Jump to content

Search the Community

Showing results for tags 'என்.கே. அஷோக்பரன்'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s Test
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • Ahal Media Network's Topics

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's சிறப்பு ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's ஆவணக்கட்டுகள்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's தொகுத்த ஆவணம்

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

  1. இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு வருமா? என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதில் அக்கறை செலுத்தி வருகிறார். ‘சர்வகட்சி அரசாங்கம்’ என்பதன் மூலம், பொருளாதாரத்தில் வீழ்ந்துபோய், வங்குரோத்து நிலையிலுள்ள நாட்டை, மீளக்கட்டி எழுப்புவதற்கான முயற்சிகளை எடுப்பதே அவரது திட்டம். அனைத்துக் கட்சிகளும் ஒரு பொது நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவு தெரிவிக்கும் போது, அதை நடைமுறைப்படுத்துவது மிக இலகுவாயிருக்கும். அத்துடன், மக்களை திருப்திப்படுத்துவதும், அல்லது குறைந்தபட்சம் சாந்தப்படுத்துவதும் பெருமளவுக்குச் சாத்தியமாகும் என்பதுதான், சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதன் பின்னணியிலுள்ள சிந்தனையாக இருக்கும். வழமைபோல, எதிர்க்கும் கட்சியான ஜே.வி.பி, இதனை எதிர்த்து நிற்கிறது; இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. நாட்டை ஆளும் எண்ணத்தில், அரசியல் செய்யும் பல கட்சிகள் இருந்தாலும், காலம் முழுவதும், எதிர்ப்பரசியல் செய்யும் எண்ணத்தில் இயங்கும் கட்சிகளும் உள்ளன. ஜே.வி.பி. இதில் இரண்டாவது ரகம். மக்களின் எதிர்ப்பை, கொதிப்பை, சினத்தை தமக்குச் சாதகமாக்கி, தமது வாக்குவங்கியை அதிகரிப்பது பற்றித்தான் ஜே.வி.பி சிந்திக்கிறது என்றே தோன்றுகிறது. மூன்றாக இருக்கும் தமது பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை, 2004இல் தமக்கிருந்ததைப் போல, 39 பாராளுமன்ற உறுப்பினர்களாக அதிகரிக்கும் கனவில் ஜே.வி.பி இயங்கிக்கொண்டிருக்கலாம். ஆனால், ஜே.வி.பியாகத் தனித்துப் போட்டியிட்டு, அந்த 39 ஆசனங்களும் ஜே.வி.பிக்குக் கிடைக்கவில்லை. சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் கொடூர முகமாக ஜே.வி.பி இருந்தபோது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் பங்குதாரராக, அந்தத் தேர்தலில் போட்டியிட்டே ஜே.வி.பிக்கு 39 ஆசனங்கள் கிடைந்திருந்தன. மறுபுறத்தில், சரத் பொன்சேகா உட்பட்ட சிலர், சர்வகட்சி அரசாங்கத்தை எதிர்ப்பதன் காரணமும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் நீண்டகாலத் திட்டமாகத்தான் இருக்கமுடியும். ராஜபக்‌ஷர்கள் பிரபல்யம் இழந்திருக்கும் இன்றைய நிலையில், அரசியலில் அந்த இடைவௌியை நிரப்ப, டளஸ் அழகப்பெரும மட்டுமல்ல, சரத் பொன்சேகா, சம்பிக்க ரணவக்க போன்றோரும் கனவு காண்கிறார்கள். சுதந்திர இலங்கையின் சாபம் என்பது, சிங்கள-பௌத்த பேரினவாத அரசியல் ஆகும். இலங்கையை மிக மோசமான ரீதியில் கூறுபோட்டு, ஆரோக்கியமான அரசியல் கலாசாரமொன்றைக் கட்சியெழுப்ப முடியாதவாறு, சிங்கள-பௌத்த பேரினவாதம், இலங்கை அரசியலைப் பீடித்திருந்தது. அதிகாரத்தைக் கைப்பற்றுதலுக்கான போட்டியென்பது, யார் மிகப்பெரிய சிங்கள-பௌத்த பேரினவாதி என்ற போட்டியாகவே மாறிப்போனது. பண்டாரநாயக்க, சிறிமாவோ, ஜே.ஆர்., சந்திரிகா, மஹிந்த, கோட்டா என, சிங்கள-பௌத்த இன-மதத் தேசிய வாக்குவங்கியைக் கவர்வதற்காக, சிறுபான்மை இனத்தவருக்கு எதிராக எதையும் செய்யத் துணிந்தவர்களே, பலமான தலைவர்களாக, பெரும்பான்மை மக்கள் ஆதரவோடு வெற்றிபெற்றார்கள். இதுதான், இலங்கையின் கறுப்பு வரலாறு. இதற்கு ஒரு பொருத்தமான உதாரணம், 1983 ஜூலை 11 ஆம் திகதி, ‘லண்டன் டெய்லி டெலிகிராப்’ பத்திரிகைக்கு இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன அளித்திருந்த ஒரு குறுஞ்செவ்வி ஆகும். அந்தப் பேட்டியில், அவர் சொன்ன ஒரு விடயம், அவரது இனவாத முகத்தைத் தோலுரித்துக் காட்டியது மட்டுமல்லாது, அன்று தமிழ் மக்களுக்குப் பெரும் ஆபத்துக் காத்திருக்கின்றது என்பதை உணர்த்தும் சமிக்ஞையாகவும் இருந்தது. அந்தக் குறுஞ்செவ்வியில், “யாழ்ப்பாண மக்களின் அபிப்பிராயத்தைப் பற்றி, இப்போது நான் கவலைப்படவில்லை; நாம் அவர்களைப் பற்றி யோசிக்க முடியாது. அவர்களுடைய உயிர்களைப் பற்றியோ, அவர்கள் எம்மைப் பற்றிக் கொண்டிருக்கும் அபிப்பிராயம் பற்றியோ யோசிக்க முடியாது; வடக்கின் மீது எவ்வளவுக்கு எவ்வளவு அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறதோ, அவ்வளவுக்கு இங்குள்ள சிங்கள மக்கள் சந்தோஷப்படுவார்கள்”. 1990களில், தமது மாக்ஸிஸப் புரட்சி தோற்கடிக்கப்பட்டபின்னர், தம்மை ஜனநாயக அரசியலுக்குள் கொண்டு வந்த ஜே.வி.பி, மக்களாதரவைப் பெறுவதற்காக, சிங்கள-பௌத்த பேரினவாதத்தைக் கையிலெடுத்தது. 2000களில் மிகப்பெரிய, சிங்கள-பௌத்த பேரினவாத சக்தியாக ஜே.வி.பியே திகழ்ந்தது. தமிழ் மக்களுக்கு எதிரான மனநிலையை, சிங்கள-பௌத்த மக்களிடையே விதைத்தில், ஜே.வி.பியின் பங்கு அளப்பரியது. மஹிந்த ராஜபக்‌ஷ, யுத்த வெற்றியை நோக்கி பயணித்து, அதை நெருங்கும் வரை ஜே.வி.பியே, சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் குத்தகைக்காரராக இருந்தது. யுத்த வெற்றி, சிங்கள-பௌத்த மக்களின் மாவீரனாக மஹிந்தவை ஆக்கிய பின்னர், அரசியலில் தப்பிப் பிழைப்பதற்காக தனது பாதையை மாற்ற வேண்டிய தேவை, ஜே.வி.பிக்கு ஏற்பட்டது. அவர்கள், அநுர குமார தலைமையில் தாராளவாத முகமூடியை அணிந்துகொண்டார்கள். நிற்க! அண்மையில், தனது முதலாவது சிம்மாசன உரையில், ஜனாதிபதி ரணில் சொன்ன ஒரு விடயம் கவனிக்கத்தக்கது. “நான் அரசியலில் பிரவேசித்த காலத்திலிருந்தே, இன, மத, மொழி, சாதி பிரிவினைகள் இல்லாத இலங்கை அடையாளத்துடன் கூடிய ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று விரும்பினேன். ஒரு தாயின் குழந்தைகள், ஒற்றுமையாக வாழக்கூடிய தேசத்தை உருவாக்க வேண்டும். இந்தச் செயற்பாட்டில் நான் தொடர்ந்து ஈடுபட்டதால், அரசியல் தோல்விகளைச் சந்தித்தேன். இது தீவிர கொள்கை உடையவர்களால் விமர்சிக்கப்பட்டது. இனவெறி மற்றும் மதவெறிக்கு எதிரான எனது தொடர்ச்சியான நிலைப்பாட்டின் காரணமாக, சில அரசியல் கட்சிகள் என்னை இனவாதி என்று அவதூறு செய்தன. எனினும், எனது கொள்கையிலிருந்து நான் விலகவில்லை. அந்தக் கொள்கையில் இருந்து நான் விலக மாட்டேன்” என்று ஜனாதிபதி ரணில் கூறயிருந்தார். இது பட்டவர்த்தனமான உண்மையும் கூட! ரணில் மீது பல விமர்சனங்களைப், பலரும் முன்வைக்கலாம். ஆனால், ரணில் இனவாதியல்ல; அரசியல் இலாபத்துக்காக இனவாதத்தைப் பயன்படுத்திக்கொண்டவரும் அல்ல. ரணில் மீது அநேக தமிழர்கள், முஸ்லிம்கள், உள்ளிட்ட சிறுபான்மையினரிடம் ஒருவகை நல்லெண்ணம் உள்ளமைக்கு இதுதான் காரணம். அரசியல் காய்நகர்த்தல்களில் ரணில், தனது மாமா ஜே.ஆரைப் போல ‘நரி’யாக இருக்கலாம், ஆனால், ஜே.ஆரைப் போல, ரணில் இனவாதத்தை அரசியலுக்கு பயன்படுத்தியவர் அல்ல. இனவாதம் பேசினால், பெரும்பான்மை சிங்கள-பௌத்த வாக்குவங்கியைக் கவரலாம் என்ற போதிலும் கூட, அதைச் செய்யாதவர் ரணில். ஆகவே, ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகி இருக்கும் இன்றைய சூழல், தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், அரசியல் தீர்வொன்றுக்கான முன்னகர்த்தலை முயற்சிக்கக்கூடிய அரிய தருணம். இதன் அர்த்தம், தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அரசியல் அபிலாஷைகளும், ரணில் விக்கிரமசிங்கவால் ஒரு நாளில் நிறைவேற்றப்பட்டுவிடும் என்பதல்ல; மாறாக, கோட்டா வந்த போது வாய்ப்பே இல்லையென்று ஆகிப்போன தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில், தற்போது அதிகரிப்புவாத (incrementalism) அடிப்படைகளில், அடுத்த கட்ட நகர்வுகளைச் செய்யக் கூடிய சாத்தியம் மீண்டும் ஏற்பட்டிருக்கிறது. ஒன்றிரண்டு தமிழ் மக்களின் பிரதிநிதிகள், தற்போது ரணில் விக்கிரமசிங்கவோடு ஏற்படுத்திக்கொண்டுள்ள தனிப்பட்ட முரண்பாடுகள் காரணமாக, இந்த வாய்ப்பை தட்டிக் கழித்துவிடக்கூடாது என்பதுதான், இங்கு கோடிட்டுக்காட்டப்பட வேண்டியதாக இருக்கிறது. இலங்கை இன்று கண்டுள்ள பொருளாதார வங்குரோத்து நிலை, சிங்கள-பௌத்த பேரினவாதம் தொடர்பில், ஒரு துளி எதிர்மறையான எண்ணத்தை, சிங்கள-பௌத்த மக்களிடையே ஏற்படுத்தி இருக்கிறது. சுதந்திர இலங்கை எடுத்துக்கொண்ட அரசியல் பாதை தவறு என்பதையும், சிறுபான்மையினர் நடத்தப்பட்ட விதம் பிழை என்பதையும் பலரும் உணர்வதாகத் தெரிகிறது. இந்த நேரத்தில், சிங்கள-பௌத்த பேரினவாதத்தை தனது, அரசியல் மூலதனமாகக் கொண்டிராத ஒருவர் ஜனாதிபதியாக இருக்கிறார். இந்தச் சந்தர்ப்பத்தில், தமிழ் மக்கள் எதைப் பெற்றுக்கொள்ளப் போகிறார்கள் என்பது, தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் திறமையிலும் இராஜதந்திரத்திலுமே தங்கியிருக்கிறது. ரணிலை எதிர்ப்பது என்பது இலகுவான தெரிவு. அதனால், தமிழ் மக்களுக்குப் பலனேதுமில்லை. ஆனால், ஜனாதிபதி ரணிலோடு, அரசியல்ரீதியாக ஈடுபடுவதன் ஊடாக, தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பில் ஏதேனுமோர் அடைவையேனும் பெற்றுக்கொள்ள முடியுமென்றால், அது ஒரு பலனுமில்லாத எதிர்ப்பைவிட, நன்மையானதே. தமது தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளை விடுத்து, இதைச் ‘சாத்தியமான அரசியல்’ பற்றிப் பேசும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாவது செய்வார்களா என்பதே, இங்கு கேள்வி. ‘வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக நினைப்பானை நீங்கும் திரு’ என்ற வள்ளுவன் வாக்கை, தமிழ் மக்கள், தமது பிரதிநிதிகள் தொடர்பில் சிந்தனையில் கொள்ள வேண்டும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இனப்பிரச்சினைக்கான-அரசியல்-தீர்வு-வருமா/91-302128
  2. தமிழ் மக்களுக்கு ஓர் அரசியல் சந்தர்ப்பம் என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan நிக்கலோ மக்கியாவலி,“யுத்தத்திலே, ஒரு வாய்ப்பை எவ்வாறு அடையாளம் காண்பது மற்றும், அந்த வாய்ப்பை எவ்வாறு கைப்பற்றுவது என்பதை அறிவது, எல்லாவற்றையும் விடச் சிறந்தது” என்று சொன்னார். அரசியலும் ஒரு வகையான யுத்தம்தான். அதில், வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ளவும், உருவாகும் வாய்ப்புகளை அடையாளம் காண்பதும், அந்த வாய்ப்புகளைத் தமக்கேற்றவாறு பயன்படுத்துவதும்தான் மிகச் சிறந்த அரசியல் தந்திரோபாயமாகும். 2009 யுத்த முடிவுக்குப் பின்னர், தமிழ்த் தேசிய அரசியலின் பேரம் பேசும் சக்தி என்பது, கணிசமாக வீழ்ச்சி கண்டிருந்தது. ஐ.நா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச அழுத்தங்களால்த்தான், தமிழ்த் தேசிய அரசியல் பெருமளவுக்குத் தங்கியிருந்தது. அதன் விளைவாக, தமிழ்த் தேசிய அரசியல் தனது அபிலாஷைகளை அடைந்துகொள்வதில், எந்தப் படிமுறை முன்னேற்றத்தையும் அடைய முடியாததொரு சூழலையே எதிர்கொண்டிருந்தது. 2015-2019 ‘நல்லாட்சி’யின் போது, தமிழ்த் தேசிய அரசியலுக்கு நல்லதொரு பேரம் பேசும் சக்தி கிடைக்கும் வாய்ப்புகள் இருந்தன. குறிப்பாக, 2018 டிசெம்பருக்குப் பிறகு, தமிழ்த் தேசிய அரசியல் குறிப்பாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, அரசாங்கத்தில் செல்வாக்கு மிக்கதொரு கட்சியாக மாறியிருந்தது. ஆனால், அதன் பலன், தமிழ் மக்களுக்கு வந்து சேரவில்லை. மாறாக, ஒரு வருடத்துக்கு உள்ளாகவே, அரசியல் களம் முற்றாக மாறிவிட்டிருந்தது. 2019இல் கோட்டா ஜனாதிபதியானது முதல், தமிழ்த் தேசிய அரசியல், மீண்டும் பேரம் பேசும் பலம் குறைந்து, அரசியல் பின்னரங்கில் ஒதுங்கிப்போனது. ‘நல்லாட்சி’ காலத்தில், ஆளும் அரசாங்கத்தோடு செல்வாக்குக் கொண்டிருந்தும், அதன் பலனை, தமிழ் மக்களுக்குப் பெற்றுக்கொடுக்காததன் விளைவை, 2020 பொதுத் தேர்தலில், த.தே. கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் உணர்த்தியிருந்தனர். 2015இல் 515,963 வாக்குகளை மொத்தமாகப் பெற்று, 16 ஆசனங்களைப் பெற்றிருந்த த.தே. கூட்டமைப்பு, 2020 பொதுத் தேர்தலில் 327,168 வாக்குகளைப் பெற்று, 10 ஆசனங்களையே பெற்றுக்கொண்டது. 2015 பொதுத் தேர்தலில், வேறெந்த தமிழ்த் தேசிய கட்சியாலும் ஓர் ஆசனத்தைக் கூட வெல்ல முடியாத நிலை இருந்தது. ஆனால், 2020 பொதுத் தேர்தலில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இரண்டு ஆசனங்களையும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஓர் ஆசனத்தையும் பெற்றுக்கொண்டன. இது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மீதான தமிழ் மக்களின் நம்பிக்கை இழப்பின் எதிரொலி ஆகும். ஏனென்றால், கூட்டமைப்பு 2015-2019 காலப்பகுதியில், ஆட்சியிலிருந்த நல்லாட்சி அரசாங்கத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தது. மஹிந்தவை தோற்கடித்து, மைத்திரி ஜனாதிபதியாகியதின் பின்னணியில் உழைத்த எதிர்க்கட்சிகளில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முக்கியமானது. ஆகவே, அந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தி, த.தே.கூட்டமைப்பு, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளில் ஒருசிலவற்றையேனும் நிறைவேற்றுவதற்கு முயலும் என்ற தமிழ் மக்களின் நம்பிக்கை, பொய்த்துப்போனதுதான், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, 2020 தேர்தலில் 188,795 வாக்குகளை இழக்கக் காரணமாகும். ‘நல்லாட்சி’க்கு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரவளித்த காலத்தில், குறைந்தபட்சம் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான சுயாதீன விசாரணையும் நீதியும், யுத்தகால அநீதிகளுக்கான நியாயம், இராணுவம் அடாத்தாகப் பிடித்துவைத்திருக்கும் தமிழ் மக்களின் தனியார் காணிகளின் விடுவிப்பு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் இல்லாதொழிப்பு அல்லது மறுசீரமைப்பு, மாகாண சபைகளை அதன் முழுமையான அதிகாரங்களுடன் இயங்கவிடுதல், ஆளுநரின் தலையீட்டை குறைக்கும் மறுசீரமைப்பு ஆகியவற்றையேனும் செய்ய முடிந்திருந்தால், தமிழ் மக்களின் தனிப்பெரும் அரசியல் சக்தியாக, அல்லது அவர்கள் சொல்ல விரும்பும் ‘ஏக பிரதிநிதி’யாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மிளிர்ந்திருக்கக் கூடும். ஆனால், ‘நல்லாட்சி’ அரசாங்கத்தைக் காப்பாற்றிக்கொடுத்தும், தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்பது, தமிழ் மக்களை அதிருப்தி அடையச் செய்ததன் விளைவுதான் 2020 தேர்தல் முடிவுகளில் எதிரொலித்தது. ஆனால், 2015-2019 ‘நல்லாட்சி’யில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறாமைக்கு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பை மட்டும் குறை கூறியும் பயனில்லை. ஏனென்றால், ராஜபக்‌ஷர்கள் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டாலும், நாட்டில் அவர்களுக்கான ஆதரவும் அவர்கள் மீதான அனுதாபமும், ‘யுத்த வெற்றியாளர்’கள் என்ற பெருமைமிகு அடையாளமும், பெரும்பான்மை மக்களிடம் தொக்கி நின்றது. ஆகவே, தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்டவைகள் அநீதிகள் என்பதைக் கூட, ஏற்றுக்கொள்ளும் மனநிலை, இந்நாட்டின் பெரும்பான்மை இனத்திடம் அன்று இருக்கவில்லை. ராஜபக்‌ஷர்களைத் தேர்தலில் தோற்றிருந்தாலும், சிங்கள-பௌத்த தேசியவாதம் சுடர்விட்டு எரிந்துகொண்டிருந்தது. அதனால், ‘நல்லாட்சி’ அரசாங்கம், சிங்கள-பௌத்த தேசியவாத மனநிலைக்கு எதிராக எதையும் செய்தால், தமது அரசியல் சூனியமாகிவிடும் என்ற அச்ச மனநிலையில் இருந்தனர். குறிப்பாக, பண்டாரநாயக்க-ராஜபக்‌ஷ பாசறையிலிருந்து வந்த, யுத்த வெற்றியில், தன்னைப் பங்குதாரராகக் காட்டிக்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, சிங்கள-பௌத்த பெரும்பான்மை தேசியவாதத்துக்கு எதிராக நடந்து கொள்ள விரும்பவில்லை. அதனால்தான், தமிழ் மக்களின் ஆகக்குறைந்த கோரிக்கைகள் கூட நிறைவேற்றப்படவில்லை. கடைமைக்கென, காணாமல் போனோர் அலுவலகம் உள்ளிட்ட சில உருவாகின. ஆனால், 2022 கோட்டாவுக்கு எதிரான மக்கள் அலை கிளம்பிய போது, அது, 2015 அலையைப் போலல்லாது, சிங்கள-பௌத்த பேரினவாதத் தேசியவாதத்துக்கும் எதிரான அம்சங்களைத் தன்னகத்தே கொண்டதோர் எழுச்சியாகவே அமைந்திருந்தது. இன்று, சிங்கள-பௌத்த மக்கள் பலர் மிக வௌிப்படையாக, தமிழ் மக்களுக்கு எதிரான அநீதிகள் குறித்துப் பேசுகிறார்கள்; கண்டனங்களை முன்வைக்கிறார்கள்; மன்னிப்புக் கோருகிறார்கள். தமிழ் மக்களுக்கு எதிராக, பெரும் அநீதி இழைக்கப்பட்டு இருக்கிறது என்பதை, சிங்கள-பௌத்த மக்கள் ஏற்றுக்கொள்ளத் தொடங்கி இருப்பதே பெரும் மாற்றம்தான். அதுபோல, சுதந்திரகாலம் முதல், இந்நாட்டைப் பீடித்துள்ள இன-மதத் தேசியவாதம்தான் இன்று, நாடு நாசமாகப் போயிருப்பதற்கான காரணம் என்பதை, கணிசமான சிங்கள-பௌத்த மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்; ஆகவே, இன்று அரசியல் களம் என்பது, முற்றாக மாறியிருக்கிறது என்பதை உணரலாம். இலங்கையின் பெரும்பான்மையின மக்களிடையே 2015இல் ராஜபக்‌ஷ எதிர்ப்பு மட்டுமே, கணிசமானளவில் ஏற்பட்டது. சிங்கள-பௌத்த பெருந்தேசியவாதம் உயிர்ப்போடிருந்தது. ஆனால் 2022இல், ராஜபக்‌ஷ எதிர்ப்போடு, இன-மதத் தேசியவாதத்துக்கு எதிரான எதிர்ப்பலையும், இலங்கையின் பெரும்பான்மையின மக்களிடம் ஏற்பட்டுள்ளதன் சமிக்ஞைகள் மிகத்தௌிவாகத் தெரிகின்றன. இதுதான் தமிழ்த் தேசிய அரசியலுக்கும், தமிழ் மக்களுக்குமான அரிய வாய்ப்பு. இன்று ஆட்சியில் உள்ளவர்களோடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு, தமிழ் மக்களின் சில முக்கிய கோரிக்கைகளையேனும் நிறைவேற்றிக்கொள்வதற்கான அரிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதைச் செய்ய, தமிழ்த் தேசிய கட்சிகள் முன்வரவேண்டும். அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான சுயாதீன விசாரணையும் நீதியும், யுத்தகால அநீதிகளுக்கான நியாயம், இராணுவம் அடாத்தாகப் பிடித்துவைத்திருக்கும் தமிழ் மக்களின் தனியார் காணிகளின் விடுவிப்பு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் இல்லாதொழிப்பு அல்லது மறுசீரமைப்பு ஆகியவற்றுக்கு பெரும்பான்மை மக்களிடையே ஆதரவு இருக்கக்கூடிய நிலையில், இதைச் செய்வதற்கு ஆட்சியில் உள்ளவர்களை ஊக்கப்படுத்த இதைவிட வேறுவாய்ப்பு இருக்க முடியாது. இன்று, மேற்சொன்னவற்றுக்கு பெரும்பான்மை மக்களிடமிருந்து பெருமளவு எதிர்ப்பு வராது. வரலாற்றுப் பிழைகளைச் சரிசெய்யும் ஒரு நடவடிக்கையாக, இவை முன்னெடுக்கப்படலாம். இதைச் செய்வதற்கு ரணில் விக்கிரமசிங்க போன்றதொரு ஜனாதிபதிதான் தேவைப்பட்டார். ஆனால், சிங்கள-பௌத்த பெருந்தேசியவாதம், அவற்றைச் செய்வதற்கு இதுவரை அனுமதிக்கவில்லை. இன்று காலத்தின் கோலமாக, ஒரு விபத்தாக, ரணில் ஜனாதிபதியாகி இருக்கிறார். ஆகவே, இது ஓர் அருமையான வாய்ப்பு. ஆனால், இவற்றை இலகுவாகச் செய்துவிடவும் கூடாது. மிகுந்த ராஜதந்திரத்துடன், நல்லுறவையும் நல்லெண்ணத்தையும் முன்வைத்து, தொடர் பேச்சுவார்த்தைகள் மூலம் அடையப்படவேண்டியவை ஆகும். 2015இல் இருந்த களநிலவரத்தைவிட, இன்றைய களநிலவரம் தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு சாதகமானதாகவே இருக்கிறது. ஆகவே, தேசிய அரசியலின் முரண்பாடுகளுக்குள்ளும், தனிநபர் பிரச்சினைகளுக்குள்ளும் தேவையில்லாமல் சிக்கிக்கொள்ளாமல், இன்றுள்ள அரசாங்கத்திடமிருந்து, தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளில் ஒரு சிலவற்றையேனும் நிறைவேற்றிக்கொள்ளுதல் தான் புத்திசாலித்தனமான அரசியல். ஒட்டோ வொன் பிஸ்மார்க் சொன்னது போல, “அரசியல் என்பது சாத்தியமானவற்றின் கலை”. எந்தப் பயனுமில்லாமல் ரணிலை எதிர்ப்பதை விட, ரணிலைப் பயன்படுத்திக்கொண்டு, சாத்தியமான ஒன்றிரண்டையேனும் அடைந்துகொள்வதுதான் மக்களுக்குப் பயன்தரும் அரசியலாக இருக்கும். இதுபோன்ற வாய்ப்புகள் எப்போதும் அமைவதில்லை. பயன்படுத்திக்கொள்வார்களா தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள்? https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்-மக்களுக்கு-ஓர்-அரசியல்-சந்தர்ப்பம்/91-301469
  3. ஜனாதிபதி தெரிவும் தமிழ்க் கட்சிகளும் என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan இலங்கையினுடைய எட்டாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக, அரசியலமைப்பின் 40ஆவது சரத்தின்படி, பாராளுமன்ற உறுப்பினர்களிடையேயான இரகசிய வாக்கெடுப்பின் மூலம், ரணில் விக்கிரமசிங்க தெரிவுசெய்யப்பட்டு, பதவியேற்றிருக்கிறார். பல திருப்புமுனைகளோடு, மிக விறுவிறுப்பாக இந்த ஜனாதிபதி தெரிவு அரங்கேறியிருக்கிறது. இந்த ஜனாதிபதி தெரிவின் போதான தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாடுகள், நடவடிக்கைகள் என்பவற்றை, மீள்பார்வை செய்வதே இந்தப் பத்தியின் நோக்கமாகும். இன்றுள்ள பாராளுமன்றத்தைப் பொறுத்தவரையில், கூட்டணிக் கட்சிகள் உள்ளடங்கலாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டு, பாராளுமன்றம் ஏகிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 145 ஆகும். இதோடு, பொதுஜன பெரமுன அரசாங்கத்தோடு இணைந்த கட்சிகளாயினும், தமது கட்சி சின்னத்தில் போட்டியிட்டு, பாராளுமன்றம் ஏகிய உறுப்பினர்கள் மூன்று. ஆகவே, பொதுஜன பெரமுன, இந்தப் பாராளுமன்றத்தில் அசைக்க முடியாத பெரும்பான்மையைக் கொண்டிருக்கிறது என்பதில், மாற்றுக்கருத்து இருக்க முடியாது. கூட்டணிக் கட்சிகள் தனித்துச் செயற்படுவதாக அறிவித்த பின்னரும், பல பாராளுமன்ற உறுப்பினர்கள், குறிப்பாக கோட்டாவின் ‘வியத்மக’ குழுவிலிருந்து வந்த பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள், சுயாதீனமாகச் செயற்படுவதாக அறிவித்த பின்னரும் கூட, பொதுஜன பெரமுனவுக்கு கணிசமான பெரும்பான்மை இன்னும் இருக்கிறது என்பதுதான் யதார்த்தம். ஆகவே, அந்தப் பெரும்பான்மையை புறக்கணித்து, அரசியல் கணிப்புகளை மேற்கொள்ள முடியாது என்பது அரசியல் பாலபாடம். இந்தப் பின்னணியில்தான், தமிழ்க் கட்சிகள் ஜனாதிபதி தெரிவு தொடர்பில் மேற்கொண்ட தெரிவுகளை, நாம் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. ஜனாதிபதி தெரிவுப் போட்டியில், பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பொதுஜன பெரமுனவின் டளஸ் அழகப்பெரும, ஜே.வி.பியின் அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அநுரவுக்கு, அவரது கட்சியிலுள்ள மூன்று வாக்குகளைத் தவிர, வேறு வாக்குகள் கிடைக்கும் என எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. ரணிலுக்கு எதிரான வாக்குகள் சஜித், டளஸ் எனப் பிரியும். ரணில், அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று வெற்றியீட்டுவார் என்ற நிலை இருந்த போது, வேட்பாளர் முன்மொழிவுக்கு முதல்நாள், டளஸூக்கும், சஜித்துக்கும் இடையில் ஓர் இணக்கப்பாடு ஏற்படுகிறது. அதன்படி, சஜித் ஜனாதிபதி தெரிவுப் போட்டியிலிருந்து விலகிக்கொண்டு, டளஸூக்கு ஆதரவை வழங்கியிருந்தார். இதன் பின்னர், முன்பு எவருக்கும் வாக்களிப்பதில்லை என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்த சுதந்திரக் கட்சியும் டளஸை ஆதரிப்பதாக அறிவித்திருந்தது. வாய்ப்பே இல்லை என்றிருந்த டளஸ், வெற்றி பெறப்போவதாக சமூக ஊடகங்களில் கருத்துகள் பரப்பப்பட்டன. தமிழ்க் கட்சிகளைப் பொறுத்த வரையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது, 18ஆம் திகதியே தன்னுடைய நிலைப்பாட்டை தெட்டத்தௌிவாக அறிவித்துவிட்டது. “ஜனாதிபதி தெரிவுக்காகத் தம்மை முன்மொழிந்து இருப்பவர்கள், தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் தீர்வு விடயங்களை முன்னெடுக்கத் தயார் இல்லாதவர்களாகவே உள்ளனர். ராஜபக்‌ஷ தரப்கை அகற்றி, ஓர் அடிப்படை மாற்றத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தில், ரணில் விக்கிரமசிங்க அதற்கு ஒரு முட்டுக்கட்டையாக இருக்கின்றார். 2015ஆம் ஆண்டு, மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து நடைபெற்ற அவரது ஆட்சிக்காலத்தில், தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயத்தில், ஒற்றையாட்சிக்கு உட்பட்ட ஓர் இடைக்கால அறிக்கை ஒன்றையே தயாரித்து இருந்தனர். ஐக்கிய தேசிய கட்சி, அதற்கு மட்டும் தான் ஆதரவு தரலாம் என்ற விடயத்தையும் சமஷ்டியையும் தமிழ் மக்களுடைய சுயநிர்ணயத்தையும் நிராகரித்து, அவர்களுடைய செயற்பாடுகள் இன்னமும் அதிலிருந்து விடுபடாமல் இருக்கின்ற நிலையில், அவரை ஏற்க முடியாது. ரணிலை நாங்கள் என்ன காரணத்துக்காக நிராகரிக்கின்றோமோ, அதேநிலைப்பாட்டில் தான் சஜித் பிரேமதாஸாவும் தனது கருத்துகளை தெரிவித்து இருந்தார். அதிகாரப் பகிர்வு தொடர்பில் அவர், எங்களோடு பேசிய பொழுது, இந்தியாவில் உள்ள பஞ்சாயத்து முறையில் பிரச்சினைகள் தீர்க்கப்படும் முறையைக் கூறி, அதைப் போலவே தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்ற கோணத்தில், அவர் தன்னுடைய கருத்தை தெரிவித்திருந்தார். தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை சார்ந்த விடயத்துக்கும் பஞ்சாயத்து முறைக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பது, சஜித் பிரேமதாஸவுக்குத் தெரிந்திருக்கவில்லை போலும்” என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமது நீண்ட அறிக்கையில், தமது நிலைப்பாட்டை பட்டவர்த்தனமாகப் பதிவு செய்திருந்தது. தமிழ்த் தேசிய கூட்டமைப்போ, வாக்களிப்புக்கு முதல்நாள் இரவுதான் தன்னுடைய முடிவை எடுத்திருந்தது. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் வீட்டில் சஜித், டளஸ், ஜீ.எல்.பீரிஸ், டிலான் பெரேரா ஆகியோரையும் சந்தித்துப் பேசிய கூட்டமைப்பினர், டளஸை ஆதரிப்பதாக முடிவெடுத்தனர். டளஸ், சஜித் ஆகியோர், அரசியல் கைதிகளின் விடுதலை, தனியார் காணிகள் விடுவிப்பு உள்ளிட்ட கூட்டமைப்பின் 10 முக்கிய கோரிக்கைகளை ஏற்று, ‘எழுத்துமூல உடன்படிக்கை’யில் ஒப்பமிட்டனர் என்று அந்தக் கூட்டத்தின் பின்னர், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் பகிரங்கமாக வௌிப்படுத்தியிருந்தார். ஆனால், இதே செய்தியை ‘டெய்லி மிரர்’ பத்திரிகைத் தளம் பிரசுரித்த போது, அதை ‘குறும்புத்தனமானதும் தவறானதுமான செய்தி’ என்று கூட்டமைப்பின் மற்றொரு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார். இதுதான் உண்மையென்றால், அதனை ஏன் மறைக்க வேண்டும்? மக்களின் உணர்வுகளோடு ஊடகங்கள் விளையாடி, வாக்கெடுப்பை தீவிரமாகப் பாதிப்பதற்கு, இது ஒன்றும் மக்கள் வாக்களிக்கும் தேர்தல் இல்லையே? இன்று வரை, அந்த எழுத்துமூல ஒப்பந்தத்தை கூட்டமைப்பு வௌியிடவில்லை என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டியது. ஆனால், பொதுஜன பெரமுனவை எதிர்க்கும் கூட்டமைப்பு, டளஸை எப்படி ஆதரிக்கலாம் என்ற கேள்வி இங்கு முக்கியமானது. ரணில் விக்கிரமசிங்கவை, ‘ராஜபக்‌ஷ விசுவாசி’ என்று கூறும் கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள், டளஸ் எவ்வளவு பெரிய ராஜபக்‌ஷ விசுவாசி என்பதனை மறந்துவிட்டார்களா? ராஜபக்‌ஷர்களை எதிர்க்கிறோம் என்று சொல்லிவிட்டு, டளஸை ஆதரிப்பதெல்லாம் சின்னப்பிள்ளைத்தனமான அரசியல். அதற்கு அவர், ராஜபக்‌ஷர்களோடு முரண்பட்டு நிற்கிறார் என்று கூறுவதெல்லாம் சப்பைக்கட்டு. இன்றுவரை டளஸ், பொதுஜன பெரமுன உறுப்பினர் என்பது, இங்கு கோடிட்டுக் காட்டப்பட வேண்டியது! ஆகவே, இங்கு ‘ரணில் எதிர்ப்பு’ என்ற ஒரு சிலரின் தனிப்பட்ட நிகழ்ச்சிநிரல்தான், கூட்டமைப்பின் நிலைப்பாடாக்கப்பட முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கிறன என்பது தெட்டத்தௌிவாகப் புலனாகிறது. கூட்டமைப்பு, தமிழ் மக்களின் நலன் கருதியோ, கொள்கை சார்ந்தோ தமது முடிவை எடுக்கவில்லை. மாறாக, சிலரின் தனிநபர் வெறுப்பின் அடிப்படையில், தனது முடிவை எடுத்திருக்கிறதோ என்ற எண்ணமே எழுகிறது. இந்த முடிவு தொடர்பில் வௌிப்படையான எதிர்ப்பை, கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் முன்வைக்காது இருந்தாலும், அவர்கள் தனிப்பட்ட ரீதியில் இந்த முடிவை ஏற்றுச் செயற்பட்டார்களா, வாக்களித்தார்களா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது. அப்படி இல்லையென்றால், கூட்டமைப்பின் முடிவாக முன்வைக்கப்பட்ட முடிவை, கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் ஏற்கவில்லை என்பதுதான் யதார்த்தமாகிறது. இந்த ஜனாதிபதி தெரிவைப் புறக்கணித்திருந்தால் கூட, கூட்டமைப்பு இப்படி மூக்குடைபட்டு நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டிராது. ‘கூட்டமைப்பு என்பது தனிநபர்களின் சொத்தல்ல’ என்பதை, கூட்டமைப்பின் அனைத்துக் கட்சிகளும் அழுத்தமாகச் சொல்லவேண்டிய காலச்சூழல் எழுந்திருக்கிறது. தனிநபர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றவகையில், கூட்டமைப்பின் நடவடிக்கைகள் அமைய முடியாது; அமையக் கூடாது என்று இனியேனும் அமைதி காக்காது, வௌிப்படையாகப் பேச வேண்டிய காலத்தின் நிர்ப்பந்தம், கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. கூட்டமைப்பு என்பது, ஒருவரின் குரலாக மாறிப்போனால், அது கூட்டமைப்பினதும், தமிழ் மக்களினதும் எதிர்காலத்துக்கு ஏற்புடையதல்ல. தனது போக்கை மறுபரிசீலனை செய்ய வேண்டியதொரு சந்தியில், கூட்டமைப்பு நின்று கொண்டிருக்கிறது. மறுபுறத்தில், நீதியரசர் சீ.வீ.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் சார்பில் ஆறு கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்றை, ரணில் விக்கிரமசிங்கவிடம் வழங்கியதாகவும், அதன் பின்னரே ரணிலை ஆதரித்ததாகவும் அந்த ஆறு கோரிக்கைகள் என்ன என்பதையும், அவற்றை ரணில் ஏற்றாரா என்பதையும் அவர் தமிழ் மக்களுக்கு வௌிப்படையாகச் சொல்ல வேண்டும். வெறுமனே, ‘கூட்டமைப்பு அந்தப் பக்கம் போனால், நான் இந்தப் பக்கம் போவேன்’ என்ற ரீதியில் இந்த முடிவு எடுக்கபடவில்லை என்பதை, தமிழ் மக்களுக்கு உணர்த்த வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஜனாதிபதி-தெரிவும்-தமிழ்க்-கட்சிகளும்/91-301082
