Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Search the Community

Showing results for tags 'ஜெயமோகன்'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • Ahal Media Network's Topics

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's சிறப்பு ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's ஆவணக்கட்டுகள்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's தொகுத்த ஆவணம்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's திரட்டுகள்
  • Home Appliances Spot's Home Appliances

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 12 results

  1. புத்தகக் கண்காட்சியும் ஐயங்களும் ஜெயமோகன் jeyamohanJanuary 6, 2023 சென்னை புத்தகக் கண்காட்சி இன்று தொடங்குகிறது. இந்த விழாவை முப்பது ஆண்டுகளாக வெவ்வேறு வடிவில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதன் வண்ணங்கள் எனக்கு இன்றுவரை சலித்ததே இல்லை. தமிழில் அறிவுச்செயல்பாடுக்காக மட்டுமே நிகழும் ஒரு பெருநிகழ்வு இது. ஒவ்வொரு ஆண்டும் எவரேனும் எங்கேனும் எழுதி, வாட்ஸப் செய்திகளாக, மின்னஞ்சல்களாக புத்தகக் கண்காட்சி பற்றிய சில விமர்சனங்கள், எள்ளல்கள் என் காதில் விழுகின்றன. மீண்டும் மீண்டும் பதில் சொல்லிக்கொண்டும் இருக்கிறேன். பழையவர்கள் அவற்றை கடந்துசெல்ல அறிந்திருக்கலாம். புதியவர்கள் குழம்பக்கூடும். ஆகவே அவற்றை மிகப்பழையவன் என்ற நிலையில் திரும்பச் சொல்லவேண்டியிருக்கிறது. இலக்கிய சூழலில் சோர்வூட்டும் எதிர்மறைக் கருத்துக்களைச் சொல்பவர்கள் நான்கு வகையானவர்கள். இந்நால்வரும் என்றும் இருப்பவர்கள். ஆனால் இன்று சமூக ஊடகங்கள் இவர்கள் குரலெழுப்ப வழியமைக்கின்றன. எண்ணிக்கைபலத்தால் இவர்கள் ஒரு சக்தியாக ஆகியிருக்கிறார்கள். என்றுமில்லாத அளவு இன்று இவர்களின் குரலால் இலக்கியவாதிகளும் வாசகர்களும் சூழப்பட்டிருக்கிறார்கள். அ. பெரிதாக ஏதும் எழுதாமல் அப்படியே ஓய்ந்துபோன சற்று மூத்த எழுத்தாளர்கள். இலக்கியம் என்பது தீவிரத்தால், அர்ப்பணிப்பால் அடையப்படுவது. அத்துடன் இயல்பான கற்பனையும் அறிவாற்றலும் இருக்கவேண்டும். இவர்களுக்கு இரண்டுமிருக்காது. கொஞ்சம் ஏதோ எழுதிப்பார்த்திருப்பார்கள். திசைதிரும்பி அங்கே இங்கே அலைந்திருப்பார்கள். மீண்டு வந்து அமர்வதற்கான திண்ணை என்பது முகநூல். அங்கே மீண்டும் எதையாவது எழுதுவார்கள். ஆனால் கலை கைவிட்டுப்போய்விட்டதென அவர்களுக்கே நன்றாகத் தெரியும். ஆகவே வம்புகளில் ஈடுபடுவார்கள். கசப்புகளையும் அவநம்பிக்கைகளையும் பொழிந்தபடியே இருப்பார்கள். இவர்களின் எதிர்மறை மனநிலை முழுக்க இலக்கியத்தின் வெற்றிகள்மேலும் புதிய எழுச்சிகள் மேலும்தான் இருக்கும். ஆ. இலக்கியத்தில் கவனம் பெறாது போன சிறு எழுத்தாளர்கள்.இவர்கள் தொடர்ந்து எழுதுவார்கள், செயல்படுவார்கள். ஆனால் இலக்கியம் கைவராது. இலக்கியம் என்றல்ல எந்தக்கலையும் அப்படித்தான். அது முயலும் அனைவருக்கும் அமையவேண்டுமென்பதில்லை. பல காரணங்கள். இயல்பான கற்பனைத்திறன்குறைவு, அறிவுநுண்மையின் போதாமை, வாசிப்பின்மை என. பலசமயம் வாழ்க்கைச்சூழலால்கூட ஒருவர் முழுமையாக வெளிப்பட முடியாமலாகும்.அவர்களுக்கு சூழல்மேல் கசப்பும் அவநம்பிக்கையும் இருக்கும். இ. அரசியலாளர்கள். இலக்கியச்சூழலில் அதிகமாகக் கேட்கும் குரல்களில் ஒன்று இத்தரப்பு. இவர்கள் இயல்பிலேயே இலக்கியத்துக்கான மொழிநுண்ணுணர்வும், வாழ்க்கைசார்ந்த பார்வையும் இல்லாதவர்கள். இளமையிலேயே ஓர் அரசியல்சார்பு உருவாகிவிடும். சுயமான சிந்தனை இல்லாத காரணத்தால் அந்த அரசியல் சார்ந்தே சிந்தனையை முன்னெடுத்து இறுக்கமான நிலைபாடாக ஆக்கிக் கொண்டிருப்பார்கள். தமிழ்ச்சூழலில் அரசியலென்பதே குழுமனப்பான்மை, தலைமைவழிபாடுதான். பெரும்பாலும் அதன் உள்ளுறை சாதியும் மதமும் தனிப்பட்ட நன்மைகளும்தான். ஆனால் இவர்களால் பெருந்திரளாக கூட முடியும். கூட்டாக கூச்சலிடமுடியும். அத்துடன் அந்த அரசியலால் இவர்களுக்கு ஓர் அபாரமான தன்னம்பிக்கை உருவாகிவந்திருக்கும். உலகுக்கே வழிகாட்ட, திருத்த, இடித்துரைக்க, கடிந்துகொள்ள, நையாண்டிசெய்ய தாங்கள் தகுதிபடைத்தவர்கள் என நம்புவார்கள். அதை எவராலும் உடைக்க முடியாது. அதை இவர்களில் உருவாக்குவது வழியாகத்தான் அந்த அரசியல்தரப்பின் அடித்தளமே அமைகிறது. இவர்களுக்கு இலக்கியத்துடன் தொடர்பே இல்லை. இலக்கியம் மொழிவழியாக அந்த ஆசிரியன் செய்யும் பயணம், கண்டடைதல் ஆகியவற்றாலானது. இவர்கள் பயணத்திற்கு முன்னரே கண்டடைதலை நடத்தியவர்கள். ஆனால் இவர்கள் இன்றைய சமூக ஊடகச் சூழலால் இலக்கியத்தை நேருக்குநேர் சந்திக்க நேர்கிறது. இவர்களுக்கு இலக்கியம் கண்ணெதிரே தீவிரமாக நிகழ்வது ஒருவகை நிம்மதியின்மையை அளிக்கிறது. இவர்கள் அறிந்தது அரசியல் மட்டுமே. ஆகவே இவர்கள் பார்வையில் எல்லாமே அரசியல்தான். இலக்கியத்தை ஒருவகை அரசியல் என்று புரிந்துகொள்கிறார்கள். இலக்கியம் இவர்களுக்குப் புரிவதில்லை. ஆகவே அது பூடகமான அரசியல் சதி என நினைக்கிறார்கள். அந்த எண்ணத்துடன் இடைவிடாது இலக்கியம் மீது மோதிக்கொண்டே இருக்கிறார்கள். இலக்கியத்தை திரிக்கிறார்கள். தங்கள் விரும்பியதை கண்டடைந்து அதையே அந்த இலக்கியம் சொல்வதாக ஆணையிட்டுச் சொல்கிறார்கள். இலக்கியவாதிகளை முத்திரையடிக்கிறார்கள். அணிதிரள்கிறார்கள், திரட்டமுயல்கிறார்கள். ஈ. இலக்கியப் பாமரர்கள். இவர்களுக்கு வாசிக்கும் வழக்கமெல்லாம் இருப்பல்லை. மிகமிகக்குறைவாகவே எந்த அறிவுசெயல்பாடு பற்றியும் தெரியும். ஆனால் சமூக ஊடகத்தால் இலக்கியத்தை வெறுமே வம்புச்செய்திகளாக மட்டுமே அறிந்து வைத்திருக்கிறார்கள். இவர்கள் நால்வரும் உருவாக்கும் சில பொதுவான அசட்டுக் கருத்துக்கள் உண்டு. ஓர் இலக்கியவாசகன் இக்கருத்துக்களில் எவற்றையேனும் எவரேனும் சொன்னால் அக்கணமே அவரை அலட்சியம்செய்து விலகிவிடவேண்டும். அவருக்கும் இலக்கியத்திற்கும் எந்த உறவுமில்லை. அவருக்கும் அறிவியக்கத்தில் இடமே இல்லை. அவை இவை. அ. வாசகர்களை விட எழுத்தாளர்கள் ஜாஸ்தியாயிட்டாங்க. எல்லாரும் எழுதறாங்க. வாசகர்கள் எங்கே? தமிழில் எழுதுபவர்கள் பெருகியிருக்கிறார்கள். ஆனால் உலகம் முழுக்க அப்படித்தான். தொழில்நுட்பம் அதற்குக் காரணம். ஆனால் அதேபோல வாசிப்பும் பெருகியிருக்கிறது. தமிழகத்தில் எட்டு நகர்களில் பெரும் புத்தகக் கண்காட்சிகள் நடக்குமென முப்பதாண்டுகளுக்கு முன்பு எவர் நினைத்திருக்க முடியும்? பல்லாயிரம் வாசகர்கள் நூல்களை வாங்கி வாசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் முகநூலில் வம்புக்கு வந்து நிற்பவர்கள் அல்ல. மௌனப்பெரும்பான்மை. ஆனால் அவர்களே இலக்கியத்தை தீர்மானிக்கிறார்கள். ஆம், இந்த எண்ணிக்கை போதாது. நம் மக்கள் தொகையுடன் ஒப்பிட்டால் வாசிப்பு இன்னும் பத்துமடங்கு ஆகவேண்டும். ஆனால் இன்று வாசிப்பவர்களே லட்சக்கணக்கானவர்கள். அவரவருக்குரியதை வாசிக்கிறார்கள். ஆன்மிகம், சுயமுன்னேற்றம், பொருளியல், தொழில்நுட்பம், வாழ்க்கைவரலாறு, அரசியல், புனைகதை. அவர்களில் ஒரு சிறுபகுதியே புனைகதை வாசகர். ஆனாலும் இங்கு ஆண்டுக்கு பல ஆயிரம் இலக்கிய நூல்கள் வெளிவந்து விற்கப்படுகின்றன. அவற்றில் ஏற்கப்படுவன மீண்டும் அச்சாகி வெளிவருகின்றன. அந்த போட்டிதான் உயிரின் இயல்பு. மலர்கள் அப்படித்தான் பூத்துக்குலுங்குகின்றன, கனியாகின்றவை சிலவே. விந்துத்துளியில் உயிரணுக்களில் கருவாகின்றது ஒன்றே. ஆகவே நூல்கள் பெருகட்டும். அந்தப் பெருக்கம் வளர்ச்சிதான். அதைக்கண்டு ஏளனம் செய்பவன், ஒவ்வாமை கொள்பவன் அறிவியக்க ஆர்வம் கொண்டவனே அல்ல. ஆ. ஒரு ரெண்டு புக் எழுதினவன்லாம் பெரிய ஆள் மாதிரி புத்தகக் கண்காட்சியிலே அலையறான். உள்ளூர் முனிசிப்பல் கவுன்சிலர் விடைத்து திரிவதை கண்டு ஒரு முனகலை வெளிப்படுத்தும் தெம்பில்லாமல் பம்முகிற, உயரதிகாரியிடம் இளிக்கிற பரிதாபத்திற்குரிய ஆத்மாக்கள்தான் இப்படிச் சொல்கின்றன. ஒரே ஒரு நூல் எழுதியவனும் சரி, நாளை எழுதவிருக்கிறேன் என நம்புபவனும் சரி, வாசகனும் சரி நிமிர்வுகொள்ளட்டும். அதற்கான இடம்தான் புத்தகக் கண்காட்சி. ஒரு புத்தகக் கண்காட்சிக்குள் நுழைந்தாலே நீங்கள் தமிழகத்தின் மக்கள்தொகையில் லட்சத்திலொருவர் என நினைவுகூருங்கள். அதன்பொருட்டே நீங்கள் பெருமிதம் அடையலாம். வேறெந்த நிமிர்வைவிடவும் அது உயர்வானது. அறிவியக்கத்துடன் தொடர்பில் இருக்கிறேன் என்னும் திமிர் உங்களிடம் இருக்கட்டும். புனிதமான உணர்வு அது. ஆம், நான் வாசகன், நான் எழுத்தாளன் என இங்கு தின்று கழிந்து புணர்ந்து சாகும் இப்பெருந்திரள் நோக்கிச் சொல்லுங்கள். நீங்கள் எங்களை அறியமாட்டீர்கள், ஆனால் உங்களுக்காகவும் நாங்கள் சிந்திக்கிறோம் என்று சொல்லுங்கள். அந்த திமிரை உணரமுடியாதவன் ஒருவகை அற்பன், அவனுக்கு அறிவியக்கத்தில் இடமில்லை. இ. எழுத்தாளர்களை வாசியுங்க, ஆனா தனிப்பட்ட முறையிலே நெருக்கம் வைச்சுக்காதீங்க. அவங்கள்லாம் நல்லவங்க இல்லை இதைச்சொல்லும் அற்பன் தன்னை ஏதோ ஒருவகை புனிதன் என நினைத்துக்கொண்டிருக்கிறான். இவனுக்கு அரசியல்வாதியை கும்பிட, அதிகாரியை பணிய கூச்சமில்லை. எழுத்தாளனிடம் மட்டும் ஒவ்வாமையாம். எழுத்தாளனும் மனிதனே. அவனுக்கும் கொந்தளிப்புகள் இருக்கும். அவனுக்கும் தன்முனைப்பு இருக்கும். ஆனால் எந்த நல்ல வாசகனும் இந்த உலகில் எழுத்தாளனையே தனக்கு அணுக்கமானவனாக கருதுவான். அவனுடன் பேச, அவனுடன் அணுக்கம் கொள்ளவே துடிப்பான். நான் இன்றும் அப்படித்தான் இருக்கிறேன். எந்த எழுத்தாளரையும் தேடிச்சென்று பழகுவதில் எந்த தயக்கமும் எனக்கில்லை. நான் என் வாழ்க்கையில் இதுவரை கண்ட மாமனிதர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் எழுத்தாளர்களே. எஞ்சியோர் மானுடசேவைப் பணியாளர்கள். சிந்திப்பவனிடம் மட்டுமே எனக்குப் பேசுவதற்கு இருக்கிறது. என்னுடைய எளிமையான சபைநாகரீகம், ஒழுக்கம் ஆகியவற்றை எழுத்தாளர்களிடம் நான் போடுவதில்லை. எழுத்தாளர் என்னை மதிக்கிறாரா கும்பிடுகிறாரா என்று நான் கவனிப்பதில்லை. எழுத்தாளனிடம் திகழும் ஒன்று உண்டு. சிலரிடம் சுதந்திரம், சிலரிடம் பித்து, சிலரிடம் சிரிப்பு, சிலரிடம் திமிறல், சிலரிடம் கனிவு, சிலரிடம் கனவு… ஏதோ ஒன்று அவனை எழுத்தாளனாக்குகிறது. அவனை பெருந்திரளில் ஒருவனாக, சாமானியனாக அல்லாமலாக்குகிறது. அதுதான் எனக்கு முக்கியம். அவர் என்னைப்போல் சலவைச்சட்டைபோட்டு உபச்சராமொழிகள் பேசி நான் மதிக்கும் ‘பெரியமனிதர்’ ஆக இருக்கவேண்டும் என்பதில்லை. குடித்துவிட்டு என்மேல் வாந்தி எடுத்த ஜான் ஆபிரகாம் நான் கண்ட மாமனிதர்களில் ஒருவர்தான். ஈ. ஆன்லைன்ல புக் வாங்கலாமே, எதுக்கு புத்தகக் கண்காட்சி? ஆன்லைனில் புத்தகம் வாங்குபவர்கள் எவரும் இதைச் சொல்வதில்லை, ஏனென்றால் அவர்கள் மெய்யாகவே புத்தகக் காதலர்கள். இதைசொல்பவர்கள் புத்தக ஒவ்வாமை கொண்டவர்கள். வாசகர்களுக்கு புத்தகங்களை காண்பதே கொண்டாட்டம்தான். ஒரு புத்தகக் கண்காட்சிக்குள் நுழைவதென்பது தமிழ்ச்சமூகத்தின் மூளையை கண்கூடாக பார்ப்பதுபோல. நம் அறிவியக்கத்தையே ஒரே பார்வையில் பார்ப்பதுபோல. உ. புத்தகங்கள்லாம் விலை அதிகம், மலிவா வித்தா நல்லது. புத்தகங்களை மெய்யாக வாங்கும் எவரும் சொல்வதல்ல இது. இன்று ஒரு நல்ல சாப்பாட்டுக்கு எளிதாக ஐநூறு ரூபாய் ஆகிறது. வீட்டுக்குக் கொண்டுவந்தால் ஆயிரம். ஆயிரம் ரூபாய் விலையுள்ள ஒரு நூல் வாழ்நாள் முழுக்க நம்முடன் இருப்பது. ஒன்று கவனித்திருக்கிறேன். புத்தகத்தின் விலை குறைத்து வைக்கப்பட்டால் அது கூடுதலாக விற்பதில்லை. அழகான நூல் விலை கூடுதலென்றாலும் அதுதான் விற்கும். அதுதான் புத்தகக் காதலர்களின் உலகம். வெளியே இருப்பவர்களுக்கு அது புரியாது ஊ. தமிழ்லே தரமான நல்ல நூல்களே இல்லை. அதனாலே வாங்குறதில்லை… சரி, ஆங்கிலத்தில் அண்மையில் என்னென்ன வாங்கி வாசித்தீர்கள் என்று இப்படிச் சொன்ன ஒருவரிடம் கேட்டேன். பெப்பேப்பே என்று ஏதோ சொல்லி சமாளித்தார். (பொதுவாக புத்தகம் பக்கம் தலைவைத்துப் படுக்காத கூட்டம் சொல்லும் பதில்தான். காந்தி, அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் போன்றவர்களின் நூல்கள். ஆம், முழுத்தொகுப்புகள்!) ஆங்கிலத்தில் பல தலைப்புகளில் உள்ள ஏராளமான நூல்கள் தமிழில் இல்லைதான். தமிழில் துறைசார் நூல்கள் பல தரமற்றவையும்தான். ஆனால் ஒருவர் அடிப்படை அறிவுத்தேடல் கொண்டவர் என்றால் தமிழில் வாங்கிக்கொண்டே இருக்கவேண்டிய அளவுக்கு நூல்கள் உள்ளன. தமிழ் வாழ்க்கையை தமிழிலக்கியம் வழியாகவே அறிந்துகொள்ள முடியும். தமிழ்ப்பண்பாடு சார்ந்த மகத்தான நூல்கள் ஏராளமாக உள்ளன. சைவம், வேதாந்தம் சார்ந்து தமிழில் ஏராளமான மூலநூல்கள் உள்ளன. முக்கியமான நூல்களின் மொழியாக்கங்கள் உள்ளன. ஊ. புத்தகம் படிச்சா அறிவாளியா? அதனலே என்ன லாபம்? அதை புத்தகம் படிக்காதவரிடம் சொல்லிப்புரியவைக்கவே முடியாது. புத்தகம் படிப்பவனுக்கு அதற்கான விடை தெரியும் ஆகவே புத்தகக் கண்காட்சிக்குச் செல்லுங்கள். திளையுங்கள் https://www.jeyamohan.in/178126/
  2. இந்து வெறுப்பை எதிர்கொள்வது jeyamohanOctober 27, 2022 அன்புள்ள ஜெ தமிழ் ஹிந்து நாளிதழ் வெளியிட்ட செய்திக்கட்டுரை இது. ‘உலக அளவில் இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு அதிகரிப்பு’ – அமெரிக்க ஆய்வ நிறுவனம் தகவல் இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு பத்துமடங்கு உலக அளவில் கூடியிருக்கிறது என்கிறது இந்த ஆய்வு. உங்கள் தகவலுக்காக. ராஜாராம் * அன்புள்ள ராஜாராம் நான் இருபதாண்டுகளுக்கும் மேலாகச் சொல்லிவரும் விஷயம் இது. இந்துக்கள் மீதான இந்த காழ்ப்புக்கு மிகப்பெரும்பாலும் மதவெறி, மதப்பரப்பு நோக்கம் ஆகிய இரண்டுமே காரணம். ஆனால் மனிதாபிமான, நீதியுணர்வுசார்ந்த, முற்போக்கான ஒரு நிலைபாடாக இது நடிக்கப்படுகிறது. நான் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் செல்வதற்கு முன்பு அதை செய்திகள் வழியாக அறிந்திருந்தேன். சென்றபின் நேரிலும் கண்டேன். நேரடியான இந்துவெறுப்புப் பிரச்சாரத்தை சந்திக்காமல் எங்கும் செல்லமுடியாது அங்கெல்லாம். இங்கேயே கவனியுங்கள். இந்து வெறுப்பு கக்கப்படுவதிலுள்ள அடிவயிற்று ஆவேசம், கட்டுக்கடங்காத வெறி. எங்கிருந்து வருகிறது இது? உலகில் வேறெந்த மதத்தின் மீதாவது இந்த அளவுக்கு நஞ்சு கொட்டப்படுகிறதா? கேட்டால் சாதியை எதிர்க்கிறோம், அதனால் இந்து மதத்தை எதிர்க்கிறோம் என்பார்கள். இங்கே அந்த அளவுக்குச் சாதியமைப்பை வெறுப்பவர்கள், சாதியை விட்டு வெளியேறியவர்கள் இருக்கிறார்களா? அப்படி நம்பினால் அவரைப்போல பேதை எவரேனும் உண்டா? அந்த அளவுக்கா இவர்கள் ஒவ்வொரு கணமும் அரசியல் கொள்கைப் பற்றுடன் இருக்கிறார்கள்? நமக்கு தெரியாதா யதார்த்தம்?மிகப்பெரிய மூளைச்சலவை ஒன்றின் வெளிப்பாடு அது. திட்டமிட்டமுறையில் நூறாண்டுக்காலம் நடைபெற்ற மூளைச்சலவை. அத்துடன் முக்காடு போட்டுக் கொண்டு வெவ்வேறு அரசியல்பாவனைகளுடன் வரும் மதவெறி. இந்துக்கள் சென்று குடியேறிய எந்நாட்டிலும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் அல்ல. அந்நாட்டின் பண்பாடுகளை மறுத்தவர்களோ, அங்கே பண்பாட்டு ஊடுருவல் நிகழ்த்த முயன்றவர்களோ அல்ல. சென்ற நாடுகள் அனைத்திலும் அவற்றின் பொருளியல்வெற்றிக்கு காரணமாகியிருக்கிறார்கள். அங்குள்ள பண்பாட்டுக்குப் பங்களிப்பாற்றியிருக்கிறார்கள். இயல்பாகவே ஒத்திசைந்துபோவது அவர்களின் இயல்புகளில் உள்ளது. இந்துக்கள் எந்த மதத்தின்மீதும், எந்த தேசத்தின் மீதும் படையெடுக்கவில்லை. இந்துக்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடவில்லை. இந்துக்கள் மீது இன்று இந்த ‘முகமூடி முற்போக்கு’களால் சொல்லப்படும் எல்லா குற்றச்சாட்டுகளும் அதன் நிலப்பிரபுத்துவகாலத்தை சேர்ந்தவை. அவற்றை இந்துமதம் தன் மையக்கொள்கையாக முன்வைக்கவில்லை. அவற்றை கடக்க அது தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறது. மாபெரும் ஞானியரும் அறிஞர்களும் அவற்றுக்கு எதிராக போரிட்டபடியே இருக்கின்றனர். சென்ற காலகட்டத்தில் உலகமெங்கும் அத்தனை சமூகங்களும் அடிமைமுறையை கொண்டிருந்தன. பல மதங்கள் கொடூரமான படையெடுப்புகளையும் மத ஒடுக்குமுறைகளை நிகழ்த்தின. மதமாற்றத்தின் பொருட்டு பல தேசங்களின் மொத்த மக்கள்தொகையையே கொன்றழித்தன. ஐரோப்பாவில் கைவினைஞர்கள் அடிமையாக பலநூற்றண்டுகள் நடத்தப்பட்டிருக்கின்றனர். பெண்கள் விலங்குகளாக வாழும்படிச் செய்யப்பட்டிருக்கின்றனர். சுதந்திர சிந்தனையே பெருந்தண்டனைக்குரியதாக ஆக்கப்பட்டிருந்தது. உலக வரலாறு கண்ட மாபெரும் இனப்படுகொலைகள் எல்லாமே தென்னமேரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் மதமாற்றநோக்குடன் செய்யப்பட்டவை. எத்தனை பெரும்போர்கள். எத்தனை செயற்கைப் பஞ்சங்கள். பலநூற்றாண்டுக்காலம் மதத்தலைமையின் ஆசியுடன் அடிமைவணிகம் செய்யப்பட்டது. மதவிசாரணை (Inquisition) என்ற பெயரில் பெரும் சித்திரவதைகளும் கூட்டப்படுகொலைகளும் நிகழ்த்தப்பட்டன. அவற்றின் பொறுப்பை எல்லாம் அந்த மதங்கள் மேல் ஏற்றலாகாது, அவற்றுக்கு சாம்ராஜ்யங்களும் அரசர்களும் மட்டுமே பொறுப்பேற்கவேண்டும் என்கிறார்கள் ஐரோப்பியரும் இங்குள்ள போலிமுற்போக்கினரும். நேரடியாக மதநிறுவனங்களும், மதகுருக்களும் நிகழ்த்திய பேரழிவுகளுக்கும் கொடுமைகளுக்கும்கூட அத்தனிமனிதர்களும் அந்தக் காலகட்டமும் மட்டுமே பொறுப்பேற்கவேண்டும் என்கிறார்கள். ஆனால் அதே வாயால், எந்த தயக்கமும் இல்லாமல், இந்தியாவில் நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் நடந்த எல்லா ஒடுக்குமுறைகளுக்கும் தீயஆசாரங்களுக்கும் இந்துமதம் மட்டுமே பொறுப்பேற்கவேண்டும் என்கிறார்கள். இந்துமதம் என்பது அதன் ஞானமோ தத்துவமோ கலையோ ஒன்றுமல்ல, அந்த அடக்குமுறைகளும் ஆசாரங்களும் மட்டுமே என கூறுகிறார்கள். இந்த அப்பட்டமான மோசடியை திரும்பத்திரும்பச் சொல்லி நம்மிலேயே பெரும்பாலானவர்கள் அதை நம்பி, இந்து என சொல்லிக்கொள்ள அஞ்சக்கூடிய நிலைமையை உருவாக்கியிருக்கிறார்கள். அதுவே முற்போக்கு என இங்கே நிறுவப்பட்டுவிட்டிருக்கிறது. முற்போக்காக தோற்றமளித்தாகவேண்டும் என்பது ஒரு சமூக நிர்ப்பந்தம். ஆகவே அனைத்து அசடுகளும் அதை ஏற்றுக் கூச்சலிடுகின்றன. சூழலின் அழுத்தத்தை மீறி உளமறிந்த ஒன்றைச் சொல்லி நிலைகொள்ள அபாரமான தன்னம்பிக்கை வேண்டும். அது தொடர் கல்வியால்தான் அமையும். இல்லையேல் மந்தைக்கூச்சல்தான். நான் ஐரோப்பியப் பண்பாட்டின் வெற்றிகளை அதன் நடுக்காலகட்டத்து மதவெறிக் கொடுமைகளில் இருந்து பிரித்தே பார்ப்பேன். கிறிஸ்தவ மதத்தின் ஆன்மிக- தத்துவ சாதனைகளை, அதன் அதிகாரபூர்வ முகங்களான செயிண்ட் அகஸ்டின், செயிண்ட் தாமஸ் அக்வினாஸ் போன்றவர்களைக்கூட மதவெறியும் ஒடுக்குமுறையும் நிறைந்த நடுக்காலகட்டத்தில் இருந்து வேறுபடுத்தியே அணுகுவேன். அவர்கள் இல்லையேல் மானுடசிந்தனை இல்லை. ஸ்பானிஷ் மதவிசாரணைகளை சுட்டிக்காட்டி மிக எளிதாக கத்தோலிக்க ஞானிகளை நிராகரிக்க முடியும்.