Search the Community
Showing results for tags 'கலைகள்'.
-
'ஆன்மிகம், தத்துவம், நமது கலைகள் இவற்றால் ஆன பயன் என்ன?'; 'அவை விஞ்ஞான, தொழிநுட்ப வளர்ச்சியடைந்த இன்றைய அதிநவீன உலகில் இன்னமும் அவசியமா?' எனப் பலரும் ஒருவித ஏளனத்துடன் கேட்பதுண்டு. இக்கேள்விகளை நானே ஒரு காலத்தில் எனக்குள்ளே வினவியதுண்டு. எனினும் கடந்த ஒரு வருடத்துக்கும் மேற்பட்ட கோவிட்-19 மற்றும் அவற்றின் விளைவான பயணத்தடை/ கட்டுப்பாட்டு காலங்களில் நான் பெற்ற அனுபவங்களையும், மற்றும் என் வாழ்வில் நான் சந்தித்த ஏனைய பிற அனுபவங்களையும் வைத்து சொல்கிறேன்; தத்துவங்கள், ஆன்மீகம், கலைகள் மீதான ஈடுபாடு தான் என்னைப் பல சந்தர்ப்பங்களிலும், கரடுமுரடான வாழ்க்கைப் பாதைகளில் கூட, தடம்மாறாமல் பயணித்துச் செல்ல உதவியாக இருந்திருக்கிறது/இருந்து வருகிறது. இவை மூன்றையும் தவிர்ந்த பல்வேறு விதமான வாழ்க்கை தொடர்பான பார்வைகள் உங்களுக்கோ எனக்கோ இருக்கலாம்; சமூக, உளவியல், பொருளாதார, அரசியல் கண்ணோட்டத்திலும் உங்கள் வாழ்க்கை தொடர்பான பார்வை இருக்கலாம். அவையும் அவசியமானவை தான். எனினும் என்னைப் பொறுத்தவரை இந்த தத்துவ, ஆன்மீக, கலைத்துவமான கண்ணோட்டங்கள் இந்த வாழ்க்கை, உலகம், பிரபஞ்சம் தொடர்பான விரிவான பார்வையை எனக்குத் தந்து ஒருவித சுதந்திரமான, நிம்மதியான, ஆனந்தமான உணர்வை பல நேரங்களில் அளித்து வருகின்றன என்பேன். இங்கே ஆன்மீகம், தத்துவம் இவற்றுக்கும் நமது கலைகளுக்கும் என்ன தொடர்பு என நீங்கள் கேட்கலாம். ஆன்மீக, தத்துவ சிந்தனைகள் வறட்சியான, அர்த்தமற்ற விடயங்களாக அவ்வப்போது தோன்றும்; இவ்வுலக வாழ்க்கைக்கு அவை பொருந்தாததாக ஒரு பொய்த் தோற்றம் தோன்றும் பொழுதுகளில் கலை வந்து கைகொடுக்கிறது. என்னைப் பொறுத்தவரை இசை, நடனம், ஓவியம், சிற்பம், நாடகம் போன்ற கலைகள் பொழுதுபோக்குக்கு மட்டுமானவை அல்ல; நான் மேலே குறிப்பிட்ட சலிப்பானவையாகத் தென்படும் ஆன்மீக, தத்துவ விடயங்களைக் கூட அவரவர் புரிதலுக்கும், ரசனைக்கும் ஏற்ப சுவாரசியமான விடயங்களாக மாற்றிவிடக் கூடிய வல்லமை இந்தக் கலைகளுக்கு உண்டு. உதாரணத்துக்கு, ஒரு தத்துவப்பாடலை வரிகளாக மட்டும் வாசிப்பதைவிட இசைப் பாடலாகக் கேட்டு ரசிப்பது அல்லது பாடி அனுபவிப்பது சுவாரசியத்தைத் தருவது மட்டுமன்றி அப்பாடலின் ஆழ்ந்த கருத்துக்கள் நம்மனதில் பதிந்துவிடவும் உதவுகின்றது. இப்படி உலகியல் வாழ்வில் தத்தளிக்கும் வேளைகளில் உலகியலுக்கும் ஆன்மீகம், தத்துவம் போன்ற பரந்துபட்ட, சுதந்திரமான, நிம்மதியான, ஆனந்தமான விடயப்பரப்புகளுக்கும் இணைப்புப் பாலமாக இக் கலைகள் விளங்குகின்றன. (ஆன்மீகம், தத்துவங்கள், கலைகள், ஆசாரங்கள் இவை கலந்தவை தான் மதங்கள் என்பது எனது இன்னொரு கண்ணோட்டம். இது பற்றி இப்போது விபரமாக எழுதாமல் தவிர்க்கிறேன்.) சுருங்கச் சொன்னால் சிலருக்கு மது போன்ற ஆரோக்கியமற்ற பழக்கங்கள் செய்யும் வேலையை ஆரோக்கியமான வழியில் கலைகள் செய்கின்றன!(கவி கண்ணதாசன் குடிபோதையில் தன் மனதில் தோன்றிய தத்துவங்களைப் பாடலாக வடித்தது வேறு விடயம். இருந்தாலும் கலைப் போதை தான், அவர் வாழ்வில் பட்ட கஷ்ட அனுபவங்களை தத்துவப் பாடல்களாக எழுத வைத்தன என்பதே நிதர்சனம்.) இனி, இந்த ஆன்மீக, தத்துவ, கலை மீதான ஈடுபாடு எந்த வழிகளில் எனக்குத் துணை புரிந்துவந்துள்ளது என்பதை மிக, மிகச் சுருக்கமாகச் சொல்கிறேன். உங்கள் வாழ்க்கை அனுபவங்களுடன் இவற்றைத் தொடர்புபடுத்திப் பார்த்தால் நான் சொல்ல வருவது நன்றாக உங்களுக்குப் புலப்படலாம் என நம்புகிறேன். ஆன்மீக, தத்துவ, கலைசார்ந்த சிந்தனைகள், 1) வாழ்க்கை தொடர்பான தெளிவான, மிகப் பரந்துபட்ட பார்வையை எனக்குத் தந்து வாழ்க்கையில் எனக்கு எது முக்கியம், எந்த வாழ்க்கைப் பாதை எனக்குப் பொருத்தமானது, அர்த்தமுள்ள, நிம்மதியான, மனநிறைவான வாழ்வை எப்படி வாழ்வது போன்ற கேள்விகளுக்கு ஓரளவுக்கேனும் பதில் தந்தன. (இன்னும் தேடல்களும், பதில்களும் இருக்கும்!) 2) இவற்றில் மூழ்கித் திளைப்பதும் பல சமயங்களில் ஓர் அழகான நிம்மதியான சுதந்திரமான பயண அனுபவத்துக்கு ஒத்ததாக இருக்கும். குறிப்பாக, லொக்டௌன் காலங்களில் வீட்டில் இருந்து பாடினாலும் மனதில் ஏதோ உள்ளார்ந்த பயணம் செய்த உணர்வு. இதை வெளிப்புறப் பயணங்கள் கூட தந்திருக்குமா என்று கூட யோசித்ததுண்டு. சற்று நேர தியான, மூச்சுப் பயிற்சியும் இந்த அனுபவத்தை தந்ததுண்டு. 3) மனம் தளர்வுற்ற பொழுதுகளில் புகலிடமாகவும், தோழமையாகவும் இவை இருந்ததுண்டு. இவை மனம் சார்ந்த உணர்வுகள். நல்ல கலைப்படைப்பு ஒன்றில் லயித்திருப்பது நல்ல நண்பனுடன் நேரம் செலவிட்ட உணர்வைத் தரும்; இலக்கியமோ, இசையோ, நடனமோ, ஓவியமோ எதுவாகவும் இருக்கலாம். ஆன்மீக சிந்தனை ஓர் சுதந்திரமான, மனநிறைவான இடத்துக்கு நம்மை அழைத்துச் சென்று புகலிடமாக அமையலாம். தற்காலிக உணர்வு என்றாலும் அதன் பயன் அளப்பெரியது. தத்துவார்ந்த சிந்தனைகளும் அவ்வாறே. 4) விஸ்தீரணமான இவ்வுலகிலோ அல்லது பிரபஞ்சத்திலோ அனைத்துவகையான ஜீவராசிகளுக்கும் ஓர் இடமுண்டு. ஆகவே நமக்கும் ஓர் இடமுண்டு என்ற நிம்மதியான உணர்வைத் தந்து அவ்வப்போது தோன்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்தன. பல்வேறு மதங்கள், தத்துவங்கள், கலை வடிவங்கள் போன்றன பல்வேறு வகையான மனிதர்களின், குழுக்களின் வெளிப்பாடே என்பதை உணரும்போது நாமும் அந்த மனித ஜாதியில் ஒருவர் தாம் என்ற பெருமிதம் ஒருபுறமும், கல்லாதது உலகளவு என்ற உண்மையை உணரும்போது நாம் ஒவ்வொருவரும் மட்டுப்படுத்தப்பட்ட அறிவைக் கொண்டுள்ளோம் என்ற பணிவும் ஏற்படுகிறது. இவற்றை விட வேறு காரணங்கள் இருக்கலாம். இருந்தால் அவற்றைப் பின்னர் எழுதுகிறேன். தவிரவும், கலை, தத்துவம், ஆன்மீகம் இவற்றில் மூழ்கித் திளைத்தலும் பேரின்பமே! இவற்றைக் கற்பதோ, இவற்றில் ஈடுபாடு கொள்வதோ, அந்த அறிவை பரஸ்பரம் ஏனையோருடன் பகிர்ந்துகொள்ளும் இனிய அனுபவமோ வாழ்நாள் நீளம் கொண்டது; நம் வாழ்நாள் தான் அவற்றின் எல்லை. வகுப்பறை, புத்தகங்கள், காணொளிகளையும் தாண்டிய கல்வி அது. வைரமுத்துவின் வரிகளில் "வானம் எனக்கொரு போதிமரம்; நாளும் எனக்கொரு சேதி சொல்லும்!" என்பது போல எல்லையற்ற பிரபஞ்சம் கற்பிக்கும் பாடங்களின் ஒரு சிறு பகுதியே நாம் கற்று அனுபவிப்பது. எனவே, இந்த ஆன்மீகம், தத்துவம், கலை சார்ந்த ஈடுபாடு உங்களுக்கு இருப்பின் அதைத் தாராளமாகத் தொடரலாம். அவை உங்கள் வாழ்க்கையை மேலும் வளப்படுத்துவதோடு மட்டும் நின்றுவிடாமல் ஏனையோருக்கும் பயனுள்ளதாக அமையட்டும். வாழ்க வளமுடன்! நன்றி (குறிப்பு 1: இதை வாசிக்கும் பெரியோர் என்னைவிடப் பன்மடங்கு அனுபவசாலிகளாக இருப்பர். எனினும் இவை பற்றிய சிறியேனின் அனுபவப்பார்வை ஏனையோருக்குப் பயனுள்ளதாக அமையலாம் எனும் நோக்கில் இதை இங்கு பகிர்கிறேன். எனவே, பெரியோரே குறைகள் பொறுத்தருள்க!; ஏதும் தவறுகள் இருப்பின் உங்கள் கருத்துக்களைத் தாராளமாகத் தெரிவிக்கலாம். குறிப்பு 2: ஆன்மீகம், தத்துவம், கலை என்பவை பரந்துபட்ட விடயப்பரப்புகள். இவற்றை இக்கட்டுரையில் மிகச் சரியாக வரையறை செய்ய இயலவில்லை. எனவே அவை சார்ந்த தேடலை உங்களிடமே விட்டுவிடுகிறேன். (தவிரவும் இது வாழ்நாள் நீளமான கற்றலும், அனுபவித்தலும் மட்டுமன்றி அவை மீதான ஆர்வமோ ஈடுபாடோ தனிநபர் விருப்பு வெறுப்பு சார்ந்தது.) குறிப்பு 3: நேரச் சுருக்கம், வாசிப்போரின் பொறுமை இவற்றை மனதில் கொண்டு மிக மிகச் சுருக்கமாகவே இவற்றை எழுதியுள்ளேன். ஏதும் தெளிவற்ற தன்மை இருந்தால் நீங்கள் அவற்றைக் கேள்விகளாக முன்வைக்கலாம்; நாம் எல்லோரும் கலந்துரையாடலாம்.