Jump to content

Search the Community

Showing results for tags 'தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • வலைப்போக்கன் கிருபன்'s செயற்கை நுண்ணறிவு உருவாக்கி
  • Ahal Media Network's Topics

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's சிறப்பு ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணக்கட்டுகள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's திரட்டுகள்
  • Home Appliances Spot's Home Appliances

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

  1. இலங்கை இனமுரண்பாட்டின் திருப்புமுனை தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ கறுப்பு ஜூலை நாற்பதாண்டுகளின் பின்னர் - 01 சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையின் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த நிகழ்வுகள் மிகச்சில! அவை ஒவ்வொன்றும் வரலாற்றின் வழித்தடத்தில் விட்டுச்சென்ற செய்திகள் சிந்தனைக்குரியன. 75 ஆண்டுகால சுதந்திர இலங்கையின் வரலாற்றின் பெரும்பகுதியை, இனமுரண்பாடு நிறைத்திருப்பது தற்செயலானதல்ல. சுதந்திரத்துக்கு முந்தைய இலங்கையிலேயே இனமுரண்பாட்டுக்கான வித்துகள் இருந்தன. மகாவம்சம் என்ற புனைவு வரலாறாகக் கருக்கொண்டதும், அதன் வழிப்பட்ட சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனையும் இதன் தொடக்கப் புள்ளிகள். 19ஆம் நூற்றாண்டு இறுதிப் பகுதிகளில் ‘கொச்சிக்கடை கலவரம்’ எனப்படும் பௌத்த-கத்தோலிக்க மோதலும் 1915இல் நடந்தேறிய சிங்கள (பௌத்த) - முஸ்லிம் கலவரங்களும் இலங்கையில் சிங்கள பௌத்த பெரும்பான்மைத் தேசியவாதம் சகிப்புத் தன்மையற்றது என்பதையும் இனத்தை விட மதம், அரசியலில் முக்கிய பங்கு வகித்ததை நாம் உணரலாம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இலங்கை தேசிய காங்கிரஸில் ஏற்பட்ட முரண்பாடுகள், சுதந்திர இலங்கையில் பன்மைத்துவ சமத்துவ சமூகம் என்பது சவால் நிறைந்தது என்பதைக் காட்டி நின்றது. சுதந்திர இலங்கையின் முதலாவது அபிவிருத்தித் திட்டங்கள், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை மையப்படுத்தி இருந்தன. மலையகத் தமிழரின் குடியுரிமை பறிப்பு, ஜனநாயகப் படுகொலையின் தொடக்கத்துக்குக் கட்டியம் கூறியது. இந்தப் பின்புலங்களில், சுதந்திரமடைந்து 35 ஆண்டுகளின் பின்னர், 1983 இல் நடந்தேறிய இனக்கலவரம், இலங்கையை முழுமையாகத் திருப்பிப்போட்டது. ‘ஆடிக்கலவரம்’, ‘ஜூலைக் கலவரம்’ எனப் பலவாறு இது அழைக்கப்படுகிறது. இந்தக் கொடுநிகழ்வை, ‘கலவரம்’ என்று சுட்டுவதே தவறானது. ஆனால், வரலாற்றில் அது அவ்வாறு தான் அழைக்கப்பட்டு, பொதுப்புத்தி மனநிலையில் ஒரு கலவரவமாகவே நிலைபெற்றுள்ளது. இதன் பின்னாலுள்ள அரசியலும் வரலாறும் கவனிப்புக்கு உள்ளாகவில்லை. இக்கொடூரம் நடந்தேறி இவ்வாண்டுடன் 40 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த 40 ஆண்டுகால வரலாற்றை இணைக்கின்ற ஒரு பொது இழை, இனமுரண்பாடு ஆகும். இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கும் இனமுரண்பாட்டுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணாமல், இலங்கையின் எதிர்காலம் வளமானதாக இருக்கவியலாது. இன்றைய நெருக்கடியை, வெறுமனே பொருளாதாரப் பிரச்சினை என்ற ஒற்றைப் பரிமாணத்துக்குள் அடக்கிவிட முடியாது. ஆனால், அதை அவ்வாறு பார்க்கவே அரசாங்கமும் அதிகாரவர்க்கமும் விரும்புகிறது. கதையாடல்கள் அதன் வழிப்பட்டே அமைக்கப்பட்டுள்ளன. இலங்கையின் தேசியவாத எழுச்சியின் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், வர்க்கப் பரிமாணத்தையும் ஒடுக்கப்பட்டோரின் பார்வையில் வரலாறு சொல்லப்படாமையையும் அவதானிக்கலாம். இது தற்செயலானதல்ல; வரலாறு என்பது வெறுமனே நிகழ்வுகளின் பதிவு அல்ல. அதில் எது பதியப்படுகிறது, எது விடுபடுகிறது, எது திரித்தோ மாற்றியோ எழுதப்படுகிறது என்பன எல்லாம் அதிகாரம் பற்றிய கேள்வியுடன் தொடர்புடையவை. நமக்குச் சொல்லப்படுகிறவை உண்மைகளா, பொய்களா என்பது ஒரு புறமிருக்க, அவை ஏன் குறிப்பிட்ட விதங்களில் சொல்லப்பட்டுள்ளன என்றும் தொடர்ந்தும் சொல்லப்பட்டு வருகின்றன என்றும் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். எழுதப்பட்ட வரலாறு குறிப்பிட்ட சில வர்க்க நலன்களால் சிறைப்பிடிக்கப்பட்டு உள்ளது. சமூக விடுதலைக்கான போராட்டம் தவிர்க்க முடியாமலே வரலாற்றையும் விடுவிக்கிற ஒரு போராட்டமாகவும் அமைய நேருகிறது. நாம் விரும்புகிற மனித சமத்துவமுள்ள ஒரு சமூகத்தை அடைய வேண்டுமாயின், சமூக மாற்றங்கள் எவ்வாறு நேர்ந்தன? அந்த மாற்றங்களின் பின்னாலிருந்த இயங்கு சக்திகள் எவை? அவற்றை இயலுமாக்கிய சூழ்நிலைகள் எவை என்ற உண்மைகளின் அடிப்படைக் கூறுகளை, எழுதப்பட்ட வரலாற்றுக்குள் இருந்து வடிகட்டி எடுக்க வேண்டிய தேவை நமக்குள்ளது. வரலாற்றுத் திரிப்பும் மறைப்பும் நலன்களைப் பேணும் முக்கிய கருவிகளாக உள்ளன. இனங்களுக்கு இடையிலான பகைமையாக வரலாறு சித்திரிக்கப்படுகிற போது, உண்மையாகவே சமூக முரண்பாடுகளின் வேராக இருந்து வந்துள்ள அடிப்படையான சமூகப் பிரிவுகள், அதாவது சமூக ஏற்றத்தாழ்வுகளை அடையாளப்படுத்துகிற பிரிவுகள் மறைக்கப்படுகின்றன. இந்தப் பின்புலத்திலேயே இத்தொடர் 1983இல் நடந்தேறிய திட்டமிட்ட வெறிச்செயலின் பின்னணி, அதை சாத்தியமாக்கிய காரணிகள், அது ஏற்படுத்திய தாக்கம் போன்றவற்றை நோக்க விளைகிறது. எல்லாவற்றிலும் மேலாக, இலங்கையர்களாக நாம் இந்தக் கொடுஞ்செயலில் இருந்து கற்றுக் கொள்ளாத பாடங்கள் எவை? சிறுபான்மைச் சமூகங்கள் இன்னமும் மோசமான குறுந்தேசியவாத அரசியலின் வழிப்பட்டு சீரழிவதற்கான அடிப்படைகள் எவை? ஒடுக்கப்பட்ட மக்கள் இன்னமும் மேலும் ஒடுக்கப்படுவதையும் அதற்கு சிறுபான்மைத் தேசியவாதங்களின் முக்கியமான பங்கு யாது ஆகிய கேள்விகளையும் ஆழ நோக்க விளைகிறது. சமூகத்தில் ஆழ வேரூன்றிய பண்பாட்டு வேர்களைக் களைவதில் நேரடியாகக் குறுக்கிடுவதால் வரக்கூடிய எதிர்ப்புகளைக் கருத்தில் கொண்டே இலங்கையின் கொலனிய நிர்வாகம் பௌத்த, சைவ மறுமலர்ச்சி இயக்கங்களுக்குத் தடையாகத் தன்னைக் காட்டிக் கொள்ளவில்லை. கொலனியத்தைத் தூக்கி எறியாமல், சமூக அடையாளங்களையும் நலன்களையும் வற்புறுத்துகிற நோக்கிலேயே பௌத்த, சைவ, இஸ்லாமிய மீளெழுச்சிகள் நிகழ்ந்தன. இவற்றிடையே குறிப்பிடத் தக்க ஒற்றுமைகள் இருப்பினும் முக்கியமான வேறுபாடுகளும் இருந்தன. இது பேசப்பட வேண்டியதொன்று. அதைப்போலவே, இருபதாம் நூற்றாண்டின் முதல் காற்பகுதி வரை சிங்களவரிடையே சாதி அடிப்படையிலான அரசியல் போட்டி இருந்த போதும், தமிழ்-சிங்களவர் என்ற அடிப்படையிலான முரண்பாடு முன்னணிக்கு வரவில்லை. இனத்தை விட, மதம் அரசியலில் முக்கிய பங்கு வகித்தது. சாதியும் மதமும் மொழியை விட முக்கியமான அடையாளங்களாகச் செயற்பட்டன. தமிழர் - சிங்களவர் என்ற மொழிவழி வேறுபாட்டின் அடிப்படையில் அரசியல் விருத்தி பெறாமைக்கான காரணம், எந்த விதமான பண்பாட்டு ஒற்றுமைகளையும் விட மேலாக, அந்த இரு அடையாளங்களுக்கும் உட்பட்ட மேட்டுக் குடிகளுக்கும் ஓரளவு வசதி படைத்த பகுதியினருக்கும் இடையே போட்டிக்குரியதாகப் பொதுவாக எதுவுமே இல்லாமை என்பதை நாம் கவனிக்க வேண்டும். சிங்கள கொவிகம, தமிழ் வேளாள மேட்டுக் குடிகளிடையே வலுவான நல்லுறவு இருந்தது. இது இன்றுவரை பேசப்படாமல் தவிர்க்கப்படுகின்ற ஒன்று! பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியிலும் தேசிய அரசியல் உருவாக்கத்தில் பங்களிக்கக் கூடியவர்களாகத் தமிழரும் சிங்களவருமே முன்னிலையில் நின்றனர். எனினும் வர்க்கமும் சாதியும் அவர்களிடையில் இருந்த உறவைத் தீர்மானித்தன என்பதை, கொலனிய ஆட்சியின் கீழான சீர்திருத்தங்களின் பின்னர் தெளிவாகவே காண இயலுமாயிற்று. கொலனிய ஆட்சியின் கீழ் கொலனிய எசமானர்களின் தயவில் ஆட்சி அதிகாரங்களில் சிறியதொரு பங்கு பெற்ற சில குடும்பங்கள், தொடர்ந்தும் ஆதிக்கத்தில் இருந்தன. அந்த எண்ணிக்கையை விரிவுபடுத்துகிற சூழ்நிலை ஏற்பட்ட போது, அவ்விரிவாக்கத்தில் சாதியும் வர்க்கமும் முக்கிய பங்கு வகித்தன. ஏன் அவை முன்னின்றன? அதற்கான காரணம் என்ன? இது எவ்வாறு இலங்கை இனமுரண்பாட்டில் சாதாரண உழைக்கும் மக்களைப் பாதித்தது என்ற வினா விரிவான ஆய்வுக்கு உட்பட்டதில்லை. இவற்றைத் தவிர்த்து, இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையையோ அதைப் புதிய திசைவழிக்கு இட்டுச்சென்ற 1983 வன்செயல்களையோ நோக்கவியலாது. இவ்வன்செயல்கள் தவிர்த்திருக்கக் கூடியவை; ஆனால், அதை அரசாங்கம் விரும்பவில்லை. இந்நிகழ்வு, இலங்கையின் அயலுறவுகளில் பாரிய மாற்றங்களை உண்டுபண்ணியது. மேற்குலகக் கவனம், தமிழர்களுக்கு ஆதரவானது என்ற மாயை வலுப்பட்டதன் கொடிய விளைவுகளை, முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெற்ற ஆயுதப்போராட்டம் தெட்டத் தெளிவாகக் காட்டியது. ஆனால், இன்று அந்தக் கொடிய நினைவுகளின் 14 ஆண்டுகளின் பின்னரும் மேற்குலகின் மீதான மாயை இன்னும் வலுவாகவுள்ளது; இது வருந்தத்தக்கது. தமிழ்ச் சமூகம், இந்த கையறு நிலைக்கு ஏன் வந்தது? இதற்கு வெறுமனே சிங்கள-பௌத்த பெருந்தேசியவாத அகங்காரம் மட்டுமே காரணமா? இது கவனமாகவும், பொறுப்புணர்வுடன், சுயவிமர்சனத்துடனும் தமிழ்ச் சமூகம் கேட்கவேண்டிய கேள்வி. இக்கேள்வியை அமைதியாகக் கடந்துபோவது, கொல்லப்பட்ட மக்களுக்கும் விடுதலைக்காக உயிர்நீர்த்தோருக்கும் இழைக்கும் அநீதி. சிங்கள-பௌத்த பேரினவாதத்தை நாம் எவ்வாறு எதிர்கொண்டோம்? இதில் நமது தலைமைகளின் பங்கென்ன? இன்னமும் தீபாவளி, பொங்கல், வருடப்பிறப்பு என்று புதிய கதைகளோடு தொடரப்போகிறோமா? உடல்களின் மீது அரசியல் செய்வது புதிதல்ல. அதைத் தொடக்கி வைத்ததும் 1983 தான். நாம் கற்காத பாடங்களையே கடந்த 40 ஆண்டுகால வரலாறு காட்டி நிற்கிறது என்பதே பெருந்துயர். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இலங்கை-இனமுரண்பாட்டின்-திருப்புமுனை/91-317786
  2. ஆபிரிக்காவின் மைய நீரோட்டத்தில் அதிவலது தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் - 24 உலகின் பல்வேறு பிராந்தியங்களில் அதிவலதுசாரி, தனக்கேயுரிய தனித்துவமான குணவியல்புகளுடன் செயற்படுகிறது. இதற்கு ஆபிரிக்காவும் விலக்கல்ல! ஆபிரிக்க அரசியல் நிலப்பரப்பானது தீவிர வலதுசாரி சித்தாந்தங்களின் சொந்த வடிவங்களைக் கொண்டுள்ளது. இதற்கான சிறந்த உதாரணமாகக் சொல்லப்படுவது 1994ஆம் ஆண்டு ருவாண்டாவில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை. இதேபோல, ஆபிரிக்காவெங்கும் அதிவலதுசாரித்துவத்தால் உந்தப்பட்டு, பல வன்முறைகளும் கொலைகளும் நடந்தேறியுள்ளன. ஆபிரிக்க சமூகங்களின் கட்டமைப்பு, சில வழிகளில் அதிவலதுசாரித்துவத்துக்கு வாய்ப்பானதாக உள்ளது. ஆபிரிக்கக் கண்டமானது, பல இனக்குழுக்களைக் கொண்டது. வளங்களைக் கொள்ளையடிக்கும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் ஆசைக்குப் பலியான ஆபிரிக்கா, 1883இல் கொலனித்துவவாதிகள் ஆபிரிக்காவை, தங்கள் இஷ்டப்படி பிரித்துக் கொண்டார்கள். இதனால் இனக்குழுக்கள் சிதறுண்டன. குறித்த நிலப்பரப்பில் பெரும்பான்மையாக இருந்தவர்கள் துண்டாடப்பட்டதால், சிறுபான்மையாயினர். இன்னொருபுறம், உருவாக்கப்பட்ட தேசஅரசின் விளைவால் சிறுபான்மை இனக்குழு பெரும்பான்மையானது. இவை இனத்துவ மோதல்களுக்கு அடிப்படையாக அமைந்தன. 1994ஆம் ஆண்டில், சிறிய கிழக்காபிரிக்க நாடான ருவாண்டா, மிகக் கொடூரமான இன மற்றும் அரசியல் வன்முறை அலைகளால் கிழிக்கப்பட்டது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலப்பகுதியில், பயிற்சி பெற்ற போராளிகளுடன் பணிபுரியும் ருவாண்டாவின் ஆயுதப் படைகள், நாட்டின் 7.7 மில்லியன் மக்களில் ஒரு மில்லியன் மக்களை திட்டமிட்டு படுகொலை செய்தனர். வன்முறையின் முதன்மை இலக்கு சிறுபான்மை டுக்ஸி இனக்குழுவைச் சேர்ந்தவர்களேயாவர். அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து துரத்தப்பட்டு, தேவாலயங்கள் மற்றும் பிற பொது கட்டடங்களில் பாதுகாப்புக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் வரன்முறையாக கொலை செய்யப்பட்டனர். இந்த இனப்படுகொலையில் கொல்லப்பட்ட டுக்ஸி மக்களின் சரியான தொகையை துல்லியமாக கண்டறிய முடியாவிட்டாலும், நாட்டில் வாழும் டுக்ஸியினரில் குறைந்தது 80 சதவீதத்தினர் தங்கள் உயிரை இழந்துள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கொடூரமான இரத்தக்களரிக்குப் பிறகு, ருவாண்டாவின் கிறிஸ்தவ தேவாலயங்கள் இனப்படுகொலையை எதிர்க்கவோ தடுக்கவோ இல்லை என்றும் இவை வன்முறையில் தீவிரமாக உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான ஆய்வுகள், அதிர்ச்சிகரமான ஓர் உண்மையைச் சொல்லியது. 1994 இனப்படுகொலையை நோக்கித் தள்ளிய அரசியல் சீர்திருத்தத்துக்கு எதிரான மக்களின் அழுத்தங்களை உந்தித் தள்ளியதில், தேவாலயங்களின் பங்களிப்பு முக்கியமானது. அரசியல் சீர்திருத்தத்துக்கு எதிரான வேலைத்திட்டத்தில், தேவாலய பணியாளர்களும் நிறுவனங்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. உலக வரலாற்றில் மத நிறுவனங்கள் ஓர் இனப்படுகொலையில் ஈடுபடுவது விதிவிலக்கானது அல்ல. துருக்கியில் ஆர்மேனியர்கள், இரண்டாம் உலகப் போரில் ஐரோப்பாவில் யூதர்கள், பொஸ்னியாவில் முஸ்லிம்கள், இந்தியாவில் முஸ்லிம்கள் மற்றும் சீக்கியர்கள், லெபனானில் கிறிஸ்தவர்கள் மற்றும் பல்வேறு முஸ்லிம் குழுக்களுக்கு இடையே நடந்த இனப்படுகொலை, வன்முறைகள் எனப் பல உதாரணங்கள் உண்டு. ஆனால், இவை அனைத்திலும் இருந்து ருவாண்டா வேறுபடுகிறது. இங்கு மதம், ஒரு சமூகக் குழுவை வரையறுக்க, குறிப்பாக அடையாளம் காட்டியாகச் செயற்படவில்லை. ருவாண்டாவில் உள்ள கத்தோலிக்க மற்றும் புரட்டஸ்தாந்து தேவாலயங்கள் இரண்டுமே பல இனங்களைக் கொண்டவை. மேலும், ருவாண்டாவில் இனப்படுகொலை ஒரு மதக் குழுவுக்குள்ளேயே நிகழ்ந்தது. பெரும்பாலான சமூகங்களில், ஒரே தேவாலய திருச்சபையின் உறுப்பினர்கள், தங்கள் சக உறுப்பினர்களைக் கொன்றனர். மேலும், பல சந்தர்ப்பங்களில், அவர்கள் தங்கள் சொந்த போதகர் அல்லது பாதிரியாரைக் கொலை செய்தனர். இதைச் சாத்தியமாக்கியது எது என்ற வினா தொக்கி நிற்கிறது. ஆபிரிக்காவில் இனத்துவரீதியான உச்சபட்ச வெறுப்பரசியலே இவ்வாறான கொலைகளுக்கும் வன்முறைக்கும் வழிசெய்கிறது. லைபீரியாவின் உள்நாட்டுப் போரானது, மேற்கு ஆபிரிக்க துணைப் பகுதிக்குள், க்ரான்ஃமாண்டிங்கோ தலைமையிலான அரசாங்கத்துக்கும் ஜியோ-மனோ கிளர்ச்சியாளர்களுக்கு இடையேயான வெறுப்பு அரசியலால் உக்கிரமடைந்தது. இந்த வெறுப்பரசியல், அரசியல் உத்தியாகவும் தேர்தல் மூலோபாயமாகவும் உள்ளது. இதன் முக்கிய கருவியாக வெறுப்புமிழும் பேச்சு இருக்கிறது. வெறுப்புமிழும் பேச்சு, தேர்தல் காலங்களில் மட்டும் வெளிப்படுவதில்லை, ஆனால், இக்காலங்களில் ஏற்கெனவே இருக்கும் பிளவுகளை அதிகப்படுத்தி, தப்பெண்ணங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை அதிவலதுசாரிகள் நன்கறிந்து இருக்கிறார்கள். இவ்வாறான பேச்சுகள் பொதுவாக, ஒரு குறிப்பிட்ட குழுவை, மற்றொன்றுக்கு எதிராக அணிதிரட்டுவது மற்றும் பிரிக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே பிரசாரங்களை உருவாக்குகின்றன. வெறுக்கத்தக்க பேச்சு என்பது ஒரு குறிப்பிட்ட குழுவை இழிவுபடுத்தும் வெறுக்கத்தக்க பேச்சின் பயன்பாட்டை அடிக்கடி உள்ளடக்கியது. பெண்களை குறிவைக்கும் வெறுக்கத்தக்க பேச்சு, சில சமயங்களில் வெறுப்பூட்டும் பேச்சு சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும்; சில சமயங்களில் இல்லை. இருப்பினும் இது பெண்களை பொது பதவியை தேடுவதை தடுக்கும் ஒரு முக்கிய காரணியாகும். தேர்தல் பங்குதாரர்கள் (அமைச்சகங்கள், உள்ளூர் அரசாங்க அதிகாரிகள், சிவில் சமூகம், ஊடகங்கள் மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் உட்பட) வெறுப்பூட்டும் பேச்சை எதிர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். மேலும், இந்தப் பங்குதாரர்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் அமைதியை கட்டியெழுப்புவதில் வெறுப்பு பேச்சுகளின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை குறைக்க முடியும். தேர்தல்களில், தேர்தல் பங்குதாரர்கள் பொது விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சிறந்த சட்டத்துக்கு வாதிட வேண்டும்; உள்ளடக்கிய உரையாடலுக்கான இடத்தை உருவாக்க வேண்டும். அறிவைப் பரப்புவதன் மூலம் வெறுப்பு பேச்சு தொடர்பான சமூக ஒருமித்த கருத்தை அடைவதே இறுதி இலக்கு. ஆபிரிக்காவில் அரசியல் அதிகாரத்தின் எல்லையற்ற தன்மையானது தேர்தலில் வெல்வதற்காக எந்தவோர் ஆயுதத்தையும் பயன்படுத்த தயாராகவிருக்கும் மனநிலையை உருவாக்கியுள்ளது. இது ஒருமித்த மனப்பான்மையும் வெறுப்புப் பேச்சுகளைப் பயன்படுத்துவதற்கு பங்களிக்கின்றன. இந்தப் பண்பை தென்னாசியச் சமூகங்களிலும் காணவியலும். ஆபிரிக்காவெங்கும் கொலனியாதிக்க விடுதலையைத் தொடர்ந்த உள்நாட்டுப் போர்கள், முரண்பாடுகளுக்கு வழியமைத்து இன்றுவரை அவை பல்வேறு வடிவங்களில் தொடர்கின்றன. ஏற்கெனவே சவாலான இந்தச் சூழல், பிராந்தியத்தில் உள்ள அதிக வேலையின்மை மற்றும் வறுமையால் இன்னும் சிக்கலாக மாறியுள்ளது. தேர்தல் காலங்கள் குழுக்களுக்கு விரக்தியை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கின்றன. இதை அதிவலதுசாரி பயன்படுத்துகிறது. இன்னும் சரியாகச் சொல்வதானால், உலகின் ஏனைய பகுதிகள் போல அதிவலது வெளியில் இல்லை; மாறாக, அரசியல் மையநீரோட்டத்தின் முக்கிய இடத்தில் உள்ளது. 2016இல், காம்பியாவின் முன்னாள் ஜனாதிபதியான லுயாயலய, ஓர் அரசியல் பேரணியின் போது, மண்டிகாக்க இனக்குழுவினரை எதிரிகள் என்றும், வெளிநாட்டவர்கள் அகற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டு அவர்களை அச்சுறுத்தினார். இதன் மற்றொரு பரிமாணம், 2020 அக்டோபரில் ஐவரி கோஸ்டில் டியோலாஸ் - அக்னிஸ் இடையேயான இன மோதல்களாகும். ஆபிரிக்கக் கண்டத்தின் தென்பகுதியில், தென்னாப்பிரிக்கா அதிவலதுசாரி ஜனரஞ்சக இயக்கங்களுக்கு ஒரு கோட்டையாகக் கருதப்படுகிறது. நிறவெறி சகாப்தத்தின் போது, இனவிரோதங்களின் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றுடன், நிறவெறிக்கு பிந்தைய ஜனநாயக அரசாங்கங்கள் இன்னும் பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கையை வெல்லாத நிலையில் அதிவலது இன்னும் செல்வாக்குடன் திகழ்கிறது. தென்னாபிரிக்காவில் உள் இனப் பதட்டங்களைத் தவிர, வெளிநாட்டினருக்கு எதிராக, குறிப்பாக மற்ற ஆபிரிக்கர்களுக்கு எதிரான, பரவலாகப் பகைமைகள் உள்ளன. ‘ஒபரேஷன் டுடுலா’ (சுலு மொழியில் தள்ளு) என்று பெயரிடப்பட்ட குழுவால் சோவெட்டோ மற்றும் ஜோகன்னஸ்பர்க்கில் புலம்பெயர்ந்த வணிகர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். இன்று தென்னாபிரிக்கா திருப்புமுனையில் நிற்கிறது. ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் ஊழலிலும் அதிகாரத் துஷ்பிரயோகத்திலும் சீரழிந்து நம்பிக்கை இழந்துள்ளது. இன்று மாற்றாக முன்வரும் புதிய சமூக சக்திகள் சர்வாதிகார ஜனரஞ்சகத்தின் வாய்ச்சண்டை வடிவங்களாகும். அவை தீவிர அதிவலதின் பக்கம் நிற்கின்றன. ஆபிரிக்காவெங்கும் அதிவலது அரசியல் மையநீரோட்டத்தின் பகுதியானமையில் உயர்செல்வந்தக் குடிகளின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கன. அவர்களே அதிவலதை ஊக்குவித்து செல்வமளித்து காக்கிறார்கள். இன்று ஆபிரிக்காவெங்கும் நிறைந்துள்ள வேலையின்மையும் வறுமையும் காலநிலை மாற்றத்தின் கொடிய விளைவுகளும் பாசிசம் உட்பட அதிவலது சர்வாதிகாரத்துக்கு இந்நாடுகள் திரும்புவதற்கான ஆபத்துள்ளது. குறிப்பாக ஆளும் உயரடுக்கு மக்களிடமிருந்து, தொலைவில் இருப்பதாகக் கருதப்பட்டு ஊழல் செய்யும்போது இந்த ஆபத்து எப்போதும் மோசமாகும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஆபிரிக்காவின்-மைய-நீரோட்டத்தில்-அதிவலது/91-316706
  3. இலத்தீன் அமெரிக்காவில் அதிவலதுசாரி அலையின் புதிய கட்டம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் - 19: இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற இரண்டு நிகழ்வுகள், இலத்தீன் அமெரிக்கா பற்றிப் பேசுகின்ற போது முக்கியமானவையாகும். முதலாவது, இப்பிராந்தியத்தில் அதிகூடிய மக்கள் தொகையையும் மிகப்பெரிய நிலப்பரப்பையும் கொண்ட நாடான பிரேஸிலில், ஜனவரி மாதம் எட்டாம் திகதி, தேர்தலில் தோல்வியடைந்த அதிவலதுசாரி முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவாளர்கள், தலைநகர் பிரேஸிலியாவில் அரச கட்டடங்களைச் சூறையாடி, மிகப்பாரிய சேதத்தை விளைவித்தார்கள். இது, சில ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தேர்தலில் தோல்வி அடைந்ததை எதிர்த்து, அவரது ஆதரவாளர்கள் விளைவித்த சேதத்துக்கு ஒப்பானது. பிரேஸிலில் அதிவலது வன்முறை அரங்கேறுவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னர், அதாவது, ஜனவரி ஆறாம் திகதி, பெரு நாட்டின் ஜனாதிபதி பெட்ரோ கஸ்டிலோ, ஓர் அதிவலதுசாரிகளின் சதித்திட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டு, சிறை வைக்கப்பட்டார். இவை, இலத்தீன் அமெரிக்காவின் அதிவலதுசாரிகளின் நடவடிக்கைகள், இன்னொரு கட்டத்தை நோக்கி நகர்வதைக் காட்டி நிற்கின்றன. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், இலத்தீன் அமெரிக்காவில் ஓர் இடதுசாரித்துவ அலை வீசியது. அதன் குணவியல்புகளின் அடிப்படையில், அதை ‘இளஞ்சிவப்பு அலை’ (pink tide) என்று எல்லோரும் அழைத்தார்கள். பல இலத்தீன் அமெரிக்க நாடுகளில், இடதுசாரிச் சார்புள்ளவர்கள், தேர்தல்களில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தார்கள். இது, இப்பிராந்தியத்தில் ஜனநாயகம், பொருளாதாரம் ஆகியவற்றில் மீது பாரிய மாற்றங்களைக் கொண்டு வந்தது. கிட்டத்திட்ட அரை நூற்றாண்டு காலத்தின் பின்னர், இன்று நிலைமை முற்றிலும் வேறாக மாறிவிட்டது. தேர்தல்களில் இடதுசாரிகள் சிறப்பாக செயற்படாதபடி பார்த்துக் கொள்ள, எதிர்ப்புரட்சி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டன. இந்த எதிர்ப்புரட்சி செயற்பாடுகளின் பிரதான அம்சமாக, தீவிர அதிவலதுசாரித்துவத்தின் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டது. இலத்தீன் அமெரிக்காவில், தீவிர அதிவலதுசாரித்துவத்துக்கு இரத்தம் தோய்ந்த ஒரு வரலாறு உண்டு. ஆனால், இப்போதைய மீள்எழுச்சியானது, இடதுசாரி முற்போக்கு சக்திகளை ஒழித்துக் கட்டுவதை நோக்காகக் கொண்டது. இலத்தீன் அமெரிக்காவில், இந்தப் புதுப்பிக்கப்பட்ட அதிவலதுசாரித்துவத்தின் எழுச்சியானது, உலக அளவில் அதிதீவிர வலதுசாரித்துவத்தின் ஒருங்கிணைப்பால் உந்தப்படுகிறது. இடதுசாரிச் சார்பு எழுச்சிக்குக் காரணம், அவர்கள் சாதாரண மக்களை, பழங்குடிகளைப் பிரதிநிதித்துவம் செய்தார்கள்; அவர்தம் நலன்களை முன்னிறுத்தினார்கள். இதனால், பல்தேசிய கம்பெனிகளை, செல்வந்த உயரடுக்கை எதிர்த்தார்கள். இன்று, அதிவலதுசாரி செல்வந்தர்களினதும் பல்தேசிய கம்பெனிகளினதும் அடியாளாக உள்ளது. இன்றைய போராட்டம் என்பது, உண்மையில் கிராமப்புற விவசாயிகள், பாரம்பரியமாக நிலத்தின் பராமரிப்பாளர்களாக இருந்த பழங்குடியினருக்கும் அவர்களை இடம்பெயரச் செய்து, அவர்களின் நிலத்தை எடுக்க விரும்புகின்றவர்களுக்கு இடையிலானது. இது உற்பத்தி வழிமுறைகளைப் பற்றியது. இந்தப் பெரிய நிலங்களை கையகப்படுத்துவதற்கான போராட்டத்தின் பகுதியே, அதிவலதின் எழுச்சியாகும். அதனால்தான், நிச்சயமாக, இங்குள்ள மக்கள் இயக்கங்கள் நிலத்தை ஜனநாயகமயமாக்குவதற்குப் போராடின; உற்பத்தி செய்ய நிலத்தை அணுகுவதற்குப் போராடின. இவற்றைச் சாத்தியமாக்குவதன் ஊடு, மக்கள் எங்காவது வாழ, எங்காவது வளர மற்றும் உற்பத்தி செய்ய உரிமை உண்டு. அவர்கள் இடம்பெயர்ந்து வீடற்றவர்களாக இருக்காது, தமக்கான உணவு உற்பத்தியைச் செய்ய முடியும்; ஏற்றுமதி செய்ய முடியும். மற்றும், பொருளாதார ரீதியாக முன்னேற, மற்ற விடயங்களைச் செய்ய முடியும். ஆனால் இதை தங்களது நிலங்களாகக் கையகப்படுத்தி, தங்கள் சுரண்டலுக்குப் பயன்படுத்த செல்வந்தர்களும் பல்தேசிய கம்பெனிகளும் அதிவலதுசாரிகளும் கைகோர்த்துள்ளன. இலத்தீன் அமெரிக்காவில், நாம் பெரும்பாலும் பார்ப்பது, கறுப்பின மக்களுக்கும் பணக்கார வெள்ளையர்களுக்கும் இனத்தின் அடிப்படையில் நடக்கும் வெறும் கலாசாரப் போரை மட்டுமல்ல! இது, நிலம் மற்றும் வளங்களுக்கான போராட்டம். இயற்கை வளங்களின் மீது இறையாண்மை, நிலத்தின் மீது இறையாண்மை, அவற்றைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்து, அவற்றை உற்பத்தி செய்ய விரும்பும் மக்களுக்கு எதிராக, இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்காக, அந்தப் பகுதிகளுக்கு அணுகல் தேடும் நாடு கடந்த நலன்களுக்கு எதிரான போராட்டம் ஆகும். அவர்களின் சொந்த நலனுக்காக, தங்களுக்கு வாய்ப்பான ஆட்சியாளர்களை உருவாக்கும் எதிரான ஆட்சியாளர்களை அகற்றும் நடவடிக்கைகளுக்கு, எதிரான போராட்டம். இந்தப் பின்புலத்திலேயே அதிவலதுசாரித்துவத்தின் புதிய அலையைப் புரிந்து கொள்ள வேண்டும். இலத்தீன் அமெரிக்க தீவிர அதிவலதுசாரித்துவத்துக்கு ஒரு வரலாறுண்டு. சர்வாதிகாரத்தன்மை, கவர்ந்திழுக்கும் ஆற்றலுடைய இராணுவத் தலைவர்கள், இதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். இலத்தீன் அமெரிக்காவில் தீவிர வலதுசாரிகளின் மூன்று அலைகளை நாம் அடையாளம் காண முடியும். இதன் முதலாவது, 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தோடு தொடங்கியது. 1930இல் ‘வோல் ஸ்ட்ரீட்’ நெருக்கடியுடன், ஆர்ஜென்டினா மற்றும் பிரேஸில் போன்ற நாடுகளில் ‘பாரம்பரிய ஜனரஞ்சகவாதம்’ வெளிப்பட்டது. இது கம்யூனிசத்துக்கு எதிரான தற்காப்பாக உயரடுக்கினரால் புரிந்து கொள்ளப்பட்ட அதேவேளை, தொழிலாளர் வர்க்கத்தால் சமூக நிலைமைகளின் முன்னேற்றத்துக்கான வழி என்று ஏற்கப்பட்டது. இராணுவத்தின் ஆதரவுடன், அர்ஜென்டினாவில் ஜுவான் பெரோன், பிரேஸிலில் கெட்டுலியோ வர்காஸ் ஆகியோர், தீவிர வலதுசாரி, பாசிச அறிவுஜீவிகள் மற்றும் ஆதரவாளர்களுடன் கூட்டணிகளை நிறுவி ஆட்சிக்கு வந்தனர். இது, இலத்தீன் அமெரிக்க அரசாங்கங்கள் மீது, ஐரோப்பிய பாசிச செல்வாக்கைக் காட்டிய ஒரு முக்கியமான தருணம்.பெரோன் (முன்னாள் ஜெனரல்) மற்றும் வர்காஸ் (இராணுவத்தின் நெருங்கிய கூட்டாளி) ஆகிய இருவரும் ஐரோப்பிய பாசிச ஆட்சிகளின் அபிமானிகளாக இருந்தனர். ஆனால், கூட்டணிகளை நிறுவி, நகர்ப்புற தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழை கிராமப்புற சமூகங்களுக்கு சில உரிமைகளை வழங்கினர். இந்தச் சர்வாதிகார ஜனநாயகம், பாரம்பரிய மற்றும் பிரபுத்துவ உயரடுக்குகளை மாற்றியது. அவர்களது செயற்பாடுகளின் மீது, தங்கள் அதிகாரத்தைப் பிரயோகிக்கும் வலிமையை இழந்தனர். பெரோன், வர்காஸ் ஆகிய இருவரும், சர்வாதிகார ஆட்சிகளை நிறுவினர். கம்யூனிசத்துக்கு எதிராக சிறந்த போராளிகளாக தங்களை முன்வைத்தனர். இந்நாடுகளில் கம்யூனிஸ்ட்கள் மிகுந்த துன்பங்களுக்கு உள்ளாகினர். தீவிர வலதுசாரிகளின் இரண்டாவது அலை, 1959ஆம் ஆண்டு கியூபப் புரட்சிக்குப் பின்னர், இலத்தீன் அமெரிக்காவில் கெடுபிடிப்போரின் தாக்கத்தோடு தொடங்கியது. மேல்தட்டு மக்களிடையே கம்யூனிசம் பற்றிய அச்சம், மற்றும் இடதுசாரி தீவிரமயமாக்கலுக்கு எதிரான அமெரிக்காவின் ஆதரவு ஆகியவை, இந்தச் சூழலை வரையறுத்தன. 60கள், 70களில் தீவிர வலதுசாரி சர்வாதிகாரங்களின் ஒரு சக்திவாய்ந்த சுழற்சி தோன்றியது. இது, இடதுசாரி இயக்கங்கள் மற்றும் தொழிலாள வர்க்கத் தலைவர்களைத் தாக்கியது, குறிப்பாக, தெற்குமுனை நாடுகளில் (அர்ஜென்டினா, பிரேஸில், சிலி, உருகுவே) மற்றும் மத்திய அமெரிக்காவில் கொடூரமாக இருந்தது. இந்தக் காலகட்டத்தின் சிறந்த பிரதிபலிப்பு, சிலியில் (1973-1990) இருந்த அகஸ்டோ பினோஷேயின் சர்வாதிகாரமாகும். இது இப்பகுதியில் புதிய தாராளமயம் மற்றும் சர்வாதிகாரத்தின் முதல் கூட்டிணைவுக்கு உதாரணமானது. இராணுவ ஜெனரல் பினோஷே, இலத்தீன் அமெரிக்க அதி வலதின் மிக முக்கியமான தலைவராக இருந்தார், மேலும், அவர் ஜனாதிபதி பதவியை விட்டு வெளியேறிய பிறகும், அவர் ஒழுங்கமைத்த அதிவலது ஒழுங்கு, சிலி சமூகத்தில் செல்வாக்குச் செலுத்தியது. இலத்தீன் அமெரிக்க தீவிர வலதுசாரிகளின் மூன்றாவது அலையில், நாம் தற்போது இருக்கிறோம். முற்போக்கான நவதாராளவாத எதிர்ப்பு, இடதுசாரி ஜனரஞ்சக அரசாங்கங்களின் உருவாக்கத்துக்கு எதிரானதாக, இந்த அலை இப்போது இருக்கிறது. ஒட்டுமொத்தமாக, இலத்தீன் அமெரிக்காவில் தீவிர வலதுசாரிகளின் வரலாறு, இராணுவ சக்தி, நவதாராளவாதத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நவதாராளவாதமே, இன்று மக்களின் பரந்துபட்ட எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளது. ‘இளஞ்சிவப்பு அலை’ ஏற்படுத்திய சமூக விழிப்புணர்வும் போராடுவதற்கான உந்துதலும், நவதாராளவாதத்துக்கு பெரிய சவாலாகவுள்ளது. இன்று இலத்தீன் அமெரிக்கா எங்கும் அதிவலதுசாரிகளுக்கு ஆதரவு பெற்ற வளச்சுரண்டலுக்கு எதிராக, மக்கள் போராடுகிறார்கள். இது, இடதுசாரிச் சார்புள்ள ஆட்சிகள் மீள்வதற்கு வழி செய்துள்ளது. இடதுசாரிகளின் இந்த மீள்எழுச்சிக்கு விடையிறுக்கும் வகையில், பிராந்தியத்தில் அதிவலதுசாரி இயக்கங்கள், கட்சிகள் மற்றும் தீவிர வலதுசாரிகளின் மறுஉருவாக்கமும் அவை பலப்படுத்தப்படுவதையும் நாம் காண்கிறோம். இதன் விளைவுகளின் ஒரு பகுதியே, இவ்வாண்டு தொடக்கத்தில் அரங்கேறிய நிகழ்வுகள். பிரேஸிலில் 2018இல் அதிவலதுசாரி நபர் ஜனாதிபதியானமை முக்கியமானது. இது, இலத்தீன் அமெரிக்க அதிவலதுக்கு மிகப்பெரிய ஊக்க மருந்தானது. இதில் இலத்தீன் அமெரிக்காவின் அதிவலசாரித்துவத்தின் வரலாற்றுக்கும் பங்குண்டு. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இலத்தீன்-அமெரிக்காவில்-அதிவலதுசாரி-அலையின்-புதிய-கட்டம்/91-314210
  4. வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் - 01: முசோலினியின் நூறு ஆண்டுகளின் பின்னர்... தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அதுவோர் அழகிய நாள்! இலையுதிர்காலம் முழுமையாகத் தன்னை வெளிப்படுத்தத் தொடங்கியிருந்தது. அந்த ஓக்டோபர் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையே, கதிரவன் தன் கதிர்களைப் பரப்பி, ஒருவித மகிழ்ச்சியைத் தரும் ஆண்டின் இறுதித் தினமென்பதைப் பலர் அறிவர். ஓஸ்லோ நகரின் மத்தியில், குழந்தைகளுக்கான பல செயற்பாடுகளை, அவர்களுடன் நாடக நடிகர்களும் முன்னெடுத்திருந்தனர். வீதிகளில் பல்வேறு நிறங்களினாலான வெண்கட்டிகளால் படங்களை வரைவது, பாடுவது, ஆடுவது விளையாடுவது என்று ‘பல்கலைக்கழக வளாகம்’ என்று அறியப்பட்ட அப்பகுதி களைகட்டியிருந்தது. அப்பகுதிக்கு வாத்தியங்களை இசைத்தபடி, கொடிகளைத் தாங்கிய கறுப்புடை அணிந்த மனிதர்கள் ஊர்வலமாக வந்தனர்கள். குழந்தைகளின் செயற்பாடுகளை நிறுத்தி, அவ்விடத்திலிருந்து அவர்களை விரைவாக ஏற்பாட்டாளர்கள் அகற்றினர். அந்த ஊர்வலத்தை மேற்கொண்டவர்கள், அதிவலதுசாரி ஆதரவாளர்கள். அவர்கள் குடியேற்றவாசிகளுக்கு எதிரானவர்கள். தங்களை நவநாசிகள் என்று அழைத்துக் கொள்பவர்கள். அவர்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் முயன்ற நிலையில், பொலிஸாருக்கும் நவநாசிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இறுதியில் 35 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பலர் நோர்வே நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லையென்றும், அண்டைய ஸ்கன்டினேவிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் காவற்றுறையினர் தெரிவித்தனர். இந்நிகழ்வு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த ஒன்றை நினைவுபடுத்தியது. இதை உலகின் ஒரு மூலையில் உள்ள ஒரு ஸ்கன்டினேவிய நாட்டின் தலைநகரில் நிகழ்ந்த தனித்த நிகழ்வாகக் கருத முடியாது. இன்று உலகைச் சூழ்ந்துள்ள பொருளாதார நெருக்கடியின் விளைவு, பல ஐரோப்பிய நாடுகளில் குடியேற்றவாசிகளுக்கு எதிரான மனநிலையும், அதிவலது தீவிரவாதமும் எழுச்சி பெற்றுள்ளது. இந்த மனநிலை, நெருக்கடிகளை எதிர்நோக்கும் எல்லா நாடுகளிலும் இன்று பரவுகிறது. இலங்கையும் இதற்கு விலக்கல்ல. இந்த அதிவலது தீவிரவாதமும் அதனோடு பின்னிப் பிணைந்த தேசியவாத வெறியும், நவநாசிசம் மற்றும் பாசிசம் ஆகியவற்றின் கூட்டுக்கலவையின் ஆபத்துகளையும் எதிர்காலச் சவால்கள் குறித்த முன்னோக்கையும் இத்தொடர் ஆராய விளைகிறது. முசோலினியின் கதைக்குப் போவதற்கு முன்னர், அண்மைய இரு நிகழ்வுகளை நினைவுகூர்தல் தகும். முதலாவது, இஸ்‌ரேல் பற்றியது. இது முக்கியமானது. ஏனெனில், ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடுகின்ற அபத்தம் இன்றும் தொடர்கிறது. கடந்தவாரம், இஸ்‌ரேலிய பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, அதிவலது தீவிரவாத நிலைப்பாடை உடைய கட்சிகள் ஆட்சியைப் பிடித்துள்ளன. தீவிர வலதுசாரிக் கட்சிகளின் எழுச்சியானது, இஸ்‌ரேலிய சமுதாயத்தில் அதிகரித்துவரும் தீவிரவாதம் மற்றும் இனவெறியின் வெளிப்பாட்டின் இயல்பான விளைவாகும். இஸ்‌ரேலியர்களால் பாலஸ்தீன மக்கள் பல ஆண்டுகளாக கொலைகள், கைதுகள், குடியேற்றங்கள் போன்ற வடிவங்களில் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இஸ்‌ரேலிய அரசானது, குடியேற்றவாசிகள் மற்றும் இராணுவத்தினர் பலஸ்தீனியர்கள் மீது எல்லையற்றுக் குற்றங்களைச் செய்ய இலவச அனுமதியை வழங்கியுள்ளது. இரண்டாவது, முசோலினி பதவியேற்று நூறாண்டுகளுக்குப் பிறகு, முசோலினியைப் பின்பற்றுவதாக வெளிப்படையாக அறிவித்த ஒருவர், தனது தீவிர வலதுசாரி நிலைப்பாட்டுடன் தேர்தலில் வென்று, இத்தாலியில் பிரதமராகியுள்ளார். இது இனி நடக்கச் சாத்தியமான நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே! ஒஸ்லோவில் கடந்த மாதம் நடந்த நிகழ்வு நினைவுகூர்ந்த நிகழ்வுக்குத் திரும்புவோம். நூறு ஆண்டுகளுக்கு முன்பு, 1922இல் இதேபோன்றதோர் ஒக்டோபர் மாதம், பெனிட்டோ முசோலினியின் துணை இராணுவ கறுப்புச்சட்டைகள், இத்தாலிய தலைநகரில் பிரதம மந்திரி லூய்கி ஃபாக்டாவின் அரசாங்கத்தை கலைக்கக் கோரி அணிவகுத்துச் சென்றனர். ரோம் மீதான அணிவகுப்பு என்பது, பாசிச சக்தியின் அடிப்படை கட்டுக்கதை. இந்தத் துணிச்சலான செயலின் மூலம், இத்தாலிய அரசாங்கத்தின் தலைவராக, வலிமையான முசோலினி தன்னை நிறுவிக் கொண்டார். ஆனாலும் அந்த அணிவகுப்பு ஒரு கேலிக்கூத்து. முசோலினியின் பாசிசப் படைகள் சில ஆயிரங்களை மட்டுமே கொண்டிருந்தன, பெரும்பாலும் தடிகளாலான ஆயுதங்களை ஏந்தியிருந்தன. அரசப்படைகளுடன் ஏற்பட்ட மோதலில் சிதறி, சேற்றிலும் மழையிலும் மூழ்கின. அவர்களில் அதிகமானோர், தலைநகரில் அரசாங்கப் படைகளால் சுடப்பட்டு, பலத்த காயங்களுக்கு உள்ளாகினர். ‘குதிரையில் ஏறிய மனிதன்’ என்று தன்னைத் தானே வீரனாக அழைத்துக் கொள்ளும் முசோலினி, சுவிஸ் எல்லைக்கு அருகே ஒரு பாழடைந்த அலுவலகத்தில் ஒளிந்து கொண்டார். பாசிஸ்டுகளிடம் வெளிப்படையான பலவீனம் இருந்தபோதிலும், அரசாங்கம் ஆட்சிக் கவிழ்ப்புக்கு அடையாள எதிர்ப்பை மட்டுமே ஏற்றியது. ‘பாசிஸ்டுகள் மீது மிகுந்த அனுதாபத்தைக் கொண்டிருந்த இராணுவம், முசோலியின் ஆட்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்க மறுப்பார்கள் என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள்’ என்று பிரிட்டிஷ் தூதர் குறிப்பிட்டார். பேரணி நடைபெற்று 24 மணி நேரத்துக்குள், மன்னர் விக்டர் இமானுவேல், முசோலினியை பிரதமராக நியமித்தார். புதிய சர்வாதிகாரியின் துருப்புகள் இறுதியாக ரோம் நகரை அடைந்தபோது, அவர்கள் வெற்றி அணிவகுப்பில் நுழைந்தனர். ரோம் மீதான அணிவகுப்பு என்ற நாடகத்தை விளங்குவதற்கு சில அடிப்படையான உண்மைகளைப் புரிந்து கொள்ளுவது முக்கியம். முசோலினி ஆளும் வர்க்கத்தின் விருப்பத்துக்கு எதிராக அதிகாரத்தை எடுக்கவில்லை, மாறாக, அதன் ஆசீர்வாதத்துடனேயே பெற்றார். அதிகாரத்துக்கான பாசிஸ்டுகளின் பாதை சகிப்புத்தன்மை, பொலிஸ்துறை, அரசியல்வாதிகளின் நேரடியான ஒத்துழைப்பு, தொழிலதிபர்களின் ஆடம்பரமான நிதியுதவி ஆகியவற்றால் அமைக்கப்பட்டது. இத்தாலிய ஆளும் வர்க்கம் முசோலினியை வரவேற்றது. ஏனெனில், அதன் உறுப்பினர்கள் பாசிஸ்டுகளை பல ஆண்டுகால நெருக்கடி மற்றும் வர்க்கப் போராட்டத்துக்கு தீர்வாகக் கருதினர், முதல் உலகப் போர், இத்தாலியை நெருக்கடிக்குள் தள்ளியது. கிட்டத்தட்ட ஆறு மில்லியன் இத்தாலியர்கள் போர்வீரர்களான உள்ளீர்க்கப்பட்டார்கள். 600,000 பேர் கொல்லப்பட்டனர்; 700,000 பேர் நிரந்தரமாக ஊனமுற்றனர். தீவிரமயமாக்கப்பட்ட முனைகளில் இருந்து, விவசாயிகள் கட்டாயப்படுத்தப்பட்டனர். தொழிற்சாலைத் தொழிலாளர்கள் தங்கள் பணியிடங்களில் இராணுவச் சட்டத்தை நிறுவுவதற்கு எதிராகப் போராடினர். 1917இல் ரஷ்யப் புரட்சி தொழிலாளர்களை தீவிரமயமாக்கும் நடைமுறை உதாரணத்தை வழங்கியது. போரின் காட்டுமிராண்டித்தனத்தை முடிவுக்குக் கொண்டுவர முதலாளித்துவ அமைப்பை வீழ்த்தியது. 1919-20 ஆம் ஆண்டின் பியென்னியோ ரோஸ்ஸோ (இரண்டு சிவப்பு ஆண்டுகள்) இயக்கத்தின் உச்சத்தின் போது, ஆளும் வர்க்கத்திடம் இருந்து இத்தாலியின் மீதான கட்டுப்பாட்டைப் பறிக்க தொழிலாளர்கள் ஒரு தீர்க்கமான போராட்டத்தைத் தொடங்கினர். அதே நேரத்தில், விவசாயிகள் நிலத்தை கைப்பற்றினர்; பெரிய நில உரிமையாளர்களிடம் இருந்து பாரிய சலுகைகளை கட்டாயப்படுத்தத் தொடங்கினர். உள்நாட்டுப் போர் நெருங்கிவிட்டதாகத் தோன்றியது. சமூக நெருக்கடி வலதுசாரி தீவிரமயமாக்கலையும் உருவாக்கியது, அது பாசிசத்தை பிறப்பித்தது. இத்தாலிய சோசலிஸ்ட் கட்சியின் ஒரு முக்கிய நபரான பெனிட்டோ முசோலினி, நாடு போருக்குள் நுழைவதற்கு ஆதரவாக அறிவித்ததன் மூலம், அவரது தோழர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். கட்சி முசோலினியை வெளியேற்றியது, அவர் மீது காறி உமிழ்ந்தது. அவரை துரோகி என்று அழைத்தது. நவம்பர் 1914இல், முசோலினி, இத்தாலிய தொழிலதிபர்கள் மற்றும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் ‘Il Popolo d’Italia’ (இத்தாலி மக்கள்) என்ற புதிய வலதுசாரி தினசரி செய்தித்தாளை நிறுவினார். இந்தப் பக்கங்களில், அவரது புதிய யோசனைகள் வடிவம் பெற்றன. அச்செய்தித்தாள் போருக்கான ஆதரவு மற்றும் அவ்வாதரவைச் சீர்குலைக்கும் திறன் கொண்ட சோசலிச இயக்கம் போன்ற அனைத்து சக்திகளுக்கும் விரோதம் ஆகியவற்றையே மூலதனமாகக் கொண்டது. முசோலினி, ஜனநாயகமே நாட்டை அதன் தலைவிதியை அடைவதில் இருந்து பின்வாங்குகிறது என்ற முடிவுக்கு விரைவாக வரத் தொடங்கினார். இறுதியில் அவர் பாசிசத்தை ‘உச்ச ஜனநாயக விரோதம்’ என்று விவரித்தார். இதனூடாக ஜனநாயகம் குறித்த வரையரைகளைக் கேள்விக்குள்ளாக்கினார். இதன் பின்னணியில், சில ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் செல்வாக்குப் பெற்ற ஒரு கதையாடலை நினைவுபடுத்தல் பொருத்தம். “இலங்கையை நாங்கள் ஒழுக்கமான சமூகமாக உருமாற்ற வேண்டும். அதுவே வினைத்திறனான சமூகமாய் மலரும். அதற்கு எமது உரிமைகளை இழக்கத் தயாராக இருக்க வேண்டும்” என்று ‘வியத்மக’ அமைப்பினர் தொடர்ந்து கூறினர். அதன் வழித்தடத்திலேயே கோட்டாபய ராஜபக்‌ஷவின் வருகை நிகழ்ந்தது. இலங்கைக்கு தேவை ஒரு சர்வாதிகாரியே; ஜனநாயகம் எங்கள் நாட்டு மக்களுக்குச் சரிவராது போன்ற பல உரையாடல்களை நாம் கேட்டிருக்கிறோம். அதன் பலன்களையும் அனுபவித்துள்ளோம். எனவே அதிவலது நிகழ்ச்சி நிரலின் ஆபத்துகள் குறித்து, எச்சரிக்கையாய் இருப்பது நல்லது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வலதுசாரி-தீவிரவாதத்தின்-நிழலில்-01-முசோலினியின்-நூறு-ஆண்டுகளின்-பின்னர்/91-307360
  5. சீனா: புதிய கூட்டாளிகளும் பழைய எதிரிகளும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ சீன கம்யூனிஸ்ட் கட்சி, அதன் 20ஆவது தேசிய காங்கிரஸை ஒக்டோபர் 16 முதல் ஒக்டோபர் 22 வரை நடத்தியது. ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இம்மாநாட்டில், கட்சியின் 96 மில்லியன் உறுப்பினர்களின் பிரதிநிதிகள், அதன் உயர்மட்ட தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் கட்சிக்கு எதிர்கால திசையை அமைப்பதற்கும் கூடினார்கள். இந்த ஆண்டு காங்கிரஸின் முக்கிய கருப்பொருள்களில் ஒன்று ‘நவீனமயமாக்கலுக்கான சீனாவின் பாதை’ மூலம், நாட்டின் ‘புத்துணர்ச்சி’ ஆகும். இம்மாநாட்டுக்கு, அதன் பொதுச் செயலாளரான ஷி ஜிங்பிங் சமர்ப்பித்த அறிக்கையில், சீனாவை ‘ஒரு நவீன சோசலிச நாடாக’ கட்டியெழுப்புவதற்கான முன்னோக்கிய வழியை வரைந்துள்ளதாகத் குறிப்பிட்டுள்ளார். 64 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையானது, சீனாவின் அபிவிருத்தியையும் நாகரிகமான சமூக விழுமியங்களையும் கொண்ட ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதையும் பற்றியதாக அமைந்துள்ளது. இந்த முன்மொழிவுகள், சீனாவுக்கு மட்டுமல்ல; ஏனைய மூன்றாமுலக நாடுகளுக்குமானவை. இந்த அறிக்கை இரண்டு விடயங்களை முன்மொழிகிறது. முதலாவது, தொடங்கியுள்ள ‘சோசலிச நவீனமயமாக்கலை’ 2020 முதல் 2035 வரையான காலப்பகுதிக்குள் நிறைவு செய்தல். இரண்டாவது, ‘அமைதியான நவீனமயமாக்கல்’ மூலம் சீனாவை வளமான, வலுவான, ஜனநாயக, பண்பாட்டு ரீதியாக முன்னேறிய, இணக்கமான ‘நவீன சோசலிச நாடாக’ உருவாக்குதல். இதை 2049 வரை (மக்கள் சீனக் குடியரசு நிறுவப்பட்டதன் நூற்றாண்டு) நிலைநிறுத்தல். இவற்றை எவ்வாறு சாத்தியமாக்குவது என்பதற்கான விரிவானதும் விளக்கமானதுமான வரைபடத்தை இவ்வறிக்கை கொண்டுள்ளது. இன்று எதிரிகளையும் நண்பர்களையும் கொண்ட உலகில், தலையாய பொருளாதார சக்தியாக சீனா வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி, திடீரென்று ஏற்பட்டதல்ல. அதன் பின்னால், மிகக் கவனமான திட்டமிடலும் உழைப்பும் மக்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பும் இருக்கிறது. 1949இல் மாஓ சேதுங் தலைமையில், சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தபோது, அந்த நாடு உலகின் 11ஆவது ஏழை நாடாக இருந்தது. இன்று உலகின் முதன்மையான பொருளாதார வல்லரசாக வளர்ந்துள்ளது. இம்மாநாட்டின் வழி, மூன்றாவது முறையாக சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதியாக ஷி ஜிங்பிங் தெரிவாகியுள்ளார். மாஓ சேதுங்குக்குப் பிறகு, ஒரு தசாப்தத்துக்கு மேல் பதவிவகிக்கும் முதலாவது ஜனாதிபதியாக ஷி ஜிங்பிங் உருவெடுத்துள்ளார். இவர் 2012இல் கட்சியின் 18ஆவது தேசிய காங்கிரஸில் பொதுச் செயலாளராகத் தெரிவாகி, மார்ச் 2013இல் சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர், நாடு குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் சந்தித்துள்ளது. பொருளாதார ரீதியாக, சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இருமடங்காக உயர்ந்துள்ளது, 2013 இல் 58.8 டிரில்லியன் யுவானிலிருந்து 2021 இல் 114.37 டிரில்லியன் யுவானாக வளர்ந்து, அதே காலகட்டத்தில், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டுக்கு 6.6 சதவிகிதம் என்ற விகிதத்தில் விரிவடைந்தது. இதற்கிடையில், நாட்டின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2013 மற்றும் 2021க்கு இடையில் கிட்டத்தட்ட இருமடங்கானது. உலகப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, 2021ஆம் ஆண்டில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18.5 சதவீதமாக இருந்தது, மேலும், 2013 முதல் 2021 வரையிலான உலக பொருளாதார வளர்ச்சியில் 30 சதவீதத்துக்கு சீனா காரணமாக இருந்தது. சீனாவும் 2021இல் உலக பொருட்களின் 30 சதவீதத்தை உற்பத்தி செய்தது. இவ்வறிக்கையின் மையக் கருத்தானது, ‘அமைதியான நவீனமயமாக்கலை எவ்வாறு நிறைவேற்றுவது’ என்பதாகும். இதை ஷி ஜிங்பிங் பின்வருமாறு சுருக்கமாகக் கூறினார்: “இது அனைத்து நாடுகளின் நவீனமயமாக்கல் செயல்முறைகளுக்கு பொதுவான கூறுகளைக் கொண்டுள்ளது, ஆனால், இது சீனச் சூழலுக்கான தனித்துவமான அம்சங்களால் வகைப்படுத்தப்படுகிறது. கன்பூசியன் தத்துவார்த்த அடித்தளத்தில், சீனப் பண்பாட்டுடன் மிகவும் இணக்கமாக, ‘அமைதியான நவீனமயமாக்கல்’ ஒரு முழுமையான தத்துவார்த்த அமைப்பை உள்ளடக்கியது. இதன் முக்கியான அம்சம் யாதெனில், இதுவரை மேற்குலகின் பொருளாதார மாதிரிக்கு மாற்று இல்லை என்று சொல்லப்பட்ட நிலையில், அதற்கு மாற்றாக மேற்குலக ஏகபோகத்துக்குச் சவாலான ஒரு தத்துவார்த்த மாதிரியை முன்மொழிகிறது”. இவ்வறிக்கை உணர்த்த விரும்புவது யாதெனில், ஈரானிய மாதிரி, உகண்டா மாதிரி, பொலிவியா மாதிரி போன்ற அனைத்தும் செல்லுபடியானதாகும். அதுபோலவே, சீனப் பரிசோதனையும் செல்லுபடியாகும். இந்த அறிக்கையின் அடிப்படை, நாடுகள் தத்தம் வளர்ச்சியை நோக்கி, ஒரு சுயாதீனமான பாதையைத் தொடர்வது முக்கியமாகும். சமீபத்திய வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினால், அமெரிக்க நலன்களுக்கு வெளியே, வளர்ச்சியடைய முயலும் ஒவ்வொரு நாடும், எண்ணற்ற வழிகளில் எவ்வாறு பயமுறுத்தப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது. இந்நாடுகள், வண்ணப் புரட்சிகள், ஆட்சி மாற்றம், சட்டவிரோதத் தடைகள், பொருளாதார முற்றுகை, நேட்டோ நாசவேலை, படையெடுப்பு ஆகியவற்றின் இலக்காக மாறுகின்றன. சீனா முன்மொழியும் மாற்றானது, இன்று உலகளாவிய ரீதியில் வளர்ச்சியடையும் நாடுகளில் எதிரொலிக்கிறது. ஏனெனில், 140க்கும் மேலான நாடுகளில், மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக சீனா உள்ளது. இந்நாடுகளால், சீனாவின் உயர்தர பொருளாதார வளர்ச்சி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தன்னிறைவு போன்ற கருத்துகளை எளிதில் புரிந்து கொள்ள முடியும். இந்த அறிக்கை, சீனாவுக்கான திட்டவட்டமான கட்டாயத்தை வலியுறுத்தியது. சீனாவின் தொழில்நுட்ப மேலாண்மையை, திட்டவட்டமாகக் குறிக்கிறது. சீனாவின் தொழில்நுட்ப மேலாண்மை, எவ்வாறு சீனாவின் தன்னிகரில்லா நிலைக்கு வழிசெய்யும் என்பதையும் கோடிட்டுக்காட்டுகிறது. குறிப்பாக, குறைக்கடத்திகள் உற்பத்தியில் தடம் புரள எந்தத் தடையும் இல்லை என்பதால், தொழில்நுட்ப தன்னம்பிக்கையை விரைவுபடுத்துகிறது. குறைக்கடத்திகள் மற்றும் அவற்றை உற்பத்தி செய்வதற்கான உபகரணங்களில், அதன் தொழில்நுட்ப சுதந்திரத்தை விரைவுபடுத்துவதற்கான சீனாவின் உந்துதலை முடக்குவதற்கு அமெரிக்கா கங்கணம் கட்டியுள்ளது. அதன் ஒரு பகுதியே, சீனாவின் குறைக்கடத்திகள் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் ஆகும். உலகளாவிய குறைக்கடத்தி தொழிற்றுறையின் அளவு, தற்போது 500 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாக உள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் அதன் அளவு ஒரு டிரில்லியன் டொலர் என இரட்டிப்பாக்க வாய்ப்புள்ளது. 2030ஆம் ஆண்டளவில் குறைக்கடத்தி தொழிற்றுறை வளர்ச்சியில், சுமார் 40 சதவீதத்தை சீனா வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது, அமெரிக்காவின் தலையாய இடத்தை சீனாவுக்கு வழங்கும். இதுவே, அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கான உடனடி தூண்டுதலாகவும், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளிடம் இருந்து சீனாவின் தொழிற்றுறையை முன்னணியில் இருந்து தடுக்கும் முயற்சியாகவும் உள்ளது. அயலுறவுக் கொள்கை தொடர்பில், அறிக்கையில் மிகத் தெளிவாக உள்ளது. சீனா எந்த விதமான ஒருதலைப்பட்சவாதத்துக்கும் குறிப்பிட்ட நாடுகளுக்கு எதிராக குறிவைக்கப்பட்ட குழுக்கள் மற்றும் பிரத்தியேக குழுக்களுக்கும் எதிரானது. தற்போதுள்ள உலகளாவிய நிர்வாக முறையானது, மூன்றாமுலக நாடுகளுக்கு மிகவும் நியாயமற்றது. சீனா தன்னை ஒரு நாகரிக அரசாகவும் ஒரு சோசலிச நாடாகவும் உலகின் முன்னணி வளரும் நாடாகவும், ஒரே நேரத்தில் கருதுகிறது. உலகில் ஆதிக்கம் செலுத்துவதில், தங்கள் நாடு ஆர்வம் காட்டவில்லை என்று சீனா தொடர்ச்சியாகக் கூறிவருகிறது. மனிதகுலத்தின் இக்கட்டான பிரச்சினைகளைத் தீர்க்க, மற்ற நாடுகளுடன் ஒத்துழைக்க சீனா விரும்புகிறது. உதாரணமாக, ‘ஒருவார் ஒருவழி’ முன்முயற்சியானது, 2013 இல் ‘வெற்றி-வெற்றி’ (இருதரப்புக்கு) ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டின் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. மேலும், இதுவரை 150 நாடுகளில் ஒரு டிரில்லியன் டொலர் முதலீடு மற்றும் கட்டுமான ஒப்பந்தங்களுடன் மிகவும் தேவையான உட்கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. காலநிலை பேரழிவைச் சமாளிப்பதில் சீனாவின் ஆர்வம், கடந்த பத்தாண்டுகளில், உலகின் புதிய காடுகளில் கால் பகுதியை மீளவனமாக்கி, மரங்களை நட்டுள்ளதோடு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடு மற்றும் மின்சார வாகன உற்பத்தியில் உலகத்தின் முதன்மையாளராகத் திகழ்கின்றது. சீனாவின் பொருளாதாரக் கூட்டணிகள் இன்று அதிகரிக்கின்றன. உலகளாவிய ரீதியில், சீனாவின் பொருளாதாரச் செல்வாக்கு, அமெரிக்காவை விஞ்சியுள்ளது. இது, மேற்குலகுக்குப் புதிய நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது. சீனாவுக்குப் புதிய நண்பர்களைத் தந்துள்ளது. உலகை ஆட்டிப்படைக்கும் பொருளாதார நெருக்கடியும், உக்ரேன் யுத்தமும் சீனாவை முதன்மையான நிலைக்குத் தள்ளியுள்ளன. ஷியின் அடுத்த ஐந்து ஆண்டுகள் உலகின் எதிர்காலத்தையே தீர்மானிக்க வல்லன. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சீனா-புதிய-கூட்டாளிகளும்-பழைய-எதிரிகளும்/91-306993
  6. உலக பொருளாதார நெருக்கடி: பழி ஓரிடம்; பாவம் இன்னோரிடம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ உலகளாவிய ரீதியில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. அது ‘சுனாமி’ மாதிரி, தொடர்ச்சியாகப் பல நாடுகளைத் தாக்கிய வண்ணமுள்ளது. பணவீக்கத்துக்கு ஆளாகும் ஒவ்வொரு நாட்டிலும், பொருளாதார சீர்கேடு உருவாக்குகிறது. இது பல சந்தர்ப்பங்களில் கடுமையான அரசியல் நெருக்கடிக்கு வழிசெய்கிறது. எரிசக்தி விலைகளின் அதிகரிப்பு, ஐரோப்பா எங்கும் எதிர்ப்பலைகளைத் தோற்றுவித்துள்ளது. எரிசக்தியின் அதிக விலை அதிகரிப்புக்கு எதிரான தொடர்ச்சியான போராட்டங்கள், பெல்ஜியம் முதல் செக் குடியரசு வரை நடத்தப்பட்டுள்ளன. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, பிரான்ஸ் மக்கள், பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். எரிவாயு மற்றும் மின்சார விலைகள் ‘மலிவு நிலை’க்கு குறைக்கப்படும் வரை, எரிசக்தி கட்டணங்களை செலுத்த மறுத்து வேலைநிறுத்தத்தில் நுழையுமாறு, பிரித்தானியக் குடிமக்களுக்கு, ‘பணம் செலுத்த வேண்டாம் இயக்கம்’ (Don’t Pay UK movement) வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பாவில் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்த எரிசக்தி விலைகள் குறித்து, தொடர்ச்சியாக கண்டங்கள் எழுந்துவருகின்றன. பல ஐரோப்பிய அரசுகள், சுவட்டு எரிபொருட்களுக்குத் திரும்பியிருப்பதானது, காலநிலை மாற்றச் செயற்பாட்டாளர்களின் எதிர்ப்புகளைத் தூண்டியுள்ளது. இந்த உலகளாவிய பணவீக்கமும் அது உருவாக்கும் வாழ்க்கைத் தரத்தின் கீழ்நோக்கிய அழுத்தமும், உக்ரேன் போரால் ஏற்பட்டதாக அமெரிக்கா கூறுகிறது. இதன்மூலம், இப்போது உலகின் பொருளாதார நெருக்கடிக்கு ரஷ்யாவே காரணம் என்பதன் மூலம், ரஷ்யாவுக்கு எதிராக நாடுகள் திரளவேண்டும் என எதிர்பார்க்கிறது. அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டை ஆழமாக நோக்கினால், உண்மை வேறொரு திசையில் இருப்பது புரியும். உக்ரேன் போர், பெப்ரவரி 24ஆம் திகதி தொடங்கியது, ஆனால், அமெரிக்க பணவீக்கம், ஏற்கெனவே கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கடுமையாகவும் தொடர்ச்சியாகவும் உயர்ந்தவண்ணம் இருந்தது. 2020 மே மாதத்தில் அமெரிக்காவில் பொருட்களின் விலை உயர்வு 0.1% ஆக இருந்தது. ஆனால், உக்ரேன் போருக்கு முன்பு, அதாவது 2022 ஜனவரிக்குள் விலைகள் 7.5% ஆக உயர்ந்தன. போருக்கு முன்பு அமெரிக்க பணவீக்கம் 7.4% உயர்ந்தது. ஓகஸ்ட் மாதத்தில், பொருட்களின் விலை உயர்வு 8.3% ஆக இருந்தது, இது போர் தொடங்கியதில் இருந்து 0.8% மட்டுமே உயர்ந்துள்ளது. 90% க்கும் அதிகமான அமெரிக்க விலை உயர்வுகள் உக்ரேன் போருக்கு முன்பு நடந்தன. எனவே, உலகளாவிய பணவீக்கத்துக்கும் அதன் விளைவாக வாழ்க்கைத் தரம் குறைவதற்கும் ரஷ்யாவை, அமெரிக்கா குற்றம் சாட்டும்போது விமர்சன ரீதியாக சிந்திக்க வேண்டியது அவசியம். வட்டி விகிதங்களை விரைவாக உயர்த்துவதன் மூலம், அமெரிக்கா பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முனைந்தது. அமெரிக்க டொலரின் மதிப்பு செயற்கையான முறையில் அதிகரித்தது. இதனால், மேற்குலக நாடுகள் பணவீக்கத்தைச் சந்தித்தன. இதேவேளை, அமெரிக்க டொலரில் தங்கியிருக்கும் வளர்முக நாடுகள் இன்னும் மோசமான பணவீக்கத்துக்குத் தள்ளப்பட்டன. அமெரிக்காவின் இந்தச் செயலால், இலங்கை போன்ற நாடுகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதை நான்கு அடிப்படைகளில் நோக்கலாம். முதலாவதாக, உயரும் அமெரிக்க வட்டி விகிதங்கள், வளரும் நாடுகளின் நாணயங்களுக்கு எதிராக, டொலரின் நாணயமாற்று விகிதத்தை அதிகரிக்கின்றன. வழக்கமாக, அமெரிக்க டொலரில் நிர்ணயிக்கப்படும் இறக்குமதி விலைகள், இதனால் கணிசமாக அதிகரிக்கின்றன. இது வளர்முக நாடுகளுக்கு பணவீக்கத்தை மோசமாக்குகிறது. இரண்டாவதாக, வளர்முக நாடுகளின் நாணயங்களுக்கு எதிராக, டொலரின் உயர்வானது, அந்நாடுகள் சர்வதேச கடன்களை திருப்பிச் செலுத்துவதில் சிக்கல்களை ஏற்படுத்துகின்றது. சர்வதேச கடன்கள், அமெரிக்க டொலர்களில் பெறப்பட்டவையாகும். எனவே, இது வளர்முக நாடுகளுக்கு அந்நியச் செலாவணி நெருக்கடியை ஏற்படுத்துகின்றன. மூன்றாவதாக, தங்கள் நாணயமாற்று விகிதங்களில் மிகக் கடுமையான வீழ்ச்சியைத் தடுக்கவும், தங்கள் பொருளாதாரங்களில் இருந்து அமெரிக்காவுக்கு மூலதனம் வெளியேறுவதைத் தடுக்கவும் வளர்முக நாடுகள் தங்கள், வட்டி விகிதங்களை உயர்த்துகின்றன. இவ்வாறு வட்டிவீதம் உயர்த்தப்படுவதானது, அப்பொருளாதாரத்தை மந்தநிலையை நோக்கித் தள்ளுகின்றது. நான்காவதாக, மேற்குலக நாடுகளில் ஏற்பட்டுள்ள மந்தநிலையானது, பொருட்களுக்கும் சேவைகளுக்குமான கேள்வியைக் குறைக்கின்றது. இதனால், மேற்குலக நாடுகளுக்கு பொருட்களையும் சேவைகளையும் ஏற்றுமதி செய்யும் வளர்முக நாடுகள் நெருக்கடிக்கு உள்ளாகின்றன. அமெரிக்காவின் பணவீக்கத்துக்கு என்ன காரணம் என்ற வினா எழுவது இயல்பானது. இது பற்றி அமெரிக்காவின் முன்னாள் திறைசேரி செயலாளர் லாரி சம்மர்ஸ், 2021 மேயில் பின்வருமாறு எச்சரித்திருந்தார்: “நாங்கள் பணவீக்கப் பக்கத்தில் மிகவும் கணிசமான அபாயங்களை எடுத்துக்கொள்கிறோம். நாங்கள் பணத்தை அச்சிடுகிறோம்; அரசாங்கப் பத்திரங்களை உருவாக்குகிறோம்; மேலும் நாங்கள் முன்னெப்போதுமில்லாத அளவில் கடன் வாங்குகிறோம்” என்றார். அமெரிக்க வரவு-செலவுத் திட்டத்தின் பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 26% ஆக உயர்ந்தது. அமெரிக்க பண விநியோகத்தில் 27%ஐ எட்டியது. இவை இரண்டும், அமெரிக்க சமாதான கால வரலாற்றில் மிக அதிகமாகும். தேவையில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டு, விநியோகத்தில் பெரிய அதிகரிப்பு இல்லாததால், அமெரிக்க பணவீக்கம் அதிகரித்து வருவது தவிர்க்க முடியாதாக உள்ளது. இங்கு பணவீக்கத்தின் சமூக பங்கைப் புரிந்துகொள்வதும் முக்கியம். பணவீக்கம், தேவை - விநியோகத்தை விட அதிகமாக இருப்பதைக் காட்டியது. இது பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையில், மேல்நோக்கிய அழுத்தத்தை ஏற்படுத்தியது. எனவே, வழங்கல் அதிகரிப்பு இல்லாததால், தேவை குறைக்கப்பட்டது. இங்கு, முக்கிய சமூகக் கேள்வி யாதெனில், இதை சமாளிக்க எந்த அமெரிக்க அரசாங்கத்தின் எந்தச் செலவினங்கள் குறைக்கப்படும்? மீண்டுமொருமுறை மீதமுள்ள சமூகநலன்களை வெட்டுவதையே, அமெரிக்கா செய்தாக வேண்டும். இது அமெரிக்கர்களின் வாழ்க்கைத் தரத்தை இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளும். தனக்கு அடுத்துள்ள ஒன்பது நாடுகளின் மொத்த இராணுவச் செலவை விட, அமெரிக்காவின் இராணுவச் செலவு உலகிலேயே அதிகம். உலகில் உள்ள மற்ற பொருளாதாரங்களைக் காட்டிலும் அமெரிக்கா தனது பொருளாதாரத்தின் ஒரு பங்காக, சுகாதாரப் பாதுகாப்பிற்கு அதிக விகிதத்தை செலவிடுகிறது. ஆனால், அமெரிக்கர்களின் ஆயுட்காலம் 77 ஆண்டுகள் மட்டுமே! மற்ற உயர் வருமானம் கொண்ட பொருளாதார நாடுகளின் சராசரி ஆயுட்காலம் 83 ஆண்டுகள் ஆகும். ஆனால், அமெரிக்க இராணுவச் செலவைக் குறைப்பதோ முழுமையான இலவச சுகாதாரப் பாதுகாப்பை நியாயப்படுத்துவதோ, அமெரிக்காவில் உள்ள ஆயுத உற்பத்தியாளர்கள், பல்தேசிய மருந்துக் கம்பெனிகளின் சொந்த நலன்களுக்கு எதிரானதாகும். அதேவேளை, அமெரிக்க இராணுவ செலவினங்களைக் குறைப்பது, அதன் வெளிநாட்டு இராணுவக் கொள்கைக்கு நெருக்கடியைக் கொடுக்கும். ஆயுத உற்பத்தியாளர்கள், பல்தேசிய மருந்து நிறுவனங்களை ஆதரிப்பதில் அமெரிக்க அரசாங்கத்தின் சொந்த நலன்கள் பின்னிப் பிணைந்துள்ளன. எனவே அத்தகைய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாது என்பதை உறுதியாக நம்பலாம். அமெரிக்கர்களே மிகப்பெரிய நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள். ஆனால், அமெரிக்கா தொடர்ந்தும் பல மில்லியன் கணக்கில் பணத்தையும் ஆயுதங்களையும் உக்ரேனுக்கு வழங்குகிறது. அதன்மூலம், உலகின் கவனம் அங்குள்ளவாறு பார்த்துக் கொள்ளப்படுகிறது. ஆனால், உலகளாவிய நெருக்கடி எம்காலடியில் வெடிகுண்டாய் வெடிக்கக் காத்திருக்கிறது. இப்போது உலகளாவியுள்ள இந்தப் பொருளாதார நெருக்கடி புதிதல்ல. ஒரு நூற்றாண்டுக்கு முன்னர், அமெரிக்க பெடரல் ரிசர்வ் உருவாக்கப்பட்டதில் இருந்து, ஒவ்வொரு பெரிய நிதிச் சந்தை சரிவும் அவ்வங்கியின் அரசியல் நோக்கங்களுக்காக வேண்டுமென்றே தூண்டப்பட்டு வந்திருக்கிறது. இன்று நிலைமை வேறுபட்டதல்ல! தெளிவாக அமெரிக்க பெடரல் அதன் வட்டி விகித ஆயுதத்துடன், மனித வரலாற்றில் மிகப் பெரிய ஊக நிதிக் குமிழியை வெடிக்க வைத்துள்ளது. ஆனால், சோகம் யாதெனில் அது உருவாக்கிய குமிழியையே இந்த வட்டிவீத அதிகரிப்பு இல்லாமல் செய்துள்ளது. 1931ஆம் ஆண்டு ஆஸ்திரிய கிரெடிடன்ஸ்டால்ட் அல்லது செப்டெம்பர் 2008 இல் லெஹ்மன் பிரதர்ஸ் தோல்வி போன்ற உலகளாவிய விபத்து நிகழ்வுகள் எப்போதும் சுற்றளவில் தொடங்குகின்றன. அவ்வாறான ஒன்றை நோக்கியே நாம் நகர்கிறோம். ஆனால், உக்ரேன் யுத்தம் நல்லதொரு கவனக் கலைப்பான். ரஷ்யா மீது எல்லாப் பழியையும் போட வேண்டியதுதான். இவை அனைத்தையும் நன்கறிந்தே ‘வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்’ ஆசிரியர் குழு பின்வருமாறு குறிப்பிட்டது. ‘இது புட்டினின் பணவீக்கம் அல்ல; இந்தப் பணவீக்கம் வொஷிங்டனில் உருவாக்கப்பட்டது’. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/உலக-பொருளாதார-நெருக்கடி-பழி-ஓரிடம்-பாவம்-இன்னோரிடம்/91-306624
  7. புலம்பெயர் மக்களின் உதவி: இன்னும் எவ்வளவு காலத்துக்கு? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ புலப்பெயர்வு ஏற்படுத்திய முக்கியமான விளைவுகளில் ஒன்று, இலங்கையில் இருக்கின்ற உறவுகளுக்கான தொடர்ச்சியான நிதியுதவியை சாத்தியப்படுத்தியமை ஆகும். கடந்த அரைநூற்றாண்டாக, இச்செயற்பாடு தொடர்ந்த வண்ணம் உள்ளது. இலங்கையின் வடக்கு - கிழக்கு பகுதிகள், முழுமையாக இந்த வெளிநாட்டு உதவியால் பயன் அடைந்தன என்று சொல்லவியலாது. ஆனால், வடக்கு - கிழக்கின் பொருளாதார இயங்கியலில், நாட்டுக்குள் வருகின்ற பணம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வெளிநாட்டுப் பணம், குறிப்பாக வடக்கில் பல்வேறுபட்ட தாக்கங்களை கடந்த ஒரு தசாப்த காலத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. இன்றுவரை விரிவாக ஆய்வுக்குட்படாத ஒன்றாகவே இது இருக்கிறது. இந்தப் புலம்பெயர் உதவி, என்றென்றைக்குமானது அல்ல! ஆனால், அதுகுறித்த உணர்வு சமூகத்தில் இருக்கின்றதா என்ற மிகப்பெரிய வினா தொக்கி நிற்கிறது. இன்றுவரை பேசாப்பொருளாய், இன்னும் சரியாகச் சொல்வதானால், பேசவிரும்பாத பொருளாய் இருக்கின்றது. ஈழத்தமிழரின் புலம்பெயர்வின் தொடக்கங்கள் உயர்கல்வி, மேநிலையாக்கம் ஆகியவற்றையே மையமாகக் கொண்டிருந்தது. 1980களில் முனைப்படைந்த இனமுரண்பாடு, போராக மாற்றமடைந்ததைத் தொடர்ந்து, பலருக்கு வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான வாய்ப்பையும் அகதி அந்தஸ்ததைப் பெற்றுக்கொள்வதற்கான வழியையும் ஏற்படுத்திக் கொடுத்தது. இவ்வாறு வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்தோரில் பெரும்பாலானோர், பொருளாதார அகதிகளாவர். இன்று இந்த வெளிநாட்டுப் பணம், ஐந்து விதமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. முதலாவது, பொருளாதார வலுவை வழங்குவதன் மூலம், பலர் கற்பதற்கும் குடும்பங்கள் உயிர்வாழ்வதற்கும் நெருக்கடிகளின் போது தப்பிப் பிழைப்பதற்குமான வாய்ப்பை வழங்கியுள்ளது. இரண்டாவது, உள்ளோருக்கும் இல்லாதோருக்கும் இடையிலான மிகப்பெரிய இடைவெளியையும் சமூக அசமத்துவத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மூன்றாவது, வெளிநாட்டுப் பணத்தில் தங்கிவாழும் சமூகமொன்றையும் வெளிநாட்டுப் பணத்தின் மீதான தொடர்ச்சியான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நான்காவது, உழைப்பின் மதிப்பின் மீதான மரியாதை குறைந்துள்ளதோடு, வெளிநாட்டுக்குப் புலம்பெயருதலே ‘வளமான வாழ்வுக்கு வழி’ என்ற எண்ணப்பாங்கையும் உருவாக்கியுள்ளது. ஐந்தாவது, பணத்தின் மதிப்புப் தெரியாமல், ஆடம்பரங்களுக்கும் அளவு கடந்த நுகர்வுப் பண்பாட்டுக்கும் வித்திட்டுள்ளது. இந்த ஐந்து விளைவுகளும், தனித்தனியாக ஆழமாக ஆராயப்பட வேண்டியவை. ஆனால், இன்றைய காலச்சூழலில் இரண்டு முக்கியமான வினாக்களூடு, இந்தக் கட்டுரையை அணுக விரும்புகிறேன். முதலாவது, இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த ‘வெளிநாட்டுப் பணத்தின்’ வருகை சாத்தியம்? இரண்டாவது, அதிகரித்துள்ள உலகளாவிய பொருளாதார நெருக்கடி, இவ்வாறு அனுப்பப்படும் ‘வெளிநாட்டுப் பணத்தில்’ ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன? கடந்த அரைநூற்றாண்டுகளாக இலங்கைக்கு பணம் அனுப்பியவர்கள், இன்னமும் அனுப்புபவர்கள் புலம்பெயர்ந்த முதலாவது தலைமுறையினர் ஆவர். இதை அவர்கள் ஒரு கடமையாகச் செய்தார்கள்; செய்கிறார்கள். இந்த உதவி பல்வகைப்பட்டதாக இருக்கிறது. உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு, ஊருக்கு, நலிந்தோருக்கு என அது இன்றுவரை தொடர்கிறது. புலம்பெயர்ந்து வாழும் பலர், தங்கள் தேவைகளைக் குறைத்து, ஆசைகளை இறுத்து, இன்றுவரை இப்பொருளாதார உதவியைச் செய்கிறார்கள். இந்த முதலாம் தலைமுறையின் காலம், விரைவில் முடிவுக்கு வருகிறது. பலர் ஓய்வு பெற்றுவிட்டார்கள்; நோயாளியாகி உள்ளார்கள்; இன்னும் பலர் விரைவில் ஓய்வு காலத்தை நெருங்குகிறார்கள். எனவே, இவர்களால் நீண்டகாலத்துக்குத் தாய்நாட்டுக்குப் பணம் அனுப்ப இயலாது. இரண்டாம், மூன்றாம் தலைமுறையினருக்கும் இலங்கைக்குமான உறவு மிகவும் குறைவு. அவர்கள், தங்களது பெற்றோர்கள் செய்த பணியை ஒருபோதும் செய்யப் போவதில்லை. எனவே, இலங்கைக்கு அனுப்பப்படும் வெளிநாட்டுப் பணத்தின் அளவு, இன்னும் ஐந்து தொடக்கம் 10 ஆண்டுகளுக்குள் பாரிய சரிவைச் சந்திக்கும். 2002ஆம் ஆண்டு, சமாதான காலத்துக்குப் பின்னர் புலம்பெயர்ந்தவர்கள், இன்னமும் வலுவான உழைப்பாளிகளாக இருக்கிறார்கள். இன்றைய உலகளாவிய பொருளாதார நெருக்கடி, அவர்களது சேமிப்பில் மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. 2023ஆம் ஆண்டு பொருளாதார ரீதியாக, மிகவும் கடினமான ஆண்டாக இருக்கும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர்களாலும் முன்னர் அனுப்பியளவு பணத்தை, இலங்கையில் உள்ள உறவுகளுக்கு அனுப்ப இயலுமா என்ற வினா இருக்கின்றது. இவ்விரண்டும், இலங்கையில் வெளிநாட்டுப் பணத்தில் தங்கிவாழும் மக்களுக்கான எச்சரிக்கைக் குறிகள் என எடுத்துக்கொள்ள வேண்டும். புலம்பெயர்ந்து போனவர்களை, ஒரு ‘பணம் காய்க்கும் மரம்’ போல பார்க்கும் பார்வை, காலங்காலமாக இருந்து வருகிறது. “நீங்கள் போய்த் தப்பிவிட்டீர்கள்; நாங்கள் கஷ்டப்படுகிறோம்” என்ற வகையிலான சொல்லாடல்கள் மூலம், புலம்பெயர்ந்தோரைக் குற்ற உணர்வுக்கு ஆட்படுத்தும் செயல்கள் நடந்துள்ளன; இன்னமும் நடக்கின்றன. இவ்விடத்தில், கவிஞர் சி. சிவசேகரம் எழுதிய ‘பணங்காய்ச்சி மரம்’ என்ற கவிதையை இங்கு தருவது இந்தக் கட்டுரை குறித்த புரிதலை வளப்படுத்தும். பணங்காய்ச்சி மரமேறிக் காய்பிடுங்கவும் மரத்தை உலுப்பிக் காய் பொறுக்கவும் பணங்காய்ச்சி மரமிருக்கும் இடந்தேடி அவர்கள் எல்லோரும் தான் போனார்கள் ஆண்களும் போனார்கள், பெண்களும் போனார்கள். வலியவர்களும் மெலியவர்களும் போனார்கள். கற்றவர்களும் கல்லாதவர்களும் நல்லவர்களும் அல்லாதவர்களும் உள்ளவர்களும் இல்லாதவர்களுமாக அவர்கள் எல்லோரும் போனார்கள். பணங்காய்ச்சிமரம் டொலர், டொயிஷ்மார்க், யென், பவுண் என வண்ண வணமாய்க் காய்த்துத்தள்ளியது. பணங்காய்ச்சி மரத்தைநாடிக் கிராமத்திலிருந்து பட்டணத்துக்குப் போனார்கள். பட்டணத்திலிருந்து பெருநகரத்துக்கும் நாட்டைவிட்டு நாட்டுக்கும் போனார்கள். நடந்தும் வண்டில்களேறி நகர்ந்தும் போனார்கள். கடலிலுங் காற்றிலும் மிதந்தும் போனார்கள். குதிரைகளின் முதுகில் அமர்ந்தும் வாகனங்களின் அடியிற் பதுங்கிக்கிடந்தும் போனார்கள். மின்சாரவேலிகளைத் தாண்டிக் குதித்தும் பாதாளச் சாக்கடை வழியே குனிந்தும் போனார்கள். எப்படியெப்படிப் போகலாமோ அப்படியப்படியெல்லாம் பணங்காய்ச்சி மரத்தின் திசை நோக்கி அவர்கள் எல்லாரும் போனார்கள். ஊரைவிட்டும் உறவைவிட்டும் போவதை எண்ணி அழுதுகொண்டு போனார்கள். சிரித்துக்கொண்டு போனார்கள். சஞ்சலத்துடன் போனார்கள். சந்தேகங்களுன், நிச்சயத்துடன், நம்பிக்கைகளுடன் போனார்கள். போன எல்லோருமே எதிர்பார்ப்புகளுடன் தான் போனார்கள். பணங்காய்ச்சி மரத்துக்குப் பூசைகள், தோத்திரங்கள், பணிவிடைகள் எல்லாமே செய்தார்கள். பணங்காய்ச்சி மரம் கொஞ்சம் உண்ணவும் உடுக்கவும் கொடுத்தது. தங்குவதற்கு நிழலுங் கொடுத்தது. விளையாடவும் பொழுதைப்போக்கவும் வழிகளைக்கொடுத்தது. பிடுங்கியும் பொறுக்கியும் எடுத்த காய்களை விலையாக வாங்கிக்கொண்டது. அவர்களது சுதந்திரத்தைக் களவாடிக்கொண்டது. பணங்காய்ச்சி மரத்துக்குச் சொந்த மண்ணென்று எதுவுமில்லை என்றும் அதன் வேர்கள் உலகெங்கும் பரவி எல்லா மண்களதும் வளங்களை உறுஞ்சிக்கொள்கிறது என்றும் அறியமாட்டாதவர்கள் அறிந்து சொன்னவர்மீது எரிந்து சினந்தார்கள். பணங்காய்ச்சி மரத்துக்குப் பணிவிடை செய்வதே தங்களது பிறவிப்பயன் என்று உரத்துக் கூறினார்கள். பணங்காய்ச்சி மரத்தை நோக்கிய தங்களது பயணம் வீண்போகவில்லை என்று மெய்யாகவே அவர்கள் நம்புகிறார்கள். இன்னமும் பணங்காய்ச்சி மரத்தை நோக்கிப் போகிறவர்களை எல்லோரும்தான் வரவேற்கிறார்கள். எல்லோருந்தான் வழிமறிக்கிறார்கள். இந்தக் கவிதை புலம்பெயர் வாழ்வின் இன்னொரு பக்கத்தைச் சொல்கிறது. ஆனால், இந்தப் பக்கத்தைப் பற்றிப் பேசுவதற்கு புலம்பெயர்ந்தோரும் தயாரில்லை; விளங்கிக் கொள்வதற்கு ஊரில் உள்ளோரும் தயாரில்லை. இனிவரும் காலத்தில், இந்த வெளிநாட்டுப் பணத்தின் வருகையில் கணிசமானளவு குறைவு ஏற்படப்போவது உறுதி. இந்தப் பணம் வடபகுதியின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றுகிறது. ‘நெல்லுக்கிறைத்த நீர் புல்லுக்குமாங்கே பொசிவது போல்’, இந்தப் பணம் ஏற்படுத்தியுள்ள நுகர்வும் புதிய சாத்தியங்களும் பலருக்கு வேலைவாய்ப்புகளை, வருமானத்தை வழங்கியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. இந்தப் பின்புலத்தில், இந்த வெளிநாட்டுப் பணம் தொடர்ச்சியாக வராதுவிடின் அதை நம்பியிருப்போரின் எதிர்காலம் என்ன? உள்ளூர் பொருளாதாரத்தில் அதன் தாக்கம் என்ன? சமூகரீதியாக இது ஏற்படுத்தப்போகும் நெருக்கடிகள் என்ன போன்றன குறித்து, ஆழமாகச் சிந்திக்கத் தொடங்க வேண்டும். பெருந்தொற்றும், இலங்கையின் பொருளாதார நெருக்கடியும் சுயபொருளாதார முயலுகைகளின் தேவையை முன்னெப்போதையும் விட, வலுவாக எடுத்துக் காட்டியுள்ளன. ஆனால், இப்போதும் ‘பொருளாதார நெருக்கடி தென்பகுதிக்குத்தான், வடபுலத்திற்கல்ல’ என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். தற்போதைய பொருளாதார நெருக்கடி, உலகளாவியதாக உருமாறுகிறது. இது இன்னொரு நெருக்கடியை நோக்கி உந்தித் தள்ளுகிறது. எனவே, எமக்கான பொருளாதார மாதிரிகள், தப்பிப்பிழைப்பதற்கான வழிகள், நீண்டகாலத் திட்டங்கள் குறித்து சிந்தித்தாக வேண்டும். அதற்கான தொடக்கம் நாட்டுக்குள் வருகின்ற வெளிநாட்டுப் பணத்துக்கு ஒரு காலாவதித் திகதி உண்டு என்ற உண்மையை ஏற்றுக் கொள்வதே! எமது பொருளாதார இயங்கியலின் தன்மை மாறியாக வேண்டும். தொடர்ந்தும் ஒரு தங்குநிலைப் பொருளாதாரமாகக் காலம் தள்ளவியலாது. அவ்வாறு காலம் தள்ள நினைத்தால், அது உயிர்ப்பான செயலூக்கமாக இருக்காது. அது, நீண்டகாலத்துக்கு தலைமுறைகள் தாண்டிப் பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்தத் தங்குநிலை பொருளாதாரத்துக்கான முடிவுக்கான முன்னுரையை எழுத, நாமெல்லோரும் தயாராக இருக்கிறோமா? https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/புலம்பெயர்-மக்களின்-உதவி-இன்னும்-எவ்வளவு-காலத்துக்கு/91-306364
  8. உலகளாவிய உணவு நெருக்கடி: தற்செயலானதா, திட்டமிடப்பட்டதா? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ், அண்மையில் ‘பசியின் சூறாவளி மற்றும் உலகளாவிய உணவு முறையின் உருக்குலைவு’ குறித்து கவலையுடன் பேசினார். விநியோகச் சங்கிலிகள் சீர்குலைந்து உணவு, எரிபொருள், உரங்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருவதாகவும், இது ஏழைகளைக் கடுமையாகப் பாதித்து, உலகம் முழுவதும் அரசியல் ஸ்திரமின்மை, அமைதியின்மைக்கு வித்திடுவதாகவும் அவர் கூறினார். உலகளாவிய உணவு நெருக்கடி பற்றி எமக்குச் சொல்லப்பட்டாலும், நிலையான உணவு முறைகள் குறித்த சர்வதேச நிபுணர்கள் குழுவின் கூற்றுப்படி, தற்போது போதுமான உணவு உள்ளது; உலகளாவிய உணவு வழங்கல் பற்றாக்குறை அபாயம் இல்லை என்பதாகும். உணவுப் பொருட்கள் ஏராளமாக இருந்தாலும், விலைவாசி உயர்வைக் காண்கிறோம். பிரச்சினை, உணவுப் பற்றாக்குறையல்ல; மாறாக, உணவுப் பொருட்களின் மீதான பல்தேசிய நிறுவனங்களின் இலாபவெறி ஆகும். உலகளாவிய உணவு முறையை கையாளுபவர்களாக, பல்தேசிய நிறுவனங்கள் மாறிவிட்டன. இவற்றின்மீது எதுவித கட்டுப்பாட்டையும் விதிக்க இயலாதவாறு, அரசுகள் செயலிழந்துள்ளன. இந்த இலாபவெறிக்கு, உக்ரேனில் இடம்பெறும் போர் நல்லதொரு சாட்டாகியுள்ளது. உக்ரேன் போர் என்பது, ஒரு புவிசார் அரசியல், வர்த்தகம், சக்தி மூலங்களைக் கட்டுப்படுத்துவதற்கான மோதல். இது, ரஷ்யாவிலிருந்து ஐரோப்பாவை பிரிக்க முயலுவதன் மூலம், ரஷ்யாவுக்கும் ஐரோப்பாவுக்கும் எதிராக, அமெரிக்கா ஒரு மறைமுகப் போரில் ஈடுபடுவதைப் பற்றியது. ஐரோப்பாவுக்கு தீங்கு விளைவிப்பதற்காக, ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்து, அதை மேலும் அமெரிக்காவைச் சார்ந்திருக்கச் செய்கிறது. 1980களில் இருந்து, புதிய தாராளமயக் கொள்கைகள், அமெரிக்கப் பொருளாதாரத்தை வெறுமையாக்கி உள்ளன. அதன் உற்பத்தித் தளம், கடுமையாகப் பலவீனமடைந்துள்ள நிலையில், சீனாவையும் ரஷ்யாவையும் குறைமதிப்புக்கு உட்படுத்துவதும், ஐரோப்பாவை பலவீனப்படுத்துவதும்தான் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான ஒரே வழி. இதன் ஒருபகுதியே, எப்படியாவது ரஷ்யாவின் அனைத்து வர்த்தகத்தையும் குறிப்பாக இயற்கை எரிவாயு ஏற்றுமதியை தடுக்க முயல்வதாககும். ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் எப்படி இருக்கும் என்பது, அமெரிக்காவுக்கு முன்பே தெரியும். அவை, உலகை இரண்டு தொகுதிகளாகப் பிரித்து, ஒருபுறம் அமெரிக்காவும் ஐரோப்பாவும் மறுபுறம், சீனாவும் ரஷ்யாவும் என்பதாக, ஒரு புதிய கெடுபிடிப்போரைத் தூண்டிவிடவே அமெரிக்கா முயல்கிறது. மின்சாரம், உணவு ஆகியவற்றின் அதிக விலை உயர்வுகளால், ஐரோப்பா பேரழிவுக்கு உள்ளாகும்; அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள், உணவு விலைகளின் அதிகரிப்பால் மிக மோசமாகப் பாதிக்கப்படும் என்று அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் அறிந்திருந்தனர். உலகளாவிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கு, அமெரிக்கா, ஒரு பெரிய நெருக்கடியை உருவாக்குவது இது முதல் முறையல்ல. உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பானது, நாடுகளை கடனில் திறம்பட சிக்க வைக்கிறது. உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பின் ஊடு, மீண்டும் மனிதகுலத்தின் பரந்த பகுதிகள் மீது, அமெரிக்கா ஒரு போரை இன்று நடத்துகிறது. இது உருவாக்குகின்ற வறுமை, அமெரிக்காவை சார்ந்து நாடுகள் இருப்பதை உறுதி செய்கிறது. சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும், அமெரிக்கா சார்பாக நாடுகள் இருப்பதை உறுதிசெய்ய, அந்நாடுகளில் கடனை உருவாக்க பயன்படுத்தும் நிதி நிறுவனங்களாகும். தற்போதைய கொள்கைகள் குறிப்பாக, ஏழை நாடுகளுக்கு உணவு மற்றும் கடன் நெருக்கடியை உருவாக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, இந்தக் கடன் நெருக்கடியைப் பயன்படுத்தி, அதிக எண்ணெய், உணவு இறக்குமதிகளுக்கு கடன்களை செலுத்துவதற்காக நாடுகளை தனியார்மயமாக்குவதையும், அவர்களின் பொதுச் சொத்துகளை விற்கவும் கட்டாயப்படுத்துகிறது. இந்த ஏகாதிபத்திய மூலோபாயம், இதேபோன்ற நோக்கத்தை நிறைவேற்றிய ‘கொவிட் நிவாரணம்’ கடன்களின் பின்னணியில் வருகிறது. 2021ஆம் ஆண்டில் மட்டும் கோவிட்-19 கடன்களின் ஊடாக, சர்வதேச நாணய நிதியம் 33 ஆபிரிக்க நாடுகளில், சிக்கனக் கொள்கைகளைத் தொடர ஊக்குவிக்கப்பட்டதை ‘ஓக்ஸ்பாம்’ மதிப்பாய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இவ்வறிக்கையானது, 55 ஆபிரிக்க யூனியன் உறுப்பு நாடுகளில், 43 நாடுகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில், மொத்தம் 183 பில்லியன் டொலர் பொதுச் செலவுக் குறைப்புகளை எதிர்கொள்கின்றன என்று குறிப்பிடுகின்றது. நீண்டகாலமாக விவசாயம், உணவு, விநியோகம் என்பவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம், மூன்றாமுலக நாடுகளில் பெரும்பகுதியை ஆதிக்கம் செலுத்த, அமெரிக்காவால் முடிந்தது. உலக வங்கியின் புவிசார் அரசியல், கடன் மூலோபாயம் என்பன, நாடுகளை உணவுப் பற்றாக்குறைப் பகுதிகளாக மாற்றியமைத்தன. அதன் ஒரு வழிமுறையாக, மூன்றாமுலக நாடுகளில் பணப்பயிர்களின், பெருந்தோட்ட ஏற்றுமதிப் பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்கக் கோரியதன் மூலம், அந்நாடுகள் தங்களுக்குத் தேவையான பயிர்களை பயிரிடாமல் செய்தது. இதன்மூலம் அந்நாடுகளை இறக்குமதியில் தங்கியிருப்பனவாக மாற்றியது. உலகளாவிய வேளாண் வணிக நிறுவனங்களால் ஊக்குவிக்கப்பட்டு, உலக வங்கியால் ஆதரிக்கப்படும் ‘உணவுப் பாதுகாப்பு’ என்ற கருத்தாக்கமானது, மக்களின் உணவை வாங்கும் திறனை அடிப்படையாகக் கொண்டது. இது தன்னிறைவுப் பொருளாதாரத்தை நோக்கி, நாடுகளை நகர்த்துவதல்ல. இக்கருத்தாக்கம் உணவு தொடர்பிலான உலகளாவிய சந்தைகள் மற்றும் மாபெரும் விவசாய வணிக நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படும் விநியோகச் சங்கிலிகள் ஆகியவற்றுடன் எந்த தொடர்பும் இல்லை போன்றதொரு தோற்றத்தை உருவாக்க முனைகின்றன. உலகளாவிய விவசாயத்தின் கட்டுப்பாடு, பல தசாப்தங்களாக அமெரிக்க புவிசார் அரசியல் மூலோபாயத்தின் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது. பசுமைப் புரட்சியின் பெயரால் மூன்றாமுலக நாடுகளின் விவசாய முறைகள் மாற்றப்பட்டன. அவை இரசாயன உரம், கிருமிநாசினி சார்ந்த விவசாய மாதிரியை ஏற்றுக்கொண்டன. அவை தொடர்பான உள்ளீடுகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு கடன்கள் தேவைப்பட்டன. அக்கடன்களை சர்வதேச நாணய நிதியம் வழங்கியது. இது அந்நியச் செலாவணியைப் பெறுவதற்கு ஏற்றுமதிப் பொருட்களின் மோனோ-பயிர் முறையை நம்பியிருக்கும் உலகமயமாக்கப்பட்ட உணவு அமைப்பிற்குள் நாடுகளை சிக்க வைத்தது. உணவு தன்னிறைவு பெற்ற பல நாடுகள், உணவுப் பற்றாக்குறையுடைய நாடுகளாக மாறின. உலக வர்த்தக அமைப்பின் வேளாண்மை ஒப்பந்தங்கள், ‘உலகளாவிய உணவுப் பாதுகாப்பு’ என்ற முகமூடித்தனமான கார்ப்பரேட் சார்புக்கு தேவையான வர்த்தக ஆட்சியை அமைக்கிறது. ‘நவ்தன்யா இன்டர்நேஷனல்’ ஜூலை 2022 இல் வெளியிட்ட ‘பசியை விதைத்து இலாபத்தை அறுவடை செய்தல்: வடிவமைக்கப்பட்ட உணவு நெருக்கடி’ என்று தலைப்பிட்ட அறிக்கையில், சர்வதேச வர்த்தகச் சட்டங்கள் மற்றும் வர்த்தக தாராளமயமாக்கல் பெரிய விவசாய வணிகத்துக்குப் பயனளித்து, நாடுகள் உணவுத் தன்னிறைவை எட்டுவதைத் எவ்வாறு தடுக்கிறது என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. உலகளாவிய சந்தை விலைகளின் ஏற்ற இறக்கங்களில் இருந்து விவசாயிகளின் பாதுகாப்பை புதிய வேளாண் ஒப்பந்தம் நீக்கியது. அதே நேரத்தில், அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் தங்கள் விவசாயத்திற்கு தொடர்ந்து மானியம் வழங்குவதற்கு விதிவிலக்குகள் செய்யப்பட்டன. இது குறித்து விவரிக்கும் நவ்தானியாவின் அறிக்கை பின்வருமாறு சொல்கிறது: ‘அரசு வரி பாதுகாப்பு மற்றும் மானியங்கள் நீக்கப்பட்டதால், சிறு விவசாயிகள் நிர்க்கதியாகினர். இதன் விளைவாக, விவசாயிகள் குறைவாக சம்பாதித்தும், நுகர்வோர் அதிக விலை செலுத்தியும் விவசாய வணிக இடைத்தரகர்கள் மிகப்பெரிய இலாபம் ஈட்டியும் வருகிறார்கள். ‘உணவுப் பாதுகாப்பு’ என்பது, உலகச் சந்தையை ஒருங்கிணைக்கவும் கார்ப்பரேட்களின் கைகளில் அதை ஒப்படைப்பதற்காகவும் உணவு இறையாண்மை மற்றும் உணவு தன்னிறைவு ஆகியவற்றைத் தகர்க்க வழிவகுத்தது. இதை செயலில் காண, நாம் இந்தியாவைத் தவிர வேறு எதையும் பார்க்க வேண்டியதில்லை. இந்தியாவில் இப்போது இரத்து செய்யப்பட்ட சமீபத்திய பண்ணை சட்டம் மற்ற நாடுகள் அனுபவித்த புதிய தாராளவாதத்தின் ‘அதிர்ச்சி சிகிச்சை’யை இந்தியாவுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. நுவ்தாகியா அறிக்கையானது, தற்போதைய உணவு நெருக்கடி எவ்வாறு ஊகங்களால் தூண்டப்படுகிறது என்பதை விளக்குகிறது. முதலீட்டு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் விவசாயப் பொருட்களின் மீதான ஹெட்ஜ் நிதிகளின் ஊகங்கள், உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு எவ்வாறு லாபம் ஈட்டுகின்றன என்பதைக் காட்டுகின்றன. பண்டங்களின் எதிர்கால விலைகள் சந்தையில் உண்மையான வழங்கல் மற்றும் தேவை ஆகியவற்றுடன் இணைக்கப்படாது, முற்றிலும் ஊகத்தின் அடிப்படையிலானவையாகவே உள்ளன. தற்போதைய உணவு நெருக்கடிக்கு உலகளாவிய விவசாய வணிகத்தால் ஊக்குவிக்கப்படும் ‘இழிந்த தீர்வு’ என்பது விவசாயிகளை அதிக உற்பத்தி செய்ய தூண்டுவதும், குறைந்த உற்பத்தியின் நெருக்கடியைப் போல சிறந்த விளைச்சலைத் தேடுவதும் ஆகும். இது அதிக இரசாயன உள்ளீடுகள், அதிக மரபணு பொறியியல் நுட்பங்கள் போன்றவற்றைக் குறிக்கிறது. இது மேலும் விவசாயிகளை கடனில் சிக்க வைப்பதற்கு தொடர்ச்சியாக கார்ப்பரேட்டுகளின் தங்கியிருக்க வேண்டிய பொறியில் சிக்க வைக்கிறது. உலகமானது தேவைப்படும் உணவுப்பொருட்களின் தயாரிப்புகள் இல்லாமல் பட்டினி கிடக்க நேரும் என்பது பழைய தொழில்துறை பொய். உண்மை என்னவென்றால், உலகமானது பெரிய விவசாய வணிகம் நிறுவிய முறையால் பட்டினி மற்றும் உணவு விலை உயர்வுகளை எதிர்கொள்கிறது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/உலகளாவிய-உணவு-நெருக்கடி-தற்செயலானதா-திட்டமிடப்பட்டதா/91-305951
  9. ஐரோப்பிய மின்சார நெருக்கடி: இலங்கைக்கான படிப்பினைகள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கை மக்களின் பொருளாதார நெருக்கடிக்கு, முக்கிய பங்களித்தவற்றில் ஒன்று மின்சார நெருக்கடி. இலங்கையின் மின்சார நெருக்கடிக்கு, தற்காலிகமான தீர்வு எட்டப்பட்டுள்ள போதும், இது நிரந்தரமானதோ நீண்டகாலத்துக்கு நிலைக்கக்கூடியதோ அல்ல; எப்போது வேண்டுமானாலும் இன்னொரு மின்சார நெருக்கடி ஏற்படக்கூடும் எனும் நிலையிலேயே, நாடு இயங்குகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஒரு சரணாகதிப் பொருளாதார மாதிரியை நோக்கியே, இலங்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. தனியார் மயமாக்கலை உந்தித் தள்ளுகின்ற நவதாராளவாத பொருளாதார அடிப்படைகள் குறிவைக்கின்ற துறைகளில், மின்சாரம் முதன்மையானது. தொழில்நுட்பம் சார்ந்த தேவைகளின் பெருக்கம், அன்றாட வாழ்வில் அதிகரித்துள்ள மின்சாரப் பாவனை, பொருளாதார வளர்ச்சி கோருகின்ற மின்சாரத்தின் தேவை என்பன, நாட்டின் பொருளாதாரத்தோடு மின்சாரத்தைப் பின்னிப் பிணைந்ததாக மாற்றியுள்ளன. இலங்கையில் இப்போது அதிகரித்துள்ள இன்னும் அதிகரிக்கும் மின்சாரத் தேவையானது, மின்சாரத்தை மிகைஇலாபம் உழைக்கக்கூடிய ஒரு சரக்காக (commodity) மாற்றியுள்ளது. இதைச் சந்தைப் பொருளாதாரமும் அதன் அரங்காடிகளும் நன்கறிவர். மின்சாரத்தைத் தனியார் மயமாக்குவது, மின்சாரத்துக்கான மானியங்களை நிறுத்துவது, போட்டிச் சந்தையின் பகுதியாக மின்சாரத்தை மாற்றுவது போன்றன, இப்போது பிரதான பேசுபொருளாகி உள்ளன. இன்று உலகளாவிய ரீதியில், மின்சார நெருக்கடி நிலவுகின்றது. மின்சாரத்தை மக்களின் தேவைக்கு உரியதாகவன்றி, சரக்காக மாற்றியதன் விளைவை ஐரோப்பியர்கள் இன்று அனுபவிக்க நேர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், ஐரோப்பாவில் மின்சாரத்தின் விலை வானளவு மோசமாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டுகளை விட, நான்கு மடங்காகவும் கடந்த இரண்டு ஆண்டுகளில் 10 மடங்காகவும் இது உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில், எரிவாயுவின் விலை அதிகரிப்பு, போதுமான எரிவாயுவை ரஷ்யா வழங்காதது போன்ற காரணங்களால், இந்த விலையுயர்வு ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது. இது, முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. இரண்டு உதாரணங்களின் ஊடு, இதை நாம் நோக்கவியலும். ஜேர்மனியின் மின்சார உற்பத்தியில் ஏழில் ஒரு பங்கை மட்டுமே, இயற்கை எரிவாயு பங்களிக்கும் போது, ஜேர்மனியின் மின்சார விலை ஏன் நான்கு மடங்கு உயர வேண்டும்? பிரித்தானியா புதுப்பிக்கத்தக்க மற்றும் அணுமின் நிலையங்களில் இருந்து, 40 சதவீத மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. தான் பயன்படுத்தும் இயற்கை எரிவாயுவில் இருந்து, பாதியை உற்பத்தி செய்கிறது. இங்கிலாந்து, மின்சாரத்தின் விலையில் கடுமையான உயர்வை ஏன் காண்கிறது? எரிவாயு விலையில் சமீபத்திய அதிகரிப்புக்கு, ரஷ்யாவைக் குற்றம் சாட்டுவது பற்றிய இந்தப் பேச்சுகள் அனைத்தும், மின்சார உற்பத்தியாளர்கள் உண்மையில் மிக அதிகளவான இலாபத்தை ஈட்டுகிறார்கள் என்ற யதார்த்தத்தை மறைக்கிறது. ஏற்கெனவே, கொரோனா வைரஸ் தொற்றால், மோசமான நிலைக்குத் தள்ளப்பட்ட ஏழை நுகர்வோர், மிகக் கொடூரமான இக்கட்டான நிலையை எதிர்கொள்கிறார்கள். குளிர்காலத்தில், தங்கள் வீட்டு பட்ஜட்டில் 30-50 சதவிகிதம் மின்சார கட்டணமாக இருக்கும் என்பதால், அவர்கள் உணவை வாங்குவதா அல்லது தங்கள் வீட்டை சூடாக வைத்திருப்பதா என்ற முடிவை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். மின்சாரத் துறையில், கடந்த 30 ஆண்டுகளாக நிகழ்ந்த சந்தைச் சீர்திருத்தங்கள் என்று சொல்லப்படும் கதையின் மறுபக்கமே, இப்போது ஐரோப்பா எதிர்நோக்குகின்ற மின்சார விலை உயர்வின் அடிப்படை ஆகும். தினசரி மற்றும் மணிநேர ஏலங்களில் மின்கட்டணமானது, விலையுயர்ந்த விநியோகத்திற்குரிய மின்சாரத்தின் விலையுடன் சமப்படுத்தப்படுகிறது. எனவே, மின்சாரத்தை விநியோகிக்கும் நிறுவனங்கள், குறைவான விலைக்கு மின்சாரத்தைப் பெற்றாலும், விநியோகத்தில் அதியுயர்ந்த விலைக்குள்ள மின்சார விலையையே வாடிக்கையாளருக்கு வழங்குகிறார்கள். இப்போது, அதியுயர்ந்த மின்சார விலையை நிர்ணயிப்பதாக இயற்கை எரிவாயு இருக்கிறது. மின்கட்டணத்துக்கு மின்சாரம் வழங்குவதற்கான முக்கிய ஆதாரமாக எரிவாயு இல்லாவிட்டாலும், சந்தையில் அதிகரித்துள்ள எரிவாயுவின் விலையின் காரணமாக, மின்சார விலை தொடர்ச்சியாக கடுமையாக உயர்ந்து வருகிறது. இது சந்தை அடிப்படைவாதம் என்று அழைக்கப்படுகிறது. இதை நவதாராளவாதப் பொருளாதார வல்லுநர்கள், ‘விளிம்புப் பயன்பாட்டுக் கோட்பாடு’ (marginal utility theory) என்று அழைக்கின்றனர். இது, 1973 முதல் 1990 வரை அகஸ்டோ பினோஷேவின் இராணுவ சர்வாதிகாரத்தின் போது, சிலியில் அறிமுகப்படுத்தப்பட்ட மின்சாரத்துறைச் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாகும். இந்த ‘பினோஷே’ சீர்திருத்தங்களின் மூலாதாரம், மில்டன் ப்ரீட்மன் ஆவார். ப்ரீட்மனும் அவரது பொருளாதார அடியாட்களும் எவ்வாறு சிலியைச் சுரண்டிக் கொழுத்தார்கள் என்பது தனிக்கதை. (இக்கதை இலங்கையுடன் பல வகைகளில் ஒத்தது). சிலியில், 1980ஆம் ஆண்டு பினோஷேயின் அரசியலமைப்பின் ஒரு பகுதியாக, மின்சார விலை அதன் ‘சிறிதளவு விலையை’ (marginal price) அடிப்படையாகக் கொண்டது. சிலியின் இச்சீர்திருத்தங்கள் நாட்டின் மின்சாரத் துறையை தனியார் மயமாக்க வழிவகுத்தது. காலப்போக்கில், சாதாரணமான எளிய சிலி மக்களுக்கு, மின்சாரம் பெறுவது அரியதொன்றாகியது. சிலியின் மாதிரியை மார்கரெட் தட்சர், பிரித்தானியாவுக்காக நகலெடுத்தார். பின்னர், அதை ஐரோப்பிய ஒன்றியம் நகலெடுத்தது. பிரித்தானியா, அதன் மத்திய மின்சார உற்பத்தி சபையை அகற்றியது. அச்சபையே அதுவரை நாட்டின் உற்பத்தி, பரிமாற்றம், மொத்த விநியோகம் என முழு மின்சார உட்கட்டமைப்பை இயக்கியது. இச்சபை அகற்றப்பட்டமையினூடு மின்சாரத்தின் முழுமையான கட்டுப்பாடு தனியாரின் கைகளுக்குச் சென்றது. ஐரோப்பிய ஒன்றியம், அதன் பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைக்க அதன் விருப்பமான எரிபொருளாக இயற்கை எரிவாயுவை பெரிதும் பயன்படுத்தியது. இது புதுப்பிக்கத்தக்க சக்தியை (சூரியகலம் மற்றும் காற்றாலை) மேலும் அதிகரித்து, கரியமில வாயுக்களை உமிழும் லிக்னைட் மற்றும் நிலக்கரியின் பயன்பாட்டைப் படிப்படியாகக் குறைத்தது. இயற்கை எரிவாயுவே, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பலவற்றின் பிரதானமான சக்தி மூலமாகும். இந்நிலையிலேயே, ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீது தொடர்ச்சியான பொருளாதாரத் தடைகளை விதித்தது. மேலும், ஐரோப்பிய ஒன்றிய வங்கிகளில் இருந்த ரஷ்யாவின் கையிருப்பான சுமார் 300 பில்லியன் யூரோக்களை கைப்பற்றியது. ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியத்துக்கான எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தை குறைப்பதாக எதிர்வினையாற்றியது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கான எரிவாயு விநியோகத்தை, ரஷ்யா கடுமையாகக் குறைத்ததில் ஆச்சரியமில்லை. மேற்குலகம் தனது நிதி சக்தியை ஆயுதமாக்கிக் கொள்ளலாம் என்று நினைத்தால், ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எரிவாயு விநியோகத்தை நிறுத்துவதன் மூலம், பதிலடி கொடுக்காது என்று எவ்வாறு நினைக்க முடியும்? மேற்கு ஐரோப்பாவுக்கான ரஷ்யாவின் இயற்கை எரிவாயு விநியோகம் வீழ்ச்சியடைந்ததால், சர்வதேச சந்தையில் திரவப் பெற்றோலிய வாயுவின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இன்றைய நிலையில், ரஷ்யா தவிர்த்து பிறநாடுகளிடம் வாங்குவதற்குப் போதுமானளவு திரவப் பெற்றோலிய வாயு யாரிடமும் இல்லை. ரஷ்யா சர்வதேச சந்தையில் வழங்கிவந்த இயற்கை எரிவாயுவுக்கு மாற்றேதுமில்லை. கடந்த சில மாதங்களில் எரிவாயு விலை, நான்கிலிருந்து ஆறு மடங்கு உயர்ந்துள்ள நிலையில், மின்சாரத்தின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால், மின்சாரத்தின் ஒரு பகுதியே எரிவாயு மூலம் இயக்கப்படுகிறது என்ற உண்மை மறைக்கப்பட்டு, நுகர்வோர் மீது அதிக மின்சார விலையின் சுமையை அரசுகளின் ஆதரவுடன் தனியார் மின்சார நிறுவனங்கள் சுமத்தியுள்ளன. இதனால், ஐரோப்பிய நாடுகளில் நுகர்வோர் மட்டும் மோசமாக பாதிக்கப்படவில்லை. தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வேலையிழப்புகள், பொருளாதார நட்டங்கள் என இந்நெருக்கடி பல்பரிமாணம் உடையதாய் மாறியுள்ளது. முன்னாள் கிரேக்க நிதியமைச்சர் யானிஸ் வரூஃபாகிஸ், ‘மின்சாரச் சந்தைகளை அழித்தொழிப்பதற்கான நேரம்’ என்ற தனது கட்டுரையில் பின்வருமாறு எழுதுகிறார்: ‘ஐரோப்பிய ஒன்றியத்தின் மின்சாரத்துறையின் சந்தை அடிப்படைவாதம், உலகெங்கிலும் உள்ள மின்சார விநியோகத்துக்கு என்ன செய்திருக்கிறது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம். சந்தைகள் மின்சார உற்பத்தியையும் விலையையும் விநியோகத்தையும் தீர்மானிப்பதை நிறுத்த வேண்டிய நேரம் இது’ என்கின்றார். இலங்கை இதற்கு எதிர்த்திசையில் நகருகிறது. மின்சாரத்தின் முழுமையான தனியார் மயமாக்கலை, சர்வதேச நாணய நிதியம் உட்படப் பலர் வேண்டி நிற்கிறார்கள். இலங்கை மின்சார சபை, மிகுந்த கோளாறானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், மின்சாரத்தை முழுமையாகத் தனியாரின் கரங்களில் கொடுப்பதன் ஆபத்தை, இப்போதைய ஐரோப்பிய மின்சார நெருக்கடி தெளிவாகக் காட்டியுள்ளது. இதிலிருந்து கற்பதா இல்லையா என்ற தெரிவு எம்முடையது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஐரோப்பிய-மின்சார-நெருக்கடி-இலங்கைக்கான-படிப்பினைகள்/91-305511
  10. அவசரகாலச் சட்டம்: எதிர்காலத்தின் கொடுபலன்கள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவசரகால நிலையை ஜனாதிபதி மீண்டும் நடைமுறைப்படுத்தி, ‘இலங்கையை வழமை’க்குக் கொண்டு வந்துள்ளார். வன்முறை, அரசின் அடக்குமுறை, அரசசார்பற்ற நபர்களின் வன்முறை, பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு இடையேயான சிக்கலான தொடர்புகளை, அவசரகால சட்டமும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டமும் இலங்கை குறித்த அனுபவத்தில் முன்னிற்கின்றன. இலங்கையின் கொடூரமான நடவடிக்கைகள், வன்முறைச் சுழற்சியை மேம்படுத்தி, ஜனநாயக சமூகத்தின் சமூக மற்றும் அரசியல் கட்டமைப்பை அழிக்க வழிவகுத்தன. தீவின் வடக்கு, தெற்கில் உள்ள அரச அதிகாரிகளால், கட்டுப்பாடற்ற அதிகாரத்தைப் பயன்படுத்தியதானது, ஏராளமான மரணங்கள், காணாமல்போதல்கள் போன்றவற்றுக்கும் அரசு மீதான பெருகிவரும் ஏமாற்றம், பாதிக்கப்பட்ட சமூகங்களின் தொடர்ச்சியான பின்னடைவுக்கு வழிவகுத்தது. அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்துவது, அரசியலமைப்பு உரிமைகளை சீர்குலைத்துள்ளது என்பது நிதர்சனமாகது. பெரும்பாலும் பயங்கரவாத சூழலை நிலைநிறுத்துகிற போது, சட்டத்தின் ஆட்சிக்கு மரியாதை இல்லாது போகிறது. இந்த அதிகாரங்கள், பாதுகாப்புதுறைசார் உறுப்பினர்களிடையே அடக்குமுறைக்கான கட்டற்ற பயன்பாட்டுக்கும், தண்டனை இன்மைக்குமான கலாசாரத்தை வளர்க்க உதவியுள்ளன. 1958இல் இலங்கை அரசாங்கம் முதன்முதலில் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்திய காலத்திலிருந்தே, அவசரகால அதிகாரங்கள் என்ற போர்வையின் கீழ், சர்வாதிகார அதிகாரத்தை பல ஆண்டுகளாக இலங்கை அனுபவித்தது. இலங்கை மிக நீண்ட காலமாக, அவசரகால ஆட்சியின் பிடியில் உள்ளது. 1983ஆம் ஆண்டு முதல், இடையில் சில குறுகிய இடைவெளிகளுடன், அண்மைய நாள் வரை அனைத்து ஆண்டுகளிலும் நீடித்தது. இதன் வரலாற்று வளர்ச்சியை நோக்குவதாயின், இந்த அவசரகால அதிகாரங்களைத் தூண்டுவதற்கு மூன்று காரணிகள் காரணமாக இருக்கின்றன. முதலாவதாக, இடதுசாரிக் கட்சிகளால் உந்தப்பட்ட தொழிற்சங்கங்கள்; 1940களின் பிற்பகுதியிலிருந்து 1960கள் வரை, உயிர்ப்புடன் இருந்தன. தொழிலாளர் உரிமைகளுக்காக இவை நடத்திய போராட்டங்களைக் கையாள்வதற்கு, இலங்கை அரசாங்கங்களால் இயலவில்லை. எனவே, அரசாங்கத்தை பொதுப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றத் தூண்டியது. இது, அவசரகால விதியை சட்டபூர்வமாக்கியது. அரசாங்கத்தின் கண்ணோட்டத்தில், உணவு விநியோகம், போக்குவரத்து, தகவல் தொடர்பு சேவைகள் போன்ற பொதுச் சேவைகள், நாட்டில் உயிர்வாழ்வுக்கு இன்றியமையாதவை; மற்றும், அவற்றைப் பாதுகாப்பது அவசரகாலச்சட்டம்; இதன்மூலம், சிவில் உரிமைகளை மீறுவது நியாயமானது. 1968ஆம் ஆண்டளவில், பல அரசாங்கத் துறைகள் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டன. வேலை நிறுத்தம் செய்பவர்களுக்கு எதிரான நடவடிக்கையை இது எளிதாக்கியது. இருப்பினும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில், அவசரகாலவிதி ஜூலை 1971 வரை செயற்படுத்தப்படவில்லை. காலப்போக்கில், இன - தேசியவாதம், அரசியல் செயற்பாடுகள் போன்றவை, தொழிற்சங்க நடவடிக்கையை முறியடித்து, அவசரகால அதிகாரங்களை செயற்படுத்துவதற்கு முக்கிய காரணங்களாகின. இரண்டாவதாக, ஜே.வி.பியால் தூண்டப்பட்ட பொது வன்முறையைக் கட்டுப்படுத்த, ஆரம்பத்தில் அவசரகாலச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. அரசாங்கத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஜே.வி.பி, தனது முதல் ஆயுதக் கிளர்ச்சியைத் தொடங்கியது. நான்கு மாத அமைதியின்மையின் போது, ஐக்கிய முன்னணி அரசாங்கம் அவசரகால சட்ட ஆட்சியைப் பயன்படுத்தியதன் மூலம் பதிலளித்தது. கிளர்ச்சியாளர்களை, விரைவாகவும் சித்திரவதை மற்றும் சட்டத்துக்குப் புறம்பாக காணாமல் போகச் செய்தல் போன்ற வழிமுறைகள் மூலமாக அடக்குவதற்கு இச்சட்டம் உதவியது. 1987 முதல் 1990 வரை, ஜே.வி.பியின் இரண்டாவது கிளர்ச்சியானது, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான மோதல்களுக்கு மத்தியில் தொடங்கியது. இதனால், அவசரகாலச் சட்டம் தென் பிராந்தியத்திலும் பரவியது. மீண்டும், ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தில், தன்னிச்சையான கைதுகள், தடுப்புகள், மரணதண்டனைகள் ஆகியவற்றின் மூலம் ஜே.வி.பியை நசுக்க முடிந்தது. தமிழ் மக்களுக்கு எதிரான, பாரபட்சமான அரசாங்கக் கொள்கைகள், சிங்கள மற்றும் தமிழ் மக்களிடையே நிலவிய பதற்றம் காரணமாகவும் அடிக்கடி எழும் கலவரங்கள் என்பன, அவசரகாலச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான மூன்றாவது மற்றும் பொதுவான காரணங்களாக அமைகின்றன. உதாரணமாக, 1956ஆம் ஆண்டின் அரச மொழிச் சட்டத்தை (சிங்களம் மட்டும் சட்டமூலம்) இயற்றுவதற்கு எதிராக, தமிழரசுக் கட்சியால் நடத்திய அமைதியான எதிர்ப்பு, சிங்களக் குண்டர்களால் வன்முறையைச் சந்தித்தது. 1972ஆம் ஆண்டு அரசியலமைப்பு, இலங்கையை ஒற்றையாட்சி நாடாக அறிவித்ததன் மூலம், சிங்கள மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தியது. இது, தமிழ் இளைஞர்களை அணிதிரட்டுவதற்கு ஊக்கமளித்தது. 1977 அளவில், தமிழ் பிரிவினைவாத இயக்கம் உருவான நேரம் முழுவதும், இடைவிடாத வன்முறைகள் ஏற்பட்டன. அதற்கு அரசாங்கம் அவசரகால விதியை நாடியது. இந்தக் கொடூரமான நடவடிக்கைகள், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தனவின் கீழ், 1979ஆம் ஆண்டு, 1979ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் (தற்காலிக ஏற்பாடுகள்) (PTA) மூலம் மேலும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன. ஒரு தற்காலிக நடவடிக்கையாக இயற்றப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம், ஐக்கிய இலங்கைக்கான அச்சுறுத்தல்களை இல்லாதொழிக்கும் நோக்கத்துடன் இருந்தது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் 6-9 பிரிவுகள், அவசரகாலச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கைது செய்தல், தடுத்து வைத்தல், சொத்துகளைப் பறிமுதல் செய்தல் போன்ற அதிகப்படியான பொலிஸாரின் அதிகாரங்களைப் பிரதிபலிக்கின்றன. இந்த வரலாற்றுப் பின்புலத்திலேயே, இப்போது ஜனாதிபதி மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ள அவசரகாலச் சட்டத்தை நோக்க வேண்டியுள்ளது. பெருந்தொற்றுக்குப் பின்னர், உலகளாவிய ரீதியில் ஜனநாயகத்தின் பின்னடைவை நாம் கண்டிருக்கிறோம். அதன் சில முக்கிய அறிகுறிகளில், இரண்டு மிகப் பிரதானமாவை; இலங்கைக்கும் பொருந்துபவை! முதலாவது, அரசாங்கத்தின் நிறைவேற்றுப் பிரிவு, ஜனாதிபதி அரசியல் நிறைவேற்று அதிகாரம், நிர்வாக மற்றும் பாதுகாப்பு இயந்திரங்கள் ஆகியவற்றுக்கு இடையே ஒரு கூட்டணி உருவாகியுள்ளது. அது, புதிய அரச அதிகார மையமாகி, பாராளுமன்றத்தையும் அமைச்சரவையையும் கூட பின்னணிக்கு தள்ளுகிறது. இரண்டாவதாக, கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் சட்டபூர்வத்தன்மை மற்றும் நியாயத்துடன் கூடிய கண்காணிப்பு, அனைத்து குடிமக்கள் மீதும் ஒரு பரந்த அரசு கண்காணிப்பு வலையை வீசுவதன் மூலம், தொடர்புத் தடமறிதலுக்காகப் பயன்படுத்தத் தொடங்கியது. இது குறிப்பாகத் தேசிய பாதுகாப்பு நோக்கங்களுக்காக என்ற போர்வையில், அரசியல் உரிமைகளைப் பறிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இலங்கை நிறைவேற்று அதிகாரத்துவத்தின் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. 1978ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்தனவால் ‘நிறைவேற்று’ ஜனாதிபதி முறை உருவாக்கப்பட்ட போது, அது அனைத்து அதிகாரங்களும் கொண்ட அலுவலகத்தை உருவாக்கியது. நிறைவேற்று அதிகாரம் மற்றும் சட்டமன்ற அதிகாரம் இரண்டையும் ஜனாதிபதி மையப்படுத்திய அதேவேளையில், பாராளுமன்ற அரசாங்கத்துடன் தொடர்புடைய மட்டுப்பாடுகளும் சமநிலையாக்கங்களும் அகற்றப்பட்டன. நீதித்துறையும் நிறைவேற்று அதிகாரத்தின் தலைவரான ஜனாதிபதியின் கட்டுப்பாட்டிலும் செல்வாக்கிலும் கொண்டுவரப்பட்டது. 2015 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில், இரண்டு தடவைகள் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்ததன் மூலம், இந்த அரசியலமைப்பு இன்னும் இலங்கையில் இயங்குகிறது. இலங்கையின் பாராளுமன்ற ஜனநாயகத்திலிருந்து, புதிய ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நோக்கிய மாற்றம் பெருந்தொற்றுக்கு 2020ஆம் ஆண்டு செப்டெம்பரில் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தினூடு உறுதியான வடிவத்தை எடுத்தது. இங்கு, 20ஆவது திருத்தத்தின் இரண்டு முக்கிய அம்சங்கள் உள்ளன: (அ) மட்டுப்பாடுகள் மற்றும் சமநிலையாக்கங்கள் ஏதுமின்றி, பாராளுமன்றம், நீதித்துறை அல்லது பிற பொறுப்புக்கூறல் நிறுவனங்களில் இருந்து சுயாதீனமாக குடியரசுத் தலைவர் பதவியை அரச அதிகாரத்தின் மத்திய நிறுவனமாக மாற்றுதல்; (ஆ) பாராளுமன்றத்தை பெயரளவு சட்டமியற்றும் அமைப்பாக மாற்றி, அதை ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் செயற்பட வைத்தல். பலவீனமான ஜனநாயகத்தில் இருந்து, நிறைவேற்று தலைமையிலான சர்வாதிகார அரசியல் ஒழுங்கிற்கு விரைவான மாற்றமாக அது இருந்தது. நிறைவேற்று அதிகாரத்துவத்தின் இந்த அரசியல் மாதிரியானது, தற்போதுள்ள பாராளுமன்ற மற்றும் அமைச்சரவை அரசாங்கத்தின் கட்டமைப்போடு இணைந்திருத்தாலும் அரசியல் நிறுவனங்களின் படிநிலையில், அமைச்சரவைக்கு ஒதுக்கப்பட்ட பாத்திரம் குறைந்துவிடும். இது வளர்ந்து வரும் அரச-சமூக உறவுகளின் தன்மையை நிச்சயமாக மறுவரையறை செய்யும். இதன் படிநிலை வளர்ச்சியையே, இலங்கையில் நாம் காண்கிறோம். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அவசரகாலச்-சட்டம்-எதிர்காலத்தின்-கொடுபலன்கள்/91-305180
  11. இன்னொரு மக்கள் எழுச்சிக்கான சாத்தியமும் சவால்களும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையின் இன்றைய நெருக்கடி நிலை மக்களை நிலைகுலைய வைத்துள்ளது. தீபாவளிக்குத் தீர்வு வரும் என்பது போல, ‘இலவுகாத்த கிளி’யாக, நிலைமை சீராகும் என்று இலங்கை மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இன்று எமது தேசிய இனப்பிரச்சினை, அனைத்துத் தரப்புகளாலும் அந்நிய சக்திகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. சிங்கள மேலாதிக்கத்தாலும் அதன் ஒடுக்குமுறை அணுகுமுறைகளாலும் தமிழர், முஸ்லிம்கள், மலையகத் தமிழர் ஆகிய தேசிய இனங்கள் மீதும் பறங்கியர், வேடர்கள் ஆகிய சிறிய சமூகங்கள் மீதும் சொல்லொணா துயரங்களும் கொடுமைகளும் ஒடுக்குமுறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விவசாயத்துறையில் நவதாராளவாத பொருளாதாரத் திட்டங்கள், ஏகாதிபத்திய உலகமயமாதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டதன் விளைவுகளை இப்போது நாம் காண்கிறோம். அவற்றின் பாதிப்புகள் காரணமாக, மக்கள் தொடர்ச்சியாக அவற்றை எதிர்த்து வருகின்றபோதும் தொடர்ச்சியான அரசாங்கங்கள் அவற்றை நிறுத்தாது முன்னெடுத்தும் வந்தன. தன்னிறைவை அடிப்படையாகக் கொண்ட தேசிய பொருளாதாரத்தின் உயிரணுக்களை, ‘உலகமயமாதல்’ என்ற நிகழ்ச்சி நிரல் அழித்துவிட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகள், தொழிலாளிகள், நடுத்தரவர்க்கத்தினர் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். மேலும் மோசமடைந்து கொண்டிருக்கும் தாராள தனியார்மய சூழ்நிலையானது, எதிர்கால சந்ததிக்கு இந்நாட்டு வளங்கள் விட்டு வைக்கப்படாது என்பதை உறுதி செய்கின்றன. இலங்கையரின் நல்வாழ்க்கை, சுயகௌரவம், சுயமரியாதை, சொத்துகள், ஜனநாயகம், மனித உரிமைகள் போன்றவற்றைப் பாதுகாப்பதில் அரசியலமைப்பு, ஜனாதிபதி ஆட்சிமுறை, பாராளுமன்ற ஆட்சிமுறை ஆகியன முழுமையாகத் தோல்வியடைந்துள்ளன. மக்கள், ‘காய்ந்த சருகாக’ மாறி வருகிறார்கள். அதன் மீது சிறிய தீப்பொறி பட்டாலேயே பெரிய காட்டுத்தீயை உண்டாக்கி விடும். அவ்வாறான ஒரு சிறிய தீயே, காலிமுகத்திடலை மையங்கொண்ட போராட்டமாகும். இன்றைய நெருக்கடி உயர், மத்தியதர வர்க்கத்தினருக்கும் பெரும் சொத்துடைய சிலருக்கும் கூட நிச்சயமற்ற சூழலை உருவாக்கியுள்ளது. அதனால், சாதாரண மக்கள் மட்டுமன்றி ஓரளவுக்கு வசதிவாய்ப்புகளுடன் வாழ்கின்றவர்கள் கூட, மாற்று அரசியல் நடவடிக்கைகள் மூலமான மாற்றங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளனர். அத்தகைய மாற்று அரசியல் சாத்தியமானதா? இலங்கையின் ஆளும் அதிகார அடுக்கின் பண்பு, ஏகாதிபத்தியத்தின் வாடிக்கையாளர்களாக செயற்படுவதையே பிரதிபலிக்கின்றது. இப்போது சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்துக்கு ஆடுகின்ற அரசாங்கத்தின் செயல்கள், இதன் அண்மைய உதாரணமாகும். அரசியல், சமூகம் ஆகிய தளங்களில், அரசின் கொள்கைகள், வன்முறை, யுத்தம், இனக்குரோதம், மதவெறி என்பனவற்றையே பிரதான அணுகுமுறையாகக் கொண்டுள்ளன. நிலைமைகளை சீர்செய்வதற்கான சீர்திருத்தங்களையோ இணக்கப்பாடுகளையோ ஏற்படுத்திக் கொள்ளும் நிலையில், இன்றைய அதிகார அடுக்கின் தலைமைகள் இல்லை. இத்தகைய அதிகார அடுக்குக்கு எதிராகவும் உறுதியாகவும் முன்னெடுக்க வேண்டிய போராட்ட வழிமுறைகளுக்கும் பழைய அரசியல் ஸ்தாபனங்களின் நடைமுறைகளுக்கும் இடையில் வித்தியாசங்கள் இருக்கின்றன. பழைய, சுரண்டுகின்ற பிற்போக்கு வர்க்கங்களுக்கும் இன்றைய கொள்ளைக்கார அதிகார அடுக்குகளுக்கும் இடையே, அவற்றின் ஆட்சிமுறை மூலோபாயம், தந்திரோபாயம் போன்றவற்றில் பல வித்தியாசங்கள் இருக்கின்றன. இந்த வித்தியாசங்களைப் பார்க்கின்ற போது, மக்கள் சார்பான இன்றைய போராட்ட அணுகுமுறைகள், பொருத்தமானவையா என்ற கேள்வி எழுவது இயற்கையானது. எனவே, மக்களது பழைய அணுகுமுறைகளை முற்றாக மாற்றி, புதிய முயற்சிகளும் புதிய மாதிரியான போராட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். தொழிலாளர்கள், விவசாயிகள் போன்ற வர்க்கத்தினரின் தொழிற்சங்க இயக்கங்கள், வேலை நிறுத்தப்போராட்டங்கள், தேர்தல் அரசியல்கள், கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு போராட்டங்கள் போன்றவை இன்றைய அதிகார அடுக்கின் வக்கிரம் நிறைந்த வன்முறைகளுடன் கூடிய அணுகுமுறைகளையே பதிலிறுப்பாகத் தந்துள்ளன. இவை மக்களிடையே எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளன. இதுவரை மேற்கொள்ளப்பட்ட கைங்கரியங்களில் இருந்து, மாறுபட்ட விதத்தில் தேர்தல் களங்களுக்கு வெளியிலும் தொழிற்சங்க வரையறைகளுக்கு வெளியிலும், பல போராட்டங்கள் பாரம்பரிய பிரசார ரீதியான விதத்திலன்றி முன்னெடுக்கப்பட வேண்டும். 1971, 1988 ஜே.வி.பியின் ஆயுத நடவடிக்கைகளும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக நடைபெற்ற ஆயுதப் போராட்டமும், இனிமேல் ஒரு போதும் அவ்வாறான போராட்டங்கள் உருவாகக் கூடாது என்ற விரக்தி நிலையை மக்களிடம் தோற்றுவித்துள்ளன. இதில் அதிகார அடுக்கின் சக்திகள் வெற்றி பெற்றுள்ளதை மறுக்க முடியாது. ஆனால், சரியான போராட்டத்தால், தற்போதைய ஆட்சிமுறையும் ஆளும் வர்க்கங்களும் செயலிழக்கச் செய்யப்பட்டு, இலங்கையில் அர்த்தமுள்ள ஜனநாயக ஆட்சிமுறை ஒன்றை ஏற்படுத்துவதைத் தவிர, வேறு தெரிவோ மாற்றுத்திட்டமோ ஒடுக்கப்பட்டுள்ள மக்களுக்கு இல்லை. அதற்கு, தொடர்ச்சியான வெகுஜனப் போராட்டங்கள், புதிய விதத்தில் புதிய வகை மாதிரியில் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு வரலாற்றில் கற்ற பாடங்களை மீட்டுப்பார்ப்பதும் அவசியமானது. தலைமைத்துவங்களின் தவறுகளால், 1953 ஓகஸ்ட் 12இல் மக்கள் பெருமளவில் பங்கெடுத்த ஹர்த்தால் போராட்டம், வெகுஜன எழுச்சியாக வளரமுடியாமல் போனது பற்றிய பட்டறிவு எமக்கு இருக்கிறது. 1980 ஜூலை வேலை நிறுத்தப் போராட்டம் உட்பட, பல விதமான வேலைநிறுத்தப் போராட்டங்களும் மக்களின் எதிர்ப்பு இயக்கங்களும் ஆர்ப்பாட்டங்களும் எதிர்விளைவுகளைத் தந்த போலி இடதுசாரி சக்திகளினதும், தீயநோக்குடைய ‘என்.ஜி.ஓ’ அமைப்புகளினதும் நடவடிக்கைகளால் எதிரிடையாக அதிகார அடுக்கின் இருப்புக்கு அவை உதவி புரிந்துள்ளன. அதேவேளை, வெகுஜன இயக்கங்களாலும் எதிர்ப்பு போராட்டங்களாலும் சில உரிமைகள் மக்களுக்கு கிடைத்துள்ளன என்பதையும் குறிப்பிடத்தக்களவான சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால், அவற்றின் தலைமைத்துவங்கள் மக்கள் விரோத சக்திகளின் ஏகபோகத்துக்குள் மட்டுப்பட்டே இருந்தன. பொதுவாக, ஐக்கிய தேசிய கட்சியினதும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினதும் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு, பொதுவாக இப்போராட்டங்கள் பயன்பட்டன. தமக்கு வாய்ப்பளிக்கும் வரை, அப்போராட்டங்கள் அவர்களால் பயன்படுத்தப்பட்டன. இன்றைய சூழ்நிலையில், பொதுமக்கள் தமது அரசியல் எதிரியான அதிகார அடுக்குக்கு, நேருக்கு நேரெதிராக நிற்கும் அரசியல் சூழ்நிலையே நிலவுகிறது. அந்த எதிர்ப்பு, அடிப்படையான சமூகமாற்றத்துக்குக் குறையாத மாற்றத்தை வேண்டி, அதற்கான தீவிரமான அரசியல் தலைமைத்துவ மாற்றத்தின் கீழ், வெகுவிரைவில் புதிய மக்கள் எழுச்சியை வேண்டிநிற்கிறது. இந்த நிலைமை முதிர்ச்சியடைந்து, வெற்றிகரமான சூழ்நிலை ஏற்படுவது அனைத்து இலங்கை மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. மக்களால் வேண்டப்படாத, அவர்களின் பங்களிப்பில்லாத மாற்றம் சாத்தியமானதல்ல. வெகுஜன எழுச்சியை, போராட்ட மார்க்கமாக ஏற்றுக்கொள்ளும் நாம், சமூகமாற்றத்துக்கான மக்கள் எழுச்சியின் புதிய அர்த்தத்தை, புதிய வடிவத்தை, புதிய இயங்கு முறையைப் பற்றி எமது கவனத்தை செலுத்த வேண்டியவர்களாகின்றோம். மக்கள் எழுச்சியை முறியடிக்க முடியாதளவுக்கு மாற்று பொருளாதார தற்காப்பு, வினை-எதிர்வினை, போராட்டத்தின் நியாயத்தை வலியுறுத்தும் பண்பாட்டு முறைமை போன்றனவற்றை தயாரிப்பது அவசியம். ஆகக்கூடுதலான மக்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கும் வெகுஜன எழுச்சி, மக்களின் நலன்களுக்கான அம்சங்களைக் கொண்டதானதாக அமைய முடியும். வெகுஜன எழுச்சிகளை எவரும் வலுக்கட்டாயமாக ஏற்படுத்த முடியாது. ஒரு வெறும் அறிவிப்பின் மூலம் அல்லது துண்டுப்பிரசுர சுவரொட்டி அறைகூவல்களின் மூலம் வெகுஜனப் போராட்டங்களை வெகுஜன எழுச்சியாக ஏற்படுத்த முடியாது. தேவையான அடிப்படையான நிலைமைகள் ஏற்படும் போது, முரண்பாடுகள் கூர்மையடையும் போது வெகுஜன எழுச்சி மேலெழும்புவது தவிர்க்க இயலாதது. சமூகமாற்றத்துக்கான வெகுஜன எழுச்சியை, எவரும் வலுக்காட்டாயமாக ஏற்படுத்த முடியாது. அவ்வாறான, தயாரான சூழ்நிலை இல்லாத போது, மக்களின் எதிரிகள் வெகுஜனப் போராட்டங்களை அவர்களுக்கு சார்பாக பயன்படுத்திக் கொண்டு, அவற்றை செயலிழக்கச் செய்து, அவற்றின் இலக்கான சமூக மாற்றத்துக்குத் தடையாக இருப்பார்கள். இலங்கை வரலாற்றில், அதிகமான வெகுஜனப் போராட்டங்கள் இரண்டு பெரிய கட்சிகளான ஐ.தே.கவையும் சுதந்திரக் கட்சியையும் மாறி மாறி ஆட்சிக்குக் கொண்டுவரவே பயன்படுத்தப்பட்டுள்ளன. ‘என்.ஜி.ஓ’க்கள், அவற்றின் நிகழ்ச்சி நிரலுக்கு, வெகுஜனப் போராட்டங்களை பயன்படுத்தியுள்ளன. அவை அதிகாரவர்க்கத்துக்கு உதவுவதாகவே முடிந்துள்ளன. இனியும் அவ்வாறே நிகழுமா என்பதைத் தீர்மானிக்க வேண்டியது மக்களே! https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இன்னொரு-மக்கள்-எழுச்சிக்கான-சாத்தியமும்-சவால்களும்/91-304726
  12. இலங்கையின் பொருளாதார மீட்சி யார் கையில்? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ நாட்டின் பொருளாதாரம் எப்படியாவது மீண்டுவிடும் என்று முழுமையாக நம்புவோர் இருக்கிறார்கள்; பகுதியாக நம்புவோரும் இருக்கிறார்கள். “வாய்ப்பில்லை ராஜா” என்று அடம்பிடிப்போரும் இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் அனைவரும் உடன்படுகின்றதும் எல்லோருக்கும் தெரிந்ததுமான ஒரு விடயம் யாதெனில், இலங்கையின் பொருளாதாரத்தின் மீட்சி, நிச்சயமாக இலங்கையர்களின் கைகளில் இல்லை என்பதாகும். அப்படியாயின், இப்போது எழுகின்ற கேள்வி, அது யார் கைகளில் இருக்கின்றது என்பதாகும். இலங்கையின் பொருளாதாரம், தனது தன்னிறைவுச் சுயசார்புத் தன்மையை இழக்கத் தொடங்கியது முதல், அந்நியர் தயவில் தங்கியிருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. நாட்டின் பொருளாதார மீட்சிக்காக முன்மொழியப்பட்டுள்ள வழிவகைகள் அனைத்தும், அந்நியர் தயவிலும் உலக நிலைவரங்களிலுமே தங்கியுள்ளன. இலங்கையின் இன்றைய பொருளாதாரம் குறித்துப் பேசும் பலரும், பேசத் தயங்குகிற விடயம் இதுவாகும். இலங்கை மிகவும் சிக்கலானதும் ஆபத்தானதுமான ஒரு நெருக்கடியில் சிக்குண்டுள்ளது. ஒருபுறம், சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகள்; இன்னொருபுறம், மேற்குலக நாடுகளின் வர்த்தக, மூலோபாய நலன்கள், சீனா, இந்தியா, ஜப்பான் எனப் பல அரங்காடிகளின் களமாக இலங்கை மாறியுள்ளது. இலங்கையின் பொருளாதார மீட்சி, தவிர்க்கவியலாமல் உலகப் பொருளாதாரத்தின் வலுவான தன்மையோடு பிணைந்தது. இதற்கு எமது வரலாற்றிலேயே சான்றுகளுண்டு. உலகசந்தையில் பெற்றோலிய விலை, 1973-74 காலப்பகுதியில் திடீரென நான்கு மடங்கு உயர்ந்ததால், இலங்கையின் பொருளாதாரம் பெரும் நெருக்கடிக்கு உள்ளானது. இதைப் பேசாமல், ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆட்சியின் நிர்வாகக் கோளாறுகளாலும் தவறான அயலுறவுக் கொள்கையாலுமே, நாடு பல்வேறு பொருட்களுக்கான தட்டுப்பாடுகளுக்கு முகங்கொடுக்க நேர்த்தது எனப் பேசுவோர் உள்ளனர். அன்று, மண்ணெண்ணெய்க்கும் பாணுக்கும் வரிசையில் நின்ற கதைகளையும் அரிசி பஞ்சத்தின் போது, அரிசியைக் கொண்டு செல்லத் தடைகள் இருந்ததையும் நினைவூட்ட அவர்கள் தவறுவதில்லை. சமையல் எரிவாயு, பெற்றோல், டீசல் போன்றவற்றுக்கான இன்றைய வரிசைகளையும் மின்வெட்டையும் பல்வேறு பொருட்களின் தட்டுப்பாடுகளையும் அதனுடன் ஒப்பிட்டுப் பேசுகின்றனர். ஸ்ரீமாவின் ஆட்சியின் போது ஏற்பட்ட நெருக்கடிக்கும், இன்றைய நெருக்கடிகளுக்கும் இடையில் பெரும் வேறுபாடு உள்ளது. அரசாங்கத்தின் பாரிய நிர்வாகக் குளறுபடிகளை விட, ஊழலும் வேறு சக்திகளின் தாக்கமுமே இன்றைய நெருக்கடிகளுக்குக் காரணங்களாக உள்ளன. உலகளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை எப்படியாயினும், அது எமது கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால், அதையும் கணிப்பில் எடுத்தே பொருளாதார மீட்சிக்கான திட்டமிடல் நடைபெற வேண்டும். ஆனால், சரணாகதிப் பொருளாதாரத்துக்கு வழிவகுத்துள்ள அரசாங்கமும் அதன் இடைக்கால வரவு செலவுத் திட்டமும், சர்வதேச நாணய நிதியத்தின் கைப்பொம்மையாக நாட்டின் பொருளாதாரத் திட்டமிடலை மாற்றியுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டதை விட, மோசமான உலகளாவிய பொருளாதார நெருக்கடியை உலகம் விரைவில் சந்திக்கக்கூடும் என்று, ஓகஸ்ட் மாதத்தில் சர்வதேச நாணய நிதியம் எதிர்வுகூறியுள்ளது. எதிர்பார்த்ததை விட, அதிகளவான பணவீக்கத்துடன் - குறிப்பாக, அமெரிக்கா மற்றும் மிகப்பெரிய ஐரோப்பிய பொருளாதாரங்களில் - உலக நிதி நிலைமைகள் இறுக்கமாகி வருகின்றன. அமெரிக்காவினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் வளர்ச்சி, கணிசமாகக் குறைத்துள்ளது. கொவிட்-19 பெருந்தொற்று நெருக்கடிகளுக்கு மத்தியில், சீனாவின் பொருளாதார மந்தநிலை எதிர்பார்த்ததை விட மோசமாக உள்ளது. உக்ரேன் யுத்தத்தின் எதிர்மறையான விளைவுகள் தொடர்கின்றன. இதன் விளைவாக, இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில், உலகளாவிய உற்பத்தி சுருங்கியுள்ளது. உணவு, எரிசக்தி என்பவற்றின் விலைகள் மிகவும் மோசமான உயர்வைக் கண்டுள்ளன. ரஷ்யா, ஐரோப்பாவுக்கான எரிவாயு விநியோகத்தை முற்றிலுமாக நிறுத்தலாம் என்பது உட்பட்ட, சில அபாயங்கள் அடுத்த மாதங்களில் இன்னும் பலமடங்காக விலைவாசி உயர்வுக்கு வழிசெய்வதோடு, மிகப் பரவலான உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் சமூக அமைதியின்மையை ஏற்படுத்தும். இன்றைய புவிசார் அரசியல், உலகளாவிய வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்பைத் தடுத்துள்ளது. இந்த நெருக்கடியை அனைவரும் இணைந்து எதிர்கொள்வதற்கான வாய்ப்பை இல்லாமலாக்கி உள்ளது. இதனால் இலங்கை போன்ற நாடுகளே மிக மோசமான விளைவுகளை எதிர்நோக்கும். தற்போதைய பொருளாதார நெருக்கடியின் மோசமான பொருளாதார வலி சிறிய, அதிக கடன்பட்ட, வளர்ந்து வரும் நாடுகளையே பாதிக்கும். இலங்கை போன்றே வங்குரோத்தாகும் நாடுகளின் பட்டியலில் ஈக்குவடோர், கானா, ஜாம்பியா, எல் சால்வடோர் ஆகியவை அடங்குகின்றன. அதேவேளை, பாகிஸ்தான், துருக்கி போன்ற பெரிய நாடுகள்கூட ஆபத்தில் உள்ளன. கடந்த கால உலகப் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து, 2022ஐ வேறுபடுத்தும் மற்றொரு விடயம், முக்கிய கடன் வழங்குநராக சீனா இருப்பதும் அது, கடன் மீள்செலுத்துகை குறித்து, வேறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதுமாகும். 1980களின் உலகளாவிய கடன் நெருக்கடிகளைப் போலன்றி, தற்போதைய கடன் நெருக்கடியின் சமநிலை, இப்போது கணிசமாக வேறுபட்டது. இந்நாடுகளினுடைய சீனக் கடனின் பெரும்பகுதி, சீனாவின் ‘ஒரு வார்; ஒரு வழி’ உட்கட்டமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. பெய்ஜிங்குடன் கடன் நிவாரணம் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்துவது, தனிப்பட்ட நாடுகளுக்கு மட்டுமல்ல, சர்வதேச சமூகத்துக்கும் புதியது. பாரம்பரியமாக, சர்வதேச நாணய நிதியம் மற்றும் பணக்கார நாடுகளின் ‘பாரிஸ் கிளப்’ என்று அழைக்கப்படுபவை, துன்பகரமான கடனை மறுசீரமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன. ஆனால், இதுவரை பெய்ஜிங் தன்னிடம் கடன் வாங்குபவர்களுடன் தனிப்பட்ட ரீதியல் பேசவும், கடன் மீள்செலுத்துகை தொடர்பான, சொந்தமான செயற்பாட்டை விரும்புகிறது. இது சர்வதேச நாணய நிதியத்தினதும் மேற்குலக நாடுகளினதும் அபிலாஷைகளுக்குக் குறுக்காக நிற்கிறது. இன்று, ஐரோப்பா எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினை, வேகமாக அதிகரிக்கும் மின்சாரத்தின் விலைகள் ஆகும். கடந்த வார இறுதியில், செக் குடியரசின் தலைநகரான பிராக்கில் உள்ள வென்செஸ்லாஸ் சதுக்கத்தில், ஏறக்குறைய 70,000 பேர் கூடி, எரிசக்தி கட்டணங்களை உயர்த்துவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். இது, ஒரு தொடக்கம் மட்டுமே; ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவும். ஜேர்மன், பிரெஞ்சு, ஃபின்னிஷ் அரசாங்கங்கள், ஏற்கெனவே உள்நாட்டு மின் நிறுவனங்கள் வங்குரோத்தாவதில் இருந்து காப்பாற்ற முன்வந்துள்ளன. சமீபத்திய நாள்களில், ஜேர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் அனைத்தும் குடும்பங்கள், வணிகங்கள் என்பவற்றின் மீதான அழுத்தத்தைக் குறைக்க, ரேஷன் மற்றும் பாதுகாப்புத் திட்டங்களுடன் சேர்ந்து பில்லியன் டொலருக்கு மேலான நிவாரணத் திட்டங்களை அறிவித்தன. இந்நாடுகளின் அரசாங்க கடன் அளவுகள், ஏற்கெனவே திகைப்புடன் இருக்கும் நேரத்தில், இவ்வகையான நடவடிக்கைகளுக்கு நாடுகள் அதிக விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். இதனாலேயே ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆபத்தான உயர் கடன் பற்றிய கவலையை, இந்த வாரம் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டது. மோசமாகக் குறைவடைந்துள்ள வருமானம், வருமான இழப்பு, பெருகிவரும் சமத்துவமின்மை, சமூகப் பதட்டங்கள் அதிகரிக்கும் அபாயம் என்பன, உடைந்துபோன சமுதாயத்துக்கு மட்டுமல்ல, உடைந்த உலகத்துக்கும் வழிவகுக்கும். 1970களில் இருந்து இதுபோன்ற எதையும் உலகம் எதிர்கொள்ளவில்லை. இங்கு கவனிக்க வேண்டியது யாதெனில், இப்போது உருவாகும் நெருக்கடியானது விரைவில் முடிவடையாது. வரலாற்றில் மிகப் பெரிய வளர்ச்சிப் பேரழிவை நாம் எதிர்நோக்கியுள்ளோம். முன்பு நடந்ததை விட, அதிகமான மக்கள் மிகவிரைவாக, மோசமான வறுமையின் பிடிக்குள் தள்ளப்படுவார்கள். உலகப் பொருளாதாரத்துக்கு இது மிகவும் ஆபத்தான நேரம். இது இயல்பாகவோ அல்லது உக்ரேனிய யுத்தத்தாலோ ஏற்பட்டதல்ல. மாறாக, மக்கள் தங்களுக்கு தாங்களே உருவாக்கிக் கொண்டது. இந்த உண்மை சொல்லப்படுவதில்லை. எல்லாவற்றுக்கும் உக்ரேன் போரே காரணம் என்ற தோற்ற மயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இன்றைய மின்சாரப் பற்றாக்குறையின் வேர், உக்ரேன் போருக்கு முந்தையது. 2020ஆம் ஆண்டில், தொற்றுநோய் கட்டுப்பாடுகளிலிருந்து நாடுகள் வெளிவரத் தொடங்கியதால், பொருட்களின் விலைகள் உயரத் தொடங்கின. அமெரிக்காவில் மட்டும், வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்ததை விட, ஒரு ரில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கூடுதல் பொருட்களை வாங்குகிறார்கள். இது திடீரென சக்தியின் தேவையை அதிகரித்தது. இலங்கையின் பொருளாதார மீட்சி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையிலும், ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதியிலும் தங்கியுள்ளது. இன்னொருபுறம் சர்வதேச சந்தையில் பொருட்களை நியாய விலையில் பெற்றுக் கொள்வதை அடிப்படையாகக் கொண்டது. இவ்விரண்டுக்குமான சாத்தியக்கூறுகள் இல்லை என்பது வெளிப்டையாகத் தெரிகிறது. புதிய களங்கள் திறக்கின்றன; நெருக்கடிகள் அதிகரிக்கின்றன. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இலங்கையின்-பொருளாதார-மீட்சி-யார்-கையில்/91-304354
  13. ஜெனீவா இன்னொரு முறை ஏமாறுவோமா? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ மீண்டுமொருமுறை இலங்கை அரசியலில், ஜெனீவா அமர்வுகள் கவனம் பெறுகின்றன. கடந்த ஒரு தசாப்தகாலமாக, ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் அதிலும் குறிப்பாக, புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் ஒரே களமான இருப்பது, ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையாகும். குறிப்பாக, இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் தொடர்ச்சியாக, அதனூடு தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுவிட முடியும் என்ற திசைவழியில், தமிழர் அரசியல் பயணித்திருக்கிறது. ‘சாண் ஏற முழம் சறுக்கும்’ கதையாகிப் போன இந்த முயற்சியின் மீது, இப்போதும் அளவற்ற நம்பிக்கை சூழ்ந்து இருக்கிருக்கிறது. தமிழருடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, அவர்களுடைய ஒற்றுமையையும் சொந்த ஆற்றலையும் நம்பியிருக்குமாறு அவர்களுடைய தேசியவாதத் தலைமைகள் தமிழரை என்றுமே ஊக்குவிக்கவில்லை. இது பொன்னம்பலம் இராமநாதன் காலம் தொட்டு, வே. பிரபாகரன் காலம் வரை நாம் கண்ட உண்மை. அதற்குக் காரணங்கள் உள்ளன. ஏனெனில், மக்கள் தமக்காகப் பேசத் தொடங்கிவிட்டால், கேட்கக்கூடாத கேள்விகளைக் கேட்கத் தொடங்கிவிடுவார்கள். அதன் பிறகு, மக்களுடைய பிரச்சினைகள் எவை என வரையறுக்கும் அதிகாரம், மேட்டுக்குடி அரசியல் தலைமைகளுக்கு இருக்காது. அதுவுமல்லாமல், மேட்டுக்குடி மேலாதிக்கத்தின் ஒவ்வோர் அம்சமும் கேள்விக்கும் எதிர்ப்புக்கும் உட்படத் தொடங்கிவிடும். பிறகு யார் எங்கே இருப்பது என்பதற்குக் கட்டுப்பாடே இல்லாமல், அரசியலின் முகமே மாறிவிடலாம். தமிழர் அரசியல், கடந்த நூற்றாண்டில் கணிசமாக ஜனநாயகப்பட்டுள்ளது என்பது உண்மை. ஆனாலும், அந்த ஜனநாயகத்தின் செயற்பாட்டுத் தளம், தேர்தல் அரசியலுக்கு மட்டுப்பட்டே இருந்து வந்தது. 1961ஆம் ஆண்டின் சத்தியாக்கிரகம் முதலாகப் பொங்கி அடங்கி, அழிவில் முடிந்த ஆயுதப் போராட்டம் வரை, எந்த ஒரு தமிழ்த் தேசிய தலைமையும் மக்களை ஒரு போராட்டச் சக்தியாகக் கற்பனை செய்ததில்லை. இப்போது சலுகைகளுக்காகக் கையேந்தும் பிச்சைக்காரர்களாக, மக்களைக் கருதுகிற ஒரு போக்கு வலுப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே, இப்போதைய தமிழ்த் தேசியவாதத் தலைமைகள், தேசிய இனப்பிரச்சினையில் கடைப்பிடிக்கும் அணுகுமுறையை நோக்க வேண்டியுள்ளது. இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையை, சிங்களவர்-தமிழர் பிரச்சினையாகவே நோக்குகிற போக்கு, இன்னமும் தொடர்கிறது. அமெரிக்காவையும் மேற்குலகையும் ராஜபக்‌ஷவுக்கு (அதாவது சிங்களவர்களுக்கு) எதிராகப் பயன்படுத்தலாம் என்ற கனவு ஒரு புறமும் இந்திய குறுக்கீட்டைப் பற்றிய மூடநம்பிக்கைகள் இன்னொரு புறமும், அவர்களது இறுதிப் பற்றுக்கோடுகளாக உள்ளன. இதன் பயனாக, இப்போது மேற்குலகம் நேரடியாகவும் ஐ.நா மூலம் மறைமுகமாகவும் கொடுக்கிற நெருக்குவாரங்களை எல்லாம், தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கிலானவை என்று கருதுகிற ஒரு போக்கு வளர்கிறது. இலங்கையின் பொருளாதார நெருக்கடி, அதற்கான புதிய பரிமாணத்தைக் கொடுத்துள்ளது. ராஜபக்‌ஷர்களை போர்க் குற்றங்களுக்காக அமெரிக்கா தண்டிக்கும் என்ற நம்பிக்கை, புலம்பெயர்ந்த தமிழ்த் தேசியவாதிகளிடையே வலுவாக உள்ளது. அதுவே அவர்களுக்குப் போதுமானதாகவும் இருக்கலாம். தமிழகத்தில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களிடையே அது, ஏறத்தாழ ஒரு வெறியாகவே புலப்படுகிறது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், அமெரிக்காவின் ஆணைக்கு உட்படாத, மனித உரிமைகள் மீறல் குற்றவாளிகளைப் பிடிக்க விடுத்துள்ள பிடியாணைகள், மியான்மர் விடயத்தில் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் என்பன, இலங்கையின் விடயத்திலும் அவ்வாறு நடக்கும் என்ற எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளன. அவ்வாறு நடக்கலாம்; நடக்காமலும் போகலாம். ஆனால், அதற்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளின் தீர்வுக்கும் ஓர் உறவுமில்லை என்பதை நாம் விளங்கிக் கொள்வது நல்லது. போர்க் குற்றங்களும் மனித உரிமைகள் மீறல்களும் விசாரிக்கப்படுவது முக்கியமானது. போரின் கொடிய உண்மைகளை, முழுநாடும் அறிவது முக்கியமானது. ஆனால், அந்த விசாரணைகளை யார், ஏன் வலியுறுத்துகிறார்கள் என்பதைப் பற்றிய தெளிவு தேவை. இதை விடவும், அக்கொடுமைகள் நிகழ, முழு உடந்தையாக இருந்த நாடுகள் எவை எனவும் அனைத்தும் நடக்கையில் பார்த்திருந்து விட்டு, இப்போது மனித உரிமைகள் மீறல், போர்க்குற்றங்கள் என்று பாசாங்கு செய்கிற நாடுகள் எவை எனவும் நினைவூட்டத் தமிழ்த் தலைமைகள் விரும்ப மாட்டா. இச்சூழலில், தமிழ் மக்களையும் முழு நாட்டையும் எதிர்நோக்குகின்ற உடனடி, நீண்ட கால அபாயங்கள் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இலங்கையில் இப்போது ஜனநாயகமும் கருத்துச் சுதந்திரமும் பெரும் மிரட்டலுக்கு உட்பட்டுள்ளன. மோசமடைந்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க இயலாமல், அரசாங்கம் நாட்டை மேலும் கடனாளியாக்கி, சர்வதேச நாணய நிதியத்தின் ஆணைகளுக்குப் பணிந்து, மக்கள் மீது சுமைகளை ஏற்றுகிறது. பயங்கரவாதத்தைக் காட்டி, மக்களை ‘ஏய்ப்பது’ இனிக் கடினம். மக்களின் எதிர்ப்பைச் சமாளித்து, திசைதிருப்பப் பேரினவாத அரசியல் மட்டும் போதாது. எனவே, நேரடியான அடக்குமுறை தேவை. அதை நாம் இன்று பல இடங்களிலும் கண்டுள்ளோம். இப்பின்புலத்திலேயே ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரது அண்மைய கருத்துகளை நோக்க வேண்டியுள்ளது. உண்மையைக் கண்டறிதல், பொறுப்புக்கூறல் என்று தோற்றம் பெற்ற இலங்கை மீதான பிரேரணை, தொடர்ச்சியாக அதன் உள்ளடக்கத்திலும் அறிக்கையிடலிலும் மாற்றமடைந்து வந்துள்ளது. மேற்குலகத்துக்கு உவப்பில்லாத அரசாங்கம், இலங்கையில் பதவியில் இருந்தபோது, இறுதிப் போரில் நடைபெற்ற விடயங்களே கூடிய முக்கியத்துவம் பெற்றன. ஆனால், காலப்போக்கில் கவனம், இலங்கையின் பொதுவான மனித உரிமைகள் பற்றியதாக மாறியது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து, அது குறித்த உண்மைகள், இலங்கை தொடர்பான அறிக்கையின் முக்கிய பேசுபொருளாகின. இதன் தொடர்ச்சியாகவே, செவ்வாய்க்கிழமை (06) வெளியாகிய அறிக்கையை நோக்க வேண்டியுள்ளது. இது, இலங்கையின் பொருளாதாரக் குற்றங்கள் பற்றிப் பேசுகிறது. அவ்வறிக்கை, ‘நிலையான முன்னேற்றங்களை அடைவதற்கு, கடந்த கால மற்றும் தற்போதைய மனித உரிமைகள் மீறல்கள், பொருளாதாரக் குற்றங்கள், உள்ளூர் ஊழல்களுக்கான தண்டனை உட்பட, பொருளாதார நெருக்கடிக்குப் பங்களித்த அடிப்படைக் காரணிகளை அடையாளம் கண்டு, நிவர்த்தி செய்வது இன்றியமையாதது’ என்று தெரிவிக்கிறது. 16 பக்கங்கள் நீள்கின்ற இந்த நீண்ட அறிக்கையின் நிறைவுரையில், இரண்டு விடயங்கள் வலியுறுத்தப்படுகின்றன. அவை, இலங்கை மீதான தீர்மானத்தின் மாறும் இயல்பையும் அதன் இன்றைய நிலையையும் அடிக்கோடிட்டுக்காட்ட வல்லன. ‘இலங்கை ஒரு பேரழிவுகரமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. இது மக்களின் வாழ்க்கையை கடுமையாகப் பாதிக்கிறது. இலங்கையை மீட்பதற்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்க வேண்டும்’ என உயர்ஸ்தானிகர் வலியுறுத்தியுள்ளார். எவ்வாறாயினும், நிலையான முன்னேற்றத்துக்கு, கடந்த கால மற்றும் தற்போதைய மனித உரிமைகள் மீறல்கள், பொருளாதாரக் குற்றங்கள், ஊழல்களுக்கான தண்டனை உட்பட, இந்த நெருக்கடிக்கு பங்களித்த அடிப்படை காரணிகளை அடையாளம் கண்டு, இலங்கைக்கு உதவுவது இன்றியமையாததாகும். அனைத்து சமூகங்களிலிருந்தும் பொறுப்புக்கூறல், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான பரந்த அடிப்படையிலான கோரிக்கைகள் எதிர்காலத்துக்கான புதிய மற்றும் பொதுவான பார்வைக்கான ஒரு முக்கியமான தொடக்கப் புள்ளியை முன்வைக்கின்றன. பொறுப்புக்கூறல், சட்டத்தின் ஆட்சி, பாகுபாடு காட்டாமை, மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் ஆகியவற்றின் அடிப்படையில், இலங்கையை எவ்வாறு, பன்மைத்துவ மற்றும் முழுமையான ஜனநாயக நாடாக மாற்றுவது என்பது குறித்த புதிய அர்த்தமுள்ள தேசிய உரையாடலுக்கான வாய்ப்பு இருப்பதாக உயர்ஸ்தானிகர் நம்புகிறார். இந்தப் பின்புலத்தில், கடந்தகால வரலாற்றை ஒருமுறை மீள நினைவூட்டல் தகும். தேசிய இனப்பிரச்சினையின் தீர்வின்மையின் பயனான கொடிய போராலேயே, போர்க் குற்றங்களும் மனிதவுரிமை மீறல்களும் நிகழ்ந்தன. போர் முடிந்து மூன்று ஆண்டுகளாகியும், அரசியல் தீர்வு நிராகரிப்பும் ஜனநாயக மறுப்பும் மனிதவுரிமை மீறல்களுமே காணக்கிடைத்த நிலையிலேயே, ஐ.நா தனது நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில், இலங்கையின் விடயத்தை மனித உரிமைகள் பேரவை நிகழ்ச்சி நிரலுக்குள் புகுத்தியது. அதில் அமெரிக்காவின் பங்கும் பெரியது. இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்த்து, மக்களிடையே நல்லெண்ணத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தவோ தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுக்கவோ வேண்டி அமெரிக்கா, ஜெனீவா தீர்மானத்துக்குப் பின்னிருந்து முழுமூச்சாகச் செயற்படவில்லை. இலங்கை மீதான பிடியை வைத்திருப்பதற்கான ஒரு கருவியாகவே, அன்றிலிருந்து இன்றுவரை இத்தீர்மானம் செயற்படுகிறது. இந்தப் பின்னணியில், ஜெனீவாவில் நடந்தவையும் நடப்பவையும் தமிழர்களின் நன்மைக்காக என்று நம்புபவர்கள், ஏமாற்றப்படுவதையே, தமது கடந்த காலமாகவும் எதிர்காலமாகவும் கொண்டிருக்க ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஜெனீவா-இன்னொரு-முறை-ஏமாறுவோமா/91-304010
  14. இடைக்கால வரவு செலவுத் திட்டம்: சர்வதேச நாணய நிதியமே வருக! தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டமானது, இந்த அரசாங்கம் நாட்டை எத்திசையில் நகர்த்த முனைகிறது, யாருக்கானதாக அரசாங்கம் இருக்கிறது போன்ற வினாக்களுக்கான பதில்களைத் தந்துள்ளது. அந்தவகையில், இந்த வரவு செலவுத் திட்டம் முக்கியமானது. தனது உரையின் தொடக்கத்தில், நான்கு விடயங்களை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இவை நான்கும் மிகத் தெளிவாக, இலங்கை அரசாங்கம் வெளிப்படையாகவே சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு செயன்முறையாகவே, இந்த வரவு செலவுத் திட்டம் இருக்கும் என்பதை உறுதிப்படுத்தின. ஒருபுறம், வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகையில் மறுபுறம், போராட்டக்காரர்கள் மீது கட்டற்ற வன்முறை ஏவப்பட்டது. இவை இரண்டும், ஒன்றுடனொன்று தொடர்பற்றவை போல்த் தோன்றலாம். ஆனால், உண்மையதுவல்ல; இலங்கையர்களின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி, எமது எதிர்கால சந்ததிகளைப் படுகுழியில் தள்ளும் காரியத்துக்கான தொடக்கப் புள்ளியாக, இந்த வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் இருக்கின்றன. இடைக்கால வரவு செலவுத் திட்ட உரையின் தொடக்கத்தில், அவர் சுட்டிக்காட்டிய நான்கு விடயங்களில் முதலாவது, “நாட்டின் பொருளாதார நெருக்கடி, மிகத்தீவிரமாக உள்ளது. ஆனால், மக்கள் அதன் தீவிரத்தை உணரவில்லை” என்பதாகும். இங்கு கேட்கப்படும் கேள்வி யாதெனில், அரசாங்கமும் அதன் உறுப்பினர்களும் நாட்டின் பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தை உணர்ந்திருக்கிறார்களா? இன்றும் அரச விழாக்கள், பெருந்தொகை பணச்செலவில் நடத்தப்படுகின்றன. ஊழல் குறையவில்லை. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்றோரின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்கின்றன. அரசாங்கத்தின் தேவையற்ற செலவுகளை, நேரடியாகவும் ஊடகங்களின் வழியாகவும் அன்றாடம் காண்கிறோம். இவை எவற்றையும் கண்டுகொள்ளாத ஜனாதிபதியும் அரசாங்கமும், மக்கள் பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தை உணரவில்லை என இப்போது சொல்கிறார்கள். இரண்டாவது: “அரசாங்கம், தேசிய மயமாக்கலை நடைமுறைப்படுத்திய காலத்திலிருந்து, நாட்டின் வரி வருவாயின் பெரும்பகுதி, அரச நிறுவனங்களின் நட்டத்தை ஈடுசெய்யவே செலவிடப்பட்டது. சமூகத்தின் தேவைகளுக்குப் பயன்படுத்த வேண்டிய நிதி, இந்த நிறுவனங்களைத் தொடர்ந்து நடத்துவதில் வீணடிக்கப்படுகிறது”. இந்தக் கூற்று சரியானதல்ல. தேசிய மயமாக்கல், பல முக்கிய பலன்களையும் அதுசார் வருமானத்தையும் அரசாங்கத்துக்கு வழங்கிய காலமொன்று இருந்தது. இலங்கையின் பொருளாதார வரலாற்றை அறிந்தவர்கள், அதை அறிவர். 1977இல் பதவிக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாலும் அந்நிறுவனங்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டமையாலுமே, அந்நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கத் தொடங்கின என்ற உண்மையை, ரணில் மறைத்துவிடுகிறார். அவரின் மேற்சொன்ன கூற்று, அரச நிறுவனங்களை தனியார் மயமாக்க வேண்டும் என்ற, சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைக்கு வலுச் சேர்ப்பதற்காக அமைந்திருக்கிறது. மூன்றாவது: “அரசாங்கம் கொள்கைகளை உருவாக்க வேண்டுமேயன்றி, இலாபம் தரும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது”. இக்கூற்று, மிகவெளிப்படையாக நவதாராளவாத திறந்த பொருளாதார அடிச்சுவட்டை அப்படியே பிரதிபலிக்கிறது. அரசு, அனைத்தையும் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும். கொள்கைவகுப்புக்கு அப்பால், அரசு தலையிடக்கூடாது; அனைத்து அலுவல்களையும் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும். இலாபமோ நட்டமோ, அது அவர்களின் பாடு என்று விட்டுவிட வேண்டும். இதைத்தான் ரணில் முன்மொழிகிறார். இதன்மூலம் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உட்பட்ட துறைகளை தனியாரிடம் ஒப்படைத்தல் வேண்டும் என்பதாகும். நான்காவது: “நாட்டை விட, தங்கள் சொந்த நலனுக்காகவும் மக்களைக் கவரும் சொல்லாடல்கள், அரசியல் மயமாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளில், கடந்த கால அரசாங்கங்கள் ஈடுபட்டமையே, நமது பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாகும்”. இவ்வாறு கடந்தகால அரசாங்கங்களைக் குறைசொல்கின்ற ரணில், கடந்த அரை நூற்றாண்டில் பல்லாண்டு காலம், அரசாங்கங்களில் அங்கம் வகித்தவர் என்பதை மறந்துவிட்டார். இலங்கை மோசமான அரசியல்மயமாக்கலைச் சந்தித்த காலம் 1977 முதலான 17 ஆண்டுகள். இக்காலத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகித்தவர் ரணில். இறுதியாக, இவர் பிரதமராகப் பதவி வகித்த, 2015 - 2019 வரையான காலத்தில், அரசாங்கத்தின் யோக்கியதை என்னவென்று நாமறிவோம். ஜனாதிபதியின் இந்த வரவு செலவுத் திட்ட உரையின் முக்கிய பகுதி, “ஐக்கிய நாடுகள் சபை, முன்னணி சர்வதேச அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அன்றாட தேவைகளான எரிவாயு, மின்சாரம், எரிபொருள் போன்றவற்றை தட்டுப்பாடு இன்றி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன; பல்கலைக்கழகங்கள் கல்வி நடவடிக்கைகளைத் தொடங்குகின்றன” என்பதாகும். நாட்டின் பொருளாதார நெருக்கடி பற்றிய, அரசாங்கத்தின் புரிதல் எத்தகையது என்பதை, இக்கூற்றுகள் தெளிவாக விளக்குகின்றன. மக்களுக்கு உணவு வழங்கும் பொறுப்பை ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளிப்பது, பாடசாலைகள், பல்கலைக்கழகங்களைத் திறப்பது, எரிவாயு, மின்சாரம், எரிபொருளை வழங்குவது என்பதோடு, எமது பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணவியலும் என்று அரசாங்கம் சொல்கிறது. பொருட்களின் அபரிமிதமான விலையேற்றம், மருந்துத் தட்டுப்பாடு, பணவீக்கம், சிறுதொழில்கள் நசிவு, அன்றாட உழைப்பாளிகளின் வருமானமின்மை போன்றவை எவையும் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் பொருட்டல்ல. ‘மக்களின் நலன்களைப் பேணுதல்’ என்ற பொறுப்பில், அரசாங்கம் எவ்வளவு அசண்டையீனமாக இருக்கிறது என்பதற்கு, இன்னொரு சான்று உள்ளது. வரவு செலவுத் திட்ட உரையில், இலங்கையில் 61,000 குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி தெரிவித்தார். சிலவாரங்களுக்கு முன்னர், இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை தொடர்பில் விரிவான அறிக்கையை ‘உலக உணவு நிகழ்ச்சித் திட்டம்’ வெளியிட்டது. அதில், 63 இலட்சம் இலங்கையர்கள், மோசமான உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசாங்கம், 63 இலட்சத்தை 61,000 எனக் குறைவாக எண்ணிக்கையை கருதியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஏனெனில், சமூகநல வெட்டுகளை அறிமுகப்படுத்துவது, இந்த வரவு செலவுத் திட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாகும்! இன்று, இலங்கையில் பொருட்களின் விலைகள், பன்மடங்கு அதிகரித்துள்ளன, பணவீக்கம் மோசமாக உள்ளது, வேலைவாய்ப்புகளும் வருமானம் ஈட்டும் வாய்ப்புகளும் குறைந்துள்ளன. இந்நிலையில், அரசாங்கம் இந்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் ஊடு, பின்வருவனவற்றை முன்மொழிகிறது: 4,500 ரூபாயாக வழங்கப்பட்ட சமுர்த்திக் கொடுப்பனவு 3,100 ரூபாயாக குறைப்பு. 5,000 ரூபாயாக இருந்த மூத்தோருக்கான கொடுப்பனவு 2,500 ரூபாயாக குறைப்பு. சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவு மாதாந்தம் 5,000 ரூபாயிலிருந்து 2,500ஆகக் குறைப்பு. இந்த வரவு செலவுத் திட்டம், சாதாரண மக்களுக்கானதல்ல; அன்றாடம் உழைக்கும் மக்களுக்கானதல்ல. பல புதிய வரிவிதிப்புகளை இந்த வரவு செலவுத் திட்டம் முன்மொழிகிறது. அதில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் வரிவிதிப்புக்குள் உள்வாங்கல்; பெறுமதிசேர் வரியை அதிகரித்தல் போன்றன குறிப்பிடத்தக்கவை. ஆனால், செல்வந்தர்களுக்கான வரி பற்றி எதுவுமில்லை. அரசாங்கம், சாதாரண மக்களிடம் வரிச்சுமையை ஏற்றுவதையே செய்கிறது. அதேவேளை, ‘வர்த்தக விரிவாக்கம்’ என்ற பெயரில், செல்வந்தர்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்படப் போகின்றன. இந்த வரவு செலவுத் திட்டம், இன்னொரு முக்கியமான விடயத்தை முன்மொழிந்துள்ளது. அது, கல்வியின் தனியார் மயமாக்கலை நோக்கிய முதற்படி. “வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் தங்கள் கிளைகளை இலங்கையில் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படும். உயர்கல்வியில் தனியார் முதலீட்டுக்கான இடத்தை உருவாக்குவது; அரசாங்க வளங்களை விடுவித்தல். இதன்மூலம் அரசநிதி மிச்சப்படுத்தப்படும்” என்றார் ஜனாதிபதி. ஆகமொத்தத்தில், மெதுமெதுவாக அரச பல்கலைக்கழகங்களுக்கான நிதியைக் குறைத்து? அரச பல்கலைக்கழகங்களை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குத் தாரைவார்க்கும் கைங்கரியத்தின் முதற்படியே இது. இலங்கையின் இலவசக் கல்வி மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கியுள்ளது. இன்று அரசு ஆர்ப்பாட்டங்களை அடக்குகிறது; எதிர்க்குரல்களை நசுக்குகிறது. இதை அரசாங்கம் செய்வது, சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சிநிரலை எந்தவோர் எதிர்ப்பும் இன்றி நடைமுறைப்படுத்தவே ஆகும். எமக்கானதை, எமது குழந்தைகளுக்கானதை நாம் இழந்துவிட்டு, அதிகாரத்துக்கு சேவகம் செய்யும் தலைமுறையை உருவாக்க, நாம் அனுமதிக்கப் போகின்றோமா? அதிகாரத்தைக் கேள்வி கேட்கவும் எதிர்க்கவும் கூடிய ஒரு சமூகத்தின் உருவாக்கத்துக்கு வழிகோலப் போகின்றோமா? https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இடைக்கால-வரவு-செலவுத்-திட்டம்-சர்வதேச-நாணய-நிதியமே-வருக/91-303584
  15. அவர்கள் என்னைத் தேடி வந்தபோது... தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ நாடு வழமைக்குத் திரும்பிவிட்டதாக பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அடிப்படைப் பொருட்களை வரிசையில் நிற்காமல் பெறமுடிகின்றமை, உணவுப்பொருட்களின் விலை குறைந்துள்ளமை, போராட்டக்காரர்கள் காலிமுகத்திடலில் இருந்து அகன்றுள்ளமை போன்றன நிலைமை, சீராகியுள்ளது என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், இங்கு நாம் கேட்க வேண்டிய அடிப்படையான கேள்வி இன்னமும் கேட்கப்படாமலேயே இருக்கிறது. நாட்டை இந்த நெருக்கடிக்குத் தள்ளிய பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட்டனவா? இல்லையெனில், எதன் அடிப்படையில் நாடு வழமைக்குத் திரும்பி விட்டது என்று நாம் நம்புகிறோம்? இப்போது நாட்டில் நடைபெறுகின்ற விடயங்கள் தொடர்பில் அக்கறை கொண்டுள்ளோமா? இலங்கையில், இன்று வன்முறை சட்டரீதியான முறையில் அரங்கேறுகிறது. போராட்டக்காரர்களும் செயற்பாட்டாளர்களும் தண்டிக்கப்படுகிறார்கள். இதைச் சூழ்ந்து நடைபெறுகின்ற விவாதங்கள், கவனத்தை வேண்டுவன. ஒருபுறம், “சட்டம் தன் கடமையைச் செய்கிறது” என்று சொல்லி ஒதுங்கிக் கொள்வோர் பலர். அவர்களுக்கு சட்டம் போராட்டக்காரர்களின் விடயத்தில் செய்வது மட்டுமே, கண்களுக்குத் தெரிகிறது. மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரத்தில் தேடப்படும் நபர், வெளிநாட்டில் இருந்து தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுப்பது தெரிவதில்லை. சட்டம் தனது கடமையைச் செய்ய இயலாமல், குற்றவாளிகளை விடுதலை செய்வதோ, நாட்டைக் கொள்ளையடித்தோர் தண்டிக்கப்படாமல் இருப்பதோ கண்களுக்குத் தெரிவதில்லை. சட்டம் யாருக்கானது என்பது பற்றிய தெளிவு வேண்டும். சட்டம் மக்களுக்கானது; அது அரசாங்கத்துக்கோ ஆளுபவர்களுக்கோ உரியதல்ல. அது, மக்களின் நலனை அடிப்படையாகக் கொள்ள வேண்டும். ஆனால், இலங்கையில் சட்டம் அவ்வாறுதான் நடைமுறையில் உள்ளதா என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். சட்டம் ஆளுபவர்களின் கைகளில் இருக்கிறது; அவர்களின் நலனுக்காகச் செயற்படுகிறது. சட்டத்தை மக்களுக்கானதாக மாற்றுவது எப்படி என்று நாம் உரையாடல்களைத் தொடங்குவது அவசியம். ஏனெனில், சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையின் வரலாற்றில், சட்டம் யாருடைய கைகளில் இருந்து, யாருடைய நலன்களைப் பாதுகாத்து வந்துள்ளது என்பது வெளிப்படை. அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர்கள் கைதுசெய்யப்பட்டு உள்ளமையானது, கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. அரசாங்கம் அனைத்துக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், ரணிலின் ஆதரவாளர்கள் ‘பகடிவதை’ என்ற ஆயுதத்தைத் தூக்கியுள்ளார்கள். அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், பகடிவதையை ஆதரிப்பதாகவும் அதனை பல்கலைக்கழகத்தில் நடைமுறைப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். அதனடிப்படையில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயற்பாட்டாளர்கள் கைதுசெய்யப்படுவதை ஆதரிப்பதாகவும், சமூகஊடகங்களில் கருத்துகள் பரவிக் கிடக்கின்றன. இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் ஒன்றுண்டு. ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு அனுப்பும் நோக்கில், காலிமுகத்திடலில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போது, அதை ஆதரித்தவர்கள் தான் இவர்கள். ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு அனுப்பியதை விரும்பி ஆதரித்த இவர்கள், ரணிலோ அவர்தம் கூட்டாளிகளோ நெருக்கடிக்கு உள்ளாவதை விரும்புவதில்லை. பல்வேறு வழிகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ரணிலையும் அவர்தம் அரசாங்கத்தின் செயல்களையும் இவர்கள் ஆதரிக்கிறார்கள். இதை விளங்கிக் கொள்வது சிரமமல்ல. இதற்கு ஒரு வர்க்க குணாம்சம் உண்டு. ராஜபக்‌ஷர்கள் இவர்களுடையவர்கள் அல்ல; ஆனால், ரணில் இவர்களில் ஒருவர். எனவே, ராஜபக்‌ஷர்களை எதிர்ப்போர், இவர்களுக்கு நண்பர்கள்; ஆனால், ரணிலை எதிர்ப்போர் இவர்களின் எதிரிகள். ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு அனுப்பியது, இவர்களின் ‘டுவிட்டர்’ பதிவுகளோ ‘பேஸ்புக்’ இடுகைகளோ அல்ல. அயராது போராடி, கண்ணீர்ப் புகைக்குண்டுகளையும் தடியடிகளையும் வாங்கிய இளைஞர்களின் தியாகமே அதைச் சாத்தியமாக்கியது. அவர்களைப் பாதுகாப்பதும் அவர்களுக்கு ஆதரவளிப்பதும் மக்களின் கடமையாகும். அவர்கள் இத்தியாகத்தை சுயநலத்துக்காகச் செய்யவில்லை. இந்த நாட்டின் நலனுக்காகச் செய்தார்கள். எமது பிள்ளைகளின் வளமான எதிர்காலத்துக்காகச் செய்தார்கள். அதை நாம் மறக்கலாகாது. இப்போது அரசுக்கு ஆதரவாக ஒலிக்கும் குரல்கள், இலங்கையை மீண்டும் ஜனநாயகப்படுத்துவதற்கான முயற்சிகளைத் தடுப்பதற்கான குரல்களேயாகும். அக்குரல்கள் ஜனநாயகத்தின் பெயரால் ஒலிக்கின்றன என்பது முரண்நகை. இந்தப் பின்னணியிலேயே இலங்கை, தன் வரலாற்றின் முக்கியமான திருப்புமுனையில் நிற்கிறது. இரண்டு வெவ்வேறுபட்ட பாதைகள் எம்முன்னே உள்ளன. எதனை நாம் தெரிகிறோம் என்பதிலேயே, நாட்டின் ஜனநாயகமும் எமது எதிர்காலமும் தங்கியுள்ளது. போராட்டக்காரர்களாலும் அவர்களுக்கு ஆதரவளித்த மக்களாலும் திறக்கப்பட்ட பாதையானது, ஜனநாயகத்தையும் பொறுப்புக்கூறலையும் வேண்டிநிற்கிறது. குறிப்பா,க சுதந்திரமடைந்தது முதல் மெதுமெதுவாக மோசமடைந்த ஜனநாயக மறுப்பு அரசியலானது, 1978க்குப் பின்னர் புதிய கட்டத்தை எட்டியது. இது நாட்டின் அரசியல் உயரடுக்கின் பல்வேறு பிரிவுகளால் மேற்கொள்ளப்பட்ட பல தசாப்தங்களாக ஜனநாயக மறுப்பையும் சர்வாதிகார இயல்புகளையும் கொண்டிருந்தது. இதன் பின்னணியிலேயே அண்மைய மக்கள் போராட்டங்கள் திறந்துள்ள ஜனநாயகத்துக்கான பாதை முக்கியமானதாகவும் அவசியமானதாகவும் உள்ளன. இங்கு குறித்துச் சொல்ல வேண்டியது யாதெனில், இது யாருக்கு முக்கியமானது என்பதையே. ஒடுக்கப்பட்ட உரிமைகள் மறுக்கப்படுகின்ற அடித்தட்டு மக்களுக்கு இலங்கையை முழுமையான ஜனநாயகமாக மாற்றுவது தவிர்க்கவியலாதது. இரண்டாவது பாதை நிறுவனமயப்பட்டுள்ள அரசியல் உயர் வர்க்கத்தின் தாராளவாத சர்வாதிகார திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்கிறது. இது சட்டத்தினதும் அரசியலமைப்பினதும் துணை கொண்டு நீதிமன்றம், காவல்துறை, அரச நிர்வாகம் ஆகியவற்றின் வழி தனது அரசியல் செயற்றிட்டத்தை முன்னெடுக்க முயல்கிறது. இது மேலாதிக்க அரசியல் உயரடுக்கின் விருப்பமான பாதையாகும். இவ்விரு பாதைத் தெரிவுகளும் இலங்கை மற்றும் அதன் மக்களுக்கான இரண்டு முற்றிலும் மாறுபட்ட அரசியல் எதிர்காலத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இலங்கையின் கடந்த அரை நூற்றாண்டுகால வரலாறானது, அரசியல் உயரடுக்கின் ஏதேச்சதிகாரத்தைக் காட்டி நிற்கிறது. ஒருபுறம் அரச நிறுவனங்கள் அதன் சுயாதீனத் தன்மையை இழந்துள்ளதோடு, அரசியல் மயமாகியுள்ளன. இவ்விரு போக்குகளும் மிகவும் வலுவற்றனவாக நிறுவனங்களை மாற்றியுள்ளன. சாதாரண மக்களின் போக்கிடங்களாக இருந்தவை அரசியலினால் வழிநடத்தப்படும் அவலத்தை நாம் தினந்தினம் காண்கிறோம். ஆதிக்கம் செலுத்தும் அரசியல் வர்க்கம் பல வருட அனுபவமும் நிபுணத்துவமும் பெற்றுள்ளது, அது சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படுவதை உறுதிசெய்து, சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் தனக்கு அடிபணியச் செய்யும்படி கட்டாயப்படுத்துகிறது. இப்போது அது அரசியல் மற்றும் அரசியல் அதிகாரத்தின் ஒட்டுமொத்த அமைப்பாக மாறிவிட்டது, சீர்திருத்த முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இது அரசியல் அதிகாரத்தின் கரங்களை இன்னமும் பலப்படுத்தி கேள்விகளுக்கு அப்பாற்பட்டதாக மாற்றியது. கேள்வி கேட்கவே இயலாது என்ற நிலையில் அரசியல் அதிகாரம் கோலோட்சிய நிலையில், அண்மைய மக்கள் எழுச்சி, புதிய நம்பிக்கைகளை விதைத்துள்ளது. அரசியல் அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்த முடியும்; மக்களின் முன் அடிபணிய வைக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. சாதாரண குடிமக்களின் சமீபத்திய எதிர்ப்பு இயக்கம் உருவாக்கியுள்ள புதிய நம்பிக்கை என்பது, புதிய அரசியல் கலாசாரத்துள் இலங்கையை கூட்டிச் செல்ல வல்லது. இதைக் கண்டு பலர் பதறுகிறார்கள். அதிகார வர்க்கம் பதறுகிறது, அதன் அடிவருடிகள் அஞ்சுகிறார்கள்; உயர்குடிகள் ஏக்கமடைக்கிறார்கள், அவர்தம் விசுவாசிகள் கலங்குகிறார்கள். இன்று அதிகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது சமூகத்தின் பல அடுக்குகளிடையே நம்பக்கூடியதாகவும் கவர்ச்சிகரமானதாகவும் மாறிவிட்டது. நாட்டை மறு-ஜனநாயகமயமாக்கலுக்கு உட்படுத்த வேண்டியதன் அவசியத்தை அனைவரும் உணர்ந்துள்ளார்கள். ஆனால், இன்று எம்முன்னுள்ள சவால் யாதெனில் இருப்பினும், தற்போதைய கட்டத்தில் மக்களுக்கான நலனுக்கான ‘கட்டமைப்பு மாற்றம்’ என்ற கோரிக்கைக்கான பாதை, சற்று மங்கலானதாகவே தெரிகிறது. ஒரு சில மாதங்களுக்கு முன்பு, இது பாரிய மக்கள் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் பெற்றிருந்தது. இன்று அந்நிலைமை இல்லை. அந்த நம்பிக்கையும் உற்சாகமும் ஏன் எவ்வாறு இழக்கப்பட்டன என்பது பற்றி ஆழ்ந்து யோசிப்பது நல்லது. தற்காலிக விலைக்குறைப்புகளும் சலுகைகளும் மக்கள் போராடிய சமூக நீதியையும், சமூகநல அரசையும் மீட்டுவிடப் போவதில்லை. களவாடப்பட்ட செல்வங்கள் மீட்கப்படப் போவதில்லை. விற்கப்பட்ட நாட்டின் வளங்கள் மீளப்பெறப்படப் போவதில்லை. போராடிய மக்களின் மீதான வன்முறைக்கு, இன்று மௌனமான இருப்பதன் ஊடு, அனுமதி அளிப்போமாயின் இதைவிட மோசமான அடக்குமுறை நம்மீது நீளும்போது, எமக்காகக் குரல்கொடுக்க யாரும் இருக்கப் போவதில்லை. மீண்டுமொருமுறை மார்ட்டின் நெய்மோலரின் கவிதையை நினைவூட்ட விரும்புகிறேன்: முதலில் அவர்கள் கம்யூனிஸ்டுகளைக் தேடி வந்தார்கள் நான் எதிர்த்துப் பேசவில்லை காரணம், நான் கம்யூனிஸ்ட் அல்ல. பிறகு அவர்கள் சோஷலிஸ்டுகளைக் தேடி வந்தார்கள் நான் எதிர்த்துப் பேசவில்லை காரணம், நான் சோஷலிஸ்ட் அல்ல. பிறகு அவர்கள் தொழிற்சங்கத்தினரைக் தேடி வந்தார்கள் நான் எதிர்த்துப் பேசவில்லை காரணம், நான் தொழிற்சங்கத்தினன் அல்ல. பிறகு அவர்கள் யூதர்களைக் தேடி வந்தார்கள் நான் எதிர்த்துப் பேசவில்லை காரணம் நான் யூதன் அல்ல. கடைசியாக அவர்கள் என்னைக் தேடி வந்தபோது எனக்காகப் பேச அங்கே எவருமே இல்லை! https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அவர்கள்-என்னைத்-தேடி-வந்தபோது/91-303244
  16. சர்வதேச நாணய நிதியம்: தரித்திரத்தின் சரித்திரம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை, இன்னொருமுறை கையேந்துவது என்று முடிவாகி, நீண்ட காலமாகிவிட்டது. எப்போது அக்கடன் கிடைக்கும் என்பதே, இப்போதைய பிரச்சினை. ஊடகங்களும் பொருளியல் அறிஞர்களும் அரசியல் விமர்சகர்களும் எழுப்பும் கேள்வி அதுவே! சர்வதேச நாணய நிதியத்திடம் இதற்கு முன்னர் 16 தடவைகள் இலங்கை கடன் வாங்கியதே, அக்கடனினால் இலங்கையால் அந்நியக் கடனை அடைக்க முடிந்ததா அல்லது, இலங்கை மேலும் கடனாளியாகியதா என்ற வினாவை எழுப்புவோர் யாருமில்லை. கடந்த காலத்தில், சர்வதேச நாணய நிதியத்திடம் வாங்கப்பட்ட கடனால் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன என்பது பற்றிப் பேசுவாரில்லை. ஆனால், எப்படியாவது இன்னொருமுறை கடனை வாங்கிவிட வேண்டும் என்று, எல்லோரும் கங்கணம் கட்டிக் கொண்டுள்ளார்கள். இலங்கையின் அந்நியக் கடன் பற்றியும் பொருளாதார நெருக்கடி பற்றியும், பேசுவோர் பேசாமல் தவிர்க்கின்ற சில விடயங்கள் உண்டு. அவை, முக்கியமானவை. இந்த நாட்டின் இன்றைய நெருக்கடிக்கான காரணங்களை, கடந்த சில ஆண்டுகளின் நிகழ்வுகளில் மட்டும் விசாரித்தறிய இயலாது. எனினும், எதிர்க்கட்சிகளும் ஆய்வாளர்களும், அனைத்து பொருளாதாரப் பிரச்சினைகளையும், 2020இல் தெரிவான அரசாங்கத்தின் தலையில் சுமத்த முற்படுகின்றனர். இந்நெருக்கடியில், அவ்வரசாங்கத்துக்கு முக்கிய பங்குண்டு என்பதில் மறுப்பில்லை. ஆனால், அடிப்படையான சில கோளாறுகள், இந்த நாட்டை நுகர்வுப் பொருளாதாரத்தினுள் தள்ளி, தேசிய உற்பத்திகளுக்கு குழி பறித்து, அந்நியக் கடன்களுக்கு உட்படுத்திய அனைத்து அரசாங்கங்களுக்கும் உரியன; இது வசதியாக மறக்கப்படுகிறது. இன்றைய நெருக்கடிக்கு, உடனடிக் காரணியாக உள்ள அந்நியச் செலாவணி நெருக்கடியை எடுத்து நோக்கினால், இந்த நாட்டின் உழைப்பாளர்களில் ஐந்தில் ஒருவர், நேரடியாக அல்லது மறைமுகமாக ஓர் அந்திய நாட்டுக்காக உழைக்கின்றார். இது இரண்டு அடிப்படையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. ஒருபுறம், உள்நாட்டுத் தொழில் விருத்தி தடைப்படுகிறது. மறுபுறம், அயல் உழைப்பு வருமானத்தில் முற்றாக தங்கியிருக்கும், பலரைக் கொண்ட ஒரு சமூகமாக நம்மை உருமாற்றியுள்ளது. இத்தோடு, தொடர்புடையதாக அந்நியச் செலாவணிக்கு இன்னொரு பரிமாணமும் உண்டு. அது நீண்ட போரின் விளைவால் தோற்றம்பெற்ற ஒரு புலம்பெயர் சமூகம். இப்பின்னணியிலும் எழுகின்ற கேள்வி யாதெனில், இவ்வாறு பல்முனைப்பட்ட அந்நியச் செலாவணி வருமானம், நாட்டுக்கு இருந்தபோதும் இந்தப் பங்களிப்பில், எவ்வளவு நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு உதவியுள்ளது? இந்த அந்நியச் செலாவணி, எங்கு செலவிடப்படுகிறது? எமது அந்நியச்செலாவணியில் பெரும்பகுதி, இறக்குமதியில் செலவாகிறது. இதற்கு அடிப்படையான காரணம், எம்மிடம் உட்பொதிந்துள்ள நுகர்வுப் பண்பாடு. திறந்த பொருளாதாரத்தின் அறிமுகத்தோடு உடன்பிறந்த உலகமயமாக்கல், இந்நுகர்வை புதிய தளத்துக்கு நகர்த்தியுள்ளது. இன்று நாம், அர்த்தமற்ற ஒரு நுகர்வுப் பழக்கத்துக்கு அடிமைப்பட்டுள்ளோம். அதன் துணை விளைவுகளாகவே உணவு இறக்குமதியின் பெருக்கமும் தனியார் கல்வியும் தனியார் மருத்துவமும் கட்டுபாடின்றி பெருகும் ஆடம்பரப் பொருட்களின் நுகர்வும் அமைகின்றன. இவையனைத்துக்கும் அந்நியச்செலாவணியே பயன்படுகிறது. இவ்வாறு அந்நியச் செலாவணி வீணாகின்றபோது, தொடர்ச்சியான அந்நியக் கடன்கள் மூலம் நுகர்வு குறையாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. எமது அடிப்படையான பொருளாதார நிலைப்பாடுகளில் மாற்றம் தேவை. இந்த அடிப்படைச் சிக்கல்களைத் தீர்க்காமல், எந்தவொரு கடனும் பயன் தராது. ஆனால், இந்த மாற்றத்துக்கு அரசியல்வாதிகளோ, அரசாங்கமோ தயாராக இல்லை. எல்லோருக்கும் இருக்கின்ற ‘ஆபத்பாண்டவன்’ சர்வதேச நாணய நிதியம். இதனிடம் கடன் வாங்கச் சொல்லிப் விதந்துரைக்கின்றவர்கள், இதுவரை உலகில் எந்த நாட்டை, சர்வதேச நாணய நிதியம் கடனில் இருந்து மீட்டது என்ற தகவலைச் சொல்வார்களா? சர்வதேச நாணய நிதியத்தால் மீட்கப்பட்ட நாடென்று, எதுவுமில்லை. இரண்டு நாடுகளை உதாரணமாகக் காட்ட முடியும். முதலாவது நாடு உக்ரேன். 2014இல், சர்வதேச நாணய நிதியத்திடம் உக்ரைன், 17 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வாங்கியது. இதற்காக விதிக்கப்பட்ட கட்டமைப்பு மாற்றங்களில், இரண்டு பிரதானமானவை. முதலாவது, அரசுக்குச் சொந்தமான விளைநிலங்களைத் தனியாருக்கு விற்பனை செய்வதும், தனியாரின் நிலக் கொள்வனவு தொடர்பான கட்டுப்பாடுகளை நீக்குவதும் ஆகும். இரண்டாவது, உக்கிரேன் உயிரியல் தொழில்நுட்ப விவசாயம், மரபணு மாற்றப்பட்ட பயிர்ச்செய்கை, மான்சாண்டோவின் நச்சு பயிர்கள், இரசாயனங்கள் விற்பனை ஆகியவற்றுக்கு அனுமதியளித்தல் ஆகியனவாகும். இதன்மூலம், பல்தேசியக் கம்பெனிகளுக்கான வாயில்கள் திறக்கப்பட்டன; ஐரோப்பா முழுவதிலும் மிகவும் பழைமையான ஒரு விவசாய நிலம் அழிக்கப்பட்டது. இதற்கு, உக்ரேனிய அரசாங்கம் உடன்பட்டது. அந்த அரசாங்கமும், ஓர் அமெரிக்கச் சதியின் விளைவால் ஆட்சிக்கு வந்தது என்பதும் கவனிப்புக்குரியது. சர்வதேச நாணய நிதியத்தின் கடனைத் தொடர்ந்து, உக்ரேனில் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டமைப்பு மாற்றங்களின் விளைவால், மான்சாண்டோ, பிளாக்ராக், வான்கார்ட் ஆகியவை 20 மில்லியன் ஹெக்டேருக்கு மேற்பட்ட நிலங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. சுருக்கமாகச் சொல்வதாயின் இந்நிறுவனங்கள், உக்ரேன் விளைநிலங்களில் 70 சதவீதத்துக்கு மேற்பட்டதை வாங்கியுள்ளன. ஐரோப்பாவில் மிகவும் வளமான மண், இப்போது பல்தேசியக் கம்பெனிகளுக்குத் திறக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இன்னும் கடன்களை வழங்க சர்வதேச நாணய நிதியம் உடன்பட்டது. அதற்கு மாற்றாக, உக்ரேன் ஓய்வூதியம், எரிபொருள் மானியங்களைக் குறைக்க வேண்டும். ஆனால், சர்வதேச நாணய நிதியம் வழங்க உடன்பட்ட கடன்தொகையை, எதுவித முன்நிபந்தனைகளின்றி வழங்க முன்வந்தது ரஷ்யா. இதைத் தொடர்ந்து நடந்தவைக்கும், இப்போதைய போருக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இரண்டாவது உதாரணம், ஆர்ஜென்ரீனா. சர்வதேச நாணய நிதியக் கடன் ஆர்ஜென்ரீனாவில் தோற்றுள்ளதாக, இவ்வாண்டு தொடக்கத்தில் அந்த நிறுவனமே ஏற்றுள்ளது. ஆர்ஜென்ரீனாவின் கதை, தனியே அதற்கு மட்டும் உரியதல்ல. இது முழு மூன்றாமுலகுக்கும் உரியது. குறிப்பாக, கடந்த நூற்றாண்டில் தென்அமெரிக்காவில், கடன் என்ற போர்வையில் சர்வதேச நாணய நிதியம் இழைத்த கொடுமைகள் ஏராளம். குறிப்பாக, 1990களில் தென்அமெரிக்காவில் உலகமயமாதலும் திறந்த பொருளாதாரமும் தீவிரமாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, ‘கட்டமைப்புச் சீராக்கம்’ எனப்படும் அரச நிர்வாகத் துறையைக் கட்டுப்படுத்தலும், அரசதுறைகளைத் தனியார் மயமாக்கலும் தொடர்ந்தன. பலநாடுகளில், சர்வதேச நாணய நிதியம் பொருளாதாரக் கொள்கைகளை ஒழுங்குபடுத்திக் கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டது. இவ்வாறு, சர்வதேச நாணய நிதியத்தால் வடிவமைக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்டதொரு நாடு ஆர்ஜென்ரீனா. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆர்ஜென்ரீனா, கடும் பொருளாதார நெருக்கடிக்கு உட்பட்டது. சர்வதேச நாணய நிதியக் கடன் உட்பட, பல கடன்களையும் தீர்க்க இயலாது மக்கள் மீது மேலும் சுமைகளை ஏற்றிய ஒரு நிலையில், அங்கு ஆட்சிமாற்றமொன்று நடைபெற்றது. இடதுசாரிப் போக்கான புதிய அரசாங்கம், எந்தக் கடனையும் வட்டியையும் மீளச் செலுத்துவதில்லை என்ற முடிவை மிகத் தெளிவாக எடுத்தது. இதன் விளைவால், ஆர்ஜென்ரீனா மீது கடுமையான சர்வதேச அழுத்தங்கள் ஏவப்பட்டன. ஆனால், பலவாறான சர்வதேச அழுத்தங்கையும் மீறி, ஆர்ஜென்ரீனாவின் பொருளாதாரம் சிறிது சிறிதாக நெருக்கடியில் இருந்து மீண்டது. அதன் பின்னர், நெருங்கிய நட்பு நாடான வெனிசுவேலாவின் உதவியுடன், சர்வதேச நாணய நிதியத்திடம் வாங்கிய கடனை முழுமையாக அடைத்ததோடு, சர்வதேச நாணய நிதியத்திடம் இனிமேல் கடன் வாங்குவதில்லை என்ற முடிவையும் எடுத்தது. ஆனால், இது நீண்டகாலம் நிலைக்கவில்லை. ஒரு சதியின் விளைவால், தீவிர வலதுசாரி அரசாங்கம் பதவிக்கு வந்தது. புதிய ஜனாதிபதியின் முதல் காரியங்களில் ஒன்று, சர்வதேச நாணய நிதியத்திடம் கையேந்தியமை ஆகும். ஆர்ஜென்ரீனா நாட்டுக்குள் மீண்டும் சர்வதேச நாணய நிதியம் நுழைந்தது. மிகக்குறுகிய காலத்தில், அந்நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இன்று, இலங்கை போன்று வங்குரோத்து நிலையில் ஆர்ஜென்ரீனா உள்ளது. இப்போது சர்வதேச நாணய நிதியத்திடம் கையேந்துகிறார்கள். இதன் பின்னணியிலேயே, சர்வதேச நாணய நிதியம், ஆர்ஜென்ரீனாவில் தோல்வியடைந்ததை தொடர்ந்து வழங்கிய ஒப்புதல் வாக்குமூலத்தை நோக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியம், ‘ஆபத்பாண்டவனோ’, ‘இரட்சகனோ’ இல்லை. இந்த உண்மை விளங்காவிடின், இன்னலில் தொடர்ந்தும் உழல்வதற்கு நாம் கடமைப்பட்டவர்கள். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சர்வதேச-நாணய-நிதியம்-தரித்திரத்தின்-சரித்திரம்/91-302775
  17. சர்வதேச நாணய நிதியம்: கலைய வேண்டிய மாயைகள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ சர்வதேச நாணய நிதியத்திடம் நாட்டை அடகு வைப்பது என்று, பலர் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார்கள். இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, சர்வதேச நாணய நிதியம்தான் ஒரே வழி என்று, மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. சர்வதேச நாணய நிதியம் கடனை வழங்கி விட்டால், அனைத்துப் பிரச்சினைகளும் விரைவில் தீர்ந்து விடும் என்ற பிம்பம், தொடர்ச்சியாகவும் கவனமாகவும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இன்று, சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவது பற்றிய விமர்சனங்களை முன்வைப்போர், மாற்றுக் கருத்துகளைத் தெரிவிப்பவர்கள், எதிர்ப்பாளர்கள் ஆகியோர் எதிரிகளாகவும் தேசத்துரோகிகளாகவும் கட்டமைக்கப்படுகிறார்கள். மாற்றுக் கருத்துக்கு மதிப்பற்ற சமூகத்தைத் திட்டமிட்டு கட்டமைப்பதற்கு, ஆட்சியாளர்களும் அதிகாரத்தில் உள்ளவர்களும் செல்வந்தர்களும் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள்; இது மிகவும் அபாயகரமானது. சர்வதேச நாணய நிதியம் மீதான விமர்சனங்களைக் கண்டு ஆட்சியாளர்கள் கலங்குகிறார்கள். அதனாலேயே மாற்றுக் கருத்தாளர்கள் முடக்கப்படுகிறார்கள். இப்போது இலங்கையில் நடந்து கொண்டிருப்பது, இனி நடக்கப் போகும் ஒரு பெரிய பேரழிவுக்கான முன்னோட்டம் மட்டுமே! இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு சர்வரோக நிவாரணி, சர்வதேச நாணய நிதியத்திடமே இருக்கிறது என்பது கிட்டத்தட்ட முடிந்த முடிவாகி விட்டது. சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்குவது பற்றிக் கதைப்பவர்கள், அடிப்படையான மூன்று விடயங்களை திட்டமிட்டு மறைக்கிறார்கள். முதலாவது, சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கை மேற்கொள்வதன் ஊடு, இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியும் என்று ஆதரிப்பவர்கள், எவ்வாறு இந்த நெருக்கடியை கையாள்வது என்பது பற்றி விரிவாகப் பேசுவதில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் கடனானது, எவ்வாறு இலங்கையின் கடனை அடைக்க உதவப் போகிறது என்பது பற்றி, இதுவரையும் வாய் திறக்கவில்லை. இந்த இடத்தில், சில விடயங்களை ஆணித்தரமாக பேச வேண்டி உள்ளது. இலங்கையின் மொத்த அந்நியக் கடன் அண்ணளவாக 52 பில்லியன் அமெரிக்க டொலர் ஆகும். சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறக்கூடிய அதிகபட்சக் கடன், நான்கு பில்லியன் அமெரிக்க டொலர் மட்டுமேயாகும். அத்தொகையும் பல்வேறு தவணைகளிலேயே வழங்கப்படும். எனவே, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கிடைக்கும் கடன் தொகை, இலங்கையின் கடனை அடைக்க போதுமானது அல்ல. வங்குரோத்து நிலையில் உள்ள இலங்கை, சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதனூடு, மீண்டும் சர்வதேச அரங்கில் கடன் பெறுவதற்கு தகுதியானதாக மாறுகிறது. இதனால், இலங்கையால் மீண்டும் கடனை பெற்றுக் கொள்ள இயலும். இந்த ஒற்றைக் காரணத்துக்காகவே, இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் கடனைப் பெற்றுக்கொள்ள அடம்பிடிக்கிறது. இப்பொழுது முன்மொழியப்படும் யோசனைகள் அனைத்தும் மேலும், இலங்கையை கடனாளி ஆக்குவதைப் பற்றியதேயன்றி, இலங்கையின் கடனைக் குறைக்கும் நோக்கம் கொண்டவை அல்ல. தற்போதைய கதையாடல்களின் ஊடு, இலங்கையின் பொருளாதார நெருக்கடி என்பது, கடன் வாங்க இயலாது போனமை என்பதாகச் சுருக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் பல்பரிமாண அம்சங்கள் பேசப்படாமல் தவிர்க்கப்படுகின்றன. குறிப்பாக, நாட்டில் புரையோடிப் போயுள்ள ஊழல் முக்கியமான காரணம். கடந்த மூன்று தசாப்த காலங்களில், விலக்கில்லாது எல்லா அரசாங்கங்களும் ஊழலில் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துள்ளன. ஆனால், இன்று இது பேசுபொருள் அல்ல. திசைதிருப்புதல்களின் ஊடாக, பொருளாதார நெருக்கடிக்கான உண்மையான காரணிகள் பேசப்படாமல், பார்த்துக் கொள்ளப்படுகின்றன. ஏனெனில், என்றாவது இவை பொதுத்தளத்தில் விரிவாகப் பேசப்படும் போது, கட்டமைப்பு ரீதியான மாற்றம் தவிர்க்க இயலாததாகும். அதை ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் அதிகாரத்தை ருசிப்போரும் விரும்பவில்லை. இரண்டாவது அம்சம், சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை கடன் பெறுகின்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவன்று. 1965ஆம் ஆண்டு முதல் இலங்கை தொடர்ச்சியாக, சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுள்ளது. இதுவரை 16 தடவைகள் இவ்வகையான கடன் திட்டங்களுக்குள் இலங்கை ஆட்பட்டு உள்ளது. தொடர்ச்சியாகக் கடன் வாங்கிய போதும், இலங்கையால் அதன் அந்நியக் கடனைக் குறைக்கவோ, அடைக்கவோ இயலவில்லை. மாறாக, இலங்கையின் அந்நியக் கடனின் தொகை, தொடர்ச்சியாக அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் இம்முறை பெறப்படுகின்ற கடன் மட்டும், இலங்கையின் கடன் சுமையை எவ்வாறு தீர்க்கும் என்பது பற்றி, யாரும் கருத்துரைப்பதில்லை. சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுகின்ற ஒவ்வொரு முறையும், இலங்கை தொடர்ச்சியான சமூகநல வெட்டுகளை நடைமுறைப்படுத்தி வந்துள்ளது என்பதையும் நினைவில் கொள்வது தகும். வரலாற்றில் இருந்து நாம் பாடம் கற்பதாயின், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறப்பட்ட ஒவ்வொரு தடவையும், ஒருங்கே சமூகநல வெட்டுகளும் அந்நிய கடன் அதிகரிப்பும் நடந்துள்ளன. பேசப்படாத மூன்றாவது முக்கிய விடயம், இலங்கைக்கு கடன் வழங்கியவர்கள் யார் என்கிற விடயத்தை, இன்று வரை இலங்கை அரசாங்கம் இரகசியமாக வைத்துள்ளது. குறிப்பாக, இலங்கைக்கு கடன் வழங்கிய தனியார் நிறுவனங்கள் எவை என்கிற தகவல், இன்று வரை பகிரங்கப்படுத்தப்படவில்லை. இது இரண்டு அம்சங்களை கோடிட்டுக் காட்டுகிறது. முதலாவது, இலங்கைக்கு கடன் வழங்கியவர்கள் யார் என்பதை அறிகின்ற உரிமை, அனைத்து இலங்கையர்களுக்கும் உண்டு. ஆனால், அந்த உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது, இலங்கை அரசாங்கம் குறித்த விடயத்தில் இரகசியம் காப்பதானது, கடன் வழங்குநர்கள் குறித்த சந்தேகங்களை எழுப்புகிறது. இதை மறைப்பதற்காக, சீனக் கடன்தான் இலங்கையை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியது என்ற பொய், திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. கொள்கை வகுப்பாளர்கள், நிபுணர்கள் மத்தியில், சர்வதேச நாணய நிதியத்துக்குச் செல்வது, நெருக்கடியிலிருந்து இலங்கைக்கு ஒரு பாதையை புலப்படுத்தும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. ஆனால், சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்குவதன் பெயரால், இலங்கையில் கட்டமைப்பு மாற்றங்களைக் கோருகிறது. இந்த மாற்றங்கள் இலங்கையில் எஞ்சியுள்ள சமூகநலத் திட்டங்களையும் முழுமையாக அழித்துவிடக் கூடியவை. சர்வதேச நாணய நிதியத்திடம் சரணாகதி அடைவதையே நோக்காகக் கொண்டுள்ள அரசாங்கத்திடம், எதிர்பார்க்க அதிகமில்லை. ‘அந்நியத் தலையீடு’, ‘இறையாண்மைக்கு சவால்’ என்று அடிக்கடி கூச்சலிடுகின்ற பேரினவாதிகளையும் கொண்டுள்ள அரசாங்கமே, சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதனூடு, இலங்கையின் இறையாண்மையை அடகுவைக்கும் செயலை முன்னெடுக்கிறது. கவனிப்புக்குரியது யாதெனில், கடனை திருப்பிச் செலுத்துவதில் அக்கறை காட்டுகிற அரசாங்கம், திருடப்பட்ட, கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்தவில்லை. மாறாக, இன்னமும் கடனைப் பெறுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளும் முகமாக, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு உட்படுகிறது. எந்தக் கட்டமைப்பு ஊழலை வரன்முறையின்றி சாத்தியமாக்கியதோ, அதே கட்டமைப்பில் மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்ப்பது மடத்தனம். சர்வதேச நாணய நிதியத்துடன், ‘அலுவலர் நிலை உடன்பாடு’ (Staff Level Agreement) விரைவில் எட்டப்படும் என்று, ஜனாதிபதி தனது பாராளுமன்ற உரையில் தெரிவித்தார். கேள்வி யாதெனில், இந்த உடன்பாட்டை பகிரங்கப்படுத்த அரசாங்கம் தயாரா? மடியில் கனமில்லையாயின் வெளிப்படுத்த வேண்டியதுதானே! Devil is in the detail என்றொரு கூற்று ஆங்கிலத்தில் உண்டு. இந்தக் கூற்று, இதற்கு மிகவும் பொருந்தும். சர்வதேச நாணய நிதியத்திடம் உடன்படிக்கை எட்டப்பட்டது என்ற செய்தியால் பலனில்லை. என்னென்ன விடயங்கள் பேசப்பட்டன என்பதும் இலங்கை அரசாங்கம் உடன்பட்ட நிபந்தனைகள் எவை என்பன, பகிரங்கப்படுத்த வேண்டும். மக்கள் இப்போது, அரசாங்கத்திடம் கோர வேண்டியது, வெளிப்படைத் தன்மையையே ஆகும். மூடிய கதவுகளுக்குப் பின்னால், எமது தலைவிதியை யாரோ சிலர் முடிவு செய்வதை அனுமதிக்க இயலாது; அனுமதிக்கவும் கூடாது. நாட்டின் வளங்களும் சொத்துகளும், இலங்கை குடிமக்களுக்குச் சொந்தமானவை; மக்களுக்காகவை. அவற்றை மக்களின் அனுமதியின்றி பகிர்ந்தளிப்பதோ, தனியார் மயமாக்குவதோ, குத்தகைக்கு விடுவதோ மக்களை அவமதிக்கும் செயல் மட்டுமல்ல; வீட்டுக்குள் அனுமதியின்றிப் புகுந்து திருடும் செயலுக்கு ஒப்பானது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சர்வதேச-நாணய-நிதியம்-கலைய-வேண்டிய-மாயைகள்/91-302368
  18. களத்தில் குதித்துள்ள பொருளாதார அடியாட்கள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையர்களின் கதையாடல்கள், இப்போது வேறு தளத்தை நோக்கி நகர்ந்துள்ளன. இன்னும் சரியாகச் சொல்வதானால் நகர்த்தப்பட்டுள்ளன. நேற்றுவரை போராட்டத்துக்கும் போராட்டக்காரர்களுக்கும் ஆதரவாக இருந்தவர்கள், கருத்துரைத்தவர்கள் பலர் இன்று அரசாங்கத்துடன் ஐக்கியமாகி, பதவிகளைப் பெற்றுள்ளார்கள். அவர்கள், போராட்டத்துக்கும் போராட்டக்காரர்களுக்கும் எதிராக, இன்று கருத்துரைக்கிறார்கள்; அவ்வாறான கருத்துருவாக்கம் ஒன்றைச் செய்கிறார்கள். இன்னொரு தரப்பினர், பொருளாதார மீட்சியின் அவசரம் பற்றிப் பேசுகிறார்கள். அவர்கள், போராட்டக்காரர்களை அமைதிகாக்கும்படி கோருகிறார்கள். மற்றுமொரு தரப்பினர், போராட்டம், வன்முறையைக் கையில் எடுத்ததை அனுமதிக்கவோ அங்கிகரிக்கவோ முடியாது என்றும் சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்றும் கோருகிறார்கள். இவ்வாறெல்லாம் கோருகிறவர்கள், அடுத்த வேளை உணவுக்கோ, எரிபொருளுக்கோ போராடுபவர்கள் அல்ல. களத்தில் நின்று கண்ணீர்புகையையும் நீர்த்தாரையையும் எதிர்கொண்டது, இவர்களது பிள்ளைகளும் அல்ல. போராடுவதும் மாற்றத்தைக் கோருவதும் மிகச் சாதாரணமான இலங்கையர்களே ஆவர். இன்று, இவர்களை நோக்கியே ஜனாதிபதி முதல் அனைவரும், இவ்வாண்டு இறுதிவரை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று கோருகிறார்கள். இன்றைய இலங்கையின் சித்திரம் கவலைக்கிடமானது. அதுகுறித்துப் பேசுவார் யாருமில்லை. அண்மையில், உலக உணவுத்திட்டம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அச்சம் தருபவை. ‘63 இலட்சம் இலங்கையர்களுக்கு உணவுப் பாதுகாப்பு இல்லை. இலங்கையின் மொத்த சனத்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் உணவு நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். சத்தான உணவுகளின் விலைகள் பொருளாதார நெருக்கடிக்கு முன்னர் இருந்ததை விட, ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது’ என்றும் இவ்வறிக்கை சுட்டுகிறது. அதேவேளை, இலங்கையின் உணவு இறக்குமதிக்காக மாதந்தோறும் செலவிடப்படும் தொகை 130 மில்லியன் அமெரிக்க டொலரில் இருந்து 50 மில்லியன் அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது. இது உணவின்மையையும் பட்டினியையும் அதிகரித்துள்ளது. விவசாய அமைச்சின் புள்ளிவிவரங்களின் படி, இலங்கையில் திரவ பால் உற்பத்தி 20 சதவீதமும் முட்டை உற்பத்தி 35 சதவீதமும் கோழி இறைச்சி உற்பத்தி 12 சதவீதமும் குறைந்துள்ளன. கால்நடை தீவனம் சரியான முறையில் உற்பத்தி செய்யப்படாமையே இந்நிலைமைக்கு பிரதான காரணம் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. நிறையுணவாகக் கருதப்படும் பாலினதும் முட்டையினதும் உற்பத்தி வீழ்ச்சியானது, போசாக்குத் தொடர்பான ஏராளமான வினாக்களை எழுப்புவதோடு, நீண்டகாலப் பாதிப்புகளை இலங்கையர்களுக்கு ஏற்படுத்தவல்லது. பாராளுமன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, மக்கள் கஷ்டங்களை தாங்கிக்கொள்ளப் பழக வேண்டும் எனத் தெரிவித்தார். இதையே பொருளாதார வல்லுனர்கள் எனப்படுவோர் சொல்கிறார்கள். முன்னாள் மத்தியவங்கி ஆளுநரான இந்திரஜித் குமாரசுவாமி, அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மானியங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அண்மையில் தெரிவித்திருந்தார். பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு குறித்துப் பேசுகின்ற அனைவரும், ஒரே தொனியில் பேசுகிறார்கள். சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதே ஒரே வழி; இலங்கை கட்டமைப்பு மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்; மானியங்கள் நிறுத்தப்பட வேண்டும்; அரச நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட வேண்டும். இவையே இவர்களது தீர்வாக இருக்கிறது. இவை அனைத்தும், சாதாரண மக்களின் மீது பொருளாதாரத்தின் சுமையை ஏற்றும் தீர்வுகளே ஆகும். சர்வதேச நாணய நிதியத்திடம் மண்டியிடத் தயாராகவுள்ள இலங்கை அரசாங்கம், இலங்கை மக்களை முழுமையாக அடகுவைக்கிறது. மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுகின்ற, மானியங்களைக் குறைக்கின்ற, தனியார்மயத்தை துரிதப்படுத்துகின்ற நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவு வழங்குவோர், செல்வந்தர்களின் பங்கு என்ன என்பது பற்றி வாய் திறப்பதில்லை. அண்மையில் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், மத்திய வங்கியின் ஆளுநர் மிகமுக்கியமான ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டினார். மாதந்தோறும் இலங்கைக்கு ஏற்றுமதி வருமானமாகக் கிடைக்கும் தொகை, ஒரு பில்லியன் (1,000 மில்லியன்) அமெரிக்க டொலர். இதில் 800 மில்லியன் அமெரிக்க டொலர் நாட்டுக்குத் திரும்பி வருவதில்லை. அவை, இலங்கைக்கு வெளியே பதுக்கப்படுகின்றன. அவை நாட்டுக்குள் வந்தால், மாதாந்த எரிபொருள், உணவு, மருந்துகளைக் கொள்வனவு செய்யப் போதுமானவையாக இருக்கும். இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தை மீண்டும் நாட்டுக்குள் கொண்டுவருதற்கான 2021ஆம் ஆண்டின் 5ம் இலக்க விதியின் படி முழு வருமானமும் அந்நியச் செலாவணியில் நாட்டுக்குள் வந்தாக வேண்டும். ஆனால், அது நடைபெறுவதில்லை. இக்குற்றவாளிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகளை அரசாங்கம் எடுப்பதுமில்லை. அதேவேளை, இலங்கையின் வரிவிதிப்பு முறைகள் அரசாங்கத்தின் மிகக்கேவலமான முகத்தை வெளிக்காட்டுகிறது. முத்துகள், வைரங்கள், உயர்ரகக் கைக்கடிகாரங்கள், உடற்பயிற்சி உபகரணங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்வதற்கு, வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பெண்களுக்கு அவசியமான மாதவிடாய்கால துணிகளுக்கு 43சதவீத வரியும் குழந்தைகளுக்கான அணையாடைகளுக்கு 15சதவீத வரியும் விதிக்கப்படுகிறது. இவ்வாறான வரிவிதிப்புகளையும் வரிச்சலுகைகளையும் உருவாக்கிய அதிகாரிகள், அங்கிகரித்த அரசாங்கம் என்பன, மிகச்சாதாரணமான இலங்கையர்களுக்கு சொல்லும் செய்தி என்ன? இலங்கையில் பொருளாதார அடியாட்கள், பல்வேறு வகைகளில் இயங்குகிறார்கள். ஒருசிலர், இவ்வாறு நாட்டுக்குள் வரவேண்டிய அந்நியச் செலாவணியை வெளிநாட்டில் பதுக்குகிறார்கள். இன்னும் சிலர் அரசாங்கப் பதவிகளில் இருந்தபடி, இவ்வாறான செயற்பாடுகளுக்கு வசதி செய்து கொடுக்கிறார்கள். இவ்வாறான செயல்கள் தொடர அனுமதியளிக்கிறார்கள். இவர்கள் அனைவரும், நாட்டுக்குள் இயங்கும் செயற்பாட்டுப் பொருளாதார அடியாட்கள். இன்னும் சிலர் அரசாங்கத்தின் கொள்கைவகுப்பில் செல்வாக்குச் செலுத்தும் பொருளாதார அடியாட்கள். அவர்கள் தான் சர்வதேச நாணய நிதியத்திடம் சரணடையக் கோருவது, சமூகநல வெட்டுகளைக் கோருவது போன்ற வேலைகளைச் செய்பவர்கள். மூன்றாவது வகை, நாட்டின் தலைவர்களாக, அமைச்சர்களாக இருந்து நேரடியாக, நவதாராளவாதத்தின் அடியாட்களாக இயங்குபவர்கள். இவர்கள் அனைவரும் வகைதொகையின்றி இலங்கையில் உலா வருகிறார்கள். இந்தப் பொருளாதார அடியாட்கள், வரன்முறையின்றி இயங்குவதற்கு இயல்பான எதிர்ப்பு உருவாகாத சூழல் அவசியம். அதையே போராட்டக்காரர்களை நசுக்குவதன் ஊடு, அரசாங்கம் செய்ய முயல்கிறது. பொருளாதார அடியாட்களோடு, ஊழலும் அதிகாரத் துஷ்பிரயோகமும் பின்னிப் பிணைந்தவை. இல்லாவிட்டால் மத்திய வங்கிப் பிணைமுறி விடயத்தில், இலங்கையால் தேடப்படுகின்ற குற்றவாளியை ‘சீஎன்என்’ தொலைக்காட்சி பேட்டி எடுக்கிறது. அவரும் இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வது பற்றி வகுப்பெடுகிறார். இதையெல்லாம், கேட்டுக்கேள்வியின்றி சகிக்க வேண்டிய நிலையில்தான் இலங்கையர்கள் இருக்கிறார்கள். இந்தப் பொருளாதார அடியாட்களும் அவர்தம் துதிபாடிகளும் அடிக்கடி சொல்கின்ற இரண்டு விடயங்களை சுருக்கமாகப் பார்ப்போம். முதலாவது, அரச சேவையில் பணியில் உள்ளவர்களைக் கணிசமாகக் குறைக்க வேண்டும் என்பது. இந்த அடியாட்களது கோரிக்கை யாதெனில், பணியாட்களைக் குறைத்து, துறைகளைத் தனியார்மயமாக்க வேண்டும் என்பதாகும். தனியார்மயமாக்குவதன் ஊடு வினைத்திறனான சேவை கிடைக்கும் என்பதே இவர்களின் வாதம். இலங்கையில் வெற்றிகரமாக இயங்கிவந்த அரச பஸ் சேவையை, 1979இல் தனியார்மயமாக்கியதன் கோர விளைவுகளை, இலங்கையர்கள் நன்கு அறிவார்கள். இன்றும் பின்தங்கிய கிராமங்களுக்கு இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ்களே செல்கின்றன. அரசசேவையைத் தனியார்மயமாக்குவது எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு, பஸ் சேவை தனியார்மயமாக்கம் நல்லதோர் உதாரணம். இலங்கையின் அரசதுறையின் அரசியல்மயமாக்கமும், வாடிக்கையாளர் அரசியலும் வினைத்திறனையும் உற்பத்தித்திறனையும் சீரழித்துள்ளன. அதேவேளை இலங்கையில் எஞ்சியுள்ள சமூகநலன்கள் அடித்தட்டு மக்களுக்குப் போய்ச் சேர்வதற்கு, வினைத்திறனான அதேவேளை போதுமான ஊழியர்களைக் கொண்ட அரசசேவை அவசியம். ஆட்கள் குறைப்பு பற்றிய விடயத்தில், நாம் ஒன்றைக் கவனிக்கத் தவறுகிறோம். இலங்கையில் 1.5 மில்லியன் பேர் அரசபணிகளில் இருக்கிறார்கள், சராசரியாக 100 பேருக்குப் பணிசெய்வதற்கு 6.8 பேர். ஐரோப்பாவில் சராசரியாக 100க்கு7, ஸ்கன்டினேவியாவில் சராசரி 100க்கு 9. இலங்கை போன்ற அசமத்துவங்கள் நிறைந்த, குறைந்த வருமானமுடைய ஒரு நாட்டின் நலனுக்கு, அரசசேவையே அச்சாணி. ஐ.நாவின் சமூகக் குறிகாட்டிகளில் ஏனைய தென்னாசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது, இலங்கை முன்னணியில் இருப்பதும், குறிப்பாகக் கல்வியிலும் மருத்துவத்திலும் இலங்கை வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு இணையான குறிகாட்டிகளைக் கொண்டிருப்பதையும் சாத்தியமாக்கியது, இலவசக் கல்வியும் இலவச மருத்துவமுமாகும். பொருளாதார அடியாட்கள் எம்மிடம் மீதமுள்ள சமூக நலன்களையும் அது தருகின்ற வளமான கல்வி, நலமான உடல்நிலை ஆகியவற்றையும் பறித்து, அனைத்தையும் வியாபாரமாகவும் இலாபத்துக்கானதாகவும் மாற்ற முயல்கிறார்கள். அவதானமாக இல்லாவிடின், துன்பத்தில் உழல்வது எமது எதிர்காலச் சந்ததியும்தான் என்பதை நினைவில் கொள்க! https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/களத்தில்-குதித்துள்ள-பொருளாதார-அடியாட்கள்/91-301863
  19. அடுத்த கட்டம்: ‘அரகலய’வுக்கு ஆப்படித்தல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கை, இன்று ஒரு முட்டுச்சந்தில் நிற்கிறது. புதிய ஜனாதிபதியின் வருகை எதையுமே மாற்றிவிடப் போவதுமில்லை; இலங்கையில் ஜனநாயகம் மலரப்போவதும் இல்லை. முன்னெவரையும் விட, மிக மோசமான சர்வாதிகாரியாகத் தன்னால் இயங்கவியலும் என்பதை, ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற 24 மணி நேரத்துக்குள் நிரூபித்துள்ளார். ரணில் மீதான, ‘மீட்பர்’, ‘ஜனநாயகத்தின் காவலர்’ போன்ற விம்பங்கள் உடைந்து, சுக்குநூறானது நல்லது. இருந்தாலும் இன்னமும் அதைத் தாங்கி நிற்போர் உண்டு. வரலாறு காணாத மக்கள் எழுச்சியொன்றை இலங்கை கண்டுள்ளது. இது அதிகாரபீடங்களை அசைத்துள்ளது. மக்கள் எழுச்சி குறித்த நம்பிக்கைகளை விதைத்துள்ளது. மக்களால் அதிகாரத்தில் உள்ளவர்களை அகற்றவியலும் என்பதை, இந்த ‘அரகலய’ செய்து காட்டியுள்ளது. இது ஆபத்தானது என்று அதிகார வர்க்கம் அறியும்; அரசியல்வாதிகள் அறிவார்கள். இவர்கள் இருவரையும் நம்பியுள்ள ஏவல் வர்க்கமும் அறியும்; இவர்கள் எல்லோரையும் ஆட்டுவிக்கும் ‘சர்வதேச சமூகமும்’ அறியும். எனவே, போராட்டத்தை மழுங்கடித்தலும் சேறுபூசலும் அவதூறுபரப்புதலும் அவசியமாகிறது. அதன்மூலமே, போராட்டத்தை வலுவிழக்கவும் நம்பிக்கை இழக்கவும் செய்ய முடியும். அதற்கான கட்டமே, இப்போது அரங்கேறுகிறது. இந்தப் போராட்டத்தையும் அதுசார்ந்து உருவாகியுள்ள உரையாடல்களையும், அவசரமாக முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்பதே அதிகாரவர்க்கத்தின் விருப்பமாகும். இதில், ஆளும் எதிர்க்கட்சி, ரணில் ஆதரவு, ரணில் எதிர்ப்பு, கோட்டா ஆதரவு என்ற எந்த வேறுபாடும் இன்றி, அதிகாரவர்க்கத்தினர் ஒன்றுபட்டு உள்ளனர். மூன்று அடிப்படையான தேவைகளுக்காக, இந்தப் போராட்டத்துக்கு முடிவு கட்டவேண்டும் என்று அதிகாரத்தில் உள்ளோர் விரும்புகிறார்கள். முதலாவது, அதிகாரவர்க்கம் சவாலுக்கு உள்ளாவதை எப்போதும் விரும்புவதில்லை. தன்னைச் சவாலுக்கு உட்படுத்துவோரை, எப்படியும் பழிவாங்கியே தீருவது என்பது அதிகாரத்தின் குணம். இலங்கையில், கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்ற விடயங்கள், அதிகாரவர்க்கத்தின் நலன்களுக்கு எதிரானவை. இப்போராட்டங்கள் தொடருமிடத்து, அதிகாரத்தின் இருப்பே கேள்விக்கு உள்ளாகும். இதனால், ‘அரகலய’வைச் சரிக்கட்டுவது தவிர்க்கவியலாதது. எல்லாவற்றிலும் மேலாக, இன்னுமொருமுறை இவ்வாறானதொரு போராட்டத்தை, இலங்கையர்கள் தொடங்காமல் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு, இவர்களுக்குப் ‘பாடம் புகட்ட வேண்டும்’; இதுதான் அதிகார வர்க்கத்தின் மனநிலை. இரண்டாவது, இலங்கையின் அண்மைக்கால மாற்றங்கள், புதிதாக ஏற்படுகின்ற அரசாங்கம், போராட்டக்காரர்களுடன் பேசவேண்டியதன் தேவையை உருவாக்கியது. இதன்மூலம் அரசாங்கமும் பாராளுமன்ற உறுப்பினர்களும் போராட்டக்காரர்களுக்கும் மக்களுக்கும் பதில்சொல்லக் கடப்பாடு உடையவர்களாகினார்கள். இது அதிகாரத்துக்கு உவப்பானதல்ல. இந்த நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவே, பாராளுமன்றின் மீஉயர் தன்மை பற்றிப் பேசி, அதிகாரத்தை அவர்கள் தமக்குள் பகிர்ந்து கொண்டார்கள். அரசாங்கமோ பாராளுமன்றோ, தமது செயல்களுக்குப் பொறுப்புச் சொல்லும் ஓர் ஏற்பாட்டை விரும்பவில்லை. இதனால், ஏதாவதொரு வழியில் போராட்டக்காரர்களை வீட்டுக்கு அனுப்புவது தவிர்க்க இயலாததாகும். இல்லாவிட்டால் விரும்பியோ - விரும்பாமலோ, போராட்டக்காரர்களுடன் பேச வேண்டியிருக்கும். இதை எப்படியாவது இல்லாமல் செய்துவிட, அதிகாரவர்க்கம் துடிக்கிறது. சட்டரீதியாகவும் சட்டத்துக்கு முரணாகவும் அதிகாரவர்க்கம் இதைச் செய்து முடிக்கும். இதை அடுத்த சிலவாரங்கள் நிகழவுள்ள காட்சிகள் உறுதிப்படுத்தும். மூன்றாவது, சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெற்றுக் கொள்வதாயின் இலங்கை ஏராளமான கட்டமைப்பு மாற்றங்களைச் செய்தாக வேண்டும். இக்கட்டமைப்பு மாற்றங்கள் இலங்கையில் எஞ்சியிருக்கின்ற சமூகப் பாதுகாப்பையும் இல்லாதொழிக்கவல்லவை. இலவசக் கல்வி, இலவச மருத்துவம் உள்ளிட்ட சமூகநலத் திட்டங்களை இல்லாதொழித்து, தனியார்மயத்தை ஊக்குவித்து, அரசதுறையை புனர்நிர்மாணம் செய்வதன் பெயரால் வேலையிழப்புகள் என அனைத்தையும் செய்வதன் ஊடே, சர்வதேச நாணய நிதியத்தை நாட முடியும். வலுவான மக்கள் போராட்டம் உயிர்ப்புடன் இருக்கும்வரை இது சாத்தியமில்லை. ஏனெனில் மக்கள் இதை எதிர்ப்பார்கள். எனவே, ‘அரகலய’வை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். சர்வதேச நாணய நிதியம் கோருகின்ற ‘அரசியல் ஸ்திரத்தன்மை’ என்பது, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, கட்டமைப்பு மாற்றங்களை எதுவித எதிர்ப்பும் இன்றி நடைமுறைப்படுத்தத் தேவையான சூழலாகும்.அதாவது, சர்வதேச நாணய நிதியமும் மேற்குலகமும் கோருகின்ற ஸ்திரத்தன்மை என்பதன் பொருள், போராட்டக்காரர்களை வீட்டுக்கு அனுப்புவதும் மக்கள் எதிர்ப்பேதும் தெரிவிக்காமல் அமைதிகாப்பதை உறுதிப்படுத்துவதுமே ஆகும். இன்று, மூன்று போக்குளைகளையும் காணக்கிடைக்கிறது. முதலாவது, அரச ஊழியர்கள் (பொலிஸார், இராணுவத்தினர், ஏனையோர்) சட்டத்தை நிலைநாட்டுவது என்பதன் போர்வையில், மக்களுக்கு எதிரான வன்முறையைப் பயன்படுத்துகிறார்கள். ஒருவாரத்துக்கு முன்னர்வரை போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக இருந்தவர்கள் எல்லாம், இன்று சட்டம்-ஒழுங்கு பற்றி வகுப்பெடுக்கிறார்கள். இந்த மாற்றம் என்பது, கோட்டாவை வீட்டுக்கு அனுப்பப் போராடியபோது, இளைஞர்கள் வீரர்களாகவும் நாயகர்களாகவும் தெரிந்தார்கள். இன்று அவர்கள் பயங்கரவாதிகளாகத் தெரிகிறார்கள். இதே குரலே பாராளுமன்றிலும் ஒலிக்கிறது. இரண்டாவது போக்கு, அதிகார வர்க்கத்தினர் இன்று வெளிப்படையாகவே வன்முறையை ஆதரிக்கிறார்கள். போராட்டக்காரர்கள் மீது வன்முறை ஏவப்படுவதை நியாயப்படுத்துவதோடு அது தேவையானது என்றும் முன்மொழிகிறார்கள். இவ்வாறு கோருபவர்கள் தங்கள் வாழ்நாளில் வன்முறைக்கு ஆளாகாதவர்கள். இலங்கைச் சமூகம் எவ்வாறு ஒரு வன்முறைச் சமூகமாக மாறியிருக்கிறது என்பதும் மூன்று தசாப்தகால யுத்தம் வன்முறைக்கும் காணாமலாக்கப்படுதலுக்கும் சித்திரவதைக்கும் மௌன அங்கிகாரத்தை வழங்கியுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது. மூன்றாவது, கடந்தவாரம் போராட்டக்காரர்கள் மீது ஏவப்பட்ட வன்முறையைப் பார்த்து, பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அரசாங்கத்தின் செயலைக் கண்டித்துள்ளனர். இவர்கள் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக, சிறுபான்மையினர் மீது வன்முறை தொடர்ச்சியாக ஏவப்பட்டபோது, கண்டும்காணாமல் இருந்தவர்கள். இவ்வாறானதொரு செயலை இலங்கை அரசாங்கம் செய்வது, வெட்டக்கேடானது என்றும் இவை சர்வதேச அரங்கில் இலங்கையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் என்றும் அறிக்கைகளையும் கருத்துகளையும் வெளியிட்டுள்ளனர். இன்றுவரை, ‘அரச பயங்கரவாதம்’ என்ற சொற்பதத்தைக் கவனமாகத் தவிர்ப்பவர்களே இவர்கள்தான். இப்போதைய கூற்றுகள் எழுப்புகிற கேள்வி யாதெனில், நீண்டதுயிலில் இருந்து இப்போதுதான் இவர்கள் எழுந்தார்களா அல்லது, இது தெரிந்தெடுத்த மறதியா? இலங்கை புதியதொரு திசைவழியில் பயணிப்பதற்கான வாய்ப்பை இன்னொருமுறை தவறவிடுகிறது என்றே தோன்றுகிறது. இலங்கையைப் பீடித்துள்ள சிங்கள - பௌத்த பேரினவாதமும் அதிகார துஷ்பிரயோகமும் ஊழலும், இலங்கையின் முன்னேற்றகரமான பாதைக்குத் தொடர்ந்து குழிபறிக்கின்றன. மேற்சொன்ன மூன்று போக்குகளுக்குமான அடிப்படை என்ன? மக்களின் நீண்ட போராட்டத்தின் பின்னரும் இவ்வாறான குறுந்தேசியவாத நிலைப்பாடுகள் ஏன் முனைப்படைகின்றன என்பது, ஆழ விசாரிக்கப்பட வேண்டியவை. இவை, ஆழ விசாரிக்கப்படாமல் இலங்கை ஒரு நாடாக முன்செல்லவியலாது. இலங்கையர்கள் ஒரு சமூகமாகத் தங்களுக்குள் சில கேள்விகளைக் கேட்டாக வேண்டும். இந்தப் போராட்டத்தின் வெற்றிக்கு உரிமையுடையவர்கள் அரசியல்வாதிகள் அல்லர். தொடர்ச்சியான வன்முறைக்கும் துன்பத்துக்கும் ஆளாகியும் தொடர்ச்சியாகக் களத்தில் நின்ற இளைஞர்களே ஆவார். அவர்களின் தியாகமே இதை சாத்தியமாக்கியது. அவர்கள் தங்களுக்காக மட்டும் போராடவில்லை. நம் அனைவருக்காகவும் நமது எதிர்காலத்துக்காகவுமே போராடினார்கள்; போராடுகிறார்கள். இன்று நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் அவர்களை, நாம் பாதுகாக்கப் போகிறோமா அல்லது நாம் உண்டு; நமது வேலையுண்டு என்று இருக்கப் போகிறோமா? மக்களால் தெரிந்து பாராளுமன்றுக்கு அனுப்பப்பட்டோர், தொடர்ந்தும் மக்கள் விரோதமாக இயங்குவதை அனுமதிப்பதா? நாங்கள் அனுப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய எமது நிலைப்பாடு என்ன? எப்போது நாம், அவர்களை கேள்வி கேட்கப் போகிறோம்? அவர்களைத் தொடர்ந்தும் தெரிவுசெய்து, எமது குழந்தைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கப் போகிறோமா? இந்த நெருக்கடியிலும் பெற்றோல், டீசல் மாபியாக்களும் மிகப்பெரிய கறுப்புச் சந்தையும் உருவாகியிருக்கிறது. இதை நாம் எவ்வாறு அனுமதித்தோம்? ஏன் கேள்வி கேட்க மறுத்தோம்? நெருக்கடியிலும் சமூகப் பொறுப்பின்றி சுயநலமாக இயங்கும் ஒரு சமூகம் விடிவுக்கு தகுதியானதா? ‘அரகலய’ தொடங்கியது முதல், நான் வலியுறுத்தியவற்றில் ஒன்று நியாயத்துக்கும் உரிமைக்கும் நீதிக்குமான போராட்டத்தில் ஒருகணம் கண்ணயர்ந்தாலும் பாசிசம் எனும் கொடுந்தண்டனை எம்மை வந்து சேரும் என்பதாகும். நாம் கண்ணயர்ந்தோமா இல்லையா என்பதை, அடுத்து இலங்கையில் அரங்கேறும் காட்சிகள் கோடுகாட்டும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அடுத்த-கட்டம்-அரகலய-வுக்கு-ஆப்படித்தல்/91-301411
  20. முட்டுச்சந்தியில் முனகும் தேசம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ மக்கள் போராட்டங்களின் வீரியம் என்னவென்பதை இலங்கையர்களும் குறிப்பாக அரசியல்வாதிகளும் உணர்ந்த தருணம் மகத்தானது. ஆனால் இலங்கை அரசியலில் பேரிடர்கள் வரிசைகட்டி நிற்கின்றன. எதிர்கட்சித் தலைவர் ஒருபேரிடர் என்றால் சபாநாயகர் இன்னொரு பேரிடர். எதிர்கட்சிகளும் பாராளுமன்றும் இதன் தொடர்ச்சி. இந்தப் பின்னணியிலேயே இந்நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான வழிகளை மக்கள் தேடவேண்டியிருக்கிறது. ஹிட்டலராகத் தன்னை உருவகித்துக் கொண்டவர் இறுதியில் கோமாளியாகி நாட்டை விட்டுத் தப்பியோட நேர்ந்திருப்பது அவல நகைச்சுவை. இதை சாத்தியமாக்கிய பெருமை போராட்டக்காரர்களையே சாரும். கடந்த 9ம் திகதி மக்கள் திரள் உறுதியானதும் இறுதியானதுமான செய்தியைச் சொல்லிவிட்ட பிறகும் அரசியல்வாதிகளின் நடத்தையானது யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. இதுவே இலங்கையின் இன்றைய முக்கியமான நெருக்கடி. இன்று முனைப்படைந்திருக்கின்ற அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான வலுவோ, மனஉறுதியோ, புத்தாக்கக் கற்பனையோ எந்தவொரு அரசியல்வாதியிடமும் இல்லை. அதேவேளை அரசியல்வாதிகள் கூட்டாக பாராளுமன்றத்திற்கு வெளியே ஒரு தீர்வை மக்கள் தேடிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த பலர் இப்போது பாராளுமன்றத்தை இயங்க அனுமதியுங்கள், ஜனநாயக முறையில் தீர்வைத் தேடுங்கள் என்று பாடம் எடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த நடத்தை புதிதல்ல. கடந்த மேமாதம் 9ம் திகதி பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவிவிலகி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றபோது பொருளாதாரப் பிரச்சனையைத் தீர்க்க ரணிலுக்கு அவகாசம் கொடுக்கச் சொல்லியும் போராட்டக்காரர்களை அமைதியாக இருக்கும்படியும் கோரியவர்கள் தான் இவர்கள். இன்று இலங்கை ஒரு புரட்சிகர மாற்றத்தை நோக்கி நகர்வதற்கான வாய்ப்புகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. இது தாராண்மைவாத ஜனநாயக விழுமியங்களில் ஊறித்திளைத்தவர்களுக்கு உவப்பானதாக இல்லை. போராட்டக்காரர்கள் அமைதி காக்க வேண்டும், வன்முறையைப் பயன்படுத்தக் கூடாது. சாத்வீகப் போராட்டத்தால் அனைத்தும் சாத்தியம் என்று தொடர்ந்து சொல்லிவருகிறார்கள். ஆனால் இலங்கை நிலவரம் சொல்லும் செய்தி வேறுவகைப்பட்டதாகவே இருக்கிறது. அமைதியான போராட்டக்காரர்களின் மீது வன்முறையை ஏவியது யார் மக்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல் அதிகாரக்கதிரைகளில் அமர்ந்திருப்பது யார் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம், கண்ணீர்ப்புகைப் பிரயோகம், நீர்த்தாரைப் பிரயோகம் என அனைத்து வழிகளிலும் அடக்குமுறைகளை ஏவுவோர் யார். இந்தக் கேள்விகளுக்கான விடையை முதலில் தேடுவோம். பின்னர் போராட்டக்காரர்களுக்கு அறம் பற்றியும் அகிம்சை பற்றியும் பாடமெடுக்கலாம். இன்று இலங்கை மூன்று நெருக்கடிகளை எதிர்நோக்குகிறது. முதலாவதும் அடிப்படையானதுமான சட்டம் ஒழுங்கு சார்ந்த நெருக்கடி இரண்டாவது இதற்கு அடிப்படையான அரசியல் நெருக்கடி, முன்றாவது பொருளாதார நெருக்கடி. இதில் கவனிக்கவேண்டியது யாதெனில் மூன்று மாதங்களுக்கு முன்னர் ஒரு பொருளாதார நெருக்கடியாக வெளிப்பட்ட இலங்கையின் சூழலானது பின்னர் அரசியல் நெருக்கடியாகி இன்று சட்ட ஒழுங்கு சார்ந்த நெருக்கடியாகியுள்ளது. இந்த சட்ட ஒழுங்கு நெருக்கடி இரண்டு பரிமாணங்களை உடையது. முதற்பரிமாணம் அரசின் வகிபாகம் குறித்தது. அரசபடைகளினதும் காவற்றுறையினதும் நடத்தை பற்றியது. இரண்டாவது பரிமாணம் போராட்டக்காரர்களின் செயற்பாடுகள் பற்றியது. இவ்விரண்டு பரிமாணங்களும் ஏதோவொரு வகையில் ஒரு உடன்பாட்டுக்கும் ஒத்திசைவுக்கும் வந்தாக வேண்டும். இன்று இவ்விரண்டும் வெவ்வேறுபட்ட நேரடி முரண்பாட்டுக்கு வழிசெய்யக்கூடிய இலக்குகளால் முன்னகர்த்தப்படுகிறது. இந்நிலை விரைவில் மாற்றமடைய வேண்டும். இல்லாவிடில் இரத்தம் சிந்துவது தவிர்க்கவியலாதாகி விடும். இவ்விரு பரிமாணங்களும் ஒத்திசைவாகச் செயற்பட அரசியற்தலைமைகளிடையே விரிந்த பார்வையும் போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் பற்றிய அக்கறையும் அவசியம். துரதிஸ்ட வசமாக இலங்கையின் அரசியற் தலைமைகளிடையே இதைக் காணக் கிடைக்கவில்லை. இக்கட்டுரை எழுதி முடிக்கும்வரை ஜனாதிபதி பதவி விலகவில்லை. விலகுவதற்கான சாத்தியக்கூறுகளும் தெரியவில்லை. தனது ஜனாதிபதிக் கனவை ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்றியுள்ளார். இனிப் பிரச்சனை அக்கதிரையில் எவ்வளவு காலம் குந்தியிருப்பது என்பதைப் பற்றியதே. இலங்கையின் இன்றைய நிலவரம் பல வழிகளில் அரபுவசந்தைத்தை நினைவூட்டுகிறது. அதிலிருந்து நாம் சில பாடங்களைக் கற்றுக் கொண்டு முன்செல்லவியலும். இலங்கையின் நிகழ்வுகள் பலருக்கு அதிர்ச்சியூட்டுவது போலவே 2011இன் அரபுலகக் கிளர்ச்சிகள் பலருக்கு வியப்பூட்டின் சிலருக்கு அதிர்வூட்டின. ஓவ்வொரு தனிமனிதரதும் நிறுவனத்தினதும் வர்க்கம், கருத்தியல், அரசியல் நிலைப்பாடு என்பவற்றுக்கமைய எதிர்வினைகள் வேறுபட்டன. துனீசியாவை உலுக்கிய வெகுசனக் கிளர்ச்சி, மீள எகிப்தில் நிகழ்ந்தபோது, தொற்றக்கூடியதாகத் தோன்றிய அச் சமூக ஒழுங்கீனத்தைப்; பரவவிடின் அது தமக்கு நட்பான மத்திய கிழக்கு ஆட்சிகளை நிலை குலைத்து, மத்திய கிழக்கிலும் அப்பாலும் தமது மூலோபாய நலன்களைக் கெடுக்கலாம் என்பதால், அமெரிக்காவினதும் மேற்கு ஐரோப்பாவினதும் ஆட்சிகள் அதைக் கடுமையாகக் கருத்திற் கொண்டன. இது இன்றைய இலங்கைக்கும் பொருந்தும். கடந்த ஒரு தசாப்தகாலமாக உலகெங்கும் இவ்வாறான மக்கள் போராட்டங்கள் நடந்துள்ளன. எதிர்ப்புக்கள் பொதுசன அதிருப்தியை வெளிப்படுத்துவன. அவை தம்மளவிற் புரட்சியின் வித்துக்களாகா என்பதும் அதைப் புரட்சிகரத் தன்மையுடையதாக மாற்றுவது அவசியம் என்பதே நாம் கற்றுக் கொள்ளக்கூடியது. அண்மைக்காலங்களில் ஐரோப்பாவெங்கும் பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. எனினும், அரசாங்கங்கள் மாறியும், அவை அரசாங்கங்கக் கொள்கைகளில் புறக்கணிக்கத்தக்க தாக்கத்தையே விளைத்தன. கிரேக்கத்தின் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்த நிகழ்வுகள் சிறிது நம்பிக்கையூட்டின, அது நீண்டகாலம் நிலைக்கவில்லை. அதேபோல பொருளதார நெருக்கடியின் விளைவால் ஆர்ஜென்டீனா, லெபனான் போன்ற நாடுகளில் முற்போக்கான மாற்றங்கள் நிகழ்ந்தபோதும் ஆளும் வர்க்கத்துக்குச் சவால் விடுத்து முதலாளிய அரச இயந்திரத்தை எதிர்கொண்டு சமூக மாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய ஒரு வெகுசன அமைப்பு உருவாக, எதிர்ப்பியக்கம் இன்னும் வெகுதூரம் செல்லவேண்டி இருக்கிறது என்பதே இவ்வனுபங்கள் சொல்லும் பாடமாகும். இலங்கையில் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது யாதெனில் வெகுசன அதிருப்தி எதிர்ப்புக்களாக வெளிப்படும் அதே வேளை, எதிர்ப்பு என்பது முற்போக்காளர்களின் ஏகபோகமல்ல, எதிர்ப்புக்கள் யாவுமே சாராம்சத்தில் முற்போக்கானவையுமல்ல. அதைவி;ட, ஃபாசிஸவாதிகள் உட்படப், பிற்போக்காளர்களும் வெகுசன அதிருப்தியைத் தமக்கு வாய்ப்பாக்கி யுள்ளனர். அரசியற் பொருளாதார நெருக்கடிக் காலங்களில் பிற்போக்கிற்கும் ஃபாசிஸத்திற்கும் உதவும் விதத்தில் வெகுசன அதிருப்தி உற்பத்தியாகியுமுள்ளது. இடதுசாரி, முற்போக்குச் சக்திகள் பலவீனமாயோ நன்கு ஸ்தாபனப்படாதோ இருக்கும் இடங்களிற், தமது நோக்கங்களை ஒப்பேற்றுமாறு பிற்போக்காளர்கள் மக்களை அணிதிரட்டுகின்றனர். 20ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஃபாசிஸவாதிகள் அதை வெற்றிகமாகச் செய்துள்ளனர். இந்தப் பாதையை இலங்கை தெரியாமல் இருப்பதை நாம் உறுதிசெய்தாக வேண்டும். இப்போது எம்முன்னுள்ள கேள்வி யாதெனில்: விரயமிக்க நுகர்வை ஊக்குவிப்பதுடன் நாட்டைக் கடனுக்குட் தள்ளும் விருத்தி பற்றிய கருத்துகளைக் கொண்ட தற்போதைய கொள்கைகளை விலக்கித் தேசியப் பொருளாதார அடிப்படையில் பொருளாதாரப் நெருக்கடிக்குத் தீர்வை முன்வைப்பதும்ளூ அனைத்துத் தேசிய இனங்களதும் சமத்துவத்தினதும் அதிகரப் பரவலாக்கலினதும் சுயநிர்ணய உரிமையினதும் அடிப்படையில் தேசிய இனப் பிரச்சனையை விளிப்பதும்ளூ நாட்டின் இறைமையைப் பாதுகாப்பதும் ஏகாதிபத்திய எதிர்ப்பை உயர்த்திப் பிடிப்பதுமான ஒரு அயற் கொள்கையைக் கடைப்பிடிப்பதுமான ஒரு அரசாங்கத்தையும் ஆட்சியை உருவாக்க எம்மால் என்ன செய்யவியலும் என்பதைச் சிந்திப்பதே அவசரமானதும் அவசியமானதுமாகும். நிறைவேற்றதிகாரச் சனாதிபதி முறையால் வக்கிரமடைந்த பாராளுமன்ற சனநாயகம் எனும் ஏமாற்று எவ்வாறு நாட்டை அழிவுப் பாதையிற் செலுத்தியுள்ளது என்பதை மக்கள் முன்னெப்போதையும் விட இப்போது உணர்ந்திருக்கிறார்கள். மாற்று அரசியலின் தேவை முன்னெப்போதினும் அவசரமாக நெருக்குகிறது. அதை நோக்கி நகரப் போகிறோமா அல்லது முட்டுச்சந்தியில் மாட்டிச் சீரழியப்போகிறோமா என்பதே வினா. பாரளுமன்ற அரசியல்வாதிகளின் நம்பகம் வீழ்கையில், அதிகாரத்துக்கும் பதவிக்கும் சொத்துக்கும் ஆவலால் உந்தப்படும் அவர்களின் பச்சையான சந்தர்ப்பவாதம் அரசியல்வாதிகள் மீது மக்களின் வெறுப்பைக் கூட்டியுள்ளது. இத்தகையதொரு அரசியற் குழப்பச் சூழலில் உண்மையாகவே மக்களை நோக்கிய சாத்தியமானதொரு அரசியல் மாற்று இருப்பின், அது வலியதொரு வெகுசன இயக்கத்தின் தோற்றத்துக்கும் மக்களின் நலனுக்கான அடிப்படை அரசியல் மாற்றத்துக்கும் வழிகோலும். மாறாக, நடப்பதேதெனின், மக்களின் விரக்தியைப் பாவித்து ஃபாசிசப் பேர்வழிகள் ஆதாயமடைகின்றனர். ஹிட்லர் போன்ற வலியதொரு தலைவர் தேவை என்ற கருத்தை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட பிம்பம் எம் கண்களின் முன்னே சுக்குநூறானதை நாம் அனைவரும் கண்டுள்ளோம். இன்னொரு ஹிட்லருக்கான வேட்டையை சிலர் தொடங்கியுள்ளார்கள். சீரழிந்த அதே பாதையில் பயணிக்கப் போகிறோமா இல்லையா என்பதே நாடு தொடர்ந்தும் முட்டுச்சந்தியில் சீரழியப் போகிறதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/முட்டுச்சந்தியில்-முனகும்-தேசம்/91-300481
  21. வளங்களைத் தொலைக்கும் தேசமும் நிலங்களைத் தொலைக்கும் மக்களும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையின் சக்தி நெருக்கடி எழுப்பியுள்ள கேள்விகள் பல. மின்சாரம், எரிபொருள், எரிவாயு என்பவற்றைப் பெற்றுக்கொள்ளுவதில் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் சொல்லி மாளாதாவை. இலங்கையின் சக்தி தேவையை எதிர்வுகூறக்கூட இயலாத, கையாலாகாத அரசாங்கத்தின் கேடுகெட்ட நடத்தையால், இலங்கையர் அனைவரதும் வாழ்க்கை சீரழிகிறது. அனைத்துத் தவறுகளையும் அந்நிய செலாவணிப் பற்றாக்குறை என்ற ஒற்றைக் காரணியின் தலையில் கட்டிவிட்டு, அப்பால் நகர்ந்துவிட அனைவரும் முயல்கிறார்கள். இது அனைவருக்கும் வசதியானது. ஆட்சியாளர்களுக்கு இது நல்லதொரு வாய்ப்பு; கொள்கை வகுப்பாளர்களுக்கு தமது தொடர்ச்சியான தவறுகளை மறைக்கும் நல்லதோர் ஆயுதம்; மக்களின் கையறுநிலைக்கு விளக்கம் கொடுக்கும் ஒரு காரணி. ஆனால், விரிவானதும் ஆழமானதுமான பார்வையில், குறுகிய நோக்கத்தினாலான கொள்கைவகுப்பும் குறிப்பிட்ட சிலரின் நலன்களுமே, இன்றைய சக்தி நெருக்கடிக்கான காரணிகள் என்பதை நாம் பேசுவதில்லை. இலங்கையின் மின்சாரத் தேவை, கடந்த இரண்டு தசாப்தங்களாக தொடர்ச்சியாக அதிகரித்து வந்திருக்கிறது. 1990களின் நடுப்பகுதி வரை நீர்மின்சக்தியிலேயே இலங்கையின் மின்சார உற்பத்தி தங்கியிருந்தது. அதைத் தொடர்ந்து, அதிகரித்த மின்சாரத் தேவைகளுக்காக, நிலக்கரியிலும் பெற்றோலிலும் இருந்து மின்சார உற்பத்தி தொடங்கியது. காலப்போக்கில், இவை இரண்டிலும் இருந்தான மின்சார உற்பத்தியே பிரதானமானது. மறுமுனையில், உலகளாவிய ரீதியில் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களின் ஊடு, மின்சார உற்பத்தி மலிவானதாக மாறியது. இலங்கை போன்ற நாடுகளில் காற்றாலைகளாலும், சூரியமின்கலங்களின் உதவியோடும் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான வளங்களும் வாய்ப்புகளும் இருந்த போதும், மின்சார உற்பத்திக்கு இலங்கை நிலக்கரியையும் டீசலையும் நம்பி இருக்கிறது. காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு சுவட்டு எரிபொருட்களின் பாவனையைக் குறைப்பதும் தடுப்பதும் அவசியமானது. இந்நிலையில், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவற்கான உலகளாவிய முயற்சிக்கு நாமும் பங்காற்ற வேண்டும். ஏனெனில், இது எமது வருங்காலத் தலைமுறையின் எதிர்காலம் பற்றியது. இதைக் கருத்தில் கொண்டே, உலகளாவிய சக்தி நிலைமாற்றத்தின் அடிப்படை, நின்றுநிலைக்கக்கூடியதும் மலிவானதும் அனைவருக்குமானதும் சூழலுக்கு மாசற்ற சக்தி மூலங்களை நோக்கி நகர்கின்றது. எளிமையாகச் சொல்வதாயின், சுவட்டு எரிபொருட்களுக்குப் பதிலாக, புதுப்பிக்கத்தக்க சக்தியைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதில், உலகின் பலநாடுகள் முனைப்பாயுள்ளன. இலங்கை போன்ற நாடுகளில் ஆண்டு முழுவதும் கிடைக்கும் சூரிய ஒளியும் தீவாக இருப்பதன் விளைவால் கரையோரங்களில் வீசுகின்ற காற்றும், முறையே சூரியகலன்களையும் காற்றாலைகளையும் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு வாய்ப்பானது. இவை இரண்டும் இலங்கையின் சக்தித் தேவைகளுக்குப் பயன்படும் முக்கியமான வளங்கள். ஆனால், இவ்வளங்கள் அதன் முழுமையான பயன்பாட்டைப் பெறவில்லை. இதன் பின்புலத்திலேயே, இலங்கையில் நிலவும் மின்சார நெருக்கடியை நோக்க வேண்டியுள்ளது. இலங்கையின் நிலக்கரி மீதான காதல் சொல்லி மாளாளது. முதலாவது அனல்மின்நிலையம் அமைக்கப்பட்டது முதல், இலங்கையின் கொள்கைவகுப்பாளர்கள் தொடர்ச்சியாக அனல்மின்நிலையங்களை அமைப்பதில் அக்கறைகாட்டி வந்துள்ளார்கள். ஏன் இந்த அக்கறை என்பதற்குப் பலகாரணிகள் உண்டு. அதில் முதன்மையானது, நிலக்கரி கொள்வனவில் மேற்கொள்ளப்படும் ஊழல். கடந்த பத்தாண்டுகளில், இது குறித்துப் பல தடவைகள் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலக்கரிக்கு மேலதிகமாக, பெற்றோலியத்தின் மூலம் உற்பத்தியாகும் மின்சாரமும் இலங்கையின் மின்சார உற்பத்தியைச் சுவட்டு எரிபொருட்களில் தங்கியுள்ளதாக மாற்றியுள்ளது. இவை இரண்டும் இலங்கையின் அந்நியச் செலாவணியில் முக்கிய பங்காற்றுவன. இலங்கை, கடந்த பத்தாண்டுகளில் புதுப்பிக்கத்தக்க சக்தி மீது கவனம் செலுத்தியிருந்தால், இன்றைய சக்தி நெருக்கடியைத் தவிர்த்திருக்க முடியும். இங்கு, கடந்த பத்தாண்டுகளில் இலங்கையில் புதுப்பிக்கத்தக்க சக்தி உற்பத்திக்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவே என்ற ஐயம் எழுவது இயல்பானது. கடந்த பத்தாண்டுகளில், இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்களில் பெரும்பாலானவை, இலங்கையின் வடபகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டவை. இத்திட்டங்கள் அனைத்தும், பொதுமக்களின் எதிர்ப்பைச் சந்தித்தவை என்பதும் பொதுமக்களின் ஒப்புதல் இல்லாமல் செயற்படுத்தப்பட்டவை என்பதும் கவனிப்புக்குரியது. மன்னாரில் அமைக்கப்பட்ட காற்றாலை உற்பத்தித் திட்டமானது, ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியோடு இலங்கை அரசாங்கத்தால் செயற்படுத்தப்பட்டது. இது தவிர்ந்த மிகுதி அனைத்தும் தனியாரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் ஆகும். வவுனியா, பளை, மறவன்புலவு, பூநகரி என இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தபடுகின்ற அனைத்து இடங்களிலும், இத்திட்டங்களுக்கு பாரிய எதிர்ப்பு நிலவியது; இன்னமும் நிலவுகிறது. ஆனால், புதுப்பிக்கத்தக்க சக்தியின் பெயரால், இவ்வெதிர்ப்புகள் கண்டுகொள்ளப்படவில்லை. இவ்வெதிர்ப்புகளுக்குப் பல காரணங்கள் உண்டு. மன்னாரில் காற்றாலைகள் அமைந்துள்ள இடமானது, தனியாருக்குச் சொந்தமான காணிகளாகும். 1990களில் போரால் இடம்பெயர்ந்து, போரின் முடிவின் பின்னரே சொந்த இடங்களுக்குத் திரும்பிய மக்களிடமிருந்து காணிகளை அரசாங்கம் ‘காணி சுவீகரிப்புச் சட்டத்தின்’ அடிப்படையில் சுவீகரித்துக் கொண்டது. இதனால் அரசாங்கம் நிர்ணயித்த குறைந்த விலைக்கு இக்காணிகளை அரசுக்கே விற்க வேண்டி வந்தது. மறவன்புலவில் காணிகளை மக்களிடமிருந்து வாங்கிய நிறுவனம், எதற்காக வாங்குகிறோம் என்று காரணத்தைச் சொல்லாமலேயே வாங்கியது. சில சந்தர்ப்பங்களில் மக்களுக்கு நல்லகுடி நீர் தருவதற்கான தொழிற்சாலை அமைக்கப்போவதாகச் சொன்னதான அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். பூநகரியில் திட்டமிட்டபடி காற்றாலைகளும் சூரியகலன்களும் கொண்ட திட்டம் அமைந்தால், மாடுகளின் மேய்ச்சல் நிலங்கள் இல்லாமல் போவதோடு மீனவருக்கான கடலுக்கான பாதைகள் தடைப்படும் என்று கௌதாரிமுனை மக்கள் அச்சப்படுகிறார்கள். கடந்த பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்கள், மக்களின் பல நலன்களைக் கருத்தில் கொள்ளப்படாமல் மேற்கொள்ளப்பட்டவை. இப்போது, புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்களை அரசாங்கம், அந்நியநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. ‘அதானி’ நிறுவனத்துக்கு மன்னாரிலும் பூநகரியிலும் வழங்கப்பட்டுள்ள திட்டங்கள் எவ்வாறான விளைவுகளைக் கொண்டு வந்து சேர்க்கப்போகின்றன? சம்பூரில் அனல்மின் நிலையத்துக்காக அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் மீளக்குடியேற்றப்படவில்லை. அதே இடத்தில் இப்போது, இந்தியா அரசாங்கம் பாரிய சூரியசக்தி திட்டமொன்றை உருவாக்குகின்றது. அந்நிய நிறுவனங்களிடம் இத்தகைய திட்டங்களை ஒப்படைப்பது எமது மின்சாரத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குட்படுத்தும். இலங்கை, இந்நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய வேண்டிவரும். அப்போது மின்சாரத்துக்கான விலையைத் தீர்மானிப்பது இந்நிறுவனங்களாகவே இருக்கும். ஒருவேளை, இலங்கை அரசாங்கம் கோருகின்ற விலைக்கு மின்சாரத்தை விற்பனை செய்ய இந்நிறுவனங்கள் விரும்பாதவிடத்து, அவை மின்சாரத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்யவியலும். இது நாடுகளுக்கு இடையில் ஏற்படுத்தப்படவுள்ள மின்கம்பி இணைப்பு மூலம் சாத்தியமாகும். இந்தியாவால் நடைமுறைப்படுத்தபடவுள்ள இத்திட்டங்கள், அடிப்படையில் இந்தியாவுக்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்வதை நோக்காகக் கொண்டவை என்பதை, ‘அதானி’ நிறுவனம் இலங்கைக்கு அனுப்பிய கடிதம் உறுதிசெய்கிறது. இலங்கையின் நெருக்கடி, வளங்களை அந்நியர்களுக்குத் தாரை வார்ப்பதற்கான நியாயத்தை உருவாக்கியுள்ளது. இப்போது, எமக்கு அந்நியச் செலாவணி தேவை. அதற்காக எதையும் செய்யமுடியும் என்ற நிலையை அரசாங்கம் உருவாக்கியுள்ளது. சக்தி நெருக்கடி, எவ்வாறு அந்நிய நிறுவனங்களுக்கு வாய்ப்பாக அமைந்ததோடு, எமது மின்சாரத்தேவைகளின் மீதான கட்டுப்பாட்டை இலங்கை இழந்து வருகிறதோ, அதேபோலவே ஏனைய பொதுத்துறைகளும் அந்நியக் கரங்களுக்குப் போகும் நாள் தொலைவில் இல்லை. அரசியல்வாதிகளின் மீது மட்டும் பழியைப் போட்டுவிட்டு, அப்பால் நகரவியலாது. இலங்கையின் சக்தித் தேவைகளை நிறைவேற்றத் தேவையான சக்தி மூலங்களைக் கண்டடையாதது யார் குற்றம்? புதுப்பிக்கத்தக்க சக்தி நோக்கிய பயணத்தை நாம் மேற்கொள்ளாமல் போனது ஏன்? அமைச்சுகள், இலங்கை மின்சார சபை ஆகியன என்ன செய்து கொண்டிருந்தன? புதுப்பிக்கத்தக்க சக்தியை, இலங்கை மின்சார சபை தொடர்ச்சியாக எதிர்த்து வந்தது ஏன்? இவையெல்லாம் பதிலை வேண்டும் வினாக்கள் மட்டுமல்ல, கொள்கை வகுப்பாளர்களும் தொடர்புடைய அரச அலுவலர்களும் மின்சார சபையும் என அனைவரும் பொறுப்புக்கூறக் கடமைப்பட்டவர்கள். ஆனால், அந்தப் பொறுப்புக்கூறலை நாம் கோருகிறோமா? கொள்கை வகுப்பாளர்கள், கொள்ளை வகுப்பாளர்களாக மாறிய தேசமதில், நாடு வளங்களையும் மக்கள் நிலங்களையும் இழப்பதில், அதிசயப்பட எதுவுமில்லை. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வளங்களைத்-தொலைக்கும்-தேசமும்-நிலங்களைத்-தொலைக்கும்-மக்களும்/91-299639
  22. இலங்கையின் மின்சக்தியை கபளீகரம் செய்யும் இந்தியா தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையர்களின் இன்றைய நெருக்கடி, அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றவியலாத ஓர் அரசாங்கமும் அதை வீட்டுக்கு அனுப்பவியலாத மக்களும் பேச்சு மன்றமாய் பாராளுமன்றமும் திகழ்கின்ற ஒரு நாட்டில், எதிர்பார்ப்பதற்கு அதிகமில்லைத் தான்! நெருக்கடிகள், மக்களுக்கு வாய்ப்பை மட்டும் வழங்குவதில்லை; ரணிலுக்கு பிரதமராகும் வாய்ப்பைக் கொடுத்தது; இன்ன பிறருக்கு, அடுத்த ஜனாதிபதி கனவைக் கொடுத்துள்ளது. அயல்நாடுகள், அவர்தம் நலன்களை வெற்றிகரமாக வென்றெடுப்பதற்கும் செயற்படுத்துவதற்கும் நெருக்கடிகள் வாய்ப்பாகிறது. ஜூன் 10ஆம் திகதி, ‘பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக்குழு’ (கோப் குழு) முன்னிலையில் கருத்துரைத்த இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ. பெர்டினன்டோ, இந்திய பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, வடபகுதியில் காற்றாலைகளை அமைக்கும் அனுமதியை, இந்தியாவின் அதானி குழுமத்துக்கு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ தனக்கு உத்தரவிட்டதாகக் கூறினார். இதை மறுத்து, ஜனாதிபதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். 24 மணித்தியாலங்களுக்குள் தனது கருத்தை, மின்சார சபைத் தலைவர் மீளப்பெறுவதாக அறிவித்தார். சில நாள்களில் அவர், பதவியில் இருந்து விலகியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். குறித்த திட்டத்தின்படி, மன்னார், பூநகரி பகுதிகளில் அதானி குழுமத்தின் Adani Green Energy Limited (AGEL) நிறுவனம், காற்றாலை மற்றும் சூரியசக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் உரிமத்தைப் பெற்றுள்ளது. அதானிக்கு இதை வழங்குமாறு, தான் கட்டளையிடவில்லை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையில், மின்சார சபைத் தலைவரின் கருத்து இந்தியாவில் ஒரு புயலைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (19) Sunday Times பத்திரிகை குறித்த விடயம் தொடர்பில் முக்கியமான செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. அதானி குழுமத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் நடைபெற்ற தகவல் பரிமாற்றங்களின் உள்ளடக்கத்தின் முக்கியமான அம்சங்களை அச்செய்தி கோடுகாட்டியுள்ளது. 2021 நவம்பர் மாதம் AGEL நிறுவனத்தின் நிறைவேற்றதிகாரி இலங்கை திறைசேரியின் செயலாளருக்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அதில் ‘எமது நிறுவனம், மின்சாரத்தை பெற்றுக்கொள்வதற்கான வலுவுள்ள மீள்சக்தித் திட்டங்களை, அதன் வளர்ந்து வரும் எரிசக்தி தேவைக்கு ஏற்றவாறு விரைவாக அமைப்பதன் மூலம், எம் நிறுவனத்தின் தடங்களை அதிகரிக்க முன்மொழிகிறது. மேலும், AGEL நிறுவனமானது, இலங்கையில் சுமார் 5GW காற்றாலை மின் திட்டங்கள் மற்றும் 2GW சூரியசக்தித் திட்டங்களை இலங்கையில் அமைக்கும். இதன் மூலம் உற்பத்தியாகும் மின்சாரமானது எம்மால் அமைக்கப்படவுள்ள இலங்கை-இந்தியா மின்சார இணைப்பு (cross border grid connection) மூலம் இந்தியாவுக்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்யும். இது இலங்கையில் கணிசமான முதலீடு மற்றும் நீண்ட கால ஏற்றுமதி வருவாய்க்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும். மேலும், இவ்விணைப்பின் வழி போட்டித் தன்மைவாய்ந்த மின்சார வர்த்தகத்தை செயற்படுத்த இயலுமாகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தின் முக்கியத்துவம் பல்முனைப்பட்டது. முதலாவது, இலங்கையின் தூயசக்தி நோக்கிய நகர்வானது, மிகவும் மெதுவானதாக இருக்கிறது. இலங்கையின் உள்ள பல நிறுவனங்களுக்கு காற்றாலைகளையும் சூரிய மின்கலங்களையும் நிறுவுவதற்கு, அரசாங்கம் தொடர்ச்சியாகத் தயக்கம் காட்டி வந்துள்ளது. பல தடைகளை உள்ளூர் நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ளன. இந்நிலையிலேயே, அதானி நிறுவனத்தின் இக்கடிதமானது கவனிப்புக்குரியது. இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதல் இல்லாமல் இவ்வாறானதொரு கடிதம் எழுதப்பட்டிருக்காது. இந்தப் பின்புலத்தின் அடிப்படையிலேயே மின்சார சபைத் தலைவரின் கருத்தை நோக்க வேண்டியுள்ளது. இக்கடிதத்தில் கவனிக்க வேண்டிய இரண்டாவது அம்சம், அதானி நிறுவனம் இலங்கையில் தூயசக்தியை உற்பத்தி செய்து, அதை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய முன்மொழிகிறது. இது மிகவும் ஆபத்தானது மட்டுமன்றி, அனுமதிக்கக் கூடாததும் ஆகும். இவ்விடத்திலேயே, இலங்கை அரசாங்கத்தின் மோசமான நடத்தையும் அதனோடு இணைந்த ஊழலும் வெளிப்படுகிறது. இலங்கை நிறுவனங்களுக்கு வழங்க மறுத்த அனுமதியை, எவ்வாறு அதானி நிறுவனத்துக்கு அரசாங்கம் வழங்கியது? இலங்கையே மின்சார நெருக்கடியில் சிக்கித் தவிக்கையில், இலங்கையில் பெறப்பட்ட மின்சாரத்தை இந்தியாவுக்கு அனுப்ப யார் அனுமதித்தது? இலங்கையில் பெறப்பட்ட மின்சாரத்தை, இலங்கைக்கே அதானி நிறுவனம் விற்கும் திட்டத்துக்கு எவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டது? இவை விடை தெரியாத வினாக்கள்; ஆனால், இலங்கையர்கள் கேட்ட வேண்டிய கேள்விகள். மூன்றாவது, மிக முக்கியமான அம்சம், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மின்கம்பங்களையும் இணைப்பையும் அதானி நிறுவனம் அமைக்கப்போவதாகக் இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையிலான மின்இணைப்பு என்பது, கடந்த இரு தசாப்தங்களாக உரையாடப்படும் ஒரு விடயம். பல விடயங்களைக் கருத்தில் கொண்டு, இலங்கை இத்திட்டத்துக்கு அனுமதி மறுத்து வந்துள்ளது. குறிப்பாக, போரின் முடிவின் பின்னர், இந்தியா இவ்விணைப்புத் திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளது. இலங்கையின் தயக்கம் நியாயமானது. இவ்வாறானதோர் இணைப்பால், இலங்கைக்கான நன்மைகள் குறைவு. காலப்போக்கில் இலங்கை மின்சாரத்துக்கு இந்தியாவை நம்பியிருக்க வேண்டியிருக்கும். இது, சக்திப் பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தலானது. அதேவேளை, இலங்கையில் இந்திய நிறுவனங்கள் மின்உற்பத்தி செய்து, இந்தியாவுக்கு அனுப்பினாலும் சரி, இலங்கைக்கு வழங்கினாலும் சரி, மின்சார உற்பத்தியின் மீதான இலங்கையின் ஏகபோகமும் சுதந்திரமும் இல்லாமல் போகும். இங்கு, நேபாளத்தின் உதாரணத்தை நோக்குவது தகும். உலகில் அதிகளவான நீர்மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய ஆற்றலை உடைய நாடுகளில் நேபாளம் முதன்மையானது. ஆனால், நேபாளத்தால் இன்றுவரை தனது தேவைக்கான நீர்மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியவில்லை. காரணம், அதற்கான அபிவிருத்தி நடவடிக்கைகள் அங்கு நடைபெறவில்லை. நேபாள-இந்திய மின்இணைப்புக் காரணமாக, நேபாளம் இன்றும் மின்சாரத்துக்கு இந்தியாவை நம்பியிருக்கிறது. இதைத் தொடருவதற்காக நேபாளத்தில் நீர்மின்சக்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த இந்தியா தொடர்ச்சியாகத் தடைபோடுகிறது. நேபாள அரசாங்கம் இந்தியாவுடன் முரண்பாட்டுப் போக்கைக் கடைப்பிடித்தால், நேபாளத்துக்கான மின்சாரத்தை மட்டுப்படுத்துவதனூடு இந்தியா செயற்படுகிறது. 2009இல் நேபாளத்தில் மாஓவாதிகள் ஆட்சிக்கு வந்த நிலையில், அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், மின்சார விநியோகத்தை இந்தியா நிறுத்தியது. இந்தக் கதைதான், இலங்கைக்கும் நடக்கும் என்பதை நினைவில் கொள்வது நல்லது. 2006ஆம் ஆண்டு, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் சம்பூர் இருந்தபோதே, அங்கு அனல் மின்நிலையம் ஒன்றை உருவாக்குவதற்கான உடன்படிக்கையை இந்திய நிறுவனம், இலங்கை அரசாங்கத்துடன் கைச்சாத்திட்டது. அதன்படி, உற்பத்திசெய்யப்படும் மின்சாரத்தில் ஒருபகுதி, இந்தியாவுக்கு அனுப்பவும் உடன்பட்ட சரத்து அந்த உடன்படிக்கையில் இருந்தது. மக்கள் போராட்டமும் நீதிமன்ற தடையுத்தரவும் அதை முடிவுக்குக் கொண்டுவந்தபோதும், கடந்தாண்டு அதே இடத்தில் சூரிய மின்கலங்களின் வழி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அனுமதியை இந்தியா பெற்றுக் கொண்டது. ஆனால், மின்நிலையத்துக்காக வெளியேற்றப்பட்ட மக்கள், காணி இழந்த நிலையில் இன்னமும் இன்னல்களை அனுபவிக்கிறார்கள். பத்திரிகைச் செய்தி அம்பலப்படுத்திய இன்னோர் ஆவணம், மன்னார், பூநகரியில் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கான அதானியின் நிறுவனத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் கையெழுத்தான புரிந்துணர்வு உடன்படிக்கை ஆகும். அதில், ‘இலங்கையின் வடமாகாணத்தின் எல்லையில் உள்ள இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பில், மிதக்கும் சூரியகலம் மற்றும் காற்றாலை வசதிகளை ஏற்படுத்துவதற்காக ஆய்வு செய்ய, குறித்த நிறுவனத்துக்கு இலங்கை அரசாங்கம் அனுமதிக்கும்’. இதன்மூலம் இலங்கையின் வடபகுதியில், எல்லையற்ற அதிகாரங்களை மின்உற்பத்தி சார்ந்து - குறித்த நிறுவனத்துக்கு இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளது. நிலங்கள் மட்டுமல்ல, எங்கள் கடலும் சேர்ந்தே களவுபோகிறது. அதானி குழுமம், காற்றாலைகளை அமைக்க அனுமதி பெற்றுள்ள மன்னார், பூநகரி ஆகிய பகுதிகளில், இத்திட்டங்களுக்கு மக்களின் பலத்த எதிர்ப்புகள் உண்டு. அதுகுறித்து விரிவாக அடுத்த வாரம் பார்க்கலாம். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இலங்கையின்-மின்சக்தியை-கபளீகரம்-செய்யும்-இந்தியா/91-299351
  23. தேவதூத மனநிலை: பொதுப்புத்தியில் மாற்றமின்றி தீர்வு சாத்தியமில்லை தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ தற்போதைய நெருக்கடி, இலங்கையின் பொதுப்புத்தி மனநிலையைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. இன்று இலங்கையர்கள் எதிர்நோக்கும் சொல்லொணாத் துயரங்களுக்கான காரணங்களை, பொருளாதாரத்தின் மீதும் ஆட்சியாளர்கள் மீதும் போட்டுவிட்டு அப்பால் நகர முடியுமா? இதற்கு இலங்கையர்களாகிய நாங்கள், பொறுப்புக்கூற வேண்டியது இல்லையா? இந்த நெருக்கடிக்கு நாமனைவரும் எவ்வாறு பங்களித்திருக்கிறோம்? இப்போதும் இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, நாம் பங்களிக்கின்றோமா? நமது பங்களிப்பு, மக்கள் நலநோக்கில் நெருக்கடியை தீர்ப்பதாக இருக்கிறதா, அல்லது அரசியல்வாதிகளின் இழிசெயல்களுக்கு ஒத்தூதுவதன் மூலமும், அமைதிகாத்து அங்கிகரிப்பதன் மூலமும் இந்நெருக்கடி தொடர வழிசெய்கிறதா? இவை குறித்து, என்றாவது நாம் சிந்தித்து இருக்கிறோமா? எல்லாவற்றிலும் மேலாக, இந்த நெருக்கடி நாமே நமது தலையில் போட்டுக் கொண்டது என்ற உண்மை, எம்மில் எத்தனை பேருக்கு உறைத்திருக்கிறது? இப்போது புதிதாகப் பாராளுமன்றம் வந்திருக்கின்ற தம்மிக பெரேரா மீது நம்பிக்கை வைக்கச் சொல்லி, ஒரு பொதுப்புத்தி மனநிலை கட்டமைக்கப்படுகிறது. அவர் ஒரு ‘வெற்றிகரமான வியாபாரி’; எனவே, அவரால் நாட்டை மீட்க இயலும் என்று பலர் சொல்கிறார்கள். ஏமாற்றாத, கொள்ளையடிக்காத, அரசியல்தரகு செய்யாத, மக்களைச் சுரண்டாத வெற்றிகரமான வியாபாரி என்று யாரும் கிடையாது. ஆனால், நவதாராளவாதச் சொல்லாடலில் இவை, ‘புத்திசாலித்தனம்’, ‘நெழிவுசுழிவுகளை அறிந்திருத்தல்’ என்றும் சொல்லப்படுகிறது. ஏழை மக்களின் பசியை, குறுங்கடன் திட்டங்கள் மூலம் தீர்த்துவைத்தமைக்காக நோபல் பரிசுபெற்ற முஹமட் யூனிஸ், ஒரு கந்துவட்டிக்காரன் என்ற உண்மை சில ஆண்டுகளில் வெளியானது. இதே வகைப்பட்டதே, ‘வெற்றிகரமான வியாபாரி’ என்ற படிமம். சில காலத்துக்கு முன்னர், பசில் ராஜபக்‌ஷ நிதி அமைச்சராவதற்கு தேசிய பட்டியல் ஊடாகப் பாராளுமன்றம் வந்தபோது, ஊடகங்களும் அரசியல் அவதானிகளும் உருவாக்கிய பொதுப்புத்தி மனநிலை, அவரை ஒரு பொருளாதார மீட்பராக முன்னிறுத்தியது. இவ்வாறே, 2019ஆம் ஆண்டு நாட்டை மீட்பதற்கான வலுவான தலைவராக கோட்டாபய முன்னிறுத்தப்பட்டார். இவை இரண்டும், இலங்கையில் ஏற்படுத்திய பேரிடரர்களை நாமறிவோம். இவ்வாறு, தனிமனிதர்கள் மீது அதீத நம்பிக்கை வைக்கும் மனோபாவம், இலங்கை அரசியலுடன் பின்னிப் பிணைந்ததொன்று. அதன் அண்மைய உதாரணத்துக்கு ரணில் பிரதமரானவுடன், அவர் பொருளாதாரத்தை சீர்படுத்துவார் என்று சொல்லப்பட்ட கதைகளை நினைத்துப் பார்க்கலாம். சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கை அரசியல், தவிர்க்கவியலாமல் தனிநபர் வழிபாடுகளின் வழிப்பட்டதாகவே உருவானது. பின்கொலனிய இலங்கை அரசியலின் அடையாள உருவாக்கம், குடும்ப அரசியலாக அமைந்தபோதும் அதை உருமறைத்து, விக்கிரக வழிபாட்டு அரசியல் முன்னெழுந்தது. டி.எஸ். சேனாநாயக்கவின் திடீர் மரணம், அவரைத் தேசபிதாவாக உருமாற்றவும், எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் கொலை, அவரை சிங்கள-பௌத்த தேசியவாதத்தின் நவீன தலைமகனாக உருவாக்கவும் உதவியது. இது காலப்போக்கில், இருபெரும் அரசியல் கட்சிகளின் வளர்ச்சிக்கும் அதன்வழிப்பட்ட குடும்ப அரசியலின் இருப்புக்கும் வழிகோலியது. இதன் மறுகரையில், சிங்கள-பௌத்த தேசியவாதத்துக்குப் போட்டியாக எழுந்த தமிழ்த் தேசியவாதமும், படித்த உயர்வர்க்க ஆங்கிலம் பேசும் சட்டம் தெரிந்த தலைமைகளையே உருவாக்கியது. பின்கொலனிய இலங்கையில் முனைப்படைந்த இரண்டு தேசியவாதங்களும், உயர்வர்க்க நலன்களை அடையாள அரசியலின் ஊடு தக்கவைத்தது. அதற்கு, அடித்தள மக்களிடம் உருவாக்கப்பட்ட பொதுப்புத்தி மனநிலை முக்கிய காரணமானது. இந்த மனோநிலை, குறித்த குடும்பங்களையும் தலைவர்களையும் முன்னுதாரணமாகவும் நாயகர்களாகவும் முன்னிறுத்தியது. 1980கள் வரை மிகுந்த செல்வாக்குடன் இருந்த போக்கு, சமூகத்தில் அரசியல் மேலாண்மைக்கான அங்கிகாரமாக மாறியது. இதனால் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைமைகள், விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களாகவும் அளவுகணக்கற்ற செல்வம் சேர்ப்பவர்களாகவும் அதிகார துஷ்பிரயோகம் செய்பவர்களாகவும் மாறினார்கள். இதில் முதலாவது வெடிப்பை, ரணசிங்க பிரேமதாஸ ஏற்படுத்தினார். எந்தவோர் அரசியல் குடும்பத்தின் பிரதிநிதியாகவோ, உயரடுக்கைச் சேர்ந்தவராகவோ இராத அவர், அடித்தட்டு மக்களின் புதிய நாயகனாக உருவானார். இது சிங்கள உயர்வர்க்க அரசியலடுக்குகளில் அதிருப்தியை ஏற்படுத்தியது. தமிழ்த் தேசியவாதம் 1970களில் சந்தித்திருந்த நெருக்கடியும் தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் இயலாமையும், இளையோரின் உயிரோட்டமான அரசியல் எழுச்சியால், மோசமான பின்னடைவைச் சந்தித்தது. இளையோரின் அமைப்பாக்கமும் அதற்கான மக்கள் ஆதரவும், பாரம்பரிய தேசியவாதத் தலைமைகளின் விருப்புக்குரியதாக இருக்கவில்லை. 1980களில் விடுதலைப் புலிகளின் எழுச்சி, தமிழ்த் தேசியவாதத் தலைமைகளில் ஒரு வெடிப்பை ஏற்படுத்தியது. இருதேசியவாதங்களிலும் 1980களில் ஏற்பட்ட வெடிப்புகள், பல வகைகளில் சாதாரண மக்களின் நீண்டகால கோரிக்கைகளின் எதிர்பார்ப்புகளின் வெளிப்பாடுகளாக இருந்தபோதும், அவை இன்னொரு வகையிலான விக்கிரக வழிபாட்டுக்கு வழிசெய்தன. பிரேமதாஸவும் பிரபாகரனும் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட மனிதர்களாக மாறினார்கள். விமர்சனங்கள், கேள்விகள், எதிர்வினைகள் எதுவும் சகிக்கப்படவில்லை. இனமுரண்பாடு கொடிய போராகிய நிலையில், வலிமையான தலைவரின் தேவையை சிங்களத் தேசியவாதம் தொடர்ந்து வலியுறுத்தி, ராஜபக்‌ஷவின் வருகையை உறுதிசெய்தது. இந்த விக்கிர உருவாக்கத்தின் ஆபத்துகளை, சிங்கள - தமிழ்த் தேசியவாதங்கள் அனுபவித்த போதும், அதிலிருந்து இன்றுவரை வெளியாக இயலவில்லை. அதன் தொடர்ச்சியே, கோட்டாபயவின் வருகையாகும். இலங்கைக்கு ஒரு சர்வாதிகாரியே தேவை; இலங்கை சமூகத்தை, ஒழுங்கமுடையதாக மாற்ற வேண்டும். அதற்கு, மக்களை ஒரு கட்டமைப்புடன் இயக்கக்கூடிய இராணுவத் தலைவரே பொருத்தமானவர் ஆகிய கோஷங்களுக்குக் கிடைத்த அங்கிகாரமே, கோட்டாபயவின் தேர்தல் வெற்றியாகும். இது, மஹிந்தவின் தொடர்ச்சியாக இருந்தபோதும், அதிலிருந்து மிகவும் வேறுபட்டது. முதலாவது, தன்னை நேரடியாகவே சர்வாதிகாரி என அழைத்துக்கொண்ட ஒருவரை, தலைவராக இலங்கையர்கள் தெரிவு செய்தார்கள். இரண்டாவது, அரசியலுக்கு அப்பால் வல்லுனர்களின் மூலம், நாட்டைக் கட்டியெழுப்பலாம் என்று முன்வைக்கப்பட்ட வாதத்துக்கு முழுமையான ஆதரவை வழங்கினார்கள். இன்றைய நெருக்கடி, இவ்விரண்டின் தோல்வியையும் மிகத் தெளிவாக உணர்த்தியுள்ளது. ஆனால், இது பொதுப்புத்தியில் எதுவித மாற்றத்தையும் உருவாக்கவில்லை. முழுமையான சர்வாதிகார நடைமுறையில், நாட்டைக் கட்டியெழுப்ப இயலாது என்ற உண்மை, இப்போது இலங்கையர்களுக்கு உறைத்துள்ளதா என்ற கேள்விக்கான பதிலை, அடுத்த தேர்தல் முடிவுகள் காட்டி நிற்கும். கோட்டாபயவும் அவரது ‘வியத்மக’ கும்பலும் முன்மொழிந்த வல்லுனர் அரசியல் படுமோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. ஆனால், இதை ஏற்றுக்கொள்ளப் பலரும் தயாராக இல்லை. இவ்வரசியலின் தொடர்ச்சியே, தம்மிக பெரேராவின் வருகையும் அதைத்சூழும் ஆரவாரங்களும் ஆகும். கோட்டாபய முன்மொழிந்த ‘சர்வாதிகாரமும் வல்லுனர் அரசியலும்’ இரண்டு அடிப்படைகளில் கட்டியெழுப்பப்பட்டன. ஒன்று, இராணுவ மையச் சிந்தனைவாதம். இரண்டாவது, சிங்கள-பௌத்த பேரினவாதம். இந்த நெருக்கடி இவ்விரண்டிலும் எதுவித மாற்றத்தையும் செய்துவிடவில்லை. மாறாக, இவ்விரண்டும் தொடர்ந்தும் சிங்கள மக்கள் மத்தியிலான பொதுப்புத்தி மனநிலையில் செல்வாக்குச் செலுத்துகிறது. கடந்த கால் நூற்றாண்டுகால இலங்கை அரசியலில், ‘வலுவான தலைவன்’ என்ற படிமம் ஆழமாகப் பதிந்துள்ளது. நெருக்கடிக்குள்ளாகும் ஒவ்வொரு தடவையும், எந்த அடித்தளத்தில் இது தன்னைக் கட்டமைத்துள்ளதோ அதன் உதவியோடோ தன்னை அது தகவமைக்கிறது. இலங்கையின் தலைமைத்துவ நெருக்கடி, இன்னும் சரியாகச் சொல்வதானால் தேசியவாதங்களின் பிரதிநிதித்துவ நெருக்கடியின் நீண்டகால இயலாமையே, தேவதூதர்களை தமது தேசியவாதம் சார்ந்து இலங்கையர்கள் தொடர்ந்து தேடிவருகிறார்கள். பொருளாதார அடியாள்கள், இப்போது புதிதாக தேவதூதர்களாக வேடம் தரிக்கிறார்கள். அவ்வேடத்துக்கான அங்கிகாரத்தை வெற்றிகரமான வியாபாரி என்ற முகமூடியூடாகச் சிலர் வழங்குகிறார்கள். அவர்கள் சொல்வது போல அவர் வெற்றிகரமான வியாபாரி என்ற பொதுப்புத்தி மனநிலையில், எதிர்காலம் பற்றி நம்பிக்கை வைப்பார்களானால், வேட்டி பற்றிய கனவில் இருந்த போது, கட்டியிருந்த கோவணம் காணாமல் போகுங்கணம் என்ன செய்வதென்று உத்தேசிப்பது நல்லது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தேவதூத-மனநிலை-பொதுப்புத்தியில்-மாற்றமின்றி-தீர்வு-சாத்தியமில்லை/91-298855
  24. நெருக்கடியிலும் நாட்டை படுகுழியில் தள்ளும் பௌத்த பேரினவாதம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையின் இன்றைய நெருக்கடியில், சிங்கள - பௌத்த பேரினவாதத்துக்கு முக்கிய பங்குண்டு. இந்நெருக்கடி உச்சத்தை அடைந்துள்ள நிலையிலும், அது, தீர்வை நோக்கிய திசைவழியில் இன்றுவரை ஏன் பயணிக்கவில்லை என்ற கேள்வியை, இலங்கையர்கள் கேட்டாக வேண்டும். மக்கள் உணவுக்கும் எரிபொருளுக்கும் அல்லாடுகையில், முல்லைத்தீவில் வட்டுவாகல் கடற்படைத் தளத்துக்காக மக்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சி, சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. அது, மக்களின் எதிர்ப்பால் தடுக்கப்பட்டது. பொருளாதார நெருக்கடி உச்சம் பெற்ற பின்னர், இடம்பெறும் முதலாவது நிகழ்வு இதுவல்ல. இது, இறுதி நிகழ்வும் அல்ல! இலங்கை அரசாங்கம் எதிர்கொள்கின்ற பரந்துபட்ட எதிர்ப்பை, பலமுனைகளில் திசைதிருப்ப அரசாங்கம் முனைகிறது. அதேவேளை, சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கை அரசின் அடிப்படையாக அமைந்த, சிங்கள - பௌத்த பேரினவாதம், சர்வாதிகார அகங்காரமாகத் தன்னை உருமாற்றியுள்ள நிலையில், இது எதிர்பார்க்கக் கூடியதே. மூன்று தசாப்தகால யுத்தமும் அதன் பொருளாதாரப் பரிமாணமும் போருக்குப் பிந்தைய காலப் பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வந்த இராணுவச் செலவீனமும், இன்னமும் பொதுத்தளத்தில் பேசப்படாத விடயங்களாக இருக்கின்றன. அன்றாட பொருட்களின் அபரிமிதமான விலை உயர்வாலும் தட்டுப்பாடாலும் மக்கள் அல்லலுறுகையில், எம்.பிகளின் எரியூட்டப்பட்ட வீடுகளை மீளக்கட்டுவதற்கு, அரசாங்கம் நிதி ஒதுக்குகிறது. இது இலங்கை அரசியல் பண்பாட்டின் ஒரு பரிமாணத்தை தெளிவுபடுத்துகிறது. இன்னொருபுறம், நிறுவன மயமாக்கப்பட்டு உள்ள சிங்கள - பௌத்த பேரினவாதத்தின் கோரப்பிடியில் இருந்து, இலங்கை இன்னமும் விடுபடவில்லை. அதனிலும் மேலாக, இலங்கை வரலாற்றில் சந்தித்திராத மிகப்பாரிய நெருக்கடியால் அதை விடுவிக்க இயலவில்லை. சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையானது, ‘ஜனநாயகம்’ என்ற தோற்றப் பொலிவோடு இயங்கினாலும், நடைமுறையில் அவ்வாறு அமைந்து இருக்கவில்லை. ஜனநாயகத்தின் போர்வையுடன், சர்வாதிகாரத்தை நோக்கிய நகர்வுகள் மேற்கொள்ளப்பட்ட வேளைகளில், மக்கள் தங்கள் வாக்குரிமை மூலம், சர்வாதிகாரச் சகதிக்குள் இலங்கை மூழ்காமல் பார்த்துக் கொண்டனர். 2009இன் யுத்தவெற்றி, சர்வாதிகாரத்துக்கான வாய்ப்பை இறுதியாக வழங்கியது. ஆனால், 2015ஆம் ஆண்டு, தேர்தல் மூலம் இலங்கை மென்மையான சர்வாதிகாரத்தில் (soft authoritarianism) இருந்து, கடும் சர்வாதிகாரத்தை (hard authoritarianism) நோக்கிய நகர்வுக்கு, மக்கள் முட்டுக்கட்டை போட்டார்கள். இந்த நெருக்கடி, மீண்டுமொருமுறை சர்வாதிகாரத்துக்கான வாய்ப்புகளைத் திறந்துள்ளது. இதை நியாயப்படுத்தி, மக்கள் அங்கிகாரத்தைப் பெறுவதற்கு சிங்கள-பௌத்த பேரினவாதம் துணை போகிறது. மூன்றாமுலக நாடுகளில், இலங்கை ஒரு வித்தியாசமான முன்மாதிரி. இனத்துவ மேலாண்மையானது, பன்மைத்துவத்தைத் தவிர்ப்பதற்கு சர்வாதிகாரமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இலங்கையில் நீண்டகாலமாக இருந்து வரும் சிங்கள - பௌத்த மேலாதிக்கமும் சிறுபான்மையினரின் கீழ்படிதலும் இவ்விடயத்தை நிரூபிக்கின்றன. சிங்கள - பௌத்த தேசியவாதத்தின் சித்தாந்தமானது, மதச்சார்பின்மையையும் பன்மைத்துவத்தையும் மேற்கத்தைய கட்டுமானங்களாகக் கருதுகிறது, இவை, இத்தீவில் பௌத்தத்தின் முதன்மையான இடத்தைப் பலவீனப்படுத்துகின்றன என்று வாதிடுகின்றன. இக்கருதுகோள்கள், காலப்போக்கில் மனித உரிமைகள், அரசியல் உரிமைகள், சுயாதீனமான நீதித்துறை, கருத்துச் சுதந்திரம் போன்ற அனைத்தையும் மேற்கத்தேயக் கட்டுமானங்களாக அடையாளம் காண்பதில் வெற்றிகண்டுள்ளன. இவ்வாறு அடையாளம் காண்பதனூடு, இத்தீவில் பன்மைத்துவ வரலாற்றைக் கட்டியெழுப்ப விரும்பாத, சுதந்திரத்துக்குப் பிந்தைய உயரடுக்குகள், அரசியல் இலாபத்துக்காக இனம், மதம் போன்றவற்றில் பிளவுகளை ஏற்படுத்தின. இது, உள்நாட்டுப் போருக்கும் அதைத் தொடர்ந்த அரசியல் பௌத்தமானது, பௌத்தத்தையும் ஜனநாயகத்தையும் சமரசம் செய்து நாட்டை, இராணுவ மயப்படுத்தப்பட்ட சர்வாதிகாரப் பாதையில் இட்டுச் சென்றது. அதிலிருந்து இன்றுவரை, இலங்கையால் மீள இயலவில்லை. இது குறித்துப் பேராசிரியர் ஜெயதேவ உயன்கொடவின் கூற்று கவனிக்கத்தக்கது. “சிங்கள - பௌத்தம், ஒரு வன்முறையற்ற சமூக சித்தாந்தத்தின் பரிணாம வளர்ச்சியில், குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கவில்லை. அதில், உள்ளார்ந்த சிங்கள - பௌத்த வரலாற்று பாரம்பரியம், கருத்தியல் என்பன இன அடிப்டையிலான அரசியல் வன்முறையை ஆதரிக்கிறது” என்கிறார். அரசியல் பௌத்தமானது, கட்டமைக்கப்பட்ட தொன்ம வரலாற்றுக் காலத்தின் அடிப்படையில் சமூகத்தை மறுசீரமைக்க முயன்றதோடு, அதன் மூலம் பௌத்தத்தின் அமைதியான கட்டளைகளைச் சீர்குலைத்து, குழிபறித்தது. மேலும், தன் செயற்பாட்டில் ஜனநாயகத்தை கீழறுத்தது. வரலாறு முழுவதும், எல்லா மதங்களும் அரசியல் நோக்கங்களுக்காகக் கையாளப்பட்டுள்ளன, பௌத்தமும் அவ்வாறே! இலங்கையில் உள்ள பௌத்த சாமானியர்களும் மதகுருமார்களும், அரசியல் பௌத்தத்தை பரப்புவதன் மூலம், பரஸ்பர நன்மைக்காக ஒருவரையொருவர் பயன்படுத்திக் கொண்டனர். பிக்குகள், தமது முக்கியத்துவம், செல்வாக்கு, ஆதரவை உறுதி செய்த அதேவேளையில், அரசியல்வாதிகளுக்கு சிங்கள - பௌத்த நற்சான்றிதழ்கள், பௌத்தத்தை வன்முறையின் கருவியாக பயன்படுத்துவதன் மூலம், இனவாத அரச இலட்சியத்துக்கு விசுவாசத்தை நிரூபிக்க ஒரு தளத்தை வழங்குகிறார்கள். பௌத்தத்தை ஒரு தத்துவமாகக் கருதுவோருக்கு இது ஆச்சரியமளிக்கலாம். ஆனால், போதிக்கப்படுவதற்கு மாறாக, பௌத்தர்களும் பௌத்தமும் எப்போதும் வன்முறையைத் தனது பகுதியாகக் கொண்டிருந்தது. ஏனென்றால், தெற்காசியாவில் ஓர் அமைதியான அரசு இருந்ததில்லை. காலப்போக்கில், பௌத்தம் ஒரு நியாயமான போர்க் கோட்பாட்டை வகுத்ததாகத் தோன்றுகிறது. இதன் விளைவு என்னவென்றால், அரசியலானது, பௌத்த மதத்தை மாற்றியமைத்தது; பௌத்தத்துடன் தொடர்புடைய அரசியல், மதத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. அரசியல் பௌத்தம், பௌத்த விழுமியங்களைப் புறக்கணித்தாலும் நடைமுறையில் பௌத்தமும் அரசியல் பௌத்தமும் இணைந்து செயற்படுகின்றன. இந்த வளர்ச்சிக்கு, மூன்று முக்கிய பிரச்சினைகள் பங்களித்துள்ளன. முதலாவது, உள்நாட்டுப் போர். இது, ‘பௌத்த பாதுகாப்பு நாடு’ என்ற இலங்கையின் அந்தஸ்தை அச்சுறுத்தியது. விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு செய்யப்படும் யாவும் நியாயப்படுத்தப்பட்டன. போர், ஒரு வன்முறை சமூகத்தை உருவாக்கியது, பல பௌத்த துறவிகள் வன்முறையை நியாயப்படுத்தினர். சில துறவிகள், இராணுவத்தில் சேர, தங்கள் ஆடைகளைக் களைந்தனர். யுத்தம் முடிவடைந்த பின்னர், பிரதானமாக தமிழர் பிரதேசங்களில், இராணுவ முகாம்களுக்கு அருகில், பௌத்த விகாரைகள் புதிதாக உருவாகி, மோதலுடன் தொடர்புடைய பகுதிகள், யாத்திரைத் தளங்களாக மாறியுள்ளன. இந்த யாத்திரைகள், முன்னாள் போர் வலயத்துக்கான விஜயங்களை உள்ளடக்கியது. இராணுவத்தினருக்கான பாராட்டுகளை வலுப்படுத்துவதுடன், அது அரசியல் பௌத்தத்தை, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும், தொடர்ந்து நடைபெறும் இராணுவ மயமாக்கலுக்கும் தொடர்புபடுத்துகிறது. பிக்குகள் மத்தியில் தண்டனையின்மை, அரசியல் பௌத்தத்திற்கு பங்களித்த இரண்டாவது முக்கிய காரணமாகும். ஒரு கோவிலின் நிலை, அதன் மதகுருமார்களின் நற்பெயரைப் பொருட்படுத்தாமல், இலங்கையில் ஒரு துறவியை வெளிப்படையாக அவமரியாதை செய்ய யாரும் துணிவதில்லை, ஏனெனில், சங்க (துறவற சமூகம்) பௌத்தத்தின் மும்மூர்த்திகளில் ஒன்றாகும். (மற்ற இரண்டும் புத்தர், தர்மம் ஜபுத்தரின் போதனைகள்). இதன் மூலம், பிக்குகள் ‘கைது செய்யப்படலாம்’ என்ற அச்சமின்றி செயற்பட அனுமதித்துள்ளது. இலங்கையில் உள்ள பல பௌத்தர்கள், தனிப்பட்ட முறையில் பிக்குகளின் மோசமான நடத்தையை விமர்சிப்பர். ஆனால், பொதுவில் அவ்வாறு செய்வதைத் தவிர்க்கின்றனர். அரச அதிகாரிகள், துறவிகளைப் பற்றி தவறாகப் பேசுவதைத் தவிர்க்கிறார்கள். எப்போதாவது அவ்வாறு பேசுபவர்கள், துரோகிகள், தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். அரசியல் பௌத்தத்துடன் இணைந்து, மதம் செயற்பட வழிவகுத்த மூன்றாவது முக்கிய காரணி, பௌத்தத்தில் ஒரு படிநிலை இல்லாமையும் அதன் விளைவாக, சங்கத்தின் நடத்தையை ஒழுங்குபடுத்தும் இயலாமையும் ஆகும். இது இன்று இலங்கையில் பௌத்தம் எதிர்நோக்கும் முதன்மையான நெருக்கடியாகும். பாராளுமன்றத்திலும் பிக்குகள் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். சிலர், பொது இடங்களில் கொச்சையானதும் தவறானதுமான வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். மேலும், பல துறவிகள் பொருள்முதல்வாதிகளாகவும் ஊழல்வாதிகளாகவும் காணப்படுகின்றார்கள். இவ்வாறாக, சங்கத்தினர் இலங்கையின் தனித்துவமான பௌத்த அடையாளத்தின் பாதுகாவலர்களாக ஒருபுறம் இருப்பதில், ஒரு முரண்பாட்டை பிரதிநிதித்துவம் செய்கின்றனர். இத்தகைய செயல்களை ஊக்குவிக்கும் தேசியவாதம், இந்தச் சீரழிவை மறைக்கிறது. ஆனால், அரசியல் பௌத்தத்துக்கும் ஒப்பீட்டளவில் சீரழிந்த மற்றும் ஊழல் நிறைந்த சங்கத்துக்கும் இடையே உள்ள தொடர்பு, அங்கிகரிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்த அங்கீகாரம் அரசின் நடத்தையில் பிரதிபலிக்கிறது. இலங்கை, இன்னும் ஏன் தீர்வின் திசைவழியில் பயணிக்கவில்லை என்ற கேள்வியை, பௌத்தம் எதிர்நோக்கும் நெருக்கடியில் இருந்தும் நோக்க வேண்டும். அரசாங்கத்தின் அண்மைய நடத்தைகள், இதையே கோடுகாட்டுகின்றன. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நெருக்கடியிலும்-நாட்டை-படுகுழியில்-தள்ளும்-பௌத்த-பேரினவாதம்/91-298516
  25. உலக உணவு நெருக்கடி: அடுப்பிலிருந்து நெருப்புக்குள் இலங்கை தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தை, இலங்கையர்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். ஆனால், இது வெறும் தொடக்கம் மட்டுமே என்பது போலவே, நிகழ்வுகள் நடந்தேறுகின்றன. புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றபோது, ‘உடனடியாக வெளிநாடுகள் கடன் கொடுக்கும்; பிரச்சினைகள் தீரும்’ என்று சொல்லப்பட்டது. “எல்லா இலங்கையர்களுக்கும், மூன்றுவேளை உணவை உத்தரவாதப்படுத்துவதே எனது பணி” என்று பதவியேற்றவுடன் ரணில் விக்கிரமசிங்க சொன்னார். நடந்தது யாதெனில், அவர் பதவியேற்ற போது மூன்று வேளை உண்டவர்கள், இப்போது இரண்டு வேளையும், இரண்டுவேளை உண்டவர்கள் ஒரு வேளையும் உண்கிறார்கள். புதிய பிரதமரின் சாதனையாக இதையே சொல்லவியலும். நிலைமை இன்னும் மோசமடையும் என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால், அதே அமைச்சர்கள்; அதே பதவிகள்; அதே சலுகைகள்; அதே பாராளுமன்றம். அதிகாரத்தில் உள்ளவர்களின் சலுகைகளில், மேலதிக கொடுப்பனவுகளில் எதுவித குறையையும் அரசாங்கம் வைக்கவில்லை. பாராளுமன்றில் சலுகை விலையில்தான் இன்னமும் உணவு பரிமாறப்படுகிறது. ஆனால், அவர்களால் வாய்கூசாமல் நிலைமை மோசமடையும் என்று சொல்ல முடிகிறது. இன்றைய நெருக்கடி தொடங்கி, இரண்டு மாதங்களுக்கு மேலாகின்ற நிலையில் குறுங்கால, நீண்டகாலத் திட்டங்கள் எதுவுமின்றி, அரசாங்கம் செயற்படுகிறது. இப்போது எதிர்ப்பாளர்கள், கலகக்குரலை எழுப்புபவர்கள் மெதுமெதுவாகக் குறிவைக்கப்படுகிறார்கள். எதிர்க்கருத்துகளை, விமர்சனங்களை அடக்குவதிலேயே அரசாங்கம் கவனம் குவிக்கின்றது. இலங்கை, உணவு நெருக்கடியை ஏற்கெனவே எதிர்கொண்டுள்ளது. உணவுப் பொருட்களின் தட்டுப்பாட்டையும் விலை உயர்வையும், உழைக்கும் மக்களால் உணர முடிகிறது. “இயேசு வருகிறார்”, “கல்கி அவதாரத்தில் கடவுள் வருகிறார்” என்று ஆருடம் சொல்லும் மதப்பிரசங்கிகளுக்கு எதுவிதத்திலும் குறைவற்ற வகையில், எமது அரசியல்வாதிகளும் “எல்லாம் சரி வரும்” என்று சொல்கிறார்கள். எமக்கு மறைக்கப்படுகின்ற மிக முக்கியமான உண்மை ஒன்றுண்டு. உலகம், மிகப்பாரிய உணவு நெருக்கடியில் சிக்கியுள்ளது. இது, இலங்கை போன்ற மூன்றாமுலக நாடுகளை மிகவும் மோசமாகத் தாக்கும். கடந்த ஏப்ரல் மாதம், ஐக்கிய நாடுகள் சபை ‘உக்ரேனியப் போரின் உணவு, சக்தி, நிதி அமைப்புகள் மீதான உலகளாவிய தாக்கம்’ (Global Impact of war in Ukraine on food,energy and finance systems) என்ற தலைப்பில், ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், (1) உணவுப் பொருட்களின் விலைகள் 34% அதிகரித்துள்ளன. (2) மசகு எண்ணெயின் விலை 60%த்தால் அதிகரித்துள்ளது. (3) எரிவாயு, உரம் ஆகியவற்றின் விலைகள் இருமடங்காகியுள்ளன. உலகம் உணவு, சக்தி, நிதி ஆகிய மூன்று நெருக்கடிகளால் சிக்கித்தவிக்கிறது. 107 நாடுகள், குறைந்தது இம்மூன்றில் ஒரு நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளன. 69 நாடுகள் இம்மூன்று நெருக்கடிகளிலும் சிக்கித் தவிக்கின்றன. இந்த நெருக்கடிகளில் பிரதானமானது உணவாகும். இதை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் போது, உலகளாவிய ரீதியில் 45 மில்லியன் மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொண்டுள்ளார்கள். இத்தொகை நாளுக்குநாள் அதிகரிக்கும். “நாம் நிலைமையை உடனடியாகக் கவனிக்கவில்லை என்றால், பெரும் பஞ்சத்தை காண்போம். நாடுகளின் ஸ்திரமின்மையைக் காண்போம். பெருமளவில் இடம்பெயர்வதைக் காண்போம்” என்று உலக உணவு நிறுவகம் எச்சரிக்கிறது. இந்த உணவு நெருக்கடி, இரண்டு வகையான சிக்கல்களை உடையது. வளர்முக நாடுகளில், உணவின்மையும் பட்டினியும் உருவாகியுள்ளன. வளர்ச்சியடைந்த நாடுகளில், உணவுப் பொருட்களின் விலை, கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த நெருக்கடி குறித்து, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தார். அதில், “உக்ரேனின் விவசாய உற்பத்தி வழமைக்குத் திரும்பி, ரஷ்யா, பெலாரஸின் உணவு மற்றும் உர உற்பத்தி, போருக்கு முந்தைய நிலையை எட்டாமல், உலகளாவிய உணவுப் பாதுகாப்பு பிரச்சினைக்கு உண்மையில், நிலையான தீர்வு இல்லை”. இக்கூற்று மிகுந்த கவனிப்புக்கு உரியது. உலகளாவிய உணவு உற்பத்தியில், ரஷ்யாவும் உக்ரேனும் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலகின் தானிய ஏற்றுமதியில், மூன்றில் ஒரு பங்குக்கும், சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதியில் பாதிக்கும் மேலான பங்குக்கும் இந்த இரண்டு நாடுகளும் சொந்தமாகும். உக்ரேனின் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் உலகளாவிய உணவுப் பிரச்சினையை மோசமாக்குகின்றன என்பது உண்மையாயினும், அது மோசமான நிலைமைக்கு முக்கிய காரணம் அல்ல. ரஷ்யாவின் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருக்கும் மேற்கத்திய பொருளாதாரத் தடைகளே மிகவும் சக்திவாய்ந்த காரணமாகும். உக்ரேனுடன் ஒப்பிடுகையில், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களின் ஏற்றுமதியில் ரஷ்யா மிகப் பெரியது. ரஷ்யா உலகின் மிகப்பெரிய கோதுமை ஏற்றுமதியாளராக உள்ளது. உக்ரேனை விட, உலகளாவிய உணவுப் பொருள் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. ரஷ்யா, உலகின் மிகப்பெரிய உர ஏற்றுமதியாளராக உள்ளது. மேற்கத்திய பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ளும் பெலாரஸூம் ஒரு முக்கியமான உர ஏற்றுமதியாளர். இவ்விரு நாடுகளும், உலகளாவிய உர விநியோகத்தில் காற்பங்குக்கும் அதிகமாகப் பங்களிக்கின்றன. இந்நெருக்கடிக்கு முன்பே உரங்களின் விலை, எரிபொருள் விலை உயர்வின் காரணமாக அதிகரித்திருந்தது. உர உற்பத்தி, இயற்கை எரிவாயுவை பெரிதும் நம்பியுள்ளது. ரஷ்யா, உரத்தை ஏற்றுமதி செய்வதைத் தடுக்கும் மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடைகள், நிலைமையை மோசமாக்கியுள்ளன. சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளரான டேவிட் லேபோர்டே, “உணவு அமைப்பு எதிர்கொள்ளும் மிகப்பெரிய அச்சுறுத்தல் உர வர்த்தகத்தின் சீர்குலைவு” என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், “கோதுமை ஒரு சில நாடுகளை பாதிக்கும். உரப் பிரச்சினை, உலகில் எல்லா இடங்களிலும் உள்ள ஒவ்வொரு விவசாயியையும் பாதிக்கும். கோதுமை மட்டுமின்றி, அனைத்து உணவுப் பொருட்களின் உற்பத்தியிலும் உரத்தட்டுப்பாடு சரிவை ஏற்படுத்தும்” என்று தெரிவித்தார். மே மாத நடுப்பகுதியில், உலகின் இரண்டாவது பெரிய கோதுமை உற்பத்தியாளரான இந்தியா, கடுமையான வெப்ப அலையால் ஏற்பட்ட பயிர் இழப்புகள் காரணமாக, கோதுமை ஏற்றுமதியை நிறுத்துவதாக அறிவித்தது. ஏற்கெனவே, ஏப்ரலில் இந்தோனேஷியா பாம் ஒயில் ஏற்றுமதியை நிறுத்துவதாக அறிவித்திருந்தது. உலக, பாம் ஒயில் விநியோகத்தில், 60 சதவீதத்தை இந்தோனேசியா கொண்டுள்ளது. இந்தியா, கோதுமை ஏற்றுமதியை நிறுத்துவது ஆசிய நாடுகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். 2021-2022 ஆம் ஆண்டில் இந்தியா முதன்மையாக, இலங்கை, இந்தோனேசியா, யெமன், நேபாளம், மலேசியா, பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு ஏழு மில்லியன் மெட்ரிக் தொன் கோதுமையை ஏற்றுமதி செய்தது. 2022-2023 ஆம் ஆண்டில், கோதுமை ஏற்றுமதியை 10 மில்லியன் தொன்னாக விரிவுபடுத்த இந்தியா இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், ஏற்றுமதியை இந்தியா நிறுத்தியுள்ளது. ரஷ்ய - உக்ரேன் நெருக்கடிக்கு முன்பே, உலகில் உணவு நிலைமை ஆபத்தானதாக இருந்தது. காலநிலை மாற்றத்துக்கும் அதற்கும் நிறையத் தொடர்பு உண்டு. அதிகரித்து வரும் தீவிர வானிலை நிகழ்வுகள், விவசாயம் மற்றும் உணவு உற்பத்திக்கு தீங்கு விளைவித்துள்ளன. கடந்த தசாப்தத்தில், 1.7 பில்லியன் மக்கள் தீவிர வானிலை நிகழ்வுகள், காலநிலை தொடர்பான பேரழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு சீனாவில் ஏற்பட்ட வெள்ளம், குளிர்கால கோதுமை அறுவடையின் விளைச்சலை, வரலாற்றில் என்றுமில்லதாவாறு குறைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் சமீபகாலமாக நிலவி வரும் வெப்ப அலையும் பொய்த்த பருவமழையும், அங்குள்ள பல்வேறு உணவு உற்பத்திகளுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்க மாநிலங்களில் வரட்சி காரணமாக, 40 சதவீத கோதுமை அழிவடையும் நிலையில் உள்ளது. ஐரோப்பாவில், குறைந்த மழைப்பொழிவு காரணமாக விளைச்சல் நிச்சயமாக அபாயகரமாக கட்டத்தைத் தொடும். இவையனைத்தும் உணவு நெருக்கடிக்கு மேலதிகமான அச்சுறுத்தலைக் கொடுத்துள்ளன. உணவு நெருக்கடியின் தீவிரத்தை உணர்ந்து, 35க்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் சொந்த உணவு பாதுகாப்புக்கு பயந்து, உணவு ஏற்றுமதியில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. சில ஏற்றுமதிக்கு முழுமையான தடை விதித்துள்ளன. செல்வந்த நாடுகள் இப்போதே உணவுப் பதுக்கலைத் தொடங்கிவிட்டன. கொரோனா தடுப்பூசியை எவ்வாறு செல்வந்த நாடுகள் அதிகமாக வாங்கி, மூன்றாமுலக நாடுகளுக்கு இல்லாமல் செய்தனவோ, அதேநிலைமையே இப்போது உணவுப் பொருட்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உணவுத் தேவையின் பெரும்பகுதிக்கு, இறக்குமதியை நம்பியிருக்கும் இலங்கையின் நிலை மிகவும் பரிதாபகரமானது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/உலக-உணவு-நெருக்கடி-அடுப்பிலிருந்து-நெருப்புக்குள்-இலங்கை/91-298004
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.