Jump to content

Search the Community

Showing results for tags 'நிலாந்தன்'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • வலைப்போக்கன் கிருபன்'s செயற்கை நுண்ணறிவு உருவாக்கி
  • Ahal Media Network's Topics

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's சிறப்பு ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணக்கட்டுகள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's திரட்டுகள்
  • Home Appliances Spot's Home Appliances

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

  1. சனல் நாலு யாருக்கு நன்மை செய்கின்றது? நிலாந்தன். September 10, 2023 சனல் நாலு மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறது. முன்னைய வீடியோவைப் போலவே, இதுவும் ஜெனீவா கூட்டத்தொடரை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் கூறப்பட்ட தகவல்கள் உண்மையாக இருந்தால், இலங்கைத் தீவின் அரச கட்டமைப்பும் அதன் உபகரணங்களும் எந்தளவுக்கு நம்பகத்தன்மையற்றவை என்பதனை அது வெளிப்படுத்தியிருக்கிறது. அசாத் மௌலானா அந்த வீடியோவின் இறுதிப் பகுதியில் கூறுகிறார்… ” அதிகாரத்துக்காக தமது சொந்த மக்களையே கொன்றிருக்கிறார்கள்” என்று. அசாத் மௌலானா பிள்ளையானின் உதவியாளராக இருந்தவர். அவருடைய தகப்பன் ஈ.பி.ஆர்.எல்எப். இயக்கத்தில் இருந்தவர். சொந்தப் பெயர் மிகிலார். இயக்கப் பெயர் கமலன். தமிழகத்தில் அந்த இயக்கத்தின் தலைவர் பத்மநாபா கொல்லப்பட்டபோது அவரோடு கொல்லப்பட்டவர். அசாத் மௌலானா சனல் நாலு வீடியோவில், பிள்ளையானுக்கும் இலங்கை படைப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளருக்கும் எதிராகச் சாட்சியமளித்துள்ளார். இதுதொடர்பில் அனைத்துலக விசாரணை தேவை என்று ஏற்கனவே கர்தினால் மல்கம் ரஞ்சித் கூறி வருகிறார். முஸ்லிம்களும் அவ்வாறான கோரிக்கையை ஏற்கனவே முன்வைத்து விட்டார்கள். இப்பொழுது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் அக்கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார். அதாவது இலங்கைத்தீவின் மூன்று இனங்களும் வெவ்வேறு காரணங்களுக்காக அனைத்துலக விசாரணையைக் கேட்கின்றன. இலங்கைத்தீவின் உள்நாட்டு நீதி பரிபாலனக் கடடமைப்பு;, புலனாய்வுக் கட்டமைப்பு; ஆட்சிமுறைமை என்பவற்றின் தோல்வியை இது காட்டுகிறது? ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்காக எந்தக் கொடிய செயலையும் செய்யலாம்; யாரையும் கருவியாகப் பயன்படுத்தலாம் என்று ஒரு மனப்பாங்கு எங்கிருந்து தோன்றியது? அதுவும் தேரவாத பௌத்த பண்பாட்டுக்குள் அது எங்கிருந்து தோன்றியது? இனமுரண்பாட்டின் நேரடி விளைவு அது. ஒரு இனத்தை அழிப்பதன் மூலம் அல்லது இனப்பகையைத் தூண்டுவதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்ற சிங்கள பௌத்த அரசுப் பாரம்பரியத்தின் தொடர் விளைவுகளில் ஒன்றுதான் அது. முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள பௌத்த உணர்வுகளைத் தூண்டி தனிச்சிங்கள பௌத்த வாக்குகளைத் திரட்டலாம் என்று நம்பியமை. அந்த நம்பிக்கை பொய்க்கவில்லை. சிங்கள மக்கள் அந்தக் குடும்பத்துக்கு 2019இல் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கினார்கள். ஆனால் அதே சிங்கள மக்கள் அந்தக் குடும்பத்தை ஓட ஓட விரட்டினார்கள். கடந்த ஆண்டு அந்தக் குடும்பம் ராணுவ முகாம்களிலும் வெளிநாடுகளிலும் ஒளிக்க வேண்டியிருந்தது. ஆனால் இந்த ஆண்டு அவர்கள் ஒப்பீட்டளவில் தற்காப்பு நிலைக்கு வந்து விட்டார்கள். லிபரல் முகமூடி அணிந்த ரணில் விக்ரமசிங்கவின் மறைவில் அவர்கள் படிப்படியாகத் தற்காப்பு நிலையில் இருந்து தாக்கும் நிலைக்கு முன்னேறத் தொடங்கிவிட்டார்கள். சனல் நாலு தொடர்பாக நாடாளுமன்றத்தில் ராஜபக்சகளின் கட்சிக்காரர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதிலிருந்து அதைத் தொகுத்துப் பார்க்கலாம். இவ்வாறு ராஜபக்சக்கள் தற்காப்பு நிலையில் இருந்து தாக்கும் நிலைக்கு முன்னேறுவதைத் தடுக்க வேண்டும் என்று மேற்கு நாடுகளும் விரும்பும்; பன்னாட்டு நாணய நிதியமும் விரும்பும். அந்த விருப்பத்தை சனல் நாலு வீடியோ ஓரளவுக்கு நிறைவேற்றுமா? அந்த வீடியோவின் உடனடி விளைவாக ராஜபக்சக்களின் கீர்த்தி உலக அளவில் மேலும் கெடும். ராஜபக்சக்களின் அந்தஸ்து உலக அளவில் ஏற்கனவே கெட்டுப் போய்விட்டது. இப்பொழுது இந்த வீடியோ அதை மேலும் கெடுக்கும். ஆனால் அது அதன் எதிர்மறை விளைவாக உள்நாட்டில் அவர்களுக்கு ஆதரவைக் கூட்டக்கூடும். புலம்பெயர்ந்த புலிகள் அமைப்புகளும் வெள்ளைக்கார நாடுகளும் சேர்ந்து யுத்த வெற்றியை அபகரிக்கும் நோக்கத்தோடு உருவாக்கியதே அந்த வீடியோ என்று சொன்னால் அது சிங்கள பௌத்த கூட்டு உளவியலில் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் ஐநா கூட்டத் தொடரும் சிங்கள மக்கள் மத்தியில் மேற்குக்கு எதிரான உணர்வுகளை அதிகப்படுத்தும். செப்டம்பர் மாதத்திற்கு பின்னர்தான் ஜனாதிபதித் தேர்தல் வரும். எனவே தேர்தலில் மேற்கு நாடுகளுக்கும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளுக்கும் எதிரான உணர்வலைகள் வாக்களிப்பில் தாக்கம் செலுத்தும். இப்படிப் பார்த்தால் சனல் நாலு வெளியுலகில் ராஜபக்சக்களின் அந்தஸ்தை குறைத்திருக்கின்றது. அதேசமயம் உள்நாட்டில் அவர்களுக்கு அனுதாபத்தைப் பெருக்கக்கூடும். ஆனாலும் ராஜபக்சக்கள் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலில் போட்டியிடும் மனோநிலையில் இல்லை என்றே தெரிகிறது. அவர்களுக்குத் தங்களை எப்படித் தற்காத்துக் கொள்வது என்று தெரியும். உலக அளவில் தங்களுடைய அந்தஸ்தை உயர்த்திக் கொள்ளும் வரை அவர்களுக்கு ஒரு பதிலி தேவை. ரணில் விக்கிரமசிங்க அதற்கு மிகப் பொருத்தமானவர். அவருக்குப் பின் பதுங்குவதன்மூலம் ராஜபக்சக்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தம்மை மேலும் ஸ்திரப்படுத்திக் கொள்ளலாம். தென்னிலங்கையில் தன்னெழுச்சிப் போராட்டங்கள் தோற்கடிக்கப்பட்டு, கிட்டத்தட்ட ஓராண்டு காலத்துக்குள், ராஜபக்ச குடும்பம் பதுங்கும் நிலையிலிருந்து தற்காப்பு நிலைக்கு முன்னேறியிருப்பது அதைத்தான் காட்டுகின்றது. எனவே தம்மை முழுமையாக பலப்படுத்திக் கொள்ளும்வரை அவர்கள் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் குதிப்பார்களா என்பது சந்தேகமே. அவர்களுடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் ஜனாதிபதித் தேர்தலைக் குறித்து இடைக்கிடை வீறாப்பாகக் கருத்துக்களைத் தெரிவித்து வந்தாலும், ராஜபக்சக்கள் வெளிப்படையாக வாய் திறப்பதில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அக்குடும்பத்தின் அடுத்த வாரிசாகக் கருதப்படும் நாமல் ராஜபக்ஸ தன்னை பலப்படுத்திக் கொள்ளும் வரையிலும் அவர்கள் பொறுத்திருப்பார்கள். எனவே அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க அவர்களுடைய பதிலியாக முன்னிறுத்தப்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. ராஜபக்சக்கள் ரணிலுக்கு இடைஞ்சலாக மேலெழுவதைத் தடுக்க சனல் நாலு வீடியோ உதவக் கூடும். இதில் ஒரு வினோதமான அரசியல் சமன்பாடு உண்டு. அதன்படி ராஜபக்சங்களுக்கு எதிரானது ரணிலுக்குச் சாதகமானது. ஆனால் அடுத்த ஆண்டு ராஜபக்சகளின் பதிலியாகத்தான் ரணில் களமிறங்கக்கூடும். ஆயின், அதில் அவருக்குக் கிடைக்கக்கூடிய வெற்றி யாருடைய வெற்றியாக இருக்கும்? அது அவருடைய சொந்த வெற்றியா அல்லது ராஜபக்சக்களின் வெற்றியா? எதுவாயினும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்சக்கள் களமிறங்குவதை குறிப்பிடத்தக்க அளவுக்கு அந்த வீடியோ தடுக்கக்கூடும். அதே சமயம் அந்த வீடியோ தமிழ் அரசியலில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும்? உடனடிக்கு அது கிழக்கில் பிள்ளையானுக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எனினும், அங்கேயும்கூட பிள்ளையானுக்கு ஒரு சாதகமான இடம் உண்டு. ஒரு முஸ்லிம் அவரைக் காட்டி கொடுத்து விட்டார் என்பதைத் தமிழ் முஸ்லிம் உறவுகளைப் பாதிக்கும் விதத்தில் உருப்பெருக்கினால், அது கிழக்கில் முஸ்லிம்களுக்கு எதிரான தமிழ் உணர்வுகளுக்குத் தலைமை தாங்கத் தேவையான பிள்ளையானின் தகைமையை மேலும் அதிகப்படுத்தக்கூடும். சீயோன் தேவாலயத்தில் கொத்தாகக் கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு யார் பொறுப்பேற்பார்கள்? இது உள்நாட்டளவில். அதேசமயம் அனைத்துலக அளவில் நீதிக்காகப் போராடும் தமிழ் அமைப்புகளுக்கு அந்த வீடியோ சாதகமானது. தமிழ் மக்களால் ஏற்கனவே குற்றஞ் சாட்டப்படும் ஒரு குடும்பத்தை அந்த வீடியோ மேலும் அனைத்துலக அளவில் அம்பலப்படுத்தியிருக்கிறது. இலங்கைத்தீவின் அரசுக் கட்டமைப்பை அது அபகீர்த்திக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்கக் கண்டம் ராஜபக்சங்களுக்கு ஆபத்தான ஒரு கண்டமாக மாறி விட்டது. அக்கண்டத்தில் உள்ள இரண்டு பெரிய நாடுகளான அமெரிக்காவும் கனடாவும் ராஜபக்சக்களுக்கு எதிராக நிர்ணயகரமான சில நகர்வுகளை முன்னெடுத்திருக்கின்றன. குறிப்பாக கனடா இரண்டு மூத்த ராஜபக்சங்களுக்கு எதிராகத் தடை விதித்திருக்கிறது. அவ்வாறு தடை விதிக்கப்பட்ட அதே காலப்பகுதியில், கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. போர்க் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் அச்சட்டத்தின் பிரகாரம் இரண்டு மூத்த ராஜபக்சகளுக்கும் அமெரிக்காவில் நெருக்கடியுண்டு. தவிர,அமெரிக்காவும் கனடாவும் சில ராணுவ அதிகாரிகளுக்கு பயணத் தடை விதித்திருக்கின்றன. குறிப்பாக, இலங்கைத் தீவின் ராணுவத் தளபதி மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி ஆகியோருக்கு எதிராகத் தடைகள் உண்டு. இவற்றுடன் கனடா இனப்படுகொலை தொடர்பில் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது. இவற்றுடன் கடந்த ஆண்டு ஐநா தீர்மானம் ஒன்றின் பிரகாரம் போர்க் குற்றங்கள் தொடர்பான சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரிப்பதற்கான அலுவலகம் ஒன்று இயங்கி வருகின்றது. அதில் சேகரிக்கப்படும் சான்றுகளும் சாட்சியங்களும் என்றைக்கோ ஒருநாள் இலங்கைக்கு எதிராகப் பயன்படுத்தப்படக் கூடியவை. மேற்கண்ட நகர்வுகள் யாவும் மேற்கத்தியப் பரப்பில் நிகழ்ந்தவை. இவற்றுடன் அண்மையில் இந்தியாவில், ராமேஸ்வரத்தில் வைத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த கருத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். இலங்கைத்தீவில் இடம்பெற்றது ஒரு பெரிய மனிதப் படுகொலை அல்லது இனப்படுகொலை என்ற பொருள்பட அவர் பேசியிருந்தார். இந்த வரிசையில் கடந்த வாரம் சனல் நாலு வீடியோவும் வெளி வந்திருக்கிறது. மேற்கண்ட அனைத்து விடயங்களும் நீதிக்கான போராட்டத்தில் தமிழ் மக்களுக்குப் பலம் சேர்ப்பவை. இலங்கைத்தீவின் அரசியல் கலாச்சாரம் பொறுப்பு கூறும் பண்புடையது அல்ல என்பதை தமிழ் மக்கள் உலக சமூகத்தின் முன் நிரூபிப்பதற்கு அவை உதவும். https://globaltamilnews.net/2023/195009/
  2. குருந்தூர் மலை தொடக்கம் கஜேந்திரக்குமாரின் வீடுவரை! நிலாந்தன். September 3, 2023 இலங்கைதீவின் சமகால பௌத்த அரசியல் நிகழ்ச்சித் திட்டத்திற்கு ஜனநாயக உள்ளடக்கம் இல்லை. அது தனது அரசியல் அபிலாசைகளை ஜனநாயகத்தின் மொழியில் வெளிப்படுத்துவதும் இல்லை. அதுவும் பிரச்சினையின் ஒரு பகுதிதான் -பேராசிரியர் ஜெயதேவ உயாங்கொட கடந்த வாரக் கட்டுரையில் கூறப்பட்டது போலவே கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானோடு பிக்குகள் மோதத் தொடங்கி விட்டார்கள். திருகோணாமலை கச்சேரியில் நடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்குள் அத்துமீறிப் புகுந்த பிக்குகள் அடங்கிய குழுவை யாராலும் தடுக்க முடியவில்லை. அங்கே போலீஸ் இருந்தது. அரச உயர் அதிகாரிகள் இருந்தார்கள். அங்கிருந்த சிங்கள உயர் அதிகாரிகள் பிக்குகளைக் கண்டதும் எழுந்து நிற்கிறார்கள். சிறு தொகுதி தமிழ் அதிகாரிகள் எழுந்து நிற்கவில்லை. ஆளுநரும் எழுந்து நிற்கிறார். அவருடைய உதவியாளர் யாருக்கும் கைபேசியில் அழைப்பை எடுக்கிறார். ஆனால் யாராலும் அந்த இடத்திலிருந்து பிக்குக்களை அகற்ற முடியவில்லை. ஊடகவியலாளர்கள் சம்பவத்தை நேரலையாக ஒளிபரப்புகிறார்கள். அந்த இடத்தில் பிக்குவுக்கு பதிலாக வேறு யாராவது இருந்திருந்தால் சட்டப்படி கைது செய்திருப்பார்கள். ஆனால் இலங்கைத்தீவின் தேரவாத பிக்குகள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள். பிக்குகள் மட்டுமல்ல, சிங்கள பௌத்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள்தான். நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி சரத் வீரசேகர இரண்டாவது தடவையாக முல்லைத்தீவு நீதிபதியை இழிவான வார்த்தைகளில் அவமதித்திருக்கிறார். நாடாளுமன்ற சிறப்புரிமை எனப்படுவது நீதிபதியை நீதிமன்றத்தை அவமதிப்பதற்கான ஒரு கவசமா? சரத் வீரசேகர அதை ஒரு கவசமாகத்தான் பயப்படுத்துகிறார். பிக்குகளும் சரத் வீரசேகரங்களும் சட்டத்தைக் கையில் எடுக்கிறார்கள். நீதிமன்றங்களை அவமதிக்கின்றார்கள். தையிட்டியில் விகாரை கட்டப்பட்டிருப்பது தனியார் காணியில். அது சட்டவிரோதம். தொல்லியல் திணைக்களம் குருந்தூர் மலையில் நீதிமன்றத்தின் ஆணையை மதித்து நடக்கவில்லை. மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரையிலும் கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன் பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற ஆணையை அமுல்படுத்த முடியவில்லை. செந்தில் தொண்டமான் கிழக்கின் ஆளுனராக நியமிக்கப்பட்டதும் அவ்வாறு சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படுகின்ற காணி அபகரிப்பு நடவடிக்கைகளை நிறுத்த முற்பட்டார். திருக்கோணமலையில் சற்று உயரமாக, குன்றுகளாகக் காணப்படும் எல்லா இடங்களிலும் விகாரைகளைக் கட்டுவது என்று ஒரு பகுதி தேரர்கள் முடிவெடுத்து விட்டார்கள் போலத் தெரிகிறது. ஏற்கனவே கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் ஒரு விகாரை கட்டப்பட்டு விட்டது. வெருகலில்,கல்லடியில், மலைநீதியம்மன் மலையில் 2006இல் ஒரு விகாரை கட்டப்பட்டு விட்டது. அந்த மலையில் முன்பு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தகவற்தொடர்புக் கட்டுமானம் ஒன்று இருந்தது. அதில் இப்பொழுது விகாரை உள்ளது. அங்கு மேலும் நிலத்தைப் பிடிக்கும் நடவடிக்கைகளை மக்கள் எதிர்க்கிறார்கள். திருக்கோணமலை, குச்சவெளி ஆகிய இரண்டு பிரதேச செயலர் பிரிவுகளினதும் எல்லையில் உள்ள ஆறாங்கட்டை அல்லது பெரியகுளம் என்ற இடத்தில் திருகோணமலை-நிலாவெளி வீதியில் ஒரு விகாரையைக் கட்ட முயற்சிக்கப்படுகிறது. கிழக்குப் பல்கலைக்கழக வளாகம் அதற்கருகே காணப்படுகிறது. பிரதேச சபை அதற்கு அனுமதி வழங்கவில்லை. எனினும் வழிபாட்டிடங்களைக் கட்டுவதற்கு பிரதேச சபையின் அனுமதி தேவையில்லை என்று பிக்குகள் நேற்று வெள்ளிக்கு கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஒழுங்குபடுத்திக் கூறியுள்ளார்கள். அடுத்தது, புல்மோட்டைப் பகுதியில் முஸ்லிம்கள் செறிவாக வாழும் அரிசி மலைப் பகுதி. அங்குள்ள கடற்கரையில் காணப்படும் குறுணிக் கற்கள் அரிசி போல அழகாய் இருப்பதால் அப்பகுதிக்கு அப்படி ஒரு பெயர். அங்கேயும் ஒரு விகாரையைக் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. அடுத்தது குச்சவெளியில்.குச்சவெளி போலீஸ் நிலையத்திற்கு எதிராக ஒரு சிறிய குன்று. அங்கே ஒரு விகாரை ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு விட்டது. அடுத்தது, தென்னை மரவாடியில் உள்ள சிறிய மலை. அது யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமத்துக்கு யாத்திரைக்கு வரும் யாத்திரிகர்கள் இளைப்பாறும் ஒரு மலையடிவாரம். அதனால் அது கந்தசாமி மலை என்று அழைக்கப்படுகிறது. அங்கேயும் ஒரு விகாரையைக் கட்ட ஏற்பாடுகள் நடப்பதாகத் தகவல். தென்னை மரவாடிச் சந்தியில், முல்லைத் தீவுக்கு திரும்புமிடத்திலும் மூதூரில் மூன்றாங் கட்டைப் பகுதியிலும் விகாரைகளைக் கட்டுவதற்கு ஏற்பாடுகள் நடப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். இவ்வாறு தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் செறிவாக வாழும் பிரதேசங்களில் குறிப்பாகப் பெரியகுளம் பகுதியில் விகாரை அமைக்கப்படுவதை செந்தில் தொண்டமான் தடுக்க முற்பட்டார். அதனால் திருகோணமலை கச்சேரியில் நடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைக் குழப்புவதற்கு, கச்சேரிக்கு முன்பாக பிக்குகள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். முடிவில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்குள் புகுந்து கூட்டத்தை குழப்பியிருக்கிறார்கள். செந்தில் தொண்டமான் மத்திய அரசின் அதிகாரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு மாகாண ஆளுநர். ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள், மாகாண சபையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சரை விடவும் ஆளுநருக்கே அதிகாரம் அதிகம். தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாத ஆளுநர் பதவிக்கு ஒரு தமிழரை நியமித்ததன்மூலம் அவர் தீர்வைத் தரப்போகிறார் என்ற ஒரு தோற்றம் முதலில் கட்டியெழுப்பப்பட்டது. செந்தில் தொண்டைமானின் நியமனத்தின் பின்னணியில் இந்தியாவைத் திருப்திப்படுத்தும் நிகழ்ச்சிநிரல் உண்டு. ஆனால் பிக்குகள் ஆளுநரோடு மோதத் தொடங்கிவிட்டார்கள். அண்மை மாதங்களாக சிங்கள பௌத்த மயமாக்கல் மற்றும் நிலப்பறிப்பு நடவடிக்கைகளில் பௌத்த மதகுருக்கள் முன்னிலையில் நிற்கிறார்கள். குருந்தூர் மலை தொடக்கம் கஜேந்திரகுமாரின் வீடு வரை பிக்குக்களே காணப்படுகிறார்கள். அது தற்செயலான ஒன்றாகத் தெரியவில்லை. திணைக்களங்களும் அரசபடைகளும் பொலிசும் வெளிப்படையாகச் செய்யமுடியாத விடயங்களுக்கு பிக்குக்கள் முன்னிறுத்தப்படுகிறார்களா? சிங்கள மக்கள் மத்தியில் பிக்குகளுக்கு மதிப்பு உண்டு. அவர்கள் சன்னியாசிகளாகப் பார்க்கப்படுகின்றார்கள். அதனால்தான் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரையில் பல்சமயக் குழுவினரை முற்றுகையிட்டு வைத்திருந்த பிக்குவை அங்கு வந்த போலீஸ் அதிகாரி முதலில் காலில் விழுந்து வணங்கினார். அப்படித்தான் திருக்கோணமலைக் கச்சேரிக்குள் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தைக் குழப்பிய பிக்குக்கள் மாநாட்டு மண்டபத்துக்குள் நுழைந்ததும் பெரும்பாலானவர்கள் எழுந்து நிற்கிறார்கள். அவர்கள் சன்னியாசிகள் என்பதனால் அந்த மதிப்பு. அந்த மதிப்பை ஒரு கவசமாகப் பயன்படுத்தி ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் அவர்கள் முன் நிறுத்தப்படுகிறார்கள். அதாவது ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் வாக்களித்தபடி ஆயிரம் விகாரைகளைக் கட்டி முடித்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டாரா? அடுத்த ஆண்டு முடிவதற்கிடையில் அவர் ஜனாதிபதித் தேர்தலை நடாத்த வேண்டும். அதற்கிடையே நாட்டின் பொருளாதாரத்தை நிமிர்த்த முடியுமோ தெரியவில்லை. சஜித்தின் தலைமை பலவீனமாக இருப்பது ரணிலுக்கு ஒரு வரப்பிரசாதம். எனினும் சஜித் ஏனைய கட்சிகளோடு ஒரு பெருங்கூட்டை உருவாக்கினால் அது ஓப்பீட்டளவில் சவாலாக மாறும். இம்முறை தமிழ் வாக்குகள் தனக்குக் கொத்தாக விழப்போவவதில்லை என்று ரணிலுக்கு தெரிகிறது. ராஜபக்சகளின் அனுசரணையோடு அவர் தேர்தலில் போட்டியிட்டால் தமிழ் வாக்குகளை முழுமையாகப் பெறமுடியாது. எனவே தமிழ் வாக்குகளுக்காக தமிழ் உணர்வுகளோடு சமரசம் செய்வதை விடவும் சிங்கள பௌத்த வாக்குகளை கவர்வதே அவருக்கு உடனடிக்கு இலகுவான வழி. மேலும் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐநா மனித உரிமைகள் கூட்டத்தொடரின்போது ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய அறிக்கையோடு ஒரு புதிய தீர்மானம் நிறைவேற்றப்படலாம். தீர்மானம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் தொடர்ச்சியாக அமையுமா அல்லது புதியதாக அமையுமா என்று பார்க்கவேண்டும். முன்னைய தீர்மானத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான அலுவலகத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாகவும் அத்த தீர்மானத்தில் முடிவெடுக்கப்படக்கூடும். எனவே அக்காலகட்டம் இலங்கையில் சிங்கள பௌத்த உணர்வுகளை அதிகம் தூண்டக்கூடிய ஒரு காலகட்டமாக அமையும். அதைத்தொடர்ந்து ஜனாதிபதி தேர்தல் வரும். அதில் ராஜபக்சகளின் அனுசரணையோடு ரணில் களமிறங்குவாராக இருந்தால் அவர் ஐநா தீர்மானத்தின் விளைவாகத் தூண்டி விடப்பட்ட சிங்கள பௌத்த உணர்வுகளுக்கு தலைமை தாங்கி எப்படி அடுத்த ஜனாதிபதியாக வரலாம் என்றுதான் சிந்திப்பார். அதனால் இப்பொழுது நடக்கும் சிங்கள பௌத்த மயமாக்கல் மற்றும் நிலப்பறிப்பு நடவடிக்கைகள் மேலும் முடுக்கி விடப்படக்கூடிய அரசியற் சூழலே வளர்ச்சியடைந்து வருகிறது. இதில் சரத் வீரசேகர, உதய கமன்பில், விமல் வீர வன்ச, மேர்வின் டி சில்வா போன்றவர்கள் எழுப்பும் இனவாத அலையின் விளைவுகளையும் ரணில் தனக்குச் சாதகமாக அறுவடை செய்து கொள்வார். எனவே கூட்டிக்கழித்துப் பார்த்தால் அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள பௌத்த வாக்குகளைக் கவரத் தேவையான தனது தகைமையை எப்படி அதிகப்படுத்துவது என்றுதான் ரணில் சிந்திப்பார். அதாவது தமிழ் மக்களுக்கு எதிராக சிங்களபௌத்த மயமாக்கலையும் நிலப்பறிப்பையும் அவர் நிறுத்தக்கூடிய வாய்ப்புகள் மிகக்குறைவு. அண்மையில் தமிழ் கட்சித் தலைவர்கள் சிலரைச் சந்தித்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் குருந்தூர் மலை தொடர்பாக அமெரிக்கா உற்றுக் கவனிப்பதாகக் கூறியதாக ஒரு செய்தி வெளிவந்தது. அதில் அவர் இந்துத் தீவிரவாத அமைப்புகளின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் விசாரித்திருக்கிறார். தமிழ் ஊடகங்களில் கூறப்படுவது போல அவர் வெளிப்படையாக ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளைக் குறித்து எதுவும் பேசவில்லையாம். மேலும் அவர் உரையாடலின் போக்கில் குருந்தூர் மலை பற்றிச் சொல்லியிருக்கிறாரே தவிர, அதை அமெரிக்கத் தூதரகத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாக ருவிற்றரில் பதிவிட்டிருக்கவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது. மேற்கு நாடுகள், ஐநா போன்றன சிங்கள பௌத்த மயமாக்கலைக் குறித்து வெளிப்படையாக உத்தியோகபூர்வமாக எதையும் தெரிவித்திராத ஒரு சூழலில், பிக்குக்கள் அதைச் செய்யும்போது அதைத் தடுக்காமல் விடுவது ரணிலைப் பொறுத்தவரை தற்காப்பானது. அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அவருடைய வெற்றி வாய்ப்புக்களைப் பாதுகாப்பது. https://globaltamilnews.net/2023/194780/
  3. பறிக்கப்படும் மேய்ச்சல் தரை – நிலாந்தன். August 27, 2023 அண்மைக் காலங்களில் இனமுரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தும் நிலப்பறிப்பு மற்றும் சிங்களபௌத்த மயமாக்கல் நடவடிக்கைகளில், முன்னணியில் பௌத்த பிக்குகள் காணப்படுகிறார்கள். அப்படியொரு சம்பவம் கடந்த வாரம் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புறத்தில் இடம்பெற்றது. அங்கே மயிலத்தமடு மாதவனையில் காணப்படும் மேய்ச்சல் தரையை ஆக்கிரமிக்க முற்படும் சிங்கள விவசாயிகளுக்குத் தலைமை தாங்கிய ஒரு தேரர் அங்கு நிலைமைகளை அவதானிக்கச் சென்ற பல்சமய ஒன்றியப் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அடங்கிய குழுவை நான்கு மணித்தியாலங்களுக்கு மேல் முற்றுகையிட்டு வைத்திருக்கிறார். மயிலத்தனை மாதவனை மேய்ச்சல் தரை எனப்படுவது மட்டக்களப்பின் எல்லையில் மதுறு ஓயாவின் கிளையாகிய மாந்தரி ஆற்றை எல்லையாகக் கொண்ட ஒரு செழிப்பான மேச்சல் நிலம் ஆகும். இங்கே கிட்டத்தட்ட 25,000 ஹெக்டேர் மேச்சல் தரை உண்டு. தமிழ்மக்கள் அதில் பத்தாயிரம் ஹெக்டேரைத்தான் கேட்கிறார்கள். அந்த மேய்ச்சல் தரையை நம்பி சுமார் 996 குடும்பங்கள் உண்டு. கடந்த நூற்றாண்டில் 1977இலிருந்து அந்த மேய்ச்சல் தரையை தமிழ்ப் பண்ணையாளர்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். எனினும் போர்க்காலங்களில் அது கைவிடப்பட்டிருக்கிறது. 2009 ஆம் ஆண்டு மாவட்டத்தின் அரச அதிபர் அந்த மேய்ச்சல் தரையை தமிழ் பண்ணையாளர்களுக்கு வழங்கியுள்ளார். 2012ஆம் ஆண்டிலிருந்து சிங்கள விவசாயிகள் அந்த மேய்ச்சல் தரையை ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். எனினும், தமிழ்ப் பண்ணையாளர்கள் வழக்குகளைத் தொடுத்து அதன் மூலம் அந்த ஆக்கிரமிப்பை ஓரளவுக்கு கட்டுப்படுத்த கூடியதாக இருந்திருக்கிறது. குறிப்பாக ஒஸ்ரின் பெர்னாண்டோ ஆளுநராக இருந்த காலகட்டத்தில் அவர் தமிழ்ப் பண்ணையாளர்களை ஒப்பிட்டுளவில் பாதுகாத்திருக்கிறார். ஆனால் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததும் அங்கே ஆக்கிரமிப்பு ஒப்பீட்டளவில் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக கோத்தாவின் மூளை என்று கருதப்பட்ட சிந்தனைக் குழாமாகிய “வியத்மக” அமைப்பைச் சேர்ந்த அனுராதா யகம்பத் கிழக்கின் ஆளுநராக நியமிக்கப்பட்ட பின் மேய்ச்சல் தரையை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டதாக்க பண்ணையாளர்கள் கூறுகிறார்கள். எனினும் பண்ணையாளர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் துணையோடு வழக்குகளைத் தொடுத்து வழக்குகளில் தமக்குச் சாதகமான ஆணைகளையும் பெற்றிருக்கிறார்கள். அவ்வாறு 2022 ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சிங்கள விவசாயிகள் தொடர்ச்சியாக அவமதித்து வருகிறார்கள். குறிப்பாக கடந்த ஜூன் மாதத்தில் இருந்து ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. மேலும் இப்பொழுது நிலவும் வறட்சியும் கால்நடைகளைப் பாதிக்கின்றது. இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு முன்பு தலைமை தாங்கிய ஒருவர் நீதிமன்ற நடவடிக்கைகளின் விளைவாகப் பின்வாங்கி விட்டார். இப்பொழுது அங்கு நிலப்பறிப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு பெண் தலைமை தாங்கி வருவதாக பண்ணையாளர்கள் கூறுகிறார்கள். நடுத்தர வயதைக் கொண்ட அப்பெண் அம்பாறை, தெகிவத்த கண்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், புதையல் தோண்டுவதற்கும், காட்டை அழிப்பதற்கும் தேவையான கனரக வாகன வளங்களோடு அவர் காணப்படுவதாகவும் தமிழ்ப் பண்ணையாளர்கள் கூறுகிறார்கள். சுற்றிவர மின்சார வேலி அமைக்கப்பட்ட பாதுகாப்பான தற்காலிகக் கொட்டிலில் அவர் அங்கே ஏறக்குறைய நிரந்தரமாகத் தங்கியிருக்கிறார். அவருக்குப் பலமான ஆளணிகள் உண்டு. அரச உயர் மட்டத்திலும் அவருக்கு செல்வாக்கு அதிகம். கைபேசி அழைப்பின்மூலம் அவர் அரசு அதிகாரிகளை கையாளக்கூடியவராக காணப்படுவதாக பண்ணையாளர்கள் கூறுகிறார்கள் .அந்தப் பெண் முன்பு ஆளுநராக இருந்த அனுராதாவுக்கு நெருக்கமானவர் என்றும் தமிழ் பண்ணையாளர்கள் கூறுகிறார்கள். கடந்த வாரம் பல்சமய ஒன்றியப் பிரதிநிதிகளை முற்றுகையிட்டவர்கள் மத்தியில் அப்பெண்ணின் மகன் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்த மேய்ச்சல் தரையை ஆக்கிரமித்திருக்கும் சிங்கள விவசாயிகள் ஏழைகள் அல்ல. அவர்களிடம் முச்சக்கர வண்டி, ராக்டர், காடுகளை அழிக்கத் தேவையான கனரக வாகனங்கள் உள்ளிட்ட பெறுமதியான சொத்துக்கள் உண்டு. அவர்களிடம் துப்பாக்கிகளும் உண்டு. தவிர படையினரின் ஆதரவும் மகாவலி அதிகார சபையின் பக்கபலமும் உண்டு. இதுவரையிலும் 2000க்கும் குறையாத மேச்சல்நிலம் அவர்களால் எரித்தழிக்கப்பட்டிருக்கிறது. காட்டையழித்து அதில் அவர்கள் சோளம், கௌபி போன்ற தானியங்களைப் பயிர்செய்கிறார்கள். தமிழ்ப் பண்ணையாளர்களின் மாடுகள் உள்நாட்டு இனங்களைச் சேர்ந்தவை. அவை உள்நாட்டுத் தானியங்களை விரும்பி உண்ணும். மேச்சல் தரைக்குள் பயிர் செய்தால் என்ன நடக்கும்? மாடுகள் அந்தப் பயிர்களை மேயாமல் உண்ணாவிரதமா இருக்கும்? இவ்வாறு தமது மேச்சல் தரையை ஆக்கிரமித்திருக்கும் பயிர்களை மாடுகள் மேயும் பொழுது அல்லது மாடுகள் காடுகளுக்குள் செல்லும் பொழுது சிங்கள விவசாயிகள் மாடுகளை சுருக்கு வைத்துப் பிடிக்கிறார்கள், அல்லது கொல்கிறார்கள் என்று பண்ணையாளர்கள் கூறுகிறார்கள். இதுவரையிலும் சுமார் 5000 மாடுகள் அவ்வாறு கொல்லப்பட்டு விட்டன. மேலும் மாடுகளைப் பிடித்து வைத்துக்கொண்டு தமிழ்ப் பண்ணையாளர்களிடம் பல லட்சம் பணத்தை தண்டமாக அறவிடுகிறார்கள். ஒருபுறம் மேய்ச்சல் தரை சுருங்கிக் கொண்டு வருகிறது. இன்னொரு புறம் கால்நடைகள் கொல்லப்படுகின்றன, அல்லது காணாமல் போகின்றன. இப்பொழுது வறட்சியும் வாட்டுகின்றது. இவற்றின் விளைவாக அந்த மேய்ச்சல் தரையை நம்பி வாழும் குடும்பங்கள் நிச்சயமற்ற ஓர் எதிர்காலத்தை நோக்கிச் செல்கின்றன. கிழக்கில் ஒரு லீட்டர் பால் கிட்டத்தட்ட 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால் யாழ்ப்பாணத்தில் இருநூற்று இருபது ரூபாய். கிழக்கில், குறிப்பாக மயிலத்தனை மாதவனை மேய்ச்சல் தரையில் கிடைக்கும் மாட்டு எருவை மலையகத்தைச் சேர்ந்த விவசாயிகள்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். அந்த மாட்டெரு வியாபாரத்தை ஓர் ஒழுங்குக்குள் கொண்டுவர முடியவில்லை. அதனால் சிங்கள வியாபாரிகள் மாட்டெருவை அறா விலைக்குக் கொள்முதல் செய்வதாக பண்ணையாளர்கள் முறைப்பாடு செய்கிறார்கள். அந்த மேய்ச்சல் தரை சுருங்கிக் கொண்டே போனால் அது கிழக்கின் பொருளாதாரத்தைப் பாதிக்கும். இதுதொடர்பில் கிழக்கில் உள்ள அரசுக்கு விசுவாசமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாய் திறப்பது குறைவு. கிழக்கில் உள்ள அரசுக்கு விசுவாசமான அரசியல்வாதிகள் வடக்கை விரோதியாகப் பார்க்கின்றார்கள். ஆனால் தமது மேய்ச்சல் தரைகளை ஆக்கிரமிக்கும் தென்னிலங்கைக் கட்சிகளுக்கு விசுவாசமாகவும் பணிவாகவும் காணப்படுகிறார்கள். மட்டக்களப்பில் இப்பொழுது ஏழுக்கும் குறையாத கால்நடைப் பண்ணையாளர் சங்கங்கள் உண்டு. இச்சங்கங்களில் மொத்தம் ஆறு லட்சத்திற்கும் குறையாத கால்நடைகள் உண்டு. மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரையில் மட்டும் இரண்டு லட்சத்திலிருந்து நாலு லட்சம் வரையான மாடுகள் உண்டு. ஆனால் இவற்றில் 90 ஆயிரம் மாடுகளுக்குத்தான் காதுப்பட்டி அணிவிக்கப்பட்ட பதிவு உண்டு. காதுப்பட்டி உள்ள மாடுகளுக்குத்தான் அரச திணைக்களங்களில் பதிவு இருக்கும். பதிவு செய்யப்பட்ட கால்நடைகளின் எணிக்கைக்கு ஏற்ப மேய்ச்சல் தரை ஒதுக்கப்படும். இந்தவிடயத்தில் தமிழ்ப் பண்ணையாளர்கள் மாடுகளுக்கு உரிய பதிவுகளை மேற்கொள்ளத் தவறி விட்டார்கள் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். மேச்சல் தரையை ஆக்கிரமிப்பது என்பது கிழக்கின் பொருளாதாரத்தை அழிக்கும் ஒரு நடவடிக்கை மட்டுமல்ல. அதற்குமப்பால் அதற்கு ஒரு பரந்தகன்ற, நீண்டகால நோக்கிலான நிகழ்ச்சி நிரல் ஒன்று உண்டு. அது பல தசாப்த காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தமிழ்மக்களின் மரபு வழித் தாயகம் என்ற கருத்துருவத்தை சிதைப்பதன்மூலம் தமிழ்மக்களின் தேசிய இருப்பை அழிப்பதே அந்த நிகழ்ச்சி நிரல். முதலில் அது திட்டமிட்ட குடியேற்றங்களில் இருந்து தொடங்கியது. அதன் விளைவாக இப்பொழுது திருகோணமலை பெருமளவுக்கு சிங்கள பௌத்தமயப்பட்டு விட்டது. கிழக்கில், அம்பாறையின் நிலைமையும் அப்படித்தான். இரண்டாவதாக, கிழக்கில் தமிழ்-முஸ்லிம் முரண்பாட்டை ஊக்குவிப்பது. அதில் அவர்கள் கணிசமான அளவுக்கு முன்னேறி விட்டார்கள். மூன்றாவதாக, வடக்குக் கிழக்கை சட்டரீதியாகவும்; நிர்வாக ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பிரிப்பது. நாலாவதாக ,அவ்வாறு வடக்குக் கிழக்கைப் பிரித்து கிழக்கைத் தனிமைப்படுத்தி, அங்கே தமிழ்மக்கள் ஒப்பீட்டுளவில் செறிவாகக் காணப்படும் மட்டக்களப்பைத் தனிமைப்படுத்திச் சிதைத்து விடுவது. இவ்வாறு வடக்குக் கிழக்கைப் பிரித்து தமிழ்மக்களின் தாயக ஒருமைப்பாட்டைச் சிதைக்கும் வேலைத் திட்டத்திற்கு உதவி செய்யும் அரசுக்கு விசுவாசமான கிழக்குமைய அரசியல்வாதிகள் தமது மேய்ச்சல் தரைகள் பறிக்கப்படுவதற்கு எதிராக துலக்கமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியிருந்த ஒரு பின்னணியில், தமிழ்த் தேசிய நிலைபாட்டைக் கொண்ட அரசியல்வாதிகள் அந்த விடயத்தில் ஒப்பீட்டளவில் அதிகம் அக்கறை காட்டுகிறார்கள். ஆனாலும் அவர்கள் பலமாக இல்லை என்பதைத்தான் அண்மைக்கால நிலைமைகள் உணர்த்துகின்றன. குறிப்பாக செந்தில் தொண்டமான் கிழக்கின் ஆளுநராக நியமிக்கப்பட்ட பின் பண்ணையாளர்கள் மத்தியில் ஏதோ சிறிய அளவிற்கு நம்பிக்கை தோன்றியிருக்கிறது. அண்மையில் செந்தில் தொண்டைமான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்திருக்கிறார். இச்சந்திப்பின்போது மேய்ச்சல் தரை விடயம் தன்னுடைய ஆளுகைக்கு உட்பட்டது என்பதனால் அதில் தான் நடவடிக்கை எடுக்கப்போவதாகக் கூறியிருக்கிறார். ஆனால் இங்கே பிரச்சனை என்னவென்றால் ஒரு செந்தில் தொண்டமான மட்டும் வைத்து இந்த விவகாரத்தை மதிப்பிட முடியாது. கடந்த மாதம் நடந்த மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் செந்தில் தொண்டமான் மேய்ச்சல் தரை விவகாரமும் உட்பட மூன்று விடையங்களில் சட்டத்தை அமுல்படுத்துமாறு ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதற்கமைய மாவட்ட அரச அதிபர் மூன்று விடையங்களில் சட்டத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி நாவலடி என்ற பகுதியில் சட்டவிரோதமாக நிலத்தைப் பிடித்து வைத்திருந்த முஸ்லிம்களை போலீசார் அகற்றியிருக்கிறார்கள். அது தமிழர்களுக்கு முஸ்லிம்களுக்கும் இடையிலான முறுகலை அதிகப்படுத்தியுள்ளது. அதேசமயம் அரச அதிபர் குறிப்பிட்டிருக்கும் மூன்று விடயங்களில் ஒன்றாகக் காணப்படும் மேய்ச்சல் தரை விடயத்தில் இட்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, இக்காலப் பகுதியில்தான் பிக்குவின் தலைமையிலான சிங்கள விவசாயிகள் பல்சமய ஒன்றியப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை சுற்றி வளைத்திருக்கிறார்கள். அதாவது ஆளுநர் செந்தில் தொண்டமான் தமிழ் மக்களுக்கு ஆதரவாக முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகளில் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு நடவடிக்கைதான் ஒப்பேற்றப்பட்டிருக்கிறது. சிங்கள நிலப்பறிப்பாளர்களுக்கு எதிரான நடவடிக்கையில் அவர் இன்றுவரை வெற்றி பெறவில்லை. செந்தில் தொண்டமான நியமித்த அதே அரசாங்கத்துக்குள்தான் வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிராகப் பேசும் நசீர் முகமட் காணப்படுகிறார். அதே அரசாங்கத்துக்குள்தான் முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டும் பிள்ளையானும் வியாளேந்திரனும் காணப்படுகிறார்கள். இதில் ரணில் யாருக்கு உண்மையாக இருக்கிறார்? சிங்கள பௌத்த நிலப்பறிப்பாளர்கள் மேய்ச்சல் தரை விடயத்தில் செந்தில் தொண்டமான எவ்வளவு காலத்துக்கு சகித்துக் கொள்வார்கள் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஏனெனில் மேய்ச்சல் தரை விவகாரம் எனப்படுவது இக்கட்டுரையில் முன்பு கூறப்பட்டது போல தமிழ் மக்களின் மரபு வழித் தாயகத்தைச் சிதைக்கும் பரந்தகன்ற நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதிதான். அதை ஒரு தமிழ் ஆளுநர் எந்தளவுக்கு மாற்றியமைக்கலாம்? https://globaltamilnews.net/2023/194510/
  4. காற்றுவெளிக் கிராமத்தில் ஒரு கண்ணகியம்மன் நிலாந்தன் கடந்த வாரம் புங்குடுதீவில் நடந்த கண்ணகியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை நோக்கிப் புலம்பெயர்ந்த தமிழர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு வந்தார்கள். 1991ஆம் ஆண்டு தீவில் நிகழ்ந்த இடப்பெயர்வுகளின் பின் புங்குடுதீவை நோக்கி இவ்வளவு தொகையான மக்கள் திரண்டு வந்தமை இதுதான் முதல் தடவை. அண்மை ஆண்டுகளில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இவ்வாறு வெவ்வேறு நிகழ்வுகளை நோக்கி ஒன்றுதிரளக் காணலாம். அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூறாவது ஆண்டுக் கொண்டாட்டம், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, பரியோவான் கல்லூரி,சில நாட்களுக்கு முன் மெத்தடிஸ்ட் மகளிர் கல்லூரி போன்றன தமது இருநூறாவது ஆண்டு விழாவை கொண்டாடியபோது பழைய மாணவர்களும் உட்பட புலம்பெயர்ந்த தமிழர்கள் அந்த நிகழ்வுகளை நோக்கித் திரண்டார்கள். மிகச் செழிப்பாக பண உதவிகளைச் செய்தார்கள். சில பாடசாலைகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் வழங்கும் உதவிகள் கோடிக்கணக்கானவை. கண்ணகி அம்மனுக்கும் அவ்வாறு கோடிக்கணக்காக காசு திரட்டப்பட்டிருக்கிறது. கிடைக்கும் தகவல்களின்படி அக்கோவிலை புனரமைப்பதற்கு கிட்டத்தட்ட 90கோடி ரூபாய்கள் செலவழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கோயிலின் ஒவ்வொரு தூணுக்கும் தலா 5லட்சம் ரூபாய் புலம்பெயர்ந்த ஊர்வாசிகளிடமிருந்து திரட்டப்பட்டிருக்கிறது. மொத்தம் 200க்கும் குறையாத தூண்கள் அங்கே உண்டு. கும்பாபிஷேகத்திலன்று ஒரு புலம்பெயர்ந்த தமிழர் கிட்டத்தட்ட ஏழரை லட்சம் ரூபாய் செலவழித்து பக்தர்கள் அனைவருக்கும் இலவசமாக ஐஸ்கிரீம் விநியோகித்தார். கடந்த மூன்று தசாப்தங்களின் பின் புங்குடுதீவை நோக்கி ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு வந்த ஒரு நிகழ்வு அது. இலங்கைத்தீவில் மட்டுமல்ல இப்பிராந்தியத்திலேயே ஆளில்லா வீடுகள் அதிகமுடைய ஒரு பிரதேசமாக தீவுப்பகுதியைக் குறிப்பிடலாம். குறிப்பாக புங்குடுதீவில் உத்தியோகப்பற்றற்ற தகவல்களின்படி 4000க்கும் சற்று அதிகமான மக்கள் வாழ்வதாக தெரிவிக்கப்படுகிறது. பேராசிரியர் குகபாலன் 4000க்கும் குறைவான மக்களே அங்கே இருப்பதாகக் கூறுகிறார். புங்குடுதீவும் உட்பட பெரும்பாலான தீவுப்பகுதிகளில் சனத்தொகை குறைவு. ஆளற்ற வீடுகளே அதிகம். ஒரு காலம் தேவாலயங்களின் பட்டினம் என்று வர்ணிக்கப்பட்ட ஊர்காவற்துறை இப்பொழுது கைவிடப்பட்ட வீடுகளின் பட்டினமாக மாறிவிட்டது. அங்கெல்லாம் பழம்பெரும் வீடுகளைச் சூழ்ந்து காடு வளர்ந்து கிடக்கின்றது. அப்படித்தான் நெடுந்தீவிலும். தீவுகளில் சன நடமாட்டம் குறைந்த காரணத்தால் அங்கே குற்ற செயல்களுக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. புங்குடுதீவில் வித்யா படுகொலை, நெடுந்தீவில் புலம்பெயர்ந்தவர்களும் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டமை, அனலைதீவில் புலம்பெயர்ந்த தமிழர் கொல்லப்பட்டமை போன்றவற்றை இங்கு சுட்டிக்காட்டலாம். தீவுகள் இடம்பெயரத் தொடங்கியது போரினால் மட்டும் அல்ல. பொருளாதாரக் காரணங்களுக்காகவும்தான். குடிநீர் ஒரு முக்கிய பிரச்சினை. அதுதவிர கல்வி, மருத்துவ,தொழிற் தேவைகளுக்காகவும் மக்கள் அங்கிருந்து இடம்பெயர்த்தார்கள். இப்பொழுதும் இடம்பெயர்கிறார்கள். அயலில் ஆட்கள் இல்லையென்றால் தனித்து விடப்பட்ட வீடுகளுக்கு இயல்பாகவே பயம் தொற்றிக் கொள்ளும். அது மேலும் இடப்பெயர்வை ஊக்குவிக்கும். போர், இடப்பெயர்வை வாழ்வின் ஒரு பகுதியாக்கியது. போர்க்காலத்தில் மக்கள் தொகையாக இடம்பெயரும் ஒரு போக்கு முதலில் தீவுகளில்தான் தொடங்கியது. முதலில் காரைநகர். அதன்பின் லைடன்தீவுகள் என்று அழைக்கப்படும் ஊர்காவற்துறையும் உள்ளிட்ட தீவுகள். முடிவில் முழு யாழ்ப்பாணமும் இடம்பெயர்த்தது. இவ்வாறு ஆளற்றுப்போன தீவுகளைப்பற்றி புங்குடுதீவைச் சேர்ந்த கவிஞர் சு.வில்வரத்தினம் எழுதிய கவிதைத் தொகுப்புக்குப் பெயர் “ காற்றுவெளிக் கிராமம்” தீவுகளில் இருந்து மக்கள் மேலும் வெளியேறுவார்களாக இருந்தால் அங்கு ஒரு மாகாண சபை உறுப்பினரைக்கூட தெரிவு செய்வதற்கு ஆட்கள் இல்லாமல் போய்விடும். ஒரு காலம் அங்கே ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைத் தெரிவு செய்யுமளவுக்கு 36 ஆயிரத்துக்கும் குறையாத வாக்காளர்கள் வசித்தார்கள். எனவே தீவுகளை நோக்கி எப்படி ஆட்களை கொண்டு வரலாம் என்று சிந்திப்பதே தீவுகளில் இருந்து புலம்பெயர்ந்த மக்கள் முன்னால் உள்ள முக்கிய பொறுப்பாகும். ஒரு நாள் திருவிழாக்கள்,சில நாள் கொண்டாட்டங்களை நோக்கி மக்களைத் திரட்டுவதற்குமப்பால், தமது தாய்க் கிராமத்தை நோக்கி என்றென்றும் மக்கள் திரளக்கூடிய பொருளாதாரத் திட்டங்களை வகுக்க வேண்டும். தமிழ்ப் புலப்பெயர்ச்சியின் தொடக்க காலத்திலேயே தீவுகளைச் சேர்ந்தவர்கள் அதிகமாகப் புலம்பெயர்ந்தார்கள். அவர்களில் சிலர் தமது சொந்தத்தீவுகளில் தனிப்பட்ட முறையில் தங்களால் இயன்ற அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்திருக்கிறார்கள். எழுவைதீவில் மருத்துவர் நடேசன் கட்டிய வைத்தியசாலை; அனலைதீவின் நீட்சியாகவுள்ள புளியந்தீவில், ஒரு வீடமைப்புத் திட்டம், புங்குடுதீவில் சுற்றுச்சூழல் மேம்பாட்டு திட்டங்கள் போன்ற சில உதாரணங்களை இங்கு சுட்டிக்காட்டலாம். வடமாகாணசபை இயங்கத் தொடங்கியபோது, முதலமைச்சரிடம் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் பா.அகிலன் தீவுகளை மையமாகக் கொண்ட ஒரு சுற்றுலாத் திட்டத்தை முன்வைத்தார். ஒவ்வொரு தீவிலும் எது தனித்துவமானதோ, அதை மையமாகக் கொண்டு சுற்றுலா வலையமைப்பு ஒன்றை உருவாக்குவது; ஒவ்வொரு தீவிலும் என்னென்ன பாரம்பரிய உணவு வகைகள் கிடைக்குமோ அவற்றுக்குரிய உணவகங்களை உருவாக்குவது; தீவுகளை இணைக்கும் படக்குச்சேவைகளை அல்லது மிதக்கும் விருந்தகங்களை உருவாக்குவது. ஆனால் அத்திட்டத்தை வடமகாணசபை அதிகாரிகள் ஆர்வத்தோடு அணுகவில்லை என்று தெரிகிறது. அதுபோலவே சில ஆண்டுகளுக்கு முன் மூன்று தீவுகளை மையமாகக் கொண்டு மீளப்புதுப்பிக்கும் எரிசக்தித் திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டது. அந்தத் திட்டம் முதலில் சீனாவிடம் கொடுக்கப்பட்டது. பின்னர் இந்தியாவின் எதிர்ப்புக் காரணமாக அது இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. நயினாதீவு, நெடுந்தீவு, அனலைதீவு ஆகிய மூன்று தீவுகளிலும் அவ்வாறு மீளப்புதுப்பிக்கும் எரிசக்தி திட்டங்கள் நிறுவப்படும். ஆனால் இந்தியா அத்திட்டங்களைப் பொறுப்பெடுத்த பின் இலங்கை அரசாங்கம், நிர்வாக மற்றும் தொழில் நுட்ப ரீதியிலான முட்டுக்கட்டைகள் உருவாக்கிவருவதாகச் ஒரு தகவல் தீவுகளை மையமாகக் கொண்டு ஏற்கனவே உருவாக்கப்பட்ட கடலட்டை பண்ணைகளும் விவாதப்பொருட்களாக மாறின. கடலட்டை, மீளப்புதுப்பிக்கும் எரிசக்தித் திட்டங்கள் போன்றவற்றின்மூலம் தீவுப்பகுதியின் சனக்கவர்ச்சி அதிகரிக்குமா என்று தெரியவில்லை. ஆனால் புவிசார் அரசியல் போட்டிக்குள் தீவுகளும் சிக்குண்டு விட்டன என்பது மட்டும் தெரிகின்றது. தீவுகளுக்கென்று தனித்துவம் உண்டு. அதில் முக்கியமானது, தீவுகளில் இருந்து எழுச்சிபெற்ற கவர்ச்சிமிகு வணிகப் பாரம்பரியம் ஆகும். தீவுகளைச் சேர்ந்த வணிகர்கள் முறைசார் படிப்புக்களுக்கூடாக வந்தவர்கள் அல்ல. ஆனால் பரம்பரை பரம்பரையாக திரட்டப்பட்ட பட்டறிவுக்கூடாக பெரு வணிகர்களாக எழுந்தவர்கள். தீவுகளுக்கேயான தனித்துவம்மிக்க, நூதனமான அந்தப் பட்டறிவை முறைசார் புலமைப் பரப்புக்குள் உள்வாங்கினால் என்ன? தீவுகளை மையமாகக் கொண்டு வணிகக் கல்லூரிகளை உருவாக்கினால் என்ன? எதைச் செய்தால் தீவுகளை சனக்கவர்ச்சி மிக்கவைகளாக மாற்றலாம்? ஒவ்வொரு ஆண்டும் நயினாதீவை நோக்கி லட்சக்கணக்கானவர்கள் வருகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாரும் வில்வரத்தினத்தின் காற்று வெளிக் கிராமங்களை கடந்துதான் போகின்றார்கள். கண்ணகியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்காக உள்ளூரில் வேலைக்கு ஆட்களைப் பெற்றுக்கொள்வதில் நிறையத் தடைகள் இருந்ததாகக் கூறப்படுகின்றது. கோயிலைத் துப்புரவாக்குவதற்கு உள்ளூரில் ஆட்ளைப் பிடிப்பது கஷ்டமாக இருந்ததாம். தீவுகளில் மட்டுமல்ல யாழ்ப்பாணத்திலும் நிலைமை அதுதான். சுவாமி தூக்க ஆளில்லை. சில ஆண்டுகளுக்கு முன் புங்குடு தீவில் வில்வரத்தினத்தின் நினைவுநாளைக் கொண்டாடினார்கள். அம்பலவாணர் அரங்கில் கால்வாசிக்குக்கூட மக்கள் நிரம்பவில்லை. அதிலும் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தவர்களே அதிகம். ஆனால் நீண்ட ஆண்டுகளின் பின் கண்ணகியம்மன் கோயிலை நோக்கி புங்குடுதீவு மீண்டும் திரண்டு வந்திருக்கிறது. கண்ணகியம்மன் கோவிலுக்கு வேறு ஒரு முக்கியத்துவமும் உண்டு. 1971 ஆம் ஆண்டு அங்கு நடந்த சாதி எதிர்ப்புப் போராட்டம் பிரசித்தமானது. ஈழத் தமிழர்கள் மத்தியில் தோன்றிய மிக முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவரும் வில்வரத்தினத்தின் ஆசிரியருமான மு.தளையசிங்கம் அப்போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அங்குள்ள கிணற்றில் சாதிரீதியாகத் தாழ்த்தப்பட்டவர்கள் நீர் அள்ளுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. அதை எதிர்த்துத் தளையசிங்கம் போராடினார். ஒருகாலம் சாதிரீதியாக தாழ்த்தப்பட்டவர்களை ஆலையங்களுக்குள் அனுமதிக்க மறுத்தவர்களுக்கும் குடி நீர்க்கிணறுகளைத் தடுத்தவர்களுக்கும் எதிராகப் போராட வேண்டியிருந்தது. ஆனால் இன்றைக்கு அவ்வாறு தடுத்தவர்களின் ஆளில்லா வீடுகளில் சாதி ரீதியாக தாழ்த்தப்பட்ட மக்களே வந்து குடியிருக்கும் ஒரு நிலை. ஆனால் அந்த வீடுகளை அதில் இப்பொழுது குடியிருப்பவர்களுக்கு சொந்தமாக எழுதிக் கொடுப்பதற்கு வீட்டின் உரிமையாளர்கள் தயாரில்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. அதேசமயம் ஊர்காவற்துறை கரம்பன் மேற்கில் புலம்பெயர்ந்த தமிழர்கள் இருவர் தமது காணிகளை 12 காணியில்லாத குடும்பங்களுக்குப் பகிர்ந்து கொடுத்திருக்கிறார்கள். எனினும், பூதங்காக்கும் காணிகள் பலவற்றை அவ்வாறு கொடுப்பதற்கு மனமில்லாத ஒரு தொகுதியினர் பங்குத் தந்தையிடமும் ஆயர் இல்லத்திடமும் தமது காணி உறுதிகளை கொடுத்து வைத்திருப்பதாக ஒரு புலம்பெயர்ந்த தமிழர் குற்றஞ்சாட்டினார். ஒருபுறம் தமிழ்ச் சமூகத்தில் நிலமற்ற வீடற்ற மக்கள். இன்னொரு புறம் புதர் மண்டிக் கிடக்கும் பெரு மாளிகைகள். ஒருபுறம் தேவையோடு தவிக்கும் தாயக மக்கள். இன்னொருபுறம் தாயகத்தைப் பிரிந்த பிரிவேக்கத்தோடு காசை என்ன செய்வது என்று தெரியாமல் கொட்டிச் சிந்தும் புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகம். நாட்டைப் பிரிந்த பிரிவேக்கத்தோடு நாட்டுக்கு எதையாவது செய்ய வேண்டும் என்று புலம்பெயர்ந்த தமிழர்கள் விரும்புகிறார்கள். ஆனால் அவர்களிடம் உள்ள அளவற்ற செல்வத்தையும் தாயகத்தில் காற்றுவெளிக் கிராமங்களின் தேவைகளையும் பொருத்தமான அபிவிருத்தி திட்டங்களின்மூலம் இணைப்பதற்கு யார் உண்டு? குறிப்பாக, புங்குடுதீவில் குடிநீர் ஒரு பிரச்சினை. ஒரு சிறிய குடிநீர்ச் சுத்திகரிக்கும் நிலையத்தை நிர்மாணிப்பதற்கு கிட்டத்தட்ட 40 லட்சம்வரை தேவை என்று கணிப்பிடப்படுகிறது. கண்ணகியம்மனுக்காக செலவழிக்கப்பட்ட தொகையோடு ஒப்பிட்டால் இது மிகச்சிறியது. கோவில் தூண் ஒன்றுக்காக காசு கொடுத்த எட்டுப் பேர் சேர்ந்தால் ஒரு நீர் விநியோகத் திட்டத்தை நிறுவலாம். புங்குடுதீவு மருத்துவமனையில் இப்பொழுதுள்ள மூன்று மருத்துவர்கள் உண்டு. அவர்களில் ஒருவர் சிங்களவர். அவர்தான் பொறுப்பதிகாரி. அண்மை ஆண்டுகளில் அவ்வாறு சிங்கள மருத்துவர்கள் தீவுகளுக்கு நியமிக்கப்படும் ஒரு நிலைமை. சிங்கள மருத்துவர்கள்தான் அதற்குத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. கணித விஞ்ஞான பிரிவுகளைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அங்கே குறைவு. பிள்ளைகள் யாழ்ப்பாணம் நகரத்துக்குத்தான் வர வேண்டும். அல்லைப்பிட்டியில் கிறீஸ்தவ திருச்சபையினரால் கட்டப்பட்ட ஒரு சர்வதேசப் பாடசாலை உண்டு. அது மதம் மாற்றும் நோக்கத்தோடு கட்டப்பட்டது என்று சில இந்துக்கள் குற்றஞ் சாட்டுகிறார்கள். அப்படியென்றால் கோவில்களைப் புனரமைக்கும் காசில் பள்ளிக்கூடங்களைக் கட்டலாம். அறப்பணிகளைச் செய்யலாம். நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவலாம். தீவுகளின் சனக் கவர்ச்சியைக் கூட்டலாம். புலம்பெயந்த தமிழர்களையும் தாயகத்தையும் ஒருங்கிணைப்பது அல்லது தேவைகளையும் வளங்களையும் ஒருங்கிணைப்பது என்பது தேச நிர்மாணத்தின் ஒரு பகுதிதான். தேசத்தைக் கட்டியெழுப்புவது என்பது சனத்திரட்சியை, இனத்திரட்சியைப் பாதுகாப்பதும் பெருக்குவதுந்தான். ஊர்பற்று இருக்க வேண்டும். அது நல்லது. அதைவிட நல்லது, அந்த ஊர்ப்பற்றானது தேச நிர்மாணத்தின் ஒரு பகுதியாக இருப்பது. https://www.nillanthan.com/6162/
  5. சிதறடிக்கப்படும் தமிழ் கவனக் குவிப்பு – நிலாந்தன். August 20, 2023 குருந்தூர் மலை, வெடுக்குநாறி மலை, பறளாய் முருகன் கோயில், தையிட்டி, திருகோணமலை, பெரியகுளம் உச்சிப்பிள்ளையார் மலை மாதவனை மயிலைத்த மடு மேய்ச்சல் தரை ராவணன் தமிழனா இல்லையா? மேர்வின் டி சில்வா தமிழர்களின் தலைகளைக் கொய்வாரா. என்றிவ்வாறாக அண்மை காலங்களில் தமிழ்க்கட்சிகள் செயற்பாட்டாளர்கள் ஊடகங்களின் கவனம் வெவ்வேறு திசைகளில் ஈர்க்கப்படுகின்றது .கிழமைக்கு ஒன்று அல்லது நாளுக்கு ஒன்று என்று ஏதோ ஒரு விவகாரம் தமிழ் மக்களின் கவனத்தை ஈர்க்கிறது. எங்காவது ஒரு புதிய விகாரை கட்டப்படுகிறது, அல்லது எங்காவது ஒரு தொல்லியல் சின்னம் அபகரிக்கப்படுகிறது, எங்காவது ஒரு நிலத்துண்டு அளவீடு செய்யப்படுகிறது அல்லது அல்லது பறிக்கப்படுகின்றது, அல்லது யாராவது ஒரு சிங்கள அரசியல்வாதி தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படையாகப் பேசுகிறார்…. இப்படியாக அடிக்கடி புதிதுபுதிதாக விவகாரங்கள் மேலெழுகின்றன. தமிழ் அரசியல்வாதிகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகங்களில் கவனங்கள் புதிய விடயங்களின் மீது குவிக்கப்படுகின்றன. இவ்வாறு தமிழ்ச்சமூகத்தின் கவனத்தை அடுத்தடுத்து புதிய விடயங்களின் மீது குவியவைப்பதன்மூலம் திட்டமிட்டுத் தமிழ்ப் போராட்டசக்தி சிதறடிக்கப்படுகின்றதா? அரசாங்கம் திட்டமிட்டு “ட்ரெண்ட்களை செற்” பண்ணுகின்றதா? சரத் வீரசேகர சொல்லுகிறார் ராவணன் ஒரு தமிழ் அரசன் இல்லையென்று. மேர்வின் டி சில்வா சொல்கிறார்… விகாரைகள் கட்டப்படுவதை எதிர்த்தால் தமிழ் மக்களின் தலைகளைக் கொய்து வருவேன் என்று. நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவற்றிற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் மினக்கெட்டுப் பதில்கூற வேண்டிய விடையங்கள் அல்ல. அவர்கள் திட்டமிட்டு தமிழ்மக்களின் கவனத்தை சிதறடிக்கிறார்கள். அவர்கள் திட்டமிட்டு தமிழ் மக்களை ஆத்திரப்படுத்துகிறார்கள். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் செயற்பாட்டாளர்களும் கட்சிகளும் இது விடயத்தில் அரசாங்கம் விரும்புவதுபோல அல்லது சிங்களபௌத்த தீவிரவாதிகள் விரும்புவதுபோல அவர்கள் இழுக்கும் திசைக்கெல்லாம் எடுபடக்கூடாது. நிதானமாக விடயங்களை அணுக வேண்டும். அரசாங்கம் அல்லது சிங்கள பௌத்த தேசியசியவாதிகள் திட்டமிட்டு ட்ரெண்ட்களை செட் பண்ணுகின்றார்கள். அந்த ட்ரெண்டின் பின் தமிழ்மக்கள் அலையத் தேவையில்லை. அலையவும் கூடாது. இந்த விடயத்தில் ஒரு மையத்திலிருந்து முடிவெடுக்கும் மக்களாக, ஒரு மையத்திலிருந்து விவகாரங்களை விளங்கிக் கொள்ளும் மக்களாக, ஒரு மையத்திலிருந்து எதையும் அணுகும் மக்களாக தமிழ்மக்கள் திரள வேண்டும். பிரச்சினைகளை அவற்றின் தொகுக்கப்பட்ட வடிவத்தில், அவற்றுக்குப் பின்னால் இருக்கும் அரசியல் சித்தாந்தத்தின் அடிப்படையில் ஒட்டுமொத்த வரைபடம் ஒன்றுக்குள் வைத்து தமிழ்மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் ஏற்கனவே சிதறிப்போயிருக்கும் தமிழ்மக்களின் கவனத்தை மேலும் சிதறடிப்பதன்மூலம் அரசாங்கம் தான் விரும்பியதைச் சாதித்து விடும். இங்கே நான் கட்சிகளின் ஐக்கியத்தைப் பற்றிக் கதைக்க வரவில்லை. பல மாதங்களுக்கு முன் காரைநகர் பிரதேச சபையில் யாரைத் தவிசாளராகத் தெரிவது என்று விவகாரத்தின்போது தமிழ்த் தேசிய முன்னணியோடு நான் உரையாடினேன். அப்பொழுது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் என்னிடம் சொன்னார்… சாதி ஏற்றத்தாழ்வுகள் போன்ற விவகாரங்களில் நீங்கள் சுட்டிக்காட்டும் பிரச்சினைகளை நாங்கள் உடனடியாகத் தீர்த்து வைப்போம். ஆனால் ஐக்கியம் என்ற ஒரு விடயத்தை மட்டும் தயவு செய்து எங்களிடம் கேட்க வேண்டாம்… என்று. இக்கட்டுரை கட்சிகளின் ஐக்கியத்தைப்பற்றி உரையாடவில்லை. தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவது பற்றியே உரையாடவிழைகிறது. தேசியவாத அரசியல் என்றால் ஒரு மக்கள் கூட்டத்தை பெருந்திரளாகத் திரட்டுவதுதான். தமிழ் மக்கள் ஒரு பெரும் திரளாக, தேசமாக விவகாரங்களை எதிர்கொள்ள வேண்டும். நடைமுறையில் அவ்வாறு தமிழ்மக்களை ஒரு தேசமாகத்திரட்டும் பொழுது புனிதர்களையும் விசுவாசிகளையும் உண்மையானவர்களையும் மட்டும் வைத்து ஒரு தேசிய இயக்கத்தை கட்டியெழுப்புவது அம்புலி மாமாக் கதைதான். ஏனென்றால் ஒரு மக்கள் கூட்டம் எனப்படுவது பல்வேறு அடுக்குகளை கொண்டிருக்கும். பல்வேறு அபிலாசைகளை கொண்டிருக்கும். பல்வேறு நோக்குநிலைகளைக் கொண்டிருக்கும். ஒரு மக்கள்கூட்டத்தைத் தட்டையாக, ஒற்றைப் பரிமாணத்தில் விளங்கிக் கொள்ள முடியாது. அதற்குள் பல்பரிமாணம் இருக்கும் என்பதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு மக்கள் கூட்டத்துக்குள் நல்லவர்களும் இருப்பார்கள் கெட்டவர்களும் இருப்பார்கள். ஒரு நபர் ஒரே நேரத்தில் தேசியவாதி போலவும் இருப்பார் அதே சமயத்தில் ஆண் ஆதிக்கவாதியாகவும் இருப்பார். ஒரு நபர் ஒரே நேரத்தில் சாதிவாதியாகவும் இருப்பார் தமிழ் தேசியவாதியாகவும் தோற்றம் காட்டுவார். ஒரு நபர் ஒரே நேரத்தில் மதவாதியாகவும் இருப்பார் தமிழ் தேசியவாதியாகவும் தோற்றம் காட்டுவார். தேசியவாதம் எனப்படுவது பல்வகைகளில் மீது ஒரு மக்கள் திரளைக் கட்டியெழுப்புவது என்ற கோட்பாட்டு விளக்கத்தின் அடிப்படையில் சிந்தித்தால் மதவாதி, சாதிவாதி, பிரதேசவாதி, ஆணாதிக்கவாதி போன்றவர்கள் தேசியவாதிகளாக இருக்கமுடியாது. ஆனால் தமிழ்க் கட்சிகளில் காணப்படும் முக்கியஸ்தர்களில் எத்தனை பேர் அவ்வாறு முழுமையாக தேசிய பண்பு மிக்கவர்களாக இருக்கிறார்கள்? ஏன் ஆயுதப் போராட்டத்திலேயே அந்த பிரச்சினை இருந்ததுதானே? ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்கள் மத்தியில் காணப்பட்ட போராளிகள் எத்தனை பேர் அவ்வாறு தேசியப் பண்பு மிக்கவர்களாக காணப்பட்டார்கள்? இது ஒரு அடிப்படைப் பிரச்சினை. ஒரு மக்கள் இயக்கம் என்று வரும்பொழுது ஒரு பெரிய கட்சி என்று வரும் பொழுது அதற்குள் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும். ஒரு மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய இயக்கம் எனப்படுவது அந்த மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய நல்லதையும் கெட்டதையும் பிரதிநிதித்துவப்படுத்தும் என்பது யதார்த்தமாகும். ஒரு பெரிய மக்கள் இயக்கம் எனப்படுவது அல்லது ஒரு பெரிய தேசிய இயக்கம் எனப்படுவது முழுக்க முழுக்க கொள்கைவாதிகளையும் தூய்மைவாதிகளையும் புனிதர்களையும் மட்டும் வைத்து கட்டியெழுப்பப்படும் ஒன்று அல்ல. யதார்த்தத்தில் அது ஒரு மக்கள் கூட்டத்தில் காணப்படும் எல்லா அடுக்குகளையும் ஏதோ ஒரு மையத்தில் இணைப்பதாகவே காணப்படும். இது தமிழ்த் தேசிய இயக்கங்களுக்கும் பொருந்தும். புனிதர்களையும், நல்லவர்களையும், கொள்கைவாதிகளையும், இலட்சியவாதி ளையும் மட்டும்வைத்து ஒரு தேசிய இயக்கத்தைக் கட்டமுடியாது. ஆனால் குறிப்பிட்ட இயக்கத்தில் அல்லது கட்சியின் மையத்தில் இருப்பவர்கள் அல்லது வழிகாட்டும் பொறுப்புகளில் இருப்பவர்கள் ஒப்பீட்டளவில் அதிகம் தேசிய பண்பு மிக்கவர்களாக இருக்கவேண்டும் என்பது ஒரு கட்டாய நிபந்தனையாகும். ஒரு கட்சியின் அல்லது மக்கள் இயக்கத்தின் முடிவெடுக்கும் பொறுப்புகளில் இருப்பவர்கள் கொள்கைவாதிகளாக இலட்சியவாதிகளாக தேசிய பண்பு ஒப்பிட்டுளவில் அதிகம் கூடியவர்களாக இருக்கவேண்டும் என்பது கட்டாயம். கட்சித் தொண்டர்கள் ஆதரவாளர்கள் எல்லாரிடமும் அவ்வாறு எதிர்பார்க்க முடியாது. அவர்களிடமிருக்கும் எதிர்த்தேசிய அம்சங்களைக் களைநீக்கம் செய்ய வேண்டியது அல்லது இருள் நீக்கம் செய்ய வேண்டியது மையக்குழுவின் பொறுப்பு. அல்லது தலைமை தாங்கும் நபர்களின் பொறுப்பு. எனவே ஐக்கியத்தை கட்டியெழுப்பும் பொழுது அந்த ஐக்கியத்துக்குள் பலதும் பத்தும் இதுக்கும் என்ற யதார்த்தத்தை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு ஐக்கியத்தைக் கட்டியெழுப்பிய பின் அந்த ஐக்கியத்திற்கு தலைமைதாங்கும் தரப்புகள் அந்த ஐக்கியத்தை எப்படிக் கொள்கை அடிப்படையில் பலப்படுத்துவது; இறுக்கமாக்குவது என்று சிந்திக்கலாம். புனிதர்களையும் நீதிமான்களையும் மட்டும் வைத்துக்கொண்டு ஐக்கியத்தை கட்டியெழுப்பலாம் என்றால், தமிழ்மக்கள் என்றைக்குமே ஒரு பெருந்திரளாக வர முடியாது. நீதிமான்களிடந்தான் நீதியைக் கேட்கலாம் என்றால் தமிழ் மக்கள் யாகந்தான் செய்யவேண்டும். எதிரிக்கு எதிரான கோபந்தான் கடந்த பல தசாப்தங்களாக தமிழ்மக்களை ஒப்பீட்டளவில் பெருந்திரளாகக் கூட்டிக்கட்டி வைத்திருக்கிறது. அதாவது இன எதிர்ப்புணர்வு அல்லது இனமான உணர்வு போன்றவைதான் தமிழ்மக்களைப் பெருமளவுக்கு ஒரு தேசமாகத் திரட்டி வைத்திருக்கின்றன. மாறாக தேசியவாதம் தொடர்பான அறிவுபூர்வமான விஞ்ஞானபூர்வமான கொள்கைகளை விளங்கி தமிழ்மக்கள் ஒரு பெருந் திரளாக மேல்லெழுந்தார்கள் என்பது உண்மையல்ல. உலகம் முழுவதிலும் உள்ள பெரும்பாலான எல்லாத் தேசியஇன விடுதலைப் போராட்டங்களுக்கும் இது பொருந்தும். கருத்து மக்களை திரட்டுவதை விடவும் எதிரிக்கு எதிரான கூட்டுணர்ச்சி ஒரு மக்கள் கூட்டத்தை இலகுவாகத் திரட்டிவிடும். ஒரு பெருந்திரளைக் கட்டியெழுப்புவது அல்லது ஒரு பேரியக்கத்தை கட்டியெழுப்புவது அல்லது ஒப்பீட்டளவில் பெரிய ஐக்கியத்தை கட்டியெழுப்புவது அதாவது தமிழ்மக்களை ஆகக்கூடியபட்சம் ஒரு பெருந்திரளாகக் கட்டியெழுப்புவது என்பது கொள்கையின் அடிப்படையில் அல்லது, புனிதமான, விட்டுக்கொடுக்கப்பட்ட அளவுகோள்களின் அடிப்படையில் என்றைக்குமே சாத்தியப்படப் போவதில்லை. தமிழ்மக்கள் மத்தியில் மட்டுமல்ல இப்பூமியில் எந்த ஒரு மக்கள் கூட்டத்தையும் அவ்வாறு புனிதமான அளவுகோல்களின் அடிப்படையில் நிறுவனமயப்படுத்த முடியாது. இது மக்கள் இயக்கங்களுக்கு மட்டுமல்ல மத நிறுவனங்களுக்கும் பொருந்தும். உலகில் உள்ள எல்லா மத நிறுவனங்களிலும் அதன் மூலப் புத்தகங்களில் உள்ள புனிதமான அம்சங்கள் பேணப்படுகின்றனவா? மதங்களில் மட்டுமல்ல மதங்களை நிராகரித்த இடதுசாரி இயக்கங்கள் மத்தியிலும் அதே பிரச்சினை உண்டு. மக்களை நிறுவனமயப்படுத்தும் பொழுது அந்த மக்கள் மத்தியில் இருக்கும் பலங்களை மட்டுமல்ல, பலவீனங்களையும் சேர்த்து நிறுவனமயப்படுத்தாமல் இருப்பது என்பது மிகவும் சவால் மிகுந்தது. ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில் இருக்கும் பலவீனங்களையும் ஏற்றுக்கொண்டு அவர்களை நிறுவனமயப்படுத்திய பின் தலைமை தாங்கும் பொறுப்பில் இருப்பவர்கள் அந்த பலவீனங்களை படிப்படியாக அகற்ற வேண்டும். அதுதான் நடைமுறைச் சாத்தியமானது. தமிழ்மக்கள் மத்தியில் இதுவரையிலும் தோன்றிய எல்லா ஐக்கியங்களும் எல்லா சிவில் கட்டமைப்புகளும் மக்கள் அமைப்புகளும் அவ்வாறு பலங்களையும், பலவீனங்களையும் வைத்துக்கொண்டுதான் கட்டியெழுப்பப்பட்டன. புனிதமான கூட்டு என்று எதுவுமே இந்தப் பூமியில் கிடையாது. முழுக்கமுழுக்க கொள்கை ரீதியிலான கூட்டு என்பதும் இந்த பூமியில் கிடையாது. தூய தங்கத்தை வைத்து நகை செய்ய முடியாது. தங்கத்தை ஆபரணமாக்குவதென்றால் அதில் செப்பைக் கலக்கவேண்டும். நாங்கள் அணியும் எல்லாத் தங்க நகைகளிலும் கலப்பு உண்டு என்ற நடைமுறையை ஏற்றுக்கொள்ள வேண்டும். இது அரசியலுக்கும் பொருந்தும். மக்கள் இயக்கங்களுக்கும் செயற்பாட்டு இயக்கங்களுக்கும் பொருந்தும். தலைமைகள் உறுதியாக இருந்தால்சரி. “ஆயிரம் ஒட்டகங்களுக்கு ஒரு சிங்கம் தலைமை தாங்கலாம். ஆனால் ஆயிரம் சிங்கங்களுக்கு ஒர் ஓட்டகம் தலைமை தாங்க முடியாது. சிங்கமாக இருப்பதா ஒட்டகமாக இருப்பதா என்பதனை தமிழ்த் தலைமைகள் தீர்மானிக்க வேண்டும். இல்லையென்றால் புதிய தலைமைகள் மேலெழ வேண்டும். ஏனெனில் தமிழ் மக்களின் கவனக்குவிப்பு திட்டமிட்டுச் சிதறடிக்கப்படுகிறது. தமிழ்மக்களால் ஒருமித்துப் போராட முடியவில்லை. அது அதன் எதிர்மறை விளைவாக ரணில் விக்கிரமசிங்கவின் சிங்களபௌத்த வாக்கு வங்கியைத்தான் வளர்க்கும். தமிழ்மக்கள் சிதறி நின்று போராடினால் அது எதிரிக்கு சேவகம் செய்யும். திரண்டு போராடினால் அங்கே அதிசயங்களும் அற்புதங்களும் நிகழும். https://globaltamilnews.net/2023/194261/
  6. சமஸ்டிக்காகப் போராடுவது யார்? நிலாந்தன். August 13, 2023 தேசத்தை அங்கீகரிக்கும் சமஸ்டிக் கட்டமைப்பே இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையமுடியும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது நிலைப்பாட்டை மீண்டும் ஒரு தடவை தெளிவுபடுத்தியிருக்கிறது. 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு கட்சிகள் தமது தரப்பு யோசனைகளைத் தருமாறு ஜனாதிபதி அண்மையில் கேட்டிருந்தார். அதற்கமைய முன்னணியானது 13ஆவது திருத்தத்தை நிராகரித்து சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்திருக்கிறது. அதேசமயம் கடந்த நான்காம் தேதி யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த விக்னேஸ்வரன் ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். தமிழ்க் கட்சிகள் எல்லாவற்றினதும் இறுதி இலக்கு கூட்டாட்சிதான் என்ற போதிலும் அதை அடைவதற்கான வழிவகை எது என்பதை தமது கட்சியும் உட்பட எந்த ஒரு கட்சியும் வெளிப்படுத்தவில்லை என்று அவர் கூறியுள்ளார். சமஷ்டியை அடையும் வழி தெரியாதபடியால் அரசியலமைப்பில் இருக்கும் 13ஆவது திருத்தத்தைப் பலப்படுத்தி அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வோம். பின்னர் அதிலிருந்து மேலும் முன்னேறி செல்லலாம் என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சமஸ்டியைப் பெறுவதற்கான வழிவகை குறித்த அவருடைய கருத்து யதார்த்தமானது. கடந்த 14ஆண்டுகளாக மட்டுமல்ல அதற்கு முன்னரும் அதாவது ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரும் தமிழ் மிதவாதிகளிடம் சமஸ்டியை அடைவதற்கு உரிய வழிவரைபடம் எதுவும் இருக்கவில்லை. கடந்த 14 ஆண்டுகளாக தமிழ் கட்சிகள் போராடுகிறோம் போராடுகிறோம் என்று கூறிக்கொள்கின்றன. ஆனால் அந்த அரசியல் இலக்கை நோக்கி எவ்வாறு அறவழியில் போராடுவது என்பது குறித்து எந்த ஒரு கட்சியிடமும் தெளிவான பார்வையோ அல்லது அதற்கு வேண்டிய அரசியல் ஒழுக்கமோ அல்லது அதற்கு தேவையான அற்பணிப்போ இருப்பதாகத் தெரியவில்லை. விக்னேஸ்வரன் அது தன்னிடமும் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறார். ஆனால் அதற்காக அதாவது போராட்டத் தயாரில்லை என்பதற்காக அல்லது போராடத் தெரியவில்லை என்பதற்காக கிடைப்பதைப் பெற்றுக் கொள்வது என்ற தத்துவம் ஏற்புடையதல்ல. கிடைக்கும் அரைகுறைத் தீர்வை ஏற்றுக் கொண்டால் அதை நோக்கியே தமிழ் மக்களின் கவனமும் சக்தியும் குவிக்கப்படும். மாகாண சபைக்குள் எப்படி தங்களுடைய இருப்பைத் தக்கவைப்பது என்பதிலேயே கட்சிகளின் கவனம் முழுதும் குவிக்கப்பட்டு விடும். அதாவது தனது இறுதி அரசியல் இலக்கை நோக்கி முன்னேறுவதற்குப் பதிலாக தமிழ் அரசியலானது மாகாண சபைகளுக்குள் தேங்கி நின்றுவிடும். கிடைக்கும் இடைக்கால ஏற்பாடுகளை நிராகரித்துவிட்டு விட்டுக்கொடுப்பின்றிப் போராடிய மக்களே இறுதி வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால் இங்கே பிரச்சனை என்னவென்றால், அப்படிப்பட்ட போராட்டம் எதுவுமே நடக்கவில்லை என்பதுதான். இப்பொழுது நடக்கும் எல்லாப் போராட்டங்களும் பதில் வினையாற்றும்-ரியாக்டிவ்-போராட்டங்களே. எதிர்த் தரப்பின் ஆக்கிரமிப்புகளுக்கு எதிர்ப்புக் காட்டுபவை. 13ஐ நிராகரிக்கும் முன்னணியானது சக கட்சிகளுக்கும் இந்தியாவுக்கும் எதிராகக் கோஷம் எழுப்பினால் மட்டும் போதாது. அதைவிட ஆழமான பொருளில் சமஸ்டிக்காகப் போராடவும் தியாகங்களைச் செய்யவும் தயாராக இருக்க வேண்டும். சமஸ்டியை அடைவதற்கான வெளியுறவுக் கொள்கை எது என்பதை வெளிப்படையாக விவாதிக்க வேண்டும். அதற்கு வேண்டிய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். தாயகத்தில் நிலப்பறிப்பு மற்றும் சிங்கள பௌத்தமயமாக்கலுக்கு எதிராக அக்கட்சிதான் அதிகமாகப் போராடுகிறது. அதன்மூலம் தமிழ் அரசியலை அவர்கள் நொதிக்கச் செய்கின்றார்கள். ஆனால் அந்தப் போராட்டங்களில் அநேகமானவை ஒரு கட்சிப் போராட்டங்கள், அல்லது சிறு திரள் போராட்டங்கள், அல்லது கவன ஈர்ப்பு போராட்டங்கள். அதாவது தொகுத்துக்கூறின் அரசாங்கத்துக்கு தாக்கமான விதங்களில் சேதத்தை ஏற்படுத்தாத போராட்டங்கள். கடந்த 14ஆண்டுகளில், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணி; எழுக தமிழ் போன்றவற்றை நீக்கிப் பார்த்தால் பெரும்பாலான போராட்டங்கள் கவனஈர்ப்பு போராட்டங்கள் அல்லது சிறுதிரள் போராட்டங்கள்தான். இப்போராட்டங்களால் அரசாங்கத்துக்கு பொருளாதார ரீதியாக நட்டம் எதுவும் ஏற்படவில்லை. குறைந்தபட்சம் அரசு நிர்வாகத்தை முடக்குவதற்குக்கூட இந்த போராட்டங்களால் முடியவில்லை. அதாவது இப்போராட்டங்களால் அரசாங்கத்துக்கு நோகக் கூடிய விளைவுகள் ஏற்படவில்லை. அல்லது வெளியுலகத்தைக் கவர்ந்திழுக்கும் சக்தியும் இப்போராட்டங்களுக்கு இருக்கவில்லை. இந்த விடயத்தில் விக்னேஸ்வரன் மட்டுமல்ல தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழரசு கட்சி, குத்துவிளக்கு கூட்டணி உட்பட எல்லாருமே பொறுப்பாளிகள் தான். ஈழத் தமிழர்கள் சமஸ்டிக்காகத் தாக்கமான விதத்தில் போராடவில்லை என்பதைத்தான் கடந்த 14 ஆண்டுகளும் நிரூபித்திருக்கின்றன. இந்த பலவீனத்தை கண்டுபிடித்த காரணத்தால்தான் அரசாங்கம் துணிச்சலாக சிங்கள பௌத்த மயமாக்கலைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது. நாடு பன்னாட்டு நாணய நிதியத்திடம் கடன் வாங்கிக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டம் இது. ஐநாவில் மனித உரிமைகள் பேரவைக்குள் ஒரு பொறிமுறை இலங்கைக்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அது போர்க் குற்றங்கள் தொடர்பாக சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரித்துக் கொண்டிருக்கிறது. அது ஒரு பலவீனமான பொறிமுறைதான். மனித உரிமைகள் ஆணையருடைய அலுவலகத்துக்கு உட்பட்ட ஒரு பொறிமுறைதான். என்றாலும் அது இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்கடியை கொடுக்கக் கூடியது. இப்படிப்பட்டதோர் பின்னணியில், அரசாங்கம் பன்னாட்டு நாணய நிதியம், மேற்கு நாடுகள், இந்தியா, ஜப்பான், ஐநா போன்றவற்றுக்குப் பதில்கூற வேண்டிய ஒரு காலகட்டத்தில் சிங்களபௌத்த மயமாக்கலை அடக்கி வாசிக்க வேண்டும். ஆனால் நிலைமை தலைகீழாகக் காணப்படுகிறது. அண்மைக் காலங்களில் சிங்களபௌத்த மயமாக்கல் பல்வேறு தளங்களில் பல்வேறு பகுதிகளில் செறிவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதற்குக் காரணம் என்ன? காரணங்கள் இரண்டு. ஒன்று, தமிழ் தரப்பின் போராட்டங்கள் அரசாங்கத்துக்கு நோகக் கூடியவைகளாக இல்லை என்பது. இரண்டாவது காரணம், அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் எப்படித் தனிச் சிங்கள பௌத்த வாக்குகளை கவர்வது என்று ஜனாதிபதி சிந்திக்கின்றார். ஏனெனில் ஜனாதிபதி தேர்தலில் அவர் பெரும்பாலும் ராஜபக்சகளின் ஆதரவோடு களமிறங்கும் வாய்ப்புக்களே அதிகம் தெரிகின்றன. அவ்வாறு ராஜபக்சர்களோடு இணைந்து வாக்குக் கேட்டால் தமிழ் வாக்குகள் தனக்கு அதிகளவு கிடைக்காது என்றும் அவர் பயப்பட முடியும். ஏனென்றால் கடந்த 14 ஆண்டுகளாக தமிழ் மக்கள் ஒரே ஒரு அரசியல் தீர்மானத்தில் ஒற்றுமையாக முடிவெடுத்து வந்திருக்கிறார்கள். அது ராஜபக்ஷைகளுக்கு எதிராக வாக்களிப்பது என்ற தீர்மானம்தான். கடந்த 14 ஆண்டுகளாக நடந்த எல்லா ஜனாதிபதித் தேர்தல்களின்போதும் தமிழ் மக்கள் பெரும் போக்காக ராஜபக்சங்களுக்கு எதிராகத்தான் வாக்களித்தார்கள். அதிலும் குறிப்பாக ராஜபக்ஷைகளின் ஆணையை ஏற்று யுத்தத்தை வழிநடத்திய தளபதியான சரத் பொன்சேகா ராஜபக்சக்களுக்கு எதிராகத் திரும்பிபோது அவருக்கும் வாக்களிக்கக்கூடிய ஒரு நிலைமை காணப்பட்டது. எனவே ராஜபக்சேக்களின் பதில் ஆளாகத் தேர்தலில் களமிறங்கினால் தமிழ் வாக்குகளைத் திரட்டுவதில் தனக்கிருக்கக்கூடிய நிச்சயமின்மைகளைக் கவனத்தில் எடுத்து, ரணில் தனிச்சிங்கள வாக்குகளைத் திரட்டுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டார் போலத் தெரிகிறது. அதனால்தான் சிங்களபௌத்த மயமாக்கலையும் நிலப்பறிப்பையும் முடுக்கி விட்டுள்ளார். அதிலும் அரசாங்கத்துக்கு நோகாத தமிழ் கட்சிகளின் போராட்டங்கள் அவருக்கு சாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும். எவ்வாறெனில், சிங்கள பௌத்த மயமாக்களுக்கு எதிராக தமிழ்க் கட்சிகள் போராடப்போராட அது சிங்கள மக்கள் மத்தியில் ரணிலுக்கிருக்கக்கூடிய செல்வாக்கை உயர்த்தும். சிங்கள பௌத்தத்தைப் பாதுகாப்பதற்காக அவர் விகாரைகளைக் கட்டுகிறார் என்று அவர்கள் நம்புவார்கள். எனவே அரசாங்கத்திற்கு எதிரான தமிழ் கட்சிகளின் சிதறலான, தொடர்ச்சியற்ற சிறுதிரள் போராட்டங்கள் மறைமுகமாக ரணிலின் வாக்கு வங்கியைப் பலப்படுத்துகின்றவைகளாகவே காணப்படுகின்றன. மாறாக அரசாங்கத்தின் பொருளாதாரத்தை முடக்கும் விதத்தில் அல்லது அரச நிர்வாகத்தை முடக்கும் விதத்தில் அல்லது வெளி உலகத்தின் கவனத்தை ஈர்த்து வைத்திருக்கும் விதத்தில் போராடுவதென்றால் தமிழ் மக்கள் பெருந்திரளாகப் போராட வேண்டும். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான போராட்டத்தை மேற்கத்திய நாடுகளின் தூதரகங்கள் ஆர்வத்தோடும் எதிர்பார்ப்போடும் கவனித்தன. கடந்த 14ஆண்டு காலமாக தமிழ் மக்கள் மத்தியில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களில் பெரியவை அல்லது கவனிக்குப்புக்கு உரியவை என்று கருதத்தக்க போராட்டங்கள் அனைத்தும் பெருந்திரள் போராட்டங்கள்தான். அவை ஒரு கட்சிப் போராட்டங்கள் அல்ல. பல கட்சிப் போராட்டங்கள்தான். கட்சிகளும் சிவில் சமூகங்களும் பாதிக்கப்பட்ட மக்களின் அமைப்புகளும் புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்புகளும் சமயப் பெரியார்களும் இணைந்து முன்னெடுத்த போராட்டங்கள்தான். அண்மையில்கூட முல்லைத்தீவில் ஒப்பீட்டுளவில் கவனிப்புக்குரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. அண்மைக் காலங்களில் முன்னெடுக்கப்பட்ட ஊர்வலங்களில் அது ஒப்பீட்டளவில் பெரியது. அது கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழிக்கு நீதி கேட்டு நடத்தப்பட்ட ஒரு போராட்டம். அது ஒரு கட்சிப் போராட்டம் அல்ல. எனவே கடந்த 14 ஆண்டு கால அனுபவத்தைத் தொகுத்துப் பார்த்தால் தெளிவாகத் தெரிவது என்னவென்றால், கட்சிகளும் சிவில் அமைப்புகளும் புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்புக்களும் இணைந்து போராடினால்தான் அது வெளியுலகத்தின் கவனத்தை ஈர்க்கும். இல்லையென்றால் அவை ரணில் விக்கிரமசிங்கவின் சிங்கள பௌத்த வாக்கு வங்கியைத்தான் வளர்க்கும். https://globaltamilnews.net/2023/193957/
  7. அணில் கட்டிய பாலமும் ரணில் கட்டாத பாலமும் ? - நிலாந்தன்! adminJuly 30, 2023 ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தைத் தொடர்ந்து இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பு திட்டங்கள் மேலும் விரிவுபடுத்தப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே பலாலியிலிருந்து மீனம்பாக்கத்திற்கும், காங்கேசன்துறையில் இருந்து தமிழ்நாட்டுக்கும், மன்னாரியிலிருந்து தமிழ்நாட்டுக்கும் என மூன்று திட்டங்கள் யோசிக்கப்பட்டன. இந்தக் கடல் வழிப்பிணைப்பு, வான்வழிப் பிணைப்பு, என்பவற்றோடு, தரை வழியாக ஒரு பாலத்தை கட்டுவது குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது. இவைதவிர ரணிலின் விஜயத்தின் பின்னணியில் இந்திய வெளியுறவுச் செயலர் தெரிவித்த கருத்துக்களின்படி கடல் வழி, வான்வழி, தரைவழிப் பிணைப்புகளோடு வர்த்தகப் பிணைப்பு, எரிசக்திப் பிணைப்பு, பொருளாதாரப் பிணைப்பு, டிஜிட்டல் பிணைப்பு, மின்சக்திப் பிணைப்பு, எரிபொருள் வினியோக குழாய்வழிப் பிணைப்பு என்றிவ்வாறாக பல்வேறு வகைப்பட்ட பிணைப்புகளைக் குறித்தும் பேசப்பட்டிருக்கிறது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான புவியியல் அருகாமை காரணமாக ஏற்கனவே இருநாட்டு மக்கள் கூட்டங்களுக்கும் இடையே கலாச்சார பிணைப்புகளும் மதம் சார்ந்த பிணைப்புகளும் உண்டு. ஒரு இந்திய ராஜதந்திரி தனிப்பட்ட உரையாடலின் போது சொன்னார், இப்புவியியல் அருகாமையும் அது சார்ந்த பிணைப்பும் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் பொருந்தும் என்று. உண்மை. இப்பொழுது மிலிந்த மொரகொட அதைத்தான் புதுப்பிக்க முயற்சிக்கின்றார். அதாவது வட இந்தியாவுக்கும் பௌத்தத்துக்கும் இடையிலான பிணைப்பைக் கையாண்டு அவர் சிங்கள மக்களை பாரதிய ஜனதாவோடு சென்ரிமென்ரலாகப் பிணைக்க முயற்சிக்கின்றார். ஆனால் ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத்திற்கும் இடையிலான பிணைப்பு ஆழமானது; பரந்தகன்ற பரிமாணங்களைக் கொண்டது. ஈழத் தமிழர்களையும் தமிழகத்தையும் பிரிப்பது ஒடுங்கிய பாக்கு நீரிணையாகும். பாக்கு நீரினையை அதன் பிரயோக வடிவத்தில் சொன்னால் அது ஒரு தமிழ் நீரிணைதான். அல்லது தமிழ் வாவிதான். அந்த நீரிணையின் இருபுறமும் தமிழர்கள் உண்டு. நவீன அரசியலின் சர்வதேச எல்லைகளால் பிரிக்கப்படுவதற்கு முன்பு, அது ஒரு தமிழ்க் கடலாகத்தான் காணப்பட்டது. ஈழப்போரின் போதும் அது அவ்வாறுதான் காணப்பட்டது. ஈழப்போரின் பலம் அதுதான் என்று மு.திருநாவுக்கரசு கூறுவார். இவ்வாறு ஒடுங்கலான தமிழ் நீரிணையால் பிரிக்கப்பட்ட இரு வேறு தமிழ்ச் சமூகங்களுக்கும் இடையிலான பிணைப்பு எனப்படுவது சிங்கள மக்களுக்கும் வட இந்தியாவுக்கும் இடையிலான பௌத்த பண்பாட்டுப் பிணைப்பை விடவும் ஆழமானது; உடனடியானது; வரலாற்றில் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தியது. இப்பிணைப்புக் காரணமாகத்தான் ஈழப்போர் அதன் அடுத்த கட்ட வளர்ச்சியை அடைந்தது. அதுமட்டுமல்ல தமிழகத்தில் மொத்தம் 19 பேர் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்திருக்கிறார்கள். இவர்களில் யாருமே திருகோணமலையில் இருக்கும் எண்ணெய் குதங்களுக்காகவோ அல்லது பலாலி விமான நிலையத்தை திற என்று கூறியோ அல்லது காங்கேசன் துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையில் கப்பலை விடு என்று கேட்டோ அல்லது கலாச்சார மண்டபம் ஒன்றை கட்டிக் கொடு என்று கேட்டோ அவர்கள் தீக்குளிக்கவில்லை. தமிழர்களுக்கு ஒன்று என்றதும் அவர்கள் தீக்குளித்தார்கள். ஈழத் தமிழர்கள் அந்த 19 பேரின் சாம்பலையும் கடந்து சென்று அதாவது தமிழகத்தைக் கடந்து சென்று அரசியல் செய்வது கடினம். இவ்வாறாக,ஈழத் தமிழர்களுக்கு தமிழகத்தோடு உள்ள ராஜதந்திர நலன்கள் கலக்காத பிணைப்பை, இந்தியா தனது புவிசார் அரசியல் நலன்களுக்காக பயன்படுத்தியது. அதன் விளைவாக ஈழப் போர் வளர்ந்தது. பின்னர் இந்தியா அதே புவிசார் நலன்களின் அடிப்படையில் இந்திய-இலங்கை உடன்படிக்கையைச் செய்தபொழுது விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் கசந்தன. விளைவாக துரோணர்களுக்கும் அர்ச்சுனர்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. ஈழப் போர் தமிழகத்திற்கும் விரிவடைந்தது. அது பழைய கதை. புதிய கதை என்னவென்றால், ஈழப்போரின் இறுதிக்கட்டத்தின் பின் தமிழகத்துக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான இடைவெளிகள் முன்னப்பொழுதையும் விட அதிகரித்துள்ளன என்பதுதான். குறிப்பாக திராவிட கட்சிகளுக்கும் ஈழச் செயற்பாட்டாளர்களுக்கும் இடையே இடைவெளிகள் அதிகமாகி வருகின்றன. சமூக வலைத்தளங்களில் நடக்கும் வாதப்பிரதிவாதங்கள் அதைக் காட்டுகின்றன. மிகக்குறிப்பாக “நாம் தமிழர்” கட்சியின் எழுச்சியோடு தமிழகத்தில் உள்ள பெரிய கட்சிகள் ஈழத் தமிழர் விவகாரத்தில் இருந்து சற்று ஒதுங்கி நிற்கும் ஒரு நிலைமை தோன்றியிருக்கிறது. மேலும் பாரதிய ஜனதாவின் தமிழக அமைப்பாளர் தனது உள்நாட்டு அரசியல் தேவைகளுக்காக ஈழப் போராட்டத்தை திராவிட கட்சிகளிடமிருந்து ஹைஜாக் பண்ண முற்படும் ஒரு நிலைமையும் வளர்ந்து வருகிறது. இதில் கடந்த வாரம் ரணில்-மோடி சந்திப்பையொட்டி தமிழக முதல்வர் டெல்லிக்குக் கடிதம் எழுதியது ஒரு மாற்றம். அதாவது 2009க்கு முன்னைய நிலைமைகளோடு ஒப்பிடுகையில் இப்பொழுது தமிழகத்துக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவுகள் ஒப்பீட்டளவில் சோதனைக்கு உள்ளாகி வருகின்றன. புவியியல் அருகாமை, இன அருகாமை, மொழி அருகாமை, பண்பாட்டு அருகாமை, மத அருகாமை போன்ற அருகாமைகள் காரணமாக பிணைக்கப்பட்டிருந்த மக்கள், அரசியல் காரணங்களால் படிப்படியாகத் தூரமாகிச் செல்லும் ஒரு பின்னணியில், பாக்குநீரிணையின் இருபுறங்களிலும் காணப்படும் தமிழ்ச் சமூகங்களுக்கிடையிலான பிணைப்பைப் பலப்படுத்தக்கூடிய சில திட்டங்களை இந்தியா முன்வைத்தது. அத்திட்டங்களை புலம்பெயர்ந்த தமிழர் அமைப்பான பி.ரி.எப்.ஊக்குவித்தது. பலாலியில் இருந்து ஒரு வான் வழியையும் காங்கேசன்துறையில் இருந்தும், மன்னாரில் இருந்தும் இரண்டு கடல் வழிகளையுந் திறப்பது மேற்படி பிணைப்புத் திட்டங்களின் நோக்கம். யாழ்ப்பாணத்தில் இந்திய நிதி உதவியோடு கட்டப்பட்டுள்ள கலாச்சார மண்டபமும் அதற்குள் அடங்கும். ஆனால் இலங்கை அரசாங்கம் இத்திட்டங்கள் அவற்றின் முழு வளர்ச்சி அடைவதை ஏதோ ஒரு விதத்தில் தடுத்து வருகின்றது. பலாலி விமான நிலையத்தை ஒரு சர்வதேச விமான நிலையமாகத் தரமுயர்த்துவதற்கு அதன் ஓடு பாதையைப் பெரிதாக்க வேண்டும். அதற்கு இலங்கை அரசாங்கம் இன்றுவரை அனுமதிக்கவில்லை. சில “டியூற்றி பிறீ” மதுக்கடைகளைத் திறப்பதன்மூலம் பலாலியை சர்வதேச விமான நிலையமாகத் தரமுயர்த்திவிட முடியுமா? காங்கேசன் துறைக்கும் தமிழகத்துக்கும் இடையிலான கடல் வழி இன்றுவரை திறக்கப்படவில்லை. அது இதோ திறக்கப்படுகிறது என்று எத்தனை தடவைகள் கூறப்பட்டுவிட்டது? மன்னாரிலும் அப்படித்தான். ஏன் அதிகம் போவான்? தமிழ் மக்களுக்கு என்று இந்தியா யாழ்ப்பாணத்தில் கட்டிக் கொடுத்த கலாச்சார மண்டபத்தை இன்றுவரை முழுமையாக இயங்க வைக்க முடியவில்லை. அதற்கு வேண்டிய நிர்வாகக் கட்டமைப்பையும் உருவாக்க முடியவில்லை. அக்கட்டடத்தை தமிழ் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட மாநகர சபையிடம் கொடுப்பதா ? அல்லது மத்திய அரசாங்கத்தின் கீழ் வைத்திருப்பதா என்று முடிவெடுக்கப்பட்டு விட்டதா? இப்படிப்பட்டதோர் பின்னணியில், இப்பொழுது மேலும் புதிய பிணைப்புத் திட்டங்கள் பற்றிச் சிந்திக்கப்படுகிறது. குறிப்பாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே தரை வழியைத் திறக்கும் நோக்கத்தோடு ஒரு பாலத்தைக் கட்டுவது பற்றிய முன்மொழிவை ரணில் விக்ரமசிங்க டெல்லியில் முன்வைத்திருக்கிறார். அவர் ஏற்கனவே இதுபோன்ற ஒரு முன்மொழிவை 2002-2004வரை பிரதமராக இருந்தபோது இந்தியாவிடம் முன்வைத்திருக்கிறார். இவ்வாறு இலங்கையை இந்தியாவோடு ஒரு பாலத்தின் மூலம் இணைக்கும் திட்டத்திற்கு அவர் தாமாக முன்வந்து வாய்ப்பை வழங்கியதன்மூலம் இந்திய அரசாங்கத்தை ஏதோ ஒரு விதத்தில் வெற்றிகரமாகக் கையாள முயற்சிக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். சீன விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ள இச்சிறிய தீவை ஒரு பாலத்தின் மூலம் இந்தியாவோடு தொடுத்து விடலாம் என்று அவர் கேட்டுக் கொண்டதன்மூலம் இந்தியாவின் பாதுகாப்புசார் கவலைகளை நீக்க முயற்சிக்கிறார் என்றும் எடுத்துக் கொள்ளலாம். “உங்களோடு எங்களைப் பிணைத்துக் கொள்ளும் ஒரு பாலத்தைக் கட்ட நான் தயார் ” என்ற செய்தியை அவர் இந்தியாவுக்கு வழங்கியிருக்கிறார். அதன்மூலம் இனப்பிரச்சினை தொடர்பில் இந்தியாவிலிருந்து வரக்கூடிய அழுத்தங்களை அவர் தவிர்த்திருக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாமா? ஆனால் நிச்சயமாக அப்படி ஒரு பாலத்தை அவர் கட்டப்போவதில்லை. அப்படிக் கட்டுவதற்கு சிங்களபௌத்த கூட்டுஉளவியல் அனுமதிக்காது. அப்பாலம் கட்டப்பட்டால் இச்சிறிய தீவு இந்தியாவின் மாநிலமாகிவிடும் என்ற அச்சம் சிங்கள பௌத்தர்களுக்கு உண்டு. அப்பாலத்தைக் கட்ட முற்பட்டால் 13-ஐ எதிர்ப்பது போல பிக்குகளும் அரசியல்வாதிகளும் எதிர்ப்பார்கள். அப்பொழுது எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை, பிக்குகள் எதிர்க்கிறார்கள் என்று சொல்லி ரணில் கையை விரிப்பார். எனவே அதில் அவர் விசுவாசமாக இல்லை. இப்போதைக்கு மோடியை எப்படி வசப்படுத்துவது என்றுதான் அவர் சிந்திக்கிறார். தமிழ் நோக்குநிலையில், பாக்கு நீரிணையின் இரு புறங்களிலும் உள்ள இரண்டு தமிழ் சமூகங்களுக்கும் இடையிலான பிணைப்பைப்பற்றி யோசித்துக் கொண்டிருக்க, ரணில் விக்கிரமசிங்க, அரசுக்கும் அரசுக்கும் இடையிலான பிணைப்புத் திட்டங்களுக்குரிய யோசனைகளை முன்வைத்திருக்கிறார். அதாவது, சிங்களத் தீவுக்கு ஒரு பாலம் அமைக்கலாம் என்று தாமாக முன்வைத்து ஒரு முன்மொழிவை கொடுத்திருக்கிறாரா? அண்ணாமலையை லண்டனுக்கு அழைத்து உறவுப் பாலம் அமைப்பதற்கு புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் முயற்சிக்க, ரணில், ”சிங்களத் தீவினுக்கோர் பாலம்” அமைக்க முன்வந்திருக்கிறாரா? அல்லது இந்துத்துவாவை ஒரு கொழுக்கியாக பயன்படுத்தி பாரதிய ஜனதா அரசாங்கத்தை நெருங்கிச் செல்லலாம் என்று நம்பும் ஒரு பகுதி ஈழத் தமிழர்கள் அதற்காகக் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்க, ரணில் விக்கிரமசிங்க புதிய பிணைப்பு திட்டங்களின் மூலம் இந்தியாவை நெருங்கிச் சென்று இனப்பிரச்சினை தொடர்பில் இந்தியா தன் மீது அழுத்தங்களை பிரயோகிக்க முடியாதபடி நிலைமைகளை வெற்றிகரமாகக் கையாள முயற்சிக்கிறாரா? https://globaltamilnews.net/2023/193460/
  8. டெல்லியில் ரணில்: 13மைனஸ்? நிலாந்தன்! adminJuly 23, 2023 டெல்லிக்கு போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் கடந்த 18ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, ரணில் விக்கிரமசிங்க தமிழ்க் கட்சிகளுக்கு எதைத் தரமுடியும் என்று கூறினாரோ, அதைத்தான் இந்தியப் பிரதமரின் முன்னிலையில் வைத்தும் திரும்பக் கூறிவிட்டு வந்திருக்கிறார். தமிழ்க் கட்சிகளுக்கு அவர் சொன்னது போலீஸ் அதிகாரம் இல்லாத ஒரு மாகாண சபை. போலீஸ் அதிகாரம் என்பது என்ன? ஒரு சட்டமன்றம் தான் உருவாக்கிய சட்டங்களை அமல்படுத்துவதற்கான ஓர் அதிகாரக் கட்டமைப்புத்தான். அதை இன்னும் தெளிவாகச் சொன்னால், ஒரு சட்டமன்றத்தின் அதிகாரத்தை அமுல்படுத்தும் பிரிவு போலீஸ்தான். உலகம் முழுதும் அதுதான் நிலைமை. அந்த அதிகாரம் இல்லையென்றால், நிதி அதிகாரம், கல்வி அதிகாரம், காணி அதிகாரப் உட்பட வேறு எந்த அதிகாரம் இருந்தாலும் பலன் இல்லை. எனவே போலீஸ் இல்லாத மாகாண சபை என்பது 13 மைனஸ்தான். அதைத்தான் தன்னால் தர முடியும் என்று ரணில் தெளிவாகத் திட்டவட்டமாகத் தமிழ்க் கட்சிகளுக்குச் சொன்னார். 2005இல் நான் தர முற்பட்டதை நீங்கள் நிராகரிதீர்கள். அதே தவறை இந்தமுறையும் செய்யாதீர்கள் என்று ஒரு விதத்தில் எச்சரிக்கையாகவும் அவர் அதைச் சொன்னார். கொழும்பில் வைத்து அவர் அதைத் தமிழ்க் கட்சிகளுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் சேர்த்துத்தான் சொன்னார். இந்தியாவை நோக்கி 13ஐ முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று கேட்ட கட்சிகளுக்கும் 13ஐத் தீர்வின் தொடக்கமாக ஏற்றுக்கொண்ட கட்சிகளுக்கும், 13 வேண்டாம், கூட்டாட்சிதான் வேண்டும் என்று கேட்ட கட்சிகளுக்கும் சேர்த்து அவர் அதைச் சொன்னார். இந்தியாவில் வைத்தும் அதை அவர் மீளச்சொன்னார் “இந்த வாரம் நான் முன்வைத்த விரிவான முன்மொழிவு” என்று அவர் அதைக் கூறுகிறார். மட்டுமல்ல, “வடக்கு அபிவிருத்தித் திடடம்” என்ற வார்த்தையை அவர் பயன்படுத்துகிறார்.வடக்கு-கிழக்கு என்று தமிழர்களின் தாயகத்தை இணைத்துக் கூறவில்லை. எனவே ரணில் மிகத் தெளிவாக இருக்கிறார். அதைவிடக் கூடுதலாக அவர் துணிச்சலாகவும் இருக்கிறார். கொழும்பில் சொன்னதையே டெல்லியில் வைத்தும் சொல்கிறார். கோத்தாபய தனது முதலாவது இந்திய விஜயத்தின்போதும் இனப்பிரச்சினை தொடர்பில் இதே தொனியில்தான் பேசினார். அவர் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வந்தவர். ஆனால் ரணில் என்ன துணிச்சலில் அவ்வாறு கூறுகிறார்? அவருடைய துணிச்சலுக்கு பின்வரும் காரணங்கள் உண்டு. முதலாவது காரணம் எல்லாப் பேரரசுகளையும் சம தூரத்தில் வைத்திருக்கக் கூடிய ஒரு தலைவர் தான் மட்டுமே என்ற துணிச்சல். எந்தப் பேரரசையும் அதிகம் நெருங்கிச் செல்ல வேண்டிய தேவை, வாழ்க்கைப் பின்னணி தனக்கு இல்லை என்று அவர் நம்புகிறார். ராஜபக்ஸக்களோடு ஒப்பிடுகையில் அது அவருடைய பலந்தான். அதனால்தான் இந்தியா அவர் பதவிக்கு வருவதை முதலில் விரும்பவில்லை. டளஸ் அழகப்பெருமவை ஆதரிக்குமாறு தமிழ்க் கட்சிகளைக் கேட்டது. இரண்டாவது துணிச்சல், தமிழ்க் கட்சிகளால் போராட முடியாது என்று அவர் நம்புகிறார். கூட்டாட்சி அல்லது முழுமையான 13 அல்லது கொன்ஃபெடரேஷன் போன்ற எந்த கோரிக்கைகளை முன்வைத்தாலும், எந்த ஒரு தமிழ்க் கட்சியும் அதற்காக போராடும் திராணியோடு இல்லை என்பதை அவர் சரியாகக் கணித்து வைத்திருக்கிறார். மாறாக சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிராக ஆங்காங்கே தெட்டந் தெட்டமாக போராடத்தான் தமிழ்க் கட்சிகளால் முடியும் என்றும் அவர் சரியாகக் கணித்து வைத்திருக்கிறார். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான போராட்டத்தைப்போல அல்லது எழுக தமிழ், பொங்கு தமிழ்களைப் போல,பெருமளவு மக்களைத் திரட்டிப் போராடும் நிலைமையில் தமிழ்க் கட்சிகள் இல்லை என்பதை அவர் சரியாகக் கணித்து வைத்திருக்கிறார். மேலும் தமிழ்க் கட்சிகளின் சிறுதிரள் போராட்டங்களின் விளைவாக, தனக்குச் சிங்களபௌத்த வாக்குகள் அதிகம் சேரும் என்பதும் அவருடைய கணிப்பு. இப்பொழுது 13 மைனஸ் என்று கூறுவதன்மூலமும் அவருக்கு சிங்கள பௌத்த வாக்குகள் திரளும். மூன்றாவது துணிச்சல், இந்தியாவுக்குள்ள வரையறைகளை அவர் விளங்கி வைத்திருக்கிறார். 13ஆவது திருத்தம் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தின் விளைவுதான். ஆனால் அது தமிழ் மக்களின் தெரிவு அல்ல. மிகச்சரியான வார்த்தைகளில் சொன்னால், அது இந்திய இலங்கை அரசுத் தலைவர்களின் குழந்தை. எனவே அதற்கு இந்தியாவும் இலங்கையுந்தான் பொறுப்பு. அதை அமுல்படுத்துவதற்கு இரண்டு நாடுகளுந்தான் பொறுப்பு. ஆனால் ஒன்றேகால் இலட்சம் இந்தியப் படைகளை வைத்துக்கொண்டு அதைச் செய்ய இந்தியாவால் முடியவில்லை. கடந்த 36 ஆண்டுகளாக 13ஐ முழுமையாக அமல்படுத்துமாறு இலங்கைமீது நிர்ப்பந்தங்களைப் பிரயோகிக்க இந்தியாவால் முடியவில்லை. அல்லது இந்தியா விரும்பவில்லை. குறிப்பாக போர் காரணமாக அதைச் செய்ய முடியவில்லை என்று ஒரு சாட்டைச் சொன்னால், 2009க்குப் பின் கடந்த 14 ஆண்டுகளாக ஏன் அதனைச் செய்ய முடியவில்லை? 13ஆவது திருத்தத்தை மட்டுமல்ல, இலங்கைத் தீவில் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்கள் சார்ந்த விடயங்களில்கூட இந்தியா விரும்பிக் கேட்ட எத்தனை விடயங்களை இலங்கை கொடுத்திருக்கிறது? கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியா கேட்டது. ஆனால் இலங்கை மேற்கு முனையத்தைத்தான் தருவேன் என்று கூறியது. தமிழர்களுக்கு என்று யாழ்பாணத்தில் இந்தியா ஒரு கலாச்சார மண்டபத்தை கட்டியது. ஆனால் அதனை முழுமையாக இயக்குவதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு கொழும்பின்மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க ஏன் இந்தியாவால் முடியவில்லை? பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாகத் தரமுயர்த்த இன்றுவரை முடியவில்லை. காங்கேசன் துறையிலிருந்து தமிழகத்துக்கு கப்பலை ஓட விட இன்றுவரை முடியவில்லை. இப்படித்தான் இருக்கிறது இந்தியாவின் பிணைப்புத் திட்டங்கள். ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை புதிய பிணைப்பு திட்டங்கள் குறித்த ஒப்பந்தங்கள் எழுதப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்தியாவிடமிருந்து மின்சாரம் ,இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான எரிபொருள் விநியோகக் குழாய்களை உருவாக்குவது, இரு நாடுகளுக்கும் இடையில் பாலங் கட்டுவதற்கான வாய்ப்புக்களைப் பரிசீலிப்பது போன்ற திட்டங்கள் உரையாடப்பட்டுள்ளன. ஆனால் இவையாவும் முழுமையாக நிறைவேற்றப்பட்ட பின்னர்தான் எதைக் குறித்தும் கருத்துச் சொல்லலாம். ஏனென்றால் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இந்தியா இலங்கைத்தீவில் விரும்பி கேட்ட எதையுமே முழுமையாகப் பெறமுடியவில்லை. அதுமட்டுமல்ல, அம்பாந்தோட்டையில் சீனா கிட்டத்தட்ட நூறாண்டுக்கு குந்தியிருக்கும். கொழும்பு துறைமுகத்திற்கு அருகே செயற்கைத்தீவில் அதாவது துறைமுக பட்டினத்தில் சீனப் பிரசன்னம் எப்பொழுதுமிருக்கும். இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் சீனப் பிரசன்னம் அதிகரித்த காலகட்டம் என்று பார்த்தால் 2009க்கு பின்னரான கடந்த 14 ஆண்டுகள்தான். தனது செல்வாக்கு மண்டலத்தில் காணப்படும் இச்சிறிய தீவில் சீன விரிவாக்கத்தைத் தடுக்க இந்தியாவால் முடியவில்லை. இச்சிறிய தீவு தனக்குள்ள கேந்திர முக்கியத்துவத்தின் அடிப்படையில் எல்லாப் பேரரசுகளையும் கெட்டித்தனமாக வெட்டியாண்டதன் விளைவாக சீனா தீவுக்குள் நுழைந்து விட்டது. இவை அனைத்தையும் கூட்டிக்கழித்துப் பார்த்தால், இந்தியா 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகிக்காது என்பதனை ரணில் சரியாகவே கணித்திருப்பார். பொருளாதார நெருக்கடியின்போது நாட்டிற்கு முதலில் உதவியதும் அதிகம் உதவியதும் இந்தியாதான். அதன்மூலம் இந்தியா ஆறு உடன்படிக்கைகளைச் செய்து கொண்டது. அதாவது சிறிய இலங்கைத்தீவின் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதன்மூலம் இந்தியா பெற்றுக் கொண்டது இந்திய-இலங்கை உடன்படிக்கையைத்தான். அதன்பின் இந்தியா பெற்றுக் கொண்டவை பெரும்பாலானவை இலங்கைதீவை அரவணைப்பதன்மூலம் பெற்றுக் கொண்டவைதான். கடந்த ஆண்டிலும் அதுதான் நடந்தது. எனவே 13ஐ முழுமையாக அமல்படுத்துவதில் இந்தியாவுக்கு இருக்கும் வரையறைகளை அல்லது இயலாமைகளை ரணில் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார். அந்தத் துணிச்சலில்தான் அவர் கூறுகிறார் 13 மைனஸைத்தான் தருவேன் என்று. ஆயின் 13ஐ முழுமையாக அமல்படுத்தக் கேட்ட கட்சிகளும், சிவில் சமூகங்களும், சமஸ்டியைக் கேட்ட கட்சிகளும் சிவில் சமூகங்களும் அடுத்த கட்டமாக என்ன செய்யப்போகின்றன? இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்று அவர்கள் நம்பும் இறுதி இலக்கை நோக்கி போராடுவதற்கு அவர்கள் தயாரா? இந்தியாவோ, அமெரிக்காவோ, ஐநாவோ, அல்லது தந்தை செல்வா கூறியது போல கடவுளோ, யாராக இருந்தாலும் தமிழ்மக்களுக்குத் தங்கத் தட்டில் தீர்வை வைத்துத் தரப்போவதில்லை. போராடினால்தான் தீர்வு கிடைக்கும். போராடியபடியால்தான் மூன்று தசாப்தங்களுக்கு முன்பு குறைந்தபட்சம் பதின்மூன்றாவது கிடைத்தது. ஆனால் இப்பொழுது தமிழ் மக்களின் பேரபலம் இறங்கிவிட்டது என்று ரணில் நம்புகிறார். ”13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது; மாகாண சபைத் தேர்தலை நடத்துவது ஆகிய அதன் பொறுப்புகளை சிறீலங்கா பூர்த்திசெய்யும் என்று நம்புகிறோம்” என்று இந்திய பிரதமர் கூறியதை அவர் ஒரு சம்பிரதாயபூர்வமான, சடங்கார்த்தமான வேண்டுகோளாகவே விளங்கிக் கொள்வார். எதிர்க்கட்சிகள் எதிர்கின்றன, பிக்குகள் எதிர்க்கிறார்கள் என்று கூறிக்கொண்டு அவர் 13ஐ முழுமையாக அமுல்படுத்த மாட்டார். ஆனால் இந்தியா மேலும் புதிய கனெக்ரிவிற்றி-பிணைப்புத் திட்டங்களில் கவனத்தைக் குவிப்பதாகத் தெரிகிறது. கடல்வழிப் பிணைப்பு: தரை வழிப் பிணைப்பு; வான் வழிப் பிணைப்பு; சக்தி,மின்சார, எரிபொருட் பிணைப்பு; வலுசக்தி,வர்த்தகம் மற்றும் பொருளாதாரப் பிணைப்பு; நிதிப் பிணைப்பு; டிஜிற்றல் பிணைப்பு; மக்களுக்கும் மக்களுக்கும் இடையிலான பிணைப்பு…போன்ற இன்னோரன்ன பிணைப்புத் திட்டங்கள் தொடர்பாக இந்திய வெளியுறவுச் செயலர் பேசுகிறார். ஏற்கனவே இந்தியா முன்னின்று தொடங்கிய தமிழ் மக்களுக்கும் தமிழகத்திற்கும் இடையிலான பிணைப்புத் திட்டங்கள் அரைகுறையாகத் தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு பின்னணியில், புதிய பிணைப்புத் திட்டங்களின்மீது இந்தியா கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டதா? இனப்பிரச்சினைக்கான தீர்வின் மீதான இந்தியாவின் கவனக்குவிப்பைத் திசை திருப்ப மேற்படி பிணைப்புத் திட்டங்கள் இலங்கைக்கு உதவுமா? https://globaltamilnews.net/2023/193228/
  9. தமிழ்க்கட்சிகள் எழுதும் கடிதங்கள்? நிலாந்தன். July 16, 2023 அண்மையில் தனது 90 ஆவது வயதை நிறைவு செய்த ஆனந்தசங்கரி, அரசியலில் அதிகம் கடிதம் எழுதிய ஒரு தமிழ் அரசியல்வாதி ஆவார். கடவுளைத்தவிர அவர் ஏனைய எல்லாருக்குமே கடிதம் எழுதியிருக்கிறார். அவருடைய கடிதங்களுக்கு பதில் கிடைத்ததோ இல்லையோ, அக்கடிதங்கள் அக்காலகட்ட அரசியலில் ஏதும் விளைவுகளை ஏற்படுத்தினவோ இல்லையோ, அவர் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருந்தார். அவை சிலசமயங்களில் துணிச்சலான, பல சமயங்களில் சுவாரசியமான அல்லது பம்பலான அரசியல் ஆவணங்களாகப் பார்க்கப்பட்டன. இப்பொழுது ஆனந்தசங்கரியிடம் இருந்து ஏனைய தமிழ் அரசியல்வாதிகளும் அதைக் கற்றுக்கொண்டு விட்டார்கள் போலத்தெரிகிறது. அண்மை நாட்களாக தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சிகளின் தலைவர்கள் இந்தியப் பிரதமருக்கு கடிதங்களை எழுதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மனோ கணேசன் தனது கட்சி அவ்வாறு கடிதம் எழுதப்போவதில்லை என்று கூறுகிறார். இந்தியாவுக்கு இங்குள்ள பிரச்சினை விளங்கும். ஆகவே கடிதம் எழுதி அதன் மூலம் பத்திரிகையில் தலைப்பு செய்தியாக இடம்பெறுவதை விரும்பவில்லை என்று மனோ கணேசன் கூறுகிறார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த மாதம் 21 ஆம் தேதி இந்தியாவுக்கு செல்கிறார். அங்கே அவர் இந்திய பிரதமரை சந்திப்பதற்கிடையில் தமிழ்க் கட்சிகளின் மூன்று கடிதங்கள் பிரதமர் மோடிக்கு அனுப்பப்படுகின்றன. முதலாவது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடையது. அக்கடிதம் எற்கனவே ஊடங்களுக்குத் தரப்பட்டுவிட்டது. இரண்டாவது சம்பந்தருடையது. மூன்றாவது ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் விக்னேஸ்வரனின் கட்சிகளுடையது. இக்கடிதங்களின் உள்ளடக்கம் என்னவென்பது ஏற்கனவே ஊடகங்களில் வெளிவந்துவிட்டது. அந்த உள்ளடக்கங்களை தொகுத்து பார்த்தால், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் விக்னேஸ்வரனும் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதாக தெரிகிறது. இரண்டாவது கடிதம் தமிழரசுக் கட்சியுடையது. இந்தியாவுக்கு ஆறு கட்சிகள் இணைந்து கடந்த ஆண்டின் தொடக்கத்தில் கடிதம் எழுதியபொழுது அதில் தமிழரசு கட்சியும் கையொப்பமிட்டது. கடிதத்தின் உள்ளடக்கத்தை மாற்றுவதில் தமிழரசுக் கட்சி முக்கிய பங்காற்றியது. அக்கடிதம் 13க்குள் முடங்கக்கூடாது என்பதனை வலியுறுத்தி அதற்குப்பால் போக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை தமிழரசு கட்சி ஏற்படுத்தியது. ஆனால் இப்பொழுது தமிழரசு கட்சி தனியாக ஒரு கடிதம் எழுதுகிறது. அக்கடிதமானது 13 வது திருத்தத்தை கடந்து சென்று ஒரு சமஸ்டி கோரிக்கையை-கூட்டாட்சிக் கோரிக்கையை முன்வைப்பதாகக் கூறப்படுகிறது. இதுவிடயத்தில் ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் வரைந்த கடிதத்தை சம்பந்தர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தெரிகிறது. அக்கடிதத்தில் அவர் கையெழுத்திட மறுத்துவிட்டார். எனவே, தமிழரசுக்கட்சி தனியாக ஒரு கடிதத்தை எழுதப்போவதாக அறிவித்துள்ளது. மூன்றாவது கடிதம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடையது. அப்படி ஒரு கடிதத்தை எழுதப்போவதாக முதலில் சொன்னது அக்கட்சிதான். தமது கடிதத்தை முதலில் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியதும் அக்கட்சிதான். அக்கட்சி இந்திய பிரதமருக்கு எழுதிய கடிதம் மிகத்தெளிவாக 13வது திருத்தத்தை நிராகரிக்கின்றது. அதேபோல மிகத்தெளிவாக கூட்டாட்சிக் கோரிக்கையை முன்வைக்கின்றது, மேலும் கடிதத்தின் இறுதி வரியில் “இந்தியாவின் சட்டபூர்வமான பிராந்திய பாதுகாப்பு நலன்களை” அக்கட்சி ஏற்றுக் கொள்வதை கடிதம் மீள வலியுறுத்துகின்றது. இந்தியாவின் புவிசார் பாதுகாப்பு நலன்களை தாம் ஏற்றுக் கொள்வதாகவும் அந்த அடிப்படையில் இந்திய இலங்கை உடன்படிக்கையை தாங்கள் ஏற்றுக் கொள்வதாகவும் அக்கட்சி ஏற்கனவே உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறது. அதேசமயம் அந்த உடன்படிக்கையின் விளைவாக உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தத்தை இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் அக்கட்சி தெளிவாகக் கூறிவிட்டது. இந்தியாவின் புவிசார் பாதுகாப்பு நலன்களை ஏற்றுக் கொள்ளும் ஒரு கட்சி இந்தியாவைப் பகை நாடாகப் பார்க்கமுடியாது. ஆனால் நடைமுறையில் முன்னணியானது, தனது அரசியல் எதிரிகளை விமர்சிக்கும்போது அல்லது தன்னை விமர்சிக்கும் அரசியல் விமர்சகர்களைத் தூற்றும்போது அவர்களை இந்தியாவின் ஏஜென்ட்கள், கைக்கூலிகள், துரோகிகள் என்றெல்லாம் குற்றஞ்சாட்டுவதுண்டு. தமது கடிதத்தை யாழ்ப்பாணத்தில் உள்ள துணைத் தூதரகத்திடம் கையளித்தபின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்துக்களிலும் அது வெளிப்படுகின்றது. நடைமுறையில் இந்தியாவை ஒரு பகை நாடாகக் காட்டிக்கொண்டு, உத்தியோகபூர்வமாக இந்தியாவின் பாதுகாப்புசார் நலன்களைத் தாம் ஏற்றுக் கொள்வதாக அக்கட்சி கூறுவதை, அகமுரண்பாடு என்று விளங்கிக் கொள்வதா? அல்லது உள்ளூரில் கட்சி மோதல்களில் வெளியுறவு நிலைப்பாடுகளை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்ற முதிர்ச்சி அந்தக் கட்சியிடம் இல்லை என்று எடுத்துக் கொள்வதா? இந்தியா ஒரு எதிரி நாடா அல்லது கையாளப்பட வேண்டிய ஒரு பிராந்தியப் பேரரசா என்ற தெளிவு ஈழத்தமிழர்களுக்கு இருக்கவேண்டும். பகைநாடு என்றால், அதன் புவிசார் பாதுகாப்பு நலன்களோடு சமரசம் செய்யத் தேவையில்லை. மாறாக, கையாளப்பட வேண்டிய ஒரு நாடு என்றால், அதை எப்படிக் கையாள்வது என்பது தொடர்பில் பொருத்தமான ஒரு வெளியுறவுத் தரிசனம் இருக்கவேண்டும். அந்த வெளியுறவுத் தரிசனம் உள்நாட்டில் எமது பேரபலம் எது? பிராந்தியத்தில் எமது பேரபலம் எது? உலக அளவில் எமது பேரபலம் எது? என்பது தொடர்பான தொகுக்கப்பட்ட ஆய்வுமுடிவுகளின் அடிப்படையில் அமையவேண்டும். உள்நாட்டுக் கொள்கைக்கு வெளியே வெளியுறவுக் கொள்கை என்று ஒன்று இருக்க முடியாது. தமிழ்க் கட்சிகள் இந்தியாவுக்கு கடிதம் எழுதுகின்றனவென்றால், அதுவும் ரணில் அங்கு போகவிருக்கும் ஒரு பின்னணியில் மூன்றுகடிதங்கள் அனுப்பப்படுகின்றனவென்றால், இந்தியாவை ஏதோ ஒருவிதத்தில் கையாள வேண்டிய தேவை உண்டு என்று மேற்படி கட்சிகள் நம்புகின்றன என்று பொருள். இனப்பிரச்சினைக்கான தீர்வில் இந்தியா தவிர்க்கப்படவியலாத ; கையாளப்பட வேண்டிய ஒரு சக்தி என்பதை மேற்படி கடிதங்கள் உணர்த்துகின்றன. ஆயின் இந்தியாவை கையாள்வதற்கு மேற்படி கட்சிகளிடம் எவ்வாறான வெளியுறவுக் கொள்கை உண்டு? அதற்கு வேண்டிய ஏதாவது நிபுணத்துவக் கட்டமைப்பு அவர்களிடம் உண்டா? இல்லை. அப்படிப்பட்ட வெளியுறவுத் தரிசனங்கள் இருந்திருந்தால் ரணில் பிரதமர் மோடியை சந்திக்கப்போகும் ஒரு காலகட்டத்தில் கடிதம் எழுதிக் கொண்டிருப்பதை விடவும் அதற்கு முன்னரே அதாவது ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிடம் இருந்து தனக்கு அழைப்பு வரவேண்டும் என்று காத்துக் கொண்டிருந்த ; அதற்காக உழைத்துக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் அந்த இடையூட்டுக்குள் புகுந்து வேலை செய்திருக்க வேண்டும். ஆனால் எந்த ஒரு தமிழ்க்கட்சியும் அதைச் செய்யவில்லை. இப்பொழுது எதிர்த்தரப்பு முன்னெடுக்கும் ஒரு நகர்வுக்கு பதில்வினையாற்றும் நடவடிக்கையாகவே கடிதம் எழுதப்படுகின்றது. அதாவது ரியாக்டிவ் டிப்ளோமசி. கடந்த ஆண்டு ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தால் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டபொழுது அதை இந்தியா விரும்பவில்லை என்று கருதப்பட்டது. டளஸ் அழகப்பெருமவை ஆதரிக்குமாறு இந்தியா கூட்டமைப்பைக் கேட்டதாக அப்பொழுது தகவல்கள் வெளிவந்தன. ஜனாதிபதியாக வந்ததும் ரணில் இந்தியாவுக்குச் செல்வதற்கு இந்தியாவிடமிருந்து அழைப்பு வரவில்லை. அதற்காக அவர் ஏறக்குறைய ஓராண்டு காலம் உழைக்க வேண்டியிருந்தது. இப்பொழுதுதான் அந்த அழைப்பு வந்திருக்கிறது. இவ்வாறு ரணில் இந்தியாவை நெருங்கிச் செல்வதற்கு உழைத்துக் கொண்டிருந்த ஒரு காலப்பகுதிக்குள் தமிழ்க் கட்சிகள் தமது நோக்கு நிலையிலிருந்து எவ்வறான வெளியுறவுச் செயற்பாடுகளை “புரோ அக்டிவ் ஆக” முன்னெடுத்தன? கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியா கூட்டமைப்பை-அப்பொழுது கூட்டமைப்பாகத்தான் இருந்தது-டெல்லிக்கு வருமாறு அழைத்தது. ஆனால் சம்பந்தர் பொருத்தமற்ற காரணங்களைக் கூறி அந்த அழைப்பை நிராகரித்தார். எந்தப் பேரபலத்தை வைத்து அப்படி ஒரு முடிவை எடுத்தார்? இன்றுவரையிலும் அவர் அதை யாருக்கும் வெளிப்படையாகச் சொல்லவில்லை. இந்தியாவின் அழைப்பை சம்பந்தர் நிராகரித்துவிட்டார். அதன்பின் இந்தியா தமிழ்த் தலைவர்களை டெல்லிக்கு அழைக்கவில்லை. ரணில் ஜனாதிபதியாக வந்ததும் இந்தியத் தலைவர்களைச் சந்திப்பதற்கு அவருக்கும் டெல்லியிலிருந்து அழைப்பு வரவில்லை. தமிழ்த் தலைவர்களுக்கும் அழைப்பு வரவில்லை. ஆனால் அரசுடைய தரப்பாகிய சிங்களத் தலைவர்கள் அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவை வெற்றிகரமாகக் கையாண்டு புதுடில்லியை நெருங்கி சென்று விட்டார்கள். ஆனால் அரசற்ற தரப்பாகிய தமிழ்த் தரப்போ கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறது? ரணில் ஒரு புத்திசாலி தந்திரசாலி என்று தமிழர்கள் கூறிக் கொள்ளுகிறார்கள். அப்படியென்றால் ஒரு தந்திரசாலியை எதிர்கொள்வதற்கு தமிழ் மக்கள் எப்படிப்பட்ட தந்திரங்களை வகுத்து வைத்திருக்கிறார்கள்? ரணில் விக்கிரமசிங்க உள்ளூராட்சிசபைத் தேர்தலை அறிவித்தபொழுது அதை நம்பி சுவரொட்டிகளை அடித்த தமிழ்க் கட்சிகள்தானே? அதுவும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரு சுவரொட்டிக்கு பெருமளவு காசைச் செலவழிக்க வேண்டியிருந்த ஒரு பின்னணியில், ரணிலின் அறிவிப்பை நம்பி தமிழ்க் கட்சிகள் சுவரொட்டிகளை அடித்தன. அல்லது நட்டப்பட்டன என்றும் சொல்லலாம். இப்பொழுது அவர் டெல்லிக்கு போகிறார் என்றதும் ஆனந்தசங்கரியை போல கடிதம் எழுதத் தொடங்கி விட்டார்களா? https://globaltamilnews.net/2023/193050/
  10. சிதறிப்போன ஒரு மக்கள் கூட்டம் ? – நிலாந்தன். adminJuly 9, 2023 காற்றுவழிக் கிராமங்களைப் பற்றிய எனது கடந்தவாரக் கட்டுரையானது பெருமளவுக்கு தீவக மக்களால் வரவேற்கப்பட்டிருக்கிறது. எனினும் ஒரு பகுதியினர் அதற்கு வேறுவிதமாக வியாக்கியானம் தருகிறார்கள். கோவில்களில் காசைக் கொட்டுவது என்பது ஒரு விதத்தில் ஊரில் தனது முதன்மையை நிலைநாட்டும் நோக்கத்தையும் கொண்டது என்று அவர்கள் கூறுகிறார்கள். ஒரு காலம் நீருக்கு கஷ்டப்பட்ட கிராமத்தில் இருந்து பொருளாதார மற்றும் போர்க் காரணங்களுக்காக ஊரை விட்டுப்போன மக்கள் இப்பொழுது அதே ஊரில் கற்பனை செய்ய முடியாத ஒரு தொகையைச் செலவழித்து ஒரு கோவிலைப் புனரமைப்பது என்பது, தங்களால் முடியும் என்பதனைச் சாதித்துக்காட்டும் ஒரு நிகழ்வாக ஏன் எடுக்கக் கூடாது என்றும் கேட்கப்படுகிறது. அதில் உண்மை உண்டு. புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தாங்கள் தேடிய செல்வத்தை எப்படி ஊரில் செலவழிப்பது என்பதை குறித்து பொருத்தமான அபிவிருத்தி திட்டங்கள் இல்லாத வெற்றிடத்தில்தான் கோவில்களில் முதலீடு செய்யும் ஒரு நிலைமை ஏற்படுகின்றது. கோவில்களை புனரமைப்பது என்பது அவர்களுடைய மத நம்பிக்கை சார்ந்த விடயம். ஆனால் ஊரின் பெருமையை வெளி உலகத்திற்கு காட்டுவது என்பது அதுவும் ஊர் என்பது ஊருக்கு வெளியே வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் சிதறிப்போயிருக்கும் ஒரு பின்னணியில், ஊருக்கு வெளியே இருக்கும் ஊரவர்களுக்கு தமது முதன்மையை, பெருமையை நிலைநாட்டுவது என்று பார்க்கும் பொழுது, அங்கே ஊரைக் கட்டியெழுப்புவதா அல்லது குறிப்பிட்ட கொடையாளி தன்னுடைய பெயரை கட்டியெழுப்புவதா என்ற கேள்விக்கு விடை முக்கியம். புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பழைய மாணவர் சங்கங்களைப் போலவே ஊர்ச் சங்கங்கள் உண்டு. இச்சங்கங்கள் பல ஓரளவுக்கு ஊரைக் கட்டியெழுப்புகின்றன. ஆனால் அதனை ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவது என்ற மையப்புள்ளியில் இருந்து சிந்தித்துச் செய்வதாகத் தெரியவில்லை. ஏனெனில் தமிழ்க் கட்சிகளை போலவே ஊர் சங்கங்களுக்கிடையிலும் ஐக்கியம் இல்லை. ஒரே ஊருக்கு வெவ்வேறு புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் வேறு வேறு சங்கங்கள் உண்டு. அவற்றுக்கு இடையில் ஐக்கியம் இல்லை. புலம் பெயர்ந்த தரப்பில் உள்ள கொடையாளிகள் அல்லது சங்கங்கள் ஊருக்கு தாங்கள் செய்யும் நற்காரியங்களுக்குரிய பாராட்டுக்கள் தங்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்று சிந்திப்பதும் ஒரு காரணம். அதில் ஒர் ஈகோ உண்டு. ஆனால் அந்த ஈகோவை பொசிட்டிவ்வான விதத்தில் பொருத்தமான அபிவிருத்தி திட்டங்களுக்குள் உள்வாங்கலாம். அதை யார் செய்வது? ஊர்ச் சங்கங்களை ஏதோ ஒரு பொது நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் யார் ஒன்றாக்குவது? புலம்பெயர்ந்த தமிழர்கள் பெரும்பாலானவர்கள் ஊர் நினைவுகளை ஊறுகாய் போட்டு வைத்திருக்கிறார்கள். ஒருவிதத்தில் ஊர்களையும் ஆங்காங்கே ஊறுகாய் போட்டு வைத்திருக்கிறார்கள். இவ்வாறு தாம் ஊரை விட்டுப்பிரிந்த காலத்தையும், ஊர் பற்றிய தமது நினைவுகளையும் ஊறுகாய் போட்டு வைத்திருக்கும் ஒரு சமூகத்தின் ஊர்ப் பற்று என்பது ஒரு தேச நிர்மாணத்தைப் பொறுத்தவரை அடிப்படையான ஒர் ஆக்க சக்தி. ஆனால் அதை ஒரு தேசத்தை கட்டியெழுப்பும் திரட்டப்பட்ட சக்தியாக மாற்றுவதற்கு தேச நிர்மாணம் என்ற அடிப்படையில் ஒரு பொதுவான வேலைத் திட்டம் இருக்க வேண்டும். ஆனால் கடந்த 14 ஆண்டுகளாக அவ்வாறான வேலைத்திட்டங்கள் எவையும் கிடையாது. ஒரு மையத்தில் இருந்து முடிவெடுத்து ஒரு மையத்திலிருந்து காசை திரட்டி அதை ஆக்கபூர்வமான பொருத்தமான வழிகளில் தேச நிர்மானத்தை நோக்கி முதலீடு செய்வதற்கு தமிழ்மக்கள் மத்தியில் இப்பொழுது ஒன்றிணைந்த மையங்கள் கிடையாது. மாறாக சிதறிப்போன சிறு மையங்கள்தான் உண்டு. நாட்டில் ஒவ்வொரு கட்சியும் தனது வாக்கு வங்கியை எப்படிக் கட்டியெழுப்பலாம் என்று சிந்திக்கின்றதோ அப்படித்தான். எனவே காற்றுவழிக் கிராமங்களில் கோவில்களைப் புனரமைக்கும் செயற்பாடுகள் நமக்கு எதை உணர்த்துகின்றனவென்றால், தமிழர்கள் தேவைகளையும் வளங்களையும் பொருத்தமான விதங்களில் இணைக்க முடியாத ஒரு மக்களாக, ஒரு மையத்திலிருந்து திட்டமிட முடியாத மக்களாகக் காணப்படுகிறார்கள் என்பதைத்தான். இதனைக் கோவில்களை புனரமைக்கும் விடயத்தில் மட்டுமல்ல, ஐநாவை அணுகுவது; இந்தியாவை அணுகுவது; அமெரிக்காவை அணுகுவது; ஐரோப்பாவை அணுகுவது ; உலகப் பொது நிறுவனங்களான பன்னாட்டு நாணய நிதியம், உலகவங்கி போன்றவற்றை அணுகுவது; போன்ற எல்லா விடயங்களிலுமே தொகுத்துக் காணலாம். தமிழ் மக்கள் ஒரு மையம் இல்லாத மக்களாகவும்; மையத்தில் இருந்து முடிவெடுக்காத மக்களாகவும் காணப்படுகிறார்கள். இதற்கு ஆகப்பிந்திய அண்மைய உதாரணங்களை இங்கே சுட்டிக்காட்டலாம். முதலாவதாக, உலகத்தமிழர் பேரவை என்று புலம்பெயர்ந்த தமிழர் அமைப்பு அண்மையில் அமெரிக்கப் பிரதானிகளைச் சந்தித்தது. அச்சந்திப்பில் கலந்து கொண்ட அமெரிக்கப் பிரதானிகளை வைத்து பார்த்தால், அது ஒரு பெறுமதியான சந்திப்பு. ஜெனிவாக் கூட்டத்தொடரை முன்னிட்டு நடந்த அச் சந்திப்பானது புலம்பெயர்ந்த தமிழர்களை அமெரிக்கா ஏதோ ஒரு நோக்கத்தோடு கையாள விரும்புகிறது என்ற செய்தியை துலக்கமான விதங்களில் வெளிப்படுத்தியது. இரண்டாவது, பாரதிய ஜனதாக்கட்சியின் தமிழக அமைப்பாளர் அண்ணாமலையை லண்டனுக்கு அழைத்தமை. பிரித்தானியத் தமிழர் பேரவை அந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. அதனை அவர்கள் உறவுப் பாலம் என்று அழைத்தார்கள். அது தொடர்பில் முக்கியமாக இரண்டு விமர்சனங்கள் எழுந்தன. ஒன்று பாரதிய ஜனதாவின் இந்துத்துவா நிலைப்பாட்டை மேற்படி புலம்பெயர்ந்த தமிழர் அமைப்பும் ஏற்றுக் கொள்கிறதா என்பது. இரண்டாவது பாரதிய ஜனதா பிரமுகர்கள் இப்பொழுதும் 13ஆவது திருத்தத்தைத்தான் ஒரு தீர்வாக முன்வைக்கிறார்கள் என்பது. அதாவது பாரதிய ஜனதாவை நெருங்கி செல்வதன்மூலம், ஈழத் தமிழர்கள் தொடர்பான இந்தியாவின் வெளியுறவு நிலைப்பாட்டில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை என்பது. குறிப்பாக, பாரதிய ஜனதாவை இந்துத்துவா என்ற கொழுக்கி மூலம் கவர முயற்சிப்பதன் விளைவாக தாயகத்தில் எத்தனை இந்துக் கோவில்களைக் காப்பாற்ற முடிந்திருக்கிறது? அல்லது அடாத்தாகக் கட்டப்படும் எத்தனை விகாரைகளை அகற்ற முடிந்திருக்கிறது? என்றெல்லாம் அவர்கள் கேட்கிகிறார்கள். மூன்றாவது, ஐரோப்பாவை மையமாகக் கொண்டியங்கும் உலகத் தமிழர் இயக்கம் என்று ஒர் அமைப்பு தொடர்ச்சியாக ஐநா விவகாரங்களில் ஈழத் தமிழர்கள் சார்பாக செயற்பட்டு வருகின்றது. கடந்த பல ஆண்டுகளைத் தொகுத்து பார்த்தால் ஐநாவில் ஈழத்தமிழர்களை அந்த அமைப்புத்தான் பிரதிநிதித்துவப்படுத்துகின்றதா என்ற ஒரு தோற்றம் உண்டாகக்கூடும். அந்த அமைப்பின் யூடியூப்பில் காணக்கிடைக்கும் காணொளிகளிலும் அதை உணரக்கூடியதாக உள்ளது. நாலாவது, லண்டனை மையமாகக் கொண்ட மூன்று அரசியல் செயற்பாட்டாளர்கள் இந்தியாவைக் கையாள்வது என்று ஒரு நிகழ்ச்சி திட்டத்தை முன்வைத்து தொடர்ச்சியாக இந்தியாவில் கருத்தரங்குகளை ஒழுங்குபடுத்தி வருகிறார்கள். இதுவரையிலும் மூன்று கருத்தரங்குகள் நடத்தப்பட்டுள்ளன. இக்கருத்தரங்குகளில் தாயகத்திலிருந்து ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் பங்குபற்றி வருகிறார்கள். இந்த அமைப்பும் பாரதிய ஜனதாவை நெருங்கிச் செல்வதன் மூலம் ஈழத் தமிழர்கள் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டில் எவ்வாறு மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று சிந்திப்பதாக தெரிகிறது. இப்பொழுது மேற்சொன்ன அனைத்தையும் தொகுத்துப் பார்க்கலாம். இந்தியாவை அணுகுவது; அமெரிக்காவை அணுகுவது; ஐரோப்பாவை அனுப்புவது; ஐநாவைக் கையாள்வது போன்ற அனைத்துமே வெளியுறவுச் செயற்பாடுகள்தான். அதாவது ஒரு வெளிவகாரக் கொள்கையை முன்வைத்து அதற்குரிய கட்டமைப்புகளை உருவாக்கி அதன்மூலம் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள். வெளிவிவகாரம் எனப்படுவது ஒரு சக்தி மூலம் (Power source) ஏனைய சக்தி மூலங்களோடு இடையூடாடுவது. ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் அப்படிப்பட்ட சக்தி மூலங்கள் கிடையாது. தாயகத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட கட்சிகள் உண்டு. மெய்யான சக்தி மூலங்கள் அவைதான். ஆனால் அக்கட்சிகளிடம் வெளியுறவுக் கட்டமைப்பு எதுவும் கிடையாது. அவ்வாறு தாயகத்திலிருந்து பொருத்தமான வெளியுறவு செயற்பாடுகளை முன்னெடுக்க தேவையான வெளியுறவு தரிசனங்களோ கட்டமைப்புகளோ இல்லாத வெற்றிடத்தில் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் அல்லது தனிநபர்கள் அதை முன்னெடுத்து வருகிறார்கள். அவர்களுக்கிடையிலும் ஒன்றிணைப்பு இல்லை. அவர்கள் ஒரு வலு மையமாக இல்லை. இது ஒரு தலைகீழ்நிலை. அதாவது வெளியுறவுச் செயற்பாடுகளை யார் முன்னெடுக்க வேண்டுமோ அவர்கள் அதைச் செய்யவில்லை. அதற்குரிய கட்டமைப்புகளும் அவர்களிடம் இல்லை. ஆனால் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் போதிய செல்வம் உண்டு; மொழியறிவு உண்டு; தொடர்புகளும் உண்டு. அதைவிட முக்கியமாக, அவ்வாறான வெளியுறவுச் செயற்பாடுகளை வெளிப்படையாக முன்னெடுக்க தேவையான சுதந்திரமான வெளியும் அங்கே உண்டு. எனவே தாயகத்தில் செய்யாமல் விடப்பட்டதை அவர்கள் செய்ய முயற்சிக்கிறார்கள். இதில் மேலும் ஓருதாரணத்தை இங்கே சுட்டிக்காட்டலாம். கனடாவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தொடர்பான தீர்மானம் எனப்படுவது ஒரு தனிநபர் பிரேரணைதான். அத்தனிநபர் பிரேரணையை முன்மொழிந்த நாடாளுமன்ற உறுப்பினரின் பின்னணியில் சில விரல்விட்டு எண்ணக்கூடிய கனேடியத் தமிழ்ச்செயற்பாட்டாளர்கள் காணப்படுகிறார்கள். நன்கு திட்டமிட்டு, தளராது, தொடர்ச்சியாக அவர்கள் உழைத்ததன் விளைவுதான் மேற்கண்ட தீர்மானம். அவ்வாறு தன்னை அர்ப்பணித்து செயல்படக்கூடிய ஆற்றலும் வளமும் பொருந்திய தமிழர்களும், அமைப்புகளும் உலகமெங்கும் உண்டு. ஆனால் அவர்களையெல்லாம் இணைப்பதற்கு ஒரு மையம் இல்லை. குறைந்தபட்சம் அவர்களைப் போன்றவர்கள் இடையூடாடுவதற்கு ஒரு மைய இடையூடாட்டத் தளங்கூட இல்லை. இதனால் திரட்டப்படாத தமிழ் உழைப்பும், வளங்களும் சிதறடிக்கப்படுகின்றன. இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட காற்றுவழிக் கிராமங்களில் கோவில்கள் புனரமைக்கப்படுவதையும் மேற்கண்ட விளக்கத்தின் பின்னணியில் வைத்தே நோக்கவேண்டும். ஒரு மையத்திலிருந்து திட்டமிடப்பட்டால் ஊர்ப்பற்றையும் பிரதேசப் பற்றையும் தேசத்தைக் கட்டியெழுப்பும் பொதுவான நிகழ்ச்சிநிரலை நோக்கி ஆக்க சக்தியாகத் திரட்டலாம். அங்கு தனிநபர் பிம்பங்களை கட்டியெழுப்பும் நிகழ்ச்சி நிரல் பின்தள்ளப்பட்டுவிடும். தாயகத்தில் உள்ள தேவைகளையும் புலம்பெயர்ந்த தரப்பில் உள்ள வளங்களையும் ஒருங்கிணைப்பது போன்ற அனைத்துமே கடந்தவாரக் கட்டுரையில் கூறப்பட்டதுபோல, தேசத்தைக் கட்டியெழுப்பும் ஒரு மைய நிகழ்ச்சிநிரலின் பிரிக்கப்படமுடியாத பகுதிகள்தான். ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவது என்ற பொதுவான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அவை ஒரு மையத்தில் இருந்து திட்டமிடப்பட வேண்டும். ஆனால் மையம் இல்லாத தமிழர்களோ தலைகீழாகச் செயற்படுகிறார்கள். ஒருபுறம் வெளியுறவுச் செயற்பாடுகள். இன்னொருபுறம் ஊரின் பெருமையை நிலைநாட்டும் செயற்பாடுகள். ஆற்றல்மிக்க, அர்ப்பணிப்புள்ள, வளம்மிகுந்த தனிநபர்களும் நிறுவனங்களும் ஒரு மையத்தில் ஒன்றிணைக்கப்படாமல் சிதறிப்போய் தனித்தனியாக செயற்படுகின்றார்கள். முதலாம் தலைமுறைப் புலம் பெயரிகளுக்குத்தான் தாயகத்தை பிரிந்த பிரிவேக்கம் உண்டு. இறந்த காலத்தை ஊறுகாய் போட்டு வைத்திருப்பவர்கள் அவர்கள்தான். தாயகத்தில் கோவில்களைப் புனரமைப்பதும் அவர்கள்தான். அவர்களுடைய பிள்ளைகள் அதைச்செய்யாது. ஏனென்றால் அந்தத் தலைமுறையிடம் பிரிவேக்கம் கிடையாது. எனவே முதலாம் தலைமுறைப் புலம்பெயரிகள் வயதாகி இறப்பதற்கு இடையில் ஊர்ப்பற்றை நாட்டுப் பற்றாக்கும் நோக்கத்தோடு தேசத்தைக் கட்டியெழுப்பும் செயற் திட்டங்களை வகுக்க வேண்டும். அதை ஒரு தொடர் செயற்பாடாக,பொறிமுறையாக நிறுவனமயப்படுத்தினால் அடுத்தடுத்த தலைமுறையும் அதில் முதலீடு செய்யும். தேசமும் பலமடையும். https://globaltamilnews.net/2023/192827/
  11. ஐ.எம்.எஃப்பைக் கையாள முடியாத தமிழர்கள் ? நிலாந்தன்! adminJune 25, 2023 ஐநா மனித உரிமைகள் பேரவையின் 53 வது கூட்டத்தொடர் கடந்த 19ஆம் திகதி ஆரம்பமாகியது. இக்கூட்டத்தொடரில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை வாசிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக மனித உரிமைகள் கூட்டத் தொடரை நோக்கிய தமிழ் மக்களின் கவனக்குவிப்பு ஒப்பீட்டளவில் குறைந்து விடுகின்றது. ஐரோப்பாவை மையமாகக் கொண்டு இயங்கும் தமிழர் அமைப்பு என்ற ஒரு அமைப்பு ஐநா விவகாரங்களில் தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றது. அதேசமயம் இம்முறை நாட்டிலிருந்து மனித உரிமைகள் கூட்டத்தொடருக்கு அரசியல்வாதிகள் யாரும் சென்றிருக்கவில்லை. அண்மை ஆண்டுகளாகமனித உரிமைகள் கூட்டத்தொடருக்குச் செல்லும் தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கிவிட்டது. இந்த விடயத்தில் தமிழ்த்தரப்பிடம் ஒருவித சோர்வு அல்லது ஊக்கமின்மை காணப்படுகின்றது. இதற்குக் காரணம் என்ன? இத்தனைக்கும் கடந்த ஆண்டிலிருந்து ஐநா இலங்கை இனப்பிரச்சனை தொடர்பில் ஒரு பொறிமுறையை உருவாக்கிச் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரித்து வருகின்றது. இந்தப் பொறிமுறை சிரியா போன்ற இடங்களுக்கு உருவாக்கப்பட்ட ஒரு பொறிமுறையைப் போன்ற பலமான ஒன்று இல்லைத்தான். அது ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு உட்பட்ட ஒன்றுதான். என்றாலும் தமிழர்களுக்கு சாதகமான ஒரு நகர்வு அது. அதில் ஒன்றுமே இல்லை என்று நிராகரிக்க முடியாது. சரியோ பிழையோ, போதுமோ போதாதோ அது ஈழத் தமிழர்களுக்குச் சாதகமானது. அதில் சேகரிக்கப்படும் சான்றுகளும் சாட்சிகளும் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளில் பெறுமதியானவை. எனவே அப்பொறிமுறையை தமிழர்கள் நீண்ட கால நோக்கில் கையாள வேண்டும். ஆனால் அவ்வாறு கையாள்வதற்குரிய அரசியல் தரிசனமோ கட்டமைப்புகளோ வழி வரைபடங்களோ ஈழத்தமிழர்களிடம் உண்டா? ஐநாவைக் கையாள்வது என்பது அதன் எல்லாப் பரிமாணங்களிலும் வெளியுறவுக் கொள்கை சார்ந்த ஒரு விடயந்தான். நிச்சயமாக மனிதாபிமான அல்லது நீதிநெறி சார்ந்த அல்லது அறநெறி சார்ந்த ஒரு விடயம் அல்ல. எனவே ஐநாவும் உட்பட மேற்கு நாடுகளையும் பிராந்தியத்தில் இந்தியாவையும் சீனாவையும் கையாள்வதற்கு தேவையான ஒரு வெளியுறவுத் தரிசனம் அல்லது கொள்கை தமிழ்த்தரப்பிடம் உண்டா? அப்படி ஒரு வெளியுறவுக் கொள்கை இருந்தால்தான் அதற்குத் தேவையான வெளியுறவுக் கட்டமைப்பும் இருக்கும். ஆனால் கடந்த 14 ஆண்டுகளாக தமிழர்கள் ஐநாவை கட்டமைப்புச் சார்ந்து ஒரு மையத்தில் இருந்து அணுகவில்லை என்பதே உண்மை நிலையாகும் சில ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் சுமந்திரன் சொன்னார், வெளியுறவுக் கொள்கையை வெளிப்படையாக விவாதிக்க முடியாது என்று. ஆனால் அவர் அப்படி சொன்னதன் பொருள் அவரிடம் ரகசியமான ஒரு வெளியுறவுக் கொள்கை உண்டு என்பதல்ல. அவரிடம் வெளியுறவுக் கொள்கையே இல்லை என்றுதான் பொருள். அப்பொழுதும் இல்லை இப்பொழுதும் இல்லை. ஏனெனில் அப்படி ஒரு கொள்கை இருந்திருந்தால் அதைக் கையாள்வதற்கு தமிழரசுக் கட்சியிடம் ஒரு கட்டமைப்பு இருந்திருக்கும், ஆனால் அக்கட்சியிடம் கட்டமைப்புசார் அணுகுமுறை இல்லை. அதனால் தனி நபர் ஓட்டங்களே அதிகமாக உள்ளன. தமிழரசுக் கட்சியிடம் மட்டுமல்ல பூகோள அரசியல் குறித்து அதிகமாகக் கதைக்கும் கஜேந்திரகுமாரிடமும் ஒரு வெளியுறவுக் கொள்கை உண்டா? கொள்கையிருந்தால் அதை நடைமுறைப்படுத்த ஒரு கட்டமைப்பு இருந்திருக்கும். தமிழ்த் தேசியப் பரப்பில் வெளியுறவு அணுகுமுறை அல்லது வெளிநாடுகளை நோக்கிய அணுகுமுறை என்று தொகுத்துப் பார்த்தால் கடந்த 14 ஆண்டுகளாக பின்வரும் போக்குகளை அவதானிக்க முடியும். சுமந்திரன் மற்றும் சம்பந்தரிடம் துலக்கமான ஒரு வெளியுறவுக் கொள்கை இல்லை. சுமந்திரன் அதிகம் மேற்கை நோக்கிச் சாயும் ஒருவராகப் பார்க்கப்படுகிறார். ஆனால் இந்தியாவைப் பகைப்பதில்லை. அதேசமயம் தமிழரசுக் கட்சிக்குள் தனிப்பட்ட உறுப்பினர்களிடம் இந்தியாவை நோக்கிய சாய்வு உண்டு. அது வெளியுறவுக் கொள்கை சார்ந்த நிலைப்பாடு என்பதைவிடவும் கட்சிக்குள் தமது ஸ்தானத்தைப் பலப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். கடந்த 14 ஆண்டு கால தமிழரசுக் கட்சியின் வெளியுறவு நிலைப்பாடுகளை தொகுத்துப் பார்த்தால் அக்கட்சியானது, அதிகம் மேற்கை நோக்கியே சாய்கின்றது, அதேசமயம், பலமான நாடுகளின் இழுவிசைகளுக்கிடையே பேர அரசியலை முன்னெடுக்கத் தவறியிருக்கிறது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் பொறுத்தவரை அதுவும் ஒரு மேற்கை நோக்கிய கட்சிதான். அது திட்டவட்டமாக இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றது. இந்தியாவின் புவிசார் அரசியல் நலன்களை எதிர்க்கப் போவதில்லை என்று அக்கட்சி அறிக்கைகளில் கூறிக் கொண்டாலும், நடைமுறையில் தனது எதிரிகளை இந்தியாவின் அடிவருடிகள் அல்லது கைக்கூலிகள் என்று கூறுவதன்மூலம் அது இந்தியாவை ஒரு எதிர்த் தரப்பாகவே உருவகப்படுத்துகின்றது. இந்தியாவை ஒரு எதிர்த் தரப்பாகக் கருதினால் அதன் தர்க்கபூர்வ விளைவாக மேற்கைத்தான் கையாள வேண்டியிருக்கும். கடந்த 14 ஆண்டுகால அக்கட்சியின் நடவடிக்கைகளைத் தொகுத்துப் பார்த்தால், அது மேற்கை நோக்கிய ஒரு கட்சிதான். ஆனால் அக்கட்சிக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்னவென்றால், முன்னணியியானது வெளிப்படையாக பலமான நாடுகளை நோக்கிச் சாய்வதில்லை என்பதுதான். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழரசுக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளையும் தவிர்த்துப் பார்த்தால் விக்னேஸ்வரனின் கட்சி ஒப்பீட்டளவில் இந்தியாவை நோக்கிச் சாய்வதாகத் தெரிகிறது. 13ஐ முழுமையாக அமுல்படுத்துவதற்குரிய ஒரு நடைமுறை வழிவரைபடத்தை விக்னேஸ்வரன் இப்பொழுது முன்வைக்கின்றார். அது இந்தியாவை நோக்கிய ஒரு சாய்வுதான். இவைதவிர ஏனைய கட்சிகள் அதாவது ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் காணப்படும் கட்சிகளைத் தொகுத்து பார்த்தால், அவை இந்தியச் சாய்வு நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள்தான். அதில் உள்ள பெரும்பாலான கட்சிகள் முன்பு இந்தியாவோடு சேர்ந்து உழைத்தவை. இப்பொழுதும் இந்தியாவுக்கு விசுவாசமானவை. மேலும் அக்கூட்டுக்குள் காணப்படும் ஜனநாயக போராளிகள் கட்சியும் அண்மை காலங்களில் இந்தியாவை அதிகம் நெருங்கிச் செல்லும் ஒரு கட்சியாகத்தான் பார்க்கப்படுகிறது. அக்கூட்டமைப்புக்குள் இருப்பவை அநேகமாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்புகள். அதில் டெலோவையும் புளட்டையும் தவிர ஏனைய கட்சிகளுக்கு குறிப்பிட்டுச் செல்லக்கூடிய மக்கள் ஆணை கிடையாது. எனவே தொகுத்துப் பார்த்தால் ஜனநாயக கூட்டமைப்புத்தான் ஒப்பீட்டளவில் வெளிப்படையாக இந்தியச் சாய்வுடைய ஒரு வெளியுறவு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. எனவே தமிழ்த் தேசிய பரப்பில் காணப்படும் கட்சிகளை அல்லது கட்சிக்கூட்டுக்களைத் தொகுத்துப் பார்க்கும் பொழுது இதில் ஒப்பீட்டளவில் இந்தியாவை விடவும் மேற்கே நோக்கி அதிகம் சாய்கின்ற கட்சிகள்தான் பலமாக இருக்கின்றன என்பது தெரிகிறது. அவ்வாறு மேற்கை நோக்கிய வெளியுறவு நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றன என்றால் மேற்படி கட்சிகள் ஐநாவையும் கட்டாயம் கையாள வேண்டும். ஏனென்றால் மேற்கத்திய ராஜதந்திர பரப்புக்குள்தான் ஐநாவும் வருகின்றது. ஆனால் மேற்படி கட்சிகளிடம் ஐநாவைக் கையாள்வதற்குரிய சரியான வழிவரைபடம் ஏதும் இருக்கின்றதா ? இங்கு ஒரு முக்கியமான விடயத்தை சுட்டிக் காட்ட வேண்டும். கடந்த 2021 ஆம் ஆண்டு ஐநா கூட்டத் தொடரை முன்னிட்டுத் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் மூன்றையும் இணைத்து ஒரு கடிதம் எழுதப்பட்டது. கடிதத்தில் ஒரு முக்கியமான விடயம் கேட்கப்பட்டது. பொறுப்புக்கூறலை மனித உரிமைகள் பேரவைக்கு வெளியே கொண்டு போக வேண்டும் என்பதே அது. எனவே பொறுப்புக்கூறலை மனித உரிமைகள் பேரவைக்கு வெளியே எடுத்து ஐநா பொதுச்சபையானது அதனை சர்வதேச நீதிமன்றங்களை நோக்கிக் கொண்டுபோக வேண்டும் என்ற தொனிப்பட மேற்படி கடிதம் எழுதப்பட்டது. பிஇக்கோரிக்கை முன்வைக்கப்பட்டு கிட்டத்தட்ட முப்பது மாதங்கள் ஆகின்றன. ஆனால் அக்கோரிக்கையை நோக்கி மேற்படி கட்சிகள் எந்தளவுக்கு உழைத்திருக்கின்றன ? எந்த ஒரு கட்சியும் அவ்வாறு உழைக்கவில்லை என்றே தெரிகிறது. அவ்வாறு உழைத்து இருந்திருந்தால் ஒரு பொருளாதார நெருக்கடியின்போது இலங்கை அரசாங்கத்தைப் பிணையெடுக்க முற்பட்ட மேற்கத்திய நாடுகள் இனப்பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் அரசாங்கத்தின் மீது நிர்ப்பந்தங்களைப் பிரயோகித்து இருந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறான நிர்பந்தங்கள் எவையும் பிரயோகிக்கப்படவில்லை என்பதைத்தான் நாட்டில் நடக்கும் சிங்கள பௌத்த மயமாக்கல் நமக்கு உணர்த்துகின்றது. ஐ.எம்.எஃப்,உலக வங்கி போன்றன பெருமளவுக்கு மேற்கத்திய ராஜதந்திர பரப்புக்குள் காணப்படும் உலகப் பொதுக்கட்டமைப்புகள். எனவே மேற்கைக் கையாள்வது என்ற நடைமுறையை கொண்டிருக்கும் தமிழ்க் கட்சிகள் ஐ.எம்.எஃப்பை வெற்றிகரமாகக் கையாண்டிருக்கின்றனவா? அல்லது பலமிக்க புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் அதை செய்திருக்கின்றதா? அவ்வாறு செய்திருந்திருந்தால் நிதி உதவியும் இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்ற நிபந்தனையும் ஒன்றிலிருந்து மற்றது பிரிக்கப்பட முடியாதபடி பிணைக்கப்பட்டிருந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு பிணைக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, ஐ.எம்.எஃப். பிரதிநிதிகள், தென்னிலங் கையிலுள்ள சிவில் சமூகங்களைச் சந்தித்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால் அவ்வாறு தமிழ்ச் சிவில் சமூகங்களை என் இதுவரை சந்திக்கவில்லை? எனவே பொருளாதார நெருக்கடியில் இருந்து ரணில் விக்ரமசிங்கவை காப்பாற்றுவதான மேற்கு நாடுகளின் நிலைப்பாடு எனப்படுவது, தமிழ்க் கட்சிகளின் மேற்கை நோக்கிய அணுகுமுறையின் இயலாமையைக் காட்டுகிறது. ஐ.எம்.எஃப்பின் உதவிகள் கிடைக்கும் ஒரு காலகட்டத்திலேயே சிங்கள பௌத்தமயமாக்கல் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றமை என்பது அந்த இயலாமைக்குச் சான்று. அரசாங்கம் ஒருபுறம் ஐநாவின் நிலைமாறு கால நீதிக்கான கட்டமைப்புகளில் ஒன்றாகிய உண்மை மற்றும் நீதிக்கான ஆணைக் குழுவை உருவாக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. ஆனால் அதற்குச் சமாந்தரமாக சிங்களபௌத்த மயமாக்கல் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றது. ஆயின், அரசாங்கம் பொறுப்புக்கூறலுக்கு அதாவது நிலைமாறு கால நீதிக்கு விசுவாசமாக இல்லை என்று பொருள். எனினும் ஐ.எம்.எஃப்பும் மேற்குநாடுகளும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்ந்து உதவுகின்றன என்றால், புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகமும் உட்பட தமிழ்த்தரப்பு மேற்கு நாடுகளை பொருத்தமான விதங்களில் கையாள்வதில் தோல்வி அடைந்துவிட்டது என்று தானே பொருள்? https://globaltamilnews.net/2023/192231/
  12. பரீட்சை எழுதிய பிள்ளைகள் செய்த குழப்படி – நிலாந்தன். adminJune 18, 2023 அண்மையில் ஓ/எல் பரீட்சை எழுதிய மாணவர்கள் பரீட்சைகள் முடிந்த கடைசி நாளன்று வகுப்பறைகளிலும் வகுப்புக்கு வெளியேயும் அட்டகாசம் செய்ததாக சில ஒளிப்படங்கள் வெளியாகின. இந்த ஒளிப்படங்களை வைத்து மூன்று விதமான கருத்துக்கள் கூறப்பட்டன. முதலாவது, சில மாணவர்கள் செய்த குழப்படிகளுக்காக எல்லா மாணவர்களையும் குற்றங் கூறக்கூடாது என்று. இரண்டாவது,அந்த வயதுக்கு அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அவர்கள் அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க விடுங்கள் என்பது. மூன்றாவது, ஆசிரியர்களின் கைகளில் இருந்து பிரம்பு பறிக்கப்பட்டதால் மாணவர்கள் தறிகெட்டுப் போய்விட்டார்கள் என்ற குற்றச்சாட்டு. பரீட்சை முடிந்த கடைசி நாளைக் கொண்டாடுவது என்பது ஒரு பொதுவான மாணவ உளவியல். அதை எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பதுதான் இங்கு பிரச்சனை. இதை இரண்டு விடயங்கள் தீர்மானிக்கின்றன. ஒன்று பரீட்சை எத்தகையது என்பது. அல்லது கல்விமுறை அல்லது கல்விச் சூழல் எத்தகையது என்பது. இரண்டாவது மாணவர்களுக்கு யார் முன்மாதிரிகள் என்பது. முதலாவதாக கல்விச் சூழல் பற்றிப் பார்க்கலாம். இலங்கைத் தீவு அதன் இலவச கல்வியைக் குறித்து பெருமைப்பட்டுக் கொண்டாலும், நடைமுறையில் போட்டிப் பரீட்சையானது தனியார் கல்வியை ஊக்குவிக்கிறது. அண்மையில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி “எமது பிள்ளைகள் இலவசக் கல்வியை முழுமையாக அனுபவிக்கின்றனர் என்று அரசாங்கம் கூறினாலும் அது பெரும் பொய்” என்று கூறியிருக்கிறார். ”நாட்டில் மாணவர்கள் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைவது இலவசக் கல்வியினால் அல்ல, தனியார் பணத்தினால்”என்றுமவர் கூறியுள்ளார். போட்டிப் பரீட்சையானது சிறுபிராயமிருந்தே பிள்ளைகளுக்கு இடையே போட்டி உணர்வை; பொறாமை உணர்வை; சுயநலத்தை வளர்க்கின்றது. இதன் விளைவாக இலவசக் கல்வியின் உன்னதங்கள் பிரகாசமிழந்து விடடன. ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை எனப்படுவது பிள்ளைகளுக்கானது என்பதை விடவும் நடைமுறையில் பெற்றோர்களுக்கு உரியதாகவே காணப்படுகின்றது. ஐந்தாம் ஆண்டு பிள்ளையைக் கசக்கி பிழியும் அந்த பரீட்சையை அகற்றுமாறு பெரும்பாலான கல்வி உளவியலாளர்களும் மருத்துவர்களும் எப்பொழுதோ சொல்லிவிட்டார்கள். ஆனால் நாடு இன்றுவரை அதைக் கைவிடத் தயாரில்லை. அதற்கு மாற்று ஏற்பாட்டைக் கண்டுபிடிக்கவும் தயாரில்லை. ஐந்தாம் ஆண்டிலிருந்து பிள்ளையை கசக்கிப் பிழியத் தொடங்கும் ஒரு கல்வி முறையானது ஓ/எல் பரீட்சையின்போது பிள்ளைக்குச் சித்திரவதையாக மாறுகிறது. கல்வி சுமையாக,சித்திரவதையாக மாறும்பொழுது பரீட்சை ஒரு தத்தாக மாறுகின்றது. அந்தப் பரீட்சையை எழுதிக் கடந்த பிள்ளை அந்த மகிழ்ச்சியை கொண்டாடுந்தானே? ஆனால் அது எப்படிக் கொண்டாடுகிறது என்பதுதான் பிரச்சினை. “பாராளுமன்றத்தினுள் மிளகாய்த் தூள் வீசி சண்டையிடுகின்றனர், கதிரைகளை வீசி எறிந்து சண்டையிடுகின்றனர், இவற்றை முன்னுதாரணமாக கொண்டே மாணவர்களும் செயற்படுவதாக” இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கருத்துத் தெரிவித்துள்ளார். அதுதான் உண்மை. மாணவர்களுக்கு முன்மாதிரிகள் குறைந்துவிட்டன. போட்டிப் பரீட்சையானது பாடசாலையின் பெறுமதியைக் குறைத்துவிட்டது. ஆளுமையை உருவாக்கும் பள்ளிக்கூடம் தனியார் கல்வி நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் சந்தைப் பெறுமதியை இழந்துவிட்டது. அதே சமயம், தனியார் கல்வி நிறுவனங்கள் பிள்ளைகளைப் பரீட்சைக்குத் தயார்படுத்தும் எந்திரங்களாக அல்லது பந்தயத்துக்குக் குதிரைகளைத் தயார்படுத்தும் பயிற்சி நிலையங்கள் ஆகவே காணப்படுகின்றன. பந்தயக் குதிரைக்கு அல்லது சவாரி மாட்டுக்கு எதைக் கொடுத்தாவது எதைச் செய்தாவது வேகமாக ஓடவைக்க வேண்டும் என்ற மனோநிலையோடு அணுகும் பயிற்சியாளராக ஆசிரியர்கள் மாறுகிறார்கள். ஓ/எல் பரீட்சை முடிந்தபின் அந்த மகிழ்ச்சியை கொண்டாடிய மாணவர்களைக் குறித்து விமர்சிக்கும் பலரும் அந்த பரீட்சை முடிந்த அடுத்தடுத்த நாளில் ஏ/எல். பாடங்களுக்கான தனியார் வகுப்புகள் தொடங்கியதைப்ப்பற்றி விமர்சித்திருக்கிறார்களா? ஒரு பரீட்சை முடிந்த கையோடு அடுத்த கட்ட பாடங்களை தொடங்க வேண்டிய தேவை என்ன? யார் முந்தித் தொடங்குவது என்ற போட்டிதானே காரணம்? இந்தப் போட்டி காரணமாக பிள்ளை அதன் ஓய்வை இழக்கின்றது. நவீன கல்வியில் ஓய்வும் படிப்பின் ஒரு பகுதி. ஆனால் பரீட்சை முடிந்த கையோடு பிள்ளை அடுத்த பந்தயத்துக்கு தயாராகின்றது. இது பிள்ளையின் உளவியலை எப்படிப் பாதிக்கும் ? இந்த விடயத்தில் கல்முனை பிரதேச சபை ஒரு நடவடிக்கை எடுத்திருக்கிறது. தனியார் கல்வி நிறுவனங்கள் 2025 ஆம் ஆண்டுக்குரிய ஏ.எல் பாடங்களை இம்மாதம் இறுதிவரை ஆரம்பிக்க வேண்டாம் என்று கல்முனை மாநகர சபை ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார். அந்த முன்மாதிரியை ஏன் ஏனைய உள்ளூராட்சி சபைகளும் பின்பற்றக் கூடாது? அண்மையில் யாழ் மாவட்டச் செயலர் தனியார் கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தார். ஆனால் அதுகூட ஒன்பதாம் ஆண்டுக்கு உட்பட்ட பிள்ளைகளுக்குத்தான். அப்படியென்றால் 9 ஆம் ஆண்டுக்கு மேற்பட்ட பிள்ளைகள் பந்தய குதிரைகளாக்கபடுவது மறைமுகமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறதா? ஆம். அதை தடுக்க முடியாத ஒரு சமூகச் சூழலே காணப்படுகின்றது. ஏனென்றால் போட்டிப் பரீட்சையில் வெற்றிபெற வேண்டும் என்ற வெறி பெற்றோருக்கும் அதிகம். இது சமூகத்தின் கல்வி பற்றிய கருதுகோள்களினால் தீர்மானிக்கப்படுகிறது. குறிப்பாக விஞ்ஞான,கணிதப் பிரிவுகளுக்குரிய பிள்ளைகளைப் பொறுத்தவரை வாழ்க்கையை வெறுத்து படிக்க வேண்டும் என்று பெற்றோரும் கருதுகிறார்கள்; ஆசிரியர்களும் கருதுகிறார்கள். சிறந்த பெறுபேறுகளுக்காக எதையும் பலியிடலாம் என்ற மனோநிலை ஊக்குவிக்கப்படுகின்றது. யாழ்பாணத்தில் ஏ/எல் பாடங்களை படிப்பிக்கும் தனியார் கல்வி நிறுவனங்கள் உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வகுப்பறை வசதிகளைக் கொண்டிருக்கின்றன? சில தனியார் கல்வி நிறுவனங்கள் தங்களைக் கண்டிப்பானவைகளாகக் காட்டிக்கொள்ள ஒழுக்கத்திலும் பெண் பிள்ளைகளின் விடயத்திலும் கிட்டத்தட்ட தாலிபான்களைப் போலவே நடந்து கொள்கின்றன. ஆனால் அங்கே நூற்றுக்கணக்கில் பிள்ளைகள் ஒன்றாக இருந்து படிப்பார்கள். அது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வகுப்பறை ஒழுங்குகளுக்கு எதிரானது. ஒரு வகுப்பறையில் எத்தனை பேர் இருக்கலாம் என்று ஒரு அளவு உண்டு. ஆனால் பெரும்பாலான தனியார் கல்வி நிறுவனங்களில் நூற்றுக்கணக்கான பிள்ளைகள் ஒன்றாக இருந்து கல்வி கற்கின்றார்கள். ஒருவர் மற்றவரோடு முட்டியபடி இருக்க வேண்டும். முதுகை சாய்க்க முடியாது. புத்தகப் பையை வைக்க இடம் கிடையாது… போன்ற முறைப்பாடுகள் உண்டு. சில தனியார் கல்வி ஆசிரியர்கள் பிள்ளைகளை நூற்றுக்கணக்கான பிள்ளைகளுக்கு முன் பகிரங்கமாகத் தண்டிக்கிறார்கள். இது கல்வி உளவியலுக்கு முரணானது. பிள்ளையின் குறைந்த புள்ளிகளை சுட்டிக்காட்டி அவமதிப்பது; பிள்ளையை வகுப்பை விட்டு துரத்துவது ; போன்ற பகிரங்க தண்டனை முறைகள் உண்டு. இவையனைத்தும் மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள். இதையே பாடசாலை செய்தால் அதற்கு நீதிமன்றம்வரை போகும் சமூகம்,தனியார் கல்வி நிறுவனங்களில் நிகழும் இவ்வாறான பகிரங்கத் தண்டனைகளைக் குறித்து அலட்டிக்கொள்வதில்லை. ஏனென்றால் சிறந்த பெறுபேறுகளுக்காக மனிதஉரிமைகள் பலியிடப்படுவதை ஏற்றுக்கொள்ளும் ஒரு சமூகமாக நாம் எப்பொழுதோ மாறிவிட்டோம். அங்கிருந்தும் தொடங்குகின்றது வன்முறை. சிறந்த பெறுபேறுகளுக்காக உயர்தரத்தில் ஒரு பாடத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்களிடம் செல்லும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனால் பிள்ளைகள் சுயமாகக் கற்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. சுயகற்றலை ஊக்குவிக்காத கல்வி முறை பிள்ளைகளை எங்கே கொண்டு போய் விடும்? சமூகத்தை எங்கே கொண்டு போய் விடும் ? கடந்த ஆண்டு ஓ/எல் பரீட்சை முடிவுகள் வெளிவந்த பொழுது பிள்ளைகள் அதிகம் சுயமாகக் கற்றிருக்கிறார்கள் என்று சுட்டிக் காட்டப்பட்டது. பெருந்தொற்றுநோய் காரணமாக பிள்ளைகள் வீடுகளில் முடங்க வேண்டி இருந்தபடியால் அவர்கள் சுயமாக கற்க வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டது என்றும் சுட்டிக் காட்டப்பட்டது. அதே சமயம் மாணவர்கள் மத்தியில் ஒரு கூட்டுஅபிப்பிராயம் உண்டு. பாடசாலைக்குப் போகும் நேரத்தை குறைத்தால் வீட்டிலிருந்து அதிகமாகப் படிக்கலாம் என்பதே அது. அதாவது தனியார் கல்வி நிறுவனங்களுக்கு போகும் நேரத்தை குறைக்க அவர்கள் தயாரில்லை. மாறாக பள்ளிக்கூடத்துக்குப் போகும் நேரத்தைக் குறைத்தால் கூடுதலாகப் படிக்கலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள். போட்டிப் பரீட்சையானது பாடசாலையின் சந்தைப் பெறுமதியைக் குறைத்து விட்டது. ஆசிரியர் மாணவ உறவின் மகிமையைக் குறைத்துவிட்டது. பிள்ளைகளைத் தறுக்கணிக்க வைக்கின்றது. பிள்ளைகளுக்கு இடையே போட்டி பொறாமை போன்றவற்றை ஊக்குவிக்கின்றது. பொதுநலத்தை விடவும் சுயநலத்தை ஊக்குவிக்கிறது. அதன் விளைவாக யாருக்கும் பயப்படாத; யாரையும் மதிக்காத; எதையும் புனிதமாகக் கருதாத ஒரு போக்கு பிள்ளைகள் மத்தியில் வளர்ந்து வருகிறது. எனவே மாணவர்கள் தறிகெட்டு போகின்றார்கள் என்று சொன்னால் அதற்கு அந்தச் சின்னப் பிள்ளைகள் மட்டும் பொறுப்பில்லை. முழுச்சமூகமும் பொறுப்பேற்க வேண்டும். முழுநாடும் பொறுப்பேற்க வேண்டும். முதலாவதாக கல்வி முறைமைதான் குற்றவாளி. அந்த கல்விமுறையின் கைதிகளாக அல்லது கருவிகளாக காணப்படும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் பெரிய புரட்சிகரமான மாற்றம் எதையும் செய்துவிட முடியாது. தன் சொந்த பிள்ளையின் விடயத்தில் வேண்டுமென்றால் பெற்றோர் ரிஸ்க் எடுக்கலாம். ஒரு முறைமைக்கு எதிராக பிள்ளையைச் செதுக்குவதில் சவால்கள் உண்டு. ஆனால் அதைவிட வேறு வழியில்லை. ஏனென்றால் இந்தக் கேடு கெட்ட நாடு போட்டிக் கல்விமூலம் உருவாக்கிய படிப்பாளிகள் பலர் ஒரு பொருளாதார நெருக்கடியின் போது நாட்டை விட்டு எப்படித் தப்பிச் செல்வது என்றுதான் சிந்தித்தார்கள். ஏன் அதிகம் போவான்? பொருளாதார நெருக்கடியே ஒரு விதத்தில் நாட்டின் கல்விமுறையின் தோல்விதான். முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ஒரு சிந்தனைக் குழாமை உருவாக்கியிருந்தார். ‘வியத்மக’ என்று அழைக்கப்பட்ட அச்சிந்தனைக் குழாம் நாட்டின் பெரிய படிப்பாளிகளை வைத்து உருவாக்கப்பட்டது. ஆனால் அந்த அரசாங்கம்தான் முடிவில் மக்களால் துரத்தப்பட்டது. நாட்டை பெற்றோல் கியூவில் நிறுத்திய படிப்பாளிகள் செய்த குற்றத்தை விடப் பெரிய குற்றத்தையா அந்தப் பதினாறு வயதுப் பிள்ளைகள் செய்துவிட்டார்கள்? https://globaltamilnews.net/2023/192005/
  13. மருதங்கேணியில் நடந்ததும் அதன் விளைவும் -நிலாந்தன் written by adminJune 11, 2023 புலனாய்வுத்துறை தமிழ்மக்களின் அரசியல்நடவடிக்கைகளைக் கண்காணிப்பது என்பது கடந்த பல தசாப்தகால யதார்த்தம். குறிப்பாக கடந்த 14 ஆண்டுகளாக தமிழ்க்கட்சிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் எல்லா நடவடிக்கைகளையும் புலனாய்வுத்துறை கண்காணித்து வருகின்றது. அதை அவர்கள் நேரடியாகவும் செய்கிறார்கள்; மறைமுகமாகவும் செய்கின்றார்கள். அச்சுறுத்தலாகவும் செய்கின்றார்கள்; நாகரீகமாகவும்செய்கின்றார்கள். எதுவாயினும் , தமிழ்மக்களைக் கண்காணிக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரலில் மாற்றம் இல்லை. ஆயுதமோதல்கள் முடிவுக்கு வந்தபின்னரும் நிலைமை அப்படித்தான் இருக்கிறது. தமிழ்மக்களை தொடர்ச்சியாகக் கண்காணிப்புக்குள் வைத்திருப்பது என்பது ஆக்கிரமிப்பு மனோநிலைதான். மருதங்கேணியிலும் அதுதான் நடந்தது. அதன்விளைவாக நடந்த கைது நடவடிக்கைகள் தமிழ்த்தேசியமக்கள்முன்னணியை அச்சுறுத்தும் நோக்கிலானவை. அண்மை மாதங்களாக முன்னணி அரசுபடைகளோடும் போலீசாரோடும் நேரடியாக முட்டுப்படும் போராட்டக்களங்களைத் திறந்து வருகின்றது. இதனால் ஆத்திரமடைந்திருக்கும் அரசபடைகளும் காவல்துறையும் ,முன்னணிக்கு அதன் வரையறைகளை உணர்த்தும் நோக்கத்தோடு மேற்படி கைது நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கலாம். அக்கட்சியை அச்சுறுத்தி அதன் செயற்பாட்டாளர்களை தற்காலிகமாகவேனும் உள்ளே தள்ளுவதன் மூலம்அக்கட்சியை தொடர்ந்து போராட விடாமல்தடுப்பது அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கலாம். இது ஏற்கனவே சிறீதரனுக்கும் நடந்தது ,. அவருடைய இரண்டு உதவியாளர்கள் பயங்கரவாதத்தடைச்சட்ட்தின் கீழ் பிடிபட்டு பல மாதங்கள்சிறையில் இருந்தவர்கள். கடந்த 14 ஆண்டுகளாக ஆயுதமோதல்கள் இல்லை. எனினும் தமிழரசியல் அதிகம் ராணுவமயப்பட்டே காணப்படுகிறது. தமிழ்மக்கள் எந்தஒரு போராட்டத்தை முன்னெடுத்தாலும் அரசபடைகளுக்கும் புலனாய்வுத்துறைக்கும் , திணைக்களங்களுக்கும், பயங்கரவாதத்தடைச்சட்டத்திற்கு எதிராக போராட வேண்டியிருக்கும். அவ்வாறு அரசபடைகளோடு மோதி அல்லது முரண்பட்டு பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் உள்ளே தள்ளுப்படுவதற்கு சாதாரணஜனங்கள் அச்சப்படும் ஒரு சூழல்தான் இப்பொழுதும் உண்டு. அண்மையில் தையிட்டியில் விகாரைக்கு எதிரான போராட்டத்தில் கஜேந்திரன் தனிஒருவராக புதர்களின் மத்தியில் தரையில் உறங்கும் காட்சி அவருடைய ஆதரவாளர்களால் அதிகம் பகிரப்பட்டது. அவர் ஒரு நாடாளுமன்றஉறுப்பினர். இருபதாயிரத்துக்கும் குறையாதவாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டவர். அவர் ஏன் அங்கே தனியாக நிலத்தில் உறங்கவேண்டும்? அவருக்கு வாக்களித்த மக்களும் அந்தகட்சியின் ஆதரவாளர்களும்எங்கே? அது உயர்பாதுகாப்புவலையத்தை அண்மித்த பகுதி. அங்கே சென்று போராடினால் கைது செய்யப்படலாம் என்ற நிலைமை உண்டு. அவ்வாறு போராடிய கட்சிக்காரர்களை பலாலி போலீஸ் கைது செய்து பின் விடுவித்தது. சட்டத்தரணிகளையும் விட்டுவைக்கவில்லை. போராடப்போனால் கைதுசெய்யப்படலாம் என்ற ஒரு நிலையை ஏற்படுத்துவதே போலீசின் நோக்கம். மருதங்கேணிச் சம்பவத்திலும் ஒரு புலனாய்வாளர் தன்னைத் தடுக்க முயன்ற கஜேந்திரக்குமாரைத் தட்டிவிட்டுத் தப்பியோடுகிறார். அவரை இரண்டு கட்சிக்காரர்கள்தான் துரத்திக்கொண்டு போகிறார்கள். ஏனைய பொதுமக்கள் குறிப்பாக , சந்திப்பில் கலந்து கொண்ட விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் அவரைத் துரத்திக்கொண்டு போகத் துணியவில்லை. அது ஒரு தமிழ்யதார்த்தம். அரசபடைகள் மற்றும் போலீஸ், புலனாய்வுத்துறை போன்றவற்றோடு நேரடியாக மோத சாதாரண தமிழ்மக்கள் பயப்படுகிறார்கள். ஏன்அதிகம் போவான், நினைவு நாட்களின்போது எல்லா ஆலயமணிகளையும் அடிக்குமாறு கேட்கப்படுகிறது. ஆனால் எல்லா கோவில்களிலும் மணி அடிக்கப்படுவதில்லை. எல்லாவீடுகளிலும் வெளிப்படையாக ஒரு சுட்டிகூட ஏற்றப்படுவதில்லை. கட்சிஅலுவலகங்களில் மட்டுந்தான் வெளிப்படையாக நினைவுச்சுடர் ஏற்றப்படும். சாதாரண ஜனங்கள் அவ்வாறு ஒரு சுட்டியை ஏற்றுவதற்குக்கூட பயப்படும்ஒருநிலை. அந்த அச்சத்தைப்போக்குவதென்றால் மக்களைத் திரளாக்க வேண்டும். உதிரியாக இருக்கும்வரைதான் அச்சமிருக்கும். ஆனால் பெரிய திரளாகக்கூடினால் எத்தனை பேரைத்தூக்குவது? போராட்டம் என்றாலே சட்ட மறுப்புத்தான். சிறைகளை நிரப்புவதுதான். பொதுமக்கள் அதிகமாகக் குவியும்போது எல்லாரையும் தூக்கி உள்ளே போட முடியாது. உதிரியாகப் போராடும் போதுதான் தனித்தனியாகத் தூக்கி உள்ளே போடலாம். திரளாகக்குவிந்தால் முழுச்சமூகத்தையும் உள்ளேதூக்கிப் போடமுடியாது. உதிரிகளாக இருக்கும்வரை மக்கள்பயப்படுவார்கள். திரண்டால் அதுதான் பலம். திரட்சிதான் பயத்தைப் போக்கும். தைரியத்தை உருவாக்கும். எனவே மக்கள் எந்தளவுக்கு எந்தளவு தங்களுடைய சௌகரிய வலையத்தை விட்டு வெளியே வருகிறார்களோ அந்தளவுக்கு அந்தளவு போராட்டம் மக்கள்மயப்படும். ஆனால்தமிழ்க்கட்சிகளிடம் அதற்குரிய பொருத்தமான வேலைத்திட்டங்கள் இல்லை. அவ்வாறான ஒரு பின்னணியில்தான் நாடாளுமன்றஉறுப்பினர்கள் தனியாக அரசுதரப்புடன் முட்டுப்பட வேண்டிவருகிறது. மக்கள்முன்னணி அந்தப்பயத்தை உடைத்துக்கொண்டு போராட முயற்சிக்கின்றது. அதில் தனிமனிதசாகசம் இருக்கலாம். எனினும், அக்கட்சிக்கு ஒரு தட்டுத்தட்டி அடக்கவேண்டும் என்று அரசாங்கம் சிந்தித்ததன் விளைவே மேற்படி கைது நடவடிக்கை. எல்லா விதமான விமர்சனங்களுக்கும் அப்பால் தமிழ்அரசியலை அண்மை மாதங்களாக நொதிக்கச் செய்வது முன்னணிதான். அதேசமயம் ,மருதங்கேணிச்சம்பவத்தின் பின்னணியில் அக்கட்சியின் அரசியல் எதிரிகளும் கட்சியின் தூய்மைவாத நடவடிக்கைகளால் எரிச்சல் அடைந்தவர்களும் பின்வரும் விமர்சனங்களை முன்வைக்கின்றார்கள்… அதுஒரு நாடகம் ,முன்னணி வேண்டுமென்று முரண்பாடுகளை தோற்றுவிக்கின்றது அதன்மூலம் ,தன்னுடைய ஆதரவுத்தளத்தைப் பலப்படுத்த முயற்சிக்கின்றது என்பது ஒருபகுதியினரின் விமர்சனம். இன்னொரு பகுதியினர் முன்னணியைப் பலப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தோடு அரசாங்கம் மேற்படி கைது நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாக விளக்கம் அளிக்கிறார்கள். இந்தியாவை எதிர்க்கும் ஒரு கட்சியை பலப்படுத்தினால் தமிழ்மக்கள் மத்தியில்இந்திய எதிர்ப்பை நிறுவனமயப்படுத்தலாம். அதனால் அரசாங்கத்தின் வேலை இலகுவாக்கப்பட்டு விடும். இரண்டாவதாக இதனது தூய்மைவாத நடவடிக்கைகளால் ஏனைய கட்சிகளோடு இணைய மறக்கும் முன்னணியானது தமிழ் ஐக்கியத்துக்கு ஏதோஒரு விதத்தில் தடையாகக் காணப்படுகின்றது. எனவே அக்கட்சியை பலப்படுத்தினால் அது தமிழ்த்திரட்சியைப் பலவீனப்படுத்தும் என்று அரசாங்கம் சிந்திப்பதாக ஒரு விளக்கம். இவைதவிர , இக்காலப்பகுதியில் ஒரு பேப்பர்கட்டிங் முன்னணியின் அரசியல்எதிரிகளால் அதிகமாக பகிரப்பட்டுவருகிறது. அது விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட காலகட்டம் ஒன்றில் அது தொடர்பாக டெலோ இயக்கமும் குமார்பொன்னம்பலமும் தெரிவித்த கருத்துக்களைக் கொண்ட ஒரு செய்திக்குறிப்பு. குமார்பொன்னம்பலம் புலிகள்இயக்கம் தடை செய்யப்பட்டமையை ஆதரித்து கருத்து தெரிவித்திருக்கிறார். முன்னணியை விமர்சிக்கும் தரப்புகள் குமார்பொன்னம்பலத்தின் விசுவாசத்தைக் கேள்விக்கு உள்ளாக்கும் நோக்கத்தோடு மேற்படி பேப்பர்கட்டிங்கைப் பகிர்ந்து வருகிறார்கள். கடந்த 14 ஆண்டுகால தமிழ்அரசியலில் விகாரமாக மேலெழுந்துவரும் ஒரு போக்கு இது. தமது அரசியல் எதிரிகளுக்கு எதிராக சூழ்ச்சிக்கோட்பாடுகளை உருவாக்குவது. முன்பு மொட்டைக்கடிதம் இருந்தது. இப்பொழுது புனைபெயரில் முகநூல் கணக்கு உள்ளது. தமக்குத் தெரியாத ஒன்றைப் பற்றி கருத்துக்கூறும் சுதந்திரத்தையும் துணிச்சலையும் சமூகவலைத்தளங்கள் அதிகப்படுத்தியுள்ளன. அதனால் யானை பார்த்த குருடர்கள் எல்லாம் விமர்சகர்கள் ஆகிவிட்டார்கள். அவர்கள் ஒரு கூட்டமாகச் சேர்ந்து சமூகவலைத்தளங்களில் தமதுஅரசியல் எதிரிகளின்மீது அவதூறை அள்ளி வீசுகிறார்கள். குமார்பொன்னம்பலம் சம்பந்தப்பட்ட பேப்பர்கட்டிங்கை பரவலாக்குவதும் அதே சீரழிந்த விமர்சனப் பண்பாட்டின்ஒரு வெளிப்பாடுதான். ஆனால் அந்த விமர்சனப் பண்பாட்டை வளர்த்தெடுத்ததில் தமிழ்த்தேசியமக்கள் முன்னணிக்கும் பெரியபங்கு உண்டு. தமது அரசியல் எதிரிகளை இனத் துரோகிகளாக உருவகிப்பதன் மூலம் அவர்களின் ஆளுமையை சிதைக்கும் ஒரு அரசியல் விமர்சனப் பண்பாட்டை அக்கட்சிதான் அதிகமதிகம் முன்னெடுத்து வருகின்றது. யாராவது தமக்கு எதிராக எழுதினால் ’சோறு முக்கியம்’ ‘அவர்களுக்குப் பசிக்குந்தானே’ என்றெல்லாம் எழுதுவது அந்தகட்சிக்காரர்கள்தான். அரசியல் விமர்சகர்களை சில ஆயிரம் ரூபாய்க்கு கட்டுரை எழுதுபவர்கள்; யுடியூப்பில் உழைப்பவர்கள் என்று எழுதுவதும் அந்தக் கட்சிக்காரர்கள்தான். தமிழ் அரசியலில் விமர்சனத்தை அவதூறாக மாற்றியதில் அக்கட்சிக்குப் பெரிய பங்குண்டு. இப்பொழுது அதேவிதமான அவதூறு அவர்கள் மீதும் அள்ளிவீசப்படுகிறது. குமார்பொன்னம்பலம் சம்பந்தப்பட்ட அந்த பேப்பர்கட்டிங்கில் இருப்பது உண்மையா பொய்யா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். சிலவேளை ,அச்செய்தி உண்மையாக இருந்தாலும் ,அதைமட்டும்வைத்து குமார்பொன்னம்பலத்தை மதிப்பிடமுடியாது. அவருடைய வாழ்க்கையை முழுமையாகத் தொகுத்துப் பார்க்க வேண்டும். அந்த பேப்பர் கட்டிங்கில் காணப்படும் செய்தி உண்மையாக இருந்தால் அது அவருடைய ஒரு காலகட்ட அரசியல் நிலைப்பாடு என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் பிறகு ஒருகாலம் அவருடைய வேறொரு அரசியல் நிலைப்பாட்டுக்காகவே அவர் கொல்லப்பட்டார். அந்தநேரத்தில்அவர்தனது கொழும்புமைய வாழ்க்கையை , தன்னுடைய சொத்துக்களை பாதுகாக்கும் ஓர் அரசியல் நிலைப்பாட்டை எடுத்திருந்திருந்தால் அவர்தன் உயிரை பாதுகாத்து இருந்திருக்கலாம். ஒரு மூத்தவாக்காளர் கூறினார்’ ஜி.ஜி.பொன்னம்பலம் பெற்றெடுத்த ஒரு செல்வநாயகந்தான் குமார்பொன்னம்பலம்’ என்று. தமிழ் அரசியலில் சட்டச்செயற்பாட்டாளர்கள் என்று பார்த்தால் குறிப்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் ஒருசதம் கூட வாங்காமல் வழக்காடியவர் என்றுபார்த்தால் ,குமார்பொன்னம்பலத்தின் வாழ்வுபெரியது. மனிதர்களை அவர்களுடைய தொகுக்கப்பட்ட வாழ்க்கைக்குள்ளால்தான் நிறுக்கலாம். ஒரு மனிதருடைய ஒருகாலகட்ட நிலைப்பாட்டை மட்டும் வைத்து நிறுக்கமுடியாது. எதிலும் ஒரு தொகுக்கப்பட்ட முழுமையான பார்வை அவசியம். தமிழ் அரசியலில் ஒருவர் தனது துறைசார்ந்து அதிகமாகத் தொண்டு செய்தாரா அல்லது தொழில் செய்தாரா என்று பார்க்க வேண்டும். இது குமார்பொன்னம்பலத்துக்கும் பொருந்தும். முன்னணியால் கேவலமாகவும் கீழ்த்தரமாகவும் விமர்சிக்கப்பட்டவர்களுக்கும் பொருந்தும். எனினும் , சரிக்கும் பிழைக்கும்அப்பால் முன்னணி தமிழ்அரசியலைநொதிக்கச் செய்கின்றது. இது அக்கட்சியின் ஆதரவுத்தளத்தை பலப்படுத்தும். முன்னணி பயப்படாமல் போராடுகிறது. அந்த முன்னுதாரணத்தை பின்பற்றி மக்கள் திரளக்கூடாது என்று சிந்தித்தே அரசாங்கம் முன்னணியின் முக்கியஸ்த்தர்கள் மீது கைவைத்தது. அதன்மூலம் தமிழ்அரசியல்செயற்பாட்டாளர்கள் அரசபடைகளோடும் புலனாய்வுத்துறையோடும் காவல்துறையோடும் முட்டுப்படுவதில் உள்ளவரையறைகளை ஆபத்தைஉணர்த்துவதேஅரசாங்கத்தின்நோக்கம். மேற்படி கைது நடவடிக்கைகளின் மூலம் ரணில், சிங்களபௌத்தஉணர்வுகளைத் திருப்திபடுத்தலாம். அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலை நோக்கி அவர் உழைக்கின்றார். தாமரைமொட்டின் ஆதரவோடு அவர்களமிறங்கினால், தமிழ்வாக்குகள் அவருக்கு கிடைக்காது என்று அவர் அஞ்சக்கூடும். எனவே முழுக்கமுழுக்க சிங்களமக்களின் வாக்குகளில் தங்கியிருப்பது என்று முடிவெடுத்தால் தமிழ் அரசியல்வாதிகளில் கைவைக்கவேண்டும். மேலும் ஐ.எம்.எஃப்பின் நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யும் பொழுது சிங்களமக்கள் மத்தியில் ஏற்படக்கூடிய கொதிப்பைத் திசை திருப்பவும்மேற்படி கைது நடவடிக்கைகள் அவருக்கு உதவும். https://globaltamilnews.net/2023/191769/
  14. ஒரு பொது நினைவுச்சின்னத்தை ஏன் உருவாக்க முடியாது? நிலாந்தன். adminJune 4, 2023 சுதந்திரப் பூங்கா-Freedom Park- தென்னாபிரிக்கா போரில் உயிர்நீத்த அனைவருக்குமாக ஒரு பொதுவான நினைவுச் சின்னத்தை உருவாக்கப் போவதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. தமிழ்க் கட்சிகளில் சில அதை எதிர்க்கின்றன; சில அதை ஆதரிப்பதாகத் தெரிகின்றது. போரில் உயிர் நீத்த எல்லாருக்குமான நினைவுச் சின்னம் என்பது உலகில் ஏற்கனவே பல நாடுகளில் உண்டு. குறிப்பிட்ட நாட்டில் அல்லது குறிப்பிட்ட பிரதேசத்தில் போரில் உயிர்நீத்த அனைவருக்குமானதாக அது அமையும். அதற்கு முகம் இருக்காது. ஆளடையாளம் இருக்காது. அது போர் வெற்றியையும் பிரதிபலிக்காது; தோல்வியையும் பிரதிபலிக்காது. குறிப்பாக, நிலைமாறுகால நீதியின் ஒரு பிரிவாகிய இழப்பீட்டு நீதியின் கீழ் அவ்வாறு நினைவுச் சின்னங்களை உருவாக்குவதற்குப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிமையுண்டு. ஆனால் இலங்கைத்தீவைப் பொறுத்தவரையிலும் நிலைமாறுகால நீதி தொடர்பான வாதப்பிரதி வாதங்களின்போது ஒரு விடயம் சுட்டிக்காட்டப்படுவதுண்டு. இலங்கைத்தீவில் நிலை மாற்றம் ஏற்படவில்லை என்பதே அது. இலங்கைத்தீவில் ஆயுத மோதல்கள்தான் முடிவுக்கு வந்திருக்கின்றன. உளவியல் மோதல் இப்பொழுதும் உண்டு. ஆயுத மோதல் ஒரு காரணம் அல்ல. அது விளைவுதான். ஆயுத மோதல்களுக்கு காரணம் இன ஒடுக்குமுறைதான். எனவே இன ஒடுக்குமுறை முடிவுக்கு வரும்பொழுதே இலங்கைத் தீவில் நிலை மாற்றம் ஏற்படும். அதாவது போருக்கு பிந்திய, அல்லது பிணக்குக்கு பிந்திய, என்று அழைக்கத்தக்க ஒரு நிலை இலங்கைத்தீவில் இப்பொழுதும் ஏற்படவில்லை உதாரணமாக, தென்னாபிரிக்காவில் கறுப்பின மக்களுக்கு அரசியல் விடுதலை கிடைத்தது. பொருத்தமான பொருளாதார விடுதலை இன்றுவரை கிடைக்கவில்லை. ஆனாலும் கறுப்பின மக்கள் ஒப்பீட்டளவில் அரசியல் விடுதலையை அனுபவிக்கும் ஒரு சூழல் அங்கே உருவாகிவிட்டது. அதனால்தான் நிலைமாறுகால நீதியை அங்கே ஒப்பீட்டளவில் வெற்றிகரமாகப் பரிசோதிக்க முடிந்தது. ஆனால் இலங்கைத்தீவில் நிலைமை அப்படியல்ல. இலங்கைத்தீவில் ஆயுத மோதல்கள்தான் முடிவுக்கு வந்திருக்கின்றன. மோதல்களுக்குக் காரணமான இன ஒடுக்குமுறை இப்பொழுதும் உண்டு. அதனால்தான் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக சிங்களபௌத்த மயமாக்கலுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். சிங்கள பௌத்த மயமாக்கல் எனப்படுவது இனக் ஒடுக்குமுறையின் ஒரு பகுதிதான். தமிழ் மக்களை ஒரு தேசமாக வனையும் அம்சங்களை அழித்து ஒழிப்பது, தமிழ்மக்களின் தேசிய இருப்பை அழிப்பதுதான் இன ஒடுக்குமுறையின் பிரதான இலக்கு. இலங்கைத்தீவைப் பொறுத்தவரையிலும் அரசாங்கம் கூறுவதுபோல 2009க்கு பின்னரான காலகட்டத்தை பிணக்கிற்குப் பின்னரான அதாவது இனப்பிரச்சினைக்குப் பின்னரான காலகட்டம் என்று அழைக்க முடியாது. அதுபோலவே அரசுசார்பற்ற நிறுவனங்கள் அழைப்பதுபோல போருக்கு பின்னரான காலகட்டம் என்றும் அழைக்க முடியாது. மாறாக நான் எனது கட்டுரைகளில் திரும்பத் திரும்ப வலியுறுத்துவதைப்போல, ஆயுத மோதல்களுக்குப் பின்னரான காலகட்டம் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் உளவியல் மோதல்கள் இப்பொழுதும் உண்டு. ஆயுத மோதல்களின்போது கைப்பற்றப்பட்ட நிலங்கள் இப்பொழுதும் அரசு படைகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன. அங்கெல்லாம் அவர்கள் விகாரைகளை அமைத்து சிங்களபௌத்த மயமாக்கலை முன்னெடுத்து வருகிறார்கள். உயர் பாதுகாப்பு வலையங்கள் இப்பொழுதும் உண்டு. இலங்கைத்தீவின் மொத்தப் படைக் கட்டமைப்பில் மூன்றில் இரண்டு பகுதி வடக்குக் கிழக்கில்தான் உண்டு. போர் முடிவுக்கு வந்துவிட்டது என்றால் எதற்காக அளவுப் பிரமாணத்துக்கு அதிகமாக படையினரை தமிழ்ப் பகுதிகளில் பேண வேண்டும்? கண்ணுக்குத் தெரியாத ஒரு எதிரிக்கு எதிராக அரசாங்கம் தொடர்ந்தும் தன்னை தயார் படுத்தி வருகின்றதா? அதுதான் பிரச்சினையே.அரசாங்கம் தமிழ்மக்கள் தேசமாக இருப்பதனை அச்சுறுத்தலாகப் பார்க்கின்றது. அதனால்தான் தமிழர்கள் தேசமாக இருப்பதை அழிக்கும் விதத்தில் சிங்கள பௌத்த மயமாக்கலை திணைக்களங்களுக்கூடாக முன்னெடுக்கின்றது. எனவே இலங்கைத்தீவில் கடந்த 14 ஆண்டுகளாக நிலவி வரும் அரசியற் சூழலை ஆயுத மோதல்களுக்கு பின்னரான ஒரு காலகட்டம் என்றுதான் அழைக்க வேண்டும். இங்கு நிலை மாற்றம் ஏற்படவில்லை. அவ்வாறு நிலை மாற்றம் ஏற்படாத ஒரு நாட்டில், போரில் உயிர்நீத்த எல்லாருக்குமாக ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்க முடியாது. அதை போரில் சம்பந்தப்பட்ட அனைவரும் அல்லது போரால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என்பதற்கில்லை. அவ்வாறு எல்லாரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சூழல் எப்பொழுது தோன்றும் என்றால், மெய்யான பொருளில் நிலைமாற்றம் ஏற்படும் பொழுதுதான். இங்கு நிலை மாற்றம் எனப்படுவது இன ஒடுக்குமுறை முடிவுக்கு கொண்டு வரப்படுவதுதான். அதாவது இலங்கைத்தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக்கொள்ளும் ஓரு யாப்பை உருவாக்குவதுதான். எனவே இப்பொழுது விடயம் தெளிவாகத் தெரிகிறது. இலங்கைத்தீவின் பல்லினச் சூழலை; பல்மதச் சூழலை; பல மொழிச் சூழலை உறுதிப்படுத்தாதவரை; நல்லிணக்கத்தை அதன் மெய்யான பொருளில் கட்டி எழுப்பாதவரை; எல்லாருக்கும் பொதுவான ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்க முடியாது. ஏனெனில் போரில் உயிர் நீத்தவர்கள் என்பது ஒரு பொதுவான வகை. அதற்குள் போராளிகள் வருவார்கள். படைத்தரப்பு வரும். பொதுமக்கள் வருவார்கள். சில சமயங்களில் வெளிநாட்டவர்களும் வருவார்கள். அதன்படி போருக்கு பின்னரான ஒரு பொது நினைவுச் சின்னம் எனப்படுவது கொன்றவர்களையும் கொல்லப்பட்டவர்களையும்; காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் அவர்களைக் காணாமல் ஆக்கியவர்களையும்; இனப்படுகொலை புரிந்தவர்களையும் இனப்படுகொலைக்கு ஆளாகியவர்களையும் ஒன்றாக நினைவுகூரும் சின்னங்களாகவே அமைய முடியும். தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் பட்சத்தில் அப்படி ஒரு நினைவுச் சின்னத்தை குறித்து தமிழ் மக்கள் சிந்திக்கலாம். ஆனால் நீதிக்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக காணப்படும் ஒரு நாட்டில், யுத்த வெற்றி நினைவுச் சின்னங்களைக் கொண்டாடும் ஒரு நாட்டில், கொலை செய்தவரையும் கொல்லப்பட்டவரையும் ஒன்றாக ஒரு சின்னத்துக்குள் கொண்டு வருவது சாத்தியமே இல்லை. அதுமட்டுமல்ல பொத்தாம் பொதுவான ஒரு நினைவுச் சின்னம் எனப்படுவது இனப்படுகொலையால் உயிரிழந்தவர்களை போரில் உயிர் இழந்தவர்கள் என்ற ஒரு பொதுவான வகைக்குள் அடக்கிவிடும். இனப்படுகொலையால் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும்போது அங்கே இனப்படுகொலைக்கு எதிரான நீதியைக்கோரும் ஓர் அரசியல் இருக்கும். ஆனால் போரில் உயிர் நீத்தவர்கள் என்று வரும்பொழுது அங்கெ இனப்படுகொலை என்ற சுட்டிப்பான அம்சம் போர் என்ற பொதுவான அம்சத்தில் பின்தள்ளப்பட்டுவிடும். இது தமிழ் மக்களைப் பொறுத்வரை அவர்களுடைய நீதிக்கான கோரிக்கையை மழுங்கடிக்கும் ஒரு நடவடிக்கை என்றே பார்க்கப்படும். ஏனென்றால் இனப்படுகொலைக்கு நீதி கிடைத்தால்தான் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் சாத்தியப்படும். நல்லிணக்கத்தை உருவாக்கினால்தான் ஒரு பொது நினைவுச் சின்னம் சாத்தியப்படும். எனவே முதலில் மூன்று இனங்களுக்கும் இடையிலே மெய்யான பொருளில் நல்லிணக்கத்தை ஸ்தாபிக்கும் விதத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இது முதலாவது விடயம். இரண்டாவது விடயம், தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் என்ற அடிப்படையில் போராட வந்து அதில் உயிர்நீத்த அனைவருக்குமாக ஒரு பொது நினைவுச்சின்னத்தை உருவாக்கக்கூடிய சூழல் இன்றுவரை உருவாகவில்லை என்பதனை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். அப்படி ஒரு நினைவு சின்னத்தை உருவாக்குவது என்றால் அதற்கு முதலில் தமிழ்மக்கள் மத்தியில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்குமான ஒரு பொது நினைவு நாளை கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் இப்பொழுதும் தமிழ்த் தேசிய அரசியலில் ஒவ்வொரு இயக்கங்களுக்கும், கட்சிக்கும், தனிநபர்களுக்குமான நினைவு நாட்களும் நினைவுச் சின்னங்களுந்தான் உண்டு. ஒரு பொதுவான நினைவு நாளை கண்டுபிடிக்கும் அளவுக்கு தமிழ்த்தேசிய அரசியலின் ஜனநாயக இதயம் இனிமேற்றான் செழிப்படைய வேண்டியிருக்கிறது. அதனால் ஒரு பொது நினைவுச் சின்னத்துக்கு இப்பொழுதும் வாய்ப்பில்லை. அவ்வாறான ஒரு பொது நினைவுச் சின்னத்தை குறித்து நான் ஏற்கனவே எழுதியுள்ளேன். அதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் முன்வைக்கும் வாதம் என்னவென்றால், தியாகிக்கும், துரோகிக்கும் ஒரேடியாக நினைவுச் சின்னத்தை அமைப்பதா என்பதுதான். அவர்களுக்கு பொது நினைவுச் சின்னம் என்றாலே என்னவென்று தெரியவில்லை. உலகில் இதுவரை உருவாக்கப்பட்ட இதுபோன்ற பொது நினைவு சின்னங்களுக்கு முகம் கிடையாது. தனிப்பட்ட கட்சி அல்லது இயக்க அடையாளம் கிடையாது. அந்நினைவு சின்னம் அரூபமானது. அது தமிழ் மக்களுக்காக போராட வந்த எல்லோருக்குமானது. ஒரு இயக்கத்துக்கு உரியது அல்ல. ஒரு கட்சிக்கு உரியது அல்ல. அது பொதுவானது. ஒரு தேசத்துக்கானது. ஆனால் அப்படி ஒரு நினைவுச் சினத்தை சின்னத்தை தமிழ் மக்கள் இன்றுவரை கண்டுபிடிக்க முடியாதிருக்கிறார்கள். அப்படி ஒரு நினைவுச் சின்னத்தை குறித்து உரையாடும் பொழுது இங்கு தென்னாபிரிக்க உதாரணத்தைக் காட்டலாம். தென்னாபிரிக்காவில் “சுதந்திரப் பூங்காவில்” அவ்வாறான ஒரு சின்னம் உண்டு. அந்த நாட்டின் வெவ்வேறு பிராந்தியங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட அந்தந்த பிராந்தியங்களின் மண்ணின் இயல்பைப் பிரதிபலிக்கும் பாறைகள் அங்கே ஓர் ஒழுங்கிற்குள் வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பாறைகளுக்கு இடையிலான நிலப்பரப்பிலிருந்து புகை எழுந்தபடியிருக்கும். தென்னாபிரிக்கர்களைப் பொறுத்தவரை புகையானது இறந்தவர்களின் ஆத்மாக்களோடு தொடர்பு கொள்வதற்கான ஒரு ஊடகமாகக் கருதப்படுகிறது. தென்னாபிரிக்காவில் சுதந்திரப் பூங்கா என்று அழைக்கப்படும் நினைவு வளாகமானது இனப்படுகொலைக்கு எதிரான ஒரு நினைவு வளாகமாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அந்த வளாகம் அமைந்திருக்கும் நிலப்பரப்புக்கு நேர் எதிராக தென்னாபிரிக்கர்களை அடிமை கொண்ட டச்சு ஆக்கிரமிப்பாளர்களின் நினைவுச் சின்னம் காணப்படுகிறது. தென்னாபிரிக்காவில் கறுப்பின மக்களுக்கு அரசியல் விடுதலை கிடைத்துவிட்டது. அதைவிட முக்கியமாக அங்கே நெல்சன் மண்டேலா என்ற ஒரு மகத்தான ஆளுமை இருந்தது. அது பண்புருமாற்றத்துக்கு -Transformation- தலைமை தாங்கியது. நிலைமாறு கால நீதிச் செய்முறைகளுக்கு தலைமை தாங்கியது. எனினும் அங்கே போரில் ஈடுபட்ட வெவ்வேறு இனக்குழுக்களுக்கு இடையே ஆறாத காயங்கள் இப்பொழுதும் உண்டு. பகையும் வன்மமும் பழிவாங்கும் உணர்ச்சியும் உண்டு. இந்த அடிப்படையில் சிந்தித்தால் தென்னாபிரிக்காவில் ஒரு சுதந்திரப் பூங்காவை உருவாக்கியது போன்று இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் ஒரு நினைவு வளாகத்தை உருவாக்க முடியுமா ? நிச்சயமாக இல்லை. ஏனென்றால் இங்கே நிலைமாற்றம் அல்லது பண்புருமாற்றம் ஏற்படவில்லை. அது, மூன்று இனங்களுக்கிடையில் மட்டுமல்ல, தமிழினத்துக்குள்ளும் இனிமேற்றான் ஏற்பட வேண்டியிருக்கிறது. இவ்வாறான ஓர் அரசியற் சூழலில் பொதுவான ஒரு நினைவுச் சின்னத்தை குறித்த உரையாடல்களுக்கு இலங்கைத்தீவும் தயாராக இல்லை; தமிழரசியலும் தயாராக இல்லை. https://globaltamilnews.net/2023/191518/
  15. தையிட்டி விகாரைதான் கடைசியா? - நிலாந்தன்! adminMay 28, 2023 தையிட்டி விகாரை திறக்கப்பட்டுவிட்டது. நிலத்தைக் கைப்பற்றி வைத்திருக்கும் ஒரு தரப்பு இதுபோன்ற விடயங்களைச் செய்யமுடியும். அந்த விகாரை விவகாரத்தை நொதிக்கச் செய்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தான். அதேசமயம் அந்த விவகாரமானது தமிழரசியலின் இயலாமையை நிரூபிக்கும் ஆகப் பிந்திய எடுத்துக்காட்டுகளில் ஒன்று. அந்த விகாரை ஒரு விவகாரமாக மாறிய பின் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அஸ்கிரிய பீடாதிபதியை சந்தித்திருந்தார். அதன்போது அஸ்திரிய பீடாதிபதி அவரிடம் கையளித்த எழுத்து மூல ஆவணம் ஒன்றின் மொழிபெயர்ப்பு தமிழில் ஊடகங்களில் வெளிவந்தது. அதி,அஸ்கிரிய பீடாதிபதி முக்கியமான சில விடயங்களை அழுத்திக் கேட்டிருக்கிறார். ”வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள விகாரைகள் மற்றும் நாடு முழுவதிலுமுள்ள வரலாற்று சிறப்புமிக்க வணக்கஸ்தலங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்” என்று அவர் கேட்டிருக்கிறார். அந்தச் சந்திப்பு நிகழ்வதற்கு கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு முன் இம்மாதம் 11 ஆம் திகதி ஜனாதிபதி தமிழ்க் கட்சிப் பிரதிநிதிகளைச் சந்தித்தார். அதில் தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளரும் அழைக்கப்பட்டிருந்தார். அச்சந்திப்பில் தொல்லியல் திணைக்களத் தலைவர், திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியைவிட மேலதிக நிதியை வெளித்தரப்புகளிடமிருந்து குறிப்பாக பௌத்த மத குருக்களிடமிருந்து பெறுவதாகக் கூறியிருக்கிறார். ஜனாதிபதி அதனை எதிர்த்துக் கேள்வி கேட்கின்றார். ஓர் அரச திணைக்களம் அவ்வாறு வெளியில் இருந்து நிதி உதவியைப் பெற முடியாது என்று சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆனால் அஸ்கிரிய பீடாதிபதி அவ்வாறு நிதி உதவி பெறுவதை அனுமதிக்குமாறு தனது கடிதத்தில் கேட்டிருக்கிறார். அதாவது சக்திமிக்க பௌத்த மத பீடங்களில் ஒன்று சிங்கள பௌத்த மயமாக்கலை ஊக்குவிக்கும் விதத்தில் ஜனாதிபதிக்கு எழுத்துமூல ஆவணம் ஒன்றை வழங்கியிருக்கிறது. அதேசமயம் உயர் மட்டத்தில் இல்லாத சில பௌத்த மதகுருக்கள் தையிட்டி விவகாரம் தொடர்பாக தமிழிலும் சிங்களத்திலும் கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்கள். இதில் நயினா தீவு விகாரதிபதியின் கருத்துக்கள் சிங்கள மக்களுக்கு சிங்களத்தில் சொல்லப்பட வேண்டியவை. இலங்கைத்தீவில் மத நல்லிணக்கத்தை பொறுத்தவரை அது பெரும்பான்மையிடமிருந்துதான் தொடங்க வேண்டும். தென்னிலங்கையில் அது சிங்கள பௌத்தர்களிடமிருந்து தொடங்க வேண்டும். தமிழ்ப்பகுதிகளில் அது இந்துக்களிடமிருந்து தொடங்க வேண்டும்.ஆனால்,அதேசமயம் மேற்படி பௌத்த மதகுருக்களில் ஒருவரான பொகவந்தலாவை ராகுல தேரர் தமிழ் பௌத்தர்களைப் பற்றிக் கதைக்கின்றார். தையிட்டி திஸ்ஸ விகாரை தமிழ் பௌத்தர்களிடம் கையளிக்கப்படும் என்று கூறுகிறார். தமிழ் பௌத்தம் என்பது தமிழ் மக்களின் வரலாற்றில் ஒரு கட்டம். ஆனால் இப்பொழுது தமிழ் பௌத்தர்கள் யாழ்ப்பாணத்தில் எத்தனை பேர் உண்டு? சாதாரண தமிழ் மக்களைப் பொறுத்தவரை பௌத்தம் என்பது ஆக்கிரமிப்பின் குறியீடாகவே பார்க்கப்படுகின்றது. தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் ஒரு காலகட்டத்தில் பௌத்தர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது ஒரு வரலாற்று உண்மை. இந்தியாவில் தோன்றிய பௌத்தம் ஆசியா முழுவதும் பரவிய பொழுது அது தமிழ் மக்கள் மத்தியிலும் பரவியது. தமிழின் காப்பிய காலம் எனப்படுவது சமண பௌத்த காலம்தான். தமிழில் உள்ள ஐந்து காப்பியங்களும் ஒன்றில் பௌத்த காப்பியங்கள் அல்லது சமண காப்பியங்கள்தான். பின்னர் நாயன்மார்களின் எழுச்சியோடு சைவம் பௌத்தத்தை வெற்றி கொண்டது. மதங்களுக்கிடையிலான பூசல்களும், அனல்வாதம் புனல் வாதம் போன்றவற்றில் பிற மதத்தவர்களை வென்றதும் தமிழ் வரலாற்றின் ஒரு பகுதி. அதுபோலவே தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் கிறிஸ்தவர்களாக மதம் மாறியதும் இஸ்லாமியர்களாக மதம் மாறியதும் தமிழ் வரலாற்றின் ஒரு பகுதி. தமிழ் அடையாளம் ஒரு மதத்துக்கு மட்டும் உரியதல்ல என்று அறிஞர்கள் கூறுவர். பூர்வ காலங்களில் தமிழர்கள் இயற்கையை வழிபட்டார்கள். அதன்பின் சமணமும் பௌத்தமும் தமிழ்மக்கள் மத்தியில் பரவின. அதன்பின் பக்தி இலக்கியம். அதன் பின் கிறிஸ்தவம், இஸ்லாம். அதன்பின் ஈழத்தில் ஆயுதப் போராட்டமும் அதன் விளைவாக ஏற்பட்ட புலப்பெயர்ச்சியும். இப்படியாக பூர்வ காலங்களில் தொடங்கி இன்று வரையிலும் தமிழ் அடையாளத்தை வெவ்வேறு மதங்கள் செதுக்கியிருக்கின்றன. வெவ்வேறு கோட்பாடுகள் செதுக்கியிருக்கின்றன. வெவ்வேறு நம்பிக்கைகள் செதுக்கியிருக்கின்றன. ஈழப் போராட்டம் செதுக்கியது. புலப்பெயர்ச்சி செதுக்கியது. புலப்பெயர்ச்சி தமிழர்களை தாயகத்துக்கு வெளியே சிதறடித்துவிட்டது. அதனால், தமிழ் அடையாளம் எனப்படுவது சில அறிஞர்கள் சுட்டிக்காட்டுவதுபோல எல்லை கடந்த ஒர் அடையாளம். அது ஓர் அரசியல் எல்லைக்குள் குறுக்கப்பட முடியாத அனைத்துலக அடையாளம். குறிப்பாக கீழடி ஆய்வுகள் இந்திய வரலாற்றை தமிழில் இருந்து தொடங்கத் தேவையான சான்றுகளை வெளிக்கொண்டு வருவதாக அறிஞர்கள் சுட்டிக் காட்டுகின்றார்கள். எனவே தமிழர்கள் தமது மொழியின் தொன்மை மற்றும் அனைத்துலக இருப்பைக் குறித்துப் பெருமைப்பட வேண்டும். இந்த அடிப்படையில் சிந்தித்தால், ஒரு காலம் தமிழில் பௌத்தம் நிலவியது என்பது வரலாற்று உண்மை. ஆனால் பௌத்தம் ஒரு மதமாக இருக்கும்வரை பிரச்சனை இல்லை.அது ஒரு இனத்தின் ஆக்கிரமிப்புத் தத்துவமாக,ஆக்கிரமிப்பின் கருவியாக மாறும் பொழுதுதான் பிரச்சினையே வருகிறது. இலங்கைத்தீவின் இனப்பிரச்சினையே அதுதான்.மதம்;மொழி;இனம்; நிலம் ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்ட “தம்மதுவீப “ கோட்பாடு அதுவென்று மு. திருநாவுக்கரசு கூறுகிறார். சிங்கள பௌத்தம் ஓர் ஆக்கிரமிப்புக் கொள்கையாக மாறிய பின் அது தமிழ் பௌத்தத்தை கையில் எடுத்தால் அதுவும் ஓர் ஆக்கிரமிப்பு உத்தி என்றுதான் தமிழ்மக்கள் பார்ப்பார்கள். சிங்கள பௌத்தமானது ஏனைய மதங்களின் இருப்பை அங்கீகரிக்குமாக இருந்தால் குறிப்பாக யாப்பில் இப்பொழுது சிங்கள பௌத்தத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் முன்னுரிமையை நீக்கி இலங்கைத்தீவின் மதப்பல்வகைமையை ஏற்றுக்கொள்ளும் ஒரு யாப்பை உருவாக்கச் சிங்கள அரசியல்வாதிகள் தயாரா? இங்கு பிரச்சனை மதப்பல்வகைமை அல்ல மத மேலாண்மைதான். சிங்கள பௌத்தம் ஒரு மத மேலாண்மைக் கோட்பாடு என்பதுதான். ஆதித் தமிழ் பௌத்தர்கள் பெருமளவுக்கு மகாயான பௌத்தத்தை சேர்ந்தவர்கள் என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். அதேசமயம் சிங்கள பௌத்தர்கள் தாங்கள் பின்பற்றுவது தேரவாத பௌத்தம் என்று கூறிக் கொள்கிறார்கள். ஆனால் தென்னிலங்கையில் பிரயோகத்தில் இருப்பது மகாயான பௌத்தந்தான் என்று பேராசிரியர் கணணாத் ஓபயசேகர கூறுகிறார். தேரவாத பௌத்தத்துக்கும் மகாயான பௌத்தத்துக்கும் இடையிலான முரண்பாடுகளின்போது இலங்கை வரலாற்றில் மன்னர்களின் காலத்தில் கொலைகள் இடம்பெற்றிருக்கின்றன. மகாயான பௌத்தம் அதிகம் இந்து மதப் பண்புகளை உள்வாங்கியது என்றும்,இலங்கைத்தீவில் உள்ள மகாயான, தேரவாத பௌத்த பிரிவுகளுக்கு இடையிலான முரண்பாடுகளை இன ரீதியாகவும் வியாக்கியானம் செய்யலாம் என்றும் கூறும் அறிஞர்கள் உண்டு. இவ்வாறான அரசியல்,பொருளாதார,இராணுவ,மத கலாச்சாரப் பின்னணிக்குள் சில பௌத்த மத குருக்கள் தமிழ் பௌத்தத்தைப் பற்றிக் கதைப்பதனை தமிழ் மக்கள் சந்தேகத்தோடுதான் பார்ப்பார்கள். மேற்படி பிக்கு கூறுகிறார் கட்டப்பட்ட விகாரைகளை இடிக்க முடியாது என்று. ஒரு நிலத்தை ஆக்கிரமித்து வைத்துக்கொண்டு அதில் விகாரைகளைக் கட்டிவிட்டு அதன் பின் விகாரைகளை இடித்தால் அது மத நல்லிணக்கத்தை குழப்பி விடும் என்று கூறுவது ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தும் ஒரு தர்க்கம்தான். தையிட்டியில் மட்டுமல்ல தமிழ் பகுதிகளில் இப்பொழுது தமிழ் பௌத்தர்கள் ஒரு சமூகமாக இல்லை. தமிழ்ப் பகுதிகளில் சிங்கள பௌத்தர்களான படைத்தரப்புத்தான் ஆயுதங்களோடு குந்தியிருக்கின்றது. தமிழ்மக்கள் அவர்களை ஆக்கிரமிப்பு படையாகத்தான் பார்க்கின்றார். ஒரு மதத்தின்,ஒரு இனத்தின் மேலாண்மையை பாதுகாக்கும் ஒரு படையாகத்தான் பார்க்கின்றார்கள். இன,மதப் பல்வமையைப் பாதுகாக்கும் ஒரு படையாகப் பார்க்கவில்லை. எனவே இந்த நாடு இன மதப் பல்கைமையை ஏற்றுக்கொள்ளும் ஒரு யாப்பை உருவாக்கட்டும். அப்பொழுது தமிழ் பௌத்தம் ஒரு பிரச்சினையே இல்லை. இப்பொழுது மீண்டும் தையிட்டி விகாரைக்கு வருவோம். இந்த விடயத்தில் மேற்சொன்ன சில அதிகாரமற்ற பிக்குக்கள் சொல்லும் கருத்துக்களை விடவும் அதிகாரம்மிக்க அஸ்கிரிய பீடாதிபதியின் கருத்துக்களே அரசியல் பரிமாணமுடையவை. அப்படிப் பார்த்தால் தாமரை மொட்டு கட்சியின் பிரதிநிதியாகக் காணப்படும் ரணில் விக்கிரமசிங்க, தொடர்ந்து சிங்கள பௌத்த மயமாக்கலை முன்னெடுக்கக்கூடிய வாய்ப்புக்களே தெரிகின்றன. அடுத்த ஆண்டு இறுதியில் அவர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும். அப்பொழுது எதிரணியின் ஒரு பொது வேட்பாளராக சம்பிக்க ரணவக்க நிறுத்தப்படலாம் என்ற ஊகங்கள் உண்டு. சம்பிக்க சிங்கள பௌத்தர்களைக் கவரக்கூடியவர். அதேசமயம் அரகலய போராட்டத்தின் பங்காளிகளிலும் ஒருவர். எனவே அவரை எதிர்கொள்வது என்றால் ரணில் விக்கிரமசிங்க சிங்கள பௌத்தர்களைக் கவரவேண்டும். அதோடு ஐ.எம்.எப்பின் நிபந்தனைகளை ஏற்பதால் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படக்கூடிய எதிர்ப்பலைகளைத் திசை திருப்பவும் அது உதவும். அதாவது அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நோக்கித்தான் அவர் உழைக்கின்றார். சிங்கள பௌத்தத்தின் காவலனாக அவர் தன்னைக் காட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது. மேற்கத்தைய உடுப்புகளையணிந்து, மேற்கத்திய பாரம்பரியத்தைப் பின்பற்றும் ரணில்,பாரம்பரிய உடையணிந்து சிங்களபௌத்த கடும் போக்காளர்களைப் பிரதிபலிக்கும் சம்பிக்க ரணவக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம். அதற்கு ஒரே வழி சிங்கள பௌத்தர்களைத் திருப்திப்படுத்துவதுதான். அப்படிப்பார்த்தால் தையிட்டி விகாரை இறுதியானது அல்ல என்று எடுத்துக் கொள்ளலாமா? https://globaltamilnews.net/2023/190988/
  16. மதில் மேல் இருக்கும் ஆமைகள் ? - நிலாந்தன் மற்றொரு மே 18ம் கடந்து போய்விட்டது. இது பதினாலாவது மே18. ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னரான கடந்த 14 ஆண்டுகளில் தமிழ் அரசியல் எதுவரை முன்னேறியிருக்கிறது? அல்லது எங்கே தேங்கி நிற்கிறது? மே 18ஐத் தமிழ்த்தரப்பு எவ்வாறு அனுஷ்டிக்கிறது என்பதிலிருந்தே ஒரு மதிப்பீட்டுக்கு வரலாம். அது ஒரு தேசிய துக்க தினம் என்று தமிழ் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் கூறிக்கொள்கிறார்கள். ஆனால் கடந்த வியாழக்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்திலும் கிளிநொச்சி மாவட்டத்திலும் சில பகுதிகளைத் தவிர ஏனைய தமிழ்ப் பகுதிகளில் வாழ்க்கை வழமைபோல இயங்கியது. பாடசாலைகள் இயங்கின. அலுவலகங்கள் இயங்கின. பாடசாலைகளில் கோட்டமட்ட விளையாட்டுப் போட்டிகள் நடந்தன: வெளிக்களப்பயிற்சி நிலையப் பரீட்சைகள் நடந்தன. ஒரு தொகுதி மக்கள் முள்ளிவாய்க்காலை நோக்கி போய்க்கொண்டிருக்க, எனையவர்கள் தமது அன்றாடத் தொழில்களை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள். தமிழ்ப் பகுதிகளில் ஆங்காங்கே கஞ்சி காய்ச்சி கொடுக்கப்பட்டது. கஞ்சி காய்ச்சும் நிலையங்களைக் கடந்து போனவர்கள் ஆங்காங்கே கஞ்சியை வாங்கி குடித்தார்கள். பின்னர் வீட்டுக்குச் சென்று வழமையான மதிய உணவை அருந்தினார்கள். அதாவது சித்திரைக் கஞ்சியை குடிப்பதுபோல விரதமிருந்து முள்ளிவாய்க்கால் கஞ்சியை ஒரு விரத உணவாக அருந்தியவர்கள் எத்தனை பேர்? மே 18க்கு முதல் நாள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அந்த நாளை துக்கதினமாக அனுஷ்டிக்குமாறும் கடைகளை மூடுமாறும் பாடசாலைகளை மூடுமாறும் அழைப்பு விடுத்தது. ஒரு தேசிய துக்க தினத்தை எப்படி அனுஷ்டிக்க வேண்டும் என்று அதற்கு முதல் நாட்தான் ஒரு கட்சி மக்களுக்கு அழைப்பு விடுக்கிறது என்றால் நிலைமை எப்படியிருக்கிறது? ஒரு தேசிய துக்க தினத்தன்று,தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் துக்கத்தை அனுஷ்டிக்க, பெரும்பகுதியினர் தமது வழமையான அன்றாடச் சோலிகளுக்குள் மூழ்கிக்கிடந்தார்கள். அப்படியென்றால் அதை ஒரு தேசிய துக்கதினம் என்று அழைக்கலாமா? கடந்த வியாழக்கிழமை முள்ளிவாய்க்காலில் மொத்தம் 2000க்கும் குறையாதவர்கள் கூடினார்கள் என்று ஊடகவியலாளர்கள் கூறுகிறார்கள். பல்கலைக்கழக மாணவர்களும் அப்படித்தான் கூறுகிறார்கள். பொதுக் கட்டமைப்பினர் கிட்டத்தட்ட 4,000பேர் வரை கூடினதாக கூறுகிறார்கள். தாங்கள் மொத்தம் 1500 தீப்பந்தங்களை நட்டு வைத்ததாகவும்,ஆனால் அதைவிட அதிகமான தொகையினர் அங்கு கூடியிருந்ததாகவும் அவர்கள் கூறுகிறார்கள். மக்கள் முள்ளிவாய்க்காலை நோக்கி வருவதற்கு பொதுவான ஏற்பாடுகள் எவையும் இருக்கவில்லை. நடைமுறையில் உள்ள பொதுக் கட்டமைப்பானது நினைவு கூர்தலுக்கான பொது இடத்தை நிர்வகிப்பதற்கும் அப்பால் மக்களைத் திரட்டும் வேலைகளை செய்யவில்லை. அக்கட்டமைப்பில் சில கத்தோலிக்க மதகுருக்களும் செயற்பாட்டாளர்களும் உண்டு. ஓர் அங்லிகன் மதகுரு கட்டமைப்பை வெளிப்படைத்தன்மை மிக்கதாகவும்,பரந்துபட்டதாகவும் மாற்ற வேண்டும் என்று முயற்சித்திருக்கிறார். திருகோணமலையைச் சேர்ந்த சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவரும் அவ்வாறு கேட்டிருக்கிறார். பல்கலைக்கழக மாணவர் அமைப்பினரும் கேட்டிருக்கிறார்கள். அதுதொடர்பாக கலந்துரையாடுவதற்கு மெய்நிகர் சந்திப்பு ஒன்றை ஒழுங்குபடுத்துவதாக கூறியிருக்கிறார்கள். ஆனால் அது நடக்கவில்லை. இந்த விவகாரத்தை நான் மே 18க்கு முன்னரே எழுத யோசித்தேன். ஆனால் இருக்கின்ற அமைப்பைக் குழப்பக்கூடாது என்பதோடு, துக்கத்தை அனுஷ்டிக்கப்போகும் மக்கள் மனதில் சலிப்பை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காகவும் அவ்வாறு எழுதுவதைத் தவிர்த்தேன். பொதுக் கட்டமைப்பைச் சேர்ந்த ஒரு கத்தோலிக்க மதகுருவோடும் நான் உரையாடினேன். அவர் அதனை ஜனநாயக மயப்படுத்த வேண்டிய தேவையை ஏற்றுக்கொண்டார். ஆனால் ஒரு முக்கிய விடயத்தைச் சுட்டிக்காட்டினார். பரந்துபட்ட அளவில் அதை விஸ்தரிக்கும் பொழுது அதற்குள் யார் யார் வருவார்கள் என்ற பயம் உண்டு என்று சொன்னார். எனினும், இப்போதுள்ள பொதுக் கட்டமைப்பு வெளிப்படைத் தன்மையற்றது என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகிறது. முள்ளிவாய்க்கால் பொதுக் கட்டமைப்பை மட்டுமல்ல நினைவு கூர்தலுக்காக ஏற்கனவே உள்ள பொதுக்கட்டமைப்புகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. அக்கட்டமைப்புகளின் பின்னணி குறித்தும், அதை யார் பின்னிருந்து இயக்குகிறார்கள் என்பதை குறித்தும் அக்கட்சிக்கு சந்தேகம் இருப்பதாக தெரிகிறது. தமிழரசியலில் சூழ்ச்சிக் கோட்பாடுகளை அதிகம் புனையும் ஒரு கட்சி அது. ஆனாலும், தமிழ் அரசியலில் இப்பொழுது யார் யாரோடு நிற்கிறார்கள்? யாருக்கு யார் காசு கொடுக்கிறார்கள்? யாரை யார் ரிமோட் பண்ணுகிறார்கள்? என்று சந்தேகப்படும் அளவுக்கு குழப்பமான ஒரு நிலைமை அதிகரித்து வருகிகிறது என்பது உண்மைதான். கடந்த வியாழக்கிழமை கிளிநொச்சி ரொட்ரிகோ மைதானத்தில் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வை, மாவட்ட மக்கள் அமைப்பு என்ற புதிய அமைப்பு ஒழுங்குபடுத்தியுள்ளது. அந்நிகழ்வுக்கு ஆட்களைத் திரட்டியது படைப் புலனாய்வுத் துறைக்கு நெருக்கமானவர்கள் என்று அவதானிக்கப்பட்டுள்ளது. அதுபோல வவுனியா நகரசபை மைதானத்தில் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவுநிகழ்வை வன்னித்தமிழர் ஒன்றியம் என்ற புதிய அமைப்பு ஒழுங்குபடுத்தியுள்ளது. அதற்கு வவுனியா விகாராதிபதி நிதியுதவி செய்திருக்கிறார். அதாவது தமிழ் அரசியல் பரப்பில் ஒரு மையம் இல்லாத காரணத்தால் ஒரு பலமான திரட்சி இல்லாத காரணத்தால், யார் எதைச் செய்கிறார்கள்? யாரை யார் இயக்குகிறார்கள்? என்பவற்றைக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு குழப்பமான ஒரு நிலைமை உருவாகி வருகிறதா? தமிழ் மக்களின் தேசத் திரட்சியை உடைக்க வேண்டும் குழப்ப வேண்டும் என்று திட்டமிட்டு பல்வேறு வகைப்பட்ட தரப்புக்களும் நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் செயற்படுவதாகத் தெரிகிறது. ஓர் ஆபிரிக்க பழமொழி உண்டு “ஆமை மதில் மேல் இருக்கிறது என்று சொன்னால் அதற்கு யாரோ உதவியிருக்கிறார்கள் என்று பொருள்”. தமிழரசியலில் இப்பொழுது பல ஆமைகள் மதில் மேல் இருக்கின்றன. ஏன் கூரை மேலும் இருக்கின்றன. அந்த ஆமைகளை யார் அங்கே தூக்கி வைத்தது என்ற கேள்வி உண்டு. சில ஆமைகள் ஒரே சமயத்தில் இரு வேறு தரப்புக்களிடம் சம்பளம் வாங்கி வருவதாக பரவலாகச் சந்தேகங்கள் உண்டு. இது சந்தேகம்தான். இந்த இடத்தில் இதைப்பற்றிக் கதைக்க வேண்டும். ஏனென்றால்,நவீன தமிழ் அரசியலில் ஏற்பட்ட ஒரு கூட்டுப் பேரழிவை நினைவு கூர்ந்து முடித்திருக்கும் இக்காலகட்டத்தில் பேசவில்லை என்றால் பிறகு எப்பொழுதும் அதைப்பற்றிப் பேச முடியாது. தமிழ்மக்களின் தேசத்திரட்சி சிதறிப்போனதன் பின்னணியில்தான் இவ்வாறான சந்தேகங்கள் எழுகின்றன. இந்த சந்தேகங்களுக்கு இரண்டு தரப்புகள் பொறுப்பு. ஒன்று,வெளியில் இருந்து தமிழ் அரசியலை ரிமோட் கொன்ட்ரோல் செய்ய முடியும் என்று நம்பும் புலம்பெயர்ந்த தரப்புகள். இரண்டாவது,தமிழ் மக்களின் தேசத் திரட்சியை சிதறடிப்பதன்மூலம் அரசியல் ரீதியாக தமிழ்மக்களை முழுமையாக தோற்கடிக்க விரும்பும் சக்திகள். மூன்றாவது தமிழ்க் கட்சிகள். இதில் புலம்பெயர்ந்த தமிழ்த்தரப்புகள் நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் உதவிகளைச் செய்கின்றார்கள். ஆனால் அவர்களை அறியாமலேயே அந்த உதவிகள் தமிழரசியற் பரப்பில் பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தி வருகின்றன. ஒர் இனப்படுகொலைக்குப் பின் தப்பியிருக்கும் மக்கள் என்ற அடிப்படையில் தாயகத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான செயற்பாட்டாளர்களே உண்டு. அவர்களையும் ரிமோட் செய்ய முற்பட்டால்,அது அவர்களை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் வேட்டைப் பற்களுக்குள் சிக்கவைத்துவிடும் என்பது முதலாவது பயம். இரண்டாவது பயம்,வெளியில் இருந்து கிடைக்கும் உதவிகளுக்காக செயற்படுகின்றவர்கள் ஒரு கட்டத்தில் தாமாகச் செயற்பட முடியாத பொம்மலாட்டப் பொம்மைகளாக மாறிவிடுவார்கள். பொம்மைகளால் தேசத்தைத் திரட்ட முடியாது. ஆமைகளாலும் தேசத்தைத் திரட்ட முடியாது. பொம்மைகளும் ஆமைகளும் தமிழரசியல் பரப்பில் அதிகரித்துவரக் காரணம் அரங்கில் உள்ள தமிழ் கட்சிகளும் செயற்பாட்டாளர்களுந்தான். எல்லாருக்கும் இதில் கூட்டுப் பொறுப்பு உண்டு. இதை இன்னும் கூர்மையாகச் சொன்னால் ஒரு தேசத்திரட்சியைக் கட்டியெழுப்பத் தவறிய அனைவருக்கும் இதில் பொறுப்பு உண்டு.தமிழ்மக்கள் மத்தியில் ஒரு தேசத்திரட்சியை கட்டியெழுப்பும் மக்கள் இயக்கமும் கிடையாது; குடிமக்கள் சமூகமும் கிடையாது; கட்சிக் கூட்டுக்களும் கிடையாது. அதனால் கடந்த 14ஆண்டுகளாக தமிழ் மக்கள் அவிழ்த்து விடப்பட்ட பாக்கு மூட்டை போல சிதறிக்கொண்டே போகிறார்கள். தமிழ் இளையோர் எப்படி நாட்டை விட்டு வெளியேறுவது என்று சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள். இது, முள்ளிவாய்க்காலில் கடைசிக்கட்டத்தில் எந்த வழியால் தப்பிச் செல்வது என்று சிந்தித்ததைப்போல இருக்கிறது என்று ஒரு செயற்பாட்டாளர் துக்கப்பட்டார். சிங்களபௌத்த மயமாக்கல்;நிலப்பறிப்பு;பயங்கரவாத தடைச் சட்டத்தை புதுப்பிப்பது;தமிழ்மக்கள் மத்தியில் குழந்தைப்பேறு குறைந்துவருவது; இளையோர் நாட்டை விட்டு வெளியேறத் துடிப்பது…போன்றவற்றின் பின்னணியில்,தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்ட யாருமே இல்லை. ஆம், யாருமே இல்லை. அந்த வெற்றிடத்தில்தான் கடந்த 14ஆண்டுகளாக,ஒரு பேரிழப்பை அனுஷ்டிப்பதற்காக பரந்துபட்ட அளவிலான,வெளிப்படைத்தன்மைமிக்க ஒரு பொதுக்கட்டமைப்பை உருவாக்கமுடியாத மக்களாகத் தமிழ்மக்கள் காணப்படுகிறார்கள். மன்னாரில் இந்துக்கள் கட்டிய வளைவு உடைக்கப்பட்ட பின் அது தொடர்பில் இந்துக்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையிலான உரையாடலை தொடக்கி வைப்பதற்கு ஒரு சிவில் சமூகம்கூட தமிழ்மக்கள் மத்தியில் கிடையாது. வடக்கு கிழக்கு இணைப்பு அதிகம் சோதனைக்குள்ளாகி வரும் இக்காலகட்டத்தில் அதுதொடர்பில் வெளிப்படையான உரையாடலைத் தொடங்கி,கிழக்கில் இருக்கக்கூடிய சந்தேகங்களை நீக்குவதற்கு யார் முயற்சிக்கிறார்கள்? சாதி ரீதியாக பிற்படுத்தப்படும் மக்களின் அச்சங்களைப் போக்குவதற்குரிய தமிழ்த்தேசிய வேலைத் திட்டம் யாரிடம் உண்டு? தமிழ்மக்களை வெளித்தரப்புகள் பிரிக்கப் பார்க்கின்றன,வெளித்தரப்புகள் ஆமைகளையும் பொம்மைகளையும் சம்பளம் கொடுத்து இயக்குகின்றன என்று குற்றஞ்சாட்டிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. பதிலாக தேசத்திரட்சியை உறுதிப்படுத்த வேண்டும்;பலப்படுத்த வேண்டும்.அதைச் செய்யத் தவறிய அனைத்துக் கட்சிகளும் ஏதோ ஒரு விகிதளவுக்கு எதிரிக்கு சேவகம் செய்திருக்கின்றன. தமிழ் மக்கள் வடக்கு கிழக்காய்;கட்சியாய் ; பொதுக் கட்டமைப்பாய்; சாதியாய் சமயமாய் சிதறிக்கொண்டே போகிறார்கள். இது தமிழ் மக்களைப் பிரித்துக் கையாள முற்படும் சக்திகளுக்கே அதிகம் வாய்ப்பானது.தமிழ் மக்களைக் கூறு போடுவதற்கு ஆமைகளும் பொம்மைகளும் தேவையில்லை. தமிழ்க் கட்சிகளே போதும் என்பதுதான் கடந்த 14 ஆண்டுகால அனுபவம் https://www.nillanthan.com/6095/
  17. பதினான்காவது மே பதினெட்டு – நிலாந்தன்! May 14, 2023 எதற்காக தமிழ் மக்கள் உயிர்களை, உறுப்புகளை, சொத்துக்களை கல்வியை இன்னபிறவற்றைத் தியாகம் செய்தார்களோ, எதற்காக லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்களோ, காணாமல் ஆக்கப்பட்டார்களோ,அதற்குரிய நீதி தமிழ்மக்களுக்கு கிடைக்க வேண்டும். எந்தப் போராட்டத்தின் பெயரால் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டார்களோ, அந்தப் போராட்டத்தின் பலன் தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டும். எனவே நினைவுகூர்தல் எனப்படுவது தமிழ்மக்கள் போராடியதன் பலனை பெறுவதற்கான ஓர் அரசியல் செயற்பாடுதான். நீதிக்கான தமிழ்மக்களின் போராட்டத்தில் அதுவும் ஒரு பகுதிதான். நவீன தமிழ் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட இடத்தில்,ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள், அதிக தொகை மக்கள் கொல்லப்பட்ட ஒரு காலகட்டத்தை நினைவு கூர்வதே முள்ளிவாய்க்கால் நினைவுகூர்தல் ஆகும். எனவே முழுத் தமிழ் வரலாற்றிலும் நவீன காலத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய படுகொலை என்ற அடிப்படையில் அந்த உணர்ச்சிப் புள்ளியில் முதலாவதாக, ஈழத்தமிழர்களை ஒரு தேசமாக திரட்டலாம். இரண்டாவதாக,உலகெங்கிலும் பரந்துவாழும் தமிழர்களை இன அடிப்படையில் திரட்டலாம். அவ்வாறு திரட்டி அந்த கூட்டுத் துக்கத்தை, கூட்டுக் கோபத்தை, கூட்டு அரசியல் ஆக்க சக்தியாக மாற்றினால் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெறுவதற்கான உந்துவிசையாக அது அமையும். எனவே நினைவுகூர்தல் எனப்படுவது நீதிக்கான போராட்டத்தின் பிரிக்கப்படவியலாத ஒரு பகுதி. அதை அவ்வாறு வடிவமைக்க வேண்டும். இப்பொழுது நடைமுறையில் உள்ள பொதுக் ஏற்பாட்டுக் குழுவானது ஒரு குறிப்பிட்ட இடத்தை ஒரு குறிப்பிட்ட நாளில் நிர்வகிக்கும் ஒரு கட்டமைப்பே தவிர அது மேற்சொன்ன அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு பொதுக் கட்டமைப்பு அல்ல. கடந்த 14 ஆண்டுகளாக பொருத்தமான ஒரு பொறிமுறையை,பொருத்தமான ஒரு பொதுக் கட்டமைப்பை தமிழ் மக்கள் உருவாக்கவில்லை.காலம் ஆற்றாத துக்கம் என்று எதுவுமில்லை. கூட்டுத் துக்கத்தை உரிய பொறிமுறைக்கூடாக கூட்டு ஆக்கசக்தியாக மாற்றவில்லை என்றால் அது வெறும் துக்கமாகச் சுருங்கிவிடும். எனவே ஒரு கூட்டுத் துக்கத்தை கூட்டு ஆக்கசக்தியாக மாற்றி,அதை நீதிக்கான போராட்டத்தின் ஊக்க சக்தியாக மாற்ற வேண்டும். அதற்கு வேண்டிய பொறி முறையும் கட்டமைப்பும் உருவாக்கப்பட வேண்டும். இது முதலாவது. இரண்டாவது, முள்ளிவாய்க்காலை நினைவு கூர்வது என்பது ஒரு யுத்த களத்தின் இறுதிக் கட்டத்தை நினைவு கூர்வதுதான். அந்த யுத்தகளத்தில் தமிழ் மக்களுக்கு தாமாக முன்வந்து தம் உயிர்களைக் கொடுத்தவர்கள்,உறுப்புகளை இழந்தவர்கள்,கல்வியை இன்னபிறவற்றை இழந்தவர்கள்,என்று ஆயிரக்கணக்கானவர்கள் உண்டு. போரில் நேரடியாக சம்பந்தப்படாமலேயே கொல்லப்பட்டவர்களும் காணாமல் ஆக்கப்பட்டவர்களும் உண்டு. அவர்களனைவர்க்கும் உதவி தேவை. நிவாரணம் தேவை. ஆறுதல் தேவை. ஆனால் கடந்த 14 ஆண்டுகளில் எத்தனை பேருக்கு அவ்வாறான உதவிகள் கிடைத்திருக்கின்றன? புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகம் குறிப்பிடத்தக்க அளவிற்கு உதவிகளை செய்கின்றது. ஆனால் அது ஒரு மையத்திலிருந்து திட்டமிடப்பட்ட,ஒரு மையத்தில் இருந்து வழங்கப்படுகின்ற உதவி அல்ல. கடந்த 14 ஆண்டுகளில் போரால் பாதிக்கப்பட்ட பலர் கைவிடப்பட்டிருக்கிறார்கள். போரில் ஈடுபட்ட பலர் கைவிடப்பட்டிருக்கிறார்கள், அல்லது அவமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இறுதிக்கட்டப் போரில் தமது குடும்பத்தின் உழைக்கும் நபரை அல்லது நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தவரை அல்லது வருமான வழியை இழந்த பல குடும்பங்கள் உண்டு. அக்குடும்பங்கள் யாவும் கடந்த 14 ஆண்டுகளில் தேறி எழுந்து விட்டனவா இல்லையா என்று பார்க்க வேண்டும். போரால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் வீட்டில் அல்லது ஒரு தியாகியின் வீட்டில் அல்லது காணாமல் ஆக்கப்பட்டவரின் வீட்டில் அடுப்பு எரியவில்லை என்றால்,முள்ளிவாய்க்காலில் ஏற்றப்படும் சுடர்களின் மகிமை குறைந்து விடும். எனவே போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு ஒரு பொருத்தமான பொறிமுறையும் அதற்கு வேண்டிய கட்டமைப்பும் தேவை. புலம்பெயர்ந்த தமிழ்மக்களிடம் போதியளவு பணம் உண்டு. உதவுவதற்கு விருப்பமும் உண்டு. ஆனால் பொருத்தமான ஒரு பொறிமுறையை, பொருத்தமான ஒரு கட்டமைப்பை யார் உருவாக்குவது? கடந்த 14 ஆண்டுகளாக அவ்வாறான கட்டமைப்புகளை ஏன் உருவாக்க முடியவில்லை? குறிப்பாக, முன்னாள் இயக்கத்தவர்களின் கதி என்னவென்று பார்க்க வேண்டும். நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் வசதியான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டார்கள். அல்லது நாட்டில் ஏதோ ஒரு விதத்தில் “செற்றில்ட்” ஆகிவிட்டார்கள். ஆனால் இப்பொழுதும் செற்றில்ட் ஆகாத பல குடும்பங்கள் உண்டு. 2009க்குப் பின் முன்னாள் இயக்கத்தவர்கள் மத்தியில் குடும்பங்கள் பிரிந்திருக்கின்றன. பிள்ளைகள் கைவிடப்பட்டுள்ளன. பெற்றோர் அனாதைகள் ஆகியிருக்கிறார்கள். போரில் பட்ட காயத்தின் விளைவாக ஏற்பட்ட நோய்க்கு மருத்துவம் செய்யக் காசு இல்லாமல் தத்தளிக்கும் பலர் உண்டு. என்ன நோய் என்று தெரியாமலேயே இறந்து போன பலர் உண்டு. இவர்களுக்கெல்லாம் உதவ ஏதாவது கட்டமைப்பு இருக்கிறதா?இல்லையென்றால் யார் பொறுப்பு? இலங்கைத் தீவிலேயே போரால் பாதிக்கப்பட்ட தரப்புக்களில் இப்பொழுதும் அதிகம் ஆபத்துக்கு உள்ளாகக்கூடிய ஒரு வகுப்பினராக(most vulnerable) காணப்படுவது முன்னாள் இயக்கத்தவர்கள்தான். நாட்டின் சட்ட அமைப்பின்படி புனர்வாழ்வு ஒரு தண்டனை அல்ல என்பதனை கடந்த 14 ஆண்டு காலம் நிரூபித்திருக்கிறது. இந்நிலையில் மீண்டும் மீண்டும் ஒரே குற்றத்துக்காகத் தண்டிக்கப்படக்கூடிய ஒரு தரப்பாக முன்னாள் இயக்கத்தவர்கள் காணப்படுகிறார்கள். அது தொடர்பாக நமது சட்டத்தரணிகள் என்ன செய்திருக்கிறார்கள்? தனிப்பட்ட வழக்குகளில் தோன்றி குறிப்பிட்ட முன்னாள் இயக்கத்தவரை விடுதலை செய்திருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால் அதை ஒர் அரசியல் விவகாரமாக மாற்றி அதற்கு வேண்டிய சட்ட ஏற்பாடுகளைக் கொண்டு வர ஏன் ஒருவரும் முயற்சிக்கவில்லை? அது மட்டுமல்ல, முன்னாள் இயக்கத்தவர்கள் புனர்வாழ்வின் பின் ஜனநாயக அரசியல் இறங்கினார்கள். அவ்வாறு இறங்கியவர்கள் கூட்டமைப்ப, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதமிழ் மக்கள் தேசியக்கூட்டணி போன்றவற்றில் இணைந்து தேர்தல் கேட்டார்கள். துயரம் என்னவென்றால் ஒருவருமே தேர்தலில் பெறுமதியான வெற்றிகளைப் பெறவில்லை. துயிலுமில்லங்களில் தமிழ்மக்கள் விட்ட கண்ணீர் யாவும் எங்கே போய் சேருகின்றது? அதை யார் வாக்குகளாக மாற்றுகிறார்கள்? “உன்னுடைய சமூகத்திற்காக நீ கல்வியைத் துறந்தாய், உறுப்புகளை இழந்தாய், உயிரைக் கொடுக்கச் சித்தமாக இருந்தாய், ஆனால் உனக்காக இந்தச் சனம் குறைந்தது உள்ளூராட்சி சபையில் ஒரு வட்டாரத்துக்கு தேவையான ஆயிரம் வாக்குகளைக் கூடத் தரவில்லையே? அப்படியென்றால் உன்னுடைய இறந்த காலத்துக்குப் பொருள் என்ன?” என்று ஒரு முன்னாள் இயக்கத்தவரின் பிள்ளை கேட்டால், அதற்கு அந்த தகப்பன் அல்லது தாய் என்ன பதில் சொல்ல முடியும்? அதே கேள்விக்கு தமிழ் மக்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? முன்னாள் இயக்கத்தவர்கள் தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட பின் அவர்களை தடுப்பில் வைத்திருந்த தரப்பு அவர்களோடு உறவுகளைப் பேணும். அது ஒரு யதார்த்தம். அவ்வாறு பேணுவதன்மூலம் அரசாங்கம் இரண்டு விடயங்களைச் சாதிக்கலாம், ஒன்று, அவர்களைக் கண்காணிக்கலாம், இரண்டு, அவர்களோடு தொடர்ந்து தொடர்புகளைப் பேணினால், அவர்களுடைய சொந்த மக்களே முன்னாள் இயக்கத்தவர்களை சந்தேகிப்பார்கள். எதிரியின் ஆட்கள் என்று முத்திரை குத்துவார்கள். எந்த சமூகத்துக்காக அவர்கள் போராடினார்களோ, அந்தச் சமூகமே அவர்களைப் புறமொதுக்கி, அவமதித்து விலகிச் செல்லும் ஒரு நிலையை ஏற்படுத்தலாம். கடந்த 14 ஆண்டுகளில் தமிழ்க் கட்சிகளே அவ்வாறு முன்னாள் இயக்கத்தவர்களைக் குற்றம்சாட்டி வருகின்றன. முன்னாள் இயக்கத்தவர்களில் ஒரு பகுதியினர் அவ்வாறு அரசு புலனாய்வுத் துறையோடு சேர்ந்து செயல்படக்கூடும். ஆனால் அதற்காக எல்லாரும் அப்படியல்ல. கடந்த 14 ஆண்டுகளில் தேர்தலில் இறங்கிய முன்னாள் இயக்கத்தவர்களில் யாருமே பொருத்தமான வெற்றிகளை பெறாததற்கு என்ன காரணம் ? இந்த விடயத்தில் முன்னாள் இயக்கத்தவர்களின் கட்சியை அரச புலனாய்வுத் துறையின் ஆட்கள் என்று விமர்சிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் நின்று தேர்தல் கேட்டவர்களும் இதுவரை வெற்றி பெறவில்லை என்பதனை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். எனவே இறந்தவர்களை நினைவு கூர்வது என்பது அவர்கள் கொல்லப்பட்ட யுத்த களத்தை நினைவு கூர்வதுதான். அந்த யுத்த களத்தில் தமது சமூகத்துக்காகப் போராடியவர்களை அவர்களுடைய நோக்கு நிலையில் இருந்து புரிந்து கொள்ள முயற்சிப்பதும்தான். இது இரண்டாவது. மூன்றாவது, இறந்தவர்களை நினைவுகூர்வது என்பது, அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நினைவுகளைக் கடத்துவது. நீதிக்கான தமிழ்மக்களின் போராட்டம் மேலும் நீண்ட காலத்துக்கு இழுபடலாம் அதுமட்டுமல்ல கடந்த 14 ஆண்டுகளில் தொழில்நுட்பப் பெருக்கம் காரணமாகவும், தலைமைத்துவ வெற்றிடம் காரணமாகவும், புதிதாக எழுந்து வரும் ஒரு தலைமுறை பெருமளவுக்கு அரசியல் நீக்கம் செய்யப்பட்டதாகவோ, அல்லது இலட்சிய நீக்கம் செய்யப்பட்டதாகவோ மாறிவருகின்றது. அந்தத் தலைமுறைக்கும், உலகெங்கிலும் புலம்பெயர்ந்து சிதறி வாழும் ஈழத்தமிழர்களின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் நினைவுகளைக் கடத்த வேண்டியிருக்கிறது. நினைவுகளின் தொடர்ச்சிக்குள் ஒரு தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது. அதற்கு நினைவு கூர்தல் அவசியம். இது மூன்றாவது. நாலாவதாக,நினைவு கூர்தல் எனப்படுவது,ஒரு கூட்டுச் சிகிச்சை போன்றது. துக்கத்தை கொட்டித் தீர்க்கும் நாளும், இடமும் அது. வெளிவழிய விடப்படாத துக்கம் உள்ளுக்குள் கிடந்து குமைந்து அடங்காத கோபமாக மாறிவிடும். அல்லது நோயாக மாறிவிடும்.எனவே உளவியல் அர்த்தத்திலும் பண்பாட்டு அர்த்தத்திலும் துக்கத்தை வெளிவழிய விடவேண்டும். அந்த அடிப்படையில் நினைவு கூர்தல் என்பது ஒரு குணமாக்கல் செய்முறை. ஒரு பண்பாட்டுச் செய்முறை. மேற்கண்ட நான்கு முக்கிய காரணங்களையும் முன்வைத்து நினைவு கூர்தலை ஒழுங்குபடுத்த வேண்டும். ஆனால் கடந்த 14 ஆண்டுகளாக நினைவு கூர்தல் அவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகின்றதா? அவ்வாறு ஒழுங்குபடுத்தப்படவில்லை என்றால் அதற்கு யார் பொறுப்பு? இந்தக் கேள்வியை மறுவளமாகக் கேட்டால் தமிழ் மக்களுக்கு யார் பொறுப்பு? என்றுதான் கேட்க வேண்டும். ஏனென்றால் கடந்த 14 ஆண்டுகளாக தமிழ் மக்களின் அரசியல் எனப்படுவது கட்சி அரசியலாகத்தான் காணப்படுகின்றது. கொழும்பு அல்லது வெளித்தரப்புகள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு பதில்வினை ஆற்றும் அரசியலாக தறுக்கணித்துப் போய்விட்டது. அது தேசத்தை கட்டியெழுப்பும் ஓர் அரசியல் அல்ல. சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிராகவும், காணிப் பறிப்புக்கு எதிராகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகேட்டும் தமிழ்மக்கள் போராடுகிறார்கள்தான். ஆனால் அவற்றில் பெரும்பாலானவை, எனது கடந்த வாரக் கட்டுரையில் கூறியது போல, பதில் வினையாற்றும்(reactive) நிகழ்வு மைய அரசியல்தான்(event oriented). அவை ஒரு தேசநிர்மாணத்துக்குரிய கட்டியெழுப்பும் (proactive) அரசியல் அல்ல. ஒரு தேசத்தைக் கட்டியெழுப்பும் அரசியலில்தான் நினைவு கூர்தல், அதற்குரிய மகிமையோடும் அரசியல் அடர்த்தியோடும் அனுஷ்டிக்கப்படும். அதற்குரிய பல்வகைமையோடு அனுஷ்டிக்கப்படும். இல்லையென்றால் கட்சிகளாக பிரிந்திருக்கும் மக்கள் நினைவுகூர்தலை அதற்குரிய பெறுமதியுணர்ந்து அனுஷ்டிக்கப் போவதில்லை. மாறாக,அது ஒரு துக்க நிகழ்வாக,அல்லது செயலுக்குப் போகாத பிரகடனங்களை வாசிக்கும் ஒரு நிகழ்வாக,ஒரு சடங்காகச் சுருங்கிப் போய்விடும். இம்முறை,பல்கலைக்கழக மாணவர்கள் சமூகப்பங்களிப்போடு கஞ்சி காய்ச்சுவது ஒரு நல்ல முன்னுதாரணம். அதேசமயம் கட்சிகளுக்கு எதிராக கருத்துக்களைக் கூறாமல் விட்டால் அதுவும் ஒரு நல்ல முன்னுதாரணம். முள்ளிவாய்க்காலில் தாமாகத் திரளக்கூடிய மக்களை,கட்சிகளும் பொதுக்கட்டமைப்புகளும் மாணவர்களும் பிரிக்காமல் விட்டாலே போதும். இறந்தவர்களின் ஆத்மா இந்த ஒரு விடயத்திலாவது சாந்தி அடையும். ஏனெனில் மனநல மருத்துவ நிபுணர் சிவதாஸ் கூறுவதுபோல “நினைவுகூர்தல் எனப்படுவது காயங்களைக் குணப்படுத்துவது,காயங்களைக் கிளறுவது அல்ல”. https://globaltamilnews.net/2023/190637/
  18. வெடுக்குநாறி மலையிலிருந்து தையிட்டிக்கு நிலாந்தன் தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தை நொதிக்கச் செய்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதான். போலீசாரோடு முரண்பட்டதன்மூலம் அதை உணர்ச்சிகரமான ஒரு விவகாரமாக மாற்றியதும் அந்தக் கட்சிதான். அதன் விளைவாகத் தமிழரசுக் கட்சியும் உட்பட ஏனைய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அப்பகுதிக்கு வரவேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது. நீதிமன்றம் தலையிடும் ஒரு நிலைமை உருவாகியது. எனினும் போராட்டம் பெருமளவுக்கு கட்சிப் பிரமுகர்களின் போராட்டமாகவே இருந்தது. கொஞ்சம் தொண்டர்களும் காணப்பட்டார்கள். முன்னணி போலீசாரோடு முரண்பட்டதுங்கூட அதன் பாணியில் வழமையானது என்று சொல்லலாம். அரச படைகளோடு முரண்படுவதை ஒரு சாகசமாக முன்னணி செய்து வருகின்றது. இதுபோன்ற போராட்டங்களில் அவ்வாறான சாகசச் செயலுக்கும் ஒரு பொருள் உண்டு. அது போலீசாரை நிதானமிழக்கச் செய்யும். அதன் தக்கபூர்வ விளைவாக சிங்களபௌத்த மயமாக்கல் மேலும் அம்பலப்படும் என்பது உண்மை. ஆனால் அறவழிப் போராட்டங்கள் மட்டுமல்ல ஆயுதப் போராட்டங்களும் சாகசங்களால் வெற்றி பெறுவதில்லை. இதுவிடயத்தில் சில அடிப்படையான கேள்விகள் உண்டு. அந்த விகாரை திடீரென்று வானத்திலிருந்து தரைக்கு வரவில்லை. அது கடந்த நான்கு வருடங்களாக கட்டப்பட்டு வருகிறது. அதற்கு அத்திவாரம் வைத்தபோதே அது விவகாரம் ஆக்கப்பட்டது. அதைக் கட்டியெழுப்பும் வரையிலும் ஏன் தமிழ்க் கட்சிகள் பார்த்துக் கொண்டிருந்தன? இப்பொழுதும் விகாரை முழுமையாக திறக்கப்படவில்லை. அதற்கு கலசம் வைக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்ட பொழுதுதான் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி களத்தில் இறங்கியது. நாவற் குழியிலும் அப்படித்தான். இதில் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. அத்திவாரம் வெட்டப்படும் பொழுதும் அதைத் தடுக்க முடியவில்லை. அது கட்டி முடிக்கப்படுவதையும் தடுக்க முடியவில்லை. அது ஒரு மதம் சார்ந்த பொதுக் கட்டிடம் என்ற அடிப்படையில் அதை இனி அகற்றுவது மேலும் விவகாரமாகிவிடும். எனவே இங்கு தொகுத்துப் பார்த்தால் தெரியவருவது எனவென்றால்,தமிழ்க் கட்சிகளின் இயலாமை தான். தமிழ்க் கட்சிகளின் நிகழ்வுகளை மையமாகக் கொண்ட அரசியல்தான்.(Event based) நாவற்குழியில் சிங்கள மக்கள் குடியமர்த்தப்பட்டபொழுது நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அங்கு போனார். முரண்பட்டார். அதுபோலவே தையிட்டி விகாரை விவகாரத்திலும் தொடக்கத்திலேயே அது பிரதேசசபையில் பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. எனவே இது விடயத்தில் 5 ஆண்டுகள் தூங்கிக் கிடந்துவிட்டு திடீரென்று விழித்த அரசியலை எப்படிப் பார்ப்பது ? ஆயிரம் விகாரைகள் கட்டப் போவதாக ரணில் பல ஆண்டுகளுக்கு முன்பே தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்திருந்தார். அவர் சொன்னதைச் செய்கிறார். அது அரசுடைய தரப்பு. திணைக்களங்கள் அவர்களுடைய உபகரணங்கள். படைத்தரப்பு அதன் காவல்காரன். எனவே எல்லா வளங்களையும் கொட்டி அவர்கள் சொன்னதைச் செய்கிறார்கள். ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் அவ்வாறு சொன்னதைச் செய்யும் சக்தி உடையவர்களா ?அதற்குத் தேவையான நீண்ட கால நோக்கிலான வழி வரைபடம் அவர்களிடம் உண்டா? இல்லையென்றபடியால்தான் அவர்கள் நிகழ்வுகளை மையமாக வைத்து எதிர்ப்பு அரசியல் செய்கின்றார்களா? அவர்கள் எதிர்த்தபோதிலும் விகாரைகள், தாதுகோபங்கள் கட்டப்பட்டு கொண்டேயிருக்கின்றன. தமிழ்க்கட்சிகளிடம் தெளிவான வழிவரைபடம் இல்லை என்பதைத்தான் தையிட்டி விவகாரம் நமக்கு உணர்த்துகின்றது. சிங்களபௌத்த மயமாக்கல் என்பது,தமிழ்மக்கள் ஒரு தேசமாக இருப்பதைச் சிதைக்கும் நோக்கிலானது. எனவே தமிழ்மக்கள் ஒரு தேசமாகத் திரண்டால்தான் அதைத் தடுக்கலாம். செல்வராஜா கஜேந்திரன் தையிட்டியில் வைத்து அதைச் சொன்னார். ஆனால் சொன்னால் மட்டும் போதாது. தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதற்கு யார் தடை ? எனைய கட்சிகளைத் துரோகிகள்,ஒட்டுக் குழுக்கள்,கைக்கூலிகள் என்றெல்லாம் கூறிக்கொண்டு எப்படி ஒற்றுமைப்படுவது? இனி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை கட்சிகளின் ஒருங்கிணைப்புக்குள் கொண்டுவர முடியாது. ஒன்றில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு பிரதான நீரோட்ட கட்சியாக வளர்ச்சி பெற வேண்டும். அல்லது ஏனைய கட்சிகள் தாங்கள் ஒரு பெரிய கூட்டாக வளர்ச்சி பெற வேண்டும். எந்தக் கூட்டாக இருந்தாலும் அது தேசத்தை கட்டியெழுப்புவது என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட வேண்டும். நிச்சயமாக தேர்தல் வெற்றிக்கான கூட்டாக இருக்கக் கூடாது. அத்தகைய அடிப்படையில் கூட்டுக்களை உருவாக்கத் தவறியதன் விளைவாகத்தான் தேச நிர்மானத்திற்கான அடுத்தடுத்த கட்ட வளர்ச்சிகளுக்குப் போக தமிழ் அரசியலால் முடியவில்லை. தேசத்தை எப்படிக் கட்டியெழுப்புவது என்று சிந்தித்து அதற்குரிய வழி வரைபடத்தைத் தயாரித்து இருந்திருந்தால், சிங்கள பௌத்த மயமாக்கலை எதிர்கொள்வதற்கு உரிய கட்டமைப்புகளை உருவாக்கியிருந்திருப்பார்கள். கட்டமைப்புகள் இல்லாத வெற்றிடத்தில்தான், நிகழ்வுகளை மையமாகக் கொண்டு எதிர்ப்பு அரசியல் செய்ய வேண்டிவந்தது. அதை ஒரு சட்ட விவகாரமாகச் சுருக்க வேண்டி வந்தது. இது ஒரு சட்ட விவகாரம் அல்ல. இது ஒரு அரசியல் விவகாரம். இதை அணுகுவதற்கு அரசியல் ரீதியான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். ஒரு கட்சியிடமும் அப்படிப்பட்ட கட்டமைப்புகள் இல்லை என்பதைத்தான் தையிட்டியில் குந்தி கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நமக்கு உணர்த்தினார்கள். சில தொண்டர்களைத் தவிர மக்களை அங்கே கொண்டுவர முடியவில்லை. எனவே இங்கு தேவையானது என்னவென்றால், தேசத்தை நிர்மாணிப்பதற்குரிய கட்டமைப்புகள் எவை எவை என்று கண்டு அவற்றை கட்டியெழுப்புவது தான். இது பல ஆண்டுகளாக நான் எழுதிவரும் ஒரு விடயந்தான். ஒரு தேசத்தை நிர்மாணிக்கத் தேவையான கட்டமைப்புகள் எவையெவை? ஒரு மக்கள் கூட்டத்தைத் தேசமாக வனையும் அம்சங்களைப் பலப்படுத்துவதற்குரிய கட்டமைப்புக்களே அவை. ஒரு மக்கள் கூட்டத்தைத் தேசமாக வனையும் அம்சங்கள் எவை? நிலம்; மொழி; இனம் அல்லது சனம்; பொதுப் பண்பாடு; பொதுப் பொருளாதாரம் போன்றவைதான். எனவே மேற்கண்ட அம்சங்களை பலப்படுத்தவும் பாதுகாக்கவும் தேவையான சுயகவசங்கள் என்று வர்ணிக்கத்தக்க கட்டமைப்புகளை புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் பங்களிப்போடு உருவாக்கலாம். தேசத்தை நிர்மாணிக்க வேண்டும் என்று கூறும் ஒரு கட்சி அதற்கு தேவையான பொருத்தமான கட்டமைப்புகளை ஏன் இதுவரை உருவாக்கவில்லை ? அதற்கு பதில் வேண்டும். தையிட்டியில் தமிழ்மக்கள் ஒரு தேசமாக நிற்கவில்லை. கட்சிப் பிரமுகர்கள்தான் நின்றார்கள். அது ஒரு நிகழ்வு. அதுபோல பல நிகழ்வுகளை நாங்கள் கடந்த 14 ஆண்டுகளில் கண்டு விட்டோம். நிகழ்வுகளை மையமாகக் கொண்ட அரசியலின் தோல்வியே இது. இப்பொழுது தேவையாக இருப்பது மூலோபாய ரீதியில் சிந்தித்து கட்டமைப்புகளை உருவாக்கி நீண்ட கால அடிப்படையில் தேசத்தைக் கட்டியெழுப்புவதுதான். அவ்வப்போது நிகழ்வுகளுக்கு எதிர்வினையாற்றும் அரசியல் எனப்படுவது தேசத்தை நிர்மாணிப்பதற்கு உரியதல்ல. தேசத்தை நிர்மாணிப்பது என்பது எதிர்ப்பு அரசியல் மட்டுமல்ல. அது கட்டியெழுப்பும் அரசியலுந்தான்(Constructive). எதைக் கட்டியெழுப்புவது? எதிர்க்கத் தேவையான கட்டமைப்புகளைக் கட்டியெழுப்புவது. இன்றைக்கு தையிட்டி. நாளைக்கு வேறொரு இடத்தில் வேறு ஒரு பௌத்த மதக் கட்டுமானத்துக்கு அத்திவாரம் வைக்கப்படும். அப்பொழுதும் அந்த நிகழ்வுக்கு எதிராக தமிழ்க்கட்சிகள் போராடக்கூடும். வழக்குத் தொடுக்கக்கூடும். போலீசோடு தள்ளுமுள்ளுப்படக்கூடும். வழக்கில் வெல்லவும்கூடும். ஆனால் அவை யாவுமே நிகழ்வுகள்தான். தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான தொடர் செயற்பாடுகளாக இருக்கப்போவதில்லை. சிங்களபௌத்த மயமாக்கலைத் தடுக்கப்போவதில்லை. இப்பொழுது வெடுக்குநாறி மலையில் இருந்து கவனக்குவிப்பு தையிட்டிக்குத் திரும்பி விட்டது. அதுகூட சிங்கள பௌத்த மயமாக்கலுக்குச் சாதகமான ஒரு விடியம்தான். தமிழ்மக்களின் கவனத்தை,தமிழ்க் கட்சிகளின் கவனத்தை அவ்வப்போது வெவ்வேறு நிகழ்வுகளின் மீது திசை திருப்புவது. தமிழ் மக்களின் கூட்டுக் கவனத்தைச் சிதற விடுவது. அண்மை வாரங்களாக தமிழ்ச் சமூகத்துக்குள் காணப்படும் சாதி ஏற்றத் தாழ்வுகளைக் குறித்தும் சாதி ஒடுக்கு முறைகளைக் குறித்தும் விமர்சனங்கள் வெளிவருகின்றன. தேசிய விடுதலை எனப்படுவது சமூக விடுதலையுந்தான். சமூக விடுதலை இல்லாத தேசிய விடுதலை, விடுதலையே அல்ல. இந்த விளக்கத்தோடு உள்ளூரில் காணப்படும் சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் போராட வேண்டிய பொறுப்பு தமிழ் கட்சிகளுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் உண்டு. மத முரண்பாடு,சாதி முரண்பாடு நாவற்குழி, தையிட்டி வெடுக்குநாறி மலை, குருந்தூர் மலை போன்ற அனைத்து அம்சங்களும் தமிழ்மக்களின் கவனத்தை அவ்வப்போது சிதறடிக்கின்றன. இவற்றிற்கு எதிராக தனித்தனியாக போராட்டத் தேவையில்லை. இவை அனைத்தும் தேச நிர்மானத்துக்கு ஏற்பட்ட சவால்களே. எனவே தேசத்தை ஜனநாயக அடிச்சட்டத்தின் மீது கட்டியெழுப்பும்போது இந்த விடயங்களை எதிர்கொள்வதற்கான அடிப்படைக் கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டு விடும். இது மே மாதம். 2009 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் மத்தியில் இருந்த ஒரு கருநிலை அரசு தோற்கடிக்கப்பட்ட மாதம். ”யுத்தத்தை வெற்றி கொண்டவர்கள் நாங்கள்” என்று தையிட்டியில் வைத்து ஒரு போலீஸ் அதிகாரி கூறுகிறார். அதன் பொருள் இதுதான். நீங்கள் தேசமாக இருப்பதை நாங்கள் தோற்கடித்து விட்டோம் என்று பொருள். ஆனால் கடந்த 14 ஆண்டுகளாக தமிழ்மக்கள் ஒரு தேசமாக மேலெழுவதைத் தோற்கடித்ததில் அரசாங்கத்தைவிடவும் தமிழ்க் கட்சிகளுக்கே பங்கு அதிகம். இதை மறுவளமாகச் சொன்னால் தமிழ்மக்களை ஓரளவுக்காவது தேசமாகத் திரட்டியது அரசாங்கந்தான். ஒடுக்குமுறைதான் தமிழ்க் கட்சிகளை ஒர் உணர்ச்சிப்புள்ளியில் சந்திக்க வைக்கின்றது . தையிட்டியில் அது நடந்தது. மு.திருநாவுக்கரசு சிவத்தம்பி போன்றவர்கள் கூறுவதுபோல எதிரிதான் தமிழ்த் தேசியத்தின் பிரதான பலமா? தியாகியாய், துரோகியாய், கைக்கூலியாய், ஒட்டுக்குழுவாய், வடக்காய், கிழக்காய், வன்னியாய், யாழ்ப்பாணமாய், கட்சியாய், சாதியாய், சமயமாய், இன்னபிறவாய், சிதறிப்போகும் சிறிய தமிழ்மக்களால், அரசாங்கம் கட்டிக் கொண்டிருக்கும் விகாரைகளிலிருந்து ஒரு செங்கல்லைத்தானும் அசைக்க முடியுமா? https://www.nillanthan.com/6057/
  19. கடையடைப்புத் தேவையா? - நிலாந்தன் நேற்று முன்தினம், வெள்ளிக்கிழமை, வெடுக்குநாறி மலையில் பூசைகள் நடக்கத் தொடங்கியுள்ளன. வியாழக்கிழமை கச்சத்தீவிலிருந்து புத்தர் சிலை அகற்றப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த கடையடைப்பு, அதற்கு அழைப்பு விடுத்த கட்சிகளைப் பொறுத்தவரை வெற்றிதான். எனினும், கடந்த வியாழக்கிழமை, யாழ்ப்பாணம், தையிட்டியில் தனியார் காணியில் ராணுவம் கட்டிய பெரிய விகாரையில் பூசை நடந்திருக்கிறது என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு நாள் கடையடைப்பு தொடர்பாக மூன்று விதமான விமர்சனங்கள் உண்டு. முதலாவது அதனால் எந்தப் பயனும் இல்லை, அது கொழும்புக்கு நோகாத ஒரு போராட்டம் என்பது. இரண்டாவது அது அன்றாடங் காய்ச்சிகளின் வயிற்றிலடிப்பது என்பது. மூன்றாவது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூறும் விமர்சனங்கள். இவை மூன்றையும் சற்று விரிவாகப் பார்க்கலாம். முதலாவதாக இது போன்ற போராட்டங்களால் பயன் இல்லை என்பது. இந்த ஒரு நாள் போராட்டம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்பது உண்மை. தமிழ் மக்கள் இதைவிடப் பெரிய போராட்டத்தை நடாத்திய மக்கள். இதுபோன்ற ஒருநாள் கடையடைப்புக்கள் கொழும்பின் கவனத்தையோ உலகத்தின் கவனத்தையோ தொடர்ச்சியாக ஈர்த்து வைத்திருக்கப் போதுமானவை அல்ல. எனினும்,பயங்கரவாத எதிர்ப்புச் சட்டதுக்கு எதிராகவும் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிராகவும் தமிழ்மக்கள் போராட வேண்டியிருக்கிறது. வடக்கு கிழக்கு இணைந்து ஒப்பீட்டளவில் ஒரு பெரிய திரளாக தமிழ் மக்கள் தமது எதிர்பைக் காட்டியிருக்கிறார்கள். ஒன்றையும் செய்யாமலிருந்து வெறுவாய் சப்புவதைவிட இது பரவாயில்லை. அதேசமயம், கடந்த ஆண்டு தென்னிலங்கையில் தோன்றிய தன்னெழுச்சிப் போராட்டங்களோடு ஒப்பிடுகையில் இதுபோன்ற கடையடைப்புகள் படைப்புத்திறன் குறைந்தவை, யாந்திரீகமானவை. இந்த விடயத்தில் தமிழ்க் கட்சிகள் தென்னிலங்கையிடமிருந்து எதையுமே கற்றுக்கொள்ளவில்லை. சமூக வலைத்தளங்களில் சிலர் விமர்சிப்பதைப் போன்று இது அரசியல்வாதிகளின் இயலாமையைக் காட்டுகிறது. ஒரு புதிய மக்கள் போராட்ட வடிவத்தைக் குறித்துச் சரியான விளக்கமோ, விசுவாசமான தேடலோ, தீர்க்கதரிசனம் மிக்க வழிவரைபடங்களோ இல்லாத வெற்றிடத்தில்தான் இது போன்ற யாந்திரீகமான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே கடையடைப்பு ஒரு விதத்தில் தமிழ் அரசியலின் இயலாமையை காட்டுகிறது என்றும் சொல்லலாம். இரண்டாவது இப்போராட்டத்தால் அன்றாடங் காய்ச்சிகள் பாதிக்கப்பட்டார்கள் என்பது. அது உண்மை. அரசியல்வாதிகள் அனேகமாக அன்றாடங் காய்ச்சிகள் இல்லை. அன்றன்று உழைப்பவர்கள் இதுபோன்ற போராட்டங்களால் பாதிக்கப்படுவார்கள். ஆனால் ஒரு மக்கள் கூட்டம் தன் அரசியல் இலக்குகளை அடைவதற்காகச் செய்யக்கூடிய தியாகங்களுக்குள் அந்த ஒரு நாள் உழைப்பும் அடங்கும். தமிழ் மக்கள் இதைவிடப் பெரிய தியாகங்களைச் செய்த மக்கள். ஒரு நாள் உழைப்பைக் காட்டி இதுபோன்ற போராட்டங்களை கொச்சைப்படுத்த முடியாது. மூன்றாவது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வைக்கும் விமர்சனங்கள். அவை வழமையான வாய்ப்பாட்டு விமர்சனங்கள்தான். போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த ஏழு கட்சிகளுக்கும் அதற்குத் தகுதி இல்லை, அவர்கள் விசுவாசமாகப் போராடவில்லை என்ற பொருள்பட முன்னணி குற்றம் சாட்டியிருக்கிறது. சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிராகவும் உத்தேச பயங்கரவாத ஏதிர்ப்புச் சட்டத்துக்கு எதிராகவும் தமிழ்மக்கள் போராட வேண்டும். அது அரசுக்கு எதிரான போராட்டம். அப்போராட்டத்தை எதிர்ப்பது அதன் தர்க்கபூர்வ விளைவாக யாருக்குச் சேவகஞ் செய்யும்?. அந்த ஏழு கட்சிகளுக்கும் போராடும் தகமை இல்லையென்றால் அல்லது அவை விசுவாசமாகப் போராடவில்லையென்றால், விசுவாசமான ஒரு போராட்டத்தை துணிச்சலான ஒரு போராட்டத்தை ஏன் முன்னணி ஒழுங்கு செய்யக்கூடாது ? முன்னணி தன்னை ஏனைய கட்சிகளைவிடத் தூய கட்சியாகவும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு அதிகம் விசுவாசமான கட்சியாகவும் காட்டிக் கொள்கிறது. அதைவிட முக்கியமாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மெய்யான வாரிசாகவும் அது தன்னைக் காட்டிக்கொள்கிறது. அந்த அடிப்படையில் அந்த இயக்கத்தின் நினைவு நாட்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது என்று திட்டமிட்டுச் செயற்பட்டு வருகிறது. அண்மையில் அன்னை பூபதியின் நினைவு மண்டபத்திலும் முன்னணிக்கும் கிழக்கைச் சேர்ந்த சிவில் அமைப்புகளுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. அது ஒர் அருவருப்பான முரண்பாடு. அன்னை பூபதியை நினைவு கூர்வதற்கென்று ஒரு பொதுக் கட்டமைப்பு அங்கே உருவாக்கப்பட்டிருக்கிறது. அதில் குடிமக்கள் சமூகத்தை சேர்ந்தவர்களும் மதத் தலைவர்களும் அன்னையின் குடும்பத்தவர்களும் இணைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் முன்னணி அப்பொதுக் கட்டமைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. இது திலீபனின் நினைவுத் தூபிக்கு முன் ஏற்பட்ட முரண்பாட்டை நினைவுபடுத்துகின்றது. புலிகள் இயக்கத்தின் நினைவு நாட்களை அனுஷ்டிப்பதற்கு தனக்குத்தான் அதிகம் உரித்தும் தகுதியும் உண்டு என்று முன்னணி கருதுகின்றது. அதன்மூலம் புலிகள் இயக்கத்தின் விசுவாசமான தொடர்ச்சியாகவும் அக்கட்சி தன்னை காட்டிக்கொள்ள விளைகின்றது. ஆனால் அதை அவர்கள் தமது செயற்பாட்டில் நிரூபிக்க வேண்டும். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியலைத் தொடர்வது என்பது, அதுவும் மிதவாத அரசியலில் அதைத் தொடர்வது என்பது சாராம்சத்தில் அந்த இயக்கத்தைப்போல அர்ப்பணிப்புகளுக்கு தயாராக இருப்பதுதான். ஆனால் கடந்த 13 ஆண்டுகளாக முன்னணி அப்படிப்பட்ட தியாகங்களைச் செய்திருக்கின்றதா? பொலிசாரோடும் படைகளோடும் நெத்திக்கு நேரே மோதுவதும், துணிச்சலாகக் கதைப்பதும், தள்ளுமுள்ளுப்படுவதும், சில மணித்தியாலங்கள் சிறையில் இருப்பதும், சாகசச் செயல்களே. அவற்றைத் தியாகம் என்று கூற முடியாது. தமிழ் மக்கள் கடந்துவந்த செயற்கரிய தியாகங்களோடு ஒப்பிடுகையில் இவையெல்லாம் தியாகங்களா? திலீபனையும் பூபதியையும் படங்களாக வாகனங்களில் காவித் திரிவது மட்டும் போதாது. அதைவிட ஆழமாக திலீபனைப்போல பூபதியைப்போல உண்ணாவிரதம் இருப்பதற்கு எத்தனை பேர் தயார்? கடையடைப்புக்கு அழைப்பு விடுத்த ஏழு கட்சிகள் மட்டுமல்ல, கடையடைப்பைப் பரிகசித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கடந்த 13 ஆண்டுகளாக கொழும்பின் கவனத்தையும் உலகத்தையும் கவனத்தையும் ஈர்க்கும் விதத்தில் போராடத் தவறியிருக்கிறது. அரசியலில் மற்றவர்களை விமர்சிப்பதால் ஒரு கட்சி தூய்மையானது ஆகிவிடாது. மாறாக மற்றவர்கள் செய்யத் தவறியதைத் தான் செய்ய வேண்டும். மற்றவர்களைத் துரோகிகளாக்குவதால் ஒருவர் தியாகிவிட முடியாது மாறாக தான் செய்யும் தியாகங்களால்தான் ஒருவர் தியாகியாக முடியும். தமது மக்கள் மத்தியில் மட்டுமல்ல,அனைத்துலக அரங்கிலும் தமிழ் அரசியலின் அந்தஸ்தை உயர்த்தும் விதத்தில் தமிழ்க்கட்சிகள் உழைத்திருக்கின்றனவா? கடந்த 13ஆண்டுகளில் தமிழ்க்கட்சிகள் அனைத்துலக அளவில் சம்பாதித்த புதிய நட்புகள் எத்தனை? உள்ளூரில் சக தமிழ்க் கட்சிகளோடு தந்திரோாபாயக் கூட்டுக்களைக்கூட வைத்துக் கொள்ளமுடியாத கட்சிகள், எப்படி வெளியரங்கில் உலக சமூகத்தோடு கூட்டுக்களை வைத்துக் கொள்வது? தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அரசியல் அந்தஸ்தை மதிப்பிடுவதற்கு ஆகப்பிந்திய ஒர் உதாரணத்தை இங்கு சுட்டிக் காட்டலாம். சில மாதங்களுக்கு முன் கனடாவுக்கு வெளிக்கிட்ட 303 தமிழர்கள் சிங்கப்பூர் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த பொழுது காப்பாற்றப்பட்டு வியட்நாமில் இடைத்தங்கல் முகாமில் வைக்கப்பட்டார்கள். அவர்களில் ஒரு தொகுதியினர் நாடு திரும்பி விட்டார்கள். அவர்கள் விருப்பத்தோடு நாடு திரும்பவில்லை. இந்த நாட்டில் இருக்கப் பிடிக்காமல்தான் புலம்பெயர முயற்சித்தார்கள். அவ்வாறு திரும்ப விரும்பாதவர்கள் ஐநாவுக்கு மீண்டும் மீண்டும் மேன்முறையீடு செய்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய மேன் முறையீடுகளும் நிராகரிக்கப்பட்டிருப்பதாகத் தகவல். அவ்வாறு மேன்முறையீடு செய்த சிலர் நாட்டில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் சிலருடைய பரிந்துரைக் கடிதங்களையும் சமர்ப்பித்ததாக அறியமுடிகிறது. ஆனால் வியட்நாமில் தங்க வைக்கப்பட்டிருக்கும் தமிழ் புலம்பெயரிகளை,ஐநா,ஐ.ஓ.எம் போன்றன சட்டவிரோதக் குடியேறிகளாகத்தான் பார்க்கின்றன. அவர்களை அரசியற் காரணங்களுக்காக குடி பெயரை முற்பட்டவர்கள் என்று பார்க்கவில்லை என்று தெரிகிறது. அதனால் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடைய கடிதங்களை மேற்சொன்ன அனைத்துலக நிறுவனங்கள் பொருட்படுத்தவில்லை. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் படிப்படியாக நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். புலம்பெயரிகளின் விடயத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகளை உலகப்பொது அமைப்புக்கள் பொருட்படுத்தவில்லை என்று தெரிகிறது. அதாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகளுக்கு உலகப் பொது அமைப்புகள் கொடுக்கும் மரியாதை அவ்வளவுதான். அப்படியென்றால் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஐநா போன்ற கட்டமைப்புகளின் மீதும் உலகின் வெளியுறவு கட்டமைப்புகளின் மீதும் எவ்வாறான செல்வாக்கைச் செலுத்த முடியும்? இதுதொடர்பாக தமிழ்க் கட்சிகளிடம் ஏதாவது வழிவரைபடங்கள் உண்டா? அரசாங்கத்தைப் பகைத்துக் கொண்டு தமிழர்களை அரவணைக்க வேண்டிய தேவை உலகில் எந்த ஒரு அரசுக்காவது உண்டா? அரசுகள் எது பலமோ,எது தேவையோ அதைத்தான் நாடிவரும். எங்கே நீதி இருக்கிறது என்று பார்த்து நாடி வருவதற்கு பூமியொன்றும் தேவ ராஜ்ஜியம் அல்ல. தமிழ் மக்கள் தமது பேர பலத்தை அதிகப்படுத்த வேண்டும். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணியை பெரும்பாலான தூதரகங்களும் ஐநாவும் ஆர்வத்தோடு கவனித்தன. ஏன் தென்னிலங்கையில் ஏற்பட்ட தன்னெழுச்சி போராட்டங்களையும் வெளிநாட்டு தூதரகங்கள் ஆர்வத்தோடு கவனித்தன. ஆர்வத்தோடு கையாண்டன என்று கூடச் சொல்லலாம். தமிழ் மக்களுக்கான நீதியைப் பெறப்போவதாக கூறிக் கொள்ளும் கட்சிகள் முதலில் தொடர்ச்சியான போராட்டங்களை ஒழுங்கமைக்க வேண்டும். கடந்த 13 ஆண்டுகளில் வெற்றி பெற்ற எல்லா மக்கள் போராட்டங்களும் ஒரு கட்சிப் போராட்டங்கள் அல்ல. குடிமக்கள் சமூகங்களோடு இணைந்த பல கட்சிப் போராட்டங்கள்தான். எனவே போராடத் தெரியாத அல்லது போராட முடியாத கட்சிகள் கடையடைப்புக்கு அழைப்புவிடுகின்றன. அதேசமயம் அப்போராட்டம் பிழை என்று கூறும் கட்சியும் கடந்த 13 ஆண்டுகளாக சின்னப் பிள்ளைகளுக்கு கண்ணாடியில் நிலவை காட்டும் அரசியலைத்தான் செய்து கொண்டிருக்கிறது. https://www.nillanthan.com/6047/
  20. சிலை அரசியல் : அறிவும் செயலும் – நிலாந்தன். March 26, 2023 வடக்கில் கடந்த ஒரு கிழமைக்குள் மட்டும் மூன்றுக்கு மேற்பட்ட சிலைகள் திறக்கப்பட்டுள்ளன. நடராஜர் சிலை,வள்ளுவர் சிலை, சங்கிலியன் சிலை, என்பவற்றோடு திருநெல்வேலி சந்தையில் மணிக்கூட்டுத் தூபி ஒன்று. இச்சிலைகளுக்குப் பின்னால் இருக்கும் அரசியலை கடந்த வாரக்கட்டுரையில் ஓரளவுக்குப் பார்த்தோம். இச் சிலைகளுக்குப் பின்னால் இருக்கும் மத அரசியலைத் தனியாயகப் பார்க்கவேண்டும். இன்று இக்கட்டுரையானது இச்சிலைகளின் அழகியல் அம்சங்களைக் குறித்த விவாதக் குறிப்புகள் சிலவற்றை முன்வைக்கின்றது. பொதுவெளிச் சிற்பங்கள் அவற்றை நிறுவும் நிறுவனங்கள் அல்லது தனி நபர்களின் விருப்பங்களை மட்டும் பிரதிபலிப்பவை அல்ல. அதைவிட ஆழமான பொருளில் குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தின் கலை மேதமையை, அழகியல் உச்சங்களை, அரசியல் கலாச்சார பல்வகைமையை வெளிக்காட்டுபவைகளாக அமைய வேண்டும்.ஒரு வெளிப்பார்வையாளர் கண்டு வியக்கும் அளவுக்கு அது ஒரு வெற்றிபெற்ற கலைப் படைப்பாக அமைய வேண்டும். இந்த விளக்கத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள சில பொதுச் வெளிச் சிற்பங்களை அல்லது சிலைகளை அல்லது தூபிகளைப் பார்க்கலாம். முதலில் மருதனார்மடம் ஆஞ்சநேயர் சிலையிலிருந்து தொடங்கலாம். இச்சிலை ஒரு வழிபாட்டு உருவாகத்தான் அந்த சந்தியில் நிறுத்தப்பட்டுள்ளது. இச்சிலையை உருவாக்கியவர்கள் அதனை ஒரு வழிபாட்டு நோக்கத்தையும் மனதில் வைத்து உருவாக்கியிருக்கிறார்கள் என்பது வெளிப்படையானது. அப்படியென்றால் தங்களுடைய இஷ்ட தேவதையை சிலையாக்கும்போது அதன் அழகியல் முழுமை குறித்து ஆகக்கூடிய பட்ச கவனத்தைச் செலுத்தியிருக்க வேண்டும். உதாரணமாக ஒருவர் தனக்கு மிகவும் பாசத்துக்குரிய தன் தாய்க்கு ஒரு சிலை வைக்கும்போது அச்சிலை தாயைப் போலவே இருக்க வேண்டும் என்றுதானே எதிர்பார்ப்பார் ? அது வேறு யாரையோ போல இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பாரா? இல்லைத்தானே? இது ஆஞ்சநேயருக்கும் பொருந்தும். ஆஞ்சநேயரின் ஆகிருதியைக் காட்டுவதுதான் சிலையின் நோக்கம் என்றால் அதற்கென்று செலவழிக்கத் தயாராக இருக்க வேண்டும். அதற்குரிய துறைசார் நிபுணர்களை அணுக வேண்டும்.அதை ஒரு தவமாகச் செய்ய வேண்டும். ஆனால் மருதனார்மடம் ஆஞ்சநேயர் தமிழ் அழகியலின் வீழ்ச்சியின் குறியீடாக நிற்கிறார். அவருடைய முகத்துக்கும் உடலுக்கும் இடையிலான அளவுப் பிரமாணம் பிழைத்து விட்டது. அதனால் அது ஒரு கறாளையான சிலை. இத்தனைக்கும் அச்சிலை இருப்பது யாழ் பல்கலைக்கழகத்தின் சித்திரமும் வடிவமைப்பும் துறை அமைந்திருக்கும் வளாகத்தில் இருந்து சில நூறு மீட்டர் தொலைவில்தான். ஆனால் பல்கலைக்கழகத்தின் இது சம்பந்தப்பட்ட துறைசார் ஆளுமைகளிடமிருந்து ஆலோசனைகள் பெறப்பட்டு ஆஞ்சநேயர் சிலை கட்டப்பட்டதாகத் தெரியவில்லை. அல்லது குறைந்தபட்சம் அந்த வளாகம் வளர்ச்சியடைந்த பின்னராவது அது தொடர்பான ஆலோசனைகள் பெறப்பட்டதாகத் தெரியவில்லை. ஆயின்,யாழ் பல்கலைக்கழகத்தின் சித்திரமும் வடிவமைப்பும் துறையில் கற்பிக்கப்படுகின்ற சிற்பம் தொடர்பான அழகியல் அறிவிற்கும் ஆஞ்சநேயருக்கும் ஒரு தொடர்பும் கிடையாது. அதாவது அறிவுகும் செயலுக்கும் இடையிலுள்ள இடைவெளி. இந்த இடைவெளி தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பெரும்பாலான பொதுச் சிற்பங்களுக்குப் பொருந்தும். மருதனார்மடம் ஆஞ்சநேயர் மட்டுமல்ல,ஆனையிறவுச் சிவனின் மீதும் அவ்வாறான விமர்சனங்கள் உண்டு. அதை உலோகத்தில் வார்த்திருந்தால் அதன் அழகு மேலும் பொலிந்திருக்கும் என்ற ஒரு கருத்து உண்டு. மேலும் அச்சிலையை வடிவமைக்கும் போதும் அது தொடர்பான துறைசார் நிபுணத்துவ ஆலோசனை பெறப்பட்டதா என்ற கேள்வி உண்டு. சிவ நடனம் எனப்படுவது கடந்த வாரக் கட்டுரையில் கூறப்பட்டதைப் போல ஒரு பிரபஞ்ச நடனம் என்று வர்ணிக்கப்படுகிறது. அப் பிரபஞ்ச அசைவை ஒரு அசையாச் சிலைக்குள் கொண்டு வருவதற்கு மகத்தான சிற்பிகள் தேவை. அசையாச் சிலை ஒன்று பிரபஞ்சப் பேரசைவைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். அது ஒர் அழகியல் சவால். சுந்தர ராமசுவாமி கூறுவதுபோல ஒரு வேட்டை நாயின் பாய்ச்சலை ஓர் ஒளிப் படத்துக்குள் கைப்பற்றுவது போல. ஆனால் நடராஜர் சிலையை வடிவமைக்கும்போது அது தொடர்பான துறைசார் நுட்பங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. உரிய துறைசார் நிபுணர்களோடு அது தொடர்பாக உரையாடப்பட்டதாகவும் தெரியவில்லை. இது ஆஞ்சநேயருக்கும் நடராஜருக்கும் மட்டுமல்ல,முத்திரச் சந்தையடி சங்கிலியன் சிலையும் உட்பட,தமிழில் பெரும்பாலான பொதுவெளிச் சிற்பங்களுக்கும் பொருந்தும். தமிழாராய்ச்சி மாநாட்டு நினைவு தூண்களில் தொடங்கி முள்ளிவாய்க்கால் நினைவுச் சிற்பம் வரையிலும் நிலைமை அப்படித்தான் காணப்படுகிறது. உரும்பிராயில் சிவகுமாரன் சிலையில் தொடங்கி வவுனியாவில் பத்மநாபா சிலை வரையிலும் நிலைமை அதுதான். அவரவர் தன் வசதிக்கேற்ப தன் அழகியல் புரிதலுக்கு ஏற்ப சிலைகளை உருவாக்குகிறார்கள். ஆனால் அது ஒரு மக்கள் கூட்டத்தின் கலை மேதமையை பிற நாட்டவர்கள் கண்டு பிரமிக்கும் அளவுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்ற அடிப்படை விஷயத்தைத் தவற விடுகிறார்கள். இதில் ஆகப்பிந்தியது கடந்த வாரம் திருநெல்வேலிச் சந்தியில் திறக்கப்பட்ட மணிக்கூட்டுடன் கூடிய ஓர் அலங்காரத்தூபி.அது யாழ் பல்கலைக்கழக சுற்றுச்சூழலுக்குள் காணப்படும் ஒரு சந்தி. அதுவும் பண்ணைச் சுற்று வளைவைப் போலவே பிறசமூகங்கள் புழங்கும் ஒரு சந்தி. யாழ்ப்பாணத்தின் உயர் கல்வி நிறுவனம் ஒன்றிற்கு மிக அருகில் காணப்படும் அச் சந்தியில் வைப்பதற்கு அந்த ஊரைச் சேர்ந்த முன்னோடிகள் அல்லது,நிறுவன உருவாக்கிகள் என்று கூறத்தக்க யாருடைய சிலையும் இல்லையா? கடந்த வாரம் திறக்கப்பட்ட சிறுதூபி தமிழ் மக்களின் அழகுணர்ச்சியை வெளிப்படுத்துகின்றதா? தமிழ்மக்களின் பெருமைகளைப் பிரதிநிதித் துவப்படுத்துகின்றதா? ஏன் அதிகம் போவான் யாழ்.பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டிருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம்கூட ஒர் அழகியல் முழுமை என்று கூற முடியாது. அதிர்ச்சியூட்டும் நவீனம் என்று கூற முடியாது. உலகிலுள்ள இதுபோன்ற நினைவுச் சின்னங்களோடு ஒப்பிடுகையில் அது மிகவும் சாதாரணமானது. ஒரு பல்கலைக்கழக வளாகத்தில் காணப்படும் நினைவுச் சின்னத்தின் நிலைமை அதுவென்றால், அதுவும் இனப்படுகொலைக்கு எதிரான நீதியைக் கேட்டுப் போராடும் ஒரு மக்கள் கூட்டம் தனது உயர்கல்வி நிறுவனத்தில் அப்படித்தான் ஒரு நினைவுத் தூபியைக்க கட்டுமென்றால், அதிலிருந்து சற்றுத் தள்ளியிருக்கும் ஏனைய பொது வெளிச்சிற்பங்கள் பற்றி அதிகம் பேசத் தேவையில்லை. இது ஒரு பொதுவான போக்காக தொடர்ந்து வளர்ந்து வருகிறது. ஈழத்தமிழர்கள் மத்தியில் பொதுவெளிச் சிற்பங்களை உருவாக்கும் பலரும் அது தொடர்பான துறைசார் நிபுணர்களை அணுகுவதில்லை என்பதைத்தான் பெரும்பாலான சிற்பங்கள் நமக்கு உணர்த்துகின்றன. இதில் மிக அருந்தலான புறநடைகளை உண்டு. அப்புறநடைகள் யாவும் அதற்குரிய துறைசார் அறிவுடையோரால் உருவாக்கப்பட்டவை. இவ்வாறான சிலைக் கலாசாரத்தின் பின்னணியில்,சிலை அரசியலின் பின்னணியில்,பண்ணைச் சுற்றுவளைவில் நிறுவப்பட்டிருக்கும் திருவள்ளுவரை இனிப் பார்ப்போம்.அச்சிலைக்குப் பின்னால் உள்ள மொழி,மத அரசியல் குறித்து ஏற்கனவே சமூகவலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பரவலாக வாதப்பிரதிவாதங்கள் போய்க்கொண்டிருக்கின்றன. இங்கு அச்சிலையின் அழகியல் அம்சங்களை மட்டும் கவனிப்போம். கண்ணாடி நாரிழையில் செய்யப்பட்ட அச்சிலையானது தமிழ்நாட்டைச் சேர்ந்த விஜிபி குழுமத்தின் தலைவர் சந்தோசம் அவர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டதாகும். இலங்கையின் எல்லா மாவட்டங்களுக்கும் மொத்தம் 18 சிலைகளை அவர் வழங்கியிருக்கிறார். அதில் இரண்டு வடக்கு கிழக்குக்கு. ஒன்று திருகோணமலைக்கு. மற்றது யாழ்ப்பாணத்திற்கு. இச்சிலைகள் யாவும் வழமையானவை. அவற்றின் அழகியல் அம்சங்கள் குறித்து விவாதிக்க அதிகமில்லை. ஆனால் பண்ணைச் சுற்று வளைவில் அச்சிலை வைக்கப்பட்டிருக்கும் இடம்,அதன் பின்னணி என்பவற்றைத் தொகுத்து பார்க்கும் போது என்ன தோன்றுகிறது? அச்சிலைக்காகக் கட்டப்பட்ட பீடத்தோடு சேர்த்துப் பார்க்கும்போது அச்சிலை சிறுத்துப்போய்த் தெரிகிறது. முத்தவெளி, டச்சுக்கோட்டை என்பவற்றின் பின்னணியில் அச்சிலையை நிற்கின்ற வள்ளுவராக வடிவமைத்து இருந்திருந்தால் ஒரு பிரமாண்டத்தை காட்டியிருக்கலாம். ஆனால் வீதிச்சுற்று வளைவில் எதைக் கட்டினாலும் அதற்குப் போக்குவரத்துத் துறைசார் வரையறைகள் உண்டு என்று சுட்டிக் காட்டப்படுகிறது. அதன்படி ஒரு குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் எதையும் கட்ட முடியாது. ஆயின் கிடைக்கும் வரையறுக்கப்பட்ட வெளிக்குள் எப்படிப்பட்ட ஒரு சிலையை ஸ்தாபிப்பது என்பதில் அரசியல் மற்றும் அழகியல் தெரிவுகள் இருக்க வேண்டும். கோட்டை,முத்தவெளி என்பவற்றின் பின்னணியில் வைத்துப் பார்க்கும்போது அச்சிலை போதாது என்ற உணர்வே எழுகிறது. இதுதான் பிரச்சினை. இதுதொடர்பில் துறைசார் நிபுணர்களின் அறிவை யாரும் பெற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. சிலைகளின் விடயத்தில் மட்டுமல்ல, பொதுவெளிச் சிற்பங்கள்,பொதுக் கட்டங்கள் போன்றவற்றில் மட்டுமல்ல,அரசியலும் உட்பட ஈழத்தமிழர்களின் பெரும்பாலான பொதுவிடயங்களில் அறிவுக்கும் செயலுக்கும் சம்பந்தமே இல்லை. அறிவு தன் பாட்டில் பாடப்புத்தகங்களில் இருக்கின்றது. செயல் தன்பாட்டில் நடக்கின்றது. அறிவுக்கும் செயலுக்கும் இடையிலான இந்த இடைவெளி அதிகமாக வெளிப்படும் இடமும் அதிக நாசத்தை விளைவித்த இடமும் எதுவென்றால் தமிழ் அரசியல்தான். சிலைகள் கோணல்மாணலாக வருவதோ அல்லது பொருத்தமற்ற இடங்களில் பொருத்தமற்ற அளவுகளில் நிர்மாணிக்கப்படுவதோ அழகியற் சிதைவு மட்டுமே. பண்பாட்டுச் சிதைவு மட்டுமே. ஆனால் அரசியலில் அவ்வாறு துறைசார் நிபுணத்துவத்தைப் புறக்கணிப்பது அல்லது சட்டக் கண்களால் எல்லாவற்றையும் அளப்பது என்பது எத்துணை பாரதூரமானது என்பதனைக் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாகக் கண்டோம். அறிவையும் செயலையும் பொருத்தமான விதங்களில் இணைக்கத் தவறிய ஒரு சமூகம் இப்பொழுது சிலைகளை வைத்துவிட்டு ஆளையாள் தின்று தீர்க்கின்றதா? http://globaltamilnews.net/2023/188979/
  21. குரங்காட்டி அரசியல் ? - நிலாந்தன் குரங்குகளை சீனாவுக்கு விற்கும் விடயம் இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் செயலுக்குப் போகவில்லை. ஆனால் குரங்குகள் நாட்டின் தலைப்புச் செய்திகளாகிவிட்டன. கடந்த வாரம் இலங்கைத்தீவில் அதிகம் மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டது குரங்குகளுக்கா? இலங்கையில் மொத்தம் 30 லட்சம் குரங்குகள் உள்ளதாக கணிப்பிடப்படுகிறது. ஆனால் இக்குரங்குகள் அண்மை ஆண்டுகளில் விவசாயத்துக்கு பெருநாசத்தை விடுவிப்பதாக விவசாயிகள் முறையிடுகின்றார்கள். குறிப்பாக ஆற்றங்கரைகளில் பயிர் செய்பவர்கள் குரங்குகளினால் அதிகம் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. இதனால் விவசாயிகளில் ஒரு பகுதியினர் யானை வேலியை அமைத்து வருவதாகவும் ஒருமுறை அந்த வேலியில் முட்டினால் குரங்கு மீண்டும் அந்த பகுதிக்கு வரத் தயங்கும் என்றும் அவதானிக்கப்பட்டுள்ளது. மன்னாரைச் சேர்ந்த ஒரு அரசியல் செயற்பாட்டாளர்(அதேசமயம் விவசாயப் பாரம்பரியத்தில் வந்தவர்)சொன்னார், தங்களுடைய ஊரில் முன்பு குரங்குகளின் வாயை கட்டும் நுட்பம் தெரிந்த மாந்திரீகர்கள் இருந்ததாக. அவர்கள் மரங்களில் ஏறி எதையோ செய்வார்களாம். அதன் பின் குரங்குகள் அந்த மரங்களுக்கு வந்தாலும் காய்கறிகளில் வாய் வைப்பது இல்லை என்று அவர் சொன்னார். அது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்க முடியாத ஒரு நம்பிக்கை. ஆனால் காட்டோரமாக விவசாயம் செய்பவர்கள் சில சமயங்களில் குரங்குத் தொல்லை தாங்க முடியாத போது வேட்டைத் துவக்கினால் குரங்குகளைக் கொல்வதும் உண்டு. கொல்லப்பட்ட குரங்கின் உடலை அப்பகுதியில் தொங்கவிடுவார்கள். அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு குரங்கின் வருகையை தடுக்கலாம் என்று அவர்கள் நம்பினார்கள். விவசாயிகள் மட்டுமல்ல காட்டுக்கு அருகே இருக்கும் கிராமவாசிகளும் வீடுகளில் பயிர்பச்சை வைக்க முடியாத ஒரு நிலைமை காணப்படுவதாக முறையிடுகிறார்கள். குறிப்பாக வன்னிப்பெருநிலத்திலும் யாழ்ப்பாணம் தென்னராட்சியிலும் இந்த நிலைமை உண்டு. வீட்டில் ஆசையாக ஒரு பயிர் பச்சையை வைத்தால் குரங்கு அதை பிடுங்கிச் சாப்பிட்டு விடுகிறது என்று சொல்லுகிறார்கள். மாங்காய்களை மட்டுமல்ல பயன்தரும் மரங்களின் துளிர்களையெல்லாம் குரங்குகள் சாப்பிட்டு விடுவதாகவும் வன்னியில் முறைப்பாடு உண்டு. இலங்கைத் தீவின் பொருளாதாரத்தை எல்லா அதிர்ச்சிகளின் போதும் தாங்கிப் பிடித்தது விவசாயம்தான். அந்த விவசாயத்துக்கு குரங்கு ஒரு எதிரியாக மாறியிருப்பதாக விவசாயிகள் முறைப்பாடு செய்கிறார்கள். அதுதொடர்பாக புள்ளிவிபரங்களும் உண்டு. புள்ளிவிபரங்களால் இக்கட்டுரையை நிரப்பக் கூடாது என்பதனால் அதைத் தவிர்க்கிறேன். அரசாங்கம் கடந்த பெப்ரவரி மாதம் குரங்கை ஒரு பீடை என்று அறிவிக்கும் அளவுக்கு குரங்குகள் விவசாயத்துக்கு பாரதூரமான சேதத்தை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டன. அண்மையில் அரசாங்கம் பாதுகாக்கப்பட வேண்டிய விலங்குகள் பட்டியலில் இருந்து குரங்குகளை நீக்கும் அளவுக்கு குரங்குகள் ஆபத்தானவைகளாக மாறிவிட்டன. எனவே பீடையாக மாறிய குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதிசெய்து டொலரைச் சம்பாதிக்க அரசாங்கம் முடிவெடுத்ததா? குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவது குறித்து சீனா மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கிடையில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என்றும் சீன தனியார் நிறுவனமொன்றே இதற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். விவசாயத்துறை அமைச்சருக்கு சீனத் தனியார் நிறுவனமொன்றிடமிருந்து மிருகக்காட்சிசாலைகளுக்காக குரங்குகளைப் பெற்றுக் கொள்ள முடியுமா என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை தொடர்பில் அவர் வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட விடயத்துடன் தொடர்புடைய ஏனைய தரப்பினரது பங்குபற்றலுடன் குழுவொன்றை நியமித்து ஆராய்ந்து வருவதாக அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். எந்தவொரு நாட்டுக்கும் விலங்குகளை சாதாரணமாக பரிமாற்றம் செய்ய முடியாது. எம்மை விட மிகக் கடுமையான சட்ட ஏற்பாடுகள் சீனாவில் காணப்படுகின்றன. எனவே சில ஊடகங்களில் காண்பிக்கப்படுவதைப் போன்று, அரசாங்கம் விலங்குகளை தான் விரும்பியபடி இறைச்சிக்காக ஏனைய நாடுகளுக்கு வழங்கமுடியாது என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிடும் அந்த சீன நிறுவனத்தின் பெயர் “ஷி செங் வூ யூ அனிமல் பிரீடிங்” என்று கூறப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் பத்தாம் தேதி அந்த நிறுவனத்திடம் இருந்து அப்படி ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. சீனாவில் தனியார் நிறுவனங்கள் என்று அழைக்கத்தக்க சுயாதீனமான நிறுவனங்கள் உண்டா? என்ற கேள்வி இங்கு முக்கியம். மேலும் இது தொடர்பில் கடந்த புதன்கிழமை கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் ருவிற்றரில் பிரசுரித்த தகவலின்படி குரங்கு வியாபாரத்தை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. ஆனால்,இலங்கைத்தீவின் பொறுப்புவாய்ந்த அமைச்சர்கள் தெரிவித்துவரும் தகவல்களை வைத்துப் பார்த்தால் இந்தக் கதை நெருப்பில்லாமல் புகையவில்லை என்று தெரிகிறது. ஒன்றில் எதிர்ப்பு வந்தபடியால் அரசாங்கம் பின்வாங்குகிறது என்று பொருள். அல்லது அரசாங்கம் ஏதோ ஒரு குரங்கு வித்தை காட்டுகிறதா? இதுதொடர்பில் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர என்னென்ன சொன்னார்? இலங்கையிலிருந்து குரங்குகளை வாங்கச் சீனா தயாராகி வருவதாக தகவல் கிடைத்ததையடுத்து,அமெரிக்காவும் குரங்குகளைப் பெற விண்ணப்பித்துள்ளது என்று அவர் சொன்னார். எனினும்,அமெரிக்காவிற்குத் தேவையான குரங்குகளின் எண்ணிக்கை இதுவரை அறிவிக்கப்படவில்லை. சீனாவுக்கு 100,000 குரங்குகளை வழங்குவதற்கான வழிமுறைகளை தயாரிப்பதற்கான குழுவொன்றை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றுமவர் சொன்னார். விலங்குகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதே பொருத்தமானது,விலங்குகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று எவரும் கூறவில்லை எனவும் அவர் சொன்னார். இலங்கையில் உள்ள குரங்கு ஒன்றை பிடிப்பதற்கு மட்டும் சுமார்,5 ஆயிரம் ரூபாய் வரை செலவிட சீன நிறுவனம் தயாராகவுள்ளதாகவும் அமைச்சர் சொல்லியிருந்தார். குரங்கொன்றிற்காக சுமார் 30 ஆயிரம் ரூபா தொடக்கம் 50 ஆயிரம் ரூபாய்வரையில் சீன நிறுவனம் செலவிட வேண்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும்,அதேவேளை,குரங்குகளை சீனாவுக்கு கொண்டு சென்று இறைச்சிக்காக பயன்படுத்தபோவதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்றும் அவர் சொல்லியிருந்தார். சீனா குரங்குகளை மிருகக்காட்சி சாலைகளில் பாதுகாப்பதற்கென்றே கேட்டுள்ளதாகவும் சொன்ன அமைச்சர்,குரங்குகளைப் பிடித்து, தனிமைப்படுத்தி,அவற்றுக்கு நோய்த்தொற்று உண்டா என்பதனை பரிசோதித்து,கூடுகளில் அடைத்து,சீனாவிற்கு கொண்டு செல்வதற்கான முழுச்செலவையும் சீனாவே ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். இலங்கையில் இருந்து குரங்குகளை 50 ஆயிரம் ரூபா செலவளித்து சீனாவிற்கு கொண்டு சென்று, அந்த குரங்கை இறைச்சிக்காக பயன்படுத்துவதாயின் 50 ஆயிரம் ரூபாய்க்குமேல் லாபம் வைத்து ஒரு லட்சம் ரூபாய்க்கே விற்க வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறிய அமைச்சர், ஒரு லட்சம்ரூபாய் கொடுத்து குரங்கை வாங்கிச் சமைப்பதற்கு சீனர்கள் தயாராக இருக்க மாட்டார்கள் என்றும் சுட்டிக்காட்டியிருந்தார். எனினும்,இலங்கையிலிருந்து அனுப்பப்படும் குரங்குகள் சீனாவின் ஆய்வு கூடங்களுக்கு அனுப்பப்படலாம் என்று இலங்கை சுற்றாடல் நீதி அமைப்பின் தலைவர் ஹேமந்த விதானகே கூறுகிறார். இலங்கையிலிருந்து அனுப்பப்படும் குரங்குகளை அழகுசாதனப் பொருட்களைச் சோதனை செய்வதற்கும் மருத்துவப் பரிசோதனைகளிற்கும் சீனா பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறுகிறார். மிருகக்காட்சி சாலைகளிற்கான சர்வதேச வரைவிலக்கணங்களின்படி, சீனாவில் 18 மிருகக்காட்சி சாலைகளே உள்ளன. ஒரு மிருகக்காட்சி சாலைக்கு 5,000 குரங்குகள் என்று கணக்கிட்டாலும் சீனா தெரிவிப்பது நம்பக்கூடிய விடயமாக இல்லை என்றும்,இலங்கை அரசாங்கம் ஒரு இலட்சம் குரங்குகளை சீனாவிற்கு அனுப்பினாலும் இலங்கையில் குரங்குகளின் எண்ணிக்கை குறையப்போவதில்லை என்றும் அவர் கூறுகிறார். “குரங்குகளால்;பயிர்களின் உற்பத்திக்கும் விவசாயிகளுக்கும் ஏற்பட்டுவரும் பாதிப்புகள் பாரதூரமானவை. ஆனால், கடந்த சில தசாப்தங்களாகக் குரங்குகளின் கணக்கெடுப்பு நிகழாத நிலையில் குரங்குகளை ஏற்றுமதி செய்ய முற்படுவது இதற்கான தீர்வாக அமையாது. மாறாக,பின்நோக்கிச் சுடுவது போன்று பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும். குரங்குகள் தமது உணவு முறையால் காட்டுவெளியெங்கும் விதைகளைத் தூவி மரங்களை இயற்கையாகவே நடவு செய்கின்றன. இதனால், காடுகளின் கட்டுமானத்தில் மையக்கல் இனங்களாகக் (key stone species) கருதப்படும் இக்குரங்குகள் அழிந்தால் காட்டுப் பரப்பளவு சுருங்கி இயற்கைச்சூழலின் சமநிலை குலையும். காபன் உறிஞ்சிகளான காடுகள் சுருங்குவதால் பாதகமான காலநிலை மாற்றங்கள் விரைவுபடுத்தப்பட்டு விவசாயமும் வீழ்ச்சியுறும். செங்குரங்குகள் இலங்கைக்கு மட்டுமே உரித்தான ஓர் உள்நாட்டு இனம். இதனைச் சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் அழிவை எதிர்நோக்கியுள்ள விலங்குகளில் ஒன்றாகப் பட்டியலிட்டுள்ளது. சீனாவைப் போன்றே இலங்கையும் அழிந்து வரும் காட்டுயிரிகளின் சர்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்நிலையில் எதனையுமே விற்று டொலர்களாக்கும் முனைப்பில் உள்ள அரசாங்கம் சட்டபூர்வமான முறையில் நடைமுறைச்சாத்தியமற்ற செங்குரங்குகளின் ஏற்றுமதி குறித்துத் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதை உடனடியாக நிறுத்துதல் வேண்டும். கூடவே,குரங்குகளினால் விவசாயத்துறைக்கு ஏற்பட்டுவரும் பாதிப்புகளைக் களைய ஒருங்கிணைந்த மாற்றுப் பொறிமுறையொன்றையும் விரைந்து நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்”…என்று தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் கூறுகிறார். ஏற்றுமதி செய்யப்படும் குரங்குகள் சீனாவில்,மிருகக்காட்சி சாலைகளில் பேணப்படுமென்று கூறப்பட்டாலும், சீனாவில் குரங்கு இறைச்சி சாப்பிடும் பாரம்பரியம் இருப்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது. குறிப்பாக குரங்கின் மூளையிலிருந்து தயாரிக்கப்படும் உணவு சீனாவில் அதிகம் விலை கூடியதாகவும் பெரும் செல்வந்தர்களால் மட்டும் நுகரப்படக்கூடிய ஒன்றாகவும் காணப்படுகிறது. இலங்கையில் இருந்து ஏற்றுமதியாகும் குரங்குகள் சீனாவின் விலங்குகள் காப்பகத்துக்கு எடுத்துச் செல்லப்படுமா அல்லது சமையலறைக்கு எடுத்துச் செல்லப்படுமா என்ற சந்தேகத்தை ஒரு பகுதியினர் கிளப்புகிறார்கள். இலங்கைத்தீவு இதுவரையிலும் பணிப்பெண்களையும் வீட்டு உதவியாட்களையும் நாட்டுக்கு வெளியே அனுப்பி வருமானத்தைப் பெறுகின்றது.இப்பொழுது குரங்குகளையும் அனுப்பினால் என்ன? என்று சிந்திக்கும் ஒரு நிலைமை வந்திருக்கிறதா? அரசாங்கம் உண்மையாகவே குரங்குகளை அனுப்புமா இல்லையா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஆனால் ஐ.எம்.எஃப்பின் நிபந்தனைகளுக்கு கீழ்படிந்த அரசாங்கம் பொதுமக்களை வருத்தும்பொழுது கொதித்து எழும் சிங்கள மக்களைத் திசைதிருப்ப குரங்குவிற்பனை விவகாரம் சில சமயம் அரசாங்கத்திற்கு உதவுமா? அதாவது அரசாங்கம் ஒரு குரங்காட்டியின் வேலையைச் செய்கின்றதா? 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் திகதி முதல் மத நிகழ்வுகளைத் தவிர காலி முகத்திடலில் இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் மற்றும் மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு அனுமதியில்லை என்று அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இது மே நாள் ஊர்வலங்களும் உட்பட எதிர்க் கட்சிகளின் ஆர்ப்பாட்டங்கள் காலிமுகத்திடலை நோக்கி அதாவது தலைநகரில் தூதரகங்களின் பார்வைக்குள் வருவதைத் தடுக்கும் உள்நோக்கமுடையது. அதாவது ஆர்பாட்டங்களையிட்டு அரசாங்கம் உசாராகக் காணப்படுகிறது. எனவே மக்களுடைய கவனத்தைத் திட்டமிட்டுக் குழப்பவேண்டும். அதற்கு குரங்குகள் உதவுமா? நவீன ஊடகக் கலாச்சாரம் எனப்படுவது ஒரு வகையில் வாசகர்களையும் பார்வையாளர்களையும் குரங்கு நிலையில்தான் வைத்திருக்கின்றது. திட்டமிட்டு ஒரு ட்ரெண்டை செற் பண்ணுவதன்மூலம் ஒரு சமூகத்தின் கூட்டுக் கவனக் குவிப்பை அடிக்கடி மாத்தலாம். குரங்கு கொப்புக்கு கொப்பு தாவுவதைப் போல. இந்த அடிப்படையில் சிந்தித்தால் ஐ.எம்.எஃப்பின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும்போது,பொதுமக்கள் மத்தியில் ஏற்படக்கூடிய கோபத்தையும் விரக்தியையும் திசைதிருப்ப குரங்கும் அரசாங்கத்துக்கு உதவுமா? https://www.nillanthan.com/6023/
  22. மேலும் ஒரு கோவிலுக்கு ஆபத்து? நிலாந்தன். April 16, 2023 கடந்த திங்கட்கிழமை பங்குனித் திங்களன்று நெடுங்கேணியில் உள்ள நொச்சிக்குளம் அம்மன் கோவிலை வழிபடச் சென்ற பக்தர்களைத் தொல்லியல் திணைக்களம் தடுத்து நிறுத்தியதாக செய்திகள் வெளியாகின. பக்தர்களைப் பொறுத்தவரை அது கோவில். தொல்லியல் திணைக்களமோ அதை ஒரு தொல்லியல் அமைவிடமாக கருதுகிறது. நாட்டின் தொல்லியல் சட்டங்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும் இறுக்கமானவை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறுகிறார். ஒரு மக்கள் கூட்டத்தால் தொடர்ச்சியாக வழிபடப்படும் ஒரிடத்தை தொல்லியல் திணைக்களம் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது என்றால் முதலில் அந்த வழிபாட்டிடத்தை நிர்வகிக்கும் தனிநபர் அல்லது நிர்வாக கட்டமைப்பிடம் அனுமதி பெறப்பட வேண்டும் என்று துறைசார் வல்லுனர்கள் கூறுகிறார்கள். அழிவடையும் நிலையில் உள்ள ஒரு மரபுரிமை சின்னத்தை தொல்லியல் திணைக்களம் பொறுப்பேற்பது வேறு, மக்களால் தொடர்ந்து வழிபடப்படும் ஓரிடத்தை பொறுப்பெடுப்பது வேறு என்றும் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். பொலநறுவையில் காணப்படும் பாழடைந்த பல சிவாலயங்களில் இரண்டாவது சிவனாலயம் என்று அழைக்கப்படுவது இப்பொழுது பக்தர்களால் வழிபடப்படுகிறது. அதற்கு பொறுப்பாக ஒரு சிங்கள பூசாரி இருக்கிறார். தமிழ் சிங்கள பக்தர்கள் அங்கே போவதுண்டு. அது தொல்லியல் விதிகளுக்கு முரணானது என்றாலும் அங்கே ஒரு நெகிழ்ச்சிப் போக்கு கடைப்பிடிக்கப்படுகிறது என்பதையும் துறைசார் புலமையாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஒரு மக்கள் கூட்டத்தின் வழிபாட்டு உரிமையும் தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரமும் முட்டும் இடங்கள் இவை. இலங்கைத் தீவைப் பொறுத்தவரை தொல்லியல் திணைக்களத்தை தமிழ் மக்கள் ஒரு நட்பான திணைக்களமாகப் பார்க்கவில்லை. தமிழ் மரபுரிமைச் சொத்துக்களை தொல்லியல் திணைக்களம் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது என்பது சிங்கள பௌத்த மயமாக்கலின் ஒரு பகுதி என்று தமிழ் மக்கள் சந்தேகிக்கின்றார்கள். குருந்தூர் மலையிலும் வெடுக்குநாறி மலையிலும் விவகாரம் அப்படித்தான் காணப்படுகிறது. கன்னியா வெந்நீர் ஊற்றிலும் நெடுந்தீவில் வெடியரசன் கோட்டையிலும் நிலைமை அப்படித்தான். தொல்லியல் திணைக்களத்தால் பராமரிக்கப்படும் சிதைந்த அல்லது சிதைந்து செல்லும் ஒரு மரபுரிமைச் சொத்தை பக்தர்கள் அணுகும் பொழுது அங்கே துறைசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ற வரையறைகள் இருப்பது நியாயமானது. ஆனால் இலங்கைத்தீவில் நிலைமை அவ்வாறல்ல. தமிழ் மக்கள், தொல்லியல் திணைக்களத்தை சிங்களபௌத்த மயமாக்கலின் கருவியாகவே பார்க்கிறார்கள். கலாநிதி.யூட்.பெர்னாண்டோ,பேராசிரியர்.நிரா விக்கிரமசிங்க போன்ற சிங்கள புலமையாளர்களே இலங்கைத்தீவின் தொல்லியல் துறையைக் கடுமையாக விமர்சித்துள்ளார்கள். கலாநிதி.யூட்.பெர்னாண்டோ “மரபுரிமையும் தேசிய வாதமும்–சிறீலங்காவின் விஷம்” என்ற தலைப்பில் 2015மார்ச் மாதம் “கொழும்பு ரெலிகிராப்”பில் மிக விரிவான ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்..(https://www.colombotelegraph.com/index.php/heritage-nationalism-a-bane-of-sri) தொல்லியல் திணைக்களம் மட்டுமல்ல மத்திய அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ்வரும் எல்லாத் திணைக்களங்களுமே சிங்கள பௌத்த அரசுக் கொள்கையின் உபகரணங்கள்தான். முப்படைகளும் உட்பட நீதிபரிபாலனக் கட்டமைப்பு,போலீஸ் திணைக்களம் உட்பட அரசுத் திணைக்களங்கள் அனைத்தும் அரசின் உபகரணங்கள்தான். அரசின் கொள்கை எதுவோ அதை அவை அமுல்படுத்தும். அவற்றுக்கெல்லாம் சுயாதீனம் இருப்பதாக கற்பிக்கப்படுவது ஒரு மாயை. எனவே அரசுக் கொள்கை எதுவோ அதைத்தான் அரச உபகரணங்கள் முன்னெடுக்கும். இப்பொழுது விடயம் தெளிவாக தெரிகிறது அல்லவா? அரசின் கொள்கை சிங்கள பௌத்த மயமாக்கல் என்றால் திணைக்களங்கள் அதைத்தான் அமுல்படுத்தும். நாடு ஐ.எம்.எஃப்பின் நிபந்தனைகளுக்கு உட்பட்டதன் விளைவாக சிங்களமக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கக்கூடிய அதிருப்தி,கோபம் என்பவற்றைத் திசை திருப்புவதற்கு தமிழ்மக்கள் மீதான தொல்லியல் ஆக்கிரமிப்பை தூண்டி விட்டால் போதும். சிங்களப் பொதுஜனத்தின் கோபத்தை இலகுவாகத் திசைதிருப்பலாம். அரசாங்கத்தின் இந்தக் கொள்கையின் விளைவாகத்தான் அண்மைக்காலமாக தமிழ் மக்களின் வழிபாட்டுரிமை, மரபுரிமை போன்றன தீவிரமாக கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன. அதற்கு எதிராகத் தமிழ் மக்கள் ஆங்காங்கே எதிர்ப்பைக் காட்டி வருகிறார்கள். உலகில் பெரும்பாலான நாடுகளில் தொல்லியல் துறை எனப்படுவது தனது நாட்டின் பெருமைமிகு மரபுரிமைச் சொத்துக்கள் என்று கருதப்படும் இடங்களை பாதுகாக்கின்றது. அதனை அவர்கள் இனரீதியாகவோ மதரீதியாகவோ பார்ப்பதில்லை. பதிலாக அதைத் தமது நாட்டின் மரபுரிமைச் சொத்து என்றுதான் பார்க்கிறார்கள். அந்த அடிப்படையில் அதைப் பாதுகாக்கின்றார்கள் என்பதனை வரலாற்று அறிஞர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். உதாரணமாக இந்திய நாகரீகத்தின் தொட்டில்களில் ஒன்றாகக் கருதப்படும் மொகஞ்சதாரோ ஹரப்பா பாகிஸ்தானின் எல்லைக்குள்தான் உண்டு. ஆனால் இஸ்லாமிய நாடாகிய பாகிஸ்தான் அந்த அகழ்வாராய்ச்சிப் பிரதேசத்தை தனது மரபுரிமை சொத்தாகப் பேணிப் பாதுகாக்கின்றது. உலகின் மிகப்பெரிய முஸ்லிம் சனத்தொகை இந்தோனேசியாவில் உண்டு. அங்கே காணப்படும் மிகப்பெரிய புத்தர் சிலைகளை அங்குள்ள இஸ்லாமிய அரசு பாதுகாக்கின்றது. ஆனால் இலங்கைத் தீவிலோ தொல்லியல் துறை எனப்படுவது ஆப்கானின் தாலிபான்களைப் போல செயல்படுகின்றதா என்ற கேள்வி தமிழர்கள் மத்தியில் உண்டு. ஆப்கானில் உள்ள பிரம்மாண்டமான புத்தர் சிலைகளை தாலிபான்கள் சேதப்படுத்தியதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இலங்கைத் தீவின் அரசாட்சி பாரம்பரியத்தைப் பொறுத்தவரை இது ஒரு வழமைதான். 2009க்குமுன் அரச படைகள் சிங்களமயமாக்கலை போர் என்ற வடிவத்தில் முன்னெடுத்தன. 2009க்குப்பின் திணைக்களங்கள் அதனை வேறுவடிவத்தில் முன்னெடுக்கின்றன. அவ்வளவுதான் வித்தியாசம். சிங்கள பௌத்த மயமாக்கல் 2009க்கு முன்பு முழு வேகத்தில் இடம்பெற முடியவில்லை. ஏனென்றால் போர் இருந்தது. ஆனால் இப்பொழுது முழு நாடுமே வெற்றி கொள்ளப்பட்ட நிலம். எனவே எங்கெல்லாம் சிங்கள பௌத்த மயமாக்கலைச் செய்யலாமோ அங்கெல்லாம் செய்யலாம்.திணைக்களங்கள் மட்டுமல்ல,மாகாண ஆளுநர்களை வைத்தும் செய்யலாம். மாகாண நிர்வாகம் இயங்காத ஓர் அரசியற் சூழலில்,உள்ளூராட்சி சபைகள் இயங்காத ஓர் அரசியற் சூழலில்,சிங்களபௌத்த மயமாக்கலை இலகுவாக முன்னெடுக்கலாம். அதுதான் இப்பொழுது நடக்கிறது. இந்த சிங்களபௌத்த மயமாக்கலைத் தடுப்பதற்கு தமிழ்மக்கள் மத்தியில் வலிமையான எதிர்ப்பு இல்லை. தமிழ்மக்கள் காட்டி வரும் எதிர்ப்புக்கள் அதைத் தடுக்க போதுமானவை அல்ல. அவ்வாறு எதிர்க்க முடியாத ஒரு சூழலில்,அல்லது எதிர்ப்பைக் காட்டவல்ல வலிமையான கட்சிகளின் கூட்டோ மக்கள் இயக்கமோ இல்லாத ஒரு வெற்றிடத்தில்,தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் இந்தியாவைத் தஞ்சம் அடைகின்றார்கள். இந்துக்களின் மரபுரிமைச் சின்னங்கள் அழிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி பாரதிய ஜனதா அரசாங்கத்தின் பாதுகாப்பைப் பெற முயற்சிக்கின்றார்கள். இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதாக் கட்சி இந்த விடயத்தில் இதுவரையிலும் உத்தியோகபூர்வமாக கருத்து தெரிவித்ததாக தெரியவில்லை. இந்திய அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இரு நாடுகளுக்குமிடையிலான உறவு பொறுத்து”தண்ணீரைவிட ரத்தம் அடர்த்தியானது” என்று கூறுகிறார். இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவரான மிலிந்த மொறகொட சிங்களபௌத்த பாரம்பரியத்திற்கும் இந்தியாவுக்கும் இடையிலே எப்படிப் பிணைப்புகளை ஏற்படுத்தலாம் என்று சிந்தித்து உழைக்கிறார். அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவுகள் என்று பார்த்தால், இந்த விடயத்தில் சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்புக்கும் இந்திய அரசுக் கட்டமைப்புக்கும் இடையே ஒப்பீட்டளவில் நெருக்கமும் இடையூடாட்டமும் அதிகம். அவ்வாறான கட்டமைப்புசார் உறவுகள் தமிழ் மக்களுக்கு இல்லை. இந்த வெற்றிடத்தில்தான் தமிழ்மக்கள் நாட்டுக்குள்ளேயும் நாட்டுக்கு வெளியேயும் உதிரிகளாக பாரதிய ஜனதா அரசாங்கத்தை அணுகிவருகிறார்கள். ஆனால் இந்த அணுகுமுறையின் விளைவாக இதுவரையிலும் இந்தியா தமிழ் மக்களுக்கு பரிந்துரைக்கும் தீர்வு 13வது திருத்தத்தை கடக்கவில்லை. 13 வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துமாறு இலங்கை மீது நிர்ணயகரமான விதங்களில் அழுத்தத்தை பிரயோகிக்கவும் இந்தியாவால் முடியவில்லை. கடந்த சில தசாப்தங்களாக இலங்கை பொறுத்து இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தோல்வியடைந்து விட்டது என்பதே நடைமுறை உண்மையாகும். அம்பாந்தோட்டையில் சீனா 99ஆண்டு கால குத்தகைக்கு குந்தியிருக்கின்றது. கொழும்புத் துறைமுகத்தில் சீனப் பட்டினம் சீனாவின் செல்வாக்குக்குள்தான் இருக்கும். இது இந்தியாவின் செல்வாக்கு மண்டலம். இந்த மண்டலத்துக்குள் ஒரு வெளிப் பேரரசு இப்படி நிரந்தரமாக வந்து குந்தியது என்பது இந்திய வெளியுறவு அணுகுமுறைகளின் தோல்விதான். இப்படிப்பட்டதோர் வெளியுறவுச் சூழலில் இந்துத் தமிழர்களை இந்தியா காக்க வேண்டும் என்று கேட்கும் குரல் அண்மை காலங்களில் வலிமையடைந்து வருகிறது. தமிழ் மக்கள் மிக நீண்ட கடல் எல்லையைக் கொண்டவர்கள். தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்ற சக்திகள் அக்கடல் எல்லையின் மீது ஆதிக்கம் செலுத்த முடியும். தனது செல்வாக்கு மண்டலத்தில் நிரந்தரமாகத் தரித்து நிற்க எத்தனிக்கும் சீனாவை அகற்றுவதற்கு இந்தியாவுக்கு தமிழ் மக்கள் தேவை. அதேபோல சிங்கள பௌத்த மயமாக்கலை தடுப்பதற்கு தமிழ் மக்களுக்கு இந்தியா தேவை. ராஜதந்திரம் இனப்படுவது தேவைகளின் கலைதான். நீதி நியாயத்தின் கலை அல்ல. ஒரு வரலாற்று அறிஞர் சுட்டிக்காட்டியது போல, பாபர் மசூதியை உடைத்த ஒரு கட்சியிடம் உடைக்கப்படும் சிவனாலயங்களுக்காக நீதி கேட்பதில் அறநெறி சார்ந்த முரண் உண்டு. ஆனால் ராஜதந்திரத்தில் அறமெல்லாம் கிடையாது. நீதி நியாயங்கள் கிடையாது. நலன்சார் உறவுகளுக்கு இடையிலான பேரம்தான் உண்டு. நீதிமான்களிடந்தான் தமிழ்மக்கள் நீதியைக் கேட்கலாம் என்றால் இந்தக் கேடுகெட்ட பூமியில் தமிழ்மக்கள் யாரிடமும் நீதியைக் கேட்க முடியாது. எனவே இந்தியாவோடு தமிழ்மக்கள் பரஸ்பரம் நலன் சார்ந்த ஒரு புரிந்துணர்வுக்கு போக வேண்டும். இந்தியாவின் பாதுகாப்பு வியூகத்தில் தமிழ் மக்கள் எப்படிப் பங்காளிகள் ஆவது என்று சிந்திக்க வேண்டும். அதற்கு தமிழ் கட்சிகளிடம் பொருத்தமான வெளியுறவுத் தரிசனங்கள் இருக்கவேண்டும். வெளியுறவுக் கட்டமைப்புகள் இருக்க வேண்டும். நாளை யாழ்ப்பாணத்தில் நடக்கவிருக்கும் உணவுதவிர்ப்புப் போராட்டம் அவசியம். அதேயளவுக்கு அவசியம் பொருத்தமான வெளியுறவுக் கூட்டுக்கள். https://globaltamilnews.net/2023/189655/
  23. ஆனையிறவில் ஆடும் சிவன் - நிலாந்தன் யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில் ஆனையிறவுக்கு அருகே,கண்டி வீதியில் தட்டுவன்கொட்டிச் சந்தியில் ஒரு நடராஜர் சிலை நிறு வப்பட்டிருக்கிறது. கரைசிப்பிரதேச சபையின் ஒழுங்கமைப்பில் புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவியோடு 27 அடி உயரமான அந்தச் சிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. இலங்கைத்தீவில் உள்ள மிக உயரமான நடராஜர் சிலை அதுவென்று கூறலாம். 2009க்கு பின் ஆனையிறவுப் பிரதேசம் யுத்த வெற்றிவாதத்தின் உல்லாசத் தலங்களில் ஒன்றாக மாற்றப்பட்டிருக்கிறது. தமிழ் மக்களின் பண்பாட்டு தலைநகரமாகிய கவர்ச்சிமிகு யாழ்ப்பாணத்துக்குள் நுழையும் எவரும் முதலில் ஆனையிறவில் அமைக்கப்பட்டிருக்கும் இரண்டு யுத்த வெற்றி வளாகங்களைக் கடந்துதான் உள்ளேவர வேண்டும். அதாவது யுத்த வெற்றி உங்களை வரவேற்கிறது என்று பொருள். இது எங்களால் வெற்றி கொள்ளப்பட்ட நிலம் என்று பொருள். யாழ்ப்பாணத்துக்குள் நுழையும் பொழுது குடாநாட்டின் கழுத்துப் பகுதியில் முதலில் தென்படுவது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தோல்வியுற்ற படை நடவடிக்கை ஒன்றின்போது பயன்படுத்தப்பட்ட உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ஒரு கவச வாகனம். அதற்கருகில் அந்தக் கவச வாகனத்தை தடுத்து நிறுத்திய படை வீரர் ஒருவரின் நினைவுச் சின்னம். அதோடு சேர்த்து ஒரு விருந்தகம். அதைச் சற்றுத் தாண்டிச் சென்றால் வலது பக்கத்தில் கடலேரியின் பின்னணியில் பிரம்மாண்டமான ஒரு யுத்த வெற்றிச்சின்னம் உண்டு. இலங்கைத்தீவை இரண்டு கைகள் ஏந்தியிருப்பது போன்ற அந்த யுத்த வெற்றிச் சின்னந்தான் யாழ்ப்பாணத்துக்குள் நுழையும் வெளியாட்களை வரவேற்கின்றது. அதாவது யுத்த வெற்றி உங்களை வரவேற்கிறது என்று பொருள். இவ்வாறு கடலேரியின் உப்புக் காற்றில் எப்பொழுதும் யுத்த வெற்றி வாடை வீசும் ஒரு பிரதேசத்தில்,தமிழ் மக்களின் வழிபாட்டுருக்களில் ஒன்றாகிய நடராஜர் சிலையை நிறுவியமை என்பது அரசியல் அர்த்தத்தில் கவனிக்கப்பட வேண்டியது. அச்சிலையின் அழகியல் அம்சங்களைக் குறித்தும் அது பார்த்த உடனேயே கையெடுத்துக் கும்பிடக்கூடிய ஒரு சிலையாக இருக்கிறதா இல்லையா என்பதைக் குறித்தும் பின்னர் தனியாக ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறேன். இன்று இக்கட்டுரையில் நான் கூறவருவது அச் சிலைக்குப் பின்னால் இருக்கும் பிரதேச,பிராந்திய மற்றும் கட்சி அரசியலைப் பற்றி. நாவற்குழிச் சந்தியை போலவே ஆனையிறவிலும் அதாவது யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில் தமிழ் மக்களை அடையாளப்படுத்தும் கட்டுமானங்கள் அவசியம். அரசாங்கம் அதைத் திட்டமிட்டு யுத்தவெற்றி வாசலாகக் கட்டியெழுப்பி வைத்திருக்கிறது. தமிழ்மக்கள் அதனை ஒரு மரபுரிமை வாசலாக மாற்ற வேண்டும். அந்த அடிப்படையில் சிந்தித்து கரைச்சி பிரதேச சபை முடிவெடுத்திருந்திருந்தால் அது வரவேற்கத்தக்கதே. நாவற்குழியில் ஒரு புத்த விகாரை கட்டியெழுப்பப்பட்டுவரும் ஒரு நிலக்காட்சியில்,சிவபூமி அறக்கட்டளையின் அருங்காட்சியகமும் திருவாசக அரண்மனையும் கட்டப்பட்டிருப்பதுபோல, ஆனையிறவிலும் யுத்தவெற்றி வாசலை எதிர்நோக்கி ஒரு மரபுரிமை வாசலை சிருஷ்டிக்க வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களுக்கு உண்டு. ஆனால் அந்த மரபுரிமைக் கட்டமைப்பானது எப்படி அமைய வேண்டும்? அது சிங்கள பௌத்த சின்னங்களுக்கு எதிராக சைவச் சின்னங்களை முன் நிறுத்தும் ஒன்றாக அமைய வேண்டுமா? அல்லது தமிழ்த் தேசியத்தின் மதப்பல்வகைமையை பிரதிபலிக்கும் ஒன்றாக அமைய வேண்டுமா? சிவபூமி அறக்கட்டளை ஒரு சமய நிறுவனம். அது தான் போற்றும் ஒரு சமயத்தை முன்னிறுத்தும். ஆனால் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் அப்படிச் சிந்திக்கத் தேவையில்லை. மேலும் பொதுவெளிச் சிற்பம் வேறு, மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் விக்கிரகம் வேறு. இரண்டையும் ஒன்றாகக் கண்டு மயங்கும் பொதுப்புத்தியை அரசியல்வாதிகள் இலகுவாகக் கையாள்வார்கள். பிரயோக தேசியவாதமும் நடைமுறையில் பொதுப்புத்தியின் மீதே கட்டியெழுப்பப்படுகிறது. ஆனால்,தேசியவாதத்தின் உள்ளடக்கம் ஜனநாயகமாக இருக்க வேண்டும் என்று மேற்கத்திய அறிஞர்கள் கூறுவார்கள். அதாவது ஜனநாயக அடிச்சட்டத்தின் மீதுதான் ஒரு மக்களைத் திரளாகக் கூட்டிக் கட்டவேண்டும். இதை இன்னும் ஆழமாக சொன்னால், ஒருவர் மற்றவருக்கு சமம் என்ற அடிப்படையில் மக்களைத் திரட்டவேண்டும். இதை இன்னும் நடைமுறை வார்த்தைகளில் சொன்னால், ஒரு மதம் இன்னொரு மதத்திற்கு சமம்; ஒரு பிரதேசம் இன்னொரு பிரதேசத்துக்கு சமம்; யாரும் பிரதேச ரீதியாகவோ சாதி ரீதியாகவோ மத ரீதியாகவோ ஒருவர் மற்றவருக்கு மேலானவரும் அல்ல; கீழானவரும் அல்ல என்ற அடித்தளத்தின் மீதுதான் ஒரு மக்களைத் திரளாகக் கூட்டிக்கட்ட வேண்டும். எனவே தேசியவாதம் எனப்படுவது மதப்பல்வகைமையின் மீதே கட்டியெழுப்பப்பட வேண்டும். மத மேலாண்மையின் மீது அல்ல. இந்த அடிப்படையில் சிந்தித்து தமிழ்மக்கள் தமது மரபுரிமைச் சின்னங்களை பாதுகாக்கவும் முன்நிறுத்தவும் வேண்டும். ஒவ்வொரு மதப்பிரிவும் அதனதன் மதச்சின்னங்களை முன்னிறுத்துவதில் தவறில்லை. அது அந்த மதத்தின் கூட்டுரிமை. ஆனால் ஒரு மதம் இன்னொரு மதத்தை அவமதிக்கும்போது அல்லது அந்த மதச் சின்னங்களை அழிக்கும்போது அல்லது ஒரு மதத்தின் மேலாண்மையை நிறுவ முற்படும் போதுதான் பிரச்சினை வருகிறது. அதாவது மதப்பல்வகைமை வேறு ;மத மேலாண்மை வேறு. அண்மை ஆண்டுகளாக தாயகத்திலும் புலம்பெயர்ந்த தமிழ்ப் பரப்பிலும் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் இந்திய மத்திய அரசை அணுகுவதற்கு மதத்தை ஒரு வாகனமாக பயன்படுத்த முயற்சிப்பது தெரிகிறது. இதில் சில தமிழ் அரசியல்வாதிகளும் அடங்குவர். இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் மதசார்பு நிலைப்பாட்டைப் பின்பற்றி அதன்மூலம் இந்திய மத்திய அரசாங்கத்தை அணுக முடியுமா என்று மேற்படி தரப்புக்கள் சிந்திக்கின்றன. பாரதிய ஜனதா அரசாங்கமானது இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று. எனவே ஈழத் தமிழர்கள் அந்த அரசாங்கத்தைத்தான் அணுக வேண்டும். ஆனால் அதன் பொருள் இந்தியாவின் உள்நாட்டு அரசியலில் பாரதிய ஜனதா பின்பற்றும் அதே நிகழ்ச்சி நிரலை ஈழத் தமிழர்களும் பின்பற்ற வேண்டும் என்றில்லை. இப்பிராந்தியம் இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்துட் காணப்படுகிறது. இந்தியாவை மீறி எந்த ஒரு வெளிச்சக்தியும் ஈழத் தமிழர்களுக்கு ஒரு தீர்வைத் தரமுடியாது. இப்பிராந்திய யதார்த்தத்துக்கூடாக சிந்திக்கும்போது ஈழத்தமிழர்கள் பாரதிய ஜனதா அரசாங்கத்தைத்தான் அணுகவேண்டும். ஆனால் அதன் பொருள் தமிழ் தேசியத்தின் மதப்பல்வமையை பலியிட வேண்டும் என்பதல்ல. ஈழத்தமிழர்களின் நவீன அரசியல் எனப்படுவது மதப்பல்வகமையின் மீதே கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. பெருமளவு இந்துக்களைக் கொண்ட ஈழத் தமிழ்ச் சமூகத்தில் முதலில் தோன்றிய இளையோர் அமைப்பாகிய யாழ்ப்பாண வாலிபர் முன்னணியை உருவாக்கியது(1924) ஒரு புரட்டஸ்தாந்து கிறிஸ்தவராகிய கன்டி பேரின்பநாயகந்தான். தமிழரசுக் கட்சி உருவாக்கப்பட்டபோது, அதன் கால்கோல் விழா 1949ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி மாவட்டபுரம் கந்தசாமி கோவில் முன்றலில் சீலஸ்ரீ துரைசாமிக் குருக்களின் ஆசியுடன் இடம் பெற்றது. இதுதொடர்பான தகவல்களை தமிழரசுக் கட்சியின் வெள்ளி விழா மலரில் காணலாம். அக்கட்சியின் தலைவராகிய செல்வநாயகம் ஒரு புரட்டஸ்தாந்துக் கிறிஸ்தவர். செல்வநாயகத்தை ஈழத்தமிழர்கள் தந்தை என்றும் ஈழத்துக் காந்தி என்றும் அழைத்தார்கள். தந்தை செல்வா இறந்தபோது அவருடைய உடல் கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்யப்படவில்லை. இந்து முறைப்படி வேட்டி அணிவிக்கப்பட்டு, தகனம் செய்யப்பட்டது. தன்னைத் தலைவராக தெரிந்தெடுத்து,தந்தை என்று அழைத்த பெரும்பான்மை இந்து வாக்காளர்களை கௌரவிப்பதற்காக செல்வநாயகம் அவ்வாறு கேட்டுக் கொண்டதாக கருதப்படுகிறது. எனவே ஈழத்தமிழர்களின் நவீன அரசியலானது மதப் பல்வகமையின் மீதுதான் கட்டியெழுப்பப்பட்டது. அதை இப்பொழுது ஒரு மதத்துக்கு மட்டும் உரியதாக குறுக்கக் கூடாது. குறிப்பாக நவீன யாழ்ப்பாணம் எனப்படுவது திருச்சபைகளுக்கும் ஆறுமுகநாவலர் போன்ற மதப் பெரியார்கள் மற்றும் இந்துபோர்ட் போன்ற இந்து அறக்கட்டளைகளுக்கும் இடையிலான போட்டியின் திரண்ட விளைவுதான். ஆனால் அந்தப் போட்டியானது மத விரோதமாக,மோதலாக மாறவில்லை. ஆனால்,2009க்குப் பின் எந்த ஒரு மதத் தலைவரும் துணிந்து கதையாத ஒரு வெற்றிடத்தில், ஒற்றைக் குரலாக ஒலித்த, முன்னாள் ஆயர் ராயப்பு ஜோசப் அவர்களுடைய அதே மறை மாவட்டத்தில் இந்துக்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையிலான முரண்பாடு தூக்கலாகத் தெரிவது தமிழ்த் தேசியத் திரட்சிக்குப் பாதகமானது. தமிழ்த் தேசியத்தை மதப்பல்வகைமையின் மீது கட்டியெழுப்ப விரும்பும் எல்லாச் சக்திகளும் அந்த முரண்பாட்டைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும். அவ்வாறு அகமுரண்பாடுகளைத் தீர்க்கும் சக்திமிக்க சிவில் அமைப்புகளோ கட்சிகளோ இல்லாத அரசியல் மற்றும் ஆன்மீக வெற்றிடத்தில், இன்னொருபுறம், சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் “எல்லைக் கற்களாக” புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு வருமோர் ராணுவஅரசியற் சூழலில், தமிழ் மக்கள் மத்தியிலும் இரவோடிரவாகச் சிலைகள் முளைக்கத் தொடங்கிவிட்டன. இவ்வாறான சிலை அரசியலின் பின்னணியில்,ஆனையிறவில் நடராஜர் சிலை நிறுவப்பட்டுள்ளது. சிவ நடனத்துக்கு ஆன்மீக வியாக்கியானம் மட்டுமல்ல,பௌதீகவியல் வியாக்கியானமும் உண்டு. அது ஒரு பிரபஞ்ச நடனம் என்று வர்ணிக்கப்படுகிறது(cosmic dance). ஆனையிறவுச் சிவனுக்கு மேலதிகமாக ஓர் அரசியல் பரிமாணமும் உண்டு. உப்புக் காற்றில் யுத்த வெற்றிச் சின்னங்களின் மத்தியில்,சிவனார் யாருடைய பஜனைக்கு ஆடப்போகிறார்? http://www.nillanthan.com/5941/
  24. மகிந்த கொல்லாத நாய்கள் - நிலாந்தன் கடந்த டிசம்பர் மாதம் யாழ்.பருத்தித்துறை வீதியில் மோட்டார் சைக்கிளில் போய்க்கொண்டிருந்தேன். வீதியை திடீரென்று குறுக்கறுத்து ஓடிய ஒரு தொகை நாய்களின் மீது மோதி விழுந்ததில் எனது கைவிரல் ஒன்று அறுந்து தொங்கியது. யாழ்.போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் எனது விரலைக் காப்பாற்றினார். நாய்களில் மோதிப் படுகாயம் அடைந்தவர்கள் மட்டுமல்ல, கோமாநிலைக்கு சென்றவர்களும் உண்டு என்று போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தின் சிறிய ஒழுங்கைகளில் கட்டாக்காலி நாய்கள் பெருகிவிட்டன. காலை வேளைகளில் எல்லாச் சிறிய தெருக்களிலும் நாயின் கழிவுகளைக் காணலாம். எனக்கு தெரிந்த ஒரு ஆசிரியை திருநெல்வேலி பகுதியில் உள் ஒழுங்குகளால் பாடசாலைக்கு செல்வதில்லை. ஏன் என்று கேட்டேன். “காலையில் எழுந்து குளித்து வெளிக்கிட்டு அந்த வீதி வழியாக சென்றால் எங்கும் நாயின் கழிவுகளைக் காணலாம். அந்தக் கழிவுகளில் மொய்க்கும் இலையான் மோட்டார் சைக்கிள் கடக்கும்போது அப்படியே எழும்பி எங்களுடைய முகங்களிலும் மோய்க்கிறது. அருவருப்பாக இருக்கும். அதைத் தவிர்ப்பதற்காக பிரதான சாலைகளின் ஊடாக பாடசாலைக்குச் செல்கிறேன்”என்று சொன்னார். அவர் குறிப்பிட்ட அந்த வீதி வழியாக நான் அடிக்கடி காலை வேளை போய் வருவேன். அப்பொழுதெல்லாம் சந்தைக்குக் கறிப்பிலையைச் சுமந்து செல்லும் வியாபாரிகளை கண்டிருக்கிறேன். அவர்கள் கறிவேப்பிலைக் கிளைகளை சைக்கிள் கரியரில் வைத்துக் கட்டிக்கொண்டு போவார்கள். சைக்கிள் கரியரின் இருபக்கமும் தொங்கும் கறிவேப்பிலைக் கிளைகள் வீதியைத் தொட்டுக் கொண்டு போகும். அந்த வீதி நெடுக நாயின் மலம் இருக்கும். அதை பார்த்ததிலிருந்து நான் சந்தையில் கறிவேப்பிலை வாங்குவதே இல்லை. திருநெல்வேலி சந்தையில் மட்டுமல்ல,யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான சந்தைகளில் வீதியோரங்களில் நாய் மலத்தைக் காணலாம். அந்த மலத்தில் மொய்க்கும் இலையான்கள் அப்படியே எழும்பி அந்த வீதியோரம் அமைந்திருக்கும் சாப்பாட்டுக் கடைகளிலும் மொய்க்கின்றன. ஆயின் நாம் சாப்பிடும் சாப்பாட்டின் சுகாதாரத்தை ஒரு முறை கற்பனை செய்து பாருங்கள். நாய் மலத்தை அகற்றுவது என்பது தெருநாய்களை அகற்றுவதுதான். தெரு நாய்களை ஏன் அகற்ற முடியவில்லை? அண்மையில் ஒரு நேர்காணலின்போது தெருநாய்களுக்கு உணவூட்டிய ஒருவர் கௌரவிக்கப்பட்டார். கனடாவில் இருந்து வந்த ஒரு நண்பர் அது தொடர்பாக பின்வருமாறு கேட்டார்…. ”தெருநாய்களைப் பராமரிப்பது நல்ல விடயம். ஆனால் எப்படிப் பராமரிக்க வேண்டும்? வளர்ச்சியடைந்த நாடுகளின் நகரங்களின் தெருநாய்களுக்குப் பராமரிப்பு நிலையங்கள் உண்டு. அப்படிப்பட்ட பராமரிப்பு நிலையங்களில் கொண்டுபோய் நாய்களைச் சேர்ப்பதுதான் அதற்குரிய வழி. மாறாக கட்டாக்காலி நாய்களைத் தெருக்களிலேயே வைத்து பராமரிப்பது என்பது மோசமான ஒரு நடைமுறை. அதைப் பாராட்டலாமா?” என்று. மாநகரங்களில் கட்டாக்காலி நாய்களைக் கட்டுப்படுத்துவதற்கென்று ஒரு பொறிமுறை உண்டு. அதற்கென்று பராமரிப்பு நிலையங்களும் உண்டு. தவிர தமிழகத்தில் செயல்படும் “ப்ளூகுறஸ்”(BLUE CROSS) நிறுவனத்தை போன்ற தன்னார்வ நிறுவனங்களும் உண்டு. ஆனால் தமிழ்ப்பகுதிகளில் அவ்வாறு ஒரே ஒரு தன்னார்வ நிறுவனந்தான் உண்டு. நாய்களைத் தெருக்களில் விடுவது குறிப்பாக பெண் நாய்க்குட்டிகளைத் தெருவில் விடுவது என்பது தமிழ்க் கலாச்சாரத்தின் சீரழிந்த ஒரு பகுதியாக பல தசாப்த காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இது தொடர்பாக யோகர் சுவாமிகள் சமாதி அடைவதற்கு முன்பு தெரிவித்த ஒரு தகவலை ஒரு சமயப் பெரியார் எனக்குச் சொன்னார். ஒருமுறை மருதனாமடம் சந்தையில் யோகர் சுவாமிகள் குந்தியிருந்தபோது, ஒரு சிறுவன் ஒரு பெட்டிக்குள் எதையோ காவிக் கொண்டு வந்திருக்கிறான். அப்பெட்டியை வைத்துக்கொண்டு நீண்டநேரமாக சுற்றுமுற்றும் பார்த்தபடி நின்றிருக்கிறான். நீண்டநேரமாக அச்சிறுவன் வீதியில் நிற்பதைக் கண்ட யோகர் பெட்டிக்குள் என்ன என்று கேட்டிருக்கிறார். பெட்டிக்குள் பெண் நாய்க்குட்டிகள் உண்டு என்று அவன் சொல்லியிருக்கிறான். அவற்றை மருதனாமடம் சந்தையில் விடுமாறு சொன்னார்கள். ஆனால் அங்கே இருப்பவர்கள் அதற்கு அனுமதிக்க மாட்டார்கள் என்பதனால், ஆளில்லாத வீதி ஓரத்தில் விடலாமா என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று அவன் சொல்லியிருக்கிறான். இதைக் குறித்து பின்னர் தனது அடியார்கள் மத்தியில் உரையாற்றிய யோகர் பெண் நாய்களை இவ்வாறு தெருக்களில் அனாதைகளாக விடுவது ஒரு பாவம். அதன் கர்ம வினையை யாழ்ப்பாணம் ஒரு நாள் அனுபவிக்கும்…. யாழ்ப்பாணத்தவர்களும் ஒரு நாள் தெருவில் வந்து நிற்க வேண்டியிருக்கும் என்று மனம் நொந்து கூறியிருக்கிறார். ஆனால் யோகர் சுவாமிகளுக்கு முன்னரும்,பின்னரும்,இப்பொழுதும்,பெண் நாய்க்குட்டிகள் தெருக்களில் விடப்படுகின்றன. 2015க்கு முன்புவரை இந்த நாய்களைப் பிடித்து கடலில் மூழ்கடித்துக் கொல்வார்கள். எமது சிறுவயது ஞாபகங்களில் நாய் வண்டி என்பது நம்மைப் பயமுறுத்தும் ஒரு வண்டிதான். இரண்டு பேர் அந்த வண்டியைத் தள்ளிக் கொண்டு வருவார்கள். பிடிபட்ட நாய்கள் சிறைக்கூண்டுக்குள் இருந்து கொண்டு எம்மைப் பரிதாபகரமாகப் பார்க்கும். யாழ் நகரப் பகுதியில் அவ்வாறு நாய் பிடிப்பதற்கு முழங்கைவரை ஒரு கை இல்லாத நகரசுத்தித் தொழிலாளர் ஒருவர் மாநகர சபையால் நியமிக்கப்பட்டிருந்தார். அவருடைய கையில் கம்பியாலான ஒரு சுருக்குத் தடம் இருக்கும். அந்த வண்டில் வீதியில் வரும்போது அவர் தன்னிடம் உள்ள தடியால் உள்ளே பிடிபட்டிருக்கும் நாய்களைக் குத்துவார். நாய்கள் கத்தும். அச்சத்தத்தைக் கேட்டு வீட்டிலிருக்கும் நாய்களும் தெரு நாய்களும் அந்த இடத்துக்கு வரும். அப்பொழுது அவர் நாய்களைப் பிடிப்பார். சுருக்குக் கம்பியில் சிக்கி நாய் துடிக்கும் காட்சி பரிதாபகரமாக இருக்கும். அதை அப்படியே இழுத்து வண்டிக்குள் ஏறிவார். வளர்ப்பு நாய்களை எஜமானர்கள் காசு கொடுத்து மீட்பார்கள். ஆனால் அனாதைகளான கட்டாக்காலி நாய்கள் பின்னர் கடலில் மூழ்கடித்துக் கொல்லப்படும். அதன் பின் கொல்லப்பட்ட நாய்களின் வால்களை வெட்டி கொண்டு வந்து கணக்குக் காட்டி தங்களுக்குரிய கொடுப்பனவைப் பெறுவார்களாம். 2015ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ நாய்களை அவ்வாறு கொல்வதற்குத் தடை விதித்து ஒரு சுற்றுநிருபத்தை வெளியிட்டார். அதாவது 2009ஆம் ஆண்டு போர்க்களத்தில் சிக்கியிருந்த தமிழர்களை பூச்சி,புழுக்களைப் போல கொன்று யுத்தத்தை வென்ற ஒருவர்,சரியாக ஆறு ஆண்டுகளின் பின் நாய்களைக் கொல்ல வேண்டாம் என்று உத்தரவிட்டார். அதன் பின் நாய்களைப் பிடிப்பவர்களுக்கு வேலையில்லாமல் போய்விட்டது. ஏனென்றால் பிடிக்கப்படும் நாய்களைப் பராமரிப்பதற்கு அரசாங்கம் உரிய பராமரிப்பு நிலையங்களை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. இவ்வாறான ஒரு பின்னணியில் யாழ் மாநகர சபை பிடித்த நாய்களைச் சிறிது காலம் கல்லுண்டாய் வெளியில் கொண்டு போய்விட்டது. ஆனால் அந்த நாய்கள் அயலில் உள்ள கிராமத்தவர்களின் கால்நடைகளைக் கடிக்கத் தொடங்கியதும் அது ஒரு முறைப்பாடாக வந்தது. அதைத் தொடர்ந்து அந்த முயற்சி கைவிடப்பட்டது. அதன்பின் கட்டாக்காலி நாய்கள் பிடிக்கப்படுவதில்லை. கட்டாக்காலி நாய்களைப் பராமரிப்பதற்கென்று சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு.திருமுருகன் ஒரு பராமரிப்பு நிலையத்தை ஆரம்பித்தார். ஆனால் அவரிடம் நாய்களைப் பிடிக்கும் ஏற்பாடு இல்லை. பிடிக்கப்பட்ட நாய்களை பராமரிக்கும் ஏற்பாடுதான் உண்டு. அதிலும் போதிய வளங்கள் இல்லை. தனக்குப் போதிய நிதி உதவியோ, துறைசார் உதவிகளோ அல்லது குறைந்தபட்சம் தார்மீக உதவிகளோ கிடைக்கவில்லை என்று அவர் கவலைப்பட்டார். தனது பராமரிப்பு நிலையத்தின் தராதரம் குறித்து ஒரு பகுதியினர் எழுப்பிய முறைப்பாடுகளால் அவர் அதிகம் நொந்து போயிருந்தார். அவரைப் பின்பற்றி யாழ்ப்பாணத்தில் உள்ள தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவரும் ஒரு நாய் பராமரிப்பு நிலையத்தை உருவாக்க முற்பட்டார். அதைக் குறித்தும் விமர்சனங்கள் எழுந்தன. அவர் அந்த முயற்சியைப் பாதியிலேயே கைவிட்டார். இப்பொழுது சிவபூமி அறக்கட்டளையின் ஒரே ஒரு நாய் பராமரிப்பு நிலையந்தான் வடக்கில் உண்டு. அங்கேயும் போதிய வளங்கள் இல்லை. ஆதரவு இல்லை. ஆறு.திருமுருகன் பெரும்பாலும் சலித்துப் போய்விட்டார். அந்த பராமரிப்பு நிலையத்தை முடிவிடலாமா என்று யோசிக்கும் அளவுக்கு அவர் நொந்து போய்விட்டார். ஆனால் தென்னிலங்கையில் நாய்களைப் பராமரிப்பதற்கு பல நிலையங்கள் உண்டு என்று கூறப்படுகிறது. அவ்வாறு அம்பாந்தோட்டையில் காணப்படும் பராமரிப்பு நிலையத்துக்கு வேண்டுமானால் வடக்கிலிருந்து நாய்களைக் கொண்டு வந்து ஒப்படைக்கலாம் என்று உள்ளூராட்சி சபை நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டதாக ஒரு தகவல் உண்டு. மனிதகுல வரலாற்றில் மனிதனின் முதல் வளர்ப்புப்பிராணி நாய்தான். மனிதன் வேட்டையாடி உணவு தேடுபவனாக இருக்கும்போதே வேட்டைத் துணையாக நாய்கள் இணைந்தன. அதன் பின் நதிக்கரை நாகரீகங்களில் வீட்டு வளர்ப்பு பிராணிகளாக நாய்கள் மனிதர்களோடு காணப்பட்டன. நாய்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு பூர்வகாலத்திலிருந்தே தொடங்குகிறது. நன்றியுள்ளது;மனிதர்களைப்போல பழிவாங்காது;காவல் காப்பது என்றெல்லாம் போற்றப்பட்ட நாய்களை இந்துக்கள் வைரவக் கடவுளின் வாகனமாக உருவகித்து வைத்திருக்கிறார்கள். இவ்வாறு தமது காவல் கடவுள் ஒருவரின் வாகனமாகக் காணப்படும் நாய்களைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு யாருடையது ? யோகர் சுவாமிகள் 1960களின் நடுப்பகுதியில் மனம் நொந்து கூறிய அதே நிலைமைதான் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டின் பின்னரும் இப்பொழுதும் காணப்படுகிறது.நாய்களைப் பராமரிப்பதற்குக்கூட ஒரு வளம் பொருந்திய நிலையத்தை உருவாக்க முடியாத மக்களா நாம்? http://www.nillanthan.com/5933/
  25. ஒரு சிப்பாய் கண்ட கனவு - நிலாந்தன் புத்த பகவான் ராஜபோகங்களையும் குடும்பத்தையும் துறந்து சன்னியாசி ஆகியவர். ஆனால் அவர் இலங்கைத் தீவில் நிலாவரையில் ராணுவ முகாமில் உள்ள ஒரு சிப்பாயின் கனவில் தோன்றி தனது சிலையை நிலாவரையில் வைக்குமாறு கூறியதாக அந்த சிப்பாய் கடந்தகிழமை கூறியுள்ளார். ரவூப் ஹக்கீம் முன்பொருமுறை கூறியது போல நாட்டில் புத்தர் சிலைகள் எல்லைக் கற்களாக மாற்றப்பட்டு விட்டன. அந்தச் சிப்பாய் நிலாவரையில் யாருக்காக நிலத்தை பாதுகாக்கின்றாரோ, அந்த மக்கள் மத்தியில் உள்ள மூளைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை அவ்வாறு வெளியேற வேண்டாம் என்று நாட்டின் ஜனாதிபதி மன்றாடிக் கொண்டிருக்கிறார். யாருடைய நிலத்தை யாரிடமிருந்து பாதுகாப்பதற்காக அந்த சிப்பாய் நிலாவரையில் குந்திக் கொண்டிருக்கிறார்? இலங்கைத்தீவின் மொத்த படைத் தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பகுதி தமிழ்ப் பகுதிகளில் நிலைகொண்டிருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மிகச்சிறிய இலங்கைத்தீவு தனது அளவுப் பிரமாணத்திற்கு அதிகமாக படையினரைக் கொண்டிருக்கிறது. இப்படையில் மூன்றில் இரண்டு பகுதி வடக்கு கிழக்கை படைமயப்படுத்த நிறுத்தப்பட்டிருக்கிறது என்று ஒரு புள்ளிவிபரம் உண்டு. நாட்டின் பொதுத்துறை ஊதியத்தில் சுமார் 50%படைத்தரப்புக்கு வழங்கப்படுகிறது என்றும், உலகில் 100 பேர்களுக்கு எத்தனை படைவீரர்கள் என்ற விகிதத்தில் இலங்கை பத்தாவது இடத்தில் உள்ளது என்றும் நிஷான் டி மெல்- வெரிற்றே ரிசேர்ச் இன்ஸ்ரிரியூட்டின் பணிப்பாளர்-கூறுகிறார். இலங்கைத்தீவின் பாதுகாப்புச் செலவினம் நாட்டின் கல்வி மற்றும் சுகாதாரச் செலவினங்கள் இரண்டையும் கூட்டிவரும் தொகையைவிட அதிகமாக இருப்பதும் பொருளாதார சீரழிவுக்கு ஒரு காரணம் என்று நிஷான் கூறுகிறார். சிறிய இலங்கைத் தீவு பாகிஸ்தானைப் போலவே தனது பருமனை விடப் பெரிய படைக்கட்டுமானத்தைக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானிலும் இப்பொழுது பொருளாதார நெருக்கடி. சில நாட்களுக்கு முன் பாகிஸ்தானிய ஊடகங்களில் வந்த செய்திகளின்படி, அங்கு படையினருக்கு ஒதுக்கப்பட்ட சிறப்பு நிதி குறைக்கப்பட்டதால்,அங்கே படையினருக்குச் மூன்று வேளையும் சாப்பாடு போடக் காசில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இலங்கைத்தீவில் 13ஆவது திருத்தத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டஞ் செய்யும் பிக்குகளுக்கு மூன்று வேளையும் சாப்பாடு கிடைக்கிறது. நிலாவாரையில் கனவுகண்ட சிப்பாய்க்கும் மூன்று வேளை சாப்பாடு கிடைக்கிறது . நாட்டின் பெருமளவு செல்வத்தையும் தலைப்பேறானவற்றையும் அனுபவிக்கும் படைக்கட்டமைப்பின் ஆட்தொகையைக் குறைத்தாலே போதும் நாட்டின் செல்வத்தில் பெரும் பகுதியை மிச்சப்படுத்தலாம். அவ்வாறு படைதரப்பில் ஆட்குறைப்பை செய்ய வேண்டும் என்பது ஐ.எம்.எஃப்பின் நிபந்தனைகளில் ஒன்று என்று முன்பு கூறப்பட்டது. ஆனால்,அண்மையில் கண்டியில் உரையாற்றிய பொழுது ஜனாதிபதி ஐ.எம்.எஃப் விதித்த 15 நிபந்தனைகளை நிறைவேற்றியது பற்றிப் பேசியிருக்கிறார். ஆனால் அதில் படை ஆட்குறைப்பு தொடர்பாக எதுவும் பேசவில்லை. சிங்கள பௌத்த பெருந்தேசியவாத அரசியலில் படை ஆட்களின் எண்ணிக்கையை குறைக்க முற்படுவது அரசியல் தற்கொலைக்கு நிகரானது என்பது ரணிலுக்கு தெரியும். அதனால் அவர் அதனை அடக்கி வாசிக்கின்றாரா, அல்லது 13-வது திருத்தத்தை எதிர்த்து வீதியில் இறங்கியதுபோல படை ஆட்குறைப்பைச் செய்தால் அதற்கும் எதிராகவும் பிக்குகளும் எதிர்க்கட்சிகளும் வீதியில் இறங்கலாம் என்ற ஒரு சாட்டைக்கூறி அந்த விவகாரத்தை ஒத்திவைத்து வருகிறாரா? ஆனால் படையினரை ஆட்குறைக்காமல் தமிழ்ப் பகுதிகளை ராணுவ மயநீக்கம் செய்யமுடியாது. எனவே பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை அரசாங்கத்தை பிணையெடுக்க முற்படும் ஐ.எம்.எஃப் போன்ற தரப்புகள் படை ஆட்குறைப்பை ஒரு நிபந்தனையாக முன் வைக்கவில்லையா? அதை ஒரு நிபந்தனையாக முன்வைக்கும்படி தமிழ்த்தரப்பு குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகம் மேற்கு நாடுகளை வற்புறுத்தவில்லையா? படையினரை ஆட்குறைக்காமல் பொருளாதாரத்தை நிமிர்த்த முடியுமா? படை ஆட்களின் எண்ணிக்கையை குறைக்காமல் ஐ.எம்.எஃப்பின் ஏனைய நிபந்தனைகளை நிறைவேற்றலாம் என்று அரசாங்கம் நம்புகின்றதா? ஆனால் அரசாங்கம் ஐ.எம்.எஃப்பின் ஏனைய நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதற்காக மானியங்களை வெட்டி,உரத்தின் விலை மின்கட்டணம்,வங்கி வட்டி விகிதம் போன்றவற்றை உயர்த்தியதனால் அடிமட்ட மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இன்னொருபுறம் அரசாங்கம் புதிதாக விதித்திருக்கும் வரியினால் படித்த நடுத்தர வர்க்கம் அதாவது நாட்டில் அதிக வருமானத்தை பெறும் வகுப்பினர் பதட்டமடையத் தொடங்கியுள்ளார்கள். உரமானியத்தை வெட்டியதனால் உரத்தின் விலை கூடியது. அதனால் விவசாயிகள் நெல்லின் விலையைக் கூட்டினார்கள். நெல்லை வாங்கி விற்கும் வியாபாரிகள் தங்களுடைய லாபத்தையும் சேர்த்து மேலும் விலையைக் கூட்டினார்கள். அதாவது மானிய வெட்டு, வரி உயர்வு, வங்கி வட்டி அதிகரிப்பு போன்றவற்றின் சுமைகள் அனைத்தும் சாதாரண மக்களின் தலைகளிலேயே சுமத்தப்படுகின்றன. அதனால்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜே.வி.பி ஒழுங்குபடுத்திய ஆர்ப்பாட்டத்தில் பெருமெண்ணிக்கையான சிங்களமக்கள் பங்குபற்றினார்கள். அதுபோலவே கடந்த புதன்கிழமை 40க்கும் குறையாத தொழிற்சங்கங்கள் இணைந்து தமது எதிர்ப்பை காட்டின. இது ஒருபுறம். இன்னொருபுறம் அரசாங்கம் விதித்திருக்கும் புதிய வரியினால் நாட்டின் படித்த மேல் நடுத்தர வர்க்கம் நாட்டை விட்டுத் தப்பியோடத் தொடங்கியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜே.வி.பி.திரட்டிய கூட்டம் கடந்த ஒரு வருடத்தில் மின்சார சபையின் 72 பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அவர்களில் 22 பேர் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் பணிபுரிவதாகவும் மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் இணைச் செயலாளர் இசுரு கஸ்தூரிரத்ன கூறியுள்ளார். நுரைச்சோலை மின்உற்பத்தி நிலையத்தை வழமையாக நடத்துவதற்கு 123 பொறியியலாளர்கள் பணியாற்ற வேண்டும், ஆனால் இன்று 100 பேரே பணிபுரிவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும்,இந்த பொறியியலாளர்கள் பற்றாக்குறையால், வருங்காலத்தில் ஆலையை நிறுத்த வேண்டிய நிலைகூட ஏற்படலாம் என்றும், அப்படி நடந்தால், மின் நெருக்கடி கடுமையாகும் என்றும் அவர் கூறியுள்ளார். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க பின்வருமாறு கூறியுள்ளார்…..“இந்த மாதத்தில் மாத்திரம் 50 முதல் 60 வரையிலான அரச வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். குறிப்பாக,சில வைத்தியர்கள் விடுமுறை பெறாமல் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இருப்பினும், நாட்டை விட்டு வெளியேறியுள்ள மருத்துவ நிபுணர்களின் பெயர் விபரங்களும் எண்ணிக்கையும் சுகாதார அமைச்சினால் இதுவரையில் வெளியிடப்படவில்லை. எமக்கு கிடைக்கப்பெற்றுள்ள தகவலுக்கு அமைவாக மொத்தமாக 1,000க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன”… “அதேவேளை, கிராமமட்ட மற்றும் நகர்ப்புற வைத்தியசாலைகளில் வைத்தியர்களின் வெளியேற்றத்தால் வைத்தியசாலை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனினும்,கொழும்பு தேசிய வைத்தியசாலை, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை மற்றும் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை போன்றன இதுவரை மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறையால் பாதிக்கப்படவில்லை….மேலும், அங்கு விசேட வைத்திய நிபுணர்கள் வைத்தியசாலையில் காணப்பட்ட போதிலும், தாதியர்கள் மற்றும் ஏனைய சுகாதார ஊழியர்கள் வைத்தியசாலைகளை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தொழில்நிமித்தம் சென்றுள்ளனர். அதேவேளை,அதிகளவிலான வைத்திய ஆலோசகர்களும் வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்” என்று சமில் விஜேசிங்க கூறுகிறார். இவ்வாறு ஒருபுறம்,மூளைசாலிகளும் படித்தவர்களும் நாட்டைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொருபுறம்,அண்மையில், அமெரிக்க யுத்தவிமானங்கள் படை அதிகாரிகளோடு நாட்டுக்குள் வந்து போயுள்ளன. திருகோணமலையில் அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து ஒரு கூட்டுத்தளத்தை உருவாக்கப் போவதாக “ஸ்ரீலங்கா கார்டியன்” எனப்படும் இணைய இதழ் கடந்த மாதம் 14ஆம் திகதி ஒரு கட்டுரையைப் பிரசுரித்திருந்தது. ஏற்கனவே இந்திய பாதுகாப்புத்துறை ஆலோசகரும் உளவுத்துறையின் தலைவரும் ரகசியமாக இலங்கைக்கு வந்து போனதாக செய்திகள் கிடைத்தன. பிச்சையெடுத்த போதிலும் இச்சிறிய தீவு அதன் கேந்திர முக்கியத்துவம் காரணமாக இப்பொழுதும் அதன் கவர்ச்சியை இழக்கவில்லை. அதனால்தான் பேரரசுகள் இச்சிறிய தீவைத் தேடிவருகின்றன. ஏற்கனவே சீனா அம்பாந்தோட்டையில் 99ஆண்டுகளுக்கு நிரந்தரமாக குந்திவிட்டது. கொழும்புத் துறைமுகத்தில் ஒரு பட்டினத்தை கட்டியெழுப்பி விட்டது. சீன விரிவாக்கத்துக்கு எதிராக இந்தியா இலங்கையில் எங்கு தனது கால்களைப் பரப்பலாம் என்று தீவிரமாக உழைக்கின்றது. வடக்கில் கடலட்டை ஒரு ராஜதந்திரப் பொருளாக மாறிவிட்டது. இச்சிறிய தீவு பேரரசுகள் பங்கிடும் அப்பமாக எப்பொழுதோ மாறிவிட்டது. ஒருபுறம் இச்சிறிய தீவைப் பேரரசுகள் தேடி வருகின்றன. இன்னொருபுறம் இச்சிறிய தீவின் படித்த மூளைசாலிகளோ நாட்டை விட்டுத் தப்பிச் செல்கிறார்கள். யாருடைய நிலத்தை யாரிடமிருந்து பாதுகாப்பதற்காக அந்த சிப்பாய் நிலாவரையில் முகாமிட்டிருந்து கனவு காண்கிறார்? http://www.nillanthan.com/5916/
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.