Jump to content

Search the Community

Showing results for tags 'புருஜோத்தமன் தங்கமயில்'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • வலைப்போக்கன் கிருபன்'s செயற்கை நுண்ணறிவு உருவாக்கி
  • Ahal Media Network's Topics

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's சிறப்பு ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணக்கட்டுகள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's திரட்டுகள்
  • Home Appliances Spot's Home Appliances

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

  1. தமிழ்க் கட்சிகள் தமிழ் மக்களைத் தோற்கடிக்கக் கூடாது புருஜோத்தமன் தங்கமயில் அமையும் சந்தர்ப்பங்களை வெற்றிகரமாகக் கையாளும் சமூகமே, அரசியல் வெற்றியை சுவைக்கும்; இலக்குகளை அடையும். மாறாக, அமையும் சந்தர்ப்பங்களை கையாளத் தெரியாமல், தொடர்ச்சியாகப் பின்னடைவைச் சந்திக்கும் சமூகம், பெரும் தோல்வியின் அடையாளமாக மாறும். தமிழ் மக்களும் தமிழ்த் தேசிய அரசியலும், இன்றைக்கு தோல்வியின் அடையாளமாக நோக்கப்படுவதற்கு, சந்தர்ப்பங்களைக் கையாளத் தெரியாத, தூரநோக்கற்ற, குறுகிய சுயநல அரசியலே பிரதான காரணம் எனலாம். இலங்கை, உள்ளூரிலும் சர்வதேச ரீதியிலும் இன்று சந்தித்து நிற்கின்ற பொருளாதார - இராஜதந்திர நெருக்கடிகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கான அவசரத்தைக் காட்டுகின்றது. அதற்காக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தன்னுடைய படை பட்டாளத்தோடு களத்தில் இறங்கியிருக்கிறார். உள்ளூரில் ராஜபக்‌ஷர்களோடு கூட்டு அமைத்திருக்கின்ற ரணில், சர்வதேச நெருக்கடிகளை நீக்குவதற்காக எரிக் சொல்ஹெய்ம் போன்றவர்களை அழைத்து வந்திருக்கிறார். கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை வெற்றிகரமாகக் கையாள்வது மாத்திரமன்றி, சந்தர்ப்பங்களை உருவாக்கி, அதிலும் வெற்றிபெறுவதற்காக அவர் இயங்கிக் கொண்டிருக்கின்றார். அதன்போக்கில்தான், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு, அடுத்த சுதந்திர தினத்துக்கு முன்னர் தீர்வைக் காண்பது என்கிற பொறியையும் அவர் வைத்திருக்கின்றார். ரணில் வைத்திருக்கின்ற பொறியில் சிக்கிக் கொள்ளாமல், தமிழ் மக்களுக்கான அரசியல் வெற்றியை எவ்வாறு அடைவது என்பது தொடர்பில் சிந்திப்பதுதான் தமிழ்த் தேசிய கட்சிகள் முன்னாலுள்ள ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும். ஆனால், தமிழ்த் தேசிய கட்சிகளும் அதன் தலைவர்களும், தமிழ் மக்களுக்கான அரசியல் வெற்றி என்கிற புள்ளியைப் புறந்தள்ளிவிட்டு, தனிப்பட்ட தங்களின் பதவி வெ(ற்)றிக்காக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த பொதுத் தேர்தலில், தமிழ்த் தேசிய கட்சிகள் மூன்று அணிகளாகப் பிரிந்து நின்று போட்டியிட்டன. அதனால், தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சக்திகளின் வெற்றி, வடக்கு - கிழக்கில் என்றைக்கும் இல்லாதளவுக்கு அதிகரிக்கக் காரணமானது. யாழ்ப்பாணத்தில் அங்கஜனின் பெரு வெற்றியும், சுமார் 3,000 விருப்பு வாக்குகளைப் பெற்ற திலீபன், வன்னி மாவட்டத்திலிருந்து ஈ.பி.டி.பி சார்பில் வெற்றி பெறுவதற்கும், அம்பாறையில் கிடைக்க வேண்டிய ஓர் ஆசனமும் கருணாவிடம் காவு கொடுக்கப்படவும் தமிழ்த் தேசிய கட்சிகளின் முரண்பாடுகள் காரணமாகின. இந்த முரண்பாடுகள் கொள்கை, கோட்பாடுகள் சார்ந்து எழுந்ததல்ல; மாறாக, தமிழ்த் தேசிய கட்சிகளுக்குள் ‘நான் பெரிதா, நீ பெரிதா’ என்கிற இழுபறியாலும் சுயநல போக்காலும் ஏற்பட்டது. இப்போது, தமிழ்த் தேசிய கட்சிகளை ஓர் அணியாகப் பேச்சுவார்த்தை மேடைக்கு வருமாறு ரணில் வலையை விரித்திருக்கின்றார். அவர் விரித்திருக்கும் வலை, கிட்டத்தட்ட ‘மாயவலை’. சர்வதேச ரீதியில் இலங்கையை நெருக்கடிகளில் இருந்து மீட்பதோடு, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தன்னுடைய வெற்றியை உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கங்களைக் கொண்டது. குறிப்பாக, தமிழ் மக்களின் வாக்குகள் ஒட்டுமொத்தமாக தனக்கு எதிராகக் களத்தில் நிற்கவுள்ள சஜித்துக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளதால், அதை இல்லாமல் செய்வதற்கான நோக்கத்திலானதாகும். 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில், தமிழ் மக்கள் தேர்தல் வாக்களிப்பை புறக்கணித்ததால், ஒரு இலட்சத்து எண்பதாயிரம் வாக்குகளால் அவர் ராஜபக்‌ஷவிடம் வெற்றியைப் பறிகொடுத்தார். தமிழ் மக்கள் அப்போது வாக்களித்திருந்தால், அந்த வாக்குகளில் 90 சதவீதமானவை ரணிலுக்கே கிடைத்திருக்கும். ஆனால், இப்போது நிலைமை அப்படியல்ல; ரணில் - ராஜபக்‌ஷர்களின் கூட்டு. அதனால், ரணிலுக்கு எதிரான வேட்பாளரை நோக்கியே, தமிழ் மக்கள் நகர்வார்கள். அந்த நகர்வில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும். அப்படியான நிலையில், கூட்டமைப்பை உடைத்து, பல கோணங்களில் சிதற வைப்பது என்பது, தமிழ் மக்களின் வாக்குகளை ஓரணியில் திரள்வதைத் தடுப்பதற்கான உத்தி என ரணில் நினைக்கிறார். அதனால்தான், தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போது, தனக்கு வாக்களித்தவர்கள் யார் யார் என்பதெல்லாம் தனக்குத் தெரியும் என்று, கூட்டமைப்புடனான சந்திப்பில் ரணில் கூறவும் செய்தார். கூட்டமைப்பு பலம் பெறுவதையோ, தமிழ்த் தேசிய கட்சிகள் ஓரணியில் திரள்வதையோ, தென்இலங்கையின் எந்தச் சக்தியும் எந்தக் காலத்திலும் விரும்பாது. ரணிலும் அதே புள்ளியில் நின்றுதான் விடயங்களைக் கையாள்கிறார். ஆனால், இந்த வெளிப்படையான சதி வலையில் சிக்காமல், விலகி நின்று, தமிழ் மக்களின் இறைமையையும் உரிமையையும் காக்க வேண்டிய பொறுப்புடையனவாக இருக்கும் தமிழ்த் தேசிய கட்சிகள், தங்களின் தனிப்பட்ட தேர்தல் இலாபநட்டக் கணக்கை பார்க்கத் தொடங்கி விட்டன. எதிர்வரும் ஆண்டு முதல் காலண்டுக்குள், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெற இருக்கின்றது. அதன், பின்னராக வரப்போகும் மாகாண சபைத் தேர்தல்கள், பொதுத் தேர்தலுக்கான பரீட்சார்த்த களமாக இருக்கும். ஏனெனில், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு அனுப்பப்பட்ட ராஜபக்‌ஷர்கள், 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தங்களது மீள்வருகையைப் பதிவு செய்தனர். தென்இலங்கை பூராவும் ராஜபக்‌ஷர்களுக்கான வெற்றி பறைசாற்றப்பட்டது. அந்தத் தேர்தலில் வடக்கு - கிழக்கில், கூட்டமைப்பு முதல் முதலாக பெரும் பின்னடைவைச் சந்தித்தது. அது, கடந்த பொதுத் தேர்தலில் பெருவாரியாக பிரதிபலிக்கவும் செய்தது. 16 பாராளுமன்ற உறுப்பினர்களோடு இருந்த கூட்டமைப்பு, 10 உறுப்பினர்களுக்குள் சுருங்கியது. தமிழரசுக் கட்சியின் தலைவர், செயலாளர் உள்ளிட்டவர்கள் தோற்றும் போனார்கள். அப்படியான நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் என்பது, தமிழ் மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் களம். அந்தக் களத்தை சாதகமாகக் கையாள வேண்டும் என்பது ஒவ்வொரு தேர்தல் மையக் கட்சியினதும் இலக்காக இருக்கும். இது, அடிப்படையில் தவறும் இல்லை. ஆனால், இந்தத் தேர்தல் களத்தில் வெற்றி காண்பதற்காக, மிக முக்கியமான பேச்சுவார்த்தைக் கட்டத்தை வைத்து, கேலிக்கூத்து நாடகத்தை தமிழ்த் தேசிய கட்சிகள் ஆடுகின்றன. அரசுக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை திகதிகளை திட்டமிடும் சந்திப்புக்கான அழைப்பை ஜனாதிபதி விடுத்தால், அந்தக் கூட்டத்தில் தங்களால் பங்கெடுக்க முடியாது என்றதும், அதில் குறு அரசியல் செய்ய சி.வி விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்கள் முயல்கிறார்கள். யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்னமும் தமிழ்த் தேசிய கட்சிகளின் மூத்த தலைவர் இரா. சம்பந்தன்தான். அவரை முன்னிறுத்தித்தான் பேச்சுவார்த்தை மேடையில் எந்தத் தமிழ்த் தேசிய கட்சியாக இருந்தாலும் அமர வேண்டும். அதனால்தான், தமிழ்த் தேசிய முன்னணி, பல்வேறு காரணங்களைச் சொல்லி அதனை ஆரம்பத்திலேயே தவிர்த்துவிட்டது. சம்பந்தன் முன்னிலை வகிக்கும் தரப்பில், எம்.ஏ சுமந்திரன் மிக முக்கிய இடத்தைப் பிடிப்பார். ஏனெனில், தந்தை செல்வாவின் மனச்சாட்சியாக இருந்த அமிர்தலிங்கம் மாதிரி, இன்றைக்கு சம்பந்தனின் குரலாக சுமந்திரனே ஒலிக்கின்றார். சுமந்திரன் இல்லாமல் சம்பந்தன் எந்தச் சந்திப்பிலும் கலந்து கொள்வதில்லை. பங்காளிக் கட்சித் தலைவர்கள் சந்திக்க விரும்பினாலும் கூட, “சுமந்திரனையும் அழைக்கவா” என்று அவர் கேட்கும் நிலையில் இருக்கிறார். ஏனெனில், அவரது உடல்நிலை தளர்வடைந்துவிட்டது. அவர் என்ன பேசுகிறார் என்பது, பல தருணங்களில் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கே விளங்குவதில்லை. அதனால், சம்பந்தனின் குரலாக அங்கு சுமந்திரன் அவசியமாகிறார். அது, சுமந்திரனுக்கான முக்கியத்துவத்தை உருவாக்கிவிட்டது. அதனால்தான், பேச்சுவர்த்தைக்கான திகதிகளை, முன்னேற்பாடுகளை தீர்மானிக்கும் சந்திப்புக்கு, தங்களை நேரடியாக அழைக்காமல் சுமந்திரன் ஊடாக அழைத்ததால், விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள் பங்கெடுக்கவில்லை. அதில், அதிகமானவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்தது முக்கிய காரணம். இவ்வாறான சூழலில், ரணிலுடன் சம்பந்தனும் சுமந்திரனும் சந்திப்பதானது, தங்களுக்கான முக்கியத்துவத்தை குறைக்கின்றது என்று எண்ணியதும், பேச்சுவார்த்தைக்கான விடயத்தில் சுமந்திரனை முன்னிறுத்தக்கூடாது என்ற சாரப்பட ரணிலுக்கு விக்னேஸ்வரன் கடிதம் எழுதுகிறார். உண்மையில் இந்தக் கடிதம், தென் இலங்கையில் கொண்டாட்டங்களை வரவழைக்கக்கூடியது. இருக்கின்ற 13 தமிழ்த் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்குள் பல பிரிவுகள்; இவர்கள் எந்த இடத்திலும் ஓரணியில் வரமாட்டார்கள்; அதனால், பேச்சுவார்த்தை மேடையில் ஏதுவும் நிகழாது; சர்வதேசத்துக்கு தமிழ் மக்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த மாதிரி காட்டியும் ஆகிவிட்டது; அது சாத்தியமான அடைவுகளை அடையாது விட்டமைக்கு, தமிழ்த் தேசிய கட்சிகளின் இழுபறியை காரணம்காட்டியும் ஆகிவிட்டது என்று விடயத்தை முடித்துவிடுவார்கள். அதற்கான ஏற்பாடுகளைத்தான், தமிழ்த் தேசிய கட்சிகளின் தூரநோக்கற்ற தலைவர்கள் இன்றைக்கு செய்து கொண்டிருக்கிறார்கள். இது, தமிழ்த் தேசிய போராட்டத்தை இன்னும் பலமாக தோற்கடிக்கவே செய்யும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்க்-கட்சிகள்-தமிழ்-மக்களைத்-தோற்கடிக்கக்-கூடாது/91-309879
  2. சொல்ஹெய்மின் மீள்வருகை: தமிழ்த் தரப்புக்கான பொறி புருஜோத்தமன் தங்கமயில் இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், அடிக்கடி கொழும்பு வந்து இராஜதந்திர ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புகளை நடத்திச் செல்கின்றார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தமிழ்த் தேசிய கூட்டமைபின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்டவர்களை, கடந்த சில நாள்களுக்கு முன்னரும் சந்தித்துச் சென்றிருக்கின்றார். இந்தச் சந்திப்புகள் அனைத்திலும், அண்மையில் நடைபெற்ற சர்வகட்சித் தலைவர்கள் மாநாட்டில் உரையாடப்பட்ட, இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயங்கள் பற்றிப் பேசப்பட்டிருக்கின்றன. எதிர்வரும் சுதந்திர தினத்துக்கு முன்னராக, இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்பட வேண்டும் என்கிற அவசரத்தை ரணில் காட்டுகின்றார். சுதந்திரத்துக்கு முந்தைய இலங்கையில் தோன்றிவிட்ட தமிழர் அரசியல் பிரச்சினைக்கு, சுமார் இரண்டு மாத கால இடைவெளிக்குள் தீர்வு காண்பது என்பது, நடக்கக் கூடிய காரியமல்ல! அப்படியான நிலையில், ரணில் காட்டும் அவசரத்துக்குப் பின்னாலுள்ள சூட்சுமங்களை அவதானிப்பது, பாதிக்கப்பட்ட தரப்பின் பிரதிநிதிகளாக பேச்சுவார்த்தை மேடைகளிலும் இராஜதந்திர ஊடாட்டங்களிலும் அமரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்த் தேசிய தரப்புக்களுக்கு முக்கியமானது. சம்பந்தனுக்கும் சொல்ஹெய்முக்கும் இடையிலான சந்திப்பு, திங்கட்கிழமை (19) இடம்பெற்று சில மணி நேரங்களிலேயே, தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்களை சந்திப்புக்கு வருமாறு ரணில் அழைத்தார். அதன் பிரகாரம், நேற்று புதன்கிழமை மாலை அந்தச் சந்திப்பு இடம்பெற்றிருக்கின்றது. சம்பந்தன், எம்.ஏ சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்டோர் அதில் கலந்து கொண்டனர். சி.வி விக்னேஸ்வரனும், செல்வம் அடைக்கலநாதனும் கொழும்பில் இல்லாத காரணத்தால் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அவரது கட்சியும் வழக்கமாக பேச்சுகளை புறக்கணிப்பதால், அவர்கள் இந்தச் சந்திப்புக்கு அழைக்கப்பட்டார்களா இல்லை என்பது தெளிவில்லை. ஆனால், அவர்கள் கலந்து கொள்ளவில்லை. ஜனாதிபதியாக ரணில் பதவியேற்றதும், இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவரான எரிக் சொல்ஹெய்மை, காலநிலை தொடர்பான தனது சர்வதேச ஆலோசகராக அவர் நியமித்தார். இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் முறிந்துவிட்ட பின்னர், சொல்ஹெய்ம் நோர்வேயில் சில காலம் அமைச்சராகப் பணியாற்றினார். பின்னரான நாள்களில் அவர், இந்தியாவை முன்னிறுத்திக் கொண்டு சுற்றுச்சசூழல் பாதுகாப்பு, காலநிலை அவதானிப்பு தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தார். அவர், இப்போது தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் ஆலோசகர் பொறுப்பிலும் இருக்கிறார். அப்படியான நிலையில்தான், ரணில் மீண்டும் பதவிக்கு வந்ததும் சொல்ஹெய்முக்கு ஆலோசகர் பொறுப்பொன்றை வழங்கி, இலங்கை விவகாரங்களில் நேரடியாகப் பங்கெடுப்பதற்கான முக்கியஸ்தாராக அழைத்திருக்கின்றார். தென் இலங்கையின் அரசியல் பிடுங்குப்பாடுகளில் சிக்காமல் இருப்பதற்காகவே, சொல்ஹெய்முக்கு ‘காலநிலை தொடர்பான சர்வதேச ஆலோசகர் பதவி’ என்கிற பெயரில் ஒரு பதவி வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால், அவரின் உண்மையான பணி அல்லது அவசியம் என்பது, சர்வதேச ரீதியில் இலங்கை இன்று சந்தித்து நிற்கும் நெருக்கடிகளில் இருந்து மீட்டெடுப்பதாகும். அதன்போக்கில், தமிழர் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு என்கிற விடயம் முக்கியமாகக் கருதப்பட்டு, அவை தொடர்பிலான பேச்சுகள் மீள ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றன. சொல்ஹெய்ம், தனக்கு வழங்கப்பட்ட தூதுவர் பொறுப்பை அனைத்துக் காலங்களிலும், அந்தப் பொறுப்பை வழங்கிய தரப்புகளுக்கு சாதகமாக முடித்துக் கொடுத்திருக்கின்றார். அதனால்தான், புதிய பதவிப் பெயரோடு, மீண்டும் சொல்ஹெய்மை ரணில் அழைத்து வந்திருக்கின்றார். காலநிலை தொடர்பான ஆலோசகராக ரணிலால் சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டாலும், அது தொடர்பிலான எந்தச் செயற்பாட்டிலும் அவர் இலங்கை தொடர்பில் ஈடுபடவில்லை. மாறாக, இலங்கை வந்த அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலேயே அவர் கவனம் செலுத்தியிருக்கின்றார். காலநிலை மாற்றங்கள், சுற்றுச்சூழல் மாசுபாட்டால் நாடுகளுக்கு இடையில் பிணக்குகள் ஏற்பட்டு பிளவுகள் ஏற்படுவதுண்டு. அப்படியான பிணக்குகளை சுற்றுச் சூழலியலாளர்களும் இராஜதந்திரகளும் பேச்சுவார்த்தைகளை நடத்தி முடித்துக் கொள்வது உலக வழக்கம்தான். ஆனால், இலங்கையின் இனமுரண்பாடு என்பது, சுற்றுச்சூழலியலாளர்கள் தீர்த்து வைக்கும் அளவுக்கானது அல்ல. அது, பௌத்த சிங்கள மேலாதிக்கக்க அடக்குமுறைகளால் எழுந்தது. அதைக் கையாள்வது என்பது, இலகுவான ஒன்றுமல்ல. ஏனெனில், இலங்கையில் ஆட்சி அதிகாரங்களை அடைவதற்கான ஒற்றை வழி, பௌத்த சிங்கள மேலாதிக்க சிந்தனையின் வழியாக இயங்குவதும், இயக்குவதுமாகும். அப்படியான நிலையில், அந்த மனநிலையை மாற்றாமல், முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பது என்பது நடக்கக் கூடிய காரியமல்ல. அப்படியான நிலையில், சொல்ஹெய்மின் மீள்வருகையை ‘கண்ணில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு’ கவனித்தாக வேண்டும். சொல்ஹெய்ம் நோர்வேயில் இருந்து கொழும்புக்கு வரும் வழியிலோ, அல்லது திரும்பிச் செல்லும் போதே புதுடெல்லியில் தங்கி, இந்திய இராஜதந்திரிகளைச் சந்திப்பது வழக்கமான செயற்பாடு. இது, இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இடம்பெற்ற காலத்திலேயே வழக்கம். அப்படியான நிலையில், சொல்ஹெய்மின் மீள் வருகை என்பது புதுடெல்லியின் ஆசிர்வாதம் இல்லாமல் ரணிலால் நிகழ்த்தப்பட்ட ஒன்றாகவும் கருத வேண்டியதில்லை. சொல்ஹெய்ம், புதுடெல்லியை தன்னுடைய இன்னொரு வாழ்விடம் மாதிரியே கையாண்டு வருகின்றார். அவருக்கு புதுடெல்லியின் இராதஜந்திர தரப்புகளோடு இருக்கும் இணக்கமும் நெருக்கமும், இங்குள்ள எந்த தமிழ்த் தேசிய கட்சிகளுக்கும் இல்லை. தமிழ்க் கட்சிகளால் இராஜதந்திர ரீதியாக இந்தியாவின் முக்கிய தரப்புகளை கையாள முடியவில்லை. அந்த இடங்களில் எல்லாம், சொல்ஹெய்ம் மிக நெருக்கத்தோடு இயங்குபவர். எப்போதுமே, இலகுவாக கையாளக் கூடிய தரப்புகளை, அதாவது அடிமை சேவகம் செய்யக்கூடிய தரப்புகளை இராதந்திர கட்டமைப்பு, கடைநிலையில் வைத்தே அணுகும். முக்கிய தீர்மானங்களை எல்லாம் எடுத்துவிட்டு, அதனை செய்வதற்கான ஏவல் தரப்புகளாக மட்டுமே கையாள நினைக்கும். அப்படியான நிலையில், தமிழ்க் கட்சிகளின் புதுடெல்லியுடனான உறவு என்பது, பெரும்பாலும் ஏஜமானுக்கும் ஏவலாளிக்கும் இடையிலானது பொன்றதே! அதனாலும், சொல்ஹெய்மின் நடவடிக்கைகளை கவனிக்க வேண்டியது தவிர்க்க முடியாதது. இந்தியப் புலனாய்வுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர், இரகசியமாக ரணிலை சந்தித்துச் சென்ற விடயம் கொழும்பில் புகைந்து கொண்டிருக்கின்றது. பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவுகளைச் சந்திக்காத ஒரு சூழல் நிலவுமாக இருந்தால், இந்தியா புலனாய்வுத்துறை அதிகாரியின் வருகையை தென் இலங்கை பெரிய விடயமாக்கி ரணிலை அலைக்கழித்திருக்கும். ஆனால், தற்போதைய நெருக்கடி நிலைமை, தென் இலங்கை கட்சிகளையும், பௌத்த சிங்கள மேலாதிக்க தரப்புகளை எல்லாம் வாயை மூடிக்கொண்டிருக்க வைத்திருக்கின்றன. நாடு இன்று சந்தித்திருக்கின்ற நெருக்கடிகளில் இருந்து, எப்படியாவது மீள வேண்டும் என்பது தென் இலங்கையின் எதிர்பார்ப்பு. அதற்காக ரணிலின் அனைத்து நகர்வுகளையும் ஆமோதித்து அமைதியாக இருக்கின்றன. அதனை தன்னுடைய அரசியல் வெற்றிகளுக்காகவும் ரணில் கையாள முனைகின்றார். அடுத்த ஆண்டு முதல் தொடர்ச்சியான தேர்தல்களை, நாடு எதிர்கொள்ளப் போகின்றது. தென் இலங்கையின் உணர்நிலை, ராஜபக்ஷர்களுக்கும் ரணிலுக்கும் எதிரானதாகவே இப்போது இருக்கின்றது. அதனால், அதனை மாற்றுவதற்கான உத்திகளின் போக்கிலும், சொல்ஹெய்மைக் கொண்டு விடயங்களை ரணில் கையாள நினைக்கின்றார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷர்களின் ஆதரவோடு ரணில் போட்டியிடுவார். ஆனால், அந்த ஆதரவு நிலை, அவருக்கு வெற்றியை பெற்றுக்கொடுக்க போதுமானதாக இருக்காது. எப்படியும், சஜித் அவரின் வெற்றியை தென் இலங்கை வாக்குகளைக் கொண்டு தடுப்பார். அந்த வாக்குகளோடு, வடக்கு கிழக்கு மக்களின் வாக்கும் இணைந்தால் சஜித் இலகுவாக வென்றுவிடுவார். அந்த நிலையை உணர்ந்து கொண்டுதான், வடக்கு கிழக்கு வாக்குகளை கணிசமாக கவர்ந்திழுக்கும் நோக்கில், இரண்டு மாதங்களுக்கு தீர்வு என்ற விடயத்தை ரணில் கையாளத் தொடங்கி இருக்கின்றார். அதன்மூலம், தமிழ்த் தரப்புகளை முழுமையாக தன் பக்கத்துக்கு நகர்த்த முடியாவிட்டாலும், பகுதி பகுதிகளாக உடைத்து விடவாவது முடியும் என்பது அவரது எதிர்பார்ப்பு. தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு, தான் பதவியேற்ற குறுகிய காலத்துக்குள்ளேயே தீர்வை வழங்கிவிட்டேன் என்ற பிம்பத்தை நிறுவி, மேற்குநாடுகளை இலகுவாக கையாள ரணில் இன்னொரு பக்கம் முனைகிறார். அதன் மூலம் பொருளாதார பின்னடைவுகளில் இருந்து உதவிகளைப் பெற்று விடுபட முடியும். தென் இலங்கை இப்போது எதிர்பார்ப்பது பொருளாதார பின்னடைவில் இருந்து மீட்பதற்கான ஒரு மீட்பரையே! அப்படியான நிலையில், தமிழர்களுக்கு தீர்வு என்ற ஒரு கல்லைக் கொண்டு, இரண்டு மூன்று காய்களை அடிக்க நினைக்கிறார் ரணில். அவரின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றவே சொல்ஹெய்ம் வந்திருக்கிறார். இதைப் புரிந்து கொண்டு கவனமாகச் செயற்பட வேண்டியது, பொறுப்புள்ள தமிழ்த் தரப்புகளின் முதல் வேலை. இதைப் புறந்தள்ளிவிட்டு நின்று, தமிழ் மக்களின் தலைகளில் அழுகிய மூட்டைகளை ஏற்றிவைக்கக் கூடாது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சொல்ஹெய்மின்-மீள்வருகை-தமிழ்த்-தரப்புக்கான-பொறி/91-309870
  3. ரணிலின் பிரித்தாளும் அரசியலை தாண்டுமா தமிழ்க் கட்சிகள்? புருஜோத்தமன் தங்கமயில் இரண்டாயிரங்களின் ஆரம்பத்தில் ஆயுதப்போர் முனையில் வெற்றி முகத்தோடு இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளை, சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து வந்து, ஆழ ஊடுருவி அழிப்பதற்கான விதைகளைப் போட்டவர் ரணில் விக்கிரமசிங்க. ‘கருணா அம்மான்’ என்கிற புலிகளின் கிழக்கு தளபதியை பிரித்தெடுத்து, இராணுவ பலத்தை சிதைத்ததுடன், சர்வதேச ரீதியில் புலிகளுக்கு எதிரான தடைகளை வெற்றிகரமாக நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான வேலைகளையும் செய்திருந்தார். புலிகளை இராணுவ மற்றும் இராஜதந்திர ரீதியில் தோற்கடிப்பதற்காக ரணில் போட்ட பாதையில்தான், அவருக்குப் பின்னர் வந்த ராஜபக்‌ஷர்கள் பயணித்து 2009இல் வென்றார்கள். ரணில் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம், எப்படிக் கையாள்வது என்பதில் கவனமாக இருப்பவர். அதற்காக தயவுதாட்சண்யங்கள் இன்றி, அரசியல் சதுரங்கத்தை ஆடுபவர். பொதுவாகவே, ஆட்சி அதிகாரங்களைக் குறிவைக்கும் அரசியல்வாதிகள், காரியம் நடக்க வேண்டுமென்றால் யார் கால்களை வேண்டுமானாலும் பிடிப்பார்கள். அதுபோல, கணநேரத்தில் குப்புறத் தள்ளி, முதுகில் குத்தவும் தயங்க மாட்டார்கள். ஆனால், ரணில் சற்று வேறுபாடானவர். அதிக நேரங்களில் தோளில் கைபோட்டு, நட்போடு அணுகியே, எதிரிகளை வீழ்த்துபவர். அதனால்தான் அவரை ‘பசுந்தோல் போர்த்திய புலி’ என்பார்கள். ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக நாடே வீதிக்கு இறங்கிப் போராடிபோது, ஒரு கட்டம் வரையில், போராட்டங்களை ரணில் ஆதரித்து வந்தார். ராஜபக்‌ஷர்களிடம் இருந்து அதிகாரத்தை அவர் பெற்ற புள்ளியில் இருந்து, போராட்டங்களை மட்டுமல்ல, அவருக்கு எதிரான அரசியல் சக்திகளையும் அழிப்பதற்கான வாய்ப்புகளை, ஒவ்வொன்றாகப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார். ராஜபக்‌ஷர்களில் தனக்கு அச்சுறுத்தலான பசில் ராஜபக்‌ஷ தொடங்கி, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஈறாக, தன்னுடைய அரசியல் எதிரிகளை ரணில் குறிவைத்து பந்தாடத் தொடங்கியிருக்கிறார். அவரின் எதிரிகள் பட்டியலில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றது. 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ராஜபக்‌ஷர்களை எப்படியாவது வீழ்த்தியாக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் எல்லாமும் ஓரணியில் இணைந்தார்கள். அப்போது, ரணிலுக்குப் பதிலாக மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக முன்னிறுத்தும் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், அந்த முடிவுக்கு ரணில் ஆரம்பத்தில் இணங்கவில்லை. ஆனால், அவரின் முடிவை மாற்றியது இரா. சம்பந்தனும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலமும்தான். “...நீங்கள் ஜனாதிபதி வேட்பாளரானால் ராஜபக்‌ஷர்கள் இலகுவாக வென்றுவிடுவார்கள். ஆகவே, ராஜபக்‌ஷர்களோடு இருந்த மைத்திரியை பொதுவேட்பாளராக்கினால் தென் இலங்கை கிராமங்களின் வாக்குகளைக் கவர்வது இலகுவானது. அது வெற்றிக்கு முக்கியமானது. அப்படியான நிலையில், நீங்கள் போட்டியிடுவது சாத்தியமில்லாதது...” என்று ரணிலை விலக வைத்தவர் சம்பந்தன். அப்போது சந்திரிகா குமாரதுங்கவும் மங்கள சமரவீரவும், ரணிலை சமரசப்படுத்துவதற்காக சம்பந்தனையும் கூட்டமைப்பின் பலத்தையும் நம்பியிருந்தார்கள். ஆனால், கூட்டமைப்பு தனக்குள் பிளவுட்டு, பலமிழந்த புள்ளியில் இன்று நிற்கும்போது, இன்னும் இன்னும் பலவீனப்படுத்தும் வேலைகளைச் செய்வதில் ரணில் கவனமாக இருக்கிறார். ஏனெனில், ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக வீதியில் இறங்கி போராடிய மக்களின் கோரிக்கைகளுக்கு எதிராக, குறிப்பாக மக்கள் ஆணைக்கு எதிராக, ஜனநாயக படுகொலை செய்துகொண்டு, ரணில் ஆட்சிபீடம் ஏறினார் என்பது கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாக இருந்தது. அது, பாராளுமன்றத்துக்குள் இடம்பெற்ற ஜனாதிபதி தெரிவு வாக்கெடுப்பின் போதும் தாக்கம் செலுத்தும் சூழ்நிலை உருவானது. அதனால்தான், கூட்டமைப்பை பலவீனப்படுத்தும் அவசரம் அவருக்கு ஏற்பட்டது. டளஸ் அழகப்பெருமவை ஆதரிப்பது என்று கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்த போதிலும், அந்த முடிவுக்கு எதிராக குறைந்தது ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவாக வாக்களித்து இருக்கிறார்கள். அதனை, ரணிலே கூட்டமைப்புடனான சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார். இன்றைக்கு கூட்டமைப்புக்குள் பிளவு மேலும் அதிகரித்திருப்பதற்கு ரணில், தன்னுடைய கரங்களை நீட்டிக் கொண்டிருப்பது காரணமாகும். தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தின் மீதான அதிருப்தியை, தமிழ் மக்கள் கடந்த பொதுத் தேர்தலின் போது கணிசமாக வெளிப்படுத்தினார்கள். அதனால், கூட்டமைப்பிலுள்ள பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு, வீட்டுச் சின்னத்தின் மீதான தங்கியிருந்தல் தொடர்பிலான அணுகுமுறை குறிப்பிட்டளவு மாறிவிட்டது. கூட்டமைப்புக்கு மாற்றாக குறிப்பாக, தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் தங்கியிருப்பதற்கு மாற்றாக, பொதுக் கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில் அவர்கள் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். அந்தப் புள்ளியை ரணில் விக்கிரமசிங்க பிடித்துக் கொண்டிருக்கிறார். அதன் மூலம், தமிழ்த் தேசிய அரசியலில் இன்றளவும் முதன்மைக் கட்சியாக இருக்கும் கூட்டமைப்பை பிளவுபடுத்தி, தனக்கு சார்பான கட்டமைப்பொன்றை பேண முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருக்கிறார். சம்பந்தனும் எம்.ஏ சுமந்திரனும், ரணிலின் முடிவுகளை ஆதரித்த சமயங்களில் அவர், கூட்டமைப்பினை பிளவுபடுத்துவது சார்ந்து யோசித்ததில்லை. ஆனால், அவர்கள் இருவரும் தனக்கு எதிராகக் திரும்பி விட்டார்கள் என்ற நிலையில், கூட்டமைப்பின் பிளவு அவருக்கு அவசியமாகிவிட்டது. அண்மையில், தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டார்கள். அவர்களின் விடுவிப்புக்கு யார் யாரெல்லாம் உரிமை கொண்டாடுகிறார்கள் என்பதைப் பார்த்தால், ரணிலின் கரங்கள் எங்கெல்லாம் நீண்டிருக்கின்ற என்பது புரியும். நீதிமன்றங்களில் ஆதாரங்களை வைத்து, வழக்குகளை நடத்த முடியாத நிலையில் பலரை, அரசியல் கைதிகளாக இலங்கை அரசு சிறைகளில் அடைத்து வைத்திருக்கின்றது. அவர்கள் பல்லாண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் விடுதலை என்பது எதற்காகவும் பிற்போடப்படக்கூடாது. அவர்களின் விடுதலை யாரால் நிகழ்ந்தாலும் அதனை தமிழ் மக்கள் ஏற்பார்கள். அதில் மாற்றுக்கருத்தில்லை. அதாவது, ‘யார் குற்றினாலும் அரசியானால் சரி’ என்ற நிலை! ஆனால், அந்தக் கட்டங்களை, தமிழ் மக்களின் அரசியல் பலத்தைச் சிதைப்பதற்காகக் கொடுங்கரங்கள் கையாள முயன்றால், அதை அடையாளம் கண்டு கொள்வது தவிர்க்க முடியாதது. நாட்டின் பொருளாதார பின்னடைவு என்பது கணிக்க முடியாத அளவுக்கு இருக்கின்றது. அப்படியான நிலையில் தென்இலங்கை, மீட்பர்களைத் தேடிக் கொண்டிருக்கின்றது. அதன் ஒருகட்டமாக, ரணில் புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களையும் அழைகின்றார். அதில், அவர் பணமுதலைகளை அடையாளம் கண்டு அழைக்கின்றார். அவர்களை நாட்டின் பொருளாதார மீட்சிக்காக மட்டுமல்லாது, தமிழ்த் தேசிய அரசியலைக் கையாளுவதற்கான கருவிகளாகவும் கையாள நினைக்கின்றார். ரணில் எப்போதுமே தன்னை மேன்மையானவர் என்ற தோரணையில் முன்னிறுத்துபவர். அதாவது, மேட்டுக்குடி மனநிலையோடு இயங்குபவர். தன் முன்னால் யாரும் பெரியவர் இல்லை என்பது அவரது நிலைப்பாடு. அப்படிப்பட்ட ரணில், அண்மைய பிரித்தானிய பயணத்தின் போது, புலம்பெயர் வர்த்தகர்கள், பணமுதலைகள் சிலரை சந்தித்து, பௌவியமாக உரையாடிய விடயம் கவனிப்புக்குரியது. அதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்தையும் தன்னுடைய அரசியல் பலத்தையும் அதிகரித்துக் கொள்ள முடியும் என்பது அவரது நோக்கம். ஏற்கெனவே, தமிழ்த் தேசிய கட்சிகள் புலம்பெயர் பணமுதலைகளின் ஏவலாளிகள் போல இயங்குவதான நிலை இருக்கின்றது. கடந்த பொதுத் தேர்தல் காலத்தில், தமிழ்த் தேசிய கட்சிகளைப் பிரித்தாண்டதில் புலம்பெயர் பணமுதலைகளின் பங்கு கணிசமானது. ஒரே கட்சிக்குள்ளேயே மற்ற வேட்பாளர்களைத் தோற்கடிப்பதற்காக, பெருமளவு பணத்தை இவ்வாறான பணமுதலைகள் செலவிட்டன. அதற்காக, கட்சிகளும் அதன் தலைவர்களும்கூட எசமானின் காலடியைச் சுற்றிவரும் நன்றியுள்ள ஜீவன் மாதிரி இயங்கினார்கள். மக்களின் எதிர்பார்த்பை மீறி, இவ்வாறான பணமுதலைகளின் தேவைகளுக்காக குரைக்க ஆரம்பித்தார்கள். அதன் விளைவு தமிழ்த் தேசிய பரப்பில், சிங்கள இனவாதக் கட்சிகளினதும் துணைக்குழுக்களினதும் வெற்றி நிகழ்ந்தது. இப்போதும் ரணிலின் பெரும் ஆசீர்வாதத்தோடு புலம்பெயர் பணமுதலைகள் சில, தமிழ்த் தேசிய கட்சிகளை குறிப்பாக கூட்டமைப்பை சிதைக்கும் வேலைகளில் கடந்த நாள்களில் இயங்குவது தெளிவாகத் தெரிகின்றது. தங்களால் கையாள முடியாத தலைவர்களை அரங்கில் இருந்து அகற்றி, கையாட்களைக் கொண்டு தமிழ்த் தேசிய அரசியலை நிரப்புவதுதான் இவர்களின் இலக்கு. இவ்வாறான செயற்பாட்டுக்கு, தூரநோக்கற்ற அரசியல் தலைவர்களும் அமைப்புகளும் துணைபோகின்றன. எப்போதுமே, எதிரியின் கையை வைத்தே எதிரியின் கண்களை குத்த வைக்கும் ரணிலின் தந்திரம், இப்போதும் தமிழ்த் தேசிய அரசியலை குறிவைத்திருக்கின்றது. அதனை அடையாளம் காண்பது என்பது, தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்புக்கு அவசியமானது. இல்லையென்றால், ஏவல் நாய்களால் மாத்திரம், தமிழ்த் தேசிய அரங்கு நிறையும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ரணிலின்-பிரித்தாளும்-அரசியலை-தாண்டுமா-தமிழ்க்-கட்சிகள்/91-307359
  4. மேய்ப்பன் இல்லாத ஆட்டு மந்தையான தமிழரசுக் கட்சி புருஜோத்தமன் தங்கமயில் இலங்கை தமிழரசுக் கட்சி, மேய்ப்பன் இல்லாத ஆட்டு மந்தையாக அலைக்கழிந்து கொண்டிருக்கின்றது. கட்சியின் தலைவராக ‘மேய்ப்பனாக’ இருக்க வேண்டிய மாவை சேனாதிராஜாவோ, அலைக்கழியும் மந்தைக் கூட்டத்தில் வலுவிழந்த ஆடாக அல்லாடுகிறார். கடந்த பொதுத் தேர்தல் காலத்தில், தமிழரசுக் கட்சி, தன்னைத் தானே அசிங்கப்படுத்தி, மக்களிடம் வெளிப்படுத்திக் கொண்ட அளவுக்கு, தமிழ்த் தேசிய அரசியலில் இயங்கும் எந்தவொரு கட்சியும் நடந்து கொண்டதில்லை. கட்சியின் தலைவரான மாவை தொடங்கி, கட்சியின் பெரும்பாலான தலைவர்கள், வேட்பாளர்களாக போட்டியிட்டவர்கள், போட்டியிட சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் என்று தமிழரசுக் கட்சிக்குள் இருக்கின்ற பல்வேறு தரப்பினரும், தங்களுக்குள் பலமாக மோதிக் கொண்டார்கள். அது, நேரடி மோதலாக மாத்திரமல்லாமல், காட்டிக் கொடுப்பதாகவும் முதுகில் குத்துவதாகவும் கூட இருந்தது. அதுதான், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பெருந்தோல்விக்கு காரணமானது. அதனால்தான், இன்றைக்கு கூட்டமைப்புக்குள் ஒற்றைத் தலைமையாக ஆளுமை செலுத்திவந்த தமிழரசுக் கட்சியை, பங்காளிகளான டெலோவும் புளொட்டும் தாண்டிச் செல்லக் காரணமாகி இருக்கின்றது. அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் தமிழர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்துக் கொண்டு, தந்தை செல்வாவால் ஆரம்பிக்கப்பட்ட தமிழரசுக் கட்சி, அதன் செல்நெறி குறித்து தெளிவான வரையறைகளை கொண்டிருந்தது. பௌத்த சிங்கள ஆட்சியாளர்களின் ஆக்கிரமிப்புக்கு எதிராகத் தொடர்ச்சியாக அஹிம்சை வழிப்போராட்டத்தை கனதியாக முன்னெடுத்தது. வெற்றி தோல்விகளுக்கு அப்பால், தமிழரசுக் கட்சிக்கான கறுப்புப் பக்கங்கள் என்று பெரிதாக ஏதும் இல்லை. அதுதான், காணாமற்போன தமிழரசுக் கட்சியை, தமிழீழ விடுதலைப் புலிகள் மீட்டெடுத்து, கூட்டமைப்பின் தலைமைக் கட்சி என்கிற நிலையில் நிறுத்தியமைக்கும் காரணமாகும். தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் கரைந்துபோன ஒரு கட்டத்தில், வடக்கு - கிழக்கில் இருந்து இல்லாமற்போய்விட்டது. கூட்டணிக்குள் இருந்த தலைவர்களில் அநேகர், தமிழரசுக் கட்சிக்காரர்கள் என்ற போதிலும், அவர்கள் கூட்டணியின் ‘உதய சூரியன்’ சின்னத்தோடு அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தேர்தல்களில் போட்டியிட்டுவிட்டு, ‘மாதிவல’ வீட்டுத் தொகுதிக்குள் பெரும்பாலும் பதுங்கிக் கொண்டு விட்டார்கள். ஆனால், அவர்களை எல்லாம் அழைத்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பை வலுவாக்கி, 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சியையும் அதன் வீட்டுச் சின்னத்தையும் தமிழ் மக்கள் மத்தியில் கொண்டுவந்து சேர்ந்தது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆவார். அதனால்தான், தமிழரசுக் கட்சியின் மீள்எழுச்சி சாத்தியப்பட்டது. புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னரும் தமிழ்த் தேசிய அரசியலை வழிநடத்தும் சந்தர்ப்பத்தையும், தமிழரசுக் கட்சிக்கு அது ஏற்படுத்திக் கொடுத்தது. தந்தை செல்வாவால் ஆரம்பிக்கப்பட்டு, தலைவர் பிரபாகரனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழரசுக் கட்சியின் இன்றைய நிலையைக் காணும் போது, தமிழ் மக்கள் இரத்தக் கண்ணீர் வடிக்க வேண்டியிருக்கும். தமிழரசுக் கட்சியின் தலைவராக இரா.சம்பந்தன் இருந்த காலம் வரையிலும்கூட, கட்சி குறிப்பிட்டளவு கட்டுக்கோப்பாக இருந்தது. ஆனால், கட்சியின் தலைமைத்துவம் மாவையிடம் வந்த நாள் முதல், கட்சிக்குள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, உள்வீட்டுக் குழப்பங்கள் எழுந்தன. அதுவும், மத்திய குழுவில் இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிட குழப்பங்களின் எண்ணிக்கை அதிகம் என்று சொல்லலாம். தமிழ்த் தேசிய அரசியலில், ஆத்மார்த்தமாக இயங்க நினைக்கின்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு, தமிழரசுக் கட்சியை உத்வேகத்தோடு நகர்த்திச் சென்று, மக்களுக்கான அரசியலை செய்ய வேண்டும் என்கிற பேரவா உண்டு. ஆனால், அதற்கான வாய்ப்புகளை மாவை சேனாதிராஜா, சி.வி.கே சிவஞானம் தொடங்கி வயது மூப்பாலும் அதன் அவஸ்தைகளாலும் அல்லாடும் தலைவர்கள் தடுக்கிறார்கள். அண்மையில்கூட, தமிழரசுக் கட்சியின் நல்லூர் தொகுதிக் கிளைக் கூட்டம் நடைபெற்றது. அதில், புதிய நிர்வாகிகளாக சிவஞானம் உள்ளிட்ட எழுபது வயதைத் தாண்டியவர்களே, பிரதான பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இவர்கள், தங்களது தொகுதிக் கிளைக்குள் கூட சென்று, மக்கள் அரசியல் செய்வதற்கான உடல் ஆரோக்கியத்தோடு இல்லாதவர்கள். அதிகபட்சம், மார்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் கூடி, கதை பேசி, கலைந்து செல்வார்கள்; அவ்வளவுதான்! இதனால், இந்த வயோதிபர்களின் ஓய்வுகாலம் வேண்டுமானால் கழிந்து போகலாம். மாறாக, தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்பட்டுவிடாது. மக்களுக்கான அரசியலை தேர்ந்தெடுக்கும் எந்தக் கட்சியாக இருந்தாலும், அது இளைஞர்களை உள்வாங்கிக் கொண்டும் அவர்களை முன்னிறுத்தியுமே செயற்பட விரும்பும். தந்தை செல்வாவின் காலத்திலும் தமிழரசுக் கட்சிக்குள்ளும் அதுதான் நிகழ்ந்தது. அதனால்தான், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றவர்கள் அரசியலுக்குள் வரவும் கோலோச்சவும் முடிந்தது. ஆனால், இளைஞர்கள் அரசியலுக்கு அவசியமானவர்கள்; அவர்களே மக்களிடம் நேரடியாக ஊடாடல்களை செலுத்தக் கூடியவர்கள் என்று உணர்ந்து, அதன் வழியாக வந்த மாவை சேனாதிராஜாவும் கூட, தமிழரசுக் கட்சியை முதியவர்களின் கூடாரமாக மாற்றுவதில் முனைப்பாக செயற்படுகின்றார். அவரின் பதவி என்கிற பேராசை, கட்சியை முழுவதுமாக முடக்கும் நிலைக்கு கொண்டு வந்து சேர்ந்திருக்கின்றது. கொழும்பில் நடைபெறும் முக்கிய சந்திப்புகளுக்குச் செல்ல வேண்டுமாக இருந்தால், பாராளுமன்ற உறுப்பினர் பதவி முக்கியம். அதன் மூலமாகவே எரிபொருள் மானியம் கிடைக்கும். அதற்காக தேசிய பட்டியல் ஆசனம் தனக்கு வழங்கப்பட வேண்டும் என்று பதவிக்காக மன்றாடியவர் மாவை. கட்சியின் தலைவராக அவர் பதவிக்கு வந்து ஏழு வருடங்கள் கடந்து விட்டன. ஆனால், இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய கட்சியின் தேசிய மாநாடுகள் ஒழுங்காக நடத்தப்படவில்லை. அவர் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர், ஒருமுறை மாத்திரமே மாநாடு நடத்தப்பட்டிருக்கின்றது. கடந்த பொதுத் தேர்தலில், கட்சி மாபெரும் தோல்வி கண்டிருக்கின்ற நிலையில், தலைமையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. அதனால், தன்னுடைய பதவிக்கு பாதிப்பு வந்துவிடும் என்ற நோக்கத்தால், தேசிய மாநாட்டைக் கூட்டுவதை மாவை தவிர்த்து வருகிறார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற ஜனநாயக தன்மை பேணாத அமைப்புகள்கூட, இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தேசிய மாநாட்டை நடத்துகின்றன. அப்படியிருக்க, ஜனநாயகத்தின் வழியில் வந்த தமிழரசுக் கட்சி, இவ்வளவு மோசமான உட்கட்சி ஜனநாயக மறுப்பில் ஈடுபடுகின்றமை அபத்தமானது. தமிழரசுக் கட்சியின் முக்கிய பதவிகளில் வயோதிபர்கள் அமர்ந்து கொண்டு, கட்சியின் செயற்றிறனை மழுங்கடித்துவிட்டதால், கட்சியின் ஓர்மம் இழக்கப்பட்டுவிட்டது. மக்கள் அரசியலுக்காக வரத் துடிக்கும் இளைஞர்கள்கூட, தமிழரசுக் கட்சிப் பக்கம் தலை வைக்கப் பயப்படுகிறார்கள். ஏனெனில், மக்கள் அரசியலுக்காக ஆக்கபூர்வமாகச் செயற்பட வேண்டிய தாங்கள், தமிழரசில் இணைந்துவிட்ட பின்னர், பதவிகளைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கும் வயோதிபர்களுக்கு எதிராக போராடி நேரத்தை செலவளிக்க வேண்டி வருமோ என்று நினைக்கிறார்கள். ஏற்கெனவே நாடு பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் இருக்கின்றது. அது இளைஞர்கள் தலையில் பெரும் சுமையை ஏற்றியிருக்கின்றது. தங்களது எதிர்காலம், குடும்பங்களின் வாழ்வாதாரம் தொடங்கி அனைத்தையும் கவனிக்க வேண்டும். கடந்த காலத்தில் எட்டு மணித்தியாலம் உழைத்தால் இப்போது 16 மணித்தியாலம் உழைக்க வேண்டிய அவசியநிலை ஏற்பட்டுள்ளது; அவ்வளவு நெருக்கடி நிலைமை. அப்படியிருக்க, ஒருநாளில் மீதமுள்ள எட்டு மணி நேரத்தில் உண்டு, உறங்கி, குடும்பத்துடன் நிம்மதியாகக் கழிக்கவே அனைவரும் விரும்புவர். இல்லாமல், தமிழரசுக் கட்சிக்குள் சேர்ந்து மூத்தவர்களோடு மோதுவதற்காக செலவிடத் தயாராக மாட்டார்கள். தமிழ்த் தேசிய அரசியலில் இன்னமும் தமிழரசுக் கட்சியே தலைமைக் கட்சியாக இருக்கின்றது. ஆனால், இளைஞர்களை உள்வாங்கி கட்சியை சீராக்கி செயற்றிறன் உள்ளதாக மாற்றாவிட்டால், தமிழரசுக் கட்சியின் தோல்வி கடந்த காலத்தைக் காட்டிலும் இன்னும் மோசமாக இருக்கும். அதனை, தந்தை செல்வா, தலைவர் பிரபாகரன் தொடங்கி தமிழ்த் தேசியத்துக்காக அர்ப்பணித்தவர்களின் ஆன்மாக்கள் ஒருபோதும் மன்னிக்காது. ஏனெனில், தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாத காலத்தில், தமிழரசுக் கட்சியின் இருப்பு தவிர்க்க முடியாதது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மேய்ப்பன்-இல்லாத-ஆட்டு-மந்தையான-தமிழரசுக்-கட்சி/91-306789
  5. ரிஷி சுனக்; நிறவெறிக்கு எதிரான குறியீடு அல்ல புருஜோத்தமன் தங்கமயில் பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்று இருக்கின்றார். சூரியன் அஸ்தமிக்காத அகண்ட கொலனித்துவ ஆட்சியை, நூற்றாண்டுகளாக செலுத்திய பிரித்தானியாவுக்கு, வெள்ளையர் அல்லாத இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இப்போது பிரதமர் ஆகியிருக்கிறார். கறுப்பினத்தவரான பராக் ஒபாமா, அமெரிக்காவின் ஜனாதிபதியானார். அதுவும் அவர் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாகத் தெரிவாகி, பெரிய நெருக்கடிகள் இன்றி ஆட்சி செலுத்தினார். ஆனால், ஒபாமா போன்று ரிஷி சுனக்கால், நெருக்கடிகள் அற்ற ஆட்சியை கொண்டு செலுத்திவிட முடியாது. பிரித்தானியாவின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியைச் சந்தித்திருக்கின்ற நிலையில், அவர் பிரதமர் பதவிக்கு வந்திருக்கிறார். அவருக்கு முந்தைய இரண்டு பிரதமர்களும், நாட்டின் பொருளாதாரத்தை சரிசெய்ய முடியாத நிலையிலேயே பதவி விலகிச் சென்றார்கள். ரிஷி சுனக், பிரித்தானியாவின் பிரதமராகப் பதவியேற்கப் போகிறார் என்றதும், பல வகையான எண்ண ஓட்டங்கள் மக்கள் மத்தியில் எழுந்தன. இந்தியாவை அடக்கி ஆண்ட பிரித்தானியாவை ஆள்வதற்காக, இந்திய வம்சாவளி வாரிசு வந்திருக்கிறார் என்று இந்திய ஊடகங்கள் கொண்டாடின. கர்நாடக மக்களோ, தங்களது மருமகன், பிரித்தானிய பிரதமர் ஆகியிருக்கின்றார் என்று மெச்சிக்கொண்டிருக்கிறார்கள். பிராமண குடிகள், தங்களில் ஒருவராக ரிஷியை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். கிறிஸ்தவ நாட்டுக்கு, இந்து மகன் பிரதமராக வந்திருப்பதாகவும் சமூக ஊடகங்களில் பேசப்படுகின்றது. இவற்றையெல்லாம் தாண்டி, வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரை பிரித்தானிய மக்கள் பிரதமராக ஏற்கும் அளவுக்கான மனநிலை, குறிப்பாக நிறவெறியற்ற உணர்நிலை ஏற்பட்டிருப்பதாக வரவேற்புச் செய்திகள் பகிரப்படுகின்றன. அடிப்படையில், பிரித்தானியா இன்று சந்தித்து நிற்கின்ற பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கான திராணி, ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்குள் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இல்லை. அதனால் அவர்கள் பொறுப்பை ஏற்றுக்கொள்வது சார்ந்து தயக்கம் வெளியிடுகிறார்கள். அதுவே, நிறவெறிக்கு எதிரான நிலைக்குள் பிரித்தானியா பெருமளவில் சென்று சேர்ந்து விட்டதாக யாரும் கருத வேண்டியதில்லை. ரிஷி சுனக்கும் பதவி விலகிச் சென்ற பிரதமர் லிஸ் டிரஸும் இரண்டு மாதங்களுக்கு முன்னர், கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட்ட போது, பாராளுமன்ற உறுப்பினர்களால் ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால், கட்சியின் உறுப்பினர்கள் மத்தியில் நடத்தப்பட்ட தேர்தலில், லிஸ் டிரஸ் 57 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். அந்த வெற்றி நிறவாதம் என்கிற அடிப்படையில் நிகழ்ந்த ஒன்று. அந்தத் தேர்தலில், தங்களை வெளிநாட்டு வம்சாவளி ஒருவர் ஆட்சி செலுத்துவதை விரும்பவில்லை என்று, கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களில் பலரும் வெளிப்படையாக கூறியிருந்தார்கள். அதுவும், லிஸ் டிரஸைவிட, ரிஷி சுனக் பொருளாதார சீர்திருத்தத்தை செய்யக்கூடியவர் என்று அறிவித்துக் கொண்டே அவரைத் தோற்கடித்தார்கள். அதற்கு நிறவாதமே காரணமாக இருந்தது. சமூக ஊடகங்களில் இப்போதும் அந்த காணொளிகள் காணக் கிடைக்கின்றன. ஆனால், ரிஷி சுனக்கிடம் பொறுப்பை இப்போது காலம் கையளித்திருக்கின்றது. ரிஷி சுனக் பிரித்தானிய பிரதமராக பொறுப்பேற்கப் போகிறார் என்றதும், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் பதவிவொன்றை இட்டிருந்தார். அதில் ஒருபகுதி, “.....பிரதமர் ரிசி சுனக்கின் நாட்டில் நிறவாதம் தோலில் (Skin Deep) இருக்கிறது. ஆகவே, அதை மாற்றி எடுக்க முடிகிறது. ஆனால், இங்கே (இலங்கையில்) இனவாதம் ஆன்மாவில் கலந்துள்ளதால் (Soul Deep), நம்நாட்டில் நமக்கு முதலிடம் தரத் தயங்குகிறார்கள்....” என்றுள்ளது. மனோ கணேசனின் ஏக்கம் மிகச் சரியானது. இலங்கையின் ஆட்சி அதிகார கட்டமைப்பு, இனவாதத்தின் வழியாக எழுந்த ஒன்று. அதன் வேர்கள் ஆழமாக ஊடுருவி படர்ந்திருக்கின்றன. அதனை அறுத்துவிட்டு, ஆட்சி அதிகார கட்டமைப்பை ஏற்படுத்துவது என்பது அவ்வளவு இலகுவானது இல்லை. நாட்டின் பொருளாதாரம் படுபாதாளத்துக்குள் வீழ்ந்திருக்கின்றது. மீட்சி என்பது இப்போதைக்கு சாத்தியமில்லை. நெருக்கடி முழுவதையும், மக்கள் தலையில் சுமக்க வேண்டியிருக்கின்றது. அப்படியான நிலையிலும், குருந்தூர் மலையிலும், திருகோணேச்சர கோவில் வளாகத்திலும் பௌத்த சின்னங்களை அமைத்து, அந்த இடங்களை ஆக்கிரமிக்கும் வேலைகளை அரச கட்டமைப்பு செய்கின்றது. நாட்டின் பொருளாதாரத்தை சரி செய்து, மக்களின் சுமையை குறைப்பதை விடுத்து, ஆக்கிரமிப்பு வேலைகளை செய்வது என்பது, இனவாதத்தின் வேர்கள் செய்வது. பௌத்த சிங்களத்தின் வேர்கள் ஆட்சிக் கட்டமைப்புக்குள் பரந்தளவில் வியாபித்தமையே நாட்டைத் தோற்கடித்தன. உண்மையில், முன்னோக்கிய வளர்ச்சிப் பயணம் என்பது, தோல்விக்கான காரணங்களைக் அடையாளம் கண்டு கொள்வதன் மூலம் நிகழக் கூடியது. ஆனால், இலங்கை போன்றதொரு நாட்டில், இனவாத -மதவாத வழி ஆட்சி அதிகார கட்டமைப்பின் நிலைப்பு, ஊழல்வாதிகளையும் குற்றவாளிகளையுமே ஆட்சியில் அமர்த்தி அழகு பார்க்கின்றது. அவர்கள், கிடைத்த வரை கொள்ளை அடிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். ஆட்சியில் உள்ளவர்கள் எவ்வளவு கொள்ளை அடித்தாலும் பரவாயில்லை; ஆனால், தங்களின் ஆட்சி அதிகாரத்துக்குள் நீளும் இனவாத - மதவாத வேர்களுக்கு பாதகம் ஏற்பட்டுவிடக் கூடாது என்று பௌத்த சிங்கள அடிப்படைவாத சக்திகள் நினைக்கின்றன. இவ்வாறான நிலை, கூட்டுக் களவாணித்தனமாக நீள்கின்றது. இப்படியான கட்டமைப்புக்குள் நாடு முழுவதுமாக சென்றிருக்கின்ற நிலையில், இலங்கையில் என்றைக்கும் பராக் ஒபாமாக்களோ, ரிஷி சுனக்களோ உருவாக வாய்ப்பில்லை. ‘இலங்கையில் இனவாதம் ஆன்மாவின் கலந்திருக்கின்றது’ என்ற மனோ கணேசனின் பதிவு இன்னும் ஆழப்படுத்தப்பட வேண்டியது. அது, ஆன்மாவைத் தாண்டியும் ஆழமான கட்டங்களில் இனவாதமாக பொதிந்திருக்கின்றது. எதிரி மக்கள் எனக் கருதும் மக்களை இனவாதம் அழித்து, சொந்த மக்களை காக்கும் என்று நம்பினால் கூட, ‘காட்டாட்சி’ தத்துவத்தின்படி அது ஏற்கக் கூடியது. ஆனால், சொந்த இன மக்களையே கருவறுக்கும் அளவுக்கான இனவாத - மதவாத அடிப்படைகளையே, இலங்கை வெளிப்படுத்தி வந்திருக்கின்றது. அப்படியான நிலையில், அதனால் ஒரு சில மத வெறிக் கூட்டமும், சில குடும்பங்களும் மாத்திரமே வாழும். மற்றப்படி, நாடு முழுவதுமாக தொடர் தோல்விக்குள் வீழ்ந்து தொலைந்து போகும். பிரித்தானிய மக்கள், நிறவெறியை கைவிடும் நிலையில் எல்லாம் முழுவதுமாக இல்லை. ஆனால், நிறவெறிக்கு அப்பால், வாழ்வு என்ற ஒன்று இருப்பது குறித்து கவனம் செலுத்துகிறார்கள். தங்களது வாழ்வை மீட்டெடுப்பதற்கு யார் வந்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறார்களோ, அவரைத் தெரிவு செய்ய விளைகிறார்கள். கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைக்கான தேர்தலில், ரிஷி சுனக் தோற்கடிக்கப்பட்ட போதிலும், இன்றைக்கு அவரை ஏற்கும் நிலை வந்திருக்கின்றது. நாளையே இன்னொரு தேர்தல் வந்தால், அதில் பிரித்தானியாவின் வெள்ளை நிறவாதம் தலைதூக்கும். அப்போதும், ரிஷியால் அதனைத் தோற்கடித்து வெற்றிபெற முடிந்தால்தான், அது உண்மையான நிறவெறிக்கு எதிரான வெற்றியாக இருக்கும். இல்லையென்றால், அது, ‘பசுத்தோல் போர்த்திய புலி’க்கு ஒப்பான நிலைக்குள் பிரித்தானியர்களின் நிறவெறி மறைந்திருப்பதற்கு ஒப்பானதுதான். அப்படியான நிலையில், பிரதமர் பதவியை ரிஷி சுனக் அலங்கரிப்பதை நிறவெறிக்கு எதிரான வெற்றியாக யாரும் பெரியளவில் கொண்டாட வேண்டியதில்லை. அதுபோல, ரிஷியோடு தங்களை இனமாக, மதமாக, வம்வாவளியாக இணைத்து பெருமை கொள்வதெல்லாம் அபத்தங்களின் உச்சம். அவர் ஓர் அரசியல்வாதி. அரசியல்வாதிக்குரிய குணாதிசயங்களின் வழியாக எழுந்து வந்தவர். அவர் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக எதையும் செய்யக் கூடிய ஒருவர். அதனைத்தான் அவரின் கடந்த காலங்கள் உணர்த்தியிருக்கின்றன. அப்படியான நிலையில், தேவையற்ற பெருமிதங்களால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ரிஷி-சுனக்-நிறவெறிக்கு-எதிரான-குறியீடு-அல்ல/91-306425
  6. ராஜபக்‌ஷர்களின் மீள்வருகைக்கான கட்டியம் புருஜோத்தமன் தங்கமயில் ராஜபக்‌ஷர்களை நாட்டின் காவலர்களாக முன்னிறுத்தும் பேரணிகளை, பொதுஜன பெரமுன மீண்டும் நடத்தத் தொடங்கிவிட்டது. அடுத்த ஆண்டு ஆரம்பத்தில், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெற இருக்கின்றது. அந்தத் தேர்தலோடு ஆரம்பிக்கும் தேர்தல் திருவிழா, மாகாண சபைத் தேர்தல், ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் என்று, எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு களைகட்டப் போகின்றது. அதைக் கருத்தில் கொண்டு ராஜபக்‌ஷர்கள், தங்களை மீண்டும் நிலைநிறுத்தும் வேலைகளை ஆரம்பித்து இருக்கிறார்கள். ராஜபக்‌ஷர்களை வீட்டுக்குச் செல்லுமாறு முழு நாடும் கொந்தளித்து அடங்கி, சில மாதங்களே ஆகின்றன. கோட்டாபய ராஜபக்‌ஷ நாட்டை விட்டுத் தப்பியோடி, ஜனாதிபதி பதவியை துறக்கும் அளவுக்கான நிலை ஏற்பட்டிருந்தது. மஹிந்த ராஜபக்‌ஷவும் அவரது குடும்பத்தினரும், தென் இலங்கை அரசியலில் மீண்டும் தலையெடுக்க வாய்ப்பில்லை என்ற எதிர்வுகூறல்கள் எல்லாம் எழுந்திருந்தன. ஆனால், ஆட்சிப் பதவிகளில் இருந்து விலகிய போதும், ஆட்டிவைக்கும் அதிகாரம் என்பது, முற்றுமுழுதாகத் தங்களிடம் இருப்பதை ராஜபக்‌ஷர்கள் கனகச்சிதமாக பாதுகாத்துக் கொண்டனர். இறுதியாக இடம்பெற்ற மூன்று தேர்தல்களிலும், ராஜபக்‌ஷர்கள் நாட்டு மக்களின் பெரும் ஆணையைப் பெற்றிருந்தார்கள். ஆனால், சில காலத்துக்குள்ளேயே அந்த ஆணையை வழங்கிய மக்களே, வீதிக்கு இறக்கி, பெரும் போராட்டங்களை நடத்தி மீளப்பெற்றார்கள். அதுதான் நாட்டில் புதிய தேர்தலுக்கான தேவையை உருவாக்கியது. அப்படியான நிலையில், தேர்தலொன்று உடனடியாக இடம்பெறுமாக இருந்தால், ராஜபக்‌ஷர்களின் அரசியல் என்பது, கிட்டத்தட்ட செல்லாக்காசாகி போயிருக்கும். அவ்வாறான நிலை உருவாவதை ராஜபக்‌ஷர்கள், ரணில் விக்கிரமசிங்க எனும் துருப்புச் சீட்டை வைத்து தடுத்திருக்கிறார்கள். கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியதும், அந்தப் பதவிக்கு தங்களது கட்சிக்குள் இருந்து இன்னொருவர் வருவதை தவிர்த்த ராஜபக்‌ஷர்கள், அதற்குப் பதிலாக ரணிலை கொண்டு வந்தார்கள். கடந்த பொதுத் தேர்தலில், முழுவதுமாக நிராகரிக்கப்பட்ட ரணில், தேசிய பட்டியலூடாக பாராளுமன்றம் வந்தவர். அவரைக் கொண்டு, தங்களது அரசியலை மீட்டெடுக்கும் வேலைகளை, ராஜபக்‌ஷர்கள் இப்போது செய்து கொண்டிருக்கிறார்கள். கடந்த இரு வாரங்களுக்குள் பொதுஜன பெரமுன இரண்டு முக்கிய பேரணிகளை நடத்தி இருக்கின்றது. அந்தப் பேரணிகளில் கலந்து கொண்டு பேசிய மஹிந்தவும் நாமல் ராஜபக்‌ஷவும், ரணிலை ஏகத்துக்கும் புகழ்ந்திருக்கிறார்கள். குறிப்பாக, கடந்த காலத் தவறுகளை, ரணில் திருத்திக் கொண்டு, சரியான பக்கத்துக்கு வந்துள்ளதால், அவரை ஜனாதிபதியாக்கும் முடிவுக்கு வந்ததாக மஹிந்த கூறுகிறார். நாமலோ இன்னொருபடி மேலேசென்று, “ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்தின் பிரதான தளமான காலி முகத்திடல் போராட்டக்காரர்களை, ரணில் இரவோடு இரவாக அகற்றி, சாதனை படைத்தவர். ஆகவே, ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமானவர்” என்கிறார். குறிப்பாக, கடந்த காலங்களில் மனித உரிமைகள், ஜனநாயகம் என்றெல்லாம் பேசிய ரணில், ஜனாதிபதியானதும் அதுபற்றியெல்லாம் பேசாமல் செயற்பட்டு இருக்கின்றார் என்று கூறிய நாமல், மனித உரிமைகள், ஜனநாயகம் பற்றியெல்லாம் மறைமுகமாக எள்ளல் செய்திருக்கிறார். அவ்வளவுக்கான திமிரை, ராஜபக்‌ஷர்கள் எங்கிருந்து பெற்றுக் கொள்கிறார்கள் என்று யோசித்தால் விடை, எதுவுமே செய்யத் திராணியற்ற எதிர்க்கட்சிகள் இருப்பதால், அந்தத் திமிர் உருவாகி இருப்பதை உணர்ந்து கொள்ள முடியும். ஒட்டுமொத்த நாடும், ராஜபக்‌ஷர்களுக்கு எதிராகப் போராடி, அவர்களை ஆட்சியில் இருந்து அகற்றிய சில மாதங்களுக்குள்ளேயே, ராஜபக்‌ஷர்கள் தங்களில் சுயரூபத்தைக் காட்ட முடிவதானது, அதிகாரத்தை இன்னமும் முழுமையாக வைத்துக் கொண்டிருப்பதால் ஏற்பட்டிருக்கும் நிலைமையாகும். ரணிலை தோற்கடிப்பதற்கான வழிகளை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சிந்திப்பது மாதிரி தெரியாவில்லை. மாறாக, ரணிலிடம் ஓடத் தயாராக இருக்கும், தங்களது கட்சி உறுப்பினர்களைப் பாதுகாப்பதையே பெரும் வேலையாகப் பார்க்க வேண்டியிருக்கின்றது. எதிர்வரும் இரண்டு ஆண்டுகள், தேர்தலுக்கான நிலையை ஏற்படுத்தி விட்டிருப்பதால் அன்றி, ஐக்கிய மக்கள் சக்தியை இப்போது வேறு எதுவும் காப்பாற்றவில்லை. இதுவே, ரணில் முழுமையாக மூன்று ஆண்டுகள் ஆட்சி நடத்துவதற்கான சூழல் (தேர்தல்கள் இல்லாமல்) தொடருமாக இருந்தால், ஐக்கிய மக்கள் சக்தி மெல்ல மெல்ல காணாமல் போயிருக்கும். சஜித் பிரேமதாஸவோடு ஒரு சிலர் மாத்திரமே எஞ்சியிருந்திருப்பார்கள். ஆனால், தவிர்க்க முடியாமல் வரும் ஆண்டுகளில் தொடர்ச்சியாக தேர்தல்கள் நடைபெற இருப்பதால், அதைக் கருத்தில் கொண்டு, கமுக்கமாக பலரும் இருக்கிறார்கள். அதனால்தான், பிரதான எதிர்க்கட்சி என்ற பெயரை ஐக்கிய மக்கள் சக்தி இன்னமும் தக்க வைத்துக்கொள்ள முடிந்திருக்கின்றது. மாறாக, அரசியல் சதுரங்கத்தில் சரியாக காய்களை நகர்த்தி, பாதுகாத்துக் கொள்ளவில்லை என்பது தௌிவாகப் புலனாகின்றது. எதிர்க்கட்சியின் ஆளுமையற்ற செயற்பாடானது, ராஜபக்‌ஷர்களை எதிர்காலத்துக்கான ஆட்சியாளர்களாக பாதுகாத்து வருகின்றது. எதிர்வரும் தேர்தல்களில், ராஜபக்‌ஷர்கள் சற்று வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டாலும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னால், ஆட்சியைப் பிடிப்பதற்கான அரசியலை செய்வதற்கான கட்டங்களை தக்கவைத்துக் கொள்வார்கள். அதற்காகத்தான், மக்களால் விரட்டி அடிக்கப்பட்ட சில மாதங்களிலேயே, ராஜபக்‌ஷர்கள் எழுச்சிபெற நினைக்கிறார்கள். ராஜபக்‌ஷர்களோ, அவர்களின் பொதுஜன பெரமுனவோ, நாட்டு மக்கள் சில மாதங்களுக்கு முன்னால் கொந்தளித்து அடங்கியது என்னவோ, வேறு யாருக்கோ என்பது போலான தோரணையை வெளிப்படுத்துகிறார்கள். நாட்டின் சீரழிவுக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்பது போல காட்டிக் கொள்ளும் அவர்கள், எதிர்க்கட்சிகளையும் ஜனநாயக விரும்பிகளையும் எள்ளல் செய்து எக்காளமிடுகிறார்கள். இந்த நிலை தடுக்கப்படாதவிடத்து, மக்களின் போராட்டம் வீணாகிப் போய்விடும். ராஜபக்‌ஷர்களின் ஆட்சிக் காலம் முழுவதும், மலையளவுக்கு அதிகரித்துவந்த அத்தியாவசியப் பொருட்களின் விலை, கடந்த சில நாள்களாக சற்று குறைந்திருக்கின்றது. எதிர்வரும் நாள்களிலும் அது தொடரும் வாய்ப்புகள் தென்படுகின்றன. இது, அடுத்த வருட ஆரம்பத்தில் நடைபெற இருக்கின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு நிகழ்த்தப்படும் சதி ஆட்டம். மலையளவு அதிகரித்துவிட்ட விலை அதிகரிப்பை சற்றுக் குறைத்துவிட்டு, அதனை தேர்தலில் வாக்குகளாக மாற்றும் வழக்கமான நரித்தனமான அரசியலை, ராஜபக்‌ஷர்களும் ரணிலும் இணைந்து இப்போது முன்னெடுக்கிறார்கள். இதன்மூலம், தங்களது வாக்கு வங்கியை பாதுகாத்துக் கொள்வார்கள். அந்த நிலை, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் ரணிலை முன்னிறுத்தி, ராஜபக்‌ஷர்கள் அதிகாரத்தில் இருப்பதற்கான உத்தியாகும். நாடு இன்று எதிர்கொண்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடி நிலைக்குள், ஒவ்வொரு நாளும் ஆட்சியாளர்கள் மக்களுக்கு எதிராக, எவ்வாறான சதித்திட்டங்களைத் தீட்டி அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பார்த்துக் கொண்டிருக்க, சாதாரண மக்களுக்கு நேரமில்லை. கடந்த காலத்தில் நாளொன்றுக்கு எட்டு மணித்தியாலங்கள் உழைத்தால் குடும்பம் நடத்தலாம் என்று இருந்தால், இப்போது 16 மணித்தியாலங்கள் உழைக்க வேண்டியிருக்கின்றது. அப்படி உழைத்தால்தான், கொஞ்சமாவது மீட்சியுள்ள வாழ்க்கையை நடத்தக் கூடியதாக இருக்கும். பதினாறு மணித்தியாலங்கள் உழைக்கும் மக்களுக்கு, எஞ்சியுள்ள எட்டு மணித்தியாலங்களில் குடும்பத்தை நடத்தி, தூங்கி எழ வேண்டும். அதற்குள், இந்த அரசியல்வாதிகளின் அசிங்கமான ஆட்டங்களைக் காண நேரம் போதாது. இதைச் சாதகமாப் பயன்படுத்திக் கொண்ட ராஜபக்‌ஷர்கள், இப்போது தயக்கம் ஏதுமின்றி மக்களின் மண்டையில் மீண்டும் மிளகாய் அரைக்கத் தயாராகி விட்டார்கள். இதனை, எதிர்க்கட்சிகள் மாத்திரமல்ல, சமூக சிவில் அமைப்புகளும், ஜனநாயக விரும்பிகளும், பொருளாதார மீட்சிக்கான அர்ப்பணிப்புள்ளவர்களும் இணைந்து தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால், இலங்கையின் படுகுழியை நோக்கிய இருண்ட பயணம் இன்னும் வேகமானதாக இருக்கும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ராஜபக்-ஷர்களின்-மீள்வருகைக்கான-கட்டியம்/91-306129
  7. போதையால் தள்ளாடும் தமிழ் இளைஞர் சமூகம் புருஜோத்தமன் தங்கமயில் வடக்கில், என்றைக்கும் இல்லாத அளவுக்கு போதைப்பொருள் பாவனை, கணிசமாக அதிகரித்திருப்பதாக வைத்தியத்துறையினரும் பாடசாலை சமூகத்தினரும் தெரிவிக்கின்றனர். இதனால், சமூகக் குற்றங்களும் இளவயதினரின் தொடர் மரணங்களும் பதிவாகி வருகின்றன. கடந்த சில மாதங்களில் மட்டும், போதைப்பொருள் பாவனையால் பத்துக்கும் அதிகமான இளவயதினர் நோய்வாய்ப்பட்டும் தற்கொலை செய்தும் உயிரிழந்துள்ளனர். அத்தோடு, நூற்றுக்கணக்கானவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையான நிலையில், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளிலும், போதை விடுவிப்பு நிலையங்களிலும் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னரான நாள்கள், வடக்கு - கிழக்கில் போதைப்பொருட்கள் இலகுவாக கிடைப்பதற்கான சூழலை ஏற்படுத்தி விட்டன. ஆயுதப் போராட்ட காலத்தில், குறிப்பாக புலிகளின் காலத்தில், பனை மரத்திலிருந்து பெறப்படும் கள்ளும் சாராயமுமே, மது வகைகளாக தமிழ் மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்தன. ஆனால், புலிகளின் ஆட்சிக் கட்டமைப்பில் இருந்து, அரசாங்கத்தால் மீட்கப்பட்ட நிலப்பகுதிகளில், மதுபான நிலையங்கள் விரைவாக முளைத்தன. அது, பியர் உள்ளிட்ட மதுவகைகளை, இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக்கின. அது, வாழ்வின் ஒரு பகுதி எனும் நிலையை நோக்கிய திணிப்பு இடம்பெற்றது. இதன் அடுத்த கட்டம், மனிதனை உடனடியாக சுயநினைவை இழக்க வைக்கும் போதைப்பொருட்களின் திணிப்பில் வந்து நிற்கின்றது. கஞ்சா, ஹெரோயின், கூல் ஐஸ் என்று பல வகைப் போதைப்பொருட்களும், வடக்கு - கிழக்கின் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விநியோகிக்கப்படுகின்றன. அதுவும், யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில், போதைப்பொருள் விநியோகமும் பாவனையும் சர்வசாதாரணமான விடயங்களாக மாறிவிட்டன. போதைப்பொருள் மாபியாக்கள், உலகம் பூராவும் இளவயதினரையே குறிவைத்து, தங்களது வியாபாரத்தை திறக்கின்றன. அதிலும் குறிப்பாக, பதின்ம வயதினரை போதைக்கு இரையாக்குகின்றார்கள். அந்த வயதில் போதைக்கு அடிமையாக்கிவிட்டால், போதை மாபியாக்களுக்கு அவர் வாழ்நாள் வாடிக்கையாளர். அப்படித்தான், இலங்கையிலும் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்தே, போதைப்பொருள் வர்த்தகம் விஸ்தரிக்கப்படுகின்றது. போதைப்பொருள் பாவித்த மாணவர்கள் மத்தியிலான அடிதடி, தென் இலங்கையில் அவ்வப்போது அரங்கேறுவதுண்டு. அந்த நிலை இன்றைக்கு வடக்கு - கிழக்கிலும் அரங்கேறத் தொடங்கிவிட்டது. பாடசாலை நாளில் இடைவேளையில், போதைப்பொருட்களை உட்கொண்டுவிட்டு, வகுப்பறைகளில் மாணவர்கள் வந்து அமர்கிறார்கள் என்பது, வடக்கின் பல ஆசிரியர்களினதும் குற்றச்சாட்டு. அவ்வாறான நிலை, இயல்பான வகுப்பறையை முழுவதுமாக நாசமாக்கி, மாணவர்கள் - ஆசிரியர்களுக்கு இடையிலான விரிசலை அதிகப்படுத்துகின்றது. ஒரு கட்டத்தில், ஆசிரியர் பணியை வாங்கும் ஊதியத்துக்கு வெறுமனே போதிக்கும் நிலைமைக்கு மாற்றுகின்றது. ஏனெனில், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இடையிலான கற்றல் - கற்பித்தல் என்பது கேள்விகள், சந்தேகங்கள் வழியாக நேர் செய்யப்பட வேண்டியது. ஆனால், போதைப்பொருட்களை உட்கொண்ட மாணவர்கள் அமர்ந்திருக்கும் வகுப்பறைகளில், எந்த ஆசிரியரும் மாணவர்களைக் கேள்விகள் கேட்பதில்லை. அவர்களிடம் பதில்களையும் எதிர்பார்ப்பதில்லை. ஏனெனில், மாணவர்கள் ஏதாவது செய்துவிடுவார்களோ என்கிற பயம். கிராமப்புற பாடசாலைகளில், இந்த நிலை ஓரளவுக்கு குறைவு. ஏனெனில், அங்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு மாணவர்களையும் தனிப்பட்ட ரீதியில் தெரியும். மாணவர்களில் நடவடிக்கைகளில் ஏதாவது மாற்றங்கள் தெரிந்தால், பெற்றோரை அழைத்து, விடயத்தைத் தெரிவித்து, எச்சரிக்க முடியும். ஆனால், நகர்புறத்திலுள்ள பிரபல பாடசாலைகளில், இவ்வாறான நிலையை பேண முடியாது. அதனால், ஆசிரியர்கள் தாமுண்டு தம் வேலையுண்டு என்று இருந்து விடுகிறார்கள். போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவது தொடர்பில், அரசாங்கம் தொடர்ச்சியாகப் பேசுவதுண்டு. ஆனால், அவை மேலோட்டமானவை. ஏனெனில், பாராளுமன்றத்துக்குள் இருக்கும் உறுப்பினர்களில் கணிசமானவர்கள், போதைப்பொருள் பாவனையாளர்கள் என்பது, அடிக்கடி பாராளுமன்றத்துக்குள் வெளிப்படுத்தப்படுவதுண்டு. அத்தோடு, போதை மாபியாக்களின் முக்கியஸ்தர்கள் சிலர், பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றார்கள் என்பது குற்றச்சாட்டு. அவ்வாறான நிலையில், நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பை அரசாங்கம் முறையாகச் செய்யும் என்று எதிர்பார்க்க முடியாது. தென் இலங்கையிலேயே போதை பெரும் சீரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்க, வடக்கு - கிழக்கில் போதைப்பொருள் ஒழிப்பை அரச கட்டமைப்புகள் செய்துவிடும் என்று எதிர்பார்ப்பது நகைப்புக்குரியது. ஏனெனில், தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களையும் உரிமைகளையும் ஆக்கிரமிக்கும் எண்ணத்தோடு இருக்கும் தென் இலங்கை, அதனை செய்வதற்கான இலகுவான வழியாக, போதைப்பொருள் பாவனையை கைக்கொள்கின்றது. வடக்கு - கிழக்கில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள், விற்பனையாளர்கள் என்று அடையாளம் காணப்பட்ட பலரும், வெளிப்படையாக உலாவி வருகிறார்கள். எப்போதாவது ஒரு சிலர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டாலும் அவர்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான வழிவகைகளை, பொலிஸார் செய்வதில்லை என்பது குற்றச்சாட்டு. போதைப்பொருள் கடத்தலுக்காகக் கைது செய்யப்பட்ட பலரும், நீதிமன்றங்களில் நிறுத்தப்படாமலேயே விடுவிக்கப்படுகின்ற காட்சிகள் அடிக்கடி அரங்கேறுவதுண்டு. அரச கட்டமைப்புகள்தான், தென் இலங்கையின் பௌத்த சிங்கள மேலாதிக்க மனநிலையோடு வடக்கு - கிழக்கின் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பை அணுகுகின்றன என்று பார்த்தால், தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகளில் இருக்கும் சில சட்டத்தரணிகள், கஞ்சா கடத்தல்கார்களுக்கும், மாபியாக்களுக்கும் நீதிமன்றங்களில் ஆஜராகி வாதிட்டு, விடுவிக்கும் காட்சிகள் தொடர்ச்சியாக அரங்கேறுவதுண்டு. சட்டத்தரணிகளின் தொழில் தர்மத்தை, இந்தப் பத்தியாளர் கேள்விக்கு உள்ளாக்கவில்லை. ஆனால், தமிழ்த் தேசிய போராட்டம் என்பது, அறத்தில் இருந்து எழுவது. அப்படியான அறத்தைப் பேணுவதற்கு, அதில் இயங்கும் நபர்கள் அறத்தோடு இருக்க வேண்டும். அந்த அறம், சட்டத்தரணிகளின் தொழில் தர்மத்தை பல நேரங்களில் கேள்விக்குள்ளாக்கிவிடும். ஏனெனில், தமிழ்த் தேசிய அரசியலுக்குள் இருக்கும் சட்டத்தரணிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்களையும் மாபியாக்களையும் காப்பாற்‌ற கறுப்பு அங்கியை அணிவது என்பது, தமிழ்த் தேசிய போராட்டத்துக்கான அறத்தின் மீது ஆணி அடிப்பதற்கு ஒப்பானது. வடக்கு - கிழக்கில் போதைப்பொருள் பாவனையின் அதிகரிப்பு என்பது, சமூக கட்டமைப்புகளின் வீழ்ச்சி மற்றும் பொறுப்பின்மையின் வழியாக வருவதாகும். ஏனெனில், தமிழ்ச் சமூகக் கட்டமைப்பு என்பது, ஒவ்வொரு தனி மனிதனுக்குமான பொறுப்புணர்வை சரியாக போதிக்கவில்லை. மாறாக, மற்றவர்களின் உழைப்பில் தங்கி வாழும் மனநிலையையும், மற்றவர்களை சுரண்டி வாழும் போக்கிலித்தனத்தையும் கேள்விக்குள்ளாக்காமல் விட்டுவிட்டது. அதாவது, விழுமியங்கள் சார் அணுகுமுறையை, சமூகக் கட்டமைப்புகள் மக்கள் மத்தியில் வளர்த்தெடுக்காமல் காலாவதியாகிவிட்டன. அதனால், புறச் சக்திகள், தமிழ் மக்கள் மத்தியில் நுழைவது இலகுவாகிவிட்டது. பொறுப்பின்மையையும் சுரண்டல் மனநிலையையும் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து முற்றாக விலக்கி வைக்க வேண்டும். இல்லையென்றால், போதைப்பொருள் பாவனையால் மாத்திமல்ல, சமூக குற்றங்களாலும் தமிழ் சூழல் இன்னும் மோசமாக தள்ளாடத் தொடங்கிவிடும். போலி கௌரவங்களுக்காக தமிழ் மக்களை ஆக்கிரமித்துவிட்ட போதை, சமூக குற்றங்களை கண்டுகொள்ளாமல் மூடி மறைத்துச் செயற்படுவது, சமூக விரோதச் செயற்பாடாகும். அவ்வாறான நிலையை தமிழ்த் தேசியத்துக்குள் இயங்கும் பல தரப்புகளும் தற்போது செய்து வருகின்றன. வடக்கு - கிழக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்புக்கு, அரச கட்டமைப்பே காரணம் என்று குற்றஞ்சாட்டிவிட்டு விலகி ஓடுவது, சமூகப் பொறுப்பைத் தட்டிக்கழிப்பதாகும். அரச கட்டமைப்புகள் மாத்திரம் காரணமல்ல; மாறாக, அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் தரப்புகள், தமிழ் மக்கள் மத்தியில் உண்டு. அந்தத் தரப்புகளை அடையாளப்படுத்தி, எச்சரிக்கை செய்வதுதான் தமிழ்த் தேசியத்துக்கான அர்ப்பணிப்பும் அறமும் ஆகும். ஏனெனில், தற்போது உயிரைக் கொடுத்து போராடுவதற்கு எந்தத் தமிழ்த் தலைவரும் தயார் இல்லை. அப்படியான நிலையில், குறைந்த பட்சம் அறத்தினை காக்கும் அரசியலுக்காக, அவர்கள் சில நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். அதில், முக்கியமானது போதைக்கு எதிராக நிலை. இல்லையென்றால், கண் முன்னாலேயே தமிழ்ச் சமூகம் மோசமாகச் சீரழிந்து போகும். அப்போது, அவர்களை அழிக்க வேறு யாரும் தேவை இருக்காது. தாங்களாகவே அழிந்து போய்விடுவார்கள். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/போதையால்-தள்ளாடும்-தமிழ்-இளைஞர்-சமூகம்/91-305731
  8. திலீபனை அவமானப்படுத்திய விடாக்கண்டன்களும் கொடாக்கண்டன்களும் புருஜோத்தமன் தங்கமயில் வாக்கு அரசியலுக்காக எதையும் செய்யத் துணியும் பொறுக்கிக் கூட்டங்கள், இனம் ஒன்றின் விடுதலை அரசியலை ஆக்கிரமித்துவிட்டால், அந்த இனம் இலகுவாக அரசியல் நீக்கம் செய்யப்பட்டுவிடும். உலகம் பூராவும் விடுதலைக்கான கோரிக்கையுடன் உரிமைப் போராட்டங்களை முன்னெடுக்கும் சமூகங்களின் குரல்களை அடக்குவதற்காக, ஆக்கிரமிப்பாளர்களும் ஆட்சியாளர்களும் போராட்டங்களுக்குள் பொறுக்கிகள், ரவுடிகள், குழப்பவாதிகளை இறக்கிவிடுவது வழக்கம். அதுவும், போராடும் தரப்புக்குள் இருந்தே புல்லுருவிகளை இனங்கண்டு, கூலிப்படையாக ஆட்சியாளர்கள் மாற்றுவார்கள். அது, போராட்டங்களை இலகுவாக தோற்கடிப்பதற்கான உத்திகள். விடுதலைப் புலிகளின் தோல்விக் கட்டங்களில், கருணாவின் பிளவு முக்கிய பங்கை வகித்தது. அதனை, இன்றைய ஜனாதிபதியும் அன்றைய பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவே வெற்றிகரமாக நிகழ்த்தியவர் என்ற விமர்சனம் உண்டு. இன்றைக்கும் அவர், தமிழ்த் தேசிய அரசியலை குண்டர்கள், கூலிப்படைகளைக் கொண்டு மெல்ல மெல்ல நீக்கம் செய்ய தொடங்கியிருக்கின்றார் என்ற சந்தேகம் அரசியல் விமர்சகர்கள் மட்டத்தில் உண்டு. அதனை, தமிழ்த் தேசியத்தின் போர்வையில் உலவும் சில கட்சிகளினதும் குழுக்களினதும் செயற்பாடுகள் நிரூபிப்பதுபோல் உள்ளன. தியாகி திலீபனின் 35ஆவது நினைவு நாளில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயகப் போராளிகள், வேலன் சுவாமி குழு உள்ளிட்டவர்கள், நல்லூரில் நிகழ்த்திய அயோக்கியத்தனங்களைப் பார்த்தால், தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து மக்களை அகற்றுவதற்காக, இந்தத் தரப்புகள் எவ்வளவு மும்முரமாக இயங்குகின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இந்தத் தரப்புகளிடம், குறுகிய சுயநல அரசியல் இலாப நோக்கங்கள் மட்டுமே இருக்கின்றன. அவற்றில், வாக்குகளை முன்னிறுத்திய அரசியல் பிரதானமானது. அதற்காக, குரங்குகள் மாதிரி குட்டிக்கரணங்களை போட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழ்த் தேசிய அரசியல் போராட்ட வரலாற்றில், தியாகி திலீபன் ஒரு குறியீடு. காந்தியின் வழியாக உலகத்துக்கு அஹிம்சை போதித்த பாரத தேசத்துக்கே, திலீபன் அஹிம்சை போதித்தவர்; ஓர் ஆயுதமுனை போராட்ட இயக்கத்துக்குள் இருந்து, அஹிம்சை வழியில் போராடி உயிர்நீத்தவர் என்ற அடையாளத்தைப் பெற்றவர். அவரின் ஆகுதிப் பயணம், தமிழ்த் தேசிய போராட்டத்தினை நோக்கி ஆயிரக்கணக்கான இளைஞர்களை இழுத்து வந்தது. அப்படிப்பட்ட ஒருவரின் நினைவிடத்தில், கட்சிகளின் ஆதரவாளர்கள் என்கிற பெயரில் இயங்கும் பொறுக்கிகள், காவாலிகள், கூலிக் குண்டர்கள் நின்று, ஏட்டிக்குப் போட்டியாக தகாத வார்த்தைகளால் சண்டையிட்டு, நினைவு கோரலுக்கான வெளியை ஆக்கிரமித்திருக்கிறார்கள். அங்கு சாதாரண ஒரு தமிழ் மகனோ, மகளோ கட்சி, குழு அரசியலுக்கு அப்பால் நின்று அஞ்சலி செலுத்துவதற்கான கட்டங்களை முன்னணியினரும், ஜனநாயகப் போராளிகளும், வேலன் சுவாமி குழுவும் நிராகரித்தார்கள். நினைவுகூரலுக்கான கட்டம் எவ்வளவு ஆத்மார்த்தமாக முன்னெடுக்கப்பட வேண்டுமோ அதுவெல்லாம் தகர்த்தப்பட்டு, ஏட்டிக்குப் போட்டியாக நினைவுச்சுடர் ஏற்றி, பொதுச்சுடரை தூக்கி வைத்துக்கொண்டு இழுபறிப்பட்டு அலங்கோலமாக்கினார்கள். இவ்வளவு அயோக்கியத்தனங்களை அரங்கேற்றிய தரப்புகள் எல்லாமும், திலீபனை அவமானப்படுத்தி ஆனந்தப்பட்டிருக்கிறார்கள். தமிழ் மக்களின் நினைவேந்தலுக்கான வெளியை, பௌத்த சிங்கள மேலாதிக்கவாதம் தொடர்ச்சியாக அடக்கி ஒடுக்கி வந்திருக்கின்றது. நெருக்கடி காலங்களில் எல்லாம், பெரும் அர்ப்பணிப்போடு தமிழ் மக்கள் நினைவேந்தல்களை முன்னெடுத்திருக்கிறார்கள்; இராணுவத்தினரின் நெருக்கடிகளைத் தாண்டியிருக்கிறார்கள். ஆனால், இம்முறை சிங்கள மேலாதிக்கத் தரப்பு, ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்திருக்கின்றது. அதுவும், பிரித்தாளும் உத்தியையும் கூலிப்படைகளையும் இறக்கிவிட்டு பார்த்துக் கொண்டது. தென் இலங்கையின் எதிர்பார்ப்பை முன்னணியும் ஜனநாயகப் போராளிகளும் வேலன் சுவாமி குழுவும், கொஞ்சமும் குறையாமல் நிறைவேற்றியிருக்கின்றன. ‘முன்னணி’ என்கிற முகப்புப் பெயரில் இயங்கும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் வாக்குக்கான அரசியல் என்பது, தொடர்ச்சியாக கறுப்புப் பக்கங்களால் நிரம்பியது. அமைச்சுப் பதவிக்காக ஜீ.ஜீ பொன்னம்பலம், இந்திய வம்சாவளித் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைப்பதைப் பொறுக்காது, காங்கிரஸில் இருந்து தந்தை செல்வா வெளியேறி, தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தார். தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், கட்சி கூட்டங்கள் எங்கு நடந்தாலும், அங்கு காங்கிரஸின் குண்டர்களும் கூலிப்படையினரும் கூட்டங்களுக்குள் புகுந்து, ரௌடித்தனங்களைப் புரிவது வழக்கம். அதுவும், கூட்டத்தில் கூடியிருக்கும் மக்களை நோக்கி, உயிருள்ள பாம்புகளை எறிவது வழக்கம். அதனை, காங்கிரஸார் கூட்டத்தை கலைக்கும் உத்தியாகவே பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். சீனியர் பொன்னம்பலம் காலத்தில் காங்கிரஸார் அரங்கேற்றிய ரௌடித்தனத்தை, ஜுனியர் பொன்னம்பலத்தின் காலத்திலும் அவர்கள் விடுவதாக இல்லை. காங்கிரஸ் கட்சியில் ஆதரவாளர்கள் என்கிற பெயரில், குண்டர்களையும் ரௌடிகளையுமே தொடர்ச்சியாக வளர்த்து வந்திருக்கிறார்கள். ஏனெனில், ஆதரவாளர்கள் என்கிற கட்டம், கேள்வி கேட்கும் கட்டங்களைக் கொண்டது. குண்டர்களுக்கோ, ரௌடிகளுக்கோ கேள்வி கேட்கும் அதிகாரம் ஏதும் இல்லை; அவர்கள், ஏவல் அடிமைகள். பொன்னம்பலம் குடும்பத்தினர் என்ன சொல்கிறார்களோ அதைச் செய்வதுதான் அவர்களின் ஒரே வேலை. திலீபன் நினைவிடத்தில், காங்கிரஸின் குண்டர்கள் மஞ்சள் நிற ரீ சேர்ட்டுக்களோடு நின்று அரங்கேற்றிய அடாவடிகளே அவற்றுக்குச் சாட்சி. நினைவேந்தலுக்கான உரிமை பற்றி, பாராளுமன்றத்துக்குள் மற்றவர்களுக்கு வகுப்பெடுக்கும் கஜேந்திரகுமாரும், கஜேந்திரனும் அதனை, நியாயமாக மக்கள் அனுஷ்டிப்பதற்கான கட்டங்களை முடக்காது இருக்க வேண்டும். தென் இலங்கையில் பொங்கிவிட்டு வந்து, மக்கள் அஞ்சலிப்பதற்கான கட்டங்களை கட்சியின் குண்டர்களை வைத்து குழப்பித் தடுக்கக் கூடாது. நல்லூரில் காங்கிரஸின் குண்டர்கள் அடாவடி புரிந்து கொண்டிருக்க கஜேந்திரகுமார் அதனை பார்த்திருந்தது, அற்பத்தனமாக அரசியல். ஜனநாயகப் போராளிகள் என்கிற பெயரில், கட்சியை நடத்தும் முன்னாள் போராளிகள் சிலரும் அபத்தமான அரசியலை தொடர்ச்சியாக செய்ய எத்தனிக்கிறார்கள். அவர்கள் நினைவேந்தலுக்கான வெளியை காங்கிரஸ் கட்சியினர் போன்றே, மோசமான வழிகளில் குழப்பும் அணுகுமுறையோடு செயற்பட்டிருக்கிறார்கள். தமிழ்த் தேசிய போராட்டத்தில் முன்னாள் போராளிகளின் அர்ப்பணிப்பு மிகப்பெரியது. அதனை எந்தவொரு தருணத்திலும் நிராகரிக்க முடியாது. ஆனால், முன்னாள் போராளிகள் என்கிற பெயரை வைத்துக் கொண்டு, அற்பத்தனமான நடவடிக்கைகளில் ஜனநாயகப் போராளிகள் கட்சியிலுள்ள சிலர் இயங்குகிறார்கள். அதுவும், நினைவேந்தலை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் எடுப்பதற்கான வேலைகளை ஆற்றியமை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாதது. நினைவேந்தலை ஓர் ஒழுங்கில் நடத்துவதற்குப் பதிலாக, ஆரம்பத்தில் இருந்தே முரண்பாடுகளுடன் அணுக வேண்டும் என்பது எந்தத் தருணத்திலும் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. தமிழ்த் தேசிய அரசியலில் தன்னை புதிய மீட்பராக காட்டிக் கொண்டு, வேலன் சுவாமி எனும் நபர் யாழ்ப்பாணத்தில் வலம் வருகிறார். அவர், ‘பொத்துவில் இருந்து பொலிகண்டி வரை’க்கான மக்களின் போராட்டத்தை தன்னுடைய போராட்டமாக அபகரித்த ஒருவர். அவரின் நோக்கம் பலத்த சந்தேகங்களுக்கு உட்பட்டது. விடுதலைப் புலிகள் முள்ளிவாய்க்காலுக்குள் முடிவை அண்மித்துக் கொண்டிருந்த காலத்தில், கொழும்பில் சின்மயா மிஷன் எனும் அமைப்பில் ‘சுவாமிஜி’ என்ற வேடத்தில் இருந்தவர். பின்னரொரு காலத்தில் யாழ்ப்பாணம் வந்த அவர், சின்மயா மிஷனோடு பிணக்கப்பட்டு ‘வேலன் சுவாமி’யாக மாறினார். அவரின் செயற்பாடுகளில், ‘தமிழர் நலன்’ என்பதைத் தாண்டி, பிறத்தியரின் நலன்களே அதிகமாக இருப்பதான சந்தேகம் உண்டு. இம்முறை திலீபன் நினைவேந்தலை அவரும் கையகப்படுத்த முனைந்தார். ஆனால், அவரைத் தாண்டிய விடாக்கண்டன்களும் கொடாக்கண்டன்களுமாக, காங்கிரஸ் கட்சியினரும் ஜனநாயகப் போராளிகளும் போட்ட அடிதடிக்கும் வேலன் சுவாமி தூக்கி எறியப்பட்டுவிட்டார். தமிழ் மக்களுக்கு நினைவேந்தலுக்கான வெளி கிடைத்தாலும் அதனை வாக்குப் பொறுக்கி அரசியல்வாதிகளும், வெளித்தரப்புகளின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் தரப்புகளும் ஒருபோதும் அனுமதிக்காது. அப்படியான நிலையில், தமிழ்ச் சமூகம், ஒவ்வொரு நினைவேந்தலுக்குமான பொதுக் கட்டமைப்பை நோக்கி நகர வேண்டும். அந்தக் கட்டமைப்புக்குள், தமிழ்த் தேசிய கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள், சமயப் பெரியார், முன்னாள் போராளிகள், பெற்றோர், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினர் உள்வாங்கப்பட வேண்டும். இல்லையென்றால், திலீபனின் நினைவிடத்தில் அரங்கேற்றப்பட்ட அசிங்கத்தை, முள்ளிவாய்க்காலிலும் மாவீரர் துயிலும் இல்லங்களிலும் நிகழ்த்துவதற்கு தயங்கமாட்டார்கள். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/திலீபனை-அவமானப்படுத்திய-விடாக்கண்டன்களும்-கொடாக்கண்டன்களும்/91-304972
  9. சம்பந்தனின் பதவி வெறியைத் தணிக்குமா தமிழரசின் குழு? புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை, அவர் வகித்து வரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுமாறு கோருவதற்காக, சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவை இலங்கை தமிழரசுக் கட்சி அமைத்திருக்கின்றது. தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, சி. வி. கே சிவஞானம், எம். ஏ சுமந்திரன் உள்ளிட்டவர்கள் அடங்கிய அந்தக் குழு, எதிர்வரும் நாள்களில் சம்பந்தனை நேரில் சந்தித்து, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்யுமாறு ‘பக்குவமாக’க் கோரும். வவுனியாவில், ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில், மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டது. வயது மூப்பு காரணமாக ஏற்படும் உடல்நலக் குறைவால் சம்பந்தன், கடந்த சில ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவரால் உதவியாளர்கள் இன்றி எந்தக் காரியத்தையும் ஆற்ற முடியாத நிலை தொடர்கிறது. அவர் முக்கிய கலந்துரையாடல்கள், சந்திப்புகளில் கூட, என்ன பேசுகிறார் என்பதை மற்றவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக சுமந்திரன் தேவைப்படுகிறார். தந்தை செல்வா உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போது, அமிர்தலிங்கம் எப்படி செல்வாவின் குரலாக நோக்கப்பட்டாரோ, அதுபோலத்தான் சம்பந்தனின் குரலாக இன்றைக்கு சுமந்திரன் அடையாளப்படுத்தப்படுகின்றார். இவ்வாறான நிலை நீடிப்பதை, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் விரும்பவில்லை. அதனால், சம்பந்தனை, கூட்டமைப்பின் தலைமைத்துவத்தில் இருந்து விலக வேண்டும் என்று தொடர்ச்சியாகக் கோரி வருகின்றன. அத்தோடு, கூட்டமைப்புக்கு கூட்டுத்தலைமை உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன. கூட்டமைப்பின் தலைவராகவும் பாராளுமன்றக் குழுவின் தலைவராகவும் இருக்கும் சம்பந்தன், தற்போதைய பாராளுமன்றத்தின் அமர்வுகளில் சொற்ப நாள்கள் மாத்திரமே கலந்து கொண்டிருக்கின்றார். அவர், வைத்திய விடுப்பு என்கிற பெயரில், அமர்வுகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்து வருகிறார். அதனால் ஏற்படும் பாராளுமன்றக் குழுத் தலைவர் என்கிற வெற்றிடத்தையும் சுமந்திரன் பிரதியீடு செய்து வருகிறார். இதனால், தமிழரசுக் கட்சிக்குள்ளும் கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளுக்குள்ளும் குழப்பம் நீடிக்கின்றது. முக்கிய அரசியல் முடிவுகள், கிட்டத்தட்ட சுமந்திரனின் கைகளுக்குள் சென்று சேர்ந்துவிட்டதான நிலை உருவாகியிருக்கிறது. ஏனெனில், ஏற்கெனவே தந்தை செல்வாவின் இறுதிக் காலங்களில், அமிர்தலிங்கம் தன்னுடைய அரசியல் முடிவுகளை எல்லாம் செல்வாவின் பெயரால் முன்மொழிந்தார் என்பது, தமிழ்த் தேசிய அரசியலில் நீடிக்கும் உணர்நிலை. அப்படியான நிலை, இன்னொரு சந்தர்ப்பத்தில் தொடர்வதை யாரும் விரும்ப மாட்டார். அதனால், சம்பந்தனின் பதவி விலகல் அல்லது அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டிய நிலை என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. இவற்றையெல்லாம் விட முக்கியமான விடயம், திருகோணமலையில் தற்போது அரங்கேறி வரும் தமிழ் பாரம்பரிய நில ஆக்கிரமிப்பை களத்தில் இருந்து எதிர்ப்பதற்கும், செயற்றிறனுடன் இயங்குவதற்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அவசியம் காணப்படுகின்றது. சம்பந்தனால் செயற்பட முடியாத நிலையில், அவர் தன்னுடைய இடத்தை, தனக்கு அடுத்த நிலையில் உள்ளவரிடம் விட்டுக் கொடுப்பதுதான் அவர் தமிழ்ச் சமூகத்துக்கு செய்யும் நல்ல காரியமாகும். வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சி கூட்டத்தில், திருகோணமலையில் இருந்து செயற்பாட்டாளர் குழுவொன்று, சம்பந்தனின் பதவி விலகல் தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று வாதிட்டு இருக்கின்றது. அந்தச் செயற்பாட்டாளர்கள், திருகோணமலையில் தமிழரசுக் கட்சியை புனரமைப்புச் செய்த குகதாசனால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் என்பது செய்தி. சம்பந்தன் பதவி விலகினால், அந்த இடத்துக்கு குகதாசன் வருவார். அவரும் இளையவர் அல்ல; அவ்வளவு வேகமாகச் செயற்படக் கூடியவர் என்று கருத முடியாது. ஆனாலும், இருந்தும் இல்லாமல் இருப்பதற்கு, களத்தில் செயற்படுவதற்கான ஒருவராக குகதாசனின் இடத்தை ஏற்றுக் கொள்ள முடியும். தமிழ்த் தேசிய அரசியல் என்பது, தொடர் செயற்பாடு மற்றும் இராஜதந்திர அணுகுமுறை என்கிற கட்டங்களில் இருந்து அணுப்பட வேண்டியது. அதனால், களத்தில் இயங்குபவர்கள் ஓய்வின்றி உழைத்தாக வேண்டும். அதற்கு வயது மூப்பு, உடல்நலக் குறைவு போன்ற தொல்லைகள் இல்லாதவர்களின் வருகை அவசியமானது. அதுதான், மக்களையும் தமிழ்த் தேசிய அரசியலில் தொடர்ச்சியாக இணைத்துக் கொண்டிருக்கும். மாறாக, வீடுகளில் ஓய்வெடுக்க வேண்டியவர்கள், கட்சிகளையும் பதவிகளையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தால், தமிழ்த் தேசிய அரசியல், சாய்வு நாற்காலிகளில் சாய்ந்திருக்க தொடங்கிவிடும். கூட்டமைப்புக்குள், குறிப்பாக தமிழரசுக் கட்சிக்குள் ஓய்வுபெற வேண்டிய மூத்தவர்கள் பலர், இளையவர்களுக்கு இடம் வழங்காமல், நந்திகளாக இடைமறித்து நிற்கிறார்கள். கடந்த பொதுத் தேர்தலின் போது, மூத்தவர்கள் ஒதுங்கிக் கொண்டு இளையவர்களுக்கு வழிவிடவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. அந்தக் கோரிக்கைகளின் போக்கில், திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடாது, அந்த இடத்தில் குகதாசனை முன்னிறுத்தும் முடிவுக்கு சம்பந்தன் வந்திருந்தார். அவர், தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் வருவாக கூறினார். ஆனால், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவோ, சம்பந்தன் போட்டியிடாது விட்டால் தானும் போட்டியிட முடியாது போகும்; அதனால், எப்படியாவது சம்பந்தனை போட்டியிட வைத்துவிட வேண்டும் என்று குறியாக இருந்தார். அதில் அவர் வெற்றியும் பெற்றார். ஆனால், அவரால் தேர்தலில் வெற்றியடைய முடியவில்லை என்பது வேறு கதை! கடந்த பொதுத் தேர்தலில், கூட்டமைப்பின் தோல்வி என்பது, தமிழரசுக் கட்சியாலேயே பெரும்பாலும் நிகழ்ந்தது. வேட்பாளர்கள் தனித்துத் தனித்தே விருப்பு வாக்குகளைக் கோரினார்களே அன்றி, கட்சிக்காக வாக்குகளைக் கோரவில்லை. தாங்கள் வென்றால் போதுமென்பதுதான் அவர்களின் நிலைப்பாடாக இருந்தது. அத்தோடு, கட்சியின் இளையோரும் ஆதரவாளர்களும் கூட சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றவர்கள் போட்டியிட்டதால் எரிச்சல் அடைந்தார்கள். கட்சிக்காக வாக்குச் சேகரிப்பதற்குப் பதிலாக, தங்களுக்குள் பிரிந்து நின்று சண்டையிடுவதற்காகவே நேரத்தைச் செலவிட்டார்கள். தேர்தலில் இளையோருக்கு இடம் வழங்காது போட்டியிட்டு தோற்ற மாவை, அதன்பின்னர், தேசிய பட்டியலுக்காக சிவஞானம் உள்ளிட்டவர்களை தூது அனுப்பி, ‘அழிச்சாட்டியம்’ பண்ணிய காட்சிகளை எல்லாம் தமிழ் மக்கள் காண வேண்டிய அவலம் ஏற்பட்டது. இப்போது, சம்பந்தனை பதவி விலகக் கோருவதற்காக அமைக்கப்பட்ட குழுவில் உள்ள மாவை சேனாதிராஜா, சிவஞானம் உள்ளிட்டவர்களும் வயது மூப்போடு இருப்பவர்கள். அந்த வயதுக்குரிய உடல்நல பிரச்சினைகளோடு அல்லாடுபவர்கள். ஆனால், அவர்கள் தொடர்ந்தும் கட்சியையும் அதன் மூலம் அடையக் கூடிய பதவிகளுக்காகவும் கழுகுகள் போல காத்திருப்பவர்கள். காலம், இவர்களிடமே சம்பந்தனை பதவி விலகுமாறு ‘பக்குவமாக’ கோரும் பொறுப்பை வழங்கி இருக்கின்றது. சம்பந்தனிடம் பதவி விலகுமாறு பக்குவமாகக் கோருவதற்கு முன்னர் மாவை, சிவஞானம் உள்ளிட்ட தமிழரசுக் கட்சியின் பதவி ஆக்கிரமிப்பாளர்கள், அந்த இடங்களை இளையோரிடம் கையளிப்பது தொடர்பில் சிந்திப்பது நல்லது. இல்லையென்றால், கூட்டமைப்பின் அழிவையும் தமிழரசுக் கட்சியின் தோல்வியையும் தவிர்க்கவே முடியாது. தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை நிலை நிறுத்துவதற்காகவே, தமிழ்த் தேசிய அரசியல் தோற்றம் பெற்றது. ஆனால், இன்றைக்கு அந்த அரசியல் அரங்கை, பதவி வெறியர்களும் சுயநலமிகளும் ஆக்கிரமித்து விட்டார்கள். அது, தமிழ் மக்களை தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து விலகிச் செல்வதற்கான சூழல்களை ஏற்படுகின்றது. அதுதான், வடக்கு - கிழக்கில் தமிழ்த் தேசிய கட்சிகளைத் தாண்டி, பௌத்த சிங்களக் கட்சிகள் மற்றும் ஒத்தோடிக் கட்சிகளில் இருந்து உறுப்பினர்கள் வெற்றிபெறும் நிலையை ஏற்படுத்தி இருக்கின்றது. ஒலிவாங்கிகளுக்கு முன்னால் தமிழ்த் தேசியம் என்று வாய்கிழியக் கத்தி, மக்களை வெறுப்பேற்றுவதற்கு முன்னர், தமிழ்த் தேசிய கட்சிகளில் அசையாத நந்திகளாக இருப்பவர்கள் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும். அவர்கள், பதவிகளில் இருந்து விலகி, கட்சியின் போசகர்கள் என்கிற நிலைக்கு நகர வேண்டும். இல்லையென்றால், தமிழ்த் தேசிய கட்சிகளின் வீழ்ச்சி இன்னும் மோசமாக இருக்கும். சம்பந்தனை பதவி விலகக் கோருவதற்காக, தமிழரசுக் கட்சி குழுவை அமைத்திருக்கின்றது என்கிற விடயம், மேலோட்டமாக பார்த்தால் நகைப்புக்குரியதுதான். ஆனால், பதவிகளில் இறுதிக் காலம் வரையில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கும் அது ஒரு விதத்தில் நெருக்கடியை ஏற்படுத்தும். இன்றைய சூழலில், சம்பந்தன் பதவி விலக வேண்டும் என்பது தவிர்க்க முடியாதது. ஆனால், அவர் பதவி விலகுவாரா என்றால், அந்தச் சிந்தனை அவருக்கு இருப்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. ஏனெனில், அவர் அதிகார அரசியலில் திளைத்த ஒருவர். இறுதிக் காலம் வரையில் பதவியை பற்றிப் பிடித்திருப்பதே அவரின் இறுதி விரும்பமாகவும் இருக்கும். ஆனால், நெருக்கடிகள் வழங்கப்பட்டு அவர் பதவி விலகினால், தமிழரசுக் கட்சிக்குள் நந்திகளாக வீற்றிருக்கும் பலருக்குமான ஆப்பாக அது இருக்கும். அவ்வாறான நிலை உருவாகுவதே, தமிழ் மக்களுக்கு சிறிதளவேனும் நன்மை பயக்கும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சம்பந்தனின்-பதவி-வெறியைத்-தணிக்குமா-தமிழரசின்-குழு/91-304725
  10. ஜெனீவா அரங்கில் இலங்கையை தக்கவைத்தல் புருஜோத்தமன் தங்கமயில் இந்த ஆண்டின் இறுதி ஜெனீவா அரங்காற்றுகை, தற்போது நிகழ்த்தப்படுகின்றது. வழக்கத்துக்கு மாறாக, தென் இலங்கையில் இருந்தும் பிரதான எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட சிங்கள பெரும்பான்மை எண்ணங்களை பிரதிபலித்து வருகின்ற தரப்புகள் சிலவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரை நாடிச் சென்றிருக்கின்றன. ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான தென் இலங்கையின் கிளர்ச்சிப் போராட்டங்களுக்குப் பின்னரான நாள்களில் இடம்பெற்றுவரும் சட்டத்துக்குப் புறம்பான கைதுகள், கடத்தல்கள் பற்றி முறையிடுவதற்காக, சிங்களத் தரப்புகள் ஜெனீவாவில் நடமாடி வருகின்றன. இலங்கையில் இடம்பெற்று வரும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக, தமிழ் மக்களின் பிரதிநிதிகளே தொடர்ந்தும் ஜெனீவாவில் முறையிட்டு வந்திருக்கிறார்கள். அதுவும், முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னரான நாள்களில் தமிழ் மக்களுக்கு எதிரான நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கான நீதியை, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும் என்று, தமிழ்த் தரப்புகள் ‘தலையால் நடந்து’ கேட்டு வருகின்றன. ஆனால், அதற்கான உறுதி மொழியை தென் இலங்கையின் எந்தவோர் அரசாங்கமும் எந்தத் தருணத்திலும் வழங்குவதற்குத் தயாராக இருந்ததில்லை. 2015இல் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம், ஜெனீவாவோடு இணைந்து வேலை செய்வதற்கான சாதகமான சமிக்ஞை காட்டுவதாகக் கூறி, கால நீடிப்பு என்னும் ஏமாற்று நாடகத்தை அரங்கேற்றுவதற்கான வேலைகளையே பார்த்து வந்தது. மற்றப்படி, பொறுப்புக் கூறலுக்கான எந்தவொரு தன்மையையும் எந்த அரசாங்கமும் வெளிப்படுத்தவில்லை. நல்லாட்சி அரசாங்கத்துக்கு முன்னும் பின்னும், தென் இலங்கையின் பெரும் இனவாதத் தரப்பான ராஜபக்‌ஷர்களே ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். இலங்கையின் குற்றங்களில் அதிகமானவை, ராஜபக்‌ஷர்கள் ஆட்சியில் இருக்கும் போது நிகழ்த்தப்பட்டவை. பொறுப்புக் கூற வேண்டியவர்களில் பிரதானமானவர்கள் அவர்களே! அதனால், ஜெனீவாவில் நிகழும் எதையும், ராஜபக்‌ஷர்கள் நிராகரித்தே வந்திருக்கிறார்கள். தற்போது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்தாலும், ஆட்சி ராஜபக்‌ஷர்களாலேயே நடத்தப்படுகின்றது. அப்படியான நிலையில், ஜெனீவாவை நிராகரிப்பது என்பது, தவிர்க்க முடியாதது. அதையே, இம்முறையும் அலி சப்ரியை வைத்து அரசாங்கம் செய்திருக்கின்றது. நீதியை உறுதிப்படுத்துவதற்கான பொறுப்புக்கூறலுக்கான கடப்பாடு, இலங்கையால் தொடர்ந்தும் தட்டிக் கழிக்கப்பட்டு வருவதாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அண்மைய அறிக்கையிலும் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கின்றது. இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதியை வழங்குவதற்கான கடப்பாட்டைத் தட்டிக்கழிக்கின்ற அனைத்துச் சந்தர்ப்பங்களும், நாட்டையும் மக்களினது வாழ்க்கையையும் படுமோசமான வழிகளை நோக்கி நகர்த்தும் என்பதற்கான உதாரணமாக, இலங்கை தொடர்ந்தும் இருந்து வருகின்றது. அதன் விளைவே, நாடு இன்று சந்தித்து நிற்கின்ற பொருளாதார பின்னடைவு என்பது, சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் குற்றச்சாட்டாகும். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையிலும், பொறுப்புக் கூறலுக்கான கடப்பாட்டை, இலங்கை தட்டிக்கழித்து வருவதால்த்தான் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கின்றது. அதனால், பொறுப்புக் கூறலுக்கான கடப்பாட்டை உறுதிப்படுத்துமாறு, ஆணையாளரின் அறிக்கை வலியுறுத்தி இருக்கின்றது. ஆனால், ரணில் - ராஜபக்‌ஷர்களின் பிரதிநிதியாகச் சென்றிருக்கின்ற அலி சப்ரி, ஆணையாளரின் அறிக்கையை முற்றாக நிராகரித்துள்ளதுடன், இலங்கையின் இறைமை பற்றி வகுப்பும் எடுத்திருக்கின்றார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில், இலங்கை தொடர்பிலான விவாதம் திங்கட்கிழமை (12) இடம்பெற்றது. இதன்போது, மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் இந்தியா தவிர்ந்த அனைத்து ஆசிய நாடுகளும் ஆபிரிக்க நாடுகளும், இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டையே முழுமையாக வெளிப்படுத்தின. குறிப்பாக, இலங்கையின் இறைமைகளில் தலையீடுகளை எந்தவோர் அமைப்பும் செய்யக் கூடாது என்றன. அத்தோடு, கடந்த சில ஆண்டுகளாக, இலங்கை முன்னேற்றப் பாதையில் பயணிப்பதாக வாதிட்டன. இந்தியா, இலங்கையை தூரிகையால் அடித்துத் தண்டித்திருக்கின்றது. அதாவது, மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற விடயத்தை, பிரதானமாகக் கூறியிருக்கின்றது. அதனோடு சேர்ந்து, அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று மேம்போக்காகச் சொல்லியிருக்கின்றது. இலங்கை தொடர்பில், அமெரிக்காவும் மேற்கு நாடுகளுமே கடந்த காலங்களில் வெளிப்படுத்திய நிலைப்பாட்டை இம்முறையும் பிரதிபலித்தன. அத்தோடு இம்முறை, இலங்கையில் இடம்பெறும் ஊழல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் வாதிட்டன. ஆனால், வழக்கமாக இலங்கை தொடர்பிலான தீர்மானங்களை மேற்கு நாடுகளே முன்வைத்து, ஆதரவு நாடுகளைத் திரட்டி வந்திருக்கின்றன. ஆனால், இம்முறை நடைபெற்ற இலங்கை தொடர்பிலான அமர்வில், இலங்கை மீதான புதிய தீர்மானமொன்றை மேற்கு நாடுகள் கொண்டு வந்தாலும், அதற்கான ஆதரவைப் பெற்றுக் கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுகின்றது. ஏனெனில், கடந்த காலங்களில் இலங்கைக்கு எதிராக வாக்களித்த பல நாடுகளும், இம்முறை இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருப்பதைக் காண முடிகின்றது. குறிப்பாக, சீனாவின் கடன் பொறிக் கட்டுப்பாட்டில் இருக்கின்ற பல ஆபிரிக்க நாடுகளும், ஆசிய நாடுகளும் இலங்கைக்கான ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருக்கின்றன. இலங்கை தொடர்பிலான புதிய தீர்மானத்தை வரையும் பணிகளை, மேற்கு நாடுகளும் மனித உரிமைகள் அமைப்புகளும் ஆரம்பித்துவிட்டன. இந்தப் பத்தி எழுதப்படும் வரையில், புதிய தீர்மானத்தின் வரைபு என்பது, கடந்த காலங்களில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஒத்ததாகவே இருக்கும் என்றும், புதிதாக ஊழல்களுக்கு எதிரான விசாரணை அல்லது பொறுப்புக்கூறல் என்கிற விடயம் அமெரிக்காவின் ஆலோசனையுடன் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகின்றது. இம்முறை ஜெனீவாவை நோக்கி ஓடிய தென் இலங்கையின் பெரும்பான்மை அரசியல் சக்திகள், தற்போதையை அரசாங்கத்துக்கு எதிராக முறைப்பாடுகளைச் செய்யவே சென்றன. அதனால், அந்தத் தரப்புகளால் பெரியளவில் இலங்கையை பொறுப்புக்கூறப் பணிக்கும் கட்டங்களை செய்ய முடியாது. அதனை அந்தத் தரப்புகள் விரும்பவும் இல்லை. மாறாக, எதிர்கால தேர்தல்களுக்கான வாக்கு அரசியலை பலப்படுத்தவே அவை சென்றிருக்கின்றன. அந்தச் சக்திகள், ஒப்புக்காக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தமது அணிக்குள் இணைத்துக் கொண்டு சென்றிருக்கின்றன. மாறாக, அந்தச் சக்திகள், தமிழ், முஸ்லிம் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் குற்றங்கள் தொடர்பில், எந்தவித முறைப்பாடுகளையும் செய்யவில்லை. அவை, தென் இலங்கையின் இனவாத அரசியலின் ஆணிவேரை அறுக்கின்ற எந்த முயற்சிகளுக்கும் தயாராக இல்லை. ஏனெனில், அந்தத் தரப்புகளின் அரசியல் இருப்பும், இனவாத அரசியலிலேயே தங்கியிருக்கின்றது. அப்படியான நிலையில், பொறுப்புக்கூறல் கடப்பாடுகளை வலியுறுத்தும் அவசியம் பாதிக்கப்பட்ட தரப்பாக, தமிழ் மக்களைச் சார்ந்ததாக இருக்கின்றது. தமிழ் மக்களின் பிரதிநிதிகள், ஜெனீவாவை நோக்கி ஓடிய அனைத்துச் சந்தர்ப்பங்களிலும், தென் இலங்கை இனவாத சக்திகளும் அதன் இணக்க சக்திகளும், ‘பிரிவினைவாதிகள்’ என்ற கோசத்தையே முன்வைத்திருக்கின்றன. ஆனால், தமிழ் மக்கள் ஒவ்வொரு தருணத்திலும் வலியுறுத்தி வந்தது, இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதியும், மீளநிகழாமைக்கான உறுதிப்பாட்டையுமே ஆகும். அதுதான், மனித உரிமைகளைப் பாதுகாக்கின்ற உறுதிப்பாடுடைய நாட்டை உருவாக்குவதற்கான அடிப்படை ஆகும். அந்த அடிப்படையில் பயணிக்கும் தரப்பாகத் தமிழ் மக்களும் அவர்களின் பிரதிநிதிகளும் மேற்கொள்ளும் பயணத்தை எந்தக் காரணங்களுக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது. சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு, இலங்கையை தொடர்ந்தும் ஜெனீவாவில் வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். இல்லையென்றால், ‘நூல் அறுந்த பட்டத்தின் நிலை’யே ஏற்படும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஜெனீவா-அரங்கில்-இலங்கையை-தக்கவைத்தல்/91-304209
  11. வழமைக்கு திரும்பிய தென்இலங்கை அரசியல் புருஜோத்தமன் தங்கமயில் மக்கள் போராட்டத்துக்குப் பயந்து, நாட்டை விட்டுத் தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, கடந்த வார இறுதியில் நாடு திரும்பி இருக்கிறார். அவரை, விமான நிலையத்தில் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களும் முக்கியஸ்தர்களும் வரவேற்றனர். கோட்டாவை மீண்டும் அரசியலுக்கு அழைத்து வந்து, ‘மக்களால் துரத்தியடிக்கப்பட்ட ஜனாதிபதி’ என்ற பெயரைக் களைய வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் ஒருதரப்பினர் நினைக்கிறார்கள். மக்கள் போராட்டங்களால், பாரம்பரிய அரசியல்வாதிகளின் சிந்தனையையும் நிலைப்பாடுகளையும் மாற்ற முடியாது என்று நிறுவ நினைக்கிறார்கள். அதன்மூலமே, சம்பாதிப்பதற்கான தெரிவாக அரசியலைக் கொண்டிருக்கின்ற தங்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படும் என்பது அவர்களின் எண்ணம். ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான மக்களின் போராட்டங்களால், ஆட்சியில் தலைமை மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது. கோட்டா இருந்த இடத்தில் ரணில் விக்கிரமசிங்கவும் மஹிந்த ராஜபக்‌ஷவின் இடத்தில் தினேஷ் குணவர்தனவும் அமர்ந்திருக்கிறார்கள். அதைத்தாண்டி ஆட்சியின் போக்கு, அதன் எதிர்கால நோக்கு என்பவற்றில், பாரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. அதுபோல, ஆட்சியின் இயல்பு என்பது, ராஜபக்‌ஷர்களின் அரசியல் நிலைப்பாடுகளில் இருந்து, பாரிய மாற்றங்கள் இன்றி, அதன் தொடர்ச்சியைப் பிரதிபலிக்கத் தொடங்கி இருக்கின்றது. பெயரளவில் ராஜபக்‌ஷர்கள் ஆட்சியில் இல்லை; ஆனால், அவர்கள்தான் தீர்மானிக்கும் சக்தியாக இன்னமும் இருக்கிறார்கள். ரணிலைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தோடு ராஜபக்‌ஷர்கள் இருக்கிறார்கள். அதனால்தான், தேசிய அரசாங்கத்தை அமைக்க நினைக்கும் ரணிலின் விரும்பம் நிறைவேறாமல் இருக்கின்றது. தேசிய அரசாங்கத்தை அமைப்பதன் மூலம், தன்னுடைய அரசியல் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து ரணில் சிந்திக்கிறார். ஆனால், ராஜபக்‌ஷர்களோ தேசிய அரசாங்கத்துக்கான வாய்ப்பு உருவானால், ரணிலையோ அவர் தலைமையிலான ஆட்சியையோ தங்களால் கையாள முடியாது போகலாம் என்று நினைத்து, தேசிய அரசாங்கத்துக்கான வாய்ப்புகளை இல்லாமல் செய்வதில் குறியாக இருக்கிறார்கள். அதன் ஒருகட்டமாகவே, ராஜபக்‌ஷர்களால் ஜோன்சன் பெர்ணான்டோ, நாமல் ராஜபக்‌ஷ போன்றோர் மீண்டும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று கோரப்படுகின்றது. தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்க வேண்டும் என்றால், ராஜபக்‌ஷர்களின் ஒட்டுறவு இல்லாத அமைச்சரவை உருவாக்கப்பட வேண்டும் என்பது, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளின் கோரிக்கையாகும். அப்படியான நிலையில், ராஜபக்‌ஷர்களின் ஆட்சியில் ஊழல் பெருச்சாளிகளாகவும் மக்கள் விரோத நடவடிக்கைகளின் காரணகர்த்தாக்களாகவும் இருந்த ஜோன்சன் பெர்ணான்டோ, நாமல் ராஜபக்‌ஷ போன்றோரை, தேசிய அரசாங்க அமைச்சரவைக்குள் உள்வாங்க வேண்டும் என்று ரணிலிடம் ராஜபக்‌ஷ தரப்பு கோரிக்கை விடுக்கின்றது என்றால், அதன் தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். தேசிய அரசாங்கம் அமைந்தால், பொதுஜன பெரமுனவின் தயவில் ஆட்சி நடத்தும் ரணில், அதிலிருந்து கொஞ்சம் வெளிவரக் கூடியதாக இருக்கும். அதன்மூலம், ராஜபக்‌ஷர்களின் தலையீடுகள் அற்ற சுதந்திரமான தலைவராக, ஆட்சியை நடத்த முடியும். ஆனால், அதற்கான சூழலை இல்லாமல் செய்வதுதான், தங்களின் எதிர்கால அரசியலுக்கான வழித்தடத்தை காத்துத் தரும் என்பது, ராஜபக்‌ஷர்களின் நிலைப்பாடு. அதற்காக அவர்கள் அனைத்து வகையிலான ‘திகிடு தத்தம்’களையும் அரங்கேற்றி வருகிறார்கள். கடந்த காலங்களில், ராஜபக்‌ஷர்களை வீராதி வீரர்களாக தென்இலங்கை பூராவும் முழங்கிய விமல் வீரவங்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில உள்ளிட்ட தரப்பு, தங்களுக்கும் ராஜபக்‌ஷர்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்ற மாதிரியான உணர்நிலையோடு, புதிய கூட்டணியை ஆரம்பித்திருக்கின்றது. கோட்டாவை, சிங்கப்பூரின் லி குவான் யூ, மலேசியாவின் மஹாதிர் முஹமட், இந்தியாவின் நேரு, தென்ஆபிரிக்காவின் நெல்சன் மண்டேலா ஆகியோரோடு ஒப்பிட்டு, தேர்தல் மேடைகளில் முழங்கியவர்களும் இவர்கள்தான். “கோட்டாவை ஜனாதிபதியாக சிங்கள மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்றால், பௌத்தத்தையும் சிங்களத்தையும் காப்பாற்ற முடியாது” என்று, நாடு பூராவும் இனவாதத்தீயை வளர்த்தவர்களும் இவர்கள்தான்; அதன் மூலம், இனவாத ஆட்சியொன்றை உருவாக்கியிருந்தார்கள். தமிழர்கள், முஸ்லிம்கள் அங்கம் வகிக்காத ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற ஒற்றை நிலைப்பாட்டோடு இயங்கியிருந்தார்கள். ஆனால், ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக, தென்இலங்கை மக்கள் கிளர்ந்தெழத் தொடங்கியதும், ராஜபக்‌ஷர்களின் சீர்கெட்ட ஆட்சிக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்ற மாதிரி நடிக்கத் தொடங்கிவிட்டார்கள். இந்த இனவாதக் குழுவினர், இன்றைக்கும் புதிய கூட்டணியை அமைத்துக் கொண்டு, எதிர்வரும் பொதுத் தேர்தல் வரைக்கும் நாடகமாடுவார்கள். பொதுத் தேர்தல் வந்ததும், மீண்டும் ராஜபக்‌ஷர்களோடு அல்லது அவர்களின் தொடுப்புள்ள தரப்போடு இணைந்து தேர்தலில் போட்டியிடுவார்கள். அவர்களுக்கும் வெட்கமில்லை; அவர்களைத் தேர்தெடுக்கும் மக்களுக்கு வெட்கமுமில்லை; அறிவும் இல்லை. ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான போராட்டம் என்பது, ‘ராஜபக்‌ஷர்கள்’ என்ற ஒற்றைக் குடும்பத்துக்கு எதிரான போராட்டமல்ல. அது, ராஜபக்‌ஷர்களின் சிந்தனைக்கும் ஆட்சி முறைக்கும் எதிரானது. அதில், ராஜபக்‌ஷ குடும்பமும் அவர்களை ஆட்சியில் அமர்த்துவதற்கு உதவிய தரப்பினரும் உள்ளடங்குவார்கள். அந்தவகையில், விமல் வீரவங்ச குழுவும் ராஜபக்‌ஷர்கள் கூட்டம்தான். அவர்களையும் வெளியேறுமாறுதான் மக்கள் வலியுறுத்தினார்கள். மக்களின் போராட்டம் எழுச்சியாக நடைபெற்ற தருணத்தில், இந்தக் கூட்டமும் ஒளிந்து வாழ வேண்டியிருந்தது. நிலைமை சற்று சுமூகமானதும், தங்களை வெள்ளையடிக்கும் வேலையைச் செய்து வருகிறார்கள். இன்னொரு பக்கம், ராஜபக்‌ஷர்களும் அவர்களின் ஆட்சியில் பிரதான அமைச்சர்களாக, பங்காளிகளாக இருந்தவர்களும், நாட்டின் பொருளாதார சீரழிவுக்குத் தாங்கள் காரணமல்ல என்று பேசத் தொடங்கி இருக்கிறார்கள். கோட்டாவின் அமைச்சரவையில் விவசாய அமைச்சராக இருந்து, அவரின் தூரநோக்கற்ற முடிவுகளுக்கு ஒத்தூதிய மஹிந்தானந்த அளுத்கமகே, “நாட்டின் விவசாயத்துறை வீழ்ச்சிக்கு நான் பொறுப்பில்லை“ என்கிறார். கோட்டாவும் அளுத்கமகேயும் தான், உர இறக்குமதியைத் தடை செய்துவிட்டு, சீனாவில் இருந்து உயிர்க்கொல்லி உரத்தை நாட்டுக்கு கொண்டுவர முயன்றவர்கள். சீனாவின் உரம், பாதுகாப்பில்லாதது என்று தெரிய வந்ததும் எதிர்ப்புகளைக் கண்டு பின்வாங்கினார்கள். அதனால், உரத்தைப் பெற்றுக்கொள்ளாமலேயே, மக்களின் பல மில்லியன் பணத்தை, சீனாவுக்கு தாரைவார்த்தார்கள். ஆனால், இன்றைக்கு அதற்கும் தங்களுக்கும் பொறுப்பில்லை என்ற நிலையைக் காட்டுகிறார்கள். மக்கள் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்த சில நாள்களுக்குள்ளேயே, இந்தக் கூத்துகளை எல்லாம் இந்த அரசியல்வாதிகளால் செய்ய முடிகின்றது. தென்இலங்கையில்தான் இவ்வாறான நிகழ்வுகள் என்றால், கிழக்கில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தங்களின் தேசிய மாநாட்டுக்காக நாமல் ராஜபக்‌ஷவை பிரதான விருந்தினராக அழைத்து நடத்தி இருக்கின்றது. மக்கள் போராட்டம் எழுச்சியாக நடைபெற்றுக் கொண்டிருந்த தருணத்தில், ‘பிள்ளையான்’ என்கிற சிவநேசத்துரை சந்திரகாந்தனும்கூட பதுங்கி வாழும் நிலை இருந்தது. அவரைப் பொது வெளியில் காணக் கிடைக்கவில்லை. எப்போதாவது பொது வெளிக்கு வந்தாலும், போராடும் மக்களை ஆதரிக்கும் நிலையே இருந்தது. ஆனால், அந்தப் போராட்டம் முடிக்கு வந்த சில காலத்துக்குள்ளேயே அதன் நோக்கங்களுக்கு எதிராக, கட்சியின் தேசிய மாநாட்டை ராஜபக்‌ஷர்கள் இன்றி நடத்துவதற்கு அவர் தயாராக இல்லை. அதுவும், சிறுவர், சிறுமியரை அழைத்து வந்து, அவர்களை நாமலின் விசிறிகளாகக் காட்டி, தேசிய மாநாட்டின் பெருமை பீத்தல்களை, சமூக ஊடகங்களில் பிள்ளையான் தரப்பு செய்து கொண்டிருக்கின்றது. மக்களின் எதிர்பார்ப்பு, நியாயமான கோரிக்கைகள் குறித்தெல்லாம் பிள்ளையானோ, அவரின் கட்சியோ அக்கறை கொண்டது மாதிரி தெரியவில்லை. மாறாக, ராஜபக்‌ஷர்களுக்கு ‘குடைபிடித்து’, ஏதாவது ஆதாயங்களை அடைந்தால் போதுமென்பதுதான், ஒற்றை நிலைப்பாடாக அவரிடம் இருக்கின்றது. மாபெரும் மக்கள் போராட்டத்தால் ஆட்சியில் தலைமை மாற்றம் என்ற ஒன்றைத் தவிர, வேறு எதையும் செய்து விட முடியவில்லை. குறிப்பாக, அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளில் சின்ன மாற்றத்தைக் கூட செய்ய முடியவில்லை. அப்படியான நிலையில், மக்களின் போராட்டமும் அதற்கான அர்ப்பணிப்பும் காற்றில் பறந்து போய்க் கொண்டிருக்கின்றது. இலங்கை, வழக்கமான தன்னுடைய அரசியலுக்குத் திரும்பி இருக்கின்றது. அவ்வளவுதான்! அதற்கு மேலாக எதுவுமே இல்லை. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வழமைக்கு-திரும்பிய-தென்இலங்கை-அரசியல்/91-303801
  12. அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது குறைப்பு; யார் விட்ட பிழை? புருஜோத்தமன் தங்கமயில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடந்த செவ்வாய்க்கிழமை (30) முன்வைத்த இடைக்கால வரவு -செலவுத் திட்டத்தில், அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது எல்லையை 60ஆக நிர்ணயிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அரச மற்றும் அரச சார் நிறுவனங்கள் பலவற்றில், ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது எல்லை 65ஆகக் காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில், இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில், 60 வயதைக் கடந்துவிட்ட அனைத்து அரச ஊழியர்களும், எதிர்வரும் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதியோடு, ஓய்வுபெற்றுச் செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. நாட்டின் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, சர்வதேச நாணய நிதியத்திடம் உதவியை இலங்கை கோரிய போதே, அரச, அரச சார் நிறுவனங்களின் கட்டமைப்புகளில் பாரியளவு மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில், நாட்டின் நிர்வாக கட்டமைப்பில், தேவையற்ற விதத்தில் எங்கெல்லாம் நிதி வீணடிக்கப்படுகின்றதோ, அந்த பகுதிகளை எல்லாம் ஒழித்து, மீளமைப்புச் செய்யும் நிபந்தனையை, சர்வதேச நாணய நிதியம் விதித்து வருகின்றது. சர்வதேச நாணய நிதியத்திடம், ஏற்கெனவே உதவி பெற்ற நாடுகள், இதற்கு உதாரணங்களாக இருக்கின்றன. 22 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இலங்கையில், 1.5 மில்லியன் அரச ஊழியர்கள் இருக்கிறார்கள். அதாவது, 15 பேருக்கு ஓர் அரச ஊழியர் என்ற விகிதம் காணப்படுகின்றது. எந்தவொரு நாடும், இவ்வாறான விகிதத்தில் அரச ஊழியர்களைப் பேணுவதில்லை. அநேக நாடுகளில், 50 பேருக்கு ஓர் அரச ஊழியர் என்ற விகிதமே பேணப்பட்டு வந்திருக்கின்றது. அவ்வாறான நிலையில், 15 பேருக்கு ஓர் அரச ஊழியர் என்பது, அரச கட்டமைப்பில் பெருமளவு மனித வளமும் நிதியும் வீணடிக்கப்பட்டு வந்திருக்கின்றமைக்கான சாட்சி. இந்த நிலைக்கு நாடு செல்வதற்கு, நாட்டை ஒவ்வொரு கட்டத்திலும் ஆட்சி செலுத்திய அரசாங்கங்களே பொறுப்புக் கூற வேண்டும். இலங்கை போன்ற மத்தியதர மக்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில், அரச மற்றும் அரச சார் வேலையைப் பெறுவது என்பது, பெரும் கௌரவமாகப் பார்க்கப்பட்டது. அதற்கு, அரச ஊழியராக இணைந்துவிட்டால், அவரின் ஓய்வுபெறும் வயது வரை, தொழிலுக்கான உறுதிப்பாடு உண்டு. அத்தோடு, ஓய்வுக்குப் பின்னரும் ஓய்வூதியம் என்கிற சலுகை உண்டு. இதனால், மிகவும் பாதுகாப்பான வாழ்க்கைக்கு, அரச வேலை அவசியம் என்ற உணர்வு, நாட்டு மக்களிடையே ஏற்பட்டது. அதனை கட்சிகளும் அரசியல் தலைவர்களும் தங்களுக்கான வாக்குகளை ஈர்க்கும் யுக்தியாகக் கைக்கொள்ளத் தொடங்கினார்கள். நாட்டை கடந்த காலங்களில் ஆண்ட ஐக்கிய தேசிய கட்சியோ, சுதந்திரக் கட்சியோ அல்லது அவற்றின் தொடுப்புள்ள கட்சிகளோ, தங்களில் தேர்தல்கால வாக்குறுதிகளில் மிகமுக்கிய ஒன்றாக, அரச வேலை வாய்ப்பை வழங்குவதைக் குறிப்பிட்டு வந்திருக்கிறார்கள். அது, நாட்டின் அரச கட்டமைப்பில், காலத்துக்கு காலம், தேவைக்கு அதிகமாக ஊழியர்களை இணைக்கும் நிலையை உருவாக்கியது. அதனால், அரச வரி வருமானங்களில் பெருமளவு, அரச மற்றும் அரசு சார் நிறுவனங்களின் ஊழியர்களுக்கான ஊதியமாகக் கரைந்து போனது. இன்றைக்கு அரச ஊழியர்களுக்கு ஊதியத்தை வழங்குவதற்காக, பணத்தை அச்சிடும் நிலை உருவாகியிருக்கின்றது. நாட்டை ஆட்சி செலுத்திய ஆட்சியாளர்களின் முறையற்ற தேர்தல் வாக்குறுதிகளும், அதனால் இணைக்கப்பட்ட இலட்சக்கணக்கான அவசியமற்ற ஊழியர்களால் அரச இயந்திரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. அது நிதிச்சுமை என்கிற அளவில் மாத்திரமல்ல; சேவையின் தரத்தையும் கீழிறக்கியது. மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்த சமயத்தில், தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான ஒரு இலட்சம் இளைஞர் - யுவதிகளுக்கு அரச வேலை என்கிற விடயத்தை நடைமுறைப்படுத்தினார். அதில், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என்கிற பெயரில், ஆயிரக்கணக்கான இளைஞர் - யுவதிகள் பிரதேச செயலங்களில் இணைக்கப்பட்டார்கள். அவ்வாறு இணைக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புகள் என்று எதுவும் உறுதியாக வரையறுக்கப்படவில்லை. மாறாக, அவர்களுக்கும் பிரதேச செயலகங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்ற மாதிரியான நிலையே இருந்தது. அவ்வாறு இணைக்கப்பட்டவர்களின் நேரமும், சேவையும் வீணடிக்கப்பட்டு வருகின்றது. அவ்வாறு ஊழியர்களாக இணைக்கப்பட்டு, ஏழெட்டு வருடங்கள் கடந்துவிட்ட போதிலும். அபிவிருத்தி உத்தியோகத்தர்களில் பலரும், பிரதேச செயலகங்களில் வளாகத்துக்குள் இருக்கின்ற மரங்கள், கொட்டகைக்கு கீழ் கூடி நின்று, அதிக நேரங்களில் பேசிக் கொண்டிருப்பதை காண முடியும். அது, அந்த ஊழியர்களின் பிழையில்லை. மாறாக, எந்தவித தேவையும் இல்லாமல் அரச வேலையில் ஆட்களை இணைத்துவிட்ட ஆட்சியாளர்களின் பிழை. நாட்டின் மத்தியதர மக்களின் மனங்களில், அரச வேலைக்கான கௌரவ மற்றும் உறுதிப் பெறுமனம் கேள்விக்கு உள்ளாக்கப்படும் போதுதான், இவ்வாறான முறையற்ற ஊழியர்கள் உள்ளீர்ப்பை, ஆட்சியாளர்கள் நிறுத்துவார்கள். ஏனெனில், தனியார் துறையில் அதிக ஊதியம் பெற்றாலும், அரச வேலைக்கான மத்திய தர மக்களின் ஏக்கம், இன்னும் தீர்ந்த பாடில்லை. அது, எவ்வாறான நிலையில் இருக்கின்றது என்றால், பட்டதாரிகளாக வந்துவிட்ட அனைவருக்கும், அரசாங்கம் வேலை வழங்க வேண்டும் என்பது நிர்ப்பந்தம் என்ற உணர்நிலையை பேண வைத்திருக்கின்றது. அதுதான், வேலையற்ற பட்டதாரிகள் என்ற பெரும் இளைஞர் - யுவதிகள் கூட்டத்தை சேர்த்திருக்கின்றது. அவர்களில் குறிப்பிட்டளவானர்கள், தனியார் துறையில் வேலை வாய்ப்பைப் பெற்ற போதிலும் பெரும்பான்மையினர், அரசாங்கம் தொழில் வழங்கும் வரையில், குடும்பங்களில் தங்கி வாழும் நிலை பேணப்படுகின்றது. அந்த நிலையை, அந்தக் குடும்பங்கள் கேள்விக்கு உள்வாக்குவதில்லை. பட்டதாரி ஆகிவிட்டால், அவருக்கு வேலை வழங்க வேண்டியது அரசின் கடமை. அதனை நிறைவேற்றாதது அரசின் தவறு. அதனால், தொழில் இல்லாமல் தங்கி வாழ்ந்தாலும் அது சம்பந்தப்பட்டவரின் தவறு இல்லை என்பது, மத்தியதர குடும்பங்களிலுள்ள உணர்நிலை. இந்த நிலை என்பது, நாட்டுக்கு மாத்திரமல்ல வீட்டுக்கும் பெரும் சுமையாகும். இலட்சக்கணக்கான பொறுப்பற்ற இளைஞர் - யுவதிகளை சுமைகளாக உருவாக்கிவிடும் கட்டத்தை, இந்தச் சூழல் உருவாக்கி விட்டிருக்கின்றது. இந்தக் கட்டத்தைத்தான் அரசியல் கட்சிகளும் தலைவர்களும் பிடித்துக் கொண்டு, அரச வேலை என்கிற விடயத்தை தேர்தல் வாக்குறுதிகளில் சேர்த்து, நாட்டின் பொருளாதார நிலையை மிக மோசமாக்கும் கட்டங்களில் இயங்கியிருக்கிறார்கள். நாட்டின் பொருளாதாரத்தை மீளத் தூக்கி நிறுத்துவது என்றால், தேவையற்ற செலவுகள் எங்கெல்லாம் செய்யப்படுகின்றனவோ அங்கெல்லாம் ஆணி அடிக்கப்பட வேண்டும். அது, உதவி வழங்கும் பேச்சுகளை ஆரம்பித்த போதே, சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த நிபந்தனை. அதனால்தான், ரணிலும் அவரின் அமைச்சர்களும் நாட்டின் தேவைக்கு அதிகமாக, ஒரு மில்லியன் அரச ஊழியர்கள் இருக்கின்றார்கள் என்று அண்மைக்காலமாக பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இலங்கை போன்றதொரு நாட்டில், ஐந்து இலட்சம் அரச ஊழியர்கள் போதுமென்பது நிபுணர்களின் கருத்து. அவ்வாறான நிலையில், ஏற்கெனவே இணைத்துக் கொள்ளப்பட்ட அரச ஊழியர்களை, வேலையை விட்டு அனுப்பும் கட்டங்கள் குறித்து அரசாங்கம் சிந்திக்கத் தொடங்கியிருக்கின்றது. அதன் ஒரு கட்டமே 60 வயதோடு அனைத்து அரச, அரச சார் ஊழியர்களும் ஓய்வுபெற வேண்டும் என்ற அறிவிப்பு. அதனால், 65 வயது வரை ஓய்வுபெறும் வயது எல்லையை அனுபவித்து வந்த ஆயிரக்கணக்கானவர்கள், இந்த ஆண்டோடு வெளியேற்றப்படுவார்கள். அதனால், பெருமளவு நிதிச்சுமை அரசாங்கத்துக்கு குறையும். அதுபோல, இன்னும் சில ஆண்டுகளுக்கு அரச ஊழியர்களை இணைப்பது தொடர்பில் எந்தவோர் அரசாங்கமோ, கட்சிகளோ தேர்தல் வாக்குறுதிகளை வழங்கும் சூழலும் இல்லை. சர்வதேச நாணய நிதியத்திடம் கையை நீட்டிவிட்டால், அதன் நிபந்தனைகளுக்கு உடன்பட்டே ஆகவேண்டும். இல்லையென்றால், அந்த நாடுகளின் நிலை படுமோசமாக மாறும். அவ்வாறான நெருக்கடியை நாணய நிதியம் கொடுத்து வந்திருக்கின்றது. அதனால்தான் எவ்வளவு பொருளாதார நெருக்கடி வந்தாலும் நாடுகள், சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதை விரும்புவதில்லை. ராஜபக்‌ஷர்கள் அதனால்தான் நாடு முழுமையாக முடங்கும் நிலை வந்த போதும் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதில் இருந்து பின்நின்றார்கள். இறுதியில் வேறு வழியில்லை என்ற போதுதான், அந்தக் கட்டத்தை அடைந்தார்கள். அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது எல்லை குறைப்பு போன்று, எதிர்காலத்தில் இன்னும் அரச நிர்வாக ரீதியிலான கட்டுப்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ளும். அப்போதும், இவ்வாறான நெருக்கடிகளை மக்கள் சந்திக்க வேண்டி வரும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அரச-ஊழியர்களின்-ஓய்வுபெறும்-வயது-குறைப்பு-யார்-விட்ட-பிழை/91-303380
  13. தமிழ்த் தேசிய அரசியல் எதை நோக்கிப் பயணிக்க வேண்டும்? புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசிய அரசியல், சம்பவங்களுக்கும் நிகழ்வுகளுக்கும் பிரதிபலிக்கும் கட்டத்துக்குள் சிக்கிக் கொண்டிருக்கின்றது. அரசியல் உரிமையையும் விடுதலையையும் முன்னிறுத்தி செயற்பட வேண்டிய தரப்பாக, தமிழ்த் தேசிய கட்சிகளும் அமைப்புகளும் அதுசார் ஓர்மத்தோடும் இராஜதந்திர அணுகுமுறையோடும் நகர வேண்டும். ஆனால், அவ்வாறான கட்டத்தை எந்தவொரு தமிழ்த் தரப்பும் கடந்த சில ஆண்டுகளாகப் பதிவு செய்யவில்லை. இலங்கை, அதன் அமைவிடம் சார்ந்து, எப்போதுமே சர்வதேச ரீதியில் கவனம் பெறும் நாடாக இருந்து வந்திருக்கின்றது. சீனா, தன்னுடைய தொழில், இராணுவ கட்டமைப்பு ரீதியான முன்னேற்றத்தை அடைந்த போது, சர்வதேச ரீதியில் தன்னுடைய பாதுகாப்பு, புலனாய்வு எல்லைகளை விஸ்தரித்தது. அதன்போக்கில், பசுபிக் பெருங்கடலையும், இந்து மாகடலையும் கையாளும் தேவைகளுக்காக பிராந்திய நாடுகளை கையாளும் முயற்சிகளை முழு முனைப்போடு முன்னெடுத்து வருகின்றது. அதனால், அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் ஒரு பக்கத்திலும் சீனா தனியொரு நாடாக இன்னொரு பக்கத்திலும் நிற்கின்றன. ஏற்கெனவே இந்தியாவோடு எல்லைப் பிரச்சினையைக் கொண்டிருக்கிற சீனா, இந்தியாவை அச்சுறுத்தும் அளவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை எப்போதுமே மேற்கொண்டு வந்திருக்கின்றது. அதன்போக்கில், கடந்த சில தசாப்த காலமாக, இந்தியாவையும், இந்து மாகடலையும் கண்காணிக்கும் களமாக, இலங்கையை சீனா பயன்படுத்தி வருகின்றது. அண்மையில், ஹம்பாந்தோட்டை துறைமுகம் வரையில் புலனாய்வுப் பணியில் ஈடுபடும் சீனாவின் கப்பல் வந்து சென்றது. இந்தியாவும் மேற்குநாடுகளும் அந்தக் கப்பலின் வருகையை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை முழு மூச்சோடு முன்னெடுத்தன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைக் கொண்டு கப்பலின் வருகையை தடுத்து நிறுத்திவிடலாம் என்றும் நம்பின. ஆனால், ரணிலால் கூட சீனக் கப்பலின் வருகையை தடுத்து நிறுத்த முடியவில்லை. அப்படியான ஆளுகையை இலங்கை மீது, சீனா செலுத்திக் கொண்டிருக்கின்றது. தென் இலங்கையில் மாத்திரமல்ல, வடக்கு, கிழக்கிலும்கூட கடல் அட்டைப் பண்ணைகள் உள்ளிட்ட பல வடிவங்களில் சீனாவின் ‘ஒக்டோபஸ்’ கரங்கள் நீள்கின்றன. இந்தக் கட்டத்தில் தமிழ்த் தேசிய கட்சிகள் தங்களில் தாயகப் பிரதேசம் சார்ந்து குறிப்பிட்டளவு ஆளுமை செலுத்த வேண்டும். அதன்மூலம் சர்வதேச அரசியல் ஆட்டங்களுக்குள் ஊடுருவிச் சென்று, ஆதாயங்களை அடையும் நிலை சார்ந்து சிந்திக்க வேண்டும். ஆனால், தமிழ்த் தேசிய கட்சிகளும் அமைப்புகளும் பிராந்திய அரசியலில் இந்தியாவே பிரதான தரப்பு என்ற கட்டத்தில் இருந்தே அணுகி வருகின்றன. இலங்கையின் உள்ளக அரசியலில் இந்தியா அளவுக்கு எந்தவொரு நாடும் எந்தக் காலத்திலும் ஆளுமை செலுத்தியது இல்லை. கிழக்கு இந்தியாவிலிருந்து துரத்தப்பட்ட விஜயனும் அவனது தோழர்களினாலும் இலங்கையில் தோற்றம் பெற்றதே சிங்கள இனம் என்பது மகா வம்சத்து கதை. அப்படியான நிலையில், இலங்கையின் பெரும்பான்மை மக்களின் தொடுப்பு இந்தியாவே. அதுபோல, இலங்கை காலத்துக்கு காலம் இந்தியப் படையெடுப்புகளுக்கு உள்ளாகி, இந்திய மன்னர்களின் ஆட்சியின் கீழ் பல ஆண்டுகள் இருந்திருக்கின்றன. வெள்ளையின ஆட்சியாளர்களும் வியாபாரிகளும் இலங்கையை ஆக்கிரமித்த போது, கண்டி இராட்சியத்தை ஆட்சி செலுத்தியது நாயக்கர் வம்சத்தினர். காலனித்துவ ஆட்சியின் கீழ் இலங்கை இருந்திருக்காவிட்டால், தற்போதும்கூட இந்தியாவின் ஒரு கூறாக சிலவேளை இருந்திருக்கலாம். இறுதியாக, இலங்கை – இந்திய உடன்படிக்கைக்கு அமைய இந்தியாவின் இராணுவம் அமைதி காக்கும் படை எனும் பெயரில் இலங்கைக்குள் வந்து சில ஆண்டுகள் அலைக்கழித்தது. அப்படியான நிலையில், இலங்கையின் ஆட்சி அதிகார கட்டங்களில் இந்தியா வெகுவான தலையீடுகளைச் செய்து வந்திருக்கின்றது. அதனால், இந்தியாவை நிராகரிக்க முடியாத ஒரு தரப்பாக தமிழ்த் தேசிய தரப்புகள் ஆரம்பம் தொட்டு நம்பி வருகின்றன. தமிழ்த் தேசிய அரசியல் என்பது, எந்தவொரு கட்டத்திலும் இந்தியாவை கொஞ்சமாகவேனும் சங்கடப்படுத்தி விடக்கூடாது என்ற எண்ணத்தில் இயங்கி வந்திருக்கின்றது. இந்தக் கட்டம், சர்வதேச ரீதியில் இந்திய சார்புக்கு அப்பால் தமிழ்த் தேசிய தரப்புகள் இயங்காது என்கிற கட்டத்தை உருவாக்கி விட்டது. ஆனால், தமிழ்த் தேசிய தரப்புக்கள் ஆரம்பம் தொட்டு, இந்தியாவுக்கு வழங்கிவந்த முக்கியத்துவத்தை, இந்தியா தமிழ்த் தேசிய தரப்புக்கள் சார்ந்தோ, ஈழத் தமிழ் மக்கள் சார்ந்தோ கொண்டிருந்ததோ என்றால் இல்லை என்பதே வெளிப்படையான பதில். எப்போதுமே தென் இலங்கையின் ஆட்சியாளர்களை ‘தாஜா ’செய்யும் வேலைகளையே இந்தியா செய்து வந்திருக்கின்றது. இலங்கை சார் இந்தியாவின் அணுகுமுறையில், ஈழத் தமிழ் மக்கள் ஒரு கருவியாகவே இருக்கிறார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் போன்றதொரு தரப்பு, தமிழ்த் தேசிய அரசியலில் தீர்மானிக்கும் சக்தியாக எழுந்த போது, அதனை இந்தியா ஒருபோதும் விரும்பவில்லை. அதனால்தான், புலிகளை முழுமையாக அழித்து ஒழிப்பதற்கான ஆதரவை இந்தியா முழுமையாக வழங்கியது. ஆனால், இரண்டு தசாப்த காலத்துக்கு மேலாக, தமிழ்த் தேசிய அரசியலில் தலைமைச் சக்தியாக இருந்த புலிகள்கூட, இந்தியாவை முழுமையாக எதிர்க்கும் எந்தவொரு கட்டத்துக்கும் வரவில்லை. அது, இந்தியாவை பிராந்திய வல்லரசாக ஏற்றுக்கொண்டமையால் ஆகும். ஆரம்பம் முதலே தமிழ்த் தேசிய அரசியல் என்பது, அளவுக்கு மீறிய அளவுக்கு இந்தியாவுக்கான விசுவாசத்தை காட்டி வந்திருக்கின்றது. அதனால் அடைந்த அடைவுகள் என்றால், மாகாண சபை என்கிற அதிகாரங்களற்ற ஓர் ஆட்சிக் கட்டமைப்பு என்பதைத் தவிர வேறெதுவும் இல்லை. அப்படியான கட்டத்தில், கேள்விகளுக்கு அப்பாலான பரிவை இந்தியாவை நோக்கி காட்டிக் கொண்டிருக்கும் நிலை என்பது, தேவையற்ற எதிரிகளை சர்வதேச ரீதியில் ஏற்படுத்தி விடுகின்றன. சீனாவைப் பொறுத்தளவில் தமிழ் மக்கள் தங்களுக்கு எதிராவனர்கள் என்பதே உணர்நிலை. அதன்போக்கில்தான், தென் இலங்கை மக்களையும், அவர்களால் தேர்வாகும் ஆட்சியாளர்களையும் முதன்மைப்படுத்திக் கொண்டு, சீனா செயற்பட்டு வந்திருக்கின்றது. அவர்களைப் பொறுத்தளவில் தமிழ் மக்கள் பிரிவினைவாதிகள். கம்யூனிசம் என்ற பெயரில் ஏதேச்சதிகார ஆட்சி செலுத்தி வரும் சீனா, தங்களுக்கான இலாபம் என்ற ஒற்றைக்கணக்கை முன்னிறுத்தியே செயற்பட்டு வருகின்றது. அதனால், இந்தியாவின் அடிமைகளாக இருக்கும் தமிழ்த் தேசிய அரசியலையும், அதன் பரப்பையும் எதிரியாகவே கையாண்டு வருகின்றது. அதனால், சர்வதேச ரீதியில் குறிப்பிட்டளவான பின்னடைவை, தமிழ்த் தேசிய தரப்புகள் கண்டிருக்கின்றன. இந்த இடத்தில்தான், பிராந்திய வல்லரசான இந்தியாவையும் இலங்கையை இன்று ஆட்கொண்டுவிட்ட சீனாவையும் கிட்டத்தட்ட சம தூரத்தில் வைத்து அணுகும் இராஜதந்திர கட்டத்தை நோக்கி தமிழ்த் தேசிய தரப்புகள் நகர வேண்டும். இல்லையென்றால், எப்போதுமே ஒரு தரப்பின் அடிமையாக இருந்து, அடைவுகள் இன்றி இருக்க வேண்டும். இராஜதந்திர அணுமுறை என்பது, எதிர்காலத்தைக் குறித்த தெளிவான சிந்தனையோடு இருக்க வேண்டியது. அது இல்லாமல், சம்பவங்களுக்கும் நிகழ்வுகளுக்கும் மாத்திரம் பிரதிபலித்துக் கொண்டிருந்தால், எதையும் அடைய முடியாது. தமிழ்த் தேசிய அரசியலில் முகவர்களும் அவர்களின் அணிகளும் மேலெழுந்துவிட்ட நிலையில், அவர்களுக்கு தூர நோக்கு என்பது அவசியமற்ற ஒன்று! ஏனெனில், அவர்களின் எதிர்பார்ப்பு என்பது, தங்களது பைகளை நிரப்பிக் கொள்ளுதல் என்பதாகும். அவ்வாறான கட்டத்தில், அவர்களிடத்தில் அரசியலை தூர நோக்கோடு, இராஜதந்திர கட்டங்களில் அணுகக் கோருவது அபத்தமானதே. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்த்-தேசிய-அரசியல்-எதை-நோக்கிப்-பயணிக்க-வேண்டும்/91-303121
  14. சர்வகட்சி அரசாங்கம் எனும் ரணிலின் தந்திர வலை - புருஜோத்தமன் தங்கமயில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் எதிர்க்கட்சிகள் அற்ற ஆட்சியை, நிலைநிறுத்திவிட முடியும் என்று நம்பிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கனவு, எதிர்க்கட்சிகளால் கலைக்கப்பட்டு இருக்கின்றது. நாடு எதிர்கொண்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தையும் உள்ளடக்கிய சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்துச் செயற்பட வேண்டிய அவசியம் இருப்பதாக, ரணில் தொடர்ந்தும் கூறிவருகிறார். பிரதமர் பதவியில் மஹிந்த ராஜபக்‌ஷ இருந்து விலகியதும், பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்ட ரணில், பொதுஜன பெரமுன ஆளுமை செலுத்தாத, ஐக்கிய தேசிய கட்சியின் கொள்ளை, கோட்பாடுகள் கொண்ட அரசாங்கமொன்றை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று விரும்பினார். ஆனால், அதற்கு ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய மஹிந்த ராஜபக்‌ஷவும் அவரது அணியினரும் பெருந்தடையாக இருந்தார்கள். அப்படியான நிலையில், ‘நாட்டின் பொருளாதாரத்தை உடனடியாகச் சீர்செய்ய முடியாது; அவ்வளவுக்கு ராஜபக்‌ஷர்கள் சீரழித்து வைத்திருக்கிறார்கள்’ என்ற தொனிப்பட ரணில், தொடர்ந்தும் உரைகளை ஆற்றிவந்தார். நெருக்கடி நிலை இன்னும் இன்னும் மோசமடையும் என்றும், அவர் எச்சரிக்கத் தொடங்கினார். அதுதான், கோட்டாவுக்கு எதிரான போராட்டம், அடுத்த கட்டத்தை அடைந்து, அவரை நாட்டைவிட்டு ஓடவும் வைத்தது. அந்தச் சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்த ரணில், சரியான விதத்தில் காய்களை நகர்த்தி, பதவியில் இருந்து விரட்டப்பட்ட ராஜபக்‌ஷர்களின் ஒத்துழைப்போடு, ஜனாதிபதி பதவிக்கும் வந்துவிட்டார். அன்றிலிருந்து, ஐ.தே.கவை மீளவும் நிலைநிறுத்தும் வேலைகளை, அவர் மேற்கொண்டு வருகின்றார். அதன்மூலம், கட்சியின் நேரடியாக ஜனாதிபதியாகத் தான் போட்டியிட்டு, வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறார். அடுத்த ஜனாதிபதி தேர்தலில், ராஜபக்‌ஷர்கள் அணிக்குள் இருந்து ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஏனெனில், ராஜபக்‌ஷர்கள் தவிர்ந்த ஒருவரை, பொதுஜன பெரமுனவுக்குள் இருந்து ஜனாதிபதியாக முன்னிறுத்தும் எண்ணம் ஏதும், ராஜபக்‌ஷர்களுக்கு இல்லை. ஏனெனில், தங்களைத் தாண்டி வேறு யாரையாவது பொதுஜன பெரமுனவுக்குள் இருந்து ஜனாதிபதி பதவியைப் பிடித்துவிட்டால், கட்சியும் எதிர்கால ஆட்சிக்கனவும், தங்களிடம் இருந்து பறிக்கப்பட்டுவிடும் என்று ராஜபக்‌ஷர்கள் நினைக்கிறார்கள். அதனால், தங்களது கட்சிக்குள் இருந்து, இன்னொருவரை வளர்த்துவிடும் எந்த எண்ணப்பாட்டிலும் அவர்கள் இல்லை. இப்போது உடல் - மன ரீதியாகத் தளர்ந்து போயிருக்கிற மஹிந்த, கட்சியை முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அளவுக்கு இல்லை. ஆனாலும், எப்படியாவது கட்சியைக் காப்பாற்றி, அதன் தலைமைப்பீடத்தில் தன்னுடைய மகனான நாமல் ராஜபக்‌ஷவை இருந்திவிட வேண்டும் என்று நினைக்கிறார். அதன்மூலமே, நாமலை எதிர்காலத்தில் ஜனாதிபதியாக்கி, ஆட்சியை ராஜபக்‌ஷர்களிடம் தக்க வைத்துக் கொள்ளலாம் என்பது அவரது எண்ணம். அதற்கு, ரணிலை, தற்போதைக்கு ஆதரிப்பதுதான் இருப்பதில் ஒரே வழி. அதனால்தான், ரணிலை வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்காக, மஹிந்த மிகுந்த பிரயத்தனப்பட்டார். அதனால், கோட்டாவின் மிகுதி ஆட்சிக் காலத்துக்காக ரணில் வந்தார். பாராளுமன்ற வாக்கெடுப்பில் வென்றதும், மஹிந்தவின் வீட்டுக்குத் தேடிச் சென்ற ரணில், அங்கு இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக, தனிப்பட்ட உரையாடலை நிகழ்த்தியுள்ளார். இதன்போது, இருவரும் பொதுஜன பெரமுனவையும் ஐ.தே.கவையும் மீளவும் உயிர்ப்போடு மீட்டெடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தி உரையாடி இருக்கிறார்கள். அதன்மூலமே, ராஜபக்‌ஷர்களின் வாரிசு அரசியலும், ஐ.தே.கவின் வம்ச அரசியலும், நிலைத்து நிற்கும் என்று நம்புகிறார்கள். அதற்காக, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் போட்டியிட்டால், அதனை ஆதரிக்கும் கட்டத்தில் ராஜபக்‌ஷர்கள் இருக்கிறார்கள். இங்கு, ‘ராஜபக்‌ஷர்கள்’ என்று குறிப்பிடப்படுவது பஷில், கோட்டா தவிர்ந்த ராஜபக்‌ஷர்களை. ஏனெனில், பஷிலுக்கு ஜனாதிபதி கனவு உண்டு. அதற்காக அவர் இன்னமும் காய்களை நகர்த்தி, பொதுஜன பெரமுனவைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான வேலைகளில் ஈடுபடுகிறார். ஆனால், சகோதரர்களை குறிப்பாக, பஷிலை நம்பும் கட்டத்தில் மஹிந்த இல்லை. ஏற்கெனவே, கோட்டாவிடம் ஆட்சியைக் கொடுத்து, ராஜபக்‌ஷர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாத அளவுக்கான வேலைகளை செய்துவிட்டார் என்பது, அவரது கோபம். அதுபோல, பஷிலும் ராஜபக்‌ஷர்கள் மீது ‘ஊழல்வாதிகள்’ என்ற அடையாளத்தை ஏற்படுத்திவிட்டவர் என்ற ஆத்திரம் மஹிந்தவிடம் உண்டு. பஷில், பாரம்பரிய அரசியல்வாதிகளுக்கு உரிய குணவியல்புகள் இன்றி, ‘தனியாவர்த்தனம்’ செய்து பணத்தை குவிப்பதிலேயே கவனம் செலுத்துவார். இதனால், ஆட்சி, அரசியலில் தொடர்ந்தும் நிலைத்திருப்பதற்கான வாய்ப்புகளை ராஜபக்‌ஷ குடும்பம் இழந்துவிடும் என்பது மஹிந்தவின் எண்ணம். இதனால்தான், பஷில் கட்சிக்குள் வகிக்கும் பதவியை, நாமலிடம் பெற்றுக் கொடுத்துவிட வேண்டும் என்று அவர் முயன்றுவருகிறார். அடுத்த ஜனாதிபதி தேர்தலில், ராஜபக்‌ஷர்கள் யார் போட்டியிட்டாலும், வெற்றிபெற முடியாது என்பது வெளிப்படையானது. அப்படியான நிலையில், அதற்கு அடுத்த ஜனாதிபதி தேர்தலை குறிவைத்து, மஹிந்த செயற்பட நினைக்கிறார். அதில், நாமலை வேட்பாளராக்கி, வெற்றிபெற வைக்க வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பு. இன்னொரு பக்கத்தில், ரணிலுக்கு இப்போது 74 வயது கடந்துவிட்டது. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றால், அதில் வெற்றிபெற்று, ஜனாதிபதி பதவியை அடைந்தால், 81 வயது வரை ஆட்சியில் இருந்துவிட்டு,அரசியலில் இருந்து ஒதுங்கிவிடலாம் என்று நினைக்கிறார். நாட்டு மக்களால், நேரடியாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவராக இருக்க வேண்டும் என்கிற அவா ரணிலுக்கு உண்டு. அதுதான், ஜே. ஆர் ஜெயவர்தனவின் அரசியல் வாரிசாக அவர் விரும்புவது. அதுவே, ஐ.தே.கவை, தன்னுடைய அரசியல் வாரிசான ருவான் விஜயவர்தனவிடம் குழப்பங்கள் இன்றி, கட்சியை கையளிக்கவைக்கும் என்பது அவருக்கு தெரியும். இப்படியான கட்டத்தில்தான், மஹிந்தவும் ரணிலும் தெளிவான இணக்கப்பாட்டோடு, தங்களது அரசியலை, தற்போது செய்து வருகின்றார்கள். அதன்போக்கில்தான், சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் சதித்திட்ட யோசனையோடு ரணில் முன்வந்திருக்கின்றார். சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டால், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியை மெல்ல மெல்ல நலிவடையச் செய்துவிடலாம் என்பது அவரது எதிர்பார்ப்பு. தான் பிரதமர் பதவிக்கு வந்ததுமே, ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான நபர்களில் ஒருவரான ஹரீன் பெர்ணான்டோவை பிரித்தெடுக்க முடிந்த அவரால், சர்வகட்சி அரசாங்கம் அமைந்து, அதில், ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்களுக்குப் பிரதான அமைச்சுகளை வழங்கி, ஆட்சியில் பங்காளிகளாக்கி விட்டால், சஜித் பிரேமதாஸவிடம் இருந்து அவர்களை இலகுவாக பிரித்தெடுத்துவிடலாம். அதன்மூலம், ஐ.தே.கவில் இருந்து விலகிச் சென்றவர்களை, மீண்டும் கட்சியில் இணைத்து, கட்சியைப் பலப்படுத்த முடியும். ஆனால், அந்த எண்ணத்தைப் புரிந்து கொண்ட சஜித், தன்னுடைய கட்சியை சர்வகட்சி அரசாங்கத்தில் அங்கம்பெற வைப்பதில் இருந்து விலகினார். அத்தோடு, பிரதான எதிர்க்கட்சி என்ற நிலையைப் பேணுவதுதான், அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றிகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்தும். அது இல்லாமல், ஆட்சியில் பங்காளியாகிவிட்டு, ராஜபக்‌ஷர்கள்- ரணில் இணக்கப்பாட்டோடு நடைபெறும் ஆட்சியை விமர்சிக்க முடியாது. அதனை, மக்கள் ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். ரணிலும் ராஜபக்‌ஷர்களும் கட்சிகள், இயக்கங்களை இலகுவாக உடைந்துவிடுவார்கள். கடந்த காலங்களில், அவ்வாறான வேலைகளை நிகழ்த்தியும் காட்டியிருக்கிறார்கள். அதனால், சஜித், ஐக்கிய மக்கள் சக்தியை கட்டிக் காப்பாற்றுவதிலேயே கவனமாக இருக்கிறார். அதனால், அடுத்த தேர்தல் வரையில், பிரதான எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தியை பேணவே சஜித் விரும்புகிறார். இதனால்தான், ரணிலின் சர்வகட்சி அரசாங்கம் என்ற பொறியில் இருந்து சஜித் விலகியிருக்க நினைத்தார். ஐக்கிய மக்கள் சக்தியும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் அங்கம் வகிக்காத அரசாங்கத்தை சர்வகட்சி அரசாங்கமாக முன்னிறுத்த முடியாது. ஏனெனில், தற்போதையை பாராளுமன்றத்துக்குள் எதிர்வரிசையில் ஆரம்பம் முதல் இருக்கும் முதல் மூன்று கட்சிகள் இவை. இந்தக் கட்சிகளைத் தவிர்த்துவிட்டு எவ்வாறான ஆட்சிகள் அமைக்கப்பட்டாலும் அது சர்வகட்சி அரசாங்கம் என்ற பெயரைப்பெறாது. அதனை மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால், அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்காக தன்னைத் தயார்படுத்தும் ரணிலின் திட்டங்களில், பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றது. ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் போட்டியிட்டால், அது தனக்கு பெரும் நெருக்கடியாக இருக்கும் என்று அவருக்கு தெரியும். அதன்போக்கிலேயே, சஜித் அணியை அவர் உருக்குலைக்கும் வேலைகளுக்காக, சர்வகட்சி அரசாங்கம் என்ற பெயரோடு வந்தார். ஆனால், அது சாத்தியமில்லை என்றாகிவிட்டது. அதனால், சஜித்தோடு இருப்பவர்களை தனித்தனியாக இழுத்து, ஆட்சியில் பங்காளிகளாக்க அவர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இவற்றைத் தவிர்த்து, சர்வகட்சி அரசாங்கம் என்பதெல்லாம், மக்களைப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் என்பதெல்லாம் வெறும் ‘மாயை’. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சர்வகட்சி-அரசாங்கம்-எனும்-ரணிலின்-தந்திர-வலை/91-302774
  15. கூட்டமைப்பு கைக்கூலிகளின் கூட்டு ஆகிறதா? புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ‘ரணில்- ராஜபக்‌ஷ’ கூட்டடம், விலை போய்விட்டதாக புகைந்து கொண்டிருந்த சந்தேகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எண்ணைய் ஊற்றியிருக்கிறார். சர்வகட்சி அரசாங்கத்தினை அமைப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளை அழைத்து ரணில் சந்தித்து வருகிறார். அதன் ஒரு கட்டமாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பை கடந்த வாரம் நிகழ்த்தினார். இதன்போதே, ஜனாதிபதித் தெரிவின் போது, டலஸுக்கு ஆதரவளிப்பது என்ற கூட்டமைப்பின் தீர்மானத்தினைத் தாண்டி, சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு வாக்களித்தாக கூறியிருக்கிறார். இதனை, கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் ரணிலிடம் மறுத்த போதும், அவர் அதனை நிராகரித்து, தமிழ் மக்களின் நலனுக்காக சில கூட்டமைப்பு உறுப்பினர்கள் தனக்கு வாக்களித்ததாகவும், அவர்கள் யாரென்பது தனக்குத் தெரியும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஜனாதிபதித் தெரிவுக்கான பாராளுமன்ற வாக்கெடுப்பில் என்ன தீர்மானத்தினை எடுப்பது என்பது தொடர்பில், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் தொடர்ச்சியாக இரண்டு நாள்கள் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, ரணிலுக்கு வாக்களிக்க முடியாது என்ற ஒரே நிலைப்பாட்டில் பத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இருந்தார்கள். சில பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாது புறக்கணிப்போம் என்ற நிலைப்பாட்டை முன்வைத்தார்கள். ஆனால், நாட்டு மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து, ராஜபக்‌ஷர்கள் இல்லாத ஆட்சிக்கான நிலைப்பாடு எனும் நோக்கில், டலஸ் அழகப்பெருமவை ஆதரிப்பது என்று கூட்டமைப்பு இறுதியில் தீர்மானித்தது. அதனை டலஸ் – சஜித் பிரேமதாஸ கூட்டோடு இணைந்து படம் எடுத்து ஊடகங்களிடம் அறிவிக்கவும் செய்தது. ஆனால், அந்தப் படங்கள் வெளிவந்த சில நிமிடங்களிலேயே ரணிலுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டில், ரணில் அணியை கூட்டமைப்பின் பங்களிக்கட்சியின் தலைவர் ஒருவரும் அவரின் கட்சி உறுப்பினர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது வெளிவந்துவிட்டது. ஜனாதிபதி தெரிவு என்பது, இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்படும் ஏற்பாட்டை தமக்கு சாதகமாகக் பயன்படுத்திக் கொண்ட பல பாராளுமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள். அதில், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அங்கம் வகிப்பது, வாக்கெடுப்பு இடம்பெறுவதற்கு முன்னாலேயே தெரியவந்துவிட்டது. கூட்டமைப்பின் நிலைப்பாட்டை மீறி, அதன் உறுப்பினர்கள் சிலர் வாக்களிக்கப் போவதாக ஊடகங்களில் செய்தி பரவியதும், கூட்டமைப்பின் தலைமை அஞ்சத் தொடங்கிவிட்டது. ஆனாலும், அவ்வாறான நிலையொன்று இல்லை என காட்டிக் கொண்டது. வாக்கெடுப்பு முடிந்து, ரணில் வெற்றிபெற்றதும் கூட்டமைப்பின் தீர்மானத்தை, அதனை கூடி எடுத்த உறுப்பினர்களில் குறைந்தது நான்கு பேராவது மதிக்காமல், ரணிலை ஆதரித்து வாக்களித்திருக்கிறார்கள் என்ற சந்தேகம் மேலும் வலுத்தது. அதனை, ரணில் அணியின் ஹரீன் பெர்னாண்டோ வெளிப்படுத்தினார். இதன் தொடர்ச்சியைத்தான் ரணில், கூட்டமைப்பினருடனான கடந்த வாரச் சந்திப்பின் போதும் செய்தார். தமிழ் மக்களின் பிரதான கட்சியாக ஒரு கட்டம் வரையில் தன்னை நிரூபித்து வந்த கூட்டமைப்பு, கடந்த சில ஆண்டுகளாக மிக மோசமான தரகு அரசியலை செய்வதாக குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் உண்டு. கூட்டமைப்பின் அங்கம் வகிக்கின்ற தமிழரசுக் கட்சி, டெலோ, புளொட் என்று எந்தக் கட்சியும் எந்தப் பாகுபாடும் இன்றி, தரகு அரசியலின் பங்காளிகாக மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் அரசியலை கூச்சமின்றி செய்து வருகிறார்கள். அதுதான், கடந்த பொதுத் தேர்தலில் மிக மோசமான பின்னடைவைச் சந்திக்கவும் காரணம். தேர்தல் முடிவுகளைப் பார்த்தாவது, கூட்டமைப்பின் தலைவர்கள், தங்களைத் திருத்திக் கொண்டு மக்களை நோக்கிய அரசியலுக்கு தங்களைத் தயார்படுத்துவார்கள் என்று நம்பினால், அதில் அவர்களே நாளாந்தம் மண்ணை அள்ளிப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள். கூட்டமைப்பு இரா. சம்பந்தனின் காலத்துக்குப் பின்னரான காலத்தில் தமிழரசுக் கட்சி என்கிற ஒற்றைக் கட்சிக்குள் சுருங்கிவிடும் கட்டமும் வந்துவிட்டது. மாறாக, பங்காளிக் கட்சிகளுக்கு இடையில், ஒரு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றமை தொடர்பிலான ஒழுக்கம் ஏதும் இல்லை. அதனை, ஆரம்பித்து வைத்ததில் தமிழரசுக் கட்சியே பிரதான பங்கை வகித்தது. ஒரே கூட்டணிக்குள் இருந்து கொண்டே, பங்காளிக் கட்சியின் உறுப்பினரை திருடி, தங்களின் கட்சி வேட்பாளராக அறிவித்தது முதல், தமிழரசுக் கட்சி கசடுத்தனமான அரசியலை செய்து வந்திருக்கிறது. அதனை, மாவை சேனாதிராஜா அரசியல் நெறியாகவே முன்னெடுத்து வந்திருக்கிறார். தங்களை விட்டால் யாரும் இல்லை என்ற நினைப்பில் தமிழரசுக் கட்சி கடந்த காலங்களில் ஆடிய ஆட்டத்திற்கு அந்தக் கட்சி சற்று பின்னடைவைச் சந்தித்ததுமே பங்காளிக் கட்சிகள் ஆட்டங்காட்டத் தொடங்கியிருக்கின்றன. இன்றைக்கு, தமிழரசுக் கட்சி ஒரு பக்கத்திலும் டெலொவும் புளொட்டும் இன்னொரு பக்கத்திலும் நின்று கூட்டமைப்பின் அரசியலைச் செய்கின்றன. அதிலும், தமிழரசுக் கட்சியில் இருக்கின்ற ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குள்ளேயே குறைந்தது மூன்று அணி இருக்கின்றது. இப்படியான நிலையில், கூட்டமைப்பினை மக்களை நோக்கி மீண்டும் நகர்த்திச் செல்வது என்பது, எவ்வளவு அபத்தமான நம்பிக்கை. ரணில் - ராஜபக்‌ஷ கூட்டினை ஆதரித்து, கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் அதற்கான சன்மானங்களை பெற்றுக் கொண்டதான தகவல், மக்களிடம் பரவியிருக்கின்றது. இந்த நிலையில், ஒவ்வொரு தரப்பினரும் தங்களுக்கு வெள்ளையடித்துக் கொள்ளும் ஆர்வத்தில் இருக்கிறார்கள். கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர், தனக்கு வாக்களித்ததாக அவர்களின் முன்னாலேயே ரணில் கூறும்போது, அமைதியாக இருந்துவிட்டு வந்த சிலர், இன்றைக்கு ஒலிவாங்கிகளுக்கு முன்னால் நின்று,, தாங்கள் புலிகளின் வாரிசுகள் என்ற தோரணையில் முழங்குவதைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கின்றது. சமாதானப் பேச்சுவார்த்தை எனும் போர்வையில் விடுதலைப் புலிகளை ரணில் துண்டாடினார். அதுதான், புலிகளை ராஜபர்ஷர்கள் அழித்து ஒழிக்க காரணமானது என்ற உணர்நிலையொன்று தமிழ் மக்கள் மத்தியில் உண்டு. அதனால்தான் ரணிலை ‘நரி’ என்ற அடையாளப்படுத்தல் பலம்பெற்றது. கூட்டமைப்பினை பிரித்தாளுவதற்காக ரணில் இப்போது, கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மத்தியில் எண்ணெய் ஊற்றி அனுப்பியிருக்கிறார் என்ற வாதம் வைக்கப்படுகின்றது. பௌத்த - சிங்கள அடிப்படைவாத அரசியலில் ஐம்பது ஆண்டுகளாக பயணிக்கும் ரணிலுக்கு, கூட்டமைப்பினை பிரித்தாளும் தேவை இருக்கிறது. ஏனெனில், தமிழ் மக்கள் ஓரணியில் திரள்வது என்பது எப்போதுமே பௌத்த - சிங்கள பேரினவாதத்துக்கு சிக்கலானது. அப்படியான நிலையில், ரணில் கூட்டமைப்பை பிரித்தாள நினைப்பார் என்பது தர்க்கரீதியிலானது. ஆனால், ரணில், அதைச் செய்வதற்காக கூட்டமைப்பினருடனான சந்திப்பை பயன்படுத்திய போது, கலந்து கொண்ட உறுப்பினர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அமைதி காத்தது ஏன் என்பதுதான் முக்கிய கேள்வி. அத்தோடு, ரணில் பிரித்தாளும் கட்டத்தை முன்னெடுக்க முன்னரேயே கூட்டமைப்பு பல முனைகளில் துருத்திக் கொண்டு நிற்கத் தொடங்கிவிட்டது. அப்படியான நிலையில், ரணிலின் தந்திரத்துக்கு கூட்டமைப்பு ஆளாகக் கூடாது என்று மேம்போக்காக பேசிக் கடக்க முடியாது. கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தங்களுக்குள் யார் யார் விலை போனார்கள் என்பது தெளிவாகத் தெரியும். ஆனால், அதனை அவர்கள் முழுமையாக வெளிப்படுத்தவோ, கூட்டமைப்புக்குள் இருக்கும் கறுப்பு ஆடுகளை களை எடுக்கவோ விரும்பமாட்டார்கள். ஏனெனில், கூட்டமைப்பின் தலைவர்களில் பலரும் ஒவ்வொரு கட்டத்தில் கறுப்பு ஆடுகளாக வலம் வருபவர்கள். தற்போதையை கறுப்பு ஆடுகளை பகிரங்கப்படுத்தினால், பகிரங்கமாக்கப்பட்டவர்கள் வெளியே வந்து மற்றவர்களையும் காட்டிக் கொடுப்பார்கள் என்பது நிலை. ஏனெனில், கூட்டமைப்புக்குள் இருக்கும் கட்சிகளுக்கு காட்டிக் கொடுத்தல் என்கிற கடந்த கால கறுப்பு வரலாறு உண்டு. அப்படியான நிலையில், மக்களை ஏமாற்றும் கூத்துகளை மாத்திரம் மேடைகளைப் போட்டு நிகழ்த்துவார்கள். தமிழ்த் தேசிய அரசியலை அயோக்கியர்களின் கூடாரமாக்கிவிட்டு, கூட்டமைப்பு கலைந்து போகும் காலம் தொலைவில் இல்லை. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கூட்டமைப்பு-கைக்கூலிகளின்-கூட்டு-ஆகிறதா/91-302133
  16. ஜனாதிபதி தேர்வில் தமிழ்த் தேசிய கட்சிகளின் வெளிப்பாடு புருஜோத்தமன் தங்கமயில் புதிய ஜனாதிபதியை தேர்தெடுப்பதற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பில், தமிழ்த் தேசிய கட்சிகள் மூன்றும், மூன்று விதமான தீர்மானங்களை எடுத்திருந்தன. டளஸ் அழகப்பெரும - சஜித் பிரேமதாஸ அணியை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரித்திருந்தது. ரணில் விக்கிரமசிங்கவை, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆதரித்திருந்தது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ, பாராளுமன்ற வாக்கெடுப்பை புறக்கணித்திருந்தது. தமிழ் மக்களைப் பொறுத்தளவில், ராஜபக்‌ஷர்களின் சுவடு இல்லாத ஆட்சிக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் பற்றி ஆராய்ந்து, புதிய ஜனாதிபதியை தேர்தெடுப்பதற்கான வாக்கெடுப்பில், தமிழ்த் தேசிய கட்சிகள் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்கிற விடயம், பேசு பொருளானது. ஆனால், வழக்கம்போலவே தமிழ் மக்களின் முன்னால், பௌத்த - சிங்கள பேரினவாதிகளே வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார்கள். அவர்களில், எது குறைவான தீயதோ, அதுதான் தமிழ் மக்களின் தெரிவாக இதுவரை காலமும் இருந்து வந்திருக்கின்றது. இந்த நோக்கத்தின் அடிப்படையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, டளஸ் - சஜித் அணியை ஆதரிக்க முடிவு செய்தது. விடுதலைப் புலிகள் ஆட்சி செலுத்திய காலங்களிலும் தமிழ் மக்கள், குறைந்த தீயதை ஆதரிக்கும் முடிவுகளுக்கே வந்திருக்கிறார்கள். ராஜபக்‌ஷர்களைக் காப்பாற்ற வந்த ஆபத்பாண்டவர் ரணில்; அவரை ஆதரிப்பது என்பது, ராஜபக்‌ஷர்களைக் காப்பாற்றுவதற்கு ஒப்பானது என்பது அடிப்படை வாதம். எனினும், அமெரிக்காவில் இருந்த டளஸை, அரசியலுக்கு மீண்டும் அழைத்து வந்தது ராஜபக்‌ஷர்கள். ராஜபக்‌ஷர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற தருணத்தில், தங்களுக்கு ஒத்துழைக்கக்கூடிய தரப்பினரை இணைக்கத் தொடங்கியிருந்தனர். அதன் ஒரு கூறாகவே, டளஸும் இலங்கை அரசியலுக்குள் மீண்டும் வந்தார். அவர், ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான மக்கள் போராட்டம் பெருமளவில் முன்னெடுக்கப்படும் தருணம் வரையில், ராஜபக்‌ஷர்களை ஆதரித்து, அவர்களை பூசிப்பதில் குறியாகவே இருந்தார். எனினும், ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான மக்களின் மனநிலை என்பது, பொதுஜன பெரமுனவில் உள்ள பலருக்கு, தங்களில் அரசியல் எதிர்காலம் குறித்த அச்சத்தை உண்டு பண்ணியது. அதன்போக்கில், பெரமுனவில் இருந்து தனித்து இயங்குவதாக அறிவித்த குழுக்களில் டளஸின் அணியும் ஒன்று. அவர், குறைந்தது 40 பாராளுமன்ற உறுப்பினர்களை தன்னோடு வைத்திருக்கின்றார் என்ற விடயம்தான், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை, ஜனாதிபதி போட்டிக்கான வேட்பாளர் தேர்வில் இருந்து விலகிக் கொள்ள வைத்தது. டளஸ் ஜனாதிபதியானதும் சஜித் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என்கிற இணக்கப்பாடுதான், எதிர்க்கட்சிகளை டளஸின் பின்னால் செல்ல வைத்தது. ரணில் எதிர் சஜித் என்கிற போட்டி ஏற்பட்டிருந்தால், சஜித்தை ஆதரிப்பது சார்ந்து கூட்டமைப்பில் உள்ளவர்களுக்கு பிரச்சினை ஏதும் இருந்திருக்காது. ஆனாலும், ரணிலை ஆதரிப்பது என்பது, டளஸை ஆதரிப்பதைவிட அதிகமான அளவில் ராஜபக்‌ஷர்களைப் பாதுகாக்கும் என்கிற விடயம் முன்நகர்த்தப்பட்டு, டளஸை ஆதரிக்கும் முடிவுக்கு கூட்டமைப்பு வந்தது. அந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதும், டளஸ் - சஜித் அணியோடு புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் கூட்டமைப்பு கைச்சாத்திட்டது. ஆனால், கூட்டமைப்பின் அறிவிப்பு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட போதிலும், மொத்தமுள்ள 10 கூட்டமைப்பு எம்.பிக்களில் குறைந்தது நான்கு பேர் ரணிலை ஆதரித்து வாக்களித்து இருக்கிறார்கள் என்பது, கூட்டமைப்பு தலைமையின் எண்ணம். ரணில் அணியும், தங்களுக்கு ஐந்து கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்து இருக்கிறார்கள் என்ற விடயத்தை வெளிப்படுத்தினர். ஏனெனில், கூட்டமைப்பின் தீர்மானத்தை எடுக்கும் கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள், கூட்டம் நிறைவுபெற்ற சில நிமிடங்களில் ரணிலுக்கு, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களால் தெரிவிக்கப்பட்டுவிட்டது. அதுதான், டளஸை கூட்டமைப்பு ஆதரிக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டை, இந்திய தூதரகம் எடுத்தமை தொடர்பிலான ராஜதந்திர நெருக்கடிக்கும் காரணமானது. ரணில், இந்திய வெளிவிவகார அமைச்சரைத் தொடர்பு கொண்டு பேசுமளவுக்கு விடயம் சென்றிருக்கின்றது. எனினும், அவ்வாறான சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை என்று இந்திய தூதரகமும் கூட்டமைப்பின் தலைமைப்பீடமும் ஊடகங்களுக்கு அறிவித்திருக்கின்றன. ஆனால், அதன் உண்மைத்தன்மை எப்படிப்பட்டது என்பது, மக்களுக்கு விளங்கிக் கொள்ளக் கூடியதுதான். ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பு, இரகசியமான முறையில் இடம்பெறாது விட்டிருந்தால், ரணில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. இதுதான், மில்லியன் டொலர் பண பேரம் பேசப்பட்டு, வாக்குகள் விற்கப்படுவதற்கும் காரணமாகியது. அத்தோடு, ஜனாதியாக ரணில் தேர்தெடுக்கப்பட்டால், தற்போதையை பாராளுமன்ற பதவிக்காலம் முழுமையாக முடிவடைந்த பின்னரே, தேர்தலொன்று குறித்து சிந்திக்கப்படும் என்கிற வாக்குறுதி, பொதுஜன பெரமுன தொடங்கி அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் ரணிலின் தரப்பால் வாக்குறுதி அளிக்கக்பட்டிருக்கின்றது. அதனால், அவரை வெற்றிபெற வைக்கும் தேவை, கட்சி பேதங்கள் கடந்து பெரும்பான்மை எம்.பிக்களுக்கு ஏற்பட்டது. இதில், கூட்டமைப்பின் எம்.பிக்களுக்கோ, விக்னேஸ்வரனுக்கோ கூட, பெரும் உடன்பாடு இருக்கத்தான் செய்யும். ஏனெனில், டளஸ் - சஜித் கூட்டணி, தாங்கள் ஆட்சியமைத்தால், அடுத்த ஆறு மாதங்களுக்குள் பொதுத் தேர்தலொன்றுக்கு செல்வோம் என்று அறிவித்திருந்தது. அதுதான், அதிக பாராளுமன்ற உறுப்பினர்களை அச்சம் கொள்ள வைத்தது. தற்போதையை பாராளுமன்றத்திலுள்ள அதிகமானவர்களுக்கு, மீண்டும் ஒரு தேர்தலை எதிர்கொள்வதற்கு பாரிய பயம். அதனால், பதவிக்காலத்தை முழுமையாக அனுபவித்துவிட்டு செல்லலாம் என்று நினைக்கிறார்கள். அத்தோடு, பெருமளவில் பேசப்பட்ட பண பேரம் என்பது, ஊழல்வாதிகளான பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு உவப்பானதாக இருந்தது. விக்னேஸ்வரன் ரணிலை ஆதரிக்க எடுத்த முடிவு என்பது, விசித்திரமான ஒன்று! ஏனெனில், ரணில்- மைத்திரி நல்லாட்சிக் காலத்தில் அவர், கூட்டமைப்பில் இருந்து விலகிச் செல்வதற்கு, “நல்லாட்சி ஆட்சியாளர்களை கூட்டமைப்பு பாதுகாக்கின்றது” என்று காரணம் கூறினார். அத்தோடு, ரணிலுக்கும் சம்பந்தனுக்கும் தனக்கும் இடையிலான சந்திப்பொன்றின் போது, வடக்கு - கிழக்கில் இருந்து இராணுவத்தை அகற்றுவதற்கு தன்னால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ரணில் புறந்தள்ளினார்; அப்போது அதைச் சம்பந்தன் கவனத்தில் கொள்ளாமல் இருந்தார் என்றெல்லாம் 2015 பொதுத் தேர்தல் காலத்தில் விக்னேஸ்வரன் வெளிப்படுத்தியிருந்தார். அத்தோடு, “புதிய அரசியலமைப்பு, தமிழ் மக்களின் சமஷ்டிக் கோரிக்கையை ஏற்கவில்லை. சம்பந்தனும் சுமந்திரனும் தமிழ் மக்களை, நல்லாட்சியை காப்பாற்றுவதற்காக ஏமாற்றுகிறார்கள்” என்றார். இவையெல்லாம் சேர்ந்துதான், அவரை தனி அரசியல் ஆளுமையைாக முன்னிறுத்தும் வேலையை, தமிழ் மக்கள் பேரவையும் சில வைத்தியர்களும் கல்வியாளர்களும் ஒருசில அரசியல் ஆய்வாளர்களும் முன்னிறுத்தினார்கள். விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினராகியதும், இன்றைக்கு இந்தியாவின் புதுச்சேரி, கோவா ஒன்றியப் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை ஒத்த அதிகாரங்கள், வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கு வழங்குவதற்கு ரணில் வாக்குறுதி அளித்திருப்பதாக கூறினார். அதனால்தான், ரணிலை ஆதரிக்கும் முடிவுக்குத் தான் வந்ததாகவும் கூறுகிறார். இந்தியாவின் ஒன்றியப் பிரதேசங்களின் அதிகார வரம்பு என்பது, துணைநிலை ஆளுநரின் அதிகாரத்துக்கு முன்னால் ஒன்றுமே இல்லை. குறிப்பாக, புதுச்சேரியும் கோவாவும் மத்தியிலுள்ள ஆட்சிக்கு எதிரான நிலைப்பாடுள்ள கட்சியால் ஆளப்படுமானால், அங்கு எதுவுமே நடைபெறாது. அதற்கு துணைநிலை ஆளுநர் அனுமதி வழங்குவதில்லை. புதுச்சேரியில், காங்கிரஸின் நாராயணசாரி ஆட்சியில் இருந்த போது, கிரன் பேடி துணைநிலை ஆளுநராக இருந்து கொடுத்த இடையூறுகள் வெளிப்படையானவை. கிட்டத்தட்ட இலங்கையின் மாகாண அலகுகள் தற்போது கொண்டிருக்கின்ற அதிகார வரப்பு எவ்வளவோ அது போன்றதொரு நிலையே, கோவா, புதுச்சேரி ஆகியவற்றுக்கும் உண்டு. அப்படியான நிலையில், அவ்வாறான அதிகாரமொன்றை ரணில் வழங்கத் தயாராக இருக்கிறார்; அதனால் அவரை ஆதரிக்க விக்னேஸ்வரன் தீர்மானம் மேற்கொண்டார் என்பதெல்லாம், மக்களின் மண்டையில் மசாலா அரைக்கும் வேலையாகும். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் பொறுத்தளவில், அவர்களின் ஜனாதிபதி தேர்தல் கால புறக்கணிப்பு நிலைப்பாட்டை, அதே கோரிக்கைகளுடன் இப்போதும் கடைப்பிடித்து இருக்கிறார்கள். அதில், ஆச்சரியப்பட ஒன்றுமேயில்லை. ஜனாதிபதிக்கான பாராளுமன்ற வாக்கெடுப்பை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் விக்னேஸ்வரனும் கையாண்ட விதம் தொடர்பில் மக்களுக்கு நிறையவே அறியக் கிடைத்திருக்கின்றது. அதாவது, உள்ளடி வேலைகளின் போக்கிலும், ஊழல்களுக்குத் துணைபோகும் நிலைப்பாட்டிலும் எம்.பிக்கள் செயற்பட்ட விதமும் வெளியாகி இருக்கின்றது. இந்த விடயங்கள், எதிர்கால தேர்தல்களின் போது, மக்களால் நினைவுகூரப்பட்டு, விலைபோகாத தலைவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஜனாதிபதி-தேர்வில்-தமிழ்த்-தேசிய-கட்சிகளின்-வெளிப்பாடு/91-301266
  17. அரசியல் தந்திரசாலி ரணிலின் வெற்றி! புருஜோத்தமன் தங்கமயில் நம்பிக்கைக் கதைகளின் புதிய அத்தியாயமாக இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடம்பிடித்திருக்கிறார். ஐந்து தசாப்த கால அரசியல் வாழ்வைக் கொண்டிருக்கின்ற ரணில், ஜனாதிபதிக் கனவை ஒவ்வொரு நாளும் கொண்டு சுமந்தார். இரண்டு தடவைகள் ஜனாதிபதித் தேர்தலில் நேரடியாக போட்டியிட்டு தோல்வியடைந்த போதிலும், அவர் தனது கனவை அடைவதற்கான அனைத்துச் சந்தர்ப்பங்களையும் பரீட்சித்துப் பார்ப்பதற்கு தயாராக இருந்தார். அதுதான், அவரை காலம் இன்று ஜனாதிபதியாக்கியிருக்கிறது. நம்பிக்கைக் கதைகளில் புதிய நாயகனாகவும் மாற்றியிருக்கின்றது. இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு கட்சித் தலைவராக ரணில் மிக மோசமான தோல்விகளைச் சந்தித்திருக்கிறார். 1994ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவிக்கு வந்தது முதல் 2002, 2015 ஆகிய இரு தடவைகள் மாத்திரமே பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கின்றது. ஏனைய சந்தர்ப்பங்களில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் என்கிற அடையாளத்தோடுதான் இருந்து வந்திருக்கிறார். 2020 பொதுத் தேர்தலில் அவரும் அவரது கட்சியும் மக்களால் என்றைக்கும் இல்லாதவாறு தோற்கடிக்கப்பட்டதோடு எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் பறிபோனது.. ஆனாலும், கட்சிக்கு கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியல் ஆசனத்தைப் பற்றிப் பிடித்துக் கொண்டு ஒன்றரை ஆண்டுகளின் பின்னர், பாராளுமன்றம் வந்த ரணில், திடீரென ஒருநாள் பிரதமரானார். இப்போது ஜனாதிபதியாகியிருக்கிறார். இப்போதுதான் ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் ஆன்மா அமைதியடைந்திருக்கும். ஏனெனில், நிறைவேற்று அதிகாரம் என்கிற எதேச்ச அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி முறையை இலங்கை அரசியலில் அறிமுகப்படுத்தி, அதனை உச்ச அளவில் பிரயோகித்தவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன. அவர் தன்னுடைய காலத்தின் பின்னர், என்றோ ஒருநாள் அந்தப் பதவிக்கு தனது மருமகனான ரணில் வரவேண்டும் என்று விரும்பினார். அது, நிறைவேறாமல் போய்விடுமோ என்று அவரது ஆன்மா கடந்த முப்பது ஆண்டு காலமாக அங்கலாய்த்திருக்கும். ஆனாலும், தன்னுடைய பாசறையில் அரசியல் தந்திரம் பழகிய ரணில், என்ன விலை கொடுத்தாலும் அதிகாரத்தை அடைந்து காட்டியிருக்கிறார். ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் ஆரம்பித்த போது, அதனை சாதகமாக பயன்படுத்துவது குறித்து ரணில் மிக நிதானமாக காய்களை நகர்த்தினார். ஐ.தே.க.வின் ஒற்றை உறுப்பினராக எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்த்திருந்தாலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வருவது குறித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியோடு சேர்ந்து கவனம் செலுத்தினார். ராஜபக்‌ஷர்களால் மக்களின் எழுச்சியை கையாள முடியாது என்ற நிலை எழுந்த போது, ரணில் தன்னுடைய அரசியல் தந்திர ஆட்டத்தை தனித்து ஆடத் தொடங்கினார். போராட்டக்காரர்கள், பௌத்த உச்ச பீடங்கள் தொடங்கி அனைத்து கட்டங்களிலும் ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான அழுத்தம் அதிகரித்த போது, சர்வகட்சி அரசாங்கம் என்கிற விடயம் பேசு பொருளானது. சர்வகட்சி அரசாங்கம் என்பது ராஜபக்‌ஷர்களுக்கு இடையில் பிளவுகளை ஏற்படுத்தியது. ஒவ்வொரு ராஜபக்‌ஷவும் தங்களது பதவியை பாதுகாப்பதற்காக மற்ற ராஜபக்‌ஷர்களின் பதவிகளை பலி கொடுக்கத் தயாரானார்கள். அந்த இடத்தை சரியாக பற்றிக் கொண்ட ரணில், மஹிந்த ராஜபக்‌ஷவிடம் இருந்த பிரதமர் பதவியை கோட்டாவினூடு கைப்பற்றினார். கோட்டா முன்னிலையில் பிரதமராக பதவியேற்ற போதிலும்கூட அவர், ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான மக்களின் எழுச்சியை தணிந்து போக விடவில்லை. எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை என்கிற நாளாந்த வாழ்க்கைக்கான பெரும் நெருக்கடியை ரணில் தனக்கான அரசியல் விளையாட்டுக்காக கையாண்டார். பிரதமராக பொறுப்பேற்ற அவர், மக்களின் நாளாந்த வாழ்க்கைக்கான நெருக்கடியை சமாளிப்பதற்கான வாய்ப்புக்களைப் பற்றி பேசுவார் என்று பார்த்தால், நாட்டு மக்களை நோக்கி பஞ்சம் பசி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கத் தொடங்கினார். அது, ஒருவகையில், ராஜபக்‌ஷர்களின் எவர் ஒருவர் ஆட்சியில் இருந்தாலும் சர்வதேச நாடுகளோ, உதவி வழங்கும் அமைப்புக்களோ இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதாவது என்ற தோரணையிலானதாக இருந்தது. அந்த செய்திகள் மக்களை இன்னும் இன்னும் கோபப்படுத்தியது. அது, கடந்த ஒன்பதாம் திகதி, ஜனாபதிப் பதவியில் இருந்து கோட்டாவை ஓட வைக்கும் போராட்டமாக மாறியது. கோட்டா நாட்டை விட்டு ஓடி சென்று 14ஆம் திகதி பதவி விலகிய போது, பதில் ஜனாதிபதியாக ரணில் மாறினார். ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு அனுப்பும் போராட்டம், ஒரு கட்டத்தில் ரணிலுக்கு எதிரானதாகவும் மாறியது. அவரை வீட்டுக்கு செல்லுமாறு கோரியது. ஆனால், அவர் எந்தக் கட்டத்திலும் அந்த முடிவை நோக்கி செல்வதற்கு தயாராக இருக்கவில்லை. தனது கனவை அடைவதற்கான இறுதிச் சந்தப்பம் இது என்பதில் அவர் கவனமாக இருந்தார். கோட்டாவை நாட்டை விட்டு அனுப்புவதில் ரணில் காட்டிய ஆர்வம் மிகப்பெரியது. அதுபோல, கோட்டா நாட்டைவிட்டுச் சென்றதும், அவர் பாதுகாப்புத் தரப்பை கையாளத் தொடங்கிய விதம் அச்சமூட்டும் அளவுக்கு இருந்தது. அதுதான், போராட்டக்காரர்களை சற்று பின்வாங்கவும் வைத்தது. ராஜபக்ஷக்கள் இருக்கும் வரையில் போராட்டக்காரர்களை ஒரு அளவுக்கு மேல் எதிர்க்காது பின்வாங்கிக் கொண்டிருந்த பாதுகாப்புத் தரப்பு, ரணில் பதில் ஜனாதிபதி என்கிற நிலையை அடைந்ததும், முன்நோக்கி வரத் தொடங்கினார்கள். அவசர காலச் சட்டம் தொடங்கி, போராட்டத்தை அடக்குவதற்கான அனைத்து விதமான ஆணைகளையும் ரணில் எந்தவித தயக்கமும் இன்றி விடுக்கத் தொடங்கினார். போராட்டக்காரர்களை நோக்கி பாஷிஸ்டுகள் என்கிற அடையாளப்படுத்தலை அவர் திருப்பத் திரும்பச் செய்தார். ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான மக்களின் போராட்டத்தை அடக்குவதற்கு ஒருபோதும் முயலேன் என்று பிரதமராக பதவியேற்ற தருணத்தில் அறிவித்த ரணில், பதில் ஜனாதிபதியானதும், அந்தத் தோரணையை மாற்றினார். ராஜபக்‌ஷர்களை அகற்றப்பட்ட பின்னர், இனி தன்னுடைய களத்தில் யாருக்கும் இடமில்லை என்பது அவரது நிலைப்பாடாக மாறியது. கடந்த காலங்களில் ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக அரசியல் செய்த ரணிலும், ரணிலுக்கு எதிராக அரசியல் செய்த ராஜபக்‌ஷர்களும் இன்று ஒரே அணியில் இருக்கிறார்கள். அதுவும், கடந்த பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற ராஜபக்‌ஷர்கள், தேர்தலில் தோல்வியடைந்த ரணிலை ஜனாதிபதியாக்குவதற்காக பாராளுமன்றத்துக்குள் வாக்களித்திருக்கிறார்கள். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்வுக்கான வாக்களிப்பில், அவர் பெற்ற 132 வாக்குகள் என்பது செல்லும் செய்தி, ராஜபக்‌ஷர்களின் ஆதரவு உறுப்பினர்கள், ஒரே அணியில் இருக்கிறார்கள். அவர்கள் இப்போது ரணிலை முன்னிறுத்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு பொது மக்களின் போராட்டமோ, ராஜபக்‌ஷர்கள் மீதான கோபமோ ஒரு பொருட்டாக இல்லை. ரணிலை இடைக்கால ஜனாதிபதியாக முன்னிறுத்துவதன் மூலம், பொது ஜன பெரமுன என்கிற கட்சியை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம் என்பது ராஜபக்‌ஷர்களின் எதிர்பார்ப்பு. ஏனெனில், இன்றைக்கு தங்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்தாலும், நல்லாட்சிக் காலத்தில் ரணிலும் -மைத்திரியும் சறுக்கிய இடம்போன்ற சந்தர்ப்பம் மீண்டும் தங்களுக்கு கிடைக்கும் அதனைப் பிடித்துக் கொண்டு ஆட்சி அதிகார கனவை நோக்கி மீண்டும் ஓடிக் கொள்ளலாம் என்பதே ராஜபக்‌ஷர்களின் எண்ணம். குறிப்பாக, ராஜபக்‌ஷர்களின் சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பிய மஹிந்தவின் நோக்கம். ஏனெனில், ராஜபக்‌ஷர்களின் வரலாறு கோட்டாவோடு முடிந்து போகக்கூடாது என்பது அவரது நிலைப்பாடு. தன்னுடைய மகன் நாமல் ராஜபக்‌ஷ, அதன் பின்னர் நாமலின் வாரிசு என்று ஆட்சி அதிகார வரலாறு எழுதப்பட வேண்டும் என்று மஹிந்த விரும்புகிறார். அதற்காக, இப்போது, ரணிலை ஆதரிப்பதுதான் அவருக்கு இருக்கும் ஒரே தெரிவு. ஏனெனில், பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த இன்னொரு நபர் இடைக்கால ஜனாதிபதியாக பதவிக்கு வந்தால், கட்சி ராஜபக்‌ஷர்களின் கட்டுப்பாட்டில் இருந்து செல்வதற்கான வாய்ப்புக்கள் உண்டு. அதனைத் தவிர்ப்பதற்கு இன்னொரு கட்சியின் தலைவரான ரணிலை ஜனாதிபதியாக முன்னிறுத்தி, இரண்டரை ஆண்டுகளைக் கடப்பதுதான் இருப்பதில் சமயோசிதமான வழி. நாட்டின் பொருளாதார நெருக்கடியை உடனடியாக சீர்செய்ய முடியாது. ஆகவும், இனி வரப்போகும் நாட்களை ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்ப்பதுதான், தங்கள் மீதான மக்களின் கோபத்தை குறைப்பதற்கான வழி. ஆகவே, அந்த வழிமுறையை சில காலத்துக்கு பின்பற்றுவதில் தவறில்லை என்பதும், அதுதான் தங்களை அரசியலில் காப்பாற்றும் என்பதுமே மஹிந்த தரப்பு ரணிலை ஜனாதிபதியாக முன்னிறுத்துவதில் முடிந்திருக்கின்றது. இன்று ராஜபக்‌ஷர்களும் ரணிலும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி ஆதாயங்களை அடைந்திருக்கிறார்கள். ஆனால், போராடி மக்களின் எதிர்பார்ப்போ ஏதுமறிய திக்குத் திசையில் உழலத் தொடங்கியிருக்கின்றது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அரசியல்-தந்திரசாலி-ரணிலின்-வெற்றி/91-300844
  18. ராஜபக்‌ஷர்களின் வீழ்ச்சியில் கற்க வேண்டியது புருஜோத்தமன் தங்கமயில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச படுகொலை செய்யப்பட்ட போது, தென் இலங்கையில் சில இடங்களில் வெடி கொளுத்தி மக்கள் ஆர்ப்பரித்த சம்பவங்கள் பதிவாகியிருந்தன. சுதந்திர இலங்கை அரசியல் வரலாற்றில் ஆட்சித் தலைவர் ஒருவர் மரணித்த போது, இவ்வாறான சம்பவங்கள் அதற்கு முன்னர் எப்போதும் நிகழ்ந்ததில்லை. அப்படியானதொரு நிலை தனக்கு என்றைக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அடிக்கடி கூறுவாராம். புலிகளிடம் இருந்து நாட்டை சிங்கள மக்களுக்கு மீட்டுக் கொடுத்த தலைவராக தான் என்றைக்குமே மகா வம்சத்தில் அடையாளம் பெற்றிருக்க வேண்டும் என்பது அவரது ஆசை. அதற்காக, அரச நிதியை செலவிட்டு மகா வம்சத்தில் ராஜபக்‌ஷர்களுக்கான அத்தியாயத்தை அவர் எழுதச் செய்தார். ஆனால், 2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ தோற்கடிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டார். தன்னுடைய தோல்வி தமிழ், முஸ்லிம் மக்களால் நிகழ்ந்ததாக குற்றஞ்சாட்டினார். சிங்கள மக்கள் தன்னுடனே இருப்பதாகவும் கூறினார். அந்த இடத்திலிருந்து தென் இலங்கையில் பௌத்த-சிங்கள பேரினவாதத்தை தேர்தலுக்கான பெரும் உத்தியாக முன்னிறுத்தி அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆட்சியை மீண்டும் பிடிக்கும் அளவுக்கான தலைவராக தன்னை மாற்றிக்காட்டினார். 2019 ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றியும், 2020 பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன பெற்ற மூன்றில் இரண்டுக்கு அண்மித்த பெரும்பான்மை வெற்றியும் அதனால் நிகழ்ந்தவை. ஆனால், அந்த வெற்றி முகம் நீடிக்கவில்லை. இரண்டரை ஆண்டுக்களுக்குள்ளேயே ராஜபக்‌ஷர்களை ஆட்சியை விட்டு ஒழித்து ஓடுமளவுக்கான நிலைமையை தென் இலங்கை காட்சிப்படுத்திக் கொண்டிருக்கின்றது. கோட்டாபய ராஜபக்‌ஷ நேற்று (13) புதன்கிழமை அதிகாலையில் விமானப்படைக்குச் சொந்தமான சிறப்பு விமானத்தில் நாட்டை விட்டுத் தப்பிடிச் செல்லும் நிலை ஏற்பட்டது. தெற்காசியாவில் பதவியில் இருக்கும் போதே நாட்டை விட்டுத் தப்பி ஓடிய இரண்டாவது ஜனாதிபதி என்ற அடையாளத்தை கோட்டா பெற்றிருக்கிறார். ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியாக இருந்த அஷ்ரப் கானி கடந்த ஆண்டு தலிபான்களுக்குப் பயந்து நாட்டை விட்டு ஓடினார். ஆனால், கோட்டாவோ அவரை யார் ஆட்சிக்கு கொண்டு வந்தார்களோ, அந்த மக்களுக்கு பயந்து நாட்டை விட்டு ஓடியிருக்கிறார். இது, இலங்கை அரசியல் வரலாற்றில் இதுவரை நிகழாத ஒன்று. அதுபோல எதிர்பார்க்கப்படா ஒன்று. மஹிந்த தன்னுடைய காலத்துக்கு பின்னர், தான் எப்படி நினைவுகூரப்பட வேண்டாம் என்று நினைத்தாரோ, அது அவர் வாழும் காலத்திலேயே கனவாக மாறியிருக்கின்றது. மஹிந்த ராஜபக்‌ஷ கடந்த மே மாதம் 09ஆம் திகதி பிரதமர் பதவியில் இருந்து விலகிய போது, நாடு முழுவதும் வெடி கொளுத்திக் கொண்டாடியது. ராஜபக்‌ஷர்கள் பாதுகாப்புத் தேடி இராணுவ முகாம்களுக்குள் பதுங்கியிருக்க வேண்டி வந்தது. இன்றைக்கு கோட்டா சட்ட நடைமுறைகளுக்கு அப்பால், விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றிருக்கிறார். இந்தப் பத்தி எழுதப்படும் வரையில், நாட்டில் ஜனாதிபதி என்ற ஒருவர் இல்லை. அதுபோல, கோட்டாவும் பதவியை விட்டு விலகியிருக்கவில்லை. ராஜபக்‌ஷர்கள் இன்றைக்கு எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி பௌத்த- சிங்கள பேரினவாத சிந்தனைக் கட்டமைப்பினால் நிகழ்ந்தது. ஏனெனில், எவ்வளவு ஊழல் மோசடிகளைக் செய்தாலும், காட்டு ஆட்சியை நடத்தினாலும் பௌத்த -சிங்கள இனவாதத்தை பேசிக் கொண்டிருந்தால், தென் இலங்கையின் கிராமங்களை வளைத்து வைத்துக் கொள்ளலாம். அதற்கு பௌத்த பீடங்கள் பக்க பலமாக இருக்கும் என்று ராஜபக்‌ஷர்கள் நம்பினார்கள். இதனை, ஜே.ஆர்.ஜெயவர்த்தன, எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க உள்ளிட்டவர்கள் கடந்த காலங்களில் பின்பற்றி வந்த ஆட்சிக் கட்டிலை அடைவதற்கான உத்தி. ராஜபக்‌ஷர்களும் அதனையே நம்பி நடைமுறைப்படுத்தினார்கள். ஆனால், இனவாதமும் மதவாதமும் மனிதனின் வயிற்றுப் பசிக்கு முன்னால் தோற்றுப் போகும் பிம்பங்கள் என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கின்றது. எவ்வளவு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டாலும், மக்களிடம் இனவாத மதவாத தீயை வளர்த்தால் ஆட்சியில் தொடர்ந்தும் இருந்துவிடலாம் என்ற சிந்தனையை தங்களின் இறுதி நாட்கள் வரையில் ராஜபக்‌ஷர்கள் நம்பினர். ஆனால், அது இம்முறை சாத்தியமாகவில்லை. வயிற்றுப் பசிக்கு முன்னால் எதுவும் முக்கியமல்ல. உணவுதான் முக்கியமானது என்பதை தென் இலங்கையின் கிராமங்கள் உணரத் தொடங்கிய போதுதான், ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக தொடர் போராட்டம், ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை உள்ளிட்டவற்றை கைப்பற்றும் அளவுக்கு சென்றிருக்கின்றது. இலங்கையின் அரசியல் போராட்டங்கள், புரட்சிகள், கிளர்ச்சிகள் என்பவை அடிக்கடி நிகழ்ந்து வந்திருக்கின்றன. ஆனால், இவ்வாறான மக்கள் பங்களிப்போடு எந்தப் போராட்டங்களும் நடைபெற்றிருக்கவில்லை. எந்தவொரு கட்டத்திலும் ராஜபக்‌ஷர்களின் சுவடுகள் இருக்கும் ஆட்சிக் கட்டமைப்பொன்று நீடித்திருக்கக் கூடாது என்பதில் மக்கள் குறியாக இருக்கிறார்கள். இந்தப் பத்தி எழுதப்படும் போது, பிரதமர் செயலகத்துக்கு முன்னால், ரணிலை பதவி விலகக் கோரி மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராட்டத்தைக் கலைப்பதற்கு இராணுவமும், பொலிஸாரும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியிருக்கிறார்கள். ரணில், மக்களின் போராட்டத்தின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல், ராஜபக்‌ஷர்களைக் காப்பாற்றும் முகமாக பிரதமர் பதவியை ஏற்றதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், ராஜபக்‌ஷர்கள் அகற்றப்பட்டது மாதிரியே, ரணிலும் அரங்கிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். கடந்த காலங்களில் ராஜபக்‌ஷர்களுக்காக ஆதரவாக இருந்த பௌத்த பீடங்களும் மக்களின் கோபத்துக்கு முன்னால் செல்லாமல் பதுங்கிக் கொண்டுவிட்டன. ராஜபக்‌ஷர்களை அகற்றியாகிவிட்டது. இனி அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று மக்கள் நம்பவில்லை. ஆனால், ஊழல் மோசடிக்கார ஆட்சியாளர்களுக்கான எச்சரிக்கைச் செய்தியொன்று சொல்லப்பட்டிருக்கின்றது. இனி ஆட்சிக்கு வரும் யாரும் விட்டேந்தித்தனமாக செயற்பட முடியாது. அத்தோடு, மக்களின் ஏகோபித்த ஆதரவோடு ஆட்சிக்கு வந்தாலும், ஆட்சியை மக்களின் விருப்பத்துக்கு மாறாக நடத்தினால், தாங்கள் வழங்கிய ஆணையை மீளப்பெற்றுக் கொள்ளலாம் என்பதை மக்கள் நிரூபித்திருக்கிறார்கள். நாட்டில் குழப்பங்கள் இல்லாத நிலையான ஆட்சிக்கான தேவை தவிர்க்க முடியாதது. அதற்கு சிவில் சமூக அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும். ஏனெனில், அரசியல் கட்சிகள் தங்களின் இயல்பான குணத்தை வெளிப்படுத்தவே செய்யும். அதுபோல, தென் இலங்கை மக்கள் உணர வேண்டிய முக்கிய விடயமொன்று உள்ளது. அது, பௌத்த- சிங்கள பேரினவாத சிந்தனையோடு ஆட்சி அரசியல் செய்யும் எந்தத் தரப்பை ஆதரித்தாலும், அது ராஜபக்‌ஷர்கள் போன்றவர்களை உருவாக்கவே செய்யும். அப்போது நாடு இன்னும் மோசமான கட்டத்தை அடையும். ஏனெனில், சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் வீழ்ச்சி பௌத்த- சிங்கள பேரினவாத சிந்தனை ஆட்சி அரசியலுக்கான கருவியாக முன்வைக்கப்பட்ட காலத்திலிருந்து நிகழ்ந்தது. கடந்த ஏழு தசாப்த காலமாக பௌத்த -சிங்களப் பேரினவாத சிந்தனை நாட்டை பகுதி பகுதியாக அழித்து, இன்றைக்கு படு பாதாளத்துக்குள் தள்ளியுள்ளது. ராஜபக்‌ஷர்களின் வீழ்ச்சியை கொண்டாடும் தென் இலங்கை, இனவாத மதவாத சிந்தனையை எப்போது நிராகரிக்க ஆரம்பிக்கிறார்களோ, அப்போது சுபீட்சமான இலங்கை சாத்தியாகும். இல்லையென்றால், ராஜபக்‌ஷர்கள் போன்று பலரும் மீண்டும் மீண்டும் உருவாகுவார்கள். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ராஜபக்-ஷர்களின்-வீழ்ச்சியில்-கற்க-வேண்டியது/91-300482
  19. இன்றைய நெருக்கடியில் இருந்து கற்க வேண்டிய பாடம் புருஜோத்தமன் தங்கமயில் நாடு அறிவிக்கப்படாத முழு முடக்கத்துக்குள் வந்துவிட்டது. பசி பட்டினிக்கான முன் அறிவிப்பை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளாந்தம் வெளியிட்டு வருகின்றார். போர் நீடித்த காலத்தில், நாட்டு மக்கள் கொண்டிருந்த பதற்றத்தைக் காட்டிலும், தற்போது மக்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல், மிகப்பெரியதாக மாறியிருக்கின்றது. வாழ்வதற்கு தகுதியில்லாத நாடாக இலங்கை இன்று நோக்கப்படுகின்றது. இவ்வாறான நிலையை ஏற்படுத்திவிட்ட அரசாங்கம், இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், மேற்கு நாடுகள் என்று பல நாடுகளுக்கு, அமைச்சர்களையும் அதிகாரிகளையும் அனுப்பி, கடன்களை கோரி வருகின்றது. இன்னொரு பக்கம், ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்கிவிட்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, தன்னுடைய கடந்த கால முறையற்ற நிர்வாகத்தையே மேற்கொண்டு வருகின்றார். பிரதமர் பதவி மாத்திரமல்ல, நிதி அமைச்சும் இன்று ரணிலிடமே இருக்கின்றது. ஆனால், அவரை அழைக்காமல், திறைசேரியின் ஆணையாளரையும் அதிகாரிகளையும் அழைத்து, எப்படியாவது எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கடன்களைப் பெறுவதற்கான சந்தர்ப்பங்களை உறுதிப்படுத்துமாறும், ஜனாதிபதி கோட்டா கோருகிறார். நாட்டின் நிதிநிலை என்ன என்பது அனைவருக்கும் தெரியும். அப்படியிருக்கும் போது, நிதி அமைச்சரான ரணிலை அழைக்காமல், அறிவுறுத்தல் வழங்கும் கூட்டத்தை கோட்டா நடத்துவது என்பது, நாட்டை இவ்வளவு மோசமான நிலைக்குத் தள்ளிய பின்னரும், அவர் கற்றுக்கொண்டது மாதிரி தெரியவில்லை. தான் தோற்றுப்போன ஜனாதிபதி என்பதை, கோட்டா ஏற்றுக்கொண்ட போதும், பதவியிலிருந்து விலகி, நாட்டின் நிர்வாகத்தை சீராக முன்னெடுப்பதற்கான வாய்ப்புகளை, அவர் சிந்திக்கிறார் இல்லை. ஏனெனில், ராஜபக்‌ஷர்களின் இறுதி எச்சம், ஆட்சிப்பீடத்தில் இருக்கும் வரையில், இலங்கைக்கான உதவிகளை வழங்குவதில்லை என்ற தோரணையிலேயே சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட பல தரப்புகளும் இருக்கின்றன. கடன்களையும் உதவித் திட்டங்களையும் பெறும்போது, ராஜபக்‌ஷர்கள் காட்டும் அடக்கத்தை, அதைத் திருப்திச் செலுத்தும் போது காட்டுவதில்லை. மாறாக, கடன்களை திரும்பச் செலுத்துவதற்கான எந்தவித வாய்ப்புகளையும் ஏற்படுத்தாமல், நாட்டின் கடன் சுமையை இன்னும் இன்னும் அதிகரிப்பது சார்ந்தே அவர்கள் செயற்பட்டு வந்திருக்கிறார்கள். அத்தோடு, வெளிநாடுகளிடமும் சர்வதேச அமைப்புகளிடமும் பெறப்பட்ட கடன்களில் கணிசமான பகுதியை, ராஜபக்‌ஷர்கள் ஊழல், மோசடி வழிகளால் சுருட்டிவிட்டார்கள் என்கிற உண்மை யாவரும் அறிந்தவை! அப்படியான நிலையில், ராஜபக்‌ஷர்களின் இறுதி எச்சம் வரை அகற்றிய பின்னரே, இலங்கைக்கான உதவிகளை வழங்குவது குறித்து, அந்தத் தரப்புகள் சிந்திக்கின்றன. இதனை, ரணில் பிரதமராகப் பதவியேற்றது முதல், அவரிடமே வெளிப்படையாக அறிவித்தும் விட்டன. அதனால்தான், வெளிநாட்டு ஊடகங்களிடம் பேசும் அனைத்துத் தருணங்களிலும், “ராஜபக்‌ஷர்களின் கடந்த கால ஆட்சிகளே, நாட்டின் இப்போதையை சீரழிவுக்குக் காரணம்” என்று ரணில் குற்றஞ்சாட்டி வருகின்றார். அதைவிடுத்து, நாட்டுக்கு உதவிகளையோ, கடன்களையோ கொண்டு வரும் எந்த மார்க்கங்களையும் அவரால் கண்டடைய முடியவில்லை. கோட்டாவை, ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தியதில் பௌத்த- சிங்கள இனவாத தரப்புகள் முதன்மை வகித்தன. அவரை, ‘பௌத்தத்தின் காவலர்’, ‘அபிவிருத்தியின் நாயகன்’, ‘பாதுகாப்பின் நம்பிக்கை’ என்றெல்லாம் அடையாளப்படுத்தின. அவரால்தான் நாட்டைக் காப்பாற்ற முடியும் என்று கூவித்திரிந்தார்கள். ஆனால், இன்றைக்கு அந்தத் தரப்புகள் எல்லாமும், “நாங்கள் பாவம் செய்துவிட்டோம்” என்று, பொது வெளியில் கதறத் தொடங்கிவிட்டன. ராஜபக்‌ஷர்களுக்கு நாட்டை மீண்டும் வழங்கக் கோரியதன் மூலம், வரலாறுக்கும் மீள முடியாத கரும்புள்ளி, தங்களில் பதிந்துவிட்டதாக அவர்கள் ஒப்பாரி வைக்கின்றனர். பௌத்த பீடங்கள் தொடங்கி, இனவாதத்தை வளர்த்த அனைத்துத் தரப்புகளும், இன்றைக்கு சிங்கள மக்களுக்கு பதில் சொல்ல வேண்டி வந்திருக்கின்றது. இன்றைக்கு எதிர்கொள்ளும் நெருக்கடி போன்று ஒன்றை, தென்னிலங்கை கடந்த 70 வருடத்தில் சந்தித்ததில்லை. சிறீமாவின் ஆட்சிக் காலத்தில், உணவுப் பொருட்களுக்காக மக்கள் வரிசையில் நின்ற வரலாறு உண்டுதான். ஆனால், வரிசையில் நிற்கும் போது, உணவுப்பொருட்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உறுதியும் இருந்தது. வரிசையில் நின்றவர்கள், பொருட்கள் கிடைக்காமல் வீட்டுக்கு சென்றதில்லை. ஆனால், ராஜபக்‌ஷர்கள் ஏற்படுத்திவிட்ட இன்றைய சீரழிவு நாள்களில், எரிபொருட்களுக்காகவோ, சமையல் எரிவாயுவுக்கோ நாள்கணக்கில், மாதக்கணக்கில் வரிசையில் நின்றாலும், அது கிடைக்கும் என்று எந்த உத்தரவாதத்தையும் யாரிடமும் பெற்று கொள்ள முடியாது. எரிபொருள் விநியோகத்துக்காக வரிசையில் நின்றவர்களுக்கு ‘டோக்கன்’ வழங்கும் முறையை அறிமுகப்படுத்தி, அதை பொலிஸ், இராணுவத்தினரைக் கொண்டு நடைமுறைப்படுத்திய மறுநாள், எரிபொருள் விநியோகத்தை அரசாங்கம் நிறுத்தியிருக்கின்றது. வரிசையில் நின்றவர்கள், வீழ்ந்து இறக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழும் நாடாக, தற்போது இலங்கை பதிவாகி வகின்றது. இவ்வளவு சீரழிவின் பின்னரும், பௌத்த பேரினவாதப் பேச்சைப் பேசினால், தப்பித்துக் கொள்ளலாம் என்று சரத் வீரசேகர போன்ற முன்னாள் அமைச்சர்கள் நினைக்கிறார்கள். ஆனால், வயிற்றுப்பசிக்கு முன்னால், இந்த இனவாதப் பேச்செல்லாம் எடுபடாது என்று, சரத் வீரசேகரவுக்கு நடுவீதியில் வைத்து சிங்கள மக்கள் போதித்திருக்கிறார்கள். அதுவும், அவரை நோக்கி நடுவிரலை உயர்த்திக் காட்டும் அளவுக்கான கோபம் எல்லாம், மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது என்றால், இனவாதம் பேசி ஆட்சிக்கு வந்து அலைக்கழித்தவர்கள் மீது, மக்கள் என்ன மாதிரியான வெறுப்பில் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடியும். ராஜபக்‌ஷர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், மத்திய கிழக்கு நாடுகளின் உதவியில் இயங்கிய உள்நாட்டு அமைப்புகளைத் தடை செய்யவும், நெருக்கடி வழங்கவும் தொடங்கியது. சில அமைப்புகளை இஸ்லாமிய தீவிரவாத இயங்கங்கள் என்ற அடையாளம் வழங்கி, சிலரைக் கைது செய்யவும் செய்தது. குறிப்பாக, கட்டாரின் உதவித் திட்டத்தில் இயங்கிய உள்நாட்டு அமைப்புகளை அதிகமாகவே அலைக்கழிக்கும் வேலைகளில் ராஜபக்‌ஷர்கள் இயங்கினார்கள். ஆனால், இன்றைக்கு எரிபொருளுக்கான கடன் உதவிக்காக, கட்டாரிடம் எரிபொருள் அமைச்சரான காஞ்சன விஜயசேகர சென்றிருக்கின்றார். தனக்குத் துணையாக, முஸ்லிம் அமைச்சர் என்பதற்காகவே சுற்றாடல் அமைச்சரான நஸீர் அஹமட்டையும் அவர் அழைத்துச் சென்றிருக்கின்றார். ராஜபக்‌ஷர்கள் ஆட்சிக்கு வந்ததும், அலி சப்ரி என்கிற ராஜபக்‌ஷர்களின் விசுவாசியைத் தவிர, எந்த முஸ்லிமையும் அமைச்சரவைக்குள் இணைத்துக் கொள்ளவில்லை. ஏன், பிரதி அமைச்சுப் பதவி கூட வழங்கவில்லை. முஸ்லிம் கட்சிகளும் அதன் தலைவர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும், தீவிரவாதிகள் போன்ற தோரணையிலேயே தென் இலங்கை பூராவும் காட்சிப்படுத்தியும் வந்தனர். ஆனால், நாட்டை சீரழித்து முடித்த பின்னர், நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, கட்டார் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளிடம் கையேந்துவது குறித்து, எந்த வெட்கத்தையும் அவர்கள் படவில்லை. நாட்டிலுள்ள முஸ்லிம்களையும் அவர்களின் மார்க்க வழிமுறையையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி, பௌத்த சிங்கள பேரினவாத அடக்குமுறை புரிந்த ராஜபக்‌ஷர்களுக்கும், அவர்களின் விசுவாசிகளுக்கும், இன்றைக்கு மத்திய கிழக்கு நாடுகள் இனிக்கத் தொடங்கிவிட்டன. ஆனால், மத்திய கிழக்கு நாடுகள் ராஜபக்‌ஷர்களின் கடந்த கால ஆட்சியைக் கருத்தில் கொண்டு, உதவி வழங்குவது குறித்து நிறையவே சிந்திக்கின்றன. நாட்டு மக்கள், குறிப்பாக தென் இலங்கை மக்கள், இன்றைய நெருக்கடியில் இருந்து படித்துக் கொள்வதற்கு பல செய்திகள் உண்டு. அதில், பிரதானமானது, இனவாத மதவாத சிந்தனை கொண்ட அரசியலை புறந்தள்ள வேண்டியதன் அவசியமாகும். இல்லையென்றால், காலனித்துவத்திலிருந்து சுதந்திரம் பெறும்போது, ஆசியாவின் முதன்மை நாடுகளில் பட்டியலில் இருந்த இலங்கை, இன்று எப்படி இனவாத அரசியலால் சீரழிந்திருக்கின்றதோ, இதைவிட இன்னும் படுமோசமாக சீரழிந்துவிடும். அப்போது, இந்த நாடு, யாருக்கும் வேண்டாத, எல்லோராலும் புறக்கணிக்கப்பட்ட ஒரு நாடாக மாறும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இன்றைய-நெருக்கடியில்-இருந்து-கற்க-வேண்டிய-பாடம்/91-299485
  20. நீண்ட காத்திருப்பு: சீரழியும் நாட்டின் கதை புருஜோத்தமன் தங்கமயில் எரிபொருளை ஏற்றி வந்த வாகனத்தை தேங்காய் உடைத்து வரவேற்ற காட்சியொன்று வடமராட்சிப் பகுதியில், கடந்த சில நாள்களுக்கு முன்னர் பதிவானது. அதுபோல, எரிபொருள் தாங்கி வாகனத்தில் இருந்து, சட்டத்துக்கு புறம்பாக வைத்தியர் ஒருவர், வெற்றுக் கான்களில் பெற்றோலை பெற்று, தன்னுடைய வாகனத்தில் எடுத்துச் செல்லும் காட்சியும் ஊடகங்களில் செய்தியானது. இப்படி எரிபொருள், சமையல் எரிவாயு ஆகியவற்றின் தட்டுப்பாட்டால் நாடு, ஒவ்வொரு நாளும் புதுப்புதுப் பிரச்சினைகளை காட்சிப்படுத்தி வருகின்றது. அவை, இன்னும் இன்னும் நாட்டை மோசமாக முடக்கும் கட்டத்தை நோக்கி நகர்த்தி வருவதற்கான சான்றுகளாக இருக்கின்றன. எரிபொருள், சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால், நாட்டின் தொழிற்றுறை, நிர்வாகத்துறையின் முடக்கம் என்பது, தவிர்க்க முடியாததாகிவிட்டது. பாடசாலைகளுக்கு வலிந்து விடுமுறை விடும் நிலை ஏற்பட்டு விட்டது. வீட்டில் சமைப்பதற்கு எரிவாயு பிரச்சினை என்று, வெளியில் உணவகங்களை நாடினால், உணவகங்களில் பெரும்பாலனவை அதே எரிவாயு தட்டுப்பாட்டால் மூடப்பட்டு கிடக்கின்றன. நகரம், கிராமம் என்ற வித்தியாசம் இன்றி, முழு நாடுமே நாட்கணக்கில் எரிபொருளுக்காகவும் சமையல் எரிவாயுவுக்காகவும் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றது. இலங்கையில் நீதிக்காகத்தான், நீண்ட காத்திருப்பு தொடர்ந்து வந்திருக்கின்றது. இப்போது, அத்தியாவசிய தேவைகளுக்காகவும் நீண்ட காத்திருப்பு என்பது வழக்கமாகிவிட்டது. ஆனால், இலங்கையில் அநீதியும் முறைகேடுகளும், எப்போதுமே தன்னுடைய கோரத்தண்டவத்தை நிகழ்த்திக் கொள்வதை நிறுத்தியதில்லை. இப்போதும் நிலைமை அப்படித்தான் இருக்கின்றது. மக்கள் சந்தித்து நிற்கும் நெருக்கடியை, தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, தங்களது கஜானாக்களை நிரப்பும் முயற்சியில், பதுக்கல் வியாபாரிகளும் முதலாளிகளும் அரச ஆதரவு தரகர்களும் ஈடுபடுகிறார்கள். அரசாங்கமோ, மீண்டும் மீண்டும் தன்னுடைய கையாலாகாத்தனத்தைத் காட்டி நிற்கின்றது. பிரித்தானிய கொலனித்துவத்தில் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற போது, நாட்டின் பொருளாதாரம் ஆசிய அளவில் முதன்மையான நாடுகள் பட்டியலில் இருந்தது. ஆனால், பௌத்த சிங்கள பேரினவாத சிந்தனை கொண்ட ஆட்சியாளர்கள், ஆட்சிக்கு வந்த 75 ஆண்டுகளில், நாட்டின் பொருளாதாரத்தை ஒவ்வொரு நாளும் படுமோசமாகப் பலிகொடுத்து வந்திருக்கிறார்கள். தங்களின் ஆட்சி அதிகார போதைக்காக, இனவாதத்தையும் மதவாதத்தையும் வளர்ப்பதிலேயே சிங்கள ஆட்சியாளர்கள் அனைவரும் குறியாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் ஆட்சி அதிகாரத்தை அடைவதற்காக, எவ்வாறான முறைகேடானா வேலைகளையும் செய்வதற்குத் தயாராக இருந்தார்கள். சிறுபான்மைச் சமூகங்களை அடக்கி ஒடுக்கி, அதன் மூலம் சிங்கள பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியும் என்கிற நிலைப்பாட்டை ஒரு தொழில்முறையாகவே சிங்கள ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் கைக்கொண்டார்கள். இதன் விளைவு, மீள முடியாத பொருளாதார சிக்கலுக்குள், நாடு இன்றைக்கு வந்திருக்கின்றது. இந்த நெருக்கடி நிலையில் இருந்து மீள்வது என்பது, சில ஆண்டுகளுக்குள் நிகழ்த்தும் அளவுக்கு எல்லாம் இல்லை. மாறாக, சரியான திட்டமிடலோடு நாட்டைக் குறித்து சிந்தித்து செயலாற்றினால், இன்னும் இரண்டு மூன்று தசாப்தங்களில் மீளலாம் என்பதுதான் உண்மையான நிலை. ஆனால், நாடு இவ்வளவு நெருக்கடிக்குள் இருந்தாலும், பௌத்த சிங்கள பேரினவாத சிந்தனையை வளர்த்தெடுக்கும் வேலைகளை, தென் இலங்கையின் ‘சதி பீடங்கள்’ நிறுத்துவதாக இல்லை. குருந்தூர் மலையில் நீதிமன்ற உத்தரவுகளை மீறி, புத்தர் சிலையை வைக்கும் வேலைகளில் ஈடுபடுகின்றது. அதுபோல, வடக்கு - கிழக்கின் பெரும்பாலான பகுதிகளில், தமிழ் அடையாளங்களைச் சிதைத்து, பௌத்த சிங்கள அடையாளங்களை வலிந்து திணிக்கும் வேலைகளை மும்முரமாக்கிக் கொண்டு இருக்கின்றது. நாட்டின் நிதிக் கையிருப்பு என்பது, பூச்சியத்தைத் தாண்டி மறைப்பெறுமானத்தில் சென்று கொண்டிருக்கின்றது. அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கே மாதாந்தம் ட்ரில்லியன் கணக்கில் ரூபாயை அச்சடிக்கும் நிலை வந்திருக்கின்றது. டொலர் கையிருப்பு என்பது, வங்கிகளில் இல்லையென்ற நிலை வந்துவிட்டது. இறக்குமதியை வலிந்து கட்டுப்படுத்தி, டொலர் வெளியேற்றத்தைத் தடுத்து, ரூபாயின் பெறுமதியைப் போலியாகப் பேணும் வேலைகளில் திறைசேரி ஈடுபடுகின்றது. இந்தக் கட்டுப்பாடு நீங்கினால், டொலரின் பெறுமதி 450 ரூபாயைத் தொடும் நிலை இன்று இருக்கின்றது. இதுதான் நாட்டின் நிதிக் கையிருப்புப் பற்றிய உண்மை. ஆனால், இவ்வாறான நெருக்கடி நிலை இருந்தாலும், வடக்கு - கிழக்கை நோக்கி மில்லியன்களில் பணத்தைச் செலவு செய்து, பௌத்த சிங்கள பேரினவாத ஆதிக்கத்தை செய்யும் வேலைகளை அரசாங்கமோ, அதன் துணை நிறுவனங்களோ நிறுத்தவில்லை என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விடயம். ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றவுடன், வெளிநாடுகள் எல்லாமும் ஓடிவந்து உதவும் என்றும் நாட்டின் பொருளாதார பின்னடைவு ஓரளவுக்கு சரி செய்யப்பட்டு விடும் என்றும் தென் இலங்கையின் தரப்புகள் சில நம்பின. ரணிலை நாட்டின் மீட்பராகவே கொண்டாடின. ஆனால், ராஜபக்‌ஷர்களின் ஆட்சி அதிகாரம் தொடரும் வரையில், இலங்கைக்கு உதவுவது என்பது நிகழ வாய்ப்பில்லாத ஒன்றாக, மீண்டும் பதிவாகியிருக்கின்றது. மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட ராஜபக்‌ஷர்கள் ஆட்சி அதிகாரப் பொறுப்புகளில் இருந்து விலகினாலும், கோட்டாபய ராஜபக்‌ஷ இன்னமும் ஜனாதிபதியாக இருக்கிறார். அவர், ரணிலை அழைத்து பிரதமர் பொறுப்பை வழங்கினாலும், அரச நிர்வாகம் என்பது தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் இயங்க வேண்டும் என்கிற குறிக்கோளோடு ஜனாதிபதி இயங்கி வருகிறார். ராஜபக்‌ஷர்களின் ஆட்சிக் காலத்தில் ஊழல் மோசடிகள், போதைப் பொருள் வர்த்தகம் என்று கொடி கட்டிப் பறந்தவர்கள் என்று குற்றம் சாட்டப்படுபவர்களை எல்லாம் அழைத்து வந்து, அரச நிர்வாகக் கட்டமைப்பில் தாக்கம் செலுத்தும் பதவிகளை, கோட்டா வழங்கி வருகிறார். இது, ‘மஹிந்த’ என்ற முகத்துக்குப் பதிலாக, ‘ரணில்’ என்ற முகத்தை மாற்றிவிட்டு, கோட்டா தன்னுடைய வழக்கமான வேலையைச் செய்து வரும் காட்சிகளாகும். இதனால், மேற்கு நாடுகளும் அந்த நாடுகளின் ஆளுகைக்குள் இருக்கும் உதவி வழங்கும் நிறுவனங்களும் இலங்கைக்கு உதவுவதிலிருந்து ஒதுங்கிக் கொண்டுவிட்டன. நெருக்கடி நிலையில் இருக்கும் நாட்டை மீட்ட தலைவர் என்ற பெயருடன், கடந்த காலத்தில் தன்னால் அடைய முடியாத ஜனாதிபதி பதவியை பிடிப்பதற்கான சந்தர்ப்பம், தற்போது ஏற்பட்டிருப்பதாக நம்பிக் கொண்டு, பிரதமர் பதவியை ரணில் ஏற்றார். ஆனால், அவர் எதிர்பார்த்த மாதிரியான காட்சிகள் நகரவில்லை. மாறாக, நாட்டின் அவலத்தை மக்களிடம் திரும்பத் திரும்ப எடுத்துக்கூறும், அவல அறிவிப்பாளராக மாத்திரமே ரணிலால் செயற்பட முடிந்திருக்கின்றது. அவர் பிரதமராக பதவியேற்ற நாளில் இருந்து, இன்று வரையில் நாட்டின் பொருளாதார நெருக்கடியை மீட்பதற்கான மாற்றுத் திட்டங்கள், அதன் அடைவுகள் குறித்து சொல்லிக் கொள்ளும் படியாக எதுவுமே நிகழவில்லை. மாறாக, உணவுப் பஞ்சம் பற்றிய அச்சுறுத்தல்களை விடுப்பதையே அவர் ஒரு சாதனை போல செய்து வந்திருக்கிறார். கொரோனா காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மாதிரியான நிலையொன்றை நாட்டில் அமல்படுத்துவது குறித்து, அரசாங்கம் சிந்திக்கத் தொடங்கி இருக்கின்றது. அதன் ஒரு கட்டமாகவே, அரச ஊழியர்களை வீட்டில் இருந்தே பணி செய்யுமாறு கோரியுள்ளமையும், ஆசிரியர்களை பக்கத்து பாடசாலைகளுக்கு சென்று கடமை செய்யுமாறு கேட்டுக் கொண்டமையும் ஆகும். இந்த நிலை, எரிபொருள் தட்டுப்பாட்டால் ஏற்பட்ட நிகழ்வுகளில் முக்கியமானது. போக்குவரத்து வசதிகள் முடங்கும் எந்த நாடும், பொருளாதார முன்னெடுப்புகளில் முன்னேறிச் செல்ல முடியாது. ஏனெனில், அனைத்துத் தொழிற்றுறையும் எரிபொருள் தேவையில் தங்கியிருப்பவை. அது சரி செய்யப்படாதவிடத்து, முடக்கம் என்பது மீள முடியாத பின்னடைவாக மாறும். அந்த நிலையை நோக்கி நகர்வதற்கு முதல், சற்றேனும் விளித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், இனவாத மதவாத அரசியல் மோகத்தால் சீரழிந்த நாட்டின் வரலாறு என்ற ஒன்று மாத்திரமே, இலங்கையின் அடையாளமாக இருக்கும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நீண்ட-காத்திருப்பு-சீரழியும்-நாட்டின்-கதை/91-299072
  21. காலி முகத்திடல் போராட்டத்தின் காலாவதி புருஜோத்தமன் தங்கமயில் ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு விரட்டும் போராட்டத்தின் எழுச்சி மெல்ல அடங்கத் தொடங்கிவிட்டது. காலி முகத்திடல் போராட்டக்களமும் சோபையிழந்துவிட்டது. ராஜபக்‌ஷர்களை முழுமையாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று ஆரம்பித்த போராட்டம், மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமர் பதவியிலிருந்து விலக வைக்கும் அளவுக்கான இலக்கை எட்டியது. ஆனால், முதன்மைக் கோரிக்கையான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பதவி விலக வேண்டும் என்கிற விடயம் இலக்கை அடைய முதலே போராட்டம் முடிவுக்கு வரும் நிலையில் இருக்கின்றது. ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான தென் இலங்கையின் எழுச்சி பொருளாதார நெருக்கடிகள், ஊழல் மோசடிகளுக்கு எதிராக நிகழ்ந்த ஒன்று. அங்கு ஆட்சி அதிகார மாற்றம் என்பது குறிக்கோளாக இருந்தது. அதன்மூலம், மோசமடைந்திருக்கின்ற நாட்டின் பொருளாதாரம் சீர் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகும் என்ற நம்பிக்கை சார்ந்தது. ஆனால், கோட்டா தவிர்ந்த ஏனைய ராஜபக்‌ஷர்களை ஆட்சியில் இருந்து அகற்றினாலும், ஆட்சியை தீர்மானிக்கும் அதிகாரக் கட்டமைப்பில் இருந்து அவர்களை இன்னமும் நீக்க முடியவில்லை. ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராக பதவியேற்ற போதிலும், அவரினால் அமைச்சரவைக்குள் தீர்மானங்களை எடுப்பது என்பது குதிரைக் கொம்பாக இருக்கின்றது. மாறாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இழுப்புக்கு இசைந்து கொடுக்கும் நிலைகளுக்குள்ளேயே அவர் இருக்கின்றார். அடிப்படையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்பது ராஜபக்‌ஷர்களின் பெயரினால் கட்டியெழுப்பப்பட்ட கட்சி. அதன் அதிகாரங்கள் எல்லாமும் இன்னமும் பசில் ராஜபக்‌ஷவிடம்தான் இருக்கின்றது. அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தையும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவே கொண்டிருக்கின்றது. பாராளுமன்றத்தில் இன்னமும் பெரும்பான்மையோடு இருக்கின்ற தரப்பு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவே. அதுதான், ரணில் அரசாங்கத்தின் ஆதாரம். அப்படியான நிலையில், ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து பாராளுமன்றத்திடம் பாரப்படுத்தும்- பகிரும் 21ஆவது திருத்தத்தை நிறைவேற்ற விடாமல் தடுக்கும் வேலைத்திட்டங்களில் ராஜபக்‌ஷர்கள் ஈடுபடுகிறார்கள். அது முடியாமல் போனாலும், 21ஆவது திருத்தத்தின் சரத்துகளில் குளறுபடிகளைச் செய்து, அதனை வலுவிழக்கச் செய்யும் வேலைகளில் அவர்கள் கவனமாக இருக்கிறார்கள். அதன் மூலம்தான், ஆட்சி அதிகாரம் குறித்த தங்களது கனவை மீண்டும் அடையாலாம் என்பது ராஜபக்‌ஷர்களின் நம்பிக்கை. அப்படியான நிலையில், ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு விரட்டும் போராட்டம் சோபையிழப்பது என்பது ஆபத்தானது. ரணில் பிரதமர் பதவியை ஏற்றது முதல், இரண்டு தடவைகள் நாட்டு மக்களுக்கு உரையாற்றிவிட்டார். அதுபோல, பாராளுமன்றத்திலும் நாட்டின் நிலைமைகளை விளக்கி நீண்ட உரைகளை நிகழ்த்தியிருக்கின்றார். இந்த உரைகளில் எல்லாமும் அவர் திரும்பத் திரும்ப குறிப்பிட்ட விடயங்கள், எதிர்வரும் மாதங்களில் உணவுப் பஞ்சம் ஏற்படப் போகிறது. நாட்டின் எரிபொருள் நெருக்கடி என்பது இப்போதைக்கு முடிவுக்கு வராது என்பதாகும். அத்தோடு, இந்த நெருக்கடிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் தீர்க்க தரிசனமில்லாத பொருளாதார திட்டங்களே காரணங்கள் என்றும் அவர் கூறுகிறார். ரணில் உணவுப் பஞ்சம், எரிபொருள் நெருக்கடி பற்றி திரும்பத் திரும்ப கூறி மக்களை அச்சமூட்ட நினைக்கிறார். அதுபோல, ஒரே நாளில் அல்லது குறுகிய காலத்துக்குள் நாட்டின் பொருளாதார நெருக்கடியைக் கடக்க முடியாது என்றும் கூறி மக்களை அதற்காக தயார்ப்படுத்தத் தொடங்கிவிட்டார். இதனால், மக்கள் அதனை உள்வாங்கத் தொடங்கிவிட்டார்கள். ராஜபக்‌ஷர்கள் ஏற்படுத்திவிட்டுப்போன பொருளாதார நெருக்கடியை யாராலும் குறுதிய காலத்துக்குள் கடந்துவிட முடியாது. எனவே, ரணிலின் உரைகளை நோக்கி இசைவதுதான் வழி என்று மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். ராஜபக்‌ஷர்கள் ஏற்படுத்திவிட்ட பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிராக போராட்டக்களம் வந்த மக்கள், தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி குறுதிய காலத்துக்குள் தீர்க்கப்பட முடியாதது என்று உணரத் தொடங்கியதும், தங்களது பொருளாதார -வாழ்வாதார கட்டங்களைக் காப்பாற்றுவது சார்ந்து சிந்திக்கத் தலைப்படுவது இயல்பு. அதனால், நீண்டு செல்லும் போராட்டக்களத்தில் அவர்களினால் பங்களிக்க முடியாமல் போகும். அதுவும்கூட தென் இலங்கை எழுச்சியை கலகலக்க போதுமானது. எதிர்க்கட்சித் தலைவர் செவ்வாய்க்கிழமை (07) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது, தற்போது கோட்டாவை வீட்டுக்கு விரட்டும் போராட்டம் பற்றி யாரும் பேசுவதில்லை. அது, கலைந்து போகத் தொடங்கிவிட்டது என்று கூறினார். அத்தோடு, படித்த சமூகம் நாட்டைவிட்டு வெளியேறவும் தொடங்கிவிட்டதாக குறிப்பிட்டார். சாதாரண மக்கள் தங்களின் வாழ்வாதாரம் குறித்து அல்லாடுவதும், அறிவார்ந்த சமூகம் நாட்டைவிட்டு வெளியேறுவதுமேகூட போராட்டக்களத்தினை கலைக்க போதுமானது. அந்த வகையில், ரணில் பதவியேற்றது முதல், பொருளாதார நெருக்கடி, குறிப்பாக உணவுப் பஞ்சம் குறித்த அச்சுறுத்தலை விடுத்து மக்களை போராட்டக்களத்திலிருந்து அகன்றுபோக வைத்திருக்கிறார். ராஜபக்‌ஷக்களுக்கு எதிரான தென் இலங்கையின் எழுச்சி போராட்ட வடிவம் பெற்று ஐம்பது நாள்களைத் தாண்டி நீடித்தமை என்பது எதிர்பார்க்கப்படாத ஒன்று. ஏனெனில், ஆரம்பத்தில் அந்தப் போராட்டம் அதற்கான எந்த தன்மையையும் கொண்டிருக்கவில்லை. ஆனால், காலி முகத்திடல் போராட்டக்களம் திறந்ததும் போராட்டம், ஐம்பது நாள்கள் வரை நீண்டது. அதற்கான ஓர் ஓர்மத்தை மக்களிடம் கொடுத்தது. அதுதான், தென் இலங்கையில் மூத்த ஊடகவியலாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள் எல்லாமும் இலங்கையில் இதுபோன்று ஐம்பது நாள்கள் நீண்ட ஜனநாயக போராட்டம் இல்லை என்று அறிவிக்கவும் காரணமானது. அவர்களின் கண்களில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் தாய்மாரின் 1,600 நாள்களைத் தாண்டி நீளும் போராட்டங்கள் படவில்லை. பொருளாதார நெருக்கடிகளால் எழுந்த போராட்டமொன்று அதன் தன்மைகளில்தான் பயணிக்கும். அந்தப் போராட்ட வடிவத்திடம் அரசியல் உரிமைகள் சார்ந்த அறிவோ, எதிர்பார்ப்போ இருப்பதற்கு வாய்ப்பில்லை. அதுதான் காலி முகத்திடல் போராட்டக் களத்திலும் பிரதி பலித்தது. ஆட்சி மாற்றம் மட்டுமே அந்தப் போராட்டத்தின் குறிக்கோள். அது அப்படித்தான் தன்னைக் காட்சிப்படுத்தியது. அங்கு இனமுரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான சிந்தனைகளோ எதிர்பார்ப்புகளோ எழவில்லை. அப்படியான நிலையில், காலி முகத்திடல் போராட்டக்களத்திடம் அதனை எதிர்பார்ப்பது காற்றில் பொரி விற்கும் நிலைக்கு ஒப்பானது. ஆனால், தென் இலங்கையின் ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான எழுச்சியை ஒரு சந்தர்ப்பமாக கையாளுவது சார்ந்து தமிழ்த் தலைமைகள் செயற்பட்டிருக்கலாம். அது, பெரியளவில் நிகழவில்லை. குறிப்பாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனைத் தவிர அந்தப் போராட்டக்களத்தை பயன்படுத்துவது குறித்து யாருமே சிந்திக்கவில்லை. அதிலும், அந்தப் போராட்டத்திற்கும் வடக்கு - கிழக்கு மக்களுக்குமே சம்பந்தமில்லை என்பது மாதிரியான தோற்றப்பாட்டைப் பேணவே சில தமிழ்த் தலைவர்கள் முயன்றார்கள். பொருளாதார நெருக்கடிக்கு எதிராக எழுந்த போராட்டக்களம், அதன் இயல்புக்கு ஏற்ற மாதிரியே அடங்கவும் தொடங்கிவிட்டது. அந்தப் போராட்டம் ஒரு கட்டத்தில் மிக அவசியமாக இருந்தது. குறிப்பிடத்தக்க இலக்கையும் எட்டியது. அத்தோடு, அது கலைந்து போனது என்று எதிர்காலத்தில் பதிவு பெறும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/காலி-முகத்திடல்-போராட்டத்தின்-காலாவதி/91-298514
  22. நாட்டின் பொருளாதார நெருக்கடி சமூக சீரழிவுக்கு வித்திடும் புருஜோத்தமன் தங்கமயில் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராகக் கொண்ட புதிய அமைச்சரவை, பகுதி பகுதியாக இன்னமும் பதவியேற்று வருகின்றது. புதிய அரசாங்கத்தை, ‘சர்வகட்சி அரசாங்கம்’ என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முன்மொழிகிறார்கள். ஆனால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி போன்ற கட்சிகளின் நிலைப்பாடுகளுக்கு எதிராக, அக்கட்சிகளின் உறுப்பினர்களைப் பிரித்தெடுத்து அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து வைப்பதன் மூலம், அது எப்படி சர்வகட்சி அரசாங்கம் ஆக இருக்க முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் கேள்வி எழுப்புகின்றன. கோட்டா பதவி விலகினால் மாத்திரமே, சர்வகட்சி அரசாங்கமொன்றில் அங்கம் வகிக்க முடியும் என்பது, அந்தக் கட்சிகளின் நிலைப்பாடாக இருக்கிறது. புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதும், மேற்கு நாடுகளும் அமைப்புகளும் அதற்காகவே காத்திருந்தவை மாதிரி, வரவேற்று கருத்துகளை வெளியிட்டிருந்தன. குறிப்பாக, இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சீர்செய்வதற்கு, புதிய பிரதமருக்கு ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகக் கூறின. ஆனால், புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர், இடம்பெற்ற முதலாவது பாராளுமன்ற அமர்வில், பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் நடத்து கொண்ட விதம் குறித்து, மேற்கு நாடுகள் ஏமாற்றம் அடைந்திருக்கின்றன. மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமர் பதவியிலிருந்து விலகினாலும், ஆட்சி அதிகாரம் என்பது பொதுஜன பெரமுனவின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கின்றது. அது, தன்னுடைய ஆட்சி அதிகாரம் குறித்த அரசியல் நிலைப்பாட்டிலேயே செயற்படுகின்றது. அப்படியான நிலையில், ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தாலும், அவரது முடிவெடுக்கும் அதிகார வரம்பு எப்படிப்பட்டது? அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றனவா என்றெல்லாம் ஆராயும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. இதனால், இலங்கையின் பொருளாதார மீட்சிக்காக ஒத்துழைப்பதாகக் கூறிய தரப்புகள், எல்லாமும் ஒதுங்கிக் கொள்ளத் தொடங்கிவிட்டன. இது நிலைமையை இன்னும் சிக்கலாக்கவே செய்யும். “பொருளாதாரக் கொள்கைகள் சரியாக வரையறுக்கப்படாத பட்சத்தில், இலங்கையுடன் இணைந்து பயணிக்க முடியாது. அதாவது, உதவிகளை வழங்க முடியாது” என்று சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட தரப்புகள் கூறிவிட்டன. இது, இலங்கையைப் பொறுத்தளவில் பாரிய பின்னடைவாகும். ஏற்கெனவே, நாட்டின் பணவீக்கம் பாரிய அளவில் அதிகரித்துவிட்டது. நாட்டில் உணவுப் பற்றாக்குறை பாரிய பாதிப்புகளை செய்யப் போகின்றது என்று பிரதமர், அமைச்சர்கள் என்று பொறுப்பிலுள்ள அனைத்து தரப்பினரும் கூறத் தொடங்கிவிட்டார்கள். எரிபொருள் தட்டுப்பாடு என்பது, உயிர்களைப் பலிவாங்கும் அளவுக்கு சென்று கொண்டிருக்கின்றது. எரிபொருள் நிரப்பு நிலையங்களை நோக்கி, இரண்டு முதல் மூன்று கிலோ மீற்றர் தூரத்துக்கு வாகனங்கள் வரிசையில் நிற்கின்றன. ஆனாலும், எரிபொருள் கிடைக்கும் என்கிற நிச்சயத்தன்மை எல்லாம் இல்லை. 48 மணித்தியாலம் கூட வரிசையில் நின்று, எரிபொருளைப் பெற முடியாத விரக்தியில் மக்கள் இருக்கிறார்கள். இவ்வாறான நெருக்கடிகளால், அனைத்துத் தொழிற்றுறைகளும் முடங்கிவிட்டன. அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த, ஏனைய அரச உத்தியோகஸ்தர்கள் அலுவலகங்களுக்கு வர வேண்டாம் என்று அரசாங்கமே அறிவித்துவிட்டது. அரசாங்கத்தை பொறுப்பெடுத்து, நாட்டைச் சீராக்குவதுதான் தன்னுடைய முதல் பணி என்று கூறிக்கொண்டு பதவிக்கு வந்த ரணிலுக்கு, ராஜபக்‌ஷர்களோடும் அவர்களின் ஆதரவுத் தரப்புகளோடும் வேலை செய்வது, எவ்வளவு சிக்கலானது என்று புரியத் தொடங்கிவிட்டது. நாட்டு மக்கள் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டிருக்கின்ற நிலையில், அது குறித்து எந்தவித விவாதத்தையும் நடத்தாமல், பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள், தங்களது எரிந்த வீடுகள் பற்றி மணிக்கணக்கில் பேசிக் கொண்டார்கள். அதுபோல, வீடுகளை இழந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, அரச செலவில் புதிய அடக்குமாடி குடியிருப்புகளை நிர்மாணிப்பது தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பேசியிருக்கின்றார். நாட்டில் சமையல் எரிவாயு, எரிபொருள், மருந்துப்பொருட்கள் தொடங்கி அத்தியாவசியமான அனைத்துக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது. நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது, புதிய பிரதமர் கூட அது பற்றி பிரஸ்தாபிக்கின்றார். ஆனால், அது தொடர்பில் எந்தவித அக்கறையாவது பாராளுமன்றத்துக்குள் ஆளும் தரப்பில் உள்ள உறுப்பினர்களுக்கு இல்லை. மாறாக, மக்களின் போராட்டங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, கடந்த காலத்தில் ராஜபக்‌ஷ யுகத்தில் தாங்கள் செயற்பட்டது மாதிரியே, மீண்டும் செயற்படுவோம் என்கிற நிலையில் இருக்கின்றார்கள். மக்கள் வீதிகளில் அத்தியாவசிய பொருட்களுக்காக அலைவது குறித்தோ, அவர்களின் பட்டிணி குறித்தோ எந்தவித சிந்தனையையும் பாராளுமன்றத்துக்குள் ஆளும் தரப்பில் உள்ள உறுப்பினர்கள் வெளிப்படுத்துகிறார்கள் இல்லை. இதனால், ரணிலின் புதிய அரசாங்கமும்கூட, ராஜபக்‌ஷர்களின் பாரம்பரிய ஆட்சி அதிகார கட்டமைப்பின் நீட்சியாகவே இருக்கின்றது. அபிவிருத்தி அடைந்துவரும் நாடாகவே, இலங்கை இவ்வளவு காலமும் இருந்து வந்திருக்கின்றது. நாட்டின் பெரும்பான்மையான மக்கள் மத்தியதர வர்க்கத்தினர். ஆனால், இன்றைய பொருளாதார நெருக்கடி என்பது, நாட்டில் மத்தியதர வர்க்கம் என்கிற பிரிவையே இல்லாமல் செய்திருக்கின்றது. மத்திய தர வர்க்கம் இல்லாமல் போய், வறுமைக் கோட்டுக்கு உட்பட்டோர் என்கிற பெரும் பிரிவு உருவாகியிருக்கின்றது. இந்த நிலைமை, வேலை வாய்ப்பின்மை, பசி பட்டினியின் அளவை நாளுக்கு நாள் அதிகரிக்கவே செய்யும். இன்றைக்கு அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்காக, தங்களிடம் இருக்கின்ற சேமிப்புகளையும் தங்க நகைகளையும் இழந்துவிட்ட பின்னரான நிலை என்பது, படுபயங்கரமாக இருக்கும். ஏனெனில், ஒரு கட்டம் வரையில்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை எவ்வளவுக்கு அதிகாரித்தாலும் அதனை எதிர்கொள்ளத் தயாராக மக்கள் இருப்பார்கள். அது எல்லைக்கோட்டைத் தாண்டும் போது, மக்கள் தங்களது நிதானத்தை இழங்கும் நிலை உருவாகும். வயிறு பசிக்கும் போது, வாழ்வியல் அறம், மனித மாண்பு பற்றியெல்லாம் யாரும் சிந்தித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அதனால், பொருளாதார நெருக்கடி என்பது, சமூக சீரழிவுக்கான கட்டங்களைத் திறந்துவிடும். எப்போதுமே சமூக ஒழுக்கம், இனம், மதம் அடையாளம், பாரம்பரிய சிந்தனைகள் என்பவற்றை பெரும்பாலும் தாங்கி நிற்பது மத்தியதர வர்க்கமே ஆகும். அதனை அடிப்படையாகக் கொண்டுதான், நாட்டின் அரசியலை முன்னெடுக்கின்ற தரப்புகள் இயங்கி வந்திருக்கின்றன. ஆனால், மத்தியதர வர்க்கம் காணாமல் ஆக்கப்படும் போது, அது தாங்கிப் பிடித்திருந்த குண இயல்புகளும் காணாமல் போகும். சர்வதேச ரீதியில் பொருளாதார நெருக்கடியால் சமூக சீரழிவுக்குள் சென்றுசேர்ந்த பல நாடுகளை நாம் காணலாம். அவ்வாறான நிலையொன்றை அடைவதற்கான அனைத்து கட்டங்களையும் நாடு பிரதிபலிக்கத் தொடங்கிவிட்டது. அவ்வாறான நிலையில், அவசர அவசரமாக நாட்டின் பொருளாதார சிந்தனைகளை சீர் செய்து, நெருக்கடியில் இருந்து மீள்வது குறித்து சிந்திக்க வேண்டும். அதற்கு கட்சி அரசியல், அதிகார போதை கடந்த ஆற்றலுள்ள சுயநலமில்லாதவர்கள் அரசாங்கத்தை செலுத்த வேண்டும். மக்களின் போராட்ட கோரிக்கைகளுக்கு எதிராக, ஜனநாயக விழுமியங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, ராஜபக்‌ஷர்களோடு இணைந்து ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள ரணில், இனியாவது மக்களின் குரல்களுக்கு செவி சாய்க்க வேண்டும். இல்லையென்றால் ஆபிரிக்க நாடுகள், சில கிழக்கு ஆசிய நாடுகள், தென் அமெரிக்க நாடுகள் போல, மீளமுடியாத பொருளாதார சமூக சீரழிவுக்குள் சிக்கிக் கொள்ள வேண்டி வரும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நாட்டின்-பொருளாதார-நெருக்கடி-சமூக-சீரழிவுக்கு-வித்திடும்/91-297430
  23. ரணிலின் மீள்வருகையும் சதியும் புருஜோத்தமன் தங்கமயில் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராகி இருக்கிறார். கடந்த பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசிய கட்சி முழுமையாக தோற்கடிக்கப்பட்டது. அந்தக் கட்சி பெற்ற உதிரி வாக்குகளால் கிடைத்த ஒரேயொரு தேசிய பட்டியல் மூலமாக, 2021ஆம் ஆண்டு, ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்துக்கு வந்தார். ஐந்து முறை பிரதமர், நீண்ட காலமாக எதிர்க்கட்சித் தலைவர் போன்ற பதவிகளை வகித்த ரணில், தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு மீண்டும் வந்த போது, அதைப் பலரும் பரிதாபத்தோடு பார்த்தார்கள். ஆனால், ஒற்றைப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு, மூன்றில் இரண்டு அறுதிப் பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியைப் பெற்ற ராஜபக்‌ஷர்களின் பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் பிரதமராக, இன்று அவர் விளங்குகின்றார். தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு, அதுவும் தனி ஒருவராக இருந்து கொண்டு, இலங்கை அரசியலில் என்ன செய்துவிட முடியும் என்று, கடந்த ஆண்டு ரணிலிடம் கேட்கப்பட்ட போது, அவர் தனக்கு அதிர்ஷ்டம் இருப்பதாகக் கூறியிருந்தார். அப்போது, அது குறித்து யாரும் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால், இன்றைக்கு அவர் நம்பிய அதிர்ஷ்டம் பற்றிப் பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். யார் விரும்பினாலும் இல்லையென்றாலும், இன்னும் சில மாதங்களுக்கு ரணில் விக்கிரமசிங்க தான் நாட்டின் பிரதமர். ஆனால், பிரதமர் பதவியை ரணில் ஏற்றமை என்பது, ‘ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு விரட்டும்’ போராட்டத்தின் இலக்கை, மழுங்கடிக்கச் செய்யும் செயற்பாடாகும். ஜனநாயகத்தின் அடிப்படை மக்களாவர். அவர்களின் உணர்வுகளையும் உரித்துகளையும் புறந்தள்ளிக் கொண்டு செய்யப்படும் அரசியல், அறம் சார்ந்தது அல்ல. ரணில் விக்கிரமசிங்க இம்முறை பிரதமர் பதவியை ஏற்றமை, அறத்துக்கு அப்பாலான செயற்பாடு. குறிப்பாக, ராஜபக்‌ஷர்களைக் காக்கும் செயற்பாடு. ராஜபக்‌ஷர்களை முழுமையாக ஆட்சி அதிகார கட்டமைப்பில் இருந்து நீக்குவதன் மூலம், தென் இலங்கை மக்கள், ஆட்சிக் கட்டமைப்புக்குள் ஊழலற்ற, நேர்மையான இயக்கத்தைப் பேண விரும்பினார்கள். ஆனால், அந்த வாசல் திறப்பதற்கு முன்னர், ரணில் தடுப்புக்கட்டையாக வந்திருக்கிறார். “..முழுமையாக வீழ்ந்து போயிருக்கிற நாட்டின் பொருளாதாரத்தை மீளக்கட்டி அமைப்பதற்காகவே, பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டேன். மாறாக, ஒரு தனி மனிதரையோ, ஒரு குடும்பத்தையோ காப்பாற்றுவதற்காக அல்ல....” என்று திங்கட்கிழமை (16) நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போது, ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். ஆனால், முதல் நாள் ஆற்றிய உரைக்கு மாறாக, அடுத்த நாள் பாராளுமன்றத்தில் அவர் ராஜபக்‌ஷர்களின் ஏவலாளி மாதிரி, அவர்களைக் காக்க வந்தவர் மாதிரி செயற்பட்டார்.ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு விரட்டும் போராட்டத்தின் இலக்குகளில் ஒன்று, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதாகும். அதன் போக்கில், முதலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிரான குற்றப்பிரேரணையொன்றை பாராளுமன்றத்துக்கு கொண்டு வருவதன் மூலம், அவரைப் பதவி நீக்குவதற்கான ஏதுகைகளை ஏற்படுத்துவதாகும். அதற்காக எதிர்க்கட்சிகளின் பிரேரணையை எம்.ஏ. சுமந்திரன் தயாரித்து, போராட்டக்காரர்களின் ஒப்புதலோடு பாராளுமன்றத்தில் முன்வைத்தார். எதிர்க்கட்சியில் இருக்கும் போது, அந்தப் பிரேரணைக்கு தன்னுடைய ஆலோசனைகளை வழங்கிய ரணில், அந்தப் பிரேரணை பாராளுமன்றத்தில் எடுக்கப்படுவது தொடர்பில் இடம்பெற்ற பாராளுமன்ற வாக்கெடுப்பில், எதிராக வாக்களித்திருக்கிறார். அன்றைக்கு அவர் எதிர்க்கட்சி உறுப்பினர். இன்று அவர் ராஜபக்‌ஷர்களின் அரசாங்கத்தின் பிரதமர். அப்படிப்பட்ட நிலையில், அவர் எப்படி கோட்டாவை நீக்குவதற்கான பிரேரணைக்கு ஆதரவளிப்பார் என்கிற கேள்வி இயல்பானதுதான். ஆனால், கடந்த காலங்களில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்புக்கு எதிராகத் தொடர்ச்சியாகப் பேசி வந்திருக்கின்ற ரணில், அதற்கான வாய்ப்புக்கான சாத்தியப்பாடுகள் ஏற்பட்டிருக்கின்ற தருணத்தில், அதைத் தவிர்த்திருக்கின்றார். அதற்கு காரணம், பல தடவைகள் முயன்றும் அடைய முடியாமல் போன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியின் மீது, அவருக்கு இருக்கும் தீராத காதல்! ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக, மூன்று தசாப்த காலமாக அவர் இருந்த போதிலும், இரண்டு முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போதிலும், அவரால் அந்தப் பதவியை அடைய முடியவில்லை. அதுவும், அவரது மாமாவான ஜே.ஆர். ஜெயவர்தன கொண்டுவந்த ஆட்சி முறையில் இருந்து, அதிகார கரங்களை நீட்ட வேண்டும் என்பது அவரது விருப்பம். கடந்த பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசிய கட்சி முழுவதுமாகத் தோற்றதோடு, அதற்கான வாய்ப்பு முழுமையாக இல்லாமல் போனது. ஆனால், ராஜபக்‌ஷர்களின் முறையற்ற ஆட்சியும் அவர்கள் இரண்டரை ஆண்டுகளுக்குள் ஏற்படுத்திவிட்ட பொருளாதார சீரழிவும், ரணிலுக்கான ஜனாதிபதி கனவை மீண்டும் ஏற்படுத்தி இருக்கின்றது. இன்னொரு ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றால், அதில் ராஜபக்‌ஷர்கள் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் இல்லை. அப்படிப் போட்டியிட்டாலும் அவர்கள் வெற்றிபெறும் வாய்ப்புகள் இல்லை. அப்படியான நிலையில், தனக்குக் கிடைத்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி, அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக, வெற்றியாளராகத் தன்னை முன்னிறுத்தும் வாய்ப்பையும் கருத்தில் கொண்டே, ரணில் பிரதமர் பதவியை ஏற்றிருக்கிறார். நாடு சந்தித்துள்ள பாரிய பொருளாதார நெருக்கடியை, சிறிதாக மாற்றினாலே, நாட்டை மீளக்கட்டி அமைப்பதற்கான ஆளுமையாகத் தன்னை தென் இலங்கை மக்கள் நம்புவார்கள் என்று ரணில் நினைக்கிறார். நாடு நெருக்கடியில் இருக்கும் போது, ஆட்சிப் பொறுப்பை ஏற்கத் தயங்குபவர்கள், எப்படி ஆளுமைமிக்க தலைவர்களாக இருப்பார்கள் என்கிற கேள்வியை சஜித் பிரேமதாஸ, அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்டவர்களை நோக்கி எழ வைப்பதற்கான வாய்ப்பாகவும், தான் ஏற்றிருக்கும் பிரதமர் பதவியை ரணில் பார்க்கிறார். அப்படியான நிலையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஆதரவளிக்கும் சஜித், அநுர உள்ளிட்டவர்களை, பிரதமர் பதவியை ஏற்க விடுவதற்கு ரணில் தயாரில்லை. ராஜபக்‌ஷர்களுக்கும் எதிர்க்கட்சிகளின் கைகளில் ஆட்சி செல்வது விருப்பமில்லை. அப்படியான நிலையில்தான், ரணிலும் ராஜபக்‌ஷர்களும் தங்களுக்கான எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டு, இவ்வாறான ஆட்சி அதிகார மாற்றத்துக்கான இணக்கத்துக்கு வந்திருக்கிறார்கள். ரணில் தன்னுடைய பதவி குறித்துத்தான் கவனமாக இருப்பார். அவருக்கு அவரின் கட்சியின் எதிர்கால வளர்ச்சியோ, அடுத்த கட்டத் தலைமைகளை தயார்படுத்துவதோ இலக்கில்லை. அப்படியான நிலையில், அவரை இப்போது பிரதமர் பதவியில் இருத்துவதுதான் தங்களின் மீள்வருகைக்கான வாய்ப்புகளைத் தக்க வைக்கும் செயல் என்று ராஜபக்‌ஷர்கள் நினைக்கிறார்கள். ஏனெனில், சஜித்தோ அல்லது அநுரவோ ஆட்சிப் பொறுப்பை ஏற்றால், அவர்கள் ஆட்சியை மாத்திரமல்ல, கட்சி சார் நடவடிக்கைகளிலும் கவனமாக இயங்குவார்கள். அது, அவர்களை தோற்கடிப்பதற்கான சாத்தியங்களை கடினமாக்கும். இப்படி, ராஜபக்‌ஷர்கள் - ரணில் என்ற இரண்டு தரப்புகளும், தங்களின் எதிர்கால ஆட்சி அதிகார வாய்ப்புகளைக் கருதித்தான் இணக்கத்துக்கு வந்துள்ளார்கள். இவ்வாறு ரணில், இந்த ஆள்மாறாட்ட ஆட்சிக்கு வந்தமையால்த்தான், அவர் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ராஜபக்‌ஷர்களைக் காக்கவும் முனைகிறார். நாடு பொருளாதார ரீதியில் முழுமையாக முடங்கிவிட்டது. அதுதான், தென் இலங்கை மக்களை எழுச்சி கொள்ளவும் வைத்தது. அந்த எழுச்சி என்பது, பொருளாதார மீட்சி சார்ந்ததுதான். ஆனால், அது, ஆட்சி அதிகார, நிர்வாக கட்டமைப்புக்குள் இருக்கும் ஊழல், மோசடி, செயற்றிறன் இன்மை உள்ளிட்டவற்றுக்குத் எதிரானது. இவற்றைச் சரி செய்வதற்கான வாய்ப்பு, ஒற்றை மனிதரிடம் முழு அதிகாரத்தையும் சேர்ப்பிக்கும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்போடு ஆரம்பிக்கலாம். ஆனால், அந்த வாய்ப்பினை ரணில் இல்லாமல் ஆக்கியிருக்கிறார். அது, போராடும் மக்களுக்கு எதிரானது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ரணிலின்-மீள்வருகையும்-சதியும்/91-296771
  24. மஹிந்த போய்விட்டார்; இனி சஜித் பொறுப்பேற்க வேண்டும்! புருஜோத்தமன் தங்கமயில் ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு விரட்டும் போராட்டம் பகுதியளவில் வெற்றிபெற்றுவிட்டது. பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்‌ஷ நீண்ட இழுபறிக்குப் பின்னர் கடந்த திங்கட்கிழமை (09) விலகினார். அவர் பதவி விலகியவுடன் அரசாங்கமும் பதவி இழந்துவிட்டது. ஆனாலும், ஜனாதிபதி பதவியில் இன்னமும் கோட்டாபய ராஜபக்‌ஷவே இருக்கிறார். ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு விரட்டும் போராட்டத்தின் பிரதான கோஷமான ‘கோட்டாவை வீட்டுக்கு விரட்டுவோம்’ என்கிற விடயம் இன்னமும் முடிவின்றி தொடர்கின்றது. ராஜபக்‌ஷர்களை முற்றாக விரட்டும் வரையில், போராட்டங்களை முடித்துக் கொள்ளப் போவதில்லை என்பது தென் இலங்கை மக்கள் எழுச்சியின் செய்தி. ராஜபக்‌ஷர்கள் பொது வெளிக்கு வரமுடியாத நிலையொன்று தென் இலங்கையில் ஏற்பட்ட பின்னர்தான், மஹிந்த பதவி விலகும் முடிவுக்கு வந்தார். தான் பதவி விலகுவதற்கு முன்னர், காலி முகத்திடலில் ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு விரட்டும் போராட்டம் நடத்தியவர்களை குண்டர்களைக் கொண்டு தாக்கிவிட்டுச் செல்ல வேண்டும் என்கிற எண்ணத்தோடு அவர் செயற்பட்டார். அலரி மாளிகையில் பொதுஜன பெரமுனவின் குண்டர்களை கூட்டி உணவு வழங்கி உபசரித்து உசுப்பேத்தி அனுப்பிவிட்டு போராட்டக்காரர்கள் தாக்குதலுக்கு உள்ளாகுவதைப் பார்த்து ரசித்துவிட்டுத்தான் அவர் பதவி விலகினார். ஆனால், மஹிந்த எதிர்பார்த்ததைக் காட்டிலும் மோசமான விளைவொன்று ஏற்பட்டது. போராட்டக்காரர்களைத் தாக்கிய குண்டர்கள், பொது மக்களினால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்கள். அலரி மாளிகை போராட்டக்களமானது. அலரி மாளிகையிலிருந்து மஹிந்த வெளியேறுவதற்கு இராணுவத்தின் பாதுகாப்பை பெற வேண்டி ஏற்பட்டது. அதுமாத்திரமல்லாமல், கோட்டா தவிர்ந்த அனைத்து ராஜபக்‌ஷர்களும், அவர்களின் சக பாடிகளும் இன்று வரை பதுங்கியிருக்க வேண்டி வந்திருக்கின்றது. ராஜபக்‌ஷர்களில் பெரும்பாலோனோர் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுவது குறித்து சிந்திக்கிறார்கள். அதனைத் தடுப்பதற்காக விமான நிலையங்களை போராட்டக்காரர்கள் சுற்றி வருகிறார்கள். மற்றொரு புறம், ராஜபக்‌ஷர்களினதும் அவர்களினது சக பாடிகளினதும் வீடுகள், வளவுகள், சொத்துக்கள் தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இதனை பொது மக்கள் போர்வையில் வேறு நிகழ்ச்சி நிரலில் இயங்கும் துணைக்குழுக்கள் செய்வது மாதிரியான தோற்றமும் ஏற்படுகின்றது. ஏனெனில், ஒவ்வொரு தீ வைப்புச் சம்பவமும் நன்கு திட்டமிட்ட ரீதியில் இடம்பெறுகின்றது. அதேவேளை, ராஜபக்‌ஷர்களின் தாய், தந்தையரின் நினைவிடங்கள், சிலைகள் என்பன தகர்க்கப்பட்டிருக்கின்றன. நாட்டில் தற்போது அரசாங்கம் என்ற ஒன்று இல்லை. அரசாங்கம் இல்லையென்றால், நிர்வாக நடவடிக்கைகளுக்கான தீர்மானங்களை யார் எடுப்பது என்கிற கேள்வி எழும்? ஜனாதிபதியும், அவரது பரிவாரங்களான இராணுவமும் நாட்டை முன்னோக்கி நகர்த்தி சென்று விட முடியுமா? அந்த நிலைதான் தொடரப்போகின்றது என்றால், கோட்டா ஜனாதிபதியாக பதவியேற்றது முதல் பகுதியளவில் காணப்பட்ட இராணுவ ஆட்சி முறைமை முழுமையாக மாறும். அது, ஜனாநாயக ஆட்சி அதிகாரத்துக்கான கட்டங்களை இல்லாமற்செய்துவிடும். அப்படியான நிலையில், புதிய இடைக்கால அரசாங்கமொன்று உடனடியாக பதவியேற்க வேண்டியது தவிர்க்க முடியாதது. ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு விரட்டுவோம் என்கிற போராட்டத்தின் வழியாக பொதுஜன பெரமுன அரசாங்கம் பதவி இழந்துவிட்டது. அப்படியான நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிப்பொறுப்பை ஏற்கும் கட்டத்துக்கு வந்தாக வேண்டும். ஏனெனில், நாட்டில் அரசாங்கமொன்று இல்லாத நிலை தொடர முடியாது. அதுவும், நாடு திவாலடைந்துவிட்ட நிலையில், பொருளாதாரத்தை முன்நகர்த்துவதற்கான உரையாடல்களை சர்வதேச நாடுகளுடனும் அமைப்புக்களுடனும் நடத்துவதற்கு கூட ஸ்திரமான அரசாங்கம் அவசியமானது. தற்போதுள்ள நிலையில், தேர்தலொன்றை நடத்தி புதிய அரசாங்கத்தை அமைப்பது என்பது, நாடு எதிர்கொண்டிருக்கின்ற பொருளாதார சிக்கலை இன்னும் மோசமாக்கிவிடும். அப்படியான நிலையில், சஜித் பிரேமதாச அரசாங்கத்தை பொறுப்பேற்க முன்வர வேண்டியிருக்கின்றது. மஹிந்த பதவி விலகிய உடனேயே (முன்னாள்) நிதி அமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர் ஆகியோரை அழைத்து நாட்டின் நிதி நிலைமைகள் தொடர்பில் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக சஜித் ஆலோசனை நடத்தியிருக்கின்றார். அது அவர் அரசாங்கத்தை பொறுப்பேற்க தயாராகிவிட்டார் என்பதைக் காட்டுகின்றது. எந்தவொரு அரசாங்கம் பதவியேற்றாலும் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியை சற்று சீர்படுத்துவதற்கே குறைந்தது இரண்டு ஆண்டுகள் எடுக்கும். அப்படியான நிலையில், தற்போதுள்ள பொருட்களின் விலை உயர்வு இன்னமும் அதிகரிக்கவே செய்யும். அது மக்களின் மேலான சுமையாக மேலும் மாறும். அது இடைக்கால அரசாங்கத்தை ஏற்கும் எந்தத் தரப்புக்கு எதிரான மனநிலையாகவும் மாறும் வாய்ப்புண்டு. ஆனாலும், நாட்டை மீட்டெடுப்பதற்கு எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருக்க வேண்டிய பொறுப்பு உண்டு. அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு, இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கள் உள்ளிட்டவற்றின் மத்தியஸ்தத்துடன் சஜித் தயாராவிட்டார். சஜித் பிரதமர் பதவியை ஏற்று புதிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பற்காக, ஜனாதிபதி கோட்டாவிடம் முன்வைக்கும் பிரதான கோரிக்கையாக, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஆறு மாதங்களுக்குள் இல்லாதொழிப்பதற்கு பொது மக்களின் முன்நிலையில் உறுதி வழங்க வேண்டும் என்பது. அதற்காக இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் மத்தியஸ்தத்தையும் கோருகிறார். ராஜபக்‌ஷர்கள் தென் இலங்கை மக்களிடம் இருந்து பதுங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்ற நிலையில், கோட்டா அந்தக் கோரிக்கைக்கு இணங்குவார் என்பது சஜித்தின் எதிர்பார்ப்பு. இடைக்கால அரசாங்கம் பதவியேற்றதும் ஜனாதிபதி கோட்டா பதவி விலகி, புதிய ஆட்சி முறைக்கு வழிவிட வேண்டும் என்று நேற்றும்கூட இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை வெளியிட்டிருக்கின்றது. புதிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு வாருங்கள் என்று கோட்டா கோரிக்கை விடுத்தாலும், அவரின் இராணுவ மனநிலை எப்படிச் சிந்திக்கும் என்பது குறித்த சந்தேகம் எதிர்க்கட்சிகளிடம் இன்னமும் இருக்கவே செய்கின்றது. ஏனெனில், அவர், அவசரகாலச் சட்டத்தை அவர் மீண்டும் பிரகடனப்படுத்தியிருக்கிறார். அதன்மூலம், இராணுவத்தினரின் துப்பாக்கிகளை மக்களை நோக்கி திருப்புவதற்கான ஆணையை வழங்கியிருக்கின்றார். எனினும், அவசரகாலச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டு பத்து நாட்களுக்குள் பாராளுமன்றத்தின் அனுமதி பெறப்பட வேண்டும் என்கிற விடயம், கோட்டாவின் இராணுவ சிந்தனைக்கு இடர்பாடுகளைப் போடும் வாய்ப்புள்ளது. பாராளுமன்றத்தை அவசரமாக கூட்டினாலும், அங்கு அவசரகாலச் சட்டத்தின் மீதான வாக்கெடுப்பில், அதற்கு ஆதரவாக வாக்களிக்கும் நிலையில் எந்தப் பாராளுமன்ற உறுப்பினரும் இல்லை. ஏன், பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் ஏனைய ராஜபக்‌ஷர்களும்கூட ஆதரவாக வாக்களிக்கும் சூழல் இல்லை. கோட்டாவின் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் எந்த உறுப்பினரும் அவர்களின் தொகுதிக்கு செல்லும் நிலை தற்போது இல்லை. அவ்வளவு எதிர்ப்பு மனநிலையோடு மக்கள் இருக்கின்றார்கள். அப்படியான நிலையில், கோட்டாவின் இராணுவ சிந்தனைக்கும் தடை ஏற்படுவதற்கான வாய்ப்புக்களே உண்டு. அப்படியான நிலையில், இடைக்கால அரசாங்கத்தை சஜித் பொறுப்பேற்று, குறுகிய காலத்துக்குள்ளேயே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பினை பாராளுமன்றத்துக்குள் நிறைவேற்றிக் கொள்வதுதான் இருக்கின்ற ஒரே வழி. ஏனெனில், தற்போதுள்ள சூழ்நிலையில், நிறைவேற்று அதிகார ஒழிப்பினை பாராளுமன்றத்துக்குள் நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்பு என்பது மிகப் பிரகாசமானது. அனைத்துக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அதற்கு இணங்கவே செய்வார்கள். அதன் மூலம் கோட்டாவின் நீக்கத்தையும் சாத்தியப்படுத்தலாம். அதனையெல்லாம் தாண்டி, நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வேண்டியது பிரதானமானது. அதற்கு நீண்ட திட்டமிடல்களுடனான முன்னோக்கிய நகர்வு அவசியம். அதனை, பிரதான எதிர்க்கட்சியாக செய்ய வேண்டிய பொறுப்பு ஐக்கிய மக்கள் சக்திக்கு உண்டு. அதனைச் செய்யத் தவறும் பட்சத்தில் ஆட்சி அதிகாரத்தை மக்களிடம் கோரும் தார்மீகத்தை அந்தக் கட்சி இழந்ததாகிவிடும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மஹிந்த-போய்விட்டார்-இனி-சஜித்-பொறுப்பேற்க-வேண்டும்/91-296307
  25. ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான போராட்டங்களில் தமிழ் மக்களின் பங்கு? புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்ப் பரப்பிலுள்ள சில தரப்புகளால், “..ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு அனுப்பும் போராட்டம், தென் இலங்கை மக்களின் வயிற்றுப் பசிக்கான பிரச்சினை. அதில் பங்களிப்பது அவசியமற்றது. தமிழ் மக்கள் ஒதுங்கியிருந்து, வேடிக்கை பார்க்க வேண்டும்....” என்கிற கருத்துருவாக்கம், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றது. குறிப்பாக, புலம்பெயர் தமிழ் மக்களில் ஒரு தொகுதியினர் அதைத் தலையாய பணியாக ஏற்றும் செயற்படுகின்றனர். நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு தலைவிரித்தாடுகின்றது. சமையல் எரிவாயு தொடங்கி, எரிபொருட்களைப் பெற்றுக் கொள்வது என்பது குதிரைக் கொம்பாகிவிட்டது. தங்களது நாளாந்த வேலைகளை விட்டுவிட்டு, நாள்கணக்கில் அத்தியாவசிய தேவைகளுக்காக வரிசையில் நிற்பதே, மக்களின் வாடிக்கையாகிவிட்டது. இந்த நெருக்கடி, தென் இலங்கை மக்களுக்கு மாத்திரமானதல்ல; அது முழு நாட்டுக்குமானது. தென் இலங்கை மக்கள்தான், ராஜபக்‌ஷர்களை ஏகோபித்த பெரும்பான்மையோடு ஆட்சிக்கு கொண்டு வந்தார்கள். ஆகவே, அவர்கள் தற்போது சந்தித்து நிற்கும் நெருக்கடி, தேவையான ஒன்றுதான் என்ற மாதிரியான எண்ணப்பாடுகளையும், சில தமிழ்த் தரப்புகள் கொண்டாட்ட மனநிலையோடு பகர்ந்து வருகின்றன. அவர்களுக்கு, தமிழ் மக்கள் ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு அனுப்பும் கோரிக்கைகளை விடுப்பதோ, போராடுவதோ எரிச்சலூட்டுகின்றது. அவர்கள், அற்ப சந்தோஷங்களின் வழியாக, வாழ்க்கையைக் கொண்டு நகர்த்திவிட நினைக்கிறார்கள். மாறாக, தாயகத்திலுள்ள தமிழ் மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகள் பற்றியோ, அரசியல் நகர்வுகள் பற்றியோ எந்தவித புரிதலும் இல்லை. “தமிழ் மக்கள், முள்ளிவாய்க்காலில் சந்திந்த பிரச்சினைகளோடு ஒப்பிடுகையில், இன்றைய பொருளாதார நெருக்கடி எல்லாம் ஒன்றுமேயில்லை” என்கிற வகையான வாதங்களை, எந்தவித ‘கூச்சநாச்சம்’ இன்றி முன்வைத்து வருகின்றனர். இலங்கை ரூபாயின் பெறுமதி, கடந்த இரண்டு மாதங்களில் 48 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து இருக்கின்றது. கிட்டத்தட்ட அரைவாசியாகப் பெறுமதி இழப்பு ஏற்பட்டிருக்கின்றது. இந்தப் பெறுமதி இழப்புக்கு ஏற்ப, வருமான அதிகரிப்பு என்பது, இலங்கையில் எந்தவொரு தொழிற்றுறையிலும் சாத்தியமில்லை. இப்படியான நிலையில், இந்த நெருக்கடி நிலை ஒரு சில நாள்களிலோ மாதங்களிலோ முடிந்து போகப்போவதில்லை. சில ஆண்டுகளுக்கு இதுவே வாழ்க்கையாகிவிடும். அப்படியான நிலையில், நெருக்கடி நிலையை ஏற்படுத்தியதில் பெரும்பங்காற்றிய ராஜபக்‌ஷர்களுக்கு எதிராகப் போராடுவது என்பது தவிர்க்க முடியாதது. அதுபோல, எதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் தரப்புகள், ஊழல் மோசடிகள் இன்றி செயற்படுவதற்கான எச்சரிக்கையை விடுக்கும் வகையிலும் தற்போதைய போராட்டங்கள் அவசியமானவை. முள்ளிவாய்க்கால் கொடூரங்களைச் சந்தித்துவிட்டு வந்த மக்களில் 95 சதவீதமானவர்கள் இன்னமும் தாயகத்திலேயே இருக்கிறார்கள். இவர்களின் பொருளாதாரம் என்பது, இன்னமும் சரி செய்யப்படவில்லை. மாறாக, வறுமைக்கோட்டுக்குக் கீழான வாழ்க்கையோடு அல்லல்படுபவர்கள்தான் அதிகமானவர்கள். இவர்களுக்கு, இன்றைக்கு நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடி என்பது இன்னும் பயங்கரமானது. இவர்கள் முள்ளிவாய்க்காலை சந்தித்த அனுபவங்களைக் கொண்டவர்கள்; எனவே, இதையும் சகித்துக் கொள்வார்கள் என்கிற அணுகுமுறையானது, அயோக்கியத்தனமானது. நெருக்கடியைச் சந்தித்த மக்கள், வாழ்க்கை பூராவும் அப்படியே இருந்துவிட வேண்டும் என்கிற தோரணையிலானது. வடக்கு, கிழக்கில் போரால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் விவசாயத்தையும் மீன்பிடியையும் பிரதான தொழிலாகக் கொண்டவர்கள். ராஜபக்‌ஷர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தது முதல், விவசாய முன்னெடுப்புகள் படுத்துவிட்டன. உரத்துக்கான தட்டுப்பாட்டை, திட்டமிட்ட ரீதியில் ராஜபக்‌ஷர்கள் ஏற்படுத்தினார்கள். அத்தோடு, அசேதன உரத்துக்கு மாற்றாக, சேதன உரம் என்கிற திட்டத்தை ஒரே நாள் இரவில் அமல்படுத்தினார்கள். இதனால், ஏக்கர் கணக்கான வயல்வெளிகள் காய்ந்து வறண்டன. பெரும் நட்டத்தோடு விவசாயிகள் அல்லாட வேண்டி வந்தது. ராஜபக்‌ஷர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், 3,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட உரத்தின் விலை, தற்போது 30,000 ரூபாயைத் தாண்டி விட்டது. அத்தோடு டீசலையோ, மண்ணெண்ணையையோ விவசாயிகளால் பெற்றுக் கொள்ள முடியவில்லை. நீரிறைக்கும் இயந்திரங்கள் தொடங்கி, உழவு இயந்திரங்கள் வரையில் ஒன்றையும் இயக்க முடியாது, வயல்களையும் தோட்டங்களையும் அப்படியே காயவிட்டு கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. அதுபோல, எரிபொருள் தட்டுப்பாட்டால் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாடு பூராவுமுள்ள மீனவர்களின் தொழில் நடவடிக்கைகள் முழுவதுமாக முடங்கி விட்டன. ஆயுதப் போர் நீடித்த மூன்று தசாப்த காலத்தில் வடக்கு, கிழக்கு மீனவர்கள் தங்களது தொழில் நடவடிக்கைகளை முழுவதுமாக இழந்திருந்தனர். போரின் முடிவுக்குப் பின்னரும் கூட, எல்லை தாண்டும் இந்திய மீனவர்களாலும், தென் இலங்கை மீனவர்களின் அச்சுறுத்தல்களாலும் தொழில் நடவடிக்கைளை முன்னெடுப்பதில் இடர்பாடுகளையே சந்தித்து நிற்கின்றார்கள். இப்படியான நிலையில், இன்றைக்கு எரிபொருள் தட்டுப்பாட்டால் வடக்கு, கிழக்கிலுள்ள மீனவர்கள், தொழில் நடவடிக்கையை முன்னெடுக்க முடியாது திணறுகிறார்கள். படகுகளைத் தரையில் ஏற்றிவிட்டு, போர்க் காலத்தில் கட்டுமரத்தில் கரையோர மீன்பிடியில் ஈடுபட்டது போல, மீண்டும் கட்டுமரங்களைக் கட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். கட்டுமரங்களைக் கட்டி, தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவது என்பது, இன்றைய நிலையில், ஒருவேளை உணவுக்கான பணத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாது. இன்னொரு பக்கம், அரச ஊழியர்களின் வாழ்வும் இருண்டே கிடக்கின்றது. கடந்த காலங்களில், ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய ஒரு பொருளை, தற்போது இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியிருக்கின்றது. அப்படியான நிலையில், நாற்பதாயிரம் ரூபாய் அளவில் ஊதியம் பெறும் அரச ஊழியரையும், அவரில் தங்கி வாழும் குடும்பத்தினதும் நிலை, எவ்வளவு நெருக்கடியானது என்பதை உணர்ந்து கொள்வது, அவ்வளவு ஒன்றும் சிக்கலானது இல்லை. இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடியில் ஆதாயம் அடையும் தரப்புகளாக பதுக்கல் வியாபார முதலைகள், கடத்தல்காரர்கள், வெளிநாட்டிலிருந்து வரும் பணத்தில் வயிறு வளர்ப்பவர்கள் போன்றோரை, வேண்டுமானால் இந்த நெருக்கடி பாதிக்காமல் இருக்கலாம். அவர்களுக்கு இவ்வாறான நெருக்கடி நிலை, நீடிப்பு அவசியமான ஒன்றும் கூட! அதுதான் அவர்களின் கறுப்புச் சந்தையை இன்னும் இன்னும் விரிவுபடுத்த உதவும். வயிற்றுப் பசி அனைவருக்கும் பொதுவானது. அது தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என்று வேறுபடுவதில்லை. அதுபோல, இன்றைய பொருளாதார நெருக்கடி என்பது, இலங்கையின் மேற்றட்டு வர்க்கத்தைத் தாண்டி, அனைத்து மக்களுக்கும் பொதுவானது. அப்படியான நிலையில், அந்த நெருக்கடிக்கு எதிராகப் போராடுவது என்பது இயல்பானது. அதுவும், தொடர்ச்சியாகப் போராட்ட வழியாக வந்த தமிழ் மக்களுக்கு, அது புதிதானதும் இல்லை. அத்தோடு, ராஜபக்‌ஷர்களை தோற்கடிக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டிலேயே தமிழ் மக்கள் தொடர்ந்தும் இருந்து வந்திருக்கிறார்கள். அப்படியான நிலையில், ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக, தமிழ் மக்கள் போராடுவதை எள்ளி நகையாட முனைவது சிறுபிள்ளைத்தனமானது. இன்னொரு பக்கத்தில், ராஜபக்‌ஷர்கள் தங்களுக்கு எதிராக தென் இலங்கையின் எழுச்சியை சமாளிப்பதற்காக, 20ஆவது திருத்தச் சட்டத்தை மீளப்பெற்று 19ஆவது திருத்தத்துக்குத் திரும்புவது பற்றி சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதன் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, அது பாராளுமன்றத்தோடு பகிரப்படும். அது, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான கட்டங்களில், சில நல்ல முன்னேற்றங்களை ஏற்படுத்தும் வாய்ப்புகளை உருவாக்கும். குறிப்பாக, இனவாத தரப்புகளை மேலெழாதவாறு பார்த்துக் கொள்ளும் நிலை, ஓரளவுக்கு ஏற்பட்டால் கூட, புதிய அரசியலமைப்பு ஊடாக, சில அடைவுகளை நோக்கி நகரலாம். ராஜபக்‌ஷர்கள் இன்றைக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சந்தித்து நிற்கும் நெருக்கடி நிலை அதற்கு உதவலாம். அப்படியான நிலையில், ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான போராட்டத்தில், தமிழ் மக்கள் நீடித்திருப்பது தவிர்க்க முடியாதது; அவசியமானதும் கூட! https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ராஜபக்-ஷர்களுக்கு-எதிரான-போராட்டங்களில்-தமிழ்-மக்களின்-பங்கு/91-295048
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.