Search the Community
Showing results for tags 'குமரி மாவட்ட விதிகள்'.
-
திருமண பந்தி சாப்பாடு - அன்றும் இன்றும்.! குமரி மாவட்டத்திற்கு என்றே சில பந்தி மரியாதைகள் உண்டு. அவை வெற்றுச் சம்பிரதாயங்கள் அல்ல. பலநூறு பேர் ஓர் இடத்தில் கூடி சாப்பிடும்போது ஒருவர் இன்னொருவரை சங்கடப்படுத்தாமல், ஒவ்வொருவருடைய தனிப்பட்ட ருசிகளும் கவனிக்கப்பட்டு, சிக்கலில்லாமல் உணவு பரிமாறப்படுவதற்கான விதிகள், காலாகாலமாக அவை நடைமுறைஞானம் வழியாக கண்டறியப்பட்டும், கட்டாயமாக ஆக்கப்பட்டுள்ளன. குமரி மாவட்ட ஒரு திருமண விருந்து எப்படி இருக்கும்? முதல் விஷயம், பந்திப் பந்தல் என்னும் சாப்பாட்டுக் கூடத்தில் விருந்தை ஏற்பாடு செய்யும் பெண் வீட்டாரின் பிரதிநிதியாக ஒரு பெரியவர் முழுப்பொறுப்பில் தொடக்கம் முதல் கடைசிவரை இருப்பார். பந்திமுறைகள் அறிந்தவரும் நிர்வாக தோரணை கொண்டவருமான அவரது கட்டுப்பாட்டில்தான் பரிமாறுதல் நிகழ வேண்டும். சாப்பாட்டுக் கூடத்தில் எத்தனை இலைபோட முடியும் என முதலில் கணக்கிடுவார்கள். அந்த அளவுக்கு இலைபோட்டு அதேயளவுக்கு ஆட்களை மட்டுமே உள்ளே விடுவார்கள். உணவுக்கூடத்தில் உள்ளே நுழையும் வழி ஒன்றே. வெளியேறும் வழி இன்னொன்று. உள்ளே ஆளனுப்பலாமென தகவல் வந்ததும் ஒரு பெரியவர் வந்து வாசலில் நிற்பார். மரியாதைக்குறைவு தெரியாவண்ணம் மனத்துக்குள் எண்ணிக்கொண்டு உள்ளே ஆளனுப்புவார். உள்ளே செல்வதற்காக எழுந்து வந்துவிட்ட ஒருவரை உள்ளே பந்தி நிறைந்துவிட்டது என்று திரும்பிச் செல்ல சொல்லக்கூடாது. அது மரியாதை குறைவானது என்பதால் இந்தக் கணக்கு. விருந்தினருக்கும் அந்த மரியாதை தெரிந்திருக்கவேண்டும். ஒரு போதும் அவராக எழுந்து உணவு உண்ண வந்து நிற்கக்கூடாது. பந்தி அறிவிப்பு வந்ததும் விருந்தளிக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வந்து தனித்தனியாக உணவுண்ண அழைக்கும் வரை அமர்ந்திருக்க வேண்டும். வயதில் மூத்தவர்களுக்கு முதலிடம். மாப்பிள்ளை வீட்டாருக்கு அடுத்த இடம். ஊர் பெரியவர்களுக்கு அதற்கு அடுத்த இடம். கடைசியாக பெண் வீட்டார் அழைக்காமல் உண்ண செல்வது தமிழர் வாழ்வியல் இழிவு. முண்டியடித்து சாப்பிடச் செல்வதென்பது இழிவினும் இழிவு. முதலில் உள்ளே செல்பவர்கள் கூடத்தின் மறு எல்லையில் கடைசி இலையில்தான் அமர வேண்டும். அங்கிருந்து நிரம்பியபடியே வந்து கடைசியாக உள்ளே செல்பவர் வாசலருகே உள்ள இலையில் அமர்வார். நடுவே இடைவெளி விடக்கூடாது. உள்ளே செல்லும்போதே அருகே அமர வேண்டியவர்களை தீர்மானித்து கொள்ளுதல் வேண்டும். உள்ளே அமர்ந்த பின்னர் அருகே அமர ஆளைக்கூப்பிடுவது மரியாதைக்குறைவு. மிக எளிய நியாயம்தான் இது. வரிசையாக உணவுண்ண அமர்ந்த பின்னர் வரிசையை தாண்டிச் செல்வதும் நடுவே நுழைவதும் எல்லாம் பிறருக்கு மிக அசௌகரியமாக இருக்கும். கை கால்கள் பிறர் மேல் படும். அனைத்துக்கும் மேலாக, ஒருவர் அமர்ந்த இலையில் இருந்து அவர் எழுந்து விலகி இன்னொன்றில் அமர்வதென்பது மிக சங்கடமான விஷயம். குமரி மாவட்டத்தில் பந்தியில் விருந்தினர் அமர்வதற்கு முன்னரே எல்லா கறிவகைளையும் இலையில் வைத்துவிடுவார்கள். அனைவரும் அமர்ந்த பின்னர் பந்தி விசாரணை செய்யும் தாய்மாமா சைகை காட்ட, உணவு பரிமாறப்படும். முதலில் குடிநீர். பின்னர் அப்பளம் . அதன் பின்னர் சோறு. பரிமாறப்படும்போத உணவை எடுத்து தின்ன ஆரம்பிப்பது கூடாது. சோறு பரிமாறப்பட்டபடியே செல்லும்போது பின்னால் பருப்புக்கறி வரும். அதைத் தொடர்ந்து நெய் வரும். இந்த வரிசையை மீறி எதையும் கேட்கக்கூடாது. ஏனென்றால், அப்படிக் கொண்டு வர வேண்டும் என்றால் முன்னால் செல்பவர்களைத் தாண்டிச் சென்று பரிமாறவேண்டியிருக்கும். குழம்புக் கரண்டியை சாப்பிடுபவர்களின் தலைமேல் சுழற்றி திரும்ப வேண்டிவரும். ஒரு வரிசையில் அனைவரும் ஒரே சமயத்தில் சாப்பிடவேண்டும் என்பது விதி. ஆகவே, வரிசையின் தொடக்கத்தில் எப்போதும் கொஞ்சம் விவரம் தெரிந்த பெரியவரை மட்டும் அமரச் செய்வார்கள். அனைவரும் ஒரே நேரத்தில் பருப்புக்குழம்பு சாப்பிட்டு முடிந்ததும்தான் சாம்பார் வரும். சாப்பிட்டு முடித்த பின்னர் தனித்தனியாக எழுவது தவறு. ஒரு பந்தி மண்டபத்தில் அனைவரும் ஒன்றாகவே எழுந்து செல்லவேண்டும் என்பதே முறை. நாம் சாப்பிடும்போது நம் தலைமேல் இன்னோருவர் எச்சில் கை கடந்து செல்வதைப்போல அருவருப்பூட்டும் செயல் இன்னொன்று இல்லை. மொத்த பந்தியும் எழுந்து சென்றபின் இலைகளை எடுக்கவேண்டும். இலைகளை எடுத்து மண்டபத்தை சுத்தம் செய்து முந்தைய பந்தியின் உணவு வாசனை எஞ்சியிருக்காமல் இருக்க சாம்பிராணிப் புகை போட்டு அதன்பின் அடுத்த பந்திக்கான இலை போடுவார்கள். இன்று சென்ற கால் நூற்றாண்டாக இந்த பந்தி மரியாதைகள் மெல்ல மெல்ல குறைந்து இன்று இந்த ஆசாரங்கள் எவருக்கும் தெரியவில்லை. விளைவாக லட்சக்கணக்காகச் செலவிட்டு நடத்தப்படும் திருமணங்கள்கூட சோற்றுக்கல்லாட்டங்களாக ஆகிவிட்டிருக்கின்றன. படித்தவர்கள் கூட கூட்டம் கூட்டமாக பந்திவாசலில் முட்டி மோதுகிறார்கள். வயதானவர்களைப் பிடித்துத் தள்ளுகிறார்கள். குழந்தைகளை நசுக்குகிறார்கள். ஏற்கெனவே சாப்பிட்டவர்களின் எச்சில் இலைகளுக்கு முன்னால் சென்று அமர்ந்து இடம்பிடிக்கிறார்கள். சாப்பிட அமர்ந்தவர்களின் முன்னால் இருந்து எச்சில் இலைகளை எடுக்கிறார்கள். ஒருவர் சாபிட்டுக் கொண்டிருக்க அவர் முன்னால் எச்சில் குவிந்த குப்பைத்தொட்ட போன்ற நாற்றமடிக்கும் பெரிய எச்சில் கூடைகளைக் கொண்டு வைத்து இருபக்கம் உள்ள எச்சில் இலைகளை அள்ளிக்கொண்டு இழுத்துச் செல்வதை நான் எங்கும் காண்கிறேன். சில இடங்களில் எச்சில் இலையை எடுத்தவர் அதே கையுடன் பரிமாறுகிறார். பந்தியில் கூச்சலிடுகிறார்கள். நம் தலைக்குமேலே குழம்புவாளிகள் செல்கின்றன. பரிமாறுபவர்கள் முன்னும் பின்னுமாக முட்டி மோதுகிறார்கள். ஆகவே, எவருக்கு என்ன கொடுத்தோம் என அவர்கள் மறந்து விடுகிறார்கள். சாப்பிடுபவர்கள். கூச்சலிட்டுக் கேட்கிறார்கள். பரிமாறுபவர் கூச்சலிட்டு உபசரிக்கிறார். ஆட்கள் வந்தபடியும் சென்றபடியும் இருக்கிறார்கள். ஒரு ரயில்நிலையம் கூட இன்னும் ஒழுங்குடன் இருக்கும். இன்னும் மோசம் என்னவென்றால் சாப்பிடுபவர்களுக்குப் பின்னால் அடுத்து சாப்பிடுபவர்கள் வந்து காத்து நின்று இலையையே எப்போது எழுந்திரிப்பர் என பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆக கூடிச் சாப்பிடுவதென்பதே ஒரு பெரும் அவமானமாக ஆகிவிட்டிருக்கிறது இன்று. சாப்பாட்டு மரியாதைகள் இல்லாத சமூகம் உலகில் எங்கும் இல்லை. ஐரோப்பியரும் சீனரும் மிகமிக விரிவான சாப்பாட்டு மரியாதைகளை கடைப்பிடிப்பவர்கள். நமக்கும் எல்லா மரியாதைகளும் இருந்தன. அவற்றை விட்டுவிட்டு இன்று நாம் விருந்துண்கிறோம். ஒரு அன்னியர் நம்மைப் பார்த்தால் நாம் உயர்தர உடை அணிந்து வந்த காட்டுமிராண்டிகள் என்றே நினைப்பார். - திருவட்டாறு சிந்துகுமார் https://m.dinamalar.com/weeklydetail.php?id=9725