  4. அடுத்த ஜனாதிபதி எப்படி தெரிவு செய்யப்படுவார்? என்.கே. அஷோக்பரன் அரசியலமைப்பின் 38(1)(ஆ) சரத்தின் பிரகாரம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்ததன்படி, இலங்கையின் ஜனாதிபதி பதவி வெற்றிடமானது. இதனைத் தொடர்ந்து, அரசியலமைப்பின் 40(1)(இ) சரத்தின் படி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அரசியலமைப்பின் படி, கோட்டாபய விட்டுச்சென்றுள்ள மிகுதிப் பதவிக்காலத்திற்காக அடுத்த ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படும் வரை, பதில் ஜனாதிபதியாகியுள்ளார். ஜனாதிபதிப் பதவி வெற்றிடமாகும் பட்சத்தில், எஞ்சியுள்ள பதவிக்காலத்திற்கு ஜனாதிபதியொருவரை தேர்ந்தெடுப்பது தொடர்பில், அரசியலமைப்பின் 40வது சரத்தும், 1980ம் ஆண்டின் 2ம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமும் உரிய ஏற்பாடுகளைக் கொண்டுள்ளன. ஜனாதிபதி பதவி வெற்றிடமாகியுள்ள இந்த நிலையில், இலங்கையின் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வது பாராளுமன்றமே (அதாவது பாராளுமன்ற உறுப்பினர்களே). அரசியலமைப்பின் பிரிவு 40(1)(அ) மற்றும் 1980ம் ஆண்டின் 2ம் இலக்க சட்டத்தின் பிரிவு 3(1) ஆகியன பாராளுமன்றம் அதன் உறுப்பினர்களில், ஜனாதிபதியாவதற்கு அரசியலமைப்பு கூறும் தகுதிகளைக் கொண்ட, ஒரு பாராளுமன்ற உறுப்பினரை ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வழங்குகிறது. அந்தத் தேர்தலானது, ஜனாதிபதி பதவி வெற்றிடமான திகதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் நடத்தப்பட வேண்டும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் புதிய ஜனாதிபதி, பதவி விலகிய ஜனாதிபதியின் பதவிக் காலத்தின் எஞ்சிய காலப்பகுதிக்கான, அதாவது 2024 நவம்பர் வரை பதவியிலிருப்பார். பாராளுமன்றம் புதிய ஜனாதிபதியை எவ்வாறு தேர்ந்தெடுக்கும்? பாராளுமன்றம் கூடுதல் ஜனாதிபதி பதவி விலகியவுடன், ஜனாதிபதி பதவி வெற்றிடமாகி மூன்று நாட்களுக்குள் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும். அத்தகைய கூட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட திகதி மற்றும் நேரத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்க வேண்டும் என 1980ம் ஆண்டின் 2ம் இலக்க சட்டத்தின் பிரிவு 4 வழங்குகிறது. அவ்வாறு பாராளுமன்றம் கூடும் போது, பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஜனாதிபதி பதவி வெற்றிடமாகியுள்ளதை பாராளுமன்றத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிப்பதுடன். அடுத்த ஜனாதிபதியை பாராளுமன்ற உறுப்பினர்களிலிருந்து தேர்ந்தெடுப்பதற்கான வேட்புமனுக்களுக்கான திகதியாக, அன்றிலிருந்து 48 மணிநேரத்திற்கு குறையாத, ஏழு நாட்களுக்கு அதிகரிக்காத திகதியையும், நேரத்தையும் நிர்ணயம் செய்வார் (பிரிவு 5). வேட்புமனு குறித்த வேட்புமனுத் தினத்தில், பாராளுமன்றம் கூடும் போது, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தேர்தல் அதிகாரியாகச் செயற்படுவார். ஜனாதிபதி பதவிக்கு குறித்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரையும் தேர்ந்தெடுக்க விரும்பும் இன்னொரு பாராளுமன்ற உறுப்பினர், அவர் முன்மொழிய விரும்பும் உறுப்பினரின் முன் எழுத்துப்பூர்வ ஒப்புதலைப் பெற வேண்டும். அதன்பின்னர், அந்த உறுப்பினர், தான் முன்மொழிய விரும்பும் உறுப்பினரின் பெயரை ஜனாதிபதி பதவிக்காக பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் முன்மொழிவார். இன்னொரு பாராளுமன்ற உறுப்பினர் அதனை வழிமொழிய வேண்டும். இதில் விவாதத்திற்கு இடமில்லை. இவ்வாறு, ஜனாதிபதி பதவிக்காக ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினரின் பெயர் மட்டும் முன்மொழிந்து, வழிமொழியப்படும் போது, அவர் ஜனாதிபதி பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவிப்பார். அவ்வாறன்றி, ஒன்றிற்கு மேற்பட்டவர்கள் முன்மொழிந்து வழிமொழியப்படும்போது, பாராளுமன்ற செயலாளர் நாயகம், அன்றிலிருந்து 48 மணி நேரத்திற்கு மிகாத காலத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும். அதற்கான திகதியையும், நேரத்தையும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவிப்பார். (பிரிவு 6). தேர்தல் தேர்தல் திகதியன்று, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தேர்தல் அதிகாரியாகச் செயற்படுவார். தேர்தல் இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்படும். இந்தத் தேர்தலில் விசேடத் தன்மை யாதெனில், சபாநாயரும், ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகைியல் வாக்களிப்பில் கலந்துகொள்வார். பாராளுமன்ற உறுப்பினரின் பெயர் அழைக்கப்படும் போது, அவர் தேர்தல் அதிகாரியிடம் சென்று வாக்குச் சீட்டைப் பெற்றுக்கொண்டு, இரகசிய முறையில் வாக்களிப்பார். தேர்தல் அதிகாரி, வாக்குப்பதிவு முடிவடைவதற்கு முன், முதலில் வாக்களிக்காத எந்த உறுப்பினரின் பெயரையும் இரண்டாவது முறையாக அழைப்பார். அத்தகைய உறுப்பினர் தனது பெயர் இரண்டாவது முறை அழைக்கப்பட்ட பிறகும் கூட வாக்களிக்கவில்லை என்றால், அவர் வாக்களிப்பதில் இருந்து விலகியதாகக் கருதப்படுவார். (பிரிவு 7). வாக்களிக்கும் முறை மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் முறையை ஒத்த முறையிலேயே, பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிப்பார்கள். அதாவது இரண்டிற்கு மேற்பட்டவர்கள் ஜனாதிபதிப் பதவிக்காக முன்மொழியப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், பாராளுமன்ற உறுப்பினர்கள் 1, 2 என்றவாறு முன்னுரிமைத் தெரிவு அடிப்படையில் வாக்களிக்க முடியும். தனது முதலாவது, அல்லது ஒரே தெரிவிற்கு முன்னால் “1” என்று இலக்கமிட்டு வாக்களிக்க வேண்டும். இரண்டிற்கு மேற்பட்டவர்கள் போட்டியிடும் போது, அடுத்த தெரிவுகளை 2, 3… என்று குறிப்பிட்டுத் தெரிவிக்க முடியும். (பிரிவு 8). வாக்கெண்ணிக்கை தேர்தல் அதிகாரி வாக்குச் சீட்டுகளை ஆய்வு செய்து, செல்லாத வாக்குச் சீட்டுகளை நிராகரித்த பிறகு, மீதமுள்ள வாக்குச் சீட்டுகளை ஒவ்வொரு வேட்பாளருக்கும் பதிவு செய்யப்பட்ட முதல் (“1”) விருப்பத்தேர்வுகளின்படி பிரிக்க வேண்டும். ஒவ்வொரு வேட்பாளரும் பெற்றுக்கொண்ட முதல் விருப்பத் தேர்வு வாக்குகளின் எண்ணிக்கையை அவர் கணக்கிடுவார். (பிரிவு 10). எந்தவொரு வேட்பாளரும் பதிவான செல்லுபடியாகும் வாக்குகளில் பாதிக்கு மேல் பெற்றிருந்தால், தேர்தல் அதிகாரி, அத்தகைய வேட்பாளரை ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்க வேண்டும். (பிரிவு 11). எந்தவொரு வேட்பாளரும் பதிவான செல்லுபடியாகும் முதல் விருப்பத் தேர்வு வாக்குகளில் பாதிக்கு மேல் பெறாதிருந்தால், ஆகக் குறைந்த முதல் விருப்பத் தேர்வு வாக்குகளைப் பெற்றுக்கொண்டவர், போட்டியிலிருந்து நீக்கப்பட்டு, அவருடைய வாக்குச் சீட்டுக்களில் இரண்டாவது (“2”) விருப்பத் தேர்வு வாக்குகள் எண்ணப்பட்டு, அவற்றில் மற்றைய வேட்பாளர்கள் பெற்றுள்ள இரண்டாவது விருப்பத் தேர்வு வாக்குகள், அவர்கள் பெற்றுக்கொண்ட முதல் விருப்பத் தேர்வு வாக்குளுடன் சேர்ந்து கணக்கிடப்படும். இப்படியாக ஒரு வேட்பாளர் பதிவான செல்லுபடியாகும் வாக்குகளில் பாதிக்கு மேல் பெறாத நிலையில், குறைந்த வாக்குளைப் பெற்றவர்கள் ஒன்றொன்றாக நீக்கப்பட்டு, அவர்களுடைய இரண்டாம் விருப்புவாக்கு அல்லது, இரண்டாம் விருப்பு வாக்கு பெற்றவரும் போட்டியிலிருந்து ஏலவே நீக்கப்பட்டிருந்தால், மூன்றாவது விருப்பு வாக்கு என்றவாறு அவை கணக்கெடுக்கப்பட்டு குறித்த வேட்பாளர்களின் வாக்குகளோடு ஒன்று சேர்க்கப்படும். இவ்வாறு எண்ணிய பின்னரும், எண்ணிக்கையின் முடிவில் எந்த வேட்பாளரும் செல்லுபடியாகும் வாக்குகளில் பாதிக்கு மேல் பெறவில்லை என்றால், அந்த எண்ணிக்கையில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற வேட்பாளரை தேர்தல் அதிகாரி ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டதாக அறிவிக்க வேண்டும். (பிரிவு 12). இரண்டு வேட்பாளர்கள் சம அளவிலான வாக்குகளைப் பெற்றிருந்தால், தேர்தல் அதிகாரி தான் தீர்மானிக்கும் வகையிலான லொத்தர் ஒன்றின் மூலம், அந்த இருவரில் ஒருவரை ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுப்பார். (பிரிவு 13) ஜனாதிபதி பதவிக்கு பாராளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட வேட்பாளரின் பெயரை, அத்தகைய தேர்தல் திகதிதியிலிருந்து மூன்று நாட்களுக்குள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் வர்த்தமானியில் வெளியிட வேண்டும். (பிரிவு 17) கள நிலவரம் தற்போதைய களநிலவரத்தின்படி, ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ, அநுர குமார திசாநாயக்க, டளஸ் அழகப்பெரும ஆகியோரின் பெயர்கள் ஜனாதிபதிப் பதவிக்கு முன்மொழியப்படலாம் என்று தெரிகிறது. இன்றைய நிலையில் ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி யாருக்கும் ஆதரவில்லை என்று அறிவித்திருக்கிறது. தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டினை இன்னும் அறிவிக்கவில்லை. ஆகவே எத்தனை பேர் வாக்களிக்கப்போகிறார்கள். எத்தனை பேர் வாக்களிப்பை புறக்கணிக்கப் போகிறார்கள் என்பது இன்னும் தெரியவில்லை. எத்தனை பேர் மொத்தம் செல்லுபடியான முறையில் வாக்களிக்கிறார்கள் என்பதில்தான், ஒருவர் முதல் சுற்று வாக்கெடுப்பிலேயே ஜனாதிபதியாவதற்கு எத்தனை வாக்குகள் தேவை என்பதைச் சொல்ல முடியும். 225 பேரும் செல்லுபடியான முறையில் வாக்களித்தால், ஜனாதிபதியாவதற்கு, ஒருவருக்கு 113 முதல் விருப்புரிமை வாக்குகள் தேவை. வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை குறையக் குறைய, வெற்றிக்கான எண்ணும் குறையும். 200 பேர் மட்டுமே செல்லுபடியான முறையில் வாக்களித்தால், வெற்றிக்கான எண் 101 ஆகும். களம் தயார். அடுத்த ஜனாதிபதி யார் என்பது இந்த வாரம் நிச்சயமாகும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அடுத்த-ஜனாதிபதி-எப்படி-தெரிவு-செய்யப்படுவார்/91-300599
  5. பதவிவிலகுகிறார் கோட்டா? என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan ஜனாதிபதிப் பதவியிலிருந்து கோட்டாபய, எதிர்வரும் 13ம் திகதி, புதன் கிழமை, எசல பௌர்ணமி தினத்தன்று, விலகுவதாக சபாநாயகருக்கு தெரிவித்திருப்பதாக செய்தியறிக்கைகள் குறிப்பிடுகின்றன. 2022 ஜூலை 9ம் திகதி நடந்த பெரும் ஆர்ப்பாட்டத்தையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை ஆகியவற்றினுள் நுழைந்து அவற்றைக் கைப்பற்றிய நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்கு தீவைத்து எரித்தழித்த பின்புலத்தில், இந்த அறிவிப்புச் செய்தி வந்திருக்கிறது. இப்படி ஒரு செய்தி வந்துவிட்ட பின்னர் “பதவிவிலகுறார் கோட்டா” என்பதற்கு பிறகு கேள்விக்குறிக்கான தேவை என்ன என்று கேள்வி எழலாம். ஜனாதிபதி பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டு அதனை சபாநாயகருக்கு அனுப்பி வைத்து, அது சபாநாயகருக்கு கிடைக்கும் வரை, பதவி விலகல் என்பது ஒரு செய்தி மட்டுமே. அதன் நிச்சயத்தன்மைக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஜனாதிபதி பதவி விலகாவிட்டால் அடுத்தது என்ன என்பது பெருங்கேள்வி. சட்டரீதியாக ஜனாதிபதியை பதவி விலகச் செய்ய ஒரு வழிதான் இருக்கிறது. அது பழிமாட்டறைதல் (impeachment). ஆனால் அது ஒரு நீண்ட காலந்தேவைப்படும் செயற்பாடு. முதலில் ஜனாதிபதி அரசியலமைப்பு குறிப்பிடும் பழிமாட்டறைதலுக்கான குற்றமொன்றைப் புரிந்தார் பிரேரணை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு நிறைவேற்றப்பட வேண்டும்.\ அதற்குப் பின்னர் உயர் நீதிமன்றம் குறித்த குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி, குறித்த ஜனாதிபதி குறித்த குற்றங்களைப் புரிந்தார் என்று தீர்மானிக்க வேண்டும். அந்தத் தீர்மானத்தின் படி, பாராளுமன்றம் மீண்டும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு பழிமாட்டறைதல் தீர்மானத்தை நிறைவேற்றினால் மட்டுமே ஜனாதிபதி பதவி நீக்கப்படுவார்! பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்றை நிறைவேற்றுவதனூடாக ஜனாதிபதியை பதவி நீக்க முடியாது. அத்தகைய ஏற்பாடுகள் அரசியலமைப்பில் இல்லாததற்குக் காரணம், ஜனாதிபதி என்பவர், இங்கு பாராளுமன்றத்தால் நியமிக்கப்படும் ஒருவர் அல்ல. மாறாக அவர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஜனாதிபதிக்கென தனித்த மக்களாணையொன்றை ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்குகிறார்கள். ஆகவே பாராளுமன்றம் அந்த மக்களாணையை இலகுவில் மீறக்கூடியதாக கட்டமைப்பு அமையக்கூடாது என்பதனால்தான் அரசியலமைப்பு இவ்வாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே மக்களால் ஜனாதிபதித் தேர்தலில் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியை பதவி விலக்குவது என்பது, இலங்கையின் அரசியலமைப்பு ஏற்பாடுகளின் கீழ், அவ்வளவு இலகுவான காரியமல்ல. ஆகவேதான் மக்கள் நேரடியாக வீதிக்கிறங்கி கோட்டாவை பதவி விலகுமாறு அழுத்தங்கொடுத்துப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். சட்டரீதியாக செய்ய முடியாதததை, சட்டத்தைத் தாண்டி அரசியல் ரீதியாக சாதிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இலங்கை மக்கள் இருக்கிறார்கள். ஆனால், இது அனைத்தையும் மீறியும் கோட்டா பதவி விலகாவிட்டால் என்ன நடக்கும் என்ற கேள்விக்கான நிச்சயமான பதவிலை எவரால் சொல்ல முடியாது. மறுபுறத்தில் ஜனாதிபதி கோட்டா பதவி விலகிவிட்டால், அடுத்தது என்ன என்ற கேள்வியும் இங்கு முக்கியமானது. ஜனாதிபதி பதவி, அவரது பதவிக்காலத்தின் போது, பதவிவிலகல் அல்லது வேறு காரணங்களினால் வெற்றிடமாகும் போது, இலங்கை அரசியலமைப்பின் படி உடனடியாக பிரதமர் பதில் ஜனாதிபதியாவார். பிரதமர் பதவி வெற்றிடமாக இருந்தால், சபாநாயகர் பதில் ஜனாதிபதியாவார். ஜனாதிபதிபதவி வெற்றிடமாகிய முப்பது நாட்களுக்குள் பாராளுமன்றமானது, ஜனாதிபதியாவதற்கான தகுதிகள் என்று அரசியலமைப்புரைக்கு தகுதிகளைக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை, வெற்றிடமாகிய ஜனாதிபதிப்பதவியின் எஞ்சிய பதவிக்காலத்திற்கு ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பார்கள். இதற்கு முன்பதாக, ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ அகால மரணமடைந்தபோது, அப்போது பிரதமராக இருந்த டிங்கிரி பண்டா விஜேதுங்க பாராளுமன்றத்தினால், ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் எஞ்சிய பதவிக்காலத்திற்கு ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டமையை ஓர் உதாரணமாகக் குறிப்பிடலாம். மேலும், தற்போது அனைத்துக் கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பது பற்றியும் நிறைய குறிப்பிடப்படுகின்றன. அனைத்துக்கட்சி அரசாங்கம் ஒன்று அமைய வேண்டுமானால், அதில் பிரதமர் யார், அமைச்சர்கள் எவரெவர் என்பது முக்கிய கேள்வி. அரசாங்கம் ஒன்று இயங்க வேண்டுமானால், அதற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் என்பது அவசியம். ஆகவே பாராளுமன்றத்தில் அந்த பெரும்பான்மையின் ஆதரவைப் பெறக்கூடியவர்கள் யார் இருக்கிறார்கள் என்பது மிக முக்கியமான கேள்வி. இந்த இடத்தில்தான் பெரும் சிக்கல் ஒன்று உருவாகிறது. இன்று ஆர்ப்பாட்டக்களத்தில் முன் நிற்கும் எதிர்க்கட்சிகள் எதற்கும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இதுவரை கிடையாது. ஆகவே, கோட்டா பதவி விலகினால், எஞ்சிய பதவிக்காலத்திற்கான ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கும், இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை அவசியம். இதில், இதுவரை காலமும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் ராஜபக்‌ஷர்களின் கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முடிவு என்பது தீர்மானம்மிக்கதாக அமையும் என்பது கவனிக்கப்பட வேண்டியது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்றால் கூட, இன்றைய நிலையில் பாராளுமன்றமானது அதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய நிலை இருக்கிறது. அதற்கும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை அவசியம். ஆகவே, இன்று ஆர்ப்பாட்டக்களத்தில் முன்னிலை வகிக்கும் எதிர்க்கட்சிகளுக்கு முன்னுள்ள பெரும் சவால், பாராளுமன்றத்தில் தமக்கான பெரும்பான்மையை எப்படித் திரட்டிக்கொள்வது என்பதுதான். பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இல்லாது, அரசாங்கமொன்றை அமைக்க முடியாது, கோட்டா பதவி விலகினால் எஞ்சியுள்ள பதவிக்காலத்திற்கான ஜனாதிபதியை தேர்தெடுக்க முடியாது, பொதுத் தேர்தல் நடத்துவதற்கான தீர்மானத்தைக் கூட நிறைவேற்றமுடியாது. நாடு அரசியல் ஸ்திரத்தன்மையின்றி தத்தளிக்கும். இதுதான் அடுத்த பெரும் சவால். இந்த நிலையில், எதிர்க்கட்சிகளுக்கு இருக்கக் கூடிய ஒரு நம்பிக்கை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து கணிசமானவர்கள் பிரிந்து வருவார்கள் என்பதுதான். ஒரு கப்பல் கவிழும்போது, அதிலிருந்து தப்பித்தோ வௌியே பாய்ந்து தப்பிக்கும் எலிகளைப் போல, மூழ்கும் ராஜபக்‌ஷ கப்பலிலிருந்து பாய்ந்து தப்பிக்கும் எலிகளாக பலர் கட்சிமாறுவார்கள். தம்மை “சுயாதீனர்களாக” அறிவித்துக்கொண்டு, இடைக்கால சர்வ கட்சி அரசாங்கத்திற்கும், அதன் முடிவுகளுக்கும் ஆதரவு தருவார்கள் என்பதுதான் எதிர்க்கட்சிகளுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை. ஆனால் இத்தோடு சிக்கல் தீராது. இங்கு எதிர்க்கட்சிகள் என்பது பல. அவற்றில் கொள்கைகள், நோக்கங்கள், முன்னுரிமைகள் மாறுபட்டவை. ஆகவே கோட்டா பதவி விலகினால் எஞ்சியுள்ள காலப்பகுதிக்கு யாரை தேர்ந்தெடுப்பது என்பதே சிச்கலானதொரு கேள்வியாக அமையலாம். இங்கு ஜனாதிபதியாக வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இல்லை என்று யோசிப்பது ஒருபுறமிருக்க, நாடு மிகமோசமான பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் யார் ஜனாதிபதியாகும் சவாலை ஏற்கப் போகிறார்கள் என்பது யோசிக்க வேண்டியதொரு விஷயம். எல்லா விடயங்களையும் கருத்திற்கொண்டு பார்க்கையில், இந்த சிக்கலுக்கான தீர்வுப் புள்ளி, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதில்தான் தங்கியுள்ளது. அத்தகைய அரசியலமைப்பு திருத்தத்திற்கு சர்வசன வாக்கெடுப்பில் அங்கிகாரமொன்று பெறப்படவேண்டுமானால், அதனைப் பெற்றுக்கொள்வதற்கு இதனைவிடப் பொருத்தமானதொரு சந்தர்ப்ப சூழல் உருவாகாது. ஆகவே இது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதுடன், நாட்டின் அரசியலமைப்பை மாற்றியமைப்பதற்கான அரிய சந்தர்ப்பமாகக் கருதப்பட வேண்டும். நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை இல்லாதொழித்தல், அரசியலமைப்பிற்கான அடிப்படைத் திருத்தங்கள் பலவற்றைச் செய்ய சர்வசன வாக்கெடுப்பில் மக்கள் அங்கிகாரம் தேவை என்று பாதுகாப்பு முட்டுக்கட்டையாக இருந்தது. இன்று அதனைச் செய்யக் கூடிய யதார்த்த சூழல் உருவாகியிருக்கிறது. ஆனால் அதனைச் செய்வதற்கு மக்கள் பிரதிநிதிகளாகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தயாராக இருக்கிறார்களா என்பது முக்கிய கேள்வி. இதனை அவர்கள் செய்யாவிட்டால், சர்வ கட்சி அரசாங்கம் என ஆட்சியலமர்ந்தாலும், நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை எப்படி ஏற்படுத்தப்போகிறார்கள் என்பதை அவர்கள்தான் மக்களுக்கு விளக்க வேண்டும். நாடு அரசற்ற அராஜகத்திற்கு (anarchy) முற்றாக மூழ்குவதற்கு முன்னதாக நாட்டைக் காப்பாற்றாவிட்டால், இலங்கையின் எதிர்காலம் என்பது கேள்விக்குறியே. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பதவிவிலகுகிறார்-கோட்டா/91-300198
  6. நோயைக் குணப்படுத்துவதா? அறிகுறியை மறைப்பதா? என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan சர்வதேச நாணய நிதியத்தின் உத்தியோகத்தர் குழாமொன்று ஜூன் 20 முதல் 30 வரை, பத்து நாள்கள், இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மற்றும் இலங்கைக்கான விரிவான பொருளாதார சீர்திருத்த திட்டம் ஆகியன பற்றி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமரும் நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க, திறைசேரியின் செயலாளர் கே.எம். மஹிந்த சிறிவர்தன, அரசாங்க மற்றும் மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தனியார் துறை பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புகள், சர்வதேச நாணய நிதியத்தின் அபிவிருத்தி பங்காளிகள் ஆகியோரைச் சந்தித்து, பேச்சுவார்த்தைகளை நடத்திவிட்டுத் திரும்பி இருக்கிறார்கள். இந்த விஜயத்தைத் தொடர்ந்து, சர்வதேச நாணய நிதியம் உத்தியோகபூர்வமாக வௌியிட்டிருந்த ஊடக அறிக்கையில், ‘சர்வதேச நாணய நிதிய குழு (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) மூலம் ஆதரிக்கப்படும் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்து, அதிகாரிகளுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடலை நடத்தியது. குறித்த கலந்துரையாடல்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. மேலும், விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) தொடர்பாக, உத்தியோகத்தர்கள் அளவிலான உடன்பாட்டை எட்டுவதற்கான கலந்துரையாடல் தொடரும்’ என்று குறிப்பிட்டிருந்தது. ‘கலந்துரையாடல் தொடரும்’ என்ற குறிப்பு, இந்த விஜயத்தை தொடர்ந்து இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலிருந்த இலங்கையர்களைக் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. இந்தக் கவலைக்கு முக்கிய காரணம், சர்வதேச நாணய நிதியத்தினுடனான ஒப்பந்தமொன்று இன்றி, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பெருமளவு உதவி எதையும் இலங்கைக்கு வழங்கத் தயாராக இல்லை என்ற நிலைமையாகும். ஆகவே, பொருளாதார ரீதியில் இலங்கை மீண்டெழுவதற்கு, சர்வதேச நாணய நிதியத்தினுடனான ஒப்பந்தம், இன்றியமையாததொரு தேவையாக உருவெடுத்திருக்கிறது. இது பற்றி இன்னும் பேசுவதற்கு முன்பதாக, இலங்கையர்கள் ஒரு விடயத்தைப் புரிந்துகொள்வது அவசியமாகும். சர்வதேச நாணய நிதியம் என்பது, தர்ம ஸ்தாபனம் அல்ல. அதன் நோக்கம் தர்மம் செய்வதல்ல; அந்நியச் செலாவணிப் பற்றாக்குறையுள்ள நாடுகளுக்கு, கடன் வசதி வழங்குவதன் மூலம், கடன் பெறும் நாடுகளுக்கு ஆலோசனை, தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதன் மூலம், அந்நாடுகள் நிதி நெருக்கடி நிலையைச் சமாளிக்கவும், அதிலிருந்து மீளவும் உதவி செய்வதாகும். ஆனால், அது வழங்குவது கடன். அந்தக் கடன் திரும்பச் செலுத்தப்பட வேண்டும். ஆகவே, கடனைத் திருப்பிச் செலுத்தத் தக்கதாகவும், பொருளாதார நிலையை மீட்டெடுக்கக் கூடியதாகவுமான குறுங்கால, நீண்டகாலக் கொள்கைகளும் திட்டங்களும் இல்லாத அரசொன்றுக்கு சர்வதேச நாணய நிதியம், தர்மம் செய்வதுபோல கடன்வழங்காது. அதற்காகத்தான், அது நீண்ட கலந்துரையாடல்களின் மூலம், பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பிலான பல விடயங்களை உள்ளடக்கிய விரிவான ஒப்பந்தமொன்றை மேற்கொள்கிறது. அந்தத் திட்டத்தின்படி அரசாங்கம் நடக்கும் போது மட்டும்தான், அது தொடர்ந்து கடனுதவியை அளிக்கிறது. ஒரு வகையில், இது இலங்கை போன்ற, முறையான பொருளாதார திட்டம் எதுவுமில்லாத, ஆட்சியிலுள்ளவர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்றவாறு பொருளாதாரம், நாணயக் கொள்கை என்பவற்றை மாற்றி அமைத்துக் கொண்டிருக்கும் ‘வாழைப்பழக் குடியரசு’களுக்கு நல்ல விடயம்தான். ஆனால், இதில் குறைகள் இல்லாமலும் இல்லை. சர்வதேச நாணய நிதியத்தின் கடன் என்பதும், இதுவரை இலங்கை வௌிநாடுகளிடம், வௌிநபர்களிடம் வாங்கிய கடன்கள் எல்லாமே, மீளச் செலுத்தப்பட வேண்டும். அப்படியானால், அரச வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும்; அரச செலவினம் குறைய வேண்டும். அரச வருமானம் அதிகரிப்பதற்கு, வரி விதிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். இந்த வரிச் சுமை மக்களால்தான் சுமக்கப்படப் போகிறது. அதுபோலவே அரச செலவு குறையும் போது, அரசாங்கத்தின் பொதுநலச் செயற்றிட்டங்களும் குறையலாம். ஆகவே, சர்வதேச நாணய நிதியத்தினுடனான ஒப்பந்தத்தின்படியான, பொருளாதார மறுசீரமைப்பு ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் போது, அது இலகுவாக இருக்கப்போவதில்லை. இது ஒரு கடினமான பாதையாக இருக்கும். ஒரு பெருநோயிலிருந்து மீள்வதற்கான சிகிச்சை இது. சிகிச்சை இலகுவானதாக இருக்கப்போவதில்லை. அது கடுமையானது. ஆனால், கட்டுப்பாட்டுடன், பொருளாதார மீட்சிக்கான திட்டங்கள் நீண்ட காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் போது, இந்த நோயிலிருந்து நாடு ஒரு பத்து வருடங்களில் மீளமுடியும். இந்தக் கடினமான பொருளாதார மீட்புச் சிகிச்சையை முன்னெடுக்கும் எந்த அரசாங்கமும், மக்களிடம் பிரபல்யம் பெறப்போவதில்லை. அவை கெட்டபெயரையே பெறும். கசப்பான மருந்தை, வலிந்தூட்டும் கடுமையான வைத்தியரை வெறுக்கும் குழந்தையைப் போல, மக்கள் இந்தத் திட்டங்களை அமல்படுத்தும் அரசாங்கத்தை வெறுக்கத் தொடங்குவர். இது சந்தர்ப்பவாத சக்திகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும். “பத்தே நாளில் நாம் குணப்படுத்துகிறோம்” என்று வாய்ஜாலம் பேசுவோர்பால், மக்கள் ஈர்ப்புக்கொள்வதற்கான வாய்ப்புகள் பல. ஆனால், அவர்களால் குறுங்காலத்தில் இனிப்புகளை வழங்கமுடியுமேயன்றி, நோயைக் குணப்படுத்த முடியாது. இதுபோன்று இனிப்பு வழங்குனர்களால்தான், இலங்கை இந்த நிலைக்கே வந்தது. முறையான பொருளாதாரக் கொள்கை, வளர்ச்சித் திட்டம் என எதுவுமில்லாமல், பொருளாதாரத்துக்குப் பயன்தராத திட்டங்களை, பெரும் கடனெடுத்து நடைமுறைப்படுத்தி, கடனடைக்கும் வழிகளைப் பற்றியெல்லாம் சிந்திக்காத, தூரநோக்கற்ற, மக்களுக்கு ‘இனிப்பு’ வழங்கி அதிகாரத்தை தக்கவைத்துக்கொண்டவர்களால், இலங்கைக்கு வந்த நிலை இது. ஆகவேதான், கசப்பான வைத்தியத்தை வழங்கும் எந்த அரசாங்கமும், அதற்கான தேவை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு வழங்குவது இன்றியமையாத ஒன்றாகும். வறுமையை ஒழிக்க, அரசாங்கம் பணத்தை அச்சிட்டு மக்களுக்கு வழங்கவேண்டும் என்று நினைக்கிறளவில் பொருளாதார அறிவுடையவர்கள் பலர் வாழும் நாட்டில், பொருளாதாரம், பொருளியல் பற்றிய விழிப்புணர்வை அரசாங்கம் வழங்கத் தவறினால், கசப்பு மருந்து வழங்கும் அரசாங்கத்தை, மக்கள் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, இனிப்பு வழங்குவோரை ஆட்சிக்குக் கொண்டுவந்துவிடுவர். மறுபுறத்தில், சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை விரைவில் எட்டுவதில் அக்கறை காட்டுவதை விட்டுவிட்டு கோட்டாபய ராஜபக்‌ஷ, ரஷ்யாவிடம் எண்ணெய் கடன் வாங்குவது, மத்திய கிழக்கு நாடுகளிடம் எண்ணெய் கடன் வாங்குவது, அவ்வப்போது அத்தியாவசியத் தேவைக்குக் கடன் வாங்குவது என, எஞ்சியிருக்கும் தனது இரண்டரை வருட காலத்தை ஓட்டிவிடலாம் என யோசிப்பது, இலங்கையை மிகப் பெரிய மீளமுடியாத பள்ளத்துக்குள் தள்ளிவிடும். எரிபொருள், எரிவாயு, அத்தியாவசியப் பொருட்கள் போன்றவற்றின் தட்டுப்பாடு நோய் அல்ல; அவை நோயின் அறிகுறிகள்தான். இலங்கையில் பொருளாதாரம் நலமாக இருந்தால், இலங்கைக்கு அந்நியச் செலாவணி கையிருப்பு தேவையானளவு இருக்குமானால், எரிபொருள், எரிவாயு வரிசைகள் மறைந்து போய்விடும். ஆகவே, உலகின் அநேக நாடுகள், குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதான பங்களிப்பு நாடுகள், இன்று பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள ரஷ்யாவுடன், இலங்கை புதியதொரு பொருளாதார உறவை உருவாக்குவது என்பது, எவ்வளவு தூரம் புத்திசாலித்தனமானது என்பதை கோட்டாபய சிந்திக்க வேண்டும். நோயின் அறிகுறியைத் தீர்க்க வைத்தியம் தேடி, நோயைத் தீர்க்கும் வைத்தியத்தை தொலைத்துவிடக்கூடாது. அதுபோலவே, கோட்டாபய பதவி விலகினால்த்தான், இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட, சர்வதேச நாடுகளின் உதவிகள் கிடைக்குமென்றால், கோட்டா, ‘கோ ஹோம் கோட்டா’ என்ற மக்களின் குரலை ஏற்று, பதவி விலகுவதுதான் இலங்கைக்கு நன்மை பயப்பதாக இருக்கும். மாறாக, தனது எஞ்சியிருக்கும் இரண்டரை வருடகால பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக கோட்டா, இலங்கையின் எதிர்காலத்தை பகடையாக்குவது நியாயமல்ல. கோட்டாவால், இலங்கையின் நோய்க்கு இரண்டரை வருடங்களில் வைத்தியம் செய்ய முடியாது. அவராலோ, ஞானாக்காவாலோ அது முடியாது. அதற்கு முயற்சிப்பது என்பது, கோவிட்-19 பெருந்தொற்றுக்கு ‘தம்மிக்க பாணி’யால் தீர்வுகாண முயன்றதற்குச் சமனானதாக அமையும். ஆகவே, நோய் தீரும் வைத்தியத்தைப் பெறுவதற்கு கோட்டா தடைக்கல்லாக நிற்பதை விட, விலகி வழிவிடுவதே அவர் இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் ஆற்றக்கூடிய ஒரே நல்ல சேவையாக அமையும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நோயைக்-குணப்படுத்துவதா-அறிகுறியை-மறைப்பதா/91-299679
  7. பொய் பொய் பொய் என்.கே.அஷோக்பரன் Twitter: @nkashokbharan இந்தா இன்றைக்கு எரிபொருள் கப்பல் வருகிறது. இல்லை, ஒரு சின்ன சிக்கல், ஒருநாள் கழித்துத்தான் எரிபொருள் கப்பல் வரும். இல்லை கப்பல் அடுத்த இரண்டு நாட்களுக்கு வராது. இப்படி வராத கப்பல், இன்றைக்கு வருகிறது, நாளைக்கு வருகிறது என்று ஆயிரம் பொய்க்கதைகளை சொல்லி தனக்கிருந்த கொஞ்ச மரியாதையையும் கெடுத்துக்கொண்டிருக்கிறார் இலங்கையின் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர. ஆனால் இத்தகைய பொய்களைச் சொன்ன முதல் அமைச்சரும், அரசியல்வாதியும் காஞ்சன அல்ல. அரசியல்வாதி என்றாலே பொய்தான் சொல்லுவான் என்று மக்கள் உறுதியாக நம்பும் அளவுக்கு அரசியல்வாதிகள் பொய் சொல்வது ஏன்? அப்படி பொய் சொல்லும் அரசியல்வாதிகளை மக்கள் தொடர்ந்தும் நம்புவது ஏன்? என்பதெல்லாம் சுவாரசியமான கேள்விகள். அரசியல்வாதிகள் பொய் சொல்வதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இதைப்பற்றி கருத்துரைத்த ஜொனதன் றோச், “அரசியலில் போலித்தனமும் இரட்டைப் பேச்சும் கருவிகள். ஜனாதிபதி ரிச்சர்ட் எம். நிக்சன் வோட்டர்கேட் சர்ச்சைக்கு உடந்தையாக இருந்ததை மறுத்தபோது, அது தவறான முறையில், சட்டவிரோதமாக அல்லது தனிப்பட்ட ஆதாயத்திற்காக செய்ததை மறைக்கச் சொன்ன பொய், ஆனால் ஒரு பொது நோக்கத்திற்காகவும் பொய் சொல்லப்படலாம். ஆப்ரஹாம் லிங்கனின் விஷயத்தைப் பொருத்தவரையில், அது உள்நாட்டுப் போரைத் தடுப்பதற்கான நியாயமான பொது நோக்கங்களுக்காக சொல்லப்பட்டதைப் போன்று. மேலும் அமெரிக்க கௌரவத்தையும் பாதுகாப்பையும் பாதுகாக்க, அமெரிக்க உளவு விமானத்தை சோவியத் யூனியன் சுட்டு வீழ்த்தியதை ஜனாதிபதி டுவைட் டி. ஐசன்ஹோவர் மறுத்தது போலவும் பொய் சொல்லப்படலாம்… தனிப்பட்ட முறையில் ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டு, அதை பொதுவில் சரிசெய்வது அல்லது மறுப்பது பாசாங்குத்தனமா? நிச்சயமாக. ஆனால் பொது மற்றும் தனிப்பட்ட முகங்களை தனித்தனியாக பராமரிப்பது நாம் அனைவரும் தினமும் செய்யும் ஒன்று. எரிச்சலூட்டும் உறவினர்களிடம் நாங்கள் அவர்களின் வருகையால் மகிழ்ந்தோம் என்று சொல்கிறோம், மோசமான சேவையை வழங்கிய தகுதியற்ற பணியாளர்களுக்கு நன்றி கூறுகிறோம், மேலும் தவறு என்று எங்களுக்குத் தெரிந்தே உயரதிகாரிகளுடன் உடன்படுகிறோம்” என்கிறார் அவர். ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள் மற்றும் இராஜதந்திர சூழ்ச்சிகளை எளிதாக்குவதற்கு அரசியல் போலித்தனம், பாசாங்குத்தனம், இரட்டைப்பேச்சு, மற்றும் பொய் சில சமயங்களில் அவசியமான கருவியாக இருக்கிறது என்பதை றோச் சுட்டிக்காட்டுவது முற்றிலும் சரியானது. வள்ளுவன் சொன்னது போல பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். ஆனால் யாருக்கு நன்மை பயக்கும் என்பது இங்கு முக்கியமானது. இங்கு நன்மை என்பது பொதுநன்மை. ஆனால் அரசியல்வாதிகள் மேற்சொன்ன காரணங்களுக்காகவும், பொது நன்மைக்குமாகவும் மட்டும்தான் பொய் சொல்கிறார்களா? இல்லை. பல சமயங்களில் தனிப்பட்ட நலன்களுக்கும், அரசியல் ஆதாயங்களுக்குமாகத்தான் பொய்களைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள். அரசியல்வாதிகளின் பொய்களுக்கு லட்சோபலட்சம் உதாரணங்கள் இருக்கின்றன. அதில் அண்மைக்காலத்தில் ஒரு தனிமனிதனின் வாழ்வையும், அவரது குடும்பத்தின் நிம்மதியையும் சீரழித்த பொய் என்றால், அது டொக்டர் ஷாஃபி முஸ்லிம் மக்கள் அல்லாதவர்களுக்கு கருத்தடை செய்கிறார் என்று கோட்டாவின் ஆட்சியில் அமைச்சராக இருந்த சன்ன ஜயசுமன உள்ளிட்ட பலரும் சொன்ன பொய்யைக் குறிப்பிடலாம். இனவாதம் பரப்பிய கோட்டாவினது இனவெறிக் கும்பல், இந்த இனவாதப் பொய்யினால், ஷாஃபி என்ற அப்பாவி வைத்தியர் மீது மட்டுமல்ல, முஸ்லிம் சமூகத்தின் மீதே வேண்டாத ஒரு வெறுப்பு உருவாக்கப்பட்டது. “சிங்கள-பௌத்த” இனவாதத்தை முன்னிறுத்தி வாக்குவேட்டை நடத்த விளைந்த கோட்டா குழுமத்துக்கு இந்த இனவெறிச் சதி, அந்த வாக்குவேட்டைக்கு அவசியமானதொன்றாக இருந்தது. இன்று அந்தப் பொய் தகர்ந்துபோயிருக்கிறது. பொய் சொன்ன சன்ன ஜயசுமன உள்ளிட்டோர் இன்று பதவிகளைப் பற்றிப்பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் வைத்தியர் ஷாஃபியும் அவரது குடும்பமும் அனுபவித்த வலிகளுக்கு என்ன மாற்று கிடைக்கப்போகிறது? இப்படி ஆயிரமாயிரம் இனவாதவெறி நிறைந்த பொய்களையும், புரட்டுக்களையும் அதன்பாலான கடுமையாக எதிர்வினைகளையும் இலங்கையில் சிறுபான்மையினர் காலங்காலமாக அனுபவித்தே வந்திருக்கிறார்கள். தமிழனென்றால் “புலி”, “பயங்கரவாதி” என்று எத்தனை கட்டுக்கதைகள்! எத்தனை இளைஞர்கள் மறியலில் தங்கள் இளமையைத் தொலைத்துவிட்டுக்கிடக்கிறார்கள். இதில் அரசியல்வாதிகளை மட்டும் பிழை சொல்லியும் அர்த்தமில்லை. ஏனென்றால், அவர்கள் சொன்னது பொய் என்று எத்தனை தரம் நிரூபிக்கப்பட்டாலும், மீண்டும், மீண்டும் அவர்கள் சொல்லும் பொய்களுக்குள் விழுந்துகொண்டேயிருக்கும் முட்டாள் மக்கள் கூட்டமொன்று இருக்கும்வரை அவர்களும் பொய்களைச் சொல்லிக் கொண்டேயிருப்பார்கள். றொஜர் கூப்மன் சொல்வதுபோல, பொய் மற்ற நபரைப் பாதிக்கிறது, மேலும் அவர்களின் உரிமைகளை மீறுகிறது. இது தார்மீக ரீதியாகவும் நெறிமுறை ரீதியாகவும் திருட்டுக்கு சமம். ஒரு நபரின் மனதை நீங்கள் பொய்யால் நிரப்பும்போது - உண்மையைப் பொய்யால் மாற்றினால் - நீங்கள் உண்மையில் அவர்களிடமிருந்து திருடுகிறீர்கள். ஒருவர் துப்பாக்கி முனையில் உங்கள் பணத்தை திருடும் போது குறைந்த பட்சம், ஒரு திருட்டு நடந்திருப்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் உங்களிடம் உண்மையைச் சொல்வதாக நீங்கள் நம்பும் ஒருவர் உண்மையில் பொய்களைச் சொல்லும்போது, அவர்கள் உங்கள் நம்பிக்கையைப் பயன்படுத்தி உங்களை பாதுகாப்பற்றவர்களாக விட்டுவிடுகிறார்கள். ஒரு வகையில் பார்க்கப்போனால், அரசியல்வாதிகள் சொல்லும் பொய்கள், அவர்கள் கொள்ளையடிப்பதை விட ஆபத்தானது. அரசியல்வாதிகள் ஏன் பொய் சொல்கிறார்கள்? இதற்கு மிக முக்கிய காரணம் மக்கள் பொய்களால் கவரப்படுகிறார்கள். மக்கள் உண்மையைப் பற்றி யோசிக்க நேரமெடுப்பதில்லை. மக்கள் வதந்திகளை நம்ப விரும்புகிறார்கள். இணையம், சமூக ஊடகம் என எல்லாவிடத்திலும், மக்கள் வதந்திகளை விரும்பிப் படிக்கிறார்கள். அது அவர்களுக்கு கிளுகிளுப்பூட்டுகிறது. அதன் உண்மைத்தன்மை பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை. இதனால் அரசியல் உலகில், பொய் வேலை செய்கிறது. "உண்மை அதன் உடையை அணிவதற்கு முன்பு ஒரு பொய் உலகம் முழுவதும் சுற்றி வருகிறது” என்பது பழமொழி. அதுதான் உண்மையும் கூட. கடினமான, கசப்பான, வலிமிகுந்த உண்மையை சொல்வது மக்களுக்குப் பெரிதும் பிடிப்பதில்லை. உண்மை எப்போது அழகாக இருப்பதில்லையே! வாய்மையே வெல்லும், உண்மையே பேசு என பெறுமதிகளைக் கொண்ட சமூகம் கூட, கசப்பான உண்மைகளை விரும்புவதில்லை போலும்! தீபாவளிக்குத் தீர்வு, பொங்கலுக்குத் தீர்வு என்று பேய்க்காட்டுதலை நம்பிக்கையூட்டுதல் என்று புரிந்துகொள்ளும் மனிதர்களும் இங்கு இல்லாமல் இல்லை. இன்றுள்ள அரசியல் கட்டமைப்பின்படி, அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றுதல் தவிர்க்க முடியாததாக இருக்கலாம். பொய் சொல்ல மறுக்கும் மற்றும் பொது அறியாமையை சுரண்டிக் கொள்ளாத அரசியல்வாதிகள், குறைவான ஒழுக்கமும், தராதரமும், பெறுமதியும் உள்ள அரசியல்வாதிளுடன் ஒப்பிடும்போது கட்டமைப்பு ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ளனர். மேலும், அதன் காரணமாக குறைவான தேர்தல்களில் வெற்றி பெறுகிறார்கள். நேர்மையற்ற அரசியல்வாதிகளை வெறுக்கும் அதே வாக்காளர்கள், அந்தப் பொய்களையே மூலதனமாகக் கொண்ட அரசியல்வாதிகளை ஆதரிக்கிறார்கள், வாக்களிக்கிறார்கள். அதிலும் குறிப்பாக அந்த அரசியல்வாதிகளின் பொய்கள் குறித்த வாக்காளர்களின் முன்முடிவுகளை வலுப்படுத்தும் போது, உண்மையைப் பற்றி ஆராயமல், அவர்கள் அந்த அரசியல்வாதிகளை ஆதரிக்கிறார்கள். ஆகவே நேர்மையான அரசியல்வாதிகள் வேண்டும், உண்மையைப் பேச வேண்டும் என்று பேச்சுக்குச் சொல்லும் மக்கள்கூட, உண்மையான அரசியல்வாதிகளை ஆதரிக்காது, பொய்பேசும் அரசியல்வாதிகளின் பொய்களுக்கு எடுபட்டு, அவர்களையே ஆதரிக்கிறார்கள். பொய்யால் ஆதரவு கிடைக்குமென்றால், வாக்கு கிடைக்குமென்றால், பதவி கிடைக்குமென்றால், எந்த அரசியல்வாதிதான் பொய் பேச மாட்டான்! பொய்யிற்கு நற்பலனை வழங்கும் சமூகமொன்றில், உண்மை செத்துத்தான் போகும். மக்கள் ஒரு விஷயத்தை மறந்துவிடக் கூடாது, உங்களுக்கு பிடித்த அரசியல்வாதிகள் பொய் சொல்வதை சகித்துக்கொள்வது, அந்தப் பொய்யில் நீங்களும் பங்கேற்பதற்கு சமம். உங்கள் தார்மீக குருட்டுத்தன்மை அந்தக் குருட்டுத்தன்மைக்கேற்ற அரசாங்கத்தைப் பெற வழிவகுக்கும் போது, அதற்குப் பிறகு அழுது புலம்புவதில் பயனில்லை. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பொய்-பொய்-பொய்/91-299263
  8. நாட்டைக் காப்பாற்ற இரட்சகர்களைத் தேடுதல் என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan இலங்கை தீவு மிகப்பாரதூரமான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து நிற்கிறது. இதனை நெருக்கடி நிலை என்று விளிப்பது, அதன் பாரதூரத்தன்மையை குறைத்துக் குறிப்பிடுவதாகவே அமையும். நிலைமை அவ்வளவு மோசமாகவுள்ளது. எரிபொருளுக்கு வரிசை, எரிவாயுவுக்கு வரிசை, உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு, மருந்துகளுக்கு தட்டுப்பாடு, உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் அபார விலையேற்றம் என, ஒட்டுமொத்த இலங்கையரும் தப்பிப்பிழைக்கவே தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையர்கள் அனைவரும் எல்லா இடங்களிலும் இந்த நெருக்கடியின் தாக்கங்களை உணர்கிறார்கள். மளிகைக் கடைகளில், எரிபொருள் நிலையங்களில் உள்ள வரிசைகளிலும், வீட்டிலும் என எல்லா இடங்களிலும் விலையேற்றம், தட்டுப்பாடு ஆகிய இரண்டையும் மக்கள் எதிர்கொள்கிறார்கள். இலங்கை ரூபாயின் பெறுமதி, இப்போது கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது, இதனால் வாழ்க்கைச் செலவு மிகவும் தீவிரமடைந்துள்ளது. இதன் விளைவாக, அதிகமான மக்கள் அத்தியாவசிய பொருட்கள், சேவைகளை வாங்கவோ அல்லது, அணுகவோ முடியாது திக்கித்திணறி நிற்கிறார்கள். இரசாயன உரத்தை தடைசெய்கிறோம் என கோட்டாபய ராஜபக்‌ஷ, இரவோடிரவாக எடுத்த அடிமுட்டாள்தனமான முடிவின் விளைவால், தற்போது இலங்கை இன்னும் சில மாதங்களில் உணவுப்பஞ்சத்தை எதிர்நோக்கலாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆரூடம் சொல்லி வருகிறார். எப்படியாவது பதவியில், தான் தொடரவேண்டும் என்ற கோட்டாபயவின் சுயநலத்துக்கு, முழுநாடும் பலிக்கடவாகிக் கொண்டிருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் கோட்டாபய ராஜபக்‌ஷ, அமெரிக்காவின் ‘ப்ளும்பேர்க்’ செய்திச் சேவைக்கு அளித்த செவ்வியில், “எனக்கு மக்கள், ஐந்து வருடங்களுக்கான மக்களாணை வழங்கியிருக்கிறார்கள். நான் ஒரு தோல்வி கண்ட ஜனாதிபதியாக போக முடியாது” என்று தெரிவித்திருந்தார். கோட்டாபய, உண்மையைப் பேசியிருக்கிறார். அவருக்கு நாடு பற்றி, மக்கள் படும் துன்பம் பற்றி எல்லாம் அக்கறை இல்லை. அவருடைய கவலை, தான் ஒரு தோல்வி கண்ட ஜனாதிபதியாக, வரலாற்றில் இடம்பெற்றுவிடக் கூடாது என்பதுதான். அவருடைய கவலை அதுமட்டும்தான். ஆனால், அவர் சொல்வதில் ஒரு விஷயம் இருக்கிறது. சரியோ, பிழையோ 69 இலட்சத்துக்கு மேற்பட்ட இலங்கையர்கள், கோட்டாவுக்கு வாக்களித்து, அவரை அடுத்த ஐந்து வருடங்களுக்கு ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தார்கள். மைத்திரிபாலவின் ஆட்சியில் அதிருப்பதி அடைந்த மக்கள், ‘நாட்டைக் காப்பாற்றும் வீரன் கோட்டாவே’ என்று எண்ணி, ஜனாதிபதியாக்கினார்கள். தன்னை ‘ஸ்ரிக்ட் ஒஃபிஸர்’ எனக் காட்டிக்கொண்ட கோட்டா, நிபுணர்களைக் கொண்ட ஆட்சியின் மூலம், இலங்கையை தன்னிறைவு கண்ட நாடாக்கிவிடுவார் என்று பகற்கனவு கண்டுகொண்டு, சர்வதேச அளவில் யுத்தக்குற்றம், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டுள்ள கோட்டாபயவை பெரும்பான்மையினம் ஜனாதிபதியாக்கியது. ஆனால் இதன் விளைவு, இந்தியாவும் ஏனைய உலகநாடுகளும் இலங்கைக்கு வழங்கும் கடனையும் உதவிகளையும் நிறுத்திவிட்டால், எரிபொருளின்றி, போதியளவு உணவு, மருத்துவம், மின்சாரமின்றி இலங்கை பஞ்சத்திலும் வறுமையிலும் உழலும் மிக மோசமான நாடாகிவிடும். இலங்கையை இந்த நிலைக்குக் கொண்டுவந்து விட்டதுதான் கோட்டாபயவினதும், ராஜபக்‌ஷர்களினதும் சாதனை! ஆனால், பிழை அவர்களுடையது மட்டுமல்ல. அவர்களைத் தேர்தலில் வாக்களித்து, தேர்ந்தெடுத்து, ‘நாட்டைக் காப்பாற்றும் இரட்சகர்கள்’ போல அவர்களை வர்ணித்து, அதிகாரத்துக்குக் கொண்டுவந்தவர்கள் இந்நாட்டின் பெரும்பான்மையின மக்கள். இன்றும் கூட, இலங்கை மக்களில் கணிசமானோர், தற்போது தம்மை இந்த இன்னல் நிலையிலிருந்து காப்பாற்ற, ஒரு இரட்சகரை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல; இதுதான் இந்நாட்டின் சாபக்கேடு. ஒரு ஜனநாயக நாட்டில், மாற்றங்கள் விளைய வேண்டுமானால், அந்நாட்டின் அரசாங்கம் உள்ளிட்ட அனைத்து படிநிலைகளிலும் கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். ஆனால், இங்கு யாரும் கட்டமைப்பு மாற்றம் பற்றி யோசிப்பதில்லை. தென்னிந்திய திரைப்படங்களில் வருவதுபோல, ஒரு நாயகன் உதயமாகி, ஏழையை, பணக்காரனாக மாற்றுவதைப் போல, யாராவது துன்பத்தில் உழலும் இலங்கையை ஒரேயடியாக மாற்றிவிட மாட்டார்களா என இரட்சர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இன்றும், கோட்டாவை வீட்டிற்குப் போக வேண்டினாலும், அடுத்தது என்ன என்ற திட்டம், இலங்கை மக்களில் கணிசமானோர் மனதில் இல்லை. நாளை இன்னொருவன் வந்து தன்னை வீரன் என்று ஊடகங்களின் ஆதரவுடன் முன்னிறுத்தினால், அந்தப் பிரசாரத்தில் மயங்கி, மக்களில் கணிசமானோர் அந்த ‘புதிய வீரன்’, தம்மை இரட்சித்துக் காப்பான் என்று நம்பி அவனுக்கு வாக்களிப்பார்கள். அவன் ஏமாற்றியதும், இன்னொரு இரட்சகனுக்கான தேடும்படலம்; ஆக கட்டமைப்பு மாறவில்லை. இரட்சகர்களுக்கான தேடல் மட்டும் தொடர்கிறது. உண்மையில், வளர்ச்சி, அபிவிருத்தி என்பவை மிக நீண்டகால கட்டமைப்பு மாற்றத்தின் மூலமே சாத்தியப்படும். அது, இலகுவான பயணமாக இருக்காது. கட்டமைப்பு மாற்றம், தனிமனித வாழ்வில் நிறையத் தாக்கங்களை ஏற்படுத்தும். இதற்கு மக்கள் தயாரில்லை என்பதுதான், மக்கள் கட்டமைப்பு மாற்றத்தை விரும்பாது, இரட்சகன் ஒருவனை வேண்டி நிற்பதற்கான மூல காரணம். மக்களில் கணிசமானோர் தமது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை. அதிகம் பேருக்கும் கொஞ்ச எரிபொருளாவது கிடைக்க வேண்டும் என, ஒரு பங்கீட்டு முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தி, ஒரு வாகனத்திற்கு ரூ.10,000 தான் எரிபொருள் நிரப்ப முடியும் என்று கட்டுப்பாடு விதித்தால், எரிபொருள் நிரப்புனருடன் பேசி, அவருக்கு ரூ.1,000 இலஞ்சம் வழங்கி, கட்டுப்பாட்டு அளவிற்கு மேலாகத் தமது வாகனத்தின் தாங்கியை நிரப்பிக்கொள்வோர் பலர் இருக்கிறார்கள். மக்கள் எரிவாயுவிற்காக நாட்கணக்காக வரிசையில் காத்திருக்கும் போது, எரிவாயுக் கடைக்காரருக்கு இலஞ்சம் கொடுத்து, கடையின் பின்கதவால் எரிவாயு பெற்றுக்கொள்வோர் இருக்கிறார்கள். இதைச் செய்பவர்கள் எல்லாம் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மட்டுமல்ல. ஆகவே இங்கு பலரும் தாம் எதையும் விட்டுக்கொடுக்கத் தயராகவில்லை. தமது வாழ்க்கை முறையை கொஞ்சம் கூட மாற்றியமைக்கத் தயாராகவில்லை. ஆகவே, அவர்களுக்கு கட்டமைப்பை மாற்றுவதைப் பற்றி அக்கறையில்லை. தாம் நிகழ்காலத்தில் பிரச்சினையில்லாமல், நோகாமல், தாம் எப்படி வாழ்ந்தோமோ அப்படியே வாழ வேண்டும். அதற்கு வழிசமைக்கிற ஒரு இரட்சகன் வரவேண்டும். அவனை ஆதரிப்போம் என்பதுதான் இங்கு பலரின் மனநிலை. இதனால்தான் மாறி மாறி இரட்சகர்களுக்கு வாக்களித்துக்கொண்டு இருக்கிறார்கள் மக்கள். இங்கு கட்டமைப்பை மாற்றவேண்டுமென உண்மையாக விரும்புகிறவர்களுக்கு மதிப்புமில்லை; ஆதரவுமில்லை. குறைந்த வரி, ஆனால் அரசாங்கம் நிறைந்த மானியங்களையும் உதவிகளையும் வழங்கவேண்டும் என்று நினைக்கும் மக்கள் இங்கு ஏராளம். அந்த மக்கள் பதவிக்குக் கொண்டு வந்த நாயகனான கோட்டாபய, அந்த மக்களின் கனவை நனவாக்கியதன் விளைவைத்தான் இன்று நாம் அனைவரும் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். நான் மட்டும் வாழ்ந்தால் போதும், மற்றவன் எக்கேடுகெட்டாலென்ன என்று நினைத்த இலங்கையின் பெரும்பான்மையினம், ஒரு வௌிப்படையான இனவாதிக்கு வாக்களித்தது. அவன் பதவிக்கு வந்தால், சிறுபான்மையினர் துன்பத்திற்காளாவர்களே, அரச படைகளால், பொலிஸாரால் அடக்குமுறைக்காளாவார்களே என்றெல்லாம் வாக்களித்த அந்த பெரும்பான்மை யோசிக்கவில்லை. பதவிக்கு கொண்டு வந்த இரட்சகன் முன்பு, சிறுபான்மையினரிடம் மட்டும் காட்டிய வன்முறைவெறியை, இன்று பெரும்பான்மையினருக்கு எதிராகவும் காட்டத் தொடங்கியது கண்டு அவருக்கு வாக்களித்தவர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். தாம் வெறுக்கும் இந்த முன்னாள் இரட்சகனை விரட்டிவிட்டு, தமக்கு சொகுசான வாழ்க்கையை அளிக்கக்கூடிய இன்னோர் இரட்சகனைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த இரட்சகனுக்காக தேடல் நிற்கும் வரை, கட்டமைப்பு மாற வேண்டும் என்று மக்கள் உணரும் வரை, அதற்காக விட்டுக்கொடுப்புகளுக்கு தயாராகும் வரை, இங்கு எதுவும் மாறப்போவதில்லை என்பதுதான் யதார்த்தம். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நாட்டைக்-காப்பாற்ற-இரட்சகர்களைத்-தேடுதல்/91-298858
  9. ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியலமைப்பு திருத்த வரைபு என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாகவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி, அரசியலமைப்பு திருத்த சட்டமூல வரைபு ஒன்றை, வியாழக்கிழமை (21) சபாநாயகரிடம் கையளித்துள்ளதுடன், அந்த வரைபையும் வௌியிட்டுள்ளது. அரசியலமைப்புக்கான 21ஆவது திருத்த சட்டமூல வரைபாக இது அமைந்துள்ளது. ‘கோ ஹோம் கோட்டா’, ‘கோ ஹோம் ராஜபக்‌ஷஸ்’ போராட்டங்கள் கடுமையாகியுள்ள நிலையில், இலங்கை அடுத்த கட்டம் நோக்கி நகர்வதற்கும், இலங்கை அரசியல் ஸ்திரத்தன்மையை நோக்கி நகர்வதற்குமான முதற்படியாக, அரசியலமைப்பு மாற்றம் அவசியம் என்ற அடிப்படையில், ஐக்கிய மக்கள் சக்தியால் இந்தத் திருத்த வரைபு முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த வரைபின் முக்கிய அம்சங்களை அலசுவதே இந்தப் பத்தியின் நோக்கமாகும். ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியலமைப்பு திருத்த வரைபின் பிரதான அம்சமானது, நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதாகும். 1978ஆம் ஆண்டு, ஜே.ஆர். தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பின் மூலமாக, நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறை, இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்படுவதற்கான யோசனை, முன்வைக்கப்பட்ட நாளிலிருந்து அதற்கெதிரான கடும் விமர்சனங்களும் எதிர்ப்பும், பல்வேறு தரப்புகளாலும் முன்வைக்கப்பட்டு வந்துள்ளன. அரசின் அதிகாரம், ஒரு நபரிடம் குவிவது, ஜனநாயகத்துக்கு பாதகமாகதொன்று. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைக்கு எதிரான பிரதான விமர்சனமும் இதுதான். அக்டன் பிரபு சொன்னது போல,“அதிகாரம் கெடுக்கும்; முழுமையான அதிகாரம், முழுமையாகக் கெடுக்கும்”. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையின் கீழ், பாராளுமன்றம் தனது சுயாதீனத்தை இழந்துள்ளது என்ற விமர்சனத்தில் நியாயங்கள் இல்லாமல் இல்லை. பாராளுமன்றத்திலுள்ள, ஜனாதிபதியின் கட்சியினர், ஜனாதிபதியின் ஏவலாளிகளாகச் செயற்படும் பாங்கை, கடந்த 44 வருட கால நிறைவேற்று ஜனாதிபதி முறையில், இலங்கையர்கள் மிக வௌிப்படையாகவே அவதானித்திருக்கிறார்கள். ஆகவேதான், ஜனாதிபதியின் அதிகாரத்தை மட்டுப்படுத்துவதற்கான பெரும் அரசியல் தேவை ஏற்பட்டது. அதன் விளைவாக, அரசியலமைப்புக்கான 17ஆவது, 19ஆவது திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால், அதிகார போதை மிகுந்தவர்கள், தமது அதிகாரத்தை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. அதனால், மேற்சொன்ன 17ஆவது திருத்தம், 18ஆவது திருத்தத்தின் மூலம் இல்லாதொழிக்கப்பட்டது. 2015இல் ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் வருகையின் பின்னர் கொண்டு வரப்பட்ட 19ஆவது திருத்தம், மீண்டும் ராஜபக்‌ஷர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், 20ஆவது திருத்தத்தின் மூலம் இல்லாதொழிக்கப்பட்டது. அதன் விளைவுகளைத்தான் இலங்கையும் இலங்கையர்களும் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியலமைப்பு திருத்த வரைபின் படி, ஜனாதிபதியானவர் அரசுத் தலைவராகவும் முப்படைகளின் தளபதியாகவும் தொடர்ந்தாலும், அவர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குப் பதிலாக, பாராளுமன்றத்தால், ஐந்து வருட பதவிக் காலத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்படுபவராவார். ஜனாதிபதி, பாராளுமன்றத்தின் நம்பிக்கையை வென்றவரை பிரதமராக நியமிப்பார். இதில், ஜனாதிபதியின் தெரிவுக்கு இடமில்லை. பாராளுமன்றத்தின் நம்பிக்கையை வென்றவர் எவரென்றாலும், அவரைப் பிரதமராக நியமிக்க ஜனாதிபதி கடமைப்பட்டவராவார். ஜனாதிபதியானவர், பிரதமரின் ஆலோசனையின்படியே அமைச்சரவை அமைச்சர்களை நியமனம் செய்தல், மாற்றியமைத்தல், பதவிநீக்கம் செய்தல் என்பவற்றைச் செய்யலாம். அமைச்சரவையானது 25 வரையிலான அமைச்சர்களைக் கொண்டிருக்கும் என்பதோடு, அமைச்சரவை அந்தஸ்து இல்லாத ஏனைய அமைச்சர்கள் 25 பேர் வரை நியமிக்கப்பட முடியும். பிரதமரே அமைச்சரவையின் தலைவராக இருப்பார். இது தற்போதுள்ள அரசியலமைப்பின் நிலையிலிருந்து முற்றாக வேறுபட்டது. தற்போதுள்ள நிறைவேற்று ஜனாதிபதி-மைய நிர்வாக முறையிலிருந்து, பிரதமரைத் தலைவராகக் கொண்டு, அமைச்சரவை-மைய நிர்வாக முறைக்கு இலங்கையை மாற்றுவதாக இந்தத் திருத்தம் அமைகிறது. மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியலமைப்பு திருத்த வரைபின் படி, பிரதமர் பதவியானது, இறப்பின் மூலமோ, பதவி விலகலின் மூலமோ, பிரதமரானவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பதன் மூலமோ, நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதன் மூலமோ, அல்லது பாராளுமன்றத்தால் அரசாங்கப் பாதீடு தோற்கடிக்கப்படுவதன் மூலமோ வெற்றிடமாகும். பிரதமர் பதவி வெற்றிடமாகும் போது, அரசாங்கம் கலையும். பிரதமர் பதவி வெற்றிடமாகும் போது, பாராளுமன்றத்தின் நம்பிக்கையை வென்ற வேறொரு பாராளுமன்ற உறுப்பினர் பிரதமராக ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார். பிரதமரும் அமைச்சரவையும் பாராளுமன்றத்திற்கு தனியாகவும் கூட்டாகவும் பொறுப்புடையவர்கள் ஆவார்கள். பாராளுமன்றமானது ஓர் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்றும் போது, குறித்த அமைச்சரானவர் பதவியிழப்பார். இந்த முன்மொழிவுகளும் தற்போதுள்ள அரசியலமைப்பில் இருந்து மாறுபட்டவை என்பதோடு, நிர்வாகத்துறை மீதான பாராளுமன்றத்தின் கட்டுப்பாட்டை அதிகரிப்பதாகவும், நிர்வாகத்துறையின் பொறுப்புக்கூறலை அதிகரிப்பதாகவும் அமைந்துள்ளன. மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியலமைப்பு திருத்த வரைபின்படி, பாராளுமன்றமானது ஐந்து வருட காலத்துக்கென மக்களால் தேர்தெடுக்கப்படுவதுடன், பாராளுமன்றமானது அறுதிப் பெரும்பான்மையின்படியான தீர்மானமொன்றின் மூலம், குறித்த பதவிக்காலம் முடிவுறும் முன்பே, பாராளுமன்றத்தைக் கலைக்க முடியும். குறிப்பிடத்தக்கதொரு முன்மொழிவாக, கட்சி மாறி இயங்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள், குறித்த பாராளுமன்ற பதவிக்காலத்தின் போது அமைச்சர் பதவியை பெற்றுக்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், கட்சி மாறிய பாராளுமன்ற உறுப்பினர்கள், குறித்த கட்சியால் பதவி நீக்கம் செய்யப்படும் போது, அது தொடர்பில் விசாரிக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ள உயர் நீதிமன்றத்தின் அதிகாரமானது, குறித்த பதவி நீக்கலின் சட்டத் தகுதிப்பாடுகள் பற்றி மட்டும் ஆராய்வதற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கட்சி, பதவி நீக்கம் செய்த நடைமுறை பற்றி, உயர் நீதிமன்று ஆராய்வதற்கான அதிகாரத்தைக் கொண்டிராது. குறித்த அரசியலமைப்பு திருத்த வரைபின் மிக முக்கியமானதோர் அம்சமாக அமைவது, அரசியலமைப்பு பேரவையின் மீள்அறிமுகம். சபாநாயகர் தலைமையில் அமையும் அரசியலமைப்பு பேரவையானது, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், பாராளுமன்றத்திலுள்ள ஏனைய கட்சிகளால் முன்மொழியப்பட்டுள்ள ஒரு பாராளுமன்ற உறுப்பினர், மற்றும் ஐந்து சுயாதீன உறுப்பினர்களைக் கொண்டு அமையும். சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான நியமனங்கள் தொடர்பில், கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டிய பரிந்துரைகளை ஜனாதிபதிக்கு வழங்கவும், முக்கிய அரசுப் பதவிகளுக்கான நியமனங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் முன்மொழிவுகளை அங்கிகரிக்கும் அதிகாரத்தையும் கொண்டிருக்கும். ஏலவே 19ஆம் திருத்தத்தின் கீழ், பட்டியலிடப்பட்டிருந்த சுயாதீன ஆணைக்குழுக்களுடன், தகவலறியும் உரிமை ஆணைக்குழு, துறைமுக நகர் ஆணைக்குழு என்பனவும் அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரை அதிகாரத்துக்குள் கொண்டுவரப்படுவதுடன், அரசியலமைப்புப் பேரவையின் அங்கிகாரத்தின் படி, ஜனாதிபதியால் நியமிக்கக் கூடிய அரசுப் பதவிப் பட்டியலுக்குள், மத்திய வங்கி ஆளுநர் பதவியும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த அரசியலமைப்பு திருத்த வரைபில், தேசிய பாதுகாப்பு தொடர்பில் கொள்கை வகுப்பு, கொள்கை மேற்பார்வை செய்வதற்காக தேசிய பாதுகாப்பு பேரவையை ஸ்தாபிக்கும் ஏற்பாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. மற்றுமொரு குறிப்பிடத்தக்க அம்சமாக, அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்குவதற்கென, பிரதமர் தலைமையில், நிதி, வௌிவிவகாரம், பாதுகாப்பு அமைச்சர்கள், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், பாராளுமன்றத்திலுள்ள ஏனைய கட்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர், சட்டமா அதிபர், 12 வேறுபட்ட சுயாதீன துறைசார் விற்பன்னர்களைக் கொண்டமையும் அரசுப் பேரவையொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. சுருக்கமாகக் கூறின், இந்த அரசியலமைப்பு திருத்தத்தின் மூலநோக்கமானது ஜனாதிபதியிடம் குவிந்துள்ள அதிகாரத்தைக் குறைப்பதாகும். இன்று, இலங்கை எதிர்நோக்கியுள்ள நிலையிலிருந்து இலங்கை மீண்டு வரவேண்டுமென்றால், அதிகாரம் ஜனநாயகப் படுத்தப்படுதல் அவசியம். ஜனாதிபதி, ஒரே இரவில் இரசாயன உரத்தைத் தடை செய்ததன் விளைவாக இன்று உணவுத்தட்டுப்பாட்டை இலங்கை எதிர்நோக்கி நிற்கிறது. ஜனாதிபதியும் அவரால் தன்னிச்சையாக நியமிக்கப்பட்ட மத்திய வங்கி ஆளுநரும், இரண்டு வருடங்களுக்கு முன்பதாகவே சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடாததால் இலங்கை பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து நிற்கிறது. அரச இயந்திரத்தின் அத்தனை உயர் பதவிகளையும் ஜனாதிபதியே தீர்மானிக்கிறார். ஆகவே, இலங்கையின் இன்றைய நிலைக்கு காரணம், ஜனாதிபதி என்ற ஒரு நபரிடம், அளவற்ற அதிகாரம் குவிந்திருப்பது என்றால் அது மிகையல்ல. இது மாற்றப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கில் மட்டுமே, இந்தத் திருத்தம் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திருத்த வரைபானது, இலங்கையின் அரசியல், அரசியலமைப்பு சார் பிரச்சினைகளுக்கு எல்லாம் முழுமையான தீர்வை வழங்கவில்லை. ஆனால், இந்த நொடிக்கு அவசியமான முதலுதவியைச் செய்யும் வகையிலானதொரு முன்னகர்வாகவே புரிந்துகொள்ளப்பட வேண்டும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஐக்கிய-மக்கள்-சக்தியின்-அரசியலமைப்பு-திருத்த-வரைபு/91-295203
