Search the Community
Showing results for tags 'கேள்வி பதில்'.
-
Published By: VISHNU 02 SEP, 2024 | 03:20 AM நேர்கண்டவர் – ரொபட் அன்டனி கோட்டாவின் அரசாங்கத்தை திட்டமிட்டு சதித்திட்டத்தின் ஊடாக வீழ்த்தினர். சவாலை ஏற்று களமிறங்கி இருக்கிறேன். ரணில் எமது கொள்கைகளுடன் இணங்கவில்லை தமிழ் பொது வேட்பாளர் களமிறக்கத்தை சிறந்த நகர்வாக பார்க்கிறேன். நான் சஜித்தை சந்தித்து பேசவில்லை. பொலிஸ் காணி அதிகாரங்களை வழங்க முடியாது. பொய் வாக்குறுதிகளை நான் வழங்கமாட்டேன். ஜனாதிபதியாகியதும் மாகாண சபை தேர்தலை நடத்துவேன். செனட் சபை குறித்து பாராளுமன்றமே தீர்மானிக்கவேண்டும். வடக்கு இளைஞர் யுவதிகளுடனான எனது உறவு தனித்துவமானது. காணாமல் போனோர் விவகாரத்துக்கு பதில் அளிப்பேன். முஸ்லிம்களின் உடல் தகன விவகாரத்தில் மன்னிப்பு கோருகிறோம். இந்தியா, சீனாவுடன் நட்பு ரீதியான உறவை பேணுவேன். மோடியுடன் எனக்கு சிறந்த உறவுள்ளது. அப்பா என்னை அடித்ததில்லை, ஆனால் தவறு செய்தால் திட்டுவார் சகல இன மக்களினதும் கலாச்சாரங்களை பாதுகாப்பேன். சில தலைவர்கள் அதிகார பகிர்வு தொடர்பில் பேசுகின்றார்கள். ஆனால் கலாச்சாரங்களை அழிக்கின்றனர். சில சட்டங்களைக் கொண்டு வந்து கலாச்சார மரபுகளை அழிக்கின்றனர். ஆனால் நான் சகல மக்களினதும் கலாச்சாரங்களையும் பாரம்பரிய மரபுகளையும் விழுமியங்களையும் பாதுகாப்பேன் என்று உறுதி வழங்குகிறேன் என்று பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவற்றை குறிப்பிட்டார். செவ்வியின் விபரம் வருமாறு கேள்வி: ஜனாதிபதி தேர்தல் களம் தற்போது எப்படி இருக்கிறது? பதில்: எமது பிரச்சார செயல்பாடுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. நாம் மிக முக்கியமாக கிராமத்துக்குள்ளேயே தேர்தல் பிரச்சாரத்தை மையப்படுத்தி இருக்கிறோம். அனுராதபுரத்தில் பாரிய பிரச்சாரக் கூட்டத்தை நடத்தினோம். அதன் பின்னர் நாம் அதிகளவு கிராம மட்டத்தில் மக்கள் மத்தியில் சென்று பிரச்சாரம் செய்கிறோம். எமது பலம் அங்கேதான் இருக்கிறது. இம்முறை தேர்தலில் செலவுகளுக்கான ஒரு வரையறையும் காணப்படுகிறது. அடுத்த வாரத்திலிருந்து வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்வோம். கேள்வி: அரசியல் தேர்தல் களத்தில் எவ்வாறான நிலைமையை உணருகிறீர்கள்? பதில்: மக்கள் எம்மை ஆதரிக்கின்றனர். எமக்கு வாக்களிக்க விரும்புகின்றனர். சிலர் நேரடியாக ஆதரவு தெரிவிக்கின்றனர். சிலர் வேறு வழிகளில் ஆதரவு தெரிவிக்கின்றனர். சிலர் மெளனமாக இருக்கின்றனர். கேள்வி: மக்கள் உங்களை சந்திக்கும்போது என்ன உங்களிடம் கேட்கின்றனர் ? பதில்: நாட்டின் இன்றைய பொருளாதார பிரச்சனை மக்களுக்கு மிகப்பெரிய நெருக்கடியாக இருக்கிறது. வரிசை இல்லாமல் செய்யப்பட்டுள்ளது, மின்வெட்டு இல்லை என்று கூறப்பட்ட போதிலும் மக்கள் உள்ளக ரீதியில் நெருக்கடிகளை சந்திக்கின்றனர். பொருட்களின் விலைகள் அதிகரித்ததன் காரணமாகவே வரிசையுகம் நிறுத்தப்பட்டு இருக்கிறது. மக்களின் நுகர்வு குறைவடைந்து இருக்கிறது. மக்களிடம் பணம் இல்லை. அன்றாடம் தொழில் செய்கின்றவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்களே சந்தர்ப்பம் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி மாத சம்பளம் பெறுகின்றவர்களுக்கு வரியை செலுத்த வேண்டி இருக்கிறது. எனவே நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்களை ஊக்குவிக்க வேண்டும். கிராமிய வங்கிகளுடாக அவர்களை பலப்படுத்துவது அவசியம். அங்கிருந்து சந்தையை உருவாக்க வேண்டும். அடுத்ததாக முதலீட்டாளர்களை ஊக்குவித்து தொழில்களை உருவாக்குவது அவசியம். கேள்வி: இந்த தேர்தலில் பொருளாதாரம் தான் முக்கியமான பேசு பொருளாக இருக்கிறதா ? பதில்: எந்த தேர்தலிலும் பொருளாதாரம் தான் மிக முக்கியமான பேசு பொருளாக இருக்கும். பொருளாதாரத்தை பலப்படுத்துவது மட்டுமின்றி பொருளாதாரத்தை சுயாதீனமாக்க வேண்டும். இன்னொரு நாட்டிடம் நாம் பொருளாதாரத்திற்கு தங்கி இருந்தால் அங்கு சுயாதீனம் இல்லை. அதற்கு நாம் தேசிய உற்பத்திகளை ஊக்குவிக்க வேண்டும். கேள்வி: உங்கள் பார்வையில் கோட்டா ராஜபக்சவுக்கு என்ன நடந்தது? பதில்: கோட்டாபய அரசாங்கத்தில் பல நல்ல விடயங்கள் நடைபெற்றன. ஆனால் கோட்டா அரசாங்கம் தவறு இழைத்தது எங்கு என்று பார்க்க வேண்டும். எரிபொருள் வரிசை மற்றும் மின்வெட்டு ஆகிய இரண்டு விடயங்களில் தான் கோட்டா நெருக்கடியை சந்தித்தார். மின்வெட்டுக்கு காரணம் நல்லாட்சி அரசாங்க காலத்தில் புதிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவாமையாகும். மேலும் கொரோனா நெருக்கடியும் வந்தது. ஆனால் இந்த இவ்வாறான எந்த பிரச்சனையும் இல்லாத பங்களாதேஷுக்கு பிரச்சினை ஏற்பட்டிருக்கிறதே? எனவே கோட்டாவின் அரசாங்கத்தை திட்டமிட்டு சதித்திட்டத்தின் ஊடாக வீழ்த்தினர் என்பது நன்றாக தெரிகிறது. கேள்வி: 38 வயதில் நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நீங்கள் எண்ணிப்பார்த்தீர்களா? பதில்: அரசியல் பயணம் தொடர்கிறது. ஆனால் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என்று நான் எண்ணி இருக்கவில்லை. பொறுப்பு கிடைக்கும்போது அதனை ஏற்க வேண்டும். அரசியல்வாதிக்கு அந்த பண்பு இருப்பது அவசியம். நான் சவாலை ஏற்று களமிறங்கி இருக்கிறேன். நெருக்கடி நேரத்தில் களமிறங்க வேண்டும். நாடு நன்றாக இருக்கும் போது நான் அரசியல் ரீதியாக நன்றாக பிரபலமடைந்திருக்கும் போது பொறுப்பை ஏற்பதில் பயனில்லை. இவ்வாறான நெருக்கடி நேரத்தில் எம்மை போன்ற இளைஞர்கள் நவீன சிந்தனைகளை கொண்டவர்கள் களத்துக்கு வருவது அவசியம். அந்த வகையில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு நான் மரபுரீதியிலிருந்து வெளியே செல்வேன். என்னுடைய நோக்கம் மிகத் தெளிவானது. இந்த நாட்டின் ஒற்றுமையை ஒருமைப்பாட்டை பாதுகாப்பேன். சகல இன மக்களினதும் கலாச்சாரங்களை பாதுகாப்பேன். சில தலைவர்கள் அதிகார பகிர்வு தொடர்பில் பேசுகின்றார்கள். ஆனால் கலாச்சாரங்களை அழிக்கின்றனர். சில சட்டங்களைக் கொண்டு வந்து கலாச்சார மரபுகளை அழிக்கின்றனர். ஆனால் நான் சகல மக்களினதும் கலாச்சாரங்களையும் பாரம்பரிய மரபுகளையும் விழுமியங்களையும் பாதுகாப்பேன் என்று உறுதி வழங்குகிறேன். கேள்வி: ரணில் விக்ரமசிங்கவை நெருக்கடி நேரத்தில் ஜனாதிபதியாக கொண்டு வந்தீர்கள். இரண்டு வருடங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அவருக்கு நீங்கள் ஆதரவு அளித்திருக்கலாமே? பதில்: இங்கு நீண்டகால விடயத்தையா அல்லது குறுகிய கால விடயத்தையா பார்க்க வேண்டும் என்பதே கேள்வியாகும். தற்போது எமக்கு வளர்ச்சி தேவைப்படுகிறது. தற்போது சஜித் அநுர ரணில் ஆகிய மூன்று வேட்பாளர்களின் விஞ்ஞாபனத்தை பார்க்கும்போது அங்கு வளர்ச்சிக்கான இடமில்லை. 2029 ஆம் ஆண்டில் கடன் செலுத்த ஆரம்பிக்கும்போது மீண்டும் பிரச்சனை ஏற்படும். எனவே அவற்றை ஆராய்ந்துவிட்டே போட்டியிட தீர்மானித்தோம். கேள்வி: மஹிந்த ராஜபக்சவும் பசில் ராஜபக்சவும் ரணிலை ஆதரிக்கலாம் என்று கூறியபோதும் நாமல் ராஜபக்ஷ அதனை எதிர்த்தபதாக கூறப்படுகிறது. அது உண்மையா? பதில்: அது ஒரு பொய்யான தகவல். நாங்கள் ஆரம்பத்தில் அனைவரும் ரணிலுக்கு ஆதரவு வழங்கினோம். நிபந்தனையற்ற வகையில் நாம் ஆதரவு வழங்கினோம். அவர் கொண்டு வந்த சில சட்டங்களை எமது கொள்கைகளுக்கு முரணானவை. எமது கொள்கைகளுக்கு இணங்குகின்ற ஒரு வேட்பாளருக்கே ஆதரவு வழங்க வேண்டும். நாம் தற்போதைய ஜனாதிபதிக்கு முதலீடுகளை ஊக்குவிக்குமாறும் தொழில் வாய்ப்புகளை உருவாக்குமாறும் கூறினோம். கலாச்சாரத்துக்கு பொருந்தாத சட்டங்களை கொண்டு வர வேண்டாம் என்று கூறினோம். ஆனால் அவற்றுக்கு அவர் செவிமடுக்கவில்லை. கேள்வி: கலாச்சாரத்துக்கு எதிரான வகையில் கொண்டு வந்த சட்டம் என்ன? பதில்: ஓரின சேர்க்கை சட்டமூலத்தை குறிப்பிடலாம். கலாச்சாரத்துக்கு பொருந்தாத எந்த சட்டத்தையும் கொண்டுவரக் கூடாது. அவ்வாறு செய்தால் அந்த தரப்பினர் கலாச்சாரத்தில் இருந்து ஒதுக்கப்படுவார்கள். அவர்களுக்கு சட்டத்தில் உரிமை கிடைத்தாலும் நாட்டின் கலாச்சாரத்தில் அவர்களுக்கு உரிமை கிடைக்காமல் போய்விடும். கேள்வி: நீங்கள் களமிறங்க எடுத்த முடிவுடன் ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைக்கின்ற ஆதரவு குறைந்து விட்டதாக கருதுகிறீர்களா? பதில்: இல்லை அப்படி இல்லை. எனது வாக்குகள் ரணிலுக்கு செல்லவில்லை. சென்றால் தானே பிரச்சினை வரும். அதனால் நான் போட்டியிடுவதால் ரணிலுக்கு எந்தபிரச்சினையும் இல்லை. கேள்வி: தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டுள்ளார். அது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு? பதில்: ஒரு பக்கத்தில் அதனை நான் சிறந்த ஒரு விடயமாக பார்க்கிறேன். காரணம் இந்த நாட்டில் எவரும் எந்தவொரு இனத்தவரும் ஜனாதிபதியாகலாம் என்ற ஒரு சூழல் உருவாகிறது. அரசியலமைப்பில் உள்ள விடயம் பிரயோகப்படுத்தப்படுகிறது. சிறந்த ஆரம்பமாக இதனை நான் பார்க்கிறேன். எனது கட்சியிலும் தமிழ் தலைவர்கள் உருவாகுவார்கள். எனது கட்சியிலும் தமிழர்கள் தலைமைத்துவ பதவிக்கும் வருவார்கள் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. கேள்வி: எதிர்க்கட்சி தலைவர் சஜித்தை சந்தித்து நீங்கள் பேசியதாக கூறப்படுவது? பதில்: அது ஒரு பொய்யான தகவல். நான் அவரை சந்தித்து பேசவில்லை. கேள்வி: அப்படியானால் இந்த வதந்தி எங்கிருந்து உருவாகின்றது? பதில்: ராஜபக்ஷமார் எல்லோருடனும் நல்ல உறவை பேணுகின்றனர். மேலும் தேர்தல் காரணமாக இந்த கதை உருவாகி இருக்கலாம். கேள்வி: உங்களை தவிர்த்து பிரதான மூன்று வேட்பாளர்கள் தொடர்பில் உங்கள் கருத்து என்ன ? பதில்: இந்த மூவருக்கும் ஒரே கொள்கையே காணப்படுகிறது. அனுராவின் விஞ்ஞாபகனம் ரணிலின் விஞ்ஞானத்திற்கு மிக நெருக்கமாக இருக்கிறது. கேள்வி: உங்களுடன் இளம் அமைச்சர்கள் அதிகளவு இருந்தார்கள். அவர்களுக்கு உங்கள் அரசாங்கத்தில் சிறந்த சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்கள் இன்று உங்களுடன் இல்லை. இதனை எப்படி பார்க்கிறீர்கள்? பதில்: இதுதான் அரசியல். சந்தர்ப்பம் கிடைத்ததும் அதனை பயன்படுத்துகிறார்கள். அவர்கள் அங்கு இருக்கின்றனர் என்பதற்காக அங்கே தான் இருக்கின்றார்களா என்று யாருக்கும் தெரியாது. கேள்வி: அவர்களுடன் உங்களுக்கு எதிர்கால பயணம் இருக்குமா? பதில்: கொள்கை பதில் கொள்கை அடிப்படையில் பிரச்சனை இல்லாவிடில் பயணம் இருக்கும். கேள்வி: 13-வது திருத்தச் சட்டம் தொடர்பில் பிரதான வேட்பாளர்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். ஆனால் நீங்கள் 13வது திருத்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்த முடியாது என்று திட்டவட்டமாக கூறுகின்றீர்கள். பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கவே முடியாது என்று கூறுகின்றீர்கள். ஏனைய வேட்பாளர்கள் அது தொடர்பாக எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை நடத்தலாம் பாராளுமன்றத்தில் ஆராயலாம் என்று கூறுகின்றனர். ஆனால் நீங்கள் ஏன் இவ்வாறு கடினமான ஒரு போக்கை இந்த விடயத்தில் கையாளுகின்றீர்கள்? பதில்: இந்த நாட்டில் பதவிக்கு வந்த எட்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமார்களும் இந்த பொலிஸ் மற்றும் காணி அதிகாரத்தை வழங்கவில்லை. இரண்டு ஜனாதிபதிகள் அதனை வழங்குவதாக கூறிறே அதிகாரத்துக்கு வந்தனர். ஆனால் வழங்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை வழங்குவதற்காகவே கொண்டுவரப்பட்டார். ஆனால் அவர் அதனை வழங்கவில்லை. எனவே இதனை அடுத்த வருடத்தில் வழங்க முடியும் என்று தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர்கள் எவ்வாறு கூற முடியும்? பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதற்கு நாட்டில் ஒரு பகுதி மக்கள் எதிரிக்கின்றனர். அதனை வழங்கினால் மீண்டும் பிரச்சினைகள் ஏற்படும் என்ற நிலைமையுள்ளது. இன்று தமிழ் மற்றும் முஸ்லிம் சிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர். வர்த்தகங்களில் ஈடுபடுகின்றனர். நான் உண்மையை மட்டுமே கூறுவேன். வழங்க முடியாது என்றால் முடியாது என்பதனை தெளிவாக திட்டவட்டமாக உண்மையை கூறுகிறேன். தமிழ் இளைஞர்களும் நான் இவ்வாறு உண்மையை கூறுவதை ஏற்றுக் கொள்வார்கள். காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தை வழங்க முடியாது என்று கூறுகின்ற நான் எனது முதலாவது தேர்தல் அலுவலகத்தை முல்லைத்தீவில் அமைத்தேன். கேள்வி: வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு அரசியல் பிரச்சனை இருக்கின்றது என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா? பதில்: அரசியல்வாதிகளுக்கு தான் இந்த அரசியல் பிரச்சனை இருக்கின்றது. மக்களின் பிரச்சினை தொடர்பாக அரசியல்வாதிகள் பேசுவதில்லை. பொலிஸ் அதிகாரத்தை வழங்கி விட்டதும் மக்களின் வயிறு நிறைந்து விடுமா? கேள்வி: அப்படி என்றால் நீங்கள் ஜனாதிபதியானால் மாகாண சபை முறை இருக்காதா? பதில்: மாகாண சபை முறை இருக்கும். நான் ஜனாதிபதியாகியதும் மாகாண சபை தேர்தலை நடத்துவேன். உள்ளூராட்சி மன்ற தேர்தலையும் உடனடியாக நடத்துவேன். வரலாற்றில் 13வது திருத்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவோம் என்று கூறிய எவரும் உரிய நேரத்தில் தேர்தலை நடத்தவில்லை. ஆனால் மஹிந்த ராஜபக்ச முதல் முதலாக வடக்கில் தேர்தலை நடத்தினார். வடக்கில் இளைஞர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைதான் தெற்கிலும் இளைஞர்கள் எதிர்கொள்கின்றனர். எனவே நாம் இந்த இரண்டு பிரச்சினைகளையும் ஒரே கோணத்தில் ஆராய வேண்டும். இவற்றுக்கு இரண்டு தீர்வுகள் இல்லை. ஒரே தீர்வு தான் இருக்கிறது. தெற்கில் இளைஞர்களுக்கு கிடைக்கின்ற சகல உரிமைகளும் சந்தர்ப்பங்களும் வடக்கில் கிழக்கில் இருக்கின்ற இளைஞர்களுக்கும் கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறேன். பொய் வாக்குறுதிகளை வழங்க முடியாது. புதிய தலைவரான என்னிடம் புதிய விடயங்களை மக்கள் எதிர்பார்க்கலாம். கேள்வி: வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகள் சமஷடி கோரிக்கையை முன்வைக்கின்றனவே? பதில்: இது ஒரு அரசியல் தீர்மானமாக இருக்கிறது. அதற்காகத்தான் மைத்திராபாலவை ஆட்சிக்கு கொண்டுவந்தனர். அப்போது கூட இதனை பெற முடியாமல் போய்விட்டது. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதெனில் அது பாராளுமன்றத்தின் பொறுப்பாகும். அது ஜனாதிபதியின் பொறுப்பல்ல. நிறைவேற்று அதிகாரம் முறை மற்றும் தேர்தல் முறையை ஒன்றாகவே மாற்றவேண்டும். ஜனாதிபதி தேர்தல் மேடையில் அது தொடர்பாக வாக்குறுதி வழங்குவதில் அர்த்தமில்லை. கேள்வி: செனட் சபை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் உங்களிடம் ஏதாவது திட்டம் இருக்கிறதா? பதில்: இந்த விடயங்கள் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தலாம். அதற்கு எமது கதவுகள் திறந்து இருக்கின்றன. அதனை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். நாமல் ராஜபக்ஷ தீர்மானிக்க முடியாது. இதனை ரணில் விக்கிரமசிங்கவும் தீர்மானிக்க முடியாது. கேள்வி: வடக்கில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இளைஞர் யுதிகளுடன் உங்களுக்கு கடந்த காலங்களில் சிறந்த தொடர்பு இருந்தது. அந்த தொடர்பு இன்னும் இருக்கிறதா? பதில்: இன்னும் சிறப்பாக இருக்கின்றது. கடந்த சில வருடங்களில் அங்கு எனது பிரசன்னம் குறைவாக இருந்தது. ஆனால் அவர்களுடனான எனது உறவு சிறப்பாகவே தொடர்கிறத. அவர்களது நிகழ்வுகள் பிறந்த நாள் நிகழ்வுகள் வீட்டு நிகழ்வுகளுக்கு நான் அடிக்கடி சென்று வருவேன். தற்போது தேர்தல் காலத்தில் நிச்சயமாக நான் அங்கு செல்வேன். அங்கு கூட்டங்களை நடத்துவேன். அங்குள்ள இளைஞர்களுடன் எனது உறவு அரசியல் ரீதியானதல்ல. அது தனிப்பட்ட உறவாகவே காணப்படுகிறது. அதிகமானோருக்கு இது தெரியாது. கேள்வி: 2009 இல் யுத்தம் நிறைவடைந்தது. ஆனால் இன்னும் காணாமல் போனோர் பிரச்சனை நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதனை நீங்கள் எப்படி கையாள்வீர்கள்? பதில்: காணாமல் போனோர் பிரச்சினைக்கு நிச்சயமாக ஒரு பதில் வழங்கியாக வேண்டும். தொடர்ந்து காணாமல் போனோர் குறித்த ஆணைக்குழுக்களை நியமித்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. ஒரு பதில் வழங்க வேண்டும். அந்த பதிலை வழங்குவதற்கு நான் தயாராக இருக்கின்றேன். நான் ஜனாதிபதியாகியதும் அரசியல் கைதிகளை விடுதலை செய்துவிடுவேன். கேள்வி: கொரோனா காத்தில் முஸ்லிம் மக்களின் சடலங்ளை தகனம் செய்த விடயம் ஒரு மிகப்பெரிய சர்ச்சையை தோற்றுவித்தது. அந்த நேரத்தில் உங்கள் நிலைப்பாடு என்னவாக இருந்தது? பதில்: அது தனிப்பட்ட ரீதியில் எடுத்த முடிவல்ல. நிபுணத்துவ குழு வழங்கிய ஆலோசனையின் பேரில் எடுக்கப்பட்ட முடிவு. ஆனால் நிபுணத்துவ குழு கோட்டாவை தவறாக வழிநடத்தியது. கேள்வி: நீங்கள் அப்போதே அவ்வாறு கருதுனீர்களா? பதில்: எந்த நேரத்தில் அவ்வாறு நான் சிந்திக்கவில்லை. ஏனெனில் அந்த நேரத்தில் நாட்டு மக்களை பாதுகாப்பதே பிரதான தேவையாக இருந்தது. நிபுணத்துவ ஆலோசனைப்படி செயல்பட வேண்டும் என்பதே சகலரதும் கருத்தாக இருந்தது. ஆனால் சிறிது காலம் செல்லும்போது இந்த நிபுணத்துவ குழு கோட்டாவை தவறாக வழி நடத்துகிறது என்பதை புரிந்துகொண்டோம். போராட்டக் களத்தில் முஸ்லிம் மக்கள் கோட்டாவுக்கு எதிராக உடல் தகன விவகாரத்தில் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தபோது அருகில் அதற்கு ஆலோசனை வழங்கிய நிபுணத்துவகுழு உறுப்பினர்களும் பதாதைகளை பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போதுதான் இது உபாய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட ஒரு விடயம் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். கேள்வி: இந்த நேர்காணல் ஊடாக முஸ்லிம் மக்களுக்கு நீங்கள் இது தொடர்பில் என்ன கூற விரும்புகிறீர்கள்? பதில்: இது நாங்கள் தனிப்பட்ட ரீதியாக எடுத்த முடிவல்ல. நிபுணத்துவ ஆலோசனை பேரில் செய்யப்பட்ட விடயம். மக்களின் பாதுகாப்புக்காக இது செய்யப்பட்டது. ஆனால் இந்த முடிவு காரணமாக மக்கள் காயப்பட்டிருந்தால் அதற்காக நாம் மன்னிப்பு கோருகிறோம். உடல் தகன விவகாரம் மற்றும் கொரோனா காலத்தில் எடுக்கப்பட்ட கடினமான முடிவுகள் காரணமாக யாராவது காயப்பட்டிருந்தால் கவலை அடைந்திருந்தால் அதற்காக நாம் மன்னிப்பு கோருகிறோம். கேள்வி: இந்தியா சீனாவுடனான உங்கள் வெளிவிவகார கொள்கை எப்படி இருக்கும்? பதில்: நான் இரண்டு நாடுகளுடனும் நட்பு ரீதியான ஒரு கொள்கையை முன்னெடுப்பேன். நட்புரீ மற்றும் அருகாமை நாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற மற்றும் அணிசேரா கொள்கையை நான் பின்பற்றுவேன். எமது அபிவிருத்திக்கு முதலீடுகளுக்கு மற்றும் சுற்றுலாத்துறைக்கு இந்த இரண்டு நாடுகளும் மிக முக்கியத்துவமானவையாகும். ஆனால் இன்னும் ஒரு நாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதற்கு எமது நாட்டை பயன்படுத்துவதற்கு இடமளிக்க மாட்டேன். கேள்வி: இந்தியா இந்த பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பில் கரிசனை கொள்வதாக கூறப்படுகிறதே? பதில்: இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பில் நாம் கரிசனை கொள்வோம். கேள்வி: ஜனாதிபதி வேட்பாளர் என்று ரீதியில் தமிழ் பேசும் மக்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள் ? பதில்: தமிழ் பேசும் மக்களின் கலாசாரங்களை விழுமியங்களை பாரம்பரியங்களை நான் காப்பாற்றுவேன். மதங்களை காப்பாற்றுவேன். யுத்த காலத்திலும் கொரோனா காலத்திலும் கூட நாங்கள் நல்லூர் திருவிழாவை சிறப்பாக நடத்தினோம். பொய் வாக்குறுதிகளை வழங்கமாட்டேன். பொய் வாக்குறுதிகளை வழங்குபவர்களிடம் சிக்க வேண்டாம் என்று நான் கூறுகிறேன். 30 - 40 வருடங்கள் பொய் வாக்குறுதிகளுக்கு ஏமாற்றமடைந்து விட்டீர்கள். எனது தந்தையும் 13 பிளஸ் என்ற விடயத்தை முயற்சி செய்தார். அது நடக்கவில்லை. அவற்றில் பாடங்களைக் கற்றுத்தான் நான் இந்த நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறேன். வரலாற்று ரீதியான பாடங்கள் நிகழ்வுகளில் இருந்து பாடங்களை கற்று நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறேன். கேள்வி: மஹிந்த ராஜபக்சவுக்கும் நாமல் ராஜபக்சவுக்கும் இடையிலான உறவு எவ்வாறானது? பதில்: அது மிகவும் நெருக்கமான உறவு. தந்தை என்ற ரீதியில் அவர் என்னை வழி நடத்துகிறார். எனது பிரச்சாரத்தில் முன்னணியில் அவர் தான் இருக்கிறார். தவறு செய்தால் திட்டுவார். ஆனால் ஒருபோதும் என்னை அடித்ததில்லை. ஆலோசனை வழங்குவார். ஆனால் முழுமையான சுதந்திரத்தை வழங்கி இருக்கிறார். கேள்வி: நீங்கள் ஜனாதிபதி தேர்தல் தேர்தலில் களமிறங்குவதற்கு தந்தை ஆரம்பத்தில் விரும்பினாரா? பதில்: கட்சியும் தந்தையும் பசிலும் எடுத்து ஒரு முடிவே இதுவாகும். கட்சியை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டும் என்றால் நான் போட்டியிடவேண்டும் என்று அவர்கள் கருதினார்கள். கேள்வி: நீங்கள் போட்டியிடுவதாக அறிவித்த பின்னர் உங்களிடம் இருந்து பிரிந்து சென்றவர்கள் உங்களுடன் மீண்டும் பேசினார்களா ? பதில்: அவர்கள் இன்னும் என்னுடன் பேசிக் கொண்டுதான் இருக்கின்றனர். அங்கிருந்தும் சிலர் எனக்கு உதவி செய்கின்றனர். சிலர் வருவார்கள். சிலர் அங்கிருந்து எனக்கு உதவி செய்வார்கள். கேள்வி: இந்திய பிரதமர் மோடியுடனான உங்கள் எத்தகையது? பதில்: அது கொள்கை ரீதியாக ஏற்பட்ட பிணைப்பினால் ஏற்பட்ட உறவு. இந்திய பிரதமர் மோடியும் மதங்களை கலாசாரங்களை மதிப்பவர். அவர் அசைவம் உண்ண மாட்டார். இந்து மற்றும் பௌத்த கலாச்சாரங்களை மதிப்பவர். அந்த வழியிலேயே நானும் பயணிக்கிறேன். இந்து மற்றும் பௌத்த கலாச்சாரங்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். நாம் இருவரும் சந்திக்கும் போது பரஸ்பரம் அக்கறை உள்ள விடயங்கள் தொடர்பாக பேசுவோம். கேள்வி: இந்திய பிரதமர் மோடி உங்களை சந்திக்கும்போது தமிழ் பேசும் மக்களின் பிரச்சினையை தீர்த்து விடுங்கள், அதனை ஏன் தொடர்ந்து வைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று கூறியிருக்கிறாரா? பதில்: இந்திய பிரதமர் மற்றும் இந்திய அரசாங்கம் ஒருபோதும் ஏனைய நாட்டின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவதில்லை. அவர்கள் தங்களது பொருளாதார வளர்ச்சி தொடர்பாகவே கவனம் செலுத்துவார்கள். கேள்வி: பிரசார காலத்தில் உங்கள் பிள்ளைகளுடன் இருக்கின்ற சந்தர்ப்பங்களை இழக்கின்றீர்களா? பதில்: நான் எங்கிருந்தாலும் அவர்களுடன் வீடியோ தொடர்பை ஏற்படுத்தி பேசி விடுவேன். வீட்டில் இருக்கும்போது அவர்களுடன் நெருக்கமாக இருப்பேன். https://www.virakesari.lk/article/192602