடன் இரவு ஏசியைப் போட்டுவிட்டுப் படுத்தால், சிறிது நேரத்தில் கால் கைகளில் கடி. மூட்டைப் பூச்சியாக்குமென்று துடித்துப் பதைத்து எழுந்தால் சில நுளம்புகள் பறக்கின்றன. இரவு பத்துமணி. இந்த நேரத்தில் எங்கே வேறு இடம் மாறுவது? ஏசியைக் கூட்டி விடுறன். உது மொத்தப் போர்வை தானே. இழுத்துப் போர்த்திக்கொண்டு படு என்கிறார் கணவர். பிரையாணக் களைப்பில் ஒருவாறு தூங்கி காலை எழுந்து பல் விளக்கக் குளியலறைக்குச் சென்றால் கண்ணாடியில் தெரிந்த என் முகத்தைப் பார்த்து நானே பயந்துவிட்டேன்.
  2. நன்றி கருத்துக்கும் வருகைக்கும். நல்ல ஆசைதான் 😀 மிக்க நன்றி அண்ணா நன்றி புங்கை உண்மைதான் அண்ணா. மேலதிக பொ திக்கு 150 பவுண்டஸ். அதிலும் ரிக்கற்றுக்கு 100 பவுண்ட்ஸ் கூடக் குடுக்கலாம். எந்த விமானத்திலும் உணவு இப்ப நன்றாகவே இல்லை
  3. அரபு நாடுகளில் அரபுக்காரர்கள் செய்யும் பாலியல் வன்கொடுமைகள் மறைக்கப்படுகின்றன. வெளிநாட்டு அப்பாவிகள் தான் மாட்டுப்பட்டு கல்லடி படுகிறார்கள். இதுபற்றி எழுதினால் அது நீட்ட கட்டுரையாகிவிடும்
  4. நல்லாத்தான் நொந்துபோனியள். நகைச்சுவைக் கவிதை நன்றாகவே இருக்கு.
  5. நான் இந்தியா செல்வது இது ஐந்தாவது தடவை. முதல் தடவை சென்றது என் பதினைந்தாவது வயதில் என் அம்மா மற்றும் தம்பியுடன். இணுவிலில் இருந்த சண்முகலிங்கம் என்பவர் ஆட்களை குழுவாக இந்தியாவின் பல தலங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் கூட்டிச் செல்பவர். அந்தமுறை என் அம்மா கற்பித்த ஆரம்பப் பள்ளியின் ஆசிரியர்கள் சேர்ந்து ஒரு பத்துப்பேர் சேர்ந்து இந்தியச் சுற்றுலாவுக்குத் திட்டமிட்டிருந்தனர். என் வயதின் காரணமாக என்னைத் தனியே விட்டுச் செல்ல என் அம்மா விரும்பவில்லை. அதனால் எனக்கு அடித்தது அதிட்டம். எனக்குப் பின் பிறந்த ஒரு தம்பியையும் இரு தங்கைகளையும் அம்மாவின் பெற்றோர் சகோதரிகளுடன் விட்டுவிட்டு ஆறே வயதான என் கடைக் குட்டித் தம்பியையும் எம்மோடு அழைத்து வந்திருந்தார். முதலில் ஊரில் இருந்து கிளம்பி தலை மன்னார் சென்று அங்கிருந்து கப்பலில் இராமேஸ்வரம் சென்று அங்கிருந்து தொடருந்தில் பயணம் எது பின்னர் எமக்காக ஒழுங்கு செய்திருந்த மகிழுந்தில் ஒவ்வொரு ஊராகச் சென்று மீண்டும் ஒரு மாதத்தின் பின்னர் ஊர் வந்து சேர்ந்தோம். முதலாவது அந்தக் கப்பல் பயணமே எனக்கு எத்தனையோ அனுபவங்களையும் மகிழ்ச்யையும் தந்தது என்றாலும் அதுபற்றி எழுதும் ஆர்வம் எனக்கு இதுவரை எழுந்ததில்லை. அதன் பின் பதினாறு ஆண்டுகளின் பின்னர் திருமணமாகி கணவர் பிள்ளைகளுடன் சென்றபோது என் தந்தையும் கணவரின் பெற்றோரும் எம்முடன் வந்தனர். அப்போது என் நண்பியின் தமக்கை போர் சூழல் காரணமாக இந்தியா சென்று அங்கு ஒரு சொந்த வீட்டையும் கட்டி மேல்மாடியில் உள்ள மூன்று அறைகளை இந்தியாவுக்கு வருபவர்களுக்கு வாடகைக்கு விடுவார். எமக்கும் அது பாதுகாப்பு என்று கருதியதால் நாமும் மகிழ்வாகவும் நிம்மதியுடனும் அங்கு இருக்க முடிந்தது. அடுத்த நாளே அவரிடம் கதைத்தபோது அவரே ஒரு டாடா சுமோ ஜீப் ஒன்றை எங்களுக்காக ஒழுங்குசெய்து தந்தார். ஒருமாதம் மீண்டும் கோவில்கள் அரண்மனைகள் முக்கிய இடங்கள் என்று அதில் திரிந்தபோதும் பார்த்த இடங்களை மீண்டும் பார்த்தபோதும் எனக்குச் சலிக்கவில்லை. ஆனால் ஜீப்புக்கு செலுத்திய தொகைதான் தலைசுற்ற வைத்தது. ஆனாலும் அதுபற்றி என் கணவரைத் தவிர யாரும் கவலைப்படவில்லை. ஆனாலும் மீண்டும் இனி இந்தியா போவதே இல்லை என்று என் கணவர் கூற எனக்கோ மீண்டும் போய் இந்தியா முழுவது திரிந்துவிட்டு வர வேண்டும் என்னும் அவா கூடியது. எல்லோரும் இருந்து இதுபற்றிக் கதைத்துக்கொண்டிருந்தபோது அந்த எம்மூர் அக்கா “நீர் இங்கை ஒரு பாங்க் ஏக்கவுண்ட் திறந்துபோட்டுப் போனால் வருஷா வருஷம் கொஞ்சக் காசை அனுப்பினால் உமக்கு ஊர் சூத்திப் பாக்க காசும் சேர்ந்திடும்” என்று சொல்ல எனக்கும் அது நல்ல யோசனையாகத் தெரிய ஒருவாறு கணவரை சம்மதிக்க வைத்து வங்கிக் கணக்கொன்றை எங்கள் இருவரின் பெயரிலும் திறந்தாச்சு. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு ஐநூறு டொச் மாக்குகள் மட்டும் அனுப்பி அதன்பின் 2001 இல் கணவரின் தம்பியின் திருமணத்துக்குச் சென்றபோது இன்னும் ஒரு ஆயிரம் என்று போட்டாலும் மனிசன் மட்டும் எங்கட நாடும் இல்லை. உன்ர விசர் கதையைக் கேட்டு எக்கவுண்டில காசைப் போட்டாச்சு. திரும்பக் கிடைக்குமோ இல்லையோ என்று எப்பவும் எதிர்மறையாக ஏச, கடைசிவரையும் போகாது என்று மனிசனுக்குக் கூறினாலும் எனக்கும் ஒரு வீதப் பயம் இருந்தது என்னவோ உண்மை. அதன்பின் 2014 இல் என் நூல் வெளியீட்டுக்குச் சென்றபோது மனிசன் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும் கேளாமல் இன்னும் ஒரு இரண்டாயிரம் பவுண்சுகளையும் கொண்டுசென்று முன்னர் போட்டவைகள் எல்லாவற்றையும் சேர்த்து மூன்று ஆண்டுகள் நிரந்தர வாய்ப்பில் இட்டுவிட்டு