Search the Community
Showing results for tags 'ஆன்மிகம்'.
-
எங்கே சென்றாய் நீ எங்கே சென்றாய் எங்கே சென்றாய் நீ எங்கே சென்றாய் என்னை நீ தொலைத்து எங்கே சென்றாய் என்னை நீ அழைத்து எங்கே சென்றாய் தினந்தோறும் பணந்தேடி எங்கே சென்றாய் திசைதோறும் புகழ்தேடி எங்கே சென்றாய் உடலுக்குள் உயிர் காணாமல் எங்கே சென்றாய் உடலை தினம் பேணாமல் எங்கே சென்றாய் எங்கே சென்றாய் நீ எங்கே சென்றாய் எங்கே சென்றாய் நீ எங்கே சென்றாய் எதிலும் நான் தெரிகின்றேன் எங்கே சென்றாய் எல்லாம் நான் அறிகின்றேன் எங்கே சென்றாய் பேதமின்றி அள்ளித் தந்தேன் எங்கே சென்றாய் பேரிடரிலும் துணை வந்தேன் எங்கே சென்றாய் மும்மலம் நீ அறியாமல் எங்கே சென்றாய் முற்பிறவி நீ தெரியாமல் எங்கே சென்றாய் எங்கே சென்றாய் நீ எங்கே சென்றாய் எங்கே சென்றாய் நீ எங்கே சென்றாய் உயிர்தோறும் என்னைக் காணாமல் நீ எங்கே சென்றாய் உள்ளத்தில் என்னை எண்ணாமல் நீ எங்கே சென்றாய் சிற்றின்பத்தை ரசித்த நீ எங்கே சென்றாய் சிந்தையை வெறுத்த நீ எங்கே சென்றாய் நான் அக்கத்தில் இருக்கின்றேன் நீ எங்கே சென்றாய் நான் பக்கத்தில் பார்க்கின்றேன் நீ எங்கே சென்றாய் எங்கே சென்றாய் நீ எங்கே சென்றாய் எங்கே சென்றாய் நீ எங்கே சென்றாய் நிம்மதியாய் தினம் வருகின்றேன் எங்கே சென்றாய் நிம்(ம)தியை மறந்து நீ எங்கே சென்றாய் சரவிபி ரோசிசந்திரா
-
'ஆன்மிகம், தத்துவம், நமது கலைகள் இவற்றால் ஆன பயன் என்ன?'; 'அவை விஞ்ஞான, தொழிநுட்ப வளர்ச்சியடைந்த இன்றைய அதிநவீன உலகில் இன்னமும் அவசியமா?' எனப் பலரும் ஒருவித ஏளனத்துடன் கேட்பதுண்டு. இக்கேள்விகளை நானே ஒரு காலத்தில் எனக்குள்ளே வினவியதுண்டு. எனினும் கடந்த ஒரு வருடத்துக்கும் மேற்பட்ட கோவிட்-19 மற்றும் அவற்றின் விளைவான பயணத்தடை/ கட்டுப்பாட்டு காலங்களில் நான் பெற்ற அனுபவங்களையும், மற்றும் என் வாழ்வில் நான் சந்தித்த ஏனைய பிற அனுபவங்களையும் வைத்து சொல்கிறேன்; தத்துவங்கள், ஆன்மீகம், கலைகள் மீதான ஈடுபாடு தான் என்னைப் பல சந்தர்ப்பங்களிலும், கரடுமுரடான வாழ்க்கைப் பாதைகளில் கூட, தடம்மாறாமல் பயணித்துச் செல்ல உதவியாக இருந்திருக்கிறது/இருந்து வருகிறது. இவை மூன்றையும் தவிர்ந்த பல்வேறு விதமான வாழ்க்கை தொடர்பான பார்வைகள் உங்களுக்கோ எனக்கோ இருக்கலாம்; சமூக, உளவியல், பொருளாதார, அரசியல் கண்ணோட்டத்திலும் உங்கள் வாழ்க்கை தொடர்பான பார்வை இருக்கலாம். அவையும் அவசியமானவை தான். எனினும் என்னைப் பொறுத்தவரை இந்த தத்துவ, ஆன்மீக, கலைத்துவமான கண்ணோட்டங்கள் இந்த வாழ்க்கை, உலகம், பிரபஞ்சம் தொடர்பான விரிவான பார்வையை எனக்குத் தந்து ஒருவித சுதந்திரமான, நிம்மதியான, ஆனந்தமான உணர்வை பல நேரங்களில் அளித்து வருகின்றன என்பேன். இங்கே ஆன்மீகம், தத்துவம் இவற்றுக்கும் நமது கலைகளுக்கும் என்ன தொடர்பு என நீங்கள் கேட்கலாம். ஆன்மீக, தத்துவ சிந்தனைகள் வறட்சியான, அர்த்தமற்ற விடயங்களாக அவ்வப்போது தோன்றும்; இவ்வுலக வாழ்க்கைக்கு அவை பொருந்தாததாக ஒரு பொய்த் தோற்றம் தோன்றும் பொழுதுகளில் கலை வந்து கைகொடுக்கிறது. என்னைப் பொறுத்தவரை இசை, நடனம், ஓவியம், சிற்பம், நாடகம் போன்ற கலைகள் பொழுதுபோக்குக்கு மட்டுமானவை அல்ல; நான் மேலே குறிப்பிட்ட சலிப்பானவையாகத் தென்படும் ஆன்மீக, தத்துவ விடயங்களைக் கூட அவரவர் புரிதலுக்கும், ரசனைக்கும் ஏற்ப சுவாரசியமான விடயங்களாக மாற்றிவிடக் கூடிய வல்லமை இந்தக் கலைகளுக்கு உண்டு. உதாரணத்துக்கு, ஒரு தத்துவப்பாடலை வரிகளாக மட்டும் வாசிப்பதைவிட இசைப் பாடலாகக் கேட்டு ரசிப்பது அல்லது பாடி அனுபவிப்பது சுவாரசியத்தைத் தருவது மட்டுமன்றி அப்பாடலின் ஆழ்ந்த கருத்துக்கள் நம்மனதில் பதிந்துவிடவும் உதவுகின்றது. இப்படி உலகியல் வாழ்வில் தத்தளிக்கும் வேளைகளில் உலகியலுக்கும் ஆன்மீகம், தத்துவம் போன்ற பரந்துபட்ட, சுதந்திரமான, நிம்மதியான, ஆனந்தமான விடயப்பரப்புகளுக்கும் இணைப்புப் பாலமாக இக் கலைகள் விளங்குகின்றன. (ஆன்மீகம், தத்துவங்கள், கலைகள், ஆசாரங்கள் இவை கலந்தவை தான் மதங்கள் என்பது எனது இன்னொரு கண்ணோட்டம். இது பற்றி இப்போது விபரமாக எழுதாமல் தவிர்க்கிறேன்.) சுருங்கச் சொன்னால் சிலருக்கு மது போன்ற ஆரோக்கியமற்ற பழக்கங்கள் செய்யும் வேலையை ஆரோக்கியமான வழியில் கலைகள் செய்கின்றன!(கவி கண்ணதாசன் குடிபோதையில் தன் மனதில் தோன்றிய தத்துவங்களைப் பாடலாக வடித்தது வேறு விடயம். இருந்தாலும் கலைப் போதை தான், அவர் வாழ்வில் பட்ட கஷ்ட அனுபவங்களை தத்துவப் பாடல்களாக எழுத வைத்தன என்பதே நிதர்சனம்.) இனி, இந்த ஆன்மீக, தத்துவ, கலை மீதான ஈடுபாடு எந்த வழிகளில் எனக்குத் துணை புரிந்துவந்துள்ளது என்பதை மிக, மிகச் சுருக்கமாகச் சொல்கிறேன். உங்கள் வாழ்க்கை அனுபவங்களுடன் இவற்றைத் தொடர்புபடுத்திப் பார்த்தால் நான் சொல்ல வருவது நன்றாக உங்களுக்குப் புலப்படலாம் என நம்புகிறேன். ஆன்மீக, தத்துவ, கலைசார்ந்த சிந்தனைகள், 1) வாழ்க்கை தொடர்பான தெளிவான, மிகப் பரந்துபட்ட பார்வையை எனக்குத் தந்து வாழ்க்கையில் எனக்கு எது முக்கியம், எந்த வாழ்க்கைப் பாதை எனக்குப் பொருத்தமானது, அர்த்தமுள்ள, நிம்மதியான, மனநிறைவான வாழ்வை எப்படி வாழ்வது போன்ற கேள்விகளுக்கு ஓரளவுக்கேனும் பதில் தந்தன. (இன்னும் தேடல்களும், பதில்களும் இருக்கும்!) 2) இவற்றில் மூழ்கித் திளைப்பதும் பல சமயங்களில் ஓர் அழகான நிம்மதியான சுதந்திரமான பயண அனுபவத்துக்கு ஒத்ததாக இருக்கும். குறிப்பாக, லொக்டௌன் காலங்களில் வீட்டில் இருந்து பாடினாலும் மனதில் ஏதோ உள்ளார்ந்த பயணம் செய்த உணர்வு. இதை வெளிப்புறப் பயணங்கள் கூட தந்திருக்குமா என்று கூட யோசித்ததுண்டு. சற்று நேர தியான, மூச்சுப் பயிற்சியும் இந்த அனுபவத்தை தந்ததுண்டு. 3) மனம் தளர்வுற்ற பொழுதுகளில் புகலிடமாகவும், தோழமையாகவும் இவை இருந்ததுண்டு. இவை மனம் சார்ந்த உணர்வுகள். நல்ல கலைப்படைப்பு ஒன்றில் லயித்திருப்பது நல்ல நண்பனுடன் நேரம் செலவிட்ட உணர்வைத் தரும்; இலக்கியமோ, இசையோ, நடனமோ, ஓவியமோ எதுவாகவும் இருக்கலாம். ஆன்மீக சிந்தனை ஓர் சுதந்திரமான, மனநிறைவான இடத்துக்கு நம்மை அழைத்துச் சென்று புகலிடமாக அமையலாம். தற்காலிக உணர்வு என்றாலும் அதன் பயன் அளப்பெரியது. தத்துவார்ந்த சிந்தனைகளும் அவ்வாறே. 4) விஸ்தீரணமான இவ்வுலகிலோ அல்லது பிரபஞ்சத்திலோ அனைத்துவகையான ஜீவராசிகளுக்கும் ஓர் இடமுண்டு. ஆகவே நமக்கும் ஓர் இடமுண்டு என்ற நிம்மதியான உணர்வைத் தந்து அவ்வப்போது தோன்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்தன. பல்வேறு மதங்கள், தத்துவங்கள், கலை வடிவங்கள் போன்றன பல்வேறு வகையான மனிதர்களின், குழுக்களின் வெளிப்பாடே என்பதை உணரும்போது நாமும் அந்த மனித ஜாதியில் ஒருவர் தாம் என்ற பெருமிதம் ஒருபுறமும், கல்லாதது உலகளவு என்ற உண்மையை உணரும்போது நாம் ஒவ்வொருவரும் மட்டுப்படுத்தப்பட்ட அறிவைக் கொண்டுள்ளோம் என்ற பணிவும் ஏற்படுகிறது. இவற்றை விட வேறு காரணங்கள் இருக்கலாம். இருந்தால் அவற்றைப் பின்னர் எழுதுகிறேன். தவிரவும், கலை, தத்துவம், ஆன்மீகம் இவற்றில் மூழ்கித் திளைத்தலும் பேரின்பமே! இவற்றைக் கற்பதோ, இவற்றில் ஈடுபாடு கொள்வதோ, அந்த அறிவை பரஸ்பரம் ஏனையோருடன் பகிர்ந்துகொள்ளும் இனிய அனுபவமோ வாழ்நாள் நீளம் கொண்டது; நம் வாழ்நாள் தான் அவற்றின் எல்லை. வகுப்பறை, புத்தகங்கள், காணொளிகளையும் தாண்டிய கல்வி அது. வைரமுத்துவின் வரிகளில் "வானம் எனக்கொரு போதிமரம்; நாளும் எனக்கொரு சேதி சொல்லும்!" என்பது போல எல்லையற்ற பிரபஞ்சம் கற்பிக்கும் பாடங்களின் ஒரு சிறு பகுதியே நாம் கற்று அனுபவிப்பது. எனவே, இந்த ஆன்மீகம், தத்துவம், கலை சார்ந்த ஈடுபாடு உங்களுக்கு இருப்பின் அதைத் தாராளமாகத் தொடரலாம். அவை உங்கள் வாழ்க்கையை மேலும் வளப்படுத்துவதோடு மட்டும் நின்றுவிடாமல் ஏனையோருக்கும் பயனுள்ளதாக அமையட்டும். வாழ்க வளமுடன்! நன்றி (குறிப்பு 1: இதை வாசிக்கும் பெரியோர் என்னைவிடப் பன்மடங்கு அனுபவசாலிகளாக இருப்பர். எனினும் இவை பற்றிய சிறியேனின் அனுபவப்பார்வை ஏனையோருக்குப் பயனுள்ளதாக அமையலாம் எனும் நோக்கில் இதை இங்கு பகிர்கிறேன். எனவே, பெரியோரே குறைகள் பொறுத்தருள்க!; ஏதும் தவறுகள் இருப்பின் உங்கள் கருத்துக்களைத் தாராளமாகத் தெரிவிக்கலாம். குறிப்பு 2: ஆன்மீகம், தத்துவம், கலை என்பவை பரந்துபட்ட விடயப்பரப்புகள். இவற்றை இக்கட்டுரையில் மிகச் சரியாக வரையறை செய்ய இயலவில்லை. எனவே அவை சார்ந்த தேடலை உங்களிடமே விட்டுவிடுகிறேன். (தவிரவும் இது வாழ்நாள் நீளமான கற்றலும், அனுபவித்தலும் மட்டுமன்றி அவை மீதான ஆர்வமோ ஈடுபாடோ தனிநபர் விருப்பு வெறுப்பு சார்ந்தது.) குறிப்பு 3: நேரச் சுருக்கம், வாசிப்போரின் பொறுமை இவற்றை மனதில் கொண்டு மிக மிகச் சுருக்கமாகவே இவற்றை எழுதியுள்ளேன். ஏதும் தெளிவற்ற தன்மை இருந்தால் நீங்கள் அவற்றைக் கேள்விகளாக முன்வைக்கலாம்; நாம் எல்லோரும் கலந்துரையாடலாம்.
-
2020; இந்த ஆண்டைப் பலர் சாபமான ஓர் ஆண்டாகவே நினைக்கிறோம். உலகளாவிய ரீதியில் சிறந்த ஆண்டாக இது அமையாவிட்டாலும், பலருக்கு இவ்வாண்டு ஓர் restart / reset / pause buttonகளாகவே அமைந்திருக்கிறது எனக் கூறலாம்; எதற்காக ஓடிக்கொண்டு இருக்கிறோம் எனத் தெரியாமல் ஓடியவர்களை நின்று நிதானமாகச் சிந்திக்கவும், ஓடும் நோக்கத்தை, பாதைகளை தமக்குகந்தவாறு மாற்றியமைக்கவும் உகந்த ஆண்டாக இந்த 2020அமைந்திருக்கிறது. இன்னும் பலருக்கு மறந்துபோன நம் கலை, கலாசார விழுமியங்களை, வாழ்க்கை முறைகளைத் தூசி தட்டி மீண்டும் அதிசய உணர்வோடும், ஆர்வத்தோடும் அனுபவித்தும், செயற்படுத்தியும் பார்க்கும் ஆண்டாக இது அமைந்திருக்கிறது; தாய்மண்ணை விட்டுப் பிரிந்த ஒருவர் மீண்டும் வந்து தாய்மண்ணின் வாசனையை குதூகலத்துடன் நுகரும் அனுபவம் போன்றது இது; அந்த மகிழ்ச்சிக்கு ஈடேது! இன்னும், பொருட்களை நுகரும் இன்பத்திலும் மனித உறவுகளுடனான ஆரோக்கியமான தொடர்பு தரும் இன்பமே பேரின்பம் என மீண்டும் பல வருடங்களுக்குப் பின்னர் உணர்த்திய ஆண்டும் இதுவே. எனினும், இன்னோர் விதத்தில் பொருள்சார் உலகின் நிலையற்ற தன்மையையும் பல்வேறு நிகழ்வுகள் மூலம் மீண்டும் வலியுறுத்திய ஆண்டும் இதுவே! இவ்வாறான நிலையற்ற உலகையும், எல்லா உயிர்களையும் தன் பேராற்றலால் ஆட்டுவிக்கும் நிலையான ஓர் மாபெரும் சக்தியையே இறைவன் எனக் கூறுகிறோம் என்பதையும், அந்த சக்தியையே நம் கலாசாரம், வாழ்க்கை முறை, பக்குவநிலை போன்ற அம்சங்களைப் பொறுத்து பல்வேறு மதக் கூறுகளாகத் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறோம் என்பதையும் மீண்டும் பலமாக இடித்துரைத்த ஆண்டும் இந்த 2020ஏ. எம்மை நேர்வழிப்படுத்த முன்னோர்கள் அமைத்த பல்வேறு பாதைகளே இந்த மதங்கள் என்பதையும், நம் உன்னத இலக்கை நோக்கி ரசனையுடன் அவரவர் பாதைகளில் பயணிக்காமல் அதில் குப்பைகளை வீசியும், சாலை விதிகளை மீறியும், பிற பாதைகள் பற்றி விமர்சித்தலுமே சாலை விபத்துக்கள் போலாம் மதச்சண்டைகளாம் என்பதையும் உணர்த்தியது இவ்வாண்டு. எனினும், இப்பாதைகளில் பயணம் செய்து பழகிய பின்னர் ஒரு கட்டத்தில் இறைவனை உணர இப்பாதைகளில் மட்டும் பயணம் செய்ய வேண்டியதில்லை என்றும், நீ இருக்கும் இடத்திலேயே, ஏன் உனக்குள்ளேயே அந்த இறைவன் இருக்கிறான் என்பதை மீண்டும் தெளிவாக உணர வைத்ததும் இந்த 2020ஏ. கூடவே மதம் எனும் பாதை இல்லாமலேயே பல ஞானியர் நம் கற்பனைக்கெட்டாத வேறு பல மார்க்கங்கள் மூலம் அந்தப் பேராற்றலை உணர்ந்தும், அடைந்தும் இருப்பரோ எனவும் சிந்திக்க வைத்தது இவ்வாண்டு. இறுதியாக, ஆன்மீகமும் நம் வாழ்வை நெறிப்படுத்த நமக்கு அவசியமான ஓர் அறிவியலே என்றும், நம் வாழ்க்கைப் படிநிலைகளுக்கும், பக்குவத்துக்கும் ஏற்ப அந்த அறிவை வளர்க்கவும், அதன் மூலம் பயன் பெறவும் முடியும் என்றும் உணர்த்தியது இந்த 2020. அந்த அறிவியலில் முதிர்ச்சி பெற்றவன் ஆசை துறந்து உலகை வெல்லும் ஞானியாகிறான் என்பதையும், அதில் குழந்தை போலப் பாடம் பயில்பவன் இங்கே யாழில் எழுதிக்கொண்டிருக்கிறான் என்பதையும், இடைப்பட்ட நிலையில் பலர் ஆன்மீக வழியில் இவ்வுலக வாழ்வைச் சிறப்பாக வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர் என்பதையும் இந்த ஆண்டு எனக்கு உணர்த்தியது. மொத்தத்தில் என் பார்வையில் 2020ஆம் ஆண்டு ஓர் சாபமல்ல; வரமே! வரமே!! வரமே!!! நன்றி