Search the Community
Showing results for tags 'கோவிட்- 19'.
-
கோவிட் 19: மாறும் வைரசும், மாறாத மனிதர்களும்! தென்கிழக்கு இங்கிலாந்தின் நகரங்களில் புதிதான நிலை 4 கட்டுப்பாடுகள் அறிமுகம் செய்யப் பட்டிருக்கின்றன. இதற்குக் காரணமாக, புதிதாக விகாரமடைந்த நவீன கொரனா வைரஸ் அங்கே இனங்காணப் பட்டிருப்பது சொல்லப் பட்டிருக்கிறது. இதைப் பற்றிச் சுருக்கமாகப் பார்க்கலாம். வைரசுகளுக்கு மாற்றமே வாழ்க்கை! வைரசுகள் ஆர்.என்.ஏ (RNA) அல்லது டி.என்.ஏ (DNA) எனப்படும் நியூக்கிளிக் அமிலங்களால் ஆக்கப் பட்டவை. ஆர்.என்.ஏ வைரசுகள் இயற்கையாகவே பெருகும் போது விகாரமடைந்து புதிய விகாரிகளை உருவாக்கும் தன்மை கொண்டவை. தடுப்பூசி இது வரை கண்டு பிடிக்கப் படாத எயிட்ஸ் வைரசான எச்.ஐ.வி (HIV) வேகமாக விகாரமடைவதில் பிரபலமான ஒரு வைரஸ் குடும்பம். இன்னொரு வேகமாக மாறும் தன்மை கொண்ட ஆர்.என்.ஏ வைரசு வருடா வருடம் எம்மைத் தாக்கும் இன்ப்ளூழுவன்சா ஏ வைரஸ். இதனால் தான் இன்புழுவன்சாக் காய்ச்சலுக்கான தடுப்பூசியை ஒவ்வொரு ஆண்டும் புதிதாக தயாரித்துப் போட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. நவீன கொரனா வைரசும் ஒரு ஆர்.என்.ஏ வைரஸ். எச்.ஐ.வி அல்லது இன்புழுவன்சா போல வேகமாக விகாரமடையா விட்டாலும், விகாரமடையக் கூடிய வைரஸ் தான் இந்த நவீன கொரனா வைரஸ். கடந்த வருடம் கண்டறியப் பட்டதில் இருந்து 4000 வரையான விகாரங்கள் நவீன கொரனா வைரசில் அடையாளம் காணப் பட்டிருக்கின்றன. ஏன் மாற்றங்களும் விகாரங்களும்? "மாறாததெல்லாம் மண்ணோடு" என்ற கோச்சடையான் வரிகள் தான் இந்தக் கேள்விக்கு ஒரு வரிப் பதில். வைரசுகளின் வாழ்க்கை என்பது ஏனைய சிக்கலான உயிர்கள் போன்றது அல்ல. வைரசுகளின் வாழ்வுக்கு ஒரே நோக்கம் "நிலைத்திருப்பது" தான்!. அப்படி நீண்ட காலம் நிலைத்திருக்க இரண்டு வேலைகள் செய்ய வேண்டும்: ஒன்று - தாம் தங்கிப் பெருக்கக் கூடிய உயிர்களைத் தேடி அடைய வேண்டும். இரண்டு: அப்படியான ஒரு உயிர் கிடைக்கும் போது வேகமாகப் பெருக வேண்டும். இந்த இரண்டாவது வேலையை ஆர்.என்.ஏ வைரசுகள் செய்யும் போது, ஒரு சிக்கல் ஏற்படுகிறது. வேகமாக பெருகும் அவசரத்தில், தங்கள் ஆர்.என்.ஏ மூலக் கூறுகளைப் பிரதி செய்வதில் சில தவறுகளை விடுகின்றன. இது நாம் பார்த்தெழுதல் போட்டியில், வேகமாக எழுதும் போது சில எழுத்துப் பிழைகள் விடுவது போன்ற ஒரு நிலைமை. மேலே நாம் பார்த்த நவீன கொரனா வைரசின் 4000 விகாரங்களில் பெரும்பகுதி இப்படியான தவறுகள் தான். இந்த தவறுகளில் சில வைரசைப் பலவீனப் படுத்தி அது தப்பி வாழ இயலாதவாறு மாற்றி விடக் கூடியவை: எனவே இந்த விகாரங்களால் நவீன சார்ஸ் வைரஸ் பலமிழந்தால் அது மனிதனின் அதிர்ஷ்டம். அப்படியல்லாமல், இந்த