  10. உயிர் பிழைக்குமா இலங்கை? என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan கடந்த வாரம் இலங்கை சந்தித்த மிகப்பெரும் நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடுதான். எரிபொருள் தட்டப்பாட்டை, தனியார் வாகனம் வைத்திருப்பவர்களுக்கு ஏற்பட்ட வசதிக்குறைவுதான் என்று, குறுகிய பார்வையில் அணுகிவிடக்கூடாது. எரிபொருள் தட்டுப்பாடு என்பது, மிகப்பெரிய அடிப்படை வசதி சார்ந்த ஒரு பிரச்சினை. மனித சமூகத்தின் வளர்ச்சியில், விரைவுப் பிரயாணம் என்பது மிக முக்கிய அம்சம். மனிதனானவன் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு விரைவில் பயணிக்க முடியும் என்பது, மனித சமூகத்தின் பொருளாதார, சமூக வளர்ச்சியின் அடிப்படையாக உருவாகிவிட்டது. இன்றைய காலகட்டத்தில், நகரமயமாக்கலின் பின்னர் பயணம் என்பது, எமது வாழ்வியலின் அடிப்படை. அது ஸ்தம்பிக்கும் போது, எல்லாமே ஸ்தம்பித்து விடுகிறது. வேலைக்கு போக முடியாது; பாடசாலைக்குப் போக முடியாது; அவசரத்துக்கு வைத்தியசாலைக்குப் போவது கூட, சிம்மசொப்பனமானதொரு சவாலாக மாறிவிட்டது. பலருக்கு வேலையே, போக்குவரத்து சேவையை வழங்குவதுதான். அவர்களுக்கு வேலையே இல்லாது போய்விட்டது. பொருட்கள் ஓரிடத்திலிருந்து, இன்னோர் இடத்துக்குக் கொண்டு செல்லப்படுவதையும் எரிபொருள் தட்டுப்பாடு பாதிக்கிறது. இதனால் உணவு, மருந்து உட்பட அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது. பொருட்களை வாங்கக் காசில்லை என்று ஏங்கும் ஒரு பகுதி மக்கள், காசிருந்தாலும் வாங்க பொருள் இல்லையென்று தவிக்கும் இன்னொரு பகுதி மக்கள் என, இல்லாமையின் கொடுமையை இலங்கையர்கள் நித்தம் நித்தம் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்க்கும் நோக்கத்துடன், புதிய பிரதமராக பதவியேற்றிருக்கும் ரணில் விக்கிரமசிங்க, உலக நாடுகளிடமும் சர்வதேச அமைப்புகளிடமும் உதவி கோரும் நடவடிக்கைகளை துரித கதியில் முன்னெடுத்து வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்தியா மீது, இலங்கையருக்கு ஆயிரம் விமர்சனங்கள், கசப்புணர்வுகள், கோபதாபங்கள் இருந்தாலும், ஒரு நல்ல சகோதரனைப் போல, இந்தியா நடந்து கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல. ‘அர்த்த சாஸ்திரம்’ படைத்த கௌடில்யன், ‘நோய், துரதிர்ஷ்டம், பஞ்சம், படையெடுப்பு போன்றவற்றின் போது உனக்கு உதவி செய்பவனே, உன் உண்மையான சகோதரன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்தச் சாணக்கிய நீதிக்கேற்ப இந்தியா, ஒரு நல்ல சகோதரனாக இலங்கைக்கு, இந்தத் துரதிர்ஷ்ட சந்தர்ப்பத்தில் கைகொடுத்திருக்கிறது. தற்போது தமிழ்நாடு, இரண்டு பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய அத்தியாவசிய உதவிப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வைத்திருக்கிறது. பெரும்பான்மையின இலங்கையர்களால், இதுவரை காலமும் வெறுப்போடு பார்க்கப்பட்ட தமிழகம், இலங்கை வாழ் தமிழர்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து, தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் முழு இலங்கைக்கும் உதவிப் பொருட்களை அனுப்பி வைத்திருக்கிறது. இலங்கை மீதான இந்தியாவின் அக்கறைக்கு, இந்திய நலனே காரணம் எனச் சிலர் இன்றும் கற்பிதங்களை முன்வைக்கலாம். அதில் உண்மை இல்லாமல் இல்லை. இந்தியாவின் சர்வதேசக் கொள்கை மீது, குறிப்பாக அயல்நாடுகள் மீதான கொள்கை மீது விமர்சனங்கள் உண்டு. சர்வதேச அரசியல் என்பது, எப்போதும் தன்னலத்தை அடிப்படையாகக் கொண்டது. அரசியலைப் பொறுத்தவரையில், பொதுநலம் என்பது கூட, சுயநலத்தின் பாற்பட்டதே! ஆனால், சுயநலத்தை அடைந்துகொள்வதற்குப் பல வழிகள் உள்ள போது, பொதுநலன்மிக்க வழியைத் தேர்ந்தெடுப்பது என்பது பாராட்டுக்குரியது. இலங்கையின் நண்பன் எனச் சிலாகித்துக் கொண்டிருந்த, வட்டிக்கு கடன் தரும் நாடு(கள்), இன்று பெரியளவில் உதவிகள் செய்யாது இருக்கும் நிலையில், இந்தியா, இலங்கைக்கு செய்வது காலத்தால் செய்த உதவி ஆகும். ஆதலில், அது ஞாலத்தில் சாலப் பெரியது. இந்தியாவின் உதவி இல்லாவிட்டால், இன்று எரிபொருள் ஒரு துளியும் கிடைக்காத, அதனால் பாதி நாளுக்கும் மேல் மின்சாரம் இல்லாத, அதனால் பொருட்தட்டுப்பாடு நிறைந்த, பஞ்ச நிலையின் உச்சத்தைத் தொடும் நாடாக, இலங்கை மாறியிருக்கும். நிற்க! ரணில், மாயக்காரனோ மந்திரவாதியோ அல்ல. பழுத்த அரசியல் - நிர்வாக அனுபவம், நிறைந்த அரசியல் - பொருளியல் புரிதல், சர்வதேச நாடுகளுடனான உயர்ந்த உறவு ஆகியவற்றைக் கொண்ட ஓர் அரசியல்வாதி. உயிருக்காகப் போராடிக் கொண்டி ருக்கும் ‘இலங்கை’ எனும் நோயாளிக்கு, இன்று, உயிர் பிழைப்பு வைத்தியம் செய்ய வந்திருக்கும் வைத்தியரே ரணில்! இலங்கையை ராஜபக்‌ஷ எனும் வைரஸ் பீடித்திரு க்கிறது. பல வருடங்களாகப் பீடித்திருந்த அந்த வைரஸ் முழுமையாக நீங்கினால் தான், இலங்கைக்கு மீட்சி. இலங்கையை மீட்பதற்கு அந்த வைரஸ் நீங்க வேண்டும்; அதுவரை உயிர் பிழைப்பு வைத்தியம் கூட செய்யமாட்டோம் என, தம்மை கொள்கைவாதிகளாகக் காட்டிக்கொள்ளும் அரசியல்வாதிகள், வாய்ப்பிழைப்பு அரசியலை நடந்திக் கொண்டிருக்கும் போது, “கோட்டா போகாவிட்டால், நாம் அவசர நிலையில் கூட ஆட்சியைப் பொறுப்பேற்ற மாட்டோம்” என ‘கொள்கைவாத’ எதிர்க்கட்சிகள் கைவரித்த போது, உயிருக்காகப் போராடும் இலங்கையைக் காப்பாற்றுவதற்கு ரணில் முன்வந்திருக்கிறார். ரணில் மீது 1001 விமர்சனங்கள் இருக்கின்றன. ரணில் அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என இன்றும் நம்புகிறேன். ஆனால், இன்றைய நிலைக்கு ரணில் போன்றதொரு ‘தந்திரி’ அவசியம். இது, அரசியல் செய்வதற்கான நேரமில்லை. உங்கள் வீட்டில், பாலுக்கு அழும் குழந்தை, மருந்து கிடைக்காது தவிக்கும் நோயாளி, போதிய வருமானம் ஈட்ட முடியாது, வேளை உணவுக்கு என்ன செய்வது என ஸ்தம்பித்து நிற்கும் குடும்ப உறுப்பினர்கள், மின்வெட்டால் தவிக்கும் குடும்பம் இருந்தால், அப்போது உங்களுக்கு ‘கொள்கைவாத’ வாய்ப்பிழைப்பு அரசியலை விட, இன்றைய நிலையில் உயிர்பிழைப்பை முன்னுரிமைப்படுத்த வேண்டியதன் அவசியம் புரியலாம். அது புரியாவிட்டால், நீங்கள் சலுகைபெற்ற (privileged) சமூக நிலையிலிருந்து வருகிறீர்கள் என்று அர்த்தம்; அல்லாவிட்டால், ‘நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்’ என்ற கண்மூடித்தனமான பிடிவாதக்காரர் என்று அர்த்தம். ராஜபக்‌ஷர்கள் போக வேண்டும் என்பதில் துளியும் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் ராஜபக்‌ஷர்களை அனுப்ப அடுத்த தேர்தலுண்டு. அந்தத் தேர்தல் வரை, இலங்கையர்கள் உயிர்பிழைத்திருக்க வேண்டாமா? இங்கு, “ராஜபக்‌ஷர்கள் போனால்தான், நாம் ஆட்சியைப் பிடிப்போம்” என்று வியாக்கியானம் பேசும் எவரும், சட்ட ரீதியாக ராஜபக்‌ஷர்களை போகவைப்பதை தாம், எப்படிச் செய்யப்போகிறோம் என்று சொல்லவேயில்லை. ஏனென்றால், பாராளுமன்றத்தில் இன்று கிட்டத்தட்ட மூன்றிலிரண்டு பெரும்பான்மை கொண்ட ராஜபக்‌ஷ தரப்பை, சட்ட ரீதியாக வௌியேற்றுவது என்பது, அடுத்த தேர்தல் வரை சாத்தியமில்லை என்பது அவர்களுக்கும் தெரியும். அப்படியானால் சட்டத்துக்குப் புறம்பான புரட்சி மூலம், அடித்துக்கலைக்கலாமே என்று சிலர் யோசிக்கலாம். நீங்கள் நல்லது செய்வதாக எண்ணிக்கொண்டு, காடையர் ஆட்சிக்கு ஆதரவு தந்தால், நாளை அந்தக் காடையர் ஆட்சியே சாதாரணமாகிவிட முடியும். உங்களுடைய தேவைக்காக சட்டத்தை மீறுவதை நீங்கள் நியாயப்படுத்தினால், நாளை இன்னொருவர் அவருடைய தேவைக்காக சட்டத்தை மீறுவதை அவர் நியாயப்படுத்துவார். சட்டத்தின் ஆட்சி என்பது கேலிக்கூத்தாகிவிடும். ராஜபக்‌ஷர்களைக் கலைக்க வேண்டுமானால், அடுத்த தேர்தலில் இலங்கையர்கள் ஒன்றிணைந்து, ராஜபக்‌ஷர்களை நிராகரிக்க வேண்டும். அதுதான் சாத்தியப்பாடனது; அதுதான் ஜனநாயகம். அதுவரை இலங்கையர்கள் பிழைக்க வேண்டும். இலங்கையர்களை உயிர்பிழைத்து இருக்க வைப்பதற்கு, பிரதமர் ரணில் எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகளுக்கான ஆதரவு, அனைவராலும் வழங்கப்பட வேண்டும். எதிர்க்கட்சியின் கண்மூடித்தனமான நிலைப்பாட்டால், இன்று திறமையற்றதோர் அமைச்சரவையுடன் இயங்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் ரணில் விக்கிரமசிங்க இருக்கிறார். ஒருவேளை ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்தன உள்ளிட்டோர் மனம் மாறினால், தமது கட்சியை விட, இலங்கையின் பொருளாதார மீட்சியை முன்னிறுத்தினால் இலங்கையர்கள், அவர்களுக்கு நன்றிக் கடனுடையவர்களாவார்கள். அதனை அவர்கள் செய்வார்களா என்பதுதான், இன்றிருக்கும் முக்கிய கேள்வி. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிடம் பாராளுமன்ற பெரும்பான்மையுள்ள போது, தனியாளாக ஆட்சியை ஏற்றிருக்கும் ரணில், பல தர்மசங்கடங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். பிரதி சபாநாயகர் தெரிவில் நடந்தது அதுதான்! ஆனால், ரணிலால் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் இலங்கையைப் பிழைக்க வைக்க முடியுமென்றால், அதுவே ரணிலின் அரசியல் பயணத்தின் மிகப் பெரிய சாதனையாக இருக்கும். வீராவேசப் பேச்சுகளால் இன்று இலங்கையைக் காப்பாற்ற முடியாது. அதுதான் உண்மை! https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/உயிர்-பிழைக்குமா-இலங்கை/91-297017
  11. மீண்டும் ரணில் - என்.கே.அஷோக்பரன் Twitter: @nkashokbharan இவன் முடிந்துவிட்டான் என்று நினைக்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கும் ஓர் அசகாயசூரனாக, ரணில் விக்ரமசிங்ஹ மீண்டுமொருமுறை பிரதமராக பதவியேற்றிருக்கிறார். கடந்த பாராளுமன்றத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கொழும்பில் போட்டியிட்ட ரணில், ஐக்கிய தேசியக் கட்சி ஆசனம் எதனையும் வெல்லாத நிலையில் தோல்வியடைந்திருந்தார். தனது அரசியல் வரலாற்றில் பாராளுமன்றம் செல்லாது ரணில் தோல்வி கண்ட முதல் சந்தர்ப்பம். அதோடு ரணில் ஓய்வு பெற்றிருக்கலாம். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு, அவர்கள் நாடு பூராகவும் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் அடிப்படையில் தேசியப்பட்டியல் ஆசனம் ஒன்று கிடைத்தது. அதற்கு யாரை நியமிப்பது என்ற இழுபறியில் பலமாதங்களாக யாருமே நியமிக்கபடாது, ஆசனம் வெற்றிடமாகவே இருந்தது. கடைசியில் ரணில் விக்ரமசிங்ஹ அந்த ஆசனத்துக்கு நியமிக்கப்பட்டு, மீண்டும் பாராளுமன்றம் ஏகினார். ஒரே ஒரு ஆசனம், அதுவும் தேசியப்பட்டியல் ஆசனம், தனி நபராக ரணிலினால் என்ன செய்துவிட முடியும்! ஆனால் இலங்கையின் கையறு நிலையோ, ரணிலின் தலையெழுத்தோ, தற்செயலோ, பெருந்திட்டத்தின் ஒரு பகுதியோ, எதுவானாலும், ஒரே ஒரு பாராளுமன்ற ஆசனத்தை, அதுவும் தேசியப்பட்டியல் ஆசனத்தைக் கொண்ட கட்சியின் ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ரணில், இன்று இலங்கையின் பிரதமர்! ரணில் பிரதமராகப் பதவியேற்றதை ஒரு சாரார் கண்டிக்கிறார்கள். அவர் ராஜபக்‌ஷர்களைக் காப்பாற்ற பிரதமராகியிருக்கிறார் என்று சாடுகிறார்கள். தேசியப்பட்டியல் மூலம் ஒரே ஓர் ஆசனத்தைக்கொண்டு பாராளுமன்றத்துக்க வந்த ரணிலிற்கு பிரதமராகும் மக்களாணை இல்லை என்றும் சாடுகிறார்கள். ரணில், ராஜபக்‌ஷர்களைக் காப்பாற்றுகிறாரா, இல்லையா என்பது அவரவர் அபிப்ராயத்தின் பாற்பட்டது. ஆனால் ரணிலிற்கு ஆட்சியமைக்கும் மக்களாணை இல்லை என்பது தொழில்நுட்ப ரீதியில் சரியான கருத்து. ஆட்சியமைப்பதற்கான மக்களாணை என்பது 2020, ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் மக்களால் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆகவே இன்றைய நிலையில் ஆட்சி அமைப்பதற்கான மக்களாணை யாருக்கு இருக்கிறது என்று பார்த்தால், தொழில்நுட்ப ரீதியில் அது மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு மட்டுமே இருக்கிறது! ஆனால் மக்கள் போராட்டத்தை தொடர்ந்து அவர் பதவி விலகிவிட்டார். பிரதமர் பதவி விலகிய நிலையில், அடுத்த பிரதமரை நியமிக்க வேண்டிய பொறுப்பு, அரசியலமைப்பின் படி, ஜனாதிபதியைச் சார்ந்தது. பாராளுமன்ற ஜனநாயக மரபுகளின் படி, ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிதேமதாஸவை ஆட்சியமைக்க அழைத்திருந்தார். இந்த இடத்தில், சஜித் பிரேமதாஸ அதனை மறுத்திருந்தார். தான் பிரதமராகப் பதவியேற்ற வேண்டுமென்றால், ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த இடத்தில் தொழில்நுட்ப ரீதியான சிக்கல்கள் நிறைய எழுகின்றன. முதலாவது, பிரதமராகப் பதவியேற்பதற்கு, ஜனாதிபதியை பதவி விலகுமாறு நிபந்தனை விதிக்க இலங்கை அரசியலமைப்பில் இடமில்லை. ஏனென்றால், இலங்கையில் ஜனாதிபதி நேரடியாக மக்களால், ஜனாதிபதித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஜனாதிபதிக்கென தனித்த மக்களாணை இருக்கிறது. அதுவும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில், கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராகப் போட்டியிட்டு சஜித் பிரேமதாஸ தோல்விகண்டிருந்தார். ஆகவே தான் பிரதமராக வேண்டுமென்றால், ஜனாதிபதி பதவிவிலக வேண்டும் என்று சஜித் கோரியதற்கு அரசியல் ரீதியான காரணங்கள் இருக்கலாம், ஆனால் அது அரசியலமைப்பின் பாற்பட்டதொன்றல்ல! ஜனாதிபதியை பதவி நீக்குவதற்கென அரசியலமைப்பு ஒரு வழிவகையை வழங்கியிருக்கிறது. இந்த நிலையில் எதிர்க்கட்சித்தலைவர், எந்த காரணத்திற்காகவேனும், தான் ஆட்சியமைக்க மறுக்கும்போது, ஜனாதிபதி, தன்னுடைய அபிப்ராயத்தின் படி பாராளுமன்றத்தின் நம்பிக்கையைக்கொண்டவராக தான் கருதும் நபரொருவரை பிரதமராக நியமிக்க முடியும். அந்த அடிப்படையில் கோட்டாபய, ரணில் விக்ரமசிங்ஹவை பிரதமராக நியமித்தார். ரணிலிற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை, இந்த நியமனம் பிழை என்றால், பாராளுமன்றத்தில் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம், ரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்கலாம்! ஆகவே ரணிலிற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறதா, இல்லையா என்பதை பாராளுமன்றம் தான் தீர்மானிக்க வேண்டும்! இலங்கை ஒரு இக்கட்டான சிக்கல் நிலையில் சிக்கி, திக்கி நிற்கிறது. பொருளாதார நிலையில் இலங்கை வங்குரோத்தாகிவிட்டது. இந்த வங்குரோத்து நிலையிலிருந்து இலங்கையை மீட்க வேண்டும். எரிபொருள், மின்சாரம், உணவு, மருந்துகள் என எல்லாவற்றிற்கும் கடுந்தட்டுப்பாடு நிலவிக்கொண்டிருக்கும் இந்த சூழலில், பெரும்பான்மை மக்களின் ஒரே எதிர்பார்ப்பு இந்த நிலையிலிருந்து இலங்கையை யாராவது மீட்டு, எம்மைக் காப்பாற்றி விட மாட்டார்களா என்பதுதான். ஆகவே இந்த நிலையில் ஆட்சியமைப்பது என்பது, ஆட்சியமைக்கும் எவருக்கும், ஆட்சிக்கட்டிலில் சொகுசாக அமர்ந்து, உல்லாசம் கொண்டாடும் அனுபவமாக இருக்கப்போவதில்லை. இது மிகப்பெரும் பாரத்தை, 23 மில்லியன் மக்களின் வாழ்வை, உயிரை, நம்பிக்கையை, எதிர்காலத்தை தூக்கிச் சுமக்கும் கடினமான பணி. இலங்கை வரலாற்றில் இதுபோன்ற சவால் முன்பு ஒருபோதும் எழுந்ததில்லை. அந்தளவிற்கு மோசமான நிலையில் இலங்கை இருக்கிறது. ஆகவே இத்தகைய தீர்கமகானதொரு பொழுதில், அரசியல் செய்யாது, ரணில் இந்த ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டது பாராட்டுக்குரியதொன்று என்றால் அது மிகையல்ல. சஜித் பிரேமதாஸ, கோட்டா போகாவிட்டால், நான் பிரதமராக மாட்டேன் என்று சொல்லி தன்னை கொள்கைவாதியாக நிலைநிறுத்த முயற்சித்துக்கொண்டிருக்கலாம். ஆனால் நாடு வங்குரோத்து நிலையில் தத்தளித்துக்கொண்டிருக்கும் போது, இந்த கொள்கைப் பிடிவாதங்களால் யாருக்கும் எந்தப் பயனுமில்லை. எனக்கேற்றாற்போல சூழ்நிலை அமைந்தால்தான் ஆட்சியமைப்பேன் என்பவன் தலைவன் அல்ல, அவன் சந்தர்ப்பவாதி. இதற்குக் கொள்கைச் சாயம் பூச இங்கு பலர் இருக்கிறார்கள். ஆனால் எரிபொருள், மின்சாரம், உணவு, மருந்துகள் என தட்டுப்பாடுகளின் மத்தியில் வரிசையில் காத்திருந்து களைத்துப்போயிருக்கும் சாதாரண குடிமகனுக்கு, ரணில் ஆட்சியைப் பொறுப்பேற்றிருப்பது புது நம்பிக்கையைத் தந்திருக்கிறது. ரணில் பிரதமரானதுமே, ரணிலை அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளின் தூதுவர்கள் சந்தித்திருக்கிறார்கள். இந்தநாடுகளிடமிருந்து இன்னும் அதிக உதவிகள் இலங்கைக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தமும், உதவியும் கூட விரைவில் சாத்தியமாகலாம். இவையெல்லாம் நாடு மீண்டுவிடும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு வழங்கியிருக்கிறது. வரலாறு காணாத சிக்கல் நிலையில் நாடு இருக்கிற போது மக்களுக்கு நம்பிக்கை கொடுப்பவன் நல்ல தலைவன். அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பெரும் பொறுப்பு ரணிலுக்கு இருக்கிறது. இதில் ரணில் வெற்றிகண்டால், வரலாறு ரணிலை மன்னிக்கும். ரணில் மீண்டுமொருமுறை மக்களைக் கைவிட்டால், வரலாறும், இந்நாட்டு மக்களும் ரணிலை ஒருபோது மன்னிக்கார். இந்த நிலையில் ரணில் அனைவரது ஆதரவையும், உதவியையும் கோரியிருக்கிறார். ரணிலை ஆதரிக்க மாட்டோம், ஆனால் எதிர்க்கவும் மாட்டோம் என்பதைத்தான் சுற்றுவளைத்து பல கட்சிகளும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இந்த விளையாட்டை விட்டு விட்டு, தகுதியுள்ளவர்கள், அமைச்சரவையில் இணைந்து, இந்த இக்கட்டான நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க உதவுவதே சாலச்சிறந்ததொரு முடிவாகும். இல்லை நாம் சொன்னது சொன்னதுதான். நாடு எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, ஆனால் கோட்டா போகவிட்டால், நாடு அழிந்தால் கூட, நாம் ஆட்சிக்கு உதவிசெய்யமாட்டோம் என்பது உங்களை கொள்கைப்பிடிப்புள்ளவர்களாகக் காட்டிக்கொள்ள உதவலாம், ஆனால் அது நாட்டுக்கும், இந்தநாட்டு மக்களுக்கும் எந்தவொரு நன்மையையும் வழங்கப்போவதில்லை. கோட்டாவை மட்டுமல்ல, எந்தவொரு ராஜபக்‌ஷர்களையும் இந்நாட்டு மக்கள் மன்னிக்கப்போவதில்லை. ஆனால் கோட்டாவை எதிர்க்கிறோம் என்ற பேரலே, நாட்டுக்குத் தேவையானதொரு பொழுதில், நீங்கள் நாட்டுக்கு கைகொடுக்கவில்லை என்பதையும் இந்நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்கவோ, மறக்கவோ மாட்டார்கள் என்பதை பிரதான எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கவனத்தில் கொள்வது அவசியம். இன்று கூட ரணில் தன் முயற்சியில் தோற்றுவிட வேண்டும் என்று இந்த அரசியல்வாதிகள் எண்ணலாம், அது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால் இந்த நிலையில் தனது முயற்சியில் ரணில் தோற்றால், தோற்பது ரணில் மட்டுமல்ல, இந்நாடும், இந்நாட்டு மக்களும், இந்நாட்டு மக்களின் வாழ்வும், எதிர்காலமும்தான். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மீண்டும்-ரணில்/91-296534
  12. ‘நாடகம் விடும் நேரம்தான் உச்ச காட்சி நடக்குதம்மா’ என்.கே. அஷோக்பரன் மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமர் பதவியிலிருந்து விலகச்செய்துவிட்டு, எல்லாக் கட்சிகளில் இருந்தும் ஆதரவைப் பெற்று, ஓர் அரசை அமைக்க, ஜனாதிபதி கோட்டா துடித்துக்கொண்டிருப்பதை அறிக்கைகள் சுட்டி நிற்கின்றன. மறுபுறத்தில், “நான் ஒருபோதும் பிரதமர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை; வேண்டுமானால் என்னைப் பதவி நீக்கவும்” என வௌிப்படையாகவே சவால் விட்டிருக்கிறார் மஹிந்த. ஏற்கெனவே பசில், சமல், நாமல் ஆகிய ராஜபக்‌ஷர்கள், தங்கள் அமைச்சரவைப் பதவிகளிலிருந்து விலகியுள்ள நிலையில், இன்றைய அமைச்சரவையைப் பொறுத்தவரையில் கோட்டாவும் மஹிந்தவும் ஆகிய இரண்டு ராஜபக்‌ஷர்கள் மட்டுமே அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறார்கள். இதில் மஹிந்தவையும் விலக்கிவிட்டால், கோட்டாவைத் தவிர வேற எந்தவொரு ராஜபக்‌ஷவும் அமைச்சரவையில் இடம்பெறமாட்டார். மறுபுறத்தில், எதிர்த்துக்கொண்டு நிற்கும் எதிர்க்கட்சிகளையெல்லாம் ஒன்றிணைத்து ஆட்சி அமைத்துவிட்டால், தனது பதவியைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று கோட்டா சிந்திக்கலாம். மக்கள் எதிர்ப்பு, ராஜபக்‌ஷர்களுக்கு எதிராகக் கடுமையாகக் கிளர்ந்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில், மற்ற ராஜபக்‌ஷர்கள் வேறு; நான் வேறு என்று காட்டி, பிழைகளுக்கான பழியை மற்றவர்கள் மீது சாட்டிவிட்டு, கோட்டா தன்னை வேறுபடுத்தி, நல்லவனாகக் காட்ட விளைகிறாரோ? கோட்டா, அடிப்படையில் ஓர் அரசியல்வாதி இல்லை. கோட்டாவின் மிக நெருங்கிய வட்டம், அரசியல்வாதிகளால் ஆனது அல்ல. மஹிந்த, பசில், நாமல், சமல் ஆகியோரின் அரசியல் வட்டத்திலிருந்து, கோட்டாவின் அரசியல் வட்டமும் வேறுபட்டது. ஆகவே, இன்று கோட்டா உட்பட ராஜபக்‌ஷர்களுக்கு எதிராகத் திரும்பியிருக்கும் மக்கள் எதிர்ப்பிலிருந்து கோட்டாவைக் காப்பாற்ற, கோட்டாவின் வட்டம் கையிலெடுத்திருக்கும் புதிய முயற்சிதான் இந்த மாற்றமோ என்ற எண்ணம் எழுவதும், தவிர்க்க முடியாதது. அப்படியானால், இந்த இடத்தில் எழும் முக்கிய கேள்வி, ராஜபக்‌ஷ குடும்பத்துக்குள் உடைவு ஏற்பட்டுவிட்டதா என்பதே! ‘குடும்பம்தா’ன் ராஜபக்‌ஷர்களின் பலமும் பலவீனமும். இதுவரைகாலமும் பலமே விஞ்சிநின்ற குடும்பம்; இன்று பலவீனம் விஞ்சி நிற்கிற நிலைக்கு வந்தவுடன், குடும்பத்தை கைவிடும் நடவடிக்கையை கோட்டா செய்கிறாரோ என்ற எண்ணம் எழுவது இயல்பானதே. “குடும்ப ஆட்சி” என்ற குற்றச்சாட்டுத்தான் ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்று. தான் நினைத்தபடி ஆட்சியை நடத்தமுடியாத நிலை ஏற்பட்டதற்குக் காரணம், தனது குடும்பத்தினரின் தலையீடுதான் என்று கோட்டா நம்புவாராக இருந்தால், அது முழுமையாக மறுக்கப்பட முடியாது. எனினும், இன்றைய ஆட்சிப்பிழைகளுக்கு கோட்டா தன்னுடைய பங்கினை மறுத்துவிட முடியாது. இரவோடிரவாக இரசாயன உரத்தை தடைசெய்யும் அடிமுட்டாள்தனமான முடிவை யார் எடுத்தது? இலங்கையின் பொருளாதாரத்தை அதளபாதாளத்தில் தள்ளிய முடிவுகளை எடுத்த மத்திய வங்கி ஆளுநர்களான டபிள்யூ.டீ.லக்ஷ்மன், அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரை, அந்தப் பதவிக்கு நியமித்தது யார்? நிறைவேற்று அதிகாரம் யார் கையில் இருக்கிறது? ஆகவே, தனது குடும்ப உறுப்பினர்களின் மீது பழியைப் போட்டுவிட்டு, கோட்டா அவ்வளவு இலகுவாக பொறுப்புத்துறப்பு செய்துவிட முடியாது. இது அரசியல்; இவர்கள் அரசியல்வாதிகள். இவர்களின் செயல்களை மேலோட்டமாகப் பார்க்காது, ஆழமாகப் பார்க்க வேண்டியது அவசியம் என்று சிலர் எண்ணலாம். ஆகவே, மேலோட்டமாக நடப்பதை மட்டும் அவதானிக்காது, இன்னொரு வகையில் சிந்தித்தால், இன்று ஏற்பட்டிருக்கும் ராஜபக்‌ஷ எதிர்ப்பலையை அடக்க, உண்மையில் அதிகாரங்கள் நிறைந்த ஜனாதிபதி ராஜபக்‌ஷவைத் தவிர, மற்றைய ராஜபக்‌ஷர்களை அரசாங்கத்திலிருந்து விலத்தி வைத்துவிட்டால், ராஜபக்‌ஷர்களுக்குள்ளேயே ஒரு முரண்பாடு இருக்கிறது என்ற தோற்றப்பாட்டை உருவாக்கிவிட்டால், ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான அலை அடங்கிவிடும்; அல்லது, திசைதிரும்பிவிடும் என்ற திட்டத்தின்படியே, ‘ராஜபக்‌ஷ குடும்பம் உடைந்துவிட்டது’ என்ற விம்பம் கட்டமைக்கப்படுகிறதோ என்ற எண்ணம் எழுகிறது! ஆனால், இதற்காக தன்னையும் தனது பெயரையும் மதிப்பையும் பலிகொடுக்க, மஹிந்த தயாரா என்பதுதான் இங்கு முக்கிய கேள்வி. கோட்டா, மஹிந்தவை பதவி நீக்குவது நாடகமா, இல்லையா என்பதை அறிவதற்கு ஒரு வழி இருக்கிறது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுணவின் தலைவர் மஹிந்ததான். அந்தக் கட்சி பசிலின் கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கட்சி முடிவையும் கட்டுப்பாட்டையும் மீறி, பாராளுமன்ற உறுப்பினர்களான கட்சி உறுப்பினர்கள் செயற்பட்டால், அவர்களைக் கட்சியிலிருந்து நீக்க முடியும். அப்படி முறையாக நீக்கப்பட்டால், அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இழப்பார்கள். இது நடந்தால், இந்த முரண்பாடு உண்மையில் பாரதூரமானது என்பதைப் புரிந்துகொள்ளலாம். இல்லையென்றால், இந்த முரண்பாட்டின் உண்மைத்தன்மை கேள்விக்குட்படுத்தப்படும். எது எவ்வாறாயினும், இது எல்லாம் ஒரே ஒரு விஷயத்தைச் சுட்டி நிற்கிறது. ‘கோ ஹோம் கோட்டா’, ‘கோ ஹோம் ராஜபக்‌ஷஸ்’ போராட்டங்கள் ராஜபக்‌ஷர்களை நிலைகுலையச் செய்துள்ளது. ‘ராஜபக்‌ஷர்கள்’ என்ற, பெரும் பகீரதப் பிரயத்தனங்களால் கட்டியெழுப்பப்பட்ட விம்பம், தனது மதிப்பை இழந்துபோய் இருக்கிறது. ‘கோ ஹோம் கோட்டா’, ‘கோ ஹோம் ராஜபக்‌ஷஸ்’ போராட்டங்களின் பெரும் வெற்றி என்பது, ஊதிப்பெருப்பிக்கப்பட்டிருந்த ‘ராஜபக்‌ஷ’ விம்பங்களை, ஓர் ஊசி நுனியின் சிறு அழுத்தத்தில் பலூன் வெடிப்பதைப் போல, ஒன்றும் இல்லாததாக்கியதுதான். உச்சரிக்கவே பலரும் அஞ்சிய ‘கோட்டா’ எனும் பெயர், “கோட்டா கொப்பயா” என தூசிக்கப்படுகிறது. ராஜகம்பீரத்துடன் “மஹ ரஜானனீ” என்று பாடல்பாடிப் புகழப்பட்ட மஹிந்த, ‘நாக்கி மைனா’ (கிழட்டு மைனா) ஆனார். பசிலைப் பொறுத்தவரையில், அன்று மிஸ்டர் 10%, இன்று ‘கபுடா’ (காகம்). ஆகவே அதில் பெரிய மாற்றமில்லை. நாமல் இன்று, ‘பேபி மைனா’ ஆகியிருக்கிறார்! இது எல்லாம், ராஜபக்‌ஷர்கள் கனவிலும் எதிர்பார்த்திராத நிலை. தாம் இப்படி ஓர் அசிங்கத்தை, அவமானத்தைச் சந்திப்போம் என்று கோட்டாவோ, மஹிந்தவோ கனவு கூட கண்டிருக்க மாட்டார்கள். தனது அரசியல் எதிர்காலம் பற்றிய அச்சமும் கவலையும், நாமலுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால், என்ன செய்வது என்று தெரியாமல், சமூக ஊடகங்களில் சில உளறல்களையும் பதிவுசெய்து வருகிறார். நிற்க! இந்த நாடகத்தின் உச்சக்காட்சி, இந்தவாரம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கலாம். ஒன்றில் கோட்டா, மஹிந்தவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, தான் பல கட்சிகளையும் ஒன்றிணைத்த அரசாங்கமொன்றை அமைக்கலாம் அப்படியானால், அதில் பிரதமர் யார் என்ற கேள்வி எழுகிறது. பிரதமர் என்பது, இன்றைய நிலையில், ஒரு மதிப்பு மிக்க ‘டம்மி’ (பொம்மை); அவ்வளவுதான்! ஆனால், மதிப்பு மிக்க ‘டம்மி’யாக இருப்பதற்கு, இங்கு நிறைய கேள்விகள் இருக்கின்றன. அல்லது, கோட்டாவும் மஹிந்தவும் ஒரு சமரசத்துக்கு வந்து, மஹிந்த பிரதமராகத் தொடர்ந்து கொண்டு, பல கட்சிகளையும் ஒன்றிணைத்த அரசாங்கமொன்றை அமைக்கலாம். ஆனால், அதற்கு பல கட்சிகளும் சம்மதிக்குமா என்பது சந்தேகமே. எல்லாவற்றையும் விட, இதில் எது நடந்தாலும், அது களத்திலிறங்கிப் போராடும் மக்களையும் அவர்களது கோரிக்கைகளையும் திருப்தி செய்யுமா என்பது மிக முக்கிய கேள்வி. இந்த இடத்தில், இன்னொரு முக்கிய கேள்வியும் எழுகிறது. இங்கு பல கட்சிகளையும் ஒன்றிணைத்த அரசாங்கம் என்று முன்மொழியப்படுவதில், அங்கம் வகிக்கப் போகும் கட்சிகள் எவை? ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்றம் சென்று, அரசாங்கத்தில் அங்கம் வகித்து, பிறகு பதவி நீக்கம் செய்யப்பட்ட, மற்றும் அரசாங்கத்தை விட்டு விலகிய உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரை உள்ளடக்கியதுதான் இந்தப் புதிய அரசாங்கமா? அப்படியானால், இதற்கும், இதற்கு முன்னிருந்த அரசாங்கத்துக்கும் கட்சிக்கட்டமைப்பு ரீதியில் என்ன வித்தியாசம்? மறுபுறத்தில், ஐக்கிய மக்கள் சக்தி கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிலிருந்து, எவரேனும் இந்த அரசாங்கத்தில் இணைந்துகொள்ளப் போகிறார்களா? அப்படியானால், அதனை மக்கள் எப்படிப் புரிந்துகொள்வது? பதவிக்காக கட்சிமாறிவிட்டார்கள் என்றா? நிறையக் கேள்விகள் தொக்கி நிற்கின்றன. இந்தவாரம், இதில் சிலவற்றுக்கேனும் பதில் கிடைக்கும் என நாம் எதிர்பார்க்கலாம். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நாடகம்-விடும்-நேரம்தான்-உச்ச-காட்சி-நடக்குதம்மா/91-295562
  13. ‘கோட்டா கோ ஹோம்’ மக்கள் எழுச்சியில் வடக்கும் கிழக்கும் இணைய வேண்டுமா? என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan வரலாறு காணாத மக்கள் எழுச்சியொன்றை இலங்கை சந்தித்து நிற்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. காலிமுகத்திடல் பகுதியில் மக்கள், 24 மணிநேரமுமாக பல நாள்களாகத் தொடர்ந்து அமைதியான வழியிலான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கு சிங்களம், தமிழ், முஸ்லிம் மக்கள் எல்லோரும் ஒன்றாக ஒருமித்த குரலில் “கோட்டா கோ ஹோம்” (கோட்டா வீட்டுக்குப் போ), “ராஜபக்‌ஷ கோ ஹோம்” (ராஜபக்‌ஷர்கள் வீட்டுக்கு போ) என பலமான கோஷத்தை எழுப்பி வருகிறார்கள். கோட்டா அரசாங்கமும், ராஜபக்‌ஷர்களும் திணறிப்போய் நிற்கிறார்கள் என்றால் அது மிகையல்ல. வெற்றி வீரர்களாக தம்மைக் கொண்டாடிய அதே மக்கள், பச்சைத் தூஷண வார்த்தைகளால் தம்மை திட்டுவார்கள், மிக மோசமான வகையில் கேலிசெய்வார்கள், தாம் ஒரு கேலிப் பொருளாவோம் என்று ராஜபக்‌ஷர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள். ஜனநாயக வழியிலான போராட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை அடக்குமுறைக்குள்ளாக்குவது என்பது ராஜபக்‌ஷர்களுக்கு புதியதொரு விடயமல்ல. தமிழ் மக்களுடைய நியாயமான ஜனநாயக வழிப்போராட்டங்களின் போது, பொலிஸாரையும் இராணுவத்தினரையும் அனுப்பி அச்சுறுத்துதல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை இராணுவத்தினர் படம்பிடித்தல் உள்ளிட்ட பல அடக்குமுறைகளை அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது என்பது அப்பட்டமாகத் தெரிந்த வரலாறு. ஆனால் இந்தமுறை, இதுவரை இந்த அச்சுறுத்தல் நுட்பங்களெல்லாம் பெரும்பாலும் பலிக்கவில்லை. இரு தினங்கள் முன்புகூட, காலையில் பொலிஸ் லொறிகளை காலிமுகத்திடலருகே மக்கள் கூடும் இடத்தில் நிறுத்திவைத்து மக்களை அச்சுறுத்தும் ஒருவித நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. உடனேயே அந்த விடயம் சமூக ஊடகங்கள் மூலம் அனைவரையும் சென்றடைந்து பரபரப்பை ஏற்படுத்தியதும், லொறிகள் உடனடியாக அங்கிருந்து நீக்கப்பட்டன. இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இந்த அச்சுறுத்தல் நடவடிக்கைகளுக்கு எதிரான கடுமையான கண்டனத்தை வௌியிட்டிருந்தன. ராஜபக்‌ஷர்களின் வழக்கமான கையாளல்முறைகள் எல்லாம், இந்தச் சந்தர்ப்பத்தில் வேலைசெய்யவில்லை. ராஜபக்‌ஷர்கள் தமது மிகப்பெரிய பலமான ‘சிங்கள-பௌத்த’ பெருந்தேசியவாதத்தையும் இனவாதத்தையும் பயன்படுத்தி இந்த நிலையிலிருந்து எப்படியாவது மீண்டுவிட தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருந்தாலும், இதுவரை அது பலனளிக்கவில்லை. இன்னும் கூட ராஜபக்‌ஷர்களின் ஆதரவாளர்களாகத் தொடர்பவர்கள் எல்லாம் திருடனுக்குத் தேள் கொட்டியது போல அமைதியாக அடக்கிக் கொண்டிருக்கிறார்கள். அடங்கியிருக்கும் அந்த இனவாதமெல்லாம் மீண்டும் கிளர்ந்தெழ முன்னர், ஜனநாயக வழியிலான மக்கள் போராட்டம் வென்றுவிட வேண்டும் என்பதுதான் பெரும்பான்மை இலங்கையர்களின் இன்றைய அவா! இந்த இடத்தில்தான், இந்த மக்கள் எழுச்சியில் போதியளவில் தமிழ் மக்கள் பங்களிப்புச் செய்யவில்லை என்ற குரல்களும் எழத் தொடங்குகின்றன. காலிமுகத்திடலில் இடம்பெறும் அமைதி வழியிலான போராட்டத்தில் பல தமிழ் மக்களும் கலந்துகொண்டாலும், வடக்கு-கிழக்கில் இந்த காலிமுகத்திடல் மக்கள் எழுச்சிக்கான அடையாள ஆதரவு கூட எழவில்லை என்பது பலரது கவனத்தையீர்ப்பதாக இருக்கிறது. தென்மாகாணத்தின் காலியில் கூட தற்போது, கொழும்பு காலிமுகத்திடல் மக்கள் எழுச்சியின், கிளை மக்கள் எழுச்சியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிலையில், ராஜபக்‌ஷர்கள் இழைத்த அநீதிக்கு எதிராக ஒரு தசாப்தகாலத்திற்கு மேலாக குரலெழுப்பிவரும், ஜனநாயக வழியில் போராடி வரும் வடக்கு-கிழக்கு தமிழ் மக்கள், இன்று நாடே ராஜபக்‌ஷர்களைப் போ எனத்துரத்தும் மக்கள் எழுச்சியில் பங்குபெறாதது ஏன் என்று கேள்வி எழுவது ஆச்சரியமல்லவே! வடக்கு-கிழக்கு தமிழ் மக்களின் மனநிலையைப் புரிந்துகொள்ளுதல் இங்கு அவசியமாகிறது. பேரினவாதத்தின் அடக்குமுறையை பல தசாப்தங்களாக எதிர்கொண்டவர்கள் வடக்கு-கிழக்கு தமிழ் மக்கள். பாதுகாப்பின்மை என்பது வாழ்வில் ஓர் அங்கமாகவே மாறிப்போனதால், அது பழக்கப்பட்டே போய்விட்ட மக்கள் வடக்கு-கிழக்கு தமிழ் மக்கள். இன்று எரிபொருள், எரிவாயு விலையேற்றம், மின் வெட்டு ஆகியன ஏற்பட்டிருக்காவிட்டால், கொழும்பில் இந்த மக்கள் எழுச்சி ஏற்பட்டிருக்காது என்பது நிதர்சனமானது. ஆனால் பல தசாப்தங்களாக மின்சாரவசதி கூட இல்லாமல், இரண்டாயிரம், மூவாயிரம் ரூபாய்க்கு ஒரு லீற்றர் பெற்றோல் வாங்கி, பல மடங்கு விலைகொடுத்து மண்ணெண்ணெய் வாங்கி, விறகடுப்பில் சமைத்து, மண்ணெண்ணெய் விளக்கின் ஒளியில் படித்து, சைக்கிள் டைனமோவில் வானொலிப்பெட்டியை இயக்கி மிகப்பெரும் பொருளாதார அடக்குமுறைக்குள் வாழ்ந்த சமூகமொன்றை பல தசாப்தங்களாக கண்டுகொள்ளாத நாடு இது என்ற ஆதங்கம் அந்த மக்களுக்குள் இருக்கிறது. சரி, அதுதான் யுத்தகாலம். யுத்தத்திற்குப் பின்னர் கூட தமக்கான நீதி, நியாயத்திற்காக அந்த மக்கள் ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டம் செய்த போதெல்லாம், அந்த ஆர்ப்பாட்டங்கள் அடக்குமுறையைச் சந்தித்த போதெல்லாம் இந்த நாடும், இந்த நாட்டு மக்களும் அவர்களுக்கு ஆதரவு தரவில்லை என்ற ஆதங்கம் அவர்களிடம் இருக்கிறது. காணாமல்போன தமது உறவுகளைத் தேடி எத்தனை தாய்மார், சகோதரிகள், மனைவிமார், குடும்பங்கள் ஒரு தசாப்தத்திற்கும் மேலாகத் தொடர்ந்து போராட்டம் நடத்தியபோது, இந்த நாடும் மக்களும் அதனைக் கண்டுகொள்ளவில்லை என்ற ஆதங்கம் அந்த மக்களிடம் இருக்கிறது. இதெல்லாம் சேர்ந்துதான் அந்த மக்களை மனரீதியாக முழுமையாக இந்த மக்கள் எழுச்சியில் பங்குகொள்ளச் செய்ய இயலாத நிலையை உருவாக்கியிருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மேற்சொன்ன மனநிலையின் நியாயத்தை ஒருபோதும், எந்தவொரு நிலையிலும் மறுக்க முடியாது. ஆயினும் இது ராஜபக்‌ஷர்களின் கோரமுகத்தை வடக்கு-கிழக்கு தமிழர்களைத்தாண்டி, இன்னாளில் ராஜபக்‌ஷர்களின் முன்னாள் ஆதரவாளர்களாக மாறியிருப்போர் உட்பட இலங்கையின் பெரும்பான்மை மக்கள் உணர்ந்து, ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக கிளர்ந்து எழுந்துள்ள வரலாற்றுத் தருணம் இது. இன்று காலிமுகத்திடலருகே இரவு பகலாக ஜனநாயக வழியில் போராடும் மக்கள் இலங்கையின அரசியலில் மாற்றத்தைக் கோருகிறார்கள். அந்தக் கோரிக்கையில் தமிழர்களும் பங்காளிகளாக வேண்டும். அந்த மாற்றத்தினுள் தமிழ் மக்களின் அபிலாஷைகளும் உள்ளடக்கப்பட வேண்டும். அதற்காகவேனும் தமிழ் மக்கள் இந்த மக்கள் எழுச்சியை, கசப்புணர்வுகளுக்காகப் புறக்கணிக்காது, கைகோர்த்து நிற்க வேண்டும். வரலாறு மக்களுக்கு அவ்வப்போது அரிய வாய்ப்புகளை வழங்கும். அந்த வாய்ப்புகளை சரி வரப் பயன்படுத்திக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னகர வேண்டும். அரசியலில் எதுவுமே ஒரே இரவில் கிடைத்துவிடாது. உரோம சாம்ராஜ்யம் ஒரு நாளில் கட்டியெழுப்பப்படவில்லை என்பது ஞாபகமிருக்கட்டும். இத்தனை காலம் ஜனநாயக வழியில் போராடிய தமிழ் மக்கள் இந்தச் சந்தர்ப்பத்தை கைவிடுதல், தமிழ் மக்களை அரசியல் ரீதியில் வங்குரோத்து நிலைக்குத் தள்ளிவிடும். ஆகவே இந்த மக்கள் எழுச்சிக்கு தார்மீக ரீதியிலான ஆதரவையேனும் வழங்க வேண்டிய அரசியல் கடமை, வடக்கு-கிழக்கு தமிழ் மக்களுக்கு உண்டு. இதனால் மட்டும் முழு இலங்கையும், இவ்வளவு ஏன், காலிமுகத்திடலில் கிளர்ந்தெழுந்து நிற்கும் மக்கள் எல்லாம் தமிழ் மக்களின் அபிலாஷைகளை ஏற்றுக்கொண்டு விடுவார்கள் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், இது தமிழ் மக்கள் தமது நல்லெண்ணத்தை, நேரடியாக இந்நாட்டின் ஏனைய மக்களுக்கு எடுத்துரைக்கும் அரிய வாய்ப்பு. இந்தப் பத்தி எழுதப்படும் நாளில், காலிமுகத்திடல் மக்கள் எழுச்சிக்கு ஆதரவாக, வடக்கில் ஒரு எழுச்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர வேண்டும். எங்களுக்காக நீங்கள் குரல் கொடுக்காமல் போயிருக்கலாம்; ஆனால் அநீதி எங்கு நடந்தாலும், அது அனைவருக்கும் எதிரான அநீதிதான். அதற்காக நாம் குரல்கொடுப்போம் என்று தமிழ் மக்கள் தமது அரசியல் தர்மத்தை வௌிப்படுத்த வேண்டிய தருணம் இது. “அரசியல் என்பது சாத்தியமானவற்றின் கலை” என்பார் ஒட்டோ வொன் பிஸ்மார்க். சின்னச் சின்ன அடைவுகள் மூலம் தான், நீண்ட காலத்தில் பெரு அடைவுகளைக் கட்டியெழுப்ப முடியும். இது, எல்லா கசப்புணர்வுகளையும் தாண்டி, ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக அனைத்து மக்களோடும் கைகோர்க்க வேண்டிய தருணம் என்பதை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டியது காலத்தின் தேவை. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கோட்டா-கோ-ஹோம்-மக்கள்-எழுச்சியில்-வடக்கும்-கிழக்கும்-இணைய-வேண்டுமா/91-294993
  14. ஜே.வி.பி எனும் இனவாத சக்தி என்.கே. அஷோக்பரன் ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான மக்கள் அலை, தினம்தினம் வளர்ந்து கொண்டிருக்கிறது. ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக எழுந்திருக்கும் மக்கள் எதிர்ப்பையும் அதிருப்தியையும், தமக்குச் சாதகமாக்க சஜித் பிரேமதாஸவை முன்னிறுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியும், அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி என்ற மக்கள் விடுதலை முன்னணியும் களத்தில் இறங்கியுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி, திக்குத் தெரியாத நடுக்கடலில் சிக்கிய, பல கப்டன்களைக் கொண்ட கப்பலைப் போலத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. தான் ஒரு கட்சியா? அல்லது, கூட்டணியா என்ற குழப்பம், ஐக்கிய மக்கள் சக்திக்கு உள்ள ஆயிரம் பிரச்சினைகளில், ஒரு பிரச்சினையாகக் காணப்படுகின்றது. ஆகவே, பிரதான எதிர்க்கட்சி வலுவிழந்திருக்கும் போது, அந்த இடத்தைத் தான் எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என ஜே.வி.பி கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியிருக்கிறது. இலங்கை வரலாற்றில், பயங்கரவாதிகள் என்றால், தமிழ் ஆயுதக் குழுக்களை மட்டும் ஞாபகம் கொள்வது இனவாதத்தின் விளைவு. 1987இல் இலங்கை பாராளுமன்றத்துக்குள் குண்டு போட்ட பயங்கரவாதிகள், ‘தேசப்பிரேமி ஜனதா வியாபாரய’ (தேசபக்தி மக்கள் இயக்கம்) என்ற ஜே.வி.பியின் இராணுவப் பிரிவினர் ஆவர். இலங்கையின் தமிழீழ விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்ட முக்கியஸ்தர்கள் பலரை, பலருக்கும் ஞாபகம் இருக்கும், ஆனால், ஜே.வி.பியால் கொலை செய்யப்பட்ட முக்கியஸ்தர்களை பலரும் மறந்துவிட்டதாகவே தோன்றுகிறது. என்ன? ஜே.வி.பி குண்டு போட்டதா? ஜே.வி.பி ஓர் ஆயுதக் குழுவா? ஜே.வி.பி முக்கியஸ்தர்களைக் கொலை செய்ததா போன்ற கேள்விகளை, அநுர குமார திஸாநாயக்கவின் ரசிகர்களாக உருவாகியிருக்கும் புதிய தலைமுறை பூர்சுவா யௌவனர்கள், கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இலங்கையின் பெயர்போன தொழிலதிபரும், முன்னணி திரைப்படத் தயாரிப்பாளருமான கனகசபை குணரட்ணம் (கே.ஜி), தொழிலதிபர்களான சண்முகம் சகோதரர்கள், சபீர் ஹூசைன் ஆகியோர் 1989இல் ஜே.வி.பியினரால் படுகொலை செய்யப்பட்டதாக அறிக்கையிடப்பட்டு உள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களான ஜினதாஸ வீரசிங்ஹ, கீர்த்தி அபேவிக்கிரம, ஜீ.வி.எஸ்.டி சில்வா, லயனல் ஜயதிலக்க, அநுர டானியல், மெரில் காரியவசம், டபிள்யூ.எம்.பி.ஜீ. பண்டா, லெஸ்லி ரணகல, தயா சேபாலி சேனாதீர ஆகியோரும், ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்களான ஹர்ஷ அபேவர்தன, நந்தலால் பெர்ணான்டோ, சரத் நாணயக்கார ஆகியோரும், உள்ளூராட்சி மன்ற உறுப்பினரான லக்‌ஷ்மன் சில்வாவும் ஜே.வி.பியால் படுகொலை செய்யப்பட்டதாக அறிக்கையிடப்பட்டு உள்ளது. லங்கா சமசமாஜக் கட்சி உறுப்பினரான பி.டீ விமலசேன, இலங்கை தாராளவாதக் கட்சி வேட்பாளர் ஓ. காரியவசம், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் களுத்தறை அமைப்பாளர் இந்திரபால அபேவீர, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான எல். டபிள்யூ பண்டித, இலங்கையின் முன்னணி நடிகரும், சந்திரிகா குமாரதுங்கவின் கணவரும், இலங்கை மக்கள் கட்சியின் தலைவருமான விஜய குமாரணதுங்க ஆகியோரும் ஜே.வி.பியால் படுகொலை செய்யப்பட்டதாக அறிக்கையிடப்பட்டு உள்ளது. கொழும்புப் பல்கலைக்கழகத்தின் முதலாவது உபவேந்தரான பேராசிரியர் ஸ்ரான்லி விஜேசுந்தர, மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் உபவேந்தரான சண்ட்ரட்ன பட்டுவதவிதான ஆகியோரும் ஜே.வி.பியால் படுகொலை செய்யப்பட்டதாக அறிக்கையிடப்பட்டு உள்ளது. இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் முதலாவது பெண் பணிப்பாளரான முனைவர் க்ளடிஸ் ஜயவர்தன ஜே.வி.பியால் படுகொலை செய்யப்பட்டதாக அறிக்கையிடப்பட்டு உள்ளது. மேலும் பல பொலிஸ் அதிகாரிகள், அரச உத்தியோகஸ்தர்கள், தனியார் தொழிற்றுறை உத்தியோகஸ்தர்கள், பெருந்தோட்ட முகாமையாளர்கள், கல்வியியலாளர்கள், ஊடகவியலாளர்கள் என ஜே.வி.பி படுகொலை செய்தவர்களின் பட்டியல் மிக நீண்டது. இதில் வௌிநாட்டவர்களும் உள்ளடக்கம். இந்தப் படுகொலை பட்டியலில் பௌத்த பிக்குகளும் விதிவிலக்கல்ல. கொட்டிக்காவத்தே சத்ததிஸ்ஸ தேரோ, வல்லதொட பண்ணதர்ஸி தோரோ, பொஹொத்தரமுல்லே ப்ரேமலோக தேரோ உள்ளிட்ட பௌத்த பிக்குகளும் ஜே.வி.பியினால் படுகொலை செய்யப்பட்டதாக அறிக்கையிடப்பட்டு உள்ளது. பல உயிர்களைப் பறித்த இரத்தக்கறை, ஜே.வி.பி மீது படிந்து கிடக்கிறது. இந்த இரத்தக்கறையை மறைக்க வேண்டிய தேவை, ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு ‘ஜனநாயக வழி’க்குத் திரும்பிய ஜே.வி.பிக்கு இருந்தது. அதற்காக ஜே.வி.பி எடுத்துக்கொண்ட ஆயுதம் ‘பேரினவாதம்’. ராஜபக்‌ஷர்கள், ஞானசாரர்களுக்கு முன்பதாக, மிகப் பெரிய ‘சிங்கள-பௌத்த’ பேரினவாத சக்தியாக 1990களின் பிற்பகுதியிலிருந்து தன்னை முன்னிறுத்திச் செயற்பட்ட கட்சி ஜே.வி.பி ஆகும். ஜே.வி.பியின் இந்த இனவாதத்தை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ராஜபக்‌ஷர்களும் தமது அரசியல் நலன்களுக்காக, நன்றாகவே பயன்படுத்தி இருந்தார்கள். தன் தாயைக் கொல்ல முயன்ற, தன் கணவரைக் கொன்ற ஜே.வி.பியோடு, அரசியலுக்காக கைகோர்த்த அவலத்தையும் சந்திரிகா புரிந்திருந்தார். அன்று பேரினவாத சக்தியாக இருந்த ஜே.வி.பியின் அரசியல் ஆதரவு அவரது அரசியலுக்கு தேவையாக இருந்தது. இலங்கை இனப்பிரச்சினைக்கு மிக குறைந்தபட்ச தீர்வாக, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் ஊடாக ஒன்றிணைக்கப்பட்ட வடக்கு-கிழக்கை, வழக்காடிப் பிரித்தது ஜே.வி.பி ஆகும். இந்த ‘இனவாத’ ஜே.வி.பியில் புடம்போடப்பட்டவர்கள்தான் விமல் வீரவன்ச வகையறாக்கள். தமிழர் விரோத இனவாதத்தை, 1990களின் பின்னர் வளர்த்து விட்டதில், ஜே.வி.பிதான் முதன்மையானதும் முக்கியமானதுமான அரசியல் சக்தியாகும். 2009ஆம் ஆண்டில் பெற்றுக்கொள்ளப்பட்ட யுத்த வெற்றி, மஹிந்த ராஜபக்‌ஷவை ‘அடுத்த துட்டகைமுனு’ என்ற நிலைக்கு கொண்டு சென்றது. ராஜபக்‌ஷவை மீறியதொரு ‘சிங்கள-பௌத்த’ பேரினவாத தலைமை உருவாக முடியாது என்ற நிலையில், தன் நிலைப்பாட்டை மாற்ற வேண்டிய கட்டாயம் ஜே.வி.பிக்கு ஏற்பட்டது. பயங்கரவாதக் கறையை மறைக்க, பேரினவாத முகமூடியை அணிந்து கொண்ட ஜே.வி.பி, அரசியல் நிலைப்புக்காக அந்த முகமூடியைக் கழட்டி, கொஞ்சம் தாராளவாத ஜனநாயக முகமூடியை அணிந்துகொள்ளத் தொடங்கியது. அதற்கு உவப்பானதாக, அநுரகுமார திஸாநாயக்கவை தனது தலைவராகவும் ஆக்கிக்கொண்டது. ஆனால், ஜே.வி.பி என்ற பெயரும், அதோடு இணைந்த பயங்கரவாத, இனவாத அடையாளமும் தாராளவாத ஜனநாயக முகமூடியை கிழித்துக்கொண்டு நின்றதால், அந்தக் கிழிசல்களை மறைக்க ‘தேசிய மக்கள் சக்தி’ என்றதொரு புதிய அமைப்பின் பெயரில், புதிய சின்னத்தில் இயங்கத் தொடங்கியுள்ளது ஜே.வி.பி. புதிய போத்தலில், பழைய இரத்தக்கறை தோய்ந்த, இனவாத வெறியேறிய அதே கள்தான் என்பதை உணர வேண்டும். அது தவறு, அநுர குமார திஸாநாயக்க சரியாகத்தானே பேசுகிறார்; அவர் வித்தியாசனமானவர். அவர் ஜே.வி.பியை மாற்றிவிட்டார் என்று சிலர் வாதிடுவார்கள். அநுர, பேச்சுக்கலை வல்லோன். அவரது சிங்கள மொழிப் பேச்சுகளுக்கு நான் ரசிகன். ஆனால், ஹிட்லரும் பேச்சுக்கலை வல்லோன் என்பதை மறந்துவிடக்கூடாது. பேச்சைக் கேட்பதோடு, செயலையும் அவதானிக்க வேண்டும். ஒரு முறையாவது, இலங்கை இனப்பிரச்சினைக்கு அதிகாரப்பகிர்வு தீர்வு பற்றி அநுரகுமார திஸாநாயக்க பேசியிருக்கிறாரா. இல்லை! இன்றுள்ள பிரச்சினைகளுக்கான மாற்றுத் தீர்வுகளை அவர் முன்வைத்திருக்கிறாரா? இல்லை! ஆட்சியிலுள்ளவர்களை விமர்சிக்கும், கேள்வி கேட்பதை மட்டுமே அவரது பேச்சுகளினூடாகச் செய்துகொண்டிருக்கிறார். அதனால் ஏற்படும் கவர்ச்சியைப் பயன்படுத்தி, தேர்தல் வெற்றிகளை அடைய எண்ணுகிறார். அநுர வித்தியாசமானவராக இருந்தாலும், அவரோடு உள்ளவர்களும், அந்தக் கட்சியும் அதே ஜே.வி.பிதான். அநுர என்ற முகத்தைக் காட்டி, அதே பயங்கரவாத, இனவாத சக்தியான ஜே.வி.பிதான் அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கிறது. வரலாற்றை நாம் மறந்துவிடக்கூடாது. வரலாறு முக்கியம்! https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஜே-வி-பி-எனும்-இனவாத-சக்தி/91-293415
  15. அடுத்த ஜனாதிபதி யார்? கனவு காணும் அடுத்த ஜனாதிபதிகள் என்.கே. அஷோக்பரன் மின்சாரம் இல்லை; எரிவாயு இல்லை; எரிபொருள் இல்லை; அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், தட்டுப்பாடு; பொது மக்களின் அன்றாட வாழ்வு அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது. கோட்டாவுக்கு வாக்களித்தோர் பலவிதம். அப்பட்டமான இனத்துவேசத்தின் காரணமாக வாக்களித்தோர் ஒரு வகையென்றால், கோட்டா, பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது, கொழும்பை சுத்தம் செய்து அழகுபடுத்தியதைப் போல, நாட்டையும் ஆட்சியையும் சுத்தம் செய்து அழகுபடுத்திவிடுவார் என்று நம்பி வாக்களித்தோர் இன்னொரு வகை. இன்று, இந்த எல்லா வகையினரும் மின்சாரமின்றித் தத்தளிக்கிறார்கள். எரிவாயு, எரிபொருளுக்காக வரிசையில் காத்துக் கிடக்கிறார்கள். ஏறியிருக்கும் விலைவாசியைச் சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள். வெற்றி வீரனாகப் பார்க்கப்பட்ட கோட்டா, இன்று அரசியல் கோமாளியாக, அவருடைய ஆதரவாளர்களாலேயே பார்க்கப்படுகிறார். அவருடைய தேர்தல் பிரசார கீதம், இன்று நக்கலுக்கும் நையாண்டிக்குமானதொரு பாடலாக மாறியிருக்கிறது. இன்றைய நிலையில், ‘மொட்டு’ ஆட்சியில், ‘கோட்டாவும் தோல்வி; ராஜபக்‌ஷர்களும் தோல்வி’. இதுதான் நிதர்சனம்! ஆனால், இலங்கை மக்கள் மீது, ராஜபக்‌ஷர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. குறிப்பாக, இலங்கை மக்களின் ஞாபகத்திறன் குறைவின் மீது, அதீத நம்பிக்கை இருக்கிறது. இரு துருவங்களுக்கு இடையே மாறி மாறி அசையும் ‘பென்டூலம்’ போல, இலங்கை வாக்காளர்கள் இரண்டு தெரிவுகளையே மாறி மாறித் தெரிவுசெய்து கொண்டிருப்பார்கள் என்பது, ராஜபக்‌ஷர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆகவே, அந்த இரண்டு தெரிவுகளில் ஒன்றாகத் தாம் இருக்கும் வரை, ராஜபக்‌ஷர்கள் கவலைகொள்ளப் போவதில்லை. இந்தமுறை ஆட்சியை இழந்தாலும், அடுத்த முறை ஆட்சியைக் கைப்பற்றி விடலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உண்டு. ஏனென்றால், இலங்கை வாக்காளர்கள், அவ்வளவு தூரம் பலவீனமான நினைவுத்திறனும் பலமான உணர்ச்சிவசப்படும் தன்மையையும் கொண்டவர்கள். ஆகவே, வரப்போகும் தேர்தலில், தமது தோல்வி நிச்சயம் என்பதை ராஜபக்‌ஷர்கள் உணர்ந்துவிட்டால், அடுத்து ஆட்சிக்கு வரப்போகிறவர்கள், இலகுவில் நாட்டை மீட்டுவிட முடியாத ஆழத்தில்தான், நாட்டைப் புதைத்துவிட்டுப் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ராஜபக்‌ஷர்கள் பரம்பரை அரசியல்வாதிகள். அதிகாரம்தான் அவர்களின் இலக்கு. அதைக் கைப்பற்ற, அவர்கள் எந்த எல்லைக்கும் போவார்கள் என்பதற்கு, வரலாறு சாட்சி. ராஜபக்‌ஷர்களின் நிலை இவ்வாறு இருக்கையில், ராஜபக்‌ஷர்களின் ஆட்சியின் பெருந்தோல்வியின் காரணத்தல், ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக இன்று பொதுமக்களிடையே எழுந்திருக்கும் மனநிலையைக் கணித்துக்கொண்டு, அடுத்த தேர்தலில் ராஜபக்‌ஷர்கள் தோற்றுவிடுவார்கள்; ஆகவே, அடுத்தது நான் தான் ஜனாதிபதி; என்னுடைய கட்சிதான் ஆளுங்கட்சி என்ற கனவில் பலரும் இயங்கத் தொடங்கி உள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி ஒரு புறம்; ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்தாலும், ‘43 படையணி’ என்று ஜனாதிபதி கனவுடன் தனித்து இயங்கத் தொடங்கியுள்ள பாட்டலி சம்பிக்க; பிரதான கட்சிகளின் மீதும் அதன் வேட்பாளர்கள் மீதும் மக்கள் கொண்டுள்ள வெறுப்பை, தனக்கு மூலதனமாக்கத் துடிக்கும் அநுர குமார; ‘என் கதை இன்னும் முடியவில்லை’ என, மீண்டும் தலைதூக்க எத்தனிக்கும் மைத்திரிபால சிறிசேன; கோட்டாவால் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள உதய கம்மன்பில, விமல் வீரவன்ச என, ஜனாதிபதி தேர்தல் வருவதற்கு இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் இருக்கின்ற நிலையில், இப்போது பலரும் ஜனாதிபதி கனவில் இயங்கத் தொடங்கிவிட்டார்கள். தமது ஆட்சியின் தோல்வி ராஜபக்‌ஷர்களுக்கு கடும் அதிருப்தியைத் தந்தாலும், தமது எதிர்க்கட்சிகள் பிரிந்திருப்பதைக் கண்டு ராஜபக்‌ஷர்களுக்கு மகிழ்ச்சியே! அதிலும் குறிப்பாக, ராஜபக்‌ஷர்களின் பெரும் வாக்குவங்கியான ‘சிங்கள-பௌத்த’ பெருந்தேசியவாத வாக்குவங்கியைக் குறிவைத்து பாட்டலி சம்பிக்க, உதய கம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோர் களமிறங்கியிருப்பது, ராஜபக்‌ஷர்களிடமிருந்து வௌியேறும் அந்த வாக்குவங்கியின் வாக்குகள், மற்றோர் இடத்தில் சென்று குவிவதற்குப் பதிலாக மூன்று, நான்கு என உடையப்போகின்றது. மேலும், மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாஸ, அநுர குமார என பிரதேச ரீதியிலும் கட்சி ரீதியிலும் வாக்குகள் சிதைவடையும். இதுவும் ராஜபக்‌ஷர்களுக்கு சாதகமானதே. இதனால்தான், இன்றைய ஆட்சி எவ்வளவு மோசமானதாக இருந்தாலும், அதற்கான எதிர்ப்பு என்ற ஒன்றே இல்லாதது போன்ற நிலைதான் இருக்கிறது. யுத்தமொன்றில் எதிர்க்கும் படைகளின் அளவு, எவ்வளவு பெரிதாக இருந்தாலும், அந்தப் படைகளிடையே ஒருங்கிணைவு இல்லாவிட்டால், அவற்றால் வினைத்திறனாக எதையும் செய்ய முடியாது. இதுதான் இன்றைய எதிர்க்கட்சிகளின் நிலை. 2015 - 2019 வரை ராஜபக்‌ஷர்கள் எப்படி சிம்மசொப்பனமானதோர் எதிர்க்கட்சியாக இருந்தார்களோ, அதைப்போன்றதோர் எதிர்க்கட்சி இப்போது இல்லை. அரசியல் அனுபவம் குறைவானவர்களினதும் சோம்பேறிகளினதும் கூடாரமாகத்தான் இன்றைய எதிர்க்கட்சிகள் இருக்கின்றன. இதற்கான ஒரே நிரூபணம், இன்றைய நிலையில் ராஜபக்‌ஷர்கள் எதிர்க்கட்சியாக இருந்திருந்தால், எப்படி இருந்திருப்பார்கள் என்ற சிந்தனைதான். ராஜபக்‌ஷர்கள் மோசமான ஆட்சியாளர்கள்; ஆனால், திறமையான அரசியல்வாதிகள். இன்றைய எதிர்க்கட்சிகள் ஆட்சியிலும் மோசம்; அரசியலிலும் மோசம். இது இன்றைய நிலைதான்; ஜனாதிபதி தேர்தல் நெருங்கும்போது, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, ஒரு பொதுவேட்பாளரை ஆதரிக்கும் என்று நம்புவோர் பலர் உளர். அவர்களது நம்பிக்கை யதார்த்தமாவதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன. ஆனால், அது ராஜபக்‌ஷர்களை அடுத்த தேர்தலில் தோற்கடித்தாலும், அதற்கடுத்த தேர்தலில் இன்னும் பலத்துடன் ஆட்சிக்குக் கொண்டுவந்துவிடும். இதுதான் 2015 - 2019இல் நடந்தது. ஏன், அப்படி என்று பலரும் வினவலாம்? அது நல்ல கேள்வி. ‘பொது வேட்பாளர்’ என்பது, ஓர் அரசியல் கட்சி அல்ல; அது ஓர் அரசியல் கூட்டும் அல்ல; அது ஓர் அரசியல் சக்தியும் அல்ல. ‘பொது வேட்பாளர்’ என்பது, ஒரு சந்தர்ப்பவாத நகர்வு. அதன் நோக்கம், ராஜபக்‌ஷர்களை ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிப்பது மட்டுமே! அதற்கு மேல், அந்தச் சந்தர்ப்பவாதக் கூட்டுக்கு நோக்கமும் கிடையாது; நோக்கமாக எதை முன்வைத்தாலும், அதனை நிறைவேற்றுவதற்கான இயலுமையும் கிடையாது. வெவ்வேறு அரசியல் சிந்தனைகள், சித்தாந்தங்கள், நம்பிக்கைகள், அணுகுமுறைகள் கொண்டவர்கள், ஒரே கட்சியாக இயங்க முடியாது. மைத்திரிபாலவும் ரணில் விக்கிரமசிங்கவும் ராஜபக்‌ஷர்களைத் தோற்கடிக்க ஒன்றிணையலாம். அதைத் தாண்டி, அவர்களின் அரசியலில் வேறென்ன ஒற்றுமை இருக்கிறது? அநுர குமாரவும், சஜித் பிரேமதாஸவும் ராஜபக்‌ஷர்களை தோற்கடிக்க ஒன்றிணையலாம். அதைத் தாண்டி ஒன்றிணைந்து இயங்க, அவர்களால் முடியுமா? தமிழ்க் கட்சிகளும் அல்லது முஸ்லிம் கட்சிகளும் அல்லது வீரவன்சவும் கம்மன்பிலவும் ராஜபக்‌ஷர்களை தோற்கடிக்க ஒன்றிணையலாம்; அதற்கு மேல் அவர்களின் அரசியல், ஒன்றோடொன்று இயைபுடையதா? இதுதான் ‘பொது வேட்பாளர்’ என்ற முயற்சி தோல்வியடைவதற்கான மூலகாரணம். ராஜபக்‌ஷர்களைத் தோற்கடிக்க அது பயன்படும். அதற்குப் பின்னர் அது படுதோல்வியடையும். அந்தத் தோல்வியால் கசப்புறும் மக்கள், மீண்டும் ராஜபக்‌ஷர்களைப் பலத்துடன் ஆட்சிக்குக் கொண்டு வருவார்கள். அப்படியானால், இதற்கான தீர்வு என்ன? இது நல்ல கேள்வி. மிகக் கடினமான கேள்வியும் கூட! தீர்வுக்கு முதற்படி, இலங்கையில் பலமானதோர் எதிர்க்கட்சி கட்டியெழுப்பப்பட வேண்டும். 2019, 2020 தேர்தல்களில், ராஜபக்‌ஷர்கள் பெற்ற பெருவெற்றியின் மூலதனம், ராஜபக்‌ஷர்கள் கட்டியெழுப்பிய ‘ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன’ என்ற கட்சி. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்ற பெருவிருட்சத்திலிருந்து, ராஜபக்‌ஷ ஆதரவாளர்களைப் பிரித்தெடுத்து, தமக்கான தனிக்கட்சியை ஸ்தாபித்தமைதான் அவர்களது பெருவெற்றியின் அடிப்படை. ஆனால், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு மாற்றானதொரு பலமான எதிர்க்கட்சி இலங்கையில் இல்லை. ஐக்கிய மக்கள் சக்தி, தன்னைப் பிரதான எதிர்க்கட்சியாக முன்னிறுத்தினாலும், அது ஒரு கட்சியே அல்ல; பல கட்சிகளினதும் கூட்டு. அவ்வளவுதான்! ராஜபக்‌ஷர்களின் வெற்றி என்பது, வெறுமனே தமக்கான கட்சியை உருவாக்கியது மட்டுமல்ல, இலங்கையின் பழம்பெருங்கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை செல்லாக்காசாக்கியதும் தமது வெற்றியைப் பெருவெற்றியாக்கியதுமாகும். ஆகவே, ஜனாதிபதி கனவில் காலம் கழிக்காமல், பலமானதோர் எதிர்க்கட்சியை (கூட்டணியை அல்ல) கட்டியெழுப்பும் கைங்கரியத்தை, அரசியல் அறிவுள்ளவர்கள் முன்னெடுக்காதவரை, ராஜபக்‌ஷர்களின் அரசியல் தொடரும். அடுத்த தேர்தலில், அவர்கள் தோற்கலாம்; ஆனால், தோற்றதற்கும் சேர்த்து, அதற்கடுத்த தேர்தலில் அவர்கள் எழுவார்கள். 1970இல் தோல்வியடைந்த ஐக்கிய தேசிய கட்சி, 1977இல் பெருவெற்றி காண, சிறிமாவின் மோசமான ஆட்சி மட்டும் காரணமல்ல; ஜே.ஆர் என்ற பலமான தலைமையின் கீழ், பலமானதொரு கட்சியாக ஐக்கிய தேசிய கட்சி உருவாகி நின்றதும் முக்கிய காரணம் ஆகும். இது ஜனாதிபதி கனவில் உள்ளோரின் கவனத்துக்கு! https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அடுத்த-ஜனாதிபதி-யார்-கனவு-காணும்-அடுத்த-ஜனாதிபதிகள்/91-292632
  16. வீழ்ச்சியின் விளிம்பில் ராஜபக்‌ஷர்கள் என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, கோட்டா ஆதரவாளர்களிடமிருந்து, “இந்நாட்டுக்கு ஹிட்லரைப் போன்ற ஒரு தலைவர் வேண்டும்; அது, கோட்டா தான்” என்ற தொனியிலான முழக்கங்களை இந்நாடு கேட்டது. ‘எதற்கும் துணிந்தவன்; எல்லாம் வல்லவன்’ என்ற பிம்பம் கோட்டாவைப் பற்றி பெருப்பித்துக் கட்டப்பட்டது. இதன் பின்னணியில், இலங்கையில் சர்ச்சையான முறையில் பணம் சம்பாதித்திருந்த வணிகர்கள் பலரும், தம்மை நாட்டை நேசிக்கும் தொழில் நிபுணர்களாகக் காட்டிக்கொண்ட ஒரு கூட்டமும் பௌத்த மதத் தலைவர்களைக் கொண்ட ஒரு குழாமும் இருந்தது. ‘சிங்கள - பௌத்தம்’ என்ற பேரினவாத நிகழ்ச்சி நிரல் முன்னிறுத்தப்பட்டது. ‘சிங்கள - பௌத்த’ வெற்றி நாயகனாக கோட்டா, 6.9 மில்லியன் மக்களால் வாக்களிக்கப்பட்டு ஜனாதிபதியானார். இரண்டரை வருடங்களில், ‘எல்லாம் வல்லவன்’ என்ற பிம்பம், புஸ்வாணமாகிப் போனது. இலங்கையின் பொருளாதாரம் சரிந்து, விழுந்து, உடைந்து இன்று அதளபாதாளத்தில் நொறுங்கிக் கிடக்கிறது. இதன் விளைவாக, நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு, எரிவாயு தட்டுப்பாடு, மின்சாரத் துண்டிப்பு, உணவுத் தட்டுப்பாடு, பால் மற்றும் பால்மா தட்டுப்பாடு, மருந்துகள் தட்டுப்பாடு என அத்தனை அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ரூபாயின் பெறுமதி, ‘கடுகதி’யில் சரிந்ததால், பொருட்கள் ‘சடசட’வென விலையேறின. அன்றாடம் உழைக்கும் தொழிலாளி, இந்தச் சுமையை எப்படித் தாங்குவான்? ஒரு நாளில் 13 மணி நேர மின்வெட்டு என்பது, தென்னிலங்கை கடந்த சில தசாப்தங்களில் கண்டிராத இருண்டநிலை. வடக்கு - கிழக்குக்கு இது புதிதல்ல. யுத்தகாலம் முழுவதும் இருளில் வாழ்ந்து, பிழைத்து நிற்கும் மக்கள், வடக்கு-கிழக்கு மக்கள். ஆனால், ஒரு நாளில் 13 மணி நேரம் வரை மின்வெட்டினால் கதிகலங்கிய மக்கள், வீதிக்கு இறங்கிவிட்டார்கள். வியாழக்கிழமை (31) இரவு, கோட்டாவின் மிரிஹான வீட்டுக்கு அருகில் கூடிய மக்கள் செய்த ஆர்ப்பாட்டம், ராஜபக்‌ஷர்களை ஆட்டம் காணச்செய்துவிட்டது. இது, அரசியல் கட்சிகள் வீதிக்கு இறங்கிச் செய்த ஆர்ப்பாட்டமல்ல. அரசியல் கட்சிகள் பணமும் சாராயமும் கொடுத்து, பஸ்களில் மக்களை ஏற்றிவந்து செய்யும் ஆர்ப்பாட்டங்களை, கோட்டாவோ ராஜபக்‌ஷர்களோ பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால், மக்கள் தாமாகப் போராடத் தொடங்கியது, ராஜபக்‌ஷர்களை கதிகலங்க வைத்துவிட்டது. “கோட்டா கோ ஹோம்” (“கோட்டா, வீட்டுக்குப் போ”) என்பதுதான் இன்று, இலங்கை எங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. கதிகலங்கிப்போனவர்கள், ‘நாறிய அரசியல் சித்து விளையாட்டு’ப் புத்தகத்தின் எல்லா விளையாட்டுகளையும் விளையாட முயற்சிக்கத் தொடங்கினார்கள். மக்கள் அமைதியான முறையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், திடீரென ‘ரௌடி’கள் நுழைகிறார்கள். ஒருவன் பஸ்ஸூக்குத் தீமூட்டும் காட்சி, சமூக ஊடகங்களில் தௌிவாகப் பதிவாகிறது. இதைக் காரணம் காட்டி, பொலிஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுத் தாக்குதல், நீர்பீய்ச்சல் தாக்குதல் என்பவற்றை, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் மீது நடத்துகிறார்கள். அதன் பின்னர் பலபேரைக் கைது செய்கிறார்கள். கொஞ்சப் பேரைக் கைது செய்து, மறியலில் வைத்து விட்டால், அந்தப் பயத்தில் மக்கள் வீதிக்கு இறங்க மாட்டார்கள் என்ற அரசியல் கணக்கு பிழைத்தது. அது, இந்நாட்டின் சட்டத்தரணிகளின் நடவடிக்கையால் என்றால் மிகையல்ல! ஏறத்தாழ 500 சட்டத்தரணிகள், ‘வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில்’ கைது செய்யப்பட்டவர்களுக்காக பொலிஸ் நிலையத்திலும், அதன் பின்னர் நீதிமன்றத்திலும் ஆஜராகி இருந்தார்கள். குறிப்பாக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் இந்நாள் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், முன்னாள் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ உள்ளிட்ட பல ஜனாதிபதி சட்டத்தரணிகள் கூட அன்று ஆஜராகியிருந்தார்கள். இரவு 10.30 மணி வரை நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர், கைது செய்யப்பட்ட பலரும், நீதவானால் பிணையில் விடுதலை செய்யப்பட்டு இருந்தார்கள். இது ராஜபக்‌ஷர்கள் எதிர்பார்க்காத திருப்பம். இதேவேளை, ஞாயிற்றுக்கிழமை, (ஏப்ரல் மூன்றாம்) பெரும் ஆர்ப்பாட்டத்துக்கான அழைப்பு சமூக ஊடகங்களில் பரவிக்கொண்டிருந்தது. அச்சத்தின் உச்சத்திலிருந்த கோட்டா, முட்டாள்தனமான முடிவுகளை எடுக்கத் தொடங்கினார். உடனடியாக அவசரகாலநிலையை பிரகடனம் செய்தார். இரண்டு வருடங்கள் இந்நாட்டை ஆட்டிப்படைத்த கொவிட்-19 பெருந்தொற்றின் போது பிரகடனம் செய்யாத அவசரகால நிலையை, இந்நாட்டின் பொருளாதாரம் அதளபாதளத்தில் விழுந்த போது பிரகடனம் செய்யாத அவசரகால நிலையை, அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்த போது பிரகடனம் செய்யாத அவசரகால நிலையை, மக்கள் தாமாக வீதிக்கிறங்கி போது பிரகடனம் செய்துள்ளார். காரணம், பயம்! மக்கள் பலத்தின் மீதான பயம்! அத்தோடு நிற்கவில்லை; மூன்றாம் திகதி ஆர்ப்பாட்டம் நடைபெற்று விடுமோ என்ற அச்சத்தில், (சனிக்கிழமை மாலை ஆறு மணி தொடக்கம் திங்கட்கிழமை காலை ஆறு மணிவரை) 36 மணி நேர ஊரடங்கை அமல்படுத்தியதுடன், பூங்கா, கடற்கரை என எந்தப் பொது இடத்திலும் மக்கள் ஒன்றுகூட முடியாது என்ற உத்தரவையும் போட்டார் கோட்டாபய ராஜபக்‌ஷ! ‘எதற்கும் துணிந்தவன்; எல்லாம் வல்லவன்’ என்ற வீரனின் தைரியத்தின் அளவு அவ்வளவுதான். தனக்கு வாக்களித்த மக்களையே கண்டு பயப்படும் ‘பெரு வீரன்’! சரி! அதோடு நின்றதா அராஜகம்? இல்லை! ஞாயிற்றுக்கிழமை (03) அதிகாலை முதல் சமூக ஊடகங்களை அணுக முடியாத நிலைமை இலங்கையர்களுக்கு ஏற்பட்டது. அதன் பின்னர்தான், சமூக ஊடங்களைத் தடை செய்யுமாறு, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு உத்தரவு பிறப்பித்திருப்பதாக தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் அறிவித்தார்கள். மக்களின் கருத்துப்பகிரலுக்கே பயப்படும் இந்தப் ‘பயந்தாங்கொள்ளி’க் கூட்டத்தையா வீரர்கள் என்று விளித்தார்கள் என்ற நகைப்பு ஏற்பட்டாலும், மக்களின் கருத்துச் சுதந்திரத்தையும் நடமாடும் சுதந்திரத்தையும் தொழிற்சுதந்திரத்தையும் நசுக்கும் இந்த ஜனநாயக விரோத செயல்களைக் கண்டு, ஒவ்வோர் இலங்கையரது உள்ளமும் கொதிக்கிறது. எந்த மக்கள், இந்த ராஜபக்‌ஷ கூட்டத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்தார்களோ, இன்று அதே மக்கள், இந்த ராஜபக்‌ஷ கூட்டத்துக்கு எதிராகத் திரும்பி இருக்கிறார்கள். இது போன்ற நிலைமை, தமக்கு எதிராக உருவாகும் என்று, ராஜபக்‌ஷர்கள் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். ஏனென்றால், அவ்வளவு தூரம் சிந்திக்கும் திறன் அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், பௌத்தம் இதனை ‘தித்த தம்ம வேதனிய கம்ம’ என்கிறது. அதாவது, ‘இந்த ஜென்மத்திலேயே பலனை அனுபவிக்கும் கர்மா’ என்கிறது. இனவாத வெறியை விதைத்து, சிறுபான்மையினரை அடக்கியொடுக்கி, பேரினவாதத்தை பரப்பிய ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக, இன்று அவர்களது ஆதரவாளர்களே திரும்பியிருக்கிறார்கள். ‘பசி வந்தால் பத்தும் பறந்து போகும்’ என்று, நல்வழியில் பட்டியலிட்டாள் ஒளவைப் பிராட்டி. ‘பசி வந்தால் இனவாதமும் கூட மறந்துபோகும்’ என்ற இந்த நிலையிலும் கூட, இனவாதம் தம்மை காக்கும் என்ற ரீதியில், தீவிரவாதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்று கதைபரப்ப முயன்ற அரசாங்கத்தினர் மூக்குடைபட்டனர். ராஜபக்‌ஷர்களின் பிரம்மாஸ்திரமான ‘இனவாதம்’ கூட, பயன்தராத நிலைதான் தற்போது நிலவுகிறது. அதனால்தான் முழுமையான அடக்குமுறையை ராஜபக்‌ஷர்கள் கையிலெடுக்கத் தொடங்கிவிட்டார்கள். இதற்கு எதிராக,, அரசாங்கத்துக்கு உள்ளிருந்தே குரல்கள் எழத் தொடங்கிவிட்டன. நாமல் ராஜபக்‌ஷ கூட, சமூக ஊடகங்கள் மீதான தடையை எதிர்த்து, சமூக ஊடகத்திலேயே கருத்து வௌியிட்டிருந்தார். பாவம், நாமலுக்கு தன்னுடைய அரசியல் எதிர்காலம் பற்றிய அச்சம் வந்திருக்கும்தானே! அதனால் தன்னை, தன்னுடைய அப்பா, சித்தப்பாக்களிடம் இருந்து, தனியாகப் பிரித்துக்காட்ட விளைகிறார். அது நடக்காது! இந்நாட்டு மக்கள், ராஜபக்‌ஷர்களுக்கு மீண்டும் மீண்டும் வாக்களிக்கும் அளவுக்கு முட்டாள்களாக இருக்கலாம். ஆனால், நாமல் ராஜபக்‌ஷ, மற்றைய ராஜபக்‌ஷர்களில் இருந்து வேறுபட்டவர் என்று நம்பும் அளவுக்கு முட்டாள்கள் அல்ல என்றே நம்புகிறேன். இன்று வீழ்ச்சியின் விளிம்பில் ராஜபக்‌ஷர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். ‘என்ன வீழ்ச்சியின் விளிம்பிலா, ராஜபக்‌ஷர்கள் விழுந்துவிட்டார்களே’ என்று பலரும் கேட்கலாம். இல்லை! ராஜபக்‌ஷர்கள் என்பவர்கள் கரப்பான்பூச்சிகளின் தன்மையைப் போன்றவர்கள். அவர்களை இல்லாதொழிப்பது கடினம். இனவாதம், காழ்ப்புணர்வு, இனவெறி என்ற அழுக்குத்தான் அவர்கள் வாழும் வளரும் இடம். அந்த அழுக்கு இருக்கும் வரை, ராஜபக்‌ஷர்கள் மீண்டும் மீண்டும் வந்துகொண்டேதான் இருப்பார்கள். ஆகவே, ராஜபக்‌ஷர்கள் அரசியலிலிருந்து இல்லாதொழிக்கப்பட வேண்டுமானால், இனவாதம், காழ்ப்புணர்வு, இனவெறி என்ற அழுக்கு இல்லாதொழிக்கப்பட வேண்டும். சுத்தமான இடமாக அரசியல் மாற்றப்பட்டால், அங்கு கரப்பான்பூச்சிகளால் பிழைத்து, நீடித்திருக்க முடியாது. அது நடக்கும் வரை, கரப்பான்பூச்சிகளுக்கு முடிவே கிடையாது. அவர்கள் விழுந்தாலும், அழுக்கிலே உழன்று, பிழைத்து மீண்டும் மீண்டும் வந்துகொண்டே இருப்பார்கள். முதலில் அழுக்கை சுத்தம் செய்யுங்கள்! https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வீழ்ச்சியின்-விளிம்பில்-ராஜபக்-ஷர்கள்/91-294360
  17. மின்வெட்டும் அரசியலும் என்.கே.அஷோக்பரன் Twitter: @nkashokbharan கடந்தவாரத்தில், ஒரு நாளைக்கு ஏறத்தாழ 5 மணித்தியாலங்கள் அளவு வரை இலங்கையின் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ இரண்டு தசாப்தங்களின் பின் பெரும் மின்சார பற்றாக்குறை நிலையை இலங்கை எதிர்கொண்டு நிற்கிறது. இந்த நிலைவரக் காரணம் என்ன? குறுங்காலக் காரணம், இலங்கையிடம் பெற்றோலிய எரிபொருள் வாங்க போதிய டொலர்கள் இல்லை. ஆகவே இந்தியா உள்ளிட்ட சில நாடுகளிடம் கடன்வசதிகளைளப் பெற்றுக்கொண்டு பெற்றோலிய எரிபொருட்கள் இறக்குமதிசெய்தி வருகிறது. கிடைக்கும் பெற்றோலிய எண்ணையை,போக்குவரத்திற்கு அதனை ஒதுக்குவதா, அல்லது பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு பெருமளவில் கடன் செலுத்தவேண்டிய நிலையிலுள்ள இலங்கை மின்சார சபைக்கு அதனை வழங்குவதா என்ற கேள்வி எழுவதிலிருந்துதான் இலங்கையின் இன்றைய மின்பற்றாக்குறை பிரச்சினை தொடங்கியது எனலாம். கடனுக்கு வாங்கிய பெற்றோலியத்தை, கடனுக்கு வழங்கினால், மீண்டும் பெற்றோலியம் வாங்க மீண்டும் கடன் வாங்க வேண்டும். இது ஒரு விஷச்சக்கரம். இந்த முட்டுச்சந்தில்தான் இலங்கை முட்டிமோதி நிற்கிறது. இது நிலைமையை மோசமாக்கிய குறுங்காலக் காரணம்தான். இதற்கெல்லாம் வழிவகுத்த நீண்டகாலக் காரணத்தை, அதாவது நோய்கான காரணத்தைப் பற்றி யோசிப்பது மிக முக்கியம். நீண்டகாலக் காரணம், இலங்கையின் அறமற்ற அரசியலும், கொள்கைப் பிழைகளும்தான். இலங்கையின் மின்சாரத் துறை என்பது அரசாங்கத்தின் ஆதிக்கத்தின் கீழுள்ளதொன்று. அண்மைத் தசாப்தங்களில் தனியார் துறைக்கு மின்பிறப்பாக்க அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது உண்மை, ஆனால் மின் வழங்கல் என்பது அரசாங்கத்தின் தனியுரிமையிலேயே இருக்கிறது. இலங்கை மின்சாரத்துறையை பெருமளவில் கொண்டுநடத்துவது இலங்கை மின்சார சபை. 2010 முதல் 2019 வரையிலான 10 வருட காலப்பகுதியில், இலங்கை மின்சார சபையின் மொத்த நட்டம் ரூ. 246 பில்லியன். கடந்த இரண்டு ஆண்டுகளில் மேலும் பல பில்லியன்கள் நட்டத்தை இலங்கை மின்சார சபை அடைந்துள்ளது. மின்சாரம் என்பது அனைத்து நுகர்வோருக்கும் தேவைப்படும் ஒன்று. உலக அளவில் மின்சக்தி பிறப்பாக்கம் மற்றும் வழங்கல் என்பன பெரும் இலாபம் தரும் வியாபாரம். இலங்கை மின்சார சபை, இலங்கையின் மின்துறையில் கிட்டத்தட்ட தனியுரிமை கொண்டுள்ளது. அப்படியானால் அது ஏன் நட்டத்தில் இயங்குகிறது? இதற்கு காரணம் இலங்கையின் அரசியலும், அதன்பாலான நிர்வாகச் சீர்கேடுகளும்தான். ஒரே ஒரு உதாரணம் இதற்குப் போதும். அண்மையில் சமூக ஊடகங்களில் வௌிவந்த தகவல்களின் படி, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல 2015ல் இருந்து தனது வீட்டிற்கான மின்கட்டணம் கட்டாமல் இலங்கை மின்சார சபைக்கு மீதம் வைத்துள்ள தொகை ஒரு கோடியே இருபது லட்சத்து ஐம்பத்து ஆறாயிரத்து எண்ணூற்று மூன்று ருபாய்களும் முப்பத்தெட்டு சதங்களும்! ஒரு சாதாரண குடிமகன் இரண்டாயிரம் ரூபாய் மின்கட்டணத்தை இரண்டு மாதங்கள் கட்டாமல் விட்டாலே மின்சாரத்தை துண்டிக்கும் மின்சார சபை, அமைச்சருக்கு மட்டும் கோடிக்கணக்கில் கருணை காட்டுகிறது. இப்படி மாறி மாறி கருணை காட்டினால், மின்பிறப்பாக்கத்திற்குத் தேவையான எரிபொருள் வாங்க மின்சார சபையிடம் எப்படிப் பணம் இருக்கும்? இந்த இடத்தில் இன்னொரு கேள்வி வருகிறது. நீர்மின்னுற்பத்தி, சூரியசக்தி மின்னுற்பத்தி, காற்றாலை மின்னுற்பத்தி என மின்னுற்பத்தி செய்யத்தக்க இலங்கை ஏன் பெற்றோலிய எரிபொருள் மூலமான மின்னுற்பத்தியில் பெரிதும் தங்கியிருக்கிறது? 1995 ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை நாட்டின் மின்சார உற்பத்தியில் கிட்டத்தட்ட 100% நீர்மின்சாரமே பங்களித்தது. எவ்வாறாயினும், இலங்கையின் மின்சார உற்பத்தியில் நிலக்கரி மற்றும் அதிக விலையுயர்ந்த எண்ணெய் மூலமான மின் உற்பத்தியின் பங்களிப்பு கடந்த இரண்டு தசாப்தங்களாக மின்சார தேவையின் விரைவான அதிகரிப்பு மற்றும் பெரிய புதிய நீர் மின் வசதிகளை உருவாக்குவதற்கான மட்டுப்படுத்தப்பட்ட சாத்தியக்கூறுகளால் பல ஆண்டுகளாக தொடர்ச்சியான உயர்வைக் கண்டுள்ளது. இந்த மாற்றம் செலவுகளை கணிசமாக அதிகரித்துள்ளது. இன்றும் மிகக் குறைந்த செலவிலான மின்னுற்பத்தி நீர் மின்னுற்பத்தியாகவே இருக்கிறது. ஆனால் நீர்மின் நிலையங்களின் பங்களிப்பு வானிலை நிலைமைகளால் மிகவும் பாதிக்கப்படக்கூடியது. இது வெவ்வேறு ஆண்டுகளில் அதன் பங்களிப்பில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்களை விளக்குகிறது. மழை நன்கு பெய்யும் ஆண்டுகளில், நீர்மின் உற்பத்தியானது இலங்கை மின்னுற்பத்தியில் 40%க்கு மேல் கூட அதிகரிக்கிறது. ஆனால் வறண்ட ஆண்டுகளில், நீர்மின் உற்பத்தியில் உள்ள இடைவெளியைக் குறைக்க எண்ணெயில் இயங்கும் அனல் மின் நிலையங்கள் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன மறுபுறத்தில் சூரியசக்தி மின்பிறப்பாக்கம் பற்றி இன்னும் இலங்கை தீவிரமாகச் சிந்திக்கவேயில்லை. அதைப்பற்றி சிந்திப்பது அவசியம். முறையான திட்டத்தை இலங்கை முன்னெடுத்தால் சூரியசக்தியிலிருந்து இலங்கை இன்னும் பலன்பெறும். தென், வட மத்திய, வட மேல் மாகாணங்கள் ஆகிய பகுதிகளில் சூரியசக்தி மின்பிறப்பாக்க பூங்காக்கள் அமைத்தாலே அது இலங்கையின் மின்தேவையின் கணிசமான பங்கை பூர்த்தி செய்யும். இதற்கான மூலதனம் அதிகம். ஆனால் நீண்டகாலத்தில் அதற்கேற்ற பலனை அது தரும். இது மிகத் தூய்மையான சக்தி என்பதனையும் நாம் கருத்திற்கொள்ள வேண்டும். மேலும் இலங்கையில் பரவலாக அமைந்துள்ள சிறிய நீரூற்றுக்களில், மின்பிறப்பாக்கம் செய்யக்கூடிய சிறிய நீர்மின்நிலையங்களை அமைக்க இலங்கை அரசாங்கம் தனியார் துறைக்கு ஊக்கமும், அனுமதியுமளித்தால். அப்படி ஒரு 100 - 200 சிறிய நீர்மின்பிறப்பாக்க நிலையங்கள் உருவானால் அது இலங்கையின் மொத்த மின்னுற்பத்திக்கு இன்னொரு 300 - 400 மெகாவோட் மின்சாரத்தை வழங்கும். இலங்கை அணுமின்னுற்பத்தி பற்றியும் சிந்திக்க வேண்டும் என்று கருத்துரைப்போரும் உளர். 2010ல் இலங்கை அரசாங்கமானது, 2030 அளவில் 1000 மெகாவோட் மின்பிறப்பாக்கும் அணுமின்னிலையத்தை 2030 அளவில் அமைக்கத் திட்டமிட்டிருந்தது. 2018, இலங்கையில் அணுமின்னிலையம் அமைப்பது பற்றி இலங்கை ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. ரஷ்யா, இலங்கையில் அணுமின்னிலையமொன்றை ஒருநாள் அமைக்கும் என்று 2020ல் இலங்கைக்கான ரஷ்ய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இதுவரை இவையெல்லாம் பேச்சளவிலேயே நிற்கின்றன. இன்று உலகளவில் ரஷ்யா சந்தித்து நிற்கு தடைகளால், இதனுடைய உடனடி சாத்தியப்பாடுகள் எல்லாம் கேள்விக்குறியே. அணு மின்சாரம் என்பது உமிழ்வு இல்லாத சுத்தமான சக்தி மூலமாகும். இது பிளவு மூலம் சக்தியை உருவாக்குகிறது, இது ஆற்றலை உற்பத்தி செய்ய யுரேனியம் அணுக்களை பிரிக்கும் செயல்முறையாகும். பிளவு மூலம் வெளியிடப்படும் வெப்பம், பெற்றோலிய எரிபொருட்களால் வெளிப்படும் தீங்கு விளைவிக்கும் துணைப் பொருட்கள் இல்லாமல் மின்சாரத்தை உருவாக்க வழிவகுக்கிறது. ஆனால் அணுமின்னிலையத்தின் பாதுகாப்பு, கதிர்வீச்சு ஆபத்துக்கள் போன்ற சிக்கல்கள் அணுமின்னிறலையத்தில் உள்ளது. ஆனால் நாட்டில் மின் தேவை பூதாகரமாக அதிகரித்து வரும் நிலையில், இலங்கை அணுமின்னுற்பத்தியைப் பற்றி சிந்திக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. இவையெல்லாவற்றிற்கும் மேலாக, இலங்கை மின்சார சபை என்ற தனியுரிமையை சீரமைப்பது அவசியமாகிறது. இலாபத்தில் இயங்க வேண்டிய ஒரு துறையை, பல பில்லியன்கள் நட்டத்தில் இயங்க வைத்துக் கொண்டிருப்பது என்பது நிர்வாகச் சீர்கேட்டையே சுட்டிக்காட்டி நிற்கிறது. மின்பிறப்பாக்க கப்பல்களை வரவழைத்து, அதில் பெற்றோலிய எரிபொருள் மூலம் பிறப்பிக்கப்படும் மின்சாரத்தை பல மடங்கு விலைகொடுத்து வாங்கும் காரியமும் இலங்கையில் அரங்கேறியிருக்கிறது! இப்படி எத்தனையோ “டீல்களைப்” பட்டியலிடலாம். அரசாங்கத்தின் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் வரை, மின்சாரத்துறையின் நிர்வாக சீர்கேடு என்பது தொடரவே செய்யும். இந்த நிலையை மாற்றியமைப்பது அவசியம். அடிப்படைகளை மாற்றாமல், கொள்கைகளை மாற்றாமல், கட்டமைப்புக்களை மாற்றாமல் இந்த நோயைத் தீர்க்க முடியாது. கடனெடுத்து இன்று மின்சாரத்தை உற்பத்தி செய்து, இன்றைய தினத்தைக் கடத்திவிடலாம். ஆனால் இப்படி எத்தனை நாட்கள் சமாளிக்க முடியும்? கடனெடுக்க முடியாத நிலைவந்தால், அத்தியாவசிய சேவைகள் தாண்டி வேறு எதற்கு மின்சாரம் இல்லாத இருண்ட யுகத்தையே நாம் நிதர்சனத்தில் அனுபவிக்க வேண்டி வரும். இன்றை நிலையில் அது வெறும் பயங்கரமான கற்பனையல்ல, யதார்த்தத்தில் நிகழக்கூடிய சாத்தியக்கூறுகள் மிக அதிகமாகவே இருக்கின்றன. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மின்வெட்டும்-அரசியலும்/91-292072
  18. கல்வித் தகைமையும் அரசியலும் என்.கே. அஷோக்பரன் அரசியலில் மாற்றம் வேண்டும் என்போர் பலரினதும் எண்ணப்பகிரல், ‘படிச்சவன் அரசியலுக்கு வரவேண்டும்’ என்பதாக இருக்கிறது. ‘படிச்சவன்’ என்ற சொற்பதத்தின் பயன்பாடு, கொஞ்சம் மேலோட்டமானது. ஆனால், பெரும்பாலும் இந்தச் சொல் ஏதோ ஒரு துறையில் கற்று, பட்டம் பெற்று, குறித்த துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ளமையைச் சுட்டியே, பொதுவில் பயன்படுத்தப்படுவதை அவதானிக்கலாம். தம்மைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதி, படித்துப் பட்டம் பெற்ற ஒருவராக இருக்க வேண்டும் என்ற அவா, மக்களிடையே அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு ஒருவகையில், ஏலவே உள்ள அரசியல்வாதிகளின் நடத்தைகளும் நடவடிக்கைகளும், முக்கிய காரணமாக இருக்கிறது. இத்தகைய மோசமான அரசியல்வாதிகளை வெறுக்கும் மக்களிடையே, அவர்களின் மோசமான நடத்தைகளுக்குக் காரணம், அவர்கள் ‘படித்தவர்களாக இல்லை’ என்ற பொது மனப்பான்மை, ஏதோவொரு வகையில் உருவாகிவிடுகிறது. ஆகவே படித்தவர்கள், தொழில் நிபுணர்கள் அரசியலுக்கு வந்தால், அவர்கள் திறம்படச் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை, மக்களிடையே ஏற்பட்டுள்ளதையும் காணலாம். இந்தப் ‘படித்தவர்களின் ஆட்சி’ என்பதை முன்னிறுத்தியே, சில கட்சிகள், அரசியல் குழுக்கள் அல்லது அழுத்தக் குழுக்கள், தமது அரசியலை முன்னெடுப்பதையும் நாம் காணலாம். இன்றைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கூட, ‘வியத்மக’ என்ற ‘படித்த’ நிபுணர்களின் குழுவொன்றின் பலத்த ஆதரவுப் பின்புலத்திலிருந்து வந்தவர். அந்த நிபுணர்களின் ஆட்சியில், இலங்கையை மாற்றுவேன் என்ற சூளுரையோடு தேர்தலில் நின்று வெற்றியும் பெற்றார். ஆனால், பாடசாலைக் கல்வியைத் தாண்டிப் படித்திராத, முன்னாள் கிராம சேகவரான மைத்ரிபால சிறிசேனவின் ஆட்சியை விட, மோசமான ஆட்சியாக இந்த ‘நிபுணர்’களின் ஆட்சி நடந்துகொண்டிருப்பதை, மக்கள் நித்தம் நித்தம் அனுபவம் மூலம் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நாட்டின் பெரும் சாபக் கேடான இனவெறித் தீக்கு, எண்ணெய் ஊற்றி, பெரும் தீப்பிளம்பாக மாற்றிய, தனிச்சிங்களச் சட்டத்தை அறிமுகப்படுத்திய எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்க, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவர். 20ஆம் நூற்றாண்டில் நடத்தப்பட்ட பெரும் இனரீதியான புத்தக அழிப்பு யாழ்ப்பாண நூலக எரிப்பு ஆகும். 20ஆம் நூற்றாண்டில் ஆசியாவில் நடத்தப்பட்ட மிகப்பெரிய இன அழிப்பான 1983 கறுப்பு ஜூலை என்பன, சிலோன் பல்கலைக்கழகம், இலங்கை சட்டக் கல்லூரியில் ‘படித்த’ ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சியில் நடந்தேறியிருந்தன. “ஒரு மொழி, இருநாடு; இரு மொழி, ஒரு நாடு” என்று 1956இல் பேசிய கலாநிதி கொல்வின் ஆர் டீ சில்வாவும் தனிச்சிங்களச் சட்டத்தை 1956இல் கடுமையாக விமர்சித்த கலாநிதி என்.எம்.பெரேராவும், சிங்கள மொழியை மட்டும் உத்தியோகபூர்வ மொழியாக அறிவித்த, பௌத்த மதத்துக்கு முதலிடம் தந்த 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்பை ஆதரித்திருந்தார்கள். சிலோன் பல்கலைக்கழகம் மற்றும் இலண்டன் பல்கலைக்கழகத்தல் ‘படித்த’ கொல்வின் ஆர் டீ சில்வா, கலாநிதி பட்டத்தை இலண்டன் பல்கலைக்கழகத்தின் கிங்ஸ் கல்லூரியில் பெற்றிருந்தார். என்.எம். பெரேரா, இலண்டன் பொருளியல் மற்றும் அரசறிவியல் கல்லூரியின் பேராசிரியர் ஹறல்ட் லாஸ்கியின் கீழ் கற்று, தனது கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டதுடன், இலண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து விஞ்ஞான முனைவர் பட்டத்தையும் பெற்று, இரட்டைக் கலாநிதிப் பட்டங்களைக் கொண்டிருந்தார். இந்த இருவரும் சிறிமாவோவின் அரசாங்கத்தில், அமைச்சர்களாகப் பதவி வகித்தது மட்டுமல்லாது, 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்பை ஆதரித்தும் இருந்தார்கள். தமிழர்களின் அரசியலைப் பொறுத்தவரையில், ‘தனிநாடு’ என்ற உணர்ச்சிவயப்பட்ட கோரிக்கையை, அதன் சாத்தியப்பாடுகள், அதன் குறுங்கால மற்றும் நீண்டகால விளைவுகள் என்பவற்றைப் பற்றிய எந்தச் சிந்தனையுமின்றி, எதுவித திட்டங்களுமின்றி அரசியல் பகட்டாரவாரமாக முன்வைத்தவர், ராஜா அப்புக்காத்துவான சா.ஜே.வே.செல்வநாயகம். செல்வநாயகத்தின் முன்வைப்பை, தனது அரசியலின் மூலதனமாக மாற்றியவர் ‘படித்த’ சட்டத்தரணியான அ.அமிர்தலிங்கம். இளைஞர்களைச் சரியான அரசியல் பாதையில் கொண்டு செல்ல வேண்டிய கடமையைக் கொண்டிருந்தவர், இளைஞர்களை உணர்ச்சிவச அரசியலின் பாதையில் இட்டுச்சென்று, தமிழினத்தின் தலையெழுத்தையே தலைகீழாக மாற்றிப்போட்டுவிட்டார். அவர் இட்டதீ, அவரையே சுட்டது. ஆகவே, ‘படித்த’ அரசியல்வாதிகளும் கூட, மிக மிக மோசமான முடிவுகளை எடுத்திருக்கிறார்கள்; மிக மோசமான காரியங்களைச் செய்திருக்கிறார்கள்; மிக மிக மோசமான காரியங்கள் நிகழ்வதை அனுமதித்திருக்கிறார்கள்; தமது பதவியைக் காத்துக்கொள்ள, பிழையானவற்றை ஆதரித்திருக்கிறார்கள். அதனால், கல்வியறிவு அவசியமில்லை என்று ஆகிவிடாது. ஆனால், கல்வித்தகைமை மட்டும் ஓர் அரசியல்வாதியை சிறந்தவராக்கி விடாது. முன்னர் குறிப்பிட்டதுபோல, இங்கு பொதுவாகக் கல்வித்தகைமையாக, அல்லது ஒருவரைப் படித்தவராகக் கருதுவதற்கு அடிப்படையாக அமைவது, அவர் முறையான கல்வியைப் பெற்று, பட்டம் பெற்றிருப்பதையே ஆகும். முறையான கல்வி என்பது, ஒரு கட்டமைக்கப்பட்ட மற்றும் முறையான கற்றல் வடிவமாகும். பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒரு கட்டமைக்கப்பட்ட தரத்தின் அடிப்படையிலான கல்வி இதுவாகும். பாலர் பாடசாலைக் கல்வி, பாடசாலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி என முறையான கல்வி அமைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது. முறையான கல்வி என்பது, ஆரம்பத்தில் வகுப்பறை அடிப்படையிலானது. அதாவது, ஒரு மாணவர் கற்றுக் கொள்ளும் அனைத்தும், மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஒரே நோக்கத்துடன், புத்தகங்கள் மற்றும் பிற கல்விச் சாதனங்களூடு கல்வி புகட்டப்படுகிறது. இங்கு, எவர் பாடத்திட்டத்தைத் தீர்மானிக்கிறாரோ, அவரே அந்தத் தலைமுறையின் ‘முறையான கல்வியறிவின்’ அளவையும் பெருமளவுக்குத் தீர்மானிக்கிறார். பல்கலைக்கழகக் கல்வியில்தான் பெருமளவுக்கு ஆய்வு அடிப்படையிலான கல்வியை நோக்கி, முறையான கல்வி திரும்புகிறது. ஆனால், இது குறித்த நபர் தெரிவுசெய்த துறையிலுள்ள ஏதோ ஒரு விடயம் பற்றிய ஆழமான ஆய்வாகவே அமைகிறது. ஆகவே, முறையான கல்வி என்பது, மனித அறிவை விருத்திசெய்யும் ஒரு வழியே அன்றி, முறையான கல்வி மட்டும்தான் மனித அறிவுக்கான அளவுகோல் என்பது ஏற்புடையதொன்றல்ல. அரசியல் என்பது, மிகச் சிக்கலானதொரு கலை மட்டுமல்ல, ஆபத்தானதொரு கலையும் கூட. ஏனென்றால், அதிகாரத்தைக் கையாளும் கலை அது! அதற்குப் பரந்த அறிவு அவசியம். அறிவை விடவும் ஆற்றல் அவசியம். இவையெல்லாவற்றையும் விட, தரமான குணநலனும் நேர்மையும் நல்லெண்ணமும் அவசியம். அதிகாரம் என்பது, மிகப்பெரும் பலம் மட்டுமல்ல; மிகப்பெரும் பொறுப்பும் கூட! ஜனநாயக உலகத்தில், அதிகாரம் என்பது மக்களுடையது; மக்களுக்கானது. அப்படியானால், அந்த மக்களின் நல்லெண்ணத்தை முன்னிறுத்துபவர் ஒருவரே, தன்னலமின்றி அதிகாரத்தை மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தும் இயல்பினராவார். ஆனால், நல்லெண்ணம் மட்டும் போதாது. அதிகாரத்தை எப்படி, மக்களின் நன்மைக்குப் பயன்படுத்துவது என்ற அறிவும் வேண்டும். அது, ஒரு துறைசார்ந்த அறிவாக இருக்க முடியாது. பரந்த அறிவும் அனுபவமும் அதற்குத் தேவை. நல்லெண்ணமும் பரந்த அறிவும் மட்டும், காரியத்தைச் சாதிக்க உதவாது. அதற்கு எதையும் சாதிக்க வல்ல ஆற்றலும் இயலுமையும் அவசியம். இவையெல்லாம் ஒன்றிணையும்போதுதான் திறமையானதோர் அரசியல்வாதியாக அவர் துலங்குவார். ஆகவே, முறையான கல்விறிவு உடையவர்கள் அரசியலுக்கு வந்தால், அது நாட்டிலுள்ள சகல பிரச்சினைகளுக்குமான சர்வரோக நிவாரணியாக அமையும் என்ற நம்பிக்கையில் அர்த்தமுமில்லை; உண்மையுமில்லை. முறையான கல்விபெறாத காமராஜர், மக்களை நேசிக்கும் நேர்மையான, ஆற்றல் மிகு தலைவனாக இருந்தமையால், முறையான கல்வியைப் பெற்றுக்கொள்ள சாமானியர்களுக்குள்ள சவால்களை, தனது அனுபவத்தின் வாயிலாக உணர்ந்தமையால், மிகப் பரந்த சமூக, பொருளாதார, அரசியல் அறிவைக் கொண்டிருந்தமையால், அனைவரும் கல்வி பெறத்தக்க திட்டங்களை அறிமுகப்படுத்தினார். இப்படிப் பல உதாரணங்கள் உலகெங்கும் இருக்கிறது. முறையான கல்வி பெற்றவர்களே, சிறந்த அரசியல்வாதிகளாவார்கள் என்று கருதுவதைவிட அபத்தமானது, ஆங்கிலம் நல்லாப் பேசுகிறான்; சிங்களம் நன்றாகப் பேசுகிறான்; தமிழ் நன்றாகப் பேசுகிறான்; இருமொழியாற்றல் உடையவன்; மும்மொழியாற்றல் உடையவன் என்பதால் மட்டும், ஒருவனை மிகச் சிறந்த அரசியல்வாதியாகக் கருதுவதாகும். மொழியாற்றலுக்கும் ஒருவனுடைய அறிவுக்கும் நல்லெண்ணத்துக்கும் ஆற்றலுக்கும் எந்தச் சம்பந்தமும்மில்லை. இந்த அபத்தங்களைத் தாண்டி, மக்கள் சிந்திக்கத் தொடங்க வேண்டும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கல்வித்-தகைமையும்-அரசியலும்/91-291680
  19. அநுராதபுரக் கூட்டமும் பொதுவேட்பாளருக்கான போட்டியும் என்.கே.அஷோக்பரன் Twitter: @nkashokbharan எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது ~கொவிட்-19| நோய்த்தொற்றுப் பரவல் காலகட்டத்தில் எதிர்க்கட்சிகள் அப்படி ஆர்ப்பாட்டம் நடத்தியது நோய்ப்பரவலை அதிகரிக்கும் என்று விமர்ச்சித்துக்கொண்டிருந்த அரசாங்கம், அண்மையில் தானும் ஒரு பெரும் எழுச்சிக் கூட்டத்தை நடத்தியிருந்தது. அரசியல் களத்தில் தமது ஆதரவு வீழ்ச்சி காணும் போதெல்லாம், இலாவகமாக அதனை மீட்டெடுப்பதில் ராஜபக்‌ஷர்கள் சமர்த்தர்கள். கடந்த இரண்டாண்டுகளில் வீழந்துபோன தமது பிம்பத்தை மீட்டெடுக்க மீண்டும் பகீரதப் பிரயத்தனத்தில் இறங்கியிருக்கிறார்கள். நுகேகொடை கூட்டம் போன்று கொழும்பில் ஒரு கூட்டத்தை நடத்தாது, அவர்கள் அநுராதபுரத்தில் இந்த எழுச்சியை நடத்தியமை கவனிக்க வேண்டியதாகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேற்பட்ட ராஜபக்‌ஷர்களின் ஆட்சியில் அதிகம் பாதிப்பைச் சந்தித்தது இலங்கைப் பொருளாதாரம்தான். அந்த பாதிப்பை நேரடியாக அனுபவித்தவர்கள் பெரும்பாலும் நகர்ப்புற மக்கள்தான். உரப்பிரச்சினை, உரத்தட்டுப்பாடு தவிர்ந்த ஏனைய பிரச்சினைகள் பலவும் நகர்ப்புறத்தைத் தாண்டிய பகுதிகளில் பெரும்பிரச்சினையாக இன்னும் உருவெடுக்கவில்லை. உரப்பிரச்சினைதான், நகர்ப்புறங்களைத் தாண்டிய பகுதிகளில் ராஜபக்‌ஷர்களுக்கெதிரான பெரும் சவாலாக எழுந்து நிற்கிறது. அதனைத் தாண்டிய விலைவாசி அதிகரிப்பு, எரிபொருள் விலையேற்றம், எரிவாயுத் தட்டுப்பாடு என்பன நகர்ப்புறங்களில் ஏற்படுத்திய தாக்கம் அளவிற்கு, நகர்ப்புறத்தைத் தாண்டிய பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆகவே சரிந்துபோயுள்ள தமது பிம்பத்தை, குறைந்த பாதிப்பு உள்ள பகுதிகளிலிருந்து சரிசெய்யவே ராஜபக்‌ஷர்கள் விரும்புகிறார்கள் என்பதை நாம் ஊகிக்கக் கூடியதாகவுள்ளது. கொழும்பு என்பது ராஜபக்‌ஷர்களின் கடைசி முன்னுரிமைதான். அவர்களுக்கு நன்றாகவே தெரியும் அவர்களுடைய வாக்குவங்கி என்பது நகர்ப்புறமல்லாத சிங்கள-பௌத்த மக்களின் வாக்கு வங்கி என்பது. அதனை மீண்டும் பலப்படுத்தும் முயற்சியில்தான் தற்போது அவர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படுகிறார்கள். மத்தியவங்கி பில்லியன் கணக்கில் அச்சடிக்கும் பணத்தைக் கொண்டு, அது ரூபாவின் மதிப்பை வீழ்த்தினாலும், இலங்கையின் பொருளாதாரத்தைச் சீரழித்தாலும், இலங்கையை சிம்பாப்வே, அல்லது லெபனான் போன்ற நிலைக்கு இட்டுச்சென்றாலும் கவலையில்லை. ஆட்சியில் தாம் இருப்பதை உறுதிப்படுத்தினால் போதும் என்ற சுயநல பிடிவாதத்தோடு, ராஜபக்‌ஷர்கள் அடுத்த இரண்டு வருடங்களில் தீவிரமான தமது வாக்கு வங்கியை கவரத்தக்க பணிகளை முன்னெடுப்பார்கள். இதுதான் பசில் ராஜபக்‌ஷவின் தந்திரோபாயமாக இருக்கும் என்பதை இலகுவில் ஊகித்துக்கொள்ள முடியும். தௌிந்த அரசியல் அறிவு இல்லாத, குறைந்த ஞாபகத்திறனுள்ள, பேரினவாத உணர்ச்சி ததும்பும் வாக்குவங்கியைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாட்டில், தனது தந்திரோபாயம் வேலைசெய்யும் என்று பசில் ராஜபக்‌ஷ நம்புவதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. அதேவேளை இது அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்‌ஷர்கள் பாசறையிலிருந்து போட்டியிடப்போவது யார் என்ற கேள்வியையும் எழுப்பி நிற்கிறது. அடுத்த ஜனாதிபதித் தேர்தல்பற்றிப் பேசுவதற்கு இன்னும் நிறையக் காலமிருக்கிறது என்பதுதான் யதார்த்தமாக இருந்தாலும், எல்லாத் தரப்புக்களும் அதற்கான ஆரம்பகட்ட முஸ்தீபுகளில் ஈடுபட்டிருப்பதைக் காணலாம். ராஜபக்‌ஷர்களைப் பொறுத்தவரையில், மீண்டும் கோட்டாவே போட்டியிடுவாரா, அல்லது பசில் போட்டியிடுவாரா என்பதே பிரதான கேள்வியாக இருக்கிறது. யார் போட்டியிடுவது என்பது தொடர்பில் இன்னும் இரண்டாண்டுகளில் ஒரு தெளிவு கிடைக்கும். இன்றைய சூழலில், கோட்டாபய தன்னுடைய பிரபல்யத்தையும், கவர்ச்சியையும் இழந்து நிற்கும் நிலையில், மீண்டும் போட்டியிட்டால் கடந்தமுறை கிடைத்தளவு வாக்குகள் கிடைக்குமா என்பது ஐயமே. இந்த நிலையை அவரால் அடுத்த இரண்டு வருடங்களுக்குள் மாற்றிவிட முடியுமா என்பது ஐயத்திற்குரியதே. ராஜபக்‌ஷர்களின் தரப்பில் போட்டியிடுவது யாராயினும், அவர்களின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில் அவர்களை எதிர்த்துப் போட்டியிடுவது யார் என்பதும் முக்கியமானது. ஐக்கிய தேசிய கட்சி உயிரற்றுப் போயிருக்கிறது. ஐக்கிய மக்கள் சக்தி உள்ளுக்குள் உடைந்துபோய் இருக்கிறது. தேசிய மக்கள் சக்தி தனிவழி போய்க்கொண்டிருக்கிறது. இன்னொரு வழியில் மைத்ரிபால சிரிசேனவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் போய்க் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ராஜபக்‌ஷர்களை எதிர்த்துக் களம் காணப்போவது யார் என்பதில் கடுமையான போட்டி உருவாயிருப்பதை நாம் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இவர்கள் அனைவரும் தனித்தனியே போட்டியிட்டால், ராஜபக்‌ஷர்கள் இலகுவாக வெற்றிபெற்று விடுவார்கள். ராஜபக்‌ஷர்களினை எதிர்க்கும் அனைவரும் ஒன்றிணைந்து தமக்கு ஆதரவுதராத வரை தம்மால் வெல்ல முடியாது என்பது இந்தப் போட்டியிலுள்ள அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆகவே ராஜபக்‌ஷர்களை வெல்வதற்கான தற்காலிக சூத்திரமாக அமைவது எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்ததொரு பொதுவேட்பாளரைக் களமிறக்குவதுதான் என்பது பொதுவானதொரு நம்பிக்கையாக மட்டுமல்லாமல், தேர்தல் அரசியல் யதார்த்தமாகவும் மாறிவிட்டது. அப்படிப்பட்ட பொது வேட்பாளர் என்பவர், சிங்கள-பௌத்த வாக்கு வங்கியின் பாதியளவையேனும் பெற்றுக்கொள்ளக் கூடியவராக இருப்பதுடன், சிறுபான்மையின வாக்குவங்கியையும் கவர்ந்துகொள்ளக்கூடியவராக இருக்க வேண்டும்! மைத்ரிபால சிரிசேனவின் வெற்றி, பொது வேட்பாளரானால் வென்றுவிட முடியும் என்ற நம்பிக்கையை வழங்கியிருந்ததனால், பலருக்கும் அந்த ஆசை தொற்றிக்கொண்டது. இன்றிருக்கும் நிலையில் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து பொது வேட்பாளராகக் கூடிய நிலையில் எவரும் இல்லை என்பதுதான் யதார்த்தம். ஐக்கிய மக்கள் சக்தியைப் பொறுத்தவரையில், அதற்குள் சஜித் பிரேமதாசவிற்கான ஆதரவு குறைந்துள்ளது என்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. அதிலிருந்து சம்பிக்க ரணவக்க “43 படையணி” என்ற பெயரில் தனிப்பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். பொன்சேகாவிற்கும் ஜனாதிபதிக் கனவு இருந்துகொண்டிருப்பதையும் உணரக்கூடியதாக இருக்கிறது. மீண்டும் தன்னை பொதுவேட்பாளராக நிறுத்துவார்கள் என்ற நம்பிக்கை மைத்ரிபால சிரிசேனவிடம் இருக்கிறது. அதற்காகத்தான் அவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கிறார். ஜே.வி.பியின் பெயர் மக்கள் மத்தியில் நல்ல அபிப்ராயத்தைக் கொண்டிராத நிலையில், அந்தப் பெயருடன் ஒரு பலமான தேசிய சக்தியாக வளர முடியாது என்று தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் ஜே.வி.பி இயங்கிக் கொண்டிருக்கிறது. அநுர குமாரவை பொது வேட்பாளராகக் களமிறக்கும் கனவு நிச்சயம் தேசிய மக்கள் சக்திக்கு இருக்கும் எனலாம். இவர்களெல்லாம் ஒருபுறமிருக்க, மறுபுறத்தில் இலங்கையின் செல்வந்த தொழிலதிபர்களில் ஒருவராக தம்மிக்க பெரேரா அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடலாம் என்ற ஊகங்களும் பேசுபொருளாக இருக்கின்றன. தம்மிக்க பெரேரா அவ்வப்போது வௌியிடும் கொள்கைப் பத்திரங்கள், தீர்க்கதரிசனக் குறிப்புக்கள் என்பன இந்த ஊகங்களுக்கு வழிவகுத்திருக்கலாம். எது எவ்வாறாயினும், ஒருவர் யதார்த்தத்தில் வெற்றிவாய்ப்புள்ள பொது வேட்பாளர் ஆக வேண்டுமென்றால், வாக்குவங்கி செல்வாக்குள்ள கட்சிகள் அனைத்தும் அவரை ஆதரிக்க வேண்டும். இல்லையென்றால் வாக்குகள் சிதறுண்டு, அது ஆளுந்தரப்பிற்கே சாதகமானதாக அமையும். மேலும், முன்னர் குறிப்பிட்டது போல, குறித்த பொது வேட்பாளர் சிங்கள-பௌத்த வாக்கு வங்கியின் பாதியளவிலான வாக்குகளையேனும் பெற்றக்கொள்ளக் கூடியவராக இருப்பதுடன், சிறுபான்மையின வாக்கு வங்கிகளையும் கவரக்கூடியவராக இருக்கவேண்டும். இது மிகக் கடினமானது. சிறுபான்மையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என்று ஒரு பொது வேட்பாளர் இரகசியமாக சிறுபான்மையினக் கட்சிகளிடம் ஒத்துக்கொண்டால் கூட, அந்தச் செய்தி பெரும்பான்மையின வாக்குகளை பாதிப்பதாகவே பெருமளவிற்கு நம்பப்படுகிறது. ஆகவே ஏற்றதேர் அரசியல் தந்திரோபாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். சிறுபான்மையினரை உதாசீனம் செய்துவிட்டால், அவர்கள் வாக்களிக்கவே மாட்டார்கள். அதுவும் பொது வேட்பாளருக்கே இழப்பாக அமையும். ஆகவே பெரும்பான்மையினத்தவரும், சிறுபான்மையினத்தவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதொரு தளத்திலிருந்து தன்னுடைய அரசியலை முன்வைக்கக்கூடியவராக பொது வேட்பாளர் இருக்கும் போதுதான், அவர் வெற்றிபெறக்கூடிய பொது வேட்பாளராக அமைவார். வெறும் ராஜபக்‌ஷ எதிர்ப்பு என்பது போதாது. ராஜபக்‌ஷர்களுக்கு இந்தப் பிரச்சினையில்லை. அவர்களால் பெரும்பான்மையின வாக்குவங்கியை மட்டும் முன்னிறுத்தி தேர்தலில் வெற்றிபெற முடியும். அதனைத்தான் அவர்கள் 2019-ல் செய்தார்கள். அவர்களுக்கு சிறுபான்மையினரின் வாக்குவங்கி அத்தியாவசியம் இல்லை. அதனால்தான் அவர்கள் சிறுபான்மையினர் பற்றிக் கவலைகொள்வதில்லை. சிறுபான்மையினர் பற்றிய அவர்களின் கவலையெல்லாம், சர்வதேச அழுத்தத்தைச் சமாளிக்க மட்டும்தான். தேர்தலில் சிறுபான்மையின வாக்குகளுக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பதே இல்லை. ஆனால் பொது வேட்பாளரின் நிலை இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. மைத்ரிபால சிரிசேன செய்த காரியங்களினால் பொது வேட்பாளர் என்பதன் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை பெருமளிவிற்கு உடைந்துபோயுள்ளது. ராஜபக்‌ஷ எதிர்ப்பில் தொடங்கி, ராஜபக்‌ஷ சரணாகதியில் முடிந்த சிரிசேனவின் பயணம், மக்களுக்கு பெரும் நம்பிக்கையீனத்தையே அளித்துள்ளது. ஆகவே அடுத்த பொது வேட்பாளரை மக்கள் நம்பிக்கையோடு அன்றி, ஐயத்தோடே அணுகுவார்கள். அடுத்த பொது வேட்பாளராவது சிரிசேன பொது வேட்பாளரானதைப் போன்றதோர் இனிய பயணமாக இருக்கப்போவதில்லை என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அநுராதபுரக்-கூட்டமும்-பொதுவேட்பாளருக்கான-போட்டியும்/91-291146
  20. ‘சுதந்திர இலங்கை’ - சில எண்ணப்பகிரல்கள் என்.கே.அஷோக்பரன் பொருளாதார ரீதியில் இலங்கை தத்தளித்துக்கொண்டிருக்கும் நிலையில், தினம் தினம் டொலருக்காக எல்லா நாடுகளிடமும் கையேந்தி நிற்கும் நிலையில், டொலர் இருந்தால்தான் எரிபொருள், எரிபொருள் இருந்தால்தான் மின்சாரம் என அடுத்தநாள் மின்சாரம் இருப்பதன் நிச்சயத்தன்மை இல்லாத நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலையும் விண்ணையெட்டிப்பிடிக்குமளவிற்கு உயர்ந்துகொண்டிருக்கும் நிலையில், “கோலாகலமாக” பெரும் இராணுவ அணிவகுப்புக்களுடன், விமான சாசகஸப் பறத்தல்களுடன், 74வது சுதந்திர தினத்தை கொண்டாடித் தீர்த்திருக்கிறார்கள் ஆட்சியாளர்கள். சுதந்திர தினமென்றால் இந்தக் கொண்டாட்டங்கள் எல்லாம் நடக்கிறதுதானே எனச் சிலர் சொல்லலாம். சாதாரணமான நிலைமைகளின் கீழ், இந்தக் கொண்டாட்டங்களும் சாதாரணமானதுதான். ஆனால் இன்றுள்ள பொருளாதார கையறு நிலையில், மக்கள் பணத்திற்கு இந்த வீண் செலவுகள் தேவைதானா என்ற கேள்வியில் நிறைய நியாயங்கள் உள்ளன. இந்த வாதப் பிரதிவாதங்கள் ஒருபுறம் இருக்க, இந்த “சுதந்திரதினத்தின்” அர்த்தம்தான் என்ன? அதனை இலங்கையர்கள் எவ்வாறு புரிந்துகொள்கிறார்கள்? போன்ற கேள்விகளைப் பற்றிச் சிந்தித்தலும் முக்கியமானதாகிறது. அனேக நாடுகளுக்கு ஒரு தேசிய தினம் இருக்கிறது. அந்தவகையில் இலங்கையின் தேசிய தினமாக சுதந்திர தினத்தை இலங்கையர்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால் இதற்குப் பின்னால் காரணங்களும், அடையாளபூர்வ விடயங்களும் இருக்கின்றன. இந்தியாவை எடுத்துக்கொண்டால், இந்தியா இரண்டு தேசிய தினங்களைக் கொண்டாடுகிறது. முதலாவதாக பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடமிருந்து இந்தியா போராடிப் பெற்றுக்கொண்ட சுதந்திரத்தைக் கொண்டாடும் ஓகஸ்ட்-15 சுதந்திர தினம். அந்த சுதந்திரத்தைத் தொடர்ந்து, இந்தியா தனக்கான அரசியலமைப்பை உருவாக்க கிட்டத்தட்ட இரண்டரை வருடகாலம் எடுத்துக்கொண்டது. இந்தியாவினுடைய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாளான 26 ஜனவரி (1950) குடியரசு தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இந்தியா என்ற அரசியல் சிருஷ்டிக்கு பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடமிருந்தான சுதந்திரம் எவ்வளவு முக்கியமோ, அதேயளவிற்கு இந்தியாவை ஒற்றைக்குடியரசாக கட்டமைத்த அரசியலமைப்பு அறிமுகமான நாளும் மிக முக்கியமானது. பிரித்தானிய இந்தியாவிற்கு முன்னர், இன்றுள்ளதைப் போன்ற “ஒரு இந்தியா” இருக்கவில்லை. பிரித்தானிய ஏகாதிபத்தியமே, இன்றைய ஒரு இந்தியாவின் சிருஷ்டிகர்த்தா. மக்கட் பல்வகைமை, அடையாளப் பல்வகைமை கொண்ட ஒரு நிலப்பரப்பை, வரலாற்றில் அந்நியர் ஆதிக்கத்திற்கு முன்பதாக ஒருபோதும் முழுமையாக ஓர் அரசாகவோ, ஒரு நாடாகவோ இருக்காத ஒரு நிலப்பரப்பை, ஒரு குடியரசாகக் கட்டியெழுப்புவதென்பது பெரும் தேசநிர்மாணப் பணியாகும். அந்தப் பணிக்கு இந்த இரண்டு தினங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். பிரித்தானிய ஏகாதிபத்தியம் என்ற பொது எதிரியை வீழ்த்த, அந்த நிலத்தின் பல்வகைப்பட்ட மக்களிடமும் ஒரு பொது நிலைப்பாடு இருந்தது. அதற்கான அணுகுமுறைகளில் வேறுபாடிருந்தாலும், அந்நிய ஏகாதிபத்தியத்தை வீழ்த்துவது என்பதை அம்மக்கள் “இந்தியர்” என்ற அந்தியருக்கு எதிரான சுதேச அடையாளத்தைக் கொண்டு ஒன்றிணையும் புள்ளியானது. அதனால் இந்தியர் என்ற அடையாளத்திற்கு “சுதந்திரதினம்” என்பது அடிப்படையானது. அதுபோல, அந்த சுதந்திரத்தைப் பெற்ற பின்னர், தம்மை ஒரு “சிவில் தேசிய” குடியரசாகக் கட்டியமைப்பதில் இந்திய அரசியலமைப்பே அடிப்படையாக அமைந்தது. ஆகவே அதன் தொடக்கப்புள்ளியை குடியரசு தினமாகக் கொண்டாடுகிறார்கள். நிற்க. 1948 பெப்ரவரி 4ம் திகதி, இலங்கையின் “சுதந்திரதினம்”. இலங்கை பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் ஆட்சியிலிருந்து விடுவித்து, டொனிமினியன் அந்தஸ்த்தைப் பெற்றுக்கொண்டது. “டொமினியன் அந்தஸ்த்தின்” படியும் இலங்கை சம்பிரதாயபூர்வமாக பிரித்தானிய முடியின் கீழ்தான் இருந்தது. இலங்கையின் ஆளுநர், பிரித்தானிய முடியினால் நியமிக்கப்பட்ட, முடியின் பிரதிநிதியே. இந்தியா சுதந்திரம் கிடைத்த 1947 ஓகஸ்ட் 15 முதல் குடியரசாகும் வரை இந்த நிலையில்தான் இருந்தது. ஆனால், இரண்டரை வருடங்களுக்குள் குடியரசு அரசியலமைப்பை ஸ்தாபித்து அவர்கள் குடியரசாகிவிட்டார்கள். இலங்கையின் நிலை அதுவல்ல. பிரித்தானிய பாராளுமன்றம் ஆக்கித்தந்த சோல்பரி அரசியலமைப்பு இலங்கையில் 1972 வரை நடைமுறையிலிருந்தது. அதுவரை நாம் டொமினியனாகவே இருந்தோம். சிறிமாவோவும், அவரது இடதுசாரித் தோழர்களும் ஆட்சிக்கு வந்து 1972ம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்பு உருவாக்கப்படும் வரை, இலங்கை தொழில்நுட்ப ரீதியாக பிரித்தானிய முடியின் கீழ்தான் இருந்தது. ஆகவே இலங்கையின் சுதந்திரதினம் என்ற அடையாளம், இலங்கையர்க்கு எவ்வளவுதூரம் அர்த்தபூர்வமானது என்பது மிக முக்கிய கேள்வியாகிறது. இலங்கையை முழுமையாகக் கைப்பற்ற போர்த்துக்கேயராலும், ஒல்லாந்தராலும் முடியவில்லை. பிரித்தானியர்தான், கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றி, முழுத்தீவையும் தம் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். ஆனால் கண்டி மன்னனுக்கெதிராக இயங்கிய சில “தேசிய வீரர்கள்”, கண்டிய மன்னனை வீழ்த்த, பிரித்தானியரோடு ஒப்பத்தம் போட்டு, கண்டியை பிரித்தானியரிடம் கையளித்ததுதான் வரலாறு. இலங்கையின் “சுதந்திரப் போராட்டத்தை” ஆழமாக அலசினால் அது உரிமைகளைவிட, சலுகைகளுக்கான கோரிக்கையாகத்தான் பெருமளவிற்கு இருந்தது. இந்தியாவைப் போல ஒரு பலமான சுதந்திரப் போராட்டம் இலங்கையில் இருக்கவில்லை என்பதுதான் உண்மை. அதனால்தான் என்னவோ, இலங்கை 1972வரை டொமினியனாகவே தொடர்ந்தது. ஆனால் 1972ல் இலங்கை குடியரசாக மாறிய மே 22, சிலகாலம் வரையிலும் “குடியரசு தினமாக” இலங்கையின் கொண்டாடப்பட்டது. ஆனால் அது தற்போது மறக்கப்பட்டுவிட்டது. அதற்கு கட்சி அரசியல் காரணமாக இருக்கலாம். இந்திய குடியரசு அரசியலமைப்பு பல்வகைப்பட்ட மக்கள் உள்ள ஒரு நிலப்பரப்பை ஒரு “சிவில் தேசிய” குடியரசாகக் கட்டமைக்க உருவானது. ஆனால் இலங்கையின் முதலாவது குடியரசு யாப்பு அப்படிப்பட்டதா? பெரும்பான்மையினரின் மதத்திற்கு முதலிடமும், பெரும்பான்மையினர் மொழியை ஒரே உத்தியோகபூர்வ மொழியாக அரசியலமைப்பு ரீதியில் பிரகடனம் செய்த அரசியல் யாப்பு அது. ஆகவே இலங்கையிலுள்ள சிறுபான்மையினரை அந்நியராக உணரவைத்த ஒரு அரசியல்யாப்பு பிறந்ததினம் இலங்கையர்களை ஒன்றிணைக்கும் தினமாக அமையாது. அந்த வகையில் மே 22 முக்கியத்துவம் இழந்து, மறக்கப்பட்டமை இலங்கையர்க்கு பெரும் இழப்பல்ல. அந்த அரசியலமைப்பும், சிறிமாவோவின் ஆட்சியின் கீழ் பொருளாதார ரீதியில் இந்நாட்டு மக்கள் அனைவரும், அனைத்து வழிகளிலும் இந்நாட்டின் சிறுபான்மையினரும், குறிப்பாக தமிழர்களும் அனுபவித்த துன்பங்களை பட்டியலிட இப்படி ஆயிரம் பத்திகள் எழுத வேண்டியிருக்கும். அப்படியானால், சுதந்திரதினமாவது இலங்கையர்களை ஒன்றிணைக்கிறதா என்ற கேள்வி இங்கு எழுகிறது. இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு பலகாலம் முன்பு, இலங்கையில் “சிலோனீஸ்” எனும் சிவில் தேசக் கட்டமைப்பிற்கான எண்ணங்கள், ஐரோப்பாவில் கல்வி கற்றுத் திரும்பிய பல தலைவர்களிடமும் இருந்தது. ஆனால் 1920-களின் பின்னர் அந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறியமை நாம் காணலாம். பெரும்பான்மை இனத்தேசியவாதத்தின் எழுச்சி, இலங்கைக்குள் இலங்கையர் என்ற சிவில் தேசிய அடையாளம் கட்டியெழுப்பப்பட முடியாத நிலையை ஏற்படுத்தியது. மாறாக இலங்கை அரசியல் இனத்தேசிய அடிப்படைகளில் கட்டமைக்கப்பட்டது. அதன் விளைவுதான் இலங்கை உள்ளுக்குள் உடைந்துபோய் நிற்கிறது. சுதந்திரதினத்தில் தமிழிலும் தேசிய கீதம் பாடவிடாது செய்தததை பெரும் வெற்றியாகப் பறைசாற்றும் அரசியல்தான் இந்நாட்டு மக்களை ஒருதாய் மக்கள் என்று பசப்புவார்த்தைகள் பேசுகிறது. சொல் ஒன்று, செயல் வேறு. அதுதான் இந்நாட்டின் போலி அரசியல். சுதந்திரதின மேடையும், இந்த அரசியல் நாடகத்திற்கான இன்னொரு அரங்கமாக அமைகிறதேயன்றி, சுதந்திரத்தின் மெய்யுணர்வு அங்கே இல்லை. பெரும்பான்மைத் தேசிய அரசியல் முழங்கலுக்கான மேடையாக அது மாற்றப்பட்டுவிட்டது. ஆட்சியாளர்களின் படோடாபங்களுக்கான மேடையாக சுதந்திரதின மேடை மாற்றப்பட்டுவிட்டது. அது மக்களுக்கான நாளாக அல்லாமல், நாட்டுக்கான நாளாக அல்லாமல், ஆட்சியாளர்களுக்கும், ஆயுதப்படைகளுக்குமான நாளாகவே மாறிவிட்டது. இதற்கு ஒட்டுமொத்தப் பொறுப்பாளிகள் இந்த நாட்டை ஆண்ட, ஆளுகிற அரசியல்வாதிகள் மட்டும்தான். சுதந்திரம் என்பது ஒரு பேருணர்வு. அதனால்தான் மனிதன் சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ள உயிரைக்கூடப் பணயம்வைக்கத் தயாராக இருக்கிறான். அத்தகைய சுதந்திரம் என்பது கொண்டாடப்பட வேண்டுமானால், அது ஒவ்வொரு மனிதனாலும் முதலில் உணரப்பட வேண்டும். சொந்த நாட்டு மக்களை, சொந்த நாட்டுக்குள்ளேயே அந்நியர்களாக உணரவைத்துவிட்டு, சுதந்திரத்தைக் கொண்டாடு என்றால், அது எப்படி முடியும்? இலங்கை என்ற அற்புதமானதொரு தீவை, ஆட்சியாளர்கள் எனும் அரசியல்வாதிகள் சீரழித்துவிட்டார்கள். அது ஒன்றுதான் இலங்கையர்கள் அனைவரும் ஒன்றிணையும் புள்ளியாக இன்று இருக்கிறது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சுதந்திர-இலங்கை-சில-எண்ணப்பகிரல்கள்/91-290750
  21. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் மாகாண சபைத் தேர்தலும் என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள், இன்னாள் தலைவர்கள் சிலர் கையொப்பமிட்டு, பாரதப் பிரமருக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தமை அனைவரும் அறிந்ததே! இந்த முயற்சி, 13ஆம் திருத்தத்தை தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை அடைந்துகொள்வதற்கான தீர்வாக உருவகப்படுத்தப்படுவதைக் கண்டித்து, தமது எதிர்ப்பை வலுவாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்வைத்து வருகிறது. அண்மையில், கூட்டமொன்றில் உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், “தமிழர்களுடைய தீர்வு விடயத்தில், தமிழர்களுக்கு என்ன தேவை என்பதைத் தமிழர்கள்தான் கூறமுடியும். அதனை எவரும் கூற முடியாது; திணிக்கவும் முடியாது. 13 ஆவது திருத்தத்தைத் தீர்வாக ஒருபோதும் ஏற்க முடியாது. நாம் அதில் தெளிவாகவுள்ளோம். 13ஆம் திருத்தத்தை, தமிழ் மக்களை ஏற்று கொள்ளவைப்பது, தமிழர்களுடைய அபிலாஷைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது, தமிழர் தேசத்தை அழிப்பதற்கான ஒரு நடவடிக்கையாகத்தான் நாம் பார்க்கின்றோம். இதற்கு, நாம் ஒருபோதும் ஒத்துழைக்கப்போவதில்லை. நாங்கள் இதை எதிர்ப்பதை இந்தியா, தமக்கு எதிரானதாகப் பார்க்கிறது என்றால், அது இந்தியாவின் முடிவு. ஆனால், எங்கள் மக்களுடைய நலன்களை, எவருடனும் பேரம்பேசி, நாங்கள் கைவிடத் தயாரில்லை. தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வுக்காக, நேர்மையாகச் செயற்படுகின்ற எந்த நாட்டுடனும், நாங்கள் பயணிக்க மாட்டோம் எனக் கூறவில்லை. மாறாக, அனைவரையும் கேட்டுக்கொள்வது, தமிழர்களுடைய அடிப்படை அபிலாஷைகள் குறிப்பாக, திம்பு கோட்பாடுகளில் கூறப்பட்ட அடிப்படை அபிலாஷைகள் முழுமையாகப் பூர்த்தி செய்யக் கூடிய வகையிலே, அவர்களுடைய ஆதரவை எமக்குத் தரவேண்டும் என்ற அடிப்படையில்தான் நாம் கோரிவருகின்றோம்” என்று கூறியிருந்தார். இது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தொடர்ச்சியானதும், நிலையானதுமாக நிலைப்பாடாக இருந்து வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. இதேயிடத்தில், “அப்படியானால், மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போட்டியிடுமா” என்ற கேள்வி எழுப்பப்பட்ட போது, அதற்குப் பதிலளித்த கஜேந்திரகுமார், “நாம் மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவது 13ஐ கோரும் தரப்புகளுக்குப் பிரச்சினையாக இருக்கும். நாம் மாகாண சபையைக் கைப்பற்றி, அந்த வெற்றுக்கோசத்தை அம்பலப்படுத்தி விடுவோம் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். அதனால், கட்டாயம் நாம் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். நாம், 13ஆம் திருத்தத்தை நிராகரிக்கிறோம். எமக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. கடந்த தேர்தலை எமது கட்சி பகிஸ்கரித்தது. ஆனால், மக்களைப் பகிஷ்கரிக்கக் கோரவில்லை. மாகாண சபை முறைமையின் அதிகாரமற்ற தன்மையை அம்பலப்படுத்தாமல், அதை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு கூட்டமைப்பு சென்றுள்ளதால், மாகாண சபை முறையை அம்பலப்படுத்தும் பொறுப்பை, நாமே ஏற்க வேண்டும்” என்றும் தெரிவித்திருந்தார். கஜேந்திரகுமாரின் மாகாண சபைத் தேர்தல் பற்றி இந்த மனமாற்றம், 13ஆவது திருத்தத்தை எதிர்க்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதா என்ற கேள்விகளுக்கும் கேலிகளுக்கும் விமர்சனங்களுக்கும் வழிவகுத்துள்ளது. இந்த விமர்சனங்களை முன்வைக்கும் தரப்புகளை எடுத்துக்கொண்டால், பிரதான தரப்பு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அல்லது, தமிழரசுக் கட்சி ஆதரவாளர்கள். அரசியல் போட்டி இதற்கான பிரதான காரணமாகும். 2020 பொதுத் தேர்தலில், யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 112,967 வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 55,303 வாக்குளைப் பெற்றிருந்தது. 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 207,577 வாக்குகளைப் பெற்றிருந்தமையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெறுமனே 15,022 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆகவே, 2020 பொதுத்தேர்தல் முடிவுகளானது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது, இனியும் உதிரிக்கட்சியாகக் கருதிவிட முடியாத நிலைக்கு வந்துவிட்டது என்பதை அனைவருக்கும் உணர்த்தியிருந்தது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பெற்றுக்கொண்ட அனைத்தும், தமிழ்த் தேசியத்துக்கான வாக்குகள். ஆகவே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டால், அது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வாக்குவங்கியில்தான் கணிசமான பாதிப்பை உண்டாக்கும். மறுபுறத்தில், கண்முடித்தனமான கொள்கைப்பிடிப்புள்ளோரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உணர்வுபூர்வ ஆதரவாளர்கள் சிலரும், 13ஐ எதிர்த்துக்கொண்டு, 13இனால் வந்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது எவ்வாறு ஏற்புடையது என்று கேட்கிறார்கள். இவர்களின் எண்ணமானது, ஒரு கட்டமைப்பை எதிர்க்க வேண்டுமென்றால், அந்தக் கட்டமைப்புக்கு வௌியில் நின்றுகொண்டு மட்டும்தான் அதனை எதிர்க்க வேண்டும்; அதுதான் முறையானது என்ற மனநிலையிலிருந்து பிறந்தது. இன்று, இப்படி யோசிப்பவர்களைச் சொல்லியும் பிழையில்லை. ஏனென்றால் இதுவரை காலமும், கஜேந்திரகுமாரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும், இதே நிலைப்பாட்டில்தான் இருந்தார்கள். அதனால்தான் அவர்கள் முதலாவது வடமாகாண சபைத் தேர்தலிலும் போட்டியிடவில்லை. ஓர் ஆதரவாளர் குழுவை, ஒரு வகையான கொள்கை மனநிலையில் வளர்த்தெடுத்துவிட்டு, திடீரென்று அந்த மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. அதனால்தான் என்னவோ, மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் முடிவைத் தெரிவித்த கஜேந்திரகுமார் கூட, “ மாகாண சபை முறைமையின் அதிகாரமற்ற தன்மையை அம்பலப்படுத்தவே நாம் போட்டியிடுகிறோம்” என்று கூறவேண்டியதாக இருக்கிறது. அரசியலில் இலட்சியவாத (idealism) அடிப்படையில், தமிழ்த் தேசிய அரசியலை அணுகும் போது, தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்பதே தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள். இவற்றை எவ்வகையிலேனும் சமரசத்துக்கு உட்படுத்தும் எந்தவொரு நடவடிக்கைக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரவுதர முடியாது என்ற இலட்சியவாத நிலைப்பாட்டில் நிற்கலாம். இலட்சியவாதம் என்பது, சிந்தனைக்கும் பேச்சுக்கும் எழுத்துக்கும் பகிர்வுக்கும் சிறந்ததோர் அணுகுமுறை. ஏனெனில், சிந்தனையில், பேச்சில், எழுத்தில், பகிர்வில் அது புலன்களைத் திருப்திப்படுத்தும் ஒரு சிந்தனை உருவாக்கத்தை, கற்பனையில் சிருஷ்டித்து, பேச்சில், எழுத்தில் கட்டமைத்துப் பகிர்கிறது. ஆனால் அந்த இலட்சிய சிருஷ்டிக்கும், யதார்த்தத்துக்கம் இடைவௌியிருக்கிறது. அந்த இடைவௌியில் என்ன செய்வது என்பதுதான் முக்கியமான கேள்வி. ஜேர்மனிய பேரரசின் சான்செலராக இருந்த ஒட்டோ வொன் பிஸ்மாக், “அரசியல் என்பது சாத்தியமானவற்றின், அடையக்கூடியவற்றின் கலை. அடுத்த சிறந்ததைப் பெற்றுக்கொள்ளும் கலை” என்பார். யதார்த்தவாத அரசியல் (realpolitik) சிந்தனை இது. யதார்த்தவாத அரசியலை, இலட்சியவாத அரசியலின் எதிரியாக உருவகப்படுத்தும் போக்கு தவறானது. இலட்சியவாத அரசியல் என்பது, எதிர்கால அடைவுகளைப் பற்றியது. யதார்த்தவாத அரசியல் என்பது, தற்கால பயணத்தைப் பற்றியது. கொள்கைற்ற யதார்த்தவாதம் என்பது, சந்தர்ப்பவாதமாகும். சந்தர்ப்பவாத அரசியல் என்பதுதான், இலட்சியவாத அரசியலின் எதிரி. யதார்த்தவாதம் என்பது, கொள்கையற்ற நிலை அல்ல. அது கொண்ட கொள்கையையும் இலட்சியத்தையும் மட்டுமல்லாது, களநிலையையும் யதார்த்தத்தையும் புரிந்துகொண்டு செயற்படுதலைக் குறிக்கும். “ஆறாம் திருத்தத்தின் கீழ், சத்தியப் பிரமாணம் செய்யமாட்டோம்” என்று தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியிழந்த பின்னர், தமிழர் பிரதிநிதித்துவம் நின்றுவிட்டதா? இல்லை. கொள்கை அடிப்படையில் அன்று எடுத்த நடவடிக்கை சரி. அதுபோலவே, கொள்கையை மட்டுமல்லாது, யதார்த்தத்தையும் புரிந்துகொண்டு, ஆறாவது திருத்தத்தின் கீழ் சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொண்டமைதான் யதார்த்த அரசியல். அது, தமிழ்த் தேசியம் கண்மூடித்தனமான ‘தனிநாடு’ என்ற பிரசாரத்திலிருந்து விலகி, தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை அடைந்துகொள்ள ‘தனிநாடு’ தான் ஒரே வழி அல்ல என்பதையும் புரிந்துகொண்டு, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை சமரசம் செய்யாத, அதேவேளை, ஓர் அரசுக் கட்டமைப்புக்குள்ளான தீர்வை நோக்கி, தமிழ்த் தேசிய இலட்சியவாத அரசியலை வழிப்படுத்தியது. இலட்சியவாத அரசியலும் யதார்த்தவாத அரசியலும் எதிரிகள் அல்ல. இலட்சியவாதத்தின் அடைவுகளைப் பெற்றுக்கொள்ள, நல்லதொரு பாலமாக யதார்த்தவாத அரசியல் உதவும். அது, அதைக் கட்டமைப்பவர்களின் கைகளில் தங்கியிருக்கிறது. மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடாது விடுவது, ஒரு கட்சியாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு பெரும் பின்னடைவைத் தரும். மேலும், தமிழ் மக்களுக்குத் தமது அரசியலில், சரியான மாற்றுத்தெரிவுகள் அவசியம். அரசியலில் ஏகம், ஏகத்துவம் என்பன ஆரோக்கியமானதல்ல. போட்டி நல்லது என்பதைத்தான் பாமரத் தமிழன்,‘கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்’ என்று எளிமையாக எடுத்துச் சொல்லிவிட்டான். தாம், மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு கஜேந்திரகுமார் எந்தக் காரணத்தையும் சொல்லட்டும்; ஆனால், அந்த முடிவு வரவேற்கத்தக்கது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்த்-தேசிய-மக்கள்-முன்னணியும்-மாகாண-சபைத்-தேர்தலும்/91-290246
  22. தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமைக்கான அறைகூவலும் சாத்தியமின்மையும் என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan இலங்கை தமிழர் அரசியலை, குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழர் அரசியலைப் பொறுத்தவரையில், அதைப் பற்றிப் பேசும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட அனைவரும், தமிழர் அரசியலில் ‘ஒற்றுமை’ வேண்டும் என்று கூறுவது, உலக சமாதானம் வேண்டும் என்று உலகத் தலைவர்கள் சொல்வது போன்ற சம்பிரதாயபூர்வமான சொற்றொடராகவே மாறிப்போயுள்ளது. தமிழர் அரசியலைப் பற்றி கருத்துரைப்பவர்கள், தமிழர் அரசியலில் ஒற்றுமை இல்லை என்றும், தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்றும் சொல்வதை, பெரும்பாலும் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. அந்தப் பொது மனநிலைக்குத் தீனி போடுமாற்போல, அரசியல்வாதிகளும் அவ்வப்போது ஒற்றுமைக்கான அறைகூவலையும் சிலவேளைகளில் ஒற்றுமையின்மை பற்றிய ஒப்பாரியையும் அரங்கேற்றுவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால், இதைப்பற்றி யாரும் கொஞ்சமேனும் அலசியாராய்ந்து பார்த்ததாகத் தெரியவில்லை. தமிழ்க் கட்சிகளிடையே ஒற்றுமை என்று இங்கு பொதுவாக விளிக்கப்படுவது, கொள்கையளவில் வேறுபட்டிருக்கும் தமிழ்க் கட்சிகளிடையேயான ஒற்றுமையை அல்ல. மாறாக கொள்கையளவில் ஒற்றுமைகளைக் கொண்ட கட்சிகளிடையேயான ஒற்றுமையைத்தான். அது என்ன கொள்கையளவிலான ஒற்றுமை என்று சிலர் வினவலாம். தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரையில், தமிழ்த் தேசத்தின் அபிலாஷைகளாக தீர்க்கமாக இனங்காணப்பட்டுள்ள தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்பவையே தமிழ்த் தேசிய அரசியல் கொள்கைகளாக ஏற்கப்பட்டுள்ளன. ‘தமிழ்த் தேசிய கட்சி’களாகத் தம்மை முன்னிறுத்துபவை, இதையே தமது அடிப்படைக் கொள்கையாக முன்னிறுத்துகின்றன. இந்த அபிலாஷைகளை அடைந்துகொள்வதற்கான வழிவகைகள், ஆரம்பப்புள்ளி, அணுகுமுறை பற்றி அவற்றிடையே சில கருத்து வேறுபாடுகளை அடையாளம் காண முடியுமாயினும், அவற்றின் நோக்கங்களில் பெரும் வேறுபாடுகள் இல்லை. மறுபுறத்தில், தமிழ் அரசியல் பரப்பில், தேசிய கட்சிகளும் தேசிய கட்சிகளோடு கூட்டணியிலுள்ள கட்சிகளும் உண்டு. இந்தக் கட்சிகளைச் சார்ந்த தமிழ் அரசியல்வாதிகள், தமிழ்த் தேசியத்தின் சில பகட்டாரவாரக் கருத்துகளை முன்வைத்தாலும், தமிழ்த் தேசியம் பற்றி, சமஷ்டி பற்றியெல்லாம் பேசுவதில்லை. அது தேசிய கட்சிகளின் கொள்கையோடு சில இடங்களில் முரண்படும் என்பது அதற்குக் காரணமாக இருக்கலாம். ஆகவே இவர்கள் அதிகமாக அபிவிருத்தி பற்றிப் பேசுவதையும், ஆதரவுத்தள அரசியலை முன்னெடுப்பதையும் நாம் காணலாம். தேசிய கட்சிகளோடு, தமிழ்த் தேசிய அரசியல் கொள்கை ரீதியில் ஒன்றுபட முடியாத நிலை இருப்பதால், தமிழ் அரசியலில் ஒற்றுமை பற்றிப் பேசுபவர்கள், இந்தத் தேசிய கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளோடு கூட்டணியில் உள்ள கட்சிகளை அந்த ‘ஒற்றுமை’ எனும் பெயருக்குள் உள்ளடக்குவதில்லை. அப்படியானால், இங்கு தமிழ் அரசியலில் ஒற்றுமை என்பது, தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கும் கட்சிகளிடையேயான ஒற்றுமை என்ற பொருளிலேயே பயன்படுத்துவதை புரிந்துகொள்ளலாம். அப்படியானால், தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கும் கட்சிகளிடையே ஒற்றுமை ஏற்படுத்துவதில் என்ன சவால்கள் இருக்கின்றன என்ற கேள்வி எழுகிறது. அந்தக் கேள்விக்கு விடை காணும் முன்பு, தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கும் கட்சிகளிடையே, ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான தேவை என்ன என்பது பற்றியும் சிந்தித்தல் அவசியமாகிறது. தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கும் கட்சிகளிடையே ஒற்றுமை ஏற்படுத்துவதற்கா, தேர்தல் அரசியல் தவிர்த்த பிரதான காரணமாகக் குறிப்பிடப்படுவது, ‘ஒரே குரலாக ஒலிக்கும் போது, அந்தக் குரல் பலமான குரலாக இருக்கும்’ என்பதும், தேர்தல் அரசியல் காரணமாகச் சொல்லப்படுவது, ‘வாக்குச் சிதறலைத் தவிர்ப்பதன் மூலம், அதிக பிரதிநிதிகளை தமிழ்த் தேசிய கட்சிகளால் வென்றெடுக்க முடியும்’ என்பதுமாகும். ஒரு குரலாகத் தமிழ்த் தேசிய கட்சிகள், தமிழ் மக்கள் பிரச்சினைகளுக்காகக் குரல்கொடுக்கும் போது, அந்தக் குரல் பலமானதாகத்தான் இருக்கும். ஒரு குரலைவிட, பல குரல்கள் எப்போதும் பலமானவையே. ஆனால், மக்கள் பிரச்சினைக்காக குரல்கொடுக்க எல்லாக் கட்சிகளும் ஒன்றிணைந்து, ஒரு கட்சியாக இருந்தால்தான் அது சாத்தியம் என்று சொல்வதில் எந்த உண்மையுமில்லை. வேறுவேறு கட்சிகளாக இருந்தால் கூட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக, அவை ஒன்றாகக் குரல் கொடுக்க முடியும். ஒரே கட்சியாகவோ கூட்டணியாகவோ இணைந்துவிட்டால் மட்டும் தான், எல்லோரும் ஒன்றிணைந்து குரல் கொடுப்பார்கள் என்று சொல்வதில் உண்மையிருக்க முடியாது. ஆகவே, இந்த ஒற்றுமைக்கான தேவைக்கான உண்மையான காரணமாக இருப்பது, தேர்தல் அரசியல் காரணிகள்தான். வாக்குச் சிதறலால், தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் பிளவுபட்டுவிடக்கூடாது என்பதை முன்வைத்துத்தான், தேர்தல் அரசியல் காரணத்துக்காகவேதான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூட உருவானது. இது உருவான போது, அதில் அங்கம் வகித்த எல்லாக் கட்சிகளுக்கும் அந்த ஒற்றுமை தேர்தலில் நல்ல பலனைத் தந்தது. இது கூட்டமைப்பில் போட்டியிட்டால், வெற்றிபெற்றுவிடலாம் என்ற தேர்தல் ஆதாயம்தான் ‘கூட்டமைப்பு’ என்ற எண்ணக்கருவுக்கு வலுச்சேர்ப்பதாக இருந்தது. ‘தமிழ்த் தேசியம்’, ‘ஒற்றுமை’, ‘ஏக பிரதிநிதிகள்’ என்ற குறியீடுகளின் மதிப்பு, தேர்தல் அரசியலில் முக்கியத்துவம் பெற்றது. ஆகவே, கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கான ஆசனத்தைப் பெற்றுக்கொள்வதற்கு, தேர்தல் அரசியலில் கேள்வி அதிகமாக இருந்தது. அது, கட்சிகளிடையே ஆசனப்பங்கீட்டுப் பிரச்சினைகளை உருவாக்கியது. கூட்டமைப்புக்குள் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்ட கட்சி, தனது மேலாதிக்கத்தை செலுத்தத்தொடங்கிய போது, அங்கு பிளவுகள் ஏற்பட்டன. கூட்டமைப்புக்குள் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்ட கட்சியோடு இன்றும் ஒட்டிக்கொண்டிருக்கும் கட்சிகள், தேர்தல் ஆதாயத்துக்காக மட்டும்தான் அங்கு ஒட்டிக்கொண்டு நின்கின்றன என்றால் அது மிகையல்ல. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்துக்கும் எழுச்சிக்கும் பின்பு, கடந்த பொதுத் தேர்தல்தான் அதற்கு மிகச் சவாலான தேர்தல் எனலாம். கூட்டமைப்பைத் தாண்டிய தமிழ் வேட்பாளர்கள், கணிசமான வெற்றியைப் பெற்றிருந்தார்கள். இதனால், கூட்டமைப்பில் தேர்தல் கேட்டால் வெற்றிதான், என்று மக்கள் பணிசெய்யாது, கூட்டமைப்பு ஆசனத்தில் அமர்ந்து தேர்தல் ருசி கண்டவர்கள் பலர்; கூட்டமைப்பு பெற்றுக்கொண்ட ஆசனங்கள் குறைவடைந்ததனால் தேர்தலில் தோல்வி கண்டிருந்தனர். மேலும், ஒரே கூட்டமைப்பாக இயங்கும் போது, தமக்கள் சிலர் விடும் பிழைகளைக் கூட விமர்சிக்க முடியாது. இது தமிழ்த் தேசிய அரசியலுக்குள் அரசியல் ஜனநாயகத்தை மட்டுமல்ல, பொறுப்புக்கூறலையும் இல்லாதொழிப்பதாகவே அமையும். இந்தப் பின்புலத்தை வைத்துப் பார்க்கும் போது, இங்கு அரசியல்வாதிகளிடமிருந்து வரும் ஒற்றுமைக்கான கோஷம் என்பது, தேர்தல் அரசியல் சார்ந்ததாகவே இருக்கிறதேயன்றி, அது கொள்கைக்கானதாகவோ, மக்களுக்கானதாகவோ இல்லை. மேலும், இத்தகைய தேர்தல் ஒற்றுமை என்பது, அந்தக் கூட்டமைப்புக்குள் ஆதிக்கம் செலுத்தும் கட்சிக்கு சாதகமானதாகவே இருக்கும். தமிழ் மக்கள் விரும்பும் ஒற்றுமை, இத்தகைய தேர்தல் அரசியல் சார்ந்த ஒற்றுமையை அல்ல. இங்குதான் மக்கள் கேட்கும் ‘ஒற்றுமை’க்கும், அரசியல்வாதிகள் கேட்கும் ஒற்றுமைக்கும் வேறுபாடுண்டு. இங்கு மக்கள் விரும்பும் ‘ஒற்றுமை’ என்பது, மக்கள் பிரச்சினைகளில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்பதையே! அந்த விடயத்தில், தேர்தல் அரசியல், சுயநலக் காரணிகள் என்பவை தலையிட்டுவிடக்கூடாது என்பதே, தமிழ் மக்களின் அவா! ஆனால், தமிழ்த் தேசிய அரசியலில் மக்கள் மையப் பணியொன்று, ஒரு தரப்பால் அல்லது கட்சியால் முன்னெடுக்கப்படும் போது, எங்கே அது வெற்றிபெற்றுவிட்டால், அது அந்தத்தரப்பினது அல்லது கட்சியினது வெற்றியாகிவிடும் என்று மக்கள் எண்ணிவிடுவார்களோ என்று, ஏனைய தரப்புகள் மற்றும் கட்சிகள் அதற்கு ஆதரவு தர மறுக்கின்றன. இந்த நிலை மாற வேண்டும். இதற்காகத்தான் தமிழ் மக்களின் நலனில் அக்கறையுள்ள கட்சிகள் அனைத்தும், ஓர் அரங்கத்தில், அல்லது வட்டமேசையில் இணையவேண்டும். அது தேர்தலைக் கடந்த தமிழ்த் தேசத்துக்காகக் குரல்கொடுக்கின்ற அரங்கமாக மாற வேண்டும். அதுதான் நீடித்து நிலைக்கத்தக்க ஒற்றுமையாக இருக்கும். தேர்தலை மையப்படுத்திய ஒற்றுமை என்பது, அடிபாடுகளிலும் முரண்பாடுகளிலும்தான் முடியும். ஏனென்றால், தேர்தலுக்கான ஒற்றுமை என்பது மக்களை மையப்படுத்தியதல்ல; அது தனிநபர்களின் தேர்தல் ஆதாயங்களை மையப்படுத்தியது. இந்த இடத்தில்தான், தமிழ்த் தேசத்தின் அரசியலும் ஒற்றுமைக்கான அறைகூவலும் தோற்றுக்கொண்டிருக்கின்றன. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்க்-கட்சிகளின்-ஒற்றுமைக்கான-அறைகூவலும்-சாத்தியமின்மையும்/91-289810
