Jump to content

Search the Community

Showing results for tags 'என்.கே. அஷோக்பரன்'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • வலைப்போக்கன் கிருபன்'s செயற்கை நுண்ணறிவு உருவாக்கி
  • Ahal Media Network's Topics

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's சிறப்பு ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணக்கட்டுகள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's திரட்டுகள்
  • Home Appliances Spot's Home Appliances

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

  1. நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் என்.கே. அஷோக்பரன் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா திடீரென்று தனது பதவியை இராஜினாமச் செய்தது இலங்கையில் நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பான கேள்விகள் மீண்டும் எழுப்பப்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது. 23.09.2023 திகதியிடப்பட்ட, நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளருக்கு முகவரியிடப்பட்ட தனது பதவிவிலகல் கடிதத்தில், நீதிபதி சரவணராஜா, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாலும், அதிக அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாலும் தனது பதவியை இராஜினாமாச் செய்வதாகவும், குறிப்பிட்டிருக்கிறார்.நீதிபதி சரவணராஜாவின் திடீர் பதவிவிலகலின் முன்னர், அவர் குருந்தூர்மலை வழக்கை விசாரித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கானது தேசியளவில் பேசப்பட்ட வழக்காக மாறியிருக்கிறது, அல்லது மாற்றப்பட்டிருக்கிறது எனலாம். குருந்தூர்மலை விவகாரம் சி்க்கலானதொன்று. அது தனித்து ஆராயப்பட வேண்டியதொன்று. குருந்தூர்மலை (சிங்களத்தில் குருந்தி) விவகாரம் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் மற்றும் மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜாவால் விசாரிக்கப்பட்டு வந்தது. இனவாத அரசியல் மேவி நின்ற இந்த வழக்கில், நீதிபதி ரீ.சரவணராஜா மீது அரசியல் ரீதியிலான விமர்சனங்கள், குறிப்பாக தென்னிலங்கையின் பேரினவாத அரசியல்வாதிகளினால் முன்வைக்கப்பட்டமை கவலைக்குரியது. நீதிமன்ற அவமதிப்பிலிருந்து தப்பிக்க தனது பாராளுமன்ற வரப்பிரசாதத்தைப் பயன்படுத்தி, நீதிபதி ரீ.சரவணராஜா மீதான கடுமையான விமர்சனத்தை பேரினவாதியான முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தார் . ஜூலை 9ம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய சரத் வீரசேகர, “குருந்தூர்மலையிலிருந்து (யாழ்ப்பாணத்தில்) எங்களை வெளியேற்றிய முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது. தொல்லியல் ஆய்வு செய்ய அவருக்கு அதிகாரம் இல்லை. இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை நீதிபதி புரிந்து கொள்ள வேண்டும்” என்று பேசியிருந்தார். இந்தப் பேச்சை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வன்மையாகக் கண்டித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, ஜூலை 14ம் திகதி குருந்தூர்மலை ஆதி ஐயனார் கோவிலில் பொங்கலை நிகழ்வு நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், அது திட்டமிட்ட வகையில் அங்கு வந்த பேரினவாதிகளால் குழப்பப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை மீறி, ஒரு தரப்பினரால் குருந்தூர்மலையில் புத்தர் சிலை நிறுவப்பட்டது. தொடாந்து ஓகஸ்ட் 15ம் திகதி, குருந்தூர்மலையை அண்டிய மக்கள் ஆதி ஐயனார் கோவிலில் பொங்கல் வழிபாடு செய்வதற்கு தடை கோரி பொலிஸார் தாக்கல் செய்த மனுவை, நீதிமன்றம் நிராகரித்திருந்தது. தற்போதுள்ள தொல்லியல் சின்னங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பொங்கல் வைத்து வழிபாடு நடத்த அப்பகுதி மக்களுக்கு உரிமை உண்டு என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஓகஸ்ட் 18 நடந்த பொங்கல் வழிபாட்டைக் குழப்பும் முயற்சிகள் இடம்பெற்றிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து, ஓகஸ்ட் 20 அளவில், முல்லைத்தீவு நீதவான் ரீ.சரவணராஜாவுக்கு எதிராக இலங்கை நீதிச்சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று செய்யப்பட்டது. பேரினவாத பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான ஜாதிக நிதஹஸ் பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜயந்த சமரவீர, “ஓகஸ்ட் 18ஆம் திகதி குருந்தூர்மலையில் இந்து சமய வழிபாடுகள் இட்பெற்றுள்ளன. முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி சரவணராஜா ஒருதலைப்பட்சமாகவும் பொறுப்பற்றவராகவும் செயற்படுகின்றார். மறுபுறம், தொல்பொருள் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களை அவர் கவனிக்கவில்லை” என்று தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது. இந்த நிலையில் ஓகஸ்ட் 22ல், பேரினவாதி சரத் வீரசேகர, மீண்டும் தனது பாராளுமன்ற வரப்பிரசாதத்திற்குள் ஒளிந்தகொண்டு, நீதிபதி சரவணராஜா மீது பாராதூரமான தாக்குதலை தனது பாராளுமன்ற பேச்சில் நடத்தினார். “முல்லைத்தீவு நீதவான் மனநலம் குன்றியவர். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். நீதி அமைச்சும் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவும் இதனை ஆராய்ந்து வேறு ஒருவரை நீதிபதியாக நியமிக்க வேண்டும்” என்று பகிரங்கமாகவே பாராளுமன்றத்தில் ஒரு நீதிபதியை சரத் வீரசேகர மிக மோசமான முறையில் விமர்சித்தார். இந்தப் பின்னணியில்தான் நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகலை நாம் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. நீதிபதி சரவணராஜாவின் பதவிவிலகலைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் சில ஊடகவியலாளர்களின் பதவிவுகளில், நீதிபதி சரவணராஜா பதவிவிலகிவிட்டு நாட்டைவிட்டு வௌியேறிவிட்டதாகவும், சரத் வீரசேகர உள்ளிட்ட பெரும்பான்மையினத்தவரால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும், தனக்கான பொலிஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டதாகவும், புலனாய்வுத்துறை தன்னை கண்காணிப்பது தொடர்வதாகவும், சட்டமா அதிபர் தன்னை சட்டமா அதிபரின் அலுவலகத்திற்கு 21.09.2023 அன்று வருமாறு அழைப்புவிடுத்து, அந்த சந்திப்பின் போது, குருந்தூர்மலை வழக்கில் தனது ஆணைகளை மாற்றியமைக்க அழுத்தம் தந்ததாகவும், தனக்கெதிராக இரண்டு வழக்குகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டிருப்பதாகவும் ஊடகங்களுக்கு தெரிவித்ததாக குறிப்பிடுகிறார்கள். நீதிபதி சரவணராஜாவிடமிருந்த உத்தியோகபூர்வமாக இந்த விடயங்கள் அறிவிக்கப்படாதவரை, இந்த சமூக ஊடகவியலாளர்களின் பதிவுகள் ஐயத்துடனேயே அணுகப்பட வேண்டியவையாகின்றன. நீதிமன்றையும், நீதிபதிகளையும் தனது பாராளுமன்ற வரப்பிரசாதத்திற்குள் ஒளிந்துக்கொண்டு தாக்கும் சரத் வீரசேகரவின் ஈனச்செயலை ஆளும் அரசாங்கம் கண்டித்திருக்க வேண்டும். சபாநாயகர் அதனைத் தடுத்திருக்க வேண்டும். அவரது பதவிவிலகலுக்கான கோரிக்ககைள் எழுப்பப்பட்டிருக்க வேண்டும். இதெல்லாம் நடக்குமளவிற்கு அரசியல் நாகரீகமடைந்த நாடாக இலங்கை இன்னும் வளரவில்லை. பேரினாவதமும், காட்டுமிராண்டித்தனமும் நிறைந்த நாடாகத்தான் இலங்கை இருக்கிறது என்பதற்கு, சரத் வீரசேகர போன்ற அப்பட்டமான பேரினவாதி, தலைநகரில் அதிகூடிய விருப்பு வாக்குகள் பெற்று பாராளுமன்றத்திற்கு சென்றமையே பெரும் எடுத்துக்காட்டு. கொழும்பு என்பது பெரும்பாலும் நாகரீகமடைந்த, தாராளவாத தன்மைகள் நிறைந்த இடம் என்ற மாயத்தோற்றம் பலருக்கும் இருக்கலாம். அது அப்படியில்லை என்பதற்கு பெரும் எடுத்துக்காட்டுக்கள் இந்நாட்டின் மிகப்பெரிய பேரினவாதிகளான சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் எல்லாம் கொழும்பையே பிரதிநிதித்துவம் செய்கிறார்கள்! ஒரு நீதிபதி பேரினவாதத்திற்குப் பயந்து பதவியைத் துறந்துவிட்டு நாட்டைவிட்டு ஓட வேண்டுமென்றால், இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா? அல்லது பேரினவாதிகளின் காட்டாட்சி நடக்கிறதா? என்ற கேள்வி எழுவது நியாயமானதே. நிற்க. மறுபுறத்தில், மேற்சொன்ன சமூக ஊடகவியலாளர்களின் பதிவு உண்மையென்றால். அதில் சில சிக்கலான கேள்விகள் எழுகின்றன. ஒரு நீதிபதி, ஏன் சட்டமா அதிபரை சென்று சட்டமா அதிபரின் அலுவலகத்தில் சந்திக்க வேண்டும்? சரி, தனக்கெதிரான வழக்கில் தன் சார்பாக சட்டமா அதிபர் வழக்காடுகிறார் என்பதன் நிமித்தம் சந்திக்கச் சென்றிருந்தால், அதைத்தாண்டி தான் விசாரிக்கும் வழக்குகளைப் பற்றி பேசுவதைத் தவிர்த்திருக்கலாமே? சட்டமா அதிபரே அதைப்பற்றி பேச முயன்றிருந்தாலும், இல்லை நான் விசாரித்துக்கொண்டிருக்கும் வழக்குகள் பற்றி பேசுவது முறையல்ல என்ற தவிர்த்திருக்க வேண்டும். சட்டமா அதிபர் அச்சுறுத்தல் விடுத்திருந்தால், அதைப்பற்றி நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கும், உயர்நீதிமன்றத்திற்கும் அறிவித்திருக்க வேண்டும். உயிர் அச்சுறுத்தல் இருந்தால், அது பற்றி பொலிஸிற்கும், நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கும், உயர்நீதிமன்றத்திற்கும் முறைப்பாடு செய்திருக்க வேண்டும். இதுதானே நடைமுறை? நீதிபதி சரவணராஜா இதைக்கூட ஏன் செய்யவில்லை என்ற கேள்வி நிச்சயம் பலராலும் எழுப்பப்படும். இவற்றையெல்லாம் செய்யாமல், அவர் பதவி விலகிவிட்டு நாட்டை விட்டு வௌியேறியது உண்மையென்றால், வௌிநாட்டில் தஞ்சம் கோருவதற்காகத்தான் அவர் இதனைச் செய்தார் என்ற பிரச்சாரத்தை அவர் எதிர்கொள்ள வேண்டிவருவது தவிர்க்க முடியாததாகும். இது துரதிஷ்டவசமானது. இலங்கை அதன் வரலாற்றில் ஒரு முக்கியமான சந்தியில் நிற்கிறது. நாட்டின் கடந்த காலம் இன மற்றும் மத பதட்டங்களால் சிதைக்கப்பட்டது. பெரும்பான்மையினர் சிறுபான்மை சமூகங்களின் மீது அதிகாரத்தையும் செல்வாக்கையும் செலுத்தி, தமது நலன்களை முன்னிறுத்துகின்றனர். இந்த ஏற்றத்தாழ்வானது, பாகுபாடு, ஓரங்கட்டப்படுதல் மற்றும் வன்முறையின் சுழற்சிக்கு வழிவகுத்தது. சமூக நல்லிணக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை தொடர்ந்து தடுத்து வருகிறது. உண்மையிலேயே முன்னேற்றம் அடையவும், செழிப்பைத் தழுவவும், பெரும்பான்மையின மேலாதிக்கம் என்பது இல்லாது அமைய வேண்டும். ஒரு நாட்டின் பலம் அதன் பன்முகத்தன்மையில் உள்ளது, இலங்கையும் இதற்கு விதிவிலக்கல்ல. அனைத்து இன மற்றும் மத குழுக்களுக்கும் சம உரிமைகள், வாய்ப்புகள் மற்றும் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதன் மூலம், இலங்கை தனது மக்களின் கூட்டு ஆற்றலைப் பயன்படுத்தி, புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலையான வளர்ச்சியை வளர்க்க முடியும். உள்ளடக்கம் மற்றும் ஒற்றுமையைத் தழுவுவது கடந்த காலத்தின் காயங்களை ஆற்றுவது மட்டுமல்லாமல், பிரகாசமான மற்றும் மிகவும் இணக்கமான எதிர்காலத்திற்கு வழி வகுக்கும். அதைவிடுத்து வேதாளம் மீண்டும் முருங்கைமரம் ஏறினால், இலங்கைக்கு முக்தியில்லை. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நீதிபதி-சரவணராஜாவின்-பதவி-விலகல்/91-325352
  2. தெற்காசியா தொடர்பிலான பெரியண்ணனின் கொள்கை மாறியிருக்கிறதா? என்.கே.அஷோக்பரன் கனடாவும், இந்தியாவும் மிகப்பெரிய இராஜதந்திர முறுகல் நிலையை சந்தித்து நிற்கும் காலப்பகுதியிது. பதினைந்து வருடங்கள் முன்பு கூட இதுபோன்றதொரு நிலை ஏற்பட்டிருக்காது. ஏனென்றால், உலகளவில் இந்தியா தனது பலத்தை இதற்கு முன்னர், இத்தனை தூரம் வௌிக்காட்டியதில்லை. தனக்குக் கிடைக்கவிருந்த ஐ.நா. பாதுகாப்புச் சபை ஆசனத்தையே, சீனாவுக்கு வழங்காததை தாம் பெறுவது கூடாது என்று ஏற்காது விட்ட நேருவிய இந்தியா இப்போது இல்லை. வறிய நாடு, பிச்சைக்கார நாடு என்று மேற்குலகமானது தனது ஆதிக்கப்பார்வையின் காரணமாக, ஆபிரிக்காவுக்கு அடுத்து மோசமாகப் பார்த்த இந்தியா இன்று இல்லை. இன்று இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம்! ஒரு வல்லாதிக்க கட்சியின் சர்வாதிகார ஆட்சியில் சீனா பெரும் பொருளாதார வளர்ச்சியை சந்தித்தது. ஆனால் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக, பகுதியளவு சமஷ்டி ஆட்சியைக் கொண்ட நாடாக இருந்துகொண்டு, தனக்குள் பலநூறு பிரிவினைகளைத் தாங்கியபடி இந்தியா அடைந்த வளர்ச்சி அபாரமானது. 1991-ன் பின்னர் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதாரக் கொள்கை மாற்றம் தான் இதற்கெல்லாம் அடித்தளம். அந்த அடித்தளத்தைப் போட்டவர்கள் அன்றைய பிரதமர் நரசிம்ஹ ராவும், அன்றைய நிதியமைச்சர் கலாநிதி மன்மோஹன் சிங்கும். அந்த அடித்தளத்திலிருந்து வேர்விட்டு வளர்ந்த இந்தியா கிட்டத்தட்ட 30 ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சி அபாரமானது. இன்று மேற்குலகினால் தொல்லைக்குட்படுத்தப்பட முடியாத ஒரு சக்தியாக இந்தியா உயர்ந்திருக்கிறது. இன்றைய கனடா-இந்திய இராஜதந்திர முறுகல் நிலையில் இந்தியாவின் பலம் வௌிப்பட்டு நிற்கிறது. கனடாவின் உற்ற தோழர்களான அமெரிக்கா, பிரித்தானியா, மற்றும் அவுஸ்திரேலியா கூட இன்றுவரை கனடாவுக்கு முழு ஆதரவாக நிற்கவில்லை. அவை கனடா-இந்திய இராஜதந்திர முறுகல் நிலை தொடர்பில் மழுப்பல் நிலையைத்தான் இன்றுவரை கடைப்பிடிக்கின்றன. இதற்குக் காரணம் இன்று இந்தியா அடைந்திருக்கும் பலம் வாய்ந்த நிலை. இந்தியாவின் இன்றைய பலம் வாய்ந்த நிலை தெற்காசியாவில் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அவதானிப்பது எமக்கு அவசியமானதொன்றாக இருக்கிறது. தெற்காசியாவைப் பொறுத்தவரையில் இந்தியாவிற்கு நிகரான பொருளாதாரப் பலம் நிறைந்த இன்னொரு நாடு தெற்காசியாவில் இல்லை. இந்தியாவிற்கு அடுத்து, தெற்காசியாவின் பெரிய பொருளாதாரம் பங்களாதேஷ். ஆனால் அது இந்தியப் பொருளாதாரத்தின் அளவில் ஏறத்தாழ 13% மட்டுமே! அடுத்த இடத்தில் பாகிஸ்தான் இருக்கிறது. பங்களாதேஷ் பொருளாதாரத்தின் ஏறத்தாழ 20%ம் கொண்ட பொருளாதாரமாக இலங்கை அடுத்த இடத்தில் இருக்கிறது. இலங்கைப் பொருளாதாரத்தின் ஏறத்தாழ 40%ம் கொண்ட பொருாளதாரமாக நேபாளம் அடுத்த இடத்திலும், ஆஃப்கானிஸ்தான், மாலைத்தீவு, மற்றும் பூட்டான் ஆகியன அடுத்தடுத்த இடங்களிலும் இருக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால், இந்தியாவைத் தவிர்ந்த மற்ற 7 தெற்காசியநாடுகளின் பொருளாதாரத்தின் கூட்டளவு என்பது இந்திய பொருளாதாரத்தின் 28% மட்டும்தான்! இந்திய பொருளாதாரம் என்பது மற்ற தெற்காசிய நாடுகள் அனைத்தினதும் பொருளாதாரத்தைவிட மூன்று மடங்கிற்கு மேல் பெரியது! ஆகவே இந்தியா தெற்காசியாவின் பெரியண்ணன் என்பதில் எதுவித மாற்றுக்கருத்துக்களும் இருக்க முடியாது. பெரியண்ணனின் தெற்காசியா தொடர்பான வௌிநாட்டுக்கொள்கை என்று நாம் பார்க்கும்போது, பாகிஸ்தானைத் தவிர்த்துவிட்டுப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் பாகிஸ்தான் எதிரிநாடு. தனது எல்லையை ஒட்டியிருக்கும் இன்னொரு நாடான சீனா போட்டிநாடு. இந்தியாவும், சீனாவும் இன்றைய உலகின் பலமான போட்டியாளர்கள். பாகிஸ்தான் மற்றும் சீனாவைத் தவிர்த்த ஏனைய தெற்காசிய மற்றும் தனது எல்லையை ஒட்டிய சீனா தவிர்ந்த நாடுகள் தொடர்பில் இந்தியாவின் வௌிநாட்டுக் கொள்கையை ஆய்வு செய்யும் போது, இந்திரா கோட்பாடு, அல்லது ராஜிவ் கோட்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. இது பிராந்தியப் பாதுகாப்பு தொடர்பான இந்தியாவின் கொள்கையாக இருந்தது. இது மூன்று முக்கிய அடிப்படைகளைக் கொண்டது. முதலாவது, தெற்காசிய நாடொன்றின் உள்ளக முரண்பாடுகளில் தலையிட, இந்தியாவுக்கு எந்தவோர் எண்ணமும் கிடையாது. அதேவேளை, எந்த நாடும் இன்னொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதை, இந்தியா கடுமையாக எதிர்க்கும். இரண்டாவது, இந்திய நலன்களுக்கு, வெளிப்படையாக அல்லது உள்ளார்ந்த வகையில் எதிராக அமையும் வகையில், வெளிநாடொன்று, தெற்காசிய நாடொன்றின் உள்ளக முரண்பாட்டில் தலையிடுவதை, இந்தியா சகித்துக் கொள்ளாது. ஆகவே, எந்தத் தெற்காசிய நாடும் இந்தியாவுக்கு எதிராக அமையத் தக்கவகையில், வெளிநாடொன்றிடமிருந்து இராணுவ உதவியைப் பெறக் கூடாது. மூன்றாவது, ஒரு தெற்காசிய நாட்டுக்குப் பாரதூரமான உள்ளக முரண்பாட்டை எதிர்கொள்ள அல்லது சட்டரீதியாக ஸ்தாபிக்கப்பட்ட அரசாங்கத்துக்குச் சகிக்கமுடியாத அச்சுறுத்தல் காரணமாக, வெளியக உதவி உண்மையாகவே தேவைப்படுமானால், அது இந்தியா உள்ளிட்ட அருகிலுள்ள நாடுகளிடம் உதவி கோரலாம். அத்தகைய சூழலில், இந்தியாவைத் தவிர்த்தலானது, குறித்த அரசாங்கத்தின் இந்திய எதிர்ப்பு நடவடிக்கையாகவே பார்க்கப்படும். இந்திரா, ராஜிவ் காலத்து இந்தியா அல்ல இப்போது இருக்கும் இந்தியா. அப்படியானால், இந்தியாவின் தற்போதைய பிராந்தியக் கொள்கை மாறியிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. 2008 காலப்பகுதியிலேயே “அயலக முன்னுரிமைக்” கொள்கைக்கான அடிப்படைகள் வௌிப்பட்டிருந்தாலும், பாரதப் பிரதமர் நரேந்திர மோதியின் ஆட்சியில் “அயலக முன்னுரிமை” (“Neighbourhood First”) என்பது முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. “நண்பர்கள் மாறலாம், ஆனால் அயலவர்கள் மாறுவதில்லை, அயலவர்கள் ஒன்றாக வாழ்ந்தாக வேண்டும்” என்று முன்னர் ஒரு முறை அடல் பிஹாரி வாஸ்பாய் சொன்னது இங்கு குறிப்பிடத்தக்கது. பிராந்திய ஒத்துழைப்பு என்பது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அத்தியாவசியமானது, அதுதான் இந்தக் கொள்கையின் அடிப்படையும் கூட. ஆனால் வெறுமனே தனது பாதுகாப்புத் தேவையை அயலவர்கள் மீது திணிப்பதாக அமையாமல், அயலக நாடுகளோடு பரஸ்பர நல்லுறவைக் கட்டியெழுப்பும் அணுகுமுறையை இந்தியா தற்போது முன்னெடுக்கிறது. அது அரசாங்கங்களிடையேயான உறவுகளைத் தாண்டி மக்களிடையேயான இராஜதந்திர உறவு மேம்பாட்டிலும் கணிசமாக அக்கறை செலுத்துகிறது. இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து நின்ற போது, இலங்கைக்கு அவசர உதவி தேவைப்பட்ட நிலையில், ஏறத்தாழ 4 பில்லியன் டொலர்கள் அளவிலான உதவியை அள்ளி வழங்கியது இந்தியா. அதற்கு முன்னர் “கொவிட்-19” பெருந்தொற்றின் போதும், இலங்கை உட்பட்ட பல நாடுகளுக்கும் முதன் முதலில் தடுப்பூசியை வழங்கியது இந்தியாதான். இந்தியாவின் இந்த அணுகுமுறையானது பலத்தை மட்டும் பயன்படுத்திய இராஜதந்திரத்தைவிட, பரஸ்பர நம்பிக்கையையும், தோழமையையும் கட்டியெழுப்பும் இராஜதந்திரப் பாதையை இந்தியா தேர்ந்தெடுத்திருப்பதை உணர்த்தி நிற்கிறது. இந்தியாவின் நீடித்து நிலைத்த பாதுகாப்பிற்கு, நெருக்கமான அயலக உறவு அவசியம் என்பது இந்தியா ஆரம்பத்திலிருந்து உணர்ந்த ஒன்று. ஆனால் அதனை ஏற்படுத்த அரசாங்கங்களிடையேயான பரஸ்பர நம்பிக்கை மட்டும் போதாது, மக்களிடையேயான நம்பிக்கையும், விசுவாசமும், நல்லுறவும் அவசியம். ஆகவேதான் இந்தியா நேரடியாக மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தும் விடயங்களல் முதலிடுகிறது. நிறைய மக்கள் நலத்திட்டங்களுக்கு உதவுகிறது. மக்களுக்கான நேரடி நிகழ்வுகளை நடத்துகிறது. இந்தியா பற்றிய நல்லெண்ணத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது. இந்திரா அல்லது ராஜிவ் கோட்பாட்டின் அடிப்படைகள் மாறவில்லை. அவை மாறவும் முடியாது. அதனால்தான் சீன புலனாய்வுக் கப்பல் இலங்கைக்கு வருவதை இந்தியா கடுமையாக எதிர்க்கிறது. சீனாவோ, ஏனைய பெரும் பலம்வாய்ந்த நாடுகளோ இந்தியாவிற்கு அருகிலுள்ள இலங்கையின் வடக்கில் பெருமளவு முதலீடுகளைச் செய்து, அங்கு காலூன்றுவதைக்கூட இந்தியா விரும்பவில்லை. ஆனால் இந்த பாதுகாப்புக் காரணங்களோடு நின்றுவிடும் வௌியுறவுக் கொள்கையைத்தாண்டிய மக்களிடையே நல்லெண்ணத்தையும், நம்பிக்கையையும் விதைக்கும் அணுகுமுறையை இந்தியா தனது “அயலக முன்னுரிமை-க்” கொள்கையினூடாக முன்னெடுக்கிறது. சுருங்கக் கூறின், இந்திய வௌியுறவுக் கொள்கையின் அடிப்படைகள் மாறவில்லை, ஆனால் அணுகுமுறை மாறியிருக்கிறது. பெரியண்ணன் கொஞ்சம் அன்புகாட்டத் தொடங்கியிருக்கிறார். தனது நலனைக் காக்க கண்டிப்பு மட்டும் போதாது, நிறைய அன்பும் வேண்டும் என்பதை பெரியண்ணன் புரிந்துகொண்டிருக்கிறார். 2023.09.25 https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தெற்காசியா-தொடர்பிலான-பெரியண்ணனின்-கொள்கை-மாறியிருக்கிறதா/91-325092
  3. “நல்ல” அரசியல்வாதிகளை மக்கள் ஏன் தேர்ந்தெடுப்பதில்லை? என்.கே அஷோக்பரன் “என்னது அரசியல்வாதிகளுக்கு வாக்களித்துத் தேர்ந்தெடுப்பதும், தேர்ந்தெடுத்த பின் அவர்கள் சரியில்லை என்று புலம்புவதும் ஒரே ஆட்களா?” என்பது போலத்தான் உலகளவில் ஜனநாயக நாடுகளில் வாழும் கணிசமானளவு மக்களின் நிலை இருக்கிறது. மக்களே தான் தேர்ந்தெடுக்கிறார்கள், தாம் தேர்ந்தெடுத்தவர்கள் பற்றி மக்களே தான் அசூயையும், அதிருப்தியும் கொள்கிறார்கள். மீண்டும் கொஞ்ச நாளில் தாம் வெறுத்த அதே நபர்களைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். நல்லவர்கள், வல்லவர்கள் எல்லாரும் அரசியலுக்கு வருவதில்லை. பலரும் வர விரும்புவதில்லை. அதற்குப் பல காரணங்களுண்டு. அது தனத்து ஆராயப்பட வேண்டிய விடயம். ஆனால், அரசியலில் உள்ளவர்களுள், நல்லவர்களைத் தாண்டி, சுத்துமாத்துப் பேர்வழிகள், ஏமாற்றுக்காரர்கள், அப்பட்டமான ஊழல் பேர்வழிகள், கடைந்தெடுத்த ரௌடிகள், வெற்றுவார்த்தை ஜாலக்காரர்கள், தனிநபர் ஒழுக்கமற்றவர்கள், மக்களுக்காக உண்மையாக நன்மையேதுமே செய்திராதவர்கள், வாய்ச்சொல் வீணர்கள், அடிப்படை அரசியல், சட்ட, பொருளாதார அறிவு கூட இல்லாதவர்கள், வேறு தொழில் செய்வதற்கான தகுதியோ, தராதரமோ, இலாயக்கோ இல்லாதவர்கள், ஓய்வுபெற்ற வயோதிபர்கள், எதுவித உறுதியான கொள்கைகளும் இல்லாதவர்கள், கொள்கை வகுப்பு என்றால் என்ன என்றே தெரியாதவர்கள் என சமூகத்திற்கும், மக்களுக்கும் எதுவித பயனும் தராதவர்களை மக்கள் தமது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுப்பது ஏன்? உண்மையிலேயே மக்கள் இப்படியானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியமே கிடையாது. ஆனாலும் தேர்ந்தெடுக்கிறார்கள். நீங்கள் உங்கள் சேமிப்பையெல்லாம் முதலீடு செய்து ஒரு நிறுவனம் ஆரம்பிக்கிறீர்கள், உங்களதும், உங்கள் குழந்தைகளினதும் எதிர்காலம் இந்த நிறுவனத்தின் வெற்றியில்தான் தங்கியிருக்கிறது. அப்படியான சூழலில், அந்த நிறுவனத்தை நிர்வாகம் செய்ய, நீங்கள் நாட்டையாள வாக்களித்த மேற்சொன்ன அரசியல்வாதிகளில் ஒருவரையேனும் தேர்ந்தெடுப்பீர்களா? இது ஒரு மிக முக்கியமான கேள்வி. இதற்கு உங்கள் பதில் “இல்லை” என்றால், நாட்டை ஆள்வதற்கு மட்டும் அத்தகையவர்களைத் தேர்ந்தெப்பது ஏன் என யோசிக்க வேண்டியது அவசியம். “நல்ல” அரசியல்வாதிகளை மக்கள் ஏன் தேர்ந்தெடுப்பதில்லை? எந்தவொரு சமூகத்தின் செழுமைக்கும் நல்வாழ்வுக்கும் “நல்ல” அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுப்பது அவசியம். ஆனால் “நல்ல” அரசியல்வாதி என்றால் யார்? இது மிகக் கடினமான கேள்வி. நேர்மை, திறமை, பச்சாதாபம் மற்றும் பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உண்மையான விருப்பம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருவர் நல்ல அரசியல்வாதியாவார். இங்கு நேர்மை என்பது சட்டம், மானுட நெறிமுறைகள், தனிநபர் ஒழுக்கம் எல்லாவற்றையும் உள்ளடக்கியது. இங்கு திறமை என்பது படிப்பறிவு, பட்டறிவு, தலைமைத்துவம், ஆற்றல் எல்லாவற்றையும் உள்ளடக்கியது. இருப்பினும், பல ஜனநாயக சமூகங்களில், இந்தப் பண்புகளை உண்மையாக உள்ளடக்கிய நபர்களைத் தேர்ந்தெடுப்பது பெரும் சவாலாக இருக்கிறது. இதற்கு பல காரணிகள் பங்களிக்கின்றன. அவற்றில் முக்கியமான சிலவற்றை நாம் அலசிப் பார்க்கலாம். ஒன்று, அரசியல் துருவமுனைப்பும், பக்கச்சார்புகளும் ஆகும். அரசியல் துருவமுனைப்பு மற்றும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு சரணாகதியான விசுவாசம் ஆகியவை ஒரு வேட்பாளரின் குணங்களை புறநிலையாக மதிப்பிடுவதிலிருந்து வாக்காளர்களைத் தடுக்கிறது. குறித்த நபர் எனது இனத்தைச் சேர்ந்தவர், எனது மதத்தைச் சேர்ந்தவர், அவர் மற்ற இனத்திற்கு, மதத்திற்கு எதிராக எனது இனத்திற்கு, மதத்திற்கு ஆதரவாக கத்துகிறார். திருடன், ஊழல் பேர்வழியாக இருந்தாலும் எனது சாதி, இனம், மதத்தைச் சார்ந்தவன். என் இனத்தவன் வராவிட்டால், மற்ற இனத்தவன் வந்துவிடுவான். நான் விரும்பும் கட்சியினால் தேர்தலில் நிறுத்தப்பட்டவன். எனது கட்சித் தலைவர் வாக்களிக்கச் சொன்ன நபர், போன்ற குழுநிலை மனப்பான்மைச் சிந்தனையில் வாக்களிப்பதுதான் பெரும்பாலும் மிகக்கேவலமான அரசியல்வாதிகள் தேர்ந்தெடுக்கப்பட முக்கிய காரணம். குறித்த கட்சியில் குறித்த சின்னத்தில் ஒரு நாயை தேர்தலில் நிறுத்தினாலும், அந்த நாய் வெற்றிபெறும் என்ற சொல்லாடல் இங்கு புதியதல்ல. இது எத்தனை தூரம் கேவலமானதொரு நிலை என்பதை வாக்களிப்பவர்கள் உணர வேண்டும். இன்னொரு முக்கிய காரணம், சந்தைப்படுத்தல் மற்றும் அடையாளப் பெயரின் பெறுமதி. பரம்பரை பரம்பரையாக ஒரு அரசியல் குடும்பம் நாட்டைக் கொள்ளையடித்தாலும், அது வௌிப்படையாகத் தெரிந்தாலும், அதையும் மீறி மக்கள் அவர்களுக்கு வாக்களிப்பதற்கு சந்தைப்படுத்தலும், அந்த கட்சியின் / அந்தக் குடும்பத்தின் அடையாளப் பெயருக்கு உள்ள செல்வாக்கின் பெறுமதி முக்கிய காரணம். இதனால் இன்று அரசியல் என்பது சந்தைப்படுத்தல் மற்றும் தனிநபர் பிம்பத்தைக் கட்டியெழுப்பும் விஷயமாக மாறிவிட்டது. அரசியல்வாதிகள் உண்மையான திறமை அல்லது கொள்கைப்பிடிப்பைக் காட்டிலும், தம்மைப்பற்றிய சாதகமான பிம்பத்தை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கவர்ச்சி மற்றும் கவர்ச்சிகரமான சொல்லாட்சி சில நேரங்களில் பொருள் அல்லது தகுதிகளின் பற்றாக்குறையை மறைக்கப்பயன்படுகிறது. இன்று அரசியல்வாதிகள் எல்லாம் நடிகர்களைப் போல பன்ஞ்ச் வசனங்கள் பேசுகிறார்கள். அதற்குள் விஷயமே இருக்காது, ஆனால் பேசுவார்கள். பொருளாதாரத்தின் அரிச்சுவடிகூட தெரியாத, புரியாத “தலைவர்கள்” எல்லாம், மணிக்கணக்கில் பொருளாதாரம் பற்றியும், வறுமை ஒழிப்புப் பற்றியும் பேசுவார்கள். வாக்காளர்கள் கொள்கைகள் மற்றும் திறன்களை விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்யாமல் ஒரு கவர்ச்சியான வேட்பாளரிடம் ஈர்ப்புக் கொண்டு வாக்களிப்பதால் ஏற்பட்ட விளைவு இது. “பில்டப்பிலேயே” அரசியலைக் கொண்டு நடத்தும், மிகக் கேவலமான அரசியல்வாதிகள் எல்லாம் “தலைவர்கள்” என்று தம்மைத்தாமே சொல்லிக்கொண்டு தம்மைப் போன்றவர்களையே தொண்டரடிப்பொடிகளாகக் கொண்ட அடிவருடி இரண்டாம்கட்ட அரசியல்வாதிகளைக் கொண்டு அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மேலும், மக்களின் கருத்தை உருவாக்குவதிலும், மக்கள் மத்தியில் பிம்பங்களை உருவாக்குதிலும் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஊடகங்கள் பக்கச்சார்பானதாகவோ / பரபரப்பானதாகவோ இருக்கவே விரும்பும் தன்மையை நாம் அவதானிக்கலாம். உண்மைகளை முன்வைப்பதற்குப் பதிலாக மிகைப்படுத்தலை உருவாக்குவதில் ஊடகங்கள் கவனம் செலுத்துகிறன. கவனமெடுக்கத் தேவையற்ற வேட்பாளர்களுக்கு பிரபல்யத்தை ஏற்படுத்திக் கொடுப்பதோடு, அவர்களை நோக்கி வாக்காளர்களின் கவனத்தை திசை திருப்புகின்றன. உதாரணத்திற்கு, இன்று மலையக மக்களின் மிகப்பெரிய பிரச்சினைகளுள் முக்கியமானது, 200 வருடங்கள் தாண்டியும் அவர்கள் வரிசை அறைகளில் (“லைன்களில்”) வீடற்றவர்களாக வாழ்ந்துகொண்டிருக்கும் அவல நிலை. இதைப் பற்றிப் பேசி தீர்வு கொடுக்கக் கூடிய நிலையில் அனைத்து மலையக அரசியல்வாதிகளும் ஏதோவொரு காலகட்டத்தில் இருந்தார்கள். அதாவது ஆளும் அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்தார்கள், இருக்கிறார்கள். ஆனால் அதைச் செய்ய அவர்களால் முடியவில்லை. தமக்கான வரப்பிரசாதங்களை அமைச்சர்களாக அனுபவித்துக்கொண்டு இருந்துவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால் இதே நபர்கள், ஒரு சதத்திற்குப் பயனில்லாத பிரச்சினைகளையெல்லாம், ஏதோ மக்களின் வாழ்வாதாரத்தையே தாக்கியழிக்கும் பிரச்சினையைப் போல பூதாகாரப்படுத்தி, தம்மை ஏதோ பெரும் புரட்சியாளர்களாகக் காட்டும் பிரச்சார உத்திகளைக் கையாண்டு, மக்களை முட்டாளாக்குகின்றனர். இதற்கு ஊடகங்கள் உறுதுணையாக நிற்கின்றன. இதுதான் இன்றைய அரசியலின் பேரவல நிலை. மேலும், ஊடக நிறுவனங்கள் தங்கள் சொந்த நலன்கள் அல்லது அரசியல் தொடர்புகளைக் கொண்டிருக்கலாம், இது வேட்பாளர்களின் சித்தரிப்பை பாதிக்கலாம். இதை இலங்கையின் அன்றாட அரசியலில் நாம் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இவை எல்லாம் மக்கள் “நல்ல” அரசியல்வாதிகளை அடையாளங்கண்டுகொள்ள முட்டுக்கட்டைகளாக இருக்கின்றன. ஆகவே “நல்ல” அரசியல்வாதிகள் இல்லை என்று சொல்லும் மக்கள், நல்ல அரசியல்வாதிகள் வேண்டுமென்றால், அவர்களைத் தேடித் தேடி ஆதரிக்க வேண்டியது அவசியம். கருங்கற் பாறைகள் பெரிதாக இருக்கும், அனைவருக்கும் பெரிதாகத் தெரியும். ஆனால் விலைமதிப்பற்ற இரத்தினங்கள் எங்கோ ஒளிந்திருக்கும், அவற்றைத் தேடித் தேடித்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்! “நல்ல” அரசியல்வாதிகளைத் தெரிவுசெய்வதும் அப்படிப்பட்ட காரியம்தான். நல்லவனுக்கும், வல்லவனுக்கும் தன்னை நல்லவன், வல்லவன் என்று சொல்லித் திரிய வேண்டிய தேவை இல்லை. இதையும் மக்கள் கருத்தில்கொள்வது அவசியம். இனியாவது மக்கள் விளித்துக்கொள்ள வேண்டும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நல்ல-அரசியல்வாதிகளை-மக்கள்-ஏன்-தேர்ந்தெடுப்பதில்லை/91-324593
  4. மலையகம் 200: இந்திய வம்சாவளி மக்களுக்கு எதிராக செயற்பட்டாரா ஜீ.ஜீ ? என்.கே அஷோக்பரன் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள், இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ‘மலையகம் 200’ எனும் தொனிப்பொருளின் கீழ், பல நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இதில் அரச, மற்றும் அரச சாரா நிகழ்வுகள் எல்லாம் உள்ளடக்கம். ‘இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு’ என்று மலையக மக்கள் தொடர்ந்து விளிக்கப்பட்டாலும், அவர்களின் பொருளாதார நிலை உயர்ந்தபாடில்லை. இந்நாட்டின் குடிமக்களில் ஒரு பகுதியினர் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதை எத்தனை காலத்துக்கு இந்த நாடும், நாட்டு மக்களும் சகித்துக்கொண்டிருக்கப் போகிறார்கள்? நிற்க! இந்த நாட்டின் ‘குடிமக்கள்’ என்று குறிப்பிடும் போது, இந்நாட்டின் குடியுரிமையைப் பெற்றுக்கொள்ள இந்திய வம்சாவளி மக்கள் பட்டபாடும், அதனை அடைந்து கொள்வதற்கான மிக நீண்ட அரசியல் போராட்டத்தையும் நாம் மறந்துவிட முடியாது. இந்தத் தலைப்பு வரும்போதெல்லாம், ஜீ.ஜீ பொன்னம்பலம் மீதான ஓர் அவதூறும் மீண்டும் மீண்டும் பலராலும் முன்வைக்கப்பட்டு வருகிறது. அதாவது, இந்திய வம்சாவளி மக்களுக்கான குடியுரிமை மறுப்பை ஜீ.ஜீ பொன்னம்பலம் ஆதரித்தார் என்ற அந்த அவதூறு, ஜீ.ஜீ பொன்னம்பலத்தையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸையும் மட்டுமல்ல, இலங்கை தமிழர்களையும் ஓரவஞ்சனையாளர்களாக சித்திரித்து விடுகிறது. ஆகவே, இந்த விடயத்தில் உண்மை என்ன என்பதை அறிந்து கொள்வது அவசியமாகிறது. “இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டதை ஜீ.ஜீ ஆதரவளித்தார்” என்ற பிரசாரம், ஜீ.ஜீ, டீ.எஸ்.சேனநாயக்க தலைமையிலான அரசாங்கத்தோடு, ‘எதிர்வினை-ஒத்துழைப்பு’ அடிப்படையில் இணைந்துகொண்டு, அமைச்சுப் பதவியைப் பெற்றுக்கொண்டதன் பின்னர், ஜீ.ஜீயின் அகில இலங்கை தமிழ் காங்கிரஸிலிருந்து பிரிந்து, ஆங்கிலத்தில் ‘ஃபெடறல் பாட்டி’ என்றும், தமிழில் ‘இலங்கை தமிழரசுக் கட்சி’ என்றும் பெயர்கொண்ட கட்சியை சா.ஜே.வே செல்வாநாயகமும் அவரது ஆதரவாளர்களும் தொடங்கியதிலிருந்து, அவர்களால் கடுமையாக ஜீ.ஜீக்கு எதிராக செயல்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமை தொடர்பில் ஜீ.ஜீ பொன்னம்பலம் என்ன செய்தார், அவர் இழைத்த தவறு என்ன என்பது பற்றி இங்கு ஆராய்தல் அவசியமாகிறது. இந்திய வம்சாவளித் தமிழர் தொடர்பில் ஜீ.ஜீ அக்கறையற்றுச் செயற்பட்டவராக இருக்கமுடியாது. ஏனெனில் அவர், ஆற்றிய 50 க்கு 50 உரையிலாகட்டும், சோல்பரி குழு முன்பு ஆற்றிய உரையிலாகட்டும், இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கும் சம உரிமை, பிரதிநிதித்துவ ஒதுக்கீடு பற்றியெல்லாம் பேசியிருந்தார். குறிப்பாக, சோல்பரி குழு, தமிழ்க் காங்கிரஸின் சாட்சியத்தைக் கேட்பதற்கென ஒதுக்கிய மூன்று நாள்களில், ஒருநாள் முழுவதையும் ஒதுக்கி, இந்திய வம்சாவளி மக்களின் உரிமைகள் பற்றியும், அவர்களுக்கான பிரதிநிதித்துவம் பற்றியும் பேசினார் ஜீ.ஜீ. ஆகவே, இந்திய வம்சாவளித் தமிழர்கள் தொடர்பில் ஜீ.ஜீ அக்கறையற்றிருந்தார் என்று சொல்லமுடியாது. அப்படியாயின் அம்மக்களின் பிரஜாவுரிமை பறிபோவதற்குக் காரணமான சட்டங்களுள் ஒன்றுக்கு ஜீ.ஜீ ஆதரவளித்தாரா? அப்படி ஆதரவளித்தாராயின் அதன் மூலம் அம்மக்களுக்கு ஜீ.ஜீ பெரும் அநீதி இழைத்துவிட்டாரல்லவா என்ற கேள்வி நிச்சயம் எழுகிறது. இந்த விடயம் கொஞ்சம் சிக்கலானது. ஆனால், எளிமையாக புரியவைக்க முயல்கிறேன். இங்கே இரண்டு சட்டங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. முதலாவதாக, 1948ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க இலங்கை பிரஜாவுரிமைச்சட்டம். மற்றயது, 1949ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க இந்திய - பாகிஸ்தானியர் பிரஜாவுரிமைச் சட்டம். பிரித்தானிய கொலனித்துவ ஆட்சியின் கீழ், கொலனித்துவ நாடுகளிலுள்ள அனைத்து மக்களும் பிரித்தானிய முடியின் குடிமக்களாக இருந்தார்கள். கொலனித்துவத்தில் இருந்து நாடுகள் சுதந்திரம் பெற்றபோது, ஒவ்வொரு சுதந்திர நாடும் தமக்கென குடியுரிமைச் சட்டத்தை வரைந்து கொள்ளுதல் அவசியமானது. அவ்வகையில் 1948இல் அன்றைய டி.எஸ் சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம், இலங்கை பிரஜாவுரிமைச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது. இது சமர்ப்பிக்கப்பட்டபோது ஜீ.ஜீ .பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், எதிர்க்கட்சியில் இருந்தது. குறித்த சட்டமூலமானது பின்வருமாறு வழங்கியது: (அ) இலங்கையில் பிறந்த ஒருவருடைய தகப்பன், இலங்கையில் பிறந்தவராகவோ, அல்லது (ஆ) அவருடைய தந்தை வழிப் பேரனும், தந்தை வழிப்பாட்டனும் இலங்கையில் பிறந்தவர்களாகவோ இருந்தால், அவர் இலங்கைப் பிரஜையாகவே கருதப்படுவர். அத்துடன், (இ) இலங்கைக்கு வெளியே பிறந்தவர் இலங்கை பிரஜையாக மதிக்கப்பட வேண்டுமேயானால் அவருடைய தந்தையும், தந்தை வழிப் பேரனும் இலங்கையில் பிறந்திருத்தல் வேண்டும். அல்லது, (ஈ) அவரின் தந்தை வழிப்பேரனும், பாட்டனும், இலங்கையில் பிறந்திருத்தல் வேண்டும். இச்சட்டமூலம் இந்திய வம்சாவளி மக்கள் பிரஜாவுரிமையைப் பெறமுடியாத நிலையை ஏற்படுத்தியது. இதனை அப்போது எதிர்க்கட்சியில் இருந்த ஜீ.ஜீ. பொன்னம்பலம் கடுமையாக எதிர்த்தார். இதைக் கடுமையாக எதிர்த்து, அவர் பேசியது 1948ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி பாராளுமன்ற ஹன்சார்டின் 1821 - 1861 பக்கங்களில் பதிவாகியுள்ளது. இதனை இலங்கை-இந்திய காங்கிரஸ் கட்சியும், ஏனைய இடதுசாரிக் கட்சிகளும் கூட கடுமையாக எதிர்த்தன. ஆகவே, இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமை பறிபோவதற்கு ஜீ.ஜீ பொன்னம்பலம் ஆதரவளித்தார் என்பதில் உண்மையில்லை. மாறாக, அனைத்துத் தமிழ்க் கட்சிகளைப் போலவும் அவர் அன்று அதனை மிகக் கடுமையாக எதிர்த்தார் - எதிர்த்தே வாக்களித்தார். ஆயினும் அன்றைய அரசாங்கத்திடம் பெரும்பான்மை இருந்ததால், அது அச்சட்டத்தை நிறைவேற்றியது. இதன் பின்னர், ஜீ.ஜீ பொன்னம்பலம் - அன்றைய பிரதமர் டீ.எஸ் சேனநாயக்கவுடன் எதிர்வினை - ஒத்துழைப்பு’ வழங்குவது பற்றிப் பேச்சு நடத்தியபோது, பிரஜாவுரிமை இழந்த இந்திய வம்சாவளி மக்களுக்கு பிரஜாவுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் முக்கிய கோரிக்கையாக வைத்திருந்தார். அதனை அன்றைய பிரதமர் டீ.எஸ் சேனநாயக்க ஏற்றுக்கொண்டிருந்தார். அதன்பின்னர், அன்றைய அரசாங்கத்தில் இணைந்து அமைச்சரவை அமைச்சரானார் ஜீ.ஜீ பொன்னம்பலம். பிரஜாவுரிமை இழந்த இந்திய வம்சாவளி மக்களுக்கு பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொடுப்பதாக, தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற டீ.எஸ் சேனநாயக்க 1949ஆம் ஆண்டில் இந்திய - பாகிஸ்தானியர் பிரஜாவுரிமைச் சட்ட மூலத்தை பாராளுமன்றத்துக்குக் கொண்டு வந்தார். இந்திய - பாகிஸ்தானியர் பிரஜாவுரிமை சட்டமூலத்தின்படி, இலங்கையில் குடும்பமாக ஏழு வருடங்கள் வசித்தவர்களும், விவாகமாகாமல், பத்து வருடங்கள் வசித்தவர்களும் பிரஜாவுரிமை பெறுவதற்கு உரிமை பெற்றார்கள். இலங்கை-இந்திய காங்கிரஸும், தமிழ்க் காங்கிரஸும் ஏழு வருட காலப்பகுதியை, ஐந்தாகக் குறைக்கக் கோரின. ஆனால், அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்தச் சட்டமூலம் சட்டமானால் ஏறத்தாழ பிரஜாவுரிமையை இழந்த இந்திய வம்சாவளி மக்கள் ஒரு இலட்சம் (100,000) பேர் பிரஜாவுரிமையைப் பெறக்கூடிய சந்தர்ப்பம் இருந்தது. இந்த சட்டமூலத்துக்குத்தான் ஜீ.ஜீ பொன்னம்பலம் ஆதரவாக வாக்களித்திருந்தார். இலங்கை பிரஜாவுரிமைச் சட்டம் இழைத்த அநீதியை, இந்திய-பாகிஸ்தானியர் பிரஜாவுரிமைச் சட்டம் முற்றாக சரிசெய்து விடவில்லை. அது ஒரு முழுமையான தீர்வுமில்லை. ஆனால் இலங்கை பிரஜாவுரிமைச் சட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களில், ஏறத்தாழ ஒரு லட்சம் பேருக்கென்றாலும் பிரஜாவுரிமை கிடைக்க இந்திய-பாகிஸ்தானியர் பிரஜாவுரிமைச் சட்டம் வழிவகுத்ததனால், ஜீ.ஜீ. அதனை ஆதரித்திருக்கலாம். உண்மையில் இதைவிட நியாயமான, முழுமையான தீர்வொன்றுக்காக ஜீ.ஜீ பொன்னம்பலம் உழைத்திருக்க வேண்டும். ஆனால், இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமை பறிபோக ஜீ.ஜீ பொன்னம்பலம் ஆதரவளித்தார் என்ற கருத்தில் உண்மையில்லை. ஏனெனில், அந்தச் சட்டமூலத்தை ஜீ.ஜீ பொன்னம்பலம் கடுமையாக எதிர்த்திருந்தார். மாறாக, இலங்கை பிரஜாவுரிமைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட ஒரு தொகை இந்திய வம்சாவளி மக்களுக்கேனும் பிரஜாவுரிமை வழங்கிய இந்திய - பாகிஸ்தானியர் பிரஜாவுரிமை சட்டத்துக்கே அவர் ஆதரவளித்திருந்தார் என்பதே நிதர்சனம். ‘ஃபெடறல் பாட்டி’ என்ற ‘இலங்கை தமிழரசுக் கட்சி’, தன்னுடைய அரசியல் குறு-இலாபத்துக்காக ஜீ.ஜீ பொன்னம்பலத்துக்கு எதிராக தொடங்கிய ஒரு பிரசாரம், தேவையற்றதொரு கறையாக இலங்கை தமிழர் அரசியல் மீதே படிந்துள்ளது. இனியாவது, இந்தப் பிரசாரத்தின் பொய்மை உணரப்பட வேண்டும். ‘மலையகம் 200’, இந்தத் தீவில் 200 வருடங்களாக ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் குரலை அனைவரிடமும் கொண்டு போய்ச்சேர்க்கட்டும். அம்மக்களுக்கு விடிவு பிறக்கட்டும்! https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மலையகம்-200-இந்திய-வம்சாவளி-மக்களுக்கு-எதிராக-செயற்பட்டாரா-ஜீ-ஜீ/91-323128
  5. இனத் தேசிய அரசியலும் ‘பயன்தரு கடந்த காலமும்’ என்.கே அஷோக்பரன் அரசியலில், வரலாறு என்பது நாடுகள் மற்றும் சமூகங்களின் சித்தாந்தங்கள், அடையாளங்கள் மற்றும் அபிலாஷைகளை வடிவமைக்கும் ஒரு சக்திவாய்ந்த கருவியாக செயல்படுகிறது. ‘பயன்தரு கடந்த காலம்’ என்ற கருத்து, குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுப்பதற்கு, பெரும்பாலும் இன-மத தேசியவாத அரசியலுக்காக, வரலாற்றுக் கதைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட வியாக்கியானம் மற்றும் கையாளுதலைக் குறிக்கிறது. வரலாற்றிற்கான இந்த அணுகுமுறை சமூகத்தை ஒன்றுபடுத்தவும் வல்லது, பிரிக்கவும் வல்லது. ஏனென்றால், ‘பயன்தரு கடந்த காலம்’ ஒன்று சமகால அரசியலினால் கட்டமைக்கப்படும் போது, அது சமகால சமூகம் சமகாலப் பிரச்சினைகளை குறித்த பயன்தரு கடந்த காலக் கண்ணாடியூடாகப் பார்க்கும் நிலையை ஏற்படுத்துகிறது. இப்பத்தியானது காலத்திற்கும் இன-மத தேசியவாத அரசியலுக்கும் இடையிலான சிக்கலான உறவை மிகச்சுருக்கமாக ஆராய விளைகிறது. வரலாற்றுக் கதைகள் எவ்வாறு இன்றைய அரசியல் மற்றும் சமூக உரையாடலில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதைப் பற்றி நாம் பேச வேண்டியதாக இருக்கிறது. வள்ளுவன் மதமற்றவனாகவும் இராவணன் சிங்களவனாகவும் சித்திரிக்கப்படுவதென்பது இருவேறு அரசியல் ‘தேசியவாத’ அரசியலின் ஒரே வகையாக பயன்தரு கடந்த கால அணுகுமுறையின் வௌிப்பாடுகளே! தமிழகத்தின் ‘திராவிட’ அரசியலுக்கு, வள்ளுவனை மதநீக்கம் செய்ய வேண்டியது அவசியமாகிறது. சனாதன தர்மத்தின் எந்தவோர் அடையாளமும் வள்ளுவனுக்கு இருக்கக்கூடாது, ஏனென்றால் பழந்தமிழன் சனாதன தர்மத்தின் பாற்பட்டவன் அன்று என்று நிறுவ வேண்டியது ‘திராவிட’ தேசியவாதத்திற்கு அவசியம். அதுபோலவே, இராவணனை சிங்களவனாக சித்திரிக்க வேண்டியது ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தின் தேவை. சிங்கள-பௌத்தம் அண்மைய தசாப்பதங்கள் வரை, விஜயனின் வருகையோடுதான் சிங்கள வரலாற்றைத் தொடங்கியது. அது மஹாவம்சம் சொல்லும் வரலாறு. அதுவே உண்மை வரலாறா என்ற கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில், அப்படியானால் விஜயனுக்கு முன் இங்கு வாழ்ந்தவர்கள் யார் என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகிறது. இதில், சிங்கள-பௌத்த தேசியவாதத்திற்கு சிக்கல்; தமிழ் மொழியின் தொன்மையினால் ஏற்படுத்தப்படுகிறது. தமிழ் மொழியின் தொன்மை உலகளவில் ஆய்வாளர்களால் அசைக்கமுடியாதளவிற்கு உறுதிசெய்யப்பட்டுவிட்டது. தமிழ்மொழியும், அதன் தாய்மொழியான ப்ரொடோ-திராவிடியன் மொழியும் இந்திய உப கண்டத்தின் தெற்கே பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்திருக்கின்றன என்பதை மறுக்க முடியாத நிலையில் சிங்கள-பௌத்த தேசியவாதம் இருக்கிறது. அப்படியானால் விஜயனுக்கு முன்பு இங்கிருந்தவர்கள் சிங்களவர்கள் இல்லையென்றால், ‘சிங்களவர்கள்’ வந்தேறு குடிகளா என்ற கேள்வி எற்பட்டுவிடுமல்லவா. அதனை சமன்செய்யத்தான் கடந்த சில தசாப்தங்களில் புராண இராவணனை சிங்களவனாக்கும் பயன்தரு கடந்த காலமொன்றைக் கட்டியெழுப்பும் கைங்கரியத்தில் தீவிர சிங்கள-பௌத்த தேசியவாதிகள் ஈடுபட்டுவருகிறார்கள். நிற்க! பயன்தரு கடந்த காலமானது, விரும்பிய கதை /அடையாளத்தை வலுப்படுத்தும் வரலாற்று நிகழ்வுகள், புள்ளிவிவரங்கள் மற்றும் கதைகளின் நனவான தேர்வை உள்ளடக்கியதாகும். இன-மத தேசியவாத அரசியலில், இது பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட குழுவின் மேலாதிக்கம், உயர்வு, அல்லது விதிவிலக்கான மேன்மைத் தன்மையை எடுத்துக்காட்டும் வரலாற்று தருணங்களில் கவனம் செலுத்துகிறது. இந்த அணுகுமுறை பெருமை மற்றும் ஒற்றுமை உணர்வை உருவாக்கும் அதே வேளையில், இது எங்களுக்கு எதிராக அவர்களுக்கு என்ற மனநிலையை வளர்க்கும்; மற்ற குழுக்களுடன் பதட்டங்களை அதிகப்படுத்தி, உண்மையான வரலாற்றுப் பதிவை சிதைக்கும். இன-மத தேசியவாத அரசியலானது, பல்வேறு தேவைகளுக்காக வரலாற்றுக் கதைகளை அடிக்கடி தனக்கேற்றாற் போல பயன்படுத்திக் கொள்கிறது. பகரப்பட்ட வரலாற்று அனுபவங்கள், கலாசார நடைமுறைகள் மற்றும் சின்னங்களை வலியுறுத்துவதன் மூலம், தலைவர்கள் ஒரு பொதுவான பதாகையின் கீழ் குறித்த அடையாளத்தைப் பகரும் மக்கள்கூட்டத்தை ஒன்றிணைக்கும் ஒரு கூட்டு உணர்வை உருவாக்க முயல்கிறார்கள். இதனால் தம்முடைய அரசியல் சித்தாந்த அடிப்படைகளுக்குச் சாதகமான நிலையை உருவாக்க எத்தனிக்கிறார்கள். இப்படியாக அந்த மக்கள் கூட்டம் அரசியல் ரீதியில் கட்டமைக்கப்படும் போது, அது குறித்த அடையாளத்தின் மீதான விசுவாசத்தையும் அர்ப்பணிப்பையும் உருவாக்கி, குறித்த சமூகத்திற்கு ஒரு சக்திவாய்ந்த உணர்வைத் தருவதாக அமைகிறது. இதுதான் இன-மத தேசியவாதிகள் பயன்தரு கடந்தகாலமொன்றை கட்டமைப்பதில் அதீத பிரயத்தனம் காட்டுவதற்கான காரணம். ஏனென்றால், பணத்தை அள்ளி அள்ளிக் கொடுத்தாலும் கிடைக்காத விசுவாசத்தை, இனப்பற்று பெற்றுத்தரும். பலமான இனப்பற்று கட்டியெழுப்பப்பட, பலமான வரலாற்று வேர்கள் அவசியம். அந்த வேர்களை உருவாக்கவே இந்த அரசியல்வாதிகள் முயல்கிறார்கள். இதில் இல்லாத வேர்களை உருவாக்குவதும், வேறு மரத்தின் வேர்களைப் பிடுங்கி தம்முடையதாக்கிக் கொள்வதுமெல்லாம் அடங்கும். இருப்பினும், வரலாற்றை இது போன்ற குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தாம் விரும்பியவாறு கையாள்வது, வெறுப்பையும் பிரிவினையையும் தூண்டலாம். இது நல்லிணக்கத்துக்கு இடையூறு விளைவிக்கும். இன-மத தேசியவாத அரசியல்வாதிகள் பெரும்பாலும் தமது இனக் குழுவுக்கு ஆதரவாக இருக்கும் கொள்கைகளை சட்டப்பூர்வமாக்குவதற்கு பயன்தரு கடந்த காலத்தை பயன்படுத்துகின்றனர். உதாரணத்திற்கு ஒரு நிலப்பரப்பை தம்முடையதாக்க வேண்டுமென்றால், இது எமது இனத்தின் மூதாதையர்கள் வந்திறங்கிய இடம்; இது எமது இனத்தின் முக்கிய அடையாளம்; வானிலிருந்து இறங்கிய இடம் என்று வரலாற்றுக் கற்பிதங்களை நிறுவிக்கொண்டு, அந்த நிலப்பரப்பிலிருக்கும் மற்றவர்களை விரட்டி, அந்த நிலத்தைக் கைப்பற்றிக்கொள்ள முடியும். வரலாற்று முன்னுதாரணங்களில் சமகால முடிவுகளை தொகுத்து வைப்பதன் மூலம், தலைவர்கள் தங்கள் செயல்களை வரலாற்று ஒழுங்கை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளாக முன்வைக்க முடியும். இந்த மூலோபாயம் பொதுமக்களின் ஆதரவைப் பெறுவதற்கும் விமர்சனத்தைத் திசைதிருப்புவதற்கும் குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும். கற்பனையில் உருவகித்த கடந்த காலத்தி்ற்காக, நிகழ்காலத்தில் அண்ணன், தம்பிகளாக வாழவேண்டியவர்கள் அடித்துக்கொண்டு சாகப்போகும் நிலையை இந்த அரசியல் விஷப்பரீட்சை உருவாக்கும் என்பதைப் பற்றியெல்லாம் இந்த அரசியல்வாதிகளுக்குக் கவலை கிடையாது. ‘பயன்தரு கடந்த காலம்’ என்பது அவர்களது அரசியலுக்கான பலமான ஆயுதமாகிறது. இன-மத தேசியவாத அரசியல் மற்றும் பயன்தரு கடந்த காலத்தின் சிக்கலான தன்மையைச் சமாளிக்க, வரலாற்றுப்புலமை மற்றும் ஆழ்ந்த சிந்தனைக்கான அர்ப்பணிப்பு என்பன ஒரு மக்கள் கூட்டத்திற்கு மிக முக்கியமானது. நன்கு அறியப்பட்ட குடிமக்கள் மற்றும் விடாமுயற்சியுள்ள ஆராய்ச்சியாளர்கள் வரலாற்றுக் கதைகளை ஆராய்வதில், உண்மைகளை வெளிக்கொணர்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். திறந்த உரையாடலை ஊக்குவிப்பதன் மூலமும், பல்வேறு கண்ணோட்டங்களைக் கேட்கக்கூடிய சூழலை வளர்ப்பதன் மூலமும், சமூகங்கள் கையாளப்பட்ட வரலாற்றின் எதிர்மறையான தாக்கங்களைத் தணிக்க முடியும். ஆனால் இது இலகுவானதல்ல. ஏனென்றால், இன-மத தேசியவாதம் இதனை விரும்பாது. அது இதனை இரும்புக்கரம் கொண்டு அடக்கவே முயலும். ஏனென்றால், உண்மையான சுயாதீன வரலாறு அறியப்பட முயன்றால், அது சிலவேளைகளில், இன-மத தேசியவாதம் கட்டமைத்த பயன்தரு கடந்தகாலத்தை கேள்விக்குட்படுத்திவிடும், அல்லது பிழையென நிரூபித்துவிடும். ஆனால் இன்னொரு விஷயத்தையும் நாம் மறந்துவிடக்கூடாது. ‘பயன்தரு கடந்தகாலம்’ என்பது, எப்படி இன-மத அரசியலால், பிரிவினைக்கு பயன்படுத்தப்பட முடியுமோ, அதுபோல, தாராளவாத அரசியலால், அது சமூக ஒற்றுமையைக் கட்டியெழுப்பவும் பயன்படுத்தப்படலாம். கத்தி மரக்கறியை வெட்டி உணவுமளிக்கும்; ஆளை வெட்டிக் கொலையும் செய்யும். அதுபோலத்தான் பயன்தரு கடந்தகாலமும் அது ஒரு பலமான அரசியல் ஆயுதம். வரலாற்றுக் கதைகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்து, பயன்படுத்தக்கூடிய கடந்த காலமானது, இன்றைய சமூகத்தைப் பிரிக்கும் அல்லது ஒன்றிணைக்கும் திறனைக் கொண்டுள்ளது. இன-மத தேசியவாத அரசியல் தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாற்றைப் பயன்படுத்துவதில், குறுகிய கால ஆதாயங்களைக் கண்டாலும், நீண்ட கால விளைவுகளைத் தோற்றுவிக்கும். சமூகங்கள் தங்கள் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் வடிவமைப்பதில் வரலாற்றின் நுணுக்கமான பங்கை அங்கிகரிப்பது மற்றும் கடந்த காலத்துடன் வெளிப்படையான மற்றும் நேர்மையான ஈடுபாட்டின் மூலம் உள்ளடக்கம், புரிதல் மற்றும் நல்லிணக்கத்தை தீவிரமாக தேடுவது கட்டாயமாகும். இல்லையென்றால், ஒரு பொய்யை நம்பிக்கொண்டு அந்த சமூகம் வாழவேண்டியதுதான். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இனத்-தேசிய-அரசியலும்-பயன்தரு-கடந்த-காலமும்/91-322725
  6. ‘கறுப்பு ஜூலை’: மறக்கக்கூடாத வரலாறு என்.கே. அஷோக்பரன் போலந்து நாட்டின், க்ரக்கவ் நகருக்குப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு 2018ஆம் ஆண்டு கிடைந்திருந்தது. போலந்தின் க்ரக்கவ் நகரிலிருந்து ஏறத்தாழ ஒன்றரை மணிநேர பயண தூரத்தில் இருக்கிறது நாஸிகளின் ‘ஒஷ்விட்ஸ்’ சித்திரவதை முகாம். பல்லாயிரம் யூதர்களை, நாஸிகள் அடைத்துவைத்த பல சித்திரவதை முகாம்களில் ஒஷ்விட்ஸூம் ஒன்று. சித்திரவதை முகாம், யூதர்கள் விஷவாயு செலுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட விஷவாயு அறைகளைக் கொண்டதும், சுவரோடு நிற்கவைத்து சுட்டுக்கொல்லப்படும் கொலைச் சுவரைக் கொண்டதுமான கொலைக்களம் அது. இன்று, அந்த முகாம் ஒஷ்விட்ஸ் ஞாபகார்த்த முகாமாக, வரலாற்றின் கொடுமையான பக்கங்களை, அடுத்து வரும் சந்ததிகள் அறிந்துகொள்வதற்காக, பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. யூதர்களின் வெட்டப்பட்ட தலைமுடிகள், அவர்கள் கொண்டு வந்த பயணப் பெட்டிகள், அவர்களது உணவுத் தட்டுகள், தண்ணீர்க் கோப்பைகள், காலணிகள் என்பவை மாபெரும் மண்டப அளவிலான கண்ணாடிப் பெட்டிக்குள் பல்லாயிரக்கணக்கில் குவிக்கப்பட்டு, காட்சிப்படுத்தப்பட்டு உள்ளமை எந்த உறுதியான இதயத்தையும் அதிர்ச்சியடைய வைக்கக்கூடியவை. அங்கு, அடைத்து வைக்கப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்த முகாம் அறைகள், உடனடித் தீர்ப்பு வழங்கப்படும் அறை, அதற்கடுத்து, சுட்டுக்கொல்லப்பட முன்பு உடைமாற்றித் தம்மைக் கழுவிக்கொள்வதற்கான அறை, அடுத்து காத்திருப்பு அறை, அதற்கு அப்பால் கொலைச் சுவர் என அந்த முகாமினூடாக நடக்கும் போதே, கால்கள் நடுங்கும்! ஒரு கட்டடத்தின் அடிப்பகுதியில் சில அறைகள்; அவைதான் விஷவாயு அறைகள் என அங்கிருந்த வழிகாட்டி சொன்னபோது, முதுகுத்தண்டினூடாக மின்சாரம் பாய்ந்ததைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. அந்த முகாமினூடாக நடந்தபோது, ஏதோ பெரும் அவல ஓலச்சத்தங்கள் ஒலித்துக் கொண்டிருப்பதாகவே காதுகள் உணர்ந்தன. கண்டவை தந்த அதிர்ச்சியால் வந்த மனப்பிரம்மையாக அது இருக்கலாம். முதலாவது முகாமைப் பார்த்துவிட்டு வௌியே வந்தபோது, இரண்டாவது முகாமுக்குச் செல்லும் மனப்பலம் இருக்கவில்லை. இந்தச் சித்திரவதை முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்களின் (குழந்தைகள் உட்பட) புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. உலகின் பல்வேறு பாகங்களில் இருந்தும் வந்திருந்தவர்களில் சிலர், தமது மூதாதையர்களின் படங்களை அடையாளம்கண்டு, கண்ணீர் மல்கினார்கள். அது மனதை நொறுக்கும் காட்சியாக இருந்தது. அன்றைய தினம், மனம் உறக்கம் கொள்ளவில்லை; சிந்தனைகள் எங்கெங்கோ சென்றன. இன்று ஞாபகச் சின்னமாக மாறியிருக்கும் ‘ஒஷ்விட்ஸ் முகாம்’, எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பு, வார்த்தைகளுக்குள் அடங்காது. நாஸிகளின் கொடுமைகள் பற்றி, பல ஆயிரம் பங்கங்களில் எழுதிய எழுத்தின் மூலம் உணரப்பட முடியாததை, அந்த ஞாபகச்சின்னம் உணர்த்தியது என்றால் அது மிகையல்ல. அந்த உணர்வு, நாஸிகளின் கொடுமைகள் பற்றிய உணர்வு மட்டுமல்ல; அது அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் எல்லா மனிதர்களின் மீதுமான உணர்வு; உலகில் இதுபோன்ற கொடுமைகள், இனி அரங்கேறவே கூடாது என்ற உணர்வு; அதனை உணர்வதற்கு யூதனாக இருக்க வேண்டியதில்லை; மனிதனாக இருந்தால் போதும். நிற்க! இன்று ஞாபகார்த்த இடமாக மாற்றப்பட்டுள்ள ஒஷ்விட்ஸ் சித்திரவதை முகாமின் ஒரு கட்டடத்துக்குள் நுழையும் போது, ‘வாழ்வுக்கான காரணம்’ (The Life of Reason) எனும் நூலின் ஆசிரியர் ஜோர்ஜ் சன்ரயானா, தனது நூலில் எழுதியிருந்த, ‘வரலாற்றிலிருந்து படிப்பினைகளைப் பெற்றுக் கொள்ளாதவர்கள், வரலாற்றை மீள அரங்கேற்றுவதற்குச் சபிக்கப்பட்டவர்கள் ஆகிறார்கள்’ என்ற வாசகம், அதன் வாசலில் எழுதப்பட்டிருந்தது. எத்தனை உண்மையான, பலம் மிக்க வசனம் அது. அன்று ஜேர்மனியை ஆண்ட, முதலாவது உலக யுத்தத்தில் தோல்வியடைந்த ஜேர்மனியை, சில தசாப்தங்களில் மீண்டும் உலகத்தோடு போரிடும் வல்லரசாக மாற்றிய நாஸிகளின் கொடுமைகளைப் பற்றி, இன்று ஜேர்மனியில் கற்பிக்கிறார்கள்; நாஸிகள் நாயகர்கள் அல்ல என்பதைக் கற்பிக்கிறார்கள்; அவர்கள் கட்டவிழ்த்துவிட்ட படுகொலைகளைப் பற்றி, சித்திரவதைகளைப் பற்றிக் கற்பிக்கிறார்கள். இதன் நோக்கம், இனி இதுபோல் ஒரு கொடுமை நிகழ்ந்துவிடக்கூடாது என்பதுதான். யூதர்கள், உரோமானியர், நாடோடிகள் ஆகியோரை நாஸிகள் வெறுத்தார்கள். தூய ஜேர்மானிய இனத்தை, இந்த ‘அந்நியர்’கள் அசுத்தப்படுத்துவதாக பரப்புரை செய்தார்கள். அந்த வெறுப்பின் காரணமாக, அவர்களை சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பி, பட்டினிபோட்டு, கடும் வேலைகளைச் செய்யவைத்து, சித்திரவதைகளைச் செய்து, அவர்களைத் தமது மருத்துவ ஆராய்ச்சிக்கு ஒரு விலங்கைப் போல பயன்படுத்தி, சுட்டுக்கொன்று, விஷவாயு செலுத்திக் கொன்று என, நாஸிகள் மீது அரங்கேற்றப்பட்ட கொடுமை கொஞ்ச நஞ்சமல்ல. இந்தக் கொடுமைகளுக்கு எல்லாம் ஆணிவேர் வெறுப்பு. 1983இல், இலங்கையில் அரங்கேறிய ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பின் அடிப்படையும் வெறுப்புத்தான். உதாரணமாக, 1983 மே 19 ஆம் திகதி, ‘தி ஐலண்ட்’ பத்திரிகையில் பிரசுரமான, டி சில்வா என்ற ஒரு வாசகர் எழுதிய கடிதமானது, பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கான வழிகளை முன்வைத்தது. அவர் முன்வைத்த வழிமுறையின் சுருக்கமானது: ‘வடக்கு, கிழக்கில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட வேண்டும். பொலிஸ், இராணுவம் ஆகிய படைகள் மேலதிகமாக அனுப்பப்பட்டு, பயங்கரவாதிகள் வேட்டையாடப்பட வேண்டும். அவர்களைக் கண்டவுடன் சுட வேண்டும். பாரம்பரிய தமிழர் தாயகம் என்று சொல்லப்படும் பிரதேசங்களில், சிங்களவர்கள் குடியேற்றப்பட வேண்டும். எந்தச் சந்தர்ப்பத்திலும் ‘ஈழம்’ என்ற ஒன்று வழங்கப்படாது என்ற பிரகடனத்தை வெளியிட வேண்டும். வடக்கு, கிழக்கில் பாதுகாப்புப் படைகளை வைத்திருப்பதற்கான மேலதிக செலவானது, அங்கு வதிவோரின் மீது விசேட வரியொன்றை விதிப்பதனூடாக ஈடுசெய்யப்படலாம். பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் பாதிக்கப்படுவோருக்கு எந்த நட்டஈடும் வழங்கக் கூடாது’ என்றவாறாகக் காணப்பட்டது. 1983ஆம் ஆண்டு, கறுப்பு ஜூலைக் கலவரத்தின் பின்னணியில், இதுபோன்ற கடும் தமிழின வெறுப்பு மனநிலை இருந்தது. இது ஒரே நாளில் வந்ததல்ல; கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டமைக்கப்பட்டது. இதில் இலங்கை அரசியலின் பங்கு முக்கியமானது. 1956ஆம் ஆண்டு முதல், தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வெறுப்பும் வன்முறைகளும் இதற்குச் சாட்சி. இதில் அரச இயந்திரத்தின் பங்கும் குறிப்பிடத்தக்கது. 1983ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் திகதி, லண்டன் ‘டெய்லி ரெலிகிராப்’ பத்திரிகைக்கு இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன ஒரு குறுஞ்செவ்வியை அளித்திருந்தார். அதில், “யாழ்ப்பாண மக்களின் (தமிழ் மக்களின்) அபிப்பிராயத்தைப் பற்றி, இப்போது நான் கவலைப்படவில்லை; நாம், அவர்களைப் பற்றி யோசிக்க முடியாது. அவர்களுடைய உயிர்களைப் பற்றியோ, அவர்கள் எம்மைப் பற்றிக் கொண்டிருக்கும் அபிப்பிராயம் பற்றியோ யோசிக்க முடியாது; வடக்கின் மீது எவ்வளவுக்கு எவ்வளவு அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறதோ, அவ்வளவுக்கு இங்குள்ள சிங்கள மக்கள் சந்தோஷப்படுவார்கள்” என்று, அப்பட்டமான இனவெறி அரசியலை, வௌிப்படையாக உலகுக்கு அவர் சொல்லியிருந்தார். ஆனால், இந்த வரலாறுகள் இலங்கையில் கற்பிக்கப்படுவதில்லை. இன்று கூட, தமிழ் மக்களுக்கு அடைக்கலமும் பாதுகாப்பும் வழங்கிய சிங்கள மக்கள் பற்றிய கருத்தியலை ‘கறுப்பு ஜூலை’ பற்றிப் பேசும் போது பலரும் முன்வைக்கிறார்கள். தம்முடைய உயிரைப் பணயம் வைத்து, பல தமிழ்க் குடும்பங்களைப் பாதுகாத்த சிங்கள மக்கள் பலபேர் இருக்கின்றார்கள். அது உண்மை! ஆனால், ‘கறுப்பு ஜூலை’ என்பது அவர்களைப் பற்றியது அல்ல. தமிழ் மக்களின் உயிர்களைப் பாதுகாத்த அந்த நல்ல உள்ளங்கள் அங்கிகரிக்கப்பட வேண்டியவையே! ஆனால், ‘கறுப்பு ஜூலை’ அவர்களைப் பற்றியது அல்ல. ‘கறுப்பு ஜூலை’யின் கருத்தியலை, அவ்வாறு மாற்ற முனைவது பெரும் வரலாற்றுத் துரோகமாகும். ‘கறுப்பு ஜூலை’ என்பது, இந்த நாட்டில் வேர் கொண்டுள்ள இனவெறியைப் பற்றியது. ஆதிக்க மனநிலை கொண்ட பேரினவாதம், சிறுபான்மை இனத்தை இன அழிப்புச் செய்ததன் வரலாறு. இதில் பெருஞ்சோகம் என்னவென்றால், இதைப் பற்றி முறையான நீதி விசாரணை இடம்பெற்று, குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. இதன் பின்னணியில் இருந்தவர்கள் பொறுப்புக்கூற வைக்கப்படவில்லை. இது பற்றி, நாம் பேசுவது கூட இல்லை. குறைந்த பட்சம், ஞாபகார்த்த நிகழ்வுகளை அரசு நடத்துவதும் இல்லை. ஒரு ஞாபகார்த்த சின்னம் கூட இல்லை. ஜேர்மனியோடு இதனை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம்! தமது பிழைகள், தாம் இழைத்த கொடுமைகளை மறைத்துவிட்டு, வரலாற்றுக்கு வௌ்ளைச் சாயம் அடிப்பதால் எந்த நன்மையும் விளையப்போவதில்லை. வரலாற்றின் தவறுகளை ஏற்றுக்கொண்டு, அதற்குப் பிரயாச்சித்தம் தேடுவதுடன், இனி இதுபோன்ற நிலை வரக்கூடாது என்பதற்காக அந்த வரலாற்றுத்தவறைப் பற்றி, அடுத்த சந்ததிக்குக் கற்பிப்பதுதான் இந்த நாட்டுக்கும் அதன் எதிர்காலத்துக்கும் நாம் செய்யக்கூடிய பெருந்தொண்டு ஆகும். மறக்கமுடியாத வரலாறு இது. மனிதத்துக்கு எதிரான இந்தப் பெரும் குற்றத்துக்கு எவரேனும் பொறுப்பேற்றுக்கொண்டால்தான், மன்னிப்பது பற்றி பாதிக்கப்பட்டவர்கள் சிந்திக்கக் கூட முடியும். யாரும் பொறுப்பேற்றுக்கொள்ளாத குற்றத்துக்கு யாரை மன்னிப்பது? https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கறுப்பு-ஜூலை-மறக்கக்கூடாத-வரலாறு/91-277447
  7. ஒரே இரவில் தீர்வு? என். கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ், வலைத்தளத்தில் எழுதிவரும் ‘உரலார் கேள்வியும் உலக்கையார் பதிலும்’ என்ற கேள்வி - பதில் தொடரில், அண்மையில் கேட்கப்பட்டிருந்த, ‘ரணில் இனப்பிரச்சினைக்கு தீர்வுகண்டுவிவார் போல இருக்கிறதே’ என்ற கேள்விக்கு, ‘ஏறச்சொன்னால் கழுதைக்குக் கோபம்; இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்’ என்ற நிலையில்த்தான், நமது இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் பலகாலமாய் நடந்து கொண்டிருக்கின்றன’ என்று தனது பதிலில் குறிப்பிட்டு இருந்தமை, கவனத்தை ஈர்ப்பதாக அமைந்திருந்தது. இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு, இலங்கை அரசாங்கம், தமிழ்த்தேசம் ஆகிய இருதரப்பினரிடையே ஏற்பட வேண்டுமாயின், இருதரப்பும் சமரசங்களுக்கும் விட்டுக்கொடுப்புகளுக்கும் தயாராக இருக்க வேண்டும். அது நடக்காத வரை, தீர்வு என்பது சாத்தியமில்லை. ஆனால், இங்குதான் சூட்சுமமானதொரு நுட்பம் இருக்கிறது. இந்தச் சமரசங்களும் விட்டுக்கொடுப்புகளும் ஒரே இரவில் நடந்துவிட வேண்டுமென்ற அவசியம் இல்லை. அப்படி எதிர்பார்ப்பதும் யதார்த்தமானது இல்லை. ஆனால், நடைமுறையில் தமிழ்த் தேசிய அரசியலின் பிரச்சினை, இங்குதான் தொடங்குகிறது. தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள், தங்களுடைய மக்களாதரவைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, அதீத பகட்டாரவாரப் பேச்சுகளையும் கொள்கை நிலைப்பாடுகளையும் முன்வைக்கிறார்கள். இதன் விளைவாக, தீர்வு காண்பதில் சமரசம் அல்லது விட்டுக்கொடுப்பு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடுகிறது. ஏனென்றால், இன்று தமிழ்த் தேசிய அரசியல் பேசும், ஒன்றோடொன்று போட்டிபோடும் கட்சிகளும், ஒருவரோடொருவர் போட்டிபோடும் அரசியல்வாதிகளும் உளர். அதி தீவிர தேசியவாதப் பகட்டாரவார நிலைப்பாட்டில் இருந்து இம்மியளவேனும் பிசகினாலும் போட்டிக் கட்சி அல்லது போட்டியாளர் ‘துரோகி’ முத்திரை குத்தி, அரசியல் எதிர்காலத்தை சூனியமாக்கிவிடுவாரோ என்ற பயத்திலேயே சமரசம், விட்டுக்கொடுப்பு ஆகியன பற்றி பேசக்கூட முடியாத சூழ்நிலையில், சமரசத்தின் பாலான தீர்வை விரும்பும் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் கூட, சிக்கி நிற்கிறார்கள் என்பதுதான் யதார்த்தம். எந்தப் பிரச்சினைக்குமான அரசியல் தீர்வு என்பது, ஒரே இரவில் ஏற்பட்டுவிடாது. முழுமையான தீர்வு கிடைக்கும் வரை, இருந்த இடத்திலேயே இருப்போம்; முழுமையான தீர்வை நோக்கி ஓர் அடி கூட நகரமாட்டோம் என்பது அடிமுட்டாள்தனமான அரசியல். ஆனால், எங்கே அதைச் செய்யாவிட்டால் துரோகி என முத்திரை குத்தி, அரசியல் எதிர்காலத்தை அஸ்தமனமாக்கிவிடுவார்களோ என்ற பயத்தால் அரசியல் யதார்த்தம் புரிந்தவர்கள் கூட அமைதியாக இருக்கிறார்கள். தமிழ்த் தேசிய அரசியலில் இருக்கும் இதே பிரச்சினைதான், சிங்கள-பௌத்த தேசிய அரசியலிலும் இருக்கிறது. எங்கே தீர்வு தொடர்பில் சின்ன சமரசத்தை முன்வைத்தாலும், நாட்டைத் தமிழர்களுக்கு தாரைவார்த்துவிட்ட துரோகி என்று முத்திரை குத்திவிடுவார்களோ என்ற பயத்திலேயே சிங்கள இன அரசியல்வாதிகள் இருக்க வேண்டியதாக இருக்கிறது. இந்த விடயத்தில் தமிழ்த் தேசியமும் சிங்கள-பௌத்த தேசியமும் ஒரே மாதிரித்தான் இருக்கின்றன. இங்கு இன்னொரு கலாதியான உதாரணம் இருக்கிறது. இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, தீவிர தமிழ்த் தேசியவாதிகளும் ‘நரி’ என்கிறார்கள்; சிங்கள-பௌத்த தேசியவாதிகளும் அவ்வாறே அணுகுகிறார்கள். இத்தனைக்கும் இந்நாட்டில் இனப்பிரச்சினை ஒன்று இருக்கிறது; அது தீர்க்கப்பட வேண்டும் என்று பகிரங்கமாகச் சொன்ன ஒரேயொரு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டும்தான். இவ்வளவு ஏன்? இப்போதுள்ள பிரதான அரசியல் கட்சி தலைவர்களில் வேறு எவராவது இலங்கையில் இனப்பிரச்சினை இருக்கிறது; அது தீர்க்கப்பட வேண்டும் என்ற தொனியிலாவது பேசியிருக்கிறார்களா? அவர்களால் பேச முடியாது. அதுதான் தீவிர இன-மத தேசியவாத அரசியல் கிடுகுப்பிடி. அதிலிருந்து தப்ப முடியாதளவுக்கு இலங்கையின் அரசியல்வாதிகள் சிக்கிப்போய்க்கிடக்கிறார்கள். சரி! ரணில் தீர்வு பற்றி பேசுகிறார்; அவரோடு பேசி, இன்று கிடைப்பதை எடுத்துக்கொண்டு, அதனை மக்களின் மேம்பாட்டுக்காகப் பயன்படுத்திக்கொண்டு, எதிர்காலத்தில் மேன்மேலும் கோரிக்கைகளை முன்வைத்து, எமது அரசியல் இலக்கு நோக்கிப் பயணிப்போம் என்று யோசிப்பதற்குக் கூட, இங்கு ஒரு தமிழ் அரசியல்வாதியும் கிடையாது. அப்படி இருந்தவர்கள் கூட, எங்கே தாம் ‘துரோகி’ முத்திரை குத்தப்பட்டு, அரசியலில் செல்லாக்காசாகி விடுவோமோ என்று பயந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு பயணத்தின் இறுதிக் கோட்டை அடைய வேண்டுமானால், ஒவ்வோர் அடியாக வைத்துத்தான் போக முடியும். ஒரே பாய்ச்சலில் இறுதிக் கோட்டை அடைவதானால் அடைவேன்; இல்லையென்றால் நிற்கும் இடத்திலேயே நின்று கொண்டிருப்பேன் என்பது என்ன வகையான அரசியல்? தமிழ்த் தேசிய அரசியல் என்பது, ஒரேயடியாக ஒரே இரவில் தாம் விரும்பும் தீர்வொன்றைப் பெறும் எண்ணப்பாட்டில் இருந்து, படிப்படியாகக் கொஞ்சம் கொஞ்சமாக நீண்ட காலத்தில் தமது அபிலாஷைகளை அடைந்துகொள்ளும் ‘incrementalism’ எனும் பாதைக்கு மாற வேண்டும். இதற்கான சமிக்ஞைகள் கடந்த ஐந்து முதல் எட்டு ஆண்டு காலத்தில் தென்பட்ட போதும், அது அரசியல் முன்னரங்குக்குக் கொண்டு வரப்படவில்லை என்பது ஒட்டு மொத்தத் தமிழ் மக்களின் தோல்வி. அரசியல் ஆய்வுப் பரப்பை அவதானித்த வரையில், அரசியல் மாற்றங்கள் என்பவை நீண்டகாலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் ‘incrementalism’ எனும் வகையில்தான் ஏற்பட்டு இருக்கின்றன. இதுதான் நியமம் என்கிற பேராசிரியர் போல் கேர்ணியின் கருத்தை நாம் கவனிக்கலாம். ஓர் அரசியல் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்றால், அதற்கு மிக நீண்ட காலம் தேவை; பல தசாப்தங்கள் தேவை. இதுதான் அரசியல் யதார்த்தம். ஸ்கொட்லாந்து என்பது, ‘incrementalism’ மூலமான அதிகாரப்பகிர்வுக்கு ஓர் உதாரணமாகத் திகழ்கின்றது. ஸ்கொட்லாந்துக்கான அதிகாரப்பகிர்வை அவதானிக்கும் போது, ‘incrementalism’ அணுகுமுறையின் நடைமுறை இயக்கத்தை அவதானிக்கலாம். ஸ்கொட்லாந்தின் அதிகாரப்பகிர்வை நோக்கிய பயணமானது நீண்ட வரலாற்றை உடையது. 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தமக்கான சுயாட்சி மற்றும் சுய-ஆட்சிக்கான கோரிக்கை ஸ்கொட்லாந்தில் முக்கியத்துவம் பெற்றது. இந்த வளர்ந்து வரும் உணர்வுக்கு பதிலளிக்கும் விதமாக, பிரித்தானிய அரசாங்கம் 1998 ஆம் ஆண்டின் ஸ்கொட்லாந்து சட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்தையும் ஸ்கொட்லாந்து நிர்வாகத்தையும் ஸ்தாபித்தது. ஆனால், ஸ்கொட்லாந்து தேசியம் வேண்டிய பல அதிகாரங்கள் அதற்கு இருக்கவில்லை. அதற்காக ஸ்கொட்லாந்து தேசியவாதிகள் அதனை நிராகரிக்கவில்லை. அதனை ஏற்றுக்கொண்டு, தொடர்ந்தும் தமது கோரிக்கைகளை முன்னெடுத்தார்கள். இந்தப் பயணத்தின் அடுத்த கட்டமாக, ஸ்கொட்லாந்து சட்டம் 2012 ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்துக்கு கல்வி, சுகாதாரம், நீதி போன்ற பல்வேறு கொள்கை பகுதிகளில் சட்டம் இயற்றும் அதிகாரத்தை வழங்கியது. தொடர்ந்து, ஸ்கொட்லாந்து சட்டம் 2016 ஆனது, 2014 இல் ஸ்காட்டிஷ் சுதந்திர வாக்கெடுப்பைத் தொடர்ந்து, மேலும் அதிகரித்த அதிகாரப்பகிர்வை வழங்கியது. இந்தச் சட்டம் வருமான வரி விகிதங்கள், பட்டைகள் போன்ற கூடுதல் கொள்கைப் பகுதிகள் மீதான அதிகாரத்தை ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்துக்கு வழங்கியது. இந்த அணுகுமுறை, ஸ்கொட்லாந்து சுய-ஆட்சியின் பரிணாம வளர்ச்சிக்கு அனுமதித்தது. அரசியல் சுயாட்சி, பொறுப்புக்கூறல் உணர்வை வளர்த்தது. பெரும்பான்மை ஸ்கொட்லாந்து மக்கள், இந்தமுறையை நம்பியதன் விளைவுதான் 2014இல் ஸ்கொட்லாந்து பிரிவினைக்கான வாக்கெடுப்பில் ஐக்கிய இராச்சியமாக தொடர்வதற்கான ஆணையை ஸ்கொட்லாந்து மக்கள் வழங்கியிருந்தார்கள். இலங்கையர்கள் இதிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. ஆகவே, ஒரே இரவில் தீர்வு வேண்டும் என்று யோசிப்பதே அறிவுக்கு முரணானது. விட்டுக்கொடுப்புகள் என்பவை காலத்தின் தேவைக்கானது. அவை நிரந்தரமானவை என்று எவரும் முடிந்த முடிவுகளுக்கு வரத்தேவையில்லை. இந்த மனநிலைமாற்றம் என்பது, தமிழ்த் தேசிய அரசியலுக்கு மிக முக்கியமானது. தாழ்வுச்சிக்கல், அல்லது உயர்வுச்சிக்கல் என்ற மனநிலைகளிலிருந்து இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது அணுகப்படக்கூடாது. மாறாக, யதார்த்தமான, சமயோசிதமான, அறிவுபூர்வமான மனநிலையிலிருந்து இனப்பிரச்சினைக்கான தீர்வு அணுகப்பட வேண்டும். இன்று நீங்கள் விதை போடுங்கள்; நாளைய தலைமுறை, வளரும் கன்றுக்கு தண்ணீர் பாய்ச்சட்டும். அதற்கடுத்த தலைமுறை, வளரும் மரத்தைப் பாதுகாக்கட்டும். அப்படிச் செய்தால் அதற்கடுத்த தலைமுறை பழத்தை ருசிக்கலாம். இல்லை எனக்கு பழம் கிடைப்பதாக இருந்தால்தான் நான் எதையும் செய்வேன் என்று யோசித்தால், பூச்சியத்துக்குள் ஓர் இராச்சியத்தை கற்பனையில் கட்டி வாழ வேண்டியதுதான். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஒரே-இரவில்-தீர்வு/91-319873
  8. மீளாச் செலவு வழுவும் இனப்பிரச்சினைக்கான தீர்வும் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தை முழுமையாக, அதாவது மாகாண சபைகளுக்கு பகிரப்பட்டுள்ள அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்தால் பிடுங்கப்படாதவாறான முழுமையான அமல்ப்படுத்தல் வேண்டும் என்ற ரீதியில், முன்னாள் வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வீ விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் முன்மொழிவு செய்துள்ளார். இந்தச் செய்திக்கு, பலவாறான எதிர்வினைகள் தமிழர்களிடம் எழுந்துள்ளன. அதில் மேவி நிற்கும் எதிர்வினை, 13ஆம் திருத்தத்துக்காகவா, தமிழர்கள் இத்தனையை இழந்தார்கள் என்ற உணர்ச்சிவசப்பட்ட நிலையாகும். உணர்ச்சிவசப்பட்ட நிலைக்கு அப்பால், பகுத்தறிந்து சிந்திப்பதுதான் அறிவார்ந்த செயலாகும். அதற்காக உணர்ச்சி வசப்படுதலே பிழை என்று அர்த்தமல்ல. உணர்ச்சிகள் இயல்பானவை. ஆனால், அன்றாட வாழ்வில் கூட, நாம் உணர்ச்சிகள் காட்டும் வழியிலேயே பயணிப்பதில்லையே! ஆனால், 13ஆம் திருத்தத்துக்காகவே தமிழர்கள் இத்தனையை இழந்தோம் என்ற உணர்ச்சிவசப்பட்ட எதிர்வினையில், உணர்வு சார்ந்த நியாயங்கள் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. எதுவித திட்டங்களோ, அரசியல் நேர்மையோ இல்லாமல் இயலாமையின் வௌிப்பாடான உணர்வெழுச்சிப் பகட்டாரவாரமாக ‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ கொண்டுவரப்பட்டு, அது சாத்தியமென ‘தளபதி’களால் மக்கள் நம்பவைக்கப்பட்டு, இளைஞர்கள் ஆயுதமெடுத்து, இன்று ஓர் இனம் நான்கு தசாப்தங்களைத் தொலைத்துவிட்டு, நிர்க்கதியாக நிற்கிறது என்று சொன்னால், அந்த நான்கு தசாப்தகால இழப்பிற்கு ஏதாவது நியாயம் வேண்டாமா என்ற சிந்தனையில், உணர்வுரீதியான நியாயங்கள் இல்லாமல் இல்லை. ‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ நமக்கானதொரு விடிவொன்றைத் தரும்; அதை அடைந்துவிட முடியும் என்று நம்பவைக்கப்பட்ட எத்தனை இளைஞர்கள், தமது உயிரை தமது இனத்துக்காக ஆகுதியாக்கி இருக்கிறார்கள். அவர்களது தியாகத்துக்கு ஏதாவது நியாயம் வேண்டாமா என்ற சிந்தனையில், உணர்வுரீதியான நியாயங்கள் இல்லாமல் இல்லை. ஆனால், கடந்ததை எண்ணி, நிகழ்வதையும் நிகழப்போவதையும் மறந்துவிட முடியுமா என்பது, உணர்வுகளைத் தாண்டி அறிவுபூர்வமாகச் சிந்திக்க வேண்டிய விடயம். மேற்சொன்ன இழப்புகளைப் பற்றியும், 13ஆம் திருத்தத்துக்காகவா தமிழர்கள் இத்தனையை இழந்தார்கள் என்ற கேள்வியைப் பற்றியும் யோசிக்கையில், பொருளியலில் பேசப்படும் ‘மீளாச் செலவு’ பற்றி சிந்திக்க வேண்டியதாகிறது. பேராசிரியர் கொலின் ட்ரூறி, மீளாச் செலவுகளை ‘கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட முடிவால் உருவாக்கப்பட்ட மற்றும் எதிர்காலத்தில் எடுக்கப்படும் எந்த முடிவாலும் மாற்ற முடியாத செலவுகள்’ என்று வரையறுக்கிறார். பொருளியலில் மீளாச் செலவு என்பது ஏற்கெனவே ஏற்பட்டுள்ள மற்றும் திரும்பப் பெற முடியாத செலவைச் சுட்டுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மீளாச் செலவு என்பது கடந்த காலத்தில் செலுத்தப்பட்ட தொகையாகும். இது எதிர்காலம் பற்றிய முடிவுகளுக்கு இனிப் பொருந்தாது. ஆனால், இது பகுத்தறிந்து யோசித்தால் மட்டும்தான் புலப்படும். இதனால்தான் பொதுவில் மக்கள் இந்த மீளாச்செலவை எதிர்கால முடிவுகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளும் தன்மையை நாம் அவதானிக்கக் கூடியதாகவிருக்கிறது. இதனை மீளாச் செலவு வழு (sunk cost fallacy) என்று குறிப்பிடுவார்கள். மீளாச் செலவு வழு என்றால், ஏற்கெனவே முதலீடு செய்யப்பட்ட வளங்கள், மீட்க முடியாதவை மற்றும் வீணடிக்கப்படக்கூடாது என்ற நம்பிக்கையில் இருந்து இந்த வழு எழுகிறது. இது பகுத்தறிவற்ற முடிவெடுக்க வழிவகுக்கிறது. இதற்கு ஓர் எளிமையான உதாரணம், ஒருவரோடு பத்துவருடம் வாழ்ந்துவிட்டோம் என்ற காரணத்துக்காகவே, ஒரு மோசமான உறவைத் தொடர்வது. இந்த உறவை விட்டுவிட்டால், கடந்த பத்து வருடங்கள் இந்த உறவுக்காக செலவளித்த காலம் வீணாகிவிடும் என்ற சிந்தனை. ஆனால், பகுத்தறிந்து யோசித்துப் பார்த்தால், செலவான பத்து வருடம் செலவானதுதான்; அதனை மீட்டெடுக்க முடியாது. பத்து வருடம் வீணாகிட்டது என்பதற்காக, இன்னொரு பத்து வருடத்தையோ, இருபது வருடத்தையோ வீணடிப்பது என்பது எவ்வளவு அபத்தமானது. இதுதான் மீளாச் செலவு வழு. இந்த மீளாச் செலவு வழு என்பது, பொருளியலில் மட்டுமல்ல, நாம் எமது அன்றாட வாழ்விலும் விடும் பெருந்தவறாகும். அரசியலிலும் நாம் அதனையே செய்து கொண்டிருக்கிறோம். இன்றைக்கு தமிழ் மக்களுக்குத் தேவையான அரசியல் ரீதியாகப் பாடுபடுவதை விட்டுவிட்டு, 30 வருடங்கள், ஒரு நோக்கத்துக்காக நிறைய இழந்திருக்கிறோம். அந்த இழப்புகளும் தியாகங்களும் வீணாகிவிடக்கூடாது என்ற நோக்கத்துக்காக அரசியல் செய்வது என்பது வழுவானது; பகுத்தறிவுக்கு முரணாணது. இனப்பிரச்சினை பற்றிப் பேசும்போது, மீளாச் செலவு வழுவானது, இனப்பிரச்சினையை நிலைநிறுத்துவதற்கும் மேலும் தீவிரப்படுத்துவதற்கும் கணிசமான பங்கை வகிக்க கூடியதொன்றாக அமைகிறது. இன மோதல்கள் பெரும்பாலும் வரலாற்றுக் குறைகள், ஆழமான வேரூன்றிய பகைமைகள் மற்றும் இரு தரப்பிலும் உள்ள உரிமை பறிபட்ட பாதிக்கப்பட்ட நிலை ஆகியவற்றிலிருந்து எழுகின்றன. இத்தகைய இன முரண்பாடுகளில் ஈடுபட்டுள்ள தரப்பினர், தமது அரசியல் அடைவுகளுக்காக கணிசமானவற்றை முதலீடு செய்திருக்கலாம். அதாவது இழந்த உயிர்கள், உட்கட்டமைப்பு இழப்பு, மற்றும் அவர்களின் காரணத்துக்கான உணர்ச்சிபூர்வமான இணைப்புகள் போன்ற உறுதியான மற்றும் அருவமான நிறைய விடயங்கள் தமது அரசியல் அடைவுகளுக்காகத் தியாகம் செய்யப்பட்டிருக்கலாம். மீளாச் செலவு வழு என்பது முரண்பாடான தரப்பினரை தொடர்ந்து சண்டையிட அல்லது நல்லிணக்க முயற்சிகளை எதிர்க்க வழிவகுப்பதாக அமையும். ஏனெனில், அவர்கள் ஏற்கெனவே மோதலில் உயிர்கள் மற்றும் குறிப்பிடத்தக்க வளங்களை இழந்துள்ளனர். மோதலை கைவிடுவது அல்லது சமரசம் செய்வது அவர்களின் கடந்த கால தியாகங்களை அர்த்தமற்றதாக்கும் என்று அவர்கள் நம்பலாம். இன மோதல்களில் ஈடுபட்டுள்ள கட்சிகள் மீளாச் செலவு வழுவின் காரணமாக தமது இறுதி நோக்கத்தைத் தவிர்ந்த வேறு சமரசத்தை எதிர்க்கலாம். சலுகைகள் அல்லது சமரசங்களை ஏற்றுக்கொள்வது தோல்வியை ஒப்புக்கொள்வது அல்லது முந்தைய இழப்புகளை வீணடிப்பது என்பதாக அவர்கள் உணரலாம். இதனால் அமைதியான தீர்மானங்களுக்கான சாத்தியக்கூறுகள் தடைபடும். மீளாச் செலவு வழு என்பது மோதலுடன் உணர்ச்சிப்பூர்வமான பற்றை உருவாக்கி, இழப்புகளிலிருந்து பெறப்பட்ட அடையாளம் மற்றும் அந்த இழப்புகளுக்கு காரணமான நோக்கத்தின் உணர்வை ஆழமாக்குகிறது. இந்த உணர்வுபூர்வமான பற்று, விட்டுக்கொடுப்புகளுக்கு அல்லது சமரசம் தொடர்பிலான ஆக்கபூர்வமான உரையாடலில் ஈடுபடுவதற்கும் முட்டுக்கட்டையாக இருக்கிறது. இந்த இடத்தில், தமிழ் மக்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ‘மீளாச் செலவு வழு’ தமிழ் மக்களுக்கு மட்டும் உரியதல்ல. சிங்கள மக்களும் இதே மனநிலையில் இருக்கிறார்கள். எமது இளைஞர்கள் இராணுவத்தில் இணைந்து தமது உயிரையும் உடலையும் தியாகம் செய்து யுத்தத்தை வென்றது, தமிழ் மக்களுக்கு சமஷ்டியை வழங்கத்தானா என்று அவர்களும் ‘மீளாச் செலவு வழு’ மனநிலையில் சிந்திக்கலாம். இருதரப்பும் இப்படிச் சிந்தித்தால், தீர்வு என்பது ஒருபோதும் வராது.அரசியல்வாதிகள் தொடர்ந்தும் அரசியல் செய்து கொண்டிருக்கலாம். இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றி யோசிக்க வேண்டுமானால், இரு தரப்பும் நிறைய விட்டுக்கொடுப்புகளுக்குத் தயாராக வேண்டும். பிரச்சினையில் ஈடுபட்டுள்ள தரப்புகள், தங்கள் இலக்குகள் மற்றும் நோக்கங்களை விமர்சன ரீதியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். கடந்த கால முதலீடுகளின் அடிப்படையில் மட்டுமே, இலக்குகளைத் தொடர்வதன் பகுத்தறிவற்ற தன்மையை ஏற்றுக்கொள்வது, மற்றும் எதிர்காலத்துக்கான சாத்தியமான பலன்களில் கவனம் செலுத்துவது என்பன முக்கியமானவை. மேலும், மீளாச் செலவு வழுவைத் தவிர்க்க பிரச்சினையை தொடர்வதற்கான சந்தர்ப்பச் செலவுகளை கருத்தில் எடுப்பது ஒரு பயனுள்ள உத்தியாக இருக்கும். மோதல்கள் இல்லாத நிலையில் உணரக்கூடிய வளர்ச்சி மற்றும் செழிப்புக்கான வளங்கள் வீணடிக்கப்பட்டமை, இழந்த உயிர்கள் மற்றும் தவறவிட்ட வாய்ப்புகள் குறித்து கட்சிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். இனியும் அப்படியான அழிவு வேண்டுமா என்பதை இருதரப்பும் யோசிக்க வேண்டும். நம்பிக்கையை கட்டியெழுப்புதல் மற்றும் முரண்பட்ட குழுக்களிடையே உறவுகளை வளர்ப்பது, மீளாச் செலவு வழுவுடன் தொடர்புடைய உணர்ச்சிகரமான பற்றை எதிர்கொள்ள உதவும். பரஸ்பர புரிதல், பச்சாத்தாபம் மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம், கட்சிகள் படிப்படியாக நல்லிணக்கத்தை நோக்கி செயற்பட முடியும். சாவதற்கு இளைஞர்களை உசுப்பேத்த முடியுமென்றால், அவர்களை சிறப்பாக வாழ்வதற்கு உசுப்பேத்த அரசியல்கட்சிகளால் முடியும். அதனை அவர்கள் செய்வார்களா என்பதுதான் கேள்வி. கடந்த கால முதலீடுகள் எதிர்கால முடிவுகளைத் தீர்மானிக்க வேண்டும் என்ற கருத்தை மறுப்பதன் மூலம், முரண்பட்ட தரப்பினர் பகிரப்பட்ட நலன்கள், நீண்ட கால நன்மைகள் மற்றும் நிலையான தீர்வுகளை நோக்கி தங்கள் கவனத்தை மாற்ற முடியும். இல்லை, நாம் மீளாச் செலவு வழுவோடுதான் வாழ்வோம் என்று ஓர் இனம் எண்ணுமேயானால், அவ்வினத்தை இறைவனால்கூட உய்விக்க முடியாது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மீளாச்-செலவு-வழுவும்-இனப்பிரச்சினைக்கான-தீர்வும்/91-319648
  9. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கைது என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் பெயரில், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்த ஏழாம் திகதி காலை கொள்ளுப்பிட்டியிலுள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டு, கிளிநொச்சி அழைத்துச் செல்லப்பட்டு, கிளிநொச்சி பொலிஸின் வாக்குமூலம் பெற்ற பின்னர், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் கைது செய்வதிலும், உடனே நீதவான் முன்பு ஆஜர் படுத்துவதிலும், குற்றஞ்சாட்டப்பட்டவர் பிணையில் விடுதலை செய்யப்படுவதும் சாதாரண நடைமுறைதானே! அப்படியிருக்கையில், கஜேந்திரகுமாரின் கைது இவ்வளவு பேசப்பட என்ன காரணம் என எவரேனும் வினவலாம். கஜேந்திரகுமாரின் கைதானது, கஜேந்திரகுமார் என்ற தனிநபரின் மீதானதும், அவர் முன்வைக்கும் தமிழ்த் தேசிய அரசியலின் மீதானதுமான அடக்குமுறையாகப் பார்க்கப்படுவதற்கான நியாயங்கள் சில இருக்கின்றன என்பதை நடந்த விடயங்களை அலசிப் பார்க்கும் போது ஓரளவு புரிகிறது. கஜேந்திரகுமாரின் மீதான குற்றச்சாட்டு என்ன? பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை. அப்படி என்ன இடையூறு விளைவித்தார் என்ற கேள்வியிலே தேடலைத் தொடங்க வேண்டியதாகவுள்ளது. யாழ்ப்பாணம், மருதங்கேணி பகுதியில் விளையாட்டுக் கழக உறுப்பினர்களை சந்திக்க கஜேந்திரகுமார் சென்று, அங்கு விளையாட்டுக்கழக உறுப்பினர்களை பொது மைதானமொன்றில் சந்தித்த வேளை, அங்கு சந்தேகத்திற்கு இடமான ஒருவர் நடமாடிக் கொண்டிருந்ததை அவதானித்த கஜேந்திரகுமாரின் பகுப்பாய்வு அதிகாரி, குறித்த நபரிடம் அவரது ஆளடையாளம் பற்றி வினவிய போது, அவர் தன்னை ஒரு பொலிஸ் புலனாய்வு அதிகாரி என குறிப்பிட்டிருந்தார். அவ்வேளை கஜேந்திரகுமாரின் பகுப்பாய்வு அதிகாரியும், கஜேந்திரகுமாரும் குறித்த நபரிடம் உங்கள் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கோரியபோது, அவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அவரைத் தடுக்க கஜேந்திரகுமார் முயன்ற போது, அவரை உதறித்தள்ளிவிட்டு அந்த நபர் ஓடிச்செல்கிறார். அங்கு குறித்த நபருடன் வந்திருந்த இன்னொரு நபரை கஜேந்திரகுமார் தரப்பினர் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதற்கிடையில், குறித்த பொது மைதானத்தோடு ஒட்டியமைந்த பரீட்சை மையத்தில் கடமையிலிருந்த சிவில் உடை தரித்த பொலிஸாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நபர் ஒருவருக்கும், கஜேந்திரகுமாருக்கும் கடும் வாக்குவாதமும் நிகழ்ந்துள்ளது. இவையெல்லாம் ஊடகப் பதிவுகள் மூலமும், சமூக ஊடகப் பதிவுகள் மூலமும் நமக்கு அறியக்கிடைத்தவை. இதேவேளை, மருதங்கேணி சம்பவம் தொடர்பில் எம்.பி கஜேந்திரகுமார், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் முறைப்பாடு செய்திருந்தார். ஆனால், அவர் பொலிஸில் முறைப்பாடு செய்தாரா என தெரியவில்லை. ஓர் எம்.பியாக கஜேந்திரகுமார், குறித்த சந்தர்ப்பத்தில் நடந்துகொண்ட விதம் பற்றியும், வாக்குவாதத்தில் ஈடுபட்ட விதம் பற்றியும் பல தரப்பட்ட கருத்துகள் சமூக ஊடகங்களில் முன்வைக்கப்படுகின்றன. பாராளுமன்றத்திற்குள்ளேயே அப்பட்டமான ரௌடியிசத்தை முன்னெடுத்து, பாராளுமன்றச் சொத்துகளை சேதப்படுத்திய, பாராளுமன்றத்தை இயங்கவிடாது செய்த, எம்.பிக்களைக் கொண்ட கட்சியினர், கஜேந்திரகுமாரின் நடவடிக்கையை கேள்வி கேட்பதெல்லாம் பெரும் முரண்நகை. ஆனால், கஜேந்திரகுமார் இன்னும் கொஞ்சம் பக்குவமாக நிலைமையைக் கையாண்டிருக்கலாம் என்பதிலும் உண்மை இல்லாமல் இல்லை. நாம் ஒரு பொது இடத்தில், இருந்து பேசும் போது, அருகில் இரண்டு பேர் வந்து நின்றால், அவர் யார், ஏன் நிற்கிறார் என்று வினவ வேண்டிய அவசியம் கிடையாது. அது பொது மைதானம். யாரும் வரலாம், நிற்கலாம். நேரடியாக அவர்கள் உங்களுக்கு இடையூறு விளைவிக்காத வரை, அவர்கள் யாரென்ற விசாரணை தேவையற்றது. தனியார் இடத்திற்கும், பொது இடத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. மேலும், சாதாரணமாக அரசியல் நிகழ்வுகளை அரச புலனாய்வுத்துறைகள் அவதானித்து வருவது, அரசியல் யதார்த்தம். ஆகவே, இந்தப் பிரச்சினையின் ஆரம்பமே ஒரு தேவையற்ற விசாரிப்பில் தொடங்கியிருக்கிறது என்றே தோன்றுகிறது. அது எவ்வாறு அமையினும், கஜேந்திரகுமாரின் கைது என்பது இங்கு முற்றிலும் வேறோர் பரிமாணத்தையே காட்டி நிற்கிறது. இந்தநிலையில் கஜேந்திரகுமாருக்கு எதிராக பயணத்தடையுத்தரவு மருதங்கேணி பொலிஸாரினால் பெறப்பட்டிருந்தது. கஜேந்திரகுமார் தனது ட்விட்டரில் வௌியிட்ட ஆவணங்களின் படி, கஜேந்திரகுமார் எம்.பியை, ஜூன் மாதம் எட்டாம் திகதி, காலை 10 மணிக்கு மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கும், வாக்கு மூலம் வழங்கவும் வருமாறு ஜூன் ஆறாம் திகதி கொள்ளுப்பிட்டி பொலிஸினூடாக கஜேந்திரகுமாருக்கு தகவல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதலில் இந்தத் தகவல் சிங்கள மொழியில் மட்டும் வந்தபோது, அதனை ஏற்கவில்லை. தமிழும் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழிகளில் ஒன்று. ஆகவே ஒரு தமிழர் அரச ஆவணமொன்றை தமிழில் தருமாறு கேட்பது அவரது மொழியுரிமை. அதனை ஏற்றுக்கொண்டு பொலிஸாரும், குறித்த செய்தியை மும்மொழிகளிலும், ஆறாம் திகதியே கஜேந்திரகுமாருக்கு வழங்கியிருக்கிறார்கள். இதன்படி, அவரை மருதங்கேணி பொலிஸிற்கு எட்டாம் திகதி காலை 10 மணிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதற்கிடையில், மருதங்கேணி சம்பவம் தொடார்பிலும், பொலிஸாரின் சட்டவிரோத நடவடிக்கை தொடர்பிலும் பாராளுமன்ற வரப்பிரசாத மீறல் விடயமொன்றை ஏழாம் திகதி எழுப்புவதற்கான அறிவித்தலை, சபாநாயகருக்கு ஆறாம் திகதியே எழுத்துமூலம் கஜேந்திரகுமார் அறிவித்திருந்தார். இந்த நிலையில், திடீரென்று, ஏழாம் திகதி காலை, கஜேந்திரகுமார் பாராளுமன்றம் செல்லத் தயாரான போது, பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். எட்டாம் திகதி காலை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு தகவல் அனுப்பிவிட்டு, குறித்த நபருக்கு எதிரான பயணத்தடை உத்தரவையும் பெற்றுவிட்டிருந்த நிலையில், அவரை ஏழாம் திகதி காலையில் கைது செய்ய வேண்டியது ஏன்? இது முறையற்ற நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோதக் கைது என இந்த விடயத்திலேயே புலப்படுகிறது. கஜேந்திரகுமாருக்கு எதிராக நீதிமன்றில் பயணத்தடை பெற்ற பொலிஸார், அவரைக் கைது செய்வது அத்தியாவசியமானது என்றால், நீதிமன்றிடம் அதற்கான ஆணையையும் கோரியிருக்கலாம். ஆனால், நீதிமன்றக் கட்டளை எதுவுமில்லாமல், பாராளுமன்றத்தில் வரப்பிரசாத மீறல் பிரச்சினையை எழுப்பவிருந்த ஒரு எம்.பியைக் கைது செய்தமை, சட்ட விரோதமானது என்பதை விட, அது ஒரு மிகப் பெரிய ஜனநாயக விரோதச் செயலாகும். ஒரு நியாயமான சபாநாயகர், இதனை உடனே தடுத்து நிறுத்தியிருப்பார். குற்றவியல் விடயங்கள் தொடர்பில் எம்.பிக்களைக் கைதுசெய்வது, பாராளுமன்ற வரப்பிரசாதங்களுக்குள் அடங்காது. ஆனால், அந்தக் கைது சட்டபூர்வமானதாக இருக்க வேண்டும். ஒரு பாராளுமன்ற உறுப்பினரை சட்டவிரோதமாகக் கைது செய்வது, அதுவும் அவர் பாராளுமன்றம் செல்லவதைத் தடுக்கும் வகையில் கைது செய்வது பாராளுமன்ற வரப்பிரசாதத்தை மீறும் செயலாகவே பார்க்கப்பட வேண்டும் என்பதோடு, பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் செயலாகவே பார்க்கப்பட வேண்டும். ஆனால், அதனை அப்படி பார்க்கும் நிலையில் இந்தச் சபாநாயகர் இல்லை என்பதையே அவரது நடவடிக்கைகளும், பேச்சும் கோடிட்டு காட்டி நிற்கின்றன. இதனால்தான் கஜேந்திரகுமாரின் கைது என்பதை, அரச அடக்குமுறையின் இன்னொரு வடிவமாகப் பார்ப்பவர்களைப் பிழை சொல்ல முடியாதுள்ளது. ஒரு பாராளுமன்ற உறுப்பினரையே பொலிஸார் இப்படி நடத்துகிறார்கள் என்றால், சாதாரண மக்களின் நிலையென்ன? அதிலும் குறிப்பாக அடக்குமுறைக்குள்ளாகும் சிறுபான்மை மக்களின் நிலையென்ன என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியாதுள்ளது. டிரான் அலஸ் போன்ற மனித உரிமைகள் பற்றி கொஞ்சமும் அக்கறைகாட்டாத ஒரு நபரை, பொலிஸிற்குப் பொறுப்பான அமைச்சராக வைத்துக்கொண்டு, ரணில் விக்கிரமசிங்கவால் ஜனநாயக ஆட்சியை முன்னெடுக்க முடியாது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். இல்லை, அடுத்த தேர்தல் வெற்றிக்காக அவரும் தன்னை இனத்தேசிய அரசியலில் ஆழ்த்துவாரேயானால், அவர் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதை காலம் அவருக்கு தௌிவாக உணர்த்தும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கஜேந்திரகுமார்-பொன்னம்பலத்தின்-கைது/91-319307
  10. தமிழ்த் தேசியத்தை சிதைப்பதற்கான தந்திரோபாயங்கள் என்.கே அஷோக்பரன் தேசம், மற்றும் தேசியம் என்றால் என்ன என்பது மிகப்பெரியதொரு ஆய்வுப்பரப்பு. இவற்றை வரவிலக்கணப்படுத்துவது கூட சுலபமான காரியங்கள் அல்ல. புலமைத்தளத்தில் அகநிலை வரவிலக்கணங்கள், புறநிலை வரவிலக்கணங்கள் என்று பல வரவிலக்கணங்களைப் பலரும் வழங்கியிருக்கிறார்கள். என்னுடைய முன்னைய பல பத்திகளில் இவை பற்றி விரிவாகப் பேசியிருக்கிறேன். அது என்ன புறநிலையில் அணுகும் வரைவிலக்கணம்? தேசம் என்ற சொல்லை வரைவிலக்கணம் செய்த சோவியத் யூனியனின் கொம்யூனிஸ சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலின், “வரலாற்று ரீதியாகக் கட்டமைந்த, பொதுவான மொழி, பொதுவான பிரதேசம், பொதுவான பொருளாதார வாழ்க்கை, பொதுக் கலாசாரத்தினூடாக வௌிப்படும் பொதுவான உளவியலமைப்பு ஆகிய அடிப்படைகளைக் கொண்டமைந்த, நிலையான மக்கள் சமூகமொன்று, ஒரு தேசமாகும்” என்று வரையறுக்கிறார். அதாவது, புறநிலையில் வைத்து ஆராயக்கூடிய விடயங்களான பொதுவான மொழி, பொதுவான பிரதேசம், பொதுவான பொருளாதார வாழ்க்கை, பொதுக் கலாசாரத்தினூடாக வௌிப்படும் பொதுவான உளவியலமைப்பு ஆகிய அம்சங்களை, ஒரு மக்கள் சமூகமானது, ஒரு தனித்த தேசமாக வரையறுக்க முடியும் என்கிறார். மறுபுறத்தில், ஏனஸ்ட் றெனன் போன்ற அறிஞர்கள், தேசம் என்ற கருத்தியலை, அகநிலையில் அணுகும் வரைவிலக்கணங்களை முன்வைக்கிறார்கள். தேசம் என்ற கருத்தியலை வரையறுக்கும் ஏனஸ்ட் றெனன், “ஒரு தேசம் என்பது, ஒருவர் செய்த தியாகம், ஒருவர் மீண்டும் செய்வதற்குத் தயாராக இருக்கும் தியாகம் என்ற உணர்வின் பாலாக, கட்டமைந்த மாபெரும் ஒற்றுமையாகும். அது கடந்த காலத்தை எண்ணத்தில் கொள்கிறது; அது நிகழ்காலத்தில் தொடர்ந்து, பொது வாழ்க்கையைக் கொண்டமைவதற்கான தௌிவான வகையில் வௌிப்படுத்தப்படும் அங்கிகாரம், விருப்பு ஆகிய உறுதியான செயற்பாடுகளினூடாகத் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. ஒரு தேசத்தின் இருப்பு என்பது, நித்திய பொதுவாக்கெடுப்பாகும்” என்கிறார். இந்தப் புறநிலை, அகநிலை வரைவிலக்கணங்கள் பற்றி, மிக எளிமையாக எடுத்துரைப்பதானால், புறநிலை வரைவிலக்கணங்களானவை, குறித்த அம்சங்களை ஒரு மக்கள் கூட்டம் கொண்டிருக்கும் போது, அது ஒரு தனித்த தேசமாகும் என்கிறது. இங்கு அந்த மக்கள் கூட்டத்தின் மனநிலை, அதாவது அகநிலை விடயங்கள் கருத்திலெடுத்துக் கொள்ளப்படவில்லை. அதாவது அந்த மக்கள், அகநிலையில் தம்மை ஒரு தேசமாகக் கருதிக்கொள்கிறார்களா இல்லையா என்பதைப் புறநிலை அணுகுமுறை கருத்திலெடுப்பதில்லை. புறநிலையம்சங்கள் எப்படியிருந்தாலும், ஒரு மக்கட் கூட்டம் தன்னை ஒரு தேசமாக உணராத வரை, தேசம் என்ற எண்ணக்கரு உதிக்காது. தாம் ஒரு தேசம் என்ற ஒரு மக்கட் கூட்டத்தின் அடையாளத்தின் கரு, அடிப்படை, அஸ்திவாரம் எல்லாம் அந்த மக்கட் கூட்டம் தம்மை அவ்வாறாக உணர்வதுதான். தமிழ்த் தேசமும் இதற்கு விதிவிலக்கல்ல. நிற்க. வடக்கு-கிழக்கில், தமிழ் மக்களுக்குள்ளான மத ரீதியான பிரிவினைகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தலைதூக்கத் தொடங்கியுள்ளன. ஒரு தேசத்திற்குள் மதங்கள் பல இருக்கலாம். தமிழ்த் தேசத்திற்கும், மதங்களுக்குமிடையிலான உறவு சுமுகமானதாகத்தான் பராமரித்துக்கொள்ளப்பட்டது. இலங்கையின் பெருந்தேசியவாதம் தன்னை “இன-மதத் தேசியவாதமாக” வரையறுத்துக்கொண்ட போதும், தமிழ்த் தேசியவாதமானது தன்னை “இனத் தேசியவாதமாகவே” வரையறுத்துக்கொண்டது. அந்த வரையறையைத் தீர்மானித்ததில் பெருந்தேசியவாதத்தின் பங்கு முக்கியத்துவம் மிக்கது. ஏனெனில் பெருந்தேசியவாதம் தனது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டபோது, அது “தமிழ்” என்ற அடையாளத்தை மட்டும் பார்த்ததேயன்றி, மத அடையாளத்தை கருத்திற்கொள்ளவில்லை. அதற்கு முக்கிய காரணம், பெருந்தேசியவாதத்தின் மத அடையாளத்திற்கும், தமிழர்களின் மத அடையாளமும் ஒருங்கிணையும் புள்ளி, யதார்த்தத்தில் பூச்சியத்தை அண்டியிருந்தமையாகும். ஆகவே, “தமிழ்” என்ற அடையாளத்தினால் அடக்கு முறைக்குட்படுத்தப்பட்டதனால், அம்மக்கள் கூட்டம் அதே அடையாளத்தை முன்னிறுத்திய “தற்காப்புத் தேசியத்தை” கட்டமைத்தக்கொண்டது. மதங்களை மேவிய “தமிழ்த் தேசம்” எனும் அடையாளம், வடக்கு-கிழக்கு தமிழ் மக்களின் அரசியல், சமூக அடையாளமானது. “தமிழ்த் தேசம்” எனும் அடையாளம் கட்டுறுதி பெறும் காலத்திலும் கூட, மதரீதியான அடையாளத்தை முன்னிறுத்தும் முயற்சிகள் நடந்தன. ஆனால் பெரும்பான்மைத் தமிழ் மக்கள் அதனை நிராகரித்திருந்தார்கள். “வேலா, சிலுவையா” என்ற மத ரீதியாக வாக்களிக்கக் கோரிய முழக்கம், வேல் தாங்கிய கந்தனை வணங்கும் சைவப்பெருமக்கள் நிறைந்த தேர்தல் தொகுதியில் வெற்றி காணவில்லை. அதன் பின்னர் காலவோட்டத்தில் மத ரீதியான அணுகுமுறை அடங்கிப்போனது. இதற்கு மத ரீதியிலான புரிந்துணர்வு இருந்தமையும் முக்கிய காரணம், அதேவேளை தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் அணுகுமுறையும் இன்னொரு காரணம். தமிழ்த் தேசிய அரசியலில் மதம் என்பது பேசாப்பொருளானது. அது மக்களுடைய தனிப்பட்ட வாழ்வின், கலாசாரத்தின் அடையாளமாக உறுதியாக நீடித்தது. ஆனால் கடந்த அரைத் தசாப்தகாலத்தில், இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருவதை உணரக் கூடியதாகவுள்ளது. மத ரீதியான பிரச்சினைகள் தமிழ் மற்றும் கிறிஸ்தவ மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில், அதிகம் தலையெடுக்கத் தொடங்கியுள்ளதை நாம் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இந்தப் பிரச்சினைகள் மற்றும் முறுகல்கள் திடீரென்று வந்தவை அல்ல. அரசியல் பரப்பில் இடம் வழங்கப்படவில்லை. ஆனால் இன்று இவை அரசியலாக மாற்றப்படுவதற்கான அறிகுறிகள் மிகத் தௌிவாகத் தென்படுகின்றன. அரசியல் மையவோட்டத்தில் மத அடையாளங்கள் நுழைவதற்கான பிள்ளையார் சுழி இது. அது மட்டுமல்ல, “தமிழ்த் தேசிய” அரசியலை மீள் வரைவிலக்கணம் செய்வதற்கான முயற்சியும் கூட! சிலவேளைகளில் மீள் வரைவிலக்கணம் என்பது ஒன்றை முற்றாகச் சிதைப்பதாகவும் அமையக்கூடும். அது தான் இங்கு நோக்கம் எனலாம். மத ரீதியான “பிளவு” ஒரு பக்கம் நடக்கத்தொடங்கியிருக்கும் போது, மறுபுறத்தில் “சாதி” ரீதியான அரசியல் இங்கு நுழைக்கப்படுவதையும் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. இலங்கைத் தமிழ் அரசியலில் சாதிக் கட்சிகள் இருந்ததில்லை. “தமிழ்த் தேசிய” அரசியலில், குறிப்பாக தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் எழுச்சிக்குப் பின்னர், “சாதி” ஒரு பிரச்சினைக்குரிய அம்சமாக இருந்ததில்லை. இதற்கு அர்த்தம் சமூகத்தில் சாதிகள் இல்லாதொழிந்தன என்பதல்ல. சாதிய அடக்குமுறைகள் கணிசமாகக் குறைந்தன. ஆனால் ஆங்காங்கே சாதிய வேறுபாடுகள், பாகுபாடுகள் உள்ளன என்பதையும் மறுப்பதற்கில்லை. அவை சட்ட விரோதமான நடவடிக்கைகள். அவற்றைச் சட்டம் கொண்டே சரிப்படுத்திவிட முடியும். ஆனால், இன்று திடீரென இலங்கைக்கு சம்பந்தமே இல்லாத “தலித்தியம்” பேசிக்கொண்டு சிலர் “சாதி அரசியலை” தமிழ் மக்களிடையே முன்னெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இலங்கை தமிழரிடையேயான சாதி அமைப்பு என்பது, வர்ணாச்சிரமத்தின் பாற்பட்டதல்ல. “தலித்தியம்” என்பது வர்ணாச்சிரமத்தின் அடிப்படையிலான சாதிகளின் பாற்றபட்டது. இந்திய சாதிக்கட்டமைப்பிலிருந்து, இலங்கை தமிழரிடையேயான சாதிக்கட்டமைப்பு அடிப்படையிலேயே வேறுபட்டது. இலங்கைத் தமிழரிடையே “தலித்தியம்” என்று பேசுவதே அடிப்படையில் அர்த்தமற்றது. தமிழ்த் தேசிய அரசியல் சாதி ஏற்றத்தாழ்வுகளை நிராகரிக்கும் அரசியலாகத்தான் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் திடீரென்று “சாதிய” அரசியலை இங்கு நுழைக்கக் காரணம், தமிழ்த் தேசிய அரசியலை பலமிழக்கச் செய்வதற்குத்தான் என்பது தௌிவாகத் தெரிகிறது. தமிழ்த் தேசியத்தை “மதம்” கொண்டு பலமிழக்கச் செய்ய ஒரு தரப்பு முயல்கிறதென்றால், அதனை “சாதி” கொண்டு பலமிழக்கச் செய்ய இன்னொரு தரப்பு முயல்கிறது. ஒவ்வொரு தரப்பிற்கு ஒவ்வொரு நிகழ்ச்சி நிரல்! இந்த “சாதிய அரசியல்” உள்நுழைப்பிற்கு, இன்று திராவிட சிந்தனையின் கட்டுப்பிடிக்குள் முழுமையாகச் சிக்கியிருக்கும் பி.பி.சி. தமிழ், இந்த “சாதிய அரசியலுக்கு” முட்டுக்கொடுக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. தமிழ்த் தேசிய எண்ணம் என்பது திராவிட அரசியலுக்கு எதிரானது என்பதற்காக, அதனை தமிழ் நாட்டில் மட்டுமன்றி, இலங்கையிலும் இல்லாதொழித்துவிட திராவிடக் கூட்டம் முயல்கிறது போலும். மேலும் இலங்கைத் தமிழ்த் தேசியம் என்பது மத விரோதியல்ல, குறிப்பாக இந்து மத விரோதியல்ல. ஆகவே இதுகூட, தமிழ்த் தேசியத்தை தகர்ப்பதற்கு திராவிட அரசியலுக்கு மிக முக்கியமான தேவையாக இருக்கலாம். எது எவ்வாறாயினும், மத ரீதியான, சாதி ரீதியான பிளவுகளும், அதை மையப்படுத்திய அரசியலும் தமிழ் மக்களுக்கு ஆரோக்கியமானதொன்றல்ல என்பதை தமிழ் மக்கள் புரிந்துகொள்ளத் தவறினால், தமிழ்த் தேசம் என்பது சிதைந்துபோகும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்த்-தேசியத்தை-சிதைப்பதற்கான-தந்திரோபாயங்கள்/91-318683
  11. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது அணுகுமுறையை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan.com யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு, தையிட்டி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புத்த விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி, மே மாத ஆரம்பத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சிறிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர். போராட்டம் ஆரம்பமான காலப் பகுதியானது, வெசாக் நிகழ்வுகள் இடம்பெற்ற காலப்பகுதியாகும். எட்டரை ஏக்கர் காணியில் இராணுவத்தினரால் ‘திஸ்ஸ விகாரை’ என்ற இந்தப் புத்த விகாரை தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான முடிக்கலசம் வைக்கும் நிகழ்வு, ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி நடைபெற்றதாக அறியக் கிடைக்கிறது. ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் போராட்டம், மே மாதம் மூன்றாம் திகதிதான் தொடங்கியது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையிலான சிறியளவிலான போராட்டக்காரர்கள், 14 குடும்பங்களுக்கு சொந்தமான அண்ணளவாக 100 பரப்பு காணியை விடுவிக்க கோரியும் சட்டவிரோதமாக கட்டப்பட்ட பௌத்தக் கட்டுமானத்தை அகற்றக் கோரியும் பௌத்தமயமாக்கல் திணிப்பை எதிர்த்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம், மே மூன்றாம் திகதி முதல் ஐந்தாம் திகதி வரை நடைபெற்றது. விகாரை வழிபாட்டுக்கு இடையூறு விளைவிக்கக்கூடாது என்ற மல்லாகம் நீதிமன்றின் கட்டளையைத் தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டதாக ஊடகப் பதிவுகள் குறிப்பிடுகின்றன. மே ஐந்தாம் திகதி இரவு எட்டு மணியளவில் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அறிவித்தார். மேலும், அப்பிரதேச மக்களுடன் கலந்துரையாடிய பின்னர், அடுத்தக்கட்ட செயற்பாடு தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த நிலையில், மே 23ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட சிறியளவிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர், மீண்டும் தையிட்டி விகாரை அமைந்த பகுதியில் தமது போராட்டங்களை ஆரம்பித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், பொலிஸாரால் மல்லாக்காகத் தூக்கிச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதாக பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டிருந்தார். அத்தோடு, தனியார் காணியில் அமைக்கப்பட்டுள்ள 15 குடும்பங்களின் உறுதி பத்திரம் உள்ள காணியே இது என்றும், இங்கு இராணுவத்தினர் அடிக்கல் வைத்த வேளை, அது தொடர்பில் கேட்ட போது, “அவ்வாறு தனியார் காணியில் விகாரை அமைக்க முடியாது” என்று அதிகாரிகள் உறுதி அளித்திருந்ததாகவும், ஆனால், அங்கே தற்போது விகாரை அமைக்கப்பட்டு உள்ளதாகவும், இவ்வாறான நிலையில், கடந்த 23 ஆம் திகதி தாங்கள் அங்கே போராட்டத்தை முன்னெடுத்து இருந்ததாகவும், அதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனை பொலிஸார் தாக்கியுள்ளதாகவும், பாராளுமன்ற அமர்வு வாரம் என்பதால், அவரைக் கைது செய்வதில் சிக்கல்கள் இருந்தமையால் அதற்குப் பதிலாக அங்கிருந்த, சட்டத்தரணி சுகாஸ் உள்ளிட்ட ஒன்பது பேரை கைது செய்ததாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டிருந்தார். தனியார் காணியெனில், அதில் ‘சட்டவிரோமாக’ விகாரை கட்டப்பட்டிருந்தால் அது தவறு. அமைதியான வழியில் போராடுபவர்கள், நீதிமன்ற கட்டளையை மீறாதவரை, அந்தப் போராட்டத்தை பொலிஸார் தடுப்பதும் தவறு. அநீதியான வகையில் கைதுகள் இடம்பெற்றிருந்தால் அதுவும் தவறு. இவையெல்லாம் சட்ட விரோத காரியங்கள். ஆனால், இவை எல்லாவற்றையும் மேவி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரிடம் சில கேள்விகளைக் கேட்க வேண்டியதாக உள்ளது. முதலாவதாக, தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணி எனும் போது, அதில் விகாரை கட்டப்படும் வரை, அதன் உரிமையாளர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அல்லது அதுவரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ன செய்து கொண்டிருந்தது? சரி, தனியார் காணியில் சட்டவிரோதமாக இராணுவம் விகாரை அமைக்கிறது என்றால், அதனை சட்டரீதியாக காணி உரிமையாளர்கள் ஏன் எதிர்க்கவில்லை. நேரடியாக சட்டத்தின் உதவியை நாட, அவர்களுக்கு வழியில்லை என்றால், ‘லோயர்ஸ்’ என்று மேற்சட்டைக் ‘கொலரை’த் தூக்கிக்காட்டும் சட்டத்தரணிகள் உள்ள, சட்டத்தரணி உடையில் போராட்டத்தில் பங்கேற்கும் சட்டத்தரணிகள் உள்ள, பொலிஸார் காரை மறிக்கும் போது சட்டத்தரணி அடையாள அட்டையை நீட்டிக் காட்டி, அதிகாரம் செய்யும் சட்டத்தரணிகள் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஏன் அம்மக்களுக்கு சட்ட உதவியை அளிக்கவில்லை? இன்று, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்று ஒரு புதுப்பெயரைச் சூடியிருந்தாலும், அவர்கள் தேர்தலைச் சந்திப்பது, இலங்கையின் மிகப்பழைமையும், பாரம்பரியமும் மிக்க ‘அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்’ என்ற கட்சியில் தான். ஜீ.ஜீ பொன்னம்பலம் என்ற தன்னிகரில்லா குற்றவியல் வழக்குரைஞர் தொடங்கிய கட்சி. எத்தனை சிறந்த, மிகப்பெரும் ஆற்றல் கொண்ட சட்ட மரபைக் கொண்டதொரு கட்சி; எதையும் சட்டரீதியியாக அணுக முடியாது, பத்துப் பேரைச் சேர்த்து ‘போராட்டம்’ நடத்தும் நிலைக்கும், ஒரு சட்டத்தரணி, பொலிஸாருக்கு தனது மேற்சட்டைக் ‘கொலரை’ தூக்கிக்காட்டி, “லோயர்ஸ் ஆ... லோயர்ஸ்” என்று சொல்லும் தாழ் நிலையில் இருப்பது, தமிழ்த் தேசிய அரசியலின் வறட்சி நிலையை வௌிக்காட்டி நிற்கிறது என்றால் அது மிகையல்ல. இது சட்டரீதியாகவும், முளையிலேயே அணுகப்பட்டிருக்க வேண்டியதொரு பிரச்சினை. தனியார் காணியை, இராணுவம் வலுக்கட்டாயமாக சுவீகரிக்க முடியாது. அரசு சுவீகரிப்பதானால், அதற்கு சட்டரீதியான தகுந்த வழிகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றாது அரசு வலுக்கட்டாயமாக தனியார் காணியைச் சுவீகரிக்க முடியாது. இல்லை! இந்நாட்டின் சட்டம் தமிழர்களைக் காப்பாற்றாது என்று அரசியல் வியாக்கியானத்தை தமிழ்த் தேசிய முன்னணியினர் முன்வைக்கலாம். குறித்த பிரச்சினையைத் தீர்க்க சட்டத்தை அணுகாது, சட்டம் தமிழர்களைக் காப்பாற்றாது என்று சொல்வதில் நியாயமில்லை. ஒருவேளை முறையாக சட்டத்தை அணுகி, அதில் அநீதி இழைக்கப்பட்டால், அதற்கெதிராக ஜனநாயக ரீதியில் குரல்கொடுப்பதில் நியாயமுண்டு. ஆனால், வெற்று வியாக்கியானங்கள் சொல்லிக்கொண்டு, வங்குரோத்து அரசியல் செய்வதில் அர்த்தமில்லை. 2018இல், மைத்திரிபால சிரிசேன, அரசியலமைப்புக்கு விரோதமாக மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமராக்கி, பாராளுமன்றத்தை அரசியலமைப்புக்கு விரோதமாகக் கலைத்தபோது, அதற்கெதிரான முதல் வழக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனால் எழுப்பப்பட்டிருந்தது. தமிழ் மக்கள் உள்ளிட்ட இந்நாட்டின் மக்கள் பாதிப்படையக்கூடிய சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பல சந்தர்ப்பங்களிலும், அதனை அரசியலமைப்பு ரீதியலாக சவாலுக்குட்படுத்தி, அந்த வழக்கை முன்னின்று வாதாடியதில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான ம.ஆ சுமந்திரனின் பங்கு குறிப்பிடத்தக்கது. இத்தகைய எந்தவொரு சட்டரீதியிலான முன்னெடுப்பையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செய்திருக்கிறதா என்று கேட்க வேண்டியதாக இருக்கிறது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என்ற தனிநபரின் நேர்மையும், கொள்கைப்பிடிப்பும் மட்டும் ஒரு கட்சியினதும், அந்தக் கட்சி பிரதிநிதித்துவம் செய்யும் மக்களினதும் உய்வுக்குப் போதாது என்பதை கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் விரைவில் புரிந்துகொள்ள வேண்டும். இந்தப் பத்தியின் நோக்கம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுக்கும் இராணுவத்தினரின் காணி அபகரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை கேள்வி கேட்பதல்ல; மாறாக, பத்துப் பேர் சேர்ந்து நின்று செய்யும் ஆர்ப்பாட்டங்களைத் தாண்டி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பரந்துபட்ட அரசியல் செயற்பாடுகள் என்ன என்பதை அக்கட்சி மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துவதுதான். கொள்கைப் பற்று என்பது, வெறும் கொள்கையை நூறுமுறை கத்திக் கத்தி சொல்வதும், வீராவேசம் கொள்வதும், பகட்டாரவாரப் பேச்சுகள் செய்வதும், தீ பறக்கும் அறிக்கைகள் விடுவதும், ஐ.நாவில் அறிக்கை வாசிப்பதும், பொலிஸ்காரர்களுக்கு சவால் விடுவதும், கைதுசெய்யப்பட்டு சிறை சென்ற செம்மல்களாக முயல்வதும் எல்லாம் அல்ல; இதைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் புரிந்துகொண்டால், அது அவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் நல்லது. இந்த அரசியல் சித்து விளையாட்டுக்களைத்தாண்டி, தாங்கள் மூச்சுக்கு 300 முறை உச்சரிக்கும் தமிழ்த் தேசியம் உய்வதற்கும், தமிழ் மக்கள் உய்வதற்கும் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பற்றி சிந்திப்பதும் அவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் சிறப்பானதாக அமையும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்த்-தேசிய-மக்கள்-முன்னணி-தனது-அணுகுமுறையை-மீள்பரிசீலனை-செய்ய-வேண்டும்/91-318289
  12. ஜனாதிபதி தேர்தலும் அவசரப்பட்ட சஜித்தும் என்.கே அஷோக்பரன் கடந்த மே மாதம் 15ஆம் திகதி, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போது, “ஜனாதிபதி தேர்தலை திட்டமிட்ட காலத்துக்கு முன்னதாக நடத்துவதற்கான அரசாங்கத்தின் பிரேரணைக்கு, ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்கும்” என அறிவித்தார். அதேநேரத்தில், அரசாங்கம் தனது வசதிக்காக, தேர்தல் நடைமுறைகளை கையாளும் முயற்சியை விமர்சித்த அவர், இது ஜனநாயகத்தை மீறுவதாகும் என்றும் கூறினார். ஜனாதிபதியின் அல்லது அவரது ஆதரவாளர்களின் பணிப்புரையின் பேரில் மாத்திரம், ஜனாதிபதி தேர்தலை திட்டமிடுவது அடிப்படையில் பிழையானது எனவும் வலியுறுத்தினார். விரைவானதும் ஜனநாயகத் தேர்தலை உறுதி செய்வதற்காக நியாயமானதும் வெளிப்படையான ஒழுங்குமுறைகளும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் அவர் குறிப்பிட்டார். 2019 நவம்பரில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில், கோட்டாபய ராஜபக்‌ஷ வெற்றி பெற்று ஜனாதிபதியானார். அவரது பதவிக்காலம் 2024 வரை உள்ளது. கோட்டா, பதவி விலகியதன் பின்னர், கோட்டாவின் எஞ்சிய பதவிக் காலத்துக்கு, அரசியலமைப்பின் அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார். இந்தநிலையில், மேற்சொன்ன கருத்தை சஜித் பிரேமதாஸ கூறிய மறுநாளே, அதாவது மே மாதம் 16ஆம் திகதி, இன்னொரு செய்தி ஊடகத்தில், ‘16ஆம் திகதி நடந்த ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டத்தில், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக, சஜித் பிரேமதாஸ முன்னிறுத்தப்படுவார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது’ என்று, செய்தி பிரசுரமாகி இருந்தது. இது தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும், சஜித்தின் நம்பிக்கைக்கு உரியவருமான ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சுஜீவ சேனசிங்க ஆகியோர் சமர்ப்பித்த மேற்சொன்ன யோசனைக்கு, செயற்குழு கூட்டத்தில் ஏகமனதாக அங்கிகாரம் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கூட்டம், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நடைபெற்றது. இவ்வளவு அவசர அவசரமாக, பிரதான எதிர்க்கட்சி தன்னுடைய ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய தேவை என்ன? பொதுவாக, ஜனாதிபதி தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்போ, அல்லது தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரோ ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை உத்தியோகபூர்வமாகக் கட்சிகள் அறிவிக்கும். ஆனால், ஜனாதிபதி தேர்தலுக்கு ஒன்றேகால் வருடத்துக்கும் அதிகமான காலம் இருக்கத்தக்கதாக, ஜனாதிபதி வேட்பாளர் இன்னார் தான் என்று, பிரதான எதிர்க்கட்சி தீர்மானிக்க வேண்டிய காரணம் என்ன என்பது சுவாரஷ்யமான கேள்வி. ‘ஐக்கிய மக்கள் சக்தி’ என்பது ஒரு பெருங்கூட்டணியாகத்தான் தொடங்கியது. சஜித் பிரேமதாஸ, சரத் பொன்சேகா, சம்பிக்க ரணவக்க, குமார வெல்கம, ரவூப் ஹக்கீம், திகாம்பரம், இராதாகிருஷ்ணன், மனோ கணேசன், ரிஷாட் பதியுதீன் என பல்வேறு தரப்பினர் கைகோர்த்த பெரும் கூட்டணியாக அது தொடங்கியது. ஆனால், காலவோட்டத்தில் ஒவ்வொருவராக விடுபட்டு தனிவழி போகத் தொடங்கினார்கள். சரத் பொன்சேகா, ஐக்கிய மக்கள் சக்திக்குள் ஓரங்கட்டப்பட்டார். சம்பிக்க ரணவக்கவுக்கு ஐக்கிய மக்கள் சக்திக்குள் எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை. அவர், ‘43 படையணி’ என்ற ஒன்றைத் தொடங்கினார். தற்போது ‘ஐக்கிய குடியரசு முன்னணி’ என்ற புதிய கட்சியை ஸ்தாபித்திருக்கிறார். குமார வெல்கம, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவின் ஆதரவுடன் ‘புதிய லங்கா சுதந்திரக் கட்சி’ என்ற தனிக்கட்சியைத் தோற்றுவித்துவிட்டார். மறுபுறத்தில், ரவூப் ஹக்கீம், திகாம்பரம், இராதாகிருஷ்ணன், மனோ கணேசன், ரிஷாட் பதியுதீன் ஆகியோர் தத்தமது கட்சியின் பெயர்களில் இயங்குகிறார்களேயன்றி, ஐக்கிய மக்கள் சக்தியாக அடையாளப்படுத்துவதை தவிர்த்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. ஆகவே, ஐக்கிய மக்கள் சக்தி என்பது அது ஆரம்பித்தபோதிருந்த பெருங்கூட்டணியாக தற்போது இல்லை. மாறாக, பெருளவுக்கு முன்னாள் ஐக்கிய தேசிய கட்சியினரைக் கொண்ட கட்சியாகச் சுருங்கிவிட்டது. அதிலும், சஜித் ஆதரவாளர்கள் முன்னிறுத்தப்பட்டு, கட்சியின் முக்கியஸ்தர்களாக நியமிக்கப்படுவதால், கிட்டத்தட்ட சஜித் பிரேமதாஸவின் கட்சியாகவே மாறிவிட்டது. இதெல்லாம் சரி! சஜித் பிரேமதாஸவின் கட்சியாக மாறிவிட்ட ஐக்கிய மக்கள் சக்தி, அவசர அவசரமாகத் தனது அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை அறிவிக்க என்ன காரணம்? கடைசி நிமிடத்தில், தான் ஓரங்கட்டப்பட்டு, ‘எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளார்’ என்ற பெயரில் வேறெவரும் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டு விடுவாரோ என்ற அச்சம் சஜித் பிரேமதாஸவுக்கு எழுந்திருக்கலாம். ஏற்கெனவே, ரணில் எதிர்ப்பாளர்களையும், சஜித் ஆதரவாளர்களையும் தவிர்த்து, ஏனைய ஐக்கிய மக்கள் சக்தியினர் சஜித்தோடு இருப்பதா, ரணில் பக்கம் மீண்டும் தாவுவதா என்று மதில்மேல் பூனைகளாக இருக்கிறார்கள். இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் உபதலைவராக இருந்த பி.ஹரிசன், தனது ஆதரவை ரணிலுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளதுடன், 20ற்கு மேற்பட்ட சிரேஷ்ட ஐக்கிய மக்கள் சக்தியினர் விரைவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆகவே, தனது கட்சியினர் கட்சி தாவப் போகிறார்கள் என்ற அச்சம், சஜித் பிரேமதாஸவை ஒருபுறம் வாட்டிக்கொண்டிருக்க, மறுபுறத்தில் மேற்குல இராஜதந்திரிகள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் என்பன, அடுத்த ஜனாதிபதி தேர்தல் பற்றி என்ன திட்டமிடுகின்றனவோ என்ற அச்சமும் சஜித்துக்கு கடுமையாக எழுந்திருக்கக்கூடும். குறிப்பாக 2010, 2015ஐப் போல, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் என புதிய எவரையாவது முன்னிறுத்த அனைத்து எதிர்க்கட்சிகளும், மேற்குலக இராஜதந்திரிகளும், அரசு சாரா அமைப்புகளும் அழுத்தக் குழுக்களும் ஆதரவளித்தால், தனக்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடுமோ என்று சஜித்தும், அவரது ஆதரவாளர்களும் அஞ்சியிருக்கக்கூடும். ஆகவே, அவர்கள் முந்துவதற்கு முன்னர், தாம் முந்திக்கொள்வது என்ற இந்த முடிவை அவர்கள் எடுத்திருக்கக்கூடும். இது அவர்களுக்கு நம்பத்தகுந்த சாக்கு ஒன்றை வழங்கும். அதாவது, நாளை மேற்குலகமோ, அரசு சாரா அமைப்புகள் மற்றும் அழுத்தக் குழுக்களோ எதிர்க்கட்சியின் பொது வேட்பாளர் பற்றிய பேச்சை எடுத்தால், “இல்லை! நாம் ஏற்கெனவே பிரதான எதிர்க்கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸதான் என்பதை அறிவித்துவிட்டோம்; இனி மாற்றுவது பொருத்தமல்ல” என நம்பத்தகுந்த சாக்கைச் சொல்ல முடியும். மேலும், இன்று ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளவர்கள் கட்சி தாவுவது பற்றி ஒரு முறைக்கு இரு முறை, அவர்களை இது சிந்திக்கவும் வைக்கலாம் என்பதுகூட அவர்களது கணக்காக இருக்கலாம். அதாவது, அடுத்த ஜனாதிபதி தேர்தல் ரணில் எதிர் சஜித் ஆக அமையப் போகிறது. இதில் மாற்றமில்லை; இதை நாம் தற்போதே அறிவித்துவிட்டோம். பொது வேட்பாளர், புதிய வேட்பாளர் என்று எவரும் வரப்போவதில்லை. வெற்றி பெறப் போவது யாரென்று நீங்களே முடிவெடுத்து அவரோடு நில்லுங்கள். ஒருவேளை நீங்கள் விட்டு விட்டு போய்விட்டால், நாளை சஜித் ஜனாதிபதியானால், உங்களுக்கு எந்தவொரு வாய்ப்புமில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியினருக்கு சொல்லாமல் சொல்கிறார்கள் சஜித்தும், அவரது ஆதரவாளர்களும். அதேவேளை, தம்முடைய கூட்டுக் கட்சியினராக இருந்தவர்களுக்கும் இதே செய்தியை அவர்கள் அனுப்பி இருக்கிறார்கள். சஜித் பிரேமதாஸவுக்கான முக்கியத்துவம், அவரது தலைமைத்துவத்தையும், நலன்களையும் பாதுகாத்தல் என்பதைத் தாண்டி, இந்த முடிவுக்கு வேறு முக்கியத்துவமில்லை. இது மக்களை மையப்படுத்திய, மக்கள் நலனை முன்னிறுத்திய முடிவு அல்ல. ரணில் விக்கிரமசிங்கவைத் தோற்கடிக்க வேண்டும்; அதையும் சஜித்தே செய்ய வேண்டுமென்ற தனிநபர் வழிபாட்டு அரசியலைத்தான் இலங்கையின் பிரதான எதிர்க்கட்சி தனது அரசியலாக முன்வைத்துள்ளது. இந்த அரசியல் ராஜபக்‌ஷர்களின் அரசியலிலிருந்து பெரிதும் வேறுபட்ட ஒன்றல்ல. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஜனாதிபதி-தேர்தலும்-அவசரப்பட்ட-சஜித்தும்/91-317906
  13. மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராக நியமிக்கப்படுவாரா? என்.கே அஷோக்பரன் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன இல்லாவிட்டாலும், அவர் தொடக்கி வைத்த வௌ்ளிக்கிழமை விவகாரப் பயம், இலங்கையர்களிடம் தொடர்வதாகவே தெரிகிறது! கடந்த வௌ்ளிக்கிழமை (12) சமூக ஊடகங்களில் தீயாகப் பரவிய வதந்தி, மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராக நியமிக்கப்படப் போகிறார் என்பதுதான்! அரசியலமைப்பின் படி, தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்த்தன பதவி விலகினாலோ, ஜனாதிபதியால் அவர் பதவி விலக்கப்பட்டாலோ, அல்லது அவர் எம்.பி பதவியை இழந்தாலோ, பாராளுமன்றத்தின் நம்பிக்கையைத் தக்கவைக்கக் கூடியவர் என்று ஜனாதிபதி நினைக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை, பிரதமராக நியமிக்க முடியும். ஆகவே, இதன் நடைமுறை ரீதியிலான இரத்தினச் சுருக்கம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், பாராளுமன்றத்தில் இன்னமும் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் விரும்பினால், மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராகலாம் என்பதுதான்! நிற்க! கடந்த வருடம், இதே மாதமளவில் இலங்கை தனது சுதந்திர வரலாற்றில் மோசமான பொருளாதாரப் பிறழ்வைச் சந்தித்து ‘திக்கி விக்கி’ நின்றது. மின்வெட்டுகள், எரிபொருள் தட்டுப்பாடு, பொருட்களுக்கான தட்டுப்பாடு, அதீத பண வீக்கம், பொருட்களின் விலைகளில் அதிரடி உயர்வு என இலங்கை மக்கள் திண்டாடி நின்றனர். அதனால் வந்த கோபத்தின் விளைவாக மக்கள் வீதிக்கு இறங்கினர். நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதாளத்துக்குள் தள்ளிய ஜனாதிபதி கோட்டாவை பதவி விலகக் கோரிய போராட்டங்கள், அதிரடியாக தலை தூக்கின. விளைவாக முதலில் ராஜபக்‌ஷர்கள் பதவி விலகினர். பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த விலகினார். தொடர்ந்து, தனி ஆளாக பாராளுமன்றத்தில் இருந்த ரணில் விக்கிரமசிங்க பிரமரானார். பிறகு கோட்டா பதவி விலகி, ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானமை யாவரும் அறிந்த கதை. உண்மையில், ஜனாதிபதியாகிய பின்னர், ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க செய்த நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. இன்றைய அரசியல் சூழலில், அவருடைய அந்தச் செயல்களுக்கான அங்கிகாரம் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால், வரலாறு அவரை சரியாக அங்கிகரிக்கும். ஆனால், ரணில் விக்கிரமசிங்க ஒன்றைக் கவனத்தில் கொள்ளுதல் அவசியம். இலங்கை பொதுமக்களில் பெரும்பான்மையானவர்கள், ராஜபக்‌ஷர்கள் மீது கடும் விசனமும் கோபமும் கொண்டிருக்கிறார்கள். 2022ஆம் ஆண்டு வரை ராஜபக்‌ஷர்களை தமிழர்களும் முஸ்லிம்களும், தாராளவாத சிங்களவர்களும்தான் வெறுத்தார்கள். ராஜபக்‌ஷர்களின் பேரினவாத அரசியலும், அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளும் அதற்கு முக்கிய காரணங்களாகும். ஆனால், பெரும்பான்மைச் சிங்கள-பௌத்த மக்களிடம், ராஜபக்‌ஷர்களுக்கு கணிசமான செல்வாக்கு இருந்தது. அவர்கள் தமது பெரும் சாதனையாகச் சொல்லிக்கொள்ளும் ‘யுத்த வெற்றி’ அதற்கு முக்கிய காரணம். ஆனால், 2022ஆம் ஆண்டு, பொருளாதாரப் பிறழ்வு, ராஜபக்‌ஷர்கள் மீது கடும் கோபத்தையும் விசனத்தையும் அவர்களை ஆதரித்த சிங்கள-பௌத்த மக்களிடையேயே ஏற்படுத்தியது. அதனால்தான், அவர்களுடைய வழமையான தகிடுதத்தங்களால் கூட, தமது ஆட்சியைக் காப்பாற்ற முடியாமல் போனது. அவர்கள் பதவிகளை விட்டு விட்டு, ஓடினார்கள் என்பதுதான் உண்மை. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானபோது, அவரை அந்தப் பதவிக்கு தெரிவுசெய்ய அரசியலமைப்பு அடிப்படையிலான பாராளுமன்ற வாக்கெடுப்பின் போது, பெரும்பான்மையாக வாக்களித்தவர்கள் ராஜபக்‌ஷர்களின் பொதுஜன பெரமுனவினர்தான். அதனால், ‘ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்‌ஷர்களைக் காப்பாற்ற வந்தவர்’ என்ற விமர்சனத்தை தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறார். ராஜபக்‌ஷர்களைப் பொறுத்தவரையில், ரணில் என்பவர் பாதுகாப்பான தெரிவு. அதற்கு முக்கிய காரணம், அவரது ஐக்கிய தேசிய கட்சிக்கு பாராளுமன்றத்தில் ஓர் ஆசனம் மட்டுமே இருந்தது. அவருக்கு பெரும்பான்மையின மக்களிடையே பெரும் செல்வாக்கு இருக்கவில்லை. பிரதான எதிர்க்கட்சியின் தலைமைப்பீடம், அவரது வைரியாக இருந்தது. ஆகவே, ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இருந்தாலும், பாராளுமன்றத்தின் ஊடாகத் தனக்கு வேண்டியவற்றை ஆற்றிக்கொள்ள, ஜனாதிபதி ரணில் முழுமையாக பொதுஜன பெரமுனவில் தங்கியிருக்க வேண்டியதாக இருக்கும். இந்தக் கணக்கில்தான் ராஜபக்‌ஷர்கள், ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்கு ஆதரவளித்தனர். இந்த முடிவு, ராஜபக்‌ஷர்களின் ஆஸ்தான ஆதரவாளர்களாக இருந்து இனவாத அரசியலை முன்னெடுத்த பலரையும், ரணில் விக்கிரமசிங்கவோடு தனிப்பட்ட குரோதம் கொண்ட பலரையும் அதிருப்தியடையச் செய்தது. இதன் விளைவாக விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, டளஸ் அழகப்பெரும, ஜீ.எல் பீரிஸ், சரத் வீரசேகர போன்றோர், ராஜபக்‌ஷர்களின் பொதுஜன பெரமுனவிலிருந்து பிரிந்து இயங்கத் தொடங்கினர். இதேவேளை, ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, டயானா கமகே ஆகிய ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து வந்த முன்னாள் ஐக்கிய தேசிய கட்சியினர், மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவோடு கைகோர்த்துக்கொண்டனர். ராஜபக்‌ஷர்கள் இல்லாத அமைச்சரவையைக் கொண்டு, இதுவரை காலமும் ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொருளாதாரப் படுகுழியிலிருந்து மீட்கும் கடும்பணியை முன்னெடுத்து வருகிறார். அதில் கணிசமான அடைவுகளையும் அவர் பெற்றிருக்கிறார். மின்வெட்டுகள் இல்லாமல் போயின; எரிபொருள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தொடர்ந்து அனைவருக்கும் கிடைக்கிறது; பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் ஒப்பீட்டளவில் குறைந்துள்ளன; பணவீக்க வீதம் கணிசமாகக் குறைந்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம், இலங்கையின் பொருளதாரத்துக்குப் புதிய நம்பிக்கையைத் தந்திருக்கிறது. ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி போன்றோரின் கடும் விமர்சனங்களுக்கு நடுவே, ஜனாதிபதி ரணில், மேற்சொன்ன அனைத்து அடைவுகளையும் கொஞ்சம் கொஞ்சமாக சாதித்ததன் விளைவாக, கட்சிசாரா பொதுமக்களிடையே, அவருக்கு கொஞ்சம் நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில்தான், மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராகப் போகிறார் என்ற வதந்தி உலா வருகிறது. பொதுஜன பெரமுனவுக்குள் பசில் ராஜபக்‌ஷ, தன்னை முன்னிறுத்தத் தொடங்கி இருக்கிறார். ராஜபக்‌ஷர்கள் இல்லாத அமைச்சரவையைக் கொண்ட ஆட்சியில், ஆளும்கட்சியினராக இருந்தும் தமக்கு வேண்டியவற்றை செய்துகொள்ள முடியாமல், ராஜபக்‌ஷ ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இந்த அதிருப்தி, பசில் ராஜபக்‌ஷவை முன்னிறுத்தும் அவர்களது அரசியலுக்கு அச்சாரமாக மாறியிருக்கிறது. பசில் ராஜபக்‌ஷ முன்னிறுத்தப்படுவதுதான், மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராக நியமிக்கப்படுவது பற்றிய பேச்சின் தோற்றுவாயாக இருக்கிறது. இதற்கு இரண்டு பரிமாணங்கள் உள்ளன. ஒன்று, ராஜபக்‌ஷர்களுக்கு இடையிலான போட்டி. ராஜபக்‌ஷர்கள் தமது உள்வீட்டுப் பிரச்சினைகளை வௌியில் கொண்டுவருவதில்லை. ஆனால், அதன் அர்த்தம் உள்வீட்டுப் பிரச்சினைகள் இல்லை என்பதல்ல. பசில்-நாமல் பனிப்போரில், பசிலின் பக்கம் ஆதரவாளர்கள் காற்று வீசத்தொடங்கி உள்ளது. மஹிந்த பிரதமரானால், அந்தக் காற்று மஹிந்த பக்கம் வரும். அதன்வழியாக நாமல் பக்கம் வரும் என்பது ஒரு கணக்கு. இதற்காக, மஹிந்த பிரமராக முயலலாம். மற்றைய பரிமாணம், பொதுஜன பெரமுன, பசில் ராஜபக்‌ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் முழுமையாகப் போவதை ரணில் விரும்பாமை. பசிலுக்கும் ரணிலுக்கும் இடையில் நட்புக் கிடையாது; புரிந்துணர்வும் கிடையாது; நம்பிக்கையும் கிடையாது. ஆகவே, பொதுஜன பெரமுன, முழுமையாக பசிலின் கட்டுப்பாட்டுக்குள் செல்வதை ரணில் விக்கிரமசிங்க விரும்பமாட்டார். ரணிலின் பொருளாதார மறுசீரமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட, பாராளுமன்றத்தில் பொதுஜன பெரமுனவினரின் ஆதரவு அவசியம். பசில் வந்தால், அந்த ஆதரவுக்காக அவர் விதிக்கும் நிபந்தனைகள் சிக்கலானவையாக அமையும். ஆகவே, பொதுஜன பெரமுனவுக்குள் பசில் தலையெடுப்பதைத் தடுக்க, மஹிந்தவைப் பலப்படுத்த அவரை பிரமராக்கலாம். எது எவ்வாறாயினும், மஹிந்த பிரதமராக நியமிக்கப்பட்டால், அது கட்சி சாராப் பொதுமக்களிடையே, அதிலும் குறிப்பாக தாராளவாத சிங்களவர்களிடையேயும் சிறுபான்மையின மக்களிடையேயும் ரணில் மீதான நம்பிக்கையைக் குறைப்பதாகவே அமையும். அந்த முடிவை எடுக்க முதல், ஜனாதிபதி ரணில் இது பற்றிச் சிந்திக்க வேண்டும். கடந்த சில மாதங்களில் அவர் சம்பாதித்த நற்பெயரை அவர் இழக்க வேண்டியிருக்கும். இதுதான் ராஜபக்‌ஷவை பிரதமராக்குவதற்கு ரணில் கொடுக்கும் விலையாக அமையும். அதனால்தான், மஹிந்தவை விட, ஜனாதிபதி ரணிலை விட, ராஜபக்‌ஷர்களை விட, மஹிந்த பிரதமராக வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியினரும் ஜே.வி.பியினரும் உள்ளுக்குள் வேண்டிக்கொண்டிருப்பார்கள். மஹிந்தவின் நியமனத்தைக் காரணம் காட்டி மீண்டும் ‘அறகலய’ எழலாம்; பொருளாதார மீட்சி ஸ்தம்பிக்கலாம். இது பற்றி ஜனாதிபதி ரணில் கவனம் கொள்வது அவசியம். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மஹிந்த-ராஜபக்-ஷ-பிரதமராக-நியமிக்கப்படுவாரா/91-317427
  14. இனப்பிரச்சினைத் தீர்வு பற்றி மீண்டும் பேசிய ஜனாதிபதி ரணில் என்.கே அஷோக்பரன் இலங்கையின் இனப்பிரச்சினையை இவ்வருட இறுதிக்குள் தீர்த்து வைப்பதில் ஆர்வமாக உள்ளதாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த திங்கட்கிழமை (01), தான் நிகழ்த்திய மே தின உரையில் மீண்டும் தெரிவித்துள்ளார். “இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் நன்மை பயக்கும் கொள்கைகளுக்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டின் அடிப்படையில், நாட்டின் நீண்டகால இன மோதலைத் தீர்க்க, இந்த ஆண்டு இறுதிக்குள் ஓர் உடன்பாட்டை எட்ட எதிர்பார்க்கிறேன்” என்று குறிப்பிட்ட அவர், “இரண்டு நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே, நாடு சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்துடன் முன்னேற முடியும்” என்று தெரிவித்தார். அதில் ஒரு நிபந்தனையாக, இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதைக் குறிப்பிட்டிருந்தார். “இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக, தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்“ என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில், “இந்த வருட இறுதிக்குள் ஏதாவது ஓர் உடன்பாட்டுக்கு வரமுடியும் என்று நம்புகிறேன். எந்த ஒரு சமூகத்தையும் நாம் குறைமதிப்புக்கு உட்படுத்தக் கூடாது. சிங்களப் பெரும்பான்மை, தமிழ், முஸ்லிம், பறங்கியர் மற்றும் ஏனைய சிறுபான்மையினரைப் பாதுகாத்து முன்னேற வேண்டும். அதை அடைவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார். இதே ஜனாதிபதி ரணில் தானே, 2023 பெப்ரவரி நான்காம் திகதி, இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர், இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்றாரே; அது நடந்ததா என்ற கேள்வி, இங்கு எழுவது நியாயமானது. ஆனால், ‘ஒரு கை தட்டி மட்டும் ஓசை எழாது’ என்பதை நாம் இங்கு புரிந்துகொள்ள வேண்டும். ஏதோவொரு விசித்திர காரணத்துக்காகத் தீவிர தமிழ்த் தேசியம் பேசாத, சமரசத்துக்குத் தயாரான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூட, ஜனாதிபதி ரணிலை எதிர்ப்பதை நோக்கமாகக் கொண்டு பயணிப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. 2015-2019 ‘நல்லாட்சிக் காலத்தில்’ ரணில் விக்கிரமசிங்கவிடம் ‘ஜனாதிபதி’ என்ற நிறைவேற்று அதிகாரமுள்ள பதவி இல்லாதபோது, அவரோடு இணைந்து, தீர்வுக்காக முயன்றவர்கள், இன்று அவர்களுக்கு மட்டுமே தெரிந்த காரணத்துக்காக, சமரசமான தீர்வொன்றை சாத்தியப்படுத்தக்கூடிய நிறைவேற்றதிகாரமும், அரசியல் சூழமைவும் கூடி வந்துள்ள தருவாயில், ஜனாதிபதி ரணிலை எதிர்ப்பதை முன்னிலைப்படுத்தி, தமிழ் மக்களின் நலனையும், இந்தத் தீவின் நலனையும் பின்னிலைக்குத் தள்ளிப் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். இல்லை! ஜனாதிபதி ரணில் 13ஐ முழுமையாக அமல்படுத்துதல் என்றளவில்தான் இனப்பிரச்சினைக்கான தீர்வை அணுகுகிறார்; அது, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைத் திருப்தி செய்யாது. ஆகவே, தமிழ்த் தேசிய கட்சிகள் இந்த முயற்சியில் பங்குதாரராகத் தேவையில்லை என்று கருத்துரைப்போரும் உளர். சரி! 13 வேண்டாம்; 13ஐ முழுமையாக அமல்படுத்த முயற்சிக்கிறேன் என்றவரும் வேண்டாம்; அடுத்தது என்ன? இந்தக் கேள்விக்கு அவர்களிடம் பதில் கிடையாது என்பதுதான் உண்மை. காலம் முழுவதும், தமிழ் மக்களை உணர்வரசியலில் அழுத்திவைத்திருந்து, வடக்கு-கிழக்கு தமிழ் மக்களை இதே அவல நிலையில் தொடர்ந்து வைத்திருந்து, அவலத்தில் அரசியல் செய்வதுதான் திட்டமா? ஜனாதிபதி ரணில் போனால், அடுத்து வரப்போகும் எந்தத் தலைமை இனப்பிரச்சினை தீர்வு பற்றி, குறைந்த பட்சம், 13ஐ முழுமையாக அமல்படுத்துவதைப் பற்றி அக்கறை கொள்ளப் போகிறது என்று இவர்கள் நினைக்கிறார்கள்? ஐக்கிய மக்கள் சக்தியா? அவர்களும், அவர்களுடைய தலைவரும் இதுவரை இனப்பிரச்சினையொன்று இந்த நாட்டில் இருக்கிறது; அது தீர்க்கப்பட வேண்டும் என்றாவது பகிரங்கமாகச் சொல்லி இருக்கிறார்களா? இதைக் கூடச் சொல்லாதவர்கள், சமஷ்டி வழித் தீர்வா தரப்போகிறார்கள்? ராஜபக்‌ஷர்களைப் பற்றி இந்த இடத்தில் பேசுவதே தேவையில்லாதது. 2009இன் பின்னர், இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை என்று சாதிப்பவர்கள் அவர்கள். ஒருவேளை ஜே.வி.பி இனப்பிரச்சினையைத் தீர்த்து, தமிழ் மக்களுக்கு சமஷ்டித் தீர்வை வழங்கும் என்று இந்தத் தமிழ்த் தேசிய தலைவர்கள் நினைக்கிறார்களா? ராஜபக்‌ஷர்களை விட மோசமான இனவாதிகள் அவர்கள். இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் படி இணைக்கப்பட்ட வடக்கு-கிழக்கை பிரிக்க, ஐக்கிய தேசிய கட்சியோ, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியோ கூட தீவிரமாக முயலவில்லை. உயர்நீதிமன்றத்துக்குச் சென்று, வடக்கு-கிழக்கு இணைப்பு சட்டவிரோதம் என்று வழக்குத் தாக்கல் செய்து, பகீரதப்பிரயத்தனம் கொண்டு, வடக்கு-கிழக்கைப் பிரித்தவர்கள் ஜே.வி.பியினர். மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாவதற்கு பின்னணியில், பிரசாரமாக இருந்தவர்கள்; ராஜபக்‌ஷர்களின் இனவாத அரசியலின் வழிகாட்டிகளாக இருந்தவர்களான இந்த ஜே.வி.பி, இனப்பிரச்சினைக்குத் தீர்வு தரும் என்று எப்படி நம்புகிறார்கள். “இலங்கையின் இனப்பிரச்சினை இன்றும் காணப்படுகிறது. அது தீர்க்கப்பட வேண்டும்” என்று பகிரங்கமாகச் சொல்கின்ற ஒரு ஜனாதிபதி இலங்கைக்கு இன்று கிடைத்திருக்கிறார். ரணில் விக்கிரமசிங்கவால் இதுவரை காலமும் பெரும்பான்மையின வாக்குகளைப் பெரும்பான்மையளவில் பெறமுடியவில்லை என்பதற்கு அவர் இனவாத அரசியலை முன்னெடுக்காதது முக்கிய காரணம். ஆனால், தமிழ;த் தேசிய அரசியல் கண்மூடித்தனமான நம்பிக்கைகளால் ‘நரி’ என்று பெயரிட்டு, அவரோடு பேச்சுவார்த்தை நடத்த விளையாததன் விளைவை, தமிழ்த் தேசிய அரசியல் இன்றுகூடப் புரிந்துகொள்ளவில்லையென்றால், தமிழ்த் தேசிய அரசியலுக்கு உய்வில்லை. ரணில் விக்கிரமசிங்க, சமஷ்டியைத் தரப்போவதில்லை; அது நிச்சயம். அடுத்த இரண்டு தசாப்த காலங்களுக்கு, இலங்கையில் அத்தகைய தீர்வொன்றை எந்தத் தலைமையும் தரப்போவதில்லை. அது நிச்சயம்! இலங்கையின் அரசியலும், அரசியலின் நாடித் துடிப்பும் தெரிந்த அனைவருக்கும், புரிந்த உண்மை இது. இது, தமிழ்த் தேசியத்தின் தலைமைகளாக இருப்பவர்களுக்கும் தனித்த முறையில் நன்கே தெரிந்த விடயம். ஆனால், அவர்களது அரசியல், இதனை பகிரங்கமாகச் சொல்ல விடாது. அபிலாஷைகளை நோக்கிய பயணத்தில், இறுதி இலக்கை நோக்கிப் பயணிக்கலாம்; ஆனால், அடுத்த அடியில் இறுதி இலக்கு கிடைக்காவிட்டால், அடுத்த அடியையே நான், எடுத்து வைக்க மாட்டேன் என்பது அடி முட்டாள்தனமானது. அரசியல் என்பது சாத்தியமானவற்றின் கலை என்ற ஒட்டோ வொன் பிஸ்மார்க்கின் கருத்தை நாம் தொடர்ந்து ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுதல் அவசியம். இன்று மாகாணசபை கூட இல்லாமல் இருக்கிறது வடக்கும் கிழக்கும், 13ஆம் திருத்தம், முழுமையாக அமல்படுத்தல் என்பது வடக்குக்கும் கிழக்குக்கும் இன்றைய நிலையை விட மேம்பட்டதொரு நிலைதான். அதை அடைவதில் எந்தத் தவறும் இல்லை. அரசியலில் தீர்வுகள் எதுவும் முடிந்த முடிபுகள் அல்ல. ஆகவே, படிப்படியாக பெறக்கூடியவற்றைப் பெற்று, அதை வினைத்திறனுள்ள முறையில் கையாண்டு, மக்களுக்கு நன்மைகளைப் பெற்றுக்கொடுத்து, தொடர்ந்து கொஞ்சம், கொஞ்சமாக கோரிக்கைகளை முன்வைத்து, அரசியல் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி அவற்றைச் சாத்தியமாக்கி, மேலும் அதிகாரப் பகிர்வுகளைப் பெற்றுக்கொண்டு, தொடர்ந்து பயணிப்பதுதான் சரியானதோர் அரசியல் பாதையாக அமையும். இதற்கு குறிப்பிடத்தக்க உதாரணம் ஸ்கொட்லாந்து. இதைச் சொன்னால், ஐக்கிய இராச்சியம் போல இங்கு அரசியல் இல்லை என்பார்கள். ஆனால், அது முழுமையான உண்மை இல்லை. ஐக்கிய இராச்சியம் போல அரசியல் நாகரிகம் இங்கு இல்லாமல் இருக்கலாம்; ஆனால், வெஸ்ட்மின்ஸ்டர் முழுமையான விருப்போடு அதிகாரப் பகிர்வை ஸ்கொட்லாந்துக்கு வழங்கவில்லை. அதைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தமும், அரசியல் சூழ்நிலையும் ஏற்பட்டது. அந்த அதிகாரப் பகிர்வுகள், அரசியல் சூழ்நிலையினதும், அதனை ஸ்கொட்டிஷ் தேசியவாசிகள் கையாண்ட விதத்தினதும் குழந்தைகள்தான். ஆகவே, இலங்கையின் அரசியலில் ஏற்படும் சந்தர்ப்பங்களைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது, தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் கையில்தான் பிரதானமாக இருக்கிறது. ‘அடித்தால் மொட்டை, வளர்த்தால் ஹிப்பி’ என்ற ரீதியிலான கொள்கைப்பற்று பேச்சுக்கும், உணர்வெழுச்சிக்கும் பொருத்தமாக இருக்கலாம். ஆனால், நடைமுறை அரசியலுக்கு அது பொருத்தமானதல்ல. ‘மணந்தால் மகாதேவன்; இல்லையேல் மரணதேவன்’ என தமிழ்த் தேசிய அரசியல் பயணித்தால், மரணம் நிச்சயம்! இந்த ஜனாதிபதி 13ஐ முழுமையாக அமல்படுத்தல் என்றொரு முன்மொழிவை முன்வைக்கிறார். சரி! அதனைச் செய்யுங்கள் என்று செய்யவைத்து, இலக்கை நோக்கிய பயணத்தின் அடுத்த அடியை, தமிழ்த் தேசிய அரசியல் முன்வைக்காவிட்டால், இங்கு தோற்கப்போவது, தமிழ்த் தேசியத்தின்பால் நம்பிக்கை வைத்து வாக்களிக்கும் மக்கள்தான்! https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இனப்பிரச்சினைத்-தீர்வு-பற்றி-மீண்டும்-பேசிய-ஜனாதிபதி-ரணில்/91-317002
  15. தமிழ்த் தேசிய அரசியலில் சாதி, மதம் என்.கே அஷோக்பரன் தமிழ்த் தேசிய அரசியலில் சாதி, மதம் என்பன மிக நீண்டகாலமாக பேசாப்பொருளாகவே இருந்தது வருகின்றன. தமிழ்த் தேசிய அரசியல், மதம் பற்றிப் பேசுவதும் இல்லை; சாதி பற்றி வௌிக்காட்டிக் கொள்வதுமில்லை. 1970ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது, சா.ஜே.வே செல்வநாயகத்தை எதிர்த்து தேர்தலில் நின்ற ‘அடங்காத் தமிழன்’ சுந்தரலிங்கம், ‘வேலா, சிலுவையா?’ என்ற ரீதியிலான பிரசாரத்தையும் மேற்கொண்டார். இது ஓரளவுக்கு வௌிப்படையாக நடந்த பிரசாரம். ஆனால், அந்தத் தேர்தலில் பெரும்பான்மை சைவர்கள் நிறைந்த தொகுதியில், குறித்த பாணியிலான பிரசாரத்தை மீறியும், கிறிஸ்துவரான சா.ஜே.வே செல்வநாயகம் வெற்றி பெற்றார். அதன் பின்னர், பகிரங்கமாக சைவ-கிறிஸ்தவ வேறுபாடு சார்ந்த பிரசாரங்கள் பெருமளவிற்கு தமிழ்த் தேசிய அரசியலில் முன்வைக்கப்படவில்லை. சைவத் தலைமைகள், கிறிஸ்தவ தேவாலயத்தோடு நெருங்கிய உறவினைக் கொண்டிருந்தார்கள், அதுபோல கிறிஸ்தவத் தலைமைகள் சைவ சின்னங்களைச் சூடுவதை பொதுவௌியில் செய்வதைத் தவிர்க்கவில்லை. ஒரு வகையான புரிந்துணர்வு இருந்தது. இதற்குப் பல காரணங்களுண்டு. மிக முக்கிய காரணங்களுள் ஒன்று சிங்கள-பௌத்த பேரினவாதம். சிங்கள-பௌத்த பேரினவாதம் ‘தமிழ்’ என்ற ஒற்றை அடைளத்திற்குள் அனைத்துத் தமிழர்களையும் ஒன்றுபடுத்தி அடக்குமுறைக்கு உட்படுத்தியது. தமிழர்களுள் சாதி, மத அடையாளங்கள் இருந்தாலும், தமிழர்களை எதிரிகளாக முன்னிறுத்திய பேரினவாத அரசியல் சக்திகளுக்கு அனைவரும் தமிழர்களாக மட்டுமே தெரிந்தார்கள். பேரினவாதத்தின் அடக்குமுறையைச் சமாளிக்க தமிழர்கள், தம்முள்ளான அடையாளப் பிரிவுகளில் சிக்கிக்கொள்ளாது இருக்க வேண்டிய அவசியப்பாடு இருந்தது. அது தமிழர் என்ற அடையாளத்தை வலுப்படுத்தி, அதன் உட்பிரிவுகளால் உடையாது நிற்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியது என்றால் அது மிகையல்ல. இதற்காக தமிழர்களுள்ளான சாதி, மத அடையாளங்கள் முற்றாக அற்றுப்போயின என்று சொல்லிவிட முடியாது. உயிர்போகும் பிரச்சினை தலையைக் காவுகொள்ள காத்திருந்து போது, அந்தச் சாதி, மத அடையாளங்கள் பயனற்றுப்போயின. சிங்களக் கிறிஸ்தவர்கள், வடக்கு-கிழக்கு தமிழ்க் கிறிஸ்தவர்களை கிறிஸ்தவர்களாகப் பார்த்தார்கள் என்பதை விட, தமிழர்களாகப் பார்த்தார்கள் என்பதுதான் நிதர்சனம். தெற்கிலுள்ள கத்தோலிக்கர்களே, வடக்கு-கிழக்கிலுள்ள மறைமாவட்ட ஆயர்களை ஐயத்துடன் பார்த்த சந்தர்ப்பங்களும் நிறையவே உண்டு. ஆகவே, சிங்களவர், எதிர் தமிழர்கள் என்ற இந்தத் தீவின் இனவாத வெறியின் உச்சம்தான், ஒரு வகையில் தமிழர்களுக்கு உள்ளிருந்த சாதி, மத அடையாளங்கள் அரசியல் ரீதியில் முக்கியம் பெறாமல் போனமைக்கு முக்கிய காரணமாகும். மேலும், இதன் பின்னாலுள்ள இன்னொரு சமூகக் காரணியையும் நாம் கருத்திற்கொள்ள வேண்டும். இன்றைய வடக்கு-கிழக்கில், கணிசமான சைவக் குடும்பங்களில், கிறிஸ்தவ உறவுகளுண்டு. அதுபோல கணிசமான கிறிஸ்தவக் குடும்பங்களில், சைவ உறவுகளுண்டு. இந்தச் சமூகக் காரணியும் கூட, மத ரீதியான பிளவுகள் பெருமளவுக்கு வெடிக்காமைக்கு முக்கிய காரணம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். யாழ்ப்பாண சமூகத்தில், குறிப்பாக யாழ். சைவர்களிடையே கிறிஸ்தவ விரோதப் போக்கு என்பது இயல்பாக அமையாமைக்கு அந்தச் சமூகத்திற்கு கிறிஸ்தவ மிஷனரிகள் ஆற்றிய பங்களிப்பும், குறிப்பாக கல்வி ரீதியிலான பங்களிப்பும், ஒருவகையில் மிக முக்கிய காரணமாகிறது. பிரபல இந்து பாடசாலைகள் இன்று யாழ்ப்பாணத்தில் இருந்தாலும், சென்.ஜோன்ஸ், யாழ். மத்திய கல்லூரி, வேம்படி மகளிர் கல்லூரி, சுண்டிக்குளி மகளிர் கல்லூரி ஆகியனவே இன்றும் பிரபலமான தெரிவுகளாக இருக்கின்றன. இவை கிறிஸ்தவ பாடசாலைகளாக இருப்பினும், இங்கு சைவப்பிள்ளைகள் கணிசமானளவில் கல்வி கற்கிறார்கள். யாழ். சைவ சமூகத்தின் பெரும் அடையாளங்களுள் ஒன்றான நல்லூர் கோவிலின் இன்றைய தர்மகர்த்தா கல்வி கற்றது சென். ஜோன்ஸ் கல்லூரியில் ஆகும். ஆகவே, யாழ்ப்பாண சமூகத்தைப் புரிந்துகொள்வதற்கு, அதன் மத அடையாளங்கள் மட்டும் போதுமானவை அல்ல. அதனைத்தாண்டி சமூக யதார்த்தத்தைப் புரிந்துகொள்வது அவசியம். இந்தப் பின்புலம் இருக்கத்தக்கதாகத்தான், இன்று மத அடையாளத்தை முன்னிறுத்திய அரசியல் நகர்வுகள் சில வடக்கு-கிழக்கில் இடம்பெறுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. ‘இந்து’ அடையாளம் வடக்கு-கிழக்கில் சில தரப்பினரால் பகீரதப் பிரயத்தனத்துடன் முன்வைக்கப்பட்டு வருகிறது. யாழ்ப்பாணத்துக்கும் வடக்கு-கிழக்கிற்கும் ‘இந்து’ என்ற அடையாளம் புதியது. ஆம், இந்துக் கல்லூரிகள் இருக்கின்றன, ஆனால் அதனைத்தாண்டி இந்த அடையாளம் மிகப் புதியது. ஆறுமுகநாவலர் காலத்தில் கூட, யாழில் முன்னெடுக்கப்பட்டது சைவ மீளெழுச்சியே அன்றி, இந்து மீளெழுச்சியல்ல. இலங்கையில் பாடசாலைகளில் சமய பாடங்கள் கற்பிக்கப்படுகிறன. இங்கு சைவம் தான் கற்பிக்கப்படுகிறதேயொழிய, இந்து மதம் அல்ல. நிற்க! சைவ - இந்து சிந்தாந்தப் பிரச்சினைகள் ஒருபுறமிருக்க, இந்தப் புதிய ‘இந்து’ அடையாள நுழைப்பின் மூலத்தைத் தேடுவது அவசியமாகிறது. இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிடுவது அவசியம். சைவர்கள் உள்ளிட்ட இந்துக்கள் அனைவருக்கும், இந்நாட்டில் தாம் நடத்தப்படும் விதம், தமது அடையாளங்கள், தமது வழிபாட்டுத்தலங்கள், தமது வாழ்வியல் முறை, தமக்கான அங்கிகாரம் என்பனவெல்லாம் பற்றிய நிறையக் கவலைகளும் கோவங்களும் ஆதங்கங்களும் இருக்கின்றன. இது அரசாங்கம் பற்றியது மட்டுமல்ல. திருக்கேதீச்சரம் என்பது உலகச் சைவர்களுக்கு மிக முக்கியமான திருத்தலங்களுள் ஒன்று. பழம்பெருமை கொண்ட திருத்தலம். இராவணனின் மனைவி மண்டோதரியின் தந்தை மாயன் கட்டிய பெருங்கோவில் என்ற புராண நம்பிக்கையுமுண்டு. இந்தத் தீவின் பூர்வீக அடையாளங்களில் ஒன்றான திருக்கேதீச்சரத்தில் ஓர் அலங்கார வளைவு கூட கட்டப்படுவதைக்கூட, சில கிறிஸ்தவர்கள் அனுமதிக்கவில்லை என்பது கவலைக்குரியது. மறுபுறத்தில், திருக்கேதீச்சரம் செல்லும் வீதியில் மாதா சொரூபம் திடீரென்று வைக்கப்பட்ட பிரச்சினையும் சைவ-கிறிஸ்தவ மக்களிடையே கசப்புணர்வை உருவாக்குவதாக இருக்கிறது. இந்தக் கசப்புணர்வுகளை தமக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ள சில உள்நாட்டு, மற்றும் அந்நிய சக்திகள் கங்கணங்கட்டிக்கொண்டு செயற்படுகின்றன. அதன் விளைவுதான், இந்தத் திடீர் இந்து அமைப்புகளின் தோற்றம். அமைதியான வழியில், விட்டுக்கொடுப்புகளுடன், சைவர்களும், கிறிஸ்தவர்களும் நடந்திருந்தால், இந்தப் பிரச்சினை எழுந்திராது. ‘தமிழ்த் தேசியம்’ என்பது, தமிழ் மக்களிடையேயான சாதி, மத, பிரதேச அடையாளங்களை மேவிய, தமிழ்த் தேசிய அடையாளத்தைக் கட்டியெழுப்பும் அரசியலாக இருந்தது. அதற்கான தேவையை உருவாக்கியது பேரினவாதம். இங்கு தேவைகள்தான், புத்துருவாக்கங்களுக்கு அடித்தளமாக இருக்கின்றன. சாதி ரீதியில் பிளவுபட்டிருந்ததொரு சமூகம், மத அடையாளங்களால் அடிபட்டுப் பிளந்திருக்கக் கூடியதொரு சமூகம், அதனை மேவி, ‘தமிழர்’ என்ற அடையாளத்தால் ஒன்றிணைய வேண்டிய கட்டாயத்திற்கு தமிழர்களைப் பேரினவாதம் இட்டுச்சென்றமை, தீங்கிலும் விளைந்ததொரு நன்மையென்றால் அது தவறில்லை. 60 வருட திராவிட அரசியல், தமிழ்நாட்டில் சாதிக்காததைக்கூட, 30 வருட யுத்தம் வடக்கு-கிழக்கில் சாத்தியமாக்கியது. தமிழ்நாட்டில் இன்றும் சாதிக்கட்சிகள் இருக்கின்றன. சாதி கட்சி மாநாடுகள் நடக்கின்றன. இலங்கைத் தமிழர் அரசியலில் அது சுத்தமாக இல்லை. அதற்காக சாதி இல்லை என்று சொல்லிவிட முடியாது. சமூகத்தின் சாதி அடையாளங்கள் உள்ளன. ஆனால், சாதியின் அரசியல் வகிபாகம் என்பது மிக மட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், இன்று மீண்டும் சாதி அரசியலையும் இங்கு உள்நுழைக்கும் சதிவேலையும் நடந்துகொண்டிருப்பதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. ‘தலித்’ என்பது 1880களின் பிற்பட்ட காலப்பகுதியில் தீண்டத்தகாத சாதியினரைக் குறிக்க வடஇந்தியாவில் பயன்படுத்திய சொல். இந்தச் சொல் இலங்கையில் புழக்கத்திலேயே இல்லை. இலங்கைத் தமிழர் சாதிக் கட்டமைப்பு வர்ணாச்சிரமத்தின் பாற்பட்டதன்று. இன்று வடக்கு-கிழக்கில் ‘தலித்’ அரசியல் என்று ஒருசிலர் பேசத் தொடங்கி இருக்கிறார்கள். யாருக்காக இது, எதற்காக இது? என்பன முக்கிய கேள்விகள். யுத்த நிறைவுக்குப் பின்னரான தமிழர் அரசியல், திக்குத்தெரியாத கடலில், மாலுமியில்லாத ஓட்டைப்படகாக மாறியிருக்கிறது. இங்கு ‘நானே மாலுமி; நானே மாலுமி’ என ஒவ்வொருவரும் ஓட்டைப் படகை தம் பக்கத்துக்கு வலித்துக் கொண்டிருக்கிறார்கள். ஓட்டைப்படகோ, எங்கும் நகராமல், மூழ்கிக்கொண்டிருக்கிறது. இப்படி வலிப்பவர்களுள், இன்று புதிதான இணைந்துகொண்டவர்கள்தான் மேற்சொன்ன சாதி, மதக் காவலர்கள். எச்சரிக்கை! https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்த்-தேசிய-அரசியலில்-சாதி-மதம்/91-316709
  16. மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தல் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan தனது தாயார் சிறிமாவோவின் கொள்கைகள் தொடர்ந்து நடைமுறையில் இருந்திருந்தால் நாடு வங்குரோத்து அடைந்திருக்காது என்று அண்மையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குறிப்பிட்டிருந்தமை நகைப்பை வரவழைப்பதாக இருந்தது. இந்த நாடு சுதந்திரமடைந்த 75 ஆண்டுகளில், 26 ஆண்டுகள் இந்நாட்டின் ஆட்சித் தலைமை பண்டாரநாயக்க குடும்பத்திடம் இருந்திருக்கிறது. முதலில் எஸ்.டபிள்யு.ஆர்.டீ.பண்டாரநாயக்க, அதன் பின்னர் சிறிமாவோ பண்டாரநாயக்க, அதன் பின்னர் சந்திரிகா பண்டாரநாயக்க என சுதந்திர இலங்கையின் வாழ்நாளில் மூன்றிலொன்றைவிட அதிககாலம் நாட்டை ஆண்டவர்கள் இவர்கள். பொருளாதாரக் கொள்கை என்பதை தனித்து எடுத்துப் பார்த்துவிட முடியாது. ஒரு நாட்டின் பொருளாதாரம் என்பது சமூகக் காரணிகளில் பெரிதும் தங்கியதொன்று. இந்த நாட்டில் இனவாதம் தலைதூக்கி, இனப்பிரச்சினை வெடித்து, உள்நாட்டு யுத்தம் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இடம்பெற்று, இந்தத் தீவில் இரத்த ஆறு ஓடுவதற்கு அடிப்படைக் காரணகர்த்தாக்கள் பண்டாரநாயக்க குடும்பத்தினரே! தனிச்சிங்களச் சட்டம் என்பது கடைந்தெடுத்த இனவாதச் சட்டம். தனிச்சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்தவர் எஸ்.டபிள்யு.ஆர்.டீ.பண்டாரநாயக்க. சாதாரண சட்டமாக இருந்த தனிச்சிங்களச் சட்டத்தின் உள்ளடக்கத்திற்கு, அரசியலமைப்பு அந்தஸ்துக் கொடுத்து, சிங்கள மொழி மட்டுமே இலங்கையின் ஒரே உத்தியோகபூர்வ மொழி என்பதை அரசியலமைப்பு விதியாக மாற்றியவர் சிறிமாவோ பண்டாரநாயக்க. இவர்கள் விதைத்த இனவாதத்தீ, பேரினவாதம் பேசாமல் இலங்கையின் ஆட்சிக்கட்டிலில் ஏற முடியாது என்ற நிலையைத் தோற்றுவித்தது. இலங்கையின் அரசியலை இந்தப் பாதையில் செல்ல வைத்தவர்கள் இவர்கள். இனவாதம் பேசிப்பேசியே வங்குரோத்தாகிப்போன நாடு இலங்கை. மொழியில் தொடங்கிய அடக்குமுறை, மற்ற எல்லா விடயங்களுக்கும் பரவியது. சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளாகியும், இன்னமும் இனப்பிரச்சினையின் ஆணிவேரான மொழிப்பிரச்சினைக்குக் கூட தீர்வு காண முடியாத நிலையில்தான் நாடு இருக்கிறது. இதற்கான தீர்வு ஒன்றும் சிக்கலான விஞ்ஞானமல்ல. அது பலமுறை பலராலும் பேசப்பட்டிருக்கிறது. இலங்கையில் பரவலாக அனைத்து இடங்களிலும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளையும் பயன்படுத்த வழிசமைக்கும் மும்மொழிக்கொள்கையை முழுமையாகவும், வினைத்திறனாகவும் அமல்படுத்துதல் இலங்கையின் மொழிப்பிரச்சினையை இலகுவாகத் தீர்த்துவிடும். இது ஒன்றும் மாயமந்திரம் தேவைப்படும் காரியமல்ல. தேசிய ஒருமைப்பாட்டையும், அனைவரையும் அரவணைக்கும் தன்மையையும் மேம்படுத்துவதற்கு இலங்கைக்கு மும்மொழிக் கொள்கை அவசியமாகும். இலங்கை ஒரு பன்மைத் தேசிய நாடு. இங்கு சிங்களம், தமிழ் ஆகிய சுதேச மொழிகளும், ஆங்கிலமும் இலங்கை மக்களால் பரவலாகப் பேசவும், பயன்படுத்தவும் படுகிறது. ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த கலாசார முக்கியத்துவம் உள்ளது. மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்வதன் மூலம், நாடு மொழியியல் மற்றும் கலாசார பன்முகத்தன்மையை ஊக்குவிக்கும் அதே வேளையில் நாட்டின் ஒற்றுமையையும் மேம்படுத்துகிறது. மேலும், மும்மொழி மொழிக் கொள்கையானது மொழி அடிப்படையிலான பாகுபாட்டுப் பிரச்சினையைத் தீர்க்கவும் சமூக நீதியை மேம்படுத்தவும் வழிசமைக்கும். இலங்கையில், மொழியானது பாரபட்சம் மற்றும் ஓரங்கட்டப்படுவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது வௌ்ளிடைமலை. மும்மொழி மொழிக் கொள்கையானது இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், சமத்துவம் மற்றும் நீதியான, நியாயமான சமூகத்தை கட்டியெழுப்புவதற்கும் அவசியமானதாகும். இலங்கையில் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் பல சவால்கள் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. பயிற்சி பெற்ற மொழி ஆசிரியர்கள், மொழி பெயர்ப்பாளர்கள் மற்றும் மொழி கற்றல், மற்றும் மொழி பெயர்ப்பிற்கான போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட வளங்களின் பற்றாக்குறை மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகும். மொழிக் கல்வியில் முதலீடு செய்வதன் மூலமும், மொழி கற்றலுக்கான ஆதாரங்களை வழங்குவதன் மூலமும் இதைத் தீர்க்க முடியும். பாடசாலைகளில் மும்மொழிக் கல்வி கட்டாயமானதாக்கப்பட வேண்டும். அனைத்து இலங்கையர்களுக்கு மும்மொழிக்கல்வி சம அளவில் வழங்கப்பட வேண்டும். மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தலில் மற்றொரு முக்கிய சவாலானது மக்கள்தொகையின் சில பிரிவுகளின் எதிர்ப்பாகும், அவர்கள் மும்மொழி மொழிக் கொள்கையை தங்கள் கலாசார மற்றும் மொழி அடையாளத்திற்கு அச்சுறுத்தலாகக் கருதலாம். மொழியியல் பன்முகத்தன்மை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் அதே வேளையில், இந்த சமூகங்களுடன் உரையாடலில் ஈடுபடுவதன் மூலமும் அவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதன் மூலமும் இதைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும். இதற்கு அர்த்தம் இனவாதிகளில் இனவாதக் கோரிக்கைகளைத் திருப்தி அடையச்செய்ய வேண்டும் என்பதல்ல; மாறாக அவர்களை சரியான வழியில் கையாளவேண்டும். அவர்களின் தவறான, ஆபத்தான கொள்கைகளைப் பற்றிய வௌிப்படையான கலந்துரையாடலை ஏற்படுத்த வேண்டும். மும்மொழிக்கொள்கையின் நன்மைகளைப் பற்றி பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒரு நாடும், அரச இயந்திரமும் பலமொழிகளைக் கொண்டு இயங்க முடியுமா என்று கேட்பவர்களுக்குச் சரியான பதிலை வழங்க வேண்டும். பல மொழிகளை தங்கள் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளாக வெற்றிகரமாக செயல்படுத்திய பல நாடுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, சுவிட்சர்லாந்தில் ஜெர்மன், பிரஞ்சு, இத்தாலியன் மற்றும் ரோமன்ஷ் ஆகிய நான்கு அதிகாரப்பூர்வ மொழிகள் உள்ளன. மேலும் மொழியியல் மற்றும் கலாசார பன்முகத்தன்மையை மேம்படுத்தவும் தேசிய ஒற்றுமையை மேம்படுத்தவும் முடிந்தது. மொழிக் கல்வி முறை மற்றும் மொழி கற்றலுக்கான ஆதாரங்களை வழங்குவதன் மூலம் அந்த நாடு இதைச் சாதித்துள்ளது. இதேபோல், கனடாவில் இரண்டு அதிகாரப்பூர்வ மொழிகள் உள்ளன. ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு; இதன் மூலம் கனடாவால் தேசிய ஒற்றுமையை ஊக்குவிக்கும் அதேவேளையில் மொழியியல் மற்றும் கலாசார பன்முகத்தன்மையை மேம்படுத்த முடிந்தது. இப்படி இன்னும் நிறைய உதாரணங்களுண்டு. ஆகவே மும்மொழிக் கொள்கை அமலாக்கம் என்பது சாத்தியப்படாத ஒன்று அல்ல. அதனைச் செய்வதற்கான அரசியல் விருப்பம் இருந்தால், அதனைச் சாதிக்கலாம். இலங்கையில் மும்மொழி மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு, அரசாங்கம் மொழிக் கல்வியில் முதலீடு செய்வதுடன், மொழி கற்றலுக்கும், மொழி பெயர்ப்பிற்குமான உரிய வளங்களையும் வழங்க வேண்டும். இதில் மொழி ஆசிரியர்களுக்கும், மொழி பெயர்ப்பாளர்களுக்கும் பயிற்சி அளிப்பது, மொழி கற்றல் பொருட்களை வழங்குவது மற்றும் மொழி கற்றல் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது ஆகியவை அடங்கும். மிக முக்கியமாக அரசியலமைப்புத் திருத்தத்தினூடாக, உறுதியாக வகையில், மும்மொழிக் கொள்கை கட்டாயமானதாக்கப்பட வேண்டும். இலங்கையின் எந்தவொரு குடிமகனுக்கும், மும்மொழிகளில், தான் விரும்பும் மொழியொன்றில் அரசின் சகல சேவைகளையும் அணுகக் கூடிய உரிமை வழங்கப்பட வேண்டும். அரச ஊழியர்களுக்கு மும்மொழி அறிவு கட்டாயமானதாக்கப்பட வேண்டும். குறிப்பாக ஆட்சேர்ப்பின் போது, மும்மொழி ஆற்றல் அடிப்படைத் தகுதியாக மாற்றப்பட வேண்டும். மேலும், மும்மொழிக் கொள்கையை எதிர்க்கக்கூடிய சமூகங்களுடனும் அரசாங்கம் உரையாடலில் ஈடுபட வேண்டும். மொழியியல் பன்முகத்தன்மை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதன் மூலம் அவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்ய முயற்சிக்க வேண்டும். ‘தனிச்சிங்களம்’ என்பது ஒரு வரலாற்றுத் தவறு. அதனால் இனரீதியாக தமிழர்கள் பாதிக்கப்பட்டது யாவரும் அறிந்ததே. ஆனால், இலங்கையின் பொருளாதாரத்திற்கும் அது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சேவை மைய பொருளாதாரத்தைக் கொண்ட இலங்கைக்கு ஆங்கில அறிவின் பற்றாக்குறை என்பது பெரும் பின்னடைவாகவே இருக்கிறது. உல்லாசப் பிரயாணத்துறையாக இருக்கட்டும், அல்லது தொழில்நுட்ப சேவைத்துறையாக இருக்கட்டும், உலகத்திற்கு எமது சேவைகளை விற்பதற்கு ஆங்கில அறிவு இன்றியமையாத தேவை. தனிச்சிங்களச் சட்டம் இல்லாதொழித்த முக்கியமான விடயங்களில் ஒன்று இலங்கையர்களுக்கு கிடைக்கக் கூடியதாக இருந்த தரமான ஆங்கிலக் கல்வி. அந்தத் தரமான ஆங்கிலக் கல்வியுடன், சிங்களம், தமிழ் என்பவை புகட்டப்பட்டிருந்தால், இலங்கையின் நிலை மேம்பட்டதா இருந்திருக்கும். ஆனால் அதனைச் செய்யாது தனிச்சிங்களம் என்ற இனவாத வெறிக்குள் ஊறியதன் பிரதிபலனைத்தான் இலங்கை இன்றும் அனுபவித்துக்கொண்டிருக்கிறது என்ற கருத்தில் உண்மையில்லாமல் இல்லை. இன்று இதனை மாற்ற, மும்மொழிக் கொள்கையின் முழுமையான அமலாக்கம்தான் சாலச்சிறந்த வழி. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மும்மொழிக்-கொள்கையை-அமல்படுத்தல்/91-316311
  17. இலங்கையின் பெரும் சாபக்கேடு: தீர்க்கதரிசனமுள்ள அரசியல்வாதிகள் இல்லாமை என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan 1965 இல் சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்ததைத் தொடர்ந்து, லீ குவான் யூ சிங்கப்பூர் என்ற குட்டித் தீவுத் தேசத்தை நிறுவும் பணியைத் தொடங்கினார். ஒரே ஒரு தலைமுறையில், லீ குவான் யூ, அந்தக் குட்டித் தீவின் மக்களை ஒன்று திரட்டி, ஆயுதப் படைகளை வலுப்படுத்தவும், உள்கட்டமைப்பை விரிவுபடுத்தவும், குடியேறியவர்களை அவர்களின் பூர்வீகம் பொருட்படுத்தாமல் வரவேற்கவும் தனது அமைச்சரவை கூட்டாளிகளை வழிநடத்துவதன் மூலம் சிங்கப்பூரை ‘மூன்றாம் உலக’ நாட்டிலிருந்து ‘முதல் உலக’ உலகளாவிய பெருநகரமாக மாற்றினார். இன்று உலகளவின் தனிநபர் தலா வருமானம் உயர்ந்த முதல் ஐந்து நாடுகளுக்குள் சிங்கப்பூர் இருக்கிறது. மலேசியாவால் வேண்டாம் என்று ஒதுக்கப்பட்ட ஒரு குட்டித் தீவை, பொருளாதார, மற்றும் சமூக ரீதியாக வளர்ந்த நாடாக மாற்றியது லீ குவான் யூவின் சாதனை. அதனால் அவர் சிங்கப்பூரின் ‘ஸ்தாபக தந்தை’ என்று பரவலாக அங்கிகரிக்கப்பட்டார். சிங்கப்பூரைக் கட்டியெழுப்புவதில் அவர் பெற்ற வெற்றி, வரலாற்றில் இருந்து பாடம் கற்று, பல்லின மற்றும் பன்மொழி அரசை உருவாக்கும் திறனில் வேரூன்றி இருந்தது. சிங்கப்பூர் அடைந்த பெரும் வளர்ச்சி, மலேசியாவில் சாத்தியப்படவில்லை. அங்கு பெரும்பான்மை மலாய் மக்கள், தங்கள் தேசத்தில் சீனர்கள் மற்றும் பிற சிறுபான்மையினரை குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே சேர்க்க வேண்டும் என்று விரும்பினர். இது மலேசியாவுக்குள் இன ரீதியான கொதிப்பு நிலைகள் உருவாகக் காரணமானது. லீ இதனை நன்கு அவதானித்திருந்தார். லீ சிங்கப்பூருக்கான புதிய அரசாங்கக் கட்டமைப்பை மாற்றியமைக்க நினைத்தார். சிங்கப்பூரை அவர் ஒரு பல்லின மற்றும் பன்மொழி மாநிலத்தின் அடித்தளத்தில் கட்டினார். அவரது புதுமையான நிர்வாகம் மற்றும் ஆட்சி அணுகுமுறை சிங்கப்பூர் செழிக்கவும், 20 ஆம் நூற்றாண்டின் மிக வெற்றிகரமான வளர்ச்சிக் கதையாக மாறவும் காரணமானது. லீயின் சிந்தனை, ‘லீ குவான் யூ: த மான் அன்ட் ஹிஸ் ஐடியாஸ்’ என்ற புத்தகத்தில் தௌிவாகப் பிரதிபலிக்கிறது. இது சிங்கப்பூரின் சவால்களைத் தீர்ப்பதற்கான அவரது மூன்று பகுதி அணுகுமுறையை கோடிட்டுக் காட்டுகிறது: தடையை கண்டறிதல், தீர்வை முன்வைத்தல் மற்றும் சமூகம் வளர என்ன தேவை என்பதை மதிப்பீடு செய்தல். சிங்கப்பூர் மற்றும் உலகிற்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் எதிர்காலத்தின் படத்தை அவர் விட்டுச் சென்றார். ஒரு தீர்க்கதரிசனமுள்ள தலைமை கிடைத்தது சிங்கப்பூர் என்ற குட்டித் தீவுக்குக் கிடைத்த பெரும் வரம். சீனர்கள், மலாயர்கள், இந்தியர்கள் என பல்லினங்கள் நிறைந்த, அதேவேளை சீனர்களை 70%-ற்கு அதிகமாகக் கொண்ட தீவை, சீன இனத்தை சார்ந்த லீ குவான் யூ நினைத்திருந்தால், சீன இனத் தேசியவாதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்து ஆட்சியைத் தக்கவைத்தும் இருந்திருக்கலாம். ஆனால் சிங்கப்பூர் இவ்வளவு தூரம் வளர்ந்திருக்காது. இலங்கையைப் போல இனப்பிரச்சினையில் சிக்கி சீரழிந்திருக்கும். இந்த விஷயத்தில் லீ குவான் யூ தௌிவாக இருந்தார். பெரும்பான்மை வாக்குகளைப் பெறுவதற்கான எளிதான வழி, “எங்களுக்கு வாக்களியுங்கள்; நாங்கள் சீனர்கள்; அவர்கள் இந்தியர்கள்; அவர்கள் மலாய்க்காரர்கள் என்று சொல்வது. அப்படிச் செய்தால் எங்கள் சமூகம் பிளவுபடும்” என்று லீ குவான் யூ பகிரங்கமாகவே கூறினார். “உங்களிடம் ஒற்றுமை இல்லையென்றால். ஒரு சமுதாயமாக உங்களால் முன்னேற முடியாது” என்பது லீ குவான் யூ சொன்ன செய்தி. எத்தனை உயர்ந்த தீர்க்கதரிசனம்! இந்த விடயத்தில் விட்டுக்கொடுப்பிற்கே இடமில்லை என்பதில் லீ பிடிவாதமாக இருந்தார். இனம், மொழி, மதம் ஆகிய அட்டைகளைக் காட்டி விளையாட வேண்டாம். நாங்கள் இவ்வளவு தூரம் வந்துவிட்டோம், நாங்கள் ஒற்றுமையாகிவிட்டோம், அதை அப்படியே வைத்திருங்கள்” என்பது சிங்கப்பூர் மக்களுக்கு லீ குவான் யூ சொல்லிச் சென்ற செய்தி. லீ குவான் யூவின் தீர்க்கதரிசனம் என்பது இந்த இனங்கள் சார்ந்த விடயத்தைத் தாண்டி, சிங்கப்பூர் என்ற எந்த இயற்கை வளங்களுமற்ற குட்டித் தீவை பொருளாதார ரீதியில் மேம்படுத்துவதிலும் முக்கியத்துவம் பெற்றிருந்தது. இன்று உலகளவின் தனிநபர் தலா வருமானம் உயர்ந்த முதல் ஐந்து நாடுகளுக்குள் சிங்கப்பூர் இருக்கிறது என்றால் அதற்கு லீ குவான் யூ எடுத்துக்கொண்ட பொருளாதார அணுகுமுறைதான் அடிப்படைக் காரணம். கம்யுனிசம், சோஷலிசம், மூடிய பொருளாதாரம் பேசி மக்களை ஏமாற்றும் பணியை லீ செய்யவில்லை. சர்வதேச வணிகத்தை ஏதோவோர் ஆபத்தான பொருளாக லீ கருதவில்லை. ஆனால் சிங்கப்பூரின் நிதியையும், வணிகத்தையும் பாதுகாப்பதற்கான எல்லா நடவடிக்கைகளையும் அவர் எடுத்தார். சிங்கப்பூர் டொலரின் சர்வதேச மயமாக்கலைத் தடுப்பதன் மூலமும், வெளிநாட்டு வங்கிகளின் செயற்பாடுகளை மட்டுப்படுத்துவதன் மூலமும் லீ உள்நாட்டு நிதியில் இறுக்கமான பிடியை வைத்திருந்தார். இதன் பொருள் சர்வதேச நிறுவனங்கள் சிறிய தீவு நாட்டில் தங்களை நிலைநிறுத்துவதற்கான வாய்ப்பைக் கண்டன, ஊழலற்ற சூழல், தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் இணைந்து சிறந்த நிதி மற்றும் பொருளாதாரக் கொள்கை என்பன, பல பன்னாட்டு நிறுவனங்கள் சிங்கப்பூரை ஒரு பிராந்திய மையமாகத் தேர்ந்தெடுத்தன. லீ திறந்த சுதந்திர வர்த்தகத்தை கையிலெடுத்து வெற்றியும் கண்டார். இது சிங்கப்பூர், பெரும் பன்னாட்டு நிறுவனங்களின் வௌிநாட்டு முதலீட்டை தாராளமாக ஈர்க்க உதவியது. மேலும், சிங்கப்பூரின் எழுச்சிக்கான ஒரு தெளிவான காரணி, உலகளாவிய நிதிய எழுச்சிகளை சீராகப் பயன்படுத்திக் கொள்ளும் லீயின் திறன் ஆகும். இது 1971 இல் அமெரிக்கா டொலரை தங்கத்தின் பெறுமதியின் நிர்ணயத்திலிருந்து நீக்கியபோது தொடங்கியது. லீ இந்த வாய்ப்பை விரைவாகப் புரிந்துகொண்டு, சிங்கப்பூரை அந்நியச் செலாவணிக்கான பிராந்திய மையமாக நிறுவினார். உண்மையில், 1968 முதல், சிங்கப்பூர் அரசாங்கம் ஆசிய டொலர் சந்தையை வளர்ப்பதற்கு ஊக்கத்தொகை மற்றும் முன்னுரிமை வரி சலுகைகளை வழங்கியுள்ளது. இந்த முன்முயற்சியானது சிங்கப்பூர் ஒரு நிதி மையமாக வளர்ச்சியடையவும், அதன் அருகில் உள்ள போட்டியாளரான ஹொங்கொங்கை விட முன்னணியில் இருக்கவும் உதவியது. அதேவேளை உள்நாட்டு உட்கட்டமைப்பு அபிவிருத்தியடையாமல் பொருளாதார, சமூக வளர்ச்சி சாத்தியமில்லை என்பதையும் லீ உணர்ந்திருந்தார். வீடமைப்பு உள்ளிட்ட உள்நாட்டு உட்கட்டமைப்பை சரியான வகையில் திட்டமிட்டு லீயின் அரசாங்கம் முன்னெடுத்தது. சேரிப்புறங்களை மாற்றி, உலகத்தரத்தில் திட்டமிடப்பட்ட நகரமயமாக்கலை சிங்கப்பூர் கண்டது! லீ குவான் யூ மீதும், சிங்கப்பூர் மீதும் விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. சிங்கப்பூரில் ஜனநாயக இடைவௌி குறைவாக இருக்கிறது. பேச்சுச் சுதந்திரமில்லை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. ஒரு பலமான எதிர்க்கட்சி கூட சிங்கப்பூரில் இல்லை எனலாம். சிங்கப்பூர் கண்ட அசுர வளர்ச்சியின் விலை அது என்று கூடச் சொல்வோரும் உண்டு. இந்தக் குறைகள் இருந்தாலும், இப்படி ஒரு தலைமை எங்கள் நாட்டுக்குக் கிடைக்கவில்லையே என பலரும் அங்கலாய்க்கும் ஒரு தெளிவான பார்வையும், தீர்க்கதரிசனமும் கொண்ட தலைமை சிங்கப்பூரிற்குக் கிடைத்துள்ளது. சரி! இத்தகைய ஒரு தலைமையேனும் இலங்கைக்கு கிடைத்துள்ளதா என்றால் அது கேள்விக்குறியே? இலங்கையிலுள்ள எத்தனை அரசியல்வாதிகளுக்கு இலங்கை என்ற நாடு பற்றிய தீர்க்கதரிசனம் இருக்கிறது? இந்தக் கேள்வியை இலங்கை மக்கள் தமக்குத் தாமே கேட்டுக்கொள்வது அவசியம். இனவாதத்தால் எந்த நாடும் வளர்ந்ததில்லை என்பதுதான் வரலாறு. ஆனால் அந்த வரலாறு தெரிந்த, புரிந்த, பெரும் கல்வி கற்ற அரசியல்வாதிகள் கூட, அரசியலுக்காக இனவாதம் பேசிய நாடு இது. தேர்தல் வெற்றி, பதவி மோகம், ஆட்சி அதிகாரம் என்ற சின்ன வட்டத்துக்குள் வாழ்ந்துகொண்டு, நாட்டைச் சூறையாடி தமது வாழ்க்கையை எப்படி முன்னேற்றலாம் என்று சிந்திக்கும் அரசியல்வாதிகளையும், அவர்களுடைய அடிவருடிகளையும் கொண்ட நாடும், அவர்களை வாக்களித்து ஆதரிக்கும் மக்களும் உள்ள நாடு வங்குரோத்தானதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது. இங்குள்ளவர்கள் லீ குவான் யூவின் சர்வாதிகாரத்தை மட்டும் கையிலெடுக்க விரும்புகிறார்கள்; மற்றவற்றை மறந்துவிடுகிறார்கள். இலங்கை அரசியலின் பெரும்குறை, இங்கு நாட்டையும் மக்களையும் நேசிக்கும், லீ குவான் யூ போன்ற தீர்க்கதரிசனம் மிக்க தலைமைகள் இல்லாமை! https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இலங்கையின்-பெரும்-சாபக்கேடு-தீர்க்கதரிசனமுள்ள-அரசியல்வாதிகள்-இல்லாமை/91-316021
  18. அடுத்து ஜனாதிபதித் தேர்தல்? என்.கே.அஷோக்பரன் Twitter: @nkashokbharan உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்து நடாத்து என்று கதறிக்கொண்டிருந்த எதிர்க்கட்சிகளெல்லாம், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான நீட்டிக்கப்பட்ட நிதி வசதியை அங்கீகரித்ததன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பற்றிப் பேசுவதைக் குறைத்துக்கொண்டன. இலங்கையின் பெற்றோலியச் சந்தைக்குள் போட்டியை ஊக்குவிப்பதற்காக ஏனைய போட்டியாளர்களை உள்ளீர்க்க அமைச்சரவை எடுத்துக்கொண்ட தீர்மானத்தினை எதிர்த்து, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்கள் முன்னெடுத்த வேலைநிறுத்தமும் படுதோல்வியில் முடிந்திருக்கிறது. எரிபொருள் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டது. எரிவாயு விலையும் ஆயிரம் ரூபாயால் குறைக்கப்பட்டது. தொடர்ந்தும் விலைவாசி கொஞ்சம் குறையும் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே உருவாகியுள்ளது. தான் ஏற்ற பணியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ குறிப்பிடத்தக்க அளவு நிறைவேற்றியுள்ளார் என்ற நம்பிக்கை பொதுமக்களிடம் துளிர்விடத் தொடங்கியிருக்கிறது. அதனாலோ என்னவோ ஒரு மாதம் முன்புவரை கூட, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்து நடாத்து என்று தலைகீழாக நின்ற எதிர்க்கட்சிகள் தற்போது கள்ள மௌனம் சாதிக்கின்றன. அரசியல் யதார்த்தம் அவர்களுக்கும் விளங்கியிருக்கும். அதுபோல, ரணில் விக்ரமசிங்ஹ என்ற அரசியல் சாணக்கியன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்துவதில் அக்கறையற்றிருந்ததற்கும், ஐ.எம்.எஃப் உதவி கிடைத்தபின் களநிலவரங்கள் மாறும் என்ற கணிப்பும் முக்கியமானதாக இருந்திருக்கும். தற்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ பக்கமாகக் காற்றடிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், சஜித் பிரேமதாஸ பக்கத்திலுள்ள பலரும் ரணில் விக்ரமசிங்ஹ பக்கம் தாவுவதற்கு சமயம் பார்த்துக்கொண்டிருப்பதான கருத்துக்கள் பரவலாகப் பதியப்படுகின்றன. இலங்கை அரசியலில் கட்சி தாவுதல் என்பது, குரங்கு கொப்பு விட்டு கொப்பு தாவுவதைப் போன்றது. ஆகவே சமகி ஜன பல வேகயவினர், சஜித் என்ற காய்ந்துபோன கொப்பிலிருந்து, ரணில் என்ற ஆலமரத்திற்கு தாவ விரும்புகிறார்கள் என்ற செய்தியில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. ஆனால் அந்தத் தாவலும், ஆதரவும் இந்த சந்தர்ப்பத்தில் ரணில் விக்ரமசிங்ஹவிற்குத் தேவையா என்பதுதான் முக்கிய கேள்வி. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹவைப் பொறுத்தவரையில், பொருளாதார மீட்சித் திட்டங்கள்தான் முன்னுரிமையுடைய தேவையாக இருக்கின்றன என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். அதன்படி, அந்தத் திட்டங்களுக்கு உயிர் கொடுப்பதற்கு தேவையான பாராளுமன்றப் பெரும்பான்மை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் ஆதரவில் ஜனாதிபதி ரணிலுக்கு உண்டு. ஆகவே அதற்காக சமகி ஜன பலவேகய ஆட்களை பதவிகொடுத்து கட்சிதாவச் செய்ய வேண்டிய அத்தியாவசிய நிலையில் அவர் இல்லை. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியை மீட்டெடுக்க வேண்டும் என்ற அவருடைய தனிப்பட்ட விருப்பத்திற்கு, ஐ.தே.க-விலிருந்து விலகியவர்களை மீண்டும் கொண்டு வருவது பற்றி அவர் யோசிக்க வேண்டியதாக இருக்கிறது. அவர் ஐ.தே.க-விலிருந்து தன்னை தற்போது சற்றே தூரமாக வைத்திருந்தாலும், அவர்தான் இன்னமும் ஐ.தே.க தலைவர். இந்த இடத்தில் தான் அடுத்த தேர்தல் பற்றிய கேள்வி எழுகிறது. ஜனாதிபதியால் தற்போது பாராளுமன்றத்தைக் கலைத்து பாராளுமன்றத் தேர்தலை நடத்த முடியும், அல்லது ஜனாதிபதித் தேர்தலுக்குப் போக முடியும். இதில் எதை ஜனாதிபதி ரணில் செய்யப்போகிறார் என்பதுதான் இப்போதுள்ள கேள்வி. ஜனாதிபதி ரணில் ஆதரவளிக்கும் கட்சி அல்லது தரப்பின் வேட்பாளர்கள் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறுவதைவிட, ஜனாதிபதித் தேர்தலொன்று தற்போது நடந்தால் ரணில் விக்ரமசிங்ஹ வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. தற்போதைய சூழலின் கீழ், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுண ஜனாதிபதி ரணிலை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிக்கும் என்று தெரிகிறது. அப்படியானால் அவர்கள் ஒரு போட்டியாளரை நிறுத்தப் போவதில்லை. சஜித் பிரேமதாஸ, ரணில் விக்ரமசிங்ஹவை எதிர்த்து இன்றைய சூழலில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாரா என்பது கேள்விக்குறியே. ஓரளவேனும் தந்திரோபாயமாகச் சிந்தித்தால் அவர் அதனை தவிர்ப்பார். ஆனால் உணர்வுவசப்பட்டுச் சிந்தித்தால், அவர் போட்டியிடக் கூடும். மறுபுறத்தில், ஜே.வி.பி தனது தற்போதைய முகமூடியான என்.பி.பி-யின் கீழ் அநுரகுமார திசாநாயக்க போட்டியிடக் கூடும், அதுபோல “ஹெலிகொப்டரில்” மைத்திரி பாலவோ, டளஸோ போட்டியிடக்கூடும். இந்தக் களத்தில் எதிர்த்தரப்பு பிளவடைந்திருக்கிறது. அவர்களிடையே ஒற்றுமையை உருவாக்குவது என்பது மிகக்கடினமான காரியம். ரணில் விக்ரமசிங்ஹ என்ற அரசியல் சாணக்கியன் இருந்ததால் தான் 2015-ல் எதிர்க்கட்சியின் பிரதான வேட்பாளர் என்ற திரண்ட ஆதரவுத்தளத்தில் போட்டியிட்டு மைத்திரி பாலவினால், மஹிந்தவை எதிர்த்து வென்று ஜனாதிபதியாக முடிந்தது. ஒருவேளை அந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பிரிந்து நின்றிருந்தால், அந்த வெற்றி சாத்தியமாகியிருக்காது. இதில் ஜே.வி.பி-கூட தன்னுடைய வேட்பாளரை இறக்காது, கூட்டணிக்கு வௌியில் நின்று மைத்திரி பாலவை ஆதரித்திருந்தது. இன்றைய சூழலில் இதுபோன்றதொரு பொதுவேட்பாளர் இறக்கப்பட்டு, அவரை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரிக்குமா என்பது கேள்விக்குறியே! சஜித் போட்டியிட்டால், அவரை கூட ஆதரிக்குமா என்பதும் கேள்விக்குறியே. அல்லது வேறு ஒருவர் பொதுவேட்பாளராகும் போது, அவரை வெல்ல வைக்க சஜித் ஆதரிப்பாரா என்பதும் கேள்விக்குறியே! ஆகவே இந்தக் கணக்குகளைக் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹவைப் பொறுத்தவரையில் அடுத்து பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதைவிட, ஜனாதிபதித் தேர்தலுக்குச் செல்வதுதான் ஒப்பீட்டளவில் சாதகமானதான இருக்கும். இதைச் செல்வதால், ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் வெற்றி உறுதி என்று சொல்வதாக அர்த்தமில்லை. ஒருவேளை எதிர்க்கட்சிகள் ஒன்றுதிரண்டு ஒரு பொதுவேட்பாளரை ஆதரித்தால் அது சாத்தியம். இன்றைய எதிர்க்கட்சிகளின் இயக்குகரமாக இருக்கும் வௌிநாட்டு தூதுவராலய சக்திகளின் அழுத்தத்தின் பெயரில் அப்படியொரு தேர்தல் கூட்டு சாத்தியமானாலும் அதிசயமில்லை. அப்படியொரு நிலையின் கீழ் ஒரு “தரமான” பொதுவேட்பாளர் இறக்கப்பட்டால், ரணில் விக்ரமசிங்ஹ கணிசமான சவாலை எதிர்நோக்க வேண்டியிருக்கும். இந்த இடத்தில்தான் மறுபடியும், இலங்கையின் சிறுபான்மையினரின் வாக்குகள் முக்கியத்துவம் மிக்கனவாக மாறுகின்றன. சிறுபான்மையினர் ரணிலை ஆதரிப்பார்கள் என்ற எடுகோள், இம்முறை கொஞ்சம் சவாலுக்குட்படும்! ஏனென்றால் இம்முறை ரணிலை, ராஜபக்‌ஷக்கள் எதிர்க்கவில்லை, ஆதரிக்கிறார்கள். ராஜபக்‌ஷக்கள் எங்கு இருக்கிறார்களோ, அங்கு சிறுபான்மையினரின் வாக்குகள் இருப்பதில்லை என்பதுதான் இலங்கை தேர்தல் நியதி! ஆகவே இந்த விடயத்தில் சிறுபான்மையினருக்கு நம்பிக்கையளிக்க வேண்டிய கட்டாயத்தில் ஜனாதிபதி ரணில் இருக்கிறார். அது அவ்வளவு இலகுவானாதாக இருக்கப் போவதில்லை. 2023 பெப்ரவரி 4, சுதந்திர தினத்திற்கு முன் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கு என்று சொன்னவர் ரணில் விக்ரமசிங்ஹ, ஆனால் பெப்ரவரி போய், மார்ச் போய், ஏப்ரலும் வந்துவிட்டது, ஆனால் தீர்வு பற்றியோ, ஏன், குறைந்தபட்சம் 13ம் திருத்தத்தின் முழுமையான அமுல்ப்படுத்தல் பற்றியோ எந்தக் கதையுமே இல்லை. மறுபுறத்தில், தொல்பொருள்திணைக்களமென்ற பெயரில் பேரினவாத சக்திகளின் அட்டகாசம் வடக்கு-கிழக்கில் தமிழ் மக்களின் அடையாளங்களைச் சிதைத்துக்கொண்டிருப்பதை தமிழ் மக்கள் சினத்தோடும், கடும் விசனத்தோடும் எதிர்கொள்கிறார்கள். இதுவெல்லாம் சிறுபான்மையினர் வாக்குகளை அந்நியமாக்கும் என்பதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ விரைவில் புரிந்துகொள்வது நல்லது. இல்லையென்றால், 2005 மீண்டும் நடக்கலாம். ஆகவே ஜனாதிபதி ரணில் இதுபற்றியும் கரிசனம் கொள்வது அவசியம். தமிழ் அரசியல் கட்சிகள், இந்த முறை பலமான பேரமொன்றில் ஜனாதிபதி ரணிலுடன் ஈடுபட வேண்டியது அவசியம். நூறு கோடி ரூபாய்க்கான பேரமல்ல. மாறாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பான பேரத்தில் ஈடுபட வேண்டும். ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பே சில உறுதிமொழிகளை மட்டுமல்ல, சில நிபந்தனைகளையும் நிறைவேற்றிக்கொண்டபின் ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். 2024ன் இறுதிப்பகுதியில் நடக்க வேண்டிய ஜனாதிபதித் தேர்தல், 2024ன் ஆரம்பப் பகுதியில், அல்லது நடுப்பகுதியில் நடக்கலாம் என்பதுதான் இப்போதைய எதிர்பார்ப்பு. ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையோடு அடுத்த சில மாதங்களில் பாராளுமன்றத் தேர்தலும் நடத்தப்படலாம். எது எவ்வாறாயினும், 2024-2025 தேர்தல் ஆண்டுகளாகவே இருக்கப் போகின்றன. அதற்கான முஸ்தீபுகள் ஆரம்பமாகிவிட்டன. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அடுத்து-ஜனாதிபதித்-தேர்தல்/91-315528
  19. ‘சிஸ்டம் சேன்ஞ்’காரர்களும் தமிழ் மக்களும் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan கோட்டாபய ராஜபக்‌ஷவின் பிறழ்வாட்சியின் கீழ், நாடு அதளபாதாளத்தில் விழுந்து ஸ்தம்பித்து நின்ற போது, கோட்டாபயவை விரட்டியடிக்க, பொதுமக்கள் தாமாக வீதிக்கு இறங்கிப் போராடினர். இது இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமானதொரு மக்கள் எழுச்சியாகும். இந்த மக்கள் எழுச்சிக்கு தலைமை, அல்லது தலைவர்கள் என்று யாருமிலர். நாடெங்கிலும், ஆங்காங்கே மக்கள் தாமாகக் கூடி, தமது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். மக்கள் போராட்டங்களையும் ‘அறகலய’ என்ற சொல்லையும் தாம் மட்டுமே குத்தகைக்கு எடுத்துள்ளதாக, தமக்குள் மிக ஆழமாக நம்பிக்கொண்டிருக்கும் இலங்கையின் இடதுசாரிக் கூட்டம், இந்த மக்கள் எழுச்சியை தம்முடையதாக்க பகீரதப் பிரயத்தனப்பட்டன. பொதுமக்கள் தாமாகக் கூடும் இடங்களை, இந்த இடதுசாரிக் கூட்டங்கள், கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கத் தொடங்கின. தம்முடையவர்களையும், தம்மோடு இயைந்து இயங்கக்கூடிய அரசியல் ஆசையுள்ள சிலரையும், வேறு நிகழ்ச்சிநிரலில் மக்கள் போராட்டத்தில் சங்கமித்துள்ள ஏனைய சக்திகளையும் ஒன்றிணைத்து, இந்த இடதுசாரிகள் ‘மக்கள் போராட்டத்தை’ கையகப்படுத்த செய்த கைங்கரியங்கள் கொஞ்சநஞ்சமல்ல. ஏதோ ‘கோட்டா கோ ஹோம்’ போராட்டத்தை தாமே தலைமையேற்று நடத்துவது போல, தினம் தினம் ஊடகங்களுக்கு கருத்துச் சொல்வதும், ‘போராட்டக்காரர்களின் கோரிக்கைகள்’ என்று தமது கோரிக்கைகளை முன்வைப்பதுமாக ‘அறகலய’ என்பதை தம்முடையதாக்கினர். அதுவரை காலமும், மிக அமைதியான வழியில் இடம்பெற்ற சாதாரண பொது மக்களின் மக்கள் எழுச்சிக்குள் வன்முறையும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் ஒழுங்கீனமும் இடதுசாரிகள் மக்கள் போராட்டத்தைக் கைப்பற்றிய பின்னர் நடந்தவை. ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க மக்கள் எழுச்சியை, வன்முறை வெறியாட்டமாக்கியதில் ராஜபக்‌ஷர்களுக்கு எவ்வளவு பங்கிருக்கிறதோ, அதேயளவு பங்கு இந்த இடதுசாரிக்கூட்டங்களுக்கும் இருக்கிறது. இது அமைதி வழியில், அதுவரை காலமும் நடத்தப்பட்ட மக்கள் போராட்டத்தின் அறத்தைக் குலைத்து, அதனை நாசமாக்கியது என்பதுதான் உண்மை. மக்கள் எழுச்சியின் பின்னர் கோட்டா பதவி விலகிய பின்னர், நாட்டைக் கட்டியெழுப்ப புதிய ஜனாதிபதிக்கு வாய்ப்பளிக்க சாதாரண பொதுமக்கள் போராட்டங்களிலிருந்து விலகிய போதும் கூட, ‘சிஸ்டம் சேன்ஞ்’ என்ற வார்த்தையைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு, இந்த இடதுசாரிகளும் அவர்களோடு கைகோர்த்துள்ள அரசியல் ஆசையுள்ள சிலரும், வேறு நிகழ்ச்சிநிரலில் மக்கள் போராட்டத்தில் சங்கமித்துள்ள ஏனைய சக்திகளும் தொடர்ந்து போராட்டங்களை நடத்த பகீரதப் பிரயத்தனப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. ஆனால், மக்கள் விளித்துவிட்டார்கள். ஆனாலும், விடாமல் ஏதோ ‘சிஸ்டம் சேன்ஞ்’ கொண்டுவரப்போவதாக அடிக்கடி போராட்டங்களையும் வேலைநிறுத்தங்களையும் குழறுபடிகளையும் நடத்தி, நாடு பொருளாதாரப் பிறழ்விலிருந்து மீள்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்துக் கொண்டிருக்கிறார்கள். கோட்டா ஐ.எம்.எப்க்குப் போகவில்லை; உடனடியாக ஐ.எம்.எப்இன் உதவியைப் பெற வேண்டும் என்று அன்று பொதுமக்கள் வீதிக்கிறங்கி போராடினார்கள். இன்று இந்த இடதுசாரிகள், “அரசாங்கம் ஐ.எம்.எப்ற்கு போகிறது; ஐ.எம்.எப்ற்கு போகக் கூடாது; அதனை நாம் அனுமதிக்க மாட்டோம்” என்று போராடுகிறார்கள். இந்த இடதுசாரிகளுக்கு நாடு பொருளாதாரப் படுகுழியிலிருந்து மீள வேண்டும்; மக்கள் ஓரளவேனும் நிம்மதியாக வாழ வேண்டும் என்றெல்லாம் விருப்பமில்லை. நாடு இன்னும் இன்னும் மோசமடைய வேண்டும். அதனால் விரக்தியுறும் மக்கள், அதிகாரத்தை எப்படியாவது இடதுசாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிகாரப்பித்துப் பிடித்து அலைந்துகொண்டிருக்கிறார்கள். நிற்க! இந்த இடதுசாரிகள், ‘அறகலய’வின் போது, இன சௌஜன்யம் பற்றி நிறையப் பேசினார்கள். அதற்கான அடையாளமாகத் தமிழராக ஒன்றிரண்டு பேரை தம்முடைய மேடைகளில் ஏற்றியும் வைத்திருந்தார்கள். இந்த அடையாளம் தமிழர்களும், தாம் ஏதோ தமிழ் மக்களின் பெரும் பிரதிநிதிகள் போன்று எண்ணிக்கொண்டு அறிக்கைகள் விட்டுக்கொண்டும், ஊடகங்களுக்கு கருத்துச் சொல்லிக்கொண்டும், இடதுசாரிக் கூட்டத்தின் கீழ் ‘சிஸ்டம் சேன்ஞ்’ வந்தால், தமிழ் மக்களுக்கு உய்வு வரும் என்றும் கருத்துச் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். இந்த அடையாளத் தமிழர்களுக்கு, அரசியல் ஆசை இருக்கிற அளவுக்கு அரசியல் அறிவு இல்லை. வீதியில் இறங்கிப் போராடுவதும், கைதுசெய்யப்படுவதும், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிப்பதும், சர்வதேச தன்னார்வ நிறுவனங்களைச் சேர்ந்த நான்கு பேரைச் சந்தித்துப் பேசுவதும் அரசியல் என்று நம்பிக்கொண்டிருக்கிற, அதனால் தம்மால் பெரும் மாற்றத்தைச் சாதித்துக்கொள்ள முடியும் என்று மக்களுக்குக் காட்டி எதிர்காலத்தில் அரசியல் பதவிகளைப் பெற்றுக்கொள்ள விரும்புகிற சிறுபிள்ளைத்தனமான சிந்தனையாகும். தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கான மதிப்பும் மரியாதையும் இந்த அடையாளத் தமிழர்களுடன் கைகோர்த்து நிற்கும் ‘சிஸ்டம் சேன்ஞ்’காரார்களால் கூட வழங்கப்படாது என்பதற்கான மிக நல்ல உதாரணம் அண்மையில் இடம்பெற்றது. ‘சிஸ்டம் சேன்ஞ்’காரார்களின் முன்னிலை அமைப்புகளுள் ஒன்றான அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், அதன் அழைப்பாளர் வசந்த முதலிகேயின் தலைமையில், யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்து, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரைச் சந்தித்திருந்தனர். இதன்போது, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமாரால், வசந்த முதலிகேயிடம் தமிழ் மக்கள் சார்பான சில கோரிக்கைகளை முன்வைத்திருந்ததாக ஊடகவியலாளர் குமணன் பதிவுசெய்திருக்கிறார். தமிழ் மக்கள் வடக்கு-கிழக்கை பூர்வீகமாகக் கொண்ட, தனித்த மொழி, மத, கலாசார அடையாளம் கொண்ட மக்கள் கூட்டம்; இணைந்த வடக்கு-கிழக்கு தமிழ்மக்களின் தாயகம்; தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமையுண்டு; அதன்பாலாக தமிழ் மக்களுக்கு தமது அரசியல் அடைவைத் தீர்மானிக்கும் உரிமையுண்டு; சர்வதேசக் கண்காணிப்புக்கு உட்பட்ட சர்வசனவாக்கெடுப்பு ஒன்றின் மூலம் தமது அரசியல் அடைவை தமிழ் மக்கள் தீர்மானிக்க முடியும்; யுத்தக் குற்றம், மனிதவுரிமை மீறல் உள்ளிட்டவற்றுக்கு சர்வதேச பொறிமுறையின் கீழான விசாரணை நடத்தப்பட வேண்டும்; தமிழர் தாயகத்தை முற்றுகையிட்டுள்ள படைகள் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும்; இலங்கை அரசியலமைப்பின் ஆறாம் திருத்தம் நீக்கப்பட வேண்டும்; பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இல்லாதொழிக்கப்படுவதுடன் அதன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் விடுதலை செய்யப்பட வேண்டும்; இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதன் மூலமே பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட முடியும் என்பவையெல்லாம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதே அவர்கள் வசந்த முதலிகேக்கு வழங்கிய கோரிக்கைகளின் சாரம் என்று ஊடகவியலாளர் குமணன் பதிவுசெய்கிறார். இதனை வசந்தவும், அவரது ‘சிஸ்டம் சேன்ஞ்’ தோழர்களும் ஏற்கலாம்; அல்லது நிராகரிக்கலாம். அவர்கள் ஏற்றுக்கொள்வது என்பது சாத்தியமில்லாதது. இலங்கையின் இடதுசாரிகளில், சிறுபான்மையினர் அல்லாதவர்களில் பெரும்பான்மையினர் சிங்கள-பௌத்த தேசியவாதிகளும்கூட! இலங்கையின் மிகப் பெரிய மாக்ஸிஸக் கட்சியான ஜே.வி.பிதான் இலங்கையின் மிகப்பெரிய பேரினவாதக் கட்சியும் கூட. அவர்களுக்கு கிடைக்கும் கொஞ்சநஞ்ச வாக்குகளும் ஆதரவும் கூட, பேரினவாத இடதுசாரி வாக்குகள்தான். தமிழ் மக்களின் மேற்சொன்ன கோரிக்கைகளை ஏற்பது அவர்களால் என்றுமே முடியாத காரியம். சரி! அப்படியானால், இது எம்மால் முடியாது என்று நிராகரித்திருக்கலாம். அது குறைந்தபட்ச நேர்மையையாவது பிரதிபலித்திருக்கும். ஆனால், ஊடகங்களுக்கு அவர்கள் என்ன சொன்னார்கள் என்றால், தமக்கு யாழ்ப்பாணத்தில் எந்தக் கோரிக்கையும் யாராலும் விடுக்கப்படவில்லை என்று அறிக்கைவிடுகிறார்கள்! அப்படி கோரிக்கை தரப்பட்டதாகச் சொல்லும் செய்தி பொய் என்கிறார்கள். இதுதானா இவர்களின் ‘சிஸ்டம் சேன்ஞ்’? இலங்கையில் ஆட்சிபீடமேறிய ஏனைய அரசியல்வாதிகளை விட, இவர்கள் எந்த வகையில் மேம்பட்டவர்கள்? இலங்கையின் அரசியலைப் புரிந்துகொள்ள, இலங்கையின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். இலங்கையின் இன முரண்பாட்டைப் புரிந்துகொள்ள, இலங்கையின் இனங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். விடயம் முழுமையாகத் தெரிந்தால்தான், பிரச்சினையின் தன்மை விளங்கும். பிரச்சினையின் தன்மை புரிந்தால்தான், தீர்வுக்கான வழிபற்றி சரியாக யோசிக்கவேனும் முடியும். இது எதுவுமே தெரியாமல், புரியாமல், சும்மா ‘சிஸ்டம் சேன்ஞ்’, ‘சிஸ்டம் சேன்ஞ்’ என்று கத்துவதாலும், ஊடகங்களுக்குக் கருத்துச் சொல்லி தம்மைப் பெரும் அரசியல் சக்தியாக எண்ணிக்கொள்வதும் யாருக்கும் எந்தப் பயனையும் தராது. இதனை இந்த ‘சிஸ்டம் சேன்ஞ்’காரர்களோடு கைகோர்த்துக்கொண்டு, நிற்கும் அடையாளத் தமிழர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சிஸ்டம்-சேன்ஞ்-காரர்களும்-தமிழ்-மக்களும்/91-315327
  20. இலங்கையின் பொருளாதார பிரச்சினையை ஜே.வி.பியால் தீர்க்க முடியுமா? என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan இலங்கை இன்று சந்தித்துள்ள பொருளாதார பிறழ்வு நிலையை, தமக்குச் சாதகமாக்கத் துடித்துக் கொண்டிருக்கும் அரசியல் சக்திகளில் முன்னணியில் நிற்பது ஜே.வி.பி கட்சியாகும். தன்னுடைய பயங்கரவாத வரலாற்றை, அதைக் கண்டிராத, அறிந்திராத இன்றைய இளம் தலைமுறையினரிடம் இருந்து மறைக்கவும், தனது மார்க்ஸிஸவாத அடையாளத்தை மறைக்கவும், அரசியலுக்குப் புதிதான தாராளவாதிகளாகத் தம்மைக் காட்டிக்கொள்வோரோடு கைகோர்த்துக்கொண்டு, என்.பி.பி (தேசிய மக்கள் சக்தி) என்ற புதுப்பெயரில், புது சின்னத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கோடு “தேர்தலை நடத்து; தேர்தலை நடத்து” என்று கூக்குரலிட்டுக் கொண்டும், அக்கட்சி களத்தில் இறங்கியுள்ளது. ‘ஜே.வி.பிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து இருக்கிறது’ என்ற கருத்தையும் ஜே.வி.பி மிக நாசூக்காகக் கட்டமைத்து வருகிறது. பொருளாதாரப் பிறழ்வு நிலை, இலங்கை மக்களை பேரதிர்ச்சிக்கும் பேரவலத்துக்கும் ஆளாக்கியது என்பதில் மறுபேச்சுக்கு இடமில்லை. ஆகவே, பிரதான கட்சிகள், அரசியல்வாதிகள் மீது, மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். இந்தச் சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, வெறும் மூன்று சதவீதமாகவே உள்ள தனது வாக்குவங்கியைப் பெருப்பித்துக்கொள்ள, பகீரதப் பிரயத்தனத்தில் ஜே.வி.பி ஈடுபட்டுள்ளது. ஆனால், பொருளாதார மீட்சிக்கு ஜே.வி.பியினர் என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என்று கேட்டால், அதற்கு அவர்கள் வழங்கும் பதில்கள் நகைப்புக்கு உரியனவாகவும் சின்னப்பிள்ளைத் தனமானதாகவும் இருக்கின்றன. வௌிநாட்டிலுள்ள இலங்கையர்கள் டொலர் அனுப்புவார்கள். நாம், திருக்கோணமலை எண்ணெய்த் தாங்கிகளை மீளக்கட்டியமைத்து, அதில் எரிபொருளை வாங்கிச் சேமித்து, கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பி பணம் சம்பாதிப்போம். எரிபொருள் விலை குறையும் போது வாங்கி, சேமித்து, கூடும் போது விற்போம் என கதையளந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்தக் கதையளப்பு கூட, ஒருவகையில் அவர்களுக்குச் சாதகமானதாகவேதான் இருக்கிறது. பொருளியல் என்பது ஆழமானதும், சிக்கலானதுமானதொரு நிபுணத்துவப் பரப்பு. சாதாரண மக்களுக்கு பொருளியலை விளங்கப்படுத்துவது கடினம். குறிப்பாக, ‘பருப்பொருளியல்’; அது சார்ந்த நிதிக்கொள்கை, பணக்கொள்கை, பணவீக்கம் என்பன எல்லாம் சாதாரண மக்களால் இலகுவில் புரிந்துகொள்ளக் கூடியவிடயங்கள் அல்ல. இதனால்தான், சர்வதேச நாணய நிதியம் இன்று இலங்கைக்கு அங்கிகரித்துள்ள விரிவாக்கப்பட்ட நிதி வசதியை, வங்கியில் வாங்கும் கடனோடு, அல்லது இலங்கை வௌிநாடுகளிடம் வாங்கும் கடனோடு ஒப்பிட்டு, சாதாரண மக்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், ஜே.வி.பி சொல்லும் ‘பொருளதார தேவதைக் கதை’கள், அது எவ்வளவு தூரம் நடைமுறைச்சாத்தியம் அற்றதாயினும், சாதாரண மக்களால் அதைக் கிரகிக்க முடிவதால், அதை மக்கள் உண்மை என நம்பும் சாத்தியம் அதிகம். இந்த இடத்தில்தான், இன்னொரு கூட்டம், ‘ஜே.வி.பிக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்துப் பார்ப்போமே’ என்ற ரீதியிலான பிரசாரத்தையும் தொடங்கியிருக்கிறது. பொருளாதார நெருக்கடிகளின் போது, மார்க்சிஸ கட்சிகளின் பிரபல்யம், பல காரணங்களுக்காக அதிகரிப்பதை நாம் அவதானிக்கலாம். முதலாவதாக, மார்க்சிஸ சித்தாந்தம் தொழிலாளர்களின் உரிமைகள், சமூக நீதியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகச் சொல்கிறது. இது, தற்போதைய பொருளாதார அமைப்பால், தாம் பின்தங்கியதாக உணரும் மக்களைக் கவர்வதாக அமைகிறது. இரண்டாவதாக, பொருளாதாரத்தில் அரசின் தலையீடு அவசியம் என மார்க்சிஸ கட்சிகள் சொல்கின்றன. இது கட்டுப்பாடற்ற சந்தைகளால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு, ஒரு தீர்வாகக் கருதப்படுவதோடு, அரசு தலையிட்டால் பிரச்சினைகள் வராது என்ற பாமரச் சிந்தனைக்கு, இது கவர்ச்சியானதாக இருக்கிறது. மூன்றாவதாக, மார்க்சிஸ கட்சிகள் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு, செல்வந்த உயரடுக்குகள் மீது குற்றம் சாட்டுகிறார்கள். இது, தற்போதைய அதிகார கட்டமைப்பில் கோபம், ஏமாற்றம் போன்றவற்றைக் கொண்டிருக்கும் மக்களை ஈர்ப்பதாக அமைகிறது. எவ்வாறாயினும், பொருளாதார நெருக்கடிகளின் போது, மார்க்சிஸ, சோஸலிஸக் கட்சிகளைத் தேர்ந்தெடுக்கும் அவசரத்தில், சிந்திக்காமல் முடிவுகளை எடுப்பதில் மக்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உலகத்தில், அதிக கனிய எண்ணை வளமுள்ள நாடு வெனிசுவேலா. தென்அமெரிக்க நாடான வெனிசுவேலாவிடம் சவுதியை விட அதிக எண்ணை வளமுண்டு. இன்று, உலகைத் தன்பால் திரும்பிப் பார்க்கச் செய்யும் பிரம்மாண்டங்களைச் சவுதி சாதித்துக்கொண்டிருக்கும் போது, வெனிசுவேலா மக்கள் வறுமையில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள். பொருளாதார நெருக்கடியிலிருந்து ஒரு நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதில் மார்க்சிஸ அரசியல் கட்சிகளுக்கு உள்ள முக்கிய சவால்களில் ஒன்று, அவர்களின் சித்தாந்தம் பெரும்பாலும் பொருளாதாரத்தின் மீது அரசின் கட்டுப்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாகும். கட்டுப்பாடற்ற சந்தைகளால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு, பாமரச் சிந்தனையில் இதுவே பொருத்தமான தீர்வாகத் தோன்றினாலும், நடைமுறையில், வினைத்திறனின்மை, ஊழல், உற்பத்தித்திறன் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். வெனிசுலாவைப் பொறுத்தவரை, தொழில்களை தேசியமயமாக்குதல், பொருளாதாரத்தின் மீதான அரசின் கட்டுப்பாட்டை விரிவுபடுத்துதல் ஆகிய கொள்கைகள், உற்பத்தித்திறன் மற்றும் செயற்றிறனின் சரிவுக்கு வழிவகுத்தது, அத்துடன் வீங்கிய மற்றும் இலாபமற்ற அரசுக்கு சொந்தமான துறை, தனியார் முதலீட்டின் சரிவுக்கு வழிவகுத்ததுடன், புத்தாக்கத் தொழில்முனைவோருக்கு சந்தர்ப்பத்தையும், ஊக்கத்தையும் வழங்கவில்லை. மேலும், அத்தியாவசியப் பொருட்களின் மீது விதிக்கப்பட்ட விலைக் கட்டுப்பாடுகள் தட்டுப்பாடுகளுக்கும், பெரும் கறுப்புச் சந்தைக்கும் வழிவகுத்தது. இது பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகப்படுத்தியது. மார்க்சிஸ அரசியல் கட்சிகளுக்கு உள்ள மற்றொரு சவால் என்னவென்றால், அவர்களின் கருத்தியல் பெரும்பாலும் நடைமுறை தீர்வுகளை விட கருத்தியல் தூய்மைக்கு முன்னுரிமை அளிப்பதாக அமைகிறது. வெனிசுவேலாவைப் பொறுத்தவரை, அரசாங்கத்தின் கொள்கைகள், பொருளாதாரத்தின் சிக்கலான யதார்த்தங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், கடுமையானதாகவும் நெகிழ்ச்சித் தன்மையற்றதாகவும் இருந்தன. இது மாறிவரும் பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப, நெகிழ்வடையும் தன்மை இல்லாமைக்கு வழிவகுத்தது. மேலும், மார்க்சிஸ அரசியல் கட்சிகள் பெரும்பாலும் சர்வதேச சமூகத்துடனும் உலக சந்தைகளுடனும் விரோதமான உறவைக் கொண்டிருக்கின்றன. இது ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்கு ஆரோக்கியமான ஒன்றல்ல! வெனிசுவேலாவைப் பொறுத்தவரை, அரசாங்கம் தொழில்களை தேசிய மயமாக்கியமை மற்றும் விலைக் கட்டுப்பாடுகளை விதித்தமை என்பன ஏற்றுமதியின் சரிவுக்கு வழிவகுத்தது. அத்துடன் சர்வதேச கடன் மற்றும் முதலீட்டுக்கான அணுகல் இல்லாது போனமை, வெனிசுவேலாவின் பொருளாதாரத்தை அதலபாதாளத்துக்குள் தள்ளியது. சுருக்கமாகச் சொன்னால், பொருளாதார நெருக்கடியில் இருந்து ஒரு நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதில், மார்க்சிஸ அரசியல் கட்சிகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் சவால்களுக்கு வெனிசுவேலா ஒரு நல்ல உதாரணம். 1998இல், வெனிசுவேலாவில் வருமான சமத்துவமின்மை மற்றும் வறுமையை நிவர்த்தி செய்வதாக உறுதியளித்த மார்க்சிஸ தலைவர் ஹியூகோ சாவேஸை, அம்மக்கள் தமது ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தனர். இருப்பினும், பல ஆண்டுகளாக, சாவேஸின் கொள்கைகள், பொருளாதாரத்தின் சீரழிவுக்கு வழிவகுத்ததேயன்றி, மக்கள் எதிர்பார்த்த சோஸலிஸ சொர்க்கம் அவர்களுக்கு கிடைக்கவேயில்லை. அதிக பணவீக்கம், அடிப்படை பொருட்களின் பற்றாக்குறை ஆகியன பெரும்பாலான வெனிசுவேலா மக்களின் வாழ்க்கைத் தரத்தில் மோசமான சரிவை மட்டுமேதான் வழங்கியது. சாவேஸின் கொள்கைகளில் தொழில்களை தேசியமயமாக்குதல், பொருளாதாரத்தின் மீது அரசின் கட்டுப்பாட்டை விரிவுபடுத்துதல், அத்தியாவசியப் பொருட்களின் மீது விலைக் கட்டுப்பாடுகளை விதித்தல் ஆகியவை அடங்கும். இந்தக் கொள்கைகள், செல்வத்தை மறுபங்கீடு செய்வதையும், நாட்டில் வறுமைக்கான மூல காரணங்களை நிவர்த்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டிருந்ததாகவே பிரசாரம் செய்யப்பட்டன. ஆனால், நடைமுறையில், அவை திறமையின்மை, வினைத்திறனின்மை, ஊழல் மற்றும் உற்பத்தித்திறன் வீழ்ச்சிக்கு வழிவகுத்தன. தேசியமயமாக்கப்பட்ட தொழில்கள் வீங்கிப் பெருத்து, இலாபமற்றதாக மாறின. அதேநேரத்தில் விலைக் கட்டுப்பாடுகள் பற்றாக்குறையையும் பெரும் கறுப்புச் சந்தையையும் உருவாக்கின. சாவேஸைத் தொடர்ந்து, அடுத்த சோஸலிஸ நாயகனான நிகோலாஸ் மதுரோவின் ஆட்சியிலும் இந்தநிலை மிக மோசமாகவே தொடர்கிறது. படிப்படியாக அதிகரித்து வரும் வெனிசுவேலாவின் பணவீக்கமானது, 2018இல் 1,000,000% வீதத்துக்கு அதிகமானது. 2019 ஐ.எம்.எஃப் கணிப்பின்படி, பணவீக்கம் 10,000,000% ஆக இருந்தது. உலகில் அதிக கனிய எண்ணை வளமுள்ள நாட்டின் நிலை இதுவென்றால் நம்ப முடிகிறதா? மார்க்ஸிஸத்தின் சாதனை இது! ஆகவே, இலங்கையின் பொருளாதார மற்றும் ஆட்சிப் பிறழ்வுக்கு ஜே.வி.பி (அல்லது என்.பி.பி) ஒரு சர்வரோக நிவாரணி என்று நம்புவதற்கு முன்னர், அவர்களின் பொருளாதாரத் திட்டம் நடைமுறைச் சாத்தியமானதா, அந்தத் தேவதைக் கதைகள் உண்மையில் நடக்கக்கூடியவையா என்று சிந்திப்பது அவசியம். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இலங்கையின்-பொருளாதார-பிரச்சினையை-ஜே-வி-பியால்-தீர்க்க-முடியுமா/91-314921
  21. உள்ளூராட்சித் தேர்தல்; யாருக்கு வாக்களிப்பது? என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan இம்மாதம் நடக்கவிருந்த உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட பின்னர், தற்போது 2023 ஏப்ரல் 25 ஆம் திகதியன்று உள்ளூராட்சித் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உள்ளூராட்சித் தேர்தல், 2023 மார்ச் 9 அன்று நடைபெறவிருந்தன. ஆனால், இலங்கை தொடர்ந்து பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதால் ஏற்பட்ட நிதிப் பற்றாக்குறையால் குறித்த தினத்தில் தேர்தல் நடத்தப்பட முடியாது தாமதமானது. உயர்நீதிமன்றின் இடைக்கால உத்தரவைத் தொடர்ந்து, பாதீட்டில் தேர்தலுக்கென ஒதுக்கப்பட்ட நிதியை வழங்குவதைத் தடுக்க, இடைக்கால தடைவிதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல்கள் நடப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ள நிலையில், தற்போது தேர்தல் ஆணைக்குழு தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக பணியாற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கு ஏப்ரல் 25ஆம் திகதியை உள்ளூராட்சித் தேர்தலுக்கான புதிய திகதியாக அறிவிக்க அறிவுறுத்தியுள்ளது. உள்ளூராட்சி அதிகார சபைகளின் தேர்தல் கட்டளைச் சட்டத்தின் உப பிரிவு 38(1)(c) இன்படி, தேர்தல் ஆணைக்குழு தேர்தல் திகதியை நிர்ணயித்த பின்னர், தேர்தல்களை அறிவிக்கும் தனி வர்த்தமானிகளை பிராந்திய தேர்தல் அதிகாரிகள் வெளியிடுகின்றனர். ஆகவேதான், அவர்களுக்கான தேர்தல் திகதி அறிவுறத்தலை தேர்தல் ஆணைக்குழு வழங்கியுள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் நடக்குமா இல்லையா, என்ற கேள்வி ஒரு புறமிருக்க, இந்தவிடத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் வகிபாகமென்ன என்பதைப் புரிந்துகொள்ளுதல் அவசியமாகிறது. உள்ளூராட்சி மன்றங்களின் வகிபாகம் பற்றி அழுத்திச் சொல்வதற்கான தேவை எழுந்திருக்கக் காரணம், இந்த உள்ளூராட்சித் தேர்தல், நாட்டின் எதிர்காலத்தை மாற்றப்போகும், ஆட்சியை, ஆட்சிமுறையை மாற்றப்போகும் தேர்தலாக பிரதான எதிர்க்கட்சிகள் உருவகித்து வரும் பிரசாரத்தின் உண்மைத்தன்மை பற்றிய தௌிவு வாக்காளர்களிடம் ஏற்பட வேண்டும் என்பதாகும். உள்ளூராட்சி மன்றங்களென்றால் என்ன? உள்ளூராட்சி மன்றங்கள் என்பவை இலங்கையின் மூன்றாவது மற்றும் கீழ்மட்ட அரசாங்கக் கட்டமைப்பாகும். மத்திய அரசாங்கம் முதல் மட்டமாகவும், மாகாண சபைகள் இரண்டாம் மட்டமாகவும் உள்ளன எனலாம். உள்ளூராட்சி மன்றங்கள் தமது பகுதிக்குட்பட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை நிறைவேற்றுகின்றன. வீதிகள், நடைபாதைகள், உள்ளூர் போக்குவரத்து, உட்கட்டமைப்பு, சுகாதாரம், வடிகால், கழிவகற்றல், வீடுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொது நூலகங்கள், பொது பூங்காக்கள், பொழுதுபோக்கு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் பொது சேவைகளை வழங்குவதும், உறுதிப்படுத்துவதும் உள்ளூராட்சி மன்றின் பணிகள். ஆகவே மக்களின் வாழ்வோடு நேரடியாகத் தொடர்புடைய பல அடிப்படைப் பணிப்பொறுப்புகள் உள்ளூராட்சி மன்றின் பாற்பட்டது. மிகப் பொதுவான உதாரணமாக, குப்பை அள்ளுதல், ஊரைச் சுத்தப்படுத்துதல், வடிகால் அமைத்தல், சிறிய வீதிகளை அமைத்தல், சீரமைத்தல், ஆரம்ப சுகாதார வசதிகளை வழங்குதல், கட்டாக்காலி நாய்களைப் பிடித்தல், தீயணைப்பு மற்றும் அவசர உதவி சேவைகளை நடத்துதல், ஊர் பொதுச்சந்தைகளை நிர்வகித்தல், ஊர் மயானங்களை நிர்வகித்தல் போன்றவற்றை எல்லாம் செய்வது உள்ளூராட்சி மன்றங்களே! இந்த உள்ளூராட்சி மன்றங்கள், பெருநகரங்களில் ‘மாநகர சபை’ என்றும், நகரங்களில் ‘நகர சபை’ என்றும், ஏனைய பிரதேசங்களில் ‘பிரதேச சபை’ என்றும் அறியப்படுகின்றன. மாநகர சபைகள், 1947 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க மாநகர சபை கட்டளைச் சட்டத்தாலும், நகர சபைகள், 1939 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க நகர சபைகள் கட்டளைச் சட்டத்தாலும், பிரதேச சபைகள், 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டத்தினாலும் நிர்வகிக்கப்படுகின்றன. சமூகங்கள் நன்கு நிர்வகிக்கப்படுவதையும், வளமானதாக இருப்பதையும், அவர்களின் குடிமக்களின் தேவைகளுக்குப் பதிலளிக்கக் கூடியதாக இருப்பதையும் உறுதி செய்வதில் உள்ளூராட்சி மன்றங்களின் பங்கு முக்கியமானது. உள்ளூராட்சி மன்றங்கள் இல்லாமல், அத்தியாவசிய சேவைகளை வழங்குவதிலும், அடிமட்ட அளவில் மக்களை பிரதிநிதித்துவம் செய்வதிலும் மிக்பெரிய இடைவௌி ஏற்பட்டுவிடும். ஆனால், உள்ளூராட்சி மன்றத் தேர்தல், இன்றைய எதிர்க்கட்சிகள் மேடைக்கு மேடை முழங்குவதைப் போல, நாட்டின் எதிர்காலத்தை மாற்றப்போகும், ஆட்சியை, ஆட்சிமுறையை மாற்றப்போகும், விலைவாசியைக் குறைக்கப்போகும், பொருளாதாரத்தை மேம்படுத்தப்போகும், அந்நியச் செலாவணி வருவாயை அதிகரிக்கப்போகும், வரிகளைக் குறைக்கப்போகும், இனவாதத்தை இல்லாதொழிக்கப்போகும் தேர்தலா என்றால், அதற்கான உறுதியான பதில், உள்ளூராட்சி மன்றங்களால் இந்த எந்த விடயத்திலும் மாற்றங்களைக் கொண்டுவர முடியாது என்பதுதான். உள்ளூராட்சித் தேர்தல், உள்ளூர் சமூகங்களின் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அவை நாட்டின் ஆட்சிக் கொள்கையை மாற்ற வாய்ப்பில்லை. ஏனெனில், வரிக் கொள்கை, பொருளாதாரக் கொள்கை, நாட்டுக்கான சட்டவாக்கம், தேசிய பாதுகாப்பு போன்ற மாற்றங்கள் போன்ற முழு நாட்டையும் பாதிக்கும் முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்கும் அதிகாரம், உள்ளூராட்சி மன்றங்களுக்கு இல்லை. ஆட்சிக் கொள்கை பொதுவாக பாராளுமன்றத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மத்திய அரசாங்கத்தால்தான் தீர்மானிக்கப்படுகிறது. முழு நாட்டையும் பாதிக்கும் முடிவுகளை எடுப்பதற்கு மத்திய அரசாங்கமே பொறுப்புடையதும், அதிகாரமுடையதுமாகிறது. குடிமக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய கொள்கை மாற்றங்களை அறிமுகப்படுத்தும் அதிகாரம், மத்திய அரசாங்கத்திடமே உள்ளது. சில சந்தர்ப்பங்களில், உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் பொதுக் கருத்து மற்றும் அரசியல் உணர்வுகளில் பரந்த போக்குகளைப் பிரதிபலிக்கலாம். எவ்வாறாயினும், இவ்வாறான சந்தர்ப்பங்களிலும் உள்ளூராட்சி சபைத் தேர்தல், நாட்டின் ஆட்சிக் கொள்கையை நேரடியாக மாற்றுவதற்கு வாய்ப்பில்லை. இந்த உண்மையை வாக்காளர்கள் உணரவேண்டும். உண்மையில், உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரத்தின்போது, போட்டியிடும் கட்சிகள் வழங்க வேண்டிய உறுதிமொழிகள், உள்ளூராட்சி மன்றின் அதிகாரம், பொறுப்புகள் சார்ந்து அமைய வேண்டும். உதாரணமாக, தினமும் முறையாக குப்பை அகற்றுவோம்; குழந்தைகளுக்கான தரமான பாலர் பாடசாலைகளை ஊரின் பல பகுதிகளிலும் அமைப்போம்; சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் நுளம்புகளை இல்லாதொழிப்பதற்கும் உடனடி நடவடிக்கை எடுப்போம்; எல்லா வீதிகளையும் முறையாகச் செப்பனிட்டு பாதுகாப்போம்; அனைத்து வீதிகளுக்கும் சூரிய சக்தியைச் சேமித்து, இரவில் ஒளிரும் மின்விளக்கு வசதியை வழங்குவோம்; வீதிகளை தினமும் சுத்திகரிப்போம்; பொதுப் பூங்காக்களை அமைத்து, பராமரித்துப் பாதுகாப்போம்; ஊர்க் குளங்களை தூர்வாரிப் பாதுகாப்போம்; சுற்றுச்சூழலுக்கு தீங்கு தரும் செயற்பாடுகளை அனுமதியோம்; வீட்டுவரிகளை சமநீதிக் கொள்கைகளின்படி நடைமுறைப்படுத்துவோம் போன்ற உள்ளூராட்சி மன்றுகளின் அதிகாரத்துக்கு உட்பட்ட விடயங்கள் தொடர்பிலான உறுதிமொழிகளை வழங்க வேண்டுமேயொழிய, ‘சிஸ்டம் சேஞ்ச்’, வரிகளைக் குறைப்போம், பொருளாதாரத்தை மாற்றியமைப்போம்,என்று உள்ளூராட்சி மன்ற தேர்தல் மேடைகளில் முழங்குவதெல்லாம் அப்பட்டமான ஏமாற்று வேலை. பொதுவாகவே, உள்ளூராட்சி மன்றிற்கு மக்கள் தமது பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர், பெரும் அரசியல் விற்பன்னராக இருக்க வேண்டியவரல்ல. இது பாராளுமன்ற தேர்தல் அல்ல. இங்கு குறித்த ஊரைச் சேர்ந்த, அம்மக்களுக்கு காட்சிக்கு எளியவனாக உள்ள, எப்போதும் மக்கள் அணுகக் கூடிய, ஒருவரைப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுப்பதே மிகச் சிறந்த தெரிவாக அமையும். இரண்டு நாள்கள் குப்பையகற்ற உள்ளூராட்சி மன்றின் பணியாளர்கள் வரவில்லையென்றால், மக்கள் உடனடியகாகத் தொலைபேசி மூலம் அழைக்கவோ, நேரில் சந்திக்கவோ கூடியவராக அம்மக்களின் பிரதிநிதி இருக்க வேண்டும். ஆகவே, உங்கள் வட்டாரத்தில் வாழ்கின்ற, மக்களோடு மக்களாக நிற்கும் ஒருவர்தான், உள்ளூராட்சி மன்றிற்கு உங்கள் பிரதிநிதியாகவதற்கு தகுதியுள்ள நபர். இங்கு கட்சி சார்பு என்பது கூட அவசியமானதொன்றல்ல. ஏனென்றால் இது பாராளுமன்றத் தேர்தலோ, மாகாண சபைத் தேர்தலோ அல்ல என்பதை மீண்டும் மீண்டும் ஞாபகத்திற் கொள்ளுதல் வேண்டும். கட்சிக்கு வாக்களிக்கிறோம் என்ற பெயரில், கட்சி நிறுத்திய யாரோ ஒருவருக்கு வாக்களித்துவிட்டு, நாளைக்கு தெருவிளக்கு எரியாவிட்டால், நீங்கள் தெரிவுசெய்த அந்த யாரோ ஒரு பிரதிநிதியை எங்கே சென்று தேடுவீர்கள்? உங்கள் வட்டாரத்திற்கு ஒரு பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால், கட்சி அடையாளங்களைத் தாண்டி, உங்கள் வட்டாரத்திற்கு சேவையாற்றக் கூடிய ஒருவரைத் தேர்ந்தெடுங்கள். அவர் சுயாதீனமாகக் கூட போட்டியிடுபவராக இருக்கலாம். அதுதான் உங்களுக்கு நன்மையானது. அதைவிடுத்து, ஆட்சி மாற்றம், கொள்கை மாற்றம் என சில கட்சிகள் காட்டும் பேய்க்காட்டலில் ஏமாந்துவிட வேண்டாம். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/உள்ளூராட்சித்-தேர்தல்-யாருக்கு-வாக்களிப்பது/91-314013
  22. அவலத்தை அரசியலாக்குதல் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan அரசியல்வாதிகள் தமக்கான ‘பொலிட்டிக்கல் மைலேஜ்’ (அரசில் பிரபல்யம்) பெற, பெரும்பாலும் நெருக்கடியான சூழ்நிலைகள் சாதகமாக அமைந்துவிடுகின்றன. ஒரு நெருக்கடிநிலை ஏற்படும் போது, அந்த அவலத்தில் மக்கள் தத்தளிக்கும் போது, நெருக்கடியைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டதாகக் கூறி, தம்மை முன்னிலைப்படுத்துவதன் மூலம், இத்தகைய சூழ்நிலைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த அரசியல்வாதிகள் விளைகிறார்கள். அவ்வாறு செய்வதன் மூலம், தம்மை கடினமான சூழ்நிலைகளை கையாளும் திறன் கொண்ட, திறமையான தலைவர்களாக காட்டிக்கொள்கிறார்கள். சில சந்தர்ப்பங்களில், அரசியல்வாதிகள் தங்கள் சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுப்பதற்கு நெருக்கடிநிலைமைகளை உருவாக்கலாம்; அல்லது, பயன்படுத்திக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட கொள்கைக்கு அழுத்தம் கொடுக்க அல்லது, தங்கள் அரசியல் எதிரிகளை பிழையான வௌிச்சத்தில் காட்ட, அவர்கள் நெருக்கடியான சூழலை தமக்கு ஏதுவாகப் பயன்படுத்தலாம். உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் ஆபத்தில் இருக்கும் சூழ்நிலைகளில், இத்தகைய போக்கானது ஆபத்தானது. ஏனெனில், இது உண்மையான பிரச்சினைகளில் இருந்து, கவனத்தை திசைதிருப்பி, நெருக்கடியைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை பாதிப்புக்கு உட்படுத்தலாம். நெருக்கடிகள், அரசியல்வாதிகளுக்கு தலைமைத்துவத்தின் திறனையும் ஆழுமையையும் வெளிப்படுத்தவும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புகளை வழங்க முடியும் என்பது உண்மைதான். என்றாலும், அவர்களின் நடவடிக்கைகள், அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் நலன் நோக்கில் வழிநடத்தப்படுவதை உறுதிப்படுத்துவது முக்கியம். ஒரு நெருக்கடியின் போது, அரசியல்வாதிகள் தங்கள் முடிவுகளுக்கும் செயல்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும். மேலும், இதுபோன்ற சூழ்நிலைகளை அவர்கள், தங்கள் சொந்த இலாபத்துக்காகப் பயன்படுத்தக்கூடாது. இறுதியில், நெருக்கடியில் இருந்து வௌிவரும்போது, அரசியல் சிந்தனைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய, ஒன்றிணைந்து செயற்படுவது தலைவர்களின் உண்மையான நோக்கத்தைப் பொறுத்ததாகும். சுதந்திர இலங்கையின் மிகப்பெரிய பொருளாதார அவலத்தை, கடந்த ஆண்டில் இலங்கை சந்தித்தது. இந்த மிகப் பெரிய பொருளாதாரப் பிறழ்வு, தொடர்ந்து வந்த அரசாங்கங்களின் தீர்க்கதரிசனமற்ற அரசியல் கொள்கைகளால் விளைந்தது. இலங்கை மக்கள், குறுகிற நோக்கங்களுக்காக வாக்களித்ததன் விளைவை, அவர்கள் அனுபவிக்கிறார்கள் என்றால் சொன்னால் அது மிகையல்ல. இந்தப் பொருளாதார பேரவலத்திலிருந்து மீள்வது என்பது, கடினமான பாதையாகத்தான் இருக்கப் போகிறது. மிகப்பெரிய விபத்தைச் சந்தித்த ஒருவர், ஒரு சத்திரசிகிச்சை முடிந்தவுடன், உடனடியாக எழுந்து நடந்துவிடப் போவதில்லை. அவர் குணமாக நீண்டகாலம் தேவை. மருந்துகள் ஒழுங்காக எடுக்கப்பட வேண்டும். குணமாகும் காலம் வலி மிகுந்ததாகவே இருக்கும். அது தவிர்க்க முடியாது. இந்த வலி மிகுந்த நீண்டகால மீட்சிப் பாதையைத் தவிர, ‘மந்திரத்தால் ஏதேனும் நடத்திவிட முடியாதா’ என்ற மனிதனின் அங்கலாய்ப்புத்தான் போலி வைத்தியர்கள், மந்திரவாதிகள் போன்றவர்களுக்கு வாய்ப்பாகிவிடுகிறது. “என்னிடம் வா, முழுமையான இரட்சிப்பு கிடைக்கும்; இந்த அவலம் தேவையில்லை” என எந்த முகாந்திரமும், அடிப்படையும் இல்லாமல் அவர்கள் சொல்லும் வெற்றுவார்த்தைகள், வலியில் இருப்பவனுக்கு இனிப்பாகத்தான் இருக்கும். ஆனால், அந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தது, தற்கொலைக்குச் சமம் என்பதை மனிதன் உணர்ந்துகொள்ளும் போது, அவன் சாவின் வாசலில் நிற்பான். சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் இந்தப் போலி வைத்தியர்கள், மந்திரவாதிகள் போன்றோர் போலத்தான் மக்கள் மத்தியில் திரிகின்றார்கள்! அவர்கள் பெரும்பாலும் நெருக்கடியான சூழ்நிலையை, தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயல்கிறார்களேயன்றி, நெருக்கடியைத் தீர்ப்பது அவர்களது முதன்மை எண்ணம் அல்ல. அவர்கள், நெருக்கடிக்கு தற்போதைய அரசாங்கத்தை குற்றம் சாட்டுகிறார்கள். அத்துடன், தாங்கள் இந்த நெருக்கடிக்குத் தீர்வு காண்போம் என்றும் சொல்கிறார்கள். ஆனால், அதை எப்படிச் செய்யப் போகிறார்கள்? இப்போது செய்வதை விட, எதை வித்தியாசமாகச் செய்யப் போகிறார்கள் போன்ற கேள்விக்கு அவர்களிடம் தௌிவான பதிலில்லை. ஆளுங்கட்சியின் நம்பகத்தன்மையை குறைமதிப்புக்கு உட்படுத்தவும், பொதுமக்களின் ஆதரவைப் பெறவும் அவர்கள் நிலைமையைப் பயன்படுத்திக் கொள்ள முயல்கின்றனரே தவிர, இப்போது ஆட்சியில் உள்ளவர்களை விட எதை வித்தியாசமாகச் செய்யப் போகிறார்கள் என்பதை அவர்கள் சொல்வதே இல்லை. எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் பெரும்பாலும், நெருக்கடியைக் கையாள்வதில் அரசாங்கத்தின் தோல்விகள் அல்லது குறைபாடுகளை முன்னிலைப்படுத்துகிறார்கள். அவர்கள் அரசாங்கத்தின் கொள்கைகள், முடிவுகளை விமர்சிக்கிறார்கள், குறை சொல்கிறார்கள். மேலும் தாம் ஆட்சியில் இருந்தால் நிலைமையை சிறப்பாகக் கையாண்டிருப்பார்கள் என்று சொல்கிறார்கள். ஆளும் கட்சி சம்பந்தப்பட்ட கடந்த கால தவறுகள், சர்ச்சைகளை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். நெருக்கடி அவர்களின் திறமையின்மை அல்லது ஊழலின் விளைவாகும் என்று குறித்துரைக்கிறார்கள். தற்போதைய அரசாங்கத்தை குற்றம் சாட்டுவதன் மூலம், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி அல்லது விரக்தியின் உணர்வை உருவாக்குகிறார்கள். அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் மாற்றத்தைக் கொண்டுவருவதாக உறுதியளிக்கிறார்கள். ஆனால், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு என்ன? அவர்களது திட்டம் என்ன? அது இன்றைய அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளில் இருந்து எப்படி வேறுபட்டது? எப்படி அதனை நடைமுறைப்படுத்தப் போகிறார்கள் என்ற எதற்கும் அவர்களிடம் பதிலில்லை. “நாம் வந்தால், செய்வோம்” என்பதுதான் அவர்களது பதிலாகப் பெரும்பாலும் இருக்கிறது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்ற பிரதான எதிர்க்கட்சிகளின் அழுத்தத்துக்குப் பின்னால் இருப்பதும் இந்த நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி, தமது ‘அரசியல் மைலேஜ்’ஜை ஏற்றிக்கொள்ளும் எண்ணமேயன்றி, மக்கள் நலன் அல்ல. அதற்கு ஜனநாயகம், வாக்குரிமை, மக்கள் இறைமை என்ற கோட்பாடுகளை அவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். மின்வெட்டு, எரிபொருள் வரிசைகள் என்பன இல்லாது போயுள்ளன. பொருட்களின் தட்டுப்பாடுகள் கடந்த வருடம் இருந்ததைவிடக் குறைந்துள்ளன. இலங்கை ரூபாய் கொஞ்சம் பலமடைந்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்கும் தறுவாயில் இலங்கை நிற்கிறது. ஆகவே, இந்தப் பொருளாதார நெருக்கடி நிலை கொஞ்சம் குறைந்துவிட்டால், எங்கே தமக்கான மக்களாதரவு போய்விடுமோ என்ற பயம், உடனடியாகத் தேர்தல் வேண்டும் என்ற கோரிக்கையின் பின்னால் ஒளிந்திருப்பதை புரிந்துகொள்ளக் கூடியதாகவே இருக்கும். இன்றைய சூழலில், அதிகரித்துள்ள வரிகள், மின்சாரக் கட்டண உயர்வு ஆகியன மக்களைப் பாதித்துள்ள நிலையில், அவற்றையும் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு, மக்களின் அதிருப்தியை தமக்கான வாக்காக மாற்றி, அறுவடை செய்துகொள்ள பிரதான எதிர்க்கட்சிகள் காத்திருக்கின்றன. இதைச் சுட்டிக்காட்ட வேண்டிய தேவை ஏன் எழுகிறதென்றால், இந்தப் பிரதான எதிர்க்கட்சிகள் எதுவுமே, இலங்கையின் அரசியலில் தேவைப்படும் மாற்றத்தை வழங்குவதற்கான உறுதியான உறுதிமொழிகள் எதையும் வழங்கவில்லை. கடந்த வாரப் பத்தியில் குறிப்பிட்டதைப் போல, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணாமல், இலங்கை நீண்ட காலப் பொருளாதார வளர்ச்சியைப் பற்றி யோசிக்க முடியாது. ஆனால், இந்தப் பிரதான எதிர்க்கட்சிகள் எதுவுமே, இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில், மூச்சு விடுவது கூட இல்லை. இதுதான் இவற்றின் உண்மை முகம். இன்று ஜனாதிபதி ரணில் முன்னெடுக்கும் சர்வதேச நாணய நிதியப் பொறிமுறையைத்தான் ஐக்கிய மக்கள் சக்தியும் முன்னெடுக்கப்போகிறது. கோட்டாபய ராஜபக்‌ஷ முயன்று தோற்றுப்போய் நாட்டை நாசமாக்கிய, ‘உள்நாட்டுக்குள் தீர்வு, சர்வதேச உதவி வேண்டாம்’ என்பதைத்தான் என்.பி.பி என்ற பெயரில் உலாவரும் ஜே.வி.பியின் நிலைப்பாடும் ஆகும். இவர்களிடம் இதைவிட வேறெந்தத் தீர்வுமில்லை. சரியான தீர்வை வழங்கும் திராணியுமில்லை. அவலத்தில் சிக்கி, வலியில் துடிக்கும் மக்களிடம் வாக்குவேட்டை நடத்தத்தான் அத்தனை பகிரதப் பிரயத்தனங்களும் தகிடுதத்தங்களும் இடம்பெறுகின்றன. அதற்காகத்தான் இவர்கள் இன்று வீதிக்கு இறங்குகிறார்கள். உண்மையில், இன்று இலங்கை சந்தித்து நிற்கும் மிகப்பெரிய ஜனநாயகப் பிறழ்வுகளுள் ஒன்று, இலங்கையில் முறையான ஆளுங்கட்சியும் இல்லை; எதிர்க்கட்சியும் இல்லை. எவர், எப்போது, எங்கே, எந்தப் பக்கம் நிற்கிறார் என்ற எந்தவொரு புரிதலும் இல்லாமல்தான் இலங்கையின் அரசியல் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. இலங்கை பொருளாதார ரீதியில் மீளவேண்டுமானால், தீர்க்கதரிசனமுள்ள, திறமையும், திராணியுமுள்ள தலைமைகள் வேண்டும். மக்களின் அவலத்தை அரசியலாக்கி, வாக்கு வேட்டை நடத்தக் காத்திருக்கும் கூட்டத்தால் அந்தத் தலைமைத்துவத்தை வழங்க முடியாது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அவலத்தை-அரசியலாக்குதல்/91-313671
  23. பொருளாதார மீட்சிக்கு இனப்பிரச்சினைக்கான தீர்வின் முக்கியத்துவம் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan சுதந்திர இலங்கை என்பது, இனமுர ண்பாட்டோடுதான் பிறந்தது என்றால் அது பிழையல்ல; சர்வசன வாக்குரிமை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, வாக்காளரில் பெரும்பான்மையைக் கவர, இனரீதியான அரசியல் வசதியானது என்று கருதிய அரசியல்வாதிகளின் எண்ணத்திலிருந்து, இன மத தேசியவாதம், அரசியல் மையநீரோட்டத்தில் மெல்ல மெல்ல கலக்கத் தொடங்கியது. அதுவரை அரசியல் பரப்பின் எல்லைகளில் நின்ற இனமத தேசியவாதம், அரசியல் மைய நீரோட்டத்தை நோக்கிக் கொண்டு வரும் கைங்கரியத்தை தேர்தல் அரசியலுக்காக, இந்நாட்டின் தலைவர்கள் எனப்படுவோர் செய்யத்துணிந்தனர். இலங்கையின் இனமுரண்பாடானது வரலாறு, கலாசாரம், அரசியல் ஆகியவற்றின் காரணிகளில் வேரூன்றியுள்ளது. கொலனித்துவ காலத்தில் இருந்து சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான இன முரண்பாடுகளின் நீண்ட வரலாற்றை இந்நாடு கொண்டுள்ளது. எவ்வாறாயினும், நீண்ட வரலாற்றை சுருங்கக் கூறின், சுதந்திரத்துக்குப் பிந்தைய காலம் தமிழர்களுக்கு எதிரான பாரபட்சமான கொள்கைகளால், பெரும்பான்மையின வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் பெருந்தேசியவாதம் வளர்ச்சியடையத் தொடங்கியது. சிறுபான்மை மக்கள், பெரும்பான்மை இனமத தேசத்தின் மேலாதிக்கத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளார்கள் என்ற தோற்றப்பாடு கட்டமைக்கப்பட்டது. இதை சமன்செய்ய வேண்டும் என்ற எண்ணம், திட்டமிட்ட பேரினவாதப் பிரசாரத்தின் மூலம் பெரும்பான்மையின மக்களிடையே விதைக்கப்பட்டது. அதன் விளைவாக, சிறுபான்மையின மக்களை, குறிப்பாக தமிழர்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கும் கொள்கைகள், திட்டமிட்ட வகையில் திணிக்கப்பட்டன. இந்தக் கொள்கைகளில், சிங்களத்தை மட்டுமே அரச கரும மொழியாக அறிமுகப்படுத்துதல்; கைத்தொழில்கள், அரச சேவைகள் தேசிய மயமாக்கல்; கல்வி, வேலைவாய்ப்பில் தமிழர்கள் ஓரங்கட்டப்பட்டமை ஆகியவை அடங்கும். தொடர்ந்து வந்த அரசாங்கங்கள், இந்தக் குறைகளை நிவர்த்தி செய்யத் தவறின. பேரினவாதத்தை மட்டுமே நம்பி, இலங்கையின் அரசியல் முன்னகர்த்தப்பட்டது. பெரும்பான்மையின மொழியே, ஒரே உத்தியோகபூர்வ மொழி; பெரும்பான்மை மதத்துக்கு முன்னுரிமை என்பன அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டன. சிறுபான்மையினருக்கு எதிரான தொடர் அடக்கு முறைகள், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் எழுச்சிக்கு வழிவகுத்தன. இராணுவத்தை நிலைநிறுத்துதல், சித்திரவதைகள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உட்பட அரசாங்கத்தின் கடுமையான அடக்குமுறை நடவடிக்கைகள் மோதலை மேலும் தீவிரப்படுத்தின இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான உள்நாட்டுப் போர், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்தது; மற்றும், பல்லாயிரக்கணக்கான மக்களின் மரணத்துக்கும் வழிவகுத்தது. 2009 இல் உள்நாட்டுப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும், இனப்பிரச்சினையின் அடிப்படைக் காரணங்களைத் தீர்க்க, இலங்கை அரசாங்கங்கள் தவறிவிட்டன; இன்னும் தவறிக் கொண்டேயிருக்கின்றன. அரசாங்கத்தின் அணுகுமுறையானது, அரசியல் விருப்பமின்மை; தமது தவறுகளை மறைக்கும் தன்மை; கடந்தகால அட்டூழியங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்யத் தவறியதன் மூலம், இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலான அடிப்படைப்படிகளைக் கூட, முன்னகர்த்த முடியாத சூழல்தான் எழுந்துள்ளது. இன்று, இலங்கை பொருளாதார வங்குரோத்து நிலையில் நின்றுகொண்டிருக்கும் பொழுது கூட, தெற்கின் பெரும்பான்மையின அரசியலானது, இந்த வங்குரோத்து நிலைக்கான பிரதான காரணங்களுள் ஒன்றாக இனப்பிரச்சினை இருக்கிறது என்பதை வௌிப்படையாக ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றது. ஊழல், முறைகேடுகள், பொருளாதார திட்டத் தவறுகள், கோவிட்-19, உலகப் பொருளாதாரத்தின் மந்த நிலை என எல்லாவற்றையும் பற்றிப் பேசுகிறார்களேயன்றி, அறையிலுள்ள வௌ்ளை யானையை அவர்கள் இலாவகமாக மறந்துவிடுகிறார்கள். இலங்கையில் இன முரண்பாடானது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உள்நாட்டுப் போரின் விளைவாக உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன; மற்றும், மக்கள் இடம்பெயர்ந்தமையானது பொருளாதார நடவடிக்கைகளின் சரிவுக்கு வழிவகுத்தது. இலங்கையின் இனப்பிரச்சினையானது, கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு அபிவிருத்தி போன்ற சமூகச் செலவீனங்களில் இருந்து, பாதுகாப்புச் செலவினங்களுக்கு வளங்களைத் திருப்பி இருக்கிறது. இன்றும் இலங்கையின் அரச பாதீட்டில் மிக அதிக தொகை, பாதுகாப்புக்கே ஒதுக்கப்பட்டு வருகிறது. மேலும், இனமுரண்பாடானது வெளிநாட்டு முதலீடு, சுற்றுலா, வர்த்தகம் ஆகியவற்றிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. இலங்கையை ஒரு மோதல் வலயமாக கருதுவது, வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் கவராமல் இருந்தது. இவை அனைத்தினதும் விளைவாக, நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இலங்கை, பல தசாப்தங்கள் பின்தங்கியே இருக்கிறது. மேலும், பல இலங்கையர்கள், குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள், வறுமையில் வாடினார்கள். இன்று பொருளாதாரத்தில் பின்தங்கிய மாகாணங்களாக கிழக்கும், வடக்கும் இருக்கின்றன. ஊழல் பற்றிப் பேசுபவர்கள் கூட, ஊழலுக்கு இந்த இனமுரண்பாடு வலுசேர்த்தமை பற்றிப் பேசுவதில்லை. இந்நாட்டின் ஊழல், பொறுப்புக்கூறல் இல்லாமை போன்றவற்றுக்கு, இனமுரண்பாடு பெரும் பங்களித்துள்ளது என்றால் அது மிகையல்ல. இனமுரண்பாட்டுக்கான இலங்கை அரசாங்கங்களின் எதிர்வினைகளை நாம் எடுத்துப் பார்த்தால், பொது மக்களுக்கு நன்மை பயக்கும் அபிவிருத்தித் திட்டங்களில் முதலீடு செய்வதை விட, வளங்களை அரசியல் உயரடுக்குகளுக்கும் அவர்களது கூட்டாளிகளுக்கும் திசை திருப்புவதை நாம் அவதானிக்கலாம். யுத்தத்தால் இலாபமடைந்த வணிகர்களும் அரசியல்வாதிகளும் இங்கு எக்கச்சக்கம். யுத்தம் என்ற ஒன்றைக் காரணம் காட்டி, நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் நடந்த ஊழல், முறைகேடுகள் கொஞ்சநஞ்சமல்ல. இனவாதமானது, தேர்தல் வெற்றியை மட்டுமல்லாது, ஊழல் வெற்றியையும், அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அளித்தது என்றால் அது மிகையல்ல. நாட்டின் பாதுகாப்பு என்ற மறைவுக்குள், இரகசியக் காப்பின் பாதுகாப்புக்குள் இலங்கையின் வளங்கள் சூறையாடப்பட்டன. ஆனால், இதைப்பற்றி எல்லாம் எவரும் பேசுவதில்லை. இனப்பிரச்சினையின் விளைவுகள் இன்றும் இலங்கையில் உணரப்படுகின்றன என்பதுதான் உண்மை. 2009 இல் உள்நாட்டுப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும், சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான திட்டமிட்ட பாகுபாடு உட்பட இனமுரண்பாட்டின் அடிப்படைக் காரணங்கள் போதுமான அளவில் இல்லாதொழிக்கப்படவில்லை. இது சமூகங்களுக்கிடையில் தொடர்ந்து பதட்டங்களை ஏற்படுத்தியுள்ளது, மேலும், மீண்டும் வன்முறை ஏற்படும் அபாயத்தையும் உணர்த்தி வருகிறது. இனமுரண்பாட்டால் இலாபமடைந்த அரசியல் அதிகார, வணிக கூட்டமொன்று, முரண்பாடு தீர்க்கப்படுவதை எப்படி விரும்பும்? இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு, இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது அவசியம். இது பாகுபாட்டின் மூல காரணங்களை நிவர்த்தி செய்தல்; கடந்தகால அட்டூழியங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்தல்; அனைவருக்குமான சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிதல் என்பவற்றை உள்ளடக்கியது. அனைத்து சமூகங்களுக்கும் வளங்கள் மற்றும் வாய்ப்புகளுக்கான பன்முகத்தன்மை, சமமான அணுகலை ஊக்குவித்தல் போன்றவை உள்ளடங்கிய கொள்கைகளுக்கு, இலங்கை அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும். இதைச் செய்யாமல், பொருளாதார மீட்சி என்பது சாத்தியமில்லை. இலங்கை பற்றி, சிங்கப்பூரின் சிற்பி லீ க்வான் யூ இப்படிச் சொன்னார், “1956 ஆம் ஆண்டு, நான் முதன்முறையாக கொழும்புக்குச் சென்றபோது, அது சிங்கப்பூரை விடச் சிறந்த நகரமாக இருந்தது. கொழும்பு மவுண்ட்பேட்டனின், தென்கிழக்கு ஆசிய கட்டளையின் மையம் இருந்தது. மேலும் அவர்களிடம் ஸ்டெர்லிங் கையிருப்புகள் இருந்தன. அவர்களுக்கு இரண்டு பல்கலைக்கழகங்கள் இருந்தன. போருக்கு முன், படித்த திறமைகளின் அடர்த்தியான அடுக்கினைக் கொண்டிருந்தது. அமெரிக்க தாராளவாதிகள் அல்லது பிரிட்டிஷ் தாராளவாதிகள் சொல்வதை நீங்கள் நம்பினால், அந்நாடு செழித்திருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை. ‘ஒரு நபர்; ஒரு வாக்கு’ என்பது, சிறுபான்மைத் தமிழர்கள் மீது சிங்களப் பெரும்பான்மையினரின் ஆதிக்கத்துக்கு வழிவகுத்தது. அவர்கள் சுறுசுறுப்பான மற்றும் புத்திசாலித்தனமான தோழர்கள். கடுமையாக உழைத்தனர்; ஆனால் உழைப்புக்குத் தண்டனைதான் கிடைத்தது. மேலும் ஆங்கிலம் விலகப்பட்டது. அவர்கள் ஆங்கிலத்தில் கல்வி கற்றவர்கள். சிங்களம் உள்நுழைக்கப்பட்டது. இரண்டு பல்கலைக்கழகங்களில் ஒதுக்கீடு திணிக்கப்பட்டு, இப்போது வெறிபிடித்த புலிகளாகிவிட்டனர். அந்த நாடு மீண்டும் ஒன்றிணைக்கப்படாது. அமைப்பை மாற்றவும், தளர்த்தவும் அல்லது உடைக்கவும் யாராவது அவர்களிடம் இதைச் சொல்லியிருக்க வேண்டும்”. ஆகவே, இனப்பிரச்சினைக்குத் தீர்வில்லாமல், பொருளாதார மேம்பாடு பற்றிச் சிந்திப்பதெல்லாம், உள்ளுக்குள் இருக்கும் கிருமியால் வந்த புண்ணுக்கு, மாவுக்கட்டு போடுவதைப் போன்றது. அது புண்ணை மறைக்கலாம்; ஆனால், மாவுக்கட்டுக்குள் உடல் கொஞ்சம் கொஞ்சமாக அழுகிக் கொண்டிருக்கிறது என்பது, வலியில் துடிக்கும் உடலுக்கு மட்டும்தான் தெரியும்! https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பொருளாதார-மீட்சிக்கு-இனப்பிரச்சினைக்கான-தீர்வின்-முக்கியத்துவம்/91-313213
  24. 13உம் இனவாதமும் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தின் மீதான விவாதத்தில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் அல்லது 13+ இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என்று அறுதியிட்டு ஜே.வி.பியின் மிக நீண்டகால நிலைப்பாட்டை மீள வலியுறுத்திக் கருத்துரைத்திருந்தார். 1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புச் சட்டமோ அல்லது அதில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களோ மக்கள் வாக்கெடுப்பின் மூலம் அங்கிகரிக்கப்படவில்லை என்ற அநுர குமார, வடக்கு மற்றும் தெற்கில் உள்ள மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் புதிய அரசியலமைப்பின் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவேன் என்று ஜனாதிபதி ரணில் தட்டிவிட்ட பொறி, இனவாதிகளைப் பற்றிக்கொண்டு, மீண்டும் இனவாதிகளும் இனவாதக் கருத்துகளும் அரசியல் முன்னரங்கில் தலைதூக்கத் தொடங்கியுள்ளன. 13ஐ பௌத்த பிக்குகள் எதிர்ப்பது என்பது புதுமையானதல்ல. அவர்கள் அன்றும் அதை எதிர்த்தார்கள்; இன்றும் எதிர்க்கிறார்கள். இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. ஜே.வி.பியும் அது போலத்தான். அவர்களும் அன்று மிகக் கடுமையாக 13ஐ எதிர்த்தார்கள். 13இன் கீழ் முதலாவது மாகாண சபைத் தேர்தல் நடந்தபோது, பெரும் வன்முறைத் தாக்குதல்களை ஜே.வி.பி என்ற பயங்கரவாத இயக்கம் நடத்தியிருந்தது. ஆயுதங்களை விடுத்து, அவர்கள் ஜனநாயக நீரோட்டத்தல் கலந்துகொண்ட பின்னர் கூட, ஜே.வி.பி தன்னை மிகப் பெரும் ‘சிங்கள-பௌத்த’ இனவாத சக்தியாகவேதான் முன்நிறுத்தியது, இதைப்பற்றி முன்னைய பத்திகளில் விரிவாக எழுதியுள்ளேன். அவர்கள் தொடர்ந்தும் 13ஐ மட்டுமல்ல; தமிழர்களுக்கான எந்தவோர் அதிகாரப் பகிர்வையும் கடுமையாக எதிர்த்தே வந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் படி, ஒன்றிணைந்த வடகிழக்கு மாகாணங்களைப் பிரிக்கவேண்டும் என உயர்நீதிமன்றம் வரை சென்று வழக்காடி, வடக்கு-கிழக்கை பிரித்தவர்கள் ஜே.வி.பியினர்தான். அரசியலுக்காக இனவாதத்தைப் பயன்படுத்தும் ஒருதரப்பு, இலங்கை அரசியலில் இருக்கிறது. அவர்களுக்கு இனவாதம் என்பது வாக்குகளைப் பெறும் ஒரு கருவி. ஆனால், மிக அடிப்படையிலே இனவெறிகொண்ட, தமது இரத்தம், நாடி, நாளங்கள் என எங்கும் இனவெறி ஊறிய, ஒவ்வொரு செல்லிலும் இனவாதம் நிறைந்த ஓர் அமைப்புக்களில் ஜே.வி.பியிற்கு நிலையான இடமிருக்கிறது. ஜே.வி.பி-யிற்கு தலைவராக அநுர குமார வந்தால் என்ன, முனைவர் ஹரிணி அமரசூரிய வந்தால் என்ன, யார் வந்தாலென்ன அந்த இனவெறி மாறாது. இந்த இடத்தில், இல்லையே அநுர குமார 13ஐ தானே எதிர்க்கிறார். சர்வசனவாக்கெடுப்பில் மக்களுடைய அங்கிகாரத்தைப் பெறும் புதியதோர் அரசியலமைப்பை அநுர குமார எதிர்க்கவில்லையே என சில வினவலாம். இங்கேதான் அநுர குமார எனும் பேச்சில் வல்லோனின் வாய்ஜாலத்தைத்தாண்டி நாம் சிந்திக்க வேண்டியதாகவிருக்கிறது. அநுர சர்வசனவாக்கெடுப்பில் அங்கிகாரம் பெறுவதுதான் ஓர் அரசியலமைப்புக்கான அங்கிகாரமாக நிறுவ விளைகிறார். இதைவிடப் பெரிய பெரும்பான்மைவாதம் இருக்க முடியாது. சர்வசனவாக்கெடுப்பில் அங்கிகாரம் என்பதன் அர்த்தம் என்ன? நாட்டிலுள்ள வாக்காளர்கள் அனைவரிலும் பெரும்பான்மையானோரின் அங்கிகாரம்; அதாவது 50%ற்கு அதிகமானவர்களின் அங்கிகாரம். 25 சதவீதமளவுக்கு சிறுபான்மையினரைக் கொண்டதோர் இலங்கை போன்ற பேரினவாதம் நிறைந்த நாட்டில், பெரும்பான்மையினருக்கு சாதகமானதும், சிறுபான்மையினருக்கு எதிரானதுமானதோர் அரசியலமைப்பை, 50 சதவீத அங்கிகாரத்தோடு நிறைவேற்ற முடியாதா என்ன? பெரும்பான்மையினர்களில் மூன்றிலிரண்டு பேர் அங்கிகரித்தாலே போதும்; ஒரு சிறுபான்மையின வாக்கும் இல்லாமலும், பெரும்பான்மையினரில் மூன்றிலொரு பங்கினரின் வாக்குகள் இல்லாமலும் சர்வசனவாக்கெடுப்பில் அங்கிகாரமொன்றை இலகுவில் வென்றுவிட முடியும். இது ஜே.வி.பியிற்கு நன்றாகவே தெரியும். ஜே.வி.பி என்பது ஒரு பேரினவாத சக்திதானே! அது சொல்லியா தெரியவேண்டும் என்பவர்களுக்கு புரிய வேண்டிய விடயம் ஒன்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், குறிப்பான அநுர குமார, ஜே.வி.பி தலைவரான பின்னர், ஜே.வி.பி தனது பழைய பயங்கரவாத, இனவாத வரலாறு தெரியாத புதிய இளம் வாக்காளர்களைக் கவர்வதற்காக தன்னை ஊழலுக்கு எதிரான சக்தியாக, நல்லாட்சியை வழங்கு இரட்சகனாக முன்னிறுத்த விளைகிறது. அதற்கான அதனுடைய பகீரதப் பிரயத்தனங்களில் ஒன்றுதான் ஜே.வி.பி என்ற பெயரை மாற்றி என்.பி.பி என்ற புதிய முகமூடியை அணிந்துகொண்டமையாகும். அதுபோல, கொழும்பின் உயர்குழாமிடையே தமது செல்வாக்கை அதிகரித்துக்கொள்ள முனைவர் ஹரிணி அமரசூரியவுக்கு தன்னுடைய தேசிய பட்டியல் ஆசனத்தை வழங்கியமை, மற்றும் கொழும்பு உயர் குழாமினரிடையே பிரபல்யம் பெறும் வகையிலானவர்களை என்.பி.பியின் பிரசார முன்னரங்கிற்கு கொண்டு வந்தமை என தனது பயங்கரவாதமும் இனவெறியும் நிறைந்த கடந்தகாலத்தை மறைப்பதற்கு ஜே.வி.பி கடுமையாக முயல்கிறது. ஆனால், என்.பி.பி என்ற முகமூடியை அணிந்துகொண்டாலும், அலங்காரத்துக்காக கொழும்பின் உயர்குழாமினர் சிலரை முன்னரங்கில் வைத்திருந்தாலும், என்.பி.பியின் ஆன்மாவும் உடலும் இதயமும் தசையும் இரத்தோட்டமும் எல்லாம் அதே பழைய பயங்கரவாதமும் இனவாதமும் நிறைந்த ஜே.வி.பிதான். அவர்கள் தங்கள் கொள்கையில் கொஞ்சமும் மாறுபடவில்லை என்பதைத்தான் அநுர குமாரவின் பேச்சும் அப்பட்டமாக வௌிக்காட்டி நிற்கிறது. இந்த என்.பி.பி மாயைக்குள் தமிழர்களும் சிறுபான்மையினரும் விழுந்துவிடக்கூடாது. மறுபுறத்தில், 13ஐப் பற்றி சஜித் பிரேமதாஸ இன்னும் வாய் திறக்கவில்லை. ஜே.வி.பியிற்கு எப்படிப் பார்த்தாலும் சிறுபான்மையின வாக்குவங்கி என்று ஒன்று கிடையாது. ஆனால், சஜித்தின் ‘சமகி ஜன பலவேகய’வைப் பொறுத்தவரையில் கணிசமானளவு சிறுபான்மையின வாக்குகள் உண்டு. ஆகவே, இது போன்ற விடயங்களில் எந்த நிலைப்பாட்டையும் வௌிப்படையாக எடுக்க முடியாத நிலை அவர்களுக்கு இருக்கிறது. இவர்களும் மேற்சொன்ன ஜே.வி.பி அளவிற்கு ஆபத்தானவர்கள்தான். சஜித் பிரேமதாஸ எந்த வகைியல் ராஜபக்‌ஷர்களிலிருந்து வேறுபட்டவர் என்பதில் எந்தத் தௌிவுமில்லை. சிறுபான்மையினரின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் அவரது நிலைப்பாட்டுக்கும் ராஜபக்‌ஷர்களின் நிலைப்பாட்டுக்கும் என்ன வித்தியாசமிருக்கிறது. இருவரும், ”அனைவருக்குமான சம உரிமை; இது அனைவருக்குமான நாடு; அனைவரும் ஒருதாய் மக்கள்” என்ற வாய்ஜாலத்தை முன்வைக்கிறார்களேயன்றி, அதனைத்தாண்டியதொரு காத்திரமான அதிகாரப்பகிர்வு தொடர்பான உறுதியை வழங்க ராஜபக்‌ஷர்களும் தயாரில்லை; சஜித்தும் தயாரில்லை. ஏனென்றால், இருவருக்குமே பெரும்பான்மையின வாக்குகள் தேவை. அப்படியானால், ஜனாதிபதி ரணில் மட்டும் என்ன மேலா? இன்று இந்த சூழலில் 13ஐப் பற்றிய வாதத்தை இழுத்துவிட்டு ‘நரித்தனம்’ ஆடுகிறார் என்றும் சிலர் கேட்கலாம். 13ஆம் திருத்தம் கொண்டுவரப்பட்ட நாளிலிருந்து இன்று வரை, இலங்கையின் எந்த ஜனாதிபதி, அனைத்துக் கட்சிகளின் முன்பும் பகிரங்கமாக, நான் 13ஐ முழுமையாக அமல்படுத்தப் போகிறேன் என்று சொல்லியிருக்கிறார்? சரி, அவர் ‘நரி’த்தனத்திற்காக சொன்னார் என்றே எடுத்துக்கொள்வோம். அந்த நரித்தனம் தமிழ் மக்களுக்கு ஒன்றை மிக உறுதியாக உணர்த்தியிருக்கிறது. கடந்த வருடம் ‘அறகலய’ எழுந்தபோது அதில் மக்களின் உரிமைகளைப் பற்றிப் பேசிய குரல்களெல்லாம், 13ஐ அமல்படுத்துவோம் என்றதும் பம்முகிறது; அல்லது, அதை எதிர்க்கிறது. இதுதான் ‘அறகலய’வின் உண்மை முகம். கோட்டாவை விரட்ட எழுந்ததுதான் ‘அறகலய’. அந்தளவில் அது வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு மக்கள் எழுச்சி. அதனைத்தாண்டி அதற்கு வேறு முக்கியத்துவமெல்லாம் கிடையாது. இலங்கை இன்றும் இனரீதியில் பிளவடைந்தே இருக்கிறது. இதைச் சொல்வதற்கு நான் வருத்தப்படுகிறேன். ஆனால் இதுதான் உண்மை. ஓர் ‘அறகலய’ இதனை மாற்றிவிடவில்லை. இவர்கள் சொன்ன ‘சிஸ்டம் சேன்ஞ்’க்குள் சிறுபான்மையினருக்கு இடமில்லை என்பதுதான் நகைமுரண். அதை ஜனாதிபதி ரணில் நாசூக்காக உணர்த்தியிருக்கிறார். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/13உம்-இனவாதமும்/91-312523
  25. சில சிந்தனைகள்: ‘சுதந்திரம்’ கிடைத்து 75 ஆண்டுகள்! என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan இலங்கையானது பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து விடுதலையடைந்து, பிரித்தானிய முடியின் கீழ் டொமினியனாக ஆன, 1948 பெப்ரவரி நான்காம் திகதியை இலங்கை, சுதந்திர தினமாகக் கொண்டாடி வருகிறது. அந்தச் ‘சுதந்திரம்’ கிடைத்து, கடந்த சனிக்கிழமையோடு 75 ஆண்டுகளாகியது. 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவதா, வேண்டாமா என்ற வாதப்பிரதிவாதங்கள் இந்தமுறை மிகப் பலமாக ஒலித்தன. சுதந்திர தினத்துக்கு முதல் நாளிரவு, கொழும்பின் மருதானையில் சத்தியாக்கிரக ஆர்ப்பாட்டம் இடதுசாரிகளால் நடத்தப்பட்டது. அந்தப் போராட்டத்தை பொலிஸார் தண்ணீர் பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியும் கலைத்திருந்தனர். மறுபுறத்தில், 75ஆவது சுதந்திர தினத்தன்று, யாழ்ப்பாணத்தில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு, கடைகள் அடைக்கப்பட்டன. தமிழரசுக் கட்சியினர், சுதந்திர தினத்தை ‘கரிநாள்’ என்று அறிவித்ததுடன், வடக்கிலிருந்து, கிழக்குக்கு எதிர்ப்புப் பேரணியையும் தொடங்கினர். 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர், இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்று சொன்ன ஜனாதிபதி ரணில், 13ஆவது திருத்தத்தை முற்றாக அமல்படுத்துவேன் என்று கடந்த சர்வகட்சி மாநாட்டில் சொன்னதோடு சரி! சுதந்திர தினத்தன்று காலையில் நடந்த விழாவில் உரையாற்றாத ஜனாதிபதி ரணில், மாலையில் நாட்டுக்காக ஆற்றிய உரையில், “இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில், இந்த ஆண்டின் சவால்களை மேலும் பொறுமையுடனும் துணிச்சலுடனும் எதிர்கொள்ள நாம் அனைவரும் தீர்மானிப்போம்” என்று சொல்லி, தனது சிற்றுரையை நிறைவு செய்திருந்தார். இவையெல்லாம் இன்ன பல பிற சிந்தனைகளைத் தூண்டுவதாக இருந்தன. அவற்றில் சிலதைப் பதிவு செய்வது உசிதம். 75ஆவது சுதந்திர தினமும் எதிர்ப்பும் சுதந்திர தினத்தில் கொண்டாடுவதற்கு எதுவுமில்லை என்று, அதைப் பெரும்பாலும் வடக்கு-கிழக்கு தமிழ் மக்கள் புறக்கணித்து வந்துள்ளனர். தமக்கான அரசியல் உரிமைகள் மறுக்கப்படும் நாடொன்றில், தமக்கு என்ன சுதந்திரம் இருக்கிறது என்பதுதான், அவர்கள் முன்வைக்கும் கேள்வி. அதில் நியாயம் இல்லாமல் இல்லை. தமிழன் என்ற ஒரே காரணத்துக்காக எத்தனை துன்பங்களை, பாரபட்சங்களை, இழப்புகளை இந்நாட்டின் தமிழர்கள் சந்தித்திருக்கிறார்கள். இரண்டாந்தரப் பிரஜைகளாக தமிழர்கள் நடத்தப்பட்டமை, இந்நாட்டின் இருண்ட வரலாறு. அப்படியானால், அவர்களைப் பொறுத்தமட்டில் சுதந்திர தினம் என்பது அர்த்தமற்றது என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால், தமிழ் அரசியல்வாதிகள் விசித்திரமானவர்கள். இதே ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது, சுதந்திர தினத்தில் கலந்துகொண்டு, சுதந்திர தினத்தை ‘கரிநாள்’ என்று சொன்ன தமிழ்த் தேசியவாதிகளை “மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்” என்று பகிரங்கமாகவே சொன்ன தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இன்று அதே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருக்கும் போது, சுதந்திர தினத்தை “கரிநாள்” என்று பகிரங்கமாகச் சொல்கிறார். அன்று, அரச சுதந்திர தினத்தில் அமர்ந்திருந்தவர், இன்று வடக்கிலிருந்து, கிழக்குக்கு எதிர்ப்புப் பேரணி நடத்துகிறார். அதில், இலங்கைக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாத நேருவின் குல்லாத் தொப்பியை அணிந்து கொண்டு நிற்கிறார். அவரும் அரசியல்வாதிதானே! “அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா” என்று இதையும் தமிழ் மக்கள் கடந்துவிடலாம். அடுத்த தேர்தலில் வெல்ல வேண்டுமென்றால், தமிழ் மக்களின் உணர்ச்சியை வைத்து, அரசியல் செய்தால்தான் முடியும் என்ற தமிழரசுக் கட்சியின் அரசியலை, சுமந்திரனும் மெல்ல மெல்லக் கற்றுக்கொண்டுவிட்டார் போலும்! தேர்தல் அரசியல் மட்டும் இல்லையென்றால், தமிழ்த் தேசியம் என்றோ குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருக்கும். நிற்க! மறுபுறத்தில், சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்கு எதிராக பெரும்பான்மையின மக்களிடம் எழுந்திருக்கிற எதிர்ப்பு என்பது புதுமையானது. இங்கு கவனிக்க வேண்டியது யாதெனில், இந்த எதிர்ப்பு என்பது, சுதந்திர தினத்துக்கு எதிரான எழுச்சியல்ல; பணம் செலவழித்து, அதைக் கொண்டாடுவதற்கு எதிரான எழுச்சி ஆகும். அதாவது, நாடு பொருளாதார பிறழ்வில் சிக்கிச் சின்னாபின்னமாகிப் போயிருக்கும் இந்த நிலைமையில், கொண்டாட்டம் வேண்டுமா என்பதுதான் இந்த எதிர்ப்பின் வரையறை. தமக்கான அரசியல் அலைக்குப் பலம் சேர்க்க, இடதுசாரிகள் இதை இலாவகமாகப் பற்றிக்கொண்டு, ஆர்ப்பாட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதில், தமது கொள்கை என்ன, நிலைப்பாடு என்ன என எந்தத் தௌிவுமே இல்லாமல், எப்படியாவது தேர்தலில் வென்றுவிட வேண்டுமென மட்டும் பயணித்துக் கொண்டிருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியும் கைகோர்த்திருக்கிறது. இந்த எதிர்ப்புகள் அர்த்தமற்றவை. கடனெடுத்து குடும்பம் நடத்தும் அப்பாவின் பொக்கட்டுக்குள் இருந்து காசை எடுத்து, படம் பார்க்கும் மகனின் மீது, அம்மா காட்டும் கோபத்தை போன்றது இது. இதில் நிறைய உணர்ச்சிவசப்பாடுகள் இருக்கின்றனவேயன்றி, அரசியல் ரீதியான முக்கியத்துவம் எதுவும் கிடையாது. இவர்களுடைய எதிர்ப்பும் தமிழர்களுடைய எதிர்ப்பும் ஒன்றல்ல. வருடாவருடம் தம்முடைய சகோதரர்களையே கொன்றொழித்த யுத்த வெற்றியை, சுதந்திர தினத்தை விடப் பெரிதாகக் கொண்டாடும் போது, சேர்ந்து கொண்டாடியவர்கள்தான் இவர்கள். இன்று அதிகரித்த வாழ்க்கைச் செலவு, வருமானத்தைக் குறைத்த வருமான வரி என, மக்கள் பணத்தைச் செலவழிப்பதைப் பற்றி பெரும் பிரக்ஞையோடு இருப்பதால், சுதந்திர தினத்துக்கு 200 மில்லியன் செலவா எனத் தம்மை நல்லவர்களாகக் காட்டிக்கொள்ள நாடகம் நடத்துகிறார்கள். இலங்கையில், பொதுமக்கள் பணம் அதிகம் வீணாவது, அரசு சொந்தமாக நடத்தும் நிறுவனங்களால்த்தான்; இதை மாற்ற இவர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அரச துறை என்பது, இங்கு ஓட்டைப்பானை; ஆனால் அதை எதிர்க்கமாட்டார்கள். 15 இலட்சம் அரச ஊழியர்களினதும் அவர்களது குடும்பத்தினரதும் வாக்குகள் தேவையல்லவா? அதுபோல, இலங்கையின் பணம் வீணாகும் இன்னொரு வழி, இலங்கையின் பெருத்த இராணுவம். அதைக் குறைப்பது பற்றியும், இலங்கையின் மிக உயர்ந்த பாதுகாப்பு செலவுகளைக் குறைப்பது பற்றியெல்லாம் பேசமாட்டார்கள். அங்கே பல்லாயிரம் கோடிகள் வீணாகிக் கொண்டிருக்க, இங்கே 20 கோடிக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். இதுதான் உண்மை; இதுதான் யதார்த்தம். இனப்பிரச்சினைக்கான தீர்வு தமிழர் தரப்பு சமஷ்டி கோருகிறது. ஏன் சமஷ்டி? என்ன வகையான சமஷ்டி? எத்தகைய அதிகாரப் பகிர்வு என, எந்த விளக்கத்தையும் அவர்கள் அளிப்பது இல்லை. மறுபுறத்தில், “பாராளுமன்றம் 13ஆம் திருத்தத்தை இல்லாதொழிக்கும் வரை, நான் அதை முழுமையாக அமல்படுத்துவேன்” என்று ஜனாதிபதி சொன்னதற்கே, இனவாதத்தில் ஊறி அழுகிப்போன இனவாதிகளான சரத் வீரசேகர, உதய கம்மன்பில போன்றவர்கள் கடும் எதிர்ப்பை முன்வைத்திருக்கிறார்கள். மறுபுறத்தில், பௌத்த மகாநாயக்க தேரர்கள் 13ஐ அமல்படுத்தக்கூடாது என ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். 13 வேண்டாம் என்பதில், தமிழ்த் தேசியவாதிகளும் சிங்கள-பௌத்த தேசியவாதிகளும் தௌிவாக இருக்கிறார்கள். ஆனால், ஏற்கெனவே அரசியலமைப்பிலுள்ள 13ஐயே முழுமையாக அமல்படுத்த இடமளியாத ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதிகள், சமஷ்டியை எப்படி அனுமதிப்பாரென்ற வேதாளத்தின் கேள்விக்கு, தமிழ் அரசியல்வாதிகளிடம் பதில் இருக்கிறதா என்பதுதான் இங்கு புரியாத புதிர். ஆங்கிலத்தின் இதை ‘gridlock situation’ என்ற சொல்லலாம். ‘திறக்கமுடியாத பூட்டின் நிலை போன்றதாகும். இதற்குள்தான் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வும் சிக்கி நிற்கிறது. சமஷ்டி, ஒற்றையாட்சி என்ற இரு எல்லைகளைத் தவிர்த்து யோசிக்க, இருதரப்பும் தயாராகவில்லை. பாவம் ஜனாதிபதி ரணில், இதற்கு நடுவில் தனியாளாக சிக்கிப் போயிருக்கிறார். அவருக்கும் அடுத்த ஜனாதிபதி தேர்தலைப் பற்றிய கவலைகள் நிச்சயமாக இருக்கும். ஆகவே, சிங்கள-பௌத்த தேசியவாதிகளின் எதிர்ப்பை மீறி, அவர் 13ஐ அமல்படுத்துவாரா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. அப்படி அவர் செய்தால், சுதந்திர இலங்கையின் வரலாற்றில், முதுகெலும்பு உள்ள ஒரே அரச தலைவராக, அவரை அடையாளப்படுத்தலாம். மறுபுறத்தில், தமிழ் அரசியல்வாதிகள் என்ன செய்யப்போகிறார்கள்? கிடைக்காத சமஷ்டிக்காக இன்னும் எத்தனை தசாப்தங்களைத் தாரைவார்க்கப் போகிறார்கள்? விரும்பியது கிடைக்கும் வரை, கிடைத்தததை வைத்து செய்யக்கூடியவனவற்றையேனும் செய்யும் இயல்போ, இயலுமையோ இவர்களிடம் இல்லை என்பதற்கு, வடமாகாண சபையை இவர்கள் நடத்திய இலட்சணமே சாட்சி. எங்களிடம் அதிகாரங்கள் இருந்தால், எப்படியெல்லாம் சாதித்திருப்போம் என்று சொல்வது தலைமைத்துவமில்லை. உண்மையான தலைவர்கள், தங்களுக்கு சகல அதிகாரங்களும் கிடைக்கும் வரை காத்திருப்பதில்லை. அவர்கள் ஒவ்வோர் அடியிலும் வாய்ப்புகளைத் தேடுகிறார்கள். அதைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்கிறார்கள். ஒவ்வொரு படிக்கட்டாகக் கட்டி, தன்னையும் தனது சமூகத்தையும் முன்னேற்றுகிறார்கள். அத்தகைய தலைவர்களை தமிழினம் இனியாவது அடையாளம்காண வேண்டும். சுதந்திர இலங்கையின் 75ஆவது வயதில், அதைப் பற்றிச் சொல்ல ஒன்றேயொன்றுதான் இருக்கிறது. இனியாவது இந்தத் தீவிலுள்ள அனைவருக்குமான ஒரு நாட்டை, இங்கு கட்டியெழுப்பத் தொடங்க வேண்டும். அப்போதுதான், ‘சுதந்திர தினம்’ அனைவருக்குமே அர்த்தபூர்வமானதாக இருக்கும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சில-சிந்தனைகள்-சுதந்திரம்-கிடைத்து-75-ஆண்டுகள்/91-312090
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.