Jump to content

Search the Community

Showing results for tags 'கருணாகரன்'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • வலைப்போக்கன் கிருபன்'s செயற்கை நுண்ணறிவு உருவாக்கி
  • Ahal Media Network's Topics

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's சிறப்பு ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணக்கட்டுகள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's திரட்டுகள்
  • Home Appliances Spot's Home Appliances

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

  1. தமிழ் ஜனாதிபதி வேட்பாளர்: ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதை April 12, 2024 — கருணாகரன் — 2024 இல் ஜனாதிபதித் தேர்தல் நடக்குமா? பாராளுமன்றத் தேர்தல் நடக்குமா? என்று இன்னும் உறுதியாகச் சொல்ல முடியாத நிலையே உள்ளது. ஜனாதிபதித் தேர்தல்தான் முதலில் நடக்கும் என சில இடங்களில் சொல்லப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பு பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது நல்லது என்று பொதுஜன பெரமுன உள்ளிட்ட சில தரப்புகள் வலியுறுத்துகின்றன. எதையும் தீர்மானிக்கின்ற ஒரே மனிதராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே உள்ளார். இலங்கை அரசியல் யாப்பின்படி ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தை உச்சமாகப் பயன்படுத்தியவர் ஜே.ஆர். ஜெயவர்த்தன. அவரே ஜனாதிபதிக்கான அதிகாரங்களை உருவாக்கியவர். அவருக்கு அடுத்தபடியாக அதனுடைய சுவையறிந்து செயற்பட்டுக் கொண்டிருப்பவர் ரணில் விக்கிரமசிங்க. இருவரும் உறவினர்கள் மட்டுமல்ல, ஒரே மாதிரிச் சிந்திப்பவர்களும் செயற்படுகின்றவர்களும். இதனால் இருவரையும் தந்திரமிக்கவர்கள் (நரித்தனமுள்ளவர்கள்) எனச் சொல்லப்படுவதுண்டு. இருவருக்கும் ஒரேயொரு வித்தியாசம். ஜே.ஆர், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி நடத்தியவர். அந்தப் பலத்தைப் பயன்படுத்தி எதிர்த்தரப்புகளின் முதுகெலும்பை உடைத்தவர். தன்னுடைய கட்சிக்காரர்களின் ராஜினாமாக் கடிதத்தை வாங்கிப் பொக்கற்றுக்குள் வைத்துக் கொண்டு முழுமையான நிறைவேற்று அதிகாரத்துக்கு அப்பாலும் செயற்பட்டவர். ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிறிய – சாதாரண பெரும்பான்மை கூட ஆட்சியில் இல்லை. அவர் ஜனாதிபதியாகிய விதமே – விந்தையே வேறுவிதமானது. யானை மாலை போட்டதால் ராணியாகியதைப்போல, ராஜபக்ஸவினரின் கூட்டுத் தவறுகளின் விளைவாகவும் ஏனைய அரசியல் தலைவர்களின் பலவீனங்களுக்குள்ளாலும் மேலெழுந்து ஜனாதிபதியானவர். இதனால் கேள்விக்கிடமற்று முழுமையான நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தும் ஆளாக மாறியிருக்கிறார் ரணில். ஆகவே இப்பொழுது ரணில் மிக வலுவான யானையாக உள்ளார். ஆனால், தேர்தலில் இந்த யானைப் பலம் அவருக்கு இருக்குமா? இல்லையா என்பது கேள்வியே. என்பதால்தான் எந்தத் தேர்தல் முதலில் வரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாதுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவின் தேர்வு எதுவோ அதுவே நடக்கப்போகிறது. எப்படியிருந்தாலும் 2024 தேர்தல் ஆண்டாக அமையும் என்று நம்பிக்கையாகச் சொல்ல முடியும். இலங்கைத் தேர்தல் ஆணையகமும் இதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில்தான் – அதாவது ரணில் விக்கிரமசிங்கவின் தீர்மானம் எப்படி இருக்கப்போகிறது என்பதைப் பொறுத்துள்ள சூழலில்தான் – இலங்கையின் அரசியற் செல்வழி அமையப்போகிறது. அதை மீறிச் செயற்படக் கூடிய நிகராற்றல் வேறெவரிடத்திலும் இல்லை. இதுதான் உண்மை நிலவரம். கவலையும் கூட. இதற்குள் அவரவர் தமக்கேற்ற விதத்தில் தம்மைத் தயார்ப்படுத்தத் தொடங்கியுள்ளனர். “எந்தத் தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு பொதுஜன பெரமுன தயார்” என்று முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜனபெரமுனவின் தலைமைச் சக்தியுமாகிய மகிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார். இருந்தாலும் கடுமையான குழப்பத்தில் இருப்பது, ராஜபக்ஸக்களின் பொதுஜன பெரமுனவாகும். முதலில் பாராளுமன்றத் தேர்தலையா அல்லது ஜனாதிபதித் தேர்தலையா எதிர்கொள்வது என்ற பதட்டத்தில் உள்ளது பெரமுன. ஜனாதிபதித் தேர்தல் என்றால் அதற்கு யாரை நிறுத்தலாம் என்ற குழப்பம் அதற்குள் நீடிக்கிறது. ராஜபக்ஸக்களின் கனவு நாயகன் நாமல் ராஜபக்ஸவை நிறுத்தலாம் என ஆரம்பத்தில் பேச்சடிபட்டது. பிறகு பஸில் ராஜபக்ஸவின் பெயரடிபட்டது. இப்போது அவர்கள் ரணிலையே நிறுத்தினால் என்ன என்று யோசிப்பாகச் சொல்லப்படுகிறது. அடுத்ததாக உள்ள ஐ.தே.கவின் ஒரே தெரிவு ரணில் விக்கிரமசிங்கதான். அதற்குள் வேறு கவர்ச்சிகரமான ஆட்களில்லை. ஆனால் அதற்கு ரணில் தயாரா என்று தெரியவில்லை இன்னும். தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்வதற்கு இன்னும் ஒரு நீண்ட கால அவகாசம் தேவைப்படுவதால் பெரமுனவினரும் (ராஜபக்கஸவினரும்) ரணிலையே விரும்புவதால் சிலவேளை இரு தரப்பின் வேட்பாளராக ரணில் போட்டியிடக் கூடும் – நிறுத்தப்படக் கூடும். இதற்குள் (இலங்கையின் தற்போதைய கையறு நிலையில்) தம்மை நிலை நிறுத்திக் கொள்ளலாம் என்று சிந்திக்கிறது தேசிய மக்கள் சக்தி என்கிற (மக்கள் விடுதலை முன்னணி) ஜே.வி.பி. அதற்காக அது தமிழ்ப்பரப்பிலும் தன்னுடைய செல்வாக்கு மண்டலத்தை விரிக்கப்பார்க்கிறது. கிளிநொச்சி தொடக்கம் கனடா வரையில் நிகழ்ந்துள்ள அநுர குமாரவின் பயணம் இதற்குச் சான்று. ராாஜபக்ஸவினரின் மீதான கசப்புணர்வு, நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி, நிறுத்தப்படாத ஊழல், மர்மமாக மேற்கொள்ளப்படும் ரணில் விக்கிரமசிங்கவின் அதிகார அரசியல் போன்றவற்றுக்கு மாற்றாகத் தம்மை நிறுத்தி விடலாம் என்று ஜே.வி.பி சிந்திக்கிறது. இதற்கு அதனுடைய கவர்ச்சிகரமான தலைவரான அநுர குமார திஸநாயக்கவை நிறுத்தப் பார்க்கிறது. இதற்கெல்லாம் அப்பால் ஐக்கிய மக்கள் சக்தி என்ற சஜித் பிரேமதாசவின் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணி சஜித் பிரேமதாசவை களமிறக்குவதற்குத் தயாராகியுள்ளது. இதற்கான உடன்படிக்கைகள் கூடச் செய்யப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் கிடைக்கின்றன. இந்த நான்கு தரப்பின் மூன்று வேட்பாளர்களும் புதியனவற்றை இலங்கைத்தீவுக்குத் தருவார்கள் என்று நம்புவதற்கொன்றுமில்லை. ஜே.வி.பியிடமிருந்து சிறிய அளவில் மாற்றங்கள் ஏதும் நிகழலாம். அதுகூட இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் நிகழச் சாத்தியமில்லை. ஏனென்றால் அதற்கான இடம் ஜே.வி.பியின் இதயத்திலும் இல்லை. மூளையிலும் இல்லை. அதனுடைய கற்பனை வேறு விதமானது. இனவாதத்திலிருந்து மீண்டு விடாத சீர்திருத்தத்தையே அது கொண்டுள்ளது. மெய்யான மாற்றத்தை அல்ல. மாற்றம் போன்ற தோற்றத்தை. ஆனால், சஜித், ரணில், ராஜபக்ஸவினரை விட வரலாறு அநுரகுமார விடம் அதிகமாக எதிர்பார்க்கிறது. வரலாற்றுச் சூழலும் அவருக்கு (தேசிய மக்கள் சக்திக்கு) வாய்ப்பாக உள்ளது. ஆனால் அதைப் புரிந்து கொண்டு சரியாகச் செயற்படுவதற்கு (துணிவாக முடிவெடுப்பதற்கு) அநுரகுமாரவும் தயாரில்லை. அவருடைய தேசிய மக்கள் சக்தியும் தயாராக இல்லை. சஜித் பிரேமதாச தன்னை மிகத் தெளிவாகவே நிரூபித்து விட்டார். இனப்பிரச்சினைக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் எந்தப் பெரிய நன்மைகளையும் அளிக்கக் கூடிய வல்லமை எதுவும் தன்னிடமில்லை என. அவர் முல்லைத்தீவு – முருகண்டிப் பகுதியில் அமைத்த முழுமையடையாத வீடுகள் இதற்குச் சாட்சியம். எந்தத் தீர்மானத்தையும் ரணில் விக்கிரமசிங்கவைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. ஆனால் அவர்தான் மீட்பரைப்போலத் தோற்றம் காட்டிக் கொண்டிருப்பவர். அவரைக் கடந்து சிந்திக்கக் கூடிய – செயற்படக் கூடியவர் யாராவது வந்தால்தான் இலங்கையில் மாற்றம் நிகழும். அது அரசியல், பொருளாதாரம் எனச் சகல தளங்களிலுமாக இருக்கும். ஆனால் அப்படியான மூளையும் நல்லிதயமும் உள்ள எவரையும் அண்மையில் காண முடியவில்லை. அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதைப்போல, யாரும் எங்கிருந்தும் களமிறங்கலாம். அல்லது களமிறக்கப்படலாம். அப்படித்தான் முன்னர் எதிர்பாராத ஒரு சந்தர்ப்பத்தில் சந்திரிகா குமாரதுங்க களமிறக்கப்பட்டார். 2010 இல் யாருமே எதிர்பாராத வகையில் சரத் பொன்சேகா நிறுத்தப்பட்டார். ஒரு இராணுவத்தளபதி ஜனாதிபதி வேட்பாளரா என்று பலரும் புருவத்தை உயர்த்தி, முகத்தைச் சுழித்தனர். ஆனால், சரத் பொன்சேகா ஐம்பது லட்சம் வாக்குகளைப் பெற்றார். அதற்குப் பிறகு 2015 இல் கோட்டபாய ராஜபக்ஸ கூட அப்படியான ஒரு தெரிவினால் நிறுத்தப்பட்டவரே. உண்மையில் தான் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவேன், அதில் மிகப் பெரிய வெற்றியைப் பெறுவேன், அந்த வெற்றியின் ருசியை அனுபவிக்க முன்பு பதவியிலிருந்து அவ்வளவு விரைவாக விரட்டப்படுவேன் என்று கோட்டபாய சிந்தித்திருக்கவே மாட்டார். அவ்வளவும் நடந்து முடிந்தன. ஆகவே இவற்றைப்போல எதிர்பாராத விதமாக நம்முடைய அவதானத்துக்கு வெளியிலிருந்து வேறு யாரும் கூடப் புதிதாக களமிறக்கப்படலாம். அதற்கான வாய்ப்புகளும் உண்டு. ஏனென்றால் இலங்கை அரசியல், அண்மைய ஆண்டுகளில் இலங்கையர்களால் தீர்மானிக்கப்படும் நிலையிலிருந்து விலகிப் பிற சக்திகளால் தீர்மானிக்கப்படுவதாக மாறியுள்ளது. குறிப்பாக, இந்தியா, சீனா, அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் ஆகியன இதில் முழுதாக ஈடுபடுகின்றன. இவற்றின் சதுரங்க ஆட்டத்தின் விளைவுகளே இன்றைய இலங்கை, இன்றையை ஆட்சி, இன்றைய ஜனாதிபதி, இலங்கையில் உலக வங்கி உள்பட அனைத்தும். இதனுடைய தொடர்ச்சியாகவே இனிவரும் இலங்கையும் இருக்கும். அதற்கமைவாகவே ஆட்சியும் ஆட்சித் தலைவர்களும் தெரிவு செய்யப்படுவர். இந்தத் தரப்புகளின் விருப்பத்துக்கு மாறான தலைமைகள் அதிகாரத்துக்கு வந்தால் ராஜபக்ஸக்கள் எப்படி தூர விலக்கப்பட்டனரோ அவ்விதம் விலக்கப்படுவர். ஆகவே இங்கே தேர்தல், ஜனநாயகத் தெரிவு என்பதெல்லாம் வெறும் கனவே! இந்த யதார்த்தத்தை உணராமல், யதார்த்தத்துக்கு வெகு தொலைவில் நிற்கிறது தமிழ்த் தேசியத் தரப்பு. அது எப்போதையும்போல ஜனாதிபதித் தேர்தலிலும் தவறைச் செய்யவே முனைகிறது. கடந்த 11.03.2024 இல் தமிழ்த் தேசியத் தரப்பினர் யாழ்ப்பாணத்தில் கூடி ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த்தரப்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதைப் பற்றி யோசித்திருக்கின்றனர். இதன் காணொளியும் Yu tupe காணக்கிடைக்கிறது. அதைப் பார்த்தபோது “ஆண்டிகள் கூடி மடம் கட்டுவது” என்ற தமிழ்ப்பழமொழிதான் நினைவுக்கு வந்தது. இந்த மாதிரியான உணர்ச்சிகரமான எதிர்மறைச் சிந்தனைகளால் தமிழ்ச்சமூகம் மிகப் பெரிய விலையைக் கொடுத்துள்ளது. குறிப்பாக சமானிய மக்கள். இலங்கைத்தீவின் அரசியல் யதார்த்தத்தை இன்னும் புரிந்து கொள்ளாத – புரிந்து கொள்ள விரும்பாதவர்களின் கோமாளி விளையாட்டு அது. இதனுடைய விபரீதம் சாதாரணமானதல்ல. மேலும் சிங்களப் பேரினவாதத்தைக் கூர்மைப்படுத்தும் முட்டாள்தனமான யோசனை அது. புதிதாகச் சிந்திக்க முடியாதவர்களாக இருந்தாலும் பரவாயில்லை. வரலாற்றிலிருந்தும் சொந்த அனுபவங்களிலிருந்தும் கூட எதையும் கற்றுக் கொள்ள முடியாதவர்களாக இவர்கள் இருக்கிறார்கள் என்பது எவ்வளவு துயரமானது! தமிழ் வேட்பாளர் என்பது ஒன்றும் புதியதல்ல. முன்னர் குமார் பொன்னம்பலம் அப்படி நின்றார். பிறகு சிவாஜிலிங்கம். தமிழ் வாக்குகளின்றியே ஒருவர் ஜனாதிபதியாக வரமுடியும் என்பதற்கு கோட்டபாய ராஜபக்ஸ உதாரணம். எந்த வாக்குகளுமின்றியே ஒருவர் ஜனாதிபதியாக முடியும் என்பதற்கு ரணில் விக்கிரமசிங்க எளிய சான்று. இந்த நிலையிற்தான் தமிழ் வேட்பாளர் பற்றிய சிந்தனை இருக்கிறது. குறைந்த பட்சம் மலையக, முஸ்லிம் மக்களை உள்ளடக்கிய தமிழ் பேசும் தரப்பிலிருந்து ஒரு வேட்பாளர் என்று சிந்தித்தாற் கூடப் பரவாயில்லை. ஆக மொத்தத்தில் தேர்தலுக்கு முன்பே தேர்தற் களம் சேற்றுக் குழியாகக் கிடக்கிறது. இதற்குள் முத்தெடுப்பது எப்படி இலங்கை மக்கள்? https://arangamnews.com/?p=10617
  2. ரணில் விக்கிரமசிங்க: One Man Government April 4, 2024 — கருணாகரன் — இலங்கை அரசியலில் One Man Government ஆகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார் ரணில் விக்கிரமசிங்க. மட்டுமல்ல, அரசியல், பொருளாதாரம், பண்பாடு என அனைத்தையும் தீர்மானிக்கும் ஒரே ஆளாகியுள்ளார். ரணில் என்ன நினைக்கிறாரே அதுவே நடக்கிறது. அதுவே நடக்கக் கூடிய சூழலும் உள்ளது. அவரை மீறி எதுவும் இல்லை என்ற நிலை. இதைக் கட்டுப்படுத்தவோ இடையீடு செய்யவோ முடியாமல் எதிர்க்கட்சிகள் படுத்து விட்டன. எதிர்ப்பு அரசியல் என்பது காணாமலே போய் விட்டது. அங்கங்கே மெல்லிய தொனியில் அனுங்கலாகக் கேட்கும் குரலைத் தவிர, வேறெதுவும் இலங்கையில் இல்லை. நெடுங்காலமாக இலங்கை அரசியலில் செல்வாக்குச் செலுத்தி வந்த ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் உடைந்து, சிதறிச் சிறுத்து விட்டன. ஐ.தே.க உடைந்து ஒரு பகுதி ஐக்கிய மக்கள் சக்தி என சஜித் பிரேமதாசவின் தலைமையில் இயங்குகிறது. மற்றப்பகுதி ரணில் விக்கிரமசிங்கவோடு. சிறிலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிளவுண்டு ஒரு அணி பொதுஜன பெரமுன என ராஜபக்ஸக்களின் செல்வாக்கோடு செயற்படுகிறது. மற்றது மைத்திரிபால சிறிசேனவின் கீழ். அதிலும் ஒரு துண்டு தனியாகச் செயற்படவுள்ளதாக சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆயுதப்போராட்ட அரசியல், தேசிய நீரோட்ட அரசியல் என்ற பாராளுமன்ற ஜனநாயக அரசியல் ஆகிய இரண்டு வழி அனுபவங்களையும் கொண்ட ஜே.வி.பி ஐம்பது ஆண்டுகளைக் கடந்தும் குழந்தையாகத்தான் தவழ்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் அதனால் எழுந்து நடக்க முடியவில்லை. தமிழ்த்தரப்பின் அரசியற் குரலைக் காணவே இல்லை. அது ஆழக்கிணற்றுக்குள்ளிருந்து ஒலிப்பதைப்போல யாருக்குமே பெரிதாகக் கேட்பதில்லை. அதற்குள் ஆயிரத்தெட்டுப் பிரிவினைகள். ஒரு காலம் ஈழ விடுதலை இயக்கங்கள் பெருகிக் கிடந்ததைப்போல இப்பொழுது தமிழ்த்தேசியக் கட்சிகள் பெருகிக் கிடக்கின்றன. ஈழவிடுதலை இயக்கங்களிலிருந்து பெற்ற அனுபவமோ என்னவோ தெரியவில்லை. இப்பொழுது தமிழ் மக்களும் தமிழ் அரசியற் குரலைப் பெரிதாகக் கவனத்திற் கொள்வதில்லை. அதற்கு உருவேற்றுவதற்குச் சிலர் உடுக்கடிகாரர்களைப்போல எப்படியெல்லாமோ முயற்சிக்கிறார்கள். ஆனால், சனங்கள் சன்னதங்கொள்வதைக் காணோம். பட்டறிவாக இருக்கலாம். பதிலாகப் பலரும் தம்மை விட்டாற் காணும் என்ற நிலையில், இன, மத பேதமின்றி நாட்டை விட்டுத் தப்பியோடுகிறார்கள். உயர் பதவியிலுள்ளவர்கள் கூட பதவியாவது மண்ணாவது என அரசு வழங்கியிருக்கும் ஐந்தாண்டுகள் ஊதியமற்ற விடுமுறையைப் பயன்படுத்திக் கொண்டு வெளியே பறக்கிறார்கள். போர்க்காலத்தில் நாட்டை விட்டு வெளியேறியோரின் தொகையை விட இப்பொழுது வெளியேறுவோரின் தொகை அதிகம் என்று சொல்கின்றன புள்ளிவிவரங்கள். உண்மையும் அதுதான். கடவுச் சீட்டுப் பெறும் அலுவலகமும் வெளிநாட்டுத் தூதுவரகங்களும் சனங்களால் நிரம்பி வழிகின்றன. எஞ்சியிருப்போரில் பலரும் இனியும் காலத்தைக் கடத்த முடியாது என்று இலங்கைத் தேசிய அரசியலில் கலந்தும் கரைந்தும் போகிறார்கள். இதனால்தான் அங்கயன் ராமநாதன், சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), டக்ளஸ் தேவானந்தா போன்றோர் அதிகூடிய வாக்குகளைப் பெறுகிறார்கள். நாடு யுத்த நெருக்கடியிலிருந்து மீண்டு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் காரணம் தேசியப் பிரச்சினைகளில் ஒன்றான இனவாதம் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதை விட்டுத் தொலைப்பதற்கு யாரும் தயாரில்லை. அரசியல் கட்சிகளும் சரி, அரசியல் ஆய்வாளர்கள், பத்தியாளர்கள், ஊடகவியலாளர்கள், மதத் தலைவர்கள், மத பீடங்கள், புத்திஜீவிகள், அறிவு மையங்கள், விளிம்புகள் என எல்லா இடங்களிலும் எல்லாத் தரப்புகளிலும் இனவாதம் தாராளமாக ஊறிப்போய்க் கிடக்கிறது. மூன்றுவேளை சாப்பாட்டைப் போல இனவாதம் பலருக்கும் அவசியமான – பழக்கமான ஒன்றாகி விட்டது. அதை விட்டால் உயிரே போய் விடும் என்று எண்ணுகிறார்கள். சமாதானத்தை விட, அமைதியை விட, சுபீட்சமான எதிர்காலத்தை விட, அந்நிய தலையீடுகள், ஆக்கிரமிப்புகளை விட, பிற சக்திகளிடம் முழந்தாழில் நின்று கையேந்துவதை விட, நாடு கடனில் மூழ்குவதை விட, அரை வயிறு பட்டினி கிடப்பதை விட இனவாதம் ருசிக்கிறது எல்லோருக்கும். இந்த மாதிரி மூடத்தனம் வேறில்லை. என்னதான் சொல்லுங்கள். நாங்கள் மூடர்களாகவும் முட்டாள்களாகவும் இருந்து விட்டுப் போகிறோம். நம்முடைய முயலுக்கு ஒன்றரைக் கால்தான் என்பதிலிருந்து எவரும் முன்னகரத் தயாரில்லை. இந்தப் பைத்தியக்காரத்தனத்துக்கு எந்த வைத்தியமுமில்லை. இந்தச் சூழலில்தான் தான் ஒரு சிறந்த ஜனநாயகவாதி. அரசியல், பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க வந்த ஆபத்பாந்தகர். இனவாதத்துக்கு எதிரான பேர்வழி. அமைதியின் நேசன். மூழ்கும் நாட்டை மீட்க வந்த ஒரேயொரு மாலுமி என்று தோற்றம் காட்டுகிறார் ரணில் விக்கிரமசிங்க. நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி பதவியிலிருக்கும் ரணில் இன்று சர்வ வல்லமை பொருந்திய பெருந்தலைவர். 50 ஆண்டுகளுக்கு மேலான அரசியல் அனுபவம் ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தாராளமாகக் கை கொடுக்கிறது. சர்வதேச நாடுகளின் ஆதரவு ஒரு பக்கம் அவருக்குக் கிடைக்கிறது என்றால், சர்வதேச நாடுகளை லாவகமாகக் கையாளும் அவருடைய கலை இன்னொரு பக்கமாகக் கைகொடுக்கிறது. இதனால் ரணில் விக்கிரசிங்கவை எவராலும் எதுவும் செய்ய முடியவில்லை. பலருக்கும் அவர் மீது பொருமல்கள் உண்டு. ஆனால், அடுப்படிக்குள் புகைவதைப்போல அடிவயிற்றில் புகைவதோடு எல்லாம் அடங்கிப் போகின்றன. அறுதிப் பெரும்பான்மையை பாராளுமன்றத்தில் வைத்திருக்கின்ற ராஜபக்ஸக்களின் ‘பொது ஜன பெரமுன’ கூட ரணிலை எதுவும் செய்ய முடியாதுள்ளது. மட்டுமல்ல, ரணிலுக்குச் சவால் விட்டுக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கி, ஒரு பெரும் அணியாகத் திரண்டிருக்கும் சஜித்தின் கூட்டணியினாலும் ரணிலை ஆட்ட முடியவில்லை. இவ்வளவுக்கும் இந்தச் சீமான் ஒரு வாக்கைக் கூட, தான் இப்பொழுது வகிக்கும் பதவிக்காகப் பெற்றவரில்லை. ஏன், இதற்காக நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலிலேயே போட்டியிட்டதுமில்லை. ஆனால், அவரே நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி – நாட்டின் அதிபராகி ஆட்டுவிக்கிறார். இலங்கை அரசியல் சாசனத்தின்படி ஜனாதிபதிக்கே உச்ச அதிகாரமுண்டு. அமைச்சரவையும் பாராளுமன்றமும் முப்படைகளும் என முழு நாடுமே ஜனாதிபதிக்குக் கீழேதான். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தனக்கு எதிரான திசையிலிருந்தவர்களை வைத்தே வெற்றிகரமாக ஆட்சியை நடத்துகிறார். அமைச்சரவையில் உள்ள அத்தனை பேரும் எதிரணியைச் சேர்ந்தவர்கள். இருந்தாலும் ரணிலுக்குக் கட்டுப்பட்ட பெட்டிப் பாம்புகளாகவே இருக்கின்றனர். இதற்கெல்லாம் காரணம், இவர்கள் அனைவரும் பலவீனமான நிலையில், கடந்த காலத்தில் தவறுகளை இழைத்தவர்களாக இருப்பதேயாகும். இந்தத் தவறுகளிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டுமென்றால், தவிர்க்க முடியாமல் ரணிலை ஆதரித்தே ஆக வேண்டும். அவருடைய கால்களைப் பிடித்தே ஆக வேண்டும். ராஜபக்ஸக்களைக் காப்பாற்றி வைத்திருப்பதே ரணில்தான். இந்த நிலையிலிருந்து நாடு மீள்வதென்றால், பல காரியங்கள் நடக்க வேண்டும். முதலில் பொருளாதார நெருக்கடி தீர வேண்டும். இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அதற்கு அரசியலமைப்பில் மாற்றம் வேண்டும். அதற்கு மக்களின் மனதிலும் அரசியற் கட்சிகள் – அரசியல்வாதிகளின் மனதிலும் மதவாதிகளின் தலைக்குள்ளும் மாற்றம் நிகழ வேண்டும். அதற்கு ஏற்றமாதிரிப் பல தரப்பிலும் வேலைகள் நடக்க வேண்டும். சமாதானத்தின் மீதும் தீர்வின் மீதும் விருப்பமும் உறுதிப்பாடும் வேண்டும். ஜனநாயக ரீதியான – மாண்புடைய தேர்தல் நடக்க வேண்டும். இப்படிப் பலவும் நடப்பது அவசியம். பொருளாதார நெருக்கடியை வைத்தே ரணில் தன்னைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். ரணிலை விட்டால் பொருளாதார நெருக்கயைக் கையாளக் கூடிய வேறு ஆட்களில்லை என்றமாதிரியே நாட்டின் பெரும்பான்மையான சனங்கள் எண்ணுகிறார்கள். ஏன் அரசியற் கட்சிகள், பிற தலைவர்களுக்கும் கூட அப்படியான எண்ணம்தான். ஆனாலும் ரணில் விக்கிரசிங்கவை வீழ்த்தி விட வேண்டும் என்றே ஒவ்வொருவரும் யோசிக்கிறார்கள். இதற்காக அவர்கள் குறுக்கு வழியில் பயணிப்பதைப்போல தேர்தலை எதிர்பார்க்கிறார்கள். தேர்தல் நடந்தால் எல்லாம் சரியாகி விடும் என்று சிந்திக்கிறார்கள். இதுதான் சிரிப்புக்கிடமான சங்கதி. ஒரு தேர்தல் அல்ல ஒன்பது தேர்தல் நடந்தாலும் பிரச்சினைகள் தீராது. ஏனென்றால் நாட்டின் பிரச்சினைகளுக்குத் தேர்தல் மூலமாகத் தீர்வைக் காணவே முடியாது. தீர்வு காண வேண்டிய வேலைகளில் தேர்தல் மூலமான அதிகார மாற்றமும் ஒன்றாக இருக்கலாமே தவிர, அதுதான் தீர்வைப் பெற்றுத்தரும் என்று சொல்வதற்கில்லை. இதற்கு முன்பும் பல தேர்தல்கள் நடந்திருக்கின்றன. பல விதமான வாக்குறுதிகளின் மத்தியில்தான் அந்தத் தேர்தல்களும் அவற்றின் வெற்றியும் அமைந்தது. மக்களும் பெரும் எதிர்பார்ப்புகளோடுதான் வாக்களித்திருக்கிறார்கள். ஆட்சி பீடம் ஏறியவர்கள் மாபெரும் பிரகடனங்களோடு கதிரையில் அமர்ந்தனர். இரண்டு மாதம் சென்றதும் பழையபடி வேதாளம் முருங்கையில் ஏறிய கதையே நிகழ்ந்தது. அதிகம் ஏன், யுத்தம் முடிந்தபோது நாட்டிலுள்ள பெரும்பான்மையோரிடம் இனிப் பிரச்சினை இல்லை என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. ஆனால் நடந்தது என்ன? அதற்குப் பிறகுதான் ஆயிரத்தெட்டுப் பிரச்சினைகளும் பொருளாதார நெருக்கடியும் அந்நியத் தலையீடுகளின் அதிகரிப்பும். இன்று நாடு இருக்கின்ற நிலை? தேர்தலினால் சிலவேளை ரணில் விக்கிரமசிங்கவைத் தோற்கடிக்கலாம். நாட்டின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது நடக்கும் என்றில்லை. அதற்கு ஏற்கனவே சொல்லப்பட்டதைப்போல பல காரியங்கள் நடக்க வேண்டும். அதற்கான திடசங்கற்பம் ஒவ்வொருவரிடமும் ஏற்பட வேண்டும். அதற்கு நாட்டையும் மக்களையும் நேசிக்கும் ஒரு பண்பு உருவாக வேண்டும். அரசியல் வணிகத்திலிருந்து கட்சிகளும் தலைவர்களும் அரசியல்வாதிகளும் ஊடகவியலாளரும் விடுபட வேண்டும். தனி நலனை விட பொது நலன் என்ற சிந்தனை எழ வேண்டும். தேசப்பற்றும் மக்களின் மீதான மதிப்பும் ஒரு அலைபோல மேற்திரள வேண்டும். இதை முன்னெடுக்கும் ஒரு அணி அல்லது தலைமை உருத்திரள வேண்டும். இப்போதிருப்பவை சவலைகள். இவற்றினால் எதையுமே செய்ய முடியாது. இதை அவை நன்றாக நிரூபித்துள்ளன. இவற்றை விட இருக்கின்ற One Man Army அல்லது One Man Government பரவாயில்லை. இதை நான் சொல்லவில்லை. சனங்கள் சொல்கிறார்கள். 00 https://arangamnews.com/?p=10600
  3. தமிழரசுக் கட்சியிடம் இரண்டு யாப்பா?? March 16, 2024 — கருணாகரன் — நீதிமன்ற வழக்கை முடித்துக் கொண்டு வெளியேறினாலும் தமிழரசுக் கட்சிக்குப் பிரச்சினைகளும் தலையிடியும் மேலும் மேலும் கூடுமே தவிர, குறைந்து விடாது. அதற்கு உள்ளும் புறமுமாகக் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு அணையுமென்றில்லை. அது நீண்ட நாட்களாகத் தொடர்ந்து கனன்று கொண்டிருந்த தணலின் விளைவு. முதலில் அதனுடைய யாப்புத் தொடர்பான பிரச்சினை. “தேர்தல் திணைக்களத்திற்குக் கொடுக்கப்பட்ட – காட்டப்பட்ட – யாப்பு வேறு. கட்சியின் நடைமுறையில் உள்ள யாப்பு வேறு” என்று ஒரு வலிமையான குற்றச்சாட்டு கட்சியின் முக்கியமான உறுப்பினர்களிடையே உண்டு. இதனால் ஏற்பட்ட சிக்கலே இப்பொழுது நீதிமன்றம் வரையில் செல்லும் நிலையை ஏற்படுத்தியது. அதாவது சட்டபூர்வமான யாப்பு ஒன்றாகவும் கட்சியின் நடைமுறைகளின்போது பின்பற்றப்படும் யாப்பு இன்னொன்றாகவும் இருந்துள்ளது என்று இது பொருள்படும். ஏறக்குறைய எழுதப்படாத இரண்டாவது யாப்பின்படியே (நழுவல் யாப்பு) காரியங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. இதற்கு அண்மைய உதாரணம், மத்திய செயற்குழுவினரும் ஒவ்வொரு தொகுதிக் கிளையிலும் தெரிவு செய்யப்பட்ட ஐந்து உறுப்பினரும் பொதுச்சபை உறுப்பினராவர். இதற்கமைய ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் தலா ஐந்து உறுப்பினர்களே பொதுச்சபை உறுப்பினர்கள். இதன்படி 25 தொகுதியிலும் 125 உறுப்பினர்கள். மத்திய குழு உறுப்பினர்கள் 41. எனவே மொத்தம் 166 உறுப்பினர்களே பொதுச் சபை அங்கத்தவர்கள் ஆகும். (விதி 07 (ஆ)) ஆனால் தலைவர் தெரிவின்போது 321பேர் வாக்களிப்பில் பங்கேற்றிருக்கின்றார்கள். இது எப்படி நடந்தது? இதுதான் தமிழரசுக் கட்சியினுடைய யாப்பின் விசித்திரம். தலைமையின் சிறப்பு. மேலும் சொல்வதென்றால், யாப்பு விதியின்படி தலைவர் தெரிவின் பின்னரான அனைத்துத் தெரிவுகளையும் புதிய தலைவரின் தலைமையில் பொதுச்சபையே தீர்மானித்திருக்க வேண்டும். எந்தச் சூழலிலும் மத்தியசெயற்குழு கூட்டப்பட்டு பதவிநிலைகள் தீர்மானிக்கப்படும் என்றோ அதற்கு பொதுச்சபையிடத்தில் அனுமதி பெறும் முறைமையொன்று யாப்பில் கூறப்படவில்லை. ஆனால், இதையெல்லாம் மீறியே செயலாளர் தெரிவு உட்பட ஏனைய விடயங்கள் நடந்தன. ஏறக்குறைய புதிய தலைமை உட்பட நிருவாகத்தெரிவு விடயத்தில் யாப்பைக் கடந்து 15 க்கும் மேற்பட்ட விடயங்களை சென்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. “எல்லாத்துக்கும் நாங்கள் யாப்பை வைத்துத்தான் செயற்பட வேண்டுமென்றில்லை” என்று அதனுடைய தலைவர் மாவை சேனாதிராஜா இந்த நெருக்கடிகளின்போது சொன்னதை இங்கே நினைவு கொள்ளலாம். தமிழ் மக்களின் மிகப் பெரிய கட்சி, பாரம்பரியம் மிக்க கட்சியின் நிலைமையையும் நடத்தைச் சிறப்பையும் பார்த்தீர்களா? இப்படிச் சொன்ன மாவைக்கு நீதிமன்றம் தக்க பாடம் படிப்பித்துள்ளது. ஆம், இது போன்ற தவறுகளால் யாப்பு, இப்பொழுது கட்சிக்கே ஆப்பு வைத்துள்ளது. அதாவது யாப்பின் பலவீனங்களும் யாப்பைப் பலவீனப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்ட தலைமை உறுப்பினர்களின் செயல்களும் கட்சியை முடக்கும் நிலைக்குள்ளாக்கியுள்ளன. கட்சியைச் சந்தி சிரிக்க வைத்துள்ளன. யாப்புத் தவறுகளை முன்னிறுத்தியே யாழ்ப்பாணம், திருகோணமலை நீதிமன்றங்களில் கட்சிக்கு எதிரான வழக்குகள் யாப்பு விதிகளை வலியுறுத்தும் தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்டன. இவ்வளவுக்கும் தமிழரசுக் கட்சிக்குள் ஏராளம் சட்டவாளர்கள் உள்ளனர். கட்சியின் உருவாக்குநர்களான எஸ்.ஜே.வி. செல்வநாயகம், திருச்செல்வம், நாகநாதன் தொடக்கம் சம்மந்தன், சுமந்திரன், தவராஜா வரையில் பல சட்டவாளர்கள். இருந்தும் யாப்புக் குழப்பமும் குறைபாடுகளும் நீடிக்கிறது என்றால் பதவியில் குறியாக இருப்பதைப்பற்றியே ஒவ்வொருவரும் சிந்திக்கின்றனரே தவிர, கட்சியின் எதிர்காலத்தையோ மக்கள் நலனையோ அல்ல என்பது தெளிவாகிறது. இந்தத் தவறுகளிலிருந்தும் இந்தப் போக்கிலிருந்தும் தமிழரசுக் கட்சி தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும். ஆனால் அது எளிய விசயமல்ல. அப்படிச் செய்ய வேண்டும் என்றால் கட்சியின் தலைமைப் பதவியிலிருப்போரும் மூத்த தலைவர்களும் தங்களைச் சுய விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டும். கூடவே பல நிலைகளில் விட்டுக் கொடுப்புகளைச் செய்ய வேண்டும். அதாவது தகிடு தத்தங்களைக் கைவிட்டு, கட்சியை நேர்மையாக வழிநடத்த வேண்டும். யாப்பு விதிகளை முறையாகப் பின்பற்றுவதுடன், அதிலுள்ள குறைபாடுகளும் களையப்பட வேண்டும். இதற்கு யார் தயார்? அடுத்தது, வாய்ப்பேச்சு அரசியலிலிருந்து விடுபட்டுச் செயற்பாட்டு அரசியலில்தமிழரசுக்கட்சி தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். இதனை “சூனிய அரசியல்” என்று சொல்கிறார், விடுதலை இயக்கமொன்றில் செயற்பட்ட சார்ள்ஸ் என்ற மூத்த போராளி. தமிழரசுக் கட்சியின் அரசியல் போதாமைகளை – அதனுடைய வளர்ச்சியின்மையைப் பார்க்க வேண்டும் என்றால் 1960, 1970 களின் சுதந்திரன் பத்திரிகையையும் இப்பொழுது தமிழரசுக் கட்சியின் தலைவர்களின் பேச்சுகளையும் கவனித்தால் இது தெரியும். அன்றும் இன்றும் அது வெறும் பிரகடனங்களை (பீத்தல்களை) வாய்ச்சவடால்களாக அடிப்பதையே தன்னுடைய அரசியல் முறைமையாகக் கொண்டுள்ளது. அது அரசாங்கத்துக்கு 50 ஆண்டுகளாக விடுத்த எந்த எச்சரிக்கையும் கண்டனமும் பதிலடியும் விளைவுகளை உண்டாக்கியதில்லை. பதிலாக அவற்றைக் குறித்து மக்கள் சிரிக்கும் நிலையே உருவாகியது. அரசுக்கும் சிங்கள மக்களுக்கும் சிரிப்பதற்கான பகடியாக இருந்தது – இருக்கிறது. என்பதால்தான் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசும்போது சிங்கள உறுப்பினர்கள் அதைப் பொருட்படுத்துவதுமில்லை. அவர்கள் அங்கே இருப்பதுமில்லை. இவர்கள் தமிழ்ப்பத்திரிகைகளில் செய்தி வர வேண்டும் என்பதற்காகவே பேசுகிறார்கள் என்பார் நண்பர் ஒருவர். இதுதுான் இறுதியில் தீபாவளிக்குத் தீர்வு, பொங்கலுக்குத் தீர்வு என்று தலைவர் சம்மந்தன் சொன்னதை வைத்துச் சம்மந்தனையே பகடி செய்யத் தொடங்கினர் சனங்கள். ஆழ்ந்து நோக்கினால் தமிழரசுக் கட்சியின் கையாலாகத்தனத்தை இதில் தெளிவாக உணரலாம். அது வந்து கோமாளித்தனமான தலைவர் தெரிவு வரையில் வந்து சீரழிவில் நிற்கிறது. ஆகவே 75 ஆண்டுகால அரசியற் பயணத்தில் தமிழரசுக் கட்சி தமிழ் மக்களுக்கு எத்தகைய அரசியல் வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தது? தமிழ் மக்களுடைய அரசியல், பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சிக்கும் நிலப் பாதுகாப்புக்கும் என்ன வகையிலான பங்களிப்புகளைச் செய்தது? அவற்றின் விளைவுகள் எவ்வாறான நற்பலன்களை விளைத்துள்ளன? போரினால் பாதிக்கப்பட்ட மக்களையும் பிரதேசங்களையும் அது மீள்நிலைப்படுத்தியுள்ளதா? அப்படியென்றால் அதை அது எப்படிச் செய்யது? எங்கே செய்தது? குறைந்த பட்சம் போருக்குப் பிந்திய அரசியலையும் சமூகத்தையும் எப்படிக் கட்டமைத்தது? முன்னெடுத்தது? என்றும் கணக்கிட வேண்டும். கட்சியும் அதை மக்களுக்குச் சொல்ல வேண்டும். அந்தக் கட்சியை ஆதரிப்போரும் இருக்குப் பதிலளிக்க வேண்டும். அந்தக் கடப்பாடு இன்று தவிர்க்க முடியாமல் உருவாகியுள்ளது. குறைந்த பட்சம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய மறுவாழ்வுப் பணிகளிலும் யுத்த அழிவுப் பிரதேசங்களை மீளுயிர்ப்புச் செய்வதிலும் அது ஆற்றிய பணிகள் என்ன? அதனுடைய பெறுமானங்கள் – அடையாளங்கள் என்ன என்றபது அவசியமாக அது தெளிவுபடுத்த வேண்டும். மூத்தகட்சி, பெரிய கட்சி என்ற அடிப்படைத் தகுதியை அது கொள்வதாக இருந்தால் இன்று உலகமெங்கும் பரவிப் பலமடைந்திருக்கும் புலம்பெயர் மக்களை அது ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைப்பதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருக்க வேண்டும். அதைப்போல அது, தன்னுடைய ஒழுங்கமைப்பின் கீழும் ஒருங்கிணைப்பிலும் ஏனைய தமிழ்க்கட்சிகளைச் சேர்த்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல், அதற்கு எதிராக, ஏற்கனவே ஒருங்கிணைந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே சிதைத்தது. தமிழரசுக் கட்சியின் ஜனநாயக மறுப்பும் எதேச்சாதிகாரப் போக்குமே ஏனைய பங்காளிக் கட்சிகள் விலகிச் செல்லக் காரணமாகின. இதையெல்லாம் யார் மறுக்க முடியும்? இப்படிச் செயற்பாடு எதுவுமே இல்லாமல், எதிர்மறையாக மக்களுக்கும் சமூகத்துக்கும் விளைவுகளை – பாதிப்புகளை உண்டாக்கும் கட்சியை எளிதில் சீராக்க விட முடியாது. அதற்கு மிகப் பெரிய அளவில் மாற்றத்தை உள்ளேயும் வெளியேயும் உருவாக்க வேண்டும். இதற்கு அது தன்னுடைய வெற்றுப் பிரகடனங்களிலிருந்து விடுபட வேண்டும். மக்களையும் கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் ஏமாற்றும் அரசியலைக் கைவிட வேண்டும். தன்னை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும். உழுத்துப் போன வீட்டை அல்லது கட்டிடத்தை நாம் இடித்துப் புனரமைப்பதில்லையா? அப்படி முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும். சொந்த வாழ்க்கையில் நாம் தேவையற்றதையெல்லாம் கழித்து ஒதுக்கி விட்டு, புதியவைகளை வாங்கிக் கொள்கிறோம். அல்லது உருவாக்கிக் கொள்கிறோம். அது வீடாக இருக்கலாம். பொருட்களாக இருக்கலாம். துணிமணிகளாக இருக்கலாம். ஏன், மிகப் பெறுமதியான நகைகளாகக் கூட இருக்கலாம். காலத்துக்கு ஏற்ற மாதிரி மாற்றி அமைப்பது அவசியமானது. வேண்டப்படும் எந்த மாற்றத்தையும் செய்யாமல் இன்னும் அது தமிழ் மக்களின் தலைமைக் கட்சியாகப் பேராதரவோடு இருக்கிறது என்றால்…. தமிழ் மக்களின் அரசியற் தலைவிதியை என்னவென்று சொல்வது? அவர்களுடைய அரசியல் அறிவை, புத்திஜீவித்தனத்தை எப்படிக் கூறுவது? அடுத்தது, தமிழரசுக் கட்சியின் எதிர்காலத்துக்கான அரசியலைப் பற்றியது. தமிழரசுக் கட்சிக்குள் இரண்டு வகையான அரசியற் போக்குண்டு. 1. சம்மந்தன், சுமந்திரன், குகதாசன் போன்றோர் முன்னெடுக்கின்ற ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு என்ற வகையிலான அரசியல். இதற்காக அவர்கள் முஸ்லிம், மலையக, சிங்களத் தரப்பினரோடும் ஒரு மென்னிலை இணக்கப்பாட்டு உறவைப் பேணி வருகின்றனர். கூடவே விடுதலைப் புலிகள் முன்னெடுத்த தீவிர நிலைப்பாட்டை தவிர்க்கின்றனர். இதைப்பற்றி தலைவர் தெரிவு நடைபெற்ற பிறகு ஊடகவியலாளர் சிவராஜாவுக்கு வழங்கிய யுடியூப் நேர்காணலில் திரு சுமந்திரன் தெளிவாகவே சொல்கிறார். தலைவர் தெரிவில் தான் தோற்றிருந்தாலும் தன்னுடைய நிலைப்பாட்டை விட்டு விடப் போவதில்லை என. அது சரியானது என்றும் அவர் வாதிடுகிறார். இதனால்தான் அவர் தனியே உலக நாணய நிதியத்தின் நிதிப் பயன்பாடு பற்றிய அரசாங்கத்தின் உரையாடலில் துணிவாகச் சென்று பங்கேற்றுள்ளமையும் நிகழ்ந்திருக்கிறது. 2. சிறிதரன், மாவை, அரியநேத்திரன், சிறிநேசன் போன்றோர் முன்னெடுக்கும் தீவிரத் தமிழ்த்தேசியவாத அரசியல். இதற்கான செயல்வடிவத்துக்கு அப்பால், இவர்கள் விடுதலைப் புலிகளின் தொடர்ச்சி தாமே என்று கருதிக் கொண்டு மேற்கொண்டு வரும் தனியாவர்த்தனம். இதுவரையிலும் கூட இந்த இரண்டு போக்கும் கட்சிக்குள்ளிருந்தன. ஆனால் இப்போதுள்ளதைப்போல அதுவொரு பெரிய வெடிப்பாக வரவில்லை. இந்த இரண்டு போக்குகளையும் பயன்படுத்தி அரசியல் அறுவடையைத் தமிழரசுக் கட்சி செய்து வந்தது. சிறிதரன் புலிக்கொடியை ஏந்துவார். சம்மந்தன் சிங்கக் கொடியைத் தூக்குவார். புலிகளை ஆதரிப்போரின் வாக்குகளும் அதற்குக் கிடைத்தன. அவர்களை எதிர்ப்போரின் வாக்குகளும் கிடைத்தன. இதற்கான முடிவு ஏறக்குறைய வந்துள்ளது எனலாம். அடுத்தது, இப்போதுள்ள நிலையில் சிறிதரன் அணி மீண்டும் (நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு) தலைமையேற்றால் இன்னொரு பிரச்சினை தமிழரசுக் கட்சிக்குண்டு. சிறிதரன் மேற்கொள்கின்ற அதே தீவிர அரசியலையே கஜேந்திரகுமாரின் அணியும் மேற்கொள்கிறது. ஆகவே இரண்டு தரப்பும் களத்தில் நேருக்கு நேர் மறுபடியும் மோதக் கூடிய நிலை ஏற்படக் கூடிய சூழல் உருவாகியிருக்கிறது. இது முன்னொரு காலம் அகில கஜேந்திரகுமாரின் பாட்டனாரான ஜீ.ஜீ. பொன்னம்பத்தின் இலங்கைத் தமிழ்க்காங்கிரசும் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் மோதியதைப்போன்றிருக்கும். ஆனால் அன்று வெவ்வேறு நிலைப்பாடுகளுடன் மோதல் நடந்தது. அதனால் ஜீ.ஜீ. தோற்றார். செல்வநாயகம் வென்றார். இங்கே இருதரப்பும் ஒரே நிலைப்பாட்டில் மோதப் போகிறது. ஆகவே இது மீளவும் தமிழரசுக் கட்சிக்கு இன்னொரு நெருக்கடியாகவே இருக்கும். அதேவேளை அது இந்த நிலைப்பாட்டில் இருந்தால் தமிழ்ச்சமூகம் மேலும் நெருக்கடியைச் சந்திப்பதோடு, நாட்டிலிருந்து வெளியேறுவோரின் எண்ணிக்கையை மேலும் கூட்டும். சுமந்திரன் தரப்பு வெற்றியடைந்தால் அதுவும் நெருக்கடியைச் சந்திக்கும். இனப்பிரச்சினையைத் தீர்ப்பது – அரசியற் தீர்வைக் காண்பது தொடக்கம் தமிழ்ச்சமூகத்தை பொருளாதாரம் உட்பட அனைத்துத் தளங்களிலும் கட்டியெழுப்பும் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். இது எளிதான விசயமல்ல. இதற்கும் கடுமையாக உழைக்க வேண்டும். ஆகவே தமிழரசுக் கட்சிக்கு தொடர் நெருக்கடிகளும் தவிர்க்கவே முடியாத கடப்பாடுகளும் (பொறுப்புகளும்) வரலாற்று ரீதியாக வந்து சேர்ந்துள்ளன. இனியும் அதனால் முன்னரைப்போல சுழித்தோட (தப்பியோட) முடியாது. பொறுப்புச் சொல்லியே ஆக வேண்டும். https://arangamnews.com/?p=10549
  4. தமிழரசுக்கட்சியை விமர்சிக்கலாமா? February 26, 2024 — கருணாகரன் — “தமிழரசுக் கட்சியைப் பற்றி தொடர்ந்து எதிர்மறையாகவே எழுதி வருகிறீர்கள். ஆனால் தமிழ் மக்களுடைய பேராதரவைப் பெற்றதாகவும் 75 ஆண்டுகாலப் பாரம்பரியத்தைக் கொண்டதாகவும் தமிழரசுக் கட்சிதானே உள்ளது! அதுமட்டுமல்ல, ஒப்பீட்டளவில் உட்கட்சி ஜனநாயகத்தைக் கொண்டிருக்கும் தமிழ்க்கட்சியும் அதுதான். அண்மையில் நடந்த தலைமைக்கான தேர்தலே இதற்கொரு உதாரணம். இப்படியெல்லாம் இருக்கும்போது எப்படி நீங்கள் அந்தக் கட்சியைக் குறைத்து மதிப்பிட முடியும்?” என்று கேட்கிறார் நண்பர் ஒருவர். கூடவே தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரான சிவஞானம் சிறிதரனையும் அவருடைய தலைமைத்துவத்தையும் நான் உட்படப் பலரும் அவசரப்பட்டு விமர்சித்துள்ளதாகவும் குற்றம் சாட்டுகிறார். இத்தகைய அபிப்பிராயத்தை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘ஈழநாடு’ பத்திரிகையும் தெரிவித்திருந்தது. நண்பருடைய கேள்வியில் சில நியாயமுண்டு. அல்லது அதற்கான தருக்க உண்மையுண்டு. இதை நாம் சற்று ஆழமாகவும் விரிவாகவும் நோக்க வேண்டும். முதலில் தமிழரசுக் கட்சியைப் பற்றிப் பார்க்கலாம். தமிழரசுக் கட்சிக்கு வடக்குக் கிழக்கில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் உண்டு. (ஏனைய கட்சிகளுக்கு முழு மாவட்டங்களிலும் உறுப்பினர்களில்லை). கூடுதலான மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டுள்ள கட்சியும் அதுதான். 75 ஆண்டுகால வரலாற்றையும் அதற்கான கட்டமைப்பையும் கொண்ட கட்சியும் அதுதான். ஜனநாயக அடிப்படையிலான போட்டி முறையில் கட்சிக்கான தலைவர், செயலாளர் போன்ற பதவி நிலைகளைத் தேர்ந்தெடுக்கக் கூடிய யாப்பையும் நடைமுறையையும் தமிழரசுக் கட்சி கொண்டிருப்பதும் உண்மையே. இப்படியான சிறப்புகளைக் கொண்ட கட்சிதான் ஜனநாய மறுப்பில் ஈடுபட்டு, இப்பொழுது சீரழிவை நோக்கி, உள்ளும் புறமுமாகக் குத்துப் பட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும். அது கடைப்பிடிப்பதாகக் கூறும் ஜனநாயக மீறலையும் யாப்பு விரோதச் செயற்பாட்டையும் அது தொடர்ந்து செய்து வந்திருக்கிறது. என்றபடியால்தான் மாவை சேனாதிராஜா 10 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமைப்பதவியில் இருந்தார். இன்னும் அவருடைய பிடி முற்றாகத் தளரவில்லை. மட்டுமல்ல, பொதுச் சபையில் தெரிவு செய்யப்பட்ட குகதாசனை ஏற்க முடியாது என்று இந்த ஜனநாயகவாதிகள் மறுப்புத் தெரிவித்திருக்கிறார்கள். யாப்பு மீறலையும் ஜனநாயக மீறலையும் செய்தபடியால்தான் நீதி, நியாயம் கேட்டு அதனுடைய உறுப்பினர்களில் ஒருசாரார் நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கிறார்கள். கட்சிகளுக்குள், இயக்கங்களுக்குள் முரண்பாடுகள் ஏற்படுவதும் பிளவுகள் உண்டாகி உடைவுகள் நிகழ்வதும் அரசியலில் சகஜம். சிலவேளை கட்சிப்பிரச்சினைக்காக நீதிமன்றம்வரையில் செல்வதும் வழமை. இதொன்றும் புதுமையில்லை. அண்மையில் தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிடக் கழகம் கூட இப்படி நீதிமன்றப்படியேறியது. ஏற்கனவே ஒரு கட்டுரையில் சுட்டிக்காட்டியதைப்போல, ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் ஈரோஸ் போன்றனவும் நீதிமன்றத்தை நாடியவைதான். ஆகவே தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் உள்ளகப் போட்டிகளையோ முரண்களையோ நாம் குற்றமாகவோ குறையாகவோ பார்க்கவில்லை. ஆனால், அந்தக் கட்சி சமகால – எதிர்கால அரசியல், சமூக, பொருளாதாரப் பார்வைகளை – அதற்கான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. அதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக பழைய – தோற்றுப்போன அரசியலில் நின்று கொண்டு அதிகாரப் போட்டிக்காகத் தன்னை அழித்துக் கொண்டிருப்பதுவே அதன் மீதான விமர்சனமாகும். கூடவே இந்தளவுக்கு அவசரப்பட்டு நீதிமன்றத்துக்குச் செல்லவேண்டியதில்லை என்றும் கூறலாம். கட்சிக்குள்ளேயே இதற்குத் தீர்வு கண்டிருக்கலாம். கண்டிருக்க வேண்டும். அதாவது யாப்பின் (ஜனநாயக) அடிப்படையில் பேசி உடன்பட்டுத் தீர்வைக் கண்டிருக்க முடியும். என்றாலும் யாப்பு, அரசியல் பார்வைகள் – நோக்கு நிலைகள், கொள்கை மற்றும் அபிலாசை போன்ற காரணங்களால் முரண்பாடுகள் எழுவது இயல்பு. அதைச் சரியாகக் கையாளத் தவறும் தலைமைகள் இருக்கும்போது நீதிமன்றத்தை நாடுவது தவிர்க்க முடியாதது. அப்படியான ஒரு சூழலே இப்பொழுது தமிழரசுக் கட்சிக்கும் நேர்ந்துள்ளது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பொதுச்சபையைக் கூட்டுவதற்குத் தடையுத்தரவு கோரி, யாழ்ப்பாணம், திருகோணமலை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு வழக்குகளிலும் இதுவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் சிறிதரனும் மூத்த தலைவர்களும் இணைந்து நின்று சமாதானப்படுத்தியிருக்க முடியும். அப்படிச் செய்திருந்தால் கட்சியின் மீது கொஞ்சமாவது மதிப்பு ஏற்பட்டிருக்கும். அத்துடன், புதிய அரசியல் உள்ளடக்கத்தைப் பற்றியும் புதிய தலைமை ஆய்வு ரீதியாகச் சிந்தித்திருக்க வேண்டும். அடுத்தது, “தமிழரசுக் கட்சிக்குத்தான் மக்களின் பேராதரவுண்டு. ஆகவே அதை நாம் விமர்சிக்கவோ கேள்வி கேட்கவோ முடியாது” என்று கருதுவது தவறு. ஏனென்றால், தமிழரசுக் கட்சிக்குள்ளதையும் விட பேராதரவோடு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது ராஜபக்ஸக்களின் பொதுஜன பெரமுன. இன்றும் பெரும்பான்மையான மக்களிடம் ராஜபக்ஸவினருக்குச் செல்வாக்குண்டு. என்பதால், பெரமுனவையும் ராஜபக்ஸவினரையும் நாம் விமர்சிக்க முடியாது, கேள்வி கேட்க முடியாது, அவர்களுடைய அரசியல் தவறுகளைச் சுட்டிக்காட்ட முடியாது. அவர்களை எதிர்க்க முடியாது என்று கூறமுடியுமா? இவ்வாறு நோக்கினால், இந்தியாவில் மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கும் பாரதிய ஜனதாக் கட்சியையும் (BJP), அதனுடைய ஜனநாயக விரோத செயற்பாடுகளையும் மதவாதத்தையும் நாம் கேள்விக்கிடமின்றி ஏற்க வேண்டுமே. இப்படிப் பல உதாரணங்கள் உலகமெங்கும் உண்டு. மக்கள் எப்போதும் சரியானவர்களைத்தான் தெரிவு செய்வார்கள். சரியான தரப்புகளுக்கே ஆதரவளிப்பார்கள் என்றில்லை. அவர்களைத் திசைதிருப்பும் காரணிகள் (இனவாதம், மதவாதம், சாதியவாதம், பிரதேசவாதம் மற்றும் கையூட்டு, மோசமான பரப்புரைகள், திருப்தியடையக் கூடிய பிற அரசியற் சக்திகள் தென்படாமை போன்றவை) தவறான தரப்புகளை வெற்றியடையச் செய்து விடுகின்றன. சமகால உதாரணம் இஸ்ரேல். காசாவின் மீது இஸ்ரேல் இனரீதியான தாக்குதலைச் செய்கிறது. இதை இஸ்ரேலியர்கள் அனைவரும் ஆதரிக்காது விட்டாலும் பெரும்பான்மையானோர் ஆதரிக்கின்றனர். அதற்காக தன்னுடைய மக்களின் ஆதரவுடன்தான் இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்துகிறது என்று யாரும் நியாயப்படுத்திவிட முடியாது. கடந்த கால உதாரணம், ஹிட்லரின் யூதர்களுக்கு எதிரான யுத்தம். அன்றைய நாஸிகள் (ஜேர்மனியர்கள்) ஹிட்லரை ஆதரித்தனர் என்பதற்காக மக்கள் ஆதரவுடன்தான் ஹிட்லர் யுத்தத்தை நடத்தினார் என்று சொல்ல முடியுமா? ஆகவே மக்கள் ஆதரவு உண்டு என்பதற்காக அந்தத் தரப்புச் சரியாகச் செயற்படுகிறது என்று நாம் சொல்ல முடியாது. மக்கள் ஆதரவைப் பெற்றுக் கொண்டு தவறாகச் செயற்படுகின்ற தரப்புகளை மக்களின் முன்பு விமர்சனம் செய்ய வேண்டும். அவற்றைக் கேள்விக்குள்ளாக்க வேண்டும். அதுவே அறிவுசார் புலத்தினருடைய கடப்பாடாகும். அதையே நாம் செய்கிறோம். 1. தமிழரசுக் கட்சியின் அரசியல் போதாமைகளும் அரசியல் வரட்சியையும். 2. அதனுடைய கட்டமைப்பின் பலவீனங்களை. 3. அதன் தலைமையின் பலவீனங்கள், தவறுகளையும் மூத்த தலைமைத்துவ நிலையில் உள்ளோரின் பொறுப்பின்மைகளையும் தொடரும் தவறுகளையும். இதைச் செய்வது தவறல்ல. அவசியமே. ஏனென்றால் அது மக்களுக்கான பணி. வரலாற்றுக் கடமை. தான் ஒரு மூத்த, பொறுப்புள்ள, மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள கட்சி என்றால் அதற்குத் தக்கதாக, தகுதியானதாக பொறுப்புடன் அந்தக் கட்சியும் அதன் தலைமையும் நடந்து கொள்ள வேண்டும். உள்ளகப் பிரச்சினையை உரிய முறையில் அணுகித் தீர்க்க வேண்டும். சந்தி சிரிக்க வைக்க முடியாது. மட்டுமல்ல, எதிர்த்தரப்புகளுக்கு வாய்ப்பை இது வழங்குவதாகவும் அமைந்து விடும். புதிய – இளையோருக்கு இது சலிப்பையும் அவநம்பிக்கையையும் அளிக்கும். தமிழரசுக் கட்சியை ஆதரிப்போரும் அதனை மதிப்போரும் செய்ய வேண்டிய கடமை இது. புரிந்து கொள்ள வேண்டிய நியாயம் இது. அடுத்தது, சிறிதரனுடைய தலைமைப்பொறுப்பைப் பற்றியது. சிறிதரன் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுச் சிறிய காலமாக இருக்கலாம். ஆனால், அவர் கடந்த மூன்று தடவை தொடர்ச்சியாகப் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். இன்னொரு கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ்விலிருந்து கட்சி தமிழரசுக் கட்சிகுள் வந்தவராக இருக்கலாம். ஆனால், இப்பொழுது தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்படும் அளவுக்கு அதற்குள் செல்வாக்கைப் பெற்றவர். தமிழரசுக் கட்சியின் தலைவராகப் போட்டியிடும்போதே கட்சியின் நிலை, அதற்குள்ளிருக்கும் பிரச்சினைகள், அவற்றைத் தீர்க்க வேண்டிய கடப்பாடுகள், அதற்கான வழிமுறை பற்றிய புரிதலோடும் திட்டத்தோடும்தான் அவர் களமிறங்கியிருக்க வேண்டும். மட்டுமல்ல, போட்டிச் சூழலில் தொடர்ந்து ஏற்படக்கூடிய நெருக்குவாரங்கள், பிரச்சினைகள், அணிப் பிளவுகள் போன்றவற்றைக் கையாளக் கூடிய ஆற்றலையும் தனக்குள் தயார்ப்படுத்தியிருக்க வேண்டும். அதுதான் தலைமைக்கான தகுதி நிலையாகும். இல்லையென்றால் அந்தப் பதவிக்கு வந்திருக்கவே கூடாது. வேறு வேலைகளைப் பார்த்திருக்க வேண்டும். இப்பொழுது வழக்குகளை எதிர்கொள்ளும் நிலைக்குக் கட்சி வந்திருக்கிறது. அதாவது சிறிதரனும் வந்திருக்கிறார். கட்சியை அரசியல் உள்ளடக்கத்தின் அடிப்படையில் புதிதாக்கும் சிந்தனை எந்தத் தரப்புக்கும் வரவில்லை. அதிகாரத்தைக் கைப்பற்றுவதில்தான் அனைத்துத் தரப்பின் கவனமும் உள்ளது. என்பதால்தான் தமிழரசுக் கட்சியைக் கடுமையாக விமர்சிக்க வேண்டியிருக்கிறது. இதற்கு சமாதானங்களை யாரும் சொல்லக் கூடாது. இதேவேளை தமிழரசுக் கட்சியின் இன்னொரு அணியான சுமந்திரன் தரப்புப் பலமடைகிறதா? பலவீனப்படுகிறதா? என்ற கேள்வியைச் சிலர் எழுப்பலாம். அதை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம். 00 https://arangamnews.com/?p=10505
  5. சந்திக்கு வந்துள்ள தமிழரசுக்கட்சி! February 15, 2024 — கருணாகரன் — நீண்டகால இழுபறி, தாமதங்களுக்குப் பிறகு, தமிழரசுக் கட்சியின் தலைவராக (21.01.2024) சிவஞானம் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டு, அவர் கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் அமர்க்களமான முறையில் அதைக் கொண்டாடினாலும் அந்தக் கட்சிக்குள் கொந்தளிப்புகள் அடங்கவில்லை. முக்கியமாக, தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் தெரிவுக்குப் பிறகு சம்பிராயபூர்வமாக நடக்க வேண்டிய பதவியேற்பு மற்றும் தேசியமாநாடு போன்றவை நடத்தப்படாமலே நாட்கள் கழிந்து கொண்டிருக்கின்றன. ஆனால், கட்சிக்கு வெளியே தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் என்ற அடிப்படையில் கனேடிய, பிரித்தானிய, இந்தியத் தூதர்களைச் சந்தித்திருக்கிறார் சிறிதரன். அவர்களும் புதிய தலைவருக்கான வாழ்த்துகளைச் சொல்லியிருக்கிறார்கள். அதைப்போல தமிழக முதல்வருக்கும் புதிய தலைவர் என்ற அடிப்படையில் சிறிதரன், ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைதியாக இருந்து விடுதலையாகி சாந்தனை இலங்கைக்கு அனுப்ப உதவும்படி கடிதமொன்றை எழுதியுள்ளார். இப்படி கட்சிக்கு வெளியே தலைவராகச் செயற்படும் சிறிதரனால், கட்சிக்குள்ளே நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் (யாப்பின் பிரகாரமும் நடைமுறையிலும்) கொண்டுவர முடியவில்லை. இதற்குப் பிரதான காரணம், செயலாளர் குறித்த பிரச்சினையே. இந்தப் பிரச்சினையை (பிணக்கினை) கையாள்வதில் சிறிதரனுக்குள்ள தடுமாற்றமேயாகும். இதுவே செயலாளர் பிரச்சினை மேலும் நீடித்துச் செல்லக் காரணமாகியுள்ளது. தெரிவின் அடிப்படையில் செயலாளராகக் குகதாசனை ஏற்றுத் தன்னுடைய தலைமையில் தேசிய மாநாட்டைக் கூட்ட முற்பட்டிருந்தால் இந்தளவு சிக்கலுக்குள் சிறிதரன் சிக்கியிருக்க மாட்டார். தமிழரசுக் கட்சியும் சீரழிவு நிலைக்குள்ளாகியிருக்காது. இதனால்தான் கட்சியின் தேசிய மாநாடு நடத்தப்படாமலும் பதவியேற்பு நிகழ்வு நடைபெறாமலும் தள்ளிப்போகின்றன. இவற்றைத் தீர்மானிப்பதில் இன்னும் பழைய தலைவரான மாவை சேனாதிராஜாவின் கரங்களே வலுவானதாக உள்ளன. அதாவது இப்படி இவை தள்ளிப் போவதால் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இன்னும் மாவை சேனாதிராஜாதான் உள்ளார் என்ற ஒரு தோற்றப்பாடு தொடர்ந்தும் நிலவுகிறது. அவ்வாறே சத்தியலிங்கமே இன்னும் பதில் செயலாளர் என்றமாதிரியும் தோன்றுகிறது. புதிய செயலாளர் விவகாரம் பற்றிய விடயத்தை சத்தியலிங்கத்தின் வீட்டில் வைத்துப் பேசியது இதற்கொரு உதாரணம். சட்டப்படி (யாப்பின்படி) பொதுச்சபையின் வாக்கெடுப்பில் திருகோணமலையைச் சேர்ந்த திரு. குகதாசன் (27.01.2024) தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் அதை ஏற்றுக் கொள்வதில் கட்சிக்குள் ஒருபிரிவினர் தொடர்ந்தும் எதிர்த்தும் மறுத்தும் வருகின்றனர். செயலாளர் பதவியைக் குறிவைத்திருக்கும் மட்டக்களப்பைச் சேர்ந்த ஸ்ரீநேசனைச் சமாளிப்பதற்கு சிறிதரன் தொடர்ந்தும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார். இதற்காக வவுனியாவில் கடந்த வாரம் இருதரப்புக்கும் இடையில் இணக்கப்பாட்டை எட்டும் வகையிலான சந்திப்பொன்று நடந்தது. அதில் முதலாண்டு குகதாசனும் அடுத்த ஆண்டு ஸ்ரீநேசனும் பதவி வகிப்பது என்று உடன்பாடு காணப்பட்டது. அதற்குப் பின்பும் தமிழரசுக் கட்சிக்கான செயலாளர் யார் என்பது இன்னும் மங்கலான – குழப்பமான நிலையிலேயே உள்ளது. இந்தப் பத்தி எழுதப்படும் 15.02.2024 மாலைவரையில் இந்த நிலைமையே நீடிக்கிறது. மட்டுமல்ல, இப்போது தேசிய மாநாட்டை நடத்துவதற்கு யாழ்ப்பாண நீதி மன்றத்தில் தடையுத்தரவு கோரி வழக்குத் தாக்குதல் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை குகதாசனை ஏற்றுக் கொள்ள முடியாது. பதிலாக ஸ்ரீநேசனையே செயலாளராக அமர்த்துங்கள் என்று சிறிதரனுக்கு ஸ்ரீநேசனின் ஆதரவாளர்கள் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக யாப்பை முன்னிறுத்திச் சிறிதரனால் பதிலளித்திருக்க முடியும். அதுதான் சரியானதும் கூட. அப்படிச் செய்திருந்தால் இந்தளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்காது. இதை தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. எம். ஏ. சுமந்திரன் தெளிவாகக் கூறியிருக்கிறார். யாப்பின்படியும் பொதுச்சபை உடன்பாட்டுடனும் பகிரங்க வெளியில் நடந்த விடயங்களை மறுத்துச் செயற்படுவதும் யாப்பை மீற முயற்சிப்பதும் பாரதூரமான விடயங்களை உருவாக்கும் என்று சுமந்திரன் எச்சரித்திருக்கிறார். ஆனாலும் சிறிதரனோ இதற்குத் தீர்வு காண முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார். மாவை சேனாதிராஜா, சம்மந்தன் என மூத்த தலைவர்களை முன்னிறுத்தி இந்தப் பிரச்சினையைச் சமாளிக்கலாம் என்று முயற்சிக்கிறார் போலுள்ளது. இதனால் கட்சிக்குள் குழப்பங்கள் தொடர்கின்றன. சிறிதரனின் ஆதரவாளர்களே இப்பொழுது சலித்துப் போகின்ற அளவுக்கு நிலைமை உருவாகியுள்ளது. இது சிறிதரனின் ஆளுமைப் பிரச்சினையாகும். இதுவரையிலும் எந்தப் பொறுப்பிலும் இல்லாமல், எந்தப் பொறுப்பும் இல்லாமல் அதிரடிப் பேச்சை மட்டும் வைத்து அரசியல் செய்து கொண்டிருந்தவர் சிறிதரன். இப்பொழுதுதான் அவருக்குப் பொறுப்புக் கிடைத்துள்ளது. அதுவும் தலைமைப்பொறுப்பு. அதை ஏற்றுச் செயற்படுவதற்கு சிறிதரன் தன்னைத் தயார்ப்படுத்தியிருக்க வேண்டும். சிறிதரன் தலைமைப் பதவிக்குத் தெரிவாகும்போதே பிரச்சினை உருவாகி விட்டது. வழமைக்கு மாறாக தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு, இந்தத் தடவை போட்டியின் மத்தியில் நடைபெற்றது. மட்டுமல்ல, தொடர்ந்து செயலாளர் தெரிவும் போட்டியில்தான் நிகழ்ந்தது. அப்படி நிகழ்ந்த பிறகும் அது தீராப் பிரச்சினையாகத் தொடருகிறது என்றால் சிக்கலின் மத்தியில்தான் சிறிதரனின் தலைமைப் பொறுப்பு உள்ளது. இதற்கு சிறிதரன் கடுமையாக உழைக்க வேண்டும். மிக நிதானமாகச் செயற்பட வேண்டும். தன்னுடைய அணியை மட்டுமல்ல, எதிரணியினரையும் திருப்திப்படுத்த வேண்டும். அதற்கான உபாயங்களை வகுத்துக் கொள்வது அவசியம். அவை நீதியான, நேர்மையான முறையில் அமைய வேண்டும். ஜனநாயக விழுமியங்கள் பேணப்படுவது முக்கியமானது. ஆனால், சிறிதரனின் குணவியல்பும் அணுகுமுறையும் (Character and attitude) எப்போதும் பிரச்சினைகளைச் சுமுகமாகத் தீர்ப்பதற்கு ஏற்றதல்ல. அவர் எப்போதும் எதையும் தடாலடியாகப் பேசுகின்றவர். அப்படியே செயற்படுகின்றவர். முன் யோசனைகளின்றி வார்த்தைகளை விடுகின்றவர். பின்னர் அதை ஏற்றுக் கொள்ளாமல் அப்படித் தான் சொல்லவே இல்லை என்று மறுப்பவர். பொய்ச் சத்தியம் செய்கின்றாரே என்று சிலரைச் சொல்வார்களே, அப்படியான ஒருவராகவே சிறிதரன் இருந்திருக்கிறார். இவ்வாறான செயற்பாடுகளால் கிளிநொச்சி மாவட்டத்தில் பிறந்து, படித்து, பாடசாலை ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றியபோதும் அவருடன் கூடப்படித்த, இணைந்து பணியாற்றியவர்களில் பாதிக்கு மேற்பட்டோரைக் கையாள முடியாமல் எதிர்நிலைக்குத் தள்ளியிருக்கிறார். ஒட்டுமொத்தமான கிளிநொச்சிச் சமூகத்தை இரண்டாகப் பிளவுறச் செய்தே தன்னுடைய அரசியலை முன்னெடுத்து வந்திருக்கிறார். அரசியலுக்கு அப்பால் இணைந்து செயற்பட முடியாத ஒரு நிலையை கிளிநொச்சியில் சிறிதரன் உருவாக்கியிருப்பது பகிரங்கமான உண்மை. விவசாய அமைப்புகள், கலை, இலக்கியத் தரப்புகள், கூட்டுறவாளர்கள், கல்விச் சமூகத்தினர் என அனைத்திலும் இந்தப் பிளவைக் காணலாம். கிளிநொச்சியில் உள்ள அளவுக்கு வடக்குக் கிழக்கில் உள்ள பிற மாவட்டங்களில் இந்த மாதிரிப் பிளவுகளும் மோதல்களும் இல்லை. பலரும் இந்த நிலையைக் குறித்துக் கவலை கொண்டுள்ளனர். தேர்தல் மேடைகள் தொடக்கம் இலக்கியக் கூட்டங்கள் உட்பட பொது இடங்கள் வரையிலும் பிறரை அவமதித்தும் தூற்றியும் வந்திருக்கிறார் சிறிதரன். அவரை அடியொற்றி அவருடைய அடுத்த நிலையில் உள்ளவர்களும் இதைத் தொடருகின்றனர். இந்தளவுக்கு (இப்படியான ஒரு அரசியலை) வேறு எந்தத் தமிழ் அரசியற் தரப்பினரும் இப்போது செயற்படுவதில்லை. துரோகி – தியாகி என்ற அடிப்படையில் தமிழ் அரசியல் வெளியைப் பிளவுறுத்தி வைத்திருப்பவர்கள் இருவர். ஒருவர் உதயன் பத்திரிகையின் பணிப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான சரவணபவன். மற்றவர் சிறிதரன். சரவணபவன் கட்சியிலிலும் அரசியலிலும் மிகப் பின்னடைந்து விட்டார். சிறிதரன் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். தலைமைப் பொறுப்பில் இருக்கும்போது துரோகி – தியாகி என்ற அடிப்படையில் தன்னுடைய கட்சிக்குள்ளேயே ஆட்களை நோக்க முடியாது. அப்படிக் கையாளவும் முடியாது. ஆனால் அவருடைய உளம் தியாகி – துரோகி என்ற வகையில்தான் சிந்திக்கிறது. அவருடைய ஆதரவாளர்களும் அப்படித்தான் சிந்திக்கிறார்கள். இதனால்தான் அவர் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவாகிய பின், 2009 க்கு முன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புச் செயற்பட்டதைப்போன்ற ஒரு நிலையை உருவாக்கப் போகிறேன் என்றபோது பலரும் சிரித்தனர். மட்டுமல்ல, இதை மறுதலிப்பதாக, அப்படி ஒற்றுமை வேண்டுமென்றால் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் வந்து இணைந்து கொள்ளுங்கள் என்று சுரேஸ் பிரேமச்சந்திரனும் சித்தார்த்தனும் செல்வம் அடைக்கலநாதனும் மறுத்துரைத்தனர். இதற்குக் காரணம், கடந்த காலத்தில் இந்தத் தரப்பினரை ஒட்டுக்குழுக்கள் (துரோகிகள்) என்ற வகையில் சிறிதரன் நோக்கி வேலை செய்ததாகும். ஆகவே அவர் வைத்த எல்லா முட்களும் இப்பொழுது காலில் குத்தத் தொடங்கியிருக்கிறது. முன்னர் இருந்ததைப்போல தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை ஒற்றுமைப்படுத்துவேன் என்று சொன்னவருக்கு தன்னுடைய கட்சியையே ஒற்றுமைப்படுத்த முடியாத நிலை வந்திருக்கிறது. இப்பொழுது கட்சி நீதிமன்றப் படிக்கட்டில் நிற்கிறது. இனி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற த்ரில்லர் படத்தைப்போல அடுத்தடுத்த காட்சிகளுக்காக பலரும் காத்திருக்கின்றனர். அதாவது தமிழரசுக் கட்சி இன்றொரு வேடிக்கைப் பொருளாகி விட்டது. ஆம், புதிய தலைமையின் கீழ் கட்சி இரண்டாகப் பிளவுண்ட நிலையில் சந்திக்கு வந்துள்ளது. https://arangamnews.com/?p=10474
  6. சுயம் இழந்து, புலிகளின் ஒளியில் குளிர்காயும் தமிழ்க்கட்சிகள்! January 31, 2024 — கருணாகரன் — ஈழத்தமிழர்களின் விடுதலை மட்டும் கேள்விக்குறியாகவில்லை. விடுதலைப் போராட்டம் முறியடிக்கப்பட்டதற்குப் பின்னான (Post – War Politics) அரசியலும் கேள்விக்குறியின் முன்னேதான் நிற்கிறது. காரணம், போருக்குப் பின்னரான அரசியலைத் தமிழ்த்தரப்பு முன்னெடுக்கவில்லை என்பதேயாகும். போருக்குப் பிறகான அரசியல் எது? எப்படியானது? அதை எப்படி முன்னெடுப்பது என்ற தெளிவில்லாமல் அதை முன்னெடுக்கவே முடியாது. இந்தத் தெளிவைக் கொள்வது மிக முக்கியமானது. அதை விட அந்தத் தெளிவின் அடிப்படையில் துணிந்து அதைப் பின்பற்ற வேண்டியது அவசியமானது. ஏனென்றால் இன்னும் தமிழ் அரசியல் வெளியானது 1960, 1970, 1980 களின் அரசியலிலேயே உள்ளது. இதை தற்போதைய தமிழ் ஊடகங்கள், தமிழ் அரசியற் பத்தியாளர்களின் எழுத்துகள், அரசியற் கட்சிகளின் கொள்கைப் பிரகடனங்கள், தலைவர்களின் அறிவிப்புகளில் தெளிவாகக் காணலாம். ஆகவே இதைக் கடந்து போருக்குப் பிந்திய Post – War Politics அரசியலை முன்னெடுப்பதற்கு தெளிவும் அதை முன்னெடுக்கும் உறுதிப்பாடும் அவசியம். அதில்லாத காரணத்தினால்தான் தீவிரவாதம் பேசும் சிவஞானம் சிறிதரன் தமிழரசுக் கட்சிக்குத் தலைவராக முடிந்தது. சிறிதரனும் தமிழரசுக் கட்சியும் சுற்றிச் சுழன்று கொண்டிருப்பது கடும்போக்காளர் கஜேந்திரகுமாரைச் சுற்றி. சிறிதரன் மட்டுமல்ல, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், விக்கினேஸ்வரன் போன்றோரும் கஜேந்திரகுமாரின் அரசியற் பிரகடனத்துக்குப் பின்னாலேயே ஓடிக் கொண்டிருக்கின்றனர். அதை விட்டு தாம் வேறு நிரலில் நின்றால், தம்மை மக்கள் நிராகரித்து விடுவார்களோ என்ற அச்சம் இவர்களைப் பாடாய்ப்படுத்துகிறது. மற்றும்படி இவர்கள் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும், கஜேந்திரகுமாரின் பருப்பு எங்கும் வேகப்போவதில்லை என்று. அப்படித் தெரிந்து கொண்டே அதைத் தொடர்கிறார்கள் என்றால், இவர்களுக்குத் தங்களுடைய அரசியலில், தமிழர்களுக்கான அரசியலில், இந்தக் காலத்துக்கான அரசியலில் நம்பிக்கையும் தெளிவும் இல்லை என்றே அர்த்தமாகும். எத்தகைய சவால்கள், நெருக்கடிகள், எதிர்ப்புகள் வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு துணிந்து நின்று தமது அரசியலை முன்னெடுப்பதே தலைமைகளுக்கும் கட்சிகளுக்கும் அழகு. அதை இழந்தால் அவை தலைமைகளும் இல்லை. கட்சிகளும் இல்லை. இந்தக் கட்சிகள் மேலும் தடக்குப் படும் இடங்களுண்டு. சரியோ பிழையோ இந்தக் கட்சிகளும் தலைமைகளும் தமக்கென்ற அரசியற் பாரம்பரியத்தைக் கொண்டவை. உதாரணமாக ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கென்றொரு பாராம்பரியமும் அரசியற் கொள்கையும் உண்டு. அப்படித்தான் தமிழரசுக் கட்சிக்கும் புளொட்டுக்கும். ஆனால் இவற்றிற் சில அதைக் கைவிட்டு விடுதலைப்புலிகளின் ஒளியிலும் சிலபோது நிழலிலும் தமது அரசியலை மேற்கொள்கின்றன. இதற்கு மிகக் கிட்டிய உதாரணம், கடந்த வாரம் சிவஞானம் சிறிதரன், தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவானதற்குப் பின்பு, கிளிநொச்சியில் உள்ள கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு தன்னுடைய ஆதரவாளர்களுடன் சென்று வழிபாடு நடத்திக் காட்சிப்படுத்தியதாகும். இதையிட்டு கடுமையான விமர்சனங்கள் பொதுவெளியில் எழுந்துள்ளன. பதிலாகச் சில ஆதரவான குரல்களும் அங்கங்கே ஒலிக்கின்றன. ஆனாலும் இதையெல்லாம் கடந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோபக் கனல் எறிப்பதையும் நாம் காணமுடிகிறது. உதாரணமாக, “வலிக்கிறது. கிளிநொச்சி, கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் அரசியல் மேடையாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை அனுமதிக்கக் கூடாது” என்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளியாகச் செயற்பட்டவரும் தற்போது பசுமை ஆக்கச் செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் ‘வன்னித் தமிழ் மக்கள் ஒன்றிய’த்தின் நிறுவனருமான கணபதி சிறிதரன் (தரன்ஸ்ரீ) குற்றம் சாட்டியுள்ளார். அவர் மேலும் குறிப்பிடும்போது, “ராணுவத்தின் முற்றுகையில் களத்தில் கழுத்துப் பகுதியில் விழுப்புண் அடைந்து கதைக்க முடியாது. காலில் விழுப்புண் அடைந்து நடக்க முடியாது என்ற நிலையில் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு அருகில் இருந்த எங்களுக்கு உரித்தான (போராளிகளின்) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். என்னோடு ஒன்றாகக் களமாடி, காயப்பட்டு நான்கு நாட்கள் கழித்து மரணத்தை அடைந்த நண்பனின் இறுதி நிகழ்வில் அவனுடைய உடலை நானும் சுமந்து விதைக்க வேண்டும் என்று விரும்பினேன். நடக்கவே முடியாது. முழுமையாக கதைக்க முடியாது. இருந்தும் இறுதித் தருணத்தில் நண்பனின் வித்துடலுக்கு விடை கொடுப்பதற்காக கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு சென்றேன். ஒன்றாகப் பழகி உணவு அருந்தி, அருகில் உறங்கி, களமாடிய நண்பனை விதைப்பதற்காக… இப்பொழுது ஒவ்வொரு தடவையும் தாய்மண்ணுக்கு செல்லும்போதும் துயிலும் இல்லங்களுக்கு செல்வதற்கு நான் தவறுவதில்லை. இந்த தடவையும் நான்கு துயிலும் இல்லங்களுக்கு சென்றேன். எந்தச் சந்தர்ப்பத்திலும் அங்கே நான் புகைப்படங்களை எடுப்பதில்லை. ஆனால் பல ஆயிரம் நினைவுகளை மட்டும் மனதுக்குள் சுமந்து கொள்வேன்… வலிகளோடு… இன்று துயிலும் இல்லங்களும் அரசியல் மேடைகளாக மாற்றப்பட்டுள்ளன. அங்கே விடுதலைக்காகப் போராடித் தம்மை அர்ப்பணித்த ஆன்மாக்கள் அமைதியாக உறங்க வேண்டும். அவற்றை அரசியல் நாடகத்தினால் குலைக்கக் கூடாது….” என்று தரன்ஸ்ரீ குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு முன்பு, மாவீரர் நாளொன்றில் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பு மற்றும் விமர்சனங்களுக்கு மத்தியில் சிறிதரன் மாவீரர்நாள் சுடரை ஏற்றியிருந்தார். அதற்குப் பின்னர் அவர் அப்படிச் கூடர் ஏற்றக் கூடிய சூழல் அங்கே இருக்கவில்லை. அதற்கு மக்களும் போராளிகளும் இடமளிக்கவில்லை. ஆயினும் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தான் தெரிவு செய்யப்பட்ட பின்னர், அங்கே சென்று வழிபாட்டைச் செய்துள்ளார் சிவஞானம் சிறிதரன். இது பல தரப்பிலும் கடுமையான விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது. இதற்கு முன் புலிகளின் காலத்திலும் சரி பின்னரும் சரி, எந்தச் சந்தர்ப்பத்திலும் இவ்வாறு எந்தவொரு அரசியற் தரப்பும் மாவீரர் துயிலும் இல்லங்களைத் தம்முடைய அரசியல் மேடையாகப் பயன்படுத்தவில்லை என்கின்றனர் அவர்கள். மட்டுமல்ல, “பேச்சுவார்த்தைக்குச் செல்லும்போதும், போர்க்களத்துக்குச் செல்லும்போதும் கூட மாவீரர் துயிலுமில்லங்களை ஒரு அரசியற் களமாக விடுதலைப் புலிகள் பயன்படுத்தவில்லை. துயிலுமில்லங்களை அவர்கள் உயரிய இடத்தில் வைத்தே நோக்கினர் என்றும் கூறுகிறார்கள். ஆகவே இது தனியே தரன்ஸ்ரீயின் கவலை மட்டுமல்ல, வேறு பலருடைய கவலைகளும்தான். 2009 க்குப் பிறகு, விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள், அவர்களுடைய கொள்கையை, சித்தாந்தத்தை முன்னெடுப்போர், அவற்றின் தொடர்ச்சியாளர்கள் தாமே என்று தம்மைத் தாமே பிரகடனப்படுத்திக் கொண்டு இன்று, தமிழ் அரசியல் வெளியில் அரசியல் நாடகமாடும் போக்கு வரவரக் கூடியிருக்கிறது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்ற அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸினர் (கஜேந்திரன், கஜேந்திரகுமார் அணி) தொடக்கம், தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறிதரன் வரையில் சிலர் இந்த நாடக அரசியலை எந்தக் கூச்சமுமின்றி மேற்கொள்கின்றனர். புலிகளின் தொடர்ச்சி தாம் என்று சொல்லும் இவர்கள், விடுதலைப் புலிகள் முன்னெடுத்த எந்தவொரு அரசியல் செயற்பாட்டு வடிவத்தையும் தமது அரசியலில் கொண்டிருக்கவில்லை. உதாரணமாக, புலிகள் போராடிக் கொண்டு – களத்தில் பெரும் சமராடிக் கொண்டே – மறுபக்கத்தில் சமூக வேலைத்திட்டங்களில் ஈடுபட்டனர். சூழலையும் பண்பாட்டையும் பாதுகாத்தனர். பொருளாதாரக் கட்டமைப்புகளை விரிவாக்கம் செய்தனர். பொருளாதாரத் தடைகளின் மத்தியிலும் உள்ளுர் உற்பத்தியை ஊக்குவிக்கும் பொறிமுறையை உருவாக்கிச் செயற்படுத்தினர். சட்ட விரோத மது உற்பத்தி மற்றும் விற்பனையை இல்லாதொழித்தனர். மண்ணகழ்வைத் தடுத்தனர். மொத்தத்தில் ஒரு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கி வைத்திருந்தனர். ஊழலையும் பொறுப்பின்மையையும் அதிகார துஸ்பிரயோகத்தையும் இல்லையென்றாக்கினர். அவர்கள் உருவாக்கிய காடுகள் பல இடங்களிலும் இன்னும் உண்டு. பல நூற்றுக்கணக்கான ஏக்கரில் மரமுந்திரிகை, வேம்பு போன்ற தோப்புகள் வன்னியில் உள்ளன. சாதி, மத, பிரதேச வேறுபாடுகளற்ற ஒரு சமத்துவச் சமூகம் அப்போதிருந்தது. இதில் ஒரு சிலவற்றைக் கூட தற்போதைய அரசியற் தரப்புகள் மேற்கொள்ளவில்லை. குறைந்தபட்சம் நான்கு மரக்கன்றுகளைக் கூட நட்டுப் பராமரித்து வளர்க்க முடியாத நிலையில்தான் இவை உள்ளன. காடழிப்பும் மணல் அகழ்வும் சட்டவிரோத மது உற்பத்தியும் மதுப்பாவனையும் கட்டற்று அதிகரித்திருக்கிறது. இவற்றையெல்லாம் வெளியே இருந்து வந்து யாரும் செய்யவில்லை. அவ்வளவும் வடக்கில் – நம்முடைய சூழலில் உள்ளோரே செய்கின்றனர். இன்னும் சரியாகச் சொன்னால், இந்தத் தரப்பினரின் ஆதரவாளர்களிற் பலர் இவ்வாறு சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு, சாவகச்சேரி போன்ற நீதி மன்றங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் உரிமையாளர்களையும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிற மணல் மற்றும் மரங்களையும் கொண்டு வந்தோரையும் ஆராய்ந்தால் அவர்கள் அனைவரும் நம்முடைய சூழலைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். இவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் இருந்து கொண்டே புலிகளின் அரசியலைத் தொடர்வதாகப் பாவ்லா காட்டுகிறார்கள். கிழக்கு மாகாணத்தின் நிலை சற்று வேறு. அங்குள்ள சமூகச் சூழலின் அடிப்படையில் சில பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளின் நிலவரம் வேறாக இருந்தது. அங்கும் இப்பொழுது மணல் அகழ்வும் சூழல் சிதைப்பும் சாதாரணமாகியுள்ளது. சரி, இன விடுதலை சார்ந்து புலிகளின் அரசியல் கோரிக்கையோடு பயணிப்பதாக இருந்தாலும் அதை முன்னெடுப்பதற்கான அரசியற் கட்டமைப்பும் பொறிமுறையும் இவர்களிடம் கிடையாது. வெறுமனே வாய்ச்சவாடல்களைச் செய்து இலங்கை அரசையும் சிங்கள இனவாதத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியுமா? ஆக அதுவும் பொய்யான நாடகமே! தவிர, விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்ட பல்லாயிரக்கணக்கான போராளிகள் இன்னும் நிர்க்கதியான நிலையில்தான் வாழ்கின்றனர். மாவீரர் குடும்பங்கள் பலவும் நெருக்கடியான வாழ்க்கையில் உள்ளனர். அவர்களைப் பராமரிப்பதற்கான, அவர்கள் சுயமாக வாழக்கூடிய ஏற்பாடுகளைக் கூட இவர்கள் செய்யவில்லை. அதற்கான எந்தப் பொறிமுறையும் இவர்களிடம் கிடையாது. ஆனால், மேடைகளிலும் பத்திரிகை அறிக்கைகளிலும் புலிகளின் இன்றைய பிரதிநிதிகள் போலத் தம்மைக் காண்பித்துக் கொள்ள முயற்சிக்கின்றனர். இதற்காக புலிகள் தரப்பில் போராடி சாவினைத் தழுவிக் கொண்ட திலீபன் நினைவுநாள் தொடக்கம் புலிகளால் மதிப்பளித்துக் கொண்டாடப்படும் மாவீரர்நாள் வரையிலும் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ள விளைகின்றனர். இதனுடைய உச்சக்கட்டமாகவே தற்போது தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறிதரனின் துயிலுமில்ல நாடகமும் நடந்தேறியுள்ளது. தம்மால் சுயமாக எதையும் செய்ய முடியாத நிலையில் புலிகளின் – அவர்களுடைய மாவீர்களின் ஒளியில் தங்களுடைய அரசியலை இவர்கள் மேற்கொள்ள விளைகின்றனர். இது அந்தப் போராளிகளுக்கும் அவர்களைப் பெற்று வளர்த்த பெற்றோருக்கும் அவர்களை மதிக்கின்ற மக்களுக்கும் இழைக்கின்ற அநீதியாகும். யுத்தத்தின்போது படையினர் ஆக்கிரமித்த பிரதேசங்களில் இருந்த மாவீரர் துயிலுமில்லங்கள் சிதைக்கப்பட்டன. “அது மிகமோசமான ஒரு பண்பாட்டுச் சிதைப்பு. அதற்காக எப்போதும் சிங்கள மக்களும் அவர்களுடைய வரலாறும் தலைகுனிய வேண்டும்” என்று அப்போது அரசியல் விமர்சகர் மு.திருநாவுக்கரசு குறிப்பிட்டிருந்தார். உண்மையும் அதுதான். என்னதான் எதிர்த்தரப்பாக இருந்தாலும் எவருடைய புதைகுழிகளையும் நினைவிடங்களையும் சிதைக்கும் உரிமை எவருக்கும் இல்லை. அப்படிச் செய்தால் அதொரு பண்பாட்டு அழிப்பே. நிச்சயமாக அரசியல் பண்பாடு வீழ்ச்சியடையும் இடங்களிலேயே இவ்வாறான செயல்கள் நிகழ்ந்தேறும். ஏறக்குறைய அப்படியான ஒரு பண்பாட்டுச் சிதைப்பே, இப்பொழுது நடந்து கொண்டிருப்பதுமாகும். தமது அரசியல் ஆதாயங்களுக்காக போராளிகளையும் போராட்டத்தில் தம்முடைய இன்னுயிரை ஈய்ந்தோரையும் பயன்படுத்திக் கொள்ளுதல் மிகத் தவறானதாகும். இந்த வியாபாரத்துக்கு மக்களும் இடமளிக்கக் கூடாது. அப்படி இந்த அரசியல் தரப்பினர் தம்மைப் புலிகளின் தொடர்ச்சியாக உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றால், (கவனிக்கவும், உருவாக்கிக் கொள்ளல் அல்ல. உருவகித்தல் என்பதை) புலிகளைப் போலச் செயற்திறனுள்ளவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும். அதைச் செய்யாமல் வாய்ச்சொல் வீரர்களாக இருப்பது பொருத்தமற்றது. அது புலிகளுடைய இயல்புக்கும் அடையாளத்துக்கும் மாறானது. எதிரானது. (குறிப்பு – இந்தக் கட்டுரை புலிகளை தமது அரசியல் எஜமானர்களாகக் கருதிக் கொண்டு அல்லது புலிகளின் தொடர்ச்சி தாம் என்று உருவகித்துக் கொண்டு செயற்படும் அரசியற் தரப்பினைக் குறித்த விமர்சனங்களுக்காக எழுதப்பட்டது) https://arangamnews.com/?p=10415
  7. விதியே, விதியே, தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய்? January 25, 2024 — கருணாகரன் — இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகச் சிவஞானம் சிறிதரன் தெரிவு செய்திருப்பதை அடுத்து அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறு கருத்துகள் முன்வைக்கப்படுவதொன்றும் புதியதுமல்ல. பெரியதுமல்ல. அரசியற் கட்சிகளின் விடயங்கள் என்றால் பொதுப்பரப்பில் அதைப்பற்றிய உரையாடல்கள் நிகழ்வதுண்டு. ஆகவே இதொரு சாதாரணமான விடயம். ஆனால், இதைக் கடந்து இந்தக் கருத்துகளின் பின்னால் செயற்படுகின்ற உளநிலையும் அரசியற் காரணங்களும் முக்கியமானவை. இதற்கு அடிப்படையாகச் சில காரணங்கள் உண்டு. 1. இதற்கு முன்னெப்போதும் தமிழரசுக் கட்சியின் தலைமைக்கான போட்டி இப்படிப் பகிரங்க வெளியில் நடந்ததில்லை. இப்போதுதான் அது முதற்கடவையாக இந்த நிலைமையைச் சந்தித்திருக்கிறது. அதற்குக் கட்சிக்குள் நிலவும் உட்பலவீனங்கள் காரணமாகும். ஆனாலும் இதொரு சாதாரணமான உட்கட்சி விடயமே. இதைப்போல, தமிழ்நாட்டில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், இலங்கையில் ஐ.தே.க, சு.க போன்ற பெருங்கட்சிகளுக்கும் தலைமைப் போட்டிகள் நடந்ததுண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைமைப் போட்டியில் நீதி மன்றம் வரையில் சென்றது. அப்படிச் சில கட்சிகளுக்குள் சில சந்தர்ப்பங்களில் நிகழ்வது வழமை. கட்சியின் அரசியல் யாப்பே இதை உரைக்கிறது. இதையெல்லாம் உணர்ந்து கொள்ளாமல் அல்லது இதைத் தெரிந்து கொண்டும் இந்தப் போட்டியை ஏதோ தேசிய அளவிலான ஒரு போட்டிபோலக் காட்டியதால் – ஊதிப் பெருப்பித்ததால் ஏற்பட்டதே இந்தப் பரபரப்பு. 2. இதைப் பெரிய விவகாரமாக்கி, ஊதிப்பெருப்பிக்கக் காரணமாக இருந்த தரப்புகள், ஊடகங்களும் தமிழ்ப் பத்தியாளர்களுமாகும். காரணம், ஏற்கனவே இருக்கின்ற தமிழ்த்தேசிய அரசியற் கட்சிகளிடத்தில் காணப்படுகின்ற போதாமை உணர்வே இந்தத் தரப்புகளை தமிழரசுக் கட்சியின் தலைமைப் போட்டியின்மீது கவனத்தை உண்டாக்கியது. ஏற்கனவே தலைமைப் பொறுப்பிலிருந்த மாவை சேனாதிராஜாவும் கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் திரு. சம்மந்தனும் முதுமை மற்றும் செயலின்மை காரணமாக கட்சியையும் அரசியலையும் மந்த நிலைக்குள்ளாக்கி விட்டனர் என்று பலராலும் கருதப்பட்டது. மறுபக்கத்தில் கஜேந்திரகுமார், விக்கினேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் போன்றோர் தமிழ்த்தேசியவாத அரசியலைத் தீவிரமாகப் பேசினாலும் அதற்கான கட்டமைப்பு – செயற்பாட்டு விளைவு போதாதிருக்கிறது என்ற உணர்வு பலரிடத்திலும் காணப்பட்டது. அந்தப் போதாமை உணர்வென்பது எதிர்ப்பரசியலின் மீதான நாட்டத்தினால் ஏற்பட்டது. ஆக இன்று ஈழத்தமிழ் அரசியல் வெளியானது எதிர்ப்பரசியலிலேயே மையம் கொண்டுள்ளது. அதனுடைய விளைவே இதுவாகும். 3. இன்னொரு நிலையில் இன்னொரு சாரார், தீவிர எதிர்ப்பரசியலுக்குப் பதிலாக மென்போக்கான முறையில் பலரோடும் பேசக்கூடியவாறு தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். அவர்களே சம்மந்தன், சுமந்திரன், சாணக்கியன் போன்றோரை ஆதரிக்கின்றனர். ஆனாலும் அந்தத் தரப்பு பொதுவெளியில் இன்னும் பலமடையவில்லை. 4. ஆகவே மென்போக்கான முறையில் பன்மைத்துவத்தோடு கட்சியின் கொள்கையைக் கொண்டு செல்ல வேண்டும் என்று ஒரு சாராரும் (சுமந்திரனை ஆதரிப்போர்) அப்படியல்ல, தமிழரின் அரசியலை, விட்டுக் கொடுப்புகளற்ற முறையில் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என்று மறுசாராரும் (சிறிதரனை ஆதரிப்போரும்) கருதுவதால் ஏற்பட்டுள்ள எதிரெதிர் முனைப்புகளால் இந்தப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 5. எப்போதும் சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாகவே சிறிதரன் இருப்பதாகும். மட்டுமல்ல, கட்சிக்கு உள்ளும் வெளியிலும் ஒரு தொகுதியினரின் எதிர்ப்புகள் அவருக்கு உண்டு என்பதால் ஏற்பட்ட அலைகள். அதைப் போல அவரைத் தீவிர நிலையில் ஆதரிப்போரும் உண்டு. இதனால் உண்டாகும் உள் – வெளி முரண்கள் வெளித்தெரிகின்றன. 6. சிறிதரன் முன்னெடுக்க முயற்சிக்கின்ற அரசியலானது, கஜேந்திரகுமார் முன்னெடுத்து வரும் அதிதீவிரவாத அரசிலை ஒத்திருப்பதால், இரண்டு அரசியற் தரப்புகளுக்குமிடையில் முன்னரைப்போல (இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் – இலங்கைத் தமிழரசுக் கட்சி மோதல் அல்லது ஜீ.ஜீ.பொன்னம்பலம் – எஸ்.ஜே.வி. செல்வநாயகம் மோதல்) இரு தரப்புப் போட்டிகள், உரசல்கள், மோதல்களைக் கொண்டிருக்கும் என்பது. இதனுடைய விளைவுகள் அவ்வளவு நல்லதாக அமையாது என்ற உணர்வினால் எழும் அச்சம் இந்த விவாதங்களைக் கிளப்பியுள்ளது. 7. சிறிதரன் முன்னெடுக்க விரும்பும் அரசியலானது, தமிழரசுக் கட்சியின் காலாவதியாகப் போன அரசியல் மட்டுமல்ல, விடுதலைப் புலிகளின் தொடர்ச்சி போன்ற பாவனையைக் கொண்டிருக்கிறது என்ற தோற்றப்பாட்டைக் கொண்டது என்பதால் இரண்டும் நிகழ்காலத்திற்கோ எதிர்காலத்திற்கோ உரியதல்ல என்பதால் எழுந்துள்ள கருத்துகள். 8. புலிகளைப் போற்றிப்பாடித் தன்னுடைய அரசியல் வழிமுறையை முன்னெடுப்பதாகக் காட்டிக் கொண்டாலும் புலிகள் மேற்கொண்ட அரசியற் கொள்கை, அவர்களுடைய செயற்பாடுகள், அவர்கள் உருவாக்கிய நடைமுறை போன்றவற்றுக்கு அப்பாலேயே சிறிதரன் நிற்கிறார் என்பது. அதாவது அவர் புலிகளின் பிரதிநிதிபோல நாடகமாடுகிறார் என்பது. இல்லையென்றால் குறைந்த பட்சம் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்ளாள் உறுப்பினர்கள், அவர்களுடைய இயக்கத்தைச் சேர்ந்த மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கான இடம் இனி அளிக்கப்படுமா என்று எழுகின்ற கேள்வி. 9. விடுதலைப் புலிகளின் தொடர்ச்சியைப் பேணும் அரசியலுக்கு தென்னிலங்கையிலும் பிராந்திய ரீதியாக இந்தியா, சீனா மற்றும் சர்வதேச ரீதியில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகின் அங்கீகாரமும் கிடைக்குமா என்ற கேள்விகள். இவ்வாறு பல கேள்விகளும் அடிப்படைக் கருத்து நிலைகளும் தமிழரசுக் கட்சியின் மீதும் அதனுடைய தலைமை (சிறிதரனின்) மீதும் முன்வைக்கப்படுகின்றன. ஈழத் தமிழரின் அரசியல், ஆயுதப் போராட்டத்துக்கு முன்பும் ஆயுதப் போராட்டத்துக்குப் பின்பும் தமிழரசுக் கட்சியின் கைகளில்தான் இருந்தது, இருக்கிறது. அதற்கான தகுதி அதற்கு இருக்கிறதோ இல்லையோ வரலாற்றுச் சூழல் அப்படித்தான் அமைந்துள்ளது. இதற்கு இன்று தமிழ் அரசியல் பரப்பிலுள்ள ஏனைய சக்திகளின் பலவீனமும் ஒரு காரணமாகும். விடுதலைப் புலிகளால் பல கட்சிகளையும் இயக்கங்களையும் இணைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற கட்டமைப்பு உருவாக்கப்பட்டாலும் அதற்குத் தமிழரசுக் கட்சியே தலைமை தாங்கும் நிலை வளர்ந்தது. இதற்கு மாறாக தமிழரசுக் கட்சியின் திமிர்த்தனத்தினால் (ஜனநாயக முரண்பாடுகளால்) ஏனைய கட்சிகள் வெளியேறினாலும் அவற்றினால் தமிழரசுக் கட்சியை மீறி நிற்க முடியவில்லை. இவ்வளவுக்கும் தமிழரசுக் கட்சியின் பாராம்பரியத் தொடர்ச்சியைக் கொண்டவர்கள் இன்றில்லை. புதியவர்களே அதற்குத் தலைமை ஏற்றுள்ளனர். இருந்தும் ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களால் (அவர்களுக்கு நீண்டதொரு செயற்பாட்டு அரசியற்பாரம்பரியம் – விடுதலை இயக்க அரசியல் வழித் தொடர்ச்சி இருந்தாலும்) தமிழரசுக் கட்சியின் இந்தப் புதிய முகங்களை எதிர்கொள்ள முடியாமலே உள்ளனர். இவ்வளவுக்கும் தமிழரசுக் கட்சி செயற்பாட்டுத் தளத்தில் மிகப் பலவீனமானது. அதற்கு 75 ஆண்டுகாலப் பாரம்பரியமிருந்தாலும் அதனால் நிகழ்கால அரசியலையோ எதிர்காலத்துக்கான அரசியலையோ முன்னெடுக்கக் கூடிய சிந்தனைத் திறன் (கொள்கை), செயற்பாட்டுத் திறன் எதுவும் இல்லை. தமிழ் மக்களுடைய அரசியல் விடுதலைக்கும் சமூக மேம்பாட்டுக்கும் எந்த வகையிலும் பயன்தராத, பங்களித்திருக்காத, பங்களிக்கவே முடியாத நிலையில்தான் அது இன்னமும் உள்ளது. உண்மையில் திரு. S.J.V.செல்வநாயகம் காலத்துக்குப் பிறகு அது தேவையற்ற ஒன்றாக ஆகி விட்டது. அதாவது அது காலாவதியாகி (Expired) விட்டது. அதைச் செல்வநாயகமே “தமிழ் மக்களை இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று பகிரங்கமாக வெளிப்படுத்தியுமிருந்தார். அதைச் சற்று வேறுவிதமாக்கி தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற புதிய லேபிளில் வைத்திருந்தார் திரு. அ. அமிர்தலிங்கம். அதுவும் பின்னர் செல்லாக்காசாகி விட்டது. விடுதலைப்புலிகள் தம்முடைய அரசியல் தேவைக்காக தாம் ஏற்றுக்கொள்ளாமல் வெளியே தள்ளி வைத்திருந்த தமிழ்க்கட்சிகளையும் இயக்கங்களையும் தற்காலிகமாகப் பயன்படுத்த விளைந்ததன் விளைவாக மீண்டும் செயற்கைச் சுவாசமளிக்கப்பட்டு அரங்குக்குக் கொண்டு வரப்பட்டதே தமிழரசுக் கட்சி. அவர்கள் கூட முதலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தையே பயன்படுத்தினார்கள். திரு. வீ. ஆனந்தசங்கரியுடன் ஏற்பட்ட பிணக்கையடுத்தே தமிழரசுக் கட்சியின் வீடு சின்னம் புலிகளால் பயன்படுத்தப்பட்டது. புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி அரசியல் செய்து வருகிறது தமிழரசுக் கட்சி. ஆயினும் அதனுடைய பலவீனங்கள் அதை வளர்த்துப் புதிய – காலப் பொருத்தமுடைய அரசியல் இயக்கமாக மாற்றவில்லை. அதற்கான அனைத்து வாய்ப்புகளும் அதற்கிருந்தன. பதிலாக அந்தப் பலவீனங்கள் இன்றைய சீரழிவுக்கும் தலைமைப் போட்டிக்கும் அதைக் கொண்டு வந்து விட்டுள்ளது. அதாவது அதைச் சேற்றுக்குள் தள்ளி விட்டுள்ளது. உண்மையில் இப்பொழுது தன்னுடைய மனச்சாட்சியின்படி தமிழரசுக் கட்சி அரசியல் அரங்கிலிருந்தே விலகுவதே தமிழ் மக்களுக்கும் இந்தக் காலத்துக்கும் செய்கின்ற பெரும்பணியாக இருக்கும். நல்லதைச் செய்ய முடியாது விட்டால் பரவாயில்லை. நல்லன நிகழ்வதற்கு முட்டுக்கட்டையாக இருக்காது விட்டாலே அது ஒரு பெரிய பணியும் பங்களிப்பும்தான். ஏனென்றால் சரி பிழைகளுக்கு அப்பால் புலிகள் உருவாக்கியளித்த கூட்டமைப்பு என்பதைக் கூட தமிழரசுக் கட்சியினால் தக்க வைக்க முடியவில்லை. புலிகளுக்குப் பிறகு காலம் அளித்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்தி தமிழ்ச்சமூகத்தின் சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டு அடிப்படைகளைக் கூட அது நிர்மாணம் செய்யவில்லை. ஆனால் அதற்கான கடப்பாடும் பொறுப்பும் அதற்கிருந்தது. அதைச் செய்யாமல் பதிலாக எல்லாவற்றையும் சிதைத்து, இறுதியில் தன்னையே அழிக்கும் நிலைக்கு வந்துள்ளது. இதற்குத் தனியே தமிழரசுக் கட்சியினர் மட்டும் பொறுப்பில்லை. அதை ஆதரித்தும் அனுசரித்தும் நின்ற, நிற்கின்ற அனைவருக்கும் இந்தப் பொறுப்பும் பழியும் உண்டு. வரலாறு நிச்சயம் இவர்களை நிந்திக்கும். இப்பொழுது சிவஞானம் சிறிதரன் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தலைவராகியவுடன் சிறிதரன் சென்றது கிளிநொச்சியில் உள்ள மாவீரர் துயிலுமில்லத்துக்கு. இது ஏற்கனவே கூறப்பட்டுள்ளதைப்போல அவர் தன்னைப் புலிகளின் அரசியல் தொடர்ச்சியாகக் காட்ட முற்பட்டதற்காகவாகும். ஆனால், இதை தென்னிலங்கைச் சக்திகள் நற்சமிக்ஞையாகப் பார்க்கப் போவதில்லை. ஏன் முஸ்லிம்கள் கூட இதை எதிராகவே பார்ப்பார்கள். அவ்வாறே இந்தியாவும் மேற்குலகும் எதிர்நிலை நின்றே நோக்கும். புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு என்ற பேர் இருந்தாலும் சம்மந்தன் அதனைக் கடந்து பல்வேறு தரப்பினருடைய கவனத்தையும் கோரக் கூடிய அரசியலை முனனெடுத்து வந்தார். இந்த நிலைப்பாடு சர்வதேசப் பரப்பிலும் தமிழ்த் தரப்பின் தலைவர் என்ற அடையாளத்தைச் சம்மந்தனுக்குக் கொடுத்தது, அவர் மேற்கொண்ட பன்மைத்துவத்தை நோக்கிய அரசியலாகும். ஆனால், அதுதான் தமிழ்த்தரப்பில் சம்மந்தனுக்கும் அவரைத் தொடர்ந்த சுமந்திரனுக்கும் எதிரான விமர்சனங்களையும் கடந்த காலத்தில் உருவாக்கியிருந்தது. சுமந்திரன் தலைமைக்கு வர முடியாமல் போனதற்குக் காரணமும் இதுதான். ஆனால் போருக்குப் பிந்திய அரசியலை தனியே எதிர்ப்பு அரசியலாக முன்னெடுக்க முடியாது. இன்றைய யதார்த்தம் வேறு. இதைத் தெளிவாகவே சர்வதேச சமூகமும் இந்தியாவும் இலங்கையும் பொதுவாக உலகப் போக்கும் சொல்கின்றன. இப்படியான நிலைக்குப் பிறகும் தமிழ் மக்கள் (இங்கே மக்கள் என்பது அவர்களுக்காகச் சிந்திப்பதாகக் கருதப்படும் ஊடகவியலாளர்கள், அரசியற் பத்தியாளர்கள், தமிழர்களின் கல்விசார் துறையினர், சமூகச் செயற்பாட்டாளர்கள் உள்பட எனப் பொருள்படும) தமிழரசுக் கட்சியை தமக்கான மீட்புப் படகாகக் கருதினால் அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியுள்ளது. அவர்களைக் குறித்தே கேள்வி எழும்புகிறது. விடுதலைக்காக ஒரு சிறிய மக்கள் கூட்டம் தன்னுடைய சக்திக்கு அப்பால், மாபெரும் தியாகங்களைச் செய்துள்ளது. அளவுக்கு அதிகமான இழப்புகளைச் சந்தித்திருக்கிறது. இந்த இழப்புகள் சாதாரணமாகக் கடந்து போகக் கூடியவையல்ல. மட்டுமல்ல, உள் நாட்டிலும் நாட்டிற்கு வெளியேயும் தொடர் அலைச்சல்களில் சந்தித்த பிறகும் திக்குத் தெரியாத காட்டில் தடுமாறுவதைப்போலிருந்தால், ஈழத்தமிழரின் ஊடக, அரசியல், அதுசார் அறிவு நிலையைப் பார்த்தால் சிரிப்பு வரும். சற்று ஆழமாகச் சிந்தித்தால் கடுமையான கோபமே ஏற்படும். தங்களுடைய சொந்த அனுபவத்திலிருந்து கூட எதையும் கற்றுக் கொள்ள முடியாத சமூகமாக ஈழத்தமிழர்கள் சீரழிந்துள்ளனர். இல்லையென்றால் நாற்பது ஆண்டுகளாகப் போராடிய பட்டறிவைக் கூட நினைவில் வைத்துப் பரிசீலிக்க முடியாத அளவுக்கு, எல்லாவற்றையும் மறந்து போய், நாற்பது ஆண்டுகளுக்கு முன்னான அரசியல் குழிக்குட் போய்க் கண்மூடித்தனமாக விழுவார்களா? “விதியே விதியே, தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய்?” என்று பாரதியார் பாடியதை இங்கே நினைவிற் கொண்டு பேச வேண்டியதாக உள்ளது. பாரதியார் மனம் வருந்தி இதைச் சொன்னது, இந்திய சுதந்திரப் போராட்ட காலத்திலாகும். அப்போது வரலாற்றுச் சிறப்பெல்லாம் இருந்தும் கூட தமிழர்கள் உள்நாட்டிலும் உலகம் முழுவதும் கூலிகளாகவும் ஏதிலிகளாகவும் சிதறிப் பரந்து அல்லலுற்றுக் கிடந்தனர். அதைப் பார்த்து வெம்பித் துயரடைந்தார் பாரதி. கவிஞரின் மனம் சிறுமை கண்டு, கொடுமை கண்டு கொதிப்பதைப்போல, அறியாமையைக் கண்டும் கொதிப்படைவது. காலம் கடந்தாலும், சூழல் மாறினாலும் ஈழத்தமிழரின் நிலையில் மாற்றமில்லை. வரவர நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது. https://arangamnews.com/?p=10397
  8. நீ சென்ற இடமெல்லாம் ஒளியானதே, தமிழ் வரலாறு உலகெங்கும் பதிவானதே ! நிதர்சனம், புலிகளின்குரல் வானொலி உருவாக்கத்தின் காரணகர்த்தாவும், அவற்றின் முதன்மைப் பொறுப்பாளருமாகிய பரதன் அண்ணாவைப் பற்றி அவருடன் நீண்ட காலமாய் பழகியவனும், ஒன்றாக செயற்பட்டவன் என்ற காரணத்தினாலும் அவர் பற்றிய முக்கியமான கருத்துப் பதிவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன். பரதன் அண்ணா 83ஆம் ஆண்டு தன்னை முழுநேர உறுப்பினராக புலிகளுடன் இணைத்துக் கொண்டார். 1987இல் தான் எனக்கு அவருடன் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் திலீபன் அண்ணாவுடன் நிதர்சனம் முகாமிற்கு செல்வேன். அப்போது பரதன் அண்ணாவுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் செல்வதோ நடுச்சாமம். அப்போது அவர் அடுத்த நாள் ஒலிபரப்பிற்கான வேலைகளை செய்து கொண்டிருப்பார். பரதன் அண்ணாவின் முகாமிற்கு செல்வதென்றால் எமக்கு பெரும் ஆசை. காரணம் அந்த சாமத்திலும் சுடச்சுடப் பாணும் ஜாம் அல்லது பட்டரும் இருக்கும். ஆனால் அவருக்கு வெறும் தேநீர் மாத்திரம் போதும். இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், எமது போராளிகள் இராப் பகலாக கண் விழித்து தங்கள் வேலைகளை திறம்பட செய்தவர்கள். பரதன் அண்ணாவைப் பொறுத்தவரை வளமில்லாத காலத்திலும் வளமான படைப்புக்களை தான் ஒலி, ஒளிபரப்ப வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். ஒவ்வொரு பதிவுகளும் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்பதில் மிகக் கவனமான பிடிவாதத்தில் இருந்தார். தன்னை விளம்பரப்படுத்தாத ஒரு மனிதர். தலைவரின் கனவை கிட்டண்ணாவுடன் சேர்ந்து நனவாக்கியவர். நேர்த்தியென்ற பேச்சு வருகின்ற போது கிட்டண்ணாவையே உதாரணமாகக் காட்டுவார் பரதன் அண்ணா. காரணம் ஒருமுறை அவர்களது முகாமிற்கு காலையிலேயே கிட்டண்ணா போயிருக்கின்றார். முகாம் துப்புரவாக இல்லை. ஒருவர் மட்டுமே வேலை செய்துகொண்டிருந்தார். மற்றவர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அவரே முகாமை சுத்தம் செய்யத் தொடங்கி விட்டார். அயர்ந்த தூக்கத்திலிருந்தவர்களை எழுப்பவுமில்லை. இரவிரவாக வேலை செய்து களைத்துத் தூங்குகின்றனர் என்று அவருக்குத் தெரியும். ஆயினும் சத்தம்கேட்டு விழித்துக் கொண்டவர்கள் அசடுவழிய நின்றனர். இந்தச் சம்பவத்தை மறக்க முடியாது என்று பரதன் அண்ணா அடிக்கடி கூறுவார். இந்திய இராணுவத்துடனான போரின் போது ஒலி, ஒளி நாடாக்களை பத்திரப்படுத்துவது மிகவும் சவாலான விடயம். ஈரத்தன்மை புகாதவாறு புதைக்க வேண்டும். அதனை திறம்படச் செய்து முடித்தார் பரதன் அண்ணா. இந்திய இராணுவத்தின் முதற்குறியே நிதர்சனமாக இருந்தது. காரணம் நிதர்சனத்தின் செய்திகள் ஒளிப்படங்கள் எல்லாம் இந்திய வல்லரசிற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு மூலமாக இருந்தவர் பரதன் அண்ணா. 88 காலப்பகுதியில் கொழும்பில் மீண்டும் அவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இருவருக்கும் வெவ்வேறு வேலைகள். அவர் அப்பொழுது முதலாவது ஒலிநாடா உருவாக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். பின்னர் அது ‘புயல்கால ராகங்கள்’ என்ற பெயரில் தென்னிந்திய கலைஞர்களின் பங்களிப்பால் தரமான ஒலிநாடாவாக வெளியிடப்பட்டது. அதில் பாடிய மனோ, வாணி ஜெயராம் ஆகியோர் பாடி முடித்த பின்னர் அழுதுவிட்டார்கள் என்று குறிப்பிட்டார். அவ்வளவு சிறப்பாக அமைந்தது அவரது ஆரம்ப முயற்சி. இதற்கான பாடல் வரிகளை காசியண்ணா, புதுவையண்ணா, இன்குலாப் ஆகியோர் எழுதியிருந்தனர். அக்காலகட்டத்தில் இலங்கையின் அதிபராக இருந்த பிரேமதாசா அவர்களுடனான பேச்சுவார்த்தைக் காலம். ஒலி – ஒளிபரப்பு சாதனங்களை எல்லாம் வாங்குவதற்கு ஏற்ற காலமாகவும் திட்டமிடப்பட்ட நேரமாகவும் காணப்பட்டது. அதற்கு முன் தலைவரை சந்திக்க வேண்டும். வன்னிக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு எனக்குத் தரப்பட்டது. பரதன் அண்ணாவிற்கு அதுவொரு புது அனுபவம். நானே அடிக்கடி சென்று வருவேன். சில நேரங்களில் தலைவரை சந்திக்க நாள் கணக்கில் காத்திருக்க வேண்டும். அந்த காத்திருக்கும் காலத்தில் நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது. நாங்கள் வவுனியாவில் கிடாய்ச்சூரி என்னுமிடத்தில் ஒரு ஆதரவாளர் வீட்டில் நின்றிருந்தோம். ஆதரவாளரின் மகன் வந்து உங்களுக்கு பால் பிளேன் ரீயோ, சும்மா பிளேன் ரீயோ வேணும்? என்று கேட்டார். சிரிப்பை அடக்கிக் கொண்டு சும்மா பிளேன் ரீ என்று சொல்லி விட்டு அவர் பிளேன் ரீ கொண்டு வந்த பின் அவரை இருத்தி சரியாக சொல்வது எப்படியென பரதன் அண்ணா சொல்லிக் காட்டினார். பின்பு அவர் புத்தகத்துடன் வந்து பரதன் அண்ணாவிடம் பாடம் கற்றது வேறு விடயம். இதை நான் இங்கு ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், ஒரு விடயத்தை பகிடியாக சிரித்து விட்டு கடந்து செல்பவரல்ல அவர். சரியானதை சொல்லிக் கொடுத்து நேர்ப்படுத்தும் சீரிய பண்பு கொண்டவர் தான் பரதன் அண்ணா. தலைவரை சந்திக்க வந்த பின்பு இலத்திரனியல் கொள்வனவிற்காக நித்தியண்ணாவுடன் சிங்கப்பூர் சென்று அங்கு தான் பெரிய கொள்வனவை முடித்து வந்தார். லொறி நிறைய இலத்திரனியல் சாதனங்கள். அந்த நேரமே கோடிக்கணக்கான பெறுமதி கொண்டவை. கட்டுநாயக்காவிலிருந்து மணலாறு செல்லும் வரை STF இன் பாதுகாப்பிலேயே கொண்டு போய் சேர்க்கப்பட்டது. பின்னாளில் இதை வைத்து தான் தர்மேந்திரா கலைக்கூடம் உருவானது. 1990இல் இந்திய இராணுவம் வெளியேறி எமது கட்டுப்பாட்டில் எமது பிரதேசம் வந்த பின், இருவரும் சேர்ந்து பணியாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது. நான் நிதி நிர்வாகத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டேன். ஆரம்பமே பெரும் சவாலாகத்தானிருந்தது. புதிதாக எல்லாவற்றையும் நிறுவ வேண்டும். ஒரு ஒழுங்கான வடிவமைப்பின் கீழ் நேர்த்தியாக செய்து முடித்ததில் அவரின் சகலதுறை ஆளுமையும் புலப்பட்டது. நிதர்சனம், புலிகளின்குரல் வானொலிச் சேவைகள் 90இல் மிகுந்த தரத்துடன் தொடங்கப்பட்டது. சொற்ப ஆட்களுடன் ஆரம்பித்த இச் சேவை மிகப்பெரும் விருட்சமாக பரிணமித்தது. பரதன் அண்ணாவின் நிர்வாகத் திறமையால் பலாலி வீதியில் பெரிய அலுவலகம் உருவாக்கப்பட்டு அங்கு அமலன் அரங்கம் அமைக்கப்பட்டு அங்கேயே ஒலி – ஒளிப் பதிவுகள் செய்யப்பட்டன. ஒலி – ஒளிபரப்பின் தரத்தில் மிகவும் கண்டிப்பாக இருந்தார் பரதன் அண்ணா. எந்தவொரு விட்டுக்கொடுப்பிற்கும் இடமிருக்காது. நிலக்கீழ் ஒலி – ஒளிப்பதிவுக்கூடம் அமைக்கத் தீர்மானித்து, அதற்கான வரைபடம் பரதன் அண்ணாவால் வரையப்பட்டு, அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. மேலிருந்த மரங்கள் வெட்டப்படாமல் அதனைச் சுற்றியே நிலம் அகழப்பட்டு, நிலக்கீழ் அறை உருவனது. பார்ப்பவர்களுக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக மிகவும் கவனத்துடன் பலமாகவும், நேர்த்தியாகவும், அழகாகவும் பாதுகாப்பனதாகவும் உருவாக்கிய பெருமை அவரையே சாரும். படப்பிடிப்பு போராளி தர்மேந்திரா நினைவாக தர்மேந்திரா கலையகம் உருவானது. குறைந்த செலவில் தரமானதாக உருவானதில் தலைவராலும் பாராட்டப்பட்டோம். பரதன் அண்ணா எவ்வளவு கண்டிப்பானவரோ அந்தளவிற்கு கரிசனையும் உடையவர். அது போராளிகளாக இருந்தாலும் சரி, பொது மக்களாக இருந்தாலும் சரி அதற்கு சில உதாரணங்களைக் கூறலாம். எனக்கு நான்கைந்து நாட்களாக உடம்பு வலியுடன் கூடிய காய்ச்சல் இருந்தது. சாதாரண காய்ச்சல் என்று பனடோலைப் போட்டுவிட்டு எனது வேலைகளைச் செய்து கொண்டிருந்தேன். நாளாக நாளாக குறையவில்லை. என்னைப் பார்த்த பரதன் அண்ணா என்ன நவீனத்தார் ஒரு மாதிரியாக இருக்கிறாய். உடம்பு சரியில்லையோ என்று கேட்டார். காய்ச்சல் போலிருக்கிறது என்றேன். வா ஆஸ்பத்திரிக்குப் போவோம் என்றார். இல்லை பனடோல் போட்டனான். ஆக ஏலாது விட்டால் போவோம் என்று சொன்னேன். நீ போய் படப்பு என்று சொன்னார். எனக்கு கொஞ்ச வேலை இருக்கிறது. முடித்துவிட்டு படுக்கிறேன் என்று சொன்னேன். அதைப் பிறகு செய்யலாம். படுத்து எழும்பினால் சுகமாயிருக்கும். போய் படு என்று சொல்ல, நானும் அறைக்குள் சென்று படுத்துவிட்டேன். சிறிது நேரம் செல்ல நடுங்கத் தொடங்கி விட்டது. சத்தம் கேட்டு வந்து பார்த்தவர் நல்லா கூடிற்றுது போல என்று சொல்லி, வாகனம் தர்மேந்திராவில் நிற்கிறது. எடுத்துக்கொண்டு வாறன் என்று கூறி போர்வையால் போர்த்ததும், பயங்கரமாக குலப்பன் அடிக்கத் தொடங்கி விட்டது. அடுத்த கணமே என்னைத் தூக்கிக் கொண்டு அருகிலிருந்த திருநெல்வேலி நேர்ஸிங் ஹோமிற்கு போனார். எனக்கோ கதைக்க முடியாத நடுக்கம். என்னைப் பரிசோதித்த மருத்துவர் சிவபாதசுந்தரம், இது சாதாரண காய்ச்சல் இல்லை. இரத்தப் பரிசோதனையின் மூலம் தான் கண்டுபிடிக்கலாம் என்றும், உடனடியாக இரத்தப் பரிசோதனையை போய் செய்யும்படியும் கூறினார். அதற்குள் மணியண்ணாவும் வாகனத்தைக் கொண்டுவந்து விட்டார். இரத்தப் பரிசோதனையில் கடுமையான நெருப்புக் காய்ச்சல் என்றும் உடனடியாக அதற்கான மருந்து ஏத்த வேண்டும் எனவும், ஆனால் மருந்துக்குத் தட்டுப்பாடு. எங்கிருந்தாவது கொண்டு வந்தால் தான் காப்பாற்ற முடியும் என்றும் சொன்னார். பரதன் அண்ணாவின் முகம் மாறிவிட்டது. அதை வெளிக்காட்டாமல் எனது தலையைத் தடவி நீ ஒன்றுக்கும் யோசிக்காதை நான் மருந்தோடுதான் வருவேன் என்று கூறி, திலகனை என்னோடு நிற்கும்படியும் சொல்லி விட்டு சென்றார். சிலமணித்தியாலங்கள் கழித்து மருந்தோடுதான் வந்தார். உடனடியாக மருந்து ஏற்றத் தொடங்கி விட்டார்கள். வேலைப் பழுவிலும் அடிக்கடி வந்து பார்த்து மருத்துவரிடமும் கதைத்துவிட்டு தான் போவார். ஒரு வாரத்தின் பின் காய்ச்சல் குறைந்து விட்டது. அந்த சமயத்தில் என்னைப் போல் பெண் பிள்ளை ஒருவருக்கும் காய்ச்சல். மருந்து ஏற்ற வேண்டும். மருத்துவர் பரதன் அண்ணாவிடம் நிலைமையைக் கூறி மருந்தை அந்தப் பிள்ளைக்கும் கொடுங்கள். பொது மக்களோ, போராளியோ உயிர்தான் அவர்களுக்காகத் தானே நாம் போராடுகின்றோம் என்று கூறி அந்தப் பிள்ளையையும் பார்த்து ஆறுதல் கூறினார். அந்தப் பிள்ளை சுகமாகி தாயாருடன் எமது முகாமிற்கு வந்திருந்தார். தாயார் பரதன் அண்ணாவின் கையைப் பிடித்து அழுத அந்த நெகிழ்வான தருணம் இன்னும் மறக்க முடியாத ஒரு நிகழ்வு. அவரின் நிர்வாகத் திறமை பார்ப்போரை வியக்க வைக்கும். அவரது ஆளுமையின் கீழ் நிதர்சனம், புலிகளின்குரல், தமிழீழ வானொலி, புகைப்படம், ஒலி, ஒளி நாடா வெளியீடுகள், பயிற்சி வகுப்புகள் என அவரின் ஆளுமை வியாபித்திருந்தது. பொறுப்பாளன் என்றால் பொறுப்பேற்கும் பக்குவமும் வேண்டும். இதற்கு ஒரு சம்பவம் தலைவரின் மாவீரர் நாள் பேச்சு ஒலிபரப்பில் நடந்தது. அப்போது புலிகளின்குரல் ஒலிபரப்பிற்கு சிவா அண்ணா பொறுப்பாகவிருந்தார். தலைவரின் மாவீரர் நாள் உரையின்போது தடங்கல் ஏற்பட்டது. ஒழுங்காக தயாரிக்கப்பட்ட உரையின் ஒலி நாடாவிற்குப் பதிலாக வேறு போடப்பட்டு விட்டது. பின் இடைநிறுத்தி மீண்டும் ஒலிபரப்பப்பட்டது. தலைவரின் உரையில் எப்படி இது நடக்கச் சாத்தியம் என்று இன்றுவரை புரியவில்லை. எல்லாம் சரிபார்க்கப்பட்டுத் தான் இறுதியாக ஒலிபரப்புக்குக் கொடுக்கப்படும். உடனடியாக தலைவரிடம் சென்று தவறுக்குத் தானே பொறுப்பேற்றுக் கொண்டார். தவறிழைத்தது அவரல்ல. ஆனாலும் தான் முழுவதற்கும் பொறுப்பு என்பதால், அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். தலைவரும் பரவாயில்லை. பரதன் அடுத்தமுறை இப்படி நடக்காமல் நீங்களே நேரடியாக நின்று கவனியுங்கள் என்று சொல்லியனுப்பானார். இந்த நிகழ்வு அவரை வெகுவாகப் பாதித்திருந்தது. அதற்குப் பின் தனி ஒலிநாடாவில் பதியப்பட்டு அவரே நேரடியாகச் சென்று கொடுத்து கவனித்துக் கொள்வார். அவரது ஒலிபரப்பில் உருவான முதலாவது குறும்படம் ‘இனியொரு விதி’ தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக நிறைய தயாரிப்பு வேலைகள். ஞானரதனின் எழுத்துருவாக்கம். நாவண்ணன் அவர்களின் மகள், ஸ்ரீராம் (படப்பிடிப்பு போராளி, பின்நாளில் கிழக்கு மாகாண கடற்புலிகளின் தளபதி) நடித்திருந்தனர். பரதன் அண்ணாவிற்கு உதவியாளராக நான் இருந்தேன். நாவற்குழிக்கும், கைதடிக்கும் இடைப்பட்ட குளத்துடன் சேர்ந்த வயல் வெளியில் படப்பிடிப்பு நடைபெற்றது. ஒலி ஒளிக் கோவைகளின் பின்னர் 30 நிமிட குறும்படம் தயாரானது. தயாரானவுடன் தலைவர் எமது முகாமிற்கு வந்து படத்தைப் பார்வையிட்ட பின்னர் அவருடைய முகத்தில் ஒரு பெருமிதம். நல்லாச் செய்திருக்கிறியள். முப்பது நிமிடம் என்றீர்கள் கெதியாய் முடிந்து விட்டது என்றார். இந்த வார்த்தைக்காகத்தான் பரதன் அண்ணாவும், நாமும் காத்திருந்தோம். விரைவாக முடிந்து விட்டது என்றால் பெரிய வெற்றி தானே. பின்னர் வெளியீட்டு விழா ஸ்ரீதர் திரையரங்கில் நடைபெற்றது. அங்கு தான் முதல் ஒளிபரப்பு வெளியானது. பல நாட்கள் நிறைந்த மக்களுடன் இனியொரு விதி ஒளிபரப்பானது. அதைத் தொடர்ந்து உதயம் ஒலிநாடா உருவானது. இதற்கான ஒலிப்பதிவுகள் யாழ். ரமணன் குழுவினரின் இசையமைப்பில் தர்மேந்திரா கலையகத்தில் நடைபெற்றன. சில பாடல்களுக்கு தவில், நாதஸ்வர இசை சேர்க்கப்பட்டது. இதன் போது ஒரு துயர் நிகழ்வும் ஏற்பட்டது. அருகில் இருந்த வீட்டுக்காரர் மாரடைப்பால் மரணமடைந்து விட்டார். அதற்காக அடுத்த நாள் ஒலிபரப்பு நிறுத்தப்பட்டு இறுதிக் கிரியைகளின் பின்பு தான் மீண்டும் ஒலிபரப்பு நடைபெற்றது. இந்த ஒலிப்பதிவில் வீரமணி ஐயரின் பங்கும் மிகவும் முக்கியமானது. முழுக்க முழுக்க தமிழீழக் கலைஞர்களைக் கொண்டு தர்மேந்திரா கலையகத்தில் உருவான முதலாவது ஒலிநாடா இதுவாகும். இதன் வெளியீடும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. சண்டைகள் உக்கிரமடைந்திருந்த நேரம், அப்பொழுது கிட்டண்ணா லண்டனில் இயங்கிக் கொண்டிருந்தார். அவர் பரதன் அண்ணாவிடம் அந்த நேரத்தில் நடந்த நிகழ்வுகளையெல்லாம் ஆவண ஒளிவீச்சாக செய்து அனுப்பும்படி கூறியிருந்தார். அதற்கான வேலைகள் தொடங்கிய நிலையில் பரதன் அண்ணா ஒன்றில் மட்டும் தெளிவாக இருந்தார். தரமானதும், அதேநேரம் மேலைத்தேய ஊடகங்களுக்கு இணையாகவும் இருத்தல் வேண்டும் என்பது தான் அது. அந்த நேரம் தான் மாங்குளம் முகாம் மீதான தாக்குதல் முடிவிற்கு வந்த நேரம். வேறு இடங்களில் சண்டை மிகவும் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. எமது படப்பிடிப்பு போராளிகள் பெரும் குண்டு மழையிலும் தம்மால் எடுக்கக்கூடிய காட்சிகளையெல்லாம் எடுத்து அனுப்பிக் கொண்டிருந்தார்கள். போராளிகளின் வீரம், மக்களின் அவலங்கள் அவர்களின் காட்சிகளில் சாட்சியங்களாக அமைந்தன. அவற்றில் இருந்து ஒரு தரம் வாய்ந்த ஒரு ஒளிவீச்சு ஆவணம் உருவானது. இதில் பல பிரதிகள் எடுக்கப்பட்டு கிட்டண்ணாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. நித்திரையற்றதன் விளைவாக உடல் அசதி காட்டத் தொடங்கியது. அடுத்த நாள் தலைவரின் மாவீரர் நாள் உரைக்கான ஒலி, ஒளிப்பதிவுகள் நடைபெறவிருந்தது. அதற்கான ஆயத்தங்களையும் செய்ய வேண்டும். மறுநாள் அதற்கான முன்னேற்பாடுகளை செய்து விட்டு மீண்டும் ஒருமுறை எல்லாவற்றையும் சரிபார்த்துக் கொண்டோம். வருபவர்களுக்கான உணவுகளும் தயாராகி விட்டது. பரதன் அண்ணாவும், கிருபாவும் பங்கருக்கு சென்று விட்டனர். மீண்டும் ஒலிப்பதிவுக் கருவிகளைப் பரிசோதிப்பதற்கு ஆயத்தமானேன். நான் முன்வாசலில் உள்ள கதிரையில் இருந்து கொண்டு காவலில் நின்ற ரஞ்சனிடம் வாகனம் வாகனம் வந்தால் சொல்லு என்று சொல்லிவிட்டு அசந்து தூங்கி விட்டேன். ஜெயம் அண்ணா வந்து எழுப்பும் மட்டும் வாகனம் வந்து நின்றது தெரியாது. திடுக்கிட்டு முழித்து பின்பக்கம் செல்ல முயன்ற போது, அண்ணை அருகில் வந்து விட்டார். நவீனன் என்று கூப்பிட்டு கேட்ட முதல் கேள்வியே எத்தனை நாள் நித்திரை கொள்ளவில்லை என்பது தான். அதற்குள் பரதன் அண்ணாவும் வந்துவிட்டார். கிட்டண்ணாவிற்கு அவசரமாக ஒளிநாடா அனுப்ப வேண்டியிருந்ததால், இரண்டு நாளாக நித்திரையில்லை என்று சொல்ல, அதற்கு தலைவர் இரவு நித்திரை முழித்து வேலை செய்தால் கட்டாயம் பகலில் குறைந்தது மூன்று மணிநேரமாவது நித்திரை கொள்ளுங்கள் என்றார். நீங்களும் தான் என்று பரதன் அண்ணாவைப் பார்த்துச் சொன்னார். நான் இதைக் குறிப்பிட்டதன் நோக்கம் தலைவர் போராளிகளிடத்தில் எவ்வளவு அக்கறையும், கரிசனையும் கொண்டவர் என்பதற்கான சிறு உதாரணமே. அண்ணை ஒலிப்பதிவு முடித்துப் போகவே நடுச்சாமம் ஆகி விட்டது. அடுத்த நாள் அடுத்த ஓட்டத்திற்குத் தயாராகி விடுவோம். இரண்டு நாட்களில் அடுத்த ஒரு பெரிய நிகழ்வுக்கான தயார்ப்படுத்தல். அது புலிகளின் குரல் வானொலியின் முதலாம் ஆண்டு நிறைவு விழா. யாழ். இந்துக் கல்லூரி மண்டபத்தில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு, விழாவும் தொடங்கி விட்டது. அதில் நல்லூர் ஸ்ரீதேவி வில்லிசை் குழுவினரின் வில்லுப்பாட்டு நடைபெற்றுக் கொண்டிருந்தது. பொருளாதாரத்தடை பற்றி பேசியவர் சவர்க்காரத்தை தடை செய்து விட்டு என்று கூறி… அப்போதைய ஜனாதிபதியின் சாதி பற்றி மறைமுகமாக மேடையில் பேசியதை அவதானித்த பரதன் அண்ணா, உடனடியாக அவர்களது நிகழ்ச்சியை நிறுத்தி திரை போடச் சொன்னார். அவர்களை மண்டபத்திலிருந்து வெளியே அனுப்பி விட்டு விழாவிற்கு வந்தவர்களிடம் நடந்த சம்பவத்தை விளக்கி எங்களுடைய நிகழ்வில் நடந்த இந்தச் சம்பவத்திற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். இதில் இரண்டு விடயங்கள் புலனாகியது. ஒன்று கொள்கைப் பற்று, மற்றையது முடிவெடுக்கும் திறன். அந்த நிகழ்வு எல்லோராலும் பாராட்டப்பட்டு புலிகளின் நிலையை வலியுறுத்திய பேசுபொருளாகவும் அமைந்தது. அதேநேரம் எதிரியைக்கூட மதிக்கும் மாண்பாயும் அமைந்தது. இதை தலைவர் அறிந்தவுடன், பரதன் செய்தது தான் சரி. இது மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும் என்றார். நான் இவற்றையெல்லாம் எழுதுவதன் காரணம் தேசத்தின் மீதும், தேசியத் தலைவர் மீதும் எவ்வளவு பற்றுறுதியோடிருந்தார் என்றும், அவரின் ஆற்றலும் அர்ப்பணிப்புகளும் சாதாரணமல்ல; ஊடகத்துறையில் அவர் ஏற்படுத்திய தாக்கங்களை தெரியப்படுத்தவுமே. சில வருடங்களின் பின் நான் வேறு வேலைக்கு சென்று விட்டேன். அவரும் வேறு திசை. நாட்டில் அவரைக் கடைசியாகக் கண்டது 1996ஆம் ஆண்டின் முற்பகுதியில் மாங்குளத்திற்கும், கனகராயன் குளத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் ஒரு குடிசையில். அவர், வினோ அக்கா, இரு பிள்ளைகள். இவர்களுடன் பரதன் அண்ணாவின் அப்பா, அம்மாவும். அந்த நேரம் மிகவும் கஷ்டம். மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருந்த நேரம். இடப்பெயர்வின் வலி அது. பின் அங்கிருந்து ஒருவாறாக இலண்டனுக்கு குடும்பத்துடன் வந்து விட்டார். நான் மீண்டும் பரதன் அண்ணாவைச் சந்தித்தது 1999ஆம் ஆண்டு. நான் இலண்டன் வந்தவுடன் முதலில் வந்து பார்த்தது பரதன் அண்ணா தான். அப்பொழுது அவர் இலண்டனில் ஒளிப்படம் எடுக்கும் பணியை செய்து கொண்டிருந்தார். அவருடன் பல நிகழ்வுகளில் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பை எனக்குத் தந்தார். அந்தச் சமயத்தில் தான் மூன்றாவது கண்(THIRD EYE) என்னும் ஒளிப்பட நிறுவனத்தை தொடக்கி நடத்தினார். அவரால் இரண்டு ஒளி நாடாக்களும் (UN TOLD STORY / MY NEIROUR IN SRI LANKAN TAMIL) தயாரித்து வெளியிடப்பட்டது. அவர் தொடாத துறைகளே இல்லை. அவருக்கு எல்லாமே தெரிந்திருந்தது. அவருடைய கனவே எமது போராட்டத்தின் முழுமையும் ஆவணப்படுத்தி அதை அடுத்த சந்ததியும் அறிந்து கொள்ளும் வாய்ப்பையும் உருவாக்க வேண்டும் என்பது தான். அவர் எந்தவொரு சூழ்நிலையிலும் தேசத்தின் மீதும், தேச மக்களின் மீதும் தேசியத் தலைவர் மேலும் கொண்டிருந்த கொள்கைப் பற்றும், அவர்கள் மீதான பற்றுறுதியிலும் விலகவேயில்லை. அவரின் கனவை நனவாக்க முன்னோக்கிச் செல்வோம் உங்கள் நினைவுகளுடன் நவீனன்.
  9. அறவழி புரியாத மடமைச்சமூகம் November 27, 2023 — கருணாகரன் — “வகுப்பறையில் மாணவர்கள் கேட்கின்ற சில கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாதுள்ளது. அந்தளவுக்கு மேலிருந்து கீழ் வரையில் சகல அடுக்குகளிலும் தவறுகளும் பிழைகளும் தாராளமாகி விட்டன. பிழை செய்தாலும் பெரிய ஆட்கள், செல்வாக்குள்ளவர்கள் என்றால் அவர்களுக்குத் தண்டனையே இல்லை. சட்டம் கூட அவர்களைக் கட்டுப்படுத்தாது. நிர்வாகத்தினால் கூட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. காவல்துறையினர் லஞ்சம் வாங்குவது பகிரங்கமான உண்மை. பிள்ளைகளுக்கே (மாணவர்களுக்கே) இது நன்றாகத் தெரியும். சில பாடசாலை அதிபர்களே மோசடிகளில் ஈடுபடுகிறார்கள். இந்த நிலையில் எப்படி நாம் மாணவர்களை நல்வழிப்படுத்த முடியும்? அவர்கள் எதை முன்னுதாரணமாகக் கொள்வது? அவர்களுடைய சில கேள்விகளு்கு எப்படிப் பதிலளிப்பது?..” என்று கேட்கிறார் ஆசிரியர் விஜயசேகரன். லண்டனிலிருந்து வந்திருந்த சமூகச் செயற்பாட்டாளர்களுடன் சமகாலச் சமூக நிலைமை தொடர்பாக நடந்த உரையாடல் ஒன்றின்போதே நண்பர் இவ்வாறு குறிப்பிட்டுக் கேள்வியை எழுப்பியிருந்தார். விஜயசேகரன் குறிபிட்டுள்ள இந்த உண்மையும் இந்தக் கேள்விகளும் பலருடைய மனதிலும் செவியிலும் உள்ளதுதான். அரசியல் தலைவர்களான ராஜபக்ஸவினர் தொடக்கம் அரச உயர் மட்டத்தில் உள்ள அதிகாரிகள் வரையில் பல தரப்பிலும் பகிரங்கமாகவே ஊழல் குற்றச்சாட்டுகள் உண்டு. இவை வெறும் குற்றச்சாட்டுகள் அல்ல. உண்மையான குற்றச்சாட்டுகள். ஆனாலுமென்ன? ராஜபக்ஸக்கள் மக்கள் ஆணையின் மூலம் மறுபடியும் பாராளுமன்றத்தில் உள்ளனர். அரசியலில் உள்ளனர். அதிகார நிலைப்பட்டவர்களாகச் சமூக வெளியில் உள்ளனர். இதனால் தாம் குற்றமற்றவர்கள் போலத் தோற்றம் காட்ட முற்படுகின்றனர். அப்படித்தான் அரச உயர் அதிகாரிகள் தொடக்கம் சிற்றூழியர் வரையிலும் லஞ்சம் ஊழலுடன் தொடர்புபட்டவர்களாக இருக்கிறார்கள். அடையாள அட்டை மற்றும் கடவுச் சீட்டு பெறுமிடங்களில் நடக்கும் லஞ்சம் பகிரங்கமானது. அப்படி நடக்கவில்லை என்று யாரும் சொல்லவே முடியாது. இதபோலவே காவல்துறையில் நடக்கின்ற லஞ்சமும் ஊழலும். குறிப்பாக வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுகின்ற காவல்துறையினர் தாராளமாக லஞ்சம் வாங்குகின்றனர். இதையும் யாராலும் மறுக்க முடியாது. இப்படித்தான் காணிப்பதிவுத் திணைக்களம், பதிவாளர் அலுவலகங்கள், வன இலாகாப் பகுதி, கனிய வளங்கள் திணைக்களம், கூட்டுறவுச் சங்கங்கள், இலங்கைப் போக்குவரத்துச் சபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் போன்ற இடங்களில் நடக்கின்ற லஞ்சம், ஊழல், மோசடி, களவு போன்றவையும். அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாகவும் இடமாற்றம், பதவி உயர்வு போன்றவற்றுக்காகவும் லஞ்சம் பெறுகிறார்கள். சில சந்தர்ப்பங்களில் ஊர்களில் உள்ள சமாதான நீதிவான்களே ஒரு பத்திரத்தில் கையொப்பம் வைப்பதற்காக, ஒருவரை உறுதிப்படுத்திக் கொடுப்பதற்காக லஞ்சம் வாங்குகிறார்கள். சில பாடசாலைகளில் மாணவர்களுக்குக் கிடைக்கின்ற உதவிப் பணம், மாணவர்களுக்கான உணவுப் பொருட்கள், அலுவலகத்துக்கு வாங்கப்படும் காகிதாதி, எழுது பொருட்கள் தொடக்கம் எதில் எல்லாம் ஊழல் செய்ய முடியுமோ அதில் எல்லாம் கை வைத்துவிடுகிறார்கள். இப்படியெல்லாம் செய்து விட்டு, இவர்கள் எல்லோரும் வெளியே காட்டுகின்ற “பில்டப்”(தம்மைப் புனிதர்களாகக் காட்டுகின்ற நாடகம்), வெள்ளையடிப்பு இருக்கிறதே… அது தாங்கவே முடியாதது. இப்படித்தான் கிளிநொச்சியில் அண்மையில் ஒரு பாடசாலையின் அதிபர் தன்னுடைய ஊழல், மோசடிகளை மறைத்துக் கொள்வதற்காக தனக்குத் தானே வெள்ளை அடித்துக் கொண்ட நிகழ்ச்சியும். குறித்த அதிபர், முன்னர் பணியாற்றிய பெண்கள் பாடசாலையில் செய்த மோசடிக்காக கணக்காய்வுத் திணைக்களத்தின் அறிக்கையின் அடிப்படையில் தண்டப்பணத்தை தன்னுடைய சம்பளத்தில் கழிப்பதற்கு சம்மதக் கடிதம் கொடுத்து, அந்தப்பணம் அறிவிடப்படுகிறது. மட்டுமல்ல, இறுதியாகப் பணியாற்றிய பாடசாலையில் பிள்ளைகளுக்கு வழங்கிய மென்பானத்திலும் ஊழல் செய்து பிடிபட்டார். போதாக்குறைக்கு மாணவர்களுக்கு வழங்குவதற்கு பாடசாலைக்கு வந்திருந்த உணவுப் பொருட்களை இடம் மாற்ற எடுத்த முயற்சி உலக உணவுத்திட்ட ஊழியர்களால் தடுக்கப்பட்டது. இதற்கும் மன்னிப்புக் கோரிக் கடிதம் எழுதியிருக்கிறார். இவையெல்லாம் குறித்த அதிபர் கையும் களவுமாகப் பிடிபட்ட விடயங்கள். பிடிபடாத விடயங்கள் பலவுண்டு. அவ்வாறான ஒரு விடயம், குறித்த அதிபரின் பாடசாலையில் உதவி தேவைப்படுகின்ற நிலையில் உள்ள 10 மாணவர்களுக்கான நிதியை புலம்பெயர் அமைப்பொன்று வழங்கி வந்தது. குறித்த உதவித்திட்டம் குறித்த அதிபருக்கு முதல் பதவியிலிருந்த அதிபரின் காலத்திலிருந்தே தொடரப்பட்டு வந்தது. அந்த அதிபரின் காலத்தில் அதற்கான ஒழுங்கமைப்பின்படி இந்த நிதியைப் பகிர்ந்து மாணவர்களுக்குக் கொடுத்த பின்னர், அதை உறுதிப்படுத்திய கடிதங்களும் மாணவர்களின் தேர்ச்சி அறிக்கையின் போட்டோப் பிரதிகளும் நிதி வழங்குநர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இதுதான் அந்த உதவித்திட்டத்தின் நடைமுறையாகும். இந்த அதிபர் பொறுப்பேற்ற பின்னர் குறித்த நிதி வழங்கப்படவில்லை. எனவே இது தொடர்பாக நிதி வழங்குநர் சார்பாக அதிபரிடம் விசாரித்தபோது, அந்த நிதியை வேறொரு அவசர தேவைக்கு எடுத்துப் பயன்படுத்தியதாகவும் விரைவில் அது மீளப் பெற்றுத் தரப்படும் என்றும் உறுதி கூறப்பட்டது. ஆனாலும் அப்படி எதுவும் நடக்கவில்லை. இதனால் குறித்த 10 மாணவர்களும் பாதிப்படைந்தனர். இது தொடர்பாக மறுபடியும் மறுபடியும் குறித்த அதிபரிடம் கேட்டபோது, ஒரு கட்டத்தில் சொன்னார், அந்த நிதி உரிய மாணவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப்பட்டாயிற்று என்று. எனவே மாணவர்களிடம் அல்லது அவர்களுடைய பெற்றோரிடம் கேட்டறியலாம் என்று விசாரித்தபோது, அப்படி தமக்கு எந்தப் பணமும் அதிபராலோ பாடசாலையின் வழியாகவே வழங்கப்படவில்லை என்று அவர்கள் உறுதிபடத் தெரிவித்தனர். இதையடுத்துக் குறித்த அதிபரிடத்தில் வினவிய போது அந்தக் காசு கொடுத்தாச்சு. அவ்வளவுதான். இதற்கு மேல் தம்மால் பதிலளிக்க முடியாது என்று உறுதியாகத் தெரிவித்து விட்டார். இந்தப் பிரச்சினையைப் பெரிதாக்கி பாடசாலையோடு மோதிக்கொள்ள விரும்பாத உதவும் தரப்பினர் பின்னர் அந்த உதவியை வேறு இடத்துக்கு மாற்றி விட்டனர். இப்படியெல்லாம் பல ஊழல், முறைகேடுகள், மோசடிகள், தவறுகளோடு சம்மந்தப்பட்ட அதிபர், சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றபோது நடந்த பிரிவுபசார நிகழ்வில் தான் ஒரு புனிதப் போராளி போலப் பேசினார். “தன்மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் அதையெல்லாம் எதிர்த்துத் துணிச்சலாக நின்று சாதித்திருக்கிறேன். எல்லாவகையான எதிர்ப்புகளுக்கு அப்பால் சாதனைப் பெண்ணாக இப்பொழுது ஓய்வு பெறுகிறேன்” என்று திமிராகச் சொல்லியிருந்தார். இவ்வாறு துணிச்சலாக – திமிராக – அந்த அதிபர் வாய்திறப்பதற்குக் காரணம் சில தரப்பினர் கொடுத்த ஆதரவாகும். ஒன்று அவருடைய ஊழல், மோசடி போன்ற குற்றச்சாட்டுகளை நன்றாகவே அறிந்த, சமூக நிலையில் பெரியவர்களாக இருக்கும் உயர் அதிகாரிகளும் பெற்றார் ஆசிரியர் சங்கத்தினரும். இரண்டாவது ஆசிரியர்களில் ஒரு தரப்பினர். இவர்களுடைய நிலைப்பாடு என்னவென்றால், என்னதான் குற்றச்சாட்டுகள், தவறுகள் இருந்தாலும் அவர் தன்னுடைய சேவையை முடித்து ஓய்வு பெற்றுச் செல்கிறார். அப்படிச் செல்லும்போது நாம் பழைய விடயங்களைப் பற்றிப் பேசுவது அவரைக் கவலைப்படுத்தும் என்பதாகும். இன்னொரு காரணம், இவ்வளவு குற்றச்சாட்டுகள் இருந்தபோதும் அவர் மீது ஏன் பொறுப்புக்குரிய உயர் அதிகாரிகள் அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை? அது அவர்களுடைய தவறல்லவா? என்பது. ஆகவே இதொரு மன்னிக்கக் கூடிய குற்றம் – விடயம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இன்னொரு தரப்பு, இவை எதைப்பற்றியும் அறியாதது. அவர்களைப் பொறுத்தவரையில் தங்கள் பாடசாலையின் அதிபர் பணி ஓய்வில் செல்கிறார். அதை மதிப்புறு நிகழ்வாகச் செய்து விடுவோம் என்பதாகும். வேறொரு தரப்பு, அதிபரின் மீது பக்தி விசுவாசம் கொண்டது. அது தானும் ஊழல், முறைகேடு, தவறுகளோடு சம்மந்தப்பட்டது. அல்லது அதற்கு ஆதரவான மனநிலை உடையது. ஆனால், முன்வைக்கப்பட்ட – கணக்காய்வுப் பிரிவு, கல்வித் திணைக்களம் போன்றவற்றினால் ஆதாரப்படுத்தப்பட்ட – அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் உரிய நடவடிக்கையை எடுக்கத் தவறியது மாகாணக் கல்வித் திணைக்களமாகும். இவ்வளவுக்கும் இந்த ஊழல் விவகாரம் அப்போது மாகாணசபையில் விவாதிக்கப்பட்டது. நிர்வாக ரீதியான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பணிக்கவும் பட்டது. இருந்தும் மாகாணக் கல்வித் திணைக்களத்தினருடைய அசிரத்தையான செயற்பாடுகளால் குறித்த அதிபர் எத்தகைய தண்டனைக்கும் உள்ளாகாமல் தப்பி விட்டார். அப்படித் தப்பியவர் அல்லது தப்ப வைக்கப்பட்டவர், பதவியில் இருக்கும்போது எதுவும் பேசாமல் பம்மிக் கொண்டிருந்து விட்டு, பணி ஓய்வு பெற்றபின்னர் சவாலாகப் பேசுவதற்கான துணிச்சலைக் கொடுத்தது இந்த மாகாண உயரதிகாரிகளே. மாகாண அதிகாரிகள் இவரை மட்டுமல்ல, பல பிரதேச சபைகளில் குற்றவாளிகளைத் தப்ப வைத்திருக்கிறார்கள். பல விளையாட்டு உத்தியோகத்தர்களைத் தப்ப வைத்திருக்கிறார்கள். பல அதிபர்களைக் காப்பாற்றியிருக்கிறார்கள். பல வைத்தியர்களைப் பாதுகாத்திருக்கிறார்கள். அதாவது குற்றவாளிகளைக் காப்பாற்றும் நடவடிக்கையை மாகாணசபை நிர்வாகம் தாராளமாகச் செய்கிறது. இப்படித்தான் ராஜபக்ஸக்களும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியுள்ளனர். தப்பியது மட்டுமல்லாமல், தமக்கு மக்கள் ஆதரவுண்டு என்று திமிராகக் காண்பிக்கவும் செய்கின்றனர். பேமாலித்தனமாக மக்களும் இந்த அதிபருக்கு வழங்கிய ஆதரவைப்போலவே – மன்னிப்பைப்போலவே – ராஜபக்ஸவினருக்கும் ஏமாளித்தனமாக ஆதரவளித்துள்ளனர். கடவுச் சீட்டுப் பணிமனை, காவல்துறை, விமான நிலையம், வனத்திணைக்களம், கனிய வளங்கள் திணைக்களம், பிரதேச செயலகம் போன்ற இடங்களில் நடக்கின்ற பகிரங்க ஊழலைத் தெரிந்து கொண்டு, அது முற்றிலும் பிழை என்று நன்றாகவே அறிந்து கொண்டும் அதைக் கண்டும் காணாமலிருப்பதைப்போலவே அனைத்தையும் பழகி விட்டோம். இதனால்தான் நல்லதொரு சமூக வழியை, அறவழியைப் பற்றி இளைய தலைமுறையினருக்குப் போதிக்க முடியாதிருக்கிறது. ஏனென்றால் அத்தனை பிள்ளைகளுக்கும் நன்றாகத் தெரியும், யார் யாரெல்லாம் லஞ்சம் வாங்குகிறார்கள். எப்படியெல்லாம் ஊழல் செய்கிறார்கள். குற்றவாளிகள் எப்படியெல்லாம் காப்பாற்றப்படுகிறார்கள், தப்புகிறார்கள் என்று. எனவே பிள்ளைகளுக்கு இதை மறைத்து எப்படி அறத்தைப் போதிக்க முடியும்? எப்படி நல்வழியைக் காட்ட முடியும்? யாரை முன்னுதாரணமாக்குவது? குருவின் ஸ்தானத்திலுள்ள ஆசிரியர்களும் அதிபர்களுமே தவறு செய்கிறார்கள், தவறுகளைச் செய்து விட்டுத் தப்பித்துக் கொள்கிறார்கள், அப்படித் தப்பிக் கொண்டு, திமிராகப் பொது மேடையில் தாங்கள் மகத்தானவர்கள் என்று புருடா விடுகிறார்கள் என்றால்… அரசன் எவ்வழியோ அவ்வழியில் குடிகளும் என்ற முன்னோர் வாக்கு இப்படியாயிருக்கிறது இலங்கை மணித் திருநாட்டில். அதிபர் எவ்வழியோ அவ்வழியே உங்கள் பிள்ளைகளும் – மாணவர்களும் – என்று எண்ணிக் கொள்ளுங்கள். உங்களின் கண்மூடித்தனமான ஆதரவுக்கு உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள். ஆம், நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்ன நக்கீரனின் பரம்பரையிலிருந்து வந்த மக்கள், நாமார்க்கும் குடியல்லாம், நமனை அஞ்சோம் என்ற வம்சத்தைச் சேர்ந்தவர்கள், அச்சமில்லை, அச்சமில்லை, உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை என்றவரின் பேரரர்கள்…. இன்று வீழ்ந்திருக்கின்ற இடமோ..! https://arangamnews.com/?p=10188
  10. தமிழரின் ஐக்கியக் கனவு? November 20, 2023 — கருணாகரன் — ‘தமிழ் மக்களுடைய விடுதலைக்கு ஐக்கியம் வேண்டும்’ என்ற குரல் – வலியுறுத்தல் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. கடந்த வாரம் கூட யாழ்ப்பாணத்தில் வடக்குக் கிழக்கு சிவில் சமூகம் என்ற தரப்பினர் முன்னெடுத்த கருத்தரங்கிலும் ஐக்கியத்தின் அவசியத்தைப் பற்றிப் பேசப்பட்டது. இந்த ஐக்கியக் குரலுக்கு ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலிருக்கும். ஆனால், அது உருவாகாத, உருப்படாத சவலையாகவே உள்ளது. மட்டுமல்ல, ஐக்கியத்திற்கு எதிர்நிலையிற்தான் நடைமுறைகள் உள்ளன. அதாவது ஐக்கியத்தை வலியுறுத்துவோரும் சரி, ஐக்கியத்தை உருவாக்க வேண்டிய சக்திகளும் சரி, ஐக்கியப்பட வேண்டிய தரப்பினரும் சரி, ஐக்கியத்துக்கு எதிரானதாகவே செயற்படுவதைக் காண்கிறோம். இவற்றின் அக – புற நிலைகள் ஐக்கியத்துக்கு ஒருபோதுமே சாத்தியமாக இல்லை. இதைக்குறித்து இந்தக் கட்டுரைத் தொடர் ஆராய முற்படுகிறது. தமிழர்களுக்கு நியாயமான தீர்வு கிட்டவேண்டும் என்றால், அதற்கு ‘தமிழ்த்தரப்பிலுள்ள சக்திகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும். ஐக்கியப்பட வேண்டும். அப்போதுதான் ஒருமுகப்பட்ட தீர்வைக் குறித்துப் பேசவும் அழுத்தம் கொடுக்கவும் முடியும். பிராந்திய சக்தியாகிய இந்தியா, சர்வதேச சமூகம் மற்றும் இலங்கை அரசு என எதனோடு பேசுவதற்கும் இந்த ஒருங்கிணைவும் ஒரு நிலைப்பட்ட கோரிக்கையும் அவசியமாகும்…’ என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. இங்கே இவ்வாறு ஐக்கியத்துக்காக அர்த்தப்படுத்தப்படுவது, வலியுறுத்தப்படுவது இன்றைய தமிழ்த்தேசியச் சக்திகளை – அப்படித் தம்மை அடையாளம் காட்ட முற்படும் தரப்புகளை – மனதிற் கொண்டேயாகும். ஆனால் இதுவே தவறான புரிதலாகும். இவை மட்டும் ஐக்கியமாகினால் அது தமிழ்த்தரப்பு என்றாகிவிடாது. ஒரு அரசியற் சூழலில், அதுவும் ஜனநாயக முன்னெடுப்பிலுள்ள அரசியற் சூழலில் தனியே ஒற்றைப்படையான தரப்புகள் மட்டும் முழுமையான அடையாளத்தையும் பிரதிநிதித்துவத்தையும் கொள்ள முடியாது. ஏன் ஆயுதப்போராட்ட அரசியற் சூழலில் கூட அது பொருத்தமாவதில்லை. விடுதலைப்புலிகளின் காலத்திலும் இந்தப் பிரச்சினை இருந்தது. புலிகள் இதை மறுதலித்துத் தாமும் தம்மால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் ஏக பிரதிநிதித்துவத்துக்குரியன என்று வாதிட்டபோதும் அதை இலங்கை அரசு மட்டுமல்ல, உலகமும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கவில்லை. அப்பொழுது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர் என்பது கவனிக்கப்பட வேண்டியது. அப்படி அதை ஒரு அங்கீகாரமாகக் கொண்டிருந்தால், புலிகளும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் அரசியல் அங்கீகாரத்துடன் தொடர்ந்தும் இருந்திருக்கும் நிலை உருவாகியிருக்கும். புலிகள்தான் ஆயுதப்போராட்ட அமைப்பு. ஆகவே அவர்களுக்குப் பிரச்சினை என்றால், மக்களால் அங்கீகரிக்கப்பட்ட – தெரிவு செய்யப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அங்கீகாரத்துடன் இருந்திருக்கும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. நடக்கவும் மாட்டாது. இதுதான் இன்றைய உலக நியதி. இப்பொழுது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே உடைந்து பல துண்டுகளாகி விட்டது. ஆக ஐக்கியத்துக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்த சக்திகளை – தரப்புகளை முதலில் கொண்டு வர வேண்டும். அது சாத்தியமா? இல்லை என்பதே வெளிப்படையான – உண்மையான பதில். ஏனென்றால் அவை ஒன்றும் எளிதாக உடைந்து – பிரிந்து செல்லவில்லை. உடைந்தோ பிரிந்தோ செல்வதற்கான ஆழமான அரசியற் கொள்கை வேறுபாடுகள் இவற்றிற்கிடையே இல்லை என்றாலும் இவற்றின் நடைமுறைப் பிரச்சினைகளும் மனநிலையும் ஆழமானவை. எளிதில் தீர்த்துக் கொள்ள முடியாதவை. அதாவது இவற்றில் அடிப்படையான பண்பு மாற்றம் நிகழாமல், வெறுமனே தீர்வு காண – இணைய – முடியாதவை. அந்தப் பண்பு மாற்றத்தை நிகழ்த்துவதற்கான அரசியற் தெளிவு, கொள்கையின் மீதான உறுதிப்பாடு, வாழ்க்கை முறைமை, மனநிலை, அறிவு போன்றவையும் இந்தத் தரப்பினரிடத்தில் இல்லை. என்பதால்தான் தமிழரசுக் கட்சியை விட்டு, (கூட்டமைப்பை விட்டு) வெளியேறிய சக்திகள் கூட தனித்தனியாக உடைந்தும் பிரிந்தும் (தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்), ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம் போன்றவை) நிற்கின்றன. இன்னொரு நிலையில் தமிழரசுக் கட்சியே உடையக் கூடிய நிலையிற்தான் உள்ளது. அதற்குள்ளிருக்கும் தலைமைத்துவப் போட்டியும் அணிப் பிளவுகளும் வெளிப்படையானவை. ஏனைய கட்சிகளிலும் அவற்றின் தலைவர்களைக் கடந்து அடுத்த நிலையாளர்கள், அடுத்த கட்டத்தலைவர்கள் என எவரும் இல்லை. ஆகவே அவையும் எப்போது பொறிந்து விழும் என்று தெரியாத நிலையிலேயே உள்ளன. இவ்வளவுக்கும் இவை அனைத்தும் ஒற்றுமையையும் ஐக்கியத்தையும் வலியுறுத்திக் கொண்டிருப்பவை. ஆகவே இங்கே ஐக்கியம் – ஒற்றுமை – ஒருங்கிணைவு என்பதெல்லாம் வெறுமனே வாயால் உச்சரிக்கப்படுகிறதே தவிர, அது ஆத்மார்த்தமாக – உள்ளார்ந்த எண்ணமாக உருக் கொள்ளவில்லை. அப்படி உண்மையாகவே, ஆத்மார்த்தமாக ஐக்கியத்தைப்பற்றிச் சிந்தித்திருந்தால், ஐக்கியத்தின் தேவையை உணர்ந்திருந்தால் இவை சகிப்புத்தன்மையோடும் விட்டுக் கொடுப்புகளோடும் ஐக்கியப்பட்டிருந்திருக்கும். அல்லது இப்போது கூட எளிதாக (நிபந்தனைகளின் அடிப்படையிலோ நிபந்தனையின்றியோ) ஐக்கியப்பட்டிருக்கும். என்பதால் ஐக்கியத்தைப்பற்றிய ஆழமான ஈடுபாடு இவற்றுக்குக் கிடையாது. அதில் நம்பிக்கையும் இல்லை. ஆனால், வெளி நிர்ப்பந்தங்களுக்காகவே ஐக்கியம் பற்றிப் பேசுகின்றன; ஐக்கியம் பற்றிய உரையாடல்களில் கலந்து கொள்கின்றன. அங்கும்கூட தமது தனியான மனநிலையை விட்டு விட்டு அவற்றில் பங்கேற்பதில்லை. கூட்டுணர்வு கொள்வதில்லை. இதை நாம் இவற்றின் அகநிலைப் பிரச்சினையாகப் பார்க்க முடியும். ஒவ்வொரு கட்சிக்கும் அவற்றின் தலைமைக்கும் உள்ள உளப் பிரச்சினையாக இதுள்ளது. இதற்குள் இவற்றின் அரசியல் இருப்புப் பற்றிய பிரச்சினை முக்கியமானது. அதை முன்னிலைப்படுத்திச் சிந்திப்பதன் விளைவே இந்தச் சிக்கலாகும். புறநிலையில் அழுத்தங்கள் இருந்தாலும் அதை அகநிலைப் பிரச்சினைகள் தள்ளி விடுகின்றன. உண்மையில் அகநிலையில் ஐக்கியம் பற்றிய உணர்விருந்தால் – ஈடுபாடிருந்தால் புறநிலையைக் கடந்தும் ஐக்கியம் சாத்தியமாகும். மட்டுமல்ல, அந்த ஐக்கியம் வலுவானதாகவும் இருக்கும். இது புறநிலை அழுத்தத்தையே எதிர்த்து வெளித்தள்ளி விடக்கூடிய அகநிலைப் பிரச்சினையாக அல்லவா உள்ளது. எனவேதான் இன்றைய நிலையில் ஐக்கியம் – ஒற்றுமை சாத்தியமில்லை என்ற அறுதியிட்டுக் கூற முடிகிறது. அதை மீறிச் சொல்வதாக இருந்தால் அதொரு பாவனையாக – நாடகமாக இருக்குமே தவிர, அதில் உண்மை எதுவும் இருக்காது. அரசியலில் பிரதானமாக இரண்டு அல்லது மூன்று வகையான சூழலில் ஐக்கியத்துக்கான சந்தர்ப்பங்களும் வாய்ப்புகளும் இருப்பதுண்டு. ஒன்று, புற அழுத்தங்களின் போது. தேர்தல் அல்லது பேச்சுவார்த்தை அல்லது வெளிச்சக்திகளின் அழுத்தம் என வரும்போது. இது அந்தச் சூழலை எதிர்கொள்வதற்கான தற்காலிக ஏற்பாடாக இருக்கும். சிலவேளை இதிலிருந்து தொடங்கி ஒரு வலுவான கூட்டாகவும் ஐக்கியமாகவும் தொடரவும் கூடும். ஆனால், அந்த வெளி அழுத்தம் குறையும்போதும் உள்ளே போட்டிகள் வலுக்கும்போதும் உடைவு சாதாரணமாக நிகழ்ந்து விடும். கூட்டமைப்பின் உடைவு இதற்கு உதாரணம். இதில் இன்னொன்றும் உள்ளது. ஒடுக்குமுறை அல்லது பிரச்சினையை எதிர்கொள்வதற்காக (Based on the issues) சில வேலைத்திட்டங்களின் அடிப்படையில் அல்லது பொதுப் பிரச்சினைக்கு முகம் கொடுக்கும் அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்படுவது – ஐக்கியப்படுவது என்பதாக இதிருக்கும். இப்படிச் செயற்பட்டு வரும்போது ஏற்படுகின்ற புரிந்துணர்வு, உறவு, அனுபவம் போன்றவற்றின் அடிப்படையில் இந்த ஐக்கியத்தை – ஒற்றுமையை வலுப்படுத்திக் கொள்ள முடியும். ஆனால், அதற்கும் இவற்றின் உளநிலை பொருத்தமாக இல்லாமலே உள்ளது. அவ்வப்போது நிகழ்கின்ற போராட்டங்கள், பொதுப்பிரச்சினைகளுக்கான முகம் கொடுத்தல்களில் இந்தச் சக்திகளிற் சில அப்படியான ஒரு தோற்றத்தைக் காட்டுகின்றன. ஆனால், இதை நிதானமாக அணுகி வளர்த்தெடுத்தால் ஓரளவுக்கு ஐக்கியத்தை – ஒற்றுமையை வலுப்படுத்தலாம். மெய்யான ஐக்கியம் =========== இரண்டாவது, இந்தக் கட்டுரை பேச முற்படுகின்ற ஒரு பகுதியான மெய்யான ஐக்கியத்தை எட்டுவதற்கு – உருவாக்குவதற்கு – கொள்கை ரீதியாகவும் (Based on principle) தீர்வுக்கான தேவையின் அடிப்படையிலும் மேற்கொள்கின்ற உறவாகும். இது சற்றுக் கடினமானது. ஆனால், இதில் தெளிவேற்பட்டு, அந்தத் தெளிவின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படுகின்ற ஐக்கியமானது உறுதியாகவும் ஓரளவுக்கு நிரந்தரத்தன்மை உடையதாகவும் இருக்கும். அதுதான் பலமானது. ஏனெனில் அது கொள்கை ரீதியானது. ஐக்கியம் என்றால் என்ன, எந்த அடிப்படையிலானது என்ற தெளிவுடன் மேற்கொள்ளப்படுவதால் இது பலமானது, வலுவானது. இங்கே இவை எதற்குமான வாய்ப்புகள் இல்லை. என்பதால்தான் ஐக்கியம் – ஒற்றுமை நிகழமறுக்கிறது. (தொடரும்) https://arangamnews.com/?p=10160
  11. ஹர்த்தால் விளையாட்டில் சோடை போன கட்சிகள் October 12, 2023 — கருணாகரன் — சட்டமா அதிபரின் (அரசு) அழுத்தத்தத்தினால் பதவியைத் துறந்ததாகச் சொல்லப்படும் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவுக்கு ஆதரவு தெரிவித்தும் அரசின் செயற்பாடுகளை எதிர்த்தும் பல விதமான போராட்டங்கள் தமிழ்ப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தப் போராட்டங்களில் வடக்குக் கிழக்கிலுள்ள தமிழ் அரசியற் கட்சிகளும் அவற்றின் ஆதரவாளர்களும் கலந்து கொள்கின்றனர். சில போராட்டங்களை இவற்றில் சில தரப்புகள் முன்னெடுப்பதையும் காண முடிகிறது. அதில் ஒரு போராட்டம், “நீதி தேவதைக்கு அரோஹரா”, ”இலங்கைக்கு அரோஹரா..” என்று கொக்குவிலில் நடந்தது. இந்தப் போராட்டத்தை நடத்தியவர்கள் என்ன கருதினார்களோ தெரியாது. ஆனால், பலருக்கும் இது பகடியாகவே பட்டது. இன்னொரு போராட்டம், மனித சங்கிலிப் போராட்டமென யாழ்ப்பாணத்தில் நடந்தது. அதுவும் எதிர்பார்த்த பயனைத் தரவில்லை. இறுதியாக ஹர்த்தால் அறிவிக்கப்பட்டது. இதனை ஏழெட்டுக் கட்சிகள் இணைந்து அறிவித்துள்ளன. இதுவும் புதிதல்ல. வழமையாக இந்தக் கட்சிகள் செய்கின்ற வேலைதான். இதனுடைய பயன் எப்படி அமையும் என்று எல்லோருக்குமே தெரியும். வடக்குக் கிழக்கில் கடைகள், சந்தைகள் மூடப்படும். சந்தைகள் இயங்காது. பொதுப்போக்குவரத்து முடங்கும். இதிலும் அரச பேருந்துகளும் புகையிரத சேவையும் முடங்காது. அரச திணைக்களங்களும் பாடசாலைகளும் வழமையைப் போல நடைபெறும். மாணவரின் வருகை சில இடங்களில் குறைந்திருக்கும். நகரங்கள் வெறிச்சோடிப் போயிருக்கும். மற்றப்படி எல்லாமே வழமையைப்போல நடக்கும். மாலையில் தமிழ் இணையத் தளங்களும் மறுநாள் தமிழ்ப் பத்திரிகைகளும் “வடக்குக் கிழக்கு முடங்கியது. ஹர்த்தால் பூரண வெற்றி. அரசுக்குச் சாட்டையடி..” என்றவாறாகச் செய்திகளை வெளியிடும். அதோடு வரலாற்றுக் கடமை முடிந்து விடும். இதற்கப்பால் ஹர்த்தால் எந்தப் பயனையும் தமிழ்ச்சமூகத்துக்குத் தந்து விடாது. ஏறக்குறைய இதொரு சுய இன்ப விளையாட்டுத்தான். அல்லது நாமே நம்முடைய முதுகில் தட்டிப் பாராட்டிக் கொள்ளும் சங்கதியே. ஹர்த்தால் என்றால் அது அரசை, ஆட்சியாளர்களை முடக்குவதாக இருக்க வேண்டும். அரசும் ஆட்சியாளர்களும் திணற வேண்டும். அப்பொழுதுதான் ஹர்த்தாலின் தாக்கம் எப்படியானது என்று அதற்குப் புரியும். வடக்குக் கிழக்கில் மட்டும் நிகழ்த்தப்படும் ஹர்த்தால் வடக்குக் கிழக்கு மக்களை மட்டுமே பாதிக்கும். அரசுக்கு உண்டாகும் பாதிப்பு மிக மிகச் சிறியதாகவே இருக்கும். ஆகவே இதையிட்டு அரசு கணக்கிற் கொள்ளாது. இதுதான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ” அப்படியென்றால் ஹர்த்தால் தோற்றுப் போன அரசியல் வடிவமா,?” என்று நீங்கள் கேட்கலாம். “ஜனநாயக ரீதியாக மக்களும் அரசியற் தரப்பினரும் முன்னெடுக்கக் கூடிய மிகச் சிறந்த போராட்ட வடிவங்களில் ஒன்று ஹர்த்தால். அப்படித்தான் காந்தி தொடக்கம் பலரும் ஹர்த்தாலைக் கையாண்டிருக்கிறார்கள். தனியே ஹர்த்தாலுடன் மட்டும் அவர்கள் நின்று விடவில்லை. ஹர்த்தாலையும் தமது அரசியற் செயற்பாட்டில் ஒன்றாகக் கையாண்டனர். அதில் வெற்றியும் கண்டனர். இங்கே முன்னெடுக்கப்படுகின்ற ஹர்த்தால் அப்படியானதல்ல. இதனால் ஒரு ஆணியையும் பிடுங்க முடியாது. இதை நமது அரசியல் தலைவர்(?)களும் நன்றாக அறிவர். ஆனால், அவர்களுக்கு வேறு கதியில்லை. ஏனென்றால் செயற்பாட்டு அரசியலை முன்னெடுப்பதற்கு யாரும் தயாரில்லை. புதிதாகச் சிந்திக்கும் திறனும் அவர்களிடம் கிடையாது. ஊடகர்கள், அரசியல் பத்தியாளர்கள், மக்கள் எல்லோருக்கும் கூட இதைப்பற்றித் தெரியும். ஆகவே எல்லோரும் தெரிந்து கொண்டே ஆடுகிற நாடகம் இது. அப்படியென்றால் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம் என்றுதானே அர்த்தம்! இதற்குக் காரணம், தமிழ் அரசியலின் கையறு நிலையாகும். இனி என்ன செய்வது என்று தெரியாது குழம்பிக் கிடக்கிறது தமிழ்ச்சமூகம். முக்கியமாக இது போருக்கு முந்திய காலமா? போர்க்காலமா? போருக்குப் பிந்திய காலமா? என்ற தெளிவே பலருக்குமில்லை. ஏனென்றால், போருக்கு முந்திய கால Pre-war politics (1980 க்கு முந்திய) அரசியலே இப்பொழுது முன்னெடுக்கப்படுகிறது. அதே சொல்லாடல்கள். அதே அறிக்கைகள். அதே பிரகடனங்கள். அதே அரசியல் வழிமுறைகள். ஆனால், அதற்குப் பிறகு எவ்வளவோ நடந்து விட்டன. முக்கியமாக 30 ஆண்டுகளாக போர்க்கால அரசியல் (Wartime Politics) மேற்கொள்ளப்பட்டது. இப்பொழுது போருக்குப் பிந்திய கால அரசியலை (Post-war politics) முன்னெடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். ஆனால் அது முன்னெடுக்கப்படவில்லை. இதற்கான புரிதல் – விளக்கம் பலரிடத்திலும் இல்லை. போர்க்குற்ற விசாரணை, அரசியற் கைதிகள் விவகாரம், காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினை, இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிரான குற்றச்சாட்டு, மனித உரிமைகளுக்கு விடுக்கப்பட்ட சவால் அல்லது நெருக்கடி, நில மீட்பு போன்றனவெல்லாம் போருக்குப் பிந்திய கால (Post-war politics) அரசியல்தானே என்று நீங்கள் கேட்கலாம். இவையும் அவற்றில் அடங்கும். ஆனால் இவை மட்டுமல்ல நமது அரசியல் முன்னெடுப்புக்குரியவை. இவை உப பிரச்சினைகள். பிரதான பிரச்சினைகள் வேறு. அவை பலவிதமானவை. அவற்றைப்பற்றிய கரிசனையே நமக்கிருப்பதில்லை. அல்லது அவற்றின் மீதான கவனம் குவிக்கப்படுவது குறைவு. தவிர சமகாலச் சிக்கல்களாக இருக்கும் இந்தப் பிரச்சினைகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருப்பதால் (புலம்பிக் கொண்டிருப்பதால்) எந்தப் பயனுமில்லை. அரசு இந்த மாதிரிப் புதிய புதிய பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது. நில அபகரிப்பு, தொல்பொருட் திணைக்களத்தின் தவறான அல்லது அவசியமற்ற நடவடிக்கைகள் (தலையிடிகள்), பல்வேறு விதமான அச்சுறுத்தல்கள், அதிகாரக் குழப்பங்கள் (மத்தி, மாகாணம் போன்றன), நிர்வாக ஒழுங்கீனங்கள் (ஆளுனர், அதிகாரிகள் நியமனங்கள் தொடக்கம் நிதி ஒதுக்கீடுகள், நிதிக்கையாளல்கள் போன்றவை) இப்படி எதையாவது அவ்வப்போது உருவாக்கி குழப்பிக் கொண்டேயிருக்கிறது. அப்படியானவற்றில் ஒன்றுதான் நீதிபதி சரவணராஜா விவகாரமும். இது தீர முன்பு இன்னொரு புதிய பிரச்சினையை நம்முடைய காலடியில் கொழுத்திப் போட்டு விடும். அப்பொழுது நாம் அதற்குப் பின்னே ஓடுவோம். ஒடுக்குமுறை அரசுகளின் உத்தி அப்படித்தானிருக்கும். இதைப் புரிந்து கொண்டு, இதை முறியடிக்கும் ஆற்றலுடன் நமது அரசியலை முன்னெடுக்க வேண்டும். ஆனால் அதற்கு ஆளில்லை. அப்படி யாராவது முன்வந்தாலும் அதை ஆதரிப்பதற்கும் ஆளில்லை. ஆகவேதான் இந்த மாதிரிக் ஹர்த்தால் விளையாட்டு. இதைச் சோம்பேறி அரசியலின் வடிவமாக்கியாயிற்று. செயற்பாட்டு அரசியலின் பலவீனமே இப்படியான நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறது. அடுத்தது புதிதாகச் சிந்திக்க முடியாத – அப்படிச்சிந்திப்பதற்கு அச்சப்படும் தயக்கம். இதனால்தான் இந்த மாதிரிப் பழைய குப்பையைக் கிளறி எதையாவது எடுப்போம் என இலகுவழியில் சிந்திக்கத் தூண்டுகிறது. இதில் செயற்பாட்டியக்கப் பாரம்பரியத்திலிருந்து வந்த சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றோரும் சிக்கியிருப்பதுதான் வரலாற்றின் துயரம். இவர்களும் தோற்றுப்போன அரசியல் வடிவத்திற்குள் சிக்குண்டிருப்பது கவலையளிப்பது. இவர்களாவது புதிதாகச் சிந்திக்க வேண்டும். அடுத்த தலைமுறை என்று சொல்லப்படும் இளைஞர்களாக இருப்போரும் ஹர்த்தால், எதிர்ப்புப் போராட்டம் என்று அங்கங்கே நடத்தப்படுகிற குட்டிக் குட்டி எதிர்ப்புகளுக்கு அப்பால் சிந்திக்கக் கூடியவர்களாக இல்லை. பல்கலைக்கழக மாணவர் இயக்கங்கள் எப்போதோ காலாவதியாகி விட்டன. இளைஞர்களுக்கு அடையாளமான புதிய சிந்தனைத் திறனோ, துடிப்போ, புதியன ஆக்கும் பண்போ, கூட்டுழைப்போ இல்லாமற் போய்விட்டது. ஆகவேதான் கையறு நிலையின் வெளிப்பாடு இது என்ற நிலை வந்திருக்கிறது. அப்படியல்ல, ஹர்த்தாலுக்கு இன்னும் மதிப்புண்டு என்றால், அதொரு வீரியமிக்க போராட்ட வடிவம்தான் என்றால் அதைப்போல இப்பொழுது பதவியிலிருக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக பதவியை ராஜினாமாச் செய்யலாம். அவர்களுடைய இடத்துக்குப் பதிலாக அடுத்த நிலையில் உள்ளவர்கள் உடனே முண்டியடித்து அந்தப் பதவியை ஏற்காமல் அவர்களும் அதை நிராகரிக்க வேண்டும். அரசு சார்ப்புக் கட்சிகளில் அல்லது சிங்களக் கட்சிகளில் போட்டியிட்டவர்கள் அந்த இடத்தை நிரப்புவார்கள் அல்லவா என்று நீங்கள் கேட்கலாம். வடக்கில் அநேகமாகப் போட்டியிட்டவர்கள் எல்லோரும் தமிழர்கள்தான். வன்னியில் முஸ்லிம்களும் சில சிங்கள வேட்பாளர்களும் உண்டு. ஆனால் அங்கயன், விஜயகலா தொடக்கம் இவர்கள் அனைவரும் தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்குத் தாமும் ஆதரவு என்று சொல்வதுடன் விடுதலைப்புலிகளையும் தாம் ஆதரிப்பதாகப் பகிரங்கமாகவே சொல்லிக் கொண்டிருப்பவர்கள். ஆகவே இந்தச் சூழலில் இவர்களுடைய முகமூடிகள் அப்போது வெளிப்படும். அல்லது உண்மை நிலவரப்படி இவர்களும் நிராகரிப்புச் செய்து நெருக்கடியை உண்டாக்குவர். பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகினால், அதற்குப் பிறகு பட்டியலில் உள்ளவர்களும் பதவியை ஏற்காமல் விட்டால் என்ன நடக்கும் என்று சில நண்பர்கள் கேட்கிறார்கள். அப்படியிருந்தால், அவை வெற்றிடமாகும். இடைத்தேர்தல் பற்றி யோசிக்க வேண்டியிருக்கும். ஒப்பீட்டளவில் இந்தக் ஹர்த்தால், பேரணி, சிற்றணி போன்ற எதிர்ப்புகளை விட இது பெரிய எதிர்ப்பாக இருக்கும். இத்தகைய ஒரு எதிர்ப்பு நடவடிக்கையாக 1990 இல் ஈரோஸ் இயக்கத்தின் (ஈழவர் ஜனநாயக முன்னணியின்) 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியைத் துறந்திருந்தனர். அன்று அதொரு பெரிய வினையாக இருந்தது. அப்படிச் செய்தாலும் ஒன்றும் நிகழப் போவதில்லை எனினும் எதிர்ப்பின் வடிவம் அது. இன்னும் சொன்னால், இந்தக் ஹர்த்தால் விளையாட்டை விட அது கொஞ்சம் கவர்ச்சியான விளையாட்டாக இருக்கும். உலகத்தின் புருவத்தைக் கொஞ்சம் உயர்த்த வைக்கும். https://arangamnews.com/?p=10034
  12. தமிழர் கட்சிகளின் நிறம் September 19, 2023 —- கருணாகரன் — ஈழத் தமிழர்களின் அரசியல் இன்று பிரதானமாக மூன்று வகைப்பட்டதாக உள்ளது. ஒன்று, “தமிழ்த் தேசிய அரசியல்” என்ற பிரகடனத்தின் கீழ் அரச எதிர்ப்பு மற்றும் தமிழின விடுதலையை மையப்படுத்திப் பேசுவதாகும். இதற்குத்தான் தமிழ்ப் பெருந்திரளினர் ஆதரவளிக்கின்றனர். இதனால் இந்தத் தரப்பே பாராளுமன்றத்திலும் மாகாண சபை, உள்ளுராட்சி மன்றங்கள் போன்றவற்றிலும் முன்னிலையில் உள்ளது. 1980 – 2009 வரையில் இது ஆயுதப் போராட்ட அரசியலாக – செயற்பாட்டு அரசியலாக இருந்தது. 2009 க்குப் பின்னர், செயற்பாட்டுப் பாரம்பரியம் இல்லாதொழிந்து, பேச்சு அரசியலாக – அறிக்கை அரசியலாகச் சுருங்கி விட்டது. அதனால்தான் இதை “தமிழின விடுதலையை மையப்படுத்திப் பேசுவது” என்று குறிப்பிடுகிறோம். இந்தப் பண்பினால்தான் இந்தத் தரப்புக்குக் கடுமையான விமர்சனங்களும் உண்டு. செயற்பாட்டுப் பாரம்பரியமொன்றிற் கூடாகப் பயணித்து வந்த மக்களுக்கு, அது இல்லாமற் போனது ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆனாலும் அவர்கள் மனங்கசந்த நிலையிலும் இந்தப் பேச்சு அரசியலுக்கே ஆதரவளித்து வருகிறார்கள். அதற்கான காரணத்தை இந்தக் கட்டுரையின் போக்கில் நீங்கள் அறிய முடியும். மக்களுடைய கசப்பு, அதனால் எழுகின்ற விமர்சனங்கள் எல்லாம் இருந்தாலும் இந்த அரசியற் தரப்பினர் இவை குறித்துத் தம்மை மறுபார்வைக்குட்படுத்தவோ புதுப்பித்துக் கொள்ளவோ முயற்சிப்பதில்லை. இதனால் எழுந்த புற அழுத்தங்களாலும் உள்ளக முரண்பாடுகளாலும் இந்தத் தரப்புப் பல அணிகளாகக் கடந்த பத்து ஆண்டுகளில் உடைந்து, துண்டு துண்டுகளாகியுள்ளன. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உடைந்து, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம், ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகம், தமிழ்த் தேசியக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ஜனநாயகப் போராளிகள்.. என இந்தப் பட்டியல் நீள்கிறது. ஆயுதப் போராட்ட – செயற்பாட்டு – ப் பாரம்பரியத்திற்கூடாக வந்தவர்களும் அதற்கு மறுதலையாகப் “பேச்சுப் பாராம்பரியத்திற்குள்” சிக்கி விட்டனர் என்ற கசப்பான அனுபவத்தையும் நாம் ஜீரணிக்க வேண்டியுள்ளது. இதற்குள் ஏராளம் கவனிக்க வேண்டிய புள்ளிகளும் கோடுகளும் உள்ளன. இந்தத் தமிழ்த் தமிழ்த்தேசிய அரசியலில் அரச எதிர்ப்பைக் காட்டும் அளவுக்கு இந்திய விசுவாசம் காண்பிக்கப்படுகிறது. அதாவது தமக்கு இந்தியாவுடன் நெருக்கம் உண்டெனக் காட்டப்படுகிறது. அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் (தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி) போன்ற ஒரு சில கட்சிகளைத் தவிர்த்து ஏனையவை அனைத்தும் இந்திய விசுவாசத்தின் கீழ் உறைந்து போயுள்ளன. இவையே இலங்கை – இந்திய உடன்படிக்கையைக் குறித்தும் ஆர்வமாகப் பேசிக் கொண்டிருப்பன. இலங்கை இந்திய உடன்படிக்கையின் விளைவான 13 ஆவது திருத்தத்தைப் பற்றி வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் ஈடுபாட்டுடன் இவை இருப்பதையும் காணலாம். இன்னொரு நிலையில் இவை அனைத்தும் “இந்தியா கை விட்டால் எப்படியும் சர்வதேச சமூகத்தின் (மேற்குலகின்) ஆதரவும் நீதியும் நியாயமும் கிடைத்து விடும்” என்று ஆழமாக நம்பிக் கொண்டிருப்பன. இதையே மக்களுக்கு அவை “விடுதலைக்கான ஒரே வழி”யாகவும் காட்டிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவும் சர்வதேச சமூகமும் தமிழ் மக்களின் விடுதலையிலும் சரி, அவர்களுடைய அரசியலிலும் சரி ஒருபோதுமே நெருங்கி நின்றதும் இல்லை. தீர்வை முழுமையாகப் பெற்றுக் கொள்ள உதவப் போதுமில்லை. அதற்கான களச் சூழலும் சர்வதேச நிலைமையும் இப்போது வரைக்கும் இல்லை. இதுதான் உண்மை. இல்லையென்றால் இந்தக் குட்டி இலங்கையில் இந்த இனப்பிரச்சினை இப்படித் தீர்க்கப்படாமல் இழுபட்டுக் கொண்டிருக்காது. ஆனால் இவை பிரச்சினை முற்றிப் போகாமல் இருக்கும் அளவுக்கு ஒரு இடைத் தலையீட்டையும் மறைமுக அழுத்தத்தையும் கொடுக்கின்றன. இவற்றின் பாத்திரமும் இதுவரையான வகிபாகமும் அப்படித்தானுள்ளது. இதையெல்லாம் இந்தச் சக்திகளுக்குத் தெரியாது என்றில்லை. இருந்தாலும் இதை விட்டால் – இப்படிக் கதை விடுவதை விட்டால் இவற்றுக்கு வேறு கதியும் இல்லை. வேறு வழியும் இல்லை. என்பதால் இந்திய – சர்வதேச வித்தையைக் காட்டிக் கொண்டிருக்கின்றன. அதேவேளை இந்தத் தமிழ்த்தேசியவாதச் சக்திகள் சமூக அசமத்துவத்தைப் பற்றியோ சமூக விடுதலையைப் பற்றியோ பேசுவதேயில்லை. மட்டுமல்ல தமிழ் மக்களின் பொருளாதாரம், அவர்களுடைய வாழ்க்கை நிலவரம் பற்றி ஒன்றுமே கதைப்பதில்லை. இது இவற்றின் பெருங்குறைபாடாகும். இதனால் பெருந்தொகுதி மக்கள் தொடர்ந்தும் சாதி, மதம், பிரதேசவாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளனர். அத்துடன் மக்களுடைய பொருளாதார நிலையும் மோசமாகச் சரிவடைந்து சென்று கொண்டேயுள்ளது. இதற்கான மாற்றீடுகளும் எதிர்ப்பொறிமுறைகளும் இதுவரை காணப்படவில்லை. இது மக்களுக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை இவை இதுவரையிலும் ஒரே புள்ளியில் தீர்வு பற்றியோ மக்களுக்கான அரசியற் பணிகள் பற்றியோ சிந்திப்பதற்கு இணையவில்லை. இதனால் தமிழ் மக்களுக்கான தீர்வு யோசனையை “13, 13 க்கு அப்பால், சமஸ்டி, இரு நாடு ஒரு தேசம்” என ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக, ஒவ்வொரு கோணத்தில் முன்வைத்துள்ளன. இது மக்களுக்குக் குழப்பத்தை உண்டாக்குவதுடன், எதிர்த்தரப்பான அரசுக்கும் ஏனைய சக்திகளுக்கும் வசதியாக உள்ளது. இப்படிப் பல நிலைப்பாடுகளை முன்வைத்தால் நாம் எத்தகைய தீர்வை வழங்குவது என்று சாட்டுச் சொல்வது அரசுக்கு வாய்ப்பாகும். ஏற்கனவே தீர்வைத் தர விரும்பாத அரசுக்கு இது நல்வாய்ப்பை வழங்கி விடுகிறது. இந்தியாவுக்கும் இது பொருந்தும். இரண்டாவது, அரசாங்கத்தின் மீது உள்ளார்ந்த விமர்சனங்கள், எதிர்ப்புணர்வு இருக்கும்போதும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அதனுடன் இணைந்து (கரைந்து) செயற்படும் தரப்பாகும். இவையும் ஒரு காலகட்டத்தில் அரசை எதிர்த்துப் போராடியவைதான். ஏன் ஆயுதப் போராட்ட அரசியலின் வழியாக வந்தவையும்தான். ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் போன்றவை இதற்கு உதாரணம். எப்படியோ இன்று இவை அரசுடன் இணைந்து ஜனநாயக நீரோட்டத்துக்குள் கரையத் தொடங்கி விட்டன. தமது வழியை இவை இணக்க அரசியல் என்று குறிப்பிடுகின்றன. “மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி” என்று இவை சொன்னாலும் பிரதேச சபையில் கூட சுயத்தன்மையைப் பேண முடியாத நிலையில் மத்தியினால் கட்டுப்பட்டிருப்பவை. இவை தமது வழிமுறையை அல்லது சாதனையை “அபிவிருத்தி” என்று சொல்லிக் கொண்டாலும் சரி, “அபிவிருத்தி அரசியலை” மேற்கொண்டாலும் சரி, இவற்றினால் எந்த எல்லைகளையும் தனித்துவமாகத் தொட முடியவில்லை. ஆனால், அரச எதிர்ப்புத் தரப்பை விடவும் ஒப்பீட்டளவில் மக்களுக்கான தேவைகள், மக்கள் நலன்சார் நடவடிக்கைகள் என்ற வகையில் சில முன்னேற்றகரமான பங்களிப்புகளைச் செய்திருப்பவை என்பதை நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். அதைத் தவிர அரசியல் ரீதியாக இவற்றினால் மக்களுக்கும் சரி, தமக்கும் சரி எந்த முழு வெற்றியையும் பெற முடியாதிருப்பவை. இவை சர்வதேச சமூகத்தைப் பற்றிப் பெரிதாகப் பேசிக் கொள்வதுமில்லை. அதைப்பற்றி அக்கறைப் படுவதுமில்லை. ஆனால் இந்தியாவை தமது நெருங்கிய சகாவாகப் பார்க்கின்றன. அல்லது இந்தியாவை விமர்சிப்பதைத் தவிர்க்கின்றன. அத்துடன் இலங்கை இந்திய உடன்படிக்கையையும் 13 ஆவது திருத்தத்தையும் அதற்கும் மேலான தீர்வையும் யாசிப்பவை. ஆனாலும் இவற்றினாலும் ஒரு போதும் தாம் குறிப்பிடும் எல்லைகளைக் கூட தொட முடியாது. வேண்டுமானால் இருக்கும் காலம் வரையிலும் ஒன்றிரண்டு அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியுமே தவிர, மக்களுக்கான அரசியல் உரிமைகளைப் பெறவும் முடியாது. தனித்துவமாக இயங்கவும் முடியாது. அடுத்த தரப்பு இந்திய எதிர்ப்புடன் கூடிய தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுப்பது. இதற்கு உதாரணம், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்ற திரையில் மறைந்திருக்கும் இலங்கைத் தமிழ்க்காங்கிரஸாகும். இது சற்றுத் தீவிரமானது. இவற்றுக்கும் சமூக அரசியல் பொருளாதாரப் பார்வை இல்லை. முற்றிலும் உணர்ச்சிரமான அதி தீவிர அரசியலை முன்னெடுப்பவை. இவற்றுக்குப் பெரிய அளவில் மக்கள் ஆதவில்லை என்றாலும் குறிப்பிட்டளவு இளைய தலைமுறையினரிடத்தில் இந்தத் தரப்புச் செல்வாக்குப் பெற்றுள்ளது. அடுத்த தரப்பு மூன்றாவது. இது தமிழ் அரசியலில் புதிய முகமாக, அரசுடன் இணைந்து கொள்ளாமல் (சரணடைந்து விடாமல் அல்லது கரைந்து போகாமல்) அதற்கு வெளியே நின்று ஆதரிக்க வேண்டிய புள்ளிகளில் ஆதரித்தும் எதிர்க்க வேண்டிய விடயங்களில் எதிர்த்தும் தமது அரசியலை முன்னெடுக்க முயற்சிக்கும் தரப்பாகும். இதற்கு மக்கள் ஆதரவு ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. ஆனால் இந்தத் தரப்பு அறிவுபூர்வமாக ஒவ்வொன்றையும் அணுக முற்படுவது. ஜனநாயகத்தைத் தன்னுடைய அடிச்சட்டகமாகக் கொண்டது. இனவாதத்தை முற்றாகவே நிராகரிப்பது. அதேவேளை பால் சமத்துவம், பிரதேச சமத்துவம், இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்த அரசியல் தளத்தையும் அரசியல் உறவையும் கட்டமைக்க விளைவது. இந்தத் தரப்பு எழுச்சியடைய வேண்டும். இதற்கு உடனடியாக மக்கள் ஆதரவு ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கிறது. ஆனால் இந்தத் தரப்பு எதையும் அறிவுபூர்வமாக அணுக முற்படுவதாக இருக்கும். அதுதான் இதன் பலமாகும். அத்துடன் மக்களுடன் மிக நெருக்கமான உறவைக் கட்டியெழுப்பி, மக்களைப் புதிதாகச் சிந்திக்கச் செய்ய வேண்டும். அவர்களிடம் வரலாற்றுண்மைகளை எடுத்துரைத்தும், உலக அரசியலை விளக்கியும், தர்க்கித்தும், யதார்த்த நிலைகளை உணர வைத்தும் இந்த உறவைப் பலப்படுத்த வேண்டும். மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உரிய முக்கியத்துவத்தை அளித்து, அவற்றுக்குப் பொருத்தமான தீர்வை விரைந்து காண வேண்டும். பிராந்திய, சர்வதேச அரசியலுறவைக் கட்டியெழுப்பவும் கையாளவும் வேண்டும். இதெல்லாம் கடினமானது, சவாலானதுதான். ஆனாலும் இதைச் செய்தே ஆக வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் இதுவரையான அரசியலில் இருந்து விலகி, வேறுபட்டு, ஒரு மாற்று அரசியலை முன்னெடுக்க விளையும் தரப்பாக இது இருக்க வேண்டும். அதாவது போருக்குப் பிந்திய அரசியலை (Post – War Politics), தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, தமிழ் பேசும் சமூகங்களுக்கும் ஏன், முழு இலங்கைக்கும் தேவையான – புதிய எதிர்காலத்துக்கான அரசியலை, மக்கள் அரசியலை, அறிவுபூர்வமான அரசியலை முன்னெடுக்க விரும்புவதாக இது இருக்கும். இது இனவாத அரசியலுக்கு – இனவெறுப்புக்கும் இனவொறுப்புக்கும் – முற்றிலும் எதிரானது. அதற்காக முன்னர் இடதுசாரிகள் பேசிய – முன்னெடுத்த வைதீக அரசியலாக இல்லாமல், விடுதலைக்கான அரசியலாக இருக்கும். இப்படியான அரசியலை முன்னெடுக்கும்போதுதான் புதிய அரசியலின் முகத்தையும் அதன் அக – புறப் பண்பாட்டையும் உலக அரங்கில் முன்வைக்க முடியும். மட்டுமல்ல, மக்களுக்கும் புதிய ஒன்றை வழங்க முடியும். அந்தப் புதியது மக்களுக்குப் பயனுள்ளதாகவே இருக்கும். ஆனால், இத்தகைய அரசியலை முன்னெடுப்பதற்கு உள்நாட்டிலும் பிராந்தியத்திலும் சர்வதேச மட்டத்திலும் ஏகப்பட்ட சவால்களும் நெருக்கடிகளும் இருக்கும். அவற்றை மதிநுட்பத்தினாலும் அர்ப்பணிப்பான செயற்பாட்டினாலும்தான் வென்றெடுக்க வேண்டும். அரசியல் என்பது அறிவியல்துறை. அரசியல் என்பது முழுச் செயற்பாட்டுக்குரியது. அரசியல் என்பது வளர்ந்து செல்லும் பண்பாடு. அரசியல் என்பது வெற்றி தோல்விகளில் படிக்கும் பாடத்தின் அடிப்படையில் முன்னேறிச் செல்வது. அரசியல் என்பது கட்சிகளுக்கோ தலைவர்களுக்கோ இல்லாது, மக்களுக்கானது. அரசியல் என்பது, விருப்பங்களையும் நடைமுறைகளையும் இணைத்துச் செல்வது. அரசியல் என்பது, சத்தியமானது. இத்தகைய புரிதலோடும் அறிவொழுக்கத்தோடும் இதை முன்னெடுக்க வேண்டும். அதாவது, இலங்கையின் பின்னடைவுகளிலிருந்து இலங்கையை மீட்கக் கூடிய அரசியல் இது. இலங்கைச் சமூகங்களின் பிளவுகளிலிருந்தும் காப்பாற்றி ஒருங்கிணைவை வழங்கக் கூடியது. ஒவ்வொரு சமூகத்தையும் அதன் சுயம், அடையாளம் – தனித்துவம், முன்னேற்றம், சமநிலை ஆகியவற்றில் நிறைவாகத் தக்க வைப்பது. அப்படியென்றால் இந்த அடிப்படையில் சிந்திக்கக் கூடிய தரப்பை மக்கள் தேர்ந்து ஆதரிக்க வேண்டுமே! நிச்சயமாக இந்தக் கேள்வி நியாயமானதே. ஆனால் துரதிருஸ்டவசமாக மக்கள் அவர்களை அறியாமல் இனவாதத்தினால் கட்டமைக்கப்பட்டுள்ளனர். என்பதால் அவர்களால் அதைக் கடந்து சிந்திக்க முடியாது. உண்மை எவ்வளவு பிரகாசமாக இருந்தாலும் அறிவு குருடாகி விட்டால் அதைக் கண்டுணர முடியாது. இது மிகத் துயரமான நிலையே. இதில் இன்னும் துயரமானது படித்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் புத்திஜீவிகளும் அரசியல் ஆய்வாளர்களும் கூட இதைப் புரிந்து கொள்ள மறுக்கும் அளவுக்கு அவர்களும் இனவாத நரம்புகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மிக மலிவான, ஒரு கறிக்குப் பயன்படும் ஒரு எலுமிச்சம் பழத்தை வாங்கும்போது கூட அதன் தரத்தைக் கவனமாகப் பரிசீலிப்பார்கள். ஒரு கீரைப்பிடியை வாங்க வேணும் என்றால் கூட அது வாடியிருக்கிறதா? இலைகள் கெட்டிருக்கின்றவா, நன்றாக உள்ளனவா? முற்றியிருக்கிறதா? என்றெல்லாம் மிகக் கவனமாக ஆராய்வார்கள். அப்படி மிகச் சிறிய பொருட்களில் தொடங்கி காணி வாங்குவது, கார் வாங்குவது, திருமண உறவுகளைத் தேர்வது, சீட்டுப்பிடிக்கும்போது கூட நம்பிக்கையானரா என்பது வரை எல்லாவற்றிலும் தரத்தையும் உத்தரவாதத்தையும் பார்க்கின்றவர்கள், அரசியலில் மட்டும் மொண்ணைத்தனமாக தேர்வைச் செய்கிறார்கள். அரசியல் ஒரு அறிவியக்க வெளிப்பாடு என்று உணராமல், உணர்ச்சி வசப்பட்ட, நட்பு, உறவு, சாதி, இனம், மதம், பிரதேசம் என்ற வகையில் தேர்கிறார்கள். தேர்வு செய்யப்படுகின்றவரின் அரசியல் அறிவு, துறைசார் நிபுணத்துவம், மக்கள் மீதான கரிசனை, பண்பு, செயற்பாட்டுத்திறன், உலக அரசியல் அவர் செலுத்தக் கூடிய செல்வாக்கு, கடந்த காலத்திலும் தற்போதும் குறித்த நபர் அல்லது நபர்கள் செய்த, செய்து வரும் அரசியல், சமூகப் பங்களிப்புகள் போன்றவற்றைப் பற்றிய எந்த மதிப்பீடும் இல்லாமல் அறிவுக்(?) கண்களை மூடிக் கொண்டு ஆதரித்து விடுகிறார்கள். மேலும் ஒன்றைச் சொல்லலாம். புதிய செல்போனை வாங்குகிறோம். புதிய காரை, புதிய செருப்பை, புதிய உடைகளை, புதிய பொருட்களை எல்லாம் வாங்குகிறோம். புதியவை தரமானவை. New Vertion என்பது முன்பிருந்ததையும் விட எப்போதும் Advance ஆக இருக்கும் என்று நம்புகிறோம். அது உண்மையும் கூட. இவற்றில் நாம் காண முற்படும் பொது அம்சம் என்னவென்றால், புதியவை வேகமும் தரமும் பல்பயன்பாடும் இருக்கும் என்பதால். கூடவே இலகுத் தன்மையும் உள்ளது என்பதாகும். ஆனால் அரசியலில்? அரசியலில் இதற்கு மாறாகவே மக்கள் சிந்திக்கிறார்கள். செயற்படுகிறார்கள். தோற்றுப்போன, வெற்றிகளையே தராத அரசியல் தரப்புகளை ஆதரிப்பவர்களாக இருக்கிறோம்! இது ஏன்? தாம் பழகியவற்றிலிருந்து கடந்து புதிய பிரவேசத்துக்குள் நுழைவதற்குப் பதற்றப்படுகிறார்கள். பயங்கொள்கிறார்கள். காரணம், இனவாதமே. மீறிச் சென்றால் தாம் தனித்து விடுவோம் என்று அச்சமடைகிறார்கள். ஆகவேதான் இந்த அரசியலை முன்னெடுப்பது இலகுவானதல்ல என்ற நிலை உள்ளது. ஏனென்றால் மக்கள் வழமையான – பாரம்பரியமான அரசியல் வழிமுறையின் வழியே நடந்து பழக்கப்பட்டவர்கள். இந்த இரண்டக நிலையில்தான் தமிழ்ச்சமூகம் சிக்குண்டுள்ளது. தமிழ்ச் சமூகம் மட்டுமல்ல, சிங்களச் சமூகமும்தான். சுயமாகச் சிந்திக்காத வரையில் எல்லாமே பிரச்சினைதான். https://arangamnews.com/?p=9966
  13. இலங்கை அரசியல் இனவாதத்தில் இருந்து மீளாதா? September 11, 2023 — கருணாகரன் — “இலங்கை அரசியல் இனவாதத்திலிருந்தும் இன அடையாளத்திலிருந்தும் மீளாதா? இனப்பிரச்சினைக்கு முடிவு வராதா? தீர்வு கிடைக்காதா? இனவெறிக் கூச்சல்கள் அடங்காதா…” என்று புலம்பெயர் நாடொன்றிலிருந்து வந்த ஒரு இளைஞர் சில நாட்களுக்கு முன்பு கேட்டார். அவருடைய கண்களில் பெரிய ஏக்கம் நிறைந்திருந்தது. அவர் காண விரும்புவது வேறொரு இலங்கையை. வேறொரு அரசியற் களத்தையும் அரசியல் பண்பாட்டையும். இன சமத்துவமும் பல்லினத்தன்மைக்குரிய இடமும் ஐக்கியமும் அமைதியும் தேசத்தின் மீதான அக்கறையும் கொண்ட சூழலை அவர் விரும்புகிறார் என்பதை அவருடன் தொடர்ந்த உரையாடலின்போது உணர்ந்தேன். “உலகம் எப்படி மாறிக் கொண்டுள்ளது. யாரென்றே தெரியாத மனிதர்களுடன் நெருக்கமாகி உறவாகிறோம். நமக்கு முற்றிலும் புதிய தேசங்களில் யாரென்றே தெரியாத நிலையில் போய் வேரூன்றி வாழ்கின்றோம். எந்த உத்தரவாதத்தில் அங்கெல்லாம் போகிறோம்! அங்கே சக மனிதருக்கான இடமும் வாழ்வதற்கான உத்தரவாதமும் கிடைக்கும் என்பதால்தானே! அது ஏன் எங்களுடைய நாட்டில் (நாம் பிறந்த மண்ணில்) மட்டும் இல்லாமல் போகிறது? இந்த அரசியல்வாதிகள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்கிறார்களே. அங்கே போய் எதைப் பார்க்கிறார்கள்? எதைப்படிக்கிறார்கள்? அங்கெல்லாம் இன, மத, சாதி(?) நிற, மொழி வேறுபாடுகளைக் கடந்து மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். இதைப் பார்க்கும்போது தங்களை நினைத்து இவர்கள் வெட்கப்படுவதில்லையா? ஏன் நம்முடைய பிரமர், ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் எனத் தலைவர்கள் நாடு நாடாகச் சுற்றுப் பயணம் போய் வருகிறார்களே! அந்த நாடுகளைப் பார்த்து கொஞ்சமாவது கற்றுக்கொள்ள வேண்டாமா? அங்கே பேதங்களுக்கும் வேறுபாடுகளுக்கும் இடமிருப்பதில்லை. சட்டமும் அரசாட்சியும் ஒன்றாகவே இருக்கின்றன என்பதையாவது புரிந்து கொள்ளமுடியாமல் ஏனிருக்கிறார்கள்? இனவாதத்தையும் மதவாதத்தையும் மனதுக்குள்ளும் தலைக்குள்ளும் வைத்துக் கொண்டு எப்படி ஜனநாயத்தைப் பற்றிப் பேசுகிறார்கள்? எப்படி உலகத்துடன் கைகுலுக்குகிறார்கள்? இது என்ன காட்டு மிராண்டி யுகமா? அல்லது நம்மை மட்டுமல்லாமல் உலகத்தையும் ஏமாற்றுகிறார்களா…” என்று சற்று உரத்த தொனியில் ஆக்ரோஷமாகக் கேட்டார். அவருடைய கேள்வி நியாயமானது. இதே கேள்விகள் என்னிடத்திலும் எழுந்திருக்கின்றன. இன்னும் பலரிடத்திலும் இவைபோலப் பல கேள்விகள் இருக்கலாம். ஆனால் இந்தக் கேள்விகளை நாம், நம் நம்முடைய அரசியல்வாதிகளிடமும் தலைவர்களிடமும் கேட்க வேண்டும். நம்முடைய ஊடகங்களிடமும் ஊடகவியலாளர்களிடத்திலும் கேட்க வேண்டும். மாற்றாளர்கள் விலக்கு. மாற்றாளர்கள் விலக்கு என்பது ஏனென்றால் அவர்கள் இனவாதத்துக்கும் இங்கே நிலவுகின்ற அரசியற் போக்குக்கும் எதிராக – மாறாகச் சிந்திப்பவர்கள். அவர்கள் யதார்த்தத்தை உணர்ந்து, அதன்படியே அரசியலை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டவர்கள். ஆனால், அவர்களுடைய கருத்தையும் நிலைப்பாட்டையும் பெருந்திரள் சமூகமும் அதைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் தரப்புகளும் ஏற்றுக் கொள்வதில்லை. ஆகவே அவர்கள் இதில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள். ஆனால், ஏனைய பெருந்திரளாளர்கள் இதற்குப் பதில் அளிக்க வேண்டும். பொறுப்புச்சொல்லவும் பொறுப்பு ஏற்கவும் வேண்டும். அவர்கள் அனைவரும் ஆளையாள் குற்றம் சாட்டிக் கொண்டு ஏட்டிக்குப் போட்டியாக இனவாதத்தை வளர்த்துக்கொண்டிருப்பவர்கள். இனவாதம் அழியக் கூடாது என்று செயற்பட்டுக் கொண்டிருப்பவர்கள். தவறு, பிழை, குற்றம் என்றெல்லாம் தெரிந்து கொண்டே அதை எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாமற் செய்து கொண்டிருப்பவர்கள். மக்களிலும் பெரும்பாலானோர் அப்படித்தான் செயற்படுகிறார்கள். தவறான – பொருத்தமற்ற அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள், அரசியற் தலைவர்கள் என்று நன்றாகத் தெரிந்து கொண்டே அதற்கு ஆதரவளிப்பவர்கள். கட்சி அபிமானம், தலைமை மீதான பிடிமானம், இனமானம் போன்ற காரணங்கள் இவர்களுடைய அறிவுக் கண்ணைக் குருடாக்கி விடுகின்றன. ஆனால், அந்த இளைஞர் கேட்கும் கேள்விகளும் அவருடைய மனதிலே எழுகின்ற கோபமும் நியாயமானது. அந்த நியாயத்துக்கு இங்கே உரிய இடமில்லை. இந்தக் கேள்விகளுக்கும் பதில் கிடையாது. இதிலே துயரமான வேடிக்கை என்னவென்றால் இனவாதத்தையும் மதவாதத்தையும் வளர்த்துக் கொண்டு, மக்களுக்கு விரோதமாகச் செயற்படுகின்றவர்களையே மக்களும் தமது அரசியல் தலைவர்களாகவும் அரசியற் பிரதிநிதிகளாகவும் தெரிவு செய்வதுதான். இனவாதம், மதவாதம் மட்டுமல்ல, ஊழல் முறைகேட்டைச்செய்கின்றவர்களையும் மக்கள்தான் ஆதரித்து வெற்றியடையச் செய்கிறார்கள். இதையெல்லாம் கேள்விக்குட்படுத்தாமல், கேள்விக்குட்படுத்தத் தயாரில்லாமல் இருக்கின்ற ஊடகக்கார்களும் ஊடகங்களும் இதில் சேர்த்தி. இதுதான் இலங்கையின் துயரமும் அவலமும். இதற்கு அடிப்படையாகச் சில விடயங்கள் உண்டு. ஒன்று, சிங்கள அரசியற் தலைவர்கள் மதத்துக்குக்கும் மதவாதிகளுக்கும் கட்டுப்பட்டிருப்பதாகும். இலங்கையில் மொழியும் மதமும் இரண்டறக் கலந்தது என்பர். சைவமும் தமிழும். சிங்களமும் பௌத்தமும். ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாத அளவுக்கு பிணைந்திருப்பவை. இதனால் தெரிவு செய்யப்படும் அரசியற் தலைவர்கள் மதபீடங்களுக்குச் சென்று ஆசி பெறுவதும் வழிபடுவதும் முதற்பணியாகிறது. அதற்குப் பிறகுதான் ஆட்சி பரிபாலனமும் அரசியற் பணியும் மக்கள் தொண்டும். இதொரு வழமையாகி விட்டது. மன்னர் காலத்துப் பாரம்பரியத்தை இந்த ஜனநாயக யுகத்திலும் அப்படியே பின்பற்றுகிறார்கள். இதனால் மதபீடங்களையும் மதக் கட்டுமானங்களையும் இவர்களால் கடந்து செல்ல முடிவதில்லை. இதனால்தான் இலங்கையின் அரசியலமைப்பும் பௌத்தத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. பௌத்தத்துக்கு முன்னுரிமை என்று சொன்னால் ஏனைய மதங்களைச் சேர்ந்தவர்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இலங்கையில் பௌத்தத்தை பின்பற்றுகின்றவர்கள் தனியே சிங்களர் மட்டுமே. ஆகவே சிங்கள பௌத்தவாதமாக இது திரட்சியடைந்துள்ளது. இதற்கு அரசு தலைமை தாங்குவதால் ஏனைய மதத்தையும் மொழியையும் பேசும் மக்களின் நிலை கேள்விக்குள்ளாகிறது. சிங்கள பௌத்தத்தைப் போல மிகப் பிற்போக்குத்தனமான மதக் கட்டுப் பெட்டித்தனங்கள் இல்லை என்றாலும் முஸ்லிம்கள், பள்ளிவாயல்களையும் அவற்றின் சம்மேளத்தையும் கடந்து நிற்றமுடியாதவர்கள். அப்படித்தான் தமிழ்க்கட்சிகளும் மலையகக் கட்சிகளும். ஆனால் அவை மதத்துக்குள் கட்டுப்பட்டிருக்காமல் வேறொரு நிலையில் கட்டுப்பட்டுள்ளன. என்பதால்தான் இந்தக் கட்சிகள் எல்லாமே இனக் கட்சிகளாகச் சுருங்கிக் கிடக்கின்றன. இதைப்பற்றி விவாதிக்கும்போது அரசும் சிங்களத் தரப்பும் இனவாதத்தைப் பிரயோகிப்பதனால் தாமும் தவிர்க்க முடியாமல் இனரீதியாகவே திரட்சியடைய வேண்டியுள்ளது. அவர்கள் (சிங்கள மக்கள்) சிங்களத் தேசியவாதத்தை மேலுயர்த்தும்போது தவிர்க்க முடியாமல் நாமும் தமிழ்த்தேசிய வாதத்தையே நிலை நிறுத்த வேண்டியுள்ளது. அப்படித்தான் முஸ்லிம் தேசியவாதமும் மலையகத் தேசியவாதமும் என்று சொல்லப்படுகிறது. மேலோட்டமாகப் பார்த்தால் இது சரிபோலவே தோன்றும். அதற்கான பகுதி அளவு நியாயங்களும் உண்டு. ஆனால், இது தவறு. ஏனென்றால் இந்த எதிர்த்தேசியவாதம் என்பது தேசியத் தன்மையோடு உருவாகவும் இல்லை. அப்படிக் கடைப்பிடிக்கப்படவும் இல்லை. சிங்கள இனவாதத்துக்குப் பதில் தமிழினவாதம். சிங்கள + தமிழ் இனவாதத்துக்குப் பதில் முஸ்லிம் இனவாதம். அவ்வளவுதான். இதில் சிங்கள இனவாதம் சற்றுக் கூர்மையாக உள்ளது. காரணம், அது அரசு, அதன் வளங்கள், படைத்துறை, பெரும்பான்மை என்ற அதிகார எல்லைகளை உச்சமாகக் கொண்டிருப்பதால் கூரானதாக உள்ளது. அடுத்தபடியாக தமிழினவாதம் இருந்தது. இப்பொழுது தமிழ்த்தரப்பின் பலம் குறைவடைந்துள்ளதால் அதனுடைய எல்லைகள் மட்டுப்பட்டுள்ளன. முஸ்லிம் இனவாதம் அதற்கும் கீழே உள்ளது. இனவாதத்துக்கும் தேசியவாதத்துக்கும் இடையிலான வேறுபாட்டைப் பலரும் உணர்ந்து கொள்வதில்லை. இதனால் இரண்டையும் ஒன்றாகப் போட்டுத் தாமும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். இனவாதத்தில் ஜனநாயகத்துக்கான இடமே இருக்காது. தேசியவாதத்தில் (அதுவும் ஒரு கற்பிதம்தான் என்றபோதும்) அதற்குள் ஒப்பீட்டளவில் ஒரு சுதந்திர வெளி உண்டு. ஜனநாயகம் அதற்கான வெளியை ஏற்படுத்திக் கொடுக்கிறது. இதனால் அது உள்ளும் புறத்தும் திறந்தே காணப்படும். அதனுடைய பலமே அதுதான். எந்தத் தயக்கமும் தடுமாற்றமும் அதற்குக் கிடையாது. அது மற்ற இனங்களைக் கண்டு அஞ்சாது. தன்னுடைய வெளிப்படைத்தன்மையிலும் ஜனநாயகவேரின் பலத்திலும் அது நிமிர்ந்து நிற்கும். ஆனால், இனவாதம் அப்படியானதல்ல. அது எப்போதும் பிறரைச் சந்தேகிக்கும். பிறரைக் குறித்து அச்சமடைந்து கொண்டேயிருக்கும். இதனால் பிறரை எப்போதும் எதிரியாகவும் எதிர்த்தரப்பாகவுமே கருதிச் செயற்படும். எதையும் முரண்நிலை நின்றே நோக்கும். அதனுடைய குணமே அதுதான். அதற்குச் சமாதானத்தின் மீது ஈடுபாடோ நம்பிக்கையோ திருப்தியோ ஏற்படாது. எப்பபொழுதும் அது எதிர்த்தரப்பைக் குற்றம் சாட்டிக்கொண்டேயிருக்கும். அதில் திருப்தி காண்பதே அதன் முழுமையான ஈடுபாடு. அதுவே தன்னுடைய பலம் எனக் கருதிக் கொண்டிருக்கும். இதனால் எந்தப் பயனும் இல்லை என்பதைப் பற்றிய ஆய்வோ அறிதலோ அதற்குக்கிடையாது. அதை அது பொருட்படுத்திக் கொண்டிருப்பதும் இல்லை. அதற்கு எதிர்த்தரப்பின் மீது குற்றம் சுமத்திக் கொண்டும் எதிர்த்தரப்பை எதிர்த்துக் கொண்டுமிருக்க வேண்டும். அதுவே தன்னுடைய பணி எனக் கருதிக் கொண்டிருக்கிறது. இனவாதம், நிறவாதம், மனவாதம் அனைத்தினதும் பொதுக்குணம் இதுவாகும். இதையெல்லாம் தெரிந்து கொண்டே பலரும் தெரியாததைப்போல தவறிழைக்கிறார்கள். எனவேதான் இவர்கள் வரலாற்றின் குற்றவாளிகள். குப்பைக் கூடைக்குள் தள்ளப்பட வேண்டியவர்கள் என்கிறோம். இலங்கையின் தொடரப்படுகின்ற இனவாதமே இலங்கையைச் சீரழித்தது என்று அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இதற்குக் காரணமானவர்களையும் தெரியும். ஊழல்வாதிகள், இனவாதிகள், சமாதானத்துக்கும் தீர்வுக்கும் எதிரானவர்கள் என்றும் தெரியும். இதற்கெல்லாம் காரணமான கட்சிகள் எவை என்றும் தெரியும். ஆனாலும் மக்கள் இன்னும் இனியும் அவர்களைச் சார்ந்தும் அந்தக் கட்சிகளை ஆதித்துக் கொண்டுமே இருக்கிறார்கள். அடுத்து வரப்போகின்ற தேர்தல்களிலும் இப்படியான சக்திகள்தான் வெற்றியடையக் கூடிய நிலை உண்டு. அப்படியென்றால் எங்கே தவறுண்டு? எதற்காக மக்கள் இப்படித் தவறிழைக்கிறார்கள்? இலங்கை மக்களும் சரி, அரசியல் தலைவர்களும் சரி, ஊடகங்களும் சரி அனைத்துத் தரப்புமே தற்காலத்தில் – நவீன யுகத்தில் வாழவில்லை. அவர்கள் இந்த யுகத்தின் பிரதிநிதிகள் கிடையாது. தற்காலத்தில் உயிரோடிருந்தாலும் அவர்கள் வாழ்வது பல நூறாண்டுகளுக்கு முன்பான காலத்திலேயே. அந்தப் பழைய யுகத்தின் பிரதிநிதிகளாகவே அவர்கள் செயற்படுகிறார்கள். அந்த யுகத்தின் பிரதிநிதியாகவே சிந்திக்கிறார்கள். அதனால்தான் அவர்களால் இந்த யுகத்தின் மனிதர்களாக முடியவில்லை. கோட்டும் சூட்டும் போட்டு (ரை) கழுத்துப்பட்டியும் கட்டிவிட்டால் அவர்கள் இந்த யுகத்தின் பிரதிநிதிகள் ஆகி விடுவார்கள் என்றில்லை. என்பதால்தான் இலங்கையர்களாகிய நாங்கள் இந்த உலகத்தில் மிகப் பின்தங்கியவர்களாக உள்ளோம். இலங்கையை விட்டு எங்காவது தப்பியோடினால் நல்லது என்று எண்ணுகின்றவர்களாக இருக்கிறோம். ஆனால் அங்கே சென்றதும் இங்குள்ள அரசியற் கட்சிகளுக்கு முண்டு கொடுக்கும் ஆட்களாகவும் மாறி விடுகிறோம். அடிப்படையில் நாமும் இனவாதிகளாக இருப்பதே இதற்குக் காரணம். நம்மை அறியாமலே நமக்குள் இனவாதம் செயற்படுகிறது. என்பதால்தான் நம்மால் பிறரை நம்பவும் மதிக்கவும் அவர்களோடு இணைந்து செயற்படவும் முடியாதிருக்கிறது. ஆகவே இன்னும் நூறு ஆண்டுகளுக்கு இதே ஐ.தே.கவும் இதே சு.கவும் இதே ஜே.வி.பியும் இதே பெரமுனவும் இதே தமிழரசுக் கட்சியும் இதே முஸ்லிம் காங்கிரசும் இதே மலையகக் கட்சிகளும் இதே அரசியலை இதே வழிமுறையில் தயக்கமின்றித் தொடரப் போகின்றன. வாழ்த்துகள். https://arangamnews.com/?p=9933
  14. எது வரலாறு ? September 2, 2023 —- கருணாகரன் —- “வரலாறு என்பது என்ன? அது எப்படியானது?” வெடிகுண்டையும் விட ஆபத்தானதா? அவ்வளவு பயங்கரமானதா? அப்படியென்றால் வரலாறு ஏன்? எதற்காக? யாருக்காக? என்ற கேள்விகள் இன்று இலங்கைக் குடிமக்கள் ஒவ்வொருவருடைய மனதிலும் அச்சத்தோடு எழுந்து கொண்டிருக்கின்றன. (இந்த வரலாற்றுக் கதையாடல்களை இனிமையாக ருசித்துக் கொண்டிருப்போர் விலக்கு). அந்தளவுக்கு வரலாற்றுக் கதைகள் (வரலாற்றுப் புரட்டுகள்) அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களாலும் ஊடக அதிகாரத்தில் இருப்போரினாலும் திட்டமிட்டுக் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இனவன்முறைகளைத் தூண்டும் இந்த வரலாற்றுக் கதைகள், உண்மையில் வெடி குண்டையும் விட அபாயகரமானவை. வெடிகுண்டுகள் வெடிக்கும் கணத்தில் மட்டும்தான் பாதிப்பை உண்டாக்கும். இவை அப்படியல்ல. மனதில் ஆழமாக ஊடுருவி தலைமுறைகளுக்கு வியாதியாகத் தொடரக் கூடியவை. தலைக்குள் ஊடுருவி விட்டால் இதயத்தையே கல்லாக்கி, இரும்பாக்கி பரம்பரைகளை நாசமாக்கி விடுபவை. அதனால்தான் இவை மிகப் பயங்கரமான வெடிகுண்டுகள் – நச்சு விதைகள் என்கிறோம். இந்த வரலாற்றுக் கதைகளினால் எழுகின்ற மேற்குறித்த கேள்விகளை எழுப்புவோர் நியாயமான வரலாற்றாசிரியர்களோ வரலாற்று அறிஞர்களோ இல்லை. (அதென்ன, நியாயமான வரலாற்று ஆசிரியர்களும் நியாயமான வரலாற்று அறிஞர்களும் என்று நீங்கள் கேட்கலாம். வரலாற்றை அறிவார்ந்த கண் கொண்டு, சமூகப்பொறுப்பு என்ற மனம் கொண்டு பார்க்கின்றவர்களே நியாயமான வரலாற்று ஆசிரியர்களும் அறிஞர்களுமாவர்) வரலாற்றாசிரியர்களும் அறிஞர்களும் கேள்வி எழுப்பினால், அதில் அறிவின் சாரமிருக்கும். ஓரளவுக்கேனும் அதில் நியாயமிருக்கும். வரலாறு பற்றி இப்பொழுது அதிகமாகப் பேசுவதும் மக்களை அந்தப்பக்கமாக இழுத்துத் திருப்பி விடுவதும் இனவாதிகளே! தங்களுடைய அரசியல் பெரிய லாபத்துக்காக குறுகிய வழியில் இனவாதத்தைத் தூண்டுகிறார்கள். அதற்காக வரலாற்றை ஒரு கருவியாக எடுத்தாள்கிறார்கள். தமக்கேற்ற விதமாக வரலாற்றுப் புனைவை உருவாக்குகிறார்கள். இவர்களுடைய வரலாற்றுக் (கட்டுக்) கதைகள் – இவர்கள் சொல்லும் வரலாறு பற்றிய புனைகதைகள் – அத்தனையும் அறிவுக்கும் உண்மைக்கும் அப்பாலானது. நகைப்புக்குரியது. முட்டாள்தனமானது. அதனால்தான் இது ஆபத்தானதாக உள்ளது. சாத்தான் வேதம் ஓதுகிறது என்பார்களே! அதுதான் இது. தேவ கட்டளையை மீறியொலிக்கும் சாத்தான்களின் குரல். நாடோ பொருளாதாரத்திலும் இன நெருக்கடியிலும் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் பிச்சையெடுப்பதைப்போலக் கெஞ்சிக் கெஞ்சி கடன்பட்டும் உதவி கேட்டுக்கொண்டுமிருக்கிறது அரசாங்கம். “நாட்டைக்கொள்ளை அடித்தால் இப்படித்தான் உலகத்திடம் பிச்சையெடுக்க வேண்டி வரும்” என்று யாரும் எளிதாகச் சொல்லிக் கடந்து விடலாம். ஊழலும் மோசடியும் பொறுப்பின்மையும் ஆட்சி அதிகாரத்தில் இருப்போரிடம் மட்டும்தான் இருக்கிறது என்றில்லை. நாட்டில் பொறுப்பான இடங்களில் பதவி வகிக்கின்ற அத்தனை பேரிடத்திலும் செழித்துள்ளது. ஆளுந்தரப்புக்கு நிகராக அதற்கு வெளியே உள்ள எதிர்க்கட்சிகளிடத்திலும் ஊழலும் பொறுப்பின்மையும் வளர்ந்து நிற்கிறது. அரச நிர்வாக, அரச சார்பற்ற நிறுவனங்களிலும் இவை தாராளம். ஊர்கள், கிராமங்களில் உள்ள மக்கள் அமைப்புகளிடம் இது பரவியுள்ளது. அங்குள்ள மக்களில் சிலரிடமும் இவை ஊடுவி வளர்ந்து கொண்டிருக்கின்றன. இதனால்தான் முழுதாகவே கவிழ்ந்த நிலையில் நாடு இருக்க வேண்டிய நிலை வந்தது. நாட்டைக் காப்பாற்றுவதற்கு எந்தப் புதல்வரும் புதல்வியரும் இல்லை என்றாகி விட்டது. இந்தச் சூழ்நிலையில்தான் பஞ்சம் தலைவிரித்தாடப்போகிறது என்ற அச்சத்தில், முன்னெச்சரிக்கையுடன் ஆயிரக்கணக்கானோர் நாட்டை விட்டுப் பிழைப்புத் தேடி, பொருளாதாரப் பாதுகாப்புத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். படித்தவர்கள், உயர் பொறுப்புகளிலும் பதவிகளிலும் இருப்போர் தொடக்கம் எல்லோரும் ஓடுகிறார்கள். இந்த ஓட்டம் சாதாரணமானதல்ல. மிக மிக ஆபத்தானது. இது நீடித்தால் சில மாதங்களில் ஆஸ்பத்திரிகளில் மருத்துவர்களே இருக்க மாட்டார்கள். நாட்டிலே மருந்துக்கும் மருத்துவர்களைக் காண முடியாது என்ற நிலை ஏற்பட்டு விடும். பாடசாலைகளில் ஆசிரியர்களுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவும். இப்பொழுதே பல பாடசாலைகளில் பொருத்தமான – போதிய ஆசிரிய வளமின்றி மட்டுப்பாடுகளுடன் கல்வியை ஓட்டிக்கொண்டிருக்கிறோம். இதுபோலத்தான் ஒவ்வொரு துறையிலும் பெரிய வெற்றிடங்கள் உருவாகப் போகின்றன. உத்தியோகத்தர்கள் மட்டும்தான் நாட்டை விட்டுப் போகிறார்கள் என்றில்லை. படித்துக் கொண்டிருப்போர், தொழில்துறை அனுபவமுடையவர்கள் என்று எல்லோரும்தான் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை நீடித்தால் எதிர்காலத்தில் பல திணைக்களங்களிலும் ஆட்பற்றாக்குறை ஏற்படும். நிர்வாகம் முடங்கி நாடே படுத்து விடும். இந்த வெளியேற்றம் சாதாரணமானதல்ல. ஒரு நாட்டின் வளம் வெளியேறிக் கொண்டிருக்கிறது. சாதாரண வளமல்ல. மனித ஆற்றலின் வளம். மனித ஆற்றலின் வளமே மிகச் சிறந்தது. பிறந்து, வளர்ந்து, படித்து, அறிவாளிகளாகவும் தொழில் வல்லுனர்களாகவும் உருவாகுவதற்கு அல்லது உருவாக்கப்படுவதற்கு சராசரியாக முப்பது ஆண்டுகள் செல்லும். பலருக்கு அதற்கு மேலும் செல்லும். இதற்கான செலவைச் செய்தது நமது நாடேயாகும். இப்படி நாட்டின் செலவில் வளர்ந்து, ஆளுமைகளாக உருவாகியோர்தான் நாட்டின் நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்குமாக உழைத்துக் கொடுக்க வேண்டியவர்கள். நாட்டைக் கட்டியெழுப்பவும் அதைப் பாதுகாக்கவும் வேண்டியவர்கள். நாட்டுக்கு நெருக்கடி வரும்போது அதில் நின்று தாக்குப் பிடித்து அதை மீட்க வேண்டியவர்கள். ஆனால், இவர்கள் நெருக்கடி வந்து விட்டதென்று ஓடுகிறார்கள் என்றால்…? அதிகம் ஏன்? நீங்கள் பிள்ளைகளைப் பெற்று, வளர்த்து, படிப்பித்து ஆளாக்கிய பிறகு அவர்கள் உங்களைக் கைவிட்டு விட்டு ஓடிப்போனால்…? பிறத்தியாருக்கு உழைத்துக் கொடுப்பவர்களாக மாறினால்…? அப்பொழுது உங்கள் நிலை என்னவாகும்? உங்கள் மனதும் உங்கள் வாழ்வும் எப்படியிருக்கும்? அப்படித்தான் இன்று நாட்டை விட்டு வெளியேறுவோரின் நிலையும் நாட்டின் நிலையும் உள்ளது. இதேவேளை இப்படிச் செல்வோரைப் பிற நாடுகள் வரவேற்கின்றன. இவர்களை அழைக்கும் செலவு கூட இல்லாமல், தங்களுக்குத் தேவையான ஆற்றலர்களையும் தொழிலாளர்களையும் இந்த நாடுகள் பெற்றுக் கொள்கின்றன. தனியே அதற்கான கூலியை மட்டும் கொடுத்தால் போதும் என்ற நிலையில் வைத்திருக்கின்றன. அதுவும் தொடக்கத்தில் மிகக் குறைவான ஊதியமும் வாழ்க்கை வசதிகளுமே வழங்கப்படுகின்றன. அந்தளவுக்கு நம்முடைய மக்களை வைத்து அவை தம்மை வளர்த்துக் கொள்கின்றன. ஆனால், நமது நாடோ!? இதெல்லாம் இந்த வரலாற்றுப் பிரியர்களான இனவாதிகளுக்கு புரியவே புரியாது. அவர்களுடைய தலைக்குள் இருப்பது மண்கூட இல்லை. அதையும் விடக் கழிவான பொருளே உண்டு. அதனால்தான் அவர்களை நாம் தயங்காமல் முட்டாள்கள், மூடர்கள் என்கிறோம். நாடு எதிர்கொண்டிருக்கும் இந்தத் திக்கு முக்காடல் போதாதென்று இந்த இனவாதிகள் வரலாற்றுப் புனைவுகளைக் கட்டவிழ்த்து மேலும் தொண்டைக்குழியை இறுக்குவதென்றால்….? இதிலே துயரமும் வெட்கக் கேடும் என்னவென்றால், அப்படியானவர்களை நமது மக்கள்தான் பாராளுமன்றத்துக்கே தங்கள் பிரதிநிதிகளாக அனுப்பி வைத்துள்ளார்கள். சரத் வீரசேகரா அண்மைக்காலத்தில் முளைத்த ஒரு அரசியல்வாதி. சிங்களத் தரப்பில் அவருக்குப் பெரிய ஆதரவுத்தளமொன்றுமில்லை. ஆனால், தன்னுடைய இனவெறிப் பேச்சுகளால் தமிழ் அரசியல், ஊடகப் பரப்பைத் தன்வசப்படுத்தியிருக்கும் கெட்டிக்காரர். இன்னொரு முட்டாள் உதய கம்மன்பில. கொழும்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டை முற்றுகையிடுகிறார். இதுவா இப்பொழுது தேவையானது? ஏற்கனவே இணக்கத்தீர்வுக்கு எதிர்ப்புள்ளியில் இயங்குபவர் கஜேந்திரகுமார். அப்படியானவரை முற்றுகையிடுவதென்பது, தமிழ்ப்பரப்பில் அவருக்கான ஆதரவு அலையை மேலும் பெருக்குவதாகவே அமையும். அதாவது மேலும் தீவிரநிலையை ஊக்கப்படுத்துவதாக இருக்கும். அப்படி அமையும்போது இலங்கையில் மேலும் நெருக்கடியும் இனவாதமுமே வளரும். பிரச்சினைகள் தீராது. சிங்கள அதிகாரத் தரப்பின் உள் நோக்கமும் அதுதான். கஜேந்திரகுமாரை வளர்த்து விடுவது. அவர் வளர்ந்தால்தான் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணாமலே காலத்தை இலகுவாக ஓட்ட முடியும். எனவே பிரச்சினைகளை வளர்த்து அதில் அரசியல் ஆதாயம் தேடுவதே இவர்களின் நோக்கம். இப்படித்தான் விமல் வீரவன்சவும். எந்த நிலையில் எதைப் பேச வேண்டும்? எதைப்பற்றிச் சிந்திக்க வேண்டும்? என்று சிந்திக்காதவர்கள். நாடிருக்கும் நிலையைப் பற்றிச் சிந்திக்காதவர்கள். வெளிச்சக்திகளுக்கு நாடு அடமானமாகிக் கொண்டிருப்பதைப்பற்றிய சிந்தனையே இல்லாதவர்கள். இப்படியானவர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும் அவர்களால் தீமையே அதிகம். சரத் வீரசேகரா, உதயன்கம்மன்பில, விமல் வீரவன்ச போன்றவர்கள் அரை மூடர்கள் என்றால் இவர்களையும் இவர்கள் சொல்வதையும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டு இவர்களுக்குப் பதிலளிக்க முற்படுவோர் முழு மூடத்தனத்தில் இயங்குவோராகும். சிறிதரன், கஜேந்திரன், விக்னேஸ்வரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் போன்றவர்கள் இந்த வகையானோரே! செல்வாக்கற்ற ஒற்றை மனிதர்களான சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோர் உளறுவதையெல்லாம் பெரிசாக்கிப் பொது மக்களுக்கு செய்தி அளிக்கும் ஊடகங்களும் முழு முட்டாள்தனத்தில் இயங்குகின்றவையாகும். அப்படியென்றால், இவர்கள் சொல்லும் வரலாற்றுப் புரட்டுகளை எல்லாம் நாம் கேட்டுக் கொண்டு சும்மா இருப்பதா? பதிலடி கொடுக்க வேண்டாமா? என்று சிலர் கேட்கக் கூடும். சரத் வீரசேக, விமல்வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் சில இனவாதப் பிக்குமார், இனவாத ஊடகங்கள் வெளிப்படுத்தும் கருத்துகள் நம்மைச் சீண்டும்தான். அதுதான் இந்தத் தரப்பின் நோக்கமுமாகும். நம்மையும் இனவாதச் சகதிக்குள் தள்ளி விடுவது. ஆனால், இவர்கள் விரிக்கின்ற இந்த வலைக்குள் நாம் விழக் கூடாது. அதுதான் நமது அரசியலாக இருக்க வேண்டும். அறிவினால் இந்தச் சதி வலையில் சிக்காமல் இதைக் கடந்து செல்ல வேண்டும். மாற்று உத்திகளைக் கையாண்டு இவர்களை முறியடிக்க வேண்டும். இவர்களை மட்டுமல்ல, இவர்களை வைத்து அரசியல் ஒடுக்குமுறையை மேற்கொள்ளும் அரசாங்கத்தையும் அதிகார அரசியல் மையங்களையும் வெற்றி கொள்ள வேண்டும். அதற்குரிய நிதானமும் அறிவுக் கூர்மையும் அரசியற் தெளிவும் நமக்கு வேண்டும். அதை நாம் உருவாக்கிக் கொள்வது அவசியம். ஆகவே இந்த வரலாற்றுக் கோமாளிகளை நாம் ஒரு போதும் பொருட்படுத்தவே வேண்டியதில்லை. நான்கு நாட்களுக்கு இவர்களைப் பொருட்படுத்தவில்லை என்றால் இவர்கள் கத்திக் களைத்து விடுவார்கள். தங்களை யாரும் பொருட்படுத்தவில்லை என்று சோர்ந்து போவார்கள். ஆனால், எதிர்ப்புள்ளியில் இருக்கும் இனவாதிகள் அப்படிச் செய்ய மாட்டார்கள். அவர்களும் இதைத் திட்டமிட்டுச் செய்கிறார்கள். பிறகெப்படி இதைப் புறக்கணிப்பார்கள்? ஆகவேதான் இதற்கு மறுத்தான் கொடுக்கிறோம் என்று நமது “தமிழ் வீரர்களும்” கத்துகிறார்கள். இதற்காக ஒவ்வொரு கட்சியும் ஒரு சமூகமும் தமக்குள் தீவிர நிலைச் சக்திகளை வைத்துப் பராமரிக்கின்றன. இலகுவான வழியில் அரசியல் ஆதாயத்தைப் பெறுவதற்கான வழியாக அவை இந்தத் தீவிரவாதிகளை ஊக்குவிக்கின்றன. என்பதால்தான் இதைக் கண்டித்துக் கட்டுப்படுத்தாது விட்டு விடுகின்றன. ஊடகங்களுக்கும் இனவாதிகளுக்கும் எப்போதும் எதிர்த்துக் களமாடுவதற்கு சில “வாய்கள்” வேண்டும். அவை அதைப் பிடித்துத் தொங்கிக் கொள்ளும். அதில்தானே அவற்றுக்கும் லாபம் கிடைக்கும். என்பதால்தான் இவர்கள் (இருதரப்பும்) அவிழ்த்து விடும் வரலாறு பற்றிய கதையாடல்களையும் கட்டுக்கதைகளையும் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும் என்கிறோம். ஏனென்றால் இவர்களின் ஆபத்தான இந்தச் செயற்பாடுகளை நாம் எளிதில் கடந்து செல்ல முடியாது. இவர்கள் விதைக்கின்ற விசம் மிகப் பயங்கரமானது. ஆயிரமாயிரம் வெடிகுண்டுகளுக்குச் சமம். இவர்கள் தூண்டுகின்ற இனவாதத்துக்கு பலியாகுவது மக்களாகிய நாமே! இதேவேளை இந்தச் சூழலில் எந்த வரலாற்று அறிஞரும் வரலாற்று ஆசிரியர்களும் தமிழ் – சிங்களத் தரப்புகளுக்கு இடையில் நிகழும் வரலாற்றுப் புளுகுப் போர்களைப் பற்றி எதுவுமே பேசாதிருக்கின்றனர் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அவர்களுடைய அறிவுபூர்வமான சொல்லை – அறிவுரைகளை – ஆய்வு முடிவுகளை இந்த இனவாதிகள் பொருட்படுத்த மாட்டார்கள். அவற்றுக்கு மதிப்பளிக்கவும் மாட்டார்கள். என்பதால்தான் வரலாறு பற்றிய அச்சம் இன்று நாட்டில் உள்ள அனைவருக்கும் எழுந்துள்ளது. இந்த அச்சத்தை மக்களாகிய நாம்தான் முறியடிக்க முடியும். வரலாற்றுப் புனைவுகளுக்குள் சிக்குண்டு அள்ளுப்படாமல், வரலாற்று ஆய்வுகளின் ஊடாகப் பயணிப்போம். வரலாறு நம்மை மீட்கட்டும். நம்மை யார் என்று நமக்கும் பிறருக்கும் உணர்த்தட்டும். வரலாறு நமக்கு வழியை மூடிச் சிதைப்பதற்குப் பதிலாக வழிகளைத் திறந்து காட்டட்டும். வரலாறு நம்மை உலக அரங்கில் நிறுத்தட்டும். அந்த வரலாற்றை எழுதுவோம். https://arangamnews.com/?p=9907
  15. புலம்பெயர் சமூகத்தின் உதவிகள் -01 August 22, 2023 —- கருணாகரன் —- கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகப் புலம்பெயர் சமூகம் இலங்கையில் உள்ள மக்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. இந்த உதவிகள், போராட்டத்துக்கான பங்களிப்பாக, போர் நெருக்கடிகளைத் தீர்ப்பதாக, சுனாமி மற்றும் கொரோனா கால பேரிடர்களில் துயர் களைவதாக எனப் பல வகையில் இருந்து வருகிறது. மட்டுமல்ல, இந்தப் பாதிப்புகளுக்குட்பட்ட மக்களை மீள் நிலைப்படுத்துவதற்காகவும் மேம்படுத்துவதற்காகவும் கல்வி, மருத்துவம், வாழ்வாதாரம், சமூக மேம்பாடு எனப் பலவற்றுக்காகவும் உதவுகிறது. கூடவே துறைசார் அறிவுப் பகிர்தலையும் இப்பொழுது ஆற்றி வருகிறது. இவற்றைப் பற்றி இந்தத் தொடர் விவாதிக்கிறது. புலம்பெயர் சமூகம் இன்று மிகப் பெரிய சக்தியாகும். பொருளாதாரத்தில் பல்வேறு வகையான உதவித்திட்டங்களிலும் நலத்திட்டங்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் பல உதவித்திட்டங்களையும் நலத்திட்டங்களையும் முன்னெடுக்கக் கூடியதாகவும் உள்ளது. கூடவே நாட்டில் (இலங்கையில்) பெரிய அளவில் முதலீடுகளை மேற்கொள்ளக் கூடிய அளவுக்கு வலுவானதாகவும் இருக்கிறது. இதைப்போல அறிவுசார் பங்களிப்பை வழங்கக் கூடிய நிலையிலும் அரசியல் ரீதியாகத் தாக்கங்களை உண்டாக்கக் கூடிய சூழலிலும் உள்ளது. அதிலும் புலம்பெயர் சமூகத்தின் இரண்டாம் தலைமுறையினர் இதில் முன்னணியில் உள்ளனர். அந்தந்த நாடுகளில் கல்வி கற்றும் துறைசார் பணிகளில் ஈடுபட்டும் தமது அறிவை விருத்தி செய்துள்ளனர். இந்த இரண்டாம் தலைமுறையினரே அரசியல் ரீதியாகவும் செல்வாக்கைப் பெற்று வருகின்றனர். கனடாவில் ஹரி ஆனந்தசங்கரி, ராதிகா சிற்சபேசன், லோகன் கணபதி, விஜே தணிகாசலம் தொடக்கம்………. வரை பலர் உள்ளனர். இந்த எண்ணிக்கையும் இந்தப் போக்கும் மேலும் உயரும். ஆனால் இதையெல்லாம் ஒழுங்கமைத்து வலுவாகத் திரட்சியடைய வைக்கக் கூடிய அரசியல் ஒருங்கிணைப்போ கட்டமைப்பாக்க உணர்வோ இல்லாமல் சிதறுண்ட நிலையிலேயே அது காணப்படுகிறது. இதுதான் மிகப் பெரிய பலவீனம். அதாவது, மிகப் பெரிய சக்தியாகக் காணப்படும் புலம்பெயர் சமூகம், தன்னுடைய சக்தியைத் திரட்டிக் கொள்ள முடியாமல் பலவீனமான நிலையிலேயே வைத்துக் கொண்டிருக்கிறது. இது அதன் மீதான குற்றச்சாட்டல்ல. அதனுடைய மெய்நிலையைப் பற்றிய அவதானிப்பாகும். இதைச் சுட்டிக் காட்டுவதன் மூலமாக எதிர்காலத்தில் அதனைச் சீராக்கி வலுவாக்கம் செய்ய வேண்டும், அது முடியும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடே இது. இதற்கு இலங்கையிலோ அல்லது புலம்பெயர் சூழலிலோ ஆளுமையும் ஆற்றலும் நம்பிக்கையும் உள்ள தலைமை வேண்டும். அப்படியான தலைமை இல்லை என்பது மிகப் பெரிய குறைபாடே. இதனால்தான் இந்தப் பெரிய பலத்தை, அதன் பயனை பெறமுடியாமல் தமிழ்ச்சமூகம் உள்ளது. புலம்பெயர் மக்கள் பல்வேறு தளங்களில், பல்வேறு நோக்கு நிலையில் தாயகத்துக்கான உதவிகளைச் செய்கின்றனர். சிலர், தமிழர் தாயகம் என்ற அடிப்படையில் வடக்குக் கிழக்கில் மட்டும் தமது உதவித் திட்டங்களை மேற்கொள்கின்றனர். இவர்களில் பலர் தமிழீழக் கனவோடு செயற்பட்டவர்கள், அதற்குப் பங்களித்தவர்கள். இப்பொழுது அந்தக் கனவுக்காகத் தம்மைப் பலியிட்டோருக்கும் அந்தக் கனவினால் பாதிக்கப்பட்டோருக்கும் உதவுகின்றனர். கூடவே தமிழ்ப் பிரதேசங்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிக்க வேண்டும் என்றும் விரும்புகின்றனர். இன்னொரு சாரார், வடக்கிற்கு மட்டும் உதவிகளையும் நலத்திட்டங்களையும் செய்கிறார்கள். இதை நாம் பிரதேசவாதமாகவோ அப்படியான சிந்தனையின்பாற்பட்டதாகவோ கொள்ள வேண்டியதில்லை. ஏனென்றால் இவர்கள் தமக்குச் சாத்தியப்பட்ட எல்லைக்குள் தம்மால் முடிந்த உதவிப் பணிகளையும் நலத்திட்டங்களையும் மேற்கொள்ள விரும்புகின்றனர். இப்படித்தான் இன்னொரு தரப்பினர் கிழக்கிற்கென உதவுகின்றனர். வேறொரு தரப்பினர் மலையகம் உள்ளடங்கலாக வடக்குக் கிழக்கு முழுவதிலும் உதவிப் பணிகளைச் செய்கின்றனர். இன்னொரு தரப்பினர் போராட்டப்பங்களிப்பு என விடுதலைப் புலிகள் இயங்கிய போது அவர்களுக்கும் அவர்களுடைய கட்டமைப்புகளுக்கும் உதவினர். அவர்கள் இல்லாத சூழலில் போரினால் பாதிக்கப்பட்டோருக்கென உதவுகின்றனர். இதில் சிலர் தமக்குத் திருப்தியளிக்கக் கூடிய அரசியல் கட்சிகளுக்கும் உதவுகின்றனர். வேறு சிலர் தனிப்பட தமக்குக் கிடைக்கின்ற தொடர்புகள், அறிமுகங்களின் வழியாக உதவுகின்றனர். இப்படிப் பல வகைப்படுகிறது இந்த உதவித்திட்டங்கள். இதை விட ஊர் சார்ந்த உதவிகள், தாம் படித்த பாடசாலைகள், தமது விளையாட்டுக் கழகங்கள், தமக்கு இணக்கமான அமைப்புகள் மற்றும் மருத்துவ உதவிகள் என்ற வகையிலும் உதவிப் பணிகள் விரிவடைகின்றன. எப்படியோ இந்த உதவிகள் அனைத்தும் இங்கே தாய் மண்ணிற்கே – தாய்நாட்டில் வாழும் மக்களுக்கே – கிடைக்கின்றன. அப்படியென்றால் இந்த உதவிகளின் மூலமாக இந்த மக்களும் இந்த மண்ணும் வளம் பெற்றிருக்க வேண்டுமே! இந்த உதவிகள் பல வகைப்பட்டனவாக இருப்பதால் அந்தந்த அடிப்படையில் முன்னேற்றமோ மாற்றமோ ஏற்பட்டிருக்க வேண்டும் அல்லவா! உச்சபட்சமான மாற்றமோ வளர்ச்சியோ ஏற்படவில்லை என்றாலும் குறைந்த பட்சமாகவேனும் வளர்ச்சியும் மாற்றமும் தென்பட்டிருக்க வேண்டும் அல்லவா! அப்படி ஏதும் நிகழ்ந்துள்ளதா? அப்படி நிகழவில்லை என்றால் அதற்கு யார் பொறுப்பு? அல்லது அதற்குக் காரணம் என்ன? அந்தக் காரணத்தை கண்டறிவதற்கான முயற்சிகள் ஏதேனும் நடந்துள்ளதா? இப்பொழுது கூட இதை உணர்ந்து இதைச் சீர்செய்யக் கூடிய முயற்சிகள் ஏதும் நடக்கிறதா? அல்லது அப்படியான ஒரு முயற்சி தொடங்கப்பட வேண்டும் என்று சிந்திக்கப்படுகிறதா? நானறிந்த வகையில் அப்படி எதுவும் நடப்பதாகவோ நடக்கக் கூடியதாகவோ தெரியவில்லை. இது துயரமளிக்கக் கூடிய நிலையே! வளமும் வாய்ப்பும் உள்ள ஒரு பெரிய சமூகப் பங்களிப்பை ஒருங்கிணைக்க முடியாமல் அதைச் சிதற விடுவதென்பது பெரிய இழப்பு மட்டுமல்ல, பொறுப்பற்ற தனத்தின் வெளிப்பாடுமாகும். அதுவும் நீண்டகாலமாகவே இனவொடுக்குமுறைக்கும் அந்த ஒடுக்குமுறையினால் மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரத் தடை, போர் போன்றவற்றாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த வளத்தையும் வாய்ப்பையும் பெற்றுக் கொடுக்கத் தவறுவது மன்னிக்க முடியாத குற்றமாகும். தமிழ் அரசியற் கட்சிகள் பலவுண்டு. 2009 க்குப் பின்னர் மேலும் பல கட்சிகள் முளைத்துள்ளன. ஏற்கனவே விடுதலைப் போராட்ட அரசியல் வழிமுறைக்கூடாக வந்த கட்சிகளும் தலைவர்களும் உள்ளனர். ஐம்பது, அறுபது, எழுபது ஆண்டுப் பாரம்பரியத்தை உடைய கட்சிகளும் மூத்த தலைவர்களும் இருக்கின்றனர். இப்படியெல்லாம் (இவர்கள் எல்லாம்) இருந்தும் என்ன பயன்? இவர்களாலும் இந்தக் கட்சிகளாலும் ஒரு ஒழுங்கான கட்டமைப்பை உருவாக்க முடிந்ததா? போர் முடிந்த பிறகு இவர்களுக்குத்தானே மக்கள் வாக்களித்தார்கள்? தமது ஆதரவை வழங்கினார்கள்? எதற்காக? இவர்கள் மீதான நம்பிக்கையினால்! ஆனால் அந்த நம்பிக்கைக்கு ஏற்ற மாதிரிப் பொறுப்புடன் இவர்களும் இந்தக் கட்சிகளும் நடக்கவில்லை. 2009 இல் போரின் முடிவில் தமிழ்ச் சமூகம் நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்டதையும் விட மிக மோசமான நிர்க்கதி நிலையை இன்று அடைந்துள்ளது. இப்பொழுது பல துண்டுகளாக உடைந்து சிதறிப் பலவீனமடைந்துள்ளது. இந்த நிலைக்குக் கொண்டு வந்ததில் இந்தத் தலைவர்களுக்கும் இந்தக் கட்சிகளுக்கும் பொறுப்புண்டு. அதைப்போலப் புலம்பெயர் நாடுகளில் உள்ள தன்முனைப்பாளர்களுக்கும் இந்தத் தவறில் பொறுப்புண்டு. உண்மையில் புலம்பெயர் சமூகத்தின் பொருளாதார, அறிவியல், அரசியல் பலத்தை ஒழுங்கமைத்துக் கட்டமைத்திருக்க முடியும். அதைத் திரட்சியாக்கியிருக்கலாம். இதைக்குறித்து நிலாந்தன் போன்ற ஒரு சிலர் மட்டுமே பேசியுள்ளனர். அல்லது சுட்டிக் காட்டியுள்ளனர். ஏனைய அறிவாளர்கள் இதைக் கண்டும் காணாததைப்போலவே கடந்து செல்கின்றனர். பல்கலைக்கழகங்களும் அவற்றிலுள்ள துறைசார் அறிவாளர்களும் அவற்றின் மாணவர் அமைப்புகளும் இந்த விசயத்தில் அக்கறை கொள்ளவில்லை. விவசாயம், பொருளியல், கடற்றொழில், சமூகவியல், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் உள்ளோர் இதைக்குறித்துச் சிந்தித்திருக்கவும் செயற்பட்டிருக்கவும் வேண்டும். போர் முடிந்த கையோடு, தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலம் குறித்தும் முதலீடுகளைச் செய்வதற்கான அகப்புற நிலைகளைக் குறித்தும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு புலம்பெயர் தேசங்களிலிருந்து ஒரு அணி வந்து கலந்துரையாடலை மேற்கொண்டது. அது ஒரு நல்ல தொடக்கம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது அடுத்த கட்டத்துக்கு நகரவேயில்லை. இதில் அரச ஆதரவுச் சக்திகளும் அக்கறை காட்டவில்லை. அரச எதிர்ப்புச் சக்திகளும் அக்கறை கொள்ளவில்லை. ஆக மொத்தத்தில் அனைத்துத் தரப்பும் மக்களின் மேம்பாட்டைக் குறித்துச் சிந்திக்க மறுப்பதில் ஒரே விதமாகவே உள்ளன. (தொடரும்) https://arangamnews.com/?p=9893
  16. ‘வாராது வந்துற்ற மாமணிகளை தோற்றோம்’ July 20, 2023 (சுகு ஸ்ரீதரன் நேர்காணல்) —- கருணாகரன் —- தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் சுகு ஸ்ரீதரன், ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலப் போராளிகளில் ஒருவர். ஏறக்குறைய 45 ஆண்டு கால அரசியல் போராட்ட வரலாற்றைக் கொண்டவர். ஆயுதப் போராட்ட அரசியல், ஜனநாயக நீரோட்ட அரசியல் என இரண்டிலும் செழிப்பான அனுபவங்களைக் கொண்ட சுகு, பல தரப்பினருடைய மதிப்பையும் தன்னுடைய நற்குணத்தினாலும் சிந்தனைத் திறத்தினாலும் பெற்றவர். புதுடில்லி, தமிழ்நாடு, தென்னிலங்கை, மலையகம் என விரிந்த பரப்பில் அரசியல் உறவுகளைக் கொண்டிருக்கும் சுகுவுக்கு, தமிழ், முஸ்லிம், மலையக மக்களிடத்திலும் அந்தந்தச் சமூகத் தலைமைகளிடத்திலும் மதிப்புண்டு. எதையும் வித்தியாசமாகச் சந்திக்கும் இயல்பும், எந்தப் பிரச்சினையையும் அதன் வரலாற்றுச் சூழலிலும் சமூகச் சூழலிலும் சர்வதேசச் சூழலிலும் வைத்துப் பார்க்கும் தன்மையும் சுகுவின் அடையாளமாகும். இதற்குக் காரணம், அவரிடமுள்ள அரசியல், சமூகவியல், இலக்கியம், வரலாறு, பண்பாடு, பொருளாரம், மானுடவியல், சூழலியல் எனப் பன்முக வாசிப்பே. 45 ஆண்டு கால அரசியல் வாழ்வில், தலைமறைவு வாழ்க்கை, சிறை, அரசியல் வகுப்புகள், களப்பணி, மக்கள் போராட்டங்கள், தேர்தல் அரசியல் எனப் பலவற்றையும் சந்தித்த ஆளுமை. 1. இனப்பிரச்சினைத் தீர்வுக்கு ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த இளைஞர்களும் இயக்கங்களும் தோற்றுப் பின்வாங்கியதற்கான காரணம் என்ன? சகோதரப் படுகொலை. அதன் விளைவு, மக்கள் மத்தியில் ஏற்பட்ட அவ நம்பிக்கை. சர்வதேச பிராந்திய எதார்த்தங்களை புரிந்து கொள்ளாமை. சக சமூகங்கள் மீதான பகைமை, படுகொலைகள்…. சர்வதேச, தேசிய தலைவர்கள் மீதான தாக்குதல்கள். தோற்றுப் பின்வாங்கவில்லை. உள்ளிருந்தே பின்வாங்கச் செய்யப்பட்டது. 2. இவற்றை ஏன் முன்னுணரவில்லை? அப்போதே சர்வதேச அரசியல் பார்வையை இந்த இளைஞர்களும் இயக்கங்களும் முன்வைத்ததுண்டு. அப்படியிருந்த போதும் தவறுகளின் மேல் தவறுகள் ஏன் நிகழ்ந்தன? பொத்தம் பொதுவாக இவ்வாறு கூற முடியாது. எல்லா இயக்கங்களுக்கும் அவ்வாறான சர்வதேசப் பார்வை இருந்தது என்று கூற முடியாது. குறுங்குழுவாத சிந்தனையே தூக்கலாக இருந்தது. சில இயக்கங்களுக்கு அவ்வாறான பார்வை இருந்தாலும் செயற்படுவதற்கான சமூக இடைவெளி அழிக்கப்பட்டிருந்தது. 3. ஆயுதப்போராட்ட இயக்கங்களின் வழிமுறையை நிகராகரித்த அல்லது அதற்கு வெளியே நின்ற அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் அல்லது இன்றைய தமிழ்த்தேசிய அடையாளக் கட்சிகளின் நிழலில் பின்னாளில் இந்த இயக்கங்கள் சரணடைய வேண்டி வந்ததை எப்படிப் பார்க்கிறீர்கள்? அரசியல் அற்ற ஆயுதம். கண் மண் தெரியாமல் செய்த படுகொலைகள். ஜனநாயக மறுப்பு. பெருவாரியான இளைஞர் யுவதிகளின் அர்ப்பணிப்புகளை இழிவாக்கி, “ஆசாடபூதி பிரமுகர்கள் மேல்” என்ற நிலையை சமூகத்தில் உருவாக்கியது. ஊழலும் அயோக்கியத்தனமும் கபடதாரித்தனமான பாரம்பரிய ஆளும் வர்க்க அரசியல் படுகொலை, அரசியலுக்கு இது பரவாயில்லை என்றவாறு மக்களினதும் போராளிகளதும் அர்ப்பணங்கள் அவமாக்கப்பட்டது. 4. புலிகளின் காலத்திற்கும் (2009 க்கு முன்பும்) அதற்குப் பின்னுள்ள இன்றைய நிலைக்கும் உள்ள வேறுபாட்டை – அரசியல் நிலைமையை எப்படிப்பார்க்கிறீர்கள்? புலிகளின் காலத்தில் ஜனநாயக இடைவெளி இருக்கவில்லை. மாற்றுக் கருத்துக் கொண்டோரை உயிர் மீதமின்றி அழிக்கும் போக்கே மேலோங்கி துருத்திக் கொண்டிருந்தது. இன்று 100 கருத்துக்கள் முட்டி மோதுவதற்கான இடைவெளி இருக்கிறது. ஆனால், ஏற்கனவே 2009 க்கு முன்னர் இருந்த தலைமுறைகள் அழிந்து விட்டன. ஆளுமையுள்ள தலைமைத்துவங்கள் அழிக்கப்பட்டன. அரசியல் தலைமைத்துவம் மாத்திரம் அல்ல. அறிவு ஜீவிகள், தொழிற்சங்கவாதிகள், ஊடகவியலாளர்கள் பலர் கொல்லப்பட்டனர். கணிசமான பகுதியினர் புலம்பெயர்ந்து சென்று விட்டனர். ஒரு வறண்ட சமூகம் மிச்சமாகி விட்டிருக்கிறது. ஒரு கணம் சிந்தித்துப்பாருங்கள். இவர்கள் உயிருடன் இருந்தால் எத்தனை பெரிய சமூக வளம்! வாராது வந்துற்ற மாமணிகளை தோற்றோம். 5. இன்றைய நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்டுவது எப்படி? அதற்குச் சாத்தியமான வழிகள்? தமிழ் பேசும் மக்களின் நிலை தற்காப்பு நிலையே இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான மாகாண சபை முறைமை. அனைத்து சமூகங்களுக்காகவும் அதனை நாம் ஆதரித்துக் கொண்டு அதன் அதிகாரங்களை 1988இல் சொல்லப்பட்டவாறு உள்ளது உள்ளபடி முழுமையாக பகிர்ந்து கொள்ள முயல்வதே சிறப்பு. மற்ற நிலைப்பாடுகள் எவ்வாறு இருந்தாலும் இந்த ஒரு விடயத்திலாவது தமிழ் முஸ்லிம் சிங்கள மலையக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும். இல்லாவிட்டால் முடியாது. 6. இந்த வழிகளைக் குறித்து ஒருமித்த எண்ணம் தமிழ், சிங்கள, முஸ்லிம் கட்சிகளிடத்தில் இல்லையே! ஆரம்பத்திலேயே கூறியவாறு இதுதான் இங்கு பிரச்சனை. வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளிடம் எப்போதாவது இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக ஒருமித்த கருத்து நிலவியதா அல்லது புரிதல் இருந்ததா? எப்போதாவது விதிவிலக்கான சந்தர்ப்பங்களை தவிர. இதற்கு தமிழ் முஸ்லிம் மலையக சிங்கள ஜனநாயக சக்திகள் இடையே புரிதலை உண்டாக்குவது ஒரு சவால். ஆனால் அதனைச் செய்துதான் ஆகவேண்டும். 2022 இல் நடந்த அரகலய எழுச்சிச் சூழல் கூடவோ குறையவோ ஒரு இணைந்து செயல்படுவதற்கான வெளியை உருவாக்கி இருக்கிறது. இந்த எழுச்சி இனவாத சக்திகளுக்குத் தடுமாற்றங்களை உண்டாக்கியது. ஆனால் தற்போது மீண்டும் இன மதவாத சக்திகள் சமூகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் பதட்டங்களையும் பூசல்களையும் உருவாக்குகின்றன .இவற்றைத் தாண்டியாக வேண்டும். 7. இனப்பிரச்சினைக்கான தீர்விலும் இலங்கையின் அரசியல் பொருளாதார நிலைப்படுத்தலிலும் இந்தியாவின் அனுசரணை, வகிபாகம் குறித்துத் தொடர்ச்சியாகப் பேசப்படுகிறது. ஆனாலும் இந்தியா இன்னும் இனப்பிரச்சினைக்கான தீர்வில் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்திருப்பதாகத் தெரியவில்லையே! ஒரே ஒருவிடயம் தான் இருக்கிறது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட மாகாண சபை முறை. அதனை வலுப்படுத்தச் சொல்லி இலங்கை அரசுக்கும் தமிழ் மற்றும் இதர சமூகத் தலைவர்களுக்கும் இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. கரிசனைகள் முதலில் இலங்கையில் இருந்து வர வேண்டும். அனைத்து சமூக தலைமைகளிடமிருந்தும் வர வேண்டும். கூட குறைய இந்திய முறையை ஒத்த பிராந்திய மட்டத்தில் அதிகார கட்டமைப்பை இலங்கையில் உருவாக்குவதில் இந்தியா பங்களித்திருக்கிறது. பிரதானமாக காரியமாற்ற வேண்டியவர்கள் இங்கு உள்ளவர்கள். அனைத்து சமுகங்களின் தலைவர்களும். 8. உண்மையில் இந்தியா யாருக்கு ஆதரவாக உள்ளது? தமிழர்களுக்காகவா, சிங்களவர்களுக்காகவா அல்லது தமிழ், சிங்கள, முஸ்லிம், மலையக மக்கள் என்ற இலங்கை மக்களுக்காகவா? அப்படியென்றால் இன ஒடுக்குமுறையை இந்தியா எப்படிப் பார்க்கிறது? அனைத்து சமூகங்களுக்கும் இந்தியாவுடன் மொழி கலாச்சார பாரம்பரிய உறவுகள் உண்டு. 140 கோடி மக்களை கொண்ட ஒரு உபகண்டம் என்ற அளவில் மிக மிக அனைத்து இலங்கையர்களுடனும் உறவை பேணுவது பிரதான போக்காக இருக்கும். மற்றது அவர்களிடம் இந்தியாவின் பாதுகாப்பு, சமூக பொருளாதார உறவுகள் சார்ந்தும் கரிசனைகள் இருக்கும். உலகில் நாடுகளுக்கு இடையிலான உறவுகள் அவ்வாறுதான் அமைகின்றன. 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நாடு தொடர்பான கரிசனங்கள் தீவிரமானவை. இலங்கை இந்திய உபகண்டத்தின் பரஸ்பர நலன்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மக்களிடையிலான உறவுகள் பற்றிய கரிசனை வேண்டும் .பரந்த உலகில் வாழ்வதற்கு எம்மை தகவமைக்க வேண்டும். தீவுச் சிந்தனைகளுக்குள் மூழ்கி விட முடியாது. 9. இனப்பிரச்சினைத் தீர்வில் இலங்கை அரசும் சிங்கள அதிகாரத்தரப்புகளும் (கட்சிகள், ஊடகங்கள், புத்திஜீவிகள், மதபீடங்கள்) எவ்விதம் செயற்பட வேண்டும்? இதை எப்படிச் சாத்தியப்படுத்துவது? அதற்கான ஒரு பொதுவான இயல்பு, போக்கு எதார்த்தமானது அல்ல. இதில் அவரவரின் வர்க்க நலன்கள் இருக்கின்றன. எனினும் இந்த உலகில் இலங்கை என்ற நாடு கண்ணியமாகவும் சுயமரியாதையாகவும் தன்னை நிலை நிறுத்த வேண்டுமானால் பல இனமாகவும் மொழிகளின் நாடாகவும் மதச்சார்பற்ற நாடாகவும் இராணுவவாத மதவாத இனவாத முன்னுரிமைகள் களையப்பட்ட நாடாகவும் அமைய வேண்டும். 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரகலய எழுச்சியில் அத்தகைய சில கூறுகள் காணப்பட்டன. அது வளர்த்தெடுக்கப்பட வேண்டும். சமூக பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள வேண்டும். இதை விட வேறு மார்க்கம் கிடையாது. 10. நாடு பொருளாதார ரீதியில் பிற நாடுகளிடத்திலும் உலக நிதி நிறுவனங்களிலும் கையேந்திக் கொண்டிருக்கும் நிலையிலும் இனவாதச் சிந்தனை குறையவில்லையே! தொல்பொருட் திணைக்களத்தின் நடவடிக்கைகள் தொடக்கம் தமிழ்த் தரப்பினால் மேற்கொள்ளப்படும் அதிதீவிர நிலைப்பாடுகள் வரையில் ஏட்டிக்குப் போட்டியாக இதைக் காணமுடிகிறது. யுத்தமும் பொருளாதார நெருக்கடியும் தந்த படிப்பினைகள் என்ன? நம்மில் ஒற்றுமை இல்லையேல் அனைவருக்கும் தாழ்வு என்பதுதான் படிப்பினை. ஆனால் அந்தப் படிப்பினையை எடுத்துக் கொண்டு முன் செல்வதற்கான அறிகுறிகள் குறைவாகவே காணப்படுகின்றது. வாழ்வா சாவா என்ற பொருளாதாரச் சவாலை இலங்கை எதிர்நோக்கி நிற்கையில் இந்தத் தொல்பொருள் தேடுதல்கள் இனமதவாத பகைமைகளைத் தெரிந்தும் மீள முடியாதபடுகுழியில் வீழ்தலே போலத்தான். பரஸ்பரம் உடன்கட்டை ஏறல் போலத்தான். இனமத மோதல்கள் எம்மை அழிக்கும் அபாயகரமான போதை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த மதவாதிகளும் இனவாத அரசியல்வாதிகளும் நாட்டின் அனைத்து சமூகங்களையும் நரகப் படுகுழியில் தள்ளும் போதை வியாபாரிகள் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். 11. இனப்பிரச்சினைத் தீர்வுக்கு வடக்குக் கிழக்கு இணைப்பும் சுயாட்சிக்குரிய அடிப்படைகளைப் பற்றியும் தமிழ்த்தரப்பினால் வலியுறுத்தப்படுகிறது. இதில் முஸ்லிம்களின் நிலைப்பாட்டையும் கிழக்குத் தமிழர்களின் எண்ணங்களையும் எப்படிச் சரியாக இணைத்துக் கொள்ள வேண்டும்? இதற்கு யாரையும் வில்லங்கப் படுத்த முடியாது. அதிகமான உரையாடல் வேண்டும். தமிழ் தரப்பு யார் என்ற பிரச்சினையும் இருக்கிறது. நாங்கள்தான் தமிழ் தரப்பு என்று யாரும் உரிமை கொண்டாடினால் இன்றைய நிலையில் அது சரியாக இருக்காது. பரஸ்பரம் பரந்தஅளவில் தமிழ் முஸ்லிம் தரப்பினரிடமும் சிவில் சமூகம் உட்பட பரந்த உரையாடல் வேண்டும். அதேபோல் மலையக சிங்கள மக்களுடனும் உரையாட வேண்டும். பரஸ்பர அவநம்பிக்கைகள் குறைந்து போவதற்கு வழி காணப்பட வேண்டும். 12. இனப்பிரச்சினைத் தீர்வை முஸ்லிம்களும் இணைந்தே காணமுடியும். ஆனாலும் தமிழ் – முஸ்லிம் தரப்புகளிடையே (கட்சிகளுக்கிடையிலும் சரி, சமூகங்களுக்கிடையிலும்சரி) இன்னும் சரியான புரிந்துணர்வும் ஒருமித்த நிலைப்பாடும் எட்டப்படவில்லையே! இதற்கான காரணம் என்ன? இதை எப்படிச் சாத்தியப்படுத்துவது? அவர்கள் தமிழ் பேசுபவர்கள் ஆக இருந்தாலும் முஸ்லிம் மக்களின் தனித்துவங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும். அந்த மக்களின் பாரம்பரிய வாழ்வு, சமூக பொருளாதார நிலைமைகள், வடக்குக் கிழக்கில் அவர்களுடைய நியாயமான அச்சங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். 1990 இல் உடுத்த துணியுடன் வெளியேற்றப்பட்டது தொடர்பாக தமிழர் தரப்பில் ஆக்கபூர்வமான விமர்சனங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இது தமிழ் தேசிய அவமானம். அந்த மக்கள் உரிய முறையில் திரும்ப வரவேற்கப்படவும் இல்லை. தமிழ் பேசும் மக்களாக வாழ்ந்த காலம் சிதைந்து நீண்ட காலம் ஆகிவிட்டது. இரத்தம் தோய்ந்த சகோதர சமூக அனுபவங்கள் இருக்கின்றன. இதைக் கடப்பதற்கு பரஸ்பர புரிதலுக்கான கடுமையான முயற்சிகள் வேண்டும் . சமூகங்களுக்குள்ளே தோன்றிய மதவாத இனவாத பிரதேசவாத சக்திகள் சமூகத்தை துண்டு துண்டாக உடைத்துக் கொண்டிருக்கின்றன என்பது வேதனையான உண்மை. இவர்கள் இந்த மதம் என்ற பிரக்ஞையே இல்லாத இடங்களில் எல்லாம் அவை செயற்கையாக உருவாக்கப்படுகின்றன. 13. தமிழ்த் தேசியவாதம் உள்வாங்கும் தேசியவாதமாக (Inclusive nationalism) கட்டமைக்கப்படவில்லை. அதனால்தான் அதற்குள் இன, மத, சாதி, பால், பிரதேச வேறுபாடுகள் துருத்திக் கொண்டுள்ளன என்ற குற்றச்சாட்டுப்பற்றி? துரதிஷ்டவசமான இந்த உண்மையை இங்கு குறிப்பிட்டு தான் ஆக வேண்டும். யாழ் மைய தமிழ் தேசியம் சாதிய, பெண்ணடக்குமுறை போன்றனவெல்லாம் இவற்றின் மேல்தான் எழுந்தது. இதன் மேலாதிக்கம் இன்றளவிலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. சக சமூக விரோதங்களும் சக இயக்கவிரோதங்களும் அண்டை நாட்டு மீதான விரோதமும் இங்கிருந்துதான் மேற்கிளம்புகின்றன. புலம்பெயர்ந்து சென்று பல்வேறு சமூகங்கள் மத்தியில் வாழ்ந்தாலும் இது தகர வில்லை. சக மனிதர்களுடன் சேர்ந்து வாழ இதற்கு பயிற்சி அளிக்க வேண்டியிருக்கிறது. கிணற்றுத்தவளை மனோ நிலையில் இருந்து இது விடுபட வேண்டும். உபகண்ட அளவில் இலங்கையின் அனைத்து சமூகங்களும் இயங்குவதனால்தான் இதற்கு பரந்த இயல்பை கொண்டு வர முடியும். 14. தமிழ்த்தேசியவாதத்தின் ஜனநாயகக் குறைபாடுகளைப் பற்றி? அது ஒரு குறைபாடு என்று குறை மதிப்பீடு செய்து விட முடியாது. அது மிகவும் பாரதூரமானது. பால் சமத்துவம், சமூக நீதி, பிரதேசங்கள் இடையிலான சமத்துவம், இவற்றுக்கப்பால் சக அரசியல் சமூக இயக்கங்கள், சக சமூகங்கள் பற்றி சகிப்புத்தன்மை கொண்டதல்ல. யாழ்மைய மத்திய தரவர்க்க அரசியல் மேலாதிக்கம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். தமிழ் முஸ்லிம் மலையக மக்களிடையே சமத்துவம் சகோதரத்துவம் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். வரலாற்று பூர்வமாகவே இந்த மேலாதிக்கம் பற்றிய கசப்பான அனுபவங்களும் எச்சரிக்கை உணர்வும் சந்தேகங்களும் இருக்கின்றன. 15. தமிழர்கள் ஒரு தேசமாகத் திரள வேண்டும் என்பது இனப்பிரச்சினைத் தீர்வுக்குத் தரக்கூடிய சாதகங்கள் என்ன? பாதக நிலை என்ன? கடந்த காலம் போல் இப்போது சிந்திக்க முடியாது .புதிய எதார்த்தங்களை கரிசனைக்கு எடுக்க வேண்டும் .மொழி சார்ந்து மாத்திரம் அல்லாமல் பிரதேசம், பொருளாதார பண்பாட்டு அம்சங்கள் போன்றவற்றையும் கரிசனைக்கெடுக்க வேண்டும் .ஜனநாயக பூர்வமாகவே இந்த விடயம் அணுகப்பட வேண்டும். யாழ் மைய சிந்தனையில் இருந்து அகத்தியரின் கமண்டலத்துக்குள் காவிரியை அடக்கியது போல் இதை அடக்கிவிட முடியாது. எதார்த்தம் நம் முன் இருக்கிறது. அதே வேளை பேரினவாத ஒடுக்குமுறை தமிழ் முஸ்லிம் மலையக தேசிய சமூகங்களை ஒன்றிணைப்பதற்கான எதார்த்த அவசியத்தை உணர்த்தி நிற்கிறது. அது ஜனநாயக பூர்வமாகவே மேற்கொள்ளப்பட முடியும். கிழக்கு வடக்கு மாகாணங்களுக்கு இடையில் உள்ள பிரச்சனைகளும் முஸ்லிம் மக்கள் உடனான உறவுகளும் உரையாடல்கள், உடன்பாடுகளின் ஊடாகவே எட்டப்பட முடியும். 16. சிங்களத் தேசியவாதம், தமிழ்த்தேசியவாதம், முஸ்லிம் தேசியவாதம், மலையகத் தேசியவாதம் என இன்று இன ரீதியான தேசியவாத உணர்வு கூர்மைப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில் பகை மறப்பு, நல்லிணக்கம், அரசியல் தீர்வு, சமாதானம் போன்றவற்றை எட்டுவது எப்படி? இலங்கையின் இன மத மொழி பன்மைத்துவத்தை அந்த யதார்த்தத்தை மானசீகமாக ஏற்றுக் கொள்ளாமல் இது சாத்தியப்படாது. இதயங்கள் இங்கு இணைய வேண்டும். இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்திலேயே மதச்சார்பற்ற நாடாக பிரகடனம் செய்யப்பட்டது. அதே நேரத்தில் இந்தியாவின் பலமொழி, பல்கலாச்சார தன்மை கருத்தில் எடுக்கப்பட்டது. அதனால் தான் இன்றளவில் இந்தியா இந்தியாவாக இருக்கிறது. இலங்கை மத இனச் சார்பற்ற நாடாக மாறுவதற்கான நெடும் பயணம் மேற்கொள்ள வேண்டும். அதே வேளை சிங்கள தமிழ் முஸ்லிம் மலையக பறங்கி மலாய் மக்களின் பிரதேச ரீதியான ஏற்றதாழ்வுகளைக் கரிசனைக்கெடுத்த அதிகாரப் பகிர்ந்தளிப்பு, சமத்துவத்தை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் அவசியம். 17. பிரதான அரசியற் தலைமைகளும் கட்சிகளும் ஊடகங்களும் பகை மறப்பிற்கும் நல்லிணக்கத்துக்கும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கும் தயங்குவது ஏன்? அவர்கள் தமது வர்க்க நிலைகளில் இருந்தும் இன மத சாதி பெருமித உணர்வுகளிலிருந்தும் நிலப் பிரபுத்துவ மனப்பாங்குகளில் இருந்தும் சிறு முதலாளித்துவ உணர்வுகளில் இருந்தும் சிந்திக்கிறார்கள். அனைத்து மாந்தர்கள், அவர்களின் தனித்துவங்கள், அபிலாசைகள், இவற்றை ஒன்றிணைத்து முன் செல்லும் கனவுகள் அவர்களிடம் இல்லை. இருக்காது. எல்லோரும் ஒன்று என்று தேர்தல் காலங்களிலும் சில சிறப்பான நாட்களிலும் உதட்டால் கூறுவார்கள். ஆனால் மானசீகமாக இல்லை. தீர்க்கதரிசனமும் ஆளுமையும் துரதிருஷ்டியும் மானுட நேயமும் சமூகவாஞ்சையும் இதற்கு முன் நிபந்தனை. இலங்கை பாழ்பட்டு வறுமை மிஞ்சி போய்க் கிடப்பதற்கு காரணம், இந்த சிறுமதியே என்றால் அது மிகையல்ல. எமது அண்டை நாட்டில் காந்தி, நேரு, கான் அப்துல் கபார்கான், அம்பேத்கர், பெரியார், கஸ்தூரிபா, விஜயலட்சுமி, மணியம்மை போன்ற தலைவர்களும் ஆளுமைகளும் தாகூர், பாரதி, மைதிலி, சரண் குப்தா போன்ற கவிஞர்களும் இருந்தனர். துரதிஷ்டவசமாக எமக்கு இவை அரிதாகவே அமைந்தன. தெற்கிலும் வடக்கிலும் நிலவிய ஜனநாயக விரோத நிலமைகளும் இத்தகைய தலைமைத்துவங்கள் உருவாவதற்கான நிலைமைகளை இல்லாது ஒழித்தன. சிரச்சேதம் செய்தன. 18. போரும் பொருளாதார நெருக்கடியும் மக்களின் மனங்களிலும் அரசியல்வாதிகளின் மனதிலும் மாற்றங்களை உருவாக்கவில்லை, பிரச்சினையைத் தீர்க்கும் வழிமுறையைப் பற்றிச் சிந்திக்க வைக்கவில்லை என்றால், அடுத்த கட்டம் என்ன? வரலாறு வெற்றிடத்தை விட்டு வைப்பதில்லை . 2022ல் பிரமாண்டமான பொது ஜன எழுச்சி ஒன்று ஏற்படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. 1970 களின் முற்பகுதியில் தெற்கிலும் 1980 களிலிருந்து 2009 வரை வடக்கில் போராட்டம், யுத்தம் வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை . ஆளும் அரசியல் வர்க்கம் தானாகத்திருந்தும் என்று எதிர்பார்க்க முடியாது. சமூக அழுத்தத்தின் மீதுதான் மாற்றங்கள் நிகழ்கின்றன. வாழ்க்கை சகிக்க முடியாததாக மாறும்போது சமூகம் எழுச்சியுறும். அப்போது தூரதிருஸ்டியும் தீர்க்கதரிசனமும் உள்ள தலைமைத்துவம் உருவாக வேண்டும். அதற்கு அதனிடம் மானுட நேய கொள்கைகள் வேண்டும். இல்லாவிடில் அராஜகமும் பேரழிவும்தான் ஏடறிந்த வரலாறு பூராவும் உள்ளது. காட்டுமிராண்டித்தனத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் நாகரீகத்திற்கும் இடையிலான போராட்டத்தின் ஊடாகத்தான் மனித குலம் முன்னேறி வந்திருக்கிறது. 19. தமிழ்க்கட்சிகளிடையே ஒற்றுமையைப் பற்றித் தொடர்ந்து பேசப்படுகிறது. தமிழ்த்தேசியவாதக் கட்சிகளோடும் சரி, அதற்கு வெளியே நிற்கும் நீங்கள் (தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி) சமத்துவக் கட்சி, புதிய ஜனநாயக மாக்ஸிஸ லெனினிஸக் கட்சி, கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், தமிழர் மகா சபை உள்ளிட்ட கட்சிகள் போன்றவற்றுடன் ஏன் ஒரு உடன்பாட்டுக்கு – மாற்று அணியொன்றின் உருவாக்கத்துக்குக் கை கோர்க்க முடியாது? உடன்பாடு என்பது கொள்கை வழிபட்டது. தவிர, குறிப்பிட்ட சில பிரச்சினைகள் தொடர்பாக, சமூக பொருளாதார அரசியல் விவகாரங்கள் தொடர்பாக, ஐக்கியமாக செயல்பட வேண்டும். ஒன்றிணைதல் என்பதை விட பரந்த ஐக்கிய முன்னணியே இங்கு முதன்மையான விடயம். எல்லாரும் ஒன்று சேர்தல் என்பது எதார்த்தமானதல்ல. இலங்கையின் தெற்கில் உள்ள ஜனநாயக முற்போக்கு சக்திகள், மலையக முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சக்திகள், இவை எல்லாவற்றுடனும் ஐக்கியம் ஒருங்கிணைவு வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும். ஆனால் யாழ் மத்தியதரவர்க்க சிந்தனை ஆதிக்கம் நிறைந்த அரசியல் வானம் கிணற்றின் வாயளவு என்ற சிந்தனை கொண்டது. தமிழ்த் தேசிய புனிதர்கள் என்ற பாசாங்கும் இங்கிருந்துதான் நிகழ்கிறது. மற்றும் துரோகி தியாகி வகையறாக்கள். இது முதலில் தகர்க்கப்பட வேண்டும். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்ற மனநிலையுடன் அணுகுவதன் மூலம் மாத்திரமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். வடக்கு கிழக்கு பிரதேசத்தில் வாழும் நாம் அவிழ்த்து விடப்பட்ட நெல்லிக்காய் மூடை போல் வாழ்ந்து கொண்டு வீறாப்பு பேசுவோம். இந்த போலித்தனத்தை முதலில் கைவிட வேண்டும். 20. ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கென்றொரு வரலாற்றுப் பாத்திரமும் பங்களிப்பும் உண்டு. ஆயிரம் விமர்சனங்களுக்கு அப்பாலும் நெருக்கடிகளின் மத்தியில் ஈ.பி.ஆர்.எல்.எவ் எடுத்த மாகாணசபையே இன்று எஞ்சியிருக்கும் ஒன்று. ஆனால், இன்று அதை பிற சக்திகள் (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு) தங்கள் கையில் எடுத்துள்ளன. இந்த நிலையில் மாகாணசபையை மீள உங்கள் தரப்பு கையெடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டா? அது எம்மை மாத்திரம் சார்ந்ததல்ல. சமூக எதார்த்த நிலைமைகள் சார்ந்தது. அதனை உருவாக்க எமது தோழர்கள் அர்ப்பணித்து இருக்கிறார்கள். வரலாறு முழுவதும் அது எங்கள் கையில் இருக்கும் என்று இல்லை. அது ஒரு குறிப்பிட்ட வரலாற்று பாத்திரம். அவ்வளவுதான். ஆனால் அதனைத் தொடர்ந்து முன்னெடுக்க வலியுறுத்துவோம். நிறைவேறுவது எவரூடாக இருந்தாலும் அதில் எமக்கு பெருமிதமே! ஆத்ம திருப்தியே!! 21. பிளவுண்டிருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வை ஒருங்கிணைக்க முடியாதா? ஏனென்றால் தமிழரசுக் கட்சிக்கு நிகரான அல்லது அதையும் விட வலிமையான தரப்பாக ஈ.பி..ஆர்.எல்.எவ் உள்ளது. இன்று அரசியல் அரங்கில் உள்ள ஆளுமைகளில் ஈ.பி.ஆர்.எல்.எவ்வைச் சேர்ந்த நீங்கள், சுரேஸ் பிரேமச்சந்திரன், துரைரத்தினம், சந்திரகுமார், தவராஜா, சிவசக்தி ஆனந்தன், வரதராஜப்பெருமாள்,டக்ளஸ் தேவானந்தா, கோபாலகிருஸ்ணன் போன்றோர் முக்கியமானவர்களாக உள்ளீர்கள். இவர்களிடையே ஒரு அரசியல் இணக்கப்பாடு ஏற்பட்டால் எத்தகைய மாற்றங்கள் நிகழும்? நாம் ஒரு பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் என்பது சரி. ஆனால் இன்று எல்லோரும் ஒரு திசை என்றல்ல. விருப்பங்களுக்கும் எதார்த்தங்களுக்கும் இடையி்ல் உள்ள இடைவெளி குறைய வேண்டும். விமர்சனம், சுய விமர்சனம் என்ற அடிப்படையிலானஉரையாடல் அவசியம். அது இந்தப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்களுக்கு மாத்திரமல்ல, சமூகப்பிரக்ஞையுடன் தம்மை அர்ப்பணித்த அனைத்து தரப்பினரையும் கரிசனை கொள்ள வேண்டும். இல்லாவிடில் அது கோஷ்டி வாதம் ஆகிவிடும். நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகம், அனைத்து இலங்கையர்கள், உலகம் என்ற அடிக்கட்டுமானத்திலிருந்து சிந்தித்தால் பிரச்சனைகளுக்கு இலகுவாகவே தீர்வு காண முடியும். அவ்வாறு சிந்தித்தால் வலிமைமிக்க பரந்துபட்ட இயக்கம் ஒன்றை, முற்போக்கு ஜனநாயக இயக்கம் ஒன்றை கட்டி எழுப்ப முடியும். 22. போருக்குப் பிந்திய அரசியலை Post War Politics எப்படி முன்னெடுத்திருக்க வேண்டும்? இனியாவது அதை எப்படி முன்னெடுக்கலாம்? போருக்கு பிந்திய அரசியல் சாதாரணர்களின் கையிலிருந்து தமிழ் ஆளும் வர்க்கத்தின் கைகளுக்கு சென்று விட்டது. அதற்கு போர்க்காலத்திலேயே வழிவகை செய்யப்பட்டது. சாதாரணர் நிலையை முன்னிறுத்தி அர்ப்பணம், சமூக பிரக்ஞை, சகோதரத்துவ உணர்வு கொண்ட புதிய தலைமுறை செயற்பட வேண்டும். கடந்த காலத்தின் அனுபவங்கள் பாடமாக எடுத்துக் கொள்ளப்படவேண்டும். 23. ஆட்சி மாற்றத்தையும் (ஆட்சிப் பண்பில் மாற்றம் நிகழ்த்தப்பட வேண்டும்) புதிய ஆட்சி உருவாக்கத்தையும் அரகலயப் போராட்டம் உணர்த்தியது. மக்களின் மனங்களிலும் மக்களுடைய நிலவரங்களிலும் இதை உணரலாம். ஆனால், இதைச் சாத்தியப்படுத்துவதற்கு உள்நாட்டிலும் வெளியிலும் தடைகள் உள்ளனவே? அரகலய எழுச்சி இலங்கையர்களின் வாழ்வைச் செம்மைப்படுத்துவதற்கு நிகழ்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு. ஆளும் வர்க்கமும் ஏகாதிபத்திய சக்திகளும் எந்த சமூக எழுச்சியிலும் அதை நீர்த்துப்போக செய்வதிலும் முறியடிப்பதிலும் கரிசனையாக இருக்கவே செய்யும். சமூக மாற்றத்தை விரும்புபவர்கள் தட்டையாக சிந்திக்க முடியாது. சர்வதேச உள்ளூர் சமூக பொருளாதார சக்திகளை விளங்கிக் கொள்ள வேண்டும் .மூலோபாயம், தந்திரோபாயம் போன்ற விடயங்கள் இருக்கின்றன. குறிப்பிட்ட சூழ்நிலைகளில் நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்ற மதிப்பீடு வேண்டும். புவிசார் எதார்த்தங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இலங்கையின் மதவாத இனவாத மேலாதிக்க நலன்களில் இருந்து சிந்தித்து எந்த எழுச்சியும் வெற்றி பெற முடியாது. அக்டோபர் எழுச்சி மக்களுக்கு ரொட்டியையும் உலகத்தில் சமாதானத்தையும் தேசங்களுக்கு உரிமையையும் பிரகடனம் செய்துதான் வென்றது. 24. ரணில் விக்கிரமசிங்கவின் இன்றைய இலங்கை. உங்களுடைய பார்வை என்ன? அவர் ஜேஆரைப் போல ஒரு அவதந்திரி. சமூக பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய அவரது கரிசனைகள் குறைவானவை. ஆனால் அவர் நெருக்கடியான ஒரு அரசு இயந்திரத்தை கையேற்றிருக்கிறார். அதனை இயக்குவதற்கு அனைத்து சமூகங்களிலும் அனுசரணை விரும்பியோ விரும்பாமலோ தேவை. அதனால் தான் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவேன் என ஆர்ப்பாட்டமாக கூறினார் . ஆனால் அது இப்பொழுது நீர்த்துப் போய்விட்டது. தமிழ் மக்களின் பிரச்சினைகளை அரைவாசிக்கும் மேல் தீர்வு கண்டு விட்டதாக லண்டனில் பழமைவாத கட்சிகளின் மாநாட்டில் கூறியிருக்கிறார். சமூக பொருளாதார பிரச்சினைகளிலும் அவ்வாறு தான் கூறி வருகிறார். இது மிகைப்படுத்தலும் பொய்யும் கலந்தது. துரதிர்ஷ்டவசமாக இந்த நெருக்கடி நிலையை தாண்டுவதற்கான உருப்படியான மாற்று எதுவும் இலங்கையின் அரசியல் வானில் தற்போது காணப்படவில்லை. சமூக பொருளாதார பிரச்சினைகளில் கரிசனை உள்ளவர்கள் என்று கருதப்படுபவர்கள் கூட இலங்கையின் பன்முகப் பாங்கு, அதிகார பகிர்வு போன்ற விடயங்களில் அலட்சியமும் கள்ள மவுனமும் காக்கிறார்கள். பேரினவாதத்தை சவால் செய்ய முடியாதவர்களாக இவர்கள் இருக்கிறார்கள். 25. இன்றுள்ள பிராந்திய, சர்வதேச அரசியல் பொருளாதாரச் சூழலில் இலங்கை – இனப்பிரச்சினை – தமிழ், முஸ்லிம், மலைய மக்களின் உரிமைக்கான தீர்வு என்பதெல்லாம் என்ன வகையான எதிர்கொள்ளலைக் கொண்டுள்ளன? இன்று இலங்கையில் ஏற்பட்டிருக்கும் சமூக பொருளாதார நெருக்கடியில் தமிழ் மலையக முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து பொதுவானதும் தனித்துவமானதுமான கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும். அரசு இயந்திரம் சுதாகரித்துக் கொண்டபின் எதையும் பெற முடியாது. இறுமாப்புத்தான் மிகுதியாக இருக்கும். “எனவே காற்றுள்ள போதே தூற்றிக்கொள்”என்றவாறு இலங்கையின் தமிழ் முஸ்லிம் மலையக மக்கள் நடந்து கொள்ள வேண்டும். உலகளாவிய நெருக்கடி அல்லது உள்ளூர் அரசு இயந்திர நெருக்கடிகளில்தான் சமூக மாற்றங்கள், சீர்திருத்தங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இந்த தருணம் ஜனநாயக முற்போக்கு சிங்கள மக்களுடன் இணைந்து கொண்டு தமிழ் முஸ்லிம் சமூகங்கள் எதிர்கொள்ள வேண்டியது. https://arangamnews.com/?p=9851
  17. வடக்கில் மூடப்படும் பள்ளிக்கூடங்கள் பின்னணி என்ன? July 9, 2023 — கருணாகரன் — வடமாகாணத்தில் மாணவர் வரவின்மையினால் 194 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன என்று கடந்த வாரம் (24.06.2023) தெரிவித்திருக்கிறார் வடமாகாண ஆளுநர் பீ.எஸ். எம். சார்ள்ஸ். இதைப் போல கிழக்கு மாகாணத்திலும் பல பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இதற்குக் காரணம், பிறப்பு வீதம் குறைவாக இருப்பது ஒன்று. இன்னொரு காரணம், கிராமங்களை விட்டு மக்கள் நகரங்களை நோக்கிச் செல்வதாகும். இப்படி ஆட்கள் குறைந்த பிரதேசங்களாக யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதி, வடமராட்சி கிழக்கு முதல், கிளிநொச்சியில் பூநகரி, அக்கராயன், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் இருக்கும் தொலைதூரக் கிராமப்புறங்களைக் குறிப்பிடலாம். அடுத்தது, தொடர்ச்சியாக நடைபெறும் புலப்பெயர்வு. தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து ஆயிரக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே சந்ததிப் பெருக்கத்தை உருவாக்கக் கூடியவர்களில் ஒரு தொகையினர் புலம்பெயர்ந்து சென்றிருப்பதாகும். இவையெல்லாம் ஆட்தொகையைச் சடுதியாகக் குறைக்கின்றன. மூடப்பட்ட பாடசாலைகளை விட ஏனைய பாடசாலைகளிலும் ஆண்டு ஒன்றில் சேர்க்கப்படும் மாணவரின் தொகை குறைவாகவே உள்ளது. இது இன்னும் நெருக்கடியை எதிர்காலத்தில் கொடுக்கப்போகிறது. இதைத்தான் நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டும். இந்த மாதிரியான காரணங்களினால் பாடசாலைகள்தானே மூடப்படுகின்றன என்று இதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்த ஆட்தொகை வீழ்ச்சியானது எதிர்காலத்தில் வடமாகாணத்தின் அல்லது தமிழ்ப் பிரதேசங்களின் பாராளுமன்ற உறுப்பினர்களின், மாகாணசபை உறுப்பினர்களின் பிரதிநிதித்துவத்திலும் வெட்டு விழப்போகிறது. கூடவே நிதி ஒதுக்கீடு, பிரதேச அபிவிருத்திக்கான வளப்பகிர்வு போன்றவற்றையும் மட்டிறுத்தக் கூடிய அபாயமுண்டு. ஏற்கனவே யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் ஏழாகக் குறைந்துள்ளது. இது மேலும் குறைவடையலாம். இது எதிர்காலத்தில் மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்களின் தொகையிலும் வெட்டை உண்டாக்கும். 1980 களில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அன்றைய சனத்தொகையை இன்னும் யாழ்ப்பாணமும் எட்டவில்லை. வடமாகாணமும் எட்டவில்லை. அந்தச் சனங்களில் பாதிக்கும் மேலானவை வடக்கிற்கு வெளியே நாட்டின் பிற இடங்களிலும் புலம்பெயர் தேசங்களிலுமாகச் சிதறிப் பரந்துள்ளனர். இதற்கு யுத்தம் ஒரு காரணமாக இருந்தது. அதை விட சமூகப் பொருளாதாரக் காரணங்களும் வலுவாக உண்டு. இந்தச் சமூகப் பொருளாதாரக் காரணங்களை நாம் ஆழ்ந்து கவனிக்க வேண்டும். யுத்தம் முடிந்த பிறகும் புலப் பெயர்வு தொடர்கிறது என்றால், இடம்பெயர்வுக்கும் புலம்பெயர்வுக்கும் தனியே யுத்தம் மட்டும்தான் காரணம் என்றில்லை எனத் தெரிகிறது அல்லவா! புலப்பெயர்வுக்குக் காரணம், சாதிய வேறுபாடுகள், வேலை வாய்ப்பின்மை, உறுதியற்ற பொருளாதார நிலை, நாட்டின் ஸ்திரமற்ற அரசியற் சூழல் போன்றவை பிரதான காரணங்கள். இதில் பிரதேசங்களில் நிலவும் அபிவிருத்தியற்ற நிலையும் பொருளாதாரச் சிக்கல்களும் ஆட்தொகையைக் கணிசமாகக் குறைக்கின்றன. இது இரண்டு வகையான ஆட்தொகை வீழ்ச்சியை உண்டாக்குகிறது. ஒன்று, பிறப்பு வீதம் குறைவடைவதால் நிகழ்வது. இரண்டாவது, பிரதேசங்களை விட்டு மக்கள் வெளியேறுவதால் ஏற்படுவது. பிறப்பு வீதம் குறைவடைவதற்கும் சில காரணங்கள் உண்டு. யுத்தத்தில் (போராட்டத்தில்) ஈடுபட்ட பல ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளின் இழப்பு இப்பொழுது பிறப்புக்கான வீதத்தைக் குறைக்கக் காரணமாகியுள்ளது. அத்துடன் கணிசமான தொகையில் அன்றைய இளையோர் நாட்டை விட்டு வெளியேறியிருந்தமையும் இன்னொரு காரணமாகும். இரண்டாவது முன்னரைப் போலல்லாமல் இப்பொழுது ஒன்று இரண்டு பிள்ளைகளுடன் குடும்பங்களைக் கட்டுப்படுத்துகின்ற போக்கு வலுப்பெற்றுள்ளது. மிஞ்சினால் மூன்று பிள்ளைகள். முன்னர் அப்படியல்ல, குறைந்தது, ஐந்து ஆறு பிள்ளைகளாவது ஒரு வீட்டில் (குடும்பத்தில்) இருக்கும். இவ்வாறான காரணங்கள் பாடசாலைகள், மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை மட்டும் குறைப்பதல்ல. வடக்கின் சமூக பொருளாதார பிரதேச அபிவிருத்தியிலும் தாக்கத்தை உண்டாக்கப்போகிறது. அடையாளப் பிரச்சினைகளையும் உருவாக்கக் கூடிய சூழல் உண்டு. இதனால்தான் அரசியல் முன்னெடுப்பில் விடுதலையுடன் கூடிய அபிவிருத்தியும் அபிவிருத்தியுடன் கூடிய விடுதலையும் என்ற கோரிக்கை தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டது. விடுதலைப்புலிகள் கூட ஓரளவுக்கு இந்தக் கண்ணோட்டத்திலும் இந்த நிலைப்பாட்டிலும் இருந்தனர். அவர்கள் பொருளாதார ரீதியாக தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை வைத்திருக்க முயன்றதை இங்கே அறிந்தவர்கள் நினைவிற் கொள்ள முடியும். ஒன்றின்றி, ஒன்றில்லை. அதாவது, அபிவிருத்தியில்லாத விடுதலை என்பது அடிமைத்தனத்தையே உருவாக்கும். அது பிறரில் தங்கியிருக்கும் நிலையைக் கொண்டு வரும் என்ற தெளிவுடன் இருந்தனர். இதற்காக அவர்கள் பல்வேறு வகையான கட்டமைப்புகளை உருவாக்கியிருந்தனர். துறைசார் நிபுணர்களையும் நிபுணத்துவ அறிவையும் நாடினர். இதற்கு களப்பணி அவசியமாகும். புலிகளிடம் அந்தக் களப்பணி தாராளமாக இருந்தது. புலிகளுக்கு முந்திய சூழலில் பல இயக்கங்கள் இயங்கிய 1980 களின் நடுப்பகுதியில் கூட விடுதலைக்கான போராட்டம் என்பது, பொருளாதாரப் பாதுகாப்பையும் அதற்கான ஏற்பாடுகளையும் கொண்டதாகவே இருந்தது. இயக்கங்கள் பல இடங்களிலும் பண்ணைகளையும் தொழில் மையங்களையும் உருவாக்கியிருந்ததுடன், பொருளாதாரச் சிந்தனையை முக்கியப்படுத்திச் செயற்பட்டதையும் நினைவிற் கொள்ள வேண்டும். ஆனால், மிதவாத அரசியல் இதற்கு மாறாகவே இயங்கியது. இயங்கிக் கொண்டிருக்கிறது. அது வெறுமனே வாய்ப்பேச்சு, ஊடக அறிக்கை, அரசியற் கோரிக்கை என்ற அளவில் எந்தப் புதுமையும் வினைத்திறனும் இல்லாமல் காய்ந்து சுருங்கிக் கிடக்கிறது. “அபிவிருத்தியைப் பற்றிப் பேசினால் அது, அரசுடன் ஒத்தோடுவது, இனவிடுதலைக்கு எதிரானது” என்ற கருத்தை உற்பத்தி செய்து தமிழ் அரசியல், ஊடகப் பரப்பில் வலுப்பெற வைத்துள்ளது. களப்பணியை முற்றாகவே புறக்கணித்துவிட்டது. வெறுமனே அரசியல் சுலோகங்களை முன்னிறுத்துவதன் விளைவாக உருவாகிய நிலை இது. அந்த அரசியற் சுலோகங்களில் அரச எதிர்ப்புணர்வு மட்டும் வலுவூட்டப்பட்டது. இறுதியில் அரச எதிர்பு அல்லது எதிர்ப்பு அரசியல் மட்டுமே விடுதலை அரசியல் என்று கட்டமைக்கப்பட்டது. இதற்கு இனவாத உணர்வு நன்றாகத் தீனி போடுகிறது. அல்லது இனவாத உணர்வை நன்றாகப் பயன்படுத்திக் கொள்கிறது மிதவாத அரசியல். ஆனால் விடுதலைக்கான அரசியல் என்பது இதற்கு அப்பாலானது. அது சமூக பொருளாதார விருத்தியையும் உள்ளடக்கியது. மட்டுமல்ல, தேசியம் என்ற கருதுகோள் ஒரு கற்பிதமாக இருப்பினும் அதற்குக் கூறப்படும் வரன்முறையான விளக்கத்தின் அடிப்படையில், மொழி, நிலம், பண்பாடு போன்றவை அதற்கு முக்கியமானவையாகும். இவற்றின் செழுமையும் வளர்ச்சியும் வரலாற்றுத் தொடர்ச்சியும் சரியாகப் பேணப்பட்டால்தான் குறித்த தேசியம் வலுவானதாக இருக்கும். தமிழ்த்தேசியம் என்ற கருதுகோளை முன்னிறுத்துவோரில் பலரும் அதனுடைய நிலத்தைக் குறித்தும் மொழி மற்றும் பண்பாட்டைக் குறித்தும் பேசும் அளவுக்கு, அந்த மக்களுடைய பொருளாதாரப் பாதுகாப்பு, பொருளாதார வலுபற்றி ஆழமாகச் சிந்திப்பது குறைவு. ஆனால், உண்மையில் இவை மிகமிக அவசியமானவையாகும். அதிலும் பொருளாதார அடிப்படை தளர்ந்து, பிரதேசங்களின் அபிவிருத்தி இல்லாதிருக்குமானால் மக்கள் அந்தப் பிரதேசங்களை விட்டு தாமாகவே வெளியேறுவர். மக்கள் வெளியேறினால் அனைத்தும் பாதிக்கப்படும். அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் தங்களுடைய பிரதேசங்களில் வாழ வேண்டுமென்றால் அவர்களுக்கு நல்ல பாடசாலைகள் வேண்டும். நல்ல வீதிகள் தேவை. நல்ல மருத்துவமனைகளும் மருத்துவச் சேவைகளும் அவசியம். தொழில்வாய்ப்புகள் சரியாக இருக்க வேண்டும். பொருளாதார விருத்திக்கான ஏற்பாடுகள் சீராக அமைய வேண்டும். போக்குவரத்தும் சமூகப் பாதுகாப்பும் அவசியம். இவையெல்லாம் இல்லையென்றால் என்னதான் பற்றும் பிடிப்புமிருந்தாலும் சொந்த வீட்டையும் பிறந்த மண்ணையும் விட்டு விட்டே பெயர்ந்து போய் விடுவார்கள். இதைத் தமிழ் மிதவாதத் தலைமைகளால் புரிந்து கொள்ள முடியாது. அவர்களுடைய வர்க்க நிலை அப்படியானது. காரணம், தமிழ் மிதவாத அரசியல் தலைமைகள் ஒருபோதும் அந்த மக்களோடு மக்களாக தங்கள் பிரதேசங்களில் வாழ்ந்ததே இல்லை. அவர்களுடைய வாழ்க்கை முறையும் அரசியல் உறவும் வேறானது. அது மக்களுக்கு வெளியே அந்நியமானது. போராளிகள் அப்படியல்ல. அவர்கள் மக்களுடன் மக்களாக மக்களின் பிரதேசங்களில் வாழ்ந்தவர்கள். போராட்ட அரசியல் பாரம்பரியத்தில் வந்தவர்கள் இன்னும் அதனைப் பேணுகிறார்கள். அவர்களிடம் சில குறைபாடுகளிருந்தாலும் மக்களுக்கான விடுதலை, பிரதேச அபிவிருத்தி, சமூகப்பொருளாதாரக் கட்டமைப்பு, சமூக நீதி போன்றவற்றில் கூடிய கரிசனை உண்டு. இந்தத் துல்லியமான வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மிதவாதத் தலைமைகளிடம் உள்ள வர்க்க வேறுபாட்டினால்தான் மக்களுக்கு அபிவிருத்தி வேண்டாம் என்ற துணிபு அவர்களுக்கு வந்தது. அதாவது எந்த நிலையிலும் தாம் பாதிக்கப்பட மாட்டோம் என்ற துணிபு. ஒரு சிறிய உதாரணம், 1958, 1977, 1981, 1983 போன்ற இன வன்முறைகளில் எல்லாம் எந்த ஒரு தமிழ்த் தலைவரும் பாதிக்கப்படவில்லை. எந்தத் தமிழ் அரசியல்வாதிக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. எஸ்.ஜே.வி. செல்வநாயம், திருச்செல்வம், நாகநாதன், சுந்தரலிங்கம், ஜீ.ஜீ. பொன்னம்பலம் போன்றவர்களுடைய வீடுகளும் சொத்துகளும் கொழும்பிலும் தென்பகுதியிலும் இருந்தன. அவற்றிற்கு ஒரு சிறிய சேதமும் ஏற்படவில்லை.அவர்கள் அகதியாகவும் இல்லை. ஏனென்றால் அவர்களுடைய தரிப்பும் வாழ்க்கைப் புலமும் கொழும்பை மையப்படுத்தியது. அல்லது நகரங்களை. வர்க்க உறவை அடிப்படையாகக் கொண்டது. மக்களின் நிலையே வேறு. அவர்கள்தான் எப்போதும் பாதிக்கப்படுவோராக உள்ளனர்.இனவன்முறை நடந்தால் அதிலும் அவர்களே பாதிக்கப்படுகிறார்கள். யுத்தம் நடந்தால் அதிலும் அவர்களே பாதிக்கப்படுகிறார்கள். இனவாத அரசியலும் அவர்களே பாதிக்கப்படுகிறார்கள். இந்தப் பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கு அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி பாதுகாப்புத் தேடியும் பொருளாதார விருத்தியைத் தேடியும் இடம்பெயர்வது, புலம்பெயர்வது என்பதுதான். இது நிதர்சனமான உண்மை. மட்டுமல்ல, உயிரியல் உண்மையும் கூட. உணவும் நீரும் சரியாக இல்லையென்றால் அவற்றைத் தேடி விலங்குகளும் பறவைகளும் கூட இடம்பெயரும் என்பது உயிரியல் விதியல்லவா! நமது சூழலில் மொழிப் பேணுகையைப் பற்றியும் மொழி வளர்ச்சியைப் பற்றியும் கதைக்கும் அளவுக்கு அதனை உரிய முறையில் மேம்படுத்தும் வேலைத்திட்டங்களில் ஈடுபடுவதில்லை. அப்படித்தான் பண்பாட்டு நடவடிக்கைகளும். மேற்கொள்ளப்படும் பண்பாட்டுப் பெருவிழாக்களில் பலவும் கோமாளித்தனமானவையும் பெறுமானம் குறைந்தவையுமாகும். அறிவார்ந்த தளத்தில் மேற்கொள்ளப்படாத பண்பாட்டு நடவடிக்கைகள் எவையும் வளர்ச்சிக்குரியன அல்ல. இதைக்குறித்து அறிவார்ந்த தளத்தில் சிந்திப்போர் வலியுறுத்தும் கருத்துகளை முன்வைத்தாலும் அதிகாரத் தரப்பினரும் அரசியல் தலைமைத்துவத்தினரும் அதைக் கவனத்திற் கொள்வதில்லை. எனவேதான் இவை நெருக்கடி நிலையை எட்டியுள்ளன. இப்படித்தான் நிலம் தொடர்பான நிலைப்பாடும் உள்ளது. வடக்குக் கிழக்கு இணைப்பு, தமிழரின் தாயகபூமி என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் அந்த நிலத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் மிகச் சிக்கலானவையாகவே உள்ளன. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலமாக தமிழர்களின் பாரம்பரிய நிலப்பிரதேசம் அபகரிக்கப்படுகிறது என்பது உண்மை. ஆனால், இவ்வாறு வலியுறுத்துகின்றவர்கள், அந்தப் பிரதேசங்களை எப்படிப் பாதுகாக்கலாம். தமிழர் நிலங்களில் மக்கள் தொகையை எப்படி வலுப்படுத்தலாம், அதிகரிக்கலாம் என்று சிந்திப்பதில்லை. அல்லது அதற்கான காரணங்களும் வழிமுறைகளும் தெரிந்தாலும் அவற்றைப் பேசுவதோ முன்னெடுப்பதோ இல்லை. இதற்கு முக்கியமான காரணம், களப்பணியைச் செய்யத் தவறுவதும் அந்தக் களப்பணியில் முக்கியமாக இருக்கும் அபிவிருத்தியை மேற்கொள்ளாமல் விடுவதுமாகும். இதனால்தான், அபிவிருத்தி அரசியலை அரசாங்க சார்பு அரசியலாகச் சித்தரித்து அதை ஒதுக்கும் நிலை ஏற்பட்டது. இது சமூகத்தை முடக்கும் நிலைக்குக் கொண்டு வரும் என்று பலரும் கருதியிருக்கவில்லை. இதனால் நீண்டகாலமாக தமிழ் அரசியற் பரப்பிலும் ஊடகங்களிலும் அபிவிருத்தி அரசியல் என்பது அரசாங்க சார்பு அரசியல், ஒத்தோடும் அரசியல், துரோக அரசியல் என இந்தக் கருத்துச் செல்வாக்குப் பெற்றிருந்ததால் மக்களிலும் பெரும்பாலானோர் இதன்வழியே பயணித்தனர். ஏறக்குறைய “எதிர்ப்பு அரசியல்” என்ற வழியில். இதனால் தமிழ்ப் பிரதேசங்களின் முன்னேற்றமும் அபிவிருத்தியும் தடைப்பட்டது. இந்தப் பிரதேசங்கள் பின்தங்கிய நிலையில் காணப்பட்டன. இதைக் கிழக்கில் தெளிவாகக் காணமுடியும். அங்கே தமிழ்ப் பிரதேசங்களையும் விட முஸ்லிம் பிரதேசங்களும் சிங்களப் பிரதேசங்களும் முன்னேற்றமாக உண்டு. வடக்கில் இந்த ஒப்பீட்டுக்கு வாய்ப்பில்லை என்பதால் அந்த வித்தியாசத்தை உணர முடிவதில்லை. இதைக் கடந்து அபிவிருத்தியைப் பற்றிப் பேசியவர்களும் அந்த அரசியலை முன்னெடுத்தவர்களும் தவறானோராகச் சித்தரிக்கப்பட்டனர். அபிவிருத்தியைப் பற்றிப் பேசியவர்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று இனவிடுதலையும் அபிவிருத்தியும் இரு கண்களைப் போன்றவை. ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. இரண்டும் சமாந்தரமானவை. ஒன்றை விட்டு ஒன்றைப் பிரித்துப் பார்க்க முடியாது என்ற நோக்குடையவர்கள். இரண்டாவது, அரசாங்கத்துடன் இணைந்து நிற்பதன் மூலமாகவே அபிவிருத்தியைச் செய்ய முடியும். அல்லது அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதன் வழியாக அபிவிருத்தியைச் செய்ய முடியும் என்று கருதியவர்கள். இவர்கள் இணக்க அரசியலை முன்வைத்தனர். இலங்கையில் இணக்க அரசியல் என்பது அரசாங்கத்துக்குக் கட்டுப்பட்ட அரசியலாகவே இருக்கிறது. அதன் பெறுமானத்தைப் புரிந்து கொண்டு அதை மேம்படுத்தும் போக்கை அரசாங்கமும் சிங்களத் தரப்பும் மேற்கொள்ளவில்லை. இதனால் அபிவிருத்தி அரசியலையும் இணக்க அரசியலாகவும் ஒத்தோடும் அரசியலாகவும் பார்க்கின்ற போக்கு வலுப்பெற்றது. இதை இணக்க அரசியலை முன்னெடுப்போர் கவனத்திற் கொள்வது அவசியம். வழமையான வாய்ப்பாட்டை அவர்கள் தூக்கி எறிந்து விட்டு புதிய – மாற்று அரசியலைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். இல்லையென்றால் அரசாங்கத்தின் பயன்பாட்டு அரசியலுக்குப் பலியாக வேண்டியிருக்கும். இதேவேளை எதிர்ப்பு அரசியலும் சவால்களைச் சந்திக்க வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளது. பழைய நிலை இன்றில்லை. நிலைமை அவ்வாறில்லை என்பதே இதற்குக் காரணம். மக்களுக்கு இன்னு வாழும் வழிகள் தேவை. வேலை வாய்ப்பு, பிரதேச அபிவிருத்தி போன்றவை அவசியமாகி விட்டன. எதன் பொருட்டும் அவர்கள் இதை விட்டு விடுவதற்குத் தயாரில்லை. எனவே இந்த யதார்த்தம் எதிர்ப்பு அரசியலில் (தமிழ்த்தேசியவாத அரசியலில்) உடைப்பை உண்டாக்கியுள்ளது. இதனால் இப்பொழுது எதிர்ப்பு அரசியலோடு அபிருத்தியும் பேசப்படுகிறது. விடுதலை அரசியலும் பேசப்படுகிறது. இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவை என்ற புரிதல் ஏற்பட்டுத்தான் இப்படிப் பேசுகிறார்கள் என்றில்லை. தவிர்க்க முடியாத நிர்ப்பந்தத்தினால், வாக்காளர்களைச் சமாளித்துக் கொள்ளும் உத்தியாகவே இதைப் பேசுகிறார்கள். உண்மையான புரிதல் ஏற்பட்டு இந்தச் சமாந்தர அரசியலை இவர்கள் முன்னெடுப்பதாக இருந்தால் அதற்கான பொறிமுறையையும் கட்டமைப்பையும் உருவாக்கியிருப்பார்கள். அல்லது அதை நோக்கிச் செயற்படத் தொடங்கியிருப்பார்கள். ஆகவேதான் இதை முன்னேற்றகரமானதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால், மெய்யாகவே அப்படியான புரிதலுடன் இவர்கள் செயற்படுகின்றார்களா என்று கேட்குமளவுக்கு இதைப்பற்றிய குழப்பகரமான பேச்சுகளும் தடுமாற்றங்களும் நிலவுகின்றன. இது எப்போது தெளிவடையும்? https://arangamnews.com/?p=9823
  18. தமிழ் கட்சிகளுக்கு அரசியல் நீரிழிவு! வவுனியா கரும்பும் கசக்கிறது! July 5, 2023 – கருணகரன் – “கரும்பு இனிக்குமா? கசக்குமா?” என்ற விவாதம் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் சூடுபிடித்துள்ளது. அரசியல், ஊடகப் பரப்புடன் தொடர்ச்சியான அவதானிப்புக் குறைந்தவர்கள், “அதென்ன கரும்புக் கதை?” என்று ஆச்சரியமாகக் கேட்கக் கூடும். அந்தக் கதை இதுதான். வடக்கில் – வவுனியா மாவட்டத்தில் – கரும்பு ஆலையை நிறுவுவதற்கு அரசாங்கத்திடம் அனுமதியைக் கேட்டிருக்கிறது வெளிநாட்டு நிறுவனமொன்று. இது நடந்தது 2018 இல். அது நல்லாட்சி அரசாங்கக் காலம். 2018 ஜூலையில் தாய்லாந்துப் பிரதமர் பிரயுத் சான்ஓசா, அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வந்திருந்தார். அந்த வருகையின்போது பல விடயங்கள் பேசப்பட்டன. சில உடன்படிக்கைகள் செய்யப்பட்டன. அப்படிப் பேசப்பட்டவற்றில் ஒன்றுதான் இந்தக் கரும்பு ஆலை விடயமும். சுமார் 500 மில்லியன் டொலரில் மிகப் பெரிய கரும்பு ஆலையை நிறுவுதற்கென தாய்லாந்து நிறுவனத்தின் பேரில் தாய்லாந்துப் பிரதமர் கேட்ட திட்டத்துக்கு, மைத்திரிபால சிறிசேனா, அன்றைய பிரதமர் ரணில் விக்கிரசிங்க, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இரா. சம்மந்தன் என அனைவரும் சம்மதம் தெரிவித்தனர். எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் சம்மந்தனைச் சந்தித்த பிரயுத் சான்ஓசாவிடம் வடக்கில் முதலீடு செய்வதைப்போல கிழக்கிலும் தாய்லாந்து முதலீடுகளைச்செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தார் சம்மந்தன். பின்னர் இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்புக் கூட நடந்தது. அதிலும் இந்த விடயத்தைச் சம்மந்தன் பேசினார். இதற்குப் பின்னர், இந்தத் திட்டம் தொடர்பாக வவுனியா மாவட்டச் செயலகத்தில் நடந்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்பொழுது இந்தத் திட்டத்துக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவளித்தனர். அன்று அரசாங்கத்துக்கு ஆதரவாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் செயற்பட்டபடியால் இது விவாதப் பொருளாகவில்லை. அதற்குப் பிறகு அன்றைய அமைச்சரவையில் இதற்கான பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் அடுத்த கட்டமாக திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைகளை ஆரம்பிப்பதற்கு முன்பாக ஆட்சிக் குழப்பம் ஏற்பட்டது. ரணில் விக்கிரமசிங்கவை நிராகரித்து விட்டு மகிந்த ராஜபக்ஸவை பிரதமராக்கினார், மைத்திரிபால சிறிசேன. அதனால் எல்லாமே தடைப்பட்டன. அதற்குப் பிறகு உருவான அமைச்சரவையில் மீண்டும் இந்தத்திட்டத்துக்கான அமைச்சரவை அங்கீகாரம் சில திருத்தங்களுடன் மேற்கொள்ளப்பட்டது. இருந்தாலும் அதுவும் நடைமுறைப்படுத்த முடியாமல் தடைப்பட்டது. காரணம், அன்று உலகம் முழுவதையும் ஆட்கொண்டிருந்த கொவிட் 19 இன் தாக்கம். அது நீங்க, இலங்கையில் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கோத்தபாய ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்தார். அவர் இந்தத் திட்டத்துக்கான அனுமதிக்கு மீண்டும் சில மாற்றங்களைச் செய்து அமைச்சரவை அங்கீகாரத்துக்குச் சமர்ப்பித்தார். அதற்கும் அங்கீகாரம் கிடைத்தது. அதை நடைமுறைப்படுத்துவதற்கிடையில் கோத்தபாய ஆட்சியிலிருந்து விரட்டப்பட்டார். இப்படி இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் கழிந்து விட்டன. இப்பொழுது ரணில் விக்கிரமசிங்க அதிகாரத்துக்கு வந்த பின், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குப் பரிகாரம் காணும் வகையில் என்னென்ன திட்டங்கள் கிடப்பில் உள்ளன? என்னென்ன திட்டங்கள் தேக்கத்தில் உள்ளன. என்று ஆராய்திருக்கிறார். அப்படியான சூழலில் அடையாளம் கண்டு, மீண்டும் மேசைக்கு வந்ததே இந்தத் திட்டம். இதனை ஆராய்ந்த ஜனாதிபதி, பூர்வாங்க வேலைகள் எல்லாமே முடிந்த நிலையில் இருந்த இந்தத் திட்டத்தை சில மெருகுபடுத்தலுடன் மீண்டும் அமைச்சரவைக்குச் சமர்ப்பித்தார். அப்பொழுதுதான் இது விவகாரமாக மாறியது. விவகாரமாகிய கதை முன்னர் சம்மதித்த தமிழ்த் தரப்புகள் இப்பொழுது இரண்டு, மூன்றாக உடைந்து விட்டன. முன்னரைப்போல ஆட்சியிலும் தமிழ்த்தரப்புகள் பங்கேற்கவில்லை. தவிர, இந்தத் திட்டத்துக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் ரெலோ மட்டும்தான் நேரடியாக ஆதரவைத் தெரிவித்துள்ளது. புளொட் வழமையைப் போல நிலைமையைப் பார்த்து முடிவெடுப்போம் என்று மதிலின் மேலே குந்தியிருக்கிறது. ஈ.பி.ஆர்.எல்.எவ் இன்னும் வாயைத் திறக்கவே இல்லை. புதிய கூட்டமைப்பில் பங்காளிகள் அல்லவா! பதிலாக தமிழரசுக் கட்சி பகிரங்கமாகவே தனது எதிர்ப்பை வெளியிட்டிருக்கிறது. இதற்குக் காரணம், இந்த அணிக்கு தமிழரசுக் கட்சி எதிராக நிற்பதாகும். “எந்த வகையிலும் இந்தத் திட்டத்தை அனுமதிக்க முடியாது. அப்படி அனுமதித்தால் அது சிங்களக் குடியேற்றத்தை வவுனியா வடக்கில் கொண்டு வந்து சேர்த்து விடும். கரும்புச்செய்கைக்கான நீர் விநியோகம் என்ற பேரில் மகாவலிகங்கையை நெடுங்கேணிக்குக்கொண்டு வருவார்கள். நீரோடு சேர்ந்து சிங்கள பௌத்தக் குடியேற்றம் என்ற நெருப்பும் வரும்” என்று சொல்கிறார் சுமந்திரன். “சுமந்திரன் இப்படிக் காட்டமாகச் சொல்வதற்குக் காரணம், உண்மையில் சிங்களக் குடியேற்றம் வந்து விடும் என்பதோ, மகாவலிகங்கை நெடுங்கேணிகுள் நுழைந்து விடும் என்பதோ அல்ல. ரெலோ இந்தத் திட்டத்தில் முன்னிலைப் பாத்திரம் ஏற்றிருப்பதேயாகும். மட்டுமல்ல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்டமைப்பைப் பலவீனப்படுத்தி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதில் ரெலோ காட்டிய அக்கறையும் அதைச் செயற்படுத்தி முடித்ததுமாகும். அத்துடன் இந்தத் திட்டத்தில் முக்கிய பாத்திரமேற்றிருக்கும் ரெலோவின் இன்றைய ஆலோசகர் சுரேன் குருசாமி இதில் பிரதான செல்வாக்கைச் செலுத்துகிறார். இவரே கூட்டமைப்பிலிருந்து ஏனைய மூன்று கட்சிகளையும் பிரித்தெடுத்து, புதிய அணியில் சேர்ப்பதற்கு காரணமானவர்களில் ஒருவர் என்று தமிழரசுக் கட்சியினர் நம்புவதாகும்” என்று ரெலோவின் தரப்பில் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக சுரேன் குருசாமியிடம் கேட்டபோது, “இந்தத் திட்டத்தை தொடக்கத்திலிருந்தே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்த அத்தனை பேரும் ஆதரித்தனர். சம்மந்தன் பொதுவெளியிலேயே இதைப்பற்றிப் பேசியிருக்கிறார். ஊடகவியலாளர் சந்திப்பைக் கூட நடத்தியிருக்கிறார். (இதோ அதற்கான ஆதாரங்கள் என்று அந்தச் செய்த வந்திருந்த பத்திரிகை நறுக்குகளைக் காண்பிக்கிறார்). அப்படியெல்லாம் செய்து விட்டு, இப்பொழுதுது ரெலோதான் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தது. இது ஒரு தேவையில்லாப் பிரச்சினை என்று சொல்வது அர்த்தமற்றது மட்டுமல்ல, அரசியல் லாபங்கருதியதுமாகும்” என்றார். மேலும் அவர் சொன்னார், “இது எமது பிரதேசத்துக்கு வந்துள்ள மிகப் பெரிய முதலீடாகும். பலரும் கருதுவதைப் போல இது சீன அரசாங்கத்தின் முதலீடல்ல. அல்லது இந்திய அரசாங்கத்துக்கு எதிரானதும் அல்ல. இது தாய்வானின் முதலீடு. இதன் மூலம் வன்னிப் பிரதேசத்தில் பலருக்கான தொழில்வாய்ப்புகளை உருவாக்க முடியும். கரும்பு ஆலையை மட்டுமே குறித்த நிறுவனம் 400 ஏக்கர் நிலத்தில் அமைத்துக் கொள்ளும். ஏனைய நிலமும் அவற்றில் பயிரிடும் உரிமையும் விவசாயிகளுக்கானது. சிலர் சொல்வதைப்போல இந்தத் திட்டத்தினால் சிங்களக் குடியேற்றம் வந்து விடும். நீர்த்தேவைக்காக மகாவலி கங்கையை வவுனியாவுக்குத் திருப்பி, அதன் வழியே சிங்களவர்களைக் கொண்டு வந்து விடுவார்கள் என்பதெல்லாம் ஏற்கக் கூடிய காரணங்களில்லை. சிங்களவர்களின் பிரசன்னத்துக்கான வழிகள் பல உண்டு. அதைத் தடுப்பது வேறு. இது வேறு. தவிர, இந்தத் திட்டத்தின் பயனாளிகளைத் தெரிவு செய்வது பிரதேச மட்டத்திலான மக்கள் பிரதிநிதிகளே. ஆகவே அதனை நாம் (தமிழ்ப்பிரதிநிதிகளே) செய்யப் போகிறோம். அப்படியிருக்கும்போது எப்படி சிங்களக் குடியேற்றத்துக்கான சந்தர்ப்பம் ஏற்படும்? இந்தப் பயனாளிகள் தெரிவில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் போராளிகள், பிரதேச ரீதியாக பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவரும் முன்னணி விவசாயிகள், புதிய செய்கையாளர்கள் போன்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம். அதேவேளை ஏற்கனவே நெற்செய்கை உள்ளிட்ட ஏனைய பயிர்ச்செய்கைகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு எந்த வகையான பாதிப்பும் ஏற்படாதவாறே இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். எல்லாவற்றுக்கும் அப்பால் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இதில் திருத்தங்களுக்கு இடமுண்டு. அதற்குள் ஏன் இந்த அவசரமும் அநாவசியமான கதைகளும்? நாம் அரசியல் விடுதலையுடன் எமது மக்களின், எமது பிரதேசத்தின் பொருளாதார முன்னேற்றத்தைப் பற்றியும் சிந்திக்கிறோம்” என்று. “கரும்புச் செய்கைக்கு அதிகளவு நீர் தேவைப்படுமே. அந்த நீரை செய்கை மேற்கொள்ளப்படக் கூடிய இடங்கள் என்று கூறப்படும் நெடுங்கேணி, செட்டிகுளம் போன்ற இடங்களில் பெற முடியுமா?” என்று கேட்டபோது, “இது தொடர்பான கள ஆய்வொன்று 2016, 2017 காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. வவுனியாப் பிரதேசத்தில் கிடைக்கின்ற மழை வீழ்ச்சியில் பெருமளவு பகுதி வீணடிக்கப்படுகிறது. அதை உரிய முறையில் சேமித்தால் பல திட்டங்களுக்கு அந்த நீரைப் பயன்படுத்த முடியும் என்று கண்டறியப்பட்டது. இதற்கான கட்டுமானங்கள், வடிகாலமைப்புகளைச் செய்தால் பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பும் கிட்டும். பொருளாதார வளத்தையும் பெருக்க முடியும் என்று அந்த அறிக்கை சொல்கிறது” என்கிறார் சுரேன் குருசாமி. ஆனால், இந்தத் திட்டத்தை எதிர்க்கின்ற இன்னொரு தரப்பான தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் சூழலியலாளருமான பொ. ஐங்கரநேசன், இது தொடர்பாக வேறு விளக்கத்தை அளிக்கிறார். “இந்தத் திட்டத்தை நாம் மறுப்பதற்குப் பல காரணங்கள் உண்டு. ஒன்று, இந்தத் திட்டத்தை வவுனியாவில் திணிக்க முற்படுகின்ற அரசாங்கம், 1960 களிலிருந்து கந்தளாயில் மேற்கொள்ளப்பட்டு வந்த கரும்புச் செய்கையையும் சர்க்கரை உற்பத்தியையும் நிறுத்தி வைத்திருப்பது ஏன்? அங்கேயே மீளவும் அதை ஆரம்பிக்கலாமே. அதற்குரிய அத்தனை வசதிகளும் ஏற்பாடுகளும் அங்கேயே உண்டு. இரண்டாவது, இந்தத் திட்டத்தினால் நீர்ப்பிரச்சினையும் சூழலியல் கேடும் ஏற்படும். உலக அளவில் நீர்ப்பிரச்சினையையும் சூழலியல் பாதுகாப்பையும் பற்றிச் சிந்திக்கின்ற நாடுகள், தமது முதலீடுகளை இலங்கை போன்ற நாடுகளில் மேற்கொள்ளவே முயற்சிக்கின்றன. இதன் மூலம் வருவாயைத் தாம் பெற்றுக் கொள்வதோடு, தமது இயற்கை வளத்தையும் சூழலையும் பேணிக் கொள்கின்றன. மாறாக எமது வளத்தைச் சுரண்டி, எமது சூழலைக் கெடுக்கின்றன. ஆகவே இதற்கு நாம் அனுமதிக்க முடியாது. மூன்றாவது, இந்தத் திட்டத்திற்குப் பதிலாக எமக்குப் பொருத்தமான வேறு திட்டங்களைக் கொண்டு வர முடியும். உதாரணமாக ஆனையிறவு – குறிஞ்சாத்தீவு உப்பளங்களை முந்திய மாதிரி முழுமையான அளவில் இயங்க வைக்கலாம். ஆழ்கடல் மீன்பிடியை விருத்தி செய்து, வெளிநாடுகளுக்கான கடல் உணவு ஏற்றுமதியை ஆரம்பிக்கலாம். இந்த மாதிரிப் பலவற்றைச் செய்யலாம். அப்படிச் செய்யாமல் இதைத் திணிக்க முற்படுவது ஏன்?” என்று கேட்கிறார். இந்தத் திட்டத்தை முன்னாள் முதலமைச்சராக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விக்கினேஸ்வரனும் எதிர்க்கிறார். இது பற்றி விவசாயத்துறை மற்றும் மண்ணியல் ஆய்வுத் துறைசார்ந்த அறிஞர்களிடம் கேட்டபோது, “இது அரசியல் விவகாரமாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை நாம் நிதானமாக, ஆழமாகப் பார்க்க வேண்டும். எந்தப் பொருளாதாரத் திட்டத்திலும் சாதக பாதக அம்சங்கள் இருக்கும். அதை எப்படிக் கையாளப் போகிறோம் என்பதைப் பொறுத்தே அவற்றின் நன்மை தீமைகளும் வெற்றி தோல்விகளும் உள்ளன. எங்களுடைய விவசாயிகளில் பலரும் சோம்பல் பயிற்செய்கையிலேயே அதிகமாக நாட்டம் கொண்டிருக்கின்றனர். அதற்காகவே அவர்கள் நெல் விவசாயத்தை அதிகமாகச் செய்ய விரும்புகிறார்கள். ஆனால், செய்கை பண்ணப்படும் நெல்லை சந்தைப்படுத்த முடியாமல் அவதிப்படுவதைப்பற்றிச் சிந்திப்பதில்லை. திரும்பத்திரும்ப இந்தப் பிரச்சினைக்கு முகம் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள். இதற்குப் பதிலாக மாற்றுப் பயிர்ச்செய்கையைப் பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை. நாமும் மாற்றுப் பயிர்ச்செய்கையைப் பற்றி அக்கறைப்படும்படி தொடர்ந்து வலியுறுத்துகிறோம். விவசாயிகள் அதில் ஈடுபடுவதற்குத் தயங்குகிறார்கள். இதனால் உழுந்து, பயறு, கௌபி, கடலை, பருப்பு வகை, பருத்தி, மஞ்சள், மிளகு, பழங்கள் எனப் பலவற்றையும் இறக்குமதி செய்து கொண்டிருக்க வேண்டியுள்ளது. இதைக்குறித்து எங்களுடைய அரசியல் தலைவர்களுக்கும் அக்கறையில்லை. ஏதாவது அபிவிருத்தித் திட்டங்கள் வந்தால் அதை உடனடியாக எதிர்க்க முயற்சிப்பார்கள். இப்படித்தான் வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் வவுனியாவுக்கு வந்தபோதும் எதிர்த்தார்கள். ஒரே தரப்புக்குள்ளேயே முரண்பட்டு மாங்குளத்தில் கட்டவேண்டும் என்று ஒரு தரப்பும் ஓமந்தையில் கட்ட வேணும் என்று இன்னொரு தரப்பும் சண்டையிட்டன. இந்த மாதிரியான விடயங்களில் கலந்தாய்வை மேற்கொள்ளக் கூடியவாறு துறைசார் நிபுணத்துவக் குழு எதுவும் நம்மிடமில்லை. அப்படி ஒரு குழு இருந்தாலும் அதற்கொரு அரசியற் சாயத்தைப் பூசி விடுவார்கள். இதனால் பாதிக்கப்படுவது மக்களே. ஏனென்றால், முதலீட்டாளர்களுக்கு சிரமங்கள் அதிகம் இருப்பதை அவர்கள் விரும்புவதில்லை. ஒரு முதலீட்டாளர் படுகின்ற சிரமத்தைப் பார்க்கின்ற ஏனைய முதலீட்டாளர்கள் இந்தப் பக்கமாகத் தலை வைத்தும் படுக்க மாட்டார்கள். இதை எம்மவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இன்று நாடும் நம்முடைய மக்களும் இருக்கின்ற நிலைமையைப் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் பிழைப்புத் தேடி வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். பிறப்பு வீதம் குறைந்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் எல்லாம் குறைவடையப் போகிறது. சனத்தொகை குறைந்தால் நமக்கான நிதி ஒதுக்கீடுகளும் வள ஒதுக்கீடுகளும் குறைவடையும். அதைத் தடுப்பதற்கு நாம் பல வழிகளிலும் முயற்சிக்க வேண்டும்” என்கின்றனர். இந்த நியாயத்தை நாம் மறுக்க முடியாது. முதலில் இந்தத் திட்டத்தை அரசியல் பகைமை, அரசியல் லாபநட்டக் கணக்குகளுக்கு அப்பால் பார்க்க வேண்டும். ஏனென்றால் இந்தத் திட்டம் வடக்கில் கைவிடப்பட்டால், அதை தென்பகுதிக்குக் கொண்டு செல்வதற்கு அங்கே தயாராக உள்ளனர். விகாரைகள் கட்டப்படுவதை எதிர்க்கலாம். அதில் நியாயமுண்டு. இப்படியான தொழில்வாண்மைக்கான முயற்சிகளைத் தடுக்க முடியுமா? என்று அபிவிருத்திக் கண்ணோட்டமுடைய சிலர் கேட்கின்றனர். அவர்களுடைய நியாயம் என்னவென்றால், “கரும்பு உற்பத்தியை பிரேசில், இந்தியா, இந்தோனேசியா, சீனா, கியூபா என உலகில் 120 நாடுகள் மேற்கொள்கின்றன. முன்னணி வகித்த பிரேசிலைப் பின்னுக்குத் தள்ளி விட்டு இந்தியா முதலிடத்துக்கு வந்துள்ளது. இந்தியாவில் மூவாயிரம் ஆண்டுக்கு முன்பே கரும்புச் செய்கையும் அதன் பயன்பாடும் இருந்துள்ளது. இப்பொழுது இந்தியாவில் 03 வீதமான நிலப்பரப்பில் கரும்புச் செய்கை மேற்கொள்ளப்படுகிறது. 4.5 கோடி விவசாயிகள் கரும்புச்செய்கையில் ஈடுபடுகின்றனர். இதில் தமிழகம் 50 வீதமான உற்பத்தியைச் செய்கிறது. 2.5 லட்சம் ஏக்கரில் கரும்பு உற்பத்தி நடக்கிறது. இந்தியா முழுவதும் 500 க்கு மேற்பட்ட சர்க்கரை ஆலைகள் உள்ளன. இதில் 41 ஆலைகள் தமிழகத்தில் மட்டும் உண்டு. ஆலைகளை விட கரும்பு ஆராய்ச்சி மையங்கள், உற்பத்திப் பிரிவுகள் எனப் பலவும் செயற்படுகின்றன. கரும்பு தின்னக் கைக்கூலி எதற்கு என்று தமிழில் பழமொழி கூட உள்ளது. தமிழ்ப் பண்பாட்டில் கரும்புக்கு முக்கியமான இடமுண்டு. பொங்கல், பண்டிகைகளில் கரும்பு முன்னிலைப்படுத்தப்படுகிறது. அந்தளவுக்குத் தமிழோடும் தமிழர் வாழ்வோடும் கரும்பு பின்னிப் பிணைந்திருக்கிறது. அப்படியான கரும்பு கசக்கிறது என்கிறார்கள்” இந்தப் புத்திஜீவிகள். உலகில் 80 வீதத்துக்கு மேலான சீனி மற்றும் சர்க்கரையை கரும்பிலிருந்தே உற்பத்தி செய்கிறார்கள். மீதியையே பீற்றூட்டிலிருந்து எடுக்கிறார்கள். கியூபாவின் பொருளாதாரத்தில் பாதியை கரும்பே நிறைவு செய்கிறது. உலகப் பெரும் புரட்சியாளர்கள் ஃபிடல் காஸ்ரோவும் சேகுவேராவும் கரும்பு வெட்டும் தொழிலைச் செய்திருக்கிறார்கள். அதையே தமது அடையாளமாகவும் கொண்டிருந்தனர். நம்முடைய அரசியல் தலைவர்களுக்கோ கரும்பு கசக்கிறது! கரும்புச்செய்கையை மேற்கொள்வதாயின் அதற்கான நிலம், நீர் போன்றன உண்டா என்று வவுனியா மாவட்டச் செயலகத்துடன் தொடர்பு கொண்டபோது, “ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இதைப்பற்றிப் பேசப்பட்டது. பின்னர் அமைச்சரவை, ஜனாதிபதி ஆகிய தரப்புகள் தொடர்பு கொண்டு பேச்சுகளை நடத்தின. இதன்போது தேவையான நீரைப் பெற்றுக் கொள்ள முடியும் என நீர்ப்பாசனத் திணைக்களமும் தேவையான காணிகளை வழங்க முடியும் என வனப் பிரவினரும் காணி அமைச்சும் சொல்லியுள்ளன. ஆனால், திட்டத்தை இன்னும் இறுதி செய்யவில்லை என்று அறிகிறோம்” என்று சொல்லப்பட்டது. கரும்பு கசக்குமா? இனிக்குமா? என்று சரியாகத் தீர்மானிக்க முடியவில்லை. அதைத் தீர்மானிக்க வேண்டியது மக்களே. அப்படித்தான் இந்தத் திட்டத்தை முன்மொழிந்த ரெலோவும் சொல்கிறது. https://arangamnews.com/?p=9814
  19. பாவனைப் போரும் செயற்பாட்டு அரசியலும் March 18, 2023 — கருணாகரன் — பலரும் கருதியதைப் போலவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உடைந்து விட்டது. இந்த உடைவினால் தனித்து விடப்பட்டிருப்பது தமிழரசுக் கட்சியே. ஆனாலும் அது தன்னைப் பலமானதாகக் கருதிக் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம், அதனுடைய வீட்டுச் சின்னமாகும். எத்தகைய நிலையிலும் மக்கள் வீட்டுச் சின்னத்துக்கே வாக்களிப்பார்கள் என்ற பலமான எண்ணம் தமிழரசுக் கட்சியினருக்குண்டு. இதுவே அவர்களுடைய தைரியமாகும். இதற்குக் காரணம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை வீட்டுச் சின்னமாகவே மக்களிற் பலரும் அறிந்துள்ளனர். தமிழரசுக்கட்சிக்கு விடுதலைப் புலிகள் உருவாக்கிக் கொடுத்த அருமையான வாய்ப்பிது. இதனால் இளையதலைமுறையினரின் மனதில் கூட்டமைப்பு என்றால் அது வீட்டுச் சின்னம் என்ற புரிதலே உள்ளது. இன்னொன்று கிராமப்புற மக்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள உடைவைப் பற்றியோ, தமிழரசுக் கட்சி தனித்து விடப்பட்டிருப்பதைப் பற்றியோ எதுவுமே தெரியாது. இதெல்லாம் தமிழரசுக் கட்சிக்கு வாய்ப்பாகவே உள்ளன. வெளியே ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலொ மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி போன்றவை ஒன்றிணைந்து கூட்டாக நிற்கின்றன. இவையே “தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு” என்று தம்மைப் பிரகடனம் செய்துள்ளன. தமக்கான சின்னம் குத்து விளக்கு என்றும் அறிவித்துள்ளன. எதிர்காலத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை முறைப்படி பதிவு செய்யவுள்ளதாகவும் இந்த அணி கூறுகின்றது. இருந்தாலும் இந்த அணி பெரும் சவாலை எதிர்கொண்டே உள்ளது. கூட்டமைப்பின் பெயரில் ஒரு பெரிய அணியாக இயங்கினாலும் இவர்களுடைய குத்துவிளக்குச் சின்னம் மக்களுக்குப் புதிது. இந்தப் புதிய சின்னத்தை மக்களிடம் அறிமுகப்படுத்த வேண்டும் என்றால் வீட்டுச் சின்னத்தை நிராகரிக்கச் செய்ய வேண்டும். கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக வீட்டுச் சின்னத்தை மக்களிடம் அறிமுகப்படுத்தி விட்டு இப்பொழுது அதை மறுதலிப்பது என்றால் அது மக்களிடம் குழப்பத்தை உண்டாக்கும். அதற்கான நியாமான காரணத்தை, தெளிவான விளக்கத்தை அடிமட்ட மக்கள் வரையில் (கிராமங்கள் வரையில்) கொண்டு செல்ல வேண்டும். அதை ஒரு பெரிய வேலைத்திட்டமாக முன்னெடுக்கவேண்டும். அணியில் உள்ள தலைவர்கள் தொடக்கம் அடிமட்ட உறுப்பினர்கள் வரையில் இதைச்செய்ய வேண்டும். அவர்கள் கிராமங்களை நோக்கிச் செல்ல வேண்டும். இதற்காகக் கடுமையாக உழைக்க வேண்டும். பொருத்தமான திட்டங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தனியே ஊடகங்களை மட்டும் நம்பி இருக்க முடியாது. ஏனென்றால், இந்தப் பிளவைக் குறித்து ஊடகங்களும் அரசியல் எழுத்தாளர்களும் இன்னும் தெளிவான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகத் தெரியவில்லை. பலரும் இரண்டு தரப்பையும் அனுசரித்துப் போவதையே காணக் கூடியதாக உள்ளது. அண்மையில் கிளிநொச்சியில் தமிழரசுக்கட்சி நடத்திய பெண்கள் நாள் நிகழ்விலும் ஆனையிறவில் நடராஜர் சிலை திறப்பின்போதும் அரசியல் எழுத்தாளரான கே.ரி.கணேசலிங்கம் கலந்து கொண்டிருந்தார். நாளைக்கு இன்னொரு நிகழ்வை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு (குத்துவிளக்கு அணி) அழைத்தால் அங்கும் இவர் செல்லக்கூடும். இதெல்லாம் அவருடைய சொந்த விருப்பமும் தெரிவுமாக இருக்கலாம். அதற்கான உரிமை அவருக்குண்டு. இப்படித்தான் பலரும் உள்ளனர். ஆனால், அரசியல் ஆய்வாளர்கள் என்று கூறிக்கொண்டு, மக்களுக்கு வழிகாட்டுகிறோம் என்று இப்படிச் செயற்பட முடியாது. உண்மையில் எந்த அணி சரியான நிலைப்பாட்டில் உள்ளது? எது தவறாகச் செயற்படுகிறது என்பதை இவர்கள் தெளிவாக மக்களுக்குச் சொல்ல வேண்டும். மக்களுக்கு மட்டுமல்ல, சம்மந்தப்பட்ட தரப்பினருக்கும்தான். அதைச் சொல்லாத வரையில் குத்துவிளக்கு அணியினர் தாமே மக்களுக்கு உண்மை நிலவரத்தைச் சொல்ல வேண்டும். இதேவேளை கூட்டமைப்பில் நடந்துள்ள பிளவில் நாம் ஒரு தெளிவான பிரிகோட்டைப் பார்க்கமுடிகிறது. இரண்டு அணிகளும் மிகத் தெளிவான அரசியற் பயணப்பாதையைக் கொண்டன என்பதே அதுவாகும். தமிழரசுக் கட்சியோ எப்போதும் “பாவனைப் போர்” செய்யும் வழிமுறையைக் கொண்டது. 1960 களுக்குப் பின்னர் அது எத்தகைய போராட்டங்களையும் செய்ததில்லை. அதற்கு முன்பு செய்த சத்தியாக்கிரகப் போராட்டமே அதனுடைய ஒரே அரசியல் முதலீடாக இன்னும் உள்ளது. தவிர, உரத்துப் பேசுதலே (பாவனைப் போரே) அதனுடைய வழிமுறையாகும். இப்போது கூட கூட்டமைப்பிலுள்ள சிறிதரன், சாணக்கியன் போன்றோரே தமிழரசுக் கட்சியின் முன்னணிப் பிரமுகர்களாக உள்ளனர். இவர்களுடைய உரத்த குரலே இதற்குக் காரணம். அடுத்த நிலையில் உள்ளவர் சுமந்திரன். அவரும் பல சந்தர்ப்பங்களிலும் Politician னாக நடந்துகொள்வதற்குப் பதிலாக Police Man னாகவே நடந்து கொள்கிறார். கட்சிக்குள்ளும் மக்கள் மத்தியிலும் சுமந்திரனின் நடத்தைகள் இப்படியே உள்ளன. ஆனாலும் அவரிடமிருக்கும் மிரட்டும் தொனியே அவரை மேலெழுப்பிக் காட்டுகிறது. உண்மையில் பெரும்பாலானவர்களுக்கு இந்த மாதிரி உரத்துப் பேசுவோரே (பாவனைப் போர் வீரர்களே) விருப்பத்துக்குரியவர்களாக உள்ளனர் போலும். இல்லையென்றால் இவர்கள் எப்படி முன்னணியில் நிற்க முடியும்? இவர்களுக்குத்தான் ஊடகங்களும் முன்னுரிமை அளிக்கின்றனவே! ஏனைய ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலொ மற்றும் ஜனநாயகப் போராளிகள் அணியினரோ அப்படியல்ல. அவர்களைப் பொறுத்தவரையில் அளவுக்கு அதிகமாகப் பேசுவதை விட எதையாவது உருப்படியாகச் செய்ய வேண்டும் என்று சிந்திப்பவர்கள். தொடக்கத்திலிருந்தே செயற்பாட்டு அரசியல் வழிமுறையைக் கொண்டவர்கள். மக்களுக்காகத் தம்மை அர்ப்பணிக்கும் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள். தியாக வரலாறு இவர்களுக்கே உண்டு. மக்களுடன் நெருக்கமான அரசியல் உறவைக் கொண்டிருந்தவர்கள். (இப்பொழுது அப்படி உள்ளதா என்பது கேள்வியே) ஆனாலும் மக்களின் மீதான மெய்யான கரிசனை இவர்களை விட்டு நீங்கவில்லை. செயற்பாட்டு அரசியற் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் எங்கே நின்றாலும் எதையாவது செய்து தீரவேண்டும் என்ற விருப்பத்துடன் இருப்பவர்கள் என்பதற்கு மேலும் ஒரு சான்று அவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து நின்றாலும் சரி, வெளியே எதிர்த்தரப்பில் நின்றாலும் சரி எதையாவது மக்களுக்குச் செய்ய வேண்டும் என்று முயற்சிப்பவர்கள். ஆனால் தமிழரசுக் கட்சியினரிடம் இந்தக் குணமில்லை. அவர்கள் தங்களுடைய தேவைகள், நலன்களை மிகச் சாதுரியமாகச் செய்துகொள்வார்கள். மக்களைப் பற்றிச் சிந்திக்க மாட்டார்கள். இதை ஆதரத்துடனேயே இங்கே முன்வைக்கிறேன். எளிய, அண்மைய சான்று, கடந்த ரணில் விக்கிரமசிங்க – மைத்திரிபாலசிறிசேன ஆட்சிக் காலத்தில் அரசாங்கத்துக்கு இணக்கமாக தமிழரசுக் கட்சி செயற்பட்டது. இருந்தும் அது மக்களுக்கு உருப்படியாக எதையும் செய்யவில்லை. அப்படித்தான் முன்னரும் என்பதால்தான் இந்த உடைவு தவிர்க்க முடியாமல் நிகழ்ந்திருக்கிறது. இது வரலாற்று விதியின் விளைவு. பாவனைப் போர் வீரர்களும் செயல் வீரர்களும் ஒன்றாக நீண்ட காலம் பயணிக்கமுடியாது என்பதே இதற்கான காரணமாகும். ஆகவே இந்தத் தெளிவான வரலாற்று விதியை மக்கள் புரிந்து கொள்வது அவசியம். இன்று இந்தப் பிரிகோடு துலக்கமாகி விட்டது. இனியும் எதற்காகவும் சமரசம் செய்ய முடியாது என்ற நிலையில்தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உடைந்தது. தமிழரசுக் கட்சி தனித்தது. தமிழரசுக் கட்சி மட்டுமல்ல, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும்தான். அது அப்படித்தான் நிகழும். வரலாற்று விதி இதுவே. இந்த வரலாற்று விதியை அரசியல் ஆய்வாளர்களும் ஊடகத்துறையினரும் புரிந்து கொள்வது அவசியமாகும். இப்பொழுது தாம் எந்தப் பக்கம் நிற்கிறோம் என்பதை வெளிப்படுத்திக் கொள்ளவேண்டிய ஒரு கட்டாயம் வரலாற்றின் முன்னே ஆய்வாளர்களுக்கும் ஊடகத்துறையினருக்கும் புத்திஜீவிகளுக்கும் வந்துள்ளது. இதை அவர்கள் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். இனியும் தடுமாற்றங்களுக்குள்ளாகக் கூடாது. இது ஏறக்குறைய 1970 களில் உருவான நிலையே ஆகும். அந்தச் சூழல் மறுபடியும் இப்பொழுது வந்துள்ளது. ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட வெற்றிடத்தில்தான் தமிழரசுக் கட்சி மீள எழுந்தது. இருந்தாலும் அதன் செயற்பாடற்ற தன்மையும் மேட்டுக்குடி மனப்பாங்கும் அதனை மறுபடியும் தோற்கடிக்கும் நிலைக்குக் கொண்டு வந்துள்ளது. காலம் அப்படித்தான் தன் விதியைக் கொண்டிருக்கும். அதைத் தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது. அது தனக்குத் தேவையானதைத் தேர்ந்து கொள்ளும். 1970 கள் வரையிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும் மேற்கொண்டு வந்த “பாவனைப் போர்” அரசியல் 1970 களின் இறுதியில் வெளுத்தது. செயலின்மையை மறைப்பதற்கே இவை இனவாதத்தைப் பயன்படுத்துகின்றன. இதனால்தான் அது எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் காலத்திலேயே காலாவதியாகப் போக வேண்டிய நிலைக்குள்ளாகியது. “தமிழ் மக்களை இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று செல்வநாயம் மக்களைப் பார்த்துக் கைவிரிக்க வேண்டிய நிலை வந்தது அதனுடைய அரசியல் முறைமையினாலேயே. இல்லையெனில் ஒரு தலைவர் தன்னுடைய மக்களுக்குச் சரியான வழியைக் காட்டுவதற்குப் பதிலாக கடவுள்தான் இனி உங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று கையை விரிப்பாரா? அது ஒரு தலைவருக்கும் ஒரு தலைமைக்கும் அழகாகுமா? கடவுள் காப்பாற்ற மாட்டார். நாம்தான் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று எழுந்த இளைஞர் படைதான் பின்னர் வந்த காலத்தில் மக்களைப் பாதுகாத்தது. செயற்பாட்டு அரசியலை முன்னெடுக்கும் போராளிகள் எழுச்சியடைந்தனர். திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட நில ஆக்கிரமிப்பை இளைஞர் இயக்கங்களே தடுத்து நிறுத்தின. அவைதான் தமிழ் மொழிச் சமூகத்தினருக்கு எதிரான அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை முறியடித்துத் தாம் ஒரு புதிய நிகழ்ச்சி நிரலை உருவாக்கின. பேச்சுவார்த்தை மேசையை நோக்கி வரவேண்டிய நிர்ப்பந்தத்தை அரசாங்கத்துக்கு உருவாக்கியது போராளிகளேயாகும். மாவட்ட அபிவிருத்திச் சபையே போதும் என்ற அளவில் தம்முடைய அரசியல் கோரிக்கையை சுருக்கிக் கொண்ட தமிழரசுக் கட்சி + தமிழ்க்காங்கிரஸ் = தமிழர் விடுதலைக் கூட்டணியை நிராகரித்து விட்டு அதற்கப்பால் பயணித்தது இளைஞர் இயக்கங்களே. அதன் விளைவே இன்றுள்ள மாகாணசபையாகும். இது கூடப் போதாதென்றே தொடர் போராட்டம் நிகழ்த்தப்பட்டது. அவைதான் தமிழ் மக்களின் பிரச்சினையை பிராந்திய, சர்வதேச மட்டத்திற்குக் கொண்டுசென்றன. போராளிகள் உருவாக்கிய அரசியல் அடித்தளமே இன்றுள்ளதாகும். காரணம், செயற்பாட்டு அரசியலே மக்களுக்குத் தேவையாக இருந்தது. இந்த அணிகளின் வரலாற்றுத் தவறுகள் காரணமாகவும் சந்தர்ப்பவசமாகவும் தமிழரசு இதற்குள் புகுந்து நிற்கிறது. நின்றுகொண்டு தன்னை விரிவாக்கிக் கொள்ள முயற்சிக்கிறது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் நடந்தது இந்த மோதல்தான் என்பது தெளிவு. செயற்பாட்டுத் தரப்பினருக்கும் பாவனைப் போர்த் தரப்பினருக்குமிடையிலான இழுபறிகள். இறுதியில் இதற்கான இடமில்லை என்ற நிலையில் தமிழரசுக் கட்சி தனித்து விடப்பட்டதும் ஏனைய அணிகள் ஒன்றிணைந்ததும் இதனால்தான். வரலாற்று விதியின்படி பொருத்தமற்றதைக் காலம் கழித்தே தீரும். அதுவே நிகழ்ந்துள்ளது. செயற்பாட்டுத் தரப்பினராகிய குத்துவிளக்கு அணியினர், தம்மைப் பலப்படுத்திக் கொள்வதற்கு கிழக்கிலும் வடக்கிலும் உள்ள மேலும் பொருத்தமான தரப்புகளை உள்ளீர்த்துக் கொள்ள வேண்டும். தனித்து நிற்கின்ற தமிழரசுக் கட்சியும் நீண்ட காலத்துக்குத் தாக்குப்பிடிக்கக் கூடிய நிலையில் இல்லை. ஒன்று, ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளதைப்போல, அது பாவனைப் போரை விட்டு எளிதில் செயற்பாட்டு அரசியலை எளிதில் முன்னெடுக்கும் என்று தெரியவில்லை. அடுத்தது, அதன் கட்டுக்கோப்பில் உள்ள தளர்வும் நோய்க் கூறுகளுமாகும். அதனிடத்தில் உள்ள அரசியல் குழப்ப நிலையும் பதவி ஆசையும் அதைச் சிதைத்தே தீரும். மாவை சேனாதிராஜா தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்தாலும் அவருடைய கட்டுப்பாட்டையும் நெறிப்படுத்தலையும் இழந்த நிலையில்தான் தமிழரசுக் கட்சி உள்ளது. இனி இதை (தமிழரசுக் கட்சியை) மக்களும் கழித்து விட வேண்டும். இல்லையேல் மக்களுக்கு அதுவே தண்டனையாகும். நீங்கள் தேவையற்ற எந்தப் பொருளை வைத்திருந்தாலும் அது கழிவாகும். கழிவு குப்பையாகவே இருக்கும். குப்பையை எரிக்க வேண்டும். அல்லது புதைத்துவிட வேண்டும். இல்லையென்றால் அதனால் உங்களுக்குப் பாதிப்பே ஏற்படும். பொருத்தமில்லை, பயனில்லை என்றால் நாமே நட்டு வளர்த்த தென்னையையோ மாமரத்தையோ நாம் வெட்டி நீக்கிவிடுவதில்லையா, அதைப்போலத்தான் தயக்கமில்லாமல் அதை நீக்கிவிட வேண்டும். இல்லையென்றால் அதனால் நமக்கே பாதிப்பு. https://arangamnews.com/?p=8963
  20. சூழ்நிலைக் கைதிகளாக தமிழ்த் தேசியத் தலைவர்கள் February 14, 2023 — கருணாகரன் — தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகள் உடைந்து பல துண்டுகளாகச் சிதறிக் கிடப்பதையிட்டு போராளி ஒருவர் கவலையோடு சில விடயங்களைப் பேசினார். கூடவே சில கேள்விகளையும் எழுப்பினார். அவர் எழுப்பிய கேள்விகள் இதுதான். 1. தற்போது மேலும் பல துண்டுகளாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உடைந்துள்ளது. அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து இலங்கைத் தமிழரசுக் கட்சி வெளியேறி உள்ளது. உள்ளுராட்சித் தேர்தலில் பல அணிகள் போட்டியிடுகின்றன. இது தமிழரின் அரசியலை பலவீனப்படுத்தும் நடவடிக்கையல்லவா? 2. இப்படிப் பிரிந்தும் உடைந்தும் பல அணிகளாக நிற்பது தவறானது. இந்த நிலையானது ஒடுக்குகின்ற சிங்கள மேலாதிக்கவாதிகளுக்கு வாய்ப்பாகும். ஒடுக்குமுறைக்குள்ளாகியுள்ள மக்களுக்கு பாதகமாகும் என்பதைத் தமிழ் அரசியல்ஆய்வாளர்கள், புத்திஜீவிகள், மதகுருக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக சமூகத்தினர், புலம்பெயர் நாடுகளில் உள்ளோர் போன்றோர் ஏன் கண்டிக்கவில்லை? 3. இப்படி உடைந்தும் பிரிந்தும் நிற்கும் சக்திகளையும் கட்சிகளையும் ஏன் ஓரணிக்குள் கொண்டு வருவதைப் பற்றி யாரும் சிந்திக்காமல் உள்ளனர்? அப்படி யராவது சிந்தித்திருந்தால் அவர்கள் எடுத்த முயற்சிகள் என்ன? 4. மூத்த அரசியல் தலைவர்களான சம்மந்தன், மாவை சேனாதிராஜா, விக்கினேஸ்வரன், சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா தொடக்கம் அடுத்த நிலையில் உள்ள தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் போன்றோருடன் இதைக்குறித்து – இந்த அவல நிலையைக் குறித்து யாராவது முறையாகப் பேசியுள்ளனரா? 5. இந்தத் தலைவர்கள் தமிழ் மக்களுடைய விடுதலையைப் பற்றியும் எதிர்காலத்தைப் பற்றியும் எவ்வாறு சிந்திக்கின்றனர்? 6. கடந்த காலத்தில் ஒற்றுமையின் அவசியத்தைப் பற்றி தீவிரமாக வலியுறுத்திக் கொண்டிருந்தவர்கள், நிகழ்காலத்தில் அந்த ஒற்றுமையைச் சிதைப்பவர்களாகவே உள்ளனர்? இதற்கான காரணங்களை இவர்கள் விளக்குவார்களா? அல்லது இவர்களை ஆதரிப்போர் இதற்கான காரணங்களைச் சொல்வார்களா? அல்லது இதைப் பற்றித் தமிழ் அரசியல் ஆய்வாளர்கள், புத்திஜீவிகள், மதகுருக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக சமூகத்தினர், புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்கள் விளக்கமளிப்பார்களா? 7. இதைக் குறித்து – இந்தச் சீரழிவு நிலையைக் குறித்து தமிழ் ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களினதும் நிலைப்பாடு என்ன? பதில் என்ன? 8. இந்த நிலை தொடருமானால் தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலம் எப்படி அமையும்? 9. அல்லது இப்படிப் பிரிந்து நிற்கும் அணிகளில் எந்த அணி சரியானது? எது உண்மையானது? எது மெய்யாகவே தமிழ் மக்களுடைய அரசியலைச் சரியான திசையில், சரியான முறையில் கொண்டு செல்கிறது என்பதையாவது இவர்கள் மக்களுக்குத் தெரிவிக்கலாம் அல்லவா? 10. அப்படியில்லை என்றால் இந்த அரசியற் கட்சிகளின் சீரழிவுக்கு நிகராகவே இந்தத் தரப்பினரும் உள்ளனர். இவர்களும் வேடிக்கை பார்க்கின்றனர். தங்களால் எதையும் செய்ய முடியாது என்ற கையறு நிலையில் உள்ளனர் என்றே அர்த்தமாகும் அல்லவா? இதை விட்டு விட்டு ஒவ்வொரு தரப்பைப் பற்றியும் விமர்சிப்பதில் என்ன பயன்? என்று கேட்கிறார் நண்பர். தமிழ் மக்களின் நிலையையும் அவர்களுடைய அரசியலையும் ஆழ்ந்து சிந்திப்பவர்களுக்கு இந்தக் கேள்விகளின் நியாயமும் அதற்கான அடிப்படையும் புரியும். அவர்களுக்கு இந்த நிலை கவலையையே அளிக்கும். காரணம், அந்தளவுக்கு தமிழ்ச் சமூகம் தன்னுடைய அரசியலுக்காகவும் விடுதலைக்காகவும் இழப்புகளைச் சந்தித்திருக்கிறது. சக்திக்கு மீறிப் பெருந்தியாகங்களைச் செய்துள்ளது. இதற்கெல்லாம் பெறுமதியைப் பெற்றுக் கொள்வதற்குப் பதிலாகப் பெரும் பின்னடைவையே அது சந்தித்திருக்கிறது. அதாவது வரலாற்றை முன்னகர்த்துவதற்குப் பதிலாக தமிழ்த் தேசிய(?) அரசியற் சக்திகள் அதைப் பின்தள்ளியுள்ளன. மேலும் பின்தள்ளிக் கொண்டிருக்கின்றன. இவ்வளவுக்கும் இந்தத் துயர வரலாற்றில், தியாக வரலாற்றில் இணைந்தும் விலகியும் பயணித்தவர்களே இன்று அரசியல் அரங்கில் இருப்பவர்கள். மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் போன்றோர் நேரடியாகவே கடினமான அரசியற் பயணத்தின் வழியாக வந்தவர்கள். மேலும் சொன்னால், சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா போன்றோர் கூட நெருக்கடிகளின் வழியே அரசியலைத் தொடர்ந்தவர்கள். இவர்கள் கூட தங்களுடைய கடந்த காலத்தின் பெறுமதியைக் குறைக்கும் விதமாக நடந்து கொள்வது கவலை அளிக்கிறது. அரசியலில் இதொன்றும் புதியதல்ல. வரலாறே இப்படித்தான் ஏற்ற இறக்கத்தோடு பயணித்திருக்கிறது என்று யாரும் சொல்லக் கூடும். இது தவிர்க்க முடியாத நிலை. இதை விட வேறு எதைச் செய்ய முடியும் என்று இவர்கள் கேட்கக்கூடும். அப்படிக் கேட்டால் – அல்லது அப்படிச் சொன்னால் – இவர்கள் சூழ்நிலைக் கைதிகளாக உள்ளனர் என்றே அர்த்தமாகும். அரசியல் தலைவர்கள் ஒரு போதும் சூழ்நிலைக் கைதிகளாக இருக்க முடியாது. அப்படி இருந்தால் அவர்கள் தலைவர்களில்லை. சூழ்நிலையைச் சரியாகக் கையாளும் ஆளுமை உள்ளவர்களே தலைவர்களாகின்றனர். மற்றவர்கள் வரலாற்றைத் துயரக் குழிக்குள்ளேயே தள்ளி விடுகின்றனர். இன்றைய சீரழிவு அரசியலில் துணிவுடன் நிமிர்ந்து நிற்கக் கூடிய, தீர்மானங்களை உறுதியோடு எடுக்கக் கூடியவர்களே வெற்றியடைவர். மக்களுக்கான வெற்றியையும் விடுதலையையும் அவர்களால்தான் அளிக்க முடியும். இதற்கு சில விலைகளைக் கொடுக்க நேரிடும். இப்படித் துணிவுடன் நிற்கும்போது பல சவால்களைச் சந்திக்கவும் வேண்டியிருக்கும். ஆனால், அதைச் சந்தித்துத்தான் ஆக வேண்டும். துயரம் என்னவென்றால், கடந்த காலத்தில் மிகச் சவாலான, உயிராபத்து நெருக்கடிகளைச் சந்தித்துக் கடந்து வந்தவர்கள், இன்று மிகச் சாதாரண அரசியல் நெருக்கடிகளைச் சந்திக்கவும் கடக்கவும் பயப்படுகின்றனர். இனியும் றிஸ்க் எடுக்க முடியாது என்று சிந்திக்கிறார்களா? அல்லது றிஸ்க் எடுப்பதில் களைப்படைந்து விட்டார்களா? அப்படிக் களைப்படைந்து விட்டார்களென்றால், அவர்கள் அரசியலில் இருந்து விலகி விடலாம். களத்தில் நிற்பதாக இருந்தால் களமாடத்தான் வேண்டும். இதேவேளை இந்தச் சந்தர்ப்பத்தில் மேலும் சில விடயங்களை நினைவூட்ட வேண்டியுள்ளது. தமிழ் அரசியல் பல தடவை இந்த மாதிரி உடைந்து உதிரித்தன்மையைக் கொண்டிருந்திருக்கிறது. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸிலிருந்து செல்வநாயகம் தரப்பு பிரிந்து சென்றனர். தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பிரிந்து சென்றது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸூம் பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எவ்வும் பிரிந்து சென்றன. ஏன் ஒரு காலத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ்விலிருந்து தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி பிரிந்து சென்றது. அண்மையில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸிலிருந்து (தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி) மணிவண்ணன் அணி பிரிந்து சென்றது. அதைப்போல ரெலோவிலிருந்து ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம் தரப்புப் பிரிந்து சென்றது. ஜனநாயகச் சூழலில் இதெல்லாம் வழமை எனச் சிலரும் இது தமிழ் அரசியலில் மட்டுமல்ல, சிங்கள, முஸ்லிம், மலையக அரசியலிலும் நிகழ்வதுதான் என்று வேறு சிலரும் கூறக்கூடும். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிலிருந்து மலையக மக்கள் முன்னணியும் பின்னர் தமிழ் முற்போக்குக் கூட்டணியும் உருவாகிய வரலாறு இதைச் சொல்லும். அதைப்போல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து உடைந்தும் பிரிந்தும் சென்ற தரப்புகளையும் இவர்கள் அடையாளம் காட்டலாம். ஏன், ஆயுதம் தாங்கிய விடுதலை இயக்கங்களிலிருந்து உடைவும் பிரிவும் உண்டாகவில்லையா என்றும் நீங்கள் கேட்கலாம். புலிகளிலிருந்து உடைந்து புளொட் உருவாகியதையும் ஈரோஸிலிருந்து உடைந்து ஈ.பி.ஆர்.எல்.எவ் உருவாகியதையும் அதிலிருந்து உடைந்து ஈ.பி. டி.பி உருவாகியதையும் இவர்கள் காட்டலாம். மட்டுமல்ல ஈழதேசிய விடுதலை முன்னணி என்ற நான்கு இயக்கங்களின் கூட்டைப் புலிகள் உடைத்து நொறுக்கவில்லையா என்றும் கேட்கலாம். இந்தத் தவறுகளின் விளைவுகளைத்தானே தமிழ்ச் சமூகம் இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறது. இன்று புலிகள் சந்தித்திருக்கின்ற வரலாற்றுத் துயரம் உணர்த்துவதும் இதைத்தானே. ஒரு கட்டத்தில் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு தாமே தடை செய்த தரப்புகளை ஏற்று அரவணைத்துக் கொண்டதை – தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியதை – இங்கே நினைவூட்டிக் கொள்ளலாம். இதையெல்லாம் கவனத்திற் கொண்டே புதிய – எதிர்காலத்துக்கான அரசியலை முன்னெடுக்க வேண்டும். ஆம், தமிழ் அரசியலை முற்றிலும் புதிதாக – யுத்தத்துக்குப் பிந்திய அரசியலாக முன்னெடுக்கவேண்டும். அதற்குப் பழைய வழிமுறைகளும் பழைய சிந்தனைகளும் ஒரு போதும் உதவாது. நீங்கள் புதிய முறையில் பந்து வீசினால்தான் மட்டையைப் பிடிப்பவருக்குக் குழப்பமும் தடுமாற்றமும் உண்டாகும். எப்படி அந்தப் பந்தை எதிர்கொள்வது என்று தெரியாமல் தத்தளிப்பார்கள். ஆனால், பிரிந்தும் உடைந்தும் சிதறிக் கிடக்கும் அத்தனை தரப்புகளும் பழைய – உழுத்துப்போன அரசியலையே கொண்டுள்ளன. பழைய அரசியல் வழிமுறையைக் கொண்டிருக்கும் வரை எதிர்த்தரப்பில் உள்ளவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. அவர்கள் அதை மிக எளிதாகவே எதிர்கொள்வர். இதனால்தான் இவற்றில் எதைத் தேர்வது என்று தெரியாத தடுமாற்றம் பலருக்கும் உள்ளது. இன்னொரு பக்கம் இதைப் பற்றிப் பலருக்கும் தெரியும். தெரிந்து கொண்டே தெரியாததைப்போல, எதையும் புரியாததைப்போல நடிக்கிறார்கள். நான் உட்படப் பலரும் தமிழ் அரசியலின் பலவீனத்தையும் தவறுகளையும் தொடர்ந்து குறிப்பிட்டு வந்துள்ளோம். அப்படித் தெளிவாகக் குறிப்பிட்டவை, முன்னுணர்ந்து சொன்னவை, விமர்சித்தவை, கண்டித்தவை, குற்றம் சாட்டியவை, சுட்டிக் காட்டியவை அனைத்தும் மெய்யெனக் காலம் நிரூபித்துள்ளது. மேலும் மெய்ப்படுத்தி வருகிறது. இருந்தாலும் தமிழ் மக்களும் அவர்களிடையே உள்ள மெத்தப் படித்த மேதாவிகளும் அரசியல் அறிஞர்களும்(!) பலதைப் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை. புரிந்து கொண்டாலும் அவற்றை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. அரசியற் கட்சிகளும் அவற்றின் தலைமைகளும் அவற்றின் தொண்டர்களும் தெரிந்து கொண்டே நடிக்கிறார்கள். அல்லது தெரிந்து கொண்டே பிழைப்பு நடத்துகிறார்கள். இதை மாற்றிக் கொள்ளாத வரையில் மீட்சியில்லை. இது தொடர்பாக யாராவது சிந்தித்தால் அவருக்கு வெற்றி. https://arangamnews.com/?p=8721
  21. போருக்குப் பின் – பெண் புலிகள் நிலை என்ன? சிறப்பு கட்டுரை ஈழப் போர் முடிந்து 13 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்தப் போரில் பங்கெடுத்த முன்னாள் போராளிகள் இப்போது எப்படியிருக்கிறார்கள்? குறிப்பாக, தங்கள் இளமையையும் வாழ்க்கையையும் சமூகத்துக்காக, இனத்துக்காக, மண்ணுக்காக தியாகம் செய்த பெண் புலிகளின் வாழ்க்கை எப்படியிருக்கிறது? ‘விடுதலைப் புலிகள்’ நடத்திய ‘வெளிச்சம்’ பத்திரிகையின் ஆசிரியரும் ஈழக் கவிஞருமான கருணாகரன் எழுதுகிறார். கடந்த வாரம் ஏழு பெண்களைச் சந்தித்தேன். எல்லோருக்கும் வயது நாற்பதுக்கு மேல். சிலர் ஐம்பதைத் தொடும் நிலையிலிருக்கிறார்கள். அருவி (வயது 46), வெற்றிமலர் (வயது 48), நிலா (வயது 46), அறிவுமங்கை (வயது 45), நிலவழகி (வயது 48), மலரினி (வயது 49), செந்நிலா (வயது 50). எல்லாமே எதிர்பாராத சந்திப்புகள். ஏழு பேருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இருபது, இருபத்தைந்து ஆண்டுகளாக இவர்களோடு பழகி வந்திருக்கிறேன். சிலரோடு சில சந்தர்ப்பங்களில் சேர்ந்து வேலையும் செய்திருக்கிறேன். என்ன துணிச்சல்! எவ்வளவு ஆற்றல்! எப்படியான திறமை! நாம் எதிர்பார்த்தேயிராத வகையில் எந்த வேலையையும் வலு சிம்பிளாகச் செய்து முடித்துவிடுவார்கள். எதிர்பாராத கோணங்களில் அசாத்தியமான முடிவுகளை எடுப்பார்கள். அத்தனை சிந்தனைத் திறன், அவ்வளவு விவேகம். அந்த நாட்களில் இரவு பகலாகத் தங்களை முழுமையாக அர்ப்பணித்து வேலை செய்தவர்கள். காடு மேடு, கடல், மலை என்று தங்களுடைய பணிகளுக்காக ஓய்வின்றிக் களைப்பின்றி அலைந்து கொண்டிருந்தவர்கள். எந்த அபாயச் சூழலையும் துணிச்சலாக எதிர்கொண்டவர்கள். அநேகமாக எல்லோரும் தங்களுடைய பள்ளிக் காலத்திலேயே வீட்டை விட்டு வெளியே வந்து, ஆயுதந்தாங்கிய விடுலைப் போராட்டத்தில். போராளிகளாக. பதினைந்து இருபது ஆண்டுகளாக செயற்பட்டிருக்கிறார்கள். சிலர் அதற்கும் கூட. ஆனால், போராட்டம் தோற்கடிக்கப்பட்டு, போர் பேரழி்வுகளோடு முடிந்தபோது எல்லோரும் நிர்க்கதியாகி விட்டனர். அதற்குப் பிறகு, இவர்கள் பழகிய, பயின்ற எதையும் வீட்டிலோ சமூகத்திலோ பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. தங்களை முழுமையாக வெளிப்படுத்தவும் முடியாமல் போனது. திறமையான கடலோடிகளாக இருந்த பெண்கள் பின்னர் கடலில் ஒரு நாள் கூட படகோட்டுவதற்கு வாய்ப்பின்றிப் போனது. என்னதான் திறமையும் கடற் பரிச்சியமும் இருந்தாலும் யார்தான் பெண்களைக் கடலில் மீன் பிடிப்பதற்கு அனுமதிப்பார்கள்? மிகத் துணிச்சலான சமராடிகள், (போர்க்களத்தில் படையினரை விரட்டியவர்கள்) வீட்டிலே யாருடன் சமராடுவது? கனரக வண்டிகளைச் செலுத்திய பெண்களுக்கு யார்தான் அந்த வேலையைக் கொடுக்க முன்வருவார்? காடுகளில் பாதுகாப்பு அரண்களை அமைத்தவர்களுக்கு ஊருக்குள்ளே என்ன வேலை கொடுப்பதென்று தெரியவில்லை யாருக்கும். மனதுக்குள் இவர்களுடைய திறனையும் ஆற்றலையும் புரிந்துகொண்டாலும் வெளியே அதை ஏற்று அங்கீகரித்து இடமளிக்க முடியாமலிருக்கிறது. தங்கள் இளமையை இந்தச் சமூகத்துக்காக, இந்த இனத்துக்காக, இந்த மண்ணுக்காக அர்ப்பணித்திருக்கிறார்களே, அதற்குக் கைமாறாக என்ன கொடுக்க முடியும்? இந்தப் போராட்டம் தோற்கடிக்கப்படவில்லை என்றால் இன்று இவர்கள் இருக்கின்ற உயரம் எப்படியாக இருந்திருக்கும்? இவர்கள் வேறு யாருமல்லவே, எங்கள் மகள், எங்கள் சோதரிகள், எங்கள் தோழிகள் அல்லவா! ஆனால், இப்படி யாரும் புரிந்துகொள்வதாக இல்லை. இதனால் இவர்களுடைய வாழ்க்கை இன்று கேள்வியாகிவிட்டது. கொல்லாமல் கொல்லும் உறவுகளின் – சமூகத்தின் பாராமுகமும் இரண்டக நிலையும் இவர்களை கொன்று கொண்டேயிருக்கிறது. அருவி, பின்தங்கிய ஒரு கடலோரக் கிராமத்தில் பத்துப் பன்னிரண்டு வயதுப் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறாள். அவளுக்கு ஒரு கை இல்லை. அந்தப் பிள்ளைகள் கொடுக்கும் சிறிய தொகைப் பணமே அவளுடைய தேவைகளுக்கானது. வெற்றிமலர், இவளும் ஒரு கடலோரக் கிராமத்தில்தானிருக்கிறாள். வீட்டுக்குத் திரும்பிய பிறகு தையல் பழகி, அதன் மூலம் சீவியத்தை ஓட்டுகிறாள். நிலா, சில காலம் பழகிய தொழிலான வீடியோ எடிற்றிங்கைப் பல கடைகளில் செய்தாள். எல்லோரும் மிகக் குறைந்த ஊதியத்தையே கொடுத்தார்கள். ஒரு காலம் நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் குறும்படங்களையும் உருவாக்கியவள். அவளுடைய திறமைகளைப் புரிந்துகொள்ளவோ கொண்டாடவோ யாருமே இல்லை. பேசாமல் தோட்டத்தில் புல்லுப்பிடுங்கவும் வெங்காயம் நடவும் போகிறாள். வயிறொன்று இருக்கிறதல்லவா. அதை விட ஒவ்வொரு நாளையும் எப்படியோ போக்கிக்கொள்ள வேண்டுமே! அறிவுமங்கை, இதழியல், அச்சு, வடிவமைப்பு போன்றவற்றில் அனுபவம் கொண்டவள். இந்தத் துறையில் எங்காவது வேலை செய்யலாம் என்று செய்து பார்த்தாள். அடிமாட்டுச் சம்பளம் கொடுக்கிறார்கள். கடையொன்றில் வேலை செய்தாள். அங்கும் கெடுபிடிகள் அதிகம். ஒன்றுமே சரிப்பட்டு வரவில்லை. எல்லோரும் அவளைப் பயன்படுத்தும் அளவுக்கு அவளுடைய திறன்களுக்கான மதிப்பையும் ஊதியத்தையும் கொடுக்கத் தயாரில்லை. தனியாக ஒரு இடத்தில் அச்சு வடிவமைப்பைச் செய்யலாம் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். நிலவழகி, எதையும் கூருணர்வோடு அணுகும் திறனுள்ளவள். இடுப்புக்குக் கீழே இயங்க முடியாதிருக்கிறார். அதனால் எங்குமே செல்வதில்லை. ஒரு சிறிய வீட்டின் ஒதுக்குப் புறத்தில் உள்ள அறையே அவளுடைய பேருலகம். அமைதியான சுபாவம். சிரிப்பினால் எல்லாவற்றையும் சமன் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். நெருங்கிய உறவுகள் என்று எதுவுமில்லை. தெரிந்தவர்களின் அனுசரணையில் வாழ்க்கை ஓடுகிறது. ஆனால், இதுவும் எவ்வளவு காலத்துக்கு இப்படியிருக்கும் என்று தெரியவில்லை என்கிறார். அதனால், இடுப்புக்குக் கீழே இயங்க முடியாத போராளிகளுக்காக இயங்கும் விடுதி ஒன்றில் (இது புலம்பெயர்ந்தோரினால் நடத்தப்படுவது) இடம் கேட்டு விண்ணப்பித்திருக்கிறாள். கிடைத்தால் போய் விடுவேன் என்றாள். அவளுக்கென்றொரு காணி வன்னியில் உண்டு. ஆனால், அதில் ஒரு வீட்டைப் போட்டுக் கொண்டு இருப்பதற்கு இன்னும் முடியவில்லை. அவளும் எத்தனையோ வழிகளால் முயற்சித்து விட்டாள். ஆனாலும் எதுவுமே கை கூடவில்லை. மலரினி, காலில் பெரிய காயம். சீராக நடக்க மாட்டாள். அதைவிட வயற்றிலும் பெருங்காயங்களின் தளும்பும் உள் வலியும் இன்னும் உண்டு. ஒரு திருமணம் ஏற்பாடாகி வந்திருக்கிறது. ஆனால், அந்த மணவாளன் தன்னைப் பற்றிய விவரங்களை முழுதாகவே மறைத்து அவளைத் திருமணம் செய்ய முற்பட்டிருக்கிறான். இறுதியில்தான் தெரிந்தது அவனுக்கு ஏற்கனவே மூன்று பிள்ளைகளும் மனைவியும் ஏற்கனவே உண்டென்று. “அரும்பொட்டில் தப்பினேன்” என்று சொன்னாள். “இனி திருமணத்தைப் பற்றிய பேச்சே வேண்டாம்” என்கிறாள். செந்நிலா, ஒரு கண்ணும் ஒரு கையும் இல்லை. ஆனாலும் ‘நம்பிக்கை’ என்றொரு சிறிய அமைப்பை உருவாக்கி அதை நிர்வகித்துக் கொண்டிருக்கிறாள். வீட்டிலிருந்து பொது வெளிக்குச் செல்லும்போது ஏற்படும் நெருக்கடியை விட, எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்களை விட, பொதுவெளியில் செயற்பட்டு விட்டு வீட்டுக்குத் திரும்பும் போது ஏற்படும் நெருக்கடியும் சிக்கல்களுமே பெண்களுக்கு அதிகம். அவர்கள் அவற்றை எதிர்கொள்வதுதான் மிகச் சிரமம். அதிலும் சற்று வயது அதிகமாகி விட்டால் யாரோடும் ஒட்டிக்கொள்ள முடியாமல் முகச்சுழிப்பு வரையில் கொண்டு போய் விடும். திருமண வயதை இழந்துவிட்டால் எப்படி இந்தப் பெண்ணை வீட்டில் வைத்துக்கொள்வது என்ற கேள்வி அம்மாவுக்கும் அப்பாவுக்கும் வந்துவிடும். சிலவேளை அம்மாவோ அப்பாவோ இல்லாமல் சகோதர்கள், சகோதரிகள் மட்டும் இருக்கிற வீடுகள் என்றால் சொல்லவே வேண்டியதில்லை. “வந்து விட்டாயா? இனி என்ன செய்யப்போகிறாய்?” என்று பச்சையாகவே கேட்டுவிடுவார்கள். என்னதான் பிள்ளைப் பாசம், சகோதர பாசம் என்றிருந்தாலும் மணமாகாத, மண வயதைக் கடந்த பெண் என்றால் அது ஒரு முள்தான். அதுவும் போராட்டத்தில் – இயக்கத்தில் – ஆயுதப் பயிற்சியைப் பெற்றவர்கள் என்பதால் கடுமையாக நடந்துகொள்வார்கள்; அதிக சுயாதீனத்தைக் கோருவார்கள் என்ற கற்பிதங்கள்… எனப் பல காரணங்கள் இந்த மதிப்பிறக்கத்தை உண்டாக்குகின்றன. இதனால், இந்த முன்னாள் போராளிகளுக்கு இன்று வந்திருக்கும் சோதனை சாதாரணமானதல்ல. சிலர் இவர்களை மதித்து சிறிய அளவிலான உதவிகளைச் செய்தாலும் அது வாழ்க்கையைத் தாங்கிக் கொள்ளும் அளவுக்கில்லை. வேலை வாய்ப்புகளைப் பெறக்கூடிய வயதெல்லையையும் கடந்துவிட்டார்கள்; அதோடு கல்வி மூலமாகப் பெறக்கூடிய தொழில்களைப் பெற்றுக்கொள்ள முடியாமலிருக்கிறார்கள். ஆனால், ஒவ்வொருவரோடும் கதைத்தபோது பொதுவாகவே சில விசயங்களை உணர்ந்துகொள்ள முடிந்தது. தங்களை ஏதோ ஒரு வகையில் இவர்கள் தேற்றிக்கொள்கிறார்கள். இதுதான் இனி நிலை என்ற பிறகு வேறு என்ன செய்ய முடியும் என்ற கட்டத்தில் அத்தனை நெருக்கடிகளையும் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். எதற்கும் உணர்ச்சிகளைக் காட்டிக்கொள்ளாமல் எதையும் ஜீரணித்துக்கொள்கிறார்கள். இதில் அவமானங்கள், துயரங்கள் அனைத்தும் சேர்த்தி. இந்த நிலை ஏதோ இந்த ஏழு பெண்களுக்கும் மட்டும்தான் என்றில்லை. இவர்களைப்போலப் போராட்டத்தில் (இயக்கத்தில்) பங்கேற்ற பல நூறு பெண்களுக்கு, ஆயிரக்கணக்கானோருக்கு ஏற்பட்டிருக்கும் நிலையாகும். இது பேரவலம். பெருந் துயரம். பெரும் அநீதி. முதலாவதாக இவர்கள் எதிர்த்தரப்பினால் தோற்கடிக்கப்பட்டார்கள். யுத்தத்தத்தின் மூலம். அதைத் தொடர்ந்து சிறையிலடைக்கப்பட்டனர். மீள வேண்டியிருந்தது. இரண்டு, மூன்று ஆண்டுகள் சிறையிருந்தே மீள வேண்டியிருந்தது. மீண்ட பெண்களைத் தமிழ்ச் சமூகம் தோற்கடிக்கிறது. அது நோக்கும் நிலை குறித்து, நடத்தும் விதம் குறித்து இங்கே நாம் எழுதித் தீராது. அத்தனை வலி நிறைந்த ஏராளம் ஏராளம் கதைகள் அவை. 1970களில் பொதுவாழ்வில் ஈடுபட்டு, (அரசியற் செயற்பாடுகளில் ஈடுபட்டதற்காக) சிறை சென்ற புஸ்பராணியின் அனுபவங்களே போதும் இந்தப் பெண்களுடைய நிலையை அறிந்துகொள்வதற்கு. அதற்கும் அப்பால் இவர்கள் இப்போது சமூகச் சிறையில் சிக்கியிருக்கிறார்கள். இது இரண்டாவது சிறை. இதனுடைய தண்டனைகள் மிக நுட்பமானவை. வீட்டிலிருந்தும் சமூக வெளியிலிருந்தும் நுட்பமாக ஓரம் கட்டுவது. ஆனால், அதை இவர்கள் வெளியே காட்டிக் கொள்வதில்லை. “என்ன இருந்தாலும் எங்களை வீட்டுக்காரர் (பெற்றோரும் சகோதர சகோதரிகளும்) ஏற்றுக்கொண்டிருப்பதே பெரிய விசயம். அவர்களும் என்னதான் செய்ய முடியும்? நாங்கள் தோற்றுப் போனதற்கும் தோற்கடிக்கப்பட்டதற்கும் அவர்கள் பொறுப்பாளிகளில்லையே!… நாங்களும் வீட்டிலிருந்திருந்தால் எங்களுடைய வாழ்க்கையும் வேறாகியிருக்கும்… ஆனால், நாங்கள் இன்னொரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து விட்டோமே. அந்தக் கடந்த கால வாழ்க்கையின் மூலம் எங்களுக்கு ஒரு திருப்தி இருக்கு. ஒரு நிறைவிருக்கு. எங்களால் முடிந்த ஏதோ ஒன்றை இந்தச் சமூகத்துக்காகச் செய்திருக்கிறோம். அதில் முழுமையான வெற்றி கிடைக்காது விட்டாலும் ஏதோ நடந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அது போதும். ஒரு காலத்தில் எல்லோரும் சேர்ந்து செய்ய வேண்டிய பணி என்ற நிலையில் நாங்கள் இணைந்துகொண்டு எங்களுடைய பங்களிப்பைச் செய்திருக்கிறம். அந்தக் காலப் பணியை களப்பணியாகச் செய்த நிறைவுக்கு முன்னால் எதுவும் ஈடாகாது. அந்த நிறைவு போதும் எங்களுக்கு. இதை எங்களைச் சமாதானப் படுத்துவதற்காகச் சொல்லவில்லை. எங்களைப் பற்றிய சுயமதிப்பீட்டிலிருந்தே சொல்கிறோம். இதுதான் எங்களுடைய பலம். மகிழ்ச்சி. அடையாளம் எல்லாம். ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு திருப்தி இருக்கும் அல்லவா. ஒரு மகிழ்ச்சி. ஒரு நிறைவு. ஒரு அடையாளம். அப்படி எங்களுக்கு எங்களுடைய கடந்த காலம் இருக்கு….” என்று சிரித்தபடி சொல்லிக் கொண்டே போகிறார்கள். நான் எதுவும் பேசாமல் இவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன். ஒவ்வொரும் தனித்தனியாகச் சொன்னாலும் எல்லோருடைய கூட்டு எண்ணமும் நம்பிக்கையும் கருத்தும் ஒன்றுதான். ஒரே சாரத்தைக் கொண்டவை. செந்நிலா, பேசும் போது தன்னுடைய அனுபவங்களை எழுதிக் கொண்டிருப்பதாகச் சொன்னாள். அதைப் படிக்கத் தந்தாள். அதிலே சில வரிகளின் கீழே அடிக்கோடிட்டிருந்தாள். அந்த வரிகள் இப்படி இருந்தன: ‘நாம் தேவதைகளாக ஒரு போதுமே இருந்ததில்லை. நிலமாக, நீராக, காற்றாக, வானாக, தீயாக இருந்தோம். அப்படித்தான் இன்னும் இருக்கிறோம்.’ இதைப் புரிந்துகொண்டு இவர்களுக்குரிய வாழ்க்கையை அளிப்பதற்கு, இவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்குவதற்கு, இவர்களும் மகிழ்ந்திருப்பதற்கு, மிஞ்சிய காலத்தை இவர்கள் இயல்பாக மற்றவர்களோடு கலந்து கொண்டாடுவதற்கு நம்மிடத்திலே ஏதாவது வழி உண்டா? http://wowtam.com/ta_in/4-after-the-war-what-is-the-condition-of-the-ltte/11519/?fbclid=IwAR3x3Zmv5GBFTVPctsQZRu0oWHkOaVb3EFOkKfduhgIR-TLDBzYA9Z5xgfs#
  22. சுதந்திர இலங்கையில் சாத்தானிடம் வரம் கேட்கும் நிலை… February 6, 2023 —- கருணாகரன் —- இலங்கை பொருளாதார ரீதியாக மீண்டெழுவது எப்பொழுது என்ற கேள்விக்கு இன்னும் பதில் இல்லை. ஆனால், ஐந்து தொடக்கம் பத்து ஆண்டுகளுக்குள் நாட்டில் யாருக்கும் அடிபணியாத பொருளாதார வலுவை உருவாக்குவேன் என்றிருக்கிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. எதனை ஆதரமாகக் கொண்டு, எப்படி அந்தப் பொருளாதார வலுவை உருவாக்கப் போகிறேன் என்று அவர் சொல்லவில்லை. அவர் மட்டுமல்ல, வேறு எந்தப் பொருளாதார நிபுணர்களும் கூட இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான வழிகள் எப்படி அமைய வேண்டும்? எவ்வாறு அமையமுடியும் என்று சொல்லவில்லை. ஆக மொத்தத்தில் இலங்கையின் பொருளாதார மீட்சியைக் குறித்து எவருக்கும் எதுவுமே தெரியாத நிலையே தொடர்கிறது. ஏதோ நடக்கிறது. போகிற வரையில் போகட்டும் என்ற அளவில்தான் பலரும் உள்ளனர். கடந்த மூன் று மாதங்களுக்கு முன்பு நாடு எரிபொருளுக்கும் அத்தியாவசியப் பொருட்களுக்குமாகத் தெருவில் நின்ற போது பலருக்கும் பொருளாதார நெருக்கடி பெரிதாக – உயிர்ப் பிரச்சினையாக இருந்தது. இப்பொழுது விலை அதிகம் என்றாலும் எல்லாமே கிடைக்கிறது. ஆகவே எப்படியாவது சமாளித்துக்கொள்வோம் என்றே பலரும் கருதுகிறார்கள். இதனால்தான் எல்லோரும் பொருளாதார நெருக்கடியை விட அரசியல் நெருக்கடியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றனர். இதில் எதிர்க்கட்சிகள் அடிக்கின்ற பம்பலும் பகடியும் சாதாரணமானதல்ல. தங்களிடம் ஆட்சி அதிகாரம் கிடைத்தால் தாம் என்ன செய்வோம் என்று எந்த விளக்கத்தையும் சொல்லாமலே சஜித், அநுர போன்ற தலைவர்கள் உள்ளனர். சங்கர் படத்தில் ஒரு நாள் முதல்வராக அர்ஜூன் வந்து அதிரடி செய்வதைப்போல இவர்களும் அதிரடிப்பர் என்றுதான் இவர்களுடைய ஆதரவாளர்களில் பலரும் கருதிக் கொண்டிருக்கின்றனர். நாடோ மீட்கக் கடினமான புதை சேற்றில் மாண்டுள்ளது என்பதைக் குறித்த விளக்கம் எவருக்கும் இல்லை. ஆகவே இந்த அரசியல் நெருக்கடி ஒரு போதும் தீரப்போவதில்லை. எத்தனை ஆண்டுகள் சென்றாலும் எத்தனை தலைமைகள் மாறினாலும். முக்கியமாக இனவாத அரசியலில் மாற்றம் நிகழப் போவதில்லை. அதற்கான சாயல்களையும் சாத்தியங்களையும் காணவே இல்லை. மக்கள் இனவாத அரசியலை ஆதரிக்கும் வரையில் மாற்றமோ மீட்சியோ ஏற்படாது. இதெல்லாம் நமக்குத் தெரியாமலே நடத்தப்படுகின்ற, நம்மைப் பொம்மைகளாக்கி ஆட்டுவிக்கின்ற ஏகாதிபத்திய நாடுகளின் – வல்லரசுகளின் கூட்டுச் சதி என்பதைப் பற்றி எவரும்சிந்திப்பதாகத் தெரியவில்லை. அப்படித் தெரிந்தாலும் அதைப் பற்றியெல்லாம் அவர்கள் பேசுவதாக இல்லை. பதிலாக இந்த வல்லரசுகளின் அங்கீகாரத்தையும் அனுசரணையையும் நட்பையும் பேணிக் கொள்ளவே பலரும் முற்படுகின்றனர். இதை அவர்கள் பகிரங்கமாகவே சொல்லிப் பெருமை அடித்துக் கொள்கிறார்கள். அந்தளவுக்குத்தான் நம்முடைய புத்திஜீவிகளின் அறிவுத் தராதரம் உள்ளது. சனங்களின் மீதான, சமூகம் மீதான, நாடு மீதான இவர்களுடைய பற்றுள்ளது. அமெரிக்கா ஒரு பக்கம், இந்தியா இன்னொரு பக்கம், சீனா இன்னொரு பக்கம் என்று இலங்கையை மட்டுமல்ல, இலங்கையர் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வல்லரசும் சுற்றி வளைத்துப்பிடிக்கப் பார்க்கிறது. இதற்காக இவை ஒவ்வொன்றும் நாட்டிலுள்ள புத்திஜீவிகள், ஊடகங்கள், ஊடகவியலாளர்கள், அரசியற் கட்சிகள், அரசியற் தலைமைகள் என தமக்குச் சாத்தியப்படக்கூடிய அனைத்துத் தரப்பையும் வளைத்துப் பிடிக்க முற்படுகின்றன. இதொரு பகிரங்கப்போட்டியாகவே நடக்கிறது. இதனால் மாறி மாறி ஒவ்வொரு கட்சியையும் ஒவ்வொரு தரப்பையும் ஒவ்வொரு ஊடகவியலாளரையும் ஒவ்வொரு புத்திஜீவிகளையும் தூண்டில் போட்டுப் பிடிக்கின்றன வல்லாதிக்கச் சக்திகள். இந்த வல்லாதிக்கச் சக்திகள் லேசுப்பட்டவை அல்ல. சட்டைப் பின்னை (சட்டை ஊசியை), அப்பிளை விற்பதில் தொடக்கம் ஆயுதம், உணவு தொடக்கம் அனைத்தையும் நமக்கு விற்றுச் சம்பாதிப்பவை. நம்மைச் சுரண்டிப் பிழைப்பவை. வல்லரசுகள், அவற்றின் தகுதியை விட்டுவிட்டு இப்படிச் சட்டை ஊசியையும் விற்குமா என்று நீங்கள் கேட்கலாம். குண்டூசி, நெற்றில் ஒட்டும் ஒட்டுப் பொட்டு தொடக்கம் எதையும் விற்றுக் காசாக்குவதே – சம்பாதிப்பதே – அவற்றின் முதலாவது இலக்கு. அதனால்தான் அவை வல்லரசுகளாக இருக்கின்றன. அதனால்தான் அவை நம்முடைய ஊரில் உள்ள சில்லறை ஆட்களோடும் கூட்டு வைக்கின்றன, இரகசியமாக தம்முடைய காரியங்களைச் செய்துகொள்கின்றன. இப்படியாக இருக்கும் ஒரு நிலையில்தான் இலங்கையின் பொருளாதாரம் எப்படி அமையப்போகிறது என்று நாம் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். தேசிய பொருளாதாரக் கொள்கை ஒன்று வகுக்கப்படாமல், பொருளாதார மறுசீரமைப்புத் திட்டம் ஒன்று உருவாக்கப்படாமல் அனைத்துத் தரப்பும் ஒன்று பட்டு உழைக்காமல் பொருளாதார மீட்சியையோ மறுமலர்ச்சியையோ எட்ட முடியாது. ஒரு இடர்கால நெருக்கடியில் ஒருங்கிணையும் தன்மையோடு அனைவரும் ஒருங்கிணைந்து செயற்பட்டே இதைக் கடக்க முடியும். இதிலிருந்து மீள முடியும். அதற்கு யாரும் தயாரில்லை. எல்லோரும் முட்டையில் மயிர் பிடுங்குவதிலேயே கண்ணும் கருத்துமாக உள்ளனர். ஐ.எம்.எவ் வின் கடனுதவி மூலமாக பொருளாதார மேம்பாட்டை எட்ட முடியும் என்றொரு அபிப்பிராயம் படித்தவர்கள் மட்டத்திற் கூட உண்டு. அதொரு மயக்கமே. ஐ.எம். எவ் என்பது இன்னொரு கடன்பொறி. நாட்டின் இறைமையையே இல்லாதொழிக்கும் சதி என்பதைப் பலரும் புரிந்து கொள்ளவில்லை. அதன் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டால்தான் அதனுடைய அருளும் அனுசரணையும் கிட்டும். இல்லையென்றால் பெப்பேதான். இதேவேளை ஐ.எம்.எவ்விடம் மண்டியிடுவதைத் தவிர வேறு வழி இப்பொழுது இலங்கைக்கு இல்லை. ஆக சாத்தானிடம் வரம் கேட்கும் நிலையே இப்போதுள்ளது. இதாவது பரவாயில்லை. இனி வரப்போகும் நிலைதான் மிகப் பயங்கரமானது. என்னதான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டங்களைச் சொன்னாலும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதாக இருந்தால் அதற்கு சில வழிமுறைகளே உண்டு. ஒன்று, உற்பத்தியைப் பெருக்குவது. குறிப்பாக ஏற்றுமதியை அதிகரிப்பது. இது இலகுவானதல்ல. உடனடிச் சாத்தியமுடையதும் அல்ல. ஆனால், இதை எட்டியே தீர வேண்டும். அது இப்பொழுது முடியாது. இரண்டாவது, அந்நியச் செலாவணியைத் திரட்டக் கூடிய வெளிநாட்டு வருமானத்தை அதிகரிப்பது. இதில் முக்கியமானது வெளிநாடுகளில் உள்ள – வேலைவாய்ப்புக்காகச் சென்ற மக்கள் தமது பணத்தை இங்கே உரிய வழிமுறைகளுக்கு ஊடாக அனுப்புவது. இதற்கு புலம்பெயர் சமூகத்தினர் தயாரில்லை. அவர்கள் வேறு வழிமுறைகளுக்கூடாகவே தமது பணப் பரிவர்த்தனைகளைச் செய்கின்றனர். ஆகவே அவர்களிடம் அதை நாம் எதிர்பார்க்க முடியாது. அதில் அவர்கள் பல வகையான லாபங்களைப் பெற்று ருசிப்பட்டவர்கள். எளிதில் அதிலிருந்து மீண்டு நாட்டின் நலனுக்காகச் செயற்படுவர் என்றில்லை. அரசும் இதைக் குறித்துச் சிந்தித்து எளிய வழிமுறைகளை உருவாக்கும் சாத்தியங்களும் இல்லை. அதை விட முக்கியமானது, இனமுரண்பாட்டு அரசியலை முடிவுக்குக் கொண்டு வராத வரையில் அவர்கள் அரசுக்கு எதிராகவே செயற்படுவர். அவர்களைப் பொறுத்தவரை இலங்கை அரசு என்பது எதிர்த்தரப்பு என்பதாகும். எனவே இதுவும் எதிர்பார்த்த அளவுக்குப் பெரிய நன்மைகளைத் தரும் என்றில்லை. அடுத்தது – மூன்றாவது, சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதாகும். இதைச் செய்ய வேண்டும் என்றால் இதற்கு கதவுகளை அகலத் திறக்க வேண்டும். இந்தக் கதவு திறத்தல் என்பது சாதாரணமானதல்ல. ஏறக்குறையத் தாய்லாந்தைப்போல கட்டற்ற பாலியல் பயன்பாட்டுக்கு (Free sex routine) இடமளித்தல் என்பதாக இது அமையும். கூடவே சிறார் துஸ்பிரயோகத்துக்கும் Child abuse க்கும் இடமளிக்க வேண்டியிருக்கும். அதாவது ஒன்று அல்லது இரண்டு தலைமுறை தன்னை விலைகொடுக்க வேண்டியிருக்கும். அப்பொழுதுதான் நாட்டை கொஞ்சமாவது மீட்டெடுக்க முடியும். இதைப் படிப்பதற்கோ இதைப்பற்றிக் கேட்பதற்கோ உங்களுக்குக் கடினமாக இருக்கலாம். ஆனால், வேறு வழியில்லை. இந்த நிலையை நாம் சந்தித்துத்தான் ஆக வேண்டும். இரண்டு தலைமுறைகள் நாட்டுக்காகத் தங்களைத் தியாகம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இரண்டு மூன்று தலைமுறை தவிர்க்க முடியாமல் இப்படித் தன்னைக் கொடுத்துத்தான் நாட்டை – மக்களை மீட்க முடியும். அடுத்து வரும் தலைமுறைகள் இதிலிருந்து மீள்வதற்காகக் கடினமாகப் போராட வேண்டியிருக்கும். சில வேளை இதுவே ஒரு பழக்கமாகி, வழக்கமாகி மேலும் தொடரவும் கூடும். அதாவது இந்தச் சீரழிவு மேலும் தொடரவும் கூடும். இலங்கையின் பண்பாடு இது என்பதாகியே விடவும் கூடும். தங்கத் தீவின் நிலவரம் இதுதான். இலங்கைத்தீவை வேறு விதமாக மீட்பதற்கு யாருமில்லை. உள்நாட்டிலும் யாருமில்லை. வெளியிலும் யாருமில்லை. அதாவது அதன் பிள்ளைகளுமில்லை. அதன் நண்பர்களுமில்லை. வீழ்ந்து கிடக்கும் நாட்டை மேலும் மேலும் கடன் பொறிக்குள் தள்ளவே அத்தனை சக்திகளும் முயற்சிக்கின்றன. வறுமைக்குள்ளான மக்களை வட்டிக் கம்பனிகள் வளைத்துப் பிடிப்பதைப்போலவே இன்றைய நிலை உள்ளது. மீட்பர்களில்லாத தேசமாகிவிட்டது இலங்கை. யாருடைய சொல்வழியும் கேளாத பிள்ளைகளை – மனிதர்களை – யாரும் பொருட்படுத்தாத ஒரு நிலை, ஒரு கட்டம் வருமல்லவா! அதைப்போன்ற நிலை – கட்டம்தான் இது. இதிலிருந்து மீள்வதாக இருந்தால் அது நம் அனைவருடைய கூட்டுப் பொறுப்பாகும். தனியே அரசாங்கத்தின் பொறுப்பென்று சொல்லி விட்டு வாழாதிருக்க முடியாது. அப்படிச் சொன்னாலும் அரசாங்கத்தினால் என்னதான் செய்து விட முடியும்? https://arangamnews.com/?p=8670
  23. 13 பற்றிய யதார்த்தம் February 1, 2023 — கருணாகரன் — முப்பத்தி ஆறு வருடங்களுக்குப் பிறகு 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்குத் தயார் என்று இலங்கை ஜனாதிபதி ஒருவர் (ரணில் விக்கிரமசிங்க) பகிரங்கமாகத் தெரிவித்திருக்கிறார். இதைக் குறித்த உரையாடல்கள் தீவிரமடைந்துள்ளன. “மாகாணசபைகளுக்கான அதிகாரத்தை வழங்கக் கூடாது. அப்படி வழங்கினால் அதைக் கடுமையாக எதிர்ப்போம்” என்று கூறுகிறது பிக்குகள் முன்னணி. இதே எதிர்ப்பை வெளியிட்டுள்ளன விமல் வீரவன்ச போன்றோரின் சிறிய சில இனவாதக் கட்சிகள். இதற்கு நிகராக மறுமுனையில் “மாகாணசபைகளுக்காகவா எங்களுடைய போராட்டமெல்லாம்?” என்று கேட்கின்றன அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் உள்ளிட்ட சில தமிழ் அரசியற் தரப்புகள். கூடவே புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற தமிழ் அமைப்பினர்களிற் சிலரும் “மேல்நிலை தமிழ் அரசியல் அபிப்பிராயவாதி”களும் இதே கேள்வியை எழுப்பியுள்ளனர். (இவர்களுடைய கற்பனைக்கு எல்லையே இல்லை. மாகாணசபையைத் தவிர்த்து வடக்குக் கிழக்கு மாகாணங்களை அல்லது இவர்கள் சொல்வதைப்போல தமிழர் தாயகத்தை எந்த அடிப்படையில் இணைத்து உரிமைகளைப் பெறுவது? அதில் முஸ்லிம் மக்களுக்கான இடமென்ன? அதற்கு அவர்களுடைய சம்மதம் உண்டா? நடைமுறைச் சாத்தியமான திட்டமும் தீர்வும் என்ன? என்பவை குறித்தெல்லாம் இந்தத் தரப்புகள் ஒரு போதுமே தெளிவாகப் பேசுவதில்லை. பதிலாக அதிதீவிர அரசியற் பிரகடனத்தை (தமிழீழம்) மட்டும் வசதியான நிலையில் இருந்து கொண்டு திருவாய் மலர்ந்தருள்கின்றன). ஆக தமிழ், சிங்களத் தரப்பிலுள்ள மிகச் சிறிய ஆதரவுத் தளத்தைக் கொண்டுள்ள சிறிய தரப்பினரே மாகாணசபை முறைமையை – அதற்கான அதிகாரங்களைக் குறித்து – தமது எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளியிட்டுள்ளன. இவை எப்போதும் இப்படித்தான். நடைமுறைச் சாத்தியமாகச் சிந்திப்பதில்லை. பிரச்சினைகள் தீர்வதை விரும்புவதில்லை. பிரச்சினைகளை வளர்த்தே தம்மை வாழ வைக்கின்றன. ஆனால், ஏனைய பெருங்கட்சிகள் அனைத்தும் இதற்கு ஆதரவாகவே உள்ளன. இதேவேளை ஜனாதிபதியின் இந்த அறிவிப்பைக் குறித்து இதுவரையில் முஸ்லிம் தரப்புகள் ஏதும் சொல்லவில்லை என்பது கவனத்திற்குரியது. அவை என்ன நிலைப்பாட்டை எடுக்கவுள்ள என்பது கேள்வியே! இவ்வளவு காலமும் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருந்தன. இலங்கை இந்திய உடன்படிக்கையில் கூறப்பட்ட சில அதிகாரங்களை 1990 இல் அன்றைய ஜனாதிபதி ஆர்.பிரேமதாச தந்திரோபாயமாக வெட்டியெடுத்திருந்தார். இதற்கு அவர் அப்பொழுது விடுதலைப் புலிகளையும் புலிகளுக்கு இணக்கமாக இருந்த ஈரோஸ் இயக்கத்தையும் பயன்படுத்தினார். மாகாணசபையைப் பலவீனப்படுத்தி, அதில் அப்பொழுது அதிகாரத்தில் இருந்த ஈ.பி.ஆர். எல்.எவ்வை அப்புறப்படுத்துவதற்கு புலிகள் விரும்பினர். இதை தமக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திப் பிரேமதாச வெற்றியடைந்தார். இதனால்தான் 1990 இல் வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபையை கலைத்தார் அ.வரதராஜாபெருமாள். இதனால்தான் மாகாணசபை முறைமை தொடர்ந்தும் நம்பிக்கையீனமாகவும் சர்ச்சைக்குரியதாகவும் நோக்கப்படுகிறது. இதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக அதற்குப் பிறகு ஆட்சியிலிருந்த அரசாங்கங்களும் அதிகாரத்திலிருந்த ஜனாதிபதிகளும் மாகாணசபையின் அதிகாரங்களை வழங்காமல் – நடைமுறைப்படுத்தாமல் இழுத்தடித்தே வந்தனர். போதாக்குறைக்கு ஜே.வி.பியின் மூலமாக இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபையை சட்டரீதியாகப் பிரித்தனர். ஆனாலும் 2009 இல் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பிறகு உருவான அரசியற் சூழலில் மாகாணசபையைத் தவிர, வேறு உடனடி மார்க்கம் ஏதுமில்லை என்ற யதார்த்தம் உருவானது. இதனால்தான் மாகாணசபைகளுக்கான அதிகாரத்தை முழுமையாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. இதை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸைத் தவிர்ந்த ஏனைய தமிழ்க்கட்சிகள் அனைத்தும் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. கடந்த ஆண்டு 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டு ஆறு தமிழ்க் கட்சிகள் இந்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தன. இதை விட தனித்தனியாகவும் ஏனைய தமிழ்க்கட்சிகள் இதை இந்தியாவிடமும் இலங்கை அரசிடத்திலும் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில்தான் இந்தியாவும் இந்தியாவின் வலியுறுத்தலின் அடிப்படையில் ஐ.நாவும் இவற்றின் அடிப்படையில் இப்பொழுது ரணில் விக்கிரமசிங்கவும் 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதைப் பற்றிப் பேசும் நிலை உருவாகியுள்ளது. அதாவது 13 ஐ நடைமுறைப்படுத்துவதற்கு மிகச் சாதகமான ஒரு சூழல் கனிந்து வந்துள்ளது என்பதை மனதிற் கொண்டே ரணில் விக்கிரமசிங்க கடந்த நவம்பரில் வரவு செலவுத்திட்ட உரையின்போது இனப்பிரச்சினைக்கு ஓராண்டுக்குள் தீர்வு காணப்படும் என்று நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார். இதில் அவர் ஓரளவுக்கு உறுதியாக இருப்பதாகவும் தெரிகிறது. அவருடைய நோக்கில் (சிங்களநோக்கு நிலையில்) இதற்கு மேலான அதிகாரத்தை வழங்குவதற்குப் பதிலாக 13 உடன் நின்றுவிடலாம் என்றும் யோசித்திருக்கக் கூடும். இதை விடவும் அதிகமான அனுகூலங்களை ரணில் விக்கிரமசிங்க தன்னுடைய அரசியல் நலனுக்காகவும் சிங்கள மேலாதிக்க நலனுக்காகவும் சிந்திக்கலாம். ஆனால், தமிழ் பேசும் சமூகங்களைப் பொறுத்து இதை அவை எப்படி அணுகப் போகின்றன? ஏனெனில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கரும் 13 ஐப் பற்றியே பேசியிருக்கிறார். மட்டுமல்ல, இந்த விடயம் உள்பட ஏனைய விடயங்களைப் பற்றிப் பேசுவதற்காகவும் ரணில் விக்கிரமசிங்கவை அழைத்திருக்கிறது இந்தியா. ஆக மொத்தத்தில் இப்பொழுது 13 ஐ நடைமுறைப்படுத்துவதே முதன்மையான விடயமாக மாறியுள்ளது. ஆனால், இதற்கு தமிழ்த் தரப்பில் இன்னொரு சிக்கலும் ஏற்பட்டுள்ளது. உள்ளுராட்சிமன்றங்களுக்கான தேர்தல் அறிவிப்பினால் ஏற்பட்டுள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வெளிப்படையான விரிசல் 13 நடைமுறைப்படுத்தும் நடவடிக்கை மற்றும் அதற்கான பேச்சுகளைப் பாதிக்கக் கூடிய நிலையே ஏற்பட்டுள்ளது. இதேவேளை ரணில் விக்கிரமசிங்க தான் அதிகாரத்துக்கு வந்த பின்னர் பல விதமான நல்லெண்ண சமிக்ஞைகளை வெளிப்படுத்தி வருகிறார். சுதந்திர தினத்தையொட்டி இன்னொரு தொகுதி அரசியற் கைதிகள் விடுவிக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை நீதிஅமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ அறிவிப்பார் என்று தெரிகிறது. கூடவே வலி வடக்கில் மேலும் ஒருதொகுதி நிலத்தை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் தமிழ்த் தேசியத் தரப்புகள் இதையிட்டெல்லாம் திருப்திப்பட்ட மாதிரித் தெரியவில்லை. இறுதியில் 13 உம் இல்லை. சமஸ்டியும் இல்லை. தமிழீழமும் இல்லை என்ற நிலைதான் வருமோதெரியாது. ஏனென்றால் 1987 இல் 13 ஐ வலுப்படுத்தக் கூடிய சூழல் இருந்தது. தமிழ்த்தரப்பில் காணப்பட்ட பிளவே (புலிகள் – ஈ.பி.ஆர்.எல்.எவ் + இந்திய அரசு) அது பலவீனமாகக்காரணமாகியது. இப்பொழுது அதே 13 ஐ பலப்படுத்துவது, நடைமுறைப்படுத்துவது என்று பேசுவதற்கே 36 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன. இடைப்பட்ட காலப்பகுதியில் கொடுக்கப்பட்ட விலை – இழப்புகள் கொஞ்சமல்ல. இந்த 36 ஆண்டு காலத்திலும் தமிழர்கள் பெற்றது எதுவும் இல்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் செய்த தியாகங்கள், நடத்திய போராட்டங்கள், சந்தித்த இழப்புகள் எல்லாவற்றுக்குப் பின்னும் 13 ஐ நடைமுறைப்படுத்துவது – அமுலாக்குவது என்றளவில்தான் பேச்சுகள் உள்ளன. இதற்கு அப்பால் செல்வதற்கு இந்தியாவோ பிற சர்வதேச சமூகமோ சிந்திப்பதாகவும் தெரியவில்லை. இந்த நிலையில் சோதனையாகவும் சாதனையாகவும் 13 வந்து முன்னே நிற்கிறது. எண் சோதிடத்தின்படி 13 என்பது அதிர்ஸ்டமற்ற எண் என்று சொல்வார்கள். தமிழர்களுக்கும் இலங்கைக்கும் அது என்ன மாதிரியான எண் என்பது வரலாற்றின் முடிவாகும். அப்படியான – அதற்கான ஒரு வரலாற்றுத் தருணம் இப்பொழுது வந்துள்ளது. யதார்த்தவாதிகள் 13 வரவேற்கிறார்கள். கற்பனாவாதிகள் எதிர்க்கிறார்கள். இனவாதிகள் எதிர்க்கிறார்கள். நியாயவாதிகள் ஆதரிக்கிறார்கள். இப்படியான ஒரு விசித்திரத்தின் முன்னே நிற்கும் 13 ஐப்பற்றிய உண்மையான நிலவரத்தை அடுத்து வரும் மாதங்களில் துலக்கமாக – நிர்ணயமாக அறிந்து கொள்ளலாம். ஆம், தமிழ் பேசும் மக்களுடைய எதிர்காலத்தையும்தான். https://arangamnews.com/?p=8637
  24. பேச்சுக்கான முஸ்தீபு மும்முரம்? December 12, 2022 — கருணாகரன் — எதிர்பார்க்கப்பட்டதற்கும் மாறாக அடுத்த சில தினங்களில் அதிகாரப்பகிர்வுக்கான பேச்சுகள் நடப்பதற்கான சூழல் கனிந்துள்ளது போலிருக்கு. தமிழ்த் தரப்பிலும் இதற்கான கவனம் ஏற்பட்டுள்ளது. தமிழ்க் கட்சிகள் இதைப் பற்றிக் கூடிப் பேசுவது, பேச்சுகள் குறித்துப் பொதுவெளியில் உரையாடுவது, பொறிமுறைகளைப் பற்றிச் சிந்திப்பது என்று பச்சைக் கொடி காட்டியுள்ளன. ரெலோ இதில் இன்னும் முன்னுக்கு வந்து இந்தச் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. இது தொடர்பாக – பேச்சுக்கு செல்லும்போது நாம் ஒரு பொறிமுறையை வகுத்துக் கொள்ள வேண்டும் என்று ரெலோவின் பேச்சாளரான சுரேந்திரன் கேட்டுள்ளார். “ஐ.நா. விடயங்களில் மாத்திரமல்லாமல் அன்றாட விடயங்களிலும் தமிழ் மக்கள் எதிர்கொண்டிருக்கும் அவசர அவசியமான பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் நாங்கள் அக்கறையோடும் செயலாற்றுவோம். அறிக்கைகளைத் தாண்டி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற செயல் வடிவம் கொடுப்பதே அர்த்தமுள்ளதாக அமையும் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டவர்கள். தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்காக பல வழிகளிலும் போராடி வரும் வரலாற்றைக் கொண்ட எமது கட்சி தொடர்ந்தும் உறுதியுடன் பயணிக்கும் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம்” என்று சொல்லியுள்ளார். ஆனால், இந்தப் பேச்சுகள் எந்த அடிப்படையில் நடக்கும் என்பதைப் பற்றி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அனைத்துக் கட்சிகளுடனும் நடக்குமா? பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளுடன் நடக்குமா? அரசுக்கும் தமிழ் தரப்புக்கும் இடையில்தான் நடக்குமா?தமிழ்த் தரப்பினரோடு முஸ்லிம்களும் இணைத்துக் கொள்ளப்படுவரா? மலையகக் கட்சிகளுக்கான இடம் இதில் உண்டா? சிறுபான்மைத் தேசிய இனங்களுடைய பிரச்சினைக்கான தீர்வு என்ற அடிப்படையில் நடக்குமா? அல்லது பல்லினங்களைக் கொண்ட நாட்டுக்குரிய அடிப்படைகளைப் பேணி பன்மைத்துவ இலங்கை என்பதாக நடக்குமா? அல்லது இது பற்றிக் கேள்வி எழுப்பியுள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டிருப்பதைப்போல, “வடக்குக் கிழக்கு தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பானதா?” (இதில் அவர் வடக்குக் கிழக்கிலுள்ள முஸ்லிம்களைப் பற்றிக் குறிப்பிடவில்லை). “அல்லது புதியதோர் யாப்புத் தொடர்பானதா?” “அல்லது வடக்குக் கிழக்கு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பானதா?” (அன்றாடப் பிரச்சினைகளுக்கான பேச்சுகள் என்றால், அது இன்று நாடு முழுவதற்குமானதாகவே உள்ளது. முக்கியமாக பொருளாதார நெருக்கடி. இதைக் கடந்து வடக்குக் கிழக்குப் பிரச்சினை பிரத்தியேகமானது என்றால் இராணுவ நெருக்கடி, நில அபகரிப்பு, பௌத்த மயமாக்கல் போன்றவையாகும். இதற்குப் பெருமெடுப்பிலான பேச்சுகளை அரசாங்கம் இப்பொழுது முன்னெடுக்கும் என்றில்லை) என எதுவும் தெரியவில்லை. ஆனால், பேச்சுகள் நடக்கவுள்ளன. எந்த அடிப்படையில் பேச்சுகள் நடக்கும் என்று முற்கூட்டியே அறிவித்தால் அதையொட்டி ஆயிரம் பிரச்சினைகளை ஒவ்வொரு தரப்பும் கிளப்பக் கூடும். போதாக்குறைக்கு ஊடகங்கள் கண்டபாட்டுக்கு எழுதி சூழலைக் கெடுத்து விடக் கூடும். மேலும் பௌத்த பீடங்கள் உறங்கு நிலையிலிருந்து விழித்துக் கொண்டு சந்நதமாடலாம். எல்லாவற்றையும் விட சமாதானத்தின் எதிரிகளும் இனவாதிகளும் துள்ளிக் குதித்துக் கொண்டு வீதியில் இறங்கி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்யக் கூடும் என்று கருதி இதைப்பற்றி முற்கூட்டியே பகிரங்கமாகப் பேசாமல் விடலாம். ஆனாலும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்பதைப் பகிரங்கமாகப் பேசிய ஜனாதிபதி, அதற்கு எல்லோரும் தயாரா என்பதையும் கேட்டிருந்தார். இது அவர் சமாதானத்தின் மீது கொண்டுள்ள ஆர்வத்தையும் விருப்பத்தையும் காட்டுகிறதா? அல்லது இந்த இனப்பிரச்சினையை இதற்கு மேலும் தாங்க முடியாதடா ராமா என்று எண்ணினாரோ தெரியவில்லை. எப்படியோ, இந்த அறிவிப்பு வந்து ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்கு மேலாகிறது. இதுவரையில் எந்தப் பெரிய சலசலப்பையும் காணவில்லை. ஆகவே கொஞ்சம் வெளிப்படையாகப் பேச வேண்டிய விடயங்களை அரசாங்கம் பேசலாம். அல்லது பொறுத்திருந்து பேச்சு மேசையில்தான் பேசப் போவதாக இருந்தால், அதுதான் சரியென்று அரசாங்கம் கருதினால் நாமொன்றும் அதை மறுத்து முந்திரிக் கொட்டை போல அப்படி இப்படி ஒன்றும் சொல்லிக் கெடுக்கப்போவதில்லை. இருந்தாலும் இந்தப் பேச்சுகளைக் குறித்து (பேச்சுக்கான அறிவிப்பைக் குறித்து) சந்தேகத்தைக் கிளப்புவோர் பலவற்றையும் சொல்லிக் கொண்டேயிருப்பதையும் நாம் புறக்கணித்து விட முடியாது. ஏனென்றால் பலரும் கருதுவதைப்போல இந்தப் பேச்சுவார்த்தையும் காலத்தைக் கடத்தும் தந்திரோபாயமாக இருக்குமா? என்ற ஐயமும் ஒரு பக்கத்தில் உண்டு. ரணில் விக்கிரமசிங்கவின் அணுகுமுறை, அரசியற் தந்திரோபாயம், தற்போதைய சூழல் எல்லாம் அப்படிச் சிந்திக்க வைக்கிறது. ஏன் சிங்களத் தரப்பின் அரசியல் முதிர்ச்சியை எதிர்கொள்ளக் கூடிய நிலையில் தமிழ்த் தரப்பில் இன்னும் வளர்ச்சி இல்லை. ஒரு பழைய வாய்பாட்டை மட்டும் வைத்துக்கொண்டு, அதே பழைய பாணி அணுகுமுறையில் போய்ப் பேச்சுக் கதிரையில் குந்த வேண்டிய நிலைதான் உள்ளது. ஆனால், பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டிய வரலாற்றுச் சூழல் இது என்பதை பலரும் புரிந்துள்ளனர். இதில் ரணில் விக்கிரமசிங்கவும் அடங்குவார். வழமையான தந்திரோபாயங்களை இனிமேலும் தொடர முடியாது என்று உள்ளுணர்வு உணர்த்தலாம். அதற்காக பேச்சுவார்த்தையில் எடுத்ததற்கெல்லாம் சந்தேகப்படுவதோ பின்னிற்பதோ பொருத்தமானதில்லை. வரலாற்றுப் படிப்பினைகளை மனதில் கொள்வது வேறு. அதை எந்த அடிப்படையில் நோக்க வேண்டும் என்பது முக்கியமானது. இதன் அர்த்தம் கண்மூடித்தனமான நம்பிக்கையோடு பேச வேண்டும். விட்டுக் கொடுக்க வேண்டும் என்று அல்ல. ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் அனைவரும். இது போர்ச் சூழலோ போர் முடிந்த போதிருந்த சூழலோ இல்லை. போர்ச் சூழலில் புலிகள் (தமிழர் தரப்பும்)) பலமாக இருந்தனர். ஏறக்குறைய சமனிலையில் இருந்தனர். அந்தச் சூழல் வேறு. அதனால் அப்போதைய பேச்சுகளின் தன்மையும் வேறாகவே இருந்தது. அடிப்படைப் பிரச்சினை, தீர்வின் இலக்கு பொதுவாக இருந்தாலும் சூழலின் தன்மை வேறாக இருந்தது. போரின் முடிவுக்குப் பின்னர் புலிகள் தோற்கடிக்கப்பட்டு, அரசு வெற்றிபெற்று மேலெழும்பியிருந்த சூழல். ஆகவே அந்த மனநிலையிலிருந்தே (வெற்றிபெற்ற மனநிலை) பல விடயங்களும் அணுகப்பட்டன, கையாளப்பட்டன. போர்ப் பாதிப்புத் தொடர்பாக எழவேண்டிய, எழுந்திருந்த குற்றவுணர்ச்சியோ, பொறுப்புணர்ச்சியோ பெரிய அளவில் – அதிகார மட்டத்தில் ஏற்படவில்லை. அமைதி, சமாதானம், அன்பு, கருணை என்று போதனைகளைச் செய்யும் பௌத்தத் தரப்பும் இந்தப் பொறுப்பையும் கடப்பாட்டையும் உணர்ந்து செயற்படவில்லை. இதைப்போலவே மிஞ்சியுள்ள நிலைமை, யதார்த்தச் சூழல் போன்றவற்றைக் கவனத்திற் கொண்டு தமிழ்த் தரப்பும் செயலாற்றவில்லை. ஆனால், சிங்களத் தரப்பின் தவறும் தமிழ்த் தரப்பின் தவறுகளும் சமனிலையானவை அல்ல. தமிழ்ச் சூழலை யதார்த்தத்துக்கு வெளியே நிறுத்தியதில் புலம்பெயர் தரப்பில் ஒரு பகுதியினருக்கும் உண்டு. அவர்கள் வாழ்க –பிரச்சினையின் தாற்பரியத்துக்கு – யதார்த்தத்துக்கு வெளியே நின்று (கற்பனாவாத) அரசியலைச் சிந்திப்பதன் வெளிப்பாடு அது. எது எப்படியோ இன்னும் நாம் எதையும் சுழித்து விளையாடலாம் என்றில்லை. அது இனப்பிரச்சினைக்கான தீர்வாக இருக்கலாம். பொருளாதார நெருக்கடியாக இருக்கலாம். ஊழல் முறைகேடுகளாக இருக்கலாம். இவை எதற்கும் தீர்வைக் காணாமல் காலத்தை இழுத்தடிக்கலாம் என்று கருதிச் செயற்பட்டால் அதன் விளைவு மிக மோசமானதாகவே இருக்கும். அப்படி இழுத்தடிப்புச் செய்து சுத்து மாத்துக் காட்டியதன் விளைவையே நாடு இன்று சந்தித்துக் கொண்டிருக்கிறது. இன்று ஒவ்வொரு குடிமக்களுடைய தோளிலும் நெருக்கடிச் சுமை ஏறியுள்ளது. தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள், மலையக மக்கள், பிற இனத்தவர் என்ற எந்தப் பேதமும் இல்லாமல் அனைவரும் சுமக்க முடியாத சுமைகளைச் சுமந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய இந்தச் சுமையேற்றத்துக்கு தனியே சில அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் மட்டும் காரணமில்லை. மக்களாகிய நாமும்தான் காரணம். நம்முடைய அசமந்தத்தனமும் கண்மூடித்தனமாக செயற்பாடுகளும் காரணம். நாம் தெரிவு செய்த பிரதிநிதிகள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்கள் என்ற அதீத நம்பிக்கையினால் அவர்கள் எடுத்த, எடுக்கின்ற தீர்மானங்கள் –முடிவுகள், அவர்களுடைய அணுகுமுறைகள் எதைப்பற்றியும் நாம் கேள்வி கேட்கவில்லை. இதனால் தவறுகள் வளர்ந்து பெருத்தன. அது வளர்ந்து இன்று நம்முடைய கழுத்தைப் பிடித்து இறுக்குகின்றன. இன்று நாடு உலக வங்கி, ஐ.நா. அனைத்துலக சமூகம் என அனைவரிடத்திலும் கையேந்தி நிற்கிறோம். வளமான ஒரு நாட்டை நம்முடைய கையில் வைத்துக் கொண்டு பிச்சைப் பாத்திரம் ஏந்துகிறோம். ஒரு அழகிய, சிறிய நாட்டில், இரண்டு மொழியைப் பேசுகின்ற நான்கைந்து இனத்தைச் சேர்ந்த மக்களாகிய நாம் ஒற்றுமையாக நின்று செயலாற்ற முடியாமல் உள்ளோம். ஆளாளுக்குப் பழியைச் சுமத்திக் கொள்ளும் பழங்குடிச் சமூக மனநிலையில் உள்ளோம். காற்சட்டை அணிந்து அதி நவீன கணினியையும் கைத் தொலைபேசியையும் நம் கையில் வைத்திருப்பதால் மட்டும் நாம் நவீனமடைந்து விட்டோம் என்று அர்த்தமல்ல. நம்முடைய சிந்தனை முறையினால், நடைமுறைகளால், எண்ணங்களால், செயற்பாடுகளில், நாம் உண்டாக்குகின்ற விளைவுகளால், நம்முடைய அணுகுமுறைகளால், சவால்களை எதிர்கொள்ளும் முறையினால், பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளும் விதத்தினால், அவற்றைத் தீர்க்கும் வழிகளால், சிந்தனையினால் நாம் நவீனமானவர்களாக இருக்க வேண்டும். நவீனத்தின் முக்கியமான அடிப்படை பன்மைத்துவமும் ஜனநாயகமுமாகும். இதை மறுக்கும்தோறும் நாம் பழங்குடி மனநிலையுடையோராகவும் பழங்குடிச் சமூகத்தினராகவுமே இருப்போம். இன்றைய இலங்கை மக்களில் எண்பது வீதமானோர் அப்படித்தான் உள்ளனர். இதனால்தான் இனவாதக் கட்சிகள் வெற்றிவாக சூடுகின்றன. சாதியம் அப்படியே பேணப்படுகிறது. நீதிபதிகளே நீதி மன்றத்துக்கு வெளியே தங்கள் வீடுகளிலும் வாழ்விலும் சாதியத்தையும் இனவாதத்தையும் தாராளமாகப் பேணுகிறார்கள் என்றால்…இதை விட வேறு என்ன சான்று வேண்டும்? நீதிபதிகள் மட்டுமல்ல, ஆசிரியர்கள், கல்விப்புலத்தினர், ஆன்மிகத்துறையில் இயங்குவோர், மதகுருக்கள் எனப் பல தரப்பினரும் இனவாதிகளாகவும் சாதியவாதிகளாகவும் மதவாதிகளாகவும்தானே உள்ளனர். இந்த மாதிரி வாத நோய்களைக் கொண்டிருப்போர் பழங்குடி மனநிலையின் பிரதிநிதிகளேயாவர். பழங்குடி மனநிலை என்பது எப்போதும் பிறரை எதிர்ப்பதிலும் பிறரைக் குறித்து சந்தேகப்படுவதுமாகவே இருக்கும். ஆனால், இதையெல்லாம் கடந்து விடுமாறு வரலாறு நம்மை நிர்ப்பந்திக்கிறது. ஏனென்றால் வரலாறு நிகழ்ந்து கொண்டிருப்பது நவீனத்துவத்தின் காலத்தில். உலகம் இயங்குவதும் நவீனத்துவத்தின் காலத்தில்தான். ஆகவே அது அதன் அடிப்படையிலேயே நிபந்தனைகளை விதிக்கும். அதற்கு மாறாக நாம் சிந்தித்தால், செயற்பட்டால் நம்மைத் தூக்கி எறிந்து விடும். அதனுடைய சுழற்சி அப்படியானது. இப்பொழுது கூட நாம் இவற்றையெல்லாம் புரிந்து கொள்ளத் தவறினால் தண்டனைகளை அனுபவித்தே தீர வேண்டும். இதை இலங்கையர்கள் ஒவ்வொருவரும் தெளிவாகப் புரிந்து கொள்வது அவசியம். இப்பொழுது நம்முன்னே உள்ள தெரிவுகள் இரண்டுதான். பிரச்சினையை வளர்க்கப்போகிறோமா? தீர்க்கப்போகிறோமா என்பதேயாகும். பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள். விரும்புகிறார்கள். ஆனால் பிரச்சினையை வளர்க்க வேண்டும் என்றே அரசியற் தரப்பினர் சிந்தித்தனர். செயற்பட்டனர். இந்த இடைவெளி நிகழ்ந்து கொண்டே இருந்தது. இனி இப்படி நிகழ முடியாது. இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக மக்கள் விழிப்படைய வேண்டிய சூழல் – காலகட்டம் இது. இலங்கையர்களாக நாம் மகிழ்ந்திருக்கப் போகிறோமா? அல்லது முரண்பாடுகளை வளர்த்து, உள் நாட்டில் நீதியை மறுத்து, பிறருக்கு அடிமையாக இருக்கப்போகிறோமா? என்ற கேள்வியை நாம் கேட்டுக் கொள்ள வேணும். சகோதரர்களுக்கு நீதியை மறுத்து விட்டு அந்நியருக்கு அடிமையாக இருப்பது எவ்வளவு முட்டாள்தனமாகும்? அதை விட முட்டாள் தனமானது சகோதர்கள் அடிபட்டுக் கொண்டிருப்பதாகும். இந்தப் பேச்சுவார்த்தையை ஆக்கபூர்வமானதாக முன்னெடுத்து அர்த்தபூர்வமானதாக்குவதற்கு முயற்சிப்போம். https://arangamnews.com/?p=8383
  25. போருக்கு பிந்திய அரசியல் என்றால் என்ன? December 6, 2022 ~ கருணாகரன் ~ “போருக்குப் பிந்திய அரசியல் என்று சொல்கிறீர்களே! அது என்ன? அதை எப்படி முன்னெடுப்பது?” என்று என்னுடைய கடந்த வாரங்களில் வெளிவந்த கட்டுரைகளைப் படித்தவர்கள் கேட்கின்றனர். இப்படிக் கேள்வி எழுந்திருப்பதே மகிழ்ச்சிக்குரியது. அதாவது சிலராவது சிந்திக்கத் தயாராக உள்ளனர் என்ற மகிழ்ச்சி. அது என்ன என்று பார்க்க முன், வரலாற்றுப் போக்கில் நிகழ்ந்த சில முன்னுதாரணங்களைப் பார்க்க வேண்டும். அரசியற் சரிகளும் தவறுகளும் வரலாற்றைத் தீர்மானிப்பதில் முக்கியமான பங்கை அளிப்பதால் அதைக்குறித்து பார்க்க வேண்டியது அவசியமாகிறது. 1970 இன் அரசியல் தவறு உண்டாக்கிய விளைவு: 1970 களில் அன்றைய தமிழரசுக்கட்சி – தமிழர் விடுதலைக்கூட்டணி காலப் பொருத்தமற்ற அரசியலையே முன்னெடுத்தது. அன்றைய நிலவரத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு செயற்பட விளையாத காரணத்தினால் தமிழ் மக்களும் அரசியல் நெருக்கடிக்குள்ளாகினர். அந்தக் கட்சியினரும் பின்னர் பெரும் விலையைக் கொடுக்க வேண்டியிருந்தது. அன்று நிலவிய பலவீனம், செயலின்மை, ஏமாற்று நாடகம் போன்றவற்றை அம்பலப்படுத்திய இளைஞர்கள் “சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள்”, “திருவிழா” போன்ற நாடகங்களை மக்கள் மத்தியில் நடத்தினர். இது ஏறக்குறைய இன்றைய நிலைக்கு ஒப்பானது. எப்படியென்றால், அன்றைய சூழலுக்குப் பொருத்தமில்லாத அரசியலை அன்றைய தமிழ்த் தலைமைகள் முன்னெடுத்தபடியால் அதை அன்றைய இளைஞர்கள் எதிர்த்தனர். விமர்சித்தனர். புதிய வழியைக் காண முற்பட்டனர். அதன் விளைவே அந்த நாடகங்கள். அன்றைய இளைஞர் இயக்கங்கள், அமைப்புகள், செயற்பாடுகள், வெளியீடுகள்…எல்லாம். தமிழ்த் தரப்பு மட்டும் அன்று தவறான அரசியலை முன்னெடுக்கவில்லை. சிங்களத் தரப்பும் தவறான – காலப் பொருத்தமற்ற அரசியலையே முன்னெடுத்தது. அதன் விளைவே அடுத்து வந்த காலம் யுத்தத்தில் அழிய வேண்டியதாகியது. அதாவது, 1960, 1970 களின் அரசியலை இலங்கைச் சமூகங்களும் அவற்றின் அரசியற் தலைமைகளும் சரியாக முன்னெடுத்திருந்தால் நாட்டில் போரே உருவாகியிருக்காது. அழிவு ஏற்பட்டிருக்காது. இன்றைய நெருக்கடிகள் எதுவும் இருந்திருக்காது. போருக்குப் பிந்திய சூழல் இதிலிருந்து பாடங்களைப் படித்துக் கொள்ளாமலே இலங்கைச் சமூகங்கள் உள்ளன. இப்பொழுது 1970 களில் இருந்த நிலையே இலங்கைச் சமூகங்களுக்கிடையில் உள்ளது. அதையும் விட மோசமான நிலையில் உள்ளது என்றே சொல்ல வேண்டும். 70 களில் தமிழ் – முஸ்லிம் உறவு நல்ல நிலையில் இருந்தது. இப்போது அது கெட்டுப்போயிருக்கிறது. அத்தனை சமூகங்களும் இன்னும் தவறான வகையில் போருக்கு முந்திய – போர்க்கால அரசியலைக் கலந்து செய்து கொண்டிருக்கின்றன. இது காலப் பொருத்தமற்றது. என்பதால்தான் போர் முடிந்த பின்னும் அரசியல் தீர்வை எட்ட முடியவில்லை. அமைதியையும் சமாதானத்தையும் உருவாக்க முடியவில்லை. நாட்டைக் கட்டியெழுப்ப முடியவில்லை. அரசியல் உறுதிப்பாட்டை உருவாக்க முடியவில்லை. பாதிக்கப்பட்ட மக்களை மீள் நிலைப்படுத்த முடியவில்லை. சமூகங்களை ஒருங்கிணைக்க முடியவில்லை. ஒவ்வொரு சமூகமும் தம்மை ஸ்திரப்படுத்திக் கொள்ளவும் முடியவில்லை. பொருளாதார வளர்ச்சியைக் காண முடியவில்லை. வெளியாரின் அதிகரித்த தலையீடுகளைத் தடுக்க முடியவில்லை. நாட்டின் சுயாதீனத்தையும் சமூகங்களின் சுயாதீனத்தையும் தனியாட்களின் சுயாதீனத்தையும் பேண முடியவில்லை. இது தொடருமானால் இலங்கை இப்போதுள்ளதையும் விடப் பெரும் பாதிப்பையும் பேரழிவையுமே சந்திக்க வேண்டியிருக்கும். ஏற்கனவே விடப்பட்ட அரசியற் தவறுகளே நாம் சந்தித்த, சந்தித்துக் கொண்டிருக்கின்ற பாதக விளைவுகள். அதைப்போல இப்பொழுதும் இனியும் அரசியற் தவறுகளைச் செய்வோமாக இருந்தால், அதற்கான விளைவுகள் – தண்டனை மிகப் பெரியதாகவே இருக்கும். இதனால்தான் போருக்குப் பிந்திய அரசியலைப் பற்றி நாம் பேசவும் அதைக்குறித்துச் சிந்திக்கவும் வேண்டும் என்கிறோம். கட்டாயமாக அதை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டியுள்ளது. சரி, போருக்குப் பிந்திய அரசியல் என்றால் என்ன? 1. போர் உண்டாக்கிய இழப்புகள், அழிவுகள், பின்னடைவுகள், பிளவுகள், உள நெருக்கடிகள், நீதி மறுப்புகள், நம்பிக்கையின்மைகள், அலைச்சல்கள் போன்றவற்றிலிருந்து மீள்வதாகும். இதைச் சற்று விரிவாகப் பார்க்க வேண்டும். போரினால் நாடு முற்றாகவே பாதிக்கப்பட்டது. அழிவிற்குள்ளாகியது. இதை இன்னும் நேரடியாகச் சொன்னால், போரானது மக்களை பாதிப்புக்குள்ளாக்கியது. பொருளாதாரத்தை முடக்கியது. இயற்கை வளத்தை அழித்தது. நாட்டின் சிறப்பு வளங்களில் ஒன்றாகிய இளைய தலைமுறையில் பாதியை யுத்தத்தில் முடக்கியது. யுத்தப்பசி அவர்களைப் பலியெடுத்தது. இந்த அழிவு பன்முகமுடையது. உடல், உளப் பாதிப்பு. தொழில் பாதிப்பு – இழப்பு. உடமைகள் பாதிப்பு – அழிவு. உயிரிழப்பு – உறவுகள் இழப்பு…. இப்படிப் பலவகையில். ஆகவே இதை மீள் நிரப்புச் செய்ய வேண்டும். அல்லது மீள்நிலைப்படுத்த வேண்டும். சரி செய்ய வேண்டும். மீள்நிலைப்படுத்துவது மட்டுமல்ல, இயல்பான வளர்ச்சியை எட்டியிருக்க வேண்டிய நிலை வரை முன்னேறியிருக்க வேண்டும். இதற்கு மக்களிடம் உரிய விவரங்கள் திரட்டப்பட வேண்டும். நிகழ்ந்தது அரசு – அதிகாரிகள் மட்டத்திலான திட்டத்தயாரிப்புகளும் நடைமுறைப்படுத்தல்களுமே. உதாரணமாக மீள் குடியேற்றம். அதை அன்றிருந்த மீள்குடியேற்ற அமைச்சும் பகுதி அளவில் புனர்வாழ்வு அமைச்சும் மேற்கொண்டன. இரண்டும் போரின் விளைவு உண்டாக்கிய அமைச்சுகளாகும். அதாவது போர் உண்டாக்கிய அழிவுகளையும் இழப்புகளையும் சீராக்கம் செய்வதற்கான அமைச்சுகள். ஆனால் அந்த இரண்டு அமைச்சுகளும் போர்ப்பாதிப்புகள் செறிவாக நிகழ்ந்த வடக்குக் கிழக்கில் பிராந்தியப் பணியகங்களைக் கூடக் கொண்டிருக்கவில்லை. மட்டுமல்ல, மீள்நிலைப்படுதல் என்றால் என்ன என்பதைச் சரியாகப் புரிந்து கொண்டு செயற்படவில்லை. மீள் நிலைப்படுதல் வேறு. மீள் நிலைப்படுத்தல் என்பது வேறு. மீள்நிலைப்படுதல் என்பது மக்கள் தாமாக, இயல்பான அடிப்படையில் மீள்நிலைப்படுதலாகும். அதற்கு ஏற்ற வகையில் அரசும் அரசாங்கத்துடன் இணைந்து அரசு சாராத தரப்புகளும் மக்களுக்கான ஆதாரத்தையும் ஊக்கத்தையும் வழங்கியிருக்க வேண்டும். அந்த ஆதாரத்தை ஊட்டமாகக் கொண்டு மக்கள் மீள்நிலையடைந்திருப்பர். மீள்நிலைப்படுத்தல் என்பது மேல் மட்டத்திலிருந்து தீர்மானித்து நடைமுறைப்படுத்தும் ஒரு அரசியல் – நிர்வாக நடவடிக்கை. மக்களுடைய இயலும் தன்மை, அவர்களுடைய பிரச்சினைகள், சூழலின் தன்மை போன்றவற்றையெல்லாம் தமது மேற்கண்கொண்டு பார்த்து, விளங்கி நடைமுறைப்படுத்தும் அதிகாரத்துவ நிலையாகும். இதில் தோல்வியே ஏற்பட்டுள்ளது. என்பதால்தான் மீள்குடியேறிய மக்கள் நுண்கடன் பொறி உள்பட பாரிய பொருளாதார நெருக்கடிக்குள்ளாகினர். பலர் தற்கொலை செய்யும் நிலை ஏற்பட்டது. இன்னும் மீள் குடியேறிய மக்கள் மிகச் சாதாரண வாழ்க்கைக்கே திரும்பமுடியவில்லை. உடல் உறுப்புகளை இழந்தோர், காணாமல் போனார், உள நெருக்கடிக்குள்ளானோர் பிரச்சினை எல்லாம் அப்படியே கொதி நிலையில் தீர்க்கப்படாமல் நீண்டு கொண்டிருக்கின்றன. மீள்குடியேற்றக் கிராமங்கள் – பிரதேசங்கள் சீரான வளர்ச்சியைப் பெறவில்லை. இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. மீள் குடியேற்றம், மீள் நிலை என்பது என்ன? இயல்பு நிலையாகுதல் அல்லவா! யுத்தம் முடிந்து 14 ஆண்டுகளாகிறது. இந்தப் பதின்னான்கு ஆண்டுகளில் மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டனர் என்று அரசாங்கமோ, அதிகாரிகளோ, எந்த அரசியற் தலைவர்களோ, அரசியற் கட்சிகளோ பதில் அளிக்கத் தயாரா? முடியாது. ஏனென்றால், மக்களுடைய தேவைகள், பிரச்சினைகள் என்ன என்று இவை அறியவில்லை. அதை அறிந்திருக்க வேண்டும். பாதிப்புகள் மக்களிடமிருந்து மதிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அதற்குரிய தீர்வுகள் என்ன என்று அவர்களுடன் இணைந்து கண்டறியப்பட்டிருக்க வேண்டும். இதற்கான பொறிமுறை, வழிமுறை, அணுகுமுறை, செயன்முறைகளை உருவாக்குவது எனத் தொடர் செயற்பாடு அவசியம். இதைக்குறித்து இந்தக் கட்டுரையாளர் உள்படச் சிலர் தொடர்ச்சியாக எழுதியும் பொது அரங்கில் பேசியும் வந்தனர். இருந்தும் அவை கவனத்திற் கொள்ளப்படவில்லை. விளைவு நெருக்கடி அப்படியே உள்ளது. மேற்கொள்ளப்பட்ட பல திட்டங்கள் தோல்விகண்டுள்ளன. மக்களின் வாழ்க்கை பாதிப்படைந்த நிலையிலேயே உள்ளது. இதற்குத் தீர்வு? இதை முன்னெடுத்துச் செல்லக்கூடிய அணிகளையும் அரசியற் சக்திகளையும் கண்டு, அவற்றை வலுப்படுத்துவதாகும். கூடவே அவற்றை ஒருங்கிணைப்பது. அல்லது பொருத்தமான புதிய சக்திகளை உருவாக்குவது. ஏற்கனவே உள்ள அரசியற் சக்திகள் புதிய நிலைமைக்கு ஏற்றவாறு தம்மைத் மாற்றித் தகவமைத்துக் கொள்ளவில்லை என்றால் பதிலாகப் புதிய சக்திகளை உருவாக்குவதைப்பற்றிச் சிந்திக்க வேண்டும். இது மிகமிகக் கடினமான ஒரு அக -புறப் பிரச்சினைதான். ஆனாலும் இதைச் செய்வது அன்றைய நிலையில் அவசியமானது என்பதால் எப்படியாவது இதை நிறைவேற்றியே தீர வேண்டும். இதன் மூலம் முதலாவது கட்டம் நிறைவேற்றப்படும். 2. போருக்கு முந்திய அரசியல் அனுபவங்களையும் போர்க்கால அரசியல் அனுபவத்தையும் கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் உளத்தில் கொண்டு போருக்குப் பிந்திய நிகழ்காலத்தை – அரசியல் வழிமுறைகளை மதிப்பீடு செய்ய வேண்டும். இதில் கிடைக்கும் அனுபவ அறிவு, புதிய சிந்தனை, உலகளாவிய பட்டறிவு போன்றவற்றை இணைத்து நமக்குப் பொருத்தமான வழிமுறைகளை உருவாக்க வேண்டும். அதன் மூலமாகத் தீர்வுகளைக் கண்டறிவது. இலக்கை எட்டுவது. எட்டப்பட வேண்டிய இலக்கு, அதற்குரிய முறைமை, அதற்கான தந்திரோபாயம், அதற்கான செயற்பாட்டு வடிவம், அதை முன்னெடுக்கும் தரப்புகள், அவற்றை வலுவாக்கம் செய்தல் என அனைத்தும் வகுக்கப்பட வேண்டும். இதுவும் நமது சிதறிய அரசியல் ஒழுங்குச் சூழலில் கடினமான – சவாலான ஒரு காரியமே. ஆனாலும் செய்தே ஆக வேண்டும். நோய் தீர வேண்டும் என்றால் மருந்தை உட்கொண்டே ஆக வேண்டும். மருத்துவம் செய்தே ஆக வேண்டும். முக்கியமாக இலங்கை ஒரு பல்லின நாடு என்ற வகையில் அரசியலமைப்பை வலுவாக்கம் செய்ய வேண்டும். பல்லின நாடு என்ற வகையில் பன்மைத்துவத்துக்குரிய அடிப்படைகள் பேணப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அப்படியில்லாமல் சிங்கள பௌத்த நாடு அல்லது சிங்களத்துக்கும் பௌத்தத்துக்கும் முன்னுரிமை என்றால் – சிங்களத்துக்கும் பௌத்தத்துக்கும் மட்டுமல்ல, நாடே பின்னுக்குத் தள்ளப்பட்டு விடும். அதுதான் நடந்தது. இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. என்பதால் உடனடியாகவே இலங்கை ஒரு பல்லின நாடு. பன்மைப்பண்பாட்டைக் கொண்ட தேசம் என்ற வகையில் அனைவருக்குமான ஜனநாயக – சமத்துவத்தை அல்லது சமத்துவ ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும். அதை உறுதிப்படுத்த வேண்டும். இதற்கான புரிதலை ஏற்படுத்த வேண்டும். இதற்குரிய வகையில் அரசியலமைப்புத்திருத்தம் செய்யப்பட வேண்டும். அந்தத் திருத்தத்தை இதையே சர்வதேச சமூகமும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. அடுத்தது, நீதி வழங்கப்படுதலாகும். போர்ப்பாதிப்புகள், யுத்தத்தின்போது நிகழ்ந்தவை பற்றிய நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டாலே நீதியை வழங்க முடியும். நீதி வழங்குதல் என்பது நீதியாக நடப்பதில் உருவாகுவது. இதைச் செய்தால், இதற்குத் துணிவு கொண்டால் பல பிரச்சினைகள் தீர்ந்து விடும். ஆனால், இது மிகச் சவாலான விடயம். நீதி என்பது எல்லோருக்கும் பொதுவானது என்று கூறப்பட்டாலும் நடைமுறையில் ஆளாளுக்குத் தரப்புக்குத் தரப்பு வேறு விதமான கண்ணோட்டத்தையும் புரிதலையும் கொண்டதாகும். திருப்தி, திருப்தியின்மை, நிறைவு – நிறைவின்மை இதனால்தான் ஏற்படுவது. ஆகவே இங்கே அரசு வழங்கும் நீதியானது அல்லது நீதியின் அளவானது பாதிக்கப்பட்டோருக்குத் திருப்தியளிக்கக் கூடியதா, அவர்களுக்குப் போதுமானதா? என்று கவனிக்கப்பட வேண்டும். இதற்குரிய வழியை – இணக்கத்தை தமிழ்த்தரப்பினரும் கொள்ள வேண்டும். அதாவது பிரச்சினையை வளர்க்கப்போகிறோமா? தீர்க்கப்போகிறோமா என்ற அடிப்படையில் நோக்கிச் செயற்பட வேண்டும். அடுத்தது, தீர்வு யோசனைகள், தீர்வுக்கான கோரிக்கைகள் பற்றியது. கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையிலும் உள்நாட்டு நிலமையிலும் பிராந்திய, சர்வதேசச் சூழலிலும் எத்தகைய தீர்வு சாத்தியம் என்ற புரிதலைக் கொள்ளுதல். நமது விருப்பங்களும் தேவைகளும் பலவாக இருக்கும். அவற்றின் விரிவெல்லையும் அதிகமாக இருக்கும். ஆனால், அவற்றை எட்டுவதெப்படி? எவை சாத்தியம்? என்ற புரிதல் வேண்டும். இல்லையென்றால், இலக்கை எட்டவே முடியாது. இதில் அரசாங்கமும் சிங்களக் கட்சிகளும் தீர்வுக்கான அவசியம், அதை எட்டுவதற்கான வழிமுறைகள், அதில் வழங்கப்பட வேண்டிய நீதி என்பவற்றைத் தெளிவாகச் சிந்திப்பது கட்டாயமாகும். இது வரலாற்றின் நிபந்தனை. இல்லையெனில் இன்னும் நாடு பொருளாதார ரீதியில் பின்னடையும். அந்நிய சக்திகளின் ஆதிக்கத்தில் – பிடியில் சிக்கும். இதைத் தவிர்த்து, இலங்கையர்களாக நாம் மகிழ்ந்திருக்கப்போகிறோமா? அல்லது முரண்பாடுகளை வளர்த்து, உள் நாட்டில் நீதியை மறுத்து, பிறருக்கு அடிமையாக இருக்கப்போகிறோமா? என்று சிந்திக்க வேண்டும். சகோதரர்களுக்கு நீதியை மறுத்து விட்டு அந்நியருக்கு அடிமையாக இருப்பது எவ்வளவு முட்டாள்தனமாகும். இன்றைய சூழலில் இதைக்குறித்த தெளிவான உரையாடல்கள் அவசியம். அந்த உரையாடல்கள் பரஸ்பரத்தன்மையுடையனவாக இருக்க வேண்டுமே தவிர, பட்டிமன்ற வாதங்களாக அமையக் கூடாது. பாராளுமன்ற உரைகள் கூட குற்றம் சாட்டும் உரைகளாகவோ சவால் விடுக்கும் உரைகளாகவோ அமையக் கூடாது. அவை விழிப்புணர்வை ஊட்டக்கூடிய, பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணும் வழிகளைக் கொண்டவையாக, நியாயங்களை உரிய முறையில் எடுத்துரைப்பவையாக, அறிவுபூர்வமானதாக இருக்க வேண்டும். முக்கியமாக அறிவுபூர்வமானதாக என்பதைக் கவனிக்க வேண்டும். ஏனென்றால் அறிவு என்பது சர்வதேசத் தன்மை வாய்ந்த ஒன்றாகும். அது எங்கே நின்று நோக்கினும் ஒரே பெறுமதியைக் கொடுப்பது. இலங்கையில் இது நிகழ வேண்டும் என்ற வகையில்தான் யுத்தம் முடிந்த கையோடு 2010 தொடக்கம் இன்று வரை சர்வதேச சமூகமானது, ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள், அரசியற் தரப்பினர், பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்தோர், சமூகச் செயற்பாட்டாளர்கள் போன்றோருக்கு இதைக்குறித்துப் பகிரங்கமாக அறிவுரைத்தது. முரண்பாடுகள் தீர்க்கப்படாமையினால் போர் உருவாகியது. போர் நிறுத்தப்படாமையினால் பேரழிவு நிகழ்ந்தது. போர்க்குற்றங்களும் உருவாகின. துயரமும் அலைவும் உண்டாகியது என்றெல்லாம் விளக்கமளிக்கப்பட்டது. ஆனால், எல்லாவற்றிலும் பங்குபற்றியோர் உண்டு களித்து கொண்டாடியதேயன்றி, உரைத்ததை எடுத்ததாக இல்லை. இதுதான் வரலாற்றின் துயரமும் சர்வதேச சமூகத்தின் ஏமாற்றமுமாகும். அரசியல்வாதிகளையும் விட பிற தரப்பினர் (ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள், பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்தோர், சமூகச் செயற்பாட்டாளர்கள்) மோசமாகச் செயற்படுகின்றனர் என ஒரு தடவை வெளிநாட்டுப் பிரதிநிதியொருவர் கவலையோடு சொன்னார். ஆகவே எதற்கும் இந்த இரண்டைப்பற்றியும் ஒரு தெளிவான வரைபை முதலில் உருவாக்க வேண்டும். இதற்கு கள யதார்த்தத்தைத் தெரிந்தவர்கள், சிந்தனையாளர்கள், அரசியல் அறிஞர்கள், சமூகச் செயற்பாட்டியக்கத்தினர், பெண் ஆளுமைகள், இளைய தலைமுறையைச் சேர்ந்த பிரதிநிதிகள், புலம்பெயர் தேசத்தில் மாற்று அரசியல் பிரக்ஞையோடு உள்ளவர்கள் என பல்வேறு ஆளுமைத் தரப்புகளை ஒரு கட்டமைப்பாக உருவாக்கம் கொள்ளுவது அவசியம். அப்படி இருக்கும்போதுதான் ஒரு விரிவான அறிதலையும் திட்டத்தையும் உருவாக்க முடியும். https://arangamnews.com/?p=8360
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.