வந்தாச்சு. மூன்று ஆண்டுகளின் பின்னர் தானாகவே புதுப்பிக்கப்படும். அப்போது உங்களுக்குக் கடிதம் மூலம் அறியத் தருவோம் என்றதுடன் சரி. எந்தக் கடிதமும் வரவில்லை. இப்ப மனிசன் எதுவும் சொல்லாமலே எனக்குப் பயம் எழ, வங்கி முகாமையாளருடன் தொலைபேசியில் கதைக்க அவரும் நீங்கள் பயம் கொள்ள வேண்டாம். உங்களுக்கு நான் மெயில் ஒன்று போடுகிறேன் என்று சொன்ன கையோடு அதுவும் வந்து சேர, அதன் பின்தான் எனக்கு நிம்மதி வந்தது. அது நடந்து படிக்கட்டு ஆண்டுகளாகியும் மீண்டும் இந்தியா செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. ஏனெனில் என் கணவருக்கு இந்தியா என்றாலே வேப்பங்காயாகவே இருந்ததும் பிள்ளைகள் கல்வி, திருமணம் என்னும் சுழலும் இந்தியாவைப் பற்றி நினைக்கவே நேரம் இல்லை என்றானது. கடந்த ஆண்டு நான் ஆறு மாதங்கள் இலங்கை சென்ற போது எனது சுவிஸில் இருக்கும் நண்பி ஒருத்தியும் நானும் உன்னுடன் வர ப்போகிறேன் என்றதும் உடனே எனக்கு அவளுடன் இந்தியா செல்ல வேண்டும் என்னும் அவா எழ அவளிடம் கேட்கிறேன். அவள் இதுவரை இந்தியா சென்றதில்லை. இனிச் செல்லும் ஆர்வமும் தனக்கு இல்லை என்று கூற சரி இலங்கையிலாவது இருவரும் சேர்ந்து திரிந்து இடங்கள் பார்க்கலாம் என்றதுடன் நான் எங்கெங்கு செல்லலாம் ஆவலுடன் பட்டியலிட்டயபடி காத்திருக்க, அவளோ கடைசி நேரத்தில் தான் தனிய இலங்கை வருவது தன் கணவருக்குப் பிடிக்கவில்லை என்று கூறி வாராமலே விட்டது வேறு கதை. இம்முறை என் வளவில் மேலதிக மரக்கன்றுகள், செடி கொடிகள் எல்லாம் வைப்பதற்கு ஏற்ற காலம் ஒக்டோபர் என்பதால் நான் விமானச்சீட்டு முதலே எடுத்து வைத்தபடி காத்திருக்க, வாங்கிய வீட்டையும் வளவையும் நான் வடிவாப் பார்க்கவே இல்லை. நானும் உன்னுடன் வாறன் என்று மனிசன் சொல்ல சரி என்று அவருக்கும் பயணச் சீட்டு எடுக்க வெளிக்கிட இப்ப நான் வர ஏலாது. டிசம்பர் அல்லது தை மாதம் போவம் என்று கூற நான் ஏற்கனவே ஒக்டோபருக்கு எடுத்திட்டனே என்கிறேன். பரவாயில்லை மாத்து என்று சொல்ல, டிசம்பரில் விலை ஆயிரம் தாண்டியது. சரி தை மாதம் போடுவோம் என்று இணையத்தில் தேடினால் எல்லா 23-30 kg மட்டுமே கொண்டுபோகலாம் என்று காட்ட 40kg பொதிகள் கொண்டுபோகக் கூடிய விமானம் எமிரேட்ஸ் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இரண்டும் தான். அதில் என் தேர்வு எமிரேட்ஸ் தான். ஏனெனில் உணவும் கவனிப்பும் நன்றாக இருக்கும் என நான் எண்ணினேன். எல்லாம் எதிர்மாறாக இருந்தது வேறுகதை. வரும்
  6. வரவர பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்தவண்ணமே இருக்கின்றன. இவர்களுக்கு பொதுவெளியில் வைத்து கல்லால் எறிந்து கொள்ளும் தண்டனை கொடுத்தால் மாத்திரம் தான் மற்றவர்கள் கொஞ்சம் பயப்படுவார்கள்.
  7. வரவுக்குநன்றி புத்தன். இங்கும் பலர் கடைப்பிடிப்பதில்லை. என் பக்கத்து வீட்டுக்காரர் போல சிலரே பிரச்சனை ஆக்குவது. வாடைக்காய் வீட்டில் இருப்போர் இதையெல்லாம் கவனித்து வீட்டு உரிமையாளருக்குச் சொல்லப் போவதில்லை. ஒரு ஆரை மீற்றர் கூடினாலும் பக்கத்து வீடுக்கு ஒரு பாதிப்பும் இல்லை.
  8. நூலை நேரில் பார்த்தால் மட்டும்தான் என்னால் மிகுதியைக் கூற முடியும். பழுப்பு நிறத்தில் வரவேண்டிய அட்டை வேறு நிறத்தில் வந்துவிட்டனர். அதனால் நானும் போடவேண்டியதாப் போச்சு. நூல் சரியான நிறத்தில் தான் வரும் என்று அவர் சொன்னாலும் நேரில் பார்த்தால்தான் தெரியும். மூணா அண்ணா என் வேண்டுகோளுக்கு இணங்க சில மாற்றங்களைச் செய்தார். அதனாலத்தான் அவரதுபோல் தெரியவில்லை. மிக்க நன்றி அண்ணா இதில் சுமே என்னும் பெயரே எனக்குப் பிடித்தமானது .😀
  9. நன்றி அண்ணா வாராதவர் என்பதிவுக்கு வந்துள்ளீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் மகிழ்ச்சியுடன் நன்றிகள் எம்மூரில் தான் செய்யும் எண்ணம் மேரியா??? அது யார் ?? வருகைக்கு நன்றி உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி
  10. நன்றி நன்றி. நான் நினைத்தேன் கூகிள் மப்பில் பார்த்துத்தான் கூறுகிறீர்களோ என்று
  11. நான்தான் தூக்கச் சொன்னேன். நான் போடமுதல் நீங்கள் பக்கத்து வீட்டில் ஒட்டினால் 😀வருகைக்கு நன்றி. கனடாவில் எதுக்கு வெளியீடு??? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா
  12. இருக்கலாம். ஆனால் நான் இன்னும் காணேல்லை😀 இப்பிடியெல்லாமா நடக்குது. அப்ப என் கதை பரவாயில்லை. 😀 விஷயம் தெரியாமல் உங்கடை ஏரியாவைப் போட்டிட்😀டனோ ??
  13. அட அப்பா நாங்கள் பரவாயில்லை. நாங்கள் எப்பவும் சுடுவதுதான். 😀 கதை எழுத நேரம் இல்லை😀 நான் வாங்கியது 99 இல். ஆனால் வீடு இது அல்ல 😂 இரண்டு பேர் தான் இறந்தது. மிகுதி நான்குபேர் இன்னும் இருக்கினம். எனக்கே முன்னர் ஆனி வைத்த கிழடு நடும் இருக்கு. ஒருநாள் நீ தான் ஆணி வைத்தது . இனி என் கார் டயருக்கு ஏதும் நடந்தால் போலீசுக்குப் போவேன் என கூறிவிட்டு வந்தபின் காற்றே போவதில்லை.
  14. எனது மூன்றாவது சிறுகதைத் தொகுதி தயாராகிறது. அட்டைப்படத்தை வடிவமைத்துத் தந்தவர் மூணா அண்ணா. அவருக்கு நன்றி. நிறம் தான் சிறிது மாறிவிட்டது. என்னுரை பத்து ஆண்டுகளின் முன்னர் என் முதலாவது சிறுகதைத்தொகுதியும் நான்கு ஆண்டுகளின் முன் என் இரண்டாவது சிறுகதைத்தொகுதியும் வெளிவந்தபின் ஐந்து ஆண்டு ஆண்டுகால இடைவெளியில் மூன்றாவது தொகுதி வெளிவருகிறது. பெண்களால் தொடர்ந்து எழுத முடியாதவாறு பல தடைகள் குடும்பச் சூழலில் இருந்தாலும் அதையும் தாண்டி நான் காண்பவற்றை, கேட்பவற்றை எழுதும் ஆற்றல் எனக்குள்ளும் இருக்கின்றது. யாரின் புகழ்தலுக்காகவும் காத்திருக்காது என்னால் முடிந்ததைத் துணிவுடன் எழுதுவதும் எனக்கு நிறைவைத் தருகிறது. முக்கியமாய் யாழ்களமே எனது எழுத்துக்களுக்கு ஊக்கியாய் இன்றுவரை இருக்கின்றது. அதுமட்டுமன்றி என் கதைகளை விமர்சிக்கும் அத்தனை யாழ்கள உறவுகளுக்கும் நன்றிகூற நான் என்றும் கடமைப்பட்டவள். சரியோ தவறோ எம் நன்மைக்காய் விடமின்றி விமர்சிப்பவர்களின் விமர்சனங்களே என் எழுத்துக்களை மெருக்கேற்றிக் கொண்டிருக்கும். நான் கேட்டவுடன் நூல் விமர்சனம் ஒன்றை எழுதித் தந்த காரைக்கவி கந்தையா பத்தமநாதன் அவர்களுக்கும், அணிந்துரையை மிகக் குறுகிய காலத்தில் எழுதித் தந்த பேராசிரியர் வல்லிபுரம் மகேஸ்வரன் அவர்களுக்கும், அட்டைப்படத்தை வடிவமைத்துத் தந்த யாழ்கள உறவான மூணா எனப்படும் ஆள்வாப்பிள்ளை செல்வகுமாரன் அண்ணாவுக்கும் நான் என்றும் கடமைப்பட்டவள். என்னை எழுதுவதர்க்குத் தூண்டியதே சுமேரிய வரலாறு பற்றிய தூண்டாலே. அதுபற்றிய அடிப்படை அறிவை என்னுள் தூவிய மறைந்த நாதன் சிவகணேசன் அண்ணா அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம். அணிந்துரை தமிழ் பெண் எழுத்தாளர்களுள் புலம்பெயர்ந்து வாழுகின்ற நிவேதா உதயன் கணிப்புக்குள்ளான எழுத்தாளராகஅறியப்படுபவர்.| அவருடைய தொடர் எழுத்துக்களின் அறுவடையாக“மனதும் இடம்பெயரும்” என்ற மகுடத்துடன் பத்து சிறுகதைகள் அடங்கிய தொகுதி வெளிவருகின்றது.ஈழத்துத் தமிழ் புனைவு வெளி புலம் பெயர்ந்த எழுத்தாளர்களினது பங்களிப்பால் சற்று அகலக்கால் வைத்தது என்பதை எவரும் மறுபதற்கில்லை. ஈழத்துக் குடாநாடு, இலங்கைத் தீவு என்ற நிலவியல் எல்லைகளுக்குள் நீண்ட காலம் பயணம் செய்த புனைவு வெளி, ஈழத் தமிழர்களின் புலப்பெயர்வு என்ற செயற்பாட்டாலும் அதன் வழி உருவான கருத்துருவாக்கங்களாலும் 'புலம்பெயர் தமிழ் இலக்கியம்" என்ற அந்தஸ்த்தைப் பெற்றது. அதன் பேறாக, நாடுகளும், இயற்கையும் தட்ப வெப்பநிலைகளும், வாழ்வியலும் நேர் மறையாகவும் எதிர்மறையாகவும் நமது மனக்கண்முன் விரிந்தன. 'உலகமயமாதல்" என்ற கருத்தியல் அல்லது 'சுருங்கிய உலகு" என்ற கருத்தியலுக்கு அமைவாக எல்லாம் தான் எமது காலடியில் வந்து குவிந்தன. இதனால் புளகாங்கிதங்களும் கூடவே துயரங்களும் நம்மிடையே நிரம்பி வழிந்தன. மேற்குறித்த கருத்து நிலைகள் ஓரளவிற்குத் தேய்மானங்கண்டுள்ள நிலையில் தற்போது புலம்பெயர் தமிழ் மக்களின் தனியாள் அனுபவங்களும் கலாசாரச் சிதைவுகளும் வாழ்வியற் கோலங்களும் அரசல் புரசலாக புனைவுகளில் வெளிவரத் தொடங்கியமையின் வெளிப்பாடாகவே நிவேதாவின் இந்தத் தொகுதியில் அடங்கிய கதைகளிலும் பெரும்பாலும் முகங் காட்டுவதை இனங்காண முடிகின்றது. நமது பாரம்பரியமான பண்பாட்டில் நம் மூத்தோர் கடவுட்குச் சமமாக வைத்தென்னைப் படுபவர்கள், தாய், தந்தை, பேரன், பெயர்த்தி என அந்தத் தொகுதி நீளும் அந்தப் பெரியோரும் நம்மையும் நம் வாரிசுகளையும் “எம்மில் தம்மைக் கண்டு” மகிழ்வு கொள்பவர்கள்| நம் குடும்ப உறவுகளின் 'எல்லைக்கால்"களா நிற்பவர்கள்| அவர்களே அந்த எல்லைகளை மீறினால்… என்ற கருவை அடியாகக் கொண்ட 'தண்டனை" என்ற கதை வாசகரைப் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கக் கூடியது. நமது கலாசார விழுமியங்களைக் கேள்விக் குள்ளாக்கக் கூடியது. எனினும் தன் மனைவியை மத்திய கிழக்கிற்கு அனுப்பி விட்டு தன் சொந்தமகளையே வன்புணர்வு செய்யும் தந்தைகள் நிறைந்த உலகிற்தானே நாமும் வாழுகிறோம் என்று இதனால் சமாதானங் கொள்வதா அல்லது சிக்மன்ட் பிறைட்டின் உளவியற் கோட்பாட்டை முன்நிறுத்திக் சமாதானங்கொள்வதா அல்லது ஏங்கல்ஸ் குறிப்பிடும் 'புனசவா" குடும்பம் என்ற கருத்தியலில் வரலாற்றைப் பின்நோக்கிப் பார்ப்பதா என்ற வினாக்கள் இதனூடாக மேற்கிளம்புகின்றன. இவ்வாறான கருவை வெளிப்படுத்துவதற்கு 'அயல் நோக்காத்துணிவு" வேண்டும். நிவேதாவிடம் அது நிறையவே உண்டு. அவர் பாரம்பரியத்தைத் தாங்கிப்பிடிக்கும் தூணாக நிற்க விரும்பவில்லை. 'தானம் நீ", 'மன வாழ்வு", 'மனக்குரங்கு" ஆகிய மூன்று கதைகளின் கருவை ஒரே நேர்கோட்டில் வைத்துப் பார்க்க முடிகிறது. பெண்களை ஆண்களே பெரும்பாலும் ஏமாற்றுபவர்கள் என்ற பெரும்பான்மையான மதிப்பீடுகளை மறுதலித்து பெண்களும் வாய்ப்புக்கிடைத்தால் ஏமாற்றத் தயங்கார் என்ற கருத்தினை இக் கதைகளூடாக முன்வைக்கிறார் நிவேதா. தன் கல்லூரிக் காலத்தில் காதல் செய்த செந்தூரனுடன் சேர்ந்து வாழ்வதற்காக, தன்னைக் கட்டியவனுடன் போலிவாழ்வு வாழ்ந்து காதலனைக் கரம்பிடிக்கத் துடித்த நயனி, தன்னிலும் வயது கூடிய வெளிநாட்டு மணமகனைக் கரம்பிடித்து விட்டு வங்கியில் தன்னுடன் பணியாற்றும் வாகீசனுடன் வாழத்துடிக்கும் ஜீவா,கரம்பிடித்த காதலனும் கணவனுமான ரவியிடமிருந்து விவாகரத்துப் பெற்று மூன்று பிள்ளைகளுடன் கஷ்டஜீவனம் செய்தவருக்கு ஆபத்பாந்தவனாக வந்து கை கொடுத்து மறுவாழ்வு தந்து கடனாவுக்கு கூட்டி வந்து வாழவு தந்தவனை ஏமாற்றிய 'மனக்குரங்கு" கதையின் நாயகி" என இவர்கள் எல்லாம் ஏமாற்றுக்காரிகளாக நம்பிக்கைத் துரோகிகளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். ஒருவேளை தான் நினைத்தவனை அடைதல் பெண் களுக்கான சுதந்திரம் என்ற கருத்தியலை இவ்விடத்தில் நிலைநாட்ட நிவேதா முனைகிறாரோ என்று எண்ணத்தோன்றினும் (ஏனெனில் அவரது முந்தைய கதைகள் அவ்வாறானவை) கதைகளின் முடிவுகளின் படி, நம்பி நடந்த ஆண் மக்களை ஏமாற்றிய பெண்களின் கதைகளாகவே அவற்றைக் கருத முடிகிறது. இதில் சித்திரிக்கப்பட்டுள்ள ஆண்கள் மிகவும் கண்ணியமானவர்களாகவே உள்ளனர். நிவேதாவின் இந்த மனமாற்றம் அல்லது கருத்தியல் புலம்பெயர் வாழ்வில் பெண்களின் நத்தைக்கோலங்களின் அபத்தங்களால் ஏற்பட்ட மன உளைச்சல்தான் காரணமாக அல்லது பிழைவிடுபவர் எல்லாத் தரப்பிலுமஉளர் என்ற சமாதானமா? எதுவெனப் புரியவில்லை. 'மருந்தே இல்லா நோய்" என்ற கதை இன்னோர் வகைமையான பெண்ணைக் கண்முன் நிறுத்துகிறது. பிரான்ஸில் பிறந்த மது என்ற பெண், புலம் பெயர் நாடுகளில் இன்னமும் வலுப்பெற்றுக் கொண்டிருக்கின்ற சாதீயத் தடைகளைத் தாண்டி, பெற்றோர் திர்ப்பையும் மீறிக் காதலித்த நவீன் என்பவனைக் கரம்பிடித்து இரு குழந்தைகள் பெற்ற பின்பும் தன்கணவன் வேறோர் பெண்ணுடன் காதலுறவு கொண்டுள்ளான் என்பதை அறிந்த மது அவனைத் தீவிரமாகக் கண்காணித்து கையும் மெய்யுமாக பிடித்து அவனிடமிருந்து பிரிந்து விடுவதாக இக்கதை அமைந்துள்ளது. தன் கணவன் எல்லை மீறுகிறான் என்பதை நிதானத்துடன் செல்லிடப்பேசியின்தொழில் நுட்பத்துடன் கண்காணித்து உண்மையை வெளிக்கொணரும் திறன் வாய்ந்த வளாக அவள் உருவாக்கப்பட்டுள்ளாள். ஒரு வகையில் இரு ஒரு புலனாய்வு சார்ந்த தன்மையுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனை வேறோர் வகையில் 'உளவியல் நாடகம்" என்றும் கட்டமைக்கலாம். குற்றமிழைத்த ஒருவரை அவர் சந்தேகப்படும்படியாக நடக்காமல் அவருடன் இயல்பாகப் பழகி, அதனூடாகக் கண்காணிப்பு அல்லது புலனாய்வை நிகழ்த்தி இறுதியில் இக்கட்டான ஒரு சூழலில் சிக்க வைத்து குற்றவாளியின் வாயிலாகவே குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்வதை உளவியல் நாடகம் (Phலஉhழ னுசயஅய) என்பர். உளவியலாளர் அந்த முறைமைதான் இக்கதையிலும் நடந்தேறியுள்ளது. இன்னோர் வகையில் அந்தப் பெண்ணின் ஆளுமையும் தெரிய வருகிறது. தன் கணவன் தனக்குத் துரோகம் செய்வதை எந்தப் பெண்ணால் தான் பொறுத்துக்கொள்ளமுடியும் என்ற பொதுவிதியைத் தாண்டி, கல்லானாலும் கணவன் என்ற கீழைத்தேய நியமங்களைக் கடந்து, மூக்குச் சிந்தி அழுது ஆர்ப்பரிக்காது அப்பெண் நடந்து கொண்டவிதம் அவளுக்கு மேலைத்தேய வாழ்க்கை முறை தந்த துணிவும், தன்னம்பிக்கையம் தான் என எண்ணத் தோன்றியது. ஓரினச் சேர்க்கையாளர்கள் தாம் விரும்பியவாறு சேர்ந்து வாழமுடியும் என்ற மேலைத்தேய அனுமதியை அனுசரித்துச் செல்கிறது. 'நான் வசந்தன்' என்ற கதை. கதையின் ஓட்டம் சராசரியாக இருந்தாலும் கதையின் முடிவில் நிவேதா எழுதிய உரையாடல் அந்த உறவின் நன்மையை அல்லது உணர்ச்சியை புரிந்துகொள் வைக்கிறது. அழைப்பு மணி அடிக்க அகிலுக்கு இதே வேலையாய்ப் போச்சு என்று மனதுக்குள் திட்டியபடி கதவைத் திறக்கிறேன். “நான் எங்காவது போயிருந்தால் என்ன செய்வாய்? திறப்பை மறக்காமல் எடுத்துக் கொண்டு போ என்று எத்தனை தடவை சொன்னாலும் கேட்கமாட்டியா?” “நான் எப்ப வருவேன் என்று நீ எனக்காகக் காத்திருப்பாய் என்று எனக்குத் தெரியுமே” என்றபடி வசந்தனை ஆசை தீர இறுக அணைக்கிறான் அகில். இதில் தெரியவருவது இரண்டு ஆத்மாக்களின் ஆழமான அன்பு தான். அது அபத்தமல்ல என்பதை நிவேதா நிறுவ முனைகிறார். இந்தத் தொகுதியில் உள்ள ஏனைய கதைகள் நிவேதாவின் அனுபவம் சார்ந்தவை. ஆயின் “அவனும் அவர்களும்” என்ற கதை நிவேதாவிற்கு உருவச் செழுமையுடனும் கதை சொல்ல முடியும் என்பதற்குப் பதந் சோறாக அமைகிறது. மரணமடைந்தவரே கதை சொல்லியாக மாறி, நனவோடை உத்தியில் கதையை நகர்த்திச் செல்லும் விதத்தால் அக்கதையை இத் தொகுதியின் கணிப்புக்குள்ளாகும் கதையாக மாறியுள்ளது. தவிர நிவேதாவின்கதை சொல்லும் முறை இன்னமும் நேர்கோட்டு முறையியலைத் தாண்டிச் செல்லவில்லை. ஆயின் கதைகளின் முடிவில் அதிர்ச்சி தருவதும் எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்துவதும் சில விடயங்களை வாசகரிடமே யுகத்துக்கு விட்டு விடுவதும் நல்ல சிறுகதைகளுக்கான குணாம்சங்கள். அவை நிவேதாவின் எழுத்துக்களில் துலங்கத் தொடங்கியுள்ளன. உரை நடையில் செம்மை சேர்வதும் அல்லது பேச்சோசை மிகுவதும் கதைகளின் களத்தைப் பொறுத்ததேயன்றி கதைசொல்லியின் மனவோட்டத்தை பொறுத்ததல்ல என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும். மற்றும் சுய விருப்பும் வெறுப்புகளுடனான தீர்வுகள் அல்லது அபிப்பிராயங்கள் கதை சொல்லியின் நேர்மையைச் சோதிப்பனவாய் அமைந்தால் அது வெறும் வக்கிரங்களின் வெளிப்பாடாய் அமைந்துவிடும் அபாயங்களும் உண்டு. எனவே முன்வைக்கும் கருத்தைத் தர்க்கத்துடனும் ஆதாரத்துடனும் சமூகவியல் கண்ணோட்டத்துடனும் அழகியலுடனும் படைக்கும் போது கதை சொல்லி நின்று நிலைப்பார்| கதைகள் சாகாவரம் பெறும். நிறைவாக நிவேதா எனும் கதைசொல்லி இன்றும் கடந்து செல்ல வேண்டிய களமும் காலமும் அவர் முன் விரிந்து கிடக்கின்றன. அவற்றை ஒருமுகப்படுத்தும் திறன் நிவேதாவிடம் நிறையவே உண்டு. அவற்றைக் கலா பூர்வமாகக் கட்டமைத்து நமது புனைவு வெளியில் தனித்துவமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய எழுத்தாளராக நிவேதா நிலைக்க வேண்டும் என்பது என் அவா. அது ஈடேனும் என்பதில் அசைக்க முடியா நம்பிக்கையும் எனக்குண்டு. வாழ்த்துக்களுடன் பேராசிரியர் வல்லிபுரம் மகேஸ்வரன் தகைசால் வாழ்நாட்பேராசிரியர் பேராதனைப் பல்கலைக்கழகம்
  15. அப்ப சாமத்திலையும் பேய்களோட கதைக்கிறதுக்கா பக்கத்துத்தெருவுக்குப் போனீர்கள் ????
  16. நீங்களே பக்கத்து வீட்டைப் படம் எடுத்ததை ஆஞ்லாவுக்கு சொல்லிப்போடுவியல் போல. 😀 வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா
  17. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா.
  18. நாங்கள் இந்த வீட்டுக்கு வந்து இருபது ஆண்டுகள் முடியப்போகிறன. காலம் தான் எத்தனை வேகமாக எல்லாவற்றையும் கடந்துபோக வைக்கிறது. ஆசைகள் தான் மனிதனை ஆட்டிப் படைக்கின்றது. எனினும் பல ஆசைகள் நிராசையாகியும் போயிருக்கின்றனதான். நல்ல ஆசைகள் முயற்சியின் காரணமாக நிறைவேறி மனதுக்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொடுப்பதோடு மட்டுமல்லாது திருப்தியுடன் வாழ்வை நகர்த்திச் செல்கின்றன. திருப்தி எப்போது இல்லாது பேராசை மேலோங்குகிறதோ அதன்பின் மனிதன் வாழ்வின் இன்பமான நாட்களைத் தொலைத்து இன்னும் இன்னும் என்று வசந்தங்களை எல்லாம் தொலைத்து ஒன்றுமில்லாதவனாகி விடுகிறான். நான் மகிழ்வாகவும் நிம்மதியாகவும் தானே இப்பொழுது இருக்கிறேன் என என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். சுற்றிவர கண்ணாடி அறையினுள் தொங்கும் பூங்கன்றுகளை ஆசைதீரப் பார்க்கிறேன். எத்தனை தடவைகள் பார்த்தாலும் அலுக்காத பச்சைப் பசேல் எனவும் வண்ணவண்ண நிறங்களுடனும் பூத்துக் குலுங்கும் இந்தச் செடிக்கொடிகளை நாள் முழுதும் பார்த்துக்கொண்டே இருந்தாலும் எனக்குச் சலிப்பதில்லை. எட்டு ஆண்டுகளுக்கு முன் இதைக் கட்டியபோதும் சரி அதன்பின் சில மாதங்களாக நான் பட்ட மன வேதனையையும் எண்ண இப்போ சிரிப்புத்தான் வருகிறது. என் நீண்ட நாள் ஆசையான குளிர் காலத்திலும் பூங்கன்றுகள் வளர்ப்பதற்கான கண்ணாடி அறை ஒன்றை அமைப்பது குறித்து கணவருடன் பலநாட்கள் தர்க்கம் செய்தாகிவிட்டது. அந்தாளும் அசையிற மாதிரி இல்லை. நானும் விடுவதாய் இல்லை. “உதெல்லாம் வீண் செலவு. கொஞ்ச நாள் சும்மா இருக்க உன்னால முடியாது. காசை கரியாக்கிறதெண்டால் முன்னுக்கு நிப்பாய்” “இருந்தாப்போல செத்திட்டால் என்ர ஆசை நிறைவேறாமல் போயிடுமப்பா” “நீ ஒண்டைச் செய்ய நினைச்சால் செய்து முடிக்குமட்டும் விடவே மாட்டாய். உப்பிடிச் சொல்லிச் சொல்லியே எல்லாத்தையும் நிறைவேற்றிக் கொள்” “நான் என்ன நகை நட்டு வாங்கித் தாங்கோ என்றா கேட்கிறன்” “என்னவோ செய்து முடி” அடுத்த நாளே நான் வேலையைத் தொடங்கியாச்சு. சாதாரணமாக எந்தச் சிறிய கட்டட வேலை செய்வதாயினும் கவுன்சிலில் அதற்கான வரைபைக் கொடுத்து சிறிது பணமும் செலுத்தி அதற்கான அனுமதியைப் பெறவேண்டும். சாதாரணமாக மூன்று அடி உயரமும் மூன்று அடி நீளமும் இருந்தால் சரி. சரிவான கூரைக்கு அனுமதி தந்திருக்க, வேலை ஆரம்பிக்க வேலைகளைச் செய்வதற்கு ஒரு தமிழர் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டி ருந்தார். சமரில் முழுவதும் திறப்பதுபோல் மடியும் கதவுகள்வரை போட்டாச்சு. கூரை வேலை மட்டுமே மிகுதியாக இருக்க விக்டோரியன் ஸ்டைல் கூரை இன்னும் நன்றாக இருக்கும் அக்கா என்கிறார் அந்தத் தமிழர். எனக்கும் ஆசை எட்டிப்பார்க்க கவுன்சிலில் சாய்வான கூரை என்றுதானே கொடுத்துள்ளோம் என்கிறேன். பக்கத்து வீட்டுக்காரர் பிரச்சனை இல்லையோ என்கிறார். அந்தக் கிழவன் கொஞ்சம் துவேஷம் தான். ஆனால் கிழவி நல்லது என்கிறேன். அப்ப நான் விக்டோரியன் கூரையே போட்டு விடுறன். ஒரு ஆயிரம் பவுண்டஸ் தான் அதிகம் என்கிறார். அப்ப கவுன்சிலுக்கு அறிவிக்கத் தேவை இல்லையோ என்கிறேன். அவங்களுக்கு அறிவிச்சு திருப்ப பிளான் கீறி காசும் நாளும் விரயம் அக்கா என்கிறார். அந்தக் கூரையை எத்தனை பதிவாகப் போட முடியுமோ போடுங்கோ என்கிறேன். அவர்களும் எவ்வளவு பதிவாக்கமுடியுமோ அவ்வளவு பதித்தேதான் போட்டுவிட்டுப் பார்த்தால் மிக அழகாக இருக்க என் கண்ணே பட்டுவிடும்போல் கண்ணாடி அறை ஒளிர்கிறது. எதற்கும் ஒருக்கா அளந்து பார்ப்போம் என்று அலுமினிய அளவுநாடாவை எடுத்து அளந்து பார்க்க மூன்று மீற்றர் இருக்கவேண்டிய உயரம் முப்பது சென்ரிமீற்றர் அதிகமாக இருக்கிறது. என் மகிழ்ச்சி எல்லாம் ஒரு நொடியில் வடிந்துபோக ஒப்பந்தக்காரருக்கு போன் செய்கிறேன். அது பெரிய பிரச்சனை இல்லை அக்கா. நீங்கள் வீணாப் பயப்படாதைங்கோ என்கிறார். இதுக்கு மிஞ்சி என்ன செய்ய வருவது வரட்டும் என்று நான்கு மாதங்கள் பயத்துடனேயே கழிய குளிரும் குறைந்துகொண்டு வர சிறிது சிறிதாகப் பூங்கன்றுகள் எல்லாம் வைத்து கண்ணாடி அறை மிக அழகாகக் காட்சிதருகிறது. இலைதுளிர் காலமும் வந்துவிட எனக்கு அந்த அறையுள் நிற்பதும் இரசிப்பதுமாக காலம் நகர வெயிலும் எறிக்க ஆரம்பிக்கிறது. கணவர் கண்ணாடி அறையின் கதவுகளை முழுவதுமாகத் திறந்துவிடுகிறார். அந்தக் கண்ணாடி அறையின் அழகு தோட்டம் முழுதுமே பிரதிபலிக்கிறது. சமையல் செய்தபடியே நான் அவற்றை இரசித்தபடி இருக்க, அங்கு ஒரு சிறிய வட்ட மேசையும் கதிரைகளுமாய் நாம் உணவை அங்கு இருந்து இயற்கையை இரசித்தபடி உண்பதும் மனதுக்கு மகிழ்வாய் இருக்கிறது. வீண் காசு என்ற கணவரே உன்ர ஐடியா நல்லாத்தான் இருக்கு என்று கூற என் மனம் நிறைந்துபோகிறது. பிள்ளைகளும் படங்கள் எடுத்து அம்மாவின் பூங்கன்றுகள் என்று இன்ஸ்ரகிறாமில் படங்கள் போட எனக்குப் பெருமிதமாயும் இருக்கு. பறவைகளும் அணில்களும் போடும் உணவுகளைக் கொத்தி உண்பதும் ஒலி எழுப்புவதுமாக இருக்க அவற்றை இரசித்தபடி பார்த்துக்கொண்டிருக்கவே பொழுது போய்விட ஆறு மாதங்கள் முடிந்து போயிருந்தது. ஒருநாள் நானும் கணவரும் மட்டும் மதிய உணவை இரசித்துச் சுவைத்து உண்டு கொண்டு இருக்கிறோம். பக்கத்து வீட்டுக்கு அவர்களின் நண்பர்கள் யாரோ இருவர்கள் வந்திருக்கிறார்கள் போல. பெரிதாக சிரித்துக் கதைப்பது கேட்கிறது. சாதாரணமாக யாருமே வந்து நான் பார்ப்பதில்லை. யாராய் இருக்கும் என்கிறேன் கணவரைப் பார்த்து. நான் என்ன சாத்திரம் தெரிஞ்ச ஆளே. உன்னை மாதிரித்தான் நானும் என்று கணவர் சிரிக்க, அவர்கள் பக்கமிருந்து எமது கண்ணாடி அறையின் பக்கம் ஒரு தடி நீள்கிறது. நான் தான் அதை முதலில் பார்க்கிறேன். அங்க பாருங்கோப்பா. எங்கட சுவரை அளக்கினமோ என்கிறேன். அதுகள் என்ன செய்யுதோ. உனக்கு எப்பவும் வீண் பயம் என்றபடி அவர் திரும்பிப் பார்க்க மறுபடி மறுபடி கண்ணாடிச் சுவரில் ஒரு தடியை வைத்துப் பார்ப்பதைக் கணவரும் கண்டுவிடுகிறார். நீ சொன்னது சரிதான். உதுகள் எங்கடை சுவரை அளந்துதான் பார்க்குதுகள். பொறு பார்ப்போம் என்றுவிட ஏன் அளக்கிறீர்கள் என்று அஞ்சலாவிடம் கேட்கட்டா என்கிறேன். பேசாமல் இரு, சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி எண்டதுபோல நீ கேட்கப்போய் பெரிசுபடுத்தாதை என்றுவிட்டு எழுந்துவிட நானும் யோசனையோடு எழுகிறேன். அடுத்துவந்த ஒவ்வொருநாளும் எனக்கு நிம்மதி இன்றிக் கழிய சரியாக ஒரு மாதத்தின் பின் ஒருநாள் கவுன்சிலில் இருந்து நான் எதிர்பார்த்த கடிதம் வந்திருக்க படபடப்புடன் கடிதத்தை உடைக்கிறேன். நீங்கள் கவுன்சிலில் தந்த பிளானில் இல்லாத விக்டோரியன் ஸ்ரையில் கண்ணாடி அறையைக் கட்டியுள்ளதாக எமக்கு முறைப்பாடு வந்துள்ளது. வருகிற வெள்ளி கவுன்சிலில் இருந்து ஒருவர் அதைப் பார்க்க வருவார் என்று போட்டிருக்க, எனக்குக் கோபம், அவமானம், ஏமாற்றம் எல்லாம் ஒன்றாக எழுகின்றன. மனிசனுக்கு போன் செய்கிறேன். “அண்டைக்கே சொன்னனான். உதுகளின்ர குணத்துக்கு வளவுக்குள்ள வந்த ஆமையை அடிச்சுச் சாப்பிடாட்டிலும் எங்கேயாவது கொண்டுபோய் விட்டிருக்கவேணும். நீயும் மேளும் தடுத்திட்டியள்” “ஆமையின்ர பாவம் எங்களுக்கு எதுக்கப்பா? எப்பிடி உதுகளுக்கு நாங்கள் சாய்வான கூரைக்குத்தான் குடுத்தனாங்கள் எண்டு தெரிஞ்சது?” “நாங்கள் கட்ட முதலே கவுன்சில் அவர்களுக்கும் கடிதம் போடும்” “அப்ப முதலே உவை எங்களுக்குச் சொல்லி இருக்கலாம் தானே” “அவை உன்ர சொந்தக்காரரே. சரி வீட்டை வந்து கதைக்கிறன்” என்றபடி கணவரின் போன் நிறுத்தப்பட யோசனையோடு நானும் போனை வைக்கிறேன். . இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது நினைவில் வருகிறது. பக்கத்து வீட்டார் ஒரு ஆமையை வளர்க்கின்றனர். நாம் வந்தநாள் முதல் சமரில் பகலில் அவர்கள் பின் வீட்டுத் தோட்டத்தில் அங்கும் இங்குமாய் திரியும் இரவில் அதைப் பின் வளவில் உள்ள கட்டடத்தின் உள்ளே விட்டு அடைத்துவிடுவார்கள். ஆனால் அந்த கட்டட அமைப்பு எப்படி இருக்கு என்று பார்க்கவேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தாலும் இதுவரை பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்ததே இல்லை. ஒருநாள் பக்கத்து வீட்டு ஆமை எங்கள் வளவுக்குள் வந்துவிட்டது. இந்தப் பத்து ஆண்டுகளில் இதுதான் முதல் தடவை. மகள் கண்டுவிட்டு கணவரைக் கூப்பிட்டுக் காட்ட கணவர் அதைக் கையில் எடுத்து இரண்டு கிலோ இருக்கும் போல. கறி வைத்தால் எப்பிடி இருக்கும் என்கிறார் கணவர். நானும் மகளும் ஒரே நேரத்தில் உங்களுக்கு விசரா என்கிறோம். கிழவன்ர கொழுப்புக்கு உதுதான் செய்யவேணும் என்கிறார் மீண்டும். கடைசிவரை உதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன் என்று நான் கூற லபக் என்று மகள் ஆமையைக் கணவரின் கைகளிலிருந்து வாங்கி விடுவவிடுவென்று கொண்டுசென்று அவர்களிடம் கொடுத்துவிட்டு வருகிறாள். அடுத்தநாள் என்னைக் காணும்போது இரண்டு மூன்று தடவை ஆமையைக் கொடுத்ததற்கு அஞ்சலா என்னிடம் நன்றி கூற எனக்கே ஒருமாதிரியாகிப்போகிறது. ************ கவுன்சில்க் கடிதம் வந்த அடுத்தடுத்த நாட்கள் வெளியே செல்லும்போது அஞ்சலாவையோ கணவனையோ கண்டும் காணாமல் செல்லவாரம்பிக்கிறேன். கணவனும் யாருக்கும் எதுவுமே சொல்வதில்லை என்று கூற நான் வணக்கம் சொல்கிறனான் என்கிறாள் மகள். அதற்கு நான் எதுவும் கூறாது அமைதி காக்கிறேன். நீங்கள் அவர்களைக் கோபித்து என்ன பயன். முதலே சரியாகச் செய்திருக்க வேண்டும். அவர்கள் இந்த நாட்டவர். நாம் வெளிநாட்டவர். சட்டதிட்டத்துக்கு அமையச் சரியாக நடக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன குற்றம் அம்மா என்கிறாள். என்னிடம் அதற்குப் பதில் இல்லைத்தான். எம் வீட்டுக்கு பின்னால் உள்ள எத்தனையோ வீடுகளுக்கு நாம் கட்டியதிலும் உயர்வான நான்கு மீற்றர் உயரக் கண்ணாடி அறைகள் கூடக் கட்டப்பட்டிருக்க இந்தக் கேவலம் கெட்டதுகள் எரிச்சலில் கவுன்சிலுக்குச் சொல்லியிருக்குதுகள் என்று மனதுள் பொருமியபடி அடுத்த வாரத்துக்காகக் காத்திருக்கிறேன். ஒரு வாரத்தின் பின் வந்த கவுன்சில் பொறியியலாளர் நீங்கள் கூரையை மாற்றவே வேண்டும். உயரத்தைக் கண்டும் காணாமல் விட்டுவிடுகிறேன். ஆனால் எல்லாம் சரி என்ற பத்திரத்தை என்னால் வழங்க முடியாது என்கிறார். இந்தளவோடு விட்டாரே என மனதில் நிம்மதி ஏற்பட வேறுவழியின்றிக் கூரை மாற்றிய செலவு 1500 பவுண்டஸ் நட்டமாகியதுதான் மிச்சம் என்று கணவர் புறுபுறுத்ததை கேட்டும் கேளாதாவளாய் இருக்க மட்டுமே முடிந்தது. மாற்றிய கூரையைப் பார்க்கும் நேரம் எல்லாம் பக்கத்து வீட்டின் மேல் வரும் கோபம் மாறாமலே ஒரு ஆண்டு ஓடிப்போக வேலை முடிந்து ஒருநாள் வந்து இறங்கும்போது பக்கத்து வீட்டின் முன் ஆம்புலன்ஸ் நிற்க என்னவாக இருக்கும்என்று யோசித்தபடி உள்ளே செல்கிறேன். அடுத்தநாள் மாலை கடைக்குச் செல்வதற்காக வெளியே சென்றபோது வழியில் அஞ்சலா வந்துகொண்டிருப்பது தெரிய நானாகவே வணக்கம் என்றுவிட்டு யாருக்கு என்ன பிரச்சனை? நீ ஓகே தானே என்கிறேன். அஞ்சலாவின் முகம் சோர்ந்து போய் இருக்கிறது. மார்க்குக்கு நேற்று காட் அற்றாக் வந்து வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றவர்கள். இன்று கண் திறந்துவிட்டார். ஆனால் ஒரு காலும் கையும் இயல்பாக இல்லை என்கிறார். அவருடன் ஆறுதலாகக் கதைத்துவிட்டு வந்தாலும் நீ எனக்குச் செய்ததுக்கு வேணும் என்று என் மனம் எண்ண, அற்ப மகிழ்ச்சிகூட எட்டிப்பார்க்கிறது. அதன்பின் எப்போதாவது மார்க்கை பிரத்தியேக வாகனம் வந்து அழைத்துப்போகும். அதுதவிர வெளியே அவரைக் காணவே இல்லை. ஆனாலும் அஞ்சலாவை சுகம் கேட்பதை நான் நிறுத்தவில்லை. நாம் முதல் முதல் அந்த வீட்டுக்கு வரும்போதே வீட்டின் வாசலுக்கு அண்மையில் மிகப் பெரிய ஊசி இலை இன மரம் ஒன்று நீண்டு நெடிதாய் வளர்ந்திருந்தது. பார்ப்பதற்கு அழகாய் இருந்ததுதான். ஆனாலும் வீட்டுக்கு