Jump to content

Search the Community

Showing results for tags 'நிலாந்தன்'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • Ahal Media Network's Topics

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's சிறப்பு ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's ஆவணக்கட்டுகள்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's தொகுத்த ஆவணம்

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

  1. தமிழர்கள் சிறுக்கிறார்களா? பெருக்கிறார்களா? Nillanthan “இனி நாங்கள் எப்பவுமே ஸ்ரீலங்கா பக்கம் போகமாட்டம்.நாங்கள் இலங்கைக்கு போகவே மாட்டம். அப்பிடிப் போறதெண்டால் நாங்கள் இங்கேயே தற்கொலை பண்ணிச் சாவம். நீங்கள்தான் எங்களுக்கு ஏதாவது ஒரு வழிபண்ணி எங்களை யு.என் பொறுப்பெடுத்து காப்பாத்தோனும்”இவ்வாறு கூறியிருப்பவர் வியட்நாமில் இறக்கி விடப்பட்டிருக்கும் ஒரு தமிழ்ப் புலம்பெயரி. அவர் ஒரு இளம் தாய்.ஒரு சிறு பிள்ளையை கையில் வைத்திருக்கிறார்.பயணத்தின் போது தாங்கள் அருந்திய அழுக்கான நீர் நிறைந்த ஒரு பிளாஸ்டிக் போத்தலையும் கையில் வைத்திருக்கிறார்.கனடாவை நோக்கிக் கப்பலில் புறப்பட்ட 303 தமிழர்களில் அவரும் ஒருவர்.அவர்கள் பயணம் செய்த படகு கடந்தவாரம் சேதமடைந்து சிங்கப்பூர் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த பொழுது காப்பாற்றப்பட்டு வியட்நாமில் இறக்கி விடப்பட்டிருக்கிறார்கள். இதுபோலவே ஒஸ்ரேலியாவை நோக்கியும் ஆபத்தான கடல்வழிகளின் ஊடாக தமிழர்கள் புலம்பெயர முயற்சிக்கிறார்கள்.இவ்வாறு கடல் வழியாக வருபவர்களை திருப்பி அனுப்பப்போவதாக ஒஸ்ரேலிய அரசாங்கம் தொடர்ச்சியாக விளம்பரம் செய்துவருகிறது.கடல் வழியாக மட்டுமல்ல வான் வழியாக வரும் புலம்பெயரிகளையும் திருப்பி அனுப்பப்போவதாக ஒஸ்ரேரேலிய அரசாங்கம் கடந்தவாரம் அறிவித்திருக்கிறது. கொழும்பில் உள்ள ஒஸ்ரேரேலிய தூதரகத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவர் ஓர் ஆங்கில ஊடகவியலாளரோடு உரையாடும்பொழுது ஒரு விடயத்தை சுட்டிக் காட்டியிருக்கிறார்.இலங்கையிலிருந்து பெருந்தொகையான மூளை உழைப்பாளிகளின் விசாவுக்கு விண்ணப்பித்திருப்பதாகவும்,அண்மை காலங்களில் அந்த விண்ணப்பங்களின் தொகை அதிகரித்து வருவதாகவும், அதனால் விசா விண்ணப்பங்களையும் கட்டுப்படுத்த வேண்டிய நிலைமை வரலாம் என்ற பொருள்பட அவர் கதைத்திருக்கிறார். கனடா,ஒஸ்ரேலியா போன்ற நாடுகளை நோக்கி மட்டுமல்ல,ஐரோப்பிய நாடுகளை நோக்கியும் பெருந்தொகையான தமிழர்களும் சிங்களவர்களும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.குறிப்பாக மேற்படிப்பு அல்லது தொழில் வாய்ப்பு என்ற அடிப்படையில் படித்தவர்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.இந்த ஆண்டு மட்டும் இதுவரையிலும் 500க்கும் அதிகமான மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் வெளியேறுவதற்காக விண்ணப்பித்திருக்கிறார்கள். பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஏற்பட்ட தன்னெழுச்சிப் போராட்டங்களின் பின்னணியில் கொழும்பில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டைப் பெறுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்தது. போர்க்காலங்களில் தமிழ் இளையோர் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் பொருளாதார காரணங்களுக்காகவும் நாட்டைவிட்டு வெளியேறினார்கள். ஆனால் அண்மைக் காலங்களில் சிங்கள இளையோரும் அவ்வாறு வெளியேறத் தொடங்கியிருக்கிறார்கள்.இவர்களின் கணிசமானவர்கள் மூளை உழைப்பாளிகள். ராஜபக்சக்கள் இந்த நாட்டை எந்த மக்களுக்கு மீட்டுக் கொடுத்ததாக பெருமைப்பட்டுக் கொண்டார்களோ,அந்த மக்களே நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.இதில் குறிப்பாக தமிழ்மக்களைப் பொறுத்தவரை 2009க்கு பின்னரும் புலப்பெயர்வு நிகழ்கிறது என்பதுதான் இக்கட்டுரையின் குவிமையம் ஆகும். அண்மையில் கல்விப் பொதுத் தராதர உயர்தரம் பயிலும் ஒரு மாணவரிடம் கேட்டேன்… நல்ல பெறுபேறு கிடைத்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? என்று அவர் சொன்னார் “வெளிநாட்டுக்குப் போவேன்” என்று. அவருடைய இரண்டு சகோதரர்களும் அவ்வாறு வெளியேறத் தயாராகி வருவதாகவும் அவர் சொன்னார்.தமிழ் இளையோரில் வகைமாதிரிக்கு ஒரு குறிப்பிட்ட தொகையினரை எடுத்து “எத்தனை பேர் நாட்டை விட்டு வெளியேற விரும்புகிறீர்கள்?”என்று கேட்டால்…அதற்கு நாட்டை விட்டு வெளியேற விரும்புவோரின் தொகையே அதிகமாயிருக்கிறது. புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் ஏற்கனவே நிதிரீதியாக செல்வாக்கு மிக்க ஒரு சமூகமாக எழுச்சி பெற்றுவிட்டது.அந்நாடுகளில் கல்வி ஒரு சுமையாகவோ சித்திரவதையாகவோ இல்லை.அதை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு நாட்டில் உள்ள இளைய தலைமுறையில் ஒரு பகுதி வெளியேற முயற்சிக்கின்றது.இவ்வாறு வெளியேற விரும்பும் பலருக்கும் புலம்பெயர்ந்த பரப்பில் யாரோ ஒரு உறவினர் அல்லது ஏதோ ஒரு தொடர்பு உண்டு.அவ்வாறு புலம்பெயர்ந்து செல்வதன்மூலம் தமது குடும்பத்தின் நிதிநிலையை உயர்த்தலாம்,தாமும் ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம் என்று அவர்கள் நம்புவதாகத் தெரிகிறது. ஒருபுறம் போதைப்பொருள் பாவனை வாள் வெட்டுக் கலாச்சாரம் தொடர்பாக செய்திகள் வெளிவருகின்றன. இன்னொருபுறம் 2009க்கு பின்னரும் நாட்டை விட்டு வெளியேறும் இளையோரின் தொகை குறையாமல் இருக்கிறது. தமிழ் அரசியல்வாதிகளும் கட்சிகளும் தாயகம்,தேசியம் சுயநிர்ணயம் என்ற கோஷங்களை விடாது உச்சரிக்கின்றன. ஆனால் தாயகத்தில் தமிழ் மக்களின் ஜனத்தொகை குறைந்து வருகிறது. ஒருபுறம் தாயகத்திலும் டயஸ்பெறாவிலும் பிள்ளைப்பேறு விகிதம் பெருமளவிற்கு குறைந்து வருகிறது. இன்னொரு புறம் தாயகத்திலிருந்து தொடர்ச்சியாக மணப்பெண்களாக ஒரு தொகுதி பெண்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.இதற்கு சமாந்தரமாக மூளை உழைப்பாளிகளும் கள்ளமாகக் குடியேறுபவர்களும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.இதுதொடர்பில் தமிழ்க் கட்சிகளிடம் அல்லது செயற்பாட்டாளர்களிடம் தொகுக்கப்பட்ட புள்ளி விபரங்கள் ஏதாவது உண்டா? ஒரு மக்கள் கூட்டத்தை தேசிய இனமாக வனையும் பிரதான அம்சங்கள் ஐந்து இனம்,நிலம்,(அதாவது தாயகம்), மொழி,பொதுப்பண்பாடு,பொதுப் பொருளாதாரம் என்பவையே அவையாகும். இதில் இனம் என்று குறிப்பிடப்படுவது பிரயோகத்தில் தமிழ் சனத் தொகையைத்தான்.ஏற்கனவே போரில் தமிழ் சனத்தொகையில் குறைந்தது மூன்று லட்சம் பேர் கொல்லப்பட்டு விட்டார்கள். அல்லது காணாமல் போய்விட்டார்கள். தப்பிப் பிழைத்தவர்களில் இளையவர்கள் இப்பொழுது புலம்பெயர முயற்சிக்கிறார்கள். இனப்படுகொலை புலப்பெயர்ச்சி என்பவற்றால் ஏற்கனவே சனத்தொகை மெலிந்து வருகிறது. இந்நிலையில் பிள்ளைப் பேறு விகிதமும் குறைந்து வருவதனால் சனத்தொகை மேலும் குறையக் கூடிய ஆபத்து அதிகரிக்கிறது. கடந்த பெப்ரவரி மாதம் யாழ்.சர்வோதயத்தில் நடந்த ஒரு கருத்தரங்கின்போது அங்கு பிரசன்னமாகியிருந்த நடுத்தர வயதைக் கடந்த சுமார் முப்பது பெண்களிடம் வளவாளர் ஒரு கேள்வி கேட்டார்.”நீங்கள் எல்லாரும் எத்தனை சகோதரர்களோடு பிறந்தீர்கள்?”அவர்களில் அநேகமானவர்கள் மூன்றுக்கும் மேற்பட்ட சகோதரர்களோடு பிறந்ததாகச் சொன்னார்கள்.அதன்பின் வளவாளர் மீண்டும் ஒரு கேள்வி கேட்டார் “உங்களில் எத்தனை பேருக்கு மூன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள்?”துரதிஷ்டவசமாக அங்கிருந்த பெண்களில் மூவருக்குத்தான் மூன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள்.ஏனைய அனைவருக்கும் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகள்தான்.இதுதான் தமிழ்ச் சமூகத்தின் இப்போதுள்ள நிலைமை. தாயகத்திலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் பிள்ளைப்பேறு விகிதம் குறைந்து வருகிறது.அதேசமயம் புலப்பெயர்ச்சியும் தொடர்கிறது. தமிழ் இளையோர் தாயகத்தை விட்டு வெளியேறுவதனால் அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்துக்கும் நிதி ரீதியாக பாதுகாப்பான ஒரு எதிர்காலம் கிடைக்கலாம். ஆனால் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் பார்த்தால் அது தாயகத்தில் சனத்தொகையைக் குறைக்கிறது.தேர்தல்மைய நோக்கு நிலையிலிருந்து பார்த்தால் வாக்காளர்களின் தொகை குறைக்கிறது.எல்லா விதத்திலும் அது தமிழ் மக்களை பலவீனப்படுத்துகிறது. காசிருந்து என்ன பலன்? தாயகத்தில் சனத்தொகை மெலிந்து கொண்டே போகிறது. ஒரு தேசமாக தமிழ் மக்கள் பெருக்கவில்லை சிறுத்துக் கொண்டே போகிறார்களா? தமிழ் இளையோர் மத்தியில் இவ்வாறு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற தவிப்பு ஏன் அதிகரிக்கின்றது? இதைக் குறித்து தமிழ் கட்சிகளோ அல்லது செயற்பாட்டாளர்களோ அல்லது புத்திஜீவிகளோ அல்லது குடிமக்கள் சமூகங்களோ சிந்திக்கின்றனவா? சில மாதங்களுக்கு முன்பு வலிகாமம் பகுதியிலுள்ள ஒரு பங்குத்தந்தை என்னை தனது பங்கில் உள்ள இளையோர் மத்தியில் பொருளாதார நெருக்கடிகள்பற்றி பேசுமாறு அழைத்திருந்தார். நான் பேசிக்கொண்டிருந்தேன் ஆனால் அங்கு கூடியிருந்த இளையோர் அந்தப் பேச்சை ரசிக்கவில்லை.அக்கறையோடு கேட்கவில்லை.ஒரு கட்டத்தில் பேசுவதை நிறுத்தி விட்டுக் கேட்டேன் “உங்களுக்கு தேவையில்லாத ஒன்றை நான் கதைக்கின்றேனா?” “ஆம்” என்று சொன்னார்கள.”உங்களைப் பாதிக்கும் விடயங்களைப்பற்றி அறிய விரும்பவில்லையா?” என்று கேட்டேன்.அறிந்து என்ன பயன் என்ற தொனிப்படக் கேட்டார்கள்.“சரி,எதிர்காலத்தில் என்னவாய் வர விரும்புகிறீர்கள்? உங்களுடைய வாழ்வின் இலட்சியம் என்ன?” என்று கேட்டேன். சுமார் 40 பேர் வந்திருந்த அந்தச் சந்திப்பில் நான்கு பேர்களிடம்தான் எதிர்கால இலட்சியம் இருந்தது. ஏனையவர்கள் கேட்டார்கள் “ஏன் அப்படி ஒரு இலட்சியம் இருக்க வேண்டும்? வாழ்க்கையை இப்பொழுது இருப்பதை போலவே அனுபவித்து விட்டு போகலாமே?” என்று.உங்களை நீங்கள் புதிய சவால்களுக்கு ஏற்ப புதுப்பித்துக் கொள்ள விரும்பவில்லையா என்று கேட்டேன். “ஏன் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்?” என்று கேட்டார்கள். அவர்களில் அநேகரிடம் ஆகப்பிந்திய தயாரிப்புகளான கைபேசிகள் இருந்தன. பெரும்பாலானவர்கள் ஆகப்பிந்திய தயாரிப்புகளான மோட்டார் சைக்கிள்களை வைத்திருந்தார்கள்.அவற்றைச் சுட்டிக்காட்டி அவர்களிடம் கேட்டேன்..”உங்களுடைய வாகனங்கள் அப்டேட் செய்யப்பட்டவை; உங்களுடைய கைபேசிகள் அப்டேட் செய்யப்பட்டவை ;உங்களுடைய வீட்டில் இருக்கும் தொலைக்காட்சிகள்,கணினிகள் அப்டேட் செய்யப்பட்டவை; ஆனால் நீங்கள் மட்டும் உங்களை அப்டேட் செய்ய விரும்பவில்லையா?” என்று. அப்பொழுதுதான் அவர்கள் ஈடுபாட்டோடு உரையாடத் தொடங்கினார்கள். நான் பேசவந்த விடயத்தை இடையிலேயே நிறுத்திவிட்டு அவர்களோடு அவர்களுடைய அலைவரிசையிலேயே நின்று கதைப்பது என்று முடிவெடுத்து, கேள்விகளை கேட்கத் தொடங்கினேன்.அது வெற்றியளித்தது. என்னை அங்கே பேச அழைத்த பங்குத் தந்தையிடம் சொன்னேன் ” ஒரு புதிய தலைமுறையின் நம்பிக்கைகளை நாங்கள் எங்களுடைய நம்பிக்கைகளுக்கூடாக அணுகப் பார்க்கிறோம்.எங்களுடைய நம்பிக்கைகளே அவர்களுடைய நம்பிக்கைகளாகவும் இருக்க வேண்டும் என்று இல்லை.அவர்கள் கைபேசிச் செயலிகளின் கைதிகள். எல்லாவற்றையும் “ஸ்க்ரோல்” பண்ணி கடந்துவிட முயலும் ஒரு தலைமுறை. பெரும்பாலான விடயங்களில் ஆழமான வாசிப்போ, யோசிப்போ,தரிசிப்போ கிடையாது.அவர்களை அவர்களுடைய அலைவரிசைக்குள் சென்று அணுகினால்தான் அவர்கள் எங்களோடு உரையாட வருகிறார்கள்” என்று கொழும்பில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராகப் போராடத் தொடங்கிய நடுத்தர வர்க்கம் குறிப்பாக இளையோர் காலிமுகத்திடலில் முதலில் வைத்த கோஷம் “You are messing up with a wrong generation” – நீங்கள் பிழையான ஒரு தலைமுறையோடு சொதப்பிக் கொண்டிருக்கிறீர்கள்” என்பதாகும்.இது தமிழ் அரசியல்வாதிகளுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் பொருந்தும் ஒரு காலம் வருகிறதா? http://www.nillanthan.com/5733/
  2. போதைப் பொருளைத் தடுக்க ஒரு படைப்பிரிவு? – நிலாந்தன். October 30, 2022 “வடக்கில் இராணுவத்தினரால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது கஞ்சா தொகையாகக் கைப்பற்றப்பட்டது. இந்தியாவிலிருந்து யாழ்ப்பணப் பகுதிக்கு மிகவும் பிரமாண்டமான முறையில் போதைப்பொருள் கடத்தல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இளம்சந்ததியினரும் அவற்றிற்கு அடிமையாகின்ற தன்மையானது வெகுவாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்த துர்ப்பாக்கிய நிலையினை இல்லாதொழிப்பதனை நோக்கமாகக் கொண்டு யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜேயசுந்தர அவர்களினுடைய தலைமையில் விசேட படைப் பிரிவானது உருவாக்கப்பட்டு விசேட சோதனை நடவடிக்கைகள் மற்றும் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு அதனூடாக யாழ்.மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல்களை தடுத்தல், கைதுசெய்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் அதனுடன் தெடர்புள்ள நபர்களை நீதி முன்நிறுத்துதல் போன்ற செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” இது பலாலி படைத் தலைமையகம் வெளியிட்ட செய்திக் குறிப்பின் ஒருபகுதி. அதாவது முடிவில் படைத்தரப்பும் போதைப் பொருளுக்கு எதிராக களத்தில் இறங்கிவிட்டது என்று பொருள்.தமிழ்மக்கள் அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் படைத்தரப்பு அவ்வாறு இறங்கும். ஏற்கனவே அவர்கள் சந்திகளில் நிற்கிறார்கள். ஏற்கனவே எஸ்.டி.எப் களத்தில் இறங்கிவிட்டது. சிலநாட்களுக்கு முன் எஸ்.ரி.எப் வவுனியாவில் தானும் களமிறக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. படைத்தரப்பு இயற்கை அனர்த்தக்கங்களின் போதும் பெருந்தொற்று நோயின் போதும் களத்தில் இறங்கியது. இலங்கைத் தீவில் மேலிருந்து கீழ்நோக்கிய மிகப் பலமான நிறுவன கட்டமைப்பை படைத்தரப்பு கொண்டிருக்கிறது. இலங்கை நாட்டில் அதிக ஆளணியையும் அதிக வளங்களையும் கொண்ட அரசு உபகரணம் அதுதான். எனவே இது போன்ற நடவடிக்கைகளில் அரசாங்கம் அவர்களை ஈடுபடுத்தும். ஆனால் இங்குள்ள பிரச்சினை என்னவென்றால்,தீவின் மொத்த படைக்கட்டமைப்பில் மூன்றில் இரண்டு பகுதி தமிழ் பகுதிகளின் நிலை கொண்டிருப்பதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.தமிழ் கடல் பெருமளவுக்கு ஸ்ரீலங்கா கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. நாட்டின் படைக் கட்டமைப்பின் மூன்றில் இரண்டு பகுதி நிறுத்தப்பட்டிருக்கும் தமிழ் பகுதிக்குள் அதிகளவு போதைப்பொருள் நுகர்ப்படுகிறது என்றால் அதற்கு அப்பகுதியை கட்டுப்படுத்தும் படைத்தரப்பும் பதில் கூறவேண்டும் என்று தமிழ் அரசியல்வாதிகள் கேட்கிறார்கள். அண்மையில் இது சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கருத்து தெரிவித்திருந்தார். மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் பின்வருமாறு கூறியுள்ளார்…”இதனை சட்டரீதியாக தடுக்க வேண்டியவர்களே அதற்கு உடந்தையாக இருப்பது தெரிகிறது. அது சம்பந்தமாக மிக உயர்ந்த மட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்”. அதாவது போதைப்பொருள் வலைப் பின்னலுக்கும் குற்றவாளிகள் தப்பிச் செல்வதற்கும் படைத்தரப்பு அல்லது காவல்துறையின் மீது அவர் மறைமுகமாக குற்றம் சாட்டுகிறார். இப்படிப்பட்ட ஒரு பின்னணிக்குள் படைத்தரப்பு போதைப் பொருளுக்கு எதிராக களமிறங்கியிருக்கிறது. அவர்கள் களமிறங்குவதற்கு முன்னரே கடந்த சில வாரங்களாக தமிழ்ப் பகுதிகளில் போலீஸும் அதிரடிப் படையும் ஆங்காங்கே போதைப் பொருள் வலைப்பின்னலுக்கு எதிராக முன்னெடுத்துவரும் முறியடிப்பு நடவடிக்கைகள் தொடர்பான செய்திகள் ஒப்பிட்டுளவில் அதிகரித்த அளவில் வெளிவருகின்றன. குறிப்பாக போதைப்பொருள் பாவனையாளர்களை,விநியோகஸ்தர்களைக் கைது செய்வது தொடர்பான செய்திகள் அடிக்கடி வெளிவருகின்றன.கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களோடு போலீசார் காட்சியளிக்கும் படங்களும் ஊடகங்களில் பிரசுரிக்கப்படுகின்றன. இச்செய்திகளை தொகுத்துப்பார்த்தால் போதைப்பொருளுக்கு எதிரான முறியடிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளதான ஒரு தோற்றம் நமக்கு கிடைக்கும். ஆனால் அரசின் சட்டம் ஒழுங்கைப் பேணும் அமைப்புகளால் மட்டும் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு விடயம் இதுவல்ல என்பதனை நான் ஏற்கனவே பல தடவை எனது கட்டுரைகளில் சுட்டிக்காட்டியுள்ளேன். தமிழ்மக்களின் தேசிய இருப்பை சிதைக்கும் உள்நோக்கத்தோடு போதைப்பொருள் விநியோகம் திட்டமிட்டு ஊக்குவிக்கப்படுவதாக ஒரு சந்தேகம் பரவலாக உண்டு. சுமந்திரனும் சிறீதரனும் கூறுவதுபோல அது மேலிருந்து கீழ்நோக்கிய ஒரு திட்டமிட்ட செயலாக இருக்கக்கூடும்.ஆனால் அதை எதிர்கொள்வதற்கு கீழிருந்து மேல் நோக்கிய ஒரு கட்டமைப்பை,சுய கவசங்களை தமிழ்மக்கள் கட்டியெழுப்ப வேண்டும். இதுதொடர்பில் கீழிருந்து மேல் நோக்கிய விழிப்பைக் கட்டியெழுப்ப வேண்டும். எனது நண்பர் ஒருவர் கூறுவதுபோல தமிழ்பகுதிகளில் கிராம மட்டத்தில் படைப்புலனாய்வுத்துறை வைத்திருப்பது போன்ற வினைத்திறன் மிக்க மேலிருந்து கீழ்நோக்கிய வலைப்பின்னல் நமது கட்சிகளிடமே கிடையாது. தமிழ் இளையோர் மத்தியில் குறிப்பாக பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பதற்கு தனிய மேலிருந்து கீழ்நோக்கிய கட்டமைப்பை மட்டும் குறை சொல்லிக் கொண்டிருக்க முடியாது.மாறாக கீழிருந்து மேல் நோக்கிய சுயகவசங்களை தமிழ் மக்கள் கட்டி எழுப்ப வேண்டும். அதை தனிய மருத்துவர்களால் மட்டும் செய்யமுடியாது என்பதனைத்தான் அண்மை காலங்களில் கிடைக்கும் புள்ளிவிவரங்கள் நமக்குக் காட்டுகின்றன. மருத்துவர்கள் இதில் ஒரு பகுதிதான். மருத்துவ சிகிச்சைக்குமப்பால் ஒரு கூட்டுச்சிகிச்சை தேவைப்படுகிறது. அதைத் தனிய மருத்துவர்கள் மட்டும் செய்யமுடியாது. இளைய தலைமுறைக்கு தலைமை தாங்க இலட்சியப் பாங்கான தலைவர்கள் வேண்டும். இளைய தலைமுறையை இலட்சியத்தை நோக்கிச் செலுத்தப்பட்ட அம்புகளாக மாற்றினால் இது போன்ற துஷ்பிரயோகங்களுக்கு இடமிருக்காது. அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள், சமயப் பெரியோர், கல்விச்சமூகம், படைப்பாளிகள்,ஊடகங்கள் என்று எல்லாத்தளங்களிலும் இருக்கக்கூடிய செயல்பாட்டாளர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அதை ஒரு கூட்டுச் செயற்பாடாக முன்னெடுக்க வேண்டும்.அக்கூட்டுச் செயற்பாட்டுக்கு அரசியல்வாதிகளோ அல்லது அரசியல் செயற்பாட்டாளர்களோ தலைமை தாங்க வேண்டும். ஆனால் அவ்வாறு தலைமை தாங்கும் தகுதியோ தரிசனமோ பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகளுக்கு இல்லை,பலமான குடிமக்கள் சமூகமும் இல்லை என்ற வெற்றிடத்தில்தான் போதைப் பொருள் பாவனை அதிகரிக்கிறது. இதை ஒரு குற்றச்செயலாக மட்டும் கருதி அதற்குரிய முறியடிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது. மாறாக இதை ஒரு கூட்டுநோயாக ஒரு பண்பாட்டு வெற்றிடமாக, ஒரு அரசியல் தலைமைத்துவ வெற்றிடமாக, உள்ளூர் தலைமைத்துவ வெற்றிடமாக, ஆன்மீக வறட்சியாக, இன்னபிறவாக தொகுத்துப் பார்க்கவேண்டும். இதில் தனிய மேலிருந்து கீழ் நோக்கிய கட்டமைப்பை மட்டும் குறை சொல்லிக் கொண்டிருக்காமல் ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு மத நிறுவனமும் ஒவ்வொரு பாடசாலையும் தங்களுக்குள்ள கூட்டுப் பொறுப்பை உணரவேண்டும். வீட்டில் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையே இறுக்கமான பாசப்பிணைப்பு இருந்திருந்தால் இடையில் ஒரு போதைப்பொருள் வியாபாரி நுழைந்திருக்க முடியாது. பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையே அல்லது பிள்ளைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே அல்லது பிள்ளைகளுக்கும் உள்ளூர் தலைவர்களுக்கும் இடையே அல்லது பிள்ளைகளுக்கும் சமயப் பெரியாருக்கு இடையே இடைவெளி அதிகரிக்கும்பொழுது இதுபோன்ற துஷ்பிரயோகங்களும் அதிகரிக்கும். அந்த இடைவெளி எங்கிருந்து வந்தது? என்று கண்டுபிடிக்க வேண்டும். போட்டிக்கல்வி முறைமையானது பாடசாலைகளின் மதிப்பைக் குறைத்துவிட்டது.இதனால் பாடசாலை ஆசிரியர்கள் பிள்ளைகளின்மீது செல்வாக்குச் செலுத்துவதில் வரையறைகள் அதிகரிக்கின்றன. அண்மையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாணப் பிரிவும் யாழ் போதனா வைத்தியசாலையின் சம்பந்தப்பட்ட பிரிவும் இணைந்து இது தொடர்பான அறிவுறுத்தல்களை வெளியிட்டிருந்தன. ஒரு பள்ளிக்கூடப் பிள்ளை போதைப்பொருள் பாவனையாளராக இருந்தால் அதை கண்டுபிடிப்பதற்கு வேண்டிய அறிகுறிகளை அவர்கள் விவரமாக தெரிவித்திருந்தார்கள். ஆனால் பிரச்சினை என்னவென்றால்,ஒரு பிள்ளையிடம் அவ்வாறான மாற்றங்கள் ஏற்படுவதனை யார் கவனிப்பது? அதைப் பெற்றோரும் ஆசிரியர்களும்தான் கவனிக்க வேண்டும்.வீட்டில் உள்ள மூத்த தலைமுறைதான் அதைச் செய்ய வேண்டும். ஆனால் இன்றைக்கு மூத்ததலைமுறையின் கவனத்தைக் கலைப்பதற்கு பல விடியங்கள் வந்துவிட்டன. குறிப்பாக திரைத் தொடர்கள், கைபேசிச் செயலிகள் போன்றவற்றை கூறலாம்.ஒரு முதிய தலைமுறை திரைத்தொடர்களின் கைதியாகிவிட்டது. நடுத்தர வயதுக்காரர்கள் கைபேசிகளின் கைதிகளாகி விட்டார்கள்.இது பொழுது போக்கைகளின் காலம். மூத்ததலைமுறை பொழுதுபோக்குச் சாதனங்களில் மூழ்கிக் கிடக்கும் பொழுது, இளைய தலைமுறை எங்கே போகிறது ?என்ன செய்கிறது? யாருடன் தொடர்பை வைத்திருக்கின்றது? போன்றவற்றை கவனிப்பதற்கான நேரங்கள் குறைகின்றன. இவ்வாறான தொடர்ச்சியான அவதானிப்பும் கவனிப்பும் இல்லாத வெற்றிடத்தில்தான் போதைப்பொருள் நுழைகிறது.வாள்கள் நுழைகின்றன. யாழ்.போதனா மருத்துவமனை வெளியிட்டிருக்கும் அந்தப் பிரசுரத்தில் காணப்படும் குணக்குறிகளை தொடர்ச்சியாகக் கவனிப்பது என்று சொன்னால் பெற்றோரும் ஆசிரியர்களும் பிள்ளைகளின் ஒவ்வொரு அசைவையும் தொடர்ச்சியாகக் கவனிக்க வேண்டும்.அதாவது பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும்.பிள்ளைகளுக்கும் ஆசிரியருக்கும் இடையே அதிகபட்ச தொடர்பாடல் இருக்க வேண்டும். எனவே போதைப் பொருட்களுக்கு எதிரான சுயகவசங்களை இங்கிருந்துதான் கட்டியெழுப்பத் தொடங்க வேண்டும். தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசம் என்று கூறுகிறார்கள்.ஒரு தேசியஇனம் என்ற அடிப்படையில் தமக்கு சுயநிர்ணய உரிமை இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் ஒரு சமூகமாக,பலமான ஒரு திரட்சியாக இல்லை என்பதனை அண்மையில் எரிபொருள் வரிசைகளில் கண்டோம்.இப்பொழுது அவர்கள் குடும்பமாகக்கூட இல்லையா என்று கேட்க வேண்டிய ஒரு நிலைமையை போதைப்பொருள் பாவனை ஏற்படுத்தியிருக்கிறதா? https://globaltamilnews.net/2022/182975/
  3. வரியைக் கட்டு அல்லது வரிசையில் நில் Nillanthan கொழும்பில் உள்ள முன்னணி ஆங்கில வாரப்பத்திரிகை ஒன்றின் ஊடகவியலாளர் என்னிடம் கேட்டார்…”யாழ்ப்பாணத்தில் ஓட்டோ மாபியாக்களை யார் கட்டுப்படுத்துவது?”என்று.அண்மையில் அவர் யாழ்ப்பாணத்துக்கு வந்த பொழுது சிறிய தூரத்துக்கு அதிக தொகை பணத்தை அவர்கள் கேட்டதாகவும் அவர் முறையிட்டார்.ஆனால் கொழும்பில் குறுந்தூரங்களுக்கு ஆகக் குறைந்தது 120 ரூபாய்களும்,அதற்கு மேற்பட்ட தூரங்களுக்கு மீற்றர் கணக்கின்படி காசு அளவிடப்படுவதாகவும் அவர் சொன்னார்.”யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டிகளில் ஏன் மீற்றரைப் பொருத்தக் கூடாது?” என்றும் கேட்டார்.அதுமட்டுமல்ல “பிக்மி” போன்ற நிறுவனங்கள் யாழ்ப்பாணத்திற்கு வர முயற்சித்த போதும் அதனை முச்சக்கர வண்டி ஓட்டுநர் சங்கம் போன்றன வரவேற்கவில்லை என்ற ஒரு தகவல் தனக்குக் கிடைத்ததாகவும் அவர் சொன்னார்.”பிக்மி போன்ற நிறுவனங்களை யாழ்ப்பாணத்துக்குள் அனுமதித்தால் அது மக்களின் பயணச்சுமையை குறைக்கும் அல்லவா ?” என்றும் கேட்டார். அவர் கூறுவதில் உண்மை உண்டு.திருநெல்வேலியில் இருந்து யாழ் நகரப் பகுதிக்கு செல்வதற்கு முன்பு முகம் தெரிந்த ஓட்டக் காரர்கள் 200 ரூபாயும் முகம் தெரியாதவர்கள் 250 ரூபாயும் எடுத்தார்கள்.ஆனால் இப்பொழுது 600 ரூபாய்க்குமேல் கேட்கிறார்கள்.”பெட்ரோல் விலை இறங்கிவிட்டது ஏன் கட்டணத்தைக் குறைக்க கூடாது?”என்று கேட்டால்,”பெட்ரோல் விலை மட்டும்தானே இறங்கியிருக்கிறது? ஏனைய பொருட்களின் விலை இறங்கவில்லையே ?”என்று கூறுகிறார்கள். சிறிய ஆனால் கவர்ச்சியான “செமி கொஸ்மோபொலிற்றன்” நகரமாகிய யாழ்ப்பாணம் புலப்பெயர்ச்சி காரணமாகவும் இடப்பெயர்ச்சி காரணமாகவும் அதன் சனப்பொலிவை இழந்துவிட்டாலும்கூட,இப்பொழுதும் அதன் தெருக்களில் ஜனங்கள் நிறைந்து வழிந்து கொண்டே இருக்கிறார்கள். இதனால் முச்சக்கர வண்டிகளுக்கான தேவை அதிகம் உண்டு.ஆனால் முச்சக்கர வண்டிக்காரர்கள் பெட்ரோல் விலை உயரும்பொழுது உயர்த்திய கட்டணத்தை இறக்கத் தயாரில்லை. யாழ்ப்பாணத்து ஊடகவியலாளர் ஒருவரும் சொன்னார், அண்மையில் தான் கொழும்புக்குச் சென்ற பொழுது அங்கே ஒரு குறுந்தூர ஓட்டோப் பயணத்தின் பின் எவ்வளவு கட்டணம் என்று கேட்டபொழுது அந்த ஓட்டோச் சாரதி தன்னிடம் 100 ரூபாய் கேட்டார் என்றும், தனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது என்றும். தலைநகரில் ஓட்டோக் கட்டணங்கள் குறையத் தொடங்கிவிட்டன.ஆனால் யாழ்ப்பாணத்தில் ஏன் குறையவில்லை?யார் அதைக் குறையவிடாமல் தடுப்பது?பிக்மி போன்ற சேவைகளை யாப்பானத்துக்கு வரவிடாமல் தடுப்பது யார்? ஓட்டோ உரிமையாளர்கள் மீற்றர் பூட்ட மறுப்பது ஏன்? அதைத் தட்டிக் கேட்பது யார்? ரணில் விக்கிரமசிங்க ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின் பொருளாதார நெருக்கடியின் விளைவுகளை ஒப்பிட்டுளவில் கட்டுப்படுத்தி வருகிறார். குறிப்பாக எரிபொருள்,எரிவாயு விநியோகம் ஒப்பிட்டுளவில் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது.மண்ணெண்ணெய் வினியோகமும் ஒப்பிட்டளவில் சீராகி வருகிறது.அதனால் கடல் படு திரவியங்களின் விலை படிப்படியாக இறங்கி வருகிறது.கோழி இறைச்சியின் விலை அண்மையில் சடுதியாக குறைந்தது.ஆனால் செய்திகளில் பொருட்களின் விலைகள் குறைக்கப்படுமளவுக்கு நடைமுறையில் விலைகளைக் குறைப்பதற்கு வியாபாரிகள் தயாரில்லை.இலங்கை போன்ற நாடுகளில் ஏறிய விலைகள் பொதுவாக இறங்குவது குறைவு என்று பொருளியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். அதை அவர்கள் “கீழ்நோக்கிய இறுக்கம்” என்று வர்ணிக்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்க ஒருபுறம் விலைகளைப் படிப்படியாகக் குறைக்கிறார்.இன்னொருபுறம் வரிகளை கூட்டத் தொடங்கியிருக்கிறார். அது மட்டுமல்ல,புதிதாக வரிகளையும் விதிக்க தொடங்கியிருக்கிறார். வரிசைகளில் நிற்பதை தடுப்பதென்றால் வரிகளைக் கட்டுங்கள் என்று அவர் அண்மையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது கூறினார்.மேலும் பொருளாதார நெருக்கடிகளுக்கு அடிப்படைக் காரணம் 2019-ல் ராஜபக்சக்கள் செய்த வரிக்குறைப்பே என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.வரியைக் குறைத்தபடியால் நாட்டின் வருமானம் குறைந்ததுதான் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்று கூறும் அவர் அதனால் புதிய வரிகளை விதிக்க வேண்டியிருக்கிறது என்றும் கூறுகிறார். 2019இல் கோட்டாபய ஆட்சி பொறுப்பை ஏற்றதும் வரிகளை குறைத்தமைதான் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்று ரணில் விக்கிரமசிங்க மட்டும் கூறவில்லை.ஏற்கனவே பொருளியல் நிபுணர்கள் அதைக் கூறிவருகிறார்கள். மிகக்குறிப்பாக கொழும்பை மையமாகக் கொண்டியங்கும் “வெரிற்றே ரிசேர்ச் இன்ஸ்ரிரியூட்” எனப்படும் நிறுவனம் இதுதொடர்பில் தொடர்ச்சியாகக் கருத்து தெரிவித்து வருகிறது. வெரிற்றே ரிசேர்ச் இன்ஸ்ரிரியூட் கூறுவது உண்மைதான்.ஆனால் அது ஒரு பகுதி உண்மை மட்டுமே.வரிக்குறைப்பை ராஜபக்சக்கள் ஏழைகளுக்காக செய்யவில்லை.அதையவர்கள் பணக்காரர்களைத் திருப்திப்படுத்தவே செய்தார்கள் என்பது முதலாவது விடயம். இரண்டாவது விடயம், வரிக்குறைப்பு மட்டும்தான் பொருளாதார நெருக்கடியை தோற்றுவித்தது என்பது முழுமையான விளக்கம் அல்ல.வரிக்குறைப்பு பல காரணங்களில் ஒன்று என்பதே சரி. பொருளாதார நெருக்கடிக்கு மூலகாரணம் இனப்பிரச்சினைதான். இனப்பிரச்சினை காரணமாக நாடு அதன் முதலீட்டு தகுதியை இழந்து விட்டது. 2009க்கு பின்னரும் அந்த தகுதியை மீளப் பெற முடியவில்லை. ஏனென்றால் அந்த யுத்த வெற்றி நியாயமான வழிகளில் பெறப்படவில்லை.அது நாட்டின் ஒரு பகுதி மக்களை பூச்சி புழுக்களைப் போல கொன்றொழித்துப் பெறப்பட்ட ஒரு வெற்றி.தமிழ்மக்கள் குற்றம் சாட்டுவதுபோல இனப்படுகொலைமூலம் பெறப்பட்ட ஒரு வெற்றி.எனவே இனப்படுகொலையை அரசியல் வெற்றியாக மாற்ற முடியவில்லை.அதன் விளைவாகத்தான் தமிழர்கள் நீதி கேட்டு உலக சமூகத்தின் கதவுகளைத் தட்டத்தொடங்கினார்கள்.அதுவும் நாட்டின் முதலீட்டுக் கவர்ச்சியை குறைத்துவிட்டது. 2009க்கு பின்னரும் முதலீட்டாளர்கள் நாட்டை நோக்கி வரத் தயங்குகிறார்கள்.எனவே இனப் பிரச்சினைதான் பொருளாதார நெருக்கடிக்கு மூலகாரணம்.வரிக் குறைப்பு,ஈஸ்டர் குண்டு வெடிப்பு,பெருந் தொற்று நோய்,உக்ரைன் யுத்தம் போன்றன உப காரணங்கள்தான். நாட்டின் பொதுத்துறை ஊதியத்தில் சுமார் 50%படைத்தரப்புக்கு வழங்கப்படுகிறது என்றும், உலகில் 100 பேர்களுக்கு எத்தனை படைவீரர்கள் என்ற விகிதத்தில் இலங்கை பத்தாவது இடத்தில் உள்ளது என்றும் நிஷான் டி மெல்-வெரிற்றே ரிசேர்ச் இன்ஸ்ரிரியூட்டின் பணிப்பாளர்- கூறுகிறார்.இலங்கைத் தீவின் பாதுகாப்பு செலவினம் நாட்டின் கல்வி மற்றும் சுகாதாரச் செலவினங்கள் இரண்டையும் கூட்டிவரும் தொகையைவிட அதிகமாக இருப்பதும் பொருளாதார சீரழிவுக்கு ஒரு காரணம் என்று நிஷான் கூறுகிறார். எனினும், ரணில் விக்ரமசிங்கவின் வரவு செலவுத் திட்டத்திலும் பாதுகாப்புச் செலவினம் குறைக்கப்படவில்லை.மாறாக ராஜபக்சவின் வரிக்குறைப்பை ஒரு பிரதான காரணமாகக் காட்டி அதன்மூலம் அவர் புதிதாக வரிகளை நியாயப்படுத்த முயல்கிறார்.அதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால் நடுத்தரவர்க்கம்,கீழ் நடுத்தர வர்க்கத்தின் மடியில் அவர் கைவைக்கப் போகின்றார்.ஏனென்றால் பன்னாட்டு நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவர் இயங்க வேண்டியுள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை 22ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதும் ஐ.எம்.எப்.ஐத் திருப்திப்படுத்தும். 2019 இல் நடந்த வரிக்குறைப்பு தொடர்பாக நிசான் டி மெல் ஒரு விடயத்தை கடந்த ஓகஸ்ட் மாதம் சுட்டிக்காட்டியிருந்தார்.அந்த வரிக்குறைப்பு உரிய ஆய்வுகளின் பின் முன்னெடுக்கப்படவில்லை.இனிமேலும் வரியை கூட்டும்பொழுது அதற்குரிய ஆய்வுகள் செய்யப்படாவிட்டால் ஏற்கனவே விட்ட தவறை திரும்பவும் விடுவதாக அது அமையும் என்று அவர் எச்சரித்திருந்தார். புதிய வரிகளின்மூலம் ரணில் பொருளாதார நெருக்கடியின் விளைவுகளை மேலோட்டமாகத் தணிக்கக்கூடும்.நெருக்கடியின் மூலகாரணத்தை நீக்க அவரால் முடியாது.ஏனென்றால் அவர் தாமரை மொட்டின் கைதியாக காணப்படும் ஒரு ஜனாதிபதி. அடுத்த மார்ச் மாதமளவில் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் அவருக்கு கிடைத்துவிடும்.அப்பொழுது அவர் தாமரை மொட்டுக்கட்சியில் தங்கியிருப்பதில் இருந்து ஒப்பீட்டளவில் விடுபடலாம். ஆனாலும் தனது சொந்தக் கட்சியை அவர் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது. அவர் ஒற்றை யானையாக நாடாளுமன்றத்தில் நிற்கிறார்.சஜித்தை உடைத்து யானைகளை தன்வசப்படுத்த வேண்டும்.அதற்கு கிடைத்திருக்கும் அரை ஆட்சிக்காலம் போதுமா?எனவே இனப் பிரச்சினையை தீர்ப்பது என்றெல்லாம் அவர் ரிஸ்க் எடுப்பாரா என்பது சந்தேகம்தான். முன்னாள் சமாதானத் தூதுவரான எரிச் சூல் ஹெய்ம்மை அவர் நாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்.சூல் ஹெய்ம் ஜனாதிபதிக்குரிய காலநிலை ஆலோசகர் என்று கூறப்பட்டாலும்,ஐ.எம்.எப்ஐ திருப்திப்படுத்த அரசாங்கம் இனப்பிரச்சினையை தீர்க்கமுயற்சிப்பது போன்ற ஒரு தோற்றத்தைக் கட்டியெழுப்ப திட்டமிடுகிறதா என்ற சந்தேகங்களும் உண்டு.சூல் ஹெய்ம் கொழும்புக்கு வந்த காலகட்டத்தில் தனது ருவிற்றர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டிருந்தார்….”மிக விரைவான வழி எப்பொழுதும் நேரான கோடாக இருப்பதில்லை”.அதில் அவர் பிரசுரித்துள்ள சிறு காணொளியின்படி வளைந்த கோடே விரைவானது என்று காட்டப்படுகிறது.அந்த வளைந்த பாதை எது? ரணில் விக்கிரமசிங்கவிற்கு இது ஏறக்குறைய கடைசி ஓவர். மிஞ்சிப் போனால் இன்னுமொரு ஓவர் இருக்கலாம்.அவருக்கு வயதாகிவிட்டது.தன்னுடைய கடைசிக் காலத்தில் முழு நாட்டையும் பலப்படுத்துவதா?அல்லது தனது சொந்தக் கட்சியான யு.என்.பியை பலப்படுத்துவதா ? என்று அவர் முடிவெடுக்க வேண்டும்.அவர் பதவியேற்ற அறையின் பின்னணிச் சுவரில் மூன்று ஒளிப்படங்களைத் தொங்கவிட்டிருந்தார்.டி.எஸ்.சேனநாயக, டட்லி சேனநாயக, ஜெயவர்த்தன ஆகிய மூவரின் ஒளிபடங்களுமே அவை.இதன்மூலம் அவர் என்ன கூற வருகிறார்?அவருடைய அண்மைக்கால நடவடிக்கைகளில் அவர் பெருமளவுக்கு ஜெயவர்த்தனாவை பின்பற்றுவது போல தோன்றுகிறார். எனவே அவருக்கு முன்னால் இரண்டு தெரிவுகள்தான் உண்டு.முதலாவது தெரிவு அன்ரன் பாலசிங்கத்தை தீர்க்கதரிசி என்று நிரூபிப்பது.இரண்டாவது தெரிவு தான் ஒரு தீர்க்கதரிசி என்று நிரூபிப்பது.அன்ரன் பாலசிங்கத்தை தீர்க்கதரிசியாக நிரூபிப்பது என்றால் ஜெயவர்த்தனவின் வழியில் தொடர்ந்து போக வேண்டும். யூ.என்.பியைப் பலப்படுத்த வேண்டும்.அல்லது,தன்னுடைய கடைசி ஓவரை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்து, நாட்டின் சமாதானத்துக்கு அர்ப்பணித்து உழைப்பாராக இருந்தால்,அதற்காக சிங்கள பௌத்த பெருந்தேசியவாதக் கட்டமைப்பை எதிர்த்து ரிஸ்க் எடுப்பாராக இருந்தால் நாடு அவரை ஒரு தீர்க்கதரிசி என்று போற்றும். இல்லையென்றால் நரி என்று தூற்றும் http://www.nillanthan.com/5691/
  4. ஜெனிவாத் தீர்மானமும் தமிழ்நாடும் Nillanthan மற்றொரு ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தீர்மானத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாக்களித்த நாடுகள் மற்றும் நடுநிலை வகித்த நாடுகள் போன்றவற்றை தொகுத்து பார்த்தால் ஒரு விடயம் தெளிவாக தெரியும்.ஆதரித்த நாடுகள் தமிழர்களுக்காக அதை ஆதரித்தன என்பதை விடவும் தங்களுடைய பூகோள அரசியல் நோக்கு நிலைகளில் இருந்து தீர்மானத்தை அணுகியுள்ளன என்பது. இரண்டாவதாக தீர்மானத்தை எதிர்த்த நாடுகளை எடுத்துப் பார்த்தால் அவை பெருமளவுக்கு அமெரிக்க எதிர்ப்பு காரணமாக ஜெனிவா தீர்மானத்தை எதிர்த்திருக்கின்றன என்பது.எனவே தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த நாடுகள் தமிழர்களுக்கு எதிராக வாக்களித்தன என்பதைவிடவும் அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித்தன என்பதே அதிகம் பொருத்தமான விளக்கம். மூன்றாவதாக நடுநிலை வகித்த நாடுகள்.இந்நாடுகள் இலங்கை அரசாங்கத்தோடு தமக்குள்ள உறவை பகை நிலைக்குத் தள்ள விரும்பவில்லை. அல்லது அமெரிக்காவின் மேலாண்மையை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை.அல்லது தமிழ்மக்களை கையாளக்கூடிய தூரத்தில் வைத்திருக்க வேண்டும் என்று கருதும் நாடுகள். இந்தியா நடுநிலை வகித்திருக்கிறது. கடந்த ஆண்டும் இந்தியா நடுநிலை வகித்தது. இதுவரையிலுமான கடந்த பத்தாண்டுகால ஜெனிவா தீர்மானங்களில் இந்தியா இரண்டு தடவைகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறது.இம்முறை ஜெனிவாவில் இந்தியாவை தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு தூண்டும் நோக்கத்தோடு தமிழகத்தில் உள்ள சில செயற்பாட்டாளர்கள் முயற்சித்தார்கள்.யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு ஓர் அறிக்கையை வெளியிட்டது.அந்த அறிக்கையானது இலங்கை அரசாங்கத்தை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்த வேண்டும் என்று கேட்டிருந்தது. இந்தியா ஐநாவில் அக்கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தது. இதுபோன்ற கோரிக்கைகளை முன்வைத்து தமிழகத்தில் உள்ள செயற்பாட்டாளர்கள் சிலர் அங்குள்ள ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு என்ற கட்டமைப்புக்கூடாக இந்திய மத்திய அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கலாமா என்று முயன்றிருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் உள்ள ஈழ உணர்வாளர்களில் முக்கியமான சிலர்கூட அந்த விடயத்தில் அதிகம் அக்கறை காட்டவில்லை என்று தெரிகிறது. புலம்பெயர்ந்த தமிழர்களோடு அதிகம் உறவைப் பேணும் சீமானின் கட்சியும் அதில் அக்கறை காட்டவில்லை. மேலும் பெரிய திராவிடக் கட்சிகளை அணுகிய பொழுது குறிப்பாக திமுக அந்த விடயத்தில் அக்கறை காட்டவில்லை. ஈழப் பிரச்சினையில் தலையிட்டு கையச் சுட்டுக்கொள்ள வேண்டாம் என்று திமுகவின் தலைமை தன் கட்சி ஆட்களுக்கு அறிவுறுத்தியிருப்பதாகத் தெரிகிறது. இவ்வாறு ஜெனிவா தீர்மானத்தை முன்வைத்து தமிழகத்தில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைக்க முடியாமல் போனமைக்கு பின்வரும் காரணங்கள் கூறப்படுகின்றன. முதலாவது காரணம்,திமுக இந்த விடயத்தில் தலையிடுவதில்லை என்ற முடிவோடு காணப்படுகிறது.நெருக்கடியான காலத்தில் நிவாரணம் வழங்குவதற்கும் அப்பால் ஈழப்பிரச்சினையில் தலையிட திமுக தயங்குகிறது. அதனால் திமுக ஆதரவு நிலைப்பாட்டை கொண்ட ஈழ உணர்வாளர்கள் ஜெனிவாவை முன்வைத்துப் போராடத் தயாரில்லை. இரண்டாவது காரணம் திராவிடம் எதிர் தமிழ் என்ற ஒரு முரண் நிலை ருவிற்றரிலும் கிளப் ஹவுஸ்சிலும் தீவிரமடைந்து வருகிறது. இதில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும் பங்குண்டு. இந்த முரண்பாடுகள் காரணமாக மேற்படி சமூகவலைத்தளங்களில் திமுக ஆதரவாளர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒரு பகுதியினரும் மோசமாக மோதிக் கொள்கிறார்கள்.இம்மோதல்களில் அனேகமாக அரசியல் நாகரீகம் பின்பற்றப்படுவதில்லை. மூன்றாவது காரணம்,சீமானின் நாம் தமிழர் கட்சி ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ஏகபோக உரித்தை கொண்டாட முற்படுகிறது. இதனாலும் ஏனைய கட்சிகள் அந்தப் பக்கம் வரத் தயங்குகின்றன.புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள சீமானுக்கு ஆதரவான தரப்புக்களில் அநேகமானவை ஜெனிவாவை,ஜெனிவா தீர்மானங்களை பிரயோசனமற்றவை என்று கருதுகின்றன.அவற்றின் செல்வாக்குக்கு உட்பட்டு சீமானும் ஜெனிவாவை குறித்து அறிக்கை விடாமல் இருந்திருக்கலாம். மேலும்,சீமான் தன் அரசியல் எதிரிகளைத் தாக்கும் பொழுது ஈழப் பிரச்சினையை ஒரு கேடயமாக பயன்படுத்துகின்றார். அதனால் அவருக்கு விழும் அடிகள் ஈழப் பிரச்சினையின் மீதும் விழுகின்றன. நாலாவது காரணம்,தமிழகத்தில் பாரதிய ஜனதா தன் கால்களை பலமாக ஊன்ற முயற்சிக்கின்றது.ஈழப்பிரச்சினையை அவர்கள் திமுகவுக்கு எதிராகவும் பயன்படுத்துகிறார்கள்.தவிர திராவிடக் கட்சிகளை ஒதுக்கிவிட்டு ஈழப் பிரச்சினையை தம் கையில் எடுக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள். ஐந்தாவது காரணம், புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்புகளில் சிலவும் தாயகத்தில் உள்ள மிகச் சில தரப்புகளும் இந்துத்துவா ராஜதந்திரம் ஒன்றை கையில் எடுக்க முயற்சிக்கின்றன.அதன்படி தமிழக பாரதிய ஜனதாக்கட்சியின் முக்கியஸ்தர்களான திருமதி.வானதி சீனிவாசன்,அண்ணாமலை போன்றோரை அணுகுவதன்மூலம் டெல்லியை நெருங்கலாம் என்று அவர்கள் சிந்திக்கிறார்கள்.இதுவும் திராவிடக் கட்சிகளை ஒதுங்கி நிற்க வைக்கிறது. மேற்கண்ட காரணங்களை தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரியவரும். தமிழகத்தின் கட்சி அரசியலுக்குள் ஈழத் தமிழர்களின் விவகாரம் சிக்கிவிட்டது.இதுதொடர்பாக உரையாடிய ஒரு தமிழகச் செயற்பாட்டாளர் பின்வரும் தொனிப்படச் சொன்னார் “ஈழப்பிரச்சினையை தேர்தலுக்காகப் பயன்படுத்தும் ஒரு வழமைக்குப் பதிலாக தேர்தலை ஈழப் பிரச்சினைக்காக கையாளும் ஒரு வளர்ச்சி தமிழகத்தில் இன்றுவரை ஏற்படவில்லை. நீங்கள் ஈழத் தமிழர்கள் இந்தியாவை கையாள்வதற்குரிய ஒரு வெளியுறவு தரிசனத்தையும் கட்டமைப்பையும் கொண்டிருக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள்.அதற்கு முதலில் தமிழகத்தை கையாள்வதற்குரிய ஒரு வெளியுறவு கொள்கை அவசியம்” என்று. இவ்வாறான ஒரு அரசியல் சூழலில் மேற்சொன்ன தமிழக செயற்பாட்டாளர்களின் தூண்டுதலால் வைகோ ஒரு அறிக்கை விட்டார். பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் ஒரு அறிக்கை விட்டார். தமிழக சட்டமன்ற உறுப்பினரும்,தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவருமாகிய வேல்முருகன் ஓர் அறிக்கை விட்டார்.அவ்வளவுதான் நடந்தது. ஆதற்குமப்பால் ஜெனிவா தீர்மானத்தில் இந்திய மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் என்ற முனைப்போடு தமிழகக் கட்சிகளை நோக்கி உழைத்த செயல்பாட்டாளர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. அதேசமயம் தமிழகத்தில் உள்ள சில செயற்பாட்டாளர்கள் ஈழத் தமிழர்கள் மத்தியில் உள்ள சிவில் சமூகங்களை நெருங்கி ஒரு வேண்டுகோள் விடுத்தார்கள்.தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட 13 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிவில் சமூகங்களும் இணைந்து இந்திய மத்திய அரசாங்கத்தை நோக்கி ஒரு கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்பதே அது.அதாவது ஜெனிவா தீர்மானத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றும் விதத்தில் இலங்கைத்தீவில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 13 பேரும் சிவில் சமூகங்களும் இணைந்து இந்திய மத்திய அரசாங்கத்தை நோக்கி ஒரு வேண்டுகோளை விடுக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் தமிழ்க் கட்சிகளும் அதற்குத் தயாராக இருக்கவில்லை.சிவில் சமூகங்களும் உடன்படவில்லை.அதற்கு அவர்கள் வலிமையான ஒரு காரணத்தை முன்வைத்தார்கள்.அது என்னவெனில், ஏற்கனவே கடந்த ஆண்டு ஆறு கட்சிகள் இந்தியாவை நோக்கி ஒரு கூட்டுக் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றன.இக்கூட்டுக் கோரிக்கையை தயாரிக்கும்பொழுது தமிழரசுக் கட்சி அதில் முதலில் இணையவில்லை. அக்கட்சி அந்த முயற்சிகளில் இணைந்து செயல்பட்ட தொடங்கியபின் கோரிக்கையின் வடிவம் மாறியது. எனினும் மேற்படி கூட்டுக்கோரிக்கையானது சாராம்சத்தில் மாகாண சபையை கடக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இரண்டு ஆர்ப்பாட்டங்களை ஒழுங்குபடுத்தியது.இதில் யாழ்ப்பாணத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கிட்டுப் பூங்காவில் ஒரு பிரகடனம் வெளியிடப்பட்டது. இவ்வாறு பலத்த எதிர்ப்புகளின் மத்தியில் ஆறு கட்சிகளும் ஒரு கூட்டுக் கோரிக்கையை இந்தியப் பிரதமரை நோக்கி முன்வைத்தன.ஆனால் இன்றுவரை அந்த கோரிக்கைக்கு இந்திய மத்திய அரசாங்கம் பதில் கூறவில்லை.கடந்த ஆண்டு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கொழும்புக்கு வந்திருந்தார்.இதன்போது அவர் கூட்டமைப்பை சந்தித்தார்.டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தார். ஆனால் ஆறு கட்சிகளையும் ஒன்றாகச் சந்திக்கவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில், மீண்டும் ஒரு தடவை இந்தியாவை நோக்கி ஒரு கோரிக்கையை முன்வைப்பதற்கு தமிழ்க் கட்சிகளும் தயாரில்லை குடிமக்கள் சமூகங்களும் தயாரில்லை. ஆக மொத்தம் ஜெனிவா கூட்டத்தொடரை முன்னிட்டு இந்திய மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு ஈழத் தமிழர்கள் மத்தியிலிருந்தும் தமிழகத்திலிருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்படவில்லை. அவ்வாறு ஈழத்தமிழர்களும் தமிழகமும் இணைந்து இந்திய மத்திய அரசாங்கத்தை வற்புறுத்துவதால் மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தலாமா இல்லையா என்ற விவாதம் ஒருபுறம் இருக்க,இந்திய மத்திய அரசாங்கத்தை கையாளும் விடயத்தில்,தமிழக ஈழத் தரப்புகள் ஒன்றிணைந்து செயல்படுவதில் உள்ள சிக்கல்களையும் ஏமாற்றகரமான இடைவெளிகளையும் மேற்படி முயற்சிகள் நமக்கு உணர்த்துகின்றன. தமிழகம் கொந்தளித்தால் இந்திய மத்திய அரசாங்கத்தின்மீது அழுத்தங்களை பிரயோகிக்க முடியும் என்ற ஒர் எடுகோளின் அடிப்படையில் மூத்த அரசறிவியலாளர் திருநாவுக்கரசு உபாயம் ஒன்றை முன்வைத்தார்.அது நாலாங்கட்ட ஈழப்போரின்போது 2006 இல் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.”சென்னையில் திறவுகோல் என்ற தலைப்பில் எழுதப்பட்ட அக்கட்டுரையில்,சென்னை-டில்லி-வொசிங்டன் ஆகிய மூன்றும் ஒரு கோட்டில் வரும்போது தமிழர்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் கடந்த ஜெனிவா கூட்டத்தொடரை முன்னிட்டு சில செயற்பாட்டாளர்கள் தன்னார்வமாக முன்னெடுத்த நகர்வுகள் வெற்றி பெறாதது எதைக் காட்டுகிறது? தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் இடையிலான பிணைப்பு ஒரு பேர பலமாக மாற்றப்படவில்லை என்பதையா ? http://www.nillanthan.com/5677/
  5. ஜெனிவாத் தீர்மானம் 2022 : தமிழ் அரசியலின் இயலாமை? Nillanthan மற்றோரு ஜெனீவாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொறுப்புக்கூறலை ஜெனீவாவுக்கு வெளியே கொண்டுபோக வேண்டும் என்று தமிழ்க்கட்சிகள் கேட்டது சரி என்பதை இப்புதிய தீர்மானம் நிரூபித்திருக்கிறது. கடந்த ஆண்டு ஜனவரி 21ஆம் திகதி தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட மூன்று கட்சிகள் இணைந்து ஜெனீவாவுக்கு ஒரு கூட்டுக்கடிதத்தை அனுப்பின. அதில் பொறுப்புக்கூறலை ஜெனீவாவுக்கு வெளியே கொண்டு போகவேண்டும் என்ற கோரிக்கையை இணைத்தது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிதான். இதுநடந்து 20மாதங்களாகிவிட்டன. பொறுப்புக்குகூறலை ஜெனீவாவுக்கு வெளியே கொண்டு போகும் முயற்சியில் மூன்று கட்சிகளும் எதுவரை முன்னேறியுள்ளன? நடந்து முடிந்த ஜெனிவாக் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் அங்கு போயிருந்தார். அங்கிருந்து அவர் வழங்கிய நேர்காணல்களில் அவர் ஒரு விடயத்தை திரும்பத்திரும்ப சுட்டிக்காட்டுகின்றார். அது என்னவெனில், கூட்டமைப்பும் சில புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளும் தொடர்ந்தும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை பலவீனப்படுத்தி வருகின்றன என்பதே அது. அதாவது ஜெனிவா தீர்மானத்தை முன் கொண்டுவரும் நாடுகளை நோக்கி கூட்டமைப்பு தமிழ்மக்களின் கோரிக்கையை வலிமையாக முன்வைக்கவில்லை என்பது அவருடைய முதலாவது குற்றச்சாட்டு. இரண்டாவது குற்றச்சாட்டு, பிரித்தானியா,ஆவுஸ்ரேலியா,கனடா ஆகிய நாடுகளை மையமாகக் கொண்டியங்கும் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகள் சில தொடர்ந்து தத்தமது நாடுகளின் அரசாங்கங்களுடைய விருப்பங்களுக்கு ஏற்ப செயல்பட்டு வருகின்றன என்பது. அதாவது மேற்படி நாடுகள் ஜெனிவாவில் தமிழ்மக்களின் கோரிக்கைகளை தமது பூகோள அரசியல் இலக்குகளுக்காக நீர்த்துப்போகச் செய்யும்பொழுது அதுவிடயத்தில் மேற்படி புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகள் அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களுக்கு விசுவாசமாக கீழ்படிவாக செயல்படுகின்றன என்ற தொனிப்பட அவர் குற்றம் சாட்டுகிறார். ரணில் விக்ரமசிங்கவின் முன்னைய ஆட்சிக்காலத்தில்,2015ஆம் ஆண்டு நிலைமாறுகால நீதிக்குரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பொழுது தமிழ்த்தரப்பில் கூட்டமைப்பு அந்த தீர்மானத்தை ஆதரித்தது. அது நிலைமாறுகால நீதியின் பங்காளியாக மாறியது. அவ்வாறே புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் சிலவும் நிலைமாறு கால நீதியை ஏற்றுக்கொண்டன. அதே சமயம் இன்னொரு பகுதி புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளும் தாயகத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி போன்ற கட்சிகளும் நிலைமாறுகால நீதியை ஏற்றுக்கொள்ளவில்லை. அவை இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியைக் கேட்டன. எனினும்,கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஐநாவுக்கு அனுப்பிய கூட்டுக் கடிதத்தில் கூட்டமைப்பு எனைய இரண்டு கட்சிகளோடு இணைந்து பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டு போகவேண்டும் என்று கேட்டிருந்தது. இலங்கை அரசாங்கத்தை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்த வேண்டும் என்று அக்கடிதம் கேட்டிருந்தது. நிலைமாறுகால நீதியைப் பரிசோதித்தோம் அதில் தோல்வியுற்றுவிட்டோம் என்று சுமந்திரன் வவுனியாவில் வைத்துச் சொன்னார். ஆனால் ஜெனீவாத் தீர்மானத்தின் சீரோ டிராப்ட் வெளிவந்த பொழுது கூட்டமைப்பு தலைகீழாகி நின்றது. இப்பொழுதும் கூட்டமைப்பு பொறுப்புக்கூறலை ஜெனீவாவுக்கு வெளியே கொண்டுபோக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கருக்குழு நாடுகளின்மீது அழுத்தத்தை பிரயோகிக்கவில்லை என்று கஜேந்திரன் குற்றஞ்சாட்டுகிறார். அதுபோலவே அவர் குற்றஞ்சாட்டும் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளும் பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டு போகவேண்டும் என்ற விடயத்தை வலியுறுத்துவதில்லை என்ற தொனிப்பட அவருடைய குற்றச்சாட்டு அமைகிறது. இக்குற்றச்சாட்டுகளை தமிழில் அரசியல் விமர்சனக் கட்டுரைகளை எழுதும் பலரும் கூட்டமைப்புக்கு எதிராக முன்வைத்து வருகிறார்கள். குடிமக்கள் சமூகங்கள் மத்தியிலும் அவ்வாறான குற்றச்சாட்டுகள் உண்டு. தவிர காணாமல் போனவர்களுக்கான அமைப்புகள் உட்பட பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்புகளும் கூட்டமைப்பின் மீது விமர்சனங்களைத் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றன. இந்த விமர்சனங்களின் விளைவாகத்தான் கடந்த பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு அதன் ஆசனங்களில் ஆறை இழந்தது. அதன் ஏகபோகம் சரிந்தது. ஆனால் அவ்வாறு இழந்த ஆறு ஆசனங்களையும் யார் பெற்றார்கள்? மூன்றே மூன்று ஆசனங்களைத்தான் மாற்று அணி பெற்றது. எனைய மூன்று ஆசனங்களும் தமிழ்த்தேசியப் பரப்புக்கு வெளியே போயின. அவ்வாறு மூன்று ஆசனங்கள் தமிழ்தேசிய பரப்புக்கு வெளியே போனதற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் கூட்டுப் பொறுப்பை ஏற்கவேண்டும். ஒரு பலமான மாற்று அணியைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற அரசியல் தரிசனம் அக்கட்சியிடம் இன்றுவரை இல்லை. எப்பொழுதும் ஏனைய கட்சிகளை குறைகூறி ஏனைய கட்சிகளில் குற்றம் கண்டுபிடித்து தங்களைப் பரிசுத்தர்களாக காட்டிக் கொள்ளும் ஒரு போக்குதான் அக்கட்சியிடம் இன்றுவரை உண்டு. அண்மையில் திலீபனின் நினைவுத்தூபி அவமதிக்கப்பட்ட போதும் அக்கட்சி தன் அரசியல் எதிரிகளைத்தான் குற்றஞ்சாட்டியது. தன் உள் அரசியல் எதிரிகளை குற்றச்சாட்டுவது என்பது தேர்தல்மைய அரசியலின் ஒரு பகுதிதான். ஆனால் ஈழத்தமிழ் நோக்கு நிலையிலிருந்து பார்த்தால் அதுமட்டுமே தேச நிர்மாணத்தின் பிரதான பகுதியாக அமைய முடியாது. ஈழத்தமிழர்கள் தொடர்ச்சியான இனப்படுகொலையால் நீர்த்துப்போன ஒரு மக்கள் கூட்டம். புலப்பெயற்சி, தோல்வி, கூட்டு காயங்கள், காட்டிக் கொடுப்புகள் போன்றவற்றால் தொடர்ந்தும் சிதறிப் போயிருக்கும் ஒரு மக்கள் கூட்டம். எனவே இந்த மக்கள் கூட்டத்தின் மத்தியில் தேர்தல் அரசியலை முன்னெடுக்கும் கட்சிகள் தமது அரசியல் எதிரிகளை திட்டிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. அதைவிட முக்கியமாக தாம் சரியெனக் கருதும் ஓர் அரசியல் இலக்கை நோக்கி மக்களைத் திரட்டவேண்டும். ஒரு தேசத் திரட்சியைக் கட்டியெழுப்ப வேண்டும். அதாவது தேர்தல்மைய அரசியலை எப்படி ஒரு தேச நிர்மாணத்தின் பகுதியாக மாற்றலாம் என்று சிந்திக்க வேண்டும். ஆனால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் உட்பட கூட்டமைப்பை விமர்சிக்கும் பலரிடமும் அவ்வாறான அரசியல் தரிசனம் உண்டா? என்ற கேள்வியை கடந்த 13 ஆண்டு கால அனுபவம் கேட்க வைக்கின்றது. கடந்த 13 ஆண்டுகளாக தமிழ் மக்களின் அரசியலானது புரோஅக்டிவ் – proactive- ஆக, அதாவது தானாக ஒன்றைக் கட்டியெழுப்பும் அரசியலாக இல்லை. அது ரியாக்டிவ்- reactive- ஆகத்தான் அதாவது பதில் வினையாற்றும் அரசியலாகத் தான் காணப்படுகிறது. அதாவது தேசத்தை நிர்மாணித்தல் என்பது எதிர் தரப்புக்கு எதிர்வினை ஆற்றும் தற்காப்பு நிலை அரசியலாகதான் மாறியிருக்கிறது. மாறாக தேசத்தை நிர்மாணிப்பதற்கான நிறுவனங்களை உருவாக்கி அதனூடாக தன் உள் அரசியல் எதிரியையும் வெளி எதிரிகளையும் எப்படித் தோற்கடிக்கலாம் என்ற சிந்தனை கூட்டமைப்பிடமும் இல்லை. கூட்டமைப்பின் எதிரிகளிடமும் இல்லை. கூட்டமைப்பின் அரசியல் தவறுகள் காரணமாகத்தான் கடந்த பொதுத் தேர்தலில் அக்கட்சி ஏகபோகத்தை இழந்தது. ஆனால் அந்த தோல்வியை தன்னுடைய முழுமையான வெற்றியாக மாற்றிக் கொள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் முடியவில்லை. எனைய தமிழ்த்தேசிய கட்சிகளாலும் முடியவில்லை. இதனால் தமிழ் வாக்குகள் மேலும் சிதறி,தமிழ்மக்களின் பேரபலம் சிதைந்தது. அதாவது தேசத் திரட்சி பலவீனமடைந்தது. இப்பொழுதும் ஜெனிவா விவகாரத்தில் கூட்டமைப்பு செய்வது பிழை என்றால் ஏனைய கட்சிகள் அதை தோற்கடிக்க வேண்டும். அதற்கு வேண்டிய மக்கள் ஆணையை முதலில் பெற வேண்டும். அந்த மக்கள் ஆணையை பெறுவதற்கு ஒரு பலமான மாற்று அணியை கட்டி எழுப்ப வேண்டும். மக்களாணையை பெற்ற பின் பொருத்தமான வெளியுறவு கொள்கை ஒன்றை வகுத்து வெளியுறவு கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி அதனூடாக ஜெனிவாவையும் இந்தியாவையும் எனைய தரப்புகளையும் அணுக வேண்டும். ஆனால் அப்படியான சிந்தனைகளையோ செயற்பாடுகளையோ தமிழ் அரசியலில் மிகக் குறைவாகவே காணமுடிகிறது. ஒப்பிட்டுளவில் அதிக ஆசனங்களைப் பெற்ற கூட்டமைப்போடுதான் வெளியுலகம் பேசும். தன் உள் அரசியல் எதிரியைத் திட்டித் தீர்ப்பதிலேயே தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் சக்தி பெருமளவுக்கு விரயம் செய்யப்படுகிறது. இது ஒரு விதத்தில் நெகட்டிவ் ஆனது. மாறாக பொசிட்டிவாக தனக்கு சரி என்று தோன்றும் ஓர் அரசியல் இலக்கை முன்வைத்து தேசத்தைக் கட்டியெழுப்ப இந்த கட்சிகளால் முடியவில்லை. இதனால்தான் கடந்த 13 ஆண்டுகளாக பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டு போக முடியவில்லை. பேராசிரியர் ஜூட் லால் கூறுவது போல தமிழ்மக்கள் கடந்த 13 ஆண்டுகளாக குறிப்பிட்டுச் செல்லக்கூடிய வெற்றிகள் எதையும் பெற்ற முடியவில்லை. வேண்டுமானால் நெருப்பை அணையாமல் பாதுகாத்தோம் என்று கூறித் திருப்திப்படலாம். தனது உள் அரசியல் எதிரிகளைப் பற்றியே எப்பொழுதும் சிந்தித்து அவர்களுக்கு எதிரான வியூகங்களை வகுப்பதிலேயே தமிழ்ச் சக்தி வீணாகிக் கொண்டிருக்கிறது .மாறாக,ஆக்கபூர்வமான விதத்தில் பொசிட்டிவாக, புரோஅக்டிவாக,ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு வேண்டிய வழி வரைபடத்தை தயாரித்து முன் செல்லும்போது அரசியல் எதிரிகள் படிப்படியாக உதிர்ந்து போய் விடுவார்கள். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மூன்று கட்சிகளும் கூட்டாக கடிதமெழுதி கிட்டத்தட்ட 20 மாதங்கள் கழிந்துவிட்டன. இந்த 20 மாதங்களிலும் தாம் ஜெனிவாவை நோக்கி முன்வைத்த கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக இக்கட்சிகள் என்னென்ன செய்திருக்கின்றன?கூட்டமைப்பு தொடர்ந்து வாக்காளர்களை ஏமாற்றுகிறது என்று சொன்னால்,அவ்வாறு ஏமாற்றாத ஏனைய கட்சிகள் கடந்த 20மாதங்களாக என்ன செய்திருக்கின்றன? கூட்டமைப்பு ஏமாற்றுகிறது என்று சொன்னால் மட்டும் போதாது. தாங்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்றும் சொல்லவேண்டும். பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டுபோகும் விடயத்தில் இவர்கள் இதுவரை சாதித்தவை என்ன? மிகக்குறிப்பாக அந்த விடயத்தை நோக்கி அவர்கள் கட்டியெழுப்பி வைத்திருக்கும் கட்டமைப்புகள் எத்தனை? பன்னாட்டு நீதிமன்றத்தை நோக்கிச் செல்லும் வழியில் கடந்த 20 மாத காலத்தில் எதுவரை முன்னேறி இருக்கிறோம் என்பதனை மூன்று கட்சிகளும் தமிழ்மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். ஜெனிவாவில் இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக்கூற வேண்டும் என்று கேட்கும் மேற்படி கட்சிகள் தமது வாக்குறுதிகளுக்கும் அதை நம்பும் தமது மக்களுக்கும் பொறுப்பு கூறவேண்டும். http://www.nillanthan.com/5671/
  6. பாடசாலைகளில் போதைப்பொருள்: யாருடைய தவறு? தமிழ்ப் பகுதிகளில் குறிப்பாக வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும், மிகக்குறிப்பாக பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும் அண்மைக்கால புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பில் சமூகவலைத்தளங்களில் பிரசுரிக்கப்படும் கருத்துக்களை கூர்ந்து கவனித்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது.என்னவெனில், பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் மாணவர்களைத் தண்டிக்க முடியாதிருப்பதன் விளைவுதான் இது போன்ற சீரழிவுகள் என்ற தொனிப்பட பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள். கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்தவர்கள், சட்டவாளர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள் உட்பட பலதரப்பட்டவர்கள் அவ்வாறான கருத்துக்களைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.ஆசிரியரின் கையில் இருந்த பிரம்பு பறிக்கப்பட்டதால்தான் இவ்வாறான துஷ்பிரயோகங்கள் பாடசாலை மட்டத்துக்கு பரவியுள்ளன என்று ஒரு பகுதியினர் நம்புகிறார்கள்.கல்வியதிகாரிகளுக்கும், அதிபர் ஆசிரியர்களுக்கும் வகுப்பெடுக்கும் உயரதிகாரிகள் மாணவர்களைத் தண்டிக்கக்கூடாது என்று கூறிவிட்டு இப்பொழுது போதைப்பொருள் பாவனை தொடர்பான புள்ளி விபரங்களை ஒப்புவிக்கிறார்கள் என்று வேறொரு குறிப்பு கூறுகிறது. இந்தக்கருத்துக்கள் எல்லாமே தொகுப்பாக கூறவருவது ஒரு விடயத்தைத்தான். பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள், பிள்ளைகளைக் கடுமையாகத் தண்டித்தால் இதுபோன்ற விடயங்களை கட்டுப்படுத்தலாம் என்பதுதான். பாடசாலைகளில் மாணவர்கள் மீது உடல்ரீதியாக அல்லது உளரீதியாக வன்முறைகள் பிரயோகிக்கப்படுவதைக் கட்டுப்படுத்தும் 17ஆம் இலக்க சுற்றுநிருபம் 2005ஆம் ஆண்டு கல்வியமைச்சால் வெளியிடப்பட்டது. அப்பொழுது கல்வியமைச்சின் செயலாளராக கலாநிதி.தாரா டி மெல் இருந்தார். அதே ஆண்டில் நிறைவேற்றப்பட்ட 23 ஆம் இலக்கச் சட்டத்தின்படி நீதிமன்றங்களில் சரீரத் தண்டனைகள் நிறுத்தப்பட்டதன் விளைவே மேற்படி சுற்றுநிருபம் என்று கூறப்படுகிறது.மேற்படி சுற்றுநிருபமானது 2016 ஆம் ஆண்டு கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட 12 ஆம் இலக்க சுற்றுநிருபத்தில் மீளவலியுறுத்தப்படுகிறது. இந்தச்சுற்றுநிருபமானது ஆசிரியர்களின் கைகளைக் கட்டிப்போடுகிறது என்ற ஒரு விமர்சனம் ஆசிரியர் சமூகத்தின் மத்தியிலும் ஏன் பெற்றோர் மத்தியிலும்கூட உண்டு. கண்டிப்பான ஆசிரியரே நல்லாசிரியர் என்று அபிப்பிராயம் தமிழ்மக்கள் மத்தியில் ஆழமாகப் பதிந்திருக்கிறது.கண்டிப்பான ஆசிரியர்களே வெற்றி பெற்ற ஆசிரியர்களாகவும் பார்க்கப்படுகிறார்கள்.நாட்டில் உள்ள கல்வி முறையானது பரீட்சையை மையமாகக் கொண்டது.பரீட்சை மையக் கல்வியைப் பொறுத்தவரை சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொடுப்பவரே கெட்டிக்கார ஆசிரியர். அந்த சிறந்த பெறுபேறுகளை அவர் எப்படியும் பெற்றுக் கொடுக்கலாம் என்று பெரும்பாலான பெற்றோர் கருதுகிறார்கள்.இதனால் சிறந்த கல்விப் பெறுபேறுகளுக்காக அதிகம் பலியிடப்படுவது மனித உரிமைகள் என்பதனை பெரும்பாலான பெற்றோர் பொருட்படுத்துவதில்லை. அதனால் தேசியமட்ட பரீட்சைகளை நோக்கி மாணவர்களை தயார்படுத்தும் தனியார் கல்வி நிறுவனங்களிலும் மனிதஉரிமைகள் மோசமாக மீறப்படுகின்றன. இப்படிப்பட்டதோர் கல்விச்சூழலில் தண்டனை நிறுத்தப்பட்டதால் பிள்ளைகள் மத்தியில் போதைப்பொருள் அதிகரிக்கிறது என்ற கூற்று மேலோட்டமாகப் பார்த்தால் சரியாகவே தோன்றும்.சில மாதங்களுக்கு முன் ஆந்திராவில் கஞ்சா பாவிக்கும் தனது 15 வயது மகனை அவருடைய தாயார் வீட்டில் ஒரு கம்பத்தில் கட்டிவைத்து அவருடைய கண்களுக்குள் மிளகாய்தூளைத் தூவினார்.இது ஊடகங்களில் பரவலாக வெளிவந்தது. இது போன்ற தண்டனைகள்மூலம்தான் மாணவர்களை மட்டுமல்ல பாடசாலை நீங்கிய இளையவர்களையும், ஏன் ஒட்டுமொத்த சமூகத்தையும் கட்டுப்படுத்தலாம் என்ற ஒரு கருத்து பரவலாக உண்டு. ஆனால் தனியே தண்டனைகளால் மட்டும் இந்த விவகாரத்தை கையாள முடியாது.ஏனெனில் பிரச்சினையின் வேர்கள் மிகஆழமானவை.அந்த வேர்களைத் தேடிப்போனால் யாரைத் தண்டிப்பது என்ற கேள்வி எழும். நுகர்வோரை தண்டிப்பதா?அல்லது விற்பனையாளர்களைத் தண்டிப்பதா?அல்லது திட்டமிட்டு மாணவர்களைக் குறிவைத்து போதைப்பொருள் வலைப்பின்னலைக் கட்டியெழுப்பும் அரசியல் உள்நோக்கமுடைய சக்திகளைத் தண்டிப்பதா? யாரைத் தண்டிப்பது? இந்தப்பிரச்சினையின் சமூகப்பொருளாதார,அரசியல் பின்னணி மிகஆழமானது. 2009 க்குப் பின்னரான தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை, முதலாவதாக, தலைமைத்துவ வெற்றிடம் ஒன்று நிலவுகிறது. இரண்டாவதாக ,உலகில் அதிகம் படைமயமாக்கப்பட்ட ஒரு அரசியல் ,இராணுவ சூழலுக்குள் தமிழ்ச்சமூகம் வாழ்கிறது. நாட்டின் படைக்கட்டமைப்பின் மொத்த தொகையில் சுமார் மூன்றில் இரண்டு பகுதி வடக்கு= கிழக்கில் காணப்படுவதாக ஒரு புள்ளிவிபரம் உண்டு. மூன்றாவதாக ,மேற்சொன்ன இராணுவ மயப்பட்ட சூழல் காரணமாக படைத்துறை புலனாய்வாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் தமிழ்ச்சமூகம் காணப்படுவது. நாலாவதாக, ஆயுத மோதல்களுக்கு முன்னிருந்த ஒரு சமூகக் கட்டமைப்பு குலைந்து போய்விட்டது.ஆயுதப் போராட்டம் புதிய விழுமியங்களையும் ஒரு புதிய சமூக ஒழுங்கையும் உருவாக்க முற்பட்டது. 2009 இல் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டிருக்கும் ஒரு பின்னணியில்,ஏற்கனவே இருந்த சமூகக் கட்டமைப்பும் குலைந்து இடையில் ஆயுதப் போராட்டம் கொண்டு வந்த புதிய ஒழுங்கும் குலைந்து, இப்பொழுது ஏறக்குறைய எல்லாச் சமூகக் கட்டமைப்புகளும் குலைந்துபோன ஒரு நிலை காணப்படுகிறது. இவ்வாறான ஒரு பின்னணியில் விழுமியங்களை மீளுருவாக்க வேண்டிய ஒரு சமூகமாக தமிழ்ச்சமூகம் மாறியிருக்கிறது. ஐந்தாவது ,உலகளாவிய தகவல் தொழில்நுட்பப் பெருக்கத்தின் விளைவாக இளைய தலைமுறை கைபேசி செயலிகளின் கைதியாக மாறியிருப்பது. மேற்கண்ட ஐந்து காரணங்களையும் தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரியவரும்.தமிழ்மக்களைத் தொடர்ந்தும் அரசியல்ரீதியாக தோற்கடிக்க விரும்பும் சக்திகள் போதைப்பொருள் பாவனையை ஊக்குவிப்பதாகவும் போதைப்பொருள் வலைப்பின்னலை அவர்களே நிர்வகிப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டை தமிழ் அரசியல்வாதிகள் ஏன் முன்வைத்து வருகிறார்கள் என்ற கேள்விக்கும் விடை கிடைக்கும் எனவே போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவது என்பது தனியே தண்டனைகளால் மட்டும் சாத்தியமான ஒன்று அல்ல.அது ஒரு கூட்டுச் செயற்பாடாக அமைய வேண்டும். முதலாவதாக,சமூகப் பிரதிநிதிகள்,மக்கள் பிரதிநிதிகள்,மருத்துவர்கள் செயற்பாட்டாளர்கள்,மதப் பெரியோர்கள்,புத்திஜீவிகள்,கலைஞர்கள், ஊடகங்கள் என்று எல்லாத் தரப்புக்களும் ஒன்றிணைந்து ஒரு கூட்டுச் செயற்பாடாக அதை முன்னெடுக்க வேண்டும். அதற்கு மக்கள் பிரதிநிதிகள் அல்லது செயற்பாட்டாளர்கள் தலைமைதாங்க வேண்டும். ஆனால் அவ்வாறான ஒரு தலைமைத்துவம் இல்லாத வெற்றிடத்தில்தான் போதைப்பொருள் பாவனை பாடசாலைகள் வரை வந்துவிட்டது.போதைபொருள் பாவனை மட்டுமல்ல வாள் வெட்டுக் கலாசாரத்தின் பின்னால் உள்ள உளவியலைத் தீர்மானிக்கும் அம்சங்களும் மேற்கண்டவைதான். இளம் வயதினரின் வேகங்களுக்கு ஈடுகொடுத்து,அவர்கள் மத்தியில் இலட்சியங்களை விதைத்து, அவர்களுடைய சாகச உணர்வுகளைச் சரியான திசையில் திருப்பி,விழுமியங்களை மீளுருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கும், செயற்பாட்டாளர்களுக்கும் ,அரசியல்வாதிகளுக்கும் மதகுருக்களுக்கும் சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் உண்டு. ஆனால் அந்தக்கூட்டுப் பொறுப்பை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறார்கள்? பாடசாலைகளில் தண்டனை நீக்கப்பட்டதை குறித்து முறையிடுகிறோம். ஆனால் ஒரு காலம் எமது பிள்ளைகள் தனியாக பள்ளிக்கூடங்களுக்கு போனார்கள்.டியூட்டரிகளுக்கு போனார்கள்.பெற்றோர் அவர்களை காவிச் செல்லும் ஒரு நிலைமை இருக்கவில்லை.ஆனால் இப்பொழுது எல்லா அம்மாக்களும் மோட்டார் சைக்கிள் வைத்திருக்கிறார்கள்.அவர்கள் பிள்ளைகளை பூனை குட்டியைக் காவுவது போல இரவும் பகலும் காவுகிறார்கள்.ஏன் காவுகிறார்கள்?பிள்ளைகளை ஏன் தனியாக விட முடிவதில்லை? ஒரு பாடத்துக்கு இரண்டுக்கு மேற்பட்ட ஆசிரியர்களிடம் பிள்ளை படிக்கிறது. அவ்வாறு படிப்பதற்கே நாள் போதாது.இது சுயகற்றலை பாதிக்காதா?அப்படிப் படித்து மேலெழுந்த பிள்ளை என்னவாக வருகிறது?கல்வி பற்றிய தமிழ்ச்சமூகத்தின் அளவுகோல்கள் சரியானவைகளா?இந்த கல்விமுறைக்கூடாக உருவாக்கப்பட்ட ஆளுமைகள் எப்படிப்பட்டவை? இதைக் குறித்த ஒரு சரியான மீளாய்வு தமிழ்ச் சமூகத்திடம் உண்டா? இல்லை.கல்வி தொடர்பாகவும் விழுமியங்களை மீளுருவாக்குவது தொடர்பாகவும்,சமூகத்தை மீளக்கட்டியெழுப்புவது தொடர்பாகவும் கூட்டுத்திட்டங்கள் வகுக்கப்படவில்லை.அவற்றை வகுப்பதற்கான அதிகாரம் இல்லை என்று சொல்லிக்கொண்டு 13 ஆண்டுகளை கடந்துவந்து விட்டோம்.நாங்களாக சுயகவசங்களை உருவாக்கத் தவறிவிட்டோம்.அந்த வெற்றிடத்தில்தான் போதைப்பொருளும் வாள்களும் நுழைகின்றன. எனவே பிரச்சினையின் வேர்களைத் தேடிப்போனால் முழுச்சமூகமும் அதன் கூட்டுப்பொறுப்பை இழந்து விட்டதைக் காணலாம். அண்மையில் எரிபொருள் வரிசைகளில் நின்றபோது நாங்கள் ஒரு சமூகமாகத் தோல்வியடைந்தமை தெரியவில்லையா? உங்களுடைய பிள்ளைக்கும் உங்களுக்கும் இடையே ஒரு வெளியாள் போதைப்பொருளை,வாளைக் கொடுக்கிறான் என்றால் உங்களுக்கும் பிள்ளைக்கும் இடையே எங்கேயோ ஒரு இடைவெளி இருக்கிறது என்று பொருள்.உங்களுக்கும் பிள்ளைக்கும் இடையே எங்கேயோ தொடர்பாடல் அறுந்துவிட்டது என்று பொருள்.நீங்கள் பிள்ளையோடு மேலும் கூடுதலாக நேரத்தைச் செலவழிக்க வேண்டியிருக்கிறது என்று பொருள்.பிள்ளைகளை இரவு பகலாக வகுப்புகளுக்கு காவி செல்கிறீர்கள்.ஆனால் பிள்ளைகளோடு மனம் விட்டு கதைக்கின்றீர்களா? பூனை குட்டியைக் காவுவது போல பிள்ளைகளைக் காவுகிறோம். சிறந்த கல்விப் பெறுபேறுக்காக மனித உரிமைகளைப் பலிகொடுக்கத் தயாராக இருக்கிறோம்.அந்தக்கல்விப் பெறுபேறுகளின் விளைவாக நாங்கள் உருவாக்கிய ஆளுமைகள் எத்தகையவை என்ற கேள்வியை எப்பொழுதாவது எங்களை நோக்கி கேட்டிருக்கிறோமா? இதுதான் பிரச்சினை.ஆயுத மோதல்களுக்கு பின்னரான ஒரு சமூகத்தை மீளக்கட்டியெழுப்ப அரசியல்வாதிகளால் முடியவில்லை.சமூகச் செயற்பாட்டாளர்களால் முடியவில்லை, சமயப் பெரியார்களால் முடியவில்லை, புத்திஜீவிகள்,படைப்பாளிகள், ஊடகங்களால் முடியவில்லை. போதைப்பொருளிலிருந்து பிள்ளைகளை விடுவிப்பதென்றால் புனர்வாழ்வும் மட்டும் போதாது. தண்டனைகளால் பலன் இல்லை. மாறாக சமூகத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டும். விழுமியங்களை மீளுருவாக்க வேண்டும்.இளையோர் பிரமிப்போடு பார்க்கும் முன்னுதாரணம் மிக்க தலைவர்கள் மேலெழ வேண்டும்.திரைப்பட நாயகர்களையும் சண்டியர்களையும் முன்னுதாரணமாகக் கொள்ளும் வெற்றிடம் ஏன் ஏற்பட்டது?எனவே இளையோரை இலட்சியப்பற்று மிக்கவர்களாகவும்,உன்னதமான சமூகக் குறிக்கோளை நோக்கி எய்யப்பட்ட அம்புகளாகவும் மாற்றுவதற்கு தனியாக ஆசிரியர்களால் மட்டும் முடியாது.மருத்துவர்களால் மட்டும் முடியாது. உளவளத் துணையாளர்களால் மட்டும் முடியாது.புனர்வாழ்வு நிலையங்களால் மட்டும் முடியாது. அது ஒரு கூட்டுப் பொறுப்பு. ஜெனிவாவில் அரசாங்கத்தை பொறுப்புக்கூற வேண்டும் என்று கேட்கும் ஒரு மக்கள்கூட்டமானது,சமூகச்சீரழிவுகள் பொறுத்து தனக்குள்ள கூட்டுப் பொறுப்பையும் உணர வேண்டும். கீழிருந்து மேல் நோக்கிய சுய பாதுகாப்புக் கவசங்களைக் கட்டியெழுப்ப வேண்டும். நிலாந்தன் https://newuthayan.com/பாடசாலைகளில்-போதைப்பொரு/
  7. நினைவு நாட்களுக்கு உரிமை கோருவது ? நிலாந்தன் நினைவு கூர்தலுக்கான ஒரு பொதுக் கட்டமைப்பை குறித்த உரையாடல்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டன.ஆனால் ஒரு பொதுவான கட்டமைப்பை உருவாக்கும் விடயத்தில் தமிழ்ப்பரப்பில் இருக்கும் அரசியல் செயற்பாட்டாளர்கள் பொருத்தமான வெற்றிகளை இதுவரை பெற்றிருக்கவில்லை.அனைத்து நினைவு கூர்தல்களுக்குமான ஒரு பொதுக் கட்டமைப்பை ஏன் உருவாக்க முடியவில்லை? ஏனென்றால் ஒரு பொதுவான தியாகிகள் நினைவு தினம் தமிழ்மக்கள் மத்தியில் இல்லை.ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒவ்வொரு அமைப்பும் தனக்கென்று தனியாக தியாகிகள் தினங்களை வைத்திருக்கின்றது. நினைவு நாட்களை வைத்திருக்கின்றது.இதில் ஒரு இயக்கம் தியாகி என்று கூறுபவரை மற்றொரு இயக்கம் துரோகி என்று கூறும் நிலைமையும் உண்டு.ஒரு இயக்கத்தால் தியாகியாக கொண்டாடப்படுகிறவர் மற்றொரு இயக்கத்தால் கொலைகாரராக பார்க்கப்படுகிறார்.எனவே இயக்கங்களுக்கிடையிலான ஒரு பொதுவான தியாகிகள் நாளை இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.அதை என்றோ ஒரு நாள் கண்டுபிடிக்கும் பொழுதுதான் தமிழ்த் தேசியத்தின் ஜனநாயக இதயம் அதன் முழுமையான செழிப்பை அடையும். தியாகிகள் நாள் மட்டுமல்ல, இனப்படுகொலை நாளில் கூட சர்ச்சைகள் உண்டு.மே 18 எனப்படுவது தமிழ்மக்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நாள்.எனவே அந்த நாளை இனப்படுகொலை நாளாக அனுஷ்டிக்க வேண்டும் என்று தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் கருதுகிறார்கள். ஒரு குறுகிய காலகட்டத்தில் ஒரு குறுகிய நிலப்பரப்புக்குள் அதிக தொகையினர் கொல்லப்பட்டதன்மூலம் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட ஒரு நாள் என்ற அடிப்படையில் அந்த நாளை இனப்படுகொலை நினைவு நாளாக அனுஷ்டிக்கலாம் என்று கருதுபவர்கள் உண்டு.ஆனால் அங்கேயும் சர்ச்சைகள் உண்டு.அந்த நாளில் புலிகள் இயக்கத்தின் பிரதானிகள் பலர் தம் உயிர்களை துறந்தனர் என்ற அடிப்படையில் அதுவும்கூட புலிகள் இயக்கத்தின் நினைவு நாட்களில் ஒன்றுதான் என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. இந்த அடிப்படையில் பார்த்தால் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள எல்லாத் தரப்புகளினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பொதுவான நினைவு நாளை கண்டுபிடிப்பது இப்போதைக்குச் சாத்தியமில்லை.அவ்வாறு ஒரு பொதுவான நினைவு நாள் இல்லாத ஒரு சமூகத்தில், நினைவு கூர்தலுக்காக ஒரு பொதுவான கட்டமைப்பை உருவாக்குவதும் சாத்தியமில்லை.பதிலாக அவரவர் அவரவருடைய தியாகிகள் நாளை அனுஷ்டிப்பது என்ற அடிப்படையில் நினைவு கூர்தலில் பல்வகைமையை ஏற்றுக் கொள்வதுதான் உடனடிக்கு சாத்தியமான ஒன்று. மேலும்,கடந்த 13ஆண்டுகளாக நினைவுகூர்தல் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகள் யாவும் விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு சம்பந்தப்பட்ட நினைவு நாட்கள்தான்.விடுதலைப்புலிகள் அல்லாத இயக்கங்களின் நினைவு நாட்கள் பொறுத்து பெரியளவில் சர்ச்சைகள் இல்லை. இது எதை காட்டுகின்றது என்றால்,புலிகள் இயக்கத்தின் மெய்யான வாரிசு யார் என்ற ஒரு போட்டிதான்.அல்லது அந்த இயக்கத்தின் வீரத்துக்கும் தியாகங்களுக்கும் யார் உரிமை கோரலாம் என்ற ஒரு போட்டிதான்.இந்தப் போட்டி காரணமாகத்தான் கடந்த 13ஆண்டுகளாக நினைவுகூர்தல் தொடர்பாக சர்ச்சைகள் எழுகின்றன. இதில் பொதுக் கட்டமைப்பை உருவாக்கும் முயற்சிகளில் பெரும்பாலானவை விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு சம்பந்தப்பட்ட நினைவு நாட்களை அனுஷ்டிப்பதற்கானவைதான்.அவ்வாறான ஒரு பொதுக் கட்டமைப்பு இல்லாத ஒரு பின்னணியில்தான் இப்பொழுது மறுபடியும் திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு அரசியல்வாதிகள் தங்களுக்கிடையே பிடுங்குப்படத் தொடங்கியிருக்கிறார்கள். இப்படி ஒரு சர்ச்சை வரும் என்பதனை ஏற்கனவே எதிர்பார்த்த அரசியற் செயற்பாட்டாளர்கள் சிலர் இதில் சம்பந்தப்பட்ட எல்லாக் கட்சிகளையும் அணுகினார்கள்.குறிப்பாக இந்த சர்ச்சைகளின் மையமாகக் காணப்படும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இரண்டு அணிகளையும் அணுகினார்கள். புலிகள் இயக்கத்தின் மூத்த உறுப்பினரான பஷீர் காக்கா இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனோடு உரையாடினார்.தான் மட்டக்களப்புக்குச் சென்று கொண்டிருப்பதாகவும் தமது அமைப்பின் பேச்சாளர் சுகாசுடன் உரையாடும்படியும் கஜேந்திரன் சொன்னார்.எனினும்,இது தொடர்பாக அக்கட்சியின் உறுப்பினரும் திலீபனோடு நேரடியாகப் பழகியவருமான பொன் மாஸ்ரரோடு உரையாடுவது அதிகம் பொருத்தமாக இருக்கும் என்று பஷீர் காக்கா கருதினார் போலும். எனவே அவர் பொன் மாஸ்டரிடம் இது தொடர்பாக உரையாடியிருக்கிறார். எனினும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் ஏற்பட்ட உடைவு நினைவு கூர்தலில் பிரதிபலிப்பதை அவரைப் போன்ற செயல்பாட்டாளர்களால் தடுக்க முடியவில்லை.மாறாக அரசியல்வாதிகள் பஷீர் காக்காவை போன்ற மூத்த செயற்பாட்டாளர்களை அவமதிக்கும் ஒரு நிலைமைதான் உருவாகியது. முரண்பாடு பொதுவெளியில் வந்த பின்னர்தான் மணிவண்ணன் ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கினார். முரண்பாட்டின் பின் உருவாக்கப்பட்டபடியால் அது முரண்பாட்டின் ஒரு விளைவாகவே பார்க்கப்படும். மாநகர முதல்வர் என்று அடிப்படையில் மணிவண்ணன் அதனை உருவாக்கிய போதிலும், அப்பொதுக் கட்டமைப்பு சுயாதீனமானது என்று அதைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.அது திலீபன் நினைவு நாட்களை சுயாதீனமாக நினைவுகூரும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் கஜேந்திரகுமார் அணியைச் சேர்ந்த பொன் மாஸ்டர் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்களை வைத்துப்பார்த்தால்,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்குள் ஏற்பட்ட பிளவு திலீபனின் நினைவு நாட்களில் பிரதிபலிக்கிறது என்றே தெரிகிறது. அது மட்டுமல்ல கடந்த 13 ஆண்டுகளில் தமிழ்மக்கள் ஒரு பொதுவான நினைவுகூரும் கட்டமைப்பை உருவாக்குவது எத்துணை சவால்கள் மிகுந்தது என்பதனை நிரூபிப்பதாகவும் அது காணப்படுகிறது.ஆயுத மோதல்களுக்கு பின்னரான கடந்த 13 ஆண்டுகளில் தமிழ்ச் சமூகமும் அதன் அரசியலும் பண்புருமாற்றம் – transformation – ஒன்றுக்கு போகமுடியாது தியங்குவதையும் அது காட்டுகிறது. தமிழ்மக்கள் முழு உலகத்தையும் திரும்பி பார்க்க வைக்கும் ஓர் ஆயுதப் போராட்டத்தை நடாத்திய மக்கள்.ஆயுதப் போராட்டம் என்று சொன்னால் சம்பந்தப்பட்ட எல்லாருடைய கைகளிலும் ரத்தம் இருக்கும்.ஆயுதம் ஏந்தியவர்கள் மட்டுமல்ல,அந்தப் போராட்டத்தை ஏதோ ஒரு விதத்தில் ஆதரித்தவர்கள் எல்லாருக்கும் அதில் கூட்டுப்பொறுப்பு உண்டு.இதில் என்னுடைய கை சுத்தம், உன்னுடைய கையில் இருப்பது ரத்தம் என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது.தியாகி – துரோகி என்ற அளவுகோள்கள் ஊடாக அரசியலைத் தொடர்ந்தும் அணுக முடியாது.நான் தியாகி,நீ துரோகி என்று வகிடுபிரிக்க வெளிக்கிட்டால் சமூகம் என்றைக்குமே ஒரு திரட்சியாக இருக்கமுடியாது.அதாவது தமிழ்மக்களை ஒரு தேசமாக கட்டியெழுப்பவே முடியாது. இதில் தங்களை தியாகிகளாக காட்டிக் கொள்பவர்கள் அல்லது கடந்த காலத் தியாகங்களுக்கும் வீரத்திற்கும் உரித்து கொண்டாடுபவர்கள் முதலில் அந்த வீரத்தின் தொடர்ச்சியும் தியாகத்தின் தொடர்ச்சியும் தாங்களே என்பதனை நிரூபித்துக் காட்டவேண்டும்.அதை நிரூபிக்கும் இடம் நினைவு கூர்தல் அல்ல. மாறாக கடந்த 13 ஆண்டு கால அரசியலில் தமது சொத்துக்களை இழப்பதற்கும் ரிஸ்க் எடுப்பதற்கும் எத்தனை பேர் தயாராக இருந்தார்கள் என்பதிலிருந்துதான் அதை மதிப்பிடலாம். திலீபனை நினைவு கூர்வது என்பது நல்லூரில் இருக்கும் நினைவுத்தூபியில் சிவப்பு மஞ்சள் கொடியை கட்டுவது மட்டுமல்ல, விளக்குகளை ஏற்றுவது மட்டும் அல்ல,அது அதைவிட ஆழமானது. திலீபனைப்போல தமது அரசியல் இலக்கை அடைவதற்காக உயிரைத் துறக்கத் தயாரான எத்தனை அரசியல்வாதிகள் தமிழ் மக்கள் மத்தியில் உண்டு? ஒருவர் முன்வரட்டும் பார்க்கலாம்? இதுதான் பிரச்சினை.தியாகத்துக்கும் வீரத்துக்கும் உரிமை கோரும் அரசியல்வாதிகள் கடந்த 13ஆண்டுகளாக எத்தனை தியாகங்களைச் செய்திருக்கிறார்கள்?எத்தனை பேர் சட்ட மறுப்பாகப் போராடி சிறை சென்றிருக்கிறார்கள்? எத்தனை பேர் சொத்துக்களை துறந்திருக்கிறார்கள்? கடந்த 13ஆண்டுகளில் காணாமல் போனவர்களின் அம்மாக்கள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள். அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள்.ஆனால் அவர்களை அரசியல் செயற்பாட்டாளர்கள் சாக விடவில்லை.இவைதவிர அரசியல்வாதிகள் என்று பார்த்தால் யாருமே அந்தளவுக்கு துணியவில்லை. அதற்காக அரசியல்வாதிகள் சாக வேண்டும் என்று இக்கட்டுரை கேட்கவில்லை.உயிரைக் கொடுத்தது போதும்.இனி உயிர்களைப் பாதுகாக்க வேண்டிய காலம்.எனவே ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரான ஒரு அரசியலுக்குரிய பண்புருமாற்றத்திற்கு தமிழ்மக்கள் தயாராக வேண்டும். நான் வண்ணாத்து பூச்சி,நீ மசுக்குட்டி என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது.ஏனென்றால் எல்லா வண்ணாத்துப் பூச்சிகளும் ஒரு காலம் மயிர்க்கொட்டிகளாக இருந்தவைதான். இந்த விடயத்தில் தமிழ்மக்கள் தென்னாபிரிக்காவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். தென்னாபிரிக்காவில் வெவ்வேறு ஆயுத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மாறி மாறி ஒருவர் மற்றவரை கொன்றிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் பழிவாங்கும் உணர்ச்சியோடு ஒருவர் மற்றவரைத் தண்டிக்க முற்பட்டிருந்திருந்தால் தென்னாபிரிக்கா தொடர்ந்தும் இறந்த காலத்திலேயே வாழ வேண்டியிருந்திருக்கும். ஒரு புதிய காலத்துக்கு வந்திருக்கவே முடியாது. இதுவிடயத்தில் தென்னாபிரிக்காவை இறந்த காலத்திலிருந்து புதிய காலத்துக்கு அழைத்து வரத் தேவையான பண்புருமாற்றத்திற்கு மண்டேலா தலைமை தாங்கினார். ஈழத்தமிழ் அரசியலிலும் இறந்த காலத்தில் இருந்து ஒரு புதிய காலத்தை நோக்கி செல்வதற்கான பண்புருமாற்றம் தேவை.தனது அரசியல் எதிரியை துரோகி ஆக்குவதால் யாரும் தியாகி ஆகிவிட முடியாது.தியாகம் செய்தால்தான் தியாகியாகலாம்.தனது அரசியல் எதிரியைத் துரோகியாக்குவது என்பது தமிழ்ச் சமூகம் பண்புருமாற்றத்துக்கு தயாரில்லை என்பதைத்தான் காட்டுகின்றது. பண்புருமாற்றத்துக்கு தயாரில்லை என்று சொன்னால் கூட்டுக் காயங்களோடும் பிணங்களோடும் இறந்த காலத்திலேயே வாழ வேண்டியதுதான்.பழிவாங்கும் உணர்ச்சியால் பிளவுண்டு ஒரு தேசமாக திரட்சியுறாமல் சிதறிப் போவதுதான். சில மாதங்களுக்கு முன் பொருளாதார நெருக்கடி தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய கஜேந்திரகுமார் சிங்கள பௌத்த அரசியலானது பண்புருமாற்றத்துக்குப் போகதவறியதன் விளைவே அதுவென்று கூறியிருந்தார்.உண்மை. அதுபோல தமிழ் அரசியலும் பண்புருமாற்றத்துக்குப் போக வேண்டும். கடந்த 13 ஆண்டுகளில் ஒரு பொதுவான நினைவு நாளையோ அல்லது நினைவு கூர்தலுக்கான ஒரு பொதுக் கட்டமைப்பையோ ஈழத்தமிழர்களால் உருவாக்க முடியவில்லை என்பது தமிழ் அரசியல் தொடர்ந்து பண்புருமாற்றத்திற்கு தயாராக இல்லை என்பதைத்தான் காட்டுகின்றது.இப்பொழுது திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு உருவாக்கப்பட்டிருக்கும் பொதுக் கட்டமைப்பானது ஒரு கட்சிக்குள் ஏற்பட்ட உடைவைப் பிரதிபதிக்குமா? அல்லது ஒரு புதிய காலத்தை நோக்கிய பண்புருமாற்றத்தைப் பிரதிபலிக்குமா? http://www.nillanthan.com/5652/
  8. ஜெனீவா கூட்டத்தொடரின் பின்னணியில் காங்கேசன்துறை தொடக்கம் அம்பாந்தோட்டைவரை - நிலாந்தன் இம்மாதம் 10ஆம் திகதியிலிருந்து சுமந்திரனின் தலைமையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு எதிராக ஒரு தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.ஜெனீவா கூட்டத்தொடரின் பின்னணியில் முன்னெடுக்கப்படும் இப்போராட்டத்திற்கு “காங்கேசன்துறை தொடக்கம் அம்பாந்தோட்டைவரை” என்று பெயரிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக யார் போராடினாலும் அதை ஆதரிக்க வேண்டும்.எனினும்,இப்போராட்டம் தொடர்பாக இப்போதுள்ள அரசியற்சூழலின் பின்னணியில் சில கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாதது. கேள்வி ஒன்று, போராட்டத்தின் தலைப்புப் பற்றியது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான ஆர்ப்பாட்டப் பேரணிக்குப் பின் அதே பாணியில் பெயரிடப்பட்ட மூன்றாவது போராட்டம் இது. P2Pபேரணிக்கு நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து வெவ்வேறு தரப்புகள் உரிமை கோருகின்றன. அதில் சுமந்திரன் சாணக்கியன் போன்றோரும் ஒரு தரப்பு. அந்தப்பெயர் தங்களுக்குரியது என்பதனை காட்டும் விதத்தில் மீண்டும் மீண்டும் சுமந்திரன் தான் ஒழுங்கு செய்யும் போராட்டங்களுக்கு இது போன்ற பெயர்களை வைத்து வருகிறாரா?தமிழக மீனவர்களுக்கு எதிராக அவர் தொடங்கிய போராட்டத்துக்கு முல்லைத்தீவு தொடக்கம் பருத்தித்துறைவரை என்று பெயரிட்டிருந்தார்.அதன்பின் இப்பொழுது காங்கேசன்துறை தொடக்கம் அம்பாந்தோட்டைவரை என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.அந்தப் போராட்டத்தலைப்பின் ஆங்கிலச் சுருக்கத்தை வெள்ளை எழுத்தில் கறுப்பு பட்டியில் பதித்து அப்பட்டியை தங்கள் தலைகளில் அணிந்து போராடுவது. இதுபோன்ற செயல்களின்மூலம் P2P போராட்டத்தின் உரித்து தமக்கே அதிகம் என்று சுமந்திரனும் அவரை சேர்ந்தவர்களும் சொல்ல முற்படுகிறார்களா? கேள்வி இரண்டு,ஏற்கனவே பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து சேகரிக்கும் ஒரு போராட்டத்தை சுமந்திரன் தலைமை தாங்கி முன்னெடுத்தார்.யாழ்.நகரப் பகுதியில் தொடங்கிய அந்தப் போராட்டம் தென்னிலங்கை,மாத்தறைவரை சென்றது.தென்னிலங்கையில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களும் அதற்கு ஒத்துழைத்தார்கள்.அதில் சேகரிக்கப்பட்ட கையெழுத்துக்களுக்கு என்ன நடந்தது?அவை யாரிடம் கையளிக்கப்பட்டன?அந்தப் போராட்டத்தைப் போலவே இப்பொழுது தொடங்கப்பட்டிருக்கும் போராட்டமும் கமுக்கமாக முடிந்து விடுமா? கேள்வி மூன்று, இந்தப் போராட்டம் தொடங்கிய அன்று கிட்டத்தட்ட 60-க்கும் குறையாத ஆட்களே அதில் பங்குபற்றினார்கள்.அதாவது மக்கள் மயப்படாத ஒரு போராட்டம்.நாடாளுமன்ற உறுப்பினர்கள்,குறிப்பாக ராவுப் ஹக்கீம் தொழிற்சங்கவாதியான ஸ்ராலின் போன்றோர் பங்குபற்றிய ஒரு போராட்டத்தின் முதல்நாள் அன்று மிகக்குறைந்த ஆட்களே கலந்து கொண்டமை என்பது எதைக் காட்டுகிறது? அதை ஒரு மக்கள் மயப்பட்ட பெருந்திரள் போராட்டமாக முன்னெடுக்கவேண்டும் என்ற திட்டம் எதுவும் ஏற்பாட்டாளர்களிடம் இருக்கவில்லையா? இந்த கேள்வியை மேலும் விரித்துச் செல்லலாம். சில மாதங்களுக்கு முன்புவரை கொழும்பில் காலிமுகத்திடலில் படைப்புத்திறனோடு எப்படிப் போராடலாம் என்பதற்கு சிங்களமக்கள் பல முன்னுதாரணங்களை காட்டியிருக்கிறார்கள். படைப்புத்திறன் மிக்க அறவழிப் போராட்டம் அது.அந்தப் போராட்டத்தில் அடிப்படையான பலவீனங்கள் உண்டு. தமிழ்மக்களுக்கு அந்தப் போராட்டம் தொடர்பில் கேள்விகள் உண்டு.ஆனாலும் அந்தப் போராட்டத்தில் படைப்புத்திறன் இருந்தது.புதுமை இருந்தது. அதில் பல பிரபல படைப்பாளிகள் பங்குபற்றினார்கள்.புத்திஜீவிகள்,சமூகப் பெரியார்கள்,மதப் பெரியார்கள் பங்குபற்றினார்கள்.எனவே அது சமூகத்தின் எல்லாத் தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் சக்திமிக்கதாக காணப்பட்டது.கொழும்பில் ராஜதந்திரிகளின் வதிவிடங்கள் அமைந்திருக்கும் ஒரு பகுதியில் உலகத்தின் கவனத்தையும் ஊடகங்களின் கவனத்தையும் ஈர்க்கும் விதத்தில் அந்தப் போராட்டம் படைப்புத்திறனை வெளிப்படுத்தியது. அப்போராட்டத்தால் அருட்டப்பட்டு மட்டக்களப்பில் காந்தி பூங்காவைச் சூழ்ந்த பகுதிகளில் ஒரு போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. மட்டக்களப்பைச் சேர்ந்த பெண்ணியச் செயற்பாட்டாளர்களும் ஏனைய சமூக செயற்பாட்டாளர்களும் இணைந்து நீதிக் கிராமம் என்று ஒன்றை உருவாக்கினார்கள். எனினும் அரகலய வெளிப்படுத்திய படைப்புத்திறனை தமிழ்க்கிராமம் வெளிப்படுத்தவில்லை. அதில் ஒப்பீட்டளவில் படைப்புத்திறன் குறைவாக இருந்தது. அது சமூகத்துக்குள் நொதிக்கத் தவறியது. அதுவும் மக்கள் மயப்படவில்லை. தமிழ்ப்பரப்பில் ஏற்கனவே அவ்வாறு மக்கள்மயப்படாத போராட்டங்கள் உண்டு. காணாமல் போகச் செய்யப்பட்டோருக்காக உறவினர்கள் நடத்தும் போராட்டம்,அரசியல் கைதிகளுக்கான போராட்டம், காணிகளை மீட்பதற்கான போராட்டம் போன்ற பல போராட்டங்கள் ஒப்பீட்டுளவில் மக்கள் மயப்படாதவைதான்.அரிதாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை அல்லது “எழுததமிழ்” போன்ற சில போராட்டங்கள் மக்கள் மயப்படுகின்றன.மற்றும்படி தமிழ்ப்பரப்பில் கடந்த 13ஆண்டுகளில் பெரும்பாலான போராட்டங்கள் மக்கள் மயப்படாதவைதான்.போராட்டத்தின் நெருப்பை அணையவிடாமல் பாதுகாத்தோம் என்று கூறித் திருப்திப்படுவதைத்தவிர அதற்குமப்பால் அவை எந்த மக்களுக்கான போராட்டங்களோ அந்த மக்கள்மத்தியில் நொதிப்பை,திரட்சியை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மைநிலை. இப்படிப்பட்டதோர் அரசியல் பின்னணியில்தான் காங்கேசன்துறை தொடக்கம் அம்பாந்தோட்டை வரையிலுமான போராட்டமும் அதிகம் மக்கள் மயப்படவில்லை.ஆனால்,கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில்,பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான கைது நடவடிக்கைகளை எதிர்த்து,கட்சிகளும் தொழிற்சங்கங்களும் மாணவர் அமைப்புக்களும் இணைந்து ஒழுங்குபடுத்திய ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டார்கள்.இதில் சுமந்திரன் அணியைக் காணவில்லை.ஆயின் காங்கேசன்துறை தொடக்கம் அம்பாந்தோட்டை வரையிலுமான போராட்டத்தை ஒழுங்குபடுத்தியவர்கள் அதுதொடர்பாக பொருத்தமான மக்கள் தரிசனங்களைக் கொண்டிருக்கவில்லை என்றே தெரிகிறது? இப்போராட்டம் அரகலயவிடமிருந்து புத்தாக்கத்திறணைக் கற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இப்போராட்டத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட ஒரு “மீம்ஸ்” வாய்விட்டு சிரிக்கும் அளவுக்கு படைப்புத்திறன் மிக்கதாக இருந்தது. அதில் ஒரு பட்டா ரக வாகனத்தில் சுமந்திரன் சாரதியின் ஆசனத்தில் இருக்கிறார்.சயந்தன் பின்பெட்டியில் இருந்தபடி எதையோ ஒலிபெருக்கியில் அறிவிக்கின்றார்.அது பழைய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான தெரு வியாபாரிகளின் அறிவிப்பு.போராட்டத்தில் இல்லாத படைப்புத்திறன் போராட்டத்திற்கு எதிரான ஒரு மீம்ஸில் இருந்தமை என்பது சுவாரசியமான ஒரு முரண். நாலாவது கேள்வி, சுமந்திரன் ஒரு நாடறிந்த வழக்கறிஞர்.அரகலயவோடு தொடர்ச்சியாக தனது நெருக்கத்தை காண்பித்து வருபவர்.அது சட்ட மறுப்பாக தோன்றிய ஒரு போராட்டம்.அந்தப் போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கில் வன்முறைகள் வெடித்தன.அந்த வன்முறைகளுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று ஏற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.ஆனால் அரசாங்கமோ அப்போராட்டத்தை சட்டத்தின் தராசில் வைத்து நிறுக்கப் பார்க்கின்றது. அதனால்தான் போராட்டத்தின் முன்னணிச் செயற்பாட்டாளர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.இந்தவிடயத்தில் போராட்டத்தின் தொடக்கத்தில் இருந்து அந்தப்போராட்டத்திற்கு ஆசிர்வாதத்தை வழங்கிய சட்டத்தரணிகள் அமைப்பானது ரணில் விக்கிரமசிங்க போராட்டத்தை நசுக்கத் தொடங்கியபொழுது எதிர்பார்த்த அளவுக்கு எதிர்ப்பை காட்டவில்லை. அதைவிட முக்கியமான ஒரு விடயம்.சட்டமறுப்பாக தோன்றிய ஒரு போராட்டத்தை சட்டத்தின் தராசில் வைத்து நிறுக்கும் அரசாங்கத்திற்கு அது தொடர்பில் எதிர்ப்பு எதையும் சட்டத்தரணிகள் சங்கம் பெரியளவில் காட்டவில்லை.சட்டமறுப்பாக எழுச்சி பெற்ற ஒரு போராட்டத்தை சட்டக்கண் கொண்டு பார்த்தால்,ஜனாதிபதியின் கதிரையில் அமர்ந்தது குற்றம். ஜனாதிபதியின் கழிப்பறைக்குள் நுழைந்தது குற்றம் ; நீச்சல் தடாகத்தில் குளித்தது குற்றம் ; அவருடைய சாப்பாட்டு மேசையில் உட்கார்ந்தது குற்றம் ; தன் படம் எடுத்தது குற்றம் ; என்று கூறி இருந்தால் குற்றம் ; நின்றால் குற்றம்; உறங்கினால் குற்றம் ; என்று எல்லாரையும் தூக்கி உள்ளே போடலாம். அதுதான் இப்பொழுது நடக்கின்றது. இந்த விடயத்தில் அது சட்ட மறுப்பாக தோன்றிய ஒரு போராட்டம் அதனை சட்டத்தின் தராசில் வைத்து நிறுப்பது சரியா என்ற அடிப்படை கோட்பாட்டுப் பிரச்சினையை சட்டத்தரணிகள் ஏன் எழுப்பவில்லை? காந்தியின் அறவழிப் போராட்டத்தை சட்டத்தின் தராசில் வைத்துப் நிறுத்தால் காந்தி வாழ்நாள் முழுவதும் சிறையில்தான் இருந்திருக்க வேண்டும். அப்படித்தான் மார்ட்டின் லூதரையோ அல்லது போலந்தில் கொம்யூனிசத்திற்கு எதிராக போராடிய லெட் வலேசாவையோ அல்லது சில மாதங்களுக்கு முன்பு வேளாண் மசோதாவை எதிர்த்துப் போராடிய டெல்லி விவசாயிகளையோ எல்லாச் சட்டங்களின் கீழும் சிறையில் தள்ளமுடியும். எனவே சட்ட மறுப்பை சட்டத் தராசில் வைத்து நிறுக்கலாமா?என்ற அடிப்படையான கோட்பாட்டு விவகாரத்தை முன்வைத்து அரசாங்கத்தோடு வாதாட ஏன் மூத்த வழக்கறிஞர்கள் கூட்டாக முன்வரவில்லை ?அண்மையில் ஒரு பெண் ஊடகவியலாளருக்கு வழங்கிய செவ்வியில் ஜனாதிபதி கூறுகிறார்.எல்லாம் சட்டப்படிதான் நடக்கிறது என்று. ஐந்தாவது கேள்வி, இந்தப் போராட்டத்தை மக்கள் மயப்படுத்துவதற்கு முதலில் தமிழரசு கட்சி தனது உறுப்பினர்கள் தொண்டர்கள் மத்தியில் இது தொடர்பான தேவையான விழிப்பூட்டலை செய்திருக்கின்றதா? இது தொடர்பாக கட்சியின் உயர்மட்டத்தில் கூடி முடிவெடுக்கப்படவில்லை என்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூறுகிறார்.அது உண்மையா?அதனால்தான் அவர் இப் போராட்டத்தின் தொடக்க நிகழ்வில் பங்குபற்றவில்லை என்றும் கூறியிருக்கிறார்.அதாவது கட்சிக்குள் தனது முதன்மையைப் பலப்படுத்த முற்படும் ஒரு அணி இப்போராட்டத்தைக் கையிலெடுத்திருக்கிறதா? எனவே தொகுத்துப் பார்த்தால் ஒன்று தெரிகிறது. ஜெனிவா கூட்டத்தொடர் காலம் என்பது தமிழ்அரசியலில் ஒப்பீட்டளவில் அதிகரித்த ஜனநாயக போராட்டங்களுக்கான வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டம் ஆகும்.ஐநாவின் கவனக்குவிப்புக்குள் இலங்கைத்தீவு வரும் ஒரு காலகட்டம் என்பதனால் அக்காலப் பகுதியில் தமிழ்மக்கள் ஒப்பீட்டளவில் அதிகரித்த போராட்டங்களை முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும். கடந்த 13 ஆண்டு கால தாயக மற்றும் புலம்பெயர் யதார்த்தம் அதுதான். பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பது இப்பொழுது இலங்கைத்தீவின் மூன்று இனத்தவர்களுக்கும் எதிராகத் திரும்பியிருக்கிறது. அதாவது இலங்கைத்தீவின் மூன்று இனத்தவர்கள் மத்தியிலும் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்களை ஒரு புள்ளியில் சந்திக்க வைக்கும் விவகாரமாக அது காணப்படுகிறது.இவ்வாறு மூன்று இனத்தவர்களையும் ஒன்றாக்கக்கூடிய ஒரு போராட்டத்தை,மக்கள் மயப்படுத்தவில்லை என்று சொன்னால் உலகசமூகத்துக்கு எப்படிப்பட்ட ஒரு செய்தி போய்ச் சேரும் ? http://www.nillanthan.com/5645/
  9. ரணில் வீசிய கொழுக்கி ? - நிலாந்தன் கனடாவில் உள்ள நண்பர் ஒருவர் கேட்டார்….”தாயகத்தில் உள்ள தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று கட்சிகளையே எங்களால் ஒருங்கிணைக்க முடியவில்லை. இந்நிலையில்,புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளையும் நபர்களையும் ஒன்றிணைத்து தாயகத்தில் முதலீடு செய்வது நடக்கக்கூடிய காரியமா ? “என்று. ரணில் விக்ரமசிங்க புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள சில அமைப்புக்கள் மற்றும் நபர்களின் மீது தடையை நீக்கியது தொடர்பில் நான் எழுதிய ஒரு கட்டுரை தொடர்பாகவே அவர் அவ்வாறு கேட்டிருந்தார். நியாமான கேள்வி. தாயகத்தில் ஒரு சிறிய நிலப்பரப்புக்குள்,மிகச்சிறிய சனத்தொகையின் மத்தியில் இயங்கிக் கொண்டிருக்கும் மூன்று கட்சிகளை ஒன்றாக்க முடியவில்லை. ஆனால் புலம்பெயர்ந்த தமிழ்ப் பரப்பு எனப்படுவது உலகம் முழுவதும் பரந்து விரிந்து சிதறிக்கிடக்கிறது. அது வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு மொழிகளைப் பேசுகிறது.வெவ்வேறு பண்பாடுகளில் வெவ்வேறு பொருளாதாரக் கட்டமைப்புகளில் வெவ்வேறு நிலையான பொருளாதார நலன்களோடு காணப்படுகிறது. தாயகத்தை நோக்கிய பிரிவேக்கம் என்ற ஒன்றைத்தவிர வேறு எதுவும் அந்த அமைப்புகளுக்கிடையில் இப்பொழுது பொதுவானதாக இல்லை. கடந்த 13ஆண்டுகளாக ஐக்கியப்பட முடியாத,ஐக்கியப்படுத்த யாருமில்லாத ஒரு புலம்பெயர் சமூகமாக தமிழ் சமூகம் காணப்படுகிறது. கடந்த 13 ஆண்டுகளில் ஐநாவை நோக்கியும் உலகப்பொது மன்றங்களை நோக்கியும் நீதிக்காக அயராது உழைத்த ஒரு சமூகமாகவும்,இலங்கை அரசாங்கத்துக்கு தொடர்ச்சியாக நெருக்கடியைக் கொடுத்த ஒரு சமூகமாகவும் அது காணப்படுகிறது. தாயகத்தில் இருக்கும் கட்சிகளுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் தனிநபர்களுக்கும் நிதியை அள்ளி வழங்கிய காசு காய்க்கும் மரமாகவும் அது காணப்படுகிறது. உலகின் மிகவும் கவர்ச்சியான செயல்திறன்மிக்க ஒரு புலம்பெயர் சமூகமாக அது தன்னை வெளிக்காட்டியிருக்கிறது. ஆனாலும் மிகவும் சிதறிப்போன,கூட்டுச் செயற்பாடு இல்லாத ஒரு புலம்பெயர் சமூகமாகவும் அது தன்னை நிரூபித்திருக்கிறது. கடந்த 13 ஆண்டுகளாக ஜெனீவாவில் பொருத்தமான வெற்றிகளைப் பெறத் தவறியதற்கு அதுவும் ஒரு காரணமா? தாயகத்தில் இயங்கும் கட்சிகளுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் நிதி உதவ புரியும் அதேநேரம் அந்த நிதி உதவிதான் கட்சிகளையும் செயற்பாட்டாளர்களையும் பிரித்து வைத்திருக்கிறது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அந்த நிதி உதவிகளால் தாயகத்தில் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியவில்லை. அல்லது மறுவளமாகச் சொன்னால் புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் எவ்வளவுதான் காசு கொடுத்தாலும் அந்த காசினால் தாயகத்தில் கட்சிகளுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் இடையே ஐக்கியத்தை ஏற்படுத்த முடியவில்லை.இதை இன்னும் கூர்மையாகச் சொன்னால் அவ்வாறு ஐக்கியம் ஏற்படாமைக்கு மேற்படி தனித்தனியான தூர இயக்கி-ரிமோட் கண்ட்ரோல்- உதவியும் ஒரு காரணம் எனலாம். இவ்வாறான கூட்டுச் செயற்பாடற்ற ஒரு புலம்பெயர்ந்த சமூகத்தை நோக்கி இலங்கை அரசாங்கம் கொழுக்கிகளை வீசியிருக்கிறது என்பதே உண்மை. தங்களுக்கிடையே ஒற்றுமைப்படாத ஒரு சமூகம் இந்த கொழுக்கிகளில் சிக்கி உதிரிகளாகத் தன் வலையில் வந்து விழும் என்று அரசாங்கம் சிந்திக்கின்றது. அவ்வாறு சிந்திக்கத்தேவையான கொழுத்த அனுபவம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உண்டு. கடந்த 2015ல் ஆட்சி மாற்றத்தின் பின் அவர் அதைச் செய்தார். அப்பொழுதும் இதே அமைப்புகள்மீதும், நபர்கள் மீதும் தடைகள் நீக்கப்பட்டன. இப்பொழுது இருப்பதைப்போல பொருளாதார நெருக்கடி என்ற விவகாரம் அப்பொழுது இருக்கவில்லை. ஆனால் ஜெனிவாவை கையாள்வது, புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகத்தின் பலத்தை உடைப்பது போன்ற நிகழ்ச்சிநிரல்கள் இருந்தன. அந்த நிகழ்ச்சிநிரலை முன்வைத்து குறிப்பிடத்தக்களவுக்கு ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் முன்நகரக் கூடியதாகவும் இருந்தது. குறிப்பாக ஐநாவில் நிலைமாறு கால நீதியை நோக்கி புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தின் ஒரு பகுதியை ஈர்த்து எடுப்பதில் அரசாங்கம் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேறியிருந்தது. தாயகத்தில் கூட்டமைப்பும் அப்பொழுது அந்த நிகழ்ச்சி நிரலிற்கு உட்பட்டு நிலை மாறுகால நீதியை ஆதரித்தது. இதனால் கூட்டமைப்பு மற்றும் தடை நீக்கப்பட்ட புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் போன்றன இணைந்து நிலைமாறு காலை நீதிக்குரிய நிகழ்ச்சிநிரலை பலப்படுத்தின. இதுவிடயத்தில் தடைநீக்கப்பட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள் சில பெருமளவுக்கு தாம் வாழும் நாடுகளில் உள்ள அரசாங்கங்களின் நிலைமாறு கால நீதிக்கான நிகழ்ச்சி நிரலை அதிகபட்சம் முன்னெடுத்தன. அக்காலகட்டத்தில் புலம்பெயர்ந்த தமிழ்அமைப்புகள் நிலைமாறு கால நீதியா ?அல்லது பரிகார ரீதியா ? என்று ஜெனிவாவில்,தங்களுக்கிடையே பிரிந்துநிற்கும் ஒரு நிலை தோற்றுவிக்கப்பட்டது. அல்லது புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகங்கள் வாழும் நாடுகளில் உள்ள அரசாங்கங்கள் ஐநாவில் முன்னெடுத்த தமிழர் தொடர்பான நிகழ்ச்சிநிரலைப் பெருமளவுக்குப் பிரதிபலித்த தமிழ் அமைப்புகள்,அல்லது பிரதிபலிக்க மறுத்த தமிழ்அமைப்புகள் என்று புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தின் மத்தியில் பல்வேறு நிலைபாடுகள் தோற்றுவிக்கப்பட்டன. இப்பொழுது மறுபடியும் ரணில் ஆட்சிக்கு வந்திருக்கிறார். அவர் தன்னுடைய நல்லாட்சி என்று அழைக்கப்பட்ட ஆட்சி காலத்தில் முன்னெடுத்த அதே நிகழ்ச்சிநிரலை அதாவது தமிழ் புலம்பெயர்ந்த அமைப்புகளின் உதவியோடு ஜெனிவாவைக் கையாள்வது என்ற நிகழ்ச்சிநிரலை முன்னெடுக்கக்கூடும். அதைவிட மேலதிகமாக நாட்டில் இப்பொழுது நிலவும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு புலம்பெயர் தமிழ் முதலீடுகள் என்ற நோக்கு நிலையில் இருந்தும் செயல்பட முடியும். இப்பொழுது வந்திருக்கும் தடைநீக்கம் ரணில் விக்ரமசிங்கவின் முன்னெடுப்பு மட்டுமல்ல. அது ஏற்கனவே கோதாபயவின் காலத்தில் தொடங்கப்பட்டது. ரணில் அதை முடித்து வைத்திருக்கிறார்.கோத்தாவும் ரணிலைப்போல முன்கண்ட இரண்டு நிகழ்ச்சி நிரல்களை மனதில் வைத்திருந்தார். ஒன்று ஜெனிவாவைக் கையாள்வது, இரண்டு பொருளாதார நெருக்கடியைக் கையாள்வது. அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஜெனிவாவைக் கையாள்வது என்பது புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தை பிரித்துக் கையாள்வதன் மூலம்,புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகம் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக அனைத்துலக அரங்கில் முன்னெடுத்து வரும் நீதிக்கான கோரிக்கைகளை பலவீனப்படுத்துவதுதான். தடை நீக்கப்பட்டால் ஒரு தொகுதி புலம்பெயர்ந்த தமிழர்கள் நாட்டிற்குள் வந்து போகும் நிலைமை திறக்கப்படும். அவர்கள் தாயக கள யதார்த்தத்தோடு நெருங்கி உறவாடும் ஒரு நிலைமை தோன்றும். இவ்வாறு தாயகத்துக்கு வந்து போகக்கூடிய வாய்ப்புக்கள் அதிகரிக்கும் பொழுது, அந்த வாய்ப்புகளை எப்படி பாதுகாப்பது என்றுதான் ஒரு தொகுதி புலம்பெயர்ந்த தமிழர்கள் சிந்திப்பார்கள். தாயகத்துக்கு வந்துபோகும் நிலைமைகளைப் பாதுகாப்பது என்பது அதன் தக்கபூர்வ விளைவாக தாயகத்துக்கு வெளியே அரசாங்கத்துக்கு எதிராக செயற்படும் தீவிரத்தை குறைப்பதுதான்.அரசாங்கத்துக்கு எதிராக நீதியைக் கோரும் போராட்டத்தின் தீவிரத்தை குறைப்பதுதான்.எனவே தடை நீக்கத்தின்மூலம் வெளியரங்கில் தனக்கு எதிராகச் செயல்படக்கூடிய தமிழ் அமைப்புகள் மற்றும் நபர்களின் தீவிரத்தை அரசாங்கம் குறைக்க முடியும். இது கடந்த நல்லாட்சி என்று அழைக்கப்பட்ட ஆட்சிக்காலத்திலும் அவதானிக்கப்பட்டது. ஏன் கடந்த சில ஆண்டுகளாகவும் அதைக் காணமுடிகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு ஜெனிவாவில் ஒப்பீட்டுளவில் குறைந்தளவு பக்க நிகழ்வுகளே இடம்பெற்றதாக ஒரு செயற்பாட்டாளர் தெரிவித்தார். அதற்குக் காரணம் பக்க நிகழ்வுகளுக்கு நிதியுதவி புரியும் ஒரு தமிழ் பெருவணிக நிறுவனம் அந்த நிதி உதவியை குறைத்தமைதான் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஏனெனில் அந்த பெருவணிக நிறுவனம் தாயகத்தில் முதலீடுகளை செய்ய தொடங்கிவிட்டது. குறிப்பாக தென்னிலங்கையில் வங்குரோத்தான ஒரு சிங்கள கொம்பனியை அது விலைக்கு வாங்கியிருக்கிறது. தாயகத்தில் தனது முதலீடுகளை பத்திரமாக முன்னெடுப்பதற்கு அந்த நிறுவனம் அரசாங்கத்துக்கு எதிரான அதன் போக்கில் தளர்வுகளை ஏற்படுத்த வேண்டியுள்ளது. அதன் விளைவுதான் கடந்த ஆண்டு பக்க நிகழ்வுகளில் அந்த நிறுவனத்தின் நிதிப் பங்களிப்பு குறைவாக காணப்பட்டமையும் என்று மேற்படி செயற்பாட்டாளர் தெரிவித்தார். இதைத்தான் அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. தடை நீக்கப்பட்ட அமைப்புகளும் நபர்களும் புலம்பெயர்ந்த தமிழ்ப்பரப்பில் அரசாங்கத்துக்கு எதிராக செயல்படும் தீவிரம் குறையும். இது முதலாவது இலக்கு. இரண்டாவது இலக்கு முதலீடு. கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய பொழுது ரணில் விக்கிரமசிங்க “புலம்பெயர் நிதியம்” ஒன்றை உருவாக்குவது தொடர்பாக யோசனையை முன் வைத்துள்ளார். வெளிநாடுகளில் வாழ்கின்ற இலங்கையர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கு ஒருங்கிணைப்பு மையமாக தொழிற்படுகின்ற வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கான அலுவலகமொன்றினை ஸ்தாபிக்கப் போவதாகக் கூறியுள்ளார். அதாவது புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் என்ற பொதுவான ஒரு பதத்தினை அவர் பயன்படுத்துகின்றார். தமிழ் முதலீடு என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை. ஆனால் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தாயகத்தில் முதலீடு செய்யும்பொழுது அதன் இனரீதியான பரிமாணத்தை அகற்றிவிட்டு வெறும் முதலீடாகச் செய்வது சரியா? அல்லது ஒரு தேசமாக சிந்தித்து தாயகத்தில் தமிழ்த் தேசத்தைக் கட்டியெழுப்புவது என்ற அடிப்படையில் முதலீடு செய்வது சரியா? புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் உதிரிகளாக வந்து தாயகத்தில் முதலீடு செய்தால் என்ன நடக்கும் ?அது வழமையான திறந்த சந்தைப் பொருளாதாரக் கட்டமைப்புக்குள் நிகழும் ஒரு முதலீடு என்ற பொருளாதார பரிமாணத்தைத்தான் அதிகமாக கொண்டிருக்கும் .மாறாக அதற்கு தாயகம் நோக்கிய தமிழ்முதலீடு என்ற இனரீதியிலான பரிமாணமும் பண்பாட்டு ரீதியிலான பரிமாணமும் அல்லது தமிழ்த்தேசிய நோக்கு நிலையிலான பரிமாணமும் குறைவாகவே இருக்கும். புலம்பெயர்ந்த தமிழ் முதலீடுகளுக்கு எப்பொழுது தமிழ்த்தேசிய பரிமாணம் அதிகரிக்கிறது என்றால் புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்கள் ஒரு தேசமாக சிந்தித்து முடிவெடுக்கும் போதுதான். ஒரு தேசமாக சிந்திப்பது என்றால் என்ன? ஒரு மிகப்பெரிய மக்கள்திரளாகச் சிந்திப்பதுதான். தாயகத்துக்கு வெளியே அவ்வாறு சிந்திப்பது எப்படி? தாயகத்தில் தமிழ்மக்களை ஒரு பெரிய தேசமாகக் கட்டியெழுப்புவது என்ற அடிப்படையில் முதலிடுவதுதான். அதாவது தாயகத்தில் தேசநிர்மாணத்தின் ஒரு பகுதியாக முதலீடு திட்டமிடப்பட வேண்டும்.மாறாக தனித்தனி வள்ளல்களின் உதவிகளோ,அல்லது தனித்தனி முதலாளிகளின் உதிரியான முதலீடுகளோ,தாயகத்தை கட்டியெழுப்புவது என்ற சமூகப்பொருளாதார அரசியல் பரிமாணத்தை கொண்டிருக்க போவதில்லை. எனவே இப்பொழுது இக்கட்டுரை தொடங்கிய இடத்துக்கே வரலாம். எனது நண்பர் கேட்டது போல புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகம் முதலீட்டை ஒரு கூட்டுச் செயற்பாடாக செய்வதற்கான வாய்ப்புகள் அநேகமாக இல்லை. புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகம் ஒரு தேசமாக சிந்தித்து முதலீடு செய்யப் போவதில்லை என்ற எதிர்பார்ப்பில்தான் அரசாங்கம் இந்தக் கொழுக்கியை வீசியிருக்கிறது. புலம்பெயர்ந்த தமிழ் முதலாளிகள் உதிரிகளாக நாட்டுக்குள் முதலீடு செய்ய வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது. அதாவது ரணில் விக்கிரமசிங்க புலம்பெயர்ந்த தமிழர்களை நோக்கி ஒரு பொறியை வைத்திருக்கிறார் என்று பொருள். அந்தப் பொறிக்குள் தமிழ் நிதி உதிரியாக வந்து சிக்குமா? http://www.nillanthan.com/5633/
  10. ரணில் பலமடைந்து வருகிறாரா? -நிலாந்தன் பயங்கரவாத தடைச் சட்டம் அரகலயவின் மீது பாயத் தொடங்கிவிட்டது. “மனித உரிமைகள் பாதுகாவலர்களான வசந்த முதலிகே, ஹஷான் ஜீவந்த மற்றும் கல்வெவ சிறிதம்மா தேரர் ஆகியோர் இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து நான் மிகவும் கவலையடைகிறேன்.அவர்களை தடுப்புக் காவலில் வைக்கும் உத்தரவில் கையெழுத்திட வேண்டாம் என ஜனாதிபதி ரணிலிடம் கேட்டுக்கொள்கின்றேன், அவ்வாறு செய்வது இலங்கைக்கு இருண்ட நாளாக அமையும்” என்று மேரி லோலர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்திருந்தார். மனித உரிமைகளைப் பாதுகாக்கும் செயற்பாட்டாளர்கள் தொடர்பான ஐநாவின் விசேட அறிக்கையாளர் அவர்.எனினும், அந்த இருண்ட நாளை அவரால் தடுக்க முடியவில்லை. கடந்த 21ஆம் திகதிவரை மொத்தம் 3353பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.இவர்களில் 1255பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். முழு உலகத்தையும் திருப்பி பார்க்க வைத்த அரகலயவின் பிரதான செயற்பாட்டாளர்கள் பயங்கரவாதிகளாக கணிக்கப்படும் ஒரு நிலைமை ஏன் வந்தது?அரசியல் எதிர்ப்பை ஆக்கத்திறனோடு வெளிப்படுத்திய படைப்பாளிகள் குற்றவாளிகளாக வேட்டையாடப்படும் ஒரு நிலைமை ஏன் தோன்றியது? காரணம் அரகலய மீண்டும் தோற்றம் பெறக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை.அரகலயவை உற்பத்தி செய்த பொருளாதார நெருக்கடிகள் தொடர்ந்தும் முற்றாக அகற்றப்படவில்லை.ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்தபின் எரிவாயு எரிபொருள் போன்றன ஒப்பிட்டளவில் கிடைக்க தொடங்கி விட்டன.ஆனால் பொருட்களின் விலைகள் இறங்கவே இல்லை.அரசாங்கம் முட்டையின் விலையை நிர்ணயித்த போதிலும் சந்தையில் முட்டையின் விலை இறங்கவே இல்லை.அரசாங்கத்தின் விலை நிர்ணயங்கள் மக்களை கவரும் நோக்கிலானவை தவிர யதார்த்தமானவை அல்ல என்று வியாபாரிகள் குற்றம் சாட்டுகிறார்கள். மண்ணெண்ணையின் விலை அதிகரித்துவிட்டது.அது விவசாயிகளாலும் கடத்தொழிலாளர்களாலும் தாங்க முடியாத அதிகரிப்பு.எனவே கீழ் மத்தியதரவர்க்கம் மற்றும் ஏழைகளால் நுகரமுடியாத அளவுக்கு விலைகள் உச்சத்தில் நிற்கின்றன.இது மக்களை எப்பொழுதும் தெருவுக்கு கொண்டு வரக்கூடியது. அனைத்துலக நாணயநிதியத்தின் உதவிகள் சீனாவின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான முடிவுகளில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. எனவே மீண்டும் ஆர்ப்பாட்டங்களில் மக்கள் ஈடுபடுவதை தடுப்பதற்கு முன்னணிச் செயற்பாட்டாளர்களை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் உள்ளே போட வேண்டிய தேவை ரணிலுக்கு உண்டு. அதாவது ஆர்ப்பாட்டங்கள் மீண்டும் மீண்டும் தோன்றலாம் என்ற ஆபத்தை அவர் முன்னுணர்கிறார்.இது முதலாவது பிரதான காரணம். இரண்டாவது காரணம் மே ஒன்பதாம் திகதியும் ஜூன் 9ஆம் திகதியும் ஆளுங்கட்சி அரசியல்வாதிகளின் சொத்துக்களையும் வீடுகளையும் தேடித்தேடி எரித்து அழித்தவர்களைப் பழிவாங்குவது.மீண்டும் ஒரு தடவை ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசியல்வாதிகளின் வீடுகளை தாக்கத் துணியாதபடி அவர்களை அச்சுறுத்த வேண்டும்.அதற்காகத்தான் பயங்கரவாத தடைச் சட்டத்தை அவர் உபயோகித்திருக்கிறார்.அதாவது தன்னை பாதுகாத்த 134 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை அவருக்குண்டு. பொருளாதார நெருக்கடியை நீக்கினால் பிரச்சனைகளின் மூலகாரணம் பலவீனமடைந்துவிடும் என்று நம்புகிறார்.பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பது என்று சொன்னால் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும். அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவது என்று சொன்னால் எதிர்க்கட்சிகளையும்,ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடிய மக்களையும் சமாளிக்க வேண்டும்.அதற்கு,சர்வ கட்சி அரசாங்கம் ஒரு கவர்ச்சியான தீர்வு.ஆனால் தந்திரசாலியான ரணிலை நம்பி அரசாங்கத்தில் இணைய எதிர்க்கட்சிகள் தயாரில்லை.இந்த வாரமும் இதுகுறித்து சஜித் பிரேமதாசவோடு ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.ஆனால் சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்க சஜித் அணி தயாராக இல்லை.ரணிலோடு இணைந்தால் அவர் தன்னுடைய அணியைக் விழுங்கி விடுவார் என்று சஜித் பயப்படுகிறார்.வெளியில் இருந்து ஆதரவு தரலாம் என்று சில நாட்களுக்கு முன் நடந்த சந்திப்பில் கூறி இருக்கிறார். ஜேவிபியும் அவ்வாறு சர்வ கட்சி அரசாங்கத்தில் இணைவதற்கு தயார் இல்லை. தமிழ் கட்சிகளும் பெருமளவுக்கு ஒத்துழைக்கும் நிலையில் இல்லை. எனவே ஒரு சர்வகட்சி அரசாங்கத்துக்கான வாய்ப்புக்கள் குறைவாகத்தான் தெரிகின்றன.மாறாக எதிர்த் தரப்பிலிருந்து தனக்கு ஆதரவான ஆட்களை கழட்டி எடுக்கும் வேலையை ரணில் செய்யலாம்.அதை அவர் ஏற்கனவே தொடங்கிவிட்டார்.அது அவருக்குக் கைவந்த கலை.ஆனால் அவ்வாறு உருவாக்கப்படும் ஒரு அரசாங்கம் எதிர்க்கட்சிகளாலோ அல்லது மக்களாலோ ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருக்காது. தாமரை மொட்டுக் கட்சியைப் பாதுகாக்க வேண்டிய தேவை ரணிலுக்கு உண்டு. ரணிலைப் பாதுகாக்க வேண்டிய தேவை தாமரை மொட்டுக்கு உண்டு. எனவே ஒருவர் மற்றவரில் தங்கியிருப்பார்கள்.இது எதுவரை என்று சொன்னால், அடுத்த பெப்ரவரி மாதம் வரையிலும்.ஏனெனில் அடுத்த பெப்ரவரி மாதத்தோடு யாப்பின் பிரகாரம் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ரணிலுக்கு கிடைத்துவிடும்.அவ்வாறு கிடைத்தால் அதற்குப்பின் நடக்கக்கூடிய எந்த ஒரு தேர்தலிலும் தாமரை மொட்டுக்கட்சி இப்பொழுது அனுபவிக்கும் பெரும்பான்மையைப் பெறமுடியுமா என்பது சந்தேகமே.எனவே வரும் பெப்ரவரி மாதத்தோடு தனது பேரம் கீழிறங்கி விடும் என்று தாமரை மொட்டுக் கட்சிக்குத் தெரியும். தன்னுடைய பேரம் அதிகமாகிவிடும் என்று ரணிலுக்கு தெரியும். எனவே அவர் திட்டமிட்டு காய்களை நகர்த்துகிறார். அடுத்த ஆறுமாத காலத்துக்குள் அவர் தன்னை பலப்படுத்த வேண்டும். யூ.என்.பியைப் பலப்படுத்த வேண்டும் என்று சொன்னால் சஜித் பிரேமதாசவை பலவீனப்படுத்த வேண்டும்.ஒன்றில் அவரை வழிக்குக் கொண்டு வர வேண்டும்.அல்லது தோற்கடிக்க வேண்டும். அடுத்த பெப்ரவரி மாதத்திற்கு பின்னரும் அவர் நாடாளுமன்றத்தை கலைப்பாரா என்பது சந்தேகம்தான்.ஏனெனில் அடுத்த பெப்ரவரி மாதத்தின் பின் நாடாளுமன்றம் பெருமளவுக்கு அவருடைய கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.தாமரை மொட்டின் பெரும்பான்மை பெருமளவு அவருக்கு கட்டுப்பட்டது ஆகிவிடும்.அதன்பின் அவர் விரும்பியபடி காய்களை நகர்த்தலாம். இந்த இடைப்பட்ட காலகட்டத்திற்குள் அவர் உள்ளூராட்சி சபை தேர்தல்களையும் மாகாண சபைத் தேர்தல்களையும் நடத்தக்கூடும். தேர்தல் முடிவுகள் தாமரை மொட்டுக்கு பாதமாக அமையும். இப்பொழுது உள்ளூராட்சி மன்றங்கள் பெருமளவுக்கு தாமரை மொட்டின் கட்டுப்பாட்டுக்குள்தான் காணப்படுகின்றன. ஆனால் ஒரு புதிய தேர்தல் நடந்தால் தாமரை மொட்டு அந்த பலத்தை இழக்கக் கூடும்.அதேபோல மாகாண சபைகளுக்கான தேர்தலும் தாமரை மொட்தின் வீழ்ச்சியைக் காட்டக்கூடும்.எனவே புதிய உள்ளூராட்சி மன்றங்களும் புதிய மாகாண சபைகளும் தமது பலவீனத்தை வெளிப்படுத்தலாம் என்ற அச்சம் தாமரை மொட்டுக்கு உண்டு. அதனால்தான் நாடாளுமன்றம் அடுத்த பெப்ரவரி மாதத்தின் பின் கலைக்கப்படுவதை எப்படித் தடுக்கலாம் என்று தாமரை மொட்டுக் கட்சி சிந்திக்கின்றது.ரணில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கும் 22 வது சட்டத் திருத்த வரைபில், 19வது திருத்தத்தில் உள்ளபடி நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைப்பதற்கான கால எல்லையை நாலரை ஆண்டுகளாக மாற்றும் ஏற்பாடு இணைக்கப்படவில்லை.இருபதாவது திருத்தத்தில் உள்ளபடியே 2 1/2 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தைக் கலைக்கலாம் என்று உள்ளது. இது தாமரை மொட்டைத் தன் பிடிக்குள் வைத்திருப்பதற்கு ரணில் செய்யும் தந்திரம் என்று அக்கட்சி நம்புகிறது. அதனால்தான் சுமார் 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றம் கலைக்கப்படும் காலத்தை 19இல் உள்ளதுபோல மாற்றுமாறு அண்மையில் ரணிலுக்கு கடிதம் கொடுத்திருந்தார்கள். அவர்களை சமாளிப்பதற்காக ரணில் இப்போதைக்கு பொது தேர்தல் இல்லை என்று அறிவித்திருக்கிறார். அவர்களை சமாளிப்பது என்பதைத் தவிர, வேறு ஒரு உள்நோக்கமும் அவரிடம் இருக்கலாம்.பெப்ரவரி மாதத்தின்பின் ஒப்பிட்டுளவில் தனக்கு அதிகம் கட்டுப்படும் நாடாளுமன்றத்தை வைத்துக்கொண்டு,தன் எஞ்சிய ஆட்சிக் காலத்தை எப்படிக் கடக்கலாம்,தனது சொந்த கட்சியை எப்படி மீள இணைக்கலாம் என்று அவர் திட்டமிடுவார். ஒரு தேர்தல் நடந்தால் முடிவுகள் தாமரை மொட்டுக்குப் பாதகமாகவும் எதிர்கட்சிகளுக்குச் சாதகமாகவும் அமையக்கூடும். ஆனால் யு.என்.பிக்கு அது எப்படி அமையும் என்று இப்பொழுது கூறுவது கடினம்.ஏனென்றால் யூ.என்.பி.இப்பொழுது இரண்டாக உடைந்து கிடக்கிறது.எனவே நாடாளுமன்ற தேர்தலை நடத்தினால் அது எதிரிகளுக்கு சாதகமாக அமையும் என்று ரணில் அஞ்சுகிறார்.அதனால் அவர் நாடாளுமன்றத்தை கலைக்கவும் ஒரு புதிய தேர்தலை நடத்தவும் தயாராக இருக்க மாட்டார். எனவே கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒரு நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு ரணிலுக்கும் விருப்பமில்லை. வரும் பெப்ரவரி மாதத்தின் பின் தாமரை மொட்டு கட்சியானது அவரில் தங்கி இருக்கும் நிலைமைகள் மேலும் அதிகரிக்கும். அந்த நிலையை அப்படியே பேணியபடி அவர் தன்னுடைய பதவிக்காலத்தை முடிப்பதற்கு இடையில் யு.என்.பியை எப்படிப் பலப்படுத்தலாம் என்று திட்டமிடலாம். எனவே சஜித்தை எப்படி வளைத்தெடுப்பது என்பதே அவர் முன் உள்ள சவால். சஜித்தை வளைத்து எடுத்தால் ரணிலுக்கு இரட்டை லாபம் உண்டு. அதன் மூலம் ஒரு சர்வ கட்சி அரசாங்கத்தை உருவாக்கலாம்.அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டிருப்பதாக சர்வதேச நாணய நிதியத்துக்கு வெளிக்காட்டலாம். இரண்டாவது சஜித்தை தோற்கடித்து விட்டால் அல்லது சஜித்தை வழிக்கு கொண்டு வந்து விட்டால் யூ.என்.பி மீள இணைந்துவிடும். அதன் மூலம் அடுத்த நாடாளுமன்ற தேர்தல், ஜனாதிபதி தேர்தல் போன்றவற்றில் ரணில் முன்னரை விடப் பலமாகக் காணப்படுவார். எனவே இப்பொழுது ரணிலுக்கு உள்ள சவால்,சஜித்தை எப்படி வளைப்பது என்பதுதான். ஒரு புதிய தேர்தலுக்குப் போக அவர் தயாரில்லை. ஏனெனில்,ஜே.வி.பியின் தலைவர் அனுர குமார கேட்பது போல “134 எம்பிக்களா?அல்லது மக்களா?” என்ற கேள்விக்கு விடை கிடைக்கக்கூடிய ஒரு தேர்தலை நடத்த அவர் துணிய மாட்டார்? http://www.nillanthan.com/5624/
  11. புலம்பெயர்ந்த தமிழர்களால் நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்கமுடியுமா? - நிலாந்தன் கடந்த இரு தசாப்தகால அனுபவத்தின்படி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் ஜனநாயகவெளி ஒப்பீட்டளவில் அதிகரிப்பதுண்டு.எனினும் இம்முறை அவர் அதிர்ஷ்டலாபச் சீட்டில் ஜனாதிபதியாக வந்ததும் தென்னிலங்கையில் ஜனநாயகவெளி ஒப்பீட்டளவில் சுருங்கியது எனலாம்.மக்கள் எழுச்சிகளின் காரணமாக அந்த வெளி கடந்த மூன்று மாதங்களாக குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு அதிகரித்துவந்தது. ஆனால் ரணில் அதைச் சுருக்கி விட்டார்.அரகலயவை முறியடிப்பதில் அவர் முதற்கட்ட வெற்றியைப் பெற்றிருக்கிறார்.அதனால் அவசரகாலச் சட்டத்தைத் நீக்கப்போவதாகக் கூறியிருக்கிறார். இவ்வாறு தென்னிலங்கையில் மக்கள் எழுச்சிகளின் விளைவாக அதிகரித்து வந்த ஜனநாயக வெளியைக் குறுக்கிய ஒருவர்,எப்படித் தமிழ்மக்களுக்கு ஜனநாயக வெளியை அதிகப்படுத்துவார் என்று எதிர்பார்ப்பது?ஆனால் தென்னிலங்கை நிலவரமும் தமிழ்ப் பகுதிகளின் நிலவரமும் ஒன்று அல்ல. தென்னிலங்கையில் போராட்டத்தை தொடர்ந்து அனுமதித்தால் ரணில் தன்னுடைய ஆட்சியை பாதுகாக்க முடியாது. அதேசமயம் தமிழ் பகுதிகளில் அவ்வாறான போராட்டங்கள் எவையும் இடம்பெறவில்லை. மேலும் ஜெனிவாக் கூட்டத்தொடரை நோக்கி அவ்வாறு தமிழ் மக்களின் அரசியலில் ஜனநாயக வெளியை அதிகப்படுத்த வேண்டிய தேவை ரணிலுக்கு உண்டு.கடந்த நல்லாட்சி என்று அழைக்கப்பட்ட ஆட்சிக் காலத்தில் அவர் அதைச் செய்தார்.அவர் திறந்துவிட்ட அதிகரித்த ஜனநாயக வெளிக்குள்தான் தமிழ் மக்கள் பேரவை எழுச்சி பெற்றது, இரண்டு எழுக தமிழ்கள் இடம்பெற்றன. இம்முறையும் அவர் அவ்வாறு தமிழ் மக்களுக்கு ஜனநாயக வெளியை அகலப்படுத்துவாரா என்று பார்க்க வேண்டும்.கடந்தவாரம் அவர் சில புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் மீதான தடைகளை அகற்றினார்.அதை அவர் நல்லாட்சி என்று அழைக்கப்பட்ட ஆட்சிக் காலத்திலும் செய்தார்.அதைவைத்து அவர் ஜனநாயக வெளியை அதிகப்படுத்துகிறார் என்று எடுத்துக் கொள்ளலாமா? இல்லை. ஏனென்றால் புலம்பெயர் தமிழர்கள்-தமிழ் டயஸ்பொறா- இப்பொழுது நாட்டுக்குத் தேவை. புலம்பெயர்ந்த தமிழர்கள் நாட்டில் முதலீடு செய்தால் நாட்டின் செல்வச்செழிப்பை அதிகப்படுத்தலாம்.நாடு இப்பொழுது எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கு புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகள் தேவை என்பதனை ரணில் மட்டுமல்ல கோட்டாபயவும் ஏற்றுக் கொண்டிருந்தார். தமிழ் டயாஸ்போற எனப்படுவது தட்டையான, ஒற்றைப்படையான ஒரு சமூகம் அல்ல. அதில் பல அடுக்குகள் உண்டு. இப்பொழுது தடை நீக்கப்பட்ட எல்லா அமைப்புகளும் நபர்களும் முழுத்தமிழ் டயஸ்போறவையும் பிரதிபலிக்கிறார்களா என்ற கேள்வி உண்டு.மேலும்,ராஜபக்சவால் தடை செய்யப்பட்ட உலகத்தமிழர் அமைப்பின் தலைவரான மதகுரு யாழ்ப்பாணத்தின் தெருக்களில் லேடிஸ் பைசிக்கிளில் வழமைபோல நடமாடினார். அவர் விடயத்தில் தடை ஒரு நடைமுறையாகவே இருக்கவில்லை. எனவே தடை நீக்கமும் அவ்வாறு சம்பிரதாயபூர்வமானதா ?எதுவாயினும், ,இதுதொடர்பில் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் என்ன செய்ய வேண்டும்? இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி புலம்பெயர்ந்த தமிழர்கள் நாட்டில் முதலீடு செய்வதற்கு முண்டியடித்துக் கொண்டு வரத்தேவையில்லை. நிதானமாக முடிவெடுக்கலாம். இந்த அரசாங்கமும் ஒரு நாள் மாறும்.மாறும்போது எப்படி கோட்டாபய வந்ததும் ரணில் தடை நீக்கிய அமைப்புக்கள்,தனி நபர்கள் மீண்டும் தடை செய்யப்பட்டார்களோ,அப்படி இந்த நிலையும் மாறலாம். எனவே புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் ஆட்சி மாற்றங்களைக் கண்டு மயங்கத் தேவையில்லை. மாறாக இந்த சந்தர்ப்பத்தை வெற்றிகரமாகக் கையாண்டு எப்படி ஒரு அரசுக் கட்டமைப்பு மாற்றத்துக்கான பேரத்தைப் அதிகப்படுத்தலாம் என்று சிந்திக்க வேண்டும்.தமிழ் முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டு வருவது என்று சொன்னால் அதற்கு ஓர் அரசியல் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்.தமிழ் மக்களை நாட்டின் பொருளாதாரத்தில் பங்காளிகளாக ஏற்றுக் கொள்ளவேண்டும்.அதாவது தமிழ்மக்களை முதலீட்டாளர்களாக இணைப்பதற்கு பதிலாக தமிழ்மக்களை அரசியற் பொருளாதாரப் பங்காளிகளாக இணைக்கவேண்டும்.அதற்கு முதலில் அரசியல் தீர்வு ஒன்று வேண்டும்.அரசுக்கட்டமைப்பில் மாற்றம் செய்யப்பட வேண்டும். இப்பொழுது முதலீடு செய்தவர்கள் சில ஆண்டுகளின் பின் அவற்றை திருப்பி எடுத்துக் கொள்ளும் ஒரு நிலைமை வரக்கூடாது. எனவே இனப்பிரச்சினைக்கு தீர்வு தரப்படாத ஒரு பின்னணிக்குள் புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்கள் கண்ணை மூடிக்கொண்டு ரணிலின் அழைப்பை ஏற்கத்தேவையில்லை. பதிலாக இத்தருணத்தை பயன்படுத்தி ரணில் விக்ரமசிங்கவின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கலாம். ஒரு தீர்வை முதலில் கொண்டு வாருங்கள், அதற்குரிய நல்லெண்ண சூழலை முதலில் உருவாக்குங்கள். உதாரணமாக பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குங்கள்,கைதிகளை விடுதலை செய்யுங்கள், காணிகளை விடுவியுங்கள்,காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிவாரணத்தை வழங்குங்கள்.இவற்றின் மூலம் ஒரு நல்லெண்ண சூழலை பயமற்ற சூழலை ஏற்படுத்துங்கள்.அதைத்தொடர்ந்து அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்குங்கள். அதில் புலம்பெயர்ந்த தமிழர்களையும் பங்காளிகள் ஆக்குங்கள். ஒரு தீர்வு கிடைக்கட்டும். அதன் பின் நாங்கள் முதலீடு செய்கிறோம் என்று நிபந்தனை விதிக்கலாம். தமிழ்மக்கள் ஏன் புலம்பெயர்ந்தார்கள்? ஏனென்றால் நாட்டுக்குள் பாதுகாப்பு இல்லை என்பதனால்தான்.கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக தென்னிலங்கையில் தமிழ் மக்களின் சொத்துக்களை குறி வைத்து தாக்குதல்களை நடத்தப்பட்டன. அதுதான் பின்னாளில் முஸ்லிம்களுக்கும் நடந்தது..தென்னிலங்கையில் சிங்களவர்கள் அல்லாத ஏனைய இனங்கள் நிதி ரீதியாக செழித்தோங்குவதைக் கண்டு சகிக்க முடியாத ஒரு கூட்டு மனோ நிலை சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்திடம் உண்டு. அது இப்பொழுது மாறிவிட்டதா? அந்த மனநிலையின் விளைவாகத்தான் தமிழ் மக்கள் நாட்டின் பொருளாதாரத்தில் பங்களிக்காத ஒரு நிலை அதிகரித்தது.ஆனால் புலப்பெயர்ச்சியானது சிங்கள பெருந்தேசியவாதம் கற்பனை செய்ய முடியாத வேறு ஒரு வளர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.புலம்பெயர்ந்து சென்ற சென்ற தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்ற நாடுகளில் மிக விரைவாக தங்களை ஸ்தாபித்துக் கொண்டார்கள்.நிதி ரீதியாக செழித்தோங்கினார்கள்.சில தசாப்தங்களுக்கு முன்பு ரூபாய்களோடு முதலாளிகளாக காணப்பட்டவர்கள்,புலம்பெயர்ந்த பின் டொலர்களை விசுக்கும் பெரு வணிகர்களாக மாறினார்கள்.எந்தத் தமிழர்களை தென்னிலங்கையில் இருந்து அகற்றவேண்டும் என்று திட்டமிட்டு இன அழிப்பு முன்னெடுக்கப்பட்டதோ, அதே தமிழர்கள் இப்பொழுது கொழும்புக்கு திரும்பி வந்து தனது டொலர்களால் காணிகளையும் கட்டிடங்களையும் விலைக்கு வாங்குகிறார்கள். சிங்கள மக்கள் விற்கும் காணிகளை வாங்கி அங்கெல்லாம் அடுக்குமாடித் தொடர்களைக் கட்டி வருகிறார்கள். இங்கே ஒரு உதாரணத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும். எதிரிசிங்க குரூப் ஒஃப் கொம்பனி என்று அழைக்கப்படும் ஒரு பிரம்மாண்டமான வணிக நிறுவனம் தென்னிலங்கையில் வந்துரோத்து நிலையை அடைந்தது. நூற்றுக்கணக்கான நகைக்கடைகள், சுவர்ணவாகினி என்று அழைக்கப்படும் ஊடக நிறுவனம் போன்றவற்றைச் சொந்தமாக கொண்டிருந்த எதிரிசிங்க குரூப் ஒஃப் கொம்பனி வங்குரோத்தானபோது அதை புலம்பெயர்ந்து வாழும் ஒரு தமிழ் பெரு வணிகர் விலைக்கு வாங்கினார். அவர் ஏற்கனவே ஒரு ஊடகப் பெரு வணிகரும் ஆவார். இவ்வாறு தென்னிலங்கையில் வங்குரோத்தாகும் கொம்பனியை விலைக்கு வாங்கும் அளவுக்கு தமிழ் மக்கள் நிதி ரீதியாகப் பலம் மிக்கவராக காணப்படுகிறார்கள். புலப்பெயர்ச்சி தமிழ் மக்களை ஒரு விதத்தில் சிதறடித்திருக்கிறது.இன்னொரு விதத்தில் உலகில் மிகவும் கவர்ச்சியான,பலம்வாய்ந்த ஒரு டயஸ்பொறவை உருவாக்கியிருக்கிறது.இந்த வளர்ச்சியை சிங்களபௌத்த பெருந்தேசியவாதம் கணித்திருக்கவில்லை.அதன் விளைவாகத்தான் புலம்பெயர்ந்த தமிழர்களை நாட்டில் முதலீடு செய்யுமாறு கோட்டாவும் கேட்டார். இப்பொழுது ரணிலும் கேட்கிறார். மேலும் ஜெனிவாவில் அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பது புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள்தான். எனவே அவர்களோடு சுமுகமான உறவை வைத்துக் கொள்வதன்மூலம், அரசாங்கம் ஜெனிவாவில் தனக்கு ஏற்படக்கூடிய நெருக்கடியின் அளவைக் குறைக்கலாம். ஆனால் எதுகாரணமாக தமிழ்மக்கள் நாட்டின் பொருளாதாரத்தில் முழு அளவுக்குப் பங்களிக்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டதோ,அக்காரணங்களை அகற்ற ரணில் விக்ரமசிங்க தயாரா என்ற கேள்விக்கு விடை இல்லாமல் புலம்பெயர்ந்த தமிழர்கள் நாட்டில் முதலீடு செய்ய முன்வரக்கூடாது. அதுபோலவே ஜெனிவாவில் அரசாங்கத்தின் மீது நெருக்கடியைப் பிரயோகிக்கும் செய்முறைகளையும் நிறுத்தக்கூடாது. இந்தவிடயத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் முதலில் ஓர் அமைப்பாகத் திரள வேண்டும். அதன்பின் அந்த அமைப்பானது அனைத்துலகை வழமைகளின் ஊடாக அரசாங்கத்தோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்.அப்பொழுது இனப்பிரச்சினைக்கான தீர்வை ஒரு முக்கிய முன் நிபந்தனையாக முன் வைக்கலாம். தனித்தனி அமைப்பாக தனிநபர்களாக அரசாங்கத்தோடு டீல் களுக்குப் போவதற்கு பதிலாக ஒரு அமைப்பாகத் திரண்டு அதைச் செய்ய வேண்டும்.குறிப்பாக ரணில் விக்ரமசிங்க டயஸ்போறாவை பிரித்துக் கையாள வாய்ப்பளிக்கக்கூடாது. நாட்டுக்குள் முதலீடு செய்வது என்பது இலங்கைத்தீவின் பொருளாதாரத்தில் டயஸ்பொறா ஒரு பங்காளிகளாக மாறுவது என்ற பொருளில் அல்ல.அதைவிட ஆழமானபொருளில் ,தமிழ்த்தேசத்தைக் கட்டியெழுப்புவது என்ற நீண்ட கால நோக்குநிலையிருந்தே திட்டமிடப்படவேண்டும்.அதாவது முதலீட்டின் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்புவது.யூதர்கள் கடந்த நூற்றாண்டில் அவ்வாறு முதலீட்டின்மூலம் ஒரு தேசத்தை-இஸ்ரேலைக்- கட்டியெழுப்பினார்கள்.எனவே புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் இலங்கைத்தீவின் பொருளாதாரத்தில் பங்காளிகளாவது என்று சொன்னால்,அதைத் தமிழ்த் தேசத்தைக் கட்டியெழுப்புவது என்ற உள்நோக்கத்தோடு திட்டமிடவேண்டும். http://www.nillanthan.com/5617/
  12. ஒன்பதாந் திகதி என்ன காத்திருக்கிறது? நிலாந்தன் வரும் ஒன்பதாம் திகதியும் மக்கள் தெருவில் இறங்குவார்கள் என்ற தொனிப்பட சரத் பொன்சேகா எச்சரித்திருந்தார்.அவர் அவ்வாறு கூறியதை அரகலயக்காரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது.சரத் பொன்சேகா அரகலயவை “ஹைஜாக் “ பண்ணப் பார்க்கிறார் என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த மூன்று மாத காலத்துக்கும் மேலான மக்கள் எழுச்சிகளின்போது ஒவ்வொரு ஒன்பதாம் திகதியும் அரசியல்வாதிகளுக்கு குறிப்பாக ராஜபக்ச குடும்பத்துக்கும் அவர்களுடைய ஆதரவாளர்களுக்கும் கெட்ட நாட்களாகக் காணப்பட்டன. இந்த அரசியல் எண்கணிதத் தர்க்கத்தின்படி வரும் ஒன்பதாம் திகதியும் அரசியல்வாதிகளுக்கு கெட்ட நாளாக அமையுமா? அந்த ஆபத்தை எதிர்கொள்ளும் தற்காப்பு முறியடிப்பு நடவடிக்கைகளில் ரணில் ஏற்கனவே இறங்கிவிட்டார்.அரகலயவை ஒடுக்கும் நடவடிக்கைகளை ரணில் இருமுனைகளில் முன்னெடுக்கிறார்.ஒருமுனை,அரகலய தோன்றக் காரணமாக இருந்த பொருளாதார நெருக்கடியைத் தற்காலிகமாகவேனும் தணிப்பது. இரண்டாவது, அரகலயச் செயற்பாட்டாளர்களை தொடர்ச்சியான அச்சுறுத்தலுக்குள் வைத்திருப்பது. முதலாவது முனையில்,கடந்த சில வாரங்களுக்குள் ரணில் விக்ரமசிங்க பின்வரும் விடயங்களைச் செய்திருக்கிறார்.முதலாவது, மின்வெட்டு நேரத்தை குறைத்துக் கொண்டு வருவது.இரண்டாவது தலைநகரில் எரிவாயு விநியோகத்தை வழமைக்கு கொண்டு வந்தது.ஏனைய நகரங்களிலும் எரிவாயு விநியோகம் சீராகி வருகிறது. மூன்றாவது, வரிசையில் நின்றால் எரிபொருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.கியூஆர் கோட் முறைமைக்குள் எரிபொருள் ஒப்பிட்டளவில் கிடைக்கக்கூடியதாக இருப்பது.நாலாவது, பொருட்களின் விலைகளைப் படிப்படியாகக் குறைத்து வருவது. ஐந்தாவது, அரகலயவின் கோரிக்கையான நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை பலவீனப்படுத்தும் விதத்தில் 22 A திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஆறாவது, சர்வ கட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்கப் போவதாக அறிவித்திருப்பது. மேற்கண்ட நடவடிக்கைகள் யாவும் அரகலய தோன்றக் காரணமாக இருந்த அம்சங்களை அகற்றுவது என்ற அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக,அரகலயவை ஆதரித்த சிங்கள படித்த நடுத்தர வர்க்கத்தின் கஷ்டங்களையும் பயங்களையும் போக்குவது.இது முதலாவது முனை. இரண்டாவது முனையில் அரகலய செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது. கடந்த ஒரு வாரத்துக்குள் மட்டும் இரண்டு பிணங்கள் காலிமுகத்திடலில் கரையொதுங்கின.அரகலய தொடங்கி இதுவரையிலும் இவ்வாறு ஆறு பிணங்கள் கரை ஒதுங்கியுள்ளன.இது முதலாவது. இரண்டாவது,தென்னிலங்கையில் பரவலாக துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நடக்கின்றன.இதில் கடந்த இரு மாதகாலப் பகுதிக்குள் 23பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். மூன்றாவது,அரகலய செயற்பாட்டாளர்கள் உதிரி உதிரியாகக் கைது செய்யப்படுவது. அவர்களில் சிலருக்கு நாட்டை விட்டு வெளியேறத் தடை விதித்திருப்பது.ஆசிரியர் தொழிற்சங்கத் தலைவரான ஸ்டாலினைக் கைது செய்யப்பட்டிருக்கிறார். தொழிற்சங்கங்கள் அரகலயவை தூக்கிநிறுத்தக்கூடாது என்று ரணில் சிந்திக்கிறார்.நாலாவது,அரகலயவின் பின்னணியில் நிற்பதாக கருதப்படும் முன்னிலை சோசலிஸக் கட்சியின் அலுவலகம் போலீசாரால் சோதனை இடப்பட்டுள்ளது.நாலாவது,கோட்டாகோகம கிராமத்தின் பருமனைக் குறைப்பது.அக்கிராமம் நாடு முழுவதுக்குமான அரகலயவின் குறியீட்டு மையம் ஆகும்.அரசுக்கு எதிராக ஒரு போராட்டம் தொடர்ச்சியாக நடப்பதை வெளியுலகத்துக்கு உணர்த்தும் ஒரு செயற்பாடாக அது காணப்பட்டது. ரணில் இப்பொழுது அதைச் சிறிதாக்கி வருகிறார்.அங்கே இப்போது நூற்றுக்கும் குறைவானவர்களே காணப்படுகிறார்கள். மேற்கண்ட நடவடிக்கைகளின்மூலம் ரணில் விக்ரமசிங்க அரகலயவை குறிப்பிடத்தக்க அளவிற்கு முறியடித்திருப்பதாகவே தோன்றுகிறது. அரகலயவின் முன்னனிச் செயற்பாட்டாளர்ர்கள் பலர் தலைமறைவாகியிருப்பதாகக் கருதப்படுகிறது. அரகலயவின் தொடக்கத்தில் இருந்து அதை ஆதரித்து வந்த மேற்கு நாட்டுத் தூதரகங்கள் இப்பொழுது கைது நடவடிக்கைகளை கடுமையான வார்த்தைகளால் கண்டிப்பதில்லை. கைது நடவடிக்கைகளுக்கு எதிராக பார் அசோசியேஷன்-சட்டத்தரணிகள் அமைப்பு-முன்னரைப்போல பலமான எதிர்பைக் காட்டவில்லை. கோத்தாபய அகற்றப்படும் வரையிலுமான போராட்டக்களத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களைப் பாதுகாப்பதில் சட்டத்தரணிகளின் சங்கம் பெரிய பங்களிப்பை நல்கியது. ஒருநாட் காலை காலிவீதியில் போலீஸ் வாகனத் தொடரணியொன்று காணப்பட்டது.போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கத்தோடு அவ்வாறு அந்த வாகனத்தொடரணி நிறுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டது.அதற்கு எதிராக சட்டத்தரணிகள் சங்கம் ஆட்சேபணை தெரிவித்தது.பின்னர் அந்த வாகனப்பேரணி நீக்கிக்கொள்ளப்பட்டது. காலிமுகத்திடலில் போலீஸ் மற்றும் படைத்தரப்பிடமிருந்து போராட்டக்காரர்களை பாதுகாப்பதற்காக சட்டத்தரணிகளும் மதகுருகளும் கைகளை கோர்த்தபடி மனிதச் சங்கிலி அமைத்துக் கவசமாக நின்ற காட்சிகளும் உண்டு.கோத்தாபய அகற்றப்படுவதற்கு முன்புவரை அரகலய செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம் சட்டத்தரணிகள் நூற்றுக்கணக்கில் நீதிமன்றங்களில் குவிந்தார்கள்.மீரிஹான சம்பவத்தின் பின்னரான கைது நடவடிக்கைகள் உட்பட சில கைது நடவடிக்கைகளின்போது 300க்கும் குறையாத சட்டத்தரணிகள் அவ்வாறு திரண்டுநின்று செயற்பாட்டாளர்களை பாதுகாத்தார்கள். ஆனால் இதுவெல்லாம் கோத்தா அகற்றப்பட முன்னரான கதைகள்.ரணில் வந்த பின்னரான கதைகள் வேறு.போராட்டத்தில் முன்னணியில் நின்ற மதகுரு அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளார்.பல செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.சட்டத்தரணிகள் சங்கம் அவர்களை பாதுகாப்பதற்கு முன்னரைப் போல ஒன்றிணைந்து தீவிரமாகச் செயல்படுவதாகத் தெரியவில்லை. கைது செய்யப்படுவோர் வெவ்வேறு நீதிமன்றங்களில் பரவலாக முற்படுத்தப் படுத்தப்படுவதால்,சட்டத்தரணிகள் அவ்வாறு திரளமுடியவில்லை என்று ஒரு காரணம் கூறப்படுகிறது.எனினும் கொழும்புமைய சட்டத்தரணிகள் அமைப்பு பெருமளவுக்கு யூஎன்பிக்கு ஆதரவானது என்று கருதப்படுகிறது.மேலும் அரகலயவோடு தொடக்கத்திலிருந்தே இளம் சட்டத்தரணிகள் அமைப்புத்தான் அதிகம் நெருக்கமாக காணப்பட்டது என்றும் அவதானிக்கப்பட்டுள்ளது. மேலும்,கைது செய்யப்படுவோரில் தனிப்பட்ட மற்றும் பொதுச் சொத்துக்களை நாசம் செய்த குற்றச்சாட்டுக்கு இலக்கானவர்களின் விடயத்தில் நீதிமன்றங்களில் வாதிடுவதற்கு சில இளம் சட்டத்தரணிகள் மட்டுமே தயாராக காணப்படுவதாகவும் ஒரு தகவல் உண்டு. அவை அரகலயவின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்படாத வன்முறைகள் என்று கருத்தும் ஒரு பகுதி சட்டத்தரணிகளும் உண்டு. அதாவது சட்ட மறுப்பை சட்டக்கண் கொண்டு பார்ப்பது. ஒரு மக்கள் எழுச்சியின்போது இடம்பெற்ற சம்பவங்களை சட்டக்கண் கொண்டு பார்க்க முடியாது.ஏனென்றால் எல்லா மக்கள் எழுச்சிகளும் சட்ட மறுப்பாகத்தான் தோன்றுகின்றன.எனவே ஒரு மக்கள்திரளின் சட்டமறுப்பு நடவடிக்கையை சட்டத்தின் தராசில் வைத்து நிறக்க முடியாது. அதை ஒரு சட்டப் பிரச்சினையாக வியாக்கியானம் செய்யவும் முடியாது.அது ஓர் அரசியல் பிரச்சினை.ஆனால் ரணில் விக்ரமசிங்க அதனை சட்டத்தின் தராசில் வைத்து நிறுக்கிறார்.அதற்கு எதிராக சட்டத்தரணிகள் அமைப்பு பலமான எதிர்ப்பை காட்டவில்லை.அதைச் சட்ட விவகாரமாகச் சுருங்குவது ஒருவிதத்தில் ரணில் வைத்த பொறிக்குள் சென்று விழுவதுதான். சட்டத்தரணிகள் மட்டுமல்ல, எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மத்தியிலும் குறிப்பாக சஜித் அணியினர் மத்தியிலிருந்தும் மேற்படி கைது நடவடிக்கைகளுக்கு எதிராக வலிமையான எதிர்ப்புக் காட்டப்படவில்லை. இந்த விடயத்தில் எல்லா அரசியல்வாதிகளும் ஒரு வர்க்கமாக நின்று சிந்திக்கிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களை அழித்த, வீடுகளை எரித்த நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டவர்களை பாதுகாப்பதற்கு எதிர்க்கட்சிகளின் மத்தியிலும் பெரியளவு ஆர்வம் காட்டப்படவில்லை. இவ்வாறான ஒரு அரசியல் சூழலில் ரணில் விக்கிரமசிங்க அரகலயவை அதன் ஆதரவுத்தளங்களில் இருந்து பெருமளவுக்கு தனிமைப்படுத்தி வருகிறார் என்று தோன்றுகிறது. இந்த அடிப்படையில் தொகுத்துக் கணித்தால் வரும் ஒன்பதாம் திகதி மாபெரும் எழுச்சி ஒன்றுக்கான வாய்ப்புகளைத் தடுப்பதற்காக ரணில் கடுமையாக உழைக்கிறார். அரகலயக்காரர்கள் கூறுகிறார்கள் தற்பொழுது போராட்டம் ஓய்ந்து போய்விட்டதான ஒரு தோற்றம் வெளித் தெரிவது உண்மைதான் என்று. ஆனால் அரகலயவின் பேரெழுச்சிகளை தொகுத்துப் பார்த்தால் இடைவெளிகள் விட்டு மக்கள் குறிப்பிட்ட தினங்களில் தெருக்களில் லட்சக்கணக்கில் திரண்டு வந்தார்கள்,இப்பொழுதும் அரகலய சோர்ந்து போய்விட்டதாக தோன்றினாலும் அது மறுபடியும் ஒருநாள் மக்களைத் வீதிகளுக்குக் கொண்டுவரும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.மஹிந்தவை அகற்றியது அரகலய -1.0 என்றும் ,பஸிலை அகற்றியது அரகலய-2.0 என்றும்,கோட்டாவை அகற்றியது அரகலய-3.0 என்றும், இனி ரணிலை அகற்றுவதும் முறமையை மாற்றுவதும் அரகலய-4.0 என்றும் அவர்கள் அழைக்கிறார்கள். ஆனால் கடந்த மூன்றுமாத காலத்துக்கும் மேலான தென்னிலங்கை அரசியற் களத்தைத் தொகுத்துப் பார்த்தால்,தெளிவான ஒரு பிரிகோட்டைக் காணமுடிகிறது.கோத்தாவுக்கு முன்,கோத்தாவுக்கு பின் என்பதே அது. கோத்தாவுக்கு பின்னரான அரகலய பெருமளவுக்கு தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது.சோர்ந்துபோய்க் காணப்படுகிறது. கைது நடவடிக்கைகளுக்கு எதிராக அண்மைய வாரங்களாக ஒழுங்கு செய்யப்படும் போராட்டங்கள் பேரெழுச்சிகளாக அமையவில்லை. வரும் ஒன்பதாந் திகதியும் அரசியல்வாதிகளுக்கு ஒரு கெட்ட நாளாக மாறுவதைத் தடுக்க ரணில் முயற்சிக்கிறார்.69 லட்சம் வாக்குகளால் வெற்றி பெற்ற ராஜபக்சக்களைத் துரத்திய ஒரு போராட்டத்தை, சுமார் 30,000 வாக்குகள் பெற்ற ஒருவர் முறியடிக்கப் போகிறாரா? ஒன்பதாம் திகதி பற்றிய அரசியல் எண்கணிதத்தைப் பொய்யாக்குவதில் ரணில் வெற்றி பெறுவாரா? http://www.nillanthan.com/5594/
  13. ரணில்: கடைசி ஆளா? நாடாளுமன்றத்தில் தனது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே ஒரு உறுப்பினர், அதுவும் தேர்தலில் தோற்றதால்,தேசியப் பட்டியல்மூலம் உள்ளே வந்தவர்,நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இது ஆசியாவின் அதிசயம் மட்டுமல்ல உலகத்தின் அதிசயமும்தான். தாமரை மொட்டுக்குத் தலைமை தாங்கும் யானைக்கும், யானைக்குத் தலைமை தாங்கும் தாமரை மொட்டுக்கும் இடையிலான போட்டியில் யானை ஜெயித்திருக்கிறது. எனவே அது எல்லா விதத்திலும் தாமரை மொட்டுக்குக் கிடைத்த வெற்றிதான். ரகசிய வாக்கெடுப்பு என்பது திருடர்களுக்கு வசதியானது.”அரகலய”போராட்டக்காரர்கள் கூறுவதுபோல, திருடர்களே வெற்றியைத் தீர்மானித்திருக்கிறார்கள். ரணிலை முன்னிறுத்தியதன்மூலம் ராஜபக்சக்கள் தங்களை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பாதுகாத்துக் கொண்டு விட்டார்கள். இது முதலாவது வெற்றி. இரண்டாவது வெற்றி,போராட்டத்தைப் பிசுபிசுக்கச் செய்யலாம் என்பது. பதவியேற்ற அடுத்தநாளே ரணில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதலைத் தொடுத்திருக்கிறார். எனினும் இது ஒரு முழுமையான முறியடிப்பு நடவடிக்கை அல்ல. ஒருவிதத்தில் குறியீட்டு வகைப்பட்ட எச்சரிக்கை எனலாம். ஜனாதிபதி செயலகத்தின் முன்பகுதியைக் கைப்பற்றி வைத்திருந்த ஆர்ப்பாட்டக்காரர்களே அகற்றப்பட்டிருக்கிறார்கள். அதேசமயம் கோட்டா கோகம கிராமத்தைச் சேந்த கூடாரங்கள் பெருமளவுக்கு அகற்றப்படவில்லை. ஜனாதிபதி செயலகத்தை சில தினங்களில் கையளிக்கப்போவதாக போராட்டத்தில் ஈடுபடும் தரப்புகள் சமூக வலைத்தளங்களில் அறிவித்திருந்தன என்றும்,நள்ளிரவுத் தாக்குதலை அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிகிறது. இது கிட்டத்தட்ட ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் இறுதிக்கட்டத்தை ஒத்தது. தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தமது பிரதான கோரிக்கைகள் வென்றெடுக்கப்பட்டபின் அந்த வெற்றியின் உற்சாகத்தால் புதிய கோரிக்கைகளை முன்வைத்து ஒரு தரப்பு தொடர்ந்து போராட்டக் களத்தில் நின்றது. மிஞ்சி நின்ற அந்தத் தரப்பை தமிழக அரசு பலத்தை பிரயோகித்து துரத்தியது. எனினும் காலி முகத்திடல் போராட்டம் சற்று வித்தியாசமானது. போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் முழுமையாக வெற்றி பெறவில்லை. ரணிலை முன்னிறுத்தி ராஜபக்சக்கள் தப்பிவிட்டார்கள். அதுமட்டுமல்ல போராட்டத்தின் இறுதி வெற்றியைத் தடுக்கும் ஒருவராக ரணில் ஜனாதிபதியாக மேலெழுந்து விட்டார். ராஜபக்சக்களை பிரதியீடு செய்யும் ரணிலை அகற்றுவதற்காக தொடர்ந்து போராடப் போவதாக போராட்டக்காரர்கள் கூறுகிறார்கள். ஏற்கனவே தன்னுடைய வீடு எரிக்கப்பட்டதாலும்,தனக்கு மிகவும் விருப்பத்துக்குரிய வளர்ப்பு நாய் கொல்லப்பட்டதாலும்,ரணில் தனிப்பட்ட முறையில் மனமுடைந்து காணப்பட்டவர். நள்ளிரவுத் தாக்குதலை ஊக்குவித்த காரணிகளில் அதுவும் ஒன்றா? போராட்டங்களின் பின்னணிகள் மேற்கு நாடுகள் நின்றன. சில விமர்சகர்கள் கூறுவது போல மேற்கத்திய தூதுவர்கள் போராட்டத்திற்கு நிதியுதவி வழங்கினார்கள் என்ற சூழ்ச்சிக் கோட்பாட்டை இக்கட்டுரை நியாயப்படுத்தவில்லை. ஆனால் போராட்டங்களுக்கு மேற்கத்திய தூதரகங்களின் ஆசீர்வாதம் இருந்தது. இப்பொழுதும் ரணில் விக்ரமசிங்கவின் முறியடிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்கு நாடுகள், கொழும்பில் உள்ள ஐநா தூதரகம் போன்றன கருத்துத் தெரிவித்துள்ளன. ஆனால் முன்பு ராஜபக்சவுக்கு எதிராக பயன்படுத்திய கடுமையான வார்த்தைகளை இம்முறை பயன்படுத்தவில்லை. இதுதான் அரசியல். சீனாவுக்கு விசுவாசமான ராஜபக்சக்களை ஆட்சியில் இருந்து அகற்றும்வரை போராட்டக்காரர்களைத் தடவித்தடவி உற்சாகமூட்டினார்கள். ராஜபக்சக்கள் அகற்றப்பட்டதன் விளைவாக மேற்கிற்கு விசுவாசமான ரணில் ஜனாதிபதியாகிவிட்டார். இப்பொழுது எந்தப் போராட்டங்களை மேற்கு ஆசீர்வதித்ததோ,அதே போராட்டங்களை அவர்களுடைய விசுவாசியை வைத்துக் கையாள வேண்டிய ஒரு நிலை. போராட்டங்களின் இதயமாகக் காணப்பட்ட இடதுசாரி மரபில் வந்த ஜேவிபி, முன்னிலை சோசலிசக் கட்சி,அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போன்றவற்றை மேற்குநாடுகள் இந்தியா போன்றன எச்சரிக்கை உணர்வோடுதான் அணுகின. இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்த தரப்புகள் இலங்கைத்தீவின் ஆட்சிப் பொறுப்புக்கு வருவதையோ அல்லது தீர்மானிக்கும் சக்திகளாக வருவதையோ மேற்குநாடுகளும் அனுமதிக்காது,இந்தியாவும் அனுமதிக்காது. எனவே ரணிலுக்கு எதிரான அரகலயவை ஏதோ ஒரு விதத்தில் முறியடிக்க வேண்டிய தேவை மேற்குக்கும் உண்டு. அரகலயவை நீர்த்துப்போகச் செய்வதும் பொருளாதார நெருக்கடிகளை தற்காலிகமாகத் தணிப்பதும் ஒன்றுதான். ஏனென்றால் பொருளாதார நெருக்கடிகளின் காரணமாகத்தான் அரகலய தோற்றம் பெற்றது. எனவே பொருளாதார நெருக்கடிகளை தற்காலிகமாக வேணும் வெற்றிகரமாகக் கையாண்டால்,நடுத்தர வர்க்கத்தின் கொதிப்பையும் கோபத்தையும் தணிக்கலாம். ரணில் பதில் ஜனாதிபதியாக வந்த கையோடு அந்த மாற்றத்தைக் காட்டவிளைந்தார். எரிவாயு கிடைக்க தொடங்கியது, எரிபொருள் வரத் தொடங்கியது, மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டது. ரணில் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதும் ஐ.எம்.எஃப் வெளியிட்ட அறிக்கையும் மத்தியவங்கி ஆளுநர் தெரிவித்த கருத்துக்களும் அந்த வகையிலானவைதான். மத்தியவங்கியின் ஆளுநர் இப்பொழுது கூறுகிறார் 5 மாதங்களுக்குள் நிலைமை தேறிவிடும் என்று. ஆனால் சில கிழமைமைகளுக்கு முன் ரணில் கூறினார்,பொருளாதாரத்தை நிமிர்ந்துவதற்கு குறைந்தது நான்கு ஆண்டுகள் தேவை என்று ஐ.எம்.எஃப் கூறியதாக. அதிலும் குறிப்பாக முதலாவது ஆண்டு மிக நெருக்கடியான ஆண்டாக அமையும் என்றும் அவர் எச்சரித்திருந்தார். ஆனால் இப்பொழுது மத்திய வங்கியின் ஆளுநர் கூறுகிறார் நாலைந்து மாதங்களில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்று. மொத்தத்தில் ரணிலைப் பலப்படுத்துவதற்காக மேற்குநாடுகளும் ஐ.எம்.எஃப்பும் இலங்கைத்தீவை நோக்கி உதவிகளைப் பாய்ச்சத் தொடங்கிவிட்டன. பங்குச் சந்தையும் அண்மை நாட்களில் மாற்றத்தைக் காட்டுகிறது. ரணிலை பலப்படுத்துவதுதான் அவர்களுடைய ஒரே குறிக்கோள். ரணிலை பலப்படுத்துவதென்றால் பொருளாதாரத்தை தற்காலிகமாகவேனும் நிமிர்த்த வேண்டும். பொருளாதாரத்தை தற்காலிகமாக நிமிர்த்திவிட்டால் போராட்டத்திற்கான காரணங்கள் வலுவிழுந்துவிடும். எனினும்,போராடும் தரப்புக்களுக்கு அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்று ரணில் சிந்திப்பதாகத் தெரிகிறது. இத்தாலிய அறிஞரான க்ரொம்சி கூறுவது போல…நாடாளுமன்றம்,ஜனநாயகம் என்றெல்லாம் வெளித் தோற்றத்துக்குக் காட்டப்படும். ஆனால் அரசுக்கு ஆபத்து என்று வரும்போது நாடாளுமன்றத்தின் பின் மறைந்து நிற்கும் ராங்கிகள் வெளியில் வரும். அதுதான் கடந்த வியாளன் நள்ளிரவு நடந்ததா? பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதும் ரணில் காயப்பட்ட படையினரை மருத்துவமனைக்குச் சென்று பார்த்ததும், ஜனாதிபதியாக வந்ததும் படைத்தரப்பைச் சந்தித்ததும் அதைத்தான் காட்டுகின்றன. அதாவது ராஜபக்சக்கள் ரணிலை ஒரு முன்தடுப்பாக முன் நிறுத்தியதன்மூலம் தமது இரண்டாவது இலக்கையும் அதாவது அரகலயவைத் தோற்கடிப்பது என்ற விடயத்தில் வெற்றிபெறத் தொடங்கி விட்டார்களா? ரணில் பதில் ஜனாதிபதி ஆகியதும் போராட்டக்காரர்கள் உஷார் அடைந்தார்கள். ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் பாசிச சக்திகள் உண்டு என்று அவர் கூறினார். எனவே அரகலய தன்னை தற்காத்துக் கொள்ள முற்பட்டது. ஏற்கனவே அவர்கள் கட்சித் தலைவர்களை சந்திக்கத் தொடங்கி விட்டிருந்தார்கள். ஜனாதிபதி தேர்தலையொட்டி கட்சிகளுடன் சந்திப்பை வேகப்படுத்தினார்கள். அவர்கள் ஒரு புதிய கட்சியை உருவாக்கப் போவதாகவும் ஓர் அறிவிப்பு வந்தது. ஆனால் அது போராட்டத்துக்குள் ஊடுருவிய சிலரின் பொய்யான அறிவிப்பு என்று போராடும் அமைப்புகள் தெரிவிக்கின்றன. ராஜபக்சக்கள் ரணிலை முன்னிறுத்தியதும் அரகலய முன்னெச்சரிக்கை உணர்வோடு தற்காப்பு நிலைக்குச் செல்லத்தொடங்கியது. எந்த அரசியல் கட்சிகளை போராட்ட களத்தில் அனுமதிக்க மறுத்தார்களோ, அதே கட்சிகளை அவர்கள் சந்தித்தார்கள். எந்த மக்கள் பிரதிநிதிகளை அவர்கள் திருடர்கள் என்று விழித்தார்களோ அவர்களைச் சந்தித்தார்கள். எனினும் அரகலயவின் முன்னெச்சரிக்கையோடு கூடிய தற்காப்பு நடவடிக்கைகளை மீறி ரணில் தாக்குதலைத் கொடுத்திருக்கிறார். ராஜபக்சக்கள் செய்யத்துணியாத ஒன்றை அவர் செய்திருக்கிறார் .ஏனென்றால் ராஜபக்சக்களின் பலம் உள்நாட்டில் சிங்கள பௌத்த பெருந்தேசியவாத உணர்வுதான். அவர்கள் எப்பொழுதும் உள்நாட்டில் பலமான தலைவர்கள். வெளியரங்கில் பலவீனமானவர்கள். அதனால்,உள்நாட்டில் எதிர்ப்புகள் கிளம்பியதும் அவர்களுடைய சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத் தளம் ஆட்டங்காணத் தொடங்கியது. அரகலயவின் பின்னணியில் மேற்குநாடுகள் நிற்பதும் அவர்களுக்குத் தெரியும். எனவே தப்பிச் செல்வதைத் தவிர ராஜபக்சங்களுக்கு வேறு தெரிவு இருக்கவில்லை. ஆனால் ரணிலின் விடயத்தில் நிலைமை வேறு. அவர் உள்நாட்டில் மிகவும் பலவீனமானவர். வெளியரங்கில் மிகப் பலமானவர். மேற்கு நாடுகள் மத்தியில் அவருக்கு கவர்ச்சி அதிகம். அந்தத் துணிச்சல் காரணமாகத்தான் அவர் அரகலயவின் மீது கை வைத்திருக்கிறார். ஆனால் இது ஒரு விஷப்பரீட்சை. ஏனெனில் அரகலியவின் பின்னணியில் இடதுசாரி மரபில் வந்த,ஏற்கனவே பலமான நிறுவனக் கட்டமைப்புகளை கொண்டுள்ள,அமைப்புகளும் கட்சிகளும் உண்டு. ஏற்கனவே இருதடவை ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு தோற்கடிக்கப்பட்ட அனுபவம் உண்டு. பலமான தொழிற்சங்கங்கள் உண்டு. இவற்றின் தொகுக்கப்பட்ட விளைவாக ரணிலை அவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்று பார்க்க வேண்டும். ரணில் இப்பொழுதும் உள்நாட்டில் பலவீனமான தலைவர்தான். பொருளாதார நெருக்கடிகளை தற்காலிகமாகத் தணிப்பதன்மூலம் அரகலியவை இல்லாமல் செய்யலாம் என்று ரணிலும் மேற்கு நாடுகளும் சிந்திக்கும். ஆனால் முறைமை மாற்றத்தை கேட்டு அரகலய புதிய வடிவம் எடுக்குமாக இருந்தால் அது நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை பாதிக்கும். இதைப் பொழிவாகச் சொன்னால், ரணில் அரகலயவை எப்படிக் கையாள போகிறார் என்பதுதான் நாட்டின் அடுத்தகட்ட அரசியலைத் தீர்மானிக்கப் போகின்றது. அரகலயவின் விளைவாகத்தான் அவருக்கு இப்படி ஒரு வாய்ப்பே கிடைத்தது. இக்கட்டுரை எழுதப்படும் கணம் வரையிலும் அரகலயவவின் வெற்றிக் கனிகளை ரணில் தன்னுடைய சட்டப்பைக்குள் போட்டுக் கொண்டு விட்டார். நாடாளுமன்றத்தில் தாமரை மொட்டுக்கட்சி தொடர்ந்தும் பலமாகக் காணப்படுகிறது. அதனால் மாற்றத்தைக் கேட்கும் மக்களுக்கு ஒரு தோற்ற மாற்றத்தைக் காட்டும் ஒரு உத்தியாக அரசியல் சங்கீதக் கதிரை விளையாட்டை அக்கட்சி கடந்த மூன்று மாதங்களாக விளையாடி வருகிறது. இந்த சங்கீதக் கதிரையில் கடைசியாக அமர்த்தபட்டவர்தான் ரணில். ஆனால் அதுதான் சங்கீதக் கதிரை விளையாட்டின் கடைசிக் கட்டம் என்று எடுத்துக் கொள்ள தேவையில்லை. கிரேக்கத்தில் பொருளாதார நெருக்கடிகளின்போது ஐந்து ஆண்டுகளுக்குள் ஏழு தடவைகள் அரசாங்கம் மாறியது. இலங்கைத் தீவில் கடந்த சுமார் இரண்டரை ஆண்டு காலப் பகுதிக்குள் ஒன்பது தடவைகள் அமைச்சரவை பகுதியளவோ அல்லது முழுமையாகவோ மாற்றப்பட்டிருக்கிறது. ஐந்து நிதி அமைச்சர்கள் வந்துவிட்டார்கள். மூன்று பிரதமர்கள் வந்துவிட்டார்கள். ஒரு புதிய ஜனாதிபதியும் வந்துவிட்டார். இதுதான் கடைசி மாற்றமா இதற்குப் பின்னரும் மாற்றங்கள் இடம் பெறுமா என்பதனை ரணிலுக்கும் அரகலயவுக்கும் இடையிலான மோதல்தான் தீர்மானிக்கப் போகிறதா? http://www.nillanthan.com/5583/
  14. தமிழ் அரச நிர்வாகிகளின் கவனத்திற்கு – நிலாந்தன். June 26, 2022 பள்ளிஹகார முன்பு வட மாகாண ஆளுநராக இருந்தவர். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் ஆணையாளர் களில் ஒருவர்.இவர் தமிழ்ப் பகுதிகளில் உள்ள நிர்வாகக் கட்டமைப்பின் வினைத்திறனை குறித்து உயர்வான அபிப்பிராயத்தைக் கொண்டிருந்ததாகத் தெரியவருகிறது. போர்காலத்தில் மிக நெருக்கடியான ஒரு சூழலில் நிர்வாகம் செய்து பழகிய தமிழ் அதிகாரிகளிடமிருந்து முழு நாடும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறுவாராம். அதில் உண்மையும் உண்டு.நெருக்கடியான காலகட்டத்தில் இரண்டு நிர்வாகங்களுக்கு இடையே செயல்படுவது என்பது கயிற்றில் நடப்பது போன்றது. மூத்த தமிழ் நிர்வாகிகள் பலரிடம் அந்த ஆற்றல் இருந்தது. ஆனால் அண்மை நாட்களாக தமிழ்ப் பகுதிகளில் காணப்படும் எரிபொருள் வரிசைகளை வைத்துப் பார்த்தால் அப்படியான நிர்வாகத்திறமை எங்கே போனது என்று கேட்கத் தோன்றுகிறது. இது நாடு முழுவதற்குமான ஒரு தோற்றப்பாடு, இதில் தமிழ்ப் பகுதியை தனித்துப் பார்க்க முடியாது என்று ஒரு விவாதம் முன்வைக்கப்படலாம். ஆனால் டெல்டா திரிபு வைரஸ் நாடு முழுவதையும் தாக்கியபோது தமிழ்ப் பகுதிகள் ஒப்பீட்டளவில் ஸ்திரமாக காணப்பட்டன. இறப்பு விகிதமும் ஒப்பீட்டளவில் தமிழ் பகுதிகளில் குறைவு என்று கூறப்படுகிறது. யுத்தமும் வைரசும் ஒன்று அல்ல என்பதனை ராஜபக்ஷக்களுக்கு உணர்த்திய ஒரு நெருக்கடி அது. டெல்டா திரிபு வைரஸின் தாக்கத்தின்போது தமிழ்ப் பகுதிகளில் மருத்துவ சுகாதார கட்டமைப்புக்கள் இயங்கிய விதம் முன்பு யுத்த காலகட்டத்தில் கிடைத்த அனுபவத்தின் விளைவு என்றும் எடுத்துக் கொள்ளலாமா? இவ்வாறாக அனர்த்த காலங்களின்பொழுது தமிழ் மக்களின் கூட்டு உளவியலும் சரி தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய நிர்வாக கட்டமைப்புகளும் சரி முன்னைய யுத்த கால அனுபவத்தை அடியொட்டி சிறப்பாக செயல்பட முடியும். ஏனென்றால் இந்த பூமியிலே யாருக்கும் கிடைக்காத நூதனமான அனுபவங்கள் தமிழ் மக்களுக்கு கிடைத்தன. இந்தப்பூமியிலேயே யாரும் அனுபவித்திராத துன்பங்களை தமிழ்மக்கள் அனுபவித்திருக்கிறார்கள். நவீன வரலாற்றில் மரணத்தின் ருசி மிகத்தெரிந்த மக்கள் கூட்டங்களுக்குள் தமிழ் மக்களும் அடங்குவர். மரணத்தோடு நீண்டகாலம் உரையாடிய மக்கள் அவர்கள். மரணத்துள் வாழ்ந்து தப்பிப் பிழைத்த மக்கள் அவர்கள். அதாவது சாவினால் சப்பித் துப்பப்பட்ட மக்கள். ஒரு இனப் படுகொலையில் தப்பிப் பிழைத்தவர்கள். தமிழ் அதிகாரிகள் போரிலீடுபட்ட இரண்டு தரப்புக்களுக்கும் இடையே சான்ற்விச் ஆக்கப்பட்டவர்கள்.இக்கூட்டு அனுபவங்களின் ஊடாகவே தமிழ் மக்கள் எந்த ஒரு நெருக்கடியையும் எதிர்கொள்வார்கள். யூதர்களின் வரலாற்றைக் கூறும் எக்சோடஸ் என்றழைக்கப்படுகின்ற நாவலில் அதன் ஆசிரியர் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும்போது இவர் இந்த பெயருடைய நாசி வதைமுகாமின் பட்டதாரி என்று அறிமுகப்படுத்துவார். அதாவது நாசி வதை முகாம்களில் இருந்து தப்பிய ஒவ்வொரு யூதரும் பட்டப்படிப்புக்கு நிகரான அனுபவங்களை கொண்டிருந்தார் என்று பொருள். இது தமிழ் மக்களுக்கும் பொருந்தும். தமிழ் மக்களைப் பொருத்தவரை எல்லா இடப்பெயர்வுகளும் புலப்பெயர்ச்சிகளும் அவர்களுக்குப் பட்டப்படிப்புகள்தான். எல்லாக் கூட்டுக் காயங்களும்,கூட்டு மனவடுக்களும் சித்திரவதைகளும், அகதிமுகாம்களும் நலன்புரி நிலையங்களும் அவர்களைச் செதுக்கின. இப்படிப் பார்த்தால் இந்தப் பூமியிலேயே மிகக்கொழுத்த அனுபவங்களைக் கொண்ட மக்கள். இப்படியான அனுபவத்தைக் கொண்ட ஒரு சமூகம் இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலையின்போது எப்படிச் செயல்பட வேண்டும்? எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இவ்வளவுதான் எரிபொருள் உண்டு என்றால் அந்த அடிப்படையில் வாகனங்களை முதலில் பதிவு செய்து டோக்கன் கொடுத்து ஏதோ ஒரு முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகத்தை கொண்டு வரலாம் தானே? ஏன் இப்படி நாட்கணக்காக வாகனங்களையும் சாதிகளையும் தெருவோரங்களில் நிறுத்தி வைக்க வேண்டும்? எரிபொருளுக்காக காத்திருக்கும் மக்களில் ஒரு பகுதியினரைப் பார்த்தால், ஒரு இனப்படுகொலையில் இருந்து கற்றுக்கொண்ட மக்களாகத் தெரியவில்லை. ஒருபகுதியினர் வரிசைகளில் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார்கள். ஒரு பகுதியினர் திரும்பத் திரும்ப எரிபொருளை மீள நிரப்புகிறார்கள். அதை ஒரு குழுவாகத் திட்டமிட்டு வியாபாரமாகச் செய்கிறார்கள். அந்த எரிபொருள் கறுப்புச் சந்தையில் ஒரு லீற்றர் 1000 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. நிர்வாகம் சீர்குலைந்தால் கள்ளச் சந்தையும் பதுக்கலும் தலைவிரித்தாடும். யார் அதைக் கட்டுப்படுத்துவது? தெற்கில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் பொறுமையிழந்து மோதலுக்கு போனால் அதை போலீஸ் கட்டுப்படுத்துகிறது. ஆனால் வடக்கில், விசுவமடுவில் அதை ராணுவம் கையாண்டிருக்கிறது. எரிபொருள் வரிசைகள் மட்டுமில்ல, கடந்த வாரம் பாடசாலைகளை இயக்குவது தொடர்பிலும் அவ்வாறான குழப்பத்தைக் காணமுடிந்தது. இங்கு முதலில் ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும். எரிபொருட் தட்டுப்பாடு காரணமாக அன்றாட வாழ்வின் அசைவுகளை மட்டுப்படுத்த வேண்டியிருக்கிறது. எனினும் தனியார் கல்வி நிறுவனங்கள் குறிப்பாக கல்விப் பொதுச்சாதாரணம், உயர்தரம்,மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் போன்ற தேசிய பரீட்சைகளுக்கான தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து இயங்குகின்றன. அவற்றை நோக்கி ஆயிரக்கணக்கில் தமது பிள்ளைகளை பெற்றோர் மோட்டார் சைக்கிள்களில் ஏற்றி இறக்குகிறார்கள். ஒரு நண்பர் பகிடியாக சொன்னார்….. பெட்ரோல் கியூவில் நிற்கும் ஒரு பகுதியினர் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தமது பிள்ளைகளை அழைத்துச் செல்வதற்காகத்தான் எரிபொருளைச் சேமிக்கிறார்களா? என்று. அரசாங்கம் மாறிமாறி அறிக்கைகளை விடுகிறது. ரணில் விக்ரமசிங்க பிரதமராக வந்த பின்னரும்கூட நாட்டில் அரசாங்கம் என்ற ஒன்று உண்டா என்று கேட்குளவுக்குத்தான் நிலைமை தொடர்ந்தும் காணப்படுகிறது. எனவே இந்த விடயத்தில் அரசாங்கம் குழம்பிப் போனதால் நிர்வாக அதிகாரிகளும் குழம்பிப் போனார்கள்,நிர்வாகக் கட்டமைப்பும் குழம்பிபோய் விட்டது,என்று ஒரு விளக்கத்தை தரமுடியும். கடந்த வாரம் பாடசாலைகளை திறப்பதா இல்லையா என்ற விடயத்தில் முடிவெடுக்க முடியாத ஒரு நிலைமை காணப்பட்டது. முதலில் பாடசாலைகளை குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மூடப்போவதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் அது மேல் மாகாணத்துக்கு மட்டுமே பொருந்தும்,என்றும் ஏனைய மாகாணங்களுக்கு பொருந்தாது என்றும் பின்னர் தெளிவுபடுத்தப்பட்டது. அதேசமயம் கிட்ட உள்ள பாடசாலைகளில் மாணவர்கள் கல்வி கற்கலாம் என்று கூறப்பட்டது.மேலும் இணைய வழியிலும் வகுப்புகளை நடத்தலாம் என்று கூறப்பட்டது. அதாவது ஹைபிரிட் முறைமை. முடிவில் அதிபர்கள் தற்துணிவாக முடிவெடுக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போதுள்ள நிர்வாகக் கட்டமைப்பில் நெருக்கடிக்குள் ரிஸ்க் எடுத்து துணிவாக முடிவெடுக்க எத்தனை அதிபர்கள் தயார்? அவ்வாறு ரிஸ்க் எடுத்து முடிவெடுக்கக்கூடிய ஒரு நிர்வாகக் கட்டமைப்பு நாட்டில் உண்டா? துணிந்து முடிவெடுக்கும் அதிபர்கள் அதன் விளைவுகளுக்கும் பதில் சொல்ல வேண்டும்.அவர்கள் எத்தனை பேருக்கு பதில் சொல்ல வேண்டும்?கல்வித் திணைக்களம், பெற்றோர்,பழைய மாணவர் என்று எல்லாத் தரப்பும் அதிபரைத் தான் பிடுங்குவார்கள்.கிளிநொச்சி மாவடடத்தைச் சேர்ந்த ஒரு அதிபர் பின்வருமாறு முகநூலில் எழுதியிருந்தார்…”நினைச்சு நினைச்சு கலியாணம் முடிக்கிறாங்கள்.என்னெண்டு பிரயோக முடிவுகளை எடுப்பது? சீ”. இதுவிடயத்தில் நிர்வாகக் கட்டமைப்புக்கள் மட்டும் குழம்பிப் போயிருந்தன என்பதல்ல,ஊடகங்களும் குறிப்பாக இணையவழி ஊடகங்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு நிலைமையைக் குழப்பின என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். ஒரு செய்தியின் மூலத்தை விசாரிக்காமல் பரபரப்பிற்காக செய்திகளைப் போடும் ஒரு போக்கை சமூக வலைத்தளங்கள் வளர்த்துவிட்டிருக்கின்றன. இதனால்,உண்மையை விட வதந்தியே அதிகம் பரவலாகச் சென்றடைகிறது. இது கடந்த ஞாயிற்றுக்கிழமையும் நடந்தது. பதினோரு மணியளவில் அடுத்த நாள் பாடசாலைகள் இயங்காது என்று இணைய ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்தன. ஆனால் சுமார் அரை மணித்தியால இடைவெளிக்குள் அச்செய்தியை அதே ஊடகங்கள் மறுத்தன. நாட்டைக் குழப்புவதில் உறுதிப்படுத்தப்படாத செய்திகள்,அல்லது பரபரப்பு செய்திகளுக்கும் ஒரு பங்கு உண்டு. குறிப்பாக பொருட்கள் பதுக்கப்படுவதற்கும் விலைகள் உயர்வதற்கும் பரபரப்புச் செய்திகளும் ஒரு விதத்தில் காரணம். ஓர் அனர்த்த காலத்தில் மக்களை குழப்பாமல் இருக்க வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கும் உண்டு. அத்தியாவசிய சேவைகளுக்குரிய நிர்வாகக் கட்டமைப்பின்படி நாட்டின் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளருக்கு கீழ் ஒவ்வொரு மாவட்டச் செயலரும் பதவி வழியாக பிரதி அத்தியாவசிய சேவைகள் ஆணையாளராகச் செயற்பட முடியும்.அதாவது மாவட்ட செயலர்களுக்கு அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக முடிவெடுக்கத் தேவையான முழு அளவு அதிகாரம் உண்டு. அவர்கள் தமது மக்களுக்காக ரிஸ்க் எடுக்கத் தயாராக இருந்தால் சரி. ஆனால் தமிழ்ப் பகுதிகளில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட சட்டமன்றங்கள் இல்லை. இதனால் கொழும்பினால் நேரடியாக நிர்வகிக்கப்படும் நிர்வாகக் கட்டமைப்பே உண்டு. இதுவும் தமிழ் நிர்வாகிகளின் சுயாதீனத்தை கட்டுப்படுத்துகிறது. இவ்வாறான ஒரு நிர்வாகச் சூழலில்ஆளுநர் ஒருவரின் கூற்றில் தொடங்கிய இக் கட்டுரையை மற்றொரு ஆளுநரின் அறிவிப்பில் முடிக்கலாம் என்று நினைக்கிறேன்.சில நாட்களுக்கு முன் வடமாகாண ஆளுநரின் அறிவிப்பு ஒன்றை ஊடகங்களில் பார்க்க முடிந்தது. எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் மணிக்கணக்காக காத்திருக்கும் மக்களுக்கு உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இயன்றவரை நீராகாரத்தை வழங்குமாறு ஆளுநர் கேட்டிருக்கிறார். அது ஒரு மனிதாபிமான நடவடிக்கை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒரு மாகாண ஆளுநர் அதைவிடக்கூடுதலாகச் செய்யவேண்டிய ஒரு வேலை இருக்கிறது. எரிபொருள் வரிசைகளை எப்படிப் புத்திபூர்வமாக ஏதோ ஒரு முறைமைக்குள் கொண்டு வரலாம் என்று சிந்திப்பதே அது. பதவி வழி அதிகாரமுடைய நிர்வாகிகள் துணிந்து ரிஸ்க் எடுக்க வேண்டிய ஒரு காலகட்டம் இது. தமிழ் அதிகாரிகள் மதிப்புக்குரிய,முன்னுதாரணம்மிக்க இறந்தகால அனுபவங்களைப் பின் தொடர வேண்டும். https://globaltamilnews.net/2022/177811
  15. குருந்தூர் மலையும் காலிமுகத்திடலும் - நிலாந்தன் நாட்டில் பொருளாதார நெருக்கடி என்ற ஒன்று உண்டா என்று ஐயப்படும் அளவுக்கு திருவிழாக்களும் கொண்டாட்டங்களும் விமரிசையாக நடக்கின்றன. ஆயிரக்கணக்கானவர்கள் திருவிழாக்களில் கூடுகிறார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் கொண்டாட்டங்களில் கூடுகிறார்கள்.வல்லிபுர ஆழ்வார் கோவில், பாசையூர் அந்தோணியார் கோவில், வற்றாப்பளை அம்மன் கோயில் போன்றவற்றில் திருவிழாக்கள் அமோகமாக நடந்தன. இக்கட்டுரை எழுதப்படும் நாளில் கண்டியில் கிரிக்கெட் கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கிறது.திருவிழாக்கள் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளும் சனங்கள் அணியும் ஆடைகள்,எடுப்புச் சாய்ப்பு எதிலுமே பொருளாதார நெருக்கடியைக் காணமுடியவில்லை. ஆனால் யாழ் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஒருவர் கூறினார் 12 மாணவர்களைக் கொண்ட ஒரு வகுப்பில் 11 பேருக்கு உணவுத் தட்டுப்பாடு இருப்பதாக. அவர்கள் ஒரு வேளை அல்லது இரு வேளை உணவையே உட்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். இம்மாணவர்கள் பெருமளவுக்கு கிழக்கு, மலையகம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் சொன்னார். எனவே மாணவர்களுக்கு உணவு கொடுக்கும் விதத்தில் “கொம்யூனிட்டி கிச்சின்களை” உருவாக்கியிருப்பதாகவும்அவர் தெரிவித்தார். அவ்வாறான சமூகப்பொதுச் சமையலறைகளை குறித்து ஏற்கனவே மனோகணேசன் பேசிவருகிறார். நகர்ப்புறத் தொடர்மாடிக் குடியிருப்பாளர்களுக்கு அவ்வாறு பொதுச் சமையல் அறைகளை உருவாக்க வேண்டும் என்று அவர் கேட்டிருந்தார். கடந்தகிழமை அக்கரைப்பற்றில் அவ்வாறான முயற்சிகளை சில முஸ்லீம் நண்பர்கள் முன்னெடுத்திருக்கிறார்கள். “வீட்டிலிருந்து ஒரு பார்சல்” என்ற பெயரில் அது மருதமுனை,சாய்ந்தமருது,மாளிகைக்காடு,கல்முனைக்குடி,பாலமுனை போன்ற கிராமங்களுக்கு வேகமாகப் பரவுவதாகக் கூறப்படுகிறது. அதாவது சமூகப் பொதுச்சமையலறை மூலம் உணவூட்டப்பட வேண்டிய ஒரு தொகுதியினர் உருவாகி வருகிறார்கள் என்று பொருள். இதை இன்னும் கூர்மையாகச் சொன்னால் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்க முன்பிருந்ததைவிடவும் நிலைமை பாரதூரமானதாக மாறிவருகிறது என்று பொருள். அவர் பதவியேற்க முன்பிருந்ததை விடவும் இப்பொழுது எரிபொருளுக்கான வரிசைகள் அதிகரித்த அளவிலும் மிக நீண்ட வகைகளாகக் காணப்படுகின்றன. கடந்த 16 ஆம் திகதி வியாழக்கிழமை எரிபொருளுக்காக யாழ்ப்பாணத்தில் பல கிலோ மீட்டர் நீளமான வரிசைகள் காணப்பட்டன. யாழ்ப்பாணத்தின் நவீன வரலாற்றில் இவ்வாறான மிக நீண்ட வரிசைகள் காணப்பட்ட ஒரு நாள் அது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சிலர் சைக்கிள்களை வாடகைக்கு எடுத்து அதில் வேலைக்கு வருகிறார்கள். ஒரு நாளைக்கு சைக்கிள் வாடகை 150 ரூபாய். ஆனால் நாட்டின் பிரதமரும் அமைச்சர்களும் குறிசொல்வோராக மாறி விடடார்கள் என்று கடந்த வியாழக்கிழமை ஐலன்ட் பத்திரிகை தனது ஆசிரியர் தலையங்கத்தில் விமர்சித்திருந்தது. பிரதமர்,அமைச்சர்கள்,எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எனைய அரசியல்வாதிகளை, அந்த ஆசிரியர் தலையங்கம் ஞானா அக்காவின் மச்சான்கள் என்று வர்ணித்திருந்தது. அதாவது கோட்டா கோகம,மைனா கோகம,ஹிரு கோ கம போன்ற போராட்ட கிராமங்கள் உருவாக்கப்படுவதற்கு காரணமாக இருந்த பொருளாதார நெருக்கடிகளை இப்பொழுது மேலும் தீவிரமாகியிருக்கின்றன. இப்படிப் பார்த்தால் இப்பொழுதுதான் போராட்டமும் அதிகரிக்கவேண்டும். ஒன்றல்ல பல கிராமங்களை நாடு முழுவதும் உருவாக்க வேண்டும். ஆனால் இருக்கின்ற கோட்டா கோகம கிராமமும் தற்பொழுது சோர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்பு ஒவ்வொரு நாளும் பிற்பகலில் அக்கிராமத்தை நோக்கி ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு வந்தார்கள். இப்பொழுது அவ்வாறான திரட்சி காணப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. ரணில் விக்ரமசிங்க பிரதமராக தெரிவு செய்யப்பட்ட பின் நிகழ்ந்த மாற்றங்களில் அதுவும் ஒன்று. போராட்டக் கிராமங்கள் சோரத் தொடங்கி விட்டன என்பது. அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச்செயலர் குமார் குணரட்னம் அதை ஏற்றுக் கொண்டார். கோட்டா கோகம கிராமத்தில் வினைத்திறனோடு செயற்படும் பல்வேறு அமைப்புக்கள் மத்தியில் முன்னிலை சோசலிசக் கட்சியின் மாணவர் அமைப்பும் காணப்படுகிறது. போராட்டத்தில் எழுச்சியும் வீழ்ச்சியும் உண்டு என்று குமார் குணரட்னம் கூறுகிறார். அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் சோரத் தொடங்கியதற்கு பல்வேறு காரணங்களைக் கூறலாம். அவற்றுள் முக்கியமானவை வருமாறு. முதலாவது காரணம் ரணில் விக்கிரமசிங்கவின் வருகை.அவர் பிரதமராக நியமிக்கப்பட்டதோடு நடுத்தர வர்க்கத்தின் மத்தியில் ஒப்பீட்டளவில் நம்பிக்கைகள் அதிகரித்துள்ளன. தென்னிலங்கையில் படித்த நகர்ப்புற நடுத்தர வர்க்கம் எனப்படுவது பெருமளவுக்கு யு.என்.பிக்கு ஆதரவானது. அதில் ஒரு சிறு பகுதி ஜேவிபியினால் ஈர்க்கப்படுகிறது. அரசாங்கத்துக்கு எதிரான போராட்டக் கிராமங்களுக்கு மேற்படி நகர்ப்புற படித்த,நடுத்தர வர்க்கத்தின் ஆசீர்வாதம் அதிகளவு உண்டு என்று குமார் குணரட்னம் கூறுகிறார். ரணில் பிரதமராக நியமிக்கப்பட்ட பின் மேற்படி நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் போராட்டத்துக்கான உத்வேகம் குறைந்து வருவதாக அவதானிக்கப்பட்டுள்ளது. இது ஒரு காரணம். இரண்டாவது காரணம். அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை ஒருங்கிணைத்து தலைமை தாங்கவல்ல பலமான கட்டமைப்புக்கள் எவையும் அங்கே கிடையாது. ஒரு சித்தாந்த அடித்தளத்தின் மீது கட்டியெழுப்பப்பட்ட அமைப்போ கட்சியோ அங்கு இல்லை. போராட்டக்களத்தில் காணப்படும் அமைப்புக்கள் மற்றும் தனிப்பட்ட செயற்பாட்டாளர்கள் தங்களுக்கிடையே இறுக்கம் குறைந்த இணைப்புகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். அரசாங்கத்துக்கு எதிரானவர்கள் என்ற ஒரு ஒற்றைப் புள்ளியில் அவர்கள் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அந்தப்பிணைப்பு மேலிருந்து கீழ்நோக்கிய ஒரு மையத்திலிருந்து நிர்வகிக்கப்படுகின்ற, ஒரு தலைமைத்துவத்துக்கு கீழ்ப்பட்ட பிணைப்பு அல்ல.மாறாக பக்கவாட்டில் ஒருவர் மற்றவரோடு கொள்ளும் சுயாதீனமான பிணைப்புக்கள். இவ்வாறு பலமான தலைமைத்துவமோ அல்லது பலமான நிறுவனக் கட்டமைப்போ இல்லாத ஒரு பின்னணியில் இதுபோன்ற போராட்டங்கள் காலப்போக்கில் சோர்ந்து போகும் ஆபத்து உண்டு. இது இரண்டாவது காரணம். மூன்றாவது காரணம். சனங்கள் நெருக்கடிகளுக்கு இசைவாக்கம் அடைந்து வருவது. நெருக்கடியின் தொடக்க காலத்தில் அவர்களுக்கு அது பாரதூரமாகத் தெரிந்தது. ஆனால் இப்பொழுது அது அவர்களுக்கு பழக்கப்பட்ட ஒன்றாக மாறிவிட்டது. இயல்பின்மையே இயல்பானதாக மாறிவிட்டது. இதுதான் யுத்த காலத்தில் தமிழ் மக்களுக்கும் நடந்தது. ஏன் ஆயுத மோதல்களுக்கு பின்னரான காலங்களிலும் அதுதானே நிலைமை?அந்தக் கூட்டு அனுபவம்தான் பின் வந்த வைரஸ் பிரச்சினை, இப்பொழுதுள்ள பொருளாதாரப் பிரச்சனை போன்றவற்றை தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பொழுதும் அவர்களுக்கு உதவுகின்றது. இப்பொழுது தமிழ் மக்களைப் போலவே சிங்கள மக்களும் நெருக்கடிகளுக்கு பழக்கப்பட்டு வருகிறார்களா? அதனால்தான் போராட்டத்தின் தீவிரம் குறைந்து வருகிறதா? நாலாவது காரணம், மக்கள் எரிபொருளுக்கும் எரிவாயுவுக்குமாக நீண்ட நேரம் மிக நீண்ட வரிசைகளில் காத்துக் கிடக்கிறார்கள். தமது வயிற்றுப்பாட்டுக்காக இவ்வாறு நீண்டநேரம் காத்திருப்பதால் அவர்களுக்கு போராடுவதற்கு நேரம் குறைவாகவே கிடைக்கிறது. ஐந்தாவது காரணம், எரிபொருள் விலை உயர்வினால் போக்குவரத்து ஒரு பிரச்சினையாக மாறியிருப்பது. நாட்டின் ஏனைய பாகங்களில் இருந்து காலிமுகத்திடலை நோக்கிப் பயணம் செய்வதற்குப் பெருந்தொகை பணத்தைச் செலவிட வேண்டியிருக்கிறது. இதுவும் ஒரு காரணம். மேற்கண்ட காரணங்களின் தொகுக்கப்பட்ட விளைவாக போராட்ட கிராமங்களில் ஒருவித தொய்வு ஏற்பட்டிருக்கிறது. போராட்டங்களின் விளைவாக மஹிந்த வெளியேறிவிட்டார். பஸில் வெளியேறிவிட்டார். இது போராடும் தரப்புக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிக்க வேண்டும். மஹிந்தவையும் பசிலையும் அகற்றியது போல கோட்டாபயவையும் அகற்றலாம் என்ற நம்பிக்கை இப்பொழுதுதான் அதிகரிக்க வேண்டும். ஆனால் நிலைமை அப்படியாகத் தெரியவில்லை. எனினும் போக்குவரத்துச் செலவு காரணமாக காலிமுகத்திடலில் கூடுவோரின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைந்திருந்தாலும்,சிறிய பரவலான ஆர்ப்பாட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. மக்கள் தாங்கள் வாழும் இடங்களில் ஆங்காங்கே சிறியளவில் எதிர்ப்புகளை அவ்வப்போது காட்டிவருவதாக கோட்டா கோகம கிராமத்தை சேர்ந்தவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அதாவது ஒரு மையமான இடத்தில் பெருந்தொகையானவர்கள் கூடுவதற்கு பதிலாக சிதறலாக பரவலாக சிறிய அளவில் எதிர்ப்புக்கள் காட்டப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள். கடந்தவாரம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த குமார் குணரட்னம் தமிழ் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான செயற்பாட்டாளர்கள் காலிமுகத்திடலுக்கு வந்தால் போராட்டத்தின் பரிமாணம் வேறு விதமாக அமையும் என்று எதிர்பார்ப்பதாக தெரிகிறது. குமார் குணரட்ணம் வடக்கிற்கு வந்த அதே காலப்பகுதியில்தான் குருந்தூர் மலையில் புதிய தாதுகோப கலசத்தை பிரதிஷ்டை செய்யும் வேலைகள் முடுக்கிவிடப்பட்டன. தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களின் எதிர்ப்பினால் அது கைவிடப்பட்டது. ஆனால் அந்த மரபுரிமை ஆக்கிரமிப்பை குறித்து கண்டியிலும் காலிமுகத்திடலிலும் கோட்டா கோகம கிராமங்களில் எதிர்ப்புகள் காட்டப்படவில்லை. மாறாக இந்தியப் பெரு வணிக நிறுவனமான அதானி குழுமத்துடன் கோட்டாபாய அரசாங்கம் செய்து கொண்ட டீலுக்கு எதிராக காலிமுகத்திடலில் எதிர்ப்புக் காட்டப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் விசாரித்தபொழுது அது தொடர்பான செய்திகள் தமக்கு உரிய காலத்தில் கிடைக்கவில்லை என்று கொழும்பு கோட்டா கோகம கிராமத்தை சேர்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் தென்னிலங்கையில் போராடும் தரப்புக்கள் தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கு கிடைத்த மிகப்பிந்திய தருணங்களில் அதுவும் ஒன்று. கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு கோட்டா கோகம கிராமத்திலிருந்து செயற்பாட்டாளர்கள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்தார்கள். கோட்டா கோகம கிராமத்திலிருந்து யாழ்.நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட நூல்களை கையளிப்பது அவர்களுடைய வருகையின் நோக்கம்.அது ஒரு நன்நோக்கம் என்பதில் சந்தேகமில்லை. தமிழ்மக்களின் கூட்டுக்காயங்களை சுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் அதில் உண்டு. அதேசமயம் தமிழ் மக்களின் கூட்டுக்காயங்கள் இதுபோன்ற நற்செயல்களால் மட்டும் சுகப்படுத்த முடியாத அளவுக்கு ஆழமானவை,தொடர்ந்து புதுப்பிக்கப்படுபவை என்பதைத் தமிழ் செயற்பாட்டாளர்கள் அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். குருந்தூர்மலை ஆக்ரமிப்பு அதை நிரூபிக்கக் கிடைத்த ஆகப்பிந்திய உதாரணங்களில் ஒன்று. http://www.nillanthan.com/5526/
  16. கோத்தா+ரணில் : அசுத்தக் கூட்டா ? நிலாந்தன்! June 12, 2022 தனது பிள்ளைகள் மூன்று நாட்களாக பட்டினியில் வாடுவதை கண்டு, சகித்துக்கொள்ள முடியாத, தாயொருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று வெல்லவாய பகுதியில் இடம்பெற்றுள்ளது. தந்தைக்கு நிரந்தர தொழில் இல்லை.வேறு வருமான வழிகளும் இல்லை.இதனால்,அக்குடும்பம் சுமார் 3 நாட்களாக நீரை மட்டுமே அருந்தி உயிர்வாழ்ந்ததாகக் கூறப்படுகின்றது. இது முதலாவது செய்தி. வெலிகேபொல, பிரதேசத்தில் கிராமத்தில் ஒரு வறிய பெண் நோயுற்ற தனது பிள்ளைக்கு உணவுக்கு எதுவும் இல்லை என்பதால் அருகிலுள்ள உறவினருக்கு சொந்தமான ஈரப்பலா மரத்தில் காயொன்றைப் பறித்து 100 ரூபாய்க்கு விற்றுள்ளார்.அப்பணத்தில் 500 கிராம் அரிசியை வாங்கியுள்ளார்.ஈரப்பலா பறிக்கப்பட்டதை அறிந்த உறவினர், கோபமுற்று அந்தத்தாயைத் தாக்கியுள்ளார். இது இரண்டாவது செய்தி. கதிர்காமத்தில்,மூன்று பிள்ளைகளின் தாயொருவர்,ஒரு கிலோ அரிசி, 250 கிராம் சீனி, 200கிராம் கருவாடு மற்றும் பிஸ்கட் என்பவற்றை வாங்கிக்கொண்டு வீடு திரும்பியுள்ளார். வழியில்,மீன் வியாபாரியொருவர் சைக்கிளில் வந்துள்ளார். சைக்கிளை நிறுத்தி,மீன் வாங்கியுள்ளார். அப்பொழுது,உணவுப்பொருட்கள் இருந்த பையை தரையில் வைத்துள்ளார். மீனை வாங்கிக்கொண்டு,பையைப் பார்த்தபோது,பையைக் காணவில்லை. பையை யாரோ திருடி விட்டார்கள்.இது மூன்றாவது செய்தி தொடரும் உணவுத் தட்டுப்பாடு காரணமாக சிறுவர்கள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாக கொழும்பு ‘லேடி ரிட்ஜ்வே’ சிறுவர் மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா கவலை வெளியிட்டுள்ளார்.அண்மை நாட்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 53 குழந்தைகளில் 11 பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது என்றும், அவர்களில் நால்வருக்கு கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டின் அறிகுறிகள் தென்படுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது நாலாவது செய்தி. கடந்த 31ஆம் திகதி “சவுத் சைனா மோர்னிங் போஸ்ற்” என்ற இணைய ஊடகத்தில் ஒரு கட்டுரை வெளிவந்தது. அதில் பெண்கள் மாதவிடாய் காலங்களில் அணியும் சுகாதார பாதுகாப்பு நப்கின்களின் விலை அதிகரித்த காரணத்தால் பாடசாலைக்குச் செல்லும் மாணவிகள் அவதிப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.மாதவிடாய் காலங்களில் பள்ளிக்கூடம் செல்வதை தாங்கள் தவிர்ப்பதாக மாணவிகள் தெரிவித்திருக்கிறார்கள்.இறக்குமதி செய்யப்படும் நப்கின்களுக்கு அரசாங்கம் 58 விகித வரி அறவிவிடுகிறது.இதனால் வெளிநாட்டு நப்கின்களை வாங்க முடியாத ஒரு நிலைமை.வறிய பெண்கள் பெருமளவுக்கு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நப்கின்களை பயன்படுத்தப்படுவதாகவும்,ஆனால் அவற்றின் விலையும் அதிகரித்திருப்பதால் பல குடும்பங்கள் அவற்றுக்காக காசை செலவழிக்க முடியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.நப்கினா சாப்பாடா என்று கேட்டால் சாப்பாடுதான் முக்கியம் என்று பல குடும்பத்தலைவிகள் கருதுவதாகத் தெரிகிறது.இதனால் நப்கின்கள் இல்லாத காரணத்தால் பல மாணவிகள் பள்ளிக்கூடம் வருவதில்லை என்றும் அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.மிகவறிய பெண்கள் விலை கூடிய நப்கின்களை வாங்குவதற்கு பதிலாக சீலைத் துண்டுகளை பயன்படுத்துவதாகவும் அது சுகாதாரமற்றதுநோய் தொற்றுக்கான காரணிகளில் ஒன்று என்று எச்சரிக்கப் பட்டிருக்கிறது.இது ஐந்தாவது செய்தி. கடந்தமாதம் 28ஆம் திகதி “தெ டெலிகிராப்” இணையத்தளத்தில் வெளிவந்த மற்றொரு கட்டுரையில்,ஆடைத் தொழிற்துறையைச் சேர்ந்த ஒரு தொகுதி பெண்கள் வேலையின்மை,வறுமை காரணமாக பாலியல் தொழிலை நோக்கிச் செல்வதாக கூறப்பட்டுள்ளது.இது ஆறாவது செய்தி. இதுதான் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னரான நாட்டின் நிலை. எனினும் அவர் பதவியேற்ற பின் ஒரு விடயத்தில் மிகவும் தெளிவாக காணப்படுகிறார்.நாட்டில் எந்தப் பொருள்?எவ்வளவு கையிருப்பில் உண்டு?எவ்வளவு நாடுக்குத் தேவை?எவ்வளவு கடனாகக் கிடைக்கும்? எப்பொழுது எந்த பொருளுக்கு தட்டுப்பாடு வரும்? எப்பொழுது பஞ்சம் வரலாம்? போன்ற எல்லா விவரங்களையும் அடிக்கடி வானிலை அறிவித்தலில் கூறுவதுபோல வெளிப்படையாகச் சொல்லி வருகிறார். அதனால்தான் ஒரு முஸ்லிம் நண்பர் முகநூலில் பின்வருமாறு எழுதினார்…. ரனில் விக்ரமசிங்கவை இலங்கை கிறிக்கட் அணித்தலைவராக நியமித்தால்…. “அடுத்து வரும் போட்டிகளில் எமக்கு வீசுவதற்கு ஒரு பஞ்சு கட்டி கூட கிடைக்காது” “இனி வரும் ஆட்டங்களில் இடை வேளையில் மூன்று மிடறு தண்ணீருக்கு பதிலாக இரண்டு மிடறு தண்ணீரையே பருக வேண்டி வரும்” “ஒக்டோபர் மாதம் வரும் போது கிறிக்கட் மட்டைக்கு பதிலாக நாங்கள் தென்னம் மட்டையே பயன் படுத்த வேண்டிவரும்” “உக்ரேன் வீரர்களுடன் கிறிக்கட்டும் அதே விக்கட்டால் ரஷ்ய வீரர்களுடன் கிட்டிப்புள்ளும் விளையாடுங்கள்”……. ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கும் புள்ளிவிபரங்கள் உண்மையோ பொய்யோ அவர் நாட்டின் நிலைமையை ஒளிவு மறைவின்றி மக்களுக்கு தெரியப்படுத்துகிறார் என்ற ஒரு தோற்றத்தை வெற்றிகரமாக கட்டியெழுப்பி விட்டார்.ஆனால் இது மக்களுக்குப் பீதியூட்டும் நடவடிக்கை என்றும்,இதனால் வர்த்தகர்கள் பொருட்களைப் பதுக்குகிறார்கள் என்றும் ஒரு விமர்சனம் வருகிறது. ஆனால் இதுவிடயத்தில் ரணில் விக்கிரமசிங்கவிடம் வேறு உள்நோக்கங்கள் இருப்பதாக தெரிகிறது.நாட்டின் நிலைமையை வெளிப்படையாக செய்வதன்மூலம் மக்களை அவர் நெருக்கடிக்கு தயார்படுத்துகிறார்.மக்களை உஷாராக இருக்குமாறு எச்சரிக்கிறார்.அதேசமயம் இந்த நெருக்கடிகளுக்குத் தான் பொறுப்பில்லை என்பதையும் மறைமுகமாக உணர்த்தப்பார்க்கிறார்.அவர் கூறுவது போல விடயங்கள் நடக்கும்பொழுது அவர் உண்மையைத்தான் சொன்னார்,எதையும் மறைக்கவில்லை என்ற உணர்வு மக்கள் மத்தியில் பரவும். இது தன்னைப் பலப்படுத்த உதவும் என்று அவர் நம்புகிறாரா? வியட்நாம் விடுதலைப் போராட்டத்தின் தலைவர் கோசிமின் கூறிய“மக்களிடம் செல்லுங்கள்,மக்களுக்கு உண்மையைச் சொல்லுங்கள், மக்கள் உங்களுக்கு வெற்றியை பெற்றுத்தருவார்கள்”என்ற மேற்கோளை ரணில் எப்படி விளங்கி வைத்திருக்கிறார்? அவர் பிரதமராக வந்தபின் நாட்டுக்கு உள்ளேயும் நாட்டுக்கு வெளியேயும் நம்பிக்கைகளை கட்டியெழுப்ப வேண்டிய ஒருவராகக் காணப்படுகிறார்.நாட்டுக்குள் அவ்வாறு நம்பிக்கைகளை கட்டியெழுப்பினாரோ இல்லையோ நாட்டுக்கு வெளியே படிப்படியாக நம்பிக்கைகளைக் கட்டியெழுப்பி வருகிறார் என்பது உண்மை. ரூபாயை மிதக்க விட்டமை,சில பொருட்களுக்கான வரியை அதிகரித்தமை,வட்டி விகிதத்தைக் கூட்டியமை,விலைக் கட்டுப்பாட்டை நீக்கியமை,அரசு செலவினங்களை குறைத்தமை,சில அமைச்சுக்களின் செயலர்களாக இருந்த படைத்துறை பிரதானிகளின் இடத்துக்கு சிவில் அதிகாரிகளை நியமித்தமை,அமெரிக்காவினால் பயணத்தடை விதிக்கப்பட்ட சவேந்திர சில்வாவின் பதவியை மாற்றியமை,ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை இடைநிறுத்தி,குற்றம் சாட்டப்பட்ட சிலரை மீண்டும் கைதுசெய்தமை,பசில் ராஜபக்சவை நாடாளுமன்றத்திலிருந்து அகற்றியமை.போன்ற மாற்றங்களோடு, முக்கியமாக ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் விதத்தில் 21ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டுவரும் ஏற்பாடுகளையும் முன்னெடுத்து வருகிறார். மேற்கண்ட மாற்றங்களின்மூலம் நாட்டின் நீதித்துறை சுயாதீனமாக இயங்குகிறது என்ற ஒரு தோற்றத்தையும்,நாட்டில் ராணுவமய நீக்கம் நிகழ்கிறது என்ற ஒரு தோற்றத்தையும்,ராஜபக்சவின் அதிகாரம் குறைக்கப்படுகிறது என்று ஒரு தோற்றத்தையும் கட்டியெழுப்புவதே கோத்தா+ரணில் கூட்டின் நோக்கமாகும்.அப்படி ஒரு தோற்றம் கட்டியெழுப்பப்பட்டால் மேற்கு நாடுகளையும் ஐஎம்எப் போன்ற பன்னாட்டு நிறுவனங்களையும் கவரலாம் என்று ரணில் அரசாங்கம் சிந்திக்கிறது. ஒருபுறம் இந்தியா நாட்டுக்கு சேலைன் ஏற்றிக்கொண்டிருக்கிறது. இந்தியா திட்டமிட்டு சிறுகச்சிறுக உதவிகளைச் செய்துவருகிறது. உடனடியாக பெருமெடுப்பில் உதவிகளைச் செய்யாமல்,சேலைன் ஏற்றுவது போல துளித்துளியாக இந்திய உதவிகள் கிடைக்கின்றன. இதன்மூலம் இந்தியா தனது அருமையை உணர்த்தமுற்படுகிறது. அதேசமயம்,பெருமெடுப்பிலான உதவிகள் அடுத்தடுத்த மாதங்களில் ஐ.எம்.எப்பிடமிருந்து கிடைக்கலாம் என்று ரணில் விக்ரமசிங்க எதிர்பார்க்கிறார். குறிப்பாக 21ஆவது திருத்தத்தின்மூலம் ஐ.எம்.எப்,மேற்கு நாடுகள்,எதிர்க்கட்சிகள்,காலிமுகத்திடலில் போராடிக் கொண்டிருப்பவர்கள்.ஆகிய நான்கு தரப்புக்களையும் திருப்திப்படுத்தலாம் என்று கோத்தா+ரணில் கூட்டு சிந்திக்கின்றது. ஐஎம்எப், காலிமுகத்திடலில் போராடிக் கொண்டிருப்பவர்கள்,மேற்கு நாடுகள் போன்றன ராஜபக்சவை அதிகாரத்திலிருந்து அகற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.ஆனால் கோத்தா+ரணில் கூட்டு அதற்கு உடனடியாகத் தயாரில்லை.கோட்டாபயவின் அதிகாரங்களைக் குறைத்துவிட்டு அவரைத் தொடர்ந்தும் பதவியில் வைத்திருப்பதே அவர்களுடைய உள் நோக்கம். கோட்டாபய பதவி விலகத் தயார் இல்லை என்பதைத்தான் அண்மையில் அவர் அமெரிக்காவின் அவர் அமெரிக்காவின் ப்ளூம்பேர்க் (Bloomberg) செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய செவ்வி காட்டுகிறது. “தோற்றுப்போன ஜனாதிபதி என்ற பெயருடன் விலகிச் செல்ல முடியாது”என்று அவர் கூறியிருக்கிறார் (Bloomberg) செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய செவ்வி காட்டுகிறது.”தோற்றுப்போன ஜனாதிபதி என்ற பெயருடன் விலகிச் செல்ல முடியாது”என்று அவர் கூறியிருக்கிறார். அதாவது தான் இப்பொழுது தோற்றுப் போயிருக்கிறார் என்பதனை அவர் ஒப்புக்கொள்கிறார்.யுத்த வெற்றியை முதலீடாகக் கொண்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற ஒரு குடும்பத்தின் பிரதிநிதி அவர். யுத்த வெற்றியை ஒரு குடும்பச் சொத்தாக மாறிய ராஜபக்சக்கள், அவர்களுக்கு முன்னிருந்த எல்லாத் தலைவர்களும் செய்த தவறுகளின் விளைவாக வந்த திரட்டப்பட்ட தோல்வியை சுமக்க வேண்டி வந்தமை என்பது இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் ஒரு நகைமுரண்தான்.நாட்டின் பொருளாதாரத் தோல்விகளுக்கு ராஜபக்சக்கள் மட்டும் பொறுப்பில்லை.ரணிலும் உட்பட இனப்பிரச்சினையை படைப் பலத்தின்மூலம் தீர்க்க முற்பட்ட எல்லாத் தலைவர்களுமே பொறுப்புத்தான்.இவர்கள் எல்லாருடைய தொடர் தோல்விகளின் திரட்டப்பட்ட விளைவுதான் கோத்தாபயவின் தலையில் வந்து பொறிந்தது. ஆனால் அவர் வெற்றி பெற்றவராகப் பதவி விலகுவாரா என்பது சந்தேகமே. ஏனென்றால் அவர் இனிப் பெறக்கூடிய எல்லா வெற்றிகளும் ரணில் விக்கிரமசிங்கவின் கணக்கில்தான் சேர்க்கப்படும். கோத்தா+ரணில் கூட்டு ஒர் அசுத்தக் கூட்டு என்று யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.அது ஒரு தந்திரக் கூட்டு. தோல்வியின் விளிம்பில் சிங்களத் தலைவர்கள் கட்சி பேதங்களைக் கடந்து எப்படி ஒருவர் மற்றவரைப் பாதுகாப்பார்கள் என்பதற்கு அதுவோர் ஆகப் பிந்திய உதாரணம். https://globaltamilnews.net/2022/177549
  17. காலிமுகத் திடலில் முள்ளி வாய்க்கால் கஞ்சி – நிலாந்தன். May 29, 2022 12ஆண்டுகளாக எந்தக் காலிமுகத்திடலில் யுத்தவெற்றி கொண்டாடப்பட்டத்தோ, அதே காலிமுகத்திடலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரப்பட்டிருக்கிறது. எந்த காலிமுகத்திடலில் கடந்த 12 ஆண்டுகளாக பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு, படை அணிவகுப்புடன் யுத்த வெற்றிக் கோஷங்கள் ஒலிக்கப்பட்டனவோ, அதே காலிமுகத்திடலில் போரின் இறுதிக்கட்டத்தில் இறந்து போனவர்கள் நினைவு கூரப்பட்டார்கள். இது ஒரு அடிப்படை பண்பு மாற்றத்தின் தொடக்கம். 12 ஆண்டுகளாக மே18 எனப்படுவது காலிமுகத்திடலில் படைத்துறைப் பரிமாணத்தோடுதான் நினைவு கூரப்பட்டது.அது யுத்தவெற்றி வாதத்தின் வெற்றி விழாவாக கொண்டாடப்பட்டது.ஆனால் கடந்த மே 18 அன்று அது ஒப்பீட்டளவில் சிவில் தன்மைமிக்க ஒரு நிகழ்வாக அனுஷ்டிக்கப்பட்டது என்பது ஒரு முக்கியமான பெயர்ச்சி.முள்ளிவாய்க்கால் கஞ்சியை அங்கே சமைத்துப் பகிர்ந்தமை என்பது, கொல்லப்பட்ட மக்களை,அந்த மக்களின் துயரத்தை நினைவுகூர்ந்தமைதான். அது படைத்துறை பரிமாணம் அற்றது.சிவில் பரிமாணத்தைக் கொண்டது. பாதிக்கப்பட்ட நிராயுதபாணிகளான மக்களின் உணர்வுகளை மதிக்கும் ஒரு நிகழ்வு.நிராயுதபாணிகளான மக்கள் அருந்திய ஓர் உணவை சமைத்துப் பகிர்ந்தமை வரவேற்கத்தக்கது.அது ஒரு மாற்றம். அது ஒரு தொடக்கம். ஆனால் அந்த மாற்றத்தில் தமிழ் மக்களுக்கு சில அடிப்படைக் கேள்விகள் உண்டு. அங்கே நினைவு கூர்ந்த போது பின்னணியில் காணப்பட்ட பதாகையில் போரில் “இறந்தவர்களை” நினைவுகூர்வது என்று எழுதப்பட்டிருந்தது.அந்த வார்த்தைதான் இங்கே பிரச்சினை.வன்னி கிழக்கில் தமிழ் மக்கள் தாமாக இறக்கவில்லை.அதில் பெரும்பாலானவை இயற்கை மரணங்கள் அல்ல. அவர்கள் கொல்லப்பட்டார்கள்.அவர்களைக் கொன்றது போரும் போரின் விளைவுகளும்தான்.எனவே முள்ளிவாய்க்காலை நினைவுகூர்வது என்பது கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்வதுதான். அதை இன்னும் கூர்மையாகச் சொன்னால் ஓர் இனப்படுகொலைக் களத்தில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்வது.ஆனால் காலிமுகத்திடலில் அவ்வாறு கொல்லப்பட்டவர்கள் என்ற வார்த்தை இருக்கவில்லை. அவ்வாறு இனப்படுகொலை என்று கூறுவதில் காலிமுகத்திடலில் குடியிருப்பவர்களுக்கு நெருக்கடிகள் இருக்கலாம். அவ்வாறு இனப்படுகொலை என்று அழைத்தால் அது நேரடியாக படைத்தரப்போடும், சிங்கள-பௌத்த யுத்த வெற்றிவாதத்தோடும் நேரடியாக மோதுவதாக அமையும். அதை அவர்கள் தவிர்க்க விரும்பியிருக்கலாம். ஆனால் தமிழ்மக்கள் அதை ஏற்றுக் கொள்ள முடியாது.ஏனென்றால் கடைசிக் கட்டப்போரில் இறந்தவர்களை நினைவு கூர்வது என்று பொதுவாக வகைப்படுத்தும் போது அதில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், படைத்தரப்பு ஆகிய மூன்று தரப்புகளையும் நினைவு கூர்வதாக அமையும். ஆனால் தமிழ்மக்கள் நினைவுகூர்வது இனப்படுகொலையை.எனவே அங்கே படைத்தரப்பை நினைவுகூர முடியாது. இதை இன்னும் தெளிவாகச் சொன்னால்,தமிழ்மக்கள் நினைவுகூர்வது ஓர் ஒடுக்குமுறையை.எனவே ஒடுக்கப்படும் மக்கள் ஒடுக்கும் தரப்புக்கும் சேர்த்து நினைவுகூர்வது சாத்தியமில்லை.இனப்படுகொலையை நினைவுகூர்வது என்பது இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெறுவதற்கான ஒரு போராட்டத்தின் பிரிக்கப்படவியலாத பகுதிதான். அந்த நீதி இனப்படுகொலையாளிகளுக்கு எதிரானது.ஆயின் யாருக்கு எதிராக நீதியைக் கேட்க்கிறார்களோ அவர்களையும் எப்படி நினைவு கூர்வது? இவ்வாறு கூறுவதன்மூலம் காலிமுகத்திடலில் போராடிக்கொண்டிருக்கும் சிங்கள இளம் தலைமுறையை ஒடுக்குமுறையின் பிரதிநிதிகளாக இக்கட்டுரை வர்ணிக்கவில்லை. அதில் ஒடுக்கு முறையை ஏற்றுக் கொள்ளாத தரப்புகளும் உண்டு. ஏற்கனவே ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்த தரப்புக்களும் உண்டு.எனவே எல்லாவற்றையும் ஒரு பெட்டிக்குள் போட்டு பார்க்க தேவையில்லை.அதற்காக இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்களாக வர்ணிக்க முடியாது. அதேசமயம்,காலிமுகத்திடலில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தின் தொடக்கத்தை தமிழ் மக்கள் உதாசீனம் செய்யத் தேவையில்லை.ஒடுக்கும் தரப்பையும் ஒடுக்கப்படும் தரப்பையும் ஒன்றாக நினைவு கூர்வதில் இருக்கும் தர்க்க வழுவை கோட்டாகோ கமவிலிருப்பவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். ஒடுக்குமுறை இல்லாத ஒரு பின்னணியில்,ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் ஒரு பின்னணியில் வேண்டுமானால் பொத்தாம் பொதுவாக போரில் இறந்த அனைவரையும் நினைவுகூரலாம். தமிழ்த் தரப்பு இதனை கோட்டா கம கிராமத்துக்கு விளங்கப்படுத்த வேண்டும். அக்கிராமத்தில் இருக்கும் சிங்கள இளையோர் சிங்கள தேசியவாதத்தை பிரதிநிதித்துவபடுத்துவதில் தவறில்லை.அவர்கள் தமிழ்தேசியவாதிகளாக மாற வேண்டும் என்று எதிர்பார்ப்பது அப்பாவித்தனமானது.அவர்கள் சிங்கள தேசியவாதிகளாகவே இருக்கட்டும்.அதுதான் சரி.உதாரணமாக மனோ கணேசன் கொழும்புமைய அரசியலைச் செய்பவர்.அங்கே அவர் இனவாதத்தின் சேவகனாக இல்லாமல் இருந்தாலே போதும்.அவர் இனவாதத்துக்கு எதிராகக் குரல் கொடுத்தால் அது மகத்தானதே. அதேபோல திரைப்படக் கலைஞர் பிரசன்ன விதானகே ஒரு சிங்கள இனவாதியாக இல்லாமல் இருந்தாலே போதும்.அவர் இனவாதத்துக்கு எதிராகப் படம் தயாரிப்பாராக இருந்தால் அது மகத்தானது.அவர் தமிழ் தேசியவாதியாக மாறத் தேவையில்லை.யாரும் தங்களுடைய தேசிய இருப்பை இழக்கத் தேவையில்லை. இழக்கவும் கூடாது. ஏனென்றால், தமிழ் மக்கள் தமது தேசிய இருப்பை இழக்கக்கூடாது என்பதற்காகத்தான் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அதேசமயம் தமிழ் மக்களுக்கும் அவ்வாறு ஒரு தேசிய இருப்பு உண்டு என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு தேசமாக தமிழ் மக்களுக்குள்ள சுயநிர்ணய உரிமையை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.அவ்வாறு ஏற்றுக்கொள்வார்களாக இருந்தால்,தமிழ்த் தேசமும் சிங்கள தேசமும் முஸ்லிம்களும் மலையகத் தமிழர்களும் இணைந்து இச்சிறிய தீவுக்குள் பல்லினத் தன்மை மிக்க ஒர் அரசுக் கட்டமைப்பை உருவாக்கலாம். அதுதான் பொருத்தமானது. தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ளும் சிங்கள தேசியம் முற்போக்கானது. அதேசமயம் தமிழ் மக்களை ஒரு தேசமாக ஏற்றுக்கொள்ள மறுக்கும் சிங்கள தேசியம் இனவாதப்பண்பு மிக்கது. அது தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை மறப்பது.அதனால் அது பிற்போக்கானது.எனவே சிங்கள தேசியவாதத்தின் முற்போக்கான கூறுகளோடு தமிழ்மக்கள் சேர்ந்து வேலை செய்யலாம். காலிமுகத்திடலில் அதற்கான ஒரு வெளி திறக்கப்படுமாக இருந்தால் தமிழ்மக்கள் அங்கே உரையாட வேண்டும் இந்த விளக்கத்தின் அடிப்படையில்தான் காலிமுகத்திடலில் நிகழ்ந்த நினைவு கூர்தலைத் தமிழ்மக்கள் பார்க்க வேண்டும்.காலிமுகத்திடலில் உள்ளவர்களோடு இந்த விளக்கத்தின் அடிப்படையில் உரையாடலாம். ஆனால் தமிழ்த்தரப்பில் ஒரு பகுதியினர் அவ்வாறான உரையாடல்களுக்கு தயாரில்லை என்று தெரிகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையை மையமாகக் கொண்டியங்கும் “புழுதி” என்ற செயற்பாட்டு அமைப்பு ஒரு மெய்நிகர் சந்திப்பை ஒழுங்குபடுத்தியது. அதில் மேற்படி கருத்தை வலியுறுத்தி இக்கட்டுரையாளர் பேசியபோது, யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த ஒரு நபர் அவ்வாறு சிங்களத்தரப்புடன் உரையாட முடியாது என்று வாதிட்டார். மேற்சொன்ன விளக்கத்தை அவரால் உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை என்றும் தெரிந்தது.அவர் கொழும்பை மையமாகக் கொண்டியங்கும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்துக்காக யாழ்ப்பாணத்தில் வேலை செய்கிறார். அதேசமயம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளராகவும் காணப்படுகிறார். அவர் அவ்வாறு கதைத்த பின் தேசிய மீனவர் ஒத்துழைப்பு சங்கத்தின் வடகிழக்கு மாவட்டங்களுக்கான இணைப்பாளர் யேசுதாஸ் தனது கருத்துக்களை தெரிவித்தார். அவர் அதில் காலிமுகத்திடலில் நினைவு கூர்தலை ஒழுங்குபடுத்துவதில் காணப்பட்ட சவால்களை சுட்டிக்காட்டினார்.அதேசமயம் தென்னிலங்கையில் சிங்களமக்கள் மத்தியில் ஏற்படும் சிறு மாற்றங்களை வடக்கு கிழக்கில் இருப்பவர்கள் எதிர்மறையாக நோக்குகிறார்கள்,அவற்றை பரிசீலிக்க அவர்கள் தயாரில்லை என்ற பொருள்படவும் அவர் கருத்து தெரிவித்தார். ஒரு தனிப்பட்ட உரையாடலின்போது அவர் மேலும் விவரங்களைக் கூறினார். காலி வீதிக்கு அருகே கோட்டா கோ கம கிராமத்தின் முன்பகுதியில் நினைவு கூர்வதற்கு அங்கிருந்தவர்கள் தயாராக இருக்கவில்லை என்றும், அதனால்தான் கடலுக்கு அருகே ஒரு ஒதுக்கமான இடத்தில் நினைவுகூர வேண்டியிருந்தது என்றும் அவர் கூறினார்.கோட்டா கோகம கிராமத்தில் இருந்த எல்லா செயற்பாட்டாளர்களும் அதில் பங்குபற்றவில்லை என்றும், குறிப்பிட்ட சிறு தொகையினர்தான் பங்குபற்றினார்கள் என்றும் குறிப்பிட்டார். அந்த மெய்நிகர் சந்திப்பில் அவர் தெரிவித்த கருத்துக்கள் அவர் சார்ந்த தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்ப்பாணப் பிரிவைச் சேர்ந்தவரின் கருத்துக்களுக்கு எதிராகக் காணப்பட்டன. தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் உட்பட கொழும்பை மையமாகக் கொண்டியங்கும் ஆசிரிய தொழிற்சங்கமான இலங்கை ஆசிரிய சங்கத்தைச் சேர்ந்த வடபகுதி செயற்பாட்டாளர்கள் சிலரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு சேர்ந்து செயல்படுகிறார்கள். முன்னணி” ஒரு நாடு இரு தேசம்” என்ற கொள்கையை கொண்டது. இலங்கை ஆசிரியர் சங்கமும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்பவை என்ற அடிப்படையில் அதன் உறுப்பினர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து செயற்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள். அது சரி. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ளும் சிங்கள தேசியவாதிகளுடன் தமிழ்மக்கள் இணைந்து செயல்படலாம். தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளும் சிங்கள முற்போக்கு தேசியவாதிகள் நினைவுகூர்தலை அதன் சரியான அர்த்தத்தில் அனுஷ்டிப்பார்கள். காலிமுகத்திடலில் கிராமம் அமைத்துப் போராடும் தரப்புகளுக்கும் அவர்கள் அதனை கற்றுக் கொடுக்க வேண்டும். https://globaltamilnews.net/2022/177155
  18. இலங்கைத்தீவு ஒரு தேசமாக இருப்பதில் தோல்வி அடையுமா? நிலாந்தன்! May 22, 2022 ரணில் விக்ரமசிங்க யாருடைய பிரதமர் ? அவர் கோத்தபாயவின் பிரதமரா ?அல்லது ஆளுங்கட்சியின் பிரதமரா ?அல்லது எதிர்க்கட்சிகளின் பிரதமரா? சிலர் அவரை அமெரிக்காவின் பிரதமர் என்று சொன்னார்கள். மேற்கத்திய நிதி முகவர் அமைப்புக்களின் பிரதமர் என்று சொன்னார்கள். காலிமுகத்திடலில் போராடும் புதிய தலைமுறை அவரை டீல்களின் பிரதமர் என்று சொன்னது. முன்னிலை சோசலிசக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் அவரை கிழட்டுக் கோழி என்று சொன்னார். ஆனால் ஒரே ஒரு ஆளாக உள்ளே வந்தவர்,இப்பொழுது பெரும்பாலானவர்களின் தவிர்க்கப்பட முடியாத தெரிவாக மாறியுள்ளார். நாட்டின் நிதி நெருக்கடியும் அதன் விளைவாக ஏற்பட்ட அரசியல் நெருக்கடியும் அவரை தவிர்க்க முடியாதவராக மாற்றி உள்ளனவா? அவர் மந்திரவாதி அல்ல. மந்திர தந்திரங்களில் நாட்டமுடையவரும் அல்ல. ராஜபக்ச குடும்பத்தைப் போல ஞானாக்காக்களின் பின் செல்பவரோ, அல்லது மந்திரித்த தாயத்துக்களை கைகளில் அணிந்திருப்பவரோ வைத்திருப்பவரோ அல்ல. அவர் மந்திரத்தை விடவும் தந்திரத்தை நம்புபவர். அவர் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டதும் பங்குச்சந்தை மாற்றத்தை காட்டத் தொடங்கியது. டொலரின் பெறுமதி குறைந்தது. மேற்கு நாடுகள் உதவிகளை அள்ளி வழங்கின. இதனால் ஒரு திடீர் எதிர்பார்ப்பு அவரை நோக்கி உருவாகியது. அதன் விளைவாக உள்ளூர் சந்தைகளில் பதுக்கப்பட்டிருந்த பொருட்கள் வெளிவந்தன. மூடப்பட்டிருந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வெளிப்படத் தொடங்கியது. முகநூலில் ஒரு நண்பர் எழுதியது போல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் ஊற்றெடுக்க தொடங்கியது. 3 ஆயிரம் வரையிலும் விற்கப்பட்ட சீமெந்து திடீரென்று 1200ரூபாய்க்கு இறங்கியது. இவ்வாறு பதுக்கப்பட்ட பொருட்கள் வெளிப்படத் தொடங்கியதும் அவர் மீதான நம்பிக்கை மேலும் அதிகரித்தது. நாடாளுமன்றத்தில் அவர் தெரிவு செய்யப்பட்ட விதத்தை, அவருடைய தெரிவை எதிர்த்த கட்சிகள் பெரும்பாலானவை படிப்படியாக அவரை எதிர்ப்பதில்லை என்ற முடிவை எடுக்கத் தொடங்கின. ஏனென்றால் ரணிலுக்கு எதிராக வாக்களித்தால் மக்களின் எதிர்ப்பை வாங்கிக்கட்ட வேண்டியிருக்கும் என்ற பயம் அவர்களுக்கு. கடந்த 9 ஆம் திகதியும் 10 ஆம் திகதியும் மக்களின் கோபம் எப்படியிருக்கும் என்பதை அனுபவித்தவர்கள் அவர்கள். இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேசசபைத் தலைவரும் மக்களால் அடித்துக் கொல்லப்படும் அளவுக்கு நிலைமைகள் பயங்கரமாக இருந்த நாட்கள் அவை. எனவே முதலில் பத்திரமாக சொந்த தேர்தல் தொகுதிக்குப் போகவேண்டுமென்றால் இப்போதைக்கு ரணிலை எதிர்ப்பதில்லை என்று பெரும்பாலான சிங்கள கட்சிகள் முடிவெடுத்தன. எனினும் பிரதி சபாநாயகர் தெரிவில் ரணிலுக்குள்ள வரையறைகளை ஆளுங்கட்சி உணர்த்தியிருக்கிறது. ரணில் பிரதமராக நியமிக்கப்பட்டதை பேராயர் மல்கம் ரஞ்சித் ஏற்றுக்கொள்ளவில்லை. மகா நாயக்கர்களின் கருத்தும் அதுதான் என்று அவர் சொன்னார். சகல மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சகல மக்களுக்கும் நம்பிக்கை ஊட்டக்கூடிய ஒருவரை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று பேராயர் போர்க்கொடி எழுப்பினார். அப்படி ஒருவரை நாடாளுமன்றத்தில் கண்டுபிடிப்பது கடினம் என்று பேராயருக்கும் தெரியும். தவிர நாடாளுமன்றத்துக்கு வெளியே அப்படிப்பட்ட ஒருவரைத் தேட பேராயராலும் முடியவில்லை. மகாநாயக்கர்களாலும் முடியவில்லை. இந்த வெற்றிடத்தை தந்திரமாகப் பயன்படுத்தி ரணிலை கோத்தபாய தெரிவு செய்தார். யாப்பின் பிரகாரம் தனக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி கோத்தாபய ரணிலைத் தெரிவு செய்தார். அதாவது யாப்பின்படி ரணில் தெரிவு செய்யப்பட்டார். இந்த இடத்தில் ஒரு முக்கியமான விடயத்தை நாம் கவனிக்கவேண்டும். கோட்டாவை வீட்டுக்குப் போ என்று கேட்டு ஒரு புதிய தலைமுறை போராடுகிறது. ஆனால் யாப்பின்படி அவரை வெளியே அனுப்ப முடியாதுள்ளது. அதேசமயம் மஹிந்த பதவி விலகியது யாப்பின்படி அல்ல. யாப்பின்படி அவர் பலமாகக் காணப்பட்டார். ஆனால் யாப்புக்கு வெளியே நடந்த மக்கள் எழுச்சிகள் அவரைப் பதவிவிலகத் தூண்டின. அந்த மக்கள் எழுச்சிகளுக்கு எதிர்க்கட்சிகள் தலைமை தாங்கியிருந்திருந்தால் கோட்டோவையும் வீட்டுக்கு அனுப்பியிருந்திருக்கலாம். ஆனால் ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை தாங்க எந்த ஒரு சிங்களக் கட்சியாலும் முடியவில்லை. சஜித் பிரேமதாசவும் ஜேவிபியும் போராடும் தரப்புகளின் கோஷங்களை ஏற்றுக் கொள்வதன்மூலம் தாங்கள் அவர்களின் பக்கம் என்று காட்டினார்கள். ஆனால் போராடும் மக்களுக்கு தலைமை தாங்க அவர்களால் முடியவில்லை. இதுதான் அடிப்படைப் பிரச்சினை. யாப்பை மீறிச் செல்லத் துணிச்சலற்ற எதிர் கட்சிகளின் மத்தியில் யாப்பின் பிரகாரம் ஜனாதிபதி ரணிலைத் தெரிவு செய்தார். இதை இன்னும் சரியான வார்த்தைகளில் சொன்னால் காலிமுகத்திடலில் போராடும் புதிய தலைமுறையும் தெருக்களில் இறங்கி அரசியல்வாதிகளுக்கு பாடம் படிப்பித்த மக்களும், எதிர்க்கட்சிகளும் போராடியதால் கிடைத்த கனிகளை ரணில் விக்கிரமசிங்க சுவீகரித்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். மிகப் பலவீனமான, உலகின் மிக நூதனமான ஒரு பிரதமராக அவர் தொடக்கத்தில் தோன்றினார். ஆனால் படிப்படியாக தன்னை பலப்படுத்தி வருகிறார். அவர் கடைசியாக இரண்டு தடவைகள் பதவியில் இருந்த போதும் கூட நிலைமை அப்படித்தான் இருந்தது. அவர் உள்நாட்டில் மிகப் பலவீனமான தலைவராகவும் வெளியுலகில் மிகப் பலமான ஒரு தலைவராகவும் காணப்பட்டார். அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையும் தெரிவிக்கும் தகவல்களும் ஒப்பீட்டளவில் வெளிப்படையானவை. அவர் மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கத் தயாரில்லை என்று தெரிகிறது. இந்தச் சோதனையில் அவர் வெற்றி பெற்றால் அவர் ஒரே கல்லில் மூன்று கனிகளை வீழ்த்துவார். முதலாவது தன் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் -அதாவது அவரைப் பொறுத்தவரை இது கடைசி ஓவர் -இந்த கடைசி ஓவரில் ஆவது அவர் வெற்றி பெற்ற ஒரு தலைவராக ஓய்வு பெறலாம். மிக நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் நாட்டை மீட்டெடுத்தவர் என்ற புகழுடன் அவர் ஓய்வு பெறலாம். இரண்டாவது தனது கட்சியை பலப்படுத்தலாம். மூன்றாவது தனது உட்கட்சி எதிரிகளை தோற்கடிக்கலாம். அதேசமயம் ரணிலை நியமித்ததன் மூலம் கோத்தபாய முதலாவதாக தன்னைத் தற்காத்துக் கொண்டார். இரண்டாவதாக ஏனைய ராஜபக்சக்களையும் பாதுகாத்துக் கொண்டார். மூன்றாவதாக மக்கள் எதிர்ப்பை ஒப்பீட்டளவில் தணித்திருக்கிறார். காலிமுகத்திடலில் போராடும் புதிய தலைமுறை அவரை வீட்டுக்கு போ என்று கேட்கிறது. ஆனால் இன்றுவரை அவர் வீட்டுக்கு போகவில்லை. அதேசமயம் ரணிலை நியமித்தன்மூலம் அவர் நாட்டின் கவனத்தையும் வெளி உலகின் கவனத்தையும் ரணிலின் மீது குவியச் செய்து விட்டார். ரணிலின் மறைவில் அவர் தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொண்டார். இப்படிப் பார்த்தால் ரணிலை நியமித்ததன்மூலம் கோத்தபாயவும் ஒரு கட்டம் வரை வெற்றி பெற்றிருக்கிறார். ஆளும் கட்சியும் வெற்றி பெற்றிருக்கிறது. ரணிலும் வெற்றி பெற்றிருக்கிறார். அதாவது சிங்களத் தலைவர்கள் ஏதோ ஒரு விதத்தில் தங்களையும் யாப்பையும் சிங்கள பௌத்த அரசு கட்டமைப்பையும் அமைச்சுப் பதவிகளையும் பாதுகாத்திருக்கிறார்கள் என்று பொருள். ரணிலை விட்டால் வேறு யாரும் இல்லை என்ற ஒரு வெற்றிடம் ஏற்படுவதற்கு எதிர்க்கட்சிகளும் காரணம். பேராயர் மல்கம் ரஞ்சித் மகாநாயக்கர் போன்ற மதத் தலைவர்களும் காரணம். மதத்தலைவர்கள் நீதியின் மீது பசி தாகம் உடையவர்களாக இருந்தால் அரசியல்வாதிகளும் மக்களுக்கு பொறுப்புக் கூறுவார்கள். இலங்கைத்தீவின் பௌத்த மதம் ஓர் அரச மதம். யாப்பின்படி ஏனைய மதங்களை விட முதன்மை வகிக்கும் பௌத்தமதம் அதற்க்கு முழுப் பொறுப்புக் கூறவேண்டும். ஈஸ்டர் குண்டு வெடிப்போடு பேராயர் மல்கம் ரஞ்சித்துக்கு ஞானக்கண் திறந்திருக்கிறது. இலங்கைத்தீவின் கத்தோலிக்கத் திருச்சபை ஒப்பீட்டளவில் அதிக இன முரண்பாட்டை பிரதிபலித்தது. கடந்த வாரம் கூட வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் நடந்தது இனப்படுகொலை என்று சொல்லியிருக்கிறது. ஆனால் பேராயர் மல்கம் ரஞ்சித் கூறுவாரா? இவ்வாறு மதத்தலைவர்கள், குடிமக்கள் சமூகங்கள் போன்றவற்றால் ஒரு பொருத்தமான தலைவரை நாடாளுமன்றத்துக்கு வெளியே கண்டுபிடிக்க முடியாத ஒரு வெற்றிடத்தில்தான் ரணிலுக்கு லொத்தர் விழுந்தது. “ரணில்விக்கிரமசிங்க தோல்வியடைந்தால் இலங்கையும் தோல்வியடையும்- இந்த தோல்வி அடுத்த சில ஆண்டுகளிற்கான தோல்வியாகயிராது மாறாக ஒரு தேசமாக இலங்கையின் இருத்தலிற்கான தோல்வியாக இது காணப்படும்” என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி டபில்யூ ஏ விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். தமிழ் மக்களைப் பொறுத்தவரை இலங்கைத்தீவு எப்பொழுதோ ஒரு தேசமாக இருப்பதில் தோல்வியடைந்து விட்டது. அதை ஒரு தேசமாகக் கட்டியெழுப்புவது என்பது சிங்கள பௌத்த தேசமாகக் கட்டியெழுப்புவது அல்ல. அது,தமிழ் மக்களை ஒரு தேசமாக அங்கீகரிப்பதுதான். அந்த அடிப்படையில், பல்லினத் தன்மை மிக்க; பல் சமயப் பண்பு மிக்க; பல்மொழி பண்புமிக்க; ஒரு தேசமாகக் இக்குட்டித்தீவைக் கட்டியெழுப்புவதுதான். தனது கடைசி ஓவரிலாவது ரணில் அதைச் செய்வாரா? அல்லது இலங்கைத்தீவு ஒரு தேசமாக இருப்பதில் தோல்வியடையுமா? https://globaltamilnews.net/2022/176989
  19. கோட்டா கோ கமவும் மே பதினெட்டும்! நிலாந்தன். May 1, 2022 கோட்டா கோகம கிராமத்தில் யுத்த வெற்றி வீரர்களுக்கும் ஒரு குடில் ஒதுக்கப்பட்டமை தொடர்பாக நான் எழுதிய விமர்சனத்துக்கு நண்பர் ஒருவர் பதிலளித்தார். அரசியல் சிவில்,சமூக செயற்பாட்டாளரான அவர் அண்மையில் கோட்டாகோகம கிராமத்திற்கு விஜயம் செய்திருந்தார். அவர் தரும் தகவல்களின்படி ரணவிரு குடிலில் அமர்ந்திருக்கும் படைவீரர்கள் போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்தே அதில் இணைந்து செயற்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் யுத்தவெற்றியை ஒரு அரசியல் முதலீடாக முன்னெடுக்கும் ராஜபக்சக்களின் யுத்த வெற்றிவாதத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் என்றும் அவர்களை யுத்த வெற்றி வாதத்திற்கூடாகப் பார்க்கத் தேவையில்லை என்றும் நண்பர் கூறினார். எனினும்,ரணவிரு குடிலை அக்கிராமத்தில் உருவாக்க காரணம் அரசாங்கம் முன்னெடுக்ககூடிய முறியடிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கும்தான் என்ற ஒரு விளக்கம் உண்டு. இலங்கை தீவு ஏற்கனவே மூன்று தடவைகள் தன் சொந்த இளையோரின் ரத்தத்தில் குளித்த ஒரு நாடு. ஜே.வி.பியின் இரண்டு ஆயுதப் போராட்டங்கள், தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் என்று கடந்த ஒரு நூற்றாண்டுக்குள் இலங்கைத்தீவு மூன்று தடவைகள் தனது சொந்த மக்களின் ரத்தத்தில் குளித்த ஒரு நாடு. எனவே இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களையும் குறிப்பாக பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழந்த இளைய தலைமுறையின் ஆர்ப்பாட்டங்களை அரசாங்கம் இரும்புக்கரம் கொண்டு நசுக்காது என்று நூறுவீதம் நிச்சயமாகக் கூற முடியாது. ஆனால், அவ்வாறு நசுக்குவது என்றால் அதை தொடக்கத்திலேயே செய்திருந்திருக்க வேண்டும். இப்பொழுது அது உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் ஒன்றாக மாறியிருக்கும் பின்னணியில்,குறிப்பாக கொழும்பின் மையத்தில், தூதரகங்களின் மத்தியில் அக்கிராமம் அமைந்திருப்பதனால் அதனை இனி இரும்புக்கரம் கொண்டு நசுக்குவது கடினமானதாக இருக்கும் என்றும் ஒரு விளக்கம் உண்டு. எனினும் அரசாங்கத்தின் முறியடிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கு ஒரு தற்காப்பு ஏற்பாடாக கிராமத்தில் குடியிருப்பவர்கள் ரணவிரு குடிலை அங்கு அமைத்திருக்கலாம் என்றும் கருதலாம். தாங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு எதிரானவர்கள் அல்ல தமது போராட்டம் தேசத்துரோகமானது அல்ல என்பதனை அவர்கள் நிரூபிக்க முற்படுகிறார்கள். அவர்கள் கைகளில் சிங்கக் கொடிகளை ஏந்தி வைத்திருப்பதும் அவ்வாறான ஒரு தற்காப்பு உள்நோக்கத்தை கொண்டதா என்ற சந்தேகம் தமிழ்த் தரப்பில் உண்டு. இவ்வாறானதொரு பின்னணியில் கோட்டா கோகம கிராமத்தில் ரணவிரு குடில் உருவாக்கப்பட்ட பின் அங்கே மனிதஉரிமை செயற்பாட்டாளர்களால் காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கான ஒரு குடிலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இது ரணவிரு கிராமத்தை சமன் செய்யும் ஒரு நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது. எதுவாயினும் இப்படிப்பட்ட எல்லா விமர்சனங்களுக்கும் அப்பால் கோட்டா கோகம கிராமத்தில் கூடியிருப்பவர்களோடு தமிழ்த் தரப்பு உரையாட வேண்டும். இப்பொழுது நொந்து போயிருக்கும் படித்த சிங்கள நடுத்தர வர்க்கத்தின் மனசாட்சியை உலுப்பும் விதத்தில் தமிழ்த் தரப்பு விடயங்களைச் சுட்டிக்காட்ட வேண்டும். அதன்மூலம் சிங்களப் பொது உளவியலைக் கூட்டுக் குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்க வேண்டும். அவ்வாறு சிங்களப் பொது உளவியலின் கூட்டுக் குற்றவுணர்ச்சியைத் தூண்டவில்லை என்றால் இலங்கைத் தீவுக்குள் இரண்டு இனங்களும் எந்த ஒரு இணக்கத்துக்கும் போகமுடியாது. எனவே கோட்டா கோகம கிராமத்தோடு தமிழ்த்தரப்பு உரையாட வேண்டும். அதன் பொருள் மெய்மறந்து இணைந்து போராட வேண்டும் என்பதல்ல. முதலில் உரையாட வேண்டும். குறிப்பாக இன்னும் ஒரு வாரத்தில் மே மாதம் தொடங்குகிறது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை அது நினைவு கூர்தலுக்கான மாதம். கடந்த சில ஆண்டுகளாக தமிழ்மக்களின் நினைவுகூரும் கூட்டுரிமை மறக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தென்னிலங்கையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களின் நிலைப்பாடு என்ன? இப்போதுள்ள நிலைமைகளின்படி ஜனாதிபதி வீட்டுக்குப் போகக்கூடிய நிலைமை இன்னமும் தோன்றவில்லை. அதேசமயம் பௌத்த மகா நாயக்கர்களின் வேண்டுகோளை ஏற்று ஜனாதிபதி உருவாக்கக்கூடிய இடைக்கால ஏற்பாட்டில் எதிர்க்கட்சிகள் இணையுமா என்பதும் சந்தேகமே. இந்நிலையில் ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்று கேட்டு காலிமுகத்திடலில் கூடியிருப்பவர்கள் மே மாதம் வருவதற்கு இடையில் வீட்டுக்கு போகக்கூடிய விதத்தில் திருப்திகரமான மாற்றங்கள் ஏற்படுமா என்பது சந்தேகமே. அவ்வாறு அக்கிராமம் மே 18ஆம் திகதியும் அங்கே இருக்குமாக இருந்தால் நினைவுகூர்தல் தொடர்பாக அக்கிராமத்தில் இருப்பவர்கள் தமது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டியிருக்கும். கோட்டா கோ கம கிராமத்தில் நினைவுகூர்வதற்கு இடம் இருக்குமா?அல்லது நினைவுகூர்தல் தொடர்பாக கோட்டா கோகம கிராமத்தில் இருப்பவர்களின் கருத்து என்ன?அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கும் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு என்ன? கடந்த ஆண்டு சஜித் பிரேமதாச நினைவுகூர்தல் தொடர்பாக தமிழ் மக்களுக்கு சாதகமாகக் கருத்துத் தெரிவித்திருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்மக்கள் துப்பாக்கியின் நிழலில்தான் நினைவுகூர முடிகிறது. கடந்த ஆண்டு மட்டக்களப்பில் நினைவுகூர்தலை அனுஷ்டித்தவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு,கடந்த திங்கட்கிழமைதான் விடுவிக்கப்பட்டார்கள் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். எனவே நினைவுகூர்தல் தொடர்பில் கோட்டா கோகம கிராமத்தில் இருப்பவர்களின் தார்மீக நிலைப்பாடு என்ன என்பதனை அறிவது அவசியம். அக்கிராமத்தில் இருப்பவர்கள், மற்றும் அக்கிராமத்தை எதிர்ப்பின் மையமாக கருதுபவர்கள் அனைவரும் தமிழ்மக்களின் நினைவு கூர்தலுக்கான கூட்டுரிமை தொடர்பாக ஒரு நிலைப்பாட்டுக்கு வரவேண்டியிருக்கிறது. அந்நிலைப்பாடு தமிழ் மக்களை அக்கிராமத்தை நோக்கி போவதா இல்லையா என்ற முடிவை எடுக்க உதவக்கூடும்.தென்னிலங்கையில் நிகழும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் விலகி நின்று சாட்சிகளாகக் காணப்படும் தமிழ்மக்களின் மனதை மாற்ற அது உதவக்கூடும். இதுவிடயத்தில் தமிழ் தரப்பிலிருந்து யாராவது கோட்டா கோகம கிராமத்தோடு உரையாடினால் என்ன ? இலங்கைத் தீவில் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்துவது என்றால் அதற்கு தமிழ்,சிங்கள,முஸ்லிம் ஆகிய மூன்று தரப்புக்களும் இணைந்தால்தான் உண்டு. அதைத் தனிய சிங்கள மக்களால் செய்ய முடியாது என்பதைத்தான் 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் உணர்த்தியது. இப்பொழுதும் அடிப்படையான கட்டமைப்பு மாற்றத்துக்கு மூன்று இனங்களும் இணையவேண்டும். ஆனால் அரசாங்கத்துக்கு எதிராக போராடும் பெரும்பாலானவர்கள் ஒரு குடும்பத்தை ஆட்சியில் இருந்து அகற்றினால் எல்லாம் சரியாகிவிடும் என்று கருதுவதாக தெரிகிறது. அவர்கள் தமது எதிர்ப்பு முழுவதையும் ஒரு குடும்பத்தின் மீதே குவிக்கிறார்கள். அதிலும் குறிப்பாக பசில் ராஜபக்ஷவின் மீது முழு வெறுப்பையும் காட்டுகிறார்கள். பசில் ராஜபக்சவை ஒரு காகமாக உருவகித்து அவர் மீது தொடர்ச்சியாக தனிப்பட்ட முறையில் தாக்கி வருகிறார்கள். கடந்த செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சிகள் ஒழுங்குபடுத்திய ஆர்ப்பாட்டத்தில் ஒரு பிரம்மாண்டமான காகச்சிலையை செய்து அதன் கழுத்தில் குரக்கன் சால்வையைக் கட்டி ஊர்வலமாக எடுத்துச் சென்றதைக் காணக்கூடியதாக இருந்தது. பூமிகா ஜெயசிங்க என்ற ஓவியர் காகத்தை குரக்கன் சால்வையோடு கழிப்பறைக் குழிக்குள் வைத்து ஓவியம் வரைந்திருக்கிறார். பெரியவர்கள் தொடக்கம் சிறுகுழந்தைகள் வரையிலும் காகம் என்றால் பஸில் என்று நக்கலடிக்க காணலாம். ஆனால் இங்கு பிரச்சினை ஒரு பசில் ராஜபக்ஷ மட்டுமல்ல. அவர் பத்து வீதம் கொமிஷன் பெற்றதால் மட்டும் நாடு கெட்டுப் போகவில்லை. அல்லது ஏனைய ராஜபக்சக்கள் கொள்ளை அடித்ததால் மட்டும் நாடு கெட்டுப் போகவில்லை. இந்த எல்லா ராஜபக்சக்களும் எப்படி ஒரேயடியாக நாடாளுமன்றத்துக்குள் வந்தார்கள்? என்ற கேள்வியை சிங்களமக்கள் தங்களைத் தாங்களே கேட்கவேண்டும். யுத்தவெற்றிதான் அதற்கு அடிப்படைக் காரணம். தமிழ் மக்களுக்கு எதிராக பெற்ற வெற்றிதான். அதாவது இனவாதம். இனவாதத்தை முதலீடு செய்துதான் ஒரு குடும்பம் ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த குடும்பம் மட்டுமல்ல இதற்கு முன்னரும் கொழும்பை யார் ஆட்சி செய்வது என்பதனை இனவாதம்தான் பெருமளவுக்கு தீர்மானித்திருக்கிறது. அதுதான் இலங்கைத்தீவின் சிங்கள-பௌத்த அரசுக் கட்டமைப்பின் அடிப்படைப் பண்பு. அதை மாற்ற வேண்டும். அதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தயாரா? எதிர்க்கட்சிகள் தயாரா? தமிழ் மக்கள் கேட்கும் மாற்றம் என்பது நாடாளுமன்றத்தில் இப்பொழுது நடப்பது போன்ற அரசியல் சங்கீதக்கதிரை விளையாட்டு அல்ல. அரசாங்கம் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது. பௌத்த மகா நாயக்கர்களின் எச்சரிக்கையையடுத்து ஜனாதிபதி மீண்டும் அவ்வாறான ஒரு சங்கீதக்கதிரை விளையாட்டுக்கு தயாராகி வருகிறார். அதை இன்னும் திருத்தமான வார்த்தைகளில் சொன்னால் இப்போது இருக்கும் யாப்புக்குள், இப்போதுள்ள நாடாளுமன்றத்துக்குள்,என்னதான் மாற்றத்தைச் செய்ய முற்பட்டாலும் அது ஒரு சங்கீதக்கதிரை விளையாட்டாகத்தான் முடியும். எனவே ஆர்ப்பாட்டக்காரர்கள் கேட்க வேண்டியது அடிப்படையான கட்டமைப்பு மாற்றத்தை. அதுதான் அவர்களுக்கும் நிரந்தர மீட்சியைக் கொடுக்கும். அதைத்தான் தமிழ்மக்களும் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக கேட்டுவருகிறார்கள். கோட்டா கோகம கிராமத்தில் தேசியகீதம் தமிழில் இசைக்கப்பட்டது. ஒரு நல்ல சகுனம்தான். எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் தமிழில் தேசியகீதம் இசைக்கப்பட்டது ஒரு நல்ல சகுனம்தான். ஆனால் தமிழ் மக்களை இது போன்ற சீர்திருத்தங்களால் மட்டும் திருப்திப்படுத்த முடியாது. ஏனெனில் தமிழ்மக்களின் சந்தேகங்கள் நூற்றாண்டு காலத்துக்குரியவை. காயங்கள் ஆழமானவை, இப்பொழுதும் ஆறாதவை. தமிழ் மக்கள் வாகனத் தகட்டு இலக்கங்களில் பொறிக்கப்பட்ட சிங்களச் சிறீ எழுத்து, சிங்கக்கொடி, தேசியகீதம் எல்லாவற்றுக்கும் எதிராக ஒருகாலம் போராடினார்கள். இப்பொழுது இனப்படுகொலைக்கு எதிரான நீதியை கேட்டுப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். சின்னச்சின்ன சீர்திருத்தங்களைக் கேட்டு அல்ல. சிங்கள பௌத்த மேலாண்மையை பாதுகாக்கும் ஒற்றையாட்சி கட்டமைப்பை உடைத்து பல்லினத்தன்மைமிக்க ஒரு தீவைக் கட்டியெழுப்புவதே தமிழ்மக்கள் கேட்கும் கட்டமைப்பு மாற்றம் ஆகும். காகச்சிலையை தெருத்தெருவாக இழுத்துச்செல்லும் சிங்களமக்கள் இந்த அடிப்படை மாற்றத்தை ஏற்றுக் கொள்வார்களா? அண்மையில் மட்டக்களப்பில் அன்னை பூபதி நினைவு தினம் வந்தது. அந்த நினைவு நாளை அனுஷ்டிக்கக் கூடியவர்கள் என்று அரசாங்கம் இனங்கண்ட ஒரு தொகுதி அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக தடையுத்தரவுகள் விநியோகிக்கப்பட்டன. அதே சமயம் கடந்த ஆண்டு நினைவு கூர்தலை அனுஷ்டித்த பத்துபேர் கைது செய்யப்பட்டு நான்கு மாதங்களின்பின் இந்த வாரம் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். தென்னிலங்கை குழம்பிப் போயிருக்கும் ஒரு பின்னணியில் இம்முறை மே 18ஐ நினைவு கூர்வது தொடர்பில் அரசாங்கம் எப்படிப்பட்ட ஒரு முடிவை எடுக்கும்?ஆனால் அதைவிட முக்கியமானது, இப்பொழுது அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் சிங்கள மக்கள் அது தொடர்பாக என்ன முடிவெடுப்பார்கள் ? https://globaltamilnews.net/2022/175997
  20. தமிழ்க் கட்சிகளின் கவனத்திற்கு – நிலாந்தன்! April 24, 2022 புத்தாண்டு பிறந்த அடுத்த நாள் வெள்ளிக்கிழமை காலை கிளிநொச்சிக்கு போகும்பொழுது எல்லா எரிபொருள் நிரப்பு நிலையங்களும் திறந்திருந்தன. சிறிய மற்றும் பெரிய வரிசைகளில் நின்று எரிபொருளை நிரப்பக் கூடியதாக இருந்தது. ஆனால் மதியமளவில் ஒரு செய்தி வெளிவந்தது. மோட்டார் சைக்கிளுக்கு ஆயிரம் ரூபாய் வரையிலும் மோட்டார் கார்களுக்கு 1500 ரூபாய் வரையிலும் தான் பெட்ரோல் நிரப்பலாம் என்று அச்செய்தி தெரிவித்தது. அதன்பின் பிற்பகல் 3 மணியளவில் கிளிநொச்சியிலிருந்து புறப்பட்டேன். கிளிநொச்சியில் தொடங்கி யாழ்ப்பாணம் வரையிலும் பெரும்பாலும் எல்லா எரிபொருள் நிரப்பு நிலையங்களும் ஒன்றில் மூடப்பட்டிருந்தன. அல்லது பெட்ரோல் இல்லை என்ற அறிவிப்போடு காணப்பட்டன. ஏன் அப்படி மூடினார்கள் ?ஒரே நாளில் ஒரே நேரத்தில் எல்லா எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எப்படி பெட்ரோல் தீர்ந்து போனது? சில நாட்களில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கலாம் என்பதை ஊகித்த முதலாளிகள் பெட்ரோலை பதுக்கினார்கள் என்ற பொதுமக்களின் குற்றச்சாட்டு சரியா? எரிவாயு சிலிண்டர்கள் வினியோகம் தொடர்பாகவும் அவ்வாறு குற்றச்சாட்டுக்கள் உண்டு.ஒரு குறிப்பிட்ட தொகுதியினர் எரிவாயு சிலிண்டர்களை எப்படியோ பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் நாள் முழுக்க வரிசையில் நிற்பவர்களிற் பலர் அவ்வாறு அதிஷ்டசாலிகள் இல்லை. அதிலும் சிலர் எரிபொருளுக்காக காத்திருக்கும் பொழுது இறந்து போய்விட்டார்கள். வேறுசிலர் காத்திருந்த களைப்பில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளின் கீழ் உறங்கி விடுகிறார்கள். சாரதிகள் பேருந்துகளை இயக்கும் போது அவற்றுக்குக் கீழே உறங்குபவர்களைக் கவனிப்பதில்லை. அதனால் சிலர் பேருந்துகளில் நசியுண்டு இறந்து போகிறார்கள். இவ்வாறாக இதுவரையிலும் இலங்கைத்தீவில் எரிபொருள் எரிவாயு வரிசைகளில் நின்று இறந்தவர்களின் தொகை ஒன்பதுக்கும் அதிகமாக இருக்கலாம் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகள் மட்டும் மக்களை மிதிக்கவில்லை. வர்த்தகர்களும் மக்களை மிதிக்கிறார்கள் என்று மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.சித்ராப் பவுர்ணமியையொட்டி திருநெல்வேலி சந்தையில் மரக்கறிகள் அகோர விலைக்கு விற்கப்படுகின்றன.ஒரு கிலோ முருங்கைக்காய் 1,600 ரூபாய்க்கு மேல் போனது. ஒரு பிடி கீரை 160 ரூபாய் வரை போனது. ஒருவர் பகிடியாகச் சொன்னார்…ஆட்டு இறைச்சியும் 3000 ரூபாய், பாகற்காயும் 3000 ரூபாய் என்று.ஏன் இப்படி விலைகள் தாறுமாறாக இருக்கின்றன என்று கேட்டால் தம்புள்ளையில் இருந்து வாகனங்கள் வரவில்லை என்று கூறினார்கள். அப்படி என்றால் உள்ளூர் மரக்கறியின் விலையை தீர்மானிப்பது யார்? முட்டையின் விலை இப்பொழுது இறங்கி வருகிறது. ஏன் என்று கேட்டேன். ஒரு கடைக்காரர் சொன்னார்…சாப்பாட்டுக் கடைகள் இயங்குவது குறைவு என்பதால் முட்டை நுகர்வு குறைந்து விட்டது, அதனால் தான் விலை இறங்கியது என்று. ஆனால் அவர் கூறிய அளவுக்கு சாப்பாட்டுக் கடைகள் மூடப்படவில்லை. முட்டை விலை இறங்கினாலும் கோழி இறைச்சியின் விலை இறங்கவில்லை. ஏன் என்று ஒரு இறைச்சிக் கடைக்காரரிடம் கேட்டேன். தெற்கிலிருந்து முட்டையைக் கொண்டு வருகிறார்கள், ஆனால் கோழியை கொண்டு வருவதில்லை என்று அவர் சொன்னார். இப்படி எத்தனையோ காரணங்களைக் கூறுகிறார்கள்.காரணங்கள் சரியாகவும் இருக்கலாம் அல்லது புனையப்பட்டவைகளாகவும் இருக்கலாம். ஆனால் விலைகள் மட்டும் எந்த ஒரு தர்க்கத்துக்குள்ளும் அகப்படாமல் ஏறிக்கொண்டே போகிகின்றன. வியாபாரிகள் வைத்ததே விலை என்று வந்துவிட்டது. அதைக் கட்டுப்படுத்த யாருமில்லை. பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிரான சிங்கள மக்களின் ஆர்ப்பாட்டங்களின் விளைவாக அரசியல் நெருக்கடியும் யாப்பு நெருக்கடியும் ஏற்பட்டிருக்கின்றன.இதனால் நாடு அரசற்ற ஒரு நிலைக்குள் தள்ளப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது.இந்த அரசற்ற நிலை காரணமாக விலைகளை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. அருகருகே வாழும் அயலவர்கள் எரிவாயு வாங்கப் போகும்போது ஒருவர் மற்றவருக்கு சொல்லாமல் ரகசியமாக போகிறார்கள். ஏனென்றால் அப்படிச் சொன்னால் அரிதாக கிடைக்கும் அப்பொருளை நுகர்வதற்கு மற்றவரும் போட்டிக்கு வந்து விடுவார் என்பதே காரணம்.ஒரு சமூகத்தின் கூட்டுணர்வையே சிதைக்கும் அளவுக்கு பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றனவா? கடந்த ஞாயிற்றுக்கிழமை 6 கட்சிகள் யாழ் இளங்கலைஞர் மன்றத்தில் கூடிய பொழுது அதில் நான் இந்தக் கேள்வியை எழுப்பினேன். அதற்கு முன்னரும் எனது எழுத்திலும் பேச்சிலும் இதுபற்றி அதிகமாக குறிப்பிட்டிருக்கிறேன். தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசம் என்று நம்புகிறார்கள். ஆனால் அவர்கள் தேசமாகத் திரட்சியாக இல்லை என்பதைத்தான் வியாபாரிகளின் நடவடிக்கைகள் உணர்த்துகின்றனவா? அரசாங்கம் ஒருபக்கம் மக்களை வதைக்கிறது என்றால் இன்னொரு பக்கம் வர்த்தகர்களும் வதைக்க்கிறார்களா? இந்த விடயத்தில் வர்த்தகர்களை தட்டிக் கேட்பது யார்? அரசியல் கட்சிகளுக்கு இதில் பொறுப்பு கிடையாதா? மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள்,கட்சித் தலைவர்களாக இருப்பவர்கள்,இந்த விடயத்தில் வர்த்தகர்களோடு கதைத்து பொதுமக்களின் கஷ்டத்தை ஒப்பீட்டளவில் குறைக்க முடியாதா? நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் மக்களுக்கு அரசியல் தலைமைத்துவத்தை வழங்குவது என்பது அதுதானே ? அறிக்கை விட்டால் மட்டும் போதாது, நாடாளுமன்றத்தில் கூர்மையான உரைகளை நிகழ்த்தினால் மட்டும் போதாது, அதற்கும் அப்பால் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவது என்பது நடைமுறையில் மக்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுப்பதே.எனவே தேசத் திரட்சியின் ஒரு கூறாக அமையும் வணிகர்களோடு இது தொடர்பில் ஏன் எந்த ஒரு அரசியல்வாதியும் உரையாடத் துணியவில்லை? என்று அக்கூட்டத்தில் நான் கேள்வி எழுப்பினேன். மக்கள் பிரதிநிதிகளாக இருப்பது என்பது மக்களுக்கு தலைமை தாங்குவதுதான். மக்களுக்கு தலைமை தாங்குவது என்பது நெருக்கடியான ஒரு சூழ்நிலையில் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது. மக்களை அடுத்தகட்டத்துக்கு தயார்படுத்துவது.முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு மக்களைத் தூண்டுவது. அதற்கு வேண்டிய கட்டமைப்புக்களை உருவாக்குவது. அதாவது மக்களை அமைப்பாக்குவது. திரள் ஆக்குவது. ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய பெரும்பாலான அரசியல்வாதிகள் இப்பொழுது மட்டுமல்ல இதற்கு முன்னரும் பெரும் தொற்று நோய் சூழலுக்குள் அவ்வாறு மக்களுக்கு தலைமை தாங்கவில்லை. புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதியை பெற்று நிவாரணம் வழங்கினால் மட்டும் போதாது,மக்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும்.வழிகாட்ட வேண்டும். அதுதான் தலைமைத்துவம் என்றெல்லாம் நான் கட்டுரைகளை எழுதினேன்.விக்னேஸ்வரன் ஒரு கேள்வி-பதில் அறிக்கையில் அது தொடர்பான சில அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்.அதற்குமப்பால் மக்களை அமைப்பாக்கும் செயற்றிட்டம் எதுவும் அவரிடம் இருக்கவில்லை. இப்பொழுது பொருளாதார நெருக்கடி வந்திருக்கிறது. அரசாங்கத்தின் உரக் கொள்கை காரணமாக விவசாயம் பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்து விட்டது. இதனால் இன்னும் இரண்டு மாதங்களில் அரிசிக்கு தட்டுப்பாடு வரலாம் என்று எச்சரிக்கப்படுகிறது.அரசாங்கம் அரிசியை இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் இறக்க முயற்சிக்கிறது.அரசாங்கம் அதைச் செய்யட்டும்.ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் தமிழ் மக்கள் எப்படிப்பட்ட முன்னாயத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து ஏன் வழிகாட்டக் கூடாது?நெருக்கடியான காலகட்டங்களில் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டி வழி காட்டுவதுதான் தலைமைத்துவம்.அப்படிப்பட்ட தலைவர்கள் எத்தனை பேர் தமிழ்த்தேசிய அரங்கில் இப்பொழுது உண்டு? அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல அவர்களுக்கு வெளியே இதுபோன்ற நெருக்கடியான தருணங்களில் மக்களுக்கு வழிகாட்டவல்ல சிவில் சமூகத் தலைமைகள் எத்தனை உண்டு? ஆன்மீக தலைமைகள் எத்தனை உண்டு? இதுதொடர்பாக யாழ் வர்த்தக சங்கத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவரிடம் உரையாடினேன். அவர் சொன்னார்….இப்போது நிலவும் விலை உயர்வை எந்த அரசியல்வாதியாலும் தீர்க்க முடியாது என்று.நாட்டின் பொருளாதார நிலைமை அந்தளவுக்கு மோசமான ஒரு கட்டத்தை அடைந்து விட்டது என்றும் அவர் கூறினார். இறக்குமதி செய்வதற்கு வணிகர்கள் பயப்படுகிறார்கள். யாராவது முன்வந்து இறக்குமதி செய்வார்களாக இருந்தால் அவர்களுடைய காலில் பூ போட்டுக் கும்பிடலாம் எனுமளவுக்கு நிலைமை காணப்படுகிறது. ஒரு தொகுதி பெரு வணிகர்கள் இறக்குமதி நடவடிக்கைகளை நிறுத்திவிட்டார்கள். இறக்குமதி குறைந்தால் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும். மேலும் பெரும்பாலான வணிகர்கள் ஆறுமாதக் கடனில்தான் பொருட்களை இறக்குவதுண்டு.அப்பொருளை விற்று கடனை அடைக்கும் காலகட்டத்தில் டொலரின் விலை எங்கேயோ போயிருக்கும். அதாவது பொருளை இறக்கும் போது இருந்ததை விட பலமடங்கு அதிகரித்திருக்கும். இதனால் வரக்கூடிய மேலதிக நட்டத்தையும் கவனத்தில் எடுத்தே வணிகர்கள் பொருட்களின் விலைகளைத் தீர்மானிக்கிறார்கள். எனவே இது விடயத்தில் டொலரின் பெறுமதியைக் கட்டுப்படுத்தும் சக்தியுள்ள அரசியல்வாதிகள்தான் விலைகளையும் கட்டுப்படுத்தலாம். ஆனால் தமிழ் அரசியல்வாதிகளுக்கு அப்படிப்பட்ட சக்தி இல்லை என்பதால் அவர்களில் யாராலும் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது என்று அவர் தெரிவித்தார். மேலும் எரிவாயு விநியோகத்தில் எரிவாயு கம்பெனிகளின் தலையீடு காரணமாக சில சீரற்ற விநியோகங்கள் இடம் பெற்றிருப்பதை அவர் ஒப்புக்கொண்டார். எரிவாயுவை அந்தந்தப் பகுதியில் உள்ள விநியோகஸ்தர் ஊடாக வழங்கினாலே போதும் அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை ஏதோ ஒரு விதத்தில் திருப்திப் படுத்துவார்கள்.ஆனால் கிராமமட்ட விநியோகஸ்தர்களிடம் பகிர்ந்தளிப்பதற்கு பதிலாக வேறு சில நடவடிக்கைகளை எடுக்க முற்பட்டதால் அதிக முறைப்பாடுகள் வந்தன என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். எனினும்,எரிவாயுவும் உட்பட பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் சக்தி வர்த்தக சங்கங்களிடமும் இல்லை, எந்த ஒரு சமூக முகாமைத்துவத்திடமும் இல்லை என்று அவர் முடிவாகச் சொன்னார். அதாவது,நெருக்கடியான ஒரு காலகட்டத்தில்,பொருட்கள் பதுக்கப்படுவது,நியாயமற்ற விலை உயர்வு போன்ற விடயங்களில் வணிகர்கள் மீது செல்வாக்கைப் பிரயோகிக்கவல்ல பலமான தலைமைத்துவம் எதுவும் தமிழ் மக்கள் மத்தியில் இல்லை? பொருட்களின் விலைகளும் இறக்கப்போவதில்லை.ராஜபக்சக்களும் சிம்மாசனத்தை விட்டு இறங்கப்போவதில்லை.ராஜபக்சக்களை வீட்டுக்கு அனுப்பும்வரை காலிமுகத்திடலில் கூடியிருக்கும் மக்களும் வீட்டுக்குப் போகப் போவதில்லை? https://globaltamilnews.net/2022/175719
  21. கொந்தளிக்கும் சிங்கள மக்கள்: தமிழ்மக்களின் நிலைப்பாடு என்ன? நிலாந்தன். April 10, 2022 நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் எல்லா இனங்களையும் பாதிக்கின்றன. எனவே அரசுக்கு எதிரான போராட்டத்தில் சிங்களவர் தமிழர்,முஸ்லிம்கள் ஆகிய மூன்று இன மக்களும் ஒன்று சேரவேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எந்த அரசியல் இலக்கை முன்வைத்து அவ்வாறு ஒன்று சேர்ந்து போராடுவது என்பதில் தமிழ் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். சிங்கள மக்கள் போராடுவது ஒரு ஆட்சி மாற்றத்திற்காக. ஆட்சியை மாற்றினால் அவர்களுடைய பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் ஆட்சி மாற்றத்தால் தமிழ் மக்களுக்கு என்ன பயன் கிடைக்கும்? 2015 இல் நடந்ததுதான் திரும்பவும் நடக்கும். ஏனென்றால் ஆட்சி மாற்றம் எனப்படுவது,இலங்கைத் தீவை பொறுத்தவரையிலும் அரசாங்கத்தைத்தான் மாற்றும். மாறாக அரசுக் கட்டமைப்பை மாற்றாது. தமிழ் மக்கள் கேட்பது அரசுக் கட்டமைப்பை மாற்ற வேண்டுமென்று. ஒற்றையாட்சி கட்டமைப்பை மாற்றி இலங்கைத்தீவின் பல்லினத் தன்மையை உறுதிப்படுத்தும் ஒரு சமஸ்டி கட்டமைப்பைத்தான் தமிழ் மக்கள் கேட்கிறார்கள். தமிழ் மக்களுடைய கோரிக்கைகள் ஆட்சி மாற்றத்துக்கு உரியவை அல்ல. அவை அரசுக் கட்டமைப்பில் மாற்றத்தை கேட்பவை. ஏற்கனவே 2015இல் ஒரு ஆட்சி மாற்றத்தால் ஏமாற்றப்பட்டவர்கள் தமிழ்மக்கள். அந்த ஆட்சிமாற்றத்தின் எதிர்மறை விளைவுதான் மூன்றிலிரண்டு தனிச்சிங்கள பெரும்பான்மையை நோக்கி ராஜபக்சக்கள் உழைக்கக் காரணம். தமிழ் மக்கள் மீண்டுமொரு தடவை ஆட்சிமாற்றத்தின் அப்பாவிப் பங்காளிகளாக மாறி ஏமாற்றம் அடைய முடியாது. எனவே சிங்களமக்கள் இப்பொழுது தென்னிலங்கையில் நடத்தும் போராட்டங்கள் தொடர்பில் தமிழ்த்தேசிய நோக்கு நிலையிலிருந்து முடிவுகளை எடுக்க வேண்டும். தென்னிலங்கையில் நடக்கும் போராட்டங்கள் ஒரு பகுதி தன்னியல்பானவை. இன்னொரு பகுதி எதிர்க்கட்சிகளால் ஒழுங்கமைக்கப்படுவன. தென்னிலங்கையில் உள்ள நகர்ப்புற நடுத்தர வர்க்கம் வீதியில் இறங்கியிருக்கிறது. ஏனென்றால் மின்சாரம் இல்லை,எரிவாயு இல்லை, அத்தியாவசிய பொருட்கள் இல்லை. மின்சாரம் இல்லையென்றால் விசிறி இல்லை,குளிரூட்டி இல்லை. காலமோ கோடை. அடுக்குமாடிக் குடியிருப்பில் எப்படியிருப்பது? கிராமத்தில் கல்லை வைத்து விறகில் சமைக்கலாம். ஆனால் அடுக்குமாடியில் என்ன செய்வது?பிரச்சினை நடுத்தர வர்க்கத்தை தாக்கிவிட்டது. அவர்கள் தெருவில் இறங்கினார்கள். கோட்டா வீட்டுக்கு போ என்ற கோஷத்தை உருவாக்கினார்கள். அந்த கோஷத்துக்கு உயிர் கொடுத்தார்கள். ஜனாதிபதியின் மாளிகையை முற்றுகையிட்டார்கள். சிங்கள மக்கள் முன்வைக்கும் கோஷங்களில் பெரும்பாலானவை ஆளும் அரசாங்கத்துக்கு எதிரானவைதான். சிங்களபவுத்த அரசுக் கட்டமைப்புக் எதிரானவை அல்ல என்பதனை தமிழ்மக்கள் கவனிக்கவேண்டும். ஆர்ப்பாட்டக்காரர்களில் மிகச்சிலரைத்தவிர பெரும்பாலானவர்கள் ஆட்சிமாற்றத்தைத்தான் கேட்கிறார்கள். மிகச்சிலர்தான் தமிழ்மக்களுக்கு நீதி வேண்டும்,போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்று கேட்கிறார்கள். அவர்கள் பெரும்பான்மைக்குள் சிறுபான்மையினர். அவர்களால் பெரும்பான்மை அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. ஆனால் தமிழ்மக்களின் உண்மையான நண்பர்கள் அவர்கள்தான். அவர்களை எப்பொழுதும் தமிழ் மக்கள் மதித்து நடக்க வேண்டும். அதேசமயம் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை பொறுத்தவரை தமிழ்மக்கள் தமது கோரிக்கைகளில் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். இனப்பிரச்சினைக்கு தீர்வு, இனப்படுகொலைக்கு நீதி போன்ற கோரிக்கைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏற்றுக்கொள்வார்களாக இருந்தால் தமிழ்மக்கள் அவர்களோடு இணைந்து போராடலாம். 12 ஆண்டுகளுக்கு முன் யுத்த வெற்றியை பால்சோறு பொங்கி கொண்டாடிய ஒரு மக்கள் இப்பொழுது அதே யுத்த வெற்றி நாயகரை கீழ்தரமான வார்த்தைகளால் நிந்தித்து வீட்டுக்குப் போ என்று கேட்கிறார்கள். இது தமிழ் மக்களுக்கு பழி வாங்கியவருக்கு உண்டாகும் திருப்தியை கொடுக்கலாம். ஆனால் பிரச்சினை அதைவிட ஆழமானது. கோட்டாபய ஒரு கருவிதான். மஹிந்தவும் ஒரு கருவிதான். சிங்கள பௌத்த பெருந் தேசியவாத அரசின் கருவிகளே அவர்கள். இன ஒடுக்குமுறையை அவர்கள் உச்சத்துக்குக் கொண்டு போனார்கள் என்று வேண்டுமானால் கூறலாம். இன ஒடுக்குமுறையானது மகிந்தவுக்கும் முன்னரும் இருந்தது. தமிழ் மக்கள் போராட வேண்டியது இனஒடுக்குமுறைக்கு எதிராகத்தான். இனஒடுக்குமுறையை நிறுவனமயப்படுத்தி வைத்திருக்கும் அரசுக் கட்டமைப்பு எதிராகத்தான். ராஜபக்ச குடும்பத்திற்கு எதிரான போராட்டம் என்பது இன ஒடுக்குமுறைக்கு எதிரான பெரும் போராட்டத்தின் ஒரு பகுதிதான். அதுவே முழுப் போராட்டம் ஆக முடியாது. ஒரு குடும்பத்தை மட்டும் எதிராக பார்த்து அந்தக் குடும்பத்தை அகற்றினால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நம்புவது ஆட்சி மாற்றத்தில்தான் முடியும். இதுதான் 2015 ஆம் ஆண்டு நடந்தது. எனவே தமிழ் மக்கள் இப்பொழுது மிகத் தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும். ஒரு குடும்ப ஆட்சிக்கு எதிரான சிங்கள மக்களின் போராட்டம் முற்போக்கானதே. அதே சமயம் சிங்கள மக்களோடு இணைந்து போராட வேண்டும் என்றால் தமிழ் மக்கள் தமது கோரிக்கைகளில் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். கோட்டாவை ஆட்சியில் இருந்து அகற்றத் துடிக்கும் எந்த ஒரு எதிர்க்கட்சியும் சமஸ்டியை ஏற்றுக்கொள்ளவில்லை. 13ஆவது திருத்தத்தை தாண்டிப் போகத் தயாராகவும் இல்லை. இப்படிப்பட்ட எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஆட்சி மாற்றத்தை கேட்கவும் முடியாது, ஒரு தேசிய அரசாங்கத்தை அமைக்கவும் முடியாது. ஏனென்றால் எனது கடந்த வாரத்துக்கு முதல் வாரக் கட்டுரையில் கூறப்பட்டது போல, தேசிய அரசாங்கம் என்பது சிங்கள பௌத்த தேசிய அரசாங்கமாக அமையுமாக இருந்தால் அதில் தமிழ்மக்கள் இணைவதில் எந்த பயனும் கிடையாது. அது ஒரு பல்லித்தன்மை மிக்க தேசிய அரசாங்கமாக அமையுமாக இருந்தால்,தமிழ் பிரதிநிதிகள் அதைக்குறித்து தீவிரமாக யோசிக்கலாம். எனவே தென்னிலங்கையில் இப்போது ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்பைக் கண்டு தமிழ் மக்கள் உணர்ச்சிவசப்படத் தேவையில்லை. கிருணிகாவுக்கு ரசிகர் மன்றத்தை கட்டியெழுப்பவும் தேவையில்லை. இப்பொழுது சஜித் பிரேமதாச கூறுகிறார் ஜனாதிபதி முறையை அகற்ற வேண்டும் என்று. ஆனால் அவரும் இதற்கு முன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவர். மட்டுமல்ல சந்திரிகாவும் அவ்வாறு போட்டியிட்டவர்தான். போட்டியிடுவதற்கு முன்பு ஜனாதிபதி முறைமையை மாற்ற வேண்டும் என்பார்கள். ஆனால் தேர்தலில் வென்றதும் அதை மறந்து விடுவார்கள். நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை என்பது இலங்கைத் தீவின் ஜனநாயக இதயத்தை பலவீனப்படுத்தும் பல அம்சங்களில் ஒன்றுதான். ஆனால் அதைவிட ஆழமான அம்சங்கள் உண்டு. சிங்கள-பௌத்த ஒற்றையாட்சி கட்டமைப்புதான் இலங்கைத் தீவின் ஜனநாயக இதயத்தை தொடக்கத்திலிருந்தே பலவீனப்படுத்தியது. இச்சிறிய தீவின் பல்லினத் தன்மையை ஏற்றுக் கொள்ளாமைதான் எல்லாவற்றுக்கும் மூல காரணம். எனவே இங்கு தேவையாக இருப்பது யாப்பு மாற்றம். அந்த யாப்பு மாற்றத்துக்குள் ஜனாதிபதி முறைமையும் அடங்கும். இந்த அடிப்படையில் கோரிக்கைகளை முன்வைக்குமாறு தமிழ் தரப்பு எதிர்க்கட்சிகளை ஊக்குவிக்க வேண்டும். அவ்வாறு ஊக்குவித்து இது விடயத்தில் எதிர்க்கட்சிகளுடன் ஓர் அரசியல் உடன்படிக்கையை உருவாக்க வேண்டும். இது எரிகிற வீட்டில் லாபம் பிடுங்கும் அரசியல்தான். ஆனால் அது தவிர்க்க முடியாதது. அப்படி ஒரு உடன்படிக்கையைச் செய்ய முடிந்தால் அடுத்த கட்டமாக சிங்கள மக்களோடு இணைந்து தெருவில் இறங்கலாம். தென்னிலங்கையில் நடப்பவைகளோடு ஒப்பிடுகையில் தமிழ்மக்கள் அந்த அளவுக்கு கடந்த 12 ஆண்டுகளில் போராடவில்லை என்பது உண்மைதான். பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் தம்மை நோக்கி வீசப்பட்ட கண்ணீர் புகைக்குண்டைத் திரும்பவும் போலீசாரை நோக்கி வீசுகிறார்கள். போலீசாரின் தற்காலிகத் தடுப்புகள் உருட்டிக் கொண்டு ஓடுகிறார்கள். ஆர்ப்பாட்டக்காரர்கள். அதிரடிப் படையோடு நெற்றிக்கு நேரே வாக்குவாதப்படுகிறார்கள். எல்லாம் சரிதான்,ஆனால் அவர்கள் அவ்வாறு எதிர்த்துப் போராடுவதால் அவர்களை யாரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப் போவதில்லை. இதையே தமிழ் மக்கள் செய்தால் நிலைமை என்னவாகும்? பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் உள்ளே தூக்கிப் போட்டுவிடுவார்கள். கடந்த 12 ஆண்டுகளாக தமிழ் மக்கள் மத்தியில் சட்டமறுப்பு போராட்டங்கள் பெருமெடுப்பில் தொடர்ச்சியாக நடக்காமைக்கு அதுவும் ஒரு காரணம். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலிமையாக கேட்பதற்கு இது ஒரு பொருத்தமான சந்தர்ப்பம். கோட்டாவை வீட்டுக்கு அனுப்பத் துடிக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்தக் கோரிக்கையை முன்வைப்பார்களா? பயங்கரவாத தடைச்சட்டம் இல்லையென்றால் தமிழ் மக்கள் சிங்கள மக்களை விட ஆக்ரோஷமாக போராட முன் வருவார்கள். ஏற்கனவே பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ்தான் தமிழ் அம்மாக்கள் காணாமல் போன தமது உறவுகளுக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள். பயங்கரவாத தடைச்சட்டம் இருக்கத்தக்கதாகவே கேப்பாபிலவில் பெண்கள் காணிக்காகப் போராடினார்கள். இரணைதீவுப் பெண்கள் தமது வீடுகளை மீட்டார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அம்மாக்கள் அதிரடிப்படையின் துப்பாக்கி வாய்க்கு நேரே நின்று நியாயம் கேட்கிறார்கள். ஆனால் இவையாவும் சிறிய மற்றும் தெட்டம் தெட்டமான போராட்டங்கள்தான். தென்னிலங்கையில் இப்பொழுது நடப்பது போன்று பெருமெடுப்பிலான தொடர்ச்சியான போராட்டங்கள் அல்ல. பயங்கரவாத தடைச்சட்டம் இல்லை என்று சொன்னால் தமிழ் அம்மாக்கள் இதைவிட ஆக்ரோஷமாக போராடுவார்கள். அதை அரசாங்கம் தாங்காது. கடந்த வாரம் கிருனிக்கா யாழ் பேருந்து நிலையத்தில் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். அந்த ஆர்ப்பாட்டத்தில் நடந்த சம்பவங்களின் விளைவாக யாழ்ப்பாணத்தில் அவருக்கு ஒரு சிறு ஆதரவு அலை ஏற்பட்டது. ஆனால் இதே கிருனிக்கா கடந்த 12 ஆண்டுகளில் காணாமல் ஆக்கப்பட்டவர்காகப் போராடும் அம்மாக்களோடு சேர்ந்து போராடினவரா?கேப்பாபிலவில்,இரணைதீவில் தமிழ்ப் பெண்களோடு சேர்ந்து போராடினவரா?இல்லையே. இதுதான் தமிழ்மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டிய இடம். எனவே தென்னிலங்கையில் நடப்பவை ஒரு குடும்ப ஆட்சிக்கு எதிரான மக்கள் எழுச்சி என்ற அடிப்படையில் அதன் முற்போக்கான அம்சத்தை தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேசமயம் அந்த போராட்டங்களை கண்டு உணர்ச்சிவசப்பட்டு மெய்மறந்து நிபந்தனையின்றி ஆதரிக்கவும் தேவையில்லை. இதை இந்த கட்டுரை சொல்லித்தான் தமிழ்மக்கள் செய்ய வேண்டும் என்றும் இல்லை. ஏனென்றால்,ஏற்கனவே தமிழ்மக்கள் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் சிங்கள மக்களோடு பெருமெடுப்பில் இணையவில்லை. தென்னிலங்கையிலும் சரி வடக்கு கிழக்கிலும் சரி நிலமை அப்படித்தான் இருக்கிறது. கிளிநொச்சி வளாகத்தில் உள்ள சிங்கள மாணவர்கள் போராடியபோது தமிழ் மாணவர்கள் அதில் பெரிய அளவில் இணையவில்லை. அப்படித்தான் யாழ் பல்கலைக்கழகத்திலும் சிங்கள மாணவர்கள் போராடிய பொழுது ஒப்பீட்டளவில் குறைந்தளவு எண்ணிக்கையான தமிழ் மாணவர்கள்தான் அதில் இணைந்தார்கள். இவ்வாறாக கடந்த வாரம் முழுவதும் நாடுபூராகவும் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் மீண்டும் ஒரு தடவை நிரூபித்திருக்கும் யதார்த்தம் எதுவென்றால் நாடு இவ்வாறான போராட்டங்களின் போதும் பெருமளவுக்கு இனரீதியாக பிளவுபட்டு நிற்கிறது என்பதே. https://globaltamilnews.net/2022/175258
  22. திறந்து மூடப்பட்ட யாழ்.கலாச்சார மையம் ? நிலாந்தன் கடந்த திங்கட்கிழமை யாழ். கலாச்சார மையம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.ஆனால் பொருத்தமான வார்த்தைகளில் சொன்னால் அது வைபவ ரீதியாக திறக்கப்பட்ட பின் மூடப்பட்டுள்ளது என்பதே சரி. இந்தியாவின் நிதி உதவியோடு கட்டப்பட்ட அக்கட்டடம் 11 மாடிகளைக் கொண்டது. யாழ்ப்பாணத்தின் நில அமைப்பைப் பொருத்தவரை ஆறு மாடிகளுக்கு மேல் கட்டிடங்களைக் கட்டுவதற்கு கட்டடநிர்மாணத் துறையினர் அனுமதிப்பதில்லை.எனினும் விசேஷ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள ஏனைய எல்லா கட்டடங்களை விடவும் உயரமான ஒரு கட்டடமாக கலாச்சார மையம் கட்டியெழுப்பப்பட்டது.யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல தமிழர்களின் தாயகத்தில் உள்ள மிக உயரமான கட்டடம் அது. அதன் அசாதாரண உயரத்தை வைத்து, இந்தியா அதன் மேற் தளத்திலிருந்து வடபகுதியை கண்காணிக்கப் போகிறது என்றெல்லாம் கதைகள் பரவின. ஆனால் கட்டி முடிக்கப்பட்ட பின்னரும் பல மாதங்களுக்கு ஆட்புழக்கமில்லாத ஒரு பொதுக் கட்டடமாக அது காணப்படுகிறது. அக்கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின் அதை இந்தியப் பிரதமர் மோடி வந்து திறந்து வைப்பார் என்றும் திறப்பு விழா கோலாகலமாக ஒழுங்கமைக்கப்படும் என்றும் அதில் இசையமைப்பாளர் ரகுமானின் இசை நிகழ்ச்சியிருக்கும் என்று முன்பு கூறப்பட்டது.ஆனால் கடந்த திங்கட்கிழமை அமைதியாகவும் அழைக்கப்பட்ட குறிப்பிட்ட தொகை விருந்தினர்களின் முன்னிலையிலும் மெய்நிகர் நிகழ்வு ஒன்றில் கலாச்சார மையம் திறந்து வைக்கப்பட்டது. திறப்புவிழா soft opening என்று அழைக்கப்பட்டது.மெய்நிகர் வைபவம் என்பதால் அது அவ்வாறு அழைக்கப்பட்டது என்று ஒரு விளக்கம் உண்டு. ஆனால் திறப்பு விழாவை வைத்துக் கூறுவதென்றால் அது ஒரு பகுதியளவான திறப்புத்தான்.விழாவிற்கு வருகை தந்தவர்கள் கலாச்சார மையத்தின் கலையரங்கத்துக்குள் மட்டுமே நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டார்கள். கலாச்சார மண்டபத்தின் ஏனைய பகுதிகளுக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படவில்லை.மேலும் கலாச்சார மையத் திறப்பு விழா நடந்து கையோடு அது மீண்டும் மூடப்பட்டுவிட்டது. அது பொதுமக்களின் பாவனைக்கு திறக்கப்படவில்லை. எல்லாவற்றையும் விட முக்கியமாக கலாச்சார மையம் யாருடைய பொறுப்பில் இருக்கும் என்பது தொடர்பில் தெளிவான தகவல்கள் இல்லை. கலாச்சார மையம் மாநகரசபை எல்லைக்குள் வருகிறது. ஆனால் மாநகர சபையிடம் அவ்வாறான பிரம்மாண்டமான ஒரு மையத்தை நிர்வகிப்பதற்கு போதுமான நிதி இல்லை. யாழ் மாநகர சபையின் வருமானம் அதற்குப் போதாது.எனவே அதை மத்திய கலாச்சார அமைச்சு அதன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரக்கூடிய நிலைமைகளே அதிகமாக தென்பட்டன.மாநகர முதல்வராக மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டதும் அவர் கலாச்சார மையத்தை மாநகர சபை பொறுப்பேற்கும் என்று தெரிவித்தார்.அதற்கு வேண்டிய நிதியை இந்தியா வழங்க வேண்டும் என்றும் அவர் எதிர்பார்த்தார். இந்தியா அதற்குரிய நிதியை குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு வழங்க முன் வந்ததாக ஒரு தகவல் உண்டு. இதுதொடர்பாக கொழும்பில் நடந்த சந்திப்புக்களில் ஒன்றின் போது கலாச்சார அமைச்சின் பிரதானி ஒருவர் மாநகர முதல்வரிடம் “நீங்கள் இந்தியாவை நம்பக்கூடாது அரசாங்கத்தைத்தான் நம்ப வேண்டும்” என்ற தொனிப்பட அறிவுறுத்தியிருக்கிறார். அவர் அவ்வாறு கூறும்பொழுது கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் துணைத் தூதுவரும் அங்கிருந்திருக்கிறார். எனினும் யாழ் மாநகர சபை தன் கொள்ளளவை மீறி கலாச்சார மையத்தை பொறுப்பேற்க தயாராக காணப்படுகிறது. ஆனால் இன்று வரையிலும் அவ்வாறு கலாச்சார மையத்தை இயக்குவதற்கு தேவையான நிர்வாக கட்டமைப்புக்கள் எவையும் உருவாக்கப்படவில்லை.அக்கட்டமைப்புகளுக்கு பொறுப்பாக ஒரு நிர்வாக சேவை அதிகாரியும் ஒரு கியூறேற்றரும் (curator) -எடுத்தாளுநரும்- நியமிக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. இடையில் மாநகரசபை கலாச்சார மையத்தை நிர்வகிக்கத் தேவையான உத்தியோகத்தர்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் இறங்கப் போவதாக செய்திகள் வெளிவந்தன. எனினும் உரிய நிர்வாகக் கட்டமைப்புக்கள் எவையும் இன்றுவரையிலும் உருவாக்கப்படவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில்தான் கலாச்சார மையம் திறக்கப்பட்டிருக்கிறது. கலாச்சார மையத்தை அரசாங்கம் மத்திய கலாச்சார அமைச்சின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவிரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்தியா அதை தமிழ் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் வழங்குவதற்கு முன்னுரிமை அளிப்பதாக தெரிகிறது. இப்போது கிடைக்கும் செய்திகளின்படி சிலசமயம் கலாச்சார மையத்தின் நிர்வாகம் ஒரு தனியார் நிறுவனத்திடம் வழங்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இதுபோன்ற மையங்கள் உள்ளூர் மக்களின் பங்களிப்போடு நிர்வகிக்கப்படும் போதுதான் அவை மெய்யான பொருளில் பண்பாட்டு மையங்களாக திகழும் என்பதே உலக அனுபவம் ஆகும். ஆனால் கலாச்சார மையத்தை யார் நிர்வகிப்பது என்பது தொடர்பில் பொருத்தமான இறுதி முடிவுகள் எடுக்கப்படாத ஒரு வெற்றிடத்தில்தான் மேற்கண்டவாறு ஒரு மென் திறந்துவைப்பு நடந்திருக்கிறது. ஒரு பிரம்மாண்டமான முழு அளவிலான திறப்புவிழா வரும் நொவம்பர் மாதமளவில் ஒழுங்கு செய்யப்படும் என்று ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.அதாவது சொஃப்ற் ஓப்னிங் எனப்படுவது பிரயோகத்தில் முழு அளவிலான திறந்துவைப்பு அல்ல என்றும் பொருள். இந்த மாதம் பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்தபோது அவர் கலாச்சார மண்டபத்தையும் திறந்து வைப்பார் என்றும் ஊகங்கள் தெரிவிக்கப்பட்டன. ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை.மாறாக அந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்த இந்திய வெளியுறவு அமைச்சரும் இலங்கையின் பிரதமரும் இணைந்து மெய்நிகர் நிகழ்வு ஒன்றின்மூலம் கலாச்சார மண்டபத்தை திறந்து வைத்திருக்கிறார்கள். திறக்க வேண்டும் என்பதற்காக அவசரப்பட்டு சம்பிரதாய பூர்வமாக கலாச்சார மையம் திறக்கப்பட்டிருப்பதாகவே கருதவேண்டியுள்ளது. பிரதமர் மோடி வந்து அதை முழுமையாகத் திறந்து வைப்பார் என்றால் ஏன் அவசரப்பட்டு பகுதியளவு திறந்துவைக்க வேண்டும்?பிரதமர் மோடி வரும்வரையிலும் பொறுத்திருக்கலாம்தானே? கடந்த சில மாதங்களாக இந்திய இலங்கை அரசாங்கத்துக்கு அதிக தொகை பணத்தை கடனாக கொடுத்து வருகிறது.அந்த அடிப்படையில் பார்த்தால் இலங்கை அரசாங்கத்தின் மீது இந்தியாவின் பிடி பலமடைந்து வர வேண்டும். அவ்வாறு இந்தியாவின் பிடி இலங்கைதீவில் பலமடைந்து வந்தால் இந்தியாவின் நிதி உதவியோடு உருவாக்கப்படும் இணைப்புத் திட்டங்களை விரைவாக முன்னெடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் ஒப்புக்கொள்ள வேண்டும். குறிப்பாக கலாச்சார மண்டபத்தை முழுமையாக திறப்பது, பலாலி விமான நிலையத்தை இரண்டாம் கட்டத்திற்கு விரிவுபடுத்தி விஸ்தரித்து திறந்துவிடுவது, மூன்றாவதாக காங்கேசன்துறையிலிருந்து காரைக்காலுக்கு ஒரு பயணிகள் போக்குவரத்து படகை ஓடவிடுவது போன்ற இணைப்புத் திட்டங்களுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும்.ஆனால் இக்கட்டுரை எழுதப்படும் இந்நாள்வரையிலும் அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டதாக செய்திகள் கிடைக்கவில்லை. ஆனால் அதேசமயம் கலாச்சார மையம் திறந்து வைக்கப்பட்ட அதேநாளில் கொழும்பில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே ஆறு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.அவற்றுள் குறிப்பாக யாழ்ப்பாணத்தின் மூன்று தீவுகளில் நிறுவப்பட இருக்கும் மீளப்புதுப்பிக்கும் எரிசக்தி திட்டம், இந்தியா தனது தென் கடலோர கண்காணிப்பை ஒப்பீட்டளவில் அதிகளவு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஏற்பாடு செய்யும் ஓர் உடன்படிக்கை (MRCC)என்பனவும் அடங்கும். அதாவது இந்தியா கடனைக் கொடுத்து தனக்குத் தேவையானவற்றை பெற்றுக் கொள்கிறது.எனினும்,கலாச்சார மையத்தை மக்கள் பாவனைக்கு திறந்து விடுவது மேலும் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது கலாச்சார மையம் பலாலி விமான நிலையம், காங்கேசன்துறையில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் போக்குவரத்துச் சேவை, மன்னாரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு மற்றொரு பயணிகள் படகுச் சேவை போன்ற தமிழ் மக்களுக்கும் தமிழகத்துக்கும் இடையிலான இணைப்புகளை பலப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டங்கள் இழுபட்டு இழுபட்டு நகர்கின்றன. கலாச்சார மையம் கட்டப்பட்டு பல மாதங்களின் பின்னர் முழுமையாக திறக்கப்படாமலிருப்பது,பலாலி விமான நிலையத்தின் இப்போதுள்ள நிலைமையோடு ஒப்பிடத் தக்கது. அவ்விமான நிலையம் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி காலத்தின் கடைசி பகுதியில் அவசர அவசரமாக திறக்கப்பட்டது. ஜனாதிபதி தேர்தலில் பெரும்பாலும் ராஜபக்சக்கள் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு இருப்பதை முன்னுணர்ந்து ரணில் விக்கிரமசிங்க தனது ஆட்சிக்காலத்தின் கடைசிக் கட்டத்தில் அவசர அவசரமாக அதை திறந்தார். திறக்கப்பட்ட பொழுது அந்த விமான நிலையத்தில் கொள்ளளவின்படி சிறிய விமானங்கள்தான் அங்கே வந்து போகக்கூடியதாக இருந்தது.சுமார் 70 பயணிகளை ஏற்றி இறக்கக்கூடிய விமானங்கள் மட்டும்தான் அங்கே வந்து போகலாம். பயணிகள் ஒவ்வொருவரும் இருபது கிலோ நிறை கொண்ட பொதிகளைத்தான் எடுத்து வரலாம். இதனால் விமான நிலையத்தை அடுத்த கட்டத்துக்கு விஸ்தரிக்க வேண்டிய தேவை இருந்தது. இந்தியா அதற்கு நிதி உதவி வழங்குவதாகவும் கூறியது. ஆனால் அதற்கிடையே பெருந்தொற்றுநோய் பரவியது. அதனால் விமான நிலையம் மூடப்பட்டது. அதன்பின் விமான நிலையத்தை திறக்கப் போவதாக அரசாங்கமும் பொறுப்பு வாய்ந்த அமைச்சர்களும் கடந்த இரண்டு ஆண்டுகளில் அடிக்கடி கூறியிருக்கிறார்கள்.சிலசமயம் ஊடகங்களில் விமான நிலையம் மீளத்திறக்கப்படும் திகதியும் அறிவிக்கப்படுவது உண்டு. உதாரணமாக கடந்த ஜனவரி மாதம் 10ஆம் திகதி விமான நிலையம் திறக்கப்படும் என்று ஒரு செய்தி வந்தது.ஆனால் இன்றுவரையிலும் அந்த விமான நிலையம் மீளத் திறக்கப்படவில்லை.அண்மையில்கூட யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த அமைச்சர் பீரிஸ் அந்த விமான நிலையத்தை பற்றி குறிப்பிட்டிருந்தார். ஆனாலும் அது திறக்கப்படவில்லை. அவசரமாக திறக்கப்பட்டு அடுத்தடுத்த கட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படாமல் அது மூடப்பட்டுவிட்டது. யாழ் கலாச்சார மண்டபம் திறக்கப்பட்ட விதமும் அது யாருடைய நிர்வாகத்தின் கீழ் இயங்குகிறது என்பது தொடர்பாக காணப்படும் குழப்பமும் தவிர்க்க முடியாதபடி பலாலி விமான நிலையத்தை ஞாபகப்படுத்துகின்றன.இன்னும் எவ்வளவு காலத்துக்கு அது யாழ்ப்பாணத்தின் மிக உயரமான,ஆனால் ஆளரவமற்ற ஒரு பொதுக்கட்டடமாக இருக்கப்போகிறது? http://www.samakalam.com/திறந்து-மூடப்பட்ட-யாழ்-க/
  23. சிங்கள மக்களின் கோபம்... அரசாங்கத்தை அசைக்குமா? நிலாந்தன். அரசியலில், அரசியல் பொருளாதாரம்தான் உண்டு.இலங்கைத்தீவின் பொருளாதார நெருக்கடிக்கு பிரதானமான காரணம் அரசியல்தான். பொருளாதாரத்தை சரியாக முகாமை செய்யத் தவறியமை மட்டும் காரணமல்ல. அது ஒரு உப காரணம்தான். இப்போதிருக்கும் பொருளாதார நெருக்கடியை அரசியல் நீக்கம் செய்து ஒரு பகுதி பொருளாதாரவிமர்சகர்கள் எழுதியும் பேசியும் வருகிறார்கள்.அவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு இப்போதுள்ள பொருளாதார நெருக்கடியை அதன் அரசியலில் இருந்து பிரித்துப் பேசி வருகிறார்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.இலங்கைத்தீவு இப்பொழுது எதிர்கொள்ளும் நெருக்கடிகள் தனிய பொருளாதாரக் காரணங்களால் மட்டும் ஏற்பட்டவை அல்ல.இப்பொருளாதார நெருக்கடியை அதன் அரசியலை நீக்கிப் பேசுவது என்பதே ஓர் அரசியல்தான். இந்த அடிப்படையில் பார்த்தால் நாட்டில் இப்பொழுது நிலவும் பொருளாதார நெருக்கடியை அதன் அரசியல் பரிமாணத்திலேயே விளங்கிக்கொள்ள வேண்டும்.அதற்கு நிரந்தரத் தீர்வை அரசியல் ரீதியாகத்தான் கண்டுபிடிக்கவேண்டும். இந்த அடிப்படையில்தான்,அரசாங்கம் தேர்தல் காலங்களிலும், தேர்தல் வெற்றிகளுக்கு பின்னரும் நாட்டின் மக்களுக்கு வாக்குறுதி அளித்த எல்லாவற்ரிலிருந்தும் பின்வாங்கி வருகிறது.இந்த தலைகீழ் மாற்றங்களின் தொடக்கம் பசில் ராஜபக்சவை நிதி அமைச்சராக நியமித்தமைதான். அரசுத்தலைவர் கோட்டாபய ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்கு முன்னும் பின்னும் தன்னை மேற்கு நாடுகளுக்கும் ஐநாவுக்கும் பணியாத ஒருவராகவே காட்டிக் கொண்டார். இந்தியாவுடன் செய்துகொண்ட கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்திற்கான உடன்படிக்கையில் இருந்து பின்வாங்கினார். தன்னை தனிச் சிங்கள வாக்குகளால் வெற்றி பெற்ற ஒருவர் என்றும் சிங்கள பௌத்தர்களின் தலைவன் என்றும் கூறிக் கொண்டார். ஆனால் வைரஸ் அவரைப் பணிய வைத்திருக்கிறது. வைரசின் விளைவாக மேலும் சரிந்த பொருளாதாரம் அவரைப் பணிய வைத்திருக்கிறது. இந்தப் பணிவின் தொடக்கம் பசில் ராஜபக்ஷவை நிதியமைச்சராக நியமிப்பது என்று முடிவெடுத்ததுதான். அமெரிக்காவுடனான உடன்படிக்கைகளை நிராகரித்த ஓர் அரசாங்கம் அமெரிக்காவின் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்ட ஒருவரை நிதியமைச்சராக நியமித்ததன்மூலம் அமெரிக்காவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் ஐநாவுக்கும் மாற்றத்தின் முதல் சமிக்கையைக் காட்டியது. அதிலிருந்து தொடங்கி பசில் ராஜபக்ச வெளியுறவு அணுகுமுறைகளில் உத்தி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தினார்.ஜி எல் பீரிஸ் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.மஹிந்த சமரசிங்க அமெரிக்காவின் தூதுவராக நியமிக்கப்பட்டார்.இந்தியாவுக்கான தூதராக நியமிக்கப்பட்ட மிலிந்த மொரகொடவின் நியமனம் துரிதமாக்கப்பட்டது. இவ்வாறாக வெளியுறவு அணுகுமுறை.மாற்றத்தை பிரதிபலிக்கும் நியமனங்கள் வேகமாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டன. அதோடு ஐநாவை நோக்கி அரசாங்கம் சுதாகரிக்கத் தொடங்கியது. பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்துவது ,பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒரு தொகுதிக்கு அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், பொறுப்புக்கூறலுக்கான உள்நாட்டு வடிவிலான ஒரு பொறி முறைக்கு தயாராக காணப்பட்டமை, ஏற்கனவே ரணில் விக்கிரமசிங்க உருவாக்கிய பொறுப்புக்கூறலுக்கான கட்டமைப்புக்களை அவற்றின் நலிந்த நிலையிலும் தொடர்ந்து பேணியமை. அக்கட்டமைப்புகளுக்கு அதிகரித்த நிதியை ஒதுக்கியமை, யாப்பு உருவாக்கத்துக்கான நிபுணர் குழுவை நியமித்தன்மை,இந்தியாவுடன் புதிய உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டமை போன்ற பல விடயங்களிலும் அரசாங்கம் வெளியுறவு உத்திகளில் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவாக கிடைத்த வெளியாதரவுகளின் தொகுக்கப்பட்ட வெற்றிதான் வைரசுக்கு எதிராக கிடைத்த வெற்றியாகும். சில அரச பிரமுகர்கள் கூறுவது போல படையினரின் கையில் வைரசுக்கு எதிரான போர் கொடுக்கப்பட்டதால் கிடைத்த வெற்றி அது அல்ல. மாறாக வெளியுறவுப் பரப் ப்பில் அரசாங்கம் சுதாகரிக்கத் தொடங்கியதன் விளைவாக வெளிநாடுகள் வழங்கிய உதவிகளின் திரட்டப்பட்ட விளைவே வைரசுக்கு எதிராக கிடைத்த வெற்றியாகும். இவ்வாறாக வைரஸை ஒப்பீட்டளவில் கட்டுப்படுத்திய அரசாங்கம் வைரஸின் தாக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார விளைவுகளிலிருந்து தப்ப முடியவில்லை. வெளியுறவு அணுகுமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்திய பசில் ராஜபக்ச வெளிநாட்டு உதவிகளை நாட்டுக்குள் கொண்டு வந்தார்.எனினும் பொருளாதார நெருக்கடியை அவரால் சமாளிக்க முடியவில்லை. இலங்கைத் தீவின் பொருளாதாரம் மிகவும் சிறியது.பேரரசுகள் கை கொடுத்தால் அதை இலகுவாக நிமிர்த்தலாம். ஆனாலும் கடந்த சில மாதங்களாக பேரரசுகள் செய்த பெரும் உதவிகளால் இலங்கைத் தீவுக்கு மூச்சுவிடும் அவகாசம்தான் கிடைத்திருக்கிறதே தவிர,பொருளாதாரம் நிமிரவில்லை.இதனால் பசில் ராஜபக்சவே அதிகம் விமர்சிக்கப்படுகிறார். அவரை பதவிக்கு கொண்டு வந்த பொழுது அவர் பல தலைகளைக் கொண்ட மந்திரவாதி போல கட்டப்பட்டார். அவர் ஒரு மந்திரவாதி அல்ல என்று எனது கட்டுரைகளில் ஏற்கனவே நான் எழுதி இருக்கிறேன். எந்தப் பெரிய மந்திரவாதி வந்தாலும் இலங்கைத் தீவின் பொருளாதாரத்தை நினைத்த மாத்திரத்தில் நிமிர்த்த முடியாது.பஸில் மட்டுமல்ல போதிசத்துவரே நிதியமைச்சராக நியமிக்கப்பட்டாலும் பொருளாதார விடயங்களில் மந்திர மாயங்களைச் செய்ய முடியாது.இப்பொழுது ஏற்பட்டிருக்கும் தோல்விகள் யாவும் பசில் ராஜபக்ச என்ற தனிமனிதனின் தோல்விகளாக ஒரு பகுதி சிங்கள விமர்சகர்களால் காட்டப்படுகின்றன. ஆனால் இது பசில் ராஜபக்சவின் அல்லது அவரது சகோதரர்களின் தனிப்பட்ட தோல்வியல்ல.அவை சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் அரசியல் தோல்விகளிலிருந்து தொடங்குகின்றன. அதைவிட ஆழமான பொருளில் சொன்னால் தோல்விகள் யாவும் இனவாதத்திலிருந்து தொடங்குகின்றன. இனப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண முடியாது.ஆனால் பொருளாதாரப் பிரச்சினையை தீர்ப்பதற்கு எடுக்கப்படும் அரசியல் முடிவுகளில் இனப்பிரச்சினைக்கான தீர்வும் உள்ளடங்கும்.அதனால்தான் அரசாங்கம் கூட்டமைப்போடு பேச முன் வந்திருக்கிறது. புலம்பெயர்ந்த தமிழர்களை நாட்டில் முதலீடு செய்யுமாறு கேட்கிறது. அது காலத்தால் பிந்திய ஞானம். தவிர அரசாங்கத்தால் தன்னுடைய முன்னைய பிரகடனங்கள் இருந்து முற்றிலுமாக பின்வாங்கி தமிழ் மக்களுக்கு ஒரு பொருத்தமான தீர்வை கொடுக்க முடியாது. அதுபோலவே புலம்பெயர்ந்த தமிழர்கள் மனதிலும் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்த முடியாது. தமிழ் மக்கள் என்ன காரணத்துக்காக புலம் பெயர்ந்தார்களோ அக்காரணம் நீக்கப்படாத ஓர் அரசியல் சூழலில் புலம்பெயர்ந்த தமிழர்கள் நாட்டுக்குள் முதலீடு செய்யத் துணிய மாட்டார்கள். ஆனால்,சிங்கள மக்கள் தமது பொறுமையை இழந்து விட்டார்கள். எந்த ஒரு இரும்பு மனிதர் தமக்குத் தேவை என்று கூறி அமோகமான வெற்றியை கொடுத்து அவரை ஆட்சிக்கு கொண்டு வந்தார்களோ, அவரை வீட்டுக்கு போ என்று கேட்டு அவருடைய தனிப்பட்ட வாசஸ்தலத்தை முற்றுகையிடும் ஒரு நிலை. இலங்கைத்தீவின் இதற்கு முன்னிருந்த எந்த ஒரு ஜனாதிபதிக்கும் இப்படி ஒரு நெருக்கடி வந்ததில்லை. இதற்கு முன்னிருந்த எந்த ஒரு அரசியல் தலைவரின் தனிப்பட்ட வாசஸ்தலம் இவ்வாறு ஆர்ப்பாட்டக்காரர்களால் இவ்வாறு முற்றுகையிடப்பட்டதுமில்லை. வெல்லக்கடினமான ஒரு யுத்தத்தை வென்று கொடுத்ததற்காக தாம் தலையில் வைத்துக் கொண்டாடிய ஒரு வெற்றி வீரரை “வீட்டுக்கு போ” என்று சிங்கள மக்கள் கேட்கும் ஒரு நிலைமை. ஆனால் அவ்வளவு இலகுவாக அவர் வீட்டுக்குப் போகக் கூடியவர் அல்ல. அவரை அவ்வாறு வீட்டுக்கு அனுப்ப இப்போது எந்த எதிர்க்கட்சியாலும் முடியாது. மனோ கணேசனின் வார்த்தைகளில் சொன்னால் அரசாங்கம் எப்பொழுதோ தோற்றுவிட்டது. ஆனால் அந்தத் தோல்வியை தம்முடையதாக சுவீகரித்துக் கொள்ள எதிர்க்கட்சிகளால் முடியாதிருக்கிறது. ஏனெனில் எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒற்றுமை இல்லை. ஒரு ஜனவசியம் மிக்க தலைவர்கள் குறைவு..மூன்று இனத்தவர்களின் வாக்குகளை கவர தேவையான ஒரு ஜனவசியம் மிக்க தலைவர்கள் எதிர்க்கட்சிகள் மத்தியில் இல்லை.அதுதான் ராஜபக்சக்களின் பலம். இது ஆட்சி மாற்றத்தை விரும்பும் வெளித் தரப்புகளுக்கும் விளங்குகிறது. ராஜபக்சக்களை இலகுவாக வீட்டுக்கு அனுப்ப முடியாது என்பது அவர்களுக்குத் தெரிகிறது. எனவே ஆட்சி மாற்றத்திற்கு பதிலாக ஆளை மாற்றி அதன் மூலம் நமக்கு அனுகூலமான ஓர் ஆட்சியை ஏற்படுத்தலாம் என்று சில நாடுகள் யோசிப்பதாக தகவல்கள் உண்டு. அந்த ஆள் பசில் ராஜபக்ச என்றுதான் பொதுவாக வெளிநாடுகள் நம்புவதாகவும் தகவல் உண்டு. கடந்த வாரம் இந்தியாவுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின் பின்னணியில் பசில்தான் இருந்தார்.அவருடைய உழைப்பின் விளைவாகத்தான் அந்த உடன்படிக்கைகள் செய்து கொள்ளப்பட்டன.அந்த உடன்படிக்கை களின்மூலம் இலங்கை அரசாங்கம் இந்தியாவின் அச்சங்களை குறிப்பிடத்தக்க அளவிற்குத் தணித்திருக்கிறது. இந்தியா இனப்பிரச்சினையை இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக கையாள முடியாதபடிக்கு பசில் ராஜபக்ச இந்தியாவை திருப்திப்படுத்தியிருக்கிறார் என்றும் எடுத்துக் கொள்ளலாம். ஐநாவின் விடையத்திலும் அமெரிக்காவின் விடையத்திலும் அவர் அவ்வாறுதான் காய்களை நகர்த்தி வருகிறார். இவற்றின் தொகுக்கப்பட்ட விளைவாக வெளியுறவுப் பரப்பில் நாட்டை நோக்கி வந்த அழுத்தங்களை அவர் பெருமளவுக்கு குறைத்திருக்கிறார். ஆனால் நாட்டுக்குள் நிலைமைகள் கட்டுப்படுத்த முடியாத வளர்ச்சிகளை அடைந்துவிட்டன. பசில் ராஜபக்சே முன்னெடுக்கும் ஆகிய அணுகுமுறைகளில் பொருளாதார விளைவுகளை நாடு அனுபவிப்பதற்கு காலம் எடுக்கும்.பொருளாதார மாற்றங்கள் மாயாஜாலக் கதைகளில் வருவது போல திடீரென்று நடக்கக் கூடியவை அல்ல. பொருளாதாரத்துக்கு அதற்கான விதிகள் உண்டு. அரசியல் பொருளாதாரம் அதன்படிதான் மாற்றங்களை அடையும். மந்திரத்தால் மாங்காய் பிடுங்க முடியாது. ஆனால் அதற்கிடையில் சிங்கள மக்களை சாந்தப்படுத்த ராஜபக்சக்களிடம் எதுவும் இல்லை. யுத்த வெற்றிதான் அவர்களுடைய பலம். அதுதான் அவர்களுடைய அரசியல் முதலீடு. யுத்த வெற்றி எனப்படுவது 2009க்குப் பிந்திய சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் அப்டேட் செய்யப்பட்ட ஒரு வடிவம்தான். பண்டாரநாயக்கா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஸ்தாபித்து தேர்தல் வெற்றிக்காக சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் உள்நாட்டு மூலகங்கள் அனைத்தையும் ஒன்று திரட்டி சிங்கள பௌத்த பெருந் தேசியவாதத்தை அதன் முதற்கட்ட உச்சத்துக்குக் கொண்டு போனார். ராஜபக்ச குடும்பம் சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தை அதன் இரண்டாம்கட்ட உச்சத்துக்கு கொண்டு போனார்கள். ஆனால் சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதம் இப்பொழுது அந்த வெற்றி நாயகர்களை வீட்டுக்கு போ என்று கேட்கிறது. இது கார்ல் மார்க்ஸின் கூற்று ஒன்றை ஞாபகப்படுத்துகிறது. “வரலாற்றில் சில சம்பவங்கள் இரண்டு தடவை நடக்கின்றன. முதல் தடவை அது அவலச்சுவை நாடகமாக முடியும். இரண்டாவது தடவை அது நகைச்சுவை நாடகமாக முடியும்”. https://athavannews.com/2022/1274506
  24. சர்வ கட்சி மாநாடு ஒரு நாடகமா? நிலாந்தன். March 27, 2022 சர்வகட்சி மாநாடு எனப்படுவது வளர்ச்சியடைந்த ஜனநாயகங்களில் ஒரு உன்னதமான பயில்வு. முழு நாடும் கட்சி பேதங்களைக் கடந்து தேசியப் பிரக்ஞையோடு ஒன்றிணைந்து முடிவை எடுக்கும் நோக்கத்தோடு சர்வகட்சி மாநாடு கூட்டப்படுவதுண்டு. ஆளுங்கட்சி,எதிர்க்கட்சி சிறிய கட்சி ,பெரிய கட்சி என்ற பேதமின்றி நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து ஒரு பொது முடிவை எட்டுவதற்கான ஒரு மகத்தான ஜனநாயக நடைமுறைதான் சர்வகட்சி மாநாடு ஆகும். ஆனால் இலங்கைத் தீவில் சர்வகட்சி மாநாடு எனப்படுவது அவ்வாறான உன்னதமான ஒரு பயிலுகை அல்ல. இலங்கைத்தீவின் மோசமான அரசியல் கலாச்சாரத்தை பொறுத்தவரை, சர்வகட்சி மாநாடு எனப்படுவது ஒரு தப்பிச் செல்லும் வழி, அல்லது அரசாங்கம் தனது தோல்விக்கு எதிர்க் கட்சிகளையும் கூட்டுப் பங்காளிகள் ஆக்கும் அல்லது கூட்டுப் பொறுப்பாக்கும் ஒரு தந்திரம், அல்லது காலத்தை கடத்தும் ஓர் உத்தி. அதாவது எதிர்க்கட்சிகளின் கவனத்தை திசைதிருப்பி காலத்தை கடத்தும் ஓர் உத்தி எனலாம். குறிப்பாக,இனப்பிரச்சினைக்கான தீர்வு பொறுத்து கடந்த பல தசாப்தங்களாக வட்டமேசை மாநாட்டில் இருந்து தொடங்கி இன்று வரையிலான எல்லா சர்வகட்சி மாநாடுகளையும் தொகுத்துப் பார்த்தால் அவை அனைத்தும் தந்திரமான உள்நோக்கம் கொண்டவை என்பது தெரியவரும். இலங்கை அரசாங்கம் நியமித்த விசாரணைக் கொமிஷன்கள் போலவே சர்வகட்சி மாநாடுகளும் தீர்க்க விரும்பாத ஒரு பிரச்சினைக்காக கூட்டப்படும் மாநாடுகள்தான். தமிழ் அரசியலில் முதலில் வட்டமேசை மாநாடு என்ற வார்த்தையை பயன்படுத்தியது ஜி. ஜி. பொன்னம்பலம் என்று கூறப்படுகிறது. இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அவர் எல்லா கட்சிகளும் ஒரு வட்ட மேசையில் அமர்ந்து பேச வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அப்பொழுது அவருடைய அரசியல் எதிரிகளாக காணப்பட்ட தமிழரசுக் கட்சி அப்படி என்றால் சதுரமேசை மாநாட்டைக் கூட்டலாம் என்று அவரை கிண்டல் செய்தார்கள். ஆனால் வட்டமேசை மாநாடுகள், அல்லது சதுர மேசை மாநாடுகள், நல்லது சர்வகட்சி மாநாடுகள் போன்றன தமிழ் மக்களைப் பொறுத்தவரை தோல்வியுற்ற அரசியல் நடைமுறைகள்தான். இவ்வாறான தோல்விகரமானதொரு பாரம்பரியத்தின் பின்னணியில் வைத்தே கடந்த புதன்கிழமை நடந்த சர்வகட்சி மாநாட்டையும் பார்க்க வேண்டும். நேற்று முன்தினம் நடந்த கூட்டமைப்புடனான சந்திப்பும் அத்தகையதா? நாட்டை இப்பொழுது ஆள்வது மூன்றிலிரண்டு தனிச்சிங்கள பெரும்பான்மையை வென்றெடுத்ததாக மார்தட்டிக் கொள்ளும் ஓர் அரசாங்கம் ஆகும். நாடாளுமன்றத்தை பலவீனப்படுத்தும்விதத்தில் 20வது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து அதன் மூலம் ஓர் அரசனுக்கு இருப்பதைப் போன்ற அதிகாரங்களை ஜனாதிபதி பெற்றுக் கொண்டார். ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் நிறைவேற்று அதிகாரமும் அவரை வெற்றி பெற்ற ஒரு நிர்வாகியாக நிரூபிக்க தவறி விட்டன. யுத்தமும் பொருளாதார நெருக்கடியும் ஒன்றல்ல என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொடுத்ததாக கூறப்படும் சிங்கள மக்கள் இப்பொழுது “கோட்டா வீட்டுக்குப் போ” என்று கேட்கும் ஒரு நிலைமை. இவ்வாறானதொரு பின்னணியில்தான் அரசாங்கம் சர்வகட்சி மாநாட்டை கூட்டி இருக்கிறது. சர்வகட்சி மாநாடு எனப்படுவது ஜனாதிபதியைப் பொறுத்தவரை கீழிறங்கி வருவதுதான். ஆனால் அவர் இதய சுத்தியோடு இறங்கி வருகிறாரா என்பதுதான் இங்குள்ள கேள்வியாகும். அல்லது அவர் தனது தோல்வியை எல்லா கட்சிகளுக்கும் உரியதாக மாற்றப் பார்க்கிறாரா என்றும் கேட்கலாம். தமிழ் கட்சிகளில் தமிழரசுக்கட்சியும் பிள்ளையானின் கட்சியும் ஈபிடிபியும் புளட்டும் மட்டும் அதில் பங்குபற்றின. ஏனைய கட்சிகள் பங்குபற்றவில்லை. தென்னிலங்கை மையக் கட்சிகளில் மிகச்சில கட்சிகள்தான் பங்குபற்றின. அந்த மாநாடு ரணிலின் மதிப்பை மேலும் உயர்த்தியிருக்கிறது. மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ போன்றோரை ரணில் புத்திசாலித்தனமாக அம்பலப்படுத்தியிருக்கிறார். ஜனாதிபதி பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் அளவுக்கு ரணில் தனது ஆளுமையை காட்டியிருக்கிறார். ரணில் ஒரே நேரத்தில் இரண்டு தரப்புக்கு தனது ஆளுமையை நிரூபிக்க வேண்டியிருக்கிறது. ஒன்று அரசாங்கத்துக்கு. மற்றது சஜித்துக்கு. அப்படித்தான் சஜித்தும் அவரும் தனது பலத்தை ஒரே நேரத்தில் அரசாங்கத்துக்கு எதிராகவும் காட்ட வேண்டி இருக்கிறது, அதேசமயம் ரணிலுக்கு எதிராகவும் காட்ட வேண்டியிருக்கிறது. எதிர்க் கட்சிகள் மத்தியில் ஐக்கியம் இல்லை. சில மாதங்களுக்கு முன் மனோ கணேசன் கூறியது போல அரசாங்கம் எப்பொழுதோ தோற்று விட்டது. ஆனால் அந்த தோல்வியை தங்களுடையதாக சுவீகரித்துக் கொள்ளத் தேவையான ஐக்கியம் எதிர்க் கட்சிகள் மத்தியில் கிடையாது. சர்வகட்சி மாநாடு ரணிலின் ஆளுமையை நிரூபித்திருக்கலாம். ஆனால் அதற்காக அவரை அங்கீகரிக்க அரசாங்கம் தயாரா? அல்லது சஜித்தும் எதிர்க்கட்சிகளும் தயாரா? என்று பார்க்க வேண்டும். மூத்த அரசறிவியலாளரான மு.திருநாவுக்கரசு கூறுவதுபோல மேற்கத்திய நாடுகளில் இவ்வாறான நெருக்கடிகள் வரும் பொழுது, எல்லாக் கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்கும். அப்போதுதான் நாட்டின் முழுப் பலத்தையும் ஒன்றுதிரட்டி நெருக்கடிகளை எதிர்கொள்ளலாம். ஆனால் இலங்கை தீவில் அவ்வாறான செழிப்பான ஒரு பாரம்பரியம் இல்லை. ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்கினால் இப்போதிருக்கும் நெருக்கடிகளை தற்காலிகமாக சமாளிக்கலாம். ஆனால் அவ்வாறு ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு சிங்கள கட்சிகள் தயாரா ? ஏனெனில் அது எந்த தேசிய அரசாங்கம் என்பதே இங்குள்ள அடிப்படைக் கேள்வியாகும். அது சிங்கள பௌத்த பெருந்தேசிய அரசாங்கமா ? அல்லது இலங்கைத் தீவின் பல்லி த்தன்மையை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளும் ஓரூ தேசிய அரசாங்கமா என்பதுதான் இங்குள்ள பிரச்சினை. தன்னைத் தனிச் சிங்கள வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஒரு தலைவராக பிரகடனப்படுத்தும் ஒரு ஜனாதிபதி அவ்வாறு பல்லினத்தன்மைமிக்க ஒரு தேசிய அரசாங்கத்தை எப்படி உருவாக்குவார்? அவ்வாறு மூன்று இனங்களில் தேசிய இருப்பையும் நிராகரித்த காரணத்தால்தான் அவர் இலங்கைத் தீவில் இனப்பிரச்சினையே இல்லை என்று கூறுகிறார். அதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக கூறுகிறார் இப்போதிருக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு காரணம் covid-19 தான் என்று. ஆனால்,இனப்பிரச்சினைதான் பொருளாதார பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் அடிப்படைக் காரணம். நாட்டின் முதலீட்டுக் கவர்ச்சியை அது அழித்துவிட்டது. 2009 க்குப் பின்னரும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. அதனால் நாடு அதன் முதலீட்டு கவர்ச்சியை கட்டியெழுப்ப முடியவில்லை. இவ்வாறு இனப்பிரச்சினை காரணமாக ஏற்கனவே நொந்து போயிருந்த பொருளாதாரத்தின் மீது ஈஸ்டர் குண்டுவெடிப்பு மற்றொரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்த அதிர்ச்சியை பெருந்தொற்று நோய் கொடுத்தது. அதாவது இனப்போர் காரணமாக ஏற்கனவே சரிந்து போயிருந்த பொருளாதாரத்தின் மீது ஈஸ்டர் குண்டு வெடிப்பும் covid-19உம் கோட்டாபய அரசாங்கத்தின் திறமையற்ற நிர்வாகமும் மேலும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தின என்பதே சரி. எனவே பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது என்பது அதன் மூலப் பிரச்சினையில் இருந்தே தொடங்க வேண்டும். உடனடிக்கு வேண்டுமென்றால் சரிந்து விழும் வாழைக்கு முட்டுக் கொடுப்பது போல எதையாவது செய்யலாம். அதைத்தான் இப்போது செய்ய எத்தனிக்கிறார்கள். ஆனால் நிரந்தரத் தீர்வு வேண்டுமானால், பல்லினத்தன்மை மிக்க ஒரு தீவைக் கட்டியெழுப்ப வேண்டும். அதாவது இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். அண்மையில் உலகின் மிகவும் சந்தோஷமான நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டது.அதில் பின்லாந்து மீண்டும் முதல் இடத்தை பெற்றிருக்கிறது. படைத்துறை ரீதியாக வளம் குறைந்த பின்லாந்து ரஷ்யப் பேரரசின் செல்வாக்கு மண்டலத்தில் வாழ்கிறது. கடந்த நூற்றாண்டிலிருந்து பேரரசுகளுக்கிடையிலான போட்டிக்குள் அது எப்பொழுதும் கெட்டித்தனம்டினமாகவும் கவனமாகவும் முடிவுகளை எடுத்தது வருகிறது. உக்ரைனைப் போலவோ அல்லது ஜோர்ஜியாவைப் போலவோ பேரரசுகளின் இழு விசைகளுக்குள் பக்கம் சாயாமல் நிதானமாக முடிவுகளை எடுத்தது. தமது நாடு பேரரசுகளின் உதைபந்தாட்டக் களமாக மாறக் கூடாது என்று சிந்தித்து பின்லாந்து மக்கள் பொருத்தமான முடிவுகளை எடுத்தார்கள். உலகின் மிகச்சிறந்த கல்வி முறையைக் கொண்ட நாடாக பின்லாந்து கணிக்கப்படுகிறது. அதை அந்நாடு தனது வெளியுறவுக் கொள்கையில் அழகாக, தீர்க்கதரிசனமாக பிரதிபலிக்கிறது. இலங்கையும் இலவசக் கல்விக்கு பெயர் பெற்றது. ஆனால் இலங்கைத்தீவின் இலவச கல்வியானது இனப்பிரச்சினையைத் தீர்க்க தவறிவிட்டது. இலங்கைத்தீவின் இலவசக் கல்வியானது ஒருபுறம் வறிய மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளால் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்புக்களை வழங்கியது. அதேசமயம் அது இனப்படுகொலையை தீர்க்க தவறியிருக்கிறது. இப்போதிருக்கும் அரசாங்கம் வியத்மக எனப்படும் தொழில்சார் திறன் மிக்க நிபுணர்களைக் கொண்ட ஒரு சிந்தனைக் குழாத்தால் வழி நடத்தப்படுவது என்று கருதப்படுகிறது. இப்போதிருக்கும் மத்திய வங்கியின் ஆளுநர் அந்த சிந்தனைக் குழாத்தில் இருந்து வந்தவர்தான். ஆனால் இந்த புத்திசாலிகள் எல்லாம் நாட்டை எங்கே கொண்டுபோய் விட்டிருக்கிறார்கள்? https://globaltamilnews.net/2022/174709
  25. ஜெனீவா 2022 – நிலாந்தன். March 13, 202 கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட ஜெனிவாத் தீர்மானத்தில் ஒரு விடயம் உண்டு. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான சான்றுகளைத் திரட்டும் ஒரு பொறிமுறை உருவாக்கப்படும் என்பதே அது. அவ்வாறு ஜெனிவா தீர்மானத்தில் அப்பொறிமுறையை இணைப்பதற்காக தொடக்கத்திலிருந்தே உழைத்தது பி.ரி.எஃப் எனப்படும் பிரித்தானியாவை மையமாகக் கொண்டியங்கும் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்பு ஆகும். மியான்மர் மற்றும் சிரியாவில் உருவாக்கப்பட்ட பொறிமுறைகள மனதில் வைத்து பிரிஎப் உழைத்திருந்தாலும் தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்டது அப்படிப்பட்ட ஒரு பொறிமுறை அல்ல என்ற ஒரு விமர்சனம் உண்டு. மேலும் அது கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் திகதி தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட மூன்று கட்சிகள் இணைந்து ஐநாவுக்கு வரைந்த ஒரு கடிதத்தில் கேட்டிருந்தது போன்ற ஒரு பொறிமுறையும் அல்ல. எனினும் அப்பொறிமுறையானது சான்றுகளை திரட்டுவதற்கான ஒரு கட்டமைப்பாக இயங்கும் என்று கூறப்பட்டது. கூட்டமைப்பு அதை ஒரு முக்கிய அடைவாகக் காட்டியது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிகழ்ந்த ஐநா கூட்டத் தொடரில் தனது வாய்மூல அறிக்கையில் மனித உரிமைகள் ஆணையாளர் மேற்படி பொறிமுறையானது கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்திலிருந்து செயற்படத் தொடங்கும் என்று குறிப்பிட்டிருந்தார். அது ஒரு பொறிமுறை என்று அழைக்கப்பட மாட்டாது என்றும் சான்றுகளை திரட்டுவதற்கான செயலகம் என்றே அழைக்கப்படும் என்றும் ஒரு தகவல் வந்தது. அப்பொறிமுறைக்குள் மொத்தம் 12 உறுப்பினர்கள் இருப்பார்கள் என்றும், கடந்த ஆண்டு கடைசி மூன்று மாதங்களும் இந்த ஆண்டில் முதல் ஒன்பது மாதங்களுமாகச் சேர்த்து மொத்தம் ஒரு ஆண்டு காலகட்டத்திற்குரிய நிதி அதற்கு ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. அதற்கு வேண்டிய நிதியை ஒதுக்குவதற்கு சில நாடுகள் முன் வந்ததாகவும் தெரியவருகிறது.எனினும் சீனா பாகிஸ்தான் போன்ற இலங்கைக்கு ஆதரவான நாடுகள் அப்பொறிமுறைக்குரிய நிதியை குறிப்பிட்ட சில நாடுகளிடமிருந்து விசேஷ நிதியாக சேகரிப்பதை எதிர்த்ததாகத் தெரிகிறது. பதிலாக ஐநாவின் பொது நிதி ஒதுக்கீட்டிற்கூடாக அந்த நிதி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரியவருகிறது. ஐநா மன்றம் வளம் பொருந்திய நாடுகளின் நிதியில் தங்கியிருக்கிறது. போதிய நிதி ஐநாவுக்கு கிடைப்பதில்லை. அதிலும் குறிப்பாக ஐநா மனித உரிமைகள் ஆணையத்துக்கு நிதிப்பற்றாக்குறை உண்டு. இலங்கைத் தீவின் வட பகுதியில் கிளிநொச்சியிலும் கிழக்கில் மட்டக்களப்பிலும் இயங்கும் இரண்டு யுனிசெப் காரியாலயங்கள் அவற்றின் நடவடிக்கைகளை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தோடு குறைந்தளவு அலுவலர்களோடு மட்டுப்படுத்துகின்றன என்பதனை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இது ஐநாவுக்குள்ள நிதி நெருக்கடி காரணமாக என்ற ஒரு வாதம் உண்டு. அதேசமயம் இலங்கைத் தீவு நடுத்தர வருமானத்துக்குரிய ஒரு நாடாக வளர்ச்சியடைந்து விட்டதால் மேற்படி அலுவலகங்கள் அவற்றின் செயற்பாடுகளை குறைத்து கொள்கின்றன என்று ஒரு விளக்கமும் உண்டு. இலங்கைத் தீவு தொடர்பான ஐநா மனித உரிமைகள் ஆணையகத்தின் இந்த ஆண்டுக்குரிய அறிக்கையில் நிதி நெருக்கடி பற்றிச் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. சான்றுகளைத் திரட்டும் பொறிமுறையின் செயற்பாடுகள் நிதி போதாமையால் கட்டுப்படுத்தப்படுவதாக அறிக்கை கூறுகிறது. இவ்வாறானதொரு பின்னணியில், மேற்படி சான்றுகளைத் திரட்டும் பொறிமுறையை ஐநாவின் பொதுவான நிதி ஒதுக்கீட்டின் கீழ் கொண்டு வந்ததன் மூலம் இலங்கைக்கு ஆதரவான நாடுகள் பொறிமுறைக்கு வழங்கப்படும் நிதியை திட்டமிட்டுக் குறைத்து விட்டதாக சுட்டிக்காட்டப்படுகிறது. தொடக்கத்தில் 12 உறுப்பினர்களைக் கொண்ட பொறிமுறைக்கு 2.8 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் இப்போது கிட்டத்தட்ட ஒரு மில்லியன் டொலர்தான் ஒதுக்கப்படும் என்று தெரியவருகிறது.இதனால் அப்பொறிமுறையின் பருமனும் கனதியும் குறைக்கப்பட்டு விட்டன. இப்போது வழங்கப்படும் நிதியின்படி மொத்தம் 8 உறுப்பினர்களை கொண்ட ஒரு கட்டமைப்பாக அது இயங்கும்.அதில் இதுவரை ஐந்து நிபுணர்கள் நியமிக்கப்பட்டு விடடார்கள். மேலும், இப்பொறிமுறையானது இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து வரும் செப்டம்பர் மாதம் வரையிலும் இயங்கும். அதாவது அதன் செயற்பாட்டுக் காலம் ஆறு மாதங்களாக குறைக்கப்பட்டிருப்பதாக அறிய முடிகிறது. இது தொடர்பில் ஐநா வட்டாரங்களை மேற்கோள் காட்ட முடியவில்லை. கடந்த ஆண்டு மார்ச் மாத கூட்டத்தொடரை முன்னிட்டு தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட மூன்று கட்சிகளை ஒருங்கிணைத்த பொழுது மேற்படி சான்றுகளை திரட்டும் பொறிமுறையை அதிகம் வலியுறுத்தி கூறியது விக்னேஸ்வரனின் கூட்டணியைச் சேர்ந்த சிவாஜிலிங்கம்தான். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அந்த கோரிக்கையின்பால் அதிகம் அக்கறை காட்டவில்லை. கிளிநொச்சியில் நடந்த மூன்றாவது சந்திப்பின்போது அக்கோரிக்கையை கஜேந்திரகுமார் நிபந்தனையோடு ஏற்றுக் கொண்டார்.குறிப்பிட்ட பொறிமுறைக்குரிய காலகட்டம் ஆறு மாதங்களாக குறைக்கப்பட வேண்டும் என்பதே அந்த நிபந்தனையாகும் இப்பொழுது அப்பொறிமுறைக்குரிய காலகட்டம் ஆறு மாதங்களாக குறுகப்பட்டிருக்கிறது. ஆனால் இது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கேட்ட ஆறு மாதங்கள் அல்ல.மாறாக,அப்பொறிமுறையின் வீரியம் குறைக்கப்பட்டதால் குறுக்கப்பட்ட அதன் ஆயுட்காலம்தான் அது. அதாவது அக்கூட்டுக் கடிதத்தில் கேட்கப்பட்டது போன்ற ஒரு பொறிமுறை உருவாக்கப்பட வில்லை.இது முதலாவது.இரண்டாவதாக, ஐநா மனித உரிமைகள் ஆணையர் கூறியதுபோல கடந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து அது இயங்கத் தொடங்கவில்லை. அது வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்துதான் இயங்க போகிறது.மூன்றாவதாக அப்பொறிமுறையானது முன்பு கூறப்பட்டது போல 12 உறுப்பினர்களைக் கொண்டதாக அமையவில்லை.இப்பொழுது அதில் மொத்தம் எட்டு உறுப்பினர்கள் இருப்பார்கள். தமிழ் மக்கள் மத்தியிலும் தமிழ் ஊடகங்கள் மத்தியிலும் அப்பொறிமுறை குறித்து போதிய விளக்கங்களும் இல்லை. ஆர்வமும் இல்லை.அது தொடர்பாக தெளிவற்ற தகவல்களே கடந்த ஓராண்டு முழுவதும் உலவி வருகின்றன.கடந்த ஐநா தீர்மானத்தில் அப்பொறிமுறை அறிவிக்கப்பட்டதிலிருந்தே அது தொடர்பில் குழப்பமான ஊர்ஜிதமற்ற தகவல்கள்தான் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. தமிழ்த் தரப்பு கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஐநாவை ஓரணியாக அணுகவில்லை.ஒரே கட்டமைப்பின் ஊடாக அணுகவில்லை.ஒரு பொதுக்கட்டமைப்போ பொதுப் பொறிமுறையோ இல்லை பிரித்தானியாவில் உள்ள பி. ரி.எஃப் போன்ற சில அமைப்புகள் ஐநாவுடன் நெருக்கமாக செயல்படுவதாகத் தெரிகிறது.அதேசமயம் ஜெனீவாவை மையமாகக்கொண்டு ஒரு தமிழ் அமைப்பும் செயற்படுகின்றது. இவைதவிர தாயகத்திலுள்ள கட்சிகளும் ஐநாவுடன் தொடர்பில் உள்ளன. இதில் சம்பந்தப்பட்ட தாயகம் மற்றும் புலம் பெயர்ந்த தரப்பில் உள்ள அமைப்புகளுக்கிடையே ஒருங்கிணைப்பு கிடையாது.ஒருவர் மற்றவரை அங்கீகரிக்கும் நிலைமையும் இல்லை. ஒருவர் மற்றவரை அனுசரித்து ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் இணைந்து செயற்படும் நிலைமையும் இல்லை. அவ்வாறு இம்மூன்று தரப்புகளையும் இணைத்து இயக்குவதற்கு பொருத்தமான தலைமைகளும் இல்லை. ஆனால் அரசாங்கத்தைப் பொறுத்தவரை அவர்கள் ஒரே குரலில் ஒரே கட்டமைப்பாக இயங்குகிறார்கள்.அவர்களிடம் ஒரு பொதுவான வேலைத்திட்டம் உண்டு.ஒரு பொதுவான நிகழ்ச்சி நிரல் உண்டு.முழு வளத்தையும் ஒரு மையத்தை நோக்கி அவர்கள் குவிக்கிறார்கள். இம்முறை ஜெனிவா கூட்டத் தொடருக்கு தமிழ் மக்கள் பக்கமிருந்து யாரும் போகவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டத்துக்கும் ஐநாவுக்கும் இடையே உரையாடல்கள் உண்டு. அது தவிர ஐநாவுக்கு கூட்டாக கடிதம் எழுதிய ஐந்து கட்சிகளின் கூட்டுக்கும் ஐநா மனித உரிமைகள் ஆணையகத்தின் சேர்ந்த சில அதிகாரிகளுக்கும் இடையே கடந்த வாரம் ஒரு சூம் சந்திப்பு இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இவை தவிர தமிழ்த் தரப்பில் இருந்து யாரும் இம்முறை ஐநாவுக்கு போகவில்லை. மேலும் ஜெனிவாவில் வழமையாக நடப்பதைப் போல பக்க நிகழ்வுகளும் இம்முறை அதிக தொகையில் இல்லை என்று சுட்டிக்காட்டப்படுகிறது. கடந்த ஆண்டு 17 பக்க நிகழ்வுகள் இடம்பெற்றதாகவும் இந்த ஆண்டு அதைவிடக் குறைவாகவே இடம்பெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. நிதி உதவி வழங்குனர்களின் தொகை குறைந்தமை ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இம்முறை ஒருவித சோர்வான சூழ்நிலை காணப்படுவதாக செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால் அரசுத் தரப்பிலிருந்து ஒரு பலமான தூதுக்குழு சென்றிருக்கிறது. அங்கே அவர்கள் மேற்சொன்ன பொறிமுறையை திட்டவட்டமாக நிராகரித்திருக்கிறார்கள்.அப்பொறி முறை எப்படிப்பட்டது ?அதன் உள்ளடக்கம் எப்படிப்பட்டது? அது எவ்வளவு காலத்துக்கு இயங்கும்? இப்பொழுது பொறிமுறையின் நிலை என்ன? போன்ற கேள்விகளுக்கு தமிழ் மக்கள் மத்தியில் விளக்கங்கள் இல்லை. ஆனால் அப்பொறி முறையை இல்லாமல் செய்யும் முனைப்போடு அரசாங்கம் திட்டமிட்டு தனது வளங்கள் அனைத்தையும் திரட்டிச் செயல்படுகிறது.மேலும்,ஜெனிவா கூட்டத் தொடருக்கு சென்ற அரசு தூதுக்குழு நாடு திரும்பிய கையோடு ஒரு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதன்படி நிலைமாறுகால நீதிக்குரிய அலுவலகங்களான காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் இழப்பீடு நீதிக்கான அலுவலகம் ஆகிய இரண்டுக்கும் 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. அதாவது அரசாங்கம் ஜெனிவாவைக் கையாள முடியும் என்ற நம்பிக்கையோடு உழைக்கிறது என்று பொருள். சான்றுகளைத் திரட்டுவதற்கான பொறிமுறையின் வீரியம் குறைக்கப்பட்டமையானது அந்த நம்பிக்கையைப் பலப்படுத்துவதாக எடுத்துக் கொள்ளலாமா? https://globaltamilnews.net/2022/174107
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.