விகாரங்களில் சில வைரசின் தப்பி வாழும் திறனை அதிகரித்தால், வைரசுக்கு அதிர்ஷ்டம், மனிதனுக்கு ஆப்பு! மனிதனுக்கு ஆப்பு! இப்போது தென்கிழக்கு இங்கிலாந்தில் நடந்திருப்பது இது தான்: செப்ரெம்பர் மாதத்தில் இருந்து தென்கிழக்கு இங்கிலாந்தின் 60 நிர்வாகப் பிரிவுகளில் VUI202012/01 என்ற விகாரி வைரஸ் பரவலாக அதிகரித்து வந்திருக்கிறது. அப்படியானால் ஏன் செப்ரெம்பரிலேயே அரசு எச்சரிக்கை செய்யவில்லை என்ற கேள்வி எழலாம்! பதில் - செப்ரெம்பர் மாதத்தில் இந்த விகாரி வைரஸ் கண்டு பிடிக்கப் பட்டாலும், அதைத் தொடர்ந்து கண்காணித்து வந்த போது தான் இந்த விகாரி வைரசின் பரவல் அதிகமாக இருப்பதை அறிந்திருக்கிறார்கள். இதில் ஒழிப்பு மறைப்பு எதுவும் இல்லை, இது சாதாரணமாக நடக்கும் epidemiological surveillance என்ற ஆய்வு நடவடிக்கை. இது வரை இந்த விகாரி வைரசில் 17 வெவ்வேறு விகாரங்களை அடையாளம் கண்டிருக்கிறார்கள். இந்த 17 மாற்றங்களில் முக்கியமானது, N502Y எனப்படும் விகாரமாக இருக்கிறது. இந்தக் குறிப்பிட்ட மாற்றம் நவீன சார்ஸ் வைரசு எங்கள் உடலில் உள்நுழையப் பயன்படுத்தும் வைரசின் புரத (spike protein) மூலக்கூற்றில் ஏற்பட்டிருக்கிறது. இதனால் இந்த விகாரி வைரஸ் எங்கள் உடலில் இலகுவாக நுழைந்து கொள்ளும் திறனைப் பெற்றிருக்கிறது. முன்னர் இருந்த நவீன கொரனா வைரசுகளோடு ஒப்பிடுகையில், இந்த விகாரி வைரஸ் 70% அதிக தொற்றும் திறனைக் கொண்டிருக்கிறது. தொற்றும் திறனில் 70% அதிகரிப்பு, எங்களுக்கு என்ன விளைவுகள்? 70% அதிகரிப்பு என்பது கிட்டத்தட்ட இந்த விகாரி வைரஸ் தன் தொற்றும் திறனை இரட்டிப்பாக்கியிருக்கிறது என்று கொள்ள முடியும். இது வரை வைரசைக் காவிய ஒருவர் இருவருக்கு தன் வைரசுத் தொற்றை வழங்கி வந்திருந்தால், இந்த விகாரியால் தொற்றப் பட்ட ஒருவர் , இனி 4 பேருக்கு தன் தொற்றைக் கடத்துவார் என்று அண்ணளவாகக் கூற முடியும்!. இதனால் தொற்றுக்கள் மிக வேகமாகப் பரவும். இப்படிப் பரவும் போது, மருத்துவக் கவனிப்புத் தேவையான தொற்றுக்களும், மரணங்களும் அதிகரிக்கும். எனவே, இந்த விகாரி வைரஸ் கோவிட் நோயின் தீவிரத்தை நோயாளியில் அதிகரிக்கா விட்டாலும் அதிகரித்த பரவலால் மருத்துவமனைகள் மீதான சுமையும், மரணங்களும் அதிகரிக்கும் என்பது முக்கியமான ஒரு விடயம்! யார் மேல் தவறு? இந்த விகாரி வைரஸ் மிகப் பெரும்பான்மையாக தென்கிழக்கு இங்கிலாந்தில் தான் காணப்படுகிறது. அதனால் இது அந்தப் பிரதேசத்திலேயே உருவாகியிருக்கிறது என்பது தான் தற்போதைய முடிவு. இது வைரசின் தன்னிச்சையான மாற்றத்தினால் உருவாகியிருப்பதால், மனிதர்களின் நேரடியான தவறால் இது உருவானதாகக் கூற இயலாது. ஆனால், நவீன கொரனா வைரஸ் கட்டுப் பாடின்றிப் பரவ மனிதர்கள் இடங்கொடுக்கும் போது தான் இப்படியான விகாரங்கள் நடக்கவும் மேடை அமைக்கப் படுகிறது. தொற்ற வாய்ப்புகள் இல்லையேல், வைரசுக்கு தன்னைப் பெருக்கிக் கொள்ளவும் தேவையும் சந்தர்ப்பமும் இல்லாமல் போய் விடுகிறது. எனவே, மனித நடத்தைகள் மறைமுகமாக புதிய விகாரிகள் உருவாவதற்குக் காரணமாக அமைந்திருக்கின்றன. என்ன செய்யலாம்? மேலே குறிப்பிட்டிருப்பது போல: மனித நடத்தையை நாம் இதற்கேற்ப மாற்றிக் கொள்ள வேண்டியதே ஒரே வழி. அதிர்ஷ்டவசமாக, இந்த விகாரி உடலுக்கு வெளியே தப்பி வாழும் கால அளவு, சவர்க்காரத்தினால் அழிக்கப் படும் இயல்பு என்பவற்றை மாற்றிக் கொள்ளவில்லை. எனவே, நாம் அதே சமூக இடைவெளி பேணல், கைகளைக் கழுவுதல் போன்ற தடுப்பு முறைகளைப் பின்பற்றுவதே போதுமானது. என் புலம்பல்! இங்கே விஞ்ஞானத் தகவல்களில் இருந்து நகர்ந்து என் தனிப்பட்ட அவதானங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். இங்கிலாந்து வாசிகள் மன்னித்தருள்க! கோவிட் 19 இனைக் கையாண்ட விதத்தைப் பொறுத்தவரை, நான் அதிகம் எதிர்பார்த்து ஏமாந்த நாடு பிரிட்டன் (குறைவாக எடை போட்டு ஆச்சரியப் பட்ட நாடு: சிறிலங்கா). ஆயிரக்கணக்கான ஆய்வுப் பல்கலைக் கழகங்களை வைத்துக் கொண்டு அமெரிக்கா செய்யும் அறிவியல் சாதனைகளை சில டசின் பல்கலைக் கழகங்களை வைத்துக் கொண்டே சமம் செய்யும் வினைத் திறன் கொண்ட நாடு பிரிட்டன். இத்தகைய அறிவியல், மருத்துவ பாரம்பரியம் கொண்ட நாட்டில் ஆரம்பக் கட்டுப்பாடுகளைக் கொண்டு வர தலைமை விஞ்ஞானியாக இருந்தவர் காரணமின்றித் தயங்கியதும், பின்னர் அடுத்தடுத்து அரசு அறிவுறுத்தலில் விட்ட தவறுகளும் நியாயப் படுத்த முடியாத தோல்விகள்! பிரிட்டனின் மையக் கட்டுப்பாடு குறைபாடாக இருந்தாலும், மக்கள் நடந்து கொண்ட விதத்தினால் கோவிட் 19 இனை கொஞ்சம் வீரியமற்றதாக மாற்றியிருக்க முடியும். நடந்ததோ எதிரானதாக இருந்தது: கோடை கால விடுமுறைக்கு வழமை போல சென்று, பிரிட்டன் திரும்பி, தனிமைப் படுத்தலையும் நிராகரித்து பிரித்தானிய, பிரதானமாக இங்கிலாந்து வாசிகள் நடந்து கொண்டது கோவிட் 19 கட்டுப்பாட்டில் ஏற்பட்ட இரண்டாவது பாரிய ஓட்டை! இப்போது இருக்கும் கேள்வி: இந்த பரவல் சக்தி கூடிய வைரசின் பின்னராவது பிரித்தானிய, இங்கிலாந்து வாசிகள் தங்கள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களைத் தவிர்த்து பரவலைத் தடுப்பார்களா என்பது தான்! தொகுப்பு : ஜஸ்ரின் மூலங்களும், மேலதிக தகவல்களும்: 1. விகாரி வைரஸ் பற்றிய தகவல்கள்: https://www.bmj.com/content/371/bmj.m4857 2. இன்னொரு விகாரம் பற்றிய அறிக்கை https://pubmed.ncbi.nlm.nih.gov/32697968/
- 4 replies
-
- 11
-
-
- கோவிட்- 19
- கொவிட் 19
-
(and 1 more)
Tagged with: