Jump to content

Search the Community

Showing results for tags 'நிலாந்தன்'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • வலைப்போக்கன் கிருபன்'s செயற்கை நுண்ணறிவு உருவாக்கி
  • Ahal Media Network's Topics

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's சிறப்பு ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணக்கட்டுகள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's திரட்டுகள்
  • Home Appliances Spot's Home Appliances

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

  1. மின்வெட்டும் இல்லை தேர்தலும் இல்லை? - நிலாந்தன் கடந்த 16ஆம் திகதியிலிருந்து மின்வெட்டு நிறுத்தப்பட்டு விட்டது. ஆனால் மின்கட்டணம் 66 விகிதத்தால் அதிகரித்திருக்கிறது. இதன் மூலம் அரசாங்கம் மக்களுக்கு உணர்த்த விரும்புவது எதனை? மின்வெட்டை நிறுத்துவது என்றால் நீங்கள் மின் கட்டண உயர்வை தாங்கிக் கொள்ள வேண்டும். இதை அதன் பிரயோக அர்த்தத்தில் கூறின், மின் கட்டணத்தை குறைப்பது என்றால் மின்சாரத்தை குறைவாக நுகருங்கள் என்பதுதான். இப்படி ஒர் உத்தியைத்தான் எரிபொருள் விநியோகத்திலும் அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. கியூஆர் கோட் முறைமை என்பது எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தியது. எரிபொருள் பதுக்கப்படுவதையும் தேவைக்கும் அதிகமாக நுகரப்படுவதையும் அது ஒப்பீட்டளவில் கட்டுப்படுத்தியது. அதன் விளைவாக வெளியே போகும் டொலர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது. இப்பொழுது மின் கட்டணம் உயர்ந்திருக்கிறது. ஆனால் மின் கட்டண உயர்வினால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழைகள்தான் என்பது சுட்டிக்காட்டப்படுகிறது. அதிகளவு மின்சாரத்தை நுகரும் பணக்காரர்களுக்கு ஏற்கனவே கட்டணம் உயர்ந்துவிட்டது. ஆனால் ஒரு குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட மின் அலகுகளைப் பயன்படுத்தும் கீழ் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்கள்தான் இப்புதிய மின் கட்டண உயர்வால் பாதிப்படைவார்கள் என்று சுட்டிக் காட்டப்படுகிறது. அரசாங்கம் தந்திரமான முறையில் மானியத்தை வெட்டுகிறது என்றும் எடுத்துக் கொள்ளலாமா? ஏனெனில் கடந்த இருபதாம் திகதி கண்டியில் உரையாற்றும் பொழுது ஜனாதிபதி அதை வெளிப்படையாகக பின்வருமாறு கூறியிருந்தார்….“சர்வதேச நாணய நிதியத்துடன் அரசு கடந்த ஒகஸ்ற் மாதம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது. அதன்படி, செப்டெம்பரில் அதிகாரிகள் மட்டத்தில் உடன்பாடு காண முடிந்தது. அவர்கள் எமக்கு நடைமுறைப்படுத்த பதினைந்து விடயங்களைக் முன்வைத்தார்கள். டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன் அவற்றை நடைமுறைப்படுத்த சர்வதேச நாணய நிதியம் கால அவகாசம் வழங்கியது. ஆனால், அன்று அதைச் செய்யமுடியவில்லை. பின்னர் ஜனவரி 31ஆம் திகதி வரை அவகாசம் பெற நடவடிக்கை எடுத்தோம். அப்போதும் அந்த 15 விடயங்களை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை. இறுதியாக பெப்ரவரி 15 ஆம் திகதிவரை கால அவகாசம் நீடிக்கப்பட்டது. பெப்ரவரி 15 ஆம் திகதி மாலை 6 மணிக்குள் அனைத்து விடயங்களையும் நிறைவேற்றி வாஷிங்டனுக்கு அனுப்பினோம்…” அதாவது,ஐ.எம்.எஃப்பின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வது அல்லது நிறைவேற்றுவது என்ற ஒரே இலட்சியத்தை நோக்கி அவர் உழைக்கிறார் என்பது அந்த உரையில் தெரிகிறது .ஐ.எம்.எஃப் என்ன கேட்கும்? மானியங்களை வெட்டு; தனியார்மயப்படுத்து; வரிகளைஉயர்த்து; ஆட்குறைப்பைச்செய்…போன்ற விடயங்களைத்தானே? அரசாங்கம் ஐ.எம்.எஃப்பின் நிபந்தனைகளுக்குக் கீழ்ப்படியத் தொடங்கிவிட்டது. இதன்மூலம் வரும் மார்ச் மாதமளவில் ஐஎம்எஃபிடமிருந்து உதவி கிடைக்கலாம் என்று அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. ஆனால் அது ஒரு சிறிய தொகை. அதன் மூலம் கடனை அடைக்க முடியாது. எனினும்,அது நாட்டின் கடன் வாங்கும் தகைமையை அங்கீகரிக்கும் ஓர் உதவியாக அமையும். இதை இன்னும் கூரான வார்த்தைகளில் சொன்னால் பிச்சை எடுப்பதற்கான தகைமையை அது அதிகப்படுத்தும். இவ்வாறு பிச்சை எடுத்து பொருளாதாரத்தை ஒரு கட்டத்துக்கு மேல் நிமிர்த்தி விட்டால்,அதன் விளைவாக அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றி பெறலாம் என்று ரணில் விக்கிரமசிங்க நம்புகிறார். ஜனாதிபதித் தேர்தலை அடுத்த ஆண்டு நடத்த வேண்டும். அதனால்தான் உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் பின்னடிக்கின்றதா? வடிவேலுவின் பகிடியில் வருவது போல உள்ளூராட்சி சபைத் தேர்தல் வரும் ஆனால் வராது என்ற நிலைதான் காணப்படுகிறது. பெரும்பாலும் ஒரு ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. பொருளாதாரத்தை ஓரளவுக்கு நிமிர்த்தினால்,அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணிலை விட்டால் வேறு தெரிவு நாட்டுக்கு இருக்காது. சஜித் பிரேமதாச தன்னுடைய தலைமைத்துவத்தை இதுவரையிலும் நிரூபித்திருக்கவில்லை. ஜேவிபி ஒரு பிரதான நீரோட்ட கட்சியாக மேலெழுமா என்பதனை இனிவரும் தேர்தலே தீர்மானிக்கும். எனினும் பொருளாதாரத்தை நிமிர்த்தும் சக்தி ரணிலுக்கு உண்டு என்று நிரூபிக்கப்பட்டால் அவர்தான் அடுத்த ஜனாதிபதி. கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவோடு அவருடைய அதிகாரம் மேலும் கூடியிருக்கிறது. அரசியலமைப்பின் 70(1)அ,உறுப்புரையின்படி நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் இப்பொழுது அவருக்கு உண்டு. இதை அதன் விளைவுகளின் அடிப்படையில் கூறின், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வகிக்கும் தாமரை மொட்டுக் கட்சி இனி ரணிலுக்கு மேலும் கீழ்ப்படிவாக மாறும். அதாவது ரணில் மேலும் பலமடைந்திருக்கிறார் என்று பொருள். இப்படியாக ரணில்,ஒப்பீட்டளவில் பலமடைந்துவரும் ஒரு சூழலில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தினால் அது சில வேலை அரசியல் ஸ்திரத்தன்மையைக் குழப்பக்கூடும். உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் தாமரை மொட்டு கட்சிக்கு பாதகமாக வரலாம் என்ற எதிர்பார்ப்பு உண்டு. கடந்த பொதுத் தேர்தலில் தாமரை மொட்டுக் கட்சி பெற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை காலாவதியாகிவிட்டது என்பதனை தேர்தல் நிரூபிக்கக்கூடும். அது நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையைக் குழப்பும். அரசியல் ஸ்திரத்தன்மை இல்லையென்றால் பொருளாதாரத்தை நிமிர்ந்துவது கடினம். அரசியல் ஸ்திரத்தன்மை இல்லையென்றால் ஐ.எம்.எஃப் போன்ற மேற்கத்திய நிதி அமைப்புக்கள் உதவப்பின்னடிக்கும். எனவே அரசியல் ஸ்திரத்தன்மையைப் பேண வேண்டும். அதற்கு உள்ளுராட்சி சபை தேர்தலை வைப்பது புத்திசாலித்தனமல்ல. இந்த இடத்தில் ஒரு கேள்வி எழும். உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் உள்ளூர் நிலவரங்களை பிரதிபலிப்பவை. அவை தேசிய அளவில் கட்சிகளின் வெற்றி தோல்விகளை காட்டுமா?என்று. உண்மைதான். உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் உள்ளூரில் காணப்படும் சாதி, சமயம், தனிப்பட்ட செல்வாக்கு போன்ற அம்சங்களைப் பிரதிபலிக்கின்றன. ஆனாலும் இறுதியிலும் இறுதியாக கட்சிகளுக்கு கிடைத்த வாக்குகளை தேசிய மட்டத்தில் கணிக்கும்போது அங்கே அது கட்சிகளின் வெற்றி தோல்வியாகவும் வியாக்கியானம் செய்யப்படும். இப்படி ஒரு நிலைமை 2015ல் ரணில்+மைத்திரி அரசாங்கம் உருவாகிய பின் ஏற்பட்டது. 2015 தேர்தலில் ரணில்+மைத்திரி கூட்டு வெற்றி பெற்ற பின் நடந்த கூட்டுறவு சபைகளுக்கான தேர்தலில் மஹிந்த அணி வெற்றி பெற்றது. அது உள்ளூர்ப் பண்புமிக்க ஒரு வெற்றிதான். எனினும் அதைக் கண்டு பயந்த ரணில்+மைத்திரி கூட்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலை கிட்டத்தட்ட 20 மாதங்களுக்கு ஒத்திவைத்தது. அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட தேர்தல்கள் 2018ல் நடந்தபோது அதில் மகிந்த அணி பெரு வெற்றி பெற்றது. அதன் மூலம் ரணில் மைத்திரி கூட்டு பெற்ற வெற்றி காலாவதியாகிவிட்டது என்பது நிரூபிக்கப்பட்டது. அதன் விளைவாக மைத்திரி தனது விசுவாசத்தை இடம் மாற்றிக் கொண்டார். ஒரு யாப்புச் சதிப்புரட்சியில் ஈடுபட்டார். எனவே உள்ளூராட்சி தேர்தல்கள் உள்ளூர் பண்பு அதிகமுடைய முடிவுகளை வெளிக்கொண்டு வந்தாலும், அவை தேசிய அளவில் கட்சிகளுக்கு உரிய வெற்றி தோல்வியாகவே கணிக்கப்பட முடியும். இந்த அடிப்படையில் சிந்தித்தால் தாமரை மொட்டுக்கு மக்கள் ஆணை உண்டா இல்லையா? சஜித்தின் உயரம் எவ்வளவு? ஜே.வி.பியின் உயரம் எவ்வளவு? என்பவற்றை நிரூபிக்கக் கூடிய ஒரு உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயங்கும் என்பதே உண்மை. பதிலாக பொருளாதாரத்தை குறிப்பிடத்தக்க அளவுக்கு நிமிர்த்திய பின் அல்லது ஆகக் குறைந்த பட்சம் ஐஎம்எஃபிடமிருந்து உதவியைப் பெற்ற பின்பு அதை ஒரு வெற்றியாகக் காட்டி தேர்தல்களை வைப்பது அரசாங்கத்தைப் பொறுத்தவரை அதிகம் பாதுகாப்பானது. ஜனாதிபதி ஐ.எம்.எப்பிடமிருந்து கிடைக்கக்கூடிய உதவிகளைக் குறித்து கடந்த பல மாதங்களாக கட்டியெழுப்பிவரும் பிம்பமானது அதைத்தான் காட்டுகிறது. அவர் ஒற்றை யானையாக நாடாளுமன்றத்துக்கு வந்தபொழுதே அதாவது ராஜபக்சக்களின் காலத்திலேயே தனது முதல் உரையில் ஐ.எம்.எஃப்பிடம் போங்கள் என்று சொன்னார். இப்பொழுதும் அதைத்தான் சொல்கிறார்; செய்கிறார். ஐ.எம்.எஃப்பை ஒரு சர்வரோக நிவாரணியாக அவர் உருவகித்து வருகிறார். அதன்மூலம் ஐ.எம்.எஃப்பிடமிருந்து உதவிகளை வெற்றிகரமாகப் பெற முடிந்தால் அதை ஒரு சாதனையாகக் காட்டி அவர் வாக்குகளைத் திரட்ட முயற்சிக்கலாம். ஆனால் இங்குள்ள கேள்வி என்னவென்றால், ஜனாதிபதி எதிர்பார்ப்பது போல அடுத்த ஆண்டுக்குள் பொருளாதாரத்தை ஓரளவுக்குச் சரிக்கட்டலாமா என்பதுதான். ஏனெனில்,இலங்கையைப் போன்று பொருளாதார நெருக்கடிக்குள் வீழ்ந்த கிரேக்கத்தில் ஐந்து ஆண்டுகளுக்குள் எழு தடவைகள் அரசாங்கம் மாறியது. அர்ஜென்டினாவில் ஐந்து தடவைகள் அரசாங்கம் மாறியது. ஐந்து தடவைகள் நிதியமைச்சர்கள் மாற்றப்பட்டார்கள். இலங்கையில் ? http://www.nillanthan.com/5898/
  2. சுதந்திர தினத்தையொட்டி தமிழர்கள் நடாத்திய போராட்டங்கள் – நிலாந்தன். February 19, 2023 “சிவாஜிலிங்கம் தனது ஆதங்க ஆவேசத்தை வெளிப்படுத்துகிறார். இது அவரது உரிமை. அவரது ஆவேச கோரிக்கைகள் தமிழ் மக்களின் ஆவேச கோரிக்கைகள்தான். எனக்கு அதில் மாற்று கருத்து தெரியலை. ஆனால் இவர் இப்படி தன்னந்தனி மனிதராக இதை செய்யும்போது, அவர் முன்வைக்கும் கோஷங்களும் பலவீனமடைகின்றனவே? தவிர்க்க முடியாமல் ஒரு கோமாளி தோற்றப்பாடும் ஏற்படுகிறதே? இவற்றை இன்னமும் கட்சி, இயக்கரீதியாக பலமாக திட்டமிட்டு அமைப்புரீதியாக செய்ய முடியாதா?” இவ்வாறு கேட்டிருப்பவர் மனோகணேசன். சுதந்திர தினத்தையொட்டி யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்வில் பங்குபற்றுவதற்காக வருகை தந்த ஜனாதிபதிக்கு எதிராக சிவாஜிலிங்கமும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்தவர்களும் எதிர்ப்புக் காட்டியிருந்தார்கள். இதில் சிவாஜி லிங்கம் தனி ஒரு ஆளாக நின்று கோஷம் எழுப்பும் காணொளியை பார்த்துவிட்டு மனோகணேசன் மேற்கண்டவாறு கேட்டார். இயல்பிலேயே சிவாஜிலிங்கம் ஒரு தனிமனித ராணுவந்தான். நினைவேந்தலிலும் அவர் அப்படித்தான்,எதிர்ப்புப் போராட்டங்களிலும் அப்படித்தான். பெரும்பாலான அவருடைய துணிச்சலான அரசியல் செயற்பாடுகளில் அவர் தனியாகத்தான் முன்செல்கிறார். அதை ஒரு குழுச் செயல்பாடாகவோ,அல்லது கட்சிச் செயற்பாடாகவோ,அல்லது மக்கள் மயப்பட்ட ஒரு செயற்பாடாகவோ ஒழுங்குபடுத்தவேண்டும் என்று அவர் யோசிப்பதில்லை. சில சமயம் அவ்வாறு மற்றவர்களைக் கூட்டுச்சேர்ப்பது கடினமானது என்று அவர் கருதுகிறாரா? ஒரு மக்கள் கூட்டம் எதிர்ப்பைக் காட்டும்போது அதை ஏதோ ஒரு விதத்தில் உலகத்தையும் ஊடகங்களையும் கவரும் விதத்தில் படைப்புத்திறனோடும், புத்திசாலித்தனமாகவும் ஒழுங்கமைக்க வேண்டும். ஆனால்,தமிழ் அரசியல்பரப்பில் அவ்வாறு எதிர்ப்புப் போராட்டங்களில் படைப்புத்திறனோடு கூடிய கூட்டுச் செயற்பாடுகளை அனேகமாகக் காணமுடிவதில்லை. அவ்வாறு மக்கள்மயப்படாத போராட்டங்கள் உரிய செய்தியை,உரிய தாக்கத்தோடு,உரிய தரப்புகளுக்கு உணர்த்தத் தவறுகின்றன. யாழ்ப்பாணத்தின் முக்கிய சந்தைகளில் வெள்ளை உடுப்போடு ஒரு கையில் பைபிளும் ஒரு கையில் ஸ்பீக்கருமாக மதபோதனையை முன்னெடுக்கும் ஒருவரை அடிக்கடி காணலாம். மற்றவர்கள் தன்னைப் பார்க்கிறார்களா? கேட்கிறார்களா?என்பதைக் குறித்து அவர் அலட்டிக் கொள்வதில்லை. அதையோர் இறை ஊழியமாக அவர் தொடர்ந்து செய்துவருகிறார். அது அவருடைய நம்பிக்கை. ஆனால்,அதைப்போல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் செயற்பட முடியாது. சுதந்திர தினத்திலன்று பல்கலைக்கழக மாணவர்கள் வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி ஊர்வலமாக போனார்கள். அது வடக்குக் கிழக்கு இணைந்த தாயக ஒருமைப்பாட்டைப் பலப்படுத்தும் ஒரு பேரணி. அதில் உதிரிகளாக கட்சி பிரமுகர்கள் காணப்பட்டார்கள். சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாளர்களோடு கலந்துகொண்டார்கள். முன்பு நடந்த பிரூபி போராட்டத்தைப் போல பெருந்திரளான எண்ணிக்கையில் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதில் பங்குபற்றவில்லை. அதாவது அந்த எதிர்ப்பு பேரணியில் கட்சிகளின் பங்களிப்பு ஒப்பீட்டளவில் குறைவாக காணப்பட்டது. ஏன் அதிகம் போவான்,அதில் பங்குபற்றிய பல்கலைக்கழக மாணவர்களின் எண்ணிக்கையே நூற்றுக்கும் குறைவு. கலைப்பீடத்தைத் தவிர ஏனைய பீட மாணவர்கள் பெரும்பாலும் பங்குபற்றவில்லை. மாணவர்களின் போராட்டம் தொடங்கமுன்பே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கும் மாணவர்களுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் தோன்றின. மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் போராட்டத்தை தொடங்கியபொழுது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தனியாக ஒரு போராட்டத்தை நடத்தியது. அதே நாளில் மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சி தனியாக ஒரு போராட்டத்தை நடத்தியது. அப்போராட்டமானது அரசாங்கத்துக்கு எதிரானது மட்டுமல்ல,குறிப்பாக குத்துவிளக்கு சின்னத்தின் கீழ் காணப்படும் டெலோ இயக்கத்துக்கும் எதிரானது. இவ்வாறாக சுதந்திர தினத்தையொட்டி நடந்த போராட்டங்களைத் தொகுத்துப் பார்த்தால் தமிழ்மக்கள் கூட்டாகவும் செயல்பட மாட்டார்களா? படைப்புத்திறனோடு போராடவும் மாட்டார்களா? என்று கேட்கத் தோன்றுகிறது. மட்டக்களப்பில்,சுமந்திரனும் சாணக்கியனும் அவர்களுடைய ஆதரவாளர்களும் காந்தி குல்லாயோடு காட்சியளித்தமை ஒரு படைப்புத்திறனாகப் பார்க்கப்படவில்லை. மாறாக அது ஒரு பகிடியாகப் பார்க்கப்பட்டது. இவ்வாறாக கடந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்ப் பகுதிகளில் நடந்த போராட்டங்கள் அனைத்திலும் கூட்டுச் செயற்பாடு குறைவாக இருந்தது. தனிமனித முனைப்பு அல்லது கட்சி முனைப்பு துருத்திக் கொண்டு தெரிந்தது. படைப்புத்திறன் இருக்கவில்லை. பழைய சலித்த அதே போராட்ட வழிமுறைகள். போலீசார் கைது செய்தபடியால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் போராட்டத்திற்கு ஒரு கவனிப்பு கிடைத்தது. அதுவும் பிணை கிடைத்தவுடன் கொதிப்பு அடங்கிவிட்டது. இவ்வாறு உலகின் கவனத்தை ஈர்க்கமுடியாத போராட்டங்களால் ஒரே ஒரு நன்மை உண்டு. குறிப்பிட்ட கட்சியின் ஆதரவாளர்களை ஓரளவுக்கு கூட்டிக் கட்டி வைத்திருக்க அது உதவும். ஆனால் அதைவிட ஆழமான பொருளில் தமிழ் மக்களை ஒரு தேசமாக திரட்ட மேற்படி போராட்டங்களால் முடிந்திருக்கிறதா? புலம்பெயர்ந்து வாழும் ஒரு நண்பர் அண்மையில் கேட்டார்… ”போராட்டம் என்று சொன்னால் தமிழ் மக்கள் எப்பொழுதும் வீதியிலே நிற்க வேண்டுமா? ஒரு மக்கள் கூட்டம் ஆண்டு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்களையும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் நடத்திக் கொண்டிருக்க முடியுமா?” என்று. பொருத்தமான கேள்வி. ஒர் உடனடிக் பிரச்சினையை முன்வைத்து நிகழும் மக்கள் போராட்டங்கள் அவற்றின் இலக்கை அடையும்வரை தொடர்வது தவிர்க்க முடியாது. உதாரணமாக டெல்லியில் நடந்த விவசாயிகளின் போராட்டம். ஆனால் ஒரு மக்கள் கூட்டத்தின் விடுதலைக்கான ஒரு போராட்டத்தை பொறுத்தவரை குறிப்பாக அறவழிப் போராட்டம் என்று வரும்பொழுது ஆண்டு முழுக்க போராட முடியாதுதான். ஏன் அதிகம் போவான் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எத்தனை நாள் போராடியிருக்கிறார்கள் என்பது இடைக்கிடை ஊடகங்களில் வெளிவரும். ஆனால் அப்போராட்டங்கள் எந்தளவு தூரத்துக்கு உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன? அல்லது எந்த அளவுக்கு சொந்த மக்களை சென்றடைந்திருக்கின்றன? ஆயுதப் போராட்டத்தில் மட்டுமல்ல அறவழிப் போராட்டத்திலும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை போராட்டம் எனப்படுவது இறுதியிலும் இறுதியாக தேசத்தை நிர்மாணிப்பதுதான். தேசத்தை நிர்மாணிப்பது என்பது ஒரு மக்கள் கூட்டத்தை தேசமாக வனையும் அடிப்படை மூலக்கூறுகளை பலப்படுத்துவது தான். அதற்குரிய கட்டமைப்புகளை உருவாக்குவதுதான். ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு கருநிலை அரசு இருந்தது. அது தேச நிர்மாணத்துக்கு வேண்டிய கட்டுமானங்களை ஏதோ ஒரு விகிதமளவுக்கு கட்டியெழுப்பிக் கொண்டிருந்தது. ஆனால் கடந்த 13 ஆண்டுகளாக தமிழ் மக்கள் மத்தியில் அவ்வாறு தேசநிர்மாணத்துக்கு தேவையான கட்டமைப்புகள் எவையும் கட்டியெழுப்பப்படவில்லை. பதிலாக அவ்வப்போது காட்டப்படும் சிறிய மற்றும் பெரிய எதிர்ப்புகளுக்கூடாக கட்சிகளைத்தான் கட்டியெழுப்பி வருகிறார்கள். எனவே தமிழ் மக்கள் போராட்டம் என்பதனை தனிய எதிர்ப்பு அரசியலாக மட்டும் சுருக்கி பார்க்காமல் அதைவிட பரந்தகன்ற அர்த்தத்தில் அதை தேச நிர்மாணமாக விளங்கிக் கொள்ளவேண்டும். ஒரு மக்கள் கூட்டத்தை தேசமாகத் திரட்டும் அடிப்படை அம்சங்களைப் பலப்படுத்தும் விதத்தில் உரிய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். அவ்வாறான கட்டமைப்புகளில் ஒன்றாக போராட்டத்திற்கான மக்கள் அமைப்பும் கட்டியெழுப்பப்பட வேண்டும். புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இருந்துகொண்டு தொலை இயக்கிமூலம் ஒரு மக்கள் போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் அடிப்படையான வரையறைகள் உண்டு. தமிழ்க்கட்சிகளில் பெரும்பாலானவற்றிடம் மாணவ அமைப்புகள் இல்லை. யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள சிங்கள மாணவர்கள் மத்தியில் தென்னிலங்கையில் இயங்கும் ஜேவிபி போன்ற கட்சிகளுக்கு உறுப்பினர்கள் உண்டு. சிறிய அளவில் கட்டமைப்புகளும் உண்டு. ஆனால் போராடும் தமிழ் மக்கள் மத்தியில் அவ்வாறான கட்டமைப்புகள் கிடையாது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் அவ்வாறு மாணவர் போராட்டத்திற்கூடாக மேலெழுந்த ஒருவர். ஆனால் அக்கட்சியிடமும் பலமான மாணவ அமைப்புக்கள் கிடையாது, அப்படிப்பட்ட கட்டமைப்புகள் இல்லாத ஒரு வெற்றிடத்தில்தான்,பல்கலைக்கழக மாணவர்களின் ஊர்வலத்தைப் பலப்படுத்தி பிரம்மாண்டமானதாக கட்டமைக்க வேண்டும் என்ற அக்கறை கட்சிகளிடம் இருக்கவில்லை மாணவர்களிடமும் இருக்கவில்லை. தமிழகத்தில் உள்ள கட்சிகள் எல்லாவற்றுக்கும் மாணவ அமைப்புகள்,மகளிர் அமைப்புகள் என்று வெவ்வேறு வயது மட்டங்களுக்கு ஏற்ப கட்டமைப்புகள் உண்டு. குறிப்பாக கேரளா,மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கொமியூனிஸ்ற் கட்சிக்கு இளையோர் மத்தியில் மூன்றுக்கும் குறையாத கட்டமைப்புகள் உண்டு. பள்ளி மாணவருக்கு ஒரு கட்டமைப்பு,பல்கலைக்கழக மாணவருக்கு ஒரு கட்டமைப்பு, மாணவப் பருவத்தைக் கடந்தவர்களுக்கு ஒரு கட்டமைப்பு,என்றெல்லாம் கட்டமைப்புகள் உண்டு. ஆனால் தமிழ் கட்சிகளுக்கு அப்படியெல்லாம் கட்டமைப்புகள் இல்லை. ஆனால் ரோட்டரிக் கிளப் போன்றவற்றுக்கு அப்படிப்பட்ட கட்டமைப்புகள் உண்டு. இப்பொழுது உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான அறிவிப்புகள் வந்தபின் பெண் வேட்பாளர்களைத் தேடி கட்சிகள் ஓடத்தொடங்கி விட்டன. கிராம மட்ட மகளிர் அமைப்புகள் பலமாக இருந்தால் அதற்குள் இருந்தே உள்ளூர் தலைமைத்துவங்கள் மேலெழுந்து வரும். அப்படிப்பட்ட கட்டமைப்புகள் இல்லாத வெற்றிடத்தில்தான் தேர்தல் என்று வந்ததும் வேட்பாளர்களைத் தேடி அலையும் ஒரு நிலை. அதிலும் பெண்கள் பொறுத்து உள்ளூராட்சித் தேர்தல்களில் 25 விகிதம் பெண் வேட்பாளர்கள் இருக்க வேண்டும் என்று சட்ட ஏற்பாடு உருவாக்கப்பட்ட பின்னர்தான் கட்சிகள் பெண்களை வேட்பாளர்களாக இணைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டது. மற்றும்படி பால் சமநிலையை பேண வேண்டும் என்று எத்தனை கட்சிகள் சிந்திக்கின்றன? எனவே கடந்த 13 ஆண்டுகளாக தமிழ்மக்களை ஒரு தேசமாகத் திரட்ட முடியாத தமிழ்க்கட்சிகள் குறைந்தபட்சம் தமக்குத் தேவையான கட்டமைப்புக்களைக்கூட கட்டியெழுப்பவில்லை. கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் விட்ட வெற்றிடத்தில்தான்,புலம்பெயர்ந்த தமிழர்கள் போராட்டங்களை தொலைவிலிருந்து இயக்க முயற்சிக்கிறார்கள். மாணவர்கள் வேறாகவும் காட்சிகள் வேறாகவும் போராடுகிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிநபர்களாக ஆர்ப்பாட்டங்களுக்கு வருகிறார்கள். தமிழ் மக்கள் பார்வையாளர்களாக விலகிக் கொன்டேயிருக்கிறார்கள்? http://globaltamilnews.net/2023/187733/
  3. பிச்சையெடுக்கச் சுதந்திரம்? - நிலாந்தன் “நான் பேசப்போவது எமக்கு கிடைத்த சுதந்திரத்தைப் பற்றி அல்ல. இன்று நாம் இழந்திருக்கும் சுதந்திரத்தை மீளப்பெறுவது பற்றியே நான் பேசப்போகிறேன்” இப்படிப் பேசியிருப்பவர் நாட்டின் ஜனாதிபதி. நடந்து முடிந்த சுதந்திர தின விழாவில் அவர் ஆற்றிய உரை அது. நாங்கள் சுதந்திரத்தை இழந்து விட்டோம் என்று ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார். இதை எப்பொழுது கூறுகிறார்? ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து 13 ஆண்டுகளின் பின் கூறுகிறார். ஆயின்,2009 ஆம் ஆண்டு ராஜபக்ச சகோதரர்கள் வென்று கொடுத்த சுதந்திரம் எங்கே? அல்லது அது சுதந்திரமே இல்லையா? ராஜபக்சக்கள் யாருக்காக நாட்டை மீட்டுக் கொடுத்தார்களோ, அந்த மக்களே இப்பொழுது நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.அதைத் தனது உரையில் ரணில் குறிப்பிடுகிறார்.அதன்பின் நான்கு நாட்கள் கழித்து நாடாளுமன்றத்தில் கொள்கை விளக்க உரையிலும் அவர் அதைக் குறிப்பிடுகிறார். நாட்டை விட்டுப் போகாதீர்கள் என்று. அண்மையில் முகநூலில் ஒரு மூத்த தமிழ் அரசியல் செயற்பாட்டாளரின் மகன் ஒரு பதிவைப் போட்டிருந்தார்.தான் சந்திக்கும் பெரும்பாலான நண்பர்கள் எப்படி நாட்டை விட்டு வெளியேறலாம் என்பதைப் பற்றியே கதைக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இறுதிக்கட்டப் போரில் வன்னி கிழக்கில் வசித்த ஒரு ஊடகவியலாளர் சொன்னார்… அக்காலகட்டத்தில் ஒன்றில் சாலை கடற்கரையை அல்லது வங்கக் கடலைப் பார்த்தபடி எந்த வழியால் தப்பி போகலாம்? எப்பொழுது தப்பி போகலாம்? என்று சிந்தித்ததை ஒத்த நிலைமை இது.அக்காலகட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் தப்பிப்போவதைப் பற்றியே சிந்தித்தார்கள்.13 ஆண்டுகளின் பின் இப்பொழுது நாடு முழுவதும் அந்த நிலைமை வந்திருக்கிறது. ஆயின்,ராஜபக்சக்கள் வென்று கொடுத்த சுதந்திரம் எங்கே?அல்லது அது சுதந்திரமே இல்லையா?அதைச் சாப்பிட முடியாதா?அதை வைத்து உழைக்க முடியாதா? தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை ராஜபக்சக்கள் தோற்கடித்தார்கள். ஆனால் அதற்காக அவர்கள் எந்தெந்த நாடுகளிடம் கையேந்தினார்களோ அந்த நாடுகளிடம் நாட்டில் ஏதோ ஒரு பகுதியை அல்லது ஏதோ ஒரு வளத்தை இழந்து விட்டார்கள். சீன விரிவாக்கம், அதற்கு எதிரான இந்தோ பசிபிக் வியூகம், குவாட் வியூகம் என்பதற்குள் இச்சிறிய நாடு சிக்கிவிட்டது. நாட்டின் துறைமுகங்களில் ஒன்றாகிய அம்பாங்கோட்டை துறைமுகத்தை சீனா 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எழுதி பெற்றுக் கொண்டு விட்டது. கொழும்புத் துறைமுகத்துக்கு அருகே சீனா ஒரு துறைமுகப் பட்டினத்தைக் கட்டியெழுப்பிவிட்டது. அத்துறைமுகப் பட்டினத்துக்கு நாட்டில் உள்ள மாகாண சபைகளை விடவும் சில அதிகாரங்கள் விசேஷமாக கொடுக்கப்பட்டிருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. தன் சொந்த மக்களுக்கு கொடுக்கத் தயாரற்ற அதிகாரங்களை பிறத்தியாருக்கு கொடுக்கிறது சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு. ஒரு காலம் தேரவாத சிங்கள பௌத்தத்தின் மரபுரிமை சின்னங்களே இந்த நாட்டின் அடையாளங்களாக இருந்தன.ஆனால் இப்பொழுது சீனா கட்டிக் கொடுத்த தாமரை கோபுரந்தான் நாட்டின் நவீன அடையாளமாக மாறியிருக்கிறது. சீன விரிவாக்கத்தின் பலனாக இலங்கை தீவின் வரைபடமே மாறிவிட்டது. சீன விரிவாக்கத்துக்கு எதிராக இந்தியா தனது நிலைகளை இச்சிறிய தீவுக்குள் பலப்படுத்த முற்படுகின்றது.குறிப்பாக வடக்கில் கடலட்டை ஒரு ராஜதந்திரக் கருவியாக மாறிவிட்டது.அது மட்டுமல்ல போரை வென்ற ராஜபக்சக்களின் சுதந்திரம் பெருமளவுக்கு நாட்டுக்குள்ளேயே சுருங்கத் தொடங்கிவிட்டது.அமெரிக்க கண்டத்தின் இரு பெரிய நாடுகளில் அவர்கள் பயணம் செய்யவும் சொத்துக்களை முதலீடு செய்யவும் தடை உருவாகியிருக்கிறது.அதுபோன்ற தடைகள் ஐரோப்பாவுக்கும் பரவக்கூடும்.ராஜபக்சங்களுக்கு அமெரிக்க கண்டத்தில் மட்டும் தடையில்லை, உள்நாட்டிலும் அவர்களுக்கு கடந்த ஆண்டு பாதுகாப்பு இருக்கவில்லை.அதனால்தான் மூத்த ராஜபக்சக்கள் நாட்டின் படைத்தளங்களில் ஒழிந்தார்கள்.அல்லது நாடு விட்டு நாடு ஓடிக்கொண்டிருந்தார்கள்.சொந்த நாட்டிலேயே அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது.அவர்கள் வென்று கொடுத்த நாட்டிலேயே அவர்களுக்கு நிம்மதியாக உறங்க முடியாமல் போய்விட்டது. ஏன் இந்த நிலை வந்தது? அப்படியென்றால் அவர்கள் பெற்ற வெற்றியின் பொருள் என்ன? யுத்தந்தான் நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கியது என்றால்,யுத்தம் முடிந்த பின்னரும் ஏன் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியவில்லை? நாடு ஏன் அதன் முதலீட்டுக் கவர்ச்சியை இழந்தது? ஏனென்றால் யுத்த வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்ற முடியவில்லை. அப்படி மாற்றவும் முடியாது. ஏனென்றால் நாட்டின் மக்கள் கூட்டத்தில் ஒரு பகுதியினரை பூச்சி, புழுக்களைப் போல கொன்று குவித்துப் பெற்ற வெற்றியது. ஒரு இனப்படுகொலையை அரசியல் தீர்வாக மாற்ற முடியாது.மாறாக இனப்படுகொலைக்கு எதிரான நீதிதான் அரசியல் தீர்வாக அமைய முடியும். அதைத்தான் தமிழர்கள் கேட்கிறார்கள். முழுமையான 13ஐ அல்ல. ரணில் விக்கிரமசிங்க சுதந்திர தினத்துக்கு முன்னதாக இனப்பிரச்சினைக்கான தீர்வில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடப் போவதாக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தினார்.ஆனால் சுதந்திரதின விழாவன்று அவரால் அப்படிப்பட்ட அறிவிப்பு எதனையும் வெளியிட முடியவில்லை.அவர் கொழும்பில் 200 மில்லியன் ரூபாய் செலவில் சுதந்திர தினத்தை கொண்டாடிய பொழுது, தமிழர் தாயகத்தில் சுதந்திர தினம் ஒரு கரி நாளாக அனுஷ்டிக்கப்பட்டது. வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி தமிழ் மாணவர்கள் ஊர்வலம் போனார்கள். தமிழ் மக்கள் சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஷ்டிப்பது இதுதான் முதல் தடவையல்ல. கடந்த பல தசாப்தங்களாக அவர்கள் அவ்வாறுதான் அனுஷ்டித்து வருகிறார்கள். 1957 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சி சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஷ்டிக்குமாறு கேட்டது.அந்த அழைப்பை ஏற்று திருமலையில் நடராஜன் என்றழைக்கப்படும் இளைஞர் மணிக்கூட்டுக் கோபுரத்தில் ஏறி கட்டப்பட்டிருந்த சிங்கக் கொடியை அகற்றி கறுப்பு கொடியை கட்ட முற்பட்டார்.அவரை திருக்கோணமலை சந்தையில் வியாபாரஞ் செய்த ஒரு சிங்களவர் வேட்டைத் துவக்கினால் சுட்டு வீழ்த்தினார்.இன்றுவரையிலும் நடராசனுக்கு நீதி கிடைக்கவில்லை.தமிழ் மிதவாதிகளால் தூண்டிவிடப்பட்டு தமிழ் இளையோர் எத்துணை துணிகரமான செயல்களில் இறங்கமுடியும் என்பதற்கு நடராசன் முதலாவது முன்னுதாரணம்.தமிழ் மக்களின் போராட்டத்தில் முதல்வித்து அவர்.நடராசனுக்குப் பின் அவ்வாறு துணிச்சலாகத் தங்கள் உயிர்களை,உறுப்புகளை,சொத்துக்களை,கல்வியை,இழந்த தியாகிகளின் மிகநீண்ட பட்டியல் தமிழ்மக்களிடம் உண்டு. ஆனாலும் நடராசன் சுட்டு வீழ்த்தப்பட்டு 65ஆண்டுகளின் பின்னும்,தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. சுதந்திர தினம் கரிநாளாகவே காணப்படுகிறது. ஆனால் நடராசனை கறுப்புக்கொடி ஏந்துமாறு தூண்டிய தமிழ் மிதவாதிகளின் வழிவந்தவர்கள் பின்னாளில் தாங்களே சுதந்திரதின விழாவில் தேசியக் கொடியை கைகளில் ஏந்தி அசைத்தார்கள்.கொல்லப்பட்ட நடராசனை அதைவிடக் கேவலமாக அவமதிக்கமுடியாது.அவ்வாறு ரணில் விக்கிரமசிங்கவின் நல்லாட்சி காலகட்டத்தில்,சுதந்திரதின விழாவில் பங்குபற்றிய தமிழ்த் தலைவர்கள்,இப்பொழுது மட்டக்களப்பில் காந்தி பூங்காவில் காந்திக் குல்லாயும் கறுப்புக் கொடியுமாக நிற்கிறார்கள்.அவர்கள் எதற்காக காந்திக் குல்லாய் அணிந்தார்கள் என்று தெரியவில்லை.ஆனால் அவர்களுடைய நடப்பு அரசியலை வைத்து பார்க்கும்போது, அவர்களுடைய தோற்றம் வினோதஉடைப் போட்டியில் வேசமிட்டு வந்தவர்களைப்போல காணப்பட்டது. அவர்கள் விதவிதமான வினோத உடைகளை அணிந்து தமிழ் மக்களைக் கவர முயற்சிக்கிறார்கள். ஒருபுறம் தமிழ் அரசியல்வாதிகள்,அரசியலை வினோத உடைப் போட்டியாக மாற்றுகிறார்கள்,இன்னொருபுறம் ஜனாதிபதி ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு தருவேன் என்கிறார்.கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் போலீஸ் அதிகாரம் தொடர்பில் இப்போதுள்ள நிலைமைகளில் மாற்றம் இல்லை என்று கூறுகிறார்.அதாவது 13 மைனஸ்? அதை இன்னும் கூர்மையாகச் சொன்னால் தமிழ் மக்களுக்கு போலீஸ் அதிகாரத்தைப் பெறும் சுதந்திரம் இல்லை.ஒற்றையாட்சிக்கு உட்பட்ட ஒரு தீர்வைப் பெறும் சுதந்திரந்தான் உண்டு.ஆனால் அதைக் கூறியது யாரென்றால் சுதந்திரமில்லாத ஒரு நாட்டின் தலைவர்? புவிசார் அரசியல் விளக்கங்களின்படியும்,பூகோள அரசியல் விளக்கங்களின்படியும் ஒரு பிராந்தியப் பேரரசின் செல்வாக்கு மண்டலத்தில் காணப்படும் ஒரு சிறியநாடு முழு அளவுக்கு சுதந்திரமானதாக இருக்க முடியாது.ஆனால் அச்சிறிய நாடு வெளிச்சக்திகள் தலையிட முடியாதபடி உருகிப்பிணைந்த ஒரு நாடாக இருந்தால்,அது ஒப்பீட்டளவில் ஆகக்கூடிய பட்சம் சுதந்திரமாக இருக்கலாம்.சிறிய நாடுகளைப் பொறுத்தவரை சுதந்திரத்தின் அளவு என்பது ஐக்கியத்தின் அளவுதான்;நல்லிணக்கத்தின் அளவுதான்.அந்தநாட்டில் வாழும் எல்லா மக்கள் கூட்டங்களையும் அந்த நாட்டின் சகநிர்மாணிகளாக ஏற்றுக்கொண்டு பல்லினத்தன்மைமிக்க ஒரு நாட்டைக் கட்டியெழுப்பினால்,அது ஆகக்கூடியபட்சம் சுதந்திரமாக இருக்கலாம்.இல்லையென்றால் தனக்குள் மோதிக் கொண்டிருக்கும் ஒரு நாட்டை வெளிச்சக்திகள் வேட்டையாடும்.அதுவும் இலங்கை போன்று மூன்று பேரரசுகளின் இழுவிசைகளுக்குள்,கேந்திர முக்கியத்துவம் மிக்க ஒரு ஜல சந்தியில், காணப்படும் மிகச்சிறிய நாடானது, தனக்குள் அடிபடுமாக இருந்தால் அது பேரரசுகள் பங்கிடும் ஒர் அப்பமாக மாறிவிடும்.அதுதான் இப்பொழுது நடக்கிறது. இலங்கைத்தீவு இப்பொழுது ஒரு சுதந்திரமான நாடு அல்ல. இறமையுள்ள நாடும் அல்ல.தமிழ் மக்கள் சுதந்திரமாக இல்லாதவரை சிங்கள மக்களும் சுதந்திரமாக இருக்கமுடியாது என்பதைத்தான் கடந்த 13ஆண்டுகளும் நிரூபித்திருக்கின்றன.போரில் வெற்றி பெற்ற பின்னரும் ஏன் இந்த நாடு சுதந்திரமாக இருக்க முடியவில்லை?ஏன் இந்த நாடு செழிப்பாக நிமிர முடியவில்லை?தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை தோற்கடித்த பின்னரும் தமிழ் அரசியலை முன்வைத்து ஏன் ஜெனிவாவில் ஒவ்வொரு ஆண்டும் பதில் கூற வேண்டியிருக்கிறது?வடக்கில் கடலட்டை எப்படி ஒரு ராஜதந்திரக் கருவியாக மாறியது?ஆயுத மோதல்களில் வெற்றி பெற்ற பின்னரும் இந்த நாடு ஐ.எம்.எப் போன்ற அனைத்துலக நிறுவனங்களின் சொற்கேட்டு கீழ்ப்படியும் ஒரு நிலைமை ஏன் ஏற்பட்டது? இலங்கை அதன் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் ஒரு காலகட்டம் எனப்படுவது ஐ.எம்.எப்.போன்ற வெளித்தரப்புகளிடம் கடன்கேட்டுக் கையேந்தும் ஒரு காலமாகவே காணப்படுகிறது.இவ்வாறு வெளிநாடுகளிடமும் உலகப்பொது நிறுவனங்களிடமும் கையேந்தும் ஒருநாடு தன்னை சுதந்திரமான நாடாக கூறிக்கொள்ள முடியுமா?கார்ல் மார்க்ஸின் வார்த்தைகளிற் சொன்னால் “ஒடுக்கும் இனம் என்றைக்குமே நிம்மதியாக இருக்கமுடியாது”.அது சுதந்திரமாகவும் இருக்கமுடியாது.ஒரே ஒரு விடயத்தில்தான் இப்போதைக்கு சுதந்திரமாக இருக்கலாம்.பிச்சையெடுப்பதற்கான சுதந்திரம். http://www.nillanthan.com/5876/
  4. சுடலைக்கழிவு அரசியல்? - நிலாந்தன் 1970களில் தமிழ் இளைஞர் பேரவையில் உறுப்பினராக இருந்தவரும் தமிழரசு கட்சியோடு நெருங்கிச் செயற்பட்டவரும், பிந்நாளில் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவரும், இந்திய இலங்கை உடன்படிக்கையின் பின், இணைந்த வடக்கு கிழக்கில் முக்கிய பொறுப்பில் இருந்தவருமாகிய, ஒரு மூத்த அரசியல் செயற்பாட்டாளரின் நேரடி அனுபவம் இது…….தமிழரசுக் கட்சியோடு நெருங்கிச் செயற்பட்ட காலப்பகுதியில் இளையவர்கள் அமிர்தலிங்கத்தின் வீட்டு முன் விறாந்தையில் தங்குவதுiண்டாம். ஒருநாள் இரவு அவர்கள் சுவரொட்டி ஒட்டுவதற்காக போகும்பொழுது அவர்களோடு சேர்ந்து அமிர்தலிங்கத்தின் மகன் ஒருவரும் சென்றிருக்கிறார். இரவு முழுதும் மகனைத் தேடிக் காணாத அமிர்தலிங்கம் அடுத்த நாள் காலை இந்த இளைஞர்களோடு அவரைக் கண்ட பொழுது பின்வரும் தொனிப்படப் பேசியிருக்கிறார்… “நீயும் படிக்காமல் இவங்களப்போல காவாலியாத் திரியப் போறியா?” 1970களில் அமிர்தலிங்கம் எந்த நோக்கு நிலையில் இருந்து அவ்வாறு கூறினாரோ,அதே நோக்கு நிலையில் இருந்துதான் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளின் பின் சுமந்திரனும் கதைக்கிறாரா ? “20 வருடங்களாகக் கூட இருந்தவர்களை நல் வழிப்படுத்த எடுத்த முயற்சியிலும் நாம் தோல்வி அடைந்து விட்டோம்” இவ்வாறு சுமந்திரன் அண்மையில் சாவகச்சேரியில் வைத்துக் கூறியுள்ளார். முன்பு பங்காளிகளாக இருந்த கட்சிகளை நோக்கித்தான் அவர் அவ்வாறு கூறியுள்ளார். அவர்களை நல்வழிப்படுத்த முற்பட்டோம் என்று கூறுகிறார். ஆயின் அவர்கள் திருத்தப்பட வேண்டிய குற்றவாளிகள் என்று பொருள். ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குற்றவாளிகள் அல்லது திருத்தப்பட வேண்டியவர்கள் என்று அவர் கருதுகிறாரா? இரண்டு தசாப்தங்களாக ஒன்றாகக் குடும்பம் நடத்திவிட்டு இப்பொழுது இனித் திருந்த மாட்டார்கள் என்று கூறுகிறாரா? ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நல்வழிப்படுத்துவது என்பது ஏறக்குறைய அரசாங்கம் கூறுவதுபோல புனர்வாழ்வழிப்பது என்ற பொருளில்தான். ஒரு ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அவ்வாறு கூறத்தக்க மனோநிலை எங்கிருந்து வருகிறது? நாங்கள் தூய மிதவாத கட்சி. ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடாதவர்கள். எமது கைகளில் ரத்தம் இல்லை. கொலைப் பழி இல்லை. நாங்கள் படித்தவர்ள்; நாங்கள் எப்பொழுதும் நல்வழியில்தான் செல்கிறோம்…. என்று நம்பும் ஒரு மிதவாத பாரம்பரியத்தில் இருந்தா அவ்வாறு கூறப்படுகிறது? ஆனால் தமிழரசுக் கட்சி அப்படி கூறமுடியாது. ஏனெனில் இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட அரசியல் செயற்பாட்டாளரும் உட்பட ஆயிரக்கணக்கான இளவயதினரை ஆயுதப் போராட்டத்தை நோக்கித் தூண்டியதே தமிழ் மிதவாதிகள்தான். குறிப்பாக தமிழரசு கட்சியானது தேர்தல்களில் தோற்கும்பொழுது தீவிர தேசிய நிலைப்பாட்டை கையில் எடுக்கும். (இப்பொழுது, பேச்சுவார்த்தை மேசையில் தீவிரமான நிலைப்பாட்டை எடுப்பது போல). அப்பொழுது அவர்கள் பேசும் வீர வசனங்களில் மயங்கி இளையோர் அவர்கள் பின் செல்வார்கள். அந்த இளையோரை தமது அரசியல் எதிரிகளுக்கு எதிராகத் திருப்பி அவர்களைத் தண்டிக்குமாறு தூண்டியது தமிழ் மிதவாதிகள்தான். மேடைகளில் அவர்கள் செய்த முழக்கங்களை கலாநிதி சிதம்பரநாதன் “வார்த்தை வன்முறை-வேர்பல் வயலன்ஸ்” என்று வர்ணிப்பார். இவ்வாறு தமிழ் மிதவாதிகளால் தூண்டப்பட்டு போசிக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டதே தமிழ் ஆயுதப் போராட்டம் ஆகும். எனவே தமிழரசுக் கட்சி இதில் தனக்கு சம்பந்தமில்லை என்று கூறமுடியாது. தனது கையில் ரத்தம் இல்லை என்றும் கூறமுடியாது. தமிழரசு கட்சியின் தேர்தல் மேடைகளில் இளையோர் உணர்ச்சிவசப்பட்டு விரலை வெட்டி தலைவர்களின் நெற்றியில் ரத்தத் திலகம் வைத்தார்கள். அவ்வாறு ரத்தத்தால் பொட்டு வைத்த ஒருவர் பின்னாளில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புலனாய்வுத்துறை பொறுப்பாளராக வந்தார். அவருக்கு இயக்க பெயரும் பொட்டு என்று வைக்கப்பட்டது. இப்படியாக இளைஞர்களை ரத்தம் சிந்துமாறு ஊக்குவித்த ஒரு கட்சி இப்பொழுது தன்னை ஒரு தூய மிதவாதக் கட்சியாக கூறிக்கொள்ள முடியாது. ஏன் அதிகம் போவான்? தமிழரசுக் கட்சியின் தலைவர் அமிர்தலிங்கத்தின் மகன் இந்தியாவில் ஒரு இயக்கத்தைத் தொடங்கிய பொழுது அதை அமிர்தலிங்கம் தடுக்கவில்லை. இவ்வாறு தமது இயலாமை,பொய்மை,போர்க்குணமின்மை என்பவற்றிற்கு எதிராகத் திரண்டு வந்த இளையோரின் கோபத்தைத் திசைதிருப்பி ஆயுதப் போராட்டத்தை நோக்கி ஊக்கிவித்ததன்மூலம் தமிழ்த் தலைமைகள் தந்திரமாக போராட்ட பொறுப்பை இளைய தலைமுறையின் தலையில் சுமத்தின. ஆயுதப் போராட்டம் படிப்படியாக அரங்கில் முன்னேறத் தொடங்கிய பொழுது அதன் தர்க்கபூர்வ விளைவாக தமிழ் மிதவாதிகள் பின்னரங்கிற்கு தள்ளப்பட்டார்கள். ஒரு கட்டத்தில் ஆயுதப் போராட்டம் மிதவாதிகளுக்கு எதிராகவும் திரும்பியது. அதாவது ஆயுதப் போராட்டத்தால் தண்டிக்கப்படுவோரின் பட்டியலில் தமிழ் மிதவாதிகளும் இருந்தார்கள் என்பதனை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். எனினும் அதே ஆயுதப் போராட்டம் அதன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு பின் ஒரு பண்புருமாற்றத்துக்கு தயாராகியது. அதன் விளைவுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. கூட்டமைப்பு எனப்படுவதே 2009க்கு முந்திய ஒரு பண்புருமாற்றத்தின்-trasformation-விளைவுதான். நவீன தமிழ் அரசியலில் தோன்றிய சாம்பல் பண்பு அதிகமுடைய (grey) ஒரு கட்டமைப்பு அது. அப்பண்புருமாற்றத்தை 2009 க்குப் பின் அடுத்த கட்டக் கூர்ப்புக்கு எடுத்துச் செல்ல சம்பந்தர் தவறிவிட்டார். வரலாறு அவருக்கு நிர்ணயகரமான,உன்னதமான ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியது. ஆனால் வரலாறு அவருக்கு வழங்கிய பொறுப்பை அவர் பொருத்தமான விதத்தில் நிறைவேற்றவில்லை. ஒரு பண்புருமாற்ற காலகட்டத்தை அவர் வீணடித்து விட்டார். ஒரு பண்புருமாற்றத்துக்குத் தலைமைதாங்க அவரால் முடியவில்லை. அதற்கு அவசியமான அரசியல் உள்ளடக்கமும் அவரிடமில்லை. தமிழ் மக்கள் ஓர் ஆயுதப் போராட்டத்தை கடந்து வந்த மக்கள். ஆயுதப் போராட்டம் என்றாலே எல்லாருடைய கைகளிலும் ரத்தம் இருக்கும். இதில் எல்லாருக்கும் ஏதோ ஒரு விகிதமளவுக்குக் கூட்டுப் பொறுப்பு உண்டு. தமிழ் மக்கள் தங்களுடைய இறந்த காலத்தைக் கிண்டத் தொடங்கினால் பிணமும் நிணமும் எலும்புக்கூடுகளுந்தான் வெளியேவரும். தமிழ் மக்களைப் பொறுத்தவரை இறந்த காலத்தை கிண்டுவது என்பது அதன் பெரும்பாலான அர்த்தத்தில் புதைமேடுகளைக் கிண்டுவதுதான். அப்படிக் கிண்டத் தொடங்கினால்,ஒருவர் மற்றவரைக் குற்றவாளியாக்குவதிலேயே தேசம் பல துண்டுகளாக சிதறிப் போய்விடும். ஒர் ஆயுத மோதலுக்கு பின்னரான அரசியல் என்ற அடிப்படையில்,தமிழ் மக்கள் இரண்டு தளங்களில் தமது அரசியலை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது. ஒன்று நீதிக்கான போராட்டம். இரண்டு,அந்தப் போராட்டத்துக்காக தேசத் திரட்சியை ஆகக்கூடியபட்சம் உடையவிடாமல் பாதுகாப்பது. அவ்வாறு தேசத்திரட்சியை பலமான நிலையில் பேணுவதென்றால்,அதற்கு தமிழ் அரசியலில் பண்புருமாற்றம் அவசியம். அதாவது வெளி நோக்கிய நீதிக்கான போராட்டம்; உள்நோக்கிய பண்புருமாற்றம். அதற்கு பரந்த மனம் கொண்ட பெருந்தலைவர்கள் வர வேண்டும். ஆனால் சம்பந்தர் அவ்வாறான ஒரு பெருந் தலைவரல்ல. தமிழ் அரசியலில் முன்னெப்பொழுதும் தோன்றியிராத ஒரு சாம்பல் பண்புமிக்க கூட்டுக்கு சுமார் 20 வருடங்கள் அவர் தலைமை தாங்கினார். தமிழ் மிதவாத அரசியலிலேயே அதிகளவு ஆசனங்களை(22) வென்ற அக்கூட்டு படிப்படியாகச் சிதைந்து போய்விட்டது. அதற்கு அவரும் பொறுப்பு. அவர் தலைமை தாங்கிய ஒரு கூட்டுக் கலைந்தபொழுது,அதன் தலைவராக,அதைக்குறித்து அவர் உத்தியோகபூர்வமாக எதையும் சொல்லவில்லை. அல்லது சொல்ல முடியவில்லை. கூட்டமைப்பின் சிதைவு என்பது சம்பந்தருடைய தலைமைத்துவத்தின் தோல்வியுந்தான். தமிழ் பண்புருமாற்ற அரசியலின் தோல்வியுந்தான். அது தமிழரசுக் கட்சியின் தோல்வியுமா என்பதை இனிவருங்காலமே தீர்மானிக்கும். கடந்த சில கிழமைகளுக்குள் கூட்டமைப்பு மட்டும் சிதையவில்லை தமிழரசு கட்சியும் இறுக்கமான ஒரு கட்சியாக உள்ளதா என்ற கேட்குமளவுக்கு நிலைமைகள் காணப்படுகின்றன. கடந்த கிழமை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும்போது மார்ட்டின் வீதியில்,கட்சித் தலைமையகத்தில் மூத்த தலைவர்கள் காத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். ஆனால் வேட்பு மனுக்கள் சுமந்திரனின் அணியைச் சேர்ந்த ஒருவருடைய அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டு நேரடியாக கச்சேரிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக குற்றஞ் சாட்டப்படுகிறது. அதாவது கட்சித் தலைமையின் கட்டுப்பாட்டுக்குள் கட்சி இல்லை என்று பொருள். அது மட்டுமல்ல, கிளிநொச்சியில் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பொழுது, சுமந்திரனுக்கு விசுவாசமான அணியைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் அவர்கள் சுயேச்சைக் குழுவாக போட்டியிடுகிறார்கள். அவர்களில் சிலர் சந்திரகுமாரின் சமத்துவக் கட்சியில் இணைந்து விட்டார்கள். சிறீதரனின் அன்ரன் பாலசிங்கம் கட்சியை எங்கே கொண்டு போகிறார்? கடந்த திங்கட்கிழமை கரைச்சி பிரதேச சபையின் தவிசாளரின் வீட்டுக்கு முன் சுடலைக் கழிவுகள் ஒரு மூட்டையாகக் கட்டிப் போடப்பட்டுள்ளன என்பதனை அவர் முகநூலில் பதிவேற்றியுள்ளார். அதை யார் செய்தது என்பது நிரூபிக்கப்படவில்லை. எனினும் முகநூலில் பிரதேச சபை தவிசாளர் எழுதிய குறிப்பில்,சுயேட்சைக் குழுவின் மீதே குற்றஞ் சாட்டப்படுகிறது. ஒரே கட்சிக்குள் ஒரே தேர்தல் தொகுதிக்குள் ஏற்பட்ட மோதல்கள் சுடலைக் கழிவுகளை வீட்டின் முன் போடும் அருவருப்பான ஒரு வளர்ச்சிக்கு வந்து விட்டனவா? இருபது வருடங்களாக ஒன்றாகக் குடும்பம் நடத்திவிட்டு இப்பொழுது முன்னாள் பங்காளிகளை ஒட்டுக் குழுக்கள். தூள் கடத்திகள், தலையாட்டிகள் என்று அழைக்கலாமென்றால்,நாளை,கட்சியை உடைத்துக் கொண்டு வெளியேறுபவர்களுக்கு என்னென்ன பட்டங்களைச் சூட்டப் போகிறார்கள்? http://www.nillanthan.com/5866/
  5. சுதந்திரத்தின் பொருள் என்ன? நிலாந்தன். 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் திருப்பகரமான ஒரு முடிவு எட்டப்படும் என்று ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார். தமிழ்க் கட்சிகளோடு பேச்சுவார்த்தைகளைத் தொடங்கிய பொழுது அவருடைய நிகழ்ச்சி நிரல் அவ்வாறுதான் காணப்பட்டது. ஆனால் அவர் எதிர்பார்த்தது போல பேச்சுவார்த்தைகள் முன்னேறவில்லை. அதைவிட முக்கியமாக சுதந்திர தினத்தை ஒரு கரி நாள் என்று பிரகடனப்படுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் வடக்கிலிருந்து கிழக்கை நோக்கி ஒரு ஆர்ப்பாட்டப் பேரணியை ஒழுங்குப்படுத்தியிருக்கிறார்கள். கடந்த 75 ஆண்டுகளாக சுதந்திர தினம் எனப்படுவது தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு கெட்ட நாளாகவே காணப்படுகிறது. தமிழ் மக்கள் தங்களுடைய சுதந்திரத்தை இழந்த நாளாக அதைக் கருதுகிறார்கள். 1956 ஆம் ஆண்டு இதே நாளில் திருமலையில் தியாகி நடராசன் சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஷ்டிக்க வேண்டும் என்று தமிழரசு கட்சி விடுத்த வேண்டுகோளை ஏற்று கட்டப்பட்டிருந்த சிங்கக் கொடியை அகற்றி கறுப்புக் கொடியை பறக்க விட முயற்சித்த பொழுது சுட்டுக் கொல்லப்பட்டார். நவீன தமிழ் அரசியலில் தொடக்க கால தியாகிகளில் அவரும் ஒருவர். தமிழ் மிதவாதிகளால் தூண்டப்பட்ட இளையோர் தமது உயிரைத் துச்சம் என மதித்து துணிகரமான செயல்களில் ஈடுபட முடியும் என்பதனை உணர்த்திய முதல் சந்தர்ப்பம் அது. திருமலை நடராஜனிலிருந்து தொடங்கி சுதந்திரத்துக்காக உயிரைக் கொடுத்த, உறுப்புகளைக் கொடுத்த, கல்வியை, சுகபோகங்களை, சொத்துக்களை இழந்த மிக நீண்ட தியாகிகள் பட்டியல் ஒன்றை இப்பொழுது தமிழ் மக்கள் வைத்திருக்கிறார்கள். ஆனாலும், 66ஆண்டுகளின் பின்னரும் தமிழ் மக்களுக்கு சுதந்திர தினம் ஒரு கரிநாளாகத்தான் உள்ளது. தமிழ் மக்கள் தங்களுக்கு சுதந்திரம் இல்லை என்றே இப்பொழுதும் நம்புகிறார்கள். தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்குந்தான் சுதந்திரம் இல்லை முஸ்லிம் மக்களுக்குந்தான் சுதந்திரம் இல்லை. கடந்த ஆண்டு நடந்த தன்னெழுச்சி போராட்டங்கள் அதைத்தான் நாட்டு மக்களுக்கு உணர்த்துகின்றன. இலங்கைத் தீவின் நவீன வரலாற்றில் நிகழ்ந்த அதிகம் படைப்புத்திறன் மிக்க ஒரு அறவழிப் போராட்டம் அது. ”அரகலய” போராட்டம் சிங்கள மக்களுக்கும் சுதந்திரம் இல்லை என்பதை உணர்த்தியது. அதற்கு முன் நிகழ்ந்த ஈஸ்டர் குண்டு வெடிப்பும் அதன் பின்னரான விளைவுகளும் முஸ்லிம் மக்களுக்கும் சுதந்திரம் இல்லை என்பதை உணர்த்தின. ஆகமொத்தம் ராஜபக்சக்கள் சிங்கள மக்களுக்கு பெற்றுக் கொடுத்ததாக பிரகடனப்படுத்திய சுதந்திரம் இப்பொழுது யாரிடம் இருக்கிறது? ஏன் அதிகம் போவான்? ராஜபக்சேக்களுக்கே சுதந்திரம் இருக்கவில்லை. அவர்கள் படைத்தளங்களில் பதுங்க வேண்டி வந்தது. நாட்டுக்கு நாடு ஓட வேண்டி வந்தது. அவர்கள் வென்றெடுத்த நாட்டில் அவர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றானது. அதுதான் அவர்கள் பெற்றுக் கொடுத்த சுதந்திரம். இப்பொழுது ரணில் விக்கிரமசிங்க ராஜபக்சக்களின் கருவியாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறார். எனினும் ராஜபக்சங்களுக்கு இப்பொழுதும் சுதந்திரம் இல்லைத்தான். கடந்த மாதம் கனடா விதித்த தடைகளின்படியும் அமெரிக்க பிரதிநிதிகள் சபை நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், ராஜபக்சக்கள் அமெரிக்க கண்டத்தில் வாழ்வது, நடமாடுவது போன்றன எதிர்காலத்தில் நெருக்கடிக்கு உள்ளாகலாம். அதாவது அவர்கள் பெற்றுக் கொடுத்ததாகக் கூறிய சுதந்திரம் அவர்களுடைய நாட்டுக்குள்ளையே சுருங்கி வருகிறது. அவர்களுக்கு மட்டுமல்ல அவர்களுடைய மக்களுக்கும் அந்த சுதந்திரம் சாப்பிடக் கூடியதாக இல்லை;உழைக்கக் கூடியதாக இல்லை. அந்த சுதந்திரத்தை சாப்பிட முடியாத காரணத்தால் அந்த சுதந்திரத்துள் உழைக்க முடியாத காரணத்தால் சிங்கள மக்கள் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். லட்சக்கணக்கானவர்கள் கடவுச் சீட்டுகளை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அண்மையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்த தகவல் பரவலாக ஊடகங்களில் பகிரப்பட்டது. 6000க்கும் குறையாத மூளைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறியிருப்பதாக அவர் கூறுகிறார். ராஜபக்சக்கள் வென்று கொடுத்த நாட்டை விட்டு ஏன் மூளைசாலிகள் வெளியேற வேண்டும்? அதுமட்டுமல்ல தன்னெழுச்சி போராட்டங்களுக்கு காரணமாக இருந்த பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தியும், தன்னெழுச்சிப் போராட்டங்களின் விளைவுகளை பயன்படுத்தியும், வெளிச்சக்திகள் இச்சிறிய தீவின் மீதான தமது பிடியை இறுக்கி வருகின்றன. அல்லது அவ்வாறு தமது பிடியை இறக்குவதற்கான ஒரு பலப் பரீட்சையில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 13 ஆண்டுகளில் இலங்கை தீவில் இந்தியா அதிகமாக பெற்றுக் கொண்ட ஆண்டு கடந்த ஆண்டு எனலாம். எனினும் கடந்த 13 ஆண்டுகளுக்குள் ஏற்கனவே இலங்கை தீவில் காலூன்றி நிற்கும் சீனாவை அகற்ற இந்தியாவால் முடியாது. அம்பாந்தோட்டையில் இருந்து சீனாவை அகற்றுவதென்றால் அதற்கு குறைந்தது 90 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். நாட்டின் அடையாளமாக முன்னர் காணப்பட்டது அதன் பௌத்த மரபுரிமை சின்னங்கள்தான். ஆனால் இப்பொழுது இந்த நாட்டின் அடையாளமாக கூறப்படுவது, சீனா கட்டிக் கொடுத்த தாமரை மொட்டு கோபுரம்தான். சீன விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக இச்சிறிய தீவு மாறிய பின்,நாட்டின் நிலப் பரப்பு அதிகரித்துள்ளது. கொழும்புத் துறைமுகத்திற்கு அருகே கட்டப்பட்டுள்ள சீனப்பட்டினமானது, இலங்கைத் தீவின் சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்குவது. அச்சிறிய பொருளாதார பட்டினத்துக்கு இலங்கை அரசாங்கம் அதிகரித்த அதிகாரங்களை வழங்கியது. 13 ஆவது திருத்தத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டதை விடவும் சிறப்பு அதிகாரங்கள் சீனப் பட்டினத்துக்கு உண்டு என்று விமர்சனங்கள் எழுந்தன. சீனப் பட்டினம் ,அம்பாந்தோட்டை துறைமுகம், தாமரை மொட்டுக் கோபுரம், வடக்கில் கடலட்டைப் பண்ணைகள்…என்று இச்சிறு தீவு இப்பொழுதும் சீனாவின் விரிவாக்கத்துக்குள்தான் காணப்படுகின்றது. அதே சமயம் இந்தியாவும் தன் பங்கிற்கு இச்சிறிய தீவினுள் எங்கெல்லாம் காலூன்ற முடியுமோ அங்கெல்லாம் காலூன்ற முனைகிறது. கடந்த ஆண்டு இந்தியா ஆறு உடன்படிக்கைகளை எழுதிப் பெற்றுக் கொண்டது. எனவே ஆயுத மோதல்களுக்கு பின்னரான கடந்த 13 ஆண்டுகளை அதாவது ராஜபக்சக்கள் சிங்கள மக்களுக்கு நாட்டை வென்று கொடுத்த பின்னரான கடந்து பதின் மூன்று ஆண்டுகளைத் தொகுத்துப் பார்த்தால், நமக்கு கிடைக்கும் சித்திரம் என்ன? அவர்கள் வென்றெடுத்த நாடு அதன் மக்களுக்கு சொந்தமில்லை. அவர்கள் வென்றெடுத்த நாட்டில் அவர்களுடைய மக்களே இருக்க விரும்பவில்லை. அவர்கள் வென்றெடுத்த நாட்டில் அவர்களுக்கே பாதுகாப்பு இல்லை. அவர்கள் வென்றெடுத்த நாடு உலகின் மிக கேவலமான கடனாளியாக மாறி விட்டது. இப்பொழுது கூறுங்கள் அவர்கள் வென்றெடுத்தது எதனை? அதற்கு பெயர் சுதந்திரமா? புவிசார் அரசியல் விளக்கங்களின்படியும், பூகோள அரசியல் வியூகங்களின்படியும் ஒரு சிறிய நாடு முழு அளவுக்கு சுதந்திரமானதாக இருக்க முடியாது. ஆனால் அச்சிறிய நாடு வெளிச்சக்திகள் தலையிட முடியாதபடி உருகிப் பிணைந்த ஒரு நாடாக இருந்தால் அது ஒப்பிட்ட அளவில் ஆகக்கூடிய பட்சம் சுதந்திரமாக இருக்கலாம். சிறிய நாடுகளைப் பொறுத்தவரை சுதந்திரத்தின் அளவு என்பது ஐக்கியத்தின் அளவுதான்;நல்லிணக்கத்தின் அளவுதான். அந்த நாட்டில் வாழும் எல்லா மக்கள் கூட்டங்களையும் அந்த நாட்டின் சக நிர்மாணிகளாக ஏற்றுக்கொண்டு பல்லினத்தன்மை மிக்க ஒரு நாடாகக் கட்டியெழுப்பினால் அது ஆகக்கூடிய பட்சம் சுதந்திரமாக இருக்கலாம். இல்லையென்றால் தனக்குள் மோதிக் கொண்டிருக்கும் ஒரு நாட்டை வெளிச் சக்திகள் வேட்டையாடும். அதுவும் இலங்கை போன்று மூன்று பேரரசுகளின் இழுவிசைகளுக்குள், கேந்திர முக்கியத்துவம் மிக்க ஒரு ஜல சந்தியில், காணப்படும் மிகச்சிறிய நாடானது, தனக்குள் அடிபடுமாக இருந்தால் அது பேரரசுகள் பங்கிடும் ஒரு அப்பமாக மாறிவிடும். அதுதான் இப்பொழுது நடக்கிறது. இலங்கைத் தீவு இப்பொழுது ஒரு சுதந்திரமான நாடு அல்ல. இறமையுள்ள நாடும் அல்ல. தமிழ் மக்கள் சுதந்திரமாக இல்லாதவரை சிங்கள மக்களும் சுதந்திரமாக இருக்க முடியாது என்பதைத்தான் கடந்த 13 ஆண்டுகளும் நிரூபித்திருக்கின்றன. போரில் வெற்றி பெற்ற பின்னரும் ஏன் இந்த நாடு சுதந்திரமாக இருக்க முடியவில்லை? ஏன் இந்த நாடு செழிப்பாக நிமிர முடியவில்லை? தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை தோற்கடித்த பின்னரும் தமிழ் அரசியலை முன்வைத்து ஏன் ஜெனிவாவில் ஒவ்வொரு ஆண்டும் பதில் கூற வேண்டியிருக்கிறது? வடக்கில் கடலட்டை எப்படி ஒரு ராஜதந்திரக் கருவியாக மாறியது? ஆயுத மோதல்களில் வெற்றி பெற்ற பின்னரும் இந்த நாடு ஐ.எம்.எப் போன்ற அனைத்துலக நிறுவனங்களின் சொற் கேட்டு கீழ்ப்படியும் ஒரு நிலைமை ஏன் ஏற்பட்டது? இலங்கை அதன் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் ஒரு காலகட்டம் எனப்படுவது ஐ.எம்.எப் போன்ற வெளிதரப்புகளிடம் கடன் கேட்டுக் கையேந்தும் ஒரு காலமாகவே காணப்படுகிறது. இவ்வாறு வெளிநாடுகளிடமும் உலகப் பொது நிறுவனங்களிடமும் கையேந்தும் ஒரு நாடு தன்னை சுதந்திரமான நாடாக கூறிக்கொள்ள முடியுமா?அல்லது அது கையேந்துவதற்கான ஒரு சுதந்திரமா? https://athavannews.com/2023/1323192
  6. மீண்டும் பதின்மூன்றா? - நிலாந்தன் “இதனால் நாடு பிளவுபடாது. விசேடமாக 13ஆவது திருத்தம் தொடர்பில் ஐந்துநீதிபதிகள் அடங்கிய குழுவின் தீர்மானத்தின்படி பார்த்தால் நாம்ஒற்றையாட்சிக்குள் இருக்கிறோம். அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு நான்உடன்படுகின்றேன். நாம் தற்போது உருவாக்கிக் கொண்டுள்ள மாகாணசபைகளுக்கு லண்டன் நகரசபைக்குள்ள அதிகாரங்கள் கூடகிடையாது. லண்டன் நகரசபைக்கு இதனைவிடவும் அதிகாரங்கள் உள்ளன. எனவே இதனை பெடரல் இராச்சியம் எனக் கூறமுடியுமென நான் நினைக்கவில்லை” –ஜனாதிபதி ரணில் 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்த் தரப்பிடமிருந்துதான் முதலில் வெளிப்பட்டது. ஆறு கட்சிகள் இணைந்து இந்தியாவை நோக்கிக் கூட்டுக் கோரிக்கையை வைத்தபொழுது அது ஒரு வாதப்பொருளாக மாறியது. கடந்த தைப்பொங்கல் விழாவில் வைத்து ரணிலும் அதைத்தான் சொன்னார். இப்பொழுது ஜெய்சங்கரும் அதைத்தான் கூறியிருக்கிறார். ஒரு இடைக்கால ஏற்பாடாக 13ஐ முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று. அவர் அவ்வாறு கூறுவதற்கு சில கிழமைகளுக்கு முன்பு தயான் ஜயதிலக்கவும் அதுபற்றிக் கூறியிருந்தார். 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு 15 ஆண்டுகள் அவகாசம் கொடுக்க வேண்டும் என்று தயான் கூறுகிறார். ரணில் விக்ரமசிங்க கூறுகிறார் தனக்கு ஒன்றரை ஆண்டுகள் தேவை என்று. எனவே கூட்டிக்கழித்துப் பார்த்தால் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது என்பது ஒரு வலிமையான கருத்தாக மேலெழுகிறது. அது ரணில் விக்கிரமசிங்கவுக்கு வசதியானது. அவர் முன்பு மைத்திரியோடு ஆட்சியைப் பகிர்ந்த காலகட்டத்தில் சம்பந்தரோடு இணைந்து உருவாக்கிய ஒரு புதிய யாப்புக்கான இடைக்கால வரைபானது 13ஆவது திருத்தத்தைக் கடந்து செல்கின்றது. அதை அவர் “எக்கிய ராஜ்ய” என்று கூறினார். அப்படி ஒரு தீர்வை கட்டியெழுப்புவது குறித்து அவர் இந்தியாவுக்கு தெரிவித்திருக்கவில்லை. தமிழ்த் தரப்பும் தெரிவித்திருக்கவில்லை. அவ்வாறு தமக்கு தெரிவிக்கவில்லை என்பதனை அப்போதிருந்த இந்தியத் தூதுவர் சம்பந்தரை சந்தித்தபொழுது குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டியிருந்தார். அது சண்டே டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியிருந்தது. ஆனால் இப்பொழுது எக்கிய ராஜ்யவிலிருந்து கீழிறங்கி மீண்டும் 13ஐ முழுமையாக அமுல்படுத்துவது என்ற நிலைக்கு அரசியல் வந்திருக்கிறது. மகிந்தவும் 13ஐ ஏற்றுக் கொள்கிறார்,சஜித்தும் 13ஐ ஏற்றுக் கொள்கிறார்,எனவே பெரிய சிங்களக் கட்சிகள் மத்தியில் அதற்கு எதிர்ப்பு இல்லை. அதனால் 13ஐ முழுமையாக அமல்படுத்துவது என்ற விடயத்தில் ரணிலுக்குப் பெரிய சவால்கள் இல்லை, மேலும் அதன் மூலம் இந்தியாவை வைத்துத் தமிழ்த் தரப்பைக் கையாள முடியும் என்றும் அவர் நம்புவார். இந்தியா கடந்த ஆண்டு இலங்கைத்தீவில் ஒப்பீட்ளவில் அதிகமாகப் பெற்றுவிட்டது. பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் முதலில் உதவிய நாடாகவும் அதிகமாக உதவிய நாடாகவும் இந்தியா காணப்படுகிறது. அதன் மூலம் இந்தியா இலங்கை மீதான தனது பிடியை ஒப்பீட்டளவில் அதிகரித்த அளவில் இறுக்கிக் கொண்டு விட்டது. கடந்த 13 ஆண்டுகளில் இந்தியா இலங்கைத் தீவில் அதிகம் பெற்றுக் கொண்ட ஒரு ஆண்டாக கடந்த ஆண்டைக் குறிப்பிடலாம். கடனை மீளக்கட்டமைக்கும் விடயத்திலும் சீனாவை முந்திக்கொண்டு இந்தியா இலங்கைக்கு சாதகமாக முடிவுகளை எடுத்தது. இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால், இந்தியா கடனை மீளக் கட்டமைக்கத் தயார் என்ற செய்தியை “இந்து” பத்திரிகையைப் பார்த்துத்தான் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி அறிந்து கொண்டார் என்பது. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வருவதை இந்தியா விரும்பவில்லை என்று கருதப்பட்டது. ஆனால் இந்தியாவை சுதாகரிப்பதில் அவர் கடந்த ஆண்டு முழுவதிலும் வெற்றிகரமாக உழைத்திருப்பதாகவே தெரிகிறது. அவரை இந்தியாவுக்கு வருமாறு ஜெய்சங்கர் கடந்த வாரம் உத்தியோக பூர்வமாக அழைப்பு விடுத்திருக்கிறார். இவ்வாறு நெருக்கடியான காலத்தில் உதவி புரிந்ததன்மூலம் இந்தியா சீனாவை முந்திக்கொண்டு கொழும்பை அதிகம் நெருங்கி வரலாமா என்று முயற்சிக்கின்றது. இவ்வாறு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ராஜதந்திரப் போட்டிக்குள் ஈழத் தமிழர்களை நுட்பமாக சிக்க வைக்கும் தந்திரம் மிக்கவர் ரணில் விக்கிரமசிங்க என்பதே ஈழத் தமிழர்களுக்கு இதிலுள்ள பாதகமான அம்சம் ஆகும். தந்திரசாலியான ரணில் மூன்று முனைகளில் விடயங்களை அணுகுகிறார். முதலாவது தமிழ்த் தரப்போடு பேச்சுவார்த்தை. இரண்டாவது இந்தியாவை வளைத்துப் போடுவது. மூன்றாவது ஐநாவை சுதாகரிப்பது. ஒருபுறம் 13,இன்னொருபுறம் நிலைமாறுகால நீதி. இந்த இரண்டையும் சமாந்தரமாக அவர் முன்னெடுக்க முயற்சிக்கக்கூடும். தென்னாபிரிக்கப் பாணியிலான நல்லிணக்க முயற்சி என்று கூறிக்கொண்டு அவர் நிலைமாறு கால நீதிச் செயற்பாடுகளை புதிய வடிவத்தில் உயிர்ப்பிக்க முடியும். அதன்மூலம் அவர் ஐநாவைச் சமாளிக்கலாம். ஐநா தீர்மானங்களில் 13 ஆவது திருத்தம் ஒரு தீர்வாக முன்வைக்கப்படுகிறது. இந்தியா அதை ஊக்கிவித்தது. எனவே நிலைமாறுகால நீதி,13வது திருத்தம் என்பவற்றின் ஊடாக ரணில் பல இலக்குகளை அடைய முயற்சிக்கிறார். கடந்த 21 ஆம் தேதி சம்பந்தரையும் சுமந்திரனையும் அவர் சந்தித்தபொழுது அவர் தெரிவித்த கருத்துக்களின் பிரகாரம் 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவதற்குரிய சாத்தியமான வழிமுறைகளை அரசாங்கம் சிந்திக்கிறது என்ற ஒரு தோற்றம் ஏற்படத்தக்க விதத்தில் கதைத்திருக்கிறார். கடந்த 26 ஆம் திகதி நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் ஓர் அறிக்கையை கையளித்துள்ளார். அதில் மாகாணத்திடம் இருந்து மத்திய அரசாங்கம் பறித்துக் கொண்ட அதிகாரங்களை மீளப்பெறுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதேசமயம் அக்கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி ரணில் “ நாம் தற்போது உருவாக்கிக் கொண்டுள்ள மாகாண சபைகளுக்கு லண்டன் நகரசபைக்குள்ள அதிகாரங்கள் கூட கிடையாது. லண்டன் நகரசபைக்கு இதனை விடவும் அதிகாரங்கள் உள்ளன. எனவே இதனை பெடரல் இராச்சியம் எனக் கூறமுடியுமென நான் நினைக்கவில்லை”என்று கூறியுள்ளார். அத்துணை பலவீனமான 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவதை சிங்களக் கட்சிகள் எதிர்க்கக் கூடாது என்று அவர் கூற வருகிறாரா? 13-வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்தப்போவதாக ஒரு தோற்றத்தை கட்டியெழுப்புவதன்மூலம் அவர் இந்தியாவைத் திருப்திப்படுத்தலாம்; ஒரு பகுதி தமிழ்க் கட்சிகளைத் திருப்திப்படுத்தலாம் ; ஐநாவையும் திருப்திப்படுத்தலாம். இதில் பதிமூன்றாவது திருத்தத்தை ஒரு இடைக்கால ஏற்பாடாகக்கூட ஏற்றுக் கொள்ளாத தமிழ்த் தரப்புகள் என்ன செய்யப் போகின்றன?தமது தீர்வு முன்மொழிவை நோக்கி அக்கட்சிகள் கடந்த 13 ஆண்டுகளாக எப்படி உழைத்திருக்கின்றன? என்னென்ன தியாகங்களைச் செய்திருக்கின்றன? ஒரு அரசியல் இலக்கை முன்வைத்து அதை நோக்கி உழைக்கத் தேவையான கட்டமைப்புகள் தமிழ்க் கட்சிகளிடம் உண்டா? தாம் விரும்பும் ஒரு தீர்வுக்காக போராடவோ தியாகம் செய்யவோ எத்தனை தமிழ் அரசியல்வாதிகள் தயார்? இந்த வெற்றிடத்தைத்தான் ரணில் விக்ரமசிங்க வெற்றிகரமாக கையாளப் பார்க்கிறார்.இந்த வெற்றிடத்தைத்தான் ஜெய்சங்கர்” தீர்வைப் பற்றி பேசுவதே தீர்வு ஆகிவிடாது “ என்று சுட்டிக்காட்டியிருக்கிறார். அதாவது பொருளாதார நெருக்கடியின் பின்னரான தமிழ் அரசியல் எனப்படுவது மீண்டும் ஒருதடவை அதன் இயலாமையை நிரூபித்துக் கொண்டிருக்கிறது. உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை எதிர்கொள்வதில் மட்டுமல்ல, இந்தியாவை எதிர்கொள்வதில்,ஐநாவை எதிர்கொள்வதில், சீனாவை எதிர்கொள்வதில்,உலக சமூகத்தை எதிர்கொள்வதில், குறிப்பாக,மேற்சொன்ன அனைத்துத் தரப்புகளையும் கெட்டித்தனமாகக் கையாளும் ரணிலை எதிர்கொள்வதில் தமிழ்த் தரப்பு மீண்டும் ஒரு தடவை தோற்கப் போகிறதா? அண்மை நாட்களாக தமிழ் சமூகவலைத்தளங்களிலும் கைபேசிச் செயலிகளிலும் ஒரு “ரிக் ரொக்” காணொளி தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது. அதில் இறுதிக் கட்டப் போரில் தமிழ் மக்களைத் தோற்கடிப்பதற்காக என்னென்ன நாடுகள் என்னென்ன உதவிகளைச் செய்தன என்ற விபரம் சுருக்கமாகத் தரப்படுகிறது. இந்தியாவில் தொடங்கி கிரேக்கம் வரையிலும்,உலகப் பேரரசுகள்,அமெரிக்காவுக்கு எதிரான சிறிய நாடுகள்,ஐநா,ஐரோப்பிய ஒன்றியம்,இஸ்லாமிய நாடுகள், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் என்று உலகின் பெரும்பாலான நாடுகள் அவ்வாறு உதவியுள்ளன. கோட்பாட்டு வேறுபாடுகளுக்கு அப்பால், மத வேறுபாடுகளுக்கு அப்பால்,உலகம் முழுவதிலும் உள்ள பெரும்பாலான பலசாலி நாடுகள் ஒரு சிறிய மக்கள் கூட்டத்தை சுற்றிவளைத்திருக்கின்றன என்பதனை அச்சிறிய காணொளி விவரிக்கின்றது. ஆயின், ஐநாவும் உட்பட உலகின் பெரும்பாலான நாடுகள் ஈழத் தமிழர்களைத் தோற்கடிப்பதற்காக ஒன்று திரண்டனவா? அவை அவ்வாறு திரளக் காரணம் என்ன? பிராந்தியத்தில் எதிரும் புதிருமாக காணப்படும் அமெரிக்கா-சீனா; இந்தியா -சீனா; இந்தியா-பாகிஸ்தான் ஆகிய நாடுகளை தமிழ்மக்களுக்கு எதிராக ஒரே கோட்டில் கொண்டு வந்து நிறுத்த எப்படி இலங்கை அரசாங்கத்தால் முடிந்தது? இஸ்ரேல்-ஈரான் ஆகிய எதிரும் புதிருமான நாடுகளை எப்படித் தமிழ் மக்களுக்கு எதிராக ஒரே கோட்டில் கொண்டு வந்து நிறுத்த முடிந்தது ? சிங்கள மக்கள் அரசுடைய ஒரு தரப்பாக இருப்பதுதான் அதற்குக் காரணமா ?அப்படியென்றால் அரசற்ற தரப்பாகிய தமிழ் மக்கள் இதிலிருந்து எதைக் கற்றுக் கொள்ளவேண்டும்? ஒரு சிறிய மக்கள் கூட்டத்துக்கு எதிராக முழு உலகமும் எப்படி நீசமாக மாறியது? பிராந்தியத்தில்,அனைத்துலகில், எதிரெதிரான சக்திகளை எப்படி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களுக்கு எதிராகத் திருப்பினார்? என்ற கேள்விகளுக்கு தமிழ் மக்கள் விடை கண்டுபிடிக்க வேண்டும் . அந்த விடைகளைக் கடந்த 13 ஆண்டுகளாக கண்டுபிடிக்க தவறிய வெற்றிடத்தில்தானா இப்பொழுது பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன? 13 மீண்டும் அரங்கிற்குள் வந்திருக்கிறது ? http://www.nillanthan.com/5861/
  7. சின்னத்தில் என்ன இருக்கிறது? - நிலாந்தன் தமிழரசுக் கட்சிக்கு எதிராக ஒரு புதிய கூட்டமைப்பை அமைக்கும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இதனால் விக்னேஸ்வரன்-மணிவண்ணன் அணியானது மான் சின்னத்தின் கீழும் ஏனைய கட்சிகள் குத்துவிளக்கு சின்னத்தின் கீழும் போட்டியிடுவதாக முடிவாகியுள்ளது. தமிழரசுக் கட்சிக்கு எதிராக ஒரு பெரிய கூட்டை உருவாக்கப் போகின்றன என்று எதிர்பார்க்கப்பட்ட கட்சிகள் ஒரு பொதுச் சின்னத்தை கண்டுபிடிக்க முடியாமல் தங்களுக்கு இடையே இரண்டாக உடைந்து விட்டன. இந்த உடைவை தொகுத்துப் பார்த்தால் வெளிப்படையாக ஒரு விடயம் தெரிகிறது. ஆயுதப்போராட்ட மரபில் வந்த கட்சிகள் ஓரணியிலும் ஆயுதப்போராட்ட மரபில் வராத கட்சிகள் இன்னொரு அணியாகவும் நிற்பதைக் காணலாம். இது ஆயுதப் போராட்ட மரபில் வந்த கட்சிகளுக்கும் ஆயுதப் போராட்ட மரபில் வராத கட்சிகளுக்கும் இடையிலான ஒரு முரண்பாடாக தோன்றும். கடந்த வாரம் நடந்த சந்திப்புகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து வந்த ஜனநாயகப் போராளிகள் கட்சியை கூட்டுக்குள் இணைத்துக் கொள்வதற்கு விக்னேஸ்வரன் முதலில் தயக்கம் காட்டினார். ஏனைய கட்சிகள் விளக்கம் கேட்ட பொழுது ஜனநாயக போராளிகள் கட்சியை உள்ளே வைத்துக்கொண்டு அந்த விளக்கத்தை தன்னால் கூற முடியாது என்றும் அவர்களை வெளியே அனுப்பினால்தான் அந்த காரணத்தை வெளிப்படையாக சொல்லலாம் என்று கூறியிருக்கிறார். அதனால் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சந்திப்பை தொகுத்துப் பார்க்கும் ஒருவருக்கு பின்வரும் கேள்வி எழும். தமிழரசு கட்சிக்கு எதிரான ஒரு பலமான கூட்டை உருவாக்க முடியாமல் போனமைக்கு காரணம்,ஆயுதப் போராட்ட மரபில் வந்த கட்சிகளும் அந்த மரபில் வராத கட்சிகளுக்கும் இடையிலான முரண்பாடா ? என்பதே அக்கேள்வியாகும். காலைக்கதிர் பத்திரிகையின் செய்தியாளர் வர்ணிப்பதுபோல “மிலிட்டரி ஹோட்டலும் சைவ ஹோட்டலும்” வேறு வேறாக நிற்கின்றனவா? ஆனால்,கடந்த பொதுத் தேர்தலில் விக்னேஸ்வரன் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் சின்னத்தின் கீழ்தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அது மட்டுமல்ல அதற்கு முன்பு கடந்த வடமாகாண சபையில் அவர் தமிழரசுக் கட்சிக்காரர்களால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தபோது அவரைக் காப்பாற்றியது ஆயுதப் போராட்ட மரபில் வந்த இயக்கங்கள்தான். விக்னேஸ்வரனின் எழுச்சியென்பது ஆயுதப் போராட்ட மரபில் வந்த கட்சிகளின் உதவியால் கிடைத்த ஒன்றுதான். அதாவது விக்னேஸ்வரனுக்கு “அசைவ ஹோட்டலில்தான்” விருந்து கிடைத்தது. ”சைவ ஹோட்டலில்” அல்ல. எனவே தமிழரசுக் கட்சிக்கு எதிரான ஒரு புதிய கூட்டை உருவாக்க முடியாமல் போனமைக்கு காரணம் ஆயுதப் போராட்ட மரபில் வந்த கட்சிகளை மிதவாத மரபில் வந்தவர்கள் ஏற்றுக்கொள்ளத் தவறியமை என்று கூறப்படும் விளக்கம் முழுமையானது அல்ல. உண்மையான பிரச்சினை சின்னம்தான். கூட்டின் பெயர்தான். தமிழரசு கட்சிக்கு எதிராக ஒரு பலமான கூட்டை கட்டி எழுப்புவது என்றால் கூட்டமைப்பு என்ற பெயர் தேவை என்று விக்னேஸ்வரன் அல்லாத ஏனைய கட்சித் தலைவர்கள் நம்பினர். கூட்டமைப்பு என்ற பெயரில் வாக்குக் கேட்டால் அதற்கென்று ஒரு வாக்கு வங்கி இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். அதனால் ஏற்கனவே 2008 ஆம் ஆண்டு, அதாவது ஆயுதப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஒரு கட்சியின் சின்னத்தை பயன்படுத்துவது என்று முடிவெடுத்தார்கள். கட்சியின் பெயர் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பதாகும். அது புளட் இயக்கமும் ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தின் சுகு அணியும் இணைந்து உருவாக்கிய ஒரு கட்சியாகும். ஈ.பி.ஆர்.எல்.எப்பின் சுகு அணியானது, தமிழ்த் தேசிய சிந்தனைக்கு வெளியே நிற்கிறது. அந்த இயக்கத்தின் சுரேஷ் அணி தமிழ்த் தேசிய சிந்தனைக்குள் நிற்கிறது. இவ்வாறு புளட்டும் ஈ.பி.ஆர்.எல்.எஃபின் சுகு அணியும் சேர்ந்து உருவாக்கிய கட்சியின் சின்னத்தை பயன்படுத்தி புதிய கூட்டமைப்பை பதிந்த பின் அதில் இருக்கும் “ஜனநாயக” என்ற வார்த்தையை பின்னர் நீக்கலாம் என்று மேற்படி கட்சிகள் திட்டமிட்டிருந்தன. இது தமிழரசுக் கட்சியைத் தவிர்த்துவிட்டு கூட்டமைப்பைப் பதிவது என்று பங்காளிக் கட்சிகள் திட்டமிடத் தொடங்கிய பொழுதே கருக்கொண்ட ஒரு யோசனையாம். ஆனால் விக்னேஸ்வரனும் மணிவண்ணனும் அந்த சின்னத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள். அக்கட்சியின் செயலாளராக இருப்பவர் புளட் இயக்கத்தைச் சேர்ந்த ஆர்.ஆர் என்று அழைக்கப்படும் ராகவன். விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் கூட்டமைப்புக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஒரு கூட்டு அது என்ற அடிப்படையில் அந்த கட்சியின் சின்னத்தை பயன்படுத்துவதற்கு விக்கி-மணி அணி தயங்குகிறது. புதிய கூட்டின்மீது தனதுபிடி பலமாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு தனது கட்சியின் சின்னத்தையே பொதுச் சின்னமாக பயன்படுத்த வேண்டும் என்றும்,தன்னை கூட்டின் செயலாளராக நியமிக்க வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் விரும்பியதாக தெரிகிறது. இவ்வாறாக சின்னம் மற்றும் செயலாளர் விடயத்தில் ஒரு பொதுக் கருத்தை எட்ட முடியாத காரணத்தால் கூட்டு உருவாகவில்லை. தமிழரசுக் கட்சிக்கு எதிராக ஒரு பலமான கூட்டைக் கட்டியெழுப்பும் பொழுது அதில் கூட்டமைப்பு என்ற பெயர் தேவை என்று விக்னேஸ்வரன் அல்லாத ஏனைய கட்சித் தலைவர்கள் நம்புவதாக தெரிகிறது. கூட்டமைப்பு என்ற பெயர் கடந்த இரண்டு தசாப்தங்களாக மக்கள் மத்தியில் பதிந்திருப்பதனால், அந்த பெயருக்கு என்று ஒரு வாக்குவங்கி இருக்கும் என்றும் அவர்கள் நம்புகின்றார்கள். அதுபோலத்தான் தமிழரசுக் கட்சியும் தனது வீட்டுச் சின்னத்துக்கென்று ஒரு பெரிய வாக்குவங்கி உண்டு என்று நம்புகிறது. பழக்கப்பட்ட ஒரு சின்னம் அல்லது பழக்கப்பட்ட ஒரு பெயர் என்பது விமர்சன பூர்வமாக சிந்திக்காத வாக்காளர்களை கவர்வதற்கு இலகுவான வழி என்று நம்பப்படுவதுண்டு. அது ஒரு விதத்தில் பொதுப்புத்தியை அதிகம் உழைப்பின்றி கவர்வதற்கான ஒரு உத்திதான். ஆனால் தமிழ் தேசியப் பரப்பில் கடந்த சில தசாப்தகால அனுபவங்களை தொகுத்துப் பார்த்தால் அது முழு வெற்றி பெற்ற ஒரு உத்தி அல்லவென்பது தெரியவரும். அதற்கு கீழ்வரும் உதாரணங்களைக் காட்டலாம். இந்திய அமைதிகாக்கும் படைக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இடையே மோதல்கள் இடம்பெற்ற பொழுது வெளிச்சவீட்டு சின்னத்தின் கீழ் போட்டியிட்ட ஈரோஸ் இயக்கம் 13 ஆசனங்களை கைப்பற்றியது. தமிழ் அரசியலில் ஒரு சுயேச்சை குழு அந்தளவு ஆசனங்களை அதற்கு முன்னும் கைப்பற்றவில்லை இன்றுவரையிலும் கைப்பற்றவில்லை. அங்கே சின்னம் ஒரு விவகாரமாக இருக்கவில்லை. அந்த சின்னம் அதற்கு பின் எந்த ஒரு தேர்தலிலும் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய வாக்குகளைப் பெறவில்லை. அதேபோன்று கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலின் போதும் தமிழரசு கட்சிக்கு எதிராகக் கூட்டுச்சேர முற்பட்ட கட்சிகளின் மத்தியில் சின்னம் ஒரு விவகாரமாக காணப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னம் வெற்றிகரமானது என்று கருதப்பட்டது. தமிழ்மக்கள் பேரவைக்குள் காணப்பட்ட கட்சிகளை இணைக்க முடியாமல் போனமைக்கு அந்த சின்னமும் ஒரு காரணம். தேர்தலில் அந்தச்சின்னம் கிழக்கில் ஒப்பீட்டளவில் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்றது. எனினும் அது ஒரு நிர்ணயகரமான வெற்றியல்ல. உதயசூரியன் சின்னம் ஒரு காலம் வெற்றியின் சின்னமாகக் கருதப்பட்டது. ஆனால் ஆயுதப்போராட்டத்தின் பின்னணியில் வீட்டு சின்னம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது உதயசூரியன் தோற்கடிக்கப்பட்டது. ஏன் அதிகம் போவான் ? கடந்த பொதுத் தேர்தலின்போது வீட்டுச் சின்னத்துக்கு வெளியே வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையை தமிழ்மக்கள் மூன்று வெவ்வேறு தரப்பினருக்கு வழங்கினார்கள். முதலாவது தரப்பு,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி. இரண்டாவது,விக்னேஸ்வரனின் கட்சி. மூன்றாவது, வியாழேந்திரன். எனவே சின்னந்தான் வெற்றிக்கு அடிப்படை காரணம் என்று நம்புவது சரியா ?அதே போல பழக்கப்பட்ட ஒரு பெயரை வைத்து விமர்சனபூர்வமாக சிந்திக்காத வாக்காளர்களின் கூட்டு உளவியலை கையாளலாம் என்று நம்புவதும் சரியா? சின்னங்கள் குறியீடுகள்தான். பெயர்களும் குறியீடுகள்தான். ”வார்த்தைகள் அர்த்தங்களால் சுமையேற்றப்படுகின்றன”என்று ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி கூறுவார். வார்த்தைகளுக்கும் சின்னங்களுக்கும் மந்திரசக்தியை கொடுப்பது கட்சிகளின் வேலை. செயற்பாட்டாளர்களின் வேலை. ஒரு கட்சி எந்தளவு கடுமையாக உழைக்கிறது என்பதில்தான் அது தங்கியிருக்கிறது. எனவே தமிழரசுக் கட்சிக்கு சவாலாக எழுவது என்பது, சின்னங்களிலும் பெயர்களிலும் தங்கியில்லை. விசுவாசமான உழைப்பில்தான் தங்கியிருக்கிறது. சிறந்த தலைவர்கள் சின்னங்களை உருவாக்குகிறார்கள். வார்த்தைகளுக்கு புதிய அர்த்தங்களைக் கொடுக்கிறார்கள். சின்னங்களுக்கும் வார்த்தைகளுக்கும் மந்திர வலிமை ஏற்றுகிறார்கள். இதுதொடர்பில் இரண்டு விடயங்களை அழுத்திச் செல்லவேண்டும். முதலாவது, தமிழரசுக்கட்சிக்கு எதிராக என்று சிந்திப்பதே தவறு. அது அதன் உளவியல் அர்த்தத்தில் தமிழரசுக்கட்சியின் பலத்தைக் குறித்த தாழ்வுச்சிக்கலையுங் குறிக்கும். மாறாக தேசத் திரட்சியை கட்டியெழுப்புவதற்காக என்று சிந்திப்பதே சரி. அதுதான் ஆக்கபூர்வமானது. இது முதலாவது. இரண்டாவது விடயம், கட்சிகளின் வெற்றி என்பது சின்னங்களிலும் பெயர்களிலும் தங்கியிருப்பதில்லை. நவீன தகவல்தொடர்பு யுகத்தில் கட்சிகளின் வெற்றிக்குரிய விளம்பர உத்திகளையும் பிரச்சார உத்திகளையும் வகுத்துக் கொடுப்பதற்கென்றே தொழிற்சார் வல்லுநர்கள் வந்துவிட்டார்கள். அவர்கள் நினைத்தால் சின்னங்களையும் பெயர்களையும் திட்டமிட்டு ஸ்தாபிப்பார்கள். ஒரு புதிய ட்ரெண்டை உருவாக்குவார்கள். எனவே இந்தச்சின்னம்தான் வேண்டும்,இந்தப் பெயர்தான் வேண்டும் என்ற மாயைகளில் இருந்து புதிய கூட்டுக்கள் விடுபடவேண்டும். தமிழ் மக்களையும் அந்த மாயைகளில் இருந்து விடுவிக்க வேண்டும். மாயைகளில் மூழ்கிக் கிடந்தால் மெய்மையை கண்டுபிடிக்க முடியாது. மெய்மையை கண்டுபிடித்தால்தான் பொருத்தமான உழைப்பைக் கொட்டி வார்த்தைகளையும் சின்னங்களையும் மந்திரசக்தி மிக்கவையாக மாற்றலாம். எல்லாவற்றிற்கும் கடும் உழைப்பு வேண்டும். வியட்நாமிய புரட்சியின் தந்தை கோஷிமின் கூறியது, புதிய கட்சிக் கூட்டுக்களுக்கும் பொருந்தும். “மக்களிடம் செல்லுங்கள்,மக்களுக்கு உண்மையைச் சொல்லுங்கள், மக்கள் உங்களுக்கு வெற்றிகளைப் பெற்றுத் தருவார்கள் “ http://www.nillanthan.com/5851/
  8. பேச்சுவார்த்தைக்கான நிபுணத்துவ அறிவு கட்சிகளுக்குத் தேவையா ? நிலாந்தன். கடந்த 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் பதினோராம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று யாழ்ப்பாணம் ராஜா க்ரீம் ஹவுஸ் மண்டபத்தில் ஒரு சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டது. மன்னாரைச் சேர்ந்த தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கமானது மேற்படி சந்திப்பை ஒழுங்குபடுத்தியிருந்தது. தமிழ்த்தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் தமிழ்த்தேசிய மக்கள்முன்னணி அழைக்கப்பட்டிருக்கவில்லை. தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்திற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான உறவு சுமூகமானது அல்ல. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை இது போன்ற ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்குள் உள்ளே கொண்டு வரக்கூடிய ஒரே சிவில் அமைப்பாக தமிழ் சிவில் சமூக அமையும்தான் காணப்படுகிறது. எனவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அந்த சந்திப்பில் அழைப்பு விடுக்கப்படவில்லை. மேலும்,சந்திப்புக்கு அழைக்கப்பட்ட கட்சிகளிலும் சிலர் பங்குபற்ற வில்லை. புளொட் இயக்கத்தின் தலைவரும் டெலோ இயக்கத்தின் தலைவரும் அங்கு வந்திருக்கவில்லை. புளொட் இயக்கம் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவரை அனுப்பியிருந்தது. சட்டத்தரணி ஸ்ரீகாந்தாவும் வந்திருக்கவில்லை. சுமந்திரன் வந்திருந்தார். மாவை சேனாதிராஜா வந்திருந்தார். விக்னேஸ்வரன் வரவில்லை, அருந்தவபாலனை அனுப்பியிருந்தார். சுரேஷ் பிரேமசந்திரன்,ஐங்கரன்நேசன் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் வந்திருந்தார்கள். யாழ் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறை தலைவரும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகைகளின் ஆசிரியர்களும் தமிழ் பத்திரிகைகளில் அரசியல் கட்டுரைகளை எழுதுபவர்களும் அங்கே வந்திருந்தார்கள். மேற்படி சந்திப்பின் நோக்கம் பேச்சுவார்த்தைகளை இலக்காகக் கொண்டு ஒரு நிபுணர் குழுவை உருவாக்குவது ஆகும். பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும்,அக்கட்டமைப்பானது கட்சிகளில் மட்டும் தங்கியிராமல் கட்சிகளுக்கு வெளியே புதுஜீவிகள், கருத்துருவாக்கிகள்,சமூகப் பெரியார்கள், சமயப் பெரியார்கள், செயற்பாட்டாளர்கள் போன்ற பல தரப்புகளையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. சந்திப்பின் முடிவில் அவ்வாறு ஒரு கட்டமைப்பை உருவாக்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. கட்சிகளோ அல்லது கட்சி பிரமுகர்களோ தனி ஓட்டம் ஓடுவதை தடுப்பது மேற்படி சந்திப்பின் உள்நோக்கம் ஆகும். தமிழ் மக்கள் ஒரு தரப்பு என்ற அடிப்படையில் ஒரு தேசம் என்ற அடிப்படையில் சிந்திக்க வேண்டும் என்றும், எனவே ஒரு தேசத்துக்குரிய கட்டுமானம் என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை திட்டமிடவும் ஒழுங்குபடுத்தவும் ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. அக்கருத்தை அங்கு கூடியிருந்த பெரும்பாலான அரசியல்வாதிகள் ஏற்றுக் கொண்டிருந்தார்கள். அப்படி ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று சிந்திப்பதன் பொருள்,தமிழ் தரப்பு இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் பேச்சு வார்த்தைகளை சீரியஸ் ஆக எடுத்துக் கொள்கிறது என்பது அல்ல. சுமந்திரன் கூறுவது போல ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களையும் வெளிநாடுகளையும் ஏமாற்றுவதற்காக ஒரு பட்டத்தை வானில் விட முயற்சிக்கிறார் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் அவர் பட்டம் விடுகிறாரோ இல்லையோ தமிழ் மக்கள் அதற்காக அண்ணாந்து பார்த்து கொட்டாவி விட்டுக் கொண்டிருக்க தேவையில்லை. ரணில் வருவார் போவார் அவரைப் போல எத்தனையோ தலைவர்கள் கடந்த ஒரு நூற்றாண்டு முழுவதும் வந்து போய்விட்டார்கள். ஆனால் எல்லாத் தலைவர்களும் தமிழ் மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள். எனவே அந்த ஒரு நூற்றாண்டு கால அனுபவத்தின் அடிப்படையில் சிங்கள தலைவர்களை எதிர்கொள்ளவும், அவர்கள் விரிக்கும் சூழ்ச்சி வலைகளை அறுத்து எறியவும், அவற்றை அனைத்துலகத்திற்கு அம்பலப்படுத்தவும் தமிழ் மக்களிடம் ஒரு கட்டமைப்பு இருக்க வேண்டும். ஒரு தேசம் என்ற அடிப்படையில் தமிழ்மக்கள் அதற்குரிய கட்டமைப்பை கொண்டிருக்க வேண்டும். சிங்களத் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு விசுவாசமாக இருக்கலாம், இல்லாமல் விடலாம். ஆனால் தமிழ் மக்கள் வெளி உலகத்துக்கு தாங்கள் பேச்சுவார்த்தைக்கு விசுவாசமாக இருக்கிறார்கள் என்பதனை நிரூபிக்கும் விதத்தில் ஒரு கட்டமைப்பை வைத்திருக்க வேண்டும். அது மட்டுமல்ல தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய அரசியல்வாதிகளும் நிரந்தரமானவர்கள் அல்ல. இன்றைக்கு இருக்கும் மக்கள் பிரதிநிதி நாளை இல்லாமல் போகலாம். ஆனால் ஒரு தேசமாக தமிழ் மக்கள் தொடர்ந்து இருக்கிறார்கள், இருக்கவும் வேண்டும். எனவே ஒரு தேசம் என்ற அடிப்படையில் இதுபோன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஒரு கட்டமைப்பு இருக்க வேண்டும். அது அரசியல்வாதிகளில் தங்கியிராமல் சுயாதீனமாக இயங்கும் ஒரு கட்டமைப்பாகவும் இருக்க வேண்டும். இந்த அடிப்படையில் பேச்சு வார்த்தைகளுக்கான ஒரு சுயாதீனக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று கடந்த 11ஆம் திகதி ராஜா கிரீம்ஹவுஸில் நடந்த சந்திப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தமிழ் மக்கள் ஓர் அரசுடைய தரப்பு அல்ல. ஓர் அரசற்ற தரப்பாக இருப்பதனால் தமிழ் மக்களுக்கு ஐநா போன்ற உலகப் பொது மன்றங்களிலும் உரிய அங்கீகாரம் இல்லை. அது மட்டுமல்ல இந்தியா சீனா அமெரிக்கா போன்ற பேரரசுகளும் கொழும்பில் இருக்கும் அரசாங்கத்தைத்தான் எப்பொழுதும் கையாளப் பார்க்கும். அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்பு சார் அணுகுமுறை அத்தகையதுதான். அண்மையில்கூட இந்திய நாடாளுமன்றத்தில் தமிழக அரசியல்வாதியான வை.கோபாலசாமி ஒரு கேள்வியை எழுப்பிய பொழுது இந்திய வெளியுறவு அமைச்சர் வழங்கிய பதிலில் அதை காணலாம். பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா இலங்கைக்கு வழங்கிய உதவிகள் ஒரு இனத்துக்கு என்று வழங்கப்படவில்லை,இலங்கைக்கு பொதுவாகவே வழங்கப்பட்டன என்று அவர் கூறுகிறார். ஏனென்றால் இலங்கையை இந்தியா கொழும்புக்கு ஊடாகத்தான் அணுகுகின்றது. கொழும்பில் இருக்கும் அரசாங்கத்தைத்தான் இந்தியா கையாள முயற்சிக்கும். கொழும்பில் உள்ள அரசாங்கம் இந்தியாவின் வழிக்கு வரவில்லை என்றால்,தமிழ் மக்களை ஒரு கருவியாக பயன்படுத்தி, கொழும்பைப் பணியவைப்பார்கள். அதுதான் இந்திய-இலங்கை உடன்படிக்கை.எனவே ஓர் அரற்ற தரப்பாக இருப்பதனால் தமிழ் மக்களிடம் ஒரு தேசமாக இருப்பதற்கு தேவையான கட்டுமானங்கள் அநேகமாக இல்லை. விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு கருநிலை அரசை நிர்வகித்தபொழுது அவர்கள் ஒரு தொகுதி கட்டமைப்புகளை உருவாக்கினார்கள். ஆனால் 2009க்கு பின் அவ்வாறான கட்டமைப்புகள் எவையும் தமிழ் மக்கள் மத்தியில் கிடையாது. உதாரணமாக வெளிநாடுகளை அணுகுவதற்கு ஒரு வெளியுறவுக் கொள்கை வேண்டும். வெளியுறவுக் கொள்கையை வகுப்பதற்கு ஒரு சிந்தனைக் குழாம் வேண்டும். வகுக்கப்பட்ட வெளியுறவுக் கொள்கையை அமல்படுத்துவதற்கு நிபுணர்களை உள்ளடக்கிய ஒரு வெளியுறவுக் கொமிட்டி வேண்டும். ஆனால் கடந்த 13 ஆண்டுகளாக அப்படிப்பட்ட கட்டமைப்புகள் எவையும் தமிழ் மக்கள் மத்தியில் கிடையாது. கடந்த 13ஆண்டுகளாக தமிழ்க் கட்சிகள் ராஜதந்திரிகளோடும் வெளிநாடுகளோடும் அனைத்துலக நிறுவனங்களோடும் இடையூடாடி வருகின்றன. ஆனால் அவ்வாறான ராஜிய இடையூடாட்டங்களுக்கு பொருத்தமான கட்டமைப்புகள் எவையும் எந்த ஒரு கட்சியிடமும் இல்லை. அரங்கில் உள்ள தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று கட்சிகளும் தனிநபர்களின் ஆங்கிலப் புலமை,ராஜதந்திரப் புலமை என்பவற்றில்தான் தங்கியிருக்கின்றன. ஆனால் வெளியுறவு நடவடிக்கைகள் எனப்படுகின்றவை அதற்கு பொருத்தமான நிபுணர்களைக் கொண்ட கட்டமைப்புக்களால் முன்னெடுக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட கட்டமைப்புகள் எவையும் தமிழ் கட்சிகளிடம் கிடையாது.அதனால் தான் கட்சிப் பிரமுகர்கள் ராஜதந்திரப்பரப்பில் தனியோட்டம் ஓடுகிறார்கள். இக் கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட ராஜா கிரீம் கவுஸ் சந்திப்புக்கூட பேச்சுவார்த்தைகளுக்கு இரண்டு நாட்களுக்கு முன் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு சந்திப்புத்தான். அதுவே தவறு. பேச்சுவார்த்தைக்கான ஒரு நிபுணர் குழுவை உருவாக்குவது என்பது,திடீர் ரசத்தை, அல்லது திடீர் தோசையைப் போன்றது அல்ல. அது தேசநிர்மாணத்தின் ஒரு பகுதி. அப்படி ஒரு கட்டமைப்பு இதுவரையிலும் தமிழ்த் தரப்பில் இல்லை என்பது எதைக் காட்டுகிறது? ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தைகளுக்கு விசுவாசமாக இருக்கிறாரா இல்லையா என்பதல்ல இங்கு பிரச்சனை,தமிழ்த் தரப்பு பேச்சுவார்த்தை என்று வரும்பொழுது கொழும்பையும் அனைத்துலக சமூகத்தையும் எதிர்கொள்வதற்கு வேண்டிய தயாரிப்புகளோடு இருக்கிறதா இல்லையா என்பதே இங்கு பிரச்சனை. இதை இன்னும் ஆழமான பொருளில் சொன்னால் ஒரு தேசம் என்ற அடிப்படையில் அதற்கு தேவையான வெளியுறவு கட்டமைப்பைத் தமிழ்த் தரப்பு கொண்டிருக்கிறதா இல்லையா என்பதே இங்கு கேள்வி. இந்த அடிப்படையில் பேச்சுவார்த்தைகளுக்கான நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்குவதற்கு என்று ஒரு கட்டமைப்பை உருவாக்குவது என்று கடந்த 11ஆம் திகதி ராஜா க்ரீம் ஹவுஸில் கூடிய கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் உடன்பட்டிருந்தார்கள். பேச்சுவார்த்தைகள் 13ஆம் திகதி ஆரம்பமான பின்,அடுத்தகட்ட நகர்வை முன்னெடுப்பது என்றும் சிந்திக்க பட்டது. பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாக கடந்த புதன்கிழமை மேலும் ஒரு சந்திப்பு இடம்பெறவிருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் கடந்த புதன்கிழமை நடந்த சந்திப்பு சர்ச்சைக்குரியதாக மாறியது. அச்சந்திப்பில் அரச தரப்புடன் சம்பந்தரும் சுமந்திரனும் மட்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். அதில் ஒப்புக்கொள்ளப்பட்ட விடயங்களைப்பற்றி பின்னர் ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் அச்சந்திப்பில் பங்குபற்றவில்லை. விக்னேஸ்வரனின் கட்சியும் கலந்து கொள்ளவில்லை. உரிய முறைப்படி உரிய நேரத்தில் தங்களுக்கு அறிவிக்கப்படவில்லை என்று மேற்படி காட்சிகள் தெரிவித்தன. விக்னேஸ்வரன் அதுதொடர்பாக பகிரங்கமாக விமர்சித்திருந்தார். அது ஒரு உத்தியோகபூர்வ சந்திப்பு அல்ல என்று அரசுத் தலைவரின் செயலகம் தெரிவித்துள்ளது. வரும் 5ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஒரு சந்திப்பு இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பேச்சுவார்த்தைகள் என்று தொடங்கிய பின் அரசாங்கம் ஒரு கட்சியை மட்டும் அழைத்துச் சந்திப்பது ஒரு நல்ல அறிகுறியல்ல. மேலும் எல்லாக் கட்சிகளும் இணைந்து பேச்சுவார்த்தைகளுக்கென்று ஒரு கட்டமைப்பை உருவாக்குவது என்று தீர்மானித்துவிட்டு ஒரு கட்சி மட்டும் தனியாகச் சென்று அரசுத் தலைவரை சந்தித்தமையும் நல்ல தொடக்கமல்ல. பேச்சுவார்த்தைகளுக்காக ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவது எத்துணை சவால்கள் மிகுந்தது என்பதைத்தான் அது உணர்த்துகின்றது. https://athavannews.com/2022/1317200
  9. மீன் கரைஞ்சாலும் சட்டிக்குள் இல்லை? - நிலாந்தன் தேசம் என்பது ஒரு பெரிய மக்கள் திரள். தேசியம் என்பது ஒரு மக்கள் கூட்டத்தைத் திரளாகக் கூட்டிக்கட்டுவது. தேசிய அரசியல் என்பது ஒரு மக்கள் கூட்டத்தைத் திரளாகக் கூட்டிக்கட்டும் அரசியற் செய்முறைதான். இந்த அடிப்படையில் சிந்தித்தால் கடந்த சில நாட்களாக நடந்து வருபவை நிச்சயமாக தேசத்தைத் திரட்டும் அரசியல் அல்ல. தமிழரசு கட்சி தனித்துப் போட்டியிடுவது என்று முடிவெடுத்ததன் உள்நோக்கம் பங்காளிக் கட்சிகளை வெளியே தள்ளுவதுதான். வீட்டுச் சின்னத்தைக் கைவிட்டால் பங்காளிக் கட்சிகள் வெல்ல முடியாது என்று தமிழரசு கட்சி நம்புகின்றது. கடந்த பொதுத் தேர்தல் அந்த நம்பிக்கையைத் தோற்கடித்து விட்டது. எனினும் தமிழரசு கட்சி அப்படி நம்புகிறது. எனவே பங்காளிக் கட்சிகளை வெளியே தள்ளியதன் மூலம்,தமிழரசுக் கட்சி அக்கட்சிகளுக்கு ஒரு சவாலை முன்வைக்கின்றது. வீட்டு சின்னம் இல்லாமல் வென்று காட்டுங்கள் என்பதே அந்தச்சவால். ஆனால் அந்தச் சவாலை அவர்கள் வெளிப்படையாகச் சொல்லாமல், தந்திரமாக ஒரு கணிதபூர்வமான காரணத்தை முன்வைக்கிறார்கள். உள்ளூராட்சி மன்றங்களில் கலப்புத் தேர்தல் முறைமை காரணமாக வெற்றி வாய்ப்புகள் குறைவதை தடுப்பதற்காக இவ்வாறு பங்காளி கட்சிகளை தனியே போட்டியிடுமாறு கேட்டதாக அவர்கள் காரணம் கூறுகிறார்கள். அதன்படி பிரிந்து நின்று வாக்கு கேட்டு, அவரவர் தங்கள் தங்கள் பலத்தை நிரூபித்தபின் ஒன்றாகச் சேர்ந்து உள்ளூராட்சி மன்றங்களை நிர்வாகிக்கலாம் என்பதே தமிழரசுக் கட்சி கூறும் விளக்கம். ஆனால்,தமிழரசுக் கட்சி கடந்த 13 ஆண்டுகளாக கூட்டமைப்புக்குள் இருந்த ஆயுதப்போராட்ட மரபில் வந்த கட்சிகளை அகற்றி வருகிறது என்பதே உண்மை. இந்த அடிப்படையில் கடைசிவரை நின்று பிடித்த பங்காளிக் கட்சிகளை வெளியே தள்ளிவிட்டிருக்கிறார்கள். இங்கு வெளித்தள்ளப்பட்டிருப்பது பங்காளிக் கட்சிகள் மட்டுமல்ல ஒரு விதத்தில் மாவையுந்தான். கட்சிக்குள் அவருடைய தலைமை ஸ்தானம் மேலும் பலவீனமடைந்திருக்கிறது என்று தெரிகிறது. கடந்த பல மாதங்களாக பங்காளிக்கட்சிகள் மற்றும் கூட்டமைப்பில் இருந்து ஏற்கனவே விலகிய கட்சிகள் என்று ஐந்துக்கும் குறையாத கட்சிகள் இணைந்து செயல்பட்டு வந்தன. இந்த ஒருங்கிணைப்புக்குள் மாவையும் அவ்வப்போது வந்து போனார். அதனால்தான் விக்னேஸ்வரன் மாவையின் தலைமையின் கீழ் ஐக்கியப்பட்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலைச் சந்திக்கத் தயார் என்று அறிக்கை விட்டிருந்தார். அதே காலப்பகுதியில் பங்காளிக் கட்சிகள் இணைந்து கூட்டமைப்பின் தலைவருக்கு ஒரு கடிதத்தை எழுதின. பரந்துபட்ட அளவில் கூட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தார்கள். ஆனால் தமிழரசு கட்சி அவ்வாறான பரந்த தளத்திலான ஐக்கியம் ஒன்றைக் கட்டியெழுப்பத் தயாரில்லை என்று தெரிகிறது. எனவே பங்காளிக் கட்சிகள் வெளித்தள்ளப்பட்டிருக்கின்றன. மாவை சேனாதிராஜா, இனி கட்சிக்கு வெளியே சேர்க்கைகளை வைத்துக் கொள்ள முடியாது. இது ஒரு நாள் நடக்கும் என்பது பங்காளி கட்சிகளுக்குத் தெரியும். சம்பந்தருக்குப் பின்னர்தான் அப்படி நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சம்பந்தர் உடலாலும்,முடிவெடுக்கும் திறனாலும் தளரத் தொடங்கியிருக்கும் ஒரு பின்னணிக்குள்,இரு தசாப்த காலங்களுக்குமேல் அவர் தலைமை தாங்கிய கூட்டு கலைந்து விட்டது. ஆனால் அதற்குரிய விளக்கத்தை ஒரு தலைவர் என்ற முறையில் அவர் இக்கட்டுரை எழுதப்படும் நாள்வரையிலும் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கவில்லை. இதுவும் தமிழ் அரசியலின் சீரழிவைக் காட்டுகிறது. கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ச்சியாக உடைந்து வந்த கூட்டமைப்பு இனி ஒரு கூட்டாக இருக்காது. அதே சமயம் விலகிச் சென்ற தரப்புக்கள் ஒரு புதிய கூட்டை உருவாக்கப் போவதாக அறிவித்திருந்தன. அந்த ஒருங்கிணைப்புக்குள் ஜனநாயக போராளிகள் கட்சி,மணிவண்ணன், ஐங்கரநேசன்,ஆனந்தி சசிதரன், போன்றவர்களை உள்ளீர்த்து ஒரு மிகப்பெரிய கூட்டைக் கட்டியெழுப்பினால் அது தமிழரசுக் கட்சிக்கு தலையிடியாக மாறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சந்திப்பின்படி அப்படி ஒரு பெரும் கூட்டுக்கான வாய்ப்புக் குறைவு என்றே தெரிகிறது. புதிய கூட்டின் சின்னம் எது என்பதிலும், அதன் செயலாளர் யார் என்பதிலும் விக்னேஸ்வரனோடு ஏனைய கட்சிகளால் உடன்பட முடியவில்லை. விக்னேஸ்வரன் தனது கட்சியின் சின்னமாகிய மான் சின்னத்தை விட்டுக் கொடுக்கத் தயார் இல்லை. அதேசமயம் புளட் இயக்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் செயலாளராக இருக்கும் கட்சியின் சின்னத்தை ஏனைய கட்சிகள் வலியுறுத்தியதாக தெரிகிறது. அதை விக்னேஸ்வரனும் மணிவண்ணனும் ஏற்கவில்லை. மணிவண்ணன் விக்னேஸ்வரனின் கட்சியில் சேர்ந்து விட்டார். கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சந்திப்பில் மணிவண்ணனும் விக்னேஸ்வரனும் ஒரு தரப்பாகவும் ஏனைய கட்சிகள் மற்றொரு தரப்பாகவும் பிரிந்து நின்றதாகத் தெரிகிறது. ஒரு பொது முடிவை எட்டாமல் விக்னேஸ்வரன் இடையிலேயே எழுந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. சில சமயம் விக்னேஸ்வரன் ஒரு பொது முடிவுக்கு உடன்பட்டிருந்தாலும்கூட புதியகூட்டு தமிழரசுக் கட்சிக்கு சவாலாக மேலெழும் ஒரு புதிய வளர்ச்சிக்குத் தலைமைதாங்கத் தேவையான தலைமைப் பண்பு அவருக்குண்டா? என்ற கேள்வி உண்டு. ஏனென்றால் தன் சொந்தக் கட்சியையே பலப்படுத்தாத ஒரு தலைவர் அவர். அவருடைய கட்சிக்குள் பெருமளவுக்கு அவர் மட்டும்தான் தெரிகிறார். இப்பொழுது மணிவண்ணனையும் இணைத்திருக்கிறார். அவர் கட்சிக்குள் கலந்து பேசி முடிவுகளை எடுப்பதில்லை என்று கட்சி முக்கியஸ்தர்கள் குறைபடுகிறார்கள். கட்சிக்குள் மட்டுமல்ல,கடந்த பல மாதங்களாக ஒருங்கிணைந்து செயற்பட்டு வரும் புதிய கூட்டுக்குள்ளும் அவர் முடிவுகளை கலந்து பேசி எடுப்பதில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. மணிவண்ணனை கட்சிக்குள் இணைக்கும் முடிவும் அவ்வாறு கலந்து பேசி எடுக்கப்படவில்லை என்ற விமர்சனம் உண்டு. கடந்த பொதுத் தேர்தலில் தமிழ்மக்கள் அவருக்கு ஒரு தனிச்சிறப்பான ஆணையை வழங்கினார்கள். வீட்டுச் சின்னத்துக்கு வெளியே வந்தாலும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டும் ஒராணை அது. ஆனால் அந்த மக்கள் ஆணையை ஒரு பெரும் கட்சியாக நிறுவனமயப்படுத்த அவரால் முடியவில்லை. இவ்வாறு தன் சொந்தக் கட்சியையே கட்டியெழுப்ப முடியாத ஒருவர் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டதும், உள்ளதில் பலமானதுமாகிய, தமிழரசுக் கட்சிக்கு எதிராக ஒரு புதிய கூட்டை எப்படிக் கட்டியெழுப்புவார் என்ற கேள்விக்கு விடை முக்கியம். மேலும் புதிய கூட்டுக்குள் ஜனநாயக போராளிகள் கட்சியை இணைப்பதற்கும் விக்னேஸ்வரன் இணங்கவில்லை. அதற்கு அவர் கூறிய காரணம்,ஏற்கனவே கட்சிகளின் ஒருங்கிணைப்புக்குள் ஜனநாயகப் போராளிகள் கட்சி உள்ளீர்க்கப்படவில்லை என்பதனால்,முதலில் ஏற்கனவே ஒருங்கிணைந்து செயல்பட்ட கட்சிகள் தங்களுக்கிடையே ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு வந்தபின்,ஜனநாயக போராளிகள் கட்சியையும் இணைப்பது தொடர்பாக சிந்திக்கலாம் என்று காரணம் கூறியுள்ளார். காரணம் எதுவாகவும் இருக்கலாம். ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சந்திப்புக்குப் பின் யார் யார் ஒன்றுபட்டிருக்கிறார்கள்? யார் யார் பிரிந்து நிற்கிறார்கள்? என்று பார்த்தால், முன்பு ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்புகள் யாவும் ஒன்றாகிவிட்டன. இதில் முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தவரின் கட்சியும் அடங்கும். அதே சமயம் ஆயுதப் போராட்ட மரபில் வராத அரசியல்வாதிகள் விலகி நிற்கிறார்கள். இவ்வாறாக தமிழ்த்தேசியப் பரப்பில் இப்பொழுது மொத்தம் நான்கு கூட்டுக்கள் அல்லது நான்கு சேர்க்கைகள் மேலெழுந்திருக்கின்றன. சிலசமயம் எதிர்காலத்தில் இவற்றுட் சில தங்களுக்கிடையே ஒரு புதிய ஒருங்கிணைப்புக்கு போக முடியும். ஆனால் இப்போதுள்ள களநிலவரத்தின்படி ஒரு தேர்தல் நடக்குமாக இருந்தால்,தமிழ் வாக்குகள் கட்சிகளால் சிதறடிக்கப்படும் ஆபத்தே அதிகம் தெரிகிறது. முன்னைய தேர்தல்களின்போது ஒரு பழமொழி கூறப்படுவதுண்டு.“மீன் கரைஞ்சாலும் சட்டிக்குள்தான் இருக்கிறது” என்று. ஆனால் இனி அப்படிக்கூற முடியாது. கடந்த பொதுத் தேர்தல் கற்றுத்தந்த பாடம் அது. கடந்த பொதுத் தேர்தலின்போது கூட்டமைப்பு அதன் ஏகபோகத்தை இழந்தது. வீட்டு சின்னத்துக்கு வெளியே போனால் வெல்ல முடியாது என்ற மாயை உடைக்கப்பட்டது. ஆனால் அதேசமயம் கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணி ஒரு பலமான கூட்டாக உருத்திரளவில்லை. அதனால் கூட்டமைப்பு இழந்த ஆசனங்களில் மூன்றை அரச சார்பு கட்சிகள் வென்றன. அதாவது மீன் சட்டிக்கு வெளியே போய்விட்டது. இனிமேலும் அதுதான் நிலைமை என்று தெரிகிறது. தமிழ் மக்கள் தேசமாகத் திரள்வதற்கு பதிலாக கட்சிகளாக சிதறப் போகிறார்களா?அதுவும் இப்படிப்பட்ட உடைவுகள் எப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் நிகழ்ந்திருக்கின்றன? அரசாங்கம் தமிழ்ப் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கும் ஒரு காலகட்டம் இது. அதே சமயம் கனடாவில் புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் ஒரு திருப்பகரமான வெற்றியைப் பெற்றிருக்கும் காலகட்டமும் இது பேச்சுவார்த்தைக் காலங்களில் பேரத்தைக் குறையவிடக்கூடாது. பேரம் குறையக்கூடாது என்றால், தமிழ்மக்களைப் பொறுத்தவரை, தேசத் திரட்சியைப் பலப்படுத்த வேண்டும். ஆனால் எந்த ஒரு தமிழ்க் கட்சியிடமும் அந்தத் தரிசனம் இருப்பதாகத் தெரியவில்லை. ஒருபுறம் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் நீதிக்கான போராட்டத்தில் மேலும் ஒரு வெற்றியை பெற்றிருக்கும் அதே காலப்பகுதியில் தாயகத்தில் உள்ள கட்சிகளோ தமிழ் மக்களை தேசமாகத் திரட்டுவதற்குப் பதிலாக கட்சிகளாக,வாக்காளர்களாகச் சிதறடித்துக் கொண்டிருக்கிறார்கள். http://www.nillanthan.com/5842/
  10. கனடா விதித்திருக்கும் தடை -நிலாந்தன். தாயகத்தில் கூட்டமைப்பு உள்ளூராட்சி மன்றத் தேர்தலையொட்டிக் குலைந்து போய் நிற்கும் ஒரு காலகட்டத்தில் புலம்பெயர்ந்த தமிழ்ப் பரப்பில் கனடாவில் வாழும் தமிழர்கள் ஒரு திருப்பகரமான வெற்றியை பெற்றிருக்கிறார்கள். இலங்கைத் தீவின் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிராக கனடா தடை விதித்திருக்கிறது. ஏற்கனவே அமெரிக்கா நாட்டின் தளபதிக்கு எதிராக தடை விதித்திருக்கிறது. அமெரிக்காவின் தடையோடு ஒப்பிடுகையில் கனடாவின் தடை பலமானது. அமெரிக்கா பயணத்தடை மட்டும்தான் விதித்திருக்கிறது. ஆனால் கனடா பயணத் தடையோடு சேர்த்து தடை விதிக்கப்பட்டவர்கள் கனடாவில் சொத்துக்களை வைத்திருப்பதை, முதலீடுகள் செய்வதை அல்லது கனடாவில் உள்ள முதலீட்டாளர்கள் மேற்படி முன்னாள் ஜனாதிபதிகளோடு தொடர்பு கொள்வதை தடை செய்கின்றது. கனடா ஏற்கனவே குறிப்பிட்டுச் செல்லக்கூடிய இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றியது. தமிழர்கள் செறிவாக வாழும் ஒன்றாரியோ மாநில சட்டமன்றமும் கனேடிய மத்திய நாடாளுமன்றமும் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பாக இரு வேறு தீர்மானங்களை நிறைவேற்றின. அத்தீர்மானங்களின் அடுத்த கட்டமாக இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிராக தடை விதிக்கப்பட்டிருக்கிறது. நீதியைக் கோரும் ஒரு மக்கள் கூட்டத்தை பொறுத்தவரை இது ஒரு திருப்பகரமான முன்னேற்றம். அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்த இரண்டு பலமான நாடுகள் ஈழத் தமிழர்களின் நீதிக்கான போராட்டத்துக்கு உற்சாகமூட்டும் சமிக்கைகளைக் காட்டியிருக்கின்றன. மூத்த ராஜபக்ச சகோதரர்கள் இருவரும் இப்பொழுது பதவியில் இல்லை. ஆனாலும் அவர்களால் கட்டுப்படுத்தப்படும் ஒரு நாடாளுமன்றம்தான் நாட்டை இப்பொழுதும் நிர்வகிக்கின்றது. இந்த இரண்டு சகோதரர்களும் ஒற்றை யானையாக நாடாளுமன்றத்தில் நிற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மறைவில் மீண்டும் பதவிகளுக்கு வராமல் தடுப்பதும் இத்தகைய தடைகளின் நோக்கங்களில் ஒன்று எனலாம். ரணில் விக்ரமசிங்க தன்னுடைய பதவியை பாதுகாப்பதற்காக இரண்டு ராஜபக்சக்களையும் மீண்டும் ஏதும் பொறுப்புகளில் அமர்த்தக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை தடையில் உண்டு. மேலும் கோட்டாபய ராஜபக்சவின் குடும்பம் அமெரிக்காவில் உள்ளது. இந்நிலையில் கனடாவை பின்பற்றி அமெரிக்காவும் முடிவெடுத்தால் அவர் தனது குடும்பத்தை அமெரிக்காவில் சென்று சந்திப்பதும் தடுக்கப்பட்டு விடும் ஏற்கனவே குறிப்பிட்ட சில தளபதிகளுக்கு அவ்வாறு தடை உண்டு. அவர்கள் வெளிநாடுகளில் படிக்கும் தங்கள் பிள்ளைகளைச் சென்று சந்திக்க முடியாமல் இருக்கிறது என்று சுட்டிக்காட்டப்படுகிறது. மேற்படி தடைகள் மட்டும் ஈழத் தமிழர்களுக்கு மீட்சியைப் பெற்று தராது. ஆனால் இத்தடைகள் நீதிக்கான ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு உற்சாகமூட்டக் கூடியவை. கனடாவின் தடை விதிக்கப்பட்ட நால்வரில் இருவர் முன்னாள் ஜனாதிபதிகள். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஏனைய இருவரும் படைத்தரப்பைச் சேர்ந்தவர்கள். ஒருவர் மிருசுவில் கொலை வழக்கில் நீதிமன்றத்தால் குற்றவாளியாக தீர்க்கப்பட்டவர். மற்றவர் ரவிராஜின் கொலை வழக்கு,கொழும்பில் மாணவர்கள் காணாமல் போனமை போன்ற வழக்குகளோடு சம்பந்தப்பட்டவர். இதில் மிருசுவில் படுகொலையில் குற்றவாளியாக காணப்பட்ட சுனில் ரட்னாயக்காவை முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய தனது பதவிக்காலத்தில் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார். அதாவது இலங்கையின் அரசுத் தலைவர் ஒருவரால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட ஒருவரை கனடா குற்றவாளி என்று கூறி தன் நாட்டுக்குள் வருவதற்கும் முதலீடு செய்வதற்கும் சொத்துக்களை வைத்திருப்பதற்கும் தடை விதித்திருக்கிறது. இதன் மூலம் நாட்டின் மிக உயர் நிறைவேற்று அதிகாரத்தை கொண்ட ஒருவர் வழங்கிய பொது மன்னிப்பை கனடா நிராகரித்து இருக்கிறது. மேலும் இத்தடை குறித்த அறிவிப்பில் 1983 இல் இருந்து 2009 வரையிலுமான காலப்பகுதியில் இழைக்கப்பட்ட குற்றங்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. இதன் மூலம் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் குற்றங்கள் புரிந்த எல்லாத் தரப்புக்களும் பொறுப்பு கூற வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தை கனடா ஏற்படுத்தியிருக்கிறது. இத்தடைகளுக்காக பல ஆண்டுகள் உழைத்ததாக கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழத்தமிழருமான ஹரி ஆனந்தசங்கரி கூறியிருக்கிறார். அமெரிக்கா,கனடா ஆகிய நாடுகளைப் பின்பற்றி ஐரோப்பிய சமூகத்தைச் சேர்ந்த நாடுகளும் தடைகளை விதிக்குமாறு கேட்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார். கனடாவில் 3 லட்சத்துக்கும் குறையாத ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழுகிறார்கள். இந்தத் தொகை 5 லட்சம் வரை வரும் என்று உத்தியோகப்பற்றற்ற புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் அதிக தொகை மக்கள் வாழும் நாடு கனடா தான். கனேடியத் தமிழ் சமூகம் நாடாளுமன்றத்திற்கு தமது பிரதிநிதிகளை அனுப்பும் அளவுக்குச் செறிவாகக் காணப்படுகிறது. மிகக் குறுகிய காலத்தில் முலோபாய கொள்கைவகுப்பு வட்டாரங்களுக்குள் செல்வாக்கு செலுத்தக்கூடிய ஒரு வளர்ச்சியை படிப்படியாக பெற்று வருகிறது. இவ்வாறு புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் உள்ள கொள்கை வகுப்பாளர்களின் மீது செல்வாக்கு செலுத்தக்கூடிய ஒரு வளர்ச்சியை தமிழ் மக்கள் பெறுவார்களாக இருந்தால்,நீண்ட எதிர்காலத்தில் நீதிக்கான போராட்டத்தில் தமிழ் மக்கள் மேலும் முன்னேற இடம் உண்டு. கனடாவின் மேற்படி தடைகள் அமெரிக்காவின் தடைகளோடு ஒப்பிடுகையில் பலமானவை. அதே சமயம் அமெரிக்காவின் தடைகள் இப்பொழுது பதவியில் இருக்கும் ஒரு தளபதிக்கு எதிரானவை. கனடாவின் தடைகள் பதவி இழந்த இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிரானவை. உலகில் போர்க் குற்றம் சாட்டப்பட்ட பல தலைவர்கள் பதவி இழந்த பின்னர்தான் விசாரிக்கப்பட்டிருக்கிறார்கள். கம்பூச்சியாவிலும் ஆபிரிக்க மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் அதற்கு முன்னுதாரணங்கள் உண்டு. நிலை மாறுகால நீதி என்பது பொதுவில் தோற்றவர்களை விசாரிக்கும் ஒரு பொறிமுறைதான். 2015ல் நிலைமாறு கால நீதிக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது ராஜபக்சக்கள் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டிருந்தார்கள். எனினும் ராஜபக்சக்களைத் தோற்கடித்து வெற்றி பெற்ற நல்லாட்சி என்று அழைக்கப்படுகின்ற ரணில்+மைத்திரி அரசாங்கம் மறைமுகமாக போர் வெற்றியையும், வெற்றி நாயகர்களையும் பாதுகாத்தது. இப்பொழுதும் நிலைமை அப்படித்தான். ராஜபக்சக்கள் தங்கள் சொந்த மக்களால் தோற்கடிக்கப்பட்டிருக்கும் ஒரு நிலையில் அவர்களைப் பாதுகாக்க ஒற்றை யானையாகிய ரணில் இருக்கிறார். அவர் ராஜபக்சக்களையும் பாதுகாப்பார் அதோடு கனடாவின் தடையை வைத்து ராஜபக்சக்களின் மீதான தனது பிடியை மேலும் இறுக்கிக் கொள்வார். அதாவது மேற்படி தடைகள் அவற்றின் தர்கபூர்வ விளைவுகளை பொறுத்தவரை ரணிலுக்குச் சாதகமானவை. அதே சமயம் இதில் ராஜபக்சங்களுக்கும் ஒரு நன்மை உண்டு. உள்ளூர் தேர்தல்களில் அவர்களின் வாக்கு வங்கியை இது பாதுகாக்கும், பலப்படுத்தும். நாட்டுக்காக வீரமாகப் போராடிய சகோதரர்களை தமிழர்கள் வெள்ளைக்காரர்களோடு சேர்ந்து தண்டிக்கப் பார்க்கிறார்கள் என்று நம்பும் சிங்களப் பொதுசனம் ராஜபக்சங்களுக்கு மீண்டும் வாக்குகளை அள்ளிக் கொடுக்க முடியும். அதாவது இத்தடை ஒருபுறம் ராஜபக்ச குடும்பத்தை அனைத்துலக அளவில் அவமதிப்பது. அவர்களுடைய அந்தஸ்தை குறைப்பது. அவர்களுடைய போக்குவரத்து நடமாட்டங்களை கட்டுப்படுத்துவது. அவர்களுடைய முதலீட்டு வாய்ப்புகளை குறைப்பது. அதேசமயம் இன்னொரு பக்கம் உள்ளூரில் அவர்களை,அவர்களுடைய வாக்கு வங்கியை அது பாதுகாக்கும். நாட்டில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையில் ஒரு தேர்தலை வைத்தால் அது ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை விசப்பரீட்சையாகவும் அமையலாம். ஒரு தேர்தலில் அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை இல்லை என்பது வெளித்தெரியவந்தால் அரசாங்கம் மேலும் பலவீனமடைந்து விடும். எனவே அப்படி ஒரு அமில பரிசோதனையில் இறங்க ஜனாதிபதி தயாரா என்றும் பார்க்க வேண்டும். சில சமயம் தேர்தல் நடந்தால், அதில் ராஜபக்ச குடும்பத்தின் வாக்கு வங்கியை பாதுகாப்பதற்கு கனடாவின் மேற்படி தடைகளும் ஒரு காரணமாக அமையும். இலங்கைத் தீவின் துயரம் அதுதான். தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்று தரக்கூடிய எந்த ஒரு நடவடிக்கையும் சிங்கள மக்கள் மத்தியில் யுத்த வெற்றி நாயகர்களைப் பலப்படுத்தும் என்பது. https://athavannews.com/2023/1320181
  11. பிச்சை எடுக்கப் பேச்சுவார்த்தை ? - நிலாந்தன் 2023 ஆம் ஆண்டிலாவது உலக நாடுகளிடம் கையேந்தாத நிலைக்கு இலங்கை வளர்ச்சியடைய வேண்டும் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மல்க்கம் ரஞ்சித் அவர்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.ஆனால் நாடு இந்த ஆண்டு மட்டுமல்ல இனி வரும் ஆண்டுகளிலும் பிச்சை எடுக்காமல் தப்பிப்பிழைக்க முடியாது என்பதே மெய்நிலை ஆகும். பன்னாட்டு நாணய நிதியம் தரும் சிறிய உதவி கடனைத் தீர்க்கப் போதாது. அது 2.8பில்லியன்கள் மட்டும்தான்.ஆனால் நாட்டின் மொத்த கடன் தொகை 50பில்லியன்களைவிட அதிகம். எனவே கடன்வாங்கி கடனை அடைக்க முடியாது. பன்னாட்டு நாணய நிதியத்திடம் இலங்கை அரசாங்கங்கள் கடன் வாங்குவது இதுதான் முதல் தடவையுமல்ல. இதற்கு முன் பதினாறு தடவைகள் கடன் வாங்கியிருக்கின்றன.அதில் ஏழு தடவைகள் பன்னாட்டு நாணய நிதியத்தோடு பொருந்திக்கொண்ட உடன்படிக்கைகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக அமல்படுத்தவில்லை. இந்நிலையில் கடனை வாங்கிக் கடனை அடைப்பது என்பதற்கும் அப்பால்,கடனே இல்லாத ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. கடன் இல்லாத ஒரு நாட்டை அல்லது பிச்சை எடுக்காத ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவது என்றால் ஒரே ஒரு வழிதான் உண்டு. அது இனப்பிரச்சினை தீர்ப்பதுதான்.இனப்பிரச்சினைதான் நாட்டை கடனாளியாக்கியது.கடன் வாங்கி,கடன் வாங்கி யுத்தம் செய்தார்கள்.வாங்கிய கடனில் வெடிமருந்து வாங்கி கடனைக் கரியாக்கினார்கள், தமது சொந்த மக்களையே கொன்று குவித்தார்கள். இப்பொழுது மீள முடியாத கடனில் நாடு சிக்கிவிட்டது. இவ்வாறாக கடன்வாங்கி அல்லது பிச்சையெடுத்து யுத்தம் செய்த ஒரு நாடு இப்பொழுது பிச்சை எடுப்பதற்காக சமாதானம் செய்கிறது என்பதுதான் நூதனமான ஒரு மாற்றம்.ஆனால் பிச்சையெடுத்துச் செய்த யுத்தம் உண்மையானது. பிச்சை எடுப்பதற்காக செய்யும் சமாதானம் உண்மையானதா என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் உண்டு. உண்மையாகவோ அல்லது பொய்யாகவோ பேச்சுவார்த்தைகள் நடக்கப்போகின்றன.கடந்த 75 ஆண்டுகளாக இவ்வாறு பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.இப்பேச்சுவார்த்தைகளில் சிங்களத்தலைவர்கள் மாறியிருக்கிறார்கள்.தமிழ்த்தலைவர்களும் மாறியிக்கிறார்கள்.இதில் ஒப்பீட்டளவில் நீண்ட காலம் மாறாமல் இருந்த ஒரே தலைவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர்தான்.அவர் ஐந்து சிங்களத் தலைவர்களோடு பேசியிருக்கிறார்.இப்பொழுது கடந்த 13 ஆண்டுகளாக சம்பந்தர் பேசி வருகிறார். கடந்த 75ஆண்டுகால அனுபவத்தின்படி பேசுவதற்கு புதிதாக விடயங்கள் கிடையாது.ஒரே ஒரு விடயத்தில் துணிச்சலான முடிவை எடுத்தால் சரி. நாட்டின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பை உடைத்து ஒரு கூட்டாட்சிக் கட்டமைப்பை உருவாக்கத் தயாராக இருந்தால் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறும். ஆனால் இலங்கைத்தீவின் துயரம் எதுவென்றால்,சிங்களமக்கள் மத்தியில் அதிகம் பிழையாக விளங்கிக் கொள்ளப்பட்ட ஒரு வார்த்தை சமஸ்ரி என்பதுதான்.உலகின் மிகச்செழிப்பான ஜனநாயக நாடுகளில் நாட்டை ஒரு தேசமாக கட்டியெழுப்பும் சமஸ்ரிக் கட்டமைப்பானது இலங்கைத்தீவில் நாட்டை பிரிக்கக்கூடியது என்று கருதப்படுகிறது. கடந்த 75 ஆண்டு காலப்பகுதிக்குள் நிகழ்ந்த பிரதான தீர்வு முயற்சிகளை பின்வருமாறு தொகுக்கலாம். 1957-இல் பிராந்திய சபைகள், 1965 இல் மாவட்ட சபைகள்.அதன்பின்1980இல் தென்னகோன் அறிக்கை,1981ல் மாவட்ட அபிவிருத்தி சபைகள்,1983இல் மாவட்ட மட்ட அதிகார பரவலாக்கம், 1986 இல் இரண்டு தமிழ் மாகாணங்கள் என்ற யோசனை,1987இல் இந்திய-இலங்கை உடன்படிக்கை, 1992இல் நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் அறிக்கை,1995இல் சந்திரிகாவின் பிராந்தியங்களின் ஒன்றியம் அதன்பின்,2002இல் ஒஸ்லோ பிரகடனம், 2003இல் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை,2005இல் சுனாமிக்கு பின்னரான பொதுக் கட்டமைப்பு,2009க்குப் பின் மகிந்தவின் 13பிளஸ், 2015இலிருந்து 2018 வரையிலுமான ரணில்-சம்பந்தன் கூட்டின் எக்கிய ராஜ்ய. இதில் 1965இல் திருமதி சிறிமாவோவின் அணிக்குள்ளிருந்த என்.எம். பெரேரா சமஸ்ரிப் பண்புடைய ஒரு தீர்வு யோசனையை முன்வைக்கத் தயாராகக் காணப்பட்டார் என்றும் ஆனால் தமிழ்த் தரப்பு அதனை சமயோசிதமாகக் கையாளவில்லை என்றும் ஒரு விமர்சனம் உண்டு.அம்முயற்சி கருவிலேயே கைவிடப்பட்டது. மேற்கண்ட தீர்வு முயற்சிகளையும் தீர்வுத் திட்டங்களையும் யார் குழப்பினார்கள் ஏன் குழப்பினார்கள்? என்பவற்றைத் தொகுத்துப் பார்த்தால் தெளிவாகத் தெரிவது என்ன? ஆயுதப் போராட்டத்திற்கு முன்னும் பின்னுமான மிதவாத அரசியலில் நிகழ்ந்த பெரும்பாலான பேச்சுவார்த்தைகளில் சமஸ்ரிப் பண்புடைய அல்லது ஒற்றையாட்சி கட்டமைப்புக்கு வெளியே வருவது போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும் தீர்வு யோசனைகளை ஒன்றில் சிங்களத் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை,அல்லது கருவிலேயே கைவிட்டிருக்கிறார்கள்,அல்லது முதலில் ஏற்றுக்கொண்டு பின்னர் குழப்பியிருக்கிறார்கள். அதேசமயம் தமிழ்த் தலைவர்கள் ஒற்றையாட்சிப் பண்புடைய தீர்வு முன்மொழிவுகளை பெரும்பாலும் நிராகரித்திருக்கிறார்கள்.அல்லது முதலில் நம்பிக்கை வைத்து பின்னர் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். ஆயுதப்போராட்ட காலகட்டத்தில்தான் ஒப்பீட்டளவில் உயர்வான தீர்வு யோசனைகள் முன்வைக்கப்பட்டன. அதற்குக் காரணம் நாட்டின் அரசியல் வலுச் சமநிலையை மாற்றக்கூடிய சக்தி ஆயுதப் போராட்டத்திற்கு இருந்தது. 2009க்குப்பின் ஒரு சிங்கள தொலைக்காட்சி திருமதி.சந்திரிக்காவை மேற்கண்டபோது “நீங்கள் முன்பு வழங்க தயாராக இருந்த பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற தீர்வு இப்பொழுது பொருத்தமானதா?” என்ற தொனிப்பட ஒரு கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு அவர் “இல்லை.இப்பொழுது அதற்குத் தேவை இல்லை.ஏனென்றால் இப்பொழுது ஆயுதப்போராட்டம் இல்லை.” என்ற பொருள்பட பதில் கூறியுள்ளார்.அதுதான் உண்மை. நாட்டின் அரசியல் வலுச் சமநிலையை மாற்றக்கூடிய சக்தி இப்பொழுது தமிழ் அரசியலுக்கு இல்லை.அதனால்தான்,பிரிக்கப்பட முடியாத, பிளவுபடாத நாட்டுக்குள் சமஸ்ரி என்று கூற வேண்டியிருக்கிறது.ஆனால் சமஸ்ரிக்கு சிங்களத் தலைவர்கள் தயாரா? 2012ஆம் ஆண்டு எஸ்.ஜே.வி செல்வநாயகத்தின் பேத்தி ஒரு நேர்காணலுக்காக சர்வோதயம் அமைப்பின் தலைவர் ஆரியரட்ணாவை சந்தித்தபோது அவர் சமஸ்ரி பற்றிக் கூறியதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். தன்னுடைய சிறுவயதில் 1950கள் 60களிலேயே சமஸ்ரி என்பது ஒரு பிரிவினைக் கோரிக்கையாக வியாக்கியானம் செய்யப்பட்டது என்று ஆரியரட்ணா கூறியிருக்கிறார்.ஆனால் ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கு பின்னரும் நிலைமை அப்படித்தான் உள்ளது. எனவே ஒரு சமஸ்ரித் தீர்வை நோக்கி சிங்கள மக்களின் கூட்டு உளவியலை தயார்படுத்தும் பொறுப்பை ரணில் ஏற்றுக்கொள்வாரா? அதற்குத் தேவையான அரசியல் திடசித்தம் அவரிடம் உண்டா? அதற்குத் தேவையான மக்கள் ஆணை அவருக்குண்டா? அவர் தனது அரசியல் எதிரிகளின் பலத்தில் தங்கியிருக்கிறார்.அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் அவர் ராஜபக்சகளின் வேட்பாளராக களமிறங்கக்கூடிய வாய்ப்புகள் தெரிகின்றன.எனவே ராஜபக்சக்களை மீறி ஒரு தீர்வை அவர் தர மாட்டார்.ராஜபக்சக்கள் 13பிளஸ்தான் தங்களால் தரக்கூடிய தீர்வு என்று ஏற்கனவே சொல்லிவிட்டார்கள்.சஜித் பிரேமதாசவும் 13ஐ முழுமையாக அமல்படுத்துவதே தமது தீர்வு என்று கூறுகிறார்.இப்படிப்பார்த்தால் 13ஆவது திருத்தத்தைத் தாண்டிச் செல்வதற்கு மகிந்தவும் தயாரில்லை சஜித்தும் தயாரில்லை. பதின்மூன்றாவது திருத்தத்தை தொடர்ந்து வலியுறுத்துவதன்மூலம் சிங்களத் தலைவர்கள் இந்தியாவையும் தமது நிகழ்ச்சிநிரலின் பங்காளிகளாக்கலாமா என்று யோசிக்கக்கூடும். கடந்த சில வாரங்களாக ரணில் விக்கிரமசிங்க இந்தியாவை அதிகம் நெருங்கி செல்கிறார்.அவர் பதவியேற்ற காலத்தில் இருந்ததைவிடவும் இப்பொழுது அவருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு ஒப்பீட்டளவில் சுமூகமாகி வருகிறது.பலாலி விமான நிலையத்தை மறுபடியும் திறந்துவிட்டார்,காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்கும் இடையே ஒரு பயணிகள் போக்குவரத்து சேவையும் விரைவில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,அடுத்த சுதந்திர தின விழாக் கொண்டாட்டங்களில் ஒரு பகுதி யாழ்ப்பாணத்திலும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதில் இந்திய நிதி உதவியோடு கட்டப்பட்ட யாழ் கலாச்சார மையத்தை ஒரு இந்திய தலைவர் வந்து திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் இந்தியப் பிரதமர் மோடி வருவார் என்று கூறப்பட்டது.பின்னர் இந்திய ஜனாதிபதி வருவார் என்று கூறப்பட்டது. இப்பொழுது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.யார் வந்தாலும் அது ஒரு கோலாகலமான விழாவாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.அவ்வாறு கலாச்சார மையத்தை கையளிக்கும் விழாவை இலங்கையின் சுதந்திரதின விழாவின் ஒரு பகுதியாக ஒழுங்கமைப்பதன்மூலம் தமிழ் மக்களுக்கான இந்தியாவின் உதவிகள் எவையும் இலங்கைத்தீவின் சுதந்திரத்துக்கு வெளியே இல்லை என்ற செய்தி இந்தியாவுக்கும் தரப்படும்,தமிழ் மக்களுக்கும் தரப்படும்.இவ்வாறாக, கடந்த சில வாரங்களாக ரணில் விக்கிரமசிங்க இந்தியாவை நோக்கி முன்னெடுக்கும் நகர்வுகளைத் தொகுத்துப்பார்த்தால்,அவர் பேச்சுவார்த்தைகளிலும் இந்தியாவின் ஒத்துழைப்பை மறைமுகமாகப் பெற முயற்சிக்கலாம் என்று தெரிகிறது. 13-வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த போகிறோம் என்று அரசாங்கம் கூறுமாக இருந்தால் அது இந்தியாவுக்கும் விருப்பமாகத்தான் இருக்கும்.கடந்த வெள்ளிக்கிழமை ஆறாம் தேதி தமிழ்நாட்டில் ஒரு கருத்தரங்கு இடம்பெற்றது அதன் தலைப்பு 13வது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு தீர்வை ஈழத்தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்று இந்திய ஒன்றிய அரசைக் கோரும் நோக்கிலானது.அதில் சுமந்திரனும் பங்குபற்றினார்.எனவே நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தைகள் 13-வது திருத்தத்தை தாண்டாமல் இருப்பதற்கு ரணில் இந்தியாவிடமிருந்து உதவியை எதிர்பார்க்கக்கூடும். அவரைப் பொறுத்தவரை ஒருபுறம் பிச்சையெடுப்பதற்காகச் சமாதானம் செய்ய வேண்டியிருக்கிறது.இன்னொருபுறம் அவருடைய வயோதிப காலத்தில் அவருக்கு கிடைத்திருக்கும் சிம்மாசனத்தை சமாதானத்துக்காகத் தியாகம் செய்யவும் முடியாது. பிச்சையா? சமாதானமா? அரச போகமா? http://www.nillanthan.com/5837/
  12. 2023:பேச்சுவார்த்தைகளின் ஆண்டா ?பேய்க்காட்டப்படும் ஆண்டா? - நிலாந்தன் புதிய ஆண்டு பேச்சுவார்த்தைகளோடு தொடங்குகின்றது. புத்தாண்டு பிறந்த கையோடு மூன்று அல்லது நாலு நாட்களுக்கு தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மூன்று நாட்கள் என்பதே வெளியுலகத்தை கவர்வதற்கான ஒரு ஏற்பாடுதான். அரசாங்கம் பேச்சுவார்த்தைகளில் சீரியஸ் ஆக இருக்கிறது என்பதை காட்டுவதற்கான ஓர் உத்தி அது. அவ்வாறு காட்டவேண்டிய தேவை அரசாங்கத்துக்கு உண்டு. ஏனெனில் இப்பொழுது நடக்கும் பேச்சுவார்த்தைகள் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வைத் தர வேண்டும் என்பதை விடவும், பொருளாதார நெருக்கடியில் இருந்து அரசாங்கத்தைப் பிணை எடுக்கக்கூடிய நாடுகளை கவர்வதற்கான ஒரு ஏற்பாடுதான். மோதலில் ஈடுபடும் தரப்புகள் அல்லது பிணக்கிற்கு உட்பட்ட தரப்புகள் எப்பொழுது பேச்சுவார்த்தைக்கு வரும் என்றால்,அரசியல் வலுச்சமநிலை மாறும் போதுதான். அரசியல் வலுச்சமநிலையை போரின் மூலமும் மாற்றலாம். மக்கள் போராட்டங்களின் மூலமும் மாற்றலாம். தேர்தல் முடிவுகளின் மூலமும் மாற்றலாம். இலங்கைத்தீவின் வலுச்சமநிலை பொருளாதார நெருக்கடியின் விளைவாக தோன்றிய தன்னெழுச்சி போராட்டத்தின்மூலம் மாற்றப்பட்டு விட்டது. தன்னெழுச்சி போராட்டங்கள் சிங்கள பௌத்த கடுந்தேசிய வாதத்தை பதுங்க செய்துவிட்டன. சிங்கள பௌத்த கடுந்தேசியவாதமானது சிங்கள பௌத்த லிபரல் முகமூடியின் பின் மறைவெடுத்து நிற்கிறது. தாமரை மொட்டுக் கட்சி ஒற்றையானைக்கு பின் பதுங்கி நிற்கின்றது. இதனால் ஏற்பட்ட வலுச்சமநிலை மாற்றம்தான் ரணில் விக்கிரமசிங்கவின் பேச்சுவார்த்தைக்கான அழைப்புக்குக் காரணம். இதைத் தமிழ்த்தரப்பின் நோக்குநிலையில் இருந்து சொன்னால், பேச்சுவார்த்தைக்கான அரசியல் வலுச்சமநிலை இலங்கைத்தீவில் உருவாக காரணம் தமிழ்த்தரப்பின் போராட்டங்கள் அல்ல. தமிழ்த்தரப்பு பலமடைந்ததாலும் அல்ல. மாறாக சிங்களத்தரப்பு தனக்குள்தானே மோதி பலவீனம் அடைந்ததே காரணம். இவ்வாறு சிங்களத் தரப்பு பலவீனமடைந்ததால் இலங்கைத்தீவின் அரசியல் வலுச்சமநிலை மாற்றம் கண்டுள்ளது. இதை பயன்படுத்தி வெளிநாடுகள் இலங்கைத்தீவின் மீதான தமது பிடியை மேலும் இறுக்க முற்படும்பொழுது இத்தீவின் அரசியல்,ராணுவ,பொருளாதார வலுச்சமநிலையில் மேலும் மாற்றம் வரலாம். உதய கம்மன்பில அதைத்தான் “பொருளாதார நெருக்கடியை பகடைக்காயாக கொண்டு நாட்டுக்கு எதிரான தீர்மானங்களை செயற்படுத்துவதாயின்,30 வருடகால யுத்தத்தை வெற்றிகொள்ளாமல் இருந்திருக்கலாம்”என்று கூறியிருக்கிறார். கஜேந்திரக்குமார் அதைத்தான் தமிழ் நோக்குநிலையில் இருந்து கூறியிருக்கிறார். அதாவது பொருளாதார நெருக்கடி காரணமாக சிங்களத்தரப்பு பலவீனம் அடைந்து விட்டது, அதனால் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வருகிறது, எனவே தமிழ்த் தரப்பு தனது பேரத்தை பலப்படுத்த வேண்டும் என்று. ஆனால் இது தமிழ்த்தரப்பின் போராட்டத்தாலோ அல்லது அதிகரித்த பலத்தாலோ ஏற்பட்ட வலுச்சமநிலை மாற்றம் அல்ல. இந்த வலுச்சமநிலை மாற்றத்தில் அரசாங்கத்துக்கு உதவி புரியும் நாடுகளின் அழுத்தமும் ஓரளவுக்கு உண்டு. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான உதவிகளும் இனப்பிரச்சனைக்கான தீர்வும் ஒரே பொதிக்குள் வைக்கப்பட வேண்டும் என்று மேற்கு நாடுகள் வலியுறுத்துகின்றன. அதேசமயம் நடந்து முடிந்த ஜெனிவா கூட்டத்தொடரில் இந்தியாவின் நிலைப்பாடும் அதுவாக இருந்தது. எனவே பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இனப்பிரச்சினைக்கான தீர்வை கண்டுபிடிக்க வேண்டும் என்ற அழுத்தம் அரசாங்கத்தின் மீது உண்டு. அதுவும் அரசாங்கம் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன என்று ஒரு தோற்றத்தை கட்டியெழுப்பக் காரணம். எனவே இதில் தமிழ்த்தரப்பின் பேரபலம் என்பது முதலாவதாக சிங்களத்தரப்பின் வீழ்ச்சியாகவும்,இரண்டாவதாக வெளி உலகத்தின் அழுத்தமாகவும் காணப்படுகிறது. அதனால் பேச்சுவார்த்தையை எதிர்பார்ப்போடு பார்க்கும் வெளியுலகத்திற்கு தமிழ்த்தரப்பு அதில் ஈடுபடும்-என்கேஜ்-engage-பண்ணும் என்ற செய்தி கொடுக்கப்பட வேண்டும். இதன்பொருள் மேற்கு நாடுகள் ஒரு தீர்வை பெற்று தரும் என்பதல்ல. மாறாக,நவீன ராஜதந்திரவியல் எனப்படுவது என்கேஜ்மென்ட்தான். இந்த அடிப்படையில்,ஒரு தரப்பாக சிந்தித்தால், ஒரு தேசமாக சிந்தித்தால்,பேச்சுவார்த்தையில் என்கேஜ் பண்ண வேண்டும். தவிர தமிழ்த்தரப்பிடம் நாட்டில் சொந்தமாகப் பலம் எதுவும் கிடையாது. அந்த பலத்தின் காரணமாக வலுச்சமநிலை மாறவும் இல்லை. எனவே தன் பலம் எதுவென்று கண்டு தமிழ்த்தரப்பு பேச்சில் ஈடுபட வேண்டும். அதன்பொருள் பேச்சுவார்த்தையை இதயபூர்வமாக நம்ப வேண்டும் என்பதல்ல. இதுவிடயத்தில் “என்கேஜ் அண்ட் எக்ஸ்போஸ்” அதாவது ஈடுபட்டு அதை அம்பலப்படுத்துவது என்ற ஒரு தந்திரத்தை தமிழ்த்தரப்பு கடைப்பிடிக்க வேண்டும். சிங்களபௌத்த பெருந்தேசியவாதத்தின் கடும்போக்குவாதிகள் லிபரல் முகமூடி அணிந்த ஒற்றை யானைக்கு பின் பதுங்குகிறார்கள். அவர்களுக்கு உலக அங்கீகாரத்தை பெறுவதற்கு அந்த ஒற்றை யானைய ஏற்பாடு செய்யும் பேச்சுவார்த்தை என்ற தோற்றமாயை தேவை. எனவே அதைப் பயன்படுத்தி பதுங்கியிருக்கும் சிங்களபௌத்த பெருந்தேசியவாதத்தின் கடும்போக்காளர்களை ஒரு தீர்வை நோக்கி வளைத்தெடுக்கலாம் என்று மேற்கு நாடுகள் நம்பக்கூடும். அந்த நம்பிக்கை தமிழ் மக்களின் சுமார் ஒரு நூற்றாண்டு கால அனுபவத்துக்கு பொருந்தி வரவில்லை என்பதனை நிரூபிக்கவேண்டிய பொறுப்பு தமிழ்த்தரப்புக்கு உண்டு. எனவே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு எதிர்த்தரப்பை அம்பலப்படுத்த வேண்டும். அதுதான் இப்பொழுது உயர்ந்திருக்கும் தமிழ் தரப்பின் பேரத்தை தொடர்ந்து உயர்வாக வைத்திருக்க உதவும். பன்னாட்டு நாணயநிதியத்தின் உதவிகள் எதிர்பார்த்த வேகத்தில் கிடைக்கவில்லை. மேலும் அந்த உதவிகள் கடனை அடைக்க போதுமானவை அல்ல. ஆனால் அந்த உதவிகள் கிடைத்தால் ஏனைய நாடுகளிடம் உதவி பெறத் தேவையான அங்கீகாரம் அரசாங்கத்திற்கு கிடைக்கக்கூடும். எனவே அந்த அங்கீகாரத்தை நோக்கி உழைக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு உண்டு. இந்த அடிப்படையில் பார்த்தால் அரசாங்கம் மேற்குநாடுகளை சமாளிக்க வேண்டிய நிலையில் உள்ளது. அதனால் ரணில் விக்கிரமசிங்க முன்பு 2015இல் இருந்து 2018வரையிலும் முன்னெடுத்த நிலைமாறுகால நீதிப் பொறிமுறையை ஒரு புதிய வடிவத்தில் முன்னெடுக்க முயற்சிப்பதாக தெரிகிறது. தென்னாபிரிக்கப் பாணியிலான நல்லிணக்கப் பொறிமுறை என்ற உரையாடல் அதைத்தான் குறிக்கிறது. ஆனால் நிலைமாறுகால நீதி என்பது இலங்கைத்தீவைப் பொறுத்தவரையிலும் ஓர் அழகிய பொய்யாகிவிட்டது. ரணிலோடு நிலைமாறுகால நீதியின் பங்காளியாகச் செய்யப்பட்ட கூட்டமைப்பின் பேச்சாளர் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வவுனியாவில் வைத்துச் சொன்னார்….”6 ஆண்டுகளாக ஒரு பரிசோதனையை முயற்சி செய்தோம்.அதில் தோற்றுவிட்டோம்.” என்று. அவ்வாறு ஏற்கனவே இந்த நாடு பரிசோதித்து தோல்வி கண்ட ஒரு விடயத்தை மீண்டும் ரணில் விக்கிரமசிங்க கையில் எடுக்கப் போகிறாரா ? முன்னைய நிலைமாறுகால நீதிச் செய்முறைகளின்போது கூட்டமைப்பு அரசாங்கத்தோடு இணைந்து யாப்புருவாக்க முயற்சிகளில் ஈடுபட்டது. ஒரு புதிய யாப்புக்கான இடைக்கால வரைபு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அமர்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா கூறிய வார்த்தைகளை இங்கே தமிழ்த்தரப்பு மீட்டுப் பார்க்க வேண்டும்.“சம்பந்தரின் காலத்திலேயே ஒரு தீர்வைக் காண வேண்டும். அவரைப் போல விட்டுக்கொடுக்கும் ஒரு தமிழ்த் தலைவர் இனி வரமாட்டார்” என்று டிலான் தெரிவித்திருந்தார். அது உண்மை. ஏனென்றால் அந்தளவுக்கு சம்பந்தர் விட்டுக் கொடுத்தார். பிளவுபடாத பிரிக்கப்பட முடியாத நாட்டுக்குள் தீர்வு என்று சம்பந்தர் காயத்திரி மந்திரம் போல திரும்பத்திரும்பச் சொன்னார். ஆனால் அது எதுவுமே மகிந்த அணியை சமாதானப்படுத்தவில்லை. அவர்கள் யாப்புருவாக்க முயற்சியை இடைக்கால வரைபோடு குழப்பினார்கள். இப்பொழுது மறுபடியும் சம்பந்தர் விட்டுக்கொடுக்கப் போகிறாரா இல்லையா என்பதனை தமிழ்மக்கள் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். டிலான் வழங்கிய பாராட்டு பத்திரத்தை விடவும் தமிழ் மக்கள் கடந்த பொதுத் தேர்தலில் சம்பந்தருக்கு வழங்கிய தண்டனை பெரியது. எனவே கூட்டமைப்பு இம்முறை ஏனைய கட்சிகளோடு இணைந்து திட்டவட்டமாக சில முடிவுகளை எடுக்கவேண்டும். முதலாவதாக பேச்சுவார்த்தைக்கான கட்டமைப்பை மறுகட்டமைப்பை செய்ய வேண்டும். இப்பொழுது நடந்து கொண்டிருப்பது சர்வகட்சி மாநாடு. அது வெளித்தோற்றத்திற்கு எல்லாக் கட்சிகளின் கருத்துக்களையும் கேட்கும் ஒரு ஜனநாயக ஏற்பாடாக தோன்றலாம். ஆனால் கடந்த 75 ஆண்டுகால அனுபவம் என்னவென்றால், இனப் பிரச்சினைக்கான தீர்வு பொறுத்து எல்லா சர்வகட்சி மாநாடுகளும் ஏமாற்று வித்தைகளே. எனவே பேச்சுவார்த்தைகளை பிணக்குக்கு உட்பட்ட தரப்புகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளாக மாற்ற வேண்டும். அதன்படி தமிழ்த்தரப்பு சிங்களத் தரப்புடனும் முஸ்லிம் தரப்புடனும் பேச வேண்டும். அரசாங்கமே சிங்களத் தரப்பை பிரதிநிதித்துவப் படுத்த வேண்டும். எல்லா கட்சிகளையும் கூட்டிக்கொண்டு வந்து சர்வகட்சி மாநாடு என்று சொல்லி குழப்பியடிக்க முடியாது. சிங்களக் கட்சிகளை சமாளிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்குரியது. அரசாங்கத்தோடு நிற்கும் தமிழ்க் கட்சிகளையும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அரசு தரப்பாகவே பார்க்க வேண்டும். இவ்வாறு பேச்சுவார்த்தைகளை மறு கட்டமைப்பு செய்ய வேண்டும். அடுத்த கட்டமாக மூன்றாவது தரப்பை உள்ளே கொண்டு வர வேண்டும். இந்தியாவும் உட்பட மேற்கு நாடுகளை இணைத்தலைமை நாடுகளாக உள்ளே இறக்க வேண்டும். அண்மையில் முன்னாள் சமாதான தூதுவரான எரிக் சொல் ஹெய்ம் கூறியிருக்கிறார்…. மூன்றாவது தரப்பு தேவையில்லை என்று. அது அவருடைய தனிப்பட்ட அபிப்பிராயம். அதுவே தமிழ்தரப்பின் அபிப்பிராயமாக இருக்கத் தேவையில்லை. இவ்வாறு பேச்சுவார்த்தைகளை மறுக்கட்டமைப்பு செய்துவிட்டு பேசத் தொடங்கலாம். ரணில் விக்கிரமசிங்க தயாரிக்கும் நாடகத்தில் பங்காளிகளாக இணைவதா அல்லது தமது மக்களுக்கு விசுவாசமாக இருப்பதா என்பதை தமிழ் கட்சிகள் தீர்மானிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. போன தடவை நிலைமாறுகால நீதியின் பங்காளிகளாக மாறப் போய் ஆறு ஆசனங்களை இழந்த கூட்டமைப்பு இனிமேலும்“பிளவுபடாத பிரிக்கப்பட முடியாத இலங்கைத் தீவுக்குள்” என்று உச்சாடனம் செய்யத் தேவையில்லை. டிலான் பெரேராக்களின் பாராட்டுப் பத்திரமா? அல்லது அல்லது தமது சொந்த மக்களின் தோல்வியா? என்பதனை தீர்மானிக்க வேண்டிய ஆண்டு இது. http://www.nillanthan.com/5832/
  13. ரணில் வகுக்கும் வியூகத்தில் விழாமலிருப்பது எப்படி? - நிலாந்தன் ரணில் விக்கிரமசிங்க ஒரு தந்திரசாலி என்பது தமிழ் மக்களின் மனதில் ஆழப் பதிந்த ஒரு படிமம்.எனவே அவர் தந்திரசாலி என்று தெரிந்து கொண்டும் அவருடைய பொறியில் போய் விழுவது என்பது சுத்த முட்டாள்தனம். ஒரு தந்திரசாலியை எதிர்கொள்வதற்கு தமிழ்த் தரப்பும் தந்திரமாக யோசிக்க வேண்டும். ரணிலை எதிர் கொள்வதற்கு தமிழ் தரப்பு தயாராக வேண்டும். கஜேந்திரக்குமார் கூறுகிறார்,ரணில் கூட்டாட்சிக் கட்டமைப்பை உருவாக்கத் தயார் என்று அறிவித்தால் தாங்களும் பேசத்தயார் என்று. ரணில் அதைச் செய்ய மாட்டார். அதை செய்துவிட்டு அவர் ஜனாதிபதியாக இருக்க முடியாது. எனவே பேச்சுவார்த்தைகளை அவர் அங்கிருந்து தொடங்கப் போவதில்லை. அந்த நிபந்தனையை கைவிடாத வரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முடியாது. விக்னேஸ்வரன் கூறுகிறார் உயர்ந்தபட்ச கூட்டாட்சி அதாவது கொன்பெடரேஷன் என்று. ரணில் அதைத் தர மாட்டார். அதுதான் விக்னேஸ்வரனின் மாறாத நிலைப்பாடு என்றால்,அக்கட்சி ஒரு கட்டத்துக்கு மேல் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியாது. அடுத்தது கூட்டமைப்பு கூட்டமைப்பும் சமஷ்டி என்றுதான் கூறுகிறது. ஆனால் ஏற்கனவே 2015 இலிருந்து 2018 வரையிலும் லேபல் இல்லாத ஒரு சமஸ்டி ,அல்லது “ஒற்றையாட்சிக்குள் சமஸ்டி” என்று கூறிக்கொண்டு யாப்புருவாக்க முயற்சியில் ஈடுபட்டது. அதன் விளைவாக அடுத்து வந்த தேர்தலில் அக்கட்சி தமிழ்மக்கள் மத்தியில் தனக்கிருந்த ஏகபோகத்தை இழந்தது. தனது ஆசனங்களில் ஆறை இழந்தது. எனவே கூட்டமைப்பு அதே தவறை மறுபடியும் விடுமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அதேசமயம்,சிங்களத் தரப்பு எதைத் தரும்? ரணில் விக்ரமசிங்க இதுவரையிலும் சமஸ்டிக்குத் தயார் என்று கூறவில்லை. சஜித் தெளிவாகக் கூறுகிறார் 13 வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது என்று. மஹிந்த ராஜபக்ச தெளிவாகக் கூறுகிறார் 13 பிளஸ் என்று. சிங்களமக்கள் மத்தியில் உள்ள பிரதான கட்சிகள் அனைத்தும் 13ஐச் சுற்றியே சிந்திக்கின்றன. அதாவது ஒற்றையாட்சிக் கட்டமைப்பை மாற்றியமைக்க அவர்கள் இப்பொழுதும் தயாரில்லை. மேலும் 13ஐ வலியுறுத்துவதன் மூலம் இந்தியாவையும் அவர்கள் வெற்றிகரமாகக் கையாளலாம் என்று நம்புகிறார்கள். தமிழ் மக்களுக்கும் இந்தியாவுக்கும் இடையே பிளவை அதிகப்படுத்தலாம் என்று அவர்கள் சிந்திக்க முடியும். எனவே வரும் 13ஆம் தேதி பேச்சுவார்த்தை மேசைக்கு வரப்போகும் தரப்புகள் எதைக் கேட்கின்றன அல்லது எதைத் தரக்கூடும் என்பவற்றின் அடிப்படையில் தொகுத்துப் பார்த்தால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. இப்பேச்சுவார்த்தைகள் ஒரு கட்டத்துக்கு மேல் வளர முடியாது. அப்படி வளர்வதாக இருந்தால் இரண்டு தரப்பும் விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும். இதில் சிங்களத் தரப்பு ஒற்றையாட்சியை விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும். தமிழ்த் தரப்பு முழுச் சமஸ்டி என்ற கோரிக்கையில் இருந்து இறங்கிவர வேண்டி இருக்கும். அதாவது பொழிவாகச் சொன்னால் 13-க்கும் சமஸ்டிக்கும் இடையில் இணக்கப் புள்ளியொன்றைக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். ஆனால் இதிலோர் அடிப்படையான கோட்பாட்டுப் பிரச்சினையும் நடைமுறைப் பிரச்சினையும் உண்டு. அதாவது,ஒற்றையாட்சியும் சமஷ்டியும் ஒன்றாக இருக்க முடியாது. அப்படியிருந்தால் அது சமஷ்டி அல்ல. ஒற்றையாட்சிதான். மேலும் இலங்கைத்தீவின் யாப்பு மரபு எனப்படுவது தமிழ் மக்களுக்கு எதிரானது. எனவே யாப்பில் தெளிவாக்க கூறப்படாதவற்றை அவர்கள் எப்படி வியாக்கியானம் செய்வார்கள் என்ற அனுபவம் தமிழ் மக்களுக்கு உண்டு. இந்த அடிப்படையில் சிந்தித்தால் ரணில் தொடங்கப் போகும் பேச்சுவார்த்தைகள் எங்கேயோ ஒரு கட்டத்தில் தேங்கி நிற்கும் வாய்ப்புக்களே அதிகம். அதாவது பொழிவாகச் சொன்னால் கஜேந்திரகுமாரின் நிபந்தனையை ஏற்றுக் கொண்டால் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவே முடியாது. அதேசமயம் விக்னேஸ்வரன் மற்றும் கூட்டமைப்பின் முன்மொழிவுகளை ஏற்றுக் கொண்டால் பேச்சுவார்த்தைகள் ஒரு கட்டத்துக்கு மேல் முறிந்து போகும். மொத்தத்தில் பேச்சுவார்த்தைகள் முறிந்து போகும் ஆபத்தே அதிகம். ஆனால் அதற்காக தமிழ்த் தரப்பு பேசாமல் இருக்க முடியாது. பன்னாட்டு நாணய நிதியத்தை கவர்வதற்கும், மேற்கு நாடுகளைக் கவர்வதற்கும் ரணில் ஒரு நாடக மேடையைத் திறக்கப் போகிறார். அதில் பங்காளிகளாக மாறி தமிழ் பிரதிநிதிகளும் தமது மக்களுக்கு நடிக்க போகிறார்களா? அல்லது அந்த நாடக மேடையை உலக சமூகத்துக்கு அம்பலப்படுத்துவதா? என்ற முடிவை இப்பொழுது தமிழ்த் தரப்பு எடுக்க வேண்டும். பேச்சுவார்த்தைகளை நிராகரிப்பதை விடவும்,பேச்சுவார்த்தைகளை அம்பலப்படுத்துவதே தமிழ்த் தரப்பின் பேர பலத்தை அதிகப்படுத்தும். ஏனெனில், பேச்சுவார்த்தைகளை நிராகரிக்கும் பொழுது அதை உலக சமூகம் பொதுவாக வரவேற்பதில்லை. ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கம் பேச்சுவார்த்தைகளை நிராகரித்தது உண்டு. தேர்தல்களை புறக்கணித்ததும் உண்டு. அதற்கு ஒரு தர்க்கம் உண்டு. அந்த இயக்கத்தின் பிரதான ஒழுக்கம் ஆயத்தப் போராட்டந்தான். அந்த இயக்கம் ஒரு நிலத்தை கட்டுப்படுத்தியது. ஒரு கருநிலை அரசை வைத்திருந்தது. தேர்தல் அல்லது பேச்சுவார்த்தை எனப்படுவது அவர்களை பொறுத்தவரை பிரதான ஒழுக்கமில்லை. ஆனால் தமிழ்க்கட்சிகளின் பிரதான ஒழுக்கமே தேர்தல்தான். இங்கு மக்கள் இயக்கம் கிடையாது. இருப்பவையெல்லாம் தேர்தல் கேட்கும் கட்சிகளே. தேர்தல் தான் அவர்களுடைய பிரதான ஒழுக்கம். இனப்பிரச்சினைக்குத் தீர்வைப் பெறுவதற்கு பேச்சுவார்த்தைகளைத் தவிர வேறு எந்த வழியையும் அவர்கள் கடந்த 13 ஆண்டுகளாக உருவாக்கியிருக்கவில்லை. தேர்தல் மைய அரசியலிலும் தமிழ் மக்கள் ஒரு தேசத்திரட்சியாக இல்லை. வடக்கு கிழக்கு இணைப்பை அரசாங்கத்தோடு நின்று எதிர்க்கக்கூடிய கிழக்கு மையத் தமிழ் அரசியல்வாதிகள் இருவர் இப்பொழுது நாடாளுமன்றத்தில் உண்டு. எனவே வடக்கு கிழக்கு இணைந்த தாயகம் என்ற கோட்பாடு சோதனைக்கு உள்ளாகும் ஒரு காலகட்டம் இது. மேலும் கடந்த 13 ஆண்டுகளாக தமிழ்மக்கள் தங்களுடைய போராட்டம் நீதிக்கானது என்று கூறி வருகிறார்கள். ஆனால் நீதிக்கான போராட்டத்தில் தமிழ் மக்களின் பலங்களில் ஒன்றாக காணப்படும் தமிழ் டயாஸ்போறா ஒரு பலமான திரட்சியாக இல்லை. அதோடு மேற்கு நாடுகளும் தமிழ் மக்களுக்கு இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியை பெற்றுத்தரும் வாய்ப்புகள் இதுவரையிலும் கனியவில்லை. மேற்கு நாடுகள் மட்டுமல்ல,ஐநா போன்ற உலகப் பொது மன்றங்கள் மட்டுமல்ல,எந்த ஒரு வெளித்தரப்பும் தமிழ்மக்களுக்கு நீதியைப் பெற்று தர மாட்டார்கள். தமிழ் மக்கள்தான் தங்களுக்கு வேண்டிய நீதிக்காக போராட வேண்டும். ஆனால் கடந்த 13 ஆண்டுகளில் நிலைமை எவ்வாறு உள்ளது? ஐநா தமிழ் மக்களுக்கு பரிகார நீதியைப் பரிந்துரைக்கத் தயாரில்லை. மாறாக நிலைமாறுகால நீதியைத்தான் பரிந்துரைத்தது. அது வென்றவர்கள் தோற்றவர்களுக்கு வழங்கும் ஒரு நீதி. இரண்டாம் உலகமகா யுத்தத்தின் பின்னிருந்து நூரம்பேர்க் தீர்ப்பாயத்தில் தொடங்கி அண்மைக்கால கம்பூச்சியத் தீர்ப்பாயங்கள் வரையிலும் நிலைமாறுகால நீதி எனப்படுவது வென்றவர்கள் தோற்றவர்களுக்கு வழங்கும் ஒரு நீதிதான். எனவே தொகுத்துப் பார்த்தால்,கடந்த 13ஆண்டுகளாக நீதிக்கான போராட்டத்தில் அனைத்துலக சமூகம் தமிழ் மக்களுக்கு விசுவாசமாக நடந்ததா அல்லது தமிழ் மக்களை ஒரு கருவியாகக் கையாண்டதா?என்ற சந்தேகமும் உண்டு. இதில்,அனைத்துலக சமூகத்தில் தங்களுக்குள்ள வரையறைகளை தமிழ் மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். மேலும்,பிராந்தியப் பேரரசாகிய இந்தியாவானது, கொழும்பில் இருக்கும் அரசாங்கத்தை எப்படிக் கையாளலாம் என்றுதான் சிந்திக்கின்றது.தமிழ்மக்களை ஒரு தரப்பாக ஏற்றுக் கொள்ளவில்லை. கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் வைகோவின் கேள்விக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் வழங்கிய பதிலில் அந்தத் தொனி உண்டு. தமிழகம் அண்மை ஆண்டுகளில் ஈழத் தமிழர்களுக்காக பெரியளவில் நொதிக்கவில்லை. தமிழ் கட்சிகளும் அதற்காக வேலை செய்யவில்லை. எனவே கூட்டிக் கழித்து பார்த்தால் ஈழத் தமிழர்கள் ஒப்பீட்டளவில் பலவீனமாக காணப்படுகிறார்கள். தமது பலம் எது பலவீனம் எது என்பதை குறித்து ஈழத் தமிழர்களிடம் சரியான மதிப்பீடு இருக்க வேண்டும். கற்பனையில் திழைக்க முடியாது. கடந்த 13 ஆண்டுகளில் தமிழ்க் கட்சிகள் இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பெறுவதற்கு பேச்சுவார்த்தை என்று ஒரே ஒரு வழியைத்தான் நம்பியிருக்கின்றன. பேச்சுவார்த்தைகளை எதிர்க்கும் கட்சிகள் மக்கள் இயக்கத்தை உருவாக்கி,தொடர்ச்சியாகப் போராடி,தியாகம் செய்து, தமது பேரபலத்தை அதிகப்படுத்திக் காட்டட்டும். இவ்வாறான பரிதாபகரமான ஓர் அரசியற் சூழலில் பேச்சுவார்த்தைகளை நிராகரிப்பதைவிடவும் பேச்சுவார்த்தைகளில் இறங்கி அவற்றை அம்பலப்படுத்துவதுதான் அனைத்துலக சமூகத்தின் மத்தியில் தமிழ் மக்களின் அந்தஸ்தை உயர்த்தும்.ரணில் ஒரு நாடக மேடையை திறக்கிறார். அதில் சேர்ந்து நடிப்பதல்ல தமிழ் தரப்பின் வேலை.அதை ஒரு நாடகம் என்று அம்பலப்படுத்த வேண்டும். யுத்தத்தைப் போலவே பேச்சுவார்த்தையும் ஒரு கலைதான். அது ஒரு கூட்டு ஒழுக்கம். யுத்தத்தைப் போலவே பேச்சுவார்த்தைகளுக்கும் வியூகங்கள் உண்டு. எனவே ரணில் வகுக்கும் வியூகத்துக்கு எதிர் வியூகத்தை தமிழ்த் தரப்பும் வகுக்க வேண்டும். http://www.nillanthan.com/5793/
  14. கடந்து செல்லும் கொந்தளிப்பான ஆண்டு - நிலாந்தன் இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் பல மாற்றங்கள் ஒன்றாக நிகழ்ந்து மிகக் கொந்தளிப்பான ஒரு ஆண்டு நம்மைக் கடந்து போகிறது. இந்த ஆண்டில்தான் இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் முப்பொழுதும் ஏற்பட்டிராத ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதற்கு எதிராக சிங்கள மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடினார்கள். அரகலய என்று அழைக்கப்பட்ட அப்போராட்டமானது உலகத்தின் கவனத்தை ஈர்க்குமளவுக்கு படைப்புத்திறன் மிக்கதாக காணப்பட்டது. போரை வெற்றி கொண்ட ஒரு குடும்பம் நாட்டின் கருவூலத்தை திருடிவிட்டது என்று சிங்கள மக்கள் குற்றம்சாட்டினார். போராட்டத்தை ஒடுக்குவதற்கு அக்குடும்பம் குண்டர்களை ஏவி விட்டது. ஆனால் அது விபரீதமான விளைவைக் தந்தது. ஓரிரவுக்குள் 30 க்கும் குறையாத அரசியல்வாதிகளின் வீடுகளும் சொத்துக்களும் எரித்து அழிக்கப்பட்டன. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் ஒரு பிரதேச சபைத் தலைவரும் கொல்லப்பட்டார்கள். இலங்கைத் தீவின் நவீன வரலாற்றில் சிங்கள அரசியல்வாதிகளுக்கு அப்படியோர் அச்சம் நிறைந்த இரவு முன்னெப்பொழுதும் வந்ததில்லை. அதன் விளைவாக ராஜபக்சக்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார்கள். ஏந்த ஒரு குடும்பத்துக்கு சிங்கள மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கினார்களோ,அதே குடும்பத்தை அவர்கள் பதவிகளிலிருந்து துரத்தினார்கள். எனினும் அந்த குடும்பம் ஒற்றை யானைக்குப்பின் பாதுகாப்பைத் தேடிக் கொண்டது. மக்களால் நிராகரிக்கப்பட்டவரும் தனது அரசியல் வாழ்வின் இறுதிக் கட்டத்தை அடைந்துவரும் ஆழங்காண முடியாத தந்திரசாலியுமாகிய ரணில் விக்ரமசிங்க அந்தப் போராட்டத்தின் கனிகள் அனைத்தையும் தன் சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டார். அந்தப் போராட்டம் அவருக்கு ஓய்வூதியம் பெறும் காலத்தில் வாழ்வு கொடுத்தது. அப்போராட்டத்தை அவர் நசுக்கினார். மன்னராட்சிக்கு எதிரான பிரஞ்சுப் புரட்சியின் கனிகளை நெப்போலியன் திருடியது போல,சிஸ்டத்துக்கு எதிரான அரகலயவின் கனிகளை அந்த சிஸ்டத்தை பாதுகாக்கும் ஒருவர் தனது சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டார். இப்படியாக கடந்து போகும் ஓர் ஆண்டு என்பது இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் நம்பமுடியாத மாற்றங்கள் நிகழ்ந்த ஓராண்டாக காணப்படுகிறது. இந்த மாற்றங்களின் தொகுக்கப்பட்ட விளைவுகளே இனிவரும் காலங்களில் இலங்கைத்தீவின் அரசியல் போக்கை தீர்மானிக்கப் போகின்றன. இந்த மாற்றங்கள் அல்லது கொந்தளிப்புகள் எவையும் வெற்றிடத்தில் இருந்து தோன்றவில்லை. அவை அவற்றுக்கான தர்க்கபூர்வ வளர்ச்சிகளின் தவிர்க்கப்படவியலாத விளைவுகளே. அவை இந்த ஆண்டில் ஒன்றாகத் திரண்டு வெளிப்பட்டன என்பதே சரி.ஆனால் அவற்றின் தோற்றுவாய்கள் பல தசாப்தகாலதுக்கு முந்தியவை. பொருளாதார நெருக்கடி வானத்திலிருந்து தோன்றவில்லை. ராஜபக்சக்கள் கூறியதுபோல அது வைரஸினால் வந்ததும் அல்ல. அல்லது வெரிட்டே ரிசேர்ச் இன்ஸ்டிட்யூட் கூறுவதுபோல 2019இல் கோட்டாபய வரியைக் குறைந்ததால் மட்டும் தோன்றவில்லை.அல்லது ஈஸ்டர் குண்டுவெடிப்பின் விளைவாக மட்டும் தோன்றவில்லை.மாறாக அதன் வேர்கள் மிக ஆழமானவை, வெளிப்படையானவை. சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதமும் அதன் தமிழ் நண்பர்களும் திட்டமிட்டு மறைபவை. ஆம். இனப்பிரச்சினைதான் பொருளாதார நெருக்கடியின் வேர்நிலைக் காரணம். தீர்க்கப்படாத இனப்பிரச்சினையின் மீது எனைய உப பிரச்சினைகள் பிதிபலித்தன என்பதே சரி. எந்த ஒரு குடும்பத்துக்கு சிங்கள மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கினார்களோ அதே குடும்பத்தை நாட்டை விட்டு துரத்தும் ஒரு நிலை ஏன் வந்தது என்பது முதல் கேள்வி. ராஜபக்ஷக்களுக்கு சிங்களமக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கியது ஏனென்றால் அவர்கள் யுத்தத்தில் பெற்ற வெற்றிக்காகத்தான். ராஜபக்ஷக்கள் யுத்த வெற்றி வாதத்திற்கு தலைமை தாங்கினார்கள் .ஈஸ்ரர் குண்டு வெடிப்பின் மூலம் வெற்றி வாதத்தை 2020க்குப் புதுப்பித்தார்கள். கோவிட-19 இன் மூலம் அதை 2021க்குப் புதுப்பித்தார்கள். இவ்வாறு யுத்த வெற்றி வாதத்தை அவர்கள் புதுப்பித்த போதெல்லாம் சிங்கள மக்கள் அவர்களுக்குத் தேர்தல் வெற்றிகளைக் கொடுத்தார்கள். யுத்த வெற்றிவாதம் என்பது அடிப்படையில் தமிழர்களுக்கு எதிரானது. ஈஸ்டர் குண்டு வெடிப்புக்குப் பின் அது முஸ்லிம்களுக்கு எதிரானது. இவ்வாறு இரண்டு சிறிய தேசிய இனங்களுக்கும் எதிராக ஒரு இரும்பு மனிதனை தெரிந்தெடுத்த சிங்களமக்கள் அதே இரும்பு மனிதனை நாட்டை விட்டு ஓட விரட்டினார்கள். இதன் பொருள் சிங்கள பௌத்த பெருந் தேசியவாதம் ஞானம் அடைந்துவிட்டது என்பதல்ல. யுத்தத்தை வென்ற ஒரே தகுதி காரணமாக ராஜபக்சக்கள் நாட்டின் கருவூலத்தை திருடி விட்டார்கள் என்பதுதான் அவர்களுடைய கோபம். இங்கு உற்றுக் கவனிக்க வேண்டியது என்னவென்றால், யுத்தத்தை வென்றமை எங்கே ஒரு தகுதியாக மாறுகிறது ?என்பதுதான். ஆம். யுத்த வெற்றி என்பது அடிப்படையில் தமிழ்மக்களுக்கு எதிரானது. தமிழ்மக்களுக்கு எதிரான வெற்றியைக் கொண்டாடும் ஒரு அரசியல் பரப்பில்தான் ராஜபக்சக்கள் சிங்கள மக்களின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை வெல்ல முடிந்தது. எனவே இங்கு பிரச்சினையாகவிருப்பது ஒரு குடும்பம் அல்ல. யுத்த வெற்றியைக் கொண்டாடும் இனவாத அரசியல்தான். இருந்த ஒரே தகுதி காரணமாக ஒரு குடும்பம் முறைகேடான ஆட்சியை நடத்துவது என்பதே சரி. எனவே சிங்கள மக்கள் போராட வேண்டியது இனவாதத்தை எதிர்த்து தான். ஆனால்,யுத்த வெற்றியை சிங்கள மக்கள் இப்பொழுது நிராகரிக்கவில்லை. அது மஹிந்தவுக்கு தெரிகிறது. அதனால்தான் பிலிப்பைன்சில் மார்க்கோசின் மகன் வந்ததுபோல நாமலையும் ஒருநாள் ஜனாதிபதியாக்கலாம் என்று அவர் கனவு காண்கிறார். எனவே சிங்கள மக்கள் ராஜபக்சக்களைத் துரத்தியமை என்பது அவர்களுடைய முறைகேடான நிர்வாகம் குடும்ப ஆட்சி போன்றவற்றுக்கு எதிராகத்தான். நிச்சயமாக யுத்த வெற்றி வாதத்துக்கு தலைமைதாங்கியதற்காக அல்ல. ஆனால் முறைகேடான ஆட்சியும் குடும்ப ஆட்சியும் யுத்த வெற்றியின்மூலம் தங்களை பலப்படுத்திக் கொண்டன என்பதே உண்மை. யுத்த வெற்றியின் மினுக்கத்துக்கு முன் ராஜபக்சக்களின் குடும்ப ஆதிக்கம் முதலில் சிங்கள மக்களுக்குத் தெரியவில்லை. சாதாரண சிங்களமக்கள் மட்டுமல்ல அரகலயவை வழிநடத்திய கட்சிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் பொருளாதார நெருக்கடியின் மூல காரணங்கள் தொடர்பாக சரியான விளக்கம் இருக்கவில்லை. தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம்தான் எல்லா பாவங்களுக்கும் முதல் பாவம் என்பதை அரகலயக்காரர்களில் அநேகர் இப்பொழுதும் ஏற்றுக்கொள்ளவில்லை. தேர்தல் மூலம் வெற்றி பெறமுடியாத இடதுசாரி அமைப்புகள் சில அரகலயவை பின்னிருந்து இயக்கின என்று ராஜபக்சக்கள் குற்றம்சாட்டினர். அவ்வாறு குற்றம்சாட்டப்பட்ட முன்னிலை சோசலிசக் கட்சிகூட,தமிழ்மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. சமஸ்டியை ஒரு தீர்வாக ஏற்றுக் கொள்ளவில்லை. இதுதான் அரகலயவின் அரசியல் நிலைப்பாடு. அதாவது 2022 க்குப் பின்னரான சிங்கள பௌத்த தேசியவாதத்தின் நிலைப்பாடு அதுதான். அதனால்தான் தமிழ்மக்கள் அரகலயவுடன் முழுமையாக இணையவில்லை. அதாவது 2009 க்குப் பின்னரும் வென்றவர்கள் தோற்றவர்கள் என்று இரண்டாகப் பிளவுண்டிருந்த நாடு அரகலயவின் போதும் போராட்டக்காரர்களும் விலகிநிற்கும் சாட்சிகளும் என்று இரண்டாகப் பிரிந்து நின்றது. மின்சாரம் இல்லாத இருண்ட இரவுகளில் மெழுகுதிரிகளுக்கும் பாண் துண்டுகளுக்குமாக தெருவில் இறங்கிப் போராடிய அரகலயகூட சிங்களபௌத்த பெரும் தேசியவாத சிந்தனை கட்டமைப்பிலிருந்து திருப்பகரமான விதத்தில் விலகி வரவில்லை.அதுதான் பிரச்சினை. அந்த சிந்தனைக் கட்டமைப்புக்குள் பாதுகாப்பாக இருந்துகொண்டு சிந்திக்கும்வரை தமிழ் மக்களின் கவலைகளை,அச்சங்களை, காயங்களை விளங்கிக்கொள்ள முடியாது. இதனால் அரகலய தமிழ் மக்களை தன்னோடு முழுஅளவுக்கு இணைத்துக்கொள்ள முடியவில்லை. இச்சிறிய தீவின் நவீன வரலாற்றில் வந்த மிகக் கொந்தளிப்பான ஓராண்டில் கூட நாடு தமிழர்கள் சிங்களவர்கள் என்று இரண்டாகப் பிளவுண்டு நின்றது. அதாவது நாட்டின் மிகக் கொந்தளிப்பான ஓராண்டில் கூட நாடு இனரீதியாக இரண்டாகப் பிறவுண்டிருந்தது. அரகலயவின் பிரதான கோஷம் சிஸ்டத்தை மாற்றுவது என்பதாகும். ஆனால் அவர்கள் சிஸ்டம் என்று கருதியது எதனை? ஆட்சி நிர்வாகதத்தைதான். அரசுக் கட்டமைப்பை அல்ல. சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்பையல்ல. அங்கேதான் அடிப்படைத் தவறு நிகழ்ந்தது. அவர்கள் அந்தக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக இருந்தார்கள். அதிலிருந்து விடுபட்டு அதையே எதிராக பார்க்க அவர்களால் முடியவில்லை. நாட்டில் அடிப்படையான அரசுக் கட்டமைப்பு மாற்றத்தை வேண்டி அவர்கள் போராடவில்லை. அரகலயவுக்குள் தீவிர இடதுசாரிகளிலிருந்து தீவிர வலதுசாரிகள் வரை எல்லாரும் இருந்தார்கள். அது ஒரு கதம்பமான கலவை. அதனால்,மேலிருந்து கீழ்நோக்கிய தலைமைத்துவ கட்டளைக் கட்டமைப்பு இருக்கவில்லை. பதிலாக பக்கவாட்டிலான இன்டர்நெட் போன்ற இறுக்கமில்லாத ஒரு வலையமைப்பெ இருந்தது. அதனால்தான் ரணில் அதை இலகுவாக நசுக்கினார். இலங்கைத்தீவில் தோன்றிய நூதனமான பல முன்னுதாரணங்கள் கொண்ட படைப்புத்திறன் மிக்க ஓர் அறவழிப் போராட்டம் நசுக்கப்பட்டு விட்டது. கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் இலங்கைத்தீவு நான்கு போராட்டங்களை வெற்றிகரமாக நசுக்கியிருக்கிறது. ஜேவிபியின் இரண்டு போராட்டங்கள், தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம்,அரகலய என்று அழைக்கப்பட்ட சிங்கள மக்களின் அறவழிப் போராட்டம் என்று நான்கு போராட்டங்களை நசுக்கியிருக்கிறது. சிங்கள ஆட்சியாளர்கள் அதை அரசியல் வெற்றியாக கொண்டாட்டக் கூடும். ஆனால் அரை நூற்றாண்டு காலத்தில் நசுக்க நசுக்க மக்கள் ஏன் போராடுகிறார்கள் என்ற கேள்விக்கு அவர்கள் விடை கண்டுபிடிக்க வேண்டும். சிங்கள பௌத்த அரசியல் பண்பாடு யாரைத் தோற்கடிக்கின்றது? தன்னைத்தானே தோற்கடித்துக்கொண்டிருக்கிறதா? இந்த ஆண்டு பிறந்தபோது மக்கள் தெருக்களில் நீண்ட வரிசைகளில் நின்றார்கள். பால்மா இருக்கவில்லை. ஏழைகளின் வீடுகளில் பால்தேநீர் இருக்கவில்லை. இந்த ஆண்டு முடியும்போது முட்டை விலை உயர்ந்துவிட்டது. ஏழைகளின் வீடுகளில் கேக் இல்லாத கிறிஸ்மஸோடு முடிகிறது இலங்கைத்தீவின் மிகக் கொந்தளிப்பான ஓராண்டு. http://www.nillanthan.com/5826/
  15. எல்லாரும் ஏறிச்சறுக்கிய குதிரையில் சக்கடத்தார்? - நிலாந்தன் இராமநாதன் சகோதரர்களில் இருந்து தொடங்கி சம்பந்தர்கள் வரையிலும் சிங்களத் தலைவர்களிடம் ஏமாந்திருக்கிறார்கள்.கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கால அரசியல் அனுபவம் அது. கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் இலங்கைத் தீவு சுதந்திரம் அடைய முன்னும் பின்னும் தமிழ்த் தலைவர்கள் சிங்களத் தலைவர்களோடு நடத்திய பேச்சுவார்த்தைகள்,சந்திப்புகள்,எழுதிய உடன்படிக்கைகள் எதுவுமே வெற்றி பெறவில்லை. ஆயுதப் போராட்டம் கொழும்பின் மீது நிர்ணயகரமான அழுத்தத்தை பிரயோகித்தது. அதனால் ஒப்பீட்டளவில் நீண்ட காலம் நிலைத்திருந்த இரண்டு உடன்படிக்கைகள் எழுதப்பட்டன.மூன்றாவது தரப்பொன்று தலையிட வேண்டிய தேவையும் ஏற்பட்டது.இவ்வாறு ஆயுதப் போராட்டத்தில் தமிழ் மக்கள் சிந்திய ரத்தத்தின் விளைவாக எழுதப்பட்ட இரண்டு உடன்படிக்கைகள் ஒப்பிட்டுளவில் நீண்ட காலம் நிலைத்திருந்தன. முதலாவது இந்திய இலங்கை உடன்படிக்கை. அடுத்தது ரணில் பிரபாகரன் உடன்படிக்கை. இது தவிர ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரும் ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரும் எழுதப்பட்ட உடன்படிக்கைகள் எவையும் நீடித்திருக்கவில்லை.அவை சிங்களத் தரப்புகளாலேயே கிழித்து எறியப்பட்டன. ஆயுதப் போராட்டமானது இலங்கைத்தீவின் அரசியல் ராணுவ வலுச்சமநிலையை மாற்றக்கூடிய பலத்தோடு காணப்பட்டது.அவ்வாறு வலுச்சமநிலை மாறும்போதெல்லாம் சமாதான உடன்படிக்கைகள் செய்து கொள்ளப்பட்டன. அல்லது பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டன. ஆனால் 2009 க்கு பின் அவ்வாறு இலங்கை தீவின் அரசியல் வலுச் சமநிலையை மாற்றத்தக்க பேரபலம் தமிழ்த் தரப்பிடம் இல்லை. முதலாவதாக தமிழ்த்தரப்பு ஒரு திரண்ட சக்தியாக இல்லை. இரண்டாவதாக, தமிழ்த்தரப்பு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் தொடர்ச்சியான நிர்ணயகரமான போராட்டங்கள் எதையும் முன்னெடுக்கவில்லை.தமிழ்த்தரப்பில் இப்பொழுது தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மொத்தம் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்டு. தலைக் கணக்கின்படி பார்த்தால் அது மிகச் சிறிய தொகை.தமிழ் மக்களின் அரசியல் இப்பொழுது தேர்தல் மைய அரசியலாகத்தான் காணப்படுகிறது. மக்கள் இயக்கம் கிடையாது. இந்நிலையில் பூகோள அரசியலைக் கையாளப் போகின்றோம் புவிசார் அரசியலை கையாள போகின்றோம், என்று தமிழ்க் கட்சிகள் கூறிக் கொள்ளலாம். ஆனால் நடைமுறையில் அவ்வாறு புவிசார் அரசியலையோ அல்லது பூகோள அரசியலையோ கையாளத் தேவையான கட்டமைப்புகள் எவையும் தமிழ்க் கட்சிகளிடம் இல்லை. அதாவது தொகுத்துக் கூறின் 2009க்கு பின் தமிழ் அரசியல் எனப்படுவது “ரியாக்ட்டிவாகத்தான்”-பதில் வினையாற்றும் ஆரசியலாகத்தான் இருக்கிறதே தவிர “புரோஆக்டிவாக”-தனது செயல்களுக்கு ஏனைய தரப்புக்களை பதில் வினையாற்ற நிர்பந்திக்கும் அரசியலாக இல்லை. இப்பொழுதும்கூட பொருளாதார நெருக்கடி காரணமாகத்தான் ரணில் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறார்.அதுகூட வெளி நிர்ப்பந்தமே காரணம். பொருளாதார நெருக்கடிக்கான நிதி உதவிகளும் இனப்பிரசினைக்கான தீர்வும் ஒரே பக்கேஜ்ஜுக்குள் வைக்கப்பட வேண்டும் என்று மேற்கு நாடுகள் வலியுறுத்துவதாகத் தெரிகிறது. கடைசியாக நடந்த ஜெனிவா கூட்டத்தொடரில் இந்தியாவும் அதை வலியுறுத்தியது. எனவே இனப்பிரச்சினையைத் தீர்ப்பதுபோல ஒரு தோற்றத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை ரணிலுக்கு ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு வெளித்தரப்புகளிடமிருந்து வரும் நிர்பந்தங்கள் காரணமாக அவர் பேச வந்திருக்கிறார். இந்த நிர்பந்தங்கள் காரணமாக தமிழ்த் தரப்பின் பேரம் ஒப்பீட்டளவில் அதிகரித்து இருக்கிறதுதான். ஆனாலும் தனது கோரிக்கைகளை முன் நிபந்தனைகளாக வைத்து பேச்சுவார்த்தைகளை தொடங்குமளவுக்கு தமிழ்த்தரப்பு பலமாக இருக்கிறதா என்ற கேள்விக்கு விடை இங்கு முக்கியம். ஆயுதப் போராட்டத்தின் பேரபலம் காரணமாகத்தான் வெளித்தலையீடுகள் ஏற்பட்டன. மூன்றாவது தரப்புகளின் மேற்பார்வையின் கீழ் பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முதலாவது வெளிநாட்டு பேச்சுவார்த்தை திம்புவில் இடம்பெற்றது. அங்கிருந்து தொடங்கி ஒஸ்லோ வரையிலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.வெளிநாடுகளில் நிகழ்ந்த எல்லா பேச்சுவார்த்தைகளுக்கும் காரணம் ஆயுத போராட்டந்தான். ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரும் பின்னருமான மிதவாத அரசியலில் வெளியரங்கில் இடம்பெற்ற பேச்சு வார்த்தைகள் என்று பார்த்தால் 2015 ஆட்சி மாற்றத்திற்காக நிகழ்ந்த சில ரகசிய சந்திப்புகளைத்தான் குறிப்பிடலாம். மற்றும்படி ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தபின் பேச்சுவார்த்தைகளை கொழும்புக்கு வெளியே கொண்டு போக முடியவில்லை. மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தரை கிட்டத்தட்ட 17தடவைகள் ஏமாற்றினார் என்று சம்பந்தரே கூறுகிறார். அதன்பின் ரணில் விக்கிரமசிங்க உருவாக்கிய யாப்புருவாக்கக் குழு 82 தடவைகள் சந்தித்தது.எல்லாவற்றையும் முடிவில் மைத்திரி குழப்பினார்.நிலைமாறுகால நீதியின் கீழ் ஒரு புதிய யாப்பை உருவாக்க முயன்ற ரணிலின் முயற்சிகளை மைத்திரி முறியடித்தார். அம்முயற்சிகளுக்கு ஐநா பின்பலமாக இருந்தது.ஐநாவின் 30/1 தீர்மானம் அதற்குரிய அடிப்படைகளை வகுத்துக் கொடுத்தது. ஆனாலும் ஐநா இலங்கைத்தீவில் சம்பந்தப்பட்ட தரப்புகளின்மீது அழுத்தங்களை பிரயோகிக்கக்கூடிய நிலைமை இருக்கவில்லை. ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு அவ்வாறு அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்குரிய ஆணையும் இருக்கவில்லை.அதனால்தான் 2018ல் ஒக்டோபர் மாதம் மைத்திரிபால சிறிசேன பொறுப்புக்கூறலுக்கான உடன்படிக்கையை ஒருதலைப்பட்சமாக முறித்தார்.அதன்பின் ஆட்சிக்கு வந்த கோட்டாபய அரசாங்கம் மேற்படி பொறுப்புக் கூறலுக்கான ஐநா தீர்மானத்துக்கு முன்னைய இலங்கை அரசாங்கம் வழங்கிய இணை அனுசரணையிலிருந்து விலகியது.அதாவது ஐநா மனித உரிமைகள் பேரவையில் ஒப்புக்கொண்ட கடப்பாடுகளில் இருந்து இலங்கை அரசாங்கம் பின்வாங்கியது. அனைத்துலக அரங்கில் தானும் கையெழுத்திட்டு ஏற்றுக்கொண்ட பொறுப்புகளில் இருந்து இலங்கை அரசாங்கம் பின்வாங்க முடியும் என்பதற்கு அது ஆகப்பிந்திய உதாரணம் ஆகும். ஏற்கனவே இந்திய இலங்கை உடன்படிக்கையின் கீழ் உருவாக்கப்பட்ட 13 வது திருத்தத்தை எந்த ஒரு ஜனாதிபதியும் முழுமையாக அமல்படுத்தவில்லை. மாறாக 13வது திருத்தத்தின் உள்ளடக்கத்தை படிப்படியாக உருவி எடுத்து விட்டார்கள். இப்பொழுது அது ஒரு கோறை. தான் பெற்ற பிள்ளையாகிய 13 வது திருத்தத்தின் உறுப்புகள் ஒவ்வொன்றாக வெட்டப்பட்ட பொழுது அதன் பெற்றோரில் ஒருவராகிய இந்தியா அதைப் பார்த்துக் கொண்டிருந்தது. 2009க்கு பின்னரும் கடந்த 13 ஆண்டுகளாக இந்தியா அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. எனவே கொழும்புடனான பேச்சுவார்த்தைகள் என்ற நூற்றாண்டு கால தோல்விகரமான அனுபவத்தின் பின்னணியில், குறிப்பாக 87 ஆம் ஆண்டுக்கு பின்னரான கடந்த மூன்று தசாப்த காலத்துக்கும் மேலான அனுபவங்களைத் தொகுத்துப் பார்த்தால்,தமிழ் மக்களுக்கு மிக கசப்பான பாடங்கள் கிடைக்கின்றன.பிராந்திய மட்டத்திலும் அனைத்துலக மட்டத்திலும் எழுதப்பட்ட உடன்படிக்கைகளில் இருந்து இலங்கை அரசாங்கங்கள் பின்வாங்கியிருக்கின்றன.ஒரு பிராந்தியப் பேரரசாகிய இந்தியாவும் இந்தவிடயத்தில் அழுத்தத்தை பிரயோகிக்க முடியவில்லை.உலகப் பொது மன்றமாகிய ஐநாவும் அழுத்தத்தை பிரயோகிக்க முடியவில்லை.அவ்வாறு சம்பந்தப்பட்ட தரப்புக்களின்மீது நிர்ணயகரமான அழுத்தங்களை பிரயோகிக்கும் ஆணை ஐநா மனித உரிமைகள் பேரவைக்குக் கிடையாது. அப்படியென்றால் ஒரு மூன்றாவது தரப்பின் பிரசன்னம் எனப்படுவது வெறும் பிரசன்னமாக மட்டும் இருந்தால் போதாது. அதைவிட ஆழமான பொருளில் அழுத்தத்தை பிரயோகிக்கும் ஒரு பிரசன்னம் தேவைப்படுகிறது என்று பொருள். எரிக் சூல்ஹெய்ம் மார்ட்டி அஹ்ரிசாரி சமூக செயற்பாட்டாளராகிய செல்வின் சொன்னார்…நோர்வையின் அனுசரனையுடனான சமாதான முயற்சிகள் தோல்வியுற்றபின் ஒஸ்லோவில் நடந்த ஒரு சந்திப்பில் சிறப்புத் தூதுவரான சூல் ஹெய்ம் பின்வரும் தொனிப்பட கருத்து தெரிவித்திருக்கிறார்… “நோர்வே ஓர் அனுசரணையாளர் மட்டுமே. அனுசரணை என்பது,சந்திக்கும் இடங்களையும் சந்திப்பு நேரங்களையும் ஒழுங்குபடுத்துவது. சந்திப்புக்கான பயண ஏற்பாடுகளையும் தங்குமிட ஏற்பாடுகளையும் ஒழுங்குபடுத்துவது என்பவைதான்” என்று.அவர் இவ்வாறு கூறிய பின் நிகழ்ந்த மற்றொரு தனிப்பட்ட சந்திப்பில் பின்லாந்தின் முன்னாள் ஜனாதிபதியான மார்ட்டி அஹ்ரிசாரி-அவர்தான் பலஸ்தீனத்தில் பேச்சுவார்த்தைகளை ஒழுங்குபடுத்தியவர்-இலங்கையின் சமாதான முன்னெடுப்புகளை குறித்து பின்வரும் தொனிப்பட கருத்து தெரிவித்துள்ளார். “இரண்டு தரப்பும் சமாதானத்துக்கு தயாரில்லை என்றால், அந்த இடத்தில் நான் இருந்திருந்தால், இரண்டு பேரையும் வீட்டுக்கு அனுப்பியிருந்திருப்பேன். பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்திருக்க மாட்டேன்” என்று.ஏனெனில் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு தேவையான வளங்களை ஒழுங்குபடுத்துவது மட்டும் ஒரு மூன்றாந்தரப்பின் வகிபாகம் அல்ல என்ற பொருளில். சூல் ஹெய்ம் மற்றும் மார்ட்டி அஹ்ரிசாரி ஆகியோரின் கூற்றுக்களின் அடிப்படையிலும்,ஆயுதப்போராட்ட காலத்தில் நடந்த பேச்சுக்களில் தலையிட்ட மூன்றாந் தரப்புக்களான இந்தியா,நோர்வே(அமெரிக்கா)ஆகிய இரு தரப்புக்களுடனும் தமிழ்த் தரப்பு முரண்படும் ஒரு நிலை ஏன் ஏற்பட்டது என்ற அனுபவத்தின் அடிப்படையிலும் ஈழத்தமிழர்கள் தொகுக்கப்பட்ட ஓரு முடிவுக்கு வரவேண்டும். ஒரு மூன்றாந்தரப்பின் தலையீடு இன்றி இலங்கைத்தீவில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு இல்லை,அதேசமயம் ஒரு மூன்றாவது தரப்பின் தலையீடு எனப்படுவது வெறுமனே பிரசன்னமாகவோ அல்லது நடுநிலை வகிக்கும் மத்தியஸ்தராகவோ அல்லது அனுசரணையாளராகவோ இருந்தால் மட்டும் போதாது.நீதியான சமாதானத்தை நோக்கி அழுத்தங்களைப் பிரயோகிக்குமளவுக்கு ஒரு மூன்றாவது தரப்பின் வகிபாகம் இருக்க வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட மூன்றாவது தரப்பை உள்ளே கொண்டு வருமளவுக்கு தமிழ்த் தரப்பு பேரபலத்துடன் இல்லை என்பதால்தான் ரணில் மூன்றாவது தரப்பைக் குறித்து சீரியஸாக இல்லையா?அல்லது அவர் பேச்சவார்த்தையிலேயே சீரியஸாக இல்லையா? http://www.nillanthan.com/5804/
  16. தமிழர்கள் சிறுக்கிறார்களா? பெருக்கிறார்களா? Nillanthan “இனி நாங்கள் எப்பவுமே ஸ்ரீலங்கா பக்கம் போகமாட்டம்.நாங்கள் இலங்கைக்கு போகவே மாட்டம். அப்பிடிப் போறதெண்டால் நாங்கள் இங்கேயே தற்கொலை பண்ணிச் சாவம். நீங்கள்தான் எங்களுக்கு ஏதாவது ஒரு வழிபண்ணி எங்களை யு.என் பொறுப்பெடுத்து காப்பாத்தோனும்”இவ்வாறு கூறியிருப்பவர் வியட்நாமில் இறக்கி விடப்பட்டிருக்கும் ஒரு தமிழ்ப் புலம்பெயரி. அவர் ஒரு இளம் தாய்.ஒரு சிறு பிள்ளையை கையில் வைத்திருக்கிறார்.பயணத்தின் போது தாங்கள் அருந்திய அழுக்கான நீர் நிறைந்த ஒரு பிளாஸ்டிக் போத்தலையும் கையில் வைத்திருக்கிறார்.கனடாவை நோக்கிக் கப்பலில் புறப்பட்ட 303 தமிழர்களில் அவரும் ஒருவர்.அவர்கள் பயணம் செய்த படகு கடந்தவாரம் சேதமடைந்து சிங்கப்பூர் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த பொழுது காப்பாற்றப்பட்டு வியட்நாமில் இறக்கி விடப்பட்டிருக்கிறார்கள். இதுபோலவே ஒஸ்ரேலியாவை நோக்கியும் ஆபத்தான கடல்வழிகளின் ஊடாக தமிழர்கள் புலம்பெயர முயற்சிக்கிறார்கள்.இவ்வாறு கடல் வழியாக வருபவர்களை திருப்பி அனுப்பப்போவதாக ஒஸ்ரேலிய அரசாங்கம் தொடர்ச்சியாக விளம்பரம் செய்துவருகிறது.கடல் வழியாக மட்டுமல்ல வான் வழியாக வரும் புலம்பெயரிகளையும் திருப்பி அனுப்பப்போவதாக ஒஸ்ரேரேலிய அரசாங்கம் கடந்தவாரம் அறிவித்திருக்கிறது. கொழும்பில் உள்ள ஒஸ்ரேரேலிய தூதரகத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவர் ஓர் ஆங்கில ஊடகவியலாளரோடு உரையாடும்பொழுது ஒரு விடயத்தை சுட்டிக் காட்டியிருக்கிறார்.இலங்கையிலிருந்து பெருந்தொகையான மூளை உழைப்பாளிகளின் விசாவுக்கு விண்ணப்பித்திருப்பதாகவும்,அண்மை காலங்களில் அந்த விண்ணப்பங்களின் தொகை அதிகரித்து வருவதாகவும், அதனால் விசா விண்ணப்பங்களையும் கட்டுப்படுத்த வேண்டிய நிலைமை வரலாம் என்ற பொருள்பட அவர் கதைத்திருக்கிறார். கனடா,ஒஸ்ரேலியா போன்ற நாடுகளை நோக்கி மட்டுமல்ல,ஐரோப்பிய நாடுகளை நோக்கியும் பெருந்தொகையான தமிழர்களும் சிங்களவர்களும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.குறிப்பாக மேற்படிப்பு அல்லது தொழில் வாய்ப்பு என்ற அடிப்படையில் படித்தவர்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.இந்த ஆண்டு மட்டும் இதுவரையிலும் 500க்கும் அதிகமான மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் வெளியேறுவதற்காக விண்ணப்பித்திருக்கிறார்கள். பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஏற்பட்ட தன்னெழுச்சிப் போராட்டங்களின் பின்னணியில் கொழும்பில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டைப் பெறுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்தது. போர்க்காலங்களில் தமிழ் இளையோர் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் பொருளாதார காரணங்களுக்காகவும் நாட்டைவிட்டு வெளியேறினார்கள். ஆனால் அண்மைக் காலங்களில் சிங்கள இளையோரும் அவ்வாறு வெளியேறத் தொடங்கியிருக்கிறார்கள்.இவர்களின் கணிசமானவர்கள் மூளை உழைப்பாளிகள். ராஜபக்சக்கள் இந்த நாட்டை எந்த மக்களுக்கு மீட்டுக் கொடுத்ததாக பெருமைப்பட்டுக் கொண்டார்களோ,அந்த மக்களே நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.இதில் குறிப்பாக தமிழ்மக்களைப் பொறுத்தவரை 2009க்கு பின்னரும் புலப்பெயர்வு நிகழ்கிறது என்பதுதான் இக்கட்டுரையின் குவிமையம் ஆகும். அண்மையில் கல்விப் பொதுத் தராதர உயர்தரம் பயிலும் ஒரு மாணவரிடம் கேட்டேன்… நல்ல பெறுபேறு கிடைத்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? என்று அவர் சொன்னார் “வெளிநாட்டுக்குப் போவேன்” என்று. அவருடைய இரண்டு சகோதரர்களும் அவ்வாறு வெளியேறத் தயாராகி வருவதாகவும் அவர் சொன்னார்.தமிழ் இளையோரில் வகைமாதிரிக்கு ஒரு குறிப்பிட்ட தொகையினரை எடுத்து “எத்தனை பேர் நாட்டை விட்டு வெளியேற விரும்புகிறீர்கள்?”என்று கேட்டால்…அதற்கு நாட்டை விட்டு வெளியேற விரும்புவோரின் தொகையே அதிகமாயிருக்கிறது. புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் ஏற்கனவே நிதிரீதியாக செல்வாக்கு மிக்க ஒரு சமூகமாக எழுச்சி பெற்றுவிட்டது.அந்நாடுகளில் கல்வி ஒரு சுமையாகவோ சித்திரவதையாகவோ இல்லை.அதை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு நாட்டில் உள்ள இளைய தலைமுறையில் ஒரு பகுதி வெளியேற முயற்சிக்கின்றது.இவ்வாறு வெளியேற விரும்பும் பலருக்கும் புலம்பெயர்ந்த பரப்பில் யாரோ ஒரு உறவினர் அல்லது ஏதோ ஒரு தொடர்பு உண்டு.அவ்வாறு புலம்பெயர்ந்து செல்வதன்மூலம் தமது குடும்பத்தின் நிதிநிலையை உயர்த்தலாம்,தாமும் ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம் என்று அவர்கள் நம்புவதாகத் தெரிகிறது. ஒருபுறம் போதைப்பொருள் பாவனை வாள் வெட்டுக் கலாச்சாரம் தொடர்பாக செய்திகள் வெளிவருகின்றன. இன்னொருபுறம் 2009க்கு பின்னரும் நாட்டை விட்டு வெளியேறும் இளையோரின் தொகை குறையாமல் இருக்கிறது. தமிழ் அரசியல்வாதிகளும் கட்சிகளும் தாயகம்,தேசியம் சுயநிர்ணயம் என்ற கோஷங்களை விடாது உச்சரிக்கின்றன. ஆனால் தாயகத்தில் தமிழ் மக்களின் ஜனத்தொகை குறைந்து வருகிறது. ஒருபுறம் தாயகத்திலும் டயஸ்பெறாவிலும் பிள்ளைப்பேறு விகிதம் பெருமளவிற்கு குறைந்து வருகிறது. இன்னொரு புறம் தாயகத்திலிருந்து தொடர்ச்சியாக மணப்பெண்களாக ஒரு தொகுதி பெண்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.இதற்கு சமாந்தரமாக மூளை உழைப்பாளிகளும் கள்ளமாகக் குடியேறுபவர்களும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.இதுதொடர்பில் தமிழ்க் கட்சிகளிடம் அல்லது செயற்பாட்டாளர்களிடம் தொகுக்கப்பட்ட புள்ளி விபரங்கள் ஏதாவது உண்டா? ஒரு மக்கள் கூட்டத்தை தேசிய இனமாக வனையும் பிரதான அம்சங்கள் ஐந்து இனம்,நிலம்,(அதாவது தாயகம்), மொழி,பொதுப்பண்பாடு,பொதுப் பொருளாதாரம் என்பவையே அவையாகும். இதில் இனம் என்று குறிப்பிடப்படுவது பிரயோகத்தில் தமிழ் சனத் தொகையைத்தான்.ஏற்கனவே போரில் தமிழ் சனத்தொகையில் குறைந்தது மூன்று லட்சம் பேர் கொல்லப்பட்டு விட்டார்கள். அல்லது காணாமல் போய்விட்டார்கள். தப்பிப் பிழைத்தவர்களில் இளையவர்கள் இப்பொழுது புலம்பெயர முயற்சிக்கிறார்கள். இனப்படுகொலை புலப்பெயர்ச்சி என்பவற்றால் ஏற்கனவே சனத்தொகை மெலிந்து வருகிறது. இந்நிலையில் பிள்ளைப் பேறு விகிதமும் குறைந்து வருவதனால் சனத்தொகை மேலும் குறையக் கூடிய ஆபத்து அதிகரிக்கிறது. கடந்த பெப்ரவரி மாதம் யாழ்.சர்வோதயத்தில் நடந்த ஒரு கருத்தரங்கின்போது அங்கு பிரசன்னமாகியிருந்த நடுத்தர வயதைக் கடந்த சுமார் முப்பது பெண்களிடம் வளவாளர் ஒரு கேள்வி கேட்டார்.”நீங்கள் எல்லாரும் எத்தனை சகோதரர்களோடு பிறந்தீர்கள்?”அவர்களில் அநேகமானவர்கள் மூன்றுக்கும் மேற்பட்ட சகோதரர்களோடு பிறந்ததாகச் சொன்னார்கள்.அதன்பின் வளவாளர் மீண்டும் ஒரு கேள்வி கேட்டார் “உங்களில் எத்தனை பேருக்கு மூன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள்?”துரதிஷ்டவசமாக அங்கிருந்த பெண்களில் மூவருக்குத்தான் மூன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள்.ஏனைய அனைவருக்கும் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகள்தான்.இதுதான் தமிழ்ச் சமூகத்தின் இப்போதுள்ள நிலைமை. தாயகத்திலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் பிள்ளைப்பேறு விகிதம் குறைந்து வருகிறது.அதேசமயம் புலப்பெயர்ச்சியும் தொடர்கிறது. தமிழ் இளையோர் தாயகத்தை விட்டு வெளியேறுவதனால் அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்துக்கும் நிதி ரீதியாக பாதுகாப்பான ஒரு எதிர்காலம் கிடைக்கலாம். ஆனால் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் பார்த்தால் அது தாயகத்தில் சனத்தொகையைக் குறைக்கிறது.தேர்தல்மைய நோக்கு நிலையிலிருந்து பார்த்தால் வாக்காளர்களின் தொகை குறைக்கிறது.எல்லா விதத்திலும் அது தமிழ் மக்களை பலவீனப்படுத்துகிறது. காசிருந்து என்ன பலன்? தாயகத்தில் சனத்தொகை மெலிந்து கொண்டே போகிறது. ஒரு தேசமாக தமிழ் மக்கள் பெருக்கவில்லை சிறுத்துக் கொண்டே போகிறார்களா? தமிழ் இளையோர் மத்தியில் இவ்வாறு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற தவிப்பு ஏன் அதிகரிக்கின்றது? இதைக் குறித்து தமிழ் கட்சிகளோ அல்லது செயற்பாட்டாளர்களோ அல்லது புத்திஜீவிகளோ அல்லது குடிமக்கள் சமூகங்களோ சிந்திக்கின்றனவா? சில மாதங்களுக்கு முன்பு வலிகாமம் பகுதியிலுள்ள ஒரு பங்குத்தந்தை என்னை தனது பங்கில் உள்ள இளையோர் மத்தியில் பொருளாதார நெருக்கடிகள்பற்றி பேசுமாறு அழைத்திருந்தார். நான் பேசிக்கொண்டிருந்தேன் ஆனால் அங்கு கூடியிருந்த இளையோர் அந்தப் பேச்சை ரசிக்கவில்லை.அக்கறையோடு கேட்கவில்லை.ஒரு கட்டத்தில் பேசுவதை நிறுத்தி விட்டுக் கேட்டேன் “உங்களுக்கு தேவையில்லாத ஒன்றை நான் கதைக்கின்றேனா?” “ஆம்” என்று சொன்னார்கள.”உங்களைப் பாதிக்கும் விடயங்களைப்பற்றி அறிய விரும்பவில்லையா?” என்று கேட்டேன்.அறிந்து என்ன பயன் என்ற தொனிப்படக் கேட்டார்கள்.“சரி,எதிர்காலத்தில் என்னவாய் வர விரும்புகிறீர்கள்? உங்களுடைய வாழ்வின் இலட்சியம் என்ன?” என்று கேட்டேன். சுமார் 40 பேர் வந்திருந்த அந்தச் சந்திப்பில் நான்கு பேர்களிடம்தான் எதிர்கால இலட்சியம் இருந்தது. ஏனையவர்கள் கேட்டார்கள் “ஏன் அப்படி ஒரு இலட்சியம் இருக்க வேண்டும்? வாழ்க்கையை இப்பொழுது இருப்பதை போலவே அனுபவித்து விட்டு போகலாமே?” என்று.உங்களை நீங்கள் புதிய சவால்களுக்கு ஏற்ப புதுப்பித்துக் கொள்ள விரும்பவில்லையா என்று கேட்டேன். “ஏன் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்?” என்று கேட்டார்கள். அவர்களில் அநேகரிடம் ஆகப்பிந்திய தயாரிப்புகளான கைபேசிகள் இருந்தன. பெரும்பாலானவர்கள் ஆகப்பிந்திய தயாரிப்புகளான மோட்டார் சைக்கிள்களை வைத்திருந்தார்கள்.அவற்றைச் சுட்டிக்காட்டி அவர்களிடம் கேட்டேன்..”உங்களுடைய வாகனங்கள் அப்டேட் செய்யப்பட்டவை; உங்களுடைய கைபேசிகள் அப்டேட் செய்யப்பட்டவை ;உங்களுடைய வீட்டில் இருக்கும் தொலைக்காட்சிகள்,கணினிகள் அப்டேட் செய்யப்பட்டவை; ஆனால் நீங்கள் மட்டும் உங்களை அப்டேட் செய்ய விரும்பவில்லையா?” என்று. அப்பொழுதுதான் அவர்கள் ஈடுபாட்டோடு உரையாடத் தொடங்கினார்கள். நான் பேசவந்த விடயத்தை இடையிலேயே நிறுத்திவிட்டு அவர்களோடு அவர்களுடைய அலைவரிசையிலேயே நின்று கதைப்பது என்று முடிவெடுத்து, கேள்விகளை கேட்கத் தொடங்கினேன்.அது வெற்றியளித்தது. என்னை அங்கே பேச அழைத்த பங்குத் தந்தையிடம் சொன்னேன் ” ஒரு புதிய தலைமுறையின் நம்பிக்கைகளை நாங்கள் எங்களுடைய நம்பிக்கைகளுக்கூடாக அணுகப் பார்க்கிறோம்.எங்களுடைய நம்பிக்கைகளே அவர்களுடைய நம்பிக்கைகளாகவும் இருக்க வேண்டும் என்று இல்லை.அவர்கள் கைபேசிச் செயலிகளின் கைதிகள். எல்லாவற்றையும் “ஸ்க்ரோல்” பண்ணி கடந்துவிட முயலும் ஒரு தலைமுறை. பெரும்பாலான விடயங்களில் ஆழமான வாசிப்போ, யோசிப்போ,தரிசிப்போ கிடையாது.அவர்களை அவர்களுடைய அலைவரிசைக்குள் சென்று அணுகினால்தான் அவர்கள் எங்களோடு உரையாட வருகிறார்கள்” என்று கொழும்பில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராகப் போராடத் தொடங்கிய நடுத்தர வர்க்கம் குறிப்பாக இளையோர் காலிமுகத்திடலில் முதலில் வைத்த கோஷம் “You are messing up with a wrong generation” – நீங்கள் பிழையான ஒரு தலைமுறையோடு சொதப்பிக் கொண்டிருக்கிறீர்கள்” என்பதாகும்.இது தமிழ் அரசியல்வாதிகளுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் பொருந்தும் ஒரு காலம் வருகிறதா? http://www.nillanthan.com/5733/
  17. போதைப் பொருளைத் தடுக்க ஒரு படைப்பிரிவு? – நிலாந்தன். October 30, 2022 “வடக்கில் இராணுவத்தினரால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது கஞ்சா தொகையாகக் கைப்பற்றப்பட்டது. இந்தியாவிலிருந்து யாழ்ப்பணப் பகுதிக்கு மிகவும் பிரமாண்டமான முறையில் போதைப்பொருள் கடத்தல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இளம்சந்ததியினரும் அவற்றிற்கு அடிமையாகின்ற தன்மையானது வெகுவாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்த துர்ப்பாக்கிய நிலையினை இல்லாதொழிப்பதனை நோக்கமாகக் கொண்டு யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜேயசுந்தர அவர்களினுடைய தலைமையில் விசேட படைப் பிரிவானது உருவாக்கப்பட்டு விசேட சோதனை நடவடிக்கைகள் மற்றும் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு அதனூடாக யாழ்.மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல்களை தடுத்தல், கைதுசெய்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் அதனுடன் தெடர்புள்ள நபர்களை நீதி முன்நிறுத்துதல் போன்ற செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” இது பலாலி படைத் தலைமையகம் வெளியிட்ட செய்திக் குறிப்பின் ஒருபகுதி. அதாவது முடிவில் படைத்தரப்பும் போதைப் பொருளுக்கு எதிராக களத்தில் இறங்கிவிட்டது என்று பொருள்.தமிழ்மக்கள் அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் படைத்தரப்பு அவ்வாறு இறங்கும். ஏற்கனவே அவர்கள் சந்திகளில் நிற்கிறார்கள். ஏற்கனவே எஸ்.டி.எப் களத்தில் இறங்கிவிட்டது. சிலநாட்களுக்கு முன் எஸ்.ரி.எப் வவுனியாவில் தானும் களமிறக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. படைத்தரப்பு இயற்கை அனர்த்தக்கங்களின் போதும் பெருந்தொற்று நோயின் போதும் களத்தில் இறங்கியது. இலங்கைத் தீவில் மேலிருந்து கீழ்நோக்கிய மிகப் பலமான நிறுவன கட்டமைப்பை படைத்தரப்பு கொண்டிருக்கிறது. இலங்கை நாட்டில் அதிக ஆளணியையும் அதிக வளங்களையும் கொண்ட அரசு உபகரணம் அதுதான். எனவே இது போன்ற நடவடிக்கைகளில் அரசாங்கம் அவர்களை ஈடுபடுத்தும். ஆனால் இங்குள்ள பிரச்சினை என்னவென்றால்,தீவின் மொத்த படைக்கட்டமைப்பில் மூன்றில் இரண்டு பகுதி தமிழ் பகுதிகளின் நிலை கொண்டிருப்பதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.தமிழ் கடல் பெருமளவுக்கு ஸ்ரீலங்கா கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. நாட்டின் படைக் கட்டமைப்பின் மூன்றில் இரண்டு பகுதி நிறுத்தப்பட்டிருக்கும் தமிழ் பகுதிக்குள் அதிகளவு போதைப்பொருள் நுகர்ப்படுகிறது என்றால் அதற்கு அப்பகுதியை கட்டுப்படுத்தும் படைத்தரப்பும் பதில் கூறவேண்டும் என்று தமிழ் அரசியல்வாதிகள் கேட்கிறார்கள். அண்மையில் இது சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கருத்து தெரிவித்திருந்தார். மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் பின்வருமாறு கூறியுள்ளார்…”இதனை சட்டரீதியாக தடுக்க வேண்டியவர்களே அதற்கு உடந்தையாக இருப்பது தெரிகிறது. அது சம்பந்தமாக மிக உயர்ந்த மட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்”. அதாவது போதைப்பொருள் வலைப் பின்னலுக்கும் குற்றவாளிகள் தப்பிச் செல்வதற்கும் படைத்தரப்பு அல்லது காவல்துறையின் மீது அவர் மறைமுகமாக குற்றம் சாட்டுகிறார். இப்படிப்பட்ட ஒரு பின்னணிக்குள் படைத்தரப்பு போதைப் பொருளுக்கு எதிராக களமிறங்கியிருக்கிறது. அவர்கள் களமிறங்குவதற்கு முன்னரே கடந்த சில வாரங்களாக தமிழ்ப் பகுதிகளில் போலீஸும் அதிரடிப் படையும் ஆங்காங்கே போதைப் பொருள் வலைப்பின்னலுக்கு எதிராக முன்னெடுத்துவரும் முறியடிப்பு நடவடிக்கைகள் தொடர்பான செய்திகள் ஒப்பிட்டுளவில் அதிகரித்த அளவில் வெளிவருகின்றன. குறிப்பாக போதைப்பொருள் பாவனையாளர்களை,விநியோகஸ்தர்களைக் கைது செய்வது தொடர்பான செய்திகள் அடிக்கடி வெளிவருகின்றன.கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களோடு போலீசார் காட்சியளிக்கும் படங்களும் ஊடகங்களில் பிரசுரிக்கப்படுகின்றன. இச்செய்திகளை தொகுத்துப்பார்த்தால் போதைப்பொருளுக்கு எதிரான முறியடிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளதான ஒரு தோற்றம் நமக்கு கிடைக்கும். ஆனால் அரசின் சட்டம் ஒழுங்கைப் பேணும் அமைப்புகளால் மட்டும் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு விடயம் இதுவல்ல என்பதனை நான் ஏற்கனவே பல தடவை எனது கட்டுரைகளில் சுட்டிக்காட்டியுள்ளேன். தமிழ்மக்களின் தேசிய இருப்பை சிதைக்கும் உள்நோக்கத்தோடு போதைப்பொருள் விநியோகம் திட்டமிட்டு ஊக்குவிக்கப்படுவதாக ஒரு சந்தேகம் பரவலாக உண்டு. சுமந்திரனும் சிறீதரனும் கூறுவதுபோல அது மேலிருந்து கீழ்நோக்கிய ஒரு திட்டமிட்ட செயலாக இருக்கக்கூடும்.ஆனால் அதை எதிர்கொள்வதற்கு கீழிருந்து மேல் நோக்கிய ஒரு கட்டமைப்பை,சுய கவசங்களை தமிழ்மக்கள் கட்டியெழுப்ப வேண்டும். இதுதொடர்பில் கீழிருந்து மேல் நோக்கிய விழிப்பைக் கட்டியெழுப்ப வேண்டும். எனது நண்பர் ஒருவர் கூறுவதுபோல தமிழ்பகுதிகளில் கிராம மட்டத்தில் படைப்புலனாய்வுத்துறை வைத்திருப்பது போன்ற வினைத்திறன் மிக்க மேலிருந்து கீழ்நோக்கிய வலைப்பின்னல் நமது கட்சிகளிடமே கிடையாது. தமிழ் இளையோர் மத்தியில் குறிப்பாக பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பதற்கு தனிய மேலிருந்து கீழ்நோக்கிய கட்டமைப்பை மட்டும் குறை சொல்லிக் கொண்டிருக்க முடியாது.மாறாக கீழிருந்து மேல் நோக்கிய சுயகவசங்களை தமிழ் மக்கள் கட்டி எழுப்ப வேண்டும். அதை தனிய மருத்துவர்களால் மட்டும் செய்யமுடியாது என்பதனைத்தான் அண்மை காலங்களில் கிடைக்கும் புள்ளிவிவரங்கள் நமக்குக் காட்டுகின்றன. மருத்துவர்கள் இதில் ஒரு பகுதிதான். மருத்துவ சிகிச்சைக்குமப்பால் ஒரு கூட்டுச்சிகிச்சை தேவைப்படுகிறது. அதைத் தனிய மருத்துவர்கள் மட்டும் செய்யமுடியாது. இளைய தலைமுறைக்கு தலைமை தாங்க இலட்சியப் பாங்கான தலைவர்கள் வேண்டும். இளைய தலைமுறையை இலட்சியத்தை நோக்கிச் செலுத்தப்பட்ட அம்புகளாக மாற்றினால் இது போன்ற துஷ்பிரயோகங்களுக்கு இடமிருக்காது. அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள், சமயப் பெரியோர், கல்விச்சமூகம், படைப்பாளிகள்,ஊடகங்கள் என்று எல்லாத்தளங்களிலும் இருக்கக்கூடிய செயல்பாட்டாளர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அதை ஒரு கூட்டுச் செயற்பாடாக முன்னெடுக்க வேண்டும்.அக்கூட்டுச் செயற்பாட்டுக்கு அரசியல்வாதிகளோ அல்லது அரசியல் செயற்பாட்டாளர்களோ தலைமை தாங்க வேண்டும். ஆனால் அவ்வாறு தலைமை தாங்கும் தகுதியோ தரிசனமோ பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகளுக்கு இல்லை,பலமான குடிமக்கள் சமூகமும் இல்லை என்ற வெற்றிடத்தில்தான் போதைப் பொருள் பாவனை அதிகரிக்கிறது. இதை ஒரு குற்றச்செயலாக மட்டும் கருதி அதற்குரிய முறியடிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது. மாறாக இதை ஒரு கூட்டுநோயாக ஒரு பண்பாட்டு வெற்றிடமாக, ஒரு அரசியல் தலைமைத்துவ வெற்றிடமாக, உள்ளூர் தலைமைத்துவ வெற்றிடமாக, ஆன்மீக வறட்சியாக, இன்னபிறவாக தொகுத்துப் பார்க்கவேண்டும். இதில் தனிய மேலிருந்து கீழ் நோக்கிய கட்டமைப்பை மட்டும் குறை சொல்லிக் கொண்டிருக்காமல் ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு மத நிறுவனமும் ஒவ்வொரு பாடசாலையும் தங்களுக்குள்ள கூட்டுப் பொறுப்பை உணரவேண்டும். வீட்டில் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையே இறுக்கமான பாசப்பிணைப்பு இருந்திருந்தால் இடையில் ஒரு போதைப்பொருள் வியாபாரி நுழைந்திருக்க முடியாது. பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையே அல்லது பிள்ளைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே அல்லது பிள்ளைகளுக்கும் உள்ளூர் தலைவர்களுக்கும் இடையே அல்லது பிள்ளைகளுக்கும் சமயப் பெரியாருக்கு இடையே இடைவெளி அதிகரிக்கும்பொழுது இதுபோன்ற துஷ்பிரயோகங்களும் அதிகரிக்கும். அந்த இடைவெளி எங்கிருந்து வந்தது? என்று கண்டுபிடிக்க வேண்டும். போட்டிக்கல்வி முறைமையானது பாடசாலைகளின் மதிப்பைக் குறைத்துவிட்டது.இதனால் பாடசாலை ஆசிரியர்கள் பிள்ளைகளின்மீது செல்வாக்குச் செலுத்துவதில் வரையறைகள் அதிகரிக்கின்றன. அண்மையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாணப் பிரிவும் யாழ் போதனா வைத்தியசாலையின் சம்பந்தப்பட்ட பிரிவும் இணைந்து இது தொடர்பான அறிவுறுத்தல்களை வெளியிட்டிருந்தன. ஒரு பள்ளிக்கூடப் பிள்ளை போதைப்பொருள் பாவனையாளராக இருந்தால் அதை கண்டுபிடிப்பதற்கு வேண்டிய அறிகுறிகளை அவர்கள் விவரமாக தெரிவித்திருந்தார்கள். ஆனால் பிரச்சினை என்னவென்றால்,ஒரு பிள்ளையிடம் அவ்வாறான மாற்றங்கள் ஏற்படுவதனை யார் கவனிப்பது? அதைப் பெற்றோரும் ஆசிரியர்களும்தான் கவனிக்க வேண்டும்.வீட்டில் உள்ள மூத்த தலைமுறைதான் அதைச் செய்ய வேண்டும். ஆனால் இன்றைக்கு மூத்ததலைமுறையின் கவனத்தைக் கலைப்பதற்கு பல விடியங்கள் வந்துவிட்டன. குறிப்பாக திரைத் தொடர்கள், கைபேசிச் செயலிகள் போன்றவற்றை கூறலாம்.ஒரு முதிய தலைமுறை திரைத்தொடர்களின் கைதியாகிவிட்டது. நடுத்தர வயதுக்காரர்கள் கைபேசிகளின் கைதிகளாகி விட்டார்கள்.இது பொழுது போக்கைகளின் காலம். மூத்ததலைமுறை பொழுதுபோக்குச் சாதனங்களில் மூழ்கிக் கிடக்கும் பொழுது, இளைய தலைமுறை எங்கே போகிறது ?என்ன செய்கிறது? யாருடன் தொடர்பை வைத்திருக்கின்றது? போன்றவற்றை கவனிப்பதற்கான நேரங்கள் குறைகின்றன. இவ்வாறான தொடர்ச்சியான அவதானிப்பும் கவனிப்பும் இல்லாத வெற்றிடத்தில்தான் போதைப்பொருள் நுழைகிறது.வாள்கள் நுழைகின்றன. யாழ்.போதனா மருத்துவமனை வெளியிட்டிருக்கும் அந்தப் பிரசுரத்தில் காணப்படும் குணக்குறிகளை தொடர்ச்சியாகக் கவனிப்பது என்று சொன்னால் பெற்றோரும் ஆசிரியர்களும் பிள்ளைகளின் ஒவ்வொரு அசைவையும் தொடர்ச்சியாகக் கவனிக்க வேண்டும்.அதாவது பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும்.பிள்ளைகளுக்கும் ஆசிரியருக்கும் இடையே அதிகபட்ச தொடர்பாடல் இருக்க வேண்டும். எனவே போதைப் பொருட்களுக்கு எதிரான சுயகவசங்களை இங்கிருந்துதான் கட்டியெழுப்பத் தொடங்க வேண்டும். தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசம் என்று கூறுகிறார்கள்.ஒரு தேசியஇனம் என்ற அடிப்படையில் தமக்கு சுயநிர்ணய உரிமை இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் ஒரு சமூகமாக,பலமான ஒரு திரட்சியாக இல்லை என்பதனை அண்மையில் எரிபொருள் வரிசைகளில் கண்டோம்.இப்பொழுது அவர்கள் குடும்பமாகக்கூட இல்லையா என்று கேட்க வேண்டிய ஒரு நிலைமையை போதைப்பொருள் பாவனை ஏற்படுத்தியிருக்கிறதா? https://globaltamilnews.net/2022/182975/
  18. வரியைக் கட்டு அல்லது வரிசையில் நில் Nillanthan கொழும்பில் உள்ள முன்னணி ஆங்கில வாரப்பத்திரிகை ஒன்றின் ஊடகவியலாளர் என்னிடம் கேட்டார்…”யாழ்ப்பாணத்தில் ஓட்டோ மாபியாக்களை யார் கட்டுப்படுத்துவது?”என்று.அண்மையில் அவர் யாழ்ப்பாணத்துக்கு வந்த பொழுது சிறிய தூரத்துக்கு அதிக தொகை பணத்தை அவர்கள் கேட்டதாகவும் அவர் முறையிட்டார்.ஆனால் கொழும்பில் குறுந்தூரங்களுக்கு ஆகக் குறைந்தது 120 ரூபாய்களும்,அதற்கு மேற்பட்ட தூரங்களுக்கு மீற்றர் கணக்கின்படி காசு அளவிடப்படுவதாகவும் அவர் சொன்னார்.”யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டிகளில் ஏன் மீற்றரைப் பொருத்தக் கூடாது?” என்றும் கேட்டார்.அதுமட்டுமல்ல “பிக்மி” போன்ற நிறுவனங்கள் யாழ்ப்பாணத்திற்கு வர முயற்சித்த போதும் அதனை முச்சக்கர வண்டி ஓட்டுநர் சங்கம் போன்றன வரவேற்கவில்லை என்ற ஒரு தகவல் தனக்குக் கிடைத்ததாகவும் அவர் சொன்னார்.”பிக்மி போன்ற நிறுவனங்களை யாழ்ப்பாணத்துக்குள் அனுமதித்தால் அது மக்களின் பயணச்சுமையை குறைக்கும் அல்லவா ?” என்றும் கேட்டார். அவர் கூறுவதில் உண்மை உண்டு.திருநெல்வேலியில் இருந்து யாழ் நகரப் பகுதிக்கு செல்வதற்கு முன்பு முகம் தெரிந்த ஓட்டக் காரர்கள் 200 ரூபாயும் முகம் தெரியாதவர்கள் 250 ரூபாயும் எடுத்தார்கள்.ஆனால் இப்பொழுது 600 ரூபாய்க்குமேல் கேட்கிறார்கள்.”பெட்ரோல் விலை இறங்கிவிட்டது ஏன் கட்டணத்தைக் குறைக்க கூடாது?”என்று கேட்டால்,”பெட்ரோல் விலை மட்டும்தானே இறங்கியிருக்கிறது? ஏனைய பொருட்களின் விலை இறங்கவில்லையே ?”என்று கூறுகிறார்கள். சிறிய ஆனால் கவர்ச்சியான “செமி கொஸ்மோபொலிற்றன்” நகரமாகிய யாழ்ப்பாணம் புலப்பெயர்ச்சி காரணமாகவும் இடப்பெயர்ச்சி காரணமாகவும் அதன் சனப்பொலிவை இழந்துவிட்டாலும்கூட,இப்பொழுதும் அதன் தெருக்களில் ஜனங்கள் நிறைந்து வழிந்து கொண்டே இருக்கிறார்கள். இதனால் முச்சக்கர வண்டிகளுக்கான தேவை அதிகம் உண்டு.ஆனால் முச்சக்கர வண்டிக்காரர்கள் பெட்ரோல் விலை உயரும்பொழுது உயர்த்திய கட்டணத்தை இறக்கத் தயாரில்லை. யாழ்ப்பாணத்து ஊடகவியலாளர் ஒருவரும் சொன்னார், அண்மையில் தான் கொழும்புக்குச் சென்ற பொழுது அங்கே ஒரு குறுந்தூர ஓட்டோப் பயணத்தின் பின் எவ்வளவு கட்டணம் என்று கேட்டபொழுது அந்த ஓட்டோச் சாரதி தன்னிடம் 100 ரூபாய் கேட்டார் என்றும், தனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது என்றும். தலைநகரில் ஓட்டோக் கட்டணங்கள் குறையத் தொடங்கிவிட்டன.ஆனால் யாழ்ப்பாணத்தில் ஏன் குறையவில்லை?யார் அதைக் குறையவிடாமல் தடுப்பது?பிக்மி போன்ற சேவைகளை யாப்பானத்துக்கு வரவிடாமல் தடுப்பது யார்? ஓட்டோ உரிமையாளர்கள் மீற்றர் பூட்ட மறுப்பது ஏன்? அதைத் தட்டிக் கேட்பது யார்? ரணில் விக்கிரமசிங்க ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின் பொருளாதார நெருக்கடியின் விளைவுகளை ஒப்பிட்டுளவில் கட்டுப்படுத்தி வருகிறார். குறிப்பாக எரிபொருள்,எரிவாயு விநியோகம் ஒப்பிட்டுளவில் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது.மண்ணெண்ணெய் வினியோகமும் ஒப்பிட்டளவில் சீராகி வருகிறது.அதனால் கடல் படு திரவியங்களின் விலை படிப்படியாக இறங்கி வருகிறது.கோழி இறைச்சியின் விலை அண்மையில் சடுதியாக குறைந்தது.ஆனால் செய்திகளில் பொருட்களின் விலைகள் குறைக்கப்படுமளவுக்கு நடைமுறையில் விலைகளைக் குறைப்பதற்கு வியாபாரிகள் தயாரில்லை.இலங்கை போன்ற நாடுகளில் ஏறிய விலைகள் பொதுவாக இறங்குவது குறைவு என்று பொருளியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். அதை அவர்கள் “கீழ்நோக்கிய இறுக்கம்” என்று வர்ணிக்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்க ஒருபுறம் விலைகளைப் படிப்படியாகக் குறைக்கிறார்.இன்னொருபுறம் வரிகளை கூட்டத் தொடங்கியிருக்கிறார். அது மட்டுமல்ல,புதிதாக வரிகளையும் விதிக்க தொடங்கியிருக்கிறார். வரிசைகளில் நிற்பதை தடுப்பதென்றால் வரிகளைக் கட்டுங்கள் என்று அவர் அண்மையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது கூறினார்.மேலும் பொருளாதார நெருக்கடிகளுக்கு அடிப்படைக் காரணம் 2019-ல் ராஜபக்சக்கள் செய்த வரிக்குறைப்பே என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.வரியைக் குறைத்தபடியால் நாட்டின் வருமானம் குறைந்ததுதான் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்று கூறும் அவர் அதனால் புதிய வரிகளை விதிக்க வேண்டியிருக்கிறது என்றும் கூறுகிறார். 2019இல் கோட்டாபய ஆட்சி பொறுப்பை ஏற்றதும் வரிகளை குறைத்தமைதான் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்று ரணில் விக்கிரமசிங்க மட்டும் கூறவில்லை.ஏற்கனவே பொருளியல் நிபுணர்கள் அதைக் கூறிவருகிறார்கள். மிகக்குறிப்பாக கொழும்பை மையமாகக் கொண்டியங்கும் “வெரிற்றே ரிசேர்ச் இன்ஸ்ரிரியூட்” எனப்படும் நிறுவனம் இதுதொடர்பில் தொடர்ச்சியாகக் கருத்து தெரிவித்து வருகிறது. வெரிற்றே ரிசேர்ச் இன்ஸ்ரிரியூட் கூறுவது உண்மைதான்.ஆனால் அது ஒரு பகுதி உண்மை மட்டுமே.வரிக்குறைப்பை ராஜபக்சக்கள் ஏழைகளுக்காக செய்யவில்லை.அதையவர்கள் பணக்காரர்களைத் திருப்திப்படுத்தவே செய்தார்கள் என்பது முதலாவது விடயம். இரண்டாவது விடயம், வரிக்குறைப்பு மட்டும்தான் பொருளாதார நெருக்கடியை தோற்றுவித்தது என்பது முழுமையான விளக்கம் அல்ல.வரிக்குறைப்பு பல காரணங்களில் ஒன்று என்பதே சரி. பொருளாதார நெருக்கடிக்கு மூலகாரணம் இனப்பிரச்சினைதான். இனப்பிரச்சினை காரணமாக நாடு அதன் முதலீட்டு தகுதியை இழந்து விட்டது. 2009க்கு பின்னரும் அந்த தகுதியை மீளப் பெற முடியவில்லை. ஏனென்றால் அந்த யுத்த வெற்றி நியாயமான வழிகளில் பெறப்படவில்லை.அது நாட்டின் ஒரு பகுதி மக்களை பூச்சி புழுக்களைப் போல கொன்றொழித்துப் பெறப்பட்ட ஒரு வெற்றி.தமிழ்மக்கள் குற்றம் சாட்டுவதுபோல இனப்படுகொலைமூலம் பெறப்பட்ட ஒரு வெற்றி.எனவே இனப்படுகொலையை அரசியல் வெற்றியாக மாற்ற முடியவில்லை.அதன் விளைவாகத்தான் தமிழர்கள் நீதி கேட்டு உலக சமூகத்தின் கதவுகளைத் தட்டத்தொடங்கினார்கள்.அதுவும் நாட்டின் முதலீட்டுக் கவர்ச்சியை குறைத்துவிட்டது. 2009க்கு பின்னரும் முதலீட்டாளர்கள் நாட்டை நோக்கி வரத் தயங்குகிறார்கள்.எனவே இனப் பிரச்சினைதான் பொருளாதார நெருக்கடிக்கு மூலகாரணம்.வரிக் குறைப்பு,ஈஸ்டர் குண்டு வெடிப்பு,பெருந் தொற்று நோய்,உக்ரைன் யுத்தம் போன்றன உப காரணங்கள்தான். நாட்டின் பொதுத்துறை ஊதியத்தில் சுமார் 50%படைத்தரப்புக்கு வழங்கப்படுகிறது என்றும், உலகில் 100 பேர்களுக்கு எத்தனை படைவீரர்கள் என்ற விகிதத்தில் இலங்கை பத்தாவது இடத்தில் உள்ளது என்றும் நிஷான் டி மெல்-வெரிற்றே ரிசேர்ச் இன்ஸ்ரிரியூட்டின் பணிப்பாளர்- கூறுகிறார்.இலங்கைத் தீவின் பாதுகாப்பு செலவினம் நாட்டின் கல்வி மற்றும் சுகாதாரச் செலவினங்கள் இரண்டையும் கூட்டிவரும் தொகையைவிட அதிகமாக இருப்பதும் பொருளாதார சீரழிவுக்கு ஒரு காரணம் என்று நிஷான் கூறுகிறார். எனினும், ரணில் விக்ரமசிங்கவின் வரவு செலவுத் திட்டத்திலும் பாதுகாப்புச் செலவினம் குறைக்கப்படவில்லை.மாறாக ராஜபக்சவின் வரிக்குறைப்பை ஒரு பிரதான காரணமாகக் காட்டி அதன்மூலம் அவர் புதிதாக வரிகளை நியாயப்படுத்த முயல்கிறார்.அதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால் நடுத்தரவர்க்கம்,கீழ் நடுத்தர வர்க்கத்தின் மடியில் அவர் கைவைக்கப் போகின்றார்.ஏனென்றால் பன்னாட்டு நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவர் இயங்க வேண்டியுள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை 22ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதும் ஐ.எம்.எப்.ஐத் திருப்திப்படுத்தும். 2019 இல் நடந்த வரிக்குறைப்பு தொடர்பாக நிசான் டி மெல் ஒரு விடயத்தை கடந்த ஓகஸ்ட் மாதம் சுட்டிக்காட்டியிருந்தார்.அந்த வரிக்குறைப்பு உரிய ஆய்வுகளின் பின் முன்னெடுக்கப்படவில்லை.இனிமேலும் வரியை கூட்டும்பொழுது அதற்குரிய ஆய்வுகள் செய்யப்படாவிட்டால் ஏற்கனவே விட்ட தவறை திரும்பவும் விடுவதாக அது அமையும் என்று அவர் எச்சரித்திருந்தார். புதிய வரிகளின்மூலம் ரணில் பொருளாதார நெருக்கடியின் விளைவுகளை மேலோட்டமாகத் தணிக்கக்கூடும்.நெருக்கடியின் மூலகாரணத்தை நீக்க அவரால் முடியாது.ஏனென்றால் அவர் தாமரை மொட்டின் கைதியாக காணப்படும் ஒரு ஜனாதிபதி. அடுத்த மார்ச் மாதமளவில் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் அவருக்கு கிடைத்துவிடும்.அப்பொழுது அவர் தாமரை மொட்டுக்கட்சியில் தங்கியிருப்பதில் இருந்து ஒப்பீட்டளவில் விடுபடலாம். ஆனாலும் தனது சொந்தக் கட்சியை அவர் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது. அவர் ஒற்றை யானையாக நாடாளுமன்றத்தில் நிற்கிறார்.சஜித்தை உடைத்து யானைகளை தன்வசப்படுத்த வேண்டும்.அதற்கு கிடைத்திருக்கும் அரை ஆட்சிக்காலம் போதுமா?எனவே இனப் பிரச்சினையை தீர்ப்பது என்றெல்லாம் அவர் ரிஸ்க் எடுப்பாரா என்பது சந்தேகம்தான். முன்னாள் சமாதானத் தூதுவரான எரிச் சூல் ஹெய்ம்மை அவர் நாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்.சூல் ஹெய்ம் ஜனாதிபதிக்குரிய காலநிலை ஆலோசகர் என்று கூறப்பட்டாலும்,ஐ.எம்.எப்ஐ திருப்திப்படுத்த அரசாங்கம் இனப்பிரச்சினையை தீர்க்கமுயற்சிப்பது போன்ற ஒரு தோற்றத்தைக் கட்டியெழுப்ப திட்டமிடுகிறதா என்ற சந்தேகங்களும் உண்டு.சூல் ஹெய்ம் கொழும்புக்கு வந்த காலகட்டத்தில் தனது ருவிற்றர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டிருந்தார்….”மிக விரைவான வழி எப்பொழுதும் நேரான கோடாக இருப்பதில்லை”.அதில் அவர் பிரசுரித்துள்ள சிறு காணொளியின்படி வளைந்த கோடே விரைவானது என்று காட்டப்படுகிறது.அந்த வளைந்த பாதை எது? ரணில் விக்கிரமசிங்கவிற்கு இது ஏறக்குறைய கடைசி ஓவர். மிஞ்சிப் போனால் இன்னுமொரு ஓவர் இருக்கலாம்.அவருக்கு வயதாகிவிட்டது.தன்னுடைய கடைசிக் காலத்தில் முழு நாட்டையும் பலப்படுத்துவதா?அல்லது தனது சொந்தக் கட்சியான யு.என்.பியை பலப்படுத்துவதா ? என்று அவர் முடிவெடுக்க வேண்டும்.அவர் பதவியேற்ற அறையின் பின்னணிச் சுவரில் மூன்று ஒளிப்படங்களைத் தொங்கவிட்டிருந்தார்.டி.எஸ்.சேனநாயக, டட்லி சேனநாயக, ஜெயவர்த்தன ஆகிய மூவரின் ஒளிபடங்களுமே அவை.இதன்மூலம் அவர் என்ன கூற வருகிறார்?அவருடைய அண்மைக்கால நடவடிக்கைகளில் அவர் பெருமளவுக்கு ஜெயவர்த்தனாவை பின்பற்றுவது போல தோன்றுகிறார். எனவே அவருக்கு முன்னால் இரண்டு தெரிவுகள்தான் உண்டு.முதலாவது தெரிவு அன்ரன் பாலசிங்கத்தை தீர்க்கதரிசி என்று நிரூபிப்பது.இரண்டாவது தெரிவு தான் ஒரு தீர்க்கதரிசி என்று நிரூபிப்பது.அன்ரன் பாலசிங்கத்தை தீர்க்கதரிசியாக நிரூபிப்பது என்றால் ஜெயவர்த்தனவின் வழியில் தொடர்ந்து போக வேண்டும். யூ.என்.பியைப் பலப்படுத்த வேண்டும்.அல்லது,தன்னுடைய கடைசி ஓவரை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்து, நாட்டின் சமாதானத்துக்கு அர்ப்பணித்து உழைப்பாராக இருந்தால்,அதற்காக சிங்கள பௌத்த பெருந்தேசியவாதக் கட்டமைப்பை எதிர்த்து ரிஸ்க் எடுப்பாராக இருந்தால் நாடு அவரை ஒரு தீர்க்கதரிசி என்று போற்றும். இல்லையென்றால் நரி என்று தூற்றும் http://www.nillanthan.com/5691/
  19. ஜெனிவாத் தீர்மானமும் தமிழ்நாடும் Nillanthan மற்றொரு ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தீர்மானத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாக்களித்த நாடுகள் மற்றும் நடுநிலை வகித்த நாடுகள் போன்றவற்றை தொகுத்து பார்த்தால் ஒரு விடயம் தெளிவாக தெரியும்.ஆதரித்த நாடுகள் தமிழர்களுக்காக அதை ஆதரித்தன என்பதை விடவும் தங்களுடைய பூகோள அரசியல் நோக்கு நிலைகளில் இருந்து தீர்மானத்தை அணுகியுள்ளன என்பது. இரண்டாவதாக தீர்மானத்தை எதிர்த்த நாடுகளை எடுத்துப் பார்த்தால் அவை பெருமளவுக்கு அமெரிக்க எதிர்ப்பு காரணமாக ஜெனிவா தீர்மானத்தை எதிர்த்திருக்கின்றன என்பது.எனவே தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த நாடுகள் தமிழர்களுக்கு எதிராக வாக்களித்தன என்பதைவிடவும் அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித்தன என்பதே அதிகம் பொருத்தமான விளக்கம். மூன்றாவதாக நடுநிலை வகித்த நாடுகள்.இந்நாடுகள் இலங்கை அரசாங்கத்தோடு தமக்குள்ள உறவை பகை நிலைக்குத் தள்ள விரும்பவில்லை. அல்லது அமெரிக்காவின் மேலாண்மையை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை.அல்லது தமிழ்மக்களை கையாளக்கூடிய தூரத்தில் வைத்திருக்க வேண்டும் என்று கருதும் நாடுகள். இந்தியா நடுநிலை வகித்திருக்கிறது. கடந்த ஆண்டும் இந்தியா நடுநிலை வகித்தது. இதுவரையிலுமான கடந்த பத்தாண்டுகால ஜெனிவா தீர்மானங்களில் இந்தியா இரண்டு தடவைகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறது.இம்முறை ஜெனிவாவில் இந்தியாவை தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு தூண்டும் நோக்கத்தோடு தமிழகத்தில் உள்ள சில செயற்பாட்டாளர்கள் முயற்சித்தார்கள்.யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு ஓர் அறிக்கையை வெளியிட்டது.அந்த அறிக்கையானது இலங்கை அரசாங்கத்தை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்த வேண்டும் என்று கேட்டிருந்தது. இந்தியா ஐநாவில் அக்கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தது. இதுபோன்ற கோரிக்கைகளை முன்வைத்து தமிழகத்தில் உள்ள செயற்பாட்டாளர்கள் சிலர் அங்குள்ள ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு என்ற கட்டமைப்புக்கூடாக இந்திய மத்திய அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கலாமா என்று முயன்றிருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் உள்ள ஈழ உணர்வாளர்களில் முக்கியமான சிலர்கூட அந்த விடயத்தில் அதிகம் அக்கறை காட்டவில்லை என்று தெரிகிறது. புலம்பெயர்ந்த தமிழர்களோடு அதிகம் உறவைப் பேணும் சீமானின் கட்சியும் அதில் அக்கறை காட்டவில்லை. மேலும் பெரிய திராவிடக் கட்சிகளை அணுகிய பொழுது குறிப்பாக திமுக அந்த விடயத்தில் அக்கறை காட்டவில்லை. ஈழப் பிரச்சினையில் தலையிட்டு கையச் சுட்டுக்கொள்ள வேண்டாம் என்று திமுகவின் தலைமை தன் கட்சி ஆட்களுக்கு அறிவுறுத்தியிருப்பதாகத் தெரிகிறது. இவ்வாறு ஜெனிவா தீர்மானத்தை முன்வைத்து தமிழகத்தில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைக்க முடியாமல் போனமைக்கு பின்வரும் காரணங்கள் கூறப்படுகின்றன. முதலாவது காரணம்,திமுக இந்த விடயத்தில் தலையிடுவதில்லை என்ற முடிவோடு காணப்படுகிறது.நெருக்கடியான காலத்தில் நிவாரணம் வழங்குவதற்கும் அப்பால் ஈழப்பிரச்சினையில் தலையிட திமுக தயங்குகிறது. அதனால் திமுக ஆதரவு நிலைப்பாட்டை கொண்ட ஈழ உணர்வாளர்கள் ஜெனிவாவை முன்வைத்துப் போராடத் தயாரில்லை. இரண்டாவது காரணம் திராவிடம் எதிர் தமிழ் என்ற ஒரு முரண் நிலை ருவிற்றரிலும் கிளப் ஹவுஸ்சிலும் தீவிரமடைந்து வருகிறது. இதில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும் பங்குண்டு. இந்த முரண்பாடுகள் காரணமாக மேற்படி சமூகவலைத்தளங்களில் திமுக ஆதரவாளர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒரு பகுதியினரும் மோசமாக மோதிக் கொள்கிறார்கள்.இம்மோதல்களில் அனேகமாக அரசியல் நாகரீகம் பின்பற்றப்படுவதில்லை. மூன்றாவது காரணம்,சீமானின் நாம் தமிழர் கட்சி ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ஏகபோக உரித்தை கொண்டாட முற்படுகிறது. இதனாலும் ஏனைய கட்சிகள் அந்தப் பக்கம் வரத் தயங்குகின்றன.புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள சீமானுக்கு ஆதரவான தரப்புக்களில் அநேகமானவை ஜெனிவாவை,ஜெனிவா தீர்மானங்களை பிரயோசனமற்றவை என்று கருதுகின்றன.அவற்றின் செல்வாக்குக்கு உட்பட்டு சீமானும் ஜெனிவாவை குறித்து அறிக்கை விடாமல் இருந்திருக்கலாம். மேலும்,சீமான் தன் அரசியல் எதிரிகளைத் தாக்கும் பொழுது ஈழப் பிரச்சினையை ஒரு கேடயமாக பயன்படுத்துகின்றார். அதனால் அவருக்கு விழும் அடிகள் ஈழப் பிரச்சினையின் மீதும் விழுகின்றன. நாலாவது காரணம்,தமிழகத்தில் பாரதிய ஜனதா தன் கால்களை பலமாக ஊன்ற முயற்சிக்கின்றது.ஈழப்பிரச்சினையை அவர்கள் திமுகவுக்கு எதிராகவும் பயன்படுத்துகிறார்கள்.தவிர திராவிடக் கட்சிகளை ஒதுக்கிவிட்டு ஈழப் பிரச்சினையை தம் கையில் எடுக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள். ஐந்தாவது காரணம், புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்புகளில் சிலவும் தாயகத்தில் உள்ள மிகச் சில தரப்புகளும் இந்துத்துவா ராஜதந்திரம் ஒன்றை கையில் எடுக்க முயற்சிக்கின்றன.அதன்படி தமிழக பாரதிய ஜனதாக்கட்சியின் முக்கியஸ்தர்களான திருமதி.வானதி சீனிவாசன்,அண்ணாமலை போன்றோரை அணுகுவதன்மூலம் டெல்லியை நெருங்கலாம் என்று அவர்கள் சிந்திக்கிறார்கள்.இதுவும் திராவிடக் கட்சிகளை ஒதுங்கி நிற்க வைக்கிறது. மேற்கண்ட காரணங்களை தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரியவரும். தமிழகத்தின் கட்சி அரசியலுக்குள் ஈழத் தமிழர்களின் விவகாரம் சிக்கிவிட்டது.இதுதொடர்பாக உரையாடிய ஒரு தமிழகச் செயற்பாட்டாளர் பின்வரும் தொனிப்படச் சொன்னார் “ஈழப்பிரச்சினையை தேர்தலுக்காகப் பயன்படுத்தும் ஒரு வழமைக்குப் பதிலாக தேர்தலை ஈழப் பிரச்சினைக்காக கையாளும் ஒரு வளர்ச்சி தமிழகத்தில் இன்றுவரை ஏற்படவில்லை. நீங்கள் ஈழத் தமிழர்கள் இந்தியாவை கையாள்வதற்குரிய ஒரு வெளியுறவு தரிசனத்தையும் கட்டமைப்பையும் கொண்டிருக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள்.அதற்கு முதலில் தமிழகத்தை கையாள்வதற்குரிய ஒரு வெளியுறவு கொள்கை அவசியம்” என்று. இவ்வாறான ஒரு அரசியல் சூழலில் மேற்சொன்ன தமிழக செயற்பாட்டாளர்களின் தூண்டுதலால் வைகோ ஒரு அறிக்கை விட்டார். பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் ஒரு அறிக்கை விட்டார். தமிழக சட்டமன்ற உறுப்பினரும்,தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவருமாகிய வேல்முருகன் ஓர் அறிக்கை விட்டார்.அவ்வளவுதான் நடந்தது. ஆதற்குமப்பால் ஜெனிவா தீர்மானத்தில் இந்திய மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் என்ற முனைப்போடு தமிழகக் கட்சிகளை நோக்கி உழைத்த செயல்பாட்டாளர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. அதேசமயம் தமிழகத்தில் உள்ள சில செயற்பாட்டாளர்கள் ஈழத் தமிழர்கள் மத்தியில் உள்ள சிவில் சமூகங்களை நெருங்கி ஒரு வேண்டுகோள் விடுத்தார்கள்.தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட 13 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிவில் சமூகங்களும் இணைந்து இந்திய மத்திய அரசாங்கத்தை நோக்கி ஒரு கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்பதே அது.அதாவது ஜெனிவா தீர்மானத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றும் விதத்தில் இலங்கைத்தீவில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 13 பேரும் சிவில் சமூகங்களும் இணைந்து இந்திய மத்திய அரசாங்கத்தை நோக்கி ஒரு வேண்டுகோளை விடுக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் தமிழ்க் கட்சிகளும் அதற்குத் தயாராக இருக்கவில்லை.சிவில் சமூகங்களும் உடன்படவில்லை.அதற்கு அவர்கள் வலிமையான ஒரு காரணத்தை முன்வைத்தார்கள்.அது என்னவெனில், ஏற்கனவே கடந்த ஆண்டு ஆறு கட்சிகள் இந்தியாவை நோக்கி ஒரு கூட்டுக் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றன.இக்கூட்டுக் கோரிக்கையை தயாரிக்கும்பொழுது தமிழரசுக் கட்சி அதில் முதலில் இணையவில்லை. அக்கட்சி அந்த முயற்சிகளில் இணைந்து செயல்பட்ட தொடங்கியபின் கோரிக்கையின் வடிவம் மாறியது. எனினும் மேற்படி கூட்டுக்கோரிக்கையானது சாராம்சத்தில் மாகாண சபையை கடக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இரண்டு ஆர்ப்பாட்டங்களை ஒழுங்குபடுத்தியது.இதில் யாழ்ப்பாணத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கிட்டுப் பூங்காவில் ஒரு பிரகடனம் வெளியிடப்பட்டது. இவ்வாறு பலத்த எதிர்ப்புகளின் மத்தியில் ஆறு கட்சிகளும் ஒரு கூட்டுக் கோரிக்கையை இந்தியப் பிரதமரை நோக்கி முன்வைத்தன.ஆனால் இன்றுவரை அந்த கோரிக்கைக்கு இந்திய மத்திய அரசாங்கம் பதில் கூறவில்லை.கடந்த ஆண்டு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கொழும்புக்கு வந்திருந்தார்.இதன்போது அவர் கூட்டமைப்பை சந்தித்தார்.டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தார். ஆனால் ஆறு கட்சிகளையும் ஒன்றாகச் சந்திக்கவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில், மீண்டும் ஒரு தடவை இந்தியாவை நோக்கி ஒரு கோரிக்கையை முன்வைப்பதற்கு தமிழ்க் கட்சிகளும் தயாரில்லை குடிமக்கள் சமூகங்களும் தயாரில்லை. ஆக மொத்தம் ஜெனிவா கூட்டத்தொடரை முன்னிட்டு இந்திய மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு ஈழத் தமிழர்கள் மத்தியிலிருந்தும் தமிழகத்திலிருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்படவில்லை. அவ்வாறு ஈழத்தமிழர்களும் தமிழகமும் இணைந்து இந்திய மத்திய அரசாங்கத்தை வற்புறுத்துவதால் மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தலாமா இல்லையா என்ற விவாதம் ஒருபுறம் இருக்க,இந்திய மத்திய அரசாங்கத்தை கையாளும் விடயத்தில்,தமிழக ஈழத் தரப்புகள் ஒன்றிணைந்து செயல்படுவதில் உள்ள சிக்கல்களையும் ஏமாற்றகரமான இடைவெளிகளையும் மேற்படி முயற்சிகள் நமக்கு உணர்த்துகின்றன. தமிழகம் கொந்தளித்தால் இந்திய மத்திய அரசாங்கத்தின்மீது அழுத்தங்களை பிரயோகிக்க முடியும் என்ற ஒர் எடுகோளின் அடிப்படையில் மூத்த அரசறிவியலாளர் திருநாவுக்கரசு உபாயம் ஒன்றை முன்வைத்தார்.அது நாலாங்கட்ட ஈழப்போரின்போது 2006 இல் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.”சென்னையில் திறவுகோல் என்ற தலைப்பில் எழுதப்பட்ட அக்கட்டுரையில்,சென்னை-டில்லி-வொசிங்டன் ஆகிய மூன்றும் ஒரு கோட்டில் வரும்போது தமிழர்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் கடந்த ஜெனிவா கூட்டத்தொடரை முன்னிட்டு சில செயற்பாட்டாளர்கள் தன்னார்வமாக முன்னெடுத்த நகர்வுகள் வெற்றி பெறாதது எதைக் காட்டுகிறது? தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் இடையிலான பிணைப்பு ஒரு பேர பலமாக மாற்றப்படவில்லை என்பதையா ? http://www.nillanthan.com/5677/
  20. பாடசாலைகளில் போதைப்பொருள்: யாருடைய தவறு? தமிழ்ப் பகுதிகளில் குறிப்பாக வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும், மிகக்குறிப்பாக பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும் அண்மைக்கால புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பில் சமூகவலைத்தளங்களில் பிரசுரிக்கப்படும் கருத்துக்களை கூர்ந்து கவனித்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது.என்னவெனில், பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் மாணவர்களைத் தண்டிக்க முடியாதிருப்பதன் விளைவுதான் இது போன்ற சீரழிவுகள் என்ற தொனிப்பட பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள். கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்தவர்கள், சட்டவாளர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள் உட்பட பலதரப்பட்டவர்கள் அவ்வாறான கருத்துக்களைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.ஆசிரியரின் கையில் இருந்த பிரம்பு பறிக்கப்பட்டதால்தான் இவ்வாறான துஷ்பிரயோகங்கள் பாடசாலை மட்டத்துக்கு பரவியுள்ளன என்று ஒரு பகுதியினர் நம்புகிறார்கள்.கல்வியதிகாரிகளுக்கும், அதிபர் ஆசிரியர்களுக்கும் வகுப்பெடுக்கும் உயரதிகாரிகள் மாணவர்களைத் தண்டிக்கக்கூடாது என்று கூறிவிட்டு இப்பொழுது போதைப்பொருள் பாவனை தொடர்பான புள்ளி விபரங்களை ஒப்புவிக்கிறார்கள் என்று வேறொரு குறிப்பு கூறுகிறது. இந்தக்கருத்துக்கள் எல்லாமே தொகுப்பாக கூறவருவது ஒரு விடயத்தைத்தான். பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள், பிள்ளைகளைக் கடுமையாகத் தண்டித்தால் இதுபோன்ற விடயங்களை கட்டுப்படுத்தலாம் என்பதுதான். பாடசாலைகளில் மாணவர்கள் மீது உடல்ரீதியாக அல்லது உளரீதியாக வன்முறைகள் பிரயோகிக்கப்படுவதைக் கட்டுப்படுத்தும் 17ஆம் இலக்க சுற்றுநிருபம் 2005ஆம் ஆண்டு கல்வியமைச்சால் வெளியிடப்பட்டது. அப்பொழுது கல்வியமைச்சின் செயலாளராக கலாநிதி.தாரா டி மெல் இருந்தார். அதே ஆண்டில் நிறைவேற்றப்பட்ட 23 ஆம் இலக்கச் சட்டத்தின்படி நீதிமன்றங்களில் சரீரத் தண்டனைகள் நிறுத்தப்பட்டதன் விளைவே மேற்படி சுற்றுநிருபம் என்று கூறப்படுகிறது.மேற்படி சுற்றுநிருபமானது 2016 ஆம் ஆண்டு கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட 12 ஆம் இலக்க சுற்றுநிருபத்தில் மீளவலியுறுத்தப்படுகிறது. இந்தச்சுற்றுநிருபமானது ஆசிரியர்களின் கைகளைக் கட்டிப்போடுகிறது என்ற ஒரு விமர்சனம் ஆசிரியர் சமூகத்தின் மத்தியிலும் ஏன் பெற்றோர் மத்தியிலும்கூட உண்டு. கண்டிப்பான ஆசிரியரே நல்லாசிரியர் என்று அபிப்பிராயம் தமிழ்மக்கள் மத்தியில் ஆழமாகப் பதிந்திருக்கிறது.கண்டிப்பான ஆசிரியர்களே வெற்றி பெற்ற ஆசிரியர்களாகவும் பார்க்கப்படுகிறார்கள்.நாட்டில் உள்ள கல்வி முறையானது பரீட்சையை மையமாகக் கொண்டது.பரீட்சை மையக் கல்வியைப் பொறுத்தவரை சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொடுப்பவரே கெட்டிக்கார ஆசிரியர். அந்த சிறந்த பெறுபேறுகளை அவர் எப்படியும் பெற்றுக் கொடுக்கலாம் என்று பெரும்பாலான பெற்றோர் கருதுகிறார்கள்.இதனால் சிறந்த கல்விப் பெறுபேறுகளுக்காக அதிகம் பலியிடப்படுவது மனித உரிமைகள் என்பதனை பெரும்பாலான பெற்றோர் பொருட்படுத்துவதில்லை. அதனால் தேசியமட்ட பரீட்சைகளை நோக்கி மாணவர்களை தயார்படுத்தும் தனியார் கல்வி நிறுவனங்களிலும் மனிதஉரிமைகள் மோசமாக மீறப்படுகின்றன. இப்படிப்பட்டதோர் கல்விச்சூழலில் தண்டனை நிறுத்தப்பட்டதால் பிள்ளைகள் மத்தியில் போதைப்பொருள் அதிகரிக்கிறது என்ற கூற்று மேலோட்டமாகப் பார்த்தால் சரியாகவே தோன்றும்.சில மாதங்களுக்கு முன் ஆந்திராவில் கஞ்சா பாவிக்கும் தனது 15 வயது மகனை அவருடைய தாயார் வீட்டில் ஒரு கம்பத்தில் கட்டிவைத்து அவருடைய கண்களுக்குள் மிளகாய்தூளைத் தூவினார்.இது ஊடகங்களில் பரவலாக வெளிவந்தது. இது போன்ற தண்டனைகள்மூலம்தான் மாணவர்களை மட்டுமல்ல பாடசாலை நீங்கிய இளையவர்களையும், ஏன் ஒட்டுமொத்த சமூகத்தையும் கட்டுப்படுத்தலாம் என்ற ஒரு கருத்து பரவலாக உண்டு. ஆனால் தனியே தண்டனைகளால் மட்டும் இந்த விவகாரத்தை கையாள முடியாது.ஏனெனில் பிரச்சினையின் வேர்கள் மிகஆழமானவை.அந்த வேர்களைத் தேடிப்போனால் யாரைத் தண்டிப்பது என்ற கேள்வி எழும். நுகர்வோரை தண்டிப்பதா?அல்லது விற்பனையாளர்களைத் தண்டிப்பதா?அல்லது திட்டமிட்டு மாணவர்களைக் குறிவைத்து போதைப்பொருள் வலைப்பின்னலைக் கட்டியெழுப்பும் அரசியல் உள்நோக்கமுடைய சக்திகளைத் தண்டிப்பதா? யாரைத் தண்டிப்பது? இந்தப்பிரச்சினையின் சமூகப்பொருளாதார,அரசியல் பின்னணி மிகஆழமானது. 2009 க்குப் பின்னரான தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை, முதலாவதாக, தலைமைத்துவ வெற்றிடம் ஒன்று நிலவுகிறது. இரண்டாவதாக ,உலகில் அதிகம் படைமயமாக்கப்பட்ட ஒரு அரசியல் ,இராணுவ சூழலுக்குள் தமிழ்ச்சமூகம் வாழ்கிறது. நாட்டின் படைக்கட்டமைப்பின் மொத்த தொகையில் சுமார் மூன்றில் இரண்டு பகுதி வடக்கு= கிழக்கில் காணப்படுவதாக ஒரு புள்ளிவிபரம் உண்டு. மூன்றாவதாக ,மேற்சொன்ன இராணுவ மயப்பட்ட சூழல் காரணமாக படைத்துறை புலனாய்வாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் தமிழ்ச்சமூகம் காணப்படுவது. நாலாவதாக, ஆயுத மோதல்களுக்கு முன்னிருந்த ஒரு சமூகக் கட்டமைப்பு குலைந்து போய்விட்டது.ஆயுதப் போராட்டம் புதிய விழுமியங்களையும் ஒரு புதிய சமூக ஒழுங்கையும் உருவாக்க முற்பட்டது. 2009 இல் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டிருக்கும் ஒரு பின்னணியில்,ஏற்கனவே இருந்த சமூகக் கட்டமைப்பும் குலைந்து இடையில் ஆயுதப் போராட்டம் கொண்டு வந்த புதிய ஒழுங்கும் குலைந்து, இப்பொழுது ஏறக்குறைய எல்லாச் சமூகக் கட்டமைப்புகளும் குலைந்துபோன ஒரு நிலை காணப்படுகிறது. இவ்வாறான ஒரு பின்னணியில் விழுமியங்களை மீளுருவாக்க வேண்டிய ஒரு சமூகமாக தமிழ்ச்சமூகம் மாறியிருக்கிறது. ஐந்தாவது ,உலகளாவிய தகவல் தொழில்நுட்பப் பெருக்கத்தின் விளைவாக இளைய தலைமுறை கைபேசி செயலிகளின் கைதியாக மாறியிருப்பது. மேற்கண்ட ஐந்து காரணங்களையும் தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரியவரும்.தமிழ்மக்களைத் தொடர்ந்தும் அரசியல்ரீதியாக தோற்கடிக்க விரும்பும் சக்திகள் போதைப்பொருள் பாவனையை ஊக்குவிப்பதாகவும் போதைப்பொருள் வலைப்பின்னலை அவர்களே நிர்வகிப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டை தமிழ் அரசியல்வாதிகள் ஏன் முன்வைத்து வருகிறார்கள் என்ற கேள்விக்கும் விடை கிடைக்கும் எனவே போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவது என்பது தனியே தண்டனைகளால் மட்டும் சாத்தியமான ஒன்று அல்ல.அது ஒரு கூட்டுச் செயற்பாடாக அமைய வேண்டும். முதலாவதாக,சமூகப் பிரதிநிதிகள்,மக்கள் பிரதிநிதிகள்,மருத்துவர்கள் செயற்பாட்டாளர்கள்,மதப் பெரியோர்கள்,புத்திஜீவிகள்,கலைஞர்கள், ஊடகங்கள் என்று எல்லாத் தரப்புக்களும் ஒன்றிணைந்து ஒரு கூட்டுச் செயற்பாடாக அதை முன்னெடுக்க வேண்டும். அதற்கு மக்கள் பிரதிநிதிகள் அல்லது செயற்பாட்டாளர்கள் தலைமைதாங்க வேண்டும். ஆனால் அவ்வாறான ஒரு தலைமைத்துவம் இல்லாத வெற்றிடத்தில்தான் போதைப்பொருள் பாவனை பாடசாலைகள் வரை வந்துவிட்டது.போதைபொருள் பாவனை மட்டுமல்ல வாள் வெட்டுக் கலாசாரத்தின் பின்னால் உள்ள உளவியலைத் தீர்மானிக்கும் அம்சங்களும் மேற்கண்டவைதான். இளம் வயதினரின் வேகங்களுக்கு ஈடுகொடுத்து,அவர்கள் மத்தியில் இலட்சியங்களை விதைத்து, அவர்களுடைய சாகச உணர்வுகளைச் சரியான திசையில் திருப்பி,விழுமியங்களை மீளுருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கும், செயற்பாட்டாளர்களுக்கும் ,அரசியல்வாதிகளுக்கும் மதகுருக்களுக்கும் சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் உண்டு. ஆனால் அந்தக்கூட்டுப் பொறுப்பை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறார்கள்? பாடசாலைகளில் தண்டனை நீக்கப்பட்டதை குறித்து முறையிடுகிறோம். ஆனால் ஒரு காலம் எமது பிள்ளைகள் தனியாக பள்ளிக்கூடங்களுக்கு போனார்கள்.டியூட்டரிகளுக்கு போனார்கள்.பெற்றோர் அவர்களை காவிச் செல்லும் ஒரு நிலைமை இருக்கவில்லை.ஆனால் இப்பொழுது எல்லா அம்மாக்களும் மோட்டார் சைக்கிள் வைத்திருக்கிறார்கள்.அவர்கள் பிள்ளைகளை பூனை குட்டியைக் காவுவது போல இரவும் பகலும் காவுகிறார்கள்.ஏன் காவுகிறார்கள்?பிள்ளைகளை ஏன் தனியாக விட முடிவதில்லை? ஒரு பாடத்துக்கு இரண்டுக்கு மேற்பட்ட ஆசிரியர்களிடம் பிள்ளை படிக்கிறது. அவ்வாறு படிப்பதற்கே நாள் போதாது.இது சுயகற்றலை பாதிக்காதா?அப்படிப் படித்து மேலெழுந்த பிள்ளை என்னவாக வருகிறது?கல்வி பற்றிய தமிழ்ச்சமூகத்தின் அளவுகோல்கள் சரியானவைகளா?இந்த கல்விமுறைக்கூடாக உருவாக்கப்பட்ட ஆளுமைகள் எப்படிப்பட்டவை? இதைக் குறித்த ஒரு சரியான மீளாய்வு தமிழ்ச் சமூகத்திடம் உண்டா? இல்லை.கல்வி தொடர்பாகவும் விழுமியங்களை மீளுருவாக்குவது தொடர்பாகவும்,சமூகத்தை மீளக்கட்டியெழுப்புவது தொடர்பாகவும் கூட்டுத்திட்டங்கள் வகுக்கப்படவில்லை.அவற்றை வகுப்பதற்கான அதிகாரம் இல்லை என்று சொல்லிக்கொண்டு 13 ஆண்டுகளை கடந்துவந்து விட்டோம்.நாங்களாக சுயகவசங்களை உருவாக்கத் தவறிவிட்டோம்.அந்த வெற்றிடத்தில்தான் போதைப்பொருளும் வாள்களும் நுழைகின்றன. எனவே பிரச்சினையின் வேர்களைத் தேடிப்போனால் முழுச்சமூகமும் அதன் கூட்டுப்பொறுப்பை இழந்து விட்டதைக் காணலாம். அண்மையில் எரிபொருள் வரிசைகளில் நின்றபோது நாங்கள் ஒரு சமூகமாகத் தோல்வியடைந்தமை தெரியவில்லையா? உங்களுடைய பிள்ளைக்கும் உங்களுக்கும் இடையே ஒரு வெளியாள் போதைப்பொருளை,வாளைக் கொடுக்கிறான் என்றால் உங்களுக்கும் பிள்ளைக்கும் இடையே எங்கேயோ ஒரு இடைவெளி இருக்கிறது என்று பொருள்.உங்களுக்கும் பிள்ளைக்கும் இடையே எங்கேயோ தொடர்பாடல் அறுந்துவிட்டது என்று பொருள்.நீங்கள் பிள்ளையோடு மேலும் கூடுதலாக நேரத்தைச் செலவழிக்க வேண்டியிருக்கிறது என்று பொருள்.பிள்ளைகளை இரவு பகலாக வகுப்புகளுக்கு காவி செல்கிறீர்கள்.ஆனால் பிள்ளைகளோடு மனம் விட்டு கதைக்கின்றீர்களா? பூனை குட்டியைக் காவுவது போல பிள்ளைகளைக் காவுகிறோம். சிறந்த கல்விப் பெறுபேறுக்காக மனித உரிமைகளைப் பலிகொடுக்கத் தயாராக இருக்கிறோம்.அந்தக்கல்விப் பெறுபேறுகளின் விளைவாக நாங்கள் உருவாக்கிய ஆளுமைகள் எத்தகையவை என்ற கேள்வியை எப்பொழுதாவது எங்களை நோக்கி கேட்டிருக்கிறோமா? இதுதான் பிரச்சினை.ஆயுத மோதல்களுக்கு பின்னரான ஒரு சமூகத்தை மீளக்கட்டியெழுப்ப அரசியல்வாதிகளால் முடியவில்லை.சமூகச் செயற்பாட்டாளர்களால் முடியவில்லை, சமயப் பெரியார்களால் முடியவில்லை, புத்திஜீவிகள்,படைப்பாளிகள், ஊடகங்களால் முடியவில்லை. போதைப்பொருளிலிருந்து பிள்ளைகளை விடுவிப்பதென்றால் புனர்வாழ்வும் மட்டும் போதாது. தண்டனைகளால் பலன் இல்லை. மாறாக சமூகத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டும். விழுமியங்களை மீளுருவாக்க வேண்டும்.இளையோர் பிரமிப்போடு பார்க்கும் முன்னுதாரணம் மிக்க தலைவர்கள் மேலெழ வேண்டும்.திரைப்பட நாயகர்களையும் சண்டியர்களையும் முன்னுதாரணமாகக் கொள்ளும் வெற்றிடம் ஏன் ஏற்பட்டது?எனவே இளையோரை இலட்சியப்பற்று மிக்கவர்களாகவும்,உன்னதமான சமூகக் குறிக்கோளை நோக்கி எய்யப்பட்ட அம்புகளாகவும் மாற்றுவதற்கு தனியாக ஆசிரியர்களால் மட்டும் முடியாது.மருத்துவர்களால் மட்டும் முடியாது. உளவளத் துணையாளர்களால் மட்டும் முடியாது.புனர்வாழ்வு நிலையங்களால் மட்டும் முடியாது. அது ஒரு கூட்டுப் பொறுப்பு. ஜெனிவாவில் அரசாங்கத்தை பொறுப்புக்கூற வேண்டும் என்று கேட்கும் ஒரு மக்கள்கூட்டமானது,சமூகச்சீரழிவுகள் பொறுத்து தனக்குள்ள கூட்டுப் பொறுப்பையும் உணர வேண்டும். கீழிருந்து மேல் நோக்கிய சுய பாதுகாப்புக் கவசங்களைக் கட்டியெழுப்ப வேண்டும். நிலாந்தன் https://newuthayan.com/பாடசாலைகளில்-போதைப்பொரு/
  21. ஜெனிவாத் தீர்மானம் 2022 : தமிழ் அரசியலின் இயலாமை? Nillanthan மற்றோரு ஜெனீவாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொறுப்புக்கூறலை ஜெனீவாவுக்கு வெளியே கொண்டுபோக வேண்டும் என்று தமிழ்க்கட்சிகள் கேட்டது சரி என்பதை இப்புதிய தீர்மானம் நிரூபித்திருக்கிறது. கடந்த ஆண்டு ஜனவரி 21ஆம் திகதி தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட மூன்று கட்சிகள் இணைந்து ஜெனீவாவுக்கு ஒரு கூட்டுக்கடிதத்தை அனுப்பின. அதில் பொறுப்புக்கூறலை ஜெனீவாவுக்கு வெளியே கொண்டு போகவேண்டும் என்ற கோரிக்கையை இணைத்தது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிதான். இதுநடந்து 20மாதங்களாகிவிட்டன. பொறுப்புக்குகூறலை ஜெனீவாவுக்கு வெளியே கொண்டு போகும் முயற்சியில் மூன்று கட்சிகளும் எதுவரை முன்னேறியுள்ளன? நடந்து முடிந்த ஜெனிவாக் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் அங்கு போயிருந்தார். அங்கிருந்து அவர் வழங்கிய நேர்காணல்களில் அவர் ஒரு விடயத்தை திரும்பத்திரும்ப சுட்டிக்காட்டுகின்றார். அது என்னவெனில், கூட்டமைப்பும் சில புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளும் தொடர்ந்தும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை பலவீனப்படுத்தி வருகின்றன என்பதே அது. அதாவது ஜெனிவா தீர்மானத்தை முன் கொண்டுவரும் நாடுகளை நோக்கி கூட்டமைப்பு தமிழ்மக்களின் கோரிக்கையை வலிமையாக முன்வைக்கவில்லை என்பது அவருடைய முதலாவது குற்றச்சாட்டு. இரண்டாவது குற்றச்சாட்டு, பிரித்தானியா,ஆவுஸ்ரேலியா,கனடா ஆகிய நாடுகளை மையமாகக் கொண்டியங்கும் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகள் சில தொடர்ந்து தத்தமது நாடுகளின் அரசாங்கங்களுடைய விருப்பங்களுக்கு ஏற்ப செயல்பட்டு வருகின்றன என்பது. அதாவது மேற்படி நாடுகள் ஜெனிவாவில் தமிழ்மக்களின் கோரிக்கைகளை தமது பூகோள அரசியல் இலக்குகளுக்காக நீர்த்துப்போகச் செய்யும்பொழுது அதுவிடயத்தில் மேற்படி புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகள் அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களுக்கு விசுவாசமாக கீழ்படிவாக செயல்படுகின்றன என்ற தொனிப்பட அவர் குற்றம் சாட்டுகிறார். ரணில் விக்ரமசிங்கவின் முன்னைய ஆட்சிக்காலத்தில்,2015ஆம் ஆண்டு நிலைமாறுகால நீதிக்குரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பொழுது தமிழ்த்தரப்பில் கூட்டமைப்பு அந்த தீர்மானத்தை ஆதரித்தது. அது நிலைமாறுகால நீதியின் பங்காளியாக மாறியது. அவ்வாறே புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் சிலவும் நிலைமாறு கால நீதியை ஏற்றுக்கொண்டன. அதே சமயம் இன்னொரு பகுதி புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளும் தாயகத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி போன்ற கட்சிகளும் நிலைமாறுகால நீதியை ஏற்றுக்கொள்ளவில்லை. அவை இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியைக் கேட்டன. எனினும்,கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஐநாவுக்கு அனுப்பிய கூட்டுக் கடிதத்தில் கூட்டமைப்பு எனைய இரண்டு கட்சிகளோடு இணைந்து பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டு போகவேண்டும் என்று கேட்டிருந்தது. இலங்கை அரசாங்கத்தை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்த வேண்டும் என்று அக்கடிதம் கேட்டிருந்தது. நிலைமாறுகால நீதியைப் பரிசோதித்தோம் அதில் தோல்வியுற்றுவிட்டோம் என்று சுமந்திரன் வவுனியாவில் வைத்துச் சொன்னார். ஆனால் ஜெனீவாத் தீர்மானத்தின் சீரோ டிராப்ட் வெளிவந்த பொழுது கூட்டமைப்பு தலைகீழாகி நின்றது. இப்பொழுதும் கூட்டமைப்பு பொறுப்புக்கூறலை ஜெனீவாவுக்கு வெளியே கொண்டுபோக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கருக்குழு நாடுகளின்மீது அழுத்தத்தை பிரயோகிக்கவில்லை என்று கஜேந்திரன் குற்றஞ்சாட்டுகிறார். அதுபோலவே அவர் குற்றஞ்சாட்டும் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளும் பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டு போகவேண்டும் என்ற விடயத்தை வலியுறுத்துவதில்லை என்ற தொனிப்பட அவருடைய குற்றச்சாட்டு அமைகிறது. இக்குற்றச்சாட்டுகளை தமிழில் அரசியல் விமர்சனக் கட்டுரைகளை எழுதும் பலரும் கூட்டமைப்புக்கு எதிராக முன்வைத்து வருகிறார்கள். குடிமக்கள் சமூகங்கள் மத்தியிலும் அவ்வாறான குற்றச்சாட்டுகள் உண்டு. தவிர காணாமல் போனவர்களுக்கான அமைப்புகள் உட்பட பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்புகளும் கூட்டமைப்பின் மீது விமர்சனங்களைத் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றன. இந்த விமர்சனங்களின் விளைவாகத்தான் கடந்த பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு அதன் ஆசனங்களில் ஆறை இழந்தது. அதன் ஏகபோகம் சரிந்தது. ஆனால் அவ்வாறு இழந்த ஆறு ஆசனங்களையும் யார் பெற்றார்கள்? மூன்றே மூன்று ஆசனங்களைத்தான் மாற்று அணி பெற்றது. எனைய மூன்று ஆசனங்களும் தமிழ்த்தேசியப் பரப்புக்கு வெளியே போயின. அவ்வாறு மூன்று ஆசனங்கள் தமிழ்தேசிய பரப்புக்கு வெளியே போனதற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் கூட்டுப் பொறுப்பை ஏற்கவேண்டும். ஒரு பலமான மாற்று அணியைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற அரசியல் தரிசனம் அக்கட்சியிடம் இன்றுவரை இல்லை. எப்பொழுதும் ஏனைய கட்சிகளை குறைகூறி ஏனைய கட்சிகளில் குற்றம் கண்டுபிடித்து தங்களைப் பரிசுத்தர்களாக காட்டிக் கொள்ளும் ஒரு போக்குதான் அக்கட்சியிடம் இன்றுவரை உண்டு. அண்மையில் திலீபனின் நினைவுத்தூபி அவமதிக்கப்பட்ட போதும் அக்கட்சி தன் அரசியல் எதிரிகளைத்தான் குற்றஞ்சாட்டியது. தன் உள் அரசியல் எதிரிகளை குற்றச்சாட்டுவது என்பது தேர்தல்மைய அரசியலின் ஒரு பகுதிதான். ஆனால் ஈழத்தமிழ் நோக்கு நிலையிலிருந்து பார்த்தால் அதுமட்டுமே தேச நிர்மாணத்தின் பிரதான பகுதியாக அமைய முடியாது. ஈழத்தமிழர்கள் தொடர்ச்சியான இனப்படுகொலையால் நீர்த்துப்போன ஒரு மக்கள் கூட்டம். புலப்பெயற்சி, தோல்வி, கூட்டு காயங்கள், காட்டிக் கொடுப்புகள் போன்றவற்றால் தொடர்ந்தும் சிதறிப் போயிருக்கும் ஒரு மக்கள் கூட்டம். எனவே இந்த மக்கள் கூட்டத்தின் மத்தியில் தேர்தல் அரசியலை முன்னெடுக்கும் கட்சிகள் தமது அரசியல் எதிரிகளை திட்டிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. அதைவிட முக்கியமாக தாம் சரியெனக் கருதும் ஓர் அரசியல் இலக்கை நோக்கி மக்களைத் திரட்டவேண்டும். ஒரு தேசத் திரட்சியைக் கட்டியெழுப்ப வேண்டும். அதாவது தேர்தல்மைய அரசியலை எப்படி ஒரு தேச நிர்மாணத்தின் பகுதியாக மாற்றலாம் என்று சிந்திக்க வேண்டும். ஆனால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் உட்பட கூட்டமைப்பை விமர்சிக்கும் பலரிடமும் அவ்வாறான அரசியல் தரிசனம் உண்டா? என்ற கேள்வியை கடந்த 13 ஆண்டு கால அனுபவம் கேட்க வைக்கின்றது. கடந்த 13 ஆண்டுகளாக தமிழ் மக்களின் அரசியலானது புரோஅக்டிவ் – proactive- ஆக, அதாவது தானாக ஒன்றைக் கட்டியெழுப்பும் அரசியலாக இல்லை. அது ரியாக்டிவ்- reactive- ஆகத்தான் அதாவது பதில் வினையாற்றும் அரசியலாகத் தான் காணப்படுகிறது. அதாவது தேசத்தை நிர்மாணித்தல் என்பது எதிர் தரப்புக்கு எதிர்வினை ஆற்றும் தற்காப்பு நிலை அரசியலாகதான் மாறியிருக்கிறது. மாறாக தேசத்தை நிர்மாணிப்பதற்கான நிறுவனங்களை உருவாக்கி அதனூடாக தன் உள் அரசியல் எதிரியையும் வெளி எதிரிகளையும் எப்படித் தோற்கடிக்கலாம் என்ற சிந்தனை கூட்டமைப்பிடமும் இல்லை. கூட்டமைப்பின் எதிரிகளிடமும் இல்லை. கூட்டமைப்பின் அரசியல் தவறுகள் காரணமாகத்தான் கடந்த பொதுத் தேர்தலில் அக்கட்சி ஏகபோகத்தை இழந்தது. ஆனால் அந்த தோல்வியை தன்னுடைய முழுமையான வெற்றியாக மாற்றிக் கொள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் முடியவில்லை. எனைய தமிழ்த்தேசிய கட்சிகளாலும் முடியவில்லை. இதனால் தமிழ் வாக்குகள் மேலும் சிதறி,தமிழ்மக்களின் பேரபலம் சிதைந்தது. அதாவது தேசத் திரட்சி பலவீனமடைந்தது. இப்பொழுதும் ஜெனிவா விவகாரத்தில் கூட்டமைப்பு செய்வது பிழை என்றால் ஏனைய கட்சிகள் அதை தோற்கடிக்க வேண்டும். அதற்கு வேண்டிய மக்கள் ஆணையை முதலில் பெற வேண்டும். அந்த மக்கள் ஆணையை பெறுவதற்கு ஒரு பலமான மாற்று அணியை கட்டி எழுப்ப வேண்டும். மக்களாணையை பெற்ற பின் பொருத்தமான வெளியுறவு கொள்கை ஒன்றை வகுத்து வெளியுறவு கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி அதனூடாக ஜெனிவாவையும் இந்தியாவையும் எனைய தரப்புகளையும் அணுக வேண்டும். ஆனால் அப்படியான சிந்தனைகளையோ செயற்பாடுகளையோ தமிழ் அரசியலில் மிகக் குறைவாகவே காணமுடிகிறது. ஒப்பிட்டுளவில் அதிக ஆசனங்களைப் பெற்ற கூட்டமைப்போடுதான் வெளியுலகம் பேசும். தன் உள் அரசியல் எதிரியைத் திட்டித் தீர்ப்பதிலேயே தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் சக்தி பெருமளவுக்கு விரயம் செய்யப்படுகிறது. இது ஒரு விதத்தில் நெகட்டிவ் ஆனது. மாறாக பொசிட்டிவாக தனக்கு சரி என்று தோன்றும் ஓர் அரசியல் இலக்கை முன்வைத்து தேசத்தைக் கட்டியெழுப்ப இந்த கட்சிகளால் முடியவில்லை. இதனால்தான் கடந்த 13 ஆண்டுகளாக பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டு போக முடியவில்லை. பேராசிரியர் ஜூட் லால் கூறுவது போல தமிழ்மக்கள் கடந்த 13 ஆண்டுகளாக குறிப்பிட்டுச் செல்லக்கூடிய வெற்றிகள் எதையும் பெற்ற முடியவில்லை. வேண்டுமானால் நெருப்பை அணையாமல் பாதுகாத்தோம் என்று கூறித் திருப்திப்படலாம். தனது உள் அரசியல் எதிரிகளைப் பற்றியே எப்பொழுதும் சிந்தித்து அவர்களுக்கு எதிரான வியூகங்களை வகுப்பதிலேயே தமிழ்ச் சக்தி வீணாகிக் கொண்டிருக்கிறது .மாறாக,ஆக்கபூர்வமான விதத்தில் பொசிட்டிவாக, புரோஅக்டிவாக,ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு வேண்டிய வழி வரைபடத்தை தயாரித்து முன் செல்லும்போது அரசியல் எதிரிகள் படிப்படியாக உதிர்ந்து போய் விடுவார்கள். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மூன்று கட்சிகளும் கூட்டாக கடிதமெழுதி கிட்டத்தட்ட 20 மாதங்கள் கழிந்துவிட்டன. இந்த 20 மாதங்களிலும் தாம் ஜெனிவாவை நோக்கி முன்வைத்த கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக இக்கட்சிகள் என்னென்ன செய்திருக்கின்றன?கூட்டமைப்பு தொடர்ந்து வாக்காளர்களை ஏமாற்றுகிறது என்று சொன்னால்,அவ்வாறு ஏமாற்றாத ஏனைய கட்சிகள் கடந்த 20மாதங்களாக என்ன செய்திருக்கின்றன? கூட்டமைப்பு ஏமாற்றுகிறது என்று சொன்னால் மட்டும் போதாது. தாங்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்றும் சொல்லவேண்டும். பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டுபோகும் விடயத்தில் இவர்கள் இதுவரை சாதித்தவை என்ன? மிகக்குறிப்பாக அந்த விடயத்தை நோக்கி அவர்கள் கட்டியெழுப்பி வைத்திருக்கும் கட்டமைப்புகள் எத்தனை? பன்னாட்டு நீதிமன்றத்தை நோக்கிச் செல்லும் வழியில் கடந்த 20 மாத காலத்தில் எதுவரை முன்னேறி இருக்கிறோம் என்பதனை மூன்று கட்சிகளும் தமிழ்மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். ஜெனிவாவில் இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக்கூற வேண்டும் என்று கேட்கும் மேற்படி கட்சிகள் தமது வாக்குறுதிகளுக்கும் அதை நம்பும் தமது மக்களுக்கும் பொறுப்பு கூறவேண்டும். http://www.nillanthan.com/5671/
  22. நினைவு நாட்களுக்கு உரிமை கோருவது ? நிலாந்தன் நினைவு கூர்தலுக்கான ஒரு பொதுக் கட்டமைப்பை குறித்த உரையாடல்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டன.ஆனால் ஒரு பொதுவான கட்டமைப்பை உருவாக்கும் விடயத்தில் தமிழ்ப்பரப்பில் இருக்கும் அரசியல் செயற்பாட்டாளர்கள் பொருத்தமான வெற்றிகளை இதுவரை பெற்றிருக்கவில்லை.அனைத்து நினைவு கூர்தல்களுக்குமான ஒரு பொதுக் கட்டமைப்பை ஏன் உருவாக்க முடியவில்லை? ஏனென்றால் ஒரு பொதுவான தியாகிகள் நினைவு தினம் தமிழ்மக்கள் மத்தியில் இல்லை.ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒவ்வொரு அமைப்பும் தனக்கென்று தனியாக தியாகிகள் தினங்களை வைத்திருக்கின்றது. நினைவு நாட்களை வைத்திருக்கின்றது.இதில் ஒரு இயக்கம் தியாகி என்று கூறுபவரை மற்றொரு இயக்கம் துரோகி என்று கூறும் நிலைமையும் உண்டு.ஒரு இயக்கத்தால் தியாகியாக கொண்டாடப்படுகிறவர் மற்றொரு இயக்கத்தால் கொலைகாரராக பார்க்கப்படுகிறார்.எனவே இயக்கங்களுக்கிடையிலான ஒரு பொதுவான தியாகிகள் நாளை இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.அதை என்றோ ஒரு நாள் கண்டுபிடிக்கும் பொழுதுதான் தமிழ்த் தேசியத்தின் ஜனநாயக இதயம் அதன் முழுமையான செழிப்பை அடையும். தியாகிகள் நாள் மட்டுமல்ல, இனப்படுகொலை நாளில் கூட சர்ச்சைகள் உண்டு.மே 18 எனப்படுவது தமிழ்மக்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நாள்.எனவே அந்த நாளை இனப்படுகொலை நாளாக அனுஷ்டிக்க வேண்டும் என்று தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் கருதுகிறார்கள். ஒரு குறுகிய காலகட்டத்தில் ஒரு குறுகிய நிலப்பரப்புக்குள் அதிக தொகையினர் கொல்லப்பட்டதன்மூலம் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட ஒரு நாள் என்ற அடிப்படையில் அந்த நாளை இனப்படுகொலை நினைவு நாளாக அனுஷ்டிக்கலாம் என்று கருதுபவர்கள் உண்டு.ஆனால் அங்கேயும் சர்ச்சைகள் உண்டு.அந்த நாளில் புலிகள் இயக்கத்தின் பிரதானிகள் பலர் தம் உயிர்களை துறந்தனர் என்ற அடிப்படையில் அதுவும்கூட புலிகள் இயக்கத்தின் நினைவு நாட்களில் ஒன்றுதான் என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. இந்த அடிப்படையில் பார்த்தால் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள எல்லாத் தரப்புகளினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பொதுவான நினைவு நாளை கண்டுபிடிப்பது இப்போதைக்குச் சாத்தியமில்லை.அவ்வாறு ஒரு பொதுவான நினைவு நாள் இல்லாத ஒரு சமூகத்தில், நினைவு கூர்தலுக்காக ஒரு பொதுவான கட்டமைப்பை உருவாக்குவதும் சாத்தியமில்லை.பதிலாக அவரவர் அவரவருடைய தியாகிகள் நாளை அனுஷ்டிப்பது என்ற அடிப்படையில் நினைவு கூர்தலில் பல்வகைமையை ஏற்றுக் கொள்வதுதான் உடனடிக்கு சாத்தியமான ஒன்று. மேலும்,கடந்த 13ஆண்டுகளாக நினைவுகூர்தல் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகள் யாவும் விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு சம்பந்தப்பட்ட நினைவு நாட்கள்தான்.விடுதலைப்புலிகள் அல்லாத இயக்கங்களின் நினைவு நாட்கள் பொறுத்து பெரியளவில் சர்ச்சைகள் இல்லை. இது எதை காட்டுகின்றது என்றால்,புலிகள் இயக்கத்தின் மெய்யான வாரிசு யார் என்ற ஒரு போட்டிதான்.அல்லது அந்த இயக்கத்தின் வீரத்துக்கும் தியாகங்களுக்கும் யார் உரிமை கோரலாம் என்ற ஒரு போட்டிதான்.இந்தப் போட்டி காரணமாகத்தான் கடந்த 13ஆண்டுகளாக நினைவுகூர்தல் தொடர்பாக சர்ச்சைகள் எழுகின்றன. இதில் பொதுக் கட்டமைப்பை உருவாக்கும் முயற்சிகளில் பெரும்பாலானவை விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு சம்பந்தப்பட்ட நினைவு நாட்களை அனுஷ்டிப்பதற்கானவைதான்.அவ்வாறான ஒரு பொதுக் கட்டமைப்பு இல்லாத ஒரு பின்னணியில்தான் இப்பொழுது மறுபடியும் திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு அரசியல்வாதிகள் தங்களுக்கிடையே பிடுங்குப்படத் தொடங்கியிருக்கிறார்கள். இப்படி ஒரு சர்ச்சை வரும் என்பதனை ஏற்கனவே எதிர்பார்த்த அரசியற் செயற்பாட்டாளர்கள் சிலர் இதில் சம்பந்தப்பட்ட எல்லாக் கட்சிகளையும் அணுகினார்கள்.குறிப்பாக இந்த சர்ச்சைகளின் மையமாகக் காணப்படும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இரண்டு அணிகளையும் அணுகினார்கள். புலிகள் இயக்கத்தின் மூத்த உறுப்பினரான பஷீர் காக்கா இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனோடு உரையாடினார்.தான் மட்டக்களப்புக்குச் சென்று கொண்டிருப்பதாகவும் தமது அமைப்பின் பேச்சாளர் சுகாசுடன் உரையாடும்படியும் கஜேந்திரன் சொன்னார்.எனினும்,இது தொடர்பாக அக்கட்சியின் உறுப்பினரும் திலீபனோடு நேரடியாகப் பழகியவருமான பொன் மாஸ்ரரோடு உரையாடுவது அதிகம் பொருத்தமாக இருக்கும் என்று பஷீர் காக்கா கருதினார் போலும். எனவே அவர் பொன் மாஸ்டரிடம் இது தொடர்பாக உரையாடியிருக்கிறார். எனினும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் ஏற்பட்ட உடைவு நினைவு கூர்தலில் பிரதிபலிப்பதை அவரைப் போன்ற செயல்பாட்டாளர்களால் தடுக்க முடியவில்லை.மாறாக அரசியல்வாதிகள் பஷீர் காக்காவை போன்ற மூத்த செயற்பாட்டாளர்களை அவமதிக்கும் ஒரு நிலைமைதான் உருவாகியது. முரண்பாடு பொதுவெளியில் வந்த பின்னர்தான் மணிவண்ணன் ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கினார். முரண்பாட்டின் பின் உருவாக்கப்பட்டபடியால் அது முரண்பாட்டின் ஒரு விளைவாகவே பார்க்கப்படும். மாநகர முதல்வர் என்று அடிப்படையில் மணிவண்ணன் அதனை உருவாக்கிய போதிலும், அப்பொதுக் கட்டமைப்பு சுயாதீனமானது என்று அதைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.அது திலீபன் நினைவு நாட்களை சுயாதீனமாக நினைவுகூரும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் கஜேந்திரகுமார் அணியைச் சேர்ந்த பொன் மாஸ்டர் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்களை வைத்துப்பார்த்தால்,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்குள் ஏற்பட்ட பிளவு திலீபனின் நினைவு நாட்களில் பிரதிபலிக்கிறது என்றே தெரிகிறது. அது மட்டுமல்ல கடந்த 13 ஆண்டுகளில் தமிழ்மக்கள் ஒரு பொதுவான நினைவுகூரும் கட்டமைப்பை உருவாக்குவது எத்துணை சவால்கள் மிகுந்தது என்பதனை நிரூபிப்பதாகவும் அது காணப்படுகிறது.ஆயுத மோதல்களுக்கு பின்னரான கடந்த 13 ஆண்டுகளில் தமிழ்ச் சமூகமும் அதன் அரசியலும் பண்புருமாற்றம் – transformation – ஒன்றுக்கு போகமுடியாது தியங்குவதையும் அது காட்டுகிறது. தமிழ்மக்கள் முழு உலகத்தையும் திரும்பி பார்க்க வைக்கும் ஓர் ஆயுதப் போராட்டத்தை நடாத்திய மக்கள்.ஆயுதப் போராட்டம் என்று சொன்னால் சம்பந்தப்பட்ட எல்லாருடைய கைகளிலும் ரத்தம் இருக்கும்.ஆயுதம் ஏந்தியவர்கள் மட்டுமல்ல,அந்தப் போராட்டத்தை ஏதோ ஒரு விதத்தில் ஆதரித்தவர்கள் எல்லாருக்கும் அதில் கூட்டுப்பொறுப்பு உண்டு.இதில் என்னுடைய கை சுத்தம், உன்னுடைய கையில் இருப்பது ரத்தம் என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது.தியாகி – துரோகி என்ற அளவுகோள்கள் ஊடாக அரசியலைத் தொடர்ந்தும் அணுக முடியாது.நான் தியாகி,நீ துரோகி என்று வகிடுபிரிக்க வெளிக்கிட்டால் சமூகம் என்றைக்குமே ஒரு திரட்சியாக இருக்கமுடியாது.அதாவது தமிழ்மக்களை ஒரு தேசமாக கட்டியெழுப்பவே முடியாது. இதில் தங்களை தியாகிகளாக காட்டிக் கொள்பவர்கள் அல்லது கடந்த காலத் தியாகங்களுக்கும் வீரத்திற்கும் உரித்து கொண்டாடுபவர்கள் முதலில் அந்த வீரத்தின் தொடர்ச்சியும் தியாகத்தின் தொடர்ச்சியும் தாங்களே என்பதனை நிரூபித்துக் காட்டவேண்டும்.அதை நிரூபிக்கும் இடம் நினைவு கூர்தல் அல்ல. மாறாக கடந்த 13 ஆண்டு கால அரசியலில் தமது சொத்துக்களை இழப்பதற்கும் ரிஸ்க் எடுப்பதற்கும் எத்தனை பேர் தயாராக இருந்தார்கள் என்பதிலிருந்துதான் அதை மதிப்பிடலாம். திலீபனை நினைவு கூர்வது என்பது நல்லூரில் இருக்கும் நினைவுத்தூபியில் சிவப்பு மஞ்சள் கொடியை கட்டுவது மட்டுமல்ல, விளக்குகளை ஏற்றுவது மட்டும் அல்ல,அது அதைவிட ஆழமானது. திலீபனைப்போல தமது அரசியல் இலக்கை அடைவதற்காக உயிரைத் துறக்கத் தயாரான எத்தனை அரசியல்வாதிகள் தமிழ் மக்கள் மத்தியில் உண்டு? ஒருவர் முன்வரட்டும் பார்க்கலாம்? இதுதான் பிரச்சினை.தியாகத்துக்கும் வீரத்துக்கும் உரிமை கோரும் அரசியல்வாதிகள் கடந்த 13ஆண்டுகளாக எத்தனை தியாகங்களைச் செய்திருக்கிறார்கள்?எத்தனை பேர் சட்ட மறுப்பாகப் போராடி சிறை சென்றிருக்கிறார்கள்? எத்தனை பேர் சொத்துக்களை துறந்திருக்கிறார்கள்? கடந்த 13ஆண்டுகளில் காணாமல் போனவர்களின் அம்மாக்கள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள். அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள்.ஆனால் அவர்களை அரசியல் செயற்பாட்டாளர்கள் சாக விடவில்லை.இவைதவிர அரசியல்வாதிகள் என்று பார்த்தால் யாருமே அந்தளவுக்கு துணியவில்லை. அதற்காக அரசியல்வாதிகள் சாக வேண்டும் என்று இக்கட்டுரை கேட்கவில்லை.உயிரைக் கொடுத்தது போதும்.இனி உயிர்களைப் பாதுகாக்க வேண்டிய காலம்.எனவே ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரான ஒரு அரசியலுக்குரிய பண்புருமாற்றத்திற்கு தமிழ்மக்கள் தயாராக வேண்டும். நான் வண்ணாத்து பூச்சி,நீ மசுக்குட்டி என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது.ஏனென்றால் எல்லா வண்ணாத்துப் பூச்சிகளும் ஒரு காலம் மயிர்க்கொட்டிகளாக இருந்தவைதான். இந்த விடயத்தில் தமிழ்மக்கள் தென்னாபிரிக்காவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். தென்னாபிரிக்காவில் வெவ்வேறு ஆயுத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மாறி மாறி ஒருவர் மற்றவரை கொன்றிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் பழிவாங்கும் உணர்ச்சியோடு ஒருவர் மற்றவரைத் தண்டிக்க முற்பட்டிருந்திருந்தால் தென்னாபிரிக்கா தொடர்ந்தும் இறந்த காலத்திலேயே வாழ வேண்டியிருந்திருக்கும். ஒரு புதிய காலத்துக்கு வந்திருக்கவே முடியாது. இதுவிடயத்தில் தென்னாபிரிக்காவை இறந்த காலத்திலிருந்து புதிய காலத்துக்கு அழைத்து வரத் தேவையான பண்புருமாற்றத்திற்கு மண்டேலா தலைமை தாங்கினார். ஈழத்தமிழ் அரசியலிலும் இறந்த காலத்தில் இருந்து ஒரு புதிய காலத்தை நோக்கி செல்வதற்கான பண்புருமாற்றம் தேவை.தனது அரசியல் எதிரியை துரோகி ஆக்குவதால் யாரும் தியாகி ஆகிவிட முடியாது.தியாகம் செய்தால்தான் தியாகியாகலாம்.தனது அரசியல் எதிரியைத் துரோகியாக்குவது என்பது தமிழ்ச் சமூகம் பண்புருமாற்றத்துக்கு தயாரில்லை என்பதைத்தான் காட்டுகின்றது. பண்புருமாற்றத்துக்கு தயாரில்லை என்று சொன்னால் கூட்டுக் காயங்களோடும் பிணங்களோடும் இறந்த காலத்திலேயே வாழ வேண்டியதுதான்.பழிவாங்கும் உணர்ச்சியால் பிளவுண்டு ஒரு தேசமாக திரட்சியுறாமல் சிதறிப் போவதுதான். சில மாதங்களுக்கு முன் பொருளாதார நெருக்கடி தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய கஜேந்திரகுமார் சிங்கள பௌத்த அரசியலானது பண்புருமாற்றத்துக்குப் போகதவறியதன் விளைவே அதுவென்று கூறியிருந்தார்.உண்மை. அதுபோல தமிழ் அரசியலும் பண்புருமாற்றத்துக்குப் போக வேண்டும். கடந்த 13 ஆண்டுகளில் ஒரு பொதுவான நினைவு நாளையோ அல்லது நினைவு கூர்தலுக்கான ஒரு பொதுக் கட்டமைப்பையோ ஈழத்தமிழர்களால் உருவாக்க முடியவில்லை என்பது தமிழ் அரசியல் தொடர்ந்து பண்புருமாற்றத்திற்கு தயாராக இல்லை என்பதைத்தான் காட்டுகின்றது.இப்பொழுது திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு உருவாக்கப்பட்டிருக்கும் பொதுக் கட்டமைப்பானது ஒரு கட்சிக்குள் ஏற்பட்ட உடைவைப் பிரதிபதிக்குமா? அல்லது ஒரு புதிய காலத்தை நோக்கிய பண்புருமாற்றத்தைப் பிரதிபலிக்குமா? http://www.nillanthan.com/5652/
  23. ஜெனீவா கூட்டத்தொடரின் பின்னணியில் காங்கேசன்துறை தொடக்கம் அம்பாந்தோட்டைவரை - நிலாந்தன் இம்மாதம் 10ஆம் திகதியிலிருந்து சுமந்திரனின் தலைமையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு எதிராக ஒரு தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.ஜெனீவா கூட்டத்தொடரின் பின்னணியில் முன்னெடுக்கப்படும் இப்போராட்டத்திற்கு “காங்கேசன்துறை தொடக்கம் அம்பாந்தோட்டைவரை” என்று பெயரிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக யார் போராடினாலும் அதை ஆதரிக்க வேண்டும்.எனினும்,இப்போராட்டம் தொடர்பாக இப்போதுள்ள அரசியற்சூழலின் பின்னணியில் சில கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாதது. கேள்வி ஒன்று, போராட்டத்தின் தலைப்புப் பற்றியது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான ஆர்ப்பாட்டப் பேரணிக்குப் பின் அதே பாணியில் பெயரிடப்பட்ட மூன்றாவது போராட்டம் இது. P2Pபேரணிக்கு நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து வெவ்வேறு தரப்புகள் உரிமை கோருகின்றன. அதில் சுமந்திரன் சாணக்கியன் போன்றோரும் ஒரு தரப்பு. அந்தப்பெயர் தங்களுக்குரியது என்பதனை காட்டும் விதத்தில் மீண்டும் மீண்டும் சுமந்திரன் தான் ஒழுங்கு செய்யும் போராட்டங்களுக்கு இது போன்ற பெயர்களை வைத்து வருகிறாரா?தமிழக மீனவர்களுக்கு எதிராக அவர் தொடங்கிய போராட்டத்துக்கு முல்லைத்தீவு தொடக்கம் பருத்தித்துறைவரை என்று பெயரிட்டிருந்தார்.அதன்பின் இப்பொழுது காங்கேசன்துறை தொடக்கம் அம்பாந்தோட்டைவரை என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.அந்தப் போராட்டத்தலைப்பின் ஆங்கிலச் சுருக்கத்தை வெள்ளை எழுத்தில் கறுப்பு பட்டியில் பதித்து அப்பட்டியை தங்கள் தலைகளில் அணிந்து போராடுவது. இதுபோன்ற செயல்களின்மூலம் P2P போராட்டத்தின் உரித்து தமக்கே அதிகம் என்று சுமந்திரனும் அவரை சேர்ந்தவர்களும் சொல்ல முற்படுகிறார்களா? கேள்வி இரண்டு,ஏற்கனவே பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து சேகரிக்கும் ஒரு போராட்டத்தை சுமந்திரன் தலைமை தாங்கி முன்னெடுத்தார்.யாழ்.நகரப் பகுதியில் தொடங்கிய அந்தப் போராட்டம் தென்னிலங்கை,மாத்தறைவரை சென்றது.தென்னிலங்கையில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களும் அதற்கு ஒத்துழைத்தார்கள்.அதில் சேகரிக்கப்பட்ட கையெழுத்துக்களுக்கு என்ன நடந்தது?அவை யாரிடம் கையளிக்கப்பட்டன?அந்தப் போராட்டத்தைப் போலவே இப்பொழுது தொடங்கப்பட்டிருக்கும் போராட்டமும் கமுக்கமாக முடிந்து விடுமா? கேள்வி மூன்று, இந்தப் போராட்டம் தொடங்கிய அன்று கிட்டத்தட்ட 60-க்கும் குறையாத ஆட்களே அதில் பங்குபற்றினார்கள்.அதாவது மக்கள் மயப்படாத ஒரு போராட்டம்.நாடாளுமன்ற உறுப்பினர்கள்,குறிப்பாக ராவுப் ஹக்கீம் தொழிற்சங்கவாதியான ஸ்ராலின் போன்றோர் பங்குபற்றிய ஒரு போராட்டத்தின் முதல்நாள் அன்று மிகக்குறைந்த ஆட்களே கலந்து கொண்டமை என்பது எதைக் காட்டுகிறது? அதை ஒரு மக்கள் மயப்பட்ட பெருந்திரள் போராட்டமாக முன்னெடுக்கவேண்டும் என்ற திட்டம் எதுவும் ஏற்பாட்டாளர்களிடம் இருக்கவில்லையா? இந்த கேள்வியை மேலும் விரித்துச் செல்லலாம். சில மாதங்களுக்கு முன்புவரை கொழும்பில் காலிமுகத்திடலில் படைப்புத்திறனோடு எப்படிப் போராடலாம் என்பதற்கு சிங்களமக்கள் பல முன்னுதாரணங்களை காட்டியிருக்கிறார்கள். படைப்புத்திறன் மிக்க அறவழிப் போராட்டம் அது.அந்தப் போராட்டத்தில் அடிப்படையான பலவீனங்கள் உண்டு. தமிழ்மக்களுக்கு அந்தப் போராட்டம் தொடர்பில் கேள்விகள் உண்டு.ஆனாலும் அந்தப் போராட்டத்தில் படைப்புத்திறன் இருந்தது.புதுமை இருந்தது. அதில் பல பிரபல படைப்பாளிகள் பங்குபற்றினார்கள்.புத்திஜீவிகள்,சமூகப் பெரியார்கள்,மதப் பெரியார்கள் பங்குபற்றினார்கள்.எனவே அது சமூகத்தின் எல்லாத் தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் சக்திமிக்கதாக காணப்பட்டது.கொழும்பில் ராஜதந்திரிகளின் வதிவிடங்கள் அமைந்திருக்கும் ஒரு பகுதியில் உலகத்தின் கவனத்தையும் ஊடகங்களின் கவனத்தையும் ஈர்க்கும் விதத்தில் அந்தப் போராட்டம் படைப்புத்திறனை வெளிப்படுத்தியது. அப்போராட்டத்தால் அருட்டப்பட்டு மட்டக்களப்பில் காந்தி பூங்காவைச் சூழ்ந்த பகுதிகளில் ஒரு போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. மட்டக்களப்பைச் சேர்ந்த பெண்ணியச் செயற்பாட்டாளர்களும் ஏனைய சமூக செயற்பாட்டாளர்களும் இணைந்து நீதிக் கிராமம் என்று ஒன்றை உருவாக்கினார்கள். எனினும் அரகலய வெளிப்படுத்திய படைப்புத்திறனை தமிழ்க்கிராமம் வெளிப்படுத்தவில்லை. அதில் ஒப்பீட்டளவில் படைப்புத்திறன் குறைவாக இருந்தது. அது சமூகத்துக்குள் நொதிக்கத் தவறியது. அதுவும் மக்கள் மயப்படவில்லை. தமிழ்ப்பரப்பில் ஏற்கனவே அவ்வாறு மக்கள்மயப்படாத போராட்டங்கள் உண்டு. காணாமல் போகச் செய்யப்பட்டோருக்காக உறவினர்கள் நடத்தும் போராட்டம்,அரசியல் கைதிகளுக்கான போராட்டம், காணிகளை மீட்பதற்கான போராட்டம் போன்ற பல போராட்டங்கள் ஒப்பீட்டுளவில் மக்கள் மயப்படாதவைதான்.அரிதாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை அல்லது “எழுததமிழ்” போன்ற சில போராட்டங்கள் மக்கள் மயப்படுகின்றன.மற்றும்படி தமிழ்ப்பரப்பில் கடந்த 13ஆண்டுகளில் பெரும்பாலான போராட்டங்கள் மக்கள் மயப்படாதவைதான்.போராட்டத்தின் நெருப்பை அணையவிடாமல் பாதுகாத்தோம் என்று கூறித் திருப்திப்படுவதைத்தவிர அதற்குமப்பால் அவை எந்த மக்களுக்கான போராட்டங்களோ அந்த மக்கள்மத்தியில் நொதிப்பை,திரட்சியை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மைநிலை. இப்படிப்பட்டதோர் அரசியல் பின்னணியில்தான் காங்கேசன்துறை தொடக்கம் அம்பாந்தோட்டை வரையிலுமான போராட்டமும் அதிகம் மக்கள் மயப்படவில்லை.ஆனால்,கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில்,பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான கைது நடவடிக்கைகளை எதிர்த்து,கட்சிகளும் தொழிற்சங்கங்களும் மாணவர் அமைப்புக்களும் இணைந்து ஒழுங்குபடுத்திய ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டார்கள்.இதில் சுமந்திரன் அணியைக் காணவில்லை.ஆயின் காங்கேசன்துறை தொடக்கம் அம்பாந்தோட்டை வரையிலுமான போராட்டத்தை ஒழுங்குபடுத்தியவர்கள் அதுதொடர்பாக பொருத்தமான மக்கள் தரிசனங்களைக் கொண்டிருக்கவில்லை என்றே தெரிகிறது? இப்போராட்டம் அரகலயவிடமிருந்து புத்தாக்கத்திறணைக் கற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இப்போராட்டத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட ஒரு “மீம்ஸ்” வாய்விட்டு சிரிக்கும் அளவுக்கு படைப்புத்திறன் மிக்கதாக இருந்தது. அதில் ஒரு பட்டா ரக வாகனத்தில் சுமந்திரன் சாரதியின் ஆசனத்தில் இருக்கிறார்.சயந்தன் பின்பெட்டியில் இருந்தபடி எதையோ ஒலிபெருக்கியில் அறிவிக்கின்றார்.அது பழைய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான தெரு வியாபாரிகளின் அறிவிப்பு.போராட்டத்தில் இல்லாத படைப்புத்திறன் போராட்டத்திற்கு எதிரான ஒரு மீம்ஸில் இருந்தமை என்பது சுவாரசியமான ஒரு முரண். நாலாவது கேள்வி, சுமந்திரன் ஒரு நாடறிந்த வழக்கறிஞர்.அரகலயவோடு தொடர்ச்சியாக தனது நெருக்கத்தை காண்பித்து வருபவர்.அது சட்ட மறுப்பாக தோன்றிய ஒரு போராட்டம்.அந்தப் போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கில் வன்முறைகள் வெடித்தன.அந்த வன்முறைகளுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று ஏற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.ஆனால் அரசாங்கமோ அப்போராட்டத்தை சட்டத்தின் தராசில் வைத்து நிறுக்கப் பார்க்கின்றது. அதனால்தான் போராட்டத்தின் முன்னணிச் செயற்பாட்டாளர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.இந்தவிடயத்தில் போராட்டத்தின் தொடக்கத்தில் இருந்து அந்தப்போராட்டத்திற்கு ஆசிர்வாதத்தை வழங்கிய சட்டத்தரணிகள் அமைப்பானது ரணில் விக்கிரமசிங்க போராட்டத்தை நசுக்கத் தொடங்கியபொழுது எதிர்பார்த்த அளவுக்கு எதிர்ப்பை காட்டவில்லை. அதைவிட முக்கியமான ஒரு விடயம்.சட்டமறுப்பாக தோன்றிய ஒரு போராட்டத்தை சட்டத்தின் தராசில் வைத்து நிறுக்கும் அரசாங்கத்திற்கு அது தொடர்பில் எதிர்ப்பு எதையும் சட்டத்தரணிகள் சங்கம் பெரியளவில் காட்டவில்லை.சட்டமறுப்பாக எழுச்சி பெற்ற ஒரு போராட்டத்தை சட்டக்கண் கொண்டு பார்த்தால்,ஜனாதிபதியின் கதிரையில் அமர்ந்தது குற்றம். ஜனாதிபதியின் கழிப்பறைக்குள் நுழைந்தது குற்றம் ; நீச்சல் தடாகத்தில் குளித்தது குற்றம் ; அவருடைய சாப்பாட்டு மேசையில் உட்கார்ந்தது குற்றம் ; தன் படம் எடுத்தது குற்றம் ; என்று கூறி இருந்தால் குற்றம் ; நின்றால் குற்றம்; உறங்கினால் குற்றம் ; என்று எல்லாரையும் தூக்கி உள்ளே போடலாம். அதுதான் இப்பொழுது நடக்கின்றது. இந்த விடயத்தில் அது சட்ட மறுப்பாக தோன்றிய ஒரு போராட்டம் அதனை சட்டத்தின் தராசில் வைத்து நிறுப்பது சரியா என்ற அடிப்படை கோட்பாட்டுப் பிரச்சினையை சட்டத்தரணிகள் ஏன் எழுப்பவில்லை? காந்தியின் அறவழிப் போராட்டத்தை சட்டத்தின் தராசில் வைத்துப் நிறுத்தால் காந்தி வாழ்நாள் முழுவதும் சிறையில்தான் இருந்திருக்க வேண்டும். அப்படித்தான் மார்ட்டின் லூதரையோ அல்லது போலந்தில் கொம்யூனிசத்திற்கு எதிராக போராடிய லெட் வலேசாவையோ அல்லது சில மாதங்களுக்கு முன்பு வேளாண் மசோதாவை எதிர்த்துப் போராடிய டெல்லி விவசாயிகளையோ எல்லாச் சட்டங்களின் கீழும் சிறையில் தள்ளமுடியும். எனவே சட்ட மறுப்பை சட்டத் தராசில் வைத்து நிறுக்கலாமா?என்ற அடிப்படையான கோட்பாட்டு விவகாரத்தை முன்வைத்து அரசாங்கத்தோடு வாதாட ஏன் மூத்த வழக்கறிஞர்கள் கூட்டாக முன்வரவில்லை ?அண்மையில் ஒரு பெண் ஊடகவியலாளருக்கு வழங்கிய செவ்வியில் ஜனாதிபதி கூறுகிறார்.எல்லாம் சட்டப்படிதான் நடக்கிறது என்று. ஐந்தாவது கேள்வி, இந்தப் போராட்டத்தை மக்கள் மயப்படுத்துவதற்கு முதலில் தமிழரசு கட்சி தனது உறுப்பினர்கள் தொண்டர்கள் மத்தியில் இது தொடர்பான தேவையான விழிப்பூட்டலை செய்திருக்கின்றதா? இது தொடர்பாக கட்சியின் உயர்மட்டத்தில் கூடி முடிவெடுக்கப்படவில்லை என்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூறுகிறார்.அது உண்மையா?அதனால்தான் அவர் இப் போராட்டத்தின் தொடக்க நிகழ்வில் பங்குபற்றவில்லை என்றும் கூறியிருக்கிறார்.அதாவது கட்சிக்குள் தனது முதன்மையைப் பலப்படுத்த முற்படும் ஒரு அணி இப்போராட்டத்தைக் கையிலெடுத்திருக்கிறதா? எனவே தொகுத்துப் பார்த்தால் ஒன்று தெரிகிறது. ஜெனிவா கூட்டத்தொடர் காலம் என்பது தமிழ்அரசியலில் ஒப்பீட்டளவில் அதிகரித்த ஜனநாயக போராட்டங்களுக்கான வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டம் ஆகும்.ஐநாவின் கவனக்குவிப்புக்குள் இலங்கைத்தீவு வரும் ஒரு காலகட்டம் என்பதனால் அக்காலப் பகுதியில் தமிழ்மக்கள் ஒப்பீட்டளவில் அதிகரித்த போராட்டங்களை முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும். கடந்த 13 ஆண்டு கால தாயக மற்றும் புலம்பெயர் யதார்த்தம் அதுதான். பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பது இப்பொழுது இலங்கைத்தீவின் மூன்று இனத்தவர்களுக்கும் எதிராகத் திரும்பியிருக்கிறது. அதாவது இலங்கைத்தீவின் மூன்று இனத்தவர்கள் மத்தியிலும் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்களை ஒரு புள்ளியில் சந்திக்க வைக்கும் விவகாரமாக அது காணப்படுகிறது.இவ்வாறு மூன்று இனத்தவர்களையும் ஒன்றாக்கக்கூடிய ஒரு போராட்டத்தை,மக்கள் மயப்படுத்தவில்லை என்று சொன்னால் உலகசமூகத்துக்கு எப்படிப்பட்ட ஒரு செய்தி போய்ச் சேரும் ? http://www.nillanthan.com/5645/
  24. ரணில் வீசிய கொழுக்கி ? - நிலாந்தன் கனடாவில் உள்ள நண்பர் ஒருவர் கேட்டார்….”தாயகத்தில் உள்ள தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று கட்சிகளையே எங்களால் ஒருங்கிணைக்க முடியவில்லை. இந்நிலையில்,புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளையும் நபர்களையும் ஒன்றிணைத்து தாயகத்தில் முதலீடு செய்வது நடக்கக்கூடிய காரியமா ? “என்று. ரணில் விக்ரமசிங்க புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள சில அமைப்புக்கள் மற்றும் நபர்களின் மீது தடையை நீக்கியது தொடர்பில் நான் எழுதிய ஒரு கட்டுரை தொடர்பாகவே அவர் அவ்வாறு கேட்டிருந்தார். நியாமான கேள்வி. தாயகத்தில் ஒரு சிறிய நிலப்பரப்புக்குள்,மிகச்சிறிய சனத்தொகையின் மத்தியில் இயங்கிக் கொண்டிருக்கும் மூன்று கட்சிகளை ஒன்றாக்க முடியவில்லை. ஆனால் புலம்பெயர்ந்த தமிழ்ப் பரப்பு எனப்படுவது உலகம் முழுவதும் பரந்து விரிந்து சிதறிக்கிடக்கிறது. அது வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு மொழிகளைப் பேசுகிறது.வெவ்வேறு பண்பாடுகளில் வெவ்வேறு பொருளாதாரக் கட்டமைப்புகளில் வெவ்வேறு நிலையான பொருளாதார நலன்களோடு காணப்படுகிறது. தாயகத்தை நோக்கிய பிரிவேக்கம் என்ற ஒன்றைத்தவிர வேறு எதுவும் அந்த அமைப்புகளுக்கிடையில் இப்பொழுது பொதுவானதாக இல்லை. கடந்த 13ஆண்டுகளாக ஐக்கியப்பட முடியாத,ஐக்கியப்படுத்த யாருமில்லாத ஒரு புலம்பெயர் சமூகமாக தமிழ் சமூகம் காணப்படுகிறது. கடந்த 13 ஆண்டுகளில் ஐநாவை நோக்கியும் உலகப்பொது மன்றங்களை நோக்கியும் நீதிக்காக அயராது உழைத்த ஒரு சமூகமாகவும்,இலங்கை அரசாங்கத்துக்கு தொடர்ச்சியாக நெருக்கடியைக் கொடுத்த ஒரு சமூகமாகவும் அது காணப்படுகிறது. தாயகத்தில் இருக்கும் கட்சிகளுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் தனிநபர்களுக்கும் நிதியை அள்ளி வழங்கிய காசு காய்க்கும் மரமாகவும் அது காணப்படுகிறது. உலகின் மிகவும் கவர்ச்சியான செயல்திறன்மிக்க ஒரு புலம்பெயர் சமூகமாக அது தன்னை வெளிக்காட்டியிருக்கிறது. ஆனாலும் மிகவும் சிதறிப்போன,கூட்டுச் செயற்பாடு இல்லாத ஒரு புலம்பெயர் சமூகமாகவும் அது தன்னை நிரூபித்திருக்கிறது. கடந்த 13 ஆண்டுகளாக ஜெனீவாவில் பொருத்தமான வெற்றிகளைப் பெறத் தவறியதற்கு அதுவும் ஒரு காரணமா? தாயகத்தில் இயங்கும் கட்சிகளுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் நிதி உதவ புரியும் அதேநேரம் அந்த நிதி உதவிதான் கட்சிகளையும் செயற்பாட்டாளர்களையும் பிரித்து வைத்திருக்கிறது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அந்த நிதி உதவிகளால் தாயகத்தில் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியவில்லை. அல்லது மறுவளமாகச் சொன்னால் புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் எவ்வளவுதான் காசு கொடுத்தாலும் அந்த காசினால் தாயகத்தில் கட்சிகளுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் இடையே ஐக்கியத்தை ஏற்படுத்த முடியவில்லை.இதை இன்னும் கூர்மையாகச் சொன்னால் அவ்வாறு ஐக்கியம் ஏற்படாமைக்கு மேற்படி தனித்தனியான தூர இயக்கி-ரிமோட் கண்ட்ரோல்- உதவியும் ஒரு காரணம் எனலாம். இவ்வாறான கூட்டுச் செயற்பாடற்ற ஒரு புலம்பெயர்ந்த சமூகத்தை நோக்கி இலங்கை அரசாங்கம் கொழுக்கிகளை வீசியிருக்கிறது என்பதே உண்மை. தங்களுக்கிடையே ஒற்றுமைப்படாத ஒரு சமூகம் இந்த கொழுக்கிகளில் சிக்கி உதிரிகளாகத் தன் வலையில் வந்து விழும் என்று அரசாங்கம் சிந்திக்கின்றது. அவ்வாறு சிந்திக்கத்தேவையான கொழுத்த அனுபவம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உண்டு. கடந்த 2015ல் ஆட்சி மாற்றத்தின் பின் அவர் அதைச் செய்தார். அப்பொழுதும் இதே அமைப்புகள்மீதும், நபர்கள் மீதும் தடைகள் நீக்கப்பட்டன. இப்பொழுது இருப்பதைப்போல பொருளாதார நெருக்கடி என்ற விவகாரம் அப்பொழுது இருக்கவில்லை. ஆனால் ஜெனிவாவை கையாள்வது, புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகத்தின் பலத்தை உடைப்பது போன்ற நிகழ்ச்சிநிரல்கள் இருந்தன. அந்த நிகழ்ச்சிநிரலை முன்வைத்து குறிப்பிடத்தக்களவுக்கு ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் முன்நகரக் கூடியதாகவும் இருந்தது. குறிப்பாக ஐநாவில் நிலைமாறு கால நீதியை நோக்கி புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தின் ஒரு பகுதியை ஈர்த்து எடுப்பதில் அரசாங்கம் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேறியிருந்தது. தாயகத்தில் கூட்டமைப்பும் அப்பொழுது அந்த நிகழ்ச்சி நிரலிற்கு உட்பட்டு நிலை மாறுகால நீதியை ஆதரித்தது. இதனால் கூட்டமைப்பு மற்றும் தடை நீக்கப்பட்ட புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் போன்றன இணைந்து நிலைமாறு காலை நீதிக்குரிய நிகழ்ச்சிநிரலை பலப்படுத்தின. இதுவிடயத்தில் தடைநீக்கப்பட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள் சில பெருமளவுக்கு தாம் வாழும் நாடுகளில் உள்ள அரசாங்கங்களின் நிலைமாறு கால நீதிக்கான நிகழ்ச்சி நிரலை அதிகபட்சம் முன்னெடுத்தன. அக்காலகட்டத்தில் புலம்பெயர்ந்த தமிழ்அமைப்புகள் நிலைமாறு கால நீதியா ?அல்லது பரிகார ரீதியா ? என்று ஜெனிவாவில்,தங்களுக்கிடையே பிரிந்துநிற்கும் ஒரு நிலை தோற்றுவிக்கப்பட்டது. அல்லது புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகங்கள் வாழும் நாடுகளில் உள்ள அரசாங்கங்கள் ஐநாவில் முன்னெடுத்த தமிழர் தொடர்பான நிகழ்ச்சிநிரலைப் பெருமளவுக்குப் பிரதிபலித்த தமிழ் அமைப்புகள்,அல்லது பிரதிபலிக்க மறுத்த தமிழ்அமைப்புகள் என்று புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தின் மத்தியில் பல்வேறு நிலைபாடுகள் தோற்றுவிக்கப்பட்டன. இப்பொழுது மறுபடியும் ரணில் ஆட்சிக்கு வந்திருக்கிறார். அவர் தன்னுடைய நல்லாட்சி என்று அழைக்கப்பட்ட ஆட்சி காலத்தில் முன்னெடுத்த அதே நிகழ்ச்சிநிரலை அதாவது தமிழ் புலம்பெயர்ந்த அமைப்புகளின் உதவியோடு ஜெனிவாவைக் கையாள்வது என்ற நிகழ்ச்சிநிரலை முன்னெடுக்கக்கூடும். அதைவிட மேலதிகமாக நாட்டில் இப்பொழுது நிலவும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு புலம்பெயர் தமிழ் முதலீடுகள் என்ற நோக்கு நிலையில் இருந்தும் செயல்பட முடியும். இப்பொழுது வந்திருக்கும் தடைநீக்கம் ரணில் விக்ரமசிங்கவின் முன்னெடுப்பு மட்டுமல்ல. அது ஏற்கனவே கோதாபயவின் காலத்தில் தொடங்கப்பட்டது. ரணில் அதை முடித்து வைத்திருக்கிறார்.கோத்தாவும் ரணிலைப்போல முன்கண்ட இரண்டு நிகழ்ச்சி நிரல்களை மனதில் வைத்திருந்தார். ஒன்று ஜெனிவாவைக் கையாள்வது, இரண்டு பொருளாதார நெருக்கடியைக் கையாள்வது. அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஜெனிவாவைக் கையாள்வது என்பது புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தை பிரித்துக் கையாள்வதன் மூலம்,புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகம் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக அனைத்துலக அரங்கில் முன்னெடுத்து வரும் நீதிக்கான கோரிக்கைகளை பலவீனப்படுத்துவதுதான். தடை நீக்கப்பட்டால் ஒரு தொகுதி புலம்பெயர்ந்த தமிழர்கள் நாட்டிற்குள் வந்து போகும் நிலைமை திறக்கப்படும். அவர்கள் தாயக கள யதார்த்தத்தோடு நெருங்கி உறவாடும் ஒரு நிலைமை தோன்றும். இவ்வாறு தாயகத்துக்கு வந்து போகக்கூடிய வாய்ப்புக்கள் அதிகரிக்கும் பொழுது, அந்த வாய்ப்புகளை எப்படி பாதுகாப்பது என்றுதான் ஒரு தொகுதி புலம்பெயர்ந்த தமிழர்கள் சிந்திப்பார்கள். தாயகத்துக்கு வந்துபோகும் நிலைமைகளைப் பாதுகாப்பது என்பது அதன் தக்கபூர்வ விளைவாக தாயகத்துக்கு வெளியே அரசாங்கத்துக்கு எதிராக செயற்படும் தீவிரத்தை குறைப்பதுதான்.அரசாங்கத்துக்கு எதிராக நீதியைக் கோரும் போராட்டத்தின் தீவிரத்தை குறைப்பதுதான்.எனவே தடை நீக்கத்தின்மூலம் வெளியரங்கில் தனக்கு எதிராகச் செயல்படக்கூடிய தமிழ் அமைப்புகள் மற்றும் நபர்களின் தீவிரத்தை அரசாங்கம் குறைக்க முடியும். இது கடந்த நல்லாட்சி என்று அழைக்கப்பட்ட ஆட்சிக்காலத்திலும் அவதானிக்கப்பட்டது. ஏன் கடந்த சில ஆண்டுகளாகவும் அதைக் காணமுடிகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு ஜெனிவாவில் ஒப்பீட்டுளவில் குறைந்தளவு பக்க நிகழ்வுகளே இடம்பெற்றதாக ஒரு செயற்பாட்டாளர் தெரிவித்தார். அதற்குக் காரணம் பக்க நிகழ்வுகளுக்கு நிதியுதவி புரியும் ஒரு தமிழ் பெருவணிக நிறுவனம் அந்த நிதி உதவியை குறைத்தமைதான் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஏனெனில் அந்த பெருவணிக நிறுவனம் தாயகத்தில் முதலீடுகளை செய்ய தொடங்கிவிட்டது. குறிப்பாக தென்னிலங்கையில் வங்குரோத்தான ஒரு சிங்கள கொம்பனியை அது விலைக்கு வாங்கியிருக்கிறது. தாயகத்தில் தனது முதலீடுகளை பத்திரமாக முன்னெடுப்பதற்கு அந்த நிறுவனம் அரசாங்கத்துக்கு எதிரான அதன் போக்கில் தளர்வுகளை ஏற்படுத்த வேண்டியுள்ளது. அதன் விளைவுதான் கடந்த ஆண்டு பக்க நிகழ்வுகளில் அந்த நிறுவனத்தின் நிதிப் பங்களிப்பு குறைவாக காணப்பட்டமையும் என்று மேற்படி செயற்பாட்டாளர் தெரிவித்தார். இதைத்தான் அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. தடை நீக்கப்பட்ட அமைப்புகளும் நபர்களும் புலம்பெயர்ந்த தமிழ்ப்பரப்பில் அரசாங்கத்துக்கு எதிராக செயல்படும் தீவிரம் குறையும். இது முதலாவது இலக்கு. இரண்டாவது இலக்கு முதலீடு. கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய பொழுது ரணில் விக்கிரமசிங்க “புலம்பெயர் நிதியம்” ஒன்றை உருவாக்குவது தொடர்பாக யோசனையை முன் வைத்துள்ளார். வெளிநாடுகளில் வாழ்கின்ற இலங்கையர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கு ஒருங்கிணைப்பு மையமாக தொழிற்படுகின்ற வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கான அலுவலகமொன்றினை ஸ்தாபிக்கப் போவதாகக் கூறியுள்ளார். அதாவது புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் என்ற பொதுவான ஒரு பதத்தினை அவர் பயன்படுத்துகின்றார். தமிழ் முதலீடு என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை. ஆனால் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தாயகத்தில் முதலீடு செய்யும்பொழுது அதன் இனரீதியான பரிமாணத்தை அகற்றிவிட்டு வெறும் முதலீடாகச் செய்வது சரியா? அல்லது ஒரு தேசமாக சிந்தித்து தாயகத்தில் தமிழ்த் தேசத்தைக் கட்டியெழுப்புவது என்ற அடிப்படையில் முதலீடு செய்வது சரியா? புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் உதிரிகளாக வந்து தாயகத்தில் முதலீடு செய்தால் என்ன நடக்கும் ?அது வழமையான திறந்த சந்தைப் பொருளாதாரக் கட்டமைப்புக்குள் நிகழும் ஒரு முதலீடு என்ற பொருளாதார பரிமாணத்தைத்தான் அதிகமாக கொண்டிருக்கும் .மாறாக அதற்கு தாயகம் நோக்கிய தமிழ்முதலீடு என்ற இனரீதியிலான பரிமாணமும் பண்பாட்டு ரீதியிலான பரிமாணமும் அல்லது தமிழ்த்தேசிய நோக்கு நிலையிலான பரிமாணமும் குறைவாகவே இருக்கும். புலம்பெயர்ந்த தமிழ் முதலீடுகளுக்கு எப்பொழுது தமிழ்த்தேசிய பரிமாணம் அதிகரிக்கிறது என்றால் புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்கள் ஒரு தேசமாக சிந்தித்து முடிவெடுக்கும் போதுதான். ஒரு தேசமாக சிந்திப்பது என்றால் என்ன? ஒரு மிகப்பெரிய மக்கள்திரளாகச் சிந்திப்பதுதான். தாயகத்துக்கு வெளியே அவ்வாறு சிந்திப்பது எப்படி? தாயகத்தில் தமிழ்மக்களை ஒரு பெரிய தேசமாகக் கட்டியெழுப்புவது என்ற அடிப்படையில் முதலிடுவதுதான். அதாவது தாயகத்தில் தேசநிர்மாணத்தின் ஒரு பகுதியாக முதலீடு திட்டமிடப்பட வேண்டும்.மாறாக தனித்தனி வள்ளல்களின் உதவிகளோ,அல்லது தனித்தனி முதலாளிகளின் உதிரியான முதலீடுகளோ,தாயகத்தை கட்டியெழுப்புவது என்ற சமூகப்பொருளாதார அரசியல் பரிமாணத்தை கொண்டிருக்க போவதில்லை. எனவே இப்பொழுது இக்கட்டுரை தொடங்கிய இடத்துக்கே வரலாம். எனது நண்பர் கேட்டது போல புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகம் முதலீட்டை ஒரு கூட்டுச் செயற்பாடாக செய்வதற்கான வாய்ப்புகள் அநேகமாக இல்லை. புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகம் ஒரு தேசமாக சிந்தித்து முதலீடு செய்யப் போவதில்லை என்ற எதிர்பார்ப்பில்தான் அரசாங்கம் இந்தக் கொழுக்கியை வீசியிருக்கிறது. புலம்பெயர்ந்த தமிழ் முதலாளிகள் உதிரிகளாக நாட்டுக்குள் முதலீடு செய்ய வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது. அதாவது ரணில் விக்கிரமசிங்க புலம்பெயர்ந்த தமிழர்களை நோக்கி ஒரு பொறியை வைத்திருக்கிறார் என்று பொருள். அந்தப் பொறிக்குள் தமிழ் நிதி உதிரியாக வந்து சிக்குமா? http://www.nillanthan.com/5633/
  25. ரணில் பலமடைந்து வருகிறாரா? -நிலாந்தன் பயங்கரவாத தடைச் சட்டம் அரகலயவின் மீது பாயத் தொடங்கிவிட்டது. “மனித உரிமைகள் பாதுகாவலர்களான வசந்த முதலிகே, ஹஷான் ஜீவந்த மற்றும் கல்வெவ சிறிதம்மா தேரர் ஆகியோர் இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து நான் மிகவும் கவலையடைகிறேன்.அவர்களை தடுப்புக் காவலில் வைக்கும் உத்தரவில் கையெழுத்திட வேண்டாம் என ஜனாதிபதி ரணிலிடம் கேட்டுக்கொள்கின்றேன், அவ்வாறு செய்வது இலங்கைக்கு இருண்ட நாளாக அமையும்” என்று மேரி லோலர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்திருந்தார். மனித உரிமைகளைப் பாதுகாக்கும் செயற்பாட்டாளர்கள் தொடர்பான ஐநாவின் விசேட அறிக்கையாளர் அவர்.எனினும், அந்த இருண்ட நாளை அவரால் தடுக்க முடியவில்லை. கடந்த 21ஆம் திகதிவரை மொத்தம் 3353பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.இவர்களில் 1255பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். முழு உலகத்தையும் திருப்பி பார்க்க வைத்த அரகலயவின் பிரதான செயற்பாட்டாளர்கள் பயங்கரவாதிகளாக கணிக்கப்படும் ஒரு நிலைமை ஏன் வந்தது?அரசியல் எதிர்ப்பை ஆக்கத்திறனோடு வெளிப்படுத்திய படைப்பாளிகள் குற்றவாளிகளாக வேட்டையாடப்படும் ஒரு நிலைமை ஏன் தோன்றியது? காரணம் அரகலய மீண்டும் தோற்றம் பெறக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை.அரகலயவை உற்பத்தி செய்த பொருளாதார நெருக்கடிகள் தொடர்ந்தும் முற்றாக அகற்றப்படவில்லை.ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்தபின் எரிவாயு எரிபொருள் போன்றன ஒப்பிட்டளவில் கிடைக்க தொடங்கி விட்டன.ஆனால் பொருட்களின் விலைகள் இறங்கவே இல்லை.அரசாங்கம் முட்டையின் விலையை நிர்ணயித்த போதிலும் சந்தையில் முட்டையின் விலை இறங்கவே இல்லை.அரசாங்கத்தின் விலை நிர்ணயங்கள் மக்களை கவரும் நோக்கிலானவை தவிர யதார்த்தமானவை அல்ல என்று வியாபாரிகள் குற்றம் சாட்டுகிறார்கள். மண்ணெண்ணையின் விலை அதிகரித்துவிட்டது.அது விவசாயிகளாலும் கடத்தொழிலாளர்களாலும் தாங்க முடியாத அதிகரிப்பு.எனவே கீழ் மத்தியதரவர்க்கம் மற்றும் ஏழைகளால் நுகரமுடியாத அளவுக்கு விலைகள் உச்சத்தில் நிற்கின்றன.இது மக்களை எப்பொழுதும் தெருவுக்கு கொண்டு வரக்கூடியது. அனைத்துலக நாணயநிதியத்தின் உதவிகள் சீனாவின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான முடிவுகளில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. எனவே மீண்டும் ஆர்ப்பாட்டங்களில் மக்கள் ஈடுபடுவதை தடுப்பதற்கு முன்னணிச் செயற்பாட்டாளர்களை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் உள்ளே போட வேண்டிய தேவை ரணிலுக்கு உண்டு. அதாவது ஆர்ப்பாட்டங்கள் மீண்டும் மீண்டும் தோன்றலாம் என்ற ஆபத்தை அவர் முன்னுணர்கிறார்.இது முதலாவது பிரதான காரணம். இரண்டாவது காரணம் மே ஒன்பதாம் திகதியும் ஜூன் 9ஆம் திகதியும் ஆளுங்கட்சி அரசியல்வாதிகளின் சொத்துக்களையும் வீடுகளையும் தேடித்தேடி எரித்து அழித்தவர்களைப் பழிவாங்குவது.மீண்டும் ஒரு தடவை ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசியல்வாதிகளின் வீடுகளை தாக்கத் துணியாதபடி அவர்களை அச்சுறுத்த வேண்டும்.அதற்காகத்தான் பயங்கரவாத தடைச் சட்டத்தை அவர் உபயோகித்திருக்கிறார்.அதாவது தன்னை பாதுகாத்த 134 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை அவருக்குண்டு. பொருளாதார நெருக்கடியை நீக்கினால் பிரச்சனைகளின் மூலகாரணம் பலவீனமடைந்துவிடும் என்று நம்புகிறார்.பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பது என்று சொன்னால் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும். அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவது என்று சொன்னால் எதிர்க்கட்சிகளையும்,ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடிய மக்களையும் சமாளிக்க வேண்டும்.அதற்கு,சர்வ கட்சி அரசாங்கம் ஒரு கவர்ச்சியான தீர்வு.ஆனால் தந்திரசாலியான ரணிலை நம்பி அரசாங்கத்தில் இணைய எதிர்க்கட்சிகள் தயாரில்லை.இந்த வாரமும் இதுகுறித்து சஜித் பிரேமதாசவோடு ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.ஆனால் சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்க சஜித் அணி தயாராக இல்லை.ரணிலோடு இணைந்தால் அவர் தன்னுடைய அணியைக் விழுங்கி விடுவார் என்று சஜித் பயப்படுகிறார்.வெளியில் இருந்து ஆதரவு தரலாம் என்று சில நாட்களுக்கு முன் நடந்த சந்திப்பில் கூறி இருக்கிறார். ஜேவிபியும் அவ்வாறு சர்வ கட்சி அரசாங்கத்தில் இணைவதற்கு தயார் இல்லை. தமிழ் கட்சிகளும் பெருமளவுக்கு ஒத்துழைக்கும் நிலையில் இல்லை. எனவே ஒரு சர்வகட்சி அரசாங்கத்துக்கான வாய்ப்புக்கள் குறைவாகத்தான் தெரிகின்றன.மாறாக எதிர்த் தரப்பிலிருந்து தனக்கு ஆதரவான ஆட்களை கழட்டி எடுக்கும் வேலையை ரணில் செய்யலாம்.அதை அவர் ஏற்கனவே தொடங்கிவிட்டார்.அது அவருக்குக் கைவந்த கலை.ஆனால் அவ்வாறு உருவாக்கப்படும் ஒரு அரசாங்கம் எதிர்க்கட்சிகளாலோ அல்லது மக்களாலோ ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருக்காது. தாமரை மொட்டுக் கட்சியைப் பாதுகாக்க வேண்டிய தேவை ரணிலுக்கு உண்டு. ரணிலைப் பாதுகாக்க வேண்டிய தேவை தாமரை மொட்டுக்கு உண்டு. எனவே ஒருவர் மற்றவரில் தங்கியிருப்பார்கள்.இது எதுவரை என்று சொன்னால், அடுத்த பெப்ரவரி மாதம் வரையிலும்.ஏனெனில் அடுத்த பெப்ரவரி மாதத்தோடு யாப்பின் பிரகாரம் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ரணிலுக்கு கிடைத்துவிடும்.அவ்வாறு கிடைத்தால் அதற்குப்பின் நடக்கக்கூடிய எந்த ஒரு தேர்தலிலும் தாமரை மொட்டுக்கட்சி இப்பொழுது அனுபவிக்கும் பெரும்பான்மையைப் பெறமுடியுமா என்பது சந்தேகமே.எனவே வரும் பெப்ரவரி மாதத்தோடு தனது பேரம் கீழிறங்கி விடும் என்று தாமரை மொட்டுக் கட்சிக்குத் தெரியும். தன்னுடைய பேரம் அதிகமாகிவிடும் என்று ரணிலுக்கு தெரியும். எனவே அவர் திட்டமிட்டு காய்களை நகர்த்துகிறார். அடுத்த ஆறுமாத காலத்துக்குள் அவர் தன்னை பலப்படுத்த வேண்டும். யூ.என்.பியைப் பலப்படுத்த வேண்டும் என்று சொன்னால் சஜித் பிரேமதாசவை பலவீனப்படுத்த வேண்டும்.ஒன்றில் அவரை வழிக்குக் கொண்டு வர வேண்டும்.அல்லது தோற்கடிக்க வேண்டும். அடுத்த பெப்ரவரி மாதத்திற்கு பின்னரும் அவர் நாடாளுமன்றத்தை கலைப்பாரா என்பது சந்தேகம்தான்.ஏனெனில் அடுத்த பெப்ரவரி மாதத்தின் பின் நாடாளுமன்றம் பெருமளவுக்கு அவருடைய கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.தாமரை மொட்டின் பெரும்பான்மை பெருமளவு அவருக்கு கட்டுப்பட்டது ஆகிவிடும்.அதன்பின் அவர் விரும்பியபடி காய்களை நகர்த்தலாம். இந்த இடைப்பட்ட காலகட்டத்திற்குள் அவர் உள்ளூராட்சி சபை தேர்தல்களையும் மாகாண சபைத் தேர்தல்களையும் நடத்தக்கூடும். தேர்தல் முடிவுகள் தாமரை மொட்டுக்கு பாதமாக அமையும். இப்பொழுது உள்ளூராட்சி மன்றங்கள் பெருமளவுக்கு தாமரை மொட்டின் கட்டுப்பாட்டுக்குள்தான் காணப்படுகின்றன. ஆனால் ஒரு புதிய தேர்தல் நடந்தால் தாமரை மொட்டு அந்த பலத்தை இழக்கக் கூடும்.அதேபோல மாகாண சபைகளுக்கான தேர்தலும் தாமரை மொட்தின் வீழ்ச்சியைக் காட்டக்கூடும்.எனவே புதிய உள்ளூராட்சி மன்றங்களும் புதிய மாகாண சபைகளும் தமது பலவீனத்தை வெளிப்படுத்தலாம் என்ற அச்சம் தாமரை மொட்டுக்கு உண்டு. அதனால்தான் நாடாளுமன்றம் அடுத்த பெப்ரவரி மாதத்தின் பின் கலைக்கப்படுவதை எப்படித் தடுக்கலாம் என்று தாமரை மொட்டுக் கட்சி சிந்திக்கின்றது.ரணில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கும் 22 வது சட்டத் திருத்த வரைபில், 19வது திருத்தத்தில் உள்ளபடி நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைப்பதற்கான கால எல்லையை நாலரை ஆண்டுகளாக மாற்றும் ஏற்பாடு இணைக்கப்படவில்லை.இருபதாவது திருத்தத்தில் உள்ளபடியே 2 1/2 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தைக் கலைக்கலாம் என்று உள்ளது. இது தாமரை மொட்டைத் தன் பிடிக்குள் வைத்திருப்பதற்கு ரணில் செய்யும் தந்திரம் என்று அக்கட்சி நம்புகிறது. அதனால்தான் சுமார் 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றம் கலைக்கப்படும் காலத்தை 19இல் உள்ளதுபோல மாற்றுமாறு அண்மையில் ரணிலுக்கு கடிதம் கொடுத்திருந்தார்கள். அவர்களை சமாளிப்பதற்காக ரணில் இப்போதைக்கு பொது தேர்தல் இல்லை என்று அறிவித்திருக்கிறார். அவர்களை சமாளிப்பது என்பதைத் தவிர, வேறு ஒரு உள்நோக்கமும் அவரிடம் இருக்கலாம்.பெப்ரவரி மாதத்தின்பின் ஒப்பிட்டுளவில் தனக்கு அதிகம் கட்டுப்படும் நாடாளுமன்றத்தை வைத்துக்கொண்டு,தன் எஞ்சிய ஆட்சிக் காலத்தை எப்படிக் கடக்கலாம்,தனது சொந்த கட்சியை எப்படி மீள இணைக்கலாம் என்று அவர் திட்டமிடுவார். ஒரு தேர்தல் நடந்தால் முடிவுகள் தாமரை மொட்டுக்குப் பாதகமாகவும் எதிர்கட்சிகளுக்குச் சாதகமாகவும் அமையக்கூடும். ஆனால் யு.என்.பிக்கு அது எப்படி அமையும் என்று இப்பொழுது கூறுவது கடினம்.ஏனென்றால் யூ.என்.பி.இப்பொழுது இரண்டாக உடைந்து கிடக்கிறது.எனவே நாடாளுமன்ற தேர்தலை நடத்தினால் அது எதிரிகளுக்கு சாதகமாக அமையும் என்று ரணில் அஞ்சுகிறார்.அதனால் அவர் நாடாளுமன்றத்தை கலைக்கவும் ஒரு புதிய தேர்தலை நடத்தவும் தயாராக இருக்க மாட்டார். எனவே கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒரு நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு ரணிலுக்கும் விருப்பமில்லை. வரும் பெப்ரவரி மாதத்தின் பின் தாமரை மொட்டு கட்சியானது அவரில் தங்கி இருக்கும் நிலைமைகள் மேலும் அதிகரிக்கும். அந்த நிலையை அப்படியே பேணியபடி அவர் தன்னுடைய பதவிக்காலத்தை முடிப்பதற்கு இடையில் யு.என்.பியை எப்படிப் பலப்படுத்தலாம் என்று திட்டமிடலாம். எனவே சஜித்தை எப்படி வளைத்தெடுப்பது என்பதே அவர் முன் உள்ள சவால். சஜித்தை வளைத்து எடுத்தால் ரணிலுக்கு இரட்டை லாபம் உண்டு. அதன் மூலம் ஒரு சர்வ கட்சி அரசாங்கத்தை உருவாக்கலாம்.அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டிருப்பதாக சர்வதேச நாணய நிதியத்துக்கு வெளிக்காட்டலாம். இரண்டாவது சஜித்தை தோற்கடித்து விட்டால் அல்லது சஜித்தை வழிக்கு கொண்டு வந்து விட்டால் யூ.என்.பி மீள இணைந்துவிடும். அதன் மூலம் அடுத்த நாடாளுமன்ற தேர்தல், ஜனாதிபதி தேர்தல் போன்றவற்றில் ரணில் முன்னரை விடப் பலமாகக் காணப்படுவார். எனவே இப்பொழுது ரணிலுக்கு உள்ள சவால்,சஜித்தை எப்படி வளைப்பது என்பதுதான். ஒரு புதிய தேர்தலுக்குப் போக அவர் தயாரில்லை. ஏனெனில்,ஜே.வி.பியின் தலைவர் அனுர குமார கேட்பது போல “134 எம்பிக்களா?அல்லது மக்களா?” என்ற கேள்விக்கு விடை கிடைக்கக்கூடிய ஒரு தேர்தலை நடத்த அவர் துணிய மாட்டார்? http://www.nillanthan.com/5624/
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.