Search the Community
Showing results for tags 'கருணாகரன்'.
-
பாவனைப் போரும் செயற்பாட்டு அரசியலும் March 18, 2023 — கருணாகரன் — பலரும் கருதியதைப் போலவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உடைந்து விட்டது. இந்த உடைவினால் தனித்து விடப்பட்டிருப்பது தமிழரசுக் கட்சியே. ஆனாலும் அது தன்னைப் பலமானதாகக் கருதிக் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம், அதனுடைய வீட்டுச் சின்னமாகும். எத்தகைய நிலையிலும் மக்கள் வீட்டுச் சின்னத்துக்கே வாக்களிப்பார்கள் என்ற பலமான எண்ணம் தமிழரசுக் கட்சியினருக்குண்டு. இதுவே அவர்களுடைய தைரியமாகும். இதற்குக் காரணம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை வீட்டுச் சின்னமாகவே மக்களிற் பலரும் அறிந்துள்ளனர். தமிழரசுக்கட்சிக்கு விடுதலைப் புலிகள் உருவாக்கிக் கொடுத்த அருமையான வாய்ப்பிது. இதனால் இளையதலைமுறையினரின் மனதில் கூட்டமைப்பு என்றால் அது வீட்டுச் சின்னம் என்ற புரிதலே உள்ளது. இன்னொன்று கிராமப்புற மக்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள உடைவைப் பற்றியோ, தமிழரசுக் கட்சி தனித்து விடப்பட்டிருப்பதைப் பற்றியோ எதுவுமே தெரியாது. இதெல்லாம் தமிழரசுக் கட்சிக்கு வாய்ப்பாகவே உள்ளன. வெளியே ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலொ மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி போன்றவை ஒன்றிணைந்து கூட்டாக நிற்கின்றன. இவையே “தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு” என்று தம்மைப் பிரகடனம் செய்துள்ளன. தமக்கான சின்னம் குத்து விளக்கு என்றும் அறிவித்துள்ளன. எதிர்காலத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை முறைப்படி பதிவு செய்யவுள்ளதாகவும் இந்த அணி கூறுகின்றது. இருந்தாலும் இந்த அணி பெரும் சவாலை எதிர்கொண்டே உள்ளது. கூட்டமைப்பின் பெயரில் ஒரு பெரிய அணியாக இயங்கினாலும் இவர்களுடைய குத்துவிளக்குச் சின்னம் மக்களுக்குப் புதிது. இந்தப் புதிய சின்னத்தை மக்களிடம் அறிமுகப்படுத்த வேண்டும் என்றால் வீட்டுச் சின்னத்தை நிராகரிக்கச் செய்ய வேண்டும். கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக வீட்டுச் சின்னத்தை மக்களிடம் அறிமுகப்படுத்தி விட்டு இப்பொழுது அதை மறுதலிப்பது என்றால் அது மக்களிடம் குழப்பத்தை உண்டாக்கும். அதற்கான நியாமான காரணத்தை, தெளிவான விளக்கத்தை அடிமட்ட மக்கள் வரையில் (கிராமங்கள் வரையில்) கொண்டு செல்ல வேண்டும். அதை ஒரு பெரிய வேலைத்திட்டமாக முன்னெடுக்கவேண்டும். அணியில் உள்ள தலைவர்கள் தொடக்கம் அடிமட்ட உறுப்பினர்கள் வரையில் இதைச்செய்ய வேண்டும். அவர்கள் கிராமங்களை நோக்கிச் செல்ல வேண்டும். இதற்காகக் கடுமையாக உழைக்க வேண்டும். பொருத்தமான திட்டங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தனியே ஊடகங்களை மட்டும் நம்பி இருக்க முடியாது. ஏனென்றால், இந்தப் பிளவைக் குறித்து ஊடகங்களும் அரசியல் எழுத்தாளர்களும் இன்னும் தெளிவான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகத் தெரியவில்லை. பலரும் இரண்டு தரப்பையும் அனுசரித்துப் போவதையே காணக் கூடியதாக உள்ளது. அண்மையில் கிளிநொச்சியில் தமிழரசுக்கட்சி நடத்திய பெண்கள் நாள் நிகழ்விலும் ஆனையிறவில் நடராஜர் சிலை திறப்பின்போதும் அரசியல் எழுத்தாளரான கே.ரி.கணேசலிங்கம் கலந்து கொண்டிருந்தார். நாளைக்கு இன்னொரு நிகழ்வை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு (குத்துவிளக்கு அணி) அழைத்தால் அங்கும் இவர் செல்லக்கூடும். இதெல்லாம் அவருடைய சொந்த விருப்பமும் தெரிவுமாக இருக்கலாம். அதற்கான உரிமை அவருக்குண்டு. இப்படித்தான் பலரும் உள்ளனர். ஆனால், அரசியல் ஆய்வாளர்கள் என்று கூறிக்கொண்டு, மக்களுக்கு வழிகாட்டுகிறோம் என்று இப்படிச் செயற்பட முடியாது. உண்மையில் எந்த அணி சரியான நிலைப்பாட்டில் உள்ளது? எது தவறாகச் செயற்படுகிறது என்பதை இவர்கள் தெளிவாக மக்களுக்குச் சொல்ல வேண்டும். மக்களுக்கு மட்டுமல்ல, சம்மந்தப்பட்ட தரப்பினருக்கும்தான். அதைச் சொல்லாத வரையில் குத்துவிளக்கு அணியினர் தாமே மக்களுக்கு உண்மை நிலவரத்தைச் சொல்ல வேண்டும். இதேவேளை கூட்டமைப்பில் நடந்துள்ள பிளவில் நாம் ஒரு தெளிவான பிரிகோட்டைப் பார்க்கமுடிகிறது. இரண்டு அணிகளும் மிகத் தெளிவான அரசியற் பயணப்பாதையைக் கொண்டன என்பதே அதுவாகும். தமிழரசுக் கட்சியோ எப்போதும் “பாவனைப் போர்” செய்யும் வழிமுறையைக் கொண்டது. 1960 களுக்குப் பின்னர் அது எத்தகைய போராட்டங்களையும் செய்ததில்லை. அதற்கு முன்பு செய்த சத்தியாக்கிரகப் போராட்டமே அதனுடைய ஒரே அரசியல் முதலீடாக இன்னும் உள்ளது. தவிர, உரத்துப் பேசுதலே (பாவனைப் போரே) அதனுடைய வழிமுறையாகும். இப்போது கூட கூட்டமைப்பிலுள்ள சிறிதரன், சாணக்கியன் போன்றோரே தமிழரசுக் கட்சியின் முன்னணிப் பிரமுகர்களாக உள்ளனர். இவர்களுடைய உரத்த குரலே இதற்குக் காரணம். அடுத்த நிலையில் உள்ளவர் சுமந்திரன். அவரும் பல சந்தர்ப்பங்களிலும் Politician னாக நடந்துகொள்வதற்குப் பதிலாக Police Man னாகவே நடந்து கொள்கிறார். கட்சிக்குள்ளும் மக்கள் மத்தியிலும் சுமந்திரனின் நடத்தைகள் இப்படியே உள்ளன. ஆனாலும் அவரிடமிருக்கும் மிரட்டும் தொனியே அவரை மேலெழுப்பிக் காட்டுகிறது. உண்மையில் பெரும்பாலானவர்களுக்கு இந்த மாதிரி உரத்துப் பேசுவோரே (பாவனைப் போர் வீரர்களே) விருப்பத்துக்குரியவர்களாக உள்ளனர் போலும். இல்லையென்றால் இவர்கள் எப்படி முன்னணியில் நிற்க முடியும்? இவர்களுக்குத்தான் ஊடகங்களும் முன்னுரிமை அளிக்கின்றனவே! ஏனைய ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலொ மற்றும் ஜனநாயகப் போராளிகள் அணியினரோ அப்படியல்ல. அவர்களைப் பொறுத்தவரையில் அளவுக்கு அதிகமாகப் பேசுவதை விட எதையாவது உருப்படியாகச் செய்ய வேண்டும் என்று சிந்திப்பவர்கள். தொடக்கத்திலிருந்தே செயற்பாட்டு அரசியல் வழிமுறையைக் கொண்டவர்கள். மக்களுக்காகத் தம்மை அர்ப்பணிக்கும் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள். தியாக வரலாறு இவர்களுக்கே உண்டு. மக்களுடன் நெருக்கமான அரசியல் உறவைக் கொண்டிருந்தவர்கள். (இப்பொழுது அப்படி உள்ளதா என்பது கேள்வியே) ஆனாலும் மக்களின் மீதான மெய்யான கரிசனை இவர்களை விட்டு நீங்கவில்லை. செயற்பாட்டு அரசியற் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் எங்கே நின்றாலும் எதையாவது செய்து தீரவேண்டும் என்ற விருப்பத்துடன் இருப்பவர்கள் என்பதற்கு மேலும் ஒரு சான்று அவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து நின்றாலும் சரி, வெளியே எதிர்த்தரப்பில் நின்றாலும் சரி எதையாவது மக்களுக்குச் செய்ய வேண்டும் என்று முயற்சிப்பவர்கள். ஆனால் தமிழரசுக் கட்சியினரிடம் இந்தக் குணமில்லை. அவர்கள் தங்களுடைய தேவைகள், நலன்களை மிகச் சாதுரியமாகச் செய்துகொள்வார்கள். மக்களைப் பற்றிச் சிந்திக்க மாட்டார்கள். இதை ஆதரத்துடனேயே இங்கே முன்வைக்கிறேன். எளிய, அண்மைய சான்று, கடந்த ரணில் விக்கிரமசிங்க – மைத்திரிபாலசிறிசேன ஆட்சிக் காலத்தில் அரசாங்கத்துக்கு இணக்கமாக தமிழரசுக் கட்சி செயற்பட்டது. இருந்தும் அது மக்களுக்கு உருப்படியாக எதையும் செய்யவில்லை. அப்படித்தான் முன்னரும் என்பதால்தான் இந்த உடைவு தவிர்க்க முடியாமல் நிகழ்ந்திருக்கிறது. இது வரலாற்று விதியின் விளைவு. பாவனைப் போர் வீரர்களும் செயல் வீரர்களும் ஒன்றாக நீண்ட காலம் பயணிக்கமுடியாது என்பதே இதற்கான காரணமாகும். ஆகவே இந்தத் தெளிவான வரலாற்று விதியை மக்கள் புரிந்து கொள்வது அவசியம். இன்று இந்தப் பிரிகோடு துலக்கமாகி விட்டது. இனியும் எதற்காகவும் சமரசம் செய்ய முடியாது என்ற நிலையில்தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உடைந்தது. தமிழரசுக் கட்சி தனித்தது. தமிழரசுக் கட்சி மட்டுமல்ல, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும்தான். அது அப்படித்தான் நிகழும். வரலாற்று விதி இதுவே. இந்த வரலாற்று விதியை அரசியல் ஆய்வாளர்களும் ஊடகத்துறையினரும் புரிந்து கொள்வது அவசியமாகும். இப்பொழுது தாம் எந்தப் பக்கம் நிற்கிறோம் என்பதை வெளிப்படுத்திக் கொள்ளவேண்டிய ஒரு கட்டாயம் வரலாற்றின் முன்னே ஆய்வாளர்களுக்கும் ஊடகத்துறையினருக்கும் புத்திஜீவிகளுக்கும் வந்துள்ளது. இதை அவர்கள் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். இனியும் தடுமாற்றங்களுக்குள்ளாகக் கூடாது. இது ஏறக்குறைய 1970 களில் உருவான நிலையே ஆகும். அந்தச் சூழல் மறுபடியும் இப்பொழுது வந்துள்ளது. ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட வெற்றிடத்தில்தான் தமிழரசுக் கட்சி மீள எழுந்தது. இருந்தாலும் அதன் செயற்பாடற்ற தன்மையும் மேட்டுக்குடி மனப்பாங்கும் அதனை மறுபடியும் தோற்கடிக்கும் நிலைக்குக் கொண்டு வந்துள்ளது. காலம் அப்படித்தான் தன் விதியைக் கொண்டிருக்கும். அதைத் தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது. அது தனக்குத் தேவையானதைத் தேர்ந்து கொள்ளும். 1970 கள் வரையிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும் மேற்கொண்டு வந்த “பாவனைப் போர்” அரசியல் 1970 களின் இறுதியில் வெளுத்தது. செயலின்மையை மறைப்பதற்கே இவை இனவாதத்தைப் பயன்படுத்துகின்றன. இதனால்தான் அது எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் காலத்திலேயே காலாவதியாகப் போக வேண்டிய நிலைக்குள்ளாகியது. “தமிழ் மக்களை இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று செல்வநாயம் மக்களைப் பார்த்துக் கைவிரிக்க வேண்டிய நிலை வந்தது அதனுடைய அரசியல் முறைமையினாலேயே. இல்லையெனில் ஒரு தலைவர் தன்னுடைய மக்களுக்குச் சரியான வழியைக் காட்டுவதற்குப் பதிலாக கடவுள்தான் இனி உங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று கையை விரிப்பாரா? அது ஒரு தலைவருக்கும் ஒரு தலைமைக்கும் அழகாகுமா? கடவுள் காப்பாற்ற மாட்டார். நாம்தான் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று எழுந்த இளைஞர் படைதான் பின்னர் வந்த காலத்தில் மக்களைப் பாதுகாத்தது. செயற்பாட்டு அரசியலை முன்னெடுக்கும் போராளிகள் எழுச்சியடைந்தனர். திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட நில ஆக்கிரமிப்பை இளைஞர் இயக்கங்களே தடுத்து நிறுத்தின. அவைதான் தமிழ் மொழிச் சமூகத்தினருக்கு எதிரான அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை முறியடித்துத் தாம் ஒரு புதிய நிகழ்ச்சி நிரலை உருவாக்கின. பேச்சுவார்த்தை மேசையை நோக்கி வரவேண்டிய நிர்ப்பந்தத்தை அரசாங்கத்துக்கு உருவாக்கியது போராளிகளேயாகும். மாவட்ட அபிவிருத்திச் சபையே போதும் என்ற அளவில் தம்முடைய அரசியல் கோரிக்கையை சுருக்கிக் கொண்ட தமிழரசுக் கட்சி + தமிழ்க்காங்கிரஸ் = தமிழர் விடுதலைக் கூட்டணியை நிராகரித்து விட்டு அதற்கப்பால் பயணித்தது இளைஞர் இயக்கங்களே. அதன் விளைவே இன்றுள்ள மாகாணசபையாகும். இது கூடப் போதாதென்றே தொடர் போராட்டம் நிகழ்த்தப்பட்டது. அவைதான் தமிழ் மக்களின் பிரச்சினையை பிராந்திய, சர்வதேச மட்டத்திற்குக் கொண்டுசென்றன. போராளிகள் உருவாக்கிய அரசியல் அடித்தளமே இன்றுள்ளதாகும். காரணம், செயற்பாட்டு அரசியலே மக்களுக்குத் தேவையாக இருந்தது. இந்த அணிகளின் வரலாற்றுத் தவறுகள் காரணமாகவும் சந்தர்ப்பவசமாகவும் தமிழரசு இதற்குள் புகுந்து நிற்கிறது. நின்றுகொண்டு தன்னை விரிவாக்கிக் கொள்ள முயற்சிக்கிறது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் நடந்தது இந்த மோதல்தான் என்பது தெளிவு. செயற்பாட்டுத் தரப்பினருக்கும் பாவனைப் போர்த் தரப்பினருக்குமிடையிலான இழுபறிகள். இறுதியில் இதற்கான இடமில்லை என்ற நிலையில் தமிழரசுக் கட்சி தனித்து விடப்பட்டதும் ஏனைய அணிகள் ஒன்றிணைந்ததும் இதனால்தான். வரலாற்று விதியின்படி பொருத்தமற்றதைக் காலம் கழித்தே தீரும். அதுவே நிகழ்ந்துள்ளது. செயற்பாட்டுத் தரப்பினராகிய குத்துவிளக்கு அணியினர், தம்மைப் பலப்படுத்திக் கொள்வதற்கு கிழக்கிலும் வடக்கிலும் உள்ள மேலும் பொருத்தமான தரப்புகளை உள்ளீர்த்துக் கொள்ள வேண்டும். தனித்து நிற்கின்ற தமிழரசுக் கட்சியும் நீண்ட காலத்துக்குத் தாக்குப்பிடிக்கக் கூடிய நிலையில் இல்லை. ஒன்று, ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளதைப்போல, அது பாவனைப் போரை விட்டு எளிதில் செயற்பாட்டு அரசியலை எளிதில் முன்னெடுக்கும் என்று தெரியவில்லை. அடுத்தது, அதன் கட்டுக்கோப்பில் உள்ள தளர்வும் நோய்க் கூறுகளுமாகும். அதனிடத்தில் உள்ள அரசியல் குழப்ப நிலையும் பதவி ஆசையும் அதைச் சிதைத்தே தீரும். மாவை சேனாதிராஜா தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்தாலும் அவருடைய கட்டுப்பாட்டையும் நெறிப்படுத்தலையும் இழந்த நிலையில்தான் தமிழரசுக் கட்சி உள்ளது. இனி இதை (தமிழரசுக் கட்சியை) மக்களும் கழித்து விட வேண்டும். இல்லையேல் மக்களுக்கு அதுவே தண்டனையாகும். நீங்கள் தேவையற்ற எந்தப் பொருளை வைத்திருந்தாலும் அது கழிவாகும். கழிவு குப்பையாகவே இருக்கும். குப்பையை எரிக்க வேண்டும். அல்லது புதைத்துவிட வேண்டும். இல்லையென்றால் அதனால் உங்களுக்குப் பாதிப்பே ஏற்படும். பொருத்தமில்லை, பயனில்லை என்றால் நாமே நட்டு வளர்த்த தென்னையையோ மாமரத்தையோ நாம் வெட்டி நீக்கிவிடுவதில்லையா, அதைப்போலத்தான் தயக்கமில்லாமல் அதை நீக்கிவிட வேண்டும். இல்லையென்றால் அதனால் நமக்கே பாதிப்பு. https://arangamnews.com/?p=8963
-
சூழ்நிலைக் கைதிகளாக தமிழ்த் தேசியத் தலைவர்கள் February 14, 2023 — கருணாகரன் — தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகள் உடைந்து பல துண்டுகளாகச் சிதறிக் கிடப்பதையிட்டு போராளி ஒருவர் கவலையோடு சில விடயங்களைப் பேசினார். கூடவே சில கேள்விகளையும் எழுப்பினார். அவர் எழுப்பிய கேள்விகள் இதுதான். 1. தற்போது மேலும் பல துண்டுகளாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உடைந்துள்ளது. அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து இலங்கைத் தமிழரசுக் கட்சி வெளியேறி உள்ளது. உள்ளுராட்சித் தேர்தலில் பல அணிகள் போட்டியிடுகின்றன. இது தமிழரின் அரசியலை பலவீனப்படுத்தும் நடவடிக்கையல்லவா? 2. இப்படிப் பிரிந்தும் உடைந்தும் பல அணிகளாக நிற்பது தவறானது. இந்த நிலையானது ஒடுக்குகின்ற சிங்கள மேலாதிக்கவாதிகளுக்கு வாய்ப்பாகும். ஒடுக்குமுறைக்குள்ளாகியுள்ள மக்களுக்கு பாதகமாகும் என்பதைத் தமிழ் அரசியல்ஆய்வாளர்கள், புத்திஜீவிகள், மதகுருக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக சமூகத்தினர், புலம்பெயர் நாடுகளில் உள்ளோர் போன்றோர் ஏன் கண்டிக்கவில்லை? 3. இப்படி உடைந்தும் பிரிந்தும் நிற்கும் சக்திகளையும் கட்சிகளையும் ஏன் ஓரணிக்குள் கொண்டு வருவதைப் பற்றி யாரும் சிந்திக்காமல் உள்ளனர்? அப்படி யராவது சிந்தித்திருந்தால் அவர்கள் எடுத்த முயற்சிகள் என்ன? 4. மூத்த அரசியல் தலைவர்களான சம்மந்தன், மாவை சேனாதிராஜா, விக்கினேஸ்வரன், சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா தொடக்கம் அடுத்த நிலையில் உள்ள தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் போன்றோருடன் இதைக்குறித்து – இந்த அவல நிலையைக் குறித்து யாராவது முறையாகப் பேசியுள்ளனரா? 5. இந்தத் தலைவர்கள் தமிழ் மக்களுடைய விடுதலையைப் பற்றியும் எதிர்காலத்தைப் பற்றியும் எவ்வாறு சிந்திக்கின்றனர்? 6. கடந்த காலத்தில் ஒற்றுமையின் அவசியத்தைப் பற்றி தீவிரமாக வலியுறுத்திக் கொண்டிருந்தவர்கள், நிகழ்காலத்தில் அந்த ஒற்றுமையைச் சிதைப்பவர்களாகவே உள்ளனர்? இதற்கான காரணங்களை இவர்கள் விளக்குவார்களா? அல்லது இவர்களை ஆதரிப்போர் இதற்கான காரணங்களைச் சொல்வார்களா? அல்லது இதைப் பற்றித் தமிழ் அரசியல் ஆய்வாளர்கள், புத்திஜீவிகள், மதகுருக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக சமூகத்தினர், புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்கள் விளக்கமளிப்பார்களா? 7. இதைக் குறித்து – இந்தச் சீரழிவு நிலையைக் குறித்து தமிழ் ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களினதும் நிலைப்பாடு என்ன? பதில் என்ன? 8. இந்த நிலை தொடருமானால் தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலம் எப்படி அமையும்? 9. அல்லது இப்படிப் பிரிந்து நிற்கும் அணிகளில் எந்த அணி சரியானது? எது உண்மையானது? எது மெய்யாகவே தமிழ் மக்களுடைய அரசியலைச் சரியான திசையில், சரியான முறையில் கொண்டு செல்கிறது என்பதையாவது இவர்கள் மக்களுக்குத் தெரிவிக்கலாம் அல்லவா? 10. அப்படியில்லை என்றால் இந்த அரசியற் கட்சிகளின் சீரழிவுக்கு நிகராகவே இந்தத் தரப்பினரும் உள்ளனர். இவர்களும் வேடிக்கை பார்க்கின்றனர். தங்களால் எதையும் செய்ய முடியாது என்ற கையறு நிலையில் உள்ளனர் என்றே அர்த்தமாகும் அல்லவா? இதை விட்டு விட்டு ஒவ்வொரு தரப்பைப் பற்றியும் விமர்சிப்பதில் என்ன பயன்? என்று கேட்கிறார் நண்பர். தமிழ் மக்களின் நிலையையும் அவர்களுடைய அரசியலையும் ஆழ்ந்து சிந்திப்பவர்களுக்கு இந்தக் கேள்விகளின் நியாயமும் அதற்கான அடிப்படையும் புரியும். அவர்களுக்கு இந்த நிலை கவலையையே அளிக்கும். காரணம், அந்தளவுக்கு தமிழ்ச் சமூகம் தன்னுடைய அரசியலுக்காகவும் விடுதலைக்காகவும் இழப்புகளைச் சந்தித்திருக்கிறது. சக்திக்கு மீறிப் பெருந்தியாகங்களைச் செய்துள்ளது. இதற்கெல்லாம் பெறுமதியைப் பெற்றுக் கொள்வதற்குப் பதிலாகப் பெரும் பின்னடைவையே அது சந்தித்திருக்கிறது. அதாவது வரலாற்றை முன்னகர்த்துவதற்குப் பதிலாக தமிழ்த் தேசிய(?) அரசியற் சக்திகள் அதைப் பின்தள்ளியுள்ளன. மேலும் பின்தள்ளிக் கொண்டிருக்கின்றன. இவ்வளவுக்கும் இந்தத் துயர வரலாற்றில், தியாக வரலாற்றில் இணைந்தும் விலகியும் பயணித்தவர்களே இன்று அரசியல் அரங்கில் இருப்பவர்கள். மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் போன்றோர் நேரடியாகவே கடினமான அரசியற் பயணத்தின் வழியாக வந்தவர்கள். மேலும் சொன்னால், சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா போன்றோர் கூட நெருக்கடிகளின் வழியே அரசியலைத் தொடர்ந்தவர்கள். இவர்கள் கூட தங்களுடைய கடந்த காலத்தின் பெறுமதியைக் குறைக்கும் விதமாக நடந்து கொள்வது கவலை அளிக்கிறது. அரசியலில் இதொன்றும் புதியதல்ல. வரலாறே இப்படித்தான் ஏற்ற இறக்கத்தோடு பயணித்திருக்கிறது என்று யாரும் சொல்லக் கூடும். இது தவிர்க்க முடியாத நிலை. இதை விட வேறு எதைச் செய்ய முடியும் என்று இவர்கள் கேட்கக்கூடும். அப்படிக் கேட்டால் – அல்லது அப்படிச் சொன்னால் – இவர்கள் சூழ்நிலைக் கைதிகளாக உள்ளனர் என்றே அர்த்தமாகும். அரசியல் தலைவர்கள் ஒரு போதும் சூழ்நிலைக் கைதிகளாக இருக்க முடியாது. அப்படி இருந்தால் அவர்கள் தலைவர்களில்லை. சூழ்நிலையைச் சரியாகக் கையாளும் ஆளுமை உள்ளவர்களே தலைவர்களாகின்றனர். மற்றவர்கள் வரலாற்றைத் துயரக் குழிக்குள்ளேயே தள்ளி விடுகின்றனர். இன்றைய சீரழிவு அரசியலில் துணிவுடன் நிமிர்ந்து நிற்கக் கூடிய, தீர்மானங்களை உறுதியோடு எடுக்கக் கூடியவர்களே வெற்றியடைவர். மக்களுக்கான வெற்றியையும் விடுதலையையும் அவர்களால்தான் அளிக்க முடியும். இதற்கு சில விலைகளைக் கொடுக்க நேரிடும். இப்படித் துணிவுடன் நிற்கும்போது பல சவால்களைச் சந்திக்கவும் வேண்டியிருக்கும். ஆனால், அதைச் சந்தித்துத்தான் ஆக வேண்டும். துயரம் என்னவென்றால், கடந்த காலத்தில் மிகச் சவாலான, உயிராபத்து நெருக்கடிகளைச் சந்தித்துக் கடந்து வந்தவர்கள், இன்று மிகச் சாதாரண அரசியல் நெருக்கடிகளைச் சந்திக்கவும் கடக்கவும் பயப்படுகின்றனர். இனியும் றிஸ்க் எடுக்க முடியாது என்று சிந்திக்கிறார்களா? அல்லது றிஸ்க் எடுப்பதில் களைப்படைந்து விட்டார்களா? அப்படிக் களைப்படைந்து விட்டார்களென்றால், அவர்கள் அரசியலில் இருந்து விலகி விடலாம். களத்தில் நிற்பதாக இருந்தால் களமாடத்தான் வேண்டும். இதேவேளை இந்தச் சந்தர்ப்பத்தில் மேலும் சில விடயங்களை நினைவூட்ட வேண்டியுள்ளது. தமிழ் அரசியல் பல தடவை இந்த மாதிரி உடைந்து உதிரித்தன்மையைக் கொண்டிருந்திருக்கிறது. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸிலிருந்து செல்வநாயகம் தரப்பு பிரிந்து சென்றனர். தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பிரிந்து சென்றது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸூம் பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எவ்வும் பிரிந்து சென்றன. ஏன் ஒரு காலத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ்விலிருந்து தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி பிரிந்து சென்றது. அண்மையில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸிலிருந்து (தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி) மணிவண்ணன் அணி பிரிந்து சென்றது. அதைப்போல ரெலோவிலிருந்து ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம் தரப்புப் பிரிந்து சென்றது. ஜனநாயகச் சூழலில் இதெல்லாம் வழமை எனச் சிலரும் இது தமிழ் அரசியலில் மட்டுமல்ல, சிங்கள, முஸ்லிம், மலையக அரசியலிலும் நிகழ்வதுதான் என்று வேறு சிலரும் கூறக்கூடும். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிலிருந்து மலையக மக்கள் முன்னணியும் பின்னர் தமிழ் முற்போக்குக் கூட்டணியும் உருவாகிய வரலாறு இதைச் சொல்லும். அதைப்போல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து உடைந்தும் பிரிந்தும் சென்ற தரப்புகளையும் இவர்கள் அடையாளம் காட்டலாம். ஏன், ஆயுதம் தாங்கிய விடுதலை இயக்கங்களிலிருந்து உடைவும் பிரிவும் உண்டாகவில்லையா என்றும் நீங்கள் கேட்கலாம். புலிகளிலிருந்து உடைந்து புளொட் உருவாகியதையும் ஈரோஸிலிருந்து உடைந்து ஈ.பி.ஆர்.எல்.எவ் உருவாகியதையும் அதிலிருந்து உடைந்து ஈ.பி. டி.பி உருவாகியதையும் இவர்கள் காட்டலாம். மட்டுமல்ல ஈழதேசிய விடுதலை முன்னணி என்ற நான்கு இயக்கங்களின் கூட்டைப் புலிகள் உடைத்து நொறுக்கவில்லையா என்றும் கேட்கலாம். இந்தத் தவறுகளின் விளைவுகளைத்தானே தமிழ்ச் சமூகம் இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறது. இன்று புலிகள் சந்தித்திருக்கின்ற வரலாற்றுத் துயரம் உணர்த்துவதும் இதைத்தானே. ஒரு கட்டத்தில் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு தாமே தடை செய்த தரப்புகளை ஏற்று அரவணைத்துக் கொண்டதை – தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியதை – இங்கே நினைவூட்டிக் கொள்ளலாம். இதையெல்லாம் கவனத்திற் கொண்டே புதிய – எதிர்காலத்துக்கான அரசியலை முன்னெடுக்க வேண்டும். ஆம், தமிழ் அரசியலை முற்றிலும் புதிதாக – யுத்தத்துக்குப் பிந்திய அரசியலாக முன்னெடுக்கவேண்டும். அதற்குப் பழைய வழிமுறைகளும் பழைய சிந்தனைகளும் ஒரு போதும் உதவாது. நீங்கள் புதிய முறையில் பந்து வீசினால்தான் மட்டையைப் பிடிப்பவருக்குக் குழப்பமும் தடுமாற்றமும் உண்டாகும். எப்படி அந்தப் பந்தை எதிர்கொள்வது என்று தெரியாமல் தத்தளிப்பார்கள். ஆனால், பிரிந்தும் உடைந்தும் சிதறிக் கிடக்கும் அத்தனை தரப்புகளும் பழைய – உழுத்துப்போன அரசியலையே கொண்டுள்ளன. பழைய அரசியல் வழிமுறையைக் கொண்டிருக்கும் வரை எதிர்த்தரப்பில் உள்ளவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. அவர்கள் அதை மிக எளிதாகவே எதிர்கொள்வர். இதனால்தான் இவற்றில் எதைத் தேர்வது என்று தெரியாத தடுமாற்றம் பலருக்கும் உள்ளது. இன்னொரு பக்கம் இதைப் பற்றிப் பலருக்கும் தெரியும். தெரிந்து கொண்டே தெரியாததைப்போல, எதையும் புரியாததைப்போல நடிக்கிறார்கள். நான் உட்படப் பலரும் தமிழ் அரசியலின் பலவீனத்தையும் தவறுகளையும் தொடர்ந்து குறிப்பிட்டு வந்துள்ளோம். அப்படித் தெளிவாகக் குறிப்பிட்டவை, முன்னுணர்ந்து சொன்னவை, விமர்சித்தவை, கண்டித்தவை, குற்றம் சாட்டியவை, சுட்டிக் காட்டியவை அனைத்தும் மெய்யெனக் காலம் நிரூபித்துள்ளது. மேலும் மெய்ப்படுத்தி வருகிறது. இருந்தாலும் தமிழ் மக்களும் அவர்களிடையே உள்ள மெத்தப் படித்த மேதாவிகளும் அரசியல் அறிஞர்களும்(!) பலதைப் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை. புரிந்து கொண்டாலும் அவற்றை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. அரசியற் கட்சிகளும் அவற்றின் தலைமைகளும் அவற்றின் தொண்டர்களும் தெரிந்து கொண்டே நடிக்கிறார்கள். அல்லது தெரிந்து கொண்டே பிழைப்பு நடத்துகிறார்கள். இதை மாற்றிக் கொள்ளாத வரையில் மீட்சியில்லை. இது தொடர்பாக யாராவது சிந்தித்தால் அவருக்கு வெற்றி. https://arangamnews.com/?p=8721
-
போருக்குப் பின் – பெண் புலிகள் நிலை என்ன? சிறப்பு கட்டுரை ஈழப் போர் முடிந்து 13 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்தப் போரில் பங்கெடுத்த முன்னாள் போராளிகள் இப்போது எப்படியிருக்கிறார்கள்? குறிப்பாக, தங்கள் இளமையையும் வாழ்க்கையையும் சமூகத்துக்காக, இனத்துக்காக, மண்ணுக்காக தியாகம் செய்த பெண் புலிகளின் வாழ்க்கை எப்படியிருக்கிறது? ‘விடுதலைப் புலிகள்’ நடத்திய ‘வெளிச்சம்’ பத்திரிகையின் ஆசிரியரும் ஈழக் கவிஞருமான கருணாகரன் எழுதுகிறார். கடந்த வாரம் ஏழு பெண்களைச் சந்தித்தேன். எல்லோருக்கும் வயது நாற்பதுக்கு மேல். சிலர் ஐம்பதைத் தொடும் நிலையிலிருக்கிறார்கள். அருவி (வயது 46), வெற்றிமலர் (வயது 48), நிலா (வயது 46), அறிவுமங்கை (வயது 45), நிலவழகி (வயது 48), மலரினி (வயது 49), செந்நிலா (வயது 50). எல்லாமே எதிர்பாராத சந்திப்புகள். ஏழு பேருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இருபது, இருபத்தைந்து ஆண்டுகளாக இவர்களோடு பழகி வந்திருக்கிறேன். சிலரோடு சில சந்தர்ப்பங்களில் சேர்ந்து வேலையும் செய்திருக்கிறேன். என்ன துணிச்சல்! எவ்வளவு ஆற்றல்! எப்படியான திறமை! நாம் எதிர்பார்த்தேயிராத வகையில் எந்த வேலையையும் வலு சிம்பிளாகச் செய்து முடித்துவிடுவார்கள். எதிர்பாராத கோணங்களில் அசாத்தியமான முடிவுகளை எடுப்பார்கள். அத்தனை சிந்தனைத் திறன், அவ்வளவு விவேகம். அந்த நாட்களில் இரவு பகலாகத் தங்களை முழுமையாக அர்ப்பணித்து வேலை செய்தவர்கள். காடு மேடு, கடல், மலை என்று தங்களுடைய பணிகளுக்காக ஓய்வின்றிக் களைப்பின்றி அலைந்து கொண்டிருந்தவர்கள். எந்த அபாயச் சூழலையும் துணிச்சலாக எதிர்கொண்டவர்கள். அநேகமாக எல்லோரும் தங்களுடைய பள்ளிக் காலத்திலேயே வீட்டை விட்டு வெளியே வந்து, ஆயுதந்தாங்கிய விடுலைப் போராட்டத்தில். போராளிகளாக. பதினைந்து இருபது ஆண்டுகளாக செயற்பட்டிருக்கிறார்கள். சிலர் அதற்கும் கூட. ஆனால், போராட்டம் தோற்கடிக்கப்பட்டு, போர் பேரழி்வுகளோடு முடிந்தபோது எல்லோரும் நிர்க்கதியாகி விட்டனர். அதற்குப் பிறகு, இவர்கள் பழகிய, பயின்ற எதையும் வீட்டிலோ சமூகத்திலோ பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. தங்களை முழுமையாக வெளிப்படுத்தவும் முடியாமல் போனது. திறமையான கடலோடிகளாக இருந்த பெண்கள் பின்னர் கடலில் ஒரு நாள் கூட படகோட்டுவதற்கு வாய்ப்பின்றிப் போனது. என்னதான் திறமையும் கடற் பரிச்சியமும் இருந்தாலும் யார்தான் பெண்களைக் கடலில் மீன் பிடிப்பதற்கு அனுமதிப்பார்கள்? மிகத் துணிச்சலான சமராடிகள், (போர்க்களத்தில் படையினரை விரட்டியவர்கள்) வீட்டிலே யாருடன் சமராடுவது? கனரக வண்டிகளைச் செலுத்திய பெண்களுக்கு யார்தான் அந்த வேலையைக் கொடுக்க முன்வருவார்? காடுகளில் பாதுகாப்பு அரண்களை அமைத்தவர்களுக்கு ஊருக்குள்ளே என்ன வேலை கொடுப்பதென்று தெரியவில்லை யாருக்கும். மனதுக்குள் இவர்களுடைய திறனையும் ஆற்றலையும் புரிந்துகொண்டாலும் வெளியே அதை ஏற்று அங்கீகரித்து இடமளிக்க முடியாமலிருக்கிறது. தங்கள் இளமையை இந்தச் சமூகத்துக்காக, இந்த இனத்துக்காக, இந்த மண்ணுக்காக அர்ப்பணித்திருக்கிறார்களே, அதற்குக் கைமாறாக என்ன கொடுக்க முடியும்? இந்தப் போராட்டம் தோற்கடிக்கப்படவில்லை என்றால் இன்று இவர்கள் இருக்கின்ற உயரம் எப்படியாக இருந்திருக்கும்? இவர்கள் வேறு யாருமல்லவே, எங்கள் மகள், எங்கள் சோதரிகள், எங்கள் தோழிகள் அல்லவா! ஆனால், இப்படி யாரும் புரிந்துகொள்வதாக இல்லை. இதனால் இவர்களுடைய வாழ்க்கை இன்று கேள்வியாகிவிட்டது. கொல்லாமல் கொல்லும் உறவுகளின் – சமூகத்தின் பாராமுகமும் இரண்டக நிலையும் இவர்களை கொன்று கொண்டேயிருக்கிறது. அருவி, பின்தங்கிய ஒரு கடலோரக் கிராமத்தில் பத்துப் பன்னிரண்டு வயதுப் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறாள். அவளுக்கு ஒரு கை இல்லை. அந்தப் பிள்ளைகள் கொடுக்கும் சிறிய தொகைப் பணமே அவளுடைய தேவைகளுக்கானது. வெற்றிமலர், இவளும் ஒரு கடலோரக் கிராமத்தில்தானிருக்கிறாள். வீட்டுக்குத் திரும்பிய பிறகு தையல் பழகி, அதன் மூலம் சீவியத்தை ஓட்டுகிறாள். நிலா, சில காலம் பழகிய தொழிலான வீடியோ எடிற்றிங்கைப் பல கடைகளில் செய்தாள். எல்லோரும் மிகக் குறைந்த ஊதியத்தையே கொடுத்தார்கள். ஒரு காலம் நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் குறும்படங்களையும் உருவாக்கியவள். அவளுடைய திறமைகளைப் புரிந்துகொள்ளவோ கொண்டாடவோ யாருமே இல்லை. பேசாமல் தோட்டத்தில் புல்லுப்பிடுங்கவும் வெங்காயம் நடவும் போகிறாள். வயிறொன்று இருக்கிறதல்லவா. அதை விட ஒவ்வொரு நாளையும் எப்படியோ போக்கிக்கொள்ள வேண்டுமே! அறிவுமங்கை, இதழியல், அச்சு, வடிவமைப்பு போன்றவற்றில் அனுபவம் கொண்டவள். இந்தத் துறையில் எங்காவது வேலை செய்யலாம் என்று செய்து பார்த்தாள். அடிமாட்டுச் சம்பளம் கொடுக்கிறார்கள். கடையொன்றில் வேலை செய்தாள். அங்கும் கெடுபிடிகள் அதிகம். ஒன்றுமே சரிப்பட்டு வரவில்லை. எல்லோரும் அவளைப் பயன்படுத்தும் அளவுக்கு அவளுடைய திறன்களுக்கான மதிப்பையும் ஊதியத்தையும் கொடுக்கத் தயாரில்லை. தனியாக ஒரு இடத்தில் அச்சு வடிவமைப்பைச் செய்யலாம் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். நிலவழகி, எதையும் கூருணர்வோடு அணுகும் திறனுள்ளவள். இடுப்புக்குக் கீழே இயங்க முடியாதிருக்கிறார். அதனால் எங்குமே செல்வதில்லை. ஒரு சிறிய வீட்டின் ஒதுக்குப் புறத்தில் உள்ள அறையே அவளுடைய பேருலகம். அமைதியான சுபாவம். சிரிப்பினால் எல்லாவற்றையும் சமன் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். நெருங்கிய உறவுகள் என்று எதுவுமில்லை. தெரிந்தவர்களின் அனுசரணையில் வாழ்க்கை ஓடுகிறது. ஆனால், இதுவும் எவ்வளவு காலத்துக்கு இப்படியிருக்கும் என்று தெரியவில்லை என்கிறார். அதனால், இடுப்புக்குக் கீழே இயங்க முடியாத போராளிகளுக்காக இயங்கும் விடுதி ஒன்றில் (இது புலம்பெயர்ந்தோரினால் நடத்தப்படுவது) இடம் கேட்டு விண்ணப்பித்திருக்கிறாள். கிடைத்தால் போய் விடுவேன் என்றாள். அவளுக்கென்றொரு காணி வன்னியில் உண்டு. ஆனால், அதில் ஒரு வீட்டைப் போட்டுக் கொண்டு இருப்பதற்கு இன்னும் முடியவில்லை. அவளும் எத்தனையோ வழிகளால் முயற்சித்து விட்டாள். ஆனாலும் எதுவுமே கை கூடவில்லை. மலரினி, காலில் பெரிய காயம். சீராக நடக்க மாட்டாள். அதைவிட வயற்றிலும் பெருங்காயங்களின் தளும்பும் உள் வலியும் இன்னும் உண்டு. ஒரு திருமணம் ஏற்பாடாகி வந்திருக்கிறது. ஆனால், அந்த மணவாளன் தன்னைப் பற்றிய விவரங்களை முழுதாகவே மறைத்து அவளைத் திருமணம் செய்ய முற்பட்டிருக்கிறான். இறுதியில்தான் தெரிந்தது அவனுக்கு ஏற்கனவே மூன்று பிள்ளைகளும் மனைவியும் ஏற்கனவே உண்டென்று. “அரும்பொட்டில் தப்பினேன்” என்று சொன்னாள். “இனி திருமணத்தைப் பற்றிய பேச்சே வேண்டாம்” என்கிறாள். செந்நிலா, ஒரு கண்ணும் ஒரு கையும் இல்லை. ஆனாலும் ‘நம்பிக்கை’ என்றொரு சிறிய அமைப்பை உருவாக்கி அதை நிர்வகித்துக் கொண்டிருக்கிறாள். வீட்டிலிருந்து பொது வெளிக்குச் செல்லும்போது ஏற்படும் நெருக்கடியை விட, எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்களை விட, பொதுவெளியில் செயற்பட்டு விட்டு வீட்டுக்குத் திரும்பும் போது ஏற்படும் நெருக்கடியும் சிக்கல்களுமே பெண்களுக்கு அதிகம். அவர்கள் அவற்றை எதிர்கொள்வதுதான் மிகச் சிரமம். அதிலும் சற்று வயது அதிகமாகி விட்டால் யாரோடும் ஒட்டிக்கொள்ள முடியாமல் முகச்சுழிப்பு வரையில் கொண்டு போய் விடும். திருமண வயதை இழந்துவிட்டால் எப்படி இந்தப் பெண்ணை வீட்டில் வைத்துக்கொள்வது என்ற கேள்வி அம்மாவுக்கும் அப்பாவுக்கும் வந்துவிடும். சிலவேளை அம்மாவோ அப்பாவோ இல்லாமல் சகோதர்கள், சகோதரிகள் மட்டும் இருக்கிற வீடுகள் என்றால் சொல்லவே வேண்டியதில்லை. “வந்து விட்டாயா? இனி என்ன செய்யப்போகிறாய்?” என்று பச்சையாகவே கேட்டுவிடுவார்கள். என்னதான் பிள்ளைப் பாசம், சகோதர பாசம் என்றிருந்தாலும் மணமாகாத, மண வயதைக் கடந்த பெண் என்றால் அது ஒரு முள்தான். அதுவும் போராட்டத்தில் – இயக்கத்தில் – ஆயுதப் பயிற்சியைப் பெற்றவர்கள் என்பதால் கடுமையாக நடந்துகொள்வார்கள்; அதிக சுயாதீனத்தைக் கோருவார்கள் என்ற கற்பிதங்கள்… எனப் பல காரணங்கள் இந்த மதிப்பிறக்கத்தை உண்டாக்குகின்றன. இதனால், இந்த முன்னாள் போராளிகளுக்கு இன்று வந்திருக்கும் சோதனை சாதாரணமானதல்ல. சிலர் இவர்களை மதித்து சிறிய அளவிலான உதவிகளைச் செய்தாலும் அது வாழ்க்கையைத் தாங்கிக் கொள்ளும் அளவுக்கில்லை. வேலை வாய்ப்புகளைப் பெறக்கூடிய வயதெல்லையையும் கடந்துவிட்டார்கள்; அதோடு கல்வி மூலமாகப் பெறக்கூடிய தொழில்களைப் பெற்றுக்கொள்ள முடியாமலிருக்கிறார்கள். ஆனால், ஒவ்வொருவரோடும் கதைத்தபோது பொதுவாகவே சில விசயங்களை உணர்ந்துகொள்ள முடிந்தது. தங்களை ஏதோ ஒரு வகையில் இவர்கள் தேற்றிக்கொள்கிறார்கள். இதுதான் இனி நிலை என்ற பிறகு வேறு என்ன செய்ய முடியும் என்ற கட்டத்தில் அத்தனை நெருக்கடிகளையும் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். எதற்கும் உணர்ச்சிகளைக் காட்டிக்கொள்ளாமல் எதையும் ஜீரணித்துக்கொள்கிறார்கள். இதில் அவமானங்கள், துயரங்கள் அனைத்தும் சேர்த்தி. இந்த நிலை ஏதோ இந்த ஏழு பெண்களுக்கும் மட்டும்தான் என்றில்லை. இவர்களைப்போலப் போராட்டத்தில் (இயக்கத்தில்) பங்கேற்ற பல நூறு பெண்களுக்கு, ஆயிரக்கணக்கானோருக்கு ஏற்பட்டிருக்கும் நிலையாகும். இது பேரவலம். பெருந் துயரம். பெரும் அநீதி. முதலாவதாக இவர்கள் எதிர்த்தரப்பினால் தோற்கடிக்கப்பட்டார்கள். யுத்தத்தத்தின் மூலம். அதைத் தொடர்ந்து சிறையிலடைக்கப்பட்டனர். மீள வேண்டியிருந்தது. இரண்டு, மூன்று ஆண்டுகள் சிறையிருந்தே மீள வேண்டியிருந்தது. மீண்ட பெண்களைத் தமிழ்ச் சமூகம் தோற்கடிக்கிறது. அது நோக்கும் நிலை குறித்து, நடத்தும் விதம் குறித்து இங்கே நாம் எழுதித் தீராது. அத்தனை வலி நிறைந்த ஏராளம் ஏராளம் கதைகள் அவை. 1970களில் பொதுவாழ்வில் ஈடுபட்டு, (அரசியற் செயற்பாடுகளில் ஈடுபட்டதற்காக) சிறை சென்ற புஸ்பராணியின் அனுபவங்களே போதும் இந்தப் பெண்களுடைய நிலையை அறிந்துகொள்வதற்கு. அதற்கும் அப்பால் இவர்கள் இப்போது சமூகச் சிறையில் சிக்கியிருக்கிறார்கள். இது இரண்டாவது சிறை. இதனுடைய தண்டனைகள் மிக நுட்பமானவை. வீட்டிலிருந்தும் சமூக வெளியிலிருந்தும் நுட்பமாக ஓரம் கட்டுவது. ஆனால், அதை இவர்கள் வெளியே காட்டிக் கொள்வதில்லை. “என்ன இருந்தாலும் எங்களை வீட்டுக்காரர் (பெற்றோரும் சகோதர சகோதரிகளும்) ஏற்றுக்கொண்டிருப்பதே பெரிய விசயம். அவர்களும் என்னதான் செய்ய முடியும்? நாங்கள் தோற்றுப் போனதற்கும் தோற்கடிக்கப்பட்டதற்கும் அவர்கள் பொறுப்பாளிகளில்லையே!… நாங்களும் வீட்டிலிருந்திருந்தால் எங்களுடைய வாழ்க்கையும் வேறாகியிருக்கும்… ஆனால், நாங்கள் இன்னொரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து விட்டோமே. அந்தக் கடந்த கால வாழ்க்கையின் மூலம் எங்களுக்கு ஒரு திருப்தி இருக்கு. ஒரு நிறைவிருக்கு. எங்களால் முடிந்த ஏதோ ஒன்றை இந்தச் சமூகத்துக்காகச் செய்திருக்கிறோம். அதில் முழுமையான வெற்றி கிடைக்காது விட்டாலும் ஏதோ நடந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அது போதும். ஒரு காலத்தில் எல்லோரும் சேர்ந்து செய்ய வேண்டிய பணி என்ற நிலையில் நாங்கள் இணைந்துகொண்டு எங்களுடைய பங்களிப்பைச் செய்திருக்கிறம். அந்தக் காலப் பணியை களப்பணியாகச் செய்த நிறைவுக்கு முன்னால் எதுவும் ஈடாகாது. அந்த நிறைவு போதும் எங்களுக்கு. இதை எங்களைச் சமாதானப் படுத்துவதற்காகச் சொல்லவில்லை. எங்களைப் பற்றிய சுயமதிப்பீட்டிலிருந்தே சொல்கிறோம். இதுதான் எங்களுடைய பலம். மகிழ்ச்சி. அடையாளம் எல்லாம். ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு திருப்தி இருக்கும் அல்லவா. ஒரு மகிழ்ச்சி. ஒரு நிறைவு. ஒரு அடையாளம். அப்படி எங்களுக்கு எங்களுடைய கடந்த காலம் இருக்கு….” என்று சிரித்தபடி சொல்லிக் கொண்டே போகிறார்கள். நான் எதுவும் பேசாமல் இவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன். ஒவ்வொரும் தனித்தனியாகச் சொன்னாலும் எல்லோருடைய கூட்டு எண்ணமும் நம்பிக்கையும் கருத்தும் ஒன்றுதான். ஒரே சாரத்தைக் கொண்டவை. செந்நிலா, பேசும் போது தன்னுடைய அனுபவங்களை எழுதிக் கொண்டிருப்பதாகச் சொன்னாள். அதைப் படிக்கத் தந்தாள். அதிலே சில வரிகளின் கீழே அடிக்கோடிட்டிருந்தாள். அந்த வரிகள் இப்படி இருந்தன: ‘நாம் தேவதைகளாக ஒரு போதுமே இருந்ததில்லை. நிலமாக, நீராக, காற்றாக, வானாக, தீயாக இருந்தோம். அப்படித்தான் இன்னும் இருக்கிறோம்.’ இதைப் புரிந்துகொண்டு இவர்களுக்குரிய வாழ்க்கையை அளிப்பதற்கு, இவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்குவதற்கு, இவர்களும் மகிழ்ந்திருப்பதற்கு, மிஞ்சிய காலத்தை இவர்கள் இயல்பாக மற்றவர்களோடு கலந்து கொண்டாடுவதற்கு நம்மிடத்திலே ஏதாவது வழி உண்டா? http://wowtam.com/ta_in/4-after-the-war-what-is-the-condition-of-the-ltte/11519/?fbclid=IwAR3x3Zmv5GBFTVPctsQZRu0oWHkOaVb3EFOkKfduhgIR-TLDBzYA9Z5xgfs#
-
சுதந்திர இலங்கையில் சாத்தானிடம் வரம் கேட்கும் நிலை… February 6, 2023 —- கருணாகரன் —- இலங்கை பொருளாதார ரீதியாக மீண்டெழுவது எப்பொழுது என்ற கேள்விக்கு இன்னும் பதில் இல்லை. ஆனால், ஐந்து தொடக்கம் பத்து ஆண்டுகளுக்குள் நாட்டில் யாருக்கும் அடிபணியாத பொருளாதார வலுவை உருவாக்குவேன் என்றிருக்கிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. எதனை ஆதரமாகக் கொண்டு, எப்படி அந்தப் பொருளாதார வலுவை உருவாக்கப் போகிறேன் என்று அவர் சொல்லவில்லை. அவர் மட்டுமல்ல, வேறு எந்தப் பொருளாதார நிபுணர்களும் கூட இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான வழிகள் எப்படி அமைய வேண்டும்? எவ்வாறு அமையமுடியும் என்று சொல்லவில்லை. ஆக மொத்தத்தில் இலங்கையின் பொருளாதார மீட்சியைக் குறித்து எவருக்கும் எதுவுமே தெரியாத நிலையே தொடர்கிறது. ஏதோ நடக்கிறது. போகிற வரையில் போகட்டும் என்ற அளவில்தான் பலரும் உள்ளனர். கடந்த மூன் று மாதங்களுக்கு முன்பு நாடு எரிபொருளுக்கும் அத்தியாவசியப் பொருட்களுக்குமாகத் தெருவில் நின்ற போது பலருக்கும் பொருளாதார நெருக்கடி பெரிதாக – உயிர்ப் பிரச்சினையாக இருந்தது. இப்பொழுது விலை அதிகம் என்றாலும் எல்லாமே கிடைக்கிறது. ஆகவே எப்படியாவது சமாளித்துக்கொள்வோம் என்றே பலரும் கருதுகிறார்கள். இதனால்தான் எல்லோரும் பொருளாதார நெருக்கடியை விட அரசியல் நெருக்கடியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றனர். இதில் எதிர்க்கட்சிகள் அடிக்கின்ற பம்பலும் பகடியும் சாதாரணமானதல்ல. தங்களிடம் ஆட்சி அதிகாரம் கிடைத்தால் தாம் என்ன செய்வோம் என்று எந்த விளக்கத்தையும் சொல்லாமலே சஜித், அநுர போன்ற தலைவர்கள் உள்ளனர். சங்கர் படத்தில் ஒரு நாள் முதல்வராக அர்ஜூன் வந்து அதிரடி செய்வதைப்போல இவர்களும் அதிரடிப்பர் என்றுதான் இவர்களுடைய ஆதரவாளர்களில் பலரும் கருதிக் கொண்டிருக்கின்றனர். நாடோ மீட்கக் கடினமான புதை சேற்றில் மாண்டுள்ளது என்பதைக் குறித்த விளக்கம் எவருக்கும் இல்லை. ஆகவே இந்த அரசியல் நெருக்கடி ஒரு போதும் தீரப்போவதில்லை. எத்தனை ஆண்டுகள் சென்றாலும் எத்தனை தலைமைகள் மாறினாலும். முக்கியமாக இனவாத அரசியலில் மாற்றம் நிகழப் போவதில்லை. அதற்கான சாயல்களையும் சாத்தியங்களையும் காணவே இல்லை. மக்கள் இனவாத அரசியலை ஆதரிக்கும் வரையில் மாற்றமோ மீட்சியோ ஏற்படாது. இதெல்லாம் நமக்குத் தெரியாமலே நடத்தப்படுகின்ற, நம்மைப் பொம்மைகளாக்கி ஆட்டுவிக்கின்ற ஏகாதிபத்திய நாடுகளின் – வல்லரசுகளின் கூட்டுச் சதி என்பதைப் பற்றி எவரும்சிந்திப்பதாகத் தெரியவில்லை. அப்படித் தெரிந்தாலும் அதைப் பற்றியெல்லாம் அவர்கள் பேசுவதாக இல்லை. பதிலாக இந்த வல்லரசுகளின் அங்கீகாரத்தையும் அனுசரணையையும் நட்பையும் பேணிக் கொள்ளவே பலரும் முற்படுகின்றனர். இதை அவர்கள் பகிரங்கமாகவே சொல்லிப் பெருமை அடித்துக் கொள்கிறார்கள். அந்தளவுக்குத்தான் நம்முடைய புத்திஜீவிகளின் அறிவுத் தராதரம் உள்ளது. சனங்களின் மீதான, சமூகம் மீதான, நாடு மீதான இவர்களுடைய பற்றுள்ளது. அமெரிக்கா ஒரு பக்கம், இந்தியா இன்னொரு பக்கம், சீனா இன்னொரு பக்கம் என்று இலங்கையை மட்டுமல்ல, இலங்கையர் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வல்லரசும் சுற்றி வளைத்துப்பிடிக்கப் பார்க்கிறது. இதற்காக இவை ஒவ்வொன்றும் நாட்டிலுள்ள புத்திஜீவிகள், ஊடகங்கள், ஊடகவியலாளர்கள், அரசியற் கட்சிகள், அரசியற் தலைமைகள் என தமக்குச் சாத்தியப்படக்கூடிய அனைத்துத் தரப்பையும் வளைத்துப் பிடிக்க முற்படுகின்றன. இதொரு பகிரங்கப்போட்டியாகவே நடக்கிறது. இதனால் மாறி மாறி ஒவ்வொரு கட்சியையும் ஒவ்வொரு தரப்பையும் ஒவ்வொரு ஊடகவியலாளரையும் ஒவ்வொரு புத்திஜீவிகளையும் தூண்டில் போட்டுப் பிடிக்கின்றன வல்லாதிக்கச் சக்திகள். இந்த வல்லாதிக்கச் சக்திகள் லேசுப்பட்டவை அல்ல. சட்டைப் பின்னை (சட்டை ஊசியை), அப்பிளை விற்பதில் தொடக்கம் ஆயுதம், உணவு தொடக்கம் அனைத்தையும் நமக்கு விற்றுச் சம்பாதிப்பவை. நம்மைச் சுரண்டிப் பிழைப்பவை. வல்லரசுகள், அவற்றின் தகுதியை விட்டுவிட்டு இப்படிச் சட்டை ஊசியையும் விற்குமா என்று நீங்கள் கேட்கலாம். குண்டூசி, நெற்றில் ஒட்டும் ஒட்டுப் பொட்டு தொடக்கம் எதையும் விற்றுக் காசாக்குவதே – சம்பாதிப்பதே – அவற்றின் முதலாவது இலக்கு. அதனால்தான் அவை வல்லரசுகளாக இருக்கின்றன. அதனால்தான் அவை நம்முடைய ஊரில் உள்ள சில்லறை ஆட்களோடும் கூட்டு வைக்கின்றன, இரகசியமாக தம்முடைய காரியங்களைச் செய்துகொள்கின்றன. இப்படியாக இருக்கும் ஒரு நிலையில்தான் இலங்கையின் பொருளாதாரம் எப்படி அமையப்போகிறது என்று நாம் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். தேசிய பொருளாதாரக் கொள்கை ஒன்று வகுக்கப்படாமல், பொருளாதார மறுசீரமைப்புத் திட்டம் ஒன்று உருவாக்கப்படாமல் அனைத்துத் தரப்பும் ஒன்று பட்டு உழைக்காமல் பொருளாதார மீட்சியையோ மறுமலர்ச்சியையோ எட்ட முடியாது. ஒரு இடர்கால நெருக்கடியில் ஒருங்கிணையும் தன்மையோடு அனைவரும் ஒருங்கிணைந்து செயற்பட்டே இதைக் கடக்க முடியும். இதிலிருந்து மீள முடியும். அதற்கு யாரும் தயாரில்லை. எல்லோரும் முட்டையில் மயிர் பிடுங்குவதிலேயே கண்ணும் கருத்துமாக உள்ளனர். ஐ.எம்.எவ் வின் கடனுதவி மூலமாக பொருளாதார மேம்பாட்டை எட்ட முடியும் என்றொரு அபிப்பிராயம் படித்தவர்கள் மட்டத்திற் கூட உண்டு. அதொரு மயக்கமே. ஐ.எம். எவ் என்பது இன்னொரு கடன்பொறி. நாட்டின் இறைமையையே இல்லாதொழிக்கும் சதி என்பதைப் பலரும் புரிந்து கொள்ளவில்லை. அதன் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டால்தான் அதனுடைய அருளும் அனுசரணையும் கிட்டும். இல்லையென்றால் பெப்பேதான். இதேவேளை ஐ.எம்.எவ்விடம் மண்டியிடுவதைத் தவிர வேறு வழி இப்பொழுது இலங்கைக்கு இல்லை. ஆக சாத்தானிடம் வரம் கேட்கும் நிலையே இப்போதுள்ளது. இதாவது பரவாயில்லை. இனி வரப்போகும் நிலைதான் மிகப் பயங்கரமானது. என்னதான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டங்களைச் சொன்னாலும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதாக இருந்தால் அதற்கு சில வழிமுறைகளே உண்டு. ஒன்று, உற்பத்தியைப் பெருக்குவது. குறிப்பாக ஏற்றுமதியை அதிகரிப்பது. இது இலகுவானதல்ல. உடனடிச் சாத்தியமுடையதும் அல்ல. ஆனால், இதை எட்டியே தீர வேண்டும். அது இப்பொழுது முடியாது. இரண்டாவது, அந்நியச் செலாவணியைத் திரட்டக் கூடிய வெளிநாட்டு வருமானத்தை அதிகரிப்பது. இதில் முக்கியமானது வெளிநாடுகளில் உள்ள – வேலைவாய்ப்புக்காகச் சென்ற மக்கள் தமது பணத்தை இங்கே உரிய வழிமுறைகளுக்கு ஊடாக அனுப்புவது. இதற்கு புலம்பெயர் சமூகத்தினர் தயாரில்லை. அவர்கள் வேறு வழிமுறைகளுக்கூடாகவே தமது பணப் பரிவர்த்தனைகளைச் செய்கின்றனர். ஆகவே அவர்களிடம் அதை நாம் எதிர்பார்க்க முடியாது. அதில் அவர்கள் பல வகையான லாபங்களைப் பெற்று ருசிப்பட்டவர்கள். எளிதில் அதிலிருந்து மீண்டு நாட்டின் நலனுக்காகச் செயற்படுவர் என்றில்லை. அரசும் இதைக் குறித்துச் சிந்தித்து எளிய வழிமுறைகளை உருவாக்கும் சாத்தியங்களும் இல்லை. அதை விட முக்கியமானது, இனமுரண்பாட்டு அரசியலை முடிவுக்குக் கொண்டு வராத வரையில் அவர்கள் அரசுக்கு எதிராகவே செயற்படுவர். அவர்களைப் பொறுத்தவரை இலங்கை அரசு என்பது எதிர்த்தரப்பு என்பதாகும். எனவே இதுவும் எதிர்பார்த்த அளவுக்குப் பெரிய நன்மைகளைத் தரும் என்றில்லை. அடுத்தது – மூன்றாவது, சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதாகும். இதைச் செய்ய வேண்டும் என்றால் இதற்கு கதவுகளை அகலத் திறக்க வேண்டும். இந்தக் கதவு திறத்தல் என்பது சாதாரணமானதல்ல. ஏறக்குறையத் தாய்லாந்தைப்போல கட்டற்ற பாலியல் பயன்பாட்டுக்கு (Free sex routine) இடமளித்தல் என்பதாக இது அமையும். கூடவே சிறார் துஸ்பிரயோகத்துக்கும் Child abuse க்கும் இடமளிக்க வேண்டியிருக்கும். அதாவது ஒன்று அல்லது இரண்டு தலைமுறை தன்னை விலைகொடுக்க வேண்டியிருக்கும். அப்பொழுதுதான் நாட்டை கொஞ்சமாவது மீட்டெடுக்க முடியும். இதைப் படிப்பதற்கோ இதைப்பற்றிக் கேட்பதற்கோ உங்களுக்குக் கடினமாக இருக்கலாம். ஆனால், வேறு வழியில்லை. இந்த நிலையை நாம் சந்தித்துத்தான் ஆக வேண்டும். இரண்டு தலைமுறைகள் நாட்டுக்காகத் தங்களைத் தியாகம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இரண்டு மூன்று தலைமுறை தவிர்க்க முடியாமல் இப்படித் தன்னைக் கொடுத்துத்தான் நாட்டை – மக்களை மீட்க முடியும். அடுத்து வரும் தலைமுறைகள் இதிலிருந்து மீள்வதற்காகக் கடினமாகப் போராட வேண்டியிருக்கும். சில வேளை இதுவே ஒரு பழக்கமாகி, வழக்கமாகி மேலும் தொடரவும் கூடும். அதாவது இந்தச் சீரழிவு மேலும் தொடரவும் கூடும். இலங்கையின் பண்பாடு இது என்பதாகியே விடவும் கூடும். தங்கத் தீவின் நிலவரம் இதுதான். இலங்கைத்தீவை வேறு விதமாக மீட்பதற்கு யாருமில்லை. உள்நாட்டிலும் யாருமில்லை. வெளியிலும் யாருமில்லை. அதாவது அதன் பிள்ளைகளுமில்லை. அதன் நண்பர்களுமில்லை. வீழ்ந்து கிடக்கும் நாட்டை மேலும் மேலும் கடன் பொறிக்குள் தள்ளவே அத்தனை சக்திகளும் முயற்சிக்கின்றன. வறுமைக்குள்ளான மக்களை வட்டிக் கம்பனிகள் வளைத்துப் பிடிப்பதைப்போலவே இன்றைய நிலை உள்ளது. மீட்பர்களில்லாத தேசமாகிவிட்டது இலங்கை. யாருடைய சொல்வழியும் கேளாத பிள்ளைகளை – மனிதர்களை – யாரும் பொருட்படுத்தாத ஒரு நிலை, ஒரு கட்டம் வருமல்லவா! அதைப்போன்ற நிலை – கட்டம்தான் இது. இதிலிருந்து மீள்வதாக இருந்தால் அது நம் அனைவருடைய கூட்டுப் பொறுப்பாகும். தனியே அரசாங்கத்தின் பொறுப்பென்று சொல்லி விட்டு வாழாதிருக்க முடியாது. அப்படிச் சொன்னாலும் அரசாங்கத்தினால் என்னதான் செய்து விட முடியும்? https://arangamnews.com/?p=8670
-
13 பற்றிய யதார்த்தம் February 1, 2023 — கருணாகரன் — முப்பத்தி ஆறு வருடங்களுக்குப் பிறகு 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்குத் தயார் என்று இலங்கை ஜனாதிபதி ஒருவர் (ரணில் விக்கிரமசிங்க) பகிரங்கமாகத் தெரிவித்திருக்கிறார். இதைக் குறித்த உரையாடல்கள் தீவிரமடைந்துள்ளன. “மாகாணசபைகளுக்கான அதிகாரத்தை வழங்கக் கூடாது. அப்படி வழங்கினால் அதைக் கடுமையாக எதிர்ப்போம்” என்று கூறுகிறது பிக்குகள் முன்னணி. இதே எதிர்ப்பை வெளியிட்டுள்ளன விமல் வீரவன்ச போன்றோரின் சிறிய சில இனவாதக் கட்சிகள். இதற்கு நிகராக மறுமுனையில் “மாகாணசபைகளுக்காகவா எங்களுடைய போராட்டமெல்லாம்?” என்று கேட்கின்றன அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் உள்ளிட்ட சில தமிழ் அரசியற் தரப்புகள். கூடவே புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற தமிழ் அமைப்பினர்களிற் சிலரும் “மேல்நிலை தமிழ் அரசியல் அபிப்பிராயவாதி”களும் இதே கேள்வியை எழுப்பியுள்ளனர். (இவர்களுடைய கற்பனைக்கு எல்லையே இல்லை. மாகாணசபையைத் தவிர்த்து வடக்குக் கிழக்கு மாகாணங்களை அல்லது இவர்கள் சொல்வதைப்போல தமிழர் தாயகத்தை எந்த அடிப்படையில் இணைத்து உரிமைகளைப் பெறுவது? அதில் முஸ்லிம் மக்களுக்கான இடமென்ன? அதற்கு அவர்களுடைய சம்மதம் உண்டா? நடைமுறைச் சாத்தியமான திட்டமும் தீர்வும் என்ன? என்பவை குறித்தெல்லாம் இந்தத் தரப்புகள் ஒரு போதுமே தெளிவாகப் பேசுவதில்லை. பதிலாக அதிதீவிர அரசியற் பிரகடனத்தை (தமிழீழம்) மட்டும் வசதியான நிலையில் இருந்து கொண்டு திருவாய் மலர்ந்தருள்கின்றன). ஆக தமிழ், சிங்களத் தரப்பிலுள்ள மிகச் சிறிய ஆதரவுத் தளத்தைக் கொண்டுள்ள சிறிய தரப்பினரே மாகாணசபை முறைமையை – அதற்கான அதிகாரங்களைக் குறித்து – தமது எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளியிட்டுள்ளன. இவை எப்போதும் இப்படித்தான். நடைமுறைச் சாத்தியமாகச் சிந்திப்பதில்லை. பிரச்சினைகள் தீர்வதை விரும்புவதில்லை. பிரச்சினைகளை வளர்த்தே தம்மை வாழ வைக்கின்றன. ஆனால், ஏனைய பெருங்கட்சிகள் அனைத்தும் இதற்கு ஆதரவாகவே உள்ளன. இதேவேளை ஜனாதிபதியின் இந்த அறிவிப்பைக் குறித்து இதுவரையில் முஸ்லிம் தரப்புகள் ஏதும் சொல்லவில்லை என்பது கவனத்திற்குரியது. அவை என்ன நிலைப்பாட்டை எடுக்கவுள்ள என்பது கேள்வியே! இவ்வளவு காலமும் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருந்தன. இலங்கை இந்திய உடன்படிக்கையில் கூறப்பட்ட சில அதிகாரங்களை 1990 இல் அன்றைய ஜனாதிபதி ஆர்.பிரேமதாச தந்திரோபாயமாக வெட்டியெடுத்திருந்தார். இதற்கு அவர் அப்பொழுது விடுதலைப் புலிகளையும் புலிகளுக்கு இணக்கமாக இருந்த ஈரோஸ் இயக்கத்தையும் பயன்படுத்தினார். மாகாணசபையைப் பலவீனப்படுத்தி, அதில் அப்பொழுது அதிகாரத்தில் இருந்த ஈ.பி.ஆர். எல்.எவ்வை அப்புறப்படுத்துவதற்கு புலிகள் விரும்பினர். இதை தமக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திப் பிரேமதாச வெற்றியடைந்தார். இதனால்தான் 1990 இல் வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபையை கலைத்தார் அ.வரதராஜாபெருமாள். இதனால்தான் மாகாணசபை முறைமை தொடர்ந்தும் நம்பிக்கையீனமாகவும் சர்ச்சைக்குரியதாகவும் நோக்கப்படுகிறது. இதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக அதற்குப் பிறகு ஆட்சியிலிருந்த அரசாங்கங்களும் அதிகாரத்திலிருந்த ஜனாதிபதிகளும் மாகாணசபையின் அதிகாரங்களை வழங்காமல் – நடைமுறைப்படுத்தாமல் இழுத்தடித்தே வந்தனர். போதாக்குறைக்கு ஜே.வி.பியின் மூலமாக இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபையை சட்டரீதியாகப் பிரித்தனர். ஆனாலும் 2009 இல் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பிறகு உருவான அரசியற் சூழலில் மாகாணசபையைத் தவிர, வேறு உடனடி மார்க்கம் ஏதுமில்லை என்ற யதார்த்தம் உருவானது. இதனால்தான் மாகாணசபைகளுக்கான அதிகாரத்தை முழுமையாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. இதை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸைத் தவிர்ந்த ஏனைய தமிழ்க்கட்சிகள் அனைத்தும் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. கடந்த ஆண்டு 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டு ஆறு தமிழ்க் கட்சிகள் இந்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தன. இதை விட தனித்தனியாகவும் ஏனைய தமிழ்க்கட்சிகள் இதை இந்தியாவிடமும் இலங்கை அரசிடத்திலும் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில்தான் இந்தியாவும் இந்தியாவின் வலியுறுத்தலின் அடிப்படையில் ஐ.நாவும் இவற்றின் அடிப்படையில் இப்பொழுது ரணில் விக்கிரமசிங்கவும் 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதைப் பற்றிப் பேசும் நிலை உருவாகியுள்ளது. அதாவது 13 ஐ நடைமுறைப்படுத்துவதற்கு மிகச் சாதகமான ஒரு சூழல் கனிந்து வந்துள்ளது என்பதை மனதிற் கொண்டே ரணில் விக்கிரமசிங்க கடந்த நவம்பரில் வரவு செலவுத்திட்ட உரையின்போது இனப்பிரச்சினைக்கு ஓராண்டுக்குள் தீர்வு காணப்படும் என்று நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார். இதில் அவர் ஓரளவுக்கு உறுதியாக இருப்பதாகவும் தெரிகிறது. அவருடைய நோக்கில் (சிங்களநோக்கு நிலையில்) இதற்கு மேலான அதிகாரத்தை வழங்குவதற்குப் பதிலாக 13 உடன் நின்றுவிடலாம் என்றும் யோசித்திருக்கக் கூடும். இதை விடவும் அதிகமான அனுகூலங்களை ரணில் விக்கிரமசிங்க தன்னுடைய அரசியல் நலனுக்காகவும் சிங்கள மேலாதிக்க நலனுக்காகவும் சிந்திக்கலாம். ஆனால், தமிழ் பேசும் சமூகங்களைப் பொறுத்து இதை அவை எப்படி அணுகப் போகின்றன? ஏனெனில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கரும் 13 ஐப் பற்றியே பேசியிருக்கிறார். மட்டுமல்ல, இந்த விடயம் உள்பட ஏனைய விடயங்களைப் பற்றிப் பேசுவதற்காகவும் ரணில் விக்கிரமசிங்கவை அழைத்திருக்கிறது இந்தியா. ஆக மொத்தத்தில் இப்பொழுது 13 ஐ நடைமுறைப்படுத்துவதே முதன்மையான விடயமாக மாறியுள்ளது. ஆனால், இதற்கு தமிழ்த் தரப்பில் இன்னொரு சிக்கலும் ஏற்பட்டுள்ளது. உள்ளுராட்சிமன்றங்களுக்கான தேர்தல் அறிவிப்பினால் ஏற்பட்டுள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வெளிப்படையான விரிசல் 13 நடைமுறைப்படுத்தும் நடவடிக்கை மற்றும் அதற்கான பேச்சுகளைப் பாதிக்கக் கூடிய நிலையே ஏற்பட்டுள்ளது. இதேவேளை ரணில் விக்கிரமசிங்க தான் அதிகாரத்துக்கு வந்த பின்னர் பல விதமான நல்லெண்ண சமிக்ஞைகளை வெளிப்படுத்தி வருகிறார். சுதந்திர தினத்தையொட்டி இன்னொரு தொகுதி அரசியற் கைதிகள் விடுவிக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை நீதிஅமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ அறிவிப்பார் என்று தெரிகிறது. கூடவே வலி வடக்கில் மேலும் ஒருதொகுதி நிலத்தை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் தமிழ்த் தேசியத் தரப்புகள் இதையிட்டெல்லாம் திருப்திப்பட்ட மாதிரித் தெரியவில்லை. இறுதியில் 13 உம் இல்லை. சமஸ்டியும் இல்லை. தமிழீழமும் இல்லை என்ற நிலைதான் வருமோதெரியாது. ஏனென்றால் 1987 இல் 13 ஐ வலுப்படுத்தக் கூடிய சூழல் இருந்தது. தமிழ்த்தரப்பில் காணப்பட்ட பிளவே (புலிகள் – ஈ.பி.ஆர்.எல்.எவ் + இந்திய அரசு) அது பலவீனமாகக்காரணமாகியது. இப்பொழுது அதே 13 ஐ பலப்படுத்துவது, நடைமுறைப்படுத்துவது என்று பேசுவதற்கே 36 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன. இடைப்பட்ட காலப்பகுதியில் கொடுக்கப்பட்ட விலை – இழப்புகள் கொஞ்சமல்ல. இந்த 36 ஆண்டு காலத்திலும் தமிழர்கள் பெற்றது எதுவும் இல்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் செய்த தியாகங்கள், நடத்திய போராட்டங்கள், சந்தித்த இழப்புகள் எல்லாவற்றுக்குப் பின்னும் 13 ஐ நடைமுறைப்படுத்துவது – அமுலாக்குவது என்றளவில்தான் பேச்சுகள் உள்ளன. இதற்கு அப்பால் செல்வதற்கு இந்தியாவோ பிற சர்வதேச சமூகமோ சிந்திப்பதாகவும் தெரியவில்லை. இந்த நிலையில் சோதனையாகவும் சாதனையாகவும் 13 வந்து முன்னே நிற்கிறது. எண் சோதிடத்தின்படி 13 என்பது அதிர்ஸ்டமற்ற எண் என்று சொல்வார்கள். தமிழர்களுக்கும் இலங்கைக்கும் அது என்ன மாதிரியான எண் என்பது வரலாற்றின் முடிவாகும். அப்படியான – அதற்கான ஒரு வரலாற்றுத் தருணம் இப்பொழுது வந்துள்ளது. யதார்த்தவாதிகள் 13 வரவேற்கிறார்கள். கற்பனாவாதிகள் எதிர்க்கிறார்கள். இனவாதிகள் எதிர்க்கிறார்கள். நியாயவாதிகள் ஆதரிக்கிறார்கள். இப்படியான ஒரு விசித்திரத்தின் முன்னே நிற்கும் 13 ஐப்பற்றிய உண்மையான நிலவரத்தை அடுத்து வரும் மாதங்களில் துலக்கமாக – நிர்ணயமாக அறிந்து கொள்ளலாம். ஆம், தமிழ் பேசும் மக்களுடைய எதிர்காலத்தையும்தான். https://arangamnews.com/?p=8637
-
பேச்சுக்கான முஸ்தீபு மும்முரம்? December 12, 2022 — கருணாகரன் — எதிர்பார்க்கப்பட்டதற்கும் மாறாக அடுத்த சில தினங்களில் அதிகாரப்பகிர்வுக்கான பேச்சுகள் நடப்பதற்கான சூழல் கனிந்துள்ளது போலிருக்கு. தமிழ்த் தரப்பிலும் இதற்கான கவனம் ஏற்பட்டுள்ளது. தமிழ்க் கட்சிகள் இதைப் பற்றிக் கூடிப் பேசுவது, பேச்சுகள் குறித்துப் பொதுவெளியில் உரையாடுவது, பொறிமுறைகளைப் பற்றிச் சிந்திப்பது என்று பச்சைக் கொடி காட்டியுள்ளன. ரெலோ இதில் இன்னும் முன்னுக்கு வந்து இந்தச் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. இது தொடர்பாக – பேச்சுக்கு செல்லும்போது நாம் ஒரு பொறிமுறையை வகுத்துக் கொள்ள வேண்டும் என்று ரெலோவின் பேச்சாளரான சுரேந்திரன் கேட்டுள்ளார். “ஐ.நா. விடயங்களில் மாத்திரமல்லாமல் அன்றாட விடயங்களிலும் தமிழ் மக்கள் எதிர்கொண்டிருக்கும் அவசர அவசியமான பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் நாங்கள் அக்கறையோடும் செயலாற்றுவோம். அறிக்கைகளைத் தாண்டி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற செயல் வடிவம் கொடுப்பதே அர்த்தமுள்ளதாக அமையும் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டவர்கள். தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்காக பல வழிகளிலும் போராடி வரும் வரலாற்றைக் கொண்ட எமது கட்சி தொடர்ந்தும் உறுதியுடன் பயணிக்கும் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம்” என்று சொல்லியுள்ளார். ஆனால், இந்தப் பேச்சுகள் எந்த அடிப்படையில் நடக்கும் என்பதைப் பற்றி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அனைத்துக் கட்சிகளுடனும் நடக்குமா? பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளுடன் நடக்குமா? அரசுக்கும் தமிழ் தரப்புக்கும் இடையில்தான் நடக்குமா?தமிழ்த் தரப்பினரோடு முஸ்லிம்களும் இணைத்துக் கொள்ளப்படுவரா? மலையகக் கட்சிகளுக்கான இடம் இதில் உண்டா? சிறுபான்மைத் தேசிய இனங்களுடைய பிரச்சினைக்கான தீர்வு என்ற அடிப்படையில் நடக்குமா? அல்லது பல்லினங்களைக் கொண்ட நாட்டுக்குரிய அடிப்படைகளைப் பேணி பன்மைத்துவ இலங்கை என்பதாக நடக்குமா? அல்லது இது பற்றிக் கேள்வி எழுப்பியுள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டிருப்பதைப்போல, “வடக்குக் கிழக்கு தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பானதா?” (இதில் அவர் வடக்குக் கிழக்கிலுள்ள முஸ்லிம்களைப் பற்றிக் குறிப்பிடவில்லை). “அல்லது புதியதோர் யாப்புத் தொடர்பானதா?” “அல்லது வடக்குக் கிழக்கு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பானதா?” (அன்றாடப் பிரச்சினைகளுக்கான பேச்சுகள் என்றால், அது இன்று நாடு முழுவதற்குமானதாகவே உள்ளது. முக்கியமாக பொருளாதார நெருக்கடி. இதைக் கடந்து வடக்குக் கிழக்குப் பிரச்சினை பிரத்தியேகமானது என்றால் இராணுவ நெருக்கடி, நில அபகரிப்பு, பௌத்த மயமாக்கல் போன்றவையாகும். இதற்குப் பெருமெடுப்பிலான பேச்சுகளை அரசாங்கம் இப்பொழுது முன்னெடுக்கும் என்றில்லை) என எதுவும் தெரியவில்லை. ஆனால், பேச்சுகள் நடக்கவுள்ளன. எந்த அடிப்படையில் பேச்சுகள் நடக்கும் என்று முற்கூட்டியே அறிவித்தால் அதையொட்டி ஆயிரம் பிரச்சினைகளை ஒவ்வொரு தரப்பும் கிளப்பக் கூடும். போதாக்குறைக்கு ஊடகங்கள் கண்டபாட்டுக்கு எழுதி சூழலைக் கெடுத்து விடக் கூடும். மேலும் பௌத்த பீடங்கள் உறங்கு நிலையிலிருந்து விழித்துக் கொண்டு சந்நதமாடலாம். எல்லாவற்றையும் விட சமாதானத்தின் எதிரிகளும் இனவாதிகளும் துள்ளிக் குதித்துக் கொண்டு வீதியில் இறங்கி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்யக் கூடும் என்று கருதி இதைப்பற்றி முற்கூட்டியே பகிரங்கமாகப் பேசாமல் விடலாம். ஆனாலும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்பதைப் பகிரங்கமாகப் பேசிய ஜனாதிபதி, அதற்கு எல்லோரும் தயாரா என்பதையும் கேட்டிருந்தார். இது அவர் சமாதானத்தின் மீது கொண்டுள்ள ஆர்வத்தையும் விருப்பத்தையும் காட்டுகிறதா? அல்லது இந்த இனப்பிரச்சினையை இதற்கு மேலும் தாங்க முடியாதடா ராமா என்று எண்ணினாரோ தெரியவில்லை. எப்படியோ, இந்த அறிவிப்பு வந்து ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்கு மேலாகிறது. இதுவரையில் எந்தப் பெரிய சலசலப்பையும் காணவில்லை. ஆகவே கொஞ்சம் வெளிப்படையாகப் பேச வேண்டிய விடயங்களை அரசாங்கம் பேசலாம். அல்லது பொறுத்திருந்து பேச்சு மேசையில்தான் பேசப் போவதாக இருந்தால், அதுதான் சரியென்று அரசாங்கம் கருதினால் நாமொன்றும் அதை மறுத்து முந்திரிக் கொட்டை போல அப்படி இப்படி ஒன்றும் சொல்லிக் கெடுக்கப்போவதில்லை. இருந்தாலும் இந்தப் பேச்சுகளைக் குறித்து (பேச்சுக்கான அறிவிப்பைக் குறித்து) சந்தேகத்தைக் கிளப்புவோர் பலவற்றையும் சொல்லிக் கொண்டேயிருப்பதையும் நாம் புறக்கணித்து விட முடியாது. ஏனென்றால் பலரும் கருதுவதைப்போல இந்தப் பேச்சுவார்த்தையும் காலத்தைக் கடத்தும் தந்திரோபாயமாக இருக்குமா? என்ற ஐயமும் ஒரு பக்கத்தில் உண்டு. ரணில் விக்கிரமசிங்கவின் அணுகுமுறை, அரசியற் தந்திரோபாயம், தற்போதைய சூழல் எல்லாம் அப்படிச் சிந்திக்க வைக்கிறது. ஏன் சிங்களத் தரப்பின் அரசியல் முதிர்ச்சியை எதிர்கொள்ளக் கூடிய நிலையில் தமிழ்த் தரப்பில் இன்னும் வளர்ச்சி இல்லை. ஒரு பழைய வாய்பாட்டை மட்டும் வைத்துக்கொண்டு, அதே பழைய பாணி அணுகுமுறையில் போய்ப் பேச்சுக் கதிரையில் குந்த வேண்டிய நிலைதான் உள்ளது. ஆனால், பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டிய வரலாற்றுச் சூழல் இது என்பதை பலரும் புரிந்துள்ளனர். இதில் ரணில் விக்கிரமசிங்கவும் அடங்குவார். வழமையான தந்திரோபாயங்களை இனிமேலும் தொடர முடியாது என்று உள்ளுணர்வு உணர்த்தலாம். அதற்காக பேச்சுவார்த்தையில் எடுத்ததற்கெல்லாம் சந்தேகப்படுவதோ பின்னிற்பதோ பொருத்தமானதில்லை. வரலாற்றுப் படிப்பினைகளை மனதில் கொள்வது வேறு. அதை எந்த அடிப்படையில் நோக்க வேண்டும் என்பது முக்கியமானது. இதன் அர்த்தம் கண்மூடித்தனமான நம்பிக்கையோடு பேச வேண்டும். விட்டுக் கொடுக்க வேண்டும் என்று அல்ல. ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் அனைவரும். இது போர்ச் சூழலோ போர் முடிந்த போதிருந்த சூழலோ இல்லை. போர்ச் சூழலில் புலிகள் (தமிழர் தரப்பும்)) பலமாக இருந்தனர். ஏறக்குறைய சமனிலையில் இருந்தனர். அந்தச் சூழல் வேறு. அதனால் அப்போதைய பேச்சுகளின் தன்மையும் வேறாகவே இருந்தது. அடிப்படைப் பிரச்சினை, தீர்வின் இலக்கு பொதுவாக இருந்தாலும் சூழலின் தன்மை வேறாக இருந்தது. போரின் முடிவுக்குப் பின்னர் புலிகள் தோற்கடிக்கப்பட்டு, அரசு வெற்றிபெற்று மேலெழும்பியிருந்த சூழல். ஆகவே அந்த மனநிலையிலிருந்தே (வெற்றிபெற்ற மனநிலை) பல விடயங்களும் அணுகப்பட்டன, கையாளப்பட்டன. போர்ப் பாதிப்புத் தொடர்பாக எழவேண்டிய, எழுந்திருந்த குற்றவுணர்ச்சியோ, பொறுப்புணர்ச்சியோ பெரிய அளவில் – அதிகார மட்டத்தில் ஏற்படவில்லை. அமைதி, சமாதானம், அன்பு, கருணை என்று போதனைகளைச் செய்யும் பௌத்தத் தரப்பும் இந்தப் பொறுப்பையும் கடப்பாட்டையும் உணர்ந்து செயற்படவில்லை. இதைப்போலவே மிஞ்சியுள்ள நிலைமை, யதார்த்தச் சூழல் போன்றவற்றைக் கவனத்திற் கொண்டு தமிழ்த் தரப்பும் செயலாற்றவில்லை. ஆனால், சிங்களத் தரப்பின் தவறும் தமிழ்த் தரப்பின் தவறுகளும் சமனிலையானவை அல்ல. தமிழ்ச் சூழலை யதார்த்தத்துக்கு வெளியே நிறுத்தியதில் புலம்பெயர் தரப்பில் ஒரு பகுதியினருக்கும் உண்டு. அவர்கள் வாழ்க –பிரச்சினையின் தாற்பரியத்துக்கு – யதார்த்தத்துக்கு வெளியே நின்று (கற்பனாவாத) அரசியலைச் சிந்திப்பதன் வெளிப்பாடு அது. எது எப்படியோ இன்னும் நாம் எதையும் சுழித்து விளையாடலாம் என்றில்லை. அது இனப்பிரச்சினைக்கான தீர்வாக இருக்கலாம். பொருளாதார நெருக்கடியாக இருக்கலாம். ஊழல் முறைகேடுகளாக இருக்கலாம். இவை எதற்கும் தீர்வைக் காணாமல் காலத்தை இழுத்தடிக்கலாம் என்று கருதிச் செயற்பட்டால் அதன் விளைவு மிக மோசமானதாகவே இருக்கும். அப்படி இழுத்தடிப்புச் செய்து சுத்து மாத்துக் காட்டியதன் விளைவையே நாடு இன்று சந்தித்துக் கொண்டிருக்கிறது. இன்று ஒவ்வொரு குடிமக்களுடைய தோளிலும் நெருக்கடிச் சுமை ஏறியுள்ளது. தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள், மலையக மக்கள், பிற இனத்தவர் என்ற எந்தப் பேதமும் இல்லாமல் அனைவரும் சுமக்க முடியாத சுமைகளைச் சுமந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய இந்தச் சுமையேற்றத்துக்கு தனியே சில அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் மட்டும் காரணமில்லை. மக்களாகிய நாமும்தான் காரணம். நம்முடைய அசமந்தத்தனமும் கண்மூடித்தனமாக செயற்பாடுகளும் காரணம். நாம் தெரிவு செய்த பிரதிநிதிகள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்கள் என்ற அதீத நம்பிக்கையினால் அவர்கள் எடுத்த, எடுக்கின்ற தீர்மானங்கள் –முடிவுகள், அவர்களுடைய அணுகுமுறைகள் எதைப்பற்றியும் நாம் கேள்வி கேட்கவில்லை. இதனால் தவறுகள் வளர்ந்து பெருத்தன. அது வளர்ந்து இன்று நம்முடைய கழுத்தைப் பிடித்து இறுக்குகின்றன. இன்று நாடு உலக வங்கி, ஐ.நா. அனைத்துலக சமூகம் என அனைவரிடத்திலும் கையேந்தி நிற்கிறோம். வளமான ஒரு நாட்டை நம்முடைய கையில் வைத்துக் கொண்டு பிச்சைப் பாத்திரம் ஏந்துகிறோம். ஒரு அழகிய, சிறிய நாட்டில், இரண்டு மொழியைப் பேசுகின்ற நான்கைந்து இனத்தைச் சேர்ந்த மக்களாகிய நாம் ஒற்றுமையாக நின்று செயலாற்ற முடியாமல் உள்ளோம். ஆளாளுக்குப் பழியைச் சுமத்திக் கொள்ளும் பழங்குடிச் சமூக மனநிலையில் உள்ளோம். காற்சட்டை அணிந்து அதி நவீன கணினியையும் கைத் தொலைபேசியையும் நம் கையில் வைத்திருப்பதால் மட்டும் நாம் நவீனமடைந்து விட்டோம் என்று அர்த்தமல்ல. நம்முடைய சிந்தனை முறையினால், நடைமுறைகளால், எண்ணங்களால், செயற்பாடுகளில், நாம் உண்டாக்குகின்ற விளைவுகளால், நம்முடைய அணுகுமுறைகளால், சவால்களை எதிர்கொள்ளும் முறையினால், பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளும் விதத்தினால், அவற்றைத் தீர்க்கும் வழிகளால், சிந்தனையினால் நாம் நவீனமானவர்களாக இருக்க வேண்டும். நவீனத்தின் முக்கியமான அடிப்படை பன்மைத்துவமும் ஜனநாயகமுமாகும். இதை மறுக்கும்தோறும் நாம் பழங்குடி மனநிலையுடையோராகவும் பழங்குடிச் சமூகத்தினராகவுமே இருப்போம். இன்றைய இலங்கை மக்களில் எண்பது வீதமானோர் அப்படித்தான் உள்ளனர். இதனால்தான் இனவாதக் கட்சிகள் வெற்றிவாக சூடுகின்றன. சாதியம் அப்படியே பேணப்படுகிறது. நீதிபதிகளே நீதி மன்றத்துக்கு வெளியே தங்கள் வீடுகளிலும் வாழ்விலும் சாதியத்தையும் இனவாதத்தையும் தாராளமாகப் பேணுகிறார்கள் என்றால்…இதை விட வேறு என்ன சான்று வேண்டும்? நீதிபதிகள் மட்டுமல்ல, ஆசிரியர்கள், கல்விப்புலத்தினர், ஆன்மிகத்துறையில் இயங்குவோர், மதகுருக்கள் எனப் பல தரப்பினரும் இனவாதிகளாகவும் சாதியவாதிகளாகவும் மதவாதிகளாகவும்தானே உள்ளனர். இந்த மாதிரி வாத நோய்களைக் கொண்டிருப்போர் பழங்குடி மனநிலையின் பிரதிநிதிகளேயாவர். பழங்குடி மனநிலை என்பது எப்போதும் பிறரை எதிர்ப்பதிலும் பிறரைக் குறித்து சந்தேகப்படுவதுமாகவே இருக்கும். ஆனால், இதையெல்லாம் கடந்து விடுமாறு வரலாறு நம்மை நிர்ப்பந்திக்கிறது. ஏனென்றால் வரலாறு நிகழ்ந்து கொண்டிருப்பது நவீனத்துவத்தின் காலத்தில். உலகம் இயங்குவதும் நவீனத்துவத்தின் காலத்தில்தான். ஆகவே அது அதன் அடிப்படையிலேயே நிபந்தனைகளை விதிக்கும். அதற்கு மாறாக நாம் சிந்தித்தால், செயற்பட்டால் நம்மைத் தூக்கி எறிந்து விடும். அதனுடைய சுழற்சி அப்படியானது. இப்பொழுது கூட நாம் இவற்றையெல்லாம் புரிந்து கொள்ளத் தவறினால் தண்டனைகளை அனுபவித்தே தீர வேண்டும். இதை இலங்கையர்கள் ஒவ்வொருவரும் தெளிவாகப் புரிந்து கொள்வது அவசியம். இப்பொழுது நம்முன்னே உள்ள தெரிவுகள் இரண்டுதான். பிரச்சினையை வளர்க்கப்போகிறோமா? தீர்க்கப்போகிறோமா என்பதேயாகும். பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள். விரும்புகிறார்கள். ஆனால் பிரச்சினையை வளர்க்க வேண்டும் என்றே அரசியற் தரப்பினர் சிந்தித்தனர். செயற்பட்டனர். இந்த இடைவெளி நிகழ்ந்து கொண்டே இருந்தது. இனி இப்படி நிகழ முடியாது. இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக மக்கள் விழிப்படைய வேண்டிய சூழல் – காலகட்டம் இது. இலங்கையர்களாக நாம் மகிழ்ந்திருக்கப் போகிறோமா? அல்லது முரண்பாடுகளை வளர்த்து, உள் நாட்டில் நீதியை மறுத்து, பிறருக்கு அடிமையாக இருக்கப்போகிறோமா? என்ற கேள்வியை நாம் கேட்டுக் கொள்ள வேணும். சகோதரர்களுக்கு நீதியை மறுத்து விட்டு அந்நியருக்கு அடிமையாக இருப்பது எவ்வளவு முட்டாள்தனமாகும்? அதை விட முட்டாள் தனமானது சகோதர்கள் அடிபட்டுக் கொண்டிருப்பதாகும். இந்தப் பேச்சுவார்த்தையை ஆக்கபூர்வமானதாக முன்னெடுத்து அர்த்தபூர்வமானதாக்குவதற்கு முயற்சிப்போம். https://arangamnews.com/?p=8383
-
போருக்கு பிந்திய அரசியல் என்றால் என்ன? December 6, 2022 ~ கருணாகரன் ~ “போருக்குப் பிந்திய அரசியல் என்று சொல்கிறீர்களே! அது என்ன? அதை எப்படி முன்னெடுப்பது?” என்று என்னுடைய கடந்த வாரங்களில் வெளிவந்த கட்டுரைகளைப் படித்தவர்கள் கேட்கின்றனர். இப்படிக் கேள்வி எழுந்திருப்பதே மகிழ்ச்சிக்குரியது. அதாவது சிலராவது சிந்திக்கத் தயாராக உள்ளனர் என்ற மகிழ்ச்சி. அது என்ன என்று பார்க்க முன், வரலாற்றுப் போக்கில் நிகழ்ந்த சில முன்னுதாரணங்களைப் பார்க்க வேண்டும். அரசியற் சரிகளும் தவறுகளும் வரலாற்றைத் தீர்மானிப்பதில் முக்கியமான பங்கை அளிப்பதால் அதைக்குறித்து பார்க்க வேண்டியது அவசியமாகிறது. 1970 இன் அரசியல் தவறு உண்டாக்கிய விளைவு: 1970 களில் அன்றைய தமிழரசுக்கட்சி – தமிழர் விடுதலைக்கூட்டணி காலப் பொருத்தமற்ற அரசியலையே முன்னெடுத்தது. அன்றைய நிலவரத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு செயற்பட விளையாத காரணத்தினால் தமிழ் மக்களும் அரசியல் நெருக்கடிக்குள்ளாகினர். அந்தக் கட்சியினரும் பின்னர் பெரும் விலையைக் கொடுக்க வேண்டியிருந்தது. அன்று நிலவிய பலவீனம், செயலின்மை, ஏமாற்று நாடகம் போன்றவற்றை அம்பலப்படுத்திய இளைஞர்கள் “சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள்”, “திருவிழா” போன்ற நாடகங்களை மக்கள் மத்தியில் நடத்தினர். இது ஏறக்குறைய இன்றைய நிலைக்கு ஒப்பானது. எப்படியென்றால், அன்றைய சூழலுக்குப் பொருத்தமில்லாத அரசியலை அன்றைய தமிழ்த் தலைமைகள் முன்னெடுத்தபடியால் அதை அன்றைய இளைஞர்கள் எதிர்த்தனர். விமர்சித்தனர். புதிய வழியைக் காண முற்பட்டனர். அதன் விளைவே அந்த நாடகங்கள். அன்றைய இளைஞர் இயக்கங்கள், அமைப்புகள், செயற்பாடுகள், வெளியீடுகள்…எல்லாம். தமிழ்த் தரப்பு மட்டும் அன்று தவறான அரசியலை முன்னெடுக்கவில்லை. சிங்களத் தரப்பும் தவறான – காலப் பொருத்தமற்ற அரசியலையே முன்னெடுத்தது. அதன் விளைவே அடுத்து வந்த காலம் யுத்தத்தில் அழிய வேண்டியதாகியது. அதாவது, 1960, 1970 களின் அரசியலை இலங்கைச் சமூகங்களும் அவற்றின் அரசியற் தலைமைகளும் சரியாக முன்னெடுத்திருந்தால் நாட்டில் போரே உருவாகியிருக்காது. அழிவு ஏற்பட்டிருக்காது. இன்றைய நெருக்கடிகள் எதுவும் இருந்திருக்காது. போருக்குப் பிந்திய சூழல் இதிலிருந்து பாடங்களைப் படித்துக் கொள்ளாமலே இலங்கைச் சமூகங்கள் உள்ளன. இப்பொழுது 1970 களில் இருந்த நிலையே இலங்கைச் சமூகங்களுக்கிடையில் உள்ளது. அதையும் விட மோசமான நிலையில் உள்ளது என்றே சொல்ல வேண்டும். 70 களில் தமிழ் – முஸ்லிம் உறவு நல்ல நிலையில் இருந்தது. இப்போது அது கெட்டுப்போயிருக்கிறது. அத்தனை சமூகங்களும் இன்னும் தவறான வகையில் போருக்கு முந்திய – போர்க்கால அரசியலைக் கலந்து செய்து கொண்டிருக்கின்றன. இது காலப் பொருத்தமற்றது. என்பதால்தான் போர் முடிந்த பின்னும் அரசியல் தீர்வை எட்ட முடியவில்லை. அமைதியையும் சமாதானத்தையும் உருவாக்க முடியவில்லை. நாட்டைக் கட்டியெழுப்ப முடியவில்லை. அரசியல் உறுதிப்பாட்டை உருவாக்க முடியவில்லை. பாதிக்கப்பட்ட மக்களை மீள் நிலைப்படுத்த முடியவில்லை. சமூகங்களை ஒருங்கிணைக்க முடியவில்லை. ஒவ்வொரு சமூகமும் தம்மை ஸ்திரப்படுத்திக் கொள்ளவும் முடியவில்லை. பொருளாதார வளர்ச்சியைக் காண முடியவில்லை. வெளியாரின் அதிகரித்த தலையீடுகளைத் தடுக்க முடியவில்லை. நாட்டின் சுயாதீனத்தையும் சமூகங்களின் சுயாதீனத்தையும் தனியாட்களின் சுயாதீனத்தையும் பேண முடியவில்லை. இது தொடருமானால் இலங்கை இப்போதுள்ளதையும் விடப் பெரும் பாதிப்பையும் பேரழிவையுமே சந்திக்க வேண்டியிருக்கும். ஏற்கனவே விடப்பட்ட அரசியற் தவறுகளே நாம் சந்தித்த, சந்தித்துக் கொண்டிருக்கின்ற பாதக விளைவுகள். அதைப்போல இப்பொழுதும் இனியும் அரசியற் தவறுகளைச் செய்வோமாக இருந்தால், அதற்கான விளைவுகள் – தண்டனை மிகப் பெரியதாகவே இருக்கும். இதனால்தான் போருக்குப் பிந்திய அரசியலைப் பற்றி நாம் பேசவும் அதைக்குறித்துச் சிந்திக்கவும் வேண்டும் என்கிறோம். கட்டாயமாக அதை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டியுள்ளது. சரி, போருக்குப் பிந்திய அரசியல் என்றால் என்ன? 1. போர் உண்டாக்கிய இழப்புகள், அழிவுகள், பின்னடைவுகள், பிளவுகள், உள நெருக்கடிகள், நீதி மறுப்புகள், நம்பிக்கையின்மைகள், அலைச்சல்கள் போன்றவற்றிலிருந்து மீள்வதாகும். இதைச் சற்று விரிவாகப் பார்க்க வேண்டும். போரினால் நாடு முற்றாகவே பாதிக்கப்பட்டது. அழிவிற்குள்ளாகியது. இதை இன்னும் நேரடியாகச் சொன்னால், போரானது மக்களை பாதிப்புக்குள்ளாக்கியது. பொருளாதாரத்தை முடக்கியது. இயற்கை வளத்தை அழித்தது. நாட்டின் சிறப்பு வளங்களில் ஒன்றாகிய இளைய தலைமுறையில் பாதியை யுத்தத்தில் முடக்கியது. யுத்தப்பசி அவர்களைப் பலியெடுத்தது. இந்த அழிவு பன்முகமுடையது. உடல், உளப் பாதிப்பு. தொழில் பாதிப்பு – இழப்பு. உடமைகள் பாதிப்பு – அழிவு. உயிரிழப்பு – உறவுகள் இழப்பு…. இப்படிப் பலவகையில். ஆகவே இதை மீள் நிரப்புச் செய்ய வேண்டும். அல்லது மீள்நிலைப்படுத்த வேண்டும். சரி செய்ய வேண்டும். மீள்நிலைப்படுத்துவது மட்டுமல்ல, இயல்பான வளர்ச்சியை எட்டியிருக்க வேண்டிய நிலை வரை முன்னேறியிருக்க வேண்டும். இதற்கு மக்களிடம் உரிய விவரங்கள் திரட்டப்பட வேண்டும். நிகழ்ந்தது அரசு – அதிகாரிகள் மட்டத்திலான திட்டத்தயாரிப்புகளும் நடைமுறைப்படுத்தல்களுமே. உதாரணமாக மீள் குடியேற்றம். அதை அன்றிருந்த மீள்குடியேற்ற அமைச்சும் பகுதி அளவில் புனர்வாழ்வு அமைச்சும் மேற்கொண்டன. இரண்டும் போரின் விளைவு உண்டாக்கிய அமைச்சுகளாகும். அதாவது போர் உண்டாக்கிய அழிவுகளையும் இழப்புகளையும் சீராக்கம் செய்வதற்கான அமைச்சுகள். ஆனால் அந்த இரண்டு அமைச்சுகளும் போர்ப்பாதிப்புகள் செறிவாக நிகழ்ந்த வடக்குக் கிழக்கில் பிராந்தியப் பணியகங்களைக் கூடக் கொண்டிருக்கவில்லை. மட்டுமல்ல, மீள்நிலைப்படுதல் என்றால் என்ன என்பதைச் சரியாகப் புரிந்து கொண்டு செயற்படவில்லை. மீள் நிலைப்படுதல் வேறு. மீள் நிலைப்படுத்தல் என்பது வேறு. மீள்நிலைப்படுதல் என்பது மக்கள் தாமாக, இயல்பான அடிப்படையில் மீள்நிலைப்படுதலாகும். அதற்கு ஏற்ற வகையில் அரசும் அரசாங்கத்துடன் இணைந்து அரசு சாராத தரப்புகளும் மக்களுக்கான ஆதாரத்தையும் ஊக்கத்தையும் வழங்கியிருக்க வேண்டும். அந்த ஆதாரத்தை ஊட்டமாகக் கொண்டு மக்கள் மீள்நிலையடைந்திருப்பர். மீள்நிலைப்படுத்தல் என்பது மேல் மட்டத்திலிருந்து தீர்மானித்து நடைமுறைப்படுத்தும் ஒரு அரசியல் – நிர்வாக நடவடிக்கை. மக்களுடைய இயலும் தன்மை, அவர்களுடைய பிரச்சினைகள், சூழலின் தன்மை போன்றவற்றையெல்லாம் தமது மேற்கண்கொண்டு பார்த்து, விளங்கி நடைமுறைப்படுத்தும் அதிகாரத்துவ நிலையாகும். இதில் தோல்வியே ஏற்பட்டுள்ளது. என்பதால்தான் மீள்குடியேறிய மக்கள் நுண்கடன் பொறி உள்பட பாரிய பொருளாதார நெருக்கடிக்குள்ளாகினர். பலர் தற்கொலை செய்யும் நிலை ஏற்பட்டது. இன்னும் மீள் குடியேறிய மக்கள் மிகச் சாதாரண வாழ்க்கைக்கே திரும்பமுடியவில்லை. உடல் உறுப்புகளை இழந்தோர், காணாமல் போனார், உள நெருக்கடிக்குள்ளானோர் பிரச்சினை எல்லாம் அப்படியே கொதி நிலையில் தீர்க்கப்படாமல் நீண்டு கொண்டிருக்கின்றன. மீள்குடியேற்றக் கிராமங்கள் – பிரதேசங்கள் சீரான வளர்ச்சியைப் பெறவில்லை. இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. மீள் குடியேற்றம், மீள் நிலை என்பது என்ன? இயல்பு நிலையாகுதல் அல்லவா! யுத்தம் முடிந்து 14 ஆண்டுகளாகிறது. இந்தப் பதின்னான்கு ஆண்டுகளில் மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டனர் என்று அரசாங்கமோ, அதிகாரிகளோ, எந்த அரசியற் தலைவர்களோ, அரசியற் கட்சிகளோ பதில் அளிக்கத் தயாரா? முடியாது. ஏனென்றால், மக்களுடைய தேவைகள், பிரச்சினைகள் என்ன என்று இவை அறியவில்லை. அதை அறிந்திருக்க வேண்டும். பாதிப்புகள் மக்களிடமிருந்து மதிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அதற்குரிய தீர்வுகள் என்ன என்று அவர்களுடன் இணைந்து கண்டறியப்பட்டிருக்க வேண்டும். இதற்கான பொறிமுறை, வழிமுறை, அணுகுமுறை, செயன்முறைகளை உருவாக்குவது எனத் தொடர் செயற்பாடு அவசியம். இதைக்குறித்து இந்தக் கட்டுரையாளர் உள்படச் சிலர் தொடர்ச்சியாக எழுதியும் பொது அரங்கில் பேசியும் வந்தனர். இருந்தும் அவை கவனத்திற் கொள்ளப்படவில்லை. விளைவு நெருக்கடி அப்படியே உள்ளது. மேற்கொள்ளப்பட்ட பல திட்டங்கள் தோல்விகண்டுள்ளன. மக்களின் வாழ்க்கை பாதிப்படைந்த நிலையிலேயே உள்ளது. இதற்குத் தீர்வு? இதை முன்னெடுத்துச் செல்லக்கூடிய அணிகளையும் அரசியற் சக்திகளையும் கண்டு, அவற்றை வலுப்படுத்துவதாகும். கூடவே அவற்றை ஒருங்கிணைப்பது. அல்லது பொருத்தமான புதிய சக்திகளை உருவாக்குவது. ஏற்கனவே உள்ள அரசியற் சக்திகள் புதிய நிலைமைக்கு ஏற்றவாறு தம்மைத் மாற்றித் தகவமைத்துக் கொள்ளவில்லை என்றால் பதிலாகப் புதிய சக்திகளை உருவாக்குவதைப்பற்றிச் சிந்திக்க வேண்டும். இது மிகமிகக் கடினமான ஒரு அக -புறப் பிரச்சினைதான். ஆனாலும் இதைச் செய்வது அன்றைய நிலையில் அவசியமானது என்பதால் எப்படியாவது இதை நிறைவேற்றியே தீர வேண்டும். இதன் மூலம் முதலாவது கட்டம் நிறைவேற்றப்படும். 2. போருக்கு முந்திய அரசியல் அனுபவங்களையும் போர்க்கால அரசியல் அனுபவத்தையும் கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் உளத்தில் கொண்டு போருக்குப் பிந்திய நிகழ்காலத்தை – அரசியல் வழிமுறைகளை மதிப்பீடு செய்ய வேண்டும். இதில் கிடைக்கும் அனுபவ அறிவு, புதிய சிந்தனை, உலகளாவிய பட்டறிவு போன்றவற்றை இணைத்து நமக்குப் பொருத்தமான வழிமுறைகளை உருவாக்க வேண்டும். அதன் மூலமாகத் தீர்வுகளைக் கண்டறிவது. இலக்கை எட்டுவது. எட்டப்பட வேண்டிய இலக்கு, அதற்குரிய முறைமை, அதற்கான தந்திரோபாயம், அதற்கான செயற்பாட்டு வடிவம், அதை முன்னெடுக்கும் தரப்புகள், அவற்றை வலுவாக்கம் செய்தல் என அனைத்தும் வகுக்கப்பட வேண்டும். இதுவும் நமது சிதறிய அரசியல் ஒழுங்குச் சூழலில் கடினமான – சவாலான ஒரு காரியமே. ஆனாலும் செய்தே ஆக வேண்டும். நோய் தீர வேண்டும் என்றால் மருந்தை உட்கொண்டே ஆக வேண்டும். மருத்துவம் செய்தே ஆக வேண்டும். முக்கியமாக இலங்கை ஒரு பல்லின நாடு என்ற வகையில் அரசியலமைப்பை வலுவாக்கம் செய்ய வேண்டும். பல்லின நாடு என்ற வகையில் பன்மைத்துவத்துக்குரிய அடிப்படைகள் பேணப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அப்படியில்லாமல் சிங்கள பௌத்த நாடு அல்லது சிங்களத்துக்கும் பௌத்தத்துக்கும் முன்னுரிமை என்றால் – சிங்களத்துக்கும் பௌத்தத்துக்கும் மட்டுமல்ல, நாடே பின்னுக்குத் தள்ளப்பட்டு விடும். அதுதான் நடந்தது. இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. என்பதால் உடனடியாகவே இலங்கை ஒரு பல்லின நாடு. பன்மைப்பண்பாட்டைக் கொண்ட தேசம் என்ற வகையில் அனைவருக்குமான ஜனநாயக – சமத்துவத்தை அல்லது சமத்துவ ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும். அதை உறுதிப்படுத்த வேண்டும். இதற்கான புரிதலை ஏற்படுத்த வேண்டும். இதற்குரிய வகையில் அரசியலமைப்புத்திருத்தம் செய்யப்பட வேண்டும். அந்தத் திருத்தத்தை இதையே சர்வதேச சமூகமும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. அடுத்தது, நீதி வழங்கப்படுதலாகும். போர்ப்பாதிப்புகள், யுத்தத்தின்போது நிகழ்ந்தவை பற்றிய நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டாலே நீதியை வழங்க முடியும். நீதி வழங்குதல் என்பது நீதியாக நடப்பதில் உருவாகுவது. இதைச் செய்தால், இதற்குத் துணிவு கொண்டால் பல பிரச்சினைகள் தீர்ந்து விடும். ஆனால், இது மிகச் சவாலான விடயம். நீதி என்பது எல்லோருக்கும் பொதுவானது என்று கூறப்பட்டாலும் நடைமுறையில் ஆளாளுக்குத் தரப்புக்குத் தரப்பு வேறு விதமான கண்ணோட்டத்தையும் புரிதலையும் கொண்டதாகும். திருப்தி, திருப்தியின்மை, நிறைவு – நிறைவின்மை இதனால்தான் ஏற்படுவது. ஆகவே இங்கே அரசு வழங்கும் நீதியானது அல்லது நீதியின் அளவானது பாதிக்கப்பட்டோருக்குத் திருப்தியளிக்கக் கூடியதா, அவர்களுக்குப் போதுமானதா? என்று கவனிக்கப்பட வேண்டும். இதற்குரிய வழியை – இணக்கத்தை தமிழ்த்தரப்பினரும் கொள்ள வேண்டும். அதாவது பிரச்சினையை வளர்க்கப்போகிறோமா? தீர்க்கப்போகிறோமா என்ற அடிப்படையில் நோக்கிச் செயற்பட வேண்டும். அடுத்தது, தீர்வு யோசனைகள், தீர்வுக்கான கோரிக்கைகள் பற்றியது. கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையிலும் உள்நாட்டு நிலமையிலும் பிராந்திய, சர்வதேசச் சூழலிலும் எத்தகைய தீர்வு சாத்தியம் என்ற புரிதலைக் கொள்ளுதல். நமது விருப்பங்களும் தேவைகளும் பலவாக இருக்கும். அவற்றின் விரிவெல்லையும் அதிகமாக இருக்கும். ஆனால், அவற்றை எட்டுவதெப்படி? எவை சாத்தியம்? என்ற புரிதல் வேண்டும். இல்லையென்றால், இலக்கை எட்டவே முடியாது. இதில் அரசாங்கமும் சிங்களக் கட்சிகளும் தீர்வுக்கான அவசியம், அதை எட்டுவதற்கான வழிமுறைகள், அதில் வழங்கப்பட வேண்டிய நீதி என்பவற்றைத் தெளிவாகச் சிந்திப்பது கட்டாயமாகும். இது வரலாற்றின் நிபந்தனை. இல்லையெனில் இன்னும் நாடு பொருளாதார ரீதியில் பின்னடையும். அந்நிய சக்திகளின் ஆதிக்கத்தில் – பிடியில் சிக்கும். இதைத் தவிர்த்து, இலங்கையர்களாக நாம் மகிழ்ந்திருக்கப்போகிறோமா? அல்லது முரண்பாடுகளை வளர்த்து, உள் நாட்டில் நீதியை மறுத்து, பிறருக்கு அடிமையாக இருக்கப்போகிறோமா? என்று சிந்திக்க வேண்டும். சகோதரர்களுக்கு நீதியை மறுத்து விட்டு அந்நியருக்கு அடிமையாக இருப்பது எவ்வளவு முட்டாள்தனமாகும். இன்றைய சூழலில் இதைக்குறித்த தெளிவான உரையாடல்கள் அவசியம். அந்த உரையாடல்கள் பரஸ்பரத்தன்மையுடையனவாக இருக்க வேண்டுமே தவிர, பட்டிமன்ற வாதங்களாக அமையக் கூடாது. பாராளுமன்ற உரைகள் கூட குற்றம் சாட்டும் உரைகளாகவோ சவால் விடுக்கும் உரைகளாகவோ அமையக் கூடாது. அவை விழிப்புணர்வை ஊட்டக்கூடிய, பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணும் வழிகளைக் கொண்டவையாக, நியாயங்களை உரிய முறையில் எடுத்துரைப்பவையாக, அறிவுபூர்வமானதாக இருக்க வேண்டும். முக்கியமாக அறிவுபூர்வமானதாக என்பதைக் கவனிக்க வேண்டும். ஏனென்றால் அறிவு என்பது சர்வதேசத் தன்மை வாய்ந்த ஒன்றாகும். அது எங்கே நின்று நோக்கினும் ஒரே பெறுமதியைக் கொடுப்பது. இலங்கையில் இது நிகழ வேண்டும் என்ற வகையில்தான் யுத்தம் முடிந்த கையோடு 2010 தொடக்கம் இன்று வரை சர்வதேச சமூகமானது, ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள், அரசியற் தரப்பினர், பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்தோர், சமூகச் செயற்பாட்டாளர்கள் போன்றோருக்கு இதைக்குறித்துப் பகிரங்கமாக அறிவுரைத்தது. முரண்பாடுகள் தீர்க்கப்படாமையினால் போர் உருவாகியது. போர் நிறுத்தப்படாமையினால் பேரழிவு நிகழ்ந்தது. போர்க்குற்றங்களும் உருவாகின. துயரமும் அலைவும் உண்டாகியது என்றெல்லாம் விளக்கமளிக்கப்பட்டது. ஆனால், எல்லாவற்றிலும் பங்குபற்றியோர் உண்டு களித்து கொண்டாடியதேயன்றி, உரைத்ததை எடுத்ததாக இல்லை. இதுதான் வரலாற்றின் துயரமும் சர்வதேச சமூகத்தின் ஏமாற்றமுமாகும். அரசியல்வாதிகளையும் விட பிற தரப்பினர் (ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள், பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்தோர், சமூகச் செயற்பாட்டாளர்கள்) மோசமாகச் செயற்படுகின்றனர் என ஒரு தடவை வெளிநாட்டுப் பிரதிநிதியொருவர் கவலையோடு சொன்னார். ஆகவே எதற்கும் இந்த இரண்டைப்பற்றியும் ஒரு தெளிவான வரைபை முதலில் உருவாக்க வேண்டும். இதற்கு கள யதார்த்தத்தைத் தெரிந்தவர்கள், சிந்தனையாளர்கள், அரசியல் அறிஞர்கள், சமூகச் செயற்பாட்டியக்கத்தினர், பெண் ஆளுமைகள், இளைய தலைமுறையைச் சேர்ந்த பிரதிநிதிகள், புலம்பெயர் தேசத்தில் மாற்று அரசியல் பிரக்ஞையோடு உள்ளவர்கள் என பல்வேறு ஆளுமைத் தரப்புகளை ஒரு கட்டமைப்பாக உருவாக்கம் கொள்ளுவது அவசியம். அப்படி இருக்கும்போதுதான் ஒரு விரிவான அறிதலையும் திட்டத்தையும் உருவாக்க முடியும். https://arangamnews.com/?p=8360
-
ஆசிய அதிசயத்தின் சர்வரோக நிவாரணி என்ன? November 10, 2022 — கருணாகரன் — “ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி உட்பட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிட்டிவிடும்” என்று எதிர்க்கட்சிகள் சொல்கின்றன. எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் என்று சொல்லப்படுவோராலும் அப்படித்தான் கூறப்படுகிறது. ஏறக்குறைய இது ஒரு பொது நம்பிக்கையாகவே வளர்க்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணமும் உண்டு. ராஜபக்ஸக்கள் நேரடியாகப் பதவியிலிருந்து நீக்கப்பட்டாலும் அவர்களுடைய அதிகாரப் பிடியிலிருந்து ஆட்சி மாறவில்லை. இன்னும் பொதுஜன பெரமுனவே ஆட்சியில் செல்வாக்குச் செலுத்துகிறது. அதாவது ராஜபக்ஸவினரே நிழல் ஆட்சி செய்கின்றனர். ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக இருந்தாலும் அவரால் பொதுஜன பெரமுனவை –ராஜபக்ஸக்களை- க் கடந்து சுயாதீனமாக எந்தத் தீர்மானத்தையும் எடுக்க முடியாத சூழலே நிலவுகிறது. இதனால்தான் அமைச்சரவையிலும் அரசியல் தீர்மானங்களிலும் பொதுஜன பெரமுனவின் செல்வாக்குத் தொடர்கிறது. ரணில் விக்கிரமசிங்க தட்டாமல் முட்டாமல் ஒருவாறு சாதுரியமாக – கெட்டித்தனமாக ஆட்சியைக் கொண்டு போகிறார் என்பது உண்மையே. இது எப்போது, எங்கே முட்டும் என்று சொல்ல முடியாது. “நித்திய கண்டம், தீர்க்க ஆயுள்” என்று சொல்வார்களே, அதைப்போல இந்த ஆட்சிக்கு எப்பொழுது, என்ன நடக்கும் என்று தெரியாமல் தத்தளிக்கும் நிலையே உண்டு. இதை மீறிச் செயற்படக் கூடிய பலம் இன்னும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உருவாகவில்லை. பொதுஜன பெரமுனவைக் கட்டுப்படுத்துவதற்கே அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க முயற்சித்தார். ஆனால் அது சாத்தியமற்றுப் போனது. இவ்வாறான சூழலில்தான் “உடனடியாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்” என்று ஆளும் தரப்பைத் தவிர, அனைத்துக் கட்சிகளும் கூட்டாகக் கேட்கின்றன. அதாவது இனி நடக்கவுள்ள பாராளுமன்றத் தேர்தலை ஒரு சர்வரோக நிவாரணியாக இவை பார்க்கின்றன அல்லது அப்படிக் காட்ட முற்படுகின்றன. அரகலய போராட்டத் தரப்பினரும் இதையே வலியுறுத்துகின்றனர். ஆனால், இந்த ஆட்சி கலைக்கப்பட்டுப் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டால், அதற்குப் பிறகு உருவாகும் ஆட்சி சர்வரோக நிவாரணியாக அமையுமா? அல்லது அதுவும் வெறுமனே ஆள் மாற்றம் – தலைமை மாற்றம் என்ற அளவில் சுருங்கிக் கிடக்குமா? எனக் கேட்க வேண்டியுள்ளது. ஏனென்றால், நாடு பல வகையிலும் மிக மோசமான நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்ற இந்தச் சூழலிலும் கூட, உண்மையான பிரச்சினை என்ன? இது எதனால், எப்படி ஏற்பட்டது? என்பதைப் பற்றிப் பகிரங்கமாகப் பேசுவதற்குப் பலரும் தயங்குகின்றனர். ஆதார – அடிப்படைப் பிரச்சினையைத் தந்திரமாகத் தவிர்த்து விட்டு, ராஜபக்ஸக்களினால்தான் நாட்டுக்கே பேரழிவு ஏற்பட்டது என்று சுருக்கிக் காட்ட முற்படுகின்றனர். நாட்டை முடக்க நிலைக்குக் கொண்டு வந்ததில் ராஜபக்ஸக்களுக்குக் கூடுதல் பொறுப்புண்டு. அதை மறுக்க முடியாது. அதைப்போல இதுவரையில் ஆட்சியிலிருந்தோருக்கும் அப்போதெல்லாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவளித்தோருக்கும் பொறுப்புண்டு. எனவே அனைவரும் இதில் தமது பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும். ஆனால், இதில் நேர்மையாக யாரும் செயற்படுவதாகக் காணமுடியவில்லை. காணப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதற்கான வழிமுறைகளைப் பற்றி இதுவரையில் ஒருவர் கூட, ஒரு கட்சி கூட தங்கள் பக்கத்தில் உள்ள திட்டம் என்ன, நிலைப்பாடு என்ன என்பதைப் பற்றிப் பேசக் காணோம். முக்கியமாக இனப்பிரச்சினைக்கு என்ன தீர்வு? அதை எப்படிக் காண்பது? எவ்வளவு கால எல்லைக்குள் காண்பது? அதற்கான வழிமுறை என்ன? என்பதைக் குறித்து இதுவரையிலும் யாருமே பேசவில்லை. இவ்வளவுக்கும் இனப்பிரச்சினை எழுபது ஆண்டுகளுக்கு மேலாக நாட்டைப் பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதைப் பற்றிப் பேசாத நாட்களுண்டா? பேசாத கட்சிகள், தலைவர்கள், ஊடகங்கள் உண்டா? இதைத் தீர்ப்பதற்கென்று கடந்த அறுபது ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த அத்தனை அரசாங்கங்களும் முயற்சி எடுத்தன. அல்லது அப்படிக் காண்பித்தன. இருந்தும் இன்னும் அது தீர்க்கப்படவேயில்லை. பதிலாக இந்தப் பிரச்சினை மேலும் மேலும் விரிவடைந்து பல புதிய பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. இனப்பிரச்சினையோ முன்னரை விட உச்சமான கொதிநிலையை அடைந்துள்ளது. அத்துடன் உள்நாட்டுப் பிரச்சினை என்ற நிலையைக் கடந்து இப்பொழுது சர்வதேச ரீதியாகப் பேசப்படுகின்ற – தலையீடுகளைச் செய்கின்ற அளவுக்கு வளர்ந்துள்ளது. இனப்பிரச்சினையினால் எத்தனை உயிர்கள் மாண்டுள்ளன? எத்தனை அருமையான மனிதர்களை இழந்திருக்கிறோம்? மனித வளம் என்பது தேசத்தின் வளங்களில் ஒன்றாகும். அருமையான வளம். பிற நாடுகள் ஆற்றலுள்ளோரைப் பல வழிகளிலும் தமது நாட்டுக்குள் உள்ளீர்க்கின்றன. அப்படி உள்ளீர்த்துப் பயனடைகின்றன. ஆனால், நாம் அந்த வளத்தை அழித்துப் புதைக்கிறோம். யுத்தத்தினால் எத்தனை கோடி ரூபாய் பெறுமதியான சொத்துகளையும் இயற்கை வளத்தையும் அழித்திருக்கிறோம்? இன்றைய பொருளாதார நெருக்கடிக்குப் பிரதான காரணங்களில் ஒன்று யுத்தச் செலவீனமாகும். இப்பொழுது கூட பெருமளவு நிதி பாதுகாப்புத் தரப்புக்கே செலவழிக்கப்படுகிறது. இந்தச் சிறிய நாட்டுக்கு இது தாக்குப் பிடிக்க முடியாதது என்று பொருளாதார நிபுணர்கள் தொடர்ந்தும் எச்சரிக்கின்றனர். இப்படியெல்லாம் இருந்தும் இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காணவேண்டும். அதிலிருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் வரவில்லை. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்கிறார்கள். இது சுத்த ஏமாற்றன்றி வேறென்ன? இவ்வாறுதானே ஒவ்வொரு ஆட்சியின்போதும் சொல்லப்படுகிறது –வாக்குறுதி அளிக்கப்படுகிறது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு,நடைமுறை வேறாகி விடுகிறது. ஆகவே இது வெறுமனே அதிகாரப் போட்டியே தவிர, வேறில்லை என்பது மிகத் தெளிவானது. இதற்காக தேர்தல் வரக்கூடாது, இந்த ஆட்சி மாறக்கூடாது என்று இங்கே நாம் வாதிடவில்லை. மாற்றுத் தீர்மானங்கள், தீர்வுக்கான வழிமுறைகள் பற்றிய தெளிவும் உறுதிப்பாடும் இல்லாமல் வெறுனே ஆட்சி மாறுவதால் –தலைகள் மாறுவதால் – எந்தப் பயனும் ஏற்படாது. அது வழமையைப் போல தலைகள் –ஆட்கள் – கட்சி – மாறுவதாக மட்டுமே அமையும். இரண்டரைக் கோடி மக்கள் வாழும் நாட்டில் 25 லட்சம்பேர் நாளாந்த உணவுக்கே அல்லற்படுகிறார்கள். அதாவது, பத்தில் ஒரு பங்கினர் பசியாலும் பிணியாலும் துன்பப்படுகிறார்கள். இது வெட்கக் கேடில்லையா? இதையிட்டு எத்தனை பேருக்கு கவலை உண்டு? இவ்வளவுக்கும் மிக வளமான நாடு நமது. விவசாயச் செய்கைக்குரிய இயற்கை வளமும் கால நிலைப் பொருத்தமும் மிகச் சிறப்பாக உள்ள நாடு. உலகில் உள்ள அனைவரும் நம்முடைய நாட்டைப் பார்த்து ஆசைப்படுகிறார்கள். இந்த நாட்டைச் சரியாக நிர்வகித்திருந்தால் இன்று எவ்வளவு பெரிய வளர்ச்சியை எட்டியிருக்க முடியும்! உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக உருவாக்கியிருக்கலாம். மெய்யாகவே ஆசியாவின் ஆச்சரியமாக இருந்திருக்கும். ஆனால், எல்லோருமாகச் சேர்ந்து ஆசியாவின் கண்ணீர்த்துளியாக அல்லவா இலங்கையை மாற்றி வைத்திருக்கின்றனர். இலங்கை சுதந்திரம் பெற்றபோது அந்நியச் செலாவணி மிக உச்சத்தில் இருந்தது என்று சொல்கிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. உண்மையும் அதுதான். அதற்குப் பிறகு அந்த நிலையைத் தலைகீழாக்கியது யார்? நமது அருந்தலைவர்கள்தானே! இனவெறி போதையாகித் தலைக்குள் புழுக்கத் தொடங்கியவுடன் நமக்குக் கண்ணும் தெரியவில்லை. மண்ணும் புரியவில்லை. அதனால்தான் தலைவர்கள் தவறாகச் செயற்படும்போதெல்லாம் அதைக் காணாமலே இருந்தோம். இப்போதும் அப்படித்தான் இருக்க முற்படுகிறோம். இப்பொழுது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உலகமெல்லாம் பிச்சைப் பாத்திரம் ஏந்துகின்ற போது கூட இனவாதத்தைக் கைவிட வேண்டும். ஜனநாயகத்தைச் செழிப்பூட்ட வேண்டும். ஐக்கியத்தை உருவாக்க வேண்டும். ஊழலை ஒழிக்க வேண்டும். அதிகாரத்தைப் பரவலாக்க வேண்டும். பன்மைப் பண்பாட்டுக்கு இடமளிக்க வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. உலகில் ஒவ்வொரு நாடும் ஜனநாயக விழுமியச் செழிப்பை உண்டாக்கி, வளர்ச்சியில் முன்னேறிச் சென்று கொண்டிருக்கின்றன. ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கின்ற நாடுகள் அழிவில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கின்றன. இந்த வேறுபாட்டை, இந்த உண்மையைப் புரிந்து கொண்டு, நம் நாட்டில் ஜனநாயகத்தை விருத்தியாக்க வேண்டும் என்றோ, மக்களுக்கான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்றோ யாரும் சிந்திக்கக் காணோம்! இந்தத் தவறுகள்தான் நெருக்கடிகளைத் தொடராக உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. மீளவும் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்கத் தொடங்கியுள்ளனர். கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைக் கோரி, ஜனநாயக அடிப்படைகளை வலியுறுத்தி, கட்டற்ற அதிகாரத்துக்கு எதிராகத் தெருவிலே முழக்கமிடுகிறார்கள். இந்தப் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் படைகளை நிறுத்துகிறது. இதனால் அமைதியின்மை உருவாகிறது. உள்நாட்டு நெருக்கடி அமைதியின்மையையே எப்போதும் உருவாக்கும். அமைதியின்மை நாட்டின் வருவாயைப் பாதிக்கும். குறிப்பாக சுற்றுலாத்துறைக் கடுமையாகப் பாதிக்கும். முதலீடுகளைப் பாதிக்கும். மக்களுடைய உழைப்பு நேரத்தையும் உழைப்புச் சக்தியையும் பாதிக்கும். நாடு இன்னும் டொலர்ப் பற்றாக்குறையிலிருந்து மீளவேயில்லை. இப்போது கூட மசகு எண்ணெயுடன் வந்திருக்கும் கப்பல் ஒன்று 44 நாட்களாகக் கடலில் தரித்து நிற்கிறது. தாமதக்கட்டணம் மட்டும் 99 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்தக் கட்டணம் மக்களுக்கு மேல்தானே செலுத்தப்படப்போகிறது. இந்தளவுக்கு யதார்த்தம் நம்முடைய அடிப்பக்கத்தைச் சுட்டாலும் நமக்குப் புத்தி வரவில்லை. அந்தளவுக்கு இனவாதத்திலும் (கட்சி) தலைமைத்துவ விசுவாசத்திலும் பைத்தியக்காரத்தனமாக ஊறிப்போய் கிடக்கிறோம். உண்மையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நம்மையெல்லாம் ஆழமாகச் சிந்திக்கச் செய்திருக்க வேண்டும். உலகமெல்லாம் பிச்சை கேட்கும் நிலை ஏன் நமக்கு வந்தது? இதை நாம் மாற்ற முடியாதா? என்று சிந்தித்திருக்க வேண்டும். இதற்கான பொறிமுறைகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அதில் அனைவரும் ஒன்றிணைந்து பங்களிப்பதைப் பற்றிச் சிந்தித்திருக்க வேண்டும். அவசரகால அல்லது இடர்கால பொறிமுறை – வேலைத்திட்டம் என்ற அடிப்படையில் ஒவ்வொருவரும் இரண்டு மடங்கு அல்லது மூன்று மடங்கு வேலை செய்ய வேண்டும் என்ற நிலையை உருவாக்கியிருக்க வேண்டும். இதை அரசாங்கமும் செய்யவில்லை. எதிர்த்தரப்புகளும் செய்யவில்லை. சமூக மட்டத்திலுள்ளோரும் செய்யவில்லை. எனவே நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான முயற்சிகள் எதுவும் நடக்கவே இல்லை. இது வெட்கப்பட வேண்டிய உண்மையாகும். பதிலாக ஆட்சி மாற்றம் வேண்டும் – தேர்தல் வேண்டும் என்று மட்டும் தந்திரமாகச் சொல்லப்படுகிறது. ஆட்சி மாற்றமும் தேர்தலும் என்ன மந்திரக் கோலா? எல்லாப் பரிகாரத்துக்குமாக? நாம் துணிவாகச் சிந்தித்தால், சரியாகச் செயற்பட்டால் நிச்சயமாக நம்மால் இந்த நெருக்கடியிலிருந்து மீள முடியும். மாற்றங்களை உண்டாக்க முடியும். இடர்காலத்திட்டத்தைத் தீட்டி, உரிய பொறிமுறையை உருவாக்கி அதை நடைமுறைப்படுத்த வேண்டும். அதை உறுதிப்பாட்டுடன் மேற்கொள்ள வேண்டும். ஒரு ஐந்து ஆண்டுத் திட்டமாக முதற்கட்டமாக இதைச் செய்யலாம். இதற்கான பொருளாதாரக் கொள்கை, வேலைத்திட்டம், சட்ட உருவாக்கம், நிர்வாக நடைமுறை போன்றவற்றை சிறப்பு ஏற்பாடாகச் செய்ய வேண்டும். ஆனால், அப்படி ஒன்றிணைந்து செயற்பட்டு ஒரு புதிய யுகத்தைக் காணுவோம் என்ற திடசங்கற்பத்தைப் பூணுவதற்கு எவருமே முன்வரவில்லை. இதுதான் மிகத் துயரமானது. மிக வெட்கக் கேடானது. எனவேதான் நாடு நெருக்கடியிலிருந்து மீளும் என்று நம்பிக்கை கொள்ள முடியவில்லை என்று துணிந்து கூற முடிகிறது. காரணம், வெளிப்படையானது. புண்ணுக்கு வைத்தியம் செய்வதை – மருந்து போடுவதை – விட்டு விட்டு, புண்ணைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம். இதுதான் நமக்குப் பழக்கமானது. இதைத்தான் எப்போதும் செய்து கொண்டிருக்கிறோம். நமக்கு முன்னே உள்ள எந்தப் பிரச்சினைக்கும் நாம் தீர்வு காண்பதில்லை. பதிலாக அவற்றைப் பேசிப் பேசியே பராமரித்துக் கொள்கிறோம். அரசாங்கத்துக்கு வெளியே பல கட்சிகள் உண்டு. அமைப்புகள் உண்டு. புத்திஜீவிகள் உள்ளனர். செயற்பாட்டியக்கங்கள் இருக்கின்றன. பல தலைவர்களும் நிபுணர்களும் உள்ளனர். இவ்வளவும் இருந்தாலும் பொருளாதார நெருக்கடிக்கு என்ன வகையான தீர்வு சாத்தியம்? அதற்கு என்ன செய்ய வேண்டும்? அதற்கான வழிமுறை என்ன? அரசின் பங்களிப்பும் பொறுப்பும் எத்தகையது? மக்களுடைய பங்களிப்பு எவ்வாறிருக்க வேண்டும்? இதைச் சாத்தியப்படுத்துவது எப்படி? சர்வதேச உதவிகளைப் பெறுவதும் அதைப் பயனுடையதாக மாற்றுவதும் எவ்வாறு? என்பதைப்பற்றி ஒருதர் கூடப் பேசக் காணவில்லை. அதைப்போல இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ன? அதற்கு என்ன செய்ய வேண்டும்? அதற்கான வழிமுறை என்ன? அரசின் பங்களிப்பும் பொறுப்பும் எத்தகையது? மக்களுடைய பங்களிப்பு எவ்வாறிருக்க வேண்டும்? இதைச் சாத்தியப்படுத்துவது எப்படி?என்று சிந்திப்பதைக் காணவில்லை. எவ்லோரும் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறார்கள். அதைப்பேசிப் பேசியே காலத்தை ஓட்டுகிறார்கள். பிரச்சினையைப் பற்றி எல்லோருக்கும்தான் நன்றாகத் தெரியுமே. இப்பொழுது இந்த நெருக்கடியிலிருந்து எப்படி மீள்வது? என்பதே பேச வேண்டியதும் செயற்பட வேண்டியதுமாகும். இதற்கு வழிகாட்டுவது யார்?சாத்தியங்களை உருவாக்குவது யார்? தற்போது வெளியே ஆட்சி மாற்றம் போலொரு தோற்றம் காட்டினாலும் நிலைமையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை என்பது உண்மையே. சிறிய அளவில் தட்டுப்பாடு நீங்கினாலும் பொருட்களின் விலை குறையவில்லை. அரசுக் கொள்கையில் மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு எதுவும் கிட்டவில்லை. குறிப்பாக விவசாயச்செய்கைக்கான அரச உதவிகள் இன்னும் கேள்வியாகவே உள்ளன. மீள்வதற்கான புதிய பொருளாதாரக் கொள்கையோ நெருக்கடி கால வேலைத்திட்டங்களோ முன்னெடுக்கப்படவில்லை. இதனால் இன்னும் இளையோர் தொடக்கம் முதியோர் வரையில் பலரும் சும்மாதான் இருக்கிறார்கள். என்ன வேலையைச் செய்வது என்று தெரியாத நிலையில் 30 வயதுக்குட்பட்ட லட்சக்கணக்கானோர் உள்ளனர். நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான இளைய சக்தி அநாவசியமாக வீணடிக்கப்படுகிறது. ஒவ்வொரு கட்சியும் ஆட்சியைப் பிடிப்பதற்காகவே ஆவலாதிப்படுகின்றன. இதற்கான அரசியற் கூட்டுகள் உருவாகின்றன. அல்லது அதைப்பற்றி தீவிரமாக யோசிக்கப்படுகிறது. பொதுஜன பெரமுனவும் மீள் எழுச்சியடைவதற்கான ஏற்பாடுகளைத் துரிதகதியில் செய்கிறது. “யாரும் நம்மைத் தோற்கடிக்க முடியாது. மீண்டும் நாம் வருவோம் என்று சூளுரைத்திருக்கிறார்” இளைய ராஜபக்ஸ. நாடு இருக்கின்ற நிலையில் அதை முன்னேற்றுவதை விட்டு விட்டு ஆட்சியை மீளக் கைப்பற்றும் முயற்சியிலேயே முழுக்கவனத்தையும் வைத்திருக்கின்றனர் ராஜபக்ஸவினர். இவ்வளவுக்கும் இன்றைய சீரழிவு நிலைக்குப் பெரும்பொறுப்பு ராஜபக்ஸக்களே. இதையிட்ட பொறுப்புணர்வோ குற்றவுணர்வோ அவர்களுக்கிருப்பதாகத் தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் இந்த மாதிரி இளைய ராஜபக்ஸ கதைத்திருக்க மாட்டார். மட்டுமல்ல, புத்தளம் தொடக்கம் ஒவ்வொரு இடத்திலும் தங்களுடைய மீள் எழுச்சிக்கான எத்தனத்தை வெளிப்பத்திக் கொண்டிருக்கின்றனர் பொதுஜன பெரமுனவினர். அதற்கு ஆதரவளிப்போருக்கும் தவறுகளில் பொறுப்புண்டு. ராஜபக்ஸக்களைக் குற்றம் சாட்டி, ரணில் விக்கிரமசிங்கவை எதிர்த்து மட்டும் நாட்டுக்கு நன்மைகளைச் செய்து விட முடியாது. அதற்கு மாற்று வழியே தேவை. இதனால்தான் சிஸ்டம் சேஞ்ஜ் (System change) வலியுறுப்படுகிறது. நாட்டுக்கு மெய்யான சர்வரோக நிவாரணி என்பது System change மட்டுமே. அதற்கு இப்போதுள்ள எந்த அரசியற் தலைகளும் பொருத்தமானவை அல்ல. https://arangamnews.com/?p=8267