அண்மையில் இதை ஏன் வைத்தார்கள் என்னும் அளவு அதன் கிளைகள் வாசல் கதவைத் திறக்க முடியாதபடி பெரிதாகிக் கொண்டிருந்தன. நாம் கதவைத் திறந்து உள்ளே செல்லாது அந்த மரத்தை வெட்டுவோமா என்று கதைத்துக்கொண்டு நிற்க, பக்கத்து வீட்டு வெள்ளைக்காரர் ஒரு அறுபது வயதாவது இருக்கும் வணக்கம் என்கிறார். நாமும் வணக்கம் சொல்லி முடிய நீங்கள் தான் இங்கு குடிவருக்கிறீர்களா என்கிறார். ஓம் என்று என் கணவர் தலையாட்ட வாடகைக்கு இருக்கப்போகிறீர்களா என்கிறார் மீண்டும். இல்லை இதை நாம் வாங்கிவிட்டோம். எமது சொந்த வீடு என்று கூறி முடிய முதலே இந்தமரத்தை வெட்டிவிடுங்கள். இதன் வேர் என் வீட்டு அத்திவாரத்தையும் வெடிக்கச் செய்துவிடும் என்கிறார். என்னடா இது வந்து வீட்டுக்குள் செல்லவே இல்லை. இந்த மனிதன் மரத்தை வெட்டச் சொல்கிறதே என்கிறேன். நீயும் வெட்டுவது பற்றிக் கதைத்தாய் தானே. பிறகெதற்கு கிழவனைக் குறை சொல்கிறாய் என்று கணவர் என்னை கடிந்துவிட்டு வெட்டத்தான் வேண்டும். நாம் இன்றுதான் வந்திருக்கிறோம். நிறைய வேலைகளிருக்கு. முடிந்தபிறகு பார்ப்போம் என்று கூறி உள்ளே செல்கிறோம். ஒரு ஐந்து நிமிடங்கள் ஆகவில்லை. கதவின் அழைப்பு மணி அடிக்க யார் என்று பார்த்தால் பக்கத்துவீடுக்காரர் மரம் அரியும் வாள் ஒன்றுடன் நிற்கிறார். நான் கீழே உள்ள கிளைகளை வெட்டிவிடுகிறேன் மிகுதியை நீங்கள் வெட்டுங்கள் என்று சிரித்தபடி கூற, சரி வெட்டுங்கள் என்கிறார் கணவர். நாம் உள்ளே சென்று வேறு விடயங்களைக் கதைத்துவிட்டு வந்து பார்த்தால் மரத்தின் அரைவாசிக் கிளைகள் வெட்டப்பட்டு எம் வீட்டின் முற்றத்தில் குவிக்கப்பட்டிருக்க இனி நீங்கள் வெட்டுங்கள் என்று கூறி வாளையும் எம்மிடம் தந்துவிட்டு அவர் உள்ளே போக, நானும் கணவரும் சேர்ந்து மிகுதியை வெட்டிக் குவித்துவிட்டோம். பக்கத்து வீட்டுக் கணவன் மனைவி இருவரும் வெளியே வந்து இப்போதுதான் வீட்டைப் பார்க்க நன்றாக இருக்கு என்று முகமெல்லாம் பல்லாய் கூறிவிட்டுச் செல்ல நாமும் நல்லதொரு சனம் பக்கத்தில என்று மகிழ்ந்துதான் போனோம். அந்தமரத்தின் கிளைகளை அகற்ற நான்கு தடவை காரில் கொண்டுசெல்லவேண்டி இருந்தது வேறு கதை. அதன் பின் எம்மைக் கண்டால் ஒரு வணக்கம் சொல்வதோடு சரி. அவர்களுக்கு ஏதும் எம் உணவு செய்துகொண்டுபோய் கொடுப்போமா என்கிறேன் கணவரிடம். நாங்கள் குடுக்க, அவை தர எதுக்கு உதெல்லாம் பேசாமல் இரு என்று கணவர் சொன்னது எனக்கும் சரியாகவே படுகிறது. அதன்பின் ஐந்து ஆண்டுகள் வணக்கம் சொல்வதுடனேயே கழிகிறது. நத்தார் தினத்துக்கு இரு வாரத்துக்கு முன்னர் வாழ்த்து மடல் போட, நாமும் திருப்ப அவர்களுக்குப் போடுவதுடன் எங்கள் உறவு நிறைவடைந்துவிடும். மூன்று பிள்ளைகளுடன் இருந்த எமக்கு சமையலறை மிகச் சிறிதாக இருக்க வீட்டைப் பின்புறமாக நீட்டுவதற்கு ஆலோசித்து அந்த வேலைகளில் இறங்க, சைனீஸ் வேலையாட்கள் கூறிய பொருட்களை கடைகளில் ஓடர் செய்ய, அவர்கள் வாகனங்களில் கொண்டுவந்து இறக்குகின்றனர். மரக் குற்றிகள், நீளமான பலகைகள் என்பன வந்து இறங்குகின்றன. அவர்கள் நடைபாதையில் அவற்றை இறக்கி வைக்கின்றனர். சில பலகைகள் ஆறு மீற்றர் நீளம் கொண்டவை, அவை பக்கத்து வீட்டு வாசலைக் கடந்து நிற்கின்றன. இன்னும் சிறிது நேரத்தில் வேலையாட்கள் வந்துவிடுவார்கள். அதன்பின் அவர்கள் இறக்கியவற்றை உள்ளே கொண்டு செல்வார்கள். “நாங்கள் அதை எடுத்துக்கொண்டு போய் உள்ளே வைப்போமா” என்று கணவரைக் கேட்கிறேன். “நீ உன்ர அலுவலைப் பார். அவங்கள் தூக்கி வைப்பாங்கள்” என்று கணவர் சொல்லி முடிக்குமுன்னரே எங்கள் அழைப்புமணி கோபத்துடன் அழுத்துப்பட கணவர் சென்று கதவைத் திறக்க, பக்கத்து வீட்டு மனிதர் தன் வளவில் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க நிற்கிறார். “நீயா மணியை அழுத்தினாய்” “ஓம் நான் தான். நீ உடனடியாக உந்தப் பலகைகளை எடு. எனக்கு இடைஞ்சலாக இருக்கு” “உனக்கென்ன இடைஞ்சல்? உன் வீட்டுக்குள்ளா வைத்திருக்கிறோம்” “என் வாசல் வரை வந்திருக்கு. நான் வெளியே செல்லவேண்டும்” “உனக்கு அவசரம் என்றால் கடந்து செல். இன்னும் 10 நிமிடங்களில் வேலையாட்கள் வந்து தூக்குவார்கள்” “நான் போலீசுக்கு போன் செய்யப் போகிறேன்” “தாராளமாகச் செய்” கணவர் கதவை அடித்துச் சாத்திவிட்டு வருகிறார். “என்னப்பா பிரச்சனை” “பக்கத்து வீட்டுக் கிழடு சரியான துவேஷம். மரங்கள் தனக்கு இடைஞ்சலாம். உடனே தூக்கு என்கிறது” “அதுக்குத்தான் நான் முதலே நாங்கள் தூக்குவம் என்றனான்” “நீ உன்ர அலுவலைப் பார். அவர் போலீசுக்கு அடிக்கமாட்டார். எங்களை வெருட்டுறார்” “இத்தனை ஆண்டுகளாய் இருக்கிறம். ஒரு சத்தம் கூடப் போட்டதில்லை. அடிமனதில் நாங்கள் கறுப்பர் எண்டது உதுகளுக்கு இருக்கு. அதின்ர வெளிப்பாடுதான் இது” “சரியப்பா டென்ஷன் ஆகாமல் பெல் அடிக்குது. திரும்பக் கிழவன்தானோ தெரியேல்லை. போய் கதவைத் திறவுங்கோ” அடுத்தநாள் காலை நான் வேலைக்குச் செல்ல வெளியே வர, நான் எப்ப வருவேன் என்று பார்த்துக்கொண்டு இருந்ததுபோல் பக்கத்துவீட்டுப் பெண் கதவைத் திறந்து வணக்கம் என்கிறார். அவருக்கும் வயது ஒரு ஐம்பத்தைந்து அறுபது இருக்கலாம். குறை நினைக்காதை டியர். என் கணவர் கொஞ்சம் முசுடு. நேற்று அப்படிக் கதைத்துவிட்டார். மன்னித்துக்கொள் என்கிறார். எனக்கு உடனே மனது இளகிப்போக அதனால் என்ன. நாம் எதுவும் நினைக்கவில்லை என்று கூற அஞ்சலாவின் முகம் மலர்ந்துபோக நான் பாய் என்றுவிட்டுக் காரில் ஏறுகிறேன். அதன்பின் என் கணவர் பக்கத்து வீட்டுக்காரருக்கு வணக்கம் எதுவும் சொல்வதில்லை. ஆனால் என்னை கண்டால் அவர் வணக்கம் சொல்ல நானும் சொல்வேன். அஞ்சலாவைக் கண்டால் மட்டும் நின்று கதைபேன். அவவும் நானும் பிள்ளைகளின் படிப்பு என் வேலை இப்படி இரண்டு மூன்று விடயங்களைக் கதைத்துவிட்டு போய்விடுவோம். நாம் மூன்று பிள்ளைகள் என்பதால் வாரத்தில் இரு நாட்கள் உடைகளைத் துவைத்துக் காயவிடுவோம். கோடை காலங்களில் வெளியே போட்டால் அன்றே காய்ந்துவிடும். குளிர் காலத்தில் வீட்டின் உள்ளே இரண்டு நாட்கள் எடுக்கும். கொடி முழுவதும் எம் ஆடைக்களால் நிரம்பி வழியும். ஆனால் அவர்கள் வீட்டில் இரண்டு மூன்று ஆடைகளே காயப்போட்டிருக்கும். பணத்தை ஏன் இப்படிமிச்சம் பிடிக்கின்றனர். வெள்ளைகள் வாழ்வை நன்றாகத்தானே அனுபவிக்கின்றனர். இவர்கள் மட்டும் ஏன் இப்படி என்று எண்ணிக்கொள்வதோடு சரி. கேட்பதற்கு முடியவில்லை. நாம் ஒருதடவை நானும் கணவரும் கிரேக்கத்துக்குச் சென்று வந்தபோது எம்மைக் கண்ட அஞ்சலா “ஓ விடுமுறைக்குச் சென்று வருகிறீர்களா” என்றுமட்டும் கேட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அடுத்த நாள் என்னைக் கண்டபோது எங்கே சென்றீர்கள்? என்றார். நான் கிரேக்கம் என்றதும் வாயைப் பிளந்தபடி பயமின்றிப் போய் வந்தீர்களா என்றார். நீங்கள் அங்கு சென்றிருக்கிறீர்களா? மிக அழகிய இடம். எந்தப் பயமும் இல்லை என்கிறேன். நான் லண்டன் நகருக்கே இதுவரை சென்றதில்லை. என் கணவருக்கு எங்கு செல்வதும் பிடிக்காது என்றுகூற எனக்கு நம்பமுடியாததாக இருக்கிறது. கோடை மாரி குளிர் வெயில் என்று காலங்கள் எத்தனை விரைவாகச் சென்றுவிட்டன. *********************************** நாம் லண்டன் வந்து பதினெட்டு ஆண்டுகள் ஆகிவிட்டதை நம்பத்தான் முடியாமல் இருக்கு. பதினெட்டு ஆண்டுகளா என்னும் மலைப்போடு பல யுகங்கள் ஆகிவிட்டதான ஆயாசமும் சேர்ந்துகொள்கிறது. இத்தனை ஆண்டுகளில் பக்கத்து வீட்டுக்கு ஒருநாள் கூட நாங்கள் போக முடியவில்லையே என்னும் ஆதங்கம் மனதில் ஏற்படுகிறது. சில நண்பர்கள் அயல் நாட்டுப் பக்கத்து வீட்டாரைப் பற்றிச் சொல்லும்போது எமக்கும் ஒரு நல்ல நட்பான பக்கத்து வீடு அமைந்திருக்கலாமோ என்னும் எண்ணம் எழும். நாம் மட்டும் எல்லோரோடும் நட்போடுதான் பழகினோமா என்னும் கேள்வியும் கூடவே எழும். பிடித்தவர்களுடன் மட்டும்தானே நெருக்கமாகினோம். எமது பக்கத்து வீட்டாருக்கும் எமக்கும் நல்ல பொருத்தங்கள் இல்லைபோல என நானே என்னை ஆற்றிகொள்கிறேன். ஒருநாள் அவர்கள் வீட்டுக்கு இரண்டு மூன்று வெள்ளை இனத்தவர் வந்துபோக ஏதும் விசேடமாக இருக்குமோ என்று எண்ணியபடி செல்கிறேன். மூன்றாவது வீட்டில் வசிக்கும் ஆபிரிக்கப் பெண்மணி எப்பவாவது கண்டால் நின்று கதைப்பார். அன்று கண்டவுடன் மார்க் எப்படி இறந்தார் என்று கேட்கிறார். இறந்துவிட்டாரா? எனக்கு இதுவரை தெரியாதே என்கிறேன். நேற்று இரவு நான் வேலை முடிந்து வந்தபோது அம்புலன்சில் ஏற்றினார்கள். முகத்தை மூடியிருந்தது. அதனால்தான் கேட்டேன் என்கிறார். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஊரில் என்றால் ஒருவர் இறந்தால் அடுத்தமணியே அனைவருக்கும் தெரிந்துவிடும். பக்கத்து வீட்டில் இருந்தும் எனக்குத் தெரியவில்லை என்பது வெட்கமாகவும் குற்றஉணர்வாகவும் இருக்க கணவருக்குப்போன் செய்கிறேன். கணவர் போனை எடுக்கவில்லை. அஞ்சலாவின் வீட்டுக் கதவைத் தட்ட அவரே வந்து திறக்கிறார். “நான் மார்க் பற்றிக் கேள்விப்பட்டேன்” “ஓ நேற்று மாலை இறந்துவிட்டார். இரவு ஏழு மணிவரை வீட்டில் வைத்திருந்தோம். அதன்பின் கொண்டுசென்றுவிட்டார்கள்” “ஏலாமல் இருந்தாரா” “ஆறு மாதங்கள் படுத்த படுக்கைதான். ஒரு நர்ஸ் வந்து பார்த்துவவிட்டுச் செல்வார். எனக்கு அவரை கோமில் கொண்டுபோய் விட விருப்பம் இல்லை. என் பிள்ளைகள் பலதடவை சொன்னார்கள்” “உனக்குப் பிள்ளைகள் இருக்கின்றார்களா??” “ஓம் இரண்டு ஆண் பிள்ளைகள். ஒருவன் திருமணமாகி மான்சஸ்ரரில் இரண்டு குழந்தைகளுடன் இருக்கிறான். மற்றவன் திருமணம் செய்யவில்லை. அவனும் தூரத்தில்த்தான்.” “நான் அவர்களை ஒருநாளும் கண்டதில்லையே” “அவர்களுக்கு எங்கே நேரம். கடைசி மகன் அப்பப்ப வந்துவிட்டுப் போவான். அவனுக்கும் தகப்பனுக்கும் சரிவாராது” “அவர்கள் வந்திருக்கிறார்களா?” “இல்லை நாளைதான் வருவார்கள்” “தனியாகத்தான் வீட்டில் இருக்கிறாயா? யாரும் துணைக்கு இல்லையா?” “இல்லை எனக்குப் பழகிவிட்டது” “உனக்கு உணவு ஏதும் கொண்டுவந்து தரட்டுமா??” “வேண்டாம், வேண்டாம். என்னிடம் உணவு இருக்கிறது” “ஏதும் தேவை என்றால் என்னைக் கூப்பிடு” “நன்றி தேவை என்றால் அழைக்கிறேன்” வீட்டுக்கு வந்தபின் மனதில் எதுவோ அடைத்ததுபோல் இருக்க அஞ்சலா என்னை வீட்டுக்குள் வா என்று அழைக்காததும் மனதை எதுவோ செய்ய மனிசிக்கும் என்ன பிரச்சனையோ என்று மனதைத் தேற்றிக் கொள்கிறேன். ஒரு வாரத்தின் பின் மார்க்கின் மரண வீடுக்கு நானும் கணவரும் சென்றிருந்தோம். எல்லோருடனும் கை குலுக்கிய பிள்ளைகள் எம்முடனும் அடுத்த வீட்டு ஆபிரிக்கப் பெண்ணிடமும் கை குலுக்காததை கவனித்தபின் மனதில் சிறிது ஆசுவாசம் ஏற்பட்டதுதான். ஒரு மாதம் செல்ல மீண்டும் இலைதளிர் காலத்தில் கடைசி மகன் தாயுடன் வசிக்க வந்துவிட பக்கத்து வீட்டில் பேச்சும் சிரிப்புமாக அஞ்சலாவின் வாழ்கை மாறியிருந்தது. கொடிகளில் விதவிதமாக அழகிய ஆடைகள் காய்ந்தன. எழுபத்தைந்து வயதான முகத்தில் ஒரு பளபளப்பும் மலர்ச்சியும் தெரிந்தன. கிழவியைப் பாத்தியே. விதவிதமாய் உடுப்புப் போடுது என்று கணவர் நக்கலாகக் கூற எனக்குக் கோபம் வருக்கிறது. அந்தக் கிழவன் சரியான அடக்குமுறையாளனாகத்தான் இருந்திருக்க வேண்டும். இப்பவாவது அந்த மனிசி தன் ஆசைப்படி வாழட்டுமன். உங்களுக்கு அதில் என்ன நட்டம் என்கிறேன். கடந்தவருடம் இலங்கை சென்று ஆறு மாதங்களின் பின் தான் நான் திரும்பி வந்தேன். அடுத்தநாள் நான் வெளியே செல்ல என்னைக் கண்ட அஞ்சலா “ஓ டியர் உன்னை இத்தனை நாள் நான் காணவில்லை. எங்கே சென்றாய், உனக்கு ஏதும் ஆகிவிட்டதோ என்று நான் பயந்துவிட்டேன்” என்றபடி கட்டியணைக்க நான் திக்குமுக்காடிப்போய் பேச்சற்று நிற்கிறேன்.
  19. ஓ மற்றநாட்டவரும் இப்படித்தானா ??? வருகைக்கு நன்றி உடையார்.
  20. என மகள் இப்ப கைவிட்டுட்டா ஏனெனில் பூனையைத் தடவி கையில் அலர்ஜி உண்டாக்கிவிட்டதும் பயந்துவிட்டா. எனக்கும் மகிழ்ச்சி.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.