• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Search the Community

Showing results for tags 'சிறுகதை'.More search options

 • Search By Tags

  Type tags separated by commas.
 • Search By Author

Content Type


Forums

 • யாழ் இனிது [வருக வருக]
  • யாழ் அரிச்சுவடி
  • யாழ் முரசம்
  • யாழ் உறவோசை
 • செம்பாலை [செய்திக்களம்]
  • ஊர்ப் புதினம்
  • உலக நடப்பு
  • நிகழ்வும் அகழ்வும்
  • தமிழகச் செய்திகள்
  • அயலகச் செய்திகள்
  • அரசியல் அலசல்
  • செய்தி திரட்டி
 • படுமலைபாலை [தமிழ்க்களம்]
  • துளித் துளியாய்
  • எங்கள் மண்
  • வாழும் புலம்
  • பொங்கு தமிழ்
  • தமிழும் நயமும்
  • உறவாடும் ஊடகம்
  • மாவீரர் நினைவு
 • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
  • இலக்கியமும் இசையும்
  • கவிதைப் பூங்காடு
  • கதை கதையாம்
  • வேரும் விழுதும்
  • தென்னங்கீற்று
  • நூற்றோட்டம்
  • கவிதைக் களம்
  • கதைக் களம்
 • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
  • சமூகவலை உலகம்
  • வண்ணத் திரை
  • சிரிப்போம் சிறப்போம்
  • விளையாட்டுத் திடல்
  • இனிய பொழுது
 • கோடிப்பாலை [அறிவியற்களம்]
  • கருவிகள் வளாகம்
  • தகவல் வலை உலகம்
  • அறிவியல் தொழில்நுட்பம்
  • சுற்றமும் சூழலும்
 • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
  • வாணிப உலகம்
  • மெய்யெனப் படுவது
  • சமூகச் சாளரம்
  • பேசாப் பொருள்
 • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
  • நாவூற வாயூற
  • நலமோடு நாம் வாழ
  • நிகழ்தல் அறிதல்
  • வாழிய வாழியவே
  • துயர் பகிர்வோம்
  • தேடலும் தெளிவும்
 • யாழ் உறவுகள்
  • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
  • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
  • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
  • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
  • யாழ் ஆடுகளம்
  • யாழ் திரைகடலோடி
  • யாழ் தரவிறக்கம்
 • யாழ் களஞ்சியம்
  • புதிய கருத்துக்கள்
  • முன்னைய களம் 1
  • முன்னைய களம் 2
  • பெட்டகம்
 • ஒலிப்பதிவுகள்
 • Newsbot - Public club's Topics
 • தமிழரசு's நாபயிற்சி
 • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
 • தமிழரசு's வரவேற்பு
 • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
 • தமிழரசு's படித்ததில் பிடித்தது
 • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
 • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
 • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
 • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
 • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
 • தமிழ்நாடு குழுமம்'s கணணி
 • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
 • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
 • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
 • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
 • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
 • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில் 360'
 • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
 • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
 • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
 • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
 • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
 • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
 • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
 • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
 • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
 • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
 • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
 • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
 • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா

Calendars

 • நாட்காட்டி
 • மாவீரர் நினைவு

Blogs

There are no results to display.

There are no results to display.


Find results in...

Find results that contain...


Date Created

 • Start

  End


Last Updated

 • Start

  End


Filter by number of...

Joined

 • Start

  End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 230 results

 1. துரோகங்கள் - சிறுகதை அசோகமித்திரன், ஓவியங்கள்: ஸ்யாம் இதற்கு முன்னர் பல முறை அந்த பங்களா கேட்டைத் தாண்டியபோது அவனை மீறி வந்த காய்ச்சல் உணர்வு இப்போது இல்லை. தோட்டத்தைத் தாண்டி பங்களா போர்ட்டிகோவில் நிறுத்தப்பட்டிருந்த கறுப்பு நிற பெரிய காரைச் சுற்றிக்கொண்டு அவன் பங்களா வராண்டாவை அடைந்தான். “சார்... சார்...” என்று அழைத்தான். தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த ஆள் ஓடிவந்தான். நீலகண்டனைப் பார்த்து, “சின்ன அம்மாவைக் கூப்பிட்டீங்களா?” என்று தெலுங்கு மொழியில் கேட்டான். “இல்லை. பெரிய ஐயாவைப் பார்க்கணும்” என்றான். “பெரிய ஐயாவையா? சரி, சேர்ல உக்காருங்க. நான் சொல்லிட்டு வரேன்.” நீலகண்டன் வராண்டாவில் போடப்பட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்தான். சிறிது நேரம் பொறுத்து சதாசிவம் வந்தார். அப்போதுதான் குளித்து, திருநீறு அணிந்திருந்தார். நீலகண்டனைப் பார்த்து, “என்னப்பா, ரஞ்சனியைப் பார்க்க வந்தியா? இவ்வளவு நாளாகியும் இன்னும் மல்லையாவுக்குத் தெரியலை. ரஞ்சனி...” என்று குரல்கொடுத்தார். ``இல்லை சார். உங்களைத்தான் பார்க்க வந்தேன்.” “என்னையா? வா, உள்ளே வா. இப்போ மணி எட்டு ஆறது. என்னை அரை மணியிலே விட்டுடுப்பா.'' நீலகண்டன், சதாசிவத்தைப் பின் தொடர்ந்தான். அது வராண்டாவுக்கு அடுத்த ஹால். நிறைய சோபாக்கள் போடப்பட்டிருந்தன. “உக்காரு.” இருவரும் உட்கார்ந்தார்கள். “இப்போ சொல்லு.” “நான் ரஞ்சனியைக் கல்யாணம் பண்ணிக்கணும்.” “என்ன..!” “நான், ரஞ்சனியைக் கல்யாணம் பண்ணிக்கணும்.” சதாசிவம் சிறிது நேரம் நீலகண்டனையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். மிகுந்த அக்கறையுடன், “நீலகண்டன், நீ தெரிஞ்சுதான் பேசுறியா?” “ஆமாம் சார். எனக்கு உங்க மேலே இருக்கிற நம்பிக்கையில்தான் சொல்றேன். நான் ரஞ்சனியைக் கல்யாணம் பண்ணிக்கணும்.” சதாசிவம், மீண்டும் சிறிது நேரம் நீலகண்டனையே பார்த்தவண்ணம் இருந்தார். ``உனக்கு என்ன வயசு?” “பதினெட்டு.” “ரஞ்சனி வயசு தெரியுமா?” “என்னைவிட ஒரு வயசு பெரியவளா இருப்பா.” “உன்னைவிடப் பெரியவளையா கல்யாணம் பண்ணிக்க விரும்புறே?” “எனக்கு அவ சின்னப் பெண்ணாத்தான் தெரியுறா.” “எங்க ஜாதி தெரியும்ல..?” “தெரியும் சார். முதலியார்.” “நீ... சரி, அவகிட்ட கேட்டுட்டியா?” “முதல்ல உங்ககிட்டயும் ரஞ்சனி அம்மாகிட்டயும் அனுமதி கிடைச்சதுக்கு அப்புறம்தான் அவகிட்ட கேக்கலாம்னு இருக்கேன். முதல்ல உங்க சம்மதம் வேணும். எனக்கு எல்லோருடைய சம்மதம் கிடைச்சப் பிறகுதான் அவகிட்ட பேசப்போறேன்.” “உங்க அப்பா அம்மாகிட்ட கேட்டுட்டியா?” “இல்லை சார். உங்க ரெண்டு பேர் சம்மதம் கிடைச்ச அப்புறம்தான் அப்பா-அம்மாகிட்ட கேக்கப்போறேன். இப்பவே கேட்டா, அவங்க குழம்பிடுவாங்க.” “ரொம்பத்தான் யோசிச்சு வெச்சிருக்கே. மீனாட்சி... மீனாட்சி..!” சிறிது நேரம் பொறுத்து, ரஞ்சனியின் தம்பிகளில் ஒருவன் வந்தான். “என்னன்னு அம்மா கேக்கச் சொல்லிச்சு.” “முக்கியமான விஷயம்னு சொல்லு. மீனாட்சி..!” ரஞ்சனியின் அம்மா வந்தாள். “என்னங்க?'' “நம்ம நீலகண்டன் ஒரு புது விஷயம் சொல்றான்.” ``என்னது?'' சொல்லுப்பா. அவங்ககிட்டயே நேரா சொல்லு.” நீலகண்டன் எழுந்து நின்றான். “அம்மா...” “என்ன தம்பி?” “நான் ரஞ்சனியைக் கல்யாணம் பண்ணிக்க, உங்க சம்மதம் வேணும்.” “என்ன... என்ன?'' ``ரஞ்சனியை நான் கல்யாணம் பண்ணிக்கணும்.” “என்ன பேத்தறே? படிச்சுண்டு இருக்கீங்க, இப்பத்தான் டிகிரி கிளாஸ்ல சேர்ந்திருக்கீங்க. இப்போ கல்யாணம் பண்ணிண்டு என்ன பண்ணுவீங்க? குழந்தை பொறந்தா என்ன பண்ணுவீங்க? நிதானமாத்தான் இருக்கியா? அவ பணக்காரின்னு காதல் வந்துடுத்தா?'' சதாசிவம் குறுக்கிட்டார். “அப்படி எல்லாம் பேசாதே மீனாட்சி. அவன் சொல்லறதை முதல்ல கேளு.” ``அம்மா, இப்போ கல்யாணம்தான் ஆகுமே தவிர, அவ உங்க வீட்லதான் இருப்பா; நான் எங்க வீட்ல இருப்பேன். நாள், கிழமைக்கு அவ எங்க வீட்டுக்கு வருவா; நாங்களும் உங்க வீட்டுக்கு வருவோம். பரீட்சை முடிஞ்சு நாங்க பாஸ் பண்ணி நான் வேலைக்குப் போகணும். எங்க அப்பா, எனக்கு எப்படியும் ரயில்வேயில வேலை வாங்கித் தருவார்.” “ரயில்வே எதுக்குத் தம்பி? நீ என்னோட சேர்ந்துடலாம்.” “இதுக்கு எல்லாம் அப்புறம்தான் அவ என் வீட்ல வந்து குடித்தனம் பண்ணுவா.” சதாசிவத்தின் மனைவி கேட்டாள்... “ரஞ்சனியைக் கேட்டியா?'' “நீங்க எல்லாரும் `சம்மதம்'னு சொன்ன அப்புறம்தான் அவகிட்ட பேசணும்.” ``இதென்ன புதுசா இருக்கு? புத்தகத்துல படிக்கிற காதல் கதை மாதிரி இல்லையே!” “அம்மா, உங்க எல்லோருடைய சம்மதத்தோடு தான் இந்தக் கல்யாணம் நடக்கணும். உங்க மனுஷாளுங்க எல்லாரும் வரணும். என் மனுஷாளுங்க ரொம்ப ஐதீகமா இருக்கிறவங்க, வர மாட்டாங்க. நாங்க ஜாதி, குலம், கோத்திரம் எல்லாம் பார்த்துக் கல்யாணம் பண்ணின அக்காவை, அந்த மனுஷன் தள்ளிவெச்சிருக்கான். அதுக்காக நான் சாதிவிட்டு சாதி போறேன்னு இல்லை. உங்க சம்மதம், என் மனுஷாள் எல்லோருடைய சம்மதத்ததோடுதான் எனக்கும் ரஞ்சனிக்கும் கல்யாணம் நடக்கணும்.” “ரஞ்சனி... ரஞ்சனி..!'' ரஞ்சனி வர, சிறிது நேரமாயிற்று. வந்தாள். பாவாடை மேலாக்கு அணிந்து இருந்ததில், அவள் பள்ளி மாணவிபோல் இருந்தாள். மீனாட்சி அம்மாள் கேட்டாள், “ஏண்டி, இந்தப் பையனை எவ்வளவு நாளா தெரியும்?” “நீலகண்டன்மா... என் கிளாஸ்தான். ரெண்டு வருஷங்களா தினமும் பார்க்கிறவன்தான். இப்பதான் ஒரு வாரமாப் பார்க்கலை. காலேஜ் பக்கம் எல்லாம் ஒரே ரயட்ஸ், லட்டி சார்ஜ்னு இருக்கு. அதான் நாங்க யாருமே போகலை. ஆனா, காலேஜுக்கு முன்னாடியேகூட அவன் அக்காவைத் தெரியும்.” ``யார் இவன்? அவன் வீட்டுக்குப் போயிருக்கியா?” “போயிருக்கேன். ஏன் கேக்கறே?” “அவன் வீட்டுக்கே போயிருக்கியா?” “ஆமாம்மா. நீலகண்டனும் நம்ம வீட்டுக்கு நிறைய முறை வந்திருக்கானே? நம்ம பிரின்சிபால் கல்யாணிக்குட்டி அம்மாவை, நம்ம கார்ல அவன்தானே ஆஸ்பத்திரிக்கு அழைச்சுண்டு போனான்!” ``இதெல்லாம் எனக்குத் தெரியும். ஒழுங்கான பையன்தானா?” “என்னம்மா திடீர்னு இப்படி எல்லாம் கேக்குறே? அவனை எல்லாருக்கும் பிடிக்கும். ஹைதராபாத் இன்ஸ்பெக்டர் ஜெனரல் பையன், இவனை அவன் வீட்டுக்கு அழைச்சுண்டு போய் அவன் அம்மாகிட்ட எல்லாம் காட்டியிருக்கான்.” “அவன் இப்ப எதுக்கு வந்திருக்கான் தெரியுமா?” ‘`தெரியாது.” ``உன்னைக் கல்யாணம் கட்டிக்கணுமாம்.” ரஞ்சனிக்கு சிரிப்பு வந்தது. “இதென்னம்மா இது... நிஜமாவா?” “ஆமாம்... கேளு அவனை.” அவள் நீலகண்டனையே புன்னகையோடு ஒரு நிமிடம் பார்த்தாள். “ஏண்டா, நீலகண்டன் நிஜமாவா?” நீலகண்டன் தலையை மட்டும் அசைத்தான். ரஞ்சனிக்குச் சிரிப்பு மீண்டும் பீரிட்டு வந்தது. பெற்றோர் முன்னிலையிலேயே அவன் கன்னத்தை லேசாகக் கிள்ளினாள். ``ஏன்டா என்கிட்ட முன்னமே சொல்லலை?” என்றாள். அவள் பெற்றோரிடம், “நீங்க `சரி'னா எனக்கும் சரி” என்றாள். மீண்டும் நீலகண்டனைப் பார்த்துப் புன்னகை புரிந்தபடி உள்ளே சென்றாள். சதாசிவத்தின் முகம் கருத்தது; மீனாட்சி திகைத்து நின்றாள். நீலகண்டன், ``நான் சாயந்திரமா வரட்டுமா?'' என்று கேட்டான். சதாசிவம், “பத்து நாள்... இல்லை இல்லை, ஒரு மாசம் பொறுத்து வாங்க” என்றார். அவர் ஏன் அவனிடம் பன்மையில் பதில் சொன்னார் என அவனுக்குத் தெரியவில்லை. நீலகண்டன், அவனுடைய சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டுப்பக்கம் சென்றான். ஆரம்பத்தில் இருந்த சுமுகம் இப்போது மாறிவிட்டதுபோல தோன்றியது. ஒன்று நிச்சயம், ரஞ்சனிக்கு அவனைப் பிடித்திருக்கிறது. அது அவளுடைய பெற்றோருக்குப் பிடிக்க வில்லை. அடுத்த வாரம் ஊர் சட்டம்-ஒழுங்கு நிலைமையில் முன்னேற்றம் இருந்தது. அவன் கல்லூரிக்குப் போக ஆரம்பித்தான். ரஞ்சனி வரவில்லை. பற்களைக் கடித்துக்கொண்டு முப்பது நாட்கள் காத்திருந்தான். ஒருநாள்கூட அவள் வீட்டுப்பக்கம் போகவில்லை. ஒரு மாதம் கழித்து அவள் வீட்டுக்குப் போனான். ஜன்னல் எல்லாம் சாத்தி இருந்தன. வேலைக்காரர்கள்போல் இருந்த மூன்று நான்கு பேர் போர்டிகோவில் உட்கார்ந்துகொண்டு ஆடு புலி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தார்கள். ``வீட்ல யாரும் இல்லையா?'' என்று நீலகண்டன் கேட்டான். ``எல்லோரும் மெட்ராஸ் போயிருக்கிறார்கள்'' என்று ஒருவன் சொன்னான். “எப்போ திரும்பி வருவாங்க?” “ `ஒரு மாசத்துல அய்யா வந்திடுவார்'னு சொன்னாங்க.” “மத்தவங்க?” “தெரியலை. வந்தா எல்லோரும்தானே வருவாங்க? என்னமோ தெரியாது. அய்யா மட்டும்னுதான் சொன்னாங்க.” நீலகண்டன், கல்லூரியில் விசாரித்தான். ரஞ்சனி டி.சி வாங்கிக் கொண்டு போய்விட்டதாகத் தெரிந்தது. அவள் கட்டியிருந்த பணத்தில் பாதியை. அவள் கொடுத்த முகவரிக்கு அனுப்பியிருக்கிறார்கள். பணம் திரும்பி வந்துவிட்டது. எத்தனையோ நாட்கள், அவள் வீட்டுக்குப் போயிருக்கிறான்; அவள் அப்பாவுடன் பேசியிருக்கிறான். அவர் என்ன தொழில் செய்கிறார், எங்கு வணிகம் நடத்துகிறார் என்று தெரிந்துவைத்துக்கொள்ளவில்லை. கல்யாணிக்குட்டி அம்மாவிடம் விசாரித்தான். அவளைக் காலிசெய்யச் சொல்லியிருக்கிறார்கள். வீட்டையே விற்கப்போகிறார்கள். அதற்குள் விற்றுவிட்டார்களோ, என்னவோ. அந்த ஊரில் இரண்டே வங்கிகள். பிறர் கணக்கு விஷயங்களை ஒரு பையன் போய் விசாரித்தால் சொல்லிவிடுவார்களா? அவனுடைய தந்தையின் நண்பர் ஒருவர் மூலம் விசாரித்தான். சதாசிவம், வீட்டை விற்று அந்தப் பணத்தை ஒரு வங்கியில் போட்டு, அந்தக் கணக்கையே முடித்துவிட்டார். அவர்களும் அவர் மெட்ராஸ் போயிருக்கிறார் என்றுதான் தெரிவித்திருக் கிறார்கள். `ஐயோ, அவர்கள் ஊரில் இருந்தபோது அவர்களுடைய உறவினர்கள் யார் யார் என, பேச்சுவாக்கிலாவது தெரிந்துகொண்டிருக்கலாம். அதைச் செய்யவில்லையே' என வருந்தினான். நீலகண்டன், கல்லூரியிலேயே ரஞ்சனிக்கு நெருக்கமாக இருந்ததுபோல் தெரிந்த இந்திரகுமாரியைக் கேட்டான். அவள் வட இந்தியப் பெண். அவளுக்கு, ரஞ்சனி நினைவே இல்லை. அப்புறம் “இந்த வருஷம் பார்க்கவே இல்லையே!” என்றாள். “அவள் சொந்த விஷயம், உறவுக்காரர்கள் பற்றி எல்லாம் பேசிக்கொள்ள மாட்டீர்களா?” “நானும் கேட்டது கிடையாது, அவளும் சொன்னது இல்லை.” ``அப்புறம் என்னதான் பேசிக்கொள்வீர்கள்? நிறையச் சிரித்துச் சிரித்துப் பேசிக்கொள்வீர்களே!'’ இந்திரகுமாரிக்குக் கோபம் வந்துவிட்டது. ``இதெல்லாம் கேட்க நீ யார்? நான் பிரின்சிபாலிடம் உன்னைப் பற்றி ரிப்போர்ட் செய்வேன்.’' நீலகண்டனுக்கு வியப்பாக இருந்தது. இரண்டு ஆண்டுகள் இந்திரகுமாரியும் அவனைக் கவனித்திருப்பாள். கல்லூரி விழா ஒன்றில் அவன் ஒரு பாட்டு பாட, அதன் பிறகு அவள் சிதார் வாசித்தாள். கல்லுரிப் பையன்கள் அவளை வாசிக்கவே விடாமல் கிண்டலடித்தார்கள். நீலகண்டன்தான் அவளிடம் சென்று எதையும் லட்சியம் செய்யாமல் வாசிக்கச் சொன்னான். அந்த விழா முடிந்த பிறகு அவளே அவனிடம் வந்து, ``உனக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்” என்று சொல்லியிருக்கிறாள். ரஞ்சனிக்கு உறவுக்காரர்கள் இருக்கக்கூடும் என்ற இடங்களில் விசாரித்தான். பலருக்கு அவன் சொன்ன அடையாளங்கள் புரியவே இல்லை. அவர்கள் ரஞ்சனியை ரஞ்சனாக்கி, “அப்படி ஒரு பையன் எனக்குத் தெரிஞ்சு இல்லையேப்பா!'’ என்றார்கள். அவர்கள் இருந்த ஊரில் பெரிய பங்களாவில் வசித்து, ஊரிலேயே மிகப்பெரிய கார் வைத்திருந்தவர்கள். அடையாளமே இல்லாது மறைந்துவிட்டார்கள். இந்தச் சின்ன ஊரிலேயே தேடிக் கண்டுபிடிக்க முடியாதபோது, மெட்ராஸ் போன்ற மிகப்பெரிய நகரில் எப்படிக் கண்டுபிடிக்க முடியும்? நாட்கள் சென்றுகொண்டே இருந்தன. ஒருநாள் அவன் அப்பா, “என்னோடு கொஞ்சம் ஹாஸ்பிட்டல் வா” என்றார். அன்று ஹாஸ்பிட்டல் போன அப்பா, உயிரோடு திரும்பி வரவில்லை. நீலகண்டன், அம்மா மற்றும் உடன் பிறந்தோருடன் ஊருக்கு சற்று வெளியே குடிபோனான். வீட்டுக்கு, மின் இணைப்பு கிடையாது. ஆனால், விசேஷமான தண்ணீர்கொண்ட கிணறு. நீலகண்டனுக்கு மூன்று சின்னச்சின்ன உத்தியோகங்கள். மாடு, கன்றுடன் வாழ்க்கை சீராகப் போய்க்கொண்டிருந்தது. ரஞ்சனியின் நினைவு தூங்கவிடாமல் செய்தது. எவ்வளவு எளிதாக ரஞ்சனியின் பெற்றோர் அவனைத் தோற்கடித்து விட்டார்கள்? இல்லை, அவர்களும் பெரிய விலை கொடுத்திருக்கிறார்கள். எவ்வளவோ ஆண்டுகள் அவர்கள் வாழ்ந்து வந்த ஊரையும் வீட்டையும் துறந்திருக்கிறார்கள். ரஞ்சனியும் துடிதுடித்துப் போயிருப்பாள். அவளும் அவனை நினைத்து கண்ணீர் விட்டிருப்பாள். பெற்றோர் எதிரிலேயே ஓர் இளைஞன் கன்னத்தில் செல்லமாகக் கிள்ளிவிட்டுப் போனவளுக்கு, அவன் மீது எவ்வளவு பாசம் இருந்திருக்க வேண்டும்! வழக்கம்போல நீலகண்டன் இரவில் ஒரு பெரிய மைதானத் துக்குப் போய், உரக்கக் கத்தி அழுதான். இதற்குள் அவளுக்குக் கல்யாணம் நடந்திருக்கக்கூடும். அவள் கணவன் அவளைக் `கறுப்பி' என வேதனையூட்டிக் கொண்டிருக்கக்கூடும். அந்த எண்ணம், அவனைப் பித்துபிடிக்கவைப்பதாக இருந்தது. அவன் கை-கால்களை உதறிக்கொண்டு கதறினான். அவள் இன்று மாயமாகிவிட்டாலும் என்றாவது அவன் முன் நிற்பாள் என்ற நம்பிக்கை, அவனை தற்கொலை பற்றி நினைக்கவிடவில்லை. மூன்று ஆண்டுகள் முழுதாக முடிந்துவிட்டன. ஒருநாள் பளபளவென்ற உறையில் அவனுக்கு மெட்ராஸில் இருந்து ஒரு கடிதம் வந்தது. அவனுக்கு, அவனுடைய அப்பாவின் சிநேகிதர்கள் அனைவரையும் தெரியும்; இந்த மெட்ராஸ் நண்பரையும் தெரியும். அவனுடைய அப்பாவின் மரணத்தைத் தெரிவித்து, அவன் உறவினர், அப்பாவின் நண்பர்கள் என முப்பது பேருக்குத் தபால் அட்டையில் தகவல் தெரிவித்திருந்தான். பலர் நேரில் வந்து அவனையும் அவன் அம்மாவையும் துக்கம் விசாரித்தார்கள். சிலர், அப்பா அவர்களுக்குக் கைமாத்தாகக் கொடுத்தது என்று பத்து இருபது ரூபாயைக் கொடுத்தார்கள். வெளியூர்களில் இருந்தவர்கள், பதில் கடிதம் போட்டார்கள். அவர்கள் தப்புத் தப்பாக முகவரி எழுதிய கடிதங்கள் அனைத்தும் வந்து சேர்ந்தன. ஒருவரிடம் இருந்து மட்டும் தகவல் ஏதும் இல்லை. இப்போது வந்த கடிதம் அவருடையது. விஷயம் இதுதான். `மெட்ராஸுக்கு வா. உனக்கு நான் வேலை தருகிறேன்.' மெட்ராஸ்! ரஞ்சனி இருக்கக்கூடிய நகரம். ஆனால், இத்தனை ஆண்டுகளில் அவளுடைய வாழ்க்கையில் எவ்வளவோ மாறுதல்கள் நடந்திருக்கலாம். கல்யாணம் நடந்து, குழந்தைகள் இருக்கலாம். அவர்களின் பூர்வீகத்தை அவன் கேட்டுத் தெரிந்துகொள்ளவில்லை. ஆனால், மெட்ராஸ் மாதிரி நகரங்களுக்குச் சென்றவர்கள் அவர்களாக வேறு இடம் போவார்களா? அவனுடைய தந்தையுடன் அவன் அநேகமாக வருடம் ஒருமுறை மெட்ராஸ் போயிருக்கி றான். ஒருமுறை அவருடைய நண்பரைப் பார்க்க ஓர் இடம் அழைத்துச் சென்றார். அது சிந்தாதிரிப்பேட்டை. அங்கு வசித்தவர்கள் எல்லோரும் முதலியார்கள். அப்பா பார்க்கச் சென்றதே ஒரு முதலியாரைத்தான். நாட்டு டாக்டர். அந்தத் தெருவுக்கே அவர் பெயரைத்தான் வைத்திருந்தனர். அவர், அவனுடைய அப்பாவை எவ்வளவு வாஞ்சையோடு வரவேற்றார்! மனைவியை விசேஷமாக தோசை செய்ய சொன்னார். அந்த அம்மாள் அப்பாவிடம் சொன்னாள், ``இதில் நிறைய வெந்தயம் போட்டிருக்குங்க. ருசியாவும் இருக்கும்... உடம்புக்கும் நல்லது.'' டாக்டர் நண்பர் அப்பாவிடம் சொன்னார், ``டவுனுக்குப் போனா ஒரு துலாம் புனுகு வாங்கி, தம்பி பருவுக்குத் தடவு.'' நீலகண்டனிடம் கேட்டார், ‘`ஏன் தம்பி, நீ கோவணம் கட்டுவதுண்டா? முதல்ல அரைஞாண்கயிறு கட்டிக்க. அப்புறம் கோவணம். தினமும் குளிக்கிறதுக்கு முன்னாடி, உன் கோவணத்தாலே முகத்தைத் தொடைச்சுக்க. அதுக்கு அப்புறம்தான் கோவணத்தை நனைக்கணும்.'' மெட்ராஸ் போனால் அவரைப் போய்க் கேட்கலாம்... இரு நாட்களுக்குப் பிறகு நீலகண்டன் மெட்ராஸுக்கு ரயில் ஏறினான். அப்பாவின் நண்பர் ஒரு வேகத்தில் கடிதம் எழுதிவிட்டாரே தவிர, நீலகண்டனுக்கு என்ன வேலை தருவது என்ற முடிவுக்கு அவரால் வர முடியவில்லை. அவனிடம் நூறு ரூபாய் கொடுத்துவிட்டு, “நீ உன் காரியங்கள் எல்லாம் முடிக்கப் பார். நான் ஓரிரு மாதங்களில் தகவல் தருகிறேன்” என்றார். அவர் வீட்டில் இருந்து அவனாகத் தட்டுத்தடுமாறி சிந்தாதிரிப்பேட்டை சென்றான். அவன் கடைசியாக மெட்ராஸ் வந்து மூன்று ஆண்டுகள் முடிந்து, நகரில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. ஆனால், சிந்தாதிரிப்பேட்டை பழையபடிதான் இருந்தது. அப்பாவின் நாட்டுவைத்திய நண்பர் இறந்துவிட்டிருந்தார். ஆனால், அவருடைய மனைவி நீலகண்டனை அடையாளம் கண்டுகொண்டுவிட்டாள். அவளிடம் சதாசிவம் பற்றி விசாரித்தான். அவள் சொன்னாள்... “நீ சொல்றதைப் பாத்தா, அவங்க வசதிப்பட்டவங்கன்னு தெரியுது. அவங்க இந்த மாதிரி இடத்துக்கு வர மாட்டாங்க. நீ புரசைவாக்கம், வேப்பேரி, கீழ்ப்பாக்கம் மாதிரியான இடத்துல விசாரிச்சுப் பாரு. என்ன விஷயம் தம்பி?” “எனக்கு அந்த வீட்டுல எல்லாரையும் நன்னாத் தெரியும். திடீர்னு எங்கிட்ட சொல்லிக்காம மெட்ராஸ் வந்துட்டா.” “விசாரிச்சுப் பாரு. நீ சொல்றதைப் பாத்தா இப்ப அவங்களே சரியான மெட்ராஸ்காரங்களா ஆகிருப்பாங்க.” அவன் ஊர் திரும்பி, மெட்ராஸில் குடிபோக ஆயத்தங்கள் செய்ய ஆரம்பித்தான். இரு மாதங்களில் அப்பாவின் நண்பரிடம் இருந்து கடிதம் வந்தது. பதினைந்து நாட்களில் அவன் சென்னைவாசியாகிவிட்டான். முதலில் சென்னையில் இருந்த அவன், உறவினர்களை ஒவ்வொருவராகப் பார்த்தான். பேச்சோடு பேச்சாக `சதாசிவ முதலியார் என்று அவர்களுக்குத் தெரிந்தவர் யாராவது இருக்கிறாரா?' என்று விசாரித்தான். ஒருவர் சொன்னார், ``இன்கம்டாக்ஸ் ஆபீஸில் எனக்குத் தெரிந்த ஒரு பையனின் தகப்பனார் பெயர் சதாசிவம். அவர்கள் முதலியாரா என எனக்குத் தெரியாது. அந்த ஆபீஸ் நுங்கம்பாக்கம் ஹைரோட்டில் ஒரு அரண்மனையில் இருக்கும். நீ வேண்டுமானால் விசாரித்துப்பார்.” ``உண்மை. ஆனால், அவர் வேறு சதாசிவம்.'' நீலகண்டன், அவனுடைய மூத்த சகோதரியை அழைத்துக்கொண்டு, தண்டையார்பேட்டையில் இருந்த அவளுடைய கணவன் வீட்டில் கொண்டுவிட, அவளுடைய துணிமணிகள் கொண்ட பெட்டியோடு சென்றான். அனுபவம் இன்மையால் ரயிலில் சென்று, அங்கு இருந்து நடத்தி அழைத்துப் போனான். அந்த அயோக்கியன், பெட்டியைத் தெருவில் வீசி எறிந்து, அக்கா-தம்பியை வெளியே தள்ளிக் கதவைத் தாழிட்டுக்கொண்டான். வேறு வழியே தெரியாமல் அவனுடைய ஒரு நண்பனின் வக்கீல் தந்தையுடன் வழக்கு போட்டான். மாதம் தவறாமல் ஈரங்கி இருக்கும் அக்காவும் தம்பியுமாக நின்றுகொண்டே இருப்பார்கள். அக்கா பெயர் கூப்பிடும்போது இருவரும் சாட்சிக்கூண்டு அருகே ஓடுவார்கள். ``வக்கீல் வர மாட்டார். அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை. புரசை வாக்கம் டாணா தெருவில் உள்ள டாக்டரிடம் அழைத்துப் போ'' என்றார்கள். டாக்டர், நீலகண்டனிடம் சொன்னார் ``உங்க அம்மாவுக்கு ரெண்டு பெரிய கம்ப்ளைன்ட். ஒண்ணு, தைராய்டு. ரெண்டாவது ஹார்ட். சாதாரணமா நீங்க செய்யக்கூடிய வைத்தியத்திலே ஒரு வருஷம் தாண்டினா பெரிய காரியம். அவ நீ கல்யாணம் பண்ணிக்கணும்றா. பெரிய பிள்ளையா அதை நிறைவேத்தி வை.” அவன் சென்னைக்கு வந்த பதினோராவது ஆண்டு அவனுக்குக் கல்யாணம் ஆயிற்று. அடுத்த வருடம் அவனுடைய அம்மா காலமானாள். அடுத்த ஆண்டு அவன் வேலையை ராஜினாமா செய்தான். சின்னச்சின்ன வேலைகள். ஒன்றடுத்து ஒன்று. அவனுடைய மகன் அவனாகப் படித்து ஒரு வேலையில் சேர்ந்து நல்ல பெயர் எடுத்தான். அவன் வேலை பார்த்த இடத்திலேயே கார் கொடுத்தார்கள். மகள் பட்டப்படிப்புப் படித்து சி.ஏ-யும் முடித்து விட்டாள். மகன், மகள் இருவருக்கும் கல்யாணம் செய்ய வேண்டும். இப்போது எல்லாம் நீலகண்டன், சதாசிவம் பற்றி விசாரிப்பது இல்லை. இந்த 35, 40 ஆண்டுகளில் அவர் இறந்திருப்பார். அவர் மனைவி இருக்கலாம். பெரிய சொத்தை நிர்வகித்துக்கொண்டு நிறையக் குழந்தைகளுடன் ரஞ்சனி ஒரு சாம்ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருப்பாள். நீலகண்டனுக்கு அறுபது வயது முடிந்ததை, கொண்டாட வேண்டும் என்று மகனும் மகளும் விரும்பினார்கள். நீலகண்டனுக்கு நூறு வயதான களைப்பு. அவனுடைய தம்பி மற்றும் அனைத்து சகோதரிகளும் இறந்துவிட்டார்கள். அவனுக்கு மட்டும் முடிவு வரவில்லை. எப்போதாவது அவன் இளமையில் வாழ்ந்த ஊர்த் தகவல்கள் வரும். அவனுடைய இந்து, முஸ்லிம் நண்பர்கள் பலர் இறந்துவிட்டார்கள். கரும்பாக இனித்த கிணறைத் தூர்த்து அடுக்குமாடி வீடு வந்துவிட்டதாக ஒருவர் சொன்னார். அந்த இடமே பெரும் செல்வந்தர் குடியிருப்பாக மாறிவிட்டது. அவனுடைய பெற்றோர் முகங்கள் கூட மறந்துவிட்டது. அவனுடைய முகத்தையும் கற்பனை செய்துகொள்ள முடியவில்லை. முகச்சவரம் செய்துகொள்ளும்போது முகம் தெரிவது இல்லை. கண்ணாடியை என்றோ ஒருநாள் தனியாகப் பார்த்துக்கொண்டால் அது வேறு யார் முகம் போல இருக்கும். ஏன் முகம்கூட இல்லாததுபோல் ஆகிவிடுகிறது? எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்று யாரோ சொல்லியிருக்கிறார். சிரசு, முகத்தைக்கொண்டது இல்லையோ? அறுபது ஆண்டு பூர்த்தி விருந்துக்கு வந்த ஒருவர், நீலகண்டனிடம் இறந்த அவன் சகோதரி பெயர் கேட்டார். நீலகண்டன், “எதற்கு?” என்று கேட்டான். “என் பக்கத்து பங்களாவுல பெரியவங்களும் குழந்தைகளும் கலந்த இருபது பேர் இருக்காங்க. ஒரு அம்மா மட்டும் கொஞ்சம் வயதானவங்க. யாரையாவது பார்த்தா இதைக் கேப்பா. உங்க அக்கா பேர், அவங்க விசாரிக்கிற பேரா இருக்கு.” இரண்டு நாட்கள் கழித்து அவர், “சார், ஒருநாள் எங்க வீட்டுக்கு வர்றீங்களா? அந்த அம்மாகிட்ட நீங்களே சொல்லிடலாம்” என்றார். “பார்க்கலாம்.” “கட்டாயம் வாங்க சார். அந்த அம்மா பரபரத்துப்போயிட்டாங்க.” “அப்ப அவங்களே வரலாமே?” “அவங்களைப் பார்த்தா நீங்க இப்படிச் சொல்ல மாட்டீங்க.” அடுத்த ஞாயிறு அன்று, அந்த மனிதர் வீட்டை நீலகண்டன் தேடிப் போனான். அந்தச் சாலையில், நாட்டு ஜனாதிபதிகளில் ஒருவரின் மாளிகை இருந்தது. அவர் மெட்ராஸில் இருந்த போது ஒரு பெரிய கோஷ்டியோடு நீலகண்டனே ஒரு மகஜர் கொடுக்கப் போயிருந்தான். அவன், தேடிப் போனவர் வீட்டைக் கண்டுபிடித்துவிட்டான். அது, அந்தச் சாலையில் ஒரு குத்துச்சந்தில் இருந்தது. அவர் தேகப்பயிற்சிக் காகக் கடற்கரைக்குப் போயிருந்தார். நீலகண்டனை நீண்டநேரம் காத்திருக்க வைத்து விட்டார். இந்த வயதில் இவ்வளவு நீண்ட நேர உடற்பயிற்சி! கடைசியாக, 10 மணிக்கு வந்தார். வந்தவர், “என்ன... காலங்கார்த்தாலேயே வந்திட்டீங்க?” என்றார். “நீங்க `கட்டாயம் வாங்க'னு சொன்னது னாலேயே வந்தேன். நான் வந்தப்போ மணி ஒன்பது. நான் வந்தது தப்பு. நான் போறேன்.” “கோவிச்சுக்காதீங்க சார். இவ்வளவு தூரம் வந்து நீங்க போயிட்டீங்கன்னு அவங்களுக்குத் தெரிஞ்சா, ரொம்ப வருத்தப்படுவாங்க. இதோ ரெண்டு நிமிஷத்துல வந்துடுறேன்.” அவர் குளித்து, தலைவாரி வேறு ஷர்ட் போட்டுக்கொண்டு வர இன்னும் கால் மணி நேரம் ஆயிற்று. “வாங்க சார்'' என்று சொல்லி எதிர்வீட்டுக்குப் போனார். “ராமலிங்கம்!” என்று கூப்பிட்டார். ஒரு பையன் வந்து, “அப்பா, கிளப்புக்குப் போயிருக்கார்” என்றான். “அவரைக்கூடப் பார்க்க வேண்டாம். உங்க அத்தைப் பாட்டியைப் பார்க்கணும்.” அது பெரிய பங்களா. பழங்கால வீடு. மூன்று பக்கங்களில் வாசற்படிகள் இருந்தன. ஒவ்வொரு வாசற்படிக்கும் வராண்டா, போர்ட்டிகோ. தரைக்கு சிவப்பு ஆக்ஸைடு போட்டுப் பளபளவென இருந்தது. உண்மையில் சிறுவனின் அத்தைப் பாட்டி இருந்த இடம்தான் முன்புறம். நேர் எதிரே சாலை. “பாட்டி!’' என்று பையன் அழைத்தான். வயதான அம்மாள் உள்ளே இருந்து வந்து “வாங்க'' என்றாள். பக்கத்து வீட்டுக்காரர், “நான் சொன்னவர் இவர்தான். இவர் அக்கா பெயர் சாந்தியாம்.” நீலகண்டன் சொன்னான், “என் அக்கா பேர் சாந்தி. ஆனா, அவ போன வருஷம் போயிட்டா.” ``நீங்க சாந்தியக்கா தம்பி.” “ஆமாம்.’ ``நீலகண்டன்.” “ஆமாம்.” “நீலகண்டன், என்னை அடையாளம் தெரியலையாடா?” அந்த அம்மாள் அலறினாள். “ரஞ்சனி!” நொடிப்பொழுதில் அந்த அம்மாள் நீலகண்டனைக் கட்டிக்கொண்டு விம்மி விம்மி அழுதாள்... கதறினாள். “என்னை விட்டுட்டு எங்கேடா போயிட்டே? என்னைத் தனியா விட்டுட்டுப் போயிட்டியேடா! உனக்கு எத்தனை கடுதாசி போட்டேன். எல்லாமே திரும்பி வந்துட்டுதேடா. அப்பாவும் அவர் சாகுறதுக்கு முந்தின வருஷம் அங்கே வந்து விசாரிச்சிருக்கார். எங்கெங்கையோ தேடி விசாரிச்சார். நீ மெட்ராஸ் போயிட்டதா சொன்னாங்களாம். ஏண்டா, நீ இவ்வளவு வருஷம் இந்த ஊர்லேதான் இருந்தியா? இவ்வளவு நாள் எங்கே ஒளிஞ்சிண்டு இருந்தேடா?” ``ரஞ்சனி. நான் எங்கேயும் ஒளிஞ்சிண்டு இல்லை. உங்க அப்பா `முப்பது நாள் கழிச்சு வா'னு சொன்னதை நம்பினேன்.” ``அதுக்காக, நடுவுல ஒருநாள் வரக் கூடாதா? நான் அப்பவே உன்கூட வந்திருப்பேனே? எங்க அப்பா நீ வந்து போனதுல பயந்துபோயிட்டார். ஏதோ அர்த்தமே இல்லாத கிலி. அவர் கம்பெனியில் அவர் டைரக்டர். உடனே மெட்ராஸ் டிரான்ஸ்ஃபர் வாங்கிண்டார்.” “என்ன கம்பெனி?” “கிரைஸ்லர் இண்டியா. எங்க மூணு பேருக்கும் அவரே போய் டி.சி வாங்கிண்டு வந்தார். வீட்டை வெஸ்லி கில்ட்காரங்க ரொம்ப நாளாவே கேட்டிண்டிருந்தாங்க. அதை வித்திட்டு உடனே இங்கே வாங்கினார்.” “எல்லாம் நன்னா இருக்கிறபோ, நாம எவ்வளவோ காரியங்களைச் செய்யாம இருந்திடுறோம். எனக்கு, உங்க அப்பா என்ன கம்பெனின்னு தெரியாது; உங்க உறவுக்காரங்க தெரியாது. அங்கே மூணு வருஷம் தேடினேன். அப்புறம் இங்கே வந்து பத்து வருஷம் வீதி வீதியா வீடு வீடாத் தேடினேன். முதலியார்னு பேர் இருந்தா, ஒரு தடவைக்கு ரெண்டு தடவையா விசாரித்தேன். முருகேச முதலியார் என்ற ஒருவர் என்னை `ஏன்... எதற்கு?'னு கேட்டார். ஏதோ அவரிடம் சொல்லணும்னு தோணித்து. அவர் சொன்னார், யூ ஆர் அ பார்ன் லூஸர் (You are a born loser.). நிறையப் பேர், அவங்க உங்களுக்கு வீடு பிடிச்சுத் தந்த மாதிரி கீழ்ப்பாக்கம்னாங்க.” ‘`என்ன சாப்பிடுறே நீலகண்டன்? காபி வேண்டாம். சாப்பிட்டுடு. உன்னோட வந்திருந்தவரைக் கவனிக்கவே இல்லை.” ரஞ்சனி, நீலகண்டனைக் கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தவுடனேயே அவர் நழுவிவிட்டார். சின்னப்பையன் அவன் வீட்டில் சொல்லி, அங்கு இருந்து இரண்டு பேர் வந்துவிட்டார்கள். “என்ன ஆச்சு அத்தை? நீ ஓன்னு அழுதாயாம்!” “இதெல்லாம் உங்களுக்கு வேண்டாம். போங்க எல்லாரும்” அவள் கோபத்தைக் கண்டு அவர்கள் பயந்த மாதிரி இருந்தது. “உம்...” அவர்கள் போய்விட்டார்கள். ``நீலகண்டன். இனிமே இதுதான் உன் வீடு. நான் என் கையாலே உனக்குப் பிடிச்சதை எல்லாம் சமைச்சுப்போடுறேன். ஏன் நின்னுண்டே இருக்கே? உக்காரு. இல்லை, வீட்டைப் பார்க்கிறியா? முதல்ல முழு வீட்லயும் நான் இருந்தேன். தம்பிங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆன உடனே அவங்களைத் தனித்தனியா வெச்சேன். ஏண்டா, நான் செய்தது சரிதானே?’' “நீ செய்றது சரியாத்தான் இருக்கும் ரஞ்சனி.” “அப்பாடா, இன்னொரு தரம் என் பேரைச் சொல்லிட்டே. உன்னைக் கொண்டுவந்த மனுஷனை எங்கே பிடிச்சே? நல்ல சுபாவம் இல்லை. இத்தனை வயசாறது, இன்னும் பெண்டாட்டியை அடிக்கிறான். இவனை எங்கே பிடிச்சே?’' “என் மகன், மகள் ரெண்டு பேரும் எனக்கு அறுபது வருஷக் கல்யாணம் பண்ணினாங்க. இவர் என் பையன் கீழே வேலை பார்க்கிறார்.” “உனக்கு ஒரு மகன், ஒரு மகளா?” “ஆமாம். உனக்கு?” “எனக்கா...” என்று ரஞ்சனி இழுத்தாள். “இங்கே ஏகப்பட்ட பையங்க, பெண்களைப் பார்த்தேன்.” ``எனக்கு குழந்தை இல்லை நீலகண்டா.” ``ஏன்... ஏதாவது டாக்டரைப் பார்க்கலையா?” ரஞ்சனி சிறிது நேரம் பேசாமல் இருந்தாள். ``என்ன, ரஞ்சனி?” ரஞ்சனி கண்களில் இருந்து தாரைதாரையாக நீர் வழிந்தது. ``எனக்கு உன்னோட ஆன கல்யாணம்தான்டா.” ``ஐயோ... ஏன்? உன் அப்பா-அம்மா...” ``இல்லைடா. என் அம்மாவாவது அப்பப்போ `அவன் இல்லைன்னா என்னாச்சு? வேறே எவ்வளவோ நல்ல பையங்க இருக்காங்க'னு சொல்வாங்க. நீலகண்டன், நான் உன்னை அன்னிக்கே கல்யாணம் பண்ணிண்டுட்டேனே. மறுபடியும் எப்படிடா வேறே யாரையோ தொட முடியும்? அதை அப்பா புரிஞ்சுண்டுட்டாரு. `துரோகம் பண்ணிட்டேன்டி ரஞ்சனி. உனக்கும் அந்தப் பையனுக்கும் துரோகம் பண்ணிட்டேன்'னு புலம்பிண்டே உயிரைவிட்டார். நான் உன் பேரைச் சொல்லி தேடினா, நீ ஏதோ திருடிண்டு போயிட்டேன்னு நினைப்பாங்க. அதான் உங்க அக்கா பேர் சொல்லித் தேடச் சொன்னேன். உக்காருடா. தட்டு போடுறேன். முதல்ல சாப்பிடு. உன்னை எப்படி எல்லாம் தேடினேன் தெரியுமா? யார் யாரையோ விசாரிச்சேன்! இந்திரகுமாரியைக்கூடக் கேட்டேன்.” ``நானும் அவளைக் கேட்டேன் ரஞ்சனி. அவ `பிரின்சிபால்கிட்ட ரிப்போர்ட் பண்ணுவேன்'னு சொன்னா.” ``அவளுக்கு ரொம்ப டிஸ்டர்ப்ட் மைண்ட். அவ புருஷனுக்கு ஏகப்பட்ட கூத்தியாளுங்களாம். அவ ராஜ்புத். ஆனா, நீயும்தான் ஏமாத்தித்தினேடா. நீயும் துரோகம் பண்ணிட்டே. ஏன்டா, நீ நிஜமாவே உங்க அம்மாவுக்காகவா கல்யாணம் பண்ணிண்டே? உங்க அம்மா உயிரைக் காப்பாத்திட்டியா? எல்லாம் சாக்குப்போக்குடா. சரி, முதல்ல சாப்பிடு. இது உங்க அம்மா சமையல் இல்லை. நாற்பது வருஷம் உனக்காகவே காத்திண்டிருந்த பைத்தியக்காரி சமையல்.” நீலகண்டன் சாப்பிட்டான். அது ரஞ்சனி சமையல் அல்ல. ஒரு சமையக்கார அம்மா சமைத்தது. அவனுக்கு சற்றும் பிடிக்காத பூண்டைத் தாராளமாகப் பயன்படுத்தியது. இனி ரஞ்சனியோடு வாழவேண்டும் என்றால், பூண்டைச் சகித்துக்கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும். சதாசிவத்தைப் பார்த்த தினமே அவளை வீட்டுக்கு அழைத்து வந்திருக்க வேண்டும். ரஞ்சனி, பெருமையோடும் மிகுந்த அன்போடும் ஒவ்வொன்றையும் பரிமாறினாள். அவனுக்கு அடிக்கடி கண்ணீர் வந்தது. அவள் வரை அவன்தான் அவளுடைய கணவன். இந்தக் கணவன்-மனைவி உறவுதான் எவ்வளவு விசித்திரமானது! சீதை ஒரு வருடம் ராமனுக்குக் காத்திருந்தாள்; ரஞ்சனி நாற்பது வருடங்கள் காத்திருக்கிறாள்! ``உன் மகன், மகள் பெரியவங்க. அவங்க வாழ்க்கையை அவங்க பார்த்துப்பாங்க. நீ உன் பெண்டாட்டியை அழைத்துக்கிட்டு இங்கே வந்துடு.” ``ரஞ்சனி, நாம செய்யவேண்டிய எவ்வளவோ விஷயங்களை இந்த `40, 50 வருஷங்கள்ல செய்யலை. நீயும் யோசி. நானும் யோசிக்கிறேன். இப்போ நாம ரெண்டு பேரும் அறுபது வயதுக் கிழவங்க. இப்போ போய்த் தடுமாறக் கூடாது. நீ சொன்னது நிஜம்தான் ரஞ்சனி. நான் உனக்கு துரோகம் பண்ணிட்டேன். அப்போ தெரியலை, ரொம்பப் பெரிய துரோகம். எனக்கு உன் முன்னாடி நிக்கிறதுக்கு வெட்கமாயிருக்கு.'' ரஞ்சனி மீண்டும் அவனைக் கட்டிக்கொண்டு விம்மினாள். கதவு திறந்து இருந்தது. சலையில் இருந்துகூட அவர்களைப் பார்க்க முடியும். அவளுடைய தம்பிகளின் குடும்பத்தினர் இப்போது ஒட்டுக்கேட்டுக்கொண்டிருப்பார்கள. ஆனால், ரஞ்சனிக்கு எதுவும் ஒரு பொருட்டு அல்ல. அவள் வருஷக்கணக்கில் காத்திருந்தவன் வந்துவிட்டான்! ``ரஞ்சனி, நான் இப்போ போகணும்.” ``உன் அட்ரஸ் எழுதிக் குடுடா. நான் காரை அனுப்புறேன். இன்னிக்கு டிரைவர் லீவு. வேற டிரைவருக்கு ஏற்பாடு பண்றேன்.” ``வேண்டாம் ரஞ்சனி. நான் கொஞ்சம் தனியா இருக்கணும். என் அட்ரஸ் இதோ. இது என் மகன் விசிட்டிங் கார்டு. நான் அவனோடுதான் இருக்கேன்.” ``நாளைக்கு நானே வர்றேன்டா. அவங்க எல்லாருக்கும் வேட்டி-சேலை வாங்கிண்டு வர்றேன்.” நீலகண்டன் சாலைக்கு வந்தான். உச்சி வெயில் சுளீரென அடித்துக்கொண்டிருந்தது. வலதுபுறம் நகரம், அவன் வீடு, அவன் மனைவி, அவன் குடும்பம். இடதுபுறம் எல்லா துரோகங்களையும் கழுவக்கூடிய நீலக்கடல். எவ்வளவு பொருத்தம்... நீலகண்டன், நீலக்கடல். நீலகண்டன் கடற்பக்கம் போனான்! http://www.vikatan.com
 2. அதிதி நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்புசிறுகதை: காலபைரவன், ஓவியங்கள்: ஸ்யாம் இரவு விளக்கின் நீல நிற வெளிச்சம், அறையை முழுமையாக வியாபித்திருந்தது. அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். மின்விசிறி மெதுவாகச் சுழன்றுகொண்டிருந்தது. காற்றின் போக்குக்கு ஏற்ப, சுவரில் மாட்டப்பட்டிருந்த நாள்காட்டியின் தாள்கள் அசைந்துகொண்டிருந்தன. அதிதி மட்டும் உறக்கம் வராமல் நெளிந்து கொண்டிருந்தாள். போர்வையை இழுத்து முகத்தை மூடிக்கொண்டாள். பக்கத்தில் உறங்கிக்கொண்டிருந் தவர்களை போர்வைக்குள் இருந்து கவனித்தாள். உறங்கிக்கொண்டிருந்த வர்கள் மீது நீல வண்ணம் கவிந்து ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியது. அந்த வெளிச்சம் அவளுக்கு தந்தையின் நினைவைத் தூண்டியது. அதைத் தொடர்ந்து அவரின் குறட்டை சத்தத்தின் ஊடாக அவள் எண்ணம் பயணப்பட்டது. அவரை நினைக்கும்போது எல்லாம் மனதில் ஆத்திரம் பொங்கி வன்மமாகக் கிளைக்கத் தொடங்கியது. `அக்காவை மட்டும் ஏன் அவருக்குப் பிடித்துப்போகிறது?' என யோசித்துப் பார்த்தாள் அதிதி. எதுவும் பிடிபடவில்லை. மூச்சை, ஆழ்ந்து இழுத்து மெதுவாக வெளியிட்டாள். இந்த மூச்சுப் பயிற்சிகூட அவர் கற்றுக்கொடுத்ததுதான். மனதை ஒருமுகப்படுத்தி சுவாசத்தில் சிந்தனையைக் குவித்தாள். அது நிலைகொள்ளாமல் அடிபட்ட நாகம்போல சீறிக்கொண்டே இருந்தது. அவளின் அடிமனதில் தேங்கியிருந்த அப்பாவின் சித்திரங்கள் ஒவ்வொன்றாக மேலெழும்பத் தொடங்கின. பனிக்காலம் தொடங்கிய ஒருநாள், அப்பா தல்லாகுளம் சந்தையில் இருந்து மூன்று முயல்கள் வாங்கிவந்திருந்தார். சனி, ஞாயிறு வந்துவிட்டால் போதும். சுற்றுவட்டாரத்தில் எங்கு சந்தை நடக்கிறது; அங்கு என்னென்ன கிடைக்கும் என்பது எல்லாம் அவருக்கு அத்துபடி. கினிகோழி பிரியர். அவர் கைப்பக்குவத்தில் செய்து தரும் மாமிசத்தின் ருசி அலாதியானது. அன்று கோழி வகையினங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. முயல் தேறும்போல தோன்றியது. வாங்கிவிட்டார். உடன் சென்ற ஆறுமுகம் ஆசிரியருக்கும் துருவத்தார் வீட்டு ராஜா அண்ணனுக்கும் வரும்போது வேட்டவலத்தில் காடை வாங்கித் தந்தார். முயல் ஒவ்வொன்றும் ஒரு நிறத்தில் இருந்தது. புசுபுசுவென இருந்தது வெள்ளை முயல்; சாம்பல் நிற முயல் பருத்து இருந்தது. சற்று நோஞ்சானாக இருந்தது கறுப்பு. முயல் வேண்டும் என்று முதலில் கேட்டவள் அதிதி. ``இன்னைக்காவது ஏமாத்தாம வாங்கியாந் திட்டயே... தேங்ஸ் டாட்” என்றாள். அவர் அமைதியாக இருந்தார். வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டிருந்த அக்கா ஓடிவந்து, “எனக்கு வெள்ளை கலர் முயல்” என்றாள். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே `சரி' என்பதுபோல தலையை ஆட்டினார். தன் அக்காவை ஏற இறங்கப் பார்த்தாள் அதிதி. சமையலறையில் இருந்துகொண்டே அம்மா “எனக்கு?'' என்றாள். “அம்மா நீ சாம்பல் கலர் எடுத்துக்கோ” என்றாள் அக்கா துடுக்காக. “அப்ப அதிதிக்குக் கறுப்புதான்” என்றார் அதுவரை அமைதியாக இருந்த அப்பா. தன் விருப்பத்தைக் கேட்காமல் அவர்களாகவே பிரித்துக்கொண்டது அதிதிக்குப் பிடிக்கவில்லை. “எனக்கு முயலும் வேணாம் ஒரு ம... வேணாம்” என்றாள் ஆத்திரம் பொங்க. ``இப்படிப் பேசக் கூடாதுனு எத்தனை தடவை சொல்றது?” என்று அம்மா கத்தினாள். அவள் குரல் இவளை ஒடுங்கச்செய்தது. எதுவும் பேசாமல் படுக்கையறைக்குச் சென்றாள். தலையணையில் முகம் புதைத்து அழத் தொடங்கினாள். தன்னைக் கலக்காமல் மூவரும் முடிவெடுத்ததைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தேம்பித் தேம்பி அழுதாள். கண்களில் நீர் பெருகி தலையணை நனைந்தது. ஆத்திரம், பெருநெருப்பைப்போல அவள் மனதில் கனன்றுகொண்டிருந்தது. சுவர்க் கடிகாரம், 11 முறை மெல்லிய ஒலி எழுப்பி அடங்கியது. அப்பா வாங்கிவந்த வெளிநாட்டுக் கடிகாரம். வெளிநாட்டுப் பொருள் என்றால் கூடுதலாகக் கொடுத்துகூட வாங்கும் ரகம் அவர். அம்மாவும் திட்டிப்பார்த்து ஓய்ந்து விட்டாள். அதையெல்லாம் அவர் பொருட் படுத்தியதே இல்லை. கடிகாரச் சத்தம் அறையில் எதிரொலித்தபடியே இருந்தது. அதன் ஒலி இப்போது அவளுக்கு நாராசமாகக் கேட்டது. போர்வையை விலக்கி பக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்த அம்மாவைப் பார்த்தாள். அவள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள். எழுந்து சென்று சிறுநீர் கழித்துவிட்டு வந்தாள். போர்வையை மீண்டும் முகம் வரை இழுத்துவிட்டுக்கொண்டு கண்களை மூடிக்கொண்டாள். நீல நிற வெளிச்சம் அவளைத் தொந்தரவு செய்துகொண்டே இருந்தது. புரண்டு படுத்தாள் உறக்கம் பிடிக்காமல். பழைய நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருந்தது அவள் மனம். அன்று ஞாயிற்றுக்கிழமை. மீன்காரப் பெண் தெருவில் இருந்தபடியே சத்தம்போட்டுக் கூப்பிட்டாள்... “வாத்தியார் வீட்டம்மா மீன் வாங்கலையா?” உள்ளே இருந்தபடியே `வேண்டாம்' என்பதுபோல அம்மா கையசைத்தாள். “நீங்க அப்படித்தான் சொல்வீங்க. பாள்தார் பேத்தியைக் கூப்பிடுங்க” என்று அவள் மீண்டும் சத்தம்போட்டு அழைத்தாள். கூடத்தில் விளையாடிக்கொண்டிருந்த அதிதி நிமிர்ந்து மீன்காரியைப் பார்த்தாள். திரும்பி அம்மாவைப் பார்த்தாள். “என்னடி அப்படிப் பாக்குற?” என்று கேட்டாள். “உன் அக்காவைத்தான் அப்படிச் சொல்றாங்க” என்று சொல்லிவிட்டு வேலையைப் பார்க்கத் தொடங்கினாள். முயல்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தைச் சுத்தம் செய்துகொண்டிருந்த அப்பாவிடம் சென்றாள். சிறிது நேரம் அவரையே பார்த்துக்கொண்டு நின்றாள். அவர் காதுகள் முயலின் காதுகளைப்போல் இருந்தன. ஒரு நொடிப்பொழுதில் தன் தந்தையை முயலாக கற்பனைசெய்து பார்த்தாள். காதுகளைப் பிடித்துத் தூக்கி இப்படியும் அப்படியுமாக ஆட்டினாள். அதை எண்ணி உள்ளுக்குள் சிரித்துக்கொண்டாள். பின் மெதுவாக, “அக்காவை ஏன் `பாள்தார் பேத்தி’னு சொல்றாங்க?” என்று கேட்டாள். “நம்ம வீட்டுக்குப் `பாளையத்தார் வீடு'னு பேரு. அதனால அப்படிக் கூப்பிடுறாங்க” என்று தன் வேலையைச் செய்துகொண்டே அவர் கூறினார். “என்னையும் அப்படித்தான் கூப்பிடுவாங்களா?” - சட்டெனக் கேட்டாள். `இல்லை’ என்பதுபோல அவர் தலையாட்டினார். “ஏன்?” “நீதான் இங்கே பொறக்கலையே...” “அப்புறம், எங்கே பொறந்தேன்?” - அதிதியின் குரல் கம்மியிருந்தது. “உன்னை தல்லாகுளம் சந்தையில தவிட்டுக்குல வாங்கியாந்தேன்.” அதைக் கேட்ட அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. “என்னது தவிட்டுக்கா?” என்று புரியாமல் கேட்டாள். `ஆமாம்’ என்பதுபோல தலையாட்டி “நெல் குத்திக் கிடைச்ச கருக்கா தவுட்டை அப்படியே ஆவூர் சந்தையில வித்துட்டு, உன்னை வாங்கியாந்தேன்... சும்மா இல்லை.” அவரை ஊடுருவிப் பார்த்தாள். அவருடைய வார்த்தைகள் முள்ளாகி அவளைத் தைத்தன. கண்களில் நீர் கோத்துக்கொள்ளத் தொடங்கின. எந்த நேரமும் வெடித்து அழுதுவிடுவாள்போல இருந்தது. “உண்மைதானா?” என்று கேட்டாள். அவர் மையமாகத் தலையாட்டினார். அதன் பின்னர் வேறு எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட வேண்டும்போல இருந்தது அவளுக்கு. சட்டெனப் புறப்பட்டுச் சென்றாள். அவளுக்கு மனம் சங்கடமாக இருந்தது. வழக்கமாக தெருவே கதி எனக் கிடப்பவள், மாடிப்படியில் அமர்ந்து எதிர்வீட்டு முருங்கைமரத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். மதியம் அம்மா சாப்பிடக் கூப்பிட்டாள். வேண்டாம் என்று மறுத்துவிட்டாள். வழக்கமான பதில்தான் என நினைத்துக்கொண்டாள். ` `என்னைத் தவிட்டுக்கா வாங்கிவந்தீங்க?’னு அவளிடம் கேட்கலாமா?' என்று நினைத்தாள். `அப்பா கூறியதையே அவளும் ஆமோதித்தால் என்ன செய்வது?' என யோசித்தாள். உடல் சிலிர்த்துக்கொண்டது. மனம் நடுங்குவதை முதன்முதலாக அப்போதுதான் அதிதி உணர்ந்தாள். வீடு அன்னியமாகத் தோன்றியது. இவ்வளவு நேரம் கடந்தும்கூட தன்னை யாரும் வந்து சமாதானம் செய்யவில்லை. `இதுவே அக்காவாக இருந்தால் அப்பா இப்படி இருப்பாரா?’ எனும் சிந்தனை மனதுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. அது இவளுக்கு மேலும் வலியைத் தந்தது. பெரியவள் எதிர்வீட்டுப் பையன்களோடு கூட்டாஞ்சோறு செய்துகொண்டிருந்தாள். `உண்மையில் என்னை தவிட்டுக்குத்தான் வாங்கிவந்தாரோ, அதனால்தான் இப்படி நடத்துகிறார்களா?’ என்றும் யோசித்தாள். அனைவரும் அவரவர் வேலையில் மூழ்கியிருந்தனர். ஒருவரும் தன்னைப் பொருட்படுத்தாமல் இயங்கிக்கொண்டிருந்தது இவளுக்கு மேலும் ஆத்திரத்தை அதிகரிக்கச்செய்தது. அம்மாவும் இப்படி நடந்துகொள்வாள் என இவளால் நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. தெருவில் விளையாடிவிட்டு தண்ணீர் குடிக்க வீட்டுக்கு ஓடிவந்த பெரியவள்... “அதிதி... விளையாட வரல?” என்று கேட்டாள். இவள் அமைதியாக எதிர் வீட்டு சுவரையே வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள். ஓர் அணில், மதில் சுவரில் இங்கும் அங்குமாக ஓடிக் கொண்டிருந்தது. சாதாரணமாக இரவு 10:30 மணி ஆகிவிடும் இவள் படுப்பதற்கு. சுட்டி டி.வி ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். தூங்கிவிட்டாள் என நினைத்து அணைத்துவிட முடியாது. அவ்வளவு தான். அழுகை பீரிட்டெழும். தூங்குவதற்கு முன்னர் கண்டிப்பாக வடிவேலுவின் நகைச்சுவை அவசியம். அதன் பின்னர்தான் தூங்க முயற்சி நடக்கும். ஆனால், அன்று 8 மணிக்கே படுக்கைக்குச் சென்றுவிட்டாள். சாப்பிடத் தேடும்போதுதான் இவள் படுத்துவிட்டது அம்மாவுக்குத் தெரியவந்தது. ஏதோ கோபத்தில் இருக்கிறாள் என்பதும் புரிந்துபோனது. அருகில் சென்று சீண்டி எழுப்பினாள். அவள் புரண்டு படுத்தாள். “ராத்திரியில வெறும் வயித்தோடு படுக்கக் கூடாதும்மா. எந்திரிச்சு சாப்ட்டு படும்மா” என்று அவளை சாந்தப்படுத்திப் பார்த்தாள். “எனக்குப் பசிக்கல” என்று சுருக்கமாகப் பதில் வந்தது. “வாடிம்மா அம்மு இல்ல” என்று அவளை அப்படியே தூக்கினாள். அவள் மேலும் வீம்போடு அப்படியே சரிந்தாள். “உன் கோபத்துக்கு என்னதான்மா காரணம்?” என்றாள். “ம்… போயி உன் புருஷனைக் கேளு” என்றாள் வெடுக்கென்று. “அவுரு ஒரு கூறுகெட்ட மனுஷன். நீ சொல்லுடி செல்லம்” என்று வார்த்தையில் தேனைக் குழைத்தாள். “என்னைத்தான் தவுட்டுக்கு வாங்கியாந்தீங் களாமே, அப்புறம் எதுக்குச் சாப்பிடக் கூப்பிடுறீங்க?” என்று பொரிந்தாள். அவள் கோபத்துக்கான காரணம் புரிந்துபோனது. “அவுருக்குப் புத்தி கெட்டுப்போச்சும்மா… அதான் இப்படிப் பேசறாரு” என்று பதில் சொன்னாள். அவளைத் தூக்கிக்கொண்டு கூடத்துக்கு வந்தாள். சாப்பிடவைக்கத்தான் ரொம்பவும் மெனக்கெட வேண்டியிருந்தது. இரவு படுக்கைவிரிப்புகளைப் போட்டவாறே, “ஏங்க அவளை சும்மா சும்மா சீண்டிக்கிட்டே இருக்கீங்க?” என்று அம்மா கேட்டாள். அப்பா மென்மையாகச் சிரித்தார். “பாப்பா பேச்சு பழம்விடுங்க” என்று அவரிடம் சிணுங்கினாள். “அதிதி...” என்று அவர் அழைத்தார். கண்களை மூடி அமைதியாகப் படுத்திருந்தாள். தன்னை அவர் அவ்வாறு அழைப்பதை அவள் விரும்பவில்லை. தன் பெயரின் மென்மையை அந்தக் குரல் சிதைப்பதாக உணர்ந்தாள். ஒரு பௌர்ணமி நாளில், திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்றபோது தன் பெயர் தொடர்பாக அவருடன் பேசிக்கொண்டே நடந்து சென்றது அதிதியின் நினைவுக்கு வந்தது. “அக்காவுக்கு யார் பேர் வெச்சா?” என்று கேட்டாள். “நான்தான்...” ``எதுக்கு அந்தப் பேர் வெச்ச?” “நித்ய சைதன்ய யதி எனும் ஞானியுடைய பேரு அது. அதனால வெச்சேன்.” “பையன் பொறந்திருந்தா என்ன பேர் வெச்சிருப்ப?” “நகுலன்.” “இரண்டு பெயரையும் நீதான் செலெக்ட் பண்ணி வெச்சிருந்தியா?” `ஆமாம்’ என்பதுபோல தலையை ஆட்டினார். பல்லி தன் தலையை உயர்த்தித் தாழ்த்துவதுபோல இருந்தது அவரின் அசைவு. திரும்பவும் அதிதி பேசினாள். “எனக்கு யாரு பேரு வெச்சா?” அவர் சிறிது நேரம் யோசித்து, ``அஜயன்பாலா அங்கிள் வெச்சாரு.” “எனக்கு ஏன் அவர் பேரு வெச்சாரு... உங்களுக்கு வைக்கணும்னு தோணலையா?” அதற்கு என்ன பதில் சொல்வதெனப் புரியாமல் அமைதியாக இருந்தார். “என் பேருக்கு என்ன அர்த்தம்?” “ `விருந்தாளி’னு அர்த்தம்” என்று சொல்லிவிட்டு இவளைப் பார்த்து கண்கள் சிமிட்டிச் சிரித்தார். அந்தச் சிரிப்பு இவளை மேலும் எரிச்சலூட்டியது. எல்லாவற்றையும் முடிச்சுப்போட்டு அர்த்தப் படுத்திக்கொண்டிருந்தாள். `அக்காவுக்குப் பெயர் வைக்கத் தெரிந்த அப்பாவுக்கு, தனக்கு ஒரு பெயர் வைக்க முடியாதா?' என மனதுக்குள் ஒவ்வொரு வார்த்தைகளாக உருட்டிக் கொண்டிருந்தாள். ``தவிட்டுக்கு வாங்கினதாலதான் `அதிதி’னு பேர் வெச்சீங்களா?’’ என அவரைப் பார்த்து வெடுக்கெனக் கேட்டாள். பதில் சொல்லாமல் அப்பா சிரித்தார். அதில் ஒளிந்திருந்த கள்ளத்தனம் மேலும் அவளைச் சிறுத்துப்போகச் செய்தது. உண்மையில் தான் ஒரு விருந்தாளிதானோ என, அவள் தன்னைத்தானே மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொண்டாள். அவளுக்கு சிறுநீர் கழிக்க வேண்டும்போல இருந்தபோது அவள் எழுந்துகொண்டாள். கழிவறைக்குச் சென்று வந்தாள். நீல நிற வெளிச்சம் உறுத்திக்கொண்டே இருந்தது. அதை அணைத்துவிட்டு வந்து படுத்தாள். சிறிது நேரம் கழித்து தண்ணீர் குடிக்க எழுந்த அப்பா, மறுபடியும் விளக்கை எரியச்செய்தார். அந்தச் செயல் மேலும் அவர் மீதான ஆத்திரத்தைக் கூட்டியது. மனம் பிடிபடாமல் அலைபாய்ந்து கொண்டே இருந்தது. நீர்க்குமிழிபோல மேலெழும்பிக்கொண்டிருந்த எண்ணங்களை அமைதிப்படுத்த முயற்சித்துப் பார்த்தாள். ஒரு பயனும் ஏற்படவில்லை. மிகச் சரியாக கடந்த பொங்கல் பண்டிகைக்கு துணிமணிகள் வாங்கச் சென்ற நாளில் வந்து நின்றது நினைவின் குறிமுள். அன்று, காலை உணவை முடித்துக்கொண்டு விழுப்புரம் கிளம்புவதாகத் திட்டம். மதியம் தலப்பாகட்டி பிரியாணி என்பதும் தீர்மானமாகி இருந்தது. எல்லோரும் கலந்து பேசி எடுக்கப்பட்ட முடிவுதான். ஆனால், காலை நடைப்பயிற்சிக்குச் சென்ற அப்பா, நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு அப்படியே மீன் வாங்க வேட்டவலம் சென்றுவிட்டார். திரும்பி வரும்போது மணி 10:00. கொடுவாவும் சங்கராவும்தான் கிடைத்தன. பையை சமையல் மேடையில் வைத்துவிட்டு குளிக்கச் சென்றுவிட்டார். எல்லோரும் குளித்துவிட்டிருப்பார்கள் என்ற எண்ணத்தில் சுடுநீர் கருவியின் பொத்தானை அணைத்துவிட்டு, குளித்து முடித்தார். அவர் தலைவாரிக் கொண்டிருக்கும்போது, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த அதிதி வேகமாக வந்து குளியலறைக்குச் சென்றாள். சுடுநீர் குழாயைத் திறந்தாள். குளிர்ந்த நீர் சீறிப்பாய்ந்து பாத்திரத்தை நிரப்பியது. அங்கு இருந்தே கத்தினாள். “அம்மா... ஜில் தண்ணியா வருது...” அம்மா ஓடிச்சென்று பார்த்தாள். பொத்தான் அணைக்கப்பட்டிருந்தது. “ஏங்க நீங்களா நிறுத்தினீங்க?” என்று கேட்டாள். அவர் ``ஆமாம்'’ என்று சொல்லிக்கொண்டே சாப்பிட அமர்ந்தார். “நீங்க ஏன் நிறுத்தினீங்க, கேட்டுட்டு செய்யக் கூடாதா?” என்றாள். “மணி பத்துக்கு மேல ஆச்சேனு நிறுத்தினேன்” என்றார். அவர்களின் உரையாடலை உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தவள் குளிர்ந்த நீரை ஜக்கில் மொண்டு மேலுக்கு ஊற்றிக்கொண்டாள். “பச்சத்தண்ணியில குளிக்காதம்மா. செத்த பொறு. ஸ்டவ்ல வெச்சுத் தர்றேன்” என அம்மா அவளிடம் கெஞ்சிப்பார்த்தாள். அவள் பேசுவதை காதில் வாங்கிக்கொள்ளாமல் தண்ணீரை மொண்டு மேலுக்கு ஊற்றிக்கொண்டே இருந்தாள். அவள் உடல் குளிரில் நடுங்கியது; பற்கள் கிட்டிக்கொண்டன. எதையும் காட்டிக் கொள்ளாமல் குளித்துமுடித்து கூடத்துக்கு வந்து துவட்டத் தொடங்கினாள். உடை மாற்றிக்கொண்டு சமையற்கட்டில் இருந்த அம்மாவிடம் சென்றாள். பாலித்தீன் பையில் இருந்த மீன்களைப் பார்த்தாள். முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடித்தன. “இந்த மீன்தான் வாங்கியாந்திருக்காரா?” என்று அழுத்தமாகக் கேட்டாள். அம்மா சுதாரித்து பதில் சொல்வதற்குள், “எறா இல்லையாம்மா?” என்று அடுத்த கேள்வி வந்து விழுந்தது. இறால் மீனின் நிறம் அதிதிக்கு மிகவும் பிடிக்கும். குழம்பின் மணத்தை தன் நாசி வழியாக இழுத்து அனுபவிப்பாள். குழம்பில் சிறியதும் பெரியதுமாக வட்ட வட்டமாக அவை கிடக்கும். அவற்றை எடுத்து தட்டின் ஓரத்தில் வரிசைக்கிரமமாக அடுக்கிப்பார்ப்பாள். பின்னர் ஒவ்வொன்றாக ருசித்துச் சாப்பிடுவாள். ``என்ன மீனு வாங்கியாந்திருக்காரு உன் புருஷன்?” `அப்பா' என்று சொல்லாமல் `உன் புருஷன்' என்றது அம்மாவுக்குச் சிரிப்பை ஏற்படுத்தியது. வெளிக்காட்டிக்கொள்ளாமல், “கொடுவாவும் சங்கராவும்” என்று சொன்னாள். அதற்கு மேல் மீன் சம்பந்தமாக எதுவும் கேட்க வேண்டாம் எனப் பட்டது. சலிப்புடன் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள். “அதிதி இதுக்கு எல்லாம் கோவிச்சிக்கக் கூடாதும்மா” என்றாள் அம்மா. அவள் கூடத்துக்கு வந்து தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்தாள். “அடுத்த வாரம் நிச்சயமா வாங்கியாரச் சொல்றேன்மா. வா, வந்து இட்லி சாப்பிடு” என்று அம்மா திரும்பவும் அழைத்தாள். “எனக்குப் பசிக்கல” எனும் வார்த்தைகள் பதிலாக வந்தன. அப்பா கணினியில் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதைச் சட்டெனப் புரிந்துகொள்ள முடியாது. “நீ பேசாம கம்ப்யூட்டரையே கட்டிக்கினு இருந்திருக்கலாம்பா” என்று பெரியவள் அவரைப் பார்த்து கிண்டலாகச் சொன்னாள். “சரியாச் சொன்னடி” என்றாள் அம்மா. `அப்பா வந்து தன்னை சமாதானம் செய்ய மாட்டாரா?’ என்று ஒரு கணம் நினைத்துப் பார்த்தாள் அதிதி. சிறு சலனமும் இன்றி அவர் பணியில் மூழ்கிக்கிடந்தார். தன்னை அனைவரும் அலட்சியம் செய்வதாக நினைத்துக்கொண்டு எழுந்து தெருவுக்குச் சென்றாள். பெரியவளின் தொடர்ச்சியான இருமல் சத்தம் அவள் நினைவுகளைத் துண்டித்தது. “சைதன்யா, எழுந்து தலகாணிய உயரமா போட்டு படும்மா” என்று அம்மா எழுப்பினாள். கடிகாரச் சத்தம் தெளிவாகக் கேட்டது. தெருமுக்கில் நாய் குரைத்துக்கொண்டு இருந்தது. போர்வையை இழுத்து முழுக்கப் போத்திக்கொண்டாள். அப்படியும் குளிர் அதிகமாக இருந்தது. மின்விசிறியின் வேகத்தைக் குறைக்கலாமா என்றும் நினைத்தாள். `அக்கா செவுத்தோரம் படுத்திருக்கா. ஃபேனை நிறுத்தினா, அவளை கொசு கடிக்கும். நல்லா போத்திக்கிட்டு படு’ என்று அப்பா எப்போதோ அதட்டியது நினைவுக்கு வந்து தொலைத்தது. கேட்டு எதுவும் ஆகப்போவது இல்லை என்று அமைதியாக இருந்துவிட்டாள். அவரை நினைக்க நினைக்க எரிச்சலாக இருந்தது. `தூக்கம் வரலைனா ஒண்ணு ரெண்டு மூணு… எண்ணிக்கிட்டே இரு. தூக்கம் தன்னால வந்துடும்’ என்பது தூக்கத்துக்கான அம்மாவின் மந்திரம். மனதுக்குள் மெதுவாக எண்ணத் தொடங்கினாள். அப்படியே தூங்கியும்போனாள். நள்ளிரவு கடந்திருக்கக்கூடும். எங்கும் ஒரே நிசப்தம். நீல நிற வெளிச்சம், அறையை மேலும் அடர்த்தியாக்கியது. போர்வையை விலக்கி எழுந்து உட்கார்ந்தாள் அதிதி. தூங்கிக்கொண்டிருந்த மூவரையும் பார்த்தாள். குறட்டைவிட்டு தூங்கிக்கொண்டிருந்தார் அவர். குறட்டைச் சத்தம் அவளை பல நாட்கள் தூங்கவிடாமல் இம்சை செய்திருக்கிறது. தன் தலையணையை நகர்த்தி அடியில் ஒளித்துவைத்திருந்த கத்தியையும் தலையணையையும் எடுத்துக்கொண்டு அவர் அருகில் சென்றாள். அவளின் நிழல் எதிரில் இருந்த சுவரின் மீது சன்னமாகப் படிந்திருந்தது. மனதைத் திடப்படுத்திக்கொண்டு கீழே தோதாக அமர்ந்தாள். தலையணையை எடுத்து அப்பா முகத்தின் மேல் வைத்து ஏறி, கால்களை இரு பக்கங்களிலும் போட்டுக்கொண்டு உட்கார்ந்தாள். அப்பா சுதாரித்து எழுந்திருப்பதற்கு வாய்ப்பே அளிக்காமல் கத்தியால் தன் வலுகொண்ட மட்டும் அவர் கழுத்தை அறுத்தாள். ஆழமாகக் கத்தி பாய்ந்திருந்தது. குரல்வளை துண்டிக்கப்பட்ட நிலையில் கூச்சலிட முடியாமல் கால்களால் உதைத்தார். ரத்தம் பீறிட்டுக் கிளம்பியது. என்ன நடக்கிறது என்று அவர் உணர்வதற்கு முன்பாகவே எல்லாம் நடந்து முடிந்திருந்தது. ரத்தம் பீறிட்டு சுவரில் தெறித்தது. கோடுகோடாக வழிந்து தரை முழுக்கப் பரவியது. அப்பாவின் அசைவுகள் மெள்ள அடங்கிக்கொண்டிருந்தன. தலையணையை அப்புறப்படுத்திவிட்டு பார்த்தாள். அவரின் உஷ்ணம் அதில் பொதிந்திருந்தது. கண்கள் தன்னையே உற்றுப்பார்ப்பதுபோல இருந்தன அவளுக்கு. நிலைத்த பார்வை நடுக்கத்தை ஏற்படுத்தியது. கோரைப்பாயைத் தாண்டி ரத்தம் அடர்த்தியாக உறைந்துகிடந்தது. விபரீதம் தெரியாமல் அம்மாவும் அக்காவும் உறங்கிக்கொண்டிருந்தனர். எழுந்து அதிதி தன் இடத்துக்குச் சென்று படுத்துக்கொண்டாள். அக்காவின் சிறுநீர், அதிதியைத் தொப்பலாக நனைக்கத் தொடங்கியது. கனவு அறுபட்டு உறக்கம் கலைந்து திடுக்கிட்டு எழுந்தாள். உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. உறங்கிக் கொண்டிருக்கும் அப்பாவைப் பார்த்தாள். அவளையும் மீறி கேவிக் கேவி அழுதாள். சத்தம் கேட்டு அலறி அடித்து எழுந்த அம்மா, “அதிதி... என்னம்மா?” என்று கேட்டாள். இவளுக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை. பயத்தில் நாக்குக் குழறியது. வார்த்தைகள் வராமல் அழுதபடியே இருந்தாள். சத்தம் கேட்டு அப்பாவும் எழுந்துகொண்டார். பயத்தினால் முகம் வெளிறிப்போய் இருந்தது. அழுகை நின்றபாடில்லை. “கண்ட எடத்துக்கு போவாதனா கேக்குறியா? எதையாவது பார்த்துப் பயந்திருப்ப” என்று சொல்லிக்கொண்டே கதவைத் திறந்துகொண்டு பூஜை அறைக்குச் சென்றாள் அம்மா. கொஞ்சம் விபூதியை எடுத்து வந்து அவள் நெற்றியில் பூசினாள். குடிக்க தண்ணீர் கொடுத்தாள். வாங்கி இரண்டு மிடறு அருந்திவிட்டு நீல நிற விளக்கையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் அதிதி. கனவின் நிகழ்வுகள் திரும்பத் திரும்ப அவள் மனதில் புரண்டுகொண்டே இருந்தன. பயத்தினால் பேச்சே எழவில்லை. அப்பா எழுந்து சென்று சிறுநீர் கழித்துவிட்டு வந்தார். மீண்டும் படுத்து குறட்டைவிட்டு தூங்க ஆரம்பித்தார். “அம்மா நான் அப்பாகிட்ட போய் படுத்துக்கட்டுமா?'' என்று கேட்டாள் அதிதி. “ஏம்மா... இங்கேயே படு” என்றாள். “பயமா இருக்கு” என்றாள். “சரி போய்ப் படுத்துக்கோ” எழுந்து சென்று நன்றாக உறங்கிக்கொண்டிருந்த அப்பாவின் அருகில் படுத்தாள். அவர் மீது கால்களைத் தூக்கிப்போட்டுக்கொண்டாள். அவரும் அவளை தன் பக்கமாக இழுத்து, குளிருக்கு அடக்கமாகப் போர்வையைப் போத்திவிட்டார். மறுபடியும் குறட்டைவிட்டுத் தூங்க ஆரம்பித்தார். அவரின் கழுத்தை மெதுவாகப் தடவிப்பார்த்த அதிதி, சிறிதுநேரம் அமைதியாக இருந்தாள். பின்னர் கண்களை மூடிக்கொண்டு ஒன்று, இரண்டு, மூன்று... என்று மனதுக்குள் எண்ணத் தொடங்கினாள்! http://www.vikatan.com
 3. பாஸ்வேர்டு சிறுகதை: தமிழ்மகன், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு நட்டநடு சாலையின் மஞ்சள் கோட்டில் அவனும் அவளும் நின்றிருந்தனர். அவர்களுக்கு முன்னும் பின்னும் கொக்கியில் மாட்டிய ரயில்பெட்டிகளைப்போல வாகனங்கள் தொடர்ச்சியாகப் போய்க்கொண்டிருந்தன. சாலையைக் கடக்க வழி கிடைக்காமல், ஐந்து நிமிடங்களுக்கு மேலாக நின்றிருந்தனர். அது சாலையைக் கடப்பதற்கான தடம் அல்ல. வாகனங்களுக்கு இடையே அரிதாக இடைவெளி விழும்போது, தற்கொலை முயற்சிபோல பாய்ந்து சென்று சாலையைக் கடந்துவிட வேண்டும். ஆனால், இடையில் வெளியே இல்லாத வாகனச் சுவர். சற்று தூரத்தில் சிக்னல் இயந்திரம் இருந்தது. ஆனால், அது வேலைசெய்யவில்லை. போக்கு வரத்து போலீஸாரும் இல்லை. இரண்டு பேருக்காகப் பரிதாபப்பட்டு வாகனங்கள் நிற்பதாகவும் இல்லை. ஒருவரையொருவர் வழித்துணைபோல பார்த்துக் கொண்ட அந்தத் தருணத்தில்தான் அவர்களுக்குள் பார்வை அறிமுகம் நிகழ்ந்தது. ``சிட்டி பேங்க், நாலு மணி வரைக்கும்தானே?’’ என அவள் கேட்டபோதுதான் அவனும் ஒரு புன்னகையோடு தயார் ஆனான். அவளும் புன்னகைத்தாள். அவன் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, ``இன்னும் அஞ்சு நிமிஷம்தான் இருக்கு. இன்னைக்கு லாஸ்ட் நாள் வேற...’’ என்றான். அந்த வாகனத் திரளில் மனிதர்கள் இருவர் பேசுவதற்கான சூழ்நிலை இயல்பாகவே உருவாகியது. அவள் உடனடியாக ஒரு காரியம் செய்தாள். அவளுடைய கைப்பையில் இருந்து செல்போனை எடுத்தாள். சில பட்டன்களை வேகமாக அழுத்தினாள். பொறுமையின்றி காத்திருந்தாள். அவள் முகத்தில் புன்னகை மலர்ந்தது. ``ஆன்லைன்லயே கட்டிட்டேன்’’ - செல்போன் குறுஞ்செய்தியைப் பார்த்தபடி, பொதுவாகச் சொன்னாள். ஆனால், அதைக் கேட்பதற்கு அங்கு அவன் ஒருவன் மட்டும்தான் இருந்தான். அவள் முடிவெடுத்த வேகம், தொழில்நுட்பத்தை சட்டெனப் பிரயோகித்த திறமை, விழிகளைச் சுழற்றியபடி சொன்ன பாணி... எதனாலோ அவனுக்கு அவளைப் பிடித்துப்போனது. அவள் மஞ்சள் நிறப் புடவை கட்டியிருந்தாள். அதே நிறத்தின் சகோதர வேறுபாடுதான் அவளுடைய நிறம். அவ்வளவு மலர்ச்சியான விழிகள். கேமரா படம் எடுப்பதுபோல் அதன் இமைகள் மெள்ள மூடித் திறந்தன. சுருள்சுருளான கறுப்பான தலைமுடிகள், வாகன ஓட்டத்துக்கு ஏற்ப காற்றில் அலைபாய்ந்தன. மஞ்சள் நகப்பூச்சு. நீளமான விரல்கள். பத்து விநாடிகளில் மிக அதிகமாகவே அவனால் கவனிக்க முடிந்தது. ``நீங்க எவ்வளவு கட்டணும்?’’ ``பன்னிரண்டாயிரம்.’’ ``இப்ப கட்டப்போறீங்களா?’’ ``செல்போன்ல (‘கட்டத் தெரியாதே’ என்பது பாவனையில்)... இன்னைக்குத்தான் கடைசித் தேதி...’’ என்றபடி பாக்கெட்டைத் தொட்டான். ``கடைசித் தேதியா... கடைசி நிமிஷம்! சரி, உங்க கிரெடிட் கார்டை எடுங்க’’ - மேஜிக் செய்பவர், திடீரென எதிர்வரிசையில் ஒருவரை அழைத்து `உங்ககிட்ட பத்து ரூபாய் நோட்டு இருந்தா கொடுங்க’ என்பாரே அப்படி... ஆச்சர்யம் நடக்கக் காத்திருக்கும் சந்தர்ப்பம்போல கட்டுப்பட்டு, கிரெடிட் கார்டை எடுத்து நம்பரைக் காட்டினான். சில விநாடிகளில் அவனுடைய தொகையையும் கட்டிவிட்டு, அவளுக்கு வந்த குறுஞ்செய்தியைக் காட்டினாள். ``ஆக்டிவேட்டட்.’’ ``பன்னிரண்டாயிரத்தை எடுங்க.’’ எல்லாம் கனவுபோல இருந்தது. அவன் பணத்தை எடுத்துக் கொடுத்தான். ``இனிமே நாம ரோட்டை கிராஸ் பண்ணவேண்டியது இல்லை’’ - அவளுடைய பேச்சில் சிநேகமும் உரிமையும் இருந்தன. ``திரும்பிப் போகணுமே... கிராஸ் பண்ணித்தான் ஆகணும்’’ - என்னமா மடக்கிட்டோம் என ஓர் அசட்டுப் பூரிப்பு அவனிடம். ``யா... அஃப்கோர்ஸ். இந்தப் பக்கம் அவ்வளவு டிராஃபிக் இல்லை. நீங்க எங்கே போகணும்?’’ உரிமையாகக் கேட்டாள். ``இங்கே ஒரு மல்ட்டிமீடியா இன்ஸ்டிட்யூட் நடத்துறேன். ஆனந்த் தியேட்டர் பக்கத்துல.’’ அவர்கள் சாலையைக் கடந்து, ஸ்பென்சர் பக்கத்தில் வந்து நின்றனர். ``ஆனந்த்னு ஒரு தியேட்டரா... நான் கேள்விப்பட்டதே இல்லையே.’’ ``அந்த தியேட்டரை இடிச்சுட்டு காம்ப்ளெக்ஸ் கட்டிட்டாங்க... நீங்க மெட்ராஸுக்குப் புதுசா?’’ ``ஆமா... ரெண்டு வருஷம்தான் ஆச்சு. ஸ்பென்சர்ல பொட்டிக் வெச்சிருக்கேன்.’’ விசிட்டிங் கார்டை எடுத்துக் கொடுத்தாள். தன் கார்டைக் கொடுக்கும் சந்தர்ப்பத்துக்காக ராகவேந்திரருக்கு நன்றி சொல்லிக்கொண்டான். அவனுக்கு ரஜினியின் மூலமாக ராகவேந்திரர் அறிமுகம். அதே நேரத்தில் அவளுடைய செல்போன் மெல்லிய ‘டிங்’ ஒலியை எழுப்பியது. எடுத்துப் பார்த்துவிட்டு, ``உங்க அமௌன்ட் டிரான்ஸ்ஃபர் ஆகிருச்சு’’ என்றாள். ``ஓ... தேங்க்ஸ்.’’ புன்னகையைக் காட்டிவிட்டு, பதில் வழியலை ஏற்றுக்கொண்டு ஸ்பென்சர் கட்டடத்துக்குள் நுழைந்து, கண்ணில் இருந்து மறைந்தாள்; மனதில் இருந்து மறையவில்லை. அவளுக்கு 30 வயது இருக்கலாம். அவனுக்கு 42. அவனுக்குத் திருமணம் ஆகி ஒரு பையன். மாமனார் கண்காணிப்பில் ஹாஸ்டலில் ப்ளஸ் டூ. அவளுக்கும் கல்யாணம் ஆகியிருக்கக்கூடும். மகனோ, மகளோ இருக்கலாம். இது சரியில்லை. `இந்த வயதில் மனதைப் பறிகொடுப்பது பொருத்தமாகவே இல்லை. வீண் பிரச்னைகளும் மன உளைச்சலும் தான் ஏற்படும்' எனத் தேற்றிக்கொண்டு, அரும்பிய காதலை அப்படியே கிள்ளி எறிய நினைத்தபோது அவளிடம் இருந்து போன் வந்தது. ``நூறு ரூபாய் அதிகமா இருக்கு. ஓ மை காட். உடனே, எனக்கு நீங்க இந்த நம்பருக்கு கால் பண்ணுங்களேன்’’ என அவசர அவசரமாக போனை கட் செய்து விட்டாள். `இப்படி கணக்கு பார்க்கிறாளே!' என்ற சிறிய எரிச்சலுடன்தான் அவளுக்கு போன் செய்தான். என்ன ஆச்சர்யம்... அவளுடைய ரிங் டோனும் `டோன்ட் வொர்ரி பி ஹேப்பி’ என பாப் மார்லேவின் குரல். ``ஆச்சர்யமா இருக்குல? அதுக்காகத்தான் போன் பண்ணச் சொன்னேன்.'' அவளோடு பழகவும் அவளைப் பிடித்துப்போகவும் காரணங்கள் கூடின. அவர்களுக்குள் வேறு என்னென்ன ஆச்சர்யங்கள் இருக்கக்கூடும்? இருவருக்கும் அண்ணா சாலையிலேயே ஆபீஸ். அப்புறம்... இருவரின் அலைபேசி எண்களும் 88 என முடிந்திருந்தன. எடுத்துச் சொன்னபோது, ``ஓ... சர்ப்ரைஸ்!’’ என்றாள். ஏதேதோ காரணங்கள் சொல்லி அவளுடைய ‘துலிப் பொட்டிக்’குக்கு இரண்டு முறை போனான். ஸ்பென்சரில் முதல் முறை ஒரு சட்டை எடுக்க வந்ததாகச் சொன்னான். ``ஓ... இங்கேதான் உங்க ஷாப்பா?’’ என செயற்கையாகச் சொல்லவேண்டியிருந்தது. இரண்டாவது முறை டி ஷர்ட். அதன் பிறகு நிறைய முறை சென்றான். காரணங்கள் தேவைப்படவில்லை. அவள், அறிவாலயத்துக்கு எதிரே பெரிய அப்பார்ட்மென்ட் ஒன்றில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தாள். வைத்தது வைத்த இடத்தில் இருக்கும் அழகான வீடு. அவளுக்கு யாருமே இல்லை. சொந்த ஊர் பெங்களூரு. பெயர் ரஞ்சனி. அவளுடைய பெற்றோருக்கு ஒரே மகள். பெற்றோர் ஷீரடிக்கு காரில் பயணம் சென்றபோது விபத்தில் இறந்துபோனதால், பெற்றோரையும் கடவுள் நம்பிக்கையையும் ஒரே நாளில் இழந்துவிட்டதாகச் சொன்னாள். அவளுக்கு அப்போது 12 வயது. மாமாவும் மாமியும் உடன் இருந்தனர். 20-வது வயதில் திருமணம் நடந்தது. 21-வது வயதில் டிவோர்ஸ் மனு கொடுத்து, 24-வது வயதில் விடுதலை. மாமா, மாமிக்கு கொஞ்சம் பணத்தைக் கொடுத்து ஊருக்கு அனுப்பிவைத்தாள். வீட்டை விற்றுவிட்டு மும்பையில் செட்டில் ஆனாள். அங்கே நான்கு வருடங்கள். கார்மென்ட்ஸ் வைத்திருந்தாள். சென்னைக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. இதுதான் அவள் சொன்ன சுருக்கமான வரலாறு. அவளுடைய வாழ்க்கை ஆங்காங்கே நிரப்பப்படாத ரகசியங்களால் மூழ்கியதாக இருந்தது. ஆங்காங்கே சில `ஏன்?'கள் இருந்தன. அவன் பெயர் குமார். அவன் வாழ்க்கையில் இத்தனை அட்வெஞ்சர்கள் இல்லை. பிறந்தது, படித்தது, வளர்ந்தது, தொழில் தொடங்கியது, நான்கே ஆண்டுகளில் பிரெஸ்ட் கேன்சரில் மனைவியைப் பறிகொடுத்தது எல்லாமே சென்னையில்தான். தன் வாழ்வில் வேறு ஒரு பெண்ணுக்கு இடம் இல்லை என முடிவெடுத்து பத்து ஆண்டுகள் ஓடிவிட்டன. ரஞ்சனி அந்த முடிவை மாற்றி விட்டாள். இருவருக்குமான இழப்புகளே அவர்களின் சிறப்புச் சலுகை ஆகிவிட்டது. குமார் அவ்வப்போது அவளுடைய வீட்டிலேயே தங்கிச் செல்லும் அளவுக்குப் போதுமானதாக அந்தச் சலுகை இருந்தது. அவள் எல்லாவற்றையும் நீட்டி முழக்கிச் சொல்பவளாக இருக்கிறாள் என குமார் நினைக்கவில்லை. எதையும் கருத்தாகப் பேசுபவளாக அவனுக்குத் தெரிந்தாள். `என் ப்ரீபெய்டு கார்டை போஸ்ட் பெய்டா மாத்திட்டேன். கடைக்காரன், `ரேஷன் கார்டு இருக்கா?'னு கேட்டான். `நான் இல்லை'னு சொல்லிட்டேன். `ஆதார் அட்டை இருக்கா?'னு கேட்டான். `அதுவும் இல்லை'னு சொன்னேன். `ஓட்டர் ஐடி இருக்கா?'னு கேட்டான். `அதுவும் இல்லை'னு சொன்னேன். `அப்ப உங்களுக்கு எப்படிக் குடுக்கிறது?'னு கேட்டான். நல்ல வேளையா என்கிட்ட பாஸ்போர்ட் இருந்தது. அது அப்பா, அம்மா இருக்கும்போது வாங்கிவெச்சது. நடுவுல நல்ல பொண்ணா ரெனியூவல் பண்ணியிருந்தேன். ஒருவழியா பாஸ்போர்ட்டை வெச்சு போஸ்ட்பெய்டா மாத்த முடிஞ்சது’ என்பாள். இது ஓர் உதாரணம். இன்னோர் உதாரணம்... `காலையில் ஹோட்டலுக்குப் போனேன். `தோசை இருக்கா?'னு கேட்டேன். `பொங்கல்தான் இருக்கு'னு சொன்னான். எனக்கு நல்ல பசி. தோசைக்காக ஹோட்டல் ஹோட்டலா அலைய முடியுமா? சரி சாப்புடுவோம்னு முடிவுபண்ணேன். `பொங்கலுக்கு, வடைகறி கிடைக்குமா?'னு கேட்டேன். `சாம்பார், சட்னி'னு சொன்னான். எனக்கு என்னவோ அந்த காம்பினேஷனே பிடிக்காது. `வேண்டாம்'னு சொல்லிட்டு சப்பாத்தி சாப்பிட்டேன்.’ இவள் தரப்பை அவளுடைய வழக்கமான குரலிலும் அவளுடன் உரையாடிய மாற்று ஆட்களின் குரல்களுக்கு சற்றே பேஸ் வாய்ஸிலும் பேசி, அதை நடித்துக்காட்டாத குறையாக விவரிப்பது கொஞ்சம் அதிகம்தான். சுமதி அப்படி பேச மாட்டாள். பல சம்பாஷணை களுக்கு ஒரே எழுத்தில் `ம்’ என முடித்துவிடுவாள். ரஞ்சனியிடம் பேச்சுக்கு செவிசாய்க்கும் சுவாரஸ்யம். காலையில் அவள் சப்பாத்தி சாப்பிட்டதைத் தெரிந்துகொள்வதே குமாருக்கு மேலதிகத் தகவல்தான். ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்டு ஆனது என்ற ஒரு வரித் தகவல்கூட அவனுக்குக் கொஞ்சமும் அவசியம் இல்லாததாக இருந்தது. ஆனாலும் ரசிக்க முடிந்தது. அவள் பேசப் பேச அவளுடைய தனிமைதான் அத்தகைய நீளமான உரையாடல்களுக்குக் காரணமாக இருக்க வேண்டும் என அவன் வருத்தப்பட்டான். குழந்தையின் விவரிப்புகள்போல அதை அவன் ரசித்தான். யாரும் இல்லாத அவள் இத்தனை நாட்களாக யாரிடம் இவ்வளவு நேரம் விவரித்திருப்பாள் என பரிதாபமும் பாசமும் அதிகரித்தன. அவள் நிறையப் பேசினாளே ஒழிய, அவளுடைய சில பகுதிகளைப் பகிர்ந்துகொள்வதில் மிகுந்த கவனமாக இருந்தாள். ஆனால், இன்னோர் ஆபத்து மெள்ள வளர்ந்தது. அவளும் அவனிடமும் அதே போன்ற விரிவான பேச்சை எதிர்பார்த்தாள். ``ஏன் சொன்ன நேரத்துக்கு வரலை?'’ எனக் கோபப்பட்டாள். ``வழியில் ஒரு ஆக்சிடென்ட்.'’ ``அடிபட்ருச்சா?’' - பதறிப்போய் கேட்டாள். ``ஆக்சிடென்ட் எனக்கு இல்லை. வழியில் வேற ஒருத்தருக்கு.’ ``சரியா சொன்னாத்தானே... காரா?'’ ``இல்லை, பைக் - ஆட்டோ.’' ``அடிபட்ருச்சா?'’ ``அடிபடலைன்னு சொன்னேனே?'’ ``உங்களுக்கு இல்லை. பைக்ல வந்தவருக்கு.'’ ``எதுக்கு அவ்ளோ டீடெய்ல்... நீ போய் மருந்து போடப்போறியா?’' ``ப்ச்...’' ``ஸாரி... ஸாரி. சின்ன சிராய்ப்புதான். பெரிய காயம் எதுவும் இல்லை.'’ ``அதுக்கும் லேட்டா வந்ததுக்கும் என்ன சம்பந்தம்?'’ ``ரெண்டு பேரும் வண்டியைக் குறுக்கும் நெடுக்குமாக நிறுத்திட்டு சண்டை போட்டுக்கிட்டானுங்க. அதனால் டிராஃபிக் ஜாம்.'’ அவனுக்கு, பதில் சொல்லும் சுவாரஸ்யம் இல்லை. ஆனால், சுவாரஸ்யமாகக் கேள்வி கேட்டபடி இருந்தாள். `கிளம்பிப்போய் அவங்களோட பிரச்னையைத் தீர்த்துட்டு வரப்போறியா?’ எனக் கேட்க நினைத்தான். கேட்கவில்லை. மனம், வாயைக் கட்டுப்படுத்தி விட்டது. மனிதர்களுக்குள் நெருக்கம் ஏற்படுவது என்பது, அவர்களின் உரிமைகளில் நாம் எத்தனை சதவிகிதம் தலையிடுகிறோம் என்பதைப் பொறுத்துதானே? ``எதுக்கு வீண்பேச்சு?’’ என ஒரு தரம் சொன்னான். ``எதுவும் பேசக் கூடாதா நான்? என்னைப் பற்றி ஒரு அக்கறையும் இல்லை’’ இது அவள், அவன் மீது தொடுத்த உரிமைமீறல். குமார் `தனிக்கட்டை' எனச் சொல்லிக்கொள்வது ஒரு சம்பிரதாயம்தான். தூரத்தில் இருக்கும் சொந்தபந்தங்களால் அந்தக் கட்டை, புதர் சூழப்பட்டிருந்தது. மாமனார் கண்காணிப்பில் பையன் படித்துக்கொண்டிருந்தான். ஆனால், குமாரும் மாமனாரின் கண்காணிப்பில்தான் இருந்தான். கொஞ்ச நாட்களாக குமார் சரியாக அவர்களுடன் தொடர்பில் இல்லை என்ற சின்ன வித்தியாசமே அவர்களை விபரீதமாகச் சிந்திக்கவைத்திருக்க வேண்டும். ஆரம்பத்தில் நல்லபடியாக, அவர்களாகவே மாப்பிள்ளைக்கு என்ன துக்கமோ என வருந்தினர். பிறகு, மாப்பிள்ளை இப்போதுதான் சந்தோஷமாக இருக்கிறார் என்பதை அறிந்ததும் மேலும் வருந்த ஆரம்பித்தனர். அவன் மட்டுமே இருக்கும் அவனுடைய வீட்டுக்கு அவன் சரியாக வருவது இல்லை எனத் தெரிய ஆரம்பித்தது. `வீட்டுக்கு வருவது இல்லையாமே?' என ஜாடைமாடையாக விசாரிப்பார்கள். `இன்ஸ்டிட்யூட்டில் கொஞ்சம் வேலை' எனக் காரணம் சொல்வது, அவனுக்கே ஓவராக இருந்தது. அவர்கள் தரப்பு சந்தேகங்கள் நாகரிகமாக ஆரம்பித்து, எதற்கு உடம்பைக் கெடுத்துக்கொள்ள வேண்டும்? இன்ஸ்டிட்யூட்டே வேண்டாம். வீட்டில் சும்மா இருந்தால் போதும் என்பதாக மாறியது. வேறு என்ன, மாப்பிள்ளை தவறான பாதையில் போகிறார் என்ற வருத்தம்தான். எல்லா ரகசியங்களும் அதை ஆராய்வதற்கு ஆட்கள் இல்லாத வரைதான். நிறுவனத்தில் வேலைசெய்பவன், நண்பன், உறவினர்... எல்லா தரப்பினருக்கும் சந்தேகம் வந்தது. யாரோ சிலர் ரஞ்சனியை `பூக்காரி' எனச் சொல்லிவிட்டனர். மாமனாரும் மாமியாரும் ஊரில் இருந்து கிளம்பிவந்தனர். ``வேணும்னா ரெண்டாந்தாரமா கல்யாணம் பண்ணிக்கங்க மாப்பிள்ளை’’ - அவருக்குத் தெரிந்த பாஷையில் நேரடியாகச் சொன்னார் மாமனார். ``அவங்களுக்கு கல்யாணம் மேலே எல்லாம் நம்பிக்கை இல்லை.'’ `‘பூ யாவாரம் செய்றதா சொன்னாங்களே?’' `‘இல்லை. பொட்டிக் ஷாப்.'’ `‘ஏதோ ஒண்ணு. பையனை வேணும்னா நானே பார்த்துக் குறேன். நீங்க சந்தோஷமா இருந்தா போதும்.'’ இந்த விவாதமே தலைவலியாக இருந்தது. பெண்ணோடு பழகுவது என்றாலே `வெச்சிருக்கான்’, `கீப்பு’, `எவளோ வளைச்சுப் போட்டுட்டா'... இப்படித்தான் பேசுகிறார்கள். ரஞ்சனி பெருமைக்குரியவள்; மரியாதைக் குரியவள்; பண்பானவள்... எப்படிச் சொன்னாலும் சமூகத்தின் வாய் தவறாகத்தான் பேசும்; கண் தவறாகத்தான் பார்க்கும். அவளை கல்யாணத்துக்குச் சம்மதிக்கவைப்பதுதான் பேச்சையும் பார்வையையும் சீராக்கும். அதற்கான பேச்சு வார்த்தைக்கான சூழலை அவளே உருவாக்கியிருந்தாள். அன்று மாலை அவன் அவள் வீட்டின் காலிங் பெல்லை அழுத்த எத்தனிக்கும் முன்னர் கதவில் அந்தப் பலகையைப் பார்த்தான். பீங்கான் எழுத்தில் `ரஞ்சனி குமார்’ என போர்டு மாட்டி யிருந்தது. தகுந்த காரணத்தைச் சொன்னாள். ``பேப்பர் பையன், கூரியர் பையன், சிலிண்டர் கொண்டு வருபவன், எலெக்ட்ரீஷியன் என ஒரு நாளைக்கு ஒருத்தன் வர்றான். இந்தப் பெயர்தான் பாதுகாப்பு. குமார்னா நீங்கதான்னு யாருக்குத் தெரியப்போகுது?’' ``நான்தான் குமார் எனத் தெரிந்தால் எனக்கு ஓ.கே-தான்’’. சிறிய இடைவெளிவிட்டு, ``ஒய் டோன்ட் வி மேரி?’’ என விண்ணப்பித்தான். ஏற்கெனவே சாதாரணமாக இந்தப் பேச்சு வந்தபோதும் அவள் அதைத் தவிர்ப்பது தெரிந்தது. ``நான் கல்யாணத்துக்கு எல்லாம் சரியான ஆள் இல்லை. என் சுதந்திரம் முக்கியம்னு நினைப்பேன். என்னோட மாமா, மாமி, என் கணவன், டெல்லியில என் தோழி... எல்லோருமே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல பிடிக்காமப் போயிட்டாங்க. எனக்கு டயம் கொடுங்க.’’ அவளுக்கு மிகுந்த யோசனையாக இருந்தது. அவன் உள்ளே வந்ததும் கதவை மெள்ளச் சாத்தினாள். அவள் எதுவுமே சொல்லவில்லை. இரண்டு நாட்கள் கழித்து, ``அது மட்டும் வேண்டாம்’’ என்றாள். அடுத்த மாதமே இன்னொரு வளையம். அவனும் அவளும் எடுத்துக்கொண்ட செல்ஃபி ஒன்றை வீட்டு ஹாலில் போட்டோ ஸ்டாண்டில் வைத்திருந்தாள். அவள், அவன் தோளில் சாய்ந்திருக்க, அவன் அவளுடைய கன்னத்தைக் கைகளால் தாங்கியிருப்பது மாதிரியான படம். அவள் கறுப்பு சுடிதாரில். அவன் மஞ்சள் நிற டி-ஷர்ட்டில். ‘‘கல்யாணம் மட்டும் வேணாம். அப்ப, இதை எதற்கு ஹாலில் மாட்டணும்?’’ அந்தப் படத்தைப் பார்த்து அவன் மகிழ்வான் என எதிர்ப்பார்த்திருந்தாள் என்பது புரிந்திருந்தும் அப்படிக் கேட்டான். ``கல்யாணம் பண்ணாம இருக்கிறது ரெண்டு பேருக்கும் நல்லதுதானே?’’ ``சிம்பிளா கேட்கிறேன். ஏன் கல்யாணம் வேண்டாங்கிறே?’’ ‘‘சொன்னேனே... அது பெரிய கமிட்மென்ட். அதுக்கு நான் தயார் ஆகிட்டேனானு தெரியலை.’’ ‘‘இன்னும் என்ன தயார் ஆகணும்?’’ அந்தக் கேள்வியில் பொதிந்து இருந்த கொச்சைத்தன்மை, அவளை முகம் வாடவைத்தது. எழுந்து அந்த போட்டோ ஸ்டாண்டை எடுத்து, பீரோவில் வைத்துவிட்டாள். குமாருக்குப் பிடித்த நண்டு பொரியல் செய்துகொண்டிருந்தாள். ரஞ்சனியின் லேப்டாப், கட்டில் மேல் கிடந்தது. ஃபேஸ்புக்கில் விஜயகாந்த் மீம்ஸ், மோடி மீண்டும் இந்தியாவுக்கு வருகை புரிந்திருப்பது, `நீயில் இருக்கிறேன் நான்’ எனக் காதல் புலம்பல்... இப்படியாகப் படித்துவிட்டு, அதே மூடில் ரஞ்சனிக்கு ஒரு கவிதை எழுதி மெசேஜ் பாக்ஸில் போட்டான். அதற்கு அவள் எப்படி ரியாக்ட் செய்வாள் என்பது அவனுக்குத் தெரியும். ‘`வாவ்... ஃபென்டாஸ்டிக்... எப்படிப்பா எழுதறே?’’ `அவளுடைய பாஸ்வேர்டு தெரிந்தால் அதையும் நாமே பதிலாகவும் போடலாமே' என நினைத்தான். அவளுடைய பாஸ்வேர்டு என்னவாக இருக்கும்? மூன்று ஆப்ஷன்களில் கண்டுபிடிக்க வேண்டும். சவாலான விஷயமாக இருக்கவே, சிறிய பேப்பரில் வெவ்வேறு காம்பினேஷனில் பல வார்த்தைகளை எழுதிப் பார்த்தான். ரஞ்சனி சமையல் அறையில் இருந்து, ``என்ன யோசனை?’' என்றாள். ‘‘சர்ப்ரைஸ்’’ என்றான். 1. பெங்களூரு 2. ஷீரடி 3. துலிப் கடைசியாக இந்த மூன்றைத் தேர்ந்தெடுத்தான். முதல் ஆப்ஷன்... ம்ஹூம். இரண்டாவது? இன்னும் ஒரு வாய்ப்புதான் இருக்கிறது என்றது எஃப்.பி. மூன்றாவது ஆப்ஷனில் அவளுடைய ஃபேஸ்புக் திறந்துகொண்டது. மண்டு இத்தனை லகுவாகவா பாஸ்வேர்டு வைப்பாள்? ``ஹாய்... கம் ஹியர்... ஒரு சர்ப்ரைஸ்.’’ அவள் ஆர்வமாக வந்து அமர்ந்தாள். ``என்ன கே?’’ ``நான் ஒரு காதல் கவிதை எழுதினேன். உனக்கு.’’ ``சூப்பர்!’’ ``இரு... அந்தக் கவிதையைப் படிச்சிட்டு நீ எப்படி ரியாக்ட் பண்ணுவேன்னு நானே கற்பனையா ஒரு ரிப்ளை போட்டிருக்கேன்.’’ அவள் கவனம் ஊன்றிப் படித்தாள். ``இது என் எஃப்.பி அக்கவுன்ட் ஆச்சே?’’ ``ஆமா... உன் பாஸ்வேர்டைக் கண்டுபிடிக்கிறது பெரிய விஷயமா?’’ கையில் பீங்கான் தட்டில் வைத்திருந்த நண்டு பொரியலை அப்படியே கீழே போட்டாள். ``கெட் அவுட் ஐ ஸே... ப்ளீஸ் கெட் அவுட். நான் மிருகமா மாறுறதுக்குள்ள வெளியே போயிடு. திஸ் இஸ் த லிமிட்.’’ ``ஏய் என்ன ஆச்சு?’’ ``என்னுடைய பெர்சனல்னு ஒண்ணு இருக்கு. அங்கே தலையிட்டீங்கன்னா, அது எனக்குப் பிடிக்காது.’’ ``நமக்குள்ள என்ன பெர்சனல்? படுக்கையை ஷேர் பண்ணும்போது, பாஸ்வேர்டை ஷேர் பண்ணக் கூடாதா?’’ ``மூணு எண்றதுக்குள்ள வெளியே போயிடு. யு ஹேவ் கிராஸ்டு தட் லிமிட்.’’ ‘`நீயும்தான்.’’ குமார் கார் சாவியை எடுத்துக்கொண்டு விருட்டென வெளியேறினான். அவனுக்கு அவமானமாக இருந்தது. பாஸ்வேர்டு அத்தனை பெரிய விஷயமா என்ற அதிர்ச்சியில் இருந்து அவன் மீளவே இல்லை. கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகிவிடும்... ஆறட்டும் எனக் காத்திருந்தான். அவளுடைய பிறந்த நாள். வாழ்த்துச் செய்தி அனுப்பினான். நாட் ரிஸீவ்டு. போன் செய்து பார்த்தான், அந்த எண் உபயோகத்தில் இல்லை. கடைக்குச் சென்று பார்த்தான், அங்கே வேறு ஒரு மொபைல் கடை இருந்தது. வீட்டுக்குச் சென்று பார்த்தான், அங்கே ஒரு மார்வாடி குடும்பம் இருந்தது. உச்சிப்பொழுதில் பனிநீர்போல அவள் மறைந்து விட்டாள். புதிய பாஸ்வேர்டுடன் அவளுக்கான பிரத்யேக ரகசியங்களுடன் ரஞ்சனி எங்கோ இருக்கிறாள்! http://www.vikatan.com
 4. எலிப்பொறி - சிறுகதை வாஸந்தி - ஓவியங்கள்: ஸ்யாம் ஷீலுவுக்குச் சிரிப்புப் பொத்துக்கொண்டு வந்தது. கடகடவென்று சிரிக்க வேண்டும்போல் இருந்தது. இந்த அடுக்குமாடி வளாகத்தில் வசிக்கும் மேடம்கள் சரியான தொடைநடுங்கிகள் என அவளுக்கு இப்போதுதான் புரிந்தது. உண்மையில் அவர்களை முதன்முதலில் பார்த்தபோது, அவளுக்குப் பிரமிப்பாக இருந்தது. அவர்களது குட்டை முடியும் கால்சராயும் அங்ரேஜி மொழியும்... அவர்கள் ஏதோ வேற்றுக் கிரகக்காரர்கள் எனத் தோன்றும். அவர்கள் வீட்டு ஆண்கள் வெளியில் கிளம்புவதற்கு முன்னர், இவர்கள் தங்கள் வண்டியை ஓட்டிக்கொண்டு கிளம்பிவிடுவார்கள். ‘நா கிளம்புறதுக்குள்ள வேலையை முடிச்சுடணும்’ எனக் கண்டிப்புடன் சொல்வார்கள். அவர்கள் சொல்வதை மீறுவது தெய்வக் குற்றம்போல், மாமியார் கமலா பதைப்பாள். `இப்படிப் பட்ட சர்வவல்லமை படைத்த பெண்களும் இருக்கிறார்களா?’ என ஷீலுவுக்குப் பிரமிப்பு ஏற்படும். ஷீலு அநேகமாக முன்பு, மாமியார் வேலை செய்யும் வீடுகளுக்குச் சின்னச் சின்ன உதவி செய்யக்கூடச் செல்வாள். இப்போது மாமியார் அவளையே முழு வேலையையும் செய்யச் சொல்கிறாள் . பறந்து பறந்து செய்தாலும், எந்த மேடமிடம் இருந்தாவது திட்டு கிடைக்கும். இன்று 203 மேடம்செய்த அமர்களத்தால் எல்லாமே தாமதமாயிற்று. அதை நினைத்து அவளுக்கு மீண்டும் சிரிப்பு வந்தது. லிஃப்டில் அவள் தனக்குத்தானே சிரிப்பதைக் கண்டு, அங்கு இருந்த இரண்டு ஆண்கள் அவளை விநோதமாகப் பார்த்தார்கள். அவள் அதைக் கவனிக்காததுபோல் நின்றாள். சிரிப்பதற்குக்கூடவா சுதந்திரம் இல்லை? தோள்பட்டையில் அந்த மேடமின் சென்ட் வாசனை இருந்தது. நடக்கும்போது கூடவே வந்தது. அங்குதான் அந்த ஒப்பனைசெய்த முகம் கலவரத்துடன் பதிந்திருந்தது. சமையலறையில் ஷீலு வேலைசெய்யும்போது, அலமாரியைத் திறக்கவந்த மேடம் திடீரென்று கத்தினாள். அடுத்த விநாடி ஷீலுவைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள். அவள் தோள்பட்டையில் முகத்தைப் பதித்தாள். ஒரு விநாடி ஷீலு அரண்டுபோனாள். ``என்ன ஆச்சு?’’ `‘எலி... எலி...’’ என்று மேடம் அலறினாள். ‘`இப்பத்தான் இப்படி ஓடிப்போச்சு.’’ அவளுடைய அலறலைக் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் எல்லாம் கூடிவிட்டார்கள். ‘`எலி எப்படி வந்தது வீட்டுக்குள்ளே?’’ என்று சாஹப் கத்தினார். அது ஒரு மிகப் பெரிய அவமானம்போல், அத்துமீறல்போல் ஆளுக்கு ஆள் பேசினார்கள். வீட்டில் எங்கேயாவது ஓட்டை இருக்கும். அதை முதலில் அடைக்கவேண்டும் எனத் திட்டம் போட்டார்கள். `‘வாசல் கதவைத் திறந்துவைத்தாளா ஷீலு?’’ என்று யாரோ கேட்டார்கள். எல்லோருடைய ஆங்கிலம் கலந்த ஆவேசப் பேச்சுகளையும் கேட்டபடி நின்றாள் ஷீலு. ஓர் எலிக்காக இப்படி அரண்டுபோவார்களா என்று இருந்தது. மேடமின் பயம் இன்னும் விலகவில்லை எனத் தோன்றிற்று. `‘மேடம்... நா எலிப்பொறி கொண்டுவர்றேன். பயப்படாதீங்க’’ என்றாள் ஷீலு. `‘எலி பிடிபடுமா?’’ என்றாள் மேடம் சந்தேகத்துடன். ஷீலுவுக்குச் சிரிப்பு வந்தது. “அப்படித்தான் நாங்க பிடிப்போம். எலி அதுல அகப்பட்டுக்கிட்டு முழிக்கிறதைப் பார்க்கணுமே... தமாஷா இருக்கும்.” மேடம் முகத்தைச் சுளித்தாள்... `‘இதுல தமாஷ் வேறா? நீயே எலிப்பொறியை வெச்சுட்டுப்போ. கொண்டுவர மறந்துடாதே!’’ லிஃப்ட் ஐந்தாம் தளத்தில் நின்று திறந்ததும், அவள் அவசரமாக 503 வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினாள். அதரங்களில் புன்னகை இன்னும் இருந்தது. ``வா... வா... என்ன இத்தனை லேட்? சீக்கிரம் செய். நா வெளியிலே போகணும்’’ என்று வழக்கம்போல மேடமிடம் இருந்து அதட்டல் வந்தது. ஷீலு சிரித்தபடியே, எலியால் நேர்ந்த கூத்தைச் சொல்லிக்கொண்டு பாத்திரம் கழுவச் சென்றாள். “ஐயய்யோ எலி வந்ததா?’’ என்றாள் மேடம். சே... என்ன பெண்கள் என்று ஷீலுவுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. ஒரு சின்ன ஜந்துவைக் கண்டு என்ன பயம்? வேலை எல்லாம் முடிந்து வீட்டை நோக்கி நடக்கும்போது, சுரீரென மதிய வெயில் தலையில் அடித்தது. அவள் துப்பட்டாவை விரித்து, தலையில் சுற்றிக்கொண்டாள்... பசித்தது. வழி முழுவதும் அங்கங்கே ஆலூ டிக்கி, சமோசா என்று விற்பனை நடந்தது. எண்ணெய் காயும் வாசனையும், சமோசாவின் மணமும் நாசிக்குள் புகுந்து நாவில் நீர் ஊறிற்று. ஆனால், அவள் கையில் என்றும் ஒரு நயா பைசா இருக்காது. இல்லாதபடி கமலா பார்த்துக்கொண்டாள். அவள் வேலைபார்க்கும் வீடுகளில் எல்லாம் ஷீலு வேலை செய்யவேண்டும். ஆனால், சம்பளம் வாங்கும் தினம் கறாராக கமலா ஆஜராகி, பணத்தை எடுத்துக்கொண்டு போய்விடுவாள். ஷீலு அதில் `எனக்கும் பங்கு வேண்டும்’ என்று கேட்டது இல்லை. வீட்டுச் செலவுக்குத்தானே உழைக்கிறோம் என்று மனசு சமாதானம் சொல்லும். எங்கோ மணி ஓசை கேட்டது. கடைகளுக்கு இடையே யாரோ ஒரு சின்ன மண்டபம் கட்டி ஒரு சாமி படத்தை வைத்திருந்தார்கள். ஜெய் ஹனுமான்ஜி படம். கையில் மலையைத் தூக்கிக்கொண்டு குரங்கு உருவம். எல்லாம் நமக்கு சாமி. `எலிகூட கணேஷ்ஜிக்கு வாகனம்’ என்பாள் கமலா. அதனால் எலியைக் கொல்லக் கூடாது. அது குட்டை முடி மேடமுக்குத் தெரியாதுபோல் இருக்கு. ஒரு பூசாரி ஹனுமான்ஜிக்குத் தீபம்காட்டி மணியை ஆட்டிக்கொண்டிருந்தார். இரண்டு மூன்று பேர் அவருடைய தட்டில் காசை வைத்துவிட்டுப் போனார்கள். அவள் அந்தப் பக்கம் திரும்புவதே இல்லை. கிராமத்தைவிட்டுக் கிளம்பும் வரை கோயில் திருவிழாவுடன் சம்பந்தம் இருந்தது. சிநேகிதிகளுடன் பண்டிகைக் காலங்களில் கையில் டிசைன் டிசைனாக மருதாணி இட்டுக்கொண்டு, கோயில் வளாகத்தில் ஆடவும் பாடவும் பிடிக்கும். ஓ... அப்போது நிறைய விஷயங்கள் பிடிக்கும். வளையல் அணிய, கொலுசு போட, பாட்டு பாட, மற்றவர்களுடன் சன்னிதியைச் சுற்றி நமஸ்கரிப்பாள். சாமியிடம் எதுவும் கேட்க வேண்டும் என்றுகூடத் தோன்றாது. திருவிழா நடத்த மட்டுமே கோயில் என்று தோன்றும். உள்ளே ஜிகினா ஜரிகைச் சுற்ற அமர்ந்திருக்கும் சாமிக்கும் அவளுக்கும் சம்பந்தம் இருக்குமா? சம்பந்தம் இருந்தால், அந்த ஆளுக்கு மகாத் தொல்லை பாவம். எத்தனை பேரைச் சமாளிப்பார்? அவர் எங்கோ காணாமல் போயிருக்க வேண்டும். நீங்களே சமாளிச்சுக்குங்க. எலியையோ, பசியையோ, புருஷனுடைய அடியையோ, மாமியாரையோ. அவளுக்குச் சிரிப்பு வந்தது. வழியில் படுத்திருந்த நாய் ஒன்று உசுப்பப்பட்டதுபோல அவளை நிமிர்ந்து பார்த்தது. அதன் எதிரில் ஒரு குத்துக்கல் இருந்தது. ஷீலு அதன் மேல் அமர்ந்து அதன் முதுகை வருடினாள். அது கண்களை மூடிக்கொண்டு வாலை ஆட்டிற்று. ``பின்னே என்ன, சிரிச்சுத்தான் சமாளிக்கணும்.அழுதா, வந்து அணைக்க யாரு இருக்கா?’’ என்றாள் அதனிடம். ``பெத்தவ பெத்துப்போட்டு கண்ணை மூடிட்டாளாம். தீராத வியாதினு தெரிஞ்சதும், அவசர அவசரமா கிடைச்ச ஆளுக்குக் கட்டிக்கொடுத்த அடுத்த மாசம், அப்பா கண்ணை மூடியாச்சு.’’ நாய் கண்களைத் திறந்து அவள் கையை நக்கியது. செத்தவர்கள் சிலசமயம் ஆவியாக வருவதாக அவளுடைய சிநேகிதி ரமா சொல்வாள். அப்பா அவளுடைய கனவில்கூட வந்தது இல்லை. வந்தால்கூட என்ன சொல்லிவிட முடியும்? ஒரே ஒரு கேள்விதான் குடைகிறது. `நீ ஏன் செத்துப்போனே?’ அவள் நாயைச் சற்று நேரம் பார்த்தாள். அப்பாவின் ஜாடை அதற்கு இருப்பதுபோல் தோன்றியது. “ஷீலு...” அவள் விருக்கென்று எழுந்தாள். மாமியாரின் குரல் எட்டு ஊருக்குக் கேட்கும். அவளுடைய குரலோ இல்லை அவளது பிரமையோ முதுகின் பின்னால் விரட்டியது. அவள் திரும்பிப் பார்க்காமல் வேகமாக வீடு நோக்கி நடந்தாள். அவள் போய்தான் அடுப்பைப் பற்றவைத்து, சமையல் செய்தாக வேண்டும். ஒரு நயா பைசாவுக்குப் பிரயோஜனம் இல்லாவிட்டாலும், ஒரு மணி அடித்ததும் கூப்பிட்டு அழைத்ததுபோல சாப்பிட மதன் வந்துவிடுவான். `ஆச்சா... ஆச்சா... இன்னுமா ஆகலை? எங்கே போய் சதிராடிட்டு வந்தே?’ என்பான். ஒரு நாள் அவன் அப்படிக் கேட்டுக்கொண்டு நின்றபோது, அவள் அடுப்படியில் இருந்து எழுந்தாள். கையை விரித்து சிநேகிதிகளுடன் ஆடிய நாட்டியத்தை நினைவுபடுத்திச் சுழன்று ஆடிக் காண்பித்தாள். ‘ஆமாம்... இப்படித்தான் சதிராடிட்டு வந்தேன். பாரு நூறு ரூபா கிடைச்சுது’ என துப்பட்டா நுனியில் இருந்த முடிச்சைக் காண்பித்தாள். பிறகு கடகடவெனச் சிரித்தாள். அவன் பளார் என்று கன்னத்தில் அடித்தான். துப்பட்டாவை உருவி முடிச்சை அவிழ்த்தான். அது வெறும் முடிச்சு. துப்பட்டா பறக்காமல் இருக்க அவள் போடும் முடிச்சு. அவள் மீண்டும் சிரித்தாள். அவன் மீண்டும் அடித்தான். அவள் சுரணையற்றவள் போல அடுப்படிக்கு நகர்ந்தாள். கண்ணில் ஒரு பொட்டு நீர் வரவில்லை. `நா எதுக்கு அழணும்? என்ன தப்பு செஞ்சேன்? இதோ பார்... இப்படி அடிச்சியானா இன்னைக்கு உனக்கும் சோறு இல்லை... எனக்கும் இல்லை. எனக்குப் பசிக்குது’ என்று அமைதியாக அமர்ந்து சமையலைத் தொடர்ந்தாள். அவன் தோற்றுப்போனவன்போல மூலையில் சென்று அமர்ந்தான். எப்படி ஒருத்தன் இத்தனை உதவாக்கரை யாகவும் அதேசமயம் சர்வாதிகாரியாகவும் இருப்பது சாத்தியம் என்று, அவள் பல நாள் யோசித்திருக்கிறாள். அவளிடம்தான் அவனுடைய பௌருஷம்; வெளியில் பெட்டிப்பாம்பு. `காசு குடு... காசு இல்லே? இந்தா வாங்கிக்க. இந்தா... இந்தா... உன்னைக் கொல்வேன் ஒருநாள்.’ அவள் சிரிப்பாள். ‘கொன்னியானா உனக்குக் காசு எங்கே இருந்து கிடைக்கும்?’ அதற்கும் அவன் அடிப்பான். அவன் மனிதனே இல்லை என அவளுக்கு நிச்சயமாகிப் போனது. அந்த நினைப்பு அவளுக்குச் சமாதானமாகிக்கூடப் போனது. மனுஷனே இல்லாதவனிடம் இருந்து எப்படி மனுஷத்தனத்தை எதிர்பார்க்க முடியும்? கல்யாணம் நடந்தபோது அவனுடைய சிவந்த மேனியைப் பார்த்து அவளுடைய தோழிகள் அவளைக் கேலி செய்தார்கள். ‘ஏய்... சல்மான் கான் கணக்கா இருக்கார்டீ!’ என்றார்கள். அவளும் திருட்டுத்தனமாகப் பார்த்தாள். பார்க்க நன்றாகத்தான் இருந்தான். ஆனால், அது பொய் பிம்பம் என்று ஒரே நாளில் தெரிந்துபோயிற்று. மாமியார் வீடு போய் சேர்ந்த அன்றே அவளுடைய நகைகளைத் திருடிக் கொண்டு காணாமல்போனான் மதன்... அவள் புருஷன். பல நாட்கள் கழித்துதான் வந்தான். இடையில் அவளுடைய அப்பா இறந்துவிட்டார்... ‘எப்படி ஷீலு இருக்கே?’ என்று ஒரு கேள்வி கேட்கக்கூடப் பயந்தவர்போல. மாமியார் பிள்ளையைப் பற்றி வாயே திறக்கமாட்டாள். ‘என் தலைவிதி’ என்று சிலசமயம் மண்டையில் அடித்துக்கொள்வாள். `அடிச்சுக்கோ... பிள்ளையைக் கண்டிச்சு வளர்க்கத்தெரியலே, பள்ளிக்கூடத்துக்கு அனுப்பலே, யாரோடு பழகுறான்னு கவனிக்கலே. ஊர் மேல மேயவிட்டுப்பிட்டு, என் ‘தலைவிதி’னு சொல்லு’ என்று ஷீலு தனியாக இருக்கும் சமயத்தில், சமைக்கும்போது அடுப்பிடம் சொல்வாள். குடி மட்டும் இல்லை, என்னென்னவோ வாங்கிச் சாப்பிடுவான். போதை மருந்தாம். என்ன இழவோ. வீட்டில் இருக்கும் சாமான் எல்லாம் காணாமல்போகும். கொஞ்ச நாள் வீட்டுக்கே வராமல் இருப்பான். வந்தால் இரவு அவளைத் துவம்சம்செய்துவிட்டு, மறுநாள் முழுவதும் வீட்டு மூலையில் முடங்கிக் கிடப்பான். இரவில் அவனுடைய இம்சை பொறுக்க முடியாமல், அவள் பல நாள் எழுந்து கொல்லையில் முடங்குவாள். `‘கல்யாணமானா சரியாகிடுவான்’னு சொன்னாங்க. உனக்குத்தான் அவன்கிட்ட இணக்கமா நடந்துக்கத் தெரியலே’ என்கிறாள் மாமியார். ‘நீ பண்ணின தப்புக்கு என்மேல குத்தம் சொல்றியா? இப்படி என்கிட்ட சொல்ல உனக்குக் கூச்சமா இல்லே?’ என்று ஒருநாள் கமலாவிடம் கேட்டாள். ‘உன் பிள்ளை மனுஷன் இல்லை... மிருகம்!’ மாமியார் குய்யோமுய்யோ என ஊரைக் கூட்டிவிட்டாள். ‘உனக்கு இங்க இருக்க இஷ்டம் இல்லைன்னா எங்கேயாவது போ!’ என்றாள். அவளுக்குப் புசுபுசுவெனக் கோபம் வந்தது. ஆனால், கூடவே சிரிப்பும் வந்தது. ‘எங்கே போகட்டும் சொல்லு? நா என்ன ஓடிவந்தேனா உன் மகனைக் கட்டிக்க? நீ என் அப்பாவை ஏமாத்தி என்னை அழைச்சுட்டு வந்திருக்கே? என் மகன் இந்திரன் சந்திரன்னு சொன்னே? அவன் யமன்!’ - அவளுக்கு உற்சாகம் கரைபுரண்டுபோயிற்று. `போ... போ... போயிடு’ என்று கமலா அனத்தியபடியே இருந்தாள். ‘நா போயிடறேன்னே வெச்சுக்க. இத்தனை பேர் வீட்டுவேலைகளும் என்ன ஆகும்? ஒண்டியா செஞ்சு சம்பாதிப்பியா? இல்லே உன் அழகான மகன் சம்பாதிச்சுட்டு வருவனா?’ `இல்லே... உன் குடிகாரப் புருஷன்தான் கொண்டுவருவாங்களா?’ என்று மேற்கொண்டு அவள் கேட்கவில்லை. அது ஊருக்கு எல்லாம் தெரிந்த ரகசியம். கடகடவென்று அவள் சிரிப்பதைப் பார்த்து கமலா வாயை மூடிக்கொண்டாள். பக்கத்து வீட்டுக்காரியிடம் அவள் சொல்வது கேட்கும்... ‘பிள்ளை ஒரு உதவாக்கரைன்னா மருமகள் ஒரு கிறுக்கு.’ ஷீலுவுக்கு இப்போது எல்லாம் பழகிவிட்டது. பசியை மட்டும் பொறுத்துக்கொள்ள முடியாது. கிடுகிடுவென்று சமைத்து, பகபகவென்று வயிற்றை நிரப்பி, ஒரு லோட்டா நீரைக் குடித்தால் அதுவே சொர்க்கம். போயிடு... போயிடு... எங்கே போவது? மாமியார் மனசில் என்னதான் இருக்கிறது என்று புரியவில்லை. ஒருநாள் திடுதிப்பென்று சொன்னாள்... ‘யாராவது ஆள் கிடைச்சா கல்யாணம் பண்ணிக்கோ. இங்கே இருந்து போயிடு.’ ஷீலுவுக்குத் தூக்கிவாரிப்போட்டது. எத்தனை அபத்தமான பேச்சு எனத் தோன்றியது. ‘ஆளா... எந்தக் கடையிலே கிடைப்பான்?’ என கண்களை அகலவிரித்துப் பெரிதாகச் சிரித்தாள். மாமியாருக்குத்தான் கிறுக்குப் பிடிச்சுப்போச்சு எனத் தோன்றிற்று. நீ என்னைப் பிடிச்சுத் தள்ளினாலும் நா இங்கு இருந்து போகமாட்டேன் எனக் கருவிக்கொண்டாள். ‘என்னை எதுக்குப் போகச் சொல்றே? உனக்காக உழைக்கிறேன். ஒரு காசு கேட்கலை. வீட்டு வேலை எல்லாம் செய்றேன். நா இருக்கிறது உனக்குத் தொல்லையா இருக்கா?’ கமலா தலையைக் குனிந்துகொண்டாள். ‘இதோ பாரு... நா ஒண்ணும் இங்கே பிரியப்பட்டு வரலை. நீதான் என்னை இட்டுட்டு வந்தே. என்னை வெச்சுக் காப்பாத்துறது உன் பொறுப்பு.’ கமலா அதற்குப் பிறகு அதைப் பற்றி பேசுவது இல்லை. ஷீலுவுக்கு நல்லவேளை யாருடைய கோபமும் நினைவில் தங்காது. நாள் முழுக்க உழைத்த பின் அக்கடா என்று படுக்க வேண்டும் போல் இருக்கும். இதில் இல்லாததையும் பொல்லாததையும் மனசில் போட்டுவைத்தால் வரும் தூக்கம்கூடக் கெட்டுப்போகும். அட... சொல்லிட்டுத்தான் போகட்டுமே! சமையல் முடிந்தது. இன்று மதன் வரக் காணோம். நல்லதாய்ப் போயிற்று என்று அவள் தனது சாப்பாட்டை முடித்துக்கொண்டாள். கமலாவையும் காணோம். வேலைசெய்யும் இடத்திலேயே அவளுக்குச் சாப்பாடு கிடைக்கும். ஷீலு அவளுடைய பல வீடுகளைக் கவனிப்பதால், அவள் புதிதுபுதிதாக வீடு பிடிக்கிறாள். இருவருமாக மாதம் இருபது ஆயிரம் சம்பாதிக்கிறார்கள்... ஆண்கள் உதவாக்கரைகள் என்பதால். மாமனார் கிஷோர் லால் இரவுதான் வருவார்... அதுவும் குடிபோதையில். ஷீலு மாமனாரின் எதிரில் நிற்பதுகூடக் கிடையாது. அவர்களை அல்லவா வீட்டில் இருந்து கமலா விரட்ட வேண்டும்? ‘போ... போ... போயிடு...’ - கமலா புருஷனையும் மகனையும் துடைப்பக்கட்டையால் விரட்டுவதுபோல கற்பனைசெய்வது தமாஷாக இருந்தது. சிரிப்பு வந்தது. மாலை வேலைக்குக் கிளம்புவதற்கு முன்னர் நினைவாக எலிப்பொறியை எடுத்து பையில் வைத்துக்கொண்டாள். வெளியில் கால்வைத்ததும் ஓர் உற்சாகம் அவளுள் புகுந்தது. உலகம் வண்ணம்மிகுந்த ராட்டினம்போல் இருந்தது. கடைத்தெருக்கள் அவளுக்கு மகா நெருக்கம். காய்கறிக் கடைக்காரர்கள், பழம் விற்பவர்கள், துணிக்கடைக்காரர்கள், பெண்கள், ஆண்கள் அவளைப் பார்த்துத் தலையசைத்துச் சிரிப்பார்கள். ‘கைஸீ ஹோ?’ எப்படி இருக்கே? என்னவோ தினம் தினம் அவள் புதிதாகப் பிறந்தவள்போல. உண்மையிலேயே தினமும் எல்லாமே புது அழகோடு தெரிவதுபோலதான் இருக்கும் அவளுக்கு. எல்லோருடைய கேள்விக்கும் அவள் உற்சாகமாகக் கையை அசைத்துச் சிரிப்பாள். ‘ஃபஸ்ட் க்ளாஸ்!’ அது அங்ரேஜி பாஷை. மேடம்களிடம் இருந்து கற்றது. கடைகளில் இன்று பூவும் பழங்களும் அதிகமாகத் தெரிந்தன. ஜரிகை மாலைகளும் முகம்பார்க்கும் கண்ணாடிகளும் இருந்தன. பண்டிகைக் காலம்போல. அவள் லேசான துள்ளல் நடையுடன் நடந்து அடுக்கு மாடி வளாகத்துக்குள் நுழைந்தாள். அங்கே கமலா அவளை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் . `‘ஷீலு... மறந்தேபோச்சு. நாளைக்கு கர்வா சௌத். விரதம் இருக்கணும். நாளைக்கு வேலைக்கு வரமுடியாதுனு எல்லார்கிட்டவும் சொல்லிடு” என்றாள். `‘ஓ... அதானா. சரி” என்றபடி அவள் நகர்ந்தாள். அவளுக்குப் பண்டிகைகள் பிடிக்கும். இன்று இரவே மருதாணி இட்டுக்கொண்டால், காலை ரத்தச் சிவப்பாக விரல்கள், நகங்கள், பாதங்கள் ஜொலிக்கும். அன்று நல்ல உடை உடுத்திக்கொண்டு இரவு சந்திரன் உதயமாகும் வரை விரதம் இருக்க வேண்டும். அன்று அதிசயமாகப் பசி எடுக்காது. புருஷனுக்காக விரதம். அவளுக்கு அதை நினைத்துச் சிரிப்பு வந்தது. ஐந்து வருடங்களாக அவள் விரதம் இருக்கிறாள். அதனால், எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அவள் எதிர்பார்க்கவும் இல்லை. அவளுக்குப் பண்டிகை ஒரு தமாஷ். இன்று கமலா கடையில் இருந்து இரண்டு அரைத்த மருதாணிச் சுருளை வாங்கி வருவாள். பத்து ரூபாய்க்கு ஒன்று. மாமியாரும் மருமகளும் சாப்பாடு முடிந்த பிறகு இட்டுக்கொள் வார்கள். இருவரும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்ளும் நேரம். மேடம் எலிப்பொறியை அதிசயத்துடன் பார்த்தாள். ஷீலு அதற்குள் ரொட்டித்துண்டு வைத்து, எலி எப்படி உள்ளே மாட்டிக்கொள்ளும் என்று நடித்துக்காண்பித்தாள். மேடம்கூடச் சிரித்தாள். ‘பார்க்கலாம்... இன்னைக்கு ராத்திரி பிடிபட்டுச்சுன்னா நீதான் அதை வெளியே கொண்டுபோய் கொல்லணும்” என்றாள். ‘`எலி எல்லாம் கொல்லக் கூடாது மேடம்’’ என்றாள் ஷீலு தலையசைத்து. ‘`அப்புறம் கணேஷ்ஜி நம்மைத் தண்டிப்பார்”. `‘நீ ஒரு கிறுக்கு’’ என்றாள் மேடம். `‘எங்கேயாவது கொண்டு போய் போடு. மெட்ரோவைத் தாண்டி. மறுபடி இங்கே வரக் கூடாது.’’ `‘ஓ... மறந்துபோனேன் மேடம். நாளைக்கு நா வர முடியாது. கர்வா சௌத் விரதம் இருக்கணும். நாளன்னைக்குப் பொறி வையுங்க.’’ மேடம் அவளை வியப்புடன் பார்த்தாள். ``நல்ல கூத்து... இதெல்லாம் அந்தப் புருஷனுக்கா செய்ற?’’ “ஆமாம்... பின்னே? எனக்கு இருக்கிறது ஒரு புருஷன்தானே?” - கடகடவென்று அவள் சிரிப்பதை மேடம் விநோதமாகப் பார்த்தாள். எல்லோருடைய வீட்டுவேலைகளையும் முடித்துக் கிளம்புவதற்குள் இருட்டிவிட்டது. இன்று மதன் அதிசயமாக வீட்டில் இருந்தான். கமலா காலையில் சமைத்த பதார்த்தங்களைச் சூடாக்கி, புதிதாக ரொட்டி சுட்டிருந்தாள். மாமனாரைக் காணோம் வழக்கம்போல். அவருக்கு என்று கமலா தனியாக மூடிவைத்தாள். மூவரும் சாப்பிட்டு முடித்ததும், இருவரும் முற்றத்தில் உட்கார்ந்தபடி கையிலும் பாதத்திலும் மருதாணி வைத்துக்கொண்டார்கள். ஷீலுவுக்கு ஊர் நினைவு வந்தது. தோழிகளுடன் பாடிய பாட்டு நாவில் வந்தது. கமலாவின் அதரங்களில்கூடப் புன்னகை மலர்ந்தது. மதன் தூங்கிப்போயிருந்தான். மருதாணி கலையாமல் இருக்க முன்ஜாக்கிரதையாக அவள் பாயையும் தலையணையையும் எடுத்துக்கொண்டு, கொல்லைத் திண்ணையில் விரித்திருந்தாள். படுக்கப்போகையில், இன்று காலையில் அவள் தடவிக்கொடுத்த நாய் மண்தரையில் படுத்திருந்தது. அவளை நிமிர்ந்துபார்த்து வாலை ஆட்டியது. அது அவளுக்கு வேடிக்கையாக இருந்தது. ஒரு முறை முதுகைத் தடவிக்கொடுத்த வுடன் சொந்தம் கொண்டாட வந்ததா என்று இருந்தது. அதற்கு அப்பாவின் ஜாடை இருந்ததாகத் தனக்குத் தோன்றியது நினைவுக்கு வந்தது. மேடம் சொன்னது சரிதான். `நா ஒரு கிறுக்கு’என்று திண்ணையில் படுத்துக் கொண்டாள். படுத்த சில நொடிகளில் சுகமாகத் தூக்கம் வந்தது. கனவில் தோழிகள் வந்தார்கள். கோயில் வளாகத்தில் மருதாணியில் சிவந்த கைகளைப் பிடித்தபடி நாட்டியம் ஆடினார்கள். `சல்மான் கானுக்காக விரதம் இருக்கப்போறியா?’ என்றார்கள். கண்ணாடியிலே சந்திரனைப் பாரு. சந்திரனா... சல்மான் கானா? அவள் புரண்டு படுத்தாள். யாரோ அவளது சுடிதாரை அவிழ்ப்பதுபோல் இருந்தது. மார்பைத் தொடுவதுபோல் இருந்தது. அவள் விருக்கென்று விழித்துக்கொண்டாள். பயத்தில் நாக்குக் குழறிற்று. `‘யாரு... யாரு...’’ - அவள் வாயை யாரோ இரும்புக் கையால் பொத்தினார்கள். அவள் திமிறினாள். நாய் குரைக்க ஆரம்பித்தது. இரும்புக் கை ஒன்று அவள் கம்மீஸுக்குள் நுழைந்து மார்பைப் பிசைந்தது. நாய் குரைத்த வண்ணம் இருந்தது. திமுதிமுவென உள்ளே இருந்து யாரோ ஓடிவந்தார்கள். உள்ளே இருந்து வந்தது யார் என்று அவளுக்குத் தெரியவில்லை. அவளைப் பிடித்திருந்த கை சட்டெனத் தளர்ந்தது. மரங்களுக்கு ஊடே தெரிந்த நிலா வெளிச்சத்தில் அவள் பார்த்தாள். எதிரில் கமலாவும் மதனும் நின்றிருந்தார்கள்... கையில் தடியுடன். மதன் அத்தனை ஆக்ரோஷமாக நின்று அவள் பார்த்தது இல்லை. இருவரும் அந்த ஆளை மாற்றி மாற்றி அடித்தார்கள். `யார் அது?’ அவளுக்குத் தூக்கிவாரிப்போட்டது. `‘உனக்கு அத்தனை திமிரா, அத்தனை திமிரா, கமீனே... பத்மாஷ்!’ (அயோக்கியனே... போக்கிரி!) என்று மதன் திட்டியபடி அடித்தான். எங்கு இருந்து வந்தது அந்தப் பலம்? அவளுடைய மாமனார் மண்டையில் காயத்துடன் கீழே கிடந்தார். தலையில் இருந்து ரத்தம் பீறிட்டபடி இருந்தது. நாய் பயந்து எங்கோ ஓடிவிட்டது. ஷீலு கண்கள் விரிய பார்த்தாள். கமலா மூச்சுவாங்க நின்றிருந்தாள். மதன் வேலை முடிந்தது என்பதுபோல உள்ளே செல்லத் திரும்பினான். ‘`நா போலீஸுக்குப் போறேன்” என்றான் கமலாவிடம். ‘`நா போறேன் நீ இரு” என்றாள் கமலா. ‘`சே... அசட்டுத்தனமா பேசாதே. நீ இருக்கணும். ஷீலு உன் பொறுப்பு” - ஷீலுவின் பக்கம் திரும்பாமலே அவன் வெளியேறினான். கமலா தரையில் அமர்ந்திருந்த அவளைக் கூர்ந்து பார்த்தபடி, கையில் காய்ந்திருந்த மருதாணியை நிதானமாக உதறினாள். உள்ளங்கையும் விரல்நுனியும் ரத்தச் சிவப்பாகியிருந்தது. ஷீலுவுக்குத் திடீரென அழுகை வந்தது. அது அடி வயிற்றில் இருந்து சுருண்டு பொங்கிப் பொங்கி வந்தது! http://www.vikatan.com
 5. வீடும் கதவும் - சிறுகதை சிறுகதை: இமையம், ஓவியங்கள்: ம.செ.,நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு பெரியார் நகரில் பாவேந்தர் தெருமுனைக்கு வந்ததும், எத்தனையாவது வீடு என்ற குழப்பம் சகுந்தலாவுக்கு வந்தது. ஐந்தாவது வீடு என்ற நினைவு இருந்தது. `போன் போட்டுக் கேட்கலாமா?' என யோசித்தாள். போனை எடுத்தாள். அதற்குள், `அஞ்சாவது வீடுதான். வடக்குப் பார்த்த வீடு' என நினைவுக்குவந்த மாதிரி சொன்னாள். ஆனாலும் சந்தேகத்துடன் நடக்க ஆரம்பித்தாள். மேற்கில் இருந்து நடந்துவந்து ஐந்தாவது வீட்டின் முன்பாக நின்றாள். வீட்டின் தோற்றம், அவள் முன்னர் பார்த்ததற்கும் இப்போதைக்கும் பெரிய மாற்றத்துடன் இருந்தது; குழப்பத்தை உண்டாக்கிற்று. வீட்டின் எண்ணைப் பார்த்தாள். `80' என இருந்தது. வீட்டின் எண்ணும் அவளுக்கு மறந்துபோனது. பெயர்ப்பலகை இருக்கிறதா எனப் பார்த்தாள். `சபாநடேசன் எம்.ஏ., எம்.எட்., ஆசிரியர்’ என எழுதித் தொங்கவிடப் பட்டிருந்ததைப் பார்த்ததும் `இந்த வீடுதான்' எனச் சொல்லிக்கொண்டே அழைப்பு மணி எங்கே இருக்கிறது எனத் தேடி அழுத்தினாள். அப்போது வெளிநாட்டு நாய் ஒன்று அவளைப் பார்த்து முறைத்தது. நாயைப் பார்த்துப் பயந்தாள். இரண்டாவது முறை மணியை அழுத்தி, சிறிது நேரம் கழிந்த பிறகுதான் கதவைத் திறந்தாள் ரேவதி. சகுந்தலாவைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு ``பிரசிடென்ட் மேடம், என்ன திடீர்னு வந்து நிக்கிறாங்க?’’ எனக் கேட்டுச் சிரித்தாள். ``வீட்டு நம்பர் மறந்துபோச்சு. அஞ்சாவது வீடுங்கிறது மட்டும்தான் ஞாபகத்துல இருந்தது. ஒரு நிமிஷம் டென்ஷன் ஆகிருச்சு. என்ன... நாய் எல்லாம் புதுசா இருக்கு?’’ ``நாலு அஞ்சு வருஷம் கழிச்சு வந்தா அப்படித்தான். உள்ளாற வா’’ எனச் சொல்லி, சகுந்தலாவின் கையைப் பிடித்து வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள் ரேவதி. சோபாவில் அருகருகே உட்கார்ந்துகொண்டனர். ``என்ன திடீர்னு வந்து வாசல்ல நிக்கிற... ஒரு போன் பண்ணிட்டு வந்திருக்கக் கூடாது?’’ ``நான் உனக்கு போன் பண்ணிட்டுத்தான் வரணுமா?’’ - கோபம் வந்த மாதிரி சகுந்தலா கேட்டாள். ``ச்சீ கழுதை... நீ எப்ப வேணும்னாலும் வா... போ. திடீர்னு பார்த்ததும் ஆச்சர்யமாப்போச்சு. அதனாலதான் கேட்டேன். என்ன சாப்பிடுற?’’ ``ஒண்ணும் வேணாம். உன்கூட உட்கார்ந்து பத்து நிமிஷம் தனியா பேசினா போதும், மனசு நிறைஞ்சிரும்.’’ ``காலேஜ்ல படிக்கும்போது விடிய விடியப் பேசினது எல்லாம் மறந்துட்டியாடி கழுதை’’ - ரேவதி உற்சாகமாகச் சிரித்தாள். ``நீதான் எல்லாத்தையும் மறந்துட்டே. போன் போடுறது இல்லை; நான் போட்டாலும் பேசுறது இல்லை.’’ ``உன்கிட்ட பேசாம நான் எங்கே போறேன்? கிளாஸ் ரூம்ல இருக்கும்போது போன் வந்தா, நான் பேச மாட்டேன்’’ எனச் சொன்ன ரேவதி கேட்டாள், ``திருடி... திடீர்னு வந்திருக்கியே... என்ன விஷயம்? வந்தவ நேரா வீட்டுக்குள்ளார வரவேண்டியதுதானே... எதுக்கு மணியை அடிச்சிக்கிட்டு நிக்கிற?’’ ``நானும் அவரும்தான் வர்றதா இருந்தோம். கிளம்பும்போது திடீர்னு பீ.டி.ஓ ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அதனால ‘நீ போயிட்டு வந்துடு’னு சொல்லிட்டார். அவரோட வந்தா, `கிளம்பு... கிளம்பு'னு நச்சரிப்பார். உன்கிட்ட அஞ்சு நிமிஷம்கூடப் பேச முடியாது. `நீ போயிட்டு வந்துடு’னு சொன்னதுமே `சரி’னு கிளம்பி வந்துட்டேன்’’ - உற்சாகமாகச் சொன்னாள் சகுந்தலா. திடீரென நினைவுக்கு வந்த மாதிரி, ``எங்கே... உங்க சாரைக் காணோம்?’’ எனக் கேட்டாள். ``நீ என்னைப் பார்க்க வந்தியா... இல்லை அவரைப் பார்க்க வந்தியா?’’ ``உன்னைத்தான் பார்க்க வந்தேன். `எங்கே?’னு கேட்கக் கூடாதா? உங்க சாரை நான் பிக்கப் பண்ணிக்கிட்டுப் போயிடுவேன்னு நினைச்சியா?’’ - சகுந்தலா வாய் நிறையச் சிரித்தாள். ``பிக்கப் பண்ணிக்கிட்டுப்போயேன். சனியன் விட்டதுனு போறேன்’’ - சிரித்த ரேவதி, `` `பொண்ணைப் பார்த்துட்டு வர்றேன்'னு மெட்ராஸுக்குப் போயிருக்கார்’’ என்றாள். ``நீயாவது வீட்டுல இருந்தியே... அதுவே போதும்’’ எனச் சொன்ன சகுந்தலா, ஜவுளிக்கடை பையில் வைத்திருந்த சில்வர்தட்டை எடுத்து அதில் வாழைப்பழம், ஆப்பிள், வெற்றிலைப்பாக்கு, பூ, கல்யாணப் பத்திரிகை என ஒவ்வொன்றாக வைத்துக்கொடுத்தாள். தட்டை வாங்கிக்கொண்டே ரேவதி, ``யாருக்குடி கல்யாணம்? எனக்கு எதுக்கு வெளி ஆள் மாதிரி ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் செய்யுற?’’ எனக் கேட்டாள். தட்டை வாங்கி ஓரமாக வைத்துவிட்டு, கல்யாணப் பத்திரிகையை எடுத்துப் பார்த்தாள். ஆச்சர்யப்பட்ட மாதிரி, ``நம்ப ரம்யாவுக்கா கல்யாணம்?! போன வருஷம்தான் பி.எட் முடிச்சா. அதுக்குள்ளாற எதுக்குக் கல்யாணம்... சின்னப் புள்ளைதானே? வேலை கிடைச்ச பிறகு செய்ய வேண்டியதுதானே?’’ - அக்கறையுடன் கேட்டாள். ``சொன்னேன்... கேக்கலை. `வேலை வர்றப்ப வரட்டும். வர்ற எலெக்‌ஷன்ல ஜெயிக்க முடியுமோ... முடியாதோ. பவர்ல இருக்கும்போதே கல்யாணத்தை முடிச்சிடணும். அப்பதான் நல்ல கூட்டம் வரும்; மரியாதையாவும் இருக்கும்'னு சொல்லிட்டார். நானும் `வேலை முடிஞ்சா சரி'னு சொல்லிட்டேன்.’’ ``பையன் என்ன பண்றான்?’’ என்று கேட்ட ரேவதி, கல்யாணப் பத்திரிகையைப் பிரித்து மாப்பிள்ளை பெயர் போட்டிருந்த இடத்தைப் பார்த்தாள். ``இன்ஜினீயரா... நல்ல கம்பெனியிலதான் வேலைபார்க்கிறான். இன்ஜினீயருக்கு இன்ஜினீயர் பொண்ணுதானே பார்ப்பாங்க?’’ எனக் கேட்டாள். ``முன்னதான் அப்படி. இப்ப இன்ஜினீயர், டாக்டருக்குப் படிச்சவன் எல்லாம் டீச்சருக்குப் படிச்ச பொண்ணா இருந்தா பரவாயில்லைனு சொல்லி அலையுறானுவ’’ - சகுந்தலா சிரித்தாள். ``சொந்தமா?’’ ``பிறத்திதான். பீ.டி.ஓ ஆபீஸ்ல வேலை பார்க்கிறவரோட சொந்தக்காரப் பையன். அவருக்குப் பிடிச்சிருச்சு... முடிச்சிட்டார்.’’ ``உனக்குப் பிடிக்கலையா?’’ ரேவதி கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல், ``நான் முன்னாடி வந்தப்ப இருந்ததைவிட வீடு ரொம்ப மாறியிருக்கு’’ - வீட்டை ஒரு பார்வை பார்த்தாள். ``ரெண்டு வருஷத்துக்கு முன்னாடிதான் மேல்மாடி கட்டினேன். தரையையும் மாத்திட்டேன். வீட்டை கொஞ்சம் ஆல்ட்டர் செஞ்சேன். நீ அடிக்கடி வந்தாத்தானே தெரியும்!’’ - கோபித்துக்கொண்டாள் ரேவதி. ``நான் உன்னைப் பார்க்க வந்து மூணு நாலு வருஷம் இருக்குமா?’’ ``இருக்கும். மேடம் ரொம்ப பிஸிதான். பிரசிடென்ட் ஆகிட்டில்ல. அப்படித்தான் இருப்ப. அதிகாரத் திமிருடி உனக்கு’’ - சகுந்தலாவின் தொடையில் லேசாக அடித்தாள். ``பசங்க எப்படி இருக்காங்க?’’ ``பையன் முன்னாடியே வேலைக்குப் போயிட்டான். உனக்குத் தெரியும். பொண்ணு இப்பதான் வேலைக்குப் போனா. ஆறு மாசம் இருக்கும். பழைய காலம் மாதிரி இல்லை. இன்ஜினீயரிங் படிச்சவங்களுக்கு இப்ப வேலை கிடைக்கிறது ரொம்பக் கஷ்டமா இருக்கு. `இன்ஜினீயரிங் ஏன் படிக்கவெச்சோம்?'னு இருக்கு. டீச்சருக்குப் படிக்கவெச்சிருக்கலாம். சம்பளமும் அதிகம்; வேலையும் கம்மி’’ என ஆரம்பித்த ரேவதி, தன் மகன் எப்படிப் படித்தான், எப்படி வேலைக்குப் போனான், எவ்வளவு கஷ்டப்படுகிறான் எனச் சொல்ல ஆரம்பித்தாள். பிறகு, கல்லூரியில் படித்ததைப் பற்றி சொல்ல ஆரம்பித்ததும், சகுந்தலாவும் சேர்ந்துகொண்டு கல்லூரி நண்பர்கள், பேராசிரியர்கள் பற்றி பேச ஆரம்பித்தாள். இருவரும் மாறிமாறி தங்களுடைய கல்லூரிக் காலத்தைப் பற்றி பேசினார்கள். நேரம் பற்றிய கவனம் இருவரிடமும் இல்லை. ஏதோ நினைவுக்கு வந்தமாதிரி ``நான் கிளம்பட்டுமா?’’ சகுந்தலா கேட்டாள். ``அதுக்குள்ளாற என்ன அவசரம்?’’ ``நேரமாகிருச்சு.’’ ``ஒரு நேரமும் ஆகலை. புருஷன் - பிள்ளைனு இல்லாம இன்னிக்கித்தான் அதிசயமா ரெண்டு பேரும் ஒண்ணா உட்கார்ந்து பேசிக்கிட்டிருக்கோம். அதுக்குள்ளாற போறாளாம்’’ - சகுந்தலாவின் தலையில் கொட்டிய ரேவதி, ``என்னடி... தலையில பாதி முடியைக் காணோம்?’’ எனக் கேட்டாள். ``வயசாகுதுல்ல. சரி... நான் கிளம்புறேன்.’’ ``பிரசிடென்ட்டுங்கிற திமிர்ல பேசுறியாடி நாயே..?’’ ``பிரசிடென்ட்டுதான். ஆனா, எப்பவும்போல சோறுதான் ஆக்குறேன்; துணிதான் துவைக்கிறேன்; வீட்டு வேலைதான் செய்றேன்’’ - சகுந்தலா சிரிக்க முயன்றாள். ஆனால், சிரிப்பு வரவில்லை. ``ரெண்டு பீரியடுதானே ஜெயிச்ச?’’ சந்தேகப்பட்டது மாதிரி ரேவதி கேட்டாள். ``ம்’’ என சகுந்தலா தலையை மட்டும் ஆட்டினாள். சகுந்தலாவின் முகம் வாடிப்போனதைப் பார்த்த ரேவதி கேட்டாள்... ``என்னாச்சு... எதுக்கு அவ்வளவு சலிப்பா சொல்றே?’’ ``பிரசிடென்ட்டுதான். ஒன்பது வருஷம் முடிஞ்சுபோச்சு. பீ.டி.ஓ ஆபீஸ், கலெக்டர் ஆபீஸ்னு இதுவரை நான் எங்கேயும் அதிகம் போனது இல்லை. அவர்தான் போவார்... வருவார்’’ - சொல்லிவிட்டு அடுத்த சோபாவில் கிடந்த நாய் பொம்மையைப் பார்த்தாள். அது தன்னையே பார்ப்பது மாதிரி அவளுக்குத் தோன்றியது. ``என்னடி சொல்ற சகுந்தலா?!’’ - ஆச்சர்யமாகக் கேட்டாள் ரேவதி. ``நிசம்தான்.’’ ``ஊராட்சி மன்ற அலுவலகம்னு இருக்குமே... அங்கேயாச்சும் நீ போயிருக்கியா?’’ ``இல்லை.’’ ``ஒரு நாள்கூடப் போனது இல்லையா?’’ - சகுந்தலா சொன்னதை நம்பாத மாதிரி கேட்டாள் ரேவதி. ``பொய்யா சொல்றேன்... போனது இல்லை. இந்த ஒன்பது வருஷத்துல, பிரசிடென்ட் நாற்காலியில நான் உட்கார்ந்ததுகூட இல்லை’’ - சிரித்தாள் சகுந்தலா. அதில் அவளுக்கு மகிழ்ச்சியும் இல்லை... வருத்தமும் இல்லை. ``ஆச்சர்யமா இருக்கு’’ - ரேவதிக்கு, குரல் மாறிவிட்டது. சகுந்தலா சொல்வதை அவளால் நம்ப முடியவில்லை. கிண்டலாகக் கேட்டாள்... ``கையெழுத்தாவது நீ போடுவியா?’’ ``இல்லை.’’ ``பொய் சொல்லாதேடி.’’ ``அவர்தான் போடுவார்.’’ ``உன் கையெழுத்தையா?’’ - நம்ப முடியாத விஷயத்தைக் கேட்ட மாதிரி வாய் அடைத்துப்போனாள் ரேவதி. ``அதிசயம்தான்!’’ எனச் சொல்லிவிட்டு சகுந்தலாவின் முகத்தைப் பார்த்துக் கேட்டாள், ``நூறு நாள் வேலைத் திட்டம், கட்டடம் கட்டுறது, ரோடு போடுறது, தெருவிளக்குப் போடுறதுனு பணம் வருமே... அதை எல்லாம் யார் எடுப்பா?’’ ``அவர்தான்.’’ ``கவர்மென்ட் பணம், செக்காத்தானே வரும்?’’ ``செக்கை அவரே மாத்திடுவார்.’’ ``சத்தியமா?’’ ``ஆமான்டி. இதுல புதுசா என்ன இருக்கு... நூத்தியெட்டு கேள்வி கேக்குறே?’’ ``யாரும் கேக்க மாட்டாங்களா?’’ ``எதுக்கு?’’ ``கையெழுத்துப் போடுறதுக்கு, தலைவர் ஸீட்டுல உட்கார்றதுக்கு.’’ ``பீ.டி.ஓ ஆபீஸ்லையும் சரி, பள்ளிக்கூடம், பேங்க்னு எங்க போனாலும் அவரைத்தான் `தலைவர்'னு சொல்வாங்க தெரியுமா?’’ - வாய்விட்டுச் சிரித்தாள் சகுந்தலா. ``சத்தியமா?’’ - சகுந்தலா சொல்கிற விஷயங்களில் ஒன்றைக்கூட ரேவதியால் நம்பமுடியவில்லை. ``பொம்பளை பிரசிடென்ட், கவுன்சிலர், சேர்மனா இருக்கிற இடங்கள்ல எல்லாம் இப்படித்தான் நடக்கும். இது ஊரு உலகத்துக்கே தெரியும். ரகசியம் ஒண்ணும் இல்லை. பள்ளிக்கூடத்துல கொடி ஏத்தக்கூட அவர்தான் போவார் தெரியுமா? யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க.’’ ``நீ என்னதான் செய்வ?’’ - கிண்டலாகக் கேட்டாள். ``நாமினேஷன் கொடுக்கும்போது கூடப் போவேன். அப்புறம் கவுன்ட்டிங்குக்குப் போவேன்’’ - சகுந்தலா வாய்விட்டுச் சிரித்தாள். ``நீ ஒண்ணும் கேக்க மாட்டியா?’’ ``என்ன கேக்குறது? அவர்தான் 24 மணி நேரமும் அலயுறார்; பணம் புரட்டுறார்; ஊரு ஆளுங்களை எல்லாம் சரிகட்டுறார்; பிராந்தி வாங்கித் தரார். என்னால இதெல்லாம் செய்ய முடியுமா?’’ - லேசாகச் சிரித்த சகுந்தலா சட்டென உற்சாகமாகி, ``ஊரு சனங்க திட்டுறதையும் வாங்கிக்குவார். சங்கடப்பட மாட்டார்’’ என்று சொன்னாள்; சிரித்தாள். ``கஷ்டம்தான்’’ எனச் சொன்ன ரேவதி, ``கூல்டிரிங்க் குடிக்கிறியா?’’ - சகுந்தலா என்ன பதில் சொல்கிறாள் எனக் கேட்காமல் எழுந்து போய் ஃப்ரிட்ஜைத் திறந்து சாக்லேட் டப்பாவை எடுத்து வந்து கொடுத்தாள். ஒரு சாக்லேட்டை எடுத்து வாயில் போட்டு மென்று தின்ற சகுந்தலா, ``நான் கிளம்பட்டுமா?’’ எனக் கேட்டாள். ``அதெல்லாம் முடியாது. இன்னொரு சாக்லேட் எடுத்துக்க. நீ சொல்ற எதையும் என்னால நம்பவும் முடியல... நம்பாம இருக்கவும் முடியல’’ எனச் சொன்னாள். “இதெல்லாம் ரொம்ப சாதாரணம்.” “என்ன கூல்டிரிங்க் குடிக்கிற... கோக், ஃபேன்டா?” “மோர் இருந்தா கொடு. இல்லைன்னா எலுமிச்சை ஜூஸ்.” “அதெல்லாம் விட்டு பத்து வருஷத்துக்கு மேல ஆகிருச்சு. இப்ப எல்லாம் யாரு வந்தாலும், யார் வீட்டுக்குப் போனாலும் கூல்டிரிங்க்தான்.” “வேணாம். ஏப்பம் ஏப்பமா வரும். நெஞ்சைக் கரிக்கும்.” சகுந்தலா, நாய் பொம்மையைப் பார்த்தாள்; அதன் கண்களைப் பார்த்தாள். பிறகு, ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சியைப் பார்த்தாள். பிறகு, ரொம்பவும் களைப்படைந்துவிட்ட மாதிரி சொன்னாள்... ``எங்கே கடன் வாங்குறார், என்ன செலவு செய்றார், எதுவுமே எனக்குத் தெரியாது. நானும் கேட்கிறது இல்லை. மீறிக் கேட்டா, ‘இதுல உனக்கு வேலை இல்லை’னு சொல்வார். நானும் `சனியன்... நமக்கு எதுக்கு?'னு கேக்குறது இல்லை. எப்பவும்போல என் வேலை என்னவோ அதைச் செஞ்சுக்கிட்டு இருக்கேன்.’’ ``சரி... ஓட்டுக் கேட்கவாவது நீ போனியா... இல்லியா?’’ மொட்டையாகச் சொன்னாள், ``இல்லை.’’ ``அப்படியா... நிசமாவா?’’ - கேட்டதையே திரும்பத் திரும்பக் கேட்டாள். சகுந்தலா எவ்வளவு சொல்லியும் ரேவதி நம்பவில்லை. ``அப்புறம் எப்படி ரெண்டு முறை ஜெயிச்சே?’’ ``உள்ளூர்தானே... அவர் பார்த்துக்குவார்.’’ சகுந்தலாவின் முகம், கை கால்கள், கட்டியிருந்த புடவை என ஒவ்வொன்றாகப் பார்த்த ரேவதி, ``என்னடி... இவ்வளவு நரைச்சிப்போச்சு? சாட்டைசாட்டையா நீட்டுநீட்டா முடி இருக்கும். எல்லாம் கொட்டிப்போயி எலி வாலாட்டம் இருக்கு. தலைமுடியை வெச்சுக்கிட்டுத்தானே காலேஜ்ல பெரிய ராணி மாதிரி சுத்தின? எல்லாப் பயலையும் உன் பின்னாடி சுத்தவுட்ட?’’ எனச் சொல்லிவிட்டு, சகுந்தலாவின் சடையை எடுத்துப் பார்த்தாள். லேசாகச் சிரித்த சகுந்தலா சொன்னாள்... ``வயசாவுதுல்ல... நீயும் நானும் காலேஜ்ல படிச்சு 25 வருஷமாகிருச்சு தெரியுமா? நீ டீச்சர்... டை அடிப்ப.’’ தலைக்கு டை அடிக்கிற விஷயத்தை சகுந்தலா சொன்னதும் பேச்சை மாற்றினாள் ரேவதி. ``உங்க வீட்டுக்காரர் நல்ல ஆளுதானே?’’ ``எத்தனை வருஷம் கழிச்சுக் கேக்குற? எலெக்‌ஷன்ல நின்னதில் இருந்துதான் குணம் கெட்டுப்போயி நிக்கிறார். ஊரு ஆளுங்களுக்கு பிராந்தி வாங்கிக்கொடுக்கிறேன்னு ஆரம்பிச்சு, இப்ப அவரும் தினம் குடிக்கிறார். வர்ற எலெக்‌ஷன்ல எங்க யூனியன், பொம்பளைக்குனு மாறப்போவுதாம். அதனால அடுத்த முறை சேர்மனுக்கு நிக்கணும். அதுக்கு கவுன்சிலர் ஆவணும்னு இப்பவே மூணு ஊர்ல ‘கட்சிப் பக்கமே ஓட்டு போடுங்க. ஊருக்கு இவ்வளவுனு மொத்தமா பணம் தர்றேன். காலனிக்கும் ஊருக்கும் தனித்தனியா கோயில் கட்டித் தர்றேன்’னு பேசிக்கிட்டிருக்கார்; பிராந்தி வாங்கித்ந்துக்கிட்டிருக்கார்.’’ “இந்த மாதிரி வர்ற பணத்துல கோயில் கட்டலாமா?” “ஊரு உலகத்துல எல்லாம் அப்படித்தானே நடக்குது?” `` `நான் நிக்க மாட்டேன்'னு சொல்ல வேண்டியதுதானே?’’ - அக்கறையுடன் சொன்னாள் ரேவதி. ``சொன்னா கேட்டாதானே? பிரசிடென்டுக்கு நின்னாலும், கவுன்சிலருக்கு நின்னாலும் நான் சும்மாதானே? பேருக்குத்தான் என் பேரு. `பிரசிடென்ட்'னும் `கவுன்சிலர்'னும் அவரைத்தானே கூப்பிடுறாங்க. சாராய போதையைவிட அதிகாரப் போதை பெருசு தெரியுமா?’’ ``ஆச்சர்யமா இருக்கு. மத்த பொம்பளை பிரசிடென்ட் எல்லாம் எப்படி?’’ ``பி.எஸ்ஸி படிச்ச எனக்கே இந்த நிலைமைன்னா, படிக்காத, பத்தாவது, பன்னிரண்டாவது படிச்ச பொம்பளைங்க எப்படி இருப்பாங்க... வெறும் பேருதான்” - சகுந்தலா சத்தம்போட்டுச் சிரித்தாள். ``நீ சொல்ற எதுவும் எனக்குப் புரியல. இரு வர்றேன்’’ எனச் சொல்லிவிட்டு எழுந்து சமையலறைக்குச் சென்றாள். அடுப்பைப் பற்றவைத்தாள். பால் குண்டானை எடுத்து அடுப்பில் வைத்தாள். ஃப்ரிட்ஜில் இருந்த பாலை எடுத்து ஊற்றிக் கொதிக்கவைத்தாள். ரேவதி சமையலறைக்குப் போனதும், சகுந்தலா வீட்டை ஒரு பார்வை பார்த்தாள். ஃபிளாட் டி.வி., பெரிய பெரிய சோபா, அழகான ஷோகேஸ், விலை உயர்ந்த ஜன்னல் திரைச்சீலைகள், இரண்டு ஏ.சி அறை, கிரானைட் தரை, டைனிங் டேபிள், டிரெஸ்ஸிங் டேபிள் என, வீடு பார்ப்பதற்கு அமர்க்களமாக இருந்தது. எழுந்து நின்று, வீட்டைச் சுற்றிப் பார்த்தாள். அழகாக இருந்தது. கடைசியாக சமையலறைக்கு வந்தாள். மாடுலர் கிச்சன் பிரமாதமாக இருந்தது. `சமையலறைக்கு எவ்வளவு செலவு செய்தாய்?' எனக் கேட்கத் தோன்றியது. தவறாக நினைப்பாள் என்பதால் எதுவும் கேட்காமல், ரேவதிக்குப் பக்கத்தில் வந்து நின்றுகொண்டு, ``உங்க சார் எப்படி இருக்கார்... எப்ப வருவார்?’’ எனக் கேட்டாள். ``நல்லா இருக்கார்’’ என அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள். ``எதுக்கு இழுத்தாப்ல சொல்றே?’’ ``ஒண்ணும் இல்லை’’ ரேவதியின் முகம் கோணிற்று. அதைப் பார்த்த சகுந்தலா, ``எனக்குத் தெரிஞ்சு உங்க சார் நல்லவர்தான்டி’’ எனச் சொன்னாள். ``ஆமா... ஆமா...'’ - அழுத்தமாகச் சொன்னாள். பிறகு சிரித்தாள். அவளுடைய சிரிப்பில் உயிர் இல்லை. கொதித்துக்கொண்டிருந்த பாலின் மீது டீத்தூளைக் கொஞ்சம் போட்டாள். பொங்கிவிடாமல் இருக்க அடுப்பைக் குறைத்துவைத்தாள். எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த ரேவதியைப் பார்த்த சகுந்தலா, கேலியாகச் சொன்னாள், ``நம்ம ரூம்மேட்லயே நீதான் அழுத்தம் பிடிச்சவ. எதையும் வெளியே சொல்ல மாட்டே. என்னை மாதிரி ஓட்டைவாயும் இல்லை. `நீ பெரிய திருடி'னு நம்பகூடப் படிச்ச எல்லாருக்குமே தெரியும்’’ - கலகலவெனச் சிரித்தாள். ரேவதியும் சிரித்தாள். ஆனால், சத்தம் வெளியே வரவில்லை. டீ நன்றாகக் கொதித்துவிட்டது தெரிந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, டீயை வடிக்கட்டினாள் ரேவதி. சர்க்கரை போட்டாள். இரண்டு மூன்று முறை நன்றாக ஆற்றி, இரண்டு டம்ளர்களில் ஊற்றினாள். ஒரு டம்ளரை எடுத்து சகுந்தலாவிடம் கொடுத்தாள். ``மத்தவங்க டீ போட்டு தந்து, அதை வாங்கிக் குடிக்கிறப்ப இருக்கிற சுகமே தனிதான்’’ எனச் சொல்லிவிட்டு டீயை ஒரு வாய் குடித்தாள். பிறகு சிரித்துக்கொண்டே, ``உனக்கு ஒண்ணும் சர்க்கரை வியாதி இல்லையே?’’ எனக் கேட்டாள். ``இருக்கு... நீ வந்ததால சர்க்கரையைக் குறைச்சிப்போட மறந்துட்டேன்.’’ ``அதானே பார்த்தேன். வாத்தியார், பேராசிரியர்களுக்கு எல்லாம் சர்க்கரை வியாதி இல்லாம இருக்காதே” - சகுந்தலா சிரித்தாள். ``மகளுக்குக் கல்யாணம் கட்டப்போற. ஆனா, உனக்கு அந்தக் காலத்துல இருந்த குசும்புப் பேச்சு மட்டும் இன்னும் போகலை. கழுதை’’ - ரேவதி சிரித்தாள். பிறகு, ``வா... ஹாலுக்குப் போவோம்’’ எனச் சொல்லிவிட்டு, ஹாலுக்கு வந்து முன்புபோலவே சோபாவில் உட்கார்ந்துகொண்டாள். பின்னாலேயே வந்த சகுந்தலாவும் முன்புபோலவே உட்கார்ந்துகொண்டு டீயை ரசித்துக் குடிக்க ஆரம்பித்தாள். ``என்ன திடீர்னு டல்லாயிட்ட?’’ ரேவதி வாயைத் திறக்கவில்லை. டம்ளரில் இருந்த டீயையே பார்த்தாள். பிறகு, ஓடிக் கொண்டிருந்த தொலைக்காட்சியைப் பார்த்தாள். சுவரில் மாட்டியிருந்த சபாநடேசனுடைய போட்டோவைப் பார்த்தாள். திரும்பவும் டீ டம்ளரைப் பார்த்தாள். சகுந்தலாவை மட்டும் பார்க்கவில்லை. சந்தேகப்பட்ட சகுந்தலா கேட்டாள், ``என்னாச்சு?’’ ரேவதி, சிறிது நேரம் எதுவும் பேசவில்லை; ஒரு வாய் டீ குடித்தாள்; அங்கும் இங்குமாகப் பார்த்தாள். அதனால் மிகவும் முக்கியமான கேள்வியைக் கேட்பது மாதிரி சகுந்தலா கேட்டாள்... ``நீ சந்தோஷமா இருக்கியாடி?’’ ``இல்லாம என்ன?’’ - மொட்டையாகப் பதில் சொன்னாள் ரேவதி. பெரிதாக மூச்சுவிட்டாள். நிதானமான குரலில் சொன்னாள்... ``நான் முதன்முதல்ல வேலைக்குப் போனப்ப, எல்லாம் சேர்த்து 910 ரூபாய்தான் சம்பளம். இப்ப, 64 ஆயிரம். சம்பளம் கூடியிருக்கு. வீடு மூணு மாடி ஆகியிருக்கு. வீட்டுல பொருட்கள் எல்லாம் கூடியிருக்கு. ரெண்டு ஏ.சி இருக்கு. கார் இருக்கு. பேங்க்ல பணம் இருக்கு. ரெண்டு பிள்ளைகளும் வேலைக்குப் போயிருச்சுங்க. லாக்கர்ல நகைகள் இருக்கு. வீட்டுவாசல்ல வெளிநாட்டு நாய் கட்டியிருக்கு. அதுக்கு மட்டும் ஒரு நாளைக்கு 200 ரூபாய் செலவு ஆகுது. எல்லாம் இருக்கு. காலேஜ்ல நீயும் நானும் சிரிச்சோமே அந்தச் சிரிப்பு மட்டும் இல்லை’’ - பேச்சை நிறுத்திவிட்டு, ஒரு வாய் டீ குடித்தாள். என்ன தோன்றியதோ பாதி டம்ளரில் டீ இருக்கும்போதே, குடிக்கப் பிடிக்காதவள் மாதிரி டம்ளரை தரையில் வைத்தாள். சகுந்தலாவின் கையை எடுத்து, மடியில் வைத்துக்கொண்டு உடைந்துபோன குரலில் சொன்னாள். ``பணம், நகை, கார், வீடு, புருஷன், புள்ளைங்க… எல்லாம் இருக்கு. ஆனா, சந்தோஷம் மட்டும் இல்லை’’ - ரேவதியின் கண்களில் நீர் திரண்டு நின்றதைப் பார்த்துப் பதறிப்போன சகுந்தலா, ``என்னடி சொல்றே... எதுக்கு கண்ணு கலங்குது?’’ எனக் கேட்டாள். சகுந்தலா கேட்டது, தன்னையே பார்ப்பது என எதையும் கவனிக்காத ரேவதி, ரொம்பவும் தாழ்வான குரலில் சொன்னாள், ``நம்ம படிக்கிறப்ப எங்க அப்பா மாசத்துக்கு 25 ரூபாதான் மணியார்டர் அனுப்புவார். உனக்குத் தெரியும். அந்தப் பணத்தை வாங்குறப்ப மனசுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கும் தெரியுமா? மனசு நிறைஞ்சிருக்கும். ஆனா, 64 ஆயிரம் ரூபாய் வாங்கிறப்ப அது இல்லை’’ - ரேவதியின் கண்களில் மீண்டும் நீர் வழிந்தது. சகுந்தலாவைப் பார்க்காமல் தனக்குத்தானே சொல்லிக்கொள்வது மாதிரி சொன்னாள்... ``அப்பா அம்மாகூட புள்ளையா இருக்கோம் பாரு... அதோடு முடிஞ்சுபோகுது சந்தோஷம்... சிரிப்பு... வாழ்க்கை... எல்லாம்.’’ ரேவதியின் பேச்சும் அழுகையும், சகுந்தலாவை ஆச்சர்யப்பட வைத்தன. பொதுவாக அதிகம் பேசக்கூடிய ஆள் அல்ல. அதிகம் சிரிக்க மாட்டாள். சத்தம்போட்டுக்கூடப் பேச மாட்டாள். பத்து வார்த்தைகள் பேசினால் ஒரு வார்த்தைதான் பேசுவாள். அவளா அழுகிறாள், அவளா கூடுதலாகப் பேசுகிறாள் என ஆச்சர்யப் பட்ட சகுந்தலா, மேலும் நெருக்கமாக நகர்ந்து உட்கார்ந்து, ரேவதியின் கைகளை எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டு கேட்டாள்... ``என்னடி ஆச்சு... உனக்கு?’’ ``காலையில எங்க அம்மா வந்துட்டுப் போச்சு. கவர்மென்ட் ஆஸ்பத்திரியில சுகர் மாத்திரை வாங்க வந்துச்சாம்’’ - சிறிது நேரம் பேசாமல் இருந்துவிட்டுச் சொன்னாள்... ``எங்க அம்மா சுகர் பேஷன்ட் தெரியுமா? நான் 64 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குறேன். எங்க அம்மா கவர்மென்ட் ஆஸ்பத்திரியில இலவச மாத்திரைக்கு வரிசையில பொழுது முழுக்க நிக்குது...’’ - ரேவதியின் கண்களில் நீர் நிறைந்துவிட்டது. ``நீ வாங்கித் தரவேண்டியதுதானே?’’ ``பணம்?’’ ``என்னடி சொல்றே?’’ ``உண்மையைத்தான் சொல்றேன். எங்கிட்ட ஏது பணம்?’’ - கண்ணீரை மறைப்பதற்காக தொலைக்காட்சியைப் பார்த்தாள். புதிதாகப் பார்ப்பது மாதிரி ஷோகேஸில் உள்ள பொருட்களைப் பார்த்தாள். வீட்டில் உள்ள மற்ற பொருட்களையும் ஒவ்வொன்றாகப் பார்த்தாள். ஒவ்வொரு பொருளையும் பார்க்கப் பார்க்கத்தான் அவளுக்குக் கண்ணீர் கூடுதலாக வந்தது. ``சம்பளப் பணத்தை என்ன செய்யுற?’’ ``ஏ.டி.எம் கார்டு அவர்கிட்டதான் இருக்கு.’’ ``நீ பணத்தை எடுத்துத் தரவேண்டியதுதானே?’’ ``தபால்ல ஏ.டி.எம் கார்டு வந்த அன்னிக்குப் பார்த்ததுதான். இந்தப் பத்து வருஷத்துல அதை எடுத்துக்கிட்டுப் போயி நான் ஒரு நாளும் பணம் எடுத்தது இல்லை. பின்நம்பர்கூட எனக்குத் தெரியாது’’ - முகத்தைத் தாழ்த்திக்கொண்டாள். முந்தானையால் கண்களைத் துடைத்தாள். சிறிது நேரம் எதுவும் பேசவில்லை. ரேவதியின் பேச்சு, சகுந்தலாவை அமைதியாக்கிவிட்டது. என்ன பேசுவது எனத் தெரியாமல் உட்கார்ந்திருந்தாள். கையில் போட்டிருந்த வளையல்களை மேலேயும் கீழேயும் நகர்த்திவிட்டபடியே ரேவதி சொன்னாள், ``ஏ.டி.எம் கார்டு வந்த இந்தப் பத்து வருஷத்துல என் சம்பளப் பணத்தை நான் மொத்தமா ஒருமுறைகூட கண்ணால கண்டது இல்லை. ஸ்கூல்ல சம்பளம் வாங்குறப்ப இருந்த சந்தோஷம் இப்ப இல்லை. சம்பளம் வாங்குற அன்னிக்கி மத்தியானம் சாப்பிட்டதுமே சாப்பாட்டு டப்பாவை, கேரியரைக் கழுவி வெயில்ல காயவெச்சிருவோம். சம்பளத்தை வாங்கி மூணு முறை எண்ணுவேன். அப்புறம் ஹேண்ட் பேக்குல வெச்சா திருடன் அடிச்சிட்டுப்போயிடுவான்னு சாப்பாட்டு டப்பாவுல, கேரியருல வெச்சு எடுத்தாருவேன். ஸ்கூல்ல இருந்து வீடு வரைக்கும் சாப்பாட்டுக் கூடை நினைப்பாவே இருக்கும். இப்ப எதுவும் இல்லை. அப்ப லோன் போட்டா அஞ்சு ஆயிரம் ஆறாயிரம்தான் வரும். அதை ஒரு கோடி ரூபாயைத் தூக்கிட்டு வர்ற மாதிரி வருவேன். எல்லா டீச்சர்ஸும் அப்படித்தான் செய்வாங்க. இப்ப எதுக்குப் பணம்னு ஆகிப்போச்சு. 910 ரூபாய் கொடுத்த சந்தோஷத்தை 64 ஆயிரம் கொடுக்கலை’’ - ரேவதியின் கண்கள் கலங்கின. ``காரணம் இல்லாம எதுக்கு நீ அழுவுற?’’ - ரேவதியின் தோளில் தட்டினாள் சகுந்தலா. ``சம்பளத்துல ஒரு எட்டணா மாத்தி சொல்ல முடியாது தெரியுமா? சம்பளம், அக்கவுன்ட்ல ஏறின மறுநிமிஷமே மெசேஜ் வந்துரும். அதுவும் அவருக்குத்தான் வரும்.’’ ``உன் செல் நம்பர் என்னாச்சு?’’ ``முதல்ல அவர்தான் செல்போன் வாங்கினார். அப்புறம் நாலைஞ்சு வருஷம் கழிச்சுத்தான் எனக்கு வாங்கினேன். அதனால அவர் நம்பரை பேங்க்ல கொடுத்தாச்சு.’’ தொலைக்காட்சியைப் பார்த்தாள் ரேவதி. பிறகு, ஹாலை ஒரு பார்வை பார்த்தாள். சுவரில் சிரித்தபடி தொங்கிக்கொண்டிருந்த சபாநடேசன் போட்டோவைப் பார்த்தாள். அடுத்து மகனுடைய மகளுடைய போட்டோக்களைப் பார்த்தாள். போட்டோக்களில் எல்லாரும் நன்றாகச் சிரித்துக்கொண்டிருந்தார்கள். ரேவதி, சகுந்தலாவை மட்டும் பார்க்கவில்லை. அப்போது சோர்ந்துபோய் சகுந்தலா சொன்னாள், ``நம்ப ரூம்மேட் நாலு பேர்ல நீ ஒருத்திதான் டீச்சராப்போய் வசதியா, சந்தோஷமா இருக்கேன்னு நினைச்சேன்.’’ ``தினமும் இருபது ரூபாய் பஸ்ஸுக்குனு டேபிள் மேல வெச்சிடுவார். அதுவும் சில்லறையா.’’ ``நீ கூடுதலா கேட்கவேண்டியதுதானே... உனக்குத் துப்பு இல்லை?’’ `` `டீ குடிக்க, காபி குடிக்க காசு தாங்க’னா?’’ - ரேவதி கேட்டவிதம், அவள் ரொம்பவும் கோபமாக இருக்கிறாள் என்பதைக் காட்டியது. சிறிது நேரம் பேசாமல் இருந்துவிட்டு சகுந்தலா கேட்காமலேயே சொன்னாள், ``முன்னெல்லாம் ஸ்கூலுக்கு, புடவைக் காரங்க சம்பளம் வாங்குற அன்னிக்கு வருவாங்க. இருநூறு ரூபா புடவையை முந்நூறு ரூபானு சொல்வோம். ரெண்டு மூணு புடவை எடுத்தா இருநூறு முந்நூறு ரூபா ரகசியமா கிடைக்கும். அதைத்தான் டீச்சர்ஸ் அப்பா அம்மாவுக்குக் கொடுப்பாங்க. இல்லைனா தம்பி, தங்கச்சிக்குக் கொடுப்பாங்க. நானும் அப்படிச் செஞ்சிருக்கேன். எனக்குனு எடுக்கிற புடவையை என் அம்மாவுக்கு, தம்பி பொண்டாட்டிக்குக் கொடுத் திருக்கேன். இப்ப அந்த மாதிரி எல்லாம் செய்ய முடியாது. மளிகைக்கடை, துணிக்கடைனு எல்லாத்துலயும் கம்ப்யூட்டர் பில் வந்திருச்சு. காபிக்குக்கூட கம்ப்யூட்டர் ‘பில்’தான். ஒரு ரூபா மாத்தி சொல்ல முடியாது. `பில் எங்கே?’னு கேட்பார்.’’ ``நீ பணம் கேட்டா, உங்க சார் கொடுக்க மாட்டாரா?’’ `` `டீ குடிக்க, காபி குடிக்க, தலைவலி மாத்திரை வாங்க காசு கொடுங்க’னு நான் கேட்கணுமா? நான் கேட்க மாட்டேன்’’ - வீம்பாகச் சொன்னாள் ரேவதி. ``அவர் வாத்தியார்தானே? மனுஷங்களைப் புரிஞ்சிக்க வேணாம்? அப்புறம் என்ன வாத்தியார்?’’ - கோபமாகக் கேட்டாள். ``நீ எதுக்கு சாதாரண விஷயத்துக்கு எல்லாம் அழுவுற... `பணம் கொடுங்க'னு நீ கேட்டு, அவர் `தர முடியாது'னு சொன்னாரா?’’ - சகுந்தலா அதிகாரமாகக் கேட்டாள். ``இல்லை... எவ்வளவு கேட்டாலும் எண்ணி டேபிள் மேல வெச்சிடுவார்.’’ ``அப்புறம் என்ன?’’ ``நீயே எடுத்துக்கனு சொல்ல மாட்டார். எண்ணாம வைக்க மாட்டார். அதுதான் சிக்கல்’’ - ரேவதியின் கண்களில் நீர் நிறைந்துவிட்டது. ``நீ ஏன் அவர்கிட்ட கேக்குற... நீயே எடுத்துக்க வேண்டியதுதானே? அப்பா - அம்மாவுக்குக் கொடுக்கிறதுக்கு இல்லாத பணம், வேற எதுக்கு இருக்கு?’’ ``உனக்குப் புரியலை சகுந்தலா. அது ஒரு ஃபீலிங். சில விஷயங்களைப் பேசாம, நினைக்காம இருக்கிறதுதான் மனசுக்கு நல்லது. மீறி நினைச்சா என்னென்ன பூதம் எல்லாம் வருமோ. நீ என் ஃப்ரெண்ட். உங்கிட்ட உண்மையைச் சொல்லாம, வேற யார்கிட்ட சொல்லப் போறேன்... என் பணம்தான். ஆனா, நான் செலவுசெய்ய முடியாது. இந்த வீடு என் பேர்லதான் இருக்கு. மூணு பிளாட்டும் என் பேர்லதான் இருக்கு. பேங்க்ல லோனும் என் பேர்லதான் இருக்கு” எனச் சொன்ன ரேவதி, சிறிது நேரம் பேசாமல் இருந்தாள். பிறகு, நிதானமாகச் சொன்னாள். ``ஊர்க்காரங்க, சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்க, வேண்டினவங்கனு யாராச்சும் வீட்டுக்கு வந்துட்டுப் போகும்போது, ‘இந்தா... இதை பஸ்ஸுக்கு வெச்சுக்கங்க’னு பத்து ரூபா என் இஷ்டத்துக்குக் கொடுத்தது இல்லை. அவர்கிட்ட சொல்லித்தான் கொடுக்கணும். அப்படி சொல்லும்போது எல்லாம் எவ்வளவு அசிங்கமா இருக்கும் தெரியுமா? ஊர்ல என் தம்பி மூணு பிள்ளைங்களை வெச்சுக்கிட்டுக் கஷ்டப்படுறான். அவன் பிள்ளைங்களுக்கு பொங்கல், தீபாவளிக்குக்கூட ஒரு துணி எடுத்துத் தர முடியலை. நூறு இருநூறு மறைச்சுக் கொடுக்கலாம். அது அசிங்கம். என் பணத்தை நானே திருடணுமா? வெக்கமா இருக்குடி.’’ ``நீ பேசுறது புதுசா இருக்கு’’ - லேசாகச் சிரித்தாள் சகுந்தலா. “எங்க தாத்தா காலத்தில் இருந்து, எங்க அப்பா காலத்தில் இருந்து, என் தம்பி காலம் வரைக்கும் எங்க வீட்டுல வேலைசெஞ்சவர் போனவாரம் செத்துப் போயிட்டார். `இருநூறு ரூபாய்க்கு மாலை வாங்குங்க'னு சொன்னேன். அம்பது ரூபாய்க்கு மாலை வாங்கிப் போட்டார். அன்னிக்குப் பூராவும் நான் சாப்பிடவே இல்லை. அவர் செத்தது ஒரு கஷ்டம். இருநூறு ரூபாய்க்கு மாலை வாங்கி என் இஷ்டத்துக்குப் போட முடியலையேனு இன்னொரு கஷ்டம். மனசு ரொம்பப் பாரமாகிருச்சு. சாவு செலவுக்கு வெச்சுக்கனு ஆயிரம் - ரெண்டாயிரம்னு கொடுக்க முடியலை” - ரேவதியின் கண்களில் நீர் பீறிட்டது. “சின்ன விஷயத்தை எல்லாம் பெருசு பண்ணாதே.” `` `இது என் ஏ.டி.எம் கார்டு. என்கிட்டதான் இருக்கும்'னு சொல்லி, சம்பளத்தை தானே எடுத்து செலவுசெய்ற ரகம் ஒண்ணு இருக்கு. எங்க போனாலும் நானும் கூட வருவேன்னு சொல்லி ஜோடி போட்டுக்கிட்டுப் போற ரகம் ஒண்ணு இருக்கு. ஏ.டி.எம் பின்நம்பர்கூடத் தெரியாத என்னை மாதிரி ஒரு ரகமும் இருக்கு. டீச்சர்ஸ்ல இப்படி மூணு வகைகள் இருக்கு.’’ ``எது அதிகம்?’’ ``என் ரகம்தான்’’ - ரேவதி லேசாகச் சிரித்தாள். பிறகு, லேசாக உற்சாகம் வந்த மாதிரி சொன்னாள்... ``புருஷன் டீச்சரா இல்லாம வேற டிபார்ட்மென்ட்ல இருக்கிற வீட்டுல பரவாயில்லை. புருஷனும் டீச்சரா இருந்தா கதை முடிஞ்சிரும். ஒரு பைசா மாத்தி சொல்ல முடியாது’’ - முன்பைவிட இப்போது ரேவதி கூடுதலாகச் சிரித்தாள். ``வீட்டுக்கு வீடு பிரச்னை தான்.’’ ``அது இல்லைடி சகுந்தலா, ஒரு கடைக்குப் போறோம், நம்ம கையால நாலு காசு செலவு செய்யணும்னு ஒரு ஆசை இருக்காதா? நான் செலவுசெஞ்சாலும் இந்த வீட்டுக்குத்தானே செலவுசெய்யப்போறேன்... என்ன வாழ்க்கை?’’ - உடைந்துபோன குரலில் சொன்னாள். ``மாசம் 64 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற உனக்கே இந்த நிலைமைனா என்னைப் பத்தி என்ன சொல்றது?’’- சகுந்தலா சிரித்தாள். பிறகு, ``எங்க வீட்டுக்குப் பணம் எப்படி வருது, எப்படி போகுதுனு எனக்குத் தெரியாது. கேட்டா, ‘உங்க அப்பன் வீட்டுல இருந்து கொண்டாந்தியா?’னு கேட்பார். அதனால நான் வாயைத் திறக்கிறது இல்லை. மீறி வாயைத் திறந்தா `பிரசிடென்டுங்கிற திமிர்ல பேசுறியா?’னு கேட்பார்’’ எனச் சொல்லும்போது அவளுடைய செல்போன் ஒலித்தது. ``அவர்தான் கூப்பிடுவார்’’ - ரேவதியிடம் சொல்லிவிட்டு போனை எடுத்து ``ஹலோ’’ எனச் சொன்னாள். ``இன்னும் கால் மணி நேரத்துல பஸ் ஸ்டாண்டுக்கு வரணுமா... ரெண்டு பேரும் சேர்ந்து போயிடலாமா? சரி, நான் வந்துடுறேன். வெச்சுருங்க’’ - போனை வைத்தாள். ``சரி... நான் கிளம்பட்டுமா?’’ ``என்ன அவசரம்? ரொம்ப நாள் கழிச்சு இன்னிக்குத்தான் வந்திருக்க. இப்பத்தானே பேச ஆரம்பிச்சோம். இன்னும் ஒண்ணுமே பேசலை.’’ ``அவர் பஸ் ஸ்டாண்டுக்கு கால் மணி நேரத்துல வந்துருவார். இப்ப போனா ரெண்டு பேரும் வண்டியிலேயே போயிருவோம். இல்லைனா நான் டவுன் பஸ் பிடிச்சுப் போறதுக்குள்ள நேரமாகிடும்; திட்டுவார்.” ``திரும்ப எப்ப வருவ?’’ ``நீ போன் பேசு. வர்றேன். கல்யாணத்துக்கு மறக்காம வந்துடு.’’ ``வராம எப்படி இருப்பேன்? நீ சீக்கிரம் போறியேனுதான் வருத்தமா இருக்கு. சாப்பிடக்கூட ஒண்ணும் கொடுக்கலை.’’ ``உங்கிட்ட பேசிக்கிட்டிருந்ததே எனக்குப் போதும். உன் பையன் ரமேஷுக்குக் கல்யாணம் முடிக்கலையா?” “அவன் ஏதோ கூட வேலைசெய்யுற புள்ளையை லவ் பண்றான்னு நினைக்கிறேன். அந்தப் பொண்ணு வேற சாதிபோல. இவர் `முடியாது'னு சொல்லிட்டார். `படிச்சிட்டா, வேலைக்குப் போயிட்டா எல்லாரும் பெரிய சாதியா ஆகிட முடியுமா?’னு கேட்கிறார். என்னத்தைச் சொல்ல? ரெண்டு வருஷமா இழுத்துக்கிட்டுக் கிடக்கு. இப்ப பொண்ணு வேற மெட்ராஸுக்குப் போயிருக்கா. என்ன நடக்கப்போகுதோ?’’ “ஒண்ணும் நடக்காது. கவலப்படாம இரு.” ``மனசுல உள்ளதைப் பேசக்கூட எனக்கு ஆள் இல்லைடி’’ - ரேவதியின் கண்கள் கலங்கின. ``சாதாரண விஷயத்தைப் பெருசு பண்ணாம இரு. ஒவ்வொரு வீட்டுக்கும் வாசலும் இருக்கு; கதவும் இருக்கு. நீ வீடா இருக்க... உங்க சார் கதவா இருக்கார். உலகம் பூரா அப்படித்தான். சரி, நான் கிளம்புறேன்’’ எனச் சொல்லிவிட்டு பையை எடுத்துக்கொண்டு வெளியே வரும்போது, வாசலில் கட்டியிருந்த வெளிநாட்டு நாய் எழுந்து நின்றுகொண்டு சகுந்தலாவையே முறைத்துப் பார்த்தது! http://www.vikatan.com
 6. ஸ்டீயரிங் வீல் சிறுகதை: வாஸந்தி, ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு அந்தப் பாதை, வண்டிக்குப் பழகிப்போன ஒன்று. அவள் ஸ்டீயரிங் வீலில் கையை வைத்திருக்கக்கூடத் தேவை இல்லை என்று தோன்றும். தினமும் காலை 7 மணிக்கு அவள் அமர்ந்து, காரேஜ் பொத்தானை அமுக்கி அது திறந்துகொண்டதும், வண்டி சிலிர்த்துக்கொண்டு தன்னிச்சையாகக் கிளம்புவதுபோல இருக்கும். வேடிக்கை... அதற்கும் ஓர் ஆன்மா உண்டு; உணர்வு நிலை உண்டு என்றால், யாரும் நம்ப மாட்டார்கள். அவள் சோர்ந்திருந்தால், அது வண்டியையும் தொற்றிக்கொள்ளும். லேசில் கிளம்பாது. ஆனால் கிளம்பிவிட்டால், பாதி வழியில் என்றும் நின்றது இல்லை. சரியாக அவள் வீட்டை அடையும் வரை காத்திருக்கும். பிறகு ஆளைவிடு என்பதுபோல பெருமூச்சு விட்டு நின்றுகொள்ளும். அவள் மெக்கானிக் டேவிட்டுக்கு குறுஞ்செய்தி அனுப்பு வாள். டேவிட் எப்பவுமே கைபேசியை மௌனத்தில்தான் வைத்திருப்பான். மெசேஜ் ஒன்றைத்தான் கவனிப்பான். முணுமுணுத்துக் கொண்டே சரிசெய்ய வருவான். `குப்பையிலே போடவேண்டிய வண்டியை எத்தனை நாள்தான் வெச்சிருப்ப?’ என்று அதட்டுவான். அவள், அவனுக்குப் பதில் சொல்வதே இல்லை. `இந்த வண்டிக்கு ஆன்மா உண்டு’ என்று சொன்னால், அவன் சிரிப்பான். நினைவுகளைச் சுமக்கும் வண்டி... நல்லதும் கெட்டதுமான நினைவுகளை. அதனுள் அமர்ந்தால் ஒரு தோழனுடன் அமர்ந்திருப்பதுபோல இருக்கும். அவளது அந்தரங்கங்களை உணர்ந்த தோழன் என்றால், டேவிட்டுக்குப் புரியாது. அந்த ஸ்டீயரிங் வீலில் முகத்தைக் கவிழ்த்து அவள்விட்ட கண்ணீர் யாருக்கும் தெரியாது. இதயம் விண்டு விடுவதுபோல கேவிக்கேவி அதைப் பிடித்து அழுத அழுகை, அவளுக்கு எங்கும் கிடைக்காத வடிகால். அதன் மௌனம், ஒரு நண்பனின் அரவணைப்புபோல. இன்று ஸ்டீயரிங் வீலைப் பற்றியதும் என்னென்னவோ நினைவுக்கு வந்தன. ஏன் என்று புரியவில்லை. வண்டியில் கடிகார முள்ளும் தேதியும் தெரிந்தன. ஓ... அதுதான். மனசு மெலிதாகக் குலுங்கிற்று. உள்ளங்கையும் நெற்றியும் சூடேறி வியர்த்தன. அந்த நினைவு படுத்தலின் தாக்கம் இன்னும் அச்சுறுத்திற்று. ஆரம்ப காலத்தில் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் அது எதிரில் நின்று வாட்டும். தெரிந்த - தெரியாத முகங்களும், புலம்பல்களின் ஒலியும் அதில் தொனித்த கோபமும் சாபமும் சோகமும்... ஆ அந்தக் கோபம்தான் அனைத்துலகக் கோபம்போல தாங்க முடியாததாக இருந்தது; அவளை மிரளவைத்தது. உலகமே திரண்டு `இவள்தான்... இவள்தான்...’ என்று குற்றம்சாட்டுவதுபோல இருந்தது. அவர்களுக்குத் தெரியாது, அந்தக் கூட்டத்தில் அவளும் ஒருத்தி என்று. அதில் தனிமைப்பட்டு, குன்றிக்குறுகி, அவமானப்பட்டு, கழிவிரக்கப்பட்டு... `எப்படி, ஏன்?’ என்கிற கேள்வி களும், `நடந்ததில் என் பங்கு என்ன?’ என்கிற குற்றஉணர்வும் அவளைச் சாட்டையாக விளாசியதை அவர்கள் உணர மாட்டார்கள். இப்போது எல்லாமே பழைய கதை. பாதையை மாற்றிக்கொள்ளவைத்த கதை. அதில் இந்த வண்டிக்கு முக்கிய பங்கு உண்டு. கையைப் பிடித்து அழைத்துச்சென்ற வழிகாட்டியைப் போல. வண்டிக்கு அவள் பெயர்கூட வைத்தி ருந்தாள். டாலி. `ஏன் அந்தப் பெயர் வந்தது?’ என்று அவள் யோசிக்கவில்லை. `நான் என் வண்டிக்கு `டாலி’னு பேர் வெச்சிருக்கேன்.’ ‘அது என் பொம்மை.’ ‘என் வண்டி, எனக்கு பொம்மை கண்ணு.’ ‘கூடாது!’ அவளுக்குச் சிரிப்பு வந்தது அந்த மூர்க்கத்தைக் கண்டு. மூன்று வயசு. சிரிப்பு வராமல் என்ன செய்யும்? அவள் அழைப்பதை மாற்றவில்லை. டாலி... இது என் டாலி. தப்பாயிற்றா... எங்கிருந்து ஆரம்பித்தது அது? எது தப்பு... எது சரி? யார் விளக்கம் தருவார்கள்? வண்டி தன்னிச்சையாகச் சென்றது. அவள் அந்தப் பாதையில் பரிதவித்தபடி சென்றாள். `எனக்குப் புரியலே டாலி... எப்படி அவ்வளவு அறிவுகெட்டவளாக இருந்தேன்?’ `அறிவு போதாது மாகி... சூட்சுமம் வேணும். நமக்கு அது இல்லே’ என்றார் ஜார்ஜ். `அன்னிக்கு உலகம் இருண்டுபோச்சுனுதான் எனக்குத் தெரியும். நான் நல்லவள் டாலி. எந்தத் தப்புதண்டாவுக்கும் போனது இல்லை. ஞாயிறு தப்பாமல் சர்ச்சுக்குப் போவேன்... இப்பவும் பாவ மன்னிப்பு கேட்க. ஆனால், எதற்கு மன்னிப்பு கேட்கணும்னுகூட எனக்குத் தெரியலை. குரல் நடுங்குது. அழுகை வருது... ஆமாம் இப்பவும்.' “மார்கீடா... மார்கீடா...’’ மார்கரீட்டா திடுக்கிட்டு விழித்துக் கொண்டாள். லாரா கைகொட்டிச் சிரித்தாள். உன்னை எழுப் பிட்டேன் என்பதுபோல. இன்னும் ஸ்டீயரிங் வீலைப் பிடித்திருந்ததுபோன்ற உணர்வு இருந்தது. இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து அழுந்தத் தேய்த்துக்கொண்டாள். லாராவின் கடைவாயில் எச்சில் ஒழுகிற்று. மார்கரீட்டா மெள்ள எழுந்து, டிஷ்யூ பேப்பரை எடுத்து, அவள் வாயைத் துடைத்தாள். லாரா அவளுடைய கன்னத்தைத் தொட்டாள். `‘என்ன பேபி?’’ `‘ஆர் யூ ஓகே?’’ - லாராவின் சொற்கள் குழறின. மார்கரீட்டாவுக்கு மட்டுமே அவள் பேசுவது புரியும். ‘`எனக்கு ஒண்ணுமில்லை பேபி. மார்கீடா கிழவில? தூக்கம் வருது கண்ட நேரத்திலே.’’ ‘`மார்கீடா... கிழவில.’’ மார்கரீட்டாவுக்கு சிரிப்பு வந்தது. `‘தாங்க்யூ பேபி... டீ சாப்பிட்டு பார்க்குக்குப் போகலாமா?’’ லாரா சந்தோஷத்துடன் சிரித்தாள்... ‘`போலாம்’’. மார்கரீட்டா சமையலறைக்குச் சென்று, தேநீர் தயாரித்து, இரண்டு கோப்பைகளில் ஊற்றி, லாராவுக்குப் பிடித்த குக்கீஸை ஒரு கிண்ணத்தில் வைத்து, லாராவின் சக்கர நாற்காலிக்கு முன்னிருந்த மேஜையில் வைத்தாள். குக்கீஸை விண்டு லாராவின் கையைப் பிடித்து அவளது வாயில் ஊட்டினாள். பிறகு தேநீரைப் புகட்டினாள். இடையில் தனது தேநீரைக் குடித்தவண்ணம் இருந்தபோது எதிர்பாராமல் லாரா அவளுடைய புறங்கையில் முத்தமிட்டு ‘லவ் யூ’ என்றாள். மார்கரீட்டாவுக்குத் தேகம் எங்கும் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது. லாரா இப்போது எல்லாம் அடிக்கடி அதைச் சொல்கிறாள். எங்கே கற்றாள்? தன்னிச்சையான உணர்வின் வெளிப்பாடு. எப்படி வந்தது? ‘`ஐ லவ் யூ டூ லாரா...” லாராவின் நெற்றியில் முத்தமிட்டபோதுஅவள் மீண்டும் சொன்னாள்... ``ஐ லவ் யூ.’’ நான் உன்னை நேசிப்பதற்கும் நீ என்னை நேசிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்பதுபோல. குக்கீஸைத் தின்று முடித்ததும், `‘பார்க்... பார்க்...’’ என லாரா சத்தமிட்டாள். மார்கரீட்டா அவசரமாக கோப்பைகளை சமையலறைக்குக் கொண்டுபோய் கழுவி வைத்து, லாராவுக்கு மேல் அங்கியையும் தலைக்குத் தொப்பியையும் அணிவித்து, ‘`இப்பப் போகலாம்’’ என்று சிரித்தாள். லாராவுக்கு வெளியில் செல்வது பிடிக்கும். அதுவும் அந்தப் பூங்காவுக்கு. இன்று நல்ல வேளையாக பளீரென்று வெய்யில் அடித்தது. செர்ரிபிளாஸம் பூக்கும் காலம். இரண்டு மூன்று மரங்கள் இலை தெரியாமல் பூக்குடையாக நின்றன. பூங்காவுக்குள் நுழைந்ததும் பூக்களைக் கண்டோ என்னவோ லாரா கைகொட்டிச் சிரித்தாள். வழக்கமாக நடை பயில வருபவர்கள் அவர்களைக் கண்டு ‘ஹை’ என்று கையசைத்தபடி நடையைத் தொடர்ந்தார்கள். லாரா பதிலுக்குக் கையசைத்தாள். சக்கர நாற்காலியைத் தள்ளிக் கொண்டு வழக்கம்போல் மார்கரீட்டா நடந்தாள். 15 வருஷத்துக்கும் மேற்பட்ட நடை. எல்லாச் செடிகளுக்கும் அவளும் லாராவும் பரிச்சயம். இந்த இடைப்பட்ட காலத்தில் இப்போது சிலபேர் இல்லை. இருப்பவர்களுக்கு அவளும் லாராவும் பார்க்கின் ஓர் அங்கம்போல. ஒருநாள் வராமல் போனாலும் ‘ஏன் வரவில்லை?’ என்று கேட்கும் அளவுக்கு. ஆரம்பத்தில் தெரிந்த சந்தேகமும் வியப்பும் எப்போது காணாமல்போனது என்று நினைவில்லை. முன்பு புன்னகைக்கத் தயங்கிய வர்கள் இப்போது தோழமையுடன் சிரிக்கிறார்கள். சீதோஷ்ணத்தைப் பற்றியாவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டுப் போகிறார்கள் அல்லது லாராவைப் பற்றி... நடப்பது இன்று சற்று சிரமமாக இருந்தது. என்னென்னவோ நினைவுகளின் பாரம் முதுகை அழுத்துவதுபோல் இருந்தது. சிறிது நடந்த பிறகு தென்பட்ட பெஞ்சுக்கு அருகில் நிறுத்தி `‘லாரா... இங்கே உட்கார்ந்துக்கலாமா? எனக்கு இன்னிக்குக் களைப்பா இருக்கு’’ என்றாள் மார்கரீட்டா. லாரா எதுவும் சொல்லாமல் தலையை அசைத்தாள். மார்கரீட்டாவுக்குப் படுக்கலாம் போல இருந்தது. பெஞ்சில் தலையைச் சாய்த்து, கண்களை மூடிக்கொண்டாள். பார்க்குக்கு வந்தால் தேமே என்று தன்னைச் சுற்றிப்பார்த்தபடி அமர்ந்திருப்பாள் லாரா. கண்களை மூடியதுமே தூக்கம் வரும்போல அசத்திற்று மார்கரீட்டாவுக்கு. நேற்று இரவு சரியாகத் தூங்காததன் விளைவு. நேற்று இரவு தொலைக்காட்சியைப் பார்த்தி ருக்கக் கூடாது. திகில் மூட்டுவதற்கே அப்படிப் பட்ட செய்திகள் வருவதுபோல நெஞ்சு நடுங்கிற்று. நடந்தது எங்கேயோ தொலைவில் கலிஃபோர்னி யாவில் ஓர் இடத்தில். ஆனால், பக்கத்தில் நின்று பார்ப்பதுபோல இருந்தது. ஒரே ஓலம்... காயமடைந்தவர்களின் அலறல். போலீஸ் தூக்கிச் செல்லும் சடலங்கள். சிறுவர்கள், மீசை முளைக்காத பாலகர்கள், முலை கிளம்பாத சிறுமிகள். யாரோ இரண்டுபேர், கணவனும் மனைவியுமாகச் செய்த தாக்குதலாம். அவர்களும் பிணங்களாக. கூட்டம் விக்கித்து நிற்பது துல்லியமாகத் தெரிகிறது. மார்கரீட்டாவுக்கு விழி பிதுங்கி, மனசு பதைத்து இதயம் வெகுவேகமாக அடித்துக் கொள்கிறது. `எப்படி... எப்படி... இப்படிச் செய்ய மனசு வந்தது? தேசத்துரோகமா... நம்பிக்கைத்துரோகமா... மனநோயா... மதவெறியா?’ அடுக்கடுக்காகக் கேள்விகள். தொலைக்காட்சித் திரைக்குள் மாகியும் இருந்தாள். கேள்வி கேட்கிறாள்... `ஏன்... எதற்கு?’ மூடிய நிலையிலேயே மார்கரீட்டாவுக்குக் கண்களில் நீர் நிறைந்தது. அந்தக் குழந்தைகள்... அந்தப் பெற்றோர்கள்... எப்படித் தாங்குவார்கள்? உடல் தளர்ந்து, மனசு கழன்று, எங்கோ நழுவிக் கொண்டு போயிற்று... பாதாளத்தை நோக்கி. இருண்ட சந்துகளையும் பொந்துகளையும் கடந்து... ‘மாம்... மாம்!’ பாதாளக் குகையின் சுவர்களில் பட்டுப் பட்டுத் தாவி முன்னும் பின்னும் ஒலி தாக்கிற்று. அவள் பீதியுடன் ஓட ஆரம்பித்தாள். `வேண்டாம் போயிடு... போயிடு. உன்னை எனக்குத் தெரியாது. என்னைக் கூப்பிடாதே. போயிடு’ - அவள் ஓட ஓட குரல் துரத்திற்று. ‘மாம்... மாம்...’ படையாகக் குழந்தைகளின் குரல்கள்... `உன் மேல தப்பு. கொலை செஞ்சது நீ. பிடியுங்கள்... மாகியைப் பிடியுங்கள்.’ அவள் பதற்றத்துடன் தன்னைச் சுற்றிப் பார்த்தாள். அவளுக்குப் பரிச்சயமான இடமாக இல்லை இது. அவள் வளர்த்த செடிகளைக் காணோம். ரோஜாக்கள் இல்லை. வண்ணம் இல்லை... இருட்டும் வெறுமையும். அவளைச் சுற்றிக் கும்பல். விநோதமான வெறுப்பு உமிழும் பார்வைகள். கூச்சத்தில் முகத்தை ஒளித்துக் கொள்ள தவித்தபோது, ஜார்ஜ் அவளை அணைத்துக்கொண்டார். அவள் இதயம் விண்டுவிடுவதுபோல அழுதாள். `எப்படி... ஏன்... என்ன தப்பு செஞ்சேன்?’ ஜார்ஜ் முதுகைத் தட்டியவண்ணம் இருந்தார். `தெரியலை மாகி... எனக்கும் புரியலை’’ - அழுகை வெடித்துக்கொண்டு வந்தது. ``மார்கீட்டா... மார்கீட்டா...’’ அவள் திடுக்கிட்டு விழித்துக்கொண்டாள். கன்னங்கள் ஈரமாகியிருந்தன. லாரா அவளையே பார்த்தவண்ணம் இருந்தாள். கையை நீட்டி, `‘அழாதே’’ என்றாள். மார்கரீட்டா உணர்ச்சிவசப்பட்டு லாராவின் கைகளைப் பற்றிக்கொண்டாள். `‘என்னை மன்னிப்பியா லாரா?’’ லாரா வெள்ளையாகச் சிரித்தாள். பிறகு குழப்பத்துடன் பார்த்தாள். ‘`எனக்குத் தெரியாது’’ என்றாள். `‘அழாதே...’’ தன் கையில் வைத்திருந்த டிஷ்யூ காகிதத்தினால் மார்கரீட்டாவின் முகத்தைத் துடைத்தாள். மார்கரீட்டா சுயநினைவுக்கு வந்தவளாக, `‘ஸாரி பேபி’’ என்றாள். எத்தனை முட்டாள் நான்? ‘எனக்குத் தெரியாது...’ - லாரா புரிந்து சொன்னாளா... புரியாமல் சொன்னாளா? அந்த எண்ணத்தை அப்புறப்படுத்துவதுபோல மார்கரீட்டா தலையை அசைத்துக்கொண்டாள். `வேண்டாம்... எனக்குப் புத்தி பேதலித்துப்போச்சு’ என்றாள் தனக்குள். பார்க்கில் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. நாய்களுடன் வருபவர்களும் அலுவல கத்தில் இருந்து திரும்பி நடைபழக வந்தவர் களுமாக ஜனசந்தடி அதிகரித்துவிட்டது. லாராவுக்குக் கூட்டத்தைக் கண்டால், கலவரம் ஏற்படும். `‘வீட்டுக்குப் போகலாம் லாரா’’ என்று மார்கரீட்டா எழுந்தாள். லாரா எதுவுமே சொல்லவில்லை. வீடு போய்ச் சேரும் வரை மௌனமாக அவள் இருப்பது கண்டு யோசனை ஏற்பட்டது மார்கரீட்டாவுக்கு. `இவளைக் குழப்பிவிட்டேனா என்ன? நான் சரியான முட்டாள்...’ வீட்டுக்குள் நுழைந்தபோது டாரத்தியும் ஜானும் அலுவலகத்தில் இருந்து வந்திருந்தார்கள். டாரத்தி வழக்கம்போல் `‘ஹை... மார்கரீட்டா. பார்க் நடை எப்படி இருந்தது?’’ என்றாள் . பிறகு லாராவைப் பார்த்து ‘`ஹை பேபி!’’ என்றாள். லாரா `‘ஹை’’ என்றாள் சுரத்தே இல்லாமல். பிறகு மெள்ள வார்த்தைகள் கோத்து ‘`மார்கீட்டா அழுதா’’ என்றாள். மார்கரீட்டாவுக்குத் தூக்கிவாரிப்போட்டது. `‘ஓ நோ’’ என்று அவள் பதில் சொல்ல யத்தனிக்கையில், `‘யெஸ்... யெஸ்...’’ என்றாள் லாரா சத்தமாக. டாரத்தி வியப்புடன் அவர்களையே சற்று நேரம் பார்த்தாள். பிறகு பெருமூச்சுடன் மார்கரீட்டாவின் அருகில் வந்து, `‘பரவாயில்லை விடு. எனக்குப் புரிகிறது’’ என்றாள் மெள்ள. மார்கரீட்டா தன்னைச் சமாளித்துக்கொண்டு `‘ஸாரி லாரா... இனிமே அழ மாட்டேன். நல்ல பெண்ணா இருப்பேன்’’ என்று லேசாகச் சிரித்தாள். லாராவின் முகத்தில் இருந்த இறுக்கம் சற்றுத் தளர்ந்தது. ‘`தேநீர் தயாராயிருக்கு மாகி. குடிக்கலாம் வா’’ என்று டாரத்தி அழைத்ததும், லாராவுக்காக ஒரு நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் போட்டுவிட்டு மார்கரீட்டா வந்து அமர்ந்தாள். “ஸாரி டாரத்தி’’ என்றாள். ``பார்க்கிலே பெஞ்சிலே உட்கார்ந்து தூங்கிட்டேன். கெட்ட கனா. நேத்து டி.வி செய்தி கேட்டிருக்கக் கூடாது. கனாவிலேயே அழுதேன் போலிருக்கு.’’ ``நீ எதுவும் சொல்லத் தேவையில்லை’’ என்றாள் டாரத்தி. இருவரும் சற்று நேரம் தமக்குள் மூழ்கிய யோசனையுடன் தேநீர் பருகியபடி இருந்தார்கள். ``மாகி... உங்கிட்ட ஒண்ணு சொல்லணும். லாரா இந்த அளவுக்குத் தேறுவானு நானும் ஜானும் நினைக்கவே இல்லை. நீ தேவதை மாதிரி வந்தே!’’ மார்கரீட்டா சரேலென்று நிமிர்ந்தாள். ‘`வேண்டாம் டாரத்தி... எதுவும் சொல்லாதே தயவுசெய்து.’’ டாரத்தி அவளைக் கூர்ந்து பார்த்தாள். ``லாராவுக்கு சூட்சுமம் உண்டு தெரியுமோ? நம்ம மனநிலையை எப்படியோ புரிஞ்சுக்கிற சக்தி அவளுக்கு இருக்கு.’’ மார்கரீட்டா வெகுநேரம் எதுவும் சொல்லவில்லை. தேநீர் கோப்பையைக் கழுவி வைத்து, லாராவைக் கழிவறைக்கு அழைத்துச் சென்று உள்ளாடையை மாற்றி, இரவுக்கான ஆடையை அணிவித்து, படுக்கையில் படுக்க வைத்தாள். அவள் கிளம்பும்போது லாரா அவள் கையைப் பிடித்தாள். ``நீ நல்ல பெண்ணா?’’ என்றாள். இன்று காரணம் புரியாமல் அடிவயிறு துவண்டது. ``தெரியலை லாரா...’’ என்றாள் மெள்ளப் புன்னகைத்து. பிறகு, ‘`நல்ல பெண்ணுனுதான் நினைக்கிறேன்.’’ ‘`அப்ப அழாதே...’’ மார்கரீட்டா அவளது கையைப் பற்றி முத்தமிட்டாள். ``மாட்டேன்... அழமாட்டேன்.’’ லாரா எதுவும் பதில் சொல்லாமல் கண்களை மூடிக்கொண்டாள். ``எனக்குத் தூங்கணும்’’ என்று முணுமுணுத்தாள். மார்கரீட்டா மெள்ளக் கதவை லேசாகச் சாத்திவிட்டு வெளியே வந்தாள். டாரத்தி யாருடனோ தொலைபேசியில் பேசிக்கொண்டி ருந்தாள். குரலில் படபடப்பு தெறித்தது.கலிஃபோர்னியா குண்டுவெடிப்பு விஷயம். மாகி கையசைத்து `போய்வருகிறேன்’ என்று சைகை காட்டிக் கிளம்பினாள். வண்டியில் ஏறி அமர்ந்ததும் டாரத்தியின் உணர்ச்சிவசப்பட்ட முகம் நினைவில் நின்றது. மீண்டும் அடிவயிற்றைப் பீதி கப்பென்று பிடித்துக்கொண்டது. கடவுளே ஏன் இப்படி பூதங்கள் துரத்துகின்றன... என்ன ஆகிவிட்டது மனிதர்களுக்கு... என்ன தேவை அவர்களுக்கு? எங்கேயோ கோளாறு இருப்பதாகத் தோன்றிற்று. என்ன அது என்று புரியவில்லை. அவள் செல்லும் சர்ச்சில் இருக்கும் பாதிரிகளுக்குத் தெரியவில்லை. `யாருக்கும் இப்போது நம்பிக்கை இல்லை’ மார்கரீட்டா என்றார் ரெவெரண்ட் ஜோசஃப் முன்பு... அதாவது 15 ஆண்டுகளுக்கு முன்பு. நல்லவேளை இன்று அவர் உயிரோடு இல்லை. நேற்றைய சரமாரி குண்டுவெடிப்புக்கு, அதுவும் கேளிக்கைக்காக வந்திருந்த 15 அப்பாவி உயிர்கள் இரையானதற்கு மதவெறியர்கள் காரணம் என்றார்கள். மதமோ, பித்தோ, அதற்குப் பின்னால் இருப்பது ஒரு வெறி. கோபம். கோபத்தின் காரணம் புரியவில்லை. மனுஷனின் இயல்பு மாறிப் போச்சா, பிறக்கும்போதே கோபத்துடன் பிறக்கி றோமா அல்லது அது பின்னால் பதியும் படிமங்களா, எதை சமாதானப்படுத்தத் துடிக்கிறது அந்த வெறி? அதற்கு மன்னிப்பு உண்டா? ‘எனக்குத் தெரியாது’ - லாரா புரிந்து சொன்னாளா... புரியாமல் சொன்னாளா? டாரத்தியின் முகம் மீண்டும் நினைவுக்கு வந்தது. அவள் முகத்தில் தெரிந்த கோபம். அதைப் புரிந்துகொள்ள முடிந்தது. இன்றுதான் டாரத்தி உண்மையாகத் தெரிந்தாள். 15 ஆண்டு பழக்கத்தில் இன்று புதிதாக அதை மார்கரீட்டா உணர்ந்தாள். அது ஆச்சர்யமான சமாதானத்தை ஏற்படுத்தியது. எந்தத் துணிவில் அவளைப் பார்க்கப்போனோம் என்று இன்று நினைத்துப்பார்க்கும்போது, ஆச்சர்யமாக இருந்தது. அன்று அவள் வழக்கமாகச் செல்லும் ரொட்டிக் கடையில் கூட்டம் இருந்தது. கடந்த ஒரு வாரத்தில் ஏற்பட்டிருந்த நிகழ்வுகளில் அவளுக்கு 10 வயது கூடிவிட்டிருந்ததாகச் சோர்வு அழுத்திற்று. அங்கு ஓரமாக இருந்த பெஞ்சில் அவள் அமர்ந்துகொண்டு கண்களை மூடிக்கொண்டாள். ``பாவம் டாரத்தி. டாக்டர் சொல்லிட்டாராம்... `பெண்ணுக்கு மூளை வளர்ச்சி பாதிக்கும்’னு. `வீட்டிலேயே இனிமேல் பார்த்துக்குங்க’ என்று சொல்கிறாராம். ஜானும் அவளும் வேலைக்குப் போகணும். இல்லைன்னா மருத்துவச் செலவை எப்படிச் சமாளிக்கிறது? செவிலியை வைக்கிறதும் பெரிய செலவு. எத்தனை கஷ்டம் பாரு! ரொம்பச் சந்தோஷமான குடும்பம். இப்படி எல்லாம் நடக்கும்னு யார் நினைச்சது?’’ ``நமக்குத் தெரிஞ்சது டாரத்தியைப் பத்தி.’’ ``இந்தக் குழந்தைதான் அடிபட்டும் பிழைச்சுது. மத்ததெல்லாம்...’’ மார்கரீட்டா ரொட்டியை வாங்கிக்கொண்டு வண்டிக்குள் அமர்ந்தாள். ஸ்டீயரிங் வீலில் முகத்தைப் புதைத்துக்கொண்டபோது மார்பு குலுங்கிக் கண்ணீர் வந்தது. `ஜார்ஜ் பணி செய்யும் இடத்துக்குச் செல்லலாமா?’ என யோசித்தாள். அவருக்கு அது பிடிக்காது. `என்ன செய்யட்டும் டாலி?’ டாலி பதில் சொல்லவில்லை. ஒரு பெருமூச்சுவிட்டபடி அவள் வண்டியைக் கிளப்பினாள். அந்தப் பெண்களின் பேச்சு சுழன்று சுழன்று அடித்தது. வண்டி தன்போக்கில் சென்றது. ஒருவழியாக நின்றபோது அவள் திடுக்கிட்டாள். எங்கே வந்து நிற்கிறோம் ? இப்போது நினைவுக்கு வந்தது... ஜார்ஜ் ஒருமுறை இந்த வீட்டைக் காண்பித்தார். ஜார்ஜ் அன்று பெரும் கலக்கத்தில் இருந்தார். ``வேண்டாம்... வேண்டாம். நம்மை அவர்கள் பார்ப்பதற்கு முன் போயிடலாம்...’’ பித்து பிடித்ததுபோல அவளும் ஜார்ஜும் மருத்துவமனையில் விசாரித்தார்கள்... ``எப்படி இருக்கிறாள் அந்தப் பெண்?’’ பிரமை பிடித்திருந்தது இப்போது. போகலாமா கூடாதா என்கிற கேள்வி எழவில்லை. அவள் அந்த வாசற்கதவை அடைந்து அழைப்பு மணியை அழுத்தினாள். இரண்டு முறை அழுத்திய பிறகு டாரத்தி கதவைத் திறந்தாள். அவளைக் கண்டு லேசாக அதிர்ந்தது தெரிந்தது. அவள் பேசுவதற்கு முன்னர் மார்கரீட்டா அவசரமாகச் சொன்னாள். ‘`தயவுசெய்து என்னைப் `போ’ என்று சொல்லாதீர்கள். உங்களுக்கு உதவ எனக்கு வாய்ப்பு அளியுங்கள். லாராவை நான் பார்த்துக்கொள்வேன். செவிலியாக நான் பணியாற்றி இருக்கிறேன்.’’ டாரத்தி திடுக்கிட்டாற்போல் இருந்தது. “ ஆனால்...” “எனக்கு ஊதியம் வேண்டாம். தயவுசெய்து என்னை நம்புங்கள். சர்ச்சில் ரெவெரண்ட் ஜோசஃபிடம் வேண்டுமானால் என்னைப் பற்றி கேளுங்கள். பிறகு எனக்கு நீங்கள் போன் செய்யுங்கள்.” அவளுடன் சேர்ந்து ஜார்ஜும் காத்திருந்தார். போனில் வரும் அழைப்புக்காக... இரண்டு நாட்கள் கழித்து வந்தது. வண்டியின் கடிகாரம் ஏழு மணி ஓசை எழுப்பியது. `டாலி... இதோ கிளம்பலாம்’ என்றாள் அது கேட்டு பதில் சொல்வதுபோல. வண்டி தன்னைப்போல் ஓடியது. தானாகவே வீட்டின் முன் நின்றது. அவள் தன்னுள் மூழ்கிய யோசனையுடன் காரேஜ் பொத்தானை அமுக்கி நுழைந்து, பிறகு மூடி காரைப் பூட்டி வீட்டுக்குள் நுழைந்தாள். இன்று தொலைக்காட்சி பக்கமே போகக் கூடாது என்கிற வைராக்கியத்துடன் தனது எளிய சாப்பாட்டை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து சூடாக்கிச் சாப்பிட்டுவிட்டு, ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு படுக்கச் சென்றாள். புத்தகத்தில் கண்கள் பதியவே இல்லை. மனசு தட்டாமாலையாகச் சுழன்றது. இன்று மிகப் பெரிய தனிமை உணர்வு அவளை ஆட்கொண்டது. ஐந்து வருஷங்களுக்கு முன்னர் எந்த முகாந்திரமும் இல்லாமல் இறந்துபோன ஜார்ஜின் நினைவு அலைக்கழித்தது. அந்த மாதிரி ஒரு முடிவு வந்தால் நன்றாக இருக்கும். ஆனால், அதற்கு முன் மனத்தில் இருக்கும் பாரத்தை இறக்க வேண்டும். தூக்கமும் விழிப்புமாக, கனவும் நனவுமாக நகர்ந்த தூக்கம் அதிகாலையில் முழுவதுமாக விழித்துக்கொண்டது. டாரத்தியின் கைபேசி எண் ஒலித்தது. ‘`லாராவுக்கு ராத்திரியில் இருந்து ஜுரம் மாகி. மருத்துவமனையிலே சேர்க்கவேண்டியதா போச்சு.” - டாரத்தி முடிப்பதற்கு முன் அவள் சொன்னாள். `‘இப்பவே வர்றேன்’’ - பதற்றத்துடன் தயாராகிப் புறப்பட்டாள். `என்ன ஆகிவிட்டது லாராவுக்கு? நேற்றுகூட நன்றாக இருந்தாளே? டாலி வம்பு செய்யாமல் அவளை மருத்துவமனை வாசலில் கொண்டு நிறுத்திற்று. லாரா கண் மூடிப் படுத்திருந்தாள். பிராணவாயுக் குழாய் பொருத்தப்பட்டிருந்தது. மார்கரீட்டாவைக் கண்டதும் டாரத்தியின் முகத்தில் நிம்மதி தெரிந்தது. `‘திடீரென்று மூச்சுத்திணறல் மாதிரி இருந்தது. இங்க வரவேண்டியதாயிட்டது.” ‘`நல்ல காரியம் செய்தீர்கள். நீங்க ரெண்டு பேரும் போய் ஓய்வெடுத்து அப்புறம் வாங்க. நான் இங்கேயே இருப்பேன். கவலைப்படாதே டாரத்தி’’ என்றாள் மார்கரீட்டா. ‘`தாங்க்யூ மாகி. உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே...’’ ‘`உஷ்... கிளம்பு.’’ லாரா கண் விழிக்காமல் படுத்திருந்ததைப் பார்த்துக் கலக்கமாக இருந்தது. தன்னிச்சையாக தலை அசைந்த வண்ணம் இருந்தது. 21 வயது நங்கை. ஐந்து வயது மூளை வளர்ச்சியில் தேங்கிவிட்ட குழந்தை. அவளுடைய லாரா. 15 ஆண்டு காலமாக அவளது பராமரிப்பில் பிழைத்து மீண்ட லாரா.மூளை ஐந்து வயதில் நின்றாலும், உடலின் பருவ மாறுதலுக்கு உள்ளானதை உணராத யுவதி. நம் மனநிலையைப் புரிந்துகொள்ளும் சூட்சுமம் அவளுக்கு உண்டு என்கிறாள் டாரத்தி. உண்மையா? மருத்துவர்கள் ஏதோ பரிசோதனை செய்தவண்ணம் இருந்தார்கள். அவள் திரும்பத் திரும்ப அவர்களைக் கேட்டாள். ‘சரியாகிவிடுவாளா?’ அவர்கள் பதில் சொல்லவில்லை. இரவு அவள் மருத்துவரின் அனுமதியுடன் லாரா இருந்த அறையிலேயே தங்கினாள். ஒரே ஒரு பிரார்த்தனையுடன் லாராவின் கையை வருடியபடி அவள் இருந்தாள். எனக்கு ஒரு வாய்ப்பு வேண்டும் . லாராவுக்கு உள்ளுணர்வு இருக்குமா? லாரா... லாரா... அவள் லாராவின் கையைப் பிடித்தபடி உடல் குனிந்து முகத்தை கட்டிலின் விளிம்பில் கவிழ்த்துக்கொண்டாள். கவிழ்ந்த இருளில் காலை நேரம் தெரிந்தது. டாம் எதிரில் நின்றான். ‘`பை மாம்!’’ அவனுடைய முத்தம் இன்னும் நினைவிருக்கிறது. மென்மையான உதடுகள். அவன் எங்கோ கிளம்பிப்போனான். அவன் முதுகைப் பார்த்து ‘பை’ என்றாள் பதிலுக்கு. ஜார்ஜ் பணிக்குச் சென்றதும் அவளும் தான் வேலைபார்க்கும் கடைக்குக் கிளம்பினாள். செல்லும் வழியில் ஒரு பள்ளி. கலகலவென்று உற்சாகமாகக் காட்சி அளிக்கும். வெள்ளையும் நீலமுமான சீருடையில் சிறுவர்கள் சிறுமியர்கள். முன்பு டாம் படித்த பள்ளி. அதைத் தாண்டும்போது எல்லாம் மனசில் ஒரு மகிழ்ச்சி பூக்கும். இன்று காட்சி வேறாக இருந்தது. கும்பலும் வாகன நெரிசலுமாக இருந்தது. பிறகுதான் போலீஸ் தலைகள் தெரிந்தன. பல பெற்றோர்கள் கவலையுடன் நின்றிருந்தார்கள். ஓலங்கள் கேட்டன. ஒருவரை ஒருவர் அணைத்து அழுதபடி, சில இளம் பெண்கள் நின்றிருந்தார்கள். அவள் பீதியுடன் வண்டியை ஓரமாக நிறுத்தினாள். கண்ணாடியை இறக்கி ‘என்ன இங்கே?’ என்றாள் அங்கு நின்றிருந்த பெண்மணியிடம். ‘`யாரோ ஒரு கிறுக்கன் ஸ்கூலுக்குள்ளே நுழைஞ்சு சரமாரியா சுட்டிருக்கான்.’’ ‘`கடவுளே... அவன் பிடிபட்டானா?’’ `‘செத்துட்டான். போலீஸ் பிடிச்சு சுட்டது.’’ ‘`கடவுளே!’’ ‘`பாவி... எத்தனை குழந்தைகள், நானே எட்டு சடலத்தை எண்ணினேன். மூணு மருத்துவமனைக்குக் கொண்டுபோனார்கள். அதுவும் பிழைக்குமோ என்னவோ...’’ ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டிருந்த உடல்கள். நீலச் சீருடை சிவப்பேறி... மார்கரீட்டா லாராவின் கையைப் பிடித்தபடி விசித்து விசித்து அழுதாள். `லாரா நீ ஒருத்திதான் பிழைச்சே. ஆனால் குண்டடி பட்டதிலே மூளையைத் தாக்கிவிட்டது’. லாராவின் கையைப் பிடித்த விரல்கள் நடுங்கின. லாரா அந்தச் சண்டாளன் என் மகன். டாம். சாதுவா இருந்தவன். அவனுக்குள்ள ஒரு பூதம் இருந்தது எனக்கு சத்தியமாத் தெரியாது. எனக்கு ஒண்ணுமே புரியல்லே. அவனைப் பெத்தவ. எங்கே தவறினேன்னு தெரியல்லே. ஸாரி... ஸாரி. காலையில் கண் விழித்தபோது லாரா அவளையே பார்த்தபடி இருந்தது இனம்புரியாத நெகிழ்ச்சியை அளித்தது. அவள் கையைப் பற்றி, ‘`எப்படி இருக்கே பேபி?’’ என்றாள். லாரா அவளைக் கூர்ந்துபார்த்து, ‘`அழாதே’’ என்றாள். ‘`இல்ல... அழலே...’’ . ‘`லவ் யூ மாகீட்டா’’ என்றாள் லாரா. நான் சொன்னது காதில் விழுந்ததா? புரிந்து சொல்கிறாளா புரியாமல் சொல்கிறாளா? தெரியவில்லை. ஆனால் மனசில் பாரம் குறைந்திருந்தது. அன்று வீட்டுக்்குக் கிளம்பும்போது ஸ்டீயரிங் வீல் கைகளில் மிக லகுவாக இருந்தது. தன்னிச்சை யாக அது நகர்ந்தபோது, அது கையோடு வந்ததை உணர்வதற்கு அவளுக்கு அவகாசம் கிடைக்காமல்போனது. விவரம் அறிந்து விரைந்த மெக்கானிக் டேவிட் தலையை அசைத்து முணு முணுத்தான்... `` `குப்பையிலே போடவேண்டிய வண்டி’ என்று சொல்லிக் கொண்டே இருந்தேன்.’’ http://www.vikatan.com/anandavikatan
 7. சலனம்! - சிறுகதை கமலி பன்னீர்செல்வம், ஓவியம்: பிரேம் டாவின்ஸி மணி ஐந்தைத் தொட மூன்று நிமிடம் இருந்தது. கம்ப்யூட்டர் திரையைச் சுருக்கிவிட்டு தன் இருக்கையில் இருந்து எழுந்து ரெஸ்ட் ரூம் சென்றாள் மேரி. மீண்டும் தன் இருக்கைக்கு வரவும், மணி ஐந்தாகவும் சரியாக இருந்தது. ``மணி அஞ்சாய்டுச்சுனா டான்னு கிளம்பிடுங்க” என்று சற்றே நக்கல் கலந்த தொனியில் மேனேஜர் கோவிந்தராஜ் சொல்ல, மேரி பல்லைக் கடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள். கோப்புகளில் இல்லாத பிழைகளை அவர் பொறுப்பாகத் தேடிக் கொண்டிருந்தார். கோவிந்தராஜுக்கு வயது 63. பிள்ளைகள் இருவரும் மேற்படிப்புக்காக வெளியூரில் தங்கி இருக்க, மனைவி வேறு ஒரு நிறுவனத்தில் உயரதிகாரியாக பணிபுரிகிறார். மனைவி வீடு திரும்ப நேரமாகும் என்பதால், இவர் இங்கேயே ஏழு மணி வரை உட்கார்ந்து ஏதாவதொரு புதிய நிறுவனத்துக்கு யோசனைகளும், தனிப்பட்ட புகார்களும் எழுதிக்கொண்டோ, நெட்டில் ஏதாவது தேடிக்கொண்டோ இருப்பார். மேரி மெதுவாக, “சார் ட்ரெயின் போயிடும், இதை விட்டா அடுத்த ட்ரெயின் அரை மணி நேரம் கழிச்சுதான்” என்றாள். சொன்னவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ``சரி...சரி போ நாளைக்கு கொஞ்சம் வேலை நிறைய இருக்கு. வீட்டுக்குப் போக லேட்டாகும். போர்டு மீட்டிங்குக்கு ரிப்போர்ட் தயார் செய்யணும்” என்றார். வேகமாக நன்றி சொல்லிவிட்டு கைப்பையை எடுத்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாக வெளியே வந்தாள் மேரி. இந்த முப்பத்தைந்து வயதில் காலையும் மாலையும் ஓடவேண்டி இருப்பது சற்று சிரமமாகத்தான் இருந்தது. ஆனாலும், பொருளாதார ஓட்டம் ஓடியே ஆகவேண்டும். இவள் சென்று நிற்கவும், ட்ரெயின் வரவும் சரியாக இருந்தது. பெண்கள் கம்பார்ட்மென்ட்டில் தன்னைத் திணித்துக்கொண்டு உள்ளே சென்றாள். ஆசுவாசமுடன் இடம் தேடி பையில் இருந்த அவள் விகடனை வாசிக்கத் தொடங்கினாள். நிறுத்தம் வந்தவுடன் இறங்கி, வீட்டுக்கு வரும் வழியில் காய்கள் வாங்கிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்து வேலைகளை ஆரம்பித்தாள். இரவு சாப்பாடு முடிந்து படுக்கைக்கு செல்லும் முன் கணவன் சுந்தரிடம், ``நாளைக்கு நான் வர லேட்டாகும்ப்பா. நீ சீக்கிரம் வந்துடுறியா?'' என்று சொல்ல, ``சரி, நான் பர்மிஷன் போட்டுட்டு வர்றேன்” என்று பதில் வந்தவுடன் `அப்பாடா’ என்றொரு நிம்மதி பரவியது. நாளைய கவலையை ஒத்திவைத்துவிட்டு மெள்ள கண் அயர்ந்தாள். விடிந்ததும் அரக்க பரக்க எல்லா வேலைகளையும் முடித்து, ஓட்டமும் நடையுமாக வந்து ட்ரெயின் பிடித்து அலுவலகத்துக்கு சரியான நேரத்துக்கு வந்தாள்.வேலையில் மூழ்கிய மேரிக்கு பதினோரு மணிக்கு டீ வரும்போதுதான் நிமிரவே முடிந்தது. மாலை ஐந்தடிக்க ஒவ்வொருவராக புறப்பட்டார்கள். எல்லாரும் சென்ற பின், ``இது கொஞ்சம் சீக்ரெட் ஃபைல். அதான்...” என்று அவள் அருகில் அமர்ந்து டிக்டேஷன் கொடுக்க ஆரம்பித்தார் கோவிந்தராஜ். வேலை முடியவும் அட்டெண்டர் டீ, பிஸ்கட் வாங்கி வரவும் சரியாக இருந்தது. மூவரும் சாப்பிட, மணி ஆறரையைத் தாண்டி இருந்தது. டீ தந்த தெம்புடன் மெள்ள எழுந்து ``கிளம்புகிறேன் சார்” என்றாள். ``இரு... போற வழியில் நானே ட்ராப் பண்ணிடறேன்” என்றார் கோவிந்தராஜ். ட்ரெயின் கூட்டத்தில் இடிபடாமல் செல்லலாம் என்ற சின்ன சந்தோஷம் மனதுக்குள் எட்டிப் பார்க்க `சரி' என்றாள். கார் கதவை முன்னால் திறந்துவிட்டார். அலுவலக வேலை, வீடு, பிள்ளைகள் படிப்பு, கணவர் என்று பேச்சைத் தொடர, மேரியும் பதில் சொல்லிக்கொண்டே வந்தாள். கார் மெயின் ரோட்டைத் தொட்டது. ``மேரி... ஸீட் பெல்ட் போட்டுக்கோம்மா” என்றார். அவள் ஸீட் பெல்ட் போட முடியாமல் தடுமாற, ``கொஞ்சம் இரு... நானே போட்டுவிடுறேன்'' என்று மெல்ல ஸீட் பெல்ட்டை மாட்டிவிட்டார். மாட்டும்போது அவர் கையின் நடுக்கமும் தொடுஉணர்வும் மேரியை சட்டென துணுக்குற வைத்தது. உடனடியாக, `ச்சே... அப்படி எல்லாம் இருக்காது... இதுவரை ஒரு பார்வை தப்பா பார்த்ததில்லை, ஒரு வழிசல் இல்லை. அவருக்கு என்ன வயசு, நமக்கு ஏன் இவ்ளோ அல்பபுத்தியா இருக்கு' என்று தன்னையே கடிந்துகொண்டாள். ஒரு வாரம் சுமுகமாக ஓடியது. அடுத்து வந்த ஒரு நாள் அலுவலகத் தோழியின் திருமணத்துக்குச் சென்று திரும்பும்போது ``வா... என் கார்லயே ஆபீஸ் போயிடலாம்” என்று கோவிந்தராஜ் கூப்பிட, மேரி சற்று தயங்கி, பின்னர் ஏறிக்கொண்டாள். கார் சிறிது தூரம் கடந்திருக்கும். ஸீட் பெல்ட் மாட்ட அவர் கையை கொண்டு வர சில விநாடிகளில் இம்முறை அவரின் தடுமாற்றம், அவர் கை பட்ட இடம் பட்டென மேரிக்கு புரிந்தது. ``கையை எடுங்க சார்... நானே மாட்டிக்கிறேன்” என வெடுக்கென சொல்லி அவரை பார்க்க, அவர் பார்வையை வேறு பக்கம் திருப்பி இருந்தார். மனதுக்குள் குறுகுறுப்பு மேரிக்கு... `என்ன ஆயிற்று இவருக்கு? எது இவரை இப்படி தூண்டியது? நாம் இவரிடம் ஏதேனும் சலுகை எடுத்துக்கொண்டிருக்கிறோமா? பேச்சில், உடையில் ஏதாவது சலனப்படுத்தி இருக்கிறோமா? இல்லை... ஏதாவது அட்வான்டேஜ் எடுத்துக்கொள்ள அனுமதித்திருக்கிறோமா? இந்த செக்‌ஷன் வந்து ஆறு வருடமாகிறது. ஒரு நாள்கூட ஒரு பார்வையோ, பேச்சில் வழிசலோ இருந்ததில்லை. இப்போது ஏன்?' - கேள்விகள் ஒன்றின் மேல் ஒன்றாக தோன்றி எல்லாவற்றையும் மனம் அசை போடத் தொடங்கியது. ஒன்றுமே புரியவில்லை. உள்ளுக்குள் மிகவும் சோர்ந்து போனாள். விறுவிறுவென தன் இருக்கை சென்று அமர்ந்தவள், மிகுந்த குழப்பத்துடன் கம்ப்யூட்டரை உயிர்ப்பித்தாள். கோவிந்தராஜ் அவர் இருக்கையில் அமைதியாக அமர்ந்தார். யாரையும் பார்க்க வில்லை. ஃபைலில் தன்னைப் புதைத்துக்கொண்டார். டீ பிரேக்கின் போது விமலா விடம் மட்டும் சொல்வோம் என்று நினைக்க, அவள் கணவன் சுந்தரி டம் இருந்து மொபைல் அழைப்பு. ``என்ன சரியான நேரத்துக்கு ஆபீஸ் போயிட்டியா?” என்று கேட்க, கணவனிடம் மெள்ள விஷயத்தைச் சொன்னாள். ``நீ இப்போ யார்கிட்டயும் எதுவும் பேசாத... ஆபீஸ் வேலையை மட்டும் பார்... வீட்டுக்கு வந்து பேசிக்கலாம்'' என்றான் சுந்தர். மாலை எப்போதும்போல அலுவலகம் முடிந்த பின், இவள் செல்வதற்கு அனுமதி கேட்க, தலையை நிமிர்த்தாமலே கோவிந்தராஜ் `சரி' என்றார். இருவருக்கும் இடையில் நூற்கண்டில் சிக்கிய முடிச்சு போல அடி நுனி புரியாமல் வார்த்தைகள் சிக்குண்டு கிடந்தன. சிந்தனை எங்கெங்கோ இருந்தாலும் பழக்கப் பட்ட பாதை அவளை வீட்டில் கொண்டு வந்து நிறுத்தியது. சுந்தர் வேலை முடிந்து வந்தான். மனைவியின் நிலை புரிந்து, அவளுக்கு டீ போட்டுக் கொடுத்து, தானும் அவள் பக்கத்தில் உட்கார்ந்தான். ``மொட்டைமாடிக்குப் போகலாம் வா” என்று அழைத்தான். ``நான் என்ன செய்யறதுனே தெரியல” என்று அவளின் எல்லா குழப்பங்களையும், மன உளைச்சலையும் கொட்டிவிட்டு அவன் நெஞ்சில் சாய்ந்தாள். மெள்ள அவள் தலையைக் கோதிவிட்ட சுந்தர், “இது ஒரு பெரிய பிரச்னையே இல்லைடா. எங்கே போனாலும் இந்த மாதிரி சிக்கல்களைச் சமாளித்துதான் ஆகணும். இதற்கு முன் உனக்கு இந்த அனுபவம் இல்லாததால் குழம்பிப் போயிட்ட... அவ்வளவு தான். உன் மேனேஜரும் மோசமான ஆள் இல்லை. இவ்வளவு நாட்கள் எதுவும் பேசியதில்லை... எந்த ஒரு எதிர்மறை விஷயமும் பார்த்ததில்லை. அப்படின்னா, ஏதோ அந்த நொடி சபலத்தில்தான் நடந்திருப்பார். அப்படி நடந்து கொண்டதற்கு அவரே அவரை நொந்துகொண்டுதான் இருப்பார். நீ இப்போது நடந்துகொள்ளும் விதத்தில்தான் இந்தப் பிரச்னை ஒன்றுமில்லாமல் ஆவதும் பெரிதாவதும். நாளை அவரிடம், `சார், நேற்று நடந்தது ஏதோ அந்த நிமிட நிகழ்வு. திட்டமிட்டு எல்லாம் நீங்கள் செய்யலைன்னு எனக்கு தெரியும்... மறந்துடுவோம், அது பத்தி நான் யாரிடமும் எதுவும் சொல்ல மாட்டேன். ஆனால், இனி நாம இருவரும் மட்டும் சேர்ந்து வேலை செய்யவோ, பயணிக்கவோ வேண்டாம். நீங்களும் தேவையில்லாத குற்ற உணர்வுக்கு ஆளாக வேண்டாம். அப்படியே விட்டுடுவோம். எப்பவும் போல இருப்போம்' என்று சொல்லிவிடு. பிரச்னையே இல்லாத வாழ்க்கை இல்லை மேரி. அடுத்த பிரச்னை வரும்போது என்ன செய்வது என்று அப்போது யோசிக்கலாம். இப்போது நல்லதே நினைப்போம். இப்போ இதைச் செய்...'' என்று அவளை அணைத்துக் கொண்டான். கோவிந்தராஜின் சலனத்துடன் சேர்த்து மேரியின் சலனத்துக்கும் தீர்வு கிடைத்திருந்தது!
 8. உதிரிப்பூக்கள் - சிறுகதை தமிழ்மகன் - ஓவியங்கள்: ஸ்யாம் ‘‘மத்தவங்கள்லாம் வரலையா?” - அனுஷா கதவைத் திறந்தவுடன் பிரகாஷ் கேட்டான். ‘‘மொதல்ல உள்ள வா. எல்லாரும் வர்ற நேரம்தான். வந்ததும் வராததுமா ‘எப்படி இருக்கே’னு கேட்கத் தோணுதா உனக்கு?” “எப்படி இருக்கே அனு? பார்த்து ரொம்ப நாளாச்சு.” ‘இப்ப கேளு ட்யூப் லைட்... மர மண்டை’ -நினைத்ததைச் சொல்லாமல் அடக்கிக் கொண்டாள். அவளை சந்தோஷத்துடன் பார்த்தான் பிரகாஷ். ஜீன்ஸ் பேன்ட் சர்ட்டில் இன்னமும் கல்லூரிப் பெண்போலத்தான் இருந்தாள். நிறம்கூட கல்யாணத்துக்குப் பிறகு இன்னும் மினுமினுப்பாக மாறியிருந்தது. அனுஷாவின் பின்னாலே நடந்து, அவள் சோபாவில் அமர்ந்ததும் அவளுக்கு எதிரே இருந்த ஓர் ஒற்றை இருக்கை சோபாவில் அமர்ந்தான். பெரிய ஹால். இடது பக்கத்தில் சமையல்கூடம் தெரிந்தது. வலது பக்கம்... படுக்கை அறையாக இருக்க வேண்டும். அனுஷா உட்கார்ந்திருந்த சோபாவுக்குப் பின்னால் பால்கனியும் அதை ஒட்டி ட்ரெட்மில் ஒன்றும் இருந்தது. ‘‘வீடு நல்லாருக்கு. உங்க ஹஸ்பெண்ட் இல்லையா?’’ பிரகாஷ் வீட்டை அளந்து முடிக்கிற வரை அவனையே பார்த்துக்கொண்டிருந்த அனுஷா ‘‘இல்ல’’ என்றாள். மீண்டும் பால்கனி வழியே கடலைப் பார்க்க ஆரம்பித்திருந்த பிரகாஷ், அவள் எதற்காக ‘இல்ல’ என்றாள் என்பதை, அவன் கேட்ட கேள்வியை நினைவுபடுத்திப் புரிந்துகொள்ள வேண்டியிருந்தது. வீட்டை ஆச்சர்யமாகப் பார்த்தபடி இருந்தான். நினைவுச் சிதறல்கள்... என்ன பேசுகிறோம் என்பதில் அவனுக்கே பிடிமானம் இல்லை. ``பொண்ணு எங்கே?” என்றான் திடீரென நினைவு வந்த பாவனையில். அனுஷா அவனையேதான் பார்த்துக்கொண்டி ருந்தாள். ‘‘பாட்டி வீட்டுக்குப் போயிருக்கா” என அவள் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிவிட்டு, `வேறு என்னதான் பேசுவான்?’ என அவன் சங்கடங்களை ரசித்தாள். `நல்லவனாக இருப்பது நல்லதா?’ என ஓர் ஏடாகூடமான கேள்வி அவளுக்கு உதித்தது. நல்லவனாக இருப்பதில்தான் எவ்வளவு இழப்புகள்? இழப்பு அவனுக்கா... அவளுக்கா? எத்தனை சந்தர்ப்பங்கள்... ஒருமுறையாவது நம்மைப் புரிந்துகொண்டிருக்கலாம் என நினைத்துப்பார்த்தாள். என்ன இந்தக் கடற்கரை வீடும் காரும் இல்லாமல்போயிருக்கும். ஒவ்வொரு அன்புக்குப் பின்னாலும் எத்தனை காரணங்கள் ஒளிந்திருக்கின்றன? காதல், காமம், ஆதாயம், பிரதிபலன் எதுவுமே தேவையிருக்காதா இவனுக்கு? அன்புக்குப் பதிலாக அன்பு மட்டுமேவா, இவன் நல்லவனா... அப்பாவியா, இந்த லட்சணத்தில் `சினிமாவில் சேர்ந்து ஜெயிக்கப்போகிறேன்’ என்ற கனவு வேறு...' வெகுநேரமாக மௌனம் மட்டுமே அந்த இடத்தை ஆக்கிரமித்திருப்பதைச் சுதாரித்த நொடியில், சமையல்கட்டைப் பார்த்து, ‘‘லஷ்மி’’ எனக் குரல்கொடுத்தாள். அங்கு இருந்து ஒரு பெண்மணி சொல்லிவைத்ததுபோல, ஒரு பேப்பர் பிளேட்டில் பர்கரையும் தண்ணீரையும் கொண்டுவந்து வைத்துவிட்டு, அடுத்த விநாடியே சமையல் அறைக்குள் மறைந்துவிட்டார். சொல்லிவைத்ததுபோல அல்ல... சொல்லிவைத்தபடி என நினைவைத் திருத்தினான் பிரகாஷ். மூன்றாவதாக இன்னோர் ஆள் இருப்பது, பிரகாஷுக்கு ஏனோ இறுக்கத்தைக் குறைத்தது. ‘‘உங்க வொய்ஃப் எப்படி இருக்காங்க?” “நல்லாயிருக்காங்க.” கேள்வி, பதில் இரண்டுமே வெகுசம்பிரதாயமாக இருந்தன. மற்ற நான்கு பேரையும் 12 மணிக்கு வரச் சொன்னவள், பிரகாஷை மட்டும் 11 மணிக்கே வரச் சொன்னது, அவன் அந்த ஒரு மணி நேரத்தில் எப்படி எல்லாம் நினைக்கிறான், தடுமாறுகிறான், சங்கடப்படுகிறான், நெளிகிறான் என ரசிப்பதற்காகத்தானா என, அனுஷாவும் இப்போது அவனை உற்றுப் பார்க்கும்போதுதான் உணர்ந்தாள். ஐந்து பேருமே திரைப்படக் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். அனுஷா டாக்டருக்கு வாழ்க்கைப்பட்டு சினிமா பார்ப்பதோடு தன் திரைக்கலையை நிறுத்திக்கொண்டவள். பிரகாஷ் இன்னமும் உதவி இயக்குநர் படியில் ஜான் - முழம் என சறுக்குமரம் ஆடிவருபவன். இன்னும் கொஞ்ச நேரத்தில் வர இருக்கிற திவ்யாவும் மணியும் விளம்பரப்பட கம்பெனியில் வேலை பார்க்கிறார்கள். அசோக் ஒரு டி.வி சேனலில் இருக்கிறான். ‘‘எப்படிப் போகுது வேலை?’’ ‘‘டிஸ்கஷன் போய்க்கிட்டிருக்கு. லவ் ஸ்டோரி. இப்ப கொஞ்சம் தெளிவாகிட்டேன். இனிமே மரமண்டையா இருக்க மாட்டேன்.’’ ‘‘நான் உன்னை ஹர்ட் பண்ணணும்னு எதையும் சொல்லலை. என்னமோ அந்த நேரத்தில அப்படிப் பொங்கிட்டேன்.'' ``நீ சொல்லாமயே இருந்திருக்கலாம்...'' என்றவன், ``நீ சொன்னது ஒருவகையில நல்லதுதான். இப்பல்லாம் நான் கவனமா இருக்கேன். வார்த்தையில் மட்டும் டபுள் மீனிங் இல்லை... வாழ்க்கையிலும் டபுள் மீனிங் இருக்குனு தெரியவெச்சுட்ட.'' ``என்னென்னவோ பேசுறே. எனக்குத்தான் ஒண்ணும் புரிய மாட்டேங்குது'' எனப் பொய்யாக அலுத்துக்கொண்டாள் அனுஷா. ``பெருமையா இருக்கு'' என பிரகாஷ் தோளைக் குலுக்கினான். ``சரி... நீ சினிமாவுக்குப் பண்ணிவெச்சிருக்கிற கதையைச் சொல்லு.’’ சொல்லிச் சொல்லி மனதில் ஒரு திடப்பொருள் போல மாறிவிட்ட அந்தக் கதையின் அவுட் லைனை சில வரிகளில் சொல்ல முனைந்தான் பிரகாஷ். ‘‘படம் ஒரு கல்யாணத்திலதான் ஸ்டார்ட் ஆகுது. ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேருக்குமே விருப்பம் இல்லாத கல்யாணம். குடும்ப வற்புறுத்தலால் கல்யாணம் நடக்கிறது. ஃபர்ஸ்ட் நைட்ல ரெண்டு பேரும் வேறு ஒருவரைக் காதலிப்பதாகச் சொல்றாங்க. இருவரும் அவரவர் காதல் ஜோடியுடன் இணைய விருப்பமா இருப்பதைத் தெரிவிக்கிறாங்க. குடும்பச் சச்சரவுகள் நீங்கும் வரை ஒரே வீட்டில் இருப் பதாக முடிவெடுக்கிறார்கள். ஜென்டில்மென் அக்ரிமென்ட்.’’ ‘‘ `ஜென்டில்’னாலும் `மென்’னாலும் ஒண்ணுதான். ஜென்டில்வுமன் அக்ரிமென்ட்னு சொல்லு.’’ ‘‘நல்லாருக்கு. படத்தில யூஸ் பண்ணிக்கிறேன். ரெண்டு பேரும் அவங்க ஜோடியைப் பார்த்தது இல்லை. ஃபேஸ் புக் லவ்வர்ஸ். ஃபேக் ஐடி-யில பழகினவங்க. கடைசியில பார்த்தா...’’ ‘‘இவங்கதான் அவங்களா?’’ ‘‘அதுக்குள்ள கண்டுபிடிச்சுட்ட... நான் சுருக்கமா சொன்னேன். இன்னும் நிறைய ட்விஸ்ட் இருக்கு.’’ ‘‘வேணான்டா... ஒரு நாள் கே-டி.வி பார்த்தவன் கூட இது பழைய கதைன்னு சொல்லிடுவான்.’’ பிரகாஷ் மௌனமாகிவிட்டான். ‘‘சாரிடா... அன்னைக்கு உன்கிட்ட பேசினதுக்கு சாரி சொல்லத்தான் கூப்பிட்டேன். மறுபடி இன்னொரு தப்பு பண்ணிட்டேன்.’’ ‘‘என் நல்லதுக்குத்தான சொல்றே. நான் இன்னும் கொஞ்சம் வொர்க் - அவுட் பண்றேன்.’’ ‘‘இல்லை... நான் இன்னைக்கு உங்க எல்லாரையும் கூப்பிட்டதே உன்னைக் கூப்பிடத் தான் பிரகாஷ். உன்னை மட்டும் கூப்பிட்டா வர மாட்டேன்னு தெரியும். அன்னைக்கு ரிசப்ஷன்லயே உன்னைப் பார்க்க முடியலை. நீ என்னை அவாய்டு பண்ற மாதிரி இருந்தது. அதுக்கு சாரி சொல்லத்தான் கூப்பிட்டேன். உன்னைப் பார்த்ததும் மறுபடி பழையபடி பேச ஆரம்பிச்சுட்டேன். ஐ அம் எக்ஸ்ட்ரீம்லி சாரிடா.’’ ஃப்லிம் இன்ஸ்ட்யூட்டில் இவர்கள் ஐந்து பேரும் பென்ச்மேட்டாக இருந்து, குறும்பு டீம் ஆக இருந்து, குறும்பட டீம் ஆகி, அந்த ஆண்டின் சிறந்த படம் என பாலுமகேந்திரா கையால் ஷீல்டு வாங்கி, சினிமா... சினிமா... சினிமா! `சில்ரன் ஆஃப் ஹெவன்’, அமரோஸ் பெரோஸ்’, பெர்க்மென், அகிரா, ழான் ரெனுவார்... பேச்சின் பெரும்பகுதி சினிமா சொற் களாக மாறியிருந்த காலம். அனுஷாவுக்கு அந்தச் சொற்கள் ஒவ்வொன்றாக நினைவுகளில் இருந்து உதிர்ந்துகொண்டிருப்பது நன்றாகவே தெரிந்தது. ``ரிசப்ஷன்ல திடீர்னு எங்க போனே நீ?''- அனுஷா கேட்டாள். மறக்க முடியாத அந்தத் திருமண ரிசப்ஷனை அனுஷா நினைவுபடுத்தினாள். திவ்யாவுக்கு ரிசப்ஷன் நடந்த அந்தத் திருமண மண்டபத்தில், இதேபோல அனுஷாவும் பிரகாஷும் சற்று முன்னதாகவே வந்துவிட்டால், தனியே அமர்ந்து பேசினர். இன்னிசைக் கச்சேரி. ஓர் ஆணும் பெண்ணும் பாடுவது சன்னமாகக் கேட்டுக்கொண்டிருந்தது. உருக்கமான காதல் பாடல். ‘நீ பார்த்தப் பார்வைக்கொரு நன்றி... நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி.’ ‘‘ஒவ்வொரு கல்யாண வீட்டிலும் ஒரு காதல் முறிக்கப்படுதுல?” - திடீரென ஆழ்ந்த குரலில் அனுஷா கேட்டாள். அது கேள்விபோல இல்லை. கேள்விக்குறியுடன் ஒட்டிப்பிறந்த பதில்போல இருந்தது. ‘‘ஒரு காதலா... பல காதல்கள். ஆட்டோகிராஃப் பார்த்தல?” - புத்திசாலித்தனமும் நினைவாற்றலும்கூடிய பதிலைச் சொல்லிவிட்டதாக பிரகாஷ் பெருமிதம் காட்டினான். ‘‘ஆனா நான் யாரையும் லவ் பண்ணவும் இல்ல. என்னையும் யாரும் பண்ண மாட்டாங்க. ஸோ... என் கல்யாணத்தில் எந்தக் காதலும் முறிய வாய்ப்பு இல்லை” எனத் தன்னிரக்கம் பொங்கச் சிரித்தான். அந்தப் பாழாய்ப்போன தன்னிரக்கத்தில் ஒரு தெனாவட்டு தெரிந்தது. அதுதான் அனுஷாவை ஆத்திரம் ஊட்டியது. கோபமும் கிண்டலும் கலந்ததொனியில் அனுஷா சொன்னாள்... ‘‘உனக்குக் காதலிக்கவும் தெரியாது. காதலிக்கப்பட்டதும் தெரியாது... மரமண்டை!” ‘‘ஹேய் சும்மா சொல்லாதே. என்னை யார் காதலிப்பாங்க? கறுப்பு, கிராமத்துப் பையன். பைக்... காஸ்ட்லி டிரெஸ் எதுவும் இல்லை.” “பைக்கும் காஸ்ட்லி டிரெஸ்ஸும் இருந்தாத்தான் காதல் வருமா... என்ன பிரகாஷ் பேசற? நீ தெரிஞ்சுதான் பேசுறியா, இல்ல...” யாரோ வந்து கூல்ட்ரிங்ஸ் கொடுத்துவிட்டுப் போனதால் சற்றே இருவரும் பேசுவதைத் தவிர்த்தனர். அவர்கள் இருந்த இடம் அமைதியாக இருந்தது. அனுஷா அந்தச் சில விநாடித் துளிகளில் நிதானத்துக்கு வந்துவிட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும். ‘‘நிஜமாத்தான் அனு... என்னை யார் காதலிப்பாங்க?’’ ‘‘ஒண்ணு சொல்லட்டுமா பிரகாஷ்! காலேஜ்ல இருந்து நாம எல்லோரும் தீவுத்திடல் போயிருந்தப்ப, ஜெயின்ட் வீல்ல சுத்தினமே... அப்ப நான் உன் பக்கத்துலதான் உட்கார்ந்தேன்.” “ஆமா...” ‘‘உன் கையைக் கெட்டியா புடிச்சுக்கிட்டேன்.” ‘‘நீ செமையா பயந்துட்ட!” “அடையார் பேக்கரியில லிட்டில் ஹார்ட் வாங்கித் தரச் சொன்னேன்.” ஜெயின்ட் வீல் சம்பவத்தில் இருந்து திடீரென லிட்டில் ஹார்ட்டுக்கு ஏன் மாறினாள்? எனப் புரியாமல் பிரகாஷ் கொஞ்சம் நிதானித்தான். அவள் வேறு ஏதோ சொல்லவருவது அவனுக்கு உறைத்திருக்க வேண்டும். ‘‘ஃபேர்வெல்ல உன்கிட்ட மட்டும்தான் ஆட்டோகிராஃப் வாங்கினேன்.” அவள் பேச்சை உள்வாங்கியபடி அமைதியாக இருந்தான் பிரகாஷ். அவள் சொல்லவருவது அதைத்தானா என அவனால் நம்ப முடியவில்லை. அவள் வாயாலேயே சொல்லட்டும் எனக் காத்திருந்தான். ‘‘ஷார்ட் ஃப்லிம்ல உனக்கு சிஸ்டரா நடிக்கச் சொன்னப்போ, நான் `வேணாம்’னு சொன்னனே!” ‘‘அனு... நீ என்ன சொல்றே?” அவளுடைய கண்கள் சிவப்பேறியிருந்தன. எந்த விநாடியிலும் நீர்த்திரளும் ஓர் உணர்ச்சிகர சூழ்நிலை. கண்களில் நீர் தளும்பி நின்றதே தவிர வழியவில்லை. ``நான் உனக்கு ஆட்டோகிராஃப்ல என்ன எழுதியிருந்தேன்னு படிச்சியா நீ! புரிஞ்சுதா உனக்கு?'' வழக்கமான அன்புப் புலம்பல் எனத்தான் நினைத்திருந்தான் அதை. ``நீ ஏன் சொல்லவே இல்ல?'' என ஒரு மோசமான கேள்வியைக் கேட்டான். ‘‘ஒரு பொண்ணால அவ்வளவுதான் சொல்ல முடியும். நீ ஒரு ட்யூப்லைட். ஆனா, நீ அப்படி இருக்கிறதுதான் எனக்குப் புடிச்சிருந்தது” - ஆக்ஸிஜன் போதாமை ஏற்பட்டு, மூச்சை இழுத்துவிட்டாள். இப்போது ரிசப்ஷனில் கொஞ்சம் கூட்டமும் சத்தமும் அதிகரித்தன. உடன்படித்த பலரும் வந்திருந்தனர். ‘எப்படி இருக்கே... என்ன பண்றே?’ விசாரிப்புகள், சிரிப்புகள்... செல்போனில் கிளிக்குகள்... மணி, ஒரு ஜோக் சொல்வதாக நினைத்து ஒரு உண்மையைச் சொன்னான். ‘‘சாயங்காலம், ஷார்ட்ஸ் போட்டுக்கிட்டு ஷட்டில் காக் ஆடக் கிளம்பறவன் இந்தச் சமூகத்துக்கு என்ன சொல்லவர்றான் தெரியுமா? நான் லைஃப்ல செட்டில் ஆகிட்டேன்கிறதைத்தான்.’’ ‘‘ஆனந்த விகடன் `வலைபாயுதே’ல போன வாரமே படிச்சுட்டேன்’’ என்றான் அசோக். எல்லோர் நடவடிக்கையிலும் கல்லூரியின் உற்சாகத்தை மீட்டெடுக்கிற முயற்சி தெரிந்தது. அது முயற்சி மட்டும்தான் என்பதும் தெரிந்தே இருந்தது. ‘‘என்னடா இப்படி கல்யாணத்தோடு கல்யாணம் மீட் பண்ணா போதுமா? இப்படியே கொஞ்சம் கொஞ்சமா நாம ஒருத்தரை ஒருத்தர் மறந்துடுவோம்டா’’ - அசோக் நிஜமாகவே ஆதங்கப்பட்டான். ஒன்றாகவே இருக்கப்போகிறோம் என எல்லா உதிரிப்பூக்களும் நினைக்கின்றன. கோயிலுக்கு, அரசியல் மேடைக்கு, கல்யாணத்துக்கு, சாவுக்கு... ஒரு கொடியின் பூக்கள் இப்படி எங்கு வேண்டுமானாலும் பிரியத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால், பிரகாஷுக்கு அனுஷா ட்யூப் லைட் எனச் சொன்னதிலேயே தங்கிவிட்டது மனசு. நண்பர்களின் எந்த உற்சாகமும் மனதில் ஏறவில்லை. ‘அவ்வளவு மடையனா நான்?’ என பிரகாஷ் நழுவிப்போன சந்தர்ப்பங்களில் இருந்து அனுஷா சொன்ன ஆதாரங்களைத் தேடிக்கொண்டிருந்தான். பளிச்சென விளக்கு போட்டதுபோல எல்லாமே அவனுக்குப் புரிந்தன. கல்யாணத்தில் களை கூடக்கூட பிரகாஷின் முகம் இருட்டிக்கொண்டிருந்தது நன்றாகவே தெரிந்தது. அவன் யாரிடமும் பேசவில்லை. அவன் ஒதுங்கி, விலகிச் சென்றபடி இருந்தான். அனுஷாவுக்கு இப்போது இதை எதற்குச் சொன்னோம் என இருந்தது. உணர்ச்சி வேகத்தில் தேவையில்லாமல் வார்த்தைகளைக் கொட்டிவிட்டோம் என நினைத்தாள். அந்தக் கல்யாண ரிசப்ஷனில் அதன் பிறகு பிரகாஷும் அனுஷாவும் பேசிக்கொள்ளவே இல்லை. மணமக்களோடு புகைப்படம் எடுக்கும் வைபவத்திலும் அனுஷா ஓர் எல்லையிலும் பிரகாஷ் மற்றோர் எல்லையிலும் நின்றனர். சொல்லப்போனால், அதன் பிறகு அவர்கள் விடைபெற்றுக்கொள்ளவும் வாய்ப்பு இல்லாமலேயே போய்விட்டது; அல்லது பிரகாஷ் தவிர்த்துவிட்டான். பிரகாஷும் அழுதிருக்கிறான் என அனுஷா நினைத்தாள். சொல்லாமலேயே தவிர்த்திருக்கலாம். காதல் ஒருவர் மனதில் மட்டும் இருந்திருந்தால் கால ஓட்டத்தில் எல்லாமே மறைந்து போயிருக்கும்; மாறிப்போயிருக்கும். இரண்டு மனங்களுக்கு ஏற்றிய பிறகு, அது நினைவுச் சிற்பமாக மாறிவிடுவதை அனுஷா உணர்ந்து, பிரகாஷுடம் மன்னிப்பும் கேட்க இருந்த நேரத்தில்... அந்த இடத்தில் பிரகாஷ் இல்லை. எதிரில் அமைதியாக உட்கார்திருந்தான் பிரகாஷ். ‘‘ஏன் யாரும் இன்னும் வரலை?” ‘‘அவங்களை எல்லாம் 12 மணிக்கு வரச் சொன்னேன்.” ஏறிட்டுப் பார்த்த பிரகாஷின் முகத்தில் ‘ஏன்?’ ஒளிர்ந்து, மறைந்தது. புரிந்தது. ‘‘நான் உன்கிட்ட சொல்லியிருக்கக் கூடாது. அந்த நேரத்தில் ஏதோ பேச்சு நேசத்துல சொல்லிட்டேன். என்னை மன்னிச்சுடு பிரகாஷ். தான் காதலிக்கப்பட்டதைச் சம்பந்தப்பட்டவர் உணரவே இல்லைங்கிறது அவ்வளவு பெரிய குற்றமா?” ‘‘இல்ல அனு. மிஸ் பண்ணிட்டோமேனு ஒரு வலி மட்டும் இருக்கு.’’ ‘‘உன்கிட்ட சொல்லிட்ட பிறகு எனக்கு அந்த வலி இல்லாமப்போயிடுச்சு. வலியை டிரான்ஸ்ஃபர் பண்ணிட்டேன்போல.’’ பிரகாஷ் ஜீரோ வாட்ஸில் சிரித்தான். ‘‘டைரக்டர் மகேந்திரன் சொன்னது நினைவிருக்கா? `லைப்ஃல ரெண்டாவது டேக் கிடையாது. எல்லாமே ஒரு டேக்தான்’னு சொன்னாரு’’ - நிதானமாகச் சொன்னான். அவர் அப்படியா சொன்னார் எனக் கேட்க நினைத்தாள். அவர் வேறு ஏதோ சொன்னதாக ஞாபகம். அவர் சொன்னதாக பிரகாஷ் சொன்னதும்கூட நன்றாகத்தான் இருந்தது. அனுஷா, தலையசைத்தபோது, கண்கள் சிவக்க ஆரம்பித்திருந்தன. அடுத்து பேச வார்த்தைகள் இல்லாத அந்த நேரத்தில் காலிங்பெல் ஒலித்தது. அனுஷா சென்று கதவைத் திறந்தாள். மொத்த நண்பர்களும் ஆரவாரமாக உள்ளே நுழைந்தனர். http://www.vikatan.com
 9. நிர்மலாவின் இதயத்தில் ராகுல் - சிறுகதை சிறுகதை: வா.மு.கோமு, ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு அப்பா, சாப்பாட்டு மேஜையில் அமர்ந்தபடி என்னைக் கூப்பிட்டுக்கொண்டிருந்ததை எல்லாம் காதில் சரியாக வாங்கினேனா என்பது, எனக்கே புரியவில்லை. இருந்தும் அவர் நான்கைந்து முறை அழைத்ததாகச் சொன்னார். போக, ``இப்படி உன்னை அடிக்கடி நான் பார்த்துட்டே இருக்கேனேம்மா'' என்றார். ``ஒண்ணும் இல்லைப்பா, சும்மா ஒரு யோசனையில் இருந்துட்டேன்'' என்றபடி சாப்பிட அமர்ந்தேன். வழக்கம்போல அப்பா உப்புமாதான் செய்திருந்தார். `இன்னிக்கும் உப்புமாவாப்பா?' எனக் கொஞ்சம் சிணுங்கட்டாம் போடலாம்போல் இருந்தது. இருந்தும் `பி.எஸ்ஸி கடைசி வருடம் சென்றுகொண்டிருக்கும் பெண், சாப்பாட்டு விஷயத்துக்கு எல்லாம் சிணுங்குகிறாள்' என்பது வெளியே உங்களைப் போன்றோருக்குத் தெரிந்தால் அசிங்கம்தானே? அதனால் மாற்றி, ``என்னப்பா விஷயம்... இன்னிக்கு உப்புமா செஞ்சிருக்கீங்க?'' எனக் கேட்டுவைத்தேன். என் வார்த்தையில் இருந்த கிண்டலை உணர்ந்தவராக, ``ஒண்ணும் இல்லைம்மா, எல்லாம் நம்ம நன்மைக்குத்தான். எத்தனை நாளைக்குத்தான் நாம இப்படியே இருக்கிறது சொல்லேன்?'' என்றார். `புதியதாக ஒரு சமையல்காரியை வீட்டுக்கு ஏற்பாடு செய்துவிட்டாரோ?' என்றே நான் யோசித்தேன். `அப்படியும் இல்லை' என்பது அவரின் பேச்சின் போக்கில் இருக்கவே, மெலிதாக எனக்குள் அந்தப் பயம் தலைகாட்டியது. அப்பாவின் பேச்சு, என்னைக் கூடிய சீக்கிரம் இல்லை... இல்லை... `மாப்பிள்ளை' என ஒருவரைப் பார்த்து முடித்துவிட்டதாகவே இருந்தது. `அப்படியானால் என் ராகுலை நான் என்ன செய்வது? ஐயோ அப்பா, அதுமட்டும் முடியாது! ராகுல் இதோ என் இதயத்தில் அமர்ந்திருக்கிறான். அதே மாதிரி ராகுலின் இதயத்தில் நான் அமர்ந்திருக்கிறேன். நான்கு வருடங்கள் ஆயிற்றுதான்... நாங்கள் இருவரும் நேரில் பார்த்து. உங்கள் முன்னால்தானேப்பா, ராகுலுக்கு நான் சத்தியம் செய்துதந்தேன். வருடங்கள் தாண்டியதும் எல்லாம் மறந்து அழிந்துபோய்விட்டதா?' - நினைவுகளில் இருந்த என்னை, அப்பாவின் குரல்தான் மீண்டும் இயல்புக்குக் கொண்டுவந்தது. ‘`என்னம்மா நீ... உப்புமாவை சாப்பாடு பிசையிற மாதிரி பிசைஞ்சுட்டு இருக்கே? நான் என்ன சொல்றேன்னு கேட்டியா இல்லையா? நீ ஏதோ குழப்பத்துல இருக்கேன்னு நினைக்கிறேன்'’ என்றவரிடம், ‘`ஆமாப்பா, நீங்க என்ன சொன்னீங்கனு கவனம் இல்லாம இருந்துட்டேன்'’ என்றேன். ‘`என் ஆபீஸ்ல `கனகம்னு புதுசா ஒரு மேனேஜர் வந்திருக்காங்க'னு அன்னிக்கு சொன்னேன்லம்மா?'’ நிஜமாகவே அப்படி ஒருவரை அவர் சொல்லவில்லைதான் என்றாலும், ``ஆமாப்பா, `அவங்க ரொம்ப நல்லவங்க'னு சொன்னீங்க'' என்றதும் அவர் குழப்பமாகி, பின் மீண்டும் தொடர்ந்தார். ``அவங்க கணவர் இறந்து, இப்ப ஆறேழு வருஷம் ஆகிருச்சுபோல! பத்து வருஷ வாழ்க்கையில அவங்களுக்குக் கொழந்தை குட்டியும் இல்லை! இங்கே உன் அம்மா இறந்தும் ஆறேழு வருஷம் ஓடிப்போயிருச்சு. கனகம்கிட்ட நான் பேசினதுல அவங்க என்கூட ஒரு புது வாழ்க்கையைத் தொடங்க சம்மதம் தெரிவிச்சுட்டாங்க’' என்றவர், மூன்று டிபன்பாக்ஸில் உப்புமாவை நிரப்பிக்கொண்டிருந்தபோதுதான் எனக்கு என் முந்தைய நாள் கனவின் ஞாபகமே வந்தது. `அப்பாடா! எங்கே என்னை ஒரு கெளபாய்க்கு அவசர அவசரமாகக் கட்டிக் கொடுத்துவிடுவாரோ' என்ற கவலையில் இருக்க, அப்பாதான் ஒரு கனகத்தைக் கட்டிக்கொள்ள இந்த நேரம் வரை பேசிக்கொண்டிருந்தார் என்பது புரிந்ததும் நான் நிம்மதியானேன். ராகுல் எனக்குத்தான். அப்பா வாக்குறுதி கொடுத்திருக்கிறார். ராகுலின் அப்பாவும் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். வீணாகக் குழம்பிவிட்டேன்போல. இந்த மூன்று டிபன்பாக்ஸ் கனவு, எனக்கு இரவில் எந்த நேரத்தில் வந்தது என்றே தெரியவில்லையே! எப்போதும் அப்பாவுக்கு ஒன்றும், எனக்கு ஒன்றும் என்றுதானே தினமும் வீட்டில் இருந்து கிளம்புகிறோம். `ஃபைனல் டெஸ்டினேஷன்' படத்தில்தான் நடக்கப்போகும் விபத்துக்கள் அனைத்தும் முன்பாகவே ஒரு கேரக்டருக்குத் தெரிந்துவிடும். அதுமாதிரி அல்லவா இப்போது எனக்கும் தோன்ற ஆரம்பித்துவிட்டது. என்ன நிம்மதி என்றால், விபத்து நடப்பதுபோல் எல்லாம் நான் கனவு காணவில்லை. ‘`என்னம்மா, எதுக்கு மூணு டிபன்பாக்ஸுனு பார்க்கிறியா? கனகம்தான் `நீங்க செஞ்ச உப்புமாவை இன்னிக்கி ஒரு பிடி பிடிச்சிடறேன்'னு சொன்னாங்க. அதான்’' என்றவரிடம் புதிதாக புன்சிரிப்பைப் பார்த்தேன். அன்று கல்லூரியில் தோழியிடம் விஷயத்தைச் சொன்னபோது அவளோ, `‘நீதான் ராகுல்... ராகுல்னு எந்த நேரமும் ராகுல் நினைப்பாவே இருக்கே. அவன் இப்ப எங்கே, எப்படி இருக்கான்னு ஒரு தகவலாவது உனக்குத் தெரியுமா? `சத்தியம் வாங்கிட்டான்'னு வேற சொல்றே. அப்படி வாங்கினவன் இத்தனை வருஷத்துல ஒருவாட்டியாவது உன்னைப் பார்க்க வந்தானா? அவன் இந்நேரம் யாரோட ஜாலியா இருக்கானோ’' என்றவளின் கொமட்டில் ஒரு குத்துவிடலாம்போல கோபம் வந்தது எனக்கு. என் முகம் போன போக்கை உணர்ந்தவள், ‘`இப்ப என் மேல உனக்குக் கோபம்தான் வரும்டி. இந்த விஷயத்தை நீ நல்லா யோசிச்சுப்பார்த்தீன்னா அதுல இருக்கிற உண்மை உனக்குப் புரியும். அப்போதைக்கு, பெரியவங்க ஒரு பேச்சுக்கு என்ன வேணும்னாலும் சொல்வாங்க. அதை நம்பிக்கிட்டு நாலு வருஷமா இருக்கியே. உன்னை நினைச்சா, எனக்குப் பாவமா இருக்குடி’' என்றாள். `இப்படி எல்லாம் விளக்கம் பேசும் தோழிகளைக் கூட வைத்திருந்தால் பயங்கரமான காதல்கூட பம்மத்தான் செய்யும்' என நினைத்துக்கொண்டேன். போக, ராகுல் அப்படி எல்லாம் செய்யக்கூடியவனா? ராகுல் எனக்கானவன். ஊலலலல்லா... ஊஊலலல்லா! மானாமதுர மாமரக் கிளையிலே! அவன் கண்ணு ரொம்ப அழகா... அவன் வெட்கம் ரொம்ப அழகா... எந்தக் கேள்வி எனைக் கேட்டாலும் என்ன நான் பாடுவேன்? பெருந்துறை பள்ளியில் நான் ஒன்பதாம் வகுப்பு வாசித்துக்கொண்டிருந்தபோதுதான் எனக்குள் ராகுல் மீது அந்தச் செடி வளர ஆரம்பித்தது. அவனும் `நிர்மலா... நிர்மலா...' என, கவிதைகளாக எழுதி என்னிடம் கொடுத்துக் குவித்துக்கொண்டிருந்தான். பன்னிரண்டாம் வகுப்பில் அறிவியல் பிரிவில் இருக்கும் அவனை, எனக்குப் பிடித்துப்போனதற்கு, தனியாக எந்தக் காரணத்தையும் அடுக்கிக்கொண்டிருக்க முடியாது. விஷயம் தலைமையாசிரியையிடம் செல்ல, பஞ்சாயத்துக்காக இருவரின் அப்பாக்களும் பள்ளிக்கு வந்து சேர்ந்தனர். ராகுல், பள்ளி முழுக்க விஷயம் அம்பலமாகிவிட்டதற்காக அழுகிறானா... அவன் அப்பாவுக்குத் தகவல் போனதற்காக அழுகிறானா... இல்லை எனக்காக அழுகிறானா என்றே தெரியவில்லை. ஆனால், கடைசி நிமிடம் வரை அழுதபடியே நின்றுகொண்டிருந்தான் தலைமையாசிரியை அறையில். இறுதியாக, அப்பாக்கள் இருவரும் ஒரு முடிவுக்கு வந்தனர். ராகுல் படிப்பை முடித்து நல்ல வேலை ஒன்றில் அமரும் வரை, இருவரும் சந்தித்துக்கொள்ளவே கூடாது. இதுதான் முடிவு. பின்னர் இரு பெற்றோர்களும் பிள்ளைகளைக் கட்டிக்கொடுத்து சம்பந்திகளாகிவிடுவது. விஷயம் எவ்வளவு சுலபம் பாருங்கள்! ராகுல், இறுதியாக தன் வலது கையை என்னிடம் நீட்டினான் அழுதபடி... ‘`நான் சத்தியமா உன்னைக் கைவிட மாட்டேன் நிர்மலா. என் வாழ்க்கையில் உன்னைத் தவிர வேற யாரும் எனக்கு மனைவியா வரவே முடியாது. நீ எனக்காகக் காத்திருக்கணும் நிர்மலா! `காத்திருக்கேன்'னு இப்ப எனக்கு சத்தியம் பண்ணிக் குடு'’ என்றதும், மளாரெனப் பாய்ந்துபோய் அவன் கை மீது எனது வலது கையை வைத்து சத்தியம் செய்துகொடுத்தேன். நினைத்துப்பார்த்தால், நேற்றுதான் இந்த விஷயம் பள்ளியில் நடந்ததுபோன்றே இருந்தது. போக, ராகுல் என்பவன் யார்... அவன் வீடு, பெருந்துறையில் எங்கே இருக்கிறது... அவன் அப்பா என்ன தொழிலில் இருக்கிறார்... அவனுக்கும் என்னைப்போன்றே அம்மா இல்லையா? எதுவுமே எனக்கு அப்போது தெரியாது. ஏன் இப்போதுகூடத் தெரியாது. என்ன இருந்தாலும், என் அப்பாவுக்கு அவர் யார் என்ற விவரம் எல்லாம் தெரியும் அல்லவா! தெரிந்திருக்கத்தானே வேண்டும். `ராகுலைத் தவிர எந்த டோப்புருவையும் நான் கட்டிக்கொள்ள மாட்டேன்' என சத்தியம் செய்துகொடுத்திருக்கிறேன் என்பது எல்லாம் அப்பாவுக்கும் தெரியும்தானே! `ராகுல் என்னை அடைந்தே தீருவது' என, இப்போது படிப்பை முடித்து ஒரு வேலையில் அமர்ந்திருக்கலாம். முதல் மாதச் சம்பளத்தை வாங்கிக்கொண்டு நேராக என்னைப் பார்ப்பதற்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம் அல்லது அவன் அப்பா அவனுக்குப் புதியதாக ஒரு தொழிலைத் தொடங்க பண உதவி செய்திருக்கலாம். எப்படியாயினும் சீக்கிரமாக அவன் என் வீட்டு வாசலுக்கு வந்துவிடும் நாள் தூரத்தில் இல்லைதான். அவன் முதன்முதலாக என்னைப் பார்க்கும்போது, நான் நீலவர்ண சுடி அணிந்திருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும். அதைவிட அவனும் நீலவர்ண முழுக்கைச் சட்டை அணிந்திருந்தால்? ஆஹா! `கொத்தாணிக் கண்ணாலே என்னைக் கொத்தோட கொன்னானே! உச்சாணிக் கொம்பேத்தி என்னை உக்காரவெச்சானே! ஒரு நெல்லுக்குள் என்னை ஒளியவெச்சே உமியா என்னைப் பறக்க வெச்சே!’ அப்பாவுக்கும் கனகம் மேடத்துக்கும் என் கல்லூரிக்கு எதிரே இருக்கும் திண்டல் முருகன் கோயிலில்தான் திருமணம் நடந்து முடிந்திருந்தது. அப்பாவால் நினைத்த காரியத்தை உடனே சாதித்துக்கொள்ள முடிகிறது. என்னால்தான் முடிவது இல்லை. `படுத்தால் உறக்கம் வரலை... பாய் விரித்தால் தூக்கம் வரலை..!'னு லூஸுத்தனமான கவிதை மனசுக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. புது சித்தியின் சமையல் அமர்க்களமாக இருந்தது. புதுசுக்குத் துணியைக் கடுசாக வெளுத்துப் போட்டுக்கொள்வதுபோல அவர் வீட்டையே மாற்றியிருந்தார். பழைய சாமான்கள் கிடந்த அறையைச் சுத்தப்படுத்தி, ஆட்களைவிட்டு பெயின்ட் அடித்து எனக்கான படுக்கையறையாக அற்புதமாக மாற்றிக்கொடுத்திருந்தார். அன்றுதான் முதன்முதலாக புது சித்திக்குப் பிரியத்தின் பேரில் முத்தம் ஒன்று கொடுத்தேன்... ``தேங்க்ஸ் சித்தி.'’ `` `அம்மா'னு சொல்லு’' என்றார். அப்பா, தினமும் தாவாங்கட்டையில் எட்டிப்பார்க்கும் வெள்ளைநிற முடிகளை ஷேவிங் செய்துகொள்ள நேரம் ஒதுக்கிக்கொண்டார். அப்பாவின் தோளில் கை போட்டுக்கொண்டு புது சித்தி ஆபீஸ் கிளம்பினார். சித்தியின் ஸ்கூட்டி வீட்டில் சும்மா நிற்க, அதை எடுத்துக்கொண்டு பெருந்துறையில் நகர்வலம் வர ஆரம்பித்தேன். அப்படி நகர்வலம் வந்த ஒரு நேரத்தில்தான், ராகுலின் நண்பன் சீனுவை மகாலட்சுமி தியேட்டர் முன்பாக துணிக்கடை வாயிலில் பார்த்து, அவனை நெருங்கி நிறுத்தினேன் ஸ்கூட்டியை. அவனுக்கு என்னை யார் என்றே தெரியவில்லை. ராகுலை விசாரித்தபோதுதான் என்னை அடையாளம் கண்டுகொண்டான். ராகுலுக்கு, காஞ்சிக்கோவில்தான் சொந்த ஊராம். அவன் அப்பா சுந்தரமூர்த்தி டெலிபோன் டிபார்மென்ட்டில் வேலையில் இருந்தாராம். ராகுல் பள்ளியில் இருந்து சென்றதும் மேற்கொண்டு எல்லாம் படிக்கவே போகவில்லை என்றும், காஞ்சிக்கோவிலில் கோழிக்கடை போட்டிருந்ததாகவும் சீனு சொன்னான். அவன் சொன்னவற்றை மனதில் பதியவைத்துக்கொண்டேன். சீனுவுக்கு நன்றி சொல்லி கிளம்பலாம் என்றபோது, ‘`துணிமணி எடுக்கணும்னா இங்கேயே வா நிர்மலா. இது எங்க கடைதான்’' என்றான். தலையாட்டிவிட்டு கிளம்பினேன். ஆக, காஞ்சிக்கோவிலில்தான் ராகுல் இருந்திருக்கிறான். `கறிக்கோழிக் கடை வைத்திருக்கிறான்' என்பதுதான் உறுத்தலாக இருக்கிறது. அவன் இந்த நேரம் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினீயராக இருந்திருந்தால் எவ்வளவு பெருமையாக இருந்திருக்கும்! லூஸுப்பயல். அவனைச் சந்தித்து, `இதெல்லாம் சுத்தப்படாது ராகுல். நாம ஒரு மருந்துக்கடை போட்டு பொழைச்சுக்கலாம் அல்லது அல்லது அல்லது...' இப்படி ஏதேதோ தொழிலில் அவனை உட்காரவைத்து ரசித்துக்கொண்டிருந்தேன், ராஜ் என் வீடு வந்து சேரும் வரை. ராஜ்? `விடிகாலையில் காணும் கனவுகள் அனைத்தும் நடந்தேறிவிடும்' என்றுதானே எல்லாரும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்? அன்று என் கனவில் எங்கள் வீட்டின் முகப்பு அறை ஸ்டேண்டில் நான்கு ஜோடி மிதியடிகள் இருப்பதாக கனாக்கண்டு திடுக்கிட்டு விழித்தேன். ஒன்று எனது, ஒன்று அப்பாவுடையது. மற்றொன்று சித்தியுடையது. இன்னொன்று ஆண்கள் விளையாட்டின்போது அணியும் ஷூ மாதிரி தெரிந்ததே! பார்த்தால் அன்று மாலை வீட்டுக்குள் ராஜ்குமார் வந்துவிட்டான். ராஜ்குமார் என் புது சித்தியின் தம்பிதான். பெருந்துறை குன்னத்தூர் சாலையில் வெப் டிசைன் ஆபீஸ் போட்டிருக்கிறானாம். வாடகை வீட்டில் தங்கியிருந்தவனை `நம் வீடுதான் இவ்ளோ பெருசா இருக்கே. இங்கேயே தங்கிக்கோயேன்' என அப்பா அவனுக்கு அனுமதி கொடுத்து விட்டார். என் அப்பா இந்த அளவுக்கா முட்டாளாக இருப்பார்? வயசுக்குவந்த பெண் ஒருத்தி வீட்டில் இருக்க, திருமணமே ஆகாத கன்னிப் பையன் ராஜ்குமாரை எப்படித் தங்க அனுமதிக்கலாம்? ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆகிவிட்டால் நாளை நான் எப்படி ராகுல் முகத்தில் விழிப்பது... என் கதை முழுவதும் அப்பாவுக்குத் தெரியாதா? அப்பாக்கள் திடீரென புது கல்யாணத் திருகலில் லூஸு அப்பாக்களாக மாறிவிடுகிறார்கள்போல! நானாக அப்பாவிடம் தனித்துப் பேசவும் முடியவில்லை. போனில் பேசலாம்தானே என்றாலும் சொந்த அப்பாவிடம் போனில், `ராஜ் நம்ம வீட்டுல வேண்டாமப்பா' என என்னால் எப்படிச் சொல்ல முடியும்? அப்பா இப்போது எல்லாம், வாரம் ஒருமுறை தலைக்கு கருஞ்சாயம் பூசிக்கொண்டு அடையாளம் தெரியாதவண்ணமாக மாறிக்கொண்டிருக்கிறார். வயிற்றில் இருந்த சின்ன அழகான தொப்பையைக் குறைக்க, வீட்டின் மாடியில் S, W, Y எனப் பலவிதமாகப் படுத்து எழுகிறார். போதாதற்கு ராஜ் வேறு, ‘மாம்ஸ், அப்படி இல்லீங்க மாம்ஸ். இப்படி...’ எனக் கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறான். ‘`உங்க டாட்டர் ஏன் எந்த நேரமும் முகத்தை இறுக்கமாவே வெச்சிருக்காங்க மாம்ஸ்?’' என்று ஒருநாள் அனைவரும் சாப்பாட்டு மேஜையில் அமர்ந்திருக்கும்போது ராஜ் கேட்டுவிடவே, எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. பாதி உணவுடன் எழுந்து கை கழுவக் கிளம்பிவிட்டேன். அவனோ, மிரண்டு தவித்துப்போய் நான் கை கழுவும் இடத்துக்கே வந்து, `‘ஸாரி... ஸாரி... ஸாரி நிர்மூ. ப்ளீஸ்... நான் விளையாட்டுக்குத்தான் சொன்னேன்பா!'’ என்று அவன் கெஞ்சக் கெஞ்ச எனக்கு அழுகை அதிகமாகிக்கொண்டே இருந்தது. புது சித்திதான் வந்து என்னை அணைத்துக்கொண்டார். அப்பாவோ இங்கே நடப்பவற்றைக் கண்டுகொள்ளாமல் சப்பாத்தியைப் பிய்த்து சட்னியில் தொட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தார். புதுக் கல்யாணத் திருகலில், அப்பாக்கள் தங்கள் பெண் பிள்ளைகளை மறந்து பொம்மைகளாகிவிடுகிறார்கள்போல! அன்று இரவு படுக்கையில் படுத்தபோது நிம்மதிபோயிருந்தது. ராஜ்குமாரை, சித்தி ஏதோ திட்டத்தோடுதான் வீட்டுக்குள் கொண்டுவந்திருக்குமோ? ராஜ்குமாருக்கு ஒரு குறைச்சலும் இல்லைதான். போக, நல்லவனும்கூட. ஆனால், எனக்குத்தான் அவனைப் பார்த்தாலே பற்றிக்கொண்டுவருகிறது. ராகுலுக்குத் துரோகம் செய்யவைத்துவிடுவான் படுபாவி. அன்றைய தூக்கத்தில், ராகுலோடு அவனது க்ரக்ஸில் பின் ஸீட்டில் அமர்ந்து நான் பயணிப்பது போன்று கனவு வந்தது. காலையிலேயே அப்படி நடந்துவிடுமா என்ன? எழுதிவைத்தாற்போல ஸ்கூட்டியின் டயர், செத்த தவளை மாதிரி தரையில் அப்பி நின்றிருந்தது. அப்பா வழக்கம்போல புது சித்தியுடன் ஸ்கூட்டரில் `பை பை!' சொல்லி கிளம்பிவிட்டார். `ஸ்கூட்டியின் டயரை ராஜ் பஞ்சராக்கியிருப்பானோ? சேச்சே! ராஜ் அப்படிச் செய்யக்கூடியவன் அல்ல' - தனக்குள் யோசித்துக்கொண்டிருந்தேன். அவன் தன் க்ரக்ஸை கொஞ்சமாகத் துடைத்து, சாலையை நோக்கித் திருப்பி நிறுத்திவிட்டு `வருவாளா... மாட்டாளா?' என்பது மாதிரி என்னைப் பார்த்தான். அந்தச் சாப்பாட்டு சம்பவத்துக்குப் பிறகு, ராஜ் என்னைக் கண்டால் ஒதுங்கி ஒதுங்கிச் சென்றுகொண்டிருந்தான். இப்போதுகூட சித்திதான் இவனிடம், ‘நிர்மலாவை பஸ் ஸ்டாண்டுல விட்டுட்டு ஆபீஸ் போ’ என்று சொல்லிச் சென்றாள். அதற்காகத்தான் காத்திருந்தான். கனவு நிஜமாகப்போகிறது. நான் பொய்யாக்கலாம் என்றாலும், இன்று காலேஜ் சென்றே ஆக வேண்டும். விடுப்புப் போட்டுக்கொண்டு... `ஐய்யய்யோ... அது போர்!' நானாகச் சென்று அவன் பின்னால் அமர்ந்துகொண்டேன். அப்போதும் அன்றைய சம்பவத்துக்கு மிக மென்மையாக மன்னிப்புக் கேட்டான். `உசுரே போகுதே மனசைத் தாடி என் மணிக்குயிலே...’ ஐயோ கொல்லாதேடா என்னை! நான் ராகுலுக்கெனப் பிறப்பெடுத்தவள்! பேருந்து நிறுத்தத்தில் என்னை இறக்கிவிட்டவன், `‘அப்ப, நீ என்னை மன்னிக்கவே மாட்டியா நிர்மூ?’' என்றான். இவனென்ன எப்போ பார்த்தாலும், `நிர்மூ... நிர்மூ' என்று?' `‘நிர்மூ, நான் உன் வீட்டுல தங்குறது உனக்கு டிஸ்டர்ப்பா இருக்காடா? நான் வேணா பழையபடி ரூம்லயே தங்கிக்கிறேனே...’' என்றான். ‘`ஒண்ணும் வேண்டாம். அப்புறம் வீட்டுல என்னைத் திட்டுவாங்க'’ என்றேன். ‘`அப்ப மன்னிச்சுட்டதா சொல்லுடா நிர்மூ'’ என்றான். பேருந்து வரவே, `‘சரி சரி, மன்னிச்சுட்டேன் ராஜ். எனக்கு பஸ் வந்திருச்சு பை’' என்று சொல்லி, பேருந்தில் ஏறிக்கொண்டேன். ஜன்னல் இருக்கையில் அமர்ந்தபடி, வெளியே நின்றிருந்த வனைப் பார்த்தேன். அவன் முகத்தில் பழைய சந்தோஷத்தைப் பார்க்க முடிந்தது. பேருந்து கிளம்பும்போது அவன் எனக்கு கையசைத்தான். பக்கத்தில் இருந்த தோழிதான் என் தொடையைக் கிள்ளினாள். ``இவருதான் அந்த ராகுலா? சூப்பரா இருக்காப்ல. நீ காத்திருந்ததுல ஒண்ணும் தப்பே இல்லைடி” என்றாள். அவளுக்கு விளக்கம் சொல்லவேண்டி வந்தது. ``ராகுல்தான் என் உயிர்'' என்று அவளிடம் கோபமாகச் சொன்னேன். ``அதை ஏன் இப்படிக் கோபமா சொல்றேடி?'' என்று திருப்பி என்னை மடக்கினாள் அவள். ``ஆமாம்ல.'' கடைசியாக ஒன்று சொன்னாள் பாருங்கள், வெப் டிசைன் ஒன்றை அவளுக்குச் செய்து தரச் சொல்லி, ராஜ்குமாரிடம் இன்று மாலையே போய் நிற்கப்போவதாக! அதற்கும் கோபமே எனக்கு வந்தது. இப்படித் தொட்டதற்கு எல்லாம் கோபம் வர என்ன காரணம் என்றே தெரியவில்லை எனக்கு. அடிக்கடி வரும் கனவுகள் பற்றி சொல்லிக்கொண்டே வந்தேன் அவளிடம். `‘நீ என்ன `நூறாவது நாள்' நளினியாடி? கனவு வருதாம், நிஜத்துல நடக்குதாம்! அப்ப ராகுல் மட்டும் ஏன் கனவுல வரலை? ராகுலோட கறிக்கோழிக் கடையில நீயும் கறி வெட்டிக்கிட்டு இருக்கிறாப்ல கனவு வர மாட்டேங்கு?'’ என்றவளை, தொடையில் கிள்ளிவைக்கத்தான் முடிந்தது என்னால். பேசாமல் ராஜ்குமாரிடம் தன் பழைய காதல் விஷயத்தைச் சொல்லிவிடுவதுதான் இதற்குத் தீர்வாக இருக்க முடியும். ஆக, என் விஷயத்தை ஒரு நல்ல நாளில் வீட்டின் மொட்டைமாடியில் அமர்ந்து அவனுக்குத் தெரிவித்தேன். முதலாகவே அவன் அதிர்ச்சியாகிவிட்டது நன்றாகவே தெரிந்தது எனக்கு. இருந்தும் அவன் க்ரக்ஸின் பின்னிருக்கையில் அமர்ந்து காஞ்சிக்கோவில் சென்றேன். நல்லவேளை... நேற்றைய கனவில் அவனோடு பேருந்தில் அவன் தோளில் சாய்ந்து சென்றுகொண்டிருப்பது போன்று கனவு கண்டிருந்தேன். அது நடக்கவில்லை. ராஜ்தான் ஒவ்வொரு கறிக்கோழிக் கடையாக விசாரித்து, இறுதியில் அந்தக் குடும்பம் பவானி சென்றுவிட்டதாக அறிந்துகொண்டான். நல்லவேளை, அவர்களை பார்சல்செய்து அனுப்பிவைத்தவர் ஒரு கறிக்கடைக்காரர். அனுப்பிவைத்த இடத்தையும் கூறினார். அடுத்த நாள், நான் கண்ட கனவு நிஜத்தில் நடந்துவிட்டது. பவானி சென்றுகொண்டிருக்கும்போது தூக்கம் சுழற்ற அவன் தோளில்தான் சாய்ந்து பயங்கரமாகத் தூங்கியிருக்கிறேன். பவானி பேருந்து நிறுத்தத்தில் தட்டி எழுப்பி என்னை இறங்கவைத்தான். இரவு பூராவும் ராகுலைச் சந்தித்துவிடுவதாகவும், அவன் ஓடிவந்து ‘நிர்மலா!’ எனக் கத்திக் கட்டிக்கொள்வதுமாகவே நினைத்து நினைத்து விடிய விடிய தூங்காமல் கிடந்தால், பேருந்தில் தூங்காமல் இருக்க முடியுமா என்ன? பவானியில் சுந்தரமூர்த்தி வீட்டைக் கண்டுபிடித்து நாங்கள் போய் நிற்கும்போது, அந்த வீட்டில் வேறு ஒரு குடும்பம் இருந்தது. ‘`ஆமாங்க ஆமாங்க! நீங்க கேக்குற சுந்தரமூர்த்தி ஆறு மாசம் முன்னால ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாருங்க! இந்தா பக்கத்துத் தெருவுலதான் நாங்க வேற வீட்டுல குடியிருந்தோம். அவரு பையனுங்களா? அவனெல்லாம் மனுஷனே இல்லைங்க! அப்பா இறந்த அன்னிக்கி என்ன குடிங்கிறீங்க? இப்ப ரெண்டு மாசம் முன்னாலதான் அம்மாவைக் கூட்டிட்டு வீட்டைக் காலி பண்ணிட்டுப் போனான். வீடு காலியானதும் இது கொஞ்சம் விஸ்தாரமா இருக்குனு நாங்க வந்துட்டோம். எங்க போனாப்லைனு கேக்கிறீங்களா? தெரியலீங்களே!'' என்று அவர் கை விரிக்கவும், ராஜ் என்னை அழைத்துக்கொண்டு பேருந்து நிறுத்தம் வந்துவிட்டான். `என் முகத்தில் ஏதாவது தெரிகிறதா?' என, என் கையில் பெப்ஸியைத் திணித்துவிட்டுப் பார்த்தான். நான் அவன் முகத்தில் ஏதாவது தெரிகிறதா எனத் தேடினேன். பேருந்தில் நாங்கள் பெருந்துறை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தோம். ராஜ், போனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தான். நான் அவன் போனில் பேசும் அழகைத் திருட்டுத்தனமாக ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். படுவா, அதைக் கண்டுவிட்டான்போல! ‘அப்புறம் கூப்பிடறேன்’ என்றவன், போனை அணைத்துவிட்டு என்னைப் பார்க்கும்போது நான் தலையை வெளியே வேடிக்கை பார்ப்பவள்போல திரும்பியிருந்தேன். ‘`நிர்மூ, நான் பவானியில வந்து இறங்கினதும் `அந்த ராகுலை நீ சந்திக்கக் கூடாது'னு மனசுல நினைச்சேன் நிர்மூ’' என்றான் என் முகத்தைத் திருப்பி. அவனின் இடது கையைப் பிடித்துக்கொண்டே, ‘`நானும்தான் ராஜ்'’ என்றேன்! http://www.vikatan.com
 10. எழுத்தாளர் முனிராஜின் S பட்டன் - சிறுகதை அதிஷா, ஓவியங்கள் ஸ்யாம் இது ஒரு கணினியின் கதை. ஒரு கணினிக்காக எழுதப்படும் கதை. அதே கணினியில்தான் இந்தக் கதையை எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆனால், இந்தக் கணினி என்னுடையது அல்ல… பிரபல எழுத்தாளர் முனிராஜுடையது. என்னைப் போலவே 90-களில் வளர்ந்த இளைஞர்கள் பலருக்கும் எழுத்தாளர் முனிராஜ் மிகப்பெரிய ஆதர்சம். அவருடைய துள்ளலான கதைகளும், தீராத இளமைத்துடிப்புமிக்க எழுத்து நடையும் வாசிக்கிற யாரையுமே உள்ளே இழுத்து, நான்கு சாத்து சாத்தி, கை வாயைப் பொத்தி, அடிமையாக்கி உட்காரவைத்துவிடும். அப்படி உட்காரவைக்கப்பட்ட பல ஆயிரம் பேரில் நானும் ஒருவன். முனிராஜ், முழுநேர எழுத்தாளர் எல்லாம் இல்லை. மருந்து ஆராய்ச்சி நிறுவன அதிகாரி. அவரின் எழுத்துக்களில் சற்றே தூக்கலாக விஞ்ஞானம் விளையாடும். முனிராஜ் மீதான பிரியத்தில், எத்தனையோ நாட்கள் யார் யாருடனோ விவாதித்து, சண்டை போட்டிருக் கிறேன். குறிப்பாக, எங்களுடைய முக்கிய எதிரிகளான எழுத்தாளர் சுஜாதாவின் ரசிகர்களோடு. சுஜாதா ரசிகர்களும் நாங்களும் பல இடங்களில் மோதிக்கொண்டாலும், எங்களுடைய மெயின் கோதா... தெருமுனை ஸ்டார் சலூன்தான். அங்குதான் அத்தனை வார - மாத இதழ்களும் குவிந்துகிடக்கும். சலூன் கடை அண்ணன், முனிராஜின் வெறியர். அதனாலேயே எங்கள் குழுவின் எல்லா போர்களுக்கும் அவரே தளபதியாக முன்நின்று போரிடுவார். அவருடைய தம்பிக்கோ சுஜாதாவைத்தான் பிடிக்கும் என்பதால், சுஜாதாயிஸ்ட்களும் அங்கே வந்து உரிமையோடு உட்கார்ந்திருப்பார்கள். சுஜாதாவின் கதைகளில் குறைகள் கண்டுபிடித்து நாங்களும், முனிராஜ் கதைகளின் சிக்கல்களை அவர்களும்... மாறி மாறி விவாதிக்க... சலூன் கடை விவாதம் குருக்ஷேத்திரம் ஆகும். எங்களைப்போலவே சுஜாதாவுக்கும் முனிராஜுக்கும் நடுவிலும்கூட அறிவிக்கப்படாத ஒரு போட்டி இருப்பதாக நாங்களாகவே நம்பினோம். பேட்டி ஒன்றில் முனிராஜிடம்… ‘`சுஜாதாவின் வாரிசு நீங்கள்தான் என்று சொல்கிறார்களே?’’ என்று ஒரு நிருபர் கேட்டார். முனிராஜைக் கோபப்படுத்தவே கேட்கப்பட்ட கேள்வி அது. ஆனால் முனிராஜ் சாந்தமாகப் பதில் சொன்னார்... ``அவர் கமல், நான் ரஜினி. ஒரே வானில் பறக்கும் இரண்டு சாட்டிலைட்கள். ஆனால், வெவ்வேறு வேலைகளுக்காக...’’ சுஜாதா தன் வாழ்நாளில் முனிராஜ் பற்றி ஒரு சொல்கூட எழுதியதும் இல்லை; சொன்னதும் இல்லை. முனிராஜ் எப்போதுமே மிகவும் குறைவாகவே பேசுகிறவராகவும் எளிமையானவராகவும், தன் பிரபலத்தைப் பயன்படுத்தி காரியங்கள் சாதிக்காதவராக, ஏழை எளிய வாசகர்களுக்கு நிறைய உதவிகள் செய்பவராகவே முன்னிறுத்தப்பட்டார். இதை எல்லாம் அவர் விளம்பரத்துக்காகச் செய்கிறார் என்று தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. ஆனால், அவர் அவை பற்றி கவலைப்பட மாட்டார். அவருக்கு யார் வாசகர் கடிதங்கள் அனுப்பினாலும் தவறாமல் பதில் அனுப்புவார்... திட்டி எழுதினாலும்கூட. ``முனிராஜோட பலமே நம்மளை மாதிரி சாதாரண வாசகர்கள் வார்த்தைகளை மதிக்கிற, அவங்க மேல அவர் வெச்சிருக்கிற மரியாதைதான்டா. அதுக்குக் காரணம் அவர் வாழ்க்கைடா’’ என்பார் சலூன் கடை அண்ணன். தொடக்கத்தில் முனிராஜ், கோவையில் வாழும் சாதாரண வாசகராகத்தான் இருந்தார். பண்ணையில் விவசாயக்கூலி வேலைபார்த்த ஒருவருடைய குடிசையில் பிறந்து முதல் தலைமுறையாகப் பள்ளிக்குச் சென்றவர். படிப்படியாக முன்னேறி எழுத்தாளரான அவருடைய வாழ்க்கைக் கதை, வெளியாகாத பத்திரிகைகளே இல்லை. எழுதத் தொடங்கிய காலத்தில், சம்பத்குமார் என்கிற தன் நிஜப்பெயரில் எப்போதாவது சிறு பத்திரிகைகளுக்கு விமர்சனக் கடிதங்கள் போடுவார். ஜெயகாந்தன் எழுத்துலகின் ராஜாவாக ஆட்சிசெய்த காலகட்டத்தில் முனிராஜ் ‘எழுத்தாணி முனை’ என்ற சிறுபத்திரிகையில் சின்னச்சின்ன விஷயங்கள்கொண்ட பத்தி ஒன்றை எழுத ஆரம்பித்திருந்தார். கணையாழியில், சுஜாதா தன் ஒரிஜினல் பெயரைக் கொஞ்சம் மாற்றி ஸ்ரீரங்கம் எஸ்.ஆர் என்ற பெயரில் அப்போதுதான் கடைசிப் பக்கங்கள் ஆரம்பித்திருந்தார். கிட்டத்தட்ட அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கு முனிராஜ், சாதா சம்பத்குமாராகத்தான் இருந்தார். 90-களில்தான் தொடங்கியது முனிராஜின் வளர்ச்சி. பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவர் கதைகள் எழுதவே தொடங்கினார். சம்பத்குமார் ‘முனிராஜ்’ ஆனார் (குலசாமி முனியப்பன் + மனைவி ராஜலட்சுமி). அவருடைய கதைகள் அடுத்தடுத்து பல பத்திரிகைகளிலும் வெளிவரத் தொடங்கின. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ரகம். ஒவ்வொன்றிலும் வெவ்வேறு களம். கதைகளில் பெரிய தத்துவ விசாரணைகள் இருக்காது. ஹாலிவுட் சினிமா பாணியில் விறுவிறுப்பாக இருக்கும். ஆனால், எதை எழுதினாலும் அவர் நம்புகிற அரசியலைத் தெளித்திருப்பார். போகிறபோக்கில் இலக்கிய நூல்களை அரசியல் எழுத்துக்களை அறிமுகப்படுத்திக்கொண்டே இருப்பார். ``பிஹெச்.டி படிச்ச ஒருத்தன் ஒண்ணாங்கிளாஸ் பையனுக்குப் பாடம் எடுக்க வந்தான்னா எப்படி இருக்குமோ, அப்படிப்பட்டது முனிராஜ் ரைட்டிங்’’ என்று இலக்கியவட்டத்தில் பேசிக்கொள்வார்கள். முனிராஜ் தன் கதைகளில் பொட்டில் அறைவதுபோல் பொளேர் என்று ஒரு முடிவை வைத்திருப்பார். யாருமே கணிக்கவே முடியாத ஒன்றாக அது இருக்கும். அதனாலேயே அவரை ஓ.ஹென்றியோடு ஒப்பிட்டு விமர்சிப்பார்கள். ‘க்ளைமாக்ஸ் கிங்’ என்ற பட்டப்பெயர்கூட இருந்தது. கோடம்பாக்கத்துக்கான நுழைவு வாயிலை அந்தப் பட்டப்பெயர்தான் திறந்துவிட்டது. 90-களின் கடைசியில் தமிழ் சினிமாவின் மிகப் பிரபலமான இயக்குநர்கள் அத்தனை பேரும், க்ளைமாக்ஸுக்காக அவரை விரட்ட ஆரம்பித்தனர். ஒரு பக்கம் அவர் வளர்ந்துவந்தபோதும், இப்படி நல்ல கதைகளையும் சிறந்த முடிவுகளையும் எழுதுவது அவர் இல்லை என்ற பேச்சு தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டது. அவருக்கு இந்தக் கதைகளைத் தருவது, அவருடைய கணினிதான் என தமிழ்நாடு முழுக்கவே ஒரு வதந்தி எப்போதும் நிலைத்து இருந்தது. இலங்கை கிரிக்கெட் பேட்ஸ்மேன் ஜெயசூர்யா சிக்ஸரும் ஃபோருமாக விளாசிக்கொண்டிருந்தபோது `அவருடைய பேட்டில் ஸ்ப்ரிங் வைத்திருக்கிறார், பேட்டின் மேல் மர்ம ரசாயனம் பூசுகிறார்’ என்று எல்லாம் வதந்திகள் உலவிக்கொண்டிருந்தன. அதற்கு இணையான வதந்திகள் முனிராஜ் குறித்தும் தொடர்ந்து பரவியது அல்லது பரப்பப்பட்டது. ஜெயசூர்யாவுக்கு பேட் மாதிரி முனிராஜுக்கு கணினி. பத்திரிகைகளில் வருகிற அவருடைய புகைப்படங்கள் அனைத்திலும் அவரோடு தவறாமல் இடம்பிடித்திருக்கும் அந்தக் கணினி. எல்லா படங்களிலும் ஒரே கணினிதான். சுஜாதா தன் ஒரு கதையில் கதை எழுதும் கணினியை உருவாக்கியிருப்பார். முனிராஜிடம் அதுபோன்று ஒன்று இருக்கிறது என்று நம்பினார்கள். இன்ன இன்ன விஷயங்கள் வேண்டும் என்று சொல்லிவிட்டால் கணினியே வேண்டியபடி த்ரில்லரோ, ஹாரரோ, ரொமான்ஸோ வேண்டிய ஜானரில் கதையை சிறப்பாக எழுதித்தந்துவிடும் என்று அவருடைய வாசகர்கள்கூட நினைத்தனர். ஆனால், வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள். முனிராஜின் கணினி குறித்த கதைகள் எல்லாம் அமானுஷ்யத்தன்மையோடு, கைகால் முளைத்து வாசகர்கள் அத்தனை பேரிடமும் எப்படியோ நிலைபெற்றது. முனிராஜிடம் இதைப் பற்றி ஒருமுறை டி.வி பேட்டியில் கேட்டபோது, ‘இன்ட்ரஸ்ட்டிங்’ என்று கண்கள் சிமிட்டினார்... அவ்வளவுதான். அவர் தன் கதைகளை கணினியில் எழுதுகிறார் என்று முதன்முதலாக வெளிவந்த கிசுகிசு செய்தியே எங்களுக்குப் புல்லரிப்பாக, ஓர் அறிவியல் புனைக்கதைபோல் இருந்தது. கணினி என்பது கணக்கு போட மட்டும்தான் என நம்பிக்கொண்டிருந்த காலம். முனிராஜைப் பார்த்துதான் சுஜாதா கம்ப்யூட்டரில் ஆர்வம் வந்து அதைப் பற்றி படித்தார் என்று நாங்களும், சுஜாதாவைக் காப்பி அடித்துதான் முனிராஜ் கம்ப்யூட்டர் கற்றுக்கொண்டார் என்று அவர்களும் எந்நேரமும் சண்டையிடுவோம். ஆனால், எனக்கு நன்றாகத் தெரியும் சுஜாதாதான் இதில் மூத்தவர் என்பது... இருந்தும் விட்டுக்கொடுக்க மாட்டோம். இரண்டு அணிகளிலும் தலா ஐந்து சின்ன சுஜாதாக்களும், ஐந்து மினி முனிராஜ்களும் இருந்தோம். எங்கள் அணியிலேயே ‘கிட்டத்தட்ட முனிராஜ்’ நான்தான். அவரைப் போலவே உருவத்திலும், ஏதோ கொஞ்சம் எழுத்திலும். அவரைப் போலவே சதுரமான ஃப்ரேம் போட்ட கண்ணாடி அணிந்துகொள்வேன். இடதுபுறமாகத் தலைவாரிக்கொள்வேன். முனிராஜுக்காக கம்ப்யூட்டர் க்ளாஸுக்குப் போய் எம்எஸ்-தாஸ், பேசிக், ஃபோர்ட்ரான் எல்லாம் படித்தேன். ஐ.ஏ.எஸ் கோச்சிங் பெறுவதற்காக சென்னை வந்த பிறகு, முனிராஜ் சென்னையில் வாழ்ந்துகொண்டிருந்த ஏரியாவிலேயே நானும் அறை எடுத்துத் தங்கியிருந்தேன். அது யதேச்சையானது அல்ல. நான் எழுதிய கதைகளை அவரிடம் கொடுத்து பாராட்டு வாங்கிவிட வேண்டும் என்பது என் கனவு. அவருடைய வீட்டு வாசல் வரை செல்வேன். ஏதோ தயக்கமாக இருக்கும். போக மாட்டேன். ஒருநாள் தைரியம் வந்தவனாக வீட்டுக்குள் நுழைந்துவிட்டேன். முனிராஜ் போலவே தலை வாரி, அவரைப்போலவே உடை அணிந்து, வீட்டு முன் நின்றேன். முனிராஜ்தான் கதவைத் திறந்தார். எப்போதும் டிப்டாப்பாக மட்டுமே பார்த்து வியந்த ஆளுமை, லுங்கியோடு நின்றுகொண்டிருக்க, எனக்குச் சிரிப்பு வந்தது. அவருக்கும் என்னுடைய வேஷத்தைப் பார்த்து சிரிப்பு வந்திருக்கும். புன்னகையை அப்படியே மென்று முழுங்கினார். ``என்ன வேணும்?’’ என்று கேட்டார். விவரம் சொன்னேன். உள்ளே அழைத்து உட்காரவைத்தார். அவர் எழுதுகிற அறை அது. என்னை அங்கே காத்திருக்கச் சொல்லிவிட்டு, எங்கோ சென்றுவிட்டார். என்னைச் சுற்றி ஆயிரக்கணக்கான நூல்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் சுஜாதாவின் சிறுகதைத் தொகுப்புகளும் இருந்தன. அப்படியே பார்த்துக்கொண்டே வர, ஒரு திரைச்சீலைக்குப் பின்னால், ஓர் ஓரமாக அந்தக் கணினி இருந்தது. ஒரு பூதம் கைகால்களை மடக்கி அமர்ந்திருப்பதைப் போலவே அது இருந்தது. எத்தனை எத்தனை கதைகளை, முதன்முதலாக வாசித்த கணினி. அதன் கீபோர்டைத் தொட்டுப்பார்க்க வேண்டும் என விநோதமான ஆசை எழுந்தது. ஆனால், அதன் அருகில் செல்லவும் அச்சமாக இருந்தது. தைரியம் வந்தவனாக அந்தக் கணினிக்கு அருகில் சென்றேன். கீபோர்டில் ‘S’ என்ற எழுத்து மட்டும் அதிகமாகத் தேய்ந்திருந்தது. முனிராஜ் தன் நாயகிகளுக்கு ‘S’ என்ற முதல் எழுத்தில்தான் எப்போதும் பெயர்வைப்பார். செல்வி, ஸ்டெல்லாவில் தொடங்கி செண்பகவள்ளி வரை. அவருடைய முதல் காதலியின் பெயர்கூட சரோஜா அல்லது சந்திரா... இப்படி எதுவோ ‘S’-ல்தான் ஆரம்பிக்கும். திரைச்சீலையைத் தாண்டி நின்றுகொண்டி ருந்தேன். எதிரில் கணினி. எனக்கு முன்னால் இருக்கிற இந்தக் கணினிக்குள்தான் ஏதோ ரகசியம் இருக்கிறது. இதை வைத்துதான் ஏதோ மாயாஜாலம் பண்ணுகிறார். ஒருவேளை முழுக்கதையைக் கொடுத்துவிட்டால், உலகின் மிகச்சிறந்த க்ளைமாக்ஸைக் கொடுக்கிற மென்பொருள் உள்ளே இருக்குமோ… இதுவரை உலகில் யார் யாரோ எழுதிய, அத்தனை கதைகளையும் உள்ளே தொகுத்து, அதன் வழியே தானாகவே கதைகளை உருவாக்கும் இன்ஜின் வைத்திருப்பாரோ... நாய்க்குட்டிபோல அமைதியாக நிமிர்ந்து, அமர்ந்திருந்த கணினியின் தலையைச் செல்லமாகத் தடவ கையை நீட்டினேன். ‘`அங்கே என்ன பண்றீங்க?’’ என்ற முனிராஜின் குரல் ஒரு புல்லட்டைப்போல மூளையைத் தாக்கியது. பிலுக்கென்று கையை உள்ளே இழுத்துக்கொண்டேன். கையில் இரண்டு கோப்பை காபியோடு நின்றார். ‘`சார் நிறைய வாசிப்பீங்களா?’’ என்று அப்பாவியாகக் கேட்டேன். ‘`ஆயிரம் பக்கங்கள் வாசிச்சாத்தான், அஞ்சு பக்கங்கள் எழுத முடியும் குமார்’’ என்று கம்பீரமாகச் சொன்னார். அவருடைய தீவிர வாசகன் என்பதையும், அவருடைய சிறந்த கதைகளை நான் வாசித்த கதைகளையும் கொட்டினேன். அன்பாகக் கேட்டுக்கொண்டார். கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தில் என் கதைகள், கவிதைகளை எடுத்து நீட்டினேன். அதை வாங்கிப் புரட்டியவர். சில இடங்களில நிறுத்தி கண்ணாடியைச் சரிசெய்துகொண்டு படிக்க ஆரம்பித்தார். முகத்தில் சன்னமாகப் புன்னகை. ‘`நீங்க கல்யாண்ஜி, பசுவய்யா, பிரமிள், நகுலன் கவிதைகள்லாம் படிச்சிருக்கீங்களா?’’ எனக் கேட்டார். ‘`நான் வாழ்க்கையில உங்க எழுத்துக்கள் மட்டும்தான் சார் படிச்சிருக்கேன், சுஜாதாவோட கதைகள்கூடப் படிக்க மாட்டேன்’’ என்று பெருமையோடு பொய் சொன்னேன். அந்த அறையில் சின்னதாகப் பூகம்பம் வருகிற மாதிரி சிரித்தார். முதல் சந்திப்பிலேயே என்னை அவருக்கு ரொம்பவே பிடித்துப்போனது என்பதை அவருடைய பார்வையில் கண்டுகொண்டேன். `‘நான் வெறும் வாட்ச்மேன்தான்ப்பா… இலக்கியத்துக்கு உள்ளே முதல்ல போங்க ஏகப்பட்ட கருணாமூர்த்திகள் இருக்காங்க, அவங்க கத்துக்கொடுப்பாங்க’’ என்று ஆசி கூறி அனுப்பிவைத்தார். ``அவங்கள்லாம் வேண்டாம் சார், நீங்க சொல்லிக்குடுங்க’’ என்றேன். அதற்குப் பிறகு அடிக்கடி அவருடைய வீட்டுக்குச் செல்ல ஆரம்பித்தேன். வீட்டில் அவருடைய மனைவி ராஜலட்சுமி மட்டும் இருப்பார். அந்த அம்மாவுக்கு என்னை ரொம்பவே பிடித்துவிட்டது. அதனால் மளிகை சாமான் வாங்குவது, பிளம்பரை அழைத்து வருவது, வீட்டைச் சுத்தமாக்குவது மாதிரி வேலைகளுக்கு என்னைதான் அனுப்புவார். சாப்பாடு போடுவார். எனக்கு அவருடைய மகன் சாயல் எனச் சொல்வார். வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் நான் எழுதிய கதைகளை முனிராஜிடம் கொண்டுபோய் காட்டுவேன். அவர் புரட்டிப்பார்த்துவிட்டு… ``நீ ஏன் என்னை மாதிரியே எழுதணும். உன்னை மாதிரி எழுது. எதுக்காக நீ என்னை மாதிரியே கண்ணாடியும் முடியும் வெச்சிருக்க? அதை மாத்து. உனக்கு நல்லா எழுத வருது. இன்னும் கொஞ்சம் பக்குவப்படணும். அவ்வளவுதான். புதுமைப்பித்தன், மௌனி, கு.அழகிரிசாமி இவங்க எழுத்துக்களைப் படி. தினமும் பேப்பர் படி’’ என்று அறிவுரை கொடுப்பார். அவரோடு அமர்ந்து சாப்பிடும்போதுகூட, ‘`ஜெயமோகனோட காடு நாவல் வாசிச்சு பாரு. நான் தர்றேன். அவ்ளோ பிரமாதமா இருக்கும்’’ எனச் சொல்லிக்கொண்டேதான் சாப்பிடுவார். எங்கு சென்றாலும் என்னையும் அழைத்துப் போக ஆரம்பித்தார். கடற்கரையில் அலைகளைப் பார்த்தபடி அமர்ந்திருப்பார். சுண்டக்கஞ்சி சாப்பிட்டுவிட்டு மணலில் தூங்குவார். அவர் சொன்ன கதைகளை எல்லாம் விழுந்து விழுந்து வாசிப்பேன். வாசித்து முடித்ததும் நான் தயாராகிவிட்டதாக நினைத்து அவரிடம் ஓடிப்போய்ச் சொல்வேன். அவர் இன்னொரு பட்டியல் சொல்வார். இந்த மனிதரை இம்ப்ரஸ் பண்ணுகிற மாதிரி ஒரு கதை எழுதிவிட வேண்டும் என வெறிவரும். ராஜலட்சுமி அம்மா ஆறுதலாகப் பேசுவார். ‘`அவர்தான் சொல்றார்ல... அதை எல்லாம் படியேன்டா’’ என்பார். ‘`சார் க்ளைமாக்ஸ்ல எப்படி சார் அந்த மாதிரி ஒரு ட்விஸ்ட்டை உங்களால வைக்க முடியுது. அதைச் சொல்லிக்குடுங்களேன். நானும் எவ்வளவோ ட்ரைபண்றேன்’’ என்று கேட்பேன். அவர் சிரிப்பார். ‘`புதுமைப்பித்தனோட `காஞ்சனை’ கதை படி...’’ என்று அனுப்பிவைப்பார். ஒருமுறையாவது அவர் எழுதுவதை அருகில் இருந்து வேடிக்கை பார்க்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால், அவர் அனுமதிக்க மாட்டார். அவர் எழுதும்போது அறை உள்பக்கமாகத் தாழிட்டிருக்கும். மனைவிகூட தொந்தரவு செய்ய முடியாது. முனிராஜ் கதைகளைத் தட்டச்சுவதை ஒருமுறைகூட ராஜலட்சுமி அம்மா பார்த்தது இல்லையாம். ஆச்சர்யமாக இருந்தது. எங்கு சென்றாலும் அழைத்துச் செல்பவர் எழுதும்போது கிளம்பச் சொல்லிவிடுவார். எல்லோரும் சொல்வதுபோல அந்தக் கணினியில்தான் ஏதோ சூதுவைத்திருப்பாரோ என்று சந்தேகம் வரும். எப்படி இவரால் இதுமாதிரி யோசிக்க முடிகிறது... எங்கிருந்து கிடைக்கிறது இத்தனை கற்பனை? அறிந்துகொள்ளும் ஆர்வம் எப்போதும் அதிகரிக்கும். அவர் இல்லாத சமயத்தில் கணினியைத் திறந்துபார்த்துவிடாலம் என்று நினைப்பேன். ஆனால், செய்ய மாட்டேன். சிக்கினால், இனி எப்போதும் இந்த வீட்டுக்குள் நுழையவே முடியாது. கீபோர்டில் தேய்ந்துபோன அந்த ‘S’ எழுத்தைப் பார்க்கும்போது எல்லாம், `அதைப் போட்டு ஏன் தேய்த்திருக்கிறார்?’ என்ற எண்ணத்தோடு கடப்பேன். ஒருவேளை இந்த பட்டனைத் தொடர்ந்து தட்டினால் அலாவுதீனின் பூதம் வருமோ! ``சார் இந்த கம்ப்யூட்டரை எத்தனை வருஷமா வெச்சிருக்கீங்க?’’ யோசிப்பார்... ``இது எனக்கு கிஃப்ட்டா வந்துது. பத்து வருஷம் இருக்கும் குமார். அப்பப்ப நானே அப்டேட் பண்ணிப்பேன்’’ என்பார். ‘`இதுலதான் உங்க கதைகளை எல்லாம் வெச்சிருக்கீங்களா?’’ என்று கேட்பேன். ``உன்னை தி.ஜா-வோட `அம்மா வந்தாள்’ படிக்கச் சொன்னேனே என்னாச்சு?’’ என்று கேட்பார். நான் கிளம்பிவிடுவேன். ‘`சார்... நீங்க கதை எழுதும்போது பக்கத்துல இருந்து பார்க்கணும்’’ என்று ஒருமுறை அவரிடமே கேட்டேன். ``அதெல்லாம் அப்புறம், முதல்ல டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி எழுத்துக்களை எல்லாம் படி, மாப்பசான் சிறுகதைகள் படி’’ என்று எப்போதும்போலவே அனுப்பிவைத்தார். ‘அதைப் படிக்கிறதுக்கும் நீ கதை எழுதுறதைப் பக்கத்துல நின்னு பார்க்குறதுக்கும் என்னய்யா சம்பந்தம்?’ என எனக்குள் கடுப்பாக இருக்கும். புத்தக அடுக்குகளுக்குப் பின்னால் மறைந்துகொண்டு, அவர் எழுதும்போது பார்க்கலாமா என்று திட்டம்போடுவேன். நாள்பட எனக்கு கணினியின் ரகசியம் தெரிந்துகொள்ளும் ஆர்வம் வெறியாக மாறத் தொடங்கியிருந்தது. நான் ஐ.ஏ.எஸ் ப்ரிலிம்ஸில் தோற்றுப்போன ஒருநாளில், முனிராஜ் மாரடைப்பில் இறந்துபோனார். அறைக்குள் எதையோ எழுதிக்கொண்டிருந்தபோது அல்லது எழுத நினைத்து அமர்ந்தபோது மாரடைப்பு வந்திருக்கிறது. எழுந்துபோய் அவரால் கதவைத் திறக்க முடியவில்லை. அறைக் கதவை உடைத்துத் திறந்தபோது… அவர் இறந்துபோய் சில மணி நேரமாகியிருந்தது. அவருடைய தலை கீபோர்டில் சரிந்துகிடந்தது. இடது ஆட்காட்டி விரல் மட்டும் ‘S’ எழுத்தின் மேல் அழுந்தியிருந்தது. ராஜலட்சுமி அம்மாவுக்குக் குற்றவுணர்ச்சி. கதவைத் திறந்துவெச்சிருந்தா காப்பாத்திருப்பேனே... தாங்க முடியவில்லை. அவருக்கு ஆறுதல் சொல்லி அருகிலேயே இருந்தேன். நான் நான்கு நாட்களுக்கு எதுவுமே சாப்பிடாமல் பைத்தியம் பிடித்துத் திரிந்தேன். முனிராஜ் இல்லாத உலகத்தைக் கற்பனைசெய்யக்கூட மனம் இல்லை. என் காதலி செத்துப்போயிருந்தால்கூட அப்படி அழுதிருக்க மாட்டேன். யாரோ ஒரு மனிதனின் சில ஆயிரம் சொற்கள் அப்படி அழவைத்தன. அவருடைய ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் அவருடைய இறுதிச் சடங்குக்கு வந்து குவிந்தனர். ராஜலட்சுமி அம்மா, வீட்டைக் காலி பண்ணி விட்டு மகனுடன் போகப்போவதாகச் சொன்னார். ‘`அம்மா இந்த கம்ப்யூட்டரை நான் எடுத்துக்கவா?’’ - தயக்கமாகக் கேட்டேன். அம்மா என்னை ஏற - இறங்கப் பார்த்தார். அவருக்கு என்மீது பரிதாபம் வந்திருக்கும்போல. ‘`நீ எடுத்துட்டுப் போடா’’ என்று மட்டும் சற்றே சத்தமாகச் சொன்னார் அம்மா. அன்று அவரது கருவிழிகள் அகன்றிருந்ததை முதன்முறையாகப் பார்த்தேன். பத்து ஆண்டுகளாக எப்படி ஒரு மனிதனால் ஒரே கணினியை வைத்திருக்க முடிந்தது, ஏன் இதைப் பற்றி பேச மறுக்கிறார்... இப்படி பல கேள்விகள் அந்தக் கணினியைக் கடக்கும்போது எல்லாம் எழும். அதைப் பார்க்கும்போது எல்லாம், உயிருள்ள ஒரு மனிதன் அல்லது கதைசொல்லி அமர்ந்திருப்பதைப்போலவே இருக்கும். அது லேசாக அசைவதாகக்கூடத் தோன்றும். இப்போது நான் அந்தக் கணினியோடு என் அறைக்கு வந்துவிட்டிருந்தேன். அன்றைய இரவு... அந்தக் கணினியையே உற்றுப்பார்த்தபடி அமர்ந்திருந்தேன். முனிராஜின் மாயக்கண்ணாடி, அற்புதவிளக்கு, கற்பக விருட்சம் இப்போது எனக்கு எதிரே இருக்கிறது. இதைத் திறந்தால் முனிராஜுக்கு வாய்த்த பொக்கிஷங்கள் எனக்கும் வாய்க்குமா? கணினியை ஆன் பண்ண யத்தனித்து எழ... மின்சாரம் தடைபட்டது. அறைக்குள் இருள் சூழ்ந்துகொண்டது. மெழுகுவத்தியைத் தேட மனமின்றி, நான் அப்படியே அமர்ந்துவிட்டேன். ஒரு நெருக்கமான மரணத்துக்குப் பிறகு சந்திக்கிற முதல் இருளுக்கு சிநேக மனோபாவம் உண்டு. அது அடர்த்தியான துயரத்தையும் தனக்குள் கரைத்துக்கொள்ளும். நான் அப்படியே அமர்ந்திருந்தேன். அறையின் மூலையில் இருந்தது கணினி. நாற்காலியில் அமர்ந்திருக்கும் வெந்நிற மனிதனைப்போலவே இருந்தது. அது லேசாகக் காற்றில் அசைவதைப்போல இருந்தது. அதன் அசைவைப் பார்த்தபடியிருந்தேன். முனிராஜின் கதைகளும் அவருடைய சொற் களும் குவியலாக மூளைக்குள் சிதறிக்கொண்டிருந்தன. யாருமற்ற தெருவில் ஒலிக்கும் ஒரு சைக்கிள் மணி ஓசை கேட்டது. இனி அந்த நபர் இல்லாத உலகத்தில் வாழ்ப்போகிறோம் என்ற எண்ணம் அச்சுறுத்தியது. அழத் தொடங்கினேன். திடீரென விழிப்பு வந்தவனாக இருளில் இருந்து விலக முயன்றேன். நான் இருட்டில் ஒரு மெழுகுவத்தியை ஏற்றிவைத்தேன். இப்போது கணினியின் நிழல் ஒரு மனித உருவம்போலவே பிரமாண்டமாக எழுந்து நின்றது. நிழல் காற்றில் சலசலத்து ஆடியது. யாரோ ஒரு மனிதன் அறையின் மூலையில் அமர்ந்தபடி என்னையே பார்ப்பதுபோல இருந்தது. மின்னுகிற ஒளியோடு இரண்டு கண்கள் என்னை கூர்மையாக... முனிராஜின் குரல்கூட கேட்டது. நான் அச்சத்தில் அறையைவிட்டு வெளியேற நினைத்தேன். ஏதோ என்னைத் தடுத்து நிறுத்துவதைப்போல் இருந்தது. மிகமிக சிறியதாக அந்தக் குரல் கேட்க ஆரம்பித்தது. ‘`டேய்... வண்ணநிலவனோட `எஸ்தர்’னு ஒரு கதைடா. உடைச்சுப்போட்டுடும். தேவிபாரதி யோட `பலி’னு ஒரு கதை, பாதசாரியோட `காசி’ படிடா, உயிரை உடைச்சுடும்’’ - மெதுவாக அந்த ஒலி அதிகரிக்க ஆரம்பித்தது. காதுகளைப் பொத்திக்கொண்டேன். கண்களை இறுக மூடிக்கொண்டேன். இரவு எல்லாம் அந்த ஒலி காதுக்குள் ரீங்காரமிட்டபடியே இருந்தது. தற்கொலை செய்துகொண்ட லைப்ரரியன் தூக்கத்தில் உளறுவதைப்போல், புத்தக கம்பெனி ஒன்றின் கேட்லாக்கை, குழந்தை ஒன்று மூச்சுவிடாமல் படிப்பதைப்போல அந்த ஒலிகள் காதுக்குள் ரீங்காரமிட்டதன. விடிந்ததும் முதல் வேலையாக அந்த கணினியைக் கொண்டுபோய் எங்கேயாவது அரசுப் பள்ளிக்குத் தானமாகக் கொடுத்துவிட தீர்மானித்தேன். மின்சாரம் இல்லாமல் புழுக்கத்தில் இரவு எல்லாம் உறக்கம் இல்லாமல் தரையிலேயே புரண்டபடியிருந்தேன். விடியும் போது உடல் தொப்பலாக நனைந்திருந்தது. மூலையில் கணினி புத்தரைப்போல அமர்ந்திருந்தது. காலையில்தான் அந்த யோசனை வந்தது. கணினியை ஆன்செய்து பார்க்க முடிவெடுத்தேன். பாஸ்வேர்டு... யாரிடம் போய் கேட்பது. பாஸ்வேர்டை உடைத்து உள்ளே செல்லும் வழி எல்லாம் எனக்குத் தெரியாது. என்னோடு படித்த நண்பன் கிருஷ்ணனை அழைத்து வந்தேன். அவனிடம் இரவு நடந்த ஆவித் தொந்தரவுகளைப் பற்றி சொன்னேன். கலகலவெனச் சிரித்தான். அவன் சுஜாதா ரசிகன்… ``இன்னும் நீ அந்த முனிராஜை விடலையா ஃபன்னி பல்ப் ரைட்டர். அவரோட கதையிலதான் இப்படி லூஸுத்தனமா ஏதாவது வரும். சுஜாதா ஆல்வேஸ் கம்ஸ் வித் எ லாஜிக்டா’’ எனச் சிரித்தான். அவனுக்கு முனிராஜ் இறந்த விஷயம் தெரியாமல் இருக்கலாம். ``மூடிட்டு வேலையப் பாருடா நொன்னை’’ என்று கோபமாகக் கதவைச் சாத்தினேன். அரை மணி நேரத்தில் கணினியைத் திறந்துகொடுத்துவிட்டு சிகரட்டோடு வெளியே சென்றுவிட்டான். நான் முனிராஜின் ரகசிய வீட்டுக்குள் நுழைந்தேன். அத்தனை ரகசியமாக என்னுடைய விரல்கள் பட்டன்களைத் தட்டின. இங்கேதான் எங்கேயோ முனிராஜின் கதைகளுக் கான ரகசியம் ஒளிந்திருக்கிறது. முனிராஜின் ஆவிகூட இங்கே ஏதாவது ஒரு ஃபைலுக்குள் இருக்கலாம். கண்களால் துளாவ ஆரம்பித்தேன். எதுவுமே தட்டுப்படவில்லை. கணினியை முழுக்க அலசி ஆராய்ந்தேன். எதுவுமே இல்லை. ஒரு சின்ன ஃபைல்கூட இல்லை. ஒரு புகைப்படம்கூட இல்லை. சிகரட்டை அணைத்துப்போட்டுவிட்டு நண்பன் வந்தான். ‘‘டேய் எதுவுமே இல்லடா… ஒரு சின்னத் தகவல்கூட இல்ல’’ என்றேன். அவனுக்கும் எதுவும் தட்டுப்படவில்லை. ``சாகறதுக்கு முன்னால எல்லாத்தையும் அழிச்சிட்டுச் செத்துட்டாரா உன் குருநாதர்?’’ என்றான். ``வாய்ப்பே இல்லைடா.. அவர் எழுதும்போதுதான் மாரடைப்பு வந்து செத்திருக்கார்’’ அழுத்திச் சொன்னேன். ‘‘அவர் எழுதுறதை நீதான் பார்த்ததே இல்லையே... அவர் செத்துக்கிடந்தப்போ கம்ப்யூட்டர் ஆன்ல இருந்துதா?’’ ‘‘இல்லடா, ஆஃப்லதான் இருந்தது.’’ சுஜாதாயிஸ்ட் யோசிக்க ஆரம்பித்தான். ‘‘மனசுக்குள் பெரிய கணேஷ்னு நினைப்பு. விசாரணை பண்றான் ராஸ்கல்’’ - கோபத்தால் நுரையீரல்களை நிரப்பினேன். ``வெயிட்’’ என்றவன் உடனே தன் பேக்கில் இருந்து ஒரு சி.டி-யை எடுத்துப்போட்டு ஏதேதோ செய்யத் தொடங்கினான். அழிக்கப்பட்ட கோப்புகளை மீட்டுத்தரும் மென்பொருள் ஒன்றைப் பதிவேற்றி அதன் வழி எதாவது தேறுமா எனத் தேடிக்கொண்டிருந்தான். ஒரு மணி நேரத் தேடலுக்குப் பிறகு, ``ப்ச்… ஒண்ணுமே இல்லடா இதுல இதுவரைக்கும் எதுவுமே சேவ் பண்ணலைடா. ஒரு ஃபைல்கூட இல்லடா...’’ என்றான். ‘`ஒருவேளை முனிராஜ் ஆவி வந்து எல்லாத்தையும் அழிச்சிருக்குமோ…’’ என்றேன். அவன் ஏதாவது சொல்லிக் கிண்டல் செய்வானோ என்று நானே பேச்சை நகர்த்தினேன். ``இதைக் கவனிச்சியா... இந்த மொத்த கீபோர்டுல `S’ எழுத்து மட்டும்தான் சுத்தமா அழிஞ்சிருக்கு. மத்த கீஸ் எல்லாம் அப்படியே புத்தம்புதுசா இருக்கே’’ என்றேன். தன்னுடைய சுண்டுவிரலால் அந்த `S’-ஐ நான்கு முறை அழுத்திப்பார்த்தான். ``வொய்?’’ என்றான். ``ஒருவேளை `S’ ஃபார் சுஜாதாவா இருக்குமோ?’’ என்றான். நான் எதுவும் பேசவில்லை. அவன் இன்னொரு சிகரெட்டை முடிக்கக் கிளம்பினான். எனக்கு அவனையே முடிக்க வேண்டும்போல இருந்தது. ஒருவேளை முனிராஜுக்கு கணினி இயக்கவே தெரியாமல் இருக்குமோ? நான் யோசிக்கும்போதே சிகரெட் முடித்தவன் அதையே சொல்லிக்கொண்டு வந்தான். ``டேய் உன் ஆளு வெட்டிபந்தாவுக்காகப் பொய் சொல்லிருப்பாரோ. அவருக்கு கம்ப்யூட்டர் யூஸ் பண்ணவே தெரியாம இருக்குமோ?’’ என்றான். என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நிச்சயமாக முனிராஜ் தன் கோப்புகளை அழித்திருக்க வேண்டும். அவருக்கு ரெக்கவர் பண்ண முடியாத அளவுக்கு அழிக்கிற விஷயங்கள் நிச்சயம் தெரிந்திருக்கும். அல்லது இது அவருடைய ஆவியின் வேலையாக இருக்கலாம். தன் கற்பனையின் ஊற்றை யாரும் கண்டறியக் கூடாது என நினைத்திருக்கலாம். நான் நண்பனிடம் இதைப் பற்றி வெளியே சொல்லிவிடாதே என்று அன்பாகக் கேட்டுக்கொண்டேன். அவன் ``நான் சுஜாதா ரசிகன்டா... அப்படி எல்லாம் பண்ண மாட்டேன்’’ என்று கிளம்பினான். எனக்கு முன்னால் அந்தக் கணினி அப்படியே அமர்ந்திருந்தது. அந்த `S’ பட்டனின் புதிரை அவிழ்க்க மூளை முயன்றபடி இருந்தது. அது சுஜாதாவாக இருக்குமோ? சரோஜா? software? Secret? Self? Satisfaction? Search... http://www.vikatan.com/anandavikatan/
 11. பச்சை விளக்கு - சிறுகதை ஹேமி கிருஷ் - ஓவியங்கள்: செந்தில் தூறல் ஆரம்பித்திருந்தது. நல்ல வேளை, மழை வலுப்பதற்கு முன்னர் அலுவலகத்தில் இருந்து கிளம்பியாயிற்று. ஜெயதேவா பேருந்து நிறுத்தத்துக்கு அவசரமாக ஓடினேன். சாலையோரக் கடைகளின் மசாலா வாசனை, பசியைக் கிள்ளியது. `ராகவன் சார் வடை வங்கிக்கொண்டு வந்திருப்பார்' என்று நினைத்தபோதே, உதட்டில் சிரிப்பு பிறந்தது. `இன்னைக்கு வடைக்காரம்மாவைப் பற்றி என்ன சொல்லப்போறாரோ?' என, முகம் அறியாத வடைக்காரம்மாவைப் பற்றி சம்பந்தம் இல்லாத நான் நினைப்பது எல்லாம், நொடிப்பொழுது சுவாரஸ்யத்துக்காக மட்டுமே. ஜெயதேவாவில் இருந்து சில்க் போர்டு செல்ல வேண்டும். சில்க் போர்டில் இருந்து இன்னொரு பேருந்து பிடிக்க வேண்டும். சில்க் போர்டு வந்தடைவது, பெரும் கண்டத்தில் இருந்து தப்பிப்பது போன்று. டிராஃபிக், பெங்களூரின் பெரும் சாபம். அதுவும் மழைக் காலத்தில் அதீதப் பொறுமை வேண்டும். காலையில ஏழு மணிக்குக் கிளம்பினாலும் டிராஃபிக்; ஒன்பது மணிக்குக் கிளம்பினாலும் அதே டிராஃபிக்! சில்க் போர்டில் இருந்து சந்தாபுராவுக்கு நீளமான மேம்பாலம் வழியாகச் செல்லும் பேருந்துதான் 20-A. புதிதாக விடப்பட்ட இந்தப் பேருந்து, எங்களுக்கு வரம். இல்லையென்றால், மேம்பாலத்தின் கீழே சிக்னலிலும் டிராஃபிக்கிலும், இரண்டு மணி நேரப் பயணத்தைக் கடக்கவேண்டும். நம் மூச்சுக்காற்று நம் மீதே படும் அளவுக்கு நெருக்கடியான பேருந்தில் இனி செல்லத் தேவை இல்லை. சுமார் 10 கிலோமீட்டர் தூரம் இருக்கும் இந்த மிக நெடும் மேம்பாலத்தில் செல்வது அத்தனை வசதியாக இருந்தது. ரெஞ்சு, தமயந்தி, ராகவன் சார் இவர்களின் அறிமுகம் கிடைத்தது 20A-யில்தான். இல்லையெனில், நாங்கள் வெவ்வேறு பேருந்துகளில் அல்லது ஒரே பேருந்தில் யாரோ போல் அமர்ந்திருப்போம். நான், தமயந்தி, ராகவன் சார் மூன்று பேரும் தமிழ் பேசுபவர்கள். ரெஞ்சு, மலையாளி. ராகவன் சாருக்கு தமிழ் தாய்மொழி என்றாலும், சொந்த ஊர் மங்களூரு. கன்னடம் கலந்த தமிழ். தாட்டியமான உடல்வாகு, சட்டையையும் தாண்டி முன்நிற்கும் தொப்பை, கோல்டன் ஃப்ரேம் போட்ட கண்ணாடி, சிவப்பு நிற சதுரக் குடை. பேருந்தில் வழக்கமாக வருபவர்களே அதிகம் என்பதால், எல்லோரின் முகங்களும் அறிமுகம். நான், தமயந்தி, ரெஞ்சு மூன்று பேரும் அருகருகே அமர்ந்தபடி பேசிக்கொண்டு வருவோம். தமயந்திக்கும் ரெஞ்சுவுக்கும் ஐ.டி கம்பெனியில் பணி. ராகவன் சார், மத்திய அரசாங்க வேலையில் இருந்து கட்டாய ஓய்வு பெற்று, இப்போது தனியார் கம்பெனியில் நிர்வாகத் துறையில் இருக்கிறார். இந்தப் பேருந்தில் வந்த புதிதில் தனிமையான பயணம்தான். மேம்பாலத்தில் போகும்போது மட்டும் பெங்களூரு அழகாகத் தோன்றியது. பார்வையின் எல்லையில் தெரியும் ஆரஞ்சு நிற வானமும் உயரமான கட்டடங்களும், ஒரு புது நிறத்தைக் கண்களுக்குத் தருவதுபோல் இருந்தன.பல மனஓட்டங்கள், தனிமையான பயணங்களில் தான் அமைகின்றன. மற்ற நேரங்களில் எதை நினைப்பதற்கும் நேரம் இருப்பது இல்லை. பாலத்தில் இருந்து தூரமாகத் தெரியும் அடுக்குமாடிக் குடியிருப்பில் நான்காவது தளத்தில் ஒரு வீட்டில் தினமும் பச்சைவிளக்கு எரியும். `அந்த வீட்டில் இருப்பவர்கள் இப்போது என்ன செய்துகொண்டிருப்பார்கள்?' என யோசிப்பேன். இந்த எண்ணம் புதிது அல்ல. இரவுகளில் நெடுந்தூரம் பயணிக்கும்போது கட்டடங்களே தென்படாத இருளான இடங்களில், எங்கோ தூரத்தில் ஒரு வீட்டில் மட்டும் விளக்கு எரிந்துகொண்டிருக்கும். `அந்த வீட்டில் யார் இருப்பார்கள்... என்ன செய்துகொண்டிருப்பார்கள்?' என்று நினைப்பேன். `இப்படி எல்லாம் நமக்கு மட்டும்தான் தோன்றுகிறதா... அல்லது நம்மைப்போல் மற்றவர்களும் நினைப்பார்களா?' என்று கேள்விகள் எழுவது உண்டு. இப்படி தனிமையை ரசிப்பது எல்லாம் ரெஞ்சு, அர்பிதா, ராகவன் சார் அறிமுகம் கிடைக்கும் வரைதான். அதன் பிறகு அந்த நான்காவது தளத்தில் எரியும் பச்சைநிற வீட்டையும் சிவந்த வானத்தையும் மறந்துபோனேன். அன்றாடம் வீட்டுவேலை, அலுவலகம் என இயந்திரமாகிப்போன நாட்களில் இந்த ஒரு மணி நேர நட்பு, மனதுக்குள் சந்தோஷம் தந்தது. அவ்வப்போது மாமியார், நாத்தனார் எனப் பல தலைகள் உருளும். இதில் தமயந்தியின் கொழுந்தனார் விஷயம் பிரசித்தமானது. அமர ஆரம்பிப்பதில் இருந்து அவனைப் பற்றியே புலம்பித் தீர்ப்பாள். அவள் கோபமாகச் சொல்வது எங்களுக்குச் சிரிப்பாக இருக்கும். ராகவன் சார் அறிமுகம்கூட, அவளின் கொழுந்தனார் பிரச்னையின்போதுதான் கிடைத்தது. ஒருநாள் வழக்கம்போல் தமயந்தி ஆரம்பித்தாள். ``இப்படி வேலை இல்லாம சுத்திட்டு இருக்கானேனுதான் என் வீட்டுக்காரர் வேலை தேடச் சொல்லி, கைக்காசு போட்டு அவனை துபாய்க்கு அனுப்பினார். 30 வயசு ஆச்சே, அறிவு வேணாம்!'' ``அங்கே போய் வேலை தேடுறதா? பயங்கரமா செலவாகுமே!'' - இது நான். ``இவரோட இன்னொரு அண்ணன் அங்கேதான் வேலை பார்க்கிறார். அவர்தான் ஒரு வேலையை ரெடி பண்ணிட்டு, அங்கே கூப்பிட்டார். ஏதோ எம்.பி.ஏ படிச்சிருக்கானே, வேலை கிடைச்சுடும்னு நினைச்சோம். ஆனா, அங்கே போய் `இந்த வேலை எல்லாம் செய்ய மாட்டேன். நான் எம்.பி.ஏ படிச்சிருக்கேன்'னு சொல்லியிருக்கான். `சரி, என்ன வேலைதான் செய்வே?'னு அந்த கம்பெனியில் கேட்டிருக்காங்க. `கம்ப்யூட்டர் வேலை இருந்தா கொடுங்க'னு சொல்லியிருக்கான். சரின்னு சிஸ்டம்ல உட்காரவெச்சு ஆபரேட் பண்ணச் சொன்னா, திருதிருனு முழிச்சிருக்கான். அப்புறம் என்ன... கிளம்பிப் போகச் சொல்லிட்டாங்க. சிங்கப்பூர்ல ஒருநாள் போய், அங்கேயிருந்து இங்கே வந்திருக்கான். இதுல என்ன தெரியுமா எனக்குக் கடுப்பு? என் குழந்தைகிட்ட `நான் ஜாலியா துபாய், சிங்கப்பூர் எல்லாம் சுற்றிப் பார்த்துட்டு வந்தேனே!'னு சொல்லியிருக்கான். இவனை வெச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னே தெரியலை?'' எனச் சொல்லி முடிக்கும் முன்னர், பின்புறம் சீனியர் சிட்டிசன் ஸீட்டில் அமர்ந்திருந்த ராகவன் சார் பெரும் சத்தத்துடன் சிரித்தார். அப்போதுதான் அவரின் முதல் அறிமுகம். தமயந்திக்கு, கூச்சமாகப்போயிற்று. ``ஸாரிம்மா... நான் ஒட்டு கேட்டுட்டேன்னு நினைக்காதே!'' என்றார். ` சார், நீங்க தமிழா?' எனக் கேட்டதில் ஆரம்பித்்தது அவரின் நட்பு. ``ராஜஸ்தான்ல இருக்கிற ஒரு பொண்ணு ஐ.ஐ.ம்-ல படிச்சுட்டு விவசாயம் பார்க்குதும்மா. ஒயிட் காலர் வேலையை உதறிட்டு, இப்படி விவசாயம் பாக்கணும்னு எண்ணம் அவங்கவங்களுக்கு வந்தாத்தான் உண்டு. யாரும் சொல்லி வர்ற எண்ணம் கிடையாது. `விவசாயம் முதுகெலும்பு'னு காந்தி காலத்துல இருந்து சொல்லிட்டு மட்டும்தான் இருக்கோம்'' என்று நாட்டுநடப்புகளைக்கூட, கதைபோல் கூறுவார். அன்டார்டிக்காவில் பனி உருகி வருவதையும், சுட்டுப் போட்டாலும் புரியாத உலகப் பொருளாதாரத்தையும் சொல்லி, எங்களுடைய எண்ணங்களை விசாலமாக்கியது அவர்தான். எங்களைக் கிண்டல் செய்வதில் பேரானந்தம்கொள்வார். ரெஞ்சு, எப்போதும் கண் மட்டும் தெரியும்படி முகத்தை மறைத்தபடி முக்காடு போட்டுக்கொண்டுதான் வருவாள். நாங்கள் பல மாதங்கள் கழித்துத்தான் அவள் முகத்தையே பார்த்தோம். ``நல்லதாப்போச்சு. இந்த மாதிரி முக்காடு போட்டுக்கிட்டு பஸ் பிடிக்க அவசரமா வர்றப்போ தடுக்கி விழுந்தாக்கூட யாருக்கும் நம்மளை அடையாளம் தெரியாது. `உன்னை அந்த ரோடுல பார்த்தேனே... இந்த ரோடுல பார்த்தேனே'னு யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க. அப்புறம் யாராவது பார்ப்பாங்களோனு, வர்ற அழுகை எல்லாம் கட்டுப்படுத்த தேவையே இல்லை.அப்படித்தானேம்மா?'' என்பார். ``குட் அனாலிசிஸ் சார்'' என்றபடி சிரிப்பாள். நான் சில்க் போர்டை அடைந்தபோது தூறலும் நின்றுபோயிருந்தது. நசநசவென நான்குமுனைச் சாலையில் தெற்கு ஓரத்தில் எங்கள் பஸ்ஸுக்காகக் காத்துக் கொண்டிருந்தார் ராகவன் சார். அவரின் சிவப்பு நிற சதுரக் குடை மட்டும் அந்தக் கும்பலில் தனித்துத் தெரிந்தது. ``என்ன சார்... குடையை விரிச்சிருக்கீங்க... மழை வரலையே!'' ``எப்படியும் பொத்துக்கிட்டு வரப்போகுது. கையில வேர்க்கடலை வேற. வந்தா சிரமமாகும்னு ஏற்கெனவே குடையை விரிச்சேவெச்சிருக்கேன்'' என்றார். ``மழை வராது சார். பாருங்களேன்'' என்று நான் சொல்லி முடிப்பதற்குள் படபடவென மழை அடர்த்தியானது. `நான் சொன்னதும் மழை வந்ததா!' எனத் தலையை ஆட்டியபடி அதே பெருஞ்சிரிப்பைக் கொடுத்தார் ராகவன் சார். எங்கள் பேருந்து வர, ஏறி அமர்ந்தோம். சில நிமிடங்களில், தமயந்தி மழையில் பாதி நனைந்தும் நனையாமலும் ஏறினாள். பஸ் ஏறியதும் அவளைப் பார்த்து ராகவன் சார் பாட்டு பாட ஆரம்பித்தார். சிரிப்பு தாங்காமல் சிரித்தாள். ``ஏன் சார் இப்படி?'' என்று மடக்கிய குடையை உதறியபடி கூறினாள். ராகவன் சாருக்கு கணீர் குரல். திடீரென மனதுக்குத் தோன்றினால் அருகில் இருப்பவருக்குக் கேட்கும்படியான சத்தத்தில் பாடுவார். சிறு வயதில் கொங்கணி ஆர்கெஸ்ட்ராவில் பாடியதாக நினைவுகூர்வார். ஆனால், அவர் குரலில் எப்போதும் சோகம் தெரியும். அதைக்கூட பின்னொரு நாளில்தான் தெரிந்துகொண்டேன். பேருந்து கிளம்பிய நேரம், அர்பிதா என்கிற கொங்கணிப் பெண் ஓடிவந்து ஏறினாள். முனகியபடியே வந்தாள். அர்பிதாவை, ராகவன் சார் மூலமாகத்தான் தெரியும். அவளுக்கும் மங்களூரு பக்கம்தான். இருவரும் கொங்கணியில்தான் பேசிக்கொள்வார்கள். அர்பிதாவைப் பற்றி பெரிதாகப் பேச, ஒரே ஒரு விஷயம்தான் உள்ளது. அவளுடைய கணவனைப் பற்றி. அவள் வீட்டுக்குச் செல்லும் முன்னர், அவள் கணவன் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வந்து சமையல் செய்துவிடுவார். துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது என, பெருமளவிலான வேலைகளை அவரே செய்து முடித்துவிடுவார். டே கேரில் இருந்து அவர்களின் குழந்தையைக் கூட்டிவருவது மற்றும் மூக்குப் பிடிக்கச் சாப்பிடுவது மட்டும்தான் அவள் வேலை என ஆரம்பத்தில் சொன்னபோது, எங்களால் நம்பவே முடியவில்லை. `எனக்கு இப்போது வரை சப்பாத்தி பிசையக்கூடத் தெரியாது' என்று அவள் முகத்தைத் தீவிரமாக வைத்துக்கொண்டு சொன்னபோது, எங்களுக்கு அவள் வேற்றுக்கிரகவாசிபோலத்தான் தெரிந்தாள். மழை இன்னும் அசாதாரணமாகியது. கோடைமழையைப்போல் பருவகால மழையை ரசிப்பதற்கு, ஒன்று... குழந்தையாக இருக்க வேண்டும்; இல்லையேல் தனிமையில் உழல வேண்டும். இரண்டும் அல்லாத என்னைப் போன்ற பெண்களுக்கு ஏற்படும் பலப்பல கவலைகளில் மிக முக்கியமானது, துவைத்த துணி காய்வது. எப்போதும் ஏதாவது புலம்பிக்கொண்டிருப்பது தமயந்தியின் இயல்பு. அன்றும் அப்படித்தான் தனது புராஜெக்ட்டில் தனக்கு நேரும் துரோகத்தைப் பற்றி புலம்பியபடி இருந்தாள். ராகவன் சார், அவள் காலை வாரிக்கொண்டிருந்தார். ``மழையும் ஓயலை... தமயந்தியின் புலம்பலும் ஓயலை'' என்றார். தமயந்தி பின்பக்கம் திரும்பிப் பார்த்து, ``சார், உங்களுக்கு அங்கே நடக்கிற பாலிட்டிக்ஸ் பத்தி தெரியாது. அதான் இப்படிச் சொல்றீங்க.'' ``இப்படி சதா பிரச்னைகளைப் பேசுறது, சோக கீதங்களைக் கேட்கிற மாதிரி அது ஒரு போதை தெரியுமா? திரும்பத் திரும்பச் சோகமாகி, அந்தக் கவலைகளை நினைப்பதற்கு அடிமையாகிடுறோம். `நாம மட்டும்தான் கஷ்டப்படுறோம்' என்று நினைக்கிற உளவியல் கோளாறு'' என்றார். ``சார், மேடமும் உங்க பிள்ளைங்களும் எப்படி உங்களைச் சமாளிக்கிறாங்க? உங்களை கோபமா திட்டக்கூட முடியாதுபோலிருக்கே! அவங்களைத் திருப்பி இப்படிக் கிண்டல் பண்ணி கடுப்பேத்திடுவீங்கபோல!'' என்று சிரித்தபடி கேட்டாள். அவர் சத்தமான சிரிப்பை மட்டும் தந்தார். அவர் சொன்னதுபோல் அவளின் புலம்பல் ஓயவே இல்லை. ராகவன் சார் சாப்பாட்டு ப்ரியர். சமையலும் அருமையாகச் செய்வாராம். அவரே சிலமுறை சில பதார்த்தங்கள் செய்துகொண்டுவருவார். சின்னச்சின்ன சமையல் குறிப்புகளைத் தருவார். இவை எல்லாமே புதிதாகவும் நேரம் குறைவாகச் செய்யும்படியும் இருக்கும். ஓர் ஆண், சகஜமாக சமையல் குறிப்பைத் தருவது எல்லாம் எல்லா இடங்களிலும் நடப்பது அல்ல. எனவேதான் எங்களுக்கும் அது ஆச்சர்யம். ஒருநாள், மீனில் பஜ்ஜி போன்று புதுவகையைச் செய்து கொண்டுவந்தார். மாலை வரை அது எந்தவிதமான சேதாரமும் ஆகவில்லை. மொறுமொறுப்பும் உள்ளே மெத்தென்றும் இருந்தது. சீஸ் சேர்த்ததாகச் சொன்னார். அலுவலகத்திலும் பாராட்டுப் பத்திரங்கள் நிறையக் கிடைத்ததாகப் பெருமிதமாகச் சொல்லிக்கொண்டார். ``சார், மேடத்தைச் சமைக்கவே விட மாட்டீங்களா? கிச்சன்ல உங்க ராஜ்ஜியம்தான்போல!'' ``நான் மட்டும் இல்லைம்மா... எங்க ஊர்ப் பக்கம் நிறைய ஆண்கள் சமைப்பாங்க. வீட்டு வேலையும் செய்வாங்க'' என்றார். ``வாவ்..! எனக்கு அங்கேயே ஒரு மாப்பிள்ளை பார்த்துடச் சொல்லி, என் பேரன்ட்ஸ்கிட்ட சொல்றேன். இன்னொண்ணு குடுங்க சார் நல்லாருக்கு'' என்றாள் ரெஞ்சு. ராகவன் சார், குழந்தையைப்போல் அகமகிழ்ந்து மற்றொரு துண்டை அவளுக்குக் கொடுத்தார். வயது என்றும் வித்தியாசப்பட்டது இல்லை. ஓர் ஆண், எந்த வயதானாலும் சரி... பெண்களிடம் கூடிப் பேசினால் அவனுக்கு `பெண் பித்தன்' எனப் பெயரிட்டு மகிழ்வது இந்திய மனோபாவம். அப்படித்தான் ராகவன் சாரையும் பலரும் அந்தப் பேருந்தில் நினைத்தனர்போலும். அன்று ஒருநாள் ஒருவன் கேட்டேவிட்டான் ``என்ன சார்... லேடீஸ் ஸீட் பக்கத்துலயே பட்டா போட்டுட்டீங்க. எங்ககூட எல்லாம் பேச மாட்டீங்கபோல!'' என்று கன்னடத்தில் நக்கலாகக் கேட்டான். ராகவன் சார் நிதானமாக, ``ஒரு மகளோட பேசறதே பாக்கியம். எனக்கு இத்தனை மகள்கள் வாய்ச்சிருக்காங்க. மகா பாக்கியம். யார்கூடப் பேசுறதுங்கிறது என் விருப்பம். இதுல உனக்கு என்னப்பா கவலை... நஷ்டம்?'' என்றார். அவனிடம் மறுபேச்சு இல்லை. அமைதியாக அமர்ந்துகொண்டான். இயல்பான பழக்கத்தை, கொச்சைப்படுத்துபவர்களைக் கண்டால் ஓர் அருவருப்பு நம்மை அறியாமலேயே ஏற்படுகிறது. அந்தச் சூழ்நிலையில் ராகவன் சாரிடம் வெளிப்பட்ட இந்த வார்த்தைக்கு நன்றி சொல்ல வேண்டும் என இருந்தது. ``தேங்க் யூ சார். எங்களை `மகள்'னு சொன்னதுக்கு'' என்றேன் நெகிழ்ச்சியுடன். ``நான்தான்மா நன்றி சொல்லணும். எனக்கு பெண் குழந்தைகளே இல்லை. ரெண்டு பசங்கதான். அதனாலேயே பெண்களைப் பார்த்தா பாசம். அதோட இன்னொரு காரணமும் இருக்கு.'' ``எதுக்குக் காரணம்?'' எனக் கேட்டேன். ``நிறையப் பார்க்கிறோமேம்மா... பொண்ணுங்களால நிம்மதியா வேலைக்கும் கல்லூரிக்கும் போக முடியுதா? எவன் எப்போ பங்கம் செய்வான்னு அடிச்சுக்குதே. இந்த பஸ்லயே எடுத்துக்கோ... இருக்கிற பாதிப் பொண்ணுங்க, அம்மா-அப்பானு எங்கேயோ ஊர்ல விட்டுட்டு, குடும்பத்துக்காகத்தானே உழைக்க வர்றாங்க. பாதுகாப்பு இல்லாம எப்பவும் பயத்தோடும் சந்தேகத்தோடும் வாழ்றது அவ்ளோ ஈஸியா என்ன? அதையும் மீறி இந்த வெளி உலகத்துல நடமாடுறது, வீடு, அலுவலகம்னு சமாளிக்கிறதுக்கு எல்லாம் தனி தைரியமும் பக்குவமும் வேணும். ஆண்களுக்கு வேலை, பாரம்னு சுமக்கத்தான் தெரியும். ஆனா, இப்படி உங்களை மாதிரி நாலும் சமாளிக்கத் தெரியாது. அதனாலேயே பெண் குழந்தைகள் ரொம்பப் பிடிக்கும்'' என்றார். அதன் பிறகு அவருடனான உறவு எங்களுக்கு உணர்வுபூர்வமாக இருந்தது. பல பெண்கள் அவரைப் பார்த்தால் சிரித்தபடி `ஹாய்!' சொல்வார்கள். இதற்கு முன்னர் இந்தப் பெண்களும் அவனைப்போலத்தான் நினைத்திருப்பார்கள். என்றைக்கும் இல்லாமல் அன்று மேம்பாலத்திலும் டிராஃபிக் ஜாம் ஏற்பட்டது. வண்டிகள் அனைத்தும் நகர முடியாமல் இருந்தன. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் மேம்பாலத்திலேயே பேருந்துக்குள் காத்திருந் தோம். ஆளாளுக்கு அலைபேசியில் வீட்டுக்குத் தாமதத்தைக் குறிப்பிட்டுக்கொண்டிருந்தனர். மழையினால் மேம்பாலத்தின் முடிவில் உள்ள சிக்னலில் கடும் டிராஃபிக். `சரி, நடந்தாவது போகலாம்' என இறங்கினால், வெளியே கால் எடுத்துவைக்கக்கூட வழி இல்லை. சந்துபொந்துகளிலும் இருசக்கர வண்டிகள் ஆக்கிரமித்தன. எதுவும் செய்ய இயலாமல் மேம்பாலத்தில் இருந்து கீழே பார்த்துக்கொண்டி ருந்தோம். கீழே கண்ணுக்கு எட்டும் தூரம் வரை வாகனங்களின் விளக்கு வெளிச்சம். எங்கும் வாகனங்கள். தலை சுற்றியது. ஒரே ஒரு ஆம்புலன்ஸ், வாகனங்களுக்கு நடுவில் அலறிக்கொண்டிருந்தது. `மாயமந்திரம் நடந்தால்தான் அந்த ஆம்புலன்ஸ் நகர வழி உண்டு' என்று ராகவன் சார் முனகிக் கொண்டிருந்தார். ``இன்னும் அஞ்சே வருஷத்துல, நடந்துபோகக்கூட வழி இல்லாமப் போகப்போகுது பாருங்க. இத்தனை வண்டிகளா இந்த ரோட்ல ஓடிட்டிருக்கு?! காரில் போறதை எல்லாம் தடைசெய்யணும். `பொது வாகனத்தில்தான் எல்லாரும் பயணம் செய்யணும்'னு ஆர்டர் போடணும் சார் இல்லைன்னா ரொம்பக் கஷ்டம்'' என்றபடி ஒருவர், ராகவன் சாரிடம் கூறிக்கொண்டிருந்தார். பொறுமை மிஞ்சும் சமயத்தில் ராகவன் சார் `வண்ணம்கொண்ட வெண்ணிலவே... வானம்விட்டு வாராயோ...' என்று மெதுவாகப் பாடினார். ராகம் பிசகாமல் தேனில் நனைத்து எடுத்த பழத்தைச் சுவைப்பதுபோல் இருந்தது அந்தக் குரல். பின்னால் இருந்த வண்டிகளில் அமர்ந்தவர்கள் அனைவரும் எட்டிப்பார்த்தனர். ராகவன் சாரிடம் இந்தக் குணம் எனக்கு மிகவும் பிடித்தது. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் இல்லாமல் தனக்குத் தோன்றியதைச் செய்வார். இது எல்லோருக்கும் கைகூடாதது. 10 பேர் ஒரே மாதிரி குணங்களுடன் இருக்கும்போது ஒருவர் மட்டும் தனித்துக் காணப்பட்டால், அவரிடம் எல்லோருக்கும் ஓர் அபிமானம் இருக்கும். அப்படித்தான் எங்களுக்கு ராகவன் சார் கூடுதல் ஸ்பெஷலாக இருந்தார். ராகவன் சாரின் அந்தப் பாட்டு, எனக்கு ஓயாமல் இரவு நேரங்களிலும் சில நாட்கள் வரை கேட்டுக்கொண்டிருந்தது. ரெஞ்சுவுக்கு, எலெக்ட்ரானிக் சிட்டியிலேயே வேலை கிடைத்தது. இவ்வளவு தூரம் உள்ளே வரவேண்டியது இல்லை. இனி இந்தப் பேருந்தில் வர மாட்டாள். கடைசி நாள் அன்று எல்லோருக்கும் ஒரு கடையில் சிறியதாக ட்ரீட் கொடுத்தாள். அன்று மட்டும் முக்காடு போடாமல் எங்களுடன் வந்தாள். அந்தக் கடைகூட ராகவன் சாரால் அறிமுகப் படுத்தப்பட்டதுதான். மடிவாலாவில் பரபரவென சாலையில் இருந்து விலகிய ஒரு குறுகிய சந்தில், காபிக்காக எங்களை கால் வலிக்கக் கூட்டிச்சென்ற இடம் அது. ஒரு காபிக்காக அவ்வளவு தூரம் அலையவைத்த அவரை, எல்லோரும் திட்டியது நினைவுக்கு வந்தது. அதே கடையில் ரெஞ்சு எங்களுக்குப் பிரிவு உபசாரத்தை முடித்துக்கொண்டாள். எந்த நேரத்தில் ரெஞ்சு சென்றாளோ, சில மாதங்களிலேயே தமயந்தியின் கணவருக்கு சென்னையிலேயே புராஜெக்ட் கிடைத்ததால், அவளும் தனது பேருந்துப் பயணத்தை முடிக்கவேண்டியதாக இருந்தது. மறக்காமல் கொழுந்தனார் விஷயத்தில் தீர்வு காணும்படி கூறியதும் சிரித்தாள். வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என தொடர்புக்குப் பல இருந்தாலும், அவை பேருந்துக்கு இணையாகவில்லை. அந்த ஒரு மணி நேரப் பயணம், முழுதாக எங்களுக்கு இருந்தது. அதன் உயிர்ப்பு, இந்த மின்சாதனங்களில் இல்லை. எப்போதாவதுதான் எங்களால் சாட் செய்ய முடிந்தது. அதுவும் சில சமயம் `ஹாய்!' சொல்வதோடு முடிந்துவிடும். நானும் ராகவன் சாரும் மட்டும்தான் எஞ்சியிருந்தோம். எப்போதும்போல் அவ்வப்போது அர்பிதா எங்களுடன் சேர்ந்துகொள்வாள். ஒருநாள் வெறுமையான மனநிலையில் ராகவன் சாரிடம் அலுத்துக்கொண்டிருந்தேன். அன்றைக்கு அதைப் பற்றிப் பேசியிருக்கக் கூடாது. அவரை இறுதியாக ஒரு கவலை தோய்ந்த முகத்துடன் பார்த்த ஞாபகமாவது வராது போயிருக்கும். ``ஆபீஸ்ல ஒரே வொர்க் பிரஷர் சார். வீட்டுக்கு வந்தா பிள்ளைங்க நச்சு, வீடே தலைகீழா இருக்கும். சுத்தம் பண்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகுது. `அப்பாடா!'னு யாருமே இல்லாம நிம்மதியா இருக்கணும்னு தோணுது சார்.'' ``அப்படி எல்லாம் சொல்லாதம்மா. தனிமை எவ்ளோ கொடுமையானதுன்னு எனக்குத்தான் தெரியும்'' என்றார். ``என்ன இப்படிச் சொல்றீங்க... வீட்ல உங்க வொய்ஃப், பிள்ளைங்க இருக்காங்களே!'' ``அவங்க எல்லாரும் என்னைவிட்டுப் போய் பல காலம் ஆச்சு. இப்பதான் நான் இவளோ சிரிக்கச்சிரிக்கப் பேசறேன். ஆனா, நல்ல அப்பாவா, நல்ல கணவனா நான் இருந்தது இல்லை. என்னோட கோபம்தான். அப்படியொரு உக்கிரமான கோபம். அவங்க மென்மையானவங்க தாங்க முடியலை'' - சில நொடி அமைதியானார். நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். ``ரொம்ப டிசிப்ளின் எதிர்பார்ப்பேன். லீவு நாள்லகூட காலையில நாலு மணிக்கு அவங்க எழுந்தாகணும். இல்லைன்னா அவங்க மேல தண்ணி எல்லாம் ஊத்தியிருக்கேன். பிள்ளைங்க படிப்புல எண்பது மார்க்குக்குக் குறைஞ்சா, பாடப் புத்தகத்தை எல்லாம் கிழிச்சு வீதியிலயும் சாக்கடையிலயும் வீசுவேன். அவங்ககிட்ட சின்னக் குறையைக்கூட கண்டுபிடிச்சுட்டே இருப்பேன். சின்னத் தப்புக்கும் பெரிய தண்டனைதான். சந்தோஷமா அவங்களை வெளியே கூட்டிட்டுப்போனது இல்லை. அப்படியே போனாலும் நான் சொன்ன மாதிரிதான் நடந்துக்கணும். அதுதான் ஒழுக்கம்னு இருந்தேன். நான் காதலிச்சுத்தான் கல்யாணம் பண்ணினேன். அந்தக் காதல் செத்துப்போயிட்டதா சொல்லி, ஒருநாள் பிள்ளைங்களைக் கூட்டிட்டுப் போயிட்டா என் மனைவி. ஆரம்பத்துல `நான் இல்லைன்னாத்தான் என் அருமை தெரியும்'னு நினைச்சு, வீம்பா இருந்தேன். ஆனா, அவங்க அப்பதான் சந்தோஷமாவே இருந்தாங்க. நான் இல்லைன்னா, அவங்க ஒண்ணும் இல்லைனு நினைச்சேன். ஆனா, நான்தான் இப்போ ஒண்ணும் இல்லாம, யாரும் இல்லாம வாழறேன்.'' நொடிக்கு நொடி சிரித்துப் பேசும் இவரா அப்படி இருந்தது என நம்பவே முடியவில்லை. ஜன்னலின் வெளியே பார்த்தபடி கண்ணீரைத் துடைத்தபடி அழுதார். எப்படி ஆற்றுவது எனத் தெரியாமல் இருந்தேன். அன்றுதான் அவரை நான் இறுதியாகப் பார்த்தது. அதன் பிறகு அவர் வரவே இல்லை. அலைபேசிக்கு அழைத்தாலும் அவர் அழைப்பை எடுக்கவில்லை. என்ன ஆயிற்று? அவர் இருக்கையை தினமும் பார்ப்பேன். ஒருநாள் அவரது அலைபேசி உபயோகத்தில் இல்லை என வந்தது. அதன் பிறகு தேடுவதை நிறுத்திவிட்டேன். சிவப்பு நிற சதுரக் குடை, முன்நிற்கும் தொப்பை, கண்ணாடியுடன் அவர் சிரிக்கும் பெரும் சிரிப்பையும் நான் இழந்துகொண்டிருந்தேன். வெகு நாட்களுக்குப் பிறகு, பேருந்தின் ஜன்னலில் வழியே அந்த அடுக்குமாடி நான்காவது தளத்தில் பச்சைவிளக்கு எரிகிறதா என மீண்டும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்! http://www.vikatan.com/anandavikatan
 12. நமலி போல் வாழேல் - சிறுகதை விநாயக முருகன், ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி வீட்டுக்கு வெளியே வரும்போது, தெருவில் பட்டாசுக்குப்பைகள் மிதந்துகொண்டி ருந்தன. மழையிலும் மக்கள் தீபாவளியை எப்படியோ கொண்டாடியி ருந்தார்கள். மீண்டும் ஒரு பெருமழை வரும் என்று தோன்றியது. கவலையுடன் வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தவன், ஏதோ சத்தம் கேட்டு அங்கு நின்றிருந்த காரைத் திரும்பிப் பார்த்தேன். முதலில் பார்க்கும்போது, காருக்குக் கீழே துணிமூட்டை போலத்தான் தெரிந்தது. என்னைப் பார்த்து விருட்டென அது வெளியே வந்ததும்தான் நாய் என்று உணர்ந்தேன். பயத்தில் அனிச்சையாக எனது கால்கள் பின்னால் நகர, படிக்கட்டில் ஏறி நின்றுகொண்டேன். அவ்வளவு பெரிய உயரத்தை எப்படிக் குறுக்கி, அந்த காருக்கு அடியில் பந்துபோல சுருண்டுகிடந்தது? அது ஒரு டால்மேஷன் நாய். உடம் பில் இருந்த கருந்திட்டுகள் எல்லாம் உதிர்ந்திருந்தன. வாழ்ந்துகெட்டவனின் வீட்டுச் சிதிலங்கள்போல, போனால்போகட்டும் என உடலில் ஒட்டியிருந்தன. சேறும் சகதியும் அப்பிக்கிடந்தது. தெருநாய்போல கண்களில் கோழை வழிய முன்னங்கால்களை ஊன்ற முடியாமல் நின்றிருந்தது. தோல் கிழிந்து ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. கழுத்தில் வெளுத்துப்போன சங்கிலிப்பட்டை மின்னியது. அக்கம்பக்கத்தில் இருக்கும் ஏதேனும் ஒரு பங்களாவில் இருந்து ஓடிவந்திருக்கலாம். இல்லை. ஓடிவந்திருக்காது. மனிதர்கள்தான் அற்பவிஷயங்களுக்குக் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு ஓடிப்போவார்கள். வளர்ப்புப் பிராணிகள் அப்படிச் செய்யாது. விரட்டித்தான் விட்டிருப்பார்கள். அந்த நாய் எங்கு இருந்து வந்திருக்கும் என்று குழப்பத்துடன் தெருவைப் பார்த்தேன். தெரு அமானுஷ்யமாக இருந்தது. மழைநகரத்தில் இது ஒரு பெரிய தொல்லை. பெருநகரின் மழை, மனிதர்களை மட்டும் அல்ல வீடுகளையும் ஒருவித அமைதியில் உறையவைத்துவிடுகிறது. அந்த நாய் என்னையே பார்த்தபடி நின்றது. அதன் தோற்றம் பரிதாபமாக இருந்தாலும், அது நின்றிருந்த தொனியும், கண்களின் கூர்மையும் கம்பீரமாகவே இருந்தது. என்னிடம் இருந்து எந்தவித கருணையையும் எதிர்பார்க்கவில்லை என்று அதன் அலட்சியமான உடல்மொழி சொன்னது. பங்களாவில் வளரும் நாய்களுக்கும் தெருநாய்களுக்கும், உடல்மொழியில் மிகுந்த வித்தியாசங்கள் இருப்பதைக் கவனிக்கலாம். தெருநாயாக இருந்திருந்தால், இந்நேரம் என்னைப் பார்த்துப் பயந்து வெளியே ஓடியிருக்கும். இதுவோ என்னையே பார்த்தபடி நின்றுகொண்டிருந்தது. `இப்ப என்ன வந்துச்சு? ஒதுங்க கொஞ்சம் இடம் இருந்தது... வந்துட்டேன். உனக்குப் பிடிக்கலைன்னா, மழை நின்னதும் போயிடுறேன்’ என்று சொல்வதுபோல நின்றிருந்தது. கார் உயரத்துக்கு இணையாக, கன்றுக்குட்டிபோல நிற்கும் அந்த நாயை விரட்ட பயமாக இருந்தது. மாடிப்படிக் கட்டுகளில் ஏறி நின்றுகொண்டு தயக்கத்துடன் `ச்சூ’ என்றேன். அது அசரவில்லை. என்னையே சலனமற்ற விழிகளுடன் பார்த்தது. அதன் திமிர் மீது எனக்குக் கோபம் வந்தாலும், மனதின் மூலையில் சிறுபரிதாபம் வெளிப்பட்டு என்னை அமைதியாக்கியது. வீட்டுக்குள் சென்று பத்து நிமிடங்கள் கழித்து வெளியே வந்து பார்த்தேன். மழை சற்று வலுவாகப் பெய்து கொண்டிருந்தது. அந்த நாய், எதிர்வீட்டின் கார் நிறுத்தும் இடத்தில் படுத்திருந்தது. நான் நிம்மதியாக வீட்டுக்குள் சென்று எனது வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தேன். மறுநாள் மழையினூடாக அலுவலகம் சென்று, வேலைகளின் ஆயிரம் கரங்கள் எனது கழுத்தை நெரிக்க அந்த நாயை மறந்தேபோனேன். இரண்டு நாட்கள் ஓடின. அலுவலகம் முடிந்து வந்து கொண்டிருந்தேன். இரண்டாவது தெருமுனையில் தேநீர்க்கடை ஒன்று இருந்தது. அந்தக் கடையை `பாய் கடை’ என்பார்கள். கடையின் உரிமையாளர் முகமதியர். அவருக்கு ஐம்பது வயது இருக்கும். சொந்த ஊர் ராமநாதபுரம். துபாய் செல்ல யாரோ ஓர் ஏஜென்ட்டிடம் பணம் கொடுத்துள்ளார். அவன் இவரை சென்னை வரச்சொல்ல, இவரும் மூட்டை முடிச்சுகளோடு வந்து ஏஜென்ட் சொன்ன லாட்ஜில் தங்கியுள்ளார். விடுதியில் இவரைப்போலவே துபாய் செல்ல பணம் கட்டியவர்கள் சிலரும் தங்கியிருந்தார்கள். ஆனால், ஒருவரும் துபாய் செல்லவில்லை. பணத்தோடு தலைமறைவான ஏஜென்ட்டைத் தேடுகிறேன் என்று சென்னையிலேயே தங்கியவர், பிறகு ஒருவழியாக மனதைத் தேற்றிக்கொண்டு, டீக்கடை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்து, இப்போது சொந்தமாகவே இந்தக் கடையை நடத்துகிறார். பாய் கடைக்கு எதிரே குப்பைத்தொட்டி அருகே, அந்த நாய் என்னையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தது. இந்த நாய் இன்னுமா இதே தெருவில் சுற்றிக்கொண்டிருக்கிறது? இரண்டு நாட்களாகக் கண்ணில் தென்படவே இல்லையே. எங்கே இருந்தது? யார் சோறு போட்டிருப்பார்கள்? யோசித்தபடியே வீட்டுக்குத் திரும்பினேன். இரவு உணவை முடித்துவிட்டு வீட்டின் கதவைப் பூட்டுவதற்கு வெளியே வந்து பார்த்தேன். நாயின் நடமாட்டம் இல்லை. நிம்மதியாக இருந்தது. காலை அலுவலகம் செல்ல வெளியில் வரும்போது, நாய் என் வீட்டின் கார் நிறுத்தும் இடத்தில் உட்கார்ந்திருந்தது. என்னைப் பார்த்ததும் எழுந்துசென்று விறுவிறுவென எதிர்வீட்டு கார்நிறுத்தும் இடத்தில் உட்கார்ந்து கொண்டது. அந்த வீட்டின் உரிமையாளர் ஆர்.வி., அப்போதுதான் வெளியே வந்தார். வெளியே கிடந்த கல்லை எடுத்து நாயின் மீது வீச, அது தெருவில் ஓடி மறைந்தது. “காத்தால நான் பார்க்குறச்சே, அந்த நாய் உங்க வீட்டு கார் பார்க்கிங்ல உட்கார்ந்திருந்தது. விரட்டிவிட்டேன். இப்ப இங்க வந்து உட்கார்ந்திருக்கு. நைட்டுல கேட்டைத் திறந்து வைக்காதீங்க” என்றார். மறுநாளில் இருந்து நான் செல்லும் இடங்களில் எல்லாம், அந்த நாயைப் பார்க்க ஆரம்பித்தேன். யதேச்சையாக அந்த நாய் என் கண்களில் பட்டாலும், அந்த நாய் என்னைப் பின்தொடர்கிறதா என்றுகூடக் குழப்பமாக இருந்தது. தெரு கேட்டை மூடிவைத்தாலும், அந்த நாய் நள்ளிரவுக்கு மேல் எப்படியோ வாகனம் நிறுத்தும் இடத்தில் வந்து படுத்துக்கொள்ளும். கண்விழித்து வெளியில் வந்து பார்க்கும்போது எழுந்து ஓடிவிடும். நான் அலுவலகம் செல்லும்போது, அந்த நாய் என் பின்னாலேயே நடந்துவர ஆரம்பித்தது. அலுவலகம் முடித்து தெருவுக்குள் நுழையும்போது எங்கு இருந்தோ ஓடிவரும். வீடு வரை பின்னாலேயே வரும். கேட்டைச் சாத்துவதையே சலனமற்றுப் பார்க்கும். பிறகு மெதுவாகத் திரும்பி வந்த வழியே நடந்துசெல்லும். அந்த நாயின் மெளனம் மெள்ள மெள்ள எனது மூளைக்குள் புகுந்து, கரையான்போல அரிக்க ஆரம்பித்தது. கண்ணாடி முன்னர் நான் நிற்கும்போதுகூட அங்கு நாயின் உருவமே தெரியும். கனவிலும் தொடர்ந்தது. அலுவலகத்தில் இருக்கும்போதும் நாயின் நினைவே ஓடிக்கொண்டிருந்தது. அன்றைய தினம் அமெரிக்க நிறுவனத்துக்கு அனுப்பவேண்டிய மின்னஞ்சலைத் தவறாக அனுப்பி, எனது மேனேஜரிடம் வாங்கிக்கட்டிக் கொண்டேன். அவர் என்னைத் திட்டும்போதும் நாயின் குரலையே கேட்டேன். எனது குழப்பத்தைக் கவனித்த அலுவலக நண்பர் ராஜ், என்னிடம் நடந்த விஷயங்கள் பற்றி கேட்டார். அவரிடம், ``அந்த நாய் ஏன் எங்கள் தெருவிலேயே சுற்றிக்கொண்டிருக்கிறது?’’ என்று கேட்டேன். அவர் சிரித்தபடியே ``உங்கள் தெருவாசிகள் எவரேனும் அதற்கு ஒருவேளை சோறு போட்டிருக்கலாம். அந்த நன்றி விசுவாசத்துக்காகச் சுற்றிக்கொண்டிருக்கக்கூடும்’’ என்றார். ``ஒரு குழந்தையைப்போல வளர்த்த நாயை, யாராவது விரட்டிவிடுவார்களா?’’ என்று கோபமாகச் சொன்னேன். ``மனிதர்களையே விரட்டிவிடும்போது நாய்களை விரட்டிவிட மாட்டார்களா?’’ என்று ராஜ் கேட்டார். சாலையில் எத்தனை பேர் மனநிலை பிறழ்ந்தவர்களாக நடமாடுகிறார்கள்? அவர்கள் எல்லாரும், தங்கள் வீட்டின் முகவரியை மறந்தவர்களா? மனநிலை சரியில்லாத ஆட்களை லாரியில் ஏற்றி, ஏதாவது தேசிய நெடுஞ்சாலையில் இறக்கிவிடும் டிரைவர்களை நாம் பார்த்தது இல்லையா? தேவையற்ற சுமை என்று வந்துவிட்டால், மனிதனும் நாயும் ஒன்றுதானே? ராஜ் சொல்வதிலும் உண்மை இருப்பதாகப் பட்டது. நாங்கள் அலுவலகத்தில் வேலைசெய்யாமல் அரட்டையடிக்கிறோம் என்று மேனேஜர் மீண்டும் வந்து கத்தினார். மேனேஜர் சென்ற பிறகு, அவர் திட்டியது நாய் குரைத்ததுபோலவே இருந்தது இல்லையா என்று கேட்டேன். தனக்கும் அப்படித்தான் தோன்றியதாக ராஜ் சொன்னார். நான் அலுவலகம் முடித்து சோர்வாக வீட்டுக்குத் திரும்பும்போது வழக்கம்போல, அந்த நாய் என்னையே பின்தொடர்ந்து வந்தது. எப்போதும் நான் கேட்டைச் சாத்தியவுடன் அந்த நாய் என்னை உற்றுப்பார்த்துவிட்டுத் திரும்பிச் சென்றுவிடும். எனக்குள் குற்றவுணர்ச்சி எழும். ஆனாலும் நள்ளிரவில் எப்படியோ பூட்டிய கேட்டைத் தாண்டி, அந்த நாய், நான் கார் நிறுத்தும் இடத்தில் வந்து படுத்துக்கொள்ளும். ஒரு முடிவுக்கு வந்தவனாக கேட்டைச் சாத்தாமல் திறந்துவைத்துவிட்டு நாயை ஏறிட்டுப் பார்த்தேன். அது என்னையே விநோதமாகப் பார்த்தபடியே நின்றிருந்தது. வீட்டுக்குள் சென்று, ஒரு பிளாஸ்டிக் தட்டில் சோற்றை எடுத்து வந்து அந்த நாயின் முன்னால் வைத்தேன். அந்த நாய் என்னைச் சந்தேகமாகப் பார்த்தது. என் அருகில் வரத் தயங்கி நின்றது. நான் பின்னால் நகர்ந்து மாடிப்படிகளில் ஏறி நின்றுகொண்டேன். அந்த நாய் மெள்ள அடியெடுத்து முன்னால் வந்து, சுற்றிலும் ஒருமுறை பார்த்தது. பிறகு தட்டில் இருந்த சாதத்தை முகர்ந்துபார்த்தது. ஒரு வாய் மட்டும் தட்டை நக்கிவிட்டு, திரும்பி வந்த வழியே நடக்க ஆரம்பித்தது. `என்ன திமிர்?’ என்று நினைத்துக்கொண்டேன். “அது சாம்பார் சோறு சாப்பிடாது” - குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தேன். ஆர்.வி., அவர் வீட்டுவாசற்படியில் நின்றிருந்தார். நடந்ததை எல்லாம் பார்த்திருப்பார் என்று நினைக்க, எனக்கு வெட்கமாக இருந்தது. எதிர்வீட்டில் வசிக்கும் ராஜவேலுவை நாங்கள் `ஆர்.வி’ என்றுதான் அழைப்போம். அவருக்கு அறுபது வயது இருக்கும். அசோக் லேலேண்டில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். மகன்கள் இருவரும் வெளிநாட்டில் வசிக்க, இவர் இங்கே தனியாக உடல்நலம் சரியில்லாத மனைவியைப் பராமரித்துக்கொண்டிருந்தார். மகள் திருமணமாகி ஆவடியில் வசித்தாள். எப்போதாவது மட்டும் பார்க்க வருவாள். அவர் என்னைப் பார்த்துச் சிரித்தபடியே “நானும் சோறு வெச்சுப் பார்த்தேன். அது சாப்பிடலை” என்றார். அவரது உறவினர் வீட்டில் ஒரு டால்மேஷன் வளர்த்ததாகவும், அந்த நாய்க்கு என்னென்ன வாங்கித் தருவார்கள் என்றும் சொல்ல ஆரம்பித்தார். ``நாய்களுக்கு என்று விசேஷமாக பெடிக்ரி உணவு விற்கும் கடைகள் இருக்கு. ஒரு கிலோ முன்னூறு ரூபாய். அதோடு தினமும் மாட்டுக்கறி கலந்து தரவேண்டும். கூடவே நாய்களுக்கு என்று விற்கும் ஷாம்பூ வாங்க வேண்டும். நம் வீட்டு குழந்தைகளுக்கு ஒருவாரத்துக்கு ஆகும் செலவை, பங்களாவில் வளர்க்கும் நாய்களுக்கு ஒருநாளுக்குச் செய்வார்கள். அவை எல்லாம் நமக்குக் கட்டுப்படியாகுமா?’’ என்று அவர் கேட்க எனக்குத் தலைசுற்றியது. ``டால்மேஷன்களை முறையாகப் பராமரிக்காவிட்டால் தோல்வியாதி வரும்’’ என்று சொன்னார். அந்த நாயின் பின்னணி ஆர்.வி-க்குத் தெரிந்திருந்தது. ஐந்து தெரு தாண்டி ஒரு சினிமா நடிகையின் பங்களா இருந்தது. அவருக்கு நாற்பது வயது இருக்கும். அவர் கதாநாயகியாக நடித்த முதல்படம் சுமாராகவே ஓடியது. இரண்டாவது படம் சரியாகப் போகவில்லை. மூன்றாவது படம் வெளிவரவே இல்லை. பிறகு ஒன்றிரண்டு படங்களில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். பிறகு கதாநாயகனுக்குத் தங்கையாக நடித்தார். அப்புறம் வெகுநாட்கள் வரை வாய்ப்பு எதுவும் கிடைக்காமல்போக, தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். ``அந்த டால்மேஷன் அவரது வீட்டு நாய்தான். அவங்க வீட்டைக் காலி செஞ்சுட்டு வேற எங்கேயோ போயிட்டாங்க. போறச்ச இந்த நாயை மட்டும் விட்டுட்டுப் போயிட்டாங்க. கொஞ்ச நாள் அந்தத் தெருவுலேயே சுத்திக்கிட்டிருந்தது. இப்பத்தான் நம்ம தெரு பக்கம் வர ஆரம்பிச்சிருக்கு” என்றார் ஆர்.வி. அந்த நடிகைக்குச் சமீபமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்தது. தொலைக்காட்சித் தொடர்களிலும் நடிப்பது இல்லை என்று எங்கேயோ படித்த நினைவு. அவர் பங்களாவைக் காலிசெய்துவிட்டு இப்போது வேறு எங்கோ வசிக்கிறார். வருமானம் இல்லாதவர்கள் எதற்கு நாய் வளர்க்க வேண்டும்? வளர்க்க முடியாவிட்டால் ஏதாவது பிராணிகள் வளர்ப்பு சங்கத்தில் ஒப்படைத்துவிட்டுச் சென்றிருக்கலாமே என்று நினைத்துக்கொண்டேன். நடிகையின் பங்களாவில் இப்போது வேறு யாரோ குடிவந்திருந்தார்கள். அந்த வீட்டு வாசலிலேயே சோகமாகப் படுத்துக் கிடக்குமாம். அங்கிருந்தவர்கள் இந்த நாயை விரட்டிவிட, இது குப்பைமேட்டில் திரிய ஆரம்பித்துள்ளது. தெருநாய்கள் இந்த டால்மேஷனின் உயரத்தையும் விநோதமான தோற்றத்தையும் பார்த்து மிரண்டுபோய் தாக்க, இங்கே ஓடிவந்திருக்கிறது. இந்த நாய்க்குப் பின்னால் இவ்வளவு பெரிய சோக ஃப்ளாஷ்பேக்கா என்று நினைத்துக் கொண்டேன். அது சரி, மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் பின்னால் ஒரு கதை இருக்கும்போது, நாய்களுக்கு ஏன் இருக்கக் கூடாது? ஆர்.வி சிரித்துக்கொண்டே, “அவனவனுக்கு ஆயிரம் பிரச்னைகள். இந்தப் பங்களா நாய்ங்க பாலும் தேனும் குடிச்சு சொகுசா வளர்ந்திருக்கும். திடீர்னு தெருவுக்கு வந்தா என்ன செய்றதுனு அதுங்களுக்குத் தெரியாது. இப்பகூடப் பாருங்க. மழை பெஞ்சா, தெருநாய்ங்க ஏதாவது கடைக்கு முன்னாடி படுத்துத் தூங்கிடும். இதுக்கு கார் ஷெட் கேக்குது” என்றார். “கார்ப்பரேஷனுக்கு போன் செஞ்சா அவங்க வந்து பிடிச்சுட்டுப் போவாங்க சார்” என்றேன். “சொல்லிப் பார்த்துட்டேன். வந்தபாடில்லை. தெருவுல இருக்கிற எல்லாரும் சேர்ந்து சொன்னாலும் வர மாட்டாங்க. டிரெயினேஜ் அடைப்புக்கே வர்றது இல்லை. நாய்க்கு எல்லாமா வருவாங்க? நாம என்ன செய்றது? கேட்டை மூடிவைங்க” என்றார். நாயை வளர்க்க முடியாவிட்டால் அதைக் கொன்றுவிடலாம். எதற்கு அதை வீட்டைவிட்டுத் துரத்திவிடுகிறார்கள் என்று தோன்றியது. இந்த நாய் விஷயம், எப்படியோ என் மனைவிக்குத் தெரிய வந்தது. “நாம என்ன செய்றது? வேணும்னா அதுக்கு ஒருவேளை சோறு வைக்கலாம்” என்று மனைவி சொல்ல, எனக்கு நடந்ததைச் சொல்லப் பயமாக இருந்தது. நான் நாய்க்குச் சோறுவைத்து, அது சாப்பிடாமல் சென்றதைச் சொல்லவில்லை. ஒருவேளை நான் ஏதாவது சொல்லி என் மனைவி அதை வேறு அர்த்தத்தில் எடுத்துக்கொண்டால்? ஏனெனில் அந்தச் சோற்றைத்தானே நான் தினமும் சாப்பிடுகிறேன். “அது டால்மேஷன் நாய். ஏற்கெனவே தோல் அலர்ஜி வந்து ரத்தம் கொட்டுது. வெறும் சோறு மட்டும் வைத்தால் தேறாது. அதுக்கு சத்தா ஏதாச்சும் வாங்கிப் போடணும்.” “ஆபீஸ் முடிச்சு வர்றப்ப புகாரியில சிக்கன் பிரியாணி வாங்கிட்டுவந்து போடுங்களேன்.” நான் எதுவும் பேசாமல் திரும்பிப் படுத்துக் கொண்டேன். என்னதான் வெளியில் சற்றுக் கடுமையாக நடந்துகொண்டாலும், ஆண்களைவிட பெண்கள் கருணைமிகுந்தவர்கள் அல்லவா? அந்த நாய் கார் நிறுத்தும் இடத்துக்கு வந்து செல்வதை, என் மனைவி தடுப்பது இல்லை. எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் நான்கு வீடுகள் இருந்தன. தரைத்தளம் எங்களுடையது. வெளியில் நின்றிருந்த ஸ்கோடா கார், இரண்டாவது தளத்தில் வசிப்பவருடையது. அவர் வீட்டைப் பூட்டிவிட்டு வெளிநாடு சென்றிருந்தார். திரும்பி வர ஒரு மாதம் ஆகும். முதல்தளத்தில் வசிப்பவரிடம் பைக் மட்டும் இருந்தது. எனவே, ஒரு நாய் வெளியில் இருந்து வந்து, காருக்கு அடியில் படுத்து அதிகாலையில் எழுந்துசெல்வதை, யாரும் கண்டுபிடிக்கவோ அல்லது புகார்சொல்லவோ வாய்ப்பு இல்லை. ஸ்கோடா கார் பக்கத்தில் நைந்துபோன, பயன்படுத்தாத பழைய நைலான கார் கவர்கள், அழுக்குத்துணிகள் கிடக்கும். நைலான் உறைகள் குளிருக்கு இதமாக இருக்கும். அந்த நாய் நைலான் உறையை வாயால் கவ்வி காருக்கு அடியில் இழுத்துப்போட்டிருந்தது. தினமும் அதில்தான் படுத்து உறங்கும். ``எவ்வளவு சொகுசுபாருங்களேன்’’ என்று எனது மனைவி கிண்டல் செய்வாள். “குழந்தைகளை வீட்டைவிட்டுத் துரத்தி விடுவதைவிட கொடுமையானது, வளர்ப்பு நாய்களைத் துரத்திவிடுவது. இந்த நாயைத் துரத்திவிட்ட பெண்மணியை மட்டும் நேரில் பார்த்தால் கொலையே செய்வேன்” - மனைவியிடம் சொன்னேன். “நல்லவேளை... நாயை வளர்த்தவங்க, வீட்டுக்கு வெளியில மலம் கழிக்கப் பயிற்சி கொடுத்திருக்காங்க. அந்த வகையில அவங்களைப் பாராட்டணும்” என்றாள். எல்லா தீமைகளிலும் எப்படியோ ஒரு நன்மையை அவள் கண்டுபிடித்துவிடுவாள். சொகுசாக வளர்ந்த நாய்கள் தெருவுக்கு வருவது கொடுமையான விஷயம்தான். ஆனால், அந்த நாய்களிடம் நான் வியக்கும் விஷயம். அதன் நாகரிகம். அதுபோல வீட்டின் முன்பு மலம், சிறுநீர் கழிப்பது இல்லை. வீட்டின் அருகே ஒரு காலிமனை இருக்கிறது. அங்குதான் எல்லாம். அதுபோல நாங்கள் எல்லாரும் விளக்கை அணைத்த பிறகே கார் நிறுத்தும் இடத்துக்கு வந்து படுத்துக் கொள்ளும். சொல்லப்போனால், அதற்கு இரவில் உறங்க ஓர் இடம் மட்டுமே தேவை. எங்களிடம் சோறு எதிர்பார்க்கவில்லை. எங்களுக்கு சிறிதும் தொந்தரவு தந்துவிடக் கூடாது என்பதில், அது மிகுந்த கவனமாக இருந்தது. எங்கள் கண்ணில் படாமல் ஒரு பூனைபோல அது தங்கிவிட்டுச் சென்றுவிடும். அதற்கு யார் உணவு தருகிறார்கள் என்ன சாப்பிடுகிறது என்பது எல்லாம் புரியாத புதிராகவே இருந்தது. எனது வேலைப்பளுவில் அதைத் தெரிந்துகொள்ளும் முயற்சியிலும் இறங்கவில்லை. இரண்டு வாரங்கள் ஓடியிருக்கும். மழை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்தது. மழைக்காலம் காவியங்களில் வேண்டுமானால் அழகாகத் தோன்றலாம். ஆனால், யதார்த்தத்தில் மழையைப்போல எரிச்சலூட்டும் பருவகாலம் வேறு இல்லை. `இன்னும் சில நாட்களில் இதைவிட அதிகமாகக் கனமழை பெய்யும். வீட்டை விட்டு வெளியே வராதீங்க. மீனவர்கள் கடலுக்குச் செல்லாதீங்க’ என்று நகரம் எங்கும் அறிவித்துக்கொண்டே இருந்தார்கள். இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு எல்லாம் பயந்தால், பிழைப்பைப் பார்க்க முடியுமா? மழையில் நகரத்தின் போக்குவரத்து மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. சாலைகள் எங்கும் குண்டும்குழியுமாக சாக்கடை நீரும் மழை நீரும் கலந்து, துர்நாற்றம் வீசியது. அன்று வீட்டுக்குத் திரும்பும் வழியில், தெருவில் நீர்மட்டம் அதிகரித்திருந்தது. என் மனைவி அலைபேசியில் இருந்து அழைப்பு வந்தது. வீட்டு முன்னால் பாதாளச் சாக்கடை அடைத்துக்கொண்டதாகவும், மழைநீர் இடுப்பு அளவு நிற்பதாகவும் சொன்னாள். முன்பக்கம் செல்ல முடியாது. எங்கள் வீட்டின் பின்புறம் இருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் நுழைந்து, அந்த மதில்சுவர் மீது ஏறித்தான், எங்கள் வீட்டுக்குள் செல்ல வேண்டும். வழக்கமாக ஒவ்வொரு வருடமும் எங்கள் பகுதியில் நடப்பதுதான். பெண்கள், குழந்தைகள் எல்லாரும் இப்படித் தான் செல்வோம். பாதாளச் சாக்கடை பற்றி அதிகாரிகளிடம் புகார் கொடுத்து, நாங்கள் ஓய்ந்துபோனோம். குரங்குகள்போல வாழ எங்களைத் தயார்செய்து கொண்டோம். பின்வீட்டின் மதிற்சுவர் மீதேறி நான் எனது வீட்டின் பின்னால் குதித்திருக்க வேண்டும். ஆனால், நான் மதில் மீது நடந்துசென்று கார் நிறுத்தும் இடத்தில் குதித்தேன். அங்கு நீர்க்குழாய் ஒன்று இருந்தது. கால்களைக் கழுவிக்கொண்டு வீட்டுக்குள் போகலாம் என்ற யோசனையோடுதான் அங்கு குதித்தேன். மின்சாரம் இல்லை. அவசரத்தில் நான் குதித்த இடத்தில், டால்மேஷன் படுத்துக் கிடக்கும் என்பதை மறந்துபோனேன். நான் குதித்ததும் அந்த நாய் விருட்டென ஸ்கோடா கார் கீழ் இருந்து எழுந்து, என்மீது சிறுத்தைபோல பாய்ந்தது. இரண்டு கால்களையும் என் தோள்களில் வைத்து, குரல்வளையில் பற்களை பதிக்க... ஒரு கணமேதான். பயத்தில் வெலவெலத்துப் போனேன். நான் பின்னால் சரிந்துவிழ, நாய் என்னை அடையாளம் கண்டுகொண்டது. தலையைத் தொங்கப்போட்டு எதுவும் செய்யாமல் நின்றது. எனது உடம்பு நடுங்கிக்கொண்டிருந்தது. எரிச்சலோடு கேட்டைத் திறந்துவைக்க, அதுவோ மன்னிப்பு கேட்பதுபோல பரிதாபமாகப் பார்த்தது. ``ச்சீ போ நாயே’’ என்று காலடியில் கிடந்த சிறு ஜல்லிக்கல்லை கையில் எடுத்து, நாயின் மீது வீசினேன். அது நாயின் மீது படவில்லை. அது ஒரு கணம் என்னை நிதானமாக ஏறிட்டுப் பார்த்துவிட்டு, வெளியே நின்ற இடுப்பு அளவு வெள்ள நீரில் நீந்திச் சென்றது. அன்று இரவு எல்லாம் எனக்கு உறக்கம் வரவில்லை. அந்த நாய் தலைகுனிந்து நின்ற சித்திரம் மனதுக்குள் தொடர்ந்து வந்தபடியே இருந்தது. குழந்தையை அடித்த தந்தையைப்போல உணர்ந்தேன். தவறு என் மீதுதான். இந்த இருட்டில் யாராக இருந்தாலும், மதிற்சுவர் மீது ஏறிக் குதித்தால், `திருடன்’ என்றுதானே நினைப்பார்கள்? எனக்கு மிகுந்த மனஉளைச்சல் ஏற்படும்போது எல்லாம் எனது முகநூலில் பதிவுகள் எழுதுவேன். நான் நாயைத் திட்டியதை, அதன் மீது கல் வீசி விரட்டிவிட்டதையும் உருக்கமாக எழுதினேன். ஐந்து நிமிடங்களில் முன்னூறு பேர் விருப்பக்குறி இட, பத்துப்பேர் ஆறுதலாகப் பின்னூட்டங்கள் எழுதினார்கள். சிலர், `நாயை பிராணி நலச் சங்கத்தில் சேர்த்துவிடுங்கள்’ என்று ஆலோசனை சொன்னார்கள். பிராணி நலச் சங்கத்தின் தொடர்பு எண்ணைக் கேட்டேன். ஒருவருக்கும் தெரியவில்லை. நேரம் செல்லச் செல்ல யார் யாரோ எனது பதிவை, அவர்களது டைம்லைனில் பகிரத் தொடங்கினார்கள். சிலர் பின்னூட்டத்தில் என்னைத் திட்ட ஆரம்பித்தார்கள். ஒருவர் தொடர்பே இல்லாமல், என் அம்மா, மனைவி எல்லாரையும் திட்டி, பின்னூட்டம் போட்டிருந்தார். ஒவ்வொன்றாக அழித்து விட்டு உறங்கச் செல்லும்போது, மணி பன்னிரண்டு. நெடுநேரம் வரை நாய்களின் சன்னமானக் குரைப்புச் சத்தம் ஒலித்துக்கொண்டே இருந்தது. அலுவலகத்திலும் எனக்கு அதே நினைப்புதான். மேனேஜர் அறையில் இருந்து சோகத்துடன் வந்துகொண்டிருந்த ராஜ் என்னைப் பார்த்து, ``கேன்டீன் போகலாமா?’’ என்றார். நாங்கள் காபி வரவழைத்துப் பேச ஆரம்பித்தோம். `புராஜெக்ட்டை ஏன் முடிக்கலை?’ என மேனேஜர் திட்டியதாக வருத்தத்தோடு சொன்னார் ராஜ். நான் என் பிரச்னையைச் சொன்னேன். ``நல்லவேளை நாய் உங்களை கடிக்கலையே?’’ என்றார். ``நாய்கள் புத்திசாலிகள்’’ என்று சொன்ன ராஜ், அவர் வசிக்கும் அண்ணாநகரில் இருக்கும் ஒரு நாயைப் பற்றி சொன்னார். அந்த நாய்க்கு தீபாவளி என்றால் பயம். தீபாவளி பண்டிகை வருவது இரண்டு நாட்களுக்கு முன்பே அதற்குத் தெரிந்துவிடுமாம். அது இருக்கும் இடத்தில் இருந்து வெளியேறி, ஆவடி தாண்டிச் சென்றுவிடும். இரண்டு மூன்று நாட்கள் கழித்துதான் திரும்பிவரும். ஒருமுறை யாரோ அந்த நாய் வாலில் பட்டாசைக் கட்டிவிட, அன்றில் இருந்து ஒவ்வொரு வருடமும் தீபாவளி நெருங்கும்போது, அது இப்படிச் செய்வது வழக்கம் என்றார். மனிதர்கள் காலண்டர் பார்த்து, பண்டிகை நாட்களைத் தெரிந்துகொள்வார்கள். ஆனால், ஒரு நாய்க்கு எப்படி தீபாவளி வரப்போகிறது என்று தெரியும்? தொடர்ந்து காற்றில் ஒலிக்கும் பட்டாசு சத்தம், பருவகாலம், மழை இவை எல்லாவற்றையும் கொண்டு தீபாவளி வரப்போகிறதைக் கணித்து, பதுங்கிக்கொள்ளும் என்று ராஜ் சொன்னார். அவ்வளவு புத்திசாலி நாய்க்கு, ஏன் இருளில் என்னை அடையாளம் தெரியவில்லை என்று வியப்பாக இருந்தது. மறுநாள் காலை கண் விழித்ததும் வெளியே மழை ஓய்ந்திருந்தது. ஜன்னல் கண்ணாடிகளில் எல்லாம் நீர்த்துவாலைகள் இறங்கியிருந்தன. குளிருக்கு இதமாகத் தேநீருடன் சிகரெட் பிடிக்கத் தோன்றியது. மனைவி ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். விடுமுறை தினம். அவளை எழுப்ப மனம் இல்லை. எழுந்து வீட்டின் பின்புறமாகச் சென்றேன். லுங்கியை மடித்துக்கட்டி, மதிற்சுவர் மீது ஏறிக் குதித்து, பாய் கடைக்குச் சென்றேன். தெருக்களில் நீர் நின்றிருந்தது. இன்னும் இரண்டு தினங்கள் மழை தொடர்ந்தால், வீடுகளுக்குள் நீர் புகுந்துவிடும் என்று தோன்றியது. தெருவில் நாயைக் காணவில்லை. வழக்கமாக தேநீர்க் கடை எதிரே இருக்கும் குப்பைத்தொட்டி அருகே உட்கார்ந்திருக்கும். பாயிடம் கேட்டேன். அவர் யோசித்தார். “இங்கதான் கிடக்கும். பொறை போடுவேன். சிலநேரம் சாப்பிடும். சிலநேரம் சாப்பிடாம ஓடிடும். நீங்க கேட்டதுக்கு அப்புறம்தான் தெரியுது. ரெண்டு நாளா அதைக் காணோம்” -தேநீர்க் குவளையைக் கழுவியபடியே சொன்னார். பக்கத்துத் தெருவில் இறைச்சிக் கடை ஒன்று இருந்தது. நான்கு கடைகள் தள்ளி ஓர் அசைவ உணவகம் இருந்தது. அங்கு சுற்றிக்கொண்டி ருக்கும் என்று பாய் சொன்னார். அங்கு சென்று பார்க்கும்போது டால்மேஷன் நாய் இல்லை. வேறு ஒரு பெரிய நாய், இறைச்சிக் கழிவுகளை, எச்சில் இலைகளை முகர்ந்தபடி நின்றிருந்தது. அதைத் தெருநாய்கள் பெரும் கூட்டமாகத் திரண்டு விரட்டிக்கொண் டிருந்தன. பாவம் இதை எந்தப் பங்களா வாசி விரட்டி விட்டானோ? எங்கு போயிருக்கும் அந்த டால்மேஷன்? அடுத்தடுத்த நாட்களில் வேலைப்பளுவும் மழையும் அதிகரித்தது. வீடு திரும்ப நேரமானது. வழியில் எங்காவது அந்த நாய் தென்படுகிறதா என்று பார்த்தபடியே நடப்பது வழக்கம். கேட்டைத் தாழிடாமல் திறந்தேவைத்தேன். நள்ளிரவுக்கு மேல் எழுந்து, ஜன்னல் வழியாகப் பார்ப்பேன். நாய் வந்தபாடில்லை. சிறுவயதில் நான் வசித்த ஊர் ஞாபகம் வந்தது. ஊரில் பெரிய மனிதர்கள் சிலரைப் பார்த்திருக்கிறேன். `ஜமீன் வாரிசு’ என்று பெருமையாகச் சொல்வார்கள். ஒருகாலத்தில் அரண்மனை போன்ற வீட்டில் வசித்திருப் பார்கள். ஆனால், இப்போது அந்த வீடுகளின் வெளிப்புறச்சுவர்களில் பாசிபடர்ந்து உள்ளே ஒருவிதத் தனிமையும் வெறுமையும் குடிகொண்டிருக்கும். வேலைக்காரர்கள் இருக்க மாட்டார்கள். காட்டுக்கொடிகள் மண்டிய இடங்களில், குதிரை வண்டிகள் மட்டும் எலும்புக்கூடுபோல நிற்கும். குதிரைகள் இருக்காது. அநேகமாக அதுபோன்ற வீடுகளில் வசித்தவர்கள் மானஸ்தர்களாக இருப்பார்கள். செல்வமும் மானமும் ஒரே இடத்தில் இருப்பது ஆபத்து. அதைவிட ஆபத்து... நீட்டிய பத்திரங்களில் எல்லாம் கண்ணைமூடி கையெழுத்துப் போடுவது. எப்போதாவது அவர்களை ஊர் எல்லையில் இருக்கும் தேநீர்க் கடையில் பார்க்கலாம். தலை கவிழ்ந்து பெஞ்சில் உட்கார்ந்தபடி, அமைதியாக செய்தித்தாள் படிப்பார்கள். படிப்பது ஒரு பாவனைதான். உண்மையில் அவர்கள் முகத்தை பேப்பரால் மறைத்து, எவரிடமும் பேசாமல் கூனிக்குறுகி உட்கார்ந்திருப்பார்கள். அவர்களிடம் என்ன பேசுவது, எப்படிப் பேசுவது என்று மற்றவர்களுக்கும் தயக்கமாக இருக்கும். ஆனால், அவ்வளவு வறுமையிலும் அவர்கள் தங்கள் பழைய பகட்டை, கம்பீரத்தை விட்டுவிட மாட்டார்கள். கடன் வாங்கியாவது தானம் செய்வார்கள். அதுபோன்ற மனிதர்கள் ஒருநாள் இரவோடு இரவாக ஊரைவிட்டு சென்றுவிடுவார்கள். அவர்கள் எங்கு போவார்கள் என்ன செய்வார்கள் என்பது புதிராகவே இருக்கும். குற்றவுணர்வுடன் தலையைத் தொங்கப்போட்டபடி உட்கார்ந்திருந்த அந்த டால்மேஷனை நினைக்கும்போது எல்லாம், வாழ்ந்துகெட்ட ஜமீன்தார்கள் ஊர் எல்லையில் இருக்கும் தேநீர்க்கடைகளில் உட்கார்ந்திருப்பது, எனக்கு நினைவுக்கு வரும். அடுத்தடுத்த மழைநாட்களில் அந்த நாய் எங்கள் பார்வையில் இருந்து முற்றிலும் மறைந்து விட்டிருந்தது. மழைக்காலம் சில நினைவுகளைக் கிளறிவிடுவதுபோல சிலவற்றை மறக்கவும் வைத்துவிடும். அந்த நாயை மறந்தேபோனேன். மழையின் தாக்குதல் அதிகரித்துக்கொண்டே சென்றது. `எண்பது ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு பேய் மழை’ என்று நகரத்தில் பேசிக்கொண்டார்கள். குளங்கள், ஏரிகள் நிரம்பி நகரம் எங்கும் வெள்ளக்காடாக நிரம்பியது. தெருவில் நின்றிருந்த வெள்ளமட்டம் உயர்ந்துகொண்டே போனது. மழை அதிகரிக்க அதிகரிக்க வதந்தியும் ஏதேதோ செய்திகளும், நகரம் எங்கும் பரவிக்கொண்டே இருந்தன. திடீரென மின்சாரத்தை நிறுத்தினார்கள். அலைபேசிகள் வேலைசெய்யவில்லை. நகர எல்லையில் இருந்த பெரிய ஏரி மழையில் உடைந்துவிட்டதாகவும், நகரமே வெள்ளத்தில் மூழ்கிவிட்டதாகவும் ஆர்.வி சொன்னார். நான் நம்பவில்லை. மழை நின்றபோது நானும் முதல் தளத்தில் வசிப்பவரும், ஆர்.வி-யும் நகரத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்றோம். பாய் கடை பூட்டிக்கிடக்க ஷட்டர் உள்ளும் வெளியும், மூன்று அடிக்கு மழை நீர் நின்றிருந்தது. குப்பைத்தொட்டிகள் மழையில் படகுபோல நின்றிருந்தன. நகரத்தை சுடுகாடாக மாற்றிவிட்டிருந்தது மழை. குடிசை, பங்களா என்று மழை எந்தப் பாகுபாடும் பார்க்க வில்லை. எங்கும் மரண ஓலம். பிரதான சாலையில் ஆறுபோல வெள்ளம் ஓடியது. தெருக்களில் இருந்து வெள்ளத்தில் இழுத்து வரப்பட்ட வாகனங்கள், பிரதான சாலைகளில் குப்பைமேடாக ஒதுங்கிக் கிடந்தன. எல்லா தெருக்களிலும் இடுப்பு அளவு நீர் நின்றது. வீடுகளைப் பூட்டிக்கொண்டு மக்கள் ஊரைக் காலிசெய்து போனார்கள். பூனைகள் நீரில் விறைத்துச் செத்துக்கிடந்தன. கடைகளில் எந்தப் பொருட்களும் இல்லை. பால்பாக்கெட், குடிதண்ணீர், காய்கறிகள், டார்ச்லைட்கள், மெழுகுவத்திகள்... எவையும் இல்லை. ஏ.டி.எம் மையங்கள் வேலை செய்யவில்லை. காவல் துறையினர் இல்லை. பேருந்துகள் வரவில்லை. திறந்திருந்த சில கடைகளிலும், கிடைக்கும் சொற்பப் பொருட்களை வாங்க மக்கள் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். எங்களுக்கு எதிரே ஒரு பெரியவர் வெளிறிய முகத்தோடு சென்றார். அவரது தோளில் ஒரு சிறுமி அழுதபடி உட்கார்ந்திருந்தாள். `இந்த நகரம் அழியப்போகிறது. சீக்கிரம் இங்கிருந்து போங்க’ என்று யாரோ சொன்னார்கள். நாங்கள் எங்கு செல்வது என்று தெரியாமல், இடுப்பு அளவு நீரில் நடந்தோம். ஒரு பல்முனை வளாகம் அருகே நடந்துசென்றபோது, அங்கு நாங்கள் பார்த்த காட்சி திகைக்கவைத்தது. வெள்ளத்தில் எங்கு இருந்தோ அடித்துவரப்பட்ட நாற்பது ஐம்பது நாய்கள் உடல் உப்பி மிதந்தன. வெகுநேரம் நீருக்குள் கிடந்ததால், சடலங்கள் உருமாறிக்கிடந்தன. மனதுக்குள் சின்ன மின்னல் வெட்ட, டால்மேஷன் நாயின் உடல் ஏதாவது தட்டுப்படுகிறதா என்று பார்த்தேன். என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. நீரில் மிதந்துகொண்டிருந்த எல்லா நாய்களும் ரப்பர் பொம்மைகள்போல கிடந்தன. தெருநாய் எது, வீட்டுநாய் எது என்று அடையாளம் தெரியாமல், எல்லாம் கலந்து அழுகிக்கிடந்தன. துர்நாற்றம் அதிகரிக்க, எல்லாரும் கைக்குட்டையால் முகத்தை மூடியபடி கடந்து சென்றார்கள். அதற்குமேல் அங்கு நிற்பது ஆபத்து என்றும், நோய்த்தோற்று வரும் என்றும் ஆர்.வி சொன்னார். நான் மிகுந்த சோர்வுடன் அங்கு இருந்து சவத்தைப்போல, எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் வீடு திரும்பினேன். அடுத்து வந்த சில நாட்களில் வெள்ளம் வடிந்து, நகரம் இயல்பு நிலைமைக்குத் திரும்பியது. ஏசுநாதர் அவதரித்த நாள் வந்தது. வானத்தில் நட்சத்திரங்கள் தோன்றின. பிறகு புத்தாண்டு பிறந்தது. அந்த நாயை மறந்து, நான் எனது அன்றாட அலுவலக வேலைகளில் முழ்க ஆரம்பித்தேன். எங்கள் நகரத்தில் நடந்த வேறு ஏதேதோ பிரச்னைகளில், ஊருக்குள் வெள்ளம் என்று, ஒன்று வந்ததைக்கூட மறந்துபோனார்கள். நான் கேவலம் ஒரு நாயைத்தானே மறந்தேன்? இந்தக் கதையில் ஒரு விஷயத்தை மட்டும் நான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அன்று அந்தப் பெரும் வெள்ளத்தில் அவ்வளவு தெருநாய்கள் இறந்துபோனதைப் பற்றியும், மாநகராட்சியினர் பொக்லைன் வைத்து நாய்களை அள்ளிச் சென்றதைப் பற்றியும், ஒருவரிகூட மறுநாள் வெளியான எந்தச் செய்திப் பத்திரிக்கையிலும் இடம்பெறவில்லை. அவ்வளவு நாய்களையும் அள்ளி, எங்கு சென்று கொட்டினார்கள் என்றும் தெரியவில்லை. நடந்தது எல்லாம் கனவுபோல புகைமூட்டமாகத் தெரிகிறது. இந்தக் கதையை, நான் எங்கேயாவது சொன்னால் யாரும் நம்பக்கூட மாட்டார்கள்! http://www.vikatan.com/anandavikatan
 13. படையல் - சிறுகதை லக்‌ஷ்மி சரவணகுமார், ஓவியங்கள்: மருது இரண்டு மாதங்களுக்கு முன்பே, ஒவ்வா மலையை ஒட்டியிருந்த குடிசைகளை `காலி செய்ய வேண்டும்’ என முரட்டு ஆட்கள் சிலர் சொல்லிவிட்டுப் போனார்கள். இத்தனை வருடங்களாக இல்லாமல், புதிதாக வந்த தொல்லையை எப்படிச் சமாளிப்பது எனத் தெரியவில்லை. வெறும் மலை... புல் பூண்டுகூட இல்லாத வறண்ட மலை. நாக்கு தள்ள ஒன்றரை மைல் மலை ஏறினால், சின்னதாக ஒரு குட்டை உண்டு. எத்தனை வெயிலிலும் நீர் வற்றாது. மலை அடிவாரத்தில் பெரிய குளம். நான்கு திசைகளிலும் பருத்த ஆலமரங்களை, காவலுக்கு நிறுத்திய கம்பீரமான குளம். அதன் மேற்கு எல்லையில் பல தசம வருடங்களுக்கு முன்பாக, வெட்ட வெளியில் ஊர்க் காவலுக்கு நின்றிருந்த அய்யனார்சாமி கோயிலுக்கு, ஒரு கூரை போட்ட பிறகு சுற்றுவட்டாரத்தில் அதுவரை இல்லாத மவுசு. கெடாவெட்டு, காதுகுத்து என கோயில் அமைப்புக்கு ஏற்றாற்போல் பலிகொடுப்பது கூடிப்போனது. அய்யனாரும் லேசுப்பட்டவர் அல்ல. துடியான சாமி. கீழவளவில் இருந்து இடது பக்கமாகப் பிரியும் மண் சாலையில் இருக்கும் ஆறேழு கிராமங்களுக்கு அருள் தருவது இவர்தான். நல்லது கெட்டது என எல்லாவற்றுக்கும் அய்யனாரிடம் வந்து ஒரு வாக்கு கேட்காமல், எந்த முடிவையும் யாரும் எடுப்பது இல்லை. அய்யனாருக்குப் புதிதாக இன்னொரு குதிரை வாங்கலாம் என, ஊர்க்காரர்களில் சிலர் சொன்னபோதுகூட இறுதி முடிவை அவரேதான் எடுத்தார். அவருக்குத் தெரியும், யாருக்கு என்ன செய்ய வேண்டும் என. கோயிலை ஒட்டியவாக்கில் முதலில் குடிவந்தது பூசாரியின் குடும்பம்தான். பிற்பாடு காட்டுக் காவலுக்காக வந்துபோன காவக்காரர்களும் அங்கயே குடிசையைப் போட்டுக்கொண்டார்கள். மலையின் நாலாபக்கமும் போக்குவரத்துக்கு எளிது என்பதால், கூலி வேலைக்குப் போகிறவர்களுக்கு மலை அடிவாரம் ஏதுவான இடமாகிப்போனது. பத்தும் இருபதுமாகச் சேர்ந்து சில மாதங்களிலேயே, இருநூற்றுக்குப் பக்கமாக குடும்பங்கள் அங்கு குடித்தனமாக வந்துசேர்ந்தனர். இன்ன சாதி, இன்ன சாமி என எந்த வேற்றுமையும் இல்லாமல், எல்லோருமே அன்னாடங்கஞ்சிக்கு உழைத்தாக வேண்டிய எளிய சனங்கள். வந்துசேர்ந்த இடத்தில் எல்லோரையும் ஒரு சொந்தமாக மாற்றியது, அய்யனார் கோயிலும் பூசாரி மகன் கட்டையனும்தான். மலை அடிவாரம் ஊராக மாறி, மினி பஸ்ஸும் வந்துபோகத் தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில், பெரும்பணக்காரர்கள் சிலர் இந்த இடத்தை எல்லாம் வாங்கிவிட்டதாகப் பேச்சு எழுந்தது. அத்தனை பேரும் நகர்ந்துசெல்ல இடம் இல்லாமல், அச்சு முறிந்த வண்டியாகத் தவித்துக்கிடந்தனர். அப்படியே போனாலும் பிழைக்க வழி? நினைத்த மாத்திரத்தில் பிடுங்கி எடுத்து, வேற்று மண்ணில் நட்டுவைத்தால், எந்தச் செடி முட்டி வளரும். `ஊருனா வெறும் ஊருதானா? மனுஷரும் மண்ணும் சாமியுமா சேர்ந்து வாழப்பழகியாச்சு அத்துட்டுப்போறதுன்னா, உசுர அறுத்து எறியறாப்ல இல்லையா?’ - மருகாத சனம் இல்லை ஊருக்குள். மலை மேல் ஊர்க்காரர்களைத் தவிர்த்து வேற்று ஆட்கள் சிலர் அவ்வப்போது வந்து போவது உண்டு. `இந்தப் பக்கம் என்ன சோலின்னு அடிக்கடி வர்றீகண்ணே?’ என அவர்களிடம் விசாரித்தால், `மேல சமணப்படுகை இருக்குல்ல... அதைப் பத்தி படிக்க வந்துட்டுப்போறோம்’ என்பார்கள். அதும் ஏதோ சாமிதான்போல என, ஊர்க்காரர்கள் ஒன்றும் நினைத்துக்கொள்வது இல்லை. இன்று இந்த மக்களை இங்கு இருந்து துரத்தியடிக்க நோட்டீஸ் வந்தபோது, ‘மலையைக் காப்போம்’ எனப் பெருங்கூட்டமாக முதலில் வந்து நின்றது அவர்கள்தான். எல்லோருக்கும் ஆச்சர்யம். ‘என்ன இருக்குன்னு இந்த மலையை ஆளாளுக்கு சுத்திவர்றாய்ங்க?’ `பொதையல் கிதையல் கிடக்குமோ?’ ஊர்க்காரர்களுக்கு ஆளுக்கு ஒரு சந்தேகம்; பேச்சு. யாரும் பொதுவில் எதையும் கேட்டுக்கொள்ளவில்லை. ஆனால் அந்த வாத்தியார்மார், பத்திரிகை ஆட்கள் சத்தம் எல்லாம் ஒன்றும் எடுபட்டதாக இல்லை. முதலாளி போலீஸை ஏவ, இரவோடு இரவாக ஊர் ஆம்பளைகள் எல்லோரையும் ஸ்டேஷனுக்கு அள்ளிக்கொண்டுபோனார்கள். சரிபாதி ஆட்கள் மீது கேஸும் போட்டார்கள். பாதிப்பேருக்குத் தங்களின் மீது கேஸ் இருப்பதுகூடத் தெரியாது. ஸ்டேஷனுக்குக் கூட்டிப்போகும்போது எல்லாம் கட்டாயம் பிரம்படி உண்டு. பேச்சுவார்த்தை எல்லாம் அப்படித்தான் நடக்கும். பிறகு பேப்பரில் கையெழுத்து வாங்கி அனுப்புவார்கள். இப்படியாக அய்யனாரைத் தவிர, அத்தனை ஆம்பளைகளும் முதுகுக்குக் கீழ் உடல் வீங்கி, வலி தாங்க மாட்டாமல், கையெழுத்துப் போட்டுவிட்டு வந்ததுதான் மிச்சம். `போறதுதான் போறோம்... ரெண்டு மாத்தைல* அய்யனார் சாமி திருவிழா இருக்குங்க. அதை முடிச்சுட்டுப் போறோம்’ என ஊர் ஆட்கள் கெஞ்சிக் கேட்டதற்கு, முதலாளிகளும் ஒப்புக்கொண்டனர். நாலு மைல் தாண்டி கருவக்காட்டுக்குள் எல்லோருக்கும் புதிதாகக் குடிசைபோட ஏற்பாடானபோதுதான், ஒவ்வா மலையில் கிரானைட் குவாரி வரப்போவதாகப் பேசிக்கொண்டார்கள். ஊரின் எல்லா நல்லது கெட்டதுகளுக்கும் பொதுவான ஆள் துரை. அவன் வயது இன்னதுதான் என்பதோ, அவனுக்குப் பெயர் பாண்டித் துரை என்பதோ பலருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆனால், கல்யாண வீடு, துஷ்டி வீடு எல்லாவற்றிலும் முழுமனதோடு பங்கெடுத்து ஆட்டம்போடுவான். கட்டையாக சற்று வெளுத்த மூஞ்சிக்காரனான அவனுக்கு கல்யாணம் நடந்திருக்கவில்லை. `பிழைச்சுக் கட்டும்’ என அவனைப் பொருட்படுத்தி அவனது ஐயா, பூசாரித்தனமும் சொல்லித் தந்திருக்கவில்லை. அவர் பூசை செய்யும்போது சலிக்காமல் வாசலில் நின்று மணி அடிப்பான். அவனுக்கும் கோயிலுக்கும் உறவு அவ்வளவுதான். மூளை வளர்ச்சி குறைவான ஆள். ஆனால், அசாத்தியமான சூட்டிகை. முப்பது கிலோமீட்டர் தள்ளியிருக்கும் மேலூருக்குப் போவதானால்கூட நடந்தே போய் வருவான். வேறு எந்த வாகனத்திலும் அவன் ஏறி, யாரும் பார்த்தது இல்லை. வண்டியில் ஏற்றிக்கொள்ளக் கூப்பிட்டால்கூட `போலாம். ரைட்... ரைட்...’ என விசிலடித்து பாதை காட்டுவான். உருப்படியாகத் தெரிந்தது ஆட்டம் மட்டும்தான். அப்படி ஆடுவதற்காகவே தான் உயிரோடு இருப்பதாக அவனுக்கும் நினைப்பு. அவன் ஆட்டம் எல்லா தாளங்களுக்கும் பொருந்தும். சமயங்களில் மேளக்காரன், அவனது ஆட்டத்துக்குத் தகுந்தாற்போல் தாளத்தை மாற்றிக்கொள்வதும் நடக்கும். எத்தனை வேகமாக ஆடினாலும், லுங்கி அவிழாது. ஆடி முடிக்கும்போதே சோடா அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இடத்தைக் கவனித்துத் திரும்பும் கண்கள். ஆட்டத்தை நிறுத்தாமலேயே சோடாவை எடுத்து ஒரே மடக்கில் குடிப்பவன், `தொரைக்கு துட்டு குடுக்குறவங்க குடுக்கலாம்யா…’ என ஊர்க்காரர்களைப் பார்த்து, காலால் அழகாக ஒரு வட்டமடித்து, நடுவில் வந்து நின்று கேட்பான். எதிரில் இருக்கும் ஊர்ப்பெருசுகளில் சிலர், `என்னடா கட்டையா எம்புட்டு வேணும்?’ -மேளம் ஒரு பக்கம் அந்த கேள்விக்கு சுதி கூட்டும். “ஆயிரத்தி ஒண்ணு, ஐந்நூத்தி ஒண்ணுன்னு நீ குடுத்து நாளைக்குக் கஞ்சிக்கு வந்து நின்னா கெழவி என்னய வெளக்கமாத்தால அடிக்கவா? ஒரு அம்பத்தொண்ண வைய்யி…’ - மூச்சு இறைக்கக் கேட்பான். பத்தும் இருபதுமாக, வேகமாக ரூபாய்த் தாள்கள் அவன் முன்னால் வந்து விழும். அவசரப்படாமல் பொறுக்கிக் கொண்டு இன்னொரு சுற்று ஆடிவிட்டு, இருட்டோடு இருட்டாக பிராந்தி வாங்க ஓடுவான். எந்த நேரம் கேட்டாலும், பச்சை பாட்டில் பிராந்தி கொடுக்க, மணி கடை இருக்கிறது. அவன் குடிக்கச் சலிப்பது இல்லை. நாளுக்கு இவ்வளவுதான் என்ற அளவுகள் ஆகாது. காரியம் இல்லாத நாட்களில் குடிக்க ஒன்றும் கிடைக்காது என்பதால், கிடைக்கிற நாளில் மாதம் முழுவதுக்குமாகச் சேர்த்து குடித்து விடுவான். சோற்றுக்குக் கவலை இல்லை. `எப்பத்தா... வவுறு பசிக்கிது. கம்மங்கஞ்சி இருந்தாலும் பரவாயில்ல. கும்பால ஊத்திக் கொண்டாங்க’ - வாசலில் நின்று உரிமையோடு அவன் கேட்டால், மறுக்கிறவர் ஒருவரும் ஊரில் இல்லை. ஊரில் கோயிலுக்கு எனத் தனியாக மாடு வளர்க்கவேண்டிய தேவையை அவன் உருவாக்கியிருக்கவில்லை. குவாரிக்காரர்கள் கீழவளவு மெயின் ரோட்டில் இருந்து மலை வரைக்குமாக, வண்டி வண்டியாக கிராவல் அடித்து, புதிதாக மண்சாலை அமைத்தனர். ஆள் போக்குவரத்துக்கு ஏதுவாக இருந்த தற்காலிகச் சாலையில், லாரிகள் போய்வந்து பழகிப்போன இடமாகியது. அய்யனார் கோயில் இறக்கம் வரையிலும், ஆட்கள் வாரத்தில் நான்கு நாட்கள் அளப்பதும் குறிப்பதுமாக இருந்தனர். பேன்ட் சட்டை போட்ட எல்லோருமே முதலாளிதானோ என நினைக்கும்படி, அத்தனை பேரிடமும் ஒரு துரைத்தனம் தெரிந்தது. இந்தக் குடிசை சனங்களை அவர்கள் ஏறெடுத்தும் பார்ப்பது இல்லை. கட்டையனுக்குச் சோடியான ஆள் செல்லாண்டி பெருசுதான். ஊர்க்கதை பேசி ஓயாத வாய். நடுச்சாமத்தில்கூட கூதலுக்குப் போர்வையைச் சுற்றிக்கொண்டு, அரைத் தூக்கத்தில் இருக்கும் யாரிடமாவது வம்பளந்து கொண்டிருப்பார். சாலை போடத் தொடங்கிய நாளில் இருந்து, குவாரி ஆட்களிடம் வாயைக் கொடுப்பது இவர்கள் இரண்டு பேரும்தான். ``ஏய்யா... இங்க இருந்து கல்லை வெட்டி எங்க எடுத்துட்டுப் போவீக... மேலூருக்கா மதுரைக்கா?” - குவாரி ஆட்கள் சிரிப்பார்கள். “மதுரைக்கும் மேலூருக்கும் தூக்கிட்டுப்போக இது என்ன பிஸ்கட்டா... கிரானைட்டுய்யா. எல்லாம் கப்பல்ல வெளிநாட்டுக்குப் போகுது” -செல்லாண்டிக்கு முதலில் இது விளங்கவில்லை. விளக்கம் கேட்கலாம் என்றால், விவரம் சொல்லும் அளவுக்கு பாண்டித்துரைக்குக் கூறும் இல்லை. “அதெப்படிய்யா பொருள் நம்மூட்டுது. திங்கிறது வெளிநாட்டுக்காரனா? எவனோ திங்கிறதுக்கா எங்களை அன்னக்காவடியா துரத்துறீங்க?” எனப் பாவமாகக் கேட்டார் செல்லாண்டி. இன்ஜினீயர் ஒருவன், “என்ன செய்றது நோட்டு நோட்டா துட்டு குடுக்குறாய்ங்கள்ல” எனப் பக்குவமாகச் சொல்லிப் புரியவைத்தார். கட்டையனுக்கு லாரி டிரைவர்களோடு நல்ல பழக்கமாகிப்போக அவர்கள் வாங்கித்தரும் பிராந்தியையும் குடிக்கப் பழகினான். அவன் அரைகுறைப் பேச்சும் சத்தமும்தான், இரவுகளில் அந்த டிரைவர்களுக்கும் குவாரி ஊழியர்களுக்கும் அலாதியான பொழுதுபோக்கு. இருந்திருந்தாற்போல் ஊர்க்காரர்களுக்கு பூசாரியின் மீதும் கட்டையனின் மீதும் வெறுப்பு. பூசாரி மூஞ்சியைப் பார்க்கப் பிடிக்காமல் போனாலும், சாமியைப் பழித்துக்கொள்ள முடியாது என்பதால், அரைமனதாகவே எல்லோரும் வந்து போனார்கள். யாருக்கும் பிரார்த்தனைகள் இல்லை. கோரிக்கைகள் இல்லாதபோது, சாமியின் நினைப்பு ஏது? ஆனாலும் அய்யனாரின் நிலைமை சற்றுக் கவலைக்கு உரியதாக இருந்ததால், தங்கள் பிரார்த்தனைகளை வீணாக்க ஒருவரும் விரும்பவில்லை. `இத்தனை காலம் இந்த இடத்தில் ஒரு நிழல் தந்தவர்’ என்ற நினைப்பு மட்டும் ஆட்களைப் பிடித்துவைத்தது. பெரிய பெரிய இயந்திரங்கள் அந்த மலையை அண்டி வந்து நின்றபோது, ஆகாசத்தில் இருந்து ஆயிரம் கொம்புகளோடு எல்லா அரக்கர்களும் இறங்கிவந்து சண்டைக்குக் கூப்பிட்டதுபோல் இருந்தது ஊர்க்காரர்களுக்கு. ஆதிக்காலம் தொட்டு மனுஷனும் சாமியும் இயந்திரத்துக்குத்தான் அஞ்சி வாழ்ந்திருக் கிறார்கள். கண்களுக்கு எட்டின தூரத்துக்கு விரிந்துகிடக்கும் மலையை, தின்றுசெரிக்கும் பெரும் பசியோடு வந்துநின்ற இயந்திரங்கள், இன்னும் கூடுதலாக வந்து சேரும் முன் திருவிழாவை முடித்துவிட்டு புதிய இடத்துக்கு ஓடிவிட ஆட்கள் முடிவெடுத்தனர். ஊருக்குப் பொதுவாக காவக்காரர் குடும்பம்தான் முன்னால் நின்று, தலைக்கு இவ்வளவு என வரி போட்டு, புதிய இடத்தில் தேவையான வசதிகளைச் செய்ய, வேலை செய்தது. என்ன நினைத்தார்களோ பூசாரியிடம் மட்டும் எந்த வரியையும் யாரும் கேட்கவில்லை. பூசாரிக்கு உடம்பு எல்லாம் பதறி, கடப்பக் கல்லை முழுங்கியதுபோல் நழுக்கு என்றிருந்தது. `சொல்லாமக்கொள்ளாம ஒதுக்கி, அநாதையாக்கிட்டாய்ங்களே...’ என தனக்குள்ளாகவே புலம்பியவர், ஒருநாள் மாலை காவக்காரரைப் பார்க்கப் போனார். ``எல்லாரும் ஆளும் பேருமா பேசி குடிசை போட, தண்ணிக் குழாய் போடனு வேலையை ஆரம்பிச்சுட்டீங்க. என்கிட்ட ஒருத்தரும் வரியும் கேக்கலை. கூட்டிப்போறதாவும் சொல்லலை. இத்தனை காலம் இந்தச் சனத்தை நம்பியே, நானும் எம் புள்ளையும் வாழ்ந்துட்டோம். நட்டாத்துல விட்டுட்டுப் போறீகளே…” - பூசாரி கண்கலங்கி மருகினார். “நான் என்ன சாமி செய்யட்டும். உங்க கூட்டு அப்பிடி. உன் புள்ள முழு நேரமும் குவாரி ஆளுங்களோடுதான் சுத்திட்டிருக்கான். காசு பணம்கூட உங்ககிட்ட நல்லா புழங்குறதா கேள்வி. உங்களுக்கு என்ன தலையெழுத்தா... எங்களோடு வந்து சீப்பட்டு நிக்கணும்னு?”- சாவகாசமாக வெற்றிலையை மடித்து வாயில் அதக்கியபடியே முகம் கொடுக்காமல் பேசினார் காவக்காரர். “நான் எந்தக் காசைக் கண்டேன் தம்பி. அந்தப் பயலைத்தான் உங்களுக்குத் தெரியுமே. `ஏண்ணே’னு சொன்னா `போண்ணே’னு நிப்பான். என்ன கூறு இருக்கு அவனுக்கு. ஊரே சேர்ந்து வளர்த்த பிள்ளை அது. ஒரு நல்ல நாள் கெட்ட நாள்னாகூட, உங்களை அண்டியேதான் அந்தப் பய வளர்ந்தான். இப்ப போயி புதுசா பாக்குறீங்க. அவன் வேத்து ஆளுகளோடு பேசுறது பிடிக்கலைன்னா, கூப்பிட்டு வெச்சு நாலு போடு போடுங்க. அதை விட்டுட்டு இப்படி மொத்தமா ஒதுக்கிவெச்சா எப்படிப்பா?” -கையெடுத்துக் கும்பிட்ட பூசாரியைப் பார்க்க பாவமாக இருந்தது. எச்சிலைக் கூட்டி தூரமாகத் துப்பிய பின் காவக்காரர் நிதானமாக அவர் கைகளைப் பிடித்து, “ஏதோ புத்தி கெட்டுப்போய் ஊர்க்காரய்ங்க யோசிச்சிட்டாய்ங்க. நான் சொல்லிவைக்கிறேன் நீங்க கலங்காமப் போங்க. அந்தப் பயலை நான் பாத்துப் பேசிக்கிறேன்” -நன்றி சொல்லக்கூடத் தெம்பு இல்லாமல் பூசாரி வீடு வந்துசேர்ந்தார். மலையின் சரி பாதி எல்லையில் எங்கு எல்லாம் முதலில் உடைக்க வேண்டும் என இப்போதே அடையாளக் குறிகளைத் தயாராகக் குறித்துவைத்திருந்தனர். புள்ளிகளும் கோடுகளுமாக அது ஒரு விநோத ஓவியம். மலைக்குச் செல்லும் பாதையில் சின்னப் பாறை ஒன்று உண்டு. அதை சிலர் சாமியாகக் கும்பிடுவதும் உண்டு. காவல் சாமி. அந்தப் பாறையைத் தாண்டும்போது யாரும் காலில் செருப்பு போடுவது இல்லை. அதன் தெற்கு எல்லையில்தான் தொல்லியல் துறை ஒரு பழைய பலகை வைத்திருந்தார்கள்... `சமணப் படுகைக்குச் செல்லும் வழி’ என. குவாரி வேலைகள் தொடங்கப்போவதற்கான முதல் அறிவிப்பைத் தெரிவிப்பதுபோல, ஒரு ராட்சச பொக்லைன் முதலாவதாகத் தூக்கியது அந்த அறிவிப்புப் பலகையைத்தான். நிறம் உதிர்ந்துபோன அந்த மஞ்சள் நிற அடையாளக் கல், சுக்கு நூறாகி குப்பையில் விழுந்தது. வந்தவர்கள் அப்படியே விட்டுப்போக வேண்டாம் என, பாறையின் இரண்டு எல்லைகளை வொயரால் இணைத்து வெடிமருந்துகளை வைத்தனர். பத்து நிமிடங்களுக்குப் பின்னர் சுற்றுவட்டாரப் பகுதியே அலற, ஒரு பெரிய வெடிச் சத்தம். ஊரில் இருந்த பொண்டுபிள்ளைகள் அலறியடித்துக்கொண்டு ஓடிவந்து பார்த்தபோது, பாறை துண்டுதுண்டான கற்களாகிச் சிதறிக்கிடந்தது. ஒருவரும் மூச்சுவிடவில்லை. அச்சத்தில் உடல் ஸ்தம்பிக்க நொறுங்கிய பாறைத் துண்டுகளாகத் தங்களை நினைத்துக்கொண்டனர். வரப்போவது வெறும் குவாரி அல்ல. பணவெறிகொண்ட ராட்சசப் பேய். போதும் என்பதை ஒருநாளும் அறிந்திராத அந்தப் பேயின் வேட்கைக்கு எதுவும் பொருட்டு அல்ல. கலைந்துபோன ஊர்க்காரர்கள் ஒவ்வொருவரும் வயிறெரிந்து சாபம் விட்டனர். சிலர் யாரும் பார்க்காதபடி மண்ணை வாரித் தூற்றினர். அவர்களால் முடிந்த எதிர்ப்பு அவ்வளவுதான். முன்பு போல நினைத்த நேரத்தில் யார் வீட்டிலும் நின்று, கட்டையனால் சாப்பாடு கேட்க முடியவில்லை. அவனைப் பார்த்தாலே எல்லோருக்கும் வேப்பங்காயாகக் கசந்தது. “எத்தா... இம்புட்டுக் கஞ்சியிருந்தா ஊத்திக் குடு பசிக்கிது” -கடும் பசியோடு கேட்டாலுமேகூட ஊர்ப்பொம்பளைகள், “போடா... இப்பத்தான் குடுத்துவெச்சவனாட்டம் வந்துட்ட. அதான் அந்தக் குவாரிக்காரய்ங்களோட பொறுக்கித் திங்கிறல. அங்க போ…” எனத் துரத்தினர். என்ன ஆச்சு இந்தச் சனத்துக்கு? அவன் இன்னும் செத்த நேரம் வாசலில் நின்று காகமாகக் கரைந்தால், வாசலுக்கு வந்து அந்தப் பெண், வாயில் வந்த கெட்ட வார்த்தையால் எல்லாம் திட்டித் துரத்துவாள். இவனுக்கு ஆத்திரம் வரும்போது கூடவே அழுகையும் வந்துவிடும். ``போடி நெல்லிக்கா மூஞ்சி. உனக்குப் பசிச்சா தெரியும். எப்படிப் பசிக்கிது தெரியுமா?” என ஆவேசமாகக் கத்திவிட்டு, தெருவில் இருக்கும், எல்லோருக்கும் கேட்கும்படியாக ஒப்பாரி வைப்பான். முன்பு எல்லாம் இவன் அழுவதை விளையாட்டாகப் பார்த்து, பின்பு சிரித்தபடியே ஆளுக்கு ஒரு கும்பா சோறுகொடுத்த ஊர் இல்லை இது. பசியோடு ஒதுக்கிவைக்கப்பட்ட இந்த இனம்புரியாத வலியும் அவனை வதைக்க, வீட்டுக்குப் போனான். அய்யா வைக்கும் கஞ்சியில் உப்பு சப்பு இருக்காது. ஊர்க்கஞ்சி அப்படி அல்ல. அது கொடுக்கிறவர்களின் மனசு ருசி. சோறு கேட்டு வரும் எல்லோரையும் சொந்தப்பிள்ளையாகப் பார்க்கும் மனசு. பேருக்கு ஊர்க்காரர்கள் பூசாரியோடு பேசினார்களே தவிர, முன்பு இருந்த ஒட்டு இல்லை. சோறு கேட்டுக் கிடைக்காமல் பசியோடு வீடு வரை அலறி வந்தவனை, காதும் காதுமாக அறைந்த அவனது ஐயா, “இனி யார் உனக்குக் கஞ்சி ஊத்துவானு வீடுவீடாப் போயி தானம் கேட்டு வர்ற. நாம வாழத் தகுதியில்லாத புழுவுடா. மனுஷன், சகமனுஷன் மேல கோவத்த காட்ட முடியாதப்ப எல்லாம், மிச்சம்மீதியா எஞ்சிக்கிடக்கிற புழுப்பூச்சிங்க மேலதான் காட்டுவான். நாம அதை எல்லாம் பார்க்கணும்னு விதிச்சிருக்கான் அந்த அய்யனாரு. வா... என்ன மிஞ்சிக் கெடக்கோ குடிப்போம். இனி உனக்கு ஊர்க் கஞ்சியும் இல்ல... ஊரும் இல்ல” - நிறைய நீச்சத் தண்ணீரும் கொஞ்சம் பருக்கையும் இருந்த கும்பாவை அவனிடம் நீட்டினார். அழுது மூக்கொழுகி, அகோரமான முகத்தைத் துடைத்துக் கொள்ளாமலேயே கும்பாவை மொத்தமாகத் தூக்கிக் கஞ்சியைக் குடித்தான். “அந்தக் குவாரிக்காரய்ங்க சகவாசம் வேணாம்டா தொர. இன்னும் கொஞ்ச நாள்… பேசாம ஊரோடு ஊரா நாமளும் போயிருவோம். ஊர்ப் பகை வேணாம்ப்பா” - தனக்கே ஆறுதல் சொல்லிக்கொள்வதுபோல் சொல்லிக் கொண்டார். வாயைத் துடைத்தபடியே அவர் சொன்னதற்கு எல்லாம் தலையாட்டினான். கட்டையன், அய்யனார் கோயிலடியை விட்டு எங்கும் போவது இல்லை. எதையோ பறிகொடுத்தவன்போல் மலைப்பக்கமாகப் போகாமல் கிடந்தவனுக்கு, செல்லாண்டி பெருசுதான் இரக்கப்பட்டு ஒருநாள் பிராந்தி வாங்கிக் கொடுத்தார். அவன் வேண்டாம் எனத் தலையாட்டினான். “ஏலேய் கிறுக்கா... மத்தவனுக்குத்தான்டா நீ வேண்டாதவன் எனக்குமா? எடுத்துக் குடி…” அவன் தீர்மானமாக மறுத்துவிட்டான். அவருக்கு மனசு ஆறவில்லை. பசியால் அழவிட்டு ஒரு சின்னக் குழந்தையைத் துன்புறுத்தியிருக்கும் ஊர்க்காரர்களை நினைத்து வயிறு எரிந்தது. போய் சண்டை கட்டலாம் என்றால், யாரிடமும் மல்லுக்கட்டும் திராணி இல்லை. எதுவுமே பேசாவிட்டாலும் ஆறுதலுக்காக மட்டுமேனும் அவனோடு கொஞ்ச நேரம் உட்கார்ந்திருக்க நினைத்தார். அவன் கோயில் வாசலில் இருந்த ரெட்டைக் குதிரையையே பார்த்துக் கொண்டிருந்தான். கோயிலில் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருப்பதன் அடையாளங்கள் ஒருபுறம் தெரிய, இன்னொரு புறம் சுக்கல் சுக்கலாக மலையை உடைத்து, வெட்டி எடுக்க, அகோரப் பசியுடன் குவாரி இயந்திரங்கள் காத்துக்கொண்டிருந்தன. முதலாளிக்கு மதுரையைச் சுற்றி மட்டும் ஏழு எட்டு இடங்களில் இதுபோல் பெரிய குவாரிகள் இருப்பதாகச் சொல்லிக்கொண்டார்கள். `எத்தனை ஊர் குடியைக் கெடுத்துட்டு இங்க வந்திருக்கானுகளோ?’ எனப் பெருசு பொதுவாக முனகிக்கொண்டார். அவர்களைக் கடந்துபோன ஒரு லாரிக்காரன், இரண்டு முறை ஹார்ன் அடித்தான். கட்டையன் அந்தப் பக்கமாகத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. புதுக்குடியிருப்பில் குடிசைகள் தயாராகி நின்றன. வெட்டி எறியப்பட்ட கருவமரங்களை அள்ளிக்கொண்டுபோக வந்திருந்த லாரிகளோடு, அடுப்புக் கரிக்காக மரத்தை எடுக்கவந்த ஏஜென்ட்கள் வெட்டுக்கூலி கொடுத்தனர். கண்களுக்கு எட்டிய தூரம் வரையிலும், நீண்ட பொட்டல் காட்டில் இந்தச் சனம் என்ன செய்யப்போகிறது? சின்ன ஒரு கண்மாய் பக்கத்தில் இருந்ததோடு, குடிதண்ணீருக்காக ஊர்க்காரர்கள் சேர்ந்து, ஒரு கிணறு வெட்டியிருந்தனர். ஆட்கள் இடம்பெயர்ந்து செல்வதற்கு முன்பாக, ஆடு மாடுகளும் நாய்களும் இடம் மாறியிருந்தன. கொஞ்சமும் பச்சையற்ற வெளியில் எதை மேய்வது எனத் தெரியாமல் மாடுகள் கலங்கி நின்றன. சரியான மேச்சல் இல்லாத அவற்றின் மடி இறங்கிப்போயிருந்ததோடு, கண்களில் பல நாள் பசி தேங்கி, சோர்ந்துபோயிருந்தன. பசியைச் சொல்லத் தெரியாத வாயில்லா ஜீவன்களின் ஓலம், நள்ளிரவில் அரவமற்ற புதிய குடியிருப்பில் எதிரொலித்தது. ஒரு பக்கம் அய்யனார் கோயிலில் திருவிழா வேலைகள் நடந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் இந்த ஊருக்கு என மண் சாலை போடும் வேலையும் நடந்தது. ஊர் முழுசும் இடம் மாறிப்போனதும், தனியாகக்கிடந்து இந்தச் சாமி மட்டும் என்ன செய்யப்போகிறது என ஒவ்வொருவருக்கும் ஏக்கம். இந்தப் பழைய அய்யனாரை மாற்ற முடியுமா, சாமி திசை மிரண்டுபோனால், எந்த வகையில் மீட்பது... ஒருவருக்கும் விளங்கவில்லை. வழக்கமான ஆரவாரங்கள் இல்லாமல் திருவிழா தொடங்கியபோது, சுத்துப்பட்டு ஊர்க்காரர்கள் எப்போதும்போல் உற்சாகமாக வந்து சேர்ந்துகொண்டனர். திருவிழா முடிந்து மூன்றாவது நாளில் எல்லா ஊர்க்காரர்களும் வந்து பலிகொடுப்பது வழக்கம். ஆடுகள் மட்டுமே பலிகொடுக்கப்படும். இந்தக் கோயிலுக்கு என்றே நேர்ந்துவிடப்படும் ஆடுகளுக்கு, ஒரு தன்மை உண்டு. முழுக்க கறுப்பாக காதுகளில் வளையமிடப்பட்டு நேர்ந்துவிடப்படும். ஆடுகள், வெட்டப்படுவதற்கு முந்தின நாள் வரையிலும் எந்த ஊரில் எந்த வயலில் வேண்டுமானாலும் மேயலாம். சரியாக வெட்டப்படுவதற்கு முந்தின நாள், ஊர் ஆட்கள் தேடித்தேடி ஆடுகளைக் கொண்டுவந்து சேர்ப்பார்கள். எப்படியும் முன்னூறு ஆடுகளுக்குக் குறையாமல் இருக்கும். கோயிலில் வெட்டும் கெடாக்கறி தின்பதற்காகவே, ருசி கண்டு வரும் சனம். கோயில் சோற்றுக்கு எனத் தனித்துக்கிடக்கும் ருசி. எவ்வளவு தின்றாலும் சலிக்காது. திருவிழா தொடங்கியதில் இருந்து பூசாரிக்கும் பழைய மரியாதை கிடைத்தது. கட்டையன்தான் யாரிடமும் அண்டாமல் ஒதுங்கியே இருந்தான். சிலர் அவனிடம் தாமாகவே வந்து பேச முற்பட்டாலும், அவன் விலகி ஓடிவிடுவான். காலையிலேயே குளத்தில் இறங்கி, குளித்துவிட்டு வந்துவிட்டால் பிறகு கோயில்தான் கதி. யார் வந்து சாமி கும்பிட்டாலும் அவர்களின் பிரார்த்தனைக்காக மணியடிப்பான். சிலர் `அஞ்சோ பத்தோ’ அவன் கையில் கொடுக்கிறபோது மறுக்காமல் வாங்கிக்கொண்டான். இதற்கு முன்னால் கோயில் காரியத்துக்கு என, அவன் யாரிடமும் கை நீட்டி காசு வாங்கியது இல்லை. மத்த சமாசாரங்களுக்கு வாங்கும் காசில்தான் அவன் செலவுகள். இப்போது யாரிடமும் ஊர்க்கஞ்சியோ, ஊர்க்காசோ வாங்குவது இல்லை. திருவிழாவின் முதல் நாள் காலை பால்குடமும் மாலையில் முளைப்பாரியும் எடுத்துவருகையில், இதற்கு முன்பு இல்லாத கூட்டம். ஒருவேளை இந்தக் கோயிலில் நடக்கும் கடைசித் திருவிழாவாக இருக்கலாம் என எல்லோருக்கும் கவலை. நான்கு நாட்களுக்கு முன்பாகத்தான் புதுக்குடியிருப்பில் ஊருக்கு மையமாக, குவாரிக்காரர்கள் ஒரு பெரிய மேடையை அமைத்துக் கொடுத்தார்கள். காரணம் தெரியாமல் மலங்க மலங்கப் பார்த்த ஊர்க்காரர்களிடம், “எல்லாம் உங்களுக்காக வேண்டிதான். ஆளுக வந்துட்டீக சரி... சாமியைத் தனியாவா விட்டுட்டு வர முடியும்? அதான் முதலாளி இங்கேயே கோயிலுக்கும் ஒரு வழி பண்ணியிருக்காரு…” என மேடை அமைத்துக் கொடுத்தவர்கள் பெருமையாகச் சொல்லிவிட்டுப் போனார்கள். ஆக துரத்தியடிக்கப்படுவது ஊர்ச்சனம் மட்டும் அல்ல என்பது, தாமதமாகத்தான் எல்லோருக்கும் புரிந்தது. அய்யனார் கோயிலை நோக்கி தீச்சட்டி எடுத்தபடி, மனிதக்கூட்டம் ஊர்வலம் போகவிருப்பதை இரண்டு செட் மேளமும் பெரியகுளத்து உருமியும் முறுக்கி முறுக்கி உசுப்பேற்றிக்கொண்டிருந்தன. சட்டி எடுக்கிறவர் வேடிக்கை பார்க்கிறவர் என்ற பேதம் எல்லாம் இல்லாமல், எல்லோருக்கும் சாமி இறங்கி ஆடிக்கொண்டிருந்தனர். வெக்கையில் மனிதர்கள் வியர்வையால் நனைந்து குளித்திருக்க, எல்லோரின் கண்களும் கட்டையனைத் தேடின. திருவிழா முடிந்தால் நாளை பலி. கெடாக்கறி தின்பதில் சலிக்காதவன். தின்றுதின்றே எல்லோருக்கும் பிடித்தமான வனாகிப்போன முரட்டு உருவம் அவன். தனியாக இலை போட்டுச் சாப்பிட்டாலும், சாப்பிடும் ஊர்க்காரர்களிடம் ஆளுக்கு ஓர் உருண்டையாக வாங்கித் தின்றால்தான் அவனுக்குப் பசியாறும். இப்போது எல்லோரிடமும் கோபித்துக்கொண்டு அவன் எங்கு போயிருப்பான்? யாரும் சொல்லிக்கொள் ளாமலேயே சிலர் அவனைத் தேடினார்கள். எங்கு தேடியும் அவனைக் காண முடியவில்லை. செல்லாண்டிதான் பொதுவாகச் சொன்னார்... “ஊர்க்கார வெங்காயங்களுக்கு எவன்கிட்ட வீரத்தைக் காட்டணும்னு தெரியாம, அவனுக்குப் போடுற சோத்துல காட்டுனீங்க. இப்ப `அவன் எங்கே போனான்?’னு தேடுனா மட்டும் சரியாப்போச்சா. உங்க மூஞ்சில எல்லாம் முழிக்கக் கூடாதுனுதான்டா பத்து நாளா பொலம்பிக்கிட்டிருந்தான்’’ - பொதுவாக ஆட்களைப் பார்த்துக் காறித்துப்பிவிட்டுப் போனார். எல்லோரும் முகம் செத்துப்போய்க்கிடந்தார்கள். நல்ல காரியம் நடக்கிற நேரத்தில் இது என்ன சங்கடம் என காவக்காரருக்கு வருத்தம். பூசாரிதான் தயங்கித் தயங்கி வந்து சொன்னார். “நேத்து ரவையில இருந்தே பயலைக் காணாம்யா. நானும் யார்கிட்ட சொல்லனு தெரியாம தவிச்சுக்கிடந்தேன். நீங்கதான் என்னன்னு பார்க்கணும்” - அவருக்கு நா தழுதழுத்தது. காவக்காரருக்கு எதுவோ போலாகிவிட இரண்டு பேரைக் கூப்பிட்டு கட்டையனைத் தேடச் சொன்னார். ``யாரையும் கோவிச்சுக்கிட்டு ஊரைவிட்டுப் போற பய இல்ல தம்பி அவன். மேலூரைத் தாண்டிப்போனா, தெற்கு, வடக்கு தெரியாது. கொஞ்சம் தேடிப்பிடிச்சுக் கூட்டிட்டு வந்துடுங்க’’ - அத்தனை கூட்டத்திலும் பூசாரி பெருங்குரலெடுத்து அழத் தொடங்கிவிட்டார். ஆட்கள் கொஞ்சம் பேர் திசைக்கு ஒருவராகத் தேடிச் சென்றார்கள். ஒரு பக்கம் திருவிழாவும் சுனக்கம் இல்லாமல் நடந்து முடிந்தது. விடிய விடியத் தேடியும் கட்டையன் போன தடம் ஒருவருக்கும் தெரியவில்லை. விடிந்து கெடாவெட்டும் முடிந்து படையல் தயாராகிக்கொண்டிருந்தது. மணக்க மணக்க வெள்ளாட்டங்கறி கொதிக்க, எட்டு ஊர் சனமும் சாரிசாரியாகக் கோயிலடியில் வந்து கூடினார்கள். எத்தனை பேர் வந்தாலும் ஒரே பந்தியில் படையல் சோற்றைப் பரிமாற வேண்டும் என்பது விதி. இன்னும் வெயில் ஏறவில்லை. வந்த ஆட்கள் அப்படி அப்படியே வரிசையில் உட்கார, ஊர் ஆம்பளைகள் பரிமாறத் தயாரானார்கள். விருந்து முடியும் முன்பு, எங்கு இருந்தாவது கட்டையன் வந்துவிடுவான் என்ற நம்பிக்கை எல்லோருக்கும். சுடச்சுடச் சோறு இலைகளில் விழுந்து கொண்டிருக்க, கட்டையனைத் தேடிப்போன எல்லோரும் திரும்பிவிட்டார்கள். யாரிடமும் எந்தத் தகவலும் இல்லை. ஒரே ஒருவன் மட்டும் காவக்காரரைத் தனியாகக் கூப்பிட்டுக் காதில் சொன்னான்... “எண்ணே... மலை மேல சுனைக்குப் பக்கத்தில, குவாரிக்காரனுக முந்தாநாள் ராத்திரி சாமப்பூசை ஏதோ பண்ணியிருப்பானுகபோல. எலுமிச்சம் பழம், குங்குமம், மனுச மண்டை ஓடு, கால் எலும்புனு பார்க்கவே பயங்கரமா கிடந்துச்சு” - காவக்காரர் அவனை முறைத்துப் பார்த்துவிட்டு, “சரி அதை என்னன்னு அப்புறம் பார்த்துக்கலாம். அங்க பந்தியில பரிமாற ஆள் பத்தலை. நீ போயி என்னன்னு பாரு”- அவசரமாக அவனை அனுப்பிவைத்தார். தனித்துவிடப்பட்டு நின்றிருந்த அய்யனார் சாமி, அந்த இரவு என்ன நடந்தது என்ற எல்லா உண்மைகளையும் தெரிந்திருந்ததால், சங்கடத்தோடு கண்களை மூடிக்கொண்டார்! http://www.vikatan.com/anandavikatan
 14. பிரியாணி - சிறுகதை மலையாள மூலம்: சந்தோஷ் ஏச்சிக்கானம், தமிழில்: கே.வி.ஜெயஸ்ரீஓவியங்கள்: அனில் கே.எஸ் கோபால் யாதவ் செருக்களையில் இருந்து இப்போதுதான் பஸ் ஏறியிருக்கிறான். கூடவே கதிரேசனும் மூன்று வங்காளிப் பையன்களும் வருகிறார்கள் என்பது உறுதியாகிவிட்டது. பஸ் தீயாய்ப் பாய்ந்துவந்தாலும் பொய்நாச்சியை அடையக் குறைந்தது இருபது நிமிடங்களாவது ஆகும். அதுவரைக்கும் நாம் கலந்தன் ஹாஜியாரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கலாம். கடந்த ஜனவரியில் எண்பத்தாறு வயதைக் கடந்திருக்கும் ஹாஜியார், அந்தக் காலத்தில் தளங்கரையில் இருந்து துபாய்க்கு மரக்கலம் ஓட்டிப்போன பலசாலி. அவருக்கு நினைவு தவறிவிட்டது என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. நான்கு மனைவிகளில் குஞ்ஞீபியை மறந்துவிட்டது எல்லாம், ஞாபகசக்தியை இழந்துவிட்டதில் சேராது. கலந்தன் ஹாஜியால் இன்னும் நாற்பது மனைவிகளைக்கூட காப்பாற்றும் திராணி உண்டு என்ற ஊர்மக்களின் பேச்சில் ஒரு நியாயம் இருந்தது. ஹாஜியாருக்கு ஆமினாவினால் பிறந்த மகள், ருக்கியா. ருக்கியாவோட மகன், ரிஸ்வான். அமெரிக்காவில் கார்டியாக் சர்ஜன். அவனுடைய கல்யாணம் போன வாரம்தான் பெங்களூரில் நடந்தது. சொந்த ஊரில் பேரனுக்கு ஒரு வரவேற்பு நடத்தி, ஊர்க்காரர்களுக்கு நல்ல பிரியாணி போட்டுவிட வேண்டும் என்பது ஹாஜியாரின் ஆசை. அது நிறைவேறாமல்போனால், அவர் செத்ததுக்கு அப்புறமும் மனதில் அது ஒரு பேஜாராக் கிடக்கும் என உம்மா சொன்னதால், ரிஸ்வான் சம்மதித்தான். இன்னக்கி சாயங்காலம் ஆறில் இருந்து ஒன்பதுக்குள்ளதான் வரவேற்பு. இதோ இதுதான் கலந்தன் ஹாஜியோட பெரிய வீடு. வீடு அல்ல... இது, மாளிகை. தற்காலிகமாகப் போடப்பட்ட ஷாமியானா பந்தலைத் தாண்டி வீட்டுவாசலுக்கு வர, நாம ரொம்பத் தூரம் நடந்தாகணும். சும்மாயில்ல, நாலாயிரம் பேர் வரப்போகும் நிகழ்ச்சி இது. வெள்ளை விரிப்புகளால் மூடப்பட்ட மேஜைகளும் நாற்காலிகளும் அந்த இடத்தை வேறு ஒன்றாக மாற்றிக் காண்பித்தன. வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மேடை. வரவேற்பு முடிந்து எத்தனை நாட்களானாலும், ஊர்க்காரர்கள் அந்த மேடையைப் பற்றிப் பேச வேண்டும் என்ற எண்ணம் ஈடேறிவிட்டது கலந்தன் ஹாஜியாருக்கு. இவற்றைப் பற்றிய பெருமிதத்தோடு ஹாஜியாரின் நம்பிக்கைக்கு உரியவனும், ரியல் எஸ்டேட் தொழில் கூட்டாளியுமான ஹசைனார்ச்சா அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருக்கிறார். பரபரப்பான அவர் நடை, மாலையில் நடக்கப்போகும் நிகழ்ச்சியை முன்கூட்டியே பறைசாற்றுகிறது. இடையே ஏதோ ஞாபகம் வந்தது மாதிரி ராமச்சந்திரன் நம்பருக்கு டயல் செய்கிறார். பொய்நாச்சி என்ற சிறு கிராமத்தின் சிறு வியாபாரிதான் அந்த ராமச்சந்திரன் பெரும்பள. தினசரிகளில் ஆரம்பித்து ஸ்டேஷனரி, வார, மாத இதழ்கள், சர்பத், சிகரெட், வெத்தலைப்பாக்கு என, பல்பொருள் அங்காடி. அவர் கடை யதேச்சையாக தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருந்ததால், ஜனநடமாட்டத்துக்கு ஒன்றும் குறைவில்லை. அதனாலேயே எல்லோருமே அவரை நன்கு அறிந்திருந்தார்கள் வீட்டுக்குத் திரும்பும்போது கொண்டுபோகவேண்டிய டார்ச்லைட்டில் ஆரம்பித்து, மாதச்சீட்டு வசூல் பணம், கையில் எப்போதும் சில தபால் உறைகள், ரெவின்யூ ஸ்டாம்புகள் என, எங்கே போறோம், எப்போ திரும்புவோம் என்ற விவரங்களை, தன் மனைவிகளிடம்கூட சொல்லிவிட முடியாத மற்றவர்களின் ரகசியங்களைத் தனக்குள்ளேயே அழுத்தி, பணப்பரிமாற்றமும் பண்டமாற்றிகளுமாக, கிளைகளும் உபகிளைகளுமாகச் சுற்றிக்கொண்டே இருக்கும் ஒரு நடமாடும் டவர்தான், ராமச்சந்திரன் பெரும்பள. அவர் ஹசைனார்ச்சாவின் தொலைபேசி அழைப்பை ஏற்பதற்கும், சுக்ரியா பஸ் குறித்த நேரத்துக்கு வந்துசேருவதற்கும் சரியாயிருந்தது. முதலில் கதிரேசனும், பின்னாலேயே அந்த வங்காளிப் பையன்களும், கடைசியாக கோபால் யாதவும் இறங்கிவந்தார்கள். வங்காளிகள் மூவரும் ரோட்டைக் கடந்து வந்து நமஸ்கார் சொன்னதும், ராமச்சந்திரன் அவர்கள் முன் நன்றாகக் கசக்கப்பட்டு கட்டப்பட்டிருந்த மூன்று கஞ்சா பொட்டலங்களை நீட்டினான். அதில் ஒன்றைப் பிரித்து ஒரு துகளை எடுத்து நாக்கில் வைத்து, அதன் காரத்தை உணர்ந்தவர்களாக, விரல்நுனியை அப்படியே தங்கள் ஜீன்ஸ் பேன்ட்டில் துடைத்துக் கொண்டார்கள். எதிர்பார்த்தபடி வந்த பிக்கப் வேனில் இருந்த, ஒரு தடித்த ஆள் அவர்களை அதற்குள் நுழைத்துக்கொண்டு வேகமெடுத்தான். சற்று நேரத்துக்குள் பிளம்பிங் வேலை மிச்சம் இருப்பதாக, நேற்றிரவு போனில் அழைத்திருந்த தோமாச்சன், கதிரேசனுக்கு முன்னால் தன் ஜீப்பை நிறுத்தி ஹாரன் அடித்தான். கதிரேசனும் அவனோடு போன பின் கோபால்யாதவ் தனித்துவிடப்பட்டான். அவன் முதுகில் கீறலாக விழுந்த இளவெயில் பெரிதாகிக்கொண்டே போனது. இந்த இரண்டு வருடங்களாக கதிரேசனின் மச்சான் அண்ணாமலையுடன்தான் இருந்தான் கோபால் யாதவ். அண்ணாமலைக்கான வேலை குறைந்த பின் உடல் உழைப்பைத் தவிர வேறு ஒன்றும் தெரியாத கோபால் யாதவுக்கு, யாதொரு பிடிமானமும் இல்லாமல்போனது. அப்படி விட்டத்தைப் பார்த்து உட்கார்ந்திருந்த ஒரு நாழிகையில்தான், கதிரேசனைப் பற்றி அவனுக்குச் சொன்னான் அண்ணாமலை. நேரே செருக்கள நோக்கிக் கிளம்பிவிட்டான் கோபால். காஞ்சாடு பக்கமாக வரும்போது வித்யாநகர் கடந்தால் வரும் ஓரளவு நல்ல டவுன் செருக்கள. உளியத்தடுக்கையைப்போல வேலைவெட்டியின்றி ஈயடிச்சிக்கிட்டு உக்காந்திருக்க வேண்டியிருக்காது என கதிரேசனும் உறுதி அளித்தான். கதிரேசனின் ஒற்றையறை உள்ள வீட்டின் பின்புறம் போடப்பட்டிருக்கும் மரபெஞ்சில்தான் கோபால் யாதவ் தங்கிக்கொள்கிறான். மழைக்காலத்துக்கு முன்னர், வேறு எங்கேயாவது அறை பார்த்துப் போய்விட வேண்டும். தனி அறைக்கே இப்போது ஐயாயிரம் ரூபாய் வாடகை கேட்கிறார்கள். யாராவது வருவதற்குள் ஒரு மீட்டாபான் வாங்கி மெல்லலாம் என நினைத்து, அருகில் இருந்த பெட்டிக்கடையை நோக்கி நடந்தான். ‘‘இதர் நயா ஹை தும்?’’ ‘‘ஹா… பாயி.’’ வெற்றிலையின் நரம்பைக் கிள்ளியபடியே ராமச்சந்திரன் விசாரித்தான். ‘‘கிதர் கா ஹை தும்?’’ ‘‘பீஹார்.’’ ‘‘ஓ… ஆப்னா லாலூஜீக்கா தேஸ்யேனா.’’ கோபால் யாதவ் சிரித்தான். அப்போது அவன் கீழ்த்தாடையில் மூன்று பற்கள் விழுந்துவிட்டிருப்பதை ராமச்சந்திரன் கவனிக்கத் தவறவில்லை. ‘‘தும் கித்னா சால் ஹோகயா இதர்?’’ ‘‘சாத்’’ கோபால் யாதவ் மீட்டாபானை வாயில் போட்டு மெல்ல ஆரம்பித்தான். ‘‘அபி தும் மலையாளம் சீக்கா?’’ அவன் வெற்றிலைச் சாறை உள்ளிழுத்து விழுங்கியவாறே, ‘‘கத்துக்கிட்டேன்’’ எனத் தலையாட்டினான். ‘‘இன்னக்கி ஒரு வேலை இருக்கு... செய்றியா?’’ ‘‘செய்றேன்’’ எனப் பலமாகத் தலையாட்டினான். சுண்ணாம்பு தோய்ந்த விரலைத் துணியில் துடைத்துக்கொண்டே, ராமச்சந்திரன் தன் மொபைலை எடுத்தான். ஹசைனார்ச்சாவைக் கூப்பிட்டு, தனக்கு ஆள் கிடைத்துவிட்டதைச் சொன்னான். அவசரமா கலந்தன் ஹாஜியோட வீட்டுக்கு ஒரு வேலையாள் கிடைப்பானா எனத்தான் சுக்ரியா பஸ் வந்து நின்னப்ப, ஹசைனார்ச்சா போன்ல கேட்டிருந்தார். அரை மணி நேரத்துக்குள் ஹசைனார்ச்சாவின் ஃபார்ச்சூனர் கார், அவர்கள் முன் வந்து நின்றது. வண்டியில் இருந்து ஹசைனார்ச்சா இறங்கினார். எப்போதும் செய்வதுபோல, தன் ட்ரௌசர் பாக்கெட்டில் கையைவிட்டு தொடைக்கும் விதைப்பைக்கும் இடையே சொறிந்துகொண்டே ராமச்சந்திரனின் கடைக்கு வந்தார். ராமச்சந்திரன் ஏற்பாடு செய்திருப்பது, தன் முன் பவ்யமாக வணங்கிநிற்கும் இந்த நடுத்தர வயதுக்காரனைத்தான் என்பது அவருக்கு ஒரே பார்வையில் புரிந்துவிட்டது. ‘‘எரநூத்தைம்பது ரூபா தர்றேன். ரெடியா?’’ என கோபால் யாதவின் முகத்தைக்கூடப் பார்க்காமல் ஹசைனார்ச்சா கேட்டார். ‘‘சாப்… முன்னூத்தம்பதா குடுங்க சாப்...’’ ‘‘டேய், மலையாளிக்கு 600, தமிழனுக்கு 500, பெங்காலிக்கு 350, பீஹாரிக்கு 250. இதான் இங்கத்தய ரேட்டு. நாலைஞ்சு மணி நேர வேலைதான் இருக்கு. ஒரு மணி நேரத்துக்கு அம்பது ரூபாய்க்கு மேல நம்மால குடுக்க முடியாது. வர்றியா... இல்லியா? அதைச் சொல்லு’’ - ஹசைனார்ச்சா ஒரு வில்ஸ் எடுத்துப் பற்றவைத்துக் கொண்டார். ‘‘என்ன ஹசைனார்ச்சா, விருந்து ஏற்பாடு எல்லாம் பயங்கரமா நடக்குதுன்னு கேள்விப்பட்டேன். பிரியாணி செய்ய ஹைதராபாத்லேருந்தும், அபுதாபியிலேருந்தெல்லாம் ஆளுங்களைக் கூட்டியாந்திருக்கீங்கன்னு பேசிக்கிறாங்க...’’ - அருகில் நின்ற ராமச்சந்திரன் கேட்டான். ‘‘வெறும் பிரியாணி மட்டும் இல்ல மவனே... `குழிமந்தி’கூட இருக்கு. இது இங்கே இருக்கிற லோக்கல் இக்காங்க வீட்டுக் கல்யாணத்துல போடற சவசவ பிரியாணி இல்லை. நம்பர் ஒன் பாசுமதி ரைஸ் ஒரு லோடு பஞ்சாப்லேருந்து அப்படியே எறக்கியிருக்கோம்.’’ ‘‘ஒரு லோடா?’’ ராமச்சந்திரன் நம்ப முடியாமல் கேட்டான். ‘‘நேத்து ராத்திரி லாரி வந்து நம்ம வீட்டு வாசல்ல நின்னப்போ... டேய் ராமச்சந்திரா நீ நம்ப மாட்ட, மல்லிப்பூ பூத்த வாசனை ஊரையே நெறப்பிடுச்சு. இப்பவும் அந்த வாசனை என் மூக்குலேருந்து போகலைடா. அதான் பஞ்சாப் பாசுமதி.’’ நூறு ரூபாய் அதிகம் கேட்டிருந்தாலும், பேரம் படிந்து ஹசைனார்ச்சாவின் ஃபார்ச்சூனரின் பின்ஸீட்டில் கோபால் யாதவ் குந்தியிருந்தான். பள்ளிக்கரைக்கான சாலையை அடைந்தவுடன் ஹசைனார்ச்சா திரும்பி கோபால் யாதவிடம் கேட்டார்... ‘‘கோபாலா, நீ பீஹார்ல எங்கே இருந்த?’’ ‘‘லால் மாத்தியா?’’ ‘‘அங்க என்ன வேலை?’’ ‘‘நிலக்கரி அள்றது’’ கோபால் யாதவ், லால் மாத்தியின் ராஜ்மஹால் கோல் மைனிங் பற்றி சொல்லத் தொடங்கினான். சுரங்கம் வெட்டுவதைப் பாதியிலேயே விட்டுவிட்டு, கம்பெனி காலி செய்த இடங்களில் இரண்டாம்தர நிலக்கரி நிறைய மிச்சம் இருக்கும். சட்டவிரோதம் எனினும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் ஊர்க்காரர்கள் அவற்றை அள்ளிக்கொண்டு போவார்கள். கரி அள்ள பெண்கள்தான் அதிகம் பேர் வருவார்கள். மாதங்கியை கோபால் யாதவ் சந்தித்ததுகூட அப்படி ஒரு தருணத்தில்தான். லால் மாத்தியில் இருந்து இருநூற்றைம்பது கிலோ நிலக்கரியை ஏற்றிக்கொண்டு ‘கொத்தா’ வரை நாற்பது கிலோ மீட்டர் சைக்கிளைத் தள்ளிக்கொண்டே போகவேண்டும். சில நாட்களில் அந்தப் பயணம், மேலும் இருபது கிலோ மீட்டர் நீண்டு ‘பாங்கா’ வரை போகும். ‘‘எல்லாம் போக டெய்லி பத்து ரூபா மீறும் சாஹிப்.’’ ‘‘அடக்கடவுளே, வெறும் பத்து ரூபாயா?’’ ‘‘நூத்தம்பது கெடைக்கும். அதுல போலீஸுக்கும் ரவுடிங்களுக்கும் கொடுத்ததுபோக, சைக்கிள் ட்டியூப் மாத்தி, பால்பேரிங் சரிபண்ணிட்டுப் பாத்தா... கையில பத்து ரூபாதான் மிஞ்சும் சாப்.’’ ‘‘இதுல நீ எங்கிட்ட நூறு ரூபா சேத்துக் கேக்கிற?’’ - ஹசைனார்ச்சா தன் தலையைப் பின்புறம் திருப்பி, கோபால் யாதவைக் கோபமாய்ப் பார்த்தார். ‘‘சரி நீ ஊரைவிட்டு வந்து எத்தனை வருஷமாச்சு? ‘‘பதினஞ்சு வருஷம் சாப்.’’ ‘‘அன்னக்கி பத்துன்னா இன்னக்கி அது நூறாயிருக்கும். அவ்வளவுதான். இதுல நான் எரநூத்தம்பது குடுக்கிறேன்னா, உனக்குப் பத்தலையா?’’ வண்டி ஓட்டுவதற்கு இடையே அவர் யாரிடம் என்று இல்லாமல் தனியே புலம்பிக்கொண்டுவந்தார். தன் கஷ்டங்களை எல்லாம் இந்த ஆளிடம் சொல்லியிருக்க வேண்டாமோ என, கோபால் யாதவ் நினைத்துக்கொண்டான். ‘கொத்தா’வில் இருந்து நடுராத்திரிகளில் சைக்கிளை மிதித்துக்கொண்டு வீடு வந்து சேர்வதற்குள், தன்னை எதிர்பார்த்துக் காத்திருந்துவிட்டு கடைசியில் மண்ணை வாரித் தின்றுவிட்டுத் தூங்கும், பைத்தங்கொடியைவிட வற்றிய கழுத்தும், துருத்தி நிற்கும் வயிறுமாக ஒரு மகள் இவனுக்கு இருக்க வாய்ப்பு இல்லையே! ஒருத்தனிடம் நம் துயரத்தைப் பகிர்ந்துகொள்ள நினைத்துச் சொல்லும்போது, கேட்பவன் அதே அளவு இல்லை எனினும், அப்படிச் சில வேதனைகளைத் தன் வாழ்வில் கடந்தவனாகவேனும் இருந்தாக வேண்டும். அப்படி இல்லாத யாரிடமும், இவற்றைச் சொல்லி என்ன ஆகிவிடப்போகிறது என்று நினைத்து, கோபால் யாதவ் அமைதியானான். இதெல்லாம் தன் வாழ்வில் பட்டுத் தெரிந்துகொண்ட விஷயங்கள்தான். மாமூல் பிரித்து எடுக்கையில், எத்தனை முறை போலீஸ்காரர்களின் கால்களில் விழுந்து கெஞ்சியிருக்கிறேன். ஓர் அற்பப் புழுவைப்போல உதறித் தள்ளியதைத் தவிர, என்றுமே என்மீது அவர்கள் கரிசனம் காட்டியது இல்லை. அதற்குள் ஃபார்ச்சூனர் கலந்தன் ஹாஜியாரின் வீட்டின்முன் நின்றது. காற்றில் பாசுமதியின் வாசனை அப்போதும் பரவியிருந்தது. லால் மாத்தியில், ஹீக்கூர் மியாவின் கடையில்தான் முதன்முதலில் கோபால் யாதவுக்கு மாதங்கி இந்த அரிசியைக் காட்டினாள். அப்போது அவள் ஆறு மாதக் கர்ப்பிணி. சாக்குப்பையிலிருந்து ஒரு பிடி அள்ளி மூக்கிற்கு நேரே கொண்டுவந்த போது, அதன் வாசனையேறி அவள் கண்கள் லேசாக மூடிக்கொண்டது. அது ஒரு மாதிரியான கிறக்கம். தங்களைப் போன்றவர்களால் அதை விலைக்கு வாங்கிச் சாப்பிட முடியாது என அவளுக்கு உறுதியாகத் தெரியும். ஆனாலும் அவள் நிராசைப்பட அவன் விடவில்லை. ஐம்பது கிராம் அரிசியை அளந்து தருமாறு ஹீக்கூர் மியாவிடம் கேட்டான். வீடு வந்து சேரும் வரை மாதங்கி அதை வாயில் போட்டு மென்று கொண்டே வந்தாள். பசுவின் பால்போல அரிசி மாவு அவள் கடைவாயில் இருந்து ஒழுகியபோது, அதைத் துடைக் கவிடாமல் ஒரு கன்னுக்குட்டியைப் பார்ப்பதுபோல அவளைப் பார்த்தது நினைவுக்கு வந்தது. கோபால் யாதவைப் பின்னால் இருந்து யாரோ தட்டினார்கள். திரும்பிப் பார்த்தபோது ஓர் இளைஞன் நின்றிருந்தான். அவன் முன்னால் நின்றபோது, அத்தர் பாட்டில் கீழே விழுந்து உடைந்ததுபோல கோபால் யாதவுக்குத் தோன்றியது. அவன் கலந்தன் ஹாஜியின் மூன்றாவது மனைவி பாத்திமா வுக்குப் பிறந்த தாஹாவின் மகன் சினான். ‘‘அரே பாயி... தும் மேரா சாத் ஆவோ.’’ கையில் இருந்த கடப்பாரையையும் மண்வெட்டி யையும் கோபாலிடம் கொடுத்துவிட்டு, பக்கத்தில் இருந்த கார் கண்ணாடியில், புது ஸ்டைலில் மேல் பக்கமாய் நீட்டிச் சீவிய தன் கோல்முடியைச் சரிபார்த்துக் கொண்டான். அதில் திருப்தி அடைந்தவனாக ஒருமுறை தனக்குத்தானே சிரித்துக்கொண்டான். அந்தப் பகுதி, விழாவுக்கு வரும் வண்டிகள் நிறுத்துவதற்காக ஒழுங்கு செய்யப் பட்டிருந்தது. கொஞ்ச தூரம் நடந்தவுடன் தென்னந்தோப்பில் பச்சைப் புற்கள் வளர்ந்து நின்ற ஓர் இடத்தைக் காட்டி சினான் சொன்னான். ‘‘இங்கதான், இங்க குழிவெட்டு பாயி.’’ ஒரு பெரிய குழியை வெட்டத்தான் இங்கு அழைத்து வரப்பட்டிருக்கிறோம் என்பதே கோபால் யாதவுக்கு அப்போதுதான் புரிந்தது. ‘‘ஆழம் எவ்வளவு வெட்டணும் பாய்?’’ ‘‘உன்னோட ஆழம் போதும்.’’ சினான் அவனுடைய எண்ணற்ற காதலிகளில் ஒருவளான ரியாராஃபிக்கு வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பிக்கொண்டே கோபால் யாதவிடம் சொன்னான். ‘‘அகலம்?’’ ‘‘உன்னோட அகலமே போதும்’’ கோபால் யாதவ் கடப்பாரையின் கூர்முனையால் வெறுந்தரையில் கோடிட்டான். கோடை ஆரம்பித்துவிட்டாலும் வெய்யிலை மண்ணுக்குக் கடத்தாமல் தடுத்து நிறுத்தியிருக்கும் தென்னை ஓலைகளுக்கு நன்றி சொல்லி, தன் வேலையைத் தொடங்கினான் கோபால் யாதவ். மண்ணின் இறுக்கத்தை வைத்துப்பார்த்தால், ஓர் ஆள் ஆழத்துக்கும் அகலத்துக்கும் குழிதோண்டி முடிக்க இருட்டிவிடும். இதற்கு இடையே தன்னைப் பற்றிய சிறு விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்ட சினான், நேராக கூகுளில் நுழைந்து லால் மாத்திக்குப் போனதை கோபால் யாதவ் அறிந்திருக்கவில்லை. ‘‘பீஹாருல லால்மாத்தினு ஒரு எடமே இல்லயே பாயி.’’ மண்ணில் குத்திட்டு நின்ற கடப்பாரையை வெளியே எடுக்காமலேயே கோபால் யாதவ் சொன்னான். ‘‘லால் மாத்தியா பீஹார்லதான் இருக்கு. யே மேரா காவ் ஹை.’’ ‘‘தும் ஜோக் மத் போலோ. அது ஜார்க்கண்ட்லதான் இருக்கு. தோ பாரு...’’ விபத்தில் செத்துப்போனவனின் முகத்தை மூடியிருக்கும் வெள்ளைத் துணியை விலக்குவதைப் போல, தன் மொபைல் ஸ்க்ரீனை விலக்கி, பீஹாரில் இருந்து ஜார்க்கண்டுக்குப் போய்விட்டிருந்த லால்மாத்தியை, கோபாலிடம் காண்பித்தான் சினான். தன்னைப்போலவே தன் கிராமமும் மாநிலம் விட்டு மாறியிருக்கிறது என நினைத்து, கோபால் யாதவ் ஒரு பெருமூச்சை உள்ளிருந்து விட்டான். தனக்குப் பிரியமானவர்களின் மரணத்தின்போது எல்லாம் கோபால் யாதவ் இப்படித்தான் செய்வான். இப்போது இது லால் மாத்தியின் மரணத்துக்காக. மண்ணில் ஊன்றியிருந்த கடப்பாரையை வெளியே எடுத்தான். அதில் இருந்து பெயர்ந்த ஈரமான மண்கட்டியை பீஹாராகக் கற்பனை செய்தான். அவனுடைய கண்கள் நிறைந்தன. ஆத்திரத்தோடு கடப்பாரை முனையால் மண்கட்டியை ஓங்கி அடித்தான். அது ஒரு மனித மண்டையோட்டைப்போல இரண்டாகப் பிளந்தது. ஒன்று பீஹார்; இன்னொன்று ஜார்க்கண்ட். இவை இரண்டில் எங்கு இருக்கிறேன் நான்? தனக்குத்தானே கேட்டுக்கொண்டான். அப்புறம் எதுவும் நினைவில் இல்லை. அவர்கள் வரிசை வரிசையாகப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். யாதவர்கள், கொயேறிகள், சாந்தாள்கள்… பெடல் கழற்றிவிடப்பட்ட ஒவ்வொரு சைக்கிளிலும் 250 கிலோ கிராம் நிலக்கரி மூட்டை இருக்கிறது. செங்குத்தான மலைப்பாதைகளில் ஏறிக்கொண்டிருக்கிறார்கள். மூச்சிரைக்கிறது. வெறும் காற்று நிறைந்த நுரையீரல், விலா எலும்புகளை உடைத்துக்கொண்டு வெளியே வந்துவிடும் என கோபாலுக்குத் தோன்றியது. அரிசியோடு சேர்த்து காய்கறிகளைப் போட்டுப் பொங்கிய சோற்றைத் தவிர, காலையில் இருந்து வேறு எதையும் சாப்பிடவில்லை. தலை சுற்றுகிறது. முன்னால் நடந்துகொண்டிருந்த மஞ்சி லேசாக நடுங்கினான். ‘‘என்னாச்சு’’ எனக் கேட்பதற்குள், முடிச்சவிழ்ந்து வீழ்ந்த நிலக்கரிச் சரிவோடு, அவனும் செங்குத்தான மலைப்பாதையில் இருந்து கீழே விழுந்தான். சுற்றிலும் கும்மிருட்டு. பள்ளத்தின் ஆழ அகலத்தை நிதர்சனமாகப் பார்த்தபோது, யாதவுக்கே அதிர்ச்சியாக இருந்தது. பார்க்கிங்கில் இருந்து வண்டிகள் அகன்று செல்லும் சத்தம் மட்டும் கேட்கிறது. விருந்து கிட்டத்தட்ட முடிந்திருக்கக்கூடும். பேச்சு சத்தம் முற்றிலும் இல்லை. அவன் வெட்டிய குழியின் பச்சை மண்ணில் மல்லாந்து படுத்தான். தென்னை ஓலைகளின் இடைவெளிகளில் இருந்து நிலவொளி ஒரு சிறு கீற்றுபோல குழிக்குள் இறங்குகிறது. வாரி வெளியேகொட்டிய மண் மீது கால் பதித்து சினான் கேட்டான். ‘‘ஹோகயா?’’ ‘‘ஹா... ஜி.’’ கோபால் மேலெழுந்தான். சினான் அவன் கைப்பற்றி மேலே இழுத்தான். அவன் மேலே ஏறவும், எங்கிருந்தோ நான்கு பேர் ஒரு நீலநிற பாரலைத் தாங்கிப்பிடித்து உருட்டியபடி குழியில் கவிழ்த்தனர். எலும்புத் துண்டுகளோடு கூடிய பிரியாணி சிறுகுன்றுபோல குழிக்குள் கொட்டப்பட்டது. கோபால் யாதவின் இதயத்துடிப்பு அநியாயத்துக்கு எகிறியது. ஒரு மண் குவியலுக்குள்ளிருந்து மேலெழுந்து வருவதுபோல அவன் தலையுயர்த்திப் பார்த்தபோது, மீண்டும் ஒரு பாரல் வந்தது. அதன் பிறகு வந்ததை எல்லாம் அவன் கணக்கில் வைத்துக்கொள்ளவில்லை. கடைசியிலும் கடைசியாக தம் போட்டுப் பிரிக்கப்படாத ஒரு அண்டா பிரியாணியும் குழிக்குள் வந்து விழுந்தது. எச்சில் பருக்கைகளால் குழி நிறைந்தது. ‘‘இப்ப இதை மிதிச்சி லெவல் பண்ணிடு பாய்’’ -சினான் சொன்னான். எதையோ நினைத்துக்கொண்டு குழியையே பார்த்துக்கொண்டு நின்றான் கோபால். ‘‘மிதிச்சு அழுத்து பாய், மணி பதினொண்ணு ஆச்சு.’’ மிதித்தான். அதன் நெஞ்சில் தன் பலம் கொண்ட மட்டும் மிதித்தான். முதலில் ஓர் அழுகைச் சத்தம் எழுந்தது. பின் அது முனகலானது. இறுதியில் அதுவுமற்ற வெற்றிடமானது. ‘‘இப்ப மண்ணைப் போட்டு மூடிடு பாய்.’’ வியர்த்து வழியும் கால் பாதங்களில் நெய்யும் மசாலாவுமாக நிற்கிற கோபால் யாதவைப் பார்த்து, தன்னோடு அணைத்து நிற்கவைத்தபடி ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டே சினான் கேட்டான். ``பாயிக்கு எத்தன புள்ளைங்க?’’ ‘‘ஒரே மக.’’ ‘‘என்ன பேரு?’’ ‘‘பாசுமதி.’’ ‘‘நிக்காஹ் முடிஞ்சிடிச்சா?’’ ‘‘இல்ல.’’ அதைக் கேட்டபடியே மொபைலைத் தன் சட்டை பாக்கெட்டில் போட்டுக்கொண்டு கோபால் யாதவை எதிர்பார்ப்போடு பார்த்துக்கொண்டே, ‘‘படிக்கிறாளா?’’ என்றான். ‘‘இல்ல.’’ ‘‘அப்பறம்?’’ ‘‘செத்துட்டா.’’ ‘‘செத்துட்டாளா?’’ பெரிய இரக்கம் ஒன்றும் கசியவில்லை எனினும் சினானை அது லேசாகத் தளர்த்தியது. ‘‘எப்படி?’’ ‘‘பசியில...’’ கோபால் யாதவ் இன்னும் ஒரு மண்வெட்டி மண்ணை எடுத்து பாசுமதியின் மீது போட்டான். பிறகு தன் மூச்சை ஆழமாக உள்ளுக்கு இழுத்தான்! * குழிமந்தி - அரேபியன் பிரியாணி http://www.vikatan.com/anandavikatan
 15. ஜெர்மன் விசா - சிறுகதை அ.முத்துலிங்கம், ஓவியங்கள்: ஸ்யாம் ஒருவன் வீட்டைவிட்டு ஓடுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். பரீட்சையில் சித்தியடையாதது, காதல் தோல்வி, அம்மா ஏசியது, அப்பா அடித்தது, கடன் தொல்லை, விரோதிகளின் சதி... இப்படிப் பலவற்றைச் சொல்லலாம். நான் வீட்டைவிட்டு ஓடியதற்குக் காரணம் ஓர் ஆடு. வீட்டைவிட்டு மட்டும் அல்ல; நான் நாட்டைவிட்டே ஓடினேன். அதைச் சொன்னால் ஒருவருமே நம்புவது இல்லை. ஆகவே, அது உண்மை இல்லை என்று ஆகிவிடுமா? வருடம் 1979. எனக்கு வயது 15. நெடுந்தீவு மகாவித்தியாலத்தில் படித்துக்கொண்டிருந்தேன். வகுப்பில் முதலாவதாக வராவிட்டாலும், ‘நீ சுயமாகச் சிந்திக்கிறாய்’ என்று வாத்தியார் என்னைப் பாராட்டியிருக்கிறார். வீட்டுப்பாடம் செய்வது இல்லை என்று ஒரு கொள்கை வைத்திருந்தேன். ஆகவே, அடிக்கடி வகுப்புக்கு வெளியே நிற்க நேர்ந்தது. உலகத்தைப் பற்றி சிந்தித்தது எல்லாம் அந்த நேரங்களில்தான். ‘செருப்புக்கு தோல் வேண்டி’ என்று பாரதி எழுதிய வரிகளில்தான் பிரச்னை ஆரம்பித்தது. வாத்தியார் சொன்னார். ‘கவி, சாதாரணமானதை அசாதாரணமாகச் சொல்வான்; அசாதாரண மானதை சாதாரணமாகச் சொல்வான்.’ நான் கேட்டேன், `சாதாரணமானதை சாதாரணமாகவே சொன்னால் கவியாகாதா?’ அன்று முழுநாளும் நான் முழங்காலில் வகுப்புக்கு வெளியே நின்றேன். சரித்திர ஆசிரியரை `வாஸ்கோடகாமா வாத்தியார்’ என்றுதான் அழைப்போம். வாஸ்கோடகாமாவைப் பற்றி பேசத் தொடங் கினால், நிறுத்த மாட்டார். மிளகு வாங்க இந்தியாவுக்கு வந்தவன், நம்பூதிரியின் காதை அறுத்துவிட்டு, அந்த இடத்தில் நாய்க்காது தைத்து அனுப்பிய கதையைச் சொல்லிவிட்டு விழுந்து விழுந்து சிரிப்பார். இந்த வாத்தியாருக்கு ஓர் ஆடு தேவைப்பட்டது. 39 பேர் உள்ள வகுப்பில் `துந்திர வெளியில் மரங்களே முளைக்காது’ என்று பாடம் சொல்வதுபோல, `எனக்கு ஓர் ஆடு தேவை’ என்று பிரகடனம் செய்தார். எவருமே சட்டை செய்ததாகத் தெரியவில்லை. சிலர் அதை தங்கள் நோட்புக்கில் அதுவும் ஒரு பாடம் என்பதுபோல எழுதி வைத்தனர். நான் ஊர் முழுக்க அலைந்து, விசாரித்து, ஓர் ஆட்டைக் கண்டுபிடித்தேன். அதை நாலு மைல் தூரம் நடத்திச் சென்று வாத்தியாரிடம் ஒப்படைத்தேன். அவருக்கு ஆடு பிடித்துக்கொண்டது. ஆடுக்கும் பிடித்தது. `என்ன விலை?’ என்றார். நான் வாய் கூசாமல் 30 ரூபா சொன்னேன். அவர் காசை எண்ணித் தந்தார். நான் ஆட்டுக்காரரிடம் போய் 25 ரூபாவைக் கொடுத்துவிட்டு, மீதிக் காசை கொடிபோல தலைக்கு மேல் ஆட்டிக்கொண்டு வீட்டுக்கு ஓடினேன். அப்பா `என்னடா?’ என்றார். 5 ரூபா நோட்டைக் காட்டி, விவரத்தைச் சொன்னேன். நான் என் வாழ்நாளில்விட்ட அதிபயங்கரப் பிழை அதுதான். `இஞ்ச வாடா’ என்றார். ‘துரோகி. குருவுக்கே துரோகம் பண்ணலாமா, நீ விளங்குவாயா, இது அறமா, அறமாடா?’ என்று என்னைத் துரத்தினார். `வாத்தியாரிடம் போய் மன்னிப்புக் கேள். ஐந்து ரூபா காசைத் திருப்பிக் கொடுத்துவிட்டு வா.’ வேறு வழியின்றி வாத்தியாரிடம் போய் பணத்தைத் தந்துவிட்டுத் திரும்பினேன். நான் பாடுபட்டு உழைத்த காசு அது. அறம் அது இது என்று கூறி அப்பா என்னை வெருட்டிவிட்டார். எனக்கு அது புரியவே இல்லை. அப்பா காலை 4 மணிக்கு எழுந் திருப்பார். இளம் பனையோலையை வெட்டி, தண்ணீர் தெளித்து, ஈக்கில் பிரித்து, ஓலையைத் தனித்தனியாக வார்ந்து வைத்துக்கொண்டு, பாய் முடைவார். ஒரு பாய் செய்து முடிக்கும்போது, காலை 7:30 மணியாகிவிடும். நெடுந்தீவில் ஓடும் ஒரேயொரு பஸ் 8:00 மணிக்கு வரும். நான் பாயை சுருட்டிக்கொண்டு சந்தைக்குப் புறப்படுவேன். அங்கே அதை 50 சதத்துக்கு விற்றுவிட்டு, பள்ளிக் கூடத்துக்குப் போவேன். போக வர பஸ் காசு 30 சதம். மிச்சம் 20 சதம்தான் என்னுடைய மதியச் சாப்பாட்டுக் காசு. இது தினமும் நடக்கும். ஒரு நாளைக்கு அப்பா பாய் முடையாவிட்டால், அன்று எனக்குப் பள்ளிக்கூடம் கிடையாது. நான் பள்ளிக்குப் போன அத்தனை நாளும் பாய் விற்றுத்தான் சென்றேன். அப்படியிருக்க, நான் ஒரு மணி நேரத்தில் 5 ரூபா சம்பாதித்தேன். அப்பா என்னைப் பாராட்டியிருக்க வேண்டும். மாறாக `அறம்... அறம்...’ என்று ஏதோ சொல்லிக் கத்தினார். நான் என்ன திருடினேனா? கொலை செய்தேனா? நாலு மைல் தூரம் நடந்ததற்கு ஊதியம் வேண்டாமா? வீட்டைவிட்டு ஓட வேண்டும் என்று அப்போதுதான் தீர்மானித்தேன். என் நண்பன் ஒருவன், அடிக்கடி கள்ளத் தோணியில் இந்தியா போய் வருவான். போகும்போது பொலியெஸ்டர், தேங்காயெண்ணெய், சோப் ஆகியவற்றைக் கொண்டுபோய் அங்கே விற்பான். திரும்பும்போது சேலை, வேட்டி, பருப்பு என்று வாங்கிவருவான். ஒருமுறை போய் வந்தால், அவனுக்கு 2,000 ரூபா லாபம். அவன் படித்தது 5 -ம் வகுப்பு மட்டும்தான். அவனைப் படிப்பித்த வாத்தியாரின் மாதச் சம்பளம் ரூபா 400. நான் ஓ.எல் சோதனை எழுதிவிட்டு வீட்டில் சும்மாதான் உட்கார்ந்திருந்தேன். அவனே இத்தனை சம்பாதித்தால், படித்த நான் எவ்வளவு சம்பாதிக்க முடியும்? அவன் என்னைக் கூட்டிப்போகச் சம்மதித்து, இரண்டு மடங்கு சாமான் எடுத்துப் போனான். நான் சாமான்களைத் தூக்கி அடுக்கி, கூடமாட உதவி செய்தேன். இரவு 12 மணிக்கு பனங்காணி முனையில் இருந்து புறப்பட்டோம். வள்ளத்தில் இன்னும் சிலர் இருந்தார்கள். இரவு நேரம் ஆளுக்காள் முகம் தெரியாது. பலபலவென விடியும்போது ராமேஸ்வரம் வந்தது. கொண்டுவந்த சாமான்களை விற்றுவிட்டு வேறு சாமான்கள் வாங்கிக்கொண்டு திரும்பினோம். கிடைத்த லாபத்தில் நண்பன் எனக்கு 100 ரூபா நோட்டு ஒன்று தந்தான். என் வாழ்நாளில் சொர்க்கமான தருணம் அது. தினமும் நாலு மணிக்கு எழும்பி பனை ஓலைப் பாய் முடைந்து 50 காசு சம்பாதிக்கும் அப்பாவை நினைத்துக்கொண்டேன். அதன் பின்னர் நானே தனியாக வியாபாரம் செய்ய ஆரம்பித்தேன். ஒவ்வொரு முறையும் ராமேஸ்வரம் போய் அங்கு இருந்து மதுரைக்குப் போவேன். மதுரை 24 மணி நேரமும் கலகல வென்று இருக்கும். கைவிளக்குக்கு பழகிய எனக்கு பிரமாண்டமாகச் சுழலும் கலர் வெளிச்சங்களைப் பார்த்து பிரமிப்பு ஏற்படும். சனங்கள் மூன்று நேரமும் அங்கே சாப்பிடுவார்கள். சீனியை நக்கிக்கொண்டு தேநீர் குடிக்காமல் கரைத்துக் குடிப்பார்கள். முகத்திலே ஆட்களுக்கு எலும்பு தெரியாது. ஏ.கே.ரமேஷ் என்பவருக்கு நடுத்தர வயதுதான். மீசை வைத்து அழகாக இருப்பார். தேங்காய் எண்ணெய் தேய்த்து, தலைமுடியை வாரியிருப்பார். சீப்புக் கோடுகள் தெரியும். அவர்தான் நான் கொண்டுபோன அத்தனை சாமான்களையும் வாங்கினார். ஒரு வியாபாரிக்கு உரிய கறார்தன்மையோ, கண்டிப்போ கிடையாது. சொந்த அண்ணையிலும் பார்க்க அன்பாகக் கவனித்தார். தாராளமான குணம். சில இரவுகள் தங்கவேண்டி நேர்ந்தால், அவர் வீட்டுத் திண்ணையிலேயே படுத்துத் தூங்கிவிடுவேன். எந்தெந்த மாதங்களில், என்னென்ன சாமான் நல்ல விலைக்குப் போகும் என்று அண்ணை புத்திமதி கூறுவார். சில வேளைகளில் நான் கேட்ட விலையிலும் கூடத் தருவார். `ஏன்?' என்று கேட்டால் `இந்த உலகம் பெரியது. எல்லோருக்குமே போதியது இருக்கிறது. ஏன் ஒருவரை ஏமாற்றவேண்டும்?’ என்பார். ஒருநாள் அவரிடம் ஆடு விற்ற கதையைச் சொல்லி, `இது அறமாடா... இது அறமாடா?’ என்று அப்பா திட்டியதைச் சொன்னேன். சிறிது நேரம் அவர் ஒன்றுமே பேசாமல் அமைதியாக விருந்தார். ‘நீ ஏதோ புண்ணியம் செய்திருக்கிறாய். எல்லோருக்கும் இப்படி ஓர் அப்பா அமைவது இல்லை. நீ பள்ளிக்கூடம் செல்வதற்காக தினமும் 4 மணிக்கே எழும்பி பாய் முடைகிறார். அவருக்கு உன் மேல் எத்தனை கரிசனை. யோசித்துப் பார். நீ 5 ரூபா லாபம் வைத்தது தவறு இல்லை. ஆனால், உன் வாத்தியாருக்குத் தெரியாமல் அதைச் செய்திருக்கிறாய். அதுதான் தப்பு. வெளியே எத்தனை மகிழ்ச்சி இருந்தாலும், உன் உள்மனதில் வாத்தியாரை ஏமாற்றிவிட்டோமே என்ற குற்றவுணர்ச்சி இருந்திருக்கும். அதுதான் அறம். நீ அறம் தவறும்போது உன் மனமே அதை உனக்கு காட்டிவிடும்.’ நானும் அண்ணையும் வெளித்திண்ணையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ‘அண்ணை, இப்பவெல்லாம் சட்டத்தை மீறுபவர்கள் அதிகரிக்கிறார்களே. அது எப்படி?’ என்றேன். அண்ணை `முட்டாள் துணிச்சல்தான்’ என்றார். `நீ ஒரு சட்டத்தை மீறும்போது வேறு சட்டங்களை மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக வங்கியில் நீ கொள்ளை அடித்தால், அந்தப் பணத்தைக் கொண்டுபோகும் காருக்கு லைசென்ஸ் இருக்க வேண்டும்; ஓட்டுபவனும் சட்டத்தை மதிக்க வேண்டும்.’ `அண்ணை, அரசாங்கத்தை ஏமாற்றினால் அதுவும் தர்மத்தை மீறுவதுபோலத்தானே. கள்ளக்கடத்தல் பிழைதானே.’ ‘அது எப்படி? நீ யாரையாவது ஏமாற்றினாயா, யாரிடமாவது திருடினாயா? உணவும் உடையும் இல்லாத மக்களுக்கு அவற்றை எடுத்துச் செல்கிறாய். ஒரு கோடு போட்டு, இது எங்கள் நாடு. இது உன் நாடு என்று மனிதன் எல்லை உண்டாக்கினான். அதற்கு முன்னர் அவன் என்ன செய்தான்? அதைத்தான் நீ செய்கிறாய். இதிலே அறம் மீறல் எங்கே வருகிறது?’ எனக்கு 19 வயது தொடங்க முன்னர், நான் கிராமத்தில் பணக் காரனாகிவிட்டேன். நாங்கள் ஆறு பேர் ஒன்றாகச் சேர்ந்து வியாபாரம் செய்தோம். ஒரு படகில் இந்தியாவுக்குப் போய் சாமான்களை விற்றுவிட்டு, அதே படகில் வேறு சாமான்களுடன் திரும்புவோம். சிலசமயம் கச்சத்தீவில் இறங்கிக் கொண்டு மீதித் தூரத்தை இந்திய மீனவர் படகில் ஏறிக் கடப்போம். இந்த முறையில் எங்கள் லாபம் அதிகரித்தது. ஒரு சமயம் எங்களை கச்சத்தீவில் இறக்கிய பின்னர் படகு திரும்பிப் போய்விட்டது. இந்தியாவில் இருந்து ஒரு மீன்பிடிப் படகும் வரவில்லை. காற்று மாறிவிட்டது என்று நினைத்தோம். கச்சத்தீவில் தண்ணீர் இல்லை; உணவு இல்லை; ஆட்கள் இல்லை; வெறும் புதர்ச் செடிகள் மட்டும்தான். ஒருநாள் முழுக்க பட்டினி கிடந்தோம். இரண்டாம் நாளும் அப்படியே. மூன்றாம் நாளும் ஒரு படகும் தென்படவில்லை. நாங்கள் மயக்க நிலையை அடைந்திருந்தோம். இயக்கத்தில் இருந்து ஓடி வந்தவனின் தலை பக்கவாட்டில் கவிழ, நாங்கள் அதை நிமிர்த்திய படியே இருந்தோம். பயம் பிடித்தது. எழும்பி நிற்கக்கூட பலம் இல்லை. நாலாவது நாள் அற்புதமாக இந்தியப் படகுகள் வந்தன. இலங்கை 1983 -ம் ஆண்டு ஜூலை கலவரத்தைக் கண்டித்து எம்.ஜி.ஆர் அரசாங்கம் நாடு தழுவிய கடை அடைப்பு அறிவித்திருந்தது. அந்த நேரம் நாங்கள் மாட்டிக்கொண்டோம். எங்கள் கதையைக் கேட்ட மீனவர்கள் எங்களை இலவசமாக ராமேஸ்வரத்தில் கொண்டுபோய் இறக்கினர். அங்கு இருந்து மதுரை போய்ச் சேர்ந்தோம். அண்ணை என்னைப் பார்த்து அழுதுவிட்டார். நான் கறுத்துக் கருவாடு ஆகியிருந்தேன். மதுரையில் சில கடைகளுக்குக் கதவுகளே இல்லை. இரவும் பகலும் அவை திறந்தே கிடக்கும். கடை அடைப்பு செய்வதற்காக அவர்கள் புதிய கதவுகள் செய்து கொண்டார்களாம். `இனிமேல் கடல் வியாபாரம் உனக்கு வேண்டாம், இங்கேயே தங்கிவிடு’ என்றார் அண்ணை. அண்ணை எனக்கு ஒரு வீடியோ கடை வைத்துத் தந்தார். மெள்ள மெள்ள என் வியாபாரத்தை விருத்திசெய்தேன். அண்ணையின் தாராள மனசு ஊருக்குத் தெரியும். அடிக்கடி அவரிடம் ஆட்கள் உதவி கேட்டு வருவார்கள். ஒருநாள் என் கிராமத்துக்காரர் ஒருத்தர் அண்ணையிடம் கடன் வாங்கினார். அவர் முகம் பலகையால் அடித்ததுபோல சப்பையாக இருக்கும். பெரும் ஏமாற்றுக்காரர். அவருடைய மகளை மீனாட்சி கல்லூரி விடுதியில் சேர்க்க வந்திருந்தார். அண்ணையிடம் `கடன் கொடுக்க வேண்டாம்' என்று நான் சாடை காட்டியும் அவர் பொருட்படுத்த வில்லை. அந்த மனிதர் காசை வாங்கிக்கொண்டுபோனது போனதுதான், திரும்பவில்லை. விடுதியில் சேர்த்த அவருடைய மகள் பாடு அவலமாகியது. முன்பின் தெரியாத அந்த மனிதருக்காக, அண்ணை அந்தப் பெண்ணின் படிப்பு முடியும் வரை பணம் கட்டி அவளைத் திரும்பவும் ஊருக்கு அனுப்பிவைத்தார். என்னுடைய வீடியோ கடை நல்ல லாபம் ஈட்டியது. நான் இந்து சுஸூகி 125 மோட்டார் சைக்கிள் வாங்கினேன். நாலு பவுன் சங்கிலியும், கல்வைத்த மோதிரங்களும் என்னை அலங்கரித்தன. டெர்லின் ஷேர்ட்டும் கறுப்புக் கண்ணாடியும் சிட்டிசன் கைக்கடிகாரமும் என் நிரந்தர அடையாளங்கள். முழு அழகை நோக்கி முன்னேறிய என் உருவத்தை கண்ணாடியில் பார்க்க, எனக்கே பிரமிப்பாக இருந்தது. ஒருநாள் கிழவி ஒருத்தி இருட்டு நேரம் வந்தார். மகள் ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் இருப்பதாக அண்ணையிடம் 5,000 ரூபா உதவி கேட்டார். அன்று வெள்ளிக்கிழமை. இரவில் அண்ணை பணம் தருவது இல்லை என்பதால், அடுத்த நாள் வரச் சொன்னார். கிழவி போய் மறுபடியும் ஒரு மணிக்குத் திரும்பினார். மகள் நிலைமை படுமோசம் என்றார். அண்ணை பணம் தர மறுத்துவிட்டார். `வெள்ளைக்காரனுக்குத்தான் 12 மணிக்குப் பிறகு, அடுத்த நாள். எங்களுக்கு சூரிய உதயம் கண்டால்தான் மறுநாள்’ என்றார். என்னால் நம்ப முடியவில்லை. வெறுப்பாக வந்தது. விடிந்ததும் அண்ணை கிழவியை ஆள்விட்டுத் தேடினார். மகள் பிழைத்ததையும், நான் பணம் கொடுத்து அனுப்பியதையும் அவரிடம் சொல்லவில்லை. `நாளும் கிழமையும் வியாபாரத்துக்குத்தான், தர்மம் செய்வதற்கு அல்ல’ என்பது இத்தனை தயாளமான என் அண்ணைக்குத் தெரியாமல் போய்விட்டது. மதுரை தூங்கா நகரம். நேரம் மாற மாற ஒலியும் மாறிக்கொண்டே இருக்கும். ஒலியை வைத்து என்ன மணி என்று சொல்லிவிடும் திறமையை நான் பெற்றிருந்தேன். இரவு ஒரு மணியாகியும் தூக்கம் வரவில்லை. என்னுடைய ரேஷன் கார்டைக் கொடுத்து இந்தியக் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்திருந்தேன். அது அண்ணைக்கு இன்னும் தெரியாது. கடவுச்சீட்டு கிடைக்க இரண்டு மாதங்கள் எடுக்கும் என்று நண்பன் சொன்னான். ஆனால் அவர்களிடம் பிடிபட்டால் சிறைவாசம்தான். `உனக்கு இங்கே என்ன குறை?’ என்று அண்ணை நிச்சயம் திட்டுவார். வீடியோ கடை முதலாளி ஆவதுதான் என் லட்சியமா? வாழ்க்கையில் எத்தனை இருக்கிறது. கடவுச்சீட்டு கிடைத்ததும் அமெரிக்கா போகலாம்; கனடா போகலாம்; இங்கிலாந்து போகலாம்; பிரான்ஸ் போகலாம்; நண்பன் சொன்னான்... `அட முட்டாளே. இந்த நாடுகளுக்கு எல்லாம் விசா தேவை. விசா தேவைப்படாத ஒரே நாடு கிழக்கு ஜெர்மனிதான்.’ அப்படியென்றால் மேற்கு ஜெர்மனி என்றும் ஒரு நாடு இருக்க வேண்டும். ஆனால், அது எங்கே இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது. நான் ஏன் கவலைப்பட வேண்டும்? கிழக்கு ஜெர்மனிக் காரர்கள்தான் கவலைப்பட வேண்டும். ஏனென்றால் நான் அங்கேதான் போவது என்று முடிவெடுத்திருந்தேன். கடவுச்சீட்டு எடுப்பதற்கு அழைத்துப்போன போது நண்பன் எச்சரிக்கை செய்தான். `உன்னிடம் கெட்டித்தனம் உண்டு; விடாப்பிடித்தனம் இல்லை. புத்தியாக நட.’ எத்தனை பதில்கள் சொன்னாலும் அவர்களுக்குத் திருப்தியே இல்லை. மீண்டும் மீண்டும் கேட்டார்கள். பெயர் என்ன, அப்பா பெயர் என்ன, அம்மா பெயர் என்ன, பிறந்த இடம், பிறந்த தேதி, எங்கே படித்தது, என்ன தொழில், எங்கே போகப் போகிறாய்? உண்மைக்கும் எனக்குமான தூரம் கூடிக்கொண்டே வந்தது. அவர்களுக்கும் ஜெர்மனி போவதற்கு விசா தேவைப்படாது என்பது தெரியவில்லை. இன்னும் பல விஷயங்களும் தெரியவில்லை. நான் கச்சத்தீவில், இயக்கத்தைவிட்டு ஓடிவந்த ஒருவனுடனும், இரண்டு திருடர்களுடனும், ஒரு கடத்தல் காரனுடனும், ஒரு கொலையாளியுடனும் மூன்று இரவுகள் கழித்திருக்கிறேன். அது அவர்களுக்குத் தெரியாது. ஆயிரங்கால் மண்பத்தில் 985 தூண்கள்தான் உள்ளன. அது அவர்களுக்குத் தெரியாது. மதுரைக் கோயிலில் பிச்சைக்காரர்களின் வருமானம், அவர்களுக்கு பிச்சை போடுகிறவர் களின் வருமானத்திலும் பார்க்க அதிகம். அது அவர்களுக்குத் தெரியாது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஈழத் தமிழர்களின் சராசரி வயது 15 குறைந்துவிட்டது. அது அவர்களுக்குத் தெரியாது. இன்னும் எத்தனையோ... ஏராளம். ஏராளம். எனக்கு மகிழ்ச்சியான நாள். ‘ஒப்பரேசன் பூமாலை’ பெயரில் இந்திய விமானங்கள் ஈழத்தில் உணவுப் பொதிகளைப் போட்டன. ஆனால், இரண்டு நாட்களாக அண்ணையின் முகம் சோர்ந்துபோய்க்கிடந்தது. திரும்பிப்போகும் அலைபோல அவர் நடையில் உற்சாகமே இல்லை. ஒருவேளை கடவுச்சீட்டு விஷயம் அவருக்குத் தெரிந்துவிட்டதோ? இரண்டு முழங்கைகளையும் தரையில் ஊன்றி படகு வலிப்பதுபோல பின்னகர்ந்து அவர் திண்ணையில் படுத்தபோது கரை ஒதுங்கிய திமிங்கிலம் நினைவுக்கு வந்தது. அவருடைய 42 வயது வயிறு மெதுவாக ஏறி இறங்கியது. நான் செய்தது அறத்தை மீறிய செயலா? என்னைத் திட்டுவாரா அல்லது வாழ்த்துவாரா? இன்னும் இரண்டு மாதங்கள் முடிவதற்கு இடையில் நான் ஜெர்மனியில் இருப்பேன். அல்லது சிறையில் இருப்பேன். இது எனக்குத் தெரியும். அண்ணைக்குத் தெரியாது. http://www.vikatan.com/anandavikatan
 16. அத்தை - சிறுகதை சிறுகதை: அசோகமித்திரன், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு செப்டம்பர் 1, 1939-ம் ஆண்டு, நாங்கள் சின்னக் கிராமம் போய்ச் சேர்ந்தோம். எனக்கு வயது எட்டு. அப்போது தான், இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியிருந்தது. 5-ம் தேதி, எங்கள் அத்தையின் கணவர் சுப்பைய்யருக்கு, சஷ்டியப்தபூர்த்தி. அத்தை, என் அப்பாவின் மூன்று அக்காக்களில் மூத்தவள். அவளுடைய இரண்டு தங்கைகளும் விதவைகள். `மெயின் லைன்' எனச் சொல்லப்படும் ரயில் மார்க்கமாகச் சென்றால், மாயவரம் தாண்டி அடுத்த ரயில் நிலையம் மல்லியம். அங்கு இருந்து ஒரு கட்டைவண்டியைப் பிடித்து எட்டு மைல் சென்றால், சின்னக் கிராமம் என்றொரு கிராமம் வரும். அங்குதான் எங்கள் அத்தை இருந்தாள். சின்னக் கிராமம், ஒத்தைத் தெரு அக்கிரஹாரமும், ஐந்தாறு தெருக்கள் விவசாயத் தொழிலாளர்களும் இருந்த ஒரு குடியிருப்பு. அக்கிரஹாரத்துக்கு ஒரு முனையில் ஒரு பெருமாள் கோயில். இன்னொரு முனை வீட்டுக்காரர்தான், கிராமத்துத் தபால் அதிகாரி. `தபால்காரர்' என யாரும் கிடையாது. அந்தக் கிராமத்துக்குக் கடிதம் வருவது எப்போதோ ஒருமுறை. அந்தக் கடிதத்தை அவரே உரியவரிடம் கொடுத்துவிடுவார். அவர்தான் அந்தக் கிராமத்துக்குப் பள்ளி ஆசிரியர். ஐந்தாறு பையன்களுக்கு ஒரே வகுப்பாக நடத்திவிடுவார். முறையான பள்ளி என்றால், மல்லியத்துக்குத்தான் போக வேண்டும். அப்படிப் போய்ப் படித்து, ஒரு மாணவன் சீமைக்குப் போய் ஐ.சி.எஸ் பட்டம்கூட வாங்கினான். அத்தைக்கு, எழுதப் படிக்கத் தெரியாது. ஆனால், அவள் வீட்டில் எப்போதும் விருந்தினர்கள். அண்ணன்மார்கள் இருவரும் நீரிழிவு நோய் கண்டு, உயிரைவிட்டாலும் அவர்கள் மகன்கள் நான்கு பேரில் யாராவது ஒருவன் அத்தை வீட்டில் பத்துப் பதினைந்து நாட்கள் இருந்துவிட்டுப் போவார்கள். அத்தைக்கு என் அப்பாவையும் சேர்த்து மூன்று தம்பிகள். அத்தையின் கணவர் சுப்பைய்யருக்கும் (நாங்கள் அத்திம்பேர் என அழைப்போம்) எழுத, படிக்கத் தெரியாது. வீட்டிலேயே இருக்க மாட்டார். காலையில் பழையது உண்டுவிட்டு வயலுக்குப் போய்விடுவார். பகல் ஒரு மணிக்கு வருவார். அத்தை வீட்டுக்கிணற்றுக்கு நீண்ட மூங்கில் வைத்த ஏற்றம் போன்ற ஏற்பாடு. அத்திம்பேர் வாளிவாளியாக எடுத்துத் தலையில் கொட்டிக்கொள்வார். அப்புறம் சாப்பிடுவார். உடனே மீண்டும் வயலுக்குப் போய்விடுவார். விளைவு, வீட்டில் இரண்டு பெரிய குதிர்கள். ஒன்று, சாணம் பூசிய செங்கல் குதிர்; மற்றொன்று மரத்தினால் ஆனது. இரண்டும் பத்து அடி உயரம் இருக்கும். மேலே அழுத்தமாக மூடும் மூடி. ஏணி போட்டுத்தான் நெல்லை குதிரில் கொட்டுவார்கள். நெல்லை எடுப்பதற்கு, குதிரின் அடிப்பாகத்தையொட்டி ஒரு சிறு துவாரத்தை ஒரு சிறு மரப்பலகையால் தடுத்திருப்பார்கள். நெல் வேண்டும்போது தரையில் ஒரு முறத்தை வைத்து, பலகையைத் தூக்குவார்கள். நெல் மளமளவென விழும். ஒரு தடவைக்கு நான்கு முறம் எடுத்த பிறகு, மரப்பலகையைக் கீழே தள்ளிவிடுவார்கள். நெல் விழுவது நின்றுவிடும். நெல்லைக் குத்தி அரிசி எடுத்துச் சமைப்பார்கள். இதனால் அரிசி எப்போதும் பழையதாக இருக்கும். சாப்பிடுவது வாழை இலையில். சிறுவர்களுக்கு மட்டை இலைகள். வாழைமரத்தை வெட்டியவுடன் பட்டை உரிப்பார்கள். இப்படி உரித்த பட்டைகளையும் சீராக வெட்டி இரண்டு பட்டைத்துண்டுகளை ஈர்க்குக் கொண்டு தைத்துவிடுவார்கள். அநேகமாக அது சதுரமாக இருக்கும். சதுரத் தட்டில் சாப்பாடு! அத்தைக்கு, குழந்தை இல்லை. கடைசித் தம்பியின் குழந்தையை சுவீகாரம் எடுத்துக்கொண்டாள். ராமநாதன் என்ற பெயர் கொண்ட அந்தப் பையனுக்கும் படிப்பு வரவில்லை. அவனுக்கு உடுப்பும் பிடிக்காது. கோவணத்தைக் கட்டிக்கொண்டு வயல், குளம் எனக் கிராமத்தைச் சுற்றிச்சுற்றி வருவான். அவன் மீது அத்தையும் அத்திம்பேரும் உயிரையே வைத்திருந்தார்கள். எங்கள் அக்காவுக்குத் திருமணம் நிச்சயமாகி சென்னை தியாகராய நகர் ராகவையா சாலையில் ஒரு மாளிகையை மூன்று நாட்களுக்கு வாடகைக்கு எடுத்துக்கொண்டோம். அந்த வீடு அழகப்பச் செட்டியாருடையது. `வாடகை ஒன்றும் வேண்டாம், பத்து நாட்கள் இருங்கள்' - செட்டியார் சொல்லிவிட்டார். அவருக்கு `வள்ளல்' என்ற பெயர் உண்டு. எங்கள் வரை அவர் வள்ளல்தான். கல்யாணத்துக்கு நான்கு நாட்கள் முன்பே அத்தை, அத்திம்பேர், ராமநாதன் மூன்று பேரும் வந்துவிட்டார்கள். பங்களாவில் இருந்த எல்லா மரங்கள் மீதும் ராமநாதன் ஏறி விளையாடினான். அடுத்த நாள் அவன் காணாமல்போய்விட்டான். அத்திம்பேர் பைத்தியம் பிடித்தவர்போல ஏதேதோ புலம்பினார். அத்தை, மீண்டும் மீண்டும் மாளிகைக் கிணற்றையே பார்த்தபடி இருந்தாள். எங்கள் அப்பாவும் ஊருக்குப் புதிதுதான். அக்கம்பக்கத்தில் தேடிய பிறகு, போலீஸில் மனு கொடுத்தார். அன்றிரவு யாருமே தூங்கவில்லை. அடுத்த நாள் அதிகாலையில் ஒரு போலீஸ்காரர் வந்தார். “மவுன்ட் ரோடு போலீஸ் ஸ்டேஷனில் ஒரு பையன் கிடைத்திருக்கிறான். பெயர்கூடச் சொல்லத் தெரியவில்லை. உங்கள் பையனா எனப் பார்க்கிறீர்களா?” அத்திம்பேர், அப்பாவை ``வா... உடனே'' என்று அதட்டினார். இருவரும் ஓட்டமும் நடையுமாக வாலாஜா சாலை சென்றார்கள். அது ராமநாதன்தான். எப்படி நான்கு மைல் போனான், எதற்குப் போனான் எனத் தெரியவில்லை. காவல் நிலையத்தில் அவனுக்கு பிஸ்கட் கொடுத்திருக்கிறார்கள். அப்பாவையும் அத்திம்பேரையும் பார்த்து, “நான் ஒண்ணும் வர மாட்டேன், போ!” என்றிருக்கிறான். காவல் நிலைய எழுத்தர் சந்தேகத்துடன்தான் பையனை அனுப்பினார். என் அப்பாதான் உறுதிமொழி எழுதிக் கொடுத்திருக்கிறார். கல்யாணத்துக்கு இல்லாமல் அத்திம்பேர், அத்தை, ராமநாதன் மூவரும் உடனே பகல் வண்டியில் ஊருக்குத் திரும்பிவிட்டார்கள். யாரும் அவர்களைத் தடுக்கவில்லை. வாரம் ஒருமுறை நெல் குத்திப் பிரித்த அரிசி, தோட்டத்து வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு, சேனை, கருணை, ராமநாதன் என்று இருந்த அத்தை-அத்திம்பேர் வாழ்க்கையில் மாறுதல் வரத் தொடங்கியது. சஷ்டியப்தபூர்த்திக்குத்தான் எவ்வளவு உறவினர்கள் வந்தார்கள்! கண் பட்டதுபோல காரணமே தெரியாமல் சுப்பைய்யர் முதுகில் ஒரு சிறு புண் தோன்றியது. அது சிறிது சிறிதாகப் பெரிதாகி, சீழ் வடிய ஆரம்பித்தது. இது நடந்தபோது அத்தை வீட்டில் விருந்தினர் யாரும் இல்லை. தபால்காரர், என் அப்பாவுக்குக் கடிதம் எழுதினார். என் அப்பாவுக்கு ஒரு வாரம்தான் விடுப்பு கிடைத்தது. எங்கள் ஊரில் இருந்து சின்னக் கிராமம் செல்ல, இரண்டரை நாட்கள் ஆகும். அத்திம்பேர் நிலைமை சற்று மோசம்தான். ஒரு நாட்டு வைத்தியர் வாரம் இருமுறை சீழ் அகற்றி, கத்தக்காம்பும் மஞ்சளும் சேர்த்துக் குழைத்து, புண்ணை அடைத்து, கட்டு கட்டுவார். `அவர் சீழ் எடுக்கும்போது என் அப்பாவுக்கு அழுகையே வந்துவிட்டது' எனச் சொன்னார். ஒரு மெல்லிய மூங்கில் குச்சியின் நுனியில் துணியைச் சுற்றி, புண்ணில் நுழைத்துக் குடைவாராம் வைத்தியர். என் அப்பாவால் இரு தினங்களுக்குமேல் சின்னக் கிராமத்தில் இருக்க முடியவில்லை. திரும்பி வந்துவிட்டார். அவருடைய தம்பிகளை நான்கைந்து நாட்கள் இருந்துவிட்டு வரச் சொன்னார். அப்பாவுக்கும் அவருடைய தம்பிகளுக்கும் ஒரு பிரச்னைதான். ஒரு வாரத்துக்குமேல் விடுப்பு கிடைக்காது. ஒரு வாரத்தில் ஐந்து நாட்கள் பயணத்தில் போய்விடும். சுப்பைய்யர் இறந்துவிட்டார். இன்று அந்தப் புண்ணைப் புற்றுநோய் எனக் கண்டறிந்து, வைத்தியம் செய்வார்கள். எல்லாம் இன்றும் வாய்த்தான் பிழைத்தான் கதைதான். அத்திம்பேர் இறந்ததோடு, அத்தைக்கு இன்னொரு சூழ்நிலை மாற்றம். சுப்பைய்யருக்கு ஒரு தம்பி உண்டு என எங்களுக்கு எல்லாம் தெரியாது. அவர் சஷ்டியப்தபூர்த்திக்கு வரவில்லை. அந்தத் தம்பியும் இறந்துவிட்டார். அவருக்கு மனைவி, ஒரு பெண் இருந்திருக்கிறாள். பெண்ணை, கல்யாணம் செய்து கொடுத்துவிட்டார்கள். தம்பி மனைவி, சின்னக் கிராமத்துக்கு வந்து பங்கு கேட்டாள். அத்திம்பேருக்கு எழுதப் படிக்கத் தெரியாததால், ஒரு பத்திரமும் வைத்துக்கொள்ளவில்லை. ஆனால், கிராமத்தில் அவருக்கு மிகவும் மதிப்பு உண்டு. அவரே வயலில் இறங்கி உழுது, உரம் இட்டு, விதை விதைப்பார். அறுவடைக்கு மட்டும் ஆட்கள் அமர்த்திக்கொள்வார். கிராமத்துக் கணக்குப்பிள்ளை இரண்டு வயல்களைக் காட்டி, ``இதுதான் அவருடையது'' என்று சொன்னார். கிராமமே அதைத்தான் சொல்லியது. அத்தை, ஒரு வயலை தன் சகோதரன் மனைவிக்குக் கொடுத்துவிட்டாள். வீட்டில் ஓர் அறையை ஒழித்துக் கொடுத்தாள். சமையலறை பொது. இரண்டு சமையல் வேண்டாம் என்றும் சொல்லிவிட்டாள். அவளுடைய ஓரகத்திக்கு மிகுந்த வியப்பு. எழுதப் படிக்கத் தெரியாத அத்தை, உலக விவகாரங்களிலும் எவ்வளவு தெளிவாக இருக்கிறாள்! ஓரகத்தி, சின்னக் கிராமத்தில் வந்து வசிப்பதில் அத்தைக்கு ஒரு சௌகரியம். வந்தவளை வீட்டையும் விவசாயத்தையும் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, ராமநாதனை அவன் பெற்றோர் வீட்டில்விட்டாள். அது செகந்திராபாத்தில் இருந்து ஐம்பது அறுபது மைல் தூரத்தில் இருக்கும் சின்ன ரயில் நிலையம். அங்குதான் என் சித்தப்பா, ஸ்டேஷன் மாஸ்டராக இருந்தார். அத்தை எங்கள் வீட்டில் ஒரு மாதம் இருப்பதாக வந்தாள். எங்களுக்கு எல்லாம் மிகுந்த உற்சாகம். அத்தை சமையல் சரியான தஞ்சாவூர் சமையல். நாங்கள் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு அத்தையின் சமையலை ரசித்தோம். ஒருநாள் அப்பாவிடம் அத்தை, “ஏன்டா சபேசா... உங்கிட்டே ஒண்ணு கேக்கணும்” என்றாள். “என்ன அக்கா?” “என் ரெண்டு கை விரல்களும் என்னவோ மாதிரி இருக்கு. இங்கே நல்ல டாக்டர் யாரையாவது கேக்கலாமா?” “சாயங்காலம் போலாமா?” அப்பா, அத்தையை ராம்கோபால் டாக்டரிடம் அழைத்துப்போனார். நானும் உடன் சென்றேன். டாக்டர் வீட்டில் இல்லை. அவர் ரயில்வே ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் இருந்த கே.ஈ.எம் ஆஸ்பத்திரியில் காலை ஒன்பது மணியில் இருந்து மாலை ஆறு மணி வரை டியூட்டியில் இருப்பார். நிர்வாகம் அவருக்கு ஆஸ்பத்திரிக்கு மிக அருகில் வீடு கொடுத்திருந்தது. ஊரில் மிகுந்த செல்வாக்கு உடைய டாக்டர். அந்த நாளிலேயே அவர் கார் வைத்திருந்தார். அவருக்குக் கொடுத்திருந்த வீட்டில், கார் நிறுத்த இடம் இல்லை. ஆதலால், காரை ஆஸ்பத்திரி வளாகத்திலேயே நிறுத்தியிருந்தார். அப்பா அந்த இடத்துக்குப் போய்ப் பார்த்தார். கார் இல்லை. “ஏன்டா... சகுனம் சரியில்லையே!” என்று அத்தை கேட்டாள். “அதெல்லாம் ஒண்ணும் இல்லை அக்கா. நாம இங்கே அவர் வீட்டிலதானே உக்காந்திருக்கோம். ஏதாவது அவசர கேஸ் இருக்கலாம். வந்துடுவார்.” ராம்கோபால் இரவு 8:30 மணிக்கு வந்தார். “அஞ்சு நிமிஷம் இருங்கோ” என்று சொல்லிவிட்டு உள்ளே போனார். கால் மணி நேரம் கழித்து வந்தார். “ஸாரி, உங்களை ரொம்பக் காக்கவெச்சுட்டேன்” என்று சொல்லியபடியே, “யாரது... உங்க உறவா?” என்று கேட்டார். “என் அக்கா.” “நமஸ்காரம்மா. என்ன உங்களுக்கு?” அத்தைக்கு, சட்டென சொல்ல ஒன்றும் தோன்றவில்லை. அப்பாதான் சொன்னார், “அவ கையைப் பாருங்க. ஏதோ மாதிரி இருக்குன்னு சொல்றா.” ராம்கோபால், அத்தையின் இரண்டு கைகளையும் மேலும் கீழுமாகப் புரட்டிப்பார்த்தார். எங்கே வைத்திருந்தார் எனத் தெரியவில்லை. ஒரு இன்ஜெக்‌ஷன் மூலம் அத்தையின் ஒரு விரலைக் குத்தினார். நான் “ஓ” என்று கத்திவிட்டேன். அத்தை சாதாரணமாக இருந்தாள். ராம்கோபால் சொன்னார், ``சபேசையர், உங்க அக்காவுக்குக் கையிலே உணர்ச்சியே இல்லை.” “மரத்துப்போயிருக்கா?” “இருக்கலாம் அல்லது வேறே ஏதாவது இருக்கலாம். நான் ஒண்ணு சொல்றேன், கேக்றேளா?” “அதுக்குத்தானே வந்திருக்கோம்.” “புருஷோத்தம் டாக்டர்கிட்டே காண்பியுங்கோ.” “அவர் நாட்டு டாக்டர்தானே?” “அவர் எல்.ஐ.எம் நானும் எல்.ஐ.எம்-தான். அவருக்கு இந்த மாதிரி விஷயங்களிலே அனுபவம் ஜாஸ்தி.” புருஷோத்தம் டாக்டர் அருகில்தான், பஞ்சாபி கால்ஸா சத்திரத்துக்குப் பக்கத்துக் கடை. சாதாரணமாக 9 மணி வரை இருப்பார். அன்று 8 மணிக்கே வீட்டுக்குப் போய்விட்டார். அடுத்த நாளும் நான் போனேன். அத்தைக்கு ஆர்வம் போய்விட்டது. “என்னடாது! இருக்கிறவனுக்கு ஒண்ணும் தெரியலை. இன்னொருத்தன் எவ்வளவு நாழி காக்கவைப்பானோ?” “இவரை உடனே பார்த்துடலாம் அக்கா. ராம்கோபால், வீட்டுல யாரையும் பார்க்கிறது இல்லை. அதனாலதான் லேட் ஆச்சு. புருஷோத்தம் டாக்டர் கடை வெச்சிருக்கார்.” “கடையா?” “யார்துனு தெரியலை. அங்கே வரிசையா ஒரே கடையா இருக்கும். ஆனா, புருஷோத்தம் டாக்டர் பக்கா டிஸ்பென்ஸரி வெச்சிருக்கிறார். என் மூத்தவ `வயத்து வலி வயத்து வலி'னு துடிச்சா. புருஷோத்தம் டாக்டர்தான் ஒரு மருந்து எழுதிக் கொடுத்தார். உடனே சரியாச்சு.” அத்தைக்கு நம்பிக்கை வரவில்லை. வேண்டா வெறுப்பாகத்தான் வந்தாள். அன்றும் நான் இருந்தேன். புருஷோத்தம் டாக்டர் அத்தையின் கைகளுடன் கால்களையும் பார்த்தார். “ஐயர்... கொஞ்சம் இந்தப் பக்கமா வர்றீங்களா?” என்று தனியாக அழைத்தார். என் அப்பாவுடன் நானும் போனேன். “நீங்க அக்காவுக்கு வைத்தியம் பண்ணணும்னா, டிச்பள்ளி கொண்டுபோவணும்” என்றார். டிச்பள்ளி, செகந்திராபாத்தில் இருந்து 90 மைல் தூரத்தில் இருந்தது. அங்கு ஜெர்மன் பாதிரிமார்கள் ஓர் ஆஸ்பத்திரி அமைத்திருந்தார்கள். அங்கு எங்கள் அப்பாவின் சிநேகிதர், எழுத்தர் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அந்த ஆஸ்பத்திரி குஷ்டரோகிகளுக்கு. நான் என் அப்பாவின் சிநேகிதருடன் அதைச் சுற்றிப் பார்த்திருக்கிறேன். எல்லாருமே குஷ்டரோகிகள். பரம ஏழையில் இருந்து சிறிது வசதி படைத்தவர்களும் அங்கு இருந்தார்கள். யாரைப் பார்த்தாலும் பயமாக இருக்கும். இரண்டாம் உலக யுத்தக் காலத்தில் அங்கே பிரிட்டிஷ் ஒற்றர்கள் இருந்ததாகச் சொல்வார்கள். “இல்லை, வேணாம். உங்க அக்கா மடி ஆசாரம் பார்க்கிறவங்க. வயசு எழுவது இருக்குமா?” “எழுபத்தி இரண்டு.” “இப்போ போய் அங்கே போட வேண்டாம். இப்படியே ஜாக்கிரதையாகப் பார்த்துங்க. முக்கியமா, அவங்க தூங்குறப்போ கை கால் விரல்களை மூடிக்கணும். எலி வந்து கடிச்சிடும்.” “எலியா?” “ஆமாம். பின்னே ஏன் விரல்லாம் குட்டையாகிறது?” “எலி கடிச்சா?” “ஆமாங்க. இது ரொம்பப் பேருக்குத் தெரியறது இல்லை.” சிறிது நேரம் நாங்கள் பேசாமல் நின்றோம். அதற்குள் டாக்டருக்கு இன்னொரு நோயாளி வந்துவிட்டார். நாங்கள் வீடு திரும்பினோம். “என்னடா, வைத்தியர் என்ன சொன்னார்?” என்று அத்தை கேட்டவண்ணமே இருந்தாள். “ஒண்ணும் இல்லை. நீ இனிமே நன்னாப் போத்திண்டு படுக்கணும்.” “எனக்கு வேத்து வேத்துக் கொட்டுமே?” ``பரவாயில்லை. ஆனா, நீ நன்னாப் போத்திண்டுதான் படுத்துக்கணும்.” எங்கள் வீட்டில் நாங்கள் பார்த்துக்கொண்டுவிடுவோம். ஆனால், சின்னக் கிராமத்தில் அத்தைக்கு யார் போத்திவிடுவார்கள்? அத்தை ஊருக்குப் போய்விட்டாள். என் அப்பா அவருடைய மாப்பிள்ளைகளால் பல விசித்திரமான சிக்கல்கள். தாங்க முடியாத வேதனையுடன் உயிரைவிட்டார். அப்பா வம்சத்திலேயே ஓர் ஆண்கூட 55 வயதைத் தாங்கவில்லை. நான் குடும்பத்துடன் சென்னைக்கு வந்தேன். என் அப்பாவை அடுத்து அவர் தம்பிகளும் அற்பாயுளில் உயிரைவிட்டார்கள். ராமநாதன் பிறந்த குடும்பம் கும்பகோணத்துக்குப் போய்விட்டது. அத்தையும் சின்னக் கிராமத்தில் இருந்து அங்கே போய் இருந்தாள். ஆனால், ஒருநாள் படுத்தவள் எழுந்திருக்கவே இல்லை. இந்த அநாயாச மரணம் அத்திம்பேருக்குக் கிட்டவில்லை. ராமநாதன்தான் அத்தைக்குக் கொள்ளி போட்டிருக்கிறான். நான் அத்தையின் 10-வது நாள் கிரியைகளுக்கு கும்பகோணம் சென்றிருந்தேன். அத்தைக்காகத்தான் போயிருந்தேன். ஆனால், என் முன்னோர்களுக்குத்தான் எள்ளும் தண்ணீரும் விடவேண்டியிருந்தது. சாப்பாடாகி, ஈரத்துணிகளை ஒரு பையில் போட்டுக் கொண்டிருந்தேன். ராமநாதன் வந்தான். “என்னையும் அழைச்சிண்டு போ” என்றான். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. நான் பதில் சொல்லவில்லை. முதலில் என் அம்மாவுக்கு என் அப்பாவின் இரு தம்பிகளையும் சுத்தமாகப் பிடிக்காது. ஒரு காரணம் என் அப்பா ஒரு வேலையில் அமர்ந்துவிட்டார் எனத் தெரிந்தவுடன் அவர்களும் செகந்திராபாத் வந்துவிட்டார்கள். அவர்களுக்கு வேலை கிடைக்க ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியிருக் கிறது. அம்மா சொல்வாள்: `ஆறு மாசம் இரண்டு தடியன்களுக்கும் சோத்தை வடிச்சு வடிச்சுக் கொட்டினேன்' என்று. ஆதலால் அவள் ராமநாதனை அத்தையின் சுவீகாரப் பிள்ளையாகப் பார்க்க மாட்டாள். அவன் அப்பாவின் பிள்ளையாகத்தான் பார்ப்பாள். சிறிது நாட்கள் கழித்து ராமநாதனும் செத்துப்போய்விட்டான். அவனுக்கு அத்திம்பேர் இறந்தபோதே, பாதி உயிர் போயிருக்கும். இதெல்லாமே எப்போதோ நடந்து முடிந்தவை. இதன் பிறகுதான் என் திருமணம் நடந்தது. ஆனால், என் வரை அத்தை நினைவுகள் எதுவுமே மறையாதுபோல் இருக்கிறது. என் எண்பத்தைந்தாவது வயதில் நான் என் முதல் மகன் வீட்டில் இருக்கிறேன். இதை தற்செயல் எனக் கூற முடியாது. அவன் வீடு சென்னை தியாகராய நகரில் இருக்கிறது. அதுவும் என் அக்கா திருமணம் நடந்த வீட்டின் எதிரிலேயே இருக்கிறது. அதாவது, அந்த வீட்டில்தான் என் அத்தையும் அவள் கணவரும் கதறிக் கதறித் தவித்தபோது, ராமநாதன் மவுன்ட் ரோடு போலீஸ் ஸ்டேஷனில் பிஸ்கட் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்! http://www.vikatan.com/anandavikatan
 17. பிடிகயிறு - சிறுகதை நர்சிம், ஓவியங்கள்: ஸ்யாம் பிடிமாடாப் போச்சேடா தவுடா!'' - சொல்லிக்கொண்டே ஓடியதில் மூச்சு முட்டியது பாண்டிக்கு. கையில் இருக்கும் பிடிகயிற்றைச் சுற்றிக்கொண்டே சற்று நின்று மூச்சுவாங்கிய பாண்டியை, பரிதாபமாகப் பார்த்தான் தவுடன். ''விடப்பா, நிண்டு விளையாடுச்சு. நல்லவேள, குத்தித் தூக்கத் தெரிஞ்சிச்சு அந்தப் பாளமேட்டுக்காரனை. எல்லக் கவுறு வந்ததும் தாவிப் பம்மிப் படுத்துட்டான் தாயளி. இல்லேண்டா அவென் கொடலு கொம்புல தொங்கிருக்கும்!'' அதை ஆமோதிப்பது போல பார்த்துக்கொண்டிருந்தான் பாண்டி. கிட்டத்தட்ட ஆறேழு கிலோமீட்டர் ஓடிய களைப்பு, அவர்களின் முகங்களிலும் இடுப்புகளிலும் தெரிந்தன. கையை மாற்றி மாற்றி இடுப்பைப் பிடித்தவாறே அங்கிருந்த குத்துக்கல்லில் அமர்ந்தார்கள். ஜல்லிக்கட்டு மாடு வாடிவாசலில் இருந்து தாவுவதும், அதை வீரர்கள் பிடிப்பதும், பிடிக்க முயல்வதும் மட்டுமே பார்வையாளர்களுக்கு வெளியில் தெரியும் காட்சிகள். மாடு களத்தைவிட்டு ஓடுவதற்குள் பிடித்துக்கொண்டு போய்விட வேண்டும். மிரளும் மாடுகள் ஓட்டம் எடுத்தால், அதன் பிறகு அதைத் தேடிப் போவது, ஒரு நெடும் பயண அனுபவம். பாண்டியும் தவுடனும் மதுரை டவுன்ஹால் ரோடில் இருக்கும் எலெக்ட்ரிகல்ஸ் ஹோல்சேல் கடையில் வேலைக்குச் சேர்ந்ததே, சம்பளப் பணத்தில் மாட்டைப் பராமரிக்கத்தான். அதை உணர்ந்த பாண்டியின் அப்பா பெரியசாமி, ''நாங்கதான் மாட்டோட மல்லுக்கட்டுனோம்னா... நீங்களுமாடா?'' என்ற சம்பிரதாயக் கேள்வியை முடித்துக்கொண்டு, தம் காலத்தில் நிகழ்ந்த ஜல்லிக்கட்டு சம்பந்தப்பட்ட சாகசங்களை விளக்க ஆரம்பித்துவிடுவார். ''இப்பல்லாம் என்னத்தடா ஜல்லிக்கட்டு விடுறீங்க? போலீஸுங்குறான், பந்தோபஸ்துங்குறான். ஜல்லிக்கட்டுனாலே பறக்குற அந்தப் புழுதி மண்ணுதான். ஆனா இப்ப, மெத்து மெத்துனு தேங்கா நாரைப் போட்டு வெக்கிறான். மெத்தையில விழறதுக்கு இது என்ன மைனர் விளையாட்டா? மாடுன்னா குத்தாம பூனை மாதிரி காலையா நக்கும்? போங்கடா... போங்கடா பொசகெட்டப் பயலுகளா! அப்பல்லாம் இந்த மாதிரி கம்பிவேலி, மேட சொகுசு எதுவும் இருக்காது. வாடியில இருந்து தவ்வுற காள, எங்குட்டுனாலும் பாயும். காயப்படுற பய பூராப் பேரும் வேடிக்கை பார்க்க வந்தவனாத்தான் இருக்கும்! வேடிக்கை பார்க்க வந்தேல்ல, மாட்டத்தான பாக்கணும். அங்க ஒசக்க மச்சு மேல இருக்குற பொம்பளப் புள்ளைகளைப் பார்த்து கோட்டிங் குடுத்தா? அப்ப குத்து வாங்கித்தான ஆகணும்?' பேச்சுவாக்கில் போட்ட வெற்றிலையைக் குதப்பி எச்சில் உமிழ்ந்து நாக்கால் வாய்க்குள் சுத்தப்படுத்திக்கொள்வார். வேலைக்குச் சென்று திரும்பியவர்கள், கடைக்குப் போய் வந்தவர்கள் என அனைவரும் அந்த முக்கில் ஜமா சேர்ந்து பெரியசாமியின் பேச்சைக் கேட்க சுற்றிலும் அமர்ந்துவிடுவார்கள். ''எதைச் செஞ்சாலும் கண்ணும் கருத்தும் அதுலயே நிலைச்சு நிக்கணும்டா. அப்பிடி செஞ்சுட்டா, அந்தச் செய்கையில நீதான் எட்டூருக்கும் ராஜா!'' - சொல்லிக்கொண்டே தன் சட்டையைத் தூக்கி முதுகுப் பக்கமாகக் காட்டுவார். 500-வது தடவையாக அந்தத் தழும்பை மீண்டும் பார்ப்பார்கள். பார்த்து முடித்ததும் அதன் இடஞ்சுட்டிப் பொருள் விளக்கத்தைக் கேட்கத் தயாராவார்கள். ''அலங்கை ஜல்லிக்கட்டுண்டுதான் நெனப்பு! 'திருச்சி கொக்கிக் கொம்பு’னு மைக்ல சொல்லிட்டாய்ங்கனா, ஒரு குஞ்சு குளுவான் அங்க நிக்காது. பிடிவீரனெல்லாம் பத்தடி தள்ளி ஓடி, பம்மி உக்காந்துருவானுவ. நானும் எல்லா வருசமும் அப்பிடித்தேன். ஆனா, அந்த வருசம் கூட்டத்துல மொத மொதோ இவளைப் பாத்ததும் ஜிவ்வுண்டு ஒரு இது. நான் கொக்கிக் கொம்பு பேரக் கேட்டதும் கூட்டத்துக்குள்ள பாஞ்சதைப் பார்த்து, 'ஹுக்கும்’னு தாவாங்கட்டையைத் தோள்ள அடிச்சுத் திரும்பிக்கிட்டா. 'இம்புட்டு நேரம் தொடையைத் தட்டி இத்துப்போன ஈத்தர மாடுகளைப் பிடிச்ச பயதானா நீயும்’ன்ற மாதிரி இருந்துச்சு. ஆனது ஆகட்டும்டானு களத்துல குதிச்சுப்புட்டேன்!'' பாண்டிக்கு தன் தந்தையின் பராக்கிரமும், அதன்பேரில் தன் தாய்க்கும் தந்தைக்கும் இடையில் முகிழ்ந்த காதலையும் கேட்பதில் ஓர் அலாதி சுகம். அவர் அடுத்து சொல்லப்போவது என்ன என்பதை அவர்கள் ஆயிரம் முறை கேட்டிருக்கிறார்கள். ஆனாலும் அவர் சொல்லும் அந்தச் சுவாரஸ்யத்துக்காக அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். பாண்டிக்கு, கூடுதலாகக் கொஞ்சம் பெருமிதம். ''என்னடா சொல்லிக்கிட்டு இருந்தேன்? ஆங்... குதிச்சேனா இல்லியா? அதுவரைக்கும் இவங்க ஆத்தாளைப் பார்த்துக்கிட்டு இருந்த கண்ணுல இப்ப கொக்கிக் காள மட்டுந்தான்! ஹும்ம்... கொக்கிக் காள வாடிவாசல விட்டு வர்றதே அம்புட்டுத் தெனாவெட்டா வரும்டா. நின்னு நிதானமா அழகர் தேரு கணக்கா சுத்திமுத்திப் பார்க்கும். 'எவன்டா இங்க பிடிவீரன்? வாடா!’ங்குற மாதிரி நிக்கும். குனிஞ்சு மூச்சுவிடுமா இல்லியா... அந்தச் சூட்டுல கீழ கெடக்குற தூசு மண்ணு புயல்கணக்கா எந்திருக்கும். அதைப் பாத்தே ஒண்ணுக்கு அடிச்சுருவானுங்க! அம்பாரமா நிக்கிற மாட்டு முன்னால நான் நடுங்கிட்டே நிக்கிறேன். ஓடுற காளயை அடக்கிப்புடலாம்டா. சிமிழப் புடுச்சி எல்லக் கயிறு வரைக்கும் தொங்கிட்டு அது போர வெரசுலயே ஓடி படக்குனு விட்டு ஒதுங்குனா பிடிமாடு ஆகிரும். ஆனா, நிக்கிற மாட்ட என்ன பண்ணுவ?'' மிச்சம் இருந்த எச்சிலையும் துப்புரவாகத் துப்பிவிட்டு, ''யாருக்காக என்ன பண்ணுனாலும், பண்ணும்போது யாருக்காகப் பண்றோம்ற நெனப்பு கூடாதுடா பாண்டி. காரியத்தைப் பண்ணி முடிச்சதும், 'இந்தா உனக்காகத்தான் பண்ணேன் பாரு’னு புரியவைக்கணும்!'' கூட்டம், 'அட..!’ என்பதுபோல், அவர் கருத்தைக் கேட்டுக்கொண்டிருக்க, ''ஹுப்புனு ஒரு சத்தம் விட்டு நொட்டாங்கை பக்கமா அதை ஒரு தட்டு தட்டுனனோ இல்லியோ... கொம்பச் சொழட்டித் திரும்புச்சு. சட்டுனு வலது பக்கம் போய், திமிலப் பிடிச்சு அது மேலயே அட்ட கணக்கா ஒட்டிக்கிட்டேன். உதறுது... உறுமுது... ஆனா நான் பிடிய விடல. படுபாவிங்க... வெளக்கெண்ணெயத் தடவி இருந்தாய்ங்க. ஆனாலும் சதையோட சேர்த்து பிடிச்சுத் தொங்குனேன். அத்தாம் மொக்க உடம்ப உதறிக் குத்த குத்த வருது. உடும்புகூட அப்பிடிப் பிடிக்காதுப்பா. அந்தப் பிடி பிடிச்சு மூணு சுத்து சுத்தி எல்லக் கயிறத் தாண்டினதும், நேக்கா கூட்டத்துக்குள்ள தாவினேன் பாரு..!'' அந்தச் சூழலுக்குள் மீண்டும் நாயகனாகத் தன்னைப் பாவித்துக்கொண்டு புகுந்துவிடுவார். ''தாவி விழுந்தவன, கூட்டம் அள்ளுது; தூக்குது; 'வீரென்டா’னு கத்துது. அப்ப பார்த்தேன் பாரு, இவங்க ஆத்தாள ஒரு பார்வை... ஆகிப்போச்சப்பா அது ரெண்டு மாமாங்கம்!''- சொல்லிக்கொண்டே குத்துக்கம்பில் இருந்து தன் சட்டையை எடுத்தவரை, எல்லோரும் கேள்வியாகப் பார்த்தனர். அதை உணர்ந்தவராக, தன் தழும்பைத் தடவிப் பார்த்தபடி சட்டையைப் போட்டுக்கொண்டே, ''ஜல்லிக்கட்டுக் காள வளர்க்குறவனுங்களுக்கு உசுரவிட பிடிமாடாப் போகக் கூடாதுங்குற மொரட்டு எண்ணந்தான்டா பெரிசு. கொம்புல தகரத்த செருகுறதும், மாட்டுக்குச் சாராயத்தை ஊத்துறதும் எதுக்குன்ற? எவனும் தொடக் கூடாது, தொட்டான்னா சாகணும்! திருச்சி கொக்கினா எவனும் பக்கத்துலயே போக மாட்டான்ற பேர நான் ஒடச்சனா இல்லியா? மாட்டுக்காரன் மாட்ட வெரட்டி ஓடுற சாக்குல பிடிகயிறக் கொண்டி ஒரு இழுப்பு இழுத்தான்யா எம் மேல. அப்பிடியே நெருப்பை வெச்ச மாதிரி தொலி பிச்சுக்கிட்டு வந்துருச்சு.' பாவமாக எல்லோரும் அவரைப் பார்க்க, ''ஆனா, அந்த வலிலகூட, மாட்டைப் பிடிச்ச எஞ் சதையவே இந்தப் பிய்யிப் பிச்சுப்புட்டானே, பிடிமாட்ட என்ன பண்ணப்போறானோண்டுதான் நான் நெனச்சேன்!'' என முடிப்பார். ஓடிய ஓட்டத்தின் களைப்பு தீர்ந்து, பாண்டியும் தவுடனும் மெள்ள எழுந் தார்கள். ''எங்கப்பனுக்கு என்னடா பதில் சொல்லுவேன்?' - பாண்டியின் குரலில் முதல்முறையாக ஆற்றாமை தொற்றி இருந்தது. ''பசி பொறுக்காதுடா என் சிண்டு. பாவம் எங்க, எவன் வீட்டு வாசல்ல தண்ணிக்கு ஏகாறுதோ?'' - தலையில் அடித்துக்கொண்டான். அது கருவேலங்காடு. இவர்கள் மேல் முள் கீறல்கள் இருந்தன. சட்டை செய்யாமல் குனிந்து வளைந்து காட்டுக்குள் புகுந்தார்கள். சில மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அதன் நீளமான கயிறுகள் முடியும் இடத்தில் ஒரு சிறுமியும் வயதானவரும் தூக்குச்சட்டியின் முன்னர் அமர்ந்திருந்தார்கள். கஞ்சி வாசம் பசியைக் கிளறிவிட்டது இருவருக்கும். ''பெரிசு... ஜல்லிக்கட்டு காள எதுவும் தெறிச்சு ஓடுச்சா இங்கன?'' ''எந்த ஊரப்பா? இங்க ஒண்ணும் தட்டுப்படலயே. சலங்கை கட்டுனீகளா இல்லியா?'' ''ஆமாய்யா. சும்மா ஜல்... ஜல்...லுனு மோகினியாட்டம் ஆடும்!'' ''அப்ப காத காத்துல வெச்சு வடக்கப் போங்க... பிடிமாடா?'' கோவம் சுரீரென்று வந்தது பாண்டிக்கு ''எதுக்கு?'' ''அட கோவிக்காதப்பா... பிடிமாடுண்டா மெரண்டு மருகும். எசமானன லேசுல பார்க்காது. ரோசக்காரக் கழுத!'' பாண்டிக்கு, சிண்டு முதன்முதலில் வீட்டுக்கு வந்த நாளும், அதன் பிறகு ஒவ்வொரு நாள் காலையில் அதன் முகத்தில் விழிப்பதும், படுக்கப் போகும் முன் அதனிடம் பேசிவிட்டுப் படுப்பதும்... என நினைவுகள் அடுக்கடுக்காகப் பிரிந்து வெளிவந்தன. முதலில் அவன் அப்பாவுக்கு மட்டுமே கட்டுப்பட்ட காளை, கொஞ்சம் கொஞ்சமாக இவன் சொல் கேட்கத் தொடங்கி, அதன் பிறகு இவன் ஒருவனுக்கு மட்டும்தான் அடங்குவதாக வளர்ந்துவிட்டது. தன் தகப்பனுக்கே அடங்காதது குறித்து, இவனுக்கும் பெருமை; அவருக்கும் பெருமை. நவம்பர் மாதத்தில் இருந்தே ஜனவரி மாத ஜல்லிக்கட்டுக்குத் தயாராகிவிடுவார்கள் அவனும் தவுடனும். இரண்டு, மூன்று முறை குளிப்பாட்டி சூட்டைத் தணிப்பது, செம்மண் மேட்டில் முட்டவிடுவது, ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடமாகக் கட்டிவைப்பது, கொம்பின் மேல் செதிலைச் சுரண்டிச் சுரண்டிக் கூராக்குவது... எனப் பிரத்யேமாக ஆயத்தமாவார்கள். அவனுடைய செவலைச் சிண்டை ஒரு முறைகூட யாரும் அணைந்தது இல்லை. நின்று நிதானமாக நடந்து எல்லைக் கயிற்றைத் தாண்டியும் ஒருமுறை வாடியைப் பார்த்துவிட்டு நடக்கும் மாட்டை பெருமிதமும் திமிரும் கலந்து, 'மாட்டுக்காரருக்குப் பரிசு’ என்ற வார்த்தைகளில் மிதந்துகொண்டே பாண்டியும் தவுடனும் சிண்டைப் பிடித்துக்கொண்டு வருவார்கள். அதுவும் புதுப்பொண்டாட்டி போல் இவனோடு நடந்து வரும். இவனுக்கான பரிசுப் பொருள் பீரோவா, மிக்ஸியா எனப் பார்க்க, தெருவே வெளியில் நிற்கும். இந்த முறை ஒருவன் சரியாக அணைந்த தும் மற்றவர்கள் அதன் மீது தொங்கியதும் சற்று மிரண்டு ஓட்டம் எடுத்துவிட்டது. அவர் சொன்னதுபோல் ரோசமும் வெட்கமும்கூடக் காரணமாக இருக்கலாம். பாண்டி, செல்போனை மெள்ள எடுத்துப் பார்த்தான். சார்ஜ், விளிம்பில் இருந்தது. நான்கைந்து மிஸ்டுகால்கள் வீட்டில் இருந்து. தவுடன் தயங்கியவாறே சொன்னான், ''பாண்டி வீட்ல சொல்லுய்யா. இரும்ப தண்ணில போட்டா காணமப்போனது கெடச்சுரும்னு ஆத்தா சொல்லும். சாவிக்கொத்த போடச் சொல்லு.'' 'வேண்டாம்’ என்பதுபோல் தலையாட்டிய பாண்டி, தொடர்ந்து ஓடத் தொடங்கினான். மூச்சுவாங்கப் பின்தொடர்ந்தான் தவுடன். எங்கெங்கோ ஓடி தொட்டியபட்டியைத் தாண்டி ஏதோ ஓர் ஊர் எல்லையில் சோர்ந்து அமர்ந்தார்கள் இருவரும். கண்கள் செருகத் தொடங்கின. ''பாவம்டா மாடு. பசி தாங்காதுடா தவுடா. மாடு கெடச்சா இனி ஜல்லிக்கட்டுக்கே விட மாட்டேன்டா. அழகருக்கு முடி எறக்குறேன்டா'' எனச் சொல்லிக்கொண்டே குத்திட்டு அமர்ந்தவன் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினான். ''யாருப்பா அது... இளந்தாரி இப்பிடியா அழுகுறது?'' - குரல் கேட்டதும் பாண்டியும் தவுடனும் மெள்ள எழுந்தார்கள். தோளில் கிடந்த கைலியை எடுத்து முகத்தை அழுந்த துடைத்துவிட்டு டவுசரின் மேலாகக் கைலியைக் கட்டிக்கொண்டே குரல் வந்த திசை நோக்கிப் பார்த்தான் பாண்டி. பேரிளம் பெண் ஒருத்தி, தன் முழங்கை வரை தவிட்டுத் திட்டுடன் அவர்களை நோக்கி வந்தாள். அப்போதுதான் மாட்டுக்குத் தவிட்டுத் தண்ணீரைக் கலக்கி வைத்திருக்கிறாள் என்பது அவள் அருகில் வந்ததும் உணர்ந்தார்கள். ''புதுசா இருக்கீங்ளே... யாருய்யா? மாடு கீடு வாங்க வந்தீங்களா? கையில பிடி கவுறு? மாட்ட வித்தாலும் பிடி கயித்த குடுக்குறது இல்ல எவனும். கேட்டா அதுக்கு ஆயிரம் காரணம் சொல்லுவானுக. ஆனா, பெத்த பொட்டப்புள்ளய எந்தப் பிடியும் இல்லாம கண்ணாலம் கட்டி ஓட்டிவிட்ருவானுக.' ''இல்லத்தா, மஞ்சுருட்டு மாடு மெரண்டு ஓடி வந்துருச்சு. நேத்துலருந்து தேடிக்கிட்டு கெடக்கோம்!'' ''ஒரு வருசம் கழிச்செல்லாம் மாடு திரும்பி வந்த கதை இருக்கு. வீட்டுக்குப் போயிப் பாருப்பா. தான் நின்ன கொட்டய எந்த மாடும் மறக்காது; மறக்குறதுக்கு அது என்ன மனுசப்பயலா?'' பலவீனமாக ஆமோதித்தபடி, தளர்ந்து நடக்கத் தொடங்கியவர்களை நிறுத்தினாள். ''வவுத்துக்கு ஏதாச்சும் சாப்ட்டீங்களா?'' சில நேரங்களில் ஆதூரமாகக் கேட்கப்படும் சில கேள்விகளின் முன், நாம் திக்பிரமை பிடித்தவர்போல் நிற்போம். அப்போது அப்படி நின்றார்கள் பாண்டியும் தவுடனும். அவர்களின் கண்களில் இருந்து நிலையை உணர்ந்து கொண்டவளாக வீட்டுக்கு அழைத்துப் போனாள். ''பார்த்து வாங்கப்பா. காக்கா முள்ளுக கெடக்கும். கூட்டச் சொன்னா இவ டி.வி. பெட்டி முன்னாடி ஒக்காந்துருவா!'' சாணியைக்கொண்டு மெழுகி மொசைக் தரை போல பளபளவென ஆக்கப்பட்ட தளத்தில் அமர்ந்தார்கள் இருவரும். தண்ணென்று இதமாக இருந்தது. அதுவரை ஓடிய களைப்பு உட்கார்ந்ததும் அப்படிப் பன்மடங்கு பெரிதாகி இடுப்பில் விண்விண் எனத் தெறித்ததுபோல் இருந்திருக்க வேண்டும். முகத்தைச் சுழித்துக்கொண்டு அமர்ந்திருந்தார்கள் இருவரும். தவுடன் சைகையால் பாண்டியை கிழக்குத் திசை நோக்கிப் பார்க்கச் சொன்னான். பார்த்தான். நெருஞ்சிப் பூக்களின் மீது அஸ்தமன வெயில் படரும் பொன் நிற வசீகரத்துடன் டி.வி. முன் அமர்ந்திருந்தாள் அந்தப் பெண். நேர்த்தியான பருத்தியின் வெண்மையில் சுடிதார். அந்த வெண்மையும் அவளின் மாநிறக் கருமையும் கலந்து அந்தத் திசையிலேயே அவன் கண்களைக் குடிகொள்ளச் செய்தது. உள்ளே இருந்து கலயத்தை எடுத்துவந்து வைத்த அந்த அம்மாள், ''வெஞ்சனம் எடுத்துட்டு வாத்தா!'' என்று டி.வி. முன் இருந்த பெண்ணை ஏவினாள். வெஞ்சனம் வருவதற்குள் தவுடன் கஞ்சியைக் குடித்திருந்தான். பாண்டி, கஞ்சி கலயத்தைக் கையில் வாங்கிப் பார்த்துக்கொண்டே இருந்தான். அவனுக்கு மாட்டின் ஒட்டிப்போன வயிறு நினைவுக்கு வந்தது. சட்டெனக் கீழே வைத்துவிட்டான். ''நல்லாத்தானடா இருக்கு?'' என்றவாறே அதையும் எடுத்துக் குடித்தான் தவுடன். அந்தப் பெண் இவர்கள் அருகில் மெள்ள நடந்து வந்து வெஞ்சனத் தட்டை வைத்தாள். 'தண்ணி மட்டும் குடுங்க' என்றவனை நோக்கி ஒரு வெற்றுப்பார்வை பார்த்து, சைகையால் தண்ணீர் அங்கே இருப்பதைக் காட்டிவிட்டு விறுவிறுவென நடந்து டி.வி-க்கு அருகில் சென்றாள். பசி அடங்கிய திருப்தியில், ''ரொம்ப நன்றித்தா'' என்ற தவுடனை நோக்கியவள், 'இப்பிடித்தான் மாடு, ஜல்லிக்கட்டுனு திரிஞ்சு திரிஞ்சே அழிஞ்சு போனாரு எங்க வூட்டுக்காரரு. வாயில்லா சீவன வதச்சு வதச்சு, இந்தா இந்தப் புள்ளக்கி பொறக்கும்போதே வாயைப் புடுங்கி, ஊமையாப் படைச்சுப்புட்டான் ஆண்டவன்!' பாண்டி சட்டென்று நிமிர்ந்து அவளைப் பார்த்தான். ''கொக்கிக் கொம்பு மாடுண்டா சுத்துப்பத்துல அம்புட்டு பேமஸு. ஆனா, எவனாச்சும் அந்த மாட்ட அணஞ்சுப்புட்டா சண்டைக்குப் போயி மல்லுக்கட்டுனா விடுவாகளாப்பா? தண்ணி வாங்கிக் குடுத்து அசந்த நேரத்துல ஆள சாய்ச்சுப்புட்டானுங்க' - துக்கமும் விரக்தியும் கலந்து வார்த்தைகள் வெறுமையாக வெளிவந்துகொண்டிருந்தன. 'கொக்கிக் கொம்பா?' என்று தவுடன் வாயைப் பிளக்கவும், அவனைச் சைகையால் அமர்த்தினான் பாண்டி. 'போதும்டா சாமினு தாலி அத்து, பொறந்த சீமைக்கே வந்துட்டேன். நான் நல்லா இருக்கையிலேயே இந்த வாயில்லாப்பூச்சியை யார் கையிலயாவது கட்டிக் குடுத்துப்புடணும்யா.' தவுடன் நடக்கத் தொடங்கி இருந்தான். பாண்டி அப்படியே நின்றுகொண்டிருந்தான். அவனுடைய மொபைல் ஒலித்தது. நடுங்கிய கரங்களோடு எடுத்தான். ''ஏலேய் பாண்டி... எங்கடா இருக்க? சிண்டு வீட்டுக்கு வந்து நிக்கிது. ஒடம்பெல்லாம் காயம்டா பாண்டி. இருப்புக்கொள்ளாம ஒன்னத் தேடி கத்துதுடா!'' அம்மா சொல்லச் சொல்ல பாண்டியின் கண்களில் நீர் உகுத்தன. குரல் கம்மச் சொன்னான், 'விடுத்தா அடுத்த வருசத்துக்குள்ள ஆறிப்போகும்.' சொல்லிவிட்டு, கண்ணீரைத் துடைத்துக்கொண்டே, ''மாடு கெடச்சுருச்சாம்தா'' என்றான் அந்தப் பேரிளம் தாயிடம். ''நாஞ் சொல்லல... போ ராசா... வாயில்லா சீவன் மேல இம்புட்டுப் பாசம் வெச்சிருக்கியே... நீ நல்லா இருப்ப!'' அப்போது மிடறு விழுங்கி, தயங்கித் தயங்கி அவளிடம் கேட்டான் பாண்டி. ''நான் எலெக்ட்ரிக்ஸ்ல வேல பார்க்குறேன். எங்க ஆத்தா-அப்பனக் கூட்டிட்டு நாளைக்கி வர்றேன். ஒம் பொண்ண எனக்குக் கட்டிக் குடுக்குறியா? என் உசுரா வைச்சுப் பார்த்துக்குறேன்!'' http://www.vikatan.com
 18. இட்லிக்கடை - சிறுகதை மனுஷி பாரதி, ஓவியம்: எஸ்.ஏவி.இளையபாரதி வயிற்றுக்கு மட்டும் எப்படித்தான் பசி என்கிற மணி மிகச்சரியாக அடித்துவிடுகிறதோ? எங்காவது இட்லிக் கடையில் சாப்பிடலாம் எனக் கண்களை மேயவிட்டபடியே போய்க் கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட தெரு முழுக்க பெட்டிக்கடைகள், பானிபூரி கடைகள் நிறைந்திருந்தன. ஆனால், எல்லாமே பூட்டப்படுவதற்கு ஆயத்தமாக இருந்தன. ஒன்றிரண்டு டீக்கடைகளிலும் ஷட்டரை இழுத்து மூடிக்கொண்டிருந்தார்கள். மீன்குழம்புடன், மெத்தென்ற இட்லிக்கு நாக்கு ஏங்கிக்கொண்டிருந்தது. அஜந்தா சிக்னல் வளைவில் மிக உயர்ந்த ஸ்டார் ஹோட்டல் புதிதாக முளைத்திருந்தது. பத்து வருடத்துக்கு முன்பு அங்கே ஒரு திரையரங்கம் இருந்ததாக நினைவு. அஜந்தா சிக்னல் என்ற பெயரும்கூட, அஜந்தா தியேட்டர் நினைவாக இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அஜந்தா தியேட்டர் இப்போது அதிதி ஸ்டார் ஹோட்டலாக மினுக்கிக்கொண்டிருக்கிறது. அதிதிக்கு எதிரில் புதிதாக முளைத்த ஷெண்பகா ஸ்டார் ஹோட்டல் நீச்சல் குள வசதியுடன் பிரமாண்டமாக நின்றுகொண்டிருக்கிறது. விருது விழாவுக்கு வந்து நிற்கும் ஹாலிவுட் நடிகையின் தோரணை ஷெண்பகா ஹோட்டலைப் பார்க்கும்போதெல்லாம் வரும் எனக்கு. என்றைக்காவது ஒருநாள் இந்த ஹோட்டல் அறையில் தங்கி, அங்குள்ள ரெஸ்டாரன்ட்டில் முள்ளுக்கரண்டியால் சிக்கன் அல்லது மீனைக் கொத்தித் தின்று பசியாற வேண்டும் என்பது என்னுடைய சின்னஞ்சிறு ஆசை. எப்போதும்போல ஷெண்பகாவைப் பார்த்தபடி ஸ்கூட்டியில் கடந்துபோகும்போது அது கண்ணில் பட்டது. அவ்வளவு பெரிய பிரமாண்டமான கட்டட வாசல் அருகில் ஒரு சிறிய தள்ளுவண்டிக் கடை. ஒரு அக்காவும், ஒரு சின்ன பையனும் இருந்தார்கள். அம்மா, பையனாக இருக்க வேண்டும். இட்லியில் இருந்து வந்த ஆவி வாசமே, ‘வந்து சாப்பிட்டுப் போ’ என்று கூப்பிட்டது. ஒரு தட்டில் எண்ணெயில் பொரித்து வைத்த மீன்துண்டுகள் இருந்தன. ‘அக்கா, மூணு இட்லி’ என்றதும் பார்சல் செய்யப் போனான் அந்தச் சிறுவன். ‘இல்ல... இங்கேயே சாப்பிடறேன’் என்றதும், சில நொடிகள் என் முகத்தைப் பார்த்தவர், ‘தட்டுல வெச்சு கொடுப்பா’ என்றார். அந்தப் பையன் ஒரு தட்டில் மூன்று இட்லி வைத்து கொஞ்சம் சாம்பார், கொஞ்சம் தக்காளி சட்னி ஊற்றினான். ‘மீன் குழம்பு இல்லையா’ என்றதும், ‘ஏண்டா, என்ன வேணும்னு கேட்டு ஊத்துனு எத்தனை முறை சொல்றது’ என்று முறைத்துவிட்டு தோசையைத் திருப்பிப் போட்டார். ‘பரவாயில்லை’ என்றபடி இட்லியைப் பிட்டு வாயில் வைத்தேன். சாம்பாரும் சட்னியும் லேசாக மிக்ஸ் ஆகி சுவையைக் கூட்டியது. ‘ஆஹா...’ என்று மனம் துள்ளிக் குதித்தது. ‘ஒரு இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிட்டே ஆகணும்’ என்று மனதுக்குள் சொன்னபடி சாப்பிட்டேன். அவ்வளவு பெரிய ஹோட்டலின் முன்பு தள்ளுவண்டி கடை போட்டு வியாபாரம் செய்வதற்குத் தனியாக துணிச்சல் வேண்டும். `ஸ்டார் ஹோட்டல் என்ன ஸ்டார் ஹோட்டல்? இந்த இட்லிக்கும் சாம்பார், சட்னிக்கும் ஈடாகுமா..?’ என்று அந்த ஹோட்டலின் உயரத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு சாப்பிடுவதைத் தொடர்ந்தேன். தோசை சுடுவது, இட்லியை எடுத்து வைப்பது, ஆம்லெட், ஆஃப் பாயில் போடுவது... இப்படியே செய்துகொண்டிருந்தார் அக்கா. பார்சலுக்கான காசை அந்தச் சின்ன பையன் கணக்கு பார்த்து வாங்கி வைத்தான். அந்த அக்காவின் முகம் ஏனோ வதங்கியிருந்தது. மஞ்சள் பூசிய முகத்தின் மேல் வாழ்வின் மீதான கோபம் படர்ந்திருந்தது... நூலாம்படை போல. அம்மாவின் மனம் புரிந்தவன் போலவே நடந்து கொண்டான் அந்தப் பையனும். ‘அக்கா... கொஞ்சம் சிரிச்ச முகமா இருந்தால் இந்த உணவு கூடுதல் டேஸ்ட்டா மாறிடும்’ என்று நாக்கின் நுனி வரை வார்த்தை வந்தது. அடுத்த முறை வரும்போது சொல்லிக் கொள்ளலாம் என இட்லியுடன் சேர்த்து அமைதியாக விழுங்கி விட்டேன் வார்த்தைகளையும், எனது சின்ன புன்னகையையும். நான்காவது இட்லியை வைக்கச் சொல்லிக் கேட்டபோதுதான் அந்த அக்காவின் சிடுசிடு முகத்துக்குக் காரணம் விளங்கியது. நெஞ்சு தெரியும்படியாக ஊதா கலர் சட்டையும், சரியாகக் கட்டாத லுங்கியுமாக வந்து அமர்ந்தார் ஒருவர். நிறைய குடித்திருக்கிறார் என்பதைக் கண்களும், கேவலமான சிரிப்பும் சொன்னது. ‘ஏண்டா என்னையெல்லாம் கவனிக்க மாட்டியாடா’ என்றதும், அந்த அக்கா கோபமாகப் பார்த்து முறைத்தார். அந்தப் பையன் ’ச்சீ ப்போ’ என்றான். அவர்களுக்குள் இருந்த பந்தம் விளங்கியது. ‘சீக்கிரம் கடையைச் சாத்திட்டு வாடி’ என்றார். காதில் வாங்கிக்கொள்ளாதது போல வேலையில் மும்முரமாக இருந்தார் அக்கா. ‘எவ்ளோடா தேறிச்சு இன்னைக்கி’ என்றதும், ‘யோவ், சும்மா இருக்க மாட்டியா’ என்றான் அந்தப் பையன். ‘டேய், அந்த ஆளை இங்கிருந்து போகச் சொல்லுடா’ என்றார் அந்த அக்கா. பிளாஸ்டிக் ஸ்டூலில் அமர்ந்து மீன்குழம்பில் தோசையைக் குழைத்து அள்ளிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தவரிடம், ‘இது நம்ம கடைதான். நல்லா கேட்டு வாங்கிச் சாப்பிடுங்க’ என்று சொல்லிவிட்டு, ‘ஹெஹெஹே’ என்று சிரித்தார். ஒருவர் மட்டும் ‘தம்பி ஒரு தோசை’ என்றார். ‘முட்டை தோசையா, சாதா தோசையா’ என்று கேட்டதும், ‘சாதா தோசைதான்’ என்றார். அந்த அக்கா தோசை ஊற்றினார். ‘வடிவேலு ஒரு படத்துல கடலை எண்ணெய் வேணும்னு கேப்பான். கொண்டு வந்து வெச்சதும் இது நல்லெண்ணெய் யானு கேப்பான்...’ - சொல்லிவிட்டு சத்தமாகச் சிரித்தார். முட்டை தோசை - சாதா தோசைக்கும், கடலை எண்ணெய் - நல்லெண்ணெய் காமெடிக்கும் என்ன சம்பந்தம் என்று அங்கிருந்தவர்களுக்குப் புரியவில்லை. தோசை சொன்னவர் மட்டும் கூட சேர்ந்து சிரிப்பே வராமல் சிரித்தார். பார்சலுக்காக நின்றிருந்தவர்கள் இரண்டு பேரையும் அருவருப்பான பூச்சியைப் பார்ப்பது போல பார்த்தனர். ‘கொஞ்சம் கடையைப் பார்த்துக்க. வீடு வரைக்கும் போய்ட்டு வந்துட றேன்’ என்று மகனிடம் சொன்னவர், ‘அந்த ஆள்கிட்ட கவனம்’ என்று கிசுகிசுத்தார். அந்த அக்கா எப்போ போவாங்க என்று காத்திருந்தவர் போல லேசான தள்ளாட்டத்துடன் எழுந்தார். பார்சல் வாங்கியவர்கள் கொடுத்த தாள்களைக் கொத்தாக அள்ளினார். தோசைக்கரண்டியால் கையில் மொத்தென்று வைத்து காசைப் பிடுங்கிக்கொண்டான். ஒரு நூறு ரூபாய் தாள் மட்டும் அவர் கையில் இருந்தது. ‘இருடா உங்க அம்மாளையும் உன்னையும் பார்த்துக்கறேன்’ என்றபடி எதிரில் இருந்த மதுக்கடைக்குப் போனார். இட்லியின் சுவை மறந்து போயிருந்தது எனக்கு. http://www.vikatan.com
 19. இன்னொரு நந்தினி - சிறுகதை ஆத்மார்த்தி, ஓவியங்கள்: ஸ்யாம் பெருமழைக் காலத்தின் ஆரம்பக் கணங்களை, பெரிய கண்ணாடிச் சுவர் வழியாகப் பார்ப்பது வரம். செல்லில் நந்தினியின் மெசேஜ். `பார்க்கணும்டா!' - ஒரே ஒரு வார்த்தை.வரவேற்பறைக்கு வந்து காபி மெஷினில் இருந்து ஒரு குவளையை நிரப்பிக்கொண்டு, மழையைப் பார்க்க மறுபடி வந்தேன். இன்னும் மழை ஆரம்பிக்கவில்லை. மழைக்கு முந்தைய காற்றும் லேசாகத் தெறிக்கும் தூறலும் மட்டுப்பட்டாற்போல் தோன்றியது. அடுத்த விநாடி மீதான அறியாமைதான் எத்தனை அழகு! நகரத்தின் முக்கியமான சாலையில் அவ்வளவாகப் பரபரப்பு இல்லை. இன்று ஏதோ லோக்கல் விடுமுறை. இல்லாவிட்டால், சாலையை இந்நேரம் விழுங்கியிருக்கும் பள்ளிக்கூடக் கூட்டம். காது அருகே, ``இன்னிக்கு மழை வரக் கூடாது'' என்றான் அருண். திரும்பி முறைத்து, ``ஏன் பிசாசு, மழையை வெறுக்கிறே?'' ``முறைக்காதேக்கா... நான் மழையை வெறுக்கலை. எக்ஸ்க்யூஸ் கேக்குறேன். ஒன் மந்த் காதல் தோல்விக்கு அப்பால இன்னிக்குதான் மறுபடியும் ஒரு பூ பூத்திருக்கு. மனசு ஈரமா இருக்கணும்னா, இன்னிக்கு மழை பெய்யக் கூடாதுதானே! நான் பாவம்.'' ``போன மாசம் இதே மாதிரி மீட்டிங்குக்குக் கிளம்புனியே அருண். ஏரோப்ளேன்லகூட மீட் பண்ணதா சொன்னியே..?'' என் கேள்வியை அவன் காதில் வாங்காததைப்போல் நடித்தான். சடாரெனத் திரும்பி, முகத்தை பரிதாபமாக வைத்துக்கொண்டு ``அவளுக்கு அத்தை பையன் இருக்கானாம். மின்னசோட்டா போற வழியில பேச்சுத்துணைக்கு என்னை அணுகியிருக்கா. `எங்கு இருந்தாலும் ஒழிக'னு துப்பி அனுப்பிச்சுட்டேன்.'' கொஞ்சம் சத்தமாகச் சிரித்துவிட்டு, ``ஆல் தி பெஸ்ட்'' என்றேன். ``வர்றேன்க்கா'' என்றவாறே காணாமல் போனான். அன்றைய வேலையை முடித்துவிட்டு, ஸ்கூட்டியில் நந்தனம் சிக்னல் தாண்டி, சேமியர்ஸ் என்ற வெள்ளைக்காரத்தனமான கட்டடத்தின் உள்ளே வண்டியை நிறுத்தி, ஹெல்மெட்டை லாக்கிட்டு உள்ளே சென்று படியேறினேன். மேலோட்டமாகப் பார்த்தால், சென்னையின் அராஜகங்களில் ஒன்றாகவே தெரியும்... அந்த டீ ஷாப்பில் இரண்டு பேர் ஆளுக்கொரு கேக், காபி சாப்பிட்டால், ஆயிரம் ரூபாய்க்கு அருகில் பில் வரும். வேறு இடத்துக்குப் போகலாம் என்றால், அதற்கு நந்தினி ஒப்புக்கொள்ள மாட்டாள். ``நோ பப்பு... பிரைவசிங்கிறது எவ்ளோ பெரிய விஷயம் தெரியும்ல? அதுக்கும் சேர்த்துத்தான் இந்த விலை. விடு பப்பு!'' என்பாள். நந்தினியோடு அடிக்கடி வந்து, எனக்கும் அந்த இடம் பிடித்துப்போனது. ஒரு சுவர் முழுவதும் பழங்கால கறுப்பு-வெள்ளைப் புகைப்படங்கள் அலங்கரித்துக்கொண்டிருக்கும். அழகுக்காக எதையாவது பெயர்த்துத் தருபவர்களுக்கு மத்தியில், அத்தனை புகைப்படங்களும் 120 வருடங்களுக்கு முந்தைய ரத்தமும் சதையுமாக வாழ்ந்து, இல்லாமல்போன மனிதர்களின் புகைப்படங்கள். முதல்முறையாக அங்கே போய் வந்த அன்று இரவு, எனக்கு நெடுநேரம் உறக்கமே இல்லை. ``நாம் இன்னும் நூறு வருஷங்கள் கழிச்சு என்னவாக இருப்போம் நந்து?'' என்று போனில் கேட்டேன். ``ஃபன்னி...'' என்றவள், சற்று நேரம் கழித்து ``ஆமாம்ல... நம்ம சந்ததியில் யாராச்சும் நம்மளை நினைச்சுப்பார்ப்பாங்களா? நீயும் நானும் முன்னோரை எவ்ளோ நினைக்கிறோம்? அவ்ளோதான். எதைப் பார்க்கிறோமோ, எதில் இருக்கிறோமோ, அது மட்டும்தான் நிஜம். எவ்வளவு இருக்கோம். அவ்வளவும் இல்லாமப்போயிருவோம்'' என்றாள். எப்போதோ படித்த நகுலனின் கவிதை ஞாபகம் வந்து கனத்தது. டீ ஷாப்பின் டிஸ்ப்ளே பகுதி, பழங்காலப் பொருட்களின் கூடுகையாக அட்டகாசமாக இருந்தது. இன்னும் நந்தினி வரவில்லை. அவள் வரும் வரை பழங்கால ரேடியோ தொடங்கி போன் வரைக்கும் பார்த்துக் கொண்டிருக்கலாம். தூரத்தில் இருந்தே சிக்கனமாகக் கையசைத்தவாறு மிதந்து வந்தாள் நந்தினி. `எப்படி இவளால் இவ்வளவு அழகாக இருக்க முடிகிறது?' பதின்ம வயதின் அழகுகள் இன்னும் அவளிடம் பாக்கியிருந்தன. பணம், தன்னைத்தானே பெற்றுக்கொண்டு தேவையான பலவற்றைத் தரவல்லது. நந்தினி சொல்வாள்... `பணம், பணமா இருந்தா பத்தாது.எனக்கு, பணம் ஒரு நாய்க்குட்டி மாதிரி வேணும். அப்படி இல்லாட்டி, லைஃப் அலுத்துடும்.' முன் நெற்றியில் வந்துவிழுந்த கற்றை முடியை ஒதுக்கியபடியே, ``ரொம்ப நேரமா காத்திருக்கியா பப்பு?'' என்றாள். ``இல்லடா. பத்து நிமிஷம்தான்'' என்றேன். நந்தினியை முதன்முதலில் ஒரு பார்லரில் சந்தித்தேன். பிரபு, என்னை ரொம்ப இம்சித்ததாலும், சொந்தக் காரர்களின் கல்யாணத்துக்கு மதுரைக்குச் செல்லவேண்டி இருந்ததாலும் பியூட்டி பார்லர் போனேன். எதிர் நாற்காலியில் இருந்தவள்தான் நந்தினி. முதலில் `அவள்தான் பியூட்டீஷியனோ!' எனக் குழம்பினேன். `இன்னும் என்ன பாக்கி என்று இங்கே வந்திருக்கிறாள் எனத் தெரியவில்லையே!' என நினைக்கும் அளவுக்கு மேக்கப்புடன் இருந்தாள்...பெப்பர்மின்ட் வாசனையோடு. எனக்கு ஃபேஷியல் நடந்தபோது, எனக்கு எதிர்த்தாற்போல் அவள் அமர்ந்துகொண்டாள். அவளது பாதங்களைச் சீரமைக்கும் வேலையை ஒருத்தி செய்தாள். முதலில் எனக்கு ஆத்திரமாக வந்தது. `எல்லாம் பணத்திமிர்!' என எனக்குள் நினைத்துக்கொண்டேன். ஆனால், இன்னொருத்தியின் கால்களை எந்த அசூசையும் இல்லாமல் தன் கரங்களால் கழுவித் தேய்த்து, அலம்பி, நகம் வெட்டிவிட்டு எல்லாம் செய்துகொண்டிருந்த அந்த பார்லர் பெண் மீது எனக்கு பெரும் மரியாதை வந்தது. முடித்துவிட்டு வாசலுக்கு வந்தேன்.ரிசப்ஷனில் பில் செட்டில் செய்துவிட்டுக் கிளம்பியபோது, பெப்பர்மின்ட்டாள் என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள். இருவரும் வெளியே வரும்போது அவள் தன் கையை நீட்டி ``நந்தினி'' என்றாள். எதிர்பாராததால் ஒரு கணம் திணறி ``நான் பவித்ரா'' என்று கை கொடுத்தேன். ``உங்களைக் கவனிச்சுக்கிட்டே இருந்தேன். இதுக்கு முன்னாடி பார்லர் வந்தது இல்லையா நீங்க? நான் பெடிக்யூர் செய்துகிட்டப்போ உங்க முகத்துல சின்னதா ஆத்திரத்தைப் பார்த்தேன்.'' எனக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை. நான் ஏன் மறைக்க வேண்டும்? `ஆமாம்' என்பதுபோல் தலையாட்டினேன். ``ஸீ... பணம் இடம்மாறுது இல்லையா? இதை ஒரு வேலையா யோசிங்க, ஒரு தொழிலா புரிஞ்சுக்கங்க. கோபம் வராது'' என்றவள், டக் டக்கென நடந்து காரில் ஏறிக் காணாமல்போனாள். அவளை மறந்துபோனேன். ஒரு வாரம் கழித்து என் நம்பருக்கு போன் வந்தது. ``உங்க நம்பரை பார்லர்ல வாங்கினேன். ஏனோ எனக்கு உங்களைப் பிடிச்சுபோச்சு. நாம ஃப்ரெண்ட்ஸா இருக்கணுமே'' என்றாள். வசியப் பறவையைப்போல கதவுகளைத் திறந்து அல்ல, உடைத்துக்கொண்டு என் உலகத்துக்குள் நுழைந்தாள். ஒரே ஒரு நந்தினி. அவளும் `பப்பு... பப்பு...' என உருகத்தான் செய்கிறாள். அவளது செல்வந்தத்தின் மத்தியில் ஒரே ஒரு சாதாரணம் நானாகத்தான் இருப்பேன். அவளுக்கு அதில் எந்தக் குறையும் இல்லை. ஆச்சு, அறிமுகமாகி ஐந்து வருடங்கள். நந்தினி பதற்றத்தில் இருக்கிறாள் என்பது, அவளது முகத்தில் தெரிந்தது. அவளாகப் பேசட்டும் என நான் காத்திருந்தேன். அவள் தவித்தாள். பேரரைக் கூப்பிட்டு எதை எதையோ ஆர்டர் செய்தாள். அவளது துடிக்கும் உதடுகளின் மத்தியில் லேசான புன்னகை பொருத்தமற்ற மேலாடையைப்போல் துருத்திக்கொண்டிருந்தது. `செந்தமிழ்த் தேன்மொழியாள்...' பாடலில் வரும் அல்லவா... `பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்...' அந்த ப்ளா... ப்ளா அழகி நந்தினிதான். ``என்னப்பா..?'' என்றேன். அதற்காகவே காத்திருந்தாற்போல் என் முகத்தின் அருகே வந்து ``ஒரு முக்கியமான விஷயம்'' என்றாள். நான் என்னவோ சொல்லப்போகிறாள் எனப் பார்த்தால், ``ஐ யம் இன் லவ் பப்பூ!'' என்றாள். எனக்குப் புரியவில்லை. ``மீன்ஸ் வாட்?'' என்றேன். ``டோன்ட் யூ நோ... ஸ்டுப்பிட். நான் ஒருத்தனைக் காதலிக்கிறேன்'' என்றாள். நான் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தேன். ``ஏதாச்சும் சொல்லுடா... திட்டவாவது செய். ஒண்ணும் பேசாம உம்னு இருக்கே. அழுத்துது பப்பு'' என்றாள். உச்சபட்சப் பதற்றத்தில் லேசாக நடுங்கும் தன் கரங்களைச் சமாளித்தபடி ``சொல்லேன் பப்பு... ஏதாச்சும் சொல்டா'' என மறுபடியும் கெஞ்சினாள். ``இரு... இரு...'' என்று தண்ணீரை எனக்குள் சரித்துக்கொண்டு ``நீ சொன்னதுமே நான் ரியாக்ட் பண்ண முடியுமா நந்தினி? உள்வாங்கிக்க வேண்டாமா? எனக்குக் கொஞ்சம் டயம் ஆவாதா? நீ பதற்றமா சொல்றதைப் பார்த்தா, நீ லவ்னு அர்த்தப்படுத்துறது சங்கீத்தை இல்லைனு புரியுது'' என்றாள். சங்கீத் அவளது கணவன்; கோடீஸ்வரன். அவள் முகம், உர்ரென விளக்குகள் அணைக்கப்பட்ட கொண்டாட்டக்கூடம் மாதிரி ஆனது. இருளை இன்னும் வேகமாக வரவழைத்துக்கொண்ட அவளது விழிகளின் ஓரத்தில் லேசாகத் துளிர்த்தது. நான் ஏதும் பேசாமல், அவளது வலது கரத்தைப் பற்றிக்கொண்டேன். அப்படியே இறுக்கமாகப் பற்றியபடி இருந்தேன். இரண்டு முழு நிமிடங்களுக்குப் பிறகு ``நந்தினி... சொல்லு... யார் உன் ஹீரோ?'' மூக்கை உறிஞ்சியபடி, ``உனக்குத் தெரியும்ல பப்பு... சங்கீத், என்னை ஒரு அதிர்ஷ்ட பொம்மை மாதிரி வெச்சிருக்கான். அவனுக்கு நான் சிம்பல் ஆஃப் லக். அவன், பணத்தைத் துரத்திட்டே இருக்கான். என்னைத் திரும்பிப் பார்க்கிற நேரம் எல்லாம் என்னை மிஸ்பண்றதா எங்கிட்ட ஸாரி கேட்டுட்டே இருக்கான். கல்யாணம் ஆகி முதல் ரெண்டு வருஷம் தித்திச்சது. ரிஸ்வா பொறந்தா.இப்போ அவ மட்டும்தான் எனக்கு சந்தோஷம். எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாத மாதிரி ஒரு கொடுமை. எதுக்கு இவ்ளோ பணம்? நான் சிரிச்சாலும் அழுதாலும் கேட்க ஆள் இல்லை.இந்த நிமிஷம் சங்கீத் எந்த நாட்டுல இருக்கான்னு அவனுக்கு மட்டும்தான் தெரியும்'' என்று லேசாகக் கண்கலங்கினாள். அவளே மறுபடியும் ``நீ என் மனசாட்சி மாதிரி. நான் உடம்பு பற்றி மீன் பண்ணலை.அதுக்கு நிறைய வழிகள் இருக்கு. எனக்கு மனசுங்கிற ஒண்ணு படுத்துது. நான், காதலிக்கப்படணும்; கொண்டாடப்படணும். எனக்கான ஒரு மனசு வெளியே துடிக்கணும். ஆயிரம்தான் நீ இருந்தாலும், நட்பைத் தாண்டிய காதலை என் மனசு தேடிட்டே இருக்கு. இது பாவம்னா, நான் நூறு சதவிகிதம் இந்தப் பாவத்தைச் செய்ய விரும் புறேன். ஐ நீட் எ சின்'' என்றாள். நான் அதிர்ந்தேன். நந்தினியின் கண்களையே பார்த்தேன். ``பப்பு, இப்ப அவனை வரச்சொல்லியிருக்கேன். எதிர்பாராத நேரத்துல நம்ம வாழ்க்கையை கிராஸ் பண்ற ஒரு நறுமணம் மாதிரி அவன் வந்தான். அவனை என்ன செய்து தக்கவெச்சுக்கிறதுனு எனக்கே தெரியலை. நான் எத்தனையோ விதமான ஆண்களைப் பார்த்திருக்கேன். பட், இவன் வேற ஒருத்தன்; ஏலியன்; மகா திமிர் பிடிச்சவன்; ரொம்ப நல்லவன்; முன்னாள் பொறுக்கி. என்னை ரொம்ப விரும்புறான். என் வாழ்க்கையில எனக்குத் தேவைப்படுற வெளிச்சத்தை இவனால ஏற்படுத்த முடியும்னு நம்புறேன். எனக்காக அவன்கிட்ட பேசு'' என்றவள், என் பதிலுக்குக் காத்திராமல் போனை எடுத்து ``பாரி... வர்றியா? ம்... ம்...'' என்று வைத்தாள். சற்று நேரத்தில் ``ஹாய்!'' என்றவாறே வந்து அமர்ந்தான். ``பாரி. பாரி... இது பப்பூ அலைஸ் பவித்ரா. மை ஹார்ட் பீட்'' என்றாள் நந்தினி. ``THEN WHO AM I? அப்படின்னா நான் கிளம்புறேன். இவங்கதான் உன் ஹார்ட் பீட்டா?'' என்று பொய்க்கோபம் காட்டி எழப்போனவனை 1,001 ஸாரிகள் சொல்லி அமரவைத்தாள் நந்தினி. பாரி, நந்தினியைவிட நான்கைந்து வயதாவது குறைவானவனாக இருப்பான் எனத் தோன்றியது.சிக்கனமான மீசை-தாடி, எப்போதும் எதையாவது கவனித்துக்கொண்டே இருக்கும் சிறு பூனையின் கண்கள், கூராய் இறங்கும் மூக்கு, ஒல்லியான தேகம் என, தனித்தனியாகவும் மொத்தமாகவும் இன்றைய இளைஞனின் ஒரு பிரதி மாதிரி இருந்தான். நந்தினி இப்படிக் கிறங்கிப்போக அவனிடம் என்ன இருக்கிறது என, சத்தியமாகப் புரியவே இல்லை. நான் அங்கே இல்லாததுபோலவே ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டும், அடிக்கடி சிரித்துக் கொண்டும், விரல்களைப் பற்றிக்கொண்டும் எனக்கு ஏனோ ஆத்திரமாக வந்தது. ஆனாலும் அடக்கிக்கொண்டு ``எக்ஸ்க்யூஸ் மீ நந்தினி... நான் வேணா கிளம்பவா?'' என்றேன். அதன் பிறகு `ஸாரி' சொல்லிவிட்டு, பாரியும் அவளும் எப்படிச் சந்தித்தார்கள், எங்கே தீப்பற்றிக்கொண்டது என்பன எல்லாம் பேசினோம். நேரம் போனதே தெரியவில்லை.பாரியின் குரல் அலாதியாக இருந்ததை, அடிக்கடி கவனித்தேன். அப்படி ஓர் ஆண்மையான குரலை, சமீபத்தில் எங்கேயும் கேட்டதே இல்லை.அவன் விரல்களை ஆட்டி ஆட்டிப் பேசியது, இன்னும் ஸ்டைலாகத்தான் இருந்தது. பையன் கிராதகன்தான். நந்தினி இவனிடம் விழுந்ததில் ஆச்சர்யம் இல்லை. அவன் பேசியதில்