Search the Community
Showing results for tags 'கொரோனா'.
-
உலகின் பல்வேறு தேசங்களிலும் பரந்து வாழும் நாம் இன்றளவுக்கும் எத்தனையோ பொதுமுடக்கங்களை / பயணத்தடைகளை எதிர்கொண்டு சமாளித்து வருகிறோம். எனவே, இவ்வாறான சவாலான சூழ்நிலைகளைக் கையாளும் பக்குவத்தையும் நம்மில் பலர் பெற்றிருக்கக்கூடும். எனினும், இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்த அசாதாரணமான சூழல் நாம் வாழும் தேசங்களிலோ, தாயகத்திலோ நீடிக்கப் போகிறதோ என்று எவருக்கும் தெரியாது. இந்த நிலையில் இவ்வாறான பொதுமுடக்க / பயணத்தடை காலங்களை எவ்வாறு சமாளிக்கலாம் என்பது பற்றிய சில வழிமுறைகளைக் கீழே தருகிறேன். நம்மில் பலருக்கு ஏற்கெனவே தெரிந்த / பலரும் கைக்கொள்ளும் வழிமுறைகளாக இவை இருக்கலாம். எனினும், இந்த விடயத்தில் உதவி தேவைப்பட்டோருக்கும், ஒரு நினைவூட்டலுக்காகவுமே இந்தப் பதிவை இங்கு எழுதுகிறேன். இனி, அந்த வழிமுறைகளைப் பார்க்கலாம்: 1) கோயில்களே ஆயினும் அவை பலரும் புழங்கும் பொதுவெளிகள் ஆகும்; எம்பெருமான் சந்நிதியில் மனிதர்க்கு மட்டுமன்றி கொறோனாக்கும் இடம் உண்டு தானே! எனவே, வீட்டுப் பூஜை அறை, வீட்டு வளவில் உள்ள சிறு கோயில்களை இயன்றவரை வழிபாட்டிற்காகவும், வீட்டிலுள்ளோரின் கூட்டுப் பிரார்த்தனை / பஜனைகளுக்காகவும் பயன்படுத்துவது சிறந்தது. இது நமது ஆன்ம பலத்தை அதிகரித்து, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்; குடும்ப உறவுகளும் வலுப்பெறும். 2) அடிக்கடி பொழுதுபோக்காகவோ, வேலை நிமித்தமோ பயணம் செய்து பழகியோருக்கு பொதுமுடக்கத்தால் வீட்டிலேயே மணி/நாட்கணக்கில் முடங்கியிருப்பது மன அழுத்தத்தைத் தரலாம். அவர்கள் தமது கவனத்தைத் திசை திருப்பத் தமக்குப் பிடித்த ஓரிரு பொழுதுபோக்கான செயற்பாடுகளை ஆரம்பிக்கலாம். உதாரணமாக, வீட்டுத் தோட்டம் செய்வது, வீட்டிலுள்ள சிறுவர்களுக்குக் கற்பிப்பது, சமையல், தையல் போன்றவற்றைப் பழகுவது, ஆடல், பாடல், எழுத்து, ஓவியம், பேச்சு, இசைக்கருவிகள் இவற்றில் ஏதாவது ஒன்றையேனும் பயிற்சி செய்வது போன்றவற்றைக் கூறலாம். இதன் மூலம் நம் திறமைகளை வளர்ப்பது மட்டுமன்றி, நமது மனமும் பலவழிகளில் சிதறாது ஒருமுகப்படுத்தப்படுகிறது. உள்ளத்தில் இனம்புரியாத ஆனந்தமும், தன்னம்பிக்கையும் தோன்றுகிறது. அத்துடன் நம் வாழ்க்கையை வண்ணமயப்படுத்துவதுடன், மனநிறைவையும் தந்து நாம் வாழ்வதன் அர்த்தத்தையும் நமக்குப் புரிய வைக்கிறது. 3) நம் வாழ்வில் எவை வேண்டியன, எவை வேண்டாதவை என்பதை ஆற அமர இருந்து யோசித்து வேண்டாதவையைக் கழிக்கவும், வேண்டியவற்றைத் தேடவும் இந்தப் பொதுமுடக்க காலம் உகந்தது. அவை பொருட்களாக இருக்கலாம்; அல்லது உங்கள் நம்பிக்கை/கொள்கை போன்றனவாகவும் இருக்கலாம். எதுவாக இருப்பினும் உங்கள் விருப்பு - வெறுப்புக்களை அலசி ஆராய்ந்து அவற்றை மாற்றியமைத்துக் கொள்ள உதவும் அரிய சந்தர்ப்பமே இந்தப் பொதுமுடக்க காலம். அதை உங்கள் கற்பனா சக்தியிடமே விட்டுவிடுகிறேன்! 4) வீட்டிலுள்ள உறவுகளுடன் நமது தொடர்பாடல் திறனை அதிகரிக்க நமக்குக் கிடைத்திருக்கும் கால அவகாசமாகவும் இந்தப் பொதுமுடக்க காலத்தைக் கொள்ளலாம். 'தொடர்பாடல் திறனா!' என நீங்கள் ஏளனமாக நகைக்கலாம். ஆனால் நம்மில் பலர் நினைப்பது போல நாம் தொடர்பாடலில் சிறந்தவர்கள் அல்ல. தினமும் தெரிந்தோ, தெரியாமலோ ஏராளமான தொடர்பாடல் தவறுகளைச் செய்கிறோம். அதனால் ஏற்படும் விளைவுகள் சில சமயங்களில் பாரதூரமாகவும் இருக்கின்றன. எனவே சிறந்த தொடர்பாடல் திறனை வளர்ப்பதில் அதிக சிரத்தையையும், நேரத்தையும் தற்போது எடுத்துக்கொள்ளல் நீண்ட கால நோக்கில் மிகவும் பயனுள்ளது. ஆம், இது ஒரு மிகச் சிறந்த முதலீடு தான்! தொடர்பாடல் பற்றி YouTubeஇலும் பல்வேறு காணொளிகள் உள்ளன. அவற்றில் தரமானவற்றை இனங்கண்டு அவற்றிலிருந்து கற்று உங்கள் தொடர்பாடல் திறனை விருத்தி செய்யலாம். இது பெரும் சமுத்திரம் போல் பரந்த விசாலமான விடயம். ஓரிரவில் வளர்த்துக் கொள்ளும் திறனல்ல. எனினும் இன்றே அதனைப் பயிற்சி செய்யத் தொடங்குதல் உங்கள் உறவு, நட்பு, சமூகத்துடன் நல்ல ஆரோக்கியமான உறவைப் பேண உதவும். (Search in YouTube 'Communication skills', 'listening skills' etc.) 5) பொதுமுடக்க காலத்தில் நாம் வீட்டிலிருந்து அலுவலக வேலை பார்க்கும்போதோ, அல்லது சமையல், சுத்தம் செய்தல் போன்ற வீட்டுவேலைகளைச் செய்யும்போதோ பின்னணியில் அமைதிதரும் இசையை இசைக்கவிட்டுவிட்டு நம் கருமங்களை ஆற்றும்போது ஓர் நேர்மறையான சூழலில் இருப்பதாக உணர்வோம். இது நாம் செய்யும் கருமங்களை மனமொன்றிச் செய்ய உதவும். அது மட்டுமன்றி வீட்டுச் சூழல் நிம்மதியானதாகவும், நேர்மறை எண்ணங்களைத் தருவதாகவும் அமைய இனிய இசை உதவும். YouTubeஇல் வீணை, வயலின், புல்லாங்குழல், சக்க்ஷபோன், பியானோ இசை வடிவங்கள் இந்தியா, சீனா போன்ற கீழைத்தேச இசைவடிவங்களிலும், இன்னும் பல மேலைத்தேச இசை வடிவங்களிலும் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. தவிரவும் எத்தனையோ meditation music கோர்வைகள் பலவும் மணிக்கணக்கான videoகளாக உள்ளன. (உங்களிடம் unlimited internet வசதி இருந்தால் இன்னும் நல்லது!) அமைதியான இசை நாம் இருக்கும் சூழலை இனிமையானதாகவும், நிம்மதியானதாகவும் மாற்றவல்லது. 😊 6) பிரார்த்தனை: வீட்டுப் பூஜை அறையிலோ அல்லது ஒரு அமைதியான இடத்திலோ அமர்ந்துகொண்டு சற்று நேரம் சுவாசப்பயிற்சி செய்து நம் மனதை ஒருநிலைப்படுத்தி அமைதிப்படுத்திக்கொண்டு, நமக்கெல்லாம் மேலான பிரபஞ்சப் பேராற்றலை / இறைவனை வணங்கிவிட்டுப் பின்வருவனவற்றை நாம் நமது கற்பனா சக்திக்கேற்பச் செய்யலாம்: 1. நன்றியுணர்ச்சியை வெளிக்காட்டுதல் - உதாரணத்துக்கு, நமக்கெல்லாம் சக்தியையும், வளங்களையும் தந்து நம்மை வாழ வைத்துக்கொண்டிருக்கும் இந்தப் பிரபஞ்சப் பேராற்றலுக்கு நன்றி! இந்தச் சவாலான சூழலில் நம்மைக் காக்க இயன்ற நடவடிக்கைகளை எடுக்கும் நாட்டு/நகர/பிரதேச நிர்வாகத்துக்கு நன்றி! வைத்திய நிலையங்களில் போராடிக்கொண்டிருக்கும் மருத்துவர், தாதியர் போன்ற சுகாதாரத் தொழிலாளர்களுக்கு நன்றி! நம்முடன் கூட இருக்கும் உறவுகளுக்கு நன்றி! - இப்படி யாருக்கெல்லாம் நாம் நன்றி சொல்ல விரும்புகிறோமோ அதை நாம் உளமாரவும், உண்மை அன்புடனும் உணர்ந்து சொன்னால் நம்முள்ளேயே ஒரு பெரிய ஆத்ம திருப்தியும், நேர்மறை எண்ணங்களும் உருவாகும். இந்த உணர்வு நமது நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம். 2. இதுபோலவே, 'மன்னிப்பு (கேட்டல்/கொடுத்தல்)', 'வாழ்த்துதல்' போன்ற ஏனைய நல்ல உணர்வுகளுக்கும் உங்கள் கற்பனா சக்தியைப் பொறுத்துச் செய்யலாம். இந்தப் பயிற்சி ஒரு வேடிக்கையானதாகவோ, கேலிக்குரியதாகவோ தோன்றலாம். எனினும் அதைப் பயிற்சி செய்து அனுபவித்தால் அவற்றின் நன்மை உங்களுக்கே புரியும். 😊 7) பொதுமுடக்கத்தால்/பயணத்தடையால் வீட்டில் முடங்கியிருக்கும் நிலையில், எவ்வளவு தான் நாம் நேர்மறை எண்ணங்கள் மூலம் அதனைச் சமாளிக்க முயன்றாலும் ஒருவித சலிப்புத் தன்மை, வெறுமை, மன அழுத்த உணர்வு போன்றவை அவ்வப்போது தோன்றுவது இயல்பு. இந்த இயல்பான உணர்வுகளை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ளப் பழகினால் மேலும் மன அழுத்தமடைவதை நாம் தவிர்க்கலாம். அது தவிரவும், பொதுமுடக்கத்தை எதிர்கொள்ளும் நம்மில் பலர் யுத்தகாலத்தில் ஊரடங்கிற்கு நன்கு பழக்கப்பட்டிருப்போம். அதே யுத்த காலங்கள் தாம் நம் சமூகத்திடையே நெருக்கமான நல்ல உறவுகளைப் பேண உதவின என்று சொல்வது மிகையல்ல. நமக்கெல்லாம் பொதுவான ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டிய அந்த யுத்தச் சூழலில் நாமெல்லாம் ஒற்றுமையாக உறவு, நட்புக்களை மதித்து கூட்டுறவாய் வாழ்ந்தோம். பின்னர் வந்த நுகர்வோர் கலாசாரம், அவசர வாழ்க்கை முறை இந்தக் கூட்டுறவு வாழ்க்கையைச் சாத்தியமற்றதாக்கிவிட்டது. எனினும் தற்போது நாம் எதிர்கொள்வதும் உலகளாவிய ரீதியில் ஒரு பெரும் யுத்த சூழ்நிலையைத்தான் - அதுவும் கண்ணுக்குத் தெரியாத அந்தக் கிருமி தான் நம் எதிரி. எனவே ஊரடங்கு காலங்களைச் சமாளித்து இன்றளவும் நலமாக வாழும் நாம் தற்போதய பொதுமுடக்க காலத்தையும் தைரியமாக எதிர்கொள்வோம். இதுவும் கடந்து போகும் என்ற உறுதியான மனநிலையுடன் பொதுமுடக்க விதிமுறைகளை மதித்து அநாவசிய ஊர் சுற்றல்களைத் தவிர்ப்போம் - இயன்றவரை வீட்டு வளாகங்களுக்குள்ளே இருப்போம். உறவுகளை வளம்படுத்த அரிய ஓர் சந்தர்ப்பமாக இந்தப் பொதுமுடக்க காலத்தைப் பயன்படுத்துவோம். வீட்டிலுள்ள உறவுகளோடு செலவழிக்க நேரமில்லையே என்ற குறை முன்பு இருந்திருக்கும். எனவே தற்போது கிடைத்த வாய்ப்புக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம். நிலைமை சுமுகமடைந்ததும் பின்னாளில் இப்படி ஓர் வாய்ப்பு அமையுமோ தெரியாது. எனவே நல்ல இனிய நினைவுகளைச் சேகரிப்போம். ❤️ அன்பே சிவம். ❤️ 8 ) 📖வாசிப்புப் பழக்கம்: இதில் நான் சொல்ல புதிதாக ஒன்றும் இல்லை. எனினும் இதை ஒரு நினைவூட்டலாக (reminder) எழுதுகிறேன். அதுவும் இந்த பொதுமுடக்க காலம் வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கவோ, மீள ஆரம்பிக்கவோ உகந்ததாக இருக்கும் என்பதாலேயே இதையும் குறிப்பிடுகிறேன். வாசிப்புப் பழக்கத்தின் நன்மைகளையும் நான் சொல்லித் தான் நீங்கள் தெரிய வேண்டும் என்பதில்லை. எனினும் நினைவூட்டலாக சில நன்மைகளை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்: 1. அறிவு வளர்ச்சி மட்டுமல்லாது, ஒரு மொழியில் ஆளுமையையும் வளர்க்கிறது. அதாவது வாசிப்புப் பயிற்சியால் புதிய சொற்களை, வசன அமைப்புக்களை, அவற்றை எந்தச் சந்தர்ப்பங்களில் பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவைத் தருகிறது. வெறுமனே இலக்கணத்தைக் கற்பதாலும், சொற்களை மனப்பாடம் செய்வதாலும் எந்த ஒரு மொழியிலும் புலமை பெற்றுவிட முடியாது. இவற்றுடன் வாசிப்புப் பழக்கத்தையும் சேர்த்தல் மிகவும் அவசியமாகும். வாசிப்புப் பழக்கம் உங்களது மொழிப் பயிற்சியை துரிதப்படுத்துகிறது. உங்களுக்குப் பிடித்த விடயங்கள் சம்பந்தமான புத்தகங்களை வாசிப்பது அதனை இன்னும் துரிதப்படுத்தும். 2. மனமொன்றி வாசிப்பதில் மூழ்குவது ஒருவிதத்தில் தியானப் பயிற்சி போன்றது. 'அதே தியானமாக இருக்கிறார்' என்று பேச்சுவழக்கில் சொல்வது இதைத்தானோ என்று தெரியவில்லை! மனதை ஒருமுகப்படுத்த வாசிப்புப் பயிற்சி மிகவும் உதவுகிறது. நித்திரைக்குச் செல்லும் முன் தொலைக்காட்சி, செல்போன் இவற்றில் மூழ்குவதை விட, புத்தக வாசிப்பைச் செய்வது மிகவும் ஆரோக்கியமானது. நிம்மதியான உறக்கத்தைத் தரலாம்; கண்களுக்கும் பாதகமில்லை. எனவே, பொதுமுடக்கத்தை நல்ல முறையில் பயன்படுத்தும் ஒரு வழியாக வாசிப்புப் பழக்கத்தையும் நடைமுறைப்படுத்தலாமே! 😊📚 9) 🏃🏃♀️உடற்பயிற்சி: பொதுமுடக்கமல்லாத சூழ்நிலையில் பல்வேறு அலுவல்கள் நிமித்தம் ஓடியாடித் திரிந்த நமது இயக்கத்தை இந்த அசாதாரண சூழல் மட்டுப்படுத்துவதால் ஏற்படும் விசனம் இயல்பானதே. இதனை ஆரோக்கியமாகக் கையாளும் வழிமுறைகள் சிலவற்றை மேலே குறிப்பிட்டிருந்தேன். எனினும், பலருக்குத் தெரிந்திருந்தாலும் நடைமுறைப்படுத்த தயங்கும் ஒரு செயல் இந்த உடற்பயிற்சியாகும். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதன் அவசியம் தற்போது அதிகரித்துள்ளது. பொதுவெளிகளில் மட்டுப்படுத்தப்பட்ட நமது உடல் இயக்கத்துக்கு ஓரளவுக்கேனும் மாற்றீடே இந்த உடற்பயிற்சி. வீட்டில் இருந்து நொறுக்குத் தீனிகளை அதிகம் உண்ணும் வாய்ப்பு இருப்பதால் நமது உடல் எடையும் அசாதாரணமான அளவுக்கு அதிகரிக்கலாம். எனவே உடற்பயிற்சி அவசியமாகிறது. பரந்த வளவுடன் கூடிய வீட்டில் வாழ்ந்தாலும் சரி, சிறு பிளாட்டில் வாழ்ந்தாலும் சரி நம் சூழலுக்கும், உடல்நிலைக்கும் உகந்த உடற்பயிற்சிகளைச் செய்யலாம். இது பற்றிய பல காணொளிகள் YouTubeஇல் உண்டு. எனினும், அவற்றைப் பின்பற்றும்போது உங்கள் பொது அறிவையும் பயன்படுத்துதல் பாதுகாப்பான முறையில் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள உதவும்! உங்கள் வைத்திய நிபுணர்கள், உடற்பயிற்சி பயிற்றுனர்கள் போன்றோரின் ஆலோசனையை இந்த விடயத்தில் பெறுவது சிறந்தது. 😊 10) 'சின்னச் சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே எங்கும் எங்கும் கொட்டிக் கிடக்கு!' என்ற சினிமாப் பாடலை நாம் கேட்டிருப்போம். அதன் அர்த்தம் இன்றைய காலத்தில் இன்னமும் ஆழமானதாகத் தோன்றுகிறது. எத்தனை பெரிய சவாலான சூழல் வந்தாலும், நம்மைச் சூழவுள்ள சின்னச் சின்ன நல்ல விடயங்களையும் ரசித்து அனுபவிக்கக் கற்றுக்கொள்வோம். உதாரணத்துக்கு, வீட்டுத் தோட்டத்தில் உள்ள மலர்களின் அழகை ரசிக்கலாம்; அதைக் கவிதையால் வர்ணிக்கலாம்; கமராவில் படமாக்கலாம். அவரவர் விருப்பங்களுக்கேற்ப ரசிக்கக்கூடிய ஏராளமான சின்ன விடயங்கள் நம்மைச் சுற்றி இருக்கின்றன. கண்ணுக்கு, காதுக்கு, மூக்குக்கு, வாய்க்கு, தோலுக்கு என ஐம்புலன்களுக்கும் விருந்தாகும் விடயங்கள் பல உள்ளன. அவற்றைக் கண்டறிந்து ரசிப்போம். ஐம்புலன்களை அடக்க வேண்டியதில்லை; ஆரோக்கியமான முறையில் நெறிப்படுத்துதலே முக்கியம். நல்ல ரசனையாலும் அவை நெறிப்படுத்தப்படும் - நல்ல ரசனையும் ஒரு வித தியானமே! 😊 ************************************ நான் கற்ற, அனுபவித்து உணர்ந்த வகையில் மேலுள்ள தகவல்களை எழுதியுள்ளேன். இந்த விடயத்தில் நம் எல்லோருக்கும் பயன் தரக்கூடிய உங்களது ஆலோசனைகளை / தகவல்களையும் கீழே பின்னூட்டமாகப் பதியலாம். நன்றி 😊
-
2021 May 6ல் எனக்கு செய்யப்பட்ட pcr testன் ரிசல்ட் positive. எனவே நான் கோப்பாய் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டேன் அதோடு எனது வீடும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. Corona விற்கான 2 வது தடுப்பூசி (covishield) போடப்பட்டு அடுத்தநாள் காலையில் காய்ச்சல்,தொண்டைவலி ,உடல்வலி போன்ற அறிகுறிகள் இருந்ததால் நானாக சென்று pcr பரிசோதனையை செய்துகொண்டேன்,ரிசல்ட் பொசிட்டிவ் என்றுகாட்டியது.உடனடியாக வைத்தியசாலையில் தடுத்துவைக்கப்பட்டேன் 2 நாட்கள் intermediate ward எனப்படும் வாட்டில் அனுமதிக்கப்பட்டேன் அங்கும் என்னைப்போல் பலர் என்னுடன் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.கொரோனா பொசிட்டிவ் ஆகியிருந்தாலும் உடலில் எந்தவித அறிகுறிகளும் தென்படாமல் விட்டால்தான் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு மாற்றுவார்கள்.எனக்கு 6 மணித்தியாலங்கள்வரைதான் அறிகுறிகள் தென்பட்டது பின்னர் எந்த அறிகுறிகளும் இல்லை எனவே 2 நாட்களின் பின்னர் என்னை கோப்பாய் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு மாற்றினார்கள்.அங்குசென்றதும் என்னை பரிசோதித்தபின்னர் எனக்காக ஒதுக்கப்பட்ட அறைக்கு செல்லுமாறுகூறினார்கள். சுருக்கமாகக்கூறினால் அது ஒரு அகதிமுகாம்போலத்தான் இருந்தது அங்கு என் நோய் நிலைக்கு என்ன நடந்தது?அங்கு செல்வதாயின் என்னென்ன பொருட்களைக்கொண்டுசெல்லவேண்டும்?கொரோனா தொடர்பான ஆலோசனைகள் என்ன?என் அனுபவம் என்ன என்பதை ஒட்டுமொத்தமாக இந்த வீடியோவில் கூறியிருக்கின்றேன் பாருங்கள் நண்பர்களே <iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/1DrCkFs7p8U" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>
-
Thu, 10 Sept. at 16:41 நெஞ்சில் பதிந்த நிலவு – சித்தி கருணானந்தராஜா டியர் கண்ணன், உங்கள் மெயில் கிடைத்தது. நான் தடுமாறிப்போய் நிற்கிறேன். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நீங்கள் எப்போது வருவீர்கள்? வீட்டில் ஏதோ கசமுசாவென்று அம்மாவும் அப்பாவும் பேசுகிறார்கள். எனக்குக் கலியாணம் பேசுகிறார்கள் போலத் தெரிகிறது. என்னிடம் இதுபற்றி யாரும் இதுவரை பேசவில்லை. கடைசியாகத்தான் என்னிடம் வருவார்கள் என்று நினைக்கிறேன். அதற்கிடையில் நான் என்ன ஏது என்று சரியாகத் தெரியாமல் குறுக்கே விழுந்து எதையாவது கேட்டால் வெட்கமாகப் போய்விடும். தாங்கள் அதுபற்றிப் பேசவேயில்லையென்றால் நான்தான் கடைசியில் வெட்கப்பட்டுக் கூசிக்குறுக வேண்டியிருக்கும். எதற்கும் உங்களிடம் தெரிவித்து வைக்கிறேன். அப்படி ஏதாவது நடக்கப்பார்த்தால் நீங்கள்தான் என்னை வந்து காப்பாற்ற வேண்டியிருக்கும். நமக்கிடையில் ஏற்பட்ட தொடர்பு பற்றி இங்கு வீட்டில் யாருக்கும் தெரியாது. வீட்டில் யாரும் விழித்துக்கொள்ளு முன்பே விடிகாலையில் நீங்கள் கேற்றடிக்கு வந்து என்னிடம் உங்கள் விருப்பத்தைக் கூறிவிட்டுப் போய் விட்டீர்கள். நான் உங்களிடம் இசைவான ஒரு பதிலையும் கூறவில்லை. ஆனால் எனக்கு இதில் சம்மதமில்லையென்றும் கூறவில்லை. உங்கள் முகத்தைப் பார்த்தபோது உங்கள்மீது இரக்கமாக இருந்தது. ஆனால் திடுதிப்பென்று வந்து நான் சற்றும் எதிர்பார்க்காத நிலையில் அப்படிச் சொல்லி விட்டீர்கள். நான் தடுமாறிப்போய் உங்கள் அப்பா அம்மா மூலம் வீட்டில் வந்து கேட்கச் சொன்னேன். ஆனால் நீங்கள் அப்படி எதையும் செய்யவில்லை. வீட்டில் கேட்டால் விரும்ப மாட்டார்கள் என்ற பயமா? சரி பரவாயில்லை, இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்? தற்செயலாக எனக்கு வீட்டில் கலியாணம் நிச்சயம் செய்து விட்டார்களென்றால்! எனது நிலையென்ன? உங்கள் திட்டமென்ன? அன்று, “உன்னைக் கண்கலங்காது காப்பாற்றுவேன்…” என்றெல்லாம் சினிமா வசனம் பேசினீர்கள். இப்போது நான் கண்கலங்கிப் போய்த்தான் செய்வதறியாது திகைத்து நிற்கிறேன். நீங்கள் இப்போதைக்கு வருவீர்களா மாட்டீர்களா என்று உறுதியாகத் தெரியாததால் ஒரே தவிப்பாய் இருக்கிறது. எனக்கு ஒழுங்கான நித்திரைகூட இல்லை. என் வாழ்க்கையில் எனக்கு என்ன நடக்கப் போகிறதோ என்பதைக் கற்பனை செய்து பார்க்கவும் முடியவில்லை. எப்படி ஒருவரிடம் மனத்தைக் கொடுத்துவிட்டு இன்னொருவருக்குக் கழுத்தை நீட்டுவது? ஆண்களுக்கு இதுவெல்லாம் சர்வசாதாரணமாயிருக்கலாம். நான் ஒரு பாபமுமறியாதவள். நான் யாரையும் இதற்குமுன் என் மனதில் இருத்திக் கொண்டவளில்லை. யாரும் உங்களைப்போல என்னிடம் அப்படி விருப்பம் கேட்டதுமில்லை. எடுத்த எடுப்பில் நீங்கள் வந்து நான் யாரையாவது விரும்புகிறேனா என்று கேட்டபோது, இல்லையென்றேன். அப்படியிருந்தாற்தானே. நான் ஏன் எதற்கு என்று பதில்க்கேள்வி கேட்டிருக்கலாம். ஆனால் எனக்கு ஏனோ அப்படிக் கேட்க மனம் வரவில்லை, அப்பாவியாயிருந்தீர்கள். பார்க்க இரக்கமாக இருந்தது. எதிர்த்துப் பேசித் துரத்திவிடுமளவுக்கு உங்கள் முகம் இருக்கவில்லை. பாவம் போன்றிருந்தது. இதற்குப் பேர்தான் காதலென்பதோ தெரியவில்லை. இப்போது உங்கள் நினைவுகளை நெஞ்சிற் பதித்துவிட்டுத் தவித்துப்போய் நிற்கிறேன். வீட்டில் நான் சரியாக இளைத்து மெலிந்து களைத்துப் போய்விட்டேனாம் என்கிறார்கள். அம்மாவுக்குத்தான் இதில் அதிகம் விடுப்பு, சந்தேகம். எப்படியாவது கண்டுபிடித்து விடுவாவோ என்று பயமாக இருக்கிறது. அவவிடம் கதைவிட்டுக் கதை எடுக்கும் திறமையுண்டு. நல்ல வேளையாக அவவுக்கு எனது ரெலிபோனையெல்லாம் ஆராய்ந்து பார்க்கத் தெரியாது. அந்தச் சிறிய போனில் அவவால் எதையும் கண்டுபிடிக்க முடியாது. அதனால் தப்பிக்கிறேன். இன்னும் எத்தனை நாளைக்கு? வீட்டிற்கு வந்து யாராவது சம்பந்தம் பேசினால் என்ன செய்வது. எல்லாவற்றையும் சொல்லத்தானே வேண்டும். அப்போது குட்டுகள் வெளிப்படத்தானே செய்யும். எல்லோரும் திகைத்துத்தான் போவார்கள். “பூனைபோலிருந்தாளே! அவள் இப்படியா?” என்று நினைப்பார்கள். இதையெல்லாம் நினைக்க ஒரே தலைசுற்றுகிறது. மனம் நிறைந்த குற்ற உணர்வோடு எப்படி நடமாடுவது? என்னை எப்படிப்பட்ட சங்கடத்துக்குள் மாட்டி விட்டீர்கள் தெரியுமா? உங்களுக்கென்ன ஒருசிறிது கவலையுமில்லாமல் அங்கு இருக்கிறீர்கள். தயவு செய்து நானுங்களைக் குற்றவாளியாக்கி மனமாறுகிறேனென்று எண்ணாதீர்கள். என்னை மனதார விரும்பி என்னிடம் வந்து உங்கள் அன்பைத் தெரிவித்ததைவிட நீங்கள் வேறு ஒரு குற்றமும் செய்யவில்லை. ஆனால் நீங்கள் என்னையணுகிய காலம்தான் பொருத்தமில்லாமற் போய்விட்டது. அது நமது துரதிஸ்டம். இந்தப் பாழாய்ப்போன கொரோனா எப்போதுதான் முடிவுக்கு வந்து உலகம் பழைய நிலைக்கு வரப்போகிறதோ தெரியவில்லை. எப்போது பிளேனெல்லாம் ஓடும்? நீங்களும் இங்கு வந்து சேருவீர்கள்? போகிற போக்கைப் பார்த்தால் இந்தத் தொல்லை இப்போதைக்கு முடியும் போலத் தெரியவில்லை. அங்கிருந்து புறப்பட அனுமதிக்கிறார்களா? டிக்கட் கிடைக்குமா? தயவு செய்து அறியத்தாருங்கள். எனக்குக் கொஞ்சம் மனத்தைரியமாக இருக்கும். இல்லாவிட்டால் நானிங்கு ஏங்கியே செத்துப் போவேன். எத்தனை நாளைக்கு இந்த நிச்சயமற்ற வாழ்வை வாழ்வது? உங்களை அவசரப்படுத்தி இங்கு வரவழைக்கவும் பயமாயிருக்கிறது. ஏனென்றால் இங்கும் கொராணா. ஒவ்வொரு நாளும் புதிதாகத் தொற்றிய கணக்கும் இறந்தவர்களின் கணக்கும் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். அங்கே பாதுகாப்பாக இருக்கும் உங்களை அவசரப்படுத்தி வரவழைத்து இங்கு வந்ததும் உங்களுக்கும் தொற்றிவிட்டால் என்ன கதி? சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் விழுந்த கதையாகப் போய்விடும். எயார்ப்போட் திறந்து விட்டார்களென்றாலும் சரியாக எல்லாம் நல்ல நிலைக்கு வரும் வரைக்கும் வெளிக்கிட்டு விடாதீர்கள். நான் எப்படியாவது இங்கு சமாளித்து அவர்களிடம் நமது விடயத்தைச் சொல்லி ஒரு சம்பந்தமும் செய்ய விடாமல் தடுத்து நிறுத்தி விடுவேன். ஆனால் உங்களிடமிருந்து உறுதியான பதில் வரவேண்டும். அதுவரை காத்திருக்கிறேன். இப்படிக்கு உங்கள் ராதா --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- Thu, 17 Sept. at 16:00 டியர் ராதா மெயில் கிடைத்தது. என்னால் உடனடியாகவோர் நல்ல பதிலைத் தரமுடியாமலிருக்கிறது. இங்கு சிறிது சிறிதாகத்தான் விடயங்கள் சீரடைந்து வருகின்றன. எப்போது எயார்ப்போட் திறக்கும்? எப்போது அங்கு வர அனுமதிப்பார்கள்? என்பதெல்லாம் நிச்சயமாகத் தெரியவில்லை. தயவு செய்து என்னை மன்னித்துவிடு. உனது மனம் ஆறுதலடையக் கூடியதாக ஒரு நம்பிக்கையைக் கூட என்னால் உனக்கு ஏற்படுத்த முடியவில்லை. நான் தவறு செய்து விட்டேனே என்று எனது மனம் குற்றம் சுமத்துகிறது. ஒரு பாபமுமறியாத உன்னைக் குழப்பிவிட்டு இங்கு வந்து நானும் குழம்பிப்போய் நிற்கிறேன். நம்மிருவருக்கும் சூழ்நிலைகள் அப்படி அமைந்து விட்டன. அந்தக் கூட்ட நெரிசலைத் தாங்க முடியாமல் நீ திடீரென்று மயக்கம் போட்டுச் சரிந்தபோது உன்னை என் கைகளில் தாங்கிப் பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. கையிலிருந்த தண்ணீர்ப் போத்தலை வாயினால் திறந்து உன்முகத்தில் கவிழ்த்தேன். நீ திடுக்கிட்டு விழித்து என்னை உன் நிலவூறித் ததும்பும் விழிகளால் பார்த்தாய் பின் சாரியென்று சுதாரித்துக்கொண்டாய். பிறகு உன்னோடு வந்தவர்கள் உன்னைக் கூட்டிக்கொண்டு போய் விட்டார்கள். அவ்வளவுதான் நடந்தது. எனக்கு அந்த நிகழ்வை மறக்க முடியவில்லை. என்மீது துவண்டு விழுந்த அந்த மாற்றுப் பொன் ஒத்த உன்மேனியின் ஸ்பரிசமும் வாடிய பூப்போன்றிருந்த அந்த முகமும் வேற்று நினைவின்றி மனதைக் குழப்பியது. உன்னை எப்படியாவது சந்தித்து சுகத்தை விசாரித்து விடவேண்டுமென்று உன் வீடு தேடிவந்தேன். நீ என்னை விரும்பினால் உன்னைக் கலியாணம் செய்து விடவேண்டுமென்று இரவெல்லாம் மனம் தவிக்கத் தொடங்கிவிட்டது. ஆனால் அதை எப்படி உன்னிடம் கேட்பது என்று தெரியவில்லை. நல்ல வேளையாக நான் உங்கள் வீட்டுப் பக்கம் அன்று காலையில் வந்தபோது நீ வாசலைப் பெருக்கிக் கொண்டிருந்தாய். விடிகாலையாயிருந்ததால் யாரும் விழித்திருக்கவில்லை. அந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிட விரும்பாமல் உன்னை அழைத்தேன். நீயும் முறைக்காமல் மறுக்காமல் வந்து சிரித்துக்கொண்டு என்ன விடயமென்று கேட்டாய். நான் “சுகமாயிருக்கிறீர்களா?”என்று கேட்டபோது தலைகுனிந்தபடி ஆமென்றாய். கூட்டநெரிசலில் நீ மயக்கமடைந்து எனது நெஞ்சில் சரிந்து விழுந்ததையெண்ணி உனக்கு வெட்கம். மன்னித்துக் கொள்ளுங்கள் தெரியாமல் தடுமாறி உங்களில் விழுந்து விட்டேன் என்று தலையைக் குனிந்தபடி நீ கூறிய போது எனக்கு உன்மேல் பாவமாக இருந்தது. “எனது முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி விட்டதற்கு நன்றி”என்றாய். அப்படி நீ கூறியபோது, எனக்கும் எனது மன நிலையை உன்னிடம் கூறி உனது விருப்பத்தை அறிந்துவிட இது நல்ல சந்தர்ப்பம் என்ற எண்ணம் வந்துவிட்டது. அதனால்தான் “உங்களுக்கு யாராவது விருப்பமானவர்கள் இருக்கிறார்களா?” என்று விசாரித்தேன். நீ எனது கேள்வியைப் புரிந்து கொண்டு “இல்லை எனக்கு அப்படி யாருமில்லை ஏன் கேட்கிறீர்களென்றாய்” என்றாய். அதற்கு மேல் என்னால் எனது மனதைத் திறக்காமல் இருக்க முடியவில்லை. “அப்படியானால் என்னை விரும்பலாமே நான் உடனடியாக றிஜிஸ்தர் மேரேஜ் செய்யத் தயாராயிருக்கிறேன்.” என்று கேட்டு விட்டேன். உண்மையில் உன்னை உடனடியாகத் திருமணம் செய்ய எதுவித திட்டங்களும் என்னிடமிருக்கவில்லை. வேலையிலிருந்து ஒருமாத லீவில் வந்த நான் உடனடியாக இங்கு வரவேண்டியிருந்தது. அவசர ஆர்வத்தில் அப்படிக் கேட்டு விட்டேன். நீ திடுக்கிட்டு, தடுமாறிப்போய் “என்ன நீங்கள் இப்படித் திடீரென்று வந்து கேட்கிறீர்கள். வீட்டில் அப்பா அம்மாவிடமல்லவோ வந்து கேட்க வேண்டும் நானெப்படி இதற்குப் பதில் சொல்வது”என்றாய். எனக்கு அந்த வார்த்தை தேனாயினித்தது. என்னை நீ முறைத்து ஒரு பார்வை பார்த்திருந்தால, நானும் ‘சரி இது சரிவராது இந்தப் பழம் புளிக்குமென்று‘என்பாட்டில் போயிருப்பேன். ஆனால் உனக்கும் என் முகத்திற்கெதிரில் அப்படிச் சொல்ல மனமிருக்கவில்லை. காலம் நம்மை அப்படி மனதாலிணைய வைத்து விட்டது. எனது மொபைலைத் தந்து அதில் உனது நம்பரைப் பதிந்துவிடக் கேட்டபோது நீயும் மறுப்பில்லாமற் தந்து விட்டாய். அதன்பிறகு நாம் இருவரும் சந்திக்காமலேயே ரெலிபோனிலும், இ- மெயிலிலும் நமது உறவை வளர்த்துக் கொண்டோம். ‘என்னை மன்னித்து விடு. எந்தவொரு குழப்பமுமில்லாமல் அமைதியாக இருந்த உன் மனதைச் சலனப்படுத்திவிட்டு நான் இங்கு வந்துவிட்டேன். லீவில் வந்து நின்ற என்னைக் கம்பனி உடனடியாக வருமாறு கூப்பிட்டதால் வரவேண்டியேற்பட்டு விட்டது. கட்டாயம் முடித்துக் கொடுக்க வேண்டியிருந்த எனது வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்டு உடனடியாக அங்கு வரத்தான் எண்ணியிருந்தேன். ஆனால் பாழாய்ப் போன கொரோணாவால் இங்கு எயார்ப் போட்டையெல்லாம் மூடிவிட்டார்கள். எப்போது நிலைமை சீரடைந்து என்னால் அங்கு வரமுடியுமோ தெரியவில்லை. அதுவரை சும்மா காத்துக்கொண்டு இருக்காமல் இங்கு மீண்டுமொரு காண்டிராக்டில் கையெழுத்துப் போட்டுவிட்டேன். நிலைமை சீராகினாலும் இன்னுமொரு ஆறுமாதம் இங்கிருக்கத்தான் வேண்டியேற்படும். சில வேளை இந்தக் கொரோணாவால் ஒரு வருடம்கூட ஆகலாம். என்ன செய்வது நாம் திட்டமிடுகின்றபடியெல்லாம் வாழ்க்கை அமைவதில்லை. தயவு செய்து கவலைப்படாதே. எப்படியும் விரைவாக வந்துவிடத்தான் துடித்துக் கொண்டிருக்கிறேன். வீட்டில் உனது திருமணம்பற்றிப் பேச்சு வருமானால் விடயத்தை வெளிப்படுத்திக் கூறிவிடு. அப்படி எந்தப் பேச்சும் எழாவிட்டால் நீயாக அதுபற்றிப் பேச வேண்டாம். நான் அங்கு வந்ததும் உனது பெற்றோருடன் உரியமுறையில் தொடர்பு கொள்ளுவேன். வீணாகக் கவலைப்பட்டு உடம்பைக் கெடுத்துக்கொள்ளாதே. உன் நினைவாகவே நானிங்கு இருக்கிறேன். உனது கண்ணன். --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- Thu, 24 Sept. at 05:15 டியர் கண்ணன் உங்கள் இ-மெயில் கிடைத்தது. வாசிக்கச் சற்று ஆறுதலாக இருந்தது. ஆனால் பதிய ஒப்பந்தமொன்றைச் செய்துவிட்டு அதையும் முடித்துவிட்டு வர ஒருவருடமாகுமென்று கூறுகிறீர்கள். எனக்கு நீங்கள் வெளிநாட்டிலிருந்து உழைத்துக் கொண்டுவந்து கொட்டத் தேவையில்லை. நீங்கள் போதிய தகுதியோடு இருப்பதால் இங்கு நம்மூரில் ஒரு வேலையைத் தேடிக்கொள்ளலாம். அந்தச் சம்பாத்தியம் நமக்குப் போதும். நானும் இருக்கிறேன்தானே. சரிப்பட்டு வரவில்லையென்றால் ஒரு சிறுகடையை வைத்தாவது பிழைக்க முடியாதா? ஊர் நிலத்தில் விவசாயம் செய்து பிழைக்க முடியாதா? என்ன நமக்குத் தேவை? அன்றாடம் பசிதீர்க்கக் கஞ்சி கிடைத்தாலே எனக்குப் போதும். நான் அதிகம் உங்களிடம் எதிர்பார்க்க மாட்டேன். நாம் இருவரும் ஒன்றாக இருந்து வாழ்வதிலுள்ள மகிழ்ச்சி நீங்கள் வெளிநாட்டுப் பணத்தைக் கொண்டுவந்து இங்கு குவிப்பதால் நமக்குக் கிடைக்கப் போவதில்லை. உங்களைப் போன்ற பலபேர் இந்த விடயத்தில் சரியான தீர்மானமெடுக்க முடியாமல் தடுமாறுகிறீர்கள். உங்களை நம்பிய அபலைகளின் மன உழைச்சல்களைப் புரிந்து கொள்ளாமல் வெளிநாடு வெளிநாடு என்று அவர்களைத் தவிக்க விட்டுப் போய்விடுகிறீர்கள். ஆனால் வாழ்க்கையின் பெரும்பகுதியை அந்தப் பாலைவனப் பிரதேசத்தில் இழந்து விடுகிறீர்கள். உங்கள் உயிர்த் துணைகளின் முகங்களைக்கூட மறந்துபோய் விடுகிறீர்கள். தற்போது இருக்கும் இண்டர்நெற் வசதியால் ஏதோ சிலபேர் தங்கள் காதலை அன்பைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள். எனக்கு உங்களோடு கோபம். எதற்காக மீண்டும் உங்கள் கம்பனியுடன் ஒப்பந்தம் போட்டீர்கள்? இங்கு பலபேர் தங்கள் ஒப்பந்தம் முடிந்ததும் எப்படியோ பிளேனேறி வந்திருக்கிறார்கள். நீங்களும் அப்படி முயற்சி செய்து பார்த்திருக்கலாமே. இந்தப் பாழாய்ப் போன கொரோணாவின் சாக்கில் என்னையல்லவா இக்கட்டான நிலைக்குள் தள்ளியிருக்கிறீர்கள். அங்கு தனித்துக் கிடந்து என்னை நினைத்துக்கொண்டு உருகும் உங்கள்மேல் குற்றங்களைச் சுமத்தி வெந்தபுண்ணில் வேல் பாயச்சுகிறேனென்று கோபம் கொள்ளாதீர்கள். மனத்தாங்கல் தாளமுடியவில்லை. எனது மனஉழைச்சல்களை நான் வேறு யாரிடம் கொட்டுவது? “பிரிவுத் துயரால் தவித்துப்போய் என் வேதனைகளை உங்கள்மீது கொட்டுகிறேன்.” மன்னியுங்கள். ஏதோ உங்கள் அறிவுரைப்படி என்னால் முடிந்த அளவு சமாளிப்பேன். முடியாவிடின் எல்லாவற்றையும் போட்டு உடைத்து நமது தொடர்பை வீட்டில் வெளிப்படுத்தி விடுவேன். நீங்கள் கவலைப்படத் தேவையில்லை எதுவும் என்னைமீறி நடக்காது. என்னிடம் ஸ்மார்ட் போன் இருந்தால், இ-மெயிலில் இப்படிப் பந்திபந்தியாக எழுதிக் குவிக்காமல் உங்களுடன் வாட்சப், மெஸஞ்சர் அல்லது ஸ்கைப்பில் நேரடியாகவே கதைக்கலாம், ஆனால் இப்போதைக்கு எனது சிறிய போன் போதும். செலவு குறைவு. நான் எனது ஆபீஸ் கம்பியூட்டரில் இரகசியமாகத்தான் உங்களுடன் தொடர்பு கொள்கிறேன். யாராவது கண்டுபிடித்து விட்டால் வெட்கமும் சங்கடமும். எப்போதும் இதையென்னால் செய்ய முடியாது. அதனால்த்தான் இ-மெயிலில் ஒருவாறு உங்களுடன் தொடர்பு கொள்கிறேன். ஆபீஸ் கம்பியூட்டரில் யாரும் அவதானிக்குமுன் இ-மெயில் அனுப்புவது சரியான சிரமம். பிடிபட்டால் எனக்குப் பெரிய சங்கடமாகிவிடும். சீட்டைக் கிழித்து வீட்டுக்கு அனுப்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. என்னைப் போன்ற ஆபீஸ் போகும் பெண்களுக்கே இவ்வளவு கஸ்டமென்றால், அடிப்படை வசதிகள் ஏதுமற்ற சாதாரண கிராமத்து அபலைப் பெண்கள் தங்கள் காதலர்களை கணவன்மார்களை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு எவ்வளவு சிரமப்படுவார்கள்? “அயலூர் அழகனிலும் உள்ளூர் முடவன் சிறப்பு” என்று பெரியவர்கள் கூறுவது இதற்காகத்தானோ தெரியவில்லை. நல்லவேளை நீங்கள் என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள் ஒருவாறு சமாளித்து தொடர்பு அறுந்து போகாமல் நம்மால் இருக்க முடிகிறது. தொடர்புச் சாதனங்கள் எங்கும் பரந்துவிட்ட இந்தக் காலத்திலும் இல்லாதவர் வாழ்க்கையில் எதுவுமேயில்லை. நான் இப்படியெழுதியதற்காக என்மீது கோபம் கொள்ளாதீர்கள். நீங்கள் இங்கு வந்துவிட்டால் எனக்கு இந்தக் கம்பியூட்டர், ஸ்மார்ட் போனெல்லாம் தேவையற்ற தாகிவிடும். நானுண்டு என்பாடுண்டு என்று உங்களோடு சந்தோசமாக வாழ்ந்து விடலாம். இந்தக் கடிதத்தில் உங்கள் மனம் நோக நான் எதையாவது எழுதியிருந்தால் மன்னியுங்கள். நானுங்களோடு முரண்பட்டுக் கொள்வதெல்லாம் நாமிருவரும் வாழ்க்கையில் விரைவாக இணைந்து விட வேண்டுமென்பதற்காகத்தான். உங்கள் ராதா Thu, 1 Oct. at 20:20 டியர் ராதா உனது இ-மெயில் பார்த்தேன். உன்னிடம் ஒரு ஸ்மார்ட் போன் இல்லாததால் உனது அழகொளிரும் பொன்முகத்தை நேராகப் பார்த்துப் பேசமுடியாமலிருக்கிறது. கூட்ட நெரிசலில் நீ மயங்கி விழுந்தபோது உனது முகத்தில் நான் தண்ணீர்ப் போத்தலைக் கவிழ்த்து ஊற்றினேன். அப்போது கண்ட முகம்தான். அதன் பிறகு நான் உனது வீட்டுக் கேற்றடியில் வந்து நின்று உன்னையழைத்தபோது நீ வந்தாலும் எனது ஆசைதீர நான் உனது பூ முகத்தைக் காணவில்லை. குனிந்த தலையை நீ நிமிர்த்தவேயில்லை. அதையெல்லாம் கண்டு களிக்காமலேயே அவசரமாக இங்கு வந்து விட்டேன். என்ன செய்வது எனது கொடுப்பினை அவ்வளவுதான். எப்போதும் குனிந்த தலை நிமிராமலேயே என்னோடு நீ பேசியதால் உனக்கும் என்னைச் சரியாக நினைவிருக்குமா என்று தெரியவில்லை. உனது பாங்க் அக்கவுண்ட் விபரத்தை அனுப்பு. காசு அனுப்புகிறேன். ஓர் நல்ல போனை வாங்கி வைபை போட்டுக்கொள். ரெலிபோன் கடைகளில் மோடத்துடன் வைபையைப் போட்டும் தருவார்கள். உடனே பாங்க் விபரங்களை அனுப்பவும். கவலை வேண்டாம் கெதியாக வருவேன். கண்ணன். Thu, 08 Oct. at 16:00 டியர் கண்ணன் அன்று ஒரு கணத்தில் என் நெஞ்சில் பதிந்த உங்கள் முகம் ஒரு யுகம் சென்றாலும் இனி அழியப் போவதில்லை. எனக்கு போனெல்லாம் வேண்டாம். வந்து சேரும் வழியைப் பாருங்கள். இ-மெயிலில் எனது படத்தை அனுப்புகிறேன். நீங்கள் இங்கு வந்து பத்திரமாகச் சேரும்வரை இப்படியே தொடர்வோம். எனது சிறிய போனை வைத்துச் சமாளிக்கிறேன். இங்கு வந்ததும் உங்களிடமிருக்கும் ஸ்மார்ட் போனை தேவையான போது நானும் பாவித்துக் கொள்வேன். தருவீர்கள்தானே? இங்கு வந்து சேர உங்களுக்குப் பணம் தேவைப்படும். தேவையற்ற செலவுகளைக் கூட்டிக்கொண்டால் அதற்கும் சேர்த்து உழைக்க வேண்டிவரும். உங்கள் வருகை தாமதமாகும். இங்கு வரும்வரை என்னைப்பார்த்து எனது நினைவுகளை மீட்டுக்கொள்ள நானனுப்பும் படங்களை வைத்துச் சமாளியுங்கள். நான் எனது பாங்க் விபரத்தை இப்போதைக்கு அனுப்பவில்லை. பிறகு பார்க்கலாம். என்முகத்தை மறந்து போய்விட்டதென்றால் விரைவில் கம்பியூட்டர் சென்டரில் இருந்து ஸ்கைப் மூலம் தொடர்பு கொள்கிறேன். உங்கள் ராதா -முற்றும் -