Jump to content

Search the Community

Showing results for tags 'ராஜன் குறை'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • வலைப்போக்கன் கிருபன்'s செயற்கை நுண்ணறிவு உருவாக்கி
  • Ahal Media Network's Topics

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's சிறப்பு ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணக்கட்டுகள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's திரட்டுகள்
  • Home Appliances Spot's Home Appliances

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 16 results

  1. கதாநாயக நடிகர்கள்: ஆட்சி செய்ய ஆசை! அரசியல் பேச அச்சம்! Feb 05, 2024 07:15AM IST ராஜன் குறை Actors want to rule and are fear to talk about politics மக்களாட்சியில் யார் வேண்டுமானால் கட்சி தொடங்கலாம்; தேர்தலில் போட்டியிடலாம். மக்கள் ஆதரவளித்தால் ஆட்சி அமைக்கலாம். இது சிறு குழந்தைக்கும் தெரியும். சினிமாவில் கதாநாயகர்களாக நடிப்பவர்களுக்கு மக்களிடையே நல்ல அறிமுகம் இருக்கும். அவர்களை திரையில் பார்த்து ரசிப்பவர்கள் இருப்பார்கள். அதனால் அவர்கள் மக்களிடையே சென்று பிரச்சாரம் செய்வது சுலபம். அதனால் அவர்கள் கட்சி தொடங்க விரும்பலாம். மக்களாட்சியில் யாரும் அரசியலில் ஈடுபடலாம் என்பதால் அனைவரும் அதனை பொதுமக்கள் மாண்பு கருதி வரவேற்கவே செய்வார்கள். அப்படி ஒரு நடிகர் ஏற்கனவே உள்ள அரசியல் கட்சியில் சேராமல் தன் தலைமையில் கட்சி தொடங்கும்போது ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. எதனால் கட்சி தொடங்கும் கதாநாயக நடிகருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற கேள்விதான் அது. அவர் சினிமாவில் நன்றாக நடனம் ஆடினார், சண்டை போட்டார், சிரிப்பு வரும்படி நடித்தார், உணர்ச்சிகரமாக நடித்தார் அதனால் அவர் முதல்வராக ஆட்சி செய்ய வேண்டும் என்று யாரும் கூற மாட்டார்கள். அது அபத்தமாக இருக்கும் என்று குழந்தைகளுக்குக் கூட தெரியும். அதனால் அந்த நடிகர் பொதுவாக என்ன சொல்வாரென்றால் எல்லா அரசியல் கட்சிகளும் ஊழல் செய்கின்றன, மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை, ஜாதி, மத பிரிவினைகளைப் பார்க்கின்றன; நான் அனைத்து மக்களும் பொதுவானவன், ஊழலே செய்ய மாட்டேன், என் ரசிகர் மன்றத்து நிர்வாகிகளெல்லாம் மக்கள் பிரதிநிதிகளானால் சுயநலம் இல்லாமல் மக்களுக்காக உயிரைக் கொடுத்து உழைப்பார்கள் என்று கூறுகிறார்கள். அதை எப்படி நம்புவது என்று கேட்டால், ஏற்கனவே ரசிகர் மன்றங்கள் நற்பணி மன்றங்களாக செயல்படுகின்றன என்று கூறுவார்கள். ரத்த தான முகாம்கள் நடத்தினார்கள், இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினார்கள், வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேலை, வேட்டி கொடுத்தார்கள், பள்ளி மாணவர்களுக்கு பேனா, பென்சில், கால்குலேட்டர் எல்லாம் வாங்கிக் கொடுத்தார்கள் என்று பல நற்பணிகளைப் பட்டியில் இடுவார்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்தால் மொத்த அரசே ஒரு நற்பணி மன்றம் போல செயல்பட்டு மக்களுக்கு தேவையானதையெல்லாம் செய்து கொடுக்கும் என்று கூறுவதுபோல தோன்றும். அப்புறம் ஒட்டுமொத்தமாக சிஸ்டத்தை மாற்றி அமைப்போம், முழுப்புரட்சி செய்வோம், “போர்! போர்!” என்றெல்லாம் வீரமாக பொத்தாம் பொதுவாக எதையாவது பேசுவார்கள். ஒட்டுமொத்தத்தில் நடிகர் மிகவும் பிரபலமானவர் என்பதால் மக்கள் அவர் கட்சிக்காரர்களுக்கு வாக்களித்தால் அவர் முதல்வராகிவிட்டால் “நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார்” என்று முடித்துவிடுவார்கள். இவ்வாறு பேசுவது ஆட்சிக்கு வரும் விருப்பம்தானே தவிர, அரசியலுக்கு வரும் விருப்பமல்ல. அரசியல் என்பது எண்ணற்ற சமூக முரண்பாடுகளின் களம். கார்ல் ஷ்மிட் என்ற அறிஞர் கூறியதுபோல எதிரி x நண்பன் என்பதே அரசியல். எதிரி என்றால் தனிப்பட்ட எதிரி அல்ல; போட்டி நடிகர் அல்ல. அரசியல் எதிரி என்பது வேறு ரகம். அரசியல் என்றால் என்ன? இன்றுள்ள மக்களாட்சி நடைமுறை உருவாகி இன்னம் 250 ஆண்டுகள் கூட நிறைவடையவில்லை எனலாம். அதாவது மன்னரல்லாத அரசியலமைப்பு சட்ட குடியரசு 1776-ம் ஆண்டு அமெரிக்காவில்தான் முதன்முதலில் உருவானது. மக்களே பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து தங்களைத் தாங்களே ஆண்டுகொள்வதுதான் மக்களாட்சி. அதற்கு 13 ஆண்டுகள் கழித்து பிரெஞ்சுப் புரட்சி 1789-ம் ஆண்டு வெடித்தது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற முழக்கம் உலகளாவிய மக்களாட்சி லட்சியமாக முன்மொழியப்பட்டது. அதற்கு முன்னால் மன்னராட்சியில் மன்னர்கள், நிலப்பிரபுக்கள், மதகுருமார்கள், சாதாரண மக்கள் என்ற கட்டமைப்புதான் பரவலாக இருந்தது. இதிலும் மத அமைப்பிலோ அல்லது வேறு விதமாகவோ பலவிதமான ஒழுக்க விதிகள், கட்டுப்பாடுகள் இருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவது அரசர்களின் எதேச்சதிகாரமாக இருந்தது. மக்களுக்கான உரிமைகள் என்பது உத்தரவாதமில்லாமல் இருந்தன. இதில் முதலீட்டிய பொருளாதாரம் உருவான பிறகு வர்த்தகர்கள், தொழில்முனைவோர் ஆகிய புதிய அதிகார மையங்கள் உருவானபோது அவர்கள் புதியதொரு அரசமைப்பை உருவாக்க நினைத்தார்கள். அச்சு ஊடகத்தின் பரவல், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி எல்லாம் சேர்ந்த புதிய மத்தியதர வர்க்கமும் இந்த மாற்றத்தை வலியுறுத்தியதால் மக்களாட்சி என்ற நடைமுறை உருவாகியது. அனைத்து மக்களும் சுதந்திரமானவர்கள், சமமானவர்கள் ஆகிய சிந்தனைகள் உருவாயின. ஆனால், ஏற்கனவே இருந்த பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமூகப் பிரிவினைகள் ஆகியவையும் இருந்தன. அதனால் மக்களில் பல்வேறு தொகுதியினருக்குள் இருந்த முரண்பாடுகள் பல்வேறு சமூக இயக்கங்களைத் தோற்றுவித்தன. குறிப்பாக தொழிலாளர்கள் ஒன்று திரண்டு அவர்கள் பிரச்சினைகளுக்காக போராடினார்கள். விவசாயிகளும் அவர்கள் கோரிக்கைகளுக்காக போராடினார்கள். அப்படியே சமூகத்தின் அனைத்து பிரிவினரும் தங்கள் உரிமைகள், கோரிக்கைகளுக்காக அமைப்பாக மாறுவதில்தான் மக்களாட்சி அரசியல் கால்கொண்டது. அரசு அனைவருக்கும் பொதுவானதாக இருந்தாலும், வரி விதிப்பில் எத்தகைய கொள்கைகளை பின்பற்றுவது, முதலாளிகளுக்கும், செல்வந்தர்களுக்கும் வரி விதித்து, பிற சாமானிய மக்களுக்கான வசதிகளை செய்துகொடுப்பது என்ற மக்கள்நல அரசு மாதிரிகள் தோன்றின. முதலாளிகளுக்கும், கார்ப்பரேட்களுக்கும் வரியைக் குறைத்து பொருளாதாரத்தை வளர்ப்பது, சந்தையைக் கட்டுப்படுத்தாமல் இருப்பது, தனிச்சொத்தைப் பெருக்குவது என்பவை வலதுசாரி முதலீட்டியக் கொள்கைகள். செல்வக் குவிப்புகளுக்கு அதிக வரி விதித்து, சந்தை நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி, சமூக முழுமைக்கும் வாழ்வாதாரத்தை உத்தரவாதம் செய்வது இடதுசாரி சோஷலிச சிந்தனை. சமூகத்தின் அனைத்து வளங்களும் பொது உடமையாக இருக்க வேண்டும், எல்லா பொருளாதார நடவடிக்கைகளும் அரசு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற கம்யூனிச சித்தாந்தமும் தோன்றியது. இந்தியாவிலோ கூடுதலாக ஜாதீயம் ஏற்படுத்திய கடுமையான சமத்துவமின்மையை என்ன செய்வது என்பது பெரும் கேள்வியாக இருந்தது. பல காலமாக கல்வி மறுக்கப்பட்டு, கிட்டத்தட்ட அடிமைகள் போல வைக்கப்பட்டிருந்த சூத்திரர், அவர்ணர் என்று கூறப்பட்ட மக்களை எப்படி சம வாய்ப்புகளை பயன்படுத்தக் கூடியவர்களாக மாற்றுவது என்பது பெரும் சவாலாக இருந்தது. அதனால் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வழி வகுக்கப்பட்டது. ஆனாலும் இன்னமும் சமூகத்தில் முன்னேறிய வகுப்பினருக்கும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும் உள்ள இடைவெளி குறையவில்லை. செல்வாக்கான பதவிகளில், தொழில்களில் அவர்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே காணப்படுகிறார்கள். அவர்களுக்கான அதிகாரத்தைப் பெற மக்களாட்சி அரசியலே ஒரே களமாக உள்ளது. அதனால்தான் சமூகத்தின் பல்வேறு பிரிவினரின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளிடையேயான கடுமையான மோதல் களமாக மக்களாட்சி அரசியல் உள்ளது. அரசியலில் ஈடுபடுவோர் தாங்கள் ஏழைகள் பக்கமா, பணக்காரர்கள் பக்கமா, வரி விதிப்பு பொருளாதாரக் கொள்கைகள் என்ன என்பதைக் கூற வேண்டும். இட ஒதுக்கீட்டில் தங்கள் நிலைப்பாடு என்ன, தலித்துகளுக்கு எதிராக இழைக்கப்படும் வன்கொடுமைகளுக்கு எதிராக எப்படி போராடப் போகிறோம் என்றெல்லாம் அரசியலில் ஈடுபடுபவர்கள் பேச வேண்டும். இந்தியாவின் மற்றொரு முக்கியமான அரசியல் பிரச்சினை என்பது அதன் கூட்டாட்சி வடிவமாகும். மாநிலங்களில்தான் அரசுகள் உள்ளன. அனைத்தையும் இணைக்கும் ஒன்றிய அரசாங்கம்தான் தேசிய அளவில் உள்ளது. ஒன்றியத்திற்கும், மாநிலத்திற்குமான அதிகாரப் பகிர்வு சரிவர வகுக்கப்படவில்லை. ஒன்றியத்தில் அதிகாரம் குவிந்திருப்பது பல்வேறு மாநில அரசுகளாலும் கண்டிக்கப்படுகிறது. நாள்தோறும் பிரச்சினைகள் பெருகுகின்றன. ஒரு மாநிலக் கட்சி இந்த முக்கியமான பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டும். அரசின் ஒவ்வொரு கொள்கை முடிவும், வரி விதிப்பும் சமூகத்தில் பல்வேறு மக்கள் பிரிவினரிடையே தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதால் அரசு என்பது வெறும் நற்பணி மன்றமல்ல. ஓர் அரசியல் கட்சி எந்த வகையில் சமூக இடைவெளிகளைக் குறைப்பது என்பதைக் குறித்த ஆழ்ந்த புரிதலுடன் செயல்பட வேண்டும். அதைத்தான் நாம் கொள்கை என்று அழைக்கிறோம். முரண்பாடுகளை சமன் செய்வதே அரசியல் என்னும் கலை என்றார் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங். பெரும்பாலான அரசியல் கட்சிகள் எப்படி உருவாயின? திராவிட முன்னேற்றக் கழகம் ஜாதீய ஏற்றத்தாழ்வை களையும் சமூகநீதியை முன்வைத்தும், மாநில சுயாட்சி, மாநில உரிமைகளை முன்னிலைப்படுத்தியும், இந்தி திணிப்பை எதிர்த்தும் பிறந்தது. அது முதலில் தென்னிந்திய மாநிலங்களை தனி கூட்டாட்சி குடியரசாக, திராவிட நாடாக உருவாக்கும் லட்சியத்தைக் கொண்டிருந்தது. பின்னர் இந்திய கூட்டாட்சியிலேயே மாநில சுயாட்சி கோரிக்கையாக மாற்றிக்கொண்டது. சோஷலிச பார்வை கொண்டது. எம்.ஜி.ஆர் தி.மு.க-விலிருந்து பிரிந்தாலும் அண்ணாவின் கொள்கைகள்தான், அண்ணாயிசம்தான் தன் கட்சியின் கொள்கை என்று கூறினார். அண்ணா பெயரில்தான் கட்சியே தொடங்கினார். அதனால் அவர் தி.மு.க-வின் நகல் என்றுதான் கூற வேண்டும். நாளடைவில் தி.மு.க-விலிருந்து சில பல அம்சங்களில் வேறுபாடுகளை உருவாக்கினார். ஆனாலும் மாநில உரிமை, சமூகநீதி அரசியல் தடத்திலிருந்து முற்றாக விலகவில்லை. அ.இ.அ.தி.மு.க என்பது தி.மு.க-விற்கு ஒரு மாற்று என்பதே அதன் வரலாற்று விளக்கம். முத்துராமலிங்க தேவரின் ஃபார்வார்டு பிளாக் முக்குலத்தோரின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சியாக உருவானது. பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்கத்திலிருந்து உருமாறி வன்னியர் நலனுக்கான கட்சியாக நிறுவிக்கொண்டது. கம்யூனிஸ்டு கட்சிகள் தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோரின் வர்க்க நலன்களை முன்னெடுக்கும் கட்சிகளாக தங்களை நிலைநிறுத்திக் கொண்டன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலித் மக்களின், குறிப்பாக ஆதி திராவிட மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தும் முற்போக்குக் கட்சியாக உருவாகியுள்ளது. மக்களாட்சியில் எல்லா கட்சிகளுமே பொதுவான சமூக நலனுக்கு இயங்கினாலும் அவர்கள் முன்னிலைப்படுத்தும், பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகப் பிரிவுகள் என்ன, அவர்கள் கொள்கைகள் எந்த லட்சியங்களைக் கொண்டுள்ளன என்பது தெளிவாக இருப்பதுதான் அரசியல். நடிகர்களின் கட்சிகள் எப்படி உருவாகின்றன? கதாநாயக நடிகர்கள் தங்கள் திரைப்படங்களை எல்லோருமே பார்த்து ரசிப்பதால் எல்லா மக்களுக்குமான கட்சியையே தொடங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்போது சமூகத்திலுள்ள முரண்களை எப்படி எதிர்கொள்வார்கள் என்று கேட்டால் ஏதாவது பொத்தாம்பொதுவாக மனிதநேய சிந்தனைகளைக் கூறுகிறார்கள். எந்த அரசியல் பிரச்சினையையும் எதிர்கொள்ள அஞ்சுகிறார்கள். எல்லோருக்கும் நல்லவராக இருப்பதாக காட்டிக்கொள்ள நினைக்கிறார்கள். ஆட்சிக்கு வர ஆசைப்படுகிறார்கள். அரசியல் பேச அஞ்சுகிறார்கள். விஜய்காந்த்: விஜய்காந்த் என்ற கதாநாயக நடிகர் அப்படித்தான் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்று கலவையான பெயரில் கட்சி தொடங்கினார். தான் தி.மு.க, அ.இ.அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிக்கும் மாற்று என்றார். ஒன்பது சதவிகித வாக்குகளை இந்த “மாற்று” என்ற பெயரில் பெற முடிந்தது. ஆனால், அதற்குமேல் அவரால் அரசியல் பேச முடியவில்லை. எந்த பிரச்சினைக்காகவும் எந்த மக்கள் தொகுதியையும் அணி திரட்ட முடியவில்லை. இறுதியில் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்தார். அதன் பிறகு “மாற்று” என்ற லட்சியம் காணாமல் போனதில் அவர் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களே கட்சி மாறிவிட்டார்கள். இறுதியில் அவர் கட்சி எந்த முக்கியத்துவமும் இல்லாத கட்சியாக மாறிவிட்டது. ரஜினிகாந்த்: ரஜினிகாந்த் 1996-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி ஏற்படுத்திய அதிருப்தி அலையில் அவர் ஆட்சியை அகற்ற வேண்டும் என்று குரல் கொடுத்தார். அந்த தேர்தலில் ஜெயலலிதா படுதோல்வி அடைந்ததில் அவருக்கு பங்கிருப்பதாக ஒரு பிம்பம் உருவானது. ஆனால், எந்த அரசியல் கட்சியிலும் சேர மறுத்தார். அவரை எப்படியாவது அரசியலுக்குக் கொண்டு வர சோ ராமசாமி உள்ளிட்ட பாஜக-வினர் கடுமையாக முயன்றார்கள். அவருக்கு தனிப்பட்ட முறையில் பாஜக அரசியல் பிடித்திருந்தாலும், தமிழ்நாட்டில் அந்த அரசியல் பேசினால் சிக்கல் என்பதை பாபா படம் அடைந்த தோல்வியிலிருந்து புரிந்துகொண்டார். அதனால் அவரால் கட்சி தொடங்குவதைப் பற்றி எந்த நிலைப்பாடும் எடுக்க முடியவில்லை. கலைஞரையும், ஜெயலலிதாவையும் மாறி, மாறி புகழ்ந்தார். கலைஞரும், ஜெயலலிதாவும் மறைந்த பிறகு அரசியலுக்கு வர முற்பட்டார். அப்போதும் தான் யாரையும் எதிர்த்து அரசியல் செய்யவில்லை என்றார். ஒட்டுமொத்த சிஸ்டத்தையும் மாற்றப் போகிறேன் என்றார். கொள்கை என்னவென்று கேட்டால் தலை சுத்துகிறது என்றார். எல்லோரும் மக்களை அணி திரட்டுங்கள் – நான் பிறகு வந்து தலைமையேற்கிறேன் என்று கூறி திடுக்கிட வைத்தார். நான் முதலமைச்சராகப் பதவியேற்று எல்லோர் கேள்விக்கும் பதில் சொல்லிக்கொண்டிருக்க மாட்டேன் என்றார். இவர் கட்சியை கட்டமைத்துக் கொடுக்க பாஜக-விலிருந்து ஒருவரை இரவலாகப் பெற்றார். இறுதியில் நல்லவேளையாக உடல்நிலை சரியில்லை, அரசியலுக்கு வரவில்லை என்று முற்றுப்புள்ளி வைத்தார். கமல்ஹாசன்: மக்கள் நீதி மய்யம் என்று கட்சிக்கு பெயர் வைத்தார். வலதுசாரியும் இல்லாத, இடதுசாரியும் இல்லாத நடுப்பாதை, செண்டிரிஸ்ட் (Centrist) கட்சி என்றார். ஆனால் தெளிவாக நான் பாஜக-வை எதிர்க்கிறேன். அ.இ.அ.தி.மு.க-வை எதிர்க்கிறேன். தி.மு.க-வை எதிர்க்கிறேன் என்றெல்லாம் பேச மாட்டார். பள்ளப்பட்டியில் போய் இந்த நாட்டின் முதல் தீவிரவாதி இந்து தான் என்பார். மற்ற இடங்களில் தெளிவாக ஆர்.எஸ்.எஸ் நாட்டை பிளவுபடுத்தும் இயக்கம் என்று சொல்ல மாட்டார். திரைப்படங்களில் போட்டி நடிகர்களை இவர்கள் குறை சொல்ல முடியாது. விஜய்காந்துக்கு நடிக்கத் தெரியாது என்று பொதுவெளியில் கமல்ஹாசன் சொல்ல முடியாது. அது தொழிலுக்கு நல்லதல்ல. ஒருவர் படத்தை மற்றவர் விமர்சித்தால் பொதுவாக தொழிலும், வர்த்தகமும் பாதிக்கப்படும் என்பதால் அது விரும்பத்தக்கதல்ல. அரசியல் அப்படி இல்லை. எடப்பாடிக்கு ஆட்சி செய்யத் தெரியவில்லை; அவர் ஊழல் செய்கிறார் என்று ஸ்டாலின் சொல்லத்தான் வேண்டும். ஸ்டாலின் ஆட்சி சரியில்லை என்று எடப்பாடி கூறத்தான் வேண்டும். “செளகிதார் சோர் ஹை” என்று மோடியை திருடன் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்ட வேண்டும். ஏனெனில் அரசியலில் முரண்களும், எதிர்ப்பும் அவசியம். வன்முறை கூடாதே தவிர, கருத்தியல் எதிர்ப்பு, கண்டனம் என்பது இன்றியமையாதது. ஆனால், நடிகர்களாகவே வாழ்ந்து பழகியதால் இவர்களால் பகிரங்கமாக அரசியலில் யாரையும் விமர்சித்து பேச முடிவதில்லை. கமல்ஹாசனால் இட ஒதுக்கீடு பற்றிய கேள்விக்குக் கூட தெளிவாகப் பதில் கூற முடியவில்லை. அருகிலிருந்தவரைக் காட்டி அவர்தான் கொள்கைகளை வகுத்துக் கொண்டுள்ளார் என்று கூறிவிட்டார். விஜய்: இந்தப் பட்டியலில்தான் மற்றொரு கதாநாயக நடிகர் விஜய் இப்போது சேர்ந்துள்ளார். “தமிழக வெற்றி கழகம்” என்று ஒற்றுப்பிழையுடன் பெயர் வைத்துவிட்டார். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் அவருக்கு எந்த நிலைப்பாடும் கிடையாதாம். நீட் தேர்வில் வெற்றிபெற முடியாமல் அனிதா தற்கொலை செய்துகொண்டபோது நாடே கொந்தளித்ததே, அப்போது விஜய் எங்கே போயிருந்தார்? அவருக்கு நீட் தேர்வு எத்தகைய பிரச்சினை என்றே தெரியாதா? நடிகர் சூர்யா கூட குரல் கொடுத்தாரே? அவரையே ஜோசப் விஜய் என்று மதச்சாயம் பூசி பாஜக விமர்சித்ததே? அது மத அடையாளம் பேசி நாட்டைப் பிளவுபடுத்துகிறது என்று தெரியாதா? தமிழ்நாட்டு நலன்கள் ஒன்றிய அரசால் புறக்கணிக்கப்படுகிறதென்று ஊடகங்களில் பல்வேறு தரப்பினரும் ஓயாமல் குரல் கொடுக்கிறார்களே? அதெல்லாம் அவர் காதிலேயே விழவில்லையா? குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒரு வாரத்தில் அமலாக்கிவிடுவோம் என பாஜக அமைச்சர் ஒருவர் பேசுகிறாரே? முதல்வர் ஸ்டாலின் கண்டித்து அறிக்கை விடுகிறாரே? அதையெல்லாம் படிக்க மாட்டாரா இந்த எதிர்கால அரசியல்வாதி? நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வர வேண்டுமா? வேண்டாமா? என்ற ஒரு நிலைப்பாடே இல்லாமல் எதற்காக தேர்தல் நெருங்கும்போது கட்சி தொடங்குகிறார்? இது யார் கொடுத்த அசைன்மைண்ட் என்று மக்கள் கேட்கிறார்களே? அவருக்குப் புரியாதா? பிரகாஷ் ராஜ் என்ற அரசியல்வாதி பிரகாஷ் ராஜ் விஜய்யின் பல படங்களில் வில்லனாக நடித்தவர். பல படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடித்தவர். அவர் வளர்ந்த ஊரான பெங்களூருவில் கெளரி லங்கேஷ் என்ற சிந்தனையாளர் கொலை செய்யப்பட்டபோது அவர் வலதுசாரி அரசியலுக்கு எதிராக பொங்கி எழுந்தார். மதவாத சக்திகளை பகிரங்கமாக விமர்சித்தார். பாஜக, ஆர்.எஸ்.எஸ் என பெயர் சொல்லி கண்டித்தார். தன் கண்டனத்தைத் தெரிவிக்க சுயேச்சையாக தேர்தலில் கூட நின்றார். பிரகாஷ் ராஜ் ஆட்சிக்கு வர நினைக்கவில்லை. அவரும் எந்தக் கட்சியிலும் சேரவில்லை. கட்சியும் தொடங்கவில்லை. ஆனால் மத அடையாளவாத வன்முறை நாட்டை பாழ்படுத்தி விடும் என்று துணிந்து குரல் கொடுக்கிறார். எந்த ஒரு நடிகராவது அரசியலுக்கு வந்தாரென்றால் பிரகாஷ் ராஜைத்தான் கூற முடியும். உதயநிதி அரசியல் குடும்பத்திலிருந்து நடிக்கச் சென்றவர் என்பதால் அவரை கணக்கில் கொள்ளவில்லை. மற்றவர்களெல்லாம் ஆட்சிக்கு வரத்தான் நினைக்கிறார்களே தவிர, அரசியலுக்கு வர நினைப்பதில்லை. அரசியல் பேசவே அஞ்சுகிறார்கள். நேராக தேர்தல்; முதல்வர் பதவி. அவ்வளவுதான் அவர்கள் ஆசை. சின்னச்சின்ன ஆசை. பாவம். https://minnambalam.com/political-news/actors-want-to-rule-and-are-fear-to-talk-about-politics-by-rajan-kurai/
  2. மத அடையாள தேசம்: உருவாகிவிட்ட யூத இஸ்ரேலும், இந்துத்துவம் உருவாக்க விரும்பும் இந்து இந்தியாவும் Oct 23, 2023 07:00AM IST ஷேர் செய்ய : ராஜன் குறை அறுபதுகள், எழுபதுகளில் கோடை விடுமுறை என்றால் ‘டென் கமாண்ட்மென்ட்ஸ்’ (Ten Commandments, 1956) படத்தை திரையரங்குகளில் திரையிடுவார்கள். பள்ளி மாணவர்களை பெற்றோர் கூட்டிச் செல்வார்கள் என்பதால். எகிப்தில் அடிமைகளாக இருந்த யூதர்களை மோசஸ் கடவுளின் துணையுடன் விடுவித்து அவர்களுக்கு கடவுளால் வாக்களிக்கப்பட்ட நிலமான இஸ்ரேலுக்கு கூட்டிச் செல்வதுதான் கதை. மோசஸ் குழந்தையாக ஆற்றில் விடப்பட்டு எகிப்து இளவரசியால் கண்டெடுக்கப்பட்டு, அரச குடும்பத்தில் வளர்வார், கர்ணனைப் போல. பின்னர் உண்மை வெளிப்பட்டு, நாட்டை விட்டு துரத்தப்படுவார். அலைந்து திரிந்து சினாய் மலையில் ஏறி கடவுளின் குரலைக் கேட்பார். கடவுள் கட்டளைப்படி எகிப்து சென்று மன்னருடன் வாதாடி, பலவித உற்பாதங்களைத் தோற்றுவித்து, பெருந்திரளான அடிமைகளுடன் வெளியேறுவார். அவர்கள் செங்கடலை நெருங்கும்போது மன்னனின் படைகள் துரத்திக்கொண்டு வரும். மோசஸ் கோலை உயர்த்த செங்கடல் இரண்டாகப் பிரிந்து வழிவிடும். இந்தக் காட்சிக்கு அரங்கில் பெரும் கரவொலி எழும்பும். அந்தக் கடல் பிரிந்து கொடுத்த வழியில் யூதர்கள் கடந்து அக்கரை சென்ற பின், துரத்திக்கொண்டு வரும் மன்னனின் படைகள் அதில் இறங்கியவுடன் கடல் மூடிக்கொண்டு அவர்களை மூழ்கடித்துவிடும். இப்படியாகத் தப்பி வந்த மக்களுக்கு மோசஸ் மூலமாக பத்து கட்டளைகளை கடவுள் கொடுப்பார். அதன்படி வாழ்ந்தால் அவர்களுக்கு வாழ்வதற்கு ஒரு நிலத்தைத் தருவதாகக் கூறுவார். அப்படி வாக்களிக்கப்பட்ட நிலம், Promised land என்பதுதான் இஸ்ரேல் என்று இப்போது அழைக்கப்படும் பாலஸ்தீனம் என்பது புராணம், நம்பிக்கை. யூதர்களின் டோரா, பைபிள் உள்ளிட்ட மத நூல்களில் குறிப்பிடப்படும் இந்த கதைக்கு வரலாற்று ஆதாரம் எதுவும் கிடையாது. கிடைத்துள்ள வரலாற்று ஆதாரங்களின்படி சிந்தித்தால் அப்படியெல்லாம் நடந்திருக்கும் சாத்தியம் அதிகமாக இல்லை. ஆனால், ஏசு கிறிஸ்து பிறந்த நேரத்தில், கிறிஸ்துவ மதம் தோன்றிய நேரத்தில் யூதர்கள் பாலஸ்தீனத்தில் வாழ்ந்தார்கள் என்பது உண்மை. கிறிஸ்து பிறப்புக்கு பிறகான நானூறு, ஐந்நூறு ஆண்டுக் காலத்தில் அவர்கள் அங்கிருந்து வெளியேறி ஐரோப்பா முழுவதும் பரவி பல்வேறு நாடுகளில் வசிக்கத் தொடங்கினார்கள். பாலஸ்தீனத்தில் வாழ்ந்த அரேபியர்கள் பெருமளவு இஸ்லாமிய மதத்தை தழுவினார்கள். பொது ஆண்டு 500 முதல் பொது ஆண்டு 1900 வரை பல்வேறு நாடுகளில் வாழ்ந்த யூதர்கள் பாலஸ்தீனம்தான் சொந்த ஊர் என்று எண்ணி வந்தார்கள் என்று கிடையாது. அவர்கள் குடியேறிய நாடுகளில் வர்த்தகம் செய்தும், வட்டித் தொழில், வங்கித்தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டும் வாழ்ந்தார்கள். ஆனால் இவர்களுக்கும், பொது சமூகத்துக்கும் இடைவெளியும், முரண்பாடுகளும் நிலவி வந்ததும், யூதர்களுக்கு எதிரான வன்முறை, சமூக விலக்கம், கட்டாய வெளியேற்றம் ஆகியவை அவ்வப்போது நிகழ்ந்ததும் உண்மைதான். இதன் உச்சகட்டமாகத்தான் ஹிட்லரால் லட்சக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் இரண்டாம் உலகப் போர் நேரத்தில் நிகழ்ந்தது. புராணத்தை வரலாற்றாக்கிய தீர்வு பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே யூதர்களுக்கென ஒரு நாடு தேவை என்ற எண்ணம் உருவாகத் தோன்றியது. கடவுள் யெஹோவாவால் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட பூமி எனப்படும் இஸ்ரேல்/பாலஸ்தீனம்தான் அது என்ற சிந்தனையும் உருவானது. இந்த சிந்தனையால் பல்வேறு நாடுகளில் வசிக்கும் யூதர்களுக்கும் அவர்கள் பல தலைமுறைகளாக பார்த்தே இராத, நினைத்தே இராத பாலஸ்தீனம் அவர்களது சொந்த ஊர், உரிமையுள்ள நிலம் என்ற எண்ணம் உருவாகத் தொடங்கியது. இதன் உச்சமாகத்தான் இஸ்ரேல் என்ற நாடு இங்கிலாந்தால் உருவாக்கப்பட்டதும், உலகின் பல பகுதிகளிலிருந்தும் யூதர்களுக்கு அந்த நாட்டுக்கு “திரும்பி வரும் உரிமை” (Right to Return) வழங்கப்பட்டதும் நடந்தது. அதாவது எத்தனையோ தலைமுறைகளாக ஃபிரான்சிலோ, அமெரிக்காவிலோ வாழ்ந்து வரும் வம்சாவழியைச் சேர்ந்த யூதர் ஒருவர் இஸ்ரேலுக்குச் சென்று குடியேற நினைத்தால் அது ‘திரும்பிச் செல்வதாக’க் கருதப்படும். இந்த முரண்பாட்டை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், இலங்கையின் மலையகத் தமிழர்களை யோசித்துப் பாருங்கள். அவர்கள் நூறு முதல் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் தேயிலைத் தோட்ட த்தில் வேலை செய்ய தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்களின் வம்சாவழிகள்தான். அவர்கள் அனைவரும் தமிழ்நாட்டுக்கு ‘திரும்பி வரும் உரிமை’ கோர முடியுமா? சாஸ்திரி-சிரிமாவோ 1964 ஒப்பந்தத்தின்படி திரும்ப வர ஏற்கப்பட்டவர்களிலேயே பலர் தமிழ்நாட்டுக்கு வந்த பின்னும் குடியுரிமை இல்லாமல் அவதிப்பட்ட கதை பேசப்பட வேண்டியது. இப்படி நன்றாக அறியப்பட்ட வரலாற்றில் இடம் பெயர்ந்தவர்களின் சந்ததியருக்கே திரும்பி வரும் உரிமை இல்லாதபோது, எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னால் சென்றிருக்கலாம் என யூகிக்கப்படுபவர்களின் சந்ததியருக்கு ‘திரும்பி வரும் உரிமை’ வழங்குவது எவ்வளவு முரண்பாடானது. இஸ்ரேல் நாட்டினை எதிர்க்கும் சனாதன யூதர்கள் சனாதனம் என்றால் மாறாதது என்று பலரும் கூறுவதை சமீப காலங்களில் கேட்டுள்ளோம். அதனால் மாற்றங்களை விரும்பாதவரை சனாதனி என்று கூறுகிறோம். பொதுவாக இவர்கள் பிற்போக்காளர்களாக இருப்பார்கள். ஆனால், யூதர்கள் விஷயத்தில் ஒரு சுவாரஸ்யமான முரண் ஏற்படுகிறது. யூத மத நம்பிக்கையில் ஒரு பகுதி கடவுளின் கட்டளைகளை யூதர்கள் பின்பற்றாததால், அவர்களுக்குத் தருவதாகச் சொன்ன பூமி வழங்கப்படவில்லை என்பதாகும். அதனால் அவர்கள் பல்வேறு நாடுகளிலும் வாழ்வதுதான் சரியே தவிர, தங்களுக்கென ஒரு நாடு என இஸ்ரேலை உருவாக்கியதும், அந்த நிலத்திலிருந்து பாலஸ்தீனியர்களை அகற்றியதும் தவறு என்பது சனாதன யூதர்களில் ஒரு பிரிவினரின் கருத்து. யூதர்களின் சம்பிரதாயப்படி ஆண்கள் தாடி வளர்த்து கறுப்பு ஆடையும், கறுப்புத் தொப்பியும் அணிய வேண்டும். அவ்வாறு மத வழக்கத்தை தீவிரமாக பின்பற்றும் சனாதன யூதர்கள் இஸ்ரேலுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி நியூயார்க்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதை நான் பலமுறை கண்டுள்ளேன். நீங்களும் இங்கே இணைக்கப்பட்டுள்ள படத்தில் காணலாம். பல நேரம் இவர்கள் ‘JEWS AGAINST OCCUPATION’ என்ற பதாகையையும் பிடித்திருப்பர். அதாவது இஸ்ரேல் நாடு என்பது பாலஸ்தீனியர்களின் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது என்பதே பொருள். கீழேயுள்ள படத்தில் டோரா என்ற யூதர்களின் புனித நூல் பாலஸ்தீனம் முழுவதையும் பாலஸ்தீனியர்களின் இறையாண்மைக்கு விட்டுவிட வேண்டும் எனக் கூறுவதாக ஒரு பதாகையை ஏந்தியுள்ளதைக் காணலாம். இந்தியாவில் சனாதனிகள் இப்போது மிகுந்த ஆவேசத்துடன் சனாதன எதிர்ப்பாளர்களைக் கண்டித்துப் பேசுகிறார்கள். சனாதனம் என்றால் அது வர்ணாசிரம தர்மம் அல்ல, தீண்டாமை அல்ல என்று சொல்கிறார்கள். அவர்களெல்லாம் இது போல “ஜாதி மறுப்பே சனாதனம்”, “வர்ண பேதம் கடவுளுக்கே அடுக்காது”, “உங்கள் ஜாதிக்குள் திருமணம் செய்யாதீர்கள்”, “ஜாதிக்குள் திருமணம் செய்ய கட்டாயப்படுத்துவது அதர்மம்”, “பார்ப்பனர்கள் யாருக்கும் உயர்ந்தவர்கள் அல்ல”, “சனாதனம் ஜாதீயத்தை எதிர்க்கிறது”, “தீண்டாமை என்பது கொடிய பாவம்” என்றெல்லாம் பதாகைகளைப் பிடித்துக்கொண்டு ஊர்வலம் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அதுவும் விபூதி, திருமண் முதலிய சின்னங்களை நெற்றியில் அணிந்து, குடுமி வைத்தவர்கள் இப்படியெல்லாம் பதாகைகளை ஏந்தி வந்தால் எவ்வளவு அழகாக இருக்கும் என நினைத்துப் பார்க்க வேண்டும். ஆனால் அப்படியெல்லாம் இவர்கள் செய்வதில்லை. சனாதனம் என்றால் இதுதான், சனாதனம் என்றால் அதுதான் என்று வாயினால் பசப்புகிறார்களே தவிர, திட்டவட்டமாக களத்தில் இறங்கி ஜாதி மறுப்பு பிரச்சாரம் செய்வதில்லை. சனாதன யூதர்களைப் பாருங்கள். பாலஸ்தீனத்தை விடுவியுங்கள். பாலஸ்தீனியர்களிடம் இறையாண்மையைக் கொடுங்கள் என்று திட்டவட்டமாக கோருகிறார்கள். இந்துத்துவத்தின் புண்ணிய பூமி கருத்தாக்கம் யூதர்களுக்கு கடவுள் வாக்களித்த பூமி இஸ்ரேல் என்று சொன்னதால் எப்படி தேசம் என்ற நவீன அரசியல் அடையாளம், மதத்துடன் பிணைந்துகொண்டதோ, அது போன்றதுதான் சாவர்க்கர் புண்ணிய பூமி என்ற கருத்தாக்கத்தை உருவாக்கியதும். உண்மையில் இந்துத்துவத்தின் சாராம்சமே அதுதான். அதன்படி யார் ஒருவரின் புண்ணிய தலங்கள் இந்திய எல்லைக்குள் இருக்கிறதோ அவர்தான் இந்தியர். முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் ஆகியவர்களின் புண்ணிய தலங்கள் இந்தியாவுக்கு வெளியே இருப்பதால் அவர்கள் இந்தியாவின் முழுமையான குடிமக்கள் கிடையாது. இவ்வாறு நாட்டின் குடியுரிமையை மதம் என்பதுடன் பிணைப்பதுதான் மத அடையாள தேசியம் ஆகும். அரசாங்கம் அதிகாரபூர்வ மதமாக ஒரு மதத்தை ஏற்பது என்பது கூட பிரச்சினை கிடையாது. குடியுரிமையை, குடிநபரின் வரையறையை மதம் என்பதுடன் இணைப்பதுதான் கடுமையான பிரச்சினை. ஆங்கிலத்தில் தேசம் என்ற வார்த்தையை ‘நேஷன்’ என்று கூறுகிறோம். இதன் மூலச் சொல் லத்தீன் மொழியில் பிறப்பினை குறிப்பதாகும். ஒருவரின் பிறப்பு சார்ந்ததே அவரது தேசம் என்பது. உதாரணமாக அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் என்பவர் இருக்கிறார். இவரின் தாயார் சியாமளா சென்னையில் பிறந்தவர். தந்தை ஜமைக்காவில் பிறந்தவர். ஆனால், கமலா அமெரிக்காவில் பிறந்ததால் அந்த நாட்டின் குடிநபர் ஆகிறார். அதனால்தான் அவர் தேர்தலில் போட்டியிட முடிகிறது. துணை அதிபராக முடிகிறது. அமெரிக்காவில் பல இந்து கோயில்களைக் கட்டியுள்ளார்கள். இந்து மதத்தினரும் அங்கே அதிபர் தேர்தலில் பங்கேற்கிறார்கள். இங்கிலாந்து நாட்டின் பிரதமராக ஒரு இந்து, ரிஷி சுனக் இருக்கிறார். அவர் காசியை புண்ணிய தலமாக நினைத்தால் அது குறித்து இங்கிலாந்தில் யாரும் கவலைப்படவில்லை. மதத்துக்கும் குடியுரிமைக்கும் இந்த நாடுகள் முடிச்சுப் போடவில்லை. ஆனால் சாவர்க்கரின் இந்துத்துவம் முடிச்சுப் போடுகிறது. இந்தியாவை புண்ணிய பூமியாகக் கொள்ளாதவர்கள் இந்திய குடிமக்களாக இருக்க முடியாது என்ற கருத்தை அது விதைக்கிறது. இஸ்ரேலின் அடிப்படையான மோசஸ் கதைபோல சாவர்க்கர் ராமாயணத்தைப் பயன்படுத்துகிறார். ராமர்தான் இந்தியாவை ஒரே நாடாக இணைத்தவர் என்று கூறுகிறார். ராமாயணம் ஒரு புராணக்கதையாகும். ஆதாரபூர்வமாக நிறுவப்பட்ட வரலாறு அல்ல. மேலும் வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப்படும் இலங்கை என்பது மத்தியப் பிரதேசத்தில் இருப்பதாகக் கருதும் ஆய்வாளர்கள் பலர் இருக்கிறார்கள். புராணத்தை வரலாறாக ஆக்குவதிலும், மதத்தை தேசமாக ஆக்குவதிலும் இஸ்ரேலின் முன்மாதிரிக்கும், இந்துத்துவ சிந்தனைக்கும் நிறைய ஒப்புமைகளைக் காணலாம். உள்ளபடி சொன்னால் குடியுரிமை சீர்திருத்தச் சட்டம் என்பது ஒருவகையில் இந்துக்களின் “திரும்ப வரும் உரிமை” எனலாம். பிற நாடுகளில் உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் ஒருவர் இந்தியாவிடம் அடைக்கலம் கேட்டால் கொடுப்பதற்கான விதிமுறைகளை வகுக்காமல், இந்துக்களாக இருந்தால் குடியுரிமை வழங்கலாம், இஸ்லாமியர்கள் என்றால் முடியாது என்றெல்லாம் விதிமுறைகள் வகுப்பது குடியுரிமையையும், மதத்தையும் இணைக்கும் செயல் என்பதால்தான் போராட்டங்கள் வெடித்தன. இந்துத்துவ அணியினரின் வெளிப்படையான இஸ்ரேல் ஆதரவு என்பது, முஸ்லிம்களை பொது எதிரியாக காண்பதிலிருந்து, பலவகையான தொடர்பு புள்ளிகளைக் கொண்டது என்றே நினைக்கத் தோன்றுகிறது. இஸ்ரேல் மேலும் வலுப்பெறுவது இந்துத்துவர்களின் வேலை திட்டத்தை ஊக்கப்படுத்தவே செய்யும். ‘மதமே தேசம்! புராணமே வரலாறு’ என்ற முழக்கத்துக்கு இஸ்ரேல் மிகவும் அனுசரணையான சிறந்த முன்மாதிரியாகும். கட்டுரையாளர் குறிப்பு: ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி https://minnambalam.com/political-news/israel-and-bjp-exploiting-using-religon-rajan-kurai/
  3. ஆரிய மாயையும், இஸ்ரேல் உருவாக்கமும் – வரலாற்று விபரீதங்கள் MinnambalamOct 16, 2023 07:15AM ராஜன் குறை யூதர்களின் குடியேற்ற நாடாகிய இஸ்ரேல் அது உருவாகிய காலம் 1940-கள் முதலே பாலஸ்தீன மண்ணின் மைந்தர்களாகிய பாலஸ்தீன அரேபிய-இஸ்லாமிய மக்களின் உரிமைகளைப் பறித்தும், நிலத்தை ஆக்கிரமித்தும், அவர்களை பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு ஆளாக்கியும் வருகிறது. இன்றைய நிலையில் இஸ்ரேலின் மக்கள் தொகை கிட்டத்தட்ட ஒரு கோடி. பாலஸ்தீனியர்கள் பாலஸ்தீனத்தின் மேற்குப் பகுதியில் முப்பது லட்சம் பேரும், காஸாவில் இருபது லட்சம் பேரும் உள்ளனர். மொத்தம் ஐம்பது லட்சம் பாலஸ்தீனியர்கள். இதைத்தவிர இஸ்ரேல் குடிமக்களாகவும் முஸ்லிம்கள் உள்ளனர். இஸ்ரேல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் யூதர்களின் குடியிருப்பாக வலிந்து உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஒத்துழைப்புடன் அது ஒரு தேசிய அரசாக நிலைநிறுத்தப்பட்டது. ஆனால் அன்றிலிருந்தே அந்த நிலத்தில் வாழ்ந்த பாலஸ்தீன மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது. அவர்கள் இஸ்ரேலின் இரண்டாம்தர குடிமக்களாக வாழ்வதா, இஸ்ரேலின் மேலாதிக்கத்தில் வாழ்வதா, அவர்களது உரிமைகள் என்ன, அவர்கள் சுயாட்சி எத்தகையது என விடை தெரியாத கேள்விகள் நிலவுகின்றன. இந்த துயர வரலாறு மிகவும் நீண்டது; சுருக்கிக் கூற கடினமானது. மகாத்மா காந்தி இங்கிலாந்து ஆங்கிலேயர்களுக்கு சொந்தமானது என்பது போல பாலஸ்தீனம் பாலஸ்தீன மக்களுக்கு சொந்தமானது; அங்கே யூதர்களைக் குடியேற்றுவது தவறு என்று 1938ஆம் ஆண்டிலேயே எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றைய நிலையில் குறிப்பாக காஸா பகுதி ஒருபுறம் கடலாலும், மற்ற எல்லா திசைகளிலும் இஸ்ரேல் நாட்டாலும் சூழப்பட்டுள்ளது. காஸாவினுள் பொருட்கள் செல்வதை இஸ்ரேல் கட்டுப்படுத்தி வருகிறது. ஒரு விதத்தில் காஸா ஒரு திறந்தவெளி சிறைச்சாலை எனலாம். இஸ்ரேலின் மேற்பார்வையில் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பிரதேசம், இதில்தான் இருபது லட்சம் பாலஸ்தீனியர்கள் வாழ்கிறார்கள். இந்த பகுதி ஹமாஸ் அமைப்பால் ஆளப்பட்டு வருகிறது. கடந்த வாரம் ஹமாஸ் இஸ்ரேலினுள் புகுந்து குடிமக்களைத் தாக்கியுள்ளது. ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவியது. அதற்கு பதிலடியாக இஸ்ரேல் காஸாவின் மீது ஏவுகணைகளை ஏவியதுடன், ராணுவத்தையும் காஸாவினுள் அனுப்பியுள்ளது. ஏராளமான மக்கள் கொல்லப்படுகிறார்கள்; சொத்துகள் அழிக்கப்பட்டுள்ளன. மின்சாரம் உட்பட பல அத்தியாவசியப் பொருட்கள் காஸாவினுள் செல்லாமல் இஸ்ரேல் தடுத்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள முற்போக்கு சிந்தனையாளர்கள் ஹமாஸின் வன்முறையைக் கண்டித்தாலும், அதற்கான காரணம் இஸ்ரேல் பாலஸ்தீனிய சுயாட்சிக்கான ஒரு முறையான அரசியல் தீர்வை காணாததுதான், அதன் ஆக்கிரமிப்பு நோக்குதான் என்பதை சுட்டிக்காட்டுகின்றனர். இஸ்ரேலின் முற்போக்கு சிந்தனையாளர்களே பிரதமர் நெடன்யாஹூ மீதுதான் குற்றம் சுமத்துகின்றனர். அவருக்கெதிராக வெகுமக்கள் கிளர்ச்சிகள் இஸ்ரேலில் நடந்து வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை மகாத்மா காந்தியின் கூற்றைத் தொடர்ந்து பாலஸ்தீனிய மக்களின் அரசியல் உரிமைகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வந்துள்ளது. பாலஸ்தீனிய தலைவர் யாசர் அராபத் இந்தியாவுக்கு வந்துள்ளார். பிரதமர் இந்திரா காந்தி அவரை வரவேற்றுள்ளார். பாலஸ்தீனியர்களுக்கான சுயாட்சி அரசை உருவாக்க வேண்டும் என்பதே இந்தியாவின் குரலாக இருந்துள்ளது. ஜனதா கட்சி ஆட்சியில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பேயி இஸ்ரேல் ஆக்கிரமித்த நிலத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று கூறும் காணொலி இப்போது மீண்டும் வலைதளங்களில் காணக் கிடைக்கிறது. ஆனால், நரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி அரசு இஸ்ரேலுக்கு ஆதரவான அறிக்கைகளை வெளியிட்டது. பாலஸ்தீன பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்று கூறினாலும், இஸ்ரேலின் கடுமையான எதிர் தாக்குதலை, காஸாவிலுள்ள குடிமக்களைக் கொன்று குவிப்பதை இந்தியா கண்டிக்க இன்னும் முன்வரவில்லை. இந்தியாவில் சங்க பரிவாரம் சார்ந்த இந்துத்துவர்கள் பலர் இஸ்ரேலுக்கான கடுமையான ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். பாலஸ்தீனியர்களும் முஸ்லிம்கள் என்பதால் ஹமாஸை அழித்தொழிக்க வேண்டும் என்றும், தாங்கள் இஸ்ரேலுக்கு வந்து போராடத் தயாரென்றும் பல்வேறு இந்துத்துவவாதிகள் கூறி வருகின்றனர். முஸ்லிம்களுக்கு எதிரான மதவெறியில் இந்துக்களும், யூதர்களும் ஒன்றுபடலாம் என இவர்கள் கூறுவது தெளிவு. இப்படி இந்துத்துவம் இஸ்ரேலை ஆரத்தழுவுவது ஒரு வரலாற்று முரண் எனலாம். ஏனெனில் ஆரியர்கள் குறித்த கதையாடல்களே ஐரோப்பாவில் யூத வெறுப்பை அதிகரித்தது; அதுவே ஹிட்லரை மிகக் கொடூரமான யூத இன அழிப்புக்கு இட்டுச் சென்றது என்பதுதான் வரலாற்றின் மிகப்பெரிய துயரம். இந்த ஆரிய மாயை எப்படி உருவானது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆரியர்கள், யூதர்கள், பிராமணர்கள்: சில அடையாளங்களின் கதை பேராசிரியர் டோரதி ஃபிகைரா (Dorathy Figueira,b.1955) ஓர் அருமையான ஆய்வு நூலை சமீபத்தில் எழுதியுள்ளார். அதன் பெயர் Aryans, Jews, Brahmins: Theorizing Authority through Myths of Identity (New Delhi: Navayana, 2015). இந்த நூல் எப்படி வேத கால ஆரியர்களைப் பற்றி உருவாக்கப்பட்ட மிகையான புகழ்ச்சிகள், கட்டுக்கதைகள் சுருக்கமாகச் சொன்னால், ஆரிய மாயை ஐரோப்பாவில் ஆரிய இனவாதத்தைத் தோற்றுவித்தது, யூதர்கள் மீதான வெறுப்பைப் பரவலாக்கியது என்பதை விரிவான ஆய்வின் மூலம் எடுத்துரைக்கும் நூலாகும். இது எப்படி நடந்தது என்றால், பதினாறாம், பதினேழாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வரும் ஐரோப்பியர்கள் இங்கு புழங்கும் சமஸ்கிருத மொழி குறித்து அறிந்து கொள்கிறார்கள். அந்த மொழியில் ஏராளமான நூல்கள் இருப்பதையும், அவை மிகவும் தொன்மையானவை என்றும் அறிகிறார்கள். அதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல சமஸ்கிருத சொற்களுக்கும், ஐரோப்பிய மொழிகளின் சொற்களுக்கும் நிறைய ஒப்புமைகள் இருப்பதையும் கவனிக்கிறார்கள். சமஸ்கிருத மொழியை பண்டைய இந்தியாவில் பேசியவர்கள் ஆரியர்கள் என்று தெரியும்போது அவர்களுக்கு ஆரிய இனம் பற்றி பெரும் வியப்பு தோன்றுகிறது. பலவிதமான கற்பனைகளும் தோன்றுகின்றன. ஆங்கிலம், ஃபிரெஞ்சு, ஜெர்மனி ஆகிய மொழிகளில் சமஸ்கிருதம் குறித்தும், அதன் இலக்கியம் குறித்தும் எழுதுகிறார்கள். பலர் சமஸ்கிருதம் பயில்கிறார்கள். சமஸ்கிருத நூல்களை தப்பும் தவறுமாக மொழியாக்கம் செய்கிறார்கள். பலர் தங்கள் சொந்த சரக்கையும் சேர்த்து இதுதான் சமஸ்கிருத நூல் என்று எழுதி ஐரோப்பிய மொழிகளில் பிரசுரிக்கிறார்கள். பதினெட்டாம் நூற்றாண்டில் (1700-1800 CE) என்லைட்டன்மெண்ட் என்னும் அறிவொளிக்கால ஐரோப்பிய சிந்தனையாளர்கள் பலருக்கும் கிறிஸ்துவ மத நிறுவனங்கள் மீது கடும் விமர்சனம் நிலவியது. குறிப்பாக கத்தோலிக்க சமய நிறுவனம், அதன் போலித்தனம், போப் பாண்டவர், பாதிரியார்களின் ஊழல் மிகுந்த வாழ்க்கை, அரசியல் தலையீடுகள் எல்லாவற்றின் மீதும் அவர்களுக்கு விமர்சனம் இருந்தது. கிறிஸ்துவமும், அதன் முன்னோடியான யூத மதமும்தான் தங்கள் பண்பாட்டின் வேர்கள் என்று நினைப்பது அவர்களுக்கு உவப்பாக இல்லை. அந்த நிலையில் சமஸ்கிருதம், ஆரிய பண்பாடு குறித்து கேள்விப்பட்டதும் ஐரோப்பிய சிந்தனையாளர்கள் பலர் ஆரியமே யூதர்களைவிட மூத்த பண்பாடு, அதுவே உலக நாகரிகத்தின் துவக்கம், ஐரோப்பியர்களின் பண்பாடும் ஆரிய பண்பாட்டின் தொடர்ச்சிதான் என்று நம்பத் தலைப்படுகிறார்கள். முற்போக்கான அரசியல் சிந்தனைகளுக்காகவே அந்த ஐரோப்பிய சிந்தனையாளர்களை அறிந்துள்ள நாம், அவர்களது ஆரிய மோகத்தைக் குறித்து கவனித்ததில்லை. உதாரணமாக வோல்டேரை (Voltaire, 1694-1778) எடுத்துக்கொள்வோம். அரசியல் கோட்பாடுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். ஃபிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட சிந்தனையாளர்களில் ஒருவர். வோல்டேர் அவருக்குக் கிடைத்த அரைவேக்காட்டு ஆய்வு நூல்களின் அடிப்படையில் ஆரியர்களே உலக பண்பாடுகளின் தோற்றுவாய் என அறுதியிட்டுக் கூறுகிறார். வேதங்கள் என்ன என்று தெரியாமலேயே வேதங்களே பண்பாட்டின் துவக்கம் என்று கூறுகிறார். பிராமணர்களே உலகின் முதல் இறையியலாளர்கள். சீனா, எகிப்து, ஜப்பான் என எல்லா நாடுகளிலிருந்தும் சென்று பிராமணர்களிடமே இறையியல் பயின்றார்கள் என்றெல்லாம் அவர் கூறுகிறார். யூதர்கள் பிராமணர்களிடமிருந்துதான் தங்கள் சிந்தனைகளை களவாடினார்கள் என்று கூறுகிறார். அவருக்கு யூதர்களை அறவே பிடிக்காது. வோல்டேரைப் போல பலரும் ஆரியமே பண்பாட்டின் ஆதிமூலம், யூதர்கள் அதற்குப் பின் வந்தவர்கள்தான் என்று எழுதுகிறார்கள். யூத, கிறிஸ்துவ மதங்களின் முன்னோடி ஆதி ஆரிய மதமே என்று நினைக்கிறார்கள். அதாவது வேதங்களுக்கும் முன்பு பிரம்மம் என்ற ஒற்றைக் கடவுளை சிந்தித்த மதம் என்று ஆரிய மதத்தை புகழ்கிறார்கள். ஆனால் இந்தியாவில் அந்த ஆதி மதம் பின்னால் சீரழிந்துவிட்டது, பல்வேறு கடவுள்கள், புராணங்கள், பலியிடும் சடங்குகள் என சின்னாபின்னமாகிவிட்டது என்றும், அதற்கு இந்தியாவின் தட்பவெப்பமே காரணம் என்றும் பலர் எழுதுகிறார்கள். ஐரோப்பிய காலனீய சிந்தனை இதை இறுகப் பற்றிக்கொள்கிறது. பண்டைய இந்தியாவின் ஆரியப் பண்பாடு மிகவும் உயர்ந்தது. ஆனால் அது காலப்போக்கில் சீரழிந்து பலதெய்வ வழிபாடுகளாக, ஜாதியமாக, மூட நம்பிக்கைகளாக, புராணக் கதைகளாக சிதைந்து, தேங்கிப் போய்விட்டது. ஐரோப்பியர்கள்தான் அந்த தேக்கத்திலிருந்து இந்தியாவை மீட்டு மீண்டும் முன்னேற்றப் பாதையில் செலுத்த வேண்டும் என்று தொடர்ந்து எழுதுகிறார்கள். அது ஒருபுறம் காலனீய ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த உதவினாலும், மற்றொரு புறம் ஆரிய பண்பாடே இந்திய, உலகப் பண்பாட்டின் தோற்றுவாய், பிராமணர்களே உலகின் முதல் இறையியலாளர்கள் என்றெல்லாம் மிகையான கற்பிதங்களையும் சேர்த்தே பரப்புகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்த பண்பாடு குறித்த சிந்தனை இனவாதமாக (Racism) மாறுகிறது. அதாவது உடற்கூற்றின் அடிப்படையில் ஆரியர்களை பிரித்து அறியலாம் என்ற எண்ணம் ஐரோப்பாவில் வலுவடைகிறது. தோலின் நிறம், தாடை, மூக்கு ஆகியவற்றின் அமைப்பு, உயரம், கண்களின் நிறம் என்பன போன்ற அடையாளங்கள் மூலம் தூய ஆரிய ரத்தம் உடையவர்கள் யார் என்பதைக் காணலாம் என்று நினைக்கத் தொடங்குகிறார்கள். ஆனால் இந்தியாவின் ஆரியர்களுக்கு இது பொருந்தாது. இந்தியாவில் ஆரியர்களுக்கு அங்கிருந்த கறுப்பு நிற மனிதர்களுடன் ரத்தக்கலப்பு ஏற்பட்டுவிட்டது. அதனால் இந்தியர்கள் யாரும் ஆரியர்கள் இல்லையென ஐரோப்பிய ஆரிய இனவாதிகள் நினைத்தார்கள். இந்தியாவில் ஆரியர்கள், ஆரியர் அல்லாதவர்கள், திராவிடர்கள் ஆகியவை பண்பாட்டு அடையாளங்களாக பார்க்கப்பட்டனவேயன்றி, உடற்கூறு சார்ந்த இனமாகப் பார்க்கப்படவில்லை. பிராமணர்கள் தங்களை ஆரியர்கள் எனக் கருதிக்கொண்டாலும், தீண்டாமை போன்றவற்றை கடைப்பிடித்தாலும், அவர்கள் வரலாற்றுக் காலம் முன்பிருந்தே பிற இனங்களுடன் கலந்து வாழ்ந்ததால் உடற்கூறு என்ற அளவில் வேறுபடுத்துவது சாத்தியமில்லை எனலாம். வேதங்களிலேயே இனக்கலப்பு பேசப்பட்டிருப்பதை தொமிலா தாப்பர் போன்றவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால் வட இந்தியர்களும், தென்னிந்தியர்களும் வேறு, வேறு பண்பாட்டைச் சேர்ந்தவர்கள் என்று விவேகானந்தரே அமெரிக்க சொற்பொழிவில் கூறுகிறார். தென்னிந்தியர்கள் திராவிட பண்பாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வர்ண தர்மத்தை உருவாக்கிய ஆரிய பண்பாட்டைச் சேர்ந்தவர்களல்ல என்பது திராவிட சித்தாந்தம். ஆனால் ஐரோப்பாவில் யூதர்கள் மீதான பண்பாட்டு விமர்சனம், வெறுப்பு போன்றவை இந்த ஆரிய இன அடையாளவாதத்துடன் சேர்ந்தபோதுதான் ஹிட்லரின் யூத இன அழிப்புக் கோட்பாடு இருபதாம் நூற்றாண்டில் தோன்றியது. ஹிட்லரின் ஜெர்மானிய படைகள் 1941 முதல் 1945 வரை கிட்டத்தட்ட அறுபது லட்சம் யூதர்களைக் கொன்று குவித்தது. யூதர்களை முதலில் தனிமைப்படுத்தி கான்சென்ட்ரேஷன் காம்ப் என்னும் முகாம்களில் தங்கவைத்தார்கள். பின்னர் அவர்களை பலவகைகளில் கும்பல், கும்பலாகக் கொன்றார்கள். இந்த கொடூர நிகழ்வு ஹோலோகாஸ்ட் என்று அழைக்கப்படுகிறது. இஸ்ரேல் உருவாக்கம் பாலஸ்தீனம் ரோமப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலத்திலேயே யூதர்கள் அங்கிருந்து இடம்பெயரத் தொடங்கிவிட்டார்கள். அதன்பின் அப்பகுதி முழுவதும் அரேபிய, இஸ்லாமிய ஆட்சிக்கு உட்படுவதற்கு முன்னமே யூதர்கள் பெருமளவு இடம்பெயர்ந்து ஐரோப்பா முழுவதும் குடியேறி விட்டார்கள். யூதர்கள் தனியான ஒரு மத அடையாளத்துடன், பண்பாட்டுடன் வாழ்ந்தார்கள். அவர்களில் சிறந்த சிந்தனையாளர்கள், கலைஞர்கள் பலர் தோன்றினாலும், அவர்கள் முக்கியமாக பணத்தை வட்டிக்கு தருபவர்களாகவும் இருந்துள்ளார்கள். அதனால் செல்வந்தர்களாக இருந்தார்கள். இதன் காரணமாக பெரும்பான்மை கிறிஸ்துவ மக்களுக்கு அவர்கள் மீது ஒவ்வாமை பல நூற்றாண்டுகளாக நிலவி வந்துள்ளது. ஷேக்ஸ்பியரின் வெனிஸ் நகரத்து வியாபாரி நாடகத்தில் வரும் இரக்கமற்ற வட்டிக்காரன் ஷைலக் பாத்திரம் புகழ்பெற்றது. இந்த நிலையில்தான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே யூதர்கள் அவர்கள் ஆதி நிலமான இஸ்ரேல்/பாலஸ்தீனத்துக்குத் திரும்புவது குறித்த சொல்லாடல் உருவாகத் தொடங்கியது. சிறிது, சிறிதாக சிலர் சென்று குடியேறத் தொடங்கினார்கள். இது முதல் உலகப் போருக்குப் பின் வலுவடைந்தது. பாலஸ்தீனப் பகுதி பிரிட்டிஷ் கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் இது சாத்தியமாகியது. இங்கிலாந்தின் மந்திரிகளில் ஒருவரான பெல்ஃபோர் 1917ஆம் ஆண்டு யூதர்களுக்கான ஒரு தாயகத்தை உருவாக்குவதாக அறிவித்தார். இது குடியேற்றங்களை அதிகரித்தது. ஆனால், ஹிட்லரின் யூத அழிப்பு இஸ்ரேல் என்ற தேசத்தை உருவாக்குவதைக் கட்டாயமாக்கியதுடன், அதை உலகின் பார்வையில் நியாயப்படுத்தவும் செய்தது. அதனால் சர்வதேச அமைப்புகள் பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வந்த மண்ணின் மைந்தர்களான அரேபிய முஸ்லிம்களைப் பற்றி கவலைப்படவில்லை எனலாம். யூதர்களின் தேசமாக இஸ்ரேல் உருவானபின் அங்கிருந்த பாலஸ்தீனியர்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. அவர்கள் பலர் துரத்தியடிக்கப்பட்டார்கள். இரண்டாம்தர குடிமக்கள் ஆக்கப்பட்டார்கள். அதிலிருந்து துவங்கியதுதான் தங்கள் உரிமை மீட்புக்கான பாலஸ்தீனியர்கள் போராட்டம். தங்களை ஆரியப் பண்பாட்டின், அதன் சனாதன தர்மத்தின் வாரிசுகளாகக் கருதிக்கொள்ளும் இந்துத்துவர்கள் இன்று யூதர்களின் இஸ்ரேலுக்கு ஆதரவாகப் பேசுவது ஒரு வரலாற்று முரண் அல்லவா? இஸ்லாமிய வெறுப்பே அவர்களை இன்று இணைக்கிறது. இன, மத அடையாள வெறுப்புச் சொல்லாடல்களுக்கு என்றைக்குத்தான் மானுடம் முடிவு கட்டி, “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என ஒன்றுபடும் என்று தெரியவில்லை. கட்டுரையாளர் குறிப்பு: ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி https://minnambalam.com/political-news/annadurai-arya-mayai-israel-birth-historical-error-by-rajan-kurai/
  4. சனாதனமும், பாரதமும்: ஆரிய மாயையின் வரலாற்று வடிவங்கள்! Sep 11, 2023 07:00AM IST ராஜன் குறை அண்ணா தன் நூலுக்கு ஆரிய மாயை என்று பெயர் சூட்டக் காரணம் ஆரியம் பிறரை மயக்கி தன்னை ஏற்கச் செய்யும் தன்மை கொண்ட து என்பதைக் குறிக்கத்தான். ஆரியம் என்று ஒன்றுமில்லை; அப்படி இருப்பது போல மாயத்தோற்றம் மட்டும்தான் இருக்கிறது என்ற பொருளில் அவர் அந்த பெயரைச் சூட்டவில்லை. ஆரியம் என்று ஒன்று இருக்கிறது. அது பிறருக்கு நன்மை தருவது போல தோற்றமளித்து அவர்களையும் தன் கருத்தியலை ஏற்கச் செய்கிறது என்பதைக் குறிக்கவே அவர் ஆரிய மாயை என்று பெயர் வைத்தார். நாம் அந்த மாயைக்கு ஆட்படாமல், ஆரியத்தின் உண்மையான தன்மையை அறிய வேண்டும். நானும், நண்பர்கள் ரவீந்திரன் ஸ்ரீராமச்சந்திரன், வி.எம்.எஸ். சுபகுணராஜன் ஆகிய மூவரும் சேர்ந்து எழுதியுள்ள “Rule of the Commoner: DMK and the Formations of the Political in Tamil Nadu, 1949-1967” என்ற ஆய்வு நூலில் ஆரிய மாயை என்பதை Aryan Allure என்றுதான் மொழியாக்கம் செய்துள்ளோம். இதற்கு முன்பு செய்தவர்கள் Aryan Illusion என்று மொழியாக்கம் செய்தார்கள். அது தவறான பொருளாகும். ஆங்கிலத்தில் Allure என்றால் கவர்ந்திழுப்பது. இன்று வரை ஆரியம் அதே வேலையைத்தான் செய்கிறது. இரண்டு வார்த்தைகளை வைத்துக்கொண்டு பெரும் மாய்மாலங்களை செய்கிறார்கள். ஒன்று சனாதனம். மற்றொன்று பாரதம். இரண்டுமே ஆரியர்கள் உருவாக்கிய சமஸ்கிருத மொழிச் சொற்கள். மற்ற மொழிகளிலும், தமிழிலும் புழங்குகின்றன என்றாலும். இந்த இரண்டு சொற்களை எவ்வாறு புரிந்துகொள்வது, அவை குறித்த சர்ச்சை என்ன, ஆரிய மாயை எப்படி செயல்படுகிறது என்பதை விரிவாகப் பார்ப்போம். சனாதனம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஒருங்கிணைத்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய தி.மு.க இளைஞரணித் தலைவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் என்பதை டெங்கு, காலரா, கொரோனா கிருமிகளை அழிப்பது போல அழிக்க வேண்டும் என்று அற்புதமாக அறை கூவினார். திடீரென்று வானமே இடிந்து விழுந்தது போல அமித் ஷா முதல், உள்ளூர் அம்பிகள் வரை கொந்தளிக்கிறார்கள். நூற்றைம்பது ஆண்டுகளாக தமிழ்நாட்டில் சனாதன எதிர்ப்பு நிலவி வருகிறதே, இப்போது என்ன புதுப் பிரச்சினை என்று பார்த்தால் ஆரியத்தின் தகிடுதத்தங்களை அம்பலப்படுத்தலாம். சனாதனம் என்பது காலத்தால் அழியாத உயர்நெறி. மனிதர்கள் மகிழ்ச்சியாக, அமைதியாக இணைந்து வாழ உதவும் ஒழுக்க நெறி. அதைப்போய் அழிக்கலாமா என்று தமிழ் தொலைக்காட்சிகளில் ஆரிய முகவர்கள் கேட்கிறார்கள். வட நாட்டில் சனாதன தர்மம் என்பதுதான் இந்து மதத்தின் பெயர்; சனாதனத்தை அழிப்பது என்றால், இந்து மதத்தை அழிப்பது என்று பொருள் என்று மாய்மாலம் செய்கிறார்கள். இதில் ஏற்படும் குழப்பங்கள் கொஞ்ச, நஞ்சமல்ல. தமிழ்நாட்டில் சனாதனம் என்பதன் பொருள் காலத்திற்குப் பொருந்தாத பத்தாம்பசலித்தனம். ஆங்கிலத்தில் Orthodoxy என்பார்கள். அதாவது மூடப் பழக்கங்களை விடாமல் கடைப்பிடிப்பது. மாற்றங்களை ஏற்க மறுப்பது. எல்லா காலங்களிலும் எல்லா மதங்களிலும், சமூகங்களிலும் மாற்றங்களை ஏற்பவர்கள் இருப்பார்கள். மாற்றங்களை ஏற்க மறுத்து பழைய பழக்க, வழக்கங்களையே பின்பற்ற வேண்டும் என்பவர்கள் இருப்பார்கள். இரண்டாவது வகையினர்தான் சனாதனி. அதனால்தான் ஜாதீயத்தை இன்றும் கடைப்பிடிப்பவர்களை சனாதனி என்கிறோம். எதில் எது சரி? சனாதனம் என்றால் அழியாத மானுடப் பொது நெறியா? சனாதனம் என்றால் இந்து மதமா? சனாதனம் என்றால் வர்னாஸ்ரமம், ஜாதீயம் உள்ளிட்ட மூடப்பழக்க, வழக்கங்களா? சனாதனம் என்றால் அழியாத மானுடப் பொதுநெறியா? தமிழ்நாட்டு தொலைக்காட்சிகளில் பேசும் பல தினுசான சங்கிகள், பார்ப்பனர்கள் இவ்வாறு சனாதனம் என்றால் அழியாத மானுடப் பொதுநெறி என்று பேசுகிறார்கள். சரி, அப்படி எந்த நூலில் கூறியுள்ளது, அதற்கான ஆதாரங்களைக் கூறுங்கள், அந்த நெறிகளுக்கான பட்டியலைக் கூறுங்கள் என்றால் ஏதேதோ பேசுகிறார்களே தவிர, இந்த நூலில் இந்த இடத்தில் இவைதான் நெறிகள், அவற்றின் பெயர்தான் சனாதன தர்மம் என்று சான்றாதாரம் காட்ட மாட்டேன் என்கிறார்கள். அதற்கு மாறாக சனாதன தர்மம் என்றால் என்ன என்று புரிந்துகொள்ள உதவியாக அறிஞர் பொ.வேல்சாமி முகநூலில் பகிர்ந்திருந்த 1907ஆம் ஆண்டு வெளியான நூலைப் பார்க்கலாம். இந்த நூலை பலரும் தொலைக்காட்சி விவாதங்களில் மேற்கோள் காட்டுகிறார்கள். இந்த நூலானது “காசிப்பிரதான ஹிந்து வித்யாசாலையின் சம்ரஷணை கமிட்டியார் தம் ஆட்சிக்குட்பட்ட சகல வித்யாசாலைகளிலும் சிறுவர்க்கு மதம், நீதி இவ்விஷயங்கள் கற்பிக்கப்படுவதற்கு” உருவாக்கியது. மூலம் எந்த மொழியில் இருந்தது என்று தெரியாவிட்டாலும், தமிழில் மொழியாக்கம் செய்து 1907ஆம் ஆண்டு “ஸனாதன தர்மம்” என்ற பெயரில் பிராட்வே மினர்வா பிரஸ்ஸில் அச்சடிக்கப்பட்டதான குறிப்புடன் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த நூலில் ஏராளமான சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன. இந்த நூலின் ஏழாம் அத்தியாயத்தில் 150ஆவது பக்கத்தில் நான்கு வருணங்கள் என்பது விளக்கப்பட்டுள்ளது. சனாதன தர்மத்தின் மிக முக்கியமான அம்சமே மக்களை வர்ணங்களாகப் பிரித்திருப்பதுதான் என்று பெருமையாக நூல் கூறுகிறது. ஆனால், இதில் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கம் சுவாரஸ்யமானது. முதலில் நாம் மறுபிறவி கோட்பாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆன்மா வேறு, சரீரம் என அழைக்கப்படும் உடல் வேறு. இந்த ஆன்மா என்பதுதான் குழந்தைப் பருவத்திலிருந்து ஒவ்வொரு பிறப்பின்போதும் மெள்ள ஒவ்வொரு வர்ணமாக வளர்ந்து வர வேண்டும். முதல் பிறவியில் அது குழந்தையாக இருக்கும்போது சூத்திர வர்ணத்தின் சரீரத்தில் பிறக்கும். அப்போது பிறர் சொற்படி கேட்டு, பிறருக்கு சேவை செய்ய வேண்டும். அப்படிச் சரியாக சேவை செய்தால் பிரமோஷன் கிடைத்து வைசிய வர்ணத்தில் பிறக்கும்; அடுத்து சத்திரிய வர்ணம்; எல்லா பிறவிகளிலும் சரியாக நடந்து கொண்டால் ஆன்மா நல்ல முதிர்ச்சியடைந்து பிராமண வர்ணத்தில் பிறக்கும். அதில் சரியாக நடந்துகொண்டால் அது பிரபஞ்ச முதலாளியான ஈஸ்வரனுடன் கலந்து விடும். இல்லாவிட்டால் மீண்டும் பிறப்புதான். இந்த நூல் என்ன கவலைப்படுகிறது என்றால் சமகாலத்தில் ஒரு குறிப்பிட்ட நிலையில் (ஸ்திதியில்) உள்ள ஆன்மா, தவறான சரீரத்தில் பிறந்துவிடுகிறது என்ற நிலையைத்தான். ஆரம்ப நிலையில் உள்ள ஆன்மா பிராமண உடலில் பிறந்து ஒழுங்காகச் செயல்படாமல் குழம்புகிறது. முதிர்ந்த நிலையில் உள்ள ஆன்மா சூத்திர ர் உடலில் பிறந்தால், பேசாமல் சேவை செய்யாமல் கலகம் செய்கிறது. இந்த ஆன்மா-உடல் தவறாக இணைந்துவிடுவதில் நிறைய குழப்பம் நிகழ்கிறது என்று இந்த நூல் கூறுகிறது. இதுதான் சனாதன தர்மத்தின் அடிப்படையா என்று கேட்டால் தமிழ் தொலைக்காட்சி பார்ப்பனர்கள், இல்லை இந்த நூல் இல்லை என்கிறார்கள். காஞ்சி சங்கராச்சாரியார் கூறியதை மேற்கோள் காட்டினால் அதுவும் இல்லை என்கிறார்கள். ஆனால் காலத்தால் அழியாத தர்மம் என்று கிளிப்பிள்ளைகள் போல சொல்கிறார்கள். சரி, ஊரிலுள்ள சாமியார்கள், சங்கராச்சாரியார்கள், ஜீயர்கள் எல்லோரையும் கூட்டி இதுதான் 2023ஆம் ஆண்டுக்கான சனாதன தர்மம் என்று தெளிவாக ஒரு நூலை எழுதுங்கள் என்றால் அதையும் செய்வதில்லை. கேட்டால் எங்கள் ஹிந்து மதத்தில் எத்தனையோ பிரிவுகள், சிந்தனைகள் என்பார்கள். வெட்டிப்பேச்சு மாய்மாலத்தைத் தவிர ஆய்வு மனப்பான்மையோ, அறிவு நேர்மையோ இல்லாமல் தமிழ்நாட்டில் ஆரிய மாயை வேலை பார்க்கிறார்கள். சனாதனம் என்றால் இந்து மதமா? இங்கேதான் பெரிய பிரச்சினை. காசி வித்தியாசாலை நூல் தெளிவாக சனாதன மதம், ஆரிய மதம், ஹிந்து மதம் எல்லாம் ஒன்றுதான் என்று கூறுகிறது. அதாவது பார்ப்பனர்களின் மதம். இங்கே பிரச்சினை என்னவென்றால் இந்தியா முழுவதும் கும்பிடப்படும் சாமிகள் எல்லாவற்றிலும் பார்ப்பனர்கள் அவர்கள் லேபிளை ஒட்டி விட்டார்கள். எல்லா தரிசனங்களும் இந்து என்கிறார்கள். உதாரணங்களைப் பார்ப்போம். தமிழ் சைவ சித்தாந்தம் ஒரு தனித்துவமான தரிசனம். இதைப் பயின்ற சான்றோர்கள் வேத அதாவது வைதீக மரபை ஏற்பதில்லை. சோமசுந்தர பாரதியார் அவர் திருமணத்தில் பார்ப்பன புரோகிதர்களையோ, சடங்குகளையோ அனுமதிக்கவில்லை. தமிழ் சைவ தரிசனத்தில் நால்வர்ண கோட்பாட்டை குறித்த விளக்கங்களோ, விதிகளோ இல்லை. அதனால் வடலூர் ராமலிங்க சுவாமிகள் சமரச சன்மார்க்கம் என்ற தரிசனத்தையும், அருட்பா என்ற பாடல் தொகுப்பையும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வழங்கினார். ஆனால், இப்போது இவையெல்லாமே இந்து மதம் என்கிறார்கள். ஆளுநர் ரவி சனாதனத்தை எதிர்த்த வள்ளலாரே சனாதனத்தின் உச்சம் என்று கூச்சமில்லாமல் பொய் பேசுகிறார். சத்தியவேல் முருகனார் போன்ற சைவப் பெரியோர்கள் தமிழ் சைவம், இந்து மதம் அல்ல என்று கூறினாலும் அதை ஏற்றுக்கொள்வதில்லை. இந்தியாவில் உள்ள எத்தனையோ தரிசனங்கள், வழிபாட்டு முறைகள், தெய்வங்கள் ஆரியர்களின் வேதகால மூலங்களுக்குத் தொடர்பில்லாதவை. ஆனால், அனைத்தையும் தங்கள் செல்வாக்குக்குள் அடக்க விரும்பும் பார்ப்பனர்கள் எல்லாவற்றிலும் தங்கள் சனாதன லேபிளை ஒட்டி, எல்லாம் இந்து மதம் என்று சாதிக்கிறார்கள். சனாதனம் என்பது மூடப் பழக்கங்களா? பார்ப்பனரானாலும் வைணவர்களிடையே ஜாதி வேற்றுமை பார்ப்பதை கடுமையாக எதிர்த்தார் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ராமானுஜர். பார்ப்பனரல்லாதவரானாலும் தன் குருவாக நினைத்த திருக்கச்சி நம்பிகளை அவர் மனைவி அவமரியாதை செய்ததால், மனைவியைப் பிரிந்தார். அவருடன் முரண்பட்ட பார்ப்பனர்கள்தான் சனாதனிகள். ராமானுஜர் மாற்றத்தை, சமத்துவத்தை சிந்தித்தார். விதவை மறுமணத்தை ஏற்க மறுத்தவர்களை சனாதனிகள் என்று அழைத்தார்கள். குழந்தை திருமணத்தை தடை செய்வதை எதிர்த்தவர்கள், தேவதாசிகள் தடை சட்டத்தை எதிர்த்தவர்கள், ஆலய நுழைவை எதிர்த்தவர்கள் எல்லோரையும் சனாதனிகள் என்று அழைத்தார்கள். எனவே சனாதனம் என்பது மாற்றத்தை மறுக்கும் பிற்போக்கு கொள்கைகள், வர்ணாதர்மம் என்றே பொருள்படும். பாரதம் என்ற வார்த்தையின் மூலாதாரம் என்ன? இந்தியிலும், வேறு பல மொழிகளிலும் பாரத் என்றுதான் ஏற்கனவே குறிப்பிட்டு வருகிறார்கள். ஆங்கிலத்தில்தான் இந்தியா என்ற சொல் புழங்குகிறது. தமிழிலும், வேறு சில மொழிகளிலும் இந்தியா என்று புழங்குகிறார்கள். இப்போது பிரச்சினையே ஆங்கிலத்திலும் இந்தியாவை தவிர்த்து பாரத் என்று கூற வேண்டுமா என்பதுதான். இந்தியாவிற்குள் நிலத்தில் பயணம் செய்து வந்தவர்கள் அனைவரும் இமய மலைத்தொடரில் இருந்த கைபர், போலன் கணவாய் வழியாகத்தான் வந்தார்கள். அவ்விதம் வந்தவர்கள் முதலில் எதிர்கொண்டது சிந்து நதி தீரம். சிந்து என்பதை கிரேக்கர்கள் இன்டஸ் என்று அழைத்தார்கள். உதாரணமாக கி.மு. நான்காம் நூற்றாண்டில் மெகஸ்தனிஸ் இண்டிகா என்ற நூலை எழுதினார். இதைத் தொடர்ந்த திரிபுதான் இந்தியா. கொலம்பஸ் அமெரிக்காவுக்கு அருகிலுள்ள தீவுகளை அடைந்தபோது அதை இந்தியா என்று நினைத்ததால் இன்றளவும் அது வெஸ்ட் இண்டீஸ், மேற்கு இந்தியா என்று அழைக்கப்படுகிறது. கிரிக்கெட் ரசிகர்களுக்குத் தெரியும். பாரசீகர்களும், அரேபியர்களும் சிந்து என்பதை ஹிந்த் என்று எழுதினார்கள். அதனால் அந்த நதியை ஒட்டிய பகுதியை ஹிந்துஸ்தான் என்றார்கள். எனவே இந்துஸ்தான் என்ற பெயரும் சிந்து நதியை ஒட்டியதுதான். ஆனால் இதே பெயரில் ஹிந்து மதம், ஹிந்தி மொழி என்றெல்லாமும் பெயரிட்டுவிட்டதால் ஹிந்துஸ்தானம் என்பதைவிட இந்தியா என்ற பெயர் சற்றே பொதுத்தன்மையுடன் உள்ளதாலோ என்னவோ இந்தியா என்ற பெயரே ஆங்கிலத்தில் நிலைத்துவிட்டது. இப்போது பாரதீய ஜனதா கட்சி நமக்கு நாமே வைத்துக்கொண்ட பெயர் பாரதம் என்கிறது. பார்ப்பனர்கள் சொல்லும் மந்திரங்களில் “ஜம்புத்வீபே, பரத கண்டே” என்று சொல்லுவதாகத் தெரிகிறது. தமிழ்த்தாய் வாழ்த்திலும் “சீராரும் வதனமெனத் திகழ் பரத கண்டமிதில்” என்று வருகிறது. இதெல்லாம் கண்டம் என்ற நிலப்பரப்பை சுட்டுகின்றன. தேசம் என்பதையல்ல. பின்னால் இருபதாம் நூற்றாண்டில் பாரதியார் தமிழில் பாரத தேசம் என்பதை பிரபலப்படுத்தினார். வங்காளத்திலும், இந்தியிலும் “பாரத் மாதா” என்ற வழக்கு நிலைப்பட்டது. இதெல்லாம் சரிதான். இந்தியா சிந்து நதியிலிருந்து வந்தது. பாரதம் எதிலிருந்து வந்தது என்று கேட்டால்தான் ஆரியம் பல்லிளிக்கிறது. ஜட பரதன் என்ற முனிவர் என்கிறது. பரதன் என்ற மன்னன் என்கிறது. இவர்களுக்கெல்லாம் எந்த சரித்திர ஆதாரமும் இல்லை. எல்லாம் புராணக் கற்பனையில் உருவானவை. மகாபாரதம் என்று ஒரு இதிகாசத்திற்கு பெயர் இருக்கிறது. இதற்கு ஏன் பாரதம் என்று பெயர் என்றால் அதிலும் திட்டவட்டமாக ஒரு தெளிவில்லை. குரு வம்சத்தின் முக்கியமான மன்னன், முதல் மன்னன் பரதன் என்றெல்லாம் கூறுகிறார்கள். இந்தியாவில் ஆரியர்களுக்கு முன்பே பல்வேறு பண்பாடுகள் நிலவின என்பதில் ஆய்வாளர்கள் யாருக்கும் எந்த ஐயமும் கிடையாது. ஆரிய பண்பாடு மட்டுமே இந்தியாவின் முக்கிய பண்பாடு என்று யாரும் வாதிட முடியாது. திராவிட பண்பாடும் சரி, பல்வேறு பூர்வகுடிகளின் பண்பாட்டு மூலகங்களும் சரி புறக்கணிக்கத்தக்கவை அல்ல. இந்த பண்பாடுகள் பலவும் ஆரியர்களுடன் முரண் உறவைக் கொண்டவை. இந்த நிலையில் அனைவரும் ஏற்றுக்கொண்ட புவியியல் அடிப்படை கொண்ட இந்தியா என்ற பெயரே ஆங்கிலத்தில் புழங்குவதுதானே சரியாக இருக்கும்? இந்தியில் ஏற்கனவே பாரத் என்ற பெயரைத்தான் ரூபாய் நோட்டிலும், பாஸ்போர்ட்டிலும் பயன்படுத்துகிறார்கள். ஆங்கிலத்தில் இந்தியா. இதை இப்போது மாற்றுவது நாட்டை ஆரியமயமாக்கத்தானே? என்று மடியும் இந்த ஆரிய மாயை? https://minnambalam.com/political-news/anna-aariya-maayai-and-sanatana-by-rajan-kurai/
  5. வன்முறைக் கொண்டாட்டம் ராஜன் குறை மனிதர்களைத் தவிர பிற விலங்கினங்கள் எதுவும் தன் இனத்தையே கொல்வதையோ, அழிப்பதையோ ஒரு பழக்கமாகப் பயில்வது இல்லை. அப்படி ஒன்றிரண்டு நிகழ்ந்தாலும் அது அபூர்வமானதே. ஒரு விலங்கு பிற விலங்கு இனங்களைக் கொல்வதுகூட உணவுக்காகவோ, தற்காப்புக்காகவோ இருக்குமே தவிர, தேவையற்று கொல்வது இல்லை. ஆனால், மனித இனம் போரை, கூட்டமாக பிற மனிதர்களைக் கொல்வதைத் தொழிலாக, வித்தையாக, கலையாக, அறிவியலாக, தத்துவமாக வளர்த்தெடுத்துள்ளது. விலங்குகளைக் கொல்வதோ ஒரு விளையாட்டாகவே கருதப்பட்டுள்ளது. இப்படி ஒரு கொலையார்வம் இருந்தாலும் மிருகங்களைவிட நாகரீகமும், பகுத்தறிவும் உள்ள இனம் என்று மனிதம் தன்னைக் கருதிக்கொள்ளவும் செய்கிறது. மனித இனத்தின் அடிப்படை உள்முரண் ஒன்று உண்டென்றால் அது கொலையையும், தற்கொலையையும் தர்க்கரீதியாக, உணர்வுரீதியாக சிந்தித்துச் செய்ய முடியும் என்பதுதான். அதாவது உயிரைப் பறிப்பது, தன் உயிரையோ, பிற உயிரையோ பறிப்பது, ஒரு தேர்வாக மனிதர்கள் முன் எல்லா நேரமும் காணப்படுகிறது. இதில் பெரிய நகைச்சுவை என்னவென்றால், கொலைவெறி என்பதை மிருக உணர்வு என்று மனிதர்கள் எப்போதும் அபாண்டமாகக் கூறிவந்துள்ளார்கள். பண்பட்ட மனிதன் கொல்ல விரும்பமாட்டான்; பகைவனுக்கும் அருள்வான். ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தைக் காட்டுவான் என்றெல்லாம் பலவாராக மானுட நாகரிக மேன்மையைக் கூறுவார்கள். எல்லா உயிர்களையும் நேசிக்க வேண்டும், உயிர்களிடத்து அன்பு வேண்டும் என்றெல்லாம் ஏராளமான தத்துவங்களையும் மானுடம் எழுதிவைத்துள்ளது. எல்லா உயிர்களையும், உலகங்களையும் படைத்த இறைவனை மானுடம் கற்பனை செய்து இறைவனை அன்பின் வடிவமாக நினைத்து பக்தி பரவசமாய் வாழ முனைந்துள்ளது. அதே இறைவன் பெயரால் ஏராளமான கொலைகளையும் செய்துள்ளது. கடந்த அறுநூறு ஆண்டுகளில் உலகில் பல மாற்றங்கள் நடந்தன. மானுடம் மிகப் பெரிய அளவில் பல்வேறு சமூகங்களின் அறிவைச் சேகரித்து உலகப் பொதுவான அறிதல்களை, சமூக முன்னெடுப்புகளை சாத்தியப்படுத்தியது. அதன் காரணமாக மானுடம் முன் எப்போதும் இல்லாத அளவு வன்முறையற்ற சகவாழ்வினை உருவாக்க விரும்பியது. அறிவியல், தொழில்நுட்ப உதவியுடன் மிகப் பெரிய சமூக ஒத்திசைவுகளைக் கட்டமைக்க முற்பட்டது. கூடவே, அறிவியல் தொழில்நுட்ப உதவியுடன் உருவான கொலைக்கருவிகள், வெடி மருந்துகள் போன்ரவை, போர் நடவடிக்கைகளை விரிவாக்கின. ஒருபுறம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என மானுட ஒற்றுமையின் இலட்சிய பிரகடனங்கள், மற்றொருபுறம் பெரும் ராணுவ கட்டமைப்புகள், ஆயுதப் பெருக்கம், ஆக்கிரமிப்புகள், அடிமைச் சமூகங்கள் என முரண்பாடுகளின் பெருக்கம் மிகவும் கூர்மையடைந்தது. இந்தச் சூழ்நிலையில்தான் அழகியலின் பணி என்பது என்ன என்ற கேள்வியும் மீண்டும் துலக்கம் பெற்றது. போர் வீரர்களின் வீரத்தை, சாகசத்தை, தியாகத்தைப் போற்றிப் புகழ வேண்டுமா, அல்லது அமைதியை நாடும் ரசனையை, கொலைமறுப்பை, அன்பை, சகவாழ்வைக் கொண்டாட வேண்டுமா? கடந்த இருநூறு ஆண்டுகளில் அழகியலின் தத்துவம் குறித்து நடந்த விவாதங்களை எல்லாம் ஒரு மூச்சில் சுருக்கிச் சொல்லிவிட முடியாது. ஆனால் வன்முறையை, கொலையை எப்படி அணுக வேண்டும் என்ற கேள்வியை அழகியல் ஒருபோதும் அக்கறையின்றி கடந்து செல்லக் கூடாது. திரைப்பட அழகியலும், கதாநாயகனும் நம் புலனுலகை சிறு சிறு அசைபிம்பங்களாக பதிவுசெய்து அவற்றை குறிப்பிட்ட வரிசையில் தொகுத்து ஒரு கதையாடலாக மாற்றும் சாத்தியத்தைக் கண்டது திரைப்படக் கலை. முன்னெப்போதும் இல்லாத அளவு அது கண் முன்னே நிகழும் உலகியல் காட்சிகளாகவே கதையை நிகழ்த்திக் காட்டும் மாயத்தைச் செய்தது. கடல், மலை, காடு, இடி, மின்னல், மழை, காற்று என அனைத்தையும் அசைபிம்பங்களாக பிரதி செய்து திரையில் காட்டியது. ஆனால், அந்தப் பிம்ப உலகினுள் பார்வையாளர்கள் நுழைய, பிம்பங்களுள் பிம்பமாக அந்த உலகில் இயங்கும் ஒரு நாயகன் தேவைப்பட்டான். தங்கள் உளவியல் பதிலியாக அந்தப் பிம்ப உலகில் செயல்படும் நாயகனைப் பார்வையாளர்கள் கண்டார்கள். அதனால் உலகின் பல பகுதிகளிலும், கதையின் மையப்பாத்திரமான கதாநாயக பாத்திரத்தை ஏற்று நடிப்பவர்கள் நட்சத்திரங்களாக மாறினார்கள். ஒரு திரைப்படத்தின் பிரதிகள் ஏராளமான திரைகளில் காணப்பட முடியும் என்பதால், ஒட்டுமொத்த சமூகமும் கதாநாயக நடிகர்களிடம் கொள்ளும் ஈடுபாடே இந்த நட்சத்திரங்களை உருவாக்கியது. நட்சத்திர நடிகர்களே ஒரு தொழிலாக, வணிகமாக திரைப்படத் துறையினை நிலைபெறச் செய்தார்கள். நட்சத்திரங்கள் மீதான வெகுஜன ஈடுபாடு வணிகம் தவிர பலவிதமான விளைவுகளைக் கொண்டிருந்தன. உலகம் முழுவதும் படித்தவர்களும், பாமரர்களும் ஒருசேரக் கொண்டாடிய சார்லி சாப்ளின் இரண்டாம் உலகப் போருக்கு இடையே போருக்கு எதிரான காவியமாக தன்னுடைய ‘தி கிரேட் டிக்டேடர்’ (1940) திரைப்படத்தை உருவாக்கினார். சமூகத்தின் மனசாட்சியைத் தட்டியெழுப்பிய எத்தனையோ திரைப்படங்கள் இந்த வெகுஜன நட்சத்திர ஈடுபாட்டினைப் பயன்படுத்தி பல்வேறு நாடுகளிலும் உருவாகத்தான் செய்தன. இந்தியாவில், தமிழகத்தில் ஜாதீய ஆணாதிக்கச் சமூகத்தில் கட்டுண்டு இருந்த தன்னிலைகளை, தார்மீக சாகச கதாநாயக பிம்பங்கள் விடுவித்து அவர்களை சுயேச்சையாக செயல்படும் சாத்தியங்களை உருவாக்கின. அதேசமயம் எல்லா விளைவுகளும் நேர்மறையாகவும் அமைந்துவிடவில்லை. நட்சத்திர பிம்பங்களின் கதாநாயக முன்மாதிரிகளிலிருந்து ஊக்கம் பெறுவதுடன் நிற்காமல், அந்த நட்சத்திர பிம்பங்களையே வழிபடும் சுயஇழப்பு மனோநிலையும் உருவாகத்தான் செய்தது. ஹாலிவுட் திரைப்படங்களும் சரி, பிற வணிக திரைப்படங்களும் சரி, வாழ்வியல் குறித்த திறப்புகளை ஏற்படுத்துவதற்கு பதிலாக, நாயக பிம்பங்களின் செயல்வெளியாகவே திரைவெளியை மாற்றி மூளையை மழுங்கடித்தன. கடந்த நூறாண்டுகளில் திரைப்படங்களுக்கும் சமூகத்திற்குமான உறவு பல பிரம்மாண்டமான பரிமாணங்களைக் கொண்டது. இன்றைய நிலையில் அமெரிக்க திரைப்படமான ‘ஓப்பன்ஹைமர்’ இந்திய நகரங்களில் எல்லாம் திரையிடப்படுகிறது. தமிழ் திரைப்படமான ‘ஜெயிலர்’ அமெரிக்க நகரங்களில் எல்லாம் வெளியாகிறது (பெரும்பாலும் அமெரிக்க வாழ் இந்தியர்களே பார்ப்பார்கள் என்றாலும்). இந்த இரண்டு படங்களுமே திரைப்பட அழகியலுக்கும் வன்முறைக்குமான தொடர்பைக் குறித்து சிந்திக்கச் செய்கின்றன. வன்முறை குறித்த நுண்ணுர்வை மழுங்கடிக்கச் செய்யும் பிற்போக்கு அழகியலையே இந்த இரண்டு படங்களும் இரு வேறு விதங்களில் பிரதிநிதித்துவம் செய்கின்றன. எதனால் அப்படி மதிப்பிடுகிறேன் என்பதைக் காண்போம். ஓப்பன்ஹைமர் மானுடம் நன்கு யோசித்து, தன் அறிவு, திறமை, ஆற்றலையெல்லாம் பயன்படுத்தி நிகழ்த்திய மாபெரும் கொலைபாதக, பேரழிவுச் செயல் என்றால் அது 1945 ஆகஸ்ட் மாதம் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய ஜப்பானிய நகரங்களின் மீது வீசிய அணுகுண்டுகள்தான். இந்தக் குண்டுகள் ஜப்பானிய ராணுவத்தின் மீது வீசப்படவில்லை. அப்பாவி மக்கள் மீது, தாங்கள் எப்படி எதற்காக கொல்லப்பட்டோம் என்றே தெரியாமல் எரிந்து மடிந்த மக்கள் மீது வீசப்பட்டவை. எதிர்கால சந்ததியினரையும் பாதிக்கும் கதிரியக்கத்தைத் தோற்றுவித்த குண்டுகள். உண்மையில் சொன்னால் அணு ஆயுதப் பயன்பாட்டினால் கொல்லப்பட்டது மானுடத்தின் ஆன்மா. ‘ஓப்பி’ என்று செல்லமாக அழைக்கப்படும் ஜே.ராபர்ட் ஓப்பன்ஹைமர் அந்தப் பேரழிவுக் குண்டுகளைத் தயாரித்து அளித்த அறிவியலாளர். இவர் தனிப்பட்ட முறையில் தீயவரா, நல்லவரா என்பது பிரச்சினையில்லை. நரகத்தின் பாதை நல்லெண்ணங்களால் செதுக்கப்பட்டது என்பது முதுமொழி. இன்று நாம் ஓப்பன்ஹைமர் என்று ஒருவரை நினைவில் கொள்கிறோம் என்றால் அதற்குக் காரணம் அவர் ஜப்பானில் வீசப்பட்ட அணு ஆயுதங்களைத் தயாரித்தவர் என்பதற்காகத்தான். யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையும் சுவாரசியமானதுதான். ஓப்பி பொதுவுடமை தத்துவத்தில் ஈடுபாடு கொண்டவர். பல மொழிகளைப் பயின்றவர். பிரபஞ்சத்தின் ரகசியங்களை அறிய விரும்பியர். ஆழ்ந்த தத்துவப் பார்வை கொண்டவர். கீதை வசனங்களைச் சொன்னவர். ஜெர்மனி அணு ஆயுதத்தை முதலில் கண்டுபிடித்துவிட்டால் உலகம் பேரழிவுக்கு உள்ளாகும் என்பதால், அமெரிக்கா முதலில் அதனை உருவாக்க வேண்டும் என்று நினைத்தவர். அதை வெற்றிகரமாகச் செய்து ஜப்பானில் பயன்படுத்தப்பட்ட பிறகு மீளா குற்றவுணர்வுக்கு ஆட்பட்டவர். அதன்பின் போரற்ற உலகை உருவாக்க முயற்சித்தவர். இதையெல்லாம் கணக்கில் கொண்டுதான் வாழ்க்கை வரலாற்றை, அதன் சர்ச்சைகளை விரிவாக ஆராய்ந்து ‘அமெரிக்கன் ப்ரொமீத்யூஸ்: த டிரிம்ப் அண்ட் டிரேஜெடி ஆஃப் ஜே.ராபர்ட் ஓப்பன்ஹைமர்’ (American Prometheus: The Triumph and Tragedy of J. Robert Oppenheimer) என்ற வாழ்க்கை வரலாற்று நூலை எழுதியுள்ளார்கள். அப்படி ஒரு நூலை படிக்கும்போது வாசகர்கள் ஓரளவு விமர்சனபூர்வமாக விலகி நின்று வாசிக்க முடியும். அந்த நூலை திரைப்படமாக்க கிறிஸ்டோபர் நோலன் முடிவுசெய்கிறார். நோலன் இருளும், ஒளியும் கலந்த நாயக பாத்திரங்களைக் கொண்டு பிரம்மாண்ட உலகளாவிய வெற்றிப் படங்களைத் தந்தவர். அணுகுண்டு தயாரிக்கும் திறமைக்கு நிகரான சுவாரசியமான கதையாடலை உருவாக்கும் திறன் கொண்டவர். இரண்டிலுமே தாக்கப்பட்டவர்கள் அவர்கள் அறியாமலேயே தாக்குதலுக்கு பலியாவார்கள் என்பதில்தான் ஒற்றுமை. ஒன்று இயற்பியல் தாக்குதல்; மற்றொன்று உளவியல் தாக்குதல். ஓப்பன்ஹைமர் இளம் அறிவியலாளராக பிரபஞ்சத்தின் ரகசியங்கள் குறித்து கனவு காண்கிறார். கோட்பாட்டுப் புலியாக இருந்தாலும், சோதனைச் சாலையில் நடைமுறைப் பயிற்சிகளில் திறமையில்லாமல் இருக்கிறார். கடும் ஏளனத்திற்கு ஆளாகி தற்கொலை முயற்சி வரை செல்கிறார். ஆனால் தக்க அறிவுரைகள், வழிகாட்டுதல் மூலம் தனக்கான பாதையைச் சமைத்துக்கொண்டு பெரும் அறிவியலாளர்களின் நன் மதிப்பைப் பெறுகிறார். அமெரிக்காவில் ஆணு அயுதம் தயாரிக்கும் திட்டத்தை தலைமை தாங்கி நடத்த தேர்ந்தெடுக்கப்படுகிறார். அந்த முயற்சியில் அவர் எப்படி திறம்பட செயல்பட்டார், அவருடைய ஐயங்களுக்கு எப்படி விடை கண்டார், விடா முயற்சியுடன் அணு ஆயுதத்தை எப்படி தயாரித்தார் என்பது திரைப்படத்தின் மைய பகுதியாக விளங்குகிறது. இங்கேதான் திரைப்படம் மிகப் பெரிய அழகியல், அறவியல் சிக்கலை உருவாக்குகிறது. திரைப்படத்தின் புலன்வெளியை தவிர்க்க முடியாமல் கதாநாயகன் வழியாகவே பார்வையாளர்கள் உள்வாங்குவார்கள். நாயகனின் போராட்டத்துடன் அவன் வெற்றி, தோல்விகளுடன் உணர்வுரீதியாக ஒன்றுவார்கள். அணு ஆயுதத்தை உருவாக்குவதில் ஓப்பி அடைந்த வெற்றிக்காக மகிழ்ச்சியடையும் நிலை அவர்கள் அறியாமலேயே உருவாகிவிடுகிறது. அதன் பிறகு ஓப்பி வருந்துகிறார். மனித குலத்தை அழிவுப்பாதையில் கொண்டுசென்றுவிட்டோம் என்று மறுகுகிறார். அதெல்லாம் சரிதான். ஆனால், அணு ஆயுதம் வெற்றிகரமாக உருவான தருணம் ஓப்பியின் வெற்றியாக அவருடன் சேர்ந்து கொண்டாடும் மனநிலை திரையரங்கில் தவிர்க்க முடியாமல் உருவாகிவிடுகிறது என்பதுதான் பிரச்சினை. அணு ஆயுத பரிசோதனை வெடிப்பிற்காக கவுண்டவுன் நடக்கிறது. அப்போது அனைவரும் அது வெடிக்கக் கூடாது என்றா நினைப்பார்கள்? அந்தக் கதையாடலின் கட்டமைப்பே வெற்றியை நோக்கியதுதானே? இதில் மிகப் பெரிய பிரச்சினை என்னவென்றால் அணு ஆயுதம் வெற்றிகரமாக தயாரிக்கப்பட்ட தருணத்தில் அது பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. ஆனால், இன்றைக்குப் படம் பார்ப்பவர்கள் அனைவருக்கும் ஹிரோஷிமா, நாகசாகியில் என்ன நடந்தது என்பது தெரியும். அதிலிருந்து எழுபத்தெட்டு ஆண்டுகளாக எத்தனையோ கலைஞர்கள், சிந்தனையாளர்கள், தலைவர்கள் மனித குலத்தின் மனசாட்சியை ஓயாமல் தட்டியெழுப்பி வருகிறார்கள். அணுசக்தி பயன்பாடுகள் குறித்து ஏராளமான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. செர்னோபில், ஃபூகுஷிமா அணு உலை விபத்துக்களுக்குப் பிறகு அணு சக்தி பயன்பாடு குறித்து சிந்திக்கச் சொல்லி மக்கள் மன்றத்தில் மன்றாடிவருகிறார்கள். அதெற்கெல்லாம் மிக முக்கியமான குறியீடு ஹிரோஷிமா. ஓப்பன்ஹைமர் திரைப்படம் ஹிரோஷிமாவிற்கு முந்தைய தருணத்தை, அணு ஆயுதம் ஒரு அறிவியல், தொழில்நுட்ப சாதனையாக தயாரிக்கப்பட்ட தருணத்தை உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்துகிறது. ஹிரோஷிமாவுக்கு பிறகான உலகில் வாழும் நமக்கு அந்தத் தருணம் சாத்தியமற்றது, தேவையற்றது. ஆனால், அந்தத் தருணத்தை உணர்வுபூர்வமாக திரைவெளியில் உருவாக்குவதன் மூலம் ஹிரோஷிமா குறித்த குற்றவுணர்வை ஒப்பன்ஹைமர் திரைப்படம் மழுங்கடிக்கிறது. ஓப்பன்ஹைமருக்கு எப்படி தன் அறிவியல் தொழில்நுட்ப வெற்றி முக்கியமோ, அதேபோல நோலனுக்கு தன் திரைக்கதையாடலின் வெற்றிதான் முக்கியம். அதனால் பார்வையாளர்களை ஓர் இருண்ட தருணத்திற்கு அழைத்துச் சென்று மீண்டும் கூட்டிவந்ததாக அவர் மகிழலாம். துரதிர்ஷ்டவசமாக மானுடம் ஏற்கெனவே அறம் பிறழ்ந்துதான் இருக்கிறது. வன்முறை நாட்டத்திலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள முடியாமல் தவிக்கிறது. அதைத்தான் படு அபத்தமான உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்புப் போர் நமக்கு உணர்த்துகிறது. எந்த நிமிடமும் உலகில் அணு ஆயுதம் மீண்டும் பயன்படுத்தப்படலாம் என்ற நிலையில்தான் வாழ்கிறோம். அந்த சூழ்நிலையை உணர்ந்த படமாக ‘ஓப்பன்ஹைமர்’ திரைப்படம் அமையவில்லை. அருகாமை காட்சிகளில் ‘ஓப்பன்ஹைமர்’ பாத்திரமேற்று நடிப்பவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் மூலம் கதையாடலின் தர்க்கத்தை சமன்செய்ய முடியாது. கதையாடல் ஏற்கெனவே அணு ஆயுதத் தயாரிப்பைக் கொண்டாடிவிடுகிறது. அந்தப் பாவத்தை எதனாலும் கழுவ முடியாது என்பதே உண்மை. ஆனால், அமெரிக்க மனம் அதைக் கழுவத்தானே விரும்பும். இரண்டாம் உலகப் போர் குறித்த ஒரு பிரம்மாண்ட சுயநியாயப்பாட்டுக் கதையாடலை அமெரிக்கா தொடர்ந்து எழுபத்தெட்டு ஆண்டுகளாக திரைவெளியில் ஏராளமான திரைக்கதையாடல்கள் மூலம் உருவாக்கிவந்துள்ளது. அதன் உச்சகட்ட கண்ணிதான் ‘ஓப்பன்ஹைமர்.’ நம்மிடம் உள்ள மெல்லிய பாதுகாப்புக் கவசமே கூர்ந்த விமர்சனத்தின் மூலம் இந்தக் கதையாடல் தர்க்கங்களைக் கேள்விக்கு உள்ளாக்குவதுதான். ஜெயிலர் தமிழ்த் திரையுலகில், ஏன் இந்திய திரையுலகிலுமேகூட, நீடித்த நட்சத்திர அந்தஸ்து கொண்ட கதாநாயக நடிகராக ரஜினிகாந்த் விளங்குகிறார். திரைக் கதாநாயகனிலிருந்து வரலாற்று நாயகனாகவே உருமாறி அரசியலில் வெற்றி கண்ட எம்.ஜி.ஆரின் திரை வாழ்க்கை முப்பதாண்டுகள்தான் நீடித்தது. ஆனால், ரஜினிகாந்த் நாற்பது ஆண்டுகள் கடந்தும் உச்ச நட்சத்திரமாக நீடிக்கிறார். அவரே கூறியபடி காக்கைகள் எட்ட முடியாத உயரத்தில் கழுகாக பறந்தபடி இருக்கிறார். ரஜினிகாந்த் நிறைய குட்டிக்கதைகள் சொல்வார். அறிவுரைகள் சொல்வார். ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டமுள்ளவர். தன் படங்களிலும்கூட எளிமை, அன்பு, பாசம் ஆகியவற்றை நிறையவே வலியுறுத்தியுள்ளார். வாழ்க்கையின் நிலையாமை, பணம், பதவி, புகழ் போன்ற மாயைகள் எனப் பல தத்துவப் பார்வைகளைத் திரையிலும் சரி, பொதுவெளியிலும் சரி கூறக்கூடியவர். இந்தியப் பிரதமர்களே தேடிவந்து பார்க்குமளவு செல்வாக்கானவர். இவ்வளவு பெரும் சமூக மதிப்பு வாய்ந்த திரைப் பிம்பமான ரஜினி, 'ஜெயிலர்' படத்தில் வெளிப்படுத்தும் வெறித்தனமான வன்முறை அதிர்ச்சியளிக்கிறது. பென்சில் சீவுவது போல தலையைச் சீவுகிறார். டைனிங் டேபிளில் விழுந்து இறப்பவனின் ரத்தம் மனைவியின் முகத்தில் தெரித்தால் துடைத்துக்கொள்ளச் சொல்லி டிஷ்யூ பேப்பரைத் தருகிறார். தன் மனைவியையும், மருமகளையும் கொலைகளை இயல்பாக எடுத்துக்கொள்ள பயிற்றுவிக்கிறார். மிகக் கொடூரமான வில்லன் சட்ட விரோத செயல்களைச் செய்வதற்காக கொலைகளைச் செய்கிறான். கதாநாயகனான ரஜினி அவனைவிடக் கொடூரமாக ‘சட்ட’த்தின் சார்பாக கொலைகளைச் செய்கிறார். இதில் கொல்லாமை என்ற விழுமியத்திற்கு இடமே இல்லை; அது தேவையுமில்லை என்றாகிவிடுகிறது. ஆகப் பெரும்பாலான வணிக திரைக்கதையாடல்களின் தர்க்கமென்பது நாயகனுடன் பார்வையாளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்வதுதான். நிச்சலனமாகக் கொலைகளைச் செய்து குவிக்கும் ரஜினி பார்வையாளர்களிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துவார், வன்முறை குறித்த அவர்கள் நுண்ணுணர்வுகள் என்னவாகும் என்று நினைக்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. ஏற்கெனவே பள்ளிச் சிறுவர்களும் அரிவாளைத் தூக்கும் விபரீத போக்குகளைக் காண்கிறோம். இது வணிகத்திற்காகச் செய்யப்படுவதாக நான் நினைக்கவில்லை. ரஜினி நடித்து ‘சந்திரமுகி’, ‘சிவாஜி’ எல்லாம் ஓடவில்லையா என்ன? ‘எந்திரன்’ ஓடவில்லையா? அதிலும்தான் சண்டைக்காட்சிகள் இடம்பெற்றன. ஆனால், அவையெல்லாம் இப்படி இரக்கமற்ற கொலைகாரனாக கதாநாயகனை மாற்றவில்லையே? இங்கே நடப்பது என்னவென்றால் அழகியலின் அறம் பற்றிய குழப்பம். ஏதேதோ வெளிநாட்டுப் படங்களைப் பார்க்கிறார்கள். அதனால் வன்முறையைக் காட்சிப்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள். அந்த வன்முறையை கதாநாயகனே செய்தாலும் தவறில்லை என நினைக்கிறார்கள். விமர்சனக் குரல்களுக்கு இடமில்லை. வசூலை மட்டும் பார்த்து மக்கள் தீர்ப்பு வழங்கிவிட்டதாகக் கருதுகிறார்கள். அவர்களே விழா எடுத்துப் பாராட்டிக்கொள்கிறார்கள். நாம் சற்றே திரும்பிப் பார்க்க வேண்டும். அந்தக் காலத்தில் கதாநாயகர்கள் வில்லன்களுடன் சண்டையிடுவார்கள். ஆனால், அவர்களைக் கொல்லும் சூழ்நிலை உருவாகும் முன்பு காவல் துறை வந்து கைதுசெய்துவிடும். வேறு சில படங்களில் வில்லன்கள் திருந்திவிடுவார்கள். ‘ஆயிரத்தில் ஒருவன்’ (1965) படத்தில் விஷக் கத்தி பாய்ந்த மனோகரை எம்.ஜி.ஆரே சிகிச்சை செய்து காப்பாற்றுவார். மனோகர் மனம் திருந்திவிடுவார். சர்வாதிகாரியாக இருந்த அவரையே நல்லாட்சி தரச் சொல்லிவிடுவார் எம்.ஜி.ஆர். அதுவும் பிளாக் பஸ்டர் படம்தான். ‘ஷோலே’ (1975) படத்தில் கப்பர் சிங் கொடூரமான சம்பல் பள்ளத்தாக்குக் கொள்ளைக்காரன். காவல் அதிகாரி சஞ்சீவ் குமாரின் குடும்பத்தையே கொன்றதுடன், அவர் இரு கைகளையும் வெட்டியவன். இறுதியில் அவனை கீழே தள்ளி, தன்னுடைய ஆணிகள் பதித்த பூட்ஸ் காலால் மிதித்து சஞ்சீவ் குமார் கொல்லப்போகும்போது போலீஸ் வந்துவிடும். இதுகுறித்து ஆய்வாளர்கள் பல கட்டுரைகள் எழுதியுள்ளார்கள். தனிமனிதர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்த வேண்டிய தேவை அன்றைக்கு இருந்தது. இன்றைக்கு அதைவிட அதிகமாகவே இருக்கிறது. ஆனால், நமது கதாநாயகர்கள் வில்லன்களே வெட்கப்படும் அளவு கொடூரக் கொலைகளைச் செய்கிறார்கள். திரைப்படத்தின் சிறிய ஃபிளாஷ்பேக்கில் திஹார் ஜெயிலில் ஜெயிலராக இருக்கிறார் ரஜினி. ஜெயிலில் சட்ட விதிகள் இருக்கின்றன என்று கைதிகள் கூறும்போது, இங்கே நான் வைத்ததுதான் சட்டம் என்று கூறிவிடுகிறார். கேள்வி கேட்ட கைதியின் காதை வெட்டி எறிகிறார். சிறைவாசிகளின் உரிமைகளுக்காக மனித உரிமை ஆர்வலர்கள் எவ்வளவு போராடியுள்ளார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். சிறைச்சாலைகள் குற்றவாளிகளை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதுதான் இலட்சியமே தவிர, அவர்களை மனிதத்தன்மையில்லாமல் நட த்த வேண்டும் என்பதல்ல. அதனால்தான் ஆறு கொலைக் குற்றவாளிகளை ஒரு சிறையதிகாரி தன் பொறுப்பில் கொண்டுவந்து அவர்களைக் கொண்டு விவாசாயம் செய்து புதிய விழுமியங்களை அவர்களைக் காணச் செய்யும் ‘தோ ஆன் கேன் பாரா ஹாத்’ (1957) என்ற படத்தை எடுத்தார் சாந்தாராம். அதைப் ‘பல்லாண்டு வாழ்க’ (1975) என்ற பெயரில் தமிழில் எடுத்தார் எம்.ஜி.ஆர். அதெல்லாம் லட்சியவாதப் படங்கள். அப்படித்தான் எடுக்க வேண்டும் என்பதில்லை. வெற்றிமாறனின் ‘வட சென்னை’ போல யதார்த்தத்தில் நிலவும் வன்முறையைக் காட்டலாம். ஆனால், வன்முறையை நாயக வழிபாட்டுடன் இணைக்கக் கூடாது. தமிழ்நாடு அமைதிப் பூங்கா, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை சாதித்துள்ளது. கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் பிற இந்திய மாநிலங்களைவிட சிறப்பாக உள்ளது என்றெல்லாம் பெருமைப்படுகிறோம். ஆனால், இங்கே நீறுபூத்த நெருப்பாக வன்முறை கனன்று கொண்டுதான் இருக்கிறது. திரைப்பட அழகியல் ஆபத்தானது; அது நாயகர்களை முன்மாதிரிகளாகக் கொள்ள மக்களை தூண்டுவது. அந்த நாயகனை ஈவிரக்கமற்ற வன்முறையாளனாகச் சித்தரிப்பது விபரீதமானது. தணிக்கைக் குழுவால் இதையெல்லாம் சரிசெய்ய முடியாது. மானுடத்தின் தேவை என்பது சுய தணிக்கைதான். ஒரு தத்துவார்த்த மானுடவியல் ஆய்வாளனாக சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளுக்கெல்லாம் திரைப்படங்களைப் பொறுப்பாக்குவதை நான் சிறிதும் ஏற்பதில்லை. பிரம்மாண்டமான சமூக இயக்கத்தின் அலைகடல் பரப்பில் தோன்றும் நுரைகள்தான் திரைப்படக் கதையாடல்கள். ஆனால், அவற்றின் அழகியல் சமூகத்தின் ஆழ்மனதுடன் உரையாடக்கூடியது. அதனால் திரைப்படம் எடுப்பவர்களுக்கு நிச்சயம் பொறுப்புணர்வு வேண்டும். அதனை வலியுறுத்தும் விமர்சன சிந்தனையும் சமூகத்தில் வலுப்பெற வேண்டும். வன்முறையற்ற வாழ்வு என்ற லட்சியம் விருப்பத் தேர்வல்ல. அந்த இலட்சியம் இல்லாவிட்டால் மானுடம் அழிந்துவிடும். https://www.arunchol.com/rajan-kurai-krishnan-on-oppenheimer-and-jailer
  6. மணிப்பூர் வன்முறையும், மக்களாட்சி விழுமியங்களும் Jul 31, 2023 07:00AM IST ஷேர் செய்ய : ராஜன் குறை மணிப்பூரில் இரண்டு மாதங்களில் ஓர் உள்நாட்டுப்போரே நடந்தாற்போல சூழ்நிலை உருவாகிவிட்டது. முதலில் பொதுவாக வடகிழக்கு மாநிலங்களுடன் கணிசமான உறவு எதுவும் இல்லாத மைய இந்திய மாநிலங்கள் சாதாரணமாக கலவரச் செய்திகளை உச்சுக்கொட்டி கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால், திடீரென பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமை காட்சிகளடங்கிய சில காணொலிகள் பரவியதில் இந்திய சமூகம் பெருமளவில் அதிர்ச்சியுற்றது. இந்தக் காணொலிகளெல்லாம் சமூக ஊடகங்களில் பரவுவதால் நேரடியாக மக்களிடம் போய் சேர்ந்தன. அது பரவலாக மக்களிடையே அறச்சீற்றத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தின. ஏன் மணிப்பூர் அரசும், ஒன்றிய அரசும் கலவரத்தைக் கட்டுப்படுத்த தவறின, ஏன் பிரதமர் அது குறித்து எதுவும் பேசவில்லை என்றெல்லாம் சாமானிய மனிதர்கள், குடும்பப் பெண்கள் எல்லோரும் கேட்கத் தொடங்கினார்கள். தொலைக்காட்சி சேனல்கள் எல்லாம் மணிப்பூர் குறித்து விவாதிக்கத் தொடங்கின. அச்சு ஊடகங்களிலும் கட்டுரைகள் வரத் தொடங்கின. காணொலி பரவத் தொடங்கியவுடன் பிரதமர் நாடாளுமன்றத்துக்கு வெளியே நின்று தன் வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டார். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றார். ஆனால், மணிப்பூர் பிரச்சினையை எப்படிப் புரிந்துகொள்கிறார், அவர் அரசு அதை எப்படி அணுக விரும்புகிறது என்றெல்லாம் எதையும் பேசவில்லை. இது மக்களாட்சி விழுமியங்களுக்கு முற்றிலும் எதிரானது. நாடாளுமன்றத்தில் இதுகுறித்து பிரதமரும் பங்கேற்று விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோருகிறார்கள். அந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை. தொடர்ந்து நாடாளுமன்ற அவைகள் முடங்குகின்றன. மணிப்பூர் அரசு மணிப்பூர் மாநில அரசு சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க தவறிவிட்டது வெளிப்படையானது. மணிப்பூரைச் சேர்ந்த பலரும் அதற்கு அந்த மாநில முதல்வர் பிரேன் சிங் மீதுதான் குற்றம் சுமத்துகின்றனர். அவர் கலவரத்தைத் தடுக்கத் தவறியது மட்டுமல்ல, அவரது அரசியல் சார்பும், பேச்சுகளும், செயல்களும்தான் கலவரத்துக்கே காரணம் என்றும் குற்றம் சாட்டுகின்றனர். இதை எளிதில் புறக்கணிக்க இயலாது. பிரச்சினையின் பிரதான அம்சம் மலைவாழ் பழங்குடியினரான குக்கி, நாகா ஆகிய மக்களின் நிலம் சார்ந்த உரிமைகள். சமவெளியில் உள்ள மைத்தேய் இன மக்களுக்கும், மலைவாழ் பழங்குடியினருக்கும் இடையில் கணிசமான பண்பாட்டு இடைவெளி இருந்து வந்திருக்கிறது. ஒட்டுமொத்த மணிப்பூரும் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதையும் ஏற்காத குழுக்கள் இருந்துள்ளன. மணிப்பூருக்கும் பிரிட்டிஷ் காலனீய அரசுக்கும், அதன் தொடர்ச்சியாக இன்றைய ஒன்றிய அரசுக்குமான உறவு மிகவும் சிக்கலான, நீண்ட வரலாறு கொண்டது. ஆனால், அதில் தற்போது பாரதீய ஜனதா கட்சியின் நுழைவுக்குப் பிறகு, அது ஆட்சியில் அமர்ந்த பிறகு முற்றிலும் ஒரு புதிய பரிமாணம் ஏற்பட்டுள்ளது. அதுதான் பெரும்பான்மையினரான சமவெளி வாழ் மைத்தேய் இனத்தவருக்கும், மலைவாழ் குக்கி, நாகா இனக்குழுவினருக்கும் இடையேயான கடும் மோதல். மலைப்பகுதியில் நில உடமை, உரிமை குறித்த தீவிரமான பிரச்சினை. பிரேன் சிங் இரண்டாயிரத்துக்குப் பின்னர்தான் அரசியலுக்கு வந்தார். மைத்தேய் இனத்தைச் சேர்ந்தவர். முதலில் காங்கிரஸில்தான் இருந்தார். காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார். சமீபத்தில் 2016ஆம் ஆண்டுதான் பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளார். அதிலிருந்து அவர் மலைவாழ் பழங்குடியினருக்கு எதிராகப் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. இவை மேம்போக்கான குற்றச்சாட்டுகள் அல்ல. பத்திரிகையாளர்கள் பல ஆதாரங்கள் தருகிறார்கள். எது எப்படியிருந்தாலும், நாட்டையே உலுக்கியுள்ள வன்முறை வெறியாட்டத்துக்கும், இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டதுக்கும் பொறுப்பேற்று பதவி விலகுவதுதான் ஒரு முதலமைச்சராக அவர் செய்ய வேண்டியது. அதனால் பிரச்சினை தீர்ந்துவிடுமா என்றால் நிச்சயம் அது அவ்வளவு சுலபமல்ல. ஆனால், மக்களாட்சியில் குறைந்தபட்சம் அப்படிப் பொறுப்பேற்பதுதான் மக்கள் பிரதிநிதிகளின் மேல், அவர்கள் ஆட்சியின் மேல் நம்பிக்கையை உறுதிப்படுத்தும். ஒன்றியத்தில் ஆள்வதும் பாஜக, மணிப்பூரில் ஆள்வதும் பாஜக என்னும்போது, ஒன்றிய ஆட்சி அதன் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாநில ஆட்சியைக் கலைக்கும் அளவுக்குப் போக வேண்டியதில்லை. முதல்வரை தாமாக முன்வந்து பதவி விலகச் சொல்லலாம். அவருக்கு பதில் பாஜக-விலேயே பரவலாக ஏற்புள்ளவரை முதல்வராக்கலாம் அல்லது மொத்த அமைச்சரவையும் பதவி விலகி, குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்யலாம். இவ்வாறான பொறுப்பேற்பு என்பது மக்கள் பிரதிநிதித்துவத்துக்கு, மக்களாட்சிக்குச் செய்யும் ஒரு மரியாதை என்பதுதான் முக்கியம். மக்கள் அளித்த தீர்ப்புக்கு தகுதியாக நடந்து கொள்ளவில்லை என்பதே பிரச்சினை. நாடாளுமன்றத்தின் பங்கு என்ன? மக்களாட்சியின் உயிர்நாடியே மக்கள் பிரதிநிதிகள் கூடி விவாதிக்கும் அவையான நாடாளுமன்றம்தான். அதில் பெரும்பான்மை உள்ள கட்சிதான் ஆட்சியமைக்கும் என்றாலும், அனைத்து மக்கள் பிரதிநிதிகளுமே முக்கியமானவர்கள். அவரவர் தொகுதியைச் சேர்ந்த பல லட்சம் பேர்களின் பிரதிநிதி. எதிர்க்கட்சியானாலும், ஆளும்கட்சியானாலும் அவரின் பெருமதி ஒன்றுதான். உள்ளபடி சிந்தித்தால் பிரதமராக ஒருவர் விளங்குவதற்கு அடிப்படை தகுதியே நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதுதான். மணிப்பூர் பிரச்சினை நாடெங்கும் மக்களிடையே பரவி கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்ட நிலையில் ஒன்றிய அரசு என்ன செய்ய வேண்டும்? நாடாளுமன்றத்தில் அந்தப் பிரச்சினை குறித்தும், கலவரம் குறித்தும் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்து எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்க வேண்டும். பிரதமரே முன்வந்து இந்த உரையாடலில் முழுமையாக பங்கேற்க வேண்டும். எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டலாம்; சாத்தியமற்ற ஆலோசனைகளைக் கூறலாம். ஆனாலும்கூட அவற்றை எதிர்கொண்டு விவாதிப்பதுதான் மக்களாட்சி. ஆனால், எந்த காரணத்திலோ இந்த இயல்பான, இன்றியமையாத அணுகுமுறையைக்கூட மூர்க்கமாக மறுதலிக்கிறது பாஜக. பிரதமர் எதிர்க்கட்சிகளுடன் சமநிலையில் உரையாடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். இந்தியா முழுவதும் மகத்தான மக்கள் ஆதரவைப் பெற்றிருந்தவரான இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு கூட, எதிர்க்கட்சியினருடன் நேருக்கு நேர் நின்று உரையாடியுள்ளார். கோபப்பட்டுள்ளார், வருந்தியுள்ளார். ஆனால், நாடாளுமன்றத்தில் மாற்றுக் கருத்துகளை ஓயாமல் எதிர்கொண்டுள்ளார். ஆனால் நரேந்திர மோடி தான் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சமமான உறுப்பினர் இல்லை என்று நினைக்கிறார் என்றுதான் தோன்றுகிறது. அவர் ஒரு பேரரசர் போல உணர்கிறார். அவரை நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோருவதை அவர் கெளரவத்துக்கு இழுக்கு என்று நினைக்கிறார். கெளதம் அதானியின் பங்குச் சந்தை முறைகேடுகள் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தினாலும் சரி, மணிப்பூர் கலவரத்தின் கோரக்காட்சிகள் நாட்டையே அதிர்ச்சியடையச் செய்தாலும் சரி, நான் நாடாளுமன்றத்தில் பிறருடன் அமர்ந்து பேச மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கிறார் பிரதமர். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி குடியரசுக்கு முக்கியமான இரண்டு பரிமாணங்கள் உண்டு. ஒன்று மக்களாட்சி, இன்னொன்று சட்டத்தின் ஆட்சி. இரண்டுமே இணைந்து செயல்பட்டால்தான் அரசு சரிவர இயங்க முடியும். சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு உச்ச நீதிமன்றத்திற்குத்தான் உள்ளது. அதனால்தான் நாடாளுமன்றம் எடுக்கும் முடிவுகளையும்கூட, குடிநபர்கள் எதிர்த்து முறையிட்டால், விசாரிக்கும் உரிமை உச்ச நீதிமன்றத்துக்கு உள்ளது. தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்களும் மணிப்பூர் காணொலிகளால் அதிர்ச்சியடைந்துள்ளார். இவ்விதமான பெண்களுக்கு எதிரான பொதுவெளியில் ஒரு கும்பலின் வன்முறை என்பது அரசியலமைப்பு சட்டம் வழங்கும் பாதுகாப்பு வெளியை முற்றிலும் சீர்குலைப்பது என்பதால் அவருக்கு அதில் ஒரு பொறுப்பு இருக்கிறது. எனவே, அவர் ஒன்றிய, மாநில அரசுகளை உடனே நடவடிக்கை எடுக்கும்படியும், தவறினால் தானே எடுக்க வேண்டி வரும் என்றும் கூறியுள்ளார். அவர் நடவடிக்கை எடுப்பாரென்றால் அதன் பொருள் அவர் காவல்துறையை, அரசுத் துறைகளை நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவார் என்றுதான் பொருள். அதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது. ஆனால், பாஜக கட்சியினர் நீதிபதியின் கோபத்தையும் மதிப்பதாயில்லை. யார் என்ன சொன்னாலும், பிரேன் சிங் அரசைக் காப்பாற்றுவதிலேயே குறியாக இருக்கிறது. அந்த அரசின் தார்மீக தோல்வி இது என்றுகூட ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. காரணம், பிரதமர் மோடி 2002ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக பதவியேற்றவுடன் நடந்த கலவரங்களுடன் ஒப்பிட்டால் இது பெரிய விஷயமா என்று பிரேன் சிங் கேட்கலாம். குஜராத்தில் கிட்டத்தட்ட இனப்படுகொலை (Genocide) என்று அழைக்குமளவு முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். பாஜக கட்சியினர், ஆதரவாளர்கள், ஊடகங்கள் முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் வேலையில்தான் பாஜக கட்சியினர், ஆதரவாளர்கள், ஆதரவு ஊடகங்கள் செய்து வருகின்றனர். அவர்கள் ஏகப்பட்ட திரிபு வேலைகளை செய்து வருகிறார்கள். ஒரு சில முக்கிய அம்சங்கள்: மைத்தேய், குக்கி மக்களுக்கிடையே உள்ள பிரச்சினை வெகுகாலமாக நிலவுவது. ராணுவத்தைக் கொண்டுதான் அங்கே அமைதி நிலவச்செய்ய முடியும். இல்லாவிட்டால் வன்முறை எப்போது வேண்டுமானால் வெடிக்கும். மலைவாழ் பழங்குடியினர் வந்தேறிகள், தீவிரவாதிகள், கஞ்சா பயிரிடுபவர்கள். கலவரங்களில் குக்கி, மைத்தேய் இருவருமே சம அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மைத்தேய் மக்கள் அதிக அளவில் அணிதிரண்டு தாக்கியுள்ளதாகக் கூறப்படுவது பொய். மைத்தேய் மக்களையும் பழங்குடியினராக அறிவிக்க வேண்டும் என்பது போன்ற விபரீத கோரிக்கைகள், குக்கி மக்களை ரிசர்வ்டு ஃபாரஸ்டு என்ற பெயரில் நிலத்திலிருந்து அப்புறப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள், மேலெழுவதற்கு பாஜக அரசியல் காரணமில்லை. இவ்விதமான கடுமையான பிரச்சாரத்தை மேற்கொள்வதன் மூலம் இந்த பிரச்சினையைக் கடந்து விடலாம் என்றுதான் பாஜக நினைக்கிறது. மக்களின் அறச்சீற்றத்தை எதிர்ப்பது விபரீதமானது இந்தக் காணொலிகள் பரவியதால்தான் நாடெங்கும் மக்களுக்கு அறச்சீற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை மேலோட்டமானதாக சிலர் கருதும் போக்கு உள்ளது. ஆனால், கடந்த இருநூறு, முந்நூறு ஆண்டுகளாக ஊடகங்கள் பதிவு செய்யும் தகவல்கள், தரவுகளே மக்களை எழுச்சி கொள்ளச் செய்துள்ளன. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் இருபதாம் நூற்றாண்டில் சர்வதேச அளவில் மக்களின் அறவுணர்ச்சியை தீண்டியது வியட்நாம் போர். அமெரிக்கா தெற்கு வியட்நாமை ஆதரித்து, வடக்கு வியட்நாமில் இருந்த சுயேச்சையான இட து சாரி அரசை எதிர்த்து ராணுவத் தாக்குதல் நடத்தியது. அந்த சந்தர்ப்பத்தில் குண்டு வீச்சில் சிக்கி நெருப்பில் ஆடைகளைப் பறிகொடுத்து, அழுதபடி ஒடி வரும் ஒரு சிறுமியின் புகைப்படம் உலகெங்கும் அதிர்வலைகளை, அறச்சீற்றத்தை ஏற்படுத்தியது. புத்த பிட்சுக்குள் தங்களை தீயிட்டு எரித்துக்கொள்ளும் படமும் இவ்வாறே செயல்பட்டது. மக்களின் அறச்சீற்றத்துக்கு மதிப்பளிக்காமல் மணிப்பூரில் பிரச்சினை நடந்தால் தமிழ்நாட்டில் ஏன் சீற்றம் கொள்கிறார்கள், கவிதை எழுதுகிறார்கள் என்றெல்லாம் கேட்பது எதிர் காற்றில் எச்சில் துப்புவது போல. பாஜக தன்னுடைய நலன் கருதியே மக்கள் கருத்துக்கு மதிப்பளித்து நடந்துகொள்வதுதான் நல்லது. மணிப்பூர் பிரச்சினையை நியாயமாகக் கையாள்வது என்பது இந்திய அரசியலில் அதன் வெற்றிக்கு இன்றியமையாதது. அதற்கு முதல்படி பிரேன் சிங் அரசை பதவி விலகச் சொல்வது. என்ன ஆனாலும் அதைச் செய்ய மாட்டோம் என்ற ஒன்றிய அரசின் நிலைப்பாடு ஒன்றைத்தான் குறிக்கிறது. அது 2002 குஜராத்தின் மறுநிகழ்வுதான் 2023 மணிப்பூர் என்பதே. கட்டுரையாளர் குறிப்பு: ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி https://minnambalam.com/political-news/manipur-violence-and-democracy-rajan-kurai/
  7. வைக்கம் நூற்றாண்டு: பெருகும் பெரியார் பெருமை! Apr 03, 2023 07:02AM IST ஷேர் செய்ய : ராஜன் குறை வைக்கம் என்பது கேரள மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர். தாலுக்கா தலைநகர். இந்த ஊரில் உள்ள மகாதேவர் ஆலயத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் ஈழவர்கள், தாழ்த்தப்பட்டோர் நடமாட தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்தத் தடையை எதிர்த்து ஒரு சத்தியாகிரக போராட்டம் நூறாண்டுகளுக்கு முன் 1924ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் கேரளத் தலைவர்களால் முன்னெடுக்கப்பட்டது. அறுநூற்று மூன்று நாட்கள் நடந்த இந்தப் போராட்டம், வெற்றிகரமாக தடை நீக்கப்பட்டவுடன் நிறைவடைந்தது. வைக்கம் போராட்ட நூற்றாண்டு தொடக்க விழாவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலினை அழைத்தார். தமிழ் நாட்டு முதல்வர் சென்று கலந்துகொண்டார். இரண்டு முதல்வர்கள் நாட்டில் மீண்டும் தலையெடுக்கும் மதவாத சக்திகளை முறியடிக்க உறுதி பூண்டார்கள். திராவிட, பொதுவுடமை சித்தாந்த ஒருங்கிணைப்பின் வெளிப்பாடாக, முற்போக்கு இயக்கங்களின் ஒருமிப்பாக இந்த நிகழ்வு அமைந்தது சிறப்பானது. இவ்வாறு தமிழ்நாட்டு முதல்வரை அழைக்க முக்கிய காரணம், தமிழ்நாட்டிலிருந்தும் பலர் அந்தப் போராட்ட த்தில் பங்கெடுத்தது. அதில் மிக முக்கிய பங்கினை செலுத்தியவர் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவராக அந்த ஆண்டு பதவி வகித்த பெரியார். வைக்கம் போராட்டத்துக்கு அவர் செய்த தீரமிக்க பங்களிப்புக்காக அவர் “வைக்கம் வீரர்” என்று அழைக்கப்பட்டார். அக்காலத்தில் அவரை ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்றே குறிப்பிட்டார்கள். அவர் ஜாதிப்பட்டத்தை துறந்ததுடன், தமிழ்நாட்டில் யாருமே ஜாதிப் பெயரை பயன்படுத்துவதைத் தவிர்க்கும் சூழலையும் உருவாக்கினார். அவருடைய தன்னலமற்ற தொண்டுக்காக பெரியார் எனப் பெண்கள் மாநாட்டில் அழைக்கப்பட்டார். அந்தப் பெயரே இன்று அவரைக் குறிப்பிடும் பெயராக விளங்கி வருகிறது. பெரியாரின் வைக்கம் பங்கேற்பு அவரை ஜாதீய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான செயல்பாடுகளில் கூர்மைப்படுத்தியது. அதன் பிறகுதான் அவர் காங்கிரஸிலிருந்து விலகி சுயமரியாதை இயக்கம் கண்டார். ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலமாக பார்ப்பனீய, ஜாதீய கருத்தியலுக்கு எதிரான கடுமையான, ஓய்வில்லாத பிரச்சாரத்தை மேற்கொண்டார். பெரியாரின் அந்த இயக்கமே தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தை மக்கள் பேரியக்கமாக காலப்போக்கில் வடிவமைத்து, இன்று திராவிட மாடல் ஆட்சி என இந்தியாவே வியந்து நோக்கும் வரலாற்று திசைவழியை தீர்மானித்தது என்றால் மிகையாகாது. அதனால்தான் முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு அரசும் வைக்கம் நூற்றாண்டு விழாவை இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடும் என அறிவித்துள்ளார். வைக்கம் போராட்டத்தின் வரலாற்று முக்கியத்துவம் வைக்கம் போராட்டத்தின் முக்கியத்துவம் என்பது என்னவென்றால் முதன் முறையாக இந்தியாவில் நவீன அரசியல் சக்தி பார்ப்பனீய சனாதன சக்திகளை, தர்ம சாஸ்திர ஒடுக்குமுறைகளை நேரடியாகப் போராட்டக்களத்தில் சந்தித்தது என்பதுதான். நவீன அரசியலின் அடிப்படை பாரதியின் வார்த்தைகளில் “எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்பதாகும். பார்ப்பனீயம், சனாதனம் என்பது என்னவென்றால் அது பிறப்பின் அடிப்படையில் வர்ணங்களையும், ஜாதிகளையும் பிரித்து உயர்வுதாழ்வு கற்பிப்பதாகும். வைக்கம் போராட்டத்தின் வரலாற்றை விரிவாக ஆராய்ந்து பழ.அதியமான் “வைக்கம் போராட்டம்” என்ற அருமையான நூலை எழுதியுள்ளார். இந்த நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அது மலையாள மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. பெரியாரின் முக்கிய பங்களிப்பினை சிறப்புற வெளிப்படுத்தும் அந்த நூலில், ஒரு சுவாரஸ்யமான பகுதி உள்ளது. அது என்னவென்றால் வைதிகர்கள் எனப்படும் சனாதன சக்திகளுடன் காந்தி 1925 மார்ச் 10 அன்று இந்தன் துருத்தில் தேவன் நீலகண்டன் நம்பியாத்ரி இல்லத்தில் சந்தித்து உரையாடிய சம்பவம். அந்த உரையாடலில் காந்தி ஓர் இடத்தில் முக்கியமான கருத்தைக் கூறுகிறார். ஜாலியன் வாலாபாக்கில் இந்தியர்களைக் கொன்று குவித்த ஜெனரல் டயர் எவ்விதமான மனப்போக்கில் இயங்கினானோ, அதே மனப்போக்கில்தான் ஒடுக்கப்பட்ட ஜாதியினர் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் நடக்கக் கூடாது என்று கூறுகிறீர்கள் என காந்தி சொல்கிறார். ஜெனரல் டயர் இந்தியர்களை ஆங்கிலேயர்களுக்கு சமமான மனிதர்களாக மதிக்கவில்லை. அதேபோலத்தான் பார்ப்பனீய மனோபாவமும், ஒடுக்கப்பட்ட ஜாதிகளை சமமான மனிதர்களாகவே நினைப்பதில்லை. இதை நாம் பார்ப்பனீய மனோபாவம், ஆரிய சிந்தனை என்று சொல்ல முக்கிய காரணம் சமஸ்கிருத நூல்களில்தான் இந்தக் கருத்துகள் வலுவாக எழுதப்பட்டு இந்தியா முழுவதும் பரப்பப்பட்டது என்பதால்தான். மக்களின் இறை நம்பிக்கையை பயன்படுத்திக் கொண்ட பூசாரி வர்க்கம், இதை கடவுளின் சித்தமாக மக்களிடையே பரப்பியது. உதாரணமாக காந்தியிடம் வாதிடும் நம்பூதிரி, முற்பிறவியில் செய்த பாவத்தினால்தான் ஒருவர் தாழ்ந்த ஜாதியில் பிறக்கிறார். அதனால் கடவுளின் எண்ணப்படி அவர்களுக்கு உரிமைகளை மறுப்பதுதான் சரியானது என வாதிடுகிறார். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பிறவியே ஒரு தண்டனைதான், அதை அவர்கள் அனுபவிக்க வேண்டும் என்பதுதான் கடவுளின் எண்ணம் என்பதே பார்ப்பனீயத்தின் பார்வையாகும். அதையே அனைவரும் ஏற்கும்படி பரப்பியதைத்தான் பார்ப்பனீய கருத்தியல் மேலாதிக்கம் (Brahmin Hegemony) என்று அழைக்கிறோம். இந்தக் கருத்தியல் மேலாதிக்கத்துக்கு எதிராகத்தான் பொங்கியெழுந்தார் பெரியார். ஆனால், அவர் பண்டிதர்களிடம் உரையாடிக் கொண்டிருக்கவில்லை. வைக்கத்திலும் சரி, அதன் பிறகும் சரி, நேரடியாக பாமர மக்களிடம் சென்றார். அவர்களுக்குப் புரியும் எளிமையான மொழியில் இந்தக் கருத்தியலில் அடங்கியுள்ள சூதினை எடுத்துச் சொன்னார். பார்ப்பனர்களின் புராணங்களை கேலி செய்தார். கடவுள் நம்பிக்கைக்கு சவால் விடுத்தார். பெரியாரை வைக்கம் வீரர் என்பது வைக்கம் சத்தியாகிரகத்தில் அவர் என்ன பங்களித்தார் என்பதற்காக மட்டுமல்ல. அவர் வைக்கத்தில் ஏந்திய தீப்பந்தத்தை, சுயமரியாதை சுடரொளியை அதன் பிறகு அரை நூற்றாண்டுக் காலம் தொடர்ந்து விடாமல் ஏந்தி வந்தார் என்பதற்காகவும், தொடர்ந்து பார்ப்பனீய, ஜாதீய, சனாதன கருத்தியலுக்கு எதிராக நவீன முற்போக்கு சிந்தனையை தளராமல் உயர்த்திப்பிடித்தார் என்பதற்காகவும்தான். பார்ப்பனீயத்தின் மக்கள் வெறுப்பு சூத்திர, பஞ்சம மக்களுக்கு பிறப்பே அவர்கள் முற்பிறவியில் செய்த பாவத்துக்கு தண்டனைதான் என்றும், தீண்டாமைக் கொடுமைகளை, சமூக விலக்கங்களை அவர்கள் அனுபவிப்பதுதான் கடவுளின் சித்தம் என்றும் கூறிய பார்ப்பனீயம் எவ்வளவு கடுமையான வெறுப்பை உழைக்கும் மக்கள் மீது செலுத்தியது என்பதை இன்று யாரும் பேசுவதில்லை. இன்றைக்கும் அந்த வெறுப்பு ஜாதீயவாதிகள் மனதிலே கனன்று கொண்டுதான் இருக்கிறது. பெரியார் அத்தகைய உறைநிலை வெறுப்பை, மனிதனை மனிதனே கீழமைப்படுத்தும் வெறுப்பை, பெண்களை ஆண்கள் கீழ்மைப்படுத்தும் வெறுப்பை கடுமையாக இகழ்ந்தார், அந்த வெறுப்புக் கருத்தியலை எதிர்த்துப் போராடினார் என்பதற்காக பெரியாரை பார்ப்பன வெறுப்பாளர் என்று இன்றும் கூசாமல் சொல்கின்றனர். இன்றுவரை இந்து மத சாமியார்கள், குருமார்கள், பண்டிதர்கள் எனப்படுபவர்கள் வர்ண தர்மம் என்பது தவறான கற்பனை, நவீன காலத்துக்குப் பொருந்தாது, பிறப்பினால் யாரும் எந்த சமூக அடையாளத்தையும் பெற முடியாது என்று அறிவித்துள்ளார்களா? இன்றும் கூட பிறப்பிலேயே ஒருவர் பார்ப்பனர், மற்றொருவர் இந்தந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்ற நம்பிக்கையைத்தானே ஆதரிக்கின்றனர்? அவ்வாறு பிறப்பிலேயே அடையாளம் இருக்க வேண்டும் என்றுதானே அகமணமுறையை தீவிரமாக ஆதரிக்கின்றனர்? இன்றும் இந்தியாவின் அதிகார மையங்களில் பார்ப்பன, பனியா குடும்பங்கள்தானே ஆதிக்கம் செலுத்துகின்றன? திருவள்ளுவர் தெள்ளத் தெளிவாக சொன்னாரே “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா / செய்தொழில் வேற்றுமை யான்” என்று, அதுதான் இந்து மத தர்மமும் என்று திட்டவட்டமாகக் கூற முடியுமா? முடியாது. ஏனெனில் முற்பிறவியில் செய்த செயல்களின் பலனாகவே இந்தப் பிறவி அமைகிறது. எனவே பிறவியிலேயே ஏற்றத்தாழ்வு தீர்மானிக்கப்படுகிறது என்பதே பார்ப்பனீய சிந்தனை. இதைத்தான் நம்பூதிரி காந்தியிடம் வைக்கத்தில் சொன்னார். இன்றும் பலர் நம்புகிறார்கள். பிறவியே தண்டனை என்பதால் பலவித தீண்டாமைக் கொடுமைகளை, சமூக விலக்கங்களை சூத்திர வர்ணத்தவரும், பஞ்சமரும் அனுபவித்துதான் தீர வேண்டும் என்றும் முற்பிறவியில் செய்த புண்ணியங்களுக்குக் கொடுக்கப்பட்ட பரிசுதான் பிராமணப் பிறவி என்றும் அதனால் அவர்களை உயர்ந்தவர்களாக நடத்த வேண்டும் என்பதுதான் தர்ம சாஸ்திரம். அதை எழுதியது பார்ப்பனர்கள்தான். உண்மையில் பெரியார் வெறுப்பை விதைக்கவில்லை. கடுமையாகப் பேசினாலும், மூட நம்பிக்கைகளைக் களைந்து சிந்திக்கும் ஆற்றலை உருவாக்கவே பேசினார். சுயமரியாதை கொடுத்த வலிமையில் ஒடுக்கப்பட்டவர்கள் பார்ப்பனர்களை எதிர்கொண்டு கேள்வி கேட்டார்களே தவிர, யாரும் பார்ப்பனர்களை வெறுக்கவில்லை. சுயமரியாதை என்பதே ஒருவர் தன்னுடைய சிந்திக்கும் ஆற்றலுக்கு மரியாதை அளிப்பதுதான். சிந்திக்கச் சொன்னவர் பெரியார் வைக்கம் நூற்றாண்டு விழாவை ஒட்டிய இன்னொரு குறிப்பிடத்தக்க நிகழ்வு இரண்டு உலகப் புகழ் பெற்ற ஆளுமைகள் இணைந்து பெரியாரை சிறப்பிக்கும் வகையில் ஒரு கர்னாடக இசைப்பாடலை வெளியிட்டிருப்பதுதான். ஒருவர் இந்த பாடலை பாடிய கர்னாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா. மற்றொருவர் இந்த பாடலை எழுதிய எழுத்தாளர் பெருமாள் முருகன். இந்தப் பாடலின் சிறப்பு என்னவென்றால் பெரியாரின் இயக்கத்தை வெறுப்பியக்கமாகச் சித்திரிக்கும் இந்துத்துவ சக்திகளை மறுத்து பெரியாரின் இயக்கத்தை அறிவியக்கமாக அறிமுகம் செய்வதுதான். “சிந்திக்கச் சொன்னவர் பெரியார், சொந்த புத்தியைக் கொண்டு சிந்திக்கச் சொன்னவர் பெரியார்” என்ற பாடலின் பல்லவி எப்படி பெரியார் தமிழ் அறிவொளிக்காலத்தின் சுடரொளி என்பதை தெளிவாக்கும் வண்ணம் அமைந்துள்ளது. சாதிப் பிரிவினைகள் ஏன் சாத்திர விதிமுறைகள் ஏன் ஆதிக்க நடைமுறை ஏன் அநீதித் தீண்டாமை ஏன் பாதிக்கப்படுவோர் யார் பலனடைந்து வாழ்வோர் யார் ஏதும் அற்றோர் யார் ஏமாற்றிப் பிழைப்பவர் யார் மோதி உடைத்து முழுதாய் இங்கே மாற்றம் காண முருகாய் எதையும் சிந்திக்கச் சொன்னவர் பெரியார் என்ற பாடல் வரிகள் மிகத் தெளிவாய் வைக்கத்தில் தொடங்கிய பெரியார் இயக்கத்தின் அடிப்படைகளை விளக்கிவிடுகின்றன. இந்தப் பாடலின் முக்கியத்துவம் என்னவென்றால் இரண்டு முக்கியமான புலங்களை சார்ந்தவர்கள் பெரியாரின் பெருமையை பாடியுள்ளதுதான். ஒன்று நவீன தமிழ் இலக்கியப் புலம். நவீன தமிழ் இலக்கியம் என்ற புலம் திராவிட இயக்க இலக்கியம், பொதுவுடமை இயக்க இலக்கியம், ஜனரஞ்சக இலக்கியம் ஆகியவற்றிலிருந்து வேறுபட்ட ஒரு நுட்ப மொழி இலக்கிய புலமாகும். இந்தப் புலத்தினை சார்ந்தவர்கள் பலர் காந்தியவாதிகளாக, தேசியவாதிகளாக இருப்பார்கள். முற்போக்காளர்களாக இருப்பார்கள். நவீன சிந்தனைகளை ஆதரிப்பார்கள். மேல் நாட்டு இலக்கியங்களை, சிந்தனையாளர்களை கொண்டாடுவார்கள். ஆனால் பெரும்பாலும் பெரியாரை கொண்டாடுபவர்களாக இருக்க மாட்டார்கள். காரணம் என்னவென்றால், பெரியார் கடுமையான மொழியை பயன்படுத்தினார், பாமரர்களுக்கான மொழியைப் பேசினார் என்பதுதான். இந்தப் புலத்தினை சார்ந்த எழுத்தாளரும், தமிழ் இலக்கிய பேராசிரியருமான பெருமாள் முருகன் பெரும் இலக்கிய சாதனைகளுக்குச் சொந்தக்காரர். இவருடைய நாவல்கள் பல்வேறு உலக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. சர்வதேச அங்கீகாரமும், விருதுகளும் இவரைத் தேடி வருகின்றன. அப்படியான ஓர் எழுத்தாளர் பெரியாரின் இயக்கத்தை வியந்து கொண்டாடும்படியான கருத்தாழம் மிக்க பாடலை எழுதியுள்ளது சிறப்பு. அதைவிட அபூர்வமான நிகழ்வு கர்னாடக சங்கீத புலம் சார்ந்தது. கர்னாடக சங்கீதம், பரத நாட்டியம் ஆகிய இரண்டையுமே இசை வேளாளர்கள், பிற பிற்பட்ட சமூகத்தினரிடமிருந்து சுவீகரித்துக் கொண்ட பார்ப்பன சமூகம் இருபதாம் நூற்றாண்டில் அவர்களது கலாச்சார அடையாளமாகவே இவற்றை நிறுவுவதில் பெருமளவு வெற்றி பெற்றது எனலாம். குறிப்பாக சென்னையில் டிசம்பர் மாதம் நடக்கும் இசை விழா என்பது பிராமண சமூக விழாவாகவே கடந்த நூறாண்டுகளில் உருவெடுத்துள்ளது எனலாம். அத்தகைய கர்னாடக சங்கீத புலம்சார்ந்த பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்தவர் டி.எம்.கிருஷ்ணா. தத்துவவாதி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியால் ஈர்க்கப்பட்ட அவர் இப்படி இசையானது ஒரு ஜாதியின் வட்டத்திற்குள் சுருக்கப்படுவதை ஏற்கவில்லை. அதனால் கர்னாடக இசையை மக்களிடையே எடுத்துச் செல்வதை ஓர் இயக்கமாக மேற்கொண்டார். துணிகரமாக ஜாதீய மனோபாவத்தை எதிர்த்துப் பேசினார். அவருடைய முற்போக்கான கலாச்சார முயற்சிகளுக்காக மகஸேஸே விருது பெற்றார். அடுத்த கட்டமாக கர்னாடக இசைப்பாடல்கள் இறைவனைத்தான் பாட வேண்டும் என்ற விதியையும் தகர்க்க முற்பட்டார். சூழலியல் குறித்த அக்கறையை வெளிப்படுத்தும் தமிழ் தனிப்பாடல்கள், பல்வேறு பொருட்களை குறித்த தமிழ் தனிப்பாடல்கள் என்று பாடி வெளியிட்டார். இந்து மத தெய்வங்களைத்தான் பாட வேண்டுமா என கிறிஸ்துவையும், அல்லாவையும் குறித்தும் பாடினார். இதுபோன்ற முயற்சிகளுக்காக இந்துத்துவ சக்திகளின் எதிர்ப்பினை ஈட்டினார். இசை என்பது ஒரு சாராரின், ஒரு மதத்தின், ஜாதியின் பிடிக்குள் இருக்கக் கூடாது என்பதற்காக தன் கலை வாழ்க்கையை அர்ப்பணித்தவர் கிருஷ்ணா. சமீபத்தில் புதுடெல்லி அசோகா பல்கலைக்கழகத்துடன் இணைந்து அசோகர் கல்வெட்டு வரிகளையும் பாடி வெளியிட்டார். இத்தகைய முற்போக்கு சிந்தனை கொண்ட இசைக்கலைஞர் வைக்கம் நூற்றாண்டை முன்னிட்டு பெரியார் குறித்த பெருமாள் முருகன் பாடலைப் பாடி வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியதாகும். பெரியாரின் அறிவியக்கம் என்பது ஜாதீயக் கருத்தியலுக்கு எதிரானது, ஏற்றத்தாழ்வுக்கு எதிரானது என்பதை அனைத்து தரப்பினரும் ஏற்பதும், கொண்டாடுவதும் அவசியமானதாகும். இதனை முன்னிட்டே ஆசிரியர் வீரமணி டி.எம். கிருஷ்ணாவை, எழுத்தாளர் வ.ராமசாமி குறித்து அண்ணா கூறிய வார்த்தைகளில் “அக்ரகாரத்தின் அதிசய மனிதர்” என்று கூறியுள்ளார். வைக்கம் நூற்றாண்டில் பெருகும் பெரியார் பெருமையைக் கொண்டாடுவோம். சனாதான சக்திகளின் மீட்புவாத அரசியலை முறியடிப்போம். https://minnambalam.com/political-news/periyar-vaikom-satyagraha-special-story-rajankurai/
  8. தமிழ் நாடு, பீஹார்: இரு மாநிலங்களின் வரலாறும், வதந்தி அரசியலும் Mar 06, 2023 07:01AM IST ராஜன் குறை கடந்த இரு தினங்களாக பரபரப்பான செய்தி என்னவென்றால் அது தமிழகத்தில் பணிபுரியும் பீஹார் மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக உருவான வதந்தியும், அதை நம்பிய பீஹார் மாநிலத் தொழிலாளர்கள் பலர் சொந்த ஊர் திரும்ப முற்பட்டதும்தான். உண்மையில் எந்தத் தாக்குதலும் நிகழாதபோது எப்படி இந்த வதந்தி பரவியது, குறிப்பாக பீஹார் மாநிலத்தவர் மட்டும் தாக்கப்பட ஏதேனும் காரணம் இருக்க முடியுமா என்பதெல்லாம்தான் கேள்விகள். இதைத் தொடர்ந்து ஆராயும்போதுதான் வதந்திகளின் மூலம் பீஹார் மாநில பாரதீய ஜனதா கட்சி தலைவர் ஒருவர் என்பதும், அந்த மாநிலத்தின் அதிகாரபூர்வமான பாஜக கட்சி ட்விட்டர் பக்கத்திலேயே இந்த வதந்தி செய்திகள் பதியப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முனைந்துள்ளது. வதந்திகளை பரப்புவதும், கலவரத்தைத் தூண்டுவதும் ஆர்.எஸ்.எஸ், பாஜக உள்ளிட்ட சங்க பரிவாரத்துக்குப் புதிதல்ல. காலம் காலமாக மதக்கலவரங்களை வாய்மொழியாக பரப்பப்படும் கட்டுக்கதைகள், வெறுப்பரசியல் மூலம் உருவாக்கி வந்தவர்கள்தான் அவர்கள். இப்போது ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற தொலைத்தொடர்பு வளர்ச்சியில் சாத்தியமான சமூக ஊடகங்களையும் பழைய வதந்தி பரப்பும் அரசியலுக்கே அவர்கள் பயன்படுத்துவது அருவருக்கத்தக்கதானாலும், வியப்பிற்குரியதல்ல. ஆனால், எதனால் பீஹார் மாநில பாரதீய ஜனதா கட்சி தமிழ்நாடு குறித்து இப்படியான வதந்தியைப் பரப்பியது என்பதுதான் வியப்புக்குரிய கேள்வி. திடீரென்று இந்த விபரீத செயல்பாட்டில் அது ஈடுபடக் காரணமாக அரசியல் கருத்தாளர்களுக்கு தெரிவதெல்லாம் பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தமிழ்நாட்டு முதல்வரின் பிறந்த நாள் விழாவில் பங்கெடுத்து பேசியதுதான். தேஜஸ்வி யாதவ் பேசியதன் முக்கியத்துவம் சென்னையில் மார்ச் முதல் தேதி நடைபெற்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளில் தேஜஸ்வி யாதவ் பங்கேற்றதைக் குறித்து பீஹார் சட்டமன்றத்தில் பாஜக உறுப்பினர்கள் கலவரம் செய்துள்ளார்கள். பீஹார் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படும்போது, எப்படி முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் கேக் வெட்டுவதற்கு தேஜஸ்வி செல்லலாம், எப்படி தனி விமானத்தில் பறக்கலாம் என்றெல்லாம் ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்கள். இவ்வாறு கலவரம் செய்வதற்கென்றேதான் அவர்கள் வதந்தி பரப்பியுள்ளார்கள். அவர்கள் பரப்பிய வதந்தியைக் காட்டி அவர்களே சட்டமன்றத்தில் அமளியில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்கள் நோக்கமெல்லாம் தேஜஸ்விக்கு அவப்பெயர் உருவாக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, தேஜஸ்வி சென்னையில் சொன்னதுபோல சமூகநீதி அரசியலை முன்னெடுக்கும் சக்திகள் ஒருங்கிணையக் கூடாது என்பதும்தான். தேஜஸ்வி முதல்வர் ஸ்டாலின் விழாவில் சுருக்கமாகப் பேசினாலும் சில முக்கிய கருத்துகளைக் கூறினார். அதில் ஒன்று என்னவென்றால்… எப்படி சமூகநீதிக் கொள்கைகளை முன்னிலைப்படுத்தி மக்களை அணி திரட்டுவது, கட்சிகளை ஒருங்கிணைப்பது என்பதை தி.மு.க-விடமிருந்து வட இந்தியக் கட்சிகள் மீண்டும், மீண்டும் கற்றுத் தெளிய வேண்டும் என்பதுதான். சுருக்கமாகச் சொன்னால் பாஜக எதிர்ப்பிற்கு தி.மு.க ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டவேண்டும் என்றே தேஜஸ்வி கூறினார் என்று சொல்லலாம். பாஜக ஏன் பதற்றமடைய வேண்டும்? தேஜஸ்வி தி.மு.க-வை புகழ்ந்து பேசினால், சமூகநீதிக்கான சக்திகள் பாஜகவுக்கு எதிராக அணி திரள வேண்டும் என்று பேசினால் ஏன் பாஜக பதற்றமடைய வேண்டும்? அதற்குக் காரணம் 2024 தேர்தலில் அது எதிர்கொள்ளும் சிக்கல்தான். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை அடைய வேண்டும் என்றால் 272 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இன்றைய சூழ் நிலையில் பாஜக தனித்து ஆட்சி செய்யும் பெரிய மாநிலங்கள் நான்கு மட்டுமே. அவற்றின் நாடாளுமன்றத் தொகுதிகள் விவரம்: உத்தரப்பிரதேசம் – 80, குஜராத் – 26, மத்தியப்பிரதேசம் – 29, கர்நாடகம் – 28 ஆகியவைதான். மொத்தம் 163 தொகுதிகள்தான். இவற்றில் குஜராத் நீங்கலாக மற்ற மூன்று மாநிலங்களிலும் வலுவான எதிர்க்கட்சிகள் உள்ளன. கர்நாடகம், மத்தியப்பிரதேசம் இரண்டிலும் காங்கிரஸ் கூட்டணி சமீபத்திய தேர்தல்களில் வெற்றியைப் பெற்றுள்ளன. உத்திரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி ஜனதா கட்சி கடும் போட்டியைக் கொடுத்துள்ளது. இவற்றைத் தவிர கூட்டணியாக ஆட்சி செய்யும் பெரிய மாநிலங்கள் மஹாராஷ்டிரா – 48, அஸ்ஸாம் – 14, ஹரியானா – 10. மொத்தம் 72 தொகுதிகள். இதில் மஹாராஷ்டிராவில் பாஜக உருவாக்கிய சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே பிரிவு, மக்கள் ஆதரவைப் பெறுமா என்பதில் உறுதியில்லை. சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, காங்கிரஸ் கூட்டணியை வெல்வது சுலபமில்லை. எனவே, மொத்தத்தில் 185 தொகுதிகள் இழுபறி கடும்போட்டி. ஐம்பது தொகுதிகள்தான் அதற்கு வலுவான அடித்தளம் என்ற அளவிலேயே பாஜக உள்ளது. எல்லாம் சேர்த்தால் கூட 235 தொகுதிகள்தான் அதன் நேரடி செல்வாக்குக்கு உட்பட்டவை எனலாம். வட கிழக்கு சிறு மாநிலங்களையெல்லாம் சேர்த்தாலும் 250 தொகுதிகளில்தான் பாஜக வெற்றிக்கோட்டை எட்ட சாத்தியம் என்ற போட்டியில் இருக்கிறது. ஆனால் அதற்கு பெரும்பான்மைக்குத் தேவை 272. இந்த நிலையில் பீஹாரில் நிதீஷ் குமார் பாஜக கூட்டணியிலிருந்து விலகி எதிர் அணியில் இணைந்திருப்பது பீஹாரின் 40 தொகுதிகளை எட்டாக் கனிகளாக மாற்றிவிடும் என்பது பாஜகவின் வெற்றிக் கனவினை முற்றிலும் சீர்குலைப்பதாக இருப்பதை புரிந்துகொள்ள முடியும். அதனால்தான் தேஜஸ்வி தமிழ்நாட்டுக்கு வருவதும், தி.மு.கவை வழிகாட்டி எனப் புகழ்வதும் அதற்கு பெரும் காய்ச்சலை ஏற்படுத்துகிறது. பீஹார் மற்றும் தமிழ் நாட்டு வரலாற்றை நாம் இந்த இடத்தில் ஒப்பு நோக்கி புரிந்துகொள்ள வேண்டும். பாடலிபுத்திரம் பீஹாரும், தமிழ்நாடும்: பண்டைய வரலாறு இந்தியாவில் மிகத் தொன்மையான நாகரிகத்தின் தொட்டிலாக விளங்கியது பீஹார் என்றால் மிகையாகாது. பொது ஆண்டுக்கு ஐந்நூறு வருடங்களுக்கு முன் (500 BCE) புத்தர் வாழ்ந்த மண் பீஹார். பாடலிபுத்திரம் என்பது இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் செழித்து விளங்கிய நகரம். மகத பேரரசு கோலோச்சிய நிலம் பீஹார். தமிழ்நாட்டின் கீழடி ஆய்வுகள் நமக்குப் புலப்படுத்தத் துவங்கியுள்ள வரலாறு தமிழகத்திலும் நகர நாகரிகம் பொது ஆண்டுக்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே உருவாகியிருந்தது என்பதுதான். எனவே புத்தருக்கு சமகாலத்தில் தமிழ்நாடும் பண்பாடும், கலைகளும் செழிக்கத்துவங்கிய பகுதியாகவே விளங்கியுள்ளது. அதன் காரணமே தமிழ்நாட்டிலும் பெளத்தம், சமணம், அஜீவகம் உள்ளிட்ட சிரமண மதங்களின் பிரிவுகளும், தாக்கமும் இருந்துள்ளன. ஆரிய வேத மதங்களுக்கு மாற்றான மதங்கள், பண்பாட்டு மூலங்கள் செழுமை பெற்று விளங்கிய மாநிலங்களே பீஹாரும், தமிழ்நாடும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆரிய சிந்தனைகளும், பார்ப்பனீய வேத மதமும் இந்தப் பகுதிகளில் ஊடுருவினாலும் அவற்றுக்கு மாற்றான சிந்தனைகளும், எதிர் மரபுகளும் இந்த மாநிலங்களின் பண்பாட்டு வேர்களிலேயே சூல் கொண்டுள்ளன என்றால் மிகையாகாது. பீஹாரும், தமிழ்நாடும்: சமகால அரசியல் வரலாறு இப்படியான ஒப்பு நோக்கத்தக்க தொன்மையான பண்பாட்டு வேர்களைக் கொண்டிருந்தாலும், காலனீய ஆட்சிக்காலத்தில் பீஹாருக்கும், தமிழ்நாட்டுக்கும் மிகவும் வேறுபட்ட வரலாற்றுப் பாதைகளே உருவாயின. அதற்கு முக்கிய காரணம் என மொழி அரசியலைச் சொல்லலாம். தமிழ் நாட்டில் தொன்மையான தமிழ்மொழி பயன்பாட்டில் தொடர்ச்சி நிலவி வந்தது. மக்கள் பேச்சு வழக்கில் அது பல்வேறு வடிவம் கொண்டாலும், அதன் இலக்கிய மரபுகளில் தொடர்ச்சி பேணப்பட்டது. தமிழ் நாட்டின் அரசியல் அமைப்பு மத்திய காலத்தில் பெரும் வளர்சிதை மாற்றங்களைக் கண்டாலும், அதன் மொழியானது ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சியை உறுதி செய்யும் வல்லமை கொண்டு உள்ளுறை ஆற்றலாக விளங்கி வந்துள்ளது வியக்கத்தக்க உண்மையாகும். இதன் காரணமாக பத்தொன்பதாம் நூற்றாண்டில் அச்சின் பரவலாக்கமும், பண்டைய தமிழ் பிரதிகளின் அச்சாக்கமும் நிகழ்ந்தபோது பரவலான தமிழ் மறுமலர்ச்சி ஒன்று உருவானது. அது தமிழ்நாட்டின் அரசியலமைப்பில் புகுந்திருந்த பிற மொழிகளை எளிதில் அகற்றி, தமிழை பொதுமன்றத்தின் மொழியாக துரிதமாக நிறுவியது. திராவிட இயக்கம், குறிப்பாக தி.மு.க, பண்டைய தமிழ் மொழிக்கும், சமகால பேச்சு மொழிக்கும் இடையே புதியதொரு நவீன தொடர்பு மொழியை உருவாக்கி மக்களை அதன் மூலம் அரசியல்மயப்படுத்துவதில் பெருவெற்றி கண்டது. உதாரணமாக, வாசகர்களுக்கு அறிவிப்புகளைச் செய்யும்போது “உபயகுசலோபரி” (நலம்; நாடுவதும் அதுவே என இருபுறமும் நலம் நவில்வதற்கான சமஸ்கிருத சொல்) என்று விளித்து எழுதிய ஆனந்த விகடன் பத்திரிகை அறுபதுகளில் “வணக்கம்!” என்று முகமன் கூறி எழுதும் கால மாற்றம் சாத்தியமானது. மக்களின் பேச்சு மொழியிலிருந்தே அணுக க் கூடிய அரசியல் மொழி என்பது அரசியல் அணிசேர்க்கைக்கு முக்கியமானது. அந்த மொழியுடன் மக்கள் உளமார உணர்வுரீதியாக பிணைக்கப்படும்போதுதான் சாமானியர்களும், பணக்காரர்களும், தொழிலாளிகளும், முதலாளிகளும், பண்ணையார்களும், பண்ணையாட்களும் தங்கள் அரசியலை பொதுவானதாகக் காண முடியும். தமிழ்நாட்டில் மக்களாட்சி அரசியலில் ஜாதி, வகுப்பு, வர்க்க வேறுபாடுகளை கடந்த பொதுவான சுதந்திரவாத அரசியல் களமொன்று சாத்தியமாக மொழி மறுமலர்ச்சியும், மொழிக்களம் சாதித்த பொது மன்றமும் துணை புரிந்தது. இந்தி மொழியில் சிக்கிய பீஹார் பீஹாரில் நடந்தது முற்றிலும் வேறு கதை. அந்த மாநிலத்தில் மக்கள் பேசும் மொழிகள், தொன்மையான மொழிகள் மைதிலி, மஹதி, போஜ்பூரி ஆகிய மொழிகளேயாகும். இவற்றின் பேச்சு மொழி வடிவங்கள் பல மாவட்டங்களில் வேறுபட்டாலும் பொதுவாக போஜ்பூரி, மைதிலி மொழிகளே மக்கள் பேசும் மொழிகள் என்று கூறலாம். ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பீஹார் இந்தி பேசும் மாநிலமாக நவீன காலத்தில் கட்டமைக்கப்பட்டது. பொதுவெளியில் புழங்கும் மொழியாக, ஊடக மொழியாக, அரசு மொழியாக உருது மொழி நீக்கம் செய்யப் பட்டு, சமஸ்கிருதமயமான இந்தி மொழி பீஹாரின் அரசியல் மொழியாக நிலை பெற்றது. மக்களின் பேச்சு மொழிக்கும், அரசியல் உரையாடலுக்கும் ஏற்பட்ட இந்த இடைவெளி அரசியல் அணி சேர்க்கையிலும், மக்களை ஒரு பொதுமன்றமாக கட்டமைப்பதிலும் கணிசமான சிக்கலை உருவாக்கியதோ என்று கருதாமல் இருக்க முடியவில்லை. இந்தி மொழி திணிப்பை எதிர்ப்பதன் மூலமே தன் அரசியலை, மக்களின் திராவிட-தமிழ் அடையாளத்தை உறுதி செய்தது திராவிட இயக்கம். அது சமூகநீதி அரசியலை சாத்தியமாக்கியது; அது பொருளாதார வளர்ச்சியை மனிதவளத்துடன் பிணைத்ததால் மக்கள் பகிர்ந்துகொள்ளும் பொருளாதார வளர்ச்சி என்பது சாத்தியமானது. நில உடமை கட்டமைப்பு வீழ்ந்து, தொழில்துறையும், சிறு குறு தொழில்களும், சேவைத்துறையும் மேலோங்கின. இவற்றின் விளைவாக மொத்த உள் நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாவது இட த்திலும், பீஹார் பதினான்காவது இடத்திலும் உள்ளது. மொத்த உற்பத்தியின் அடிப்படையில் கணக்கிடப்படும் தனி நபர் வருவாயில் தமிழ்நாடு பத்தாவது இட த்திலும், பீஹார் நாட்டிலேயே கடைசி இட த்திலும் உள்ளது. வறுமைக்கோட்டுக்குக் கீழிருப்பவர் எண்ணிக்கையிலும் பீஹார் தமிழ்நாட்டுடன் ஒப்பிடுகையில் மிகவும் பின் தங்கியுள்ளது. இவற்றின் விளைவாகவே பீஹாரிலிருந்து மக்கள் கணிசமான எண்ணிக்கையில் புலம் பெயர்ந்து தமிழ்நாட்டுக்குப் பணிபுரிய வருகிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் அவர்களை வேற்றுமையாக நடத்தாமல், சமூக அரவணைப்பைத் தருவதற்கு பல எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். ஆனால் எந்த இந்து, இந்தி அரசியல் பேசி பீஹார் மாநிலத்தின் மக்கள் தொகுதியின் அரசியல் தன்னுணர்வை வளரவிடாமல் செய்தார்களோ… அந்த அரசியலேயே முன்னெடுக்கும் பாஜக இன்று தமிழ்நாட்டை பீஹார் தொழிலாளர்களுக்கு எதிரானதாக சித்திரிக்கிறது. அதற்குக் காரணம் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றிலிருந்து பீஹாரின் சமூக நீதி அரசியல் உத்வேகம் பெறக்கூடாது, இந்தி-இந்து-இந்தியா மாயையிலிருந்து விடுபட்டு அதன் மக்கள் தொகுதிகள் தங்களை தன்னுணர்வுடன் கட்டமைத்துக் கொள்ளக் கூடாது என்ற நோக்கத்தைத் தவிர வேறு என்ன இருக்க முடியும் என்பதே கேள்வி. கட்டுரையாளர் குறிப்பு: ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி https://minnambalam.com/political-news/bihar-migrant-workers-attack-false-news-rajan-kurai/
  9. திராவிட வரலாற்று மறுமலர்ச்சி நாயகர் மு.க.ஸ்டாலின் Feb 27, 2023 07:00AM IST ப் ராஜன் குறை தனது எழுபதாவது அகவையை மார்ச் மாதம் முதல் நாள் நிறைவு செய்யும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் திராவிட வரலாற்றின் மறுமலர்ச்சி நாயகராகக் காட்சி தருகிறார் என்றால் மிகையாகாது. இந்திய வரலாற்றின் மிக முக்கியமான தருணத்தில் இந்தியாவை திராவிட இந்தியாவாக வடிவமைப்பதில் முன்னணி பங்கு வகிக்கும் தலைவராக வடிவெடுத்திருக்கும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதிலும், ஆதரவைக் கூறுவதிலும் தமிழ் மக்களுடன் இணைகிறேன். அவருடைய வரலாற்றுப் பங்களிப்பு தமிழ்நாட்டு எல்லைகளைக் கடந்து, இந்திய அளவிலானது என்பதைத் தெளிவாக்கும் விதமாகவே அவருடைய பிறந்த நாள் அமைகிறது. இந்தியாவின் அரசியல் வரலாற்றுத் தருணம் இந்தியாவின் நீண்ட கால வரலாற்றை ஆராய்பவர்கள் ஒரு முக்கிய அம்சத்தைக் காணலாம். அது என்னவென்றால் ஆரியம் என்று அழைக்கப்படும் சமஸ்கிருத, பார்ப்பனீய கருத்தியலுக்கும், அதற்கு மாற்றான வெகுஜன வாழ்வியல் நெறிகளின், சிரமண மதங்களின், அதாவது பெளத்த, ஜைன, அஜீவக மதங்களின் கருத்தியல்களுக்கும் உள்ள முரண் என்பதே அந்த முக்கிய அம்சம். ஆரிய பார்ப்பனீய கருத்தியல் என்பது ஒரு பிரமிட் வடிவத்தில் சமூக படி நிலையைக் கட்டமைப்பது. அதன் உச்சியில் பிராமணர்கள், அடுத்து சத்திரியர்கள், அடுத்து வைசியர்கள், அதற்கெல்லாம் அடித்தளமாக பெருமளவிலான விவசாயிகளான, உழைப்பாளர்களான சூத்திரர்கள், அவர்களுக்கும் கீழே அவர்ணர்கள் அல்லது பஞ்சமர்கள், விலக்கப்பட்ட ஆதிவாசிகள் என்பதே இந்த பிரமிட் வடிவிலான சமூக, அரசியல் அதிகாரக் கட்டமைப்பு. இதற்கு மாற்றான வாழ்க்கை முறைகள், சிந்தனை முறைகளில் பண்டைய திராவிடமும் ஒன்றாக இருந்துள்ளது. தமிழ் மொழியின் தொல் இலக்கியங்களில் வெளிப்படும் கூற்றுக்கள் சமத்துவ சிந்தனைகளை வலியுறுத்துவையாக உள்ளன. தமிழகத்தில் புத்த, ஜைன மதங்களும் செல்வாக்குடன் விளங்கியுள்ளன. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற வள்ளுவம், பிறப்பிலேயே வர்ணத்தைத் தீர்மானிக்கும் ஆரிய வாழ்முறைக்கு எதிரான குரலாகவே அமைகிறது. அதனால் இந்தியா முழுவதிலும் ஆரிய சமூக அமைப்பை, அதற்கான கருத்தியலை ஏற்காதவர்களை திராவிட இந்தியர்கள் என்றழைப்பதில் தவறில்லை. அதாவது ஆரியத்துக்கு மாற்றான கருத்தியல் அடிப்படையில் அமையக் கூடியது திராவிட இந்தியா. புவியியல் அடிப்படையில் திராவிட மொழிகளைப் பேசும் தென்னிந்தியாவை திராவிட இந்தியா என்று அழைத்தாலும், கருத்தியல் அடிப்படையில் மொத்த இந்தியாவும் திராவிட இந்தியாவாக, வர்ண தர்மத்தை, பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வை மறுத்த இந்தியாவாக உருவாவது மக்களாட்சியை மேன்மையுறச் செய்ய அவசியமானது. வர்ண தர்ம சிந்தனைக்கும், சமத்துவ சிந்தனைக்குமான முரணே இன்று மக்களாட்சி அரசியலில் கூர்மையடைந்துள்ளது. ராஷ்டிரிய சுயம்சேவக் சங் என்னும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினால் வழி நடத்தப்படும் பாரதீய ஜனதா கட்சி வெளிப்படையாகவே சனாதன தர்மம் எனப்படும் வர்ண தர்மத்தை ஆதரித்து பேசி, பரப்பி வருகிறது. பொருளாதார வளர்ச்சி, தேச பக்தி என்பதையெல்லாம் தங்களது முக்கிய அரசியலாக அவர்கள் பேசினாலும் அவர்களது இந்துத்துவ அடையாளவாத கருத்தியல் வர்ண தர்மம் இல்லாமல் இயங்க முடியாது. இந்த உண்மையைத்தான் தனது “ஆரிய மாயை” நூலிலே தெளிவுபடுத்தினார் அறிஞர் அண்ணா. பாஜக கட்சியின் வர்ண தர்ம ஆதரவாலேயே பார்ப்பன வகுப்பினரில் பிற்போக்காளர்கள் பலரால் அந்தக் கட்சி தமிழகத்தில் தீவிரமாக ஆதரிக்கப்படுவதைக் காண முடிகிறது. இவர்களில் பலர் வெளிப்படையாகவே ஜாதீய சிந்தனையை இன்று பொதுவெளியில் பேசுகிறார்கள். அவை காணொலியாக சமூக ஊடகங்களில் பரவுகின்றன. அதற்கு எதிர்வினையாக இன்று இளைஞர்களிடையே, பொது மக்களிடையே திராவிட இயக்க மறுமலர்ச்சி ஒன்று உருவாகி வருகிறது. அந்த மறுமலர்ச்சியின் நாயகராகவே மு.க.ஸ்டாலின் காட்சி தருகிறார். அதற்கான காரணங்களாக மூன்று அம்சங்களை சொல்ல வேண்டும். கொள்கை பிடிப்பு, அயரா உழைப்பு, ஆட்சியின் சிறப்பு ஆகிய மூன்றுமே அவரை இன்று வரலாற்று நாயகராக மாற்றியுள்ளன. கொள்கை பிடிப்பு கலைஞர் மறைவுக்குப்பின் 2018ஆம் ஆண்டு கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபோது, மத்தியில் ஆளும் பாஜக ஆதரவுடன் தமிழ் நாட்டில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தார். அந்த நிலையில் ஸ்டாலின் பாஜக-வுடன் அணுக்கம் காட்டி, பழனிசாமி ஆட்சியைக் கவிழ்ப்பாரா என்றெல்லாம் சில குறுக்குப் புத்திக்காரர்கள் யூகங்களைப் பேசினார்கள். ஆனால் அவர்கள் வாய்களை அடைக்கும்படி, அவர் தலைவராகப் பொறுப்பேற்ற தருணத்திலேயே மதவாத அரசியலுடன் எந்த சமரசமும் கிடையாது என்பதை உறுதிப்படத் தெரிவித்தார். அன்றிலிருந்து எள்ளளவும் மாற்றமின்றி திராவிட இயக்கத்தின் அடிப்படை தத்துவங்களை தாங்கிப் பிடிப்பவராக, பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் பயணம் செய்த நூறாண்டு கண்ட வரலாற்றுப் பாதையில் தொடர்பவராக, மாநில சுயாட்சியை அடிப்படையாகக் கொண்ட திராவிட இந்தியா என்ற லட்சியத்தை நோக்கி உறுதிப்படக் கட்சியை வழி நடத்துபவராக விளங்குகிறார். உதயநிதி ஸ்டாலினை இளைஞரணி தலைவராக்கி புது ரத்தம் பாய்ச்சியதுடன், தமிழ்நாடெங்கும் பயிற்சி வகுப்புகள், பாசறைகள் எனக் கட்சியின் கருத்தியல் விழிப்புணர்வை மேம்படுத்தும் பணிகளை உற்சாகப்படுத்தி வருகிறார். இந்தக் கருத்தியல் தெளிவின் அடிப்படையில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், மறுமலர்ச்சி திமுக அடங்கிய முற்போக்குக் கூட்டணியை மிக உறுதியான கொள்கைக் கூட்டணியாக வடிவமைத்துள்ளார். தான் கட்சிப் பொறுப்பேற்ற மறு ஆண்டிலேயே நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக்கு மகத்தான வெற்றியைத் தேடித் தந்தார். மாநிலத்தில் அ.இ.அ.தி.மு.க, ஒன்றியத்தில் பாஜக என்ற இரண்டு ஆளும் கட்சிகளின் அதிகார பலத்தை, பணபலத்தை முறியடித்து முப்பத்தொன்பது தொகுதிகளில் முப்பத்தெட்டில் வெற்றியை ஈட்டியது சாதாரணமான சாதனையல்ல. துரதிர்ஷ்டவசமாக, தமிழ்நாட்டில் ஏற்பட்ட விழிப்புணர்வு வட மாநிலங்களில் ஏற்படாததால், பாஜக மீண்டும் ஒன்றிய அரசில் ஆட்சிக் கட்டிலில் ஏறியது. இருப்பினும் தமிழில் உறுதிமொழியேற்ற தருணத்திலிருந்து முப்பத்தெட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் இந்திய ஒன்றியத்தை தமிழகத்தைத் திரும்பிப் பார்க்கச் செய்வதாக அமைந்துள்ளதைக் காண முடிகிறது. அந்த திசையில் உறுதிப்பட உயர்ந்து நிற்கிறார் மு.க.ஸ்டாலின். அயரா உழைப்பு! நாடாளுமன்றத் தேர்தலில் ஈட்டிய வெற்றி என்பது எளிதில் கிடைத்ததாகக் கருத முடியாது. தேர்தல் பிரச்சாரம் என்று வந்தால் பம்பரமாகச் சுற்றிச் சூழலும் தி.மு.க பாரம்பர்யத்தில் உருவானவர் ஸ்டாலின். கலைஞரைப் போலவே அயராத சுற்றுப் பயணங்களை மேற்கொள்வதில் வல்லவர். நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி கிட்டிவிட்டதே என அயர்ந்து விடவில்லை அவர். அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டை அ.இ.அ.தி.மு.க-வின் அவல ஆட்சி, எடப்பாடி பழனிசாமியின் எடுபிடி ஆட்சியிலிருந்து மீட்க வேண்டிய அவசியத்தை உணர்ந்த அவர் ஒருமுறைக்கு மூன்று முறை மாநிலமெங்கும் வலம் வந்தார். செல்லுமிடமெல்லாம் கோரிக்கை பெட்டிகளை வைத்தார். மக்களின் கோரிக்கை மனுக்களை அதில் இட்டபின் பெட்டியினை சீல் வைத்துப் பூட்டினார். ஆட்சிக்கு வந்தவுடன் அதைத் திறந்து பார்த்து அத்தனை கோரிக்கைகளையும் பரிசீலித்து நிறைவேற்றுவேன் என்றார். அன்றைக்கு அதெல்லாம் சாத்தியமில்லை என்று கொக்கரித்தார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்தபின் அதற்கென தனி அதிகாரியை நியமித்து சொன்னபடி செய்து காட்டினார். கிராம சபை கூட்டங்கள், தொகுதி வாரியாக சிறு மாநாடு போன்ற கூட்டங்கள், வாகனங்களில் நின்றபடி பிரச்சாரம், காலை வேளைகளில் தெருக்களில் மக்களிடையே நடந்து சென்று பிரச்சாரம் என அத்தனை வகையான வழிகளிலும் மாநிலமெங்கும் மக்களைச் சந்தித்தார். கேள்விகளுக்கு பதில் சொன்னார். புன்னகை மாறாமல் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அன்புத்தொல்லை அனைத்தையும் இன்முகத்துடன் ஏற்றார். கொரானோ தொற்று முற்றாக நீங்கியிராவிட்டாலும், முகக்கவசம் அணிந்துகொண்டு முகம் சுளிக்காமல் பயணங்களை மேற்கொண்டார். சட்டமன்றத் தேர்தலுக்கு முன் ஓராண்டுக் காலமாக அவர் பயணங்களை, செயல்பாடுகளை ஊன்றிக் கவனித்து வந்தவன் என்ற முறையில் அவரது உழைப்பின் தீவிரத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அவரது சோர்வற்ற, எழுச்சிமிக்க பிரச்சாரங்களே தி.மு.க பெற்ற மகத்தான வெற்றியின்அச்சாரம் என்று கூற வேண்டும். “ஸ்டாலின்தான் வராரு, விடியல் தரப் போறாரு” என்ற பிரச்சாரப் பாடலை உண்மையாக்கிக் காட்டினார். ஆட்சியின் சிறப்பு! வெற்றிதான் பெற்றுவிட்டோமே என்று ஓய்ந்துவிடவில்லை ஸ்டாலின் அவர்கள். தனது ஓயாத இயக்கத்தை ஆட்சியின் உந்துவிசையாக மாற்றினார். ஆட்சிக்கு வந்ததும், மீண்டும் சுழன்றடித்த கொரோனா தொற்றினை எதிர்கொள்வதில் முனைப்பு காட்டினார். அவரே கவச ஆடை அணிந்து கொரோனா நோயாளிகள் இருந்த வார்டுக்கே சென்று மேற்பார்வையிட்டார். அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அவர் ஒவ்வொரு நாளும் புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டுமென உத்தரவு போட்டுவிட்டாரோ என்று எண்ணுமளவு நாள்தோறும் அறிவிப்புகள், திறப்பு விழாக்கள், மேற்பார்வையிடல்கள் என அரசு இயந்திரத்தைப் பரபரக்க வைத்துள்ளார் முதல்வர். இல்லம் தோறும் கல்வி என்பார்கள், இலக்கிய விழா என்பார்கள், புதிய நூலகம் என்பார்கள், தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பார்கள், நான் முதல்வன் திட்டம் என்பார்கள், பள்ளிகளில் காலை சிற்றுண்டி என்பார்கள், தகைசால் தமிழர் விருது என்பார்கள், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்பார்கள், புதிய மருத்துவமனை என்பார்கள், அரசுப் பள்ளியில் படித்தவர்களுக்கு கல்லூரி செல்ல உதவிப்பணம் என்பார்கள், எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம் என்பார்கள்; ஏதாவது புதிய திட்டங்களும் அறிவிப்புகளும் இல்லாமல் ஒரு நாளும் கழியாது என்பது போல அரசை நடத்தி வருகிறார் ஸ்டாலின். இவ்வளவுக்கும் நிதி ஒதுக்குவதில் கெடுபிடி காட்டும் ஒன்றிய அரசு, திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் முட்டுக்கட்டை போடும் ஆளுநர், ஒன்றிய அரசு, மாநில அரசின் முக்கிய நிதி ஆதாரமான விற்பனை வரியும் ஜிஎஸ்டி என்ற பெயரில் ஒன்றிய அரசிடம் சென்றுவிட்ட நிலை அனைத்தையும் கடந்துதான் ஆட்சியினை நடத்தி வருகிறார். சட்டமன்றத்திலும் சரி, அரசு விழாக்களிலும் சரி வீண் புகழுரைகளுக்கும், அலங்காரப் பேச்சுகளுக்கும் இடமளிப்பதில்லை முதல்வர். அவர் பங்கேற்கும் விழாக்கள் கச்சிதமாகத் திட்டமிடப்பட்டு சுருக்கமான, அர்த்தமுள்ள உரைகளுடன் நிறைவாக நடந்தேறுகின்றன. தான் மட்டுமன்றி, அனைவரும் காலம் கருதி செயல்படும் வண்ணம் நடந்துகொள்கிறார். முதலீடுகளை ஈர்ப்பதில், சட்டம் ஒழுங்கு பராமரிப்பில், நலத்திட்ட உதவிகள் மக்களைச் சென்றடைவதில் மாநிலம் முன்னணி வகிக்கிறது. இந்தியா டுடே ஏடு இந்தியாவின் சிறந்த முதல்வராக ஸ்டாலின் அவர்களையே கூறுகிறது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி! இவையெல்லாவற்றையும் கடந்த ஒரு முக்கியமான தருணமாக அடுத்த ஆண்டு இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. மீண்டும் நரேந்திர மோடியின் இந்துத்துவ ஆட்சி ஒன்றிய அரசை கைப்பற்றுமானால், நடிகர் ரஜினிகாந்த் 1996ஆம் ஆண்டு அம்மையார் ஜெயலலிதா ஆட்சியைக் குறித்து கூறியதுபோல, இந்தியாவை “ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது”. அந்த சவாலை எதிர்கொள்ள ஸ்டாலின் தயாராக உள்ளார் என்பதையே அவர் பிறந்த நாள் நிகழ்ச்சி நமக்கு உணர்த்தப் போகிறது. இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது மட்டுமல்ல, தமிழகத்தை மீண்டும் திராவிட வரலாற்றுப் பாதையில் செலுத்தியதைப் போல, இந்தியாவையும் சமூக நீதி, சமத்துவப் பாதையில் செலுத்த வேண்டிய வரலாற்றுக் கடமையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார் ஸ்டாலின். இந்தியாவின் விடியல் தெற்கிலிருந்து உதயமாகப் போகிறது என்பதே எதிர்பார்ப்பு. வெல்லட்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். https://minnambalam.com/political-news/dravidian-model-historical-hero-mkstalin-by-rajan-kurai/
  10. “இந்தியா: மோடி என்ற கேள்விக்குறி” – பிபிசி ஆவணப்படம் கூறுவது என்ன? Feb 20, 2023 07:00AM IST ராஜன் குறை இந்தியாவிலுள்ள பிபிசி அலுவலகங்களில் சென்ற வாரம் ஒன்றிய அரசின் வருமான வரித்துறை சோதனையிட்டது கடுமையான விமர்சனங்களுக்கும், கண்டனங்களும் உள்ளாகியுள்ளது. இது ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தும், ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கை எனப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். திடீரென சென்று சோதனை செய்யுமளவு பிபிசி என்ன அதானி நிறுவனம் போல லட்சம் கோடிகளில் புரளும் நிறுவனமா என்ன? அது குறைந்த அளவே இந்தியாவில் செயல்படும் ஒரு சர்வதேச ஊடக நிறுவனத்தின் கிளை. அதனுள் சென்று ஊழியர்களின் செல்பேசிகளைப் பறிமுதல் செய்து முற்றுகையிட்டு விசாரிக்கும் அளவு அது என்ன பெரிய வரி மோசடி செய்திருக்க முடியும் என்பதே கேள்வி. முதலில் பிபிசி என்றால் என்னவென்று பார்ப்போம். இங்கிலாந்து நாட்டின் நூறு ஆண்டுகள் கண்ட புகழ்பெற்ற ஒலிபரப்பு நிறுவனம் பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங்க் கார்ப்பரேஷன் (British Broadcasting Corporation- BBC) என்பது. இது உலகின் பல மொழிகளிலும் பல்வேறு சேவைகளை அளித்து வருகிறது. இதன் செய்தி தொலைக்காட்சி சேனல் உலகம் முழுவதும் பார்க்கப்படும் முக்கிய செய்தி தொலைக்காட்சி சேனல் ஆகும். இந்த நிறுவனத்தின் சார்பில் “மோடி என்ற கேள்விக்குறி” (The Modi Question) என்ற ஆவணப்படம் இரு பாகங்களாக ஜனவரி 17 மற்றும் 24ஆம் தேதிகளில் ஒளிபரப்பப்பட்டன. இந்த ஆவணப்படங்களே திடீர் வருமான வரி சோதனை என்ற துன்புறுத்தல் நடவடிக்கைக்கு காரணம் என்பதில் யாருக்கும் ஐயமில்லை. இந்திய அரசு இந்த ஆவணப்படத்தை வன்மையாகக் கண்டித்தது. இந்தப் படம் சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை அதிகாரபூர்வமாகத் தடுத்துள்ளது. வலைதளங்களிலும் தொடர்ந்து இந்தப் படம் இந்தியாவினுள் பார்க்க முடியாதபடி தடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பல்வேறு மாணவர் அமைப்புகள், அரசியல், சமூக இயக்கங்கள் இந்தப் படத்தை பல்வேறு இடங்களில் திரையிட்டு வருகின்றன. உதாரணமாக தமிழ்நாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்தப் படத்தை தமிழில் மொழியாக்கம் செய்து திரையிட்டுள்ளது. இந்தப் படம் தடை செய்யப்படுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாஜக அமைச்சர்கள், கட்சியினர் ஆகியோர் இந்த ஆவணப்படம் குறித்து பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். தொலைக்காட்சி விவாதங்களில் பேசுகிறார்கள். நாம் இந்த ஆவணப்படத்தை குறித்து சில அடிப்படை அம்சங்களை தெளிவுபடுத்திக் கொள்வோம். இந்தியாவுக்கு ஏன் மோடி ஒரு கேள்விக்குறி? ஆங்கிலத்தில் மோடி குவிஸ்டின் என்றால் மோடி குறித்த கேள்வி என்றோ, மோடியே ஒரு கேள்வியாகிறார் என்றோ பொருள். தமிழில் மோடி என்ற கேள்விக்குறி என்று கூறலாம். அது என்ன கேள்வி? இந்தியாவின் மதச்சார்பின்மை நீடிக்குமா, இந்திய முஸ்லிம்கள் தொடர்ந்து இந்தியாவில் பிறருக்கு இணையான குடியுரிமையுடன், அச்சமின்றி, பாதுகாப்புடன் வாழ முடியுமா என்பதுதான் கேள்வி. மோடி பிரதமராக ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அடுத்த ஆண்டு மூன்றாவது முறையாகப் பிரதமராகத் தேர்தலை சந்திக்க உள்ளார். இந்த நிலையில் அவர் இதுவரை இந்திய முஸ்லிம்களை எப்படி உணரச் செய்கிறார், அவர் மீண்டும் பிரதமரானால் இந்திய சமூகத்தில் மத நல்லிணக்கம் நீடிக்குமா, அரசு மதச்சார்பற்று இருக்குமா என்ற கேள்விகள் இன்று தவிர்க்க முடியாதவை ஆகின்றன. அது ஏன் என்பதை இந்த ஆவணப்படம் விளக்குகிறது. அந்த விளக்கத்துக்கு இரண்டு பாகங்கள். ஒன்று அவர் குஜராத் முதல்வராகப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே அங்கு நிகழ்ந்த முஸ்லிம்கள் படுகொலை. மற்றொன்று கடந்த நான்கு ஆண்டுகளாக மாட்டு இறைச்சி பிரச்சினைகள், குடியுரிமை சீர்திருத்தச் சட்ட எதிர்ப்பு, காஷ்மீர் மாநில அந்தஸ்து நீக்கம் ஆகிய பிரச்சினைகளை ஒட்டி எப்படி முஸ்லிம்கள் மீண்டும் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள், கொல்லப்படுகிறார்கள் என்பது. அதாவது குஜராத்தில் 2002ஆம் ஆண்டு தொடங்கியது, இருபது ஆண்டுகளில் பல்வேறு வடிவங்களில் தொடர்வதுடன், இந்திய அரசியலின் எதிர்காலம் குறித்த முக்கிய கேள்வியாகவும் மாறுகிறது. அதன் மூலாதாரம் என்னவென்றால் இந்துத்துவ கோட்பாட்டின், ஆர்எஸ்எஸ் அமைப்பின் லட்சியமான இந்து ராஷ்டிரம்தான். அதன்படி முஸ்லிம்கள் இந்த நாட்டில் இரண்டாம்தர குடிமக்களாகவே இருக்க முடியும். அதை நோக்கி இந்தியா செல்கிறதா என்பதே கேள்வி. குஜராத்தில் நடந்தது என்ன அல்லது மோடி அரசியலின் துவக்கம் நரேந்திர மோடி ராஷ்டிரிய சுவம்சேவக் சங்க் என்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் அடிப்படை ஊழியராக இருந்து அந்த அமைப்பின் பல்வேறு படி நிலைகளில் உயர்ந்து, அதனால் பாரதீய ஜனதா கட்சிக்கு நியமிக்கப்பட்டு இறுதியில் 2001ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராகப் பதவியேற்றவர். அவர் பதவியேற்ற சில மாதங்களிலேயே 2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மிகப் பெரிய கலவரம் மூண்டு, இஸ்லாமியர்கள் கடுமையாகக் கொன்று குவிக்கப்பட்டனர். உலகம் முழுவதும் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்தக் கலவரத்துக்கு காரணமாக கூறப்பட்ட நிகழ்வு கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு என்ற நிகழ்வாகும். சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் அயோத்திக்குச் சென்று விட்டு திரும்பிய கர சேவகர்கள் மற்றும் யாத்ரீகர்களுக்கும் ரயில் நிலையத்தில் இருந்த சில முஸ்லிம்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதன் விளைவாக முஸ்லிம்கள் ரயில் பெட்டிக்கு தீ வைத்ததாகவும், 59 பேர் அதில் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது. பல கட்ட வழக்குகள், விசாரணைகளுக்குப் பிறகு 31 பேர் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளார்கள் என்றாலும், பல்வேறு ஆய்வாளர்களும், சிந்தனையாளர்களும் அந்தப் பெட்டியில் தீ பற்றியது ஒரு விபத்துதான் என்றும், யாரும் வேண்டுமென்றே தீ வைக்கவில்லை என்றும் கருதுகிறார்கள். ஆனால் சம்பவம் நடந்த உடனேயே குஜராத் மாநிலம் முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிரான வதந்திகள் பரவின. சங்க பரிவார அமைப்புகள் மக்களிடையே கோபத்தை, பழிவாங்கும் வெறியைத் தூண்டின. முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் தொடங்கின. முதல்வராக இருந்த நரேந்திர மோடி கலவரக்காரர்களைத் தடுக்க வேண்டாமென காவல்துறை அதிகாரிகளிடம் கூறியதாக ஒரு சிலர் கூறினார்கள். மூன்று தினங்களுக்குத் தலையிட வேண்டாம் என்று கூறப்பட்டதாக தகவல். அதன் விளைவாகவோ, என்னவோ வன்முறை வெறித்தாண்டவம் நிகழ்ந்தபோதும் காவல்துறை தலையிடாமல் செயலற்று இருந்ததாக ஏராளமான சாட்சிகள் கூறுகிறார்கள். ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். பெண்கள் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டார்கள். லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்து ஓடினார்கள்; நூற்றுக்கணக்கான முகாம்களில் உள்நாட்டு அகதிகளாகத் தங்கினார்கள். நரேந்திர மோடி வேண்டுமென்றே கட்டுப்படுத்தாமல் விட்டாரா அல்லது அரசு இயந்திரம் தோல்வியடைந்ததா என்ற கேள்விகளைத் தாண்டி இவ்வளவு பெரிய சட்ட ஒழுங்கு சீர்குலைவுக்கு முதலமைச்சரான அவர் பொறுப்பேற்க வேண்டுமா, இல்லையா என்பதே கேள்வி. உதாரணமாக சமீபத்தில் கோவையில் ஒரு காரில் குண்டு வெடித்தவுடன், காவல்துறை திறம்பட செயல்பட்டு குற்றவாளியை அடையாளம் கண்டு தேசிய பாதுகாப்பு முகாமையிடம் வழக்கை ஒப்படைத்த போதும் கூட, அதில் ஏன் தாமதம், அரசு ஏன் மெத்தனம் காட்டியது என்றெல்லாம் பாஜக விமர்சிக்கிறது. யாருமே உயிரிழக்காத ஒரு குண்டு வெடிப்புக்கே மாநில அரசின் திறமையின்மை என குற்றம் சாட்டும் கட்சி, எப்படி ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்படும்போது ஓர் அரசு எப்படி வேடிக்கை பார்த்தது என கேட்க வேண்டாமா? முதல்வர் மோடி பொறுப்பேற்க வேண்டாமா? அவர் பொறுப்பேற்கவில்லை என்பது மட்டுமல்ல, அடுத்த சில ஆண்டுகளில் குஜராத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் சிறந்த நிர்வாகி என்றும் அழைக்கப்படத் தொடங்கினார். நரேந்திர மோடி கலவரத்தைத் தடுக்க வேண்டாம் என்று கூறியதற்கு பத்திரிகைகளிடமும், குடிமக்கள் விசாரணை மன்றத்திலும் சாட்சி அளித்ததாகக் கூறப்படும் முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா 2003ஆம் ஆண்டு பொதுவெளியில் காலை நேரத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். குஜராத் நிகழ்வுகள் குறித்த வழக்கெல்லாம் உச்ச நீதிமன்றத்தின் தனி அமரவில் விசாரிக்கப்பட்டு மோடி எதிலும் குற்றமற்றவர் என்று கிடைத்த, கிடைக்காத ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் பொதுக்களத்தில் ஐயங்களும், கேள்விகளும் மறையவில்லை. பழைய கதையைப் பேசலாமா? பாஜக அரசாங்கமும், பாஜக கட்சியும் என்ன கேட்கின்றன என்றால் இதெல்லாம் விவாதிக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு முடிந்து போன பழைய கதை; பி.பி.சி ஏன் அதை இப்போது பேசுகிறது என்றுதான் கேட்கிறார்கள். அதற்கு மனித உரிமை சார்ந்தவர்கள் சொல்லும் பதில் அந்தக் கதையே பல்வேறு வடிவங்களில் தொடர்கிறது என்பதுதான். குடியுரிமை சீர்திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது போன்ற திட்டங்கள் தங்கள் குடியுரிமையை பாதிக்கும் திட்டங்கள் என முஸ்லிம்களும், பொதுவான மனித உரிமை ஆர்வலர்களும், முற்போக்காளர்களும் நம்புகிறார்கள். அந்தக் குடியுரிமை சீர்திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டங்களில், பிப்ரவரி 2020இல் இந்துத்துவ சக்திகள் புகுந்து கலவரம் செய்தன. டெல்லியில் சில பகுதிகளில் முஸ்லிம்கள் மீண்டும் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள், கொல்லப் பட்டார்கள். இவை குஜராத் கொலைகளின் தொடர்ச்சி போலவே அமைந்தன. இத்துடன் காஷ்மீரில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கும் அங்கு நடக்கும் ராணுவத்தினரின் வன்முறையும் சேர்ந்துகொள்கின்றன. மாட்டிறைச்சி வைத்திருந்தார் என அக்லுக் என்பவர் கொல்லப்பட்டதும், பசு பாதுகாவலர்களால் பல முஸ்லிம்கள் பசுக்களைக் கொல்வதற்காகக் கொண்டு செல்கிறார்கள் என்ற காரணம் காட்டி கும்பல் படுகொலை செய்யப்படுவதும் நாடெங்கும் பதற்றத்தை உருவாக்குகின்றன. இதையெல்லாம் இந்த ஆவணப் படம் இரண்டு பாகங்களாகத் தொகுத்துக் காட்டுகிறது. மோடி என்னும் கேள்விக்குறி என்பது இந்தியாவில் மதச்சார்பின்மையின், மத நல்லிணக்கத்தின், முஸ்லிம்களின் எதிர்காலம் குறித்த கேள்விதான். அந்நிய நாட்டு ஊடகம் நம் நாட்டு பிரச்சினையைப் பேசலாமா? ஊடகங்கள் பரவத் தொடங்கிய பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்தே உலகில் எந்த நாட்டில் அரசு மக்களை ஒடுக்கினாலும், பெரும்பான்மை மக்கள் சிறுபான்மையினரை ஒடுக்கினாலும் உலகெங்கும் உள்ள ஊடகங்கள் அதை கண்டித்தே வந்துள்ளன. இந்திய சுதந்திரப் போரின்போது, பிரிட்டிஷ் ஆட்சி வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டபோது அமெரிக்க ஊடகங்களும், பிற ஐரோப்பிய ஊடகங்களும் அதைக் கண்டிக்கவே செய்தன. ஜெர்மனியின் ஹிட்லர் ஆனாலும், ரஷ்யாவின் ஜோசப் ஸ்டாலின் ஆனாலும், இத்தாலியின் முசோலினி ஆனாலும் உள்நாட்டில் அவர்கள் மக்கள் உரிமைகளைப் பறித்தால், மக்களில் ஒரு பகுதியினரை தாக்கினால் உலக நாடுகளின் ஊடகங்கள் கண்டிக்கத்தான் செய்தன. ஏன் தமிழ் நாட்டு இதழ்கள் கூட கண்டிக்கவே செய்தன. உலகளாவிய குடிமைச் சமூகம் என்ற கருத்தாக்கம் நவீன அரசியலின் தவிர்க்க முடியாத அங்கம். அதாவது குடிமை சமூக பிரதிநிதிகள், ஊடகங்கள் எந்த ஒரு அரசின் வன்முறையையும், அத்துமீறலையும், மனித உரிமைமீறலையும் கண்டிக்கவே செய்வார்கள். ஒரு நாட்டின் அரசு, இன்னொரு நாட்டின் அரசை விமர்சித்தால், இன்னொரு நாட்டின் உள் நாட்டு பிரச்சினையில் தலையிட்டால் அதைக் கண்டிக்கலாம். ஆனால் ஒரு நாட்டின் குடிமைச் சமூகமோ, ஊடகமோ எந்த நாட்டின் பிரச்சினையையும் பேசலாம், எழுதலாம். அதைக் கண்டிக்க முடியாது. ஏனெனில் குடிமைச் சமூகம் உலகப் பொதுவானது. மனித உரிமைகள் உலகப் பொதுவானவை. அதனால் ஊடகங்களும் அந்த உலகப் பார்வையை கொண்டே இயங்கும். அதனால் பிபிசி இந்திய முஸ்லிம்கள் சந்திக்கும் பிரச்சினைகளைப் பேசக் கூடாது, ஆவணப்படம் எடுக்கக் கூடாது, ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமத்தில் பொருளாதாரக் குற்றங்களை அம்பலப்படுத்தக் கூடாது என்றெல்லாம் கூறுவது சாத்தியமில்லை. இதையெல்லாம் ஊடகங்கள் எடுத்துக்கூறக் கூடாது என்றால் மக்களாட்சியின் பொருள்தான் என்ன? பிரதமரை விமர்சிக்கக் கூடாது, கேள்வி கேட்கக் கூடாது என்றால் இது எப்படி மக்களாட்சியாக இருக்க முடியும்? அதனால்தான் பிபிசி நிறுவனத்தில் வரிமான வரி சோதனை என்ற பெயரில் ஊழியர்கள் துன்புறுத்தப்பட்டதை இந்திய, உலக பொது மன்றம் கண்டிக்கிறது. பிபிசி ஆவணப்படம் தடை செய்யப்படுவதைக் கண்டிக்கிறது. இதெல்லாம் கருத்து சுதந்திரத்தின் மீதான, மக்களாட்சியின் மீதான தாக்குதல்கள் என்பதில் ஐயமில்லை. கட்டுரையாளர் குறிப்பு: ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி https://minnambalam.com/political-news/bbc-news-it-raid-rajan-kurai/
  11. இந்துத்துவம் ஏன் காதலர் தினக் கொண்டாட்டத்தை எதிர்க்கிறது? MinnambalamFeb 13, 2023 07:00AM ராஜன் குறை இந்துத்துவம் என்பது ஓர் அரசியல் தத்துவம், கோட்பாடு: அது இந்து மதத்தை ஓர் அடையாளமாக எடுத்துக்கொள்கிறதே தவிர, அந்த மதத்தின் வழிபாடு, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் மீது அதற்கு ஈடுபாடு ஏதும் கிடையாது என்பது நாம் மீண்டும், மீண்டும் வலியுறுத்துவது. நடைமுறையில் கண்கூடாகக் காண்பது. உதாரணமாக இந்துத்துவ அரசியலைத் தீவிரமாக எதிர்க்கும் திமுக ஆட்சியில் இந்து அறநிலையத் துறை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்து கடவுளர்களை வழிபடுபவர்கள் எல்லாம் இந்துத்துவ அரசியலை ஏற்பவர்கள் அல்லர். ராம பக்தரான காந்தியையே எதிரியாகக் கருதிக் கொன்றது இந்துத்துவம். இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்ள மற்றொரு நல்ல சந்தர்ப்பம்தான் காதலர் தினக் கொண்டாட்டங்களை இந்துத்துவ அரசியல் அணிகள் எதிர்ப்பது. இவர்களது எதிர்ப்பு விபரீதமான வடிவங்களையும், வேடிக்கையான வடிவங்களையும் ஒவ்வோர் ஆண்டும் எடுக்கும். இந்த ஆண்டு அது ஒரு மிகப்பெரிய நகைச்சுவை சம்பவமாக மாறிவிட்டது. அதற்குக் காரணம் ஒன்றிய அரசின் இந்திய விலங்குகள் நல வாரியம் செய்த ஓர் அறிவிப்புதான். காதலர் தினம் கொண்டாடப்படும் பிப்ரவரி 14ஆம் தேதியை “பசு அணைப்பு தினமாக”க் கொண்டாடும்படி அது அறிவித்தது. அதாவது பசுக்களைக் கட்டிப்பிடித்தால் நல்ல உணர்ச்சிகள் ஏற்படுமாம் (Emotional Richness). பின்னர் பல்வேறு தரப்பினரும் செய்த கிண்டல், கேலி, விமர்சனங்களின் காரணமாக ஒன்றிய மீன்வள மற்றும் கால்நடைத்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி இந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை செய்வதற்கான காரணமாகக் கூறப்பட்டது என்னவென்றால் இந்தியாவின் வேதகால பண்பாடு மறக்கப்பட்டு, அந்நிய நாட்டு கலாச்சாரம் ஊடுருவி வருகிறது, அதைத் தடுக்க வேண்டும் என்பதுதான். அதாவது காதலர் தினத்தை பசு அணைப்பு தினமாக மாற்றுவதன் மூலம் இந்தியாவின் பண்பாட்டினை மீட்டெடுக்கலாம் என்பதே நோக்கம். இதில் பல குழப்பங்கள் நேர்கின்றன. காதலே இந்திய பண்பாடு இல்லையா? அல்லது காதலர் தினம் கொண்டாடுவதுதான் இந்திய பண்பாடு இல்லையா? அதற்கு பசு எப்படி மாற்றாக எண்ணப்படுகிறது? கடவுள்களின் காதல் இந்து மதம் என்பது பல்வேறு தளங்களில் செயல்படுவது. ஏனெனில் பத்தாம் நூற்றாண்டுக்கு முன்னால் இப்படி ஒரு பெயரில் எந்த மதமும் உருவாகவில்லை; அறியப்படவில்லை. ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்தபோது அவர்கள் சமஸ்கிருதத்தின் ஆதி வடிவத்தில் வேதங்களை இயற்றினார்கள். பின்னர் பிரமாணங்கள், உபநிடதங்கள் எனப் பல நூல்களை சமஸ்கிருதத்தில் இயற்றினார்கள். இந்த நூல்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட முறையில் கற்பனை கதைகளாக புராணங்களையும், ராமாயண, மகாபாரத இதிகாசங்களையும் இயற்றினார்கள். இன்னொரு புறம் வாழ்க்கைக்கான விதிமுறைகளாக தர்ம சாஸ்திரங்களை இயற்றினார்கள். இந்தியாவில் ஆரியர்களுக்கு முன்பே வசித்த பண்பாடுகளிலும் பல கடவுள்கள், கதைகள் இருந்திருக்கலாம். ஆரிய புராணங்களுடன் இவையும் கலந்திருக்கலாம் என்பதே பலரது கருத்து. காலப்போக்கில் இந்தியாவின் எந்த ஒரு பகுதியிலும் வழிபடப்படும் தெய்வங்களை இந்து புராண, இதிகாச தெய்வங்களுடன் சேர்த்து கதைகளைப் புனைந்தார்கள். சிவன்-ருத்ரன், முருகன்-ஸ்கந்தன் என தெய்வங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டதாக கருதுபவர்கள் பலர் உண்டு. இவ்வாறான கதைகளில் இந்து கடவுளர்களின் காதல் நாடகங்கள் மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. இத்தகைய பண்பாட்டில் காதலே பக்தியாகவும், பக்தியே காதலாகவும் மாறிவிடுவதைக் காணலாம். உதாரணமாக கிருஷ்ணனுக்கும், ராதைக்குமான காதல் குறித்து ஏராளமான கவிதைகள், காவியங்கள் புனையப்பட்டுள்ளன. சமஸ்கிருதத்தில் மட்டுமல்லாமல், பல்வேறு இந்திய மொழிகளிலும் இந்தக் காதல் பெருமளவு கொண்டாடப்பட்டுள்ளது. தமிழ்ப் பண்பாட்டை எடுத்துக்கொண்டால் தினைப்புனம் காத்த வள்ளியின் மீது முருகன் கொண்ட காதல் மிகவும் புகழ்பெற்றது. வள்ளியை ஈர்ப்பதற்காக தன் அண்ணன் கணேசனை யானை வடிவில் வந்து வள்ளியை மிரட்ட வைத்து, அவளைக் காப்பாற்றி அவள் மனதைக் கவர்ந்தது மிகவும் புகழ்பெற்ற இசை நாடகமாகத் தமிழகமெங்கும் வள்ளி திருமணம் என்ற பெயரில் நடிக்கப் பெற்றதாகும். அதே போலத்தான் கடவுள் மீது காதல் கொண்ட ஆண்டாளின் திருப்பாவையும். இந்த அளவு அனைத்து மட்டங்களிலும் காதலைப் பேசும் பண்பாட்டில் ஏன் காதலர் தினம் குறித்து வெறுப்புக் கொள்ள வேண்டும்? ஏன் இந்துத்துவம் காதலர் தினத்தை அந்நிய கலாச்சாரம் என்று கூறுகிறது? உலக அளவில் பிப்ரவரி 14 என்ற வாலன்டைன்ஸ் டே பிப்ரவரி 14ஆம் தேதியை வாலன்டைன்ஸ் டே என்ற பெயரில் கொண்டாடுவது ஐரோப்பாவில், குறிப்பாக இங்கிலாந்தில் உருவான ஒரு பழக்கம்தான். இது எப்போது தோன்றியது என்று தெளிவாகத் தெரியாவிட்டாலும், வாலன்டைன் என்று பாதிரியார் சேவைகளுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் என அவர் பெயரில் இந்த நாளை காதலர் தினமாகக் கொண்டாடும் பழக்கம் பதினைந்தாம் நூற்றாண்டு இங்கிலாந்திலேயே இருந்திருப்பதாக இலக்கிய சான்றுகள் கூறுகின்றன. பதினெட்டாம் நூற்றாண்டில்தான் இது பெரியதொரு சமூக நடைமுறையாக மாறியுள்ளது. காதலர்கள் வாழ்த்து அட்டைகளை அன்றைய தினத்தில் அனுப்பிக்கொள்வது தபால்துறை வளர்ச்சியடைந்த பிறகு நடைமுறைக்கு வந்துள்ளது. பின்னர் பரிசுப் பொருட்களைக் கொடுத்துக் கொள்வதும். அமெரிக்கா பொருளாதார வல்லரசாக மாறிய பிறகு, அதில் வாலன்டைன்ஸ் டே என்பது பல கோடி டாலர்கள் புரளும் பிரமாண்டமான வணிக திருவிழாவாக மாறியுள்ளது. இந்தியர்கள் கணிசமாக அமெரிக்காவில் படிப்பதும், பணிபுரிவதுமாக இருப்பதன் காரணமாகவும், ஊடகங்களின் காரணமாகவும் இந்த தினம் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவிலும் பரவலாகக் கொண்டாடப்படுவது அதிகரித்துள்ளது. ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் பிப்ரவரி 14 அன்று பெண்கள் ஆண்களுக்கு சாக்லேட் தருவதும், அதற்கு அடுத்த மாதம் மார்ச் 14 ஆண்கள் பெண்களுக்கு சாக்லேட் தருவதும் பழக்கமாக உள்ளது. சீனாவில் பாரம்பரிய காதலர் தினமாக வேறொரு தினம் கொண்டாடப்பட்டாலும், சமீப காலங்களில் பிப்ரவரி 14-ம் ஓரளவு கொண்டாடப்படுவதாகத் தெரிகிறது. இஸ்லாமிய நாடுகள் பலவற்றில், பாகிஸ்தான் உட்பட, மதவாத அரசுகளால் காதலர் தினம் கொண்டாடப்படுவது தடை செய்யப்படுகிறது. ஆனாலும் ஈரானில் இளம் வயதினர் இந்த தினத்தைக் கொண்டாடுவதில் ஈடுபாடு காட்டி வருகின்றனர். காதலர் தினம் அந்நியக் கலாச்சாரமா? ஊடகங்களின் பெருக்கத்தாலும், சர்வதேச வர்த்தகத்தின் அதிகரிப்பாலும் இன்று தேசிய எல்லைகள் முற்றானவையாக இல்லை. யுனெஸ்கோ போன்ற அமைப்புகளால் சர்வதேச அளவில் பல்வேறு விசேஷ தினங்கள் அனுசரிக்கப்படுகின்றன. மார்ச் 8 என்பது சர்வதேச மகளிர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. மே 1 தொழிலாளர் தினம் என்று கூறப்படுகிறது. இது போலவே அன்னையர் தினம், தந்தையர் தினம் என்றெல்லாம் பல்வேறு தினங்கள் அனுசரிக்கப்படுகின்றன. அவ்வாறான சர்வதேச அளவிலான ஒரு கொண்டாட்டமாகக் காதலர்கள் ஒருவருக்கு ஒருவர் பரிசளித்துக் கொள்வதும், சந்தித்து அன்பைப் பரிமாறிக் கொள்வதும் சமூகத்துக்கு என்ன பெரிய தீங்கை விளைவித்து விடும் என்பது கேள்வி. எந்த நாட்டில், எப்படி உருவாகியிருந்தாலும் இது உலகெங்கும் காதலைக் கொண்டாடும் ஒரு தினமாக புரிந்துகொள்ளப்படுவதில் என்ன பெரிய சிக்கல் இருந்துவிட முடியும் என்பதே கேள்வி. நமது வாழ்க்கையின் சகல அம்சங்களுமே இன்று சர்வதேசத்தன்மை கொண்டுதான் விளங்குகிறது. நாம் உடுக்கும் உடை உலகெங்கும் உடுக்கப்படும் உடைதான். ஒவ்வொரு பகுதியிலும் பாரம்பரிய உடை என்று ஒன்று இருந்தாலும், பேண்ட்-சர்ட் எனப்படும் உடைதான் உலகெங்கும் பெருமளவு தரப்படுத்தப்பட்ட உடையாக உள்ளது. உணவு என்பதும்கூட பெருமளவு சர்வதேச தன்மையுடன் உள்ளது. பீட்சா இத்தாலி நாட்டினை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் அது உலகம் முழுவதும் பரவலாக உண்ணப்படுகிறது. இந்தியாவில், அமெரிக்காவில், ஐரோப்பாவில் சைனீஸ் ரெஸ்டாரென்ட் இல்லாத சிறு நகரங்களே இருக்காது எனலாம். இதெல்லாம் கூட சாதாரணமான விஷயங்கள். பொருளாதார அமைப்பு என்பது, முதலீட்டியம், இயந்திர மயமான உற்பத்தி, பங்குச் சந்தை வர்த்தகம், அதிவேக போக்குவரத்து அதிகரிப்பு, உலகெங்கும் பரவியுள்ள பண்டங்கள்-நுகர்வின் வலைப்பின்னல் என உலகெங்கும் ஒன்றே போல பரவியுள்ளது. மருத்துவம் என்பது உலகெங்கும் பரவியுள்ள ஒற்றை வலைப்பின்னலாக உள்ளது. இது மிகப்பெரிய தொழிலாகவும், மனித உடல்களை நிர்வகிக்கும் முறையாகவும் வளர்ந்து நிலை பெற்று வருகிறது. இதிலெல்லாம் எந்த வேத காலத்தைக் கொண்டு வந்து நிறுத்தப் போகிறார்கள் இந்துத்துவர்கள்? ஒட்டுமொத்த தேசிய வாழ்க்கையே சர்வதேச வாழ்க்கையுடன் இணைந்து போயிருக்கும்போது எந்த வேத காலத்தைக் காப்பாற்ற விரும்புகிறார்கள்? அதற்கு ஒரே ஒரு பதில்தான் உண்டு: அதுதான் ஜாதி. ஜாதி காப்பாற்றவே காதலுக்கு எதிர்ப்பு ஜாதி படி நிலை அமைப்பின் ஆதாரம் ஆணாதிக்கம் என்பது மட்டுமல்ல; அது தந்தையாதிக்கமாகவும் (Patriarchy) இருக்க வேண்டும் என்பதுதான். ஆண்களும், பெண்களும் சுதந்திரமாக காதலிக்கத் தொடங்கினால் அது தந்தையாதிக்கத்தின் அடிப்படைகளையே தகர்த்துவிடும். பெண் முழுக்க முழுக்க தந்தையின் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்பதே ஜாதி அகமண முறையின் அச்சாணி. இந்துத்துவ அரசியலுக்கு இந்து கடவுள்களோ, பக்தியோ, காதலோ முக்கியமல்ல. அதற்கு முக்கியமானது சனாதன தர்மம். அது என்னவென்றால் வர்ண தர்மம். மனிதர்களைப் பிறப்பின் அடிப்படையில் பிரித்து உயர்வு தாழ்வு கற்பித்து வைப்பது. மனிதர்களின் ஆன்மா பல்வேறு பிறப்புக்களில் ஒவ்வொரு வர்ணத்திலும் பிறந்து அதன் தர்மத்தின்படி நடந்து அடுத்த பிறவியில் அதற்கு மேல் வர்ணத்துக்கு பிரமோஷன் பெற்று இறுதியில் பிராமணப் பிறவி எடுத்து அதன்பிறகு மோட்சம் அடைய வேண்டும் என்பதுதான் வர்ண தர்ம கற்பிதம். ஒருவேளை வர்ண தர்மத்தைப் பின்பற்றவில்லையென்றால் டிமோஷன் – அதற்கு கீழ்வர்ணத்தில்தான் அடுத்து பிறக்க வேண்டும். இந்த வர்ண தர்ம கற்பிதத்தின் அடிப்படையிலேயே ஜாதி படிநிலை என்பது உருவாக்கி நிறுவப்பட்டுள்ளது. அதனால் அந்தந்த ஜாதிக்குள்ளேயே திருமணம் நடந்தால்தான் பிறக்கும் குழந்தை அதே ஜாதியாக இருக்கும். அதனால் பெண்கள் முழுவதும் தந்தையரின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும். வேத கால நாகரிகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று இந்துத்துவர்கள் சொல்வது இதைத்தான். அதைத்தான் புனிதப் பசுவாக புனைந்து சொல்கிறார்கள். வேத காலத்தில் பசு வேத காலத்தில் பிராமணர்கள் மாட்டிறைச்சி உண்டார்கள் என்பதற்கு வேதங்களில், இதிகாசங்களில் ஆதாரங்கள் உள்ளன. பல்வேறு அறிஞர்கள் அதைக் குறித்து ஆதார பூர்வமாக எழுதியுள்ளார்கள். புத்த, ஜைன மதங்களின் பரவலுக்குப் பின்பே பிராமணர்களும் மாமிசம் சாப்பிடுவதை நிறுத்தினார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் பலராலும் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக பசுவைக் கொல்லக் கூடாது. அது புனிதமானது என்ற பிரச்சாரம் இஸ்லாமியர்களின் வருகைக்கு பிறகே உருவான ஒரு கருத்தியல் என்று டி.என்.ஜா என்ற வரலாற்றாசிரியர் The Myth of the Holy Cow (2004) என்ற நூலில் கூறுகிறார். இஸ்லாமிய வெறுப்பு என்பதை ஆதாரமாக வைத்து வர்ண தர்மம் ஆகிய சனாதன தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு இந்து ராஷ்டிரத்தை உருவாக்கும் திட்டம்தான் இந்துத்துவம். அதனால்தான் இவர்களால் காதலர் தினத்துக்கு பதிலாக பசுவைக் கட்டிப் பிடிக்கும் திட்டத்தை அறிவிக்க முடிகிறது. இங்கே உண்மையான புனிதப் பசு என்பது ஜாதி ஆசாரம்தான். காதலர்களின் சுதந்திரம், குறிப்பாகப் பெண்களின் காதலிக்கும் சுதந்திரம், ஜாதீயத்தை தகர்த்துவிடுமோ என்ற அச்சம்தான் இந்த கலாச்சார அரசியலின் மூலாதாரம். கட்டுரையாளர் குறிப்பு: ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. https://minnambalam.com/political-news/valentines-day-hindutva-opposition-reasons-by-rajan-kurai/
  12. இந்துத்துவ சாதனைகள்: இமாலய ஊழலும், இரக்கமற்ற படுகொலைகளும்! Feb 06, 2023 07:00AM IST ராஜன் குறை கடந்த வாரம் ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்ற அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்றும் , பிபிசி (BBC – British Broadcasting Corporation) எனப்படும் பிரிட்டிஷ் ஒலிபரப்பு நிறுவனம் வெளியிட்ட ஆவணப்படம் ஒன்றும் இந்தியாவில் பரவலான அதிர்வலைகளை உருவாக்கியுள்ளன. வெறுப்பரசியலுக்கு எதிராக ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை மேற்கொண்ட பாரத் ஜாடோ யாத்திரை முடிவடைந்த தருணத்தில் அந்த பிரமாண்டமான முயற்சியின் அவசியத்தை இந்தியக் குடியரசை நேசிக்கும் எல்லா தேசபக்தர்களுக்கும் உணர்த்தும் விதத்தில் இந்த இரண்டு வெளிப்பாடுகள் அமைந்துள்ளன. ஹிண்டன்பர்க் அறிக்கை இந்தியாவின், ஆசியாவின் ஆகப்பெரிய பணக்காரர், ஏன் உலகின் இரண்டாவது மிகப்பெரிய பணக்காரர் என்று அறியப்பட்ட தொழிலதிபர், பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் கெளதம் அதானியின் பல்வேறு பொருளாதார, பங்குச்சந்தை முறைகேடுகளை பட்டியல் இட்டதுடன், அவற்றின் மீதான நடவடிக்கைகள் ஏன் இந்திய நிதி மேலாண்மை நிறுவனங்களால் எடுக்கப்படவில்லை என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. பிபிசி ஆவணப்படம் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் இந்தியாவில் வலுப்பெற்றுள்ள வெறுப்பரசியல், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை, அதில் மோடிக்கு உள்ள பொறுப்பு என்ன என்பதை விவாதிக்கிறது. குறிப்பாக நரேந்திர மோடி குஜராத்தில் முதல்வராகப் பொறுப்பேற்றதும் நிகழ்ந்த 2002ஆம் ஆண்டு முஸ்லிம்கள் படுகொலைக்கு அவருடைய திட்டமிட்ட செயலின்மை காரணமா என்ற கேள்வியை மீண்டும் வலுவாக எழுப்புகிறது. அதானி குழுமம் ஹிண்டன்பர்க் அறிக்கையை இந்தியாவின் மீதான தாக்குதல் என்று கூறியுள்ளது. அதானி குழுமத்தின் பங்குகளை வாங்கும் அமெரிக்க நிறுவனம் அந்தக் குழுமத்தின் முறைகேடுகளை அம்பலப்படுத்துவது எப்படி இந்தியா மீதான தாக்குதலாகும்? இப்போது கூட இஸ்ரேலிய துறைமுகம் ஒன்றை நிர்வகிக்க அதானி குழுமம் ஒப்பந்தம் போட்டுள்ளதே? சர்வதேச அளவில் முதலீடுகளைப் பெற்று, உலகெங்கும் பல்வேறு தொழில்களில் ஈடுபடும் குழுமத்தைக் கேள்வி கேட்டால், அந்த நிறுவனம் இந்தியா என்ற அடையாளத்தின் பின்னால் ஒளிந்துகொள்வது எப்படி முறையாகும்? அதே போல இங்கிலாந்தில் வசிக்கும் முஸ்லிம் குடும்பத்தின் உறுப்பினர்கள் குஜராத்தில் கொல்லப்பட்டார்கள்; அதற்கான நீதி கிடைக்கவில்லை என்னும்போது பிபிசி ஆவணப்படம்எடுப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? இந்திய வம்சாவளி ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமர் ஆகும்போது ஏன் இந்தியாவில் பரவும் வெறுப்பரசியல், சிறுபான்மையினர் பாதுகாப்பின்மை குறித்து சர்வதேச சமூகம் கேள்வி கேட்கக் கூடாது? இங்கே நாம் புரிந்துகொள்ள முக்கியமான ஓர் அம்சம் இருக்கிறது. அது என்னவென்றால் இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும், அதாவது அதானி குழுமத்தின் முறைகேடுகளுக்கும், மோடி அரசின் முஸ்லிம்களுக்கு எதிரான செயல்பாடுகளுக்கும் உள்ள தொடர்பு மோடி, அதானி என்ற தனி நபர்களுக்கு இடையேயுள்ள தொடர்பு அல்ல. அது இந்துத்துவம் என்ற அரசியல் தத்துவம் ஏற்படுத்தும் தொடர்பு என்பதையே நாம் கவனிக்க வேண்டும். இந்துத்துவம் என்பது என்ன? இந்துத்துவம் என்றால் அது ஓர் அரசியல் கோட்பாடு. அது இந்து மதம் எனப்படும் எதுவும் குறித்தது அல்ல. முருகன், சிவன், ராமன், கிருஷ்ணன், மாரியம்மன், மாசாணத்தம்மன் போன்ற எண்ணிறைந்த தெய்வங்களை வழிபடுவதோ, பக்தி செலுத்துவதோ அல்ல. இந்துத்துவத்தின் நோக்கம் இந்துக்களை காப்பதோ, காப்பாற்றுவதோ அல்ல. அப்படி ஓர் ஆபத்து எதுவும் நூறு கோடிக்கும் அதிகமான இந்துக்கள் எனப் பெயரிடப்பட்ட மக்களுக்கு ஏற்படவில்லை. இந்துத்துவம் என்பது இந்திய குடியரசானது இந்து ராஷ்டிரம் என்ற மத அடையாளம் கொண்ட அரசாக மாற வேண்டும் என்று கருதுவது. இன்னும் சொன்னால் இந்து மத அடையாளம் கொண்டவர்கள்தான் இந்தியாவின் முதன்மை குடிமக்கள், முஸ்லிம், கிறிஸ்துவ மதத்தவர் இந்திய குடிமக்களே அல்ல அல்லது இரண்டாம் நிலை குடிமக்கள் என்று கருதுவது. இந்த வெறுப்பரசியலை அடிப்படையாகக் கொண்டு ஒரு பாசிச அரசை உருவாக்குவது. இந்துத்துவம் மத அடையாளவாதம் பேசுவதால் அது மதவெறி அல்ல. அதுவோர் அரசியல் அதிகாரக் குவிப்புக்கான வெறி. இந்திய ஒன்றிய அரசிடம் எல்லா அதிகாரங்களையும் குவிக்க வேண்டும் என்று நினைக்கும் வெறி. அப்படிச் செய்தால் என்ன விளைவுகள் உண்டாகும்? முதல் விளைவு, ஏழை மக்கள், உழைக்கும் மக்கள் அவர்கள் தேவைகளுக்காகவும், உரிமைகளுக்காகவும் போராட முடியாது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் சுட்டது போல எல்லோரையும் சுட்டுத் தள்ளிவிடலாம். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர் ஆகியோரும் தங்கள் உரிமைகளுக்காகவும், இட ஒதுக்கீடு போன்ற சமூக நீதி கோரிக்கைகளுக்காகவும் போராட முடியாதபடி செய்துவிடலாம். முந்தைய காலம் போல முன்னேறிய வகுப்பினரே, பார்ப்பன-பனியா கூட்டணியே தங்களிடம் அதிகாரத்தைக் குவித்துக்கொள்ளலாம். அங்கேதான் சனாதனம் வருகிறது. இந்தியக் குடியரசு மாநில அரசுகளின் ஒன்றியம் என்ற நிலையை மாற்றிவிடலாம். மாநில அரசுகளின் அதிகாரங்களையெல்லாம் பறித்து ஒன்றிய அரசிடம் குவித்துவிட்டால் ஒரு பேரரசைப்போல குடியரசை மாற்றிவிடலாம். இத்தகைய அதிகாரக் குவிப்புக்குத் துணையாக மிகப்பெரிய முதலீட்டியக் குவிப்பும் நிகழ்ந்தால்தான் அது பூரணமடையும். அதற்கான ஒரு குழுமம்தான் அதானி குழுமம். நாட்டின் எரிசக்தி தேவையெல்லாம் அவர்களே பூர்த்தி செய்வார்கள். நாட்டிலுள்ள துறைமுகங்கள், விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள் என அவர்களே போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவார்கள். பின்னாளில் ரயில்வே தனியார் வசமானால் அதையும் அதானியே வாங்கி நடத்துவார்கள். முதலீட்டியக் குவிப்பின் மூலம் பொருளாதார நடவடிக்கைகள் எல்லாம் ஒரு புள்ளியில் கட்டுப்படுத்தப்படும். அரசியலதிகாரக் குவிப்பின் மூலம் அரசியல், சமூக வாழ்க்கையெல்லாம் ஒரு புள்ளியில் கட்டுப்படுத்தப்படும். இப்படியான ஒரு முற்றதிகார பாசிச சூழலை உருவாக்கிவிட்டால் நாடு வல்லரசாகி விடும் என்ற ஒரு சிந்தனையே இந்துத்துவம். அதற்காகத்தான் இந்த வெறுப்பரசியல் படுகொலைகளும், இமாலய கார்ப்பரேட் ஊழல்களும். இமாலய ஊழல் ஊழல் என்றால் என்ன? அது ஒரு குறிப்பிட்ட செயலுக்காக அதிகாரத்தில் உள்ளவர்கள் பெறும் கையூட்டு என்பது மட்டுமல்ல. அதிகாரத்தைப் பயன்படுத்தி யாருக்கு எந்த விதமான பொருளாதாரப் பலன்களை கிடைக்கச் செய்தாலும் அது ஊழல்தான். அரசியலதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு முதலாளியின் வளர்ச்சிக்கு உதவுவது. பின்னர் அந்த முதலாளியின் உதவியுடன் அரசியல் வளர்ச்சியை முன்னெடுப்பது. இந்தக் கூட்டணி, தொழில்துறையிலும், அரசியலிலும் பிற பங்கேற்பாளர்களை முறையற்ற வகைகளில் செயல் இழக்கச் செய்யும் கூட்டணியாகும். கெளதம் அதானியின் வளர்ச்சி என்பது நரேந்திர மோடியின் அரசியல் வளர்ச்சியுடன் பின்னிப் பிணைந்தது. நரேந்திர மோடி 2002 குஜராத் படுகொலைக்குப் பிறகு இந்திய தொழில்துறை சம்மேளனத்தால் (CII) கண்டிக்கப்பட்டபோது, அதானி மோடிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். அவருடன் நண்பரானார். வைர வியாபாரிகளாக இருந்தது அவர் குடும்பம். அதிலும் பல முறைகேடுகள்; வழக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தின் நிர்வாகத்தை எடுத்து நடத்தத் தொடங்கியதுதான் அதானியின் வளர்ச்சியின் முதல் புள்ளி. பின்னர் மோடி குஜராத் முதல்வராக இருந்த 13 ஆண்டுகளில் கணிசமான வளர்ச்சி கண்டது அதானி குழுமம். அதற்கு சாதகமாக பல வசதிகளை செய்து கொடுத்தார் மோடி. அதன் பலனாக மோடி பிரதமர் வேட்பாளரானபோது நாடு முழுவதும் அதானி குழுமத்தின் விமானங்களிலேயே பயணித்து பிரச்சாரம் மேற்கொண்டார். மோடி முதல்வராக இருந்தபோதும், பிரதமரான பிறகும் அவரது வெளிநாட்டுப் பயணங்களிலெல்லாம் அதானியும் உடன் சென்றார். பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பேசினார்; வர்த்தக உறவுகளை மேற்கொண்டார். இந்தத் தகவல்களெல்லாம் அவ்வப்போது செய்தித் தாள்களில் எழுதப்பட்டவைதான். சரி, இதிலெல்லாம் என்ன பிரச்சினை, எல்லாம் தொழில் வளர்ச்சிதானே, நாட்டுக்கு நன்மைதானே என்ற கேள்வி எழும். ஆனால் எங்கே பிரச்சினை வருகிறது என்றால் அதானி பெற்றுள்ள பிரமாண்டமான வங்கிக் கடன்கள்; அதானி குழுமத்தில் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி செய்துள்ள பிரமாண்டமான முதலீடு. வங்கிகளில் ஸ்டேட் பாங்க் 27,000 கோடி ரூபாய் அதானிக்கு கடன் கொடுத்துள்ளது. பிற வங்கிகளும் கொடுத்துள்ளன. அதானி குழுமத்துக்கு மொத்தம் 70,000 கோடி முதல் 80,000 கோடி வரை வங்கிக்கடன்கள் இருக்கலாம் என்று கூறுகிறார்கள். அதனாலென்ன, எல்லா நிறுவன ங்களும் கடன் வாங்கும்தானே என்றால் அதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. அதானி குழுமம் கடன்கள் வாங்க அடிப்படையாக இருப்பது அதன் சொத்தின் மதிப்பு. அந்த சொத்தின் முக்கிய வடிவம் அதன் பங்குகளின் மதிப்பு. இதில்தான் பிரச்சினை. அதானியின் பங்குகளின் மதிப்பு கடந்த மூன்றாண்டுகளில் இறக்கை கட்டி பறக்கத் துவங்கியது. எட்டு மடங்கு வளர்ச்சி அல்லது 800% வளர்ச்சி. எப்படி பங்கின் மதிப்பு அதிகரித்தது என்று பார்த்தால், ஷெல் கம்பெனிகள் எனப்படும் மொரிஷீயஸ் போன்ற வரிவிலக்கு நாடுகளில் இயங்கும் லெட்டர் பேட் கம்பெனிகள் அதானியின் பங்குகளை கொள்ளை விலைக்கு வாங்குவதுதான் காரணம். அந்த கம்பெனிகள் அதானி பங்குகளை வாங்குவது தவிர வேறு எந்த நோக்கமும் இல்லாதவை. இந்த கம்பெனிகள் பலவற்றுக்கும் அதானியின் அண்ணன் வினோத் அதானிக்கும் தொடர்பு இருக்கிறது. அவருக்கு எப்படிப் பணம் கிடைத்தது என்று பார்த்தால் அதானி நிறுவனத்தில் அவருக்குள்ள பங்குகள் மூலம் கிடைத்திருக்கலாம் என்கிறார்கள். அதாவது அதானி குடும்பத்தினரே தங்கள் பங்குகளையே அயல்நாட்டு ஷெல் கம்பெனிகள் மூலம் அதிக விலைக்கு வாங்கி பங்கின் மதிப்புகளை அதிகரிக்கிறார்கள். பின்னர் அந்த அதிக மதிப்பைக் காட்டி கடன் வாங்குகிறார்கள். இப்படி செய்வது மிகப்பெரிய பங்கு சந்தை முறைகேடு. பங்கு சந்தை வர்த்தகத்தைக் கண்காணிக்கும், மேற்பார்வை செய்யும் செபி (SEBI – Securities and Exchange Board of India) என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது மிகப்பெரிய கேள்வி. இது மத்திய நிதியமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குவது என்பதால் அரசாங்கத்தினை நோக்கித்தான் விரல்கள் நீளுகின்றன. அதானியின் ஊதிப்பெருக்கப்பட்ட பங்கு மதிப்புகளைக் குறித்து கடந்த ஜூலை மாதம் நானும் “பணத்தோட்ட பூபதி கெளதம் அதானி” என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் எழுதியுள்ளேன். அது கென் என்ற பத்திரிகையில் வெளியான விவரங்களின் அடிப்படையில் எழுதியது. ஆனால் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை பிரச்சினையை முழுமையாக ஆராய்ந்து ஆணித்தரமான தரவுகளுடன் எழுதியுள்ளது. இப்போது இந்த அறிக்கையின் விளைவாக அதானியின் ஊதிப்பெருக்கப்பட்ட பங்கு சந்தை மதிப்புகள் வேகமாக சரிகின்றன. இது எந்த அளவு அந்த குழுமத்தின் செயல்பாடுகளை பாதிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதே சமயம், இந்த முறைகேடுகள் குறித்து விசாரணை கோரி நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் குரல்கள் வலுக்கின்றன. நிதியமைச்சகம் எத்தனை நாளைக்கு முகத்தை திருப்பிக்கொண்டு பார்க்காமலேயே இருக்க முடியும் என்பது கேள்விக்குரியது. அதே சமயம், பிபிசி ஆவணப்படமும் மோடியின் தீவிர இந்துத்துவ வெறுப்பரசியலை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அதனை சமூக ஊடகங்களில் தடை செய்வதாலோ, கல்லூரிகளில் மாணவர்களைத் திரையிட விடாமல் தடுப்பதாலோ மட்டும் பொது மன்றத்திலிருந்து அகற்றி விட முடியாது. குஜராத் முதல்வராக 2002ஆம் ஆண்டு மோடி எப்படி கொலைவெறி தாண்டவத்தை மூன்று நாளுக்கு அனுமதித்தார் என்று சாட்சி சொன்னதற்காக பொய் வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட காவல் அதிகாரி சஞ்சீவ் பட்டிற்கு நீதி கிடைக்கத்தான் வேண்டும். இந்தியா நரேந்திர மோடியின் ஊழல்-வெறுப்பரசியல் வழியில் செல்லுமா, அல்லது ராகுல் காந்தியின் அன்பு-சகவாழ்வின் வழியில் செல்லுமா என்பதை எதிர்வரும் ஆண்டு முடிவு செய்யும். கட்டுரையாளர் குறிப்பு: ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி https://minnambalam.com/political-news/bbc-video-hindenberg-report-special-story-by-rajan-kurai/
  13. இந்துத்துவம் ஏன் அஹிம்சையைக் கொன்றது? ராஜன் குறை கிருஷ்ணன் காந்தி, 1948 ஜனவரி 30 அன்று கொலையுண்டு 75 ஆண்டுகள் நிறைவடையும் சமயத்தில் முன் எப்போதையும்விட அந்த நிகழ்வு நம் சிந்தனையைத் தூண்டுகிறது. நிறைய கூட்டங்கள் நடக்கின்றன. கட்டுரைகள் எழுதப்படுகின்றன. குறிப்பாக அவர் கொலைக்கு நேரடி காரணமான இந்துத்துவக் கருத்தியல், அதாவது இந்து ராஷ்டிரம் / இந்து அடையாளவாத தேசம் என்ற கருத்தியல் இந்திய அரசியலில் முதன்மை பெற முயலும் நேரத்தில், அவர் கொலை அதிக முக்கியத்துவம் பெறுவதும், அனைவரையும் சிந்திக்க வைப்பதிலும் வியப்பில்லை. நாம் கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றால் காந்தியைக் கொன்ற கோட்சேவின் கருத்தியலான இந்து ராஷ்டிரம் என்ற இந்து அடையாளவாத தேசியம் மட்டும் ஏன் காந்தி கொல்லப்பட்டே ஆக வேண்டிய எதிரி என்று நினைத்தது? ஏன் கோரக்பூர் மடாதிபதியும், இந்து மகாசபை தலைவர்களில் முக்கியமானவருமான திக்விஜய் நாத் காந்தி கொல்லப்பட வேண்டும் என்று அவர் கொலைக்கு மூன்று தினங்களுக்கு முன்பு 1948 ஜனவரி 27ஆம் தேதி தில்லி கனாட் பிளேஸில் நடந்த பொதுக்கூட்டத்தில் பகிரங்கமாக அறிவித்தார்? கொலை நடந்த பின் கைதுசெய்யப்பட்டு ஒன்பது மாதங்கள் சிறையில் இருந்தார்? அப்படிக் கொல்ல நினைக்க இந்திய - பாகிஸ்தான் பிரிவினைக் கலவரங்களோ, காந்தி முஸ்லீம் ஆதரவளராகக் கருதப்பட்டதோ, பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என்று காந்தி சொன்னதோ மட்டும் காரணமல்ல. அவை சில உடனடிக் காரணங்கள். அதன் பின்னால் இயங்கிய தத்துவார்த்த முரண்பாடு ஆழமானது. காந்தியுடன் முரண்பட்ட பிற தத்துவங்களான பொதுவுடமைத் தத்துவமோ, பெரியாரின் திராவிடக் கருத்தியலோ, அம்பேத்கரின் தலித்தியமோ காந்தியைக் கொல்லுமளவு வெறுக்கவில்லையே? அவருடன் முரண்பட்டபோதும், அவருடைய விழுமியங்களை முழுவதும் மறுக்கவில்லையே? ராமனையும், கிருஷ்ணனையும் (கீதை) உயர் விழுமியங்களின் உருவகமாகக் கொண்ட காந்தியை ஏன் இந்து அடையாளவாதம் கொன்றது? இந்த கேள்விக்கு விடை தேடுவது முன்னெப்போதையும்விட இன்றைக்கு அவசரமானது. விழுமியங்களும் நடைமுறைகளும் காந்தி வாழ்வியல் நடைமுறையில் தான் சந்தித்த எல்லா முரண்களுக்கும் விழுமியங்களையே தீர்வாக முன்வைத்தார். நடைமுறை முரண்களை அந்த தளத்திலேயே எதிர்கொண்டு தீர்க்க அவர் முயலவில்லை. ஆனால், விழுமியங்கள் குறித்த தன் எண்ணங்களை எழுத்திலும், செயலிலும் தீவிரமாக வெளிப்படுத்தினார். காந்தியால் தன் கருத்துக்களை நோக்கி பெரும்பாலானவர்களை, முக்கியமாக எளிய மக்களை ஈர்க்க முடிந்தது. இந்தியாவின் தன்னிகரற்ற வெகுஜனத் தலைவரானார். வெகுமக்கள் அவரை அவதார புருஷராக, நடமாடும் தெய்வமாக, மகாத்மாவாக கருதினார்கள். அதனால் இந்திய விடுதலை இயக்கத்தின் தனிப்பெரும் ஆற்றலாக அவர் உருவெடுத்தார். இருப்பினும் முரண்களை எதிர்கொள்வதில் சமூக இயக்கத்தில் விழுமியங்களுக்கும், நடைமுறைகளுக்குமான இடைவெளி தொடரவே செய்தது. உதாரணமாக காந்தி, முதலீட்டியத்தின் உபரி திரட்சிக்கும் (accumulation), தொழிலாளர் நலனுக்குமான முரண்பாட்டினை வர்க்க புரட்சி மூலமாக தீர்க்க வேண்டும் என்பதை ஏற்கவில்லை. மாறாக, எளிய மக்களின் பொருளாதார தன்னிறைவான வாழ்க்கை என்ற விழுமியத்தை முன்வைத்தார். உற்பத்தி, நுகர்வு பெருக்கத்தை மறுதலித்தார். ஒரு சின்ன தீவான இங்கிலாந்தில் நிகழ்ந்த தொழிற்புரட்சியே உலகை இந்தப் பாடுபடுத்தினால், இந்தியாவும், சீனாவும் தொழில்மயமானால் உலகம் வெட்டுக்கிளிகள் தாக்கிய வயல்போலாகிவிடும் என்றார். இன்று ‘மார்க்ஸ் இன் த ஆந்த்ரோபோசின்: டுவார்ட்ஸ் த ஐடியா ஆஃப் டீகுரோத் கம்யூனிஸம்’ (Marx in the Anthropocene: Towards the idea of Degrowth Communism - 2023) என்பன போன்ற நூல்களில் மார்க்ஸ் சூழலியலுக்கும், முதலீட்டியத்திற்கும் உள்ள முரண்கள் குறித்து சிந்தித்தது எடுத்துக்காட்டப்படுவதைக் காண்கிறோம். மற்றொரு முக்கிய பிரச்சினையான சாதிய ஏற்றத்தாழ்வில், காந்தி வர்ணாசிரம அமைப்பை முற்றும் மறுதலிக்க விரும்பவில்லை. ஆனால், அதன் உயர்வு - தாழ்வு நோக்கை மாற்றியமைக்கும் விழுமியங்களை முன்னிறுத்த முனைந்தார். அனைவருக்குமான தன்மானம், தன் மதிப்பு போன்ற விழுமியங்களில் தீர்வை உருவாக்க விரும்பினார். ஆங்கிலத்தில் இவை ‘செல்ஃப் ரெஸ்பெக்ட்’ (self-respect) என்றே எழுதப்படும்போது பெரியாரின் சுயமரியாதைக்கு அணுக்கமாகவே உள்ளன. இதிலும் காந்தியின் விழுமியங்கள் நடைமுறைப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போதுமானதாக இல்லை என்பதுதான் அம்பேத்கரும், பெரியாரும் அவரைக் கடுமையாக விமர்சிக்க, முரண்பட காரணமானது. ஆனாலும் காந்தியின் விழுமியங்களுக்கும், இவர்களது நடைமுறை முன்னெடுப்புகளுக்கும் முரண் முற்றானதாக இருக்கவில்லை. அதேசமயம், சீர்திருத்தங்களுக்கு எதிரான பிற்போக்குவாத சனாதன சக்திகள் காந்தியை மிகப் பெரிய எதிரியாக கருதியதை அட்சயா முகுல் எழுதிய ‘கீதா பிரஸ் அண்ட் த மேக்கிங் ஆஃப் இந்து இந்தியா’ (Gita Press and the Making of Hindu India - 2015) நூலைப் படிக்கும்போது புரிந்துகொள்ளலாம். காந்தியமும் இந்துத்துவமும் இவ்வாறான சூழலில் காந்தியின் விழுமியங்களையே முற்றிலும் முரணானதாகக் கண்டது வன்முறை நாடிய இந்துத்துவ அடையாளவாதமே. காந்தி கொலையுண்டதற்கு கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளுக்கு முன், 1909 அக்டோபர் 24ஆம் ஆண்டு லண்டனில் நடந்த விஜயதசமி தின கூட்டத்தில் முதலும் கடைசியுமாக விநாயக் தாமோதர் சாவர்க்கரும், காந்தியும் நேரில் சந்தித்தனர். அன்றைய தினம் காந்தி பத்து தலைகள் கொண்ட ராவணனுடன் ராமர் நடத்திய போரும், கீதையில் கண்ணன் கூறிய போரும் நமது மனதிற்குள் நடக்க வேண்டிய போரின் உருவகங்கள் என்று கூறினார். தீய எண்ணங்கள் நம் உள்ளத்தில் களையப்பட வேண்டும் என்பதுதான் அவற்றின் நோக்கமே தவிர வன்முறையை போதிப்பது அல்ல என்றார். சாவர்க்கரோ ராமர் இலங்கைக்கு சென்று போர் புரிந்து தீயவர்களைக் கொன்றது சீதையை விடுவிக்கத்தான் என்றார். சரியான நோக்கங்களுக்காக வன்முறையைக் கைக்கொண்டு போராடுவது தவறல்ல என்றார். இந்த காந்தி - சாவர்க்கர் லண்டன் விவாதம் அதற்கு சில மாதங்கள் முன்பு மதன்லால் திங்கரா என்ற இளைஞர் கர்சான் வைலி என்ற பிரிட்டிஷ் அதிகாரியைச் சுட்டுக்கொன்ற நிகழ்வின் பின்னணியில் புரிந்துகொள்ளப்பட வேண்டும். திங்கரா சாவர்க்கரின் எண்ணங்களால், எழுத்துகளால் தூண்டப்பட்டிருந்தார். சாவர்க்கர் திங்கராவின் செயலை புகழ்ந்தார். காந்தி திங்கரா செய்த கொலையை வன்மையாகக் கண்டித்தார். நாற்பதாண்டுகளுக்கு பிறகு அதே சாவர்க்கரின் எண்ணங்களால், எழுத்துக்களால் உருவான நாதுராம் கோட்சே காந்தியைக் கொன்றது தற்செயலானது அல்ல. காந்தி - சாவர்க்கர் லண்டன் சந்திப்பு குறித்த தகவலை தனது ‘இந்துத்துவா அண்ட் வைலனஸ்: வி.டி.சாவர்க்கர் அண்ட் த பாலிடிக்ஸ் ஆஃப் ஹிஸ்டரி’ (Hindutva and Violence: V.D.Savarkar and the Politics of History - 2022) என்ற நூலில் தரும் விநாயக் சதுர்வேதி இத்தாலிய தேசியவாதியான மாஜினியின் சிந்தனைகளும், வாழ்க்கையும் எப்படி சாவர்க்கரின் சிந்தனையை வடிவமைத்தன என்பதையும், அதேசமயம் காந்தி எப்படி மாஜினியை முற்றிலும் வேறு முறையில் புரிந்துகொண்டார் என்பதையும் குறிப்பிடுகிறார். சாவர்க்கரை சந்தித்த பிறகு கப்பலில் நாடு திரும்பும் போதுதான் காந்தி தன்னுடைய புகழ்பெற்ற ‘ஹிந்த் ஸ்வராஜ்’ என்ற நூலை எழுதினார். அதில் அவர் மாஜினி உருவாக்க நினைத்த மக்களின் சுயாட்சி என்பது இத்தாலியில் உருவாகவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறார். ஆஸ்திரிய மன்னரின் மேலாதிக்கத்திலிருந்து இத்தாலிய மன்னர் விடுவிக்கப்பட்டார் என்பதுதான் நடந்தது, மக்களுக்கு சுயாட்சி கிடைக்கவில்லை என்று தெளிவுபடுத்துகிறார். இதற்குக் காரணம் இத்தாலிய தேசம் கரிபால்டியின் ராணுவ நடவடிக்கைகள் மூலம் பெற்ற விடுதலைதான் என்று கூறுகிறார் காந்தி. வன்முறை மூலம் மக்களின் உண்மையான சுயாட்சியை உருவாக்க முடியாது என்று திட்டவட்டமாக எடுத்துரைக்கிறார். பிறரைக் கொல்வது என்பது வீரமல்ல, கோழைத்தனம் என்று காந்தி வரையறுக்கிறார். ஒருவர் தனது லட்சியங்களுக்காக தன்னுயிரைக் கொடுப்பது வீரமாக, தியாகமாக இருக்கலாம்; ஆனால் பிறரைக் கொல்வது கோழைத்தனம் என்கிறார். காந்தியின் தத்துவத்தை நாம் இறையாண்மை தேசியத்திற்கும், சுயாட்சி தேசியத்திற்குமான வேறுபாடாகப் புரிந்துகொள்ளலாம். இறையாண்மை தேசியம் என்பது ராணுவமயமானது; சுய பாதுகாப்பு மட்டுமல்லாமல், ஆக்கிரமிப்பின் சாத்தியங்களை உள்ளடக்கியது. சுயாட்சி தேசியம் என்பது மக்கள் தங்கள் வாழ்வை தாங்களே தீர்மானித்துக்கொள்ளும் உரிமை. அது மக்களின் ஆன்ம விழிப்பால், பகுத்தறிவால் உருவாவது; ஆயுதங்களால் அல்ல. உலக வரலாற்றிற்கு காந்தி பரிந்துரைத்த மாற்று பதினான்கு, பதினைந்தாம் நூற்றாண்டுகளில் இத்தாலியில் உருவான முதலீட்டிய நடைமுறை காலனீயத்திற்கு அதாவது ஐரோப்பிய நாடுகள் உலகின் பிற பகுதிகளில் கால் பதித்து வர்த்தகம் செய்ய, ஆதிக்கம் செலுத்த வழி கண்டன. பின்னர் முதலீட்டியமும், காலனீயமும் சேர்ந்து நவீன நாகரீகத்தின் இரண்டு முக்கிய அம்சங்களை உருவாக்கின. ஒன்று அரசர்களிடம் இருந்த இறையாண்மையை மக்களை நோக்கி நகர்த்த முற்பட்டது. இரண்டு, அறிவியல் தொழில்நுட்பம், இயந்திரங்களின் பெருக்கம், தொழிற்புரட்சி ஆகியவற்றின் மூலம் உற்பத்தி - நுகர்வை பெருக்கியது. இந்த இரண்டும் இணைந்தபோது, தேசியக் கருத்தியலும், ராணுவமயமான தேசங்களும் உருவாயின. மோட்டார் வாகனங்கள், ரயில், விமானம் ஆகியவையும், புதிய வகை ஆயதங்களும், வெடிகுண்டுகளும் பெருகி தேசங்களுக்கிடையேயான யுத்தங்களை அனைத்து மக்களையும் பாதிக்கும் கொலைக்களங்களாக மாற்றின. இரண்டு உலக யுத்தங்கள் பெரும் அழிவை உலகெங்கும் தோற்றுவித்தன. அதன் இறுதியில் அணு ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்ட பின் உலகம் முழுவதும் அணு ஆயுதங்கள் பெருகியுள்ளன. காந்தி இவ்வாறு உற்பத்தி, நுகர்வு, வன்முறையை பெருக்கிய நவீன நாகரீகத்தை ஏற்கவில்லை. அதற்கு மாற்றாக தன்னிறைவுப் பொருளாதாரம், தற்சார்பான வாழ்க்கை, பகிர்தல், வன்முறையை முற்றிலும் மறுத்தல் ஆகியவற்றையே நம்பினார். ஒரு தேசத்தின் சுயராஜ்யம் என்பது அனைத்து மக்களும் சுயாட்சி உரிமைகள் பெறுவதே என்று உறுதிபடக் கூறினார். மன்னர்களோ, பணக்காரர்களோ ஆட்சியதிகாரம் பெறுவது விடுதலையல்ல என்று நினைத்தார். இந்தியர்கள் மேற்கத்திய நாகரீகத்தை ஏற்க மறுத்து தங்கள் வாழ்க்கை முறையை சீர்படுத்தி வாழ்வதே சுயாட்சிக்கு வழி வகுக்கும் என்ற காந்தி, ஆங்கிலேயர்களும் அந்த வாழ்க்கை முறையை ஏற்றால் இங்கேயே வாழலாம் என்று ‘ஹிந்த் ஸ்வராஜ்’ நூலில் கூறினார். அப்படியெல்லாம் வரலாற்றில் இதுவரை நடந்ததில்லையே என்ற கேள்விக்கு, இதுவரை வரலாற்றில் நிகழாதது, இனிமேலும் நிகழாது என்று நினைப்பது மனித கெளரவத்தையே மறுப்பதாகும் என்றார் காந்தி. இத்தகைய நம்பிக்கையுடன், இந்திய விடுதலை என்பது புதிய அரசியல் விழுமியங்களை உலகிற்கு அளிப்பதாக இருக்க வேண்டும் என்று நினைத்தார் காந்தி. ஆனால், இந்துத்துவர்கள் ஐரோப்பாவில் தோன்றிய பாசிஸம், நாசிஸம்போல, ஒற்றை அடையாளவாத, வன்முறை இறையாண்மை நோக்கினைக் கொண்ட நவீன தேசியத்தையே விரும்பினார்கள். நவீன உலகில் பிற நாடுகளுடன் போட்டியிட்டு ராணுவ வல்லரசாக வேண்டும் என்று விழைந்தார்கள். காந்தி இறையியல் நோக்கு என்பது தனிப்பட்ட கடவுளர்கள், மதங்களை கடந்த பொதுவான மானுடவியல் பண்பாக இருக்க வேண்டும் என நினைத்தார். மனிதர்கள் தங்கள் எளிமையினை புரிந்து இயற்கையின் மடியில் இறை உணர்வுடன் ஒன்றியிருக்க வேண்டும் என நினைத்தார். இந்துத்துவர்களோ தெய்வங்கள் என்பவை, ராமரோ, கிருஷ்ணரோ, தங்கள் மத அடையாளத்தை உறுதிசெய்துகொண்டு, வன்முறை மூலம் தேசத்தினை கட்டமைக்க உதவக்கூடியவையாகவே கருதினார்கள். காந்தியின் விழுமியங்கள், நவீன அடையாளவாத வல்லரசிற்கு முற்றிலும் எதிரானவை என்பதால்தான் அந்த எழுபத்தெட்டு வயது மனிதர் இன்னும் சில ஆண்டுகள் வாழ்வதுகூட இந்துத்துவ இலட்சியத்தை நிரந்தரமாக சாத்தியமற்றதாக்கிவிடலாம் என்று அஞ்சி தோட்டக்கள் அவர் மேல் பாய்ச்சப்பட்டன. அகிம்சையைக் கொல்லாமல் வன்முறை தழைக்காதே? https://www.arunchol.com/rajan-kurai-krishnan-on-gandhi-assassination
  14. ராஜராஜனும் வெற்றிமாறனும்: யார் இந்து? ராஜன் குறை கிருஷ்ணன் ராஜராஜ சோழன் இந்து மன்னனா அல்லது தமிழ் சைவ மன்னனா? இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால் பலருக்கும், ‘இது என்ன புதுக்குழப்பம்?’ என்று வியப்பாக இருக்கிறது. பெயரில் என்ன இருக்கிறது என்று சிலர் கேட்கலாம். பெயரில்தான் எல்லாம் இருக்கிறது என்று ஒருவர் சொல்லலாம். ஒன்று மட்டும் நிச்சயம். பெயரில் அரசியல் இருக்கிறது. விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மணி விழாவில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன் அதைத்தான் கூறினார். நமது இருப்பே அரசியல்தான் என்று திருமாவளவன் தெளிவுபடுத்தியதாகக் கூறினார். இதைத்தான் ‘ஆன்டு - பொலிடிக்கல்’ (onto-political) என்று கூறுவார் அரசியல் கோட்பாட்டாளர் வில்லியம் கனோலி. வெற்றிமாறன் தன்னுடைய பேச்சில், எப்படி தமிழ் சினிமா திராவிட இயக்கத்தின் பங்கேற்பால் முற்போக்கான, மதச்சார்பற்ற அரசியலைப் பேசுவதாக மாறியது என்பதைக் கூறி, இன்றும் அந்த மரபைத் தொடர வேண்டிய அவசியம் ஏன் இருக்கிறது என்று சுட்டிக்காட்டினார். நமது அடையாளங்கள் களவாடப்படுகின்றன என்று கூறிய வெற்றிமாறன், ‘திருவள்ளுவருக்கு காவி வண்ணம் பூசப்படுகிறது, ராஜராஜசோழன் இந்து மன்னனாக மாற்றப்படுகிறான்’ என்றும் கூறினார். ஏன் பேசினார் வெற்றிமாறன்? உலகெங்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளியாகி பல்வேறு மொழிகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், ‘ராஜராஜசோழன் இந்து மன்னனாக மாற்றப்படுகிறான்’ என்று வெற்றிமாறன் கூறியது பரவலாக விவாதத்தை உருவாக்கி உள்ளது. உள்ளபடி சொன்னால் வட இந்திய ஊடகங்களில் இந்தப் படத்தைக் குறித்து பேசும்போது, பலர் ராஜராஜ சோழனை இந்து மன்னனாக அடையாளம் கண்டு பேசுவது உண்மை. இன்றுள்ள அரசியல் சூழலில் இந்து அடையாளம் என்பது இந்துத்துவ கருத்தியலில் ஒற்றை அகில இந்திய அடையாளமாக, பெரும்பான்மை அடையாளமாக மாற்றப்பட்டு சிறுபான்மை மக்களுக்கும், பட்டியலின மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் நலன்களுக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரான அதிகாரக் குவிப்பிற்கு, பாசிஸ அணுகுமுறைக்கு துணைபோகிறது என்பதுதான் இதில் முக்கிய பிரச்சினையாகும். வெற்றி மாறன் நமது அடையாளங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறுவதன் பொருள் தமிழகத்தில் இந்துத்துவ அரசியலின் ஊடுருவலைத் தவிர்க்க வேண்டும் என்பதுதான். ஆனால், இந்தக் கருத்தை வாசிக்கும் பலருக்கும் ஏற்படும் குழப்பம் இதுதான்: ‘சைவம், வைணவம் அனைத்தும் இந்து மதம் என்றுதானே இப்போது குறிப்பிடப்படுகிறது? அப்படி இருக்கும்போது சைவ சமயத்தை ஆதரித்த, தஞ்சை கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனை இந்து மன்னன் அல்ல என்று எப்படி ஒருவர் கூற முடியும்?’ இந்தக் கேள்விக்குச் சரியான பதிலை நாம் பெற வேண்டும் என்றால், நாம் இந்து மதம் என்ற ஓர் அடையாளம் எப்படி, எப்போது உருவாகியது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். இந்து மதம் என்ற அடையாளத்தை உருவாக்கியது யார்? சிந்து நதி தீரத்தை பாரசீக மொழியில் ‘ஹிந்த்’ என்று குறிப்பிட்டார்கள். அரேபிய மொழியில் ‘அல்-ஹிந்த்’ என்று குறிப்பிட்டார்கள். எட்டாம் நூற்றாண்டில் முஸ்லீம்கள் அங்கு குடியேறியபோது, முஸ்லீம் அல்லாதவர்களைக் குறிக்க பாரசீக மொழியில் ‘ஹிந்து’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டதாகக் கூறுகிறார் புகழ்பெற்ற ஆய்வாளரும் லங்காஸ்டர் பல்கலைக்கழகப் பேராசிரியருமான காவின் ஃபிளட் (Prof.Gavin Flood). “பதினைந்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு சம்ஸ்கிருத நூல்களிலும் சிலர் இந்த ‘ஹிந்து’ என்ற அடையாளத்தைப் பயன்படுத்தினார்கள்” என்று அவர் சொல்கிறார். ஆனால், ஆங்கிலேயர்கள் வருகைக்குப் பின்பே பதினெட்டாம் நூற்றாண்டில் இந்த ஹிந்து என்ற சொல்லுடன் இஸம் என்ற மேற்கத்திய பின்னொட்டைச் சேர்ந்து, ‘ஹிந்துயிஸம்’ என்ற வரலாற்று மத அடையாளம் உருவாக்கப்பட்டது. புத்திஸம், ஜெயினிஸம், சீக்கிஸம் என்று எல்லாவற்றிற்கும் இஸம் என்ற பின்னொட்டைக் கொடுத்து உலக வரலாற்று மதங்கள் என்று அடையாளப்படுத்தினார்கள். மேற்கத்திய பல்கலைகழகங்களில் இவற்றைக் குறித்து பாடங்கள் நடத்த ஆரம்பித்தார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் இந்தியர்கள் மெள்ள, மெள்ள இந்த வார்த்தையை ‘இந்துயிஸம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தலானார்கள். இவ்வாறு ஐரோப்பியர்கள் ஒற்றை அடையாளமாக இந்து மதத்தை உருவாக்கியபோது வேதம், உபநிதடம், பிராமணம், புராணம் எனப் பல்வேறு சம்ஸ்கிருத நூல்களை மையப்படுத்தியே இந்த மதத்தை அடையாளப்படுத்தினார்கள். அதனால், அவற்றுடன் சேர்த்து சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்ட தர்மசாஸ்திரங்களும் இந்துக்களின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் சட்டங்களாகக் கருதப்பட்டன. இது சம்ஸ்கிருதத்தை பேசிய, எழுதிய பிராமணர்களை இந்து மதத்தின் சகல சக்தி வாய்ந்த பிரிவினராக மாற்றியது. பிராமணர் அல்லாதோரின் பிரச்சினை இது பிராமணர்கள் அல்லாத பல்வேறு சமூகப் பிரிவினர், அவர்கள் வழிபாட்டு முறைகள், இறையியல் கோட்பாடுகள் எல்லாவற்றையும் திடீரென்று ஒரே அடையாளத்தில் சேர்த்துக்கட்டுவதாக மாற்றியது. ஓர் உதாரணமாக, தமிழில் சைவ சித்தாந்தத்தை தனிப்பட்ட சிந்தனை முறையாக வளர்த்துவந்த வேளாளர்களை பிராமணர்களுக்கு அடுத்து நிலையில் வைத்து சூத்திரர்கள் அல்லது சற்சூத்திரர்கள் என்று அழைக்கப்படும் நிலை உருவானதைச் சொல்லலாம். தனது ‘ஆரிய மாயை’ நூலில் அண்ணா சென்னை உயர் நீதிமன்றத்தில் 1941இல் வழங்கப்பட்ட தீர்ப்பு ஒன்றைக் குறிப்பிடுகிறார். அதில், ‘சூத்திரர்களை பிராமணர்கள் மணந்தால் அந்தத் திருமணம் இந்து தர்ம சாஸ்திரங்களின்படி செல்லாது’ என்று நீதிபதிகள் பாண்டு ரங்க ராவும், சோமையாவும் தீர்ப்பளித்துள்ளார்கள் (Appeal Number 33 of 1939) என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். இது எத்தகைய சிக்கலை பிராமணரல்லாதோருக்கு ஏற்படுத்தும் என்பதே பிரச்சினை. அவர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இந்துக்கள் என்றுதான் அரசு அடையாளப்படுத்தும். அவர்கள் அப்படி இந்துக்கள் என்று ஒப்புக்கொண்டால் அவர்கள் பிராமணர்களுக்குத் தாழ்வான சமூக அந்தஸ்துடனேயே வாழ வேண்டும். மேற்சொன்ன வழக்கில் தீர்ப்பு வழங்கிய ஆண்டு ஏதோ பண்டைய காலமல்ல. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஆறு ஆண்டுகள் முன்னர்தான் இது நிகழ்ந்துள்ளது என்பது இங்கு எண்ணிப் பார்க்கப்பட வேண்டியது ஆகும். இந்துத்துவ அரசியலின் ஒற்றை இந்து அடையாளம் இந்த சூழ்நிலையில்தான் தமிழ் சைவர்கள் தங்கள் மதம் தனித்துவமானது இந்து மதத்தைச் சேராதது என்று சொல்வதற்கு குறிப்பான பொருள் தோன்றுகிறது. இதுபோலவே தமிழ் தென் கலை வைணவர்களும் என்று கூறலாம். பிற கிராம தெய்வங்களை வழிபடுவோரும் தாங்கள் இந்துக்கள் அல்ல; கருப்பண்ணசாமியை வழிபடுபவர்கள் என்று கூறலாம். எதனால் இவர்கள் எல்லாம் சம்ஸ்கிருத மொழி நூல்களையும், பிராமணர்களையும் மையமாகக் கொண்ட இந்து மத்தினை தங்கள் மதமாக ஏற்க வேண்டும் என்று கேள்வி எழுவது இயல்பானதுதானே? இந்தப் பழைய பிரச்சினை போதாதென்று இப்போது இந்து மதம் சார்ந்த இந்தக் கேள்வியை அரசியல் அடையாளம் சார்ந்த கேள்வியாக இந்துத்துவம் மாற்றியிருக்கிறது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக வன்முறைக் கிளர்ச்சி நடத்த விரும்பிய சாவர்க்கர், கடுமையான சிறைவாசத்திற்குப் பிறகு 1920களின் துவக்கத்தில் அரசியலில் ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டார். அப்போதுதான் அவர் இந்துத்துவம் என்ற கருத்தியலை விளக்கும் ‘தி எசன்ஷியல் ஆஃப் இந்துத்வா’ (The Essentials of Hindutva) நூலை எழுதினார். இதன் பின்னணியை விரிவாக அறிய கலிஃபோர்னியா இர்வைன் பல்கலைக்கழகப் பேராசிரியர் விநாயக் சதுர்வேதி எழுதிய ‘ஹிந்துத்வா அண்டு வைலன்ஸ்: வி.டி.சாவர்க்கர் அண்டு தி பாலிடிக்ஸ் ஆஃப் ஹிஸ்டரி’ (Hindutva and Violence: V.D.Savarkar and the Politics of History) நூலைப் படிப்பது அவசியம். சாவர்க்கரால் ஈர்க்கப்பட்ட ஹெட்கேவார் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைத் தோற்றுவித்தார். சாவர்க்கர் ஹிந்து மகா சபையின் தலைவரானார். படித்தவர்கள், பெரிய மனிதர்களை ஹிந்து மகா சபை பிரதான உறுப்பினர்களாகக் கொண்டிருந்தது. மத்தியதர வர்க்கத்தினரை அணிதிரட்டியது ஆர்.எஸ்.எஸ். இரண்டு அமைப்புகளுமே இந்துத்துவம் என்ற கருத்தியலை ஏற்றுக்கொண்டவை. இன்று வரை இந்து அமைப்புகளின் அரசியல் சித்தாந்தமாக இந்துத்துவமே இருக்கிறது. இந்துத்துவம் என்ன சொல்கிறது என்றால், ‘இந்தியா என்பது இந்துக்களின் தேசம். இந்திய அரசு என்பது இந்து ராஷ்டிரம். இந்து என்பது யாரென்றால் இந்தியாவை யாரெல்லாம் தந்தை பூமியாக, தாய் பூமியாக, புண்ணிய பூமியாக ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்களெல்லாம் இந்துக்கள்’ என்பதுதான் வரையறை. வாடிகன், ஜெருசலேம், மெக்கா போன்ற இந்திய நிலப்பரப்பிற்கு வெளியில் உள்ள இடங்களைப் புனிதத் தலங்களாகக் கருதினால் அவர்கள் இந்து தேசத்தின் உண்மையான குடிமக்களாக இருக்க முடியாது என்பதே இந்தக் கருத்தாகும். இதன்படி இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் விலக்கப்படுகிறார்கள் என்பது ஒரு பிரச்சினையென்றால், அனைவரும் இந்துக்கள் என்று ஒற்றை அடையாளமாக மாறும்போது பல்வேறு சமூகங்களின் நலன்கள், மாநில நலன்கள், மக்கள் தொகுதிகளின் கலாசார வேறுபாடுகள், அவர்களுடைய உரிமைகள் எல்லாம் நெருக்கடிக்கு உள்ளாகின்றன. மிக முக்கியமாக பிராமணியத்துக்குக் கீழே இவை தள்ளப்படுகின்றன. இப்படி பல்வேறு வித்தியாசங்களை, அடையாளங்களைக் கொண்ட மக்கள் தொகுதிகளை, பல்வேறு முரண்களைக் கொண்ட சமூக இயக்கத்தை, ஒற்றை அடையாளத்தில் கட்டுவதைத்தான் பாசிஸ அரசியல் என்று கூறுவார்கள். ‘ஃபஷாய்ரே’ (Fasciare) என்ற இத்தாலிய சொல்லுக்கு சேர்த்துக் கட்டுதல் என்பதே அடிப்படைப் பொருள். பலரும் என்ன நினைக்கலாம் என்றால், எல்லோரையும் இந்து என்று சேர்த்துக் கட்டுவது ஒற்றுமையைத்தானே வளர்க்கிறது என்று நினைக்கலாம். ஆனால், அது சரியான வழியல்ல. வித்தியாசங்களைப் புரிந்து ஏற்று நல்லிணக்கத்துடன் வாழ்வதுதான் நாகரிகமே தவிர வித்தியாசங்களை அழித்து, ஏதோ ஓர் அடையாளத்தின் கீழ் எல்லாவற்றையும் சேர்த்துக் கட்டுவது அல்ல. நவீன அரசியலில் ஒவ்வொரு குடிநபரும் இறையாண்மை பொருந்தியவர். தனக்கென உரிமைகளும், சுதந்திரமும் கொண்டவர். நான் விரும்பினால் என்னை வைணவன் என்று அழைத்துக்கொள்ளும் சுதந்திரம் வேண்டும். நான் திருமாலைத்தான் வழிபடுவேன், சிவனை வழிபடமாட்டேன் என்று சொல்லும் சுதந்திரம் வேண்டும். வேறொருவருக்கு வேறொரு தெய்வம். இன்னொருவருக்கு தெய்வ நம்பிக்கையே கிடையாது. இப்படியிருக்க எல்லோரும் ஏன் இந்து என்று கூறிக்கொள்ள வேண்டும்? எல்லோர் நலன்களும் ஒன்றல்ல! ஒவ்வொரு வர்க்கத்தின் நலன்களும், ஒவ்வொரு மக்கள் தொகுதிகளின் நலன்களும் வேறுபட்டவை. தலித்துகளின் தேவைகள் வேறு; பிராமணர்களின் தேவைகள் வேறு. அவர்களுக்குள் முரண்கள் இருக்கலாம். முதலாளிகளுக்கும், தொழிலாளிகளுக்கும் முரண்கள் நிலவத்தான் செய்யும். அந்த முரண்களையெல்லாம் ஒற்றை அடையாளத்தை முன்வைத்து புதைத்து வைக்க முயற்சிக்கக் கூடாது. அதேபோல இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் தனித்துவமிக்கவை. அவற்றின் அரசியல் தன்னுணர்வு தனித்துவமானது. அதனால் அந்தந்த மாநிலங்களின் அடையாளங்களையும் பொது அடையாளத்தில் அழித்துவிடக் கூடாது. மாநில சுயாட்சி உரிமைகளை மறுக்கக் கூடாது. இதையெல்லாம் புரிந்துகொண்டால் ஏன் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சோழ மன்னன் ராஜராஜன் தமிழ் சைவன் என்பதே சரியானது என்பதையும், அவன் வாழ்ந்த காலத்தில் இல்லாத சொல்லான இந்து என்ற அடையாளத்தை அவனுக்கு வழங்க ஒருவர் விரும்பாததையும் புரிந்துகொள்ள முடியும்! https://www.arunchol.com/rajan-kurai-krishnan-on-rajarajan-and-vetrimaran-issue
  15. அ.இ.அ.தி.மு.க-வின் அவல அரசியல்: நாடகங்களும், ஊடகங்களும்! மின்னம்பலம்2022-06-20 ராஜன் குறை சாதாரண மக்களுக்குக் கூட தெளிவாக புரியும், அவர்கள் பொதுவெளிகளில் பேசிக்கொள்ளும் விஷயம் ஒன்று உண்டானால் அது பாரதீய ஜனதா கட்சியே அ.இ.அ.தி.மு.க-வில் அரங்கேறும் நாடகங்களுக்கு பின்னால் இருக்கிறது என்பதுதான். மலைப்பாம்பினால் சுற்றி வளைக்கப்பட்ட ஆட்டு குட்டி போல அ.இ.அ.தி.மு.க-வின் நிலை இருக்கிறது. பொம்மலாட்ட பொம்மைகள் போல இரட்டை தலைமை என்கிறார்கள், ஒற்றை தலைமை என்கிறார்கள், பேச்சு வார்த்தை என்கிறார்கள், இணைகிறது என்கிறார்கள், உடைகிறது என்கிறார்கள், ஜெயலலிதா இறந்ததிலிருந்து கேட்டுக் கேட்டு புளித்துப் போய் விட்டது இந்த ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் – சசிகலா அரசியல். இவர்கள் மூவருமே மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியால் மிக மோசமாக நடத்தப்பட்டாலும் அதை எதிர்த்து அரசியல் செய்யும் துணிவோ, ஆகிருதியோ இல்லாதவர்கள். இவர்கள் மீது வழக்குகள் இருக்கின்றன, அதனால்தான் பயப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது. லாலு பிரசாத் யாதவ் மீது இல்லாத வழக்கா? அவர் எப்படி சிறையிலிருந்தாலும், எத்தனை வழக்கு போட்டாலும் தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சியை எதிர்த்து வருகிறார்? ஏனெனில் அவருக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது. இவர்கள் மூவரும் எந்த அரசியல் ஆகிருதியும் மக்கள் செல்வாக்கும் இல்லாமல் ஜெயலலிதாவை அண்டிப் பிழைத்தவர்கள். அதனால் இவர்களால் பாரதீய ஜனதாவை எதிர்ப்பதை நினைத்தும் பார்க்க முடியாது. பிறகு ஏன் நான் தலைவர், நீ தலைவர் என்று காட்சி அரசியல் நடத்துகிறார்கள்? இந்த நாடகங்களுக்கு காரணம் ஊடகங்கள். ஒரு வார காலமாக தொலைக்காட்சி ஊடகங்கள் இவர்கள் பிரச்சினையைத்தான் பேசுகின்றன. ஏதோ மிக முக்கியமான அரசியல் மாற்றங்கள் நிகழ்வதைப்போல மாயத்தோற்றத்தை உருவாக்குகின்றன. கடந்த ஓராண்டாக திராவிட முன்னேற்ற கழக ஆட்சியின் அன்றாட முன்னெடுப்புகள் ஊடக கவனத்தை பெற்று வந்தன. முதல்வர் ஸ்டாலின் தினமும் ஓயாமல் புதிய திட்டங்கள். அறிவிப்புகள், செயல்பாடுகள் என தீவிரமாக பணியாற்றி வருகிறார். இப்படியே சில ஆண்டுகள் போனால் பின்னர் தி.மு.க மக்கள் மனதில் முழுமையாக குடிகொண்டுவிடும் என்ற ஒரு அச்சம் நிலவுகிறது. தி.மு.க அரசை குறை சொல்ல எதிர்கட்சிகளுக்கு வாய்ப்பே இல்லாதால் எதிர்கட்சிகள் செயல்படவில்லை என்று ஒரு கருத்து உருவாகிறது. அதனால்தான் இரட்டைத் தலைமை, ஒற்றைத்தலைமை என்று ஏதாவது பூசல் செய்தாவது கவனத்தை தங்கள் பக்கம் திருப்ப முயற்சிக்கிறார்கள். இந்த நாடகங்களுக்கு ஊடகங்களும் ஒத்துழைப்பதால் அது மக்களின் கவனத்தை பெறுகிறது. அரசியல் அவலத்தின் உச்சம் அரசியலில் எல்லாமே சகஜம் என்ற ஒரு எண்ணம் மக்களிடையே நிலவுகிறது. அதாவது எத்தகைய தகிடுதத்தமும் செய்யலாம், கூசாமல் பொய் சொல்லலாம், முன்னுக்கு பின் முரணாகப் பேசலாம் என்று நினைக்கிறார்கள். அரசியல்வாதிகளை கேலி செய்ய உருவாக்கப்பட்ட புனைவுகள், குறிப்பாக திரைப்படக் காட்சிகள் இதற்கு துணை செய்கின்றன. ஒரு திரைப்படத்தில் கவுண்டமணி என்ற நகைச்சுவை நடிகர் உள்ளூர் அரசியல்வாதி பாத்திரத்தை ஏற்றிருப்பார். அவர் ஒரு கடையில் உள்ள தொலைபேசியில் சென்னையிலோ, டெல்லியிலோ உள்ள அரசியல் தலைவரை தொடர்பு கொண்டு பேசுவது போல நடிப்பார். அவர் பேசி முடித்தவுடன் கடைக்காரர் தொலைபேசியின் ஒயர் பிய்ந்து போயிருப்பதை காண்பிப்பார். கவுண்டமணி கவலைப்படாமல் “ஆரசியலில் இதெல்லாம் சகஜமப்பா” என்று கூறுவார். இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற காட்சியாகும். அரசியலில் நிலவும் பொய்மையை கேலி செய்ய அமைக்கப்பட்ட காட்சி, அரசியலே பொய்யும், புனைசுருட்டும்தான் என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப் படுவதாக மாறிவிட்டது. நான்கு ஆண்டுகளுக்குள் என்னென்ன முரண்பட்ட காட்சிகளை ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும், சசிகலாவும் அரங்கேற்றி காட்டிவிட்டார்கள் என்பதை ஊடகங்கள் சுட்டிக் காட்டுவதே இல்லை. அ.இ.அ.தி.மு.க ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட இயக்கம் என்று அபத்தமாக ஓயாமல் கூறிக்கொண்டுள்ளார்கள். பெற்ற வாக்குகளே ஒன்றரை கோடி என்றால் வாக்களித்தவர்கள் எல்லோரும் தொண்டர்களா? சரி, இது ஒரு மிகையான கூற்று, தன்னிம்பிக்கைக்காக சொல்கிறார்கள் என்று எடுத்துக்கொண்டாலும் இந்த கட்சி மூன்று முக்கியமான பொய்களை ஆதாரமாகக் கொண்டு இயங்குகிறது. முதல் பொய் ஜெயலலிதா குற்றமற்றவர் என்பது. எந்த குற்றங்களுக்காக சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சிறை தண்டனை அனுபவித்தார்களோ அந்த வழக்கில் முதல் குற்றவாளி, அதாவது அக்யூஸ்டு நம்பர் ஒன் ஜெயலலிதாதான். நன்றாக சிந்தித்துப் பார்க்கவேண்டும். அதிகாரத்தில் இருந்தவர் ஜெயலலிதாதான். அதிகாரத்தை தவறாக பயன்படுத்திதான் சொத்து சேர்க்கும் குற்றம் நடந்துள்ளது. ஒரு குற்றத்திற்காக விசாரிக்கப்படுபவர்களில் உடந்தையாக இருந்தவர்கள் குற்றவாளி, ஆனால் நேரடியாக தன் அதிகாரத்தை பயன்படுத்தி குற்றம் செய்தவர் குற்றவாளி அல்ல என்று சொல்ல முடியுமா? ஆனால் தொடர்ந்து அது அப்படித்தான் என்று கூறி வருகிறார்கள். ஊடகங்களும் அனுமதிக்கின்றன. உச்ச நீதி மன்றத்தின் விரிவான தீர்ப்பை அதில் ஜெயலலிதாவை கண்டிக்கும் வரிகளை படிக்காததுபோல ஊடகங்களில் பேசுகிறார்கள். இரண்டாவது பொய், அ.இ.அ.தி.மு.க பொதுக்குழு கூடி சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்து மொத்த கட்சியும் அவர் காலில் விழுந்து அவரை அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்படி கெஞ்சியது. பின்னர் சட்டமன்ற கட்சி கூடி அவரை முதல்வராக தேர்வு செய்து ஆளுனருக்கு தெரிவித்தது. எந்த அடிப்படையில் அவ்வாறு செயல்பட்டார்கள் என்பதை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் விளக்க வேண்டும் அல்லவா? ஏன் அப்படி அவரை வணங்கி வழிபட்டு நின்றார்கள், பின்னால் ஏன் அவரை கட்சியை விட்டு நீக்கினார்கள் என்பதை எடுத்துக் கூற வேண்டும் அல்லவா? ஆனால் அப்படி ஒரு சம்பவமே நடக்காதது போல பேசுகிறார்கள். ஊடகங்களும் ஏதோ நகைச்சுவை காட்சி என்பதுபோல கடந்து போய்விடுகின்றன. மூன்றாவது மிகப் பெரிய பொய் கட்சியின் பொதுக்குழுவிற்கு பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கவோ, அல்லது அந்த பதவியையே நீக்கவோ அதிகாரம் இருப்பதாக கூறுவது. இது வடிகட்டிய முழுப்பொய். சாதாரணமாக ஆங்கிலத்தை எழுத்துக் கூட்டி படிப்பவர்கள் கூட அண்ணா தி.மு.க விதிமுறையில் மிகத் தெளிவாக இந்த அதிகாரம் மட்டும் பொதுக்குழுவுக்கு கிடையாது என்பதை அழுத்தம் திருத்தமாக கூறியிருப்பதை காணலாம். எந்த காரணத்தினாலோ இதில் ஏதோ சட்ட நுட்பம் இருப்பதாக அனைவரும் கருதுகிறார்கள். ஒரு நுட்பமும் இல்லை; புதிரும் இல்லை. பொதுச்செயலாளர் ஜெயலலிதா இறந்த பிறகு, கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் எல்லோரும் வாக்களித்து இன்னொரு பொதுச் செயலாளாரை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். அது மட்டுமே சட்டப்படி செல்லுபடியாகும். மற்றபடி நடந்தது எல்லாமே கட்சியின் அமைப்பு விதிகளுக்கு செய்யப்பட்ட துரோகம். அதாவது நிறுவனர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு இழைக்கப்பட்ட துரோகம். பன்னீர்செல்வம், பழனிசாமி, சசிகலா கொடுக்க வேண்டிய விளக்கங்கள் பன்னீர்செல்வம் தர வேண்டிய விளக்கம் சசிகலாவை முதல்வராக்க சட்டமன்ற கட்சி தீர்மானம் செய்து ஆளுனருக்கு அனுப்பிய பின், திடீரென்று ஆட்டத்தை கலைத்தது பன்னீர்செல்வம்தான். அவர்தான் ஜெயலலிதா சமாதியில் சென்று தியானம் செய்தார். அதன் பிறகு தான் பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அதனை கண்டறிய தான் தர்மயுத்தம் தொடங்கியிருப்பதாகவும். விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். இப்போது ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு விசாரணை ஆணையத்திற்கு சென்று ஜெயலலிதா மரணத்தில் மர்மம் எதுவும் இல்லையென்றும், மக்கள் மத்தியில் ஐயத்தை போக்கவே தான் விசாரணை ஆணையம் அமைக்கக் கோரியதாகவும் கூறிவிட்டார். இது அப்பட்டமான பொய். அப்போது தர்ம யுத்தம் என்பதுதான் என்ன? எந்த தர்மம்? யாருடன் யுத்தம்? இவ்வளவு மோசமான சந்தர்ப்பவாத அரசியலை நடத்திவிட்டு எப்படி ஒருவர் இன்னமும் அரசியலில் தனக்கு ஒரு முக்கிய பங்கு இருப்பதாக கூறுகிறார், அதனை ஊடகங்களும் அனுமதிக்கின்றன? தொடர்ந்து அவர் முரண்பாடுகளை அம்பலப்படுத்த வேண்டாமா? பழனிசாமி தர வேண்டிய விளக்கம் பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தத்தை எதிர்த்து சசிகலாவும், தினகரனும் கூவாத்தூர் விடுதியில் அணிதிரட்டிய சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர்தான் பழனிசாமி. சசிகலாவிற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறை சென்ற போது அவர் பாதம் பணிந்து, கரம் கூப்பி முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டவர். அதன் பிறகு ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தொப்பி சின்னத்தில் டி.டி.கே. தினகரனுக்கு வாக்கு சேகரித்தவர். பிறகு எதனால் பன்னீர்செல்வத்துடன் சமரசம் பேசினார்? ஏன் தினகரனுடன் உறவை முறித்துக் கொண்டார்? எதனால் சசிகலாவை புறக்கணித்தார்? தன்னுடைய முதல்வர் பதவியை தக்கவைத்துக் கொள்வதைத் தவிர வேறு எந்த அரசியல் காரணங்களையாவது அவர் கூற முடியுமா? இவ்வளவு அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல், ஒரு துளியும் வேறு எந்த நியாயங்களும் கூற முடியாதபடியான அப்பட்டமான கலப்படமற்ற சுய நலத்தை பார்க்க முடியுமா? எந்த அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு முன்னால் இரட்டைத் தலைமைதான் இனிமேல் கட்சியின் எதிர்காலம் என்று கூறி தேர்தலை அறிவித்து இணை-ஒருங்கிணைப்பாளராக பதவி ஏற்றுக்கொண்டார்? இப்போது ஏன் ஒற்றத்தலைமை என்று தூண்டிவிட்டு பன்னீர்செல்வத்தை ஓரம் கட்ட முயற்சிக்கிறார்? இவ்வளவு அப்பட்டமாக பதவியும், அதிகாரமும் மட்டுமே அரசியல் என்று ஒரு நபர் செயல்பட முடியுமா? சசிகலா தர வேண்டிய விளக்கம் ஜெயலலிதா போலில்லாமல் திராவிட முன்னேற்ற கழக தொடர்புள்ளவர் சசிகலா. அவர் கணவர் நடராஜன் 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே ஜெயலலிதாவுக்கு பக்க பலமாக இருந்து அவர் அரசியல் வாழ்வில் முழுமையாக பங்கேற்றவர். சரியாகச் சொன்னால் இவர் இல்லாமல் ஜெயலலிதா இல்லை என்றே சொல்லலாம் என்னுமளவு ஜெயல லிதாவின் இணைபிரியாத நிழலாக மாறியவர். அவராலும், டி.டி.கே.தினகரனாலும் கட்சியில் வளர்த்து விடப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். அப்படிப் பட்டவர் தனக்கெதிராக கிளர்ந்து எழுந்து ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என அபாண்டமாக குற்றம் சாட்டி, எடப்பாடி பழனிசாமியையும் தன்னிடமிருந்து தனிமைப் படுத்தியவரை எதனால் கண்டிக்கவே தயங்குகிறார் என்பது வியப்பாக இருக்கிறது. அவர் சிறையிலிருந்து வெளிவந்தபோது, தருவிக்கப்பட்ட கூட்டமோ, தானாக வந்த கூட்டமோ, பெங்களூரிலிருந்து சென்னை வரை சாலையில் மக்கள் கூட்டம் திரண்டு இருந்தது. அவர் உடனே தனக்கு துரோகம் செய்த ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் இருவரையும் கண்டித்துவிட்டு, கட்சியை தன் பின்னால் அணிதிரள சொல்லி அரசியல் செய்திருக்க வேண்டுமல்லவா? ஏன் அவ்வாறு செய்யாமல் அரசியலை விட்டு விலகுவதாக சொன்னார்? தேர்தலையே சந்திக்காவிட்டால் கூட தன்னை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியவர்களை கண்டித்து பேச வேண்டாமா? இரட்டை த் தலைமை போன்ற ஏற்பாடுகள் கட்சி விதிகளுக்கு புறம்பானவை என்று வலியுறுத்தி பேச வேண்டாமா? எதனால் இது போன்ற கேள்விகளை கேட்காமல், தானே பொதுச்செயலாளர் என்று கூறிக்கொண்டு அரசியல் செய்கிறார்? ஏன் தன்னை “சாக்கடை ஜலம்” என்று கூறிய குருமூர்த்தியை கூட கண்டிக்க அஞ்சுகிறார்? இப்படி இவர்கள் மூவரும் எந்த விளக்கமும் தராமல் அப்பட்டமான சுய நல அரசியல் செய்வதை எதனால் ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் விடுகின்றன? இன்னொரு கோணமும் இருக்கிறது. அது என்னவென்றால் இவர்கள் மூவரும் எவ்வளவு சுய நல அரசியல்வாதிகளாக இருந்தாலும், இவர்கள் இல்லாமல் அ.இ.அ.தி.மு.க கட்சி பலவீனமடைந்தால் அந்த இடத்திற்கு பாரதீய ஜனதா கட்சி வந்துவிடும் என்பதுதான். இவர்கள் தொடர்ந்து இப்படி கட்சியை பலவீனப்படுத்தி வந்தாலும் பாஜக வளரத்தான் செய்யும். இவர்கள் மூவருமே பாரதீய ஜனதாவின் கரங்களில்தானே இருக்கிறார்கள்? இவர்களை பின்னிருந்து இயக்கியபடி பாஜக வளர்ந்தால் என்ன? இவர்கள் இல்லாமல் நேரடியாக வளர்ந்தால் என்ன? உண்மையில் இவர்களை பாஜக கேடயமாக பயன்படுத்தாமல், நேரடியாக களத்தில் நிற்பதே நல்லது என்றே தோன்றுகிறது. அது மட்டுமல்லாமல் இந்த மூவராலும் அ.இ.அ.தி.மு.க கட்சியை மீண்டும் வலுப்படுத்துவது என்பது சாத்தியமேயில்லை. அ.இ.அ.தி.மு.க கட்சிக்குள் சில சத்துள்ள திராவிட இயக்கக் கூறுகள் இருக்குமானால் அவர்கள் பின்னாளில் அணிதிரட்டி தி.மு.க-விற்கான புதிய எதிர்கட்சியை உருவாக்குவார்கள். அதுவரை தி.மு.க ஆட்சி தொடர்வது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு மிகுந்த நன்மையே பயக்கும். போதும் இந்த நாடகங்களும், ஊடக பரபரப்புகளும். தமிழக அரசியலின் இந்த அவல அத்தியாயம் முடிவுக்கு வருவதே நல்லது. கட்டுரையாளர் குறிப்பு ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி https://minnambalam.com/politics/2022/06/20/14/The-tragic-politics-of-the-AIADMK-Drama-and-the-media
  16. சிறப்புக் கட்டுரை: மீண்டும் தொடங்கிவிட்டதா பனிப்போர் காலம்? மின்னம்பலம்2022-05-02 ராஜன் குறை ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்த பிறகு உலக நாடுகளுக்கு இடையிலான சர்வதேச அரசியல் சூடுபிடித்துள்ளது. இந்த பரபரப்பான உலக அரசியல் சூழலில் இந்தியக் குடியரசுக்கு மிகுந்த முக்கியத்துவம் கிடைத்துள்ளது. ரஷ்யாவுடன் நேரடியாகப் போரிட முடியாத நிலையில் அமெரிக்க - ஐரோப்பிய நாடுகள் அதற்கு பொருளாதாரத் தடை விதித்துள்ளன. ஏனெனில் உக்ரைனுக்கு ஆதரவாக அந்த நாடுகள் போரில் ஈடுபட்டால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயங்க மாட்டோம் என ரஷியா அறிவித்துள்ளது. அதனால் உக்ரைனுக்கு மறைமுகமாக ஆயுத உதவிகள் செய்வது மற்றும் பொருளாதாரத் தடைகளின் மூலம் ரஷ்யாவைத் தனிமைப்படுத்துவது ஆகிய முயற்சிகளில் மேற்கத்திய நாடுகள் இறங்கியுள்ளன. ஆனால் தடைகள் மூலம் ரஷ்யாவைப் பணிய வைப்பது சுலபமாக இல்லை. சீனா, ரஷ்யாவுக்கு முழு ஆதரவை வழங்கி வருகிறது. உலகில் பல நாடுகள் ரஷ்யாவுடன் முக்கியமான வர்த்தக உறவுகளில் உள்ளன. ஆயுதங்களை வாங்குகின்றன. அவற்றால் திடீரென ரஷ்ய உறவைத் துண்டித்துக்கொள்ள முடியாது. இந்த நிலையில் இந்தியாவும் ரஷ்யாவுடன் உறவைத் தொடர்வதும், மலிவான விலையில் பெட்ரோல் வாங்குவதும், ஆயுதங்கள் வாங்குவதும், பல்வேறு ராணுவ ஒப்பந்தங்களைத் தொடர்வதும் பிரச்சினைக்குரியதாக அமெரிக்க - ஐரோப்பிய நாடுகள் பார்க்கின்றன. பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் சென்ற வாரம் இந்தியாவுக்கு வந்தார். அடுத்து ஐரோப்பிய யூனியன் அதிபர் வந்திருந்தார். அவர் ரஷ்யாவும், சீனாவும் முழுமையான தங்கு தடையற்ற உறவினை அறிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டி எச்சரித்துப் பேசினார். இந்தியா போல ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தலை நடத்தும் மக்களாட்சியைப் பேணும் நாடு, உலகின் சுதந்திர நாடுகளுடன் இணைந்து ரஷ்ய ஆக்கிரமிப்பையும், ரஷ்யா - சீனா கூட்டுறவையும் எதிர்க்க வேண்டும் என்றார். அடுத்த மாதம் ஜப்பானில் அமெரிக்க அதிபர், இந்தியப் பிரதமரைச் சந்திக்கிறார். எத்தனை அழுத்தம் கொடுத்தாலும் இந்தியாவால் எந்தப் பக்கமும் உடனடியாக சாய முடியாது. இந்த நிலை இந்தியாவுக்கு ஆபத்தான சிக்கலா அல்லது அனுகூலமான சந்தர்ப்பமா என்பதையும் திட்டவட்டமாகக் கூற முடியாது. பிரச்சினை என்னவென்றால் அமெரிக்காவும், ஐரோப்பாவும் தரும் ஆயுத உதவிகளைக் கொண்டு உக்ரைன் சிறிது காலம் தாக்குப் பிடிக்கலாமே தவிர, அது ரஷ்யாவைத் திருப்பி தாக்குவதோ, தோற்கடிப்பதோ சாத்தியமில்லை. ரஷ்யாவின் மீது விதிக்கக்கூடிய தடைகளையெல்லாம் விதித்தாயிற்று; பொருளாதாரத் தடை என்பது இரண்டு புறமும் வெட்டும் கத்தி. ரஷ்யாவிலிருந்து எரிவாயு போன்றவை கிடைக்காததால் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரமும் பாதிக்கப்படும். இந்த நிலையில் என்ன செய்து ரஷ்யாவின் பிடியிலிருந்து உக்ரைனை மீட்பது என்று புரியாமல் மேற்கத்திய நாடுகள் திணறுகின்றன. ரஷ்யா, சீனா, வடகொரியா ஆகிய மூன்று நாடுகளும் அணு ஆயுதங்களுடனும், திறன் மிக்க ஏவுகணைகளுடனும் காத்திருக்கின்றன. சரி, உக்ரைனை ரஷ்யா பிடித்துக்கொள்ளட்டும் என்று விட்டுவிடலாமா என்றால் இத்தனை நடந்த பிறகு அவ்விதம் பின்வாங்குவது மோசமான முன்மாதிரியாகிவிடும். ஏற்கனவே ஆஃப்கானிஸ்தானை இருபதாண்டு ஆக்கிரமிப்புக்குப் பிறகு அமெரிக்கா தாலிபான்களிடமே விட்டுவிட்டு வரவேண்டியதாயிற்று. அங்கும் தாலிபானுக்கு பின்புலத்தில் சீன ஆதரவு இருக்கிறது. அதனால் சீனாவுக்கும், அமெரிக்காவுக்குமான புதிய பனிப்போர் காலம் தொடங்கிவிட்டது என்பதே பலர் கருத்தாக இருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் பனிப்போர் வரலாறு நான் சிறுவனாக இருந்த அறுபதுகளில் ஆன்றோர்களும், சான்றோர்களும் உலகைக் குறித்து கொண்டிருந்த மிகப்பெரிய கவலை மூன்றாவது உலகப் போர் மூளுமா, அணு ஆயுத பெருவெடிப்பு நேர்ந்து மானுடம் அழிந்துபோகுமா என்பதாகத்தான் இருந்தது. ஏனெனில் உலக அரசியல் இரு துருவங்களுக்கிடையே சிக்கிக்கொண்டிருந்தது. சுதந்திரவாத - தனியுடமை கோட்பாட்டை பின்பற்றும் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஒரு துருவம், அரசு மைய - பொதுவுடமை கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளும் ரஷ்யா தலைமையிலான நாடுகள் இன்னொரு துருவம். உலக நாடுகள் எந்த பாதையைத் தேர்வு செய்யப் போகின்றன என்பதை தீர்மானிப்பதில் இரண்டு அணிகளும் முனைப்புக் காட்டியதால் அவர்களுடைய நேர்முக, மறைமுக தலையீடுகள் பல்வேறு நாடுகளில் இருந்தன. இதுவே பனிப்போர் காலம் என அறியப்பட்டது. சீனாவும் அரசுமைய - பொதுவுடமை நாடுதான் என்றாலும் ரஷ்யாவுடன் அதற்கேற்பட்ட முரண்களால் அது தனிப்பாதை அமைக்கத் தொடங்கியது. இந்த நிலையில்தான் அணிசேரா நாடுகள் என்ற கோட்பாடும், மூன்றாம் உலக நாடுகள் என்ற சிந்தனையும் உருவாயின. அமெரிக்கா பொதுவுடமை சித்தாந்தம் பரவக் கூடாது என்ற அச்சத்தில் பல நாடுகளின் அரசியலில் தலையிட்டது. வியட்நாம் மிக முக்கியமான உதாரணம். அங்கே ஹோசிமின் தலைமையில் உருவான வெகுஜன ஆதரவு பெற்ற பொதுவுடமை அரசுக்கு எதிராக தெற்கு வியட்நாம் பகுதியைத் தூண்டி, அந்த அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகளை அனுப்பியது. வடக்கு வியட்நாம் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியது. உலகெங்கும் அமெரிக்காவுக்கு எதிராக கிளர்ச்சிகள் நடந்தன. ஐரோப்பாவில் அறுபதுகளின் இறுதியில் நிகழ்ந்த மாணவர் கிளர்ச்சிகளில் வியட்நாம் ஆதரவு, அமெரிக்க எதிர்ப்பு முக்கிய பங்கு வகித்தது. வியட்நாமிலிருந்து அமெரிக்கப் படைகள் தோல்வியுடன் திரும்பின. ஹோசிமின் நிறுவிய அரசு வென்றது. தென் அமெரிக்க நாடான சிலியில் பொதுவுடமை சிந்தனை கொண்ட, வெகுஜன ஆதரவுமிக்க அலெண்டே அரசுக்கு எதிராக ராணுவ கிளர்ச்சியை அமெரிக்கா தூண்டிவிட்டது. அலெண்டே கொல்லப்பட்டார். தொடர்ந்து இஸ்ரேல், அரேபிய நாடுகள் போர்கள், இந்தியா - பாகிஸ்தான் போர்கள், ஈரான் - ஈராக் போர் உள்ளிட்ட பல்வேறு போர்களிலும் பனிப்போர் கால அமெரிக்க, ரஷ்ய வல்லரசு தலையீடுகள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் இருந்து வந்தன. கொமெனியின் ஈரானை கட்டுப்படுத்த சதாம் ஹுசைனைத் தூண்டிய அமெரிக்கா, பின்னர் சதாம் ஹுசைன் குவைத்தை கைப்பற்ற அவர் மீது படையெடுத்தது. அதற்கு முன்னர் ஆஃப்கானிஸ்தானை சோவியத் யூனியன் தன் பிடிக்குள் கொண்டுவர அதனை அகற்றும்பொருட்டு ஜிஹாதி குழுக்களை ஊக்கப்படுத்தியது அமெரிக்கா. சீனா ஏற்கனவே அமெரிக்க முதலீட்டுக்கு அனுமதி வழங்கி சீர்திருத்தங்களைச் செய்தது. டெங் சியோபிங் ஆட்சியில் சீனா அரசு மையத்துவம், மக்கள் நல ஆட்சி, எல்லைக்குட்பட்ட முதலீட்டிய சந்தை பொருளாதாரம் என்று மறு சீரமைப்பு செய்துகொண்டது. இதற்கிடையில் கோர்ப்பசேவ் ஆட்சிக்கு வந்தபிறகு எண்பதுகளின் பிற்பகுதியில் சோவியத் யூனியனில் பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. பெரஸ்தொரய்கா, கிளாஸ் நாஸ்ட் என அறியப்பட்ட அந்தச் சீர்திருத்தங்கள் ரஷ்ய சமூகத்தை அரசின் பிடியிலிருந்து விடுவிக்க தொடங்கின. 1989ஆம் ஆண்டு பெர்லின் சுவர் மக்கள் எழுச்சியால் தகர்க்கப்பட்டு ரஷ்யா வசமிருந்த கிழக்கு ஜெர்மனியும், சுதந்திர பொருளாதாரமாக இருந்த மேற்கு ஜெர்மனியும் இணைந்தன. அதைத்தொடர்ந்து 1991-ஆம் ஆண்டு சோவியத் யூனியன் உடைந்து பதினைந்து நாடுகளாகப் பிரிந்தது. ரஷ்ய கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி கலைக்கப்பட்டது. எழுபதாண்டு காலமாக பொதுவுடமை தத்துவத்தின் முக்கிய அடையாளமாக விளங்கிய சோவியத் யூனியன் உடைந்ததும், கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி முடிவுக்கு வந்ததும் உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. ஒரு துருவ உலகம் அமெரிக்காவுக்கு எதிராக தொடர்ந்து சர்வதேச அரங்கில் நிழல் யுத்தம் நடத்தி வந்த சோவியத் யூனியன் வீழ்ந்த பிறகு, உலக அரசியல் ஒற்றை துருவ அரசியலாக மாறிவிட்டதாக கருதப்பட்டது. பொதுவுடமை தத்துவம் காலாவதியாகிவிட்டதாகத் தோன்றியது. இனி உலகம் முழுவதும் சுதந்திரவாத - மக்களாட்சி - முதலீட்டிய சந்தை பொருளாதாரமே நிலவும் எனக் கருதப்பட்டது. முதலீட்டிய அமைப்பில் அடங்கியுள்ள சுரண்டல், பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களுக்கு இது வருத்தத்தை அளித்தாலும், பனிப்போர் கால யுத்தங்கள் முடிவுக்கு வருவதும், அணு ஆயுத போர் குறித்த அச்சங்கள் அகல்வதும் நன்மையாகக் கருதப்பட்டது. தத்துவார்த்த அளவில் இது உலகின் எதிர்காலம் குறித்த பல கணிப்புகளுக்கு வழி வகுத்தது. இனிமேல் முரண்களுக்கு இடமில்லை; மெள்ள மெள்ள உலகம் முழுமையான சுதந்திரவாத - முதலீட்டிய கட்டமைப்புக்கு வந்து சேர்ந்துவிடும் என சிலர் நினைத்தனர். இன்னொரு நன்மையும் விளையலாம் என எதிர்பார்க்கப்பட்டது. தேசிய அரசுகள் முக்கியத்துவம் இழந்து, உலக முதலீட்டிய கட்டமைப்பை ஒரு பேரரசு போல அமெரிக்கா வழி நடத்தும் என்ற ஒரு கணிப்பு உருவானது. இத்தாலிய மார்க்ஸீய தத்துவவாதியான அண்டோனியோ நெக்ரியும், அமெரிக்க பேராசிரியர் ஹார்ட்டும் இணைந்து பேரரசு என்ற நூலை எழுதினார்கள். அவர்கள் கணிப்பில் இந்தப் பேரரசு என்பது ஏகாதிபத்தியமல்ல. முதலீட்டிய கூட்டமைப்பை நிர்வகிக்கும் அமைப்புதான். ஐக்கிய நாடுகள் சபையே உருமாறி அமெரிக்க நிர்வாகத்தில் இந்தப் பேரரசாக வடிவெடுக்கும் எனக் கூறினார்கள். அப்படி ஒரு பேரரசு உருவானால், உலகெங்கும் தொழிலாளர்கள் புலம்பெயர்ந்து வாழ்வதும் அவர்கள் தேசங்களைக் கடந்த மக்கள் திரளாக ஒன்றுபட்டு பேரரசை தங்கள் வயப்படுத்துவதும் சாத்தியமாகலாம் என்றும் நினைத்தார்கள். ஆஃப்கானிஸ்தானில் ரஷ்ய ஆதரவு கம்யூனிசத்தை அகற்ற உருவான மதவாத, தீவிரவாத ராணுவக்குழுக்கள் பலவகையில் உருமாறி தாலிபான், அல்-கொய்தா என வடிவம் எடுத்தன. செளதி அரேபிய கோடீஸ்வரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒசாமா-பின்-லேடன் அல்கொய்தா தலைவராக விளங்கினார். இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நியூயார்க் நகரில் தீவிரவாதத் தாக்குதலை நடத்தி உலக வர்த்தக மையம் என்ற இரட்டை கோபுரக் கட்டடங்களைத் தகர்த்தது அல்-கொய்தா. அதற்கு அடைக்கலம் தந்த ஆஃப்கானிஸ்தானின் தாலிபான் அரசை வீழ்த்த அமெரிக்கா ஆஃப்கானிஸ்தான் மீது படையெடுத்தது. அடுத்து சதாம் ஹுசைனின் ஈராக் பேரழிவு ஆயுதங்களை, ஆந்த்ராக்ஸ் என்னும் ஆட்கொல்லி ரசாயன துகளை உற்பத்தி செய்வதாக சொல்லி 2004ஆம் ஆண்டு ஈராக் மீது படையெடுத்தது. தீவிரவாதத்துக்கு எதிரான போர் என அறிவித்து இந்த இஸ்லாமிய நாடுகளில் தனது படைகளை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்தது. போரில் கைது செய்யப்பட்டவர்களை அமெரிக்க ராணுவத்தினர் குரூர சித்ரவதை செய்து மகிழும் காட்சிகள் வெளியாகி உலகை அதிர்ச்சியுற செய்தது. சீனாவின் எழுச்சி சோவியத் யூனியன் சிதைவுக்குப் பிறகு உலக நாட்டாமையாக தன்னை அமெரிக்கா கருதிக்கொண்ட சமயத்தில், சீனா பிரம்மாண்டமான பொருளாதார ஆற்றலாக வடிவெடுத்தது. சீனாவில் தயாராகும் பொருட்கள் உலக சந்தைகளை நிரப்பின. மலிவான விலையில் மின்னணு தொழில் நுட்ப சாதனங்களை உற்பத்தி செய்வதில் சீனா அசாதாரணமான சாதனைகளைச் செய்தது. ஏற்கனவே அணு ஆயுத வல்லரசாகவும், மக்கள் தொகையில் உலகின் ஆகப்பெரிய நாடாகவும் விளங்கிய சீனா, பொருளாதார வல்லரசாக மாறியவுடன் அமெரிக்காவின் ஒற்றைத் துருவ உலக கற்பனை முடிவுக்கு வந்தது. சோவியத் யூனியன் சிதைந்தாலும், அதன் முக்கிய அங்கமான ரஷ்யா ஓர் அணு ஆயுத வல்லரசாகவே தொடர்ந்தது. பொதுவுடமை அமைப்பு சிதைந்த பின்னர், பெருந்தொழிலதிபர்களின் குழு ஒன்று உருவானது. அவர்கள் ஆதரவுடன் அரசு மைய சமூகத்தின் அதிகார குவிமையத்தை விளாடிமீர் புடின் கைப்பற்றினார். மேற்கத்திய மக்களாட்சி வடிவத்தை ரஷ்யாவில் புகுத்திவிட்டால் சுதந்திரவாத - தனியுடமை உலகம் முழுமை பெறும் என்ற அமெரிக்காவின் நோக்கம் புடினின் எழுச்சியாலும், சீனாவின் எழுச்சியாலும் நடைபெறாமல் போனது. சீனாவிலும் பெரு முதலாளிகள் உருவானாலும், அரசு மைய சமூகமாக சீன கம்யூனிஸ்டு கட்சியின் முழுமையான கட்டுப்பாட்டில்தான் நாடு இருக்கிறது. ரஷ்யாவுக்கு அழுத்தம் தர நேடோ எனப்படும் வடக்கு ஒப்பந்த நாடுகளின் வளையத்தை ரஷ்யாவைச் சுற்றி அமெரிக்கா உருவாக்கியது. இதை புடின் தொடர்ந்து கண்டித்து வந்தார். இறுதியாக ரஷ்யாவுக்கு அடுத்து, சோவியத் யூனியனின் முக்கிய அங்கமாக இருந்த உக்ரைனையும் நேட்டோவில் இணைக்க முயற்சிகள் நடந்தபோது ரஷ்யா, உக்ரைனின் கிரிமியா பகுதியை முதலில் கைப்பற்றியது. தொடர்ந்து முரண்பாடுகளும், மோதல்களும் அதிகரிக்க இரண்டு மாதங்களுக்கு சீனாவின் ஆதரவுடன் உக்ரைனை முழுமையாக ஆக்கிரமிக்கும் நோக்குடன் போர் தொடுத்துவிட்டது. இப்போது அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தங்களுக்கு எதிராக அணி திரண்டுவிட்ட சீனா, ரஷ்யா, வடகொரியா கூட்டணியை எப்படி எதிர்கொள்வது என்ற சிக்கலில் இருக்கின்றன. ஒரு துருவ உலக கற்பனைகள், பேரரசு உருவாகுமென்ற கணிப்புகள் எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டன. இது புதிய பனிப்போரா அல்லது சூடான அமைதியா என்பதெல்லாம் போகப்போகத்தான் தெரியும். சுதந்திர உலகம் என்ற கற்பிதம் அமெரிக்கா தேர்தல் நடக்கும் நாடுகளெல்லாம் சுதந்திரவாத சொர்க்க பூமியென்றும், அரசு மைய நாடுகளெல்லாம் உலகை முழுமையாக சுதந்திரவாத உலகாக உருவாக்க தடையாக உள்ளன என்றும் ஒரு கோட்பாட்டை முன்வைக்கிறது. இதில் பெரிய பிரச்சினை என்னவென்றால் சுதந்திரவாத நாடுகளில் நிலவும் கடும் பொருளாதார ஏற்றத்தாழ்வு. அமெரிக்காவில் கல்வி கற்கவே, கல்வி கட்டணம் செலுத்தவே இரவு விடுதியில் நிர்வாண நடனமாடி பணம் சம்பாதிக்கும் மாணவியின் நேர்காணல் சில ஆண்டுகளுக்கு முன் வெளியானது. இது போன்ற முரண்களை சமாளிக்க தொழிலாளர் அமைப்புகளைப் பல நாடுகளிலும் ஒடுக்க வேண்டியுள்ளது. இந்தியா மக்களாட்சி நாடு என்று பாராட்டிப் பூரிக்கும் ஐரோப்பிய ஒன்றிய அதிபருக்கு, பீமா கொரேகான் வழக்கில் விசாரணையின்றி சிறையில் ஆண்டுக்கணக்கில் அடைக்கப்பட்டுள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பற்றி தெரியாதா என்ன? நோம் சாம்ஸ்கி உள்ளிட்ட உலக அறிஞர்களெல்லாம் அவர்களை விடுதலை செய்யச் சொல்லி இந்திய அரசுக்கு விண்ணப்பம் அனுப்பினார்களே? மனித உரிமை செயற்பாட்டாளர்களையே சிறையில் அடைத்துவிட்டு தேர்தலை மட்டும் நடத்தினால் அது சுதந்திரவாத சொர்க்க பூமியா? அமெரிக்காவின் முக்கிய பொருளாதார கூட்டாளியான சவுதி அரேபியாவில் எவ்வாறு மனித உரிமை பேணப்படுகிறது? இரண்டாம் உலகப் போருக்குப் பின் அதிகமான படையெடுப்புகளையும், ஆக்கிரமிப்புகளையும், மறைமுக ஆட்சிக் கலைப்புகளையும் செய்தது அமெரிக்காதான். உள் நாட்டிலேயே கறுப்பின மக்களுக்கெதிரான இனவெறி தலையெடுத்து ஆடுகிறது. அமெரிக்காவில் மருத்துவக் காப்பீடில்லாமல் வாழவே முடியாது. உயிர்காக்கும் சிகிச்சைகளை கூட தள்ளிப்போட வேண்டிய நிலையில்தான் அமெரிக்கத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்று செய்திகள் கூறுகின்றன. ரஷ்யாவிலும், சீனாவிலும் அரசு மைய சமூகமாக இருந்தாலும் மருத்துவ வசதி இலவசமாக அல்லது மலிவாகக் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். மக்கள் எதைத் தேர்ந்தெடுப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது. எனவே தான் இப்போது உருவாகிவரும் புதிய பனிப்போர் உலகம் இருபதாம் நூற்றாண்டு பனிப்போர் அளவுக்குக்கூட தத்துவார்த்த காரணங்களை காட்ட முடியாது. அமெரிக்க – ஐரோப்பிய நாடுகளின் ஒற்றைத்துருவ உலகா அல்லது அதிகாரப் பரவலைச் சாத்தியமாக்கும் பல்வேறு அதிகார மையங்களை கொண்ட கூட்டாட்சி உலகா என்பதுதான் கேள்வியோ என்றும் தோன்றுகிறது. ரஷ்யா - உக்ரைன் போர் என்பது உலகின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரு திருப்பம் என்பதில் ஐயமில்லை. கட்டுரையாளர் குறிப்பு: ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. https://minnambalam.com/politics/2022/05/02/10/has-the-coldwar-started-once-again
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.