Search the Community
Showing results for tags 'ராஜபக்சக்களின் படு தோல்வி'.
-
பற்றி எரிகிறது இலங்கை! சரியாக 13 ஆண்டுகளுக்கு முன் தமிழர்களின் வயிறும் வாழ்வும் உடம்பும் உடைமைகளும் பற்றி எரிந்த அதே மே மாதம் இதோ அதற்கெல்லாம் காரணமான இராசபக்சவின் வீடு தீப்பற்றி எரிந்திருக்கிறது! தமிழர்கள் குழந்தை குட்டியுடன் கொத்துக் கொத்தாகச் செத்து விழுந்ததைப் பால்சோறு பொங்கிக் கொண்டாடிய சிங்கள மக்களின் வயிறு இன்று பசித் தீயால் எரிகிறது! ஆனால் இவற்றையெல்லாம் பார்த்து மகிழும் அளவுக்குக் கொடூர மனம்தான் நமக்கு வாய்க்கவில்லை. சிலர் இதைக் கடவுளின் தீர்ப்பு என்கிறார்கள். எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. ஒரு நிமையம் (minute) நீங்கள் உங்களைக் கடவுளாக நினைத்துக் கொள்ளுங்கள்! இப்படி ஓர் இனப்படுகொலை நடக்கும் நேரத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்? உடனே மக்களைக் காப்பாற்ற ஏதேனும் செய்வீர்களா? அல்லது, மக்கள் குண்டு வீச்சால் உடல் பிய்ந்து சாவது, வெட்டவெளியில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிக் கொடூரமாகக் கொல்லப்படுவது, இந்த உலகத்தை இன்னும் கண்ணால் கூடப் பாராத குழந்தைகள் தமிழச்சி வயிற்றில் உதித்த ஒரே காரணத்துக்காகக் கருவிலேயே அழிக்கப்படுவது ஆகியவற்றையெல்லாம் நடக்க விட்டுவிட்டுப் பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பின் செய்தவர்களுக்குத் தண்டனை கொடுத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பீர்களா? குற்றம் செய்தவனைத் தண்டிக்கத் தெரிந்த கடவுள் அவன் அந்தக் குற்றத்தைச் செய்யும்பொழுது மட்டும் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்றால், ஆக மொத்தம் அவன் எப்பொழுதும் யாராவது ஒருவர் துன்பப்படுவதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்க விரும்புகிறான் என்றுதானே பொருளாகிறது? சரி, அப்படியே இது கடவுளின் தீர்ப்பு என்றே வைத்துக் கொண்டாலும் ஈழத் தமிழ் மக்களைக் கொன்று அழித்த இலங்கைக்குக் கடவுள் தண்டனை வழங்கி விட்டார் என்றால் ஈராக், ஈரான் போன்ற பல நாடுகளில் ஏதுமறியா மக்களைக் கொன்று குவித்த அமெரிக்காவுக்கு ஏன் இதுவரை அவர் எந்தத் தண்டனையும் வழங்கவில்லை? காலங்காலமாகப் பாலத்தீன (Palestine) மக்களை அழிப்பதையே பொழுதுபோக்காக வைத்திருக்கும் இசுரேலை ஏன் கடவுள் தொட்டுப் பார்க்கக் கூட அஞ்சுகிறார்? எடுத்துக்காட்டுக்காக இரண்டு சொல்லியிருக்கிறேனே தவிர இப்படிக் கொலைகார நாடுகள் உலகில் இன்னும் நிறையவே இருக்கின்றன. அங்கெல்லாம் தீர்ப்பு வழங்காத கடவுள் தமிழர்களான நமக்காக மட்டும் மனமிரங்கி வந்து விட்டார் என நாம் நம்பினால் அது முட்டாள்தனம்! இதோ, அன்று உடன் வாழும் மக்களின் இன அழிப்பைக் கொண்டாடிய சிங்களர்கள் இன்று காலி முகத் திடலில் தமிழர்களோடு சேர்ந்து இனப் படுகொலையில் கொல்லப்பட்ட நம் தமிழ் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்! கண்ணெதிரே வாழும் இத்தகைய மனிதர்களின் மனமாற்றத்தை வேண்டுமானால் நம்பலாம். ஆனால் கண்ணுக்கே தெரியாத கடவுளின் காலங்கடந்த தீர்ப்புகள் ஒருபொழுதும் நம்பத் தக்கவையல்ல! சரி, இனப்படுகொலை நினைவு நாளில் எதற்காக இந்தக் கடவுள் ஆராய்ச்சி என்றால் ‘கடவுளின் தீர்ப்பு’ எனும் சொல்லாடல் நம் போராளித்தனத்தை மட்டுப்படுத்தி விடக்கூடாது என்பதற்காகத்தான். இனப்படுகொலைக்கான நீதியைப் பெற நாம் செல்ல வேண்டிய தொலைவு இன்னும் ஏராளம். அதற்குள் கடவுளே இராசபக்சவைத் தண்டித்து விட்டார், சிங்கள மக்களுக்குப் பாடம் புகட்டி விட்டார் எனவெல்லாம் நாம் நம்பத் தொடங்கினால் நீதிக்கான போராட்டத்தில் அது பெரும் தொய்வை ஏற்படுத்தி விடும். கொடுமை நடந்து பன்னிரண்டு ஆண்டுகள் கழித்துக் கடந்த ஆண்டுதான் இனப்படுகொலை குறித்து ஆராயவே முன்வந்திருக்கிறது பன்னாட்டுச் சமுகம். அதுவும் அன்னை அம்பிகை செல்வகுமார் அவர்கள் நடத்திய பின்வாங்காத உண்ணாநிலைப் போராட்டத்தால்தான். இனி ஆய்வு முடிந்து... நடந்தது இனப்படுகொலைதான் என உறுதிப்படுத்தப்பட்டு... அதன் பேரில் இலங்கை மீது நடவடிக்கை கோரி... அதற்கு உலக நாடுகள் ஒப்புக்கொண்டு... என நீதியை அடைய இன்னும் எவ்வளவோ கட்டங்கள், எத்தனையோ பெருந்தடைகள் இருக்கின்றன! இந்நிலையில் கடவுள், தீர்ப்பு போன்ற நம்பிக்கைகள் நம்மிடையே பரவினால் இனப்படுகொலைக்கான நீதிப் போராட்டத்தை முன்னெடுக்கும் தலைவர்கள், போராளிகள், மக்கள் மத்தியில் அது சுணக்கத்தை உண்டாக்கும். செய்த குற்றத்துக்குக் கடவுளே அவர்களைத் தண்டித்து விட்டார் இனி நாம் வேறு ஏன் அவர்களைத் தொல்லைப்படுத்த வேண்டும் என்கிற மனப்பான்மை வந்து விடும். அப்படி வந்து விட்டால் அதன் பின் இனப்படுகொலைக்கான நீதி என்பது என்றைக்கும் எட்டாக்கனியாகி விடும்! கொடுமைக்காரக் கணவனைச் சட்டத்தின் மூலம் தண்டிக்காமல் கடவுள் தண்டிப்பார் என நம்பிக் காலமெல்லாம் காத்திருந்து ஏமாந்து உயிர் விட்ட எத்தனையோ முட்டாள் பெண்களை நாம் பார்த்திருக்கிறோம். தொழிலில் ஏமாற்றியவனையும், கடன் வாங்கித் திருப்பித் தராதவனையும் நீதிமன்றத்துக்கு இழுக்காமல் கடவுள் பார்த்துக் கொள்ளட்டும் என விட்டுவிட்டுக் கடைசியில் பெற்ற பிள்ளைகளைக் கரை சேர்க்கக் கூட வழி தெரியாமல் விழி பிதுங்கி நின்ற எத்தனையோ மூடர்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். கடவுளின் தண்டனை, காலத்தின் தீர்ப்பு போன்றவற்றுக்காகக் காத்திருப்பது இத்தகைய ஏமாற்றங்களைத்தாம் தருமே தவிர எந்தக் காலத்திலும் நீதியைப் பெற்றுத் தராது. எனவே இத்தனை காலமும் கடவுளின் பெயரால் நாம் ஏமாந்தது போதும். இதுநாள் வரை தனிமனிதனுக்கு நீதி கிடைக்கத் தடையாயிருந்த இந்த மூடநம்பிக்கை நம் ஒட்டுமொத்த இனத்துக்குக் கிடைக்க வேண்டிய நீதிக்கும் தடையாகி விடாமல் நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டியது முக்கியம்! இராசபக்சவுக்கு இன்று கிடைத்திருக்கும் தண்டனை அவன் செய்த கொடுமையில் நூறாயிரத்தில் ஒரு பங்கு கூடக் காணாது! சிங்கள மக்கள் இன்று படும் வறுமையின் துன்பம் கொடுமையானதுதான் என்றாலும் நாம் கேட்கும் இனப்படுகொலைக்கான நீதியும் தனி ஈழ விடுதலையும் அவர்களை எந்த வகையிலும் பாதிக்கப் போவதில்லை. அவர்களைப் பாதிப்புக்கு ஆளாக்குவது நம் எண்ணமும் இல்லை. எனவே கடவுள், தீர்ப்பு போன்ற மூடநம்பிக்கைகளை விட்டொழிப்போம்! நீதிக்கான போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்போம்! தமிழினத்தின் விடுதலையை வென்றெடுப்போம்! நினைவேந்தல் சுடர்தனை ஏற்றி வைப்போம்! வாழ்க தமிழ்! வெல்க தமிழர்!! ❀ ❀ ❀ ❀ ❀ படங்கள்: நன்றி இந்தியா டைம்சு, தமிழ் ABP நாடு. தொடர்புடைய பதிவுகள்: 📂 நினைவேந்தல் தொடர்புடைய வெளி இணைப்புகள்: ✎ முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: இலங்கைத் தலைநகர் கொழும்பு காலிமுகத் திடலில் தமிழர்கள் - சிங்களர்கள் இணைந்து அஞ்சலி
- 3 replies
-
- 1
-
-
- நினைவு நாள்
- இனப்படுகொலை
- (and 5 more)
-
இங்கையின் பொருளாதாரம் படு மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது. ஒரு நாடு -ஒரு சட்டம் – நாட்டைத் தட்டி நிமித்துகிறேன் எனப் பதவிக்கு வந்த ராஜபக்சக்களால் நாட்டைச் சீனாவிடம் அடைக்கலம் வைக்க முடிந்ததே தவிர நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்ப முடியவில்லை. ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் போன்றவற்றில் பெரும் வெற்றி ஈட்டிய ராஜபசக்களின் செல்வாக்கு தற்பொழுது தேய்ந்து போய்க்கொண்டிருக்கின்றது. இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, அந்நிய செலவாணியின் வீழ்ச்சி, என ஓட்டுமொத்த பொருளாதாரமே வீழ்ச்சி அடைந்துள்ளது. எரிபொருள், உரம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. வெளிநாடுகளில் வாங்கிய கடனை கட்ட முடியாமல் திணறுகிறது இலங்கை. இந்து சமுத்திரத்தின் முத்து இப்போது கடனில் தாண்டுவிடும் முத்தாகி விட்டது. இலங்கை கடன் கொடுக்க முடியாது திவாலாகும் நிலை சாத்தியம் என கூறப்படுகிறது. முதலில் மஹிந்த ராஜபக்ச நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வார் என்றார்கள். அதன் பின்னர் கோத்தபாய கொண்டு செல்வார்கள் என்றார்கள். இப்பொழுது பசில் நாட்டின் பொருளாதாரத்தை நிமித்தப் போகிறார் என்கிறார்கள். இவர்கள் எவரிடமுமே மக்கள் சார்பான நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கான அரசியல் பொருளாதாரக் கொள்கை இல்லை. இனத்துவேசத்தை வளர்த்து விடுவதை அரசியல் கொள்கையாவும் -சீனாவிடம் கடனை வாங்குதலை பொருளாதாரக் கொள்கையாகவும் மட்டுமே கொண்டிருக்கின்றனர். பசில் அல்ல அதன் பின்னர் நாமல் வந்தாலும் இந்தப் பாதையில் பயணித்து நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்ப முடியாது. கொரோனாவைக் கட்டுப்படுத்த ,சரிந்து கொண்டிருக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசிடம் எந்த விதமான காத்திரமான வேலைத்திட்டமும் இல்லை என்பதே நிதர்சனம். பசில் நிதியமைச்சர் ஆனவுடன் பங்குச் சந்தை ஆகா ஓகோ என வளரப் போகிறது என்றெல்லாம் ஆருடம் கூறினார்கள். பசில் நிதியமைச்சர் ஆன தொடக்கம் பங்கு சந்தையில் எதுவித மாற்றமும் நிகழவில்லை. ஆக இவர்கள் இல்லாத ஒன்றை ஊதிப் பெருப்பித்து இருப்பது போல் காட்டுகின்றனரே தவிர உண்மையான பொருளாதார வளர்ச்சி ஏற்படவில்லை. அண்மையில் இலங்கை மத்திய வங்கி வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவாறு அதிகளவான பணத்தை அச்சிட்டுள்ளது. அண்மையில் 20845 கோடி ரூபா பெறுமதியான , பணம் அச்சிடப்பட்டுள்ளது. இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியையே அரசின் இந் நடவடிக்கை எடுத்துக் காட்டுகின்றது. அரச வருமானம் அரசின் அன்றாட நடவடிக்கைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத அளவுக்கு உள்ளது தமது அதிகாரத்தை நிலை நிறுத்தி வைத்துக் கொள்ளுதலே – குடும்ப ஆட்சியை விஸ்தரித்தலே, ராஜபக்ச குடும்பங்களின் நோக்கமாக உள்ளது. அடுத்த 2024 ஜனாதிபதி தேர்தலிலும் கோட்டா, தானே போட்டியிடுவது அல்லது பசிலை நிறுத்துவது, அதன் பின் வரும் ஜனாதிபதி தேர்தலில் நாமலை நிறுத்துவது என தமது அதிகாரத்தை தக்க வைப்பதிலேயே ராஜபக்ச குடும்பம் மும்முரமாக நிற்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் பி திஸநாயக்க , பிரியங்கர ஜயரத்ன போன்றோர் தம்மால் சுயாதீனமாக இயங்கமுடியவில்லை என வெளிப்படையாக குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்கள். ராஜபக்ச குடும்ப அரசு அனைத்து அதிகாரத்தையும் தமக்குள் வைத்துக்கொண்டு இருக்கின்றது என்பது இதிலிருந்து புலனாகின்றது மறுபக்கத்தில் பொருளாதார நெருக்கடியில் திணறும் இவ்வரசைக் கவிழ்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் மும்முரமாக பணியாற்றிக் கொண்டிருக்கின்றன. ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்கு ஆளும் கட்சியும், ஆட்சியை கைபற்றிக் கொள்வதற்கும் எதிர்கட்சியும் என இரு கட்சிகள் போட்டிபோட்டுக் கொண்டிருக்கின்றன. தலையணையை மாற்றினால் தலைவலி தீராது என்பது போல், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் பிரச்சனை தீர்க்கப்படப்போவதில்லை. இங்கு மக்கள் பிரச்சனை என்பது இரண்டாம் பட்சமே. நாட்டின் தேசிய வளங்கள் ஒவ்வொன்றும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு கொண்டு வருகின்றது. கொழும்புத் துறைமுக நகர் சீனாவுக்கு ,திருகோணமலை துறைமுகம் மற்றும் எண்ணெய் குதங்கள் இந்தியாவுக்கும் , கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையம் அமெரிக்காவிற்கும் என மோடிக்கு நிகராக நாட்டை கூறு போட்டு விற்கின்றனர். தமது சொந்த சொத்துக்கள் போல் வளங்களை விற்பனை செய்வதனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய பாதிப்பு உருவாக்கி உள்ளது. சீனா அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகள் தமது அரசியல் அதிகாரப் போட்டியை நடத்தும் களமாக மாறிக்கொண்டிருக்கின்றது இலங்கை. தனது தலையை வெட்ட தானே தலையைக் கொண்டு போய்க் கொடுக்கும் ஆடு போல் செயற்படுகின்றது தற்போதைய கோத்தபாய அரசு சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து அண்மையில் 70 கோடி டொலர் கடனாகப் பெற ஒப்பந்தம் கைச்சாத்தானது. அது தவிர மேலும் பல கோடி டொலரை கடனாகப் பெற இலங்கை அரசு உத்தேசித்துள்ளது. அது தவிர ஏற்கனவே வறுமை நாடான பங்களாதேஷிடமிருந்து கூட 20 கோடி டொலரை கடனாகப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. உலகம் முழுக்க கடனுக்கு கையேந்தும் நிலைக்கு சென்றுவிட்டது இலங்கையின் பொருளாதாரம். ‘யாழ்ப்பாண மக்களின் கருத்து என்ன என்பது குறித்து எனக்கு அக்கறையில்லை. அவர்களைப் பற்றி நாம் இப்போது சிந்திக்க முடியாது’ என 1983 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்த்தன டெலிகிராப் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். ஜே ஆரின் பாணியைப் பின்பற்றும் கோத்தபாயவும் சிறிய மாற்றத்துடன் இதே கருத்தை தான் கொண்டிருக்கின்றார். அதாவது ஜே ஆர் யாழ்ப்பாண மக்களைப் பற்றி மட்டும்தான் கருத்திற்கொள்ளவில்லை கோத்தபாயவோ ஒரு படி மேலே சென்று ஒட்டு மொத்த இலங்கை மக்களைப் பற்றியே கருத்திற் கொள்ளவில்லை என்பது அவரின் அரசியல் பொருளாதார நடவடிக்கைகள் மூலம் வெளிப்படுகின்றது. இவ்வரசை நம்பி வாக்களித்த 69 லட்சம் மக்களை மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இலங்கை மக்களையும் இவ் அரசு ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது. கொரோனா பெரும்தொற்று பரவும் இந்த மோசமான காலகட்டத்தில் கூட அதிகாரத்தைக் கைப்பற்றுவதையும் தமது குடும்பத்தை விஸ்தரிப்பதையும் மட்டுமே நோக்காக கொண்டு இயங்கும் இவ்வரசை மக்கள் இனியும் நம்பிக்கொண்டிருக்காமல், மக்கள் சார்பான அரசியல் பொருளாதாரக் கொள்கைகளுடன் இயங்கும் அமைப்புகளுடன் இயங்கி தமக்கான உரிமைகளை பெற்றுக்கொள்ளவேண்டும். https://ethir.org/?p=6883