கோவா மதவிசாரணையை ஆதாரம் காட்டி செயிண்ட் சேவியரை நிந்திக்க முடியும். நான் அதைச் செய்யமாட்டேன், ஏனென்றல் நான் இந்து. அதேபோலவே இந்துமதத்தையும் அணுகுவேன். எல்லா மதங்களையும்போலவே இந்துமதமும் வெவ்வேறு வரலாற்றுக் காலகட்டங்கள் வழியாக கடந்துவந்த ஒன்று. அதில் நிலப்பிரபுத்துவக் காலகட்டத்தின் ஒடுக்குமுறைகளும் தீய ஆசாரங்களும் உண்டு. கல்வியும் நவீனவாழ்க்கைப்பார்வையும் இன்னும் வலுப்படாத சூழல்களில் அவை பலவகைகளில் நீடிப்பதும் உண்மை. ஆனால் அவற்றுக்கு எதிராக பேசிய ஞானிகள் இங்குள்ளனர். விவேகானந்தர், வள்ளலார், நாராயண குரு. இந்து மதம் தன்னை தொடர்ச்சியாக புதுப்பித்துக் கொண்டு, ஆசாரவாதத்தில் இருந்து மீண்டபடியேதான் உள்ளது. கண்கூடாகவே அந்த மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதன் ஞானமும் தத்துவமும் வேறு, அதன் ஆசாரவாதமும் பழமைநோக்கும் வேறு. இந்து எதிர்ப்புப் பிரச்சாரம் ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கு எதிரானது. நீண்டகால அடிப்படையில் இந்தியப்பொருளியலையேகூட அது அழிக்கக்கூடும். நாம் உலகமெங்கும் சென்று உழைப்பதை தடுக்கும் கருவியாக இனவெறியர்களால் பயன்படுத்தப்படக்கூடும். இன்றே அதை அடையாளம் கண்டே ஆகவேண்டும். இங்குள்ள சிலரை வாடகைக்கு எடுத்து அங்கே அதை பரப்புகிறார்கள். நாம் அனைவருக்குமே அது பேரிழப்பாக ஆகலாம். ஆனால் அதற்கு ஒரு மறுபக்கமும் உண்டு. அதையும் சுட்டிக்காட்டி வருகிறேன். இந்துமதம் மதவாத அரசியலாக, மதவெறியாக மாறும்போது இந்து எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு அது ஊக்கம் அளிக்கிறது. இந்துமதத்தை அழிக்கும் முயற்சிகளுக்கு ஆக்கம் கூட்டுகிறது. இந்து எதிர்ப்புப் பிரச்சாரம் அளவுக்கே இந்து மதத்திற்கு ஆபத்தானது இந்துவெறி அரசியல். அதாவது இன்றைய இந்து அடிப்படைவாத அரசியலின் செயல்களுக்கான பொறுப்பை இந்து மரபு ஏற்கமுடியாது. இந்துக்கள் சுமக்க முடியாது. மதவாத அரசியல் வேறு, மதம் வேறு. அந்தத் தெளிவு நமக்கு இருக்கவேண்டும். இந்த அப்பட்டமான உண்மையைச் சொல்லும்போது இருபக்கமும் வசைகளும் அவதூறுகளும் எழுகின்றன. ஒருபக்கம் இந்துமதத்தின்மேல் பற்றுகொண்ட, இந்துமெய்மை மேல் நாட்டம் கொண்ட அத்தனைபேரையும் சங்கி என வசைபாடும் ரகசிய மதவெறியும் -அரசியல்வெறியும் கொண்ட கூட்டம். மறுபக்கம் இந்துவெறி அரசியல்வாதிகளின் வசைபாடல். ஆனால் உண்மையை சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். இந்துமதவெறுப்பு பொதுவெளியில் வளரவளர அது இங்குள்ள இந்துத்துவ அரசியலுக்கே லாபகரமானது. இந்துக்கள் அனைவரையும் சங்கிகள் என முத்திரை குத்துவது, இந்துமதம் அழியவேண்டும் என பேசுவது, குறிப்பாக மாற்றுமதத்தவர் அதைப் பேசுவது என்பது இந்துத்துவ அரசியல்வாதிகள் விரும்பி வரவேற்கும் செயல். அவர்களை வளர்க்கும் வேர்நீர் அது. மறுபக்கம் இந்துத்துவ வெறி, மதக் காழ்ப்புப்பேச்சுக்கள் இந்துஎதிர்ப்புக்கே ஆக்கம் அளிப்பவை. இந்துத்துவர் இங்கே பேசும் உதிரிப்பேச்சுக்கள்கூட உலகின் கண்முன் பெரிதாக்கப்படுகின்றன எனில் இரு சாராரும் இதை ஏன் செய்கிறார்கள்? ஏன் ஒருவரை ஒருவர் வளர்க்கிறார்கள்? இருசாராரும் நடுவே இந்துக்கள் என திரண்டிருக்கும் ஒரு பெரும் மக்கள் திரளை கொன்று தின்ன முனைகிறார்கள். உலகின் மாபெரும் பண்பாடு ஒன்றை, உலகஞானத்தின் சிகரங்களை தொட்ட மரபை அழித்து தாங்கள் வாழமுயல்கிறார்கள். இந்து வெறுப்பு என்பதொன்றும் புதியது அல்ல. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி இருந்தபோது, அதிகாரம் அவர்கள் கையில் இருந்தபோது, அது உச்சகட்டத்தில் இருந்தது. கல்விக்கூடங்களில் நேரடியான இந்து எதிர்ப்பு பிரச்சாரம் நடைபெற்றது. பாரதி முதல் அத்தனை முன்னோடிகளும் அதை பதிவுசெய்திருக்கிறார்கள். அந்த உச்சகட்ட பிரச்சாரத்திற்கு இந்தியா தன் ஞானத்தால் பதிலளித்தது. விவேகானந்தர் முதல் அத்தனை இந்து மறுமலர்ச்சிக்கால மெய்ஞானிகளும் அதன் விளைவுகள். இன்று வரை இந்து எதிர்ப்புப் பிரச்சாரம் ஓயாமல் நிகழ்கிறது. ஆங்கிலத்தில் இந்திய மெய்ஞானிகள், இந்திய மறுமலர்ச்சித்தலைவர்களை இழிவுசெய்யும் ‘ஆய்வுகள்’ ஆண்டுதோறும் வந்து குவிகின்றன. விவேகானந்தர் முதல் ஜே.கிருஷ்ணமூர்த்தி வரை ஒருவர்கூட விதிவிலக்கு அல்ல. ஆனால் அது நம்மை பாதிக்கவில்லை.ஏனென்றால் நாம் அப்போது ஞானிகளை, தத்துவ ஆசிரியர்களை முன்வைத்தோம். நம் எதிர்மறைக் கூறுகளில் இருந்து வெளிவர முயன்றோம். நாம் வளர்ந்துகொண்டிருந்தோம்.இன்று ஏன் இப்பிரச்சாரம் வலுக்கொள்கிறது, ஏன் வெற்றி அடைகிறது. ஏனென்றால் நாம் ஞானிகளை விட்டுவிட்டோம், அரசியலை முன்வைக்கிறோம். ஒருவன் இந்து என்றாலே அவனை சங்கி என்பவர்கள், அத்தனை பேரிலும் சங்கிகளைக் கண்டுபிடிப்பவர்கள் அறியாமையால் அதைச் செய்யவில்லை., அவர்கள் அறிந்தோ அறியாமலோ ஒரு பெருந்திட்டத்தின் பகுதியாக இருக்கிறார்கள். எந்த இந்துவெறுப்புப் பிரச்சாரமும் தன்னிச்சையாக எழவில்லை. எவையும் தனிமனிதர் சர்ந்தவை மட்டும் அல்ல. அவை அனைத்திலும் ஒரே போக்குதான் உள்ளது. அவை கடந்தகால வரலாற்றுப்பிழைகள், சமூக ஆசாரப்பிழைகள் அனைத்துக்கும் இந்துமதத்தை, அதன் ஞானியரை பொறுப்பாக்குபவை. இந்த இக்கட்டான சூழலில் மீண்டும் செய்வதற்கொன்றே உள்ளது. நாம் நம் பெருமரபின் ஞானத்தை, தத்துவத்தை, கலையை பற்றிக்கொள்வோம். அதை அரசியல்படுத்தாமலிருப்போம். அந்த மெய்ஞானமே இந்துமதம் என உலகுக்குச் சொல்வோம். திரும்பத்திரும்ப நமக்கும் சொல்லிக்கொள்வோம். ஜெ https://www.jeyamohan.in/173054/
  3. எழுத்தாளர் ஜெயமோகனின் படைப்புலகம் by அரவின் குமார் நூற்றாண்டு வரலாறு கொண்ட நவீனத்தமிழிலக்கிய வரலாற்றில் எண்ணிக்கையாலும் தரத்தாலும் மேம்பட்ட பல படைப்புகளின் வாயிலாக மறுக்கமுடியாத இடத்தைப் பெற்றவர் எழுத்தாளர் ஜெயமோகன். எழுத்தாளர் ஜெயமோகனின் முதன்மையான இலக்கியப் பங்களிப்பாக அவரின் புனைவுலகம், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், இந்திய ஞான மரபு கட்டுரைகள், சமூகக்கட்டுரைகள் ஆகியவற்றுடன் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பின் வாயிலாக முன்னெடுத்து வரும் இலக்கிய, அறிவுலகச் செயற்பாடுகளைக் குறிப்பிடலாம். 1991 ஆம் ஆண்டு ஜெயமோகனின் முதலாவது நாவலான ‘ரப்பர்’ நாவல் வெளிவந்தது. ஜெயமோகனின் நாவல்கள் ஆழமான தத்துவ விசாரங்களையும் அறம் சார்ந்த விவாதங்களையும் முன்வைக்கக்கூடியவை. தமிழில் எழுதப்பட்ட நாவல்களில் முதன்மையான இடத்தைப் பெறுபவை. தமிழின் சிறந்த நாவல் வரிசைப்படுத்தலில் தவறாது இடம்பெறும் அவரது விஷ்ணுபுரம் (1997) நாவல் பெளத்த மற்றும் வைணவ மெய்யியல் உலகின் பின்னணியில் எழுதப்பட்டது. குறிப்பிட்ட காலப்பகுதியில் மனிதர்களுக்கு ஏற்படும் கொள்கை, தத்துவம் சார்ந்த பிடிப்பால் மெல்ல இறுகிப் போய் நடைமுறை வாழ்வுடன் கொள்ளும் பிணக்கைச் சித்திரிக்கும் நாவலாக ‘பின்தொடரும் நிழலின் குரல்’ நாவல் அமைகின்றது. பின் தொடரும் நிழலின் குரல் (1999) என்கிற அவரது மற்றுமொரு நாவலும் இலக்கியச் சூழலில் பெரும் விவாதப் பொருளானது. இந்தியாவில் தீவிரமாக இயங்கும் கம்யூனிஸ்டு இயக்கங்களின் பின்னணியில் எழுதப்பட்ட அந்நாவல் இடதுசாரிகளால் கடுமையாக நிராகரிக்கப்பட்டாலும் இலக்கியச்சூழலில் இன்றும் தனதிடத்தைத் தக்கவைத்துள்ளது. அதைப் போல, பிச்சையெடுப்பவர்களின் வாழ்வை உயிர்ப்புடன் அணுகி அதிலிருக்கும் உண்மைத்தன்மையை மனித மனத்தின் ஆழமான குரூரத்தைக் காட்டும் ஏழாம் உலகம் (2004) நாவலும் தமிழ்ச் சூழலுக்கு புதிய வாழ்வை அறிமுகம் செய்தது. உடற்பேறு குறைந்த மனிதர்களைக் கட்டாயப்படுத்திப் பிச்சையெடுக்கச் செய்து அவர்களைச் சுரண்டிப் பிழைக்கும் குரூரமான பின்னணியை ‘ஏழாம் உலகம்’ நாவலில் காட்டியிருப்பார். மனித அகத்தின் இருண்மைமிகுந்த அந்தத் தருணம் பொதுவாக அறியப்படும் அன்பு, பாசம் போன்ற விழுமியங்களை ஒட்டி வாசகர்களை விவாதம் செய்ய வைக்கின்றது. அத்தகையச் சூழலில், மனிதர்கள் மீது அன்பு செலுத்தவும் மனிதம் மீது நம்பிக்கை கொள்ளவும் ஆன்ம பலமொன்று அவசியமாவதைக் குறிப்பிட முடிகிறது. வெள்ளையர்களின் காலனியாகச் சென்னை நகரம் இருந்தபோது அங்கிருந்த பனிக்கட்டித் தொழிற்சாலையில் பணியாற்றிய தலித் தொழிலாளர்களின் இன்னல்களை அங்குப் பணியாற்றும் பிரிட்டனின் ஆதிக்கத்துக்குட்பட்ட அயர்லாந்தைச் சேர்ந்த அதிகாரியின் பார்வையில் முன்வைக்கக்கூடியது அவரது ‘வெள்ளையானை’ நாவல். ஆகவே, மரபான நன்மை தீமை என்ற இருமை விவாதத்துக்கு அப்பால் வாசகனை ஒட்டுமொத்தமாக மதிப்பீடு செய்ய அவரின் படைப்புகள் தூண்டுகின்றன. இதுபோல, கொற்றவை (2005) நாவலில் சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு புதுகாப்பியமாக எழுதியிருக்கிறார். இந்நாவல் தமிழ் புனைவு கூறு முறையில் மிக முக்கியமான தடத்தைப் பதிவு செய்திருக்கிறது எனலாம். சிலப்பதிகாரத்தில் தொன்மை எல்லைகளாகக் குறிக்கப்படுகின்ற தமிழ் நிலப்பரப்பிலிருந்து நாவல் தொடங்கி சேர, சோழ, பாண்டிய நிலமெங்கும் புனைவாடலாகச் சிலப்பதிகாரம் அமைவதைக் காட்டியிருப்பார். தொடர்ந்து அவரது இலக்கியம் சார்ந்த விமர்சனங்களிலும் புனைவெழுத்திலும் அறம் சார்ந்த கொள்கையே மீள நிலைகொள்வதைக் காணமுடிகிறது. எனினும் மாறாத பிரபஞ்ச நியதியாக முன்வைக்கப்படும் மரபான அறம் சார்ந்த பார்வைக்கு மாற்றாக ஒவ்வொருவருக்குமான தனியறத்தை (ஸ்வதர்மம்) முன்னிலைப்படுத்துகிறார். ஆகவே, அவருடைய படைப்புகளில் அறம் சார்ந்த விவாதம் இருப்பதைத் தொடர்ந்து காணலாம். அப்படி, அவர் எழுதிய ‘அறம்’ தொகுதியில் உள்ள சிறுகதைகள் தமிழில் தனி கவனம் பெற்றன. ஒவ்வொரு ஆண்டும் மறுபதிப்புக் கண்டு பல்லாயிரம் தொகுப்பு விற்பனையான நூல் அது. இலட்சியவாத நோக்கு கொண்ட எழுத்துக் காலாவதியான பாணி என்ற எண்ணம் எழுத்துலகில் தலைதூக்கிய காலக்கட்டத்தில், இலட்சியவாதத்தின் மீது கொண்ட நம்பிக்கையை விதைக்க, தான் சந்தித்த உண்மை மனிதர்களிலிருந்து உருவி எடுத்த வாழ்வின் தருணங்களைப் புனைவாக்கி அறம் தொகுப்பில் வழங்கியுள்ளார் ஜெயமோகன். சூழலியல், பண்பாடு, இலக்கியம், அரசியல், சமூகம் எனப் பல துறைகளிலும் பெரும் லட்சியவாத வேட்கையுடன் இயங்கிய உண்மை மனிதர்களை அத்தொகுப்பில் காண முடிகிறது. காட்டில் வாழும் யானைகளின் மீதான நலனுக்காகத் தன்னுடைய வாழ்நாளின் பெரும்பகுதியை ஒதுக்கிய டாக்டர் கே என அறியப்படும் கிருஷ்ணமூர்த்தி, தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து பிறந்து நாராயண குருகுலத்தின் வாயிலாகக் கல்வியறிவு பெற்று அரசு பணியில் உயர்பதவிபெற்ற தன்னுடைய நண்பர் என அறம் சிறுகதைகளின் வாயிலாக மக்களுக்கு இலட்சியவாதத்தின் மீது நம்பிக்கையூட்டச் செய்தார். ஜெயமோகன் நூற்றுக்கணக்கான சிறுகதைகளை எழுதியிருக்கிறார். ஜெயமோகனின் பெரும்பான்மையான சிறுகதைகள் அவரின் வாழ்விடமான பண்டைய தென் திருவிதாங்கூர் நாடு, தற்கால கேரள-தமிழ்நாடு எல்லையை ஒட்டி அமைந்திருக்கும் கன்னியாகுமரி நிலப்பரப்பின் சமூக, வரலாற்றுப் பின்னணியைக் கொண்டவை. அவருடைய சிறுகதைகளைத் தொகுத்துச் சொல்வதற்கு இம்மாதிரியான வகைமாதிரிகளாக அவற்றைப் பகுத்துக் கொண்டாலும் ஒட்டுமொத்தமாக மர்மம், அறிவியல் புனைவு, வரலாறு, பகடி, மெய்யியல் எனச் சிறுகதையின் வாயிலான அனைத்துச் சாத்தியங்களையும் ஜெயமோகன் நிகழ்த்தியிருக்கிறார் எனலாம். ஜெயமோகனின் அறிவியல் புனைகதைகளின் தொகுப்பான ‘விசும்பு’ கதையும் அறிவியலின் பல சாத்தியங்களைக் கொண்ட புனைவாக்கச் செயற்பாடாக அமைந்தது. கோவிட் 19 தொற்றின் காரணமாகக் கொண்டுவரப்பட்ட பொதுமுடக்கக் காலக்கட்டத்தில் நாளொன்றுக்கு ஒரு சிறுகதை எனக் கதைத் திருவிழா என்ற பெயரில் மொத்தமாக 125 சிறுகதைகளை எழுதினார். அதன் வாயிலாக, நவீன மனித வரலாற்றின் மிக இக்கட்டான காலக்கட்டமொன்றில் தன்னுடைய இடைவிடாத படைப்பாக்கச் செயல்பாட்டால் வாசகர்களுக்கு ஊக்கமூட்டினார். ஜெயமோகனின் இலக்கிய விமர்சனம் எவ்விதத் திட்டவட்டமான கோட்பாடு சார்ந்து படைப்பை அணுகும் முறைக்கு நேர் எதிராகத் தேர்ந்த ரசனை விமர்சனத்தை முன்வைக்கக்கூடியது. தமிழில் புதுமைப்பித்தன், க.நா.சுப்பரமணியம், சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன் என நீளும் ரசனை விமர்சகர்கள் வரிசையின் தொடர்ச்சியாகத் தன்னை ஜெயமோகன் முன்வைப்பதுண்டு. உலக இலக்கியங்களிலும் தமிழிலக்கியத்திலும் இதுவரையில் வெளிவந்த மிகச் சிறந்த இலக்கியங்களை வாசித்து அதன் வாயிலாகத் தான் பெற்ற அனுபவங்களைக் கொண்டு படைப்பை அணுகித் தான் பெற்ற அனுபவத்தை ஒட்டுமொத்த மதிப்பீடாக முன்வைக்கிறார். அவ்வடிப்படையில் தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகளை மீளக் கண்டடையும் வகையில் விரிவான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்களான அசோகமித்திரன், கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி எனப் பலரின் ஒட்டுமொத்த படைப்புலகைப் பற்றிய குறுக்கு வெட்டுத் தோற்றத்தை ஜெயமோகன் அளித்திருக்கிறார். பல முன்னோடி எழுத்தாளர்கள், அவரது சமகால எழுத்தாளர்கள், இலங்கை எழுத்தாளர்கள், சிங்கப்பூர் எழுத்தாளர்கள் என உள்ளடக்கம் கொண்ட அவர் விமர்சன உலகம் மிக விரிவானது. ஜெயமோகனின் கட்டுரைகளில் சீரான தருக்கப்பார்வை அமைந்திருப்பதைக் காணலாம். அத்துடன், தான் சொல்ல வரும் சூழலின் ஒட்டுமொத்தப் பார்வையைத் தொகுத்தளித்து அதை நிறுவும் வகையில் அதற்கான தருக்கப்பூர்வமான விளக்கங்களைக் கட்டுரைகளில் அளிப்பார். இந்த முழுமைத்தன்மையே அவரைத் தமிழின் மிக முக்கியமான சிந்தனையாளராகவும் முன்னிறுத்துகிறது. அவரது பல கட்டுரைகள் அதுவரையில் ஒன்றைக் குறித்து அறிந்து வந்தவற்றையே மறுவிளக்கம் செய்யக்கூடிய அளவு ஆற்றல் கொண்டவை. உதாரணத்துக்கு, ஜெயகாந்தனின் ‘அக்னிப்பிரவேசம்’ சிறுகதையில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படும் பெண் சுவிங்கம் மெல்லுவதாக வரும் சித்திரிப்பை உளவியல் நோக்கில் அணுகிய கட்டுரையைச் சொல்லலாம். அவள் மெல்லுகின்ற சுவிங்கம் ஒருவகையில் அவளின் ஏற்பு அல்லது உள்ளூர இருக்கும் விருப்பத்தின் அடையாளமாகக் கொள்ளக்கூடியதாக இருக்குமா என்ற கோணத்தை வைக்கின்றார். அந்தக் கதையை மறுவிளக்கப்படுத்தும் முக்கியமான பார்வையாக அதைக் கருதலாம். தமிழில் ஜெயமோகன் அளவுக்கு எழுதியவர் இயங்கியவர் யாரும் இல்லை எனப் பரவலான எண்ணம் இருந்த சூழலில் அவர் தனது 50வது வயதில் முன்னெடுத்த முயற்சிதான் ஆச்சரியமானது. இளமையிலே மகாபாரதத்தை மீளாக்கம் செய்ய வேண்டுமென்கிற உந்துதலைக் கொண்டிருந்தார் ஜெயமோகன். மகாபாரதத்தைப் பின்னணியாகக் கொண்டு பத்மவியூகம் உள்ளிட்ட முக்கியமான சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். 2014 ஆம் ஆண்டு தொடங்கி ஏழாண்டுகளுக்கு முழு மகாபாரதத்தையும் நவீனச் சிந்தனைக்கேற்ப மீளாக்கம் செய்து வெண்முரசு எனும் பெயரில் நாளொன்றுக்கு ஒரு அத்தியாயம் எனத் தன்னுடைய தளத்தில் வெளியிட்டார். அந்த மீளாக்க முயற்சி 25000க்கும் மேற்பட்ட பக்கங்களுடன் 26 நாவல்களாக வெளிவந்தன. இந்தியா முழுமைக்கும் மகாபாரதத்தைப் பின்னணியாகக் கொண்டு பல நூறு நாடகங்கள், கூத்துகள், நாவல்கள், சிறுகதைகள் தழுவல்களுடன் அங்காங்கே பல்லாயிரமாண்டுகளாக இருந்து வந்துள்ளன. ஜெயமோகன் உருவாக்கிய மகாபாரத மீளாக்கம் தன்னுடைய கிளைகளாக வெவ்வேறு மகாபாரதப் பிரதிகளைக் கொண்டதோடு ஒவ்வொரு கதைமாந்தரையும் தருணத்தையும் உளவியல் அடிப்படையில் தத்துவங்களுக்கேற்பவும் மறுவிளக்கம் செய்து சித்திரித்திருந்தது. தமிழில் மட்டுமின்றி உலக மொழிகளிலும் மிக முக்கியமான இலக்கியச் சாதனையாக அம்முயற்சி கருதப்படுகிறது. கெளரவர்களுடனான சூதாட்டத்தின் போது திரெளபதியை வைத்து ஆடித் தோற்கின்றனர். துச்சாதனன் திரெளபதியின் சேலையைப் பிடித்து இழுக்க சுருள் சுருளாகச் சேலைகள் வந்து விழுந்தன என்ற மூலமகாபாரதத்தின் சாரத்தை வெண்முரசில் அரண்மனை முழுதும் இருந்த பெண்கள் திரெளபதிக்கு நேர்ந்த அவலத்தை எண்ணித் தம்தம் சேலையை அளித்ததாக எழுதியிருக்கிறார். அதைப் போல, அறமின்மையான செயல்களால் பாண்டவர்களை வதைக்கின்றவனாகத் துரியோதனன் இருந்தாலும் பாண்டவர்களின் பிள்ளைகளையும் அரவணைத்துச் செல்லும் பெருந்தந்தையாகவும் பல அருங்குணங்கள் கொண்டவனாகவே வெண்முரசில் படைக்கப்படுகிறான். அத்துடன் மகாபாரதப் போருக்குப் பின்னணியாக இருந்த இந்தியாவின் சமூக அரசியல் சூழலையும் வெண்முரசில் காண முடிகிறது. நிலவுடைமைச் சாதியினரான ஷ்த்ரியருக்கும் இடையர் சாதியினரான யாதவர்களுக்குமான அதிகாரப் பூசலாகவே மகாபாரதப் போர் அமைந்திருப்பதைக் காண முடிகின்றது. இவ்வாறாக, மகாபாரதம் முழுமையாகவே அரசியல், சமூகம், தத்துவம் என மறுவிளக்கப்படுத்தி எழுதப்பட்டிருக்கிறது. தன்னுடைய இலக்கிய ஆக்கங்களுக்கு மத்தியில் விஷ்ணுபுரம் எனும் இலக்கியச் செயற்பாட்டு இயக்கத்தை 2010ஆம் ஆண்டு தொடங்கினார். இந்த இலக்கியக் குழு உலகம் முழுவதும் இருக்கின்ற அவரது இலக்கிய நண்பர்களால் முழுமையாக நடத்தப்படுகின்றது. இந்த இயக்கத்தின் வாயிலாகத் தமிழிலக்கியத்திலும் அறிவுலகத்திலும் மிக முக்கியமான பணிகளைச் செய்து வரும் படைப்பாளர்களைத் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் அவர்களுக்கு விருதும் பணமுடிப்பும் வழங்கப்படுகிறது. அத்துடன் அவர்களின் படைப்பை விரிவாக அறிமுகப்படுத்தும் நோக்கில் இரண்டு நாள் நிகழ்ச்சி ஒருங்கு செய்யப்பட்டு எழுத்தாளர்களின் உரை, கலந்துரையாடல் எனத் தமிழிலக்கியத்தின் மிக முக்கியமான அறிவுக் கொண்டாட்டமாக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இப்படி விருது பெறும் ஆளுமைகள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வரையறைதான் முக்கியமானது. அனைத்துத் தகுதிகளும் இருந்து தமிழில் எந்த விருதோ கவனமோ கிடைக்காத ஆளுமைகளையே விஷ்ணுபுரம் அமைப்புத் தேர்ந்தெடுகிறது. அவர்களையே சமூகத்தின் முன் வைக்கிறது. மூத்தப்படைப்பாளிகள் மட்டுமல்லாமல் 2015ஆம் ஆண்டு தொடங்கி இளம் கவிஞர்களை அடையாளப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கான குமரகுருபரன் நினைவு விருதும் அவர்களின் படைப்புகளை ஒட்டிய விரிவான அறிமுகத்தை அளிக்கும் அமர்வுகளும், கலந்துரையாடலும் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. இது இளம் கவிஞர்களுக்குப் பெரும் ஊக்கமாகத் திகழ்கிறது. ஒவ்வோராண்டும் தமிழின் தேர்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், விமர்சகர்கள், இளம் வாசகர்கள் ஆகியோரைக் கொண்டு கவிதை வாசிப்புக் குறித்த பயிற்சியாகவும் விவாதமாகவும் ஊட்டி காவிய முகாம் நிகழ்த்தப்படுவது விஷ்ணுபுரம் இயக்கத்தின் பங்களிப்பில் முக்கியமானது. இலக்கிய விவாதங்கள், கலந்துரையாடல்கள், அறிமுகங்கள் வழி உலக இலக்கியம் தொடங்கி சமகால இலக்கியம் வரை நிகழும் மாற்றங்கள் அந்த முகாமில் விரிவாக அறிமுகம் காண்கின்றன. பல புதிய எழுத்தாளர்கள் தீவிரமான வாசிப்புக்கும் படைப்பிலக்கியத்திற்கும் ஆட்படுத்திக்கொள்ள இந்த முகாம் பெரிதும் பங்களிக்கிறது. அத்துடன் தொடர்ந்து இளம் வாசகர்களுக்கான இலக்கியம் குறித்து மேலதிகமாகப் புரிதல் ஏற்படத் தொடர்ச்சியாக இளம் வாசகர் சந்திப்புகளை நடத்தி வருகிறார். தமிழ் இலக்கியம், வரலாறு, ஆகிய தளங்களில் முக்கிய பங்களிப்பையாற்றிய ஆளுமைகள் குறித்தக் கருத்தரங்குகளையும் முன்னெடுத்து வருகிறார். வெண்முரசு எழுதி முடித்தவுடன் ஜெயமோகன் அடுத்து என்ன செய்யப்போகிறார் எனத் தமிழ் உலகம் கவனித்துக்கொண்டிருந்தபோது அவர் முன்னெடுத்த முயற்சிதான் தமிழ் விக்கி. தமிழில் எழுதப்பட்ட கலைக்களஞ்சியங்கள் பல்லாண்டுகளாகியும் புதியத் தகவல்கள் சேர்க்கப்படாமல் முடங்கியுள்ளன. அத்துடன், விக்கிப்பீடியா போன்ற தளங்களில் எழுதப்படும் கட்டுரைகளும் எவராலும் நீக்கவும் மாற்றவும் முடியும் அபாயம் நிலவுகிறது. இந்நிலையில், தமிழ் அறிவுலகத்தைப் பற்றிய முழுமையான தகவல்கள் தேர்ந்த துறைசார்ந்த அறிஞர்களால் சரிப்பார்த்து வெளியீடுவதற்கான தளமாகத் தமிழ்விக்கி எனும் இணையத்தளம் 2022 ஆம் ஆண்டு ஜெயமோகன் முன்னெடுப்பில் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்தத் தளத்தில், தமிழ் எழுத்தாளர்கள், ஆளுமைகள், இலக்கிய ஆக்கங்கள் ஆகியவற்றை ஒட்டி அனுப்பப்படும் கட்டுரைகளைச் சரிப்பார்க்கும் அறிஞர் குழுவொன்று இயங்குகின்றது. எழுத்தாளர்கள், வாசகர்கள் எனப் பலரும் பங்களித்து அனுப்பும் கட்டுரைகளை அறிஞர் குழு வாசித்துச் சரிப்பார்த்து இறுதி செய்த பின்னரே தளத்தில் வெளியிடப்படுகிறது. தமிழ் அறிவுலகத்தைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புகின்றவர்களுக்கான மிக முக்கியமான தளமாக இத்தளம் திகழ்கிறது. மேலும், இவ்வாண்டிலிருந்து விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் முன்னெடுப்பில் தமிழின் அறிவுப்புலத்தில் முக்கிய பங்காற்றும் ஆளுமைகளைச் சிறப்பிக்கும் பொருட்டு முதல் தமிழ்க்கலைகளஞ்சியம் தயாரித்த பெரியசாமி தூரனின் நினைவாகத் தூரன் விருது வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார். ஜெயமோகனின் புனைவில் வெளிப்படும் விரிவான நிலப்பின்னணிக்கும் வெவ்வேறு மனிதர்களின் ஊடாட்டத்துக்கும் மிக முக்கியமான காரணமாக அமைவது அவரது பயணங்கள் எனச் சொல்லலாம். வருடத்தின் பாதிக்கும் மேற்பட்ட நாட்களில் ஏதேனும் பயணத்திட்டத்துடனே ஜெயமோகன் கழிக்கின்றார். தொல் இந்தியாவின் மிக முக்கியமான மதமாகத் திகழ்ந்த சமணமதத்தின் துறவிகள் ஏற்படுத்திச் சென்ற அறநிலைகளை ஒட்டி ஆறு மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் பயணித்து எழுதிய ‘அருகர்களின் பாதை’ எனும் பயணத்தொடர் மிகவும் சிறப்பானது. சமணம் இந்தியாவில் ஏற்படுத்திய வரலாற்றுச் சமூகப் பண்பாட்டுத் தாக்கத்தைக் குறுக்குவெட்டுச் சித்திரமாக அந்நூல் அளிக்கின்றது. ஆஸ்திரேலியாப் பயணத்தைப் புல்வெளித் தேசம் என்று எழுதியிருக்கிறார். மேலும், இந்திய நிலம் முழுமைக்குமான வெவ்வேறு பயணத்திட்டங்களை ஒருங்கிணைத்து நண்பர்களுடன் பயணம் செய்து இந்தியாவின் வெவ்வேறு பண்பாட்டுச் சமூகச் சூழலை முன்வைக்கும் பயண இலக்கியத்தொடரைத் தன் தளத்தில் தொடர்ச்சியாக எழுதியிருக்கிறார். இவற்றுடன் தமிழ், மலையாளத் திரைப்படங்கள் சிலவற்றுக்குமான கதை, திரைக்கதை எழுதுவதன் வாயிலாகவும் தமது பங்களிப்பை ஜெயமோகன் செய்திருக்கிறார். மலையாளத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்து பரவலான கவனத்தைப் பெற்ற ஒழிமுறி, தமிழில் விமர்சகர்களால் பெரிதும் வரவேற்பு பெற்ற கடல், அங்காடித் தெரு, காவியத்தலைவன் ஆகியப் படங்களுக்கான திரைக்கதை பங்களிப்பு செய்திருக்கிறார். ஜெயமோகனின் வருகை என்பது தமிழ் இலக்கியத்தில் மாபெரும் அறிவியக்கத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அவரைப் பின்பற்றி அல்லது ஈர்க்கப்பட்டுச் செயலூக்கத்துடன் எழுத வந்து கொண்டிருக்கும் எழுத்தாளர்களின் நிரையும் நீண்டு கொண்டே இருக்கின்றது. ஜெயமோகனின் தமிழ் விக்கி பக்கம் https://vallinam.com.my/version2/?p=8654
  4. புனைவு வாசிப்பு அடிமைப்படுத்துமா? ஜெயமோகன் September 21, 2021 Vincent Van Gogh “The Novel Reader” அன்புள்ள ஜெ, நலம்தானே? என் நண்பர்களில் புத்தகம் வாசிப்பவர்கள் மிகக்குறைவு. அவர்களிலேயேகூட பலர் புனைவுகளை வாசிப்பதில்லை. “இருபத்தஞ்சு வயசு வரை கதை படிக்கிறது ஓக்கே. அதுக்குமேலே வாசிச்சா அவன் தத்தி”என்று என் நண்பன் ஒருவன் சொன்னான், கற்பனைக்கதைகள் வாசிப்பது வெட்டிவேலை என்ற எண்ணம் பலரிடமும் உள்ளது. பொதுஅறிவை அளிக்கும் கட்டுரைநூல்களை வாசிக்கிறோம் என்று சொல்வார்கள். அவர்கள் கட்டுரைநூல்கள் என்று சொல்வது பெரும்பாலும் அரசியல்நூல்கள். இடதுசாரி அரசியல்நூல்கள்தான் அதிகமும். சிலர் சேப்பியன்ஸ் போன்ற நூல்களைப் படிப்பார்கள். ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை வரலாறு போன்றவற்றை சிலர் வாசிக்கிறார்கள். செய்திகளை தெரிவிக்கும் புத்தகங்களும், வரலாற்றுப்புத்தகங்களும் மட்டும்தான் பயனுள்ளவை என்று பலரும் பொதுவாகப் பேச்சில் சொல்கிறார்கள். நான் எங்களுக்கு வாசிப்பை அறிமுகம் செய்த மூத்த நண்பரிடம் பேசினேன். அவரும் இடதுசாரிதான். அவர் சொன்னார் “புனைவுகள் உண்மைகளைச் சொல்வதில்லை. அவை ஒருவரின் கற்பனைகளைச் சொல்கின்றன. உண்மைகளைச் சொல்லும் புனைவல்லாத நூல்களும், உண்மைகளை அறியும் வழிகளைக் கற்பிக்கும் கொள்கைநூல்களும்தான் வாசிக்கவேண்டியவை. வாசிப்புப்பழக்கம் உருவாவது வரை புனைவுகளை வாசிக்கலாம். வாசிக்க ஆரம்பித்த பிறகு நிறுத்திவிடவேண்டும்” உங்கள் கருத்து என்ன? எப்படியும் புனைவின் முக்கியத்துவம் பற்றித்தான் சொல்வீர்கள். ஆனால் நீங்கள் இதை எப்படி விளக்குவீர்கள் என்று அறிய ஆவலாக இருக்கிறேன். கிருஷ்ணன் சம்பத் Gautam Mukherjee,Novel Reader அன்புள்ள கிருஷ்ணன் சம்பத், பொதுவாக நம் அரட்டைகளில் அடிபடும் ஒரு கருத்துதான் இது. அதிலும் இடதுசாரிச்சூழலில். அன்றெல்லாம் எங்கள் தொழிற்சங்கச் சூழலில் ஒருவர் புனைவு படிக்கிறார் என்றாலே எவரோ ஒரு தோழர் கண்டிப்பாக இதைச் சொல்வார். ஏனென்றால் இடதுசாரி அமைப்புகளுக்குள் இளைஞர்களைக் கொண்டுவருவதற்கான வழியாக அவர்களுக்கு முதலில் கார்க்கியின் ‘தாய்’ போன்ற நாவல்களை வாசிக்க கொடுப்பதும், அவர்கள் வாசிக்க ஆரம்பித்ததும் மேற்கொண்டு எளிய கொள்கைவிளக்கப் பிரச்சார நூல்களை அளிப்பதும் வழக்கம். அதன்பின் படிக்கவிடமாட்டார்கள். “கதையா படிக்கிறீங்க?”என்று இளக்காரத்துடன் கேட்கும் தோழர்களைச் சந்திக்காமல் இடது அமைப்புகளுக்குள் எவரும் இலக்கியம் சார்ந்து செயல்படமுடியாது. அதேபோல பொதுவான ஜனங்களுக்கு கதை என்றாலே இளமைப்பருவத்தில் வாசிக்கும் கிளுகிளுப்பான, விறுவிறுப்பான புனைவுகள்தான் என்னும் எண்ணம் உண்டு. பொழுதுபோக்குக்காக மட்டுமே அவற்றை வாசிக்க வேண்டும் என்னும் உளப்பதிவு. ஆகவே இவர்களிடமிருந்து இரண்டுவகையான எதிர்வினைகள் வரும். “நான்லாம் சின்ன வயசிலே நெறைய கதை படிச்சேன் சார். அதுக்குப்பிறகு குடும்பம் குட்டின்னு ஆயிடிச்சு. இந்த காதல் கீதலிலே எல்லாம் நம்பிக்கை போய்டிச்சு” அதாவது கதை என்றாலே காதல்கதைதான் இவர்களுக்கு. “அதெல்லாம் படிக்கிறதில்லீங்க, எங்கங்க நேரம்?” என்பது இன்னொரு வரி. அதாவது நேரம்போகாமல்தான் கதைபடிக்கிறார்கள் என்னும் புரிதல் இவ்விரு தரப்புகளின் குரல்களைத்தான் ”புனைவு படிக்க மாட்டேன், கட்டுரைநூல்கள்தான் படிப்பேன்” என்று சொல்பவர்களும் எதிரொலிக்கிறார்கள். அவர்கள் என்ன படிக்கிறார்கள் என்று பாருங்கள். பொதுவாக இவ்வாறு சொல்பவர்கள் மிகமிகக் குறைவாக வாசிப்பவர்களாக இருப்பார்கள். ஓரிரு நூல்களே மொத்த வாழ்நாளிலும் வாசித்திருப்பார்கள். அவர்களுக்கென சில மூலநூல்கள் இருக்கும். ஒரே புத்தகத்தைச் சொல்லிக்கொண்டிருப்பார்கள். அதையொட்டி ஒரு துறைசார்ந்து சில நூல்களைச் சொல்வார்கள். சிலருக்கு அவை தன்னம்பிக்கை நூல்கள். சிலருக்கு பொதுவான ஆன்மிகநூல்கள். சிலர் ’அள்ளஅள்ளப் பணம்’, ‘பங்குமார்க்கெட்டில் பணமீட்டுவது எப்படி?’ வகையான செயல்முறை நூல்களில் இருப்பார்கள். சிலர் “அக்கினிச் சிறகுகள்” “ஸ்டீவ் ஜாப்ஸ்” வகை வாழ்க்கை வரலாறுகளை வாசிப்பார்கள். பெரும்பாலானவர்கள் தாங்கள் நம்பும் அரசியல் தரப்பைச் சார்ந்த ஓரிரு நூல்களை வாசித்திருப்பார்கள். ஆனால் எவருமே தொடர்வாசகர்களாக இருக்க மாட்டார்கள். நூல்களைத் தொடர்ந்து வாசிப்பவர்களில் புனைவை வாசிக்கும் வழக்கமே இல்லாதவர்கள் என்பவர்கள் ஒரு குறிப்பிட்ட வகையினர்தான். ஆய்வாளர்கள். வரலாறு, சமூகவியல் போன்ற ஏதேனும் தளத்தில் தொடர்ச்சியாக ஆய்வுகள் செய்து நூல்களை எழுதிவருபவர்கள் புனைவுகளை வாசிப்பதில்லை. நானறிந்த ஆய்வாளர்களில் அ.கா.பெருமாள் போன்றவர்கள் முக்கியமானவை என்று சொல்லப்படும் புனைவுகளை மட்டுமாவது வாசித்துவிடுவார்கள். ஆனால் புனைவுகளை வாசிக்கும் மனநிலை ஆய்வாளர்களுக்கு இருப்பதில்லை. ஏனென்றால் புனைவுகளை வாசிக்கத் தேவையான கற்பனை அவர்களுக்கு இருப்பதில்லை. அவர்களின் ஆய்வுத்துறைக்கு எதிரானது கற்பனை. அவர்கள் கறாரான புறவய நோக்கில் தகவல்களை பரிசீலிக்கவேண்டியவர்கள், திட்டவட்டமான முறைமைகளைப் பேணவேண்டியவர்கள். ஆகவே அவர்கள் புனைவுகளை வாசிக்காமலிருப்பது இயல்பானதே. ஏற்றுக்கொள்ளத்தக்கதே ஆனால் ஒரு பொதுவான வாசகர் புனைவை வாசிக்காமலிருப்பது உண்மையில் குறைப்பட்ட வாசிப்புதான். வாசிப்பே அல்ல என்றுகூடச் சொல்லலாம். ஏன்? அ. உலக சிந்தனை வரலாற்றை எடுத்துப் பார்த்தால் இதுவரையில் எழுதப்பட்டு தலைமுறை தலைமுறையாக கைமாற்றப்பட்டு நீடிக்கும் பெரும்பாலான படைப்புகள் புனைவுகளே. இது ஏன் என்பதை நீங்கள் பார்க்கவேண்டும். செய்திகளைச் சொல்லும் நூல்கள் ஒரு தலைமுறைக்குள் காலாவதியாகிவிடுகின்றன. ஏனென்றால் அச்செய்திகள் அடுத்த தலைமுறைக்கு தேவையானவை அல்ல. வரலாற்று நூல்களும் பழையனவாகிவிடுகின்றன. ஏனென்றால் மேலதிகத் தரவுகளுடன் வரலாறு மீண்டும் மீண்டும் எழுதப்படுகிறது. கொள்கைகளையும் தத்துவங்களையும் சொல்லும் நூல்களில் மிகமுக்கியமானவை, செவ்வியல் தகுதி கொண்டவை மட்டுமே நீடிக்கின்றன. அவையும்கூட பலசமயம் மீண்டும் எழுதப்பட்டுவிடுகின்றன. ஆனால் புனைவுகள் காலம் செல்லச்செல்ல மேலும் தகுதி பெறுகின்றன. வெறும் சித்தரிப்பாக அமையும் எளிய கதைகள்கூட அந்தக் காலகட்டத்தை பதிவுசெய்யும் ஆவணங்களாக மாறி வாசிக்கப்படுகின்றன. புனைவுகளில் இருந்து மேலும் புனைவுகள் உருவாகின்றன. புனைவுகள் வழியாகவே முந்தைய தலைமுறை அடுத்த தலைமுறையை அறிகிறது. புனைவு வழியாகவே அறிவுத்தொடர்ச்சி உருவாகிறது.ஆகவே புனைவை வாசிக்காதவர் பெரும்பாலும் சமகாலத்தில் சிக்கிக்கொண்டவராகவே இருப்பார். புனைவுகளை வாசிப்பவர் அடையும் முழுமையான காலச்சித்திரத்தை அவர் அடையமுடியாது. ஆ. புனைவுகள் வழியாகவே வாழ்க்கை தொகுக்கப்படுகிறது. ஒவ்வொரு சமூகமும் தன்னுடைய வாழ்க்கையை புனைவுகளாக சொல்லியும் எழுதியும் தொகுத்துக்கொண்டே இருக்கிறது. அதன் கனவுகளும் அச்சங்களும் கதைகளிலேயே இருக்கின்றன. அக்கதைகள் அடுத்த தலைமுறையால் தெரிவுச்செய்யப்பட்டு, தொகுத்து எடுத்துக்கொள்ளப்படுகின்றன. சிலசமயங்களில் மறுஆக்கம் செய்யப்படுகின்றன. மறுவிளக்கம் அளிக்கப்படுகின்றன. இவ்வாறுதான் தலைமுறை தலைமுறையாக பண்பாட்டுநினைவுகள் ஒன்றுசேர்க்கப்பட்டு ஒரே ஒழுக்காக ஆக்கப்படுகின்றன. இனக்குழுக்களின் பண்பாட்டுநினைவுகள், ஊர்களின் பண்பாட்டு நினைவுகள், சமூகங்களின் தேசங்களின் பண்பாட்டு நினைவுகள். அவை இணைந்து மானுடத்தின் பண்பாட்டு நினைவுத்தொகுதியாக ஆகின்றன. அந்த மாபெரும் நினைவுத்தொகுதிதான் அத்தனை சிந்தனைகளுக்கும் கச்சாப்பொருள். வரலாறு,சமூகவியல், அரசியல் எல்லாமே அதை ஆராய்ந்தே தங்கள் முடிவுகளைச் சென்றடைகின்றன.அந்த மாபெரும் நினைவுத் தொகுதி ஒவ்வொரு தனிமனிதனையும் இலக்கியம் வழியாகவே வந்தடைகிறது. ஒருவர் நவீன இலக்கியம் வாசிக்காதவராக இருக்கலாம். ஆனால் அவர் ஒரு சமூகத்தில் பிறந்து, ஒரு மொழியில் வாழும்போதே கதைகளாக அந்த நினைவுத்தொகுதி அவரை வந்தடைந்துவிடுகிறது. அதுவே அவருடைய உள்ளத்தை உருவாக்குகிறது. அவர் சிந்திப்பதும் கனவுகாண்பதுமெல்லாம் அதைக்கொண்டுதான். சாமானியர்களுக்கு அது ஓர் எல்லையில் நின்றுவிடுகிறது. இலக்கிய வாசிப்பு என்பது அதை தொடர்ந்து பயின்றுகொண்டே இருப்பது. அவ்வளவுதான் வேறுபாடு, இ. புனைவு இல்லாமல் எவராலும் வாழமுடியாது. புனைவை வாசிக்காதவர்கள் என தங்களைச் சொல்லிக்கொள்பவர்கள் கூட புனைவுகளில்தான் பெரும்பாலும் புழங்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்த உலகில் மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படுவது புனைவுதான். சினிமாக்கள், டிவி சீரியல்கள், பொழுதுபோக்கு எழுத்துக்கள், இலக்கியங்கள் என புனைவுகள் பெருகிச்சூழ்ந்துள்ளன. அவற்றை முற்றாகத் தவிர்ப்பவர் எவர்? செய்திகளும் புனைவுத்தன்மை கொண்டவைதான். புனைவு இல்லாத இடமே இல்லை. புனைவிலக்கியத்தை வாசிப்பவர் புனைவை அது என்ன என்று தெரிந்து, அதன் நுட்பங்களை உணர்ந்து, அறியும் திறமைகொள்கிறார். புனைவிலக்கியத்தை வாசிக்காதவர் அவரை அறியாமலேயே புனைவை விழுங்கி உள்ளத்தில் நிறைத்துக்கொண்டிருக்கிறார். ஈ. புனைவிலக்கியமே சமகாலத்து உணர்ச்சிகளை உருவாக்குகிறது. அதை அறிய புனைவிலக்கியத்தை வாசித்தாகவேண்டும். புனைவிலக்கியம் செயல்படும் விதமென்ன என்பது இன்று ஆய்வாளர்களால் விரிவாகவே பேசப்பட்டுவிட்டது. புனைவிலக்கியம் எழுத்தில் இருந்து பேச்சுக்குச் செல்கிறது. நிகழ்த்துகலையாகிறது. மக்கள் நினைவில் தொன்மம் ஆகிறது. தொன்மம் மீண்டும் இலக்கியமாகி விரிவடைகிறது. சிலப்பதிகாரக்கதை தமிழ் மக்களிடையே வாய்மொழிக்கதையாக இருந்தது. சிலப்பதிகாரமாக ஆகியது. மீண்டும் கதையாகி, தொன்மம் ஆகியது. அத்தொன்மம் மீண்டும் நவீன இலக்கியமாக ஆகியது. இந்த தொடர்ச்சுழல் வழியாகவே நம் உள்ளத்தின் அடிப்படை அலகுகளான ஆழ்படிமங்கள், தொன்மங்கள், படிமங்கள் உருவாகின்றன. அவற்றைக்கொண்டே நாம் சிந்திக்கிறோம். நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறோம். ஒருவர் இலக்கியம் படிக்காவிட்டாலும் இந்த சுழற்சியில்தான் இருக்கிறார். ஆனால் புனைவிலக்கியம் வாசிப்பவர் இது எப்படி நிகழ்கிறது என்னும் தெளிவை அடைகிறார். ஆகவே தன் உணர்ச்சிகளையும், அவ்வுணர்ச்சிகள் உருவாகும் விதத்தையும் அவர் அறியமுடியும். உ. புனைவிலக்கியம் வாசிக்காதவர்களால் மானுட உணர்ச்சிகளை புரிந்துகொள்ள முடியாது.மனிதர்கள் சிந்தனைகளால் வாழ்வதில்லை, உணர்ச்சிகளால்தான் வாழ்கிறார்கள். அரசியலையும் அன்றாடவாழ்க்கையையும் வணிகத்தையுமேகூட உணர்ச்சிகளே தீர்மானிக்கின்றன. புனைவிலக்கியவாசிப்பே இல்லாதவர்கள் வெறுமே கருத்துக்களையாக கக்கிக்கொண்டிருப்பதை, அக்கருத்துக்களின் அடிப்படையில் எல்லாவற்றையும் எளிமையாக்கி புரிந்துகொள்வதை காணலாம். அவர்களால் தங்கள் உணர்வுகளை, பிறர் உணர்வுகளை, சமூக உணர்வுகளை புரிந்துகொள்ள முடியாது. இது அவர்களுக்கு ஒரு மூர்க்கமான அணுகுமுறையை, ஒருவகையான பிடிவாதத்தை உருவாக்கிவிட்டிருக்கும் ஊ. புனைவிலக்கியமே வாசகனின் தனித்தன்மையையும், பயணத்தையும் அனுமதிப்பது. புனைவிலக்கியம் என்பது யாரோ ஒருவரின் கற்பனையை நாம் அப்படியே ஏற்றுக்கொள்வது என்றும், புனைவில்லா எழுத்தே ‘உண்மையை’ச் சொல்வதும் என்றும் நம்புவது மேலே சொன்ன ஐந்து அடிப்படைகளையும் அறியாத ஒருவர் உருவாக்கிக்கொள்ளும் மாயை. மிக அபத்தமானது அக்கருத்து. புனைவிலக்கியம் அல்லாதவை அனைத்துமே தர்க்கத்தின் மொழியில் அமைந்தவை. நாம் அவற்றை நோக்கி நம் தர்க்கத்தையே திருப்பி வைக்கிறோம். அங்கே நிகழ்வது தர்க்கபூர்வமான ஓர் உரையாடல். அந்த நூலாசிரியர் மிகச்சாதகமான நிலையில் இருக்கிறார். அவர் தன் துறையின் நிபுணராக இருப்பார். தன்னுடைய தர்க்கத்தை முன்னரும் பலமுறை முன்வைத்து, பலவகையான எதிர்வினைகளைக் கண்டு பழகி, தேர்ச்சி பெற்றவராக இருப்பார். அவருக்கு தன் தர்க்கங்களை ஒட்டுமொத்தமாகத் தொகுத்து சீராக முன்வைக்கும் வாய்ப்பை அந்நூல் வழங்குகிறது. பலசமயம் தேர்ந்த நூல்தொகுப்பாளர்கள் இணைந்து அந்த நூலை பழுதகற்றி அமைத்திருப்பார்கள். அந்நூலின்முன் வாசகன் கிட்டத்தட்ட நிராயுதபாணியாக நிற்கிறான். அவனும் அத்துறையில் அதேயளவு நிபுணன் அல்ல என்றால் அவன் அங்கே தோற்கும் தரப்புதான்.நீங்கள் இதை நடைமுறையில் பார்க்கலாம். சேப்பியன்ஸ் நூலை வாசிக்கும் ஒருவாசகர் மிக எளிதாக யுவால் நோவா ஹராரியின் பார்வைக்கு அடிமையாவார். அதைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார். புனைவல்லா நூலின் வாசகர்கள் அப்படி சில நூல்களையே விதந்தோதிக்கொண்டிருப்பதைக் காணலாம். அப்படி அன்றி அந்நூலால் ஆட்கொள்ளப்படாதவர் இருந்தார் என்றால் அவர் அந்நூலுக்கு எதிரான சிந்தனைகளால் ஏற்கனவே ஆட்கொள்ளப்பட்டவராக இருப்பார். மார்க்ஸியர் சேப்பியன்ஸ் நூலை மூர்க்கமாக ஒற்றைப்படையாக மறுப்பார்கள். அது இன்னும் மோசமான அடிமைநிலை. சரி, வெறும் செய்திநூல்கள் என்றால்? அங்கும் செய்திகளில் எது முக்கியம், எது தேவையில்லை என்னும் தெரிவு அதை அளிப்பவரிடம் உள்ளது.செய்திகளை அடுக்குவது அந்த ஆசிரியரிடம் உள்ளது. பெரும்பாலான செய்தித்தொகுப்புகள் மிக மறைமுகமாக வலுவான கருத்துநிலையை முன்வைப்பவை. 2000 ஆண்டு நிறைவின்போது இரண்டாயிரமாண்டின் வரலாற்று நிகழ்வுகளைப்பற்றி லண்டன் டைம்ஸின் செய்திச்சுருக்கம் ஒன்றை மலையாள மனோரமா இயர்புக்குக்காக மொழிபெயர்த்தேன். வெறும் செய்திகள், தேதிகள். வேறெந்த கருத்தும் இல்லை. ஆனால் அதில் பிரிட்டனில் ஓர் ஆர்ச்ப்பிஷப் பதவியேற்பது ஒரு செய்தி. சீனாவில் ஓர் அரசவம்சம் முடிவுக்கு வருவதுதான் செய்தி. பெரும்பாலான துறைசார் நூல்களில் நாம் வெறும் கருத்தேற்பாளர்களாகவே இருக்கிறோம். நம்மையறியாமலேயே நாம் நம் தரப்பை அந்நூல்களை ஒட்டி உருவாக்கிக் கொள்கிறோம். அவ்வாறன்றி உண்மையை நோக்கிச் செல்லவேண்டும் என்றால் அத்துறைசார் நூல்களிலேயே எல்லா தரப்பையும் வாசிக்கவேண்டும். அவ்வாறு எத்தனை துறைகளை ஒருவரால் வாசிக்க முடியும்? அப்படியென்றால் அவர் தனக்கான உண்மையை அறிவது எப்படி? எப்படி தன் நிலைபாட்டை அவர் எடுக்கமுடியும்? அவருக்கென இருப்பது அவருடைய அனுபவங்கள் மட்டுமே. அந்த அக- புற அனுபவங்களில் இருந்து அவர் நேரடியாக அடைவனவே அவருக்குரியவை. அவற்றை அளவுகோலாகக் கொண்டுதான் அவர் எல்லாவற்றையும் மதிப்பிட்டு தனக்கான முடிவுகளை அடையமுடியும். அத்தனைபேரும் இயல்பாகச் செய்வது அதைத்தான். ஆனால் எவராக இருந்தாலும் ஒருவரின் அனுபவம் என்பது மிகமிக எல்லைக்குட்பட்டது. அதைக்கொண்டு அனைத்தையும் புரிந்துகொள்ளுமளவுக்கு ஆழ்ந்த அறிதல்களை அடையமுடியாது. அதற்குத்தான் புனைவுகளை வாசிப்பது உதவுகிறது.அவை நாம் அடைந்த அனுபவங்களை கற்பனையில் விரிவாக மீண்டும் அனுபவிக்க உதவுகின்றன. உதாரணமாக, நான் குமரிமாவட்ட வாழ்க்கையையும் தர்மபுரி மாவட்ட வாழ்க்கையையும் மட்டுமே அறிந்தவன். ஆனால் தேவிபாரதியின் நாவல்கள் வழியாக என்னால் ஈரோடு மாவட்ட வாழ்க்கைக்குள் செல்லமுடியும். கண்மணி குணசேகரன் வழியாக விழுப்புரம் வட்டார வாழ்க்கைக்குள் செல்லமுடியும். கீரனூர் ஜாகீர்ராஜா வழியாக இஸ்லாமிய வாழ்க்கைக்குள்ச் செல்லமுடியும். புனைவுகளினூடாக தமிழகம் முழுக்க வாழ்ந்த அனுபவத்தை நான் அடையமுடியும். அவ்வாசிப்பு எனக்கு உண்மையில் வாழ்ந்த அனுபவத்துக்கு நிகரான அறிதல்களை அளிக்கமுடியும். புனைவுகளை வாசிக்காதவர்கள், புனைவல்லாதவற்றை மட்டுமே வாசிப்பவர்கள் பெரும்பாலும் ஏதேனும் கருத்துக்களின் அடிமைகளாக இருப்பதைக் காண்கிறோம். அவர்களுக்குச் சுயசிந்தனை மிக அரிதாகவே இருக்கும். நூல்களால் ஆட்கொள்ளப்பட்டு, நூல்களை திருப்பிச்சொல்லும் கருத்தடிமைகள் அவர்கள். காரணம் இதுதான், கருத்துக்களும் செய்திகளும் அவர்களை நோக்கி மலைமலையாக கொட்டப்படுகின்றன. அக்கருத்துக்களை திறன்மிக்க நிபுணர்கள் தேர்ந்த தர்க்க ஒழுங்குடன் அளிக்கிறார்கள். அவர்களுக்கு அந்த கருத்துக்கள் வழியாக அதிகாரத்தை உருவாக்கிக்கொள்ளும் நோக்கம் உள்ளது.ஆகவே அவர்கள் மிகுந்த விசையுடன் செயல்படுகிறார்கள்.அக்கருத்துக்களை மட்டும் வாசிப்பவர்களுக்கு அவற்றை மதிப்பிடுவதற்குரிய சுயமான அளவுகோல்கள் ஏதும் இல்லை. ஆகவே முற்றான அடிமைத்தனமே எஞ்சுகிறது. அடிமைகளுக்கு இருப்பது நம்பிக்கை அல்ல, பற்று அல்ல, விசுவாசம் மட்டுமே. ஒரு சிந்தனையாளன் எந்த படையிலும் உறுப்பாக இருக்க மாட்டான். எந்த இடத்திலும் வெறும் எதிரொலியென செயல்படமாட்டான். விரிவான புனைவு வாசிப்பு இல்லாதவர்களின் மூர்க்கம் அந்த விசுவாசத்தில் இருந்து வருவது. அவர்களுக்கு தங்களின் சார்புகள்மேல் சந்தேகமே இருப்பதில்லை. ஆகவே திரும்பத்திரும்பச் சொல்கிறார்கள். எத்தனை ஆண்டுகளானாலும் மாறாமல் அப்படியே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எங்கும் ஆழ்ந்த தன்னம்பிக்கையுடன் பேசமுற்படுகிறார்கள். இணையவெளியில் பாருங்கள். கருத்தடிமைகள் எந்த ஐயமும், எந்த வளர்ச்சியும் இல்லாமல் முழுநேரமாக ஆண்டுக்கணக்கில் இயந்திரம் போல செயல்பட்டுக்கொண்டே இருப்பதைக் காணலாம். புனைவுகளை வாசிப்பவர்களுக்கு சுயமான அனுபவங்கள் உள்ளன. அந்த அனுபவங்கள் புதிய கேள்விகளை எழுப்புகின்றன. ஐயங்களை உருவாக்குகின்றன. ஆகவே அவர்கள் மேற்கொண்டு கற்று முன்சென்றுகொண்டே இருக்கிறார்கள். புனைவுகளை வாசிக்காதவர்கள் மிகச்சீக்கிரத்திலேயே அவர்கள் வாசித்த சில வலுவான நூல்களால் முற்றாக ஆக்ரமிக்கப்பட்டுவிடுவார்கள். அந்நூல்களின் நிலைபாட்டை அவர்கள் ஏற்றுக்கொள்வதனால் அவர்களின் மூளை நிரம்பிவிடும். விசுவாசம் உருவாகிவிடும்.ஐயங்கள் இருப்பதில்லை. மேற்கொண்டு எதையும் கற்க முடியாது. ஆகவே வளர்ச்சியும் மாற்றமும் இருக்காது. விசைத்தறி ஓடுவதுபோல ஒரே டடக் டக் சடக் சட் ஓசைதான் எழுதுகொண்டிருக்கும் அவர்களிடமிருந்து. எண்ணிப்பாருங்கள் அப்படி எத்தனை முகங்கள் உங்கள் நினைவிலெழுகின்றன என. ஆனால் புனைவின் வாசகன் வளர்ந்துகொண்டிருப்பான். ஆகவே அவன் நிலையாக இருக்க மாட்டான். அவனைப் பற்றி புனைவல்லாதவற்றை வாசிப்பதாகச் சொல்லிக்கொள்பவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டே அவன் உறுதியாக இல்லாமல் ‘அலைபாய்ந்துகொண்டிருக்கிறான்’ ‘குழப்பவாதியாக இருக்கிறான்’ என்பதாகவே இருக்கும். அதாவது அவர்கள் தங்களைப்போல மூளை உறைந்த விசுவாசநிலையை புனைவு வாசகனிடம் எதிர்பார்க்கிறார்கள். இயல்பாக பேசினாலே தெரியும், ஒரு நல்ல புனைவுவாசகன் புனைவல்லாதவற்றை மட்டும் படிப்பேன் என்பவனை விட மிகப்பலமடங்கு நுண்ணிய அவதானிப்புகளும் சுயமான சிந்தனைகளும் கொண்டவனாக இருப்பான். ஆனால் அதை உணருமளவுக்கு அந்த புனைவல்லாதவற்றின் வாசகர்களுக்கு நுண்ண்ணுணர்வு இருப்பதில்லை. அவர்களின் விசுவாசம் அவர்களை ஐம்புலன்களும் முற்றாக மூடப்பட்டவர்களாக ஆக்கியிருக்கும். ஆனால் விந்தை என்னவென்றால், இங்கே புனைவின் வாசகர்களிடம்தான் ”புனைவை வாசிக்காதீர்கள், அந்த ஆசிரியரால் அடித்துச்செல்லப்படுவீர்கள்” என்று பலரும் எச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்.அதைச் சொல்பவர்கள் எவர் என்று பார்த்தால் ஒன்று கருத்தடிமைகள் அல்லது ஒன்றும் தெரியாத பொதுக்கும்பல்.இந்த அபத்தம் எங்குமென பரவியிருப்பதனால் நமக்கு உறைப்பதே இல்லை. புனைவுஅல்லாத நூல்களில்தான் ஆசிரியர் வாசகனை ஆட்கொள்ள, நம்பவைக்க, தனக்கு அடிமையாக ஆக்க முழுமூச்சாக முயல்கிறார். தன் தர்க்கத்திறன், தன் தரவுகள் எல்லாவற்றையும் பயன்படுத்துகிறார். புனைவுநூல்களில் ஆசிரியர் அப்படிச் செய்தால் அது பிரச்சாரம் எனப்படும். அதற்கு மதிப்பே இல்லை. புனைவின் மதிப்பு அது எந்த அளவுக்கு வாசகசுதந்திரத்தை அளிக்கிறது என்பதைப் பொறுத்தே உள்ளது. புனைவு எத்தனை அப்பட்டமாக பிரச்சாரநோக்கம் கொண்டிருந்தாலும்கூட ஒற்றைப்படையானது அல்ல. அது நமக்கு அளிப்பது ஒரு நிகர்வாழ்க்கையை. நாம் ஒரு மெய்யான வாழ்க்கையைப்போலவே அப்புனைவு அளிக்கும் வாழ்க்கையை அனுபவிக்கிறோம். அந்த அனுபவத்தில் இருந்து நாம் பெற்றுக்கொள்ளும் அறிதல்கள் அந்த ஆசிரியன் சொல்லும் கருத்துக்கள் அல்ல. நாமே அனுபவித்து அறியும் நமது கருத்துக்கள் அவை. நூல்கள் அளிக்கும் அனுபவமே அத்தனை வாசகர்களுக்கும் பொதுவானது. கருத்துக்கள் வாசகர்களால் அவர்களின் அறியும்திறனுக்கு ஏற்ப உருவாக்கப்படுபவை. நீங்களும் நானும் ஒரு நிகழ்ச்சியில் சிக்கிக் கொள்கிறோம். நாம் அடையும் புறஅனுபவம்தான் ஒன்று. அக அனுபவம் வெவ்வேறானது. அதிலிருந்து நாம் பெற்றுக்கொள்ளும் அறிதல்களும் வேறுவேறு. அதைப்போலத்தான் இலக்கியம் அளிக்கும் அறிதல்களும். புனைவின் செயல்முறையே தரவுகளைக்கொண்டு ஓர் அனுபவக் களத்தை உருவாக்கி வாசகன் அந்த அனுபவத்தை அவனே கற்பனைசெய்துகொள்ளச் செய்வதுதான். எத்தனை செயற்கையாக ஜோடனை செய்தாலும் அதில் ஆசிரியரை மீறி செய்திகளும் தரவுகளும் குரல்களும் இடம்பெற்றிருக்கும். கலைத்தன்மை கொண்ட படைப்பு என்றால் அது முற்றிலும் ஆசிரியரை விட்டு எழுந்து அவனுடைய கனவு போல தானாகவே மொழியில் நிகழ்ந்ததாக இருக்கும். அந்த ஆசிரியனை மீறியதாக இருக்கும். ஆசிரியன் சொல்ல விரும்புவதை அப்படியே அது சொல்வதில்லை. அவனே அறியாதவற்றையும் அது சொல்லும். சொல்லாதவற்றைச் சுட்டிநிற்கும். ஆசிரியனைவிட அது ஆழம் கொண்டதாக இருக்கும். சமயங்களில் அவனுடைய எதிர்மறைத்தன்மையைக்கூட காட்டிக்கொடுக்கும். பன்முகவாசிப்புக்கு இடமளிப்பதே இலக்கியப் படைப்பு. ஆகவேதான் இலக்கியப்படைப்பைப் பற்றி முற்றிலும் வேறுவேறான வாசிப்புகள் வரமுடிகிறது.ஒரு வாசகர் காணாததை இன்னொரு வாசகர் காண முடிகிறது வாசிப்பு பெருகுந்தோறும் இலக்கியப்படைப்பின் ஆழமும் கூடுகிறது. காலந்தோறும் அதன் அர்த்தம் வளர்ந்து உருமாறமுடிகிறது. இலக்கிய வாசிப்பு என்பது போதனை அல்ல. ஆசிரியர் கொடுக்க வாசகன் பெற்றுக்கொள்வதில்லை. ஆசிரியரும் வாசகனும் இணைந்து ஒன்றை உருவாக்குகிறார்கள். ஆசிரியர் வாசகனின் கனவை தொட்டு அதை வளரச் செய்கிறார். வாசகன் அடைவது அவனுடைய கனவையேதான். புனைவுநூல்கள் கட்டுரைநூல்களைப்போல தர்க்கபூர்வமானவை அல்ல. அவை தர்க்கத்தை பயன்படுத்தினாலும்கூட தர்க்கம்கடந்த நிலையிலேயே அவை பொருளுணர்த்துகின்றன. கட்டுரைநூல்களை வாசிக்க ஒரு காலிமூளை கொண்ட வாசகன் போதும். புனைவுகளை வாசிக்க கற்பனைத்திறன் கொண்ட வாசகன் தேவை. புனைவுநூல் தன் வாசகனுக்கு வண்ணங்களையும் சில கனவுகளையும் அளிக்கிறது. அவன் தன் ஓவியத்தை தானே வரைந்துகொள்ளவேண்டும். கட்டுரை நூல் வாசகன் வீட்டில் அத்துமீறி நுழைந்து அவன் சுவரில் ஓர் ஓவியத்தை மாட்டிவிட்டுச் செல்கிறது. கட்டுரைநூல்களில் அந்நூலாசிரியர் உருவாக்க எண்ணும் கருத்துக்கு தேவையானவை மட்டுமே சொல்லப்பட்டிருக்கும். புனைவு அப்படிச் செயல்பட முடியாது.அதில் முக்கியமானவை என ஏதும் இல்லை. ஒரு சூழலைச் சொல்ல, ஒர் உணர்வைச் சொல்ல அது ‘எல்லாவற்றையும்’ சொல்லித்தான் ஆகவேண்டும். ஆசிரியர் அந்தக் கற்பனைக்குள் செல்லும்போது தன்னிச்சையாக எல்லாமே உள்ளே வந்து பதிவாகும். உணர்வுகள் இயல்பாகவே வந்து நிறையும். ஆகவே சின்னவிஷயங்கள், விளிம்புவிஷயங்கள், எதிர்மறை அம்சங்கள் எல்லாம் புனைவில் நிறைந்திருக்கும். ஆசிரியன் பொருட்படுத்துவன மட்டுமல்ல அவனால் பொருட்படுத்தாதவை கூட புனைவில் இருக்கும். சின்னவிஷயங்களால் ஆனது வாழ்க்கை. அவை பதிவாகும் ஒரு களம் புனைவு மட்டுமே. சங்ககாலத்தில் பெண்கள் எப்படி அணிசெய்தார்கள் என நீங்கள் கலித்தொகையைக் கொண்டே அறியமுடியும். பத்தொன்பதாம் நூற்றாண்டு சமையல் என்ன என்பதை நாவல்களே காட்டமுடியும். இன்றைய அன்றாடம் புனைவில் மட்டுமே எஞ்சியிருக்கும். சின்னச்சின்னச் செய்திகள் வாசகனுக்கு முக்கியமானவையாக இருக்கலாம்.மிகச்சாதாரணமான ஒரு செய்தி அல்லது காட்சியில் இருந்து வாசகன் முக்கியமான எண்ணங்களை, புரிதல்களை அடையலாம். புனைவுவாசிப்பு அளிக்கும் இந்த வாய்ப்புகளையே நாம் அதன் முதன்மை தகுதிகளாகக் கொள்கிறோம். இன்று வாசிப்புசார்ந்த இலக்கியக் கொள்கைகளே மிகுதியாக வந்துகொண்டிருக்கின்றன. புனைவை ஒரு மொழிக்கட்டமைப்பாக பார்க்கும் ரோலான் பார்த், புனைவை ஆசிரியன் அறிந்தவையும் அறியாதவையுமான வெவ்வேறு குரல்களின் பெருந்திரளாகக் காணும் மிகயீல் பக்தின், புனைவை வாசகன் அர்த்தமேற்றிக்கொண்டே செல்வதை ஓர் ஆடலாகப் பார்க்கும் ழாக் தெரிதா என அதன் படிநிலைகள் பல. வாசக எதிர்வினை கொள்கைகள் என ஒரு பெரிய சிந்தனை மரபே உள்ளது. ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் தொடங்கி பலர். இவை எல்லாமே புனைவு அளிக்கும் வாசிப்பு வாய்ப்புகளைப் பற்றிய ஆய்வுகள். புனைவை எப்படி வாசிக்கவேண்டும் என்று இவை சொல்லவில்லை, உண்மையில் நாம் எப்படி புனைவை வாசிக்கிறோம் என்று இவை விளக்கமுயல்கின்றன. நாம் புனைவை அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. அப்படியே ஏற்றுக்கொள்ள முயன்றாலும்கூட அது நிகழ்வதில்லை. அது ஓர் உரையாடல், ஒரு கூட்டுச்செயல்பாடு. இந்தச் சிந்தனைமரபின் ஒரு துளியை அறிந்த ஒருவர் கூட புனைவுகளை வாசிப்பவன் ஆசிரியனை அப்படியே ஏற்றுக்கொள்கிறான் என்று சொல்ல மாட்டார்கள். கடைசியாக ஒன்று, புனைவல்லா நூல்களில் மட்டுமே ஈடுபடுபவர்கள் முற்றிலும் அன்றாடவாதிகளாக, உலகியல் சார்ந்தவர்களாகவே இருப்பார்கள். தங்களைச் சார்ந்து, தங்கள் சூழல் சார்ந்து மட்டுமே யோசிப்பார்கள். முழுமைநோக்கு என்பதே ஆழ்நோக்கும்கூட. அதுவே ஆன்மிகம் என்று சொல்லப்படுகிறது. வாசிப்பில் அது புனைவினூடாகவே எய்தப்பெறுவது. ஏனென்றால் புனைவிலேயே கற்பனைக்கு இடமிருக்கிறது, வாசகன் தன் அனுபவமாக உணர்வதற்கு வாய்ப்பிருக்கிறது. சரியான வாசிப்பு என்பது புனைவும் புனைவல்லாதவையும் இணைந்து உருவாகும் ஒரு வெளி. புனைவல்லா நூல்கள் நமக்குச் செய்திகளையும் பார்வைகளையும் அளிக்கின்றன. புனைவு நமக்கு அனுபவங்களை அளித்து அவற்றினூடாக நம் அறிதல்திறனை வளர்க்கிறது. இவை ஒன்றையொன்று நிரப்பிக்கொள்ளவேண்டியவை ஜெ https://www.jeyamohan.in/154691/
  5. மேடைவதைகள், சில நெறிகள். ஜெயமோகன் February 19, 2022 (Peter Saul ) இலக்கிய கூட்டங்கள் பற்றிய ஒரு செய்தியை அண்மையில் வாசித்தேன். மறைந்த குமுதம் நிறுவனர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை பற்றி அமுதசுரபி ஆசிரியரும் எழுத்தாளர் சங்கத்தலைவருமாக இருந்த விக்ரமன் ( வேம்பு) ஒரு கட்டுரையில் குறிப்பிடும்போது அவர் தமிழின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவர் என்றார். பிறரும் அதை பதிவு செய்திருக்கிறார்கள். கல்கி மறைந்தபோது எஸ்.ஏ.பி. ஆற்றிய உரை தமிழின் தலைசிறந்த உரைகளில் ஒன்று என்று அவருடைய மகன் ராஜேந்திரன் தன் குறிப்பொன்றில் பதிவு செய்திருக்கிறார். விவேகானந்தர், பகவத் கீதை இரண்டிலும் பெரும் ஈடுபாடு கொண்டவராகிய எஸ்.ஏ.பி. விவேகானந்தர் நூற்றாண்டின்போது தமிழகத்தின் பல ஊர்களுக்குச் சென்று பேருரைகளை ஆற்றியிருக்கிறார். அவர் உரைகளுக்குத் திரளாக மக்களும் வந்திருக்கிறார். ஆனால் சென்னையில் ஒரு விழா நடைபெற்றது அதில் புலவர் திரிகூட சுந்தரம் பிள்ளை எஸ்.ஏ.பிக்கு முன்னால் பேசினார். அவருக்கு அளிக்கப்பட்டிருந்த நேரம் அரைமணி.அவர் பேசி முடித்தது இரண்டரை மணி நேரம். பிறகு எஸ்.ஏ.பி. பேசுவதற்கு பொழுதிருக்கவில்லை. அந்தக்கூட்டத்தில் ஓரிரு சொற்கள் பேசி வெளிவந்த எஸ்.ஏ.பி. விக்ரமனிடம் அதுவே தன் கடைசி மேடைப்பேச்சு என்றும் மேற்கொண்டு எந்தக் கூட்டத்திலும் தான் பேசப்போவதில்லை என்று அறிவித்தார். அவருடைய பேச்சை தான் நிறுத்தக் காரணமாகிவிட்டோமோ என்று விக்ரமன் பதறினார். “நான் வாசிக்கிறேன், இதழியலிலும் இருக்கிறேன். இவ்விரண்டுமே பொழுதெண்ணி செய்யவேண்டியவை. பொருளற்று பொழுதை வீணடிப்பது மிகப்பெரிய ஊதாரித்தனம், அதை நாம் செய்யலாகாது. மேடையில் பிறர் பேசுவதற்குமேல் எனக்கு எந்தக்கட்டுப்பாடும் இல்லை. அவர்களுடைய நேரத்தை நான் ஆளமுடியாது. எனது நேரத்தை அவர்கள் ஆளமுடியும் என்பது ஒருதலைப்பட்சமானது ஆகவே இனிமேல் மேடை உரைகள் தேவையில்லை” என்று அவர் சொன்னார். இவ்வாறு தமிழில் மேடையிலிருந்து விலகிச்சென்றவர்கள் பலர் உண்டு. சுந்தர ராமசாமி மேடைப்பேச்சுக்கே எதிரானவர். ஏனென்றால் மேடை தமிழகத்தின் மாபெரும் பொழுது வீணடிப்பாக மாறியிருக்கிறது. ஒரு மேடையில் பேசுபவர் கேட்பவரைப் பற்றி எந்த அக்கறையும் கொள்ள வேண்டியதில்லை என்பதே தமிழின் பொதுமனநிலை. அவர் அங்கு பேசவேண்டிய தலைப்பைப் பற்றிக்கூட பேசவேண்டியதில்லை. தனக்கு நினைவு வரும் அனைத்தையுமே அங்கு பேசலாம். பேசப்பேச எழுந்து வருபவற்றை எடுத்து வைத்துக்கொண்டே இருக்கலாம். பிறருடைய நேரத்தை எடுத்துக்கொள்ளலாம். மேடை உரைக்கான எந்த நெறிகளையும் பேணவேண்டியதில்லை. பெரும்பாலான மேடைகளில் தலைமைப்பேச்சாளர் அல்லது முதன்மைப் பேச்சாளர் இறுதியாகப் பேசும்படி அமைக்கப்பட்டிருக்கும். அவருடைய பேச்சை கேட்கவே பெரும்பாலான கூட்டம் வந்திருக்கும் முக்கியத்துவம் இல்லாத அல்லது இளம் பேச்சாளர்களை முகப்பில் பேச வைப்பார்கள். ஓர் அரங்கின் மிகவும் கூர்ந்த கவனம் இருக்கக்கூடிய பொழுது இவ்வாறு தொடக்கநிலையாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. ஒருவகையில் அது நன்று ஏனெனில் அவர்கள் பயில்முறையாளர்கள். அவர்கள் தேறி வருவது நல்லது. ஆனால் அந்த சலுகையை அவர்கள் சூறையாடுகிறார்கள். தங்களுக்கு அளிக்கப்பட்ட நேரத்தை எந்தப்பொறுப்புமின்றி செலவழிக்கிறார்கள். தலைமைப்பேச்சாளர்களின் நேரத்தை எடுத்து சிதைக்கிறார்கள் பலர். பல கூட்டங்களில் தலைமைப்பேச்சாளர் பேச எழும்போது அரங்கு சோர்ந்து துவண்டிருக்கும் மேற்கொண்டு பேச அவருக்கும் ஊக்கம் இருக்காது. அனைவரும் கிளம்ப வேண்டிய நிலைமை வந்துவிட்டிருக்கும். சமீபத்தில் சென்னையில் கருத்தரங்கு ஒன்றில் பலர் அப்படி நேரமோ அரங்க உளநிலையோ அறியாமல் பேசியதைப் பற்றி அங்கு சென்ற பல நண்பர்கள் எனக்கு குமுறி எழுதினார்கள்.அது அழைப்பை நம்பி அங்கே வந்த பார்வையாளர்கள் மீதான நேரடி வன்முறை. அந்தக் கீழ்மையை அவருக்கு உணர்த்தவேண்டியது அமைப்பாளர்களின் பணி ஆனால் பல தருணங்களில் அவை நாகரிகம், முகநட்பு கருதி அதைச் சொல்ல முடிவதில்லை. இழித்துரைத்தல் மென்மையாக அறிவுரைத்தல் போன்றவை இவர்களைப்போன்ற சுரணையற்றவர்களுக்கு எவ்வகையிலும் உறைப்பதில்லை. பலசமயம் மேடையில் அவ்வாறு வரும் அறிவுறுத்தல்களை அங்கேயே ஒரு பகடியாக ஒரு கோமாளி நடனமாக ஆக்கி மேலும் பொழுதை எடுத்துகொள்வார்கள். இன்று ஒரு இலக்கிய மேடைக்கு வரும் பொது வாசகன் என்பவன் தனது பணிகள் பலவற்றை விட்டுவிட்டு வருகிறான். ஒவ்வொரு நாளும் இயல்பாக கூட்டத்திற்கு சென்று அமைந்து உரைகளை நெடுநேரம் கேட்கும் அளவுக்கு எவருக்கும் இன்று பொழுதில்லை. பலகோடி ரூபாய் செலவில் எடுக்கப்படும் ஒரு திரைப்படமே இரண்டேகால் மணி நேரம் ஓடுவதென்பது ஒரு ஊதாரித்தனம் என்ற எண்ணம் பரவலாக உருவாகிவரும் காலம் இது. சென்னையில் ஒருவர் ஒரு இலக்கியக் கூட்டத்திற்கு வருவதாக இருந்தால் ஒருமணிநேரத்திற்கு மேலாக அவர் பயணம் செய்து வருகிறார். மறுபடியும் ஒருமணிநேரம் திரும்பிச்செல்ல செலவாகிறது. அதற்கான பணச்செலவும் அவரால் செய்யப்படுகிறது. ஓர் இலக்கிய மேடையை சென்னையில் ஒருங்கிணைக்க இன்று கூடவாடகை மற்றும் செலவுகளோடு முப்பதாயிரம் ரூபாயாவது ஆகும். அதில் நூறு பேர் கலந்துகொண்டார்கள் என்றால் ஒவ்வொருவரும் தலா நூறு ரூபாய் செலவழித்தார்கள் என்றால் பத்தாயிரம் ரூபாய் பார்வையாளர் தரப்பிலிருந்து செலவழிக்கப்படுகிறது. அதைப்பற்றிய எந்த உணர்வும் மேடையில் பேசுபவர்களுக்கு இருப்பதில்லை. வந்திருப்பவர்களுக்கு பயனுள்ள சிந்திக்க வைக்கக்கூடிய அவர்களை ஈர்க்கக்கூடிய எதையாவது அந்த மேடையிலே சொல்லியாகவேண்டும் என்ற எண்ணம் இருப்பதில்லை.இன்னொருவர் பொழுதை எடுத்துக்கொள்வது, அவைமுறைமைகளை பொருட்படுத்தாமலிருப்பது எல்லாம் நேரடியாக பார்வையாளர்களை அவமதிப்பதுதான். தமிழில் நாம் எதையாவது உடனடியாக கவனிக்க வேண்டும் என்றால் இந்த மேடை நாகரிகத்தைத்தான். இதைச் சொன்னதுமே, இப்படி ‘கட்டற்று’ இருப்பது ஜனநாயகம், கலைஞனின் சுதந்திரம், கலகம் என்றெல்லாம் சொல்பவர்கள் உண்டு. (மதிக்கத்தக்க எவரும் அதைச் சொல்வதில்லை, சொல்பவர்கள் அத்தனைபேரும் வெறுஞ்சொல்லர்கள்தான்) இதைச் சொல்பவர்கள் எவரும் எந்த அரங்கிலும் அமர்ந்து ஐந்து நிமிடம் எதையும் கேட்பதில்லை. இலக்கியக் கூட்டங்களில் வெளியே நின்று பேசிக்கொண்டிருப்பார்கள். அதையும் சுதந்திரம் ,கலகம் என்பார்கள். அதாவது நடைமுறையில் அவர்கள் சொல்வது இதுதான், அரங்குக்கு வருபவர்கள் ஏமாளிகளும் அசடுகளும் ஆதலாம் அவர்களை இவர்கள் நேரவீணடிப்பு செய்து இழிவுபடுத்துகிறார்கள். இவர்கள் புத்திசாலிகளாதாலல் பிறர் அதை இவர்களுக்குச் செய்ய இடமளிப்பதில்லை. சென்ற காலங்களில் மேடை உரைகளைக் கேட்பது என்பது முதன்மைப் பொழுதுபோக்காக இருந்தது. எனது மாமனார் தன்னுடைய கேளிக்கையே மேடைப்பேச்சுக்களை கேட்பதுதான் என்றார். இன்று அரசியல் தலைவர்கள் பேசும் கூட்டங்களுக்குக் கூட திரட்டிக் கொண்டுவரவில்லை என்றால் எவரும் வருவதில்லை. மேடை உரை இன்று எவ்வகையிலும் ஆர்வமூட்டும் கேளிக்கை அல்ல. காட்சி ஊடகங்கள், இணைய ஊடகங்கள் பெருகி ஒவ்வொருவரைச் சுற்றியும் செறிந்து காத்திருக்கின்றன. அவற்றைக்கடந்து ஒரு கூட்டம் கேட்க வரும் வாசகன் மிக அரியவன். அவனுடைய பொழுதை வீணடிப்பதென்பது ஒரு பெருங்குற்றம் தமிழில் இலக்கியக்கூட்டங்களை ஒருங்கிணைப்பவர்கள் இந்தக் குற்றவாளிகளை இனிமேலாவது அடையாளம் கண்டுகொண்டாகவேண்டும். ஆள் கிடைக்கவில்லை என இவர்களையே அழைக்கக்கூடாது – இவர்கள் எல்லா அழைப்புக்கும் தயாராக காத்திருக்கிறார்கள். சொல்லப்போனால் அனைத்து கூட்டங்களிலும் நேரவிரயம் செய்பவர்களைத் தவிர்த்தாக வேண்டும். பொழுதுவீணர்களின் ஒரு பட்டியலையே தயாரித்து பொதுவெளியில் வெளியிடலாம் என்ற எண்ணம் எனக்கிருக்கிறது. தயாரித்தும் விட்டேன். தனிப்பட்ட சுற்றுவழியாக அவர்களின் பெயர்களை அனைவரும் அறியக்கொடுங்கள். அவர்களின் பெயர் அழைப்பிதழில் இருக்குமென்றால் அந்தக் கூட்டத்தை தவிர்த்துவிடுங்கள் என்றே நான் சொல்வேன். அது எந்த முதன்மைப் பேச்சாளர் கலந்துகொள்ளும் விழாவாக இருந்தாலும் சரி. அமைப்பாளர்களைப் பொறுத்தவரை திட்டவட்டமாகவே பேச்சாளர்களுக்கு நேரம் ஒதுக்கப்படவேண்டும். அழைப்பிதழிலேயே ஒரு நிகழ்ச்சி எப்போது தொடங்கி எப்போது முடியும் என்பது வரையறுக்கப்பட வேண்டும். ஓரளவுக்கு நீளலாம். ஆனால் கட்டற்று நீளும் ஒரு இலக்கியக் கூட்டம் என்பது ஒரு பெரும்வன்முறை.பேச்சாளர்களுக்கு அவருக்கான நேரம் சொல்லப்படவேண்டும். அவர் மீறினால் அறிவுறுத்தலும் பின் எச்சரிக்கையும் விடுக்கப்படவேண்டும். அதற்கும் கட்டுப்படாவிட்டால் ஒலிப்பெருக்கியை அணைத்து அவரை மேடையை விட்டு வெளியேற்றவேண்டும். பார்வையாளர்களே அதைச் செய்யலாம். இனி நாகரீகம் பார்ப்பதில் பொருளில்லை. நாகரீகம் பார்த்தால் நாம் மேடை என்னும் நிகழ்வையே அழித்துக்கொண்டிருக்கிறோம் என்றே பொருள். இலக்கியக் கூட்டத்திற்கு வருபவர் இலக்கிய சொற்பொழிவுகளைக் கேட்பதற்காக மட்டும் வருவதில்லை. நண்பர்களைச் சந்திக்கத்தான் வருகிறார்கள். கூட்டம் முடிந்த பிறகு குறைந்தது ஒருமணி நேரமாவது அங்கு நின்று அளவளாவ விரும்புகிறார்கள். இலக்கியக் கூட்டங்கள் அந்தக் கூடம் அனுமதிக்கும் நேரத்தைத் தாண்டி போகும்போது அங்கு நிற்கவே முடியாமல் ஆகிறது. பெரும்பாலான இலக்கியக் கூட்டங்கள் அதனுடைய வாயிற்காப்போனால் வந்து நிறுத்தப்படுகின்றன. பார்வையாளர்கள் அங்கு நின்றிருக்கும்போதே விளக்குகளை அணைத்து கூடத்தை மூட ஆரம்பிக்கிறார்கள். அங்கு நின்றிருப்பவர்கள் அனைவரையும் கடிந்து வெளியே துரத்துகிறார்கள். மேடை நாகரீங்கள், மேடைநெறிகள் சில உள்ளன 1.தொழில்நுட்பக் கருத்தரங்குகள், கல்விக்கருத்தரங்குகள் தவிர எங்குமே கட்டுரையை படிக்கக்கூடாது. அப்படி ஒரு வழக்கமே உலகில் இல்லை. அது முழுமையான நேர விரயம். கட்டுரையை அல்லது படிப்பவர் ஒரு சொல்லைக்கூட அரங்கிடம் சொல்லவில்லை என்றே பொருள். எவருமே அதை கவனிக்கமாட்டார்கள், ஒரு சொல்கூட. தொழில்நுட்பக் கருத்தரங்குகள் மற்றும் கல்விக்கருத்தரங்குகளில் உரைகள் அச்சிடப்பட்டு ஏற்கனவே அளிக்கப்பட்டிருக்கும். அவற்றின் சுருக்கத்தையே அங்கே படிக்கிறார்கள். அதுவும் அதிகம்போனால் 15 நிமிடங்கள். நம் இலக்கியக்கூட்டங்களில் கைப்பிரதியில் இருபது பக்கங்களுடன் மேடையேறும் ஆசாமிகள் இருக்கிறார்கள். 2.மேடையுரையில் தரவுகள், புள்ளி விவரங்கள் கூறுவது பெரும்பாலும் பயனற்றது. அவை நினைவில் நிற்பதே இல்லை. ஒரு கருத்தை நிறுவும்பொருட்டு ஓரிரு தரவுகளைச் சொல்லலாம். அங்கே கருத்தே முதன்மையானது. ஒரு பார்வை அங்கே ஒருவரால் முன்வைக்கப்படுகிறது 3.மேடையில் ‘நினைவுகூர்ந்து’ அந்த வரிசையில் பேசுவது பயனற்றது. ஏனென்றால் அதற்கு ஒரு வடிவம் இருக்காது. அந்த உரையை நினைவுகூரவே முடியாது. பேசவேண்டியதை ஏற்கனவே பேச்சாளர் முடிவுசெய்திருக்கவேண்டும். எந்த வரிசையில் எந்த வடிவில் முன்வைக்கவேண்டும் என அவருக்கு ஏற்கனவே ஒரு திட்டமும் இருக்கவேண்டும் 4.எக்காரணம் கொண்டும் மேடையில் முன்னர் பேசியவர் சொன்னதற்கு மறுப்பு சொல்லக்கூடாது. அதையொட்டி விவாதிக்கவும்கூடாது. ஏனென்றால் முன்னர் பேசியவர் தன் தரப்பை மீண்டும் சொல்ல வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. 5.தலைவர்கள், தொகுப்புரையாளர்கள் மேடை உரையில் சொன்னவற்றை மீண்டும் சுருக்கிச் சொல்லக்கூடாது. பெரும்பாலும் இது சம்பந்தமே அற்ற சுருக்கமாக, அபத்தமாகவே இருக்கிறது. ஓரிரு சொற்கள் சொல்லும் மரபு உண்டு. ஒருவர் சொன்னதை இன்னொருவர் திருப்பிச் சொல்வது பேச்சாளரை அவமதிப்பது. 6.மேடைப்பேச்சுக்கு பின் கேள்வி-பதில் என்பது அனுமதிக்கப்படக் கூடாது. கேள்விகள் எங்கு அனுமதிக்கப்படும் என்றால் ஒரு அரங்கு இணையான பயிற்சியும் அறிவும் கொண்டவர்கள் மட்டுமே அடங்கிய உள்வட்ட அரங்காக இருக்கையில் மட்டும்தான். அப்போதுதான் சரியான கேள்விகள் வரும். கட்டுமானப் பொறியியல் பற்றி கட்டுமானப் பொறியாளர்களின் அரங்கில் பேச்சுக்குப்பின் கேள்விபதில் அனுமதிக்கப்படலாம். பலவகையான பொதுப்பார்வையாளர்கள் உள்ள அரங்கில் கேள்விபதில் அனுமதிக்கப்பட்டால் அந்த அரங்கில் இருக்கும் மிகத்தாழ்ந்த புரிதல் கொண்டவரே கேள்வி கேட்பார். ஏனென்றால் அவருக்குத்தான் ஒன்றும் புரிந்திருக்காது. அக்கேள்வியையும் பதிலையும் மொத்த அரங்கும் சகித்துக்கொள்ளவேண்டியிருக்கும். அது உலகில் எங்குமே நிகழ்வது அல்ல உண்மையில் நமக்கு மேடைநெறிகள் என சில இருப்பதே தெரியாது. நம் கல்விநிலையங்களில் சொல்லித்தரப்படுவதில்லை. ஆகவே உலகமெங்கும் மிக அடிப்படையாக உள்ள விதிகள் கூட இங்கே கடைப்பிடிக்கப்படுவதில்லை. எங்கும் இப்படித்தான் என நாமே நினைத்துக்கொள்கிறோம். என்னைப்பொறுத்தவரை ஒரு நெறியாகவே சிலவற்றைக் கடைபிடிக்கலாமென்று நினைக்கிறேன் அ. ஏற்கனவே நேரம் கொல்லிகள் என அறியப்பட்ட எவரையும் ஊக்குவிப்பதில்லை. அவர்கள் பங்கு பெறும் எந்தக் கூட்டத்திலும். ஆகவே நான் கலந்துகொள்ள இயலாது. பங்கெடுப்பவர்களின் பெயர்கள் முன்னரே சொல்லப்படவேண்டும். ஆ.அழைப்பிதழில் பங்கெடுப்பவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் சொல்லப்படவேண்டும். அவர்களுக்கு அது அறிவிக்கப்படவேண்டும் இ. அழைப்பிதழில் இல்லாதவர்கள் எதன்பொருட்டும் பேசக்கூடாது ஈ. ஒருவர் அவருக்கு அளிக்கப்பட்ட நேரத்தைவிட ஐந்தாறு நிமிடங்களுக்கும் மேலாகப் பேசுவார் என்றால் அந்த அமைப்பாளர் உடனடியாக அவரை நிறுத்தி அடுத்தவருக்கு நேரம் அளிக்கவேண்டும். அன்றி அந்த அமைப்பாளர்கள் அதைச் செய்யவில்லை என்றால் அக்கணமே அக்கூட்டத்திலிருந்து நான் வெளியேறிவிடுவேன். எனது வாசகர்கள் உடனடியாக வெளியேறவேண்டுமென்று சொல்லிவிட்டுச் செல்வேன். இந்த நெறிகளை பார்வையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும். பார்வையாளர் தரப்பில் இருந்து கட்டாயம் எழுந்தாலொழிய இதெல்லாம் நடக்காது https://www.jeyamohan.in/162475/
  6. தமிழ், குறிகளும் ஒற்றும் January 23, 2022 அன்புள்ள ஜெ.. எழுத்து குறித்த அடிப்படையான ஒரு கேள்வி.முற்றுப்புள்ளி , காற்புள்ளி போன்றவை ஆரம்ப கால தமிழில் இல்லை… போக போக தமிழில் பயன்பாட்டுக்கு வந்து விட்டது. ஆனால் இதன் பயன்பாடு குறித்து ஒரு தெளிவு இன்னும் வரவில்லை என்றே சொல்ல வேண்டும்.. உதாரணமாக விகடன் போன்ற பத்திரிகைளில் எல்லா வாக்கியங்களிலுமே ஓர் ஆச்சர்யக்குறியை போட்டு விடுவார்கள்… ஒரு முறை பாலகுமாரன் எழுத்தை இப்படி ஆச்சர்யக்குறி போட்டு “ அழகு படுத்திய” ஒரு பத்திரிக்கையைக் கடுமையாக சாடி இருந்தார் வாக்கியங்களின் நடுவே ஒரு பிராக்கெட்டை சேர்த்து சுஜாதா அழகாக காமெடி செய்வார்…அடுத்தடுத்த முற்றுப்புள்ளிகள் வைப்பதன் மூலம் ஒ ஸ்லோனசை (நிதானத்தன்மை) ஏற்படுத்துவதை சிலர் செய்கிறார்கள்.இந்த அலங்காரங்கள் தேவை இல்லை என்று சொல்வோரும் உண்டு உங்கள் நிலைப்பாடு என்ன அன்புடன் பிச்சைக்காரன் *** அன்புள்ள பிச்சைக்காரன், நலம்தானே? மொழியின் எழுத்து வடிவத்திற்கும் அதன் உச்சரிப்பு வடிவத்திற்கும் உள்ள உறவென்பது நேரடியானது அல்ல. உச்சரிப்பு என்பது வேறு எழுத்து வேறு. ஓர் எழுத்துவடிவத்தை இன்ன உச்சரிப்பு என ஒரு சூழலில் அனைவரும் பொதுவாக ஏற்றுக்கொள்வதனால் அப்படி பயன்பாடு கொள்கிறது. இந்த பொதுப்புரிதலால்தான் மொழி இயங்குகிறது. முகம் என்னும் சொல்லில் உள்ள கவும் கலம் சொல்லில் உள்ள க வும் வேறு வேறு. சம்ஸ்கிருதம், அதைப் பின்பற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் வேறு வேறு க உண்டு. நமக்கு இல்லை. சிலர் அதை தமிழின் பெரிய குறையாகக் கண்டு எழுத்துக்களின் மேலே அடையாளம் போடுவது, கீழே கோடு போடுவது போன்று பல முயற்சிகளை முன்வைத்ததுண்டு. ஆனால் நமக்கு வெவ்வேறு க ஆக அதை வாசிக்க எந்த தடையும் இல்லை. உச்சரிப்பை அப்படியே எழுதிவிடவேண்டும் என்பவர்கள் மொழி செயல்படும் விதத்தை அறியாதவர்கள். மொழியின் எழுத்துவடிவம் நூறாண்டுகளுக்கு ஒருமுறை மாறிவிடுகிறது. மாறியாகவேண்டும். அதற்கான பல தேவைகள் காலப்போக்கில் உருவாகிக்கொண்டே இருக்கும். வியப்பு என்னவென்றால், அதேபோல மொழியின் உச்சரிப்பும் மாறிவிடுகிறது என்பதே. தமிழ் மொழியின் உச்சரிப்பு மாறியிருப்பதை சினிமாக்களை கண்டாலே உணரலாம். பழைய ஒலிப்பதிவுகளைக் கேட்டால் இன்னும் துல்லியமாக உணரலாம். பழைய சங்கீதக்காரர்கள், தலைவர்களின் சொற்பொழிவுகளை இன்று கேட்டால் அவை காலத்தின் வேறொரு கரையில் ஒலிப்பவையாகப் படுகின்றன. நூறாண்டுகளுக்கு முன்புள்ள தமிழ் உச்சரிப்பு கொஞ்சம் மென்மையாக, சம்ஸ்கிருத எழுத்துக்களான ஹ ஷ போன்றவை துல்லியமாக ஒலிப்பவையாக உள்ளது. அதன்பின் ஓங்கிய உச்சரிப்பும், வல்லினம் மிகுந்த ஓசையும் உருவாகி வந்தன. காரணம் வானொலி அறிவிப்புகள் மற்றும் மேடைப்பேச்சு ஆகியவை என நான் ஊகிக்கிறேன். அழுத்தமாகச் சொல்லவேண்டிய தேவை அவற்றுக்கு இருந்தது. அவை பொதுப்பேச்சை பாதித்தன. சென்ற முப்பதாண்டுகளில் தமிழ் உச்சரிப்பு மீண்டும் மென்மையாகியிருக்கிறது. ஆங்கிலத்திற்குரிய மென்மை இது. ஆங்கில உச்சரிப்பை இளமையிலேயே பள்ளிகளில் கற்பிக்கிறார்கள். தமிழ் அந்த உச்சரிப்பில் சென்றமைகிறது. சொன்னான் என்னும் சொல் தமிழில் இருபதுகளில் ஷொன்னான்என்றும், எண்பதுகளில் ச்சொன்னான் என்றும் இன்று ஸொன்னான் என்றும் ஒலிக்கிறது. எல்லா காலத்திலும் ஓர் உச்சரிப்பு ‘எலைட்’ ஆனது என கருதப்படுகிறது. உயர்குடி, உயர்தளத்திற்குரியது என. [எல்லா மொழிகளிலும் அப்படித்தான்] மக்கள் அதை நோக்கிச் செல்கிறார்கள். அதுவே பொதுப்போகாக ஆகிறது. இன்று ஆங்கில உச்சரிப்புடன் பேசுவது படித்தவர், நாகரீகமானவர் என்னும் சித்திரத்தை அளிக்கிறதென கருதப்படுகிறது. ஆகவே மொழியின் மாற்றங்களைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. அதன் சாராம்சமான கலையிலக்கியம், சிந்தனைகள், சொல்வளம் ஆகியவை அழியாமலிருக்கின்றனவா , தொடர்ந்து கற்கப்படுகின்றனவா என்று தான் பார்ப்பேன். எனில் அம்மொழி வாழ்கிறது. இலக்கணப்பிடிவாதம் மொழிக்கு எதிரான ஒரு பழமைவாத மனநிலை. கலையிலக்கியங்கள், சிந்தனைகளில் ஆர்வமோ அறிதலோ இல்லாதவர்களின் செயல்பாடு அது.அவர்கள் மொழியை தேங்கவைப்பவர்கள், அழிப்பவர்கள். தமிழில் புள்ளி அடையாளங்கள் ஆங்கிலம் வழியாக பத்தொன்பதாம் நூற்றாண்டில் வந்தமைந்தவை. பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர், ஆறுமுகநாவலர் போன்றவர்கள் உருவாக்கிய பாடநூல்கள் வழியாகவும்; நாளிதழ்களின் செய்திமொழியாக்கங்கள் வழியாகவும் அவை அறிமுகமாகி பரவலாயின. ஆனாலும் இலக்கணவாதிகள் பலர் அவற்றை நூறாண்டுகள் வரை ஏற்காமலிருந்தனர். தமிழுக்கு அவை ஒவ்வாதன என கருதினர். அத்தகையவர்கள் எண்பதுகளிலும் தங்கள் இதழ்களில் முற்றுப்புள்ளிகளைக்கூட பயன்படுத்தவில்லை. நான் அவர்களின் இதழ்களில் அன்று எழுதியிருக்கிறேன். இந்தப் புள்ளிஅடையாளங்களை போடுவதில் தமிழில் பெரிய சிக்கல் உள்ளது. ஆங்கில மொழி கூட்டுச் சொற்றொடர்கள் அமைக்க ஏற்றது. ஆகவே அரைப்புள்ளி, கால்புள்ளி போட்டு எழுதிக்கொண்டே செல்லலாம். சொற்றொடர்களில் குழப்பம் வராது. தமிழ்ச்சொற்றொடர்களில் எழுவாயில் தொடங்கி பயனிலையில் முடிவதுபோல ஒரு வட்ட அமைப்பு இன்றியமையாதது. இல்லையேல் பொருட்குழப்பம் அமையும். ஆகவே கால்புள்ளி அரைப்புள்ளிகளை போட்டு சொற்றொடர்களை நீட்டிச்செல்ல முடியாது. அதேபோல பலவகையான மொழியியல்புகள் தமிழுக்கு உண்டு. அவை குறைபாடுகள் அல்ல, மொழியின் தனித்தன்மைகள். ஆகவே இன்னொரு மொழியின் சொற்றொடர் அமைப்பை அப்படியே தமிழுக்கு கொண்டுவரலாகாது. சோதனைகள் செய்யலாம், தமிழ்ச் சொற்றொடர்களை மாற்றலாம். ஆனால் தமிழின் ஒலியழகும், சொற்றொடரின் அடிப்படைகளும் சிதையாமல் அதைச் செய்யவேண்டும். தமிழ் புனைவெழுத்து நூறாண்டுகளுக்கும் மேலாகச் சொற்றொடர் அமைப்பில் பல பயிற்சிகளை, முன்தாவல்களைச் செய்து வருகிறது. சில முயற்சிகள் பிழையானவை என்பதை மறுப்பதற்கில்லை. மொழியாக்கங்கள் வழியாக விசித்திர விளைவுகளும் உருவாகியிருக்கின்றன. ஆனால் இந்த முயற்சிகளின் வழியாகவே மொழி முன்னகர்கிறது. வாழும் மொழி தன் இயல்கைகளின் இறுதி எல்லைகளில் முட்டித் ததும்பிக் கொண்டிருக்கும் இது ஒருபக்கம் என்றால் ஒற்றெழுத்துக்கள் மறுபக்கச் சிக்கல். ஒற்றெழுத்துக்கள் நமக்கு பழந்தமிழில் இருந்து வந்தவை. பழந்தமிழ் என்பது செய்யுளால் ஆனது. உரைநடை அன்று இல்லை. இருந்தாலும் அது ஒருவகை செய்யுள்நடையே. நவீன அச்சுத் தொழில்நுட்பமே தமிழில் உரைநடையை உருவாக்கியது. ஆகவே உரைநடைக்குரிய தனி இலக்கணம் தேவையாக ஆயிற்று. அவற்றை உருவாக்கிய முன்னோடிகள் ஒற்றுக்களை என்ன செய்வதென திணறினர். இன்றும் அந்த திணறல் நீடிக்கிறது. வல்லினம் மிகும் இடங்களில் எல்லாம் ஒற்று போடுவதென்பது இயந்திரத்தனமான புரிதல். அப்படித்தான் இன்றும் கல்லூரிகளில் சொல்லிக்கொடுக்கிறார்கள். மேலே சொன்ன சொற்றொடரிலேயே ’ஒற்றுப்போடுவது’ என எழுதுவார்கள். ஒற்று போடுவதற்கும் ஒற்றுப்போடுவதற்கும் இடையே மாபெரும் பொருள்வேறுபாடு உண்டு. அதை புறவயமாக வரையறை செய்வது கடினம். எழுதுபவனே முடிவு செய்யவேண்டும். சொல்லிப்பார்க்கவேண்டும், உச்சரிப்பில் அழுத்தம் இருந்தால் ஒற்று போடுவது அவசியம் என்பது ஓர் எளிய புரிதல். இரண்டு சொற்கள் ஒரே சொல்லாக இணைந்து பொருள் அளிக்குமென்றால் ஒற்று தேவை என்பது இன்னொரு புரிதல். மேலே சொன்ன சொற்றொடரிலேயே ’ஒற்று தேவை’ என்றால் ஒற்றெழுத்து போடவேண்டியதில்லை. ஆனால் ’ஒற்றுத்தேவையை சமாளிக்கவேண்டும்’ என்றால் ஒற்றெழுத்து போடவேண்டிய தேவை உண்டு. மூன்றாவதாக ஒரு சிக்கல் உண்டு. சொற்களைப் பிரிக்கலாமா? இந்தியாவின் பழமையான மொழியிலக்கணங்கள் எல்லாமே சொற்புணர்ச்சிக்கான நெறிகளை முன்வைப்பவை. சொற்களை சேர்த்து ஒற்றைச் சொல்லாக எழுதுவதும் சொல்வதும் பழைய மொழியின் இயல்புகள். சம்ஸ்கிருதம் இன்றும் அவ்வாறே செயல்படுகிறது. ஆகவே அது புழக்கத்திற்கு அரிய மொழியாக போல உள்ளது. இன்று சம்ஸ்கிருதச் சொல்லாட்சி கண்டேன். பரோக்ஷாபரோக்ஷாலங்காரிதம். [மறைமுகமாகவும், மறைமுகமல்லாமலும் சொல்லப்பட்ட அழகு கொண்டது]. பழகிவிட்டால் வாசித்துக்கொண்டே செல்வோம். ஆனால் இவ்வகைச் சொல்லாட்சி நவீன மொழிக்குரியதல்ல. பண்டைய தமிழ் உரைகளைக் கண்டால் இப்படித்தான் தமிழிலும் எழுதியிருக்கிறார்கள் என்று அறியலாம். ‘தத்தமூர்திகளிலேறித்தனித்துப்புகுங்காலை’ என உ.வே.சா சீவகசிந்தாமணி உரையில் எழுதுகிறார். புழக்கத்திலுள்ள மொழிகளெல்லாம் இந்தக் கூட்டுத்தன்மையை தவிர்க்க போராடிக்கொண்டிருக்கின்றன. ஏனென்றால் நவீன மொழி தனித்தனிச் சொற்களால் ஆனது. மலையாளம் கன்னடம் எல்லாம் அதன்பொருட்டு பலகாலமாக முயல்கின்றன. தமிழ்மொழிக்கு இயல்பாகவே பொருட்குழப்பம் இல்லாமல் தனிச்சொற்களாக பிரியும் தன்மை உண்டு. அது நமக்கு இருக்கும் நல்வாய்ப்பு. ’நமக்கிருக்கும்’ என எழுதலாம். ஆனால் அதற்கு ஒரு தனியான ஒலித்தேவை இருக்கவேண்டும். இல்லையேல் நமக்கு இருக்கும் என எழுதுவதே சரியானது. ஏனென்றால் வருங்காலத்தில் உருவாகும் தானியங்கி மொழியாளுகைக்கு அதுவே உகந்தது. ’நமக்கிருக்கும்’ என்பது ஒரு சொல், ’நமக்கில்லாத’ என்பது இன்னொரு சொல் என்றால் மொழியில் சொற்கள் பல மடங்கு பெருகுகின்றன. ’நமக்கு’ ’இருக்கும்’ ’நமக்கு’ ’இல்லாத’ என பிரித்துக்கொண்டால் அவை மூன்று சொற்கள்தான். ஆகவே சில நெறிகளை உருவாக்கிக் கொள்ளவேண்டும். புள்ளிக்குறியீடுகளை மிகமிகக் குறைவாகவே பயன்படுத்தவேண்டும். வியப்புக்குறி மேற்கோள்குறி போன்றவற்றை கூடுமானவரை தவிர்க்கவேண்டும். காற்புள்ளி அரைப்புள்ளியை தேவையென்றால் மட்டுமே போடவேண்டும். ஒற்றெழுத்துக்களை தவிர்ப்பதே நம் நோக்கமாக இருக்கவேண்டும். சொற்கள் இணையவேண்டும் என்றால், செவியில் ஒலியழுத்தம் விழவேண்டும் என்றால் மட்டுமே ஒற்றுகளை போடவேண்டும். சொற்களை கூடுமானவரை பிரித்தே எழுதவேண்டும். சொற்களின் இணைவு ஒரு சிறப்பான பொருள்கோடலுக்கு தேவை என்றால் மட்டுமே இணைக்கப்பட வேண்டும். ’இப்படி எழுதினால் அப்படி படித்துவிடுவார்களே’ என்று பிலாக்காணம் ஆரம்பிப்பவர்கள் உண்டு. எழுதப்படுவனவற்றை மாற்றிப் பொருள்கொண்டு மேதாவி மாதிரி பேசுவது தமிழ்ச்சூழலுக்கு உரிய மடமைகளில் ஒன்று. அவ்வண்ணம் பேசுபவர்கள் தமிழறிந்தோர் அல்ல, பெரும்பாலும் அறைகுறைகள். எந்த சொற்றொடரையும் அப்படி மாற்றிப் பொருள்கொள்ள இயலும். மொழியின் எழுத்துவடிவில் இருந்து பொருள் எடுத்துக்கொள்வதற்கு ஒரு சமூகப்பழக்கம் உண்டு. ஒரு பொதுப்புரிதல் அது. அதற்குள் ஒவ்வொரு ஆசிரியனும் , ஒவ்வொரு நூலும் வாசகனுடன் கொள்ளும் உரையாடல் வழியாக ஒரு புரிதல்களம் உருவாகிறது. அந்த பொருட்களங்களில்தான் சொற்களுக்கும் சொற்றொடர்களுக்கும் பொருட்கோடல் நிகழ்கிறது. அந்த புரிதல்களத்துக்கு வெளியே இருந்து ஒருவர் வந்து ‘நான் இப்படி பொருள் கொண்டால் என்ன செய்வாய் ?” என்று கேட்டால் ‘உனக்கு இங்கே என்ன வேலை, வெளியே போடா’ என்பதே பதிலாக இருக்க முடியும். ஜெ பிகு: இவை என் மொழிக்கொள்கைகள். ஆனால் என் நூல்களும் என் தளமும் முழுமையாக என் கட்டுப்பாட்டில் இருப்பவை அல்ல. அவை வெவ்வேறு நண்பர்களால் மெய்ப்புநோக்கப் படுபவை. அவர்களின் பார்வைக்கேற்ப அவை மாற்றப்பட்டிருக்கும். அவற்றை முழுமையாக மீண்டும் திருத்தும் நேரம் எனக்கில்லை. எழுதியவற்றை மீண்டும் வாசிப்பது எனக்கு கடினமானது. என் உள்ளம் முன்னால் பாய்ந்துகொண்டே இருப்பது. https://www.jeyamohan.in/159561/
  7. எழுத்தாளர் ஜெயமோகனுடன் ஒரு நேர்காணல் தமிழ் இலக்கியத்தின் மறுக்கமுடியாத எழுத்தாளர்களில் முக்கியமானவர் ஜெயமோகன் அவர்கள். தமிழ் மொழியின் உச்சத்தை தொட்டவர் என்று சொல்லப் பொருத்தமானவர். தமிழிலும் மலையாளத்திலும் மிகப்பெரிய வாசகப்பரப்பு இவருக்கு உண்டு. புனைவின் எல்லா தளங்களிலும் அவரது எழுத்துக்கள் காத்திரமாக பேசப்படுகின்றன. zoom செயலி ஊடாக நடாத்தப்பட்ட இந்த நேர்காணல் பின்பு எழுத்துருவாக்கப்பட்டது . கேள்வி: மிக நீண்ட காலமாக ஈழத்து இலக்கிய சூழலையும் அதன் போக்குகளையும் அவதானிப்பவர் என்றவகையில்; அவை நகர்ந்து சென்றிருக்கின்ற செயற்பாட்டு இயங்கியலை எப்படிப்பார்க்கிறீர்கள்? பதில் : ‘ஈழ இலக்கியம்;ஒரு விமர்சனப் பார்வை’ எனும் தலைப்பில் பத்துவருடங்களுக்கு முன்பே ஒரு தொகுப்பை எழுதியிருக்கிறேன்.அதற்கு பிறகு தற்காலம் வரை தொடரான ஈழத்து இலக்கியம் குறித்த பார்வை எனது எழுத்துக்களில் வெளிப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இருந்து முக்கியமான ஈழத்து எழுத்தாளர்கள் ஒவ்வொருவர் பற்றியும் குறைந்தபட்சம் ஒரு விமர்சனக் கட்டுரையாவது எழுதியிருக்கிறேன். என் பார்வைகளை அந்த அடிப்படையில்தான் முன்வைக்கிறேன் ஈழ இலக்கியத்திற்கு சில சிறப்பு வாய்ப்புகள் இருக்கின்றன. இரு கலாச்சாரங்கள் உரையாடிக்கொள்ளும் விளிம்பு என்பது படைப்பிலக்கியத்துக்கும் பண்பாட்டு ஆய்வுக்கும் மிக முக்கியமான ஒரு வாய்ப்பு. உதாரணமாக குமரி மாவட்டத்திற்கும் கேரளத்துக்கும் நெருக்கமான ஒரு தொடர்புண்டு. மலையாளத்தோடும் அதன் கலாச்சாரத்தோடும் பேசுகிற வாய்ப்பு குமரிமாவட்டத்துக்கு இருக்கிறது. ஆகவே இங்கே இயல்பாகவே நவீன இலக்கியத்தின் தீவிரமான ஒரு தளம் இருந்துகொண்டிருக்கிறது அதைவிட பெரிய வாய்ப்பு ஈழ இலக்கியத்துக்கு உள்ளது. நீங்கள் எதிர்கொள்வது முற்றிலும் வேறொரு மொழியையும் பண்பாட்டையும். ஆனால் இது வரைக்கும் சிங்கள இலக்கியத்திற்கும் ஈழ இலக்கியத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. எழுபது ஆண்டுகள் பார்த்தால் எந்த உரையாடலுமின்றி தங்களை தனிமைப்படுத்தி ஒதுங்கிக் கொண்டு ஈழ இலக்கியம் செயல்பட்டிருக்கிறது. திறந்த மனதோடு சிங்கள கலாச்சாரத்தையும் பௌத்த மதத்தையும் நோக்கி உரையாடுவதற்கான எந்த முயற்சியும் ஈழ இலக்கியத்தில் இடம்பெறவில்லை. இரண்டாவதாக வட்டாரப் பண்பாடுகள் இலக்கியத்துக்கு முக்கியமானவை. தமிழிலக்கியத்தில் இப்படிப்பட்ட வட்டாரப் பண்பாடுகளே தனித்தன்மை கொண்ட இலக்கியத்தை உருவாக்கியிருக்கின்றன. உதாரணம் கி.ராஜநாராயணனும் ஜோ.டி.குரூசும். வெறும் ஐம்பது கிலோமீட்டர் இடைவெளிதான். இருவர் நிலங்களுக்கும் நடுவே. ஆனால் முற்றிலும் வேறு வேறான இரண்டு வாழ்க்கைச்சூழல்கள் அவை. அது இலக்கியத்துக்கு மிகப்பெரிய வாய்ப்பு. ஈழத்தில், ஒரு தீவில் இருக்கும் கலாச்சாரம் மற்றைய கலாச்சாரத்தோடு ஒப்பிடுகையில் பெரிய வேறுபாட்டோடு அமையும். அப்படி வெவ்வேறு சிறிய நிலப்பரப்புகள் உருவாக்க கூடிய தனித்த வாழ்க்கைமுறையை ஒரு புனைவு வாய்ப்பாக ஈழத்து படைப்பாளிகள் பயன்படுத்திக்கொள்ளவில்லை. வட்டாரப்பண்பாடு குறைவாகவே ஈழத்து எழுத்தில் வந்துள்ளது. அதற்கான காரணம் என்னவென்றால், பொதுவாக ஈழத்தில் ஆரம்பத்திலிருந்து இலக்கியம் என்பது ஒரு வகையான அரசியல் நடவடிக்கை எனும் எண்ணம் உருவாகியிருக்கிறது. அந்த எண்ணம் எழுத்தாளர்கள் எழுதவரும் போதே உருவாகி வந்துவிடுகிறது. எழுத வருபவனை இலக்கியத்தின் சாரம் அரசியலே என்று சொல்லி, பொதுவான அரசியல்களத்திற்கு இழுத்து விட்டுவிடுகிறார்கள். அது எல்லாருக்கும் தெரிந்த, எல்லாருக்கும் பொதுவான களம். அங்கே எல்லாரும் சொல்வதன் இன்னொரு கோணத்தைத்தான் அவனும் சொல்ல முடியும். விளைவாக அவன் அறிந்த வாழ்க்கையின் நுட்பங்கள் படைப்பாகத் திரண்டு வரக்கூடிய பரிணாமம், அவனுக்குரிய அகப்படிமங்களுடைய வளர்ச்சி நிகழாமல் போய்விடுகிறது. மறுபடியும் மறுபடியும் அரசியலில் எது சரி,எது தவறு, முஸ்லிம்தேசியமா, தமிழ் தேசியமா என்ற அன்றாட விஷயங்களுக்குள்ளேயே அவனை மூழ்கடித்துவிடுகிறது அச்சூழல். அதையே அத்தனைபேரும் திருப்பித் திருப்பி எழுதி ஒருவருடைய மூச்சை இன்னொருவர் சுவாசிப்பதைப் போல குறுகிய மனோநிலையை உருவாக்கியிருக்கிறார்கள். பாருங்கள், நான் இந்த விமர்சனத்தை சொன்னவுடன் எல்லோரும்சேர்ந்து என்னை திட்ட ஆரம்பித்துவிடுவார்கள். ஈழத்து இலக்கியம் சிங்களர்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று ஜெயமோகன் சொல்கிறார் என்று கூச்சலிடுவார்கள். ஈழத்தவர்களுக்கு எழுதத்தெரியவில்லை என்கிறார் என்பார்கள். அதுதான் அரசியல் மனநிலை. இந்த தலைமுறையாவது இதிலிருந்து வெளியே வந்து, இலக்கியம் என்பது மனிதனுடைய வாழ்க்கைச் சிக்கல்களுக்குள், மானுட உள்ளத்திற்குள், வரலாற்று ஆழத்திற்குள் செல்வதற்கான வழி என்பதை பரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். கேள்வி: தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டது. அ.முத்துலிங்கம், ஷோபா சக்தி என இன்று வரை எழுதிக் கொண்டிருக்கும் ஈழத்து எழுத்தாளர்களை முன்னிறுத்தி பல உரையாடல்களை நிகழ்த்தியிருக்கிறீர்கள். ஈழத்து போரிலக்கியம் என்பதை எவ்வாறு அணுகுகிறீர்கள் ? பதில் : போர் சார்ந்த இலக்கியமே ஈழத்தில் அனேகமாக உருவாகவில்லை என்பது தான் உண்மை. ஈழத்தில் முப்பது ஆண்டுகாலம் பெரிய உள்நாட்டு போர் நடந்திருக்கிறது. எவ்வளவு வலுவான படைப்புகளை உருவாக்கியிருக்கவேண்டும். பெயர் சொல்லுங்கள் பார்ப்போம். போரிலக்கியத்திற்கென உலக இலக்கியத்தில் ஒரு பெரிய மரபு, ஒரு பெரிய தளம் இருக்கிறது. போர் என்பது இலக்கியத்தை பொறுத்த அளவில் மனிதனுடைய உச்சகட்ட சாத்தியங்கள் மற்றும் தோல்விகள் இரண்டுமே வெளிப்படக்கூடிய ஒரு பெரிய வெளி. டால்ஸ்டாயின் படைப்புகள் முதல் ஐரோப்பாவின் உலகப் போர் பற்றிப் பேசும் படைப்புகளின் களம் மிகப்பெரியது. பிரபல வணிக எழுத்திலேயே மகத்தானவை என்று சொல்லத்தக்க ஏராளமான எழுத்துக்கள் உள்ளன. holocaust literature என்ற பெயரில் ஒரு தனி இலக்கிய வகைமையாகவே அது உள்ளது. ஈழத்தில் முப்பது ஆண்டுகால போர் எப்படி எழுதப் பட்டிருக்கிறது என்று பார்த்தால் ஏமாற்றமே. ஏன் போர் எழுதப்படவேண்டும்? மனிதனுடைய உச்சகட்ட எல்லைகள் என்னவென்று பார்க்கக்கூடிய சந்தர்ப்பங்களை பஞ்சம், போர் ஆகியவை வழங்குகின்றன. மனிதனுடைய அடிப்படையான conflict என்னவென்று ஆராய்வதற்கான இடத்தை அளிக்கின்றன. ஈழத்து இலக்கியத்தில் இதை பயன்படுத்திஇருக்கிறார்களா? அப்படி பயன்படுத்திய படைப்பு எது?. போரைப்பற்றிப் பேசினால் மட்டும் அது போர் இலக்கியம் கிடையாது. போர் என்பது எங்கே நடக்கிறது ? எந்தப்போரிலும் முதலில் பிரச்சாரப் போர்தான் நடக்கும். எதிரிகளை கட்டமைத்து உச்சகட்ட வெறுப்பு உருவாக்கப்படும். போலிச்செய்திகளும் மிகைச்செய்திகளும் உண்டுபண்ணப்படும். மிகையுணர்ச்சிகள் கட்டமைக்கப்படும். அதற்கான சொற்கள் உருவாகும்.அச்சொற்களை ஒருவன் பயன்படுத்தினாலே அவன் எழுத்தாளன் அல்ல. உதாரணமாக, சிங்களக்காடையர் என்ற ஒரு வார்த்தையை எதிரியை குறித்து உருவாக்கி விடுவார்கள். அதே மாதிரி தங்கள் தரப்பிலும் மிகைச்சொற்களை உருவாக்குவார்கள். உதாரணம் மாவீரர். இச்சொற்களை நிராகரிப்பவனே எழுத முடியும். மிலேச்சன், காஃபிர், அஞ்ஞானி போன்று மதக்காழ்ப்பு நிறைந்த சொற்களுக்கும் இவற்றுக்கும் வேறுபாடில்லை. அந்த பிரச்சாரத்துக்கான அரசியல் தேவை என்ன, போர்க்களத்தேவை என்ன என்பதை பற்றி நான் பேசவரவில்லை. ஆனால் எழுத்தாளன் இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருப்பானென்றால் அவன் எழுத்தாளனே அல்ல. அவன் அதற்கு மேல் இருக்க வேண்டும். அவன் தனக்கான பார்வையுடன் இருக்கவேண்டும். ஆனால் ஈழத்திலிருந்து எழுதியவர்கள் பெரும்பாலும் போர்சார்ந்த பிரச்சாரத்தின் பகுதியாகவே எழுதியிருக்கிறார்கள். அவர்களால் போரையே முற்று முழுதாக எழுத முடியவில்லை. போர் என்பது என்ன? சாராம்சங்கள் வெளிப்படக்கூடிய இடம், hyper dramatic நிகழ்வுகளின் களம், அடிப்படை அறக்கேள்விகள் உருவாகும் சூழல் . அதையெல்லாம் எழுதுவதே இலக்கியம். பிரச்சாரம் செய்வது அல்ல. சரி, பிரச்சாரமே ஆனாலும்கூட போரின் பிரம்மாண்டமான சித்திரத்தை கொடுக்க கூடிய நாவல் எதுவென்று கேட்டாலும் பதில் இல்லை. போரினால் மாற்றமடைந்த விழுமியங்களையும் சமூக மாற்றங்களையும் போரின் விளைவான மனிதத் துயரத்தையும் எழுதிய பெரும் படைப்பு என்னவென்று கேட்டாலும் பதில் எதுவுமே இல்லை. போரை வெறுமே நம்பகமான விரிவான காட்சி விவரிப்பாக அளித்த நாவல் எது என்றாலும் பதில் இல்லை. ஈழத்துப் போரைப்பற்றி இன்னும்கூட படைப்புகள் வரலாம். போர் என்பதுஒரு பெரிய வாய்ப்பு . இன்றைக்கு ஈழத்து இலக்கியத்தின் வெற்றிகள் எல்லாமே புலம்பெயர் இலக்கியத்தில் தான்இருக்கிறது. கேள்வி: டால்ஸ்டோய் உங்கள் ஆதர்சங்களில் ஒருவர் . மனித மனங்களின் ஊடாட்டங்களை எழுதியவர். இவ்வகையில் ரஷ்ய இலக்கியம் ஒரு உச்சத்தை தொட்டுவிட்டது என்று கருதுவோமாயின், அது பிரெஞ்சு இலக்கியத்தினுடைய தொடக்கத்தை தழுவியிருந்தது என்ற கருத்தும் இருக்கிறது. டால்ஸ்டாய்,தஸ்தாயோவ்ஸ்கிக்கு பிறகு ரஷ்ய இலக்கியத்தில் உன்னதமான படைப்புகள் எழுந்திருக்கிறதா என்பதில் மாற்றுப்பார்வையும் இருக்கத்தான் செய்கிறது. இக்கருத்தை எப்படிப்பார்க்கிறீர்கள்? பதில்: உலக நவீன இலக்கியத்தை பொதுவாக வகுக்கும் போது செவ்வியல் யதார்த்தத்தின் யுகம் என்று டால்ஸ்டாய், தஸ்தயோவஸ்கி ஆகியோரின் காலத்தை சொல்லலாம். செக்காவ் , துர்கனேவ் இரண்டு பேரும் டால்ஸ்டாய் அளவு மிகத் தரமாக வேறொரு கோணத்தில் எழுதியிருக்கிறார்கள். பேரிலக்கியங்கள் படைத்தவர்க்ளாக டால்ஸ்டாய் மற்றும் தஸ்தயோவஸ்கி இருப்பதால் இவர்கள் இருவருடைய இடமும் ஒரு படி குறைவாகத்தான் தெரிகிறது. ரஷ்ய இலக்கியத்தில் தொடர்ந்து டால்ஸ்டாய் யிலிருந்து மிகயீல் ஷோலக்கோவ், ஷோல்செனித்ஸின், போரிஸ் பார்ஸ்டநாக் வரைக்கும் ரஷ்யப் பெருநாவல் மரபு தொடர்ந்தது என்று தான் சொல்வேன். பிறகு அதன் தொடர்ச்சி ஜேர்மனியில் நிகழ்ந்தது. தாமஸ் மன் முதல் குந்தர் கிராஸ் வரை classical realism என்பது தொடர்ந்து வளர்தபடியேதான் இருந்தது. உலக இலக்கியத்தில் அது ஓர் உச்சத்தை அடைந்து நின்று விட்ட பிறகு, அடுத்து நவீனத்துவ அலை எழுந்தது. டால்ஸ்டாய்க்கும் டாஸ்டாயெவ்ஸ்கிக்கும் காலந்தால் முந்திய முன்தொடர்ச்சி என்னவென்று பார்த்தால் French, British realism ஆகியவற்றைச் சொல்லவேண்டும். ஜார்ஜ் எலியட் போல முக்கியமான படைப்பாளிகள் பிரிட்டிஷ் யதார்த்தவாதத்தில் உண்டு. அதிலிருந்தும் பெரிய படைப்பாளிகள் எழுந்து வந்திருக்கிறார்கள். டால்ஸ்டாய்க்கு சமகாலத்தவர்கள். உதாரணமாக, நான் அடிக்கடி குறிப்பிடுகிற மேரி கொரெல்லி எழுதிய தி மாஸ்டர் கிறிஸ்டியன் அற்புதமான, ஏன் டால்ஸ்டாய் எழுதியிருக்கக்கூடிய உயர்தர நாவல்.ஆனால் பெரிதாகபேசப்படவில்லை. பிரிட்டனில் அவர்களின் யதார்த்தவாதத்திற்கும் தொடர்ச்சி நவீனத்துவக் காலகட்டம் வரை உண்டு. கேள்வி: ஈழத்தின் போரிலக்கியங்களை தாண்டி மனித வாழ்க்கையைப் பேசிய பிற இலக்கியங்கள் தமிழக சூழலில் அதிககவன ஈர்ப்பை பெறவில்லை. அவர்கள் போரை மாத்திரம் பேசி போருக்குள் இருக்கக் கூடிய அரசியல் விமர்சனங்களை மாத்திரமே முன்வைத்தார்கள்.போரைத்தவிர்த்து ஈழத்தில் எழுதப்பட்ட படைப்புகள் தமிழக வாசிப்புச்சூழலில் கவன ஈர்ப்பினை பெறாமைக்கான காரணம் இருட்டடிப்பா ? அல்லது காரணங்கள் உள்ளனவா? பதில்: நல்ல உதாரணமொன்றினூடாக இதனை விளக்க முடியும். ஒரு நகரத்தை ஒரு பறவையொன்று மேலிருந்து பார்ப்பதை போல மொத்த வரலாற்றையும் ஆசிரியன் தனக்குரிய உயரத்திலிருந்தே பார்க்க வேண்டும்.கீழே இருக்கக்கூடிய தரப்புக்களில் ஒன்றாக அவன் ஆகிவிடக்கூடாது. அப்படி அவன் ஒரு தரப்பை ஒலித்தால் அது உயர்ந்த இலக்கியம் அல்ல. அது ஏற்கனவே இருக்கும் விவாதங்களில் ஒரு குரல். அது எந்த விவாதத்தையும் உருவாக்க முடியாது. அந்த ஒட்டுமொத்தமான பார்வையையே தரிசனம் என்கிறோம். அது நிகழ்ந்தால் மட்டுமே ஒரு படைப்பு கவனிக்கப்படுகிறது. ஈழத்து வாழ்க்கையின் எளிய சித்திரங்களோ, அங்குள்ள சமூகச்சூழலை காட்டும் படைப்புகளோ இங்கே ஏன் வாசிக்கப்படவேண்டும்? இங்குள்ளவர்களுக்கு அந்தப்படைப்புகள் அளிப்பது என்ன என்பதுதானே முக்கியம்? போர் பற்றிய எழுத்துக்கள் கவனிக்கப்படுவது இயல்பு. ஏனென்றால் போர் இங்கே நிறைய பேசப்பட்டிருக்கிறது. ஒரு தலைமுறைக்காலம் செய்திகளில் அடிபட்டிருக்கிறது. ஆகவே போரிலக்கியத்தைக் கொஞ்சம் கூடுதலாகக் கவனிக்கிறோம். போர் பற்றிய எழுத்துக்களில் தேவகாந்தனுடைய கனவுச்சிறை நாவல் எனக்குள் விரிந்த சித்திரத்தை உருவாக்க முயற்சித்தது. ஆனால் அதன் கலைத்தன்மை குறையுடையது. அது பலசமயம் எளிமையான விவரிப்பாகவே சென்றது. ஈழத்திலிருந்து ஒட்டுமொத்தப் பார்வையுடன் போரை அணுகி எழுதும் பெருநாவல்கள் வரும் என்று காத்திருக்கிறேன். நீங்களே கூட எழுதலாம். ஈழத்து இலக்கியத்தில் சாதனை என்று சொல்லவேண்டுமென்றால் அ. முத்துலிங்கம் மற்றும் ஷோபா சக்தி இருவரும்தான் . அவர்களைப் பற்றி தமிழகத்தில் நான் விரிவாக எழுதியிருக்கிறேன். பல்வேறு விமர்சகர்கள் எழுதியிருக்கிறார்கள். சுந்தர ராமசாமிக்கோ அசோகமித்திரனுக்கோ அவ்வளவு விமர்சனம் எழுதப்படவில்லை. முத்துலிங்கம் ஷோபா சக்தி இருவரும் போரிலக்கியம் படைத்தவர்கள் அல்ல. அவர்கள் எழுதியது பெரும்பாலும் புலம்பெயர்வு பற்றித்தான். அப்படியென்றால் எங்கே இருட்டடிப்பு? ஈழத்தில் எழுதப்படும் எல்லா படைப்புகளையும் ஒரே போல தமிழர் கொண்டாட வேண்டிய அவசியம் கிடையாது. இங்கே இலக்கிய அளவுகோல்கள் உண்டு. அந்த அளவுகோல்களின்படி முக்கியமாக கருதப்படுபவர்களே பேசப்படுவார்கள். எதையாவது எழுதி, அதை தமிழகத்தோர் கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்த்து கொண்டாடப்படாமையால் ஏமாந்தவர்கள்தான் தாங்கள் இருட்டடிக்கப்படோம் என்கிறார்கள். ஈழத்திலிருந்து வரும் நல்லபடைப்புகள் இங்குள்ள இலக்கியச்சூழலில் கவனிக்கப்படும். போரிலக்கியத்தை விட புலம்பெயர் எழுத்துதான் ஈழத்தின் சாதனை. போரை எழுதியவர்கள் போரிட்ட தரப்புகளின் பிரச்சாரங்களுக்கு ஆட்பட்டு எழுதினார்கள். புலம்பெயர்ந்து சென்றவர்கள் தங்கள் அனுபவங்களை எழுதினார்கள். அதை நேர்மையாக சொன்னார்கள். புது உலகங்களை சந்திக்கும் போது அது உருவாக்கும் கலாச்சார முரண்பாடுகளை எதிர்கொண்டு தங்கி வாழும் போராட்டத்தை எழுதினார்கள். ஆகவே அவை இலக்கியமாயின. அவர்களில் முதன்மையானவர்கள் அ.முத்துலிங்கம், ஷோபாசக்தி. அடுத்தபடியாக பொ.கருணாகரமூர்த்தி, ஆ.சி.கந்தராசா, நோயல் நடேசன், கலாமோகன் போன்ற புலம் பெயர் எழுத்தாளர்கள் இங்கு பேசப்பட்டிருக்கிறார்கள். புதிதாக எழுதக்கூடியவர்களும் கூட பேசப்பட்டிருக்கிறார்கள். சயந்தனின் ஆதிரை இங்கே ஒரு செவ்வியல் நாவலுடைய அந்தஸ்த்தோடு படிக்கப்பட்டது. அதன் பிறகு இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வந்து எழுதும் அகரமுதல்வன், பிரிட்டனில் புலம்பெயர்ந்திருக்கும் அனோஜன் பாலகிருஷ்ணன் என பலர் கவனிக்கப்பட்டிருக்கிறார்கள். விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்ட போது ஈழத்திலிருந்து வந்த மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் பற்றி ஒருஆண்டு முழுவதும் பேசப்பட்டிருக்கிறது. அவரைப் பற்றி விமர்சன நூல்கள் வெளியிடப்பட்டன. ஈழக் கவிதையின் சாதனையாளர்களான சு.வில்வரத்தினம், திருமாவளவன் பற்றியெல்லாம் பேசப்பட்டிருக்கிறது. இலங்கையில் இருந்து எழுதிய எல்லா முக்கியமானஎழுத்தாளர்களை பேசியிருக்கிறோம். தரமான எந்த படைப்பாளியும் மறைக்கப்பட்டதில்லை. தமிழ்நாட்டில் இலக்கியம் என்பது அதிகபட்சம் ஒரு இலட்சம் பேருக்குள் புழங்கும் ஒன்றாகத்தான் இன்றைக்கு இருக்கிறது. இங்கு சுந்தரராமசாமியும் , தி.ஜானகிராமனும் கூட சிறுவட்டத்திற்குள்தான் பேசப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் புதுமைப்பித்தனுக்கு ஒரு நினைவுச்சின்னம் கிடையாது. அவர் பெயரை தெரிந்த ஒருலட்சம் பேர் இங்கே இல்லை. அந்த யதார்த்தத்தை ஈழத்தவர் புரிந்துகொள்ள வேண்டும். புதுமைப்பித்தனையே கண்டுகொள்ளாத தமிழகம் ஈழத்து எழுத்தாளர்களை ஒட்டுமொத்தமாக கொண்டாடவேண்டும், இல்லையேல் அது இருட்டடிப்பு என்று சொல்வது அபத்தம். இங்கு மேதைகளே இருட்டில் தான் இருக்கிறார்கள். இங்கே உள்ள தரமான எழுத்தாளர்கள், இலக்கிய முன்னோடிகளுக்கு எவ்வளவு கவனம் அளிக்கப்பட்டிருக்கிறதோ அதை விட சற்று அதிகமாக தான் ஈழத்து இலக்கியமுன்னோடிகளுக்கும் இளம் படைப்பாளிகளுக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது என்பது தான் உண்மை. கேள்வி: ஈழத்திலிருந்து மிகத்தீவிரமான விமர்சன இலக்கியம் தோற்றம் பெற்றிருக்கிறது. பேராசிரியர்களான கைலாசபதி,கா.சிவத்தம்பி, எம்.ஏ.நுஃமான் போன்றவார்கள் மிக்க்காத்திரமாக இயங்கியிருக்கிறார்கள். ஈழத்திலிருந்து வெளிவந்த விமர்சன இயக்கம் பற்றிய உங்கள் மனோநிலை எவ்வாறானது? பதில்: சில தருணங்களில் வரலாறு ஒரு வகையாக அமைந்துவிடுகிறது. அதற்கு பல சமயம் காரணங்களைச் சொல்லமுடியாது.பிரபல இலக்கிய சூழல்தான் மக்களால் படிக்கப்படக்கூடியது. நான் சொல்வது சுமார் ஒரு லட்சம் பேரைக்கொண்ட இலக்கிய வட்டத்தைப்பற்றி. இங்கே சில விஷயங்கள் ஏன் அப்படி அமைகின்றன என்பதை நம்மால் காரிய காரணத்தால் விளக்கமுடியாது. தமிழில் இலக்கியவிமர்சனம் இலக்கியம் என்னும் சிறிய வட்டத்துக்குள் நிகழ்வது. அது இருபெரும் போக்குகளை கொண்டுள்ளது. ஒன்று அழகியல் மதிப்பீடுகளை மட்டும் முன்வைக்கக்கூடிய ஒருதரப்பு. அத்தரப்பின்படி இலக்கியம் என்பது மொழியால் உருவாக்கப் படக்கூடிய ஒரு கட்டுமானம். வாழ்க்கையின் நுட்பங்கள்சார்ந்து அதை படிக்க வேண்டும். மானுட உளவியல், உறவுநுட்பங்கள், சமூகவியல் நெருக்கடிகள் மற்றும் ஆன்மீக வினாக்கள் சார்ந்து அதை வாசிக்கவேண்டும். அது வரலாற்றுத்தருணங்கள் சார்ந்து மதிப்பிடப்படவேண்டும். வ.வே.சு.அய்யர், ரா.ஸ்ரீதேசிகன் போன்றவர்கள் அதற்கு முன்னோடிகள் . அதற்கு பிறகு க. நா.சு, சி.சு.செல்லப்பா. அடுத்த தலைமுறையில் சுந்தர ராமசாமி, வெங்கட் சுவாமிநாதன். அதன் பின்னர் வேதசகாயகுமார், ராஜமார்த்தாண்டன். அப்படி ஒரு மரபு இங்கே இருக்கிறது. இங்கே அதுதான் மைய மரபு. இதற்கு மாற்றாகவும் இணையாகவும் வலுவான மரபொன்று இந்தியாவிற்கு வெளியே ஈழத்திலிருந்து கைலாசபதி, சிவத்தம்பி போன்றோரால் எழுதப்பட்டது. அதன் தொடர்ச்சியே எம்.ஏ.நுஃமான். அவருக்குப்பின் அடுத்த தலைமுறையில் ஈழத்து விமர்சனப்பரப்பு முன்செல்லவில்லை. ஆனால் கைலாசபதி முதலியோர் முன்வைத்த முற்போக்கு இலக்கிய விமர்சன மரபுடன் விவாதித்துத் தான் தமிழகக்தின் அழகியல் விமர்சனத்தரப்பு உருவாகியிருக்கிறது. தமிழகத்து முற்போக்கு விமர்சகர்களான சி.கனகசபாபதி முதல் அ.மார்க்ஸ் வரையிலானவர்கள் இன்றைக்கும் கைலாசபதி சிவத்தம்பியைத்தான் முன்னோடிகளாகவும் அடித்தளமாகவும் கொண்டிருக்கிறார்கள். கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோரைப் பற்றி நான் விரிவாக எழுதியிருக்கிறேன்.நான் அழகியல் விமர்சனத்தின் தரப்பைச் சேர்ந்தவன். எதிர்காலத்திலும் இலக்கிய சிந்தனை என்பது இரு பிரிவுகளாகத்தான் இருக்கும். ஒன்று இலக்கியத்தில் அரசியலையும் அது சார்ந்த கருத்தியலையும் முதன்மையாகப் பார்க்கின்ற முற்போக்குப் பார்வை. இன்னொன்று அழகியல் பார்வை. கேள்வி: இலங்கையில் வளர்ந்து வந்த முற்போக்கு விமர்சன மரபானது இலக்கியத்தில் ஏற்படுத்திய கருத்தியல் பாதிப்பும் இடதுசாரித் தத்துவங்கள் சார்ந்து இலக்கியப் படைப்புகளுக்கு போடப்பட்ட நிபந்தனைகளும் இலக்கியத்தை கட்டுப்படுத்தினவா? அந்தகட்டிலிருந்து புலம்பெயர்ந்து சென்றோர் தம்மை விடுவித்துக்கொண்டதனால் தான் அவர்களால் முழுமையான இலக்கியங்களை படைக்க முடிந்தது என்று எடுத்துக் கொள்ளலாமா? பதில்: எழுத்தாளன் என்பவன் அரசியல் செயற்பாட்டாளனின் பினாமி அல்ல. அவன் அரசியல்வாதி அல்ல. அரசியல் சிந்தனையாளன் கூட அல்ல. அவன் அதற்கு ஒரு படி மேல்தான். ஆனால் முற்போக்கு இலக்கிய விமர்சனம் என்ன சொல்லிக் கொண்டு இருக்கிறதென்றால் நீ கட்சியில் ஓர் உறுப்பினராக இரு, அல்லது முற்போக்கு இலக்கிய இயக்கத்தில் ஒரு பகுதியாக இரு. அதற்குமேல் போகாதே. அதை ஏற்பவனே அங்கே இருக்கமுடியும். அவர்களுக்கு அமைப்பு தான் முக்கியம். ஒட்டுமொத்தமான கருத்தியல் இயக்கமே முக்கியம். தனியான பார்வைக்கு இடமில்லை. ஓர் எழுத்தாளன் அவனுடைய அந்தரங்கம் என்ன சொல்கிறதோ அதை எழுதவேண்டும். மாறாக இயக்கம் என்ன சொல்கிறதோ அதையே சொல்ல வேண்டும் என்றால் அவன் எழுதுவதன் தரம் என்ன? என்னைப்பொறுத்தவரை எழுத்தாளன் என்பவன் தன்னுடைய subconscious ஐ எழுதவேண்டியவன். தன் மனதின் அடியில் இருக்கும் சமூகக்கூட்டுமனத்தை அவன் எழுதவேண்டும். அந்த சமூகக்கூட்டுமனத்தின் பிரதிநிதி அவன் அவன் வெளிப்படுத்துவது அவனை அல்ல, அவனுடைய காலகட்டத்தையும் அவனுடைய பண்பாட்டையும்தான். இந்த உணர்வுதான் கம்பனுக்கும் இருந்திருக்கும். அதனால் தான் அவர் ‘சரண் நாங்களே” என்கிறார். இந்த முற்போக்கு விமர்சனம் எழுத்தாளனைச் சிறியவனாக காண்கிறது. அவன belittle செய்கிறது. இங்கே எழுதப்பட்ட முற்போக்கு விமர்சனங்கள் அனைத்தையும் அப்படியே ஒட்டுமொத்தமாக நினைவுகூர்ந்து பாருங்கள். அதில் தொண்ணூறு சதவீதம் எழுத்தாளர்களைக் கண்டிக்கின்றவையாகவே இருக்கும். அல்லது எழுத்தாளரை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்கும் நோக்கம் கொண்டவையாக இருக்கும் எதிரிகள் என நினைக்கும் எழுத்தாளர்களை அவதூறும் வசையும் கொண்டு தாக்குவார்கள். தங்கள் தரப்பு எழுத்தாளர்களை ரொம்பவும் தூக்கி விட்டுவிடக்கூடாது என்கிற கவனத்துடன் இருப்பார்கள். நம் தரப்பை சரியாக சொல்லியிருக்கிறாரா இல்லையா? அது மட்டும் தான் அவர்களின் அக்கறை. ஆகவே முற்போக்கு இலக்கிய தரப்பால் திட்டப்படாத எழுத்தாளர்கள் இருக்கமாட்டார்கள். அவர்களுடைய எதிர்முகாமானாலும் அவர்களின் சொந்த முகமானாலும். ஒரு எழுத்தாளனுக்கு பத்தொன்பது அல்லது இருபது வயதில் Creative thinking வந்துவிடும். அவன் தனக்கே உரிய குரலை முன்வைப்பான். அப்போது அவனை சராசரியாக உள்ள எல்லோரும் சேர்ந்து அடிப்பார்கள், திட்டுவார்கள், நக்கல் பண்ணுவார்கள். ‘நீ என்ன பெரிய ஆளா?’ என்பார்கள். அங்கேதான் அவன் அரசியல்சார்ந்து பேச ஆரம்பிக்கிறான். அந்த இடம் முக்கியமானது. அதுதான் பொறி. அதில் சிக்கக்கூடாது. தன் படைப்பை அவன் எழுதி விட்டால் அரசியல் சார்ந்த எதிர்வினைகளை பொருட்படுத்தாமல் போய்க்கொண்டே இருக்க வேண்டும். ஈழத்தில் விமர்சகர்கள் எல்லாரும் பேராசிரியர்கள். அதிகாரம் கொண்டவர்கள். ஆகவே அங்கே எழுத்தாளர்கள் அவர்களிடம் பணிவாக இருந்தனர். கலாநிதி என்பதெல்லாம் என்ன? சர்வ சாதாரணமான பட்டம் மட்டும்தானே? ஓர் எழுத்தாளனுக்கு இருக்கும் வரலாற்று இடம் அதற்கும் மேலானது. ஓர் எழுத்தாளன் அனைவருக்கும் மேலானவனாக, அனைத்தையும் பார்ப்பவனாக இருக்கவேண்டும். அவன் சிங்களவனாகவோ , தமிழனாகவோ, புலியாகவோ புலி எதிர்ப்பவனாகவோ, முஸ்லிமாகவோ, இந்துவாகவோ இருக்கமுடியாது. அதற்கு மேலே இருக்கவேண்டும். அவன் காலத்தைப் பார்ப்பவனாக இருப்பது அந்நிலையில்தான். விமர்சகன் கீழே இருக்கிறான். அவன் காலத்தின் சிக்கல்களுக்குள் இருக்கிறான். எல்லா விமர்சனங்களும் அந்தந்த காலம்சார்ந்தவை மட்டும்தான். முப்பதாண்டுகளில் எந்த விமர்சனமும் காலாவதியாகிவிடும்.படைப்பு காலம்தாண்டி நிலைகொள்ளும். அந்த உணர்வு எழுத்தாளனுக்கு வேண்டும். கேள்வி: பின்நவீனத்துவம் தனியான முகத்தினை இலக்கியச்சூழலில் மிகத்தீவிரமாக பரப்பியிருக்கிறது. பின்நவீனத்துவம் சார்ந்ந ‘பெருவெளி’ போன்ற தனித்துவமான இதழ்கள் இலங்கைச்சூழலில் வெளிவந்தும் இருக்கின்றன. அவை சார்ந்த விமர்சனங்களும் இங்கு நிரம்பியிருக்கின்றன. பின்நவீனப்பார்வையில் சூழலைக் கட்டுடைத்து, பொதுச் சூழலை மறுத்து, உரையாடலை தொடங்குகின்ற எழுத்துக்களை எப்படிப் பார்க்கிறீர்கள்? பதில்: நான் இதைப் பற்றி நிறையவே பேசியிருக்கிறேன். தமிழில் பின்நவீனத்துவம் பற்றி பேசியவர்களில் பெரும்பாலானவர்களுக்கு பின்நவீனத்துவம் பற்றிய புரிதல் கிடையாது. அவர்களில் பலர் கல்வியாளர்கள். சிலர் எளிமையான இலக்கிய அரசியல் பார்வைகொண்டவர்கள். புதிதாக என்ன இருக்கிறதோ அதை போய் பிடித்துகொள்வது மாத்திரம் தான் அவர்கள் அறிந்தது. எது fashion ஆக இருக்கிறதோ, மேலைநாட்டில் என்னசொல்லப்படுகிறதோ அதையே தாங்களும் பேசவேண்டும் என நினைப்பவர்கள். சிலர் தங்களுக்கென ஓர் இடம் வேண்டும் என்று புதிதாக எதையாவது சொல்லமுற்படுபவர்கள். முறையான முழுமையான புரிதல் இல்லாமல் உதிரிச்செய்திகளாக அறிந்தவற்றைப் பேசி பெரிய குழப்பத்தை இவர்கள் உண்டுபண்ணிவிட்டார்கள். ஐம்பதாண்டு காலம் ஐரோப்பாவில் உருவாகிய ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைப் பார்வையைத்தான் நவீனத்துவம் என்கிறார்கள். நவீனத்துவத்தின் சிந்தனைமுறை என்ன? ஒன்று, எல்லாவற்றையும் global ஆக சொல்ல வேண்டும். பொதுமையான பார்வை நோக்கிச் செல்லவேண்டும். உலகச் சராசரி வேண்டும். இரண்டு, தர்க்கபூர்வ அணுகுமுறை. உணர்வுகளையும் கற்பனைகளையும்கூட தர்க்கபூர்வமாகவும் புறவயமாகவும் சொல்லவேண்டும். அறிவியல் பூர்வமான அணுகுமுறை வேண்டும். மூன்று, இலக்கிய வடிவம் என்பது கச்சிதமானதாகவும் சரிவிகிதத்தன்மை கொண்டதாகவும் இருக்கவேண்டும். வடிவ ஒருமையே இலக்கியப்படைப்பின் அழகியல்.தமிழில் புதுமைப்பித்தன் முதல் சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் வரை அனைத்து படைப்பாளிகளிலும் நவீனத்துவ அழகியலே உள்ளது. அந்த நவீனத்துவப் போக்குக்கு எதிர்ப்பாக, அதற்குப்பிந்தையதாக உருவான சிந்தனைப்போக்கையே பின்நவீனத்துவம் என்கிறோம். அது ஒரு குறிப்பிட்ட கருத்துநிலை அல்ல. ஒரு குறிப்பிட்ட அழகியல் அல்ல. ஒரு குறிப்பிட்ட அரசியலும் அல்ல. நவீனத்துவத்தைக் கடந்த எல்லாமே பின்நவீனத்துவம்தான். அது ஒரு பொதுப்போக்கு. ஒரு டிரெண்ட். நவீனத்துவ காலகட்டத்தின் அடிப்படை என்பது அறிவியல்தான். அறிவியல் மதத்தின் நம்பிக்கைகளில் இருந்து மனிதர்களை விடுவித்தது. அதன்பின் அதுவே ஒரு நவீன மதம் போல ஆகியது. அது எல்லாவற்றையும் புறவயமாக வரையறை செய்ய முயன்றது. அதன் விளைவாக அதீதநிலைகளை மறுத்தது. மீறல்களை மறுத்தது. உன்னதங்களை மறுத்தது. மனிதனின் கீழ்மைகள், உச்சங்கள் ஆகியவற்றை பேசாவிட்டால் கலை இல்லை. மீறல்கள் வழியாகவே கலையும் இலக்கியமும் சிந்தனையும் முன்னகர்கின்றன. ஆகவே அறிவியலையும் அதை அடிப்படையாகக்கொண்ட நவீனத்துவத்தையும் மறுத்து பின்நவீனத்துவம் எழுந்தது. எந்த ஓர் இறுக்கமான கட்டமைப்பும் மையம் கொண்டிருக்கும். மையம் அதிகாரமாக மாறியிருக்கும். அறிவியலும் அவ்வாறு ஓர் இறுக்கமான அமைப்பாகவும் மையமான அதிகாரம் கொண்டதாகவும் ஆகியது. அறிவியலை அடிப்படையாகக்கொண்ட நவீனத்துவத்திற்கும் அவ்வியல்புகள் உருவாயின. பின்நவீனத்துவம் என்பது மையம் சார்ந்த சிந்தனைகளை மறுப்பது. விளிம்புகள், சிறு வட்டாரங்கள் ஆகியவற்றை கருத்தில்கொள்வது. அதாவது பின்நவீனத்துவம். நவீனத்துவத்தின் மூன்று அடிப்படைகளுக்கும் எதிரானது, அவற்றைக் கடந்துசெல்வது அது பின்நவீனத்துவம் என்பது ஆபாசமாகவோ கலகத்தன்மைகொண்டதாகவோ இருக்க வேண்டிய அவசியம் கிடையாது.அது சிதறுண்டதாகவோ வடிவற்றதாகவோ இருந்தாகவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. ஐரோப்பாவில் உருவாகும் பின்நவீனத்துவம் அப்படியே இந்தியாவுக்கு வரவேண்டிய அவசியம் என்ன? இந்தியாவில் இந்தியாவுக்கான பின்நவீனத்துவமே உருவாகமுடியும். நவீனத்துவம் இந்தியாவில் சிந்தனையிலும் கலையிலும் எவற்றை எல்லாம் தவிர்த்ததோ, எதையெல்லாம் சுருக்கியதோ அதையெல்லாம் சென்றடைவதும் பின்நவீனத்துவம்தான். இந்தியாவின் புராணமரபு, நாட்டார் மரபு, செவ்வியல்மரபு எல்லாவற்றையும் தள்ளி வைத்து விட்டு ஒரு சமநிலையான கூறுமுறையை இங்கே நவீனத்துவம் உருவாக்கியது. புறவயமான அறிவியல் பார்வையால் அவற்றை எல்லாம் ஒடுக்கியது. அவை எல்லாவற்றையும் திறந்து விடுவது பின்நவீனத்துவம்தான். வரலாற்றையும் புராணத்தையும் மறுஆக்கம் செய்வதும், புதியவரலாறுகளை கற்பிதம் செய்வதும் பின்நவீனத்துவம்தான். ஐரோப்பியத் தத்துவ சிந்தனையில் லாஜிக்கல் பாஸிட்டிவிசம் என்னும் புறவயவாதம் ஏ.ஜே.அயர் போன்றவர்களால் முன்வைக்கப்பட்டது. அதுதான் நவீனத்துவத்தின் தத்துவப் பார்வை. தூய தர்க்கத்தை, புறவய அணுகுமுறையை முன்வைப்பது அது. அது இலட்சியவாதம், மீபொருண்மைவாதம் எல்லாவற்றையும் நிராகரித்தது. எல்லாவகையான கனவுகளையும் நிராகரித்தது. அதை பின்நவீனத்துவம் நிராகரிக்கவேண்டியிருந்தது. ஏனென்றால் லாஜிக்கல் பாஸிட்டிவிசம் என்பது ஒரு நிராகரிப்பே ஒழிய அதனால் உருவாக்கப்படுவது என ஒன்று இல்லை. பின்நவீனத்துவம் இன்று பின்னகர்ந்துவிட்டது. அதற்கு மேலே புதிய சிந்தனைகள் வந்துவிட்டன. நவசரித்திரவாதமும் ஏற்பியல் கொள்கைகளும் இன்று பேசப்படுகின்றன. பின்நவீனத்துவம் இலக்கியத்தில் இருந்த நவீனத்துவ இறுக்கத்தை உடைக்க எழுந்த ஓர் அலை. உடைத்த பின் அதன் பணிமுடிவடைந்தது. இன்றைய சவால்களே வேறு. இதுதான் பின்நவீனத்துவம் என்ற பெயரில் ஐரோப்பாவின் பின்நவீனத்துவ இலக்கியப்படைப்புகளை நகல்செய்வதோ அங்குள்ள பின்நவீனத்துவ சிந்தனையாளர்கள் சொன்ன கருத்துக்களை நாமும் சொல்லிக்கொண்டிருப்பதோ அபத்தமானது. கேள்வி: எழுத்தாளர்கள் சிலர் மிக சொற்ப காலத்துக்குள் ஒரு படைப்புக்கான தூண்டலைக் கொண்டு எழுதிவிட்டு எழுத்துத் துறையில் இருந்து ஒதுங்கிக் கொள்கிறா‌ர்கள். தொடர்ச்சியாக இயங்குபவர்களுடைய காத்திரமற்ற படைப்புகளை மிகுதியாக பேசுகிறார்கள். அபூர்வமாக எழுதிய நல்ல எழுத்தாளர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். இந்நிலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பதில்: இலங்கையில் மிக அதிகமான படைப்புகளை கொண்டு வந்தவர் செங்கை ஆழியான் தான் இல்லையா? இன்றைக்கு ஈழ இலக்கியத்தில் அவருக்கு எந்த இடமும் கிடையாது. நிறைய எழுதினால் தான் ஒருஎழுத்தாளரை முக்கியமானவராக கருதுவார்கள் என்றால் அவர்தானே பேசப்பட்டிருக்கவேண்டும். ஆகவே அதிகமாக எழுதினால் மோசமான படைப்புகள் பேசப்படும் என்பது சரியல்ல. அதேசமயம் தரமான எழுத்து குறைவாகவே எழுதப்படும் என்பதும் அபத்தமானது. குறைவாக எழுதியமையாலேயே ஓர் எழுத்து தரமானது என்று சொல்வது அறிவின்மையே அன்றி வேறல்ல. உலக எழுத்தாளர்களில் மாஸ்டர்ஸ் என்று சொல்லப்படக்கூடியவர்கள் எல்லாருமே நிறைய எழுதியவர்கள் தான். டால்ஸ்டாய், டாஸ்டாயெவ்ஸ்கி, பால்ஸாக், தாமஸ் மன் எல்லாருகே எழுதிக்குவித்தவர்கள். நீங்கள் சிலபேர் எழுத்தை விட்டே போனார்கள் என்று சொல்கிறீர்கள் இல்லையா? அவர்களுக்கு வாழ்க்கைப்பிரச்சினைகள் இருந்ததனால் எழுதாமல் ஆனார்கள் என்கிறீர்கள். எல்லா வாழ்க்கைப்பிரச்சினையும் அசோகமித்திரனுக்கும் இருந்தது. எழுதுவதற்கு தாள் இல்லாமல் அச்சகத்தில் வெட்டிவீசப்பட்ட தாள்களில் எழுதினார். பூங்காக்களில் கூட்டம் வருவதற்கு முன் காலையில் போய் அமர்ந்து எழுதினார். தன்னுடைய கடைசித் துளி creativity வரைக்கும் தமிழுக்கு கொடுத்து விட்டுபோயிருக்கிறார். அதைத் தானே நாம் மதிக்க வேண்டும். எழுதும் அளவுக்கு தம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள தெரியாதவர்கள், எழுத்தில் மூழ்கும் அளவுக்கு அர்ப்பணிப்பு இல்லாதவர்கள் கொஞ்சமாக எழுதிவிட்டு காணாமலாகிவிடுவார்கள். உண்மையில் எழுத்தைவிட அவர்களுக்கு வேறேதோ முக்கியமாக இருந்திருக்கும். ஆகவே எழுத்தை கைவிட்டிருப்பார்கள். தொழில், வேலை, வருமானம், குடும்பம் என்று எவ்வளவோ இருக்கும். அதையெல்லாம் அடைந்தபின் திரும்பி வந்து தாங்கள் எழுதிய உதிர்ப்படைப்புகளுக்கு அங்கீகாரம் வேண்டும் என்று கோருவார்கள். அசோகமித்திரன் நிறைய எழுதியவர். வாழ்க்கையையே இலக்கியத்துக்காக அளித்தவர். அவருக்கு அளிக்கப்படும் அங்கீகாரம் தங்களுக்கும் வேண்டும் என்பார்கள். குறைவாக எழுதியதை பெரிய தகுதியாகச் சொல்பவர்கள் இவர்கள்தான். தமிழில் மௌனி, சம்பத் எல்லாம் குறைவாக எழுதியவர்கள்தான். அவர்களின் எழுத்து அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. குறைவாக எழுதியதனால் எவரும் புறக்கணிக்கப்பட்டதில்லை. நிறைய எழுதியதனால் எவரும் ஏற்கப்பட்டதுமில்லை. கேள்வி: கவிதை என்பது மீமொழியாலானது. மொழிக்குள் செயல்படும் தனிமொழி என்றுசொல்லியிருக்கிறீர்கள். தமிழ் பரப்பில் இன்று வருகிற ‘பாரம் குறைந்த’ கவிதைகள் மொழிக்குள் செயல்படும் தனிமொழி என்னும் அம்சம் கொண்டிருக்காமல் பொதுமொழியிலேயே உள்ளன. அவை மீமொழி எனும் விஷயத்தில் குறைவான படிநிலையோடு வெளிவருவது போன்று தோன்றுகிறது. அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பதில்: கவிதை எப்போதுமே மீமொழியில்தான் இயங்குகிறது. ஆகவேதான் தமிழ் தெரிந்தால் மட்டும் கவிதையை வாசிக்கமுடிவதில்லை. அந்த மீமொழியும் தெரிந்தால்தான் வாசிக்கமுடிகிறது. இந்த மீமொழி ஒரு சூழலில் கவிஞர்களும் கவிதை வாசகர்களும்சேர்ந்து உருவாக்கிக்கொண்டே இருப்பது. கவிஞன் எழுதுகிறான். கவியுடன் வாசகன் சேர்ந்துகொள்கிறான். கவிஞன் ஒன்றை சொல்லி பலவற்றை உணர்த்துகிறான். அவன் சொன்ன சொற்களிலிருந்து கற்பனையால் முன்னகர்ந்து உணர்த்தப்படுவனற்றை வாசகன் சென்றடைகிறான். அந்த உணர்த்தப்படும் பொருளைத்தான் மீமொழி என்கிறோம். நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் என்னும் பாரதி வரி உதாரணம். நெஞ்சில் எப்படி பூ மலரும்? அது எப்படி கனல் மணக்கும்? ஆனால் நாம் அந்த சொற்களுக்கு வேறு பொருள் அளிக்கிறோம். அதுதான் மீமொழி. சிட்டுக்குருவி வீட்டுக்குள் வருவதைப் பற்றி தேவதேவன் ஒரு கவிதை எழுதினார். ஒரு சிறு குருவி.அந்த குருவி வானத்தில்பறந்தபடி கீழே பார்க்கிறது. “அங்கிருந்தும் தவ்வி பாய்கிறது மரணமற்ற பெருவெலளிக்கடலை நோக்கி” என்று அவர் எழுதுகிறார். குருவி சென்று பறக்கும் வானம் மரணமற்ற பெருவெளி என்று அவர் சொல்லும்போது அவர் என்ன சொல்கிறார் என வாசகனுக்கு புரிகிறதே, அதுதான் மீமொழி. ஆனால் மீமொழியின் இயல்புகள் மாறிக்கொண்டே இருக்கும். ஒருகாலகட்டத்தில் அணிகளால் ஆனது கவிமொழி. மலர்விழிகள், நிலவுமுகம் என்றெல்லாம் சொன்னார்கள். அடுத்து படிமங்கள் வந்தன. தேவதேவனின் அந்தக்குருவி ஒரு வெறும் குருவி அல்ல, படிமம் என வாசகனுக்கு தெரியும். அடுத்தபடியாக நுண் சித்தரிப்பு வந்தது. ஒரு பைத்தியம் அதிகாலையில் டீ வாங்கிக்கொண்டு செல்வதைப் பற்றிய இசையின் கவிதை நுண்சித்தரிப்புதான். அடுத்தபடியாக நேரடியான கவிதை, பிளெயின் பொயட்ரி என்னும் வடிவம் வருகிறது. தேவதேவனின் ‘யாரோ ஒருவன் என்று எப்படிச் சொல்வேன்” ஒரு நேரடியான கூற்று. தெருவில் தூங்குபவனை, கைவிடப்பட்ட பைத்தியத்தை யாரோ ஒருவன் என எப்படிச் சொல்வேன் என்று கவிஞனின் உளம் நெகிழ்கையில் அது கவிதையாகிறது. இந்தக் கவிதைகள் எல்லாம் நேரடியான மொழியில் அமைந்திருக்கலாம். ஆனால் நேரடியான பொருள் கொண்டவை அல்ல. அந்த மேலதிகப்பொருளையே நாம் மீமொழி என்கிறோம். கவிதை அந்த மீமொழியாலான உரையாடலுக்காகவே முயல்கிறது. அதை புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. இன்னும் முன்னால் செல்லலாம். மீண்டும் படிமம் வந்தாலும் வரலாம். யார் கண்டார்கள்? அணிகளும்கூட வரலாம். அடுத்தது என்ன என்று சொல்லும் இடத்தில் விமர்சனம் இருக்க முடியாது. என்ன நிகழ்கிறது, ஏன் இப்படி வருகிறது என்று தான் விமர்சனம் பார்க்க வேண்டும். எனக்கு ஒருஅவதானிப்பு இருக்கிறது. (Parallel editing என்று சொல்லப்படும் சினிமா ஒளிப்படத்தொகுப்பு முறையால் வந்தபின் காட்சி ஊடகம் ஏராளமான படிமங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. ஆகவே கவிதை படிமங்களைக் கைவிட்டு வேறு வகையான கவிதை முறைகளுக்குச் செல்கிறது. கேள்வி: நீங்கள் கூறிய தேவதேவனின் குருவி பற்றிய கவிதைகளை Robert Frost இன் A Minor Bird உடன் ஒப்பிடக்கூடியதாய் இருப்பதற்கு காரணம் இரண்டும் பிரஸ்தாபிக்கும் கருத்துகள் ஒன்று என்பதால்தான். ஆனால் வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறு கவிஞர்களால் எழுதப்பட்ட கவிதைகள் எதேச்சையாக உருவாகும் ஒப்பிடக்கூடிய படைப்புகளாக இலக்கியத்தில் எந்த அளவு முக்கியத்துவம் பெறுகின்றன? பதில்: இலக்கியத்தில் கவிதையே உச்சத்தில் இருப்பது. இலக்கியம் என்ற கோபுரத்தின் உச்சிநுனி அது. அங்கே குறைவாகவே இடமிருக்கிறது. முற்றிலும் புதிய விஷயங்களை கவிதை கையாள முடியாது. தேவதேவனோ ரோபர்ட் பொரஸ்டோ சொல்லிக்காட்டிய அவ்வளவு தான் கவிதையால் எழுத முடியும். சங்க இலக்கியத்திலிருந்து இன்று வரைக்கும் கிட்டத்தட்ட ஒரு சிறியவட்டத்தினுள்ளே தான் கவிதைகள் எழுதப்படுகின்றன. ஆகவே எந்த இரண்டு கவிஞர்களை எடுத்து பார்த்தாலும் நிறைய அம்சங்கள்பொதுவாகத் தான் இருக்கும். பேசு பொருள்கள் மிகக்குறைவானவை. படிமங்கள் அதைவிடக்குறைவானவை. மழையை வெயிலை பூக்களைப் பற்றிபேசுவார்கள்.ஏனென்றால் அவ்வளவு தான் கவிதைக்குரிய களம். ஆனால் ஒவ்வொருமுறையும் புதிதாகவும் தோன்றும். கூறுமுறையால், சொற்சேர்க்கையால், பார்வையால். அதுதான் கவிதையின் மாயம். அதற்குமேல் கவிஞர்களுக்கு சில பொதுத்தன்மைகள் சிந்தனையிலிருந்து உருவாகி வரும். அமெரிக்காவில் உருவான நவீன ஆன்மீகம் என்பது ஆழ்நிலைவாதம் [Transcendentalism] மற்றும் இயற்கை வாதம் [Naturalism] சார்ந்தது. இயற்கையை கடவுளின் இடத்திற்கு வைக்கக் கூடிய ஒரு பார்வை அது. இயற்கையில் தெய்வத்தின் செய்திஅடங்கியிருக்கிறது என நினைகும் பார்வை. தோரோ, எமர்ஸன் ஆகியோர் அதன் முதன்மைச் சிந்தனையாளர்கள். ராபர்ட் ஃப்ரோஸ்ட் அந்தச் சிந்தனையைச் சேர்ந்தவர். தேவதேவனும் தோராவால் மிகவும் கவரப்பட்டவர். ஆகவே அவர்கள் இரண்டு பேருக்கும் இடையில் அந்த ஒற்றுமை இருக்கிறது. கேள்வி: பாரதி பேசிய கவிதையின் புள்ளிகளை தாண்டி பாரதியை விஞ்சி பேசிய ஆளுமைகள் கவனிக்கப்பட்டார்களா? பதில்: பாரதி வந்து நூறு ஆண்டுகளைத் தாண்டி விட்டது. ஆக இன்றைக்கு இன்னொருவரை சொல்லும் போது அவர் காலம்கடந்து நிற்பாரா என்ற அடிப்படையிலேயே நாம் பேசமுடியும். தமிழின் மகாகவிகளின் வரிசையில் வைத்து பார்த்தால் பாரதிக்கு அங்கே இடமில்லை. இந்தியாவில் நவீனக் கவிஞர்களிலேயே பாரதி தாகூரைவிட குறைவான கவிஞர்தான் என்பது என்னுடைய கணிப்பு. ஆனால் இதை சொன்னதும் தமிழ் பண்பாட்டு மேல் செலுத்தப்படும் அவதூறு போல எடுத்துக்கொண்டு இங்கே எழுதியிருக்கிறார்கள். இந்த மதிப்பீட்டை முன்வைத்தாலே கண்ணீர் விடக்கூடிய ஆட்கள் இருக்கிறார்கள். பாரதி மரபுக்கவிதை மறைந்து நவீனக்கவிதை தோன்றிய யுகசந்தியில் வந்தவர். மரபிலக்கியத்தில் இருந்து நவீன இலக்கியம் தோன்றும்போது எழுதியவர். ஆகவே அவர் பலவகையில் முன்னோடி. அவருடைய வசனகவிதைதான் புதுக்கவிதையின் தொடக்கம். ஆனால் அது புதிய கவிதை அல்ல. உபநிடதங்களை ஒட்டிய அதே பார்வைதான் அதிலும் உள்ளது. உரைநடை இலக்கியத்தில் பாரதியின் சாதனை மிகக்குறைவானது. அவருடைய சிறுகதைகளை தாகூரின் சிறுகதைகளுடன் ஒப்பிட்டுப்பாருங்கள். தாகூர் எழுதியவை நவீனச் சிறுகதைகள். பாரதி எழுதியவை பழையபாணி கதைச்சுருக்கங்கள் பாரதி பிரெஞ்சு கற்றவர். மாப்பசானை, விக்டர் ஹ்யூகோவை எல்லாம் வாசித்திருக்கிறாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது. தமிழில் நவீன இதழியல் மொழியை உருவாக்கிய சாதனை பாரதியுடையது என்று சொல்லலாம். மரபான கவிதை பாணியிலேயே அவருடைய நல்ல கவிதைகள் உள்ளன. ஆனால் பாரதியின் பெரும்பாலான மரபுக்கவிதைகள்கூட வழக்கமான செய்யுட்களும் இசைப்பாடல்களும்தான். தூயகவிதை குறைவே. பாரதிக்குப்பின்னரே தமிழில் நவீனகவிதை இயக்கம் ஆரம்பித்தது. என்னுடைய பார்வையில் இரண்டு பேர் அதில் சாதனையாளர்கள். ஒருவர் பிரமிள்.இன்னொருவர் தேவதேவன். கவிதை மட்டுமே என எடுத்துப் பார்த்தால் பாரதியை விட பிரமிள் அதிகமான சிறந்த கவிதைகளை எழுதியிருக்கிறார். அவர்கள் இருவரைவிடவும் தேவதேவனின் கவியுலகம் ஆழமும் விரிவும் கொண்டது. கேள்வி: அறிவியல் புனைவு சார்ந்து தமிழகச் சூழலில் அதிகம் இயங்கியவர்களில் நீங்கள் முக்கியமானவர். இப்போது அறிவியல் புனைவு தமிழில் எந்த நிலையை ஏற்படுத்திஇருக்கிறது. அதன் வளர்ச்சி எப்பேர்ப்பட்டது என்பது சம்பந்தமாக கூட உங்கள் தளத்தில் நிறையவே விவாதங்களும் எழுந்திருக்கின்றன. அறிவியல் புனைகதை உருவான காலத்தில் இருந்து அவை இப்போது சென்றடைந்திருக்கிற படிநிலை எப்படிப்பட்டது? பதில்: அறிவியல் கதைகள் அடிப்படையில் மிகுபுனைவுத்தன்மை கொண்டவை. எழுத்தாளன் உருவாக்கும் நவீனக்கனவுகள் அவை. மனிதனின் அகவயமான தேடல்களை, அவற்றின் கற்பனைவீச்சை யதார்த்த தளத்தில் எழுதிவிடமுடியாது. அதற்கு மிகுபுனைவு அதாவது ஃபேண்டஸி தேவை. மிகுபுனைவு நிகழ்வுகளை எல்லாம் குறியீடுகளாக ஆக்கிக்கொள்ள முடியும். மிகுபுனைவு வரலாற்றையும் தொன்மங்களையும் எல்லாம் பயன்படுத்திக் கொள்ளும். அவ்வாறே அறிவியலை பயன்படுத்திக் கொண்டால் அதுவே அறிவியல்புனைவு. அறிவியலை படிமங்களுக்காக பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையையும் மனித உள்ளத்தையும் சொல்லக் கூடிய எழுத்து முறையைத்தான் அறிவியல் புனைவு என்று வரையறை செய்யலாம். தமிழில் ஏன் அறிவியல் புனைவு வலுவாக வரவில்லை? அதற்குரிய தடை என்ன என்று பார்த்தால் ஒன்று நாம் தமிழில் அறிவியல் படிக்கவில்லை. அறிவியல் கலைச் சொற்கள் தமிழில் மிகக் குறைவு. அறிவியலை தமிழில் யோசிக்கிற பழக்கம் கிடையாது. அப்படி இருக்கையில் தமிழில் அறிவியல்புனைவுகள் உருவாக இயலாது. இன்னொன்று, வாழ்க்கையின் கேள்விகளையும் ஆன்மிகத்தேடலையும் அறிவியலைப் பயன்படுத்திக்கொண்டு யோசிக்கும் மனநிலை. நமக்கு அது இல்லை. இங்கே நாம் அறிவியல் என்றாலே தொழில்நுட்பம் என்றுதான் அறிந்திருக்கிறோம். தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டு அதில் வேலைசெய்கிறோம். அதை நுகர்கிறோம். அறிவியல்கொள்கைகளை புரிந்துகொண்டு அதைச்சார்ந்து வாழ்க்கையைப்பற்றி யோசிப்பதில்லை திண்ணை இதழில் அறிவியல்புனைகதைகளுக்காக ஒரு போட்டி வைத்தனர். அதன் முன்னோட்டமாக நான் சில கதைகளை எழுதினேன். அந்தக் கதைகள் விசும்பு என்ற தொகுப்பாக வெளிவந்தன. தொழில்நுட்பம் அறிவியல் அல்ல. தொழில்நுட்ப விந்தைகளை வழக்கமான கதைக்குள் புகுத்தினால் அது அறிவியல் புனைகதை அல்ல. அடிப்படையான கேள்விகளையே எழுதவேண்டும், அதற்கு அறிவியலை கையாளவேண்டும் என்று நான் சொன்னேன். உயிர் என்றால் என்ன?, காலம் என்றால் என்ன??, பிரபஞ்சம் என்றால் என்ன? என்பவை போன்ற வினாக்களை எழுப்பிக்கொள்வதே அறிவியல் புனைகதைகளின் நோக்கம் என்றேன். என் கதைகளை அந்நோக்கிலேயே எழுதினேன். அறிவியல்புனைவு என்றால் உடனே வேற்றுக்கோளங்கள், ரோபோக்கள் என்று போகவேண்டியதில்லை. நம் மரபான அறிவியலைக்கூட எடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னேன். அதன் பின்னர் அறிவியல் புனைக்கதைகளில் ஒரு மாற்றம் உருவாகியது. தீவிரமாக எழுதக்கூடிய இளைஞர்கள் உள்ளே நுழைந்தார்கள். அதற்கு காரணம் அவர்கள் பின்புலம்தான். இப்போது அறிவியல்புனைவை சுசித்ரா எழுதியிருக்கிறாரென்றால் அவர் முறையாக அறிவியல் கற்ற ஓர் அறிவியல் ஆய்வாளர் என்பதே முதன்மைக்காரணம். சுசித்ரா உயிரியலாளர். சுசித்ரா எழுத வரும் போது உயிர் என்றால் என்ன என்னும் வினாவையே புனைவில் எழுப்பிக்கொள்கிறார்கள் . அரூ என்கிற இணையத்தளம் தமிழ் அறிவியல் புனைகதையில் ஒரு மிக்கியமான பாய்ச்சலை நடத்தியிருக்கிறது. ஆனால் இன்று அறிவியலை எழுதும்போது அதற்கான தனிமொழியை இங்கு உருவாக்க வேண்டியிருக்கிறது. இங்கே அன்றாடத்தை எழுதக்கூடிய மொழி உள்ளது. அறிவியலை அதில் எழுதமுடியாது. இங்கே ஏற்கனவே எழுதப்பட்ட தத்துவ நூல்களிலிருந்து அறிவியல் மொழியை உருவாக்கவேண்டும். மிகுகற்பனைகளை எழுதிய புனைகதைகளில் இருந்து அந்த மொழியை உருவாக்கவேண்டும். அதற்கு இன்றைக்கு அதிக வாசகர்கள் கிடையாது. தத்துவ அறிமுகம் உடையவர்களே அதன் வாசகர்கள். பொதுவான இலக்கியவாசகர்களும் இலக்கியப்படைப்பாளிகளும் கூட அந்த நவீன அறிவியல்கதைகளை புரிந்துகொள்ள முடியாமல் குழம்பிப்போகிறார்கள். உலக இலக்கியத்தில் அறிவியல்புனைவுக்கு மூன்று படிநிலைகள் உள்ளன. ஆரம்பகால அறிவியல்புனைகதைகள் அறிவியலில் உள்ள ஆச்சரியங்களை பயன்படுத்திக்கொண்டு எழுதப்பட்டவை. உதாரணம் ஜூல்ஸ் வேர்ன் போன்றவர்கள். அடுத்த கட்ட அறிவியல்புனைகதைகள் அறிவியலில் இருக்கக்கூடிய சில உருவகங்களை இலக்கிய படிமங்களாக மாற்றிக்கொண்டவை. உதாரணம் ஐசக் அஸிமோவின் ரோபோ அல்லது எந்திரன் பற்றிய கதைகள். அவர் ரோபோ பற்றி எழுதியவை எல்லாம் மனிதனின் சாத்தியக்கூறுகள் பற்றிய கதைகள்தான். மூன்றாம்கட்டக் கதைகள். Robert Silverberg போன்றவர்கள் எழுதியவை. இக்காலகட்டத்தில் தத்துவம் கேட்ட அடிப்படை கேள்விகளை அறிவியலைக் கொண்டு ஆராய்ந்தனர். உதாரணமாக நான் இந்த பிரபஞ்சத்தை பார்க்கிறேன். அது அறிதல் மட்டும் தான். உண்மையில் அறிபடுபொருள் என் அறிதலுக்கு அப்பால் என்னவாக இருக்கிறது? அங்கே ஏதாவது ஒன்று உண்மையில் இருக்குமா? இந்த மாதிரியான அடிப்படை கேள்விகளை இன்றைய அறிவியல்புனைவுகள் எழுப்பிக் கொள்கின்றன. ஒருகதை. உயிர்த்துயில் [ஹைபர்னேஷன்] கொள்ளச்செய்யும் என்ஸைம்களை பிரித்து எடுத்துவிடுகிறார்கள். அவற்றை கைதிகளுக்குச் செலுத்துகிறார்கள். ஆயுள்தண்டனைக் கைதிக்கு பத்துமடங்கு அளிக்கிறார்கள். அவருடைய உடல் இயக்கம் பத்துமடங்கு மெதுவாக ஆகிறது. அவருடைய காலமும் பத்துமடங்கு மெதுவானது. இன்னொருவருக்கு இரண்டு மடங்கு அளிக்கிறார்கள். அவருடைய காலம் வேறு. இப்படி ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு காலத்தில் இருக்கிறான். அப்படியென்றால் காலமென்பது என்ன? இதைப்போன்ற ஆழ்ந்த வினாக்களுடன் அறிவியல்புனைவுகள் வரவேண்டியிருக்கிறது. கேள்வி: மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் ஏராளமாக வெளிவந்திருப்பதை பார்க்கிறோம். மொழிபெயர்ப்பு இலக்கியம் மீதான ஒரு கவனமும் இங்கு உருவாகி இருக்கிறது. மொழிபெயர்ப்புப் படைப்புகள் சரியானபடி செய்யப்பட்டிருக்கின்றனவா? மொழிபெயர்ப்புச்சூழல்களில் இருக்கின்ற குறைபாடுகளையும், அதற்கான செல்வழிகளையும் எப்படி பார்க்கிறீர்கள்? பதில்: டால்ஸ்டாயின் படைப்புகளை முதலில் ஆங்கிலத்துக்கும், ஐரோப்பிய மொழிகளுக்கும் சென்றும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அவை ரஷ்யாவுக்கு தூதர்களாகச் சென்ற ஐரோப்பியர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டவை. வரிக்கு வரி அசலுடன் ஒப்பிடத்தக்கவை. ஆனால் கான்ஸ்டென்ஸ் கார்னெட் [Constance Clara Garnett] அவரை மொழியாக்கம் செய்தபோது அவர் உலகம் முழுக்கச் சென்று சேர்ந்தார். கார்னெட் மூலத்துக்குச் சரியாக மொழியாக்கம் செய்யவில்லை. நிறைய பகுதிகளை விட்டுவிட்டே மொழியாக்கம் செய்தார். இன்று சரியான மொழியாக்கங்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் கார்னெட்டின் மொழியாக்கம் ஆங்கிலத்தில் அழகான நடையில் இருந்தது. சரளமாக வாசிக்க வைத்தது. உணர்ச்சிகளை கொண்டுசென்று வாசகர்களிடம் சேர்த்தது. நமக்கு அத்தகைய மொழியாக்கங்களே தேவை. இன்றைக்கு இரண்டு வகை மொழியாக்கங்கள் வந்துகொண்டிருக்கின்றன. மூலத்துக்கு விசுவாசமான, ஆனால் வாசிக்கமுடியாத மொழியாக்கங்கள். மூலத்தை நமக்கு அணுக்கமாக ஆக்கும் மொழியாக்கங்கள், ரஷ்ய ஆக்கங்களுக்கு எம்.ஏ.சுசீலா, புவியரசு, நா.தர்மராஜன் போன்றவர்களின் மொழியாக்கங்கள் சிறப்பானவை. சுகுமாரன் மொழியாக்கமும் நன்று. மலையாளத்திலிருந்து குளச்சல் யூசுப், யூமா வாசுகி , நிர்மால்யா மொழியாக்கங்கள் சிறந்தவை. மொழியாக்கங்கள் உருவாக்கும் இலக்கியப் பாதிப்பு ரொம்ப முக்கியமானது. நம்முடைய அக மொழியை அவை கட்டமைக்கின்றன. நம் புனைவுமொழியே ஆரம்பகாலத்தில் த.நா.குமாரசாமி போன்றவர்கள் மொழியாக்கம் செய்த வங்கநூல்கள் வழியாகவே உருவானது. அத்துடன் நாம் மூலத்தில் வாசித்த ஒரு படைப்பை மீண்டும் மொழியாக்கத்தில் வாசிக்கையில் முற்றிலும் புதிய அனுபவத்தை அடைகிறோம். என்னுடைய பத்தொன்பது வயதில் வாசித்த மேரி கெரெல்லியின் மாஸ்டர்கிறிஸ்டியன் நாவலை இன்று சுபஶ்ரீ தமிழில் மொழிபெயர்க்கிறார். அவர்கள் ஏறத்தாழ ஒரு நூறு பக்க அளவு மொழிபெயர்த்ததை படிக்க கிடைத்தது. முதல் முறையாக ஆங்கிலத்தில் படிக்கும் போது வாசித்ததை விட பெரிய அனுபவமாக அமைந்தது. காரணம் அது இப்போது என்னுடைய மொழியில் இருக்கிறது.என்னதான் இருந்தாலும், என்மொழியில வந்தால்தான் நான் முழுதாக படிக்க முடியும். இன்னொரு மொழி, இன்னொரு மொழிதான். தன்னால் ஆங்கிலத்திலும் முழுமையாக உணர்ந்து படிக்க முடியுமென்று ஒரு தமிழர் சொன்னால், எனக்கு அதில் சந்தேகம்தான். அல்லது என்னுடைய மனநிலை அப்படியாக உள்ளது. ஆகவே, உலக இலக்கியங்கள் அனைத்தும் தமிழில் வரக்கூடியகாலம் வரும்போதுதான் தமிழ் வாழும் என்று சொல்வேன். தமிழில் ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கை வரலாற்றின் மொழிபெயர்ப்பு வந்தது. சேப்பியன்ஸ் மனித குல வரலாற்றை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். அத்தகைய நல்ல மொழியில்அமைந்த மொழிபெயர்ப்புகளை பற்றி நாம் இன்னும் அதிகமாக பேசவேண்டிய சூழல் உள்ளது. வெறும் பத்துபக்கத்துக்கு மேல படிக்க முடியாத நிலையில் உள்ள மொழிபெயர்ப்புகள் பயனற்றவை. பெரும்பாலும் மொழிச்சிடுக்குகளால் அப்படி ஆகிறது. ஆகவே, ஒரு மொழியாக்க நூலை படித்தால் இதை படிக்கமுடியும் என்னும் உறுதிப்பாட்டை நாம் சகவாசகனுக்கு கொடுக்கவேண்டிய அவசியம் உள்ளது. கேள்வி: நீங்கள் வாசித்ததன் அடிப்படையில், மின் இதழ்களினுடைய வருகை இலக்கியச் சூழலில், எவ்வகையான ஒரு போக்கை ஏற்படுத்தி இருக்கிறது? பதில்: இணைய பத்திரிகை என்னும் வடிவம் பத்திரிகை நடத்த தேவையான மிகப்பெரிய சுமைகளை இல்லாமல்செய்திருக்கிறது. சொல்புதிது என்ற பத்திரிகையை நான் நடத்திவந்தேன். முந்தைய இதழ் விற்ற காசை விற்பனையாளர்களிடமிருந்து வாங்கிச் சேர்த்து எடுப்பது என்பதே பெரும் சவால். பிறகு மேலும் கொஞ்சம்பணம் சேர்த்து , பின் படைப்புகளை சேகரித்து இதழை தயாரிக்கவேண்டும். படைப்புகளைச் செப்பனிட்டு, பிழைபார்த்து அச்சிட்டு எடுத்து விலாசம் ஒட்டி அனுப்பவேண்டும். விலாசம் ஒட்டி அனுப்புவது இலேசான வேலை கிடையாது. என்னுடைய மனைவிதான் அதை செய்வார். அதற்கு ஒரு நண்பர் வட்டமும் சுற்றமும் துணை நிற்பது அவசியம். இணையப்பத்திரிகையை ஒரே ஒருவரே நடத்திவிடமுடியும். கடந்த இருபது ஆண்டுகளில், நமக்கு கிடைக்கிற மிகப் பெரிய வாய்ப்பு என சிறுபத்திரிகையை இணையத்தில் கொண்டு வந்ததை குறிப்பிடலாம். ஆக, இன்றைக்கு வந்து கொண்டிருக்கும் இணைய இதழ்களில் எனக்குபெரிய மதிப்பு உண்டு. ஒரு இயக்கமாக அவர்கள் இலக்கியச்செயல்பாட்டை நிலைநிறுத்துகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அவற்றில் வரும் முக்கியமான எல்லா படைப்புகளையும் கவனப்படுத்துகிறேன். சி.சு.செல்லப்பா ‘எழுத்து’ வழியாக என்ன செய்தாரோ அதைத்தான் இன்றைக்கு தமிழினி கோகுல் பிரசாத்தும், கனலி விக்னேஷ்வரனும், யாவரும் ஜீவ கரிகாலனும் நீங்களும் கூட செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். வாழ்த்துகள். -குறிப்புகள் ஒரு சிறு குருவி (தேவதேவன்) என் வீட்டுக்குள் வந்து தன் கூட்டை கட்டியது ஏன் ? அங்கிருந்தும் விருட்டென்று பாய்ந்தது ஏன் ஜன்னலுக்கு ? பார் ஜன்னல் கம்பிகளை உதைத்து விருட்டென்று தாவுகிறது அது மரத்துக்கு மரக்கிளையினை நீச்சல் குளத்தின் துள்ளுபலகையாக மதித்து அங்கிருந்தும் தவ்வி பாய்கிறது மரணமற்ற பெருவெலளிக்கடலை நோக்கி சுரீலென தொட்டது அக்கடலை என்னை ஒரு பெரும் பளீருடன் நீந்தியது அங்கே உயிரின் ஆனந்த பெருமிதத்துடன் நீந்திய படியே திரும்பிப்பார்த்தது வீட்டை ஓட்டுக் கூரையெங்கும் ஒளியும் நிழலும் உதிர் சருகுகளும் வீட்டு அறைகளெங்கும் சிரிப்பும் அழுகையும் மரணங்களும். பைத்தியத்தின் டீ (இசை) ஒரு பைத்தியம் கேரிபேக்கில் டீ வாங்கிக் கொண்டு போவதைப் பார்த்தேன் பைத்தியத்திற்கு இன்னமும் டீ குடிக்க வேண்டியிருக்கிறது. இந்த இருபத்திநான்காம்தேதி இரவை நான் பைத்தியத்தின் டீ என்பேன். தெய்வமே ! இந்த டீ சூடாறாதிருக்கட்டும்.. சுவை குன்றாதிருக்கட்டும்.. பருகப்பருக பல்கிப்பெருகட்டும்.. யாரோ ஒருவன் என்று எப்படிச் சொல்வேன்? (தேவதேவன்) குப்பைத்தொட்டியோரம் குடித்துவிட்டு விழுந்துகிடப்போனை வீடற்று நாடற்று வேறெந்தப் பாதுகாப்புமற்று புழுதி படிந்த நடைபாதையில் பூட்டு தொங்கும் கடை ஒட்டிப் படுத்துத் துயில்வோனை நள்ளிரவில் அரசு மருத்துவமனை நோக்கிக் கைக்குழந்தை குலுங்க அழுதுகொண்டு ஓடும் பெண்ணை நடைபாதைப் புழுதியில் அம்மணமாய் கைத்தலையணையும் அட்டணக்காலுமாய் வானம் வெறித்துப் படுத்திருக்கும் பைத்தியக்காரனை எதனையும் கவனிக்க முடியாத வேகத்தில் வாகனாதிகளில் விரைவோனை காக்கிச் சட்டை துப்பாக்கிகளால் கைவிலங்குடன் அழைத்துச் செல்லப்படும் ஒற்றைக் கைதியை *** நேர்கண்டவர்கள்:ஷாதிர் யாசீன், சாஜித் அஹமட் , சப்னாஸ் ஹாசிம் https://vanemmagazine.com/எழுத்தாளன்-என்பவன்-அரசி/
  8. அ.முத்துலிங்கமும் ஈழப்போரும் July 12, 2021 அன்புள்ள ஜெ, சமீபத்தில் அ.முத்துலிங்கம் அவர்களின் சிறுகதைகள், கட்டுரைகள் தொடர்ச்சியாக வாசித்து வருகிறேன். ஈழ எழுத்தாளர்களில் அவருடைய நடை வித்தியாசமானது. பல நாடுகளில் வேலை நிமித்தம் அவர் வசித்ததால் அந்த நாடுகளின் மண் சார்ந்தும் எழுதியிருக்கிறார். ஆனால் என் நண்பர்களில் சிலர் அவர் மீது ஒரு விமர்சனம் வைக்கின்றனர். ஈழப் பிரச்சினைகளில் அவர் மேம்போக்காக எழுதியிருக்கிறார் என்றும் தீவிர ஈழ எழுத்தாளர்களான ஷோபாசக்தி, வாசு முருகவேள், தமிழ்நதி போன்றவர்களை போல் போர் பற்றியும் ஈழ பிரச்சினை குறித்தும் தீவிரமாக எழுதவில்லை என்கின்றனர். என் கேள்வி ஒரு எழுத்தாளன் தன் மண் சார்ந்த பிரச்சினைகளை கட்டாயம் எழுதியே தீர வேண்டுமா? அவனுக்கான சுயத்தோடு எழுதவே கூடாதா? ஏனெனில் எனக்கு அ.முத்துலிங்கத்தை மிகவும் பிடிக்கும் ஆதலால் தான் கேட்கிறேன். அன்புள்ள செல்வா திசையெட்டும்தமிழ். அ.முத்துலிங்கம் அன்புள்ள செல்வா, அந்த நண்பர்களுக்கு வயது முப்பதுக்கு கீழே என்றால் இலக்கிய அறிமுகம் செய்து வையுங்கள். மேலே என்றால் அவர்களிடம் இலக்கியம் பேசாதீர்கள். மூச்சு விரயம். ஓர் எழுத்தாளன் எதை எழுதுகிறான் ஏன் எழுதுகிறான் என்பதை அவனே சொல்லிவிட முடியாது. அவனுடைய ஆழம் கொண்டிருக்கும் வினா அவனை இயக்குகிறது. அவனே கண்டடையும் சில அவன் ஆக்கங்களில் வெளிப்படுகிறது. அது புறவுலகில் எதை கருத்தில் கொள்கிறது என்பது அந்த வினாவைச் சார்ந்ததே ஒழிய சூழலின் அழுத்தமோ வாசகனின் தேவையோ அதில் எந்தப் பங்களிப்பையும் ஆற்றுவதில்லை. இந்தியச் சுதந்திரப்போர் நடந்துகொண்டிருந்தபோது எழுதிய புதுமைப்பித்தன், குபரா எழுத்துக்களில் சுதந்திரப்போராட்டத்தின் சாயலே இல்லை. அவர்கள் அன்றாடம் கண்டுகொண்டிருந்த உலகம் அவர்களுக்குள் எந்தச் சலனத்தையும் உருவாக்கவில்லை. ஆனால் தொலைதூர இலங்கையில் தலித் மக்கள் பட்டுக்கொண்டிருந்த துயரம் புதுமைப்பித்தனை பாதித்தது. அவர் அவர்களைப் பற்றி எழுதினார். (துன்பக்கேணி) ஆனால் புதுமைப்பித்தனை சுதந்திரப்போர் பெரிதும் பாதித்திருக்கிறது. அதில் கலந்துகொள்ள விரும்பியிருக்கிறார். அதை அவருடைய கடிதங்கள் காட்டுகின்றன. ஆனால் அப்புலத்தில் ஏன் கதைகள் எழுதவில்லை? அவருக்கு போர்மேல் உணர்வுரீதியான ஈடுபாடு இருந்தது, ஆனால் தத்துவச்சிக்கல் இல்லை, கேள்விகள் இல்லை. ஆகவே அது எழுதும்களமாக ஆகவில்லை. அ.முத்துலிங்கம் ஈழ எழுத்தாளர்களில் முதன்மையானவர். பிற எவரும் அவரைவிட பல படிகள் கீழேதான். ஈழப்போர் குறித்து இங்கே நிறையபேருக்கு செய்திகள் வழியாகத் தெரியும். ஒருவகை கவர்ச்சியும் அதிலுள்ளது. ஆகவே அதைப்பற்றிய கதைகளை விரும்பி வாசிக்கிறார்கள். அக்கதைகளில் அவர்களுக்கு பிடிகிடைக்கும் பலவிஷயங்கள் உள்ளன. ஆகவே கொஞ்சம் ரசனை குறைந்தவர்களும் அக்கதைகளை விரும்புகிறார்கள். முத்துலிங்கம் எழுதுவது முதன்மையாகப் பண்பாடுகளுக்கு இடையேயான முரண்பாட்டை. புலம்பெயர்ந்தவர்கள் அங்கிருக்கும் பண்பாடுகளுடன் கொள்ளும் அணுக்கமும் விலக்கமும் அதன் சிக்கல்களுமே அவர் கதைகளில் உள்ளன. உண்மையில் ஈழத்தவர் வாழ்க்கையில் போரைவிட பலமடங்கு பிரம்மாண்டமானது புலம்பெயர்வு. அதை எழுதுபவர் அ.முத்துலிங்கம். பொதுவாக இரு பண்பாடுகள் உரசிக்கொள்ளும் முனைகள் இலக்கியத்திற்கு முக்கியமானவை. ஏனென்றால் விழுமியங்கள், மனித ஆளுமை ஆகியவை பெரும்பாலும் கலாச்சார உருவகங்கள். அவற்றை அக்கலாச்சாரத்திற்குள் வைத்து மதிப்பிடுவது சற்று கடினம். இன்னொரு கலாச்சாரத்திற்கு அருகே வைத்து மதிப்பிடுகையில் அவை எளிதில் துலங்குகின்றன. விழுமியங்களையும் ஆளுமைகளையும் கலாச்சாரத்திற்குள் வைத்து மதிப்பிடுகையிலேயே கூட நாம் ஒரு கலாச்சாரக் கூற்றுடன் முரண்படும் இன்னொரு கலாச்சாரக் கூற்றுடன் ஒப்பிட்டே அந்த அளவீடுகளைச் செய்கிறோம். நேற்றை இன்றுடன் ஒப்பிடுகிறோம். நகரத்தை கிராமத்துடன் ஒப்பிடுகிறோம். தந்தையை மைந்தருடன் ஒப்பிடுகிறோம். கலாச்சாரங்களின் முரண்புள்ளிகளை கொண்டு மனிதநிலைகளை, மதிப்பீடுகளை புரிந்துகொள்ளும் முயற்சி பேரிலக்கியங்கள் அனைத்திலும் நிகழ்வது. அ.முத்துலிங்கம் செய்வது அதையே. கீழைப்பண்பாட்டுக்கும் ஐரோப்பியப் பண்பாட்டுக்குமான முரண்பாடு, ஆப்ரிக்கப் பண்பாட்டுக்கும் ஆசியப் பண்பாட்டுக்குமான முரண்பாடே அவருடைய பேசுபொருள். ஆனால் அவர் அதை எளிய வேடிக்கையாக ஆக்குவதில்லை. தீர்ப்புகளை சொல்வதில்லை. அனைத்துக்கும் மேலாக தன் பண்பாட்டுப்புலம் பற்றிய பெருமிதமும் அவரிடம் இல்லை. அவர் அந்த களத்தில் வைத்து மனிதர்களையும் அவர்களின் விழுமியங்களையும் புரிந்துகொள்ள மட்டுமே முயல்கிறார். ஆனால் அந்த உசாவல் நேரடியான தர்க்கங்களாக அவர் கதைகளில் வெளிப்படவில்லை. விவாதமே இல்லை. முடிவுகளும் சொல்லப்படுவதில்லை. அவர் கதைகள் எளிமையான, மென்மையான நிகழ்வுச்சித்தரிப்புகள். அவற்றினூடாக வாசகன் சென்றடையவேண்டிய இடமாகவே அந்த கலாச்சார உரையாடற்களம் உள்ளது. நவீனக்கவிதையின் அழகியலைக் கொண்டே அ.முத்துலிங்கத்தை புரிந்துகொள்ள முடியும். தமிழில் அ.முத்துலிங்கத்தின் புனைவுலகுக்கு அணுக்கமானது கவிஞர் இசையின் உலகுதான். அ.முத்துலிங்கத்தின் புனைவுலகம் நேரடியான அரசியலோ அப்பட்டமான பகடியோ நையாண்டிகளோ கொந்தளிப்புகளோ கூச்சல்களோ கொண்டது அல்ல. அது நுட்மான வாசகர்களுக்கு, கதையில் இருந்து நுண்ணிய படிமங்களை எடுத்துக்கொள்ளும் கவித்துவ அழகியலில் பயிற்சி கொண்டவர்களுக்கு மட்டுமே உரியது. ஜெ https://www.jeyamohan.in/149120/
  9. தமிழக அரசின் இலக்கியவிருதுகள் - ஜெயமோகன் June 5, 2021 புதிய திமுக அரசின் இலக்கியத்துறை சார்ந்த அறிவிப்புகள் பற்றி பல கேள்விகள் வந்தன. ஊடகத்தினரின் கேள்விகளை தவிர்த்துவிட்டேன். அவர்கள் நான் சொல்வதைப் போடமாட்டார்கள். சமூக ஊடகங்களுக்கு வசைபாடுவதற்கு உகந்தவகையில் எதையும் வெட்டி எடுத்துக்கொள்ள தெரியும். இதில் விவாதிப்பவர்கள் ’திமுக அரசு எழுத்தாளர்களை கொண்டாடவில்லை’ என்ற ஒற்றைவரியை வைத்துக்கொண்டு பொத்தாம்பொதுவாகத் தடவித்தடவிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே இவை சார்ந்து மிகத்தெளிவாக பேசப்பட்டவற்றை படிப்பதில்லை. மீண்டும் அதே ஒற்றைவரி உழப்பல்கள். சவடால்கள். தேவதேவன் திமுக அரசு எழுத்தாளர்களைக் கொண்டாடவில்லை என்று எவரும் சொல்லவில்லை. கொண்டாடியிருக்கிறார்கள். எந்த அரசும் அவர்களுக்கு உகந்தவர்களைக் கொண்டாடத்தான் செய்யும். அவர்கள் இருவகை. அந்த அரசை அமைத்துள்ள கட்சிகளின் கருத்தியல் அடிப்படைகளை உருவாக்கியவர்கள், அந்த அரசுடன் ஒத்துப்போகிறவர்கள். திமுக அரசு மு.கருணாநிதி அவர்கள் பதவியேற்ற நாள்முதல் அவ்விரு சாராரையும் கொண்டாடிக்கொண்டுதான் இருக்கிறது. பாரதிதாசன் பெயரில் பல்கலைக் கழகம் உள்ளது.தேவநேயப் பாவாணர் பெயரில்தான் மாவட்ட மைய நூலகம் உள்ளது. மூவாலூர் ராமாமிருதத்தம்மையார் பெயரில்தான் பெண்களுக்கான நலத்திட்டம் உள்ளது. அரசுடன் ஒத்துப்போனமையால்தான் சுரதாவுக்குச் சென்னையில் சிலை வைக்கப்பட்டுள்ளது. அப்படி விருதுகளும் பரிசுகளும் பெற்ற பலர் உண்டு. தேவிபாரதி குற்றச்சாட்டுகளாகக் கூறப்படுபவை இரண்டு. ஒன்று, திராவிட இயக்க முன்னோடிகள் எனும்போதே அவர்களில் எவர் உகந்தோர் எவர் அல்லர் என்ற தெரிவு திமுக அரசிடம் இருந்தது. அந்த தெரிவு மு.கருணாநிதியின் தனிப்பட்ட கசப்புகள் விருப்புகள் சார்ந்ததாகவே இருந்தது. ஆகவே கா.அப்பாத்துரை, எஸ்.எஸ்.தென்னரசு போன்ற பலர் புறக்கணிக்கப்பட்டார்கள். அவ்வாறு ஒரு புறந்தள்ளப்பட்டோர் பட்டியல் திராவிட இயக்க எழுத்தாளர்களுக்குள்ளேயே உண்டு. நாம் பேசிக்கொண்டிருப்பது நவீன இலக்கியம் பற்றி மட்டுமே. அரசியலெழுத்து பற்றி அல்ல. அவற்றின் இடம் தெரியுமென்றலும் இலக்கியமுன்னோடிகள் நவீன இலக்கியத்தை மட்டுமே முன்வைத்தனர். நவீன இலக்கியத்திற்கு இங்கே ஆதரவும் புரலவலரும் வாசகரும் இல்லை என்பதனால். என் தலைமுறையில் ஓரளவு வாசகர்கள் வந்துவிட்டனர். ஆகவே இன்னும் கொஞ்சம் விரிவாக அரசியலெழுத்தையும் உள்ளே கொண்டுவந்து இலக்கியத்தின் இலக்கணங்களை அமைத்துக்கொண்டேன். எஸ்.எஸ்.தென்னரசு அல்லது விந்தன் பற்றிப் பேசிய இலக்கியவிமர்சகன் நான்தான். விக்ரமாதித்தன் இரண்டாவது குற்றச்சாட்டே முக்கியமானது. அரசு என்பது அரசை அமைக்கும் கட்சிக்கு மட்டும் உரியது அல்ல. தான் ஆட்சி செய்யும் நிலத்தின் ஒட்டுமொத்தப் பண்பாட்டிற்கும் பொறுப்பேற்பதுதான் அரசின் கடமை. அப்பண்பாட்டைப் பேணவும் வளர்க்கவும் முயலவேண்டியது அதன் பணி. அரசின் நடவடிக்கைகள் அந்நோக்கிலேயே அமையவேண்டும். ஏனேன்றால் அக்கட்சிக்கு வாக்களித்தவர்களின் