Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Search the Community

Showing results for tags 'என்.கே. அஷோக்பரன்'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s Test
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • Tamil Cine's Blog
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • Vani Mohan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's எழுத்து ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's சிறப்பு ஆவணம்

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 24 results

  1. ஏறும் விலை; சரியும் பொருளாதாரம்; திணறும் மக்கள்: அமைதி காக்கும் எதிர்க்கட்சி என்.கே.அஷோக்பரன் Twitter: @nkashokbharan “தன் மே தவஸ்வல காஸ் அதி நே காம உயன்னத்த காஸ் வளின் ஹொந்தட்ட தியனவனே காஸ் காஸ் நா மேக தமய் மே ஆண்டுவே பரிகம” (இப்ப இந்த நாள்களில காஸ் கிடைக்குது என்ன காஸில் தானே சமையல் நல்லா இருக்குது தானே காஸ் காஸ் இல்லை இதுதான் இந்த அரசாங்கத்தின் இயலாத்தன்மை). “ஹபய் இதின் றட இல்லுவா, வெனஸ துன்னா, வெனஸ தமய் மே பேன்னே அத காஸ் டிகத் நதிவெலா தியனவா காஸ் டிக சபயன்ன பரி ஆண்டுவக் மே தென பொறொந்துவ சபயய்த நா” (ஆனால், நாட்டைக் கேட்டார்கள்; மாற்றத்தைக் கொடுத்தோம்; மாற்றம் தான் இப்ப நல்லாத் தெரியுது இன்று காஸ் கூட இல்லாமல் இருக்குது காஸ் வழங்க இயலாத அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளையா நிறைவேற்றப்போகுது). “தன் கொஹொமத சபத ஆண்டுவ றது லூணு கொஹொமத பொம்பய் லூணு லங்கதி காவத அள ஏம கொஹொமத ஜீவன வியதம பொஹொம அடுத” (இப்ப எப்படி சுகமா அரசாங்கம் சின்ன வெங்காயம் எப்பிடி கிட்டடியில பொம்பே வெங்காயம் சாப்பிட்டீங்களா கிழங்கு எல்லாம் எப்பிடி வாழ்க்கைச் செலவு நல்ல குறைவா). இவையெல்லாம் இன்றைய எதிர்க்கட்சியும் அதன் தலைவர்களும் இன்றைய அரசாங்கத்தைக் கண்டித்துப் பேசிக்கொண்டிருக்கும் வார்த்தைகள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது உண்மையில்லை. இந்த வார்த்தைகள் 2015 தோல்விக்குப் பின்னர், மீண்டும் 2019இல் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்‌ஷ வெற்றிபெறும் வரையான காலப்பகுதியில், வெவ்வேறு கூட்டங்களில் முன்னாள் ஜனாதிபதியும் இன்னாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்‌ஷ உதிர்த்த வார்த்தைகளாகும். அன்று சில நூறு ரூபாய்கள் காஸ் விலை கூடியதற்கே, எதிர்கட்சியில் இருந்த ராஜபக்‌ஷ்ர்களும் அவர்களது அடிப்பொடிகளும் அன்றைய நல்லாட்சி அரசாங்கத்தை, மேடை மேடையாக வறுத்தெடுத்தது மட்டுமல்லாமல், ஆர்ப்பாட்டங்கள், பரப்புரைகள் என அரசாங்கத்துக்குக் கடுமையான அழுத்தத்தையும் எதிர்ப்பையும் வழங்கினார்கள். இன்று சாதாரணமாக வீடுகளில் பாவிக்கும் 12.5 கிலோகிராம் லிட்ரோ காஸின் விலை 1,257 ரூபாயால் அதிகரித்து, சிலிண்டர் 2,750 ரூபாயாகவும், லாஃப்ஸ் காஸின் விலை 984 ரூபாயால் அதிகரித்து, சிலிண்டர் 2,840 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. சும்மா அறிக்கை விட்டதோடு எதிர்க்கட்சி மௌனமாக இருக்கிறது. இங்கு எரிவாயு மட்டும் விலையேறவில்லை. கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டமையால், அரிசி, பால்மா, கோதுமை மா, சீமெந்து ஆகியவை அதிரடியான வகையில் விலையேறியுள்ளன. இதன் விளைவாக, பாண் உள்ளிட்ட உணவுப்பொருட்களின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளன. கட்டுப்பாட்டு விலை நீக்கம் பற்றி இங்கு இன்னொரு விடயத்தைக் குறிப்பிடுதல் அவசியமாகிறது. கட்டுப்பாட்டு விலையை, அரசாங்கம் நீக்கயது வரவேற்கத்தக்க முடிவு. ஏனெனில் கட்டுப்பாட்டு விலையின் காரணமாக, சந்தையில் பொருட்களின் தட்டுப்பாடு நிலவியது. குறிப்பாக பால்மா, அரிசி, எரிவாயு என்பனவற்றுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவியதும், மக்கள் அவற்றைப் பெற்றுக்கொள்ள அல்லோலகல்லோலப்பட்டமையும் நாம் கண்ணால் கண்ட விடயங்கள். அரசாங்கம் விதித்த கட்டுப்பாட்டு விலைக்கு விற்க முடியாதெனவும், இறக்குமதிக்கான டொலர் கிடைக்காததால் லாஃப் காஸ் நிறுவனம் எரிவாயு இறக்குமதியையே நிறுத்தியிருந்தது. இதனால் எரிவாயு கிடைக்காமல், பலர் மண்ணெண்ணெய், விறகு அடுப்புகளுக்கு மாற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆகவே, கட்டுப்பாட்டு விலையை நீக்கியது சரியானதே! ஆனால், இந்த விலைவாசி அதிகரிப்புக்கு அரசாங்கத்தின் முறைகேடான பொருளாதாரத் திட்டமிடலும் பொருளாதாரச் செயற்பாடுகளுமே காரணம். அடிப்படைப் பொருளாதார அறிவு கூட இல்லாதவர்களின் கையில், நாட்டின் பொருளாதாரத்தைக் கையளித்தால் இதுதான் நிலை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த விலைவாசி ஏற்றம் மாதச்சம்பளத்தில் வாழ்க்கை நடத்தும் பெரும்பான்மை இலங்கையர்களின் அடிமடியில் தீவைத்ததைப் போன்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. விலைவாசி ஏற்றத்துக்கு நிகராகச் சம்பளம் அதிகரிக்காத நிலையில், அத்தியாவசியத் தேவைகளுக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலையில், இலங்கை குடிமக்கள் திணறிப் போய் இருக்கிறார்கள். அன்றாட உழைப்பை நம்பிய மக்களின் நிலை, இன்னும் மோசமானது. கொவிட்-19 முடக்கம், பிரயாணக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் அன்றாட உழைப்புக்கான வாய்ப்புகள் சுருங்கிய நிலையில், அவர்களது வாழ்வாதாரம் சாவலுக்கு உள்ளாகியிருக்கிறது. திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு பற்றி பல செய்தி அறிக்கைகளையும் அண்மைக்காலத்தில் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. சமகால பொருளாதார நிலையின் கீழ், திருட்டுச் சம்பவங்களின் அதிகரிப்பு ஆச்சரியப்படுவதற்கான ஒன்றல்ல. இந்தப் பொருளாதார வீழ்ச்சி தொடருமானால், இத்தகைய சம்பவங்கள் இன்னும் அதிகரிக்கலாம். அரசாங்கம் முழுமையாகவும் மோசமாகவும் ‘ஃபெயில்’ அடைந்துகொண்டிருக்கும் நிலையில், ஆகுமான எதிர்க்கட்சியொன்று என்ன செய்யும்? மிகக் கடுமையாக எதிர்ப்பை வௌிப்படுத்தி, அரசாங்கத்துக்கு கடும் அழுத்தத்தைக் கொடுக்கும். இந்நாட்டில் இருக்கும் எதிர்க்கட்சி, என்ன செய்துகொண்டிருக்கிறது? பேருக்கு அறிக்கை விட்டுவிட்டு, அமைதியாக இருக்கிறது. யோசித்துப் பாருங்கள், இத்தகைய சந்தர்ப்பம் ஒன்றில், ராஜபக்‌ஷர்கள் எதிர்க்கட்சியாக இருந்தால், என்ன செய்திருப்பார்கள் என்று! நிச்சயமாக இவ்வளவு அமைதியாக இருக்கமாட்டார்கள். எதிர்க்கட்சி என்று ஒன்று இருக்கிறதா, இல்லையா என்று தெரியாத நிலையில்தான் இன்றைய எதிர்க்கட்சியும் அதன் தலைவர்கள் எனப்படுவோரும் செயற்படுகிறார்கள். இதற்கும் சிலர் நியாயம் சொல்கிறார்கள். எதிர்க்கட்சியின் இயலாமைக்கு சாட்டுச் சொல்லும் இவர்கள், கோவிட்-19 நிலைவரத்தின் கீழ், எதிர்க்கட்சியால் பெரிதாக என்ன செய்துவிட முடியும். மேலும், கோவிட்-19 ஒழுங்குவிதிகளைப் பின்பற்றுவது அவசியம். அதற்கு ஆதர்ஷமாக எதிர்க்கட்சியும் எதிர்க்கட்சித் தலைமைகளும் செயற்படுகிறார்கள் என்று எதிர்க்கட்சியினரின் மௌனத்துக்கு நியாயம் கற்பிக்கிறார்கள். என்னே, எங்கள் எதிர்க்கட்சியனரின் கடமையுணர்வு? ‘கொவிட்-19 ஒழுங்குவிதிகளால்த்தான், அவர்கள் கடுமையான எதிர்ப்பைக் காட்டவில்லையாம்; இல்லையென்றால் வெட்டிவீழ்த்தி இருப்பார்களாம்’. இந்த வெட்டி நியாயங்களைத் தன் குழந்தைக்குப் பால்மா வாங்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் பெற்றோர்களிடம், எப்படிச் சொல்வீர்கள்? உங்கள் விதண்டாவாத நியாயங்களை, எரிவாயு விலையேற்றத்தால் விறகடுப்புக்கு மாறி, விறகடுப்பை ஊதிக்கொண்டிருக்கும் குடிமகனிடம் எப்படிச் சொல்வீர்கள்? உங்கள் சப்பைக்கட்டுச் சாட்டுகளைப் பொருள் விலையேற்றத்தால் மூன்று வேளை உணவை இருவேளையாகச் சுருக்கியுள்ள குடும்பங்களிடம் எப்படி எடுத்துரைப்பீர்கள்? உண்மையில், இப்படி விலையேற்றங்களைச் செய்ய, அரசாங்கங்கள் பெருமளவுக்குத் தயக்கம் கொள்ளும். ஏனெனில், அவை அரசாங்கங்கள் தமது செல்வாக்கை இழப்பதற்கான பெருங்காரணமாக அமையும். எதிர்க்கட்சிகள், தமது ஆதரவை அதிகரித்துக்கொள்ள வழிவகுக்கும். ஆனால், இந்த அரசாங்கம் இதுபற்றியெல்லாம் கவலைப்படுவது போல தென்படவில்லை. அது, அவர்கள் தமது 69 இலட்சம் வாக்காளர்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கை என்பதைவிட, எதற்கும் வக்கற்ற எதிர்க்கட்சியின் இயலாமையின் மீது கொண்ட நம்பிக்கை என்பதுதான் மெத்தப் பொருத்தமான காரணமாக இருக்கும். சிறைக்குள் சென்று கைதிகளை மிரட்டிய இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேயின் பெயரைக் கூடச் சொல்ல நடுநடுங்கும் எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கத்தின் பெரிய புள்ளிகளின் பெயர்களையா சொல்லிக் குற்றம்சாட்டப்போகிறார். அந்த இயலாமையின் வடிவமான எதிர்க்கட்சித் தலைவரும், அவரது அடிப்பொடிகளும் உள்ளவரை, தமது ஆட்சிக்கு எந்தப் பங்கமும் வராது என்ற நம்பிக்கையில்தான் இந்த அரசாங்கம், இந்த விலை அதிகரிப்புகளைப் பற்றி அக்கறை கொள்ளாது இருக்கிறதோ என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. வழமையாக, வல்லாட்சி அரசாங்கங்கள் எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதை உலகளவில் அவதானிக்கலாம். ஆனால், இலங்கையில் அதுகூடச் செய்யத் தேவையில்லாத நிலை இருக்கிறது. ஏனெனில், இலங்கையின் எதிர்க்கட்சி கண்மூடி, வாய்பொத்தி அமைதியாகவே இருக்கிறது. ஒருவேளை, இந்த அரசாங்கம் செல்வாக்கை இழக்கட்டும்; இந்த அரசாங்கம், தனது பெயரைக் கெடுத்துக்கொண்டதும், அதை வைத்து அடுத்த தேர்தலில் வென்று விடலாம்; அதுவரை நமக்கேன் வம்பு என்ற அற்ப நம்பிக்கையில், இவர்கள் அமைதியாக இருக்கிறார்களோ என்னவோ? ஆக மொத்தத்தில், தேர்தலும் வெற்றியும் அதிகாரமும் மட்டும்தான் இங்கு இவர்களுக்கு முக்கியம். மக்கள் பற்றி எந்த அக்கறையும் இல்லை. பாவம் மக்கள், அவர்களுக்காகக் குரல் கொடுக்கத்தான், இங்கு யாருமில்லை. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஏறும்-விலை-சரியும்-பொருளாதாரம்-திணறும்-மக்கள்-அமைதி-காக்கும்-எதிர்க்கட்சி/91-283478
  2. ராஜபக்‌ஷர்கள் முன்னுள்ள வாய்ப்பு என்.கே. அஷோக்பரன் twitter: @nkashokbharan சுதந்திரகாலம் முதல் இனமுறுகல், இனவாதம், இனத்தேசியம் ஆகியவற்றால் விளைந்த இனத்துவேசம், இனப்பிரச்சினை ஆகியவற்றுக்குள் சிக்குண்டு, இலங்கை தீவின் அரசியல் சின்னாபின்னமாகி நிற்கிறது. சுதந்திரகாலம் மற்றும் அதற்கு முற்பட்ட தலைவர்கள் கனவு கண்டது போல, இனத்தேசியவாதம், இனவாதம், இனப்பிரிவினை ஆகியவையற்ற சிவில் தேசமாக, இலங்கை ஒருவேளை கட்டியெழுப்பப்பட்டு இருந்தால், இலங்கையின் நிலை இன்று வேறாக இருந்திருக்கலாம். ஏனெனில், சுதந்திர காலத்திலேயே பொருளாதார ரீதியில் பலமான நாடாகவும் வளமான எதிர்காலத்தை நோக்கிய நாடாகவும் இலங்கை இருந்தது. ஆனால், இனவாத அரசியல் இலங்கையின் தலையெழுத்தை மாற்றிப் போட்டது. இனவாதத்துடன் இணைந்த பெருந்திரள்வாத அரசியல், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான இலகுவான வழியாகக் காணப்பட்டமை, அதிகாரத்தைக் கைப்பற்றும் எண்ணமும் சுயநலமும் மிக்க அரசியல்வாதிகளுக்கு இனவாத, பெருந்திரள்வாத அரசியல் மீதான ஈர்ப்புக்குக் காரணமாயிற்று. இலங்கையின் பேரினவாத, பெருந்தேசிய அரசியலுக்கு எதிராக, தமிழ்த் தேசிய அரசியல் தற்காப்புத் தேசியமாகப் பிறந்து, வளர்ந்து நிற்கிறது. உண்மையில், இலங்கையில் இனவாத, பெருந்திரள்வாத அரசியலுக்கு மாற்றானதும் வலுவானதுமான அரசியல் முன்னெடுக்கப்படவில்லை என்பது கவலைக்குரிய உண்மை. மிகச் சிறிய, சில கட்சிகள், இதனை முயற்சித்திருக்கலாம், ஆனால், அதை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் வலுவோ, செல்வாக்கோ அவர்களிடம் இருக்கவில்லை. இதேவேளை, மக்கள் செல்வாக்கும் கட்சிப்பலமும் பிரபல்யமும் மிக்க அரசியல்வாதிகள், தமக்கு அதிகார பலத்தைப் பெற்றுத்தரவல்ல இனமைய அரசியலைத் தாண்டி, சிந்திக்கத் தயங்கினார்கள். இதன் விளைவு இனவாதம், இனத்தேசியம், இனவெறி எனும் விஷச்சில்லுக்குள், இலங்கை சிக்கிக்கொண்டுள்ளது. இலங்கை அரசியலில், குறிப்பிடத்தக்க இடதுசாரிக்கட்சிகள் கூட, இனவாதத்தைக் கக்கியவையாகவும் அதிகாரத்தைக் கைப்பற்ற இனவாதத்தை அமைதியாக ஆதரித்தவையாகவுமே இருந்திருக்கின்றன என்பதும் கவனிக்கத்தக்க வரலாறு. முதலாளி வர்க்கம், தொழிலாளி வர்க்கத்தை அடக்குமுறைக்கு உள்ளாக்குகிறது என்றவர்கள் கூட, பெரும்பான்மைத் தேசம், சிறுபான்மைத் தேசங்களை அடக்குமுறைக்கு உள்ளாக்குவது பற்றி அக்கறை கொள்ளவில்லை. 30 வருட யுத்தம், இலங்கையின் வளர்ச்சியையும் அபிவிருத்தியையும் பெருமளவு பாதித்தது. இலங்கையிலிருந்து பல்லாயிரம் மூளைசாலிகள் வௌியேறினார்கள். இதன் தாக்கத்தை, இன்று மட்டுமல்ல, அடுத்த தலைமுறை கடந்தும் இலங்கை சந்தித்துக் கொண்டேயிருக்கும். இத்தனைக்கும் காரணம், அரசியல்வாதிகளின் சுயநலம். எல்லா நாடுகளிலும் தீவிரவாத எண்ணம் கொண்ட, துவேசம் மிக்க வெறுப்பை விதைக்கும் மிகச் சொற்ப மக்கள் கூட்டமொன்று இருந்துகொண்டேயிருக்கும். ஆனால், அவற்றுக்கு அரசியல் முன்னரங்கில் இடங்கொடுக்காமல் இருப்பதில்தான், அந்நாட்டின் எதிர்காலம் தங்கியிருக்கிறது. உதாரணத்துக்கு நோர்வே, பின்லாந்து, கனடா போன்ற நாடுகளில், இனத்துவேச எண்ணம் மிக்கவர்கள் இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஆனால், அந்த நாடுகளின் அரசியல் முன்னரங்கில், இனவாதத்துக்கு இடமளிக்கப்படுவதில்லை. இலங்கை அரசியலிலும் அது முடியாத காரியமல்ல. ஆனால், அந்த மாற்றத்தைச் செய்வதற்கு, பலமும் தன்னம்பிக்கையும் முதுகெலும்பும் உள்ள அரசியல் தலைவர்கள் அவசியம் தேவை. இன்று, ஆளுங்கட்சியினரை இனவாதிகள் என்று சொல்லிக்கொண்டு, அதே இனவாதத்தைப் பயன்படுத்தி, தாமும் ஆட்சியைக் கைப்பற்றிவிட முடியாதா என்று அவாக்கொள்ளும் எதிர்க்கட்சிகளைத்தான் நாம், பார்த்துக் கொண்டிருக்கிறோம். எம்மில் யார் பெரிய இனவாதி என்ற போட்டிதான், இலங்கையின் தேசிய அரசியலுக்கு உரமாக அமைகிறது. இதற்கு மிக முக்கிய காரணங்களாக அமைவது, அரசியல் தலைவர்கள் என்று தம்மை முன்னிறுத்துவோரின் ஆளுமைக்குறைவும் தன்னம்பிக்கை இன்மையும் நேர்மையின்மையும் குறுகிய சிந்தனையும் சுயநலமும்தான்! ‘சிறிய அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரைக் கொண்ட குழுவொன்றின் முயற்சிகள் புறநிலையாகவும், எந்தவொரு சுயநலமும் இல்லாமல் செயற்படும்போது, பெரும்பாலும் தீர்க்க முடியாத சிக்கல்களை அதனால் தீர்க்க முடியும்’ என்று நெல்சன் மண்டேலா குறிப்பிடுவதை, இங்கு கவனிக்க வேண்டும். அத்தகைய தலைவர்கள், இன்றுவரை இலங்கைக்கு கிடைக்கவில்லை. ஆங்காங்கே சில ஒளிக்கீற்றுகள் தோன்றியிருப்பினும், அவை மின்மினிகளைப் போல விரைவில் மறைந்துவிட்டன. ஓர் உதாரணத்துக்கு சந்திரிகா குமாரதுங்கவின் அரசியல் பிரவேசத்தைக் குறிப்பிடலாம். சந்திரிகாவின் அரசியல் எழுச்சி, சமாதானத்துக்கான நம்பிக்கையை விதைத்திருந்தது. ஆனால், அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவதில், சந்திரிகா தவறியது மட்டுமல்லாது, தான் கொடுத்த நம்பிக்கைக்கு நேரெதிராகவும் செயற்பட்டார். தமிழ்த் தலைமைகளும் ஒன்றும் சிறப்பானவர்கள் அல்ல; பேரினவாதத்துக்கு எதிரான, தமிழ்த் தேசிய அரசியலை அவர்கள் உணர்ச்சிவயப்பட்ட, வாய்ச்சொல் பகட்டாரவார அரசியலாக முன்னெடுத்தார்கள். அது மட்டும்தான் அவர்களுக்குத் தெரியும். காலங்காலமாக அதையே செய்து, தமது பதவிகளைக் காப்பாற்றிக்கொண்டு, வயிறுவளர்த்து வரும் கூட்டமாக அவர்கள் இருக்கிறார்கள். பெரும்பாலும் வயிற்றுப்பிழைப்புக்கு அரசியலில் தங்கியவர்களாக அவர்கள் இருப்பதால், அரசியல் பிழைப்புவாதத்தை உறுதிப்படுத்தும் வாய்ச்சொல் பகட்டாரவார அரசியலைத் தாண்டிச் சிந்திக்க அவர்கள் தயாராக இல்லை. அப்படிச் சிந்திக்கும், செயற்படும் புதியவர்கள் யாராவது வந்தாலும், அவர்களைத் ‘துரோகி’கள் என்று முத்திரை குத்தி, ஓரங்கட்டி விடுகிறார்கள். அழிவுப்பாதை அரசியலிலிருந்து தமிழ் மக்களை மீட்டெடுத்து, வழிகாட்டும் அளவுக்கான அறிவோ, அனுபவமோ, ஆற்றலோ, தன்னம்பிக்கையோ, இயலுமையோ இல்லாதவர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள். இதுதான் இலங்கை அரசியலின் நிலை. இந்த அரசியல் தலைமைகளின் இயலாமையால்தான், இன்று இனவாத, இனவெறி அரசியலுக்குள் இலங்கை உழன்று கொண்டும், எதிர்காலத் தலைமுறையின் சிந்தனையைப் பாழாக்கிக்கொண்டும் இருக்கிறது. அப்படியானால் இதற்கு மாற்றே இல்லையா? இலங்கையின் இந்த இனவாத, அரசியலை மாற்றும் பலம், ஒருமுறை ஒருவரின் கையில் இருந்தது. 2009இல், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தபோது, அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடம், இலங்கை வரலாற்றில் அதுவரை காலமும் எந்தத் தலைவரிடமும் இல்லாத ஒரு பலம் இருந்தது. ‘இத்தோடு இனவாத, இனவெறி அரசியலை முடிவுக்குக் கொண்டு வருவோம்’ என்று மஹிந்த தீர்மானித்திருந்தால், அதன் பின்னர் ஒன்றுபட்ட இலங்கையை கட்டியெழுப்பவும் ஓர் அரசுக்குள் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை வழங்கி, அனைத்து மக்களும் சுயமரியாதை, சுயகௌரவம், சுயநிர்ணயத்துடன் வாழ வழிசமைத்திருந்தால், அது இலங்கையின் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்திருக்கும். ‘யுத்தத்தை வெற்றிகொண்ட’ மஹிந்த ராஜபக்‌ஷ அதைச் செய்திருந்தால், அதைத் தட்டிக்கேட்கவும் எதிர்க்கவும் எந்தவொரு பேரினவாதியாலும் முடியாதிருந்திருக்கும். ஆனால், அதைச் செய்யும் பலமும் தன்னம்பிக்கையும் அன்று மஹிந்தவிடம் இருக்கவில்லை என்பது வரலாற்றுச் சோகம். மஹிந்த ராஜபக்‌ஷவைத் தோற்கடித்து, 2015இல் வந்த அரசாங்கம் செய்தது வரலாற்றுத் துரோகம். அதைப் பற்றிப் பேசுவது கூடப் பயனற்றது. மீண்டும் பெருவெற்றி பெற்று, ராஜபக்‌ஷர்கள் ஆட்சிப்பீடமேறி, இரண்டு ஆண்டுகள் ஆகப்போகின்றன. கடந்த ஓராண்டுக்கும் மேலாக, பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையையும் கொண்டிருக்கிறார்கள். இலங்கையின் இனப்பிரச்சினை வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய வாய்ப்பு இன்னும் ராஜபக்‌ஷர்களிடம் இருக்கிறது. 2009இல் இருந்ததைப் போன்ற தார்மீக பலம் இல்லாவிட்டாலும், பெரும்பான்மையினரை நம்பிக்கை கொள்ளச்செய்யத்தக்க இயலுமை அவர்களிடம் இருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தை, எல்லா ராஜபக்‌ஷர்களும் ஒன்றிணைந்து, இலங்கையின் வரலாற்றை மாற்றியமைக்கப் பயன்படுத்த வேண்டும். எந்த அரசாங்கத்தாலும், மிக இலகுவாக அத்தியாவசியப் பொருட்கள் மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்க முடியாது. ஆனால், ராஜபக்‌ஷர்கள் அதைக்கூடச் செய்தார்கள். அது காலத்தின் அத்தியாவசியத் தேவையாக இருக்கலாம். ஆனால் அதைச் செய்யும் பலம், அவர்களிடம் இருக்கிறது. இன்று, கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனையம், இந்தியாவின் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இத்தகைய தனியார் மயமாக்கல்களை ஐ.தே.க, தொழிற்சங்கங்களின் செல்வாக்கைக் கடந்து செய்ய முடியவில்லை. ஆனால்,ராஜபக்‌ஷர்களால் அந்த எதிர்ப்புகளை இலகுவாகக் கடந்து, அதைச் செய்ய முடிந்திருக்கிறது. இன்றைய சூழலில், இலங்கையின் இனவாத அரசியல் பாதையை மாற்றி அமைக்கக் கூடிய வலு, ராஜபக்‌ஷர்களிடம்தான் இருக்கிறது; அதற்கான அருமையான சந்தர்ப்பமும் இருக்கிறது. அவர்கள் இனவாத அரசியலைக் கைவிட்டு, இலங்கையை வளமான பாதைக்கு அழைத்துச் செல்வார்களா? அல்லது, 2009ஐப் போலவே, குறுகிய சுயநல அரசியலை முன்னெடுத்துவிட்டுப் போய்விடுவார்களா என்பதுதான், இங்கு கேள்வி. இலங்கையின் எதிர்காலம், இன்று அவர்களின் கையில் இருக்கிறது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ராஜபக்-ஷர்கள்-முன்னுள்ள-வாய்ப்பு/91-282859
  3. தமிழர்களின் பொருளாதார மீட்சி என்.கே. அஷோக்பரன் twitter:@nkashokbharan தமிழ் மக்களின் அரசியல், குறிப்பாக, வடக்கு-கிழக்கு அரசியல், வெறுமனே தமிழ்த் தேசியத்தைப் பகட்டாரவாரப் பேச்சாக முன்வைக்கின்றதே அன்றி, தேசக்கட்டுமானம் தொடர்பில் எந்த அக்கறையும் காட்டுவதில்லை. குறிப்பாக, பொருளாதார ரீதியில் தமிழ் மக்களை வலுப்படுத்தக்கூடிய எந்தத் திட்டங்களோ தூரநோக்கோ கூட, தமிழ் அரசியல்வாதிகளிடம் கிடையாது என்ற குற்றச்சாட்டை, என்னுடைய பத்தியிலும் மற்றைய தளங்களிலும் முன்வைத்திருக்கிறேன். அண்மையில், இதைப் பற்றிய கேள்வியொன்றை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ம.ஆ. சுமந்திரனிடம் முன்வைத்த போது, “இந்தக் குறையொன்று, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் உள்ளது” என்பதை, அவர் நேர்மையாக ஏற்றுக்கொண்டார். ‘சப்பைக் கட்டு கட்டும்’ அரசியல்வாதிகளிடையே, யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும் இந்தப் பண்பு பாராட்டுக்குரியது. இதேவேளை, வயதானவர்களின் கூடாரமாகிப்போய் உள்ள தமிழ்த் தேசிய அரசியல், பெருமளவுக்கு எந்தவித தூரநோக்கும் இல்லாமல், ‘அரைத்த மாவை அரைத்துக் கொண்டு’, வெற்று ‘விடுதலை’ பேசிக்கொண்டு, உள்ளுக்குள் ‘குழாயடிச் சண்டை’களாகவே கடந்துகொண்டிருக்கிறது. யாராவது இதைச் சுட்டிக்காட்டினால், அவர்களுக்குத் ‘துரோகி’ப் பட்டம் கட்டிவிட்டு, மண்ணுக்குள் தலையைக் கொடுத்துவிட்டிருக்கும் தீக்கோழி போல, தமிழ்த் தேசிய அரசியல் கடந்துகொண்டிருக்கிறது. மறைந்தவர்களுக்கான அஞ்சலி என்பது முக்கியமானதுதான். ஆனால், அதற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில் ஒரு பாதியை என்றாலும், தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றிய சிந்தனைக்குக் கொடுக்க வேண்டாமா? வெறும் உணர்ச்சிப்பிழம்பினையும் வாய்ச்சொல் பகட்டாரவாரத்தையும் வைத்துக்கொண்டு, அரசியல் நடத்துவது தமிழ் மக்களுக்கு நன்மை பயக்குமா என்றெல்லாம், நாம் சிந்திக்க வேண்டியதாக இருக்கிறது. இலங்கையில், பொருளாதார ரீதியில் பின்தங்கிய கடையிரு மாகாணங்கள் கிழக்கும் வடக்கும். எந்த நிலத்தைத் தமிழர்கள் ‘தாயகம்’ என்கிறார்களோ, அந்த நிலமும் அதன் மக்களும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாக இருக்கிறார்கள். 30 வருட கால யுத்தத்தின் நிலை இது. இதையேதான், அரசியல்வாதிகளும் சொல்வார்கள். யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, 12 வருடங்கள் உருண்டோடிவிட்டன. இந்த 12 வருடத்தில், 30 வருடகால யுத்தத்தில் உழன்று கொண்டிருந்த மக்களை மீட்டெடுக்க, என்ன செய்தீர்கள் என்ற கேள்விதான் முக்கியமானது. இந்த மக்களின் உணர்வுகளை விற்றுப்பிழைத்ததைத் தவிர, தமிழர் அரசியலும் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும், தமிழ் மக்களின் வாழ்வாதாரம் தொடர்பிலும் தமிழ் மக்களின் பொருளாதாரம் தொடர்பிலும் தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பிலும், அக்கறை காட்டவில்லை. இந்த இடத்தில்தான், தமிழ் மக்களின் பொருளாதார மீட்சி பற்றிப் பேசுதல் அவசியமாகிறது. ‘அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு’ என்கிறான் வள்ளுவன். தமிழ் அரசியல்வாதிகள், பகட்டாரவாரப் பேச்சில் வல்லவர்கள். மற்றவர்களை எதிரிகளாகவும் துரோகிகளாகவும் முத்திரை குத்தி, வாய்ச்சொல் அரசியல் செய்வதில் சமர்த்தர்கள். ஆனால், அவர்களுக்கு ஒன்று புரியவில்லை. பொருளின் பெருமை சொல்லும் வள்ளுவன், ‘செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எஃகதனிற் கூரிய தில்’ என்கிறான். அதாவது, ஒருவன் பொருளை ஈட்டவேண்டும்; அவனுடைய பகைவரின் செருக்கைக் கெடுக்கவல்ல வாள், அதைவிடக் கூர்மையானது வேறு இல்லை என்பதாகும். அதற்காக, எல்லாத் தமிழ் அரசியல்வாதிகளும் பொருளீட்டுவது பற்றிச் சிந்திப்பதில்லை என்று சொல்லிவிடவும் முடியாது. சிலர் தமக்கும் தம்மக்களுக்கும் (அதாவது, அவர்களது பிள்ளைகளுக்கு) என, நிறையவே பொருளீட்டிக் கொண்டிருக்கிறார்கள். எத்தனை ஏக்கர் நிலங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்று, அந்தந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் நன்கறிவார்கள். ஆனால், அவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் மக்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாகவே இருக்கிறார்கள். பொருளாதாரம் பற்றிச் சிந்திக்கவும் தம்மக்களை நேசிக்கவும், கொஞ்சம் அறிவும் நிறைய நல்லெண்ணமும் மிகுந்த தீர்க்கதரிசனமும் முழுமையான நேர்மையும், கொண்ட அரசியல்வாதிகள் தேவை. அது இன்று அரிதிலும் அரிதாகவே காணப்படுகிறது. இங்கு அரசியலில் உள்ள பலருக்கு, அரசியலை விட்டால் வேறு வயிற்றுப்பிழைப்பு இல்லை என்ற நிலையிலேயே, தமிழர் அரசியல் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஆகவேதான், தம்பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ளவதற்கான அரசியலை, அவர்கள் முன்னெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இரா. சம்பந்தன், ம.ஆ. சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற ஒரு சிலரைத் தவிர்த்து, மற்றையவர்களுக்குத் தாம் என்ன பேசுகிறோம் என்று கூடத் தெரியுமா என்ற ஐயம், அவர்களது பேச்சைக் கேட்கும் போது எழுகிறது. மக்களது உணர்வுகளைத் தட்டியெழுப்ப எதையாவது பேசிவிட வேண்டியது. தமிழ்த் தேசியத்துக்கு, இப்போது அவசர அவசியமாகியுள்ள ‘விடுதலை’ இத்தகைய கேவலமான அரசியல்வாதிகளிடம் இருந்தான விடுதலையே ஆகும். நிற்க! பொருளாதார மீட்சிக்கான வழி என்ன? இது மிகமுக்கியமான கேள்வி ஆகும். இதற்குப் பதில் உற்பத்தி. வடக்கு-கிழக்கின் உள்ளூர் உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும். பொருட்கள், சேவைகள் என, அங்கு உற்பத்தியைப் பெருக்குவதும் வணிகத்தை மேம்படுத்துவதும் மட்டுமே, எதிர்கால வளர்ச்சிக்கான ஒரே வழியாகக் காணப்படுகின்றது. தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் மக்களிடம் மீண்டும் மீண்டும் எடுத்துச்சொல்ல வேண்டிய கருத்து, உற்பத்தியைப் பெருக்குவதும் வணிகத்தை மேம்படுத்துவதும் ஆகவே இருக்க வேண்டும். மற்றவர்களின் உதவிகளிலும், கருணைப்பார்வையிலும் தங்கியிருக்கும் மக்கள் கூட்டமொன்று, அந்தத் தங்கியிருப்பிலிருந்து வௌியேவரும் வரை தப்பிப்பிழைக்கலாமேயொழிய வளர முடியாது. ‘வீழ்வது வெட்கமல்ல; வீழ்ந்து கிடப்பதுதான் வெட்கம்’. வீழ்ந்த தமிழினம், எழுச்சி காண்பதற்கான ஒரே வழி, பொருளாதார மேம்பாடு மட்டும்தான். அதனால்தான், ஒரு தேசத்தைக் கட்டி எழுப்புவதிலும் பொருளாதாரம் என்பது முக்கியம் பெறுகிறது. ‘பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள்’ என்ற வள்ளுவன் வாக்கு ஞாபகமிருக்கட்டும். உற்பத்தியை எப்படிப் பெருக்குவது? குறித்த நிலப்பரப்பிலுள்ள வளங்கள் என்ன என்ற புரிதல் முதலில் ஏற்பட வேண்டும். வளம் என்பது, இயற்கை வளம் மட்டுமல்ல; மனித வளமும் செயற்கை வளங்களும் உள்ளடங்கும். அடுத்து, அந்த வளங்களை வினைத்திறனாகப் பயன்படுத்தி, சந்தையில் கேள்வியுள்ள, கேள்வியை உருவாக்கக்கூடய உற்பத்தியை எப்படி மேற்கொள்வது என்று சிந்திக்க வேண்டும். மிக முக்கியமாக மூலதனத்தைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் பற்றி சிந்திக்க வேண்டும். மூலதனத்தைக் கவர்ந்திழுக்க, முதலீட்டாளர்களின் கவனத்தையும் ஆர்வத்தையும் கவர்ந்திழுக்க வேண்டும். அதற்கு உட்கட்டமைப்பு வசதிகள், முதலீட்டு ஊக்குவிப்பு வசதி வாய்ப்புகள் எல்லாம் அவசியம். இந்த இடத்தில்தான், உலகெங்கும் பரவி வாழும் புலம்பெயர் தமிழ் மக்களின் உதவி, இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் அவசியமாகிறது. வடக்கு-கிழக்கில் முதலிடுவதும் அங்கு உற்பத்தியைப் பெருக்குவதும் அங்கு பொருளாதார மீட்சிக்கு உதவுவதும்தான், புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழ்த் தேசத்துக்குச் செய்யக் கூடிய பேருதவி. உங்கள் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும், கடந்தகாலத்துக்கான நியாயம் தொடர்பானதே ஆகும். ஆனால், எதிர்காலத்தைத் தொலைத்துவிட்டு, கடந்த காலத்துக்கான நியாயத்தைத் தேடுவது என்ன பயனைத் தந்துவிடும்? உண்மையாகத் தன் தாயகத்தையும் தன் தேசத்தையும் நேசிப்பவன், அதன் எதிர்காலத்தையும் நிரந்தர இருப்பையும் நீண்ட நிலைப்பையும் பற்றியே அதிகம் அக்கறை கொள்வான். உற்பத்தியைப் பெருக்குவதில், முதலீட்டைப் போலவே உழைப்பின் பங்கும் முக்கியமானது. வௌிநாடு போய், அங்கேயே குடியேறிவிட வேண்டும் என்பதையே, வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டுள்ள இளையோர் கூட்டம் உள்ள நாடும் தேசமும் ஒரு போதும் முன்னேறப்போவதில்லை. தமிழ்த் தேசத்தின் பெரும் பின்னடைவுக்கு முக்கிய காரணம், உழைக்கும் படையின் வெளியேற்றம் ஆகும். எவ்வளவு அரிய மூளைவளம், இங்கிருந்து வௌியேறிவிட்டது; வௌியேறிக்கொண்டிருக்கிறது. உடலிலிருந்து புது இரத்தம் வௌியேறுவதைப் போன்ற நிலை இது. நோய்கள் பீடித்த உடலாகத்தான் அந்த உடல் காணப்படும். அந்த உடல் எப்படி வாழும்? ஆனால், நாட்டிலிருந்து வௌியேற விரும்பும் இளைஞர்களை மட்டும் பிழை சொல்லிவிட முடியுமா? அவர்களது எதிர்காலம் பற்றி, எந்த நம்பிக்கையும் கொடுக்க முடியாத அரசியல்வாதிகள் நிறைந்த இடத்தில், எந்த நம்பிக்கையில் அவர்கள் இங்கே வாழ்வது? ஆகவேதான், இங்குள்ள உழைக்கும் படையை, மூளைவளத்தைத் தக்கவைப்பதற்கு மட்டுமல்லாது, மூலதனத்தை ஈர்த்தெடுக்கவும் வடக்கு-கிழக்கை பொருளாதாரப் பின்னடைவிலிருந்து மீட்கவும், தீர்க்கதரிசனம் மிக்க புதிய அரசியல்பாதை, தமிழ்த் தேசிய அரசியலில் வகுக்கப்படவேண்டும். அதுவே, தமிழ் மக்களின் பொருளாதார மீட்சிக்கான பிள்ளையார் சுழியாக அமையும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழர்களின்-பொருளாதார-மீட்சி/91-282434
  4. தலைமைகளும் தாழ்வுச்சிக்கலும் என்.கே.அஷோக்பரன் Twitter: @nkashokbharan உத்தியோகபூர்வமான நிலைமையைப் பொறுத்தவரையில் நாடானது முழு முடக்கத்தில் இருக்கிறது. இதற்கு அத்தியாவசிய சேவைகள் மட்டும் விதிவிலக்கு. ஆனால் வீதிகளில் வாகனங்கள் அதிகமாக பயணித்துக்கொண்டிருக்கின்றன. சில முக்கிய வீதிச் சந்திகளில் வாகன நெரிசலையும் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. இவையெல்லாம் அத்தியாவசிய சேவைக்கானவையா என்ற கேள்வி வீட்டுக்குள் ஒரு மாதகாலத்தைக் கடந்தும் முடங்கியிருக்கும் சாதாரண இலங்கைக் குடிமகனுக்கு எழும் கேள்விகள். மறுபுறத்தில், இராஜங்க அமைச்சரான லொஹான் ரத்வத்தே, சிறைக்கு சென்று கைதிகளை மிரட்டியதாக செய்திகள் தெரிவித்தன, அதன்பின்னர் அவர் பதவியும் விலகினார். இன்னொரு புறத்தில் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ, அறுகம்பே கடலில் விளையாடும் புகைப்படங்களை தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிந்துள்ளார். ஜனாதிபதி ஜ.நா. பொதுச்சபைக் கூட்டத்தைச் சாட்டி அமெரிக்கா சென்றுவிட்டார், பிரதமர் ராஜபக்‌ஷ யாருமறியா ஒரு கூட்டத்தில் கலந்து பேசுவதைச் சாட்டி தனது பாரியார், இரண்டாவது மகன், மருமகள், வௌிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸூடன் இத்தாலி சென்று வந்துவிட்டார். இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர, ரஷ்யாவில் அங்கு நடக்கும் தேர்தல்களைக் கண்காணிக்கும் சாட்டில் ரஷ்யா சென்று வந்துவிட்டார். இதையெல்லாம் பார்க்கும் சாதாரண இலங்கைக் குடிமகன், தான் மட்டும் முடக்கப்பட்டிருப்பதை எண்ணிக் கவலை கொள்கிறான். அந்நியச் செலாவணி தட்டுப்பாடு என்கிறார்கள். உண்மை. அந்நியச் செலாவணியைப் பாதுகாக்க, இறக்குமதியைக் கட்டுப்படுத்துகிறார்கள். ஓரளவு நியாயமுண்டு. இலங்கையின் பொருளாதாரத்தைப் பாதுகாக்க, மக்கள் ஒருவேளை உணவைத் தியாகம் செய்ய வேண்டுமென்று ஆளுங்கட்சியின் முக்கியஸ்தர் கருத்து வெளியிடுகிறார். அது சரி. ஆனால் என்னத்தை வெட்டி விழுத்துவதற்கான அந்நியச் செலாவணியைச் செலவு செய்து பிரதமர் இத்தாலி சென்றார்? ஜனாதிபதி அமெரிக்கா சென்றார்? என்று ஒருவேளை உணவைத் தியாகம் செய்யக் கேட்டுக்கொள்ளப்பட்ட பொதுமகன் ஏக்கத்தோடு கேள்வி கேட்கிறான். பிரதமர் இத்தாலி போனதால், இலங்கைக்கு ஏதேனும் நன்மை விளைந்ததா? எதுவுமில்லை. ஆகவே பொதுமகனைப் பொறுத்தவரையில் இது பொதுப்பணத்தில் சென்ற உல்லாசப் பயணமே! மறுபுறத்தில், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய, ஜ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். கொவிட்-19 ஒருபுறம், பொருளாதார நெருக்கடி மறுபுறம், நாடோ முடக்கத்தில், அத்தியாவசியப் பொருட்கள் பல சந்தையில் கிடைப்பதில் சிக்கல் நிலை என்று நாடு அல்லோலகல்லோலப்படுகையில் இந்த அமெரிக்கப் பயணம் தேவைதானா? இங்கிருந்து சாதிக்க முடியாதது எதை அங்கே போய் சாதித்தார்? இவையும் பால்மா கிடைக்காமல், நல்ல அரிசி கிடைக்காமல், மற்றைய பொருட்களும் விலைகூடியுள்ள நிலையில், செய்வதறியாது நாட்டின் முடக்கத்தினுள் முடக்கப்பட்டுள்ள சாதாரண பொதுமகனுக்கு எழும் கேள்விகள். இந்த நிலைமையில், அமெரிக்கா போன ஜனாதிபதி, அங்கே போய் என்ன பேசினார்? இலங்கை போன்ற வளர்ந்துவரும் நாடுகள், பெருந்தொற்றிலிருந்து விடுபட உதவும் வகையிலான சர்வதேசப் பொறிமுறைகள் அவசியம் என்று கேட்டுக்கொண்டார். பொருளாதார உதவிக்கு ‘சர்வதேசப் பொறிமுறை’ தேவையாம். மனித உரிமைகள், நிலைமாறுகால நீதி ஆகியவற்றிற்கு கசப்பான ‘சர்வதேசப் பொறிமுறை’, பொருளாதார உதவிக்கு மட்டும் தேவையாம். சுருக்கமாகச் சொன்னால், எங்களுக்கு காசு தாறதுக்கு சர்வதேசப் பொறிமுறை தேவை; ஆனால், எங்களைக் கேள்வி கேட்பதற்கு, எங்களைப் பொறுப்புக் கூற வைப்பதற்கு, மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு சர்வதேசப் பொறிமுறை என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆங்கிலத்தில் இதனை hypocrisy என்று சொல்வார்கள். தமிழில் இதற்கு நிகரான நல்ல சொல் உருவாக்கப்பட வேண்டும். பொருளாதார ரீதியில் நெருக்கடி நிலையை சந்திக்கும் நாடுகளுக்கு உதவவே, ஏலவே சர்வதேச நாணய நிதியம் என்ற அமைப்பு உண்டு. இலங்கையும் அவர்களின் உதவியை நாடலாம். ஆனால், அவர்கள் சும்மா காசைத் தூக்கித் தர மாட்டார்கள். இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஒரு திட்டத்தை முன்வைப்பார்கள், அதனை நடைமுறைப்படுத்த சில நிபந்தனைகளை முன்வைப்பார்கள். காசு வேண்டும்; நிபந்தனைகள் வேண்டாம் என்ற அணுகுமுறையின் விளைவாகத்தான், இந்த அரசாங்கம் விடாப்பிடியாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதைத் தவிர்த்துக்கொண்டு, மத்திய வங்கியை பண நோட்டு அச்சிடும் அச்சகமாக மாற்றிக்கொண்டு வருகிறது. மறுபறத்தில், அமெரிக்க விஜயத்தின்போது, ஐ.நா செயலாளர் நாயகத்திடம் இனப்பிரச்சினையை உள்ளப்பொறிமுறை மூலம் தீர்ப்பது தொடர்பில் ‘தமிழ் டயஸ்போறா’வுடன் (புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன்) பேசத்தயார் என்று ஜனாதிபதி கூறியிருப்பதாக சில செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. நல்ல மாற்றம்! ஆனால், முதலில் இந்நாட்டு தமிழ் மக்கள், தமது பிரதிநிதிகளாத் தேர்ந்தெடுத்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி சந்திக்க வேண்டும். ஏற்கெனவே நடக்கவிருந்ததாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அறிவித்திருந்த சந்திப்பை, ஒத்திவைப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்திருந்தது. அது இன்னும் நடந்தபாடில்லை. முதலில் ஜனாதிபதி, தமிழ் மக்களின் பிரதிநிதிகளைச் சந்திக்கட்டும். பிறகு, புலம்பெயர்ந்தவர்களைச் சந்திக்கலாம். மேலும், ஐ.நா செயலாளர் நாயகத்திடம், “விடுதலைப் புலிகளோடு தொடர்பு பட்டவர்கள் என்று, சிறையில் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருப்போருக்கு பொதுமன்னிப்பு வழங்க நான் தயங்கமாட்டேன்” என்று ஜனாதிபதி கூறியிருப்பதாக சில செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், பொதுமன்னிப்பு என்பதெல்லாம் தேவையற்ற கருத்து. நீதிமன்றம் குற்றவாளிகளாகத் தீர்மானித்து தண்டனை வழங்கப்பட்டவர்களுக்குத் தான் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும். என்ன குற்றம் செய்தார்கள் என்று குற்றப்பத்திரமே சமர்ப்பிக்கப்படாத, நீதி விசாரணை நடக்காத, நீதிமன்றம் குற்றவாளிகளாகக் காணாதவர்களுக்கு அவர்கள் என்ன குற்றமிழைத்தார்கள் என்பதற்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும்? அரசினால், பயங்கரவாதத் தடுப்புச்சட்டம் என்ற கொடுஞ்சட்டத்தைப் பயன்படுத்தி அவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள். ஒன்றில் அவர்கள் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, நீதிப் பொறிமுறையிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட வேண்டும், அல்லது அவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும். இங்கு பொதுமன்னிப்பு என்று விடயம் எங்கே வருகிறது? இத்தனையையும் சொல்லிக்கொண்டு, நாடு முடக்கத்தில் இருக்கையில், யாழ்ப்பாணம் நல்லூரில் நினைவேந்தலைச் செய்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனை பொலிஸாரைக் கொண்டு கைது செய்து, வலுக்கட்டாயமாக இழுத்து வாகத்தில் ஏற்றி, பின்னர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்திருக்கிறது இந்த அரசாங்கம். கேட்டால், தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளை மீறினார் என்கிறார்கள். அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள், புடைசூழ எங்கும் பயணிக்கலாம்; விரும்பினால் கடலில் இறங்கி, நீர் விளையாட்டுகளிலும் ஈடுபடலாம்; வௌிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளலாம். ஆனால், அந்த நடவடிக்கைகளின் போதெல்லாம் மீறப்படாத தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகள், ஒரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் நினைவேந்தல் செய்தால் மட்டும் மீறப்படுகிறது என்ற அபத்தம், இரண்டு விடயங்களைச் சுட்டிக்காட்டி நிற்கிறது. முதலாவது, இந்த அரசாங்கமும் அதன் தலைமைகளும் மிகுந்த தாழ்வுச்சிக்கல் மனநிலையைக் கொண்டுள்ளார்கள். இரண்டாவது, அந்தச் தாழ்வுச்சிக்கலால், மிகுந்த பாதுகாப்பின்மை உணர்வைக் கொண்டுள்ளார்கள். இதன் விளைவாக, தமிழ் மக்களின் உணர்வுகளைத் தொடர்ந்து அவமதிக்கும் செயல்களை அவர்கள் முன்னெடுக்கிறார்கள். உண்மையில், இவர்கள் செய்யும் காரியங்கள், இவர்கள் விரும்பும் விளைவுகளுக்கு முற்றிலும் மாறான விளைவுகளையே எற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் அறிவுகூட இவர்களுக்குக் கிடையாது. இவர்கள் எதுவும் செய்யாமல் விட்டிருந்தால், கஜேந்திரன் நினைவேந்தல் செய்தது யாருக்குமே தெரியாது போயிருக்கும். அந்த நிலையில், அப்படி ஒரு நினைவேந்தலை தொடர்ந்து செய்வதற்கான அரசியல் தேவை கூட கஜேந்திரனுக்கு ஏற்பட்டிராது. ஆனால், இவர்களது இந்த நடவடிக்கை, தமிழ் மக்களிடம் இந்த நினைவேந்தலின் முக்கியத்துவத்தை பசுமரத்தாணிபோல அறுதியாகப் பதியவைக்கிறது. இது இவர்களுக்குப் புரியாது. ஏனென்றால், மூளையை ஆண்டவன் எல்லாருக்கும் கொடுத்திருக்கிறான், ஆனால் அதனுள் உள்ள அறிவை அப்படிக் கொடுப்பதில்லை. ரணில் விக்கிரமசிங்க போன்ற தலைவர்கள், இதுபோன்ற நினைவஞ்சலிகளைத் தடுக்காததன் காரணம் இதுதான். அதைத் தடுக்காதுவிட்டால், அதன் அரசியல் முக்கியத்துவம் குறைந்துவிடும். காலவோட்டத்தில் அது குறைந்த, மறக்கப்பட்டுவிடும். தாழ்வுச் சிக்கல் என்பது, தலைமைத்துவத்துக்கு முற்றிலும் முரணான குணம். தாழ்வவுச்சிக்கலில் உழலும் தலைமைகளைக் கொண்ட மக்கள் கூட்டம், என்றுமே உய்வடையப் போவதில்லை. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தலைமைகளும்-தாழ்வுச்சிக்கலும்/91-281801
  5. கொவிட்-19உம் தடுப்பூசிகளும் சில சிந்தனைகள் என்.கே. அஷோக்பரன் https://www.twitter.com/nkashokbharan இலங்கையில் கொவிட்-19 பெருந்தொற்று நோய்த் தொற்றாளர்கள் உத்தியோகபூர்வக் கணிப்புக்களின்படி ஐந்து இலட்சத்தைத் தாண்டியுள்ள நிலையிலும், கொவிட்-19 மரணங்கள் பதினோராயிரத்தை தாண்டிய நிலையில், கொவிட்-19 தடுப்பூசிகளை முழுமையானளவில் இலங்கையின் சனத்தொகையில் 50 சதவீதத்தினருக்கு வழங்கிய மைல்கல்லை சில தினங்கள் முன்பு இலங்கை எட்டிப்பிடித்துள்ளது. செய்திக்குறிப்புக்களில் அறிக்கையிடப்பட்ட உத்தியோகபூர்வ தரவுகளின்படி, மேற்குறித்த மைல்கல்லை இலங்கை எட்டிப்பிடித்த நாளவில், 8,973,670 பேர் சினோர்ஃபாம் தடுப்பூசிகளும், 949,105 பேர் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளும், 758,282 பேர் மொடேர்னா தடுப்பூசிகளும், 243,685 பேர் ஃபைசர்-பயோன்டெக் தடுப்பூசிகளும், 43,453 பேர் ஸ்புட்னிக் V தடுப்பூசிகளும் முழுமையானளவில் பெற்றுக்கொண்டுள்ளனர். இதே வேகத்தில் இலங்கை தொடர்ந்து தடுப்பூசிகளை வழங்குமானால் விரைவில் 80 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் முழுமையாக தடுப்பூசிகளைப் பெறும் இலக்கை இலங்கை அடையும். தனது சனத்தொகையில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் முழுமையான தடுப்பூசிகளைப் பெற்ற நிலையில், செப்டம்பர் 10 ஆம் திகதி, சகல கொவிட்-19 கட்டுப்பாடுகளையும் டென்மார்க் தளர்த்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. கொவிட்-19 கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டிய அத்தியாவசியத் தேவையும், இன்றியமையாத சூழலும் இலங்கைக்கிருக்கிறது. இலங்கையின் பொருளாதாரம் சரிவின் விளிம்பில் தொங்கிக்கொண்டிருக்கிறது. நாடு திறக்கப்பட்டு, உற்பத்தி, வணிகத்துறைகள் முழுமூச்சுடன் இயங்கத்தொடங்குவதுடன், நாட்டிற்கு கணிசமான வருவாயைக் கொண்டுவரும் உல்லாசப்பிரயாணத்துறை விரைவில் மீளியங்காதுவிட்டால், பொருளாதார ரீதியில் இலங்கை மிக மோசமான விளைவுகளைச் சந்திக்கும் எல்லையில் நிற்கிறது. ஆகவே எப்படியாவது தடுப்பூசிகள் பெறத்தக்க சனத்தொகையில் மற்றப்பாதியிலுள்ளவர்களுக்கும் தடுப்பூசி வழங்குவது இலங்கையின் முன்னுரிமைத் திட்டமாக இருக்கவேண்டும் அதனடிப்படையில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது அண்மையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அடுத்ததாக பாடசாலை மாணவர்களுக்கு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இந்த நிலையில் கொவிட்-19 தடுப்பூசி சம்பந்தமான இன்னொரு சவால் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது. 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டாலும், கொழும்பு நகரில், 20-29 வயதிற்கிடைப்பட்டோரில் 20 வீதமானவர்கள் மட்டுமே தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டுள்ளதாக அண்மையில் ஊடகங்களுக்கு கருத்துவௌியிட்ட கொழும்பு மாநகரசபையின் பிரதான மருத்துவ உத்தியோகத்தர் வைத்தியர். றுவன் விஜேமுனி குறிப்பிட்டிருக்கிறார். இளைஞர்களிடையே கொவிட்-19 தடுப்பூசி பெறுவதற்கான முனைப்பு குறைவாக உள்ளதை இது சுட்டிக்காட்டி நிற்கிறது. குறிப்பாக சனநெருக்கடி கூடிய தலைநகர இளைஞர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்வதில் அக்கறையற்றிருப்பது அவர்களை மட்டுமல்ல, மற்றவர்களையும் பாதிப்பதோடு, இந்த சமூகத்திலிருந்து கொவிட்-19-ஐ இல்லாதொழிப்பதில் பெரும் முட்டுக்கட்டையாக அமைகிறது. ஒரு தொற்றுநோயை சமூகத்திலிருந்து இல்லாதொழிப்பதில் தடுப்பூசியின் வீரியம் என்பது அந்தத் தடுப்பூசியை அந்த சமூகத்தில்வாழும் அனைவரும் பெற்றுக்கொள்வதில் பெரிதும் தங்கியிருக்கிறது. சிலரேனும் அந்தத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாவிட்டால், அவர்கள் மூலம் அப்பெருந்தொற்று மீண்டும் தலைதூக்கும். இதற்கு பல உதாரணங்கள் உண்டு. தடுப்பூசிகளின் வரத்தால், பல ஆண்டுகள் சமூகத்தில் மறைந்துபோன தொற்று நோய்களான measles, mumps போன்றவை, அமெரிக்காவிலுள்ள தடுப்பூசி-மறுப்பு கலாசாரவாதிகளின் தடுப்பூசி மறுப்பின் விளைவாக மீண்டும் அமெரிக்க நகரங்களில் பரவத்தொடங்கிய உதாரணங்களை நாம் காணலாம். ஆகவே தடுப்பூசி பெற்றுக்கொள்ளாமை என்பது அதனைப் பெற்றுக்கொள்ளாதவர்களின் ஆரோக்கியத்தையும், உயிரையும் மட்டுமல்லாது, அவரது குடும்பத்தவர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர்கள், அவர்கள் வாழும் சமூகத்தவர், நகரத்தவர், நாட்டவர் என அனைவரையும் பாதிக்கும். ஆனாலும், ஒருவருடைய விருப்பிற்கு மாறாக வற்புறுத்தியோ, திணித்தோ தடுப்பூசிகளை வழங்க முடியாது. அத்தகைய செயல் ஜனநாயகத்திற்கும், மனித உரிமைகளுக்கும் உவப்பானதல்ல என்பது ஒருபுறமிருக்கு, அது மருத்துவ விழுமியங்களுக்கு முரணாணது. ஆகவே தடுப்பூசிகள் பற்றிய நம்பிக்கையை மக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்துவதுதான் இந்த சவாலை எதிர்கொள்வதற்கான பொருத்தமான தந்திரோபாயமாக அமையும். இதுவரை 11,000-த்துக்கும் அதிகமான உயிர்களை இலங்கையில் மட்டும் காவு வாங்கியுள்ள இந்த கொவிட்-19 பெருந்தொற்றிடமிருந்து உயிர்களைப் பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று மருத்துவர்களும், விஞ்ஞானிகளும், நிபுணர்களும் கெஞ்சாத குறையாக வேண்டிக்கொண்டிருக்கும் இந்த சூழலில்தான், இளைஞர்களிடையே தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள ஆர்வமுனைப்பு குறைவாக இருக்கிறது என்ற செய்தி வந்துள்ளது. இத்தகைய இளைஞர்களிடையே, அமெரிக்க பாணியிலான தடுப்பூசி மறுப்பாளர்கள் ஒரு கொஞ்ச அளவில் இருந்தாலும், பொதுப்பார்வைக்கு, பெரும்பாலான இந்த இளைஞர்களிடையெ தடுப்பூசி மறுப்புச் சிந்தனைகள் இருப்பதாகத் தெரியவில்லை, மாறாக தாம் விரும்பும் தடுப்பூசி வகையைப் பெற்றுக்கொள்வதற்கு காத்திருக்கும் இளைஞர்கள்தான் கணிசமாக இருக்கிறார்கள். இது தடுப்பூசி அரசியல் பற்றி பேச வேண்டிய நிலையை உருவாக்கியிருக்கிறது. இதுவரை இலங்கையில் முழுமையான கொவிட்-19 தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களில் அண்ணளவாக 90 இலட்சம் பேர் சீனத்தயாரிப்பான சீனோர்ஃபாம் தடுப்பூசியையும், அண்ணளவாக 20 இலட்சம் பேர் ஏனைய தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர். இலங்கைக்கு முதன்முதலாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை தனது “வக்சின் மைத்ரீ” திட்டத்தின் கீழ் இந்தியா வழங்கியிருந்தாலும், அதன் பின்னர் இந்தியாவிலிருந்து குறித்த தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை உருவாகியிருந்தமையினால், முதலாவது அஸ்ட்ராசெனகா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்கள், இரண்டாவது ஊசியைப் பெற்றுக்கொள்ள பலமாதகாலம் காத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. கடைசியில், ஜப்பானின் கருணைப் பார்வையினால், பலருக்கும் அஸ்ட்ராசெனகாவின் இரண்டாவது ஊசி கிடைத்தது. அமெரிக்கா மிகக் குறைந்தளவில் ஃபைசர்-பயோன்டெக் தடுப்பூசிகளை உலகளவிலான கோவக்ஸின் திட்டத்தின் கீழ் வழங்கியிருந்தாலும், சீனாதான் தனது தயாரிப்பான சினோஃபாம் தடுப்பூசியை அன்பளிப்பாகவும், பின்னர் விலைக்கும் இலங்கைக்கு வழங்கியிருந்தது. கிட்டத்தட்ட 90 இலட்சம் இலங்கையர்கள் இந்த சினோஃபாம் தடுப்பூசியை இதுவரை பெற்றுக்கொண்டிருந்தாலும், சிலர், குறிப்பாக இளைஞர்கள் மேலைத்தேய தடுப்பூசி கிடைக்கும் வரை தடுப்பூசியைப் பெறாது காத்தக்கொண்டிருக்கிறார்கள். இதனை வெறும் மேலைத்தேய மோகமென்றும், அறியாமையென்றும் சாடுவதால் யாருக்கும் எந்தப்பயனுமில்லை. ஆகவே சீன தடுப்பூசிகள் மீது எவருக்காவது நம்பிக்கையீனமிருந்தால், அதனைக் களைய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கும், மருத்துவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும், நிபுணர்களுக்கும் இருக்கிறது. “சீனப்பொருள்” என்றால் இரண்டாந்தரமான, தரமற்ற பொருட்கள் என்ற விம்பம் பல காலமாக இருந்துவருகிறது. அந்த நிலையைத்தாண்டி சீனா வளர்ந்து பலவருடங்களாகியும், அந்த விம்பம் முழுமையாகத் தளரவில்லை. சீனாவின் அந்த நிலை மாறிவிட்டது என்பதற்கு, உலகின் மிகத்தரமான வணிகநாமங்களான அமெரிக்க மற்றும் ஜப்பான் வணிகநாமங்கள் கூட சீனாவிலேயே தமது உற்பத்தியை முன்னெடுப்பது, உற்பத்தித்துறையில் சீனா கண்டுள்ள வளர்ச்சியை வௌிக்காட்டி நிற்கிறது. தனது தேவைக்கான தடுப்பூசி உற்பத்தியைச் செய்யவே இந்தியா தடுமாறிக்கொண்டிருக்கிற சூழலில், தன்னாட்டிற்கும், உலகத்திற்கும் என பெருமளிவல் தடுப்பூசிகளை உற்பத்திசெய்து வெற்றிகரமாக தொடர்ந்து அதனை வழங்கிக்கொண்டிருக்கிறது சீனா. ஆகவே “சீனப்பொருள்” பற்றிய விம்பத்தை மாற்றியமைப்பது சீனாவின் பொறுப்பாக இருந்தாலும், இன்றைய சூழலில் தடுப்பூசிகளைப் பொறுத்தவரையில், வெற்றிகரமாக 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் முழுமையான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளும் இலக்கை இலங்கை அடைவதற்கு, சீன தடுப்பூசிகள் பற்றி ஏதேனும் அவநம்பிக்கை மக்களிடமிருக்குமானால், அதனை முறையாக அணுகி, சரி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இலங்கை அரசாங்கத்திற்கும், மருத்துவ சுகாதாரத்துறைக்கும் இருக்கிறது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கொவிட்-19உம்-தடுப்பூசிகளும்-சில-சிந்தனைகள்/91-281316
  6. சூடு கண்ட பூனை என்.கே. அஷோக்பரன் பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ், ஜனாதிபதியால் அவசரகால நிலை, 2021 ஓகஸ்ட் 30ஆம் திகதி பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் வழங்கலை உறுதிசெய்யும் காரணத்தின் நிமித்தமாக, அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவசரகால நிலை பிறப்பிப்பு என்பது, ஜனாதிபதியின் கையில் கிட்டத்தட்ட எல்லாம் வல்ல அதிகாரத்தைக் கையளிப்பது போன்றதாகும். இதன் பாதகங்கள் பற்றி, ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண, ஜனாதிபதி சட்டத்தரணியும் எம்.பியுமான எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் நிறையவே, பொதுவௌியில் பதிவு செய்து வருகிறார்கள். இந்த இடத்தில், இரண்டு கேள்விகள் எழுகின்றன. முதலாவது, இந்த அவசர கால நிலைப் பிரகடனம் அவசியம் தானா? இரண்டாவது, உணவுத் தட்டுப்பாடு ஒன்று ஏற்படும் என்ற அச்சம், இலங்கை மக்கள் மத்தியில் எவ்வாறு பரவ ஆரம்பித்தது? கொவிட்-19 பெருந்தொற்று, இலங்கையைப் பீடித்து ஒன்றரை ஆண்டுகளைத் தாண்டியும், ‘கொவிட்-19’ என்ற பெருஞ்சவாலை எதிர்கொள்வதற்காக எந்தவொரு பொழுதிலும், அவசரகாலநிலை பிறப்பிக்கப்படவில்லை. அது, அவசியமில்லை என்று, அரசாங்கம் சுட்டிக்காட்டி இருந்தது. இதற்கான காரணத்தை, தனது கட்டுரையொன்றில் விவரிக்கும் கலாநிதி விக்கிரமரட்ண, ‘கொவிட்-19 பெருந்தொற்று ஏற்பட்ட ஆரம்ப காலத்தில், பாராளுமன்றத்தைக் கலைத்து, தேர்தல் வைப்பதில் அரசாங்கம் குறியாக இருந்தது. ஏனெனில், அவசரகாலச்சட்டம் பிறப்பிக்கப்பட்டால் பாராளுமன்றத்தில் அதற்கான அங்கிகாரத்தைப் பெற்றுக்கொள்ளுதல் அவசியமாகிறது. அன்றைய பாராளுமன்றத்தில், இந்த அரசாங்கத்துக்குப் பெரும்பான்மை இருக்கவில்லை. அத்தோடு, தேர்தல் நடத்துவதில் அரசாங்கம் குறியாக இருந்தது’ என்று சுட்டிக்காட்டியிருந்தார். ஆகவே, கலாநிதி விக்கிரமரட்ணவின் கருத்தின்படி, ஒருவேளை அன்று, பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு அறுதிப் பெரும்பான்மை இருந்திருக்குமானால், கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக அவசரகாலநிலை பிறப்பிக்கப்பட்டிருக்கும். ஆனால், கொவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்ள, அவசரகாலநிலை தேவையில்லை என்று சொன்ன இந்த அரசாங்கத்துக்கு உணவு வழங்கலை உறுதிசெய்ய, அவசரகாலநிலை தேவையா என்ற கேள்வி இங்கு எழுவது தவிர்க்க முடியாதது. இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடுவதில், மேற்சொன்ன இரண்டாவது கேள்வி முக்கியம் பெறுகிறது. உணவுத்தட்டுப்பாடு ஒன்று ஏற்படும் என்ற அச்ச நிலை, இலங்கைக்கு ஏன் வந்தது? கொவிட்-19 பெருந்தொற்று உலகளாவிய பொருட்கள், சேவைகள் வழங்கல் விநியோகத்தைக் கணிசமாகப் பாதித்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், இதைத் தாண்டியும் சிங்கப்பூர் போன்ற உணவுக்காக இறக்குமதியை மட்டுமே நம்பிய நாடுகள், சுமூகமாக இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன என்பதும், இங்கு கவனிக்கப்பட வேண்டியது. அப்படியானால், உள்ளூரில் உணவு உற்பத்தி நடக்கும் இலங்கை போன்ற நாட்டில், உணவுத் தட்டுப்பாட்டு அச்ச நிலை வரக் காரணமென்ன? உணவு உற்பத்தியில், இலங்கை தன்னிறைவு பெற்ற நாடல்ல. ஆகவே, உணவுக்காக இறக்குமதியிலும் கணிசமாக இலங்கை தங்கியிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர், உள்ளூர் உற்பத்தியை ஊக்கப்படுத்துகிறோம் என்ற பெயரிலும், டொலர் கையிருப்பை தக்கவைக்கவும் அரசாங்கம் இறக்குமதித் தடைகளை அறிமுகப்படுத்தியது. இதில், பொதுமக்களின் கடும் விசனத்துக்கு உள்ளான தடையென்றால், மஞ்சள் இறக்குமதிக்கான தடையைக் குறிப்பிடலாம். தண்ணீரில் கரைத்து வீட்டுக்குத் தௌிக்குமளவிற்கு மலிவாக இருந்த மஞ்சள், சில நாட்களில் ஒரு கிலோ 7000-வைத் தாண்டிய ஒரு விலைமதிப்பு மிக்க பொருளாக இந்த இறக்குமதித் தடையின் பின்னர் மாறிவிட்டது. உள்நாட்டு உற்பத்தி அதிகரித்ததும், விலை குறையும் என்று அன்று சொன்ன அரசியல்வாதிகளின் கருத்து, அவர்களது வாக்குறுதியைப் போலவே இன்று பல மாதங்கள் கடந்தும் பொய்யாகவே இருக்கிறது. இறக்குமதியைத் தடைசெய்தால், உள்ளூர் உற்பத்தி அதிகரிக்கும் என்ற பத்தாம் ஆண்டு மாணவனின் பொருளியல் அறிவளவு ஞானத்தில் சிந்தித்து இறக்குமதியைத் தடைசெய்துவிட்டு, அதன் பிறகு உள்நாட்டு உணவு உற்பத்தியின் ஆணிவேரான இரசாயன உர இறக்குமதியையும் இந்த அரசாங்கம் தடை செய்தது. டொலர் கையிருப்பைப் பாதுகாத்தல் அதற்கான ஒரு காரணமாகச் சொல்லப்பட்டது. இப்போது, எப்படி உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது? பத்தாம் ஆண்டு மாணவனின் பொருளியல் அறிவளவான ஞானம், திக்கி விக்கி நிற்கிறது. இறக்குமதியை அனுமதித்தால், டொலர் கையிருப்பு குறையும். டொலர் கையிருப்பைப் பாதுகாக்க, இறக்குமதியைத் தடைசெய்தால், உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் நிலை வரும். அப்படியானால் என்னதான் செய்வது? உலக நாடுகளில் இத்தகைய பொருளாதார, நிதி நெருக்கடிகள் எழும்போது, அவற்றுக்கு உதவி செய்யவும், வழிகாட்டவும்தான் சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புகள் இருக்கின்றன. இலங்கை, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பல மாதங்களுக்கு முன்பே நாடியிருக்க வேண்டும். அதனூடாகத் திட்டமிட்ட முறையில், பொருளாதார மறுசீரமைப்புத் திட்டங்களை முன்னெடுத்து, இலங்கையின் பொருளாதாரத்தை பெரும் வீழ்ச்சியிலிருந்து பாதுகாப்பது முடியாத காரியமல்ல. ஆனால், வறட்டுப் பிடிவாதமும் ‘நான்’ என்ற அகங்காரமும் கொண்ட தலைமைகள், பொருளாதார மறுசீரமைப்பு திட்டங்களைத் தவிர்த்து, தற்காலிக கடன்களை அங்கே கொஞ்சம், இங்கே கொஞ்சம் என்று வாங்கி, வெறுமனே சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி, அடிப்படை பொருளியல் அறிவு இல்லாத, ஆனால் அதிகாரத் திமிரும் வறட்டுப் பிடிவாதமும் ஆணவமும் கொண்ட தலைமைகளின் அடுத்தடுத்த பிழையான பல முடிவுகள்தான், இலங்கையின் இன்றைய பொருளாதார நிலைக்குக் காரணம். இங்கு பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலையும், உணவு வழங்கல் எனும் பொருளியல் பிரச்சினையைத் தீர்க்காது. ‘மடிவற்றிய மாட்டை, எவ்வளவு அடித்தாலும் சூடு போட்டாலும், அது பால் கறக்காது’ என்று, அதன் முட்டாள் உரிமையாளனுக்கு யார் சொல்லிப் புரிய வைப்பது? 1970களிலும் இலங்கை இதே போன்றதொரு பொருளாதார நிலையை எதிர்கொண்டது. அப்போதும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவென ஆட்சியிலிருந்த கூட்டம் இறக்குமதியைத் தடை செய்து, மூடிய பொருளாதாரத்தை உருவாக்கியது. அன்றைய காலத்தில் வாழ்ந்த முன்னைய தலைமுறையிடம், ஐந்து மணிக்கு பாண் வாங்க வரிசையில் காத்துக்கிடந்த கதைகளையும் உடுப்புத் தைக்க துணிவாங்க மாதக்கணக்காக காத்திருந்த கதைகளையும் அந்த நரக அனுபவங்களையும் கேட்டுப்பாருங்கள்! ஏழு வருடங்கள் இலங்கையை இருண்ட காலத்துக்குள் தள்ளிய சிறிமாவினதும் ‘தோழர்’களினதும் கொடுமையான ஆட்சி அது. அன்றும் ‘கலாநிதிகள்’ பல பேர் அந்த ஆட்சியில் இருந்தார்கள். அரிசிச் சோறும் கறியும் உண்டு வாழ்ந்த இலங்கையர்களை, மரவள்ளிக்கிழங்கு தின்று உயிர்பிழைக்க வைத்த ‘அறிவுஜீீவிகள்’ அவர்கள். உலகநாடுகள் ஒன்றிலொன்று தங்கிய, பொருளாதார சூழல் உருவாகிவிட்ட பின்னர், நாம் இறக்குமதியை தடை செய்வோம்; அதனூடாக உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்போம் என்பதெல்லாம் காலாவதியாகிப்போன பொருளியல் சிந்தனைகள். ஏற்றுமதி, இறக்குமதி சமநிலையைத் தக்கவைக்க, ஏற்றுமதிக்கான கேள்வியை அதிகரிப்பதும், ஏற்றுமதிக்கான வழங்கலை அதிகரிப்பதும் தான் மிகச் சிறந்த, நன்மை பயக்கின்ற உபாயமாகும். அதற்கான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். உணவு உள்ளிட்ட ஏறத்தாழ எல்லா உற்பத்திகளுக்கும் வௌிநாடுகளை நம்பிய சிங்கப்பூர், மாலைதீவு போன்ற நாடுகளால், தமது இறக்குமதியைச் சமாளிக்கக் கூடியளவுக்கு டொலர் வரவைத் தக்கவைக்க முடியுமென்றால், இயற்கை வளங்களும் மனித வளமும் மிக்க இலங்கையால், அது முடியாது போனால், இலங்கையில் நிர்வாகத்தில் மிகப் பெரிய பிழை இருக்கிறது என்று தான் அர்த்தம். இலங்கையின் அரசியல் தலைவர்களும் இலங்கையின் மக்களும் காலாவதியாகிப்போன பொருளியல் சிந்தனைகளிலிருந்து வௌிவர வேண்டும். 1970களில், ஒரு முறை கண்ட சூடு, இலங்கை என்ற பூனைக்குப் போதுமாக இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால், வட-கொரியாவைப் போன்றதொரு நாடாகத் தான் நாம் ஆவோம். ஆனால், வடகொரியாவிடம் அணு ஆயுதமாவது இருக்கிறது. நாம் எதுவுமற்ற ‘கோமாளி’ நாடாகத்தான் ஆகிவிடுவோம். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சூடு-கண்ட-பூனை/91-280356
  7. இழப்பிலிருந்து மீள்தல் என்.கே.அஷோக்பரன் கொவிட்-19 பெருந்தொற்றினாலான இறப்புக்கள் தினசரி 200 என்பதைத்தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. தற்போதைய சூழலில் தினசரி 4000-ற்கும் அதிகமானவர்கள் தொற்றாளர்களாக அடையாளங்காணப்பட்டு வருகிறார்கள். இது நடத்தப்படும் பரிசோதனைகளின் அளவிலான தரவு மட்டுமே. தொற்று இலங்கையில் பரவத்தொடங்கியது முதல் இதுவரை ஏறத்தாழ நான்கு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் நோய்த்தொற்றாளர்களாக அடையாங்காணப்பட்டுள்ளதுடன், இந்த பெருந்தொற்று இலங்கையில் மட்டும் இதுவரை எட்டாயிரத்திற்கும் அதிகமான மனித உயிர்களை பலியெடுத்துள்ளது. “நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு” என்ற வள்ளுவன் வாக்கினை அன்றாட வாழ்வில் தினம் தினம் கண்ணூடாகக் காணும் நிலையை கொவிட்-19 பெருந்தொற்று உருவாக்கியிருக்கிறது. கொடிய பெருந்தொற்று நோயும், அதனாலான மரணங்களும் ஒருபுறம் இலங்கையை வாட்டிவதைக்க, மறுபுறத்தில் முடக்கமும் அதனாலான விளைவுகளும், பணவீக்கமும், பொருளாதார நெருக்கடியும் இலங்கை மக்களை இன்னும் அதிகமாகப் பாதித்துக்கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. பெருந்தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக நாட்டை முடக்குவது அவசியமாகிறது. மாதச் சம்பளத்திற்கு அரசசேவையிலும், தனியார் நிறுவனங்களிலும் உள்ளவர்களால் இதனை ஓரளவு சமாளிக்கக் கூடியதாக இருக்கிறது. அரசசேவைக்கான சம்பளத்தை பணநோட்டுக்களை அச்சடித்தேனும், பணவீக்கம் பற்றியும், அதன் விளைவுகள் பற்றியும் கரிசனங்கொள்ளாது அரசாங்கம் வழங்கிவிடும். தனியார் நிறுவனங்கள் சம்பளக் குறைப்புக்களை மேற்கொண்டாலும், அவற்றால் முடிந்தவரையில் சம்பளங்களை வழங்கிவிடும். முடியாதபட்சத்தில் நிறுவனத்தை மூடுவதைவிட அவற்றிற்கு வேறு வழியில்லை. அதன் விளைவு வேலையிழப்பு. ஆனால் இவர்களை விட நாடு முடக்கப்படுவதால் உடனடியாகப் பாதிக்கப்படுபவர்கள் அன்றாடத் தொழிலை தமது வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களே. அன்றாடத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்கள் என்று சொன்னதும் பலரும் முச்சக்கரவண்டி சாரதிகளும், கூலித்தொழிலாளர்களும், பெட்டிக்கடை நடத்துபவர்களும் தான் அன்றாடத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள் என்று எண்ணுகிறார்கள். அது தவறு. எத்தனையோ நிபுணத்துவ தொழிலாளர்கள் அன்றாடத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள். உதாரணமாக வழக்குரைக்கும் சட்டத்தரணிகளை எடுத்துக்கொண்டால், வழக்குரைப்பதற்குத் தான் அவர்களுக்கு சன்மானம் வழங்கப்படுகிறது. நாட்டின் முடக்கத்தினால் நீதிமன்றுகள் வழமைபோன்று இயங்காத நிலையில், அன்றாட வழக்குரைக்கும் தொழிலை நம்பி வாழும் அவர்களின் நிலையும் கவலைக்குரியதாகிறது. குறிப்பாக, தொழிலின் ஆரம்ப நிலையிலுள்ளவர்கள், சேமிப்போ, ஏனைய பொருளாதார பாதுகாப்புக்களோ இல்லாதவர்களின் நிலை மிகுந்த கவலைக்குரியதாக இருக்கிறது. இப்படி தொழில் மற்றும் வருமான ரீதியில் பெரும் இழப்புக்களை இலங்கையர்கள் சந்தித்துள்ள இந்த நிலையில்தான், அதனோடு சேர்ந்து இலங்கையர்களை இன்னும் வாட்டிவதைப்பதாக இலங்கையின் பொருளாதார நிலை உருவெடுத்திருக்கிறது. அடிப்படை தப்பிப்பிழைத்தலுக்கான உணவுப் பொருட்களின் விலைகள் கூட அதிரடியாக உயர்ந்திருக்கின்றன. தேசிய நுகர்வோர் விலைச்சுட்டியின் படியான பணவீக்கம் ஜூன் மாதத்தில் 6.1% அதிகரித்திருந்த நிலையில், ஜூலை மாதத்தில் அது 6.8% ஆக மேலும் அதிகரித்துள்ளது. அரசி, பருப்பு, சீனி, மரக்கறிகள் என உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு ஒருபுறமிருக்க, டொலர் கையிருப்பினைத் தக்கவைப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள இறக்குமதி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளினால் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு கூட ஏற்படும் நிலை வரலாம் என சில பொருளியலாளர்கள் கருத்துரைக்கிறார்கள். இலங்கையின் பணவீக்கத்தின் நிலை இலங்கை ரூபாய்களை வங்கிகளில் சேமிப்பதை பயனற்ற விடயமாக மாற்றியுள்ளது. வங்கிகள் தற்போது ஏறத்தாழ 3-4% சேமிப்பிற்கு வட்டிவழங்கும் நிலையில், பணவீக்கம் 6.8% ஆக உள்ள போது, ஒவ்வொரு வருடமும் சேமித்துள்ள பணத்தின் மதிப்பு குறைகிறது. பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளமை. ஒரு நாள் பாடசாலைக்கு செல்லாமல் இருப்பதே பெருஞ்சங்கடமான விடயமாக இருந்த காலம் போய், இன்று ஏறத்தாழ ஒன்றரை வருடங்கள் மாணவர்கள் பாடசாலையையே எட்டிப்பார்க்காத நிலையை கொவிட்-19 ஏற்படுத்தியிருக்கிறது. இது ஒரு சந்ததியையே நீண்டகாலத்தில் பாதிக்கும் விடயமாக அமையப்போகிறது. சிலர் இடையீடு செய்து இணையவழி கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று குறிப்பிடலாம். இலங்கையில் இணையவழி கல்வி சார்ந்த குறைபாடுகள் பற்றி பலரும் எழுதிவிட்ட நிலையில், அதை மீளக்குறிப்பிடுதல் அவசியமில்லை. ஆனால் இங்கு இணைய வழிக்கல்வி முழுமையாக கல்விச்செயற்பாடாக கருதப்பட முடியாமைக்கு முக்கிய காரணம் அது இலங்கையின் இலவசக் கல்வி போல அனைவராலும் அணுக முடியாதிருப்பதாகும். இலவசக்கல்வி, இலவசப் பாடநூல்கள், இலவச சீருடை என்பவற்றை அனைவருக்கும் கல்வி அணுகப்படக்கூடியதொன்றாக உள்ள நாடாக இலங்கை இருக்கையிலே, இணையவழிக்கல்வி என்பது அந்த நிலையைத் தகர்ப்பதாக இருக்கிறது. அடிப்படையில் இலங்கையில் எல்லா இடத்திலும் திடமான இணையவசதி கிடையாது என்பது முதற்பிரச்சினை. இணையத்தினூடாக இணைந்து கல்வி பெறும் உபகரணங்கள் அனைத்துப் பிள்ளைகளிடமும் கிடையாது என்பது இரண்டாவது பிரச்சினை. இவற்றைத்தாண்டி, இணையவழி மூலம் முழுமையான கல்வியும், கல்வி அனுபவமும் வழங்கப்படமுடியுமா என்பது முக்கிய பிரச்சினை. இத்தனைக்கும் நடுவில்தான் இலங்கையின் எதிர்காலம் சிக்குண்டு சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. இந்த நேரடிப் பிரச்சினைகளைத் தாண்டி, முடக்கநிலையானது மக்களிடையே பெரும் உளவியல் தாக்கங்களையும், பிரச்சினைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஏலவே உளவியல் பிரச்சினைகளை பெருமளவு கண்டுகொள்ளாத நாடாக இலங்கை காணப்படுகிற நிலையில், இந்த முடக்கம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கமானது, பரவலான வகையில் இலங்கையர்களிடையே பெருமளவாக உளவியல் பாதிப்புக்களையும், சிக்கல்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதன் விளைவுகள் எதிர்காலத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் உணரப்படலாம் என்பதோடு, இலங்கையில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதிக்கும் முக்கியமான விடயமாக இது மாறாலாம் என்பதையும் நாம் கவனத்திற்கொள்ளுதல் வேண்டும். இந்த இடத்தில்தான் முக்கிய கேள்வி எழுகிறது. இத்தனை இழப்புக்களிலிருந்து மீள முடியுமா? மீள்வது எப்படி? இழப்புக்களிலிருந்து மீள்தல் என்பதுதான் மனித வரலாறே! இந்தப் பூமியின் ஆதிக்கம் மிகு உயிரினமாக மனிதன் மாறியது அவன் இழப்புக்களை சந்திக்காததனால் அல்ல; விழ விழ எழுந்துகொண்டேயிருக்கும் தன்மையினை அவன் கற்றுக்கொண்டதனால்தான். ஆனால் அதற்குள் ஒரு ரகசியமுண்டு. தனிநபர்களாக மனிதன் வாழ்ந்திருப்பானாயின், அவன் என்றோ அழிந்திருப்பான். மனிதன் கூட்டங்கூட்டமாக வாழ்ந்தான். ஒரு மனிதன் காயப்பட்டபோது, மற்றவன் அவனைத்தாங்கிக்கொண்டான். இந்தக் கூட்டமாக ஒருவரையொருவர் சார்ந்தும், ஆதரித்தும் வாழும் தன்மைதான் மனிதன் எனும் உயிரினம் ஆதிக்கம் பெற்றதன் இரகசியம். இன்று அதற்கான தேவை மீண்டும் உருவாகியுள்ளது. ஒருவரையொருவர் அரவணைக்க வேண்டிய காலம் இது. இழப்புக்களிலிருந்து மீள்தல் என்பதற்கு அண்மைய உதாரணங்களே பல உள்ளன. இரண்டு அணுகுண்டுகளின் தாக்கத்தை சந்தித்த ஜப்பான் இன்று உலகின் பொருளாதார வல்லமைபெற்ற நாடுகளுள் ஒன்றாக முடியுமென்றால், இரண்டாம் உலக யுத்தத்தில் பெருந்தோல்விகண்டு சின்னாபின்னமான நிலையிலிருந்து ஜேர்மனி இன்று ஐரோப்பாவின் ஆதிக்க சக்தியாக உருவெடுத்துள்ளது என்றால், இழப்பிலிருந்து மீள்தல் என்பது முடியாத காரியமல்ல. ஆனால் இனவாதம் பேசிக்கொண்டு, தமது மக்களிடையே பிரிவினையைத் தூண்டிக்கொண்டு இந்த நாடுகள் இழப்பிலிருந்து மீளவில்லை. மாறாக தம்மக்களிடையே ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் உருவாக்கின. அதுதான் அடிப்படை. அடுத்ததாக, அடிப்படை அறிவுகூடு இல்லாத முழு முட்டாள் தலைவர்களைக் கொண்டு இந்த நாடுகள் தமது இழப்பிலிருந்து மீளவில்லை, மாறாக தம்மைப் பின்னிறுத்தி, நாட்டை முன்னிறுத்தும் தலைவர்களை, தலைமைக் குழுக்களைக் கொண்டதனால்தான் வெறும் சில தசாப்தங்களுள் பூச்சியத்திலிருந்து, பெரும் ராச்சியமாக அவை உருமாறின. 2ம் உலக யுத்தத்திற்கு பின்னரான ஜப்பானின் ஒரு தலைவரின் பெயரோ, ஜேர்மனியின் ஒரு தலைவரின் பெயரோ பலருக்கும் தெரியாது. ஆனால் அந்த நாடுகள் அந்தத் தலைமைகளின் கீழ் வளர்ச்சியடைந்தன. சுயநலங்கொண்ட, நாட்டைக் கொள்ளையடித்துப் பிழைக்கும், பொருளாதாரம், அபிவிருத்தி பற்றிய அடிப்படை அறிவுகூட இல்லாத, கடன்வாங்கி வீதிபோடுதல், நகரங்களை அழகாக்குதல் ஆகியவையே அபிவிருந்து என்று நம்பும் முழு முட்டாள் கூட்டத்திடம் நாட்டை ஒப்படைத்துவிட்டால், இழப்பிலிருந்து மீள்தல் என்பது வெறுங்கனவாகவே முடியும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இழப்பிலிருந்து-மீள்தல்/91-280127
  8. எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்? என்.கே. அஷோக்பரன் இன்றைய அரசியல்வாதிகள், தமக்குத்தாமே சூட்டிக்கொள்கின்ற பட்டங்களில், ‘செயல் வீரன்’ என்பது முதன்மையானதாக இருக்கிறது. “நாம் பேசுபவர்கள் அல்ல; செயல் வீரர்கள்” என்று, தமது பிரசாரங்களை அவர்கள் முன்னெடுக்கப் பிரயத்தனப்படுகிறார்கள். இதற்கான காரணம், ‘வாழையடி வாழை’யாக அரசியல் என்பது, பேச்சுக்கலையில் மையம் கொண்டதாக அமைந்திருப்பதும், அந்த அரசியலில், அந்த அரசியலால் மக்கள் சலிப்படைந்து உள்ளதுமாகும். ஆகவே, தம்மைச் ‘செயல் வீரர்’கள் என்று, அதே பேச்சுக்லையின் ஊடாக நிறுவுவதில், சமகால அரசியல் தலைமைகள் அக்கறை கொண்டு செயற்படுகின்றன. தாம் வெறும் வாய்ச்சொல் வீரர்கள் அல்ல; தாம் சாதித்துக்காட்டுபவர்கள் என்று வீரவசனம் பேசி, மக்களுக்குப் புது நம்பிக்கையை அளிக்க எத்தனிக்கிறார்கள். காலம் காலமாகக் கேட்டவற்றால், பார்த்தவற்றால் சலிப்படைந்த மக்களும், வித்தியாசமாக இருக்கிறதே என்று ஒரு மாற்றைத் தெரிவு செய்கிறார்கள். ஆனால், ஏமாற்றம் என்பதே எப்போதும் விடையாகிறது. அதுவே ஜனநாயக அரசியலின் துரதிர்ஷ்டமாகிக் கொண்டிருக்கிறது. ‘தெரிந்த பிசாசும் தெரியாத தேவதையும்’ என்ற விடயம், சிலருக்கு ஞாபகம் வரலாம். அரசியலில், இந்தத் ‘தெரிந்த பிசாசும் தெரியாத தேவதையும்’ மிக முக்கிய வகிபாகத்தைக் கொண்டிருக்கின்றன. மக்கள், கேட்டும் பார்த்தும் அனுபவித்தும், அவற்றால் சலித்தும் வெறுத்தும் போன அரசியல்வாதிகள் தெரிந்த பிசாசுகள். அத்தகைய ‘பிசாசு’ அரசியல்வாதிகள், நாம் அல்ல என்று, நம்பிக்கை வார்த்தைகளை வாரி வீசி, மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துகிறவர்கள் தெரியாத தேவதைகள். இவர்கள், ஏன் தெரியாத தேவதைகள் என்றால், இவர்கள் மக்கள் முன்னிலையில் தம்மை, தேவதைகளாகவும் மக்களின் இரட்சகர்களாகவும் முன்னிறுத்துகிறார்கள். மக்கள் எதிர்நோக்கும் சகல பிரச்சினைகளுக்குமான சகலரோக நிவாரணி, தாமே எனப் பிரசாரம் செய்கிறார்கள். இவர்கள் யாரென மக்களுக்குத் தெரியாது. ஆகவே தெரியாத தேவதைகள் இவர்கள். ஆனால், கசப்பான உண்மை யாதெனில், தெரியாத வரையில்தான் இவர்கள் தேவதைகள். இந்தத் தெரியாத தேவதைக் கதையை, இன்னும் கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம். பிசாசுக்கும் தேவதைக்கும் என்ன வித்தியாசம்? அவற்றின் தன்மைகள் என்ன? பிசாசுகள் மக்கள் விரும்பாத தன்மை கொண்டவை. தேவதைகள், மக்கள் நேசிக்கும் தன்மையைக் கொண்டவை. பிசாசும் தேவதையும் ஒன்றுக்கொன்று எதிர்முரணான கற்பனை உருவகங்கள். புதிதாக ஒன்று வரும்போது, அதன் தன்மை யாதென எவரும் அறியார். ஆனால், எல்லா அரசியல்வாதிகளும் தன்னை தேவதையாகவே மக்கள் முன்னிலையில் முன்னிறுத்தவும் பிரசாரம் செய்யவும் தலைப்படுகின்றனர். எவரும் தம்மைப் பிசாசுகளாக முன்னிறுத்துவதில்லை. அப்படி முன்னிறுத்துவது எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தும். ஆகவே, எல்லோரும் தம்மைத் தேவதைகளாக முன்னிறுத்தும்போது, மக்கள் முன்னிலையில் இருக்கும் கேள்வி, அவர்கள் தேவதைகளா இல்லையா என்பதுதான். இதில் முன்னனுபவத்தைக் கொண்டு, ஒருவர் தேவதையா இல்லையா என்பதை, மக்கள் தீர்மானிப்பதற்கான தரவுகள் அவர்களிடம் இருக்கும். ஆனால், புதியவர்கள் வரும்போது, அந்தத் தீர்மானத்தை எடுப்பதில், மக்களுக்கு சிக்கல் நிலை ஏற்படுகிறது. தர்க்க ரீதியாக ஒருவரை ஏற்பதற்கோ மறுப்பதற்கோ, அவரை மதிப்பிடுவதற்கான தரவுகள் தேவை. அந்தத் தரவு பற்றாக்குறையாக உள்ள போது, மனம் முன்னெடுகோள்களில் சிக்கிக்கொள்கிறது. சமூக முன்னெடுகோள்களைக் கடந்து சிந்திக்கும் போது, தெரிந்த பிசாசைவிட, தெரியாத தேவதை அதிக புள்ளிகளைகளைப் பெற்றுக்கொள்கிறது. தெரிந்த பிசாசு, பிசாசு என்று தெரியும். தெரியாத தேவதை, தேவதையா இல்லையா என்று தெரியாது. இந்த இடத்தில், இந்தத் தெரியாத தேவதைக்கு பலமாக அமையும் விடயம்தான் நம்பிக்கை (Hope). மனித வாழ்வின் முக்கிய உந்துசக்தி நம்பிக்கை. நம்பிக்கை இல்லாத வாழ்வு, எரிபொருள் இல்லாத இயந்திரத்தைப் போல, இயங்காது தரித்துவிடும். வாழ்வில் மனிதன் சந்திக்கும் அத்தனை இன்னல்களையும் தடைகளையும் பின்னடைவுகளையும் கடந்து, மனிதன் முன்னோக்கிப் பயணிக்கிறான் என்றால், அந்தப் பயணத்துக்கான ‘எரிபொருள்’ நம்பிக்கைதான். இந்த நம்பிக்கைதான் மனிதனின் பலம். அரசியலைப் பொறுத்தவரையில், வாக்காளர்கள் மத்தியில், பலவீனமாகிக் கொண்டிருப்பதும் இந்த நம்பிக்கைதான். அதற்கு, வாக்காளர்கள் காரணம் என்பதைவிட, அரசியல்வாதிகளின் தந்திரோபாயம் காரணம் என்பதுதான் பொருத்தமானது. நம்பிக்கைதான் மனிதனின் பலம் என்பது, யாருக்குத் தெரியுமோ இல்லையோ, அரசியல்வாதிகளுக்கு மிக நன்றாகவே தெரியும். அதனை அவர்கள் முழுவதுமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். மக்களின் நம்பிக்கையைத் தமக்குச் சாதகமாகத் திருப்பி, அதிகாரக் கனியை கவர்ந்துகொள்ள விளைகிறார்கள். பிரசாரம் அவர்களின் ஆயுதமாகிறது. மக்கள் நம்பிக்கை அவர்களது இலக்காகிறது. தெரிந்த பிசாசுகள் மீது, மக்கள் கொண்டுள்ள அதிருப்தியும் வெறுப்பும், அவர்களுக்கு உரமாகிறது. இப்படித்தான் ‘தெரியாத தேவதை’கள் உருவாக்கப்படுகிறார்கள். இந்தத் ‘தெரியாத தேவதை’கள் பற்றிக் கட்டியெழுப்பப்படும் பிரசார விம்பம், அவர்களைத் தேவதைகளாகவே காணும் நிலையை, மக்களிடத்தில் தோற்றுவிக்கிறது. மக்களும் தம் நம்பிக்கை முழுவதையும் இந்தத் தெரியாத தேவதைகள் மீது முதலிட்டு, தமது நம்பிக்கை மெய்யாகும் என்று காத்திருக்கிறார்கள். பெரும்பாலும் இந்த நம்பிக்கை பொய்த்துப் போய்விடுகிறது. தெரியாத தேவதைகளைப் பற்றி, மக்கள் தெரிந்து கொள்ளும் போது, அவர்களும் பிசாசுகளே என்பதை மக்கள் உணர்ந்துகொள்கிறார்கள். இந்த இடத்தில் மக்களுக்கு, இன்னொரு பேரதிர்ச்சி பெரும்பாலும் ஏற்படுகிறது. எந்தத் தெரிந்த பிசாசை ஒதுக்கிவிட்டு, இந்தத் தெரியாத தேவதையைத் தேர்ந்தெடுத்தார்களோ, இந்தத் தெரியாத தேவதை, அந்தத் தெரிந்த பிசாசைவிட, மோசமான பிசாசு என்பதை உணரும் வேளையில், நம்பிக்கை என்பது, அந்தத் தெரிந்த மோசமான பிசாசில் மட்டுமல்லாது, ஒட்டுமொத்தமான அரசியலிலும் ஏற்பட்டுவிடுகிறது. ஆனால், வாழ்க்கை ஒரு வட்டம். நம்பிக்கை இல்லாமல், வாழ்க்கை இயங்காது. மீண்டும் இந்தச் சுழலுக்குள், மக்கள் சிக்கிக் கொள்கிறார்கள். அப்படியானால், இந்தச் சுழலிருந்து விடுபட என்ன வழி? அது, அத்தனை சுலபமாகச் சொல்லிவிடக் கூடியதொன்றல்ல. ‘சாத்திரம் உரைப்பது போல’, எது உண்மையான தேவதை, எது உண்மையான பிசாசு என்று, எவராலும் ஆணித்தரமாகக் கூறிவிட முடியாது. ஆனால், சில அரசியல் அடிப்படைகளை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஜனநாயகம் என்பது, ஒருவகையான விழுமியம். வல்லாட்சிச் சிந்தனைகள், அதிகார மோகம் கொண்டவர்களால், ஒருபோதும் மிகச் சிறந்த ஜனநாயகத் தலைவர்கள் ஆக முடியாது. அச்சத்தைத் தனது ஆயுதமாகக் கொள்பவன், ஒருபோதும் மிகச் சிறந்த ஜனநாயக ஆட்சியாளனாக இருக்க மாட்டான். தன்னுடைய சித்தாந்தத்தை, வாழ்க்கை முறையை, நம்பிக்கைகளை மற்றவர் மீது திணிப்பவன், ஒருபோதும் நல்ல ஜனநாயக ஆட்சியாளனாக இருக்க மாட்டான். “என்னால் ஒரேயடியாக, நாட்டின் கட்டமைப்பை மாற்றிவிட முடியும்” என்பவன், நிச்சயமாகப் பொய்தான் சொல்கிறான். ஒரு ஜனநாயக நாட்டில், ஜனநாயக ரீதியிலான கட்டமைப்பு மாற்றத்தை, ஒரேயடியாகச் செய்துவிட முடியாது. ஆனால், பொது மனம் இதைப்பற்றி எல்லாம் சிந்திக்காது. விளைவுகள் கிடைக்காத விரக்தியில் இருக்கும் வாக்காளனின் மனம், அதிரடியாகவேனும் ஒரு மாற்றம் நிகழ்ந்துவிட வேண்டும் என்று அவாக்கொள்கிறது. ஆகவே, அப்படி அதிரடி காட்டுகிறவனை, அந்த மனம் மோகிக்கிறது; விளைவு, ஏமாற்றம்! ஏமாற்றம், மீண்டும் மீண்டும் ஏற்பட ஏற்பட, வாக்காளனின் மனம், அதிரடியான மாற்றத்தை இன்னும் வலுவாக மோகிக்கிறது. ஆனால், பகுத்தறிவின்படி சிந்தித்தால், எந்தவொரு ஜனநாயகக் கட்டமைப்பிலும் மாற்றம் என்பது அதிரடியாக நடக்காது. மாறாக, படிப்படியாகத்தான் இடம்பெறும் என்ற தௌிவு கிடைக்கும். ஆனால், தொடர்ந்து ஏமாந்த மனத்துக்கு, இந்தப் பகுத்தறிவின் கருத்து உவப்பானதாக இருக்காது. எப்படி, சத்துணவு நாவுக்குச் சுவை குறைவானதாக இருக்கிறதோ, அதுபோல அரசியல் மீதான ஈர்ப்பும், வாக்காளனுக்கு குறைந்துவிடுகிறது. ஆரோக்கியமற்ற, நாவுக்குச் சுவையான உணவுக்குப் பலரும் எப்படி அடிமையாகிறார்களோ, அதுபோல வாக்காளனின் மனம் அதிரடி அரசியலை விரும்புகிறது. உடனடி உணவைப்போல, உடனடி மாற்றத்தை மனம் கேட்கிறது. அதன் விளைவு, ஏமாற்றம். ஒரு போதைவஸ்து பாவனையாளனைப் போல, தன்னை அழிக்கும் போதையை, வாக்காளன் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கிறான். அது அவன் தவறா, போதை மருந்து விற்பவனின் தவறா? அவன் கேட்பதால் அல்லவா அவன் விற்கிறான். அவன் விற்பதால் அல்லவா, அவன் கேட்கிறான். ஒரு விசச் சுழல் இது. இறுதியாக, தலைப்பின் கேள்விக்கு, பதில் சொல்ல ஒரு சிந்தனை. இன்னும், எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் என்று கேட்பது கிடக்கட்டும். இன்னும், எத்தனை காலம் தான் ஏமாறுவார் என்றும் கேட்பதுதான் பொருத்தமாகும். சிந்திக்கவும்! https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/எத்தனை-காலம்தான்-ஏமாற்றுவார்/91-278892
  9. அரச ஊழியமும் பொருளாதாரமும் எதிர்காலமும் என்.கே. அஷோக்பரன் இன்று இலங்கையின் ஏறத்தாழ 1.3 மில்லியன் (13 இலட்சம்) அரச ஊழியர்கள் சேவையில் இருக்கிறார்கள். இதைவிட அரச ஓய்வூதியம் பெறுவோர் கிட்டத்தட்ட 659,000 பேர் இருக்கிறார்கள். இன்றைய இலங்கையின் பாதீட்டில் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருக்கும் மீளெழும் செலவுகளில் கணிசமான விகிதம் அரச ஊழியர்களின் ஊதியத்துக்கும் வருடாந்த ஊதிய உயர்வுகள் உள்ளிட்ட கொடுப்பனவுகளுக்கும் ஓய்வூதியக் கொடுப்பனவுகளுக்கும் செலவாகின்றன. இதைத் தவிர, அரச நிறுவனங்களையும் திணைக்களங்களையும் நடத்துவதற்கான செலவுகள் வேறானவை. அரச வருமானத்தின் பெரும்பகுதி இந்த மீளெழும் செலவுகளுக்கே செலவிடப்படுவதால், அரச வருமானத்தில் மூலதனச் செலவுக்கான பங்கு மிகக் குறைவானதாகவே இருக்கிறது. அரச ஊழியம் மீதான பற்று என்பது, பிரித்தானியர் ஆட்சியிலிருந்த இந்திய உபகண்டத்தில் அதீதமாகவே உருவாகிவிட்டதொன்று! பிரித்தானிய சிவில் சேவைக்கென இருந்த சமூக அந்தஸ்து, இங்கும் தொற்றிக்கொள்ள, அன்றைய காலத்தில் சமூக, பொருளாதார அந்தஸ்தில் உயர்வதற்கான வழிமுறையாக, சிவில் சேவை உருவெடுத்தது. ஆனால், பிரித்தானியர் ஆட்சியில் கல்வியறிவு பெற்ற மிகக் குறைந்தோருக்கே வாய்ப்பானதாக அமைந்த இந்தச் சிவில் சேவை, சுதந்திரத்துக்குப் பின்னர் விரிவடையத் தொடங்கியது. காலப்போக்கில் அரச சேவையாக அது மாற்றம் பெற்று, அரச ஊழியம் என்பது பரவலடைந்தது. சிவில் சேவையும் பின்னர் அரச சேவையும் சமூக முக்கியத்துவம் பெறுவதற்கு, பிரித்தானியர் காலத்தில் நிலவிய வணிகக் கட்டுப்பாடுகள், அனுமதிப்பத்திர தேவைகள், வணிகத்தை செல்வாக்கு மிக்கவர்களுக்கானதாகச் சுருக்கியது. இது, ஒருவகையில் நிலப்பிரபுத்துவத் தன்மைகளைக் கொண்டதாகவே அமைந்தது. இவ்வாறு பிரித்தானிய ஆட்சியில் செல்வாக்குப் பெற்று வணிகம் செய்தவர்களே, நிலவுடைமையாளர்களாகவும் செல்வந்தர்களாகவும் ஆகியதோடு, அன்றைய ஆட்சியிலும் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தார்கள். ஆகவே, தனியார்துறை, இவர்களாக இருந்தபோது, இவர்களிடம் வேலை செய்வதை விட, அரச சேவையில் இருப்பது கௌரவமானதாகவும் சமூக அந்தஸ்து மிக்கதாகவும் இருந்தது. மேலும், சமூக அந்தஸ்தை மேம்படுத்திக் கொள்வதற்கான வழியாகவும் அதுவே இருந்தது. அத்தோடு, ஓய்வுபெறும் வரை உத்தியோக நிச்சயத்தன்மை அரச ஊழியத்தில் இருந்தது. அரச ஊழியத்தின் மீது, இந்திய உபகண்டத்தினர் கொண்டிருக்கும் ஈர்ப்புக்கு, இது ஒரு பிரதான காரணம் எனலாம். அடுத்தது, அரச ஊழியத்தின் மூலம், ஓய்வுகாலத்துக்குப் பின்னரான சமூகப் பாதுகாப்பாக, ஓய்வூதியம் கிடைத்தமை, பலரும் அரச ஊழியத்தை விரும்பக் காரணமானது. மறுபுறத்தில், பிரித்தானிய கொலனித்துவம், தமது நலன்களுக்காக உருவாக்கி, பின்னர் விட்டுச்சென்ற கட்டுப்படுத்தப்பட்ட வணிகம், ‘லைசன்ஸ் ராஜ்’ நடைமுறைகள், சுதந்திரத்துக்குப் பின்னரும் தொடர்ந்தமை காரணமாக, வணிகம் என்பது, அரசியல் செல்வாக்கு மிக்கவர்களுக்கு என்று ஆகிப்போனது. இந்த வணிகக் கட்டுப்பாடுகள், ஊழலுக்கும் வழிவகுத்தன. இதுவே, அரச ஊழியர்களிடையே இலஞ்சம், ஊழல் அதிகரிப்பதற்கும் வழிவகுத்தது. 1970களில் மூடிய பொருளாதாரமாக சிறிமாவோவும் அவரது ‘தோழர்’களும் இந்த நாட்டை மாற்றியபோது, அன்றிருந்த சொற்ப தனியார்துறை நிறுவனங்களில் பலவும் அரச மயமாகின. எல்லாவற்றையும் அரசே நடத்தும் என்பது தோல்விகண்ட, வினைத்திறனற்ற, மிகப்பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும், அறிவுக்கு முரணான ஒரு சித்தாந்தமாகும். வணிகத்தில் போட்டி இருக்கும் போதுதான், புத்தாக்கம் நிகழும். வினைத்திறனான வளர்ச்சியும் அதன் பயன்கள் மலிவாகவும் மக்களுக்குக் கிடைக்கும். இதனால்தான் தனியார்துறையில் கூட, தனியுடைமை வந்துவிடக்கூடாது; போட்டித்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்கான ‘போட்டிச் சட்டங்கள்’, வளர்ச்சியடைந்த நாடுகளில் காணப்படுகின்றன. மூடிய பொருளாதாரமும் அரசே எல்லாத்துறைகளையும் ஏற்று நடத்துதலும் எத்தகைய தோல்வியில் முடியும் என்பதற்கு, உள்ளூர் சாட்சியாக 1970 - 1977 வரையான சிறிமாவோவினதும் அவரது தோழர்களினதும் ஆட்சி இருக்கிறது. அரிசி வாங்குவதற்குக் கூட, வரிசையில் நின்றமை; உடுப்புத்தைக்க துணி வாங்கக் கூட பலமாதங்கள் காத்திருக்கும் நிலைமை; சோறுங்கறியும் உண்ட இலங்கையர்கள், மரவள்ளிக்கிழங்கு தின்னும் சூழல் என்று, அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களின் அனுபவங்கள் ஆகும். எல்லாவற்றையும் உள்ளூரிலேயே உற்பத்தி செய்வது போன்ற, அடி முட்டாள்தனமான பொருளாதாரச் சிந்தனைகளின் தோல்விக்கு, இந்த மூடிய பொருளாதாரம் சாட்சி சொல்லும். 1977இன் பின்னர், இலங்கையின் பொருளாதாரம் திறந்து, தனியார்துறை வளர்ந்து, நவீன தொழில் நுட்பங்கள் அறிமுகமாகி, மக்களின் வாழ்க்கைத் தரம் அதிகரித்திருந்தாலும், அரச ஊழியத்தின் மீது, இலங்கையர்கள் கொண்டுள்ள ஈர்ப்பு குறையவில்லை. அதன் விளைவாக, தேர்தல் காலத்தில், “அரச உத்தியோகம் வழங்குவோம்” என்ற உறுதிமொழி அளிக்கவேண்டிய கட்டாய நிலையில்தான், அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். தேர்தலில் வென்ற பிறகு, ஏதோ ஒரு தொழிலை அரச துறையில், தமது வாக்காளர்களுக்கு வழங்கிவிட வேண்டிய நிர்ப்பந்தத்தில் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். ஆகவே, சஜித் பிரேமதாஸ அமைச்சராக இருந்த போது செய்ததுபோல, வேலை கேட்டு வந்தவர்களை வரிசையில் நிற்கவைத்து, உயரமானவனென்றால் ‘செக்யூரிட்டி’ (காவலாளி), குள்ளமானவனென்றால் தொழிலாளி என்று மக்கள் பணத்தில், அவசியமில்லாமல் பயனற்ற வேலைவாய்ப்புகளை அள்ளி வழங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதன் விளைவு, அரச ஊழியத்துக்கான அரச செலவு அதிகரிக்கிறது. மறுபுறத்தில், அவசியமே இல்லாத அரச நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஓர் அரச நிறுவனம் கவனித்துக்கொள்ளக் கூடிய வேலைக்கு, நான்கைந்து அரச நிறுவனங்களும் திணைக்களங்களும் உருவாக்கப்படுகின்றன. தனியாரிடம் கொடுத்து இலாபம் பெறும் நிறுவனங்களாக நடத்தப்படக் கூடியவை, மக்கள் பணத்தில் நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. தனியாரிடம் அதனை ஒப்படைத்து, அவை இலாபம் பெறும் நிறுவனங்களாக இயங்கும் போது, அதிலிருந்து வரிவருமானத்தை அரசாங்கம் பெற்றுக்கொள்வதுடன் அதைச் செயற்பட வைக்கும் செலவுகள் தவிர்க்கப்படுகின்றன. இது இரட்டை நன்மை. இதன் மூலம் அரசின் மீளெழும் செலவுகள் குறைந்து, மூலதனச் செலவுக்கான பங்கு அதிகரிக்கும். இதன் மூலம், நாட்டின் எதிர்காலத்துக்குப் பயன்தரும் திட்டங்களில் அரசால் முதலிட முடியும். ஆனால், வாக்குவங்கி அரசியலின் காரணத்தாலும், அந்த வாக்கு வங்கி அரச ஊழியத்தில் கொண்டுள்ள மோகத்தாலும், நாடு பெரும் பின்னடைவைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. கஜூ, தென்னை, கடதாசி, இரும்பு என ஒவ்வொன்றுக்கும் ஒரு கூட்டுத்தாபனம் இன்னும் எமக்குத் தேவையா? இந்த நிறுவனங்களை நடத்தவும், அதன் ஊழியர்களுக்கு ஊதியமளிக்கவும் மக்கள் பணம் வீணாகிக் கொண்டிருக்கிறது. இவற்றால் மக்களுக்கு எந்த நன்மையுமில்லை. இந்தப் பணம், அரச வைத்தியசாலைகளை அமைக்கவும், வைத்தியசாலைகளின் தரத்தை உயர்த்தவும் பயன்படுத்தப்பட்டால், அது மக்களுக்கு எவ்வளவு நன்மையானதாக அமையும். இலங்கை போன்ற ஒரு தீவுக்கு அரச செலவில் ஒரு சர்வதேச விமான சேவை தேவையா? பல பில்லியன் டொலர்கள் நட்டத்திலுள்ள நிறுவனம் அது. ரயில் திணைக்களம் இன்றும் நட்டத்தில்தான் இயங்குகிறது. உண்மையில் ரயில்வேத்துறை இன்னும் வினைத்திறனாகச் செயற்பட முடியும். ஆனால், அரச சேவையும் அதனோடிணைந்து வரும் தொழிற்சங்க அரசியலும், ரயில்வே சேவையை நட்டத்தில் இயங்கவைத்துக் கொண்டிருக்கின்றன. தேவையில்லாத, காலத்துக்குப் பொருந்தாத அரச நிறுவனங்கள் கலைக்கப்பட வேண்டும்; அரச துறை சுருக்கப்பட வேண்டும்; தேவைக்கதிகமான ஊழியர்களால் நிரம்பிவழியும் அரச துறையின் ஆட்சேர்ப்பு, கட்டுப்படுத்தப்பட வேண்டும். அதேவேளை, தனியார்துறை முதலீடுகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அவை, பிரித்தானியர் ஆட்சிக்காலத்தைப் போல, செல்வாக்கு உள்ளவர்களுக்கு மட்டும் தனியார்துறை வாய்ப்புகள் வழங்கப்படாது, திறந்த போட்டித்தன்மை மிக்க சூழல் உருவாக்கப்பட வேண்டும். அரச ஊழியம் மீதான மோகம், நகர்ப்புறங்களில் பெருமளவுக்குக் குறைந்துள்ளது. தனியார்துறை வளரவளர, அவை புதிய வாய்ப்புகளை நாடு முழுவதும் ஏற்படுத்தும் போது, நகர்ப்புறத்தைத் தாண்டிய ஏனைய பிரதேசங்களிலும், அரச ஊழியம் மீதான மோகம் குறைவடையும். ஆகவே, அத்தியாவசியமற்ற துறைகளைத் தனியார் மயமாக்கலும், தனியார் துறையை ஊக்குவிப்பதும்தான், அரசாங்கம் மேற்கொள்ளக் கூடிய முக்கிய பொருளாதாரத் திட்டமாக அமையும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அரச-ஊழியமும்-பொருளாதாரமும்-எதிர்காலமும்/91-278377
  10. வறுமையும் அரசியலும் என்.கே. அஷோக்பரன் ஹிஷாலினி என்ற 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரமும் அந்தச் சிறுமியின் அகால மரணமும், பல்வேறு வாதப்பிரதிவாதங்களைத் தோற்றுவித்துள்ளன. இனவாதம் இந்த நாட்டுக்குப் புதியதல்ல. 16 வயது தமிழ்ச்சிறுமி, முஸ்லிம் இன அரசியல் செய்யும், ஒரு முஸ்லிம் அரசியல்வாதியின் வீட்டில் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, தீக்கிரையாகி மரணித்த கொடூரம், இரண்டு சமூகங்களைச் சார்ந்தவர்கள் இடையே, இனரீதியான வாக்குவாதங்கள் சமூக ஊடகப்பரப்பில் இடம்பெறும் நிலையைத் தோற்றுவித்துள்ளது. எங்கெல்லாம் இனவெறி தலைதூக்குகின்றதோ, அங்கெல்லாம் அறிவு செத்துவிடுகிறது. ஒரு 16 வயது சிறுமியின் கொடூர மரணத்தை, நியாயமாக விசாரித்து, அதற்கு நீதி வழங்க வேண்டும் என்கிற கருத்தை அல்லவா, மதியுள்ள மக்கள் வலியுறுத்த வேண்டும். மாறாக, குற்றம்சாட்டப்பட்டவன், தான் சார்ந்த இனத்தவன் என்பதால், குற்றம் சாட்டப்பட்டவனுக்கான அபத்த நியாயங்களை வாதமாக முன்வைப்பதெல்லாம், இனவாதத்தால் மழுங்கிய மூளையின் சிந்தனையல்லாது வேறென்ன? மறுபுறத்தில், ஓரினத்தைச் சேர்ந்த ஒருவனும் அவன் சார்ந்தவர்களும், ஒரு பெருங்குற்றத்தை இழைத்தார்கள் என்பதற்காக, அந்த இனத்தையே பொதுமைப்படுத்திச் சாடுவதும், அறிவு சார்ந்த காரியமல்ல. இந்தக் குறுகிய இனவாத சிந்தனைகளைத் தாண்டி, நாம் என்றுதான் சிந்திக்கத் தொடங்கப் போகிறோம்? இந்த இனவாத ‘குழாயடிச் சண்டை’யில், அந்தச் சிறுமியையும் அவளுக்கான நீதியையும் அவளது உற்றோருக்கான நியாயத்தையும் மறந்துவிட்டார்கள். எத்தனை துர்பாக்கியம்மிக்க சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்தச் சிறுமியின் கொடூர மரணத்துக்கும் அவள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளுக்கும், நியாயம் கிடைக்க வேண்டும். மனிதம் நிறைந்த மனங்கள் அதையே வேண்டிநிற்கும். சட்டம் தன் கடமையைச் செய்வதற்கான அழுத்தத்தைக் கொடுப்பதுதான், இங்கு சிறந்த குடிமக்கள் செய்யக் கூடிய அரும்பணியாக அமையும். நிற்க! ஆனால், இது இந்தச் சிறுமியின் மரணத்துக்கான நீதி நியாயத்துடன் நின்று விடக்கூடாது. ஹிஷாலினி என்ற இந்தச் சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரம், இனி இந்த நாட்டில் வேறெந்தச் சிறுமிக்கும் குழந்தைக்கும் நிகழக்கூடாது. அதுபற்றிச் சிந்திக்க வேண்டியது அத்தியாவசியம். இலவசக் கல்வி வழங்கப்படும் இந்நாட்டில், 14 வயதில் ஒரு சிறுமி, இன்னொருவர் வீட்டுக்கு வேலைக்கு அமர்த்தப்பட என்ன காரணம்? எத்தனை காரணங்கள் இருப்பினும், அடிப்படைக் காரணம் வறுமை. ‘கொடிது கொடிது வறுமை கொடிது; அதனினும் கொடிது இளமையில் வறுமை’ என்றார் ஒளவைப் பாட்டி. 30,000 ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்தவே, தனது மகளை வீட்டு வேலைக்கு அனுப்ப வேண்டிய நிலை வந்ததாக, அவரின் தாய் கூறியதாக செய்தி பதிவு செய்திருந்தது. அப்படி, வீட்டு வேலைக்குச் சென்ற அந்தச் சிறுமியை, வேலைக்கமர்த்திய அந்த அரசியல்வாதியின் வீட்டாரால் உடல், உள ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாக, தனது தாயிடம் கூறியிருப்பதாகத் தாய் தெரிவிக்கிறார். என்ன மாதிரியான சமூகத்தில், நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்ற சினமும் இயலாமையும் எண்ணமும் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. மறுபுறத்தில், தன் வீட்டில் ஒரு சிறுமி இவ்வாறு நடத்தப்படுவதைத் தடுக்க முடியாத ஒருவன், தன்னை எப்படி மக்களின் தலைவன் என்று சொல்லிக் கொள்ள முடியும்? முதலில், உன் வீட்டில் ஒரு குழந்தை துன்புறுத்தப்படுவதைத் தடுக்க முடியாத நீ, மனிதனே அல்ல! மறுபுறத்தில், இன்று ஹிஷாலினிக்கு நியாயம் பெற்றுத் தருவோம் என்று கிளம்பியுள்ள மலையகத் தலைவர்களின் நிலை அபத்தமானது; அசிங்கமானது. பல கோடி ரூபாய்கள் பெறுமதியான வாகனங்களில் சுற்றிக்கொண்டிருக்கும் இவர்கள்தான், 30,000 ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக, 16 வயதுச் சிறுமியை வீட்டு வேலைக்கு அமர்த்த வேண்டிய நிலையிலுள்ள மக்களின் தலைவர்களாம்! எவ்வளவு பெரிய வெட்கக்கேடு. தமது மக்களின் நலனில், அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் அக்கறை கொண்டு, இந்தத் தலைவர்கள் எனத் தம்மைத் தாமே சொல்லிக் கொள்பவர்கள் செயற்பட்டிருந்தால், இந்த 16 வயதுச் சிறுமிக்கு இந்தக் கொடூரம் நேர்ந்திருக்காது. “தோட்டத் தொழிலாளருக்கு 1,000 ரூபாய் சம்பளம்” என்பது, இந்தத் தலைவர்கள் எனப்படுவோரின் தாரக மந்திரம். இவர்கள், இந்தக் கோரிக்கையை முன்வைக்கத் தொடங்கிய போது, ஒரு டொலர் 150 ரூபாய்க்கும் குறைவாக இருந்தது. இன்று ஒரு டொலர் உத்தியோகபூர்வ சந்தையில் 200 ரூபாயைத் தாண்டிவிட்டது. ரூபாயின் பெறுமதி கணிசமாக விழுந்திருந்தாலும் விலைவாசி கண்டபடி ஏறியிருந்தாலும், கிட்டத்தட்ட ஒரு தசாப்தகாலமாக 1,000 ரூபாய் சம்பளம் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள், இந்த தலைவர்கள் எனப்படுவோர். போதாக்குறைக்கு, இந்தத் தலைவர்கள் எனப்படுவோரே தொழிற்சங்கங்களையும் நடத்துகிறார்கள். அதற்காக, அந்த அப்பாவித் தொழிலாளர்கள் பெறும் ஆகக் குறைந்த சம்பளத்திலும், ‘தொழிற்சங்க சந்தா’ என ஒரு தொகையைப் பிடுங்கிக் கொள்கிறார்கள். எத்தனை சிறந்த தலைவர்கள் இவர்கள்! மறுபுறத்தில், “மலையகத்துக்கு என்று ஒரு பல்கலைக்கழகம்” என்று, வாய்கிழிய பல வருடங்களாகக் கூவினார்களேயன்றி, அதைச் சாத்தியப்படுத்தினார்களா?மலையகத் தலைவர் ஒருவரேனும் அங்கத்துவம் வகிக்காத அரசாங்கம், கடந்த மூன்று தசாப்தங்களில் அமைந்திருக்கிறதா? அப்படியானால், அந்த மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாததன் பொறுப்பை ஏற்க வேண்டியவர்கள் யார்? மலையக மக்களுக்கு உரிய கல்வி, உயர்கல்வி, தொழிற்பயிற்சி, தோட்டத்தொழிலுக்கு மாற்றான வேலைவாய்ப்புகள், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் என்பவற்றை ஏற்படுத்திக் கொடுத்தால், ஹிஷாலினியைப் போன்ற சிறுமிகள், வீட்டு வேலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படாது. ஆகவே, இன்று தங்களுடைய அரசியலுக்காக, “ஹிஷாலினிக்கு நீதி வேண்டும்” என்று, களத்தில் குதித்துள்ள இந்த மலையகத்தின் தலைவர்கள் எனப்படுவோரும், ஒருவகையில் ஹிஷாலினியின் கொடூரத்துக்குப் பொறுப்பாளிகள். “உலகை மாற்றப் பயன்படுத்தக் கூடிய மிகச் சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி” என்பார் நெல்சன் மண்டேலா. கல்வியும் உயர் கல்வியும் அதன்பாலான வேலைவாய்ப்புகளும் இந்த நாட்டில் எத்தனையோ மக்களின் வாழ்க்கைத் தரத்தை, ஒரே தலைமுறையுடன் மாற்றியமைத்து இருக்கிறது. அதைப் பலரும் கண்கூடாகக் கண்டிருக்கிறார்கள். இனவாதம், இனவெறி, வறுமை எனச் சாபங்கள், அசிங்கங்கள் நிறைந்த இந்த நாட்டின் மிகச் சொற்ப வரங்களில் ஒன்று இலசக் கல்வி. ஆனால், அதன் பயன் மலையகத்தை முழுமையாகச் சென்றடையவில்லை என்று சொன்னால் அது மிகையல்ல. அந்த மக்கள், தலைமுறை தலைமுறையாகத் தோட்டத் தொழிலாளர்களாகவே இருக்கவும், வறுமையின் காரணமாக தங்கள் பிள்ளைகளை வீட்டு வேலைக்கு அனுப்பவும் சபிக்கப்பட்டவர்களா என்ன? கல்வியும் உயர்கல்வியும் இந்த நிலையை மாற்ற வேண்டும். தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான அடிப்படைச் சம்பளமும் மருத்துவக் காப்புறுதி உட்பட்ட அடிப்படை வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். இதெல்லாம் சட்டவாக்கம், சட்ட நிர்வாகத்தால் செய்யக் கூடிய காரியங்களேதான். மலையகத் தலைமைகள் எனப்படுவோர், இந்நாட்டின் சட்டவாக்கம், சட்ட நிர்வாகத்தில் பங்காளிகளாக இருக்கிறார்கள். இனியேனும் தாமதிக்காமல், இதைச் செய்ய வேண்டும். ஹிஷாலினிக்கு நிகழ்ந்த கொடூரம் இனி வேறொரு சிறுமிக்கும் நிகழக்கூடாது. வறுமை என்பது மாற்றப்படக் கூடியதொன்று. கடந்த ஒரு நூற்றாண்டில் உலக வறுமை கணிசமாகக் குறைந்துள்ளது. அதிலும் குறிப்பாக, இலங்கை போன்ற மக்கள் நலன்புரி அரசில், இதற்கான முறையான திட்டங்களை வினைத்திறனாக அமல்ப்படுத்துவதன் மூலம், இதனை இலகுவாகச் சாதித்துக்கொள்ள முடியும். வறுமையை ஒழிப்பதற்கான பலம், வினைத்திறனான அரசியலிடம் இருக்கிறது. ஆனால், சாதிப்பதற்கு உண்மையான, நேர்மையான, மக்களை விசுவாசமாக நேசிக்கும் தலைமைகள் தேவை. மலையகத்தில் அத்தகைய தலைமைகள் இருப்பதாகத் தெரியவில்லை. தமது வயிற்றுப் பிழைப்புக்காக மலையக மக்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தும் தலைமைகள்தான் மலையக மக்களின் பெரும் சாபக்கேடு. மக்களை விவரம் தெரியாதவர்களாக, வறுமை நிலையிலேயே வைத்துக்கொண்டு, பொய்யான வாக்குறுதிகளையும் நிறைவேறாத நம்பிக்கைகளையும் மீண்டும் மீண்டும் வழங்கி, அவர்களின் வாக்குகளை அறுவடை செய்துகொண்டு, அந்த மக்களுக்கு எந்த நன்மையும் விளையாத கேவலாமான அரசியலை முன்னெடுத்து வருகிறார்கள். அடுத்து வரும் இளந்தலைமுறையாவது, இந்த நிலைமையை மாற்றும் என்று எண்ணுவோமாக! https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வறுமையும்-அரசியலும்/91-277931
  11. ‘கறுப்பு ஜூலை’: மறக்கக்கூடாத வரலாறு என்.கே. அஷோக்பரன் போலந்து நாட்டின், க்ரக்கவ் நகருக்குப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு 2018ஆம் ஆண்டு கிடைந்திருந்தது. போலந்தின் க்ரக்கவ் நகரிலிருந்து ஏறத்தாழ ஒன்றரை மணிநேர பயண தூரத்தில் இருக்கிறது நாஸிகளின் ‘ஒஷ்விட்ஸ்’ சித்திரவதை முகாம். பல்லாயிரம் யூதர்களை, நாஸிகள் அடைத்துவைத்த பல சித்திரவதை முகாம்களில் ஒஷ்விட்ஸூம் ஒன்று. சித்திரவதை முகாம், யூதர்கள் விஷவாயு செலுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட விஷவாயு அறைகளைக் கொண்டதும், சுவரோடு நிற்கவைத்து சுட்டுக்கொல்லப்படும் கொலைச் சுவரைக் கொண்டதுமான கொலைக்களம் அது. இன்று, அந்த முகாம் ஒஷ்விட்ஸ் ஞாபகார்த்த முகாமாக, வரலாற்றின் கொடுமையான பக்கங்களை, அடுத்து வரும் சந்ததிகள் அறிந்துகொள்வதற்காக, பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. யூதர்களின் வெட்டப்பட்ட தலைமுடிகள், அவர்கள் கொண்டு வந்த பயணப் பெட்டிகள், அவர்களது உணவுத் தட்டுகள், தண்ணீர்க் கோப்பைகள், காலணிகள் என்பவை மாபெரும் மண்டப அளவிலான கண்ணாடிப் பெட்டிக்குள் பல்லாயிரக்கணக்கில் குவிக்கப்பட்டு, காட்சிப்படுத்தப்பட்டு உள்ளமை எந்த உறுதியான இதயத்தையும் அதிர்ச்சியடைய வைக்கக்கூடியவை. அங்கு, அடைத்து வைக்கப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்த முகாம் அறைகள், உடனடித் தீர்ப்பு வழங்கப்படும் அறை, அதற்கடுத்து, சுட்டுக்கொல்லப்பட முன்பு உடைமாற்றித் தம்மைக் கழுவிக்கொள்வதற்கான அறை, அடுத்து காத்திருப்பு அறை, அதற்கு அப்பால் கொலைச் சுவர் என அந்த முகாமினூடாக நடக்கும் போதே, கால்கள் நடுங்கும்! ஒரு கட்டடத்தின் அடிப்பகுதியில் சில அறைகள்; அவைதான் விஷவாயு அறைகள் என அங்கிருந்த வழிகாட்டி சொன்னபோது, முதுகுத்தண்டினூடாக மின்சாரம் பாய்ந்ததைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. அந்த முகாமினூடாக நடந்தபோது, ஏதோ பெரும் அவல ஓலச்சத்தங்கள் ஒலித்துக் கொண்டிருப்பதாகவே காதுகள் உணர்ந்தன. கண்டவை தந்த அதிர்ச்சியால் வந்த மனப்பிரம்மையாக அது இருக்கலாம். முதலாவது முகாமைப் பார்த்துவிட்டு வௌியே வந்தபோது, இரண்டாவது முகாமுக்குச் செல்லும் மனப்பலம் இருக்கவில்லை. இந்தச் சித்திரவதை முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்களின் (குழந்தைகள் உட்பட) புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. உலகின் பல்வேறு பாகங்களில் இருந்தும் வந்திருந்தவர்களில் சிலர், தமது மூதாதையர்களின் படங்களை அடையாளம்கண்டு, கண்ணீர் மல்கினார்கள். அது மனதை நொறுக்கும் காட்சியாக இருந்தது. அன்றைய தினம், மனம் உறக்கம் கொள்ளவில்லை; சிந்தனைகள் எங்கெங்கோ சென்றன. இன்று ஞாபகச் சின்னமாக மாறியிருக்கும் ‘ஒஷ்விட்ஸ் முகாம்’, எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பு, வார்த்தைகளுக்குள் அடங்காது. நாஸிகளின் கொடுமைகள் பற்றி, பல ஆயிரம் பங்கங்களில் எழுதிய எழுத்தின் மூலம் உணரப்பட முடியாததை, அந்த ஞாபகச்சின்னம் உணர்த்தியது என்றால் அது மிகையல்ல. அந்த உணர்வு, நாஸிகளின் கொடுமைகள் பற்றிய உணர்வு மட்டுமல்ல; அது அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் எல்லா மனிதர்களின் மீதுமான உணர்வு; உலகில் இதுபோன்ற கொடுமைகள், இனி அரங்கேறவே கூடாது என்ற உணர்வு; அதனை உணர்வதற்கு யூதனாக இருக்க வேண்டியதில்லை; மனிதனாக இருந்தால் போதும். நிற்க! இன்று ஞாபகார்த்த இடமாக மாற்றப்பட்டுள்ள ஒஷ்விட்ஸ் சித்திரவதை முகாமின் ஒரு கட்டடத்துக்குள் நுழையும் போது, ‘வாழ்வுக்கான காரணம்’ (The Life of Reason) எனும் நூலின் ஆசிரியர் ஜோர்ஜ் சன்ரயானா, தனது நூலில் எழுதியிருந்த, ‘வரலாற்றிலிருந்து படிப்பினைகளைப் பெற்றுக் கொள்ளாதவர்கள், வரலாற்றை மீள அரங்கேற்றுவதற்குச் சபிக்கப்பட்டவர்கள் ஆகிறார்கள்’ என்ற வாசகம், அதன் வாசலில் எழுதப்பட்டிருந்தது. எத்தனை உண்மையான, பலம் மிக்க வசனம் அது. அன்று ஜேர்மனியை ஆண்ட, முதலாவது உலக யுத்தத்தில் தோல்வியடைந்த ஜேர்மனியை, சில தசாப்தங்களில் மீண்டும் உலகத்தோடு போரிடும் வல்லரசாக மாற்றிய நாஸிகளின் கொடுமைகளைப் பற்றி, இன்று ஜேர்மனியில் கற்பிக்கிறார்கள்; நாஸிகள் நாயகர்கள் அல்ல என்பதைக் கற்பிக்கிறார்கள்; அவர்கள் கட்டவிழ்த்துவிட்ட படுகொலைகளைப் பற்றி, சித்திரவதைகளைப் பற்றிக் கற்பிக்கிறார்கள். இதன் நோக்கம், இனி இதுபோல் ஒரு கொடுமை நிகழ்ந்துவிடக்கூடாது என்பதுதான். யூதர்கள், உரோமானியர், நாடோடிகள் ஆகியோரை நாஸிகள் வெறுத்தார்கள். தூய ஜேர்மானிய இனத்தை, இந்த ‘அந்நியர்’கள் அசுத்தப்படுத்துவதாக பரப்புரை செய்தார்கள். அந்த வெறுப்பின் காரணமாக, அவர்களை சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பி, பட்டினிபோட்டு, கடும் வேலைகளைச் செய்யவைத்து, சித்திரவதைகளைச் செய்து, அவர்களைத் தமது மருத்துவ ஆராய்ச்சிக்கு ஒரு விலங்கைப் போல பயன்படுத்தி, சுட்டுக்கொன்று, விஷவாயு செலுத்திக் கொன்று என, நாஸிகள் மீது அரங்கேற்றப்பட்ட கொடுமை கொஞ்ச நஞ்சமல்ல. இந்தக் கொடுமைகளுக்கு எல்லாம் ஆணிவேர் வெறுப்பு. 1983இல், இலங்கையில் அரங்கேறிய ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பின் அடிப்படையும் வெறுப்புத்தான். உதாரணமாக, 1983 மே 19 ஆம் திகதி, ‘தி ஐலண்ட்’ பத்திரிகையில் பிரசுரமான, டி சில்வா என்ற ஒரு வாசகர் எழுதிய கடிதமானது, பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கான வழிகளை முன்வைத்தது. அவர் முன்வைத்த வழிமுறையின் சுருக்கமானது: ‘வடக்கு, கிழக்கில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட வேண்டும். பொலிஸ், இராணுவம் ஆகிய படைகள் மேலதிகமாக அனுப்பப்பட்டு, பயங்கரவாதிகள் வேட்டையாடப்பட வேண்டும். அவர்களைக் கண்டவுடன் சுட வேண்டும். பாரம்பரிய தமிழர் தாயகம் என்று சொல்லப்படும் பிரதேசங்களில், சிங்களவர்கள் குடியேற்றப்பட வேண்டும். எந்தச் சந்தர்ப்பத்திலும் ‘ஈழம்’ என்ற ஒன்று வழங்கப்படாது என்ற பிரகடனத்தை வெளியிட வேண்டும். வடக்கு, கிழக்கில் பாதுகாப்புப் படைகளை வைத்திருப்பதற்கான மேலதிக செலவானது, அங்கு வதிவோரின் மீது விசேட வரியொன்றை விதிப்பதனூடாக ஈடுசெய்யப்படலாம். பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் பாதிக்கப்படுவோருக்கு எந்த நட்டஈடும் வழங்கக் கூடாது’ என்றவாறாகக் காணப்பட்டது. 1983ஆம் ஆண்டு, கறுப்பு ஜூலைக் கலவரத்தின் பின்னணியில், இதுபோன்ற கடும் தமிழின வெறுப்பு மனநிலை இருந்தது. இது ஒரே நாளில் வந்ததல்ல; கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டமைக்கப்பட்டது. இதில் இலங்கை அரசியலின் பங்கு முக்கியமானது. 1956ஆம் ஆண்டு முதல், தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வெறுப்பும் வன்முறைகளும் இதற்குச் சாட்சி. இதில் அரச இயந்திரத்தின் பங்கும் குறிப்பிடத்தக்கது. 1983ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் திகதி, லண்டன் ‘டெய்லி ரெலிகிராப்’ பத்திரிகைக்கு இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன ஒரு குறுஞ்செவ்வியை அளித்திருந்தார். அதில், “யாழ்ப்பாண மக்களின் (தமிழ் மக்களின்) அபிப்பிராயத்தைப் பற்றி, இப்போது நான் கவலைப்படவில்லை; நாம், அவர்களைப் பற்றி யோசிக்க முடியாது. அவர்களுடைய உயிர்களைப் பற்றியோ, அவர்கள் எம்மைப் பற்றிக் கொண்டிருக்கும் அபிப்பிராயம் பற்றியோ யோசிக்க முடியாது; வடக்கின் மீது எவ்வளவுக்கு எவ்வளவு அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறதோ, அவ்வளவுக்கு இங்குள்ள சிங்கள மக்கள் சந்தோஷப்படுவார்கள்” என்று, அப்பட்டமான இனவெறி அரசியலை, வௌிப்படையாக உலகுக்கு அவர் சொல்லியிருந்தார். ஆனால், இந்த வரலாறுகள் இலங்கையில் கற்பிக்கப்படுவதில்லை. இன்று கூட, தமிழ் மக்களுக்கு அடைக்கலமும் பாதுகாப்பும் வழங்கிய சிங்கள மக்கள் பற்றிய கருத்தியலை ‘கறுப்பு ஜூலை’ பற்றிப் பேசும் போது பலரும் முன்வைக்கிறார்கள். தம்முடைய உயிரைப் பணயம் வைத்து, பல தமிழ்க் குடும்பங்களைப் பாதுகாத்த சிங்கள மக்கள் பலபேர் இருக்கின்றார்கள். அது உண்மை! ஆனால், ‘கறுப்பு ஜூலை’ என்பது அவர்களைப் பற்றியது அல்ல. தமிழ் மக்களின் உயிர்களைப் பாதுகாத்த அந்த நல்ல உள்ளங்கள் அங்கிகரிக்கப்பட வேண்டியவையே! ஆனால், ‘கறுப்பு ஜூலை’ அவர்களைப் பற்றியது அல்ல. ‘கறுப்பு ஜூலை’யின் கருத்தியலை, அவ்வாறு மாற்ற முனைவது பெரும் வரலாற்றுத் துரோகமாகும். ‘கறுப்பு ஜூலை’ என்பது, இந்த நாட்டில் வேர் கொண்டுள்ள இனவெறியைப் பற்றியது. ஆதிக்க மனநிலை கொண்ட பேரினவாதம், சிறுபான்மை இனத்தை இன அழிப்புச் செய்ததன் வரலாறு. இதில் பெருஞ்சோகம் என்னவென்றால், இதைப் பற்றி முறையான நீதி விசாரணை இடம்பெற்று, குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. இதன் பின்னணியில் இருந்தவர்கள் பொறுப்புக்கூற வைக்கப்படவில்லை. இது பற்றி, நாம் பேசுவது கூட இல்லை. குறைந்த பட்சம், ஞாபகார்த்த நிகழ்வுகளை அரசு நடத்துவதும் இல்லை. ஒரு ஞாபகார்த்த சின்னம் கூட இல்லை. ஜேர்மனியோடு இதனை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம்! தமது பிழைகள், தாம் இழைத்த கொடுமைகளை மறைத்துவிட்டு, வரலாற்றுக்கு வௌ்ளைச் சாயம் அடிப்பதால் எந்த நன்மையும் விளையப்போவதில்லை. வரலாற்றின் தவறுகளை ஏற்றுக்கொண்டு, அதற்குப் பிரயாச்சித்தம் தேடுவதுடன், இனி இதுபோன்ற நிலை வரக்கூடாது என்பதற்காக அந்த வரலாற்றுத்தவறைப் பற்றி, அடுத்த சந்ததிக்குக் கற்பிப்பதுதான் இந்த நாட்டுக்கும் அதன் எதிர்காலத்துக்கும் நாம் செய்யக்கூடிய பெருந்தொண்டு ஆகும். மறக்கமுடியாத வரலாறு இது. மனிதத்துக்கு எதிரான இந்தப் பெரும் குற்றத்துக்கு எவரேனும் பொறுப்பேற்றுக்கொண்டால்தான், மன்னிப்பது பற்றி பாதிக்கப்பட்டவர்கள் சிந்திக்கக் கூட முடியும். யாரும் பொறுப்பேற்றுக்கொள்ளாத குற்றத்துக்கு யாரை மன்னிப்பது? https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கறுப்பு-ஜூலை-மறக்கக்கூடாத-வரலாறு/91-277447
  12. அடக்குமுறைச் சிந்தனைகள் என்.கே. அஷோக்பரன் இலங்கையர்களின் ‘ட்விட்டர்’ சமூக வலைத்தளப் பகுதியில், இலங்கையின் பிரபல ஊடக நிறுவனமொன்றின் பணிப்பாளரான, அரசியல் பின்புலத்திலிருந்து வந்த பெண்மணி ஒருவர், அண்மையில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார். அவர், முன்னொருபொழுது வழங்கியிருந்த பேட்டியொன்றும் பெண் தலைமைத்துவ விருது வழங்கல் நிகழ்வொன்றில் ஆற்றியிருந்த உரையொன்றும், மீண்டும் ‘ட்விட்டர்’ தளத்தில் பகிரப்பட்டதே, அவர் விமர்சனங்களைச் சந்திக்கக் காரணமாயிற்று. அந்த விருது வழங்கும் விழாவில், அவர் ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்த விடயங்கள், இங்கு கவனமீர்ப்பதாக அமைகிறது. அந்த உரையின் இரத்தினச் சுருக்கம், தன்னிடம் அதிகாரம் வந்தால், தான் ஊடகங்களையும், சமூக ஊடகங்களையும் போர்க்கால அறையொன்றை அமைத்து, தணிக்கை செய்வேன் எனும் தொனியில் அமைந்திருந்தது. அவருக்கெதிரான விமர்சனங்கள் முன் வைக்கப்படுவதற்கு இந்தக் கருத்து முக்கிய காரணமாகியது. சில விமர்சகர்கள், இந்தப் பெண்மணியை ஹிட்லரின் பிரசாரப் பீரங்கியான கோயபெல்ஸூடன் ஒப்பிடவும் செய்தார்கள். அதன் பொருத்தப்பாடுகள் எவ்வாறு இருப்பினும், இந்த ஒப்பீட்டுக்கான காரணம், ‘தணிக்கை’ எனும் இரும்புக்கரத்தைக் கொண்டு, அடக்குமுறையைப் பயன்படுத்தி ஊடகங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, பேச்சுரிமை, கருத்து வௌிப்பாட்டுச் சுதந்திரம் ஆகியவற்றை மீறிச்செயற்பட்டு, அதனூடாகத் தமது கருத்துகளை மட்டும் பிரசாரம் செய்தல் போன்ற எண்ணங்களை, குறித்த பெண்மணி வௌிப்படுத்தியதாக இருக்கலாம். சுதந்திரத்துக்கான மனிதனின் வேட்கை என்பது, குறைத்து மதிப்பிடக்கூடிய ஒன்றல்ல. 1320இன் ஸ்கொட்லாந்தின் சுதந்திர பிரகடனமான ‘ஆப்ரோத்’ அறிவிப்பில், “நாம் போராடுவது புகழுக்காகவோ, செல்வத்துக்காகவோ, மதிப்புக்காகவோ அல்ல. நாம் எந்த நல்ல மனிதனும் விட்டுக்கொடுக்காத, அதற்கான தன் உயிரையும் விடத்துணியும் சுதந்திரத்துக்காக மட்டுமே போராடுகிறோம்” என்று வௌிப்பட்டிருந்த வார்தைகள் சுதந்திரத்துக்கான மனிதனின் வேட்கையை எடுத்துக்காட்டும் சிறந்த உதாரணங்களுள் ஒன்றாகும். உரிமைகளும் சுதந்திரமும் அடக்கப்படும் போது, அதை பெற்றுக்கொள்ள மனிதன் தன் உயிரையும் பணயம் வைக்கத்தயங்கியதில்லை என்பதற்கு உலக வரலாறே சாட்சி. அதனால்தான், உலக வரலாற்றில் வல்லாட்சிகள் நீடித்து நிலைத்ததில்லை. “மனிதனின் இருப்பை உறுதிப்படுத்துவதே, அவனது சிந்தனைதான் என்பது மேற்குலகின் தத்துவ அடிப்படைகளில் ஒன்று” என்பார் பிரெஞ்சுத் தத்துவவியலாளரான ரெனே டெய்காட். ஆகவே, சிந்தனை என்பது மனிதனின் இருப்பின் அடிப்படைகளில் ஒன்று! அதனால்தான், சிந்தனைக்கான சுதந்திரம் என்பது, மனித இருப்பின் அடிப்படை. சிந்தனையின் தொடர்ச்சிதான், அதன் வௌிப்பாடு. ஆகவே தான், மனித உரிமைகளின் அடிப்படையானதாக பேச்சுரிமை அதாவது, சிந்தனைகளின் வௌிப்பாட்டுரிமை அமைகிறது. பிரெஞ்சுப் புரட்சியைத் தொடர்ந்து, வௌியான மனிதன் மற்றும் குடிமக்களின் உரிமைகள் பிரகடனத்தில், பேச்சுரிமையின் முக்கியத்துவம், “கருத்துகள் மற்றும் அபிப்பிராயங்களின் கட்டற்ற தொடர்பாடல் என்பது மனிதனின் உரிமைகளில் கட்டற்ற பொக்கிஷமாகும்”என்ற வார்த்தைகளின் ஊடாக அங்கிகரிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அது பேச்சுரிமைக்கான சட்டரீதியிலான மட்டுப்பாடுகள் உருவாக்கப்பட முடியும் என்பதையும் குறிப்பிட்டிருந்தது. ஆனால், இதன் பின்னர் அடுத்த சில வருடங்களில் பிறந்த அமெரிக்க அரசியலமைப்புக்கான முதலாவது திருத்தம் பேச்சுரிமை, ஊடக உரிமை, ஒன்றுகூடலுக்கான உரிமை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் சட்டமியற்றமுடியாத மட்டுப்பாட்டை அமெரிக்க கொங்கிரஸுக்கு ஏற்படுத்தும் அளவுக்குப் பேச்சுரிமையின் முக்கியத்துவத்தை அங்கிகரித்திருந்தது. எவரும் தாம் விரும்பிய சிந்தனைகளைக் கொண்டிருக்கவும் அதனைப் பேசவும் அச்சிடவும் பிரசாரம் செய்வதற்குமான உரிமை அங்கிகரிக்கப்பட்டமை, மனித வரலாற்றின் பெரும் திருப்புமுனை. அமெரிக்காவைப் போன்ற பரந்த பேச்சுரிமைக்கான அங்கிகாரம் பல்வேறு நாடுகளுக்கும் உவப்பானதாக அமையவில்லை. காரணம், பல்வேறு நாடுகளுக்கும் வேறு முக்கிய நிகழ்ச்சி நிரல்கள் இருந்தன. அதில் முக்கியமானது மதம். மதச்சார்புடைய நாடுகள், தமது மதங்களைப் பாதுகாக்கத் தலைப்பட்டன. அதற்காக பேச்சுரிமையை மட்டுப்படுத்த வேண்டியதாயிற்று. மேலும் முடியாட்சி, சர்வாதிகார ஆட்சி, கம்யூனிஸ வல்லாட்சி உடைய நாடுகள், தம்முடைய அதிகாரத்தைப் பாதுகாக்க, பேச்சுரிமையை மட்டுப்படுத்தின. இந்த நிலைமை இன்றும் தொடர்கிறது. சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சிப்பது, கடும் விளைவுகளைக் கொண்டதாக அமையும். ஆட்சியாளர்களை மீறி, எந்தவொரு தகவலும் கூட மக்களைச் சென்றடைய முடியாத நிலை அங்கு நிலவுகிறது. சிங்கப்பூரில் கூட, பேச்சு சுதந்திரம் என்பது பெரும் மட்டுப்பாடுகளைக் கொண்டதாகவே இருக்கிறது. இதன் விளைவுதான் சிங்கப்பூரை சுதந்திரகாலம் முதல் ஒரே கட்சி ஆண்டு வருகிறது. இந்தப் பின்புலத்தில்தான் இலங்கையில், குறிப்பாக அதிகார பரப்பில் உள்ளவர்களிடம் உருவாகியுள்ள தணிக்கை மீதான பற்று, இலங்கையர்களின் பேச்சுரிமையையும் வௌிப்பாட்டு உரிமையையும் கட்டுப்படுத்துவதில் கொண்டுள்ள ஈர்ப்பு, தகவலறியும் மக்களின் உரிமை ஆகியவற்றைத் தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்கான துடிப்பு என்பனவற்றை நாம் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது. சீனாவிடமிருந்தும் சிங்கப்பூரிடமிருந்தும் உற்பத்தியை அதிகரிக்கும் முறைகள், உட்கட்மைப்பு அபிவிருத்தி உபாயங்கள் போன்றவற்றைக் கற்றுக்கொள்ளாது, அவற்றின் அடக்குமுறை வழிவகைகளை மட்டும் பின்பற்ற விளைவதன் நோக்கம், ஆட்சியாளர்கள் தம் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளல், அதிகாரத்தைப் பலப்படுத்தல் என்பதாகவே அமைகிறது. சமூக ஊடகங்களுக்கு முற்பட்ட காலத்தில், அரச ஊடகம் அரசாங்கத்தின் கைப்பிள்ளையாக இருந்த நிலையில், தனியார் ஊடகங்களை சாம, தான, பேத, தண்டங்களினூடாகத் தமக்குச் சாதகமாக மாற்றிக்கொள்வதன் மூலம், மக்களின் தகவலறியும் உரிமையை பெருமளவுக்குக் கட்டுப்படுத்தும் கைங்கரியத்தை ஆட்சியாளர்கள் முன்னெடுத்தார்கள். ஆட்சியாளர்களுக்கு எதிராக கருத்துகளைத் வௌிப்படுத்திய தனியார் ஊடகங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுதல், ஊடகவியலாளர்கள் காணாமல் போதல், கொல்லப்படுதல் என்பவை எல்லாம் நாம் காணாததல்ல. ஆனால், சமூக ஊடகங்களின் வருகை, வல்லாட்சியாளர்களுக்கும் அவர்களின் அடிவருடிகளுக்கும் பெரும் சவாலாக மாறியிருக்கிறது. தன்னைப் பெரும் மரியாதைக்குரிய நபராகக் காட்டிக்கொள்ள விளையும் ஆட்சியாளர் ஒருவர், மிக முக்கியமானதாகக் கருதி வௌியிட்ட ‘பேஸ்புக்’ கருத்துக்கு ‘ஹஹா’ போட்டுச் சிரிக்கும் நபர்களை, அவர்களால் கட்டுப்படுத்த முடியாதது, அவர்களின் ஈகோவை பெருமளவு பாதிப்பதுடன், இரத்தக் கொதிப்பை அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லைத்தான். இதேபோலத்தான், பெரும் அரசியல் பின்புலத்திலிருந்து வந்து, நாட்டின் செல்வாக்கு மிக்க ஊடகமொன்றை நடத்திக்கொண்டிருக்கும் ஒருவர், அவர் கூறிய அரைகுறைத்தனமான கருத்துக்காகப் பொதுவௌியில் சாதாரண குடிமக்களால் விமர்சிக்கப்படும் போது, அது அவரின் ஈகோவை மிகக் காயப்படுத்துவதாக அமைகிறது. பெரிய நிலைகளில் இருந்தாலும், தாழ்வுச்சிக்கல் நிறைந்த மனங்களால் நியாயமான விமர்சனங்களைக் கூட ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. ஆகவேதான், தணிக்கை, போர்க்கால அறை அமைத்து கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த முயலுதல் ஆகிய வல்லாதிக்க சிந்தனைகளை அவர்கள் வௌிப்படுத்துகிறார்கள். “ஜனநாயகம் என்பது சிக்கலானதுதான். ஜனநாயகத்துக்கு எதிரான மிகச் சிறந்த வாதம் சராசரி வாக்காளருடனான ஐந்து நிமிட உரையாடலாகும்” என்றார் சேர் வின்ஸ்டன் சேர்ச்சில். ஆனால், அவரேதான், “ஜனநாயகம் மிகச் சிறந்தது என்று யாரும் பாசாங்கு செய்யவில்லை. அவ்வப்போது முயற்சிக்கப்பட்ட மற்ற அனைத்து ஆட்சி வடிவங்களிலும் ஜனநாயகம் மோசமான தன்மை குறைந்தது” என்றும் தெரிவித்தார். சுருக்கமாகச் சொன்னால், இதுவரை மனிதன் முயற்சித்த எல்லா ஆட்சி வடிவங்களிலும், ஜனநாயகமே ஒப்பீட்டளிவில் சிறந்ததாக இருக்கிறது. அதற்குக் காரணம், அது தனி மனித உரிமைகளையும் சுதந்திரங்ளையும் மதிக்கிறது. வல்லாட்சியைத் தடுப்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டமைகிறது. வெறும் தேர்தல்கள் மட்டும்தான் ஜனநாயகம் என்பது பொய். தனி மனித சுதந்திரங்களும் உரிமைகளும் இல்லாத நாடு, வெற்றுத் தேர்தல் நாடகத்தை அரங்கேற்றுவதால் ஜனநாயக நாடாகிவிடாது. ஆனால், இந்த தனி மனித உரிமைகளும் சுதந்திரங்களும் வல்லாட்சி நோக்கும், அதனை அடைந்துகொள்வதற்கான அடக்குமுறைச் சிந்தனைகளும் கொண்ட ஆட்சியாளர்களுக்கும் அவர்களது அடிவருடிகளுக்கும் உவப்பானதாக இருப்பதில்லை. ஆகவேதான் தனிமனித உரிமைகளை அடக்கியாள அவர்கள் முனைகிறார்கள். தமது உரிமைகளையும் சுதந்திரத்தையும் இத்தகைய ஆட்சியாளர்களிடமிருந்தும், அவர்களது அடிவருடிகளிடமிருந்தும் மக்கள் கண்ணுங்கருத்துமாகப் பாதுகாப்பது அவசியம். சுதந்திரங்களும் உரிமைகளும் ஒருமுறை பறிபோய்விட்டால், அதனை மீட்பதற்கு மனிதகுலம் பெரும் போராட்டத்தை சந்திக்க வேண்டியதாக இருக்கும். அதற்கு உலக வரலாறே சாட்சி. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அடக்குமுறைச்-சிந்தனைகள்/91-276992
  13. குடும்ப ஆட்சியும் இலங்கையும் என்.கே.அஷோக்பரன் சமகால அரசியலில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை என்று அண்மையில் நாமல் ராஜபக்‌ஷ சொல்லியிருந்த கருத்து பெரும் நகைமுரணான வரவேற்பைப் பெற்றிருந்தது. கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதி, அவரின் அண்ணன் மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமர் மற்றும் முக்கிய பொருளாதாரம் சார்ந்த அமைச்சுக்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறார், பாராளுமன்றத் தேர்தலில் போட்டியாடாத, தேசியப்பட்டியலில் கூட பெயர் இடம்பெறாத, ஆனால் இன்று பாராளுமன்றம் ஏகியுள்ள தம்பி பெசில் ராஜபக்‌ஷ நிதி அமைச்சர், அண்ணன் சமல் ராஜபக்‌ஷ அமைச்சரவை அமைச்சர், அவரின் மகன் சஷீந்திர ராஜபக்‌ஷ இராஜாங்க அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்‌ஷ அமைச்சரவை அமைச்சர், ராஜபக்‌ஷர்களின் சகோதரியான காந்தனி ராஜபக்‌ஷ ரணவக்கவின் மகன் நிபுன ரணவக்க மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர். மஹிந்தராஜபக்‌ஷவின் இன்னொரு மகனான யோஷித ராஜபக்‌ஷ பிரதமரின் அலுவலர்களின் முதல்வர். 2015 முன்னர் இருந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தில் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த நிஷாந்த விக்ரமசிங்ஹ, மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்‌ஷவின் சகோதரர். அதே ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக இருந்த சமீந்திரராஜபக்‌ஷ, சமல் ராஜபக்‌ஷவின் இன்னொரு மகன். 2006 காலப்பகுதியில் ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டவரும், கொவிட்-19 பெருந்தொற்றுக்கு மத்தியில் உக்ரேன் சுற்றுலாப்பயணிகளை இலங்கைக்கு அழைத்து வந்தவருமான உதயங்க வீரதுங்க மஹிந்த ராஜபக்‌ஷவின் தாயின் சகோதரியின் மகன். முன்னர் அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்ட ஜாலிய விக்ரமசூரிய மஹிந்த ராஜபக்‌ஷவின் தந்தையின் சகோதரர் டீ.எம்.ராஜபக்‌ஷவின் மகளின் மகன். மத்தளை விமானநிலையம் கட்டப்பட்ட காலத்தில் சிவில் விமானசேவை அதிகாரசபையின் தலைவராக இருந்த பிரசன்ன விக்ரமசூரிய, ஜாலிய விக்ரமசூரியவின் தம்பியாவார். நாமல் ராஜபக்‌ஷவின் கருத்து நகைமுரணான வரவேற்பைப் பெற்றமைக்கு இந்தப் பின்புலம்தான் காரணம். குடும்ப ஆட்சி என்று தமிழில் நாம் சுட்டுவதை ஆங்கிலத்தில் நெபொடிஸம் (Nepotism) என்பார்கள். இது nepotismo என்ற இத்தாலிய வார்த்தையிலிருந்து வந்தது. இந்த வார்த்தையின் வேர் nepos என்ற இலத்தீன் வார்த்தை. இலத்தீனில் nepos என்றால் nephew மருமகன் என்று அர்த்தம். 17ஆம் நூற்றாண்டிற்கு முன்னர், பாப்பரசர்களின் தமது அதிகாரத்தை தமக்கடுத்து, தமது மருமகன்களுக்கு வழங்கிய வழக்கத்தைக் குறித்து இந்தச் சொல் உருவாகியிருக்கலாம் என்கிறார்கள் சில ஆய்வாளர்கள். ஆனால் இந்தச் சொல்லின் பயன்பாடு, ஜனநாயக வௌியில்தான் முக்கியத்துவம் மிக்கதாக அமைகிறது. ஃபிரஞ்ச் புரட்சிக்கு முன்னர், அறுதிப்பலங்கொண்ட முடியாட்சியாக இருந்த பதின்நான்காம் லூயியின் ஆட்சியின் போது, தனது அறுதிப்பலத்தைக் குறிக்க பதின்நான்காம் லூயி சொன்னதான சொல்லப்படும் கூற்றுதான் “லீ டட் சீ முஆ” (l’etat, c'est moi), அதாவது “அரசு, அது நானே” (நானே அரசு). கவனிக்க, அரசன் நானே என்று லூயி சொல்லவில்லை, அரசே நான்தான் என்பதுதான் அவரது கூற்று. இத்தகைய அறுதிப்பலங்கொண்ட முடியாட்சியை வீழ்த்தித்தான் பிற்காலத்தில் நவீன ஜனநாயகம் பிறக்கிறது. ஃபிரஞ்ச் புரட்சியின் சிந்தாந்தகர்த்தாக்களில் ஒருவரான மொன்டஸ்க்யு “அதிகாரப் பிரிவுக் கோட்பாட்டை” முன்வைத்தது அறுதிப்பலங்கொண்ட தனிநபரின், அல்லது குழுக்களின் ஆட்சி உருவாகிவிடக்கூடாத என்பதனால்தான். ஓர் அரசின் மூன்று பாகங்களான சட்டவாக்கம், சட்டநிர்வாகம், நீதி ஆகியன ஒரு நபரின் அல்லது ஒரு குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது என்பதுதான் மொன்டெஸ்க்யூவின் கருத்தின் அடிப்படை. “அரசு, அது நானே” என்ற நிலை ஜனநாயகத்துக்கு உவப்பானதல்ல என்பதுதான் அதிகாரப் பகிர்வுக் கோட்பாட்டின் தாற்பரியம். ஆகவேதான் குடும்ப ஆட்சி ஜனநாயக விரோதமானதாகக் கருதப்படுகிறது. இந்த இடத்தில்தான் சிக்கலானதொரு மாற்றுக்கருத்து இடையீடு செய்கிறது. இங்கு கோட்டாபய, மஹிந்த, சமல், சஷீந்திர, நாமல் ஆகிய ராஜபக்‌ஷர்களும், நிபுன ரணவக்கவும் தேர்தலில் கோட்டியிட்டு மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்கள். ஆகவே, இதனை ஜனநாயக விரோதம் என்று எப்படிச்சொல்லலாம் என்ற கேள்வியில் சில நியாயங்கள் தென்படலாம். பெசிலின் நியமனம் வௌித்தோற்றத்திற்கு ஜனநாயக விரோதமானது என்பதில் மாற்றக்கருத்துக்கள் இருக்கமுடியாது. ஆனால், பெசில் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் அவர் வெற்றி பெற்றிருப்பார் என்பதில் பெரும் ஐயம் எழ முடியாது. இதற்குக் காரணம் எமது நாட்டின் அரசியல் கலாசாரம். எமது நாடு என்பதை விட, தெற்காசியாவின் அரசியல் கலாசாரம் என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். ஜனநாயகம் என்பது எமது நாடுகளில் போராடிப் பெறப்பட்ட ஒன்றல்ல. ஃபிரன்ஞ்ச் புரட்சியைப் போன்ற பெரும் புரட்சிகள் இங்கு மக்களால் நடத்தப்பட்டு முடியாட்சி வீழ்த்தப்படவில்லை. பிரித்தானிய கொலனித்துவத்துவக் காலகட்டத்தில் ஜனநாயகத்தின் சில அம்சங்கள் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டன. ஜனநாயக, தாராளவாத சிந்தனைகள் வலுப்பெறத்தொடங்கிய காலகட்டத்தில் பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய கல்வியைப் பெற்றுக்கொண்ட உயர்குழாம் அங்கு பிரபலமாகிக்கொண்டிருந்த ஜனநாயக, தாராளவாத சிந்தனைகளை இங்கு கொண்டுவந்தார்கள். ஆகவே, ஒருவகையில் சிந்தித்தால் இங்கு ஜனநாயகம் என்பது உயர்குழாமின் செயற்றிறட்டமாகவே இருந்தது. இதனால் ஜனநாயகக் கட்டமைப்புக்கள் தோற்றுவிக்கப்பட்டாலும், ஜனநாயக சிந்தனைகள் இங்கு பெருமளவிற்கு வேரூன்றவோ, வளம்பெறவோ இல்லை. நிலபிரபுத்துவக் கால சிந்தனைகளின் செல்வாக்கு தொடரவே செய்தது. அதனால்தான் ஆரம்பகாலம் முதல், இன்று வரை பிரித்தானிய கொலனித்துவ காலத்தில் பிரித்தானிய ஆட்சியாளர்களின் ஆதரவால் செல்வாக்குப் பெற்ற குடும்பங்களாக மாறியவையே, இன்றும் அரசியலிலும் செல்வாக்கோடு தொடர்வதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. இதனைக் குறிப்பிடுவதால் ஜனநாயகத்தால் மற்றவர்களுக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை என்று அர்த்தமல்ல. ஆனால் அதிகாரத்தின் ஸ்தலம் பெருமளவிற்கு மாறவில்லை. அவ்வப்போது ஏற்படும் குறுகிய மாற்றங்கள் கூட, புதிய “நிலபிரபுக்களை” உருவாக்குகிறதேயன்றி, இங்கு ஜனநாயக அரசியல் கலாசாரம் உறுதியடையவில்லை. 1936ல் தெற்கிலிருந்த கிராமமொன்றில் நிலவுடைமையாளர்களாக இருந்த ராஜபக்‌ஷர்களின் குடும்பத்திலிருந்து டீ.எம்.ராஜபக்‌ஷ அரச சபைக்கு தெரிவு செய்யப்படுவதோடு ராஜபக்‌ஷர்களின் அரசியல் பிரவேசம் தொடங்கியது. 1945ல் டொன் மத்யூ ராஜபக்‌ஷவின் மரணத்தைத் தொடர்ந்து இடம்பெற்ற இடைத் தேர்தலில் அவரின் சகோதரரும், மஹிந்த ராஜபக்‌ஷவின் தந்தையாருமான டொன் அல்வின் ராஜபக்‌ஷ தேர்தலில் வெற்றி பெறுகிறார். அதன் பின்னர் அரசியலில் அவர்களின் ஆதிக்கம் மக்களின் வாக்குகளோடு அதிகரித்ததேயன்றி குறையவில்லை. ஆகவே இந்த குடும்ப ஆட்சிக்கு அவர்கள் மட்டும் காரணமல்ல. அவர்களுக்கு வாக்களிக்கும் மக்கள்தான் பிரதான காரணம். இந்தியாவில் தேர்தலில் போட்டியிட நேரு பரம்பரையில் வந்தவன் என்பதைத்தவிர ராகுல் காந்திக்கு வேறு எந்த தகுதியும் தேவையில்லை. அதுபோலத்தான் இங்கும் பண்டாரநாயக்க, ராஜபக்‌ஷ, சேனநாயக்க, விக்ரமசிங்ஹ, விஜேவர்த்தன போன்ற குடும்பங்களைச் சார்ந்தவர்களின் நிலையும். இதற்கு அவர்கள் காரணம் என்று சொல்வது சோம்பேறிகளின் சாட்டாகத்தான் இருக்க முடியும். தேர்தலில் வெல்லவும், அதிகாரத்தைக் கைப்பற்றவும் ஒரு வாய்ப்பு இருக்கும் போது அதனை அவர்கள் பயன்படுத்தக்கூடாது என்று எதிர்பார்ப்பதில் நியாயமில்லை. இங்கு மக்களின் சிந்தனையும், மனநிலையும், அரசியல் கலாசாரமும்தான் மாறவேண்டும். ஒருவர் நல்லவர் வல்லவர் என்பதற்காக அவரது தம்பிக்கும், மனைவிக்கும், மகனுக்கும், பேரனுக்கும் வாக்களிக்கும் மக்கள் கூட்டம் குடும்ப ஆட்சியைப் பற்றி விமர்சிக்கும் தகுதியை இழந்துவிடுகிறது. அதேவேளை ஒருவர் அரசியலில் இருந்தார் என்பதனால், அவரது மகனோ, பேரனோ, தம்பியோ, மனைவியோ அரசியலுக்கு வரவே கூடாது என்பதும் அபத்தமாகும். இந்த நிலையில் ஒரு சாதகமான சமநிலையை சாதிப்பதற்கு வலுவான ஜனநாயக விழுமியங்களும், ஜனநாயகக் கட்டமைப்புக்களும், ஜனநாயக அரசியல் கலாசாரமும் கட்டியெழுப்பப்பட வேண்டும். அத்தகையதொரு கட்டமைப்பும், கலாசாரமும் இல்லாது போனால், இன்றுள்ள நிலபிரபுத்தன மனநிலையின் தொடர்ச்சியை நாம் மாற்றியமைக்க முடியாது. மாறாக காலங்காலமாக குடும்ப ஆட்சி பற்றி பிதற்றிக்கொண்டிருக்கும் கையறு நிலையில் நாம் சிக்கிக்கொண்டு விடுவோம். ஒரு வகையில், இந்த கலாசார மாற்றம் ஏற்படுதவற்கு இந்த குடும்ப ஆட்சியின் வல்லாதிக்கம் உதவலாம். இந்த வல்லாதிக்கம் அதிகரிக்க அதிகரிக்க, ஆட்சி தோல்வியடையும். அப்போதுதாவது மக்கள் இத்தகைய ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்தெழுவார்களேயானால், இங்கும் ஜனநாயனத்தின் தாற்பரியமும், தேவையும் மக்களால் நேரடியாக உணரப்படும். அது மட்டும்தான், இந்த நிலையை மாற்றியமைப்பதற்கான விதையாக அமையும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/குடும்ப-ஆட்சியும்-இலங்கையும்/91-276107
  14. பெரும் சாபக்கேடுகள் - என்.கே. அஷோக்பரன் ‘சிங்கப்பூரின் சிற்பி’ லீ க்வான் யூவின் நேர்காணல்கள் அடங்கிய நூலொன்று 1998இல் வௌியானது. அதில், லீ க்வான் யூ, இலங்கை பற்றிப் பேசியிருக்கும் விடயமும் பதிவாகியிருக்கிறது. ‘எங்கள் செயல்களின் விளைவுகளுடன் நாம் வாழ வேண்டியிருக்கிறது. எங்கள் சொந்த மக்களுக்கு நாங்கள் பொறுப்பு. அவர்களுக்காகச் சரியான முடிவுகளை எடுக்கிறோம். நீங்கள் பழைய பிலிப்பைன்ஸைப் பாருங்கள். பழைய இலங்கையைப் பாருங்கள். பழைய கிழக்கு பாகிஸ்தான் மற்றும் பலவற்றைப் பாருங்கள். நான் இந்த நாடுகளுக்கும் இடங்களுக்கும் சென்றிருக்கிறேன். 1956 ஆம் ஆண்டில், நான் முதன்முறையாக கொழும்புக்குச் சென்றபோது, அது சிங்கப்பூரை விடச் சிறந்த நகரமாக இருந்தது. ஏனெனில், சிங்கப்பூர் மூன்றரை ஆண்டுகள் ஜப்பானிய ஆக்கிரமிப்பில் இருந்தது. கொழும்பு மவுண்ட்பட்டனில், தென்கிழக்கு ஆசியா கட்டளையின் மையம் அல்லது தலைமையகமாக இருந்தது. அவர்களிடம் ஸ்டெர்லிங் (அந்நியச் செலாவணி) கையிருப்பு இருந்தது. அவர்களிடம் இரண்டு பல்கலைக்கழகங்கள் இருந்தன. போருக்கு முன்பு, படித்த திறமைகளின் அடர்த்தியான அடுக்கு இருந்தது. எனவே, அமெரிக்க தாராளவாதிகள் அல்லது பிரிட்டிஷ் தாராளவாதிகள் சொன்னதன் படி, அது செழித்திருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை. ஒரு நபருக்கு ஒரு வாக்கு என்பது, சிறுபான்மை தமிழர்கள் மீது, சிங்களப் பெரும்பான்மையின ஆதிக்கத்துக்கு வழிவகுத்தது. அது தீவிரமாகவும் சுறுசுறுப்பாகவும் உழைத்த புத்திசாலித்தனமான தமிழர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது போலானது. மேலும் ஆங்கிலம் வெளியேற்றப்பட்டது. அவர்கள் ஆங்கிலத்திலேதான் கல்வி கற்றனர். சிங்களம் உட்கொண்டுவரப்பட்டது. அவர்களுக்கு இரண்டு பல்கலைக்கழகங்களில் ஒதுக்கீடு முறையில் இடம் கிடைத்தது. இப்போது அவர்கள் வெறித்தனமான புலிகளாக மாறிவிட்டனர். மேலும், நாடு மீண்டும் ஒருபோதும் ஒன்றிணைக்கப்படாத நிலை ஏற்பட்டுவிட்டது. யாராவது அவர்களிடம் சொல்லியிருக்க வேண்டும் - அமைப்பை மாற்றவும், தளர்த்தவும் அல்லது முறித்துக் கொள்ளவும். அவர்கள் பலவீனமான அல்லது தவறான தலைவர்களைக் கொண்டிருந்ததால் அவர்கள் தோல்வியடைந்தனர்’ என்று லீ க்வான் யூ இலங்கை பற்றிச் சொன்னதைக் அந்தப் புத்தகத்தில் பதிவுசெய்திருக்கிறார்கள். லீ க்வான் யூ சொன்னவற்றில் நான்கு விடயங்கள் இன்றும் பொருத்தப்பாடு உள்ளனவாகவே இருக்கின்றன. முதலாவது, இலங்கையின் இனவாத, அல்லது இன-மைய அரசியல், இலங்கையின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் முன்னெற்றத்துக்கும் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கின்றது என்பதுடன் மூளைசாலிகளின் வௌியேற்றத்துக்கும் வழிவகுத்தது. இலங்கையின் வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் உதவியிருக்கக்கூடிய இந்த மூளைகள், வளர்ந்த நாடுகளை வளர்ப்பதற்குப் பயன்பட்டுக்கொண்டிருக்கின்றன. இரண்டாவது, இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு பற்றியது. சர்வதேசத்தில் கேள்வி நிறைந்த பொருட்களின் உற்பத்தியால் ஏற்பட்ட ஏற்றுமதிகளின் விளைவால், அந்நியச் செலாவணி கையிருப்பைக் கொண்ட நாடாக இலங்கை இருந்தது. இன்று அந்நியச் செலாவணி கையிருப்புத் தீர்ந்து போய், வங்குரோத்தாகும் நிலையில் இலங்கை நின்று கொண்டிருக்கிறது. மூன்றாவது, அன்றே, பெரும் பல்கலைக்கழகத்தைக் கொண்டு அறிவுச் சமூகமாக வளர்ந்துகொண்டிருந்தது இலங்கை. இன்று, உலகத் தரவரிசையில் முதல் ஆயிரத்துக்குள் கூட இலங்கையின் ஒரு பல்கலைக்கழகமும் இல்லை என்ற நிலையில்தான் இலங்கையின் உயர்கல்வித் தரம் இருக்கிறது. நான்காவது, இலங்கையின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணமாக அமைந்தது, பலவீனமானதும் தவறான தலைமைகளைக் கொண்டிருந்ததுமாகும். இயற்கை வளம் நிறைந்த பூமி; கடல் வளம், கனிம வளம், மண் வளம், மலை வளம், நீர் வளம், மழை வளம், இயற்கைக் காடுகள், அருமையான சுவாத்தியம் என இயற்கை ஆசீர்வதித்த தீவு இலங்கை என்று சொன்னால் அது மிகையல்ல. ஆனால், ‘சுதந்திரம் அடைந்து’ 73 ஆண்டுகள் கடந்து, இன்று நாடு வங்குரோத்தாகும் நிலையில் நிற்கிறதென்றால் அதற்கு யார் பொறுப்பு என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது. ஒட்டுமொத்தமாகச் சொல்வதானால் இந்தத் தீவின் இந்த நிலைக்கு, இந்தத் தீவில் வாழும் மக்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் பொறுப்பாளிகள் ஆகிறார்கள். ஆனால், இந்தத் தீவின் பெரும் சாபக்கேடு, இந்தத் தீவுக்கு அமைந்த தலைமைகள். அவர்களைத் தலைமைகள் என்று விளிப்பதுகூட தலைமைத்துவத்தைக் கேவலப்படுத்துவதாகவேதான் அமையும். ஒரு வேளை, இந்நாட்டின் தலைமைகள் இனவாத அல்லது இன-மைய அரசியலை முன்னெடுக்காது, நாட்டைச் சமூக, பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை, சுதந்திரகாலம் முதல் மேற்கொண்டிருந்தால், இன்று இலங்கையின் நிலை வேறானதாக இருந்திருக்கும். ஆனால், தாம் அதிகாரத்துக்கு வந்துவிட வேண்டும்; அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, இனவாத அரசியல் எனும் குறுக்கு வழியைத் தேர்ந்தெடுத்து, இன்று முழுநாட்டையும் தோல்வியடையும் அரசாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இலங்கை அரசியலின் பெரும் சாபக்கேடு எஸ்.டபிள்யு.ஆர்.டீ. பண்டாரநாயக்கவுடன் ஆரம்பிக்கிறது. தான் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற சுயநலத்தில், பெரும்பான்மை இனத்தேசியவாத அரசியலுக்கு, அரசியலரங்கின் முன்வரிசையில் ஆசனமிட்டுக்கொடுத்த பண்டாரநாயக்க, இந்நாட்டின் தலைவிதியை மாற்றியெழுதினார். இவர்கள் செய்த அரசியலின் விளைவு, அவரின் இரண்டாம் தலைமுறை கூட, இந்நாட்டில் வாழாது, வளர்ந்த நாட்டுக்குக் குடிபெயர்ந்து வாழ்கிறது. தங்கள் வாரிசுகளுக்கு வௌிநாட்டு வாழ்க்கை எனும் மாற்றுத்திட்டத்தை வைத்துக்கொண்டு, இந்நாட்டை தமது சுயநல அரசியலுக்கும், அதிகார வேட்கைக்குமாக சீரழித்துவிடும் அரசியல் தலைமைகள்தான் இந்நாட்டின் சாபக்கேடு. உன் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் கூட வாழாத, வாழ விரும்பாத நாட்டுக்கு, நீ தலைவன் என்பது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு! என்றோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், யாரோ சில மன்னர்கள் இந்தத் தீவை இப்படி ஆண்டார்கள் என்ற பழங்கதைகளையும் பிரசாரங்களையும் வைத்துக்கொண்டு, 21ஆம் நூற்றாண்டில் இந்தத் தீவின் அரசியலை முன்னெடுப்பதெல்லாம் அபத்தத்தின் அபத்தம். மனித குலம் முன்னோக்கிச் செல்வதைப் பற்றி சிந்திக்கையில், இந்தத் தீவின் தலைமைகள் பின்னோக்கிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். தமது சுயநல அரசியலுக்காகவும் அதிகார வேட்கைக்காகவும் அப்பாவி மக்களிடம் மற்றையவர்கள் என்ற அடையாளப்படுத்தப்படுவோர் மீதான வெறுப்பையும் துவேசத்தையும் காழ்ப்புணர்வையும் பாதுகாப்பின்மை உணர்வையும் விதைத்து, தமக்கான வாக்குகளை அறுவடை செய்கிறார்கள். ஆனால், இவையெல்லாம் இந்த நாட்டையும், சமூகத்தையும், அரசியலையும் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளிருந்து அழுகச் செய்துகொண்டிருக்கிறன என்பதை மக்கள் உணர்வதாகவும் தெரியவில்லை. இந்த அரசியல் தலைமைகள், இவற்றை அறிந்திருந்தும், இவை பற்றிக் கவலைப்படுவதாகவும் தெரியவில்லை. தன்னுடைய மக்களிடையே அச்சம், சந்தேகம், வெறுப்பு, துவேசம் ஆகியவற்றை வளர்த்துவிடும் தலைமைகள் ஆளும் நாடு, ஒருபோதும் வளாச்சிப் பாதையில் செல்லாது. எத்தகைய வளம் மிக்க நாடாயினும், இதுபோன்ற அரசியல், அந்நாட்ச்டை சீரழித்து, சின்னாபின்னமாக்கிவிடும். இந்த வளம் மிக்க தீவுக்கும் இதுதான் நடந்துகொண்டிருக்கிறது. வங்குரோத்து நிலையின் எல்லைக்கோட்டில் திணறிக்கொண்டிருக்கும் நிலையில் கூட, இந்தத் தீவின் மக்கள் இங்கு நடந்துகொண்டிருக்கும் அரசியலின் அபத்தத்தைப் புரிந்துகொள்ளவில்லை என்றால், இந்தத் தீவுக்கு ஒருபோதும் விமோசனம் என்பது கிடையாது. வங்குரோத்து நிலைக்கு ஒரு நாட்டைக் கொண்டு வந்த பின்னர், பழங்கதைகளும் போலி இனப் பெருமைகளும் யாருக்கு என்ன நன்மையைத் தரப்போகிறது? ஒரு கணமேனும், இந்நாட்டை ஆண்ட ஒரு தலைமையேனும் ஆக்கபூர்வமாகச் சிந்தித்திருந்தால், மக்களிடையேயான வெறுப்பையும் துவேசத்தையும் கசப்பையும் காழ்ப்புணர்வையும் இன-மத அடைப்படைகளில் வளர்த்துவிடும் அரசியல் எல்லாருக்கும் ஆபத்தானது; அது எல்லாருக்கும் அழிவையும், நாசத்தையுமே ஏற்படுத்தும் என்ற் யதார்த்தத்தை உணர்ந்திருந்தால், தமது சுயநலத்தைத்தாண்டி அந்த யதார்த்தத்தை சுவீகரித்திருந்தால் இந்நாட்டுக்கு ஒரு புதிய வசந்தத்தின் தொடக்கமாக அது அமைந்திருந்திருக்கும். ஆனால் இந்நாட்டின் சாபக்கேடு, இதுநாள் வரை அப்படி யோசிக்கும், செயற்படும் தலைமைகள் இந்தத் தீவுக்கு அமையவில்லை. மாறாக நான் “இந்த இனத்தவன்”, “இந்த மதத்தவன்” என்று வெற்றுப் பெருமை பேசும் தலைமைகள்தான் இங்கு அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் இந்த நாட்டின் ஆன்மாவை சீரழித்துக்கொண்டிருக்கிறார்கள். இதுதான் இந்நாட்டின் பெரும் பெரும் சாபக்கேடு. இந்நாட்டு மக்கள் இதனைப் புரிந்துகொள்ளும் வரையில், இதற்கு சாப விமோசனம் கிட்டாது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பெரும்-சாபக்கேடுகள்/91-275816
  15. உண்மையும் உணர்வுமுனைப்பும் அரசியலும்: உண்மைகளாகும் பொய்கள் என்.கே. அஷோக்பரன் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட, உலகப் புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளரான மைக்கல் ஒண்டாச்சி, தன்னுடைய நூலொன்றில், ‘இலங்கையில் சிறப்பாகச் சொல்லப்பட்ட பொய் ஒன்று, ஆயிரம் உண்மைத் தரவுகளுக்குச் சமன்’ என்று குறிப்பிடுகிறார். இதை யார் புரிந்துகொண்டார்களோ இல்லையோ, இலங்கைத் தீவின் அரசியல்வாதிகள், நன்கு புரிந்துகொண்டிருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தை, ‘உண்மையைக் கடந்த, உணர்வுமுனைப்புக் காலகட்டம்’ (Post truth era) எனச் சிலர் விளிக்கிறார்கள். உணர்வுகள், தனிப்பட்ட கருத்துகளுக்கு, உண்மைகளை விட முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை இது சுட்டி நிற்கிறது. சமூக ஊடகப் பயன்பாடு, இந்த உண்மையைக் கடந்த உணர்வுமுனைப்புக்குப் பெருந்துணை செய்கிறது. எந்தவொரு தகவலும், அதன் உண்மைத்தன்மை பற்றிய அலசல்கள் எதுவுமின்றி, சமூக ஊடகவௌியில் பதிவிடப்படுவதும், அதன் உண்மைத்தன்மை பற்றிய எதுவித கேள்விகளுமின்றி, அது தனிநபர் உணர்வுகளின்படி, ஏதோ ஒரு வகையில் உண்மை என நம்பப்படும் அடிப்படையில் மட்டும் பலராலும் பகிரப்படுவது, சமூக ஊடகங்களின் நியதியாக மாறியுள்ளது. தனிமனித உணர்வுகள், உண்மையைப் பற்றி அக்கறை கொள்ளாத ஒரு வினோத காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். “அரசியலில் பொய் என்பது, புதிய விடயமல்ல! அன்று அளித்த வாக்குறுதி என்பது, அன்றைய காலகட்டத்தின் தேவை; அந்த வாக்குறுதி, இன்று மீறப்பட்டமை, இன்றைய காலகட்டத்தின் தேவை” என்கிறார் நிக்கலோ மாக்கியவலி. அதிகார அரசியலின், அழுக்கான முகத்தின் ஒரு பகுதி இது. அரசியல், ஜனநாயக மயப்படுத்தப்பட்டதில் இருந்து, அரசியலில் பொய்யின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. தமது அதிகாரத்தை, பிறப்பால் அல்லது செல்வத்தால் மட்டும் தக்க வைத்துக்கொள்ள முடியாத நிலையில், வாக்குகளுக்காக மக்களைக் கவர வேண்டிய தேவை இருக்கிறது. ஆகவே, எப்பிரயத்தனப் பட்டேனும், எக்காரியத்தைச் செய்தேனும் மக்களின் வாக்குகளை வேட்டையாடிவிட வேண்டிய தேவையின் விளைவாக, வாக்காளர்களைத் திறமையாகக் கையாள வேண்டிய நிர்ப்பந்தத்தை, அரசியல்வாதிகள் எதிர்கொள்கிறார்கள். “இயற்கையாகவே மனிதன், ஓர் அரசியல் விலங்கு” என்று அரிஸ்டோட்டில் கூறுகின்றார். ஆனால், மனிதன் அடிப்படையில் உணர்வுவயப்பட்ட விலங்கும் கூட! தனது சிந்தைனையாற்றல், பகுத்தறிவின் விளைவாக உணர்வுவயப்படுதலை, மனிதனால் கட்டுப்படுத்த முடிந்தாலும், இயற்கையான வடிவமைப்பை முற்றாகக் கட்டுப்படுத்தி விட முடியாது. ஆகவே, மனிதனைக் கட்டுப்படுத்தக்கூடிய பெரும் ஆயுதமாக, மனித உணர்வுகள் இருக்கின்றன. இதை, மிகத்தௌிவாகப் புரிந்தவர்கள் அரசியல்வாதிகள். ஆகவே, மனிதனின் இந்த உணர்வுகளைக் கொண்டு, உண்மைகளைக் கூட மறைக்கும் செப்படி வித்தை, அரசியல்வாதிகளுக்குக் கைவந்த கலை. அடல்ப் ஹிட்லர், ‘க்ரோஸ லூக’ (ஜேர்மன் மொழி, ‘பெரும் பொய்’) எனும் பிரசார உத்தி பற்றித் தன்னுடைய ‘மெய்ன் கம்ப்ஃப்’ (எனது போராட்டம்) நூலில் குறிப்பிட்டிருக்கிறார். இதன் சுருக்கம், ஒரு பொய்யைப் பெரிய அளவில் மீண்டும் மீண்டும் பிரசாரம் செய்யும் போது, அது உண்மை என நம்பப்படும் என்பதாகும். இதை, ஹிட்லரின் வலக்கரமாக இருந்த, ‘நாஸிக்களின் பிரசார பீரங்கி’ என்று கருதப்பட்ட ஜோசப் கோபெல்ஸ், யூதர்கள் மீதான வெறுப்பை விதைக்கும் பிரசாரத்துக்குப் பயன்படுத்தியிருந்தார். யூதர்களைப் பற்றிய பல பொய்கள், கட்டவிழ்த்து விடப்பட்டன. அவை, மீண்டும் மீண்டும் அரசியல் மேடைகளில், பிரசுரங்களில் சொல்லப்பட்டபோது, அதன் உண்மைத் தன்மை பற்றிய சந்தேகங்களைக் கடந்து, வெகுஜனங்களிடையே அது உண்மை என ஏற்றுக்கொள்ளப்படும் நிலை உருவானது. அதுவும், அவை உணர்வு ரீதியில் மக்கள் மீது தாக்கம் செலுத்தும் பொய்யாக இருக்கும் போது, அவை மறுகேள்வியின்றி மக்களை ஆட்கொண்டுவிடுகின்றன. ஆனால், நாஸிக்களின் காலத்தில் இந்தப் ‘பெரிய பொய்’யைச் சாத்தியமாக்க, நாடு முழுவதும் அரசியல் கூட்டங்கள் பெரியளவில் நடத்தப்பட வேண்டிய அவசியமும், இதுதொடர்பான பிரசுரங்கள் வௌியிடப்படுவதும், அது மக்களைச் சென்றடையச் செய்ய வேண்டியதுமான தேவை இருந்தது. ஆனால், இன்றைய சூழல் இதனை இலகுவாக்கி இருக்கிறது. இணைய வசதியுள்ள ஒருவர், தான் இருக்குமிடத்தில் இருந்துகொண்டே, இத்தகைய பிரசாரத்தைச் சாதிக்கக்கூடிய வல்லமையை சமூக ஊடகங்கள் ஏற்படுத்தி இருக்கின்றன. அதன் விளைவாக, மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் பொய்கள், பாதி உண்மைகள் என்பன பெரும் பிரசாரமாக, மக்கள் முன்னிலையில் முன்வைக்கப்படுகையில், அவை மறுகேள்வியின்றி அந்த மக்களை ஆட்கொண்டு விடுகின்றன. உதாரணத்துக்கு, அபிவிருத்தியடைந்த நாடொன்று பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கும் காலகட்டத்தில், அந்த நாட்டின் பூர்வீகக் குடிகளாகத் தம்மைக் கருதிக்கொள்ளும் பலரும் வேலைகளை இழக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதேவேளை, வளர்முக நாடுகளைச் சேர்ந்த பலர் அந்நாட்டில் குடியேறி, வேலைசெய்து வருகிறார்கள். சாதாரணமாக இவர்கள் செய்யும் வேலைகள், அந்நாட்டின் பூர்வீகக் குடிகளாகத் தம்மைக் கருதிக்கொள்வோர் செய்ய விரும்பாத வேலைகள். அதனால்தான், இந்த வேலைகளுக்கான கேள்வி அதிகரித்து, அதனை நிரப்ப, வளர்முக நாடுகளைச் சேர்ந்தவர்கள் அங்கு வரும் வாய்ப்பு எற்பட்டது. இந்த இடத்தில், பூர்வீகக் குடிகளின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள விளையும் அரசியல்வாதிகள், “எங்களது நாட்டவர்களுக்கு, வேலையில்லை; எங்கள் நாட்டின் வேலைவாய்ப்புகளை அந்நியர்களும் வந்தேறு குடிகளும் தட்டிப்பறித்துக் கொள்கிறார்கள்” என்ற பிரசாரத்தை முன்னெடுக்கிறார்கள். இதில், இவர்கள் சொல்லும் இரண்டு கருத்துகளும் முற்று முழுதான பொய் அல்ல! பூர்வீகக் குடிகளாகக் கருதிக்கொள்பவர்கள் வேலை இழந்திருக்கிறார்கள்; அதேவேளை, பல வேலைகளை வௌிநாடுகளிலிருந்து வந்தோர் செய்கிறார்கள். இந்த இரண்டும் உண்மை. ஆனால், இந்த இரண்டுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது போல, இந்த அரசியல்வாதிகள் அதைச் சித்திரிக்கிறார்கள். இங்கு, பொருளாதார நெருக்கடியின் காரணமாகத்தான் வேலையிழப்பு ஏற்பட்டது. ஆனால், வேலை இழப்பால் அவதிப்பட்டுக் கொண்டிக்கும், தமது நாட்டில் குடியேறியவர்கள் மீது ஐயமும் அசூயையும் கொண்டிருக்கும் மக்களிடம், இந்தக் கருத்து உணர்வுரீதியிலான ஏற்புடைமையை ஏற்படுத்திவிடுகிறது. அதைத் தாண்டி, இதன் உண்மைத் தன்மையைப் பகுத்தறிபவர்கள் மிகக் குறைவே! இத்தகைய பிரசாரம், தினம் தினம் அம்மக்கள் பார்க்கும் சமூக ஊடகங்களில், அரசியல்வாதிகளால் மட்டுமன்றி, இந்த எண்ணத்தால் கவர்ந்திழுக்கப்பட்ட சாதாரணர்களாலும் பகிரப்படும் போது, இந்தப் பொய், அது பொய்யானாலும் கூட, உணர்வு முனைப்பால் வெகுஜனங்களிடம் அங்கிகாரத்தைப் பெற்றுக்கொள்கிறது. இலங்கை அரசியலும், இந்த உண்மையைக் கடந்த உணர்வுமுனைப்புக்கு விதிவிலக்கல்ல! தமிழர்கள் மீதான வெறுப்பு என்பது, இங்கு அரசியல் பிரசாரமாகவே உருவெடுத்தது. இன்றைய இலங்கையின் இனப்பிரச்சினை என்பது, அரசியலும் அதன்வழியான பொய்ப் பிரசாரங்களும் உருவாக்கிய ஒன்று! சிங்கள-பௌத்த தேசியவாதம் மட்டுமல்ல, தமிழ்த் தேசியவாதம் கூட, இதற்கு விதிவிலக்கல்ல. ஓர் உதாரணம் சொல்வதென்றால், அல்பிரட் துரையப்பாவை பலரும் ‘துரோகி’ என்கிறார்கள். காரணம், உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் நடந்த கொடும் வன்முறைத் தாக்குதலுக்கு, அவர்தான் காரணம் என்கிறார்கள். உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் நடந்த தாக்குதலுக்கு, சிறிமாவோ அரசாங்கம் தான் பொறுப்பு என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஆனால், அதன் பின்னணியில் அல்பிரட் துரையப்பாதான் இருந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதைப்பற்றி மிக விரிவாக, ‘தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன’ என்ற தொடரில் எழுதியிருந்தேன். வைரிகளான தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரஸூம், கூட்டணியாக ஒன்றிணைந்திருந்த வேளையில், யாழ்ப்பாணத்தில் இந்தக் கூட்டணிக்குப் பலமான அரசியல் போட்டியாக இருந்தவர் அல்பிரட் துரையப்பா. தமிழாராய்ச்சி மாநாட்டு வன்முறைகளைத் தொடர்ந்து, ‘அல்பிரட் துரையப்பா துரோகி’ என்ற பிரசாரம், கூட்டணிக்காரர்களால்த்தான் முன்னெடுக்கப்பட்டது. அதன் உண்மைத் தன்மை பற்றிய எந்தக் கேள்வியுமின்றி, அதுவே உண்மையென நம்பவைக்கப்பட்டது. இன்று மீண்டும் மீண்டும் அதுவே சொல்லப்பட்டு, அதுவே உண்மையெனக் கருதப்படும் நிலையில் நாம் நிற்கிறோம். வெகுஜனங்கள் ஒரு கணம், தமது உணர்வுவயப்பட்ட நிலையைத்தாண்டி பகுத்தறிவுக்கு இடம் கொடுத்து, ஏன், எதற்கு என்ற கேள்விகளையாவது கேட்டால், இந்தப் பிரசாரங்களின் போலி முகமூடி கழன்றுவிடும். ஆனால், பொய்களை உண்மையாக்கிய பிரசாரங்கள், பெரியளவில் நீண்டகாலத்தில் முன்னெடுக்கப்பட்டதன் விளைவாக, அந்தப் பொய்களே உண்மைகளாக நம்பப்பட்டன; அந்தப் பொய்களே வரலாறுமாயின. அதன் விளைவாக, அந்தப் பொய்களே, இன்று பலரின் அடையாளங்களாகவும் ஆகிவிட்டன. ஆனால், பொய்களை உண்மையாக்கும் இந்த உற்பத்தித் தொழிற்சாலைகள், இன்று சமூக ஊடகங்களின் உதவியால், இன்னும் வினைத்திறனுடன் தமது உற்பத்திகளை முன்னெடுக்கின்றன. “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்கிறான் வள்ளுவன். அறிவுள்ள சமுதாயமென்றால், பிரசாரங்களுக்கு எடுபடாமல், மெய்ப்பொருள் காண்பதற்கு முயலவேண்டும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/உண்மையும்-உணர்வுமுனைப்பும்-அரசியலும்-உண்மைகளாகும்-பொய்கள்/91-275270
  16. இந்திய சினிமாவும் ஈழத்தமிழர்களும் -என்.கே. அஷோக்பரன் அண்மையில் வௌிவந்த, இரண்டு இந்திய சலனச் சித்திரப் படைப்புகள், புலத்தில் வாழும், அதைவிடக் குறிப்பாகப் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், முதலாவது அமேஸன் ப்ரைம் தளத்தில் வௌியான ‘ஃபமிலி மான்’ தொடரின் இரண்டாவது பகுதி. அடுத்தது, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்து நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வௌிவந்த ‘ஜகமே தந்திரம்’ என்ற திரைப்படம். இந்திய சினிமாவில் ஈழத்தமிழர்களும் ஈழத்தமிழர் பிரச்சினையும் கையாளப்படுவது இது முதன் முறையல்ல; அதுபோல, இது கடைசிமுறையாகவும் இருக்கப்போவதில்லை. ஆனால், ஒவ்வொரு முறையும், ஈழத்தமிழர்களையும் ஈழத்தமிழர்களின் அரசியலையும் ஈழத்தமிழர் பிரச்சினையையும் காட்சிப்படுத்தும் போது, இந்திய சினிமா, ஈழத்தமிழர்களுக்கு பெரும் அநீதி இழைப்பதான உணர்வு, பல ஈழத் தமிழர்கள் இடையே எழுந்துவிடுகிறது. “சினிமாவைச் சினிமாவாகப் பாருங்கள்; அது, பொழுதுபோக்கு மட்டும்தான்” என்று சொல்லி, இதை அமைதியாகக் கடந்து செல்லக் கூறும் அறிவுரைகள், தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்ல, ஈழத் தமிழர்கள் இடையேயும் எழுவதையும் அவதானிக்கலாம். அதில் ஒருவகை நியாயமும் தென்படலாம். ஆனால், கலையும் எழுத்தும் பேச்சும் மனித இனத்தை ஆளும் மிகப் பலமான ஆயுதங்களில் முக்கிய இடத்தை வகிக்கின்றன. ஒன்று, உலகமெங்கும் வாழும் தமிழர்களை, ஆளும் கலையாக, சினிமாவே இருக்கிறது. தென்னிந்திய தமிழ்ச் சினிமா மொழி, ஈழத் தமிழர்கள் உள்ளிட்ட உலகெங்கும் வாழும் தமிழர்களின் மொழிப் பயன்பாட்டில், இன்று தாக்கம் ஏற்படுத்தி இருக்கிறது என்பது, தமிழ்ச் சினிமா கொண்டுள்ள ஆதிக்கத்தை எடுத்துக்காட்டுவதாக அமைகிறது. ஆகவே, அத்தகைய ஆதிக்கம் மிக்கதொரு கலைவடிவம், ஒருவகையான கருத்தியலை முன்னிறுத்தும் போது, அது அந்த மனிதக் கூட்டத்தினிடையே செல்வாக்கைப் பெறுவதாகவும் மற்றைய மனிதக் கூட்டங்களிடையே, குறிப்பிட்ட அந்த மனிதக் கூட்டத்தைப் பற்றி, அறிமுக அடையாளமாகவும் மாறிவிடுகிறது. இந்த அடிப்படையில்தான், ஈழத் தமிழர்கள் பற்றிய இந்தியப் படைப்புகள் மீதான, ஈழத் தமிழர்களின் அதிருப்தியும் எதிர்ப்பும் எழுவதையும் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. மறுபுறத்தில், இந்தியப் படைப்புகள் என இந்தப் படைப்புகளை ஒரே வகைக்குள் அடக்குதலும் பொருத்தமானதல்ல. மேற்கூறிய இரண்டு உதாரண படைப்புகளை எடுத்துக்கொண்டால் கூட, அவற்றின் படைப்பாளிகள், அவை பேசும் அரசியல், அந்தப் படைப்புக்கான நோக்கங்கள் ஆகியன வேறுபட்டவை. ஆகவே, இவையும் வெவ்வேறாக நோக்கப்பட வேண்டியவை. இதற்குள் குறைந்தபட்சம் மூன்று வகையான படைப்புகளை நாம் அடையாளம் காணலாம். குறித்ததொரு திரைப்படைப்பில், ஈழத் தமிழர்களைப் பற்றிய வௌிப்படுத்தல்களையும் ஈழத் தமிழ் கதாபாத்திரங்களையும் கொண்ட படைப்புகள் ஒருவகை. கமலஹாசன் நடித்த ‘தெனாலி’, சூர்யா நடித்த ‘நந்தா’, மாதவன் நடித்த ‘நளதமயந்தி’ உள்ளிட்ட படைப்புகள், இந்த வகையைச் சார்ந்தவை. இவற்றில், ஈழத்துத் தமிழ் என்று கருதி, இவர்கள் பேச முயற்சித்த மொழி பற்றிய விமர்சனங்களைத் தாண்டி, பெருமளவான அரசியல் முக்கியத்துவம் இவற்றுக்குக் கிடையாது. இத்தனை வருடங்கள் கடந்தும், தென்னிந்திய தமிழ் சினிமாவால், ஈழத்தமிழை முறையாக உச்சரிக்கக் கூட முடியாதிருப்பது, ஒரு புரியாத புதிர்தான். இரண்டாவது வகை, ஈழத் தமிழர் அரசியலை அல்லது இலங்கையில் நடந்த போராட்டத்தைத் தொட்டுச் செல்லும் திரைப்படங்கள். ‘ஜகமே தந்திரம்’ திரைப்படத்தை இந்த வகைக்குள் உள்ளடக்கலாம். அடிப்படையில், இது ஒரு தாதாக்கள் பற்றிய திரைப்படம் (ganster film). இரண்டு தாதாக்களிடையேயான கருத்தியல் வேறுபாடாக, ‘வந்தேறுகுடிகள்’ எதிர் ‘பூர்வக் குடிகள்’ என்பது முன்வைக்கப்படுகிறது. இங்கிலாந்தை மையப்படுத்திய கதைக்கு வசதியாக, இங்கிலாந்தில் அகதிகளாகக் குடியேறிய ஈழத் தமிழர்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இந்தக் கதையை எடுத்துக்கொண்டால், இங்கு ஈழத் தமிழர்களுக்குப் பதிலாக, போரால் பாதிக்கப்பட்டு, மேற்கு நாடுகளில் அகதிகளாகக் குடியேறிய வேறு எந்த இனமும் சித்திரிக்கப்பட்டு, இந்தக் கதை படம்பிடிக்கப்பட்டிருக்க முடியும். ஏனென்றால், கதைக்குத் தேவைப்படுவது, வேறுநாட்டிலிருந்து போரால் பாதிக்கப்பட்டு, எப்படியோ தப்பி வந்து, மேற்கில் அகதிகளாகக் குடியேறி, அங்கு கஷ்டப்பட்டு உழைக்கும் ஓர் இனக்கூட்டம் ஆகும். அதை எதிர்க்கும் பூர்வக்குடி அமைப்பு; அந்த எதிர்ப்பை முறியடிக்கும் நாயகன். இந்த வகை திரைப்படங்களில், உண்மைக்கு மாறான காட்சிப்படுத்தல்கள் பற்றிய பிரச்சினைகள் எழுந்தாலன்றி, இவற்றின் அரசியல் தாக்கம், முக்கியத்துவம் பெருமளவுக்கு இல்லை. ஆனால், மூன்றாவது வகையைச் சார்ந்த படைப்புகள் அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனென்றால், அவை அரசியல் பற்றி நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேசும் படைப்புகளாக அமைகின்றன. அதனால்தான், அவை பிரச்சினைக்கு உரியவையாகவும் சிக்கலானவையாகவும் கருதப்படுகின்றன என்பதோடு, கடும் விமர்சனத்துக்கும் எதிர்ப்புக்கும் ஆளாகின்றன. இந்த வகைக்குள் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படமும் ‘ஃபமிலி மான் 2’ திரைப்படமும் வருகின்றன. இந்த இந்தியப் படைப்புகளிடையே, ஓர் ஒற்றுமையை நாம் அவதானிக்கலாம். இவை இந்திய தேசியவாதத்தை முன்னிறுத்தும், இந்திய அரசின் நலன் மையப் பார்வையை முன்னிறுத்தும் அரசியலை, நேரடியாகவும் மறைமுகமாகவும் அழுத்தமாகச் சொல்லும் படைப்புகள் ஆகின்றன. அவை முன்னிறுத்தும் அரசியலுக்கும் கருத்தியலுக்கும் முரணானவற்றைப் பிழையானதாகச் சித்திரிக்கின்றன. அதனைச் செய்வதற்கு, அவை பாதி உண்மைகளை மட்டுமல்ல, பொய்களையும் பொய்யான கற்பனைகளையும் பயன்படுத்துகின்றன. இந்த இடத்தில்தான், அவற்றுக்கு எதிரான கடுமையான விமர்சனங்கள் தலைதூக்குகின்றன. இந்திய அரசாங்கத்துக்குத் தேவையான பகடைக் காய்களாக, ஈழத்தமிழர்கள் இன்றும் இருந்து கொண்டிருக்கிறார்கள். ‘இலங்கை’ என்ற இந்தப் பூகோள தந்திரோபாயம் மிக்க தீவில், இந்தியா தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள, வசதியான துருப்புச் சீட்டு ஈழத்தமிழர்களும் இலங்கையின் இனப்பிரச்சினையும்தான். அதேவேளை, ஈழத்தமிழர்களின் விடுதலை உணர்வு, இந்தியாவுக்குக் கடத்தப்படுவதை இந்திய தேசியவாதம் விரும்புவதில்லை. அது, இந்திய நலன்களுக்கு விரோதமானது என்று, இந்திய தேசியவாதம் கருதுவதாக நாம் ஊகிக்கலாம். ஆகவே, தமிழ்நாட்டுத் தமிழர்கள் மற்றும் ஈழத்தமிழர்களின் ஒன்றிணைவை, இந்திய தேசியவாதம் ஐயத்துடனேயே அணுகியது. ராஜீவ் காந்தியின் படுகொலையுடன், ஈழத்தமிழர்களின் விடுதலை உணர்வு, இந்தியாவுக்குக் கடத்தப்படுவதைத் தவிர்க்க, ஒரு புறநிலை தார்மிக நியாயப்படுத்தல் (objective moral justification) கிடைத்தது; அதுதான் பயங்கரவாதம். ஒரு மக்கள் கூட்டத்தைப் பயங்கரவாதிகளாகச் சித்திரிப்பதுதான், அந்த மக்கள் கூட்டத்தை ஏனையோர் அச்சத்துடன் அணுகச்செய்வதற்கும், அந்த மக்கள் கூட்டத்தின் அரசியலை, சட்டவிரோதமாக்குதவற்கு அல்லது, நம்பகத்தன்மை அற்றதாக்குவதற்கான இலகுவான குறுக்கு வழியாகும். இந்த மூன்றாவது வகையிலான படைப்புகள், இதைத்தான் செய்கின்றன என்பதுதான், ஈழத்தமிழர்கள் பலரும் இவற்றை விமர்சிப்பதற்கும் எதிர்ப்பதற்குமான அடிப்படைக் காரணம் ஆகும். நிற்க! ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில், இந்தியப் படைப்புகள் இப்படித்தான் அமைய வேண்டும் என்று அவர்களால் கட்டளையிட முடியாது. அதுபோலவே, கற்பனைகளைத் தணிக்கை செய்வது, இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வதற்கான ஏற்புடைய வழிமுறையும் அல்ல. படைப்பது ஒருவரது சுதந்திரம் என்றால், அதற்கான எதிர்ப்பையும் விமர்சனத்தையும் முன்வைப்பது, மற்றவருடைய சுதந்திரம். ஆனால், வெறும் எதிர்ப்போடும் விமர்சனத்தோடும் நின்றுவிடாது, மாற்றுப் படைப்புகளை முன்வைப்பதுதான், நீண்டகாலத்தில் பயனுள்ள தீர்வாக அமையும். இந்த இடத்தில்தான், ஈழத் தமிழ் திரைப்படத் துறையின் மறுமலர்ச்சி பற்றி, ஈழத் தமிழர்கள் சிந்திக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அது புலத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் சாத்தியப்படக் கூடியதே! படைப்பு, மக்களைக் கவர்வதாக அமைகின்ற போது, அது அனைவரையும் வெற்றிகரமாகச் சென்றடையக்கூடிய, திறந்த வாய்ப்புகள் உள்ள ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆகவே, மாற்றுப்படைப்புகள்தான் கருத்தியல் சமநிலையை உருவாக்குவதற்கான முதற்படி. அதுபற்றிப் பேசுதல், சிந்தித்தல், முயற்சிகளை முன்னெடுத்தல் என்பனதான் பயன்தருவன. கார்த்திக் சுப்பராஜ், தனது வசனத்தில் எழுதியதுபோல, “இலங்கைல போர்னா, என்ன கொடுமைடானு உச்சு கொட்டீட்டு, அடுத்த வேலையப் பார்க்கிற கூட்டங்க நாங்க... எனக்கெப்டீங்க இதெல்லாம் புரியும்... எப்டீங்க இதெல்லாம் ஒறைக்கும்” என்பதாகத்தான், ஈழத்தமிழர்கள் பற்றிய இரக்கம் மிகுந்த தமிழக உறவுகளின் நிலையே இருக்கிறது. ஆகவே, இந்திய சினிமாவில், ஈழத் தமிழர்களைப் பற்றிய முழுமையான புரிதல் மிக்க படைப்புகளை வழங்கவேண்டும் என்று எண்ணுவது அதீத எதிர்பார்ப்பாகவே அமையும். அவர்கள் விசுவாசமாக, அதை முயன்றாலும் கூட, அது கடினமானதே! ஆகவேதான், தனக்கான குரலாகத் தானே இருக்க வேண்டியது அவசியமாகிறது. ‘தொப்புள் கொடி உறவுக்கு’ என்று ஒரு தார்ப்பரியம் இருக்கிறது. தொப்புள்கொடி என்பது, பிறந்தவுடன் வெட்டிவிடப்படும் ஒன்று. அது, இருந்ததற்கான அடையாளம் மட்டும் இருக்கும். பாசம் இருக்கலாம்; பற்றும் இருக்கலாம். ஆனால், தாயும் பிள்ளையும் ஆனாலும், வாயும் வயிறும் வேறு; அதுதான் யதார்த்தம்! https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இந்திய-சினிமாவும்-ஈழத்தமிழர்களும்/91-274639
  17. திணறும் ஆளுங்கட்சி; திக்குத் தெரியாத எதிர்க்கட்சி என்.கே. அஷோக்பரன் எரிபொருள் விலை அதிகரிப்புத்தான் இந்த வாரத்தின் மிகப்பெரிய பரபரப்பு. இலங்கையின் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களின் விலை அதிகரிப்பு பற்றி அண்மையில் அறிவித்திருந்தார். விலை அதிகரப்பு எனும் போது, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் அதிகரிப்பு அல்ல. பெட்ரோல் விலை ஒரேயடியாக, 20 ரூபாய்க்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு, உதய கம்மன்பில தரப்பு சொல்லும் நியாயம் வினோதமானது. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய நாடுகளின் எரிபொருள் விலையைவிட, இலங்கையில் எரிபொருள் விலை குறைவு என்பதாகும். இந்த அபத்தமான வாதம் ஒருபுறமிருக்க, மறுபுறத்தில், இந்த விலையேற்றத்துக்கான உண்மையான காரணத்தைப் பார்க்கும் போது, உலக சந்தையில் ‘கச்சா’ எண்ணை விலையேற்றம் ஏற்பட்டுள்ளமையை, அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. ஆனால், கடந்த வருடம் உலக சந்தையில் ‘கச்சா’ எண்ணை விலை, கடுமையாக வீழ்ச்சி கண்டிருந்தது. உலக சந்தையில் விலை கூடும் போது, உள்ளூரில் விலையை ஏற்றும் அரசாங்கம், உலக சந்தையில் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் போது, அதன் பலனை, இலங்கை மக்களுக்கு ஏன் வழங்கவில்லை என்ற கேள்வி எழுவது நியாயமானதே! ஆனால், இந்த விடயம் இதோடு நிற்கவில்லை. உதய கம்மன்பில, எரிபொருள் விலையேற்றத்தை அறிவித்ததன் பின்னர், இந்த விலையேற்றத்தைக் கண்டித்தும், விலையை ஏற்றாது சமாளிக்க முடியாதுபோன அமைச்சரின் இயலாமையைக் காரணம் காட்டி, அவரைப் பதவி விலகக் கோரியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி, பகிரங்க அறிக்கையை வௌியிட்டிருக்கிறது. ஆம்! ஆளுங்கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவேதான் இவ்வாறு அறிக்கையை வௌியிட்டுள்ளது. கம்மன்பில பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரல்ல; அவர் பங்காளிக் கட்சியான பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர். உதய கம்மன்பிலவுக்கும் பொதுஜன பெரமுவுக்கும் இடையிலான முரண்பாடுகளை, சிலமாதங்களாகவே அவதானித்து வரும் நிலையில், தமது ஆட்சியின் பங்குதாரியான கம்மன்பிலவை பதவிவிலகுமாறு, பிரதான ஆளுங்கட்சியாக பொதுஜன பெரமுன பகிரங்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால், பொதுஜன பெரமுனவுக்கும் கம்மன்பிலவுக்கும் இடையிலான முரண்பாடு மட்டும்தான், இதற்குக் காரணம் என்று கருதிவிடக் கூடாது. கம்மன்பில இங்கு ஒரு பலிகடாவாகப் பயன்படுத்தப்படுகிறார் என்பதும் கவனிக்கப்பட வேண்டியது. ‘கொவிட்-19’ பெருந்தொற்றின் மூன்றாவது அலை, இலங்கையைப் பயங்கரமாகத் தாக்கிக் கொண்டிருக்கிறது. உறுதியான நடவடிக்கைகள் மூலம், ஒழுக்கமான ஆட்சியை வழங்குவார்கள் என்ற மக்களின் எதிர்பார்ப்பு, பாராளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பின்னரிருந்தே தோற்றுக் கொண்டிருக்கிறது. எந்த முடிவையும், உறுதியாக எடுக்க முடியாத அரசாங்கமாகவே இது இருக்கிறது. குறைந்த பட்சம், பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பதா, தளர்த்துவதா என்பதைக்கூட, சரியாக முடிவெடுக்க முடியாமல், முதல் நாள் ஒரு கதை, மறுநாள் வேறு கதை எனத் தானும் குழம்பி, மக்களையும் குழப்பிக் கொண்டிருக்கிறது. மறுபுறத்தில், பொருளாதார சிக்கலைச் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. முதல் முறை இந்தியா, நாணய பிரதியீட்டின் ஊடாகக் காப்பாற்றியது; அடுத்த முறை, சீனா கடன் கொடுத்துக் காப்பாற்றியது. அடுத்த முறை, கையேந்த இடமில்லாமல், பங்களாதேஷிடம் போய் கையேந்தி, நாணய பிரதியீட்டைப் பெற்றுக்கொண்டு, செலுத்த வேண்டிய கடன்களைத் திக்கித் திணறிச் செலுத்திக் கொண்டிருக்கிறது. இலங்கையின் கடன் தரமதிப்பீடு, மிகக் குறைந்துள்ள நிலையில், அந்நிய முதலீடுகளுக்கான வாய்ப்புகளும் மிகச் சுருங்கியுள்ளன. இந்த நிலைமையில், சீனாவிடம் தஞ்சமடைய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிடுகிறது. சீனாவிடம் கடன்வாங்கி, சீனக் கடன் பொறிக்குள் சிக்கிச் சின்னாபின்னமாகும் நிலைதான் ஏற்பட்டுள்ளது. இதுதான், அரசாங்கத்தின் பொருளாதாரம், வௌிநாட்டுக் கொள்கையென்றால், இதை ஒரு குழந்தையே செய்துவிட்டுப் போய்விடுமே! இதற்கு எதற்கு, ‘வீரர்கள்’ என்ற கூச்சலும், ‘நிபுணர்களின் ஆட்சி’ என்ற வெற்றுக் கோஷமும் வேண்டிக்கிடக்கிறது? இந்த ஆட்சி, சறுக்கிக்கொண்டிருக்கும் ஒவ்வோர் இடத்தைப் பார்த்தாலும், அந்தச் சறுக்கலைத் தவிர்ப்பதற்கு, அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியைவிட, அந்தச் சறுக்கலை மறைக்க எடுத்துக்கொண்ட பிரயத்தனம்தான், மிக அதிகமாகத் தெரிகிறது. உதாரணமாக, ‘லிட்ரோ’ எரிவாயு சிலிண்டரின், எரிவாயுவின் எடை அளவைக் குறைத்து, விலையை ஏற்றாமல்செய்த ஏமாற்று வேலை ஆகும். உள்ளூர் விவசாயத்தை ஆதரிக்கிறோம் என்று, இறக்குமதிகளைத் தடைசெய்துவிட்டு, தற்போது பொருட்களின் விலைகள் படுபயங்கரமாக ஏறியுள்ள நிலையில், இந்நாட்டின் அப்பாவி மக்கள்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அரிசியின் விலை, மஞ்சளின் விலை, ஏலக்காயின் விலை என விலையேற்றம் அதிகரித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான வழி, வௌிநாட்டு இறக்குமதிகளைத் தடைசெய்வதல்ல; இது ஓர் ஆதிகால முறை; அறியாமையின் வழி. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதானால், அதன் போட்டித்தன்மையை அதிகரிக்கும் வினைதிறனான உற்பத்தி முறைகள், நவீன விவசாய முறைகள், நுட்பங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் நடைமுறைப்படுத்தவும் வேண்டும். உற்பத்தியாளனிடமிருந்து, நுகர்வோரை இலகுவில், குறைந்த செலவில் சென்றடையக் கூடிய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறுதான், உள்ளூர் உற்பத்திகளை நீடித்துநிலைக்கத்தக்க முறையில் ஊக்குவிக்கலாமேயன்றி, இறக்குமதிகளைத் தடுப்பதால் அல்ல. 10ஆம் ஆண்டு மாணவனுக்கு உள்ள பொருளாதாரம் பற்றிய புரிதல் அளவை மட்டும் கொண்டு, ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிக்க திட்டமிட்டால், இதுபோன்ற நிலைமைகள் உருவாகலாம். அரசாங்கம், இப்படி மாறி மாறி சறுக்கிக்கொண்டிருக்கும் போது, பிரதான எதிர்க்கட்சி என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி, சக்தி இழந்து நிற்கிறது. ஜனநாயக நாடொன்றில், ஓர் எதிர்க்கட்சி ஆற்ற வேண்டிய அடிப்படைப் பணிகளைக் கூட, முறையாகச் செய்யத் திராணியற்ற வாய்ச்சொல் அமைப்பாகவே, இது இருக்கிறது. இன்று அரசாங்கத்தின் அபத்தமான நடவடிக்கைகளை விமர்சிப்பதற்குப் பதிலாக, ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்துக்கு வரப்போவதை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்க வருவதைக் கண்டு, இவர்கள் அச்சப்படக் காரணம், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையோடு அதிருப்தி கொண்டவர்கள், ரணில் விக்கிரமசிங்கவுடன் கைகோர்த்து விடுவார்களோ என்ற அச்சம்தான், இவ்வளவு காலமும் ரணிலைப் பலமற்ற தலைவர் என்று விமர்சித்தவர்கள்தான், இன்று தாம் எவ்வளவு பலமற்றவர்கள் என்பதை, மக்களுக்கு வௌிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு கட்சிக்குத் தேவையான அடிப்படைகள் எதுவும் ஐக்கிய மக்கள் சக்தியிடம் இல்லை. ஏனெனில், தாம் ஒரு கட்சியா, கூட்டணியா என்பதிலேயே அவர்களிடம் தௌிவின்மை காணப்படுகிறது. ரணிலின் பாராளுமன்ற வருகையோடு, ஐக்கிய மக்கள் சக்தியினரின் பாதுகாப்பின்மை உணர்வு, இன்னும் அதிகரிக்கும். எதிர்க்கட்சிக்குள் அடிக்கத் தொடங்கியிருக்கும் இந்தப் புயல், அவர்களது உட்கட்சி முரண்பாடுகளை அதிகரிக்கும். அவர்கள் ஆளுங்கட்சியோடு முரண்படுவதை விடுத்து, தமக்குள் அதிகம் அடிபடத் தொடங்குவார்கள். இது நிச்சயம், ஆளுந்தரப்புக்குச் சாதகமானதாகவே அமையும். ஒரு வகையில், தமது எல்லா நடவடிக்கைகளிலும் தோற்றுக்கொண்டிருக்கும் ஓர் ஆளுங்கட்சியைக் காப்பாற்றும் கைங்கரியத்தைத்தான், இங்கு பிரதான எதிர்க்கட்சி செய்து கொண்டிருக்கிறது. இந்த இடத்தில்தான், இலங்கை அரசியலில் மிகப்பெரியதொரு வெற்றிடம் உணரப்படுவதை, உண்மையில் அவதானிக்கலாம். இந்தத் திறமையும், திராணியுமற்ற அரசியல் தலைமுறையிடமிருந்து, இந்த நாடு பாதுகாக்கப்படாவிட்டால், இந்த நாட்டுக்கு எதிர்காலம் என்ற ஒன்றே இல்லாது போய்விடும். அரசியல் என்பது ஒரு பொறுப்பு மிக்க பணி. ஆழ்ந்த அறிவும் ஆற்றலும் வினைதிறனும் நல்லெண்ணமும் இங்கு அத்தியாவசியம். ஒரு நிறுவனத்தில் பணியாற்றக்கூடத் தகுதியில்லாதவர்கள், ஒரு நாட்டை நிர்வகிக்கிறார்கள் என்றால், அந்த நாடு உருப்படுமா என்பதை யோசிக்க வேண்டும். நீங்கள் ஒரு நிறுவனத்துக்குச் சொந்தக்காரர் எனில், அந்த நிறுவனத்தை நிர்வகிக்க இந்த அரசியல்வாதிகளில் எவரைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்று உங்களுக்குள் நீங்களே சிந்தித்துப் பாருங்கள்; அப்போது புரியும் இந்நாட்டின் அவல நிலை. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/திணறும்-ஆளுங்கட்சி-திக்குத்-தெரியாத-எதிர்க்கட்சி/91-274183
  18. உலக அரசியலும் உள்ளூர் அரசியலும் என்.கே. அஷோக்பரன் உலகின் மிகப் பலம்பொருந்திய பல நாடுகள், ஏனைய நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்துவது, எல்லாக் காலங்களிலும் இருந்து வந்துள்ளது. பெரும் வணிகமும் அதனால் குவிந்த செல்வமும், அந்தச் செல்வத்தால் அந்தச் செல்வத்தைக் காப்பாற்றவும் மேம்படுத்தவும், விரிவடைந்த ஆயுத மற்றும் படைபலம், இந்த நாடுகளின் வல்லமைக்கு அடிப்படையாக இருந்திருக்கின்றன. முழு உலகையும் தனது சாம்ராஜ்யமாக்குவது, அலெக்ஸாண்டர், ஹிட்லர் போன்ற பலரினது கனவு. ஆனால், அந்தக் கனவை எவராலும் அடைந்து கொள்ள முடியவில்லை. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. உலக நாடுகளைக் கைப்பற்ற முடியாவிட்டாலும், உலக நாடுகள் மீதான ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதில், வல்லரசுகள் இப்போதும் குறியாக இருக்கின்றன. இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னர், அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் உலகின் இரு துருவ வல்லரசுகளாகின. அமெரிக்க ஆதரவு, சோவியத் ஒன்றிய ஆதரவு என்ற இருபிரி நிலையை, உலகம் எதிர்கொண்டது. இந்த நிலையில்தான் இந்தியா, எகிப்து, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகள்: ‘அணிசேரா நாடுகள்’ என்ற இயக்கத்தை ஆரம்பித்திருந்தன. கிட்டத்தட்ட 120 நாடுகள், இதில் அங்கம் வகித்தன. ஆனால், அணிசேரா நாடுகளாக அவை அறிவித்துக்கொண்டாலும், ஏதோ ஒரு வகையில், சோவியத் ஒன்றியம், அமெரிக்க சார்புகளைப் பெரும்பாலான நாடுகள் கொண்டிருந்தன. உதாரணமாக, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி காலத்தில் கூட இந்தியா, சோவியத் ஒன்றியத்துடன் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தது. 1962 இந்தோ-சீன யுத்தத்தின் போது, சோவியத் ஒன்றியம் நடுநிலைமை வகித்தது. 1960களில் சீனாவை விட, இந்தியாவுக்கு சோவியத் அதிக உதவிகளை வழங்கியிருந்தது. ஆகவே, அணிசேரா நாடுகளாக இருந்தாலும், அவற்றில் பல ஏதோவொரு வகையில் அமெரிக்க, சோவியத் ஒன்றியம் என்ற இருதுருவங்களில், ஒரு துருவத்தைவிட மற்றையதற்கு நெருக்கமாகவே இருந்தார்கள். இலங்கையில், 1970இல் ஆட்சியேறிய சிறிமாவோவும் அவரது இடதுசாரித் தோழர்களும் ‘ஐக்கிய கூட்டணி’ என்ற பெயரில் அரசாங்கம் அமைத்தார்கள். அந்த அரசாங்கத்தில், மேம்பட்டு நின்ற முதலாளித்துவப் பொருளாதார எதிர்ப்பின் விளைவாக, இயல்பாகவே சோவியத் ஒன்றிய சார்பு நிலையைக் கொண்டதாக தன்னை உருவாக்கிக் கொண்டது. சிறிமாவோ அரசாங்கம், சோவியத் ஒன்றியம், சீனா, இந்திரா காந்தி தலைமையிலான இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருந்தது. சிறிமாவோவின் அந்தத் துர்ப்பாக்கியம் மிக்க ஆட்சியின் கீழ் வாழ்ந்தவர்கள், பாண் வாங்க வரிசையில் காத்துக்கிடந்த வரலாற்றைச் சொல்லக் கேட்கலாம். சோறும் கறியும் உண்டு வாழ்ந்த வளமான நாட்டு மக்கள், மரவள்ளிக்கிழங்கு தின்று உயிர்வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலையை, சிறிமாவோவினதும் அவரது இடதுசாரித் தோழர்களினதும் கிட்டத்தட்ட ஏழு வருட ஆட்சி உருவாக்கியது. இந்நாட்டின் சிறுபான்மையினருக்கு, அவர்கள் செய்த துரோகம் குறிப்பிடத்தக்கது. ஆனால், சிறுபான்மையினருக்கு எதிராக, இலங்கையை ஆண்ட அனைத்துப் பெருந்தேசியத் தரப்புகளும் செயற்பட்டுள்ளன என்பதால், அது சிறிமாவோவுக்கு மட்டும் உரிய ‘சிறப்பு’ அல்ல! சிறிமாவோவின் ஆட்சியை வீழ்த்தி, ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக முயன்றுகொண்டிருந்த பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ஜே.ஆர். ஜெயவர்தன, அமெரிக்க சார்புடையவராக இருந்தார். ஜே.ஆரின் அமெரிக்க சார்பு, எவ்வளவு வௌிப்படையானது என்றால், அது அவருக்கு ‘யங்கி டிக்கி’ என்ற பட்டப்பெயரை பெற்றுத்தருமளவுக்கு அமைந்திருந்தது. பாணுக்காகவும் காற்சட்டை தைப்பதற்கான துணிக்காகவும் என வரிசையில் காத்துக்கிடந்த மக்களுக்கு, மாற்றத்தைக் கொண்டு வருவேன் என்று ஜே.ஆர் உறுதியளித்தார். இலங்கையின் பொருளாதாரக் கொள்கையை மாற்றுவேன் என்பது ஜே.ஆரின் உறுதிமொழியாக இருந்தது. ஆனால், வெறுமனே சொல்லிவிட்டு ஜே.ஆர் அமைதியாக இருக்கவில்லை; அல்லது, வனஜீவராசிகளைப் படம் பிடிக்கப் போகவில்லை; அல்லது, பியானோ வாசித்துக்கொண்டிருக்கவில்லை. ஜே.ஆர் வீதிக்கிறங்கினார்; ஆர்ப்பாட்டங்களை நடத்தினார். சிறிமாவோ அரசாங்கத்துக்கு எதிரான மக்களின் மனநிலையை, தனக்குச் சாதகமாக்கிக்கொள்ள ஜே.ஆர் களத்தில் இறங்கினார். அதற்காக முதலில் தனது கட்சியை ஒற்றுமைப்படுத்தினார். ஜே.ஆரும் பிரேமதாஸவும் நண்பர்கள் அல்ல. அவர்களிடையே பொதுவானவைகள் என்று அடையாளப்படுத்துவதற்குக் கூட எதுவுமில்லை. அவர்கள் இருவேறுபட்ட ஆளுமைகள். ஆனால், ஜே.ஆர், பிரேமதாஸவின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தார். இந்த நாட்டின் அடித்தட்டு மக்களிடையே பிரேமதாஸ கொண்டிருந்த செல்வாக்கை அவர் உணர்ந்திருந்தார். பிரேமதாஸவுக்கு அவருக்குரிய இடத்தை வழங்கி, அவரையும் அரவணைத்து, சிறிமாவோவின் ஆட்சியை வீழ்த்தி, ஆட்சியைக் கைப்பற்றுவதையே ஒரே குறிக்கோளாகக் கொண்டு ஜே.ஆர் செயற்பட்டார். இங்கு, ‘செயற்பட்டார்’ என்பது கவனிக்க வேண்டிய சொல். அந்த விடாமுயற்சி, 1977இல், ஜே.ஆருக்கு விஸ்வரூப வெற்றியைப் பெற்றுத்தந்தது. 5/6 பெரும்பான்மையுடன், ஜே.ஆர் ஆட்சிக்கு வந்தார். இலங்கையின் பொருளாதாரக் கொள்கை மட்டுமல்ல, வௌிநாட்டுக் கொள்கையும் மாறிய சந்தர்ப்பம் அது. திறந்த பொருளாதாரத்தின் விளைவாக, இலங்கையில் பெரும் உற்பத்தித்துறை உருவாகத் தொடங்கியது. இலங்கையர்கள் வீடுகளில் தொலைக்காட்சிகள் வந்தன. உற்பத்தி, உட்கட்டமைப்பு, தொழில்நுட்பம் என பொருளாதார ரீதியில் இலங்கை குறிப்பிட்டளவு முன்னேற்றத்தைச் சந்தித்தது. இனப்பிரச்சினைதான் ஜே.ஆர் சறுக்கிய இடம். அதையும் ஜே.ஆர் சிறப்பாகக் கையாண்டிருந்தால், வரலாறு வேறாக இருந்திருக்கும். ஆனால், இலங்கையின் பெருந்தேசியவாதிகளைத் தொற்றிக்கொண்டுள்ள நோய், ‘இனவாத அரசியல்’. அதற்கு மருந்து இன்னும் கண்டறியப்படவில்லை. ஆகவேதான், அதைத் தடுப்பதும் குணப்படுத்துவதும் இன்னும்கூட, முடியாத காரியமாக இருக்கிறது. நிற்க! இன்று, உலக அரசியல் பரப்பு மாறியிருக்கிறது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியோடு, பனிப்போர் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர், உலகின் தனித்த செல்வாக்கு மிக்க நாடாக, ‘உலக பொலிஸ்’காரனாக அமெரிக்கா உருவானது. இந்தியாவும் திறந்த பொருளாதாரத்தை அரவணைத்தக்கொண்டதைத் தொடர்ந்து, இந்தியா, அமெரிக்காவின் நண்பனானது. 1947இல் பாகிஸ்தான் என்று ஒரு நாடு தெற்காசியாவில் உருவாகியதிலிருந்து, அமெரிக்காவும் பாகிஸ்தானும் மிக நெருங்கிய உறவைக் கொண்ட நாடுகளாக இருந்துள்ளன. பாகிஸ்தான் என்ற நாட்டின் உருவாக்கமே இந்தியாவுக்கு எதிரானதாக, அல்லது மாற்றானதாக அமைந்திருந்தது. இந்தியாவின் அமெரிக்க விரோதப் போக்கு, அமெரிக்கா, பாகிஸ்தானுடன் நெருக்கமாவதற்குக் காரணமாகியது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா, இராணுவம், பொருளாதாரம் போன்ற உதவிகளை வாரி வழங்கியது. பூகோள அரசியலில், தெற்காசிய பிராந்தியத்தில் தன்னை நிலைகொள்ள வைக்க அமெரிக்கா, பாகிஸ்தானைப் பயன்படுத்திக் கொண்டது. ஆப்கானிஸ்தானில் சோவியத் ஆதிக்கம் கொண்ட போது, அதனை வீழ்த்த, அமெரிக்கா முஜாஹிதீன்களுக்கு உதவியது, இதில் பாகிஸ்தானின் பங்கும் குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தானை சோவியத்தின் ஆதிக்கத்திலிருந்து மீட்க, அமெரிக்காவுடன், பாகிஸ்தான் இணைந்து செயற்பட்டது. இங்கு அமெரிக்கா, முஜாஹிதீன்களாக வளர்த்துவிட்ட பயங்கரவாதம்தான், 2001இல் அமெரிக்காவையே ஆட்டிப்போட்டது. 1990களில் பாகிஸ்தான் இரகசிய அணுவாயுத அபிவிருத்தி, அமெரிக்க-பாகிஸ்தான் உறவில் பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர், அது சரிசெய்யப்பட்டாலும், பாகிஸ்தான், குறிப்பான பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ பயங்கரவாதத்துக்கும் பயங்கரவாதிகளுக்கும் அளித்து வந்த ஆதரவு, அமெரிக்க-பாகிஸ்தான் உறவில் தொடர்ந்து விரிசலை ஏற்படுத்தியது. 9/11இற்குப் பிறகு, இது அமெரிக்காவுக்குப் பெருந்தலையிடியாக மாறியது. ஒரு தசாப்த காலமாக, அமெரிக்கா தேடிவந்த பின் லேடன், பாகிஸ்தானில் இருந்தமையும், அமெரிக்கா பாகிஸ்தானுக்கே தெரியாமல், பாகிஸ்தானுக்குள் நுழைந்து, பின் லேடனைக் கொன்றமையும் அமெரிக்க-பாகிஸ்தான் உறவை இன்னும் பலவீனமாக்கியது. இதேவேளை, சமகாலத்தில், இந்தியா திறந்த பொருளாதாரத்தை அரவணைத்ததும், அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்பத்துறையின் அதீத வளர்ச்சியும், அதன் மூளையாகவும், உற்பத்திச் சாலையாகவும் இந்தியா அமைந்தது, இந்திய - அமெரிக்க உறவை பலப்படுத்தியது. இதில் மன்மோகன் சிங் என்ற ஆளுமையின் பங்கு, இந்திய வரலாற்றில் மறக்கமுடியாதது. மறுபுறத்தில், அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு நிலைப்பாடு, குறிப்பாக இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எதிரான தீவிர நடவடிக்கை, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் இன்னொரு பொது அரங்கைத் தோற்றுவித்தது. இந்தியாவோடு அமெரிக்காவின் உறவு வலுவடைந்த அதேவேளை, பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் உறவு வலுவிழக்கத்தொடங்கியது. கிட்டத்தட்ட அமெரிக்காவின் முன்னாள் காதலி என்ற நிலையிலிருந்து, பாகிஸ்தானை மீட்க ஒரு புதிய காதலன் வந்தான். ஆனால், அந்தப் புதிய காதலனின் நிகழ்ச்சிநிரல், உலக அரசியல் ஒழுங்கை மாற்றியமைப்பதாக இருந்தது. (அடுத்த திங்கட்கிழமை தொடரும்) https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/உலக-அரசியலும்-உள்ளூர்-அரசியலும்/91-272994
  19. ஸ்ரீ லங்காவும் சிங்கப்பூர் கனவும் என்.கே. அஷோக்பரன் இலங்கை அரசியலில், “ஸ்ரீ லங்காவை சிங்கப்பூர் போல மாற்றுவோம்” என்ற வார்த்தைகளைக் கேட்காத வருடங்கள், இல்லவே இல்லை என்று கூறலாம். பொருளாதார அபிவிருத்தி முதல், பேச்சுரிமையை அடக்குவது வரை, இலங்கை அரசியல்வாதிகளுக்குப் பெரும் ஆதர்ஷமாக, சிங்கப்பூர் இருந்து கொண்டிருக்கிறது. உண்மையில், சிங்கப்பூர் ஓர் ஆச்சரியான தேசம்தான். எந்த இயற்கை வளங்களும் பெரிதாகக் கிடைக்காத, ஒரு குட்டி நகரம் அது. 1965இல் மலேசியா பாராளுமன்றத்தில் ஓர் எதிர்ப்பு வாக்குக்கூட இல்லாமல், மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் நீக்கப்பட்டபோது, அந்தக் குட்டி நகரம், தனித்ததொரு சுதந்திர நகர அரசாகியது. மலாயர்கள், சீனர்கள், தமிழர்கள் எனப் பல்வேறு இனங்களையும் கொண்டமைந்த சிங்கப்பூர் எனும் குட்டி நகர அரசில், 1969இல் மலாயர்களுக்கும் சீனர்களுக்கும் இடையிலான ஓர் இனக்கலவரம் இடம்பெற்றது. அந்தக் குட்டி நகரத்தில், எந்த இனம் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பது, அந்த இனக்கலவரத்தின் மூலநோக்கமாக இருந்தது. மலேசியாவிலிருந்து நீக்கப்பட்டதால், தாம் ‘பூமிபுத்திரர்’கள் என்ற நிலையை இழந்துவிடுவோம் என்ற அச்சம், சிங்கப்பூரில் வாழ்ந்த மலாயர்களிடம் இருந்தது. ஆனால், லீ க்வான் யூ என்ற தலைவனின் முக்கியத்துவம், இந்த இடத்தில்தான் உணரப்படுகிறது. 1965இல் மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் விலக்கப்பட்டுத் தனிநாடான போது, அதன் முதல் பிரதமராகப் பதவியேற்ற லீ க்வான் யூ, சிங்கப்பூர் மக்களுக்குச் சொன்ன செய்தி, இங்கு குறிப்பிடத்தக்கது. “சிங்கப்பூர் என்பது, ஒரு மலாய் தேசமல்ல; சீன தேசமல்ல; இந்திய தேசமல்ல; எல்லோருக்கும் சிங்கப்பூரில் இடமுண்டு” என்று சொல்லியிருந்தார். பல்லினங்கள் செறிந்துவாழும் குட்டி நகரத்தில், இன முரண்பாடுகள் இலகுவில் ஏற்பட்டுவிடக்கூடும் என்பதை, லீ க்வான் யூ அறிந்திருந்ததுடன், சிறுபான்மையினர் எதுவித அச்ச உணர்வையும் பாதுகாப்பு இன்மையையும் உணர்ந்துவிடக்கூடாது என்பதில் அவர் மிகவும் அக்கறை கொண்டிருந்தார். அது வெறும் பேச்சு மட்டுமல்ல; செயலிலும் நிரூபித்துக் காட்டியிருந்தார். லீ க்வான் யூ, ஒரு சீனர்; அவர் சிங்கப்பூரின் பிரதமர். சிங்கப்பூரின் ஜனாதிபதியான யூசொஃப் இஷாக், மலாயர். வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சராக இருந்த சின்னத்தம்பி இராஜரட்ணம், இலங்கையில் பிறந்த தமிழர். தனித்து, ‘சீனர்’களை மட்டும் கொண்ட அமைச்சரவை என்றெல்லாம், இன ரீதியாகச் சிங்கப்பூரின் அரசியலை, லீ க்வான் யூ வடிவமைக்கவில்லை. 1957இன் புள்ளிவிவரத் தரவுகளின் படி, சிங்கப்பூரின் 75 சதவீதத்துக்கும் அதிகமான குடிமக்கள் சீன இனத்தவராவர். லீ க்வான் யூ நினைத்திருந்தால், இனவாத அரசியலை மிக இலகுவாகச் செய்திருக்கலாம். ஆனால் அவரதும், அவரது கட்சியினதும் நோக்கம், அதுவாக இருக்கவில்லை. உண்மையில், அன்று சீன இனத்தவர் அங்கு அதிகம் வாழ்ந்ததாலேயே, சிங்கப்பூர் மூன்றாவது சீனாவாகப் பார்க்கப்பட்டது. ஆனால், அந்த அடையாளம், அந்த நகர மக்களின் வாழ்வின் அமைதியைச் சீரழித்துவிடும் என்று, சிங்கப்பூரின் சிற்பிகள் மிகத்தௌிவாக உணர்ந்து இருந்தார்கள். ஆகவே இனம், மதம், மொழி ஆகியவற்றைக் கடந்த, ‘சிங்கப்பூர்’ என்ற ஒன்றுபட்ட அடையாளத்தைக் கட்டியெழுப்பவே அவர்கள் முனைந்தார்கள். அன்று, லீ க்வான் யூ முதல், இன்று சிங்கப்பூரின் பிரதமராக இருக்கும் அவரது மகன் லீ ஷியன் லோங் வரை, இனம், மதம், மொழி ஆகியவற்றைக் கடந்த, ‘சிங்கப்பூர்’ என்ற ஒன்றுபட்ட அடையாளத்தில் அவர்கள் மிகத் தௌிவாகவே இருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்னர், இனம், பல்கலாசாரம் பற்றி உரையாற்றிய லீ ஷீயன் லோங், சிங்கப்பூரின் இன, மத, மொழி கடந்த அரசியல் வரலாற்றை, மீளச் சுட்டிக்காட்டியதுடன், “சிங்கப்பூரியர்கள், தாம் அறியாத வரலாற்றின் பகுதிகள் பற்றி அறிந்து கொள்ளுதல் அவசியமாகும். சிறுபான்மையினர், தாம் சிங்கப்பூருக்கு உரியவர்கள் என்று உணரச்செய்வதை உறுதிசெய்ய வேண்டும்” என்றும் அழுத்தம்திருத்தமாகத் தெரிவித்திருந்தார். நிற்க! சிங்கப்பூரின் கவர்ச்சிக்கு அடிப்படைக் காரணம், இயற்கை வளங்கள் எதுவுமற்ற அந்தக் குட்டி நகர அரசு, சில தசாப்தங்களுக்குள் அடைந்த பிரம்மாண்ட பொருளாதார வளர்ச்சிதான். இன்று உலகில், உச்ச அளவில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் ஒன்றாகவும், மிகத் தாராள திறந்த பொருளாதாரக் கொள்கையைக் கொண்ட நாடாகவும், ஊழல் மிகக் குறைந்த நாடுகளின் வரிசையில் மூன்றாவது இடத்திலுள்ள நாடாகவும், வணிகம் செய்வதற்கு ஏற்ற மிகச் சிறந்த நாடாகவும், வரிகள் குறைந்த நாடாகவும், தனிநபர் உள்நாட்டு உற்பத்தி வீதத்தில், உலகளவில் இரண்டாவது இடத்திலுள்ள நாடாகவும் பரிணமிக்கிறது. 1970 ஆம் ஆண்டில், தனிநபர் தலா உள்நாட்டு உற்பத்தி, வெறும் 925 அமெரிக்க டொலர்களாக இருந்த சிங்கப்பூரில், 2019 ஆம் ஆண்டில் உலக வங்கியின் தரவுகளின் படியான தனிநபர் தலா உள்நாட்டு உற்பத்தி 65,233 அமெரிக்க டொலர்கள். 1970ஆம் ஆண்டில், இலங்கையின் தனிநபர் தலா உள்நாட்டு உற்பத்தி வெறும் 183 அமெரிக்க டொலர்களாகவும், 2019 ஆம் ஆண்டில் வெறும் 3,853 அமெரிக்க டொலர்களாகவும் காணப்பட்டது. கிட்டத்தட்ட 50 வருடங்களில், இலங்கையின் தனிநபர் தலா உள்நாட்டு உற்பத்தி, 21 மடங்கு அதிகரித்துள்ள நிலையில், அதேகாலப் பகுதியில், சிங்கப்பூரின் தனிநபர் தலா உள்நாட்டு உற்பத்தி, ஏறத்தாழ 70 மடங்கால் அதிகரித்துள்ளது. இத்தனைக்கும் இலங்கையிலுள்ள, உலகிலேயே மிகச் சிறந்ததும் ரம்மியமும் மிக்க இயற்கை வளங்கள், சிங்கப்பூரில் கிடையாது. “இலங்கையைச் சிங்கப்பூராக மாற்றுவேன்” என்று சூளுரைக்கும் அரசியல்வாதிகள், ஒன்றில், சிங்கப்பூரின் பொருளாதார எழுச்சியைப் போன்றதோர் எழுச்சியைத் தம்மால் இங்கு செய்ய முடியும் என்று நினைக்கிறார்கள்; அல்லது, சிங்கப்பூரைப் போல, மனித உரிமைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில், ‘ஒழுக்கம்’ என்ற பெயரில், அதை இங்கே செய்ய அவாக்கொள்கிறார்கள். சிங்கப்பூரின் விளைவுகளை நேசிக்கும் இவர்கள், அந்த விளைவுகளைத் தந்த விதைகளைப் பற்றி, அக்கறை கொள்வதில்லை. அந்த விதைகள்தான், அந்த விளைவுகளைத் தந்தன என்பதையும் கருத்தில் கொள்வதில்லை. சிங்கப்பூரின் வெற்றிக் கதையின் அடிப்படை, சிங்கப்பூர் அரசியலில் இருந்து இனம், மதம், மொழி ஆகிய வேறுபாடுகள் நீக்கி வைக்கப்பட்டமை ஆகும். இனத்தை, மதத்தை, மொழியை வைத்து, சிங்கப்பூரில் அரசியல் செய்யமுடியாது. யார் பூர்வீகக்குடிகள், யார் பூமிபுத்திரர்கள், யார் பெரும்பான்மை, அரச மதம் எது, பெரும்பான்மையினர் மொழி மட்டும்தான் உத்தியோகபூர்வ மொழி போன்ற குறுகிய அரசியல் சிந்தனையில் தோன்றிய பாதையை, சிங்கப்பூரின் சிற்பிகள் தேர்ந்தெடுக்கவில்லை. சிறுபான்மையினரை இரண்டாம் தரப் பிரஜைகளாக அவர்கள் நடத்தவில்லை. 2010ஆம் ஆண்டுத் தரவுகளின் படி, வெறும் 3.2% ஆன மக்கள் மட்டுமே பேசும் மொழியான தமிழ், சிங்கப்பூரின் நான்கு உத்தியோகபூர்வ மொழிகளுள் ஒன்று. ஆங்கிலத்தை அவர்கள் வெறுக்கவில்லை. அதை வைத்து, அரசியல் செய்யவும் இல்லை. உலகை வெல்வதற்கான ஆயுதமாக, அதைப் பயன்படுத்தினார்கள். அந்த மக்களின் ஆங்கில அறிவு, சிங்கப்பூர் வணிகத்தின் மையநிலையமாக உதவியது என்றால் அது மிகையல்ல. சோசலிஸம் பேசிக்கொண்டு, சிங்கப்பூரை ஆதர்ஷமாகக் கொள்ளும் முரண் நகைகள் எல்லாம், எங்கள் நாட்டில்தான் நடக்கும். உலகின் மிகத் திறந்த பொருளாதாரத்தை கொண்ட நாடாகச் சிங்கப்பூர் அடையாளப்படுத்தப்படுகிறது. சோசலிஸம் என்ற குறுகிய பொருளாதாரக் கொள்கையால், தாம் வளரமுடியாது என்ற பிரக்ஞை, சிங்கப்பூரின் தலைவர்களிடம் இருந்தது, சிங்கப்பூர் மக்கள் செய்த பெரும் புண்ணியத்தின் பலன் எனலாம். ஆனால், அதேவேளை அனைத்து மக்களுக்குமான அடிப்டைத் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதில், சிங்கப்பூரின் தலைவர்கள் அக்கறை காட்டினார்கள். சிங்கப்பூரின் வீடமைப்பு என்பது, உலகமே வியந்து பார்க்க வேண்டிய ஒன்று. ஆனால், சிங்கப்பூரிலும் குறைகள் உண்டு. உலகில் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் காணப்படும் அடிப்படை மனித உரிமைகளும் சுதந்திரங்களும் சிங்கப்பூரில் கிடையாது. ஒரு கட்சியே ஆண்டு வரும் சிங்கப்பூரில் பேச்சுரிமை, அரசியல் உரிமை என்பன, அடக்கப்பட்டு வருகின்றன. ஆனால், சிங்கப்பூர் கண்ட வளர்ச்சியும் அந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்ட மேம்பாடும், வசதிகள் வாய்ப்புகளில் ஏற்பட்ட உயர்ச்சியும் அவர்கள் இழந்ததோடு பார்க்கையில் நல்லதொரு பேரமாகத்தான் தெரிகிறது. உரிமையும் இல்லாமல், பொருளாதார மேம்பாடும் இல்லாமல், வாழ்க்கைத் தரத்தில் பின்னடைந்து, கடனில் மூழ்கி வாழும் நிலையை விட, சிங்கப்பூரின் நிலை மேம்பட்டது ஆகும். இனவாத அரசியலைச் செய்து கொண்டு, சிறுபான்மையினரை அடக்கிக்கொண்டு, இன்று பூமிபுத்திரர்கள், ஆதிக்குடி, ஒரு மொழி, சோசலிஸம் போன்ற வேண்டாக் கதைகள் பேசிக்கொண்டு, இலஞ்சமும் ஊழலும் சாதாரணமாகிப்போனதொரு நாட்டை, “சிங்கப்பூர் ஆக்குவேன்” என்று மேடையில் பேசுவதெல்லாம், வெறும் வேடிக்கைப் பேச்சுகளாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும். ஒருவேளை, இவ்வாறு பேசுபவர்கள் எல்லோரும் சிங்கப்பூரின் அடக்குமுறைக் கலாசாரத்தை மட்டும் இங்கு கொண்டுவருவதைத்தான் விரும்புகின்றார்களோ? இதைத்தான் அவர்கள், “இலங்கையை சிங்கப்பூர் ஆக்குதல்” என்கிறார்களோ என்னவோ! http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஸ்ரீ-லங்காவும்-சிங்கப்பூர்-கனவும்/91-271965
  20. சீனாவும் இந்தியாவும் இலங்கையும் -என்.கே. அஷோக்பரன் ஆசியாவின் பூகோள அரசியலில், இலங்கைத் தீவுக்கு எப்போதுமே ஒரு முக்கிய இடம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இயற்கை இலங்கைங்கு அளித்துள்ள வரமும், சாபமும் அதன் பூகோளத்தந்திரோபாய இடவமைவுதான் (geostrategic location). இலங்கை, ஒரு மிகப்பெரிய உபகண்டத்தின் தெற்கில் அமைந்துள்ள, கடலால் பிரிந்துள்ள நாடு. பட்டுப்பாதை உள்ளிட்ட கடற்பாதைகளின் முக்கிய தொடுபுள்ளி. இந்த அமைவிடம்தான், பல்வேறு நாடுகளும் இலங்கையில் ஆர்வம் கொள்ள முக்கிய காரணம். சர்வதேச அளவிலான அதிகாரம், செல்வாக்கு என்பவை, இன்று மாற்றத்துக்கு ஒ உள்ளாகி வருவது அனைவரும் உணரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. பனிப்போரில் அமெரிக்கா வென்றபோது, சர்வதேச அரங்கின் அதிகாரத்தின் மையமாக அமெரிக்கா இருந்தது. ஆனால், இன்றைய நிலை அதுவல்ல! இன்று, உலகத்தின் ஒரே அதிகார மையம் அமெரிக்கா அல்ல! மாறாக, உலகத்தின் அதிகார மையங்களுள் அமெரிக்காவும் ஒன்று! மறுபுறத்தில், ஐரோப்பிய ஒன்றியம் இன்னோர் அதிகார மையமாக விளங்கும் அதேவேளை, 1990களின் பின்னரான பொருளாதார ஏற்றத்தின் காரணமாக, உலகின் உற்பத்திச்சாலையாக இந்தியாவும் பொருளாதார இராட்சசனாக சீனாவும் வளர்ந்து, இன்று ஆசியாவின் அதிகார மையங்களாக உருவாகி இருக்கின்றன. இந்த ஒவ்வோர் அதிகார மையத்துக்கும், சர்வதேச அளவிலான அதிகார அரசியல் போட்டி நடந்துகொண்டிருக்கிறது. சர்வதேச அளவில், அமெரிக்க-சீனா போட்டி இன்னொரு பனிப்போராகவே உருப்பெற்றுள்ள அதேவேளை, தற்போது ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரும் இறுக்கமடைந்துவருகிறது. மறுபுறத்தில், ஆசியாவைப் பொறுத்தவரையில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டி இன்னும் இறுக்கமாகி உள்ளது. தன்னைத் தெற்காசியாவின் தன்னிகரில்லாத ‘ பெரியண்ணன்’ ஆகவே, இந்தியா எப்போதும் கருதிவந்துள்ளது. பாகிஸ்தான் என்ற தனது எதிரி நாட்டைத் தவிர, தன்னைச் சூழவுள்ள நாடுகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க இந்தியா சாம, தான, பேத, தண்ட என, எல்லா வழிமுறைகளையும் கையாண்டு இருக்கிறது. பொருளாதார ரீதியில், இலங்கைக்கு சாதக பலன்களை வழங்கி இருக்கக்கூடிய ‘ஆசியான்’ என்ற தென்கிழக்காசிய நாடுகளின் ஒன்றியத்தில், இலங்கை இணைவதற்கான வாய்ப்பை மறுத்து, ‘சார்க்’ என்ற தெற்காசிய நாடுகளின் ஒன்றியத்தில் இலங்கை இணைந்துகொண்டமை கூட, இந்தியாவின் கைங்கரியம் ஆகும். தெற்காசியப் பிராந்தியத்தை, அதாவது, இந்தியாவின் அண்டை நாடுகளை, எப்பாடுபட்டேனும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் இந்தியாவின் அடிப்படை வௌியுறவுக்கொள்கை. இதை, பபானி சென் குப்தா ‘பிராந்தியப் பாதுகாப்பு தொடர்பான இந்தியக் கோட்பாடு’ என்று விளித்தார். காலவோட்டத்தில், அது ‘இந்தியக் கோட்பாடு’ என்றும் ‘இந்திரா கோட்பாடு’ என்றும் பின்னர், ‘ராஜீவ் கோட்பாடு’ என்றும் குறிக்கப்பட்டது. இந்தக் கோட்பாடானது, மூன்று முக்கிய அடிப்படைகளைக் கொண்டது. முதலாவது, தெற்காசிய நாடொன்றின் உள்ளக முரண்பாடுகளில் தலையிட, இந்தியாவுக்கு எந்தவோர் எண்ணமும் கிடையாது. அதேவேளை, எந்த நாடும் இன்னொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதை, இந்தியா கடுமையாக எதிர்க்கும். இரண்டாவது, இந்திய நலன்களுக்கு, வெளிப்படையாகவோ உள்ளார்ந்த வகையிலோ எதிராக அமையும் வெளிநாடொன்றின் அணுகுறை, தெற்காசிய நாடொன்றின் உள்ளக முரண்பாட்டில் தலையிடுவதை, இந்தியா சகித்துக் கொள்ளாது. ஆகவே, எந்தத் தெற்காசிய நாடும் இந்தியாவுக்கு எதிராக அமையத் தக்கவகையில், வெளிநாடு ஒன்றிடமிருந்து இராணுவ உதவியைப் பெறக் கூடாது. மூன்றாவது, ஒரு தெற்காசிய நாட்டுக்குப் பாரதூரமான உள்ளக முரண்பாட்டை எதிர்கொள்ளவோ சட்டரீதியாக ஸ்தாபிக்கப்பட்ட அரசாங்கத்துக்குச் சகிக்கமுடியாத அச்சுறுத்தல் காரணமாக, வெளியக உதவி உண்மையாகவே தேவைப்படுமானால், அது இந்தியா உள்ளிட்ட அருகிலுள்ள நாடுகளிடம் உதவி கோரலாம். அத்தகைய சூழலில், இந்தியாவைத் தவிர்த்தலானது, குறித்த அரசாங்கத்தின் இந்திய எதிர்ப்பு நடவடிக்கையாகவே பார்க்கப்படும். தெற்காசிய நாடுகள், குறிப்பாகத் தனது நெருங்கிய அண்டை நாடுகள் தொடர்பான இந்தியாவின் வௌியுறவுக் கொள்கையின் சுருக்கம் இதுதான். ‘இந்த நாடுகளில் வேறெந்த வௌிநாடும் தலையிடுவதை இந்தியா விரும்பாது’. இந்த இடத்தில் தான், சீனா இன்று இந்தியாவுக்குப் பெரும் தலையிடியாக மாறியிருக்கிறது. தெற்காசிய அளவிலான அதிகாரப் போட்டியில் சீனாவும் இந்தியாவும் மும்முரமாக மோதிக்கொள்ளும் ஒரு வகையான பனிப்போர் காலம் இது எனலாம். கடந்த ஒரு தசாப்த காலத்தில், இந்தியாவின் அண்டை நாடுகளைக் குறிவைத்து, சீனா தனது காய்களைக் குறிப்பிடத்தக்க அளவுக்கு வெற்றிகரமாகவே நகர்த்தி வருகிறது. இந்தியாவின் ‘எதிரி’ நாடாக உருவகிக்கப்படும் பாகிஸ்தானை, சீனா தன்னுடைய ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்துள்ளது என்றால் அது மிகையல்ல. 2013ஆம் ஆண்டளவில் கிட்டத்தட்ட 60 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுதிமிக்க உட்கட்டமைப்பு அபிவிருத்தி, ‘சீனா-பாகிஸ்தான் பொருளாதார நடைக்கூட திட்டம்’ என்ற பெயரில், சீனாவின் ‘வார்பட்டியும் பட்டுப்பாதை’ முன்னெடுப்பின் ஒரு பகுதியாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், உலகின் பல நாடுகளில் சீனா முதலிட்டு இருந்தாலும், 2018ஆம் ஆண்டு வரையான தரவுகளின் படி, அவற்றில் அதிகளவு முதலீட்டைச் செய்தது பாகிஸ்தானில்தான். இந்தியாவின் வட மேற்கு எல்லையில் அமைந்துள்ள மியன்மாரிலும் சீனா தன்னுடைய முதலீடுகளை பெருமளவுக்கு முன்னெடுத்து வருகிறது. இராணுவ ஆட்சி நடைபெறும் மியன்மாரில், அண்மையில் ஜனநாயகத் தேர்தல் முடிவுகளைத் தகர்த்தெறிந்து, மீண்டும் இராணும் தன் கோரப்பிடியை இறுக்கியுள்ள நிலையில், சீனாவின் செல்வாக்கு அங்கு மேலும் அதிகரிக்கும். இதைப்போலவே, இந்தியாவின் ஏனைய எல்லை நாடுகளான பங்களாதேஷ், நேபாளம், பலநூறு மைல் தூரம் தாண்டி அமைந்துள்ள மாலைதீவிலும் சீனா தன்னுடைய பொருளாதார இரும்புக்கரத்தின் மூலம், தனது செல்வாக்கை வளர்த்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே, இலங்கையில் சீனா முன்னெடுக்கும் முதலீடுகள், வாரி வழங்கும் கடன்கள், முன்னெடுக்கும் உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் என்பனவும் பார்க்கப்பட வேண்டும். இந்தியாவைச் சூழவுள்ள நாடுகளைக் ‘கைப்பற்றுவதன்’ மூலம், சீனா இந்தியாவைச் சூழ்ந்துகொண்டுள்ளது. இதுதான், இந்தியா இன்று எதிர்நோக்கி இருக்கும் பெருஞ்சவால். தெற்காசியப் பிராந்தியத்தின் ‘பெரியண்ணன்’ ஆக இந்தியா இருக்க விரும்பினாலும், சீனாவுடன் மல்லுக்கட்டக்கூடிய பொருளாதார பலம் இந்தியாவிடம் தற்போது இல்லை. இந்தியாவின் பொருளாதாரம், மும்முரமாக வளர்கிறது எனினும், சீனாவைப் போன்று கடன்கனை வாரி வழங்கவும், உட்கட்டமைப்பில் முதலீடு செய்யவும் இந்தியாவால் உடனடியாக முடியாது. மேலும் இந்தியா, ஒரு ஜனநாயக நாடு. மாநிலங்கள் குறிப்பிட்டளவு சுயாட்சித்தன்மையைக் கொண்ட நாடு. அங்கே ஜனநாயகக் கட்டமைப்புகள் இயங்குகின்றன. சுதந்திர ஊடகத்துறை, நீதித்துறை இயங்குகின்றன. பொறுப்புக்கூறலுக்கான தேவையும் அவசியமும் இருக்கிறது. ஆகவே, சீனாவின் செயற்படு வேகத்துக்கு இந்தியாவால் ஈடுகொடுக்க முடியாது. இன்று, தெற்காசிய நாடுகளில் சீனாவின் செல்வாக்கைத் தடுக்கவோ, சமன்செய்யவோ இந்தியா தடுமாறுவதற்கான அடிப்படைக்காரணம் இதுதான். ‘கொவிட்-19’ பெருந்தொற்றின் போது, தடுப்பூசிகள் விநியோகம் தொடங்கியபோது, ‘தடுப்பூசி இராஜதந்திரம்’ என, இந்தியா வௌிநாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கி, தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டது. ஆனால், கொரோனா வைரஸின் பரவல், இந்தியாவுக்குள் அதிகரிக்கவே, தடுப்பூசிக்கான உள்ளூர்த்தேவையை சமாளிக்கவே இந்தியா திணறும் நிலையை அடைந்தது. அதனால், ‘தடுப்பூசி இராஜதந்திரம்’ ஸ்தம்பித்துப் போனது. அந்த இடைவௌியையும் தற்போது சீனா பற்றிப் பிடித்துக்கொண்டது. தன்னுடைய சீனத் தடுப்பூசியை வழங்குவதன் மூலம், தடுப்பூசி இராஜதந்திரத்தை சீனா கைப்பற்றிக்கொண்டது. இந்த இடத்தில், இலங்கை ஒன்றைப் புரிந்துகொள்வது அவசியம். இலங்கை, பாகிஸ்தான் அல்ல. இந்தியாவுக்கோ சீனாவுக்கோ இலங்கை எதிரி நாடல்ல! மாறாக, நட்பு நாடாகும். இதுவே வரலாற்று ரீதியான யதார்த்தமும் கூட. அந்தச் சமநிலையை, இலங்கை பேணுவதுதான் இலங்கையின் நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் சிறப்பானது. அதேவேளை, இலங்கை தன்னாட்டு மக்களுக்கு இறுமாப்பாய்ச் சொல்லிக்கொள்ளும் இறைமையை, அந்நிய ஆதிக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்வதும் அவசியமாகும். இந்த இடத்தில்தான், ‘சமநிலை’ பற்றி இலங்கையின் கொள்கைவகுப்பாளர்கள் சிந்திக்க வேண்டியது காலத்தின் அத்தியாவசியத் தேவையாகிறது. இலங்கையின் அமைதியான, வளமான எதிர்காலத்துக்கு இலங்கையானது சீனா, இந்தியா ஆகிய இரண்டு நாடுகளுடனும் நட்புறவைப் பேணுதல் அவசியமாகிறது. இதில் ஒன்றை விடுத்து, இன்னொன்றைப் பற்றிக்கொள்ளுதல், நீண்டகாலத்தில் இலங்கைக்கு பெரும் சிக்கல்களையும் பிரச்சினைகளையும் தோற்றுவிப்பதாகவே அமையும். சீனா, இந்தியா ஆகிய நாடுகள் விடயத்தில், இலங்கை ‘அணிசேராக் கொள்கை’யைப் பின்பற்றும் நாடாக இருப்பதே, இலங்கைக்கு நன்மையானதாகும். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சீனாவும்-இந்தியாவும்-இலங்கையும்/91-271385
  21. ஆர்ப்பாட்டம் ஒரு ஜனநாயக உரிமை என்.கே. அஷோக்பரன் இலங்கையில், ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி செய்து கொண்டிருந்த 1992ஆம் ஆண்டு காலப்பகுதி. 1977 இலிருந்தே ஐக்கிய தேசிய கட்சிதான் தொடர்ந்து ஆட்சியிலிருந்தது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருந்தது. எப்படியாவது ஆட்சியை மீண்டும் பிடித்துவிட, அவர்கள் பகீரதப் பிரயத்தனத்தை முன்னெடுத்த காலகட்டம் அது. இதன் ஒரு படியாக, அதிகரித்து வரும் விலைவாசி, ஊழல், தனியார்மயமாக்கல், அதிகரிக்கும் கடத்தல்கள், படுகொலைகள் உள்ளிட்ட காரணங்கள் தொடர்பிலான அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஒரு புதுவிதமான ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது. அதுதான் ‘ஜன கோஷா’. அரசாங்கத்துக்கு தனது எதிர்ப்பைக் காட்ட, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரும் அவர்களது ஆதரவாளர்களும் பொதுமக்களும், ஏறத்தாழ ஏககாலத்தில் 15 நிமிடமளவுக்கு ஊதுகுழல்களை ஊதுவதன் மூலம், மேளங்களை அடிப்பதன் மூலம், உலோகப் பாத்திரங்களைத் தட்டுவதன் மூலம், வாகனங்களின் ‘ஹோர்ன்’ சத்தத்தைத் தொடர்ந்து அடிப்பதன் மூலம், வணக்கஸ்தலங்களின் மணிகளை ஒலிக்கச் செய்வதன் மூலம் சத்தமெழுப்புவதுதான் இந்த ஆர்ப்பாட்டமாக இருந்தது. இந்த ‘ஜன கோஷா’ ஆர்ப்பாட்டத்தின் முன்னரங்கில் நின்றவர்களில் ஒருவர், இன்றைய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ. நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டம், இங்கிரியவில் இடம்பெற்றபோது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஹொரண பிரேதேச சபை உறுப்பினராக இருந்த அமரதுங்க என்பவர், மேளங்களுடன் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தார். அங்கிருந்த பொலிஸார் சிலர், மேளங்களை அடிக்க வேண்டாம் என்று அவரை அச்சுறுத்தினார்கள், அதன் பின்னர், அவருடைய மேளத்தைப் பறிமுதல் செய்து, உடைத்து எறிந்ததுடன், அவர் மீது தாக்குதலும் நடத்தியிருந்தனர். பொலிஸாரின் இந்த நடவடிக்கையால், தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்று, அமரதுங்க உயர் நீதிமன்றில் அடிப்படை மனித உரிமைகள் மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார். நீதியரசர்களான மார்க் பெர்னான்டோ, தீரறட்ண, இராமநாதன் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு, ஏனைய இரு நீதியரசர்களின் இணக்கத்துடன், நீதியரசர் மார்க் பெர்னான்டோவால் வழங்கப்பட்டது. பேச்சுரிமை தொடர்பில், இலங்கை உயர் நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்புகளுள் ஒன்றாகக் கருதப்படும் இந்தத் தீர்ப்பு, ‘ஜன கோஷா வழக்குத் தீர்ப்பு’ என்று பொதுவில் அறியப்படுகிறது. தனது தீர்ப்பில், நீதியரசர் மார்க் பெர்னான்டோ, “மேளமடித்தல், கைதட்டுதல், சத்தம் எழுப்புதல் என்பன, பேச்சு மற்றும் வௌிப்பாட்டு உரிமையின் ஒருவகைதான். மேலும், அரசியலமைப்பானது, உள்ளார்ந்த மற்றும் 15ஆம் சரத்து குறிப்பிடும் மட்டுப்பாடுகளுக்கு அமைவாக, நீங்கள் விரும்பியபடி சிந்திப்பதற்கும், நீங்கள் சிந்திப்பதன் படி பேசுவதற்குமான உரிமையை வேண்டுகிறது. அதற்கமைவாக, கருத்துகளின் வௌிப்பாடானது, அது வன்முறையை அல்லது சட்டவிரோத நடவடிக்கையை ஆதரிக்காத அல்லது தூண்டாத வரையில், அந்தக் கருத்துகள் பிரபல்யமற்றதாக, அருவருப்பானதாக, வெறுக்கத்தக்கதாக, பிழையாக இருப்பினும் கூட, அது பேச்சு மற்றும் வௌிப்பாட்டுச் சுதந்திரத்தின் வரம்புக்கு உட்பட்டதே” என்று தெரிவித்திருந்தார். தொடர்ந்தும் குறித்த வழக்கின் தீர்ப்பில், “பொலிஸாரின் நடவடிக்கைகள் மனுதாரரின் பேச்சுரிமையை மீறிய செயல்” என்று கூறிய நீதியரசர் மார்க் பெர்னான்டோ, அரசாங்கத்தை, அல்லது அரசியல் கட்சிகளை அல்லது கொள்கைகளை, திட்டங்களை, ஆதரிப்பதற்கு அல்லது விமர்சிப்பதற்கான உரிமையானது, ஜனநாயக வழியிலான வாழ்க்கைக்கு அடிப்படையானதாகும் எனவும், பேச்சுரிமையை மறுத்தல் என்பது, எல்லா சிவில், அரசியல் நிறுவனங்களின் அடிப்படையாக உள்ள அடிப்படைக் கொள்கைகளான விடுதலை மற்றும் நீதியை மறுப்பதாகும் என்றும் குறிப்பிடுகிறார். நிற்க! சில தினங்களுக்கு முன்னதாக, சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, அவரது வாகனப் பேரணி கடக்கும் வரையில், வீதிப் போக்குவரத்து தடுத்து வைக்கப்பட்டதை எதிர்த்து, அங்கே வாகனங்களில் இருந்தவர்கள் ‘ஹோர்ன்’ அடித்து சத்தமெழுப்பி, தமது எதிர்ப்பை வௌியிட்டிருந்தார்கள். இதனை ஒருவர், தனது திறன்பேசியில் படம்பிடித்திருந்தார். அது, சமூக ஊடகங்களில் வௌியாகி இருந்தது. அந்தக் காணொளிப் பதிவில், அந்நபர் அங்கிருந்த வாகனச் சாரதிகளை, ‘ஹோர்ன்’ சத்தத்தை எழுப்பி, பிரபுகள் செல்வதற்காக, பொதுமக்களின் வாகனங்களைத் தடுத்துவைப்பதற்கு எதிர்ப்புக் காட்டுமாறு ஊக்குவிப்பதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அதன் பின்னர் பலரும் ‘ஹோர்ன்’ அடித்துத் தமது எதிர்ப்பை வௌியிட்டு இருந்தமையையும் காணக்கூடியதாக இருந்தது. மறுநாளே, வாகனச் சாரதிகள் ‘ஹோர்ன்’ சத்தத்தை எழுப்புவதற்கு ஊக்குவித்த குறித்த நபர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட செய்தி வௌியாகியிருந்தது. பிணையில் வௌிவந்த அந்நபர், நீதிமன்றத்துக்கு வௌியே, ஊடகவியலாளர்களிடம், “நான் இலங்கை அரசாங்கத்திடம், எனது செயலுக்காக மன்னிப்புக் கேட்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார். மன்னிப்புக் கேட்பது, கேட்காமல் விடுவது என்பது, அவரது தனிப்பட்ட எண்ணம் மற்றும் விருப்பம்! ஆனால், எந்தவித வன்முறையுமின்றி, தான் விரும்பாத அரசாங்கத்தின் நடவடிக்கையை விமர்சிக்கவும் எதிர்க்கவும் ஆர்ப்பாட்டம் செய்யவுமான அடிப்படை உரிமை, ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிறது. அதை முறியடிக்கும் வகையில், குறித்த நபரை, ஏதோ பெருங்குற்றம் செய்தவரைக் கைதுசெய்வது போல, மறுநாள் கைது செய்ததே, மனித உரிமைகள் மீறலாகப் பார்க்கப்பட வேண்டியதாக அமைகின்றது. ஆனால், குறித்த நபர் மறுநாளே பொது வௌியில் மன்னிப்புக் கேட்டது, அவர் எந்தப் பின்புலமும் இல்லாத, ஒரு சாதாரண குடிமகன் என்பதையே வௌிக்காட்டி இருந்தது. கைது, வழக்கு, என்று இழுபறிப்பட்டு, சுமூக வாழ்க்கையைத் தொலைத்துவிட முடியாத ஒரு சாதாரண குடிமகன், பிரச்சினையைத் தீர்க்க என்ன செய்வானோ, அதையே அந்நபரும் செய்திருக்கிறார். ஆனால், இந்தக் கைது என்ற செய்தியின் பின்னால் இருக்கும் தன்மையானது மிகவும் ஆபத்தானது. அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள், எதிர்ப்பவர்கள், அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்ற அச்ச உணர்வை, மறைமுகமாக இந்தச் சம்பவங்கள் மக்களுக்கு ஊட்டுகின்றன. ஒரு சர்வாதிகாரி, எப்படித் தனது மக்களை அச்சத்தின் மூலம் ஆள்வானோ, அதுபோன்ற சிந்தனையின் பாற்பட்டது இந்த நடவடிக்கைகள். இவை ஜனநாயக விரோதமானவை மட்டுமல்ல; ஜனநாயகத்தையே குழிதோண்டிப் புதைக்கும் செயல்களுமாகும். இதற்குச் சொல்லப்பட்ட நியாயங்களில் குறிப்பிடத்தக்கது, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, ட்விட்டரில் குறிப்பிட்ட கருத்தாகும். அதாவது, ‘வியன்னா உடன்படிக்கையின் கீழ், வௌிநாட்டுப் பிரமுகர்கள் வருகைதரும் போது, உச்சப்பட்ச பாதுகாப்பு அளிக்கும் கடப்பாடு, அரசாங்கத்துக்கு உண்டு. அதன்படியே வீதிப்போக்குவரத்து தடுக்கப்பட்டது, என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால், வௌிநாட்டுப் பிரமுகர்கள் வருகை தரும் போது, வன்முறையற்ற ரீதியில் பொதுமக்கள் எதிர்ப்பை வௌிக்காட்ட முடியாது என்று, எந்த ஒரு சர்வதேச சட்டமுமில்லை. அப்படியானால், ‘ஹோர்ன்’ அடிக்கத் தூண்டிய அந்த நபரைக் கைது செய்தது ஏன்? அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பல நாடுகளுக்கு விஜயம் செய்த போதும், அங்கு பொதுமக்கள் தமது கடும் எதிர்ப்பை அமைதியாக ஆர்ப்பாட்டங்கள், பதாதைகள், இராட்சத உருவப்பொம்மைகள் மூலம் வௌிப்படுத்தி இருந்தனர். அமெரிக்காவின் நட்பு நாடான ஐக்கிய இராச்சியத்தில் கூட, இது நடந்தது. ஜனநாயக விழுமிய வழி நடந்த அந்த அரசுகள், பொதுமக்களின் அமைதியான எதிர்ப்புகளை, இரும்புக்கரம் கொண்டு அடக்கவில்லை. அவை, தமது குடிமக்களின் உரிமை என்பதை, அந்த அரசுகள் புரிந்து கொண்டுள்ளன. நிச்சயமாக, தனது மக்களை அடக்குமுறைக்குள் உள்ளாக்கியுள்ள, ஒரு கட்சியின் வல்லாட்சி கொண்ட சீனாவுக்கு, இந்த ஜனநாயக விழுமியங்கள் அந்நியமானவையாகவே இருக்கும். சீனாவால் இந்த ஜனநாயக விழுமியங்களின் தாற்பரியங்களைப் புரிந்துகொள்ள முடியாது இருக்கலாம். ஆனால், இலங்கை வல்லாட்சி நடைபெறும் நாடு அல்லவே! ஆகவே, சீனா தன் மக்களை நடத்துவது போல, இலங்கை அரசாங்கம் தனது மக்களை நடத்த முடியாது. இலங்கை ஒரு ஜனநாயக நாடு. இலங்கையின் ஆட்சியில் இருப்பவர் எவராக இருந்தாலும், இதை ஞாபகத்தில் வைத்திருப்பது அவசியம். ‘ஜன கோஷா’ வழக்கின் தீர்ப்பில் நீதியரசர் மார்க் பெர்னான்டோ, ஒரு முக்கியமான விடயத்தைக் குறிப்பிட்டிருப்பார். “இன்று, மாற்றுக் கருத்தின் சட்டபூர்வமான அமைதியான வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துவதானது, தவிர்க்க முடியாமல், எதிர்காலத்தில் வன்முறைப் பேரழிவின் வெடிப்பை ஏற்படுத்தக்கூடும்” என்ற எச்சரிக்கையை நீதியரசர் மார்க் பெர்னான்டோ தனது தீர்ப்பில் கோடிகாட்டியிருந்தார். இந்தக் கூற்றின் உண்மைத்தன்மைக்கு, இலங்கையின் அண்மைய வரலாறே சான்றுபகரும். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஆர்ப்பாட்டம்-ஒரு-ஜனநாயக-உரிமை/91-270801
  22. வடமாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் யார்? என்.கே. அஷோக்பரன் தற்போதைய நிலையில், இலங்கையில் எந்தவொரு மாகாண சபையும் இயங்கும் நிலையில் இல்லை. 2019 ஒக்டோபர் எட்டாம் திகதி, ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததோடு, இலங்கையின் ஒன்பது மாகாண சபைகளும் இயங்கா நிலையை அடைந்தன. 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில், மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று சில தரப்புகள், குறிப்பாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தரப்பு, கோரிக்கை வைத்திருந்தாலும், 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், அந்தக் குரலும் அடங்கிவிட்டது. 2020இல் ‘கொவிட்-19’ பெருந்தொற்றுப் பரவல், நாட்டை முடங்கு நிலைக்குக் கொண்டு வந்த பின்னர், மாகாண சபைத் தேர்தல்கள் பற்றி, எந்த அரசியல் கட்சியும் பெரிதாக அக்கறை காட்டவில்லை. இந்த நிலையில், மாகாண சபைகள் இல்லாதொழிக்கப்பட வேண்டுமென்ற குரல், ஆளுந்தரப்பின் பெருந்தேசியவாதிகளால் அவ்வப்போது முன்வைக்கப்பட்டது. இருந்தபோதிலும், இந்தியாவை மீறி மாகாண சபைகளை இல்லாதொழிக்கும் எண்ணம், இந்த அரசாங்கத்துக்கு இருப்பதாகத் தென்படவில்லை. இந்த வருடம், மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படலாம் என்ற ஊகங்கள், பரவலாக பேசப்பட்டு வருகின்றன. எனினும், மீண்டும் உருவெடுத்துவரும் கொவிட்-19 பெருந்தொற்றின் மூன்றாம் அலை, மாகாண சபைத் தேர்தல்களை இன்னும் தாமதப்படுத்தும் என்றே தோன்றுகிறது. மாகாண சபைத் தேர்தல்களின் நிலை, இப்படியாக ‘இழுபறி’யாக இருக்கும் கட்டத்தில் கூட, வட மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கருத்து ‘அடிபிடிகள்’, அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. இந்தப் பரபரப்பு அத்தியாயத்தின் தற்போதைய பகுதியை, வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தொடங்கி வைத்திருக்கிறார். “எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், பொது முதலமைச்சர் வேட்பாளராக, வேலன் சுவாமிகளைக் களமிறக்கலாம்” என, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், அண்மையில் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்து, வாதப் பிரதிவாதங்களை அவரது கட்சிக்குள்ளும், வௌியிலும் ஏற்படுத்தி இருக்கிறது. ‘யார் இந்த வேலன் சுவாமிகள்’? என்ற கேள்வி, பலருக்குள்ளும் எழலாம். சுருக்கமாகச் சொன்னால், அவர் ஒரு சந்நியாசி; அண்மையில் நடத்தப்பட்ட ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’யான போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர். இதைத்தாண்டி, அவரது அரசியல் செயற்பாடு என்று எதுவுமில்லை. இத்தகையவரை, நீதியரசர் விக்னேஸ்வரன் ஏன் பரிந்துரைத்தார் என்ற கேள்வி ஒருபுறமிருக்க, நீதியரசர் விக்னேஸ்வரனின் இந்தப் பரிந்துரையை, வேலன் சுவாமிகள் நிராகரித்திருக்கிறார். இது பற்றி ஊடகங்களுக்குக் கருத்து வௌியிட்டிருந்த வேலன் சுவாமிகள், “பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டம், மாபெரும் வெற்றியைப் பெற்றதன் பின்னர், ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை மக்கள் பேரழுச்சி இயக்கம்’ ஆரம்பிக்கப்பட்டது. இதன் கொள்கைகளில் ஒன்றான, உறுப்பினர்கள் எவரும் கட்சி அரசியலிலோ தேர்தல் அரசியலிலோ ஈடுபடுவதில்லை என்பது, என்னையும் சாரும். அரசியல், சமூக மட்டங்களை இணைத்துக்கொண்டு, உரிமைகளுக்கான போராட்டங்களை ஒழுங்குபடுத்துவதிலேயே, நமது பணியை முன்னெடுப்போம்” என்று, வேலன் சுவாமிகள் தெரிவித்திருந்தார். நல்லது! முதலாவது வடக்கு மாகாண சபையின் ‘தோல்வி’ பற்றி, பலரும் கட்டுக்கட்டாக பதிவுசெய்துவிட்டார்கள். முதலாவது வடக்கு மாகாண சபையின் தோல்வியிலிருந்து, தமிழ் மக்கள் ஏதாவது பாடத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், அதில் முதன்மையாக அமைய வேண்டியது, கொள்கை உருவாக்க அரசியலுக்கும், அரசியல் நிர்வாகத்துக்கும் இடையிலான வேறுபாட்டை, தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ளுதலாகும். அரசியல் கொள்கைகளை முன்வைத்தல், கொள்கைகள் அடிப்படையிலான வாதப்பிரதிவாதங்களில் ஈடுபடுதல், கொள்கை முடிவுகளை எடுத்தல், கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட திட்டமிடல்களை முன்வைத்தல், கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட சட்டவாக்கத்தில் ஈடுபடுதல் என்பனவெல்லாம், கொள்கை வகுப்பு அரசியல் பாற்பட்டது. அந்தக் கொள்கை உருவாகத்ததை அமுல்படுத்துதல், அதை நிர்வகித்தல், கொள்கை வகுப்பு அடைய எத்தனிக்கும் அடைவுகளை அடைந்துகொள்ளுதல் ஆகியன, நிர்வாக அரசியலின் பாற்பட்டது. முதலாவது வடக்கு மாகாண சபையில் கொள்கை வகுப்பு ஓரளவுக்கேனும், தீவிர தமிழ்த் தேசிய அடிப்படைகளில் இடம்பெற்றது. ஆனால், நிர்வாகத்தில்தான் அது கோட்டைவிட்டது. ஆகவே, நிர்வாகத்தின் தோல்விதான், உண்மையில் முதலாவது வடமாகாண சபையின் தோல்வி. மாகாண சபையின் நிர்வாகம் என்பது, முதலமைச்சர் தலைமையிலான ஐவரைக் கொண்டமைந்த அமைச்சரவையினதும் ஆளுநரினதும் பாற்பட்டது. இங்கு ஆளுநர் என்பவர், ஜனாதிபதியின் முகவராக, ஜனாதிபதியால் நியமிக்கப்படுபவர் ஆவார். “ஆளுநர் எங்களை வேலை செய்ய விடுகிறார் இல்லை” என்ற ஒற்றை மந்திரத்தை, திரும்பத் திரும்ப உச்சரித்துவிட்டு, எந்தவொரு காரியத்தையும் சாதிக்காது இருப்பதற்குப் பெயர், நிர்வாகமும் அல்ல; அரசிலும் அல்ல. ஆனால், வடக்கு மாகாணத்துக்கென்று ஒரு மாகாண சபை உருவானது, அதுதான் முதல் முறை. அன்று அமைச்சரவையில் இருந்தவர்கள், அரசியலுக்கே புதியவர்கள். ஆகவே, அவர்கள் அரசியல் நிர்வாகத்தில் தோல்வியடைந்தமை ஆச்சரியத்துக்கு உரியதொன்றல்ல. மிகச் சிறந்த அனுபவம்மிக்க கொள்கை வகுப்பு அரசியல்வாதிகள் கூட, அரசியல் நிர்வாகத்தில் தோல்வி கண்ட பல அனுபவங்களை, உள்ளூர் அரசியலிலும் உலக அரசியலிலும் காணலாம். ஆகவேதான், தமிழ் மக்களும் தமிழ் அரசியல் கட்சிகளும் ‘கொள்கை வகுப்பு அரசியல்’க்கும் ‘நிர்வாக அரசியல்’க்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்வதும், அதன் அடிப்படையில் தமது அரசியல் முடிவுகளை எடுப்பதும் அவசியமாகிறது. ‘முதலமைச்சர்’ என்பது, அடிப்படையில் அரசியல் நிர்வாகப் பதவி. ஆகவே, கொள்கை வகுப்பு என்பதைத் தாண்டி, அரசியல் நிர்வாக (அரச நிர்வாகம் அல்ல) ஆற்றல் உடைய தலைமைத்துவப் பண்பு மிக்கவர்களே, அந்த இடத்துக்கு மிகத் தகுதியானவர்கள். இந்த இடத்தில், இன்னொன்றைக் குறிப்பிடுதல் அவசியமாகிறது. அரசியல் நிர்வாகம் என்பது, ஒரு தனித்திறன். அது ஒருவரின் கல்வித் தகைமையிலோ, தொழில் அனுபவத்தையோ சார்ந்ததொன்றல்ல என்பதற்கு, உலகம் முழுவதும் பல உதாரணங்கள் இருக்கின்றன. பாலர் வகுப்புக் கல்வியை மட்டுமே பெற்றுக்கொண்ட அரசியல் தலைவர்கள் கூட, ஆகச் சிறந்த அரசியல் நிர்வாகிகளாகப் பரிணமித்திருக்கிறார்கள். அதேவேளை, பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாக இருந்தவர்கள், அரசியல் நிர்வாகத்தைக் கொண்டு நடத்த முடியாது திணறியிருக்கிறார்கள். ஏனெனில், அரசியல் நிர்வாகம் என்பது, வெறுமனே மக்களைக் கவரப் பேசுவதும், கட்சியினரைச் சமாளிப்பதும், அறிக்கைகள் வௌியிடுவதும் அல்ல! மாறாகப் பொது நிர்வாகம், அரச சேவையாளர்கள், ஆளுநர், மத்திய அரசு உள்ளிட்ட பல்வேறு தரப்புகளையும் முறையாகக் கையாண்டு, தமது காரியங்களைச் சாதித்துக்கொள்ள வேண்டிய அதியுயர் பொறுப்புகளும் அழுத்தங்களும் நிறைந்ததொரு பதவியாகும். ஹூப்ரு வேதாகமத்தில் ஒரு வாசகமுண்டு. ‘சரியான நிலைமைகளுக்காக நீங்கள் காத்திருந்தால், நீங்கள் ஒருபோதும் எதையும் செய்ய மாட்டீர்கள்’ என்கிறது அந்த வாசகம். ஆகவே, எமக்கேற்றாற் போல நிலைமைகள் அமைந்திருந்தால், நாம் நினைத்ததை நடத்தியிருப்போம் என்று சொல்பவர்கள், சிறந்த நிர்வாகிகள் அல்ல. மாறாக, இருக்கும் நிலைமைகளைச் சமாளித்து, எப்படியேனும் தமது காரியத்தை, அடிப்படைக் கொள்கைகளில் பிசிறுகள் இன்றிச் சாதித்துக்கொள்பவர்களே மிகச் சிறந்த நிர்வாகிகள். அத்தகைய நிர்வாகத்திறன் மிக்கவர்களை அடையாளங்கண்டு, தமிழ்க் கட்சிகள் தமது முதலமைச்சர், அமைச்சர் வேட்பாளர்களாக நிறுத்தும்போது, அவர்களுக்கு வட மாகாணத் தமிழ் மக்கள், தமது அங்கிகாரத்தைத் தேர்தலில் வழங்குவார்கள். அப்போது, அடுத்த வடக்கு மாகாண சபை, வட மாகாண மக்களுக்கு நிறைய விடயங்களைச் சாதித்துத் தரக்கூடியதொன்றாக அமையும். மாறாக, பழுத்த அரசியல்வாதி, சமூகத்தில் மதிப்பு நிறைந்த ஆளுமை, கட்சித் தலைவர், முக்கியஸ்தர், அவர்களது வாரிசுகள், சொந்த பந்தங்கள், பிரபல வணிகர், முதலாளி, பிரதேசத்தில் சாதி, மத ரீதியில் முக்கியத்துவமானவர் உள்ளிட்ட அடிப்படைகளில், தமது முதலமைச்சர், அமைச்சர் வேட்பாளர்களைத் தமிழ்க் கட்சிகள் மீண்டும் தெரிவுசெய்யுமானால், முதலாவது வடமாகாண சபை போன்றே, அடுத்த வடக்கு மாகாண சபையும் அமைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த இடத்தில், தமிழ்க் கட்சிகளும் தமிழ் மக்களும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய குறள், ‘இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து அதனை அவன்கண் விடல்’ என்பதாகும். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடமாகாணத்தின்-அடுத்த-முதலமைச்சர்-யார்/91-270373
  23. பரீட்சைகளையும் பட்டங்களையும் கடந்த கல்வி மறுசீரமைப்பு -என்.கே. அஷோக்பரன் மூலைக்கு மூலை, ‘உங்கள் பிள்ளைகளைப் பட்டதாரியாக்குங்கள்’ என்று விளம்பரங்கள் நிறைந்து வழியும் காலகட்டத்தில், ‘பட்டப்படிப்பு’ என்பது சமூக அந்தஸ்தின் முக்கிய குறிகாட்டியாக மாறியுள்ளது. இந்நிலையில், எப்படியாவது எமது பிள்ளையும் ஒரு பட்டத்தைப் பெற்றுவிட வேண்டும் என்ற பெற்றோரின் அவாவின் விளைவாக, அதிகளவிலான பட்டதாரிகள் உற்பத்தி செய்யப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். கல்வியின் இலக்கு, அறிவு என்பதற்குப் பதிலாக பட்டம் என்ற நிலையில்தான் கல்வித்துறை இங்கு இயங்கிக் கொண்டிருக்கிறது. எங்கு கேள்வி இருக்கிறதோ அங்கு, அதற்குரிய நிரம்பலை, வணிகம் வழங்குவது என்பது இயல்பானது. இந்தப் பட்டப்படிப்புக்கான அதீத கேள்வியை, நிரம்பல் செய்யவே, மூலைக்கு மூலை கல்வி வழங்கும் ‘தொழில் நிலையம்’கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இதன் விளைவு, வேலையற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நிற்க! இலங்கையில் மிகப்பெரிய வரங்களில் ஒன்று, ‘இலவசக் கல்வி’. இது எவ்வளவு பெரிய வரம் என்பதை உணர்ந்துகொள்ள, அயல்நாடான இந்தியாவின் கல்விக் கட்டமைப்புடன் ஒப்பு நோக்கினாலே போதும். ஆனால், இலங்கையின் இலவசக் கல்வியின் கல்வித் திட்டமும் முறைமையும் காலாவதியாகிப்போனதொரு நோக்கத்தில்தான் இன்றும் வேர்கொண்டுள்ளது. இலங்கையின் இன்றைய பாடசாலைக் கல்வியின் ஆரம்பம், பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் இங்கு உருவான ஆங்கில வழிக் கல்வி வழங்கும் பாடசாலைகள் ஆகும். குறிப்பாக, மிஷனரி பாடசாலைகளும் அவற்றுக்குப் போட்டியாக உருவான ஆங்கிலக்கல்வி வழங்கும் பௌத்தம், இந்து ஆகிய பாடசாலைகளும் ஆகும். பிரித்தானிய கொலனித்துவ காலகட்ட்தில் உருவான இந்தப் பாடசாலைகளின் நோக்கம், சுதேசிகளுக்குச் சமயம் கற்பித்தல், அடிப்படை ஆங்கில அறிவைப் புகட்டுதல், அடிப்படை கணித அறிவை ஏற்படுத்தல் ஆகியனவாகும். இதனூடாக, பிரித்தானியர் இங்கு ஆட்சியைக் கொண்டு நடத்துவதற்குத் தேவையான அடிப்படை ஆளணியை உருவாக்குதல் ஆகும். இதைச் சுருக்கமாக, ‘எழுதுவினைஞர்களை உருவாக்கும் கல்வி முறை’ என்பார்கள். இந்தப் பாடசாலைக் கல்வி மட்டுமே, அன்றைய காலத்தில், அரச உத்தியோகமொன்றைப் பெற்றுக்கொள்ளப் போதுமானதாக இருந்தது. வெகு சிலர், பிரித்தானியப் பல்கலைக்கழகத்துக்குச் சென்று, மேற்படிப்பை மேற்கொண்டார்கள். மேலும் சிலர், இலங்கைப் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பைப் பெற்றுக்கொண்டார்கள். இத்தகைய மேற்படிப்பை மேற்கொண்டவர்கள், தத்தம் துறைகளில் தொழில்நிபுணர்களாகவும் பல்கலைக்கழக ஆசான்களாகவும் அரச நிர்வாகத்துறை உத்தியோகத்தர்களாகவும் ஆனார்கள். இதன் பாலாக, இவர்களின் சமூக அந்தஸ்து அதிகரித்தது. தொழில்நிபுணர்களுக்கான தேவை அதிகமாகவும், வழங்கல் குறைவாகவும் இருந்த காலகட்டத்தில், இவர்கள் பெருஞ்செல்வம் ஈட்டத்தக்கவர்களாக மாறினார்கள். இது, பட்டப்படிப்பு என்பது உயர் சமூக அந்தஸ்தையும் பொருளாதார வளங்களையும் வழங்கவல்லது என்ற எண்ணத்தைப் பரவலாக ஏற்படுத்தியது. இதுதான் ‘பட்டம்’ பெற வேண்டும் என்ற அவாவின் அடிப்படை. தான் பெறமுடியாத பட்டத்தை, எப்படியாவது தன் பிள்ளை பெற்றுவிட வேண்டும் என்றும், தான் பெற்றதை விட, அதிக பட்டங்களைத் தன் பிள்ளை பெற்றுவிட வேண்டும் என்றும், தான் பட்டம் பெற்ற பல்கலைக்கழகத்தைவிட, உயர் அங்கிகாரமுள்ள பல்கலைக்கழகத்தில் தன் பிள்ளை பட்டம் பெற்று விட வேண்டும் என்றும் கருதுவதால், பட்டத்துக்காக எவ்வளவு பணத்தையும் கொட்டியிறைக்க, பெற்றோர் தயாராக இருக்கிறார்கள். இந்த இடத்தில்தான், எமது கல்விமுறையின் பிரச்சினை தொடங்குகிறது. தனது பிள்ளை கல்வியறிவு பெறுவது என்பதை விட, பட்டம் பெறுவதுதான் இங்கு முக்கியமானதாகவும் முதன்மையானதாகவும் இருக்கிறது. ஆகவே, இங்கு பாடசாலைக் கல்வியின் நோக்கமும், இதை மையமாக வைத்தே முன்னெடுக்கப்படுகிறது. அரச பாடசாலைகளில், முதலாம் வகுப்பிலிருந்து, ஐந்தாம் வகுப்புவரை படிக்கும் பெரும்பான்மை மாணவர்களுக்கு, எப்படியாவது ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகள் எடுத்து, தற்போது கற்பதைவிட தரங்கூடிய பாடசாலைக்குப் போய்விட வேண்டும் என்ற அழுத்தம்; ஆறாம் ஆண்டிலிருந்து 11ஆம் ஆண்டு வரை எப்படியாவது க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் அதியுயர் புள்ளிகள் பெற்றுவிட வேண்டும் என்ற அழுத்தம்; அதன் பிறகு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் அதியுயர் புள்ளிகள் பெற்று, அதிக மதிப்புள்ளதாகக் கருதப்படும் பல்கலைக்கழகக் கல்வியொன்றைக் கற்பதற்கு, எப்படியாவது அரச பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்; அல்லது, குறைந்த பட்சம் ஏதாவதொரு துறையைக் கற்பதற்கேனும் அரச பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அழுத்தம்; இவ்வாறான அழுத்தங்கள், ஆண்டு ஒன்றிலிருந்து பல்கலைக்கழகக் கல்வி வரை தொடர்கின்றன. ஆனால், அண்மைய தரவுகளின்படி உயர்தரப் பரீட்சைக்கு முகங்கொடுக்கும் கிட்டத்தட்ட 280,000 பரீட்சார்த்திகளில், வெறுமனே கிட்டத்தட்ட 180,000 பரீட்சார்த்திகளே பல்கலைக்கழகம் செல்லும் தகுதியைப் பெறுகிறார்கள். ஆனால், இதில் ஏறத்தாழ 30,000 பேர் மட்டுமே பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக்கொள்கிறார்கள். பல்கலைக்கழகம் செல்லும் தகுதி பெற்றவர்களில் 16.6% ஆனவர்களுக்கு மட்டுமே, அரச பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்கிறது. அரச பல்கலைக்கழகம் செல்லும் 30,000 பேரைத் தவிர்த்த ஏனையவர்கள் பட்டப்படிப்பைப் பெற்றுக்கொள்ள, மாற்று வழிகளை நாட வேண்டியதாக உள்ளது. இத்தனை கடும் போட்டிப் பரீட்சைகளில் மிகத்திறமையானவர்களை உள்ளீர்ப்பதாக அமையும் அரச பல்கலைக்கழகங்கள், உண்மையில் அவர்களது திறன்களை மேம்படுத்தி, தரமானவர்களை உருவாக்குகின்றனவா என்ற கேள்வி எழுகிறது. பல்கலைக்கழக அனுமதிக்கான போட்டி என்பது, குறிப்பாக உலகின் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான அனுமதி தொடர்பிலான போட்டி என்பது, மிக அதிகமானது. ஆனால், அந்தப் போட்டியை அந்தப் பல்கலைக்கழகத்தின் ஊடாக உருவாக்கப்படும் மாணவர்களின் தரம் நியாயப்படுத்துவதாக அமைகிறது. உதாரணத்துக்கு, சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழகத்தை எடுத்துக்கொண்டால், அதற்கு அனுமதி பெற அதியுயர் புள்ளிகள் அவசியமாகிறது. ஆனால், அதன் மூலம் அது உள்ளீர்க்கும் திறமைகளை, அது அதிகமாக வளர்த்தெடுப்பதன் விளைவாக, உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் 11ஆவது இடத்தில் இருக்கிறது. ஆனால், இலங்கைப் பல்கலைக்கழகங்களின் நிலை இதுவல்ல. இது, பல கேள்விகளை எழுப்புகிறது. முதலாவது, இலங்கையின் மிகச் சிறந்த அறிவுத்திறமையை தன்னுள் ஈர்த்துக்கொள்ளும் இலங்கைப் பல்கலைக்கழகங்கள் ஏன் சர்வதேச ரீதியில் சோபிப்பதில்லை? இரண்டாவதாக, உண்மையில் உயர்தரப்பரீட்சை என்பது சிறந்த வடிகட்டல் முறைதானா? முதலாவது கேள்விக்கான பதில் நீண்டது. ஏனெனில், இலங்கைப் பல்கலைக்கழகங்கள் எதிர்நோக்கும் சவால்கள் கொஞ்சநஞ்சமல்ல!பல்கலைக்கழகங்களுக்கான நிதியொதுக்கீடு முதல் பல்கலைக்கழகங்களின் நிர்வாகம், ஆட்சேர்ப்பு, பல்கலைக்கழக ஆசிரியர்கள், கற்றல்-கற்பித்தல் முறை, ஆராய்ச்சி, பரீட்சை முறை, வளங்கள் என எல்லா இடங்களிலும் எக்கச்சக்க சிக்கல்கள் இருக்கின்றன. இன்றும் ‘சீனியர்’களின் குறிப்புகளை அச்சுப்பிரதியெடுத்து, பரீட்சை எழுதுவதே பல்கலைக்கழகத்தின் கலாசாரமாக இருக்கிறது. பல்கலைக்கழகம் செல்லும் ஒரு மாணவன், நான்கு வருடங்களில் ஒருமுறை கூட நூலகத்துக்குச் செல்லாமலேயே, பட்டம் பெற்றுப் பல்கலைக்கழகத்திலிருந்து வௌியேறக் கூடியதாக இருக்குமானால், அந்தக் கல்வி முறையில் பெருங்குறை இருக்கிறது. ஆனால், இது இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்குப் புதியதொன்றல்ல என்பது இலங்கைப் பல்கலைக்கழகங்களைப் பற்றித் தெரிந்த அனைவரும் அறிந்ததே. ஆகவே, இங்கு அடிப்படைப் பிரச்சினை, பல்கலைக்கழகம் என்பது, அறிவை விருத்தி செய்யும் வளாகமாக இல்லாது, பட்டம் வழங்கும் நிறுவனமாக மாறியுள்ளதாகும்; பல்கலைக்கழகம் ஆராய்ச்சிக்கூடமாக இல்லாது, அங்கிகாரம் வழங்கும் நிலையமாகச் சுருங்கியுள்ளது. இது கல்வியின் நோக்கத்தைச் சுருக்கி உள்ளதுடன், மனித வாழ்வின் கணிசமாக காலத்தை வீணடிப்பதாக மாறுகிறது. இன்று மேலைத்தேய நாடுகளில் கூட, குறிப்பாக அமெரிக்காவில், பல்கலைக்கழகக் கல்வி தேவைதானா? அங்கு செலவழிக்கும் பணத்துக்கு உரிய பயன் கிடைக்கிறதா என்ற கேள்விகள் பரவலாக எழுப்பப்படுகின்றன. தொழில்நுட்ப நிறுவனங்கள், தற்போது பல்கலைக்கழக பட்டங்களை ஆட்சேர்ப்புக்கான அடிப்படையாகக் கொள்வதைக் கைவிட்டு வரும் போக்கையும் அபிவிருத்தியடைந்த நாடுகளில் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. இந்த இடத்தில்தான், கல்வி மறுசீரமைப்புப் பற்றி நாம் மிகக்கூர்மையாகச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. இங்கு, கல்வி மறுசீரமைப்பு என்பது, நிறுவனம்சார் மாற்றங்கள் மட்டுமல்ல, கல்வி பற்றிய எமது சிந்தனைசார் மாற்றங்களும் தான் உள்ளடங்கி இருக்கின்றன. எமது பாடசாலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி ஆகிய முறைமைகள் பற்றி, நிறையக் கேள்விகள் எழுகின்றன. அவற்றை நாம், மீள்பரிசீலனை செய்ய வேண்டிய காலம் உருவாகியிருக்கிறது. (அடுத்த திங்கட்கிழமை தொடரும்) http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பரீட்சைகளையும்-பட்டங்களையும்-கடந்த-கல்வி-மறுசீரமைப்பு/91-268970
  24. அரசியலில் வெகுஜனங்களும் புலமைத்தளமும் -என்.கே. அஷோக்பரன் பிரபல எழுத்தாளரான ஐசக் அசிமொவ், அமெரிக்க ஜனநாயகம் அடைந்து வரும் மாற்றத்தை அவதானித்து, “புலமைத்துவ எதிர்ப்பு என்பது, நமது அரசியல், கலாசாரம் ஆகியவற்றுடன் தொடர்புடைய வாழ்க்கையில், ஒரு நிலையான அம்சமாக இருந்து வருகிறது. ‘எனது அறியாமையும் உங்கள் அறிவும் ஒன்று’ என்ற தவறான கருத்தியலால், ஜனநாயகம் தவறான வழியில் வளர்க்கப்படுகிறது”என்று கருத்துரைத்திருந்தார். ‘மக்கள் மயப்படுத்துகிறோம்; மக்களிடம் கொண்டு செல்கிறோம்’ என்ற போர்வையில், புலமைத்தளத்தின் பங்களிப்பை நிராகரித்து விட்டு, ஜனநாயகத்தை கொண்டு நடத்துவதானது, தோல்வியிலேயே முடியும். வீதியில் இறங்குவதும், கூச்சல் கூப்பாடு போடுவதும், அதன் மூலம் அரசியல் சாதனைகளைப் புரிந்துவிட முடியும் என்பதை, பெரும் வெற்றிச் சூத்திரமாக முன்னிறுத்துவது, சமகால அரசியலில் ஏற்பட்டுள்ள அறிவின், புலமையின் வரட்சியைத்தான் எடுத்துக்காட்டி நிற்கிறது. சின்னச் சின்ன சந்தோசங்களும் கிளுகிளுப்புகளுமே அரசியல் வெற்றிகளாக வரையறுக்கப்படுவது, இன்றைய அரசியல் சூழலில் ஏற்பட்டுள்ள பின்னடைவாகத்தான் எடுத்துக்கொள்ள முடிணுயும். இந்த இடத்தில், ஒரு முக்கிய இடையீடு அவசியமாகிறது. சமூக ஊடக வளர்ச்சியின் விளைவாக, அரசியல் பற்றிய பேச்சு என்பது, இன்று அதிகமாகவே நிகழ்கிறது என்கிற கருத்து பொதுவில் நம்பப்படுகிறது. ஆனால், இது காலங்காலமாகத் தேநீர்க்கடைகளிலும் வீட்டுத்திண்ணைகளிலும் அலுவலக உணவறைகளிலும் இடம்பெற்ற அரசியல் பேச்சுகளின் தொடர்ச்சிதான். ஜனநாயகத்தின் உயிர்ப்புக்கு இது அவசியமானது. ஆனால், ஜனநாயகத்தின் நிலைப்புக்கும் அரசியல் வளர்ச்சிக்கும், இந்தச் சாதாரண கதையாடல்களைத் தாண்டிய சிந்தனை வளர்ச்சியும் கருத்தியல் வளர்ச்சியும் அவசியம். அது, புலமைத்தளத்தில் நிகழ்கிற விடயம். புலமைத்தளத்துக்கும் வெகுஜனங்களுக்கும் இடையேயான இடைவௌியென்பது, வரலாற்றில் எப்போதுமே இருந்து கொண்டிருக்கிற ஒரு விடயம்தான். வரலாற்றில் இந்த இடைவௌி, சமூக, பொருளாதாரக் காரணங்களால் திணிக்கப்பட்டதொன்றாக இருந்தது. ஆனால், கடந்த தசாப்தங்களில் இந்த நிலை மாறியுள்ளது. புலமைத்தளத்தையும் வெகுஜனங்களையும் இணைப்பதில் தொழில்நுட்பத்தின் பங்கு முதன்மையானது. இந்த அரிய வாய்ப்பு, புலமைத்தள விஸ்தீரணத்துக்கும் புலமைத்தளத்தின் வெகுஜனமயமாக்கலுக்கும் வழிவகுத்திருக்க வேண்டும். ஆனால், சமகால நிலையை அவதானிக்கும் போது, நிலைமை அவ்வாறின்றி வேறுவகையான மாற்றத்தை அடைந்திருக்கிறது. இன்று, இருவகையான நிலைகள் உருவாகி இருப்பதாக உணரக்கூடியதாக உள்ளது. முதலாவது, புலமை நிராகரிப்பு. வெகுஜன அரசியலுக்குப் புலமைத்தளம் அவசியமில்லை; வெகுஜன அரசியலிலிருந்து புலமைத்தளம் அந்நியமானது என்ற நம்பிக்கை வெகுவாக விதைக்கப்படுகிறது. புலமைத்தளத்தின் எல்லாக்கருத்துகளும் வெகுஜனங்களால் இலகுவில் கிரகிக்கப்படவும் புரிந்துகொள்ளவும் முடியாதுள்ளமையானது, புலமைத்தளத்துக்கும் வெகுஜனங்களுக்கும் இடையேயான இடைவௌியொன்றை ஏற்படுத்திவிடுகிறது. இந்த இடைவௌிதான், புலமைத்தள நிராகரிப்பின் ஊற்றாக மாறிவிடுகிறது. இரண்டாவது, போலிப் புலமைத்தளமொன்றின் உருவாக்கம். புலமைத்தளத்துக்கும் வெகுஜனங்களுக்குமான இடைவௌிதான், இந்தப் போலிப் புலமையின் மூலதனம்.அந்த இடைவெளியை தமக்குச் சாதகமாக்கிக்கொண்டு, வெகுஜன சிந்தனைகளுக்கு, அதன் விளைவுகளைப் பற்றிய ஆராய்ச்சியெல்லாம் இல்லாமல், வெறுமனே கைத்தாளம் போடும் இந்த போலிப் புலமை, தம்மை, குறித்த வெகுஜனக் கூட்டத்தின் புலமையாளர்களாக முன்னிறுத்துகிறது. இந்தப் போலிப் புலமைதான், உண்மையான புலமைத்தளத்தை, வெகுஜனங்களிடமிருந்து விலத்தி வைக்கும் கைங்கரியத்தையும் தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. இந்தப் போலிப் புலமைதான், புலமையாளர்களை வெகுஜனங்களிலிருந்து நீக்கம் செய்வதற்கான பிரசாரங்களை, மிகத் தீவிரமாக முன்னெடுப்பதோடு, புலமைத்தளம் வெகுஜன அபிப்பிராயங்களோடு முரண்படும் பொழுதுகளில், வெகுஜனங்களின் கருத்துகளுக்குக் கைத்தாளமிட்டு, புலமைத்தளத்துக்கும் வெகுஜனங்களுக்கும் இடையிலான முரண்பாட்டு நிலையை தமக்குச் சாதகமாக்கிக் கொள்கிறார்கள். புலமை நிராகரிப்பு, போலிப் புலமையாளர்களின் எழுச்சி என்ற இரண்டு நிலைகளிலும் சிக்கிக்கொண்டுள்ள ஒரு வெகுஜனக்கூட்டத்தின் அரசியல் பயணம், அதளபாதாளத்தை நோக்கியதாகவே அமையும். இந்த இடத்தில், மேற்கூறியதொரு துர்ப்பாக்கிய நிலை ஏற்படுவதில், புலமைத்தளத்தின் தவறு ஒன்றுகூட இல்லை என்றும் கூறிவிட முடியாது. புலமைத்தளத்துக்கும் வெகுஜனங்களுக்குமான இடைவௌியை, புலமைத்தளம் அறிந்தும், உணர்ந்தும் இருக்கிறது. ஆனால், அந்த இடைவௌியை இணைப்பதற்கான காரியங்களை முன்னெடுப்பதில், புலமைத்தளம் மெத்தனமாக இருக்கிறது. அதன் விளைவுதான் போலிப் புலமை அந்த இடத்தை நிரப்பிக்கொள்ள வழிவகுத்திருக்கிறது. ஆகவே, வெகுஜனம், புலமைத்தளத்தோடு தொடர்பை ஏற்படுத்துவதிலும், புலமைத்தளம் தன்னை வெகுஜனத்தோடு இணைத்துக்கொள்ள முயற்சிப்பதுதான், சாத்தியமான முன்னகர்வாக இருக்கும். அதைப் புலமைத்தளம் செய்யாது விடின், அது, புலமைத்தளத்தின் தோல்வியாகவே அமையும். கொம்யூனிசச் சிந்தனை என்பது, புலமைத்தளத்தில் பிறந்தது. அதை வெகுஜன இயக்கமாக மாற்றியது, அந்தப் புலமையாளர்களின் வெற்றி. ஆகவே புலமைத்தளத்தையும் வெகுஜனத்தையும் இணைக்கவே முடியாது என்ற கருத்தில் உண்மையில்லை.ஆனால், இதைச் சாத்தியப்படுத்துவதில், வெகுஜனத்தின் பங்கைவிட, புலமைத்தளத்தின் பங்கே முதன்மையானதும் முக்கியமானதுமாகும். அதுபோலவே, இதைச் சாத்தியப்படுத்த முடியாதிருப்பதற்கும் புலமைத்தளமே முக்கிய காரணமாகவும் அமைகிறது. புலமையாளர்கள் தமக்கென ஒரு வட்டத்தை வைத்துக்கொண்டு, அந்தக் ‘குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டிக் கொண்டிருப்பதால்’ எந்த விளைபயனும் ஏற்படப்போவதில்லை. அரசியல் புலமை என்பது, வெகுஜனங்களில் இருந்து அந்நியப்பட்டிருப்பதால், எதையும் சாதிக்கப் போவதில்லை என்பதை விட, அது அரசியல் புலமையின் மிகப் பெரிய தோல்வியாகும். தன்னை வெகுஜனத்திடம் கொண்டு போய்ச் சேர்ப்பதும், அரசியல் புலமைத்தளத்தின் முக்கிய நோக்கமாக அமையவேண்டும். மறுபுறத்தில், வெகுஜனத்துக்கு இடையேயும் சில சிந்தனை மாற்றங்கள் அவசியமாகிறது. 20ஆம் நூற்றாண்டின் முக்கிய அறிஞர்களில் ஒருவரான பேட்ரண்ட் ரஸல்,‘மாறும் உலகத்துக்கான புதிய நம்பிக்கைகள்’ என்ற தனது நூலில் “ஒரு புத்திசாலித்தனமான மனிதனை விட, ஒரு முட்டாள் மனிதன் நேர்மையாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று, நம் ஜனநாயகங்கள் இன்னும் நினைக்கின்றன. ஆகவே, இயற்கை தம்மை உருவாக்கியதை விட, முட்டாள்தனமாக நடித்து, நமது அரசியல்வாதிகள் ஜனநாயகம் கொண்டுள்ள இந்தத் தப்பெண்ணத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்’ என்று குறிப்பிடுகிறார். வெகுஜனங்களுக்குப் புலமைத்தளம் சிலவேளைகளில் அந்நியமானதாகக் கூடத் தோன்றும். ஆனால், அது உண்மையல்ல என்ற யதார்த்தத்தை, உணர வேண்டும். அறிவு என்பதுதான், மனிதக் கூட்டம் சேர்த்து வைத்துள்ள பெரும் செல்வம். அதைக் கண்டு அஞ்சாது, அதைச் சுவீகரிக்கும் மனநிலையை, நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதிலிருந்து விலகி இருப்பதானது, பெருஞ்செல்வத்தை நீங்கியிருப்பதற்கு ஒப்பானது. மேலும், போலிப் புலமையாளர்கள் பற்றிய விழிப்புணர்வையும் வெகுஜனங்கள் கொண்டிருப்பது மிக அத்தியாவசியமாகிறது. புலமைத்தளத்துக்கும் வெகுஜனத்துக்குமான இடைவௌி என்பது, பாதகமானது என்றால், அந்த இடைவௌியைப் போலிப் புலமை கைப்பற்றி, நிரப்பிக்கொள்வது மிக மிக ஆபத்தானது. போலிப் புலமை, வெகுஜனங்களைக் கவர்வதையே நோக்கமாகக் கொண்டு செயற்படும். இதற்காக, வெகுஜன ஈர்ப்பு மிகுந்த விடயங்களை, அது மீள உரைக்கும்.வெகுஜனத்திடையே ஒரு விடயம் பிரபல்யமாக இருக்கும் போது, அதைப் பாராட்டிப் புழுகித்தள்ளும்; வெகுஜன நாடித்துடிப்பின் தாளத்துக்கு அது நர்த்தனமாடும். ஆகவே, வெகுஜனத்துக்கு அதைப் புரிந்துகொள்வதும், அதோடு இணங்கி இயைவதும் இலகுவானதாக இருக்கும். வெகுஜனங்களின் ஏற்பும் அங்கிகரிப்பும்தான், போலிப் புலமையின் ஒரே நோக்கம்; அதற்கேற்றாற் போலவேதான், அது தன்னை வடிவமைத்துக் கொள்கிறது. போலிப் புலமைக்கு, நேர்மை என்பது கிடையாது. அதற்குத் தனது சுயநலத்தைத் தாண்டிய நோக்கமும் கிடையாது. ஆனால், அது கவர்ச்சியானது. சொல்வதைக் கேட்கும், அழகான நாய்க்குட்டியைப் போல, அது வெகுஜனங்களின் செல்லப்பிராணியாகவே, தன்னை உருவாக்கிக்கொள்ளும். ஆனால், அதனால் ஒருபோதும் வெகுஜனங்களுக்கு வழிகாட்டியாக இருக்க முடியாது. ஏனென்றால், அது வெகுஜனங்கள் காட்டும் வழியில் பயணிக்கக் கற்றுக்கொண்டுள்ளது. அதுதான் அதன் தன்மை. வெகுஜனங்கள் எந்தப் பாதையில் போகிறதோ, அதையே சரியான பாதையாக அது முன்னிறுத்தும். அதற்குத் தேவை, வெகுஜனங்களின் அங்கிகாரம் மட்டும்தான். அதைத் தாண்டிச் சிந்திக்கும் இயலுமை கூட, அதற்கு இருக்குமோ தெரியாது. இது பற்றி வெகுஜனங்கள் எச்சரிக்கை கொள்வது அவசியம். உண்மையான புலமைத்தளமானது, வெகுஜனத்தின் அங்கிகாரத்தை வேண்டி நிற்காது. அது, புலமையின் தன்மையல்ல; அப்படி இருந்தால் அது புலமையும் அல்ல. இதையும் வெகுஜனம் புரிந்துகொள்ளுதல் அவசியம். ஜனநாயக அரசியல் என்பது, மிகச் சிக்கலானது. இதில் புலமைத்தளம் மிக முக்கியமானதொன்று. புலமைத்தளத்துக்கும் வெகுஜனங்களுக்குமான பாலத்தைக் கட்டியமைப்பது, இந்த இரண்டு தரப்பினதும் கடமை. அது சரிவரச் செய்யாவிட்டால், அது அனைவருக்கும் பேரிழப்பாகவே அமையும். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அரசியலில்-வெகுஜனங்களும்-புலமைத்தளமும்/91-266411
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.