  23. வாரிசு அரசியலும் குடும்ப ஆட்சியும் ஜனநாயகமும் என்.கே.அஷோக்பரன் Twitter: @nkashokbharan வாரிசு அரசியல் என்பதை, ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் வாழையடி வாழையாக அரசியல் கட்சிகளின் தலைமை உட்பட்ட உயர்பதவிகளையும் அதன்வாயிலாக நாட்டின் ஆட்சியில் உயர்பதவிகளையும், தம்மகத்தே கொண்டுள்ளமை என்று வரையறுக்கலாம். சுருங்கக்கூறின், தகப்பன், தகப்பனுக்குப் பின்னர் மகன்; மகனுக்குப் பின்னர் பேரன் என, வாரிசுகள் அந்தப் பதவிகளைப் பெற்றுக்கொள்ளுதல் ஆகும். இதில் நேரடி வாரிசு அல்லாது, நெருங்கிய உறவுகள் அந்தப் பதவிகளை அடுத்ததாகப் பெற்றுக்கொள்வதையும் வாரிசு அரசியல் எனலாம். குடும்ப அரசியல் அல்லது குடும்ப ஆட்சி என்று தமிழில் நாம் சுட்டுவதை, ஆங்கிலத்தில் நெபொடிஸம் (Nepotism) என்பார்கள். இது nepotismo என்ற இத்தாலிய வார்த்தையிலிருந்து வந்தது. இந்த வார்த்தையின் வேர் nepos என்ற இலத்தீன் வார்த்தை. இலத்தீனில் nepos என்றால் nephew மருமகன் என்று அர்த்தம். 17ஆம் நூற்றாண்டுக்கு முன்னர், பாப்பரசர்கள் தமது அதிகாரத்தை தமக்கடுத்து, தமது மருமகன்களுக்கு வழங்கிய வழக்கத்தைக் குறித்து, இந்தச் சொல் உருவாகியிருக்கலாம் என்கிறார்கள் சில ஆய்வாளர்கள். ஆனால் சமகாலத்தில், இந்தச் சொல்லின் அர்த்தம் இன்னும் விரிவடைந்துள்ளது. ‘குடும்ப ஆட்சி’ என்பதை, குடும்ப உறுப்பினர்களுக்கு அவர்களது உறவினர்கள், ஆதரவாகக் காட்டும் ஒரு வகையான பாரபட்சம் எனலாம். குறித்த குடும்ப உறுப்பினரின் தகுதி, யோக்கியதை ஆகியவற்றை ஆராயாமல், தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, அந்தக் குடும்ப உறுப்பினருக்கு அல்லது உறவினருக்கு பதவியை வழங்குவது குடும்ப ஆட்சி எனப்படுகிறது. வாரிசு அரசியலும் குடும்ப ஆட்சியும் ஒன்றோடொன்று நெருங்கியவையாயினும், அவற்றிற்கிடையே சில வேறுபாடுகள் உண்டு. வாரிசு அரசியல் என்பது, கட்டாயம் குடும்ப ஆட்சியால்தான் ஏற்பட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. சில சந்தர்ப்பங்கள், தகப்பன் பெரும் அரசியல் தலைமையாக இருந்தபோதும், தகப்பன் உயிரோடிருந்தவரை வாரிசுகள் அரசியற்பக்கம் கால்பதித்துக்கொள்ளாத நிலையில், இருந்த உதாரணங்கள் சில உள்ளன. ஆகவே, அந்த இடத்தில், அந்தளவில் குடும்ப ஆட்சி அங்கு இருக்கவில்லை எனலாம். ஆனால், தகப்பனின் மறைவுக்குப் பிறகு, அந்த வெற்றிடத்தை நிரப்ப வாரிசுகள் அழைத்துவரப்படும் போது, அங்கு குடும்ப ஆட்சி இல்லையென்றாலும், வாரிசு அரசியல் ஏற்படுகிறது. இதுபோன்ற அரிய சந்தர்ப்பங்களைத்தாண்டி, பெருமளவுக்கு வாரிசு அரசியலும் குடும்ப ஆட்சியும் ஒன்றோடொன்று பிணைந்திருப்பதையே காணக்கூடியதாக இருக்கிறது. வாரிசு அரசியல் மற்றும் குடும்ப ஆட்சியின் பரவலானது, தனிப்பட்ட குடும்பங்கள் கொண்டிருக்கும் பெரும் சக்தியைப் பிரதிபலிக்கிறது. அதுவும் அதிக வருமான சமத்துவமின்மை, அரசு அடக்குமுறை உள்ள நாடுகளில், இந்தக் குடும்பங்கள் செல்வத்திலும் செல்வாக்கிலும் ஒப்பிட முடியாத உயரத்தில் இருக்கின்றன. கல்வியாளர்கள், கண்காணிப்புக் குழுக்கள் என்போர், வாரிசு அரசியலும் குடும்ப ஆட்சியும் அரசியல் மற்றும் ஆட்சியை மோசமாக்கலாம் என்று கூறுகின்றனர். தகுதியற்ற வேட்பாளர்கள் அதிகாரத்தை வெல்வதற்காக, சக்திவாய்ந்த உறவினர்களின் ஆதரவைப் பயன்படுத்தி, திறமையான அடிமட்டத் தலைவர்களை முறையற்ற வகையில் வௌியேற்றி, அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்கிறார்கள். இது ஒரு நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. ஆனால், உலக நாடுகளை எடுத்துப் பார்த்தால், வாரிசு அரசியலும் குடும்ப ஆட்சியும் புதுமையானவையல்ல என்பதும் புலப்படும். அமெரிக்காவில் குடும்ப ஆட்சிக்கு எதிரான சட்டமுண்டு. கூட்டாட்சி சட்டமொன்று அமெரிக்க காங்கிரஸின் உறுப்பினர் உட்பட ஒரு கூட்டாட்சி அதிகாரி, அதிகாரியின் அதிகாரம் அல்லது கட்டுப்பாட்டை செயற்படுத்தும் எந்தவொரு நிறுவனத்துக்கும் அல்லது துறைக்கும் அதிகாரியின் ‘உறவினர்’ நியமனம் அல்லது பதவி உயர்வுக்கு பரிந்துரைப்பது, பதவி உயர்வு வழங்குவது அல்லது பரிந்துரை செய்வதிலிருந்து தடை செய்கிறது. ஆனால், அது வாரிசு அரசியலைத் தடை செய்வதில்லை. அங்கு வாரிசு அரசியல் என்பதை, நாம் கண்கூடாகக் காணலாம். கென்னடி குடும்பம், புஷ் குடும்பம் என்பன காலங்காலமாக பலமான அரசியல் சக்திகளாக இருந்துள்ளன. அண்மையில் ட்ரம்ப் குடும்பம் அமெரிக்க அரசியலில் உத்தியோகபூர்வமற்ற வகையில் ஆதிக்கம் செலுத்தியது. கனடாவில் கூட, ட்ரூடோ குடும்பம் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தி வருகிறது. தென்கிழக்காசியாவின் வாரிசு அரசியல் பற்றி தனிப்புத்தகமே எழுதலாம். தெற்காசியாவுக்கும் வாரிசு அரசியலுக்கும் மிக நெருங்கிய பந்தம் இருக்கிறது. இந்தியாவின் நேரு குடும்பம், கருணாநிதி குடும்பம், பாகிஸ்தானின் பூட்டோ குடும்பம், பங்களாதேஷின் முஜிபுர் ரஹ்மான் குடும்பம், நேபாளின் கொய்ராலா குடும்பம், இலங்கையின் பொன்னம்பலம்-குமாரசுவாமி குடும்பம், சேனநாயக்க குடும்பம், விஜேவர்தன-விக்கிரமசிங்க குடும்பம், பண்டாரநாயக்க குடும்பம், ராஜபக்‌ஷ குடும்பம் என்பன சில உதாரணங்கள் மட்டுமே! குடும்பம் என்ற கட்டமைப்பு பலமாகவுள்ள தெற்காசியாவில், எவராவது ஒருவர், மிகச் சிறந்த தலைவராக உருவாகிவிட்டால், அவரது அந்தப் பேரொளி அவரது குடும்பத்தினர் மீது தேய்க்கப்பட்டுள்ளதால், அவரது தன்மைகளை அவரது குடும்பத்தினருக்கும் இருக்கும் என்று மக்களை நம்பவைப்பது எளிது என்று நிஹால் சிங் என்ற அரசியல் கருத்துரைஞர் பதிவு செய்கிறார். இந்தக் கருத்தில் நியாயம் இருப்பதாகவே தெரிகிறது. இந்தக் குடும்பங்களிலிருந்து அரசியலுக்கு வந்த வாரிசுகளுக்கும், இந்தக் குடும்பங்களில் அல்லாது அரசியலுக்கு வந்தவர்களுக்கும் திறமை, தகுதி, யோக்கியதை என்ற அடிப்படையில் வித்தியாசத்தைப் பார்த்தால், நிச்சயம் இந்தக் குடும்பங்களிலிருந்து வந்தவர்கள் எந்தவகையிலும் அதீத திறமையானவர்கள் என்று சொல்வதற்கில்லை. ஆனால், அவர்களிடம் அரசியல் அனுபவம் பலமாக இருந்தது. அரசியல் மொழியை நன்கறிந்திருந்தார்கள். மேலும், அவர்களுக்கு அத்திவாரத்திலிருந்து தமது அரசியல் மாளிகையைக் கட்ட வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஏலவே கட்டப்பட்டிருந்த அரசியல் மாடமாளிகையிலிருந்து, இலகுவாக அரசியலில் பிரவேசிக்கக் கூடிய வாய்ப்பு அவர்களுக்கு இருந்தது. இங்கு மாளிகை என்பது அரசியல் கட்சி, இயக்கம், மக்களாதாரவு, அறிமுகம், பலவலான அரசியற் கட்டமைப்பு என எல்வாற்றையும் குறிக்கும். எல்லாவற்றையும் விட, அரசியலின் அஸ்திவாரமாக மாறியுள்ள பணமும், பணவசதியும், அவர்களிடம் தாராளமாக இருந்தது. இதனோடு, நிஹால் சிங் சொன்னது போல, அவர்களது முன்னோர்களின் இயலுமை, தம்மில் உள்ளதாக மக்களை நம்பவைப்பது இலகுவாக இருந்ததால், அவர்களால் மற்றைவர்களைவிட அரசியலில் சாதிப்பது இலகுவாயிற்று. வாரிசு அரசியலைச் சிலாகிப்பவர்கள் இருக்கிறார்கள். அது மன்னராட்சிக் கால மனநிலையின் தொடர்ச்சியாகக் கூட இருக்கலாம். ஆனால், வாரிசு அரசியல் என்பது ஜனநாயகத்தில் ஒரு கறையாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. அரசியல்வாதியின் வாரிசு என்பதால், ஒருவரின் அரசியலில் ஈடுபடும் உரிமை மட்டுப்படுத்தப்பட முடியாது. ஆனால், வாரிசு அரசியல் என்பது, அவர் குறித்த நபரின் வாரிசு என்பதால், அவருக்கு பதவி வழங்கப்படும் நிலையாகும். அதுதான் இங்கு விமர்சிக்கப்படுகிறது. பிரபல்யமான கட்சிகள் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளபோது, கட்சியின் வேட்பாளர்களை அவர்களே தீர்மானிக்கும் போது, மக்களிடம் அவர்களது தெரிவுகளே திணிக்கப்படுகின்றன. ஆகவேதான் வாரிசுகளும், நாங்கள் வாரிசுகள் என்பதால் அரசியல் பதவி பெறவில்லை, மக்கள் வாக்களித்துதத்தான் அரசியல் பதவிகளைப் பெற்றுக்கொண்டுள்ளோம் என நியாயம் சொல்கிறார்கள். ஆனால், ஆடுகளத்தையும் பகடைகளையும் தாயத்தையும் எல்லாம் நீங்களே தீர்மானித்துவிட்டு, தாயத்தை உருட்டிய மக்கள்தான் அதன் விளைவுகளைத் தீர்மானித்தார்கள் என்று சொல்வது எவ்வளவு தூரம் நியாயமானது என்ற கேள்விதான் இங்கு தொக்கு நிற்கிறது. சச்சின் டென்டுல்கர் நல்ல துடுப்பாட்ட வீரர்; ஆகவே அவரது சகோதரர்களும் அவரைப் போன்ற மிகத் திறமையான வீரர்களாக இருப்பார்கள் என்று எண்ணுவது அறிவீனமானது. மறுபுறத்தில், ஓர் அரசியல்வாதி, தன்னுடைய சொத்துகளை தனது வாரிசுகளுக்கு வழங்கிவிட்டுப்போகலாம். ஆனால், நாட்டையும் அதன் ஆட்சியையும் அப்படித் தனது வாரிசுகளுக்கு வழங்குவதற்கு நாடும் ஆட்சியும் அவர்களது பரம்பரைச் சொத்தா என்ன? ஜனநாயகத்தைக் காப்பது மக்களின் கையில்தான் இருக்கிறது. அதை ஒரு குடும்பத்திடம், அல்லது ஒரு சில குடும்பங்களிடம் தாரைவார்த்துவிட்டு, தினந்தினம் புலம்புவதில் பயனில்லை. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வாரிசு-அரசியலும்-குடும்ப-ஆட்சியும்-ஜனநாயகமும்/91-289465
  24. தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றிணைவு என்.கே.அஷோக்பரன் Twitter: @nkashokbharan அண்மையில் ‘தமிழ் பேசும் கட்சிகளின் மாநாடு’ இடம்பெற்றதாகவும் அதைத் தொடர்ந்து, ‘தமிழ் பேசும் கட்சிகளின் ஆவண நகல்’ தயாரிக்கப்பட்டு வருவதாகவும், செய்திக் குறிப்புகள் பதிவுசெய்திருந்த அதேவேளை, இந்த மாநாட்டுக்கு அழைக்கப்பட்டவர்கள், அழைக்கப்படாதவர்கள், கலந்து கொண்டவர்கள், கலந்து கொள்ளாதவர்கள் பற்றிய வாதப்பிரதிவாதங்கள் பற்றியும் இழுபறிகள் பற்றியும், நிறையப் பதிவுகள் காணக்கிடைக்கின்றன. இந்நாட்டில் வாழும் இலங்கை தமிழர், இந்திய வம்சாவளித் தமிழர், முஸ்லிம்கள் எனத் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் கூட்டங்களை ஒன்றிணைக்கும் வார்த்தையாக, ‘தமிழ் பேசும் மக்கள்’ என்ற வார்த்தை பொதுவாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆகவே, இங்கு ‘தமிழ் பேசும் கட்சிகள்’ என்ற பதம், மேற்சொன்ன மக்கள் கூட்டங்களை மையப்படுத்திய அரசியல் கட்சிகளைக் குறிப்பதாகப் புரிந்துகொள்ளலாம். ‘தமிழர்’ என்ற ஒற்றை அடையாளத்துக்குள் வந்திருக்க வேண்டிய, வந்திருக்கக்கூடிய கட்சிகள்தான் இவை. ‘தமிழர்’ என்ற பலமான ஒற்றை அடையாளம் இங்கு ஏற்படுத்தப்பட்டு இருந்தால், அது, இந்நாட்டில் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக உள்ள தமிழ் பேசும் மக்களுக்கு, பலவழிகளில் சாதகமாக அமைந்திருக்கும். அது நடக்காது போனது, பேரினவாதத்துக்குச் சாதகமாக அமைந்தது. இந்த இடத்தில், அது ஏன் நடக்காது போனது என்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தல் அவசியமாகிறது. இந்நாட்டின் தமிழர்கள், தம்முள்ளே மதத்தால், பிரதேசத்தால், சாதியால் பிரிந்த அடையாளங்களைக் கொண்டிருந்தார்கள். இவை அனைத்தும், ஒரே காலகட்டத்திலும் ஒரே அடிப்படைகளிலும் ஏற்பட்ட சமூகப் பிரிவினைகள் அல்ல. வெவ்வேறு காலகட்டங்களில், இந்தப் பிரிவினைகள் மாற்றமடைந்தன என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. இவ்வாறு தம்முள் சமூகப் பிரிவுகளைக் கொண்டிருந்த தமிழர்களிடம், ஒரு சில பிரிவினரின் ஆதிக்கமும் மற்றைய பிரிவுகள் அந்த ஆதிக்கத்திடம் அடக்கு முறையையும் எதிர்கொண்டது. இந்த அடக்குமுறையிலிருந்து வௌிப்படுவதற்கு, மாற்றுப்பிரிவுகள் உருவாகின. ஆனால், தமக்குள் சமூகப் பிரிவுகளைக் கொண்டவர்களாகவே இந்நாட்டின் தமிழர்கள் தொடர்ந்தும் காணப்படுகிறார்கள். ஆனால், இதே சமூகப்பிரிவுகள் இருந்தாலும், தமிழ்நாட்டில் ‘தமிழர்கள்’ என்ற ஒற்றை அரசியல் அடையாளம் எழுப்பப்பட்டிருக்கிறதே என்று சிலர் வினவலாம். இந்திய அரசியலும் இந்திய அரசியல் கட்டமைப்பும் அங்கிருந்த பிரச்சினைகளும் அந்தத் தலைவர்களின் முன்னுரிமைகளும், இலங்கை விடயங்களில் இருந்து மிகவும் வேறுபட்டவை. இந்த ஒப்பீடு, ஒரு தனித்த ஆய்வாகவே நடத்தப்படக் கூடிய தலைப்பாகும். தென்னிந்தியாவின் தமிழ்த் தலைமைகள், ‘திராவிடக் கொள்கை’யைக் கையிலெடுத்தார்கள். அது சித்தாந்த அடிப்படையிலேனும், ‘தமிழர்கள்’ என்ற அடையாளத்தை விடப் பரந்ததோர் அடையாளமாகும். இதற்கான உந்துணர்வாக, ‘ஆரிய எதிர்ப்புணர்வு’ அமைந்திருக்கலாம். இலங்கையின் தேசிய கட்டுமானத்தின் வரலாறு, வேறாக அமைந்தது. இங்கு, சிவில் தேச அரசு ஒன்று கட்டமைக்கப்பட முயற்சிக்கப்பட்டது. அதுவே, சுதந்திரத்துக்கு மிகவும் முற்பட்ட தமிழ்த் தலைமைகளின் அவாவாக இருந்தது. ஆனால், பேரினவாதம், அந்த முயற்சியைக் கையகப்படுத்தி, சிவில் தேச அரசின் ஒற்றையரசு, ஒற்றைத் தேசிய சிந்தனை என்பவற்றைத் தனது பெரும்பான்மை இனத் தேசியத்தின் மேலிருத்தி, இலங்கையில் இனத் தேசிய முரண்பாட்டுக்கு வழிவகுத்தது. எண்ணிக்கையில் பெரும்பான்மை இனம், தன்னை இனத் தேசிய அடிப்படையில் கட்டமைக்கத் தொடங்கிய போது, அதன் விளைவாக, எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருந்த மக்கள் கூட்டத்தின் மீது பிரயோகிக்கப்பட்ட அடக்குமுறைக்கு எதிராகவே, தற்காப்புத் தேசியமாக ‘தமிழ்த் தேசியம்’ இந்த மண்ணில் பிறந்தது. ஆனால், ‘தமிழ்’ என்ற ஒற்றை அடையாளம், தமிழ் பேசும் மக்களை இணைக்கவில்லை. மதத்தாலும், வாழும் இடத்தாலும் பிரிக்கப்பட்டது. அவர்களுக்கான தனித்தனி அரசியலைத் தேடி, அவர்கள் பயணம் தனிவழிபோனது. தமிழ்த் தேசிய அரசியல் பிறந்தபோது, அதில் ‘தமிழ் பேசும் முஸ்லிம்கள்’ ‘தமிழர்கள்’ என்ற அடையாளத்துக்குள் சேர்ந்திருந்தார்கள். ஆனால், அந்த ஒற்றுமை நீண்ட காலம் நிலைக்கவில்லை. அரசியல் முன்னுரிமைகளில் வேறுபாடுகள் இருந்தன. தமக்கான தனிவழி அரசியலை, அவர்கள் தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள். இந்திய வம்சாவளித் தமிழர்களைப் பொறுத்தவரையில், ‘இலங்கை தமிழர்’கள் என்போர், அவர்களுக்கான பலமான குரலாக இருக்கவில்லை. இந்திய வம்சாவளி தமிழர்களின் பிரஜாவுரிமைப் பிரச்சினை, வெறும் எழுத்திலான கோரிக்கையாகவே வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகளால் முன்வைக்கப்பட்டது. ‘தனிநாடு’ என்ற பாதையில், அவை பயணிக்கத் தொடங்கிய போது, அந்தத் தனிநாட்டில், மலையகத்தில் செறிந்து வாழ்ந்த இந்திய வம்சாவளித் தமிழர்களின் நிலையைப் பற்றிய உறுதியானதும் சாத்தியமானதுமான நிலைப்பாடு எதுவுமே, வடக்கு-கிழக்கு தமிழ்க் கட்சிகளால் முன்வைக்கப்படவில்லை. ஆகவே, இங்கும் இருதரப்பின் அரசியல் முன்னுரிமைகள் வேறுபட்டிருந்தது. ஆகவே, இருதரப்பும் தம்வழியே தனிவழியெனப் பயணப்பட்டன. சௌமியமூர்த்தி தொண்டமான், தமிழ் ஐக்கிய முன்னணியிலிருந்து விலகவும் இதுவே காரணம் எனலாம். இன்றும் இந்த அரசியல் முன்னுரிமைகளின் வேறுபாட்டில், பெருமளவு மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை. வடக்கு-கிழக்கு தமிழர்களின் முன்னுரிமையாக, ‘தேசியம், தாயகம், சுயநிர்ணயம்’ என்ற ‘தமிழ்த் தேசிய அபிலாஷைகள் காணப்படுகின்றன. அதற்கே, அம்மக்கள் பெருவாரியாகத் தொடர்ந்தும் தமது அரசியல் அங்கிகாரத்தை வழங்கி வருகிறார்கள். தம்மை ஒரு தனித்த ‘தேசமாக’ வடக்கு-கிழக்கு தமிழர்கள் அடையாளப்படுத்துகிறார்கள். அரசியல் அதிகாரப் பகிர்வு, அவர்களின் அடிப்படை அரசியல் கோரிக்கையாக இருக்கிறது. மறுபுறத்தில், தமிழ்பேசும் முஸ்லிம் கட்சிகளைப் பொறுத்தவரையில், தம்மைத் தனித்த தேசமாக முன்னிறுத்துவதிலும், அரசியல் அதிகாரப் பகிர்வு தொடர்பிலும் அவை அக்கறை காட்டவில்லை. மாறாக, இந்நாட்டின் சிறுபான்மையினமாகத் தம்மை முன்னிறுத்துகின்றன. சிறுபான்மையினருக்கான சமவுரிமை என்பதுதான் அவர்களின் நிலைப்பாடாக இருக்கிறது. இது சித்தாந்த அடிப்படையில், தமிழர்களின் ‘தனித்தேச’ நிலைப்பாட்டிலிருந்து வேறுபட்டது. வடக்கு-கிழக்கு தமிழர்கள், தம்மை வெறும் சிறுபான்மை இனமாக அடையாளப்படுத்தவில்லை. மாறாக, இந்நாட்டில் வாழும் தனித் தேசமாக தம்மை அடையாளப்படுத்துகிறார்கள். இதேயொத்த வேறுபாட்டை, மலையகத் தமிழ் அரசியலுக்கும் வடக்கு-கிழக்கு தமிழ் அரசியலுக்கும் இடையில் நாம் காணலாம். மலையக தமிழ் அரசியலில், மலையகத் தமிழரை அல்லது இந்திய வம்சாவளித் தமிழரை, தனித்த தேசமாக அடையாளப்படுத்தும் மிகச் சில முயற்சிகளை நாம் அவதானித்தாலும், அது அவர்களின் அரசியல் முன்னரங்கில் இடம்பெறவில்லை என்பதோடு, அது சித்தாந்த ரீதியில் நிறுவக் கடினமானதொன்றாக அமைவதையும் அவதானிக்கலாம். எது எவ்வாறாயினும், இம்மக்கள் கூட்டங்கள், அரசியலில் தம்மை வேறாக அடையாளப்படுத்துவதுடன், வேறுபட்ட அரசியல் அபிலாஷைகளையும், முன்னுரிமைகளையும் கொண்டிருக்கின்றன என்பது மிக நிதர்சனமானது. ஆகவேதான், ‘தமிழ் பேசும் கட்சிகள்’ ஒன்றிணைவதில் இத்தனை வாதப்பிரதிவாதங்கள்; ஒரு பொது ஆவணம் தயாரிப்பதில் இத்தனை இழுபறிகள். வேறுபாடுகள் எப்படியானதாக இருப்பினும், குறைந்தபட்ச ஒற்றுமை என்பது சாத்தியம்தான். ‘தமிழ் பேசும் கட்சி’களாக இவை இம்மக்கள் கூட்டங்கள், சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் எதிர்நோக்கும் பொதுவான பிரச்சினைகள் பற்றி, ஒருமித்த குரலில் பேசுவதும் மற்றவர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கான தார்மிக ஆதரவையேனும் வழங்குவதும் குறைந்த பட்ச ஒற்றுமையை வௌிப்படுத்துவதாக அமையும். இம்மக்கள் கூட்டங்கள், அரசியல் அபிலாஷைகளில் ஒன்றிணையும், ஒரு கூட்டமைப்பாக அரசியலில் இயங்கும் என்றெல்லாம் நாம் எதிர்பார்க்க முடியாது. அந்த முயற்சி, மேற்சொன்ன அடிப்படை வேறுபாடுகளின் காரணத்தால், யதார்த்தத்தில் சாத்தியப்படாது. ஆனால், தமக்கிடையேயான தொடர் உரையாடல்களுக்கான ஒரு மேடையை, இவை கொண்டிருப்பது இம்மக்கள் கூட்டங்கள் அனைத்துக்கும் சாதகமானதொன்றாகவே அமையும். இது எதிர்காலத்தில், இம்மக்கட் கூட்டங்கள் அனைத்தும் பாதிக்கப்படும் விடயங்கள் தொடர்பில், இவை ஒரு ‘கோகஸாக’ பாராளுமன்றத்தில் இயங்கவும் வழி வகுக்கலாம். ஆகவே, அந்த அடிப்படையில், இந்த முயற்சி வரவேற்கப்பட வேண்டும். அடிப்படையிலேயே வேறுபட்ட அரசியல் முன்னுரிமைகளைக் கொண்டவர்கள்தான் இங்கு ஒன்றிணைவதால், அதற்குள் சிலரை அழைக்காது விடுவதும், தவிர்ப்பதும் அந்த மேடைக்கு அழகல்ல. அதேபோல, ஓர் உரையாடலுக்கான மேடையில் கூட ஒன்றிணையாது தவிர்ப்பதும் அழகல்ல. இதையுணர்ந்து, ‘தமிழ் பேசும் கட்சி’கள் இந்த மேடையை ஒரு முறை முயற்சித்துப் பார்ப்பது உசிதமானது. ஆனால், இந்த ஒற்றுமையின் பெயரை, எவரோ ஒருவரின் அல்லது ஏதோ ஒரு வௌிநாட்டின் அரசியல் தேவைகளுக்கு பயன்படுத்த விளைந்தால், அந்த முயற்சி தோல்வியில்தான் முடியும் என்ற வரலாற்றுப் பாடத்தையும் நினைவில் கொள்வது அவசியம். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்-பேசும்-கட்சிகளின்-ஒன்றிணைவு/91-288695
  25. ஓய்வு பெறுங்கள், சம்பந்தன் ஐயா! என்.கே.அஷோக்பரன் Twitter: @nkashokbharan எதிர்வரும் பெப்ரவரி வந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவிற்கு 89 வயது கழிந்து, தனது 90வது ஆண்டில் அவர் அடியெடுத்து வைக்க இருக்கிறார். பிரித்தானிய முடியின் கீழான கொலனியாக இலங்கை இருந்தபோது பிறந்தவர் இராஜவரோதயம் சம்பந்தன். டொனமூர் அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகளில் பிறந்தவர். இலங்கை 1948ல் சுதந்திரம் பெறும் போது அவருக்கு 15 வயது கழிய ஒரு நாள் குறைவு. இலங்கைச் சட்டக் கல்லூரியில் கற்று சட்டத்தரணியாக பணிபுரிந்த அவர், 1977ம் ஆண்டு பொதுத் தேர்தலில், தனது 44 ஆவது வயதில், திருகோணமலையில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பாகப் போட்டியிட்டு பாராளுமன்றம் செல்கிறார். 1983 செப்டெம்பரில் பாராளுமன்ற ஆசனத்தை இழந்த இரா. சம்பந்தன், அதன் பின்னர் 1989, மற்றும் 1994 தேர்தல்களில் தோல்வியடைந்திருந்தார். 1994 ஆம் ஆண்டு தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பாகப் போட்டியிட்டு வெற்றியீட்டியிருந்த சட்டத்தரணி அருணாசலம் தங்கத்துரை, 1997 ஜூலை 5 ஆம் திகதி திருகோணமலை ஶ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி நிகழ்வில் கலந்துகொண்டு வௌியேறும் போது அடையாளமறியா நபர்களினால் படுகொலை செய்யப்பட்டிருந்தார். விடுதலைப் புலிகள்தான் படுகொலை செய்தார்கள் என்று பொலிஸ் விசாரணைகள் குறிப்பிட்டிருந்தன. அருணாசலம் தங்கத்துரையின் படுகொலையின் பின், ஏற்பட்ட வெற்றிடத்திற்கு 1997ஆம் ஆண்டு சம்பந்தன் நியமிக்கப்பட்டார். 1983ஆம் ஆண்டு பாராளுமன்ற ஆசனத்தை இழந்த சம்பந்தன் 1997 ஆம் ஏறத்தாழ 14 ஆண்டுகளின் பின் பாராளுமன்றம் ஏகினார். மறுபடியும் 2000ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்ட சம்பந்தன், 2001ஆம் ஆண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு, அதன் சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் 2004, 2010, 2015, மற்றும் 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார். 2015 – டிசெம்பர் 2018 வரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்ததன் மூலம், அந்தப் பதவியை வகித்த இரண்டாவது தமிழர் என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டார். தனது 89 வருட வாழ்வில் 29 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்திருக்கிறார் இரா. சம்பந்தன். இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றின் முக்கிய காலகட்டங்கள், திருப்பு முனைகள் என்பவற்றை நேரடியாகப் பார்த்த, அதில் பலவற்றில் பங்காளியாக இருந்த பழுத்த அனுபவம் மிக்க தலைவர் இரா. சம்பந்தன் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதுபோலவே பாராளுமன்ற மரபுகளை, நடைமுறைகளை நன்கறிந்த, அனுபவம் மிக்க சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களுள் இரா. சம்பந்தன் முக்கியமானவர் என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இன்று கூட அவர் பாராளுமன்றத்தில் எழுந்து உரையாற்றினால், அந்த உரை பெருமளவிற்கு அமைதியாக கேட்கப்படுமளவிற்கு மதிப்பு மிக்க மனிதராகவே அவர் பார்க்கப்படுகிறார். அண்மை ஆண்டுகளில் அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றிய சந்தர்ப்பங்கள் குறைவு என்றாலும், அவர் ஆற்றியிருந்த ஒரு சில உரைகள் கூட ஆழமானதாகவும், அர்த்தபுஷ்டியுள்ளவையாகவும் அமைந்திருந்தன. அவரது சில பாராளுமன்ற உரைகள், இலங்கைப் பாராளுமன்றம் கண்ட ஆகச் சிறந்த உரைகள் பட்டியலில் நிச்சயம் இடம்பெறும் தகை மிக்கவை. ஆனால் தற்போது அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதில்லை என்பது மட்டுமல்ல, பாராளுமன்றத்திற்கு செல்வது கூட மிகக் குறைவு என்பது வருத்தத்திற்குரிய விடயமாக இருக்கிறது. இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பை அளவிடும் சுயாதீன இணையத்தளமான மந்த்ரி.எல்கே பங்களிப்பு அளவீடுகளின் படி சம்பந்தன் அவர்களை 225 உறுப்பினர்களில், 219வது இடத்தில் தரமிட்டுள்ளது. இந்த முறை சம்பந்தன் அவர்கள் வெறும் 3 முறையே பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்றுள்ளதாக அந்த இணையத்தளம் குறிப்பிடுகிறது. கொவிட்-19 அபாயம், அவரது வயது மூப்பு, உடல்நிலை என சம்பந்தன் அவர்கள் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காததற்கு பல நியாயங்களும், காரணகாரியங்களும் சொல்லப்படலாம். அவை உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் முதற் கடமை பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளுதலாகும். அதற்காகத்தான் அவர்கள் மக்கள் பணத்தில் ஊதியம் பெறுகிறார்கள். பாராளுமன்ற அமர்விலும், செயற்பாடுகளிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்காவிட்டால், அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதன் நோக்கமும், பயனும்தான் என்ன என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது. பாராளுமன்ற உறுப்பினருக்கு சம்பளம், பலவகைமைப்பட்ட கொடுப்பனவுகள், தனிப்பட்ட ஊழியர்கள் சிலருக்கான சம்பளங்கள், ஒவ்வோர் அமர்விலும் கலந்துகொள்ள கொடுப்பனவு, குறைந்த விலையில் பாராளுமன்றத்தில் உணவு, அவர்களுக்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என ஏகப்பட்ட சலுகைகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அளவு போதுமானதா இல்லையா என்ற விவாதம் ஒருபுறமிருக்க, பெறும் சம்பளத்திற்கும், சலுகைகளுக்கும் ஏற்ற பங்களிப்பை அவர்கள் வழங்குகிறார்களா என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது. குறிப்பாக இரா. சம்பந்தன் அவர்களைப் போன்ற பழுத்த அனுபவமிக்க பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளாதிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒருவேளை பலர் சொல்வது போல அவர் வயத மூப்பின் காரணமாக, அல்லது உடல்நிலையின் காரணமாக கலந்துகொள்ள முடியாத நிலையிலிருக்கிறார் என்றால், அவர் அரசியலிலிருந்து ஓய்வு பெற விரும்பாவிட்டாலும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ஓய்வுபெற்று திருக்கோணமலையில் இன்னொரு இளம் அரசியல்வாதிக்கு வாய்ப்பளித்தலே உசிதமான காரியம். 44 வயதில் பாராளுமன்றத்திற்கு வந்த இரா. சம்பந்தன், 89 வயதிலும், தன்னால் திருகோணமலை மக்களுக்கு களத்தில் நின்று முழுமையாகப் பணி செய்ய முடியாத நிலையிலும் கூட தனது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இறுகப்பற்றிக் கொண்டிருப்பது நியாயமா என்ற கேள்வியை அவரும், அவரது ஆதரவாளர்களும் தம்மைத் தாமே கேட்டுக்கொள்ள வேண்டும். அண்மையில் சம்பந்தன் அவர்கள் ஓய்வுபெற வேண்டும் என்ற கருத்து அதிகமாகப் பேசப்படும் நிலையில், “வசதிகளை அனுபவிப்பதற்காக அரசியலுக்கு வந்தவன் அல்ல. தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு முடிவு காணக்கூடிய அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்காகவே அரசியலுக்கு வந்தவன் நான். எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதை பெறாமல் அரசியலில் இருந்து நான் விடைபெறப் போவதில்லை” என்ற பகட்டாரவாரப் பதிலை வழங்கியிருந்தார். அரசியலிலிருந்து விலகுவதும், விலகாமல் இருப்பதும் அவர் விருப்பத்தின் பாற்பட்டது. ஆனால், பாராளுமன்ற அமர்வுகளில் தொடர்ச்சியாகப் பங்குபற்ற முடியாத நிலையில், திருகோணமலை மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக மக்களை தொடர்ந்து சந்தித்து தனது கடமைகளை ஆற்ற முடியாத நிலையில் அவர் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தக்கவைத்திருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதொரு விடயமல்ல. அவரது அனுபவமும், அறிவும், அதன்பாலான ஆலோசனைகளும் தமிழர் அரசியலுக்கு தேவையான உரம். ஆனால் அவரது பங்களிப்பு அந்தளவில் அமைவதுதான் காலத்திற்கேற்றது. சம்பந்தன் அவர்களுக்கு பிறகு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்துவிடும் வாய்ப்புள்ளது, அவர் ஓய்வுபெற்றால் அடுத்த தலைவர் யாரென்ற பிரச்சினை வரும் போன்றவை சம்பந்தன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக நீடிப்பதற்கான நியாயமாக காரணங்கள் அல்ல. சம்பந்தன் அவர்கள் அரசியலில் தொடரும் வரைதான் மேற்சொன்ன பிரச்சினைகள் ஏற்படாது என்பது, மேற்சொன்ன பிரச்சினைகளுக்கு தீர்வல்ல, மாறாக பிரச்சினையின் தீவிரத்தை தள்ளிப்போடும் வழி மட்டும்தான். தனது மிகநீண்ட அரசியல் வாழ்வில் தமிழர் அரசியலுக்கு கணிசமான பங்களிப்பினை வழங்கியுள்ள சம்பந்தன் அவர்களின் சிறப்பை வரலாறு சொல்லும், ஆனால் அந்த வரலாற்றில் அவர் இளைஞர்களுக்கு வழிவிடாது, திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தானே தன் இறுதிவரை பற்றிக்கொண்டிருந்தார் என்பது ஒரு கரும்புள்ளியாக அமைந்துவிடக்கூடாது. சம்பந்தன் ஐயா, நீங்கள் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை அரசியலில் இருக்க விரும்பினால், கூட்டமைப்பின் தலைவராக, ஆலோசகராக, வழிகாட்டியாக இருங்கள். ஆனால் பாராளுமன்றத்திற்கே போகாமல் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பது ஏற்புடையதல்ல. யாழ்ப்பாணத்திற்கு அடுத்த தலைமுறை அரசியல்வாதிகளை அறிமுகப்படுத்திய நீங்கள், திருகோணமலை யில் அதைச் செய்யவில்லை. இனியும் அந்த திருகோணமலை ஆசனத்தை நீங்கள் பற்றிக்கொண்டிருந்தால், திருகோணமலை மக்கள் வரும் தேர்தலில் உங்களைத் தோற்கடித்து அதை உங்களுக்குப் புரிய வைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆட்படுவர். அது தமிழருக்கும், தமிழர் அரசியலுக்கும் அழகானதொன்றாக இருக்காது. ஆகையால் ஓய்வு பெறுங்கள், சம்பந்தன் ஐயா! https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஓய்வு-பெறுங்கள்-சம்பந்தன்-ஐயா/91-288032
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.