Jump to content

Search the Community

Showing results for tags 'என்.கே. அஷோக்பரன்'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • வலைப்போக்கன் கிருபன்'s செயற்கை நுண்ணறிவு உருவாக்கி
  • Ahal Media Network's Topics

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's சிறப்பு ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணக்கட்டுகள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's திரட்டுகள்
  • Home Appliances Spot's Home Appliances

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

  1. ரணிலும், 13ஆம் திருத்தமும், இனப்பிரச்சினைக்கான தீர்வும் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலான சர்வகட்சி மாநாட்டின் அடுத்தபடியாக, கடந்த வாரம், ஜனவரி 26ஆம் திகதி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சர்வகட்சி மாநாடு கூடியது. இதில் பலவிடயங்களை தனது பேச்சிலும் பதிலளிப்புகளிலும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். அவற்றிலிருந்து ஜனாதிபதி ரணிலின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான எண்ணம் பற்றிய மேலதிக தௌிவு புலப்படுகிறது. குறித்த சர்வகட்சி மாநாட்டில், ஜனாதிபதி ரணில், பின்வரும் விடயங்களைக் குறிப்பிட்டிருந்தமை, இங்கு கவனிக்கத்தக்கது: “அரசியலமைப்பின் 13ஆம் திருத்தம் முழுமையாக அமல்படுத்தப்படவேண்டும் அல்லது பாராளுமன்றம் 13ஆம் திருத்தத்தை இல்லாதொழிக்க வேண்டும். தற்போது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவது என்பது நிர்வாகத்துறைத் தலைவர் என்ற முறையில் எனது பொறுப்பு. 37 ஆண்டுகளாக, 13ஆம் திருத்தம், அரசியலமைப்பின் ஒரு பகுதியாக உள்ளது. தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், 13ஆம் திருத்தத்தை இல்லாதொழிக்க தனிப்பட்ட சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தமாக முன்வைக்கலாம். சபையில் பெரும்பான்மையினர் குறித்த சட்டமூலத்துக்கு எதிராக வாக்களித்தால், 13ஆம் திருத்தத்தை நான் முழுமையாக அமல்படுத்த வேண்டும். ஒன்றில் அரசியலமைப்பை நான் முழுமையாக செயல்படுத்த வேண்டும் அல்லது பாராளுமன்றம் 13ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்க வேண்டும். 13ஆவது திருத்தச் சட்டத்தை அமல்படுத்தவும் மாட்டோம்; அதேவேளை இல்லாது ஒழிக்கவும் மாட்டோம் என்று நடுநிலையில் இருக்க முடியாது. 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பிரகாரம் நான் செயற்படுகின்றேன். அதைக் கடைப்பிடித்தால், நாம் ‘ஒன்றுபட்ட’ அரசாக இருக்கிறோம் என்று சொல்லலாம். நான் சமஷ்டி அரசை எதிர்க்கிறேன்; ஆனால், அதிகாரப் பகிர்வை அல்ல. இலங்கையில் உள்ள மாகாண சபைகளுக்கு லண்டன் நகர சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் கூட இல்லை. எனவே, இதை ஒரு சமஷ்டி அரசு என்று வரையறுக்க முடியாது. மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன, இலங்கையை ஒரு சமஷ்டி நாடாக மாற்றக்கூடாது என சட்டத்தரணிகளுடன் இணைந்து பல சரத்துகளை அறிமுகப்படுத்தினார். இதுவரை, ஒவ்வொரு ஜனாதிபதியும் இதை செயற்படுத்த முடிவு செய்துள்ளனர். எனவே, நாம் 13ஆம் திருத்தத்தை அகற்ற வேண்டும் அல்லது அதை நடைமுறைப்படுத்த வேண்டும். காணி ஆணையம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும். இது தொடர்பான சட்டமூலம் மார்ச் மாதத்துக்குள் முன்மொழியப்படலாம். ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் ஒன்பது பிரதிநிதிகள் சேர்க்கப்பட வேண்டும் என்றும் 12 பேர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட வேண்டும் என்றும் அரசியலமைப்பு கூறுகிறது. பின்னர் தேசிய காணிக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். அதன் பின்னர் தேசிய காணி கொள்கையை, காணி ஆணைக்குழுவால் செயற்படுத்த முடியும். மாகாண பொலிஸ் ஆணைக்குழுவுக்கு பதிலாக, தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டால், அதற்குரிய சட்டத்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். இருப்பினும், நாம் ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும். இது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள், பெப்ரவரி எட்டாம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். மேலும் ஏதேனும் ஆலோசனைகள் இருப்பின் அவற்றை பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்னர் செய்து அவற்றை பரிசீலித்து பெப்ரவரி எட்டாம் திகதி சமர்ப்பிக்கலாம். இங்கிருப்பவர்களோ நானோ, எங்கள் நாட்டைப் பிரிக்கத் தயாராக இல்லை. இங்கு அமர்ந்திருக்கும் நாம் அனைவரும் சிங்களவர்கள். இந்த நபர்கள் சிங்களவர்களுக்கு துரோகம் செய்ய மாட்டார்கள். சிங்களவர்கள் இருப்பார்களேயானால், அவர்கள் தமிழர்கள், முஸ்லிம்கள், பர்கர்கள் போன்ற பிற இனத்தவர்களுடன் இணைந்து வாழ வேண்டும். நமது தேசிய கீதத்தில் ‘ஒரு கருணை அனைபயந்த எழில்கொள் சேய்கள்’ (ஒரு தாயின் குழந்தைகள்) என்ற வரியில் உள்ள கருத்தை நாம் பாதுகாத்தால், நாம் ஒற்றுமையாக முன்னேற முடியும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு ஒருபடியாக ஒருமித்த அடிப்படையிலான தீர்வை நோக்கிச் செயல்படுவோம். நமது அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் படிப்படியாகத் தீர்ப்போம். இந்தப் பிரச்சினையில் சிக்கிக் கொள்ளாமல் முன்பு ஒப்புக்கொண்டபடி செயற்படுவோம். நாங்கள் யாருக்கும் துரோகம் இழைக்கவோ, நாட்டை பிரிக்கவோ இல்லை. இன்று நாடு ஒன்றுபட்டுள்ளது” என்றும் கூறியிருந்தார். ஜனாதிபதி ரணிலின் மேற்சொன்ன பேச்சிலிருந்து சில விஷயங்கள் தௌிவாகின்றன. முதலாவது, இனப்பிரச்சினைக்கான உடனடித்தீர்வு என்பது 13ஆம் திருத்தத்தின் அமல்படுத்தல் என்பதுதான். இரண்டாவது, சமஷ்டி என்பது இன்னும் ‘தீண்டத்தகாததாகவே’ பார்க்கப்படுகிறது. மூன்றாவது, காணி, பொலிஸ் அதிகாரங்கள் 13ஆம் திருத்தத்தின் அமலாக்கலின் பின்னும் கூட, மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் தொடரும். நான்காவது, 37 வருடங்களுக்கும் அதிகமாக அரசியலமைப்பில் இருக்கின்ற குறைந்தபட்ச அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டை முழுமையாக அமல்படுத்துவதற்கே, “நானும் சிங்களவன் தான்; நான் நாட்டைக் காட்டிக்கொடுக்கமாட்டேன்; நானும் சமஷ்டியை எதிர்க்கிறேன்; நாம் ஒன்றுபட்ட நாடாக இருக்க வேண்டும்” என ஒரு நாட்டின் ஜனாதிபதி பேரினவாதிகளுக்கு, குழந்தை ஒன்றுக்குச் சாக்குப் போக்குச் சொல்வதுபோல சொல்லவேண்டியிருப்பது, இந்நாட்டில் இன்னும் பேரினவாதமும், இனவெறியும் தொடர்ந்தும் பலமாகவே இருக்கிறது என்பதைத்தான் உணர்த்தி நிற்கின்றன. அதிகாரப்பகிர்வு விடயத்தில் 13ஆம் என்பது எவ்வளவுதூரம் அர்த்தமற்றது என்பதற்கு “இலங்கையில் உள்ள மாகாண சபைகளுக்கு இலண்டன் நகர சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் கூட இல்லை” என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கூற்றே போதுமானது. அத்தகைய மாகாண சபை முறைமையைக் கூட முழுமையாக அமல்படுத்தத் தயங்கும் பேரினவாதிகளைக் கொண்ட நாட்டில், ‘சமஷ்டி’ கோரிக்கை உடனடியாகவோ, வெகுசிலகாலத்திலோ நிறைவேறும் என்று தமிழ்த் தேசிய கட்சிகள், தமிழ் மக்களிடம் வெற்றுக் கனவை விதைப்பதில் அர்த்தமில்லை. தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரையில், இது ஒரு முட்டுச்சந்தில் முட்டி நிற்கும் நிலை. 13ஆம் திருத்தம் தான் தீர்வு என்பது, தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் பெரும் ஏமாற்றமே! இன்று ஆட்சியிலுள்ள அரசாங்கங்களுக்கு மாற்றாக, தன்னை முன்னிறுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியோ ஜே.வி.பியோ கூட, அதிகாரப்பகிர்வொன்றை வழங்கப்போவதில்லை. அதைப் பற்றி அவர்கள் பேசுவது என்ன? மூச்சுக்கூட விடுவதில்லை. அது அவர்கள் வாக்கு வங்கியைப் பாதிக்கும் என்று அவர்களுக்குத் தெரியும். அப்படியானால், தமிழ்த் தேசிய அரசியலின் எதிர்காலம்தான் என்ன என்ற கேள்வி எழுகிறது. தமிழ்த் தேசிய அரசியல், ‘பூகோள அரசியலால்’ எதையாவது சாதிக்கலாம் என்று சொல்லலாம். ஆனால், அது எப்படியென்பதை அது ஒரு போதும் சொன்னதில்லை. அது அவர்களுக்கு மட்டுமே தெரிந்து, புரிந்த இரகசியம். 13ஐத் தாண்டிய தீர்வொன்றுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய தேவை இந்தியாவுக்குக் கிடையாது. இந்தியாவுக்குள் எழுந்திருக்கிற அதிகாரப்பகிர்வு தொடர்பான வாதப்பிரதிவாதங்களை அவதானிக்கிற போது, இலங்கையில் அதிகரித்த அதிகாரப்பகிர்வினை இந்தியா ஆதரிப்பதானது, இந்தியாவின் உள்நாட்டு அதிகாரப்பகிர்வு பிரச்சினைகளை அதிகரிப்பதாகவே அமையும். எனவே, இந்தியா அதைச் செய்யப்போவதில்லை, மற்றைய நாடுகள் இலங்கையில் தலையிட்டு அதைச் செய்யவைப்பதற்கும் இடமளிக்கப்போவதில்லை. சீனா, இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரத்தில் தலையிடுவதேயில்லை. இங்கு, அமெரிக்காவும், மேற்கும்தான் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் நம்பும் பூகோள அரசியல் மாயமந்திரம் என்றால், இன்றைய சூழலில் அவை எவ்வளவு தூரம் அதிகாரப்பகிர்வுக்கு இலங்கை மீது அழுத்தம் வழங்கும் என்பது சந்தேகமே! மஹிந்த, கோட்டா, சுனில் ரட்நாயக்க, நேவி சம்பத் மீதான கனடாவின் தடை போன்ற சில அடையாள நடவடிக்கைகளை புலம்பெயர் தமிழ் சமூகம், மேற்கில் தமக்குள்ள அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்திச் செய்யலாமேயன்றி, உடனடியாக, இன்றைய உலக அரசியல் ஒழுங்கு மற்றும் நிலைவரத்தை வைத்துப்பார்க்கையில், அதிகாரப்பகிர்வு தொடர்பில் இலங்கையைக் கட்டாயப்படுத்த முடியாத நிலைதான் இருக்கிறது. ஆகவே, இன்று தமிழ்த் தேசிய அரசியல் முன்னால் ஒரு பெரிய சவால் காத்திருக்கிறது. ஒன்றில் 13ஐ இறுகப் பிடித்து, உள்ளதை வைத்து தமிழ்த் தேசத்தின் நலனை தம்மாலியன்றளவுக்கு முன்னேற்ற முயல்கின்ற, அரசியலை முயலலாம். அதற்கு ஆட்சித்திறன் மிக்கவர்கள் தேவை; அல்லது வழமைபோலவே பகட்டாரவாரக் கோரிக்கைகளை முன்வைத்துக்கொண்டிருக்கும், போராட்டம், பேரணி, கறுப்புக்கொடி என உணர்வெழுச்சி அரசியலை தொடர்ந்து முன்னெடுக்கலாம். அதற்கு இப்போதுள்ளவர்களே போதும்! https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ரணிலும்-13ஆம்-திருத்தமும்-இனப்பிரச்சினைக்கான-தீர்வும்/91-311686
  2. பாராளுமன்றத்தில் இல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றுக்கு புனர்வாழ்வு மையங்களை நடத்தும் அதிகாரத்தை வழங்கும் புனர்வாழ்வுப் பணியக சட்டமூலம், புதன்கிழமை (18) இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் பிற அரசியல் எதிரிகளை, இராணுவத்தால் இயக்கப்படும் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கும் அதிகாரத்தை, இந்தச் சட்டம் அரசாங்கத்துக்கு வழங்கும் என, இந்தச் சட்டமூலத்தின் விமர்சகர்கள் பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷவால் அமைச்சரவையில் அங்கிகரிக்கப்பட்டு, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்தச் சட்டமூலமானது 23 ஆதரவு வாக்குகளுடனும், வெறும் ஆறு எதிர்ப்பு வாக்குகளுடனும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலத்தின் மூல வடிவம், 2022 செப்டெம்பர் 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்தச் சட்டமூலம் அரசிலயமைப்புடன் இயைபுடையது அல்ல என சிவில் சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சி எம்.பிக்கள் போன்றோர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து, குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தியிருந்தனர். இந்தச் சட்டமூலம் முற்றிலும் அரசியலமைப்புக்கு விரோதமானது என்று உயர்நீதிமன்றம் தனது தீர்மானத்தை வௌியிட்டிருந்தது. குறித்த சட்டமூலத்தில் உள்ள பெரும்பாலான சரத்துகள் நிறைவேற்றப்பட வேண்டுமாயின், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையின் ஒப்புதல் தேவை என்றும், அத்தோடு சர்வசனவாக்கெடுப்பொன்றில் மக்கள் அங்கிகாரமும் பெறப்படவேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்மானித்திருந்தது. ஆயினும், குறித்த சட்டமூலத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம், சாதாரண பெரும்பான்மையோடு திருத்தப்பட்ட சட்டமூலம் நிறைவேற்றப்பட முடியும் என்றும் உயர்நீதிமன்றம் பரிந்துரைத்திருந்தது. குறிப்பாக, இராணுவத்தால் நடத்தப்படும் புனர்வாழ்வு மையங்களுக்கு ‘முன்னாள் போராளிகள்’, ‘வன்முறை மற்றும் தீவிரவாத குழுக்கள்’, ‘வேறு எந்த நபர்களின் குழு’க்களையும் அனுப்புவதற்கு, அரசாங்கத்தை அனுமதிக்கும் விதிகள் நீக்கப்பட்டால், சாதாரண பெரும்பான்மையோடு திருத்தப்பட்ட சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும் என்றும் உயர்நீதிமன்றம் பரிந்துரைத்திருந்தது. போதைக்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வுக்கானது என்ற நோக்கில் சமர்ப்பிக்கப்படுவதாக அரசாங்கம் வியாக்கியானம் சொன்ன சட்டமூலத்தில், ‘ஏனையோரை’ உள்ளடக்குவது ஏன் என்ற கேள்வி நியாயமானதே! சட்டமூலத்தின் மீதான உயர்நீதிமன்றின் தீர்மானத்துக்குப் பின்னர், சட்டமூலத்தின் புதிய பதிப்பை பாராளுமன்றத்தில் முன்வைத்த அரசாங்கம், நீதிமன்றத்தின் பரிந்துரைகளுக்கு இணங்க சட்டமூலத்தைத் திருத்தியதாகவும், குறித்த சட்டமூலம் ‘போதைப்பொருள் சார்ந்த நபர்கள்’ மற்றும் ‘சட்டத்தால் வழங்கப்பட்ட பிற நபர்களுக்கு’ மட்டுப்படுத்தப்பட்டதாக அமையும் என்றும் கூறியது. ஆயினும், பாராளுமன்ற விவாதத்தில் சுட்டிக்காட்டியபடி, ‘சட்டத்தால் அடையாளம் காணப்பட்ட பிற நபர்கள்’ என்ற சொற்றொடரைச் செருகுவது என்பது தௌிவற்ற நிலையை உருவாக்குகிறது என்ற அச்சம் வௌியிடப்பட்டிருந்தது. ‘சட்டத்தால் அடையாளம் காணப்பட்டது’ என்பது, நீதித்துறையால் நிர்ணயிக்கப்படுவதா இல்லையா என்ற கேள்விக்கு, பாராளுமன்றத்தில் தெளிவான பதில் எதுவும் வழங்கப்படவில்லை. இந்த அடக்குமுறைச் சட்டத்தின் நோக்கத்தையும் பயன்பாட்டையும் விரிவுபடுத்துவதற்காக, அடுத்தடுத்து திருத்தங்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகளை இது பரந்த அளவில் திறந்து விடுகிறது. இது மிகவும் ஆபத்தானது. ஆகவே, இலங்கை வாழ் மக்களை நேரடியாகப் பாதிக்கக் கூடிய சட்டம் இது. குறிப்பாக, மக்களின் உரிமைகளை அடக்க, இதனை ஒரு பலமான ஆயுதமாக அரசாங்கம் பாவிக்க முடியும். அப்படிப்பட்ட சட்டமூலம் வாக்களிப்புக்கு வரும்போது, மொத்தப் பாராளுமன்ற உறுப்பினர்களில் 13% மட்டுமே பாராளுமன்றத்தில் இருந்து வாக்களிப்பில் பங்குபற்றியிருந்தனர். 225 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 29 பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே வாக்கெடுப்புக்கு வந்திருந்தனர். ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஜனதா விமுக்தி பெரமுன தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆகியவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்களில் வெறும் 29 பேர் மட்டுமே மொத்தமாக வாக்களித்திருந்தனர். ஏனையோர் எவரும் பாராளுமன்றத்தில் இருக்கவில்லை. மிகக்குறிப்பாக ஒரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினரேனும் பாராளுமன்றத்தில் இருக்கவில்லை. குறித்த சட்டமூலம் மீதான விவாதம் நடந்த போது, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்வீச்சு விமர்சனங்களுக்கு குறைவிருக்கவில்லை. ஆனால், வாக்கெடுப்பின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் 54 பாராளுமன்ற உறுப்பினர்களில், வெறும் ஐந்துக்கும் குறைவானவர்களே பாராளுமன்றத்தில் இருந்தனர். இந்தச் சட்டமூலம் மீதான விவாதம் இந்த வருடத்தின் முதல்வாரத்தில் நடந்தபோது, அதில் ஆங்கிலத்தில் உரையாற்றியிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன், “அமைச்சரிடம் நான் கூற விரும்பும் மற்றோர் அடிப்படைப் பிரச்சினை உள்ளது. ஒரு நபரின் தனிப்பட்ட சுதந்திரம் பறிக்கப்படுவதென்பது, நீதித்துறையின் தீர்ப்புக்குப் பிறகுதான் நடக்க வேண்டும். இப்போது அந்தக் குறிப்பில் இருந்து, இது ஒரு விலகலாக அமைகிறது. நாம் இப்போது குற்றவாளி என்று நீதிமன்றம் கண்டறியாமல் ஒரு நபரை சிறையில் அடைக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியுள்ளோம். இந்த வார்த்தைகளை நன்றாக யோசித்துத்தான் பயன்படுத்துகிறேன். ஏனெனில் ஒருவரது தனிப்பட்ட சுதந்திரத்தைப் பறித்தபின், அவர் ஓடிப்போனால், அவரை மீண்டும் பிடித்து வரும் ஏற்பாடுகள் இந்தச் சட்டமூலத்தில் உள்ளன. போதைப்பொருள் மறுவாழ்வு திட்டத்தில் ஒரு முக்கியமான அடிப்படையானது, குறித்த நபரின் தன்னார்வத் தன்மையாகும். அந்த நபர் மறுவாழ்வு பெற வேண்டும் என்று, நீங்கள் அதை அவரது தொண்டைக்குள்ளே கட்டாயப்படுத்தித் திணிக்க முடியாது. எனவே, போதைப்பொருள் சார்பு சம்பந்தப்பட்ட ஒரு விடயத்தில் நீதித்துறை தீர்ப்புக்கு கூடுதலாக மருத்துவக் கருத்தையும் கருத்திற் கொள்ள வேண்டும். அந்த இரண்டு நிபந்தனைகளும் இணைக்கப்பட்டால், நீங்கள் ஒரு மறுவாழ்வு மையத்தை அமைக்கலாம். ஆனால் அது அந்தத் துறையில் உள்ள நிபுணர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும்; பாதுகாப்பு நிபுணர்களால் அல்ல” என்று குறிப்பிட்டிருந்தார். மிகத் தேர்ந்த அனுபவமும், நிபுணத்துவமும் மிக்க மனித உரிமைகள் சட்டத்தரணியான சுமந்திரன், இந்தச் சட்டமூலம் சட்டமாக்கப்படுவதால் ஏற்படக்கூடிய மிகப்பெரிய ஆபத்தை மிகச்சரியாக எதிர்வுகூறியிருக்கிறார். சட்டங்கள் என்பவை ஆயுதத்தைப் போல; ஒரு பலமான ஆயுதத்தை உருவாக்கிவிட்டு, அதனை நான் சரியான தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவேன் என்று ஒருவர் சொல்லலாம். உருவாக்கியவர் அத்தகைய நல்லவராகவே இருக்கட்டும்; ஆனால், நாளை அந்த ஆயுதம் இன்னோர் அராஜகவாதியின் கைக்கு சென்றுவிட்டால், ஓர் அராஜகவாதியிடம் ஒரு பலமான ஆயுதம் கிடைத்துவிடுமில்லையா? இதுதான் இங்குள்ள பிரச்சினை. பயங்கரவாத தடுப்புச் சட்டமும் அவசரகாலச் சட்டமும், இந்நாட்டு மக்களை, குறிப்பாக சிறுபான்மையினரை, மிகக் குறிப்பாக தமிழர்களை அடக்கியொடுக்க எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டது என்பதற்கு அந்த இருண்ட வரலாறே சாட்சி! இன்றும் குற்றம்சாட்டப்படாது, பல்லாண்டுகளாக ‘அரசியல் கைதி’களாக எத்தனை பேர் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்? இந்தப் புனர்வாழ்வுப் பணியகச் சட்டமும் இந்த வகையறாச் சட்டம்தான். இது தனிமனித உரிமைக்கும், சுதந்திரத்துக்கும் எதிரான பெரும் சவால். இப்படியொரு சட்டம் வாக்கெடுப்புக்கு வரும்போது, இதை எதிர்த்துப் பேசிய சுமந்திரன் உள்ளிட்ட தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள், அவையிலிருந்து தமது எதிர்ப்பு வாக்கைப் பதிவு செய்திருக்க வேண்டாமா? அது அவர்களது கடமையல்லவா? இதைவிட என்ன பெரிய கடமை அவர்களுக்கு இருக்கிறது? ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் முதற்கடமை பாராளுமன்றத்துக்கு சமூகமளித்து, அவைச் செயற்பாடுகளில் அக்கறையோடு பங்குபற்றுதல் ஆகும். அதற்குப் பிறகுதான் மற்றையதெல்லாம். இதற்குத்தான் மக்கள் அவர்களைத் தேர்ந்தெடுத்து, பாராளுமன்றத்துக்குத் தமது பிரதிநிதிகளாக அனுப்புகிறார்கள். இதற்குத்தான் மக்கள் பணத்தில் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. இத்தனைக்கும் ஒரு மாதத்தின் ஒவ்வொரு வேலைநாளும் பாராளுமன்ற அமர்வுகள் இருப்பதில்லை. பாதீடு சமர்ப்பிக்கப்படும் மாதத்தைத்தவிர, விசேட காரணங்கள் இருந்தாலன்றி, ஒரு மாதத்தில் 10ற்கும் குறைவான நாள்களே பாராளுமன்ற அமர்வுகள் இருக்கின்றன. அவற்றில்கூட, முறையாகப் பங்குபற்ற முடியாதவர்கள், சட்டமூலம் மீதான விவாதங்களில், வாக்கெடுப்பில் பங்குபற்றாதவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து யாருக்கு என்ன பயன்? தேர்தல் காலத்தில் மக்களை வந்து வாக்களியுங்கள் என்று சொன்னவர்கள், தாம் பாராளுமன்றத்தில் வந்து வாக்களித்து, தமது கடமையைச் செய்ய வேண்டாமா? இனியாவது மக்கள், கடமையைச் செய்யத்தக்கவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனென்றால், பாராளுமன்ற உறுப்பினராகச் செயற்படுவது ஒரு சிறப்புரிமை அல்ல; அது அடிப்படையில் ஜனநாயகக் கடமை. அதைச் சரியாகச் செய்யாதவர்கள் ஜனநாயக விரோதிகளே! https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பாராளுமன்றத்தில்-இல்லாத-பாராளுமன்ற-உறுப்பினர்கள்/91-311282
  3. கூட்டமைப்பு ‘டமால்’ என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan உருவாகிய நாளிலிருந்தே முரண்பாடுகளுக்கும் பிரிவுகளுக்கும் குறையில்லாததாகத்தான் ‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பு’ இருந்து வந்திருக்கிறது. பொதுவாக நிலவும் நம்பிக்கைகள் பல உண்மையாக இருப்பதில்லை. சிலவேளைகளில் அவை வசதியான பிரசாரத்தின் விளைவாக, உண்மைக்குப் புறம்பாக சமூகத்தில் விதைக்கப்படுபவையாகக் கூட இருக்கலாம். அதில் ஒன்றுதான் கூட்டமைப்பை, விடுதலைப் புலிகள் உருவாக்கினார்கள் என்பதாகும். கூட்டமைப்பை விடுதலைப் புலிகள் உருவாக்கவில்லை. அப்படிச் சொல்வது அதன் உருவாக்கத்துக்காகப் பாடுபட்டவர்களுக்கு செய்கிற அநீதி. கூட்டமைப்பு என்பது அதன் உருவாக்கத்துக்குப் பின்னர், தமக்கான அரசியல் சந்தர்ப்பம் கருதி விடுதலைப் புலிகளால் தத்தெடுக்கப்பட்ட ஒன்றாகும். கூட்டமைப்பின் ஸ்தாபகக் கட்சிகளாக தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகியன இருந்தன. இதில் கவனிக்கப்பட வேண்டியது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஸ்தாபகக் கட்சியில் இலங்கை தமிழரசுக் கட்சி கிடையாது. புலிகள் கூட்டமைப்பை ‘தத்தெடுத்த’ பின்னர், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி, 2004இல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயரிலும், சின்னத்திலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போட்டியிட அனுமதிக்கவில்லை. அதன் பின்னர்தான், ஆனந்த சங்கரியோடு இணைந்து செல்லாது கூட்டணியினர், இலங்கை தமிழரசுக் கட்சிக்கு மீண்டும் உயிர்கொடுத்து, ‘வீட்டு’ச் சின்னத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக தொடர்ந்து இயங்கினர். அதன் பின்னர் சில கட்சிகள் விலகின; சில கட்சிகள் இணைந்தன. ‘நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை’ உலகுக்கு மட்டுமல்ல, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இருக்கிறது என்றால் அது மிகையல்ல. நேற்று கூட்டமைபிலிருந்ததொரு கட்சி, இன்று இருக்காது. இன்று இருக்கும் கட்சி, நாளை இருக்காது என்பதுதான் கூட்டமைப்பின் கதையாக இருந்து வருகிறது. இன்று கடைசியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சின்னமாகவும் முகமாகவும், முகவராகவும் இருந்த தமிழரசுக் கட்சி, நேரடியாக அன்றி மறைமுகமாக கூட்டமைப்பிலிருந்து விலகி, தனிவழி செல்கிறது. இலங்கை தமிழரசுக் கட்சி, எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் ஊடகங்களுக்கு அறிவித்ததோடு தமிழரசுக் கட்சி கூட்டமைப்பிலிருந்து விலகாமல் விலகியிருக்கிறது. தமிழரசுக் கட்சி ஏன் விலகியது என்பதற்கு ஆயிரம் வியாக்கியானங்கள் கற்பிக்கலாம். ஆனால், யதார்த்தத்தில் தமிழரசுக் கட்சி - கூட்டமைப்பு என்ற கூட்டணி மனப்பான்மையில் செயற்பட்டு பல ஆண்டுகளாகிறது. 2009 வரை தமிழ்த் தேசிய கூட்டமைப்பை கட்டுப்படுத்தும் கையாக விடுதலைப் புலிகள் இருந்தார்கள். 2009க்குப் பின்னர், தமிழரசுக் கட்சியை கட்டுப்படுத்தும் சக்தி ஒன்று இருக்கவில்லை. தமிழரசுக் கட்சி கூட்டமைப்புக்குள் ‘நாட்டாமை’யாகச் செயற்பட்டது என்று சொன்னால் அது மிகையல்ல. அந்த நாட்டாமையை விரும்பாத கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள், கூட்டமைப்பிலிருந்து தனிவழி போயின. மற்றைய அங்கத்துவக் கட்சிகள், தமது பதவிகளைப் பாதுகாத்துக்கொள்வதற்காக பல்லைக்கடித்துக்கொண்டு இருந்தன. கூட்டமைப்பின் தீர்மானங்கள், முடிவுகள், நிலைப்பாடுகள் என பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட பல முடிவுகள், கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளோடு பேசாமல், தமிழரசுக் கட்சி சார் தனிநபர்களால் எடுக்கப்பட்ட முடிவுகளே என்ற குற்றச்சாட்டுகள் கூட முன்வைக்கப்பட்டன. ‘கூட்டமைப்பு’ என்ற பெயரில் வௌிநாடுகளுக்குப் போவது, இராஜதந்திரிகளைச் சந்திப்பது, அரசாங்க முக்கியஸ்தர்களைச் சந்திப்பது என எல்லாம் தமிழரசுக் கட்சியின் தனிநபர்களால்தான் நடத்தப்பட்டன என்பது பகிரங்க இரகசியம்! இதையெல்லாம் கூட்டமைப்பில் தொடர்ந்திருந்த கட்சிகள் பொறுத்துக் கொண்டதற்கு ஒரேயொரு காரணம்தான் இருக்க முடியும். அது, அவர்கள் தேர்தலில் ஒன்றிரண்டு ஆசனங்களையேனும் வெல்வதற்கு தமிழரசுக் கட்சியுடனான தேர்தல் கூட்டு அவசியம் என்பதாகும். தமிழரசுக் கட்சிக்கும் இது நன்றாகவே தெரியும். அதனால்தான் எதுவித தயக்கமுமின்றி தமிழரசுக் கட்சி ‘நாட்டாமை’யாகச் செயற்பட்டு வந்தது. தமிழரசுக் கட்சியுடனான தேர்தல் கூட்டான கூட்டமைப்பிலிருந்து பிரிந்த கட்சிகள் மற்றும் தரப்பினது தேர்தல் செயற்றிறன் கணிசமாகக் குறைந்தது என்பது தௌிவு. சீ.வி விக்னேஸ்வரனாலும், வியாழேந்திரனாலும் கூட்டமைப்பிலிருந்து பிரிந்தாலும், பாராளுமன்ற தேர்தலில் வெல்ல முடிந்தது. ஆனால், இது தனிநபர் வாக்குவங்கி சார்ந்த விதிவிலக்கு. இவர்களால் அடுத்தமுறை இதே வெற்றியை மீளடைய முடியுமா என்பதும் கேள்விக்குறியே. ஆனால், 2010இல் கூட்டமைப்பிலிருந்து பிரிந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், மீண்டும் பாராளுமன்ற ஆசனங்களை வெல்ல 10 வருடங்களானது. ஈ.பி.ஆர்.எல்.எஃப், தமிழர் விடுதலைக் கூட்டணியால் கூட்டமைப்பிலிருந்து விகிய பின்னர் தலையெடுக்க முடியவில்லை. இந்த யதார்த்தம் தமிழரசுக் கட்சியினருக்கும் தெரியும். இதுவும் அவர்களது செருக்குக்கு முக்கிய காரணமாகும். மேலும், இதே காலப்பகுதியில், தமிழரசுக் கட்சிக்குள் கூட்டமைப்பு தேவையில்லை; நாம் தனித்துச் செயற்படுவோம் என்ற குரலும் உருவாகத் தொடங்கியது. இவற்றின் தொடர்ச்சியாக, இன்று 2001இற்குப் பின்னர் முதன்முறையாக, தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இல்லாமல் ஒரு தேர்தல் நடக்கவிருக்கிறது. கூட்டமைப்பை உடைக்கவேண்டும், தமிழர் ஒற்றுமையைச் சிதைக்க வேண்டும் என கங்கணங்கட்டிக்கொண்டிருந்த எல்லாத் தரப்புகளுக்கும் அவர்கள் விரும்பிய அடைவு கிடைக்கப்பெற்றுவிட்டது. சினிமா மொழியில் சொன்னால், கூட்டமைப்பு ‘டமால்’. ஆனால், தமிழரசுக் கட்சி கூட்டமைப்பிலிருந்து விலகி, கூட்டமைப்பின் சின்னமாக இருந்த தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தை தான் எடுத்துக் கொண்டு போன பின்னர், கூட்டமைப்பில் எஞ்சியிருந்த டெலோ, புளொட் ஆகிய கட்சிகளும், கூட்டமைப்பின் முன்னாள் அங்கத்தவரான ஈ.பி.ஆர்.எல்.எவ்உம், தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியனவும் இணைந்து ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் ‘குத்துவிளக்கு சின்னத்தில் ஒன்றாகியிருக்கின்றன. இந்தக் கூட்டணியில் இணையாமல் சீ.வி விக்னேஸ்வரனும், அவரோடு கைகோர்த்திருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து பிரிந்த மணிவண்ணனும் தனிவழி பயணிப்பதாகத் தெரிகிறது. ஆகவே, தமிழ்த் தேசிய அரசியலில் முழுமையானதோர் ஒற்றுமையை ஏற்படுத்த இன்னமும் முடியாமல் இருக்கிறது. இந்த இடத்தில் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டுதல் அவசியமாகிறது. இந்தப் பிரிவுக்கு தமிழரசுக் கட்சி காரணமல்ல என்று வியாக்கியானப்படுத்த இங்கு பெரும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. புதிதாக ஜனநாயக கூட்டமைப்பாக இணைந்திருக்கும் கட்சிகளை ‘வங்குரோத்து’ அரசியலாக வரைவிலக்கணப்படுத்த கடும் பிரசார பிரயத்தனங்களை தமிழரசுக் கட்சி சார் தரப்பு முன்னெடுப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. இது, கூட்டமைப்பின் ஒற்றுமையைச் சிதைத்தது யார் என்ற கேள்வியை மீளஎழுப்ப வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி நிற்கிறது. கூட்டமைப்பாக, ஒன்றுபட்டு நிற்கும் டெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியனதான் ஒற்றுமையைச் சிதைக்கின்றனவா, அல்லது தமிழ் மக்களின் அடையாள பிரதிநிதியாக இருந்த ‘கூட்டமைப்பை’ விடுத்து, நாம் தனியாகப் போட்டியிடுவோம் என்று அறிவித்த தமிழரசுக் கட்சி, ஒற்றுமையைச் சிதைத்திருக்கிறதா என்பதை தமிழ் மக்கள் தமக்குத் தாமே கேட்டுக்கொள்ள வேண்டும். ஒரு கூட்டணி என்றால், அதற்குள் விட்டுக்கொடுப்புகள் தேவை. விட்டுக்கொடுப்பு இல்லாமல் ஒற்றுமை என்பது சாத்தியமில்லை. ஒரு கூட்டணிக்குள் ஒருவர் நாட்டாமை நடத்திக்கொண்டிருப்பது கூட்டணிக்கு ஆரோக்கியமானது அல்ல. அன்று எப்படி ஆனந்த சங்கரி கூட்டமைப்பின் சின்னத்தை எடுத்துக்கொண்டு வௌியேறினாரோ, அதுபோல இன்று தமிழரசுக் கட்சி கூட்டமைப்பின் சின்னத்தை எடுத்துக்கொண்டு வெளியேறியிருக்கிறது. ஆகவே, கூட்டமைப்பின் பிளவுக்கு மற்றைய கூட்டணிக் கட்சிகளை குற்றம் சுமத்துவது தர்மமாகாது. ஆனால், தமது தெரிவு யார் என்பது தற்போது தமிழ் மக்களின் கையில்தான் இருக்கிறது. ஒற்றுமை தேவையில்லை; எமக்கு ஒரு கட்சிதான் வேண்டும் என்று தமிழ் மக்கள் எண்ணி, அதற்கு அங்கிகாரம் அளிப்பார்களேயானால், தமிழ் மக்கள் விரும்பித் தெரிந்தெடுத்த வழி அதுதான் என்று எடுத்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளை தேசிய அரசியலுக்கான மக்களாணையாகக் கொள்ளவும் முடியாது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவும் வேண்டும். ஆனால், அது வாக்குவங்கியின் அசைவையும், ஊடாட்டங்களையும் மேலோட்டமாக உணர்த்தும். அடுத்த பாராளுமன்றத் தேர்தல்தான், தமிழ்த் தேசிய அரசியலின் அடுத்த கட்டத்தை தீர்மானிப்பதாக அமையும். தமிழ் மக்கள் ஒற்றுமையை விரும்புகிறார்களா, இல்லையா என்பதை வௌிப்படுத்தவேண்டியது தமிழ் மக்கள்தான்! https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கூட்டமைப்பு-டமால்/91-310858
  4. இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளும் தமிழர் தரப்பும் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan நேற்று முன்தினம் (09) திங்கட்கிழமை முதல், இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் முழு வீச்சில் ஆரம்பமாகி இருக்கின்றன. இது ஒரு பொன்னான வாய்ப்பு. இப்படிச் சொல்வதற்கு மிக முக்கியமான காரணம் இருக்கிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தானாக முன்வந்து, 2022 நவம்பரில் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது, “இலங்கை தனது 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடவிருக்கும் 2023 பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்பதாக, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட வேண்டும்” என்று கூறியதுடன், தமிழர் தரப்பை அதற்கான பேச்சுவார்த்தைக்கும் அழைத்திருந்தார். இதைத் தொடர்ந்து, டிசெம்பர் 2022இல், இது தொடர்பிலான சர்வகட்சி மாநாடு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து, நாளை முதல் தமிழ்த் தரப்புடனான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகத் திட்டமிடப்பட்டு உள்ளன. இந்நிலையில், தமிழ்த் தரப்பின் ஒரு தரப்பான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தாம் முன்வைத்துள்ள மூன்று பூர்வாங்கக் கோரிக்கைகளான, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமலாக்கப்பட்டோர் தொடர்பிலான வகைகூறல், வடக்கு-கிழக்கில் அரசபடைகள் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவித்தல் ஆகியன நிறைவேற்றப்படாவிட்டால், தாம் பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றவதா, வேண்டாமா என்பது தொடர்பில், முடிவெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் எனப் பகிரங்கமாக அறிவித்துள்ளது. வடக்கு-கிழக்குத் தமிழர் தலைமைகளின் பேச்சுவார்த்தை ஆற்றல் பற்றி சௌமியமூர்த்தி தொண்டமான் சொன்ன கருத்தை பலமுறை பதிந்திருக்கிறேன். காரணம், அதில் உண்மை இருக்கிறது. இலங்கை சுதந்திரம் அடைந்ததும், முதன் முதலாக அரசாங்கத்தின் திட்டமிட்ட அடக்குமுறைக்கு ஆளானவர்கள் இந்திய வம்சாவளித் தமிழர்கள். இலங்கைக்கு இந்திய வம்சாவளித் தமிழர்கள் வந்த 200ஆவது ஆண்டு இது. சுதந்திர இலங்கைக்கான குடியுரிமைச் சட்டத்தை வரைந்த டி.எஸ் சேனநாயக்க தலைமையிலான அரசாங்கம், இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கவில்லை; அவர்கள் நாடற்றவர்களாக்கப்பட்டார்கள். இந்திய வம்சாவளி மக்கள், குறிப்பாக மலையகத் தோட்டத் தொழிலாளர் இந்நாட்டில் அனுபவித்த அடக்குமுறைகளும் துன்பங்களும் கொஞ்சநஞ்சமல்ல. ஆனால், இந்திய வம்சாவளி மக்களின் தலைமைகள், தமது பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள, முற்றுமுழுதான எதிர்ப்பு நடவடிக்கை என்ற தீவிர நிலைப்பாட்டை எடுக்காமல், விட்டுக்கொடுப்புகளுடனான ஒத்தியைபு அணுகுமுறையைக் கையாண்டார்கள். பாடசாலைகள் இல்லாத மலையகத் தோட்டப்புறங்களில் பாடசாலைகள் உருவாக்கப்பட்டன. வீடுகளற்றிருந்த தோட்டத் தொழிலாளருக்கு வீடுகள் கொஞ்சம் கொஞ்சமாக வழங்கப்பட்டன. பாடசாலைகளின் தரம் மேம்படுத்தப்பட்டது. ஏதோ ஒரு வகையிலேனும், கொஞ்சம் கொஞ்சமாகவேனும், கடந்த ஏழரை தசாப்தங்களில் மலையக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை முன்னேறியிருக்கிறது. அடுத்த தலைமுறை தோட்டத்தொழிலுக்குள் சுருங்காது, கல்வி, வணிகம் என மிகவும் முன்னேறியிருக்கிறது. 2003இல், அம்மக்களின் அடிப்படைப் பிரச்சினையாக இருந்த குடியுரிமைப் பிரச்சினையும். அன்றைய ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில், யோகராஜன் தலைமையில் தீர்க்கப்பட்டது. இந்திய வம்சாவளித் தலைவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் ஒருபுறம் இருந்தாலும், கடந்த ஏழரை தசாப்தத்தில் மலையகம் முன்னேறியிருக்கிறது. அப்படியானால் அவர்களைப் பொறுத்தமட்டில், அவர்கள் தமக்கான அரசியல் அணுகுமுறையை சரியாகக் கையாண்டிருக்கிறார்கள். செல்வா, ஜீ.ஜீ, தொண்டா என முத்தலைவர்களைக் கொண்டமைந்த தமிழ் ஐக்கிய முன்னணி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியாக மாறியபோது, ‘இது எமது மக்களுக்கான தேவையோ, பாதையோ இல்லை’ என தொண்டமான் அன்று விலகி, தனி வழி சென்றது, அவர்களைப் பொறுத்தவரையில் சரியான முடிவாகவே இருக்கிறது. மலையக அரசியலினது அடிப்படையாக, ஏறத்தாழ ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக குடியுரிமைப் பிரச்சினைதான் இருந்தது. ஆனால், அது தீர்க்கப்படும் வரை, நாம் மற்றவற்றைப் பற்றி பேசமாட்டோம் என்றோ, அது தீர்க்கப்படும் வரை தமது மற்றைய அபிவிருத்தித் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான அரசியலைச் செய்யமாட்டோம் என்றோ மலையகத் தலைமைகள் வங்குரோத்து அரசியலை முன்னெடுக்கவில்லை. அவர்கள் தமக்கான அடைவுகளைக் கொஞ்சம்கொஞ்சமாக அடைந்துகொள்ளும் அரசியல் அணுகுமுறையைக் கையாண்டார்கள். இன்றும் அதையேதான் கையாண்டு கொண்டிருக்கிறார்கள். இதை ஒரு வகையாக, கூடுதல்முறைவாத (incrementalism) அணுகுமுறை எனலாம். ‘கூடுதல்முறைவாதம்’ என்பது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஓர் உத்தியாகும். இது ஒரு முழுமையான தீர்வை, ஒரே நேரத்தில் அடைய முயல்வதை விட, காலப்போக்கில் சிறிய, அதிகரிக்கும் மாற்றங்களைச் செய்வதனுடாக, நீண்டகாலத்தில் தீர்வை அடைந்துகொள்வதை வலியுறுத்துகிறது. ஒரு பிரச்சினையில், சம்பந்தப்பட்ட தரப்பினர் முரண்பட்ட இலக்குகளைக் கொண்டிருக்கும் சூழ்நிலைகளில், அல்லது பிரச்சினை சிக்கலானதாகவும் எளிதில் தீர்க்கப்பட முடியாத சூழ்நிலையிலும் இந்த அணுகுமுறை பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. சிறிய, அடையக்கூடிய படிகளில் கவனம் செலுத்துவதன் மூலம், தரப்புகள் அதிகமாக அல்லது குழப்பமடையாமல் ஒரு தீர்மானத்தை நோக்கி முன்னேறலாம். நம்பிக்கையை கட்டியெழுப்பவும் எதிர்கால ஒத்துழைப்புக்கான அடித்தளத்தை நிறுவவும் உதவுகிறது. எவ்வாறாயினும், தரப்புகள் செயல்முறையைத் தொடர்வதற்கும் தேவையான சமரசங்களைச் செய்வதற்கும் உறுதியளிப்பது முக்கியம். ஏனெனில், அடைவுகளின் அதிகரிப்பின் வேகம் மெதுவாக இருக்கலாம். ஆகவே நீண்டகாலம், பொறுமை, விடாமுயற்சி என்பன இந்த அணுகுமுறைக்கு இன்றியமையாதன. வடக்கு-கிழக்கு தமிழர் தலைமைகளைப் பொறுத்தவரையில், அவை 2009இற்கு முற்பட்ட அணுகுமுறையிலிருந்து இன்னும் பெரிதும் மாறவில்லை என்பதுதான் திண்ணம். ஓர் ஆயுதம் தாங்கிய இயக்கத்தால் முன்னெடுக்கப்படும் ‘தனிநாட்டு’ விடுதலை அரசியலுக்கும், ஒரு ஜனநாயக அரசியல் கட்சியால் முன்னெடுக்கப்படும் ‘அதிகாரப்பகிர்வு’ கோரும் அரசியலுக்கும், அடிப்படையில் நிறைய வேறுபாடு இருக்கிறது. ஆகவே, 2009இற்குப் பின்னரான தமிழர் அரசியல், மீளக்கட்டமைப்பு செய்யப்பட வேண்டிய அத்தியாவசியத் தேவை இருக்கிறது. இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலான அணுகுமுறையும், அடிப்படையிலேயே மாற வேண்டிய நிர்ப்பந்தம், 2009இற்குப் பின்னர் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாகியும், தமிழர் அரசியலில் அந்த மாற்றம் இடம்பெறவில்லை. இன்னும் தனிநாட்டுக் கனவை, எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லாமல், தமிழ் மக்களிடையே பகட்டாரவாரப் பேச்சாக விதைக்கும் வங்குரோத்து அரசியல், இன்னமும் இங்கு முன்னெடுக்கப்படுகிறது என்பது கவலைக்குரியது. பூகோள அரசியல் பற்றிய பேசுபவர்கள் கூட, மாறிவரும் உலக ஒழுங்கையும், புதிய உலக ஒழுங்கில் பலவான்களாக மாறிவரும் இந்தியா, சீனா போன்ற நாடுகளையும், பிரிவினை தொடர்பிலான அவர்களது அணுகுமுறைகளை எல்லாம் கருத்தில் கொள்ளாது, வெறும் வாய்ச்சொல் கனவாக ‘தனிநாடு’ பற்றிப் பேசுவதெல்லாம் அடிப்படையில் நேர்மையற்ற செயலாகும். இலங்கையின் இனப்பிரச்சினை, இலங்கைக்குள்தான்; இலங்கை அரசாங்கத்தோடு பேசித்தான் தீர்க்கப்பட முடியும். எந்த இரட்சகனும் பூமிக்கு இறங்கிவந்து, “இந்தா தனிநாடு; இந்தா சமஷ்டியாட்சி” என்று தூக்கித்தந்துவிடப் போவதில்லை. இந்த யதார்த்தத்தை, தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் மக்களும் புரிந்து கொள்வது அவசியம். இன்று, இலங்கையின் மிகப் பின்தங்கிய மாகாணங்களாக வடக்கும் கிழக்கும் இருக்கின்றன. இது மாற வேண்டுமென்றால், தமிழ் மக்களின் அரசியல் அணுகுமுறை மாற வேண்டும். இன்று, இந்நாட்டின் ஜனாதிபதி, இலங்கையில் இனப்பிரச்சினை ஒன்றிருப்பதைப் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார். அது தீர்க்கப்பட வேண்டும் என்று பகிரங்கமாகத் தெரிவித்திருக்கிறார். 2009இற்குப் பின்னர், “இனப்பிரச்சினையா, அப்படியென்றால் என்ன? நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்” எனச் சப்பைக்கட்டு அரசியல் நடத்திய பேரினவாத ஜனாதிபதிகள்தான் இருந்தார்கள். 2009இற்குப் பின்னர், மைத்திரிபால சிறிசேன உட்பட, எவரும் இனப்பிரச்சினை இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை! தனிப்பட்ட ரீதியிலும், இனப்பிரச்சினையைத் தீர்ப்பதை ரணில் விரும்புவார். ஏனென்றால் அது மட்டும்தான் அவர் வரலாற்றில் இடம் பிடிப்பதற்குள்ள ஒரே வாய்ப்பு. ஆகவே, இந்தச் சந்தர்ப்பத்தை தமிழர் தரப்பு மிகக் கவனமாகவும், இராஜதந்திரமாகவும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தனிப்பட்ட நபர்களின் பிரச்சினைகளுக்காக, தமிழரின் அரசியலின் எதிர்காலம் நாசமாக்கப்பட்டுவிடக் கூடாது. கொள்கைத் தெளிவு வேண்டும். அதே போல அதனை அடைந்துகொள்ளும் சாதுரியமும் இராஜதந்திரமும் வேண்டும். இல்லையென்றால், இந்தக் கொள்கைகள் எல்லாம் வெறும் ஏட்டுச் சுரைக்காயாகத்தான் இருக்கும். இது பத்திரிகையில் அறிக்கை விட்டு, அரசியல் செய்வதற்கான நேரமல்ல. தமிழர் தரப்பு, தமிழ் மக்களுக்கான அடைவுகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய நேரம். இல்லாவிட்டால், வாய்ச்சொல் சவடால்களை விட்டுக்கொண்டும், சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்த பேசிக்கொண்டும், அறிக்கைகள் விட்டுக்கொண்டும், சர்வதேச நாடுகளுக்கு விஜயம் செய்துகொண்டும் தமிழ் அரசியல்வாதிகள் காலத்தை ஓட்ட, வறுமையிலும் துன்பத்திலும், தமிழ் மக்கள் உழன்று சாக வேண்டிய நிலையைத்தான் இந்த வங்குரோத்து அரசியல் தரும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இனப்பிரச்சினைத்-தீர்வுக்கான-பேச்சுவார்த்தைகளும்-தமிழர்-தரப்பும்/91-310458
  5. தமிழ்த் தேசிய அரசியல்: ‘தேவையில்லாத ஆணிகள்’ என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan ஹோம் சைனா’ (சீனா வீட்டுக்குப் போ) என்ற போராட்டத்தை, தான் தலைமையேற்று நடத்தவேண்டி வரும் எனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சாணக்கிய ராகுல், பாராளுமன்றத்தில் சூளுரைத்திருக்கிறார். தமிழ்த் தேசிய அரசியலின் முன்னிலைக் கட்சிகளில் ஒன்றான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, இன்று ‘மாலுமி இல்லாத கப்பலாக’, கடலில் அலையின் போக்குக்கு ஏற்ப, தன்பாட்டுக்கு மிதந்துகொண்டு நிற்கிறது. ஆளாளுக்கு தனக்குப் பிடித்த திசையில் கப்பலைச் செலுத்த, துடுப்புப் போடும் நிலையில், திக்குத் தெரியாது, கரை தெரியாது, நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது கட்சியும் தமிழ்த் தேசியமும்! கிட்டத்தட்ட 20 டிரில்லியன் டொலர் பொருளாதாரம் கொண்ட சீனாவுக்கு, இலங்கை 7.4 பில்லியன் டொலர் கடனை செலுத்த வேண்டியுள்ளது என்றும், இலங்கையின் உண்மையான நண்பனாக சீனா இருந்தால், இலங்கையின் கடனை தள்ளுபடி செய்ய அல்லது குறைந்தபட்சம் மறுகட்டமைப்பு செய்ய ஒப்புக்கொள்ளும் என்றும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி சாணக்கிய ராகுல், வெள்ளிக்கிழமை (02) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும், கிட்டத்தட்ட 20,000 பில்லியன் டொலரை வைத்திருக்கும் சீனா, உண்மையிலேயே இலங்கையின் நண்பன் என்றால்..., 9 மில்லியன் லீற்றர் டீசல் அல்லது அரை மில்லியன் கிலோ கிராம் அரிசி வழங்குவது, உண்மையான உதவியல்ல என்றும் சிங்களத்தில் பேசிய சாணக்கிய ராகுல் குறிப்பிட்டிருந்தார். மேலும், “சீனர்கள் இந்த நாட்டில் என்ன செய்தார்கள்? ஹம்பாந்தோட்டை துறைமுகத்தைப் பார்த்தால், சீனா அதைக் கைப்பற்றியுள்ளது. இலங்கை மக்களுக்கு வேலை கொடுக்கப்பதற்காக இந்த நாட்டில், சீனர்கள் செய்த முதலீடு ஒன்றைச் சொல்லுங்கள். ஒரு தொழில் கூட இல்லை” என்றும் சாணக்கிய ராகுல் கூறினார். மேலும், “ராஜபக்‌ஷ குடும்பத்துக்கு நன்றி செலுத்துவதற்காக, அவர்கள் இந்த நாட்டில் முதலீடுகளை கட்டாயப்படுத்தியுள்ளனர். அவை பயனற்ற முதலீடுகள்” என்றும் குறிப்பிட்டார். இந்தப் பேச்சு, இலங்கை என்ற நாட்டுக்கோ, அல்லது தமிழ்த் தேசிய அரசியலுக்கோ பிரயோசனமில்லாத பேச்சு. சீனா, இலங்கைக்கு என்ன செய்தது என்ற கேள்வியை சாணக்கிய ராகுல் கேட்க முதல், அவர் கொஞ்சம் வரலாற்றைப் படிக்க வேண்டும். மஹிந்த ராஜபக்‌ஷ காலம் வரை, சீன-இலங்கை உறவு எப்படி இருந்தது என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். பிரபல்யம் தேடுவதற்காக, சமூக ஊடகங்களின் பரவல் மூலம், பிரபல்யம் கிடைக்கும் என்பதற்காக, எதையும் பேசலாம் என்பதற்குப் பெயர் ‘அரசியல்’ அல்ல. அத்தகைய அரசியலை முன்னெடுப்பது, ஒரு சமூகத்துக்கு மிகமிக ஆபத்தானது. 1950களில், இலங்கை அந்நிய செலாவணி பற்றாக்குறையின் விளைவாக, பொருளாதார நெருக்கடி நிலையை சந்தித்திருந்தது. அதன் விளைவாக, அரிசி இறக்குமதி குறைந்ததில் நாட்டில் அரசிக்கான பற்றாக்குறை நிலவியது. கொரியப் போர் முடிவுக்கு வந்ததன் விளைவாகவும், செயற்கை இறப்பரின் அறிமுகத்தாலும் உலக சந்தையில் இறப்பருக்கான தேவை கணிசமாகக் குறைந்தது. உலகளாவிய நெருக்கடிகள் காரணமாக, தேயிலை மற்றும் தேங்காய் எண்ணெய் போன்ற இலங்கை ஏற்றுமதி செய்த பொருட்களுக்கான தேவையும் குறைந்தது. ஆகவே, எமது அந்நியச் செலாவணி வரவு குறைந்தது. ஆனால், அரிசிக்கு இறக்குமதியில்தான் நாம் தங்கியிருந்தோம். ஆகவே, நமது அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து கொண்டே வந்தது. எனவே, 1952 ஒரு மிகச் சவாலான காலமாக இருந்தது. இந்த நிலையில்தான், சீனாவுக்கு இறப்பரின் தேவை அதிகமாக இருந்தது. தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக, சீனாவால் இலகுவாக இறப்பரை பெற்றுக்கொள்ள முடியாத சூழல் இருந்தது. இலங்கைக்கு அரிசி தேவையானதாக இருந்தது. இந்த நிலையில்தான், அன்றைய வர்த்த அமைச்சர் றிச்சட் கோட்டாபய சேனநாயக்கவின் முயற்சியால், 1952இல், ‘சீனா-சிலோன் அரிசி - இறப்பர் ஒப்பந்தம்’ கைச்சாத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, சீனாவுக்கு இறப்பரை ஏற்றுமதி செய்தோம்; அதற்குப் பதில், சீனா எங்களுக்கு அரிசியைக் கொடுத்தது. அதுவும் சும்மா அல்ல; சீனா மிகவும் தாராளமாக இலங்கை இறப்பருக்கான சந்தை விலையை விட 40% அதிகமாகவும், அரிசிக்கான சந்தை விலையில் 1/3 பங்கையும் இலங்கைக்கு வழங்கியது. இலங்கைக்கு மிகப்பெரிய அனுகூலமான ஒப்பந்தம் இது! இதனால் ஏனைய சில நாடுகள், இலங்கைக்கான உதவிகளை நிறுத்தியிருந்தாலும், இதனால் இலங்கைக்கு கிடைத்த அனுகூலம் பெரியதுதான். இந்த ஒப்பந்த, இலங்கையும் சீனாவும் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக்கொண்ட 1957இற்கு ஐந்து வருடங்களுக்கு முன்பதாகவே கைச்சாத்திடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 1976இல் சீனா, இலங்கைக்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தைப் பரிசளித்திருந்தது. அன்றைய காலத்தில், தென் மற்றும் தென் கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய மாநாட்டு மண்டபமாக இது இருந்தது. இந்த மண்டபத்தில்தான் 1976இல் இலங்கை அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டை நடத்தியிருந்தது! இதைவிட சிறுநீரக வைத்தியசாலை, தேசிய வைத்தியசாலை வௌிநோயாளர் பிரிவு என சீனா செய்யும் உதவிகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆகவே, இலங்கைக்கான எதிரி நாடல்ல சீனா என்பதைப் புரிந்துகொள்ளுதல்தான் அரசியல் பக்குவம். இலங்கையின் நெருங்கிய நண்பன் இந்தியா என்பதில், மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இலங்கை தனது வரலாற்றில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது, இலங்கைக்கு ஏறத்தாழ நான்கு பில்லியன் டொலர் வரை கடனுதவி செய்தது இந்தியா. இதற்காக சீனாவை மோசமான எதிரியாகச் சித்திரிக்கத் தேவையில்லை. இந்தியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் இலங்கைக்கு செய்த, செய்கின்ற உதவிகளுக்கு நிகராக, ஏனைய பல செல்வந்த நாடுகள் உதவவில்லை. அதற்காக, அவர்களை வைது கொண்டிருக்க முடியுமா என்ன? மறுபுறத்தில், இந்தக் கருத்தைச் சொன்னவர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என்பதால், இலங்கை அரசியல் என்பதற்கப்பால், தமிழ்த் தேசிய அரசியலுக்கு, சீன எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய தேவை என்ன என்ற கேள்வியும் இங்கு முக்கியமானது. சீனா, வௌிநாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்பதை, தனது வௌிநாட்டுக் கொள்கையாகக் கொண்டிருக்கிறது. அதன்படி, இலங்கையின் இனப்பிரச்சினை பற்றி அது பேசுவதில்லை. ஆனால், யுத்தகாலத்தில் இலங்கைக்கு அது நிறைய ஆயுத, மற்றும் பாதுகாப்பு உதவிகளை வழங்கியிருக்கிறது. ஆனால், சீனா மட்டும்தான் ஆயுத, மற்றும் இராணுவ உதவிகளை வழங்கியதா என்பதையும் நாம் கருத்திற்கொள்ள வேண்டும். இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, இஸ்‌ரேல், ரஷ்யா என 30 வருடகால உள்நாட்டு யுத்தத்தில், இலங்கைக்கு பல நாடுகளும் இராணுவ உதவிகளைச் செய்துள்ளன. சீன எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய எந்தத் தேவையும், தமிழ்த் தேசிய அரசியலுக்குக் கிடையாது. இவ்வளவும் ஏன், இலங்கை அரசியலுக்கே, சீன எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய தேவை கிடையாது. சமகாலப் பேச்சு வழக்கில் சொல்வதானால், இது ‘தேவையே இல்லாத ஆணி’. குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் சீனா பற்றிய கருத்து, அறவே தேவையற்றதொரு கருத்து! சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்பதுபோலத்தான், தமிழ்த் தேசிய அரசியலின் நிலை இன்று மாறிக்கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது. ‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்’ என்றார் வள்ளுவர். ஆனால், தமிழ்த் தேசியமானது, பார்வையாளர்களைக் கண்டதும் கிளர்ச்சியுறும் குரங்கின் கையில் பூமாலையாக, சிக்கிச் சீரழிந்து வருகிறது என்றால் அது மிகையல்ல. தமிழ் மக்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்! ஒருவன் எந்த மொழியில் பேசுகிறான் என்பதைவிட, என்னத்தைப் பேசுகிறான் என்பதில்தான் விடயம் இருக்கிறது. அடிமுட்டாள்தனமான கருத்தை ஆங்கிலத்திலோ, ஃபிரஞ்சிலோ, லத்தீனிலோ, ஹிந்தியிலோ, சிங்களத்திலோ பேசினாலும், அது அடிமுட்டாள்தனமான கருத்துதான்! இந்தத் தேவையில்லாத ஆணிகளைப் பிடுங்குவதை, தமிழ்த் தேசிய அரசியல் நிறுத்திக்கொள்வது அதன் ஆரோக்கியத்துக்குச் சாலச்சிறந்தது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்த்-தேசிய-அரசியல்-தேவையில்லாத-ஆணிகள்/91-309439
  6. அடுத்த வருடம் பெப்ரவரிக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வு? என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan நவம்பர் மாதம் 10ஆம் திகதி, பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, “இலங்கையின் உள்விவகாரங்களில், வெளியார் தலையீடு தேவையில்லை. நாட்டின் தமிழ் சிறுபான்மையினர் எதிர்நோக்கும் நிலுவையில் உள்ள சில பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில், அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த, சிறுபான்மையின கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். “அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தி, 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் நிலுவையில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதற்கு, நான் உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்” என்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறினார். பிரித்தானியாவிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற 75ஆவது ஆண்டு நிறைவை 2023 பெப்ரவரி நான்காம் திகதி கொண்டாடவுள்ள நிலையில்தான், ரணில் விக்கிரமசிங்க இந்த அழைப்பை விடுத்திருந்தார். அத்தோடு, “எங்கள் நாட்டின் விவகாரங்களில் மற்றவர்கள் தலையிடத் தேவையில்லை. எங்கள் பிரச்சினைகளை நாங்கள் தீர்க்க முடியும்; அதைத்தான் நாங்கள் நிறைவேற்ற முயலுகின்றோம்” என்று, எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிடாமல், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தமையும் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்திருந்தது. “இனப்பிரச்சினையா... அப்படியென்றால் என்ன? அப்படியொன்று இருக்கிறதா? நாம் அனைவரும் ஒரு தேசம்; நாம் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகள். இங்கு சிறுபான்மையினர் என்று யாரும் கிடையாது. அகராதியில் சிறுபான்மையினர் என்ற சொல்லே கிடையாது” என்று பொய்க் கற்பிதங்களை பகட்டாரவாரமாகச் சொல்லும் இலங்கை அரசியல்வாதிகளிடையே, “இங்கு சிறுபான்மையினருக்கு பிரச்சினைகள் இருக்கின்றன. அவை தீர்க்கப்பட வேண்டும். அது, 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் அடையப்பட வேண்டும்” என்று இந்நாட்டின் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் பேசியதும், தமிழர் தரப்புக் கட்சிகளை இதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு அழைத்திருப்பதும் நல்ல மாற்றம்தான். இந்தப் பேச்சினூடாக, இலங்கையில் இனப்பிரச்சினை இருப்பதை நேரடியாகவோ, மறைமுகமாகவோ இலங்கையின் ஜனாதிபதி அங்கிகரித்துள்ளதுடன், அது விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்பதையும் பதிவு செய்திருக்கிறார். இது மஹிந்த, கோட்டா, சஜித் ஏன் அநுர ஜனாதிபதியாகி இருந்தால் கூட இடம்பெற்றிருக்காது. மஹிந்தவும், கோட்டாவும் “இனப்பிரச்சினையா, அப்படியென்றால் என்ன? நாம் அனைவரும் இலங்கையர்கள்” என்பார்கள். சஜித், “என் அகராதியில் சிறுபான்மை என்ற சொல்லே இல்லை” என்பார். ஜே.வி.பி எனும் பெரும்பான்மையின இனவாதத்தை அடிநாதமாகக் கொண்ட இடதுசாரிக் கட்சியின் தலைவர் அநுர, “இங்கு இனவாதம் என்பது, முதலாளித்துவத்தின் வேலை; இங்கு இனங்கள் கிடையாது; வர்க்கங்கள்தான் இருக்கின்றன” என்பார். ஆகவே, இவர்கள் எவரும் இத்தனை காலத்தில் தாமாக முன்வந்து அங்கிகரிக்காத ஒரு பிரச்சினையின் இருப்பை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கிகரித்திருக்கிறார். நன்று! இந்தப் பேச்சுவார்த்தைகள், தமிழர் தரப்புக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. இதனை தமிழர் தரப்பு மிகக்காத்திரமான வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு முதற்படியாக, தமிழர் தரப்பு, தமது கட்சி அடிபாடுகளைக் கடந்து, குறைந்தபட்ச கொள்கை அடிப்படைகளிலேனும் ஒன்றுபட்டு, ஒரு குரலாகப் பேச வேண்டியது காலத்தின் தேவையாகிறது. இந்த இடத்தில், தமிழர் தரப்பும் ஒன்றை நினைவில் வைத்திருத்தல் அவசியமாகிறது. எப்படி மேற்சொன்னதைப்போல, மஹிந்த, சஜித், அநுர ஆகியோரது கருத்துகள் பகட்டாரவார அபத்தமான கருத்தாக தமிழர்களால் பார்க்கப்படுகிறதோ, அதைப்போல, தமிழர் தலைமைகளுக்கு பகட்டாரவார அபத்தங்களைத் தவிர்த்துவிட்டு, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சுமூகமாகதொரு தீர்வை எட்ட முயல வேண்டும். பேச்சுவார்த்தை மேசையென்பது, தேர்தல் மேடையல்ல. அது மக்களிடம் கைதட்டு வாங்குவதற்கான இடம் அல்ல. அது, தான் என்ற ஆணவமும் ‘ஈகோ’வும் ஆட்டம் போடும் இடமல்ல. அது வழக்காடும் இடமும் அல்ல. பேச்சுவார்த்தை மேசையென்பது காரியத்தை சாதிக்கும் இடம்; சமரசத்துக்கான இடம். இந்த இடத்தில் சௌமியமூர்த்தி தொண்டமான், வடக்கு-கிழக்கு தமிழர் தலைமைகளைப் பற்றி முன்னர் சொன்ன ஒரு விடயம் கவனத்தில் கொள்ளத்தக்கது. “பேச்சுவார்த்தைக் கலையானது, ஐந்து கோரிக்கைகளை முன்வைத்தல்; அதில் ஒன்றை முழுமையாக வெற்றி கொள்ளுதல். இரண்டைப் பகுதியளவில் வெற்றி கொள்ளுதல். இரண்டைத் தற்காலிகமாக வேறொரு நாளுக்குக் கிடப்பில் வைத்தல்” என்று சொன்னார். “நாங்கள் தொழிற்சங்கவாதிகள்; ஆதலால் எமக்கு இந்தப் பேச்சுவார்த்தைக் கலை தெரியும். தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களில் பெரும்பாலானோர் சட்டத்தரணிகள். அவர்களுக்கு வழக்கை மிகச் சிறப்பாக வாதாடத் தெரியுமே அன்றி, சலுகைகளைப் பெற்றுக்கொள்ளத் தெரியாது” என்று சொன்னார். “பயத்தின் காரணமாக ஒருபோதும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம். ஆனால், பேச்சுவார்த்தைக்கு ஒருபோதும் பயப்பட வேண்டாம்” என்றார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜே.எப் கென்னடி. தமிழர் தரப்பு இன்று எதற்கும் அஞ்சாமல், தமிழ் மக்களின் ஏகோபித்த நலனை மட்டும் முன்னிறுத்தி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட ஒரு சந்தர்ப்பம் உருவாகியிருக்கிறது. அதைத் தமிழர் தரப்பு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளுதல் வேண்டும். தனிநபர் ஈகோக்களால், இந்நாட்டின் மக்கள் அனைவருக்கும் கிடைக்கக்கூடியதொரு நன்மை கிடைக்காது போய்விடக்கூடாது. அதேவேளை இது, வரலாற்றில் இன்னோர் ஏமாற்றமாகவும் அமைந்துவிடக்கூடாது. ஆகவே, தமிழர் தரப்பு இதனை மிகச்சரியாகவும், மிக இலாவகமாகவும் கையாளுதல் அத்தியாவசியமாகிறது. கட்சி நலன், தனிநபர் நலன்கள் என்பவற்றைத்தாண்டி தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சிந்திக்கவும், செயற்படவும் வேண்டிய தருணம் இது. மேலும், இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் அந்நியத் தலையீடு தேவையில்லை என்பதை ஜனாதிபதி தௌிவாக அழுத்திச் சொல்லவும் காரணம் இருக்கிறது. இலங்கையின் இனப்பிரச்சினை இலங்கையில் அந்நியர்கள் தலையீடு செய்வதற்கான துருப்புச் சீட்டாக மாறியிருக்கிறது. குறிப்பாக, இந்தியாவானது, இலங்கையில் தலையீடு செய்வதற்கான துருப்புச் சீட்டாக இனப்பிரச்சினையைப் பயன்படுத்திய வரலாறு இன்னும் இந்நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பினராலும் மறக்கப்படவில்லை. இந்திய சமாதானப் படை, இந்த மண்ணில் கட்டவிழ்த்து விட்ட அட்டூழியங்களை மக்கள் மறக்கமாட்டார்கள். இன்றும் பிரதான தமிழ் அரசியல் கட்சிகளை இந்தியா ஆட்டுவித்து வருகிறது என்ற குற்றச்சாட்டு, பரகசியமான இரகசியமாக பேசப்படுகிற விடயம். பிரதான தமிழ்க் கட்சிகள் எந்தவொரு முக்கிய முடிவையும் இந்தியாவுடன் கலந்தாலோசிக்காது எடுப்பதில்லை என்பதும் பரகசியமான இரகசியமாகும். ஆகவேதான், ஜனாதிபதி தமிழ்த் தரப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோது, அந்நியத் தலையீடு தேவையில்லை என்பதையும் அழுத்திச் சொல்லியிருக்கிறார். இலங்கைக்கு இந்தியா உதவி செய்திருக்கிறது. இந்தியா, தமிழ் மக்களுக்கு உதவி செய்திருக்கிறது. அது உண்மை. ஆனால், அந்த உதவிகளுக்குப் பின்னால் மனித நேயமும் தமிழ் மக்கள் மீதான பாசமும் அக்கறையும் மட்டும்தான் இருக்கிறது என்று எண்ணினால் அது தவறு. ‘இந்திய நலன்’ என்பதுதான் இந்திய வெளியுறவுக் கொள்கையின் முக்கியமான அடிப்படை. அந்த அடிப்படையை மறைமுகமாகப் பாதிக்கிற எந்த காரியத்தையும் இந்தியா செய்யாது. இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வு, அதன் வழிமுறைகள் பற்றியெல்லாம் இந்தியாவுக்கு மிகுந்த அக்கறை இருப்பதற்கான முக்கிய காரணம், இலங்கையின் அமைவிடம். அதிலும், இலங்கையின் வடக்கு, இந்தியாவுக்கு அமைவிட ரீதியில் மிக நெருக்கமாக அமைந்துள்ளதோர் இடம். வடக்கின் மீது தன்னுடைய ஆதிக்கத்தை இந்தியா எப்போதும் வைத்திருக்கவே முனையும். அதேவேளை, தமிழ்த் தலைமைகள் இந்தியாவுடன் நல்லுறவைப் பேணலாம்; (பேண வேண்டும்!). ஆனால், சரணாகதி நிலையில் இருந்து இயங்கும் மனநிலையை மாற்ற வேண்டும். இந்திய நலனைத்தாண்டி, தாம் பிரதிநிதித்துவம் செய்கிற மக்களின் நலனை முன்னிறுத்தி, தமிழ்த் தலைமைகள் இயங்க வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக விடுத்திருக்கிற இந்த அழைப்பு, வரலாற்று முக்கியத்துவம் மிக்கது. இதனை வெற்று நடவடிக்கையாக அன்றி, சாதகமானதொரு முன்னெடுப்பாக மாற்ற வேண்டிய கடப்பாடு, தமிழ்த் தலைமைகளுக்கும் ஜனாதிபதிக்கும் உரியது. மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது இன்னோர் ஏமாற்றமாக அமைந்துவிடக்கூடாது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அடுத்த-வருடம்-பெப்ரவரிக்குள்-இனப்பிரச்சினைக்கான-தீர்வு/91-307475
  7. நவம்பர் -02 உள்ளிட்ட போராட்டங்கள் எதற்காக? என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan வரலாறு காணாத மக்கள் எழுச்சியை இலங்கை சந்தித்து, அதன் வாயிலாக, 2019 நவம்பரில் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்‌ஷ, வெறும் இரண்டரை ஆண்டு பதவிக்காலத்துக்குள் பதவி விலகியமை, பெரும் வரலாற்று நிகழ்வு. இதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. இந்த மக்கள் எழுச்சிக்கான காரணம், இலங்கை சந்தித்து நின்ற வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சியும் அதன் விளைவாக மக்களால் தம் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத நிலை உருவானதுமாகும். எரிபொருள் பற்றாக்குறை; அதன் விளைவாக மின்சாரத் தடைகள் எனபன, இலங்கையை ஸ்தம்பிக்கச் செய்திருந்தன. எதிர்காலம் பற்றிய அச்சம் ஒருபுறமும் நிகழ்கால வாழ்வைக் கொண்டு நடத்துவதற்கான சவால்கள் இன்னொருபுறமுமாக மக்கள் கலங்கிப்போயிருந்த நிலையில், பல மாதங்களாக எதுவித முன்னேற்றமும் இல்லாமையால், ‘இது போதும்’ என மக்கள் தொடர் போராட்டங்களில், தாமாக முன்வந்து, அதாவது அரசியல் கட்சிகள், அமைப்புகளின் அழைப்புகள் இல்லாமல், வீதிக்கு இறங்கி, மிக அமைதியான முறையில் கோட்டாபய ராஜபக்‌ஷ அரசாங்கத்துக்கு எதிரான தமது எதிர்ப்பை, தொடர்ந்து பதிவு செய்தனர். இந்த மக்கள் எழுச்சியை, தமக்கு சாதகமாக்கிக்கொள்ள முனைந்த, அதுவரை காலமும் வங்குரோத்து அரசியலை முன்னெடுத்து வந்த இடதுசாரி அரசியல் கட்சிகள், மக்கள் போராட்டத்துக்கு உரிமை கோரத்தொடங்கினார்கள். அதுவரை காலமும் மிக அமைதியான முறையில் இடம்பெற்று வந்த மக்கள் பேராட்டங்களுக்குள் வன்முறையைக் கொண்டு வந்தவர்கள், இந்த இடதுசாரி மாக்ஸிஸவாத சக்திகள்தான். எது எவ்வாறாயினும், மக்கள் எழுச்சி என்பது கோட்டாவின் பதவி விலகலை வேண்டியே இடம்பெற்றது. அதற்குள் ‘சிஸ்டம் சேன்ஞ்’ என்று, தமது நிகழ்ச்சி நிரலை நுழைக்க, இடதுசாரிகள் பகீரதப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் கோட்டா பதவி விலகியபின், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகியவுடன், அவருக்கு கால அவகாசம் தந்து, அவராவது இந்த நிலையிலிருந்து இலங்கையை மீட்பாரா என்று மக்கள் காத்திருக்க விரும்பினாலும், இந்த இடதுசாரிகளுக்கு எண்ணம் அதில் இல்லை. அவர்களைப் பொறுத்தவரையில், அவர்களது சுயநல அரசியலுக்கு நாடு இதைவிட மோசமான நிலையை அடையவேண்டும். நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் விழுந்தே கிடக்க வேண்டும்; அதனை எவரும் மீட்டுவிடக் கூடாது. அப்படியானால்தான் அடுத்த தேர்தலில் தாம் இன்னும் கொஞ்ச ஆசனங்களையேனும் வெல்ல முடியும். இதுதான் இந்த இடதுசாரி சக்திகளின் கணக்கு! இதற்கு அழகான வார்த்தைகளில், நிறைய வியாக்கியானங்களை அவர்கள் முன்வைப்பார்கள். இடதுசாரிகளின் இந்தப் போலி முகத்துக்கு மிகப் பெரிய உதாரணம், வருமான வரி அதிகரிப்புக்கு இன்று அவர்கள் காட்டும் எதிர்ப்பு. இவ்வளவு காலமும், வருமான வரி அதிகரிக்கப்பட வேண்டும்; இலங்கையில் வருமான வரி அறவீடு குறைவாக இருக்கிறது என்று குரல் கொடுத்து வந்தவர்கள், இன்று ரணில் விக்கிரமசிங்க வருமான வரிகளை அதிகரித்த பின்னர், அதற்கு எதிராகக் குரல் கொடுக்கிறார்கள். மறுபுறத்தில், இலங்கையை இந்தப் பொருளாதார சரிவிலிருந்து மீட்டெடுக்க சர்வதேச நாணய நிதியத்தின் பொறிமுறையை நாடுவதையும் இடதுசாரிகள் கடுமையாக எதிர்க்கிறார்கள். சர்வதேச நாணய நிதியத்தின் பொறிமுறையை நாடக்கூடாது என்ற கொள்கையைக் கொண்டிருந்து, அதனால் நாட்டை மிக மோசமான பொருளாதார நிலைக்குத் தள்ளிய கோட்டாவையும் அவரது அரசாங்கத்தையும் இதே இடதுசாரிகள் எதிர்க்கிறார்கள். யோசித்துப் பார்த்தால் எதிர்ப்பது மட்டும்தான் ஜே.வி.பி உள்ளிட்ட இந்த இடதுசாரிகள் வேலையாக இருந்திருக்கிறது. ஜே.வி.பி என்பது 2001-2003 காலப்பகுதியில் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு எதிராக, மிகப்பெரும் இனவாதப் பிரசாரத்தை முன்னெடுத்து, சமாதான முயற்சிகளைச் சீரழித்தது. வடக்கு-கிழக்கு இணைப்புக்கு எதிராக உயர்நீதிமன்றம் சென்று, வடக்கு-கிழக்கை பிரித்ததும் இதே ஜே.வி.பிதான். தமது இனவெறிப் பிரசாரத்தால், மஹிந்த ராஜபக்‌ஷவைப் பதவிக்கு கொண்டு வந்துவிட்டு, பிறகு மஹிந்த ராஜபக்‌ஷவோடு முரண்பட்டு, பிரிந்து வந்தார்கள். இவர்ளைப் பொறுத்தவரையில், கொள்கை என்று பேசுவதில், ‘வாய்ச்சொல் வீரர்’களேயன்றி, இவர்கள் மிகப்பெரும் சந்தர்ப்பவாதிகள். மனித உரிமை என்று பேசுவார்கள்; பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் உயிர்களைப் பறிக்கும் காட்டுமிராண்டி நடவடிக்கையான பகிடிவதைக்கு எதிராக ஒருவார்த்தை கூடப் பேச மாட்டார்கள். ஏனென்றால், பகிடிவதைதான் இடதுசாரிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான வழிகளில் முக்கியமானது. இலங்கையின் பல்கலைக்கழகங்களைச் சீரழித்தவர்கள் இந்த இடதுசாரிகள்தான். இலங்கையின் ஆடைத் தொழிற்றுறையையும் அழித்தவர்கள் இவர்கள்தான். இலங்கையின் முன்னணி ஆடை நிறுவனங்கள், தமது தொழிற்சாலைகளை இலங்கையிலிருந்து பங்களாதேஷ், வியட்நாம் என்று இடம்மாற்ற பிரதான காரணம் இந்த இடதுசாரி அரசியல்தான். கடைசியில் இழப்பு நாட்டுக்கானது. தொழிலாளர், தொழிற்றுறை பற்றி ஜே.வி.பி நிறையப் பேசினாலும், அது மலையக தோட்டத் தொழிலாளர் பற்றி எல்லாம் அதிகமாகப் பேசுவதில்லை. வடக்கு-கிழக்கு மக்கள், அவர்களின் நிலை பற்றிப் பேசுவதில்லை. ஏனென்றால் அடிப்படையில் ஜே.வி.பியின் அரசியல் என்பது பெருந்தேசியவாத, இனவாத அரசியல்; இதற்கு வரலாறு சாட்சி. மஹிந்த ராஜபக்‌ஷர்களைவிட மிகப்பெரிய இனவாதிகள் ஜே.வி.பியினர்தான் என்பதை 1990களின் பிற்பகுதியிலிருந்து தெற்கில் வசித்த தமிழர்கள் நன்கறிவர். இன்று இலங்கையில் இடம்பெற்ற பெரும் மக்கள் எழுச்சியை, தமக்கான அரசியலாக மாற்றிக்கொள்ளத்தான் இந்த இடதுசாரிக் கூட்டம் இன்றுவரை தொடர் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கு தலைகால் புரியாத, தாம் எப்படியும் அடுத்த முறை ஆட்சியைப் பிடித்துவிட வேண்டுமென அங்கலாய்ப்பில் காத்திருக்கும் ‘பிரதான’ எதிர்க்கட்சிகள் ஆதரவு வேறு வழங்குகிறார்கள். ஆனால், தமது போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் ‘பிரதான’ எதிர்க்கட்சிகளுக்கு தாம் வழங்கும் மரியாதை என்ன என்பதை, ஜூலையில் சஜித் பிரேமதாஸ தாக்கப்பட்டதன் மூலமும், நவம்பர் இரண்டாம் திகதி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த சஜித் பிரேமதாஸ ‘ஹூ’ அடித்து விரட்டப்பட்டதன் மூலமும், இடதுசாரிகள் தெளிவாக உணர்த்தியிருக்கிறார்கள். ஆனால், சின்னப்பிள்ளைத்தனமான இந்தப் ‘பிரதான’ எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு, இது இன்னமும் விளங்கவில்லை. இதற்கு நடுவில், இந்தக் கட்சிகளின் சில கோமாளி அரசியல்வாதிகள், தம்மைப் பெரும் போராட்டக்காரர்களாகக் காட்ட முன்னரங்கில் இறங்கி, பொலிஸாருடன் சண்டையிட்டு, அதன்மூலம் அரசியல் இலாபம் காண விளைகிறார்கள். நவம்பர் - 02 போராட்டம் கூட, பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு எதிரான போராட்டமாம். நல்லது! ஆனால், அவர்களது பிரதான கோரிக்கை, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சில மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஒன்பது வருடமாக பல்கலைக்கழகத்தில் மாணவனாக இருந்து கொண்டு, மக்கள் வரிப்பணத்தை வீணடித்துக்கொண்டிருக்கும் வசந்த முதலிகேயும், இடதுசாரிகளின் பிக்கு மாணவர் அமைப்பைச் சார்ந்த ஸ்ரீதம்ம தேரரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுதான். பல்லாண்டுகளாக இதே பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் பற்றி முன்னரங்கில் பேசமாட்டார்கள். இதுதான் இந்த இனவாத ஜே.வி.பி மற்றும் பெரடுகாமியின் உண்மை முகம். இதற்குத்தான் சில தமிழர்களும் பெரும் ஆதரவளித்து வருகிறார்கள். இதில் சிலர், தம்முடைய அரசியல் வாழ்வுக்கான ஓர் உந்து சக்தியாக, இந்தப் போராட்டங்களைப் பயன்படுத்த விரும்புகிறார்கள் என்பது அவர்களது நடவடிக்கைகளில் இருந்தே தெரிகிறது. இந்தப் போராட்டம் மூலம் கிடைக்கும் பிரபல்யத்தை, அரசியல் மூலம் அறுவடை செய்யலாம் என்பது அவர்கள் கணக்கு! இப்படியாக எல்லாச் சுயநல கோஷ்டியும் ஒன்று சேர்ந்து, இலங்கையின் பொருளாதார மீட்சியை தடுப்பதற்காக பகீரதப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு, தாம் மக்கள் நலனில் பெரும் அக்கறையுள்ளவர்களாகக் காட்டிக்கொள்ளும் பேச்சுகள் வேறு! நாட்டின் பொருளாதார மீட்சிதான், அனைவரையும் வாழவைக்கும். மீட்சிக்கான பயணம் கடினமானது. அதை இலங்கை சந்தித்தே ஆக வேண்டும். மந்திரத்தால் மாங்கனிகள் வீழ்வதில்லை. போராட்டங்களால் பொருளாதாரம் வளர்வதில்லை. இதனை இலங்கை மக்கள் புரிந்துகொண்டதால்தான், கோட்டாவை விரட்ட மக்கள் தாமாகவே திரண்டு வந்ததைப்போல, இந்த இடதுசாரிகளின் சுயநல போராட்டங்களுக்கும் மக்கள் வருவதில்லை. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நவம்பர்-02-உள்ளிட்ட-போராட்டங்கள்-எதற்காக/91-307012
  8. ராஜபக்‌ஷர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan ராஜபக்‌ஷர்களின் பலமும் அவர்களின் குடும்பம்தான்; பலவீனமும் அவர்களின் குடும்பம்தான். ஒரு காலத்தில் அவர்களைப் பொறுத்தமட்டில் அதன் பலம், பலவீனத்தை விஞ்சி நின்றது. ஆனால், காலம் செல்லச் செல்ல, குறிப்பாக 2012இன் பின்னர் பலவீனம், பலத்தை விஞ்சி நிற்கிறது என்று சொன்னால் அது பொய்யல்ல. ஆனால் ‘ராஜபக்‌ஷ’ என்ற பெயருக்கு, குறிப்பாக மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு, ‘சிங்கள-பௌத்த’ வாக்கு வங்கியிடம் இன்னும் செல்வாக்கு இருக்கிறது. 2018இல், 52-நாள் அரசியலமைப்பு விரோத சதி, ராஜபக்‌ஷர்களின், குறிப்பாக மஹிந்த ராஜபக்‌ஷவின் பெயர் சிதைந்து போனாலும், அது ராஜபக்‌ஷ ஆதரவுத்தளத்தை முற்றாக தகர்த்துவிடவில்லை. வெறித்தனமான ராஜபக்‌ஷ ஆதரவாளர்கள், 52-நாள் சதியிலிருந்து நாடு காப்பாற்றப்பட்டதைத்தான் ராஜபக்‌ஷர்களுக்கு எதிரானதும், தமக்கு எதிரானதுமான சதியாகப் பார்த்தார்கள். ஆனால், இந்த வெறித்தனமான ராஜபக்‌ஷ ஆதரவு வாக்கு வங்கி, ஜனாதிபதித் தேர்தலுக்கு உதவாது. 2009 யுத்த நிறைவுடன், ‘சிங்கள-பௌத்த’ பேரினவாதத்தின் ஒப்புயர்விலாத் தலைவனாக இருந்த மஹிந்த ராஜபக்‌ஷவின் நிலை, 2015இன் பின்னர் கூட தகரவில்லை. ஆனால், 2018இல் 52-நாள் அரசியலமைப்பு விரோத சதி, மஹிந்தவின் ஆதரவாளர் அல்லாத, ‘சிங்கள-பௌத்த’ பேரினவாதிகளுக்கு இன்னொரு தலைமைக்கான அவசியத்தையும் வெற்றிடத்தையும் உணர்த்தியது. ஆனால், அது ராஜபக்‌ஷ அல்லாத ஒருவராக இருந்தால், வெறித்தனமான ராஜபக்‌ஷ ஆதரவாளர்கள் எனும் வாக்கு வங்கியின் ஆதரவு கிடைக்காது. அது ‘சிங்கள-பௌத்த’ பேரினவாத வாக்கு வங்கியை உடைப்பதாக அமையும். மேலும், ‘சிங்கள-பௌத்த’ வாக்கு வங்கியிலும், ஊசலாடும் வாக்குகள் நிறையவே உண்டு, அவற்றையும் கையப்படுத்தினால்தான் பெரியதொரு வெற்றியை அடையலாம் என்பது அவர்களின் சிந்தனையாக இருந்திருக்க வேண்டும். இந்த இடத்தில்தான், அந்த வெற்றிடத்தை நிரப்ப கோட்டாபய ராஜபக்‌ஷ என்ற அரசியல் முன்னனுபவம் அற்ற, ஹிட்லரைப் போன்ற பெரும் சர்வாதிகாரியென்ற பிம்பம் கட்டியெழுப்பப்பட்ட நபரை, இந்த மஹிந்த ராஜபக்‌ஷ அல்லாத குழுவும், ஊடக வணிக வியாபாரிகளும் ஆயுத வணிகர்களும், அவர்களின் ஆதரவில் இயங்கிய படித்துப்பட்டம் பெற்ற தொழில் நிபுணர்களான ‘சிங்கள-பௌத்த’ பேரினவாதிகளைக் கொண்ட ‘வியத்மக’ என்ற அமைப்பும் சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் அடுத்த தலைமைப் பதவிக்கு முன்னிறுத்தத் தொடங்கின. 52-நாள் அரசியலமைப்பு விரோத சதி தோற்கடிக்கப்பட்ட பின்னர், மஹிந்த மீண்டும் பழையபடி அமைதியாகினார். மஹிந்தவின் அமைதியை மேற்சொன்ன குழு, தமது நிகழ்ச்சிநிரலை முற்கொண்டு செல்லப் பயன்படுத்தியது. கோட்டாபயவை ஜனாதிபதியாக்க மஹிந்தமுனைந்தார் என்று சொல்வதற்கில்லை. ஏனென்றால், கோட்டாவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு, பெரும் களிப்பேதுமில்லாத முகத்துடன், கோட்டாவை ஜனாதிபதி வேட்பாளராக்கும் வரை, கோட்டா பற்றியோ, கோட்டாவை ஜனாதிபதி வேட்பாளராக்குவது பற்றியோ மஹிந்த எதுவித முன்னெடுப்புகளையும் செய்யவில்லை. மஹிந்தவிடம் வேறு திட்டங்கள் இருந்திருக்கலாம். மேற்சொன்ன குழுவின் அழுத்தத்தின்பேரில் கோட்டாவை ஜனாதிபதியாக்குவது என்பது, மஹிந்தவைப் பொறுத்தவரையில் குடும்பம், மற்றும் கட்சிக்குள் தனக்கிருந்த செல்வாக்கை தானே குழிதோண்டிப் புதைப்பதற்குச் சமன். மேலும் கோட்டாவுக்கு அரசியல் அனுபவம் கிடையாது. தலைமைத்துவப் பண்பு சுத்தமாகக் கிடையாது. ஆனால், ‘நான்’ என்ற அகம்பாவமும் முட்டாள்தனமான முடிவை எடுத்தபின், அதன் பாதிப்புகளைப் பார்த்தபின் கூட, ‘நான்’ என்ற மமதையின் விளைவால் அதனை மாற்றிக்கொள்ளாத ஆபத்தான் குணமெல்லாம் கோட்டாவுக்கு இருக்கிறது என்பதை கோட்டா ஜனாதிபதியாகிய பின்னர்தான் மக்கள் தெரிந்துகொண்டார்கள். அது கோட்டாவின் அண்ணாவான மஹிந்தவிற்கு முதலே தெரிந்திருக்கலாம். அதனால் ஜனவரி முதல் ஏப்ரல் 2019 வரை மஹிந்த அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் கழுவும் நீரில் நழுவும் மீனாகத்தான் இருந்தார். ஆனால்,‘வியத்கம’ குழுவினர், கோட்டாவை நேரடியாகவும் மறைமுகமாகவும் முன்னிறுத்தும் கைங்கரியத்தை ஊடகங்கள் வாயிலாகவும், கூட்டங்கள் மூலமும் நடத்திக்கொண்டுதான் இருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில்தான், இலங்கையர்கள் மட்டுமல்லாது முழு உலகமுமே அதிர்ந்துபோன உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் இலங்கையை ஆட்டிப்போட்டன. தென்இலங்கையர்களுக்கு இது யுத்த கால ஞாபங்களை ஏறத்தாழ 10 வருடங்களின் பின்னர் மீட்டுக்காட்டியது. இதனால் கதிகலங்கிப்போன சிங்கள-பௌத்த வாக்கு வங்கி, ‘ஹிட்லரை’ப் போன்ற ராஜபக்‌ஷதான் தமக்குச் சரியான தலைமையென்று எண்ணத் தொடங்கியது. அந்த எண்ணத்தை உடனடியாக அறுவடை செய்யும் வகையில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்‌ஷ அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பு சந்தர்ப்பம் சார்ந்தது. மஹிந்தவுக்கு கோட்டா ஜனாதிபதியாவதில் முழு மகிழ்ச்சி இல்லாமல் இருக்கலாம். ஆனால், ராஜபக்‌ஷர்கள் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கு அன்று இருந்த ஒரே பலமான வழி அதுதான். ஆகவே அந்த சமரசத்தை மஹிந்த, பசில், நாமல் என அனைத்து ராஜபக்‌ஷர்களும் ஏற்றிருக்கலாம். அந்த முடிவின் பிரதிபலன் இரண்டு வருடங்களில் கிடைத்தபோது, முதல் அடிகளை வாங்கியவர்களும் பசிலும் நாமலும் மஹிந்தவும்தான். ராஜபக்‌ஷர்கள் மீது கொலைகாரர்கள்; மக்கள் பணத்தை சுரண்டியவர்கள்; இன அழிப்பாளர்கள் என்று ஆயிரம் குற்றச்சாட்டுகள் இருக்கிறது. ஆனால் ராஜபக்‌ஷர“கள் செயல் வீரர்கள்; எதற்கும் அஞ்சாதவர்கள் என்பதுதான் அவர்களது ஆதரவாளர்களுக்கு இருந்த ஒரே பலமான பதில் பேச்சு. அதுவும் பொய்! ராஜபக்‌ஷர்கள் மிகப் பெரிய ‘ஃபெய்லியர்’ என்பதை தனது அடி முட்டாள்தனமான முடிவுகளாலும், மக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு பயந்த நாடுவிட்டுத் தப்பித்து ஓடிய தனது நடவடிக்கையாலும் கோட்டாபய நிரூபித்துவிட்டார். இன்று ராஜபக்‌ஷர்கள் மீண்டும், கீழானதொரு நிலையில் நின்று கொண்டு அடுத்தது என்ன செய்வது என்று சதியாலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ராஜபக்‌ஷர்களின் பலம் ஒன்றுதான். அது இனவாதம். ‘சிங்கள-பௌத்த’ பேரினவாதம்தான் ராஜபக்‌ஷர்களின் அரசியல் மூலதனம். ஆனால், ராஜபக்‌ஷர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற இனவாதத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்ற தௌிவு சிங்கள-பௌத்த வாக்கு வங்கியின் ஒரு சிறிதளவினருக்கு இன்று ஏற்பட்டிருக்கிறது. மேலும், ராஜபக்‌ஷர்களால் வீழ்ந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பு முடியும் என்று பெரும்பான்மை வாக்கு வங்கி, இன்றைய பொழுதில் நம்பவில்லை. இதைவிடவும், ராஜபக்‌ஷர்களோடு கூட இருந்தவர்கள் பலரும், கவிழும் கப்பலாக ராஜபக்‌ஷர்களை கருதி, அதிலிருந்து பாய்ந்து, தனி வழிப் பயணத்தை தொடங்கிவிட்டார்கள்; இன்னும் பலரும் அந்த வழியில் தொடர்வார்கள் என்பது யதார்த்தம். ஆகவே, மீண்டும் தனித்த ராஜபக்‌ஷ ஆட்சியென்பது குறுங்காலத்தில் சாத்தியமில்லை என்பது ராஜபக்‌ஷர்ளுக்குத் தெரியும். ஆகவே ராஜபக்‌ஷர்கள் குறுங்காலத்தைவிட, நீண்டகாலத்தைப் பற்றி யோசிப்பதுதான் அவர்களுக்கு உசிதமானது. ஆனால், இயற்கை மஹிந்தவுக்கும் சமலுக்கும் அவ்வளவு காலத்தை வழங்குமா என்பது முதல் கேள்வி. மஹிந்த உள்ளவரைதான் நாமலுக்கான இன்றைய இடம்; மஹிந்தவுக்குப் பிறகு, ராஜபக்‌ஷர்களே நாமலுக்கு இன்று அவர்கள் வழங்கியுள்ள இடத்தை வழங்குவார்களா என்பது கேள்விக்குறி.இதே நிலைதான் மஹிந்தவின் மற்றைய இரண்டு புதல்வர்களுக்கும். சசீந்திர ராஜபக்‌ஷ இதுவரை காலமும் அமைதியாக தன்னுடைய அரசியலை தனிவழியில் நடத்திக்கொண்டிருக்கிறார். ஒருவேளை காலம் அரசியலின் முன்னணிக்கு அழைத்து வரக்கூடும். ஆனால், இவர்கள் எல்லாரையும் விட, அரசியல் ஆசையோடும், கனவோடும் இருப்பது பசில்தான். ஆனால், பசிலின் ஜனாதிபதி கனவு என்பது சாத்தியமற்றது என்பது பசிலுக்குப் புரியவில்லை. கோட்டாவைக் கொண்டு வந்தே சூடுகண்ட மக்கள், பசிலை நினைத்துக் கூடப்பார்க்க மாட்டார்கள் என்பது யூகிக்கக் கூடியதே! இந்த இடத்தில், கோட்டாவை மீண்டும் கொண்டு வர, அவரை முதலில் கொண்டு வந்த அதே கூட்டம் முயல்வதாகவும் செவிவழிச்செய்திகள் சொல்கின்றன. ஆனால் அதற்கான வாய்ப்புகளும் அரிதே. ராஜபக்‌ஷர்கள் இனி என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்விக்கு, ஒரு பதிலை உறுதியாகச் சொல்லலாம். அவர்கள், ‘மீண்டும் தாம் எப்படி அதிகாரத்துக்கு வருவது என்பதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்’. ஆனால், தற்போது ராஜபக்‌ஷர்கள் முன்னர் இருந்தளவுக்கு ஒற்றுமையாக இல்லை. அவர்களது பலம், அவர்களிடம் இல்லை. அதுவும் நல்லதுதான். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ராஜபக்-ஷர்கள்-என்ன-செய்யப்-போகிறார்கள்/91-306720
  9. ராஜபக்‌ஷர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, மக்கள் எழுச்சியைக் கண்டு பயந்து, நாட்டை விட்டு ஓடிப் போய், தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமாச் செய்து, மூன்றரை மாதங்களாகப் போகின்றது. கோட்டாவுக்கு முதலே மஹிந்த, பசில், சமல், நாமல், சசீந்திர என மற்றைய ராஜபக்‌ஷர்களும் தமது பதவிகளை இராஜினாமாச் செய்திருந்தனர். கோட்டா நாட்டை விட்டு ஓடியதிலிருந்தே, பொதுவௌியில் பெருமளவுக்கு அமைதிகாத்த ராஜபக்‌ஷர்கள் தற்போது, கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் கூட்டங்களை நடத்தி, தமது இருப்பைத் தக்க வைப்பதற்கான அடுத்தகட்ட காய்நகர்த்தலுக்காக களநிலைவரத்தை பரிசீலித்து வருகிறார்கள். இந்தக் கூட்டங்களுக்கு, அவர்கள் வைத்துள்ள பெயர் ‘எக்வ நகிட்டிமு’ (ஒன்றாக எழுவோம்) என்பதாகும். இந்தப் பெயர் எதைச் சொல்கிறதோ இல்லையோ, ஒன்றை மிகத்தௌிவாகவே சுட்டிக்காட்டுகிறது. தாம் வீழ்ந்ததை, ராஜபக்‌ஷர்கள் மறைமுகமாகவேனும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். விழுந்தவர்கள்தானே எழ வேண்டும். அதனால் தான் ‘ஒன்றாக எழுவோம்’ என்ற பெயரில் கூட்டம் நடத்துகிறார்கள். 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டபின்னர், தமக்கு இனி வீழ்ச்சியே இல்லை என்று நினைத்திருந்த ராஜபக்‌ஷர்களுக்கு, 2015 இல் இலங்கை மக்கள் கொடுத்தது முதல் அதிர்ச்சி. ஆனால் 2019இல் அதிலிருந்து ராஜபக்‌ஷர்கள் மீண்டு விட்டார்கள். அவர்கள் வளர்த்தெடுத்த பேரினவாதமும் 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களும், ராஜபக்‌ஷர்களின் மீட்சிக்கு வழிவகுத்தன. ஆனால், பெரும் பலத்தோடு பதவிக்கு வந்த ராஜபக்‌ஷர்களுக்கு, 2022இல் இலங்கை மக்கள் கொடுத்ததுதான் பேரதிர்ச்சி. மக்கள் எழுச்சிக்கு பயந்து ஓடி ஒளிய வேண்டிய நிர்ப்பந்தம், ராஜபக்‌ஷர்களுக்கு ஏற்பட்டமையானது, ராஜபக்‌ஷர்கள் கனவிலும் கண்டிராத ஒன்று! ராஜபக்‌ஷர்களுக்கு ஏன் இந்த நிலைமை வந்தது என்பதற்கான அரசியல், சமூகக் காரணங்கள் பரவலாக ஆராயப்பட்டுவிட்டன. ஆனால், ராஜபக்‌ஷர்களின் வீழ்ச்சிக்கு, அவர்களது குடும்பத்துக்குள் இடம்பெறும் பனிப்போரும் ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது. ராஜபக்‌ஷர்களின் பலமும் அவர்களது குடும்பம்தான்; பலவீனமும் அதுதான். ராஜபக்‌ஷர்களின் அரசியல் தலைமகனான மஹிந்த ராஜபக்‌ஷவின் 2005 - 2015 வரையான ஆட்சிக்காலத்தைப் பொறுத்தவரையிலும், ஆரம்பத்தில் மஹிந்த ராஜபக்‌ஷ எனும் அரசியலில் பழுத்த அனுபவம் மிக்கதொரு தலைமை, ராஜபக்‌ஷ குடும்பத்துக்குள் இருந்தது. யார் என்ன செய்ய நினைத்தாலும், அநேகமான விடயங்களில் மஹிந்தவின் முடிவே, கடைசி முடிவாக இருந்தது. காலப்போக்கில், குறிப்பாக 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்குப் பின்னர், பசில், கோட்டா, நாமல் மற்றும் அவரது சகோதரர்கள், ஷிரந்தி என ஆளாளுக்கு தமக்கு வேண்டியவற்றைச் செய்ய முனைய, அவர்கள் இழுத்த இழுவைக்கெல்லாம் இழுபட அல்லது, அவர்களை தமது இஷ்டத்துக்கு ஆடவிட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டியதொரு நிலை மஹிந்தவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படத்தொடங்கியது. இதற்குக் காரணம், மஹிந்தவின் ஜனாதிபதியான இரண்டாவது பதவிக்காலம் என்பது, அவரது கடைசிப் பதவிக்காலமும் கூட! அடுத்த ஜனாதிபதி யாரென்று முறுகலுக்கான முஸ்தீபுகள் அன்றே தொடங்கியிருந்தன. ஆனால், அன்று மஹிந்த இன்றுள்ளதை விட மேம்பட்ட உடல் மற்றும் உள ஆரோக்கியத்தோடு இருந்தார். அரசியல் திமிரும் பெருமளவு இருந்தது. தன்னை மீறி அடுத்த ஜனாதிபதியாக எந்த ராஜபக்‌ஷ வருவது என்ற போட்டியை தவிர்க்க, மிகுந்த சர்ச்சைக்குரிய வகையில் அரசியலமைப்புக்கான 18ஆம் திருத்தத்தைக் கொண்டு வந்து, ஒருவர் இரண்டு முறை மட்டுமே ஜனாதிபதியாக இருக்கலாம் என்ற மட்டுப்பாட்டை இல்லாதொழித்து, 2015 ஜனாதிபதி தேர்தலில் தானே போட்டியிட்டார். 2010 போலவே, தேர்தலில் வென்றுவிடலாம் என்ற குருட்டு நம்பிக்கை மஹிந்தவுக்கு இருந்தது. அரசியல் திமிரின் விளைவு அது. 2015 ஜனவரி எட்டாம் திகதி அவர் சந்தித்த தோல்வி, மஹிந்தவை மனரீதியில் மிகுந்த பலவீனப்படுத்தியது என்றால் அது மிகையல்ல. அடுத்த பாராளுமன்றத் தேர்தலில், குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு அங்கு பெருவெற்றி ஈட்டியிருந்தாலும், அவர் அரசியல் முன்னரங்கிலிருந்து ஒதுங்கியே இருந்தார். கிட்டத்தட்ட ஒன்று, ஒன்றரை ஆண்டுகள் அளவிற்கு அவர் ஒருவகை அஞ்ஞாதவாசத்திலேயே இருந்தார். அவருடைய கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, மைத்திரிபால சிரிசேனவிடம் போயிருந்தது; கூட இருந்தவர்களில் பலரும் போயிருந்தார்கள். 2016 நவம்பரில் ‘ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன’ என்ற பெயரில், பசில் ராஜபக்‌ஷவின் இயக்கத்தில், ராஜபக்‌ஷ அணியினர் புதிய கட்சியை ஆரம்பித்த போதுகூட, அதற்குத் தலைமை வழங்க மஹிந்த வரவில்லை. அதிகாரத்தின் நிரந்தரமற்ற தன்மை மஹிந்தவுக்குப் புரிந்தகாலம் அது. ஆனால், மஹிந்த தோற்ற பின்னர், ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதம், தகுந்த தலைமையின்றி வெற்றிடமாகவே இருந்தது. அதாவது, இந்நாட்டின் பெரும்பான்மை வாக்கு வங்கியின் தலைமை வெற்றிடமாக இருந்தது. அந்த இடத்தை, தாமே நிரப்புவோம் என்று பலர் ‘பகற்கனவு’ கண்டுகொண்டிருந்தார்கள். அதற்காக பேரினவாத வெறியை பரப்பவும் தொடங்கினார்கள். அன்றைய ‘நல்லாட்சி’ அரசாங்கத்துக்கு எதிரான திட்டமிட்ட பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. இது எல்லாம், மஹிந்தவுக்கு எதிராக, மைத்திரிக்கு வாக்களித்த மஹிந்தவின் முன்னாள் வாக்காளர்களுக்கு, ஒரு கழிவிரக்க மனநிலையைத் தோற்றுவித்தது. ‘மைத்திரிக்கு வாக்களித்து, நாம் தவறிழைத்துவிட்டோமோ’ என்று எண்ணி வருந்தும் மனநிலையை, ‘நல்லாட்சி’ அரசாங்கத்துக்கு எதிரான பிரசாரம் தோற்றுவித்திருந்தது. மைத்திரி-ரணில் முரண்பாடுகள், இந்த மனநிலைக்கு இன்னும் உரமூட்டின. ‘சிங்கள-பௌத்த’ பேரினவாத வாக்குவங்கி, மீண்டும் ராஜபக்‌ஷ யுகம் வேண்டும் என யோசிக்கத் தொடங்கிய போதுதான், ரணிலுடனான தனது முரண்பாட்டுக்கு மஹிந்தவை பகடைக்காயாக மைத்திரி பயன்படுத்தினார். 2018 டிசெம்பரில், அரசியலமைப்புக்கு முரணான வகையில், மஹிந்தவை பிரதமராக மைத்திரி நியமித்தார். இப்படி ஒரு வௌிப்படையான அரசியலமைப்பு விரோத செயற்பாட்டுக்கு மஹிந்த ஏன் உடன்பட்டார் என்பது அவருக்கு மட்டும்தான் வௌிச்சம். அதுவரைகாலமும்,‘நல்லாட்சி’ அரசாங்கத்துக்கு எதிரான திட்டமிட்ட பிரசாரங்களால், சிங்கள-பௌத்த’ பேரினவாத வாக்குவங்கியிடம் ஏறுமுகத்திலிருந்த ராஜபக்‌ஷர்களின் பெயர், 52 நாள் சட்ட விரோத அரசாங்கம் அமைத்ததில் மீண்டும் சரிந்துபோனது. அதிலும் குறிப்பாக மஹிந்தவின் பெயர், முற்றாகச் சிதைந்து போனது. அரசியலமைப்புக்கு விரோதமான முறையில் ஆட்சியைக் கைப்பற்ற முயன்றால், பெயர் கெடாமல் என்ன செய்யும்? இது ஏன் மஹிந்தவுக்கப் புரியவில்லை? இதை மீறி, மைத்திரியின் ஆட்டத்தில் மஹிந்த, தன்னை பகடைக்காயாக்கியது ஏன்? இவையெல்லாம் சுவாரஸ்யமான அரசியல் கேள்விகள். காலம் இதற்கு ஒருநாள் பதிலளிக்கலாம். ஆனால், ஒன்று நிச்சயம். இந்த இடத்தில்தான் மஹிந்தவை தாண்டிய இன்னொரு ராஜபக்‌ஷ தலைமையின் தேவை, ராஜபக்‌ஷ ஆதரவு அரசியல்வாதிகளால் உணரப்பட்டது. இந்த நிலையில், ‘ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன’ என்ற புதிய கட்சியை வைத்து, 2018 உள்ளூராட்சித் தேர்தல்களில் ஏறத்தாழ 40% வாக்குகளைப் பெற்று, ஒரு சாதனையையே பசில் ராஜபக்‌ஷ நிகழ்த்திக் காட்டியிருந்தார். ஆகவே, பசிலிடம் கட்சி எனும் பலம் இருந்தது. ஆனால், பொதுமக்களிடம் பசில் என்ற தனிநபருக்கு ஆதரவு பெரிதாக இருக்கிறது என்ற எவராலும் அடித்துச் சொல்லிவிட முடியாது. ‘மிஸ்டர் 10 பேசண்ட்’ என்பது பசிலுக்கு வழங்கப்பட்ட பிரபலமான பட்டப்பெயராகவே இருந்தது. ஆகவே, கட்சியின் அமைப்பாளராக, பசில் வெற்றிகரமாகச் செயற்பட்டாலும், மஹிந்தவுக்கு அடுத்ததாக தலைமைக்கு, பசிலை முன்னிறுத்துவதில் பல ராஜபக்‌ஷ விசுவாசிகளுக்கும் தயக்கம் இருந்தது. நாமல் கத்துக்குட்டி; அதுபோலவே, 2005-2015 காலப்பகுதியில் நாமல் மற்றும் அவரது சகோதரர்களின் பெயர் பிரபல்யம் இழந்துபோயிருந்தது. சமல், சசீந்திர ஆகியோருக்கு நாடளாவிய பிரபல்யம் கிடையாது. ஆகவே, இந்த நிலையில்தான், சிங்கள-பௌத்த பேரினவாதிகளான, அதேவேளை மஹிந்தவின் ஆதரவாளர்கள் என்று சொல்லப்பட முடியாதவர்கள் சிலர், இன்னொரு ராஜபக்‌ஷவை பல்லக்கில் தூக்கிக்கொண்டு வந்தார்கள். இதற்குப் பின்னால் சிங்கள-பௌத்த மக்களிடையே பிரபல்யமான ஊடகங்களின் பிரசார பலமும் சேர்ந்துகொண்டது. மஹிந்தவுக்கே அதிர்ச்சியளிக்கும் வகையில், மஹிந்தவை மீறி இன்னொரு ராஜபக்‌ஷ முன்னிலைக்கு கொண்டுவரப்பட்டார். (அடுத்த திங்கட்கிழமை தொடரும்) https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ராஜபக்-ஷர்கள்-என்ன-செய்யப்-போகிறார்கள்/91-306365
  10. அதிகரிக்கும் வரிகள் - நியாயமா, கொள்ளையா? என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan ‘வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு ’என்றார் வள்ளுவர். தண்டிக்கும் இயல்போடு ஆட்சியாளன் தன் குடிகளிடம் வரி கேட்பது, ஆயுதத்தைப் பிடித்துக் கொண்டு நெடுவழிப் பயணிகளிடம் பணத்தைப் போடு என்று மிரட்டுவதற்குச் சமம் என்ற வள்ளுவனின் கருத்து, 1776இல் அடம் ஸ்மித் குறிப்பிட்ட நவீன வரியின் கோட்பாடுகளான நியாயத்தன்மை, நிச்சயத்தன்மை, வசதி, செயற்றிறன் என்பதோடு ஒத்தியைகிறது. வரி என்பது ஒரு அரசிற்கு இன்றியமையாததொன்று. ஆனால் அந்த வரியானது மக்களைத் தண்டிப்பதாக அமைந்துவிடக்கூடாது என்பது வரியின் அடிப்படை இயல்பாக அமையவேண்டும். இல்லையென்றால் வழிப்பறிக்கொள்ளைக்காரனுக்கும், அரசிற்கும் பெரிய வித்தியாசம் இருக்க முடியாது. அரசு ஒன்று இயங்குவதற்கு பணம் தேவை. அந்தப் பணம் வரிகளினூடாகவே பிரதானமாகப் பெற்றுக்கொள்ளப்படுகிறது. வரிகளை பிரதானமாக நேரடி வரிகள், மறைமுக வரிகள் என்று இருவகைப்படுத்தலாம். நேரடி வரிகள் முதன்மையாக தனிநபர்கள் மீதான வரிகளாகும், மேலும் அவை பொதுவாக வருமானம், நுகர்வு அல்லது நிகரச் செல்வம் ஆகியவற்றின் அடிப்படையில் செலுத்தும் வரி செலுத்துபவரின் திறனை அடிப்படையாகக் கொண்டவை. மறைமுக வரிகள் என்பவை பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தி அல்லது நுகர்வு அல்லது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி உள்ளிட்ட பரிவர்த்தனைகள் மீது விதிக்கப்படும் வரிகளாகும். எடுத்துக்காட்டுகளில் பொதுவான மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட விற்பனை வரிகள், பெறுமதி சேர் வரிகள் (VAT), உற்பத்தி அல்லது உற்பத்தியின் எந்தவோர் அம்சத்தின் மீதான வரிகள், சட்டப் பரிவர்த்தனைகள் மீதான வரிகள் மற்றும் சுங்கம் அல்லது இறக்குமதி வரிகள் ஆகியவை அடங்கும். இலங்கையின் இன்றைய பொருளாதார வீழ்ச்சி, மற்றும் வங்குரோத்து நிலைக்கு பிரதான காரணமாகச் சுட்டிக்காட்டப்படுவது, கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியான பின்னர், தனது தேர்தல் வாக்குறுதிகளின்படி வரிகளை மிகப்பெருமளவுக்கு குறைத்தமையாகும். அந்த வரிக்குறைப்பு அரசாங்கத்தின் வருமானத்தை கணிசமாகக் குறைத்தது. அதேவேளை அரசாங்கத்தின் செலவுகள் குறைக்கப்படவில்லை. வருமானத்தை விட செலவு கூடும்போது, அதோடு கடன்சுமையும், அதற்கான வட்டியும் கழுத்தை நெரிக்கும்போது, இலங்கை வங்குரோத்தாவது என்பது தவிர்க்க முடியாத விளைவாகிவிட்டது. மறைமுக வரிகளில், பெறுமதி சேர் வரி 15%-லிருந்து 8% ஆகக் குறைக்கப்பட்தோடு, பெறுமதி சேர் வரிக்கான பதிவுக்கான தேவை எல்லையளவு வருடத்திற்கு 12 மில்லியனிலிருந்து, 300 மில்லியன்களாக அதிகரிக்கப்பட்டது. மேலும், தொடர்மாடிமனைகள் மீதான பெறுமதி சேர் வரி விலக்கப்பட்டது. நேரடி வரிகளைப் பொறுத்தவரையில், மாதமொன்றிற்கு முதல் 250,000 ரூபாய்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டதோடு, அடுத்த 250,000த்திற்கு 6%மும், அடுத்த 250,000-ற்கு 12%-மும், அதற்கு மேற்பட்ட தொகைக்கு 18%-முமே வருமான வரி செலுத்த வேண்டியதாகியது. சில மாதங்கள் முன்பதாக அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டதன்படி, இந்த வரிக்குறைப்பு நடிவடிக்கைகளினால், கடந்த இரண்டு வருடங்களில் சுமார் 10 இலட்சம் வரி செலுத்துவோரை இலங்கை இழந்துள்ளது. கோட்டாபயவின் வரிவிலக்கின்படி, இலங்கையின் அதிகபட்ச மொத்த தனிநபர் வருமானவரி, 18%. இந்தியாவில் 42.74%, ஜப்பானில் 55%, நேபாளில் 36%, பங்களாதேஷில் 25%, நெதர்லாந்தில் 49.5%, நியுஸிலாந்தில் 39%, பெல்ஜியத்தில் 79.5%, பூட்டானில் 25%, நோர்வேயில் 46.4%, பாகிஸ்தானில் 35%, பிலிப்பைன்ஸில் 35%, போர்த்துக்கலில் 64%, ஈரானில் 35%, சுவீடனில் 52%, சுவிட்ஸலாந்தில் 59.7%, துருக்கியில் 40%, ஒஸ்திரேலியாவில் 45%, கனடாவில் 54%, ஃபிரான்ஸில் 49%, பிரித்தானியாவில் 63.25%, மற்றும் அமெரிக்காவில் 51.6%. ஆகவே அதிகபட்ச வருமானவரியே 18% என்பது எவ்வளவு குறைவானது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். இந்தநிலையில்தான், பொருளாதார மீட்சி ஒன்றை வேண்டி நிற்கும் இலங்கையில், இலங்கையின் இன்றைய ஜனாதிபதியும், நிதியமைச்சருமான ரணில் விக்ரமசிங்க, புதிய அதிகரித்த வரிகளை அறவிடுவதற்கான உள்நாட்டு இறைவரி சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் பிரசுரித்திருக்கிறார். இந்த அதிரடி வரி அதிகரிப்பு நடவடிக்கை கடந்த வாரத்தில் இலங்கையின் வணிக வட்டங்களில் மட்டுமல்லாது, பொதுமக்களிடையேயும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. கோட்டாவின் வரிகளின் கீழ், வருடத்திற்கு முப்பது இலட்சம் ரூபாயாக இருந்த வருமானவரி விலக்கு எல்லையளவு, வருடத்திற்கு பன்னிரண்டு இலட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே வருடத்திற்கு 12 இலட்சம் ரூபாய்க்கு அதிகமாக வருமானம் பெறும் அனைவரும் வருமான வரி செலுத்த வேண்டியவர்களாகிறார்கள். அதுபோல, வருமான வரியளவும் கணிசமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்பதோடு, 18% ஆக இருந்த அதிகபட்ச வருமானவரியளவு இரு மடங்காக 36% அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதன் யதார்த்த விளைவைச் சொல்வதானால், இதுவரை 2 இலட்ச ரூபாய் மாதச்சம்பளம் பெற்றவருக்கு, வருமான வரி கிடையாது, ஆனால் இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேறினால், மாதம் 10,500 ரூபாய் வரியாகச் செலுத்த வேண்டியிருக்கும். அதுபோல, இதுவரை 4 இலட்ச ரூபாய் மாதச்சம்பளம் பெற்றவர் மாதத்திற்கு 9000 ரூபாய் வரிசெலுத்தவேண்டியதாக இருந்தது, புதிய சட்டமூலத்தின் படி 70,500 ரூபாவாக அதிகரித்துள்ளது! இந்த திடீர் வரி அதிகரிப்பு உயர்-மத்தியதர வருமான மற்றம் உயர் வருமான தரப்பினரைக் கடுமையாகப் பாதிக்கும். வரியின் அளவின் நியாயதர்மம் என்பதைவிட, திடீர் அதிகரிப்பு என்பதுதான் இங்கு பிரச்சினையை வீரியப்படுத்துவதாக இருக்கிறது. இதுவரை 4 இலட்சம் சம்பளம் பெற்றுவந்தவர், தன்னுடைய செலவினங்களை அதற்கேற்றாற்போல கட்டமைத்திருப்பார். வீட்டுக்கடன், வாகனக்கடன், பிள்ளைகளின் கல்விக்கடன் என அனைத்தும் அந்த வருமானத்திற்கு தக்கபடி கட்டமைக்கப்பட்டிருக்கும். திடீரென அந்த 4 இலட்ச ரூபாய் சம்பளத்தில் 70,500 ரூபாய் குறைவதானது, அவர்களைக் கடுமையாகப் பாதிப்பதாகவே அமையும். மறுபுறத்தில் புதிய திட்டத்தின் கீழ் நிறுவனங்களுக்கான வருமான வரி 24%-லிருந்து 30%-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரைகாலம் வழங்கப்பட்ட பல வரிச்சலுகைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த வரிச்சலுகைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. இதைவிட, 100,000 ரூபாய்க்கு மேல் வாடகை வருமானம் மீது 10 சதவீதம் முற்கூட்டிய வருமான வரி, வட்டி வருமானம் அல்லது தள்ளுபடியில் 5 சதவீதம், ஈவுத்தொகை கொடுப்பனவுகளில் 15 சதவீதம், மற்றும் பிற கொடுப்பனவுகளுக்கு 14 சதவீதம் என்பனவையும் தனிநபர்களையும், நிறுவனங்களையும், குறிப்பான சிறு நிறுவனங்களையும் பெருமளவு பாதிப்பதாக அமைகிறது. இரண்டு விஷயங்களை நாம் இங்கு கருத்திற்கொள்ளுதல் அவசியமாகிறது. முதலாவது, பொருளாதார மீட்சிப் பயணத்திற்கு, இந்த வரிவிதிப்புகள் அவசியமானவை. விரும்பியோ, விரும்பாமலோ, இலங்கையின் அரச செலவினங்கள் மிக அதிகம். அதற்குள் இலவசக் கல்வி, இலவச மருத்துவம், சமுர்த்தி, வீடமைப்பு உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றிற்கான செலவுகளும் அடக்கம். பணத்தை அச்சிட்டு இவற்றிற்கான செலவுகளைச் செய்தால், பணவீக்கம் என்பது கூடி, ஸிம்பாம்வேயைப் போலவேதான் நாம் மாறவேண்டியிருக்கும். ஆகவே பணத்தை அச்சிடுவது தீர்வல்ல. அரச வருமானம் அதிகரிக்க, வரிகள் தேவை. இரண்டாவது, இந்த வரி அளவுகள், ஏனைய நாடுகளோடு ஒப்பிடுகையில் சாதாரணமற்ற வரி அளவு அல்ல. ஆனால் திடீரென்ற 18% லிருந்து 36% என்ற இரட்டிப்பான அதிகரிப்பானது, சிலருக்கு ஆரம்பத்தில் பெரும் சவால்களை ஏற்படுத்தப்போகிறது என்பது மறுக்க முடியாதது. மறுபுறத்தில், மக்கள் இத்தனை கஷ்டத்தில் கட்டும் வரிகள் முறையாக, தேவையானவற்றிற்குத்தான் செலவளிக்கப்படுகின்றனவா என்பது இங்கு முக்கியமானது. மக்களுடைய இரத்தமும், வியர்வையும் இலவசக் கல்விக்கும், இலவச மருத்துவத்திற்கும், உணவுப்பாதுகாப்பு உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு நடவடிக்ககைளுக்கு செலவளித்தால் அதில் நியாயமுண்டு. அதைவிடுத்து இராணுவத்திற்கும், அரசியல்வாதிகளில் படோடாபங்களுக்கும், பயனற்ற கட்டுமானங்களுக்கும், நட்டத்திலியங்கும் ‘வௌ்ளை யானை’களான அரசுடைமையான நிறுவனங்களுக்கும், ஊழலுக்கும் மக்களின் வரிப்பணம் வீணாக்கப்படுவதானது மிகப்பெரும் அநீதியும், பாவமுமாகும். ஆகவே தமது வரிப்பணம் முறையாக, மக்களுடைய நன்மைக்கே செலவிடப்படுகிறது என்ற நம்பிக்கையை அரசு மக்களிடம் ஏற்படுத்தினால், வரிகளைப் பற்றிய எதிர்மறை எண்ணம் மக்களிடையே குறையக்கூடும். அது அரசாங்கத்தின் கையில்தான் இருக்கிறது. இல்லையென்றால், அதிகரித்த வரிவிதிக்கும் அரசை மக்கள் வழிப்பறிக்கொள்ளையனாகத்தான் பார்ப்பார்கள். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அதிகரிக்கும்-வரிகள்-நியாயமா-கொள்ளையா/91-306001
  11. இலங்கையில் சிறுபான்மையும் ஒற்றைத் தேசிய அடையாளமும் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan இலங்கையில், “சிறுபான்மை இனங்கள் இல்லை; பல்வேறு இனக்குழுக்கள் உள்ளன. நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப, அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்று, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அண்மையில் ஒரு கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். இந்தக் கருத்தை, சில தமிழ் அரசியல்வாதிகள் கைதட்டி வரவேற்கிறார்கள். பொதுப்படையாகப் பார்த்தால், இது நல்லெண்ணம் மிக்க கருத்தாகவே தெரிகிறது. அந்தளவில், அதற்குரிய வரவேற்பும் பொருத்தமானதே! ‘அனைவரும் இலங்கையர்களாக ஒன்றுபட்டு, நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்’ என்கிற குரல், அனைவரும் ‘ஸ்ரீ லங்கன்ஸ்’ என்ற தேச அடையாளத்துக்குள் வரவேண்டும் என்கிற ‘சிவில் தேசியம்’ சார்ந்த ‘தேசிய அரசு’க் கட்டமைப்பு சார்ந்த சிந்தனையின் வௌிப்பாடு இதுவாகும். அதாவது, ஒரு நாட்டிலுள்ள மக்களுக்கு இடையேயான இன, மத, மொழி, பிரதேச, பிராந்திய வேறுபாடுகளை மேவி, அவை சாராத ‘தேசிய அரசு’ அடையாளம் அமைதலை, ‘சிவில் தேசியம்’ எனலாம். அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற சில நவீன தேசிய அரசுகள், அதற்கு முன்பு அங்கிருந்திராத ஒற்றைப்படுத்தப்பட்ட குடிமையையும் (homogenised polity), ஒற்றைப்படுத்தப்பட்ட சிவில் தேசிய அடையாளத்தையும் கட்டமைத்து, உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளன. பிரஞ்சுப் புரட்சிக்கு முன்பு, பிரான்ஸ் தேசம் என்று ஒன்று கிடையாது. அமெரிக்க விடுதலைக்கு முன்பு, அமெரிக்க தேசம் என்று கிடையாது. அவை, அந்தந்த மக்கள் கூட்டத்தால், அவர்களிடையே உருவாக்கப்பட்டவை. ஒற்றைப்படுத்தப்பட்ட குடிமை அல்லது, தேசம் இல்லாத நிலையில், ஒரு சிறந்த தேசிய அரசை அடைய முடியாது. அதேவேளை, பல குடிமைகளையோ தேசங்களையோ கொண்ட அரசொன்றில், ஒற்றைப்படுத்தப்பட்ட தேசமொன்றைக் கட்டியெழுப்புதல் பற்றிக் கருத்துரைக்கும் ஸ்டீபன் டியேர்னி, ‘ஒற்றைப்படுத்தலை, பல குடிமைகள் கொண்ட அரசுக்குள் முயற்சிக்கும்போது, ஆதிக்க குடிமைகளின் நடைமுறைகள், உத்திகள் (உத்தியோகபூர்வ மாநில மொழியின் பரப்புதல் போன்றவை) அரசமைப்புக் கொள்கைகளை வடிவமைக்கும் போது, துணை அரசு தேசிய சமூகங்கள் ஓரங்கட்டப்படலாம். அது, அரசின் மய்யத்தைத் தீர்மானிக்கும் குடிமையின் நலன்களை (அதன் மேலாதிக்க சமுதாயத்தை) முன்னிறுத்துவதாக அமையும் என்கிறார். பிரான்ஸ் என்ற தேசிய அரசின் உருவாக்க வரலாற்றைப் பார்த்தால், டியேர்னி கூறும் கருத்தின் அர்த்தம் புலப்படும். சிவில் தேசமல்லாது, இனத்தேசிய அரசியல் வேர்விட்டுள்ள அரசொன்றில், ஒற்றைப்படுத்தப்பட்ட தேசிய அரசொன்றைக் கட்டியெழுப்புதலானது, எப்போதுமே ஆதிக்கம் மிக்க பெரும்பான்மை இனத்தேசியத்தின் நலன்களைக் காப்பதாகவும் சிறுபான்மை இனத் தேசியங்களின் நலன்களைச் சவாலுக்கு உட்படுத்துவதாகவும் அமையும். இன்று, சஜித் பிரேமதாஸ கூட, சிறுபான்மை இனங்கள் இல்லையென்று சொல்கிறாரே தவிர, பெரும்பான்மை இனம் என்று ஒன்று இல்லையென்று சொல்லவில்லை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற எண்ணத்தை, சிறுபான்மையினரிடம் விதைப்பதற்கு முன்னர், அதைப் பெரும்பான்மையினரிடம் விதைப்பதே மாற்றத்துக்கான முதற்படியாக அமையும். உண்மையாகவே, இலங்கையில் இன, மத, மொழி, சாதி, பிரதேச, பிராந்திய அடையாளங்களை மேவி, ‘ஸ்ரீ லங்கன்’ என்பதை, ‘சிவில் தேசிய’ அடையாளமாகக் கட்டமைக்க, ஓர் அரசியல் தலைமை விரும்புமானால், அந்த மாற்றத்தை சிறுபான்மையினரிலிருந்து அல்ல; மாறாக, பெரும்பான்மையினரிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்! இதைச் சொல்வதற்கு, வரலாற்று ரீதியான காரணம் இருக்கிறது. சிங்கள-பௌத்த பெரும்பான்மை, இன-மத தேசியத்துக்கு எதிராக, அதிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே, தமிழ்த் தேசியம், ஈழ மண்ணில் விதைகொண்டு, வேர்விட்டது.அதனால்தான், இதைத் ‘தற்காப்புத் தேசியம்’ என்கிறார்கள். இலங்கைத் தீவில் ‘இனத் தேசிய’ அடையாளத்தை முதலில் சுவீகரித்தவர்கள் சிறுபான்மையினர் அல்ல. சுதந்திரத்துக்கு முன்னிருந்த தமிழ்த் தலைமைகள் பலரும், ‘சிலோனீஸ்’ (இலங்கையர்கள்) என்ற ‘சிவில் தேச’க் கட்டமைப்பு பற்றியே அக்கறை கொண்டிருந்தார்கள். ஆனால், பெரும்பான்மையின அரசியல் தலைமைகளால், பெருந்திரள்வாத உரம் போடப்பட்டு ,வளர்த்தெடுக்கப்பட்ட ‘சிங்கள-பௌத்தம்’ என்ற பெரும்பான்மை இன-மத தேசியம், தன்னுடைய வளர்ச்சிக்கு, சிறுபான்மையின தமிழ் மக்களை, வேண்டப்படாத அந்நியராகச் சித்திரித்து. தமிழின விரோதத்தையும் குரோதத்தையும் வளர்த்தது. இந்நாட்டின் பெரும்பான்மை, தன்னை ‘இன-மத’த் தேசியத்தின்பால் கட்டமைத்துக் கொள்ளும் போது, சிறுபான்மை மட்டும் ‘சிலோனீஸ்’ அல்லது ‘ஸ்ரீ லங்கன்’ என்ற ‘சிவில் தேசிய’க் கனவில் இயங்குவது சாத்தியமில்லாதது. ஆகவே, இங்கு பெரும்பான்மையின் இன-மதத் தேசியவாதமும் பேரினவாதமும்தான், சிறுபான்மையினரை, தம்மை தனித்த ‘தேசமாக’ அடையாளப்படுத்த வைத்ததேயன்றி, மற்றவளமாக இது நடக்கவில்லை. இன்று, இந்த நாட்டிலுள்ள மக்கள் கூட்டம், தம்மை இன-மதத் தேசியங்களாகக் கட்டமைத்துள்ளன. இதற்குள் மீண்டும் சிவில் தேசியத்தை கட்டமைப்பது என்பது மெத்தக்கடினமானதொரு காரியம்.சிறுபான்மையினரின் இனத்தேசியத்தை மாற்றியமைக்க முன்னர், பெரும்பான்மையினரின் இன-மதத் தேசியத்தையும் பேரினவாதத்தையும் மாற்றியமைக்க வேண்டும். இது ஓரிரவிலோ, ஓராண்டிலோ, ஏன் சில ஆண்டுகளிலோ சாத்தியப்படக் கூடிய விடயமல்ல. “சிறுபான்மையினர் இல்லை” என்று பகட்டாரவாரப் பேச்சுப் பேசும் சஜித் பிரேமதாஸ போன்றவர்கள் கூட, ‘இங்கு பெரும்பான்மையினர் என்று யாருமில்லை; இன-மத அடையாளங்களுக்கு இங்கு இடமில்லை; பெரும்பான்மை இனத்துக்கோ, மதத்துக்கோ முன்னிலையில்லை’ என்று சொல்ல மாட்டார்கள். ஏனென்றால், அது அவர்களது வாக்கு வங்கியைப் பாதிக்கும். இங்குள்ள மக்கள் கூட்டம், அதாவது அவர்களது வாக்கு வங்கி, இன-மதத் தேசியத்தின் அடிப்படைகளிலேயே கட்டமைந்திருக்கிறது. மீளிணக்கப்பாடு தொடர்பான தளங்களில், இந்தப் பேச்சு அதிகம் ஒலிக்கும். ‘இலங்கை’ எனும் சிவில் தேசிய அரசைக் கட்டமைக்கும் கனவொன்றும் புதியதல்ல! 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியிலும், இலங்கையிலிருந்த உயர்குழாம் அரசியல் தலைமைகளின் விருப்பமும் அதுவாகவே இருந்தது. ஆனால், பெரும்பான்மை இன-மத தேசியமும் அதற்கு எதிரான சிறுபான்மையினரின் தற்பாதுகாப்பு இனத் தேசியமும், பல தசாப்தங்களாக வேரூன்றிய அரசில், மீண்டும் சிவில் தேசியத்தை, பகட்டாரவாரப் பேச்சும் பிரசாரமும் மட்டும் உருவாக்கிவிடாது. மக்கள் தம்மை ஒரு தேசமாக உணராதவரை, அத்தகையதொரு தேசமொன்று உருவாகாது. சமகாலச்சூழலில் இலங்கை இன-மத, இனத் தேசியங்களில் இருந்து, மீண்டும் தன்னை ஒரு சிவில் தேசமாக் கட்டமைவதற்கான அரசியல் தேவையோ, பிரக்ஞையோ காணப்படுவதற்கான அறிகுறிகள் இல்லை. யதார்த்தத்தில், பெரும்பான்மை இனத்தால் சிறுபான்மையாகவே பார்க்கப்படுகின்ற, அவ்வாறே நடத்தப்படுகின்ற மக்கள் கூட்டத்திடம், இங்கு சிறுபான்மையினர் என்று யாருமில்லை என்று சொல்வதைப் போல அபத்தமான விடயம் வேறில்லை. பெரும்பான்மை தன்னைப் பெரும்பான்மையாக உணராத, அவ்வாறு நடந்துகொள்ளாத, சிறுபான்மையினரை அந்நியராக நடத்தாத, சிறுபான்மையினரை அடக்குமுறைக்கு உட்படுத்தாத நிலைவரும்போது, இயல்பிலேயே சிறுபான்மையினர் தம்மை சிறுபான்மையினராக உணர மாட்டார்கள். ஆனால், சிறுபான்மையினமென்று ஒன்றில்லையென்று சொல்லத் துணியும் பெரும்பான்மையினத் தலைவர்களிடம், பெரும்பான்மையினமென்று ஒன்றில்லை, அனைவரும் இலங்கையர்கள் என்று சொல்லும் திராணி இல்லை. அப்படிச் சொல்வதால் மட்டும், ஒன்றும் உடனடியாக விளைந்து விடப்போவதில்லை. ஆயினும், அதைக் கூட அவர்களால் சொல்ல முடியாது என்பதுதான் துர்பாக்கியமான நிலைமை. இலங்கையின் இனப்பிரச்சினையை, முரண்பாட்டைத் தீர்க்க வேண்டுமானால், முதலில் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். வேற்றுமைகளை அங்கிகரிப்பதுதான், வேற்றுமையில் ஒற்றுமையை ஸ்தாபிப்பதற்கான முதற்படி. இலங்கையின் பன்மைத்தேசக் கட்மைப்பை அங்கிகரிப்பதன் மூலம், இலங்கையை பன்மைத் தேச நாடாக, அதாவது இலங்கை என்ற ஓர் அரசுக்குள், பன்மைத் தேசங்கள் வாழ்கின்றன, என்ற யதார்த்தத்தை ஏற்றுகொள்வதுதான் உண்மையில், நல்லெண்ணம் கொண்ட தலைமைகளின் கருத்தாக அமையும். மிகுதியெல்லாம் வெறும் அரசியல் கண்துடைப்புகள்தான். அந்தக் கண்துடைப்பு நாடகங்களுக்கு விசிலடித்து, கைதட்டவும் இங்கு தம்மைத்தாமே தலைவர்கள் என விளித்துக்கொள்ளும் ஒரு சின்னக்கூட்டம் இருப்பதும் மக்களின் துரதிர்ஷ்டமே! https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இலங்கையில்-சிறுபான்மையும்-ஒற்றைத்-தேசிய-அடையாளமும்/91-305554
  12. தமிழ்த் தேசிய அரசியலில் ஒற்றுமையின்மை என். கே அஷோக்பரன் twitter: @nkashokbharan பலரும் எழுதி எழுதி சலித்துப் போனதொன்றை, மீண்டும் மீண்டும் எழுத வைப்பதுதான் தமிழ் அரசியல்வாதிகளின் சதி. ‘குன்றக் கூறல்; மிகைபடக் கூறல்; கூறியது கூறல்’ ஆகியவை குற்றம் என்கிறது நன்னூல். ஆனால், எப்படிச் சொன்னாலும், எத்தனை முறை சொன்னாலும் புரியாதது போலவே நடிக்கும் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுக்கு, வேதாளத்தின் கேள்விகளும் பதில் சொல்லும் விக்கிரமாதித்தனாய், சற்றும் மனந்தளராது, மீண்டும் மீண்டும் கல் செதுக்குவது போல, அது உருப்பெறும் வரை செதுக்கிக்கொண்டே இருக்க வேண்டியது தார்மிகக் கடமையாகிறது. இலங்கையில், தமிழ்த் தேசிய அரசியல் என்பது, தற்காப்புத் தேசியமாகவே உருவாகியது. அது, சிங்கள- பௌத்த பெரும்பான்மை இன-மத தேசியத்துக்கு எதிராக, அதிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே, தமிழ்த் தேசியம், ஈழ மண்ணில் விதைகொண்டு, வேர்விட்டது. அதனால்தான், ஏ.ஜே வில்சன் உள்ளிட்ட ஆய்வாளர்கள், இதைத் ‘தற்காப்புத் தேசியம்’ என்கிறார்கள். சாதிகள் சேர்க்கையாக, சாதி ரீதியாகக் கட்டமைந்திருந்த தமிழ்ச் சமூகத்திடையே, ‘தமிழர்’ என்ற அடையாளத்தை முன்னிறுத்தி, அவர்களை ஆக்கிரமிப்புச் செய்ய, பேரினவாதத் தேசியம் முயன்றதன் எதிர்விளைவாக, அதே ‘தமிழர்’ என்ற தேசிய அடையாளத்தின் கீழ், தமிழ் மக்கள் ஒன்றிணைந்தமையை நாம் காணலாம். ‘தமிழ்த் தேசியம்’, இலங்கைத் தீவின் அரசியலில் மட்டுமல்ல, தமிழ் மக்கள் என்ற இனக்கூட்டத்தின் கட்டமைப்பிலும் போக்கிலும் சிந்தையிலும் கூட, மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது. சாதி ரீதியிலான அடையாளத்தை மேவி, இனத்தேசிய அடையாளம் முன்னிறுத்தப்பட்டது. தமிழ்த் தேசியத்துக்கான தேவை, சிங்கள-பௌத்த தேசியத்தின் எழுச்சியால், அது ‘தமிழர்’ மீது ஏற்படுத்திய அடக்குமுறையால் எழுந்ததாகும். 1956இல் இருந்து, தமிழ்மக்கள் ஏகோபித்து, தமிழ்த் தேசியத்துக்கான தமது அங்கிகாரத்தையும் மக்களாணையையும் வழங்கி வந்திருக்கிறார்கள். இது, ஆறு தசாப்த காலத்துக்கும் மேலான, தமிழ் மக்களின் மக்கள் விருப்பத்தைப் பறைசாற்றி நிற்கிறது. கருத்தியல் வாதங்களால், இந்த யதார்த்தத்தை, மறுத்துவிட முடியாது. இதனால்தான், திம்பு கோட்பாடுகளின் முதல் கோட்பாடான, ‘இலங்கை தமிழர், ஒரு தேசமாக அங்கிகரிக்கப்பட வேண்டும்’ என்பது, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளில் முதன்மைமிக்கதாக இருக்கிறது. இந்த முழக்கத்தை அடிப்படையாகக் கொண்டுதான், தமிழ்த் தேசிய கட்சிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. தமிழ்த் தேசிய கட்சிகளிடையே, கருத்தியல் ரீதியிலான முரண்பாடு என்பது, தமிழ்த் தேசிய கொள்கையின் தீவிரத்தன்மை சார்ந்ததாகவே இருக்கிறதேயன்றி, தமிழ்த் தேசிய அடிப்படைகளை, குறைந்த பட்சம், தமது உத்தியோகபூர்வ கொள்கைப் பிரகடனங்களில் ஒரே மாதிரியானதாகவே பறைசாற்றி வருகின்றன. அப்படியானால், ஏன் அவற்றால் ஒற்றுமையாகச் செயற்பட முடியவில்லை? இதற்கு, குறைந்த பட்சம் இரண்டு காரணங்களை அடையாளம் காணலாம். முதலாவது, கொள்கை தொடர்பான நேர்மையின்மை. இரண்டாவது, சுயநலம். தமிழ்த் தேசியம் என்பதையும் அதன் அடிப்படைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்பனவற்றையும் முன்னிறுத்தி, தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அவற்றைக் குறிப்பிட்டு, அந்தத் தமிழ்த் தேசியத்தின் பாதுகாவலர்களாகத் தம்மை முன்னிறுத்தும் அரசியல்வாதிகள், தமிழ்த் தேசியத்தை வாக்குப் பெறுவதற்கான ஒரு சாதனமாகவே பார்க்கிறார்களேயன்றி, அதன் மீதான உண்மைப் பற்றுதல் அவர்களுக்கு இல்லை. அடிப்படையில் தாராளவாதிகளான சிலர் கூட, இன்று தமிழ்த் தேசியத்தின் தலைமைகளாகத் தம்மை முன்னிறுத்துகிறார்கள். அவர்களுக்கு, ‘தமிழ்த் தேசியம்’ என்பது வாக்குப் பெற்று, தமக்கான பாராளுமன்ற பதவி பெறுவதற்கான ஒரு கருவி; அவ்வளவுதான்! தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தும் கட்சியில், அதன் விஞ்ஞாபனத்தின் கீழ், தமிழ்த் தேசிய ஆதரவு வாக்குகளைப் பெற்றும், தமிழ்த் தேசத்தின் பிரதிநிதிகளாகத் தெரிவானவர்கள், தமிழ்த் தேசியத்தை விடுத்து, சிவில் தேசிய அரசியல்வாதிகளாகத் தம்மைப் பாவித்துக் கொண்டும் வருகிறார்கள். ஒருவர் அடிப்படையில், சிவில் தேசியத்தை விரும்பும் தாராளவாதியாக இருக்க விரும்பினால், நல்லது! அவர் அதைச் செய்யலாம். ஆனால், நேர்மை என்பது, அதை நேர்மையாக மக்களிடம் சொல்லி, அந்தக் கொள்கையை முன்னிறுத்தும் கட்சியில் இணைந்து, அந்தக் கொள்கையை முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிட்டு, அந்தக் கொள்கைக்கு மக்களாணை கிடைத்தால், அதைப் பெற்றுக்கொண்டு, அந்தக் கொள்கைப்படி நடப்பதாகும். ஆனால், தேர்தல் வெற்றிக்கு தமிழ்த் தேசியம்; வென்ற பின்னர், தாரளவாத சிவில் தேசியம் என்பதெல்லாம், அடிப்படையில் நேர்மையற்ற செயல். இதுதான் இன்று, தமிழ்த் தேசிய அரசியலின் சாபக்கேடாக மாறியுள்ளது. தமிழ்த் தேசியத்தின் நன்மைகளை எல்லாம் பெற்றுக்கொண்டு, தமிழ்த் தேசியத்துக்கு விரோதமாகச் செயற்படும் குழாமொன்று, தமிழ்த் தேசிய அரசியலை ஆக்கிரமித்துள்ளதன் விளைவுதான், இன்று தமிழ்த் தேசிய அரசியலுக்குள் உட்கட்சி முரண்பாடுகள் வலுத்துள்ளன. தமது சுயநல அரசியலுக்காக, கொள்கை ரீதியான வாதப்பிரதிவாதங்களுக்குப் பதிலாக, தமிழ்த் தேசிய அரசியலைத் தனிநபர்கள் பற்றிய ‘குழாயடிச் சண்டை’க்களமாக மாற்றி இருக்கிறார்கள். இதன் விளைவுதான் இன்று தமிழ்த் தேசிய அரசியல், நடுச்சந்தியில் நாறிக்கொண்டு கிடக்கிறது. “தேசம் என்பது, ஓர் உணர்வாகும். இறுதியாக நாம், ஒரு தேசத்தின் உறுப்பினர்களானவர்கள், உணர்ச்சிப் பெருக்குடனும் ஏகமனதாகவும் தம்மை ஒரு தேசமாக நம்புவதால், நாம் அதைத் தேசமென்று கருதமுடியும்” என்கிறார் றாம்சே மயர். இந்த உணர்வு, அடிப்படையிலேயே இல்லாதவர்கள், எப்படி அந்தத் தேசத்தின் பிரதிநிதிகளாக முடியும்? தாராளவாதம், இன-மதத் தேசியவாதத்துக்கு முற்றிலும் முரணானது. அது இன-மதத் தேசியவாதத்தை நிராகரிக்கின்றது. ஆகவே, ஒருவர் தாராளவாதியாகவும் இன-மதத் தேசியவாதியாகவும் இருக்க முடியாது. தமிழ் மக்களுக்கு தமிழ்த் தேசிய முகம்; தெற்குக்கும் சர்வதேசத்துக்கும் தாராளவாத முகம் என்று இருப்பவர்கள், ஒருபோதும் இரண்டுக்கும் நேர்மையாக இருக்க முடியாது. ஆகவே, தமிழ்த் தேசிய அரசியலுக்குள் தாராளவாதிகளின் ஆதிக்கம், தமிழ்த் தேசிய அரசியலுக்குப் பெரும் சவாலாக மாறியிருக்கிறது. இங்கு, கொள்கை வாதப்பிரதிவாதங்களைத் தவிர்த்து, தனிநபர்கள் பற்றிய ‘குழாயடிச் சண்டை’களுக்கும் இதுவே வழிவகுப்பதாக இருக்கின்றது. இதைத் தமிழ் மக்கள் உணர வேண்டியது அவசியம். மறுபுறத்தில், கொள்கை ஒன்றாக இருந்தாலும், தேர்தல், பதவி என்ற சுயநல காரணங்கள் எப்போதும் தமிழ்த் தேசிய அரசியலைத் துண்டாடி வந்திருக்கிறது. இன்றைக்கு தமிழ்த் தேசிய அரசியலில், தமிழ்த் தேசியவாதிகளிடையே ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகள் இதன்பாற்பட்டவை ஆகும். யார் தலைவர், யாருக்குப் பதவி என்ற அடிபாடுகளுக்காகப் பிரிந்து, ஒரு கொள்கையில் ஒன்றுபட்டிருந்த ஆதரவாளர்களை, தனிநபர்களின் சண்டைகளுக்காக, தனிநபர்களின் ஆதரவாளர்களாக மாற்றி, ஒருவரை இன்னொருவர் தூசித்துக்கொண்டும், அடிதடிப்பட்டுக் கொண்டும் தம்மைத் தாமே அசிங்கப்படுத்திக் கொண்டும் இருக்கிறார்கள். தமிழ்த் தேசிய அரசியலின் பலம் என்பது, அதற்கு மாற்றான எல்லாத் தரப்புக்கும் மிகச்சவாலன ஒன்றாகும். ஆகவே, தமிழ்த் தேசிய அரசியலைப் பலவீனப்படுத்துவது என்பதே, தமிழ்த் தேசிய அரசியலுக்கு மாற்றான சக்திகளின் பிரதான குறிக்கோள்களில் ஒன்றாகும். தமிழ்த் தேசிய அரசியலில் ஒற்றுமை இன்மையென்பது, தமிழ்த் தேசிய அரசியலைப் பலவீனப்படுத்துவதை இலகுப்படுத்துவதாகவே அமைகிறது. ஒரு குறிப்பிட்ட கொள்கையை முன்னிறுத்தும் தலைவர்கள் மீது மக்கள் நம்பிக்கையிழக்கும் போது, அந்தக் கொள்கை மீதும் மக்கள் நம்பிக்கை இழக்கத் தொடங்குகிறார்கள். தமிழ்த் தேசிய அரசியலின் உட்கட்சிச் சண்டைகளும் பூசல்களும், வேறுபட்ட குழுக்களிடையேயான ‘குழாயடிச் சண்டை’களும், தமிழ்த் தேசியம் மீது தமிழ் மக்களுக்கு சலிப்பை உண்டாக்குவதாகவும் வெறுப்பை உருவாக்குவதாகவும் அமைகிறது. அப்படியானால், இது தமிழ்த் தேசியத்தை பலவீனப்படுத்த எண்ணும் சக்திகளுக்கே சாதகமாக அமைந்துவிடுகிறதல்லவா! ஆகவேதான், தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் சக்திகள், விழித்துக்கொள்ள வேண்டிய காலம் என ‘பள்ளியெழுச்சி’ பாடப்படுகின்றது. தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், மீண்டும் உண்மையான தமிழ்த் தேசிய அமைப்புகளிடையே பலமானதோர் ஒற்றுமை கட்டியமைக்கப்பட வேண்டியமை, காலத்தின் தேவையாக எழுந்திருக்கிறது. இதைத் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் சரிவரச் செய்யாது விட்டால், தமிழ்த் தேசியத்தின் மீது தமிழ்த் தேசம் நம்பிக்கை இழந்துவிடும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்த்-தேசிய-அரசியலில்-ஒற்றுமையின்மை/91-305181
  13. ‘அறகலய’ எனும் அரசியல் ஆயுதம் என். கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan சிங்களத்தில் ‘அறகலய’ என்றால், ‘போராட்டம்’ என்று பொருள். இந்தாண்டு இலங்கையில் இடம்பெற்ற ‘கோட்டா கோ ஹோம்’ போராட்டம் பெரும் மக்கள் எழுச்சியானது. இது, ‘அறகலய’ என்றே பொதுவில் இனங்காணப்படுகிறது. இந்தக் ‘கோட்டா கோ ஹோம்’ மக்கள் எழுச்சிக்கு, ஆரம்பத்தில் இலங்கை எங்கும் ஆங்காங்கே கோட்டாபய ராஜபக்‌ஷவின் ஆட்சிக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களே ஆரம்பப்புள்ளி. இவை கட்சி சார்ந்த அல்லது இடதுசாரி அமைப்புகள் சார்ந்த ஆர்ப்பாட்டங்கள் அல்ல! பொதுமக்கள், தாமாக வீதிக்கு இறங்கி, அமைதி வழியில் ஆரம்பித்த ஆர்ப்பாட்டங்கள். இப்படி, பொதுமக்கள் கொழும்பில் ஒன்று திரண்ட இடங்களில், ஆர்ப்பாட்டங்களுக்கு என்று கோட்டாபயவே ஒதுக்கிய காலிமுகத்திடலுக்கு எதிரிலான, ஜனாதிபதி மாளிகைக்கும், ‘ஷங்றி-லா’ ஹொட்டலுக்கும் அருகிலான இடம். இதற்கு ஒரு சிலர் ‘கோட்டா கோ கம’ (கோட்டா போ கிராமம்) என்று பெயரிட்டு, பெயர்ப்பலகையை வைக்க, அதுவே இவ்விடத்தைக் குறிக்கும் பெயராகியது. இதன் தொடர்ச்சியாக இலங்கை எங்கும், ‘கோட்டா கோ ஹோம்’ ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. வௌிநாடுகளில் வாழும் புலம்பெயர் இலங்கையர்கள், அந்நாடுகளிலும் ‘கோட்டா கோ ஹோம்’ ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தார்கள். மிகவும் அமைதியான வழியில் போராடுவதற்கான தமது உரிமையை பொதுமக்கள் வெற்றிகரமாகப் பயன்படுத்தி, ராஜபக்‌ஷர்களுக்கு கடும் அழுத்தத்தை வழங்கி, அதன் விளைவாக கோட்டாவையும் மஹிந்தவையும் தவிர, மற்றைய ராஜபக்‌ஷர்கள் எல்லாரும் பதவி விலகியிருந்த நிலையில்தான், இந்த ‘அறகலய’வின் அடுத்த கட்டம் உருப்பெற்றது. அது, அன்று பிரதமராக இருந்த மஹிந்தவின் பதவி விலகல். மஹிந்த பதவி விலகும் தினமன்று, அலரி மாளிகையில் கூட்டிய பெருங்கூட்டம், அங்கிருந்து புறப்பட்டு, அலரிமாளிகைக்கு முன்னிருந்த ‘மைனா கோ கம’ ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கிவிட்டு, ‘கோட்டா கோ கம’ நோக்கிப் பயணித்து, அங்கிருந்த ஆாப்பாட்டக்காரர்களைத் தாக்கியது. இந்தக் கோரத் தாக்குதலுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்; தாக்குதலில் ஈடுபட்டவர்கள், தாக்குதலில் ஈடுபடத் தூண்டியவர்கள் என அனைவரும் நீதியின் முன்னே நிறுத்தப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் சாதாரண மக்கள் எவருக்கும் இருக்க முடியாது. ஆனால், இதே தினம்தான் இந்த ‘அறகலய’வின் இன்னொரு பக்கம் வௌிச்சத்துக்கு வந்தது. அலரிமாளிகையிலிருந்து வந்த காடையர்கள், ‘கோட்டா கோ கம’ ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கிவிட்டார்கள் என்று தெரிந்ததும், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அங்கு விரைந்தார்கள். ஜே.வி.பி தலைவர் அநுர குமார, ‘கோட்டா கோ கம’வுக்கு வந்தபோது, ஒரு ‘ஹீரோ’ போல அவருக்கான வரவேற்பு, சில ஆர்ப்பாட்டக்காரர்களால் வழங்கப்பட்டிருந்தது. அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்னவோடு அங்கு வந்தபோது, அவர்கள் மீது சில ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி, அவர்களை ஓடஓட விரட்டினார்கள். பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன அங்கு வந்தபோது, அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இதுதான், பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டு, இயற்கையாக வளர்ந்த ‘அறகலய’வின் முன்னரங்கிற்கு ஜனநாயக விரோத சக்திகள் வந்துவிட்டன என்பது அனைவருக்கும் வௌிப்படையாகத் தெரியவந்த முக்கிய சந்தர்ப்பம். தொடர்ந்து, அடுத்த தினங்களில், ராஜபக்‌ஷர்கள், மற்றும் அவரது ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், சொத்துகள் எரியூட்டப்பட்டன. அமைதி வழியில் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த ஜனநாயக போராட்டத்துக்குள் ஜனநாயக விரோத சக்திகள் நுழைந்து, தம் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கத் தொடங்கியது, தற்போது ‘வௌ்ளிடை மலை’யாகத் தெரிந்தது. பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டு, இயற்கையாக வளர்ந்த ‘அறகலய’வை சொந்தம் கொண்டாட, ஜனநாயக விரோத இடதுசாரி சக்திகள் தொடங்கின. ‘அறகலய’ முளைவிட்டு, வேர்விட்டு வளரும் வரை, பின்னரங்கில் பதுங்கியிருந்த இந்த ஜனநாயக விரோத இடதுசாரி சக்திகள், தற்போது, அதனை தாமே வழிநடத்த வேண்டுமென முன்னரங்கிற்கு முன்னேறியிருந்தார்கள். இதன் விளைவாக, ஜூலை ஒன்பதாம் திகதி, அதுவரை காலமும் எந்த வன்முறையும் சட்டவிரோத நடவடிக்கைகளுமின்றி அமைதிவழியில் போராடி, நிறையவற்றைச் சாதித்துக்கொண்ட மக்கள் போராட்டம், இந்த இடதுசாரி ஜனநாயக விரோதிகளின் வழிநடத்தலில் சிக்கி, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை, பிரதமர் காரியாலயம் என்பவற்றுக்குள் உடைத்துக்கொண்டு உள்நுழைந்தது. இதுதான் சந்தர்ப்பம் என்று உணர்ந்த, ரணில் விக்கிரமசிங்கவோடு தனிப்பகை கொண்டிருந்த கூட்டமொன்று, ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு முன்னால் கூடியது. அதன் விளைவாக, ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரியூட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, நாட்டை விட்டு வௌியேறினார் கோட்டாபய ராஜபக்‌ஷ. அடுத்து, பாராளுமன்றத்தைக் கைப்பற்ற ஒரு கூட்டம், இதே இடதுசாரி ஜனநாயக விரோத சக்திகளின் தலைமையில் சென்றது. ரணில் விக்கிரமசிங்கவின் உறுதியான முடிவால், அந்த நடவடிக்கை தகர்க்கப்பட்டது. மேற்சொன்ன வன்முறைகளைக் கண்ட பொதுமக்களுக்கு, இந்த ஜனநாயக விரோத சக்திகளின் நிகழ்ச்சி நிரல் புரிந்தது. மக்களுக்கு ஆட்சியாளர்கள் மீதுதான் கோபமேயன்றி, ஜனநாயக ஆட்சி முறையை, அரசியலமைப்பை, சட்டத்தின் ஆட்சியை எல்லாம் தகர்ப்பது மக்களின் விருப்பமோ, நிகழ்ச்சிநிரலோ அல்ல. இந்த இடதுசாரி ஜனநாயக விரோத சக்திகள், மக்களின் ஆட்சியாளர்கள் மீதான கோபத்தை, இலங்கையின் ஜனநாயக கட்டமைப்புகளைத் தகர்த்து, தம்முடைய இடதுசாரி சர்வாதிகார நிகழ்ச்சிநிரலை முன்னெடுக்கப் பயன்படுத்த முனைகின்றமை மக்களுக்கு தௌிவாகப் புரிந்ததால்தான், ஜூலை ஒன்பதாம் திகதிக்குப் பிறகு, மக்கள் தாமாக, இதுவரை மீண்டும் வீதிக்கு இறங்கவில்லை. இடதுசாரி கட்சிகளும் அவை சார்ந்த அமைப்புகளும் ஒரு 400-500 பேர்களைக் கொண்டு ஆர்ப்பாட்டங்களை நடத்தகின்றனவே அன்றி, ‘அறகலய’ போல பொதுமக்கள் இவர்களின் ஜனநாயக விரோத நிகழ்ச்சி நிரலுக்குள் மீண்டும் வர விரும்பவில்லை என்பது, மிகத் தௌிவாகவே தெரிகிறது. பொதுமக்கள், ரணில் விக்கிரமசிங்கவுக்கு நேரம் வழங்கிப் பார்க்க விரும்புகிறார்கள் என்றே தெரிகிறது. இடதுசாரிகளும் தற்போது தமது தனிப்பட்ட காரணங்களுக்காக, ரணிலோடு முறுகிக்கொண்டு நிற்கும் ரணிலின் முன்னாள் ஆதரவாளர்களான அரசியல்வாதிகளும் படித்த, ஆங்கிலம் பேசும் ‘சிவில் சமூகமும்’ எதிர்கால அரசியல் கனவோடு, இந்தப் போராட்டத்தை தமது அரசியல் வாழ்க்கைக்கான திறவுகோலாகக் கருதும் சில இளைஞர்களும், இன்று ரணில் எதிர்ப்பை மும்முரமாக முன்னெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்குத் தமது நிகழ்ச்சி நிரலை இங்கு முன்னெடுக்க விரும்பும் சில வௌிநாடுகளும் பின்னணியில் ஆதரவளித்து வருகின்றன. இரண்டு மாதங்களுக்கு மேலாக, ரணில் எதிர்ப்பை கடுமையான முன்வைக்க இவர்கள் பகிரதப்பிரயத்தனப்பட்டாலும், இதுவரையும் இவர்களால் அவர்களது நிகழ்ச்சிநிரலுக்குள் பொதுமக்களைக் கொண்டு வரமுடியவில்லை. இதுவரை மக்கள், அதற்கு இடமளிக்கவில்லை என்பது மக்களின் வெற்றி. இவர்களது கைப்பிள்ளைகளல்ல நாங்கள் என்பதை, மக்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதனை ரணில் விக்கிரமசிங்க, தன்னுடைய வெற்றியாக எண்ணிவிடக் கூடாது. மக்கள் அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை பார்ப்பதற்காக நேரமளித்து இருக்கிறார்கள். 6.9 மில்லியன் மக்களின் பேராதரவோடு வந்த கோட்டாவை வௌியேற்ற, இராணுவம், பொலிஸ் என எதற்கும் அஞ்சாமல் வீதிக்கிறங்கிய பொதுமக்களுக்கு, நாளை ரணிலை வௌியேற்ற வீதிக்கிறங்க முடியாது என்றில்லை. ஆகவே, மக்களுக்கு நன்மை செய்வதினூடாக மக்கள் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டிய பெருங்கடமை ரணிலுக்கு இருக்கிறது. ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற பெரும்பான்மையைத் தக்கவைக்க சில விட்டுக்கொடுப்புகளைச் செய்ய வேண்டிய கையறு நிலையில் நிற்கலாம். ஆனால், அவர் மக்களை முன்னிறுத்தி அரசியல் செய்தால் மட்டுமே, அவருக்கு அரசியலில் எதிர்காலம் இருக்கும் என்பது, பழுத்த அரசியல்வாதியான அவருக்கு சொல்லிப்புரிய வைக்க வேண்டியதொன்றல்ல; மக்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அறகலய-எனும்-அரசியல்-ஆயுதம்/91-304414
  14. மோசமானவர்கள் எனக் கருதப்படுபவர்களுக்கு மக்கள் வாக்களிப்பது ஏன்? என். கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan கடந்த பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் இரண்டாவது அதிகப்படியாக 316,544 விருப்பு வாக்குகள் பெற்று பாராளுமன்ற உறுப்பினராகியவர் பிரசன்ன ரணதுங்க. ‘நல்லாட்சி அரசாங்கம்’ அமைந்த 2015 பொதுத் தேர்தலில் கூட, கம்பஹா மாவட்டத்தில் அதிகப்படியான விருப்பு வாக்குகளாக 384,448 வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தவர் பிரசன்ன ரணதுங்க. அன்று கம்பஹா மாவட்டத்தில் ஆளும் கட்சியாக அமைந்த ஐக்கிய தேசிய கட்சி பட்டியலில் முதலிடம் பிடித்த ரஞ்சன் ராமநாயக்க பெற்றுக்கொண்ட விருப்பு வாக்குகள் 216,463 தான்! இந்தப் பிரசன்ன ரணதுங்க, மேல்மாகாண முதலமைச்சராக இருந்தபோது, வணிகர் ஒருவரை மிரட்டிப் பணம் பறிக்க முயன்ற குற்றச்சாட்டில், கொழும்பு மேல் நீதிமன்றத்தால் குற்றவாளியாகக் காணப்பட்டு, ஐந்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனையும், 25 மில்லியன் ரூபாய் தண்டப்பணமும் தண்டனையாக விதிப்பட்டுள்ள ஒரு குற்றவாளி. குறித்த தீர்ப்புக்கெதிராக மேன்முறையீடு செய்துவிட்டு தனது அரசியல் பயணத்தைத் தடையின்றித் தொடர்கிறார். பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிராகச் சொல்லப்படும் ஒரே குற்றச்சாட்டு இதுவல்ல. இவ்வருட ஆரம்பத்தில், அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையரான அனுஷ்கா ரஞ்சீவி டி சில்வா என்பவர், ஓர் ஊடக சந்திப்பை நடத்தி பிரசன்ன ரணதுங்க, தலவத்துகொடையில் உள்ள அரசுக்கு சொந்தமான காணியை அண்மித்துள்ள இரண்டு காணிகளை பலவந்தமாக சுவீகரிக்க முற்பட்டுள்ளார் என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதையெல்லாம் தாண்டி பிரசன்ன ரணதுங்க தேர்தல்களில், இலங்கையின் சனத்தொகை அதிகமான மாவட்டங்களில் ஒன்றாக கம்பஹா மாவட்டத்தில், அதிகப்படியாக விருப்பு வாக்குகளைப் பெற்று வெல்கிறார். பலமுறை அடிதடி அடாவடிக் குற்றச்சாட்டுக்களில் கைதாகியவர் இன்றைய இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த. இவரும் இவரது தம்பியாரும் செய்து வரும் அடாவடித்தனங்கள் மிகப் பிரபல்யமானவை. இவருக்கும், இவரது தம்பிக்கும் எதிராக சுற்றுச்சூழலை அழித்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கட்டுள்ளன. இன்று (12) நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் இவருக்கெதிராக வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. ஆனால்? இந்த சனத் நிஷாந்த தான் 2015 மற்றும் 2020இல் நடந்த இரண்டு பொதுத் தேர்தல்களிலும் புத்தளம் மாவட்டத்திலேயே அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்டார். பிள்ளையான் என்றறியப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஜோசப் பரராஜசிங்கம் கொலைக் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் இருந்துகொண்டே கடந்த பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிக விருப்பு வாக்குளைப் பெற்று வெற்றியீட்டியிருந்தார். பின்னர் 2021இல் குறித்த குற்றச்சாட்டிலிருந்து நீதிமன்றத்தால் அவர் விடுதலை செய்யப்பட்டிருந்தார். ஆயினும் சிவில் சமூகம் பிள்ளையான் மீது கடுமையான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. ஆனால், அப்படியான சூழலிலும், அவர் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிக வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியிருக்கிறார். எத்தனையோ வழக்குகள், குற்றச்சாட்டுகள் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காடழிப்பு தொடர்பில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் மீண்டும் தனது சொந்தச் செலவில் மரம் நாட்டவேண்டும் என்ற தீர்ப்பும் அளிக்கப்பட்டிருந்தது. இத்தனையையும் தாண்டி கடந்த பொதுத் தேர்தலில் ரிஷாட் பதியுதீன் வன்னி மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். பொதுத் தேர்தலுக்கு முன்பதாக ஜூலை 31, 2020இல் இரத்னபுரி மேல் நீதிமன்றத்தால் கொலைக்குற்றவாளியாகக் காணப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகர, 2020 ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில், இரத்னபுரி மாவட்டத்தில் இரண்டாவது அதிகபட்ச விருப்பு வாக்குகளாக 104,237 வாக்குகள் பெற்று வெற்றியீட்டியிருந்தார். ஆயினும் இவர் 2021இல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் மேன்முறையீட்டில் கொலைக்குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் மக்கள் வாக்களித்தபோது, அவர் கொலைக்குற்றத்திற்காக மரணதண்டனை விதிக்கப்பட்டவராக இருந்தார். டக்ளஸ் தேவானந்தா, இந்தியாவில் தேடப்படும் ஒரு குற்றவாளி. டக்ளஸ் தலைமையிலான துணை இராணுவக் குழு மீது படுகொலை, ஆட்கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை பல தரப்பினரும் முன்வைத்து வருகிறார்கள். ஆயினும் கூட, கடந்த பொதுத் தேர்தலில், யாழ். மாவட்டத்தில், தமிழரசுக் கட்சியின் ம.ஆ சுமந்திரன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் சீ.வீ விக்னேஸ்வரன் ஆகியோரைவிட அதிக விருப்பு வாக்குளை டக்ளஸ் தேவானந்தா பெற்றிருந்தார். மேற் சொன்ன எல்லாவற்றிலும் ஒரு விடயம் துலங்கி நிற்பதை நாம் அவதானிக்கலாம். மேற்சொன்ன அனைவரதும் வரலாறும் நடத்தையும் இயல்பும் என எல்லாவற்றையும் அறிந்தும், அந்த மக்கள் மேற்சொன்னவர்களை தமது பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். மேற்சொன்ன எவரும் போட்டியிட்ட முதல் தேர்தல் கடந்த பொதுத் தேர்தல் அல்ல. அதற்கு முன்னர் மக்களை அவர்களை அறியாதவர்களாக இருந்தவர்களும் அல்ல. ஆனால் அம்மக்கள் குறித்த நபர்களை, அவர்கள் பற்றிய விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள், அவர்களது நடத்தைகளைத் தாண்டி, ஏகபோகமாக வாக்களித்து, தமது பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றால், அது குறித்தவர்களைத் தேர்தலில் போட்டியிட அனுமதித்த சட்டத்தின் குற்றமா, அவர்களுக்கு தேர்தல் பட்டியலில் இடமளித்த கட்சியின் குற்றமா? யார் குற்றம்? குறித்த நபர்கள் மீது கடுமையான விமர்சனத்தை, படித்த, தம்மை அறிவு வாய்ந்த சிவில் சமூகமாக முன்னிறுத்தும் கூட்டமொன்று தொடர்ந்தும் முன்வைத்து வருகிறது. குறித்த நபர்கள் தெரிவுசெய்யப்படுவது ஜனநாயக விரோதமானது என்றுகூட சிலர் கருத்துரைக்கிறார்கள். குறித்த நபர்களுக்கு அமைச்சுப் பதவிகள் தரப்படக்கூடாது என்றுகூட சிலர் வாதிடுகிறார்கள். ஆனால், இந்த ‘சிவில் சமூகம்’ என்றும், தாம் ‘மக்களின் குரல்’ என்று தம்மை முன்னிறுத்தும் இவர்கள் மறந்துவிடுகிற ஒரு விடயம், இதே மக்கள்தான் மேற்சொன்னவர்களுக்கு விருப்பு வாக்களித்து மேற்சொன்னவர்களை தமது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். மேற்சொன்னவர்கள் படித்த, தம்மை அறிவுவாய்ந்த சிவில் சமூக முன்னிறுத்தும் கூட்டத்தின் பிரதிநிதியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் மாவட்ட மக்கள், அவர்களை தமது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதுதான் நாம் ஏற்க விரும்பாவிட்டாலும் முகத்திலறையும் உண்மையாக இருக்கிறது. இவர்கள் தேர்ந்தெடுக்கப்படக் கூடாது என்று கர்ஜிப்பதை விட, குறித்த மக்கள் இவர்களுக்கு ஏன் வாக்களிக்கிறார்கள் என்று ஆராய்ந்தால், சிலவேளைகளில் இதுபற்றிய மேலதிகப் புரிதல் ஏற்படும். ஆனால், இது முறையான வழியில் செய்யப்பட வேண்டியதொரு ஆராய்ச்சியாகும். இங்கு ‘சிவில் சமூகமாக’ தம்மை முன்னிறுத்துகிறவர்களுக்கும், உண்மையான மக்களுக்கும் இடையில் கணிசமான இடைவெளி காணப்படுவது பல சந்தர்ப்பங்களில் உணரப்படுகிற ஒன்று. இது, ‘சிவில் சமூகமாக’ தம்மை முன்னிறுத்துவோர் உண்மையின் மக்களின் குரலாக இருக்கிறார்களா என்ற கேள்வியை நிச்சயமாக எழுப்பவே செய்கிறது. பிரதிநிதித்துவ ஜனநாயகக் கட்டமைப்பு ஒன்றில், மாற்றம் என்ற ஒன்று வரவேண்டுமானால், அது கட்சிகளில், அரசியல்வாதிகளில் இருந்து வருவது என்பது சாத்தியக்குறைவானது. மாற்றம் என்பது மக்களிலிருந்து வரவேண்டும். அதேவேளை, தன்னைத்தானே ‘சிவில் சமூகமாக” முன்னிறுத்தும் கூட்டமொன்று விரும்புகிறவர்கள்தான் பொருத்தமானவர்கள், ஏனையோர் பொருத்தமற்றவர்கள் என்ற சிந்தனையும் ஒருவகையில் பார்த்தால் ஜனநாயக முரணானதுதான். அது, ‘உயர் குழாம் ஆட்சியின்’ பாற்பட்ட சிந்தனையே அன்றி, பிரதிநிதித்துவ ஜனநாயகத்திற்கு விரோதமானது. மறுபுறத்தில், குற்றவாளிகள், ஊழல் பேர்வழிகள் ஒரு குறிப்பிட்ட மக்கள் குழு மீது சலுகை, இன, மத, அல்லது சாதி அடையாளம், தமக்கான நன்மைகள், அல்லது பயம் போன்றவற்றின் காரணத்தால் பெற்றுக்கொண்டுள்ள செல்வாக்கால் வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவது ஜனநாயகமா என்ற கேள்வியிலும் நியாயம் இல்லாமல் இல்லை. ஜனநாயகம் என்பது முழுத்திருப்திகரமானதோர் ஆட்சிமுறையல்ல; மாறாக, அது உள்ளவற்றில் சிறந்தது என்பதுதான் உண்மை. குற்றவாளிகள், ஊழல்வாதிகள், நேர்மையற்றவர்கள் அரசியலுக்கு வரக்கூடாதென்றால், அதனைச் செய்வதற்கான பலம் மக்களிடம்தான் இருக்கிறது. மக்கள் நினைத்தால், ஒரே தேர்தலில் அதனைச் செய்துவிடலாம். மக்கள் அதனைச் செய்யாவிட்டால், அதுதான் மக்கள் விருப்பம் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மோசமானவர்கள்-எனக்-கருதப்படுபவர்களுக்கு-மக்கள்-வாக்களிப்பது-ஏன்/91-304013
  15. பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு எதிரான தென் இலங்கையின் விழிப்பு என். கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பதன் காரணமாக, தென்இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு எதிரான பிரக்ஞை அதிகரித்துள்ளது. ஏறத்தாழ 44 வருடங்கள் அமலில் இருக்கும் ஒரு தற்காலிக சட்டம், இந்நாட்டின் நிறைவேற்றுத்துறையிடம், தான் நினைக்கும் எவரையும், பயங்கரவாதி என்ற சந்தேகத்தின் பெயரில், நீதித்துறையின் தலையீடின்றித் தடுத்து வைக்கக்கூடிய அதிகாரத்தை, ஒப்புக்கொடுத்திருந்தது. இதுகுறித்து, தென்இலங்கை 44 ஆண்டுகள் கழித்தாவது, ஓரளவு விழித்துக்கொள்ள முனைவது நல்ல விடயம்தான். தென்இலங்கை, இந்த விழிப்பை அடைய, 44 ஆண்டுகள் தேவைப்பட்டதற்குக் காரணம், இத்தனை காலமும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் எனும் வாள், குறிப்பிடத்தக்க அளவுக்கு, இலங்கையின் பெரும்பான்மை இனத்தவரை நோக்கி பயன்படுத்தப்படவில்லை. முதலில் தமிழர்கள்; பிறகு முஸ்லிம்கள்; இடையில் கொஞ்ச மாக்ஸிஸவாதிகள், ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் என, பயங்கரவாத தடுப்புச் சட்டம் பெரும்பான்மை இனத்துக்கு ‘ஒவ்வாத’ நபர்களாக முன்னிறுத்தப்பட்டவர்களையே பதம்பார்த்தது. இதனால், இலங்கையின் பெரும்பான்மையினம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கோரமுகம் பற்றி, பெரிதும் அக்கறை கொண்டிருக்கவில்லை. ஆனால், இன்று, ‘கோட்டா கோ ஹோம்’ என்ற, இலங்கையின் பெரும்பான்மை இனத்தால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியவர்களுக்கு எதிராக, பயங்கரவாத தடுப்புச் சட்டம் எனும் ‘கூர்வாள்’ திரும்பலாம் என்ற நிலையில், அதற்கு எதிரான விழிப்பு, தென்இலங்கையில் உருவாவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்நிலையில், பயங்கரவாத தடுப்புச் சட்டம் பற்றிய ஒரு மீட்டல், மீள்பார்வை காலப்பொருத்தம் மிக்கதாகும். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பிறப்பு 1977 - 1978 ஆம் ஆண்டு காலப்பகுதியில், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தாக்குதல் நடவடிக்கைகள் பரவலாக இடம்பெற்றன. இது, அன்றைய ஜே. ஆர் ஜெயவர்தன தலைமையிலான அரசாங்கத்துக்கு பெரும் சவாலாக மாறிக்கொண்டிருந்தது. குறிப்பாக, வடக்கில் குற்றப் புலனாய்வுப் பொலிஸார் மீது, கொலைத் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்தேறின. இவற்றில், பல தாக்குதல்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பகிரங்கமாகப் பொறுப்பேற்ற அறிக்கை, 1978 ஏப்ரல் 25 ஆம் திகதி வெளியானதன் பின்னர், ஜே. ஆர் ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதையொத்த ஆயுதக் குழுக்களையு,ம் தடை செய்யும் சட்டத்தை நாடாளுமன்றத்தில் 1978 மே மாதம் நிறைவேற்றியது. அத்துடன், வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட 38 பேரை, பொலிஸாரால் தேடப்படுவோர் பட்டியலில் வெளியிட்டிருந்தது. இதன் பின்னர், பொலிஸாரும் இராணுவத்தினரும் வடக்கு, கிழக்கில் குவிக்கப்பட்டபோதும், இந்த ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளைக் குறைக்க முடியவில்லை. 1978 செப்டெம்பர் ஏழாம் திகதி, இரத்மலானையில் உள்ள கொழும்பு விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இலங்கையின் தேசிய விமானசேவையான ‘எயார் சிலோன்’ க்குச் சொந்தமான ‘அவ்ரோ’ விமானம், விடுதலைப் புலிகளால் வெடிக்க வைக்கப்பட்டது. இந்தத் தாக்குதல், அரசாங்கத்தைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதுடன், ஆயுதக் குழுக்களுக்கு எதிராக, உடனடி அதிரடி நடவடிக்கையை எடுக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியிருந்தது. உடனடியாகப் பொலிஸ், இராணுவம் போன்ற படையணிகளின் கெடுபிடிகள், நாடு முழுவதும் பலப்படுத்தப்பட்டன. இதனால், தமிழ் மக்கள் பல இன்னல்களைச் சந்திக்க நேரிட்டது. இதன் தொடர்ச்சியாக, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்யும் சட்டத்துக்கு மாற்றாக, 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம் 1979 ஜூலை மாதத்தில் நிறைவேற்றப்பட்டது. பல இளைஞர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள், அரசியல் ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் உட்பட்டப் பலரும், ‘சந்தேகம்’ என்ற ஒரே காரணத்தின் நிமித்தம், வேறு எந்த அடிப்படைச் சாட்சிகளினது தேவை இன்றி, கைது செய்யப்படவும் காலஎல்லை இன்றித் தடுத்து வைக்கப்படவும் இந்தப் பயங்கரவாத தடுப்புச் சட்டமும் அவசர காலச் சட்டமும் காணமாக இருந்தன. ஏறத்தாழ மூன்று தசாப்த காலத்துக்கும் மேலாக, எதேச்சாதிகாரக் கைது, தடுத்து வைத்தல் போன்ற எதேச்சாதிகாரத்தை, இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கியது. 1978ஆம் ஆண்டின், குடியரசின் இரண்டாவது யாப்பின் 13 ஆவது சரத்தானது, எதேச்சாதிகாரமான கைது, தடுத்துவைத்தல் மற்றும் தண்டனை என்பவற்றுக்கு எதிரான அடிப்படை உரிமையை உறுதி செய்கிறது. சுருங்கக் கூறின், ஒருவர் சட்டப்படியன்றி, வேறு எக்காரணத்தின் நிமித்தமும் கைது செய்யப்படவோ, தடுத்துவைக்கப்படவோ, தண்டனைக்கு உள்ளாக்கப்படவோ முடியாது. அப்படிச் செய்வதானது அந்நபரின் அடிப்படை உரிமையை மீறும் செயலாகும். 1978 ஆம் ஆண்டின், குடியரசின் இரண்டாவது யாப்பின் மனித உரிமைகள் பற்றிய அத்தியாயத்தில், இந்தச் சரத்து உள்ளடக்கப்பட்டுள்ள போதிலும், அதே அத்தியாயத்தின் 15(7) சரத்தானது தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு, பொதுச் சுகாதாரம், ஒழுக்கம், மற்றவர்களது உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாத்தல், ஒரு ஜனநாயக சமூகத்தில் பொதுநலன் நோக்கிலான, நியாயமான தேவைப்பாடுகள் ஆகிய காரணங்களுக்காக 13 ஆம் சரத்து வழங்கிய அடிப்படை உரிமைகள் மட்டுப்படுத்தப்படலாம் என்கிறது. இந்தப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டுதான், நாம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நோக்க வேண்டும். நிர்வாகத்துறையின் கையில் எதேச்சாதிகாரம் இலங்கையின் குற்றவியல் நடைமுறைச் சட்டமானது, நபரொருவரைக் கைது செய்யும் நடைமுறை, கைது செய்த பின்னர் நீதிமன்றில் ஆஜர் செய்யவேண்டிய நடைமுறை என்பன பற்றிய சட்ட ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது. இதன்படி, கைதுசெய்யப்படும் நபரொருவரை 24 மணி நேரத்துக்குள் பொலிஸார், நீதவான் முன்பு ஆஜர்படுத்த வேண்டும். மேலும், விசாரணை செய்யக் காலம் வேண்டுமெனில், நீதிவான் உத்தரவுக்கமைய மேலும், 24 மணிநேரம் தடுத்து வைக்கப்படலாம். ஆகவே, கைது செய்யப்படும் நபரொருவர், எக்காரணம் கொண்டும் எதுவித குற்றச்சாட்டக்களும் இன்றி, 48 மணிநேரத்துக்கு மேலாகத் தடுத்து வைக்கப்பட முடியாது. இதற்கு விலக்காக, குறித்த நபரொருவர் குற்றமொன்றோடு சம்பந்தப்பட்டுள்ளார் என்று சந்தேகிக்க அல்லது நம்ப, அமைச்சருக்கு உரிய காரணங்கள் உண்டெனின், அந்நபரைக் கைது செய்யவும் அமைச்சரின் உத்தரவுப்படி, ஒரு முறைக்கு அதிகபட்சம் மூன்று மாதம் என்ற அடிப்படையில், அதிக பட்சம் 18 மாதங்கள் வரை தொடர்ந்து தடுத்து வைக்க முடியும் என்று, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் ஒன்பதாவது சரத்து, அமைச்சருக்கு (அதாவது, நிர்வாகத்துறைக்கு) அதிகாரத்தை வழங்கியது. அதுமட்டுமல்ல, அந்நபரை எங்கு, எந்தச் சூழலின் கீழ் தடுத்து வைப்பது என்று தீர்மானிக்கும் அதிகாரத்தையும் அமைச்சருக்கு, அதே சரத்து வழங்கியது. அத்தோடு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 10 ஆவது சரத்தானது, ஒன்பதாவது சரத்தின் கீழமைந்த அமைச்சரொருவரின் உத்தரவானது, எந்த நீதிமன்றத்தின் முன்பும் கேள்விக்கு உட்படுத்தப்பட முடியாது என்று குறிப்பிட்டது. ஆகவே, நீதித் துறையின் தலையீடின்றி, நபரொருவரை அமைச்சரின் எண்ணத்தின்படி கைது செய்யவும், அதிக பட்சம் 18 மாதங்கள் வரை அமைச்சர் எண்ணும் இடமொன்றில் தடுத்து வைக்கவும் கூடிய, பயங்கரமானதொரு எதேச்சாதிகாரத்தை நிர்வாகத்துறைக்கு, இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் வழங்கியது. இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தோடு அவசரகாலச் சட்டமும் இணையும்போது, நிலைமை இன்னும் மோசமாகும். அவசர காலச் சட்டத்தின் கீழ், அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போது, நபரொருவரைக் கைது செய்து எல்லையின்றிய காலம் தடுத்து வைக்கும் அதிகாரமானது, பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்படுவதே இங்கு யதார்த்தமாகும். அத்தோடு அவசரகாலச் சட்ட ஒழுங்குகளின் கீழ் கைது செய்யப்படும் நபரொருவரைப் பொலிஸ் மா அதிபர் தீர்மானிக்கும் இடமொன்றில், அவரது வழிகாட்டலின் படி தடுத்து வைக்க முடியும் என்ற ஏற்பாடும் காணப்பட்டது. ஆகவே, பயங்கரவாதத் தடைச் சட்டமும் அவசர காலச்சட்டமும் தனிநபர்களைக் கைது செய்து, தடுத்து வைக்கும் அதிகாரத்தை நிர்வாகத் துறைக்கு வழங்கியது. தடுத்து வைக்கும் இடங்களையும் தீர்மானிக்கும் பலம் அமைச்சருக்கு இருந்தமையால், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பலரும், தடுப்புக் காவல் சிறைகளில் அல்லாமல், இராணுவ முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டதாகப் பரவலான குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. ஆகவே, பயங்கரவாதத் தடுப்புச்சட்டம், அரசியலமைப்பு ஒரு குடிமகனுக்கு வழங்கும் அடிப்படை பாதுகாப்பைக் கூட, இல்லாதொழிக்கத்தக்க பலத்தை, நிர்வாகத்துறையிடம் சரணடையச் செய்துள்ளது என்றால் மிகையல்ல. (அடுத்த திங்கட்கிழமை தொடரும்) https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பயங்கரவாத-தடுப்புச்-சட்டத்துக்கு-எதிரான-தென்-இலங்கையின்-விழிப்பு/91-303190
  16. ஆட்சியைப் பிடிக்கும் மகுட வாசகம் ‘சிஸ்டம் சேஞ்ச்’ என். கே அஷோக்பரன் Twitter: nkashokbharan ‘சிஸ்டம் சேஞ்ச்’ (கட்டமைப்பு மாற்றம்) என்ற சொற்றொடர், சஜித் பிரேமதாஸ முதல் அநுர குமார திஸாநாயக்க வரை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும், உச்சரிக்கும் மந்திரமாக மாறியுள்ளது. ஆனால், இது ஆட்சியைப் பிடிக்க விரும்பும் அரசியல்வாதிகள் மட்டும் சொல்லும் வார்த்தை அல்ல! பொதுவாகவே சமகால யதார்த்தத்தில், அதிருப்தி கொண்டுள்ள பலரும், ‘சிஸ்டத்தின்’ மீது பழிபோடுவது என்பது, சர்வசாதாரணமான விடயமாகிவிட்டது. ஜனநாயகம் என்பது, ஆட்சியைத் தீர்மானிக்கும் பலத்தை மக்களிடம் கொடுத்திருக்கிறது. இன்று, நாம் அனுபவிக்கும் ஜனநாயகக் கட்டமைப்பும் மனித உரிமைகள் தரும் பாதுகாப்பும், மனித சமூகத்தின் பல நூற்றாண்டு போராட்டத்தின் பலனாகும். ஜனநாயகம் என்பது, ஓர் இரவில் உருவாகவில்லை. ஜனநாயகம், காலவோட்டத்தில் பல மாறுதல்களை தன்னகத்தே ஏற்றுக்கொண்டுள்ளது. உலக வரலாற்றில், ஜனநாயகத்துக்கு மாற்றாக, பல ‘சிஸ்டங்கள்’ பரீட்சிக்கப்பட்டன; இன்றும் பரீட்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஜனநாயகம் என்பதும், கூர்ப்படைந்துகொண்டேதான் வருகிறது. அதுதான் இந்த ஜனநாயக ‘சிஸ்டத்தின்’ சிறப்பு. ஆனால், இந்த ஜனநாயகக் கட்டமைப்புகள் மீது கூட, மக்களுக்கு அதிருப்தி ஏற்படுவது ஆச்சரியப்படும் விடயமல்ல! ஏனென்றால், ஜனநாயகம் என்பது குறைகளற்ற, முழுத் திருப்திதரும் கட்டமைப்பு அல்ல; அப்படியொரு கட்டமைப்பு இருக்கவும் முடியாது. பல காரணங்களுக்காக மக்கள், தங்கள் நாடுகளில் ஜனநாயகத்தின் செயற்பாட்டில் அதிருப்தி அடைந்துள்ளனர். உதாரணமாக, அரசியல்வாதிகள், ஊழல்வாதிகள் அல்லது, தங்கள் நாட்டில் பொருளாதார நிலைமை மோசமாக உள்ளது என்று நினைப்பவர்கள், ஜனநாயகத்தின் மீது அதிருப்தி அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். மாறாக, தங்கள் நாடுகளில் உள்ள முக்கிய அரசியல் நிறுவனங்கள், போதுமான அளவில் செயற்படுவதைப் பார்ப்பவர்கள் - உதாரணமாக, நீதிமன்றங்கள் அனைவரையும் நியாயமாகவும் சமமாகவும் நடத்துகின்றன; அல்லது, மக்கள், தங்கள் கருத்துகளைப் பொதுவில் வெளிப்படுத்தலாம் என்று நினைப்பவர்கள் - ஜனநாயகம் செயற்படும் விதத்தில், அதிக திருப்தி அடைகிறார்கள். இந்த இடத்தில், ஒரு விடயத்தை கவனித்தல் முக்கியமாகிறது. இலங்கை பின்பற்றும் அரசியலமைப்பு ரீதியிலான பிரதிநிதித்துவ ஜனநாயகம் நடைமுறையிலுள்ள ஒரு நாட்டில், அந்த மக்களில் பெரும்பான்மையொன்றுதான், அந்த நாட்டை ஆளப்போகும் தரப்பைத் தேர்ந்தெடுக்கிறது. அந்தத் தேர்ந்தெடுத்தலானது, குறித்த தரப்பினது கொள்கை, நிலைப்பாடு சார்ந்து அமைகிறது. இலங்கையை பொறுத்தவரையில், இலங்கையின் பெரும்பான்மை என்பது கிட்டத்தட்ட ஏழு தசாப்த காலமாகவே சிங்கள-பௌத்த பேரினவாதத்தையே ஆதரித்து வந்திருக்கிறது. பொருளாதாரக் கொள்கைகள் மாறியிருக்கின்றன; சமூகக் கொள்கைகள் மாறியிருக்கின்றன. ஆனால், பேரினவாதம் மட்டும் தொடர்ந்தும் இலங்கை அரசியலின் அடிநாதமாக இருந்துகொண்டுதான் இருக்கிறது. இடதுசாரிகளோடு ஆட்சியமைத்து, இலங்கையின் முதலாவது குடியரசுயாப்பைக் கொண்டுவந்த, ஒரு மூடிய பொருளாதாரத்துக்குள் இலங்கையை தள்ளிய சிறிமாவோவுக்கும், “சிறிமாவோவின் இன்னல்மிகு ஆட்சியிலிருந்து மக்களை மீட்பேன்” என்று சொல்லி பதவிக்கு வந்து, இரண்டாவது குடியரசு யாப்பை அறிமுகப்படுத்தி, திறந்தபொருளாதாரத்தை இலங்கைக்கு தந்த ஜே.ஆருக்கும், பொதுவாக இருந்த கொள்கை ‘சிங்கள-பௌத்த’ பேரினவாதம் ஆகும். இலங்கை, ஒற்றையாட்சி நாடு; இலங்கையின் ஒரே உத்தியோகபூர்வமொழி சிங்களம்; இலங்கை அரசு, பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் என்பதோடு அதனைப் பாதுகாப்பது அரசின் கடமையாகும் என்பனவெல்லம், முதலாம் மற்றும் இரண்டாம் குடியரசு யாப்புகளில் மாறாமல் தொடர்ந்த விடயங்கள். இவைதான் அவர்களுக்கு வாக்குப்பெற்றுக்கொடுத்த விடயங்களுமாகும். அன்று ஜே.ஆர் தந்த ‘சிஸ்டம் சேன்ஞ்’ என்பது, பொருளாதாரத்தைத் திறந்ததோடு, நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி முறையை ஸ்தாபித்ததாகும். ஆனால், இது பொருளாதாரம் இயங்கும் முறையையும் ஆட்சி அதிகாரம் குவிந்த இடத்தையும் மாற்றியதே தவிர, இலங்கையின் அரசியல் கலாசாரத்தை மாற்றவில்லை; அரசியல் கொள்கைகளை மாற்றவில்லை. பேரினவாதமே இலங்கையின் அரசியல் கொள்கையாகத் தொடர்ந்தது; இன்றும் தொடர்கிறது. சரி! இன்றைக்கு ‘சிஸ்டம் சேன்ஞ்’ என்று சஜித் பிரேமதாஸ சொல்கிறார்; சம்பிக்க ரணவக சொல்கிறார்; அநுர குமார திஸாநாயக்க சொல்கிறார்; இவ்வளவும் ஏன், தன்னை அரசியல்வாதியாக நினைத்துக்கொள்பவர்கள் பலரும் சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால், இவர்களில் எவரேனும் பேரினவாத அரசியலை கைவிடத்தயாரா? ‘சிங்கள-பௌத்த’ முன்னுரிமைவாதத்தை கைவிடத்தயாரா? இலங்கை ஒரு பன்மைத் தேச நாடு என்பதை ஏற்றுக்கொள்ளத் தயாரா? ஒற்றையாட்சியைத் தாண்டிய ஆட்சிமுறை ஒன்றுக்குத் தயாரா? மொழிச் சமத்துவத்துக்கும், அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும் தயாரா? மதச்சார்பற்ற அரசாக இலங்கையை அங்கிகரிக்க தயாரா? இவற்றைச் சாதிக்கத்தக்க வகையில் அரசியலமைப்பு மாற்றமொன்றைக் கொண்டுவரத் தயாரா? அப்படி இல்லையென்றால் இவர்கள் சொல்லும் ‘சிஸ்டம் சேன்ஞ்’ என்பது வெறும் ஏமாற்று வேலையில்லையா? சிறிமாவோ காலத்தில் சர்வ அதிகாரமும் ‘தேசிய அரச சபை’ எனும் சட்டவாக்க சபையிடம் குவிந்திருந்தது, ஜே.ஆர், அந்தச் சர்வ அதிகாரத்தை, அங்கிருந்து ஜனாதிபதியிடம் மாற்றினார். அதன் பின்னர், ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கொஞ்சமாகக் குறைப்பதும் கூட்டுவதும், மீண்டும் குறைப்பதும் என சந்திரிகா, மஹிந்த, மைத்ரி, கோட்டா காலங்களில் அரசியல் விளையாட்டுகள் விளையாடப்பட்டன. இன்று, இதைப்போன்றதோர் அதிகாரம் குவியும் புள்ளியைப் பரவலாக்கும் விடயத்தைத்தான் ‘சிஸ்டம் சேன்ஞ்’ என்று சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட பலரும் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். அரசியல் சந்தர்ப்பவாதத்தில் திழைத்தவர்கள், தமக்கு வாய்ப்பான காலத்தில் அதற்கு ஆதரவும், தமக்கு வாயக்காத காலத்தில் எதிர்த்தும் வருகிறார்கள். அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை, பெரும் சாதனையான மாற்றமாக முன்வைத்தோர்தான், இன்று கிட்டத்தட்ட அதே திருத்தங்கள் மீள முன்வைக்கப்படும்போது விமர்சிக்கிறார்கள். ஏனென்றால், அன்று அவர்கள் அரசியலமைப்பு திருத்தம் செய்யும் தரப்பின் பக்கம் நின்றார்கள்; இன்று எதிர்த்தரப்பில் நிற்கிறார்கள். இந்த வகையறா ஒருபுறமிருக்க, மறுபுறத்தில் இன்னும் தாம் கைவிடமுடியாது தவிர்க்கின்ற கம்யுனிஸக் கனவில், இன்னொரு வடகொரியாவாக இலங்கையை மாற்ற ‘சிஸ்டம் சேன்ஞ்’ என்பதை கையிலெடுத்த அநுர குமார, குமார் குணரட்ணம் ஆகிய இடதுசாரி தீவிரவாத சக்திகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இவர்களின் நோக்கம், ஜனநாயகக் கட்டமைப்பை சரிசெய்வதல்ல; மாறாக, ஒட்டுமொத்த ஜனநாயகக் கட்டமைப்பையும் தகர்த்துவிட்டு, வடகொரியாவைப் போல ‘கம்யுனிஸத்தின்’ பெயரிலான தமது சர்வாதிகார ஆட்சியை ஸ்தாபிப்பது. இதற்காக இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி நிலையையும் அதனால் மக்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தியையும், மேலும் நீண்டகாலமாக இலங்கையின் அரசியலால் மக்களடைந்துள்ள அயர்ச்சியையும் தமக்கு சாதகமாக்க, இந்த இடதுசாரி சர்வாதிகாரக் கூட்டம் முயற்சி செய்துகொண்டிருக்கிறது. ஜே.வி.பிதான், கடந்த இரண்டரை தசாப்தங்களில் இலங்கை கண்ட மிகப்பெரிய பேரினவாத சக்தி. தமது அரசியல் இருப்பைக் காப்பாற்றிக்கொள்ள, இனவாதத்தை கையிலெடுத்து, தமிழர்களை அதற்குப் பலிகடாக்களாக்கியவர்கள் இந்த ஜே.வி.பியினர். ஜே.ஆர், இந்தியாவின் அழுத்தத்தால், ஒன்று சேர்த்த வடக்கு-கிழக்கை, வழக்குப் போட்டு பிரிக்க வைத்த இனவாதிகள் ஜே.வி.பியினர் என்ற வரலாறு, தமிழ் மக்கள் மறக்கக்கூடாத வரலாறு. இன்றும்கூட, ஒரு பொய்யான தாராளவாத முகமூடிக்குள் ஒளிந்துகொண்டிருந்தாலும் கூட, அநுர குமாரவாலோ ஜே.வி.பியினாலோ தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால், ஜே.வி.பி என்பது வெறும் இடதுசாரி கம்யுனிஸக் கட்சி மட்டுமல்ல; அதனோடு பேரினவாதத்தையும் தனது அடிப்படைகளிலேயே கொண்டுள்ள கட்சியாகும். பேரினவாதம் என்பது மாறும் வரை, இலங்கையின் ‘சிஸ்டம் சேன்ஞ்’ என்று சொல்லப்படுவதெல்லாம் வெறுமனே ஒரு தரப்பு, ஆட்சியையும் அதிகாரத்தையும் கைப்பற்றுவதற்கான ‘கண்துடைப்பு நாடகங்கள்’ மட்டுமே! https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஆட்சியைப்-பிடிக்கும்-மகுட-வாசகம்-சிஸ்டம்-சேஞ்ச்/91-302778
  17. சீனக் கப்பல்: இராஜதந்திர அழுத்தத்தில் இலங்கை என். கே அஷோக்பரன் சீனாவின் ‘யுவான் வாங் 5’ என்ற ஆராய்ச்சிக் கப்பல், ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழையவும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்து நிற்கவும் இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது என, ஓகஸ்ட் 13ஆம் திகதி, தனது உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில் இலங்கையின் வௌிநாட்டலுவல்கள் அமைச்சு குறிப்பிட்டிருக்கிறது. ‘யுவான் வாங் 5’ கப்பலின் இலங்கை வருகை தொடர்பில் இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளிடமிருந்து, கடும் இராஜதந்திர அழுத்தத்தை, கடந்த தினங்களில் இலங்கை சந்தித்திருந்தது. ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு, ரணில் ஜனாதிபதியாகிய சில வாரங்களிலேயே, ஒரு மிகப்பெரிய இராஜதந்திர சவாலை சந்திக்க வேண்டிய சூழலை, இது உருவாக்கியிருக்கிறது. இந்தியாவின் இராணுவக் கப்பல் இலங்கைக்கு வருகிறது; அமெரிக்காவின் இராணுவக் கப்பல் இலங்கைக்கு வருகிறது. இவ்வளவு ஏன், சில நாள்களுக்கு முன்னர் சீனாவில் தயாரிக்கப்பட்ட பாகிஸ்தானின் இராணுவக் கப்பல் ‘தைமூர்’ இலங்கைக்கு வந்திருந்தது. இந்த நிலையில், சீனாவின் ‘யுவான் வாங் 5’ கப்பலின் இலங்கை வருகை மட்டும், ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்பது வாஸ்தவமான கேள்வி. சாதாரண இராணுவக் கப்பலைப் போன்றதல்ல ‘யுவான் வாங் 5’ ஆராய்ச்சிக் கப்பல். ‘ஆராய்ச்சிக் கப்பல்’ என்ற பதம், ‘யுவான் வாங் 5’ கப்பலை விளிக்கப் பயன்பட்டாலும், ஏனைய நாடுகளைப் பொறுத்தவரையில், அது ‘ஒற்றறியும் கப்பலாகவே’ கருதப்படுகிறது. குறிப்பாக, இந்தியா இதனை ஒற்றறியும் கப்பலாகவே பார்ப்பதோடு, இலங்கைக்கான இதன் வருகையை, தனது தேசிய பாதுகாப்புக்கு எதிரான பெரும் சவாலாகப் பார்க்கிறது. சீனாவில் தயாரிக்கப்பட்ட ‘யுவான் வாங் 5’ கப்பல், 2007இல் இயங்கத் தொடங்கியது. கடல்கடந்த வான்வெளி கண்காணிப்புக்கான அதிநவீன கண்காணிப்புத் தொழில்நுட்பத்தை கொண்டுள்ள இந்தக்கப்பல், குறைந்தது 222 மீற்றர் நீளமும் 25.2 மீற்றர் அகலமும் கொண்டதாகவும், விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பில் ஈடுபடுவதற்கான அனைத்து நவீன வசதிகளையும் கொண்டமைந்து உள்ளதாகக் கூறப்படுகிறது. ‘யுவான் வாங் 5’ என்பது, சீனாவின் ‘யுவான் வாங்’ தொடரின் மூன்றாம் தலைமுறை விண்வெளி கண்காணிப்பு கப்பலாகும். ‘யுவான் வாங் 5’ சமீபத்தில், ‘வென்டியன்’ ஆய்வக தொகுதியை தொடங்குவதற்கான கடல்சார் கண்காணிப்பு பணியை, வெற்றிகரமாக முடித்ததாக செய்திகள் குறிப்பிடுகின்றன. இது, சீன ‘டியாங்காங்’ விண்வெளி நிலையத்தின் முதல் ஆய்வக தொகுதி ஆகும். இந்தக் கப்பலானது, இதுவரை 5,80,000 கடல் மைல்களுக்கு மேல் பாதுகாப்பாகப் பயணித்துள்ளது. 2020ஆம் ஆண்டில், பசிபிக் பெருங்கடலில் ‘லாங் மார்ச்-5பி’ ஏவுகணையை ஏவுவதற்கான கடல்சார் கண்காணிப்பு, அளவிடும் பணிக்காகவும் இது பயன்படுத்தப்பட்டு இருந்தது. அத்துடன், பல சர்வதேச துறைமுகங்கள் வழியாக, 20,000 கடல் மைல்களுக்கு மேல் பயணித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ‘யுவான் வாங் 5’ கப்பல் தொடர்பில், இந்தியா அச்சம் கொள்வதற்கான பிரதான காரணம், அதன் ஒற்றறியும் வீச்செல்லையாகும். பல செய்தித்தளங்களும் இந்தக் கப்பல் 700 - 750 கிலோ மீற்றர் அளவுக்கான ஆய்வு வீச்சு எல்லையைக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கின்றன. ஆகவே, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இந்தக் கப்பல் நின்றால், அதன் ஒற்றறியும் வீச்செல்லைக்குள் இந்தியாவின் ஸ்ரீ ஹரிகோட்டாவில் அமைந்துள்ள ‘இஸ்ரோ’வின் ‘சதீஷ் தவான் விண்வெளி மையம்’, திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ‘இஸ்ரோ’வின் ‘விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்’, கல்பாக்கம், கூடங்குளம் அணு உலைகள், தென்னிந்தியாவில் அமைந்துள்ள ஆறு கடற்படைத்தளங்கள், இந்திய கடற்படையின் தெற்குக் கட்டளையகம் உள்ளிட்ட இவையெல்லாம் வரும் என்பதுதான் இந்தியாவின் பெருங்கவலை. மேலும், ஜூன் 28ஆம் திகதி, இந்தக் கப்பல் இலங்கைக்கு வருவதற்காக சீனா அனுமதி கோரிய போது, ஓகஸ்ட் 11 முதல் 17 வரையான திகதிகளுக்கே அனுமதி கோரப்பட்டிருந்தது. இது ஓகஸ்ட் 15 இந்திய சுதந்திரதினத்தை மையப்படுத்திய காலமாக அமைந்ததும் இந்தியாவை மேலும் சலனப்படுத்தி இருக்கலாம். ‘யுவான் வாங் 5’ ஆராய்ச்சிக் கப்பல், இலங்கைக்கு இந்தக் காலப்பகுதியில் வருவதற்கான எந்த அத்தியாவசியத் தேவையும் இல்லை. மேலும், இலங்கையின் வௌிவிவகார அமைச்சு குறித்த, கப்பலின் வருகைக்கான ஒப்புதலை அளித்த காலம் என்பதும் இங்கு கருத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகிறது. ஜூலை 12ஆம் திகதி என்பது, கோட்டாபய ராஜபக்ஷ நாட்டைவிட்டு வௌியேறி, ரணிலை பதில் ஜனாதியாக நியமித்துவிட்டு, பதவி விலகாது இருந்த குழப்பகரமானதொரு காலப்பகுதி ஆகும். இந்தப் பிரச்சினைகளுக்கு மத்தியில் அன்றி, வௌிவிவகார அமைச்சராக இருந்த ஜீ.எல் பீரிஸ், இந்தக் கப்பலின் வருகைக்கு அனுமதியளித்தது ஏன் என்ற கேள்வியை, இலங்கையர்கள் கேட்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இது மிகப்பெரியதோர் இராஜதந்திர சவாலாக மாறும் என்பதை, ஜீ.எல் பீரிஸ் அறிந்திருக்கவில்லையா? அல்லது, எப்படியும் அடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கதான்; எனவே, அந்த அரசாங்கத்தில் தனக்கு வாய்ப்பு இருக்காது என்று தெரிந்துகொண்டே, வேண்டுமென்றே இந்தக் காரியத்தைச் செய்தாரா என்றும்கூட கேட்க வேண்டியதாக இருக்கிறது. ஓர் அரசாக இலங்கையானது, இன்னோர் அரசுக்கு, அதன் வேண்டுகோளை ஏற்று அனுமதியளித்துவிட்டு, அதைப் பின்னர் மறுப்பது என்பது, இராஜதந்திரப் பேரிடராகும். அதைச் செய்வது, அவ்விரு நாடுகளுக்கு இடையேயான உறவைக் கடுமையாகப் பாதிக்கும். சீனா, மிக நீண்டகாலமாக இலங்கைக்கு நல்ல நண்பனாகவே இருந்திருக்கிறது. ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில்தான், சீனா வட்டிக்கடை வியாபாரியாக மாறியது. ஆனாலும், சீனா நட்பு நாடுதான். நட்பு நாடாக இருந்தாலும், அதை மீண்டும் மீண்டும் சீனா சொல்லிக்காட்டினாலும், இலங்கை மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்த கடந்த மாதங்களில் சீனா, இலங்கைக்கு என்ன உதவிகளைச் செய்திருந்தது? ஏறத்தாழ 572 பில்லியன் டொலர் கையிருப்பிலுள்ள இந்தியா, கிட்டத்தட்ட நான்கு பில்லியன் டொலர் அளவுக்கான கடன் உதவிகளை, இலங்கைக்கு உதவி மிகவும் தேவைப்பட்டதொரு காலப்பகுதியில் வழங்கியிருந்தது. ஆனால், ஏறத்தாழ 3,480 பில்லியன் டொலர் கையிருப்பிலுள்ள சீனா, இலங்கைக்கு உதவி மிகவும் தேவைப்பட்டதொரு காலப்பகுதியில் எந்தளவு உதவிகளை வழங்கியிருந்தது? இவையெல்லாம், இலங்கையின் சாதாரண குடிமக்களின் மனதில் எழும் கேள்விகள் ஆகும். ஆகவே, இந்தியாவைச் சீண்டிப் பார்க்க சீனா செய்யும் இந்தப் ‘பனிப்போர்’ வகையிலான கைங்கரியத்துக்கு, இலங்கை ஏன் பலிகடாவாக வேண்டும்? இதுவும் இலங்கையின் சாதாரண குடிமக்களின் மனதில் எழும் கேள்வி ஆகும். சீனாவுக்கும் இந்தியாவுதுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் சிக்கிக்கொண்டுள்ள இலங்கையின் நிலை பரிதாபகரமானது. சீனா, இலங்கையின் நட்பு நாடு; எதிரி நாடல்ல. ஆகவே, சீனாவின் கோரிக்கைகளை நிராகரிக்க, இலங்கைக்கு நியாயமான காரணங்கள் தேவை. இந்தியாவின் நலனை மையமாகக்கொண்டு மட்டும் இலங்கை, தனது வௌிநாட்டுக் கொள்கையை வகுக்க முடியாது. ஆனால், இலங்கையின் நட்பு நாடும் அயல்நாடும் பெரியண்ணனுமான இந்தியாவைத் தவிர்த்துவிட்டும் இலங்கை ஒரு வௌிநாட்டுக் கொள்கையைக் கொண்டிருக்க முடியாது. இதுதான், இலங்கை சிக்கியுள்ள சிக்கலின் சிக்கல் நிலை. மேலும், இலங்கையின் மொத்தக்கடனில் 10% சீனாவால் வழங்கப்பட்டது. ஆகவே, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற, கடன் மீள்கட்டமைப்புச் செய்ய, சீனாவின் ஒத்துழைப்பு அவசியம். ஆகவே, சீனாவை இலங்கை உதாசீனம் செய்யவும் முடியாது. மறுபறத்தில், இதன் அரசியல் பக்கத்தைப் பார்த்தால், ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரையில், அவர் ஜனாதிபதியாவதற்கு இந்தியா முட்டுக்கட்டையாகச் செயற்பட்டது என்பதுதான் பொதுவிலுள்ள நம்பிக்கை. அமெரிக்காவும் ரணிலை ஆதரித்திருக்கவில்லை. அதற்கான காரண காரியங்கள் தனித்து ஆராயப்பட வேண்டியவை. ஆகவே, தன்னை எதிர்க்காத சீனாவை, தனக்கு முட்டுக்கட்டை போட நினைத்த இந்தியாவுக்காகவும், தன்னை ஆதரிக்காத அமெரிக்காவுக்காகவும், எதிர்க்க வேண்டிய தேவை, ரணிலுக்கு இல்லை. டளஸ் ஜனாதிபதியாகிவிடுவார் என்பது, இந்தியாவும் அமெரிக்காவும் கொழும்பிலுள்ள ஆங்கிலம் பேசும், தம்மைத்தாமே ‘சிவில் சமூகம்’ என முன்னிறுத்தும் சிலரும் போட்ட தப்புக்கணக்கு. ஆகவே, அரசியல் ரீதியில் இந்தியாவுக்காகவும் அமெரிக்காவுக்காகவும் வேலைசெய்ய வேண்டிய தேவை, ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கிடையாது. ஆனாலும், இந்தியாவுடனான இலங்கையினது நீண்டகால நல்லுறவைக் கருத்தில் கொண்டு, சீனாவிடம் கப்பலின் வருகையை தாமதிக்க முடியுமா என்று இலங்கை கோரியிருந்தது. அதன்படி, இந்திய சுதந்திர தினம் நிறைவடைந்த பின்னர், ஓகஸ்ட் 16ஆம் திகதி, சீனாவின் ‘யுவான் வாங் 5’ கப்பல் இலங்கை வரவிருக்கிறது. இலங்கையின் வரமும் அதன் அமைவிடம்தான்; சாபமும் அதுவேதான்! https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சீனக்-கப்பல்-இராஜதந்திர-அழுத்தத்தில்-இலங்கை/91-302311
  18. இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு வருமா? என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதில் அக்கறை செலுத்தி வருகிறார். ‘சர்வகட்சி அரசாங்கம்’ என்பதன் மூலம், பொருளாதாரத்தில் வீழ்ந்துபோய், வங்குரோத்து நிலையிலுள்ள நாட்டை, மீளக்கட்டி எழுப்புவதற்கான முயற்சிகளை எடுப்பதே அவரது திட்டம். அனைத்துக் கட்சிகளும் ஒரு பொது நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவு தெரிவிக்கும் போது, அதை நடைமுறைப்படுத்துவது மிக இலகுவாயிருக்கும். அத்துடன், மக்களை திருப்திப்படுத்துவதும், அல்லது குறைந்தபட்சம் சாந்தப்படுத்துவதும் பெருமளவுக்குச் சாத்தியமாகும் என்பதுதான், சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதன் பின்னணியிலுள்ள சிந்தனையாக இருக்கும். வழமைபோல, எதிர்க்கும் கட்சியான ஜே.வி.பி, இதனை எதிர்த்து நிற்கிறது; இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. நாட்டை ஆளும் எண்ணத்தில், அரசியல் செய்யும் பல கட்சிகள் இருந்தாலும், காலம் முழுவதும், எதிர்ப்பரசியல் செய்யும் எண்ணத்தில் இயங்கும் கட்சிகளும் உள்ளன. ஜே.வி.பி. இதில் இரண்டாவது ரகம். மக்களின் எதிர்ப்பை, கொதிப்பை, சினத்தை தமக்குச் சாதகமாக்கி, தமது வாக்குவங்கியை அதிகரிப்பது பற்றித்தான் ஜே.வி.பி சிந்திக்கிறது என்றே தோன்றுகிறது. மூன்றாக இருக்கும் தமது பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை, 2004இல் தமக்கிருந்ததைப் போல, 39 பாராளுமன்ற உறுப்பினர்களாக அதிகரிக்கும் கனவில் ஜே.வி.பி இயங்கிக்கொண்டிருக்கலாம். ஆனால், ஜே.வி.பியாகத் தனித்துப் போட்டியிட்டு, அந்த 39 ஆசனங்களும் ஜே.வி.பிக்குக் கிடைக்கவில்லை. சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் கொடூர முகமாக ஜே.வி.பி இருந்தபோது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் பங்குதாரராக, அந்தத் தேர்தலில் போட்டியிட்டே ஜே.வி.பிக்கு 39 ஆசனங்கள் கிடைந்திருந்தன. மறுபுறத்தில், சரத் பொன்சேகா உட்பட்ட சிலர், சர்வகட்சி அரசாங்கத்தை எதிர்ப்பதன் காரணமும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் நீண்டகாலத் திட்டமாகத்தான் இருக்கமுடியும். ராஜபக்‌ஷர்கள் பிரபல்யம் இழந்திருக்கும் இன்றைய நிலையில், அரசியலில் அந்த இடைவௌியை நிரப்ப, டளஸ் அழகப்பெரும மட்டுமல்ல, சரத் பொன்சேகா, சம்பிக்க ரணவக்க போன்றோரும் கனவு காண்கிறார்கள். சுதந்திர இலங்கையின் சாபம் என்பது, சிங்கள-பௌத்த பேரினவாத அரசியல் ஆகும். இலங்கையை மிக மோசமான ரீதியில் கூறுபோட்டு, ஆரோக்கியமான அரசியல் கலாசாரமொன்றைக் கட்சியெழுப்ப முடியாதவாறு, சிங்கள-பௌத்த பேரினவாதம், இலங்கை அரசியலைப் பீடித்திருந்தது. அதிகாரத்தைக் கைப்பற்றுதலுக்கான போட்டியென்பது, யார் மிகப்பெரிய சிங்கள-பௌத்த பேரினவாதி என்ற போட்டியாகவே மாறிப்போனது. பண்டாரநாயக்க, சிறிமாவோ, ஜே.ஆர்., சந்திரிகா, மஹிந்த, கோட்டா என, சிங்கள-பௌத்த இன-மதத் தேசிய வாக்குவங்கியைக் கவர்வதற்காக, சிறுபான்மை இனத்தவருக்கு எதிராக எதையும் செய்யத் துணிந்தவர்களே, பலமான தலைவர்களாக, பெரும்பான்மை மக்கள் ஆதரவோடு வெற்றிபெற்றார்கள். இதுதான், இலங்கையின் கறுப்பு வரலாறு. இதற்கு ஒரு பொருத்தமான உதாரணம், 1983 ஜூலை 11 ஆம் திகதி, ‘லண்டன் டெய்லி டெலிகிராப்’ பத்திரிகைக்கு இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன அளித்திருந்த ஒரு குறுஞ்செவ்வி ஆகும். அந்தப் பேட்டியில், அவர் சொன்ன ஒரு விடயம், அவரது இனவாத முகத்தைத் தோலுரித்துக் காட்டியது மட்டுமல்லாது, அன்று தமிழ் மக்களுக்குப் பெரும் ஆபத்துக் காத்திருக்கின்றது என்பதை உணர்த்தும் சமிக்ஞையாகவும் இருந்தது. அந்தக் குறுஞ்செவ்வியில், “யாழ்ப்பாண மக்களின் அபிப்பிராயத்தைப் பற்றி, இப்போது நான் கவலைப்படவில்லை; நாம் அவர்களைப் பற்றி யோசிக்க முடியாது. அவர்களுடைய உயிர்களைப் பற்றியோ, அவர்கள் எம்மைப் பற்றிக் கொண்டிருக்கும் அபிப்பிராயம் பற்றியோ யோசிக்க முடியாது; வடக்கின் மீது எவ்வளவுக்கு எவ்வளவு அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறதோ, அவ்வளவுக்கு இங்குள்ள சிங்கள மக்கள் சந்தோஷப்படுவார்கள்”. 1990களில், தமது மாக்ஸிஸப் புரட்சி தோற்கடிக்கப்பட்டபின்னர், தம்மை ஜனநாயக அரசியலுக்குள் கொண்டு வந்த ஜே.வி.பி, மக்களாதரவைப் பெறுவதற்காக, சிங்கள-பௌத்த பேரினவாதத்தைக் கையிலெடுத்தது. 2000களில் மிகப்பெரிய, சிங்கள-பௌத்த பேரினவாத சக்தியாக ஜே.வி.பியே திகழ்ந்தது. தமிழ் மக்களுக்கு எதிரான மனநிலையை, சிங்கள-பௌத்த மக்களிடையே விதைத்தில், ஜே.வி.பியின் பங்கு அளப்பரியது. மஹிந்த ராஜபக்‌ஷ, யுத்த வெற்றியை நோக்கி பயணித்து, அதை நெருங்கும் வரை ஜே.வி.பியே, சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் குத்தகைக்காரராக இருந்தது. யுத்த வெற்றி, சிங்கள-பௌத்த மக்களின் மாவீரனாக மஹிந்தவை ஆக்கிய பின்னர், அரசியலில் தப்பிப் பிழைப்பதற்காக தனது பாதையை மாற்ற வேண்டிய தேவை, ஜே.வி.பிக்கு ஏற்பட்டது. அவர்கள், அநுர குமார தலைமையில் தாராளவாத முகமூடியை அணிந்துகொண்டார்கள். நிற்க! அண்மையில், தனது முதலாவது சிம்மாசன உரையில், ஜனாதிபதி ரணில் சொன்ன ஒரு விடயம் கவனிக்கத்தக்கது. “நான் அரசியலில் பிரவேசித்த காலத்திலிருந்தே, இன, மத, மொழி, சாதி பிரிவினைகள் இல்லாத இலங்கை அடையாளத்துடன் கூடிய ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று விரும்பினேன். ஒரு தாயின் குழந்தைகள், ஒற்றுமையாக வாழக்கூடிய தேசத்தை உருவாக்க வேண்டும். இந்தச் செயற்பாட்டில் நான் தொடர்ந்து ஈடுபட்டதால், அரசியல் தோல்விகளைச் சந்தித்தேன். இது தீவிர கொள்கை உடையவர்களால் விமர்சிக்கப்பட்டது. இனவெறி மற்றும் மதவெறிக்கு எதிரான எனது தொடர்ச்சியான நிலைப்பாட்டின் காரணமாக, சில அரசியல் கட்சிகள் என்னை இனவாதி என்று அவதூறு செய்தன. எனினும், எனது கொள்கையிலிருந்து நான் விலகவில்லை. அந்தக் கொள்கையில் இருந்து நான் விலக மாட்டேன்” என்று ஜனாதிபதி ரணில் கூறயிருந்தார். இது பட்டவர்த்தனமான உண்மையும் கூட! ரணில் மீது பல விமர்சனங்களைப், பலரும் முன்வைக்கலாம். ஆனால், ரணில் இனவாதியல்ல; அரசியல் இலாபத்துக்காக இனவாதத்தைப் பயன்படுத்திக்கொண்டவரும் அல்ல. ரணில் மீது அநேக தமிழர்கள், முஸ்லிம்கள், உள்ளிட்ட சிறுபான்மையினரிடம் ஒருவகை நல்லெண்ணம் உள்ளமைக்கு இதுதான் காரணம். அரசியல் காய்நகர்த்தல்களில் ரணில், தனது மாமா ஜே.ஆரைப் போல ‘நரி’யாக இருக்கலாம், ஆனால், ஜே.ஆரைப் போல, ரணில் இனவாதத்தை அரசியலுக்கு பயன்படுத்தியவர் அல்ல. இனவாதம் பேசினால், பெரும்பான்மை சிங்கள-பௌத்த வாக்குவங்கியைக் கவரலாம் என்ற போதிலும் கூட, அதைச் செய்யாதவர் ரணில். ஆகவே, ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகி இருக்கும் இன்றைய சூழல், தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், அரசியல் தீர்வொன்றுக்கான முன்னகர்த்தலை முயற்சிக்கக்கூடிய அரிய தருணம். இதன் அர்த்தம், தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அரசியல் அபிலாஷைகளும், ரணில் விக்கிரமசிங்கவால் ஒரு நாளில் நிறைவேற்றப்பட்டுவிடும் என்பதல்ல; மாறாக, கோட்டா வந்த போது வாய்ப்பே இல்லையென்று ஆகிப்போன தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில், தற்போது அதிகரிப்புவாத (incrementalism) அடிப்படைகளில், அடுத்த கட்ட நகர்வுகளைச் செய்யக் கூடிய சாத்தியம் மீண்டும் ஏற்பட்டிருக்கிறது. ஒன்றிரண்டு தமிழ் மக்களின் பிரதிநிதிகள், தற்போது ரணில் விக்கிரமசிங்கவோடு ஏற்படுத்திக்கொண்டுள்ள தனிப்பட்ட முரண்பாடுகள் காரணமாக, இந்த வாய்ப்பை தட்டிக் கழித்துவிடக்கூடாது என்பதுதான், இங்கு கோடிட்டுக்காட்டப்பட வேண்டியதாக இருக்கிறது. இலங்கை இன்று கண்டுள்ள பொருளாதார வங்குரோத்து நிலை, சிங்கள-பௌத்த பேரினவாதம் தொடர்பில், ஒரு துளி எதிர்மறையான எண்ணத்தை, சிங்கள-பௌத்த மக்களிடையே ஏற்படுத்தி இருக்கிறது. சுதந்திர இலங்கை எடுத்துக்கொண்ட அரசியல் பாதை தவறு என்பதையும், சிறுபான்மையினர் நடத்தப்பட்ட விதம் பிழை என்பதையும் பலரும் உணர்வதாகத் தெரிகிறது. இந்த நேரத்தில், சிங்கள-பௌத்த பேரினவாதத்தை தனது, அரசியல் மூலதனமாகக் கொண்டிராத ஒருவர் ஜனாதிபதியாக இருக்கிறார். இந்தச் சந்தர்ப்பத்தில், தமிழ் மக்கள் எதைப் பெற்றுக்கொள்ளப் போகிறார்கள் என்பது, தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் திறமையிலும் இராஜதந்திரத்திலுமே தங்கியிருக்கிறது. ரணிலை எதிர்ப்பது என்பது இலகுவான தெரிவு. அதனால், தமிழ் மக்களுக்குப் பலனேதுமில்லை. ஆனால், ஜனாதிபதி ரணிலோடு, அரசியல்ரீதியாக ஈடுபடுவதன் ஊடாக, தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பில் ஏதேனுமோர் அடைவையேனும் பெற்றுக்கொள்ள முடியுமென்றால், அது ஒரு பலனுமில்லாத எதிர்ப்பைவிட, நன்மையானதே. தமது தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளை விடுத்து, இதைச் ‘சாத்தியமான அரசியல்’ பற்றிப் பேசும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாவது செய்வார்களா என்பதே, இங்கு கேள்வி. ‘வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக நினைப்பானை நீங்கும் திரு’ என்ற வள்ளுவன் வாக்கை, தமிழ் மக்கள், தமது பிரதிநிதிகள் தொடர்பில் சிந்தனையில் கொள்ள வேண்டும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இனப்பிரச்சினைக்கான-அரசியல்-தீர்வு-வருமா/91-302128
  19. தமிழ் மக்களுக்கு ஓர் அரசியல் சந்தர்ப்பம் என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan நிக்கலோ மக்கியாவலி,“யுத்தத்திலே, ஒரு வாய்ப்பை எவ்வாறு அடையாளம் காண்பது மற்றும், அந்த வாய்ப்பை எவ்வாறு கைப்பற்றுவது என்பதை அறிவது, எல்லாவற்றையும் விடச் சிறந்தது” என்று சொன்னார். அரசியலும் ஒரு வகையான யுத்தம்தான். அதில், வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ளவும், உருவாகும் வாய்ப்புகளை அடையாளம் காண்பதும், அந்த வாய்ப்புகளைத் தமக்கேற்றவாறு பயன்படுத்துவதும்தான் மிகச் சிறந்த அரசியல் தந்திரோபாயமாகும். 2009 யுத்த முடிவுக்குப் பின்னர், தமிழ்த் தேசிய அரசியலின் பேரம் பேசும் சக்தி என்பது, கணிசமாக வீழ்ச்சி கண்டிருந்தது. ஐ.நா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச அழுத்தங்களால்த்தான், தமிழ்த் தேசிய அரசியல் பெருமளவுக்குத் தங்கியிருந்தது. அதன் விளைவாக, தமிழ்த் தேசிய அரசியல் தனது அபிலாஷைகளை அடைந்துகொள்வதில், எந்தப் படிமுறை முன்னேற்றத்தையும் அடைய முடியாததொரு சூழலையே எதிர்கொண்டிருந்தது. 2015-2019 ‘நல்லாட்சி’யின் போது, தமிழ்த் தேசிய அரசியலுக்கு நல்லதொரு பேரம் பேசும் சக்தி கிடைக்கும் வாய்ப்புகள் இருந்தன. குறிப்பாக, 2018 டிசெம்பருக்குப் பிறகு, தமிழ்த் தேசிய அரசியல் குறிப்பாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, அரசாங்கத்தில் செல்வாக்கு மிக்கதொரு கட்சியாக மாறியிருந்தது. ஆனால், அதன் பலன், தமிழ் மக்களுக்கு வந்து சேரவில்லை. மாறாக, ஒரு வருடத்துக்கு உள்ளாகவே, அரசியல் களம் முற்றாக மாறிவிட்டிருந்தது. 2019இல் கோட்டா ஜனாதிபதியானது முதல், தமிழ்த் தேசிய அரசியல், மீண்டும் பேரம் பேசும் பலம் குறைந்து, அரசியல் பின்னரங்கில் ஒதுங்கிப்போனது. ‘நல்லாட்சி’ காலத்தில், ஆளும் அரசாங்கத்தோடு செல்வாக்குக் கொண்டிருந்தும், அதன் பலனை, தமிழ் மக்களுக்குப் பெற்றுக்கொடுக்காததன் விளைவை, 2020 பொதுத் தேர்தலில், த.தே. கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் உணர்த்தியிருந்தனர். 2015இல் 515,963 வாக்குகளை மொத்தமாகப் பெற்று, 16 ஆசனங்களைப் பெற்றிருந்த த.தே. கூட்டமைப்பு, 2020 பொதுத் தேர்தலில் 327,168 வாக்குகளைப் பெற்று, 10 ஆசனங்களையே பெற்றுக்கொண்டது. 2015 பொதுத் தேர்தலில், வேறெந்த தமிழ்த் தேசிய கட்சியாலும் ஓர் ஆசனத்தைக் கூட வெல்ல முடியாத நிலை இருந்தது. ஆனால், 2020 பொதுத் தேர்தலில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இரண்டு ஆசனங்களையும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஓர் ஆசனத்தையும் பெற்றுக்கொண்டன. இது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மீதான தமிழ் மக்களின் நம்பிக்கை இழப்பின் எதிரொலி ஆகும். ஏனென்றால், கூட்டமைப்பு 2015-2019 காலப்பகுதியில், ஆட்சியிலிருந்த நல்லாட்சி அரசாங்கத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தது. மஹிந்தவை தோற்கடித்து, மைத்திரி ஜனாதிபதியாகியதின் பின்னணியில் உழைத்த எதிர்க்கட்சிகளில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முக்கியமானது. ஆகவே, அந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தி, த.தே.கூட்டமைப்பு, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளில் ஒருசிலவற்றையேனும் நிறைவேற்றுவதற்கு முயலும் என்ற தமிழ் மக்களின் நம்பிக்கை, பொய்த்துப்போனதுதான், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, 2020 தேர்தலில் 188,795 வாக்குகளை இழக்கக் காரணமாகும். ‘நல்லாட்சி’க்கு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரவளித்த காலத்தில், குறைந்தபட்சம் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான சுயாதீன விசாரணையும் நீதியும், யுத்தகால அநீதிகளுக்கான நியாயம், இராணுவம் அடாத்தாகப் பிடித்துவைத்திருக்கும் தமிழ் மக்களின் தனியார் காணிகளின் விடுவிப்பு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் இல்லாதொழிப்பு அல்லது மறுசீரமைப்பு, மாகாண சபைகளை அதன் முழுமையான அதிகாரங்களுடன் இயங்கவிடுதல், ஆளுநரின் தலையீட்டை குறைக்கும் மறுசீரமைப்பு ஆகியவற்றையேனும் செய்ய முடிந்திருந்தால், தமிழ் மக்களின் தனிப்பெரும் அரசியல் சக்தியாக, அல்லது அவர்கள் சொல்ல விரும்பும் ‘ஏக பிரதிநிதி’யாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மிளிர்ந்திருக்கக் கூடும். ஆனால், ‘நல்லாட்சி’ அரசாங்கத்தைக் காப்பாற்றிக்கொடுத்தும், தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்பது, தமிழ் மக்களை அதிருப்தி அடையச் செய்ததன் விளைவுதான் 2020 தேர்தல் முடிவுகளில் எதிரொலித்தது. ஆனால், 2015-2019 ‘நல்லாட்சி’யில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறாமைக்கு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பை மட்டும் குறை கூறியும் பயனில்லை. ஏனென்றால், ராஜபக்‌ஷர்கள் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டாலும், நாட்டில் அவர்களுக்கான ஆதரவும் அவர்கள் மீதான அனுதாபமும், ‘யுத்த வெற்றியாளர்’கள் என்ற பெருமைமிகு அடையாளமும், பெரும்பான்மை மக்களிடம் தொக்கி நின்றது. ஆகவே, தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்டவைகள் அநீதிகள் என்பதைக் கூட, ஏற்றுக்கொள்ளும் மனநிலை, இந்நாட்டின் பெரும்பான்மை இனத்திடம் அன்று இருக்கவில்லை. ராஜபக்‌ஷர்களைத் தேர்தலில் தோற்றிருந்தாலும், சிங்கள-பௌத்த தேசியவாதம் சுடர்விட்டு எரிந்துகொண்டிருந்தது. அதனால், ‘நல்லாட்சி’ அரசாங்கம், சிங்கள-பௌத்த தேசியவாத மனநிலைக்கு எதிராக எதையும் செய்தால், தமது அரசியல் சூனியமாகிவிடும் என்ற அச்ச மனநிலையில் இருந்தனர். குறிப்பாக, பண்டாரநாயக்க-ராஜபக்‌ஷ பாசறையிலிருந்து வந்த, யுத்த வெற்றியில், தன்னைப் பங்குதாரராகக் காட்டிக்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, சிங்கள-பௌத்த பெரும்பான்மை தேசியவாதத்துக்கு எதிராக நடந்து கொள்ள விரும்பவில்லை. அதனால்தான், தமிழ் மக்களின் ஆகக்குறைந்த கோரிக்கைகள் கூட நிறைவேற்றப்படவில்லை. கடைமைக்கென, காணாமல் போனோர் அலுவலகம் உள்ளிட்ட சில உருவாகின. ஆனால், 2022 கோட்டாவுக்கு எதிரான மக்கள் அலை கிளம்பிய போது, அது, 2015 அலையைப் போலல்லாது, சிங்கள-பௌத்த பேரினவாதத் தேசியவாதத்துக்கும் எதிரான அம்சங்களைத் தன்னகத்தே கொண்டதோர் எழுச்சியாகவே அமைந்திருந்தது. இன்று, சிங்கள-பௌத்த மக்கள் பலர் மிக வௌிப்படையாக, தமிழ் மக்களுக்கு எதிரான அநீதிகள் குறித்துப் பேசுகிறார்கள்; கண்டனங்களை முன்வைக்கிறார்கள்; மன்னிப்புக் கோருகிறார்கள். தமிழ் மக்களுக்கு எதிராக, பெரும் அநீதி இழைக்கப்பட்டு இருக்கிறது என்பதை, சிங்கள-பௌத்த மக்கள் ஏற்றுக்கொள்ளத் தொடங்கி இருப்பதே பெரும் மாற்றம்தான். அதுபோல, சுதந்திரகாலம் முதல், இந்நாட்டைப் பீடித்துள்ள இன-மதத் தேசியவாதம்தான் இன்று, நாடு நாசமாகப் போயிருப்பதற்கான காரணம் என்பதை, கணிசமான சிங்கள-பௌத்த மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்; ஆகவே, இன்று அரசியல் களம் என்பது, முற்றாக மாறியிருக்கிறது என்பதை உணரலாம். இலங்கையின் பெரும்பான்மையின மக்களிடையே 2015இல் ராஜபக்‌ஷ எதிர்ப்பு மட்டுமே, கணிசமானளவில் ஏற்பட்டது. சிங்கள-பௌத்த பெருந்தேசியவாதம் உயிர்ப்போடிருந்தது. ஆனால் 2022இல், ராஜபக்‌ஷ எதிர்ப்போடு, இன-மதத் தேசியவாதத்துக்கு எதிரான எதிர்ப்பலையும், இலங்கையின் பெரும்பான்மையின மக்களிடம் ஏற்பட்டுள்ளதன் சமிக்ஞைகள் மிகத்தௌிவாகத் தெரிகின்றன. இதுதான் தமிழ்த் தேசிய அரசியலுக்கும், தமிழ் மக்களுக்குமான அரிய வாய்ப்பு. இன்று ஆட்சியில் உள்ளவர்களோடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு, தமிழ் மக்களின் சில முக்கிய கோரிக்கைகளையேனும் நிறைவேற்றிக்கொள்வதற்கான அரிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதைச் செய்ய, தமிழ்த் தேசிய கட்சிகள் முன்வரவேண்டும். அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான சுயாதீன விசாரணையும் நீதியும், யுத்தகால அநீதிகளுக்கான நியாயம், இராணுவம் அடாத்தாகப் பிடித்துவைத்திருக்கும் தமிழ் மக்களின் தனியார் காணிகளின் விடுவிப்பு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் இல்லாதொழிப்பு அல்லது மறுசீரமைப்பு ஆகியவற்றுக்கு பெரும்பான்மை மக்களிடையே ஆதரவு இருக்கக்கூடிய நிலையில், இதைச் செய்வதற்கு ஆட்சியில் உள்ளவர்களை ஊக்கப்படுத்த இதைவிட வேறுவாய்ப்பு இருக்க முடியாது. இன்று, மேற்சொன்னவற்றுக்கு பெரும்பான்மை மக்களிடமிருந்து பெருமளவு எதிர்ப்பு வராது. வரலாற்றுப் பிழைகளைச் சரிசெய்யும் ஒரு நடவடிக்கையாக, இவை முன்னெடுக்கப்படலாம். இதைச் செய்வதற்கு ரணில் விக்கிரமசிங்க போன்றதொரு ஜனாதிபதிதான் தேவைப்பட்டார். ஆனால், சிங்கள-பௌத்த பெருந்தேசியவாதம், அவற்றைச் செய்வதற்கு இதுவரை அனுமதிக்கவில்லை. இன்று காலத்தின் கோலமாக, ஒரு விபத்தாக, ரணில் ஜனாதிபதியாகி இருக்கிறார். ஆகவே, இது ஓர் அருமையான வாய்ப்பு. ஆனால், இவற்றை இலகுவாகச் செய்துவிடவும் கூடாது. மிகுந்த ராஜதந்திரத்துடன், நல்லுறவையும் நல்லெண்ணத்தையும் முன்வைத்து, தொடர் பேச்சுவார்த்தைகள் மூலம் அடையப்படவேண்டியவை ஆகும். 2015இல் இருந்த களநிலவரத்தைவிட, இன்றைய களநிலவரம் தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு சாதகமானதாகவே இருக்கிறது. ஆகவே, தேசிய அரசியலின் முரண்பாடுகளுக்குள்ளும், தனிநபர் பிரச்சினைகளுக்குள்ளும் தேவையில்லாமல் சிக்கிக்கொள்ளாமல், இன்றுள்ள அரசாங்கத்திடமிருந்து, தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளில் ஒரு சிலவற்றையேனும் நிறைவேற்றிக்கொள்ளுதல் தான் புத்திசாலித்தனமான அரசியல். ஒட்டோ வொன் பிஸ்மார்க் சொன்னது போல, “அரசியல் என்பது சாத்தியமானவற்றின் கலை”. எந்தப் பயனுமில்லாமல் ரணிலை எதிர்ப்பதை விட, ரணிலைப் பயன்படுத்திக்கொண்டு, சாத்தியமான ஒன்றிரண்டையேனும் அடைந்துகொள்வதுதான் மக்களுக்குப் பயன்தரும் அரசியலாக இருக்கும். இதுபோன்ற வாய்ப்புகள் எப்போதும் அமைவதில்லை. பயன்படுத்திக்கொள்வார்களா தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள்? https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்-மக்களுக்கு-ஓர்-அரசியல்-சந்தர்ப்பம்/91-301469
  20. ஜனாதிபதி தெரிவும் தமிழ்க் கட்சிகளும் என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan இலங்கையினுடைய எட்டாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக, அரசியலமைப்பின் 40ஆவது சரத்தின்படி, பாராளுமன்ற உறுப்பினர்களிடையேயான இரகசிய வாக்கெடுப்பின் மூலம், ரணில் விக்கிரமசிங்க தெரிவுசெய்யப்பட்டு, பதவியேற்றிருக்கிறார். பல திருப்புமுனைகளோடு, மிக விறுவிறுப்பாக இந்த ஜனாதிபதி தெரிவு அரங்கேறியிருக்கிறது. இந்த ஜனாதிபதி தெரிவின் போதான தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாடுகள், நடவடிக்கைகள் என்பவற்றை, மீள்பார்வை செய்வதே இந்தப் பத்தியின் நோக்கமாகும். இன்றுள்ள பாராளுமன்றத்தைப் பொறுத்தவரையில், கூட்டணிக் கட்சிகள் உள்ளடங்கலாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டு, பாராளுமன்றம் ஏகிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 145 ஆகும். இதோடு, பொதுஜன பெரமுன அரசாங்கத்தோடு இணைந்த கட்சிகளாயினும், தமது கட்சி சின்னத்தில் போட்டியிட்டு, பாராளுமன்றம் ஏகிய உறுப்பினர்கள் மூன்று. ஆகவே, பொதுஜன பெரமுன, இந்தப் பாராளுமன்றத்தில் அசைக்க முடியாத பெரும்பான்மையைக் கொண்டிருக்கிறது என்பதில், மாற்றுக்கருத்து இருக்க முடியாது. கூட்டணிக் கட்சிகள் தனித்துச் செயற்படுவதாக அறிவித்த பின்னரும், பல பாராளுமன்ற உறுப்பினர்கள், குறிப்பாக கோட்டாவின் ‘வியத்மக’ குழுவிலிருந்து வந்த பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள், சுயாதீனமாகச் செயற்படுவதாக அறிவித்த பின்னரும் கூட, பொதுஜன பெரமுனவுக்கு கணிசமான பெரும்பான்மை இன்னும் இருக்கிறது என்பதுதான் யதார்த்தம். ஆகவே, அந்தப் பெரும்பான்மையை புறக்கணித்து, அரசியல் கணிப்புகளை மேற்கொள்ள முடியாது என்பது அரசியல் பாலபாடம். இந்தப் பின்னணியில்தான், தமிழ்க் கட்சிகள் ஜனாதிபதி தெரிவு தொடர்பில் மேற்கொண்ட தெரிவுகளை, நாம் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. ஜனாதிபதி தெரிவுப் போட்டியில், பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பொதுஜன பெரமுனவின் டளஸ் அழகப்பெரும, ஜே.வி.பியின் அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அநுரவுக்கு, அவரது கட்சியிலுள்ள மூன்று வாக்குகளைத் தவிர, வேறு வாக்குகள் கிடைக்கும் என எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. ரணிலுக்கு எதிரான வாக்குகள் சஜித், டளஸ் எனப் பிரியும். ரணில், அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று வெற்றியீட்டுவார் என்ற நிலை இருந்த போது, வேட்பாளர் முன்மொழிவுக்கு முதல்நாள், டளஸூக்கும், சஜித்துக்கும் இடையில் ஓர் இணக்கப்பாடு ஏற்படுகிறது. அதன்படி, சஜித் ஜனாதிபதி தெரிவுப் போட்டியிலிருந்து விலகிக்கொண்டு, டளஸூக்கு ஆதரவை வழங்கியிருந்தார். இதன் பின்னர், முன்பு எவருக்கும் வாக்களிப்பதில்லை என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்த சுதந்திரக் கட்சியும் டளஸை ஆதரிப்பதாக அறிவித்திருந்தது. வாய்ப்பே இல்லை என்றிருந்த டளஸ், வெற்றி பெறப்போவதாக சமூக ஊடகங்களில் கருத்துகள் பரப்பப்பட்டன. தமிழ்க் கட்சிகளைப் பொறுத்த வரையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது, 18ஆம் திகதியே தன்னுடைய நிலைப்பாட்டை தெட்டத்தௌிவாக அறிவித்துவிட்டது. “ஜனாதிபதி தெரிவுக்காகத் தம்மை முன்மொழிந்து இருப்பவர்கள், தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் தீர்வு விடயங்களை முன்னெடுக்கத் தயார் இல்லாதவர்களாகவே உள்ளனர். ராஜபக்‌ஷ தரப்கை அகற்றி, ஓர் அடிப்படை மாற்றத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தில், ரணில் விக்கிரமசிங்க அதற்கு ஒரு முட்டுக்கட்டையாக இருக்கின்றார். 2015ஆம் ஆண்டு, மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து நடைபெற்ற அவரது ஆட்சிக்காலத்தில், தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயத்தில், ஒற்றையாட்சிக்கு உட்பட்ட ஓர் இடைக்கால அறிக்கை ஒன்றையே தயாரித்து இருந்தனர். ஐக்கிய தேசிய கட்சி, அதற்கு மட்டும் தான் ஆதரவு தரலாம் என்ற விடயத்தையும் சமஷ்டியையும் தமிழ் மக்களுடைய சுயநிர்ணயத்தையும் நிராகரித்து, அவர்களுடைய செயற்பாடுகள் இன்னமும் அதிலிருந்து விடுபடாமல் இருக்கின்ற நிலையில், அவரை ஏற்க முடியாது. ரணிலை நாங்கள் என்ன காரணத்துக்காக நிராகரிக்கின்றோமோ, அதேநிலைப்பாட்டில் தான் சஜித் பிரேமதாஸாவும் தனது கருத்துகளை தெரிவித்து இருந்தார். அதிகாரப் பகிர்வு தொடர்பில் அவர், எங்களோடு பேசிய பொழுது, இந்தியாவில் உள்ள பஞ்சாயத்து முறையில் பிரச்சினைகள் தீர்க்கப்படும் முறையைக் கூறி, அதைப் போலவே தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்ற கோணத்தில், அவர் தன்னுடைய கருத்தை தெரிவித்திருந்தார். தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை சார்ந்த விடயத்துக்கும் பஞ்சாயத்து முறைக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பது, சஜித் பிரேமதாஸவுக்குத் தெரிந்திருக்கவில்லை போலும்” என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமது நீண்ட அறிக்கையில், தமது நிலைப்பாட்டை பட்டவர்த்தனமாகப் பதிவு செய்திருந்தது. தமிழ்த் தேசிய கூட்டமைப்போ, வாக்களிப்புக்கு முதல்நாள் இரவுதான் தன்னுடைய முடிவை எடுத்திருந்தது. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் வீட்டில் சஜித், டளஸ், ஜீ.எல்.பீரிஸ், டிலான் பெரேரா ஆகியோரையும் சந்தித்துப் பேசிய கூட்டமைப்பினர், டளஸை ஆதரிப்பதாக முடிவெடுத்தனர். டளஸ், சஜித் ஆகியோர், அரசியல் கைதிகளின் விடுதலை, தனியார் காணிகள் விடுவிப்பு உள்ளிட்ட கூட்டமைப்பின் 10 முக்கிய கோரிக்கைகளை ஏற்று, ‘எழுத்துமூல உடன்படிக்கை’யில் ஒப்பமிட்டனர் என்று அந்தக் கூட்டத்தின் பின்னர், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் பகிரங்கமாக வௌிப்படுத்தியிருந்தார். ஆனால், இதே செய்தியை ‘டெய்லி மிரர்’ பத்திரிகைத் தளம் பிரசுரித்த போது, அதை ‘குறும்புத்தனமானதும் தவறானதுமான செய்தி’ என்று கூட்டமைப்பின் மற்றொரு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார். இதுதான் உண்மையென்றால், அதனை ஏன் மறைக்க வேண்டும்? மக்களின் உணர்வுகளோடு ஊடகங்கள் விளையாடி, வாக்கெடுப்பை தீவிரமாகப் பாதிப்பதற்கு, இது ஒன்றும் மக்கள் வாக்களிக்கும் தேர்தல் இல்லையே? இன்று வரை, அந்த எழுத்துமூல ஒப்பந்தத்தை கூட்டமைப்பு வௌியிடவில்லை என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டியது. ஆனால், பொதுஜன பெரமுனவை எதிர்க்கும் கூட்டமைப்பு, டளஸை எப்படி ஆதரிக்கலாம் என்ற கேள்வி இங்கு முக்கியமானது. ரணில் விக்கிரமசிங்கவை, ‘ராஜபக்‌ஷ விசுவாசி’ என்று கூறும் கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள், டளஸ் எவ்வளவு பெரிய ராஜபக்‌ஷ விசுவாசி என்பதனை மறந்துவிட்டார்களா? ராஜபக்‌ஷர்களை எதிர்க்கிறோம் என்று சொல்லிவிட்டு, டளஸை ஆதரிப்பதெல்லாம் சின்னப்பிள்ளைத்தனமான அரசியல். அதற்கு அவர், ராஜபக்‌ஷர்களோடு முரண்பட்டு நிற்கிறார் என்று கூறுவதெல்லாம் சப்பைக்கட்டு. இன்றுவரை டளஸ், பொதுஜன பெரமுன உறுப்பினர் என்பது, இங்கு கோடிட்டுக் காட்டப்பட வேண்டியது! ஆகவே, இங்கு ‘ரணில் எதிர்ப்பு’ என்ற ஒரு சிலரின் தனிப்பட்ட நிகழ்ச்சிநிரல்தான், கூட்டமைப்பின் நிலைப்பாடாக்கப்பட முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கிறன என்பது தெட்டத்தௌிவாகப் புலனாகிறது. கூட்டமைப்பு, தமிழ் மக்களின் நலன் கருதியோ, கொள்கை சார்ந்தோ தமது முடிவை எடுக்கவில்லை. மாறாக, சிலரின் தனிநபர் வெறுப்பின் அடிப்படையில், தனது முடிவை எடுத்திருக்கிறதோ என்ற எண்ணமே எழுகிறது. இந்த முடிவு தொடர்பில் வௌிப்படையான எதிர்ப்பை, கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் முன்வைக்காது இருந்தாலும், அவர்கள் தனிப்பட்ட ரீதியில் இந்த முடிவை ஏற்றுச் செயற்பட்டார்களா, வாக்களித்தார்களா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது. அப்படி இல்லையென்றால், கூட்டமைப்பின் முடிவாக முன்வைக்கப்பட்ட முடிவை, கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் ஏற்கவில்லை என்பதுதான் யதார்த்தமாகிறது. இந்த ஜனாதிபதி தெரிவைப் புறக்கணித்திருந்தால் கூட, கூட்டமைப்பு இப்படி மூக்குடைபட்டு நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டிராது. ‘கூட்டமைப்பு என்பது தனிநபர்களின் சொத்தல்ல’ என்பதை, கூட்டமைப்பின் அனைத்துக் கட்சிகளும் அழுத்தமாகச் சொல்லவேண்டிய காலச்சூழல் எழுந்திருக்கிறது. தனிநபர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றவகையில், கூட்டமைப்பின் நடவடிக்கைகள் அமைய முடியாது; அமையக் கூடாது என்று இனியேனும் அமைதி காக்காது, வௌிப்படையாகப் பேச வேண்டிய காலத்தின் நிர்ப்பந்தம், கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. கூட்டமைப்பு என்பது, ஒருவரின் குரலாக மாறிப்போனால், அது கூட்டமைப்பினதும், தமிழ் மக்களினதும் எதிர்காலத்துக்கு ஏற்புடையதல்ல. தனது போக்கை மறுபரிசீலனை செய்ய வேண்டியதொரு சந்தியில், கூட்டமைப்பு நின்று கொண்டிருக்கிறது. மறுபுறத்தில், நீதியரசர் சீ.வீ.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் சார்பில் ஆறு கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்றை, ரணில் விக்கிரமசிங்கவிடம் வழங்கியதாகவும், அதன் பின்னரே ரணிலை ஆதரித்ததாகவும் அந்த ஆறு கோரிக்கைகள் என்ன என்பதையும், அவற்றை ரணில் ஏற்றாரா என்பதையும் அவர் தமிழ் மக்களுக்கு வௌிப்படையாகச் சொல்ல வேண்டும். வெறுமனே, ‘கூட்டமைப்பு அந்தப் பக்கம் போனால், நான் இந்தப் பக்கம் போவேன்’ என்ற ரீதியில் இந்த முடிவு எடுக்கபடவில்லை என்பதை, தமிழ் மக்களுக்கு உணர்த்த வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஜனாதிபதி-தெரிவும்-தமிழ்க்-கட்சிகளும்/91-301082
  21. அடுத்த ஜனாதிபதி எப்படி தெரிவு செய்யப்படுவார்? என்.கே. அஷோக்பரன் அரசியலமைப்பின் 38(1)(ஆ) சரத்தின் பிரகாரம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்ததன்படி, இலங்கையின் ஜனாதிபதி பதவி வெற்றிடமானது. இதனைத் தொடர்ந்து, அரசியலமைப்பின் 40(1)(இ) சரத்தின் படி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அரசியலமைப்பின் படி, கோட்டாபய விட்டுச்சென்றுள்ள மிகுதிப் பதவிக்காலத்திற்காக அடுத்த ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படும் வரை, பதில் ஜனாதிபதியாகியுள்ளார். ஜனாதிபதிப் பதவி வெற்றிடமாகும் பட்சத்தில், எஞ்சியுள்ள பதவிக்காலத்திற்கு ஜனாதிபதியொருவரை தேர்ந்தெடுப்பது தொடர்பில், அரசியலமைப்பின் 40வது சரத்தும், 1980ம் ஆண்டின் 2ம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமும் உரிய ஏற்பாடுகளைக் கொண்டுள்ளன. ஜனாதிபதி பதவி வெற்றிடமாகியுள்ள இந்த நிலையில், இலங்கையின் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வது பாராளுமன்றமே (அதாவது பாராளுமன்ற உறுப்பினர்களே). அரசியலமைப்பின் பிரிவு 40(1)(அ) மற்றும் 1980ம் ஆண்டின் 2ம் இலக்க சட்டத்தின் பிரிவு 3(1) ஆகியன பாராளுமன்றம் அதன் உறுப்பினர்களில், ஜனாதிபதியாவதற்கு அரசியலமைப்பு கூறும் தகுதிகளைக் கொண்ட, ஒரு பாராளுமன்ற உறுப்பினரை ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வழங்குகிறது. அந்தத் தேர்தலானது, ஜனாதிபதி பதவி வெற்றிடமான திகதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் நடத்தப்பட வேண்டும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் புதிய ஜனாதிபதி, பதவி விலகிய ஜனாதிபதியின் பதவிக் காலத்தின் எஞ்சிய காலப்பகுதிக்கான, அதாவது 2024 நவம்பர் வரை பதவியிலிருப்பார். பாராளுமன்றம் புதிய ஜனாதிபதியை எவ்வாறு தேர்ந்தெடுக்கும்? பாராளுமன்றம் கூடுதல் ஜனாதிபதி பதவி விலகியவுடன், ஜனாதிபதி பதவி வெற்றிடமாகி மூன்று நாட்களுக்குள் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும். அத்தகைய கூட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட திகதி மற்றும் நேரத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்க வேண்டும் என 1980ம் ஆண்டின் 2ம் இலக்க சட்டத்தின் பிரிவு 4 வழங்குகிறது. அவ்வாறு பாராளுமன்றம் கூடும் போது, பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஜனாதிபதி பதவி வெற்றிடமாகியுள்ளதை பாராளுமன்றத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிப்பதுடன். அடுத்த ஜனாதிபதியை பாராளுமன்ற உறுப்பினர்களிலிருந்து தேர்ந்தெடுப்பதற்கான வேட்புமனுக்களுக்கான திகதியாக, அன்றிலிருந்து 48 மணிநேரத்திற்கு குறையாத, ஏழு நாட்களுக்கு அதிகரிக்காத திகதியையும், நேரத்தையும் நிர்ணயம் செய்வார் (பிரிவு 5). வேட்புமனு குறித்த வேட்புமனுத் தினத்தில், பாராளுமன்றம் கூடும் போது, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தேர்தல் அதிகாரியாகச் செயற்படுவார். ஜனாதிபதி பதவிக்கு குறித்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரையும் தேர்ந்தெடுக்க விரும்பும் இன்னொரு பாராளுமன்ற உறுப்பினர், அவர் முன்மொழிய விரும்பும் உறுப்பினரின் முன் எழுத்துப்பூர்வ ஒப்புதலைப் பெற வேண்டும். அதன்பின்னர், அந்த உறுப்பினர், தான் முன்மொழிய விரும்பும் உறுப்பினரின் பெயரை ஜனாதிபதி பதவிக்காக பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் முன்மொழிவார். இன்னொரு பாராளுமன்ற உறுப்பினர் அதனை வழிமொழிய வேண்டும். இதில் விவாதத்திற்கு இடமில்லை. இவ்வாறு, ஜனாதிபதி பதவிக்காக ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினரின் பெயர் மட்டும் முன்மொழிந்து, வழிமொழியப்படும் போது, அவர் ஜனாதிபதி பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவிப்பார். அவ்வாறன்றி, ஒன்றிற்கு மேற்பட்டவர்கள் முன்மொழிந்து வழிமொழியப்படும்போது, பாராளுமன்ற செயலாளர் நாயகம், அன்றிலிருந்து 48 மணி நேரத்திற்கு மிகாத காலத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும். அதற்கான திகதியையும், நேரத்தையும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவிப்பார். (பிரிவு 6). தேர்தல் தேர்தல் திகதியன்று, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தேர்தல் அதிகாரியாகச் செயற்படுவார். தேர்தல் இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்படும். இந்தத் தேர்தலில் விசேடத் தன்மை யாதெனில், சபாநாயரும், ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகைியல் வாக்களிப்பில் கலந்துகொள்வார். பாராளுமன்ற உறுப்பினரின் பெயர் அழைக்கப்படும் போது, அவர் தேர்தல் அதிகாரியிடம் சென்று வாக்குச் சீட்டைப் பெற்றுக்கொண்டு, இரகசிய முறையில் வாக்களிப்பார். தேர்தல் அதிகாரி, வாக்குப்பதிவு முடிவடைவதற்கு முன், முதலில் வாக்களிக்காத எந்த உறுப்பினரின் பெயரையும் இரண்டாவது முறையாக அழைப்பார். அத்தகைய உறுப்பினர் தனது பெயர் இரண்டாவது முறை அழைக்கப்பட்ட பிறகும் கூட வாக்களிக்கவில்லை என்றால், அவர் வாக்களிப்பதில் இருந்து விலகியதாகக் கருதப்படுவார். (பிரிவு 7). வாக்களிக்கும் முறை மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் முறையை ஒத்த முறையிலேயே, பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிப்பார்கள். அதாவது இரண்டிற்கு மேற்பட்டவர்கள் ஜனாதிபதிப் பதவிக்காக முன்மொழியப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், பாராளுமன்ற உறுப்பினர்கள் 1, 2 என்றவாறு முன்னுரிமைத் தெரிவு அடிப்படையில் வாக்களிக்க முடியும். தனது முதலாவது, அல்லது ஒரே தெரிவிற்கு முன்னால் “1” என்று இலக்கமிட்டு வாக்களிக்க வேண்டும். இரண்டிற்கு மேற்பட்டவர்கள் போட்டியிடும் போது, அடுத்த தெரிவுகளை 2, 3… என்று குறிப்பிட்டுத் தெரிவிக்க முடியும். (பிரிவு 8). வாக்கெண்ணிக்கை தேர்தல் அதிகாரி வாக்குச் சீட்டுகளை ஆய்வு செய்து, செல்லாத வாக்குச் சீட்டுகளை நிராகரித்த பிறகு, மீதமுள்ள வாக்குச் சீட்டுகளை ஒவ்வொரு வேட்பாளருக்கும் பதிவு செய்யப்பட்ட முதல் (“1”) விருப்பத்தேர்வுகளின்படி பிரிக்க வேண்டும். ஒவ்வொரு வேட்பாளரும் பெற்றுக்கொண்ட முதல் விருப்பத் தேர்வு வாக்குகளின் எண்ணிக்கையை அவர் கணக்கிடுவார். (பிரிவு 10). எந்தவொரு வேட்பாளரும் பதிவான செல்லுபடியாகும் வாக்குகளில் பாதிக்கு மேல் பெற்றிருந்தால், தேர்தல் அதிகாரி, அத்தகைய வேட்பாளரை ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்க வேண்டும். (பிரிவு 11). எந்தவொரு வேட்பாளரும் பதிவான செல்லுபடியாகும் முதல் விருப்பத் தேர்வு வாக்குகளில் பாதிக்கு மேல் பெறாதிருந்தால், ஆகக் குறைந்த முதல் விருப்பத் தேர்வு வாக்குகளைப் பெற்றுக்கொண்டவர், போட்டியிலிருந்து நீக்கப்பட்டு, அவருடைய வாக்குச் சீட்டுக்களில் இரண்டாவது (“2”) விருப்பத் தேர்வு வாக்குகள் எண்ணப்பட்டு, அவற்றில் மற்றைய வேட்பாளர்கள் பெற்றுள்ள இரண்டாவது விருப்பத் தேர்வு வாக்குகள், அவர்கள் பெற்றுக்கொண்ட முதல் விருப்பத் தேர்வு வாக்குளுடன் சேர்ந்து கணக்கிடப்படும். இப்படியாக ஒரு வேட்பாளர் பதிவான செல்லுபடியாகும் வாக்குகளில் பாதிக்கு மேல் பெறாத நிலையில், குறைந்த வாக்குளைப் பெற்றவர்கள் ஒன்றொன்றாக நீக்கப்பட்டு, அவர்களுடைய இரண்டாம் விருப்புவாக்கு அல்லது, இரண்டாம் விருப்பு வாக்கு பெற்றவரும் போட்டியிலிருந்து ஏலவே நீக்கப்பட்டிருந்தால், மூன்றாவது விருப்பு வாக்கு என்றவாறு அவை கணக்கெடுக்கப்பட்டு குறித்த வேட்பாளர்களின் வாக்குகளோடு ஒன்று சேர்க்கப்படும். இவ்வாறு எண்ணிய பின்னரும், எண்ணிக்கையின் முடிவில் எந்த வேட்பாளரும் செல்லுபடியாகும் வாக்குகளில் பாதிக்கு மேல் பெறவில்லை என்றால், அந்த எண்ணிக்கையில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற வேட்பாளரை தேர்தல் அதிகாரி ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டதாக அறிவிக்க வேண்டும். (பிரிவு 12). இரண்டு வேட்பாளர்கள் சம அளவிலான வாக்குகளைப் பெற்றிருந்தால், தேர்தல் அதிகாரி தான் தீர்மானிக்கும் வகையிலான லொத்தர் ஒன்றின் மூலம், அந்த இருவரில் ஒருவரை ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுப்பார். (பிரிவு 13) ஜனாதிபதி பதவிக்கு பாராளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட வேட்பாளரின் பெயரை, அத்தகைய தேர்தல் திகதிதியிலிருந்து மூன்று நாட்களுக்குள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் வர்த்தமானியில் வெளியிட வேண்டும். (பிரிவு 17) கள நிலவரம் தற்போதைய களநிலவரத்தின்படி, ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ, அநுர குமார திசாநாயக்க, டளஸ் அழகப்பெரும ஆகியோரின் பெயர்கள் ஜனாதிபதிப் பதவிக்கு முன்மொழியப்படலாம் என்று தெரிகிறது. இன்றைய நிலையில் ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி யாருக்கும் ஆதரவில்லை என்று அறிவித்திருக்கிறது. தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டினை இன்னும் அறிவிக்கவில்லை. ஆகவே எத்தனை பேர் வாக்களிக்கப்போகிறார்கள். எத்தனை பேர் வாக்களிப்பை புறக்கணிக்கப் போகிறார்கள் என்பது இன்னும் தெரியவில்லை. எத்தனை பேர் மொத்தம் செல்லுபடியான முறையில் வாக்களிக்கிறார்கள் என்பதில்தான், ஒருவர் முதல் சுற்று வாக்கெடுப்பிலேயே ஜனாதிபதியாவதற்கு எத்தனை வாக்குகள் தேவை என்பதைச் சொல்ல முடியும். 225 பேரும் செல்லுபடியான முறையில் வாக்களித்தால், ஜனாதிபதியாவதற்கு, ஒருவருக்கு 113 முதல் விருப்புரிமை வாக்குகள் தேவை. வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை குறையக் குறைய, வெற்றிக்கான எண்ணும் குறையும். 200 பேர் மட்டுமே செல்லுபடியான முறையில் வாக்களித்தால், வெற்றிக்கான எண் 101 ஆகும். களம் தயார். அடுத்த ஜனாதிபதி யார் என்பது இந்த வாரம் நிச்சயமாகும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அடுத்த-ஜனாதிபதி-எப்படி-தெரிவு-செய்யப்படுவார்/91-300599
  22. பதவிவிலகுகிறார் கோட்டா? என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan ஜனாதிபதிப் பதவியிலிருந்து கோட்டாபய, எதிர்வரும் 13ம் திகதி, புதன் கிழமை, எசல பௌர்ணமி தினத்தன்று, விலகுவதாக சபாநாயகருக்கு தெரிவித்திருப்பதாக செய்தியறிக்கைகள் குறிப்பிடுகின்றன. 2022 ஜூலை 9ம் திகதி நடந்த பெரும் ஆர்ப்பாட்டத்தையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை ஆகியவற்றினுள் நுழைந்து அவற்றைக் கைப்பற்றிய நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்கு தீவைத்து எரித்தழித்த பின்புலத்தில், இந்த அறிவிப்புச் செய்தி வந்திருக்கிறது. இப்படி ஒரு செய்தி வந்துவிட்ட பின்னர் “பதவிவிலகுறார் கோட்டா” என்பதற்கு பிறகு கேள்விக்குறிக்கான தேவை என்ன என்று கேள்வி எழலாம். ஜனாதிபதி பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டு அதனை சபாநாயகருக்கு அனுப்பி வைத்து, அது சபாநாயகருக்கு கிடைக்கும் வரை, பதவி விலகல் என்பது ஒரு செய்தி மட்டுமே. அதன் நிச்சயத்தன்மைக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஜனாதிபதி பதவி விலகாவிட்டால் அடுத்தது என்ன என்பது பெருங்கேள்வி. சட்டரீதியாக ஜனாதிபதியை பதவி விலகச் செய்ய ஒரு வழிதான் இருக்கிறது. அது பழிமாட்டறைதல் (impeachment). ஆனால் அது ஒரு நீண்ட காலந்தேவைப்படும் செயற்பாடு. முதலில் ஜனாதிபதி அரசியலமைப்பு குறிப்பிடும் பழிமாட்டறைதலுக்கான குற்றமொன்றைப் புரிந்தார் பிரேரணை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு நிறைவேற்றப்பட வேண்டும்.\ அதற்குப் பின்னர் உயர் நீதிமன்றம் குறித்த குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி, குறித்த ஜனாதிபதி குறித்த குற்றங்களைப் புரிந்தார் என்று தீர்மானிக்க வேண்டும். அந்தத் தீர்மானத்தின் படி, பாராளுமன்றம் மீண்டும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு பழிமாட்டறைதல் தீர்மானத்தை நிறைவேற்றினால் மட்டுமே ஜனாதிபதி பதவி நீக்கப்படுவார்! பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்றை நிறைவேற்றுவதனூடாக ஜனாதிபதியை பதவி நீக்க முடியாது. அத்தகைய ஏற்பாடுகள் அரசியலமைப்பில் இல்லாததற்குக் காரணம், ஜனாதிபதி என்பவர், இங்கு பாராளுமன்றத்தால் நியமிக்கப்படும் ஒருவர் அல்ல. மாறாக அவர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஜனாதிபதிக்கென தனித்த மக்களாணையொன்றை ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்குகிறார்கள். ஆகவே பாராளுமன்றம் அந்த மக்களாணையை இலகுவில் மீறக்கூடியதாக கட்டமைப்பு அமையக்கூடாது என்பதனால்தான் அரசியலமைப்பு இவ்வாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே மக்களால் ஜனாதிபதித் தேர்தலில் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியை பதவி விலக்குவது என்பது, இலங்கையின் அரசியலமைப்பு ஏற்பாடுகளின் கீழ், அவ்வளவு இலகுவான காரியமல்ல. ஆகவேதான் மக்கள் நேரடியாக வீதிக்கிறங்கி கோட்டாவை பதவி விலகுமாறு அழுத்தங்கொடுத்துப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். சட்டரீதியாக செய்ய முடியாதததை, சட்டத்தைத் தாண்டி அரசியல் ரீதியாக சாதிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இலங்கை மக்கள் இருக்கிறார்கள். ஆனால், இது அனைத்தையும் மீறியும் கோட்டா பதவி விலகாவிட்டால் என்ன நடக்கும் என்ற கேள்விக்கான நிச்சயமான பதவிலை எவரால் சொல்ல முடியாது. மறுபுறத்தில் ஜனாதிபதி கோட்டா பதவி விலகிவிட்டால், அடுத்தது என்ன என்ற கேள்வியும் இங்கு முக்கியமானது. ஜனாதிபதி பதவி, அவரது பதவிக்காலத்தின் போது, பதவிவிலகல் அல்லது வேறு காரணங்களினால் வெற்றிடமாகும் போது, இலங்கை அரசியலமைப்பின் படி உடனடியாக பிரதமர் பதில் ஜனாதிபதியாவார். பிரதமர் பதவி வெற்றிடமாக இருந்தால், சபாநாயகர் பதில் ஜனாதிபதியாவார். ஜனாதிபதிபதவி வெற்றிடமாகிய முப்பது நாட்களுக்குள் பாராளுமன்றமானது, ஜனாதிபதியாவதற்கான தகுதிகள் என்று அரசியலமைப்புரைக்கு தகுதிகளைக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை, வெற்றிடமாகிய ஜனாதிபதிப்பதவியின் எஞ்சிய பதவிக்காலத்திற்கு ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பார்கள். இதற்கு முன்பதாக, ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ அகால மரணமடைந்தபோது, அப்போது பிரதமராக இருந்த டிங்கிரி பண்டா விஜேதுங்க பாராளுமன்றத்தினால், ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் எஞ்சிய பதவிக்காலத்திற்கு ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டமையை ஓர் உதாரணமாகக் குறிப்பிடலாம். மேலும், தற்போது அனைத்துக் கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பது பற்றியும் நிறைய குறிப்பிடப்படுகின்றன. அனைத்துக்கட்சி அரசாங்கம் ஒன்று அமைய வேண்டுமானால், அதில் பிரதமர் யார், அமைச்சர்கள் எவரெவர் என்பது முக்கிய கேள்வி. அரசாங்கம் ஒன்று இயங்க வேண்டுமானால், அதற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் என்பது அவசியம். ஆகவே பாராளுமன்றத்தில் அந்த பெரும்பான்மையின் ஆதரவைப் பெறக்கூடியவர்கள் யார் இருக்கிறார்கள் என்பது மிக முக்கியமான கேள்வி. இந்த இடத்தில்தான் பெரும் சிக்கல் ஒன்று உருவாகிறது. இன்று ஆர்ப்பாட்டக்களத்தில் முன் நிற்கும் எதிர்க்கட்சிகள் எதற்கும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இதுவரை கிடையாது. ஆகவே, கோட்டா பதவி விலகினால், எஞ்சிய பதவிக்காலத்திற்கான ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கும், இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை அவசியம். இதில், இதுவரை காலமும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் ராஜபக்‌ஷர்களின் கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முடிவு என்பது தீர்மானம்மிக்கதாக அமையும் என்பது கவனிக்கப்பட வேண்டியது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்றால் கூட, இன்றைய நிலையில் பாராளுமன்றமானது அதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய நிலை இருக்கிறது. அதற்கும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை அவசியம். ஆகவே, இன்று ஆர்ப்பாட்டக்களத்தில் முன்னிலை வகிக்கும் எதிர்க்கட்சிகளுக்கு முன்னுள்ள பெரும் சவால், பாராளுமன்றத்தில் தமக்கான பெரும்பான்மையை எப்படித் திரட்டிக்கொள்வது என்பதுதான். பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இல்லாது, அரசாங்கமொன்றை அமைக்க முடியாது, கோட்டா பதவி விலகினால் எஞ்சியுள்ள பதவிக்காலத்திற்கான ஜனாதிபதியை தேர்தெடுக்க முடியாது, பொதுத் தேர்தல் நடத்துவதற்கான தீர்மானத்தைக் கூட நிறைவேற்றமுடியாது. நாடு அரசியல் ஸ்திரத்தன்மையின்றி தத்தளிக்கும். இதுதான் அடுத்த பெரும் சவால். இந்த நிலையில், எதிர்க்கட்சிகளுக்கு இருக்கக் கூடிய ஒரு நம்பிக்கை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து கணிசமானவர்கள் பிரிந்து வருவார்கள் என்பதுதான். ஒரு கப்பல் கவிழும்போது, அதிலிருந்து தப்பித்தோ வௌியே பாய்ந்து தப்பிக்கும் எலிகளைப் போல, மூழ்கும் ராஜபக்‌ஷ கப்பலிலிருந்து பாய்ந்து தப்பிக்கும் எலிகளாக பலர் கட்சிமாறுவார்கள். தம்மை “சுயாதீனர்களாக” அறிவித்துக்கொண்டு, இடைக்கால சர்வ கட்சி அரசாங்கத்திற்கும், அதன் முடிவுகளுக்கும் ஆதரவு தருவார்கள் என்பதுதான் எதிர்க்கட்சிகளுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை. ஆனால் இத்தோடு சிக்கல் தீராது. இங்கு எதிர்க்கட்சிகள் என்பது பல. அவற்றில் கொள்கைகள், நோக்கங்கள், முன்னுரிமைகள் மாறுபட்டவை. ஆகவே கோட்டா பதவி விலகினால் எஞ்சியுள்ள காலப்பகுதிக்கு யாரை தேர்ந்தெடுப்பது என்பதே சிச்கலானதொரு கேள்வியாக அமையலாம். இங்கு ஜனாதிபதியாக வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இல்லை என்று யோசிப்பது ஒருபுறமிருக்க, நாடு மிகமோசமான பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் யார் ஜனாதிபதியாகும் சவாலை ஏற்கப் போகிறார்கள் என்பது யோசிக்க வேண்டியதொரு விஷயம். எல்லா விடயங்களையும் கருத்திற்கொண்டு பார்க்கையில், இந்த சிக்கலுக்கான தீர்வுப் புள்ளி, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதில்தான் தங்கியுள்ளது. அத்தகைய அரசியலமைப்பு திருத்தத்திற்கு சர்வசன வாக்கெடுப்பில் அங்கிகாரமொன்று பெறப்படவேண்டுமானால், அதனைப் பெற்றுக்கொள்வதற்கு இதனைவிடப் பொருத்தமானதொரு சந்தர்ப்ப சூழல் உருவாகாது. ஆகவே இது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதுடன், நாட்டின் அரசியலமைப்பை மாற்றியமைப்பதற்கான அரிய சந்தர்ப்பமாகக் கருதப்பட வேண்டும். நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை இல்லாதொழித்தல், அரசியலமைப்பிற்கான அடிப்படைத் திருத்தங்கள் பலவற்றைச் செய்ய சர்வசன வாக்கெடுப்பில் மக்கள் அங்கிகாரம் தேவை என்று பாதுகாப்பு முட்டுக்கட்டையாக இருந்தது. இன்று அதனைச் செய்யக் கூடிய யதார்த்த சூழல் உருவாகியிருக்கிறது. ஆனால் அதனைச் செய்வதற்கு மக்கள் பிரதிநிதிகளாகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தயாராக இருக்கிறார்களா என்பது முக்கிய கேள்வி. இதனை அவர்கள் செய்யாவிட்டால், சர்வ கட்சி அரசாங்கம் என ஆட்சியலமர்ந்தாலும், நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை எப்படி ஏற்படுத்தப்போகிறார்கள் என்பதை அவர்கள்தான் மக்களுக்கு விளக்க வேண்டும். நாடு அரசற்ற அராஜகத்திற்கு (anarchy) முற்றாக மூழ்குவதற்கு முன்னதாக நாட்டைக் காப்பாற்றாவிட்டால், இலங்கையின் எதிர்காலம் என்பது கேள்விக்குறியே. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பதவிவிலகுகிறார்-கோட்டா/91-300198
  23. நோயைக் குணப்படுத்துவதா? அறிகுறியை மறைப்பதா? என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan சர்வதேச நாணய நிதியத்தின் உத்தியோகத்தர் குழாமொன்று ஜூன் 20 முதல் 30 வரை, பத்து நாள்கள், இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மற்றும் இலங்கைக்கான விரிவான பொருளாதார சீர்திருத்த திட்டம் ஆகியன பற்றி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமரும் நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க, திறைசேரியின் செயலாளர் கே.எம். மஹிந்த சிறிவர்தன, அரசாங்க மற்றும் மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தனியார் துறை பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புகள், சர்வதேச நாணய நிதியத்தின் அபிவிருத்தி பங்காளிகள் ஆகியோரைச் சந்தித்து, பேச்சுவார்த்தைகளை நடத்திவிட்டுத் திரும்பி இருக்கிறார்கள். இந்த விஜயத்தைத் தொடர்ந்து, சர்வதேச நாணய நிதியம் உத்தியோகபூர்வமாக வௌியிட்டிருந்த ஊடக அறிக்கையில், ‘சர்வதேச நாணய நிதிய குழு (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) மூலம் ஆதரிக்கப்படும் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்து, அதிகாரிகளுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடலை நடத்தியது. குறித்த கலந்துரையாடல்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. மேலும், விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) தொடர்பாக, உத்தியோகத்தர்கள் அளவிலான உடன்பாட்டை எட்டுவதற்கான கலந்துரையாடல் தொடரும்’ என்று குறிப்பிட்டிருந்தது. ‘கலந்துரையாடல் தொடரும்’ என்ற குறிப்பு, இந்த விஜயத்தை தொடர்ந்து இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலிருந்த இலங்கையர்களைக் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. இந்தக் கவலைக்கு முக்கிய காரணம், சர்வதேச நாணய நிதியத்தினுடனான ஒப்பந்தமொன்று இன்றி, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பெருமளவு உதவி எதையும் இலங்கைக்கு வழங்கத் தயாராக இல்லை என்ற நிலைமையாகும். ஆகவே, பொருளாதார ரீதியில் இலங்கை மீண்டெழுவதற்கு, சர்வதேச நாணய நிதியத்தினுடனான ஒப்பந்தம், இன்றியமையாததொரு தேவையாக உருவெடுத்திருக்கிறது. இது பற்றி இன்னும் பேசுவதற்கு முன்பதாக, இலங்கையர்கள் ஒரு விடயத்தைப் புரிந்துகொள்வது அவசியமாகும். சர்வதேச நாணய நிதியம் என்பது, தர்ம ஸ்தாபனம் அல்ல. அதன் நோக்கம் தர்மம் செய்வதல்ல; அந்நியச் செலாவணிப் பற்றாக்குறையுள்ள நாடுகளுக்கு, கடன் வசதி வழங்குவதன் மூலம், கடன் பெறும் நாடுகளுக்கு ஆலோசனை, தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதன் மூலம், அந்நாடுகள் நிதி நெருக்கடி நிலையைச் சமாளிக்கவும், அதிலிருந்து மீளவும் உதவி செய்வதாகும். ஆனால், அது வழங்குவது கடன். அந்தக் கடன் திரும்பச் செலுத்தப்பட வேண்டும். ஆகவே, கடனைத் திருப்பிச் செலுத்தத் தக்கதாகவும், பொருளாதார நிலையை மீட்டெடுக்கக் கூடியதாகவுமான குறுங்கால, நீண்டகாலக் கொள்கைகளும் திட்டங்களும் இல்லாத அரசொன்றுக்கு சர்வதேச நாணய நிதியம், தர்மம் செய்வதுபோல கடன்வழங்காது. அதற்காகத்தான், அது நீண்ட கலந்துரையாடல்களின் மூலம், பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பிலான பல விடயங்களை உள்ளடக்கிய விரிவான ஒப்பந்தமொன்றை மேற்கொள்கிறது. அந்தத் திட்டத்தின்படி அரசாங்கம் நடக்கும் போது மட்டும்தான், அது தொடர்ந்து கடனுதவியை அளிக்கிறது. ஒரு வகையில், இது இலங்கை போன்ற, முறையான பொருளாதார திட்டம் எதுவுமில்லாத, ஆட்சியிலுள்ளவர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்றவாறு பொருளாதாரம், நாணயக் கொள்கை என்பவற்றை மாற்றி அமைத்துக் கொண்டிருக்கும் ‘வாழைப்பழக் குடியரசு’களுக்கு நல்ல விடயம்தான். ஆனால், இதில் குறைகள் இல்லாமலும் இல்லை. சர்வதேச நாணய நிதியத்தின் கடன் என்பதும், இதுவரை இலங்கை வௌிநாடுகளிடம், வௌிநபர்களிடம் வாங்கிய கடன்கள் எல்லாமே, மீளச் செலுத்தப்பட வேண்டும். அப்படியானால், அரச வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும்; அரச செலவினம் குறைய வேண்டும். அரச வருமானம் அதிகரிப்பதற்கு, வரி விதிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். இந்த வரிச் சுமை மக்களால்தான் சுமக்கப்படப் போகிறது. அதுபோலவே அரச செலவு குறையும் போது, அரசாங்கத்தின் பொதுநலச் செயற்றிட்டங்களும் குறையலாம். ஆகவே, சர்வதேச நாணய நிதியத்தினுடனான ஒப்பந்தத்தின்படியான, பொருளாதார மறுசீரமைப்பு ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் போது, அது இலகுவாக இருக்கப்போவதில்லை. இது ஒரு கடினமான பாதையாக இருக்கும். ஒரு பெருநோயிலிருந்து மீள்வதற்கான சிகிச்சை இது. சிகிச்சை இலகுவானதாக இருக்கப்போவதில்லை. அது கடுமையானது. ஆனால், கட்டுப்பாட்டுடன், பொருளாதார மீட்சிக்கான திட்டங்கள் நீண்ட காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் போது, இந்த நோயிலிருந்து நாடு ஒரு பத்து வருடங்களில் மீளமுடியும். இந்தக் கடினமான பொருளாதார மீட்புச் சிகிச்சையை முன்னெடுக்கும் எந்த அரசாங்கமும், மக்களிடம் பிரபல்யம் பெறப்போவதில்லை. அவை கெட்டபெயரையே பெறும். கசப்பான மருந்தை, வலிந்தூட்டும் கடுமையான வைத்தியரை வெறுக்கும் குழந்தையைப் போல, மக்கள் இந்தத் திட்டங்களை அமல்படுத்தும் அரசாங்கத்தை வெறுக்கத் தொடங்குவர். இது சந்தர்ப்பவாத சக்திகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும். “பத்தே நாளில் நாம் குணப்படுத்துகிறோம்” என்று வாய்ஜாலம் பேசுவோர்பால், மக்கள் ஈர்ப்புக்கொள்வதற்கான வாய்ப்புகள் பல. ஆனால், அவர்களால் குறுங்காலத்தில் இனிப்புகளை வழங்கமுடியுமேயன்றி, நோயைக் குணப்படுத்த முடியாது. இதுபோன்று இனிப்பு வழங்குனர்களால்தான், இலங்கை இந்த நிலைக்கே வந்தது. முறையான பொருளாதாரக் கொள்கை, வளர்ச்சித் திட்டம் என எதுவுமில்லாமல், பொருளாதாரத்துக்குப் பயன்தராத திட்டங்களை, பெரும் கடனெடுத்து நடைமுறைப்படுத்தி, கடனடைக்கும் வழிகளைப் பற்றியெல்லாம் சிந்திக்காத, தூரநோக்கற்ற, மக்களுக்கு ‘இனிப்பு’ வழங்கி அதிகாரத்தை தக்கவைத்துக்கொண்டவர்களால், இலங்கைக்கு வந்த நிலை இது. ஆகவேதான், கசப்பான வைத்தியத்தை வழங்கும் எந்த அரசாங்கமும், அதற்கான தேவை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு வழங்குவது இன்றியமையாத ஒன்றாகும். வறுமையை ஒழிக்க, அரசாங்கம் பணத்தை அச்சிட்டு மக்களுக்கு வழங்கவேண்டும் என்று நினைக்கிறளவில் பொருளாதார அறிவுடையவர்கள் பலர் வாழும் நாட்டில், பொருளாதாரம், பொருளியல் பற்றிய விழிப்புணர்வை அரசாங்கம் வழங்கத் தவறினால், கசப்பு மருந்து வழங்கும் அரசாங்கத்தை, மக்கள் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, இனிப்பு வழங்குவோரை ஆட்சிக்குக் கொண்டுவந்துவிடுவர். மறுபுறத்தில், சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை விரைவில் எட்டுவதில் அக்கறை காட்டுவதை விட்டுவிட்டு கோட்டாபய ராஜபக்‌ஷ, ரஷ்யாவிடம் எண்ணெய் கடன் வாங்குவது, மத்திய கிழக்கு நாடுகளிடம் எண்ணெய் கடன் வாங்குவது, அவ்வப்போது அத்தியாவசியத் தேவைக்குக் கடன் வாங்குவது என, எஞ்சியிருக்கும் தனது இரண்டரை வருட காலத்தை ஓட்டிவிடலாம் என யோசிப்பது, இலங்கையை மிகப் பெரிய மீளமுடியாத பள்ளத்துக்குள் தள்ளிவிடும். எரிபொருள், எரிவாயு, அத்தியாவசியப் பொருட்கள் போன்றவற்றின் தட்டுப்பாடு நோய் அல்ல; அவை நோயின் அறிகுறிகள்தான். இலங்கையில் பொருளாதாரம் நலமாக இருந்தால், இலங்கைக்கு அந்நியச் செலாவணி கையிருப்பு தேவையானளவு இருக்குமானால், எரிபொருள், எரிவாயு வரிசைகள் மறைந்து போய்விடும். ஆகவே, உலகின் அநேக நாடுகள், குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதான பங்களிப்பு நாடுகள், இன்று பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள ரஷ்யாவுடன், இலங்கை புதியதொரு பொருளாதார உறவை உருவாக்குவது என்பது, எவ்வளவு தூரம் புத்திசாலித்தனமானது என்பதை கோட்டாபய சிந்திக்க வேண்டும். நோயின் அறிகுறியைத் தீர்க்க வைத்தியம் தேடி, நோயைத் தீர்க்கும் வைத்தியத்தை தொலைத்துவிடக்கூடாது. அதுபோலவே, கோட்டாபய பதவி விலகினால்த்தான், இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட, சர்வதேச நாடுகளின் உதவிகள் கிடைக்குமென்றால், கோட்டா, ‘கோ ஹோம் கோட்டா’ என்ற மக்களின் குரலை ஏற்று, பதவி விலகுவதுதான் இலங்கைக்கு நன்மை பயப்பதாக இருக்கும். மாறாக, தனது எஞ்சியிருக்கும் இரண்டரை வருடகால பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக கோட்டா, இலங்கையின் எதிர்காலத்தை பகடையாக்குவது நியாயமல்ல. கோட்டாவால், இலங்கையின் நோய்க்கு இரண்டரை வருடங்களில் வைத்தியம் செய்ய முடியாது. அவராலோ, ஞானாக்காவாலோ அது முடியாது. அதற்கு முயற்சிப்பது என்பது, கோவிட்-19 பெருந்தொற்றுக்கு ‘தம்மிக்க பாணி’யால் தீர்வுகாண முயன்றதற்குச் சமனானதாக அமையும். ஆகவே, நோய் தீரும் வைத்தியத்தைப் பெறுவதற்கு கோட்டா தடைக்கல்லாக நிற்பதை விட, விலகி வழிவிடுவதே அவர் இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் ஆற்றக்கூடிய ஒரே நல்ல சேவையாக அமையும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நோயைக்-குணப்படுத்துவதா-அறிகுறியை-மறைப்பதா/91-299679
  24. பொய் பொய் பொய் என்.கே.அஷோக்பரன் Twitter: @nkashokbharan இந்தா இன்றைக்கு எரிபொருள் கப்பல் வருகிறது. இல்லை, ஒரு சின்ன சிக்கல், ஒருநாள் கழித்துத்தான் எரிபொருள் கப்பல் வரும். இல்லை கப்பல் அடுத்த இரண்டு நாட்களுக்கு வராது. இப்படி வராத கப்பல், இன்றைக்கு வருகிறது, நாளைக்கு வருகிறது என்று ஆயிரம் பொய்க்கதைகளை சொல்லி தனக்கிருந்த கொஞ்ச மரியாதையையும் கெடுத்துக்கொண்டிருக்கிறார் இலங்கையின் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர. ஆனால் இத்தகைய பொய்களைச் சொன்ன முதல் அமைச்சரும், அரசியல்வாதியும் காஞ்சன அல்ல. அரசியல்வாதி என்றாலே பொய்தான் சொல்லுவான் என்று மக்கள் உறுதியாக நம்பும் அளவுக்கு அரசியல்வாதிகள் பொய் சொல்வது ஏன்? அப்படி பொய் சொல்லும் அரசியல்வாதிகளை மக்கள் தொடர்ந்தும் நம்புவது ஏன்? என்பதெல்லாம் சுவாரசியமான கேள்விகள். அரசியல்வாதிகள் பொய் சொல்வதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இதைப்பற்றி கருத்துரைத்த ஜொனதன் றோச், “அரசியலில் போலித்தனமும் இரட்டைப் பேச்சும் கருவிகள். ஜனாதிபதி ரிச்சர்ட் எம். நிக்சன் வோட்டர்கேட் சர்ச்சைக்கு உடந்தையாக இருந்ததை மறுத்தபோது, அது தவறான முறையில், சட்டவிரோதமாக அல்லது தனிப்பட்ட ஆதாயத்திற்காக செய்ததை மறைக்கச் சொன்ன பொய், ஆனால் ஒரு பொது நோக்கத்திற்காகவும் பொய் சொல்லப்படலாம். ஆப்ரஹாம் லிங்கனின் விஷயத்தைப் பொருத்தவரையில், அது உள்நாட்டுப் போரைத் தடுப்பதற்கான நியாயமான பொது நோக்கங்களுக்காக சொல்லப்பட்டதைப் போன்று. மேலும் அமெரிக்க கௌரவத்தையும் பாதுகாப்பையும் பாதுகாக்க, அமெரிக்க உளவு விமானத்தை சோவியத் யூனியன் சுட்டு வீழ்த்தியதை ஜனாதிபதி டுவைட் டி. ஐசன்ஹோவர் மறுத்தது போலவும் பொய் சொல்லப்படலாம்… தனிப்பட்ட முறையில் ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டு, அதை பொதுவில் சரிசெய்வது அல்லது மறுப்பது பாசாங்குத்தனமா? நிச்சயமாக. ஆனால் பொது மற்றும் தனிப்பட்ட முகங்களை தனித்தனியாக பராமரிப்பது நாம் அனைவரும் தினமும் செய்யும் ஒன்று. எரிச்சலூட்டும் உறவினர்களிடம் நாங்கள் அவர்களின் வருகையால் மகிழ்ந்தோம் என்று சொல்கிறோம், மோசமான சேவையை வழங்கிய தகுதியற்ற பணியாளர்களுக்கு நன்றி கூறுகிறோம், மேலும் தவறு என்று எங்களுக்குத் தெரிந்தே உயரதிகாரிகளுடன் உடன்படுகிறோம்” என்கிறார் அவர். ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள் மற்றும் இராஜதந்திர சூழ்ச்சிகளை எளிதாக்குவதற்கு அரசியல் போலித்தனம், பாசாங்குத்தனம், இரட்டைப்பேச்சு, மற்றும் பொய் சில சமயங்களில் அவசியமான கருவியாக இருக்கிறது என்பதை றோச் சுட்டிக்காட்டுவது முற்றிலும் சரியானது. வள்ளுவன் சொன்னது போல பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். ஆனால் யாருக்கு நன்மை பயக்கும் என்பது இங்கு முக்கியமானது. இங்கு நன்மை என்பது பொதுநன்மை. ஆனால் அரசியல்வாதிகள் மேற்சொன்ன காரணங்களுக்காகவும், பொது நன்மைக்குமாகவும் மட்டும்தான் பொய் சொல்கிறார்களா? இல்லை. பல சமயங்களில் தனிப்பட்ட நலன்களுக்கும், அரசியல் ஆதாயங்களுக்குமாகத்தான் பொய்களைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள். அரசியல்வாதிகளின் பொய்களுக்கு லட்சோபலட்சம் உதாரணங்கள் இருக்கின்றன. அதில் அண்மைக்காலத்தில் ஒரு தனிமனிதனின் வாழ்வையும், அவரது குடும்பத்தின் நிம்மதியையும் சீரழித்த பொய் என்றால், அது டொக்டர் ஷாஃபி முஸ்லிம் மக்கள் அல்லாதவர்களுக்கு கருத்தடை செய்கிறார் என்று கோட்டாவின் ஆட்சியில் அமைச்சராக இருந்த சன்ன ஜயசுமன உள்ளிட்ட பலரும் சொன்ன பொய்யைக் குறிப்பிடலாம். இனவாதம் பரப்பிய கோட்டாவினது இனவெறிக் கும்பல், இந்த இனவாதப் பொய்யினால், ஷாஃபி என்ற அப்பாவி வைத்தியர் மீது மட்டுமல்ல, முஸ்லிம் சமூகத்தின் மீதே வேண்டாத ஒரு வெறுப்பு உருவாக்கப்பட்டது. “சிங்கள-பௌத்த” இனவாதத்தை முன்னிறுத்தி வாக்குவேட்டை நடத்த விளைந்த கோட்டா குழுமத்துக்கு இந்த இனவெறிச் சதி, அந்த வாக்குவேட்டைக்கு அவசியமானதொன்றாக இருந்தது. இன்று அந்தப் பொய் தகர்ந்துபோயிருக்கிறது. பொய் சொன்ன சன்ன ஜயசுமன உள்ளிட்டோர் இன்று பதவிகளைப் பற்றிப்பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் வைத்தியர் ஷாஃபியும் அவரது குடும்பமும் அனுபவித்த வலிகளுக்கு என்ன மாற்று கிடைக்கப்போகிறது? இப்படி ஆயிரமாயிரம் இனவாதவெறி நிறைந்த பொய்களையும், புரட்டுக்களையும் அதன்பாலான கடுமையாக எதிர்வினைகளையும் இலங்கையில் சிறுபான்மையினர் காலங்காலமாக அனுபவித்தே வந்திருக்கிறார்கள். தமிழனென்றால் “புலி”, “பயங்கரவாதி” என்று எத்தனை கட்டுக்கதைகள்! எத்தனை இளைஞர்கள் மறியலில் தங்கள் இளமையைத் தொலைத்துவிட்டுக்கிடக்கிறார்கள். இதில் அரசியல்வாதிகளை மட்டும் பிழை சொல்லியும் அர்த்தமில்லை. ஏனென்றால், அவர்கள் சொன்னது பொய் என்று எத்தனை தரம் நிரூபிக்கப்பட்டாலும், மீண்டும், மீண்டும் அவர்கள் சொல்லும் பொய்களுக்குள் விழுந்துகொண்டேயிருக்கும் முட்டாள் மக்கள் கூட்டமொன்று இருக்கும்வரை அவர்களும் பொய்களைச் சொல்லிக் கொண்டேயிருப்பார்கள். றொஜர் கூப்மன் சொல்வதுபோல, பொய் மற்ற நபரைப் பாதிக்கிறது, மேலும் அவர்களின் உரிமைகளை மீறுகிறது. இது தார்மீக ரீதியாகவும் நெறிமுறை ரீதியாகவும் திருட்டுக்கு சமம். ஒரு நபரின் மனதை நீங்கள் பொய்யால் நிரப்பும்போது - உண்மையைப் பொய்யால் மாற்றினால் - நீங்கள் உண்மையில் அவர்களிடமிருந்து திருடுகிறீர்கள். ஒருவர் துப்பாக்கி முனையில் உங்கள் பணத்தை திருடும் போது குறைந்த பட்சம், ஒரு திருட்டு நடந்திருப்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் உங்களிடம் உண்மையைச் சொல்வதாக நீங்கள் நம்பும் ஒருவர் உண்மையில் பொய்களைச் சொல்லும்போது, அவர்கள் உங்கள் நம்பிக்கையைப் பயன்படுத்தி உங்களை பாதுகாப்பற்றவர்களாக விட்டுவிடுகிறார்கள். ஒரு வகையில் பார்க்கப்போனால், அரசியல்வாதிகள் சொல்லும் பொய்கள், அவர்கள் கொள்ளையடிப்பதை விட ஆபத்தானது. அரசியல்வாதிகள் ஏன் பொய் சொல்கிறார்கள்? இதற்கு மிக முக்கிய காரணம் மக்கள் பொய்களால் கவரப்படுகிறார்கள். மக்கள் உண்மையைப் பற்றி யோசிக்க நேரமெடுப்பதில்லை. மக்கள் வதந்திகளை நம்ப விரும்புகிறார்கள். இணையம், சமூக ஊடகம் என எல்லாவிடத்திலும், மக்கள் வதந்திகளை விரும்பிப் படிக்கிறார்கள். அது அவர்களுக்கு கிளுகிளுப்பூட்டுகிறது. அதன் உண்மைத்தன்மை பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை. இதனால் அரசியல் உலகில், பொய் வேலை செய்கிறது. "உண்மை அதன் உடையை அணிவதற்கு முன்பு ஒரு பொய் உலகம் முழுவதும் சுற்றி வருகிறது” என்பது பழமொழி. அதுதான் உண்மையும் கூட. கடினமான, கசப்பான, வலிமிகுந்த உண்மையை சொல்வது மக்களுக்குப் பெரிதும் பிடிப்பதில்லை. உண்மை எப்போது அழகாக இருப்பதில்லையே! வாய்மையே வெல்லும், உண்மையே பேசு என பெறுமதிகளைக் கொண்ட சமூகம் கூட, கசப்பான உண்மைகளை விரும்புவதில்லை போலும்! தீபாவளிக்குத் தீர்வு, பொங்கலுக்குத் தீர்வு என்று பேய்க்காட்டுதலை நம்பிக்கையூட்டுதல் என்று புரிந்துகொள்ளும் மனிதர்களும் இங்கு இல்லாமல் இல்லை. இன்றுள்ள அரசியல் கட்டமைப்பின்படி, அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றுதல் தவிர்க்க முடியாததாக இருக்கலாம். பொய் சொல்ல மறுக்கும் மற்றும் பொது அறியாமையை சுரண்டிக் கொள்ளாத அரசியல்வாதிகள், குறைவான ஒழுக்கமும், தராதரமும், பெறுமதியும் உள்ள அரசியல்வாதிளுடன் ஒப்பிடும்போது கட்டமைப்பு ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ளனர். மேலும், அதன் காரணமாக குறைவான தேர்தல்களில் வெற்றி பெறுகிறார்கள். நேர்மையற்ற அரசியல்வாதிகளை வெறுக்கும் அதே வாக்காளர்கள், அந்தப் பொய்களையே மூலதனமாகக் கொண்ட அரசியல்வாதிகளை ஆதரிக்கிறார்கள், வாக்களிக்கிறார்கள். அதிலும் குறிப்பாக அந்த அரசியல்வாதிகளின் பொய்கள் குறித்த வாக்காளர்களின் முன்முடிவுகளை வலுப்படுத்தும் போது, உண்மையைப் பற்றி ஆராயமல், அவர்கள் அந்த அரசியல்வாதிகளை ஆதரிக்கிறார்கள். ஆகவே நேர்மையான அரசியல்வாதிகள் வேண்டும், உண்மையைப் பேச வேண்டும் என்று பேச்சுக்குச் சொல்லும் மக்கள்கூட, உண்மையான அரசியல்வாதிகளை ஆதரிக்காது, பொய்பேசும் அரசியல்வாதிகளின் பொய்களுக்கு எடுபட்டு, அவர்களையே ஆதரிக்கிறார்கள். பொய்யால் ஆதரவு கிடைக்குமென்றால், வாக்கு கிடைக்குமென்றால், பதவி கிடைக்குமென்றால், எந்த அரசியல்வாதிதான் பொய் பேச மாட்டான்! பொய்யிற்கு நற்பலனை வழங்கும் சமூகமொன்றில், உண்மை செத்துத்தான் போகும். மக்கள் ஒரு விஷயத்தை மறந்துவிடக் கூடாது, உங்களுக்கு பிடித்த அரசியல்வாதிகள் பொய் சொல்வதை சகித்துக்கொள்வது, அந்தப் பொய்யில் நீங்களும் பங்கேற்பதற்கு சமம். உங்கள் தார்மீக குருட்டுத்தன்மை அந்தக் குருட்டுத்தன்மைக்கேற்ற அரசாங்கத்தைப் பெற வழிவகுக்கும் போது, அதற்குப் பிறகு அழுது புலம்புவதில் பயனில்லை. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பொய்-பொய்-பொய்/91-299263
  25. நாட்டைக் காப்பாற்ற இரட்சகர்களைத் தேடுதல் என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan இலங்கை தீவு மிகப்பாரதூரமான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து நிற்கிறது. இதனை நெருக்கடி நிலை என்று விளிப்பது, அதன் பாரதூரத்தன்மையை குறைத்துக் குறிப்பிடுவதாகவே அமையும். நிலைமை அவ்வளவு மோசமாகவுள்ளது. எரிபொருளுக்கு வரிசை, எரிவாயுவுக்கு வரிசை, உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு, மருந்துகளுக்கு தட்டுப்பாடு, உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் அபார விலையேற்றம் என, ஒட்டுமொத்த இலங்கையரும் தப்பிப்பிழைக்கவே தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையர்கள் அனைவரும் எல்லா இடங்களிலும் இந்த நெருக்கடியின் தாக்கங்களை உணர்கிறார்கள். மளிகைக் கடைகளில், எரிபொருள் நிலையங்களில் உள்ள வரிசைகளிலும், வீட்டிலும் என எல்லா இடங்களிலும் விலையேற்றம், தட்டுப்பாடு ஆகிய இரண்டையும் மக்கள் எதிர்கொள்கிறார்கள். இலங்கை ரூபாயின் பெறுமதி, இப்போது கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது, இதனால் வாழ்க்கைச் செலவு மிகவும் தீவிரமடைந்துள்ளது. இதன் விளைவாக, அதிகமான மக்கள் அத்தியாவசிய பொருட்கள், சேவைகளை வாங்கவோ அல்லது, அணுகவோ முடியாது திக்கித்திணறி நிற்கிறார்கள். இரசாயன உரத்தை தடைசெய்கிறோம் என கோட்டாபய ராஜபக்‌ஷ, இரவோடிரவாக எடுத்த அடிமுட்டாள்தனமான முடிவின் விளைவால், தற்போது இலங்கை இன்னும் சில மாதங்களில் உணவுப்பஞ்சத்தை எதிர்நோக்கலாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆரூடம் சொல்லி வருகிறார். எப்படியாவது பதவியில், தான் தொடரவேண்டும் என்ற கோட்டாபயவின் சுயநலத்துக்கு, முழுநாடும் பலிக்கடவாகிக் கொண்டிருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் கோட்டாபய ராஜபக்‌ஷ, அமெரிக்காவின் ‘ப்ளும்பேர்க்’ செய்திச் சேவைக்கு அளித்த செவ்வியில், “எனக்கு மக்கள், ஐந்து வருடங்களுக்கான மக்களாணை வழங்கியிருக்கிறார்கள். நான் ஒரு தோல்வி கண்ட ஜனாதிபதியாக போக முடியாது” என்று தெரிவித்திருந்தார். கோட்டாபய, உண்மையைப் பேசியிருக்கிறார். அவருக்கு நாடு பற்றி, மக்கள் படும் துன்பம் பற்றி எல்லாம் அக்கறை இல்லை. அவருடைய கவலை, தான் ஒரு தோல்வி கண்ட ஜனாதிபதியாக, வரலாற்றில் இடம்பெற்றுவிடக் கூடாது என்பதுதான். அவருடைய கவலை அதுமட்டும்தான். ஆனால், அவர் சொல்வதில் ஒரு விஷயம் இருக்கிறது. சரியோ, பிழையோ 69 இலட்சத்துக்கு மேற்பட்ட இலங்கையர்கள், கோட்டாவுக்கு வாக்களித்து, அவரை அடுத்த ஐந்து வருடங்களுக்கு ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தார்கள். மைத்திரிபாலவின் ஆட்சியில் அதிருப்பதி அடைந்த மக்கள், ‘நாட்டைக் காப்பாற்றும் வீரன் கோட்டாவே’ என்று எண்ணி, ஜனாதிபதியாக்கினார்கள். தன்னை ‘ஸ்ரிக்ட் ஒஃபிஸர்’ எனக் காட்டிக்கொண்ட கோட்டா, நிபுணர்களைக் கொண்ட ஆட்சியின் மூலம், இலங்கையை தன்னிறைவு கண்ட நாடாக்கிவிடுவார் என்று பகற்கனவு கண்டுகொண்டு, சர்வதேச அளவில் யுத்தக்குற்றம், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டுள்ள கோட்டாபயவை பெரும்பான்மையினம் ஜனாதிபதியாக்கியது. ஆனால் இதன் விளைவு, இந்தியாவும் ஏனைய உலகநாடுகளும் இலங்கைக்கு வழங்கும் கடனையும் உதவிகளையும் நிறுத்திவிட்டால், எரிபொருளின்றி, போதியளவு உணவு, மருத்துவம், மின்சாரமின்றி இலங்கை பஞ்சத்திலும் வறுமையிலும் உழலும் மிக மோசமான நாடாகிவிடும். இலங்கையை இந்த நிலைக்குக் கொண்டுவந்து விட்டதுதான் கோட்டாபயவினதும், ராஜபக்‌ஷர்களினதும் சாதனை! ஆனால், பிழை அவர்களுடையது மட்டுமல்ல. அவர்களைத் தேர்தலில் வாக்களித்து, தேர்ந்தெடுத்து, ‘நாட்டைக் காப்பாற்றும் இரட்சகர்கள்’ போல அவர்களை வர்ணித்து, அதிகாரத்துக்குக் கொண்டுவந்தவர்கள் இந்நாட்டின் பெரும்பான்மையின மக்கள். இன்றும் கூட, இலங்கை மக்களில் கணிசமானோர், தற்போது தம்மை இந்த இன்னல் நிலையிலிருந்து காப்பாற்ற, ஒரு இரட்சகரை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல; இதுதான் இந்நாட்டின் சாபக்கேடு. ஒரு ஜனநாயக நாட்டில், மாற்றங்கள் விளைய வேண்டுமானால், அந்நாட்டின் அரசாங்கம் உள்ளிட்ட அனைத்து படிநிலைகளிலும் கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். ஆனால், இங்கு யாரும் கட்டமைப்பு மாற்றம் பற்றி யோசிப்பதில்லை. தென்னிந்திய திரைப்படங்களில் வருவதுபோல, ஒரு நாயகன் உதயமாகி, ஏழையை, பணக்காரனாக மாற்றுவதைப் போல, யாராவது துன்பத்தில் உழலும் இலங்கையை ஒரேயடியாக மாற்றிவிட மாட்டார்களா என இரட்சர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இன்றும், கோட்டாவை வீட்டிற்குப் போக வேண்டினாலும், அடுத்தது என்ன என்ற திட்டம், இலங்கை மக்களில் கணிசமானோர் மனதில் இல்லை. நாளை இன்னொருவன் வந்து தன்னை வீரன் என்று ஊடகங்களின் ஆதரவுடன் முன்னிறுத்தினால், அந்தப் பிரசாரத்தில் மயங்கி, மக்களில் கணிசமானோர் அந்த ‘புதிய வீரன்’, தம்மை இரட்சித்துக் காப்பான் என்று நம்பி அவனுக்கு வாக்களிப்பார்கள். அவன் ஏமாற்றியதும், இன்னொரு இரட்சகனுக்கான தேடும்படலம்; ஆக கட்டமைப்பு மாறவில்லை. இரட்சகர்களுக்கான தேடல் மட்டும் தொடர்கிறது. உண்மையில், வளர்ச்சி, அபிவிருத்தி என்பவை மிக நீண்டகால கட்டமைப்பு மாற்றத்தின் மூலமே சாத்தியப்படும். அது, இலகுவான பயணமாக இருக்காது. கட்டமைப்பு மாற்றம், தனிமனித வாழ்வில் நிறையத் தாக்கங்களை ஏற்படுத்தும். இதற்கு மக்கள் தயாரில்லை என்பதுதான், மக்கள் கட்டமைப்பு மாற்றத்தை விரும்பாது, இரட்சகன் ஒருவனை வேண்டி நிற்பதற்கான மூல காரணம். மக்களில் கணிசமானோர் தமது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை. அதிகம் பேருக்கும் கொஞ்ச எரிபொருளாவது கிடைக்க வேண்டும் என, ஒரு பங்கீட்டு முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தி, ஒரு வாகனத்திற்கு ரூ.10,000 தான் எரிபொருள் நிரப்ப முடியும் என்று கட்டுப்பாடு விதித்தால், எரிபொருள் நிரப்புனருடன் பேசி, அவருக்கு ரூ.1,000 இலஞ்சம் வழங்கி, கட்டுப்பாட்டு அளவிற்கு மேலாகத் தமது வாகனத்தின் தாங்கியை நிரப்பிக்கொள்வோர் பலர் இருக்கிறார்கள். மக்கள் எரிவாயுவிற்காக நாட்கணக்காக வரிசையில் காத்திருக்கும் போது, எரிவாயுக் கடைக்காரருக்கு இலஞ்சம் கொடுத்து, கடையின் பின்கதவால் எரிவாயு பெற்றுக்கொள்வோர் இருக்கிறார்கள். இதைச் செய்பவர்கள் எல்லாம் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மட்டுமல்ல. ஆகவே இங்கு பலரும் தாம் எதையும் விட்டுக்கொடுக்கத் தயராகவில்லை. தமது வாழ்க்கை முறையை கொஞ்சம் கூட மாற்றியமைக்கத் தயாராகவில்லை. ஆகவே, அவர்களுக்கு கட்டமைப்பை மாற்றுவதைப் பற்றி அக்கறையில்லை. தாம் நிகழ்காலத்தில் பிரச்சினையில்லாமல், நோகாமல், தாம் எப்படி வாழ்ந்தோமோ அப்படியே வாழ வேண்டும். அதற்கு வழிசமைக்கிற ஒரு இரட்சகன் வரவேண்டும். அவனை ஆதரிப்போம் என்பதுதான் இங்கு பலரின் மனநிலை. இதனால்தான் மாறி மாறி இரட்சகர்களுக்கு வாக்களித்துக்கொண்டு இருக்கிறார்கள் மக்கள். இங்கு கட்டமைப்பை மாற்றவேண்டுமென உண்மையாக விரும்புகிறவர்களுக்கு மதிப்புமில்லை; ஆதரவுமில்லை. குறைந்த வரி, ஆனால் அரசாங்கம் நிறைந்த மானியங்களையும் உதவிகளையும் வழங்கவேண்டும் என்று நினைக்கும் மக்கள் இங்கு ஏராளம். அந்த மக்கள் பதவிக்குக் கொண்டு வந்த நாயகனான கோட்டாபய, அந்த மக்களின் கனவை நனவாக்கியதன் விளைவைத்தான் இன்று நாம் அனைவரும் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். நான் மட்டும் வாழ்ந்தால் போதும், மற்றவன் எக்கேடுகெட்டாலென்ன என்று நினைத்த இலங்கையின் பெரும்பான்மையினம், ஒரு வௌிப்படையான இனவாதிக்கு வாக்களித்தது. அவன் பதவிக்கு வந்தால், சிறுபான்மையினர் துன்பத்திற்காளாவர்களே, அரச படைகளால், பொலிஸாரால் அடக்குமுறைக்காளாவார்களே என்றெல்லாம் வாக்களித்த அந்த பெரும்பான்மை யோசிக்கவில்லை. பதவிக்கு கொண்டு வந்த இரட்சகன் முன்பு, சிறுபான்மையினரிடம் மட்டும் காட்டிய வன்முறைவெறியை, இன்று பெரும்பான்மையினருக்கு எதிராகவும் காட்டத் தொடங்கியது கண்டு அவருக்கு வாக்களித்தவர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். தாம் வெறுக்கும் இந்த முன்னாள் இரட்சகனை விரட்டிவிட்டு, தமக்கு சொகுசான வாழ்க்கையை அளிக்கக்கூடிய இன்னோர் இரட்சகனைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த இரட்சகனுக்காக தேடல் நிற்கும் வரை, கட்டமைப்பு மாற வேண்டும் என்று மக்கள் உணரும் வரை, அதற்காக விட்டுக்கொடுப்புகளுக்கு தயாராகும் வரை, இங்கு எதுவும் மாறப்போவதில்லை என்பதுதான் யதார்த்தம். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நாட்டைக்-காப்பாற்ற-இரட்சகர்களைத்-தேடுதல்/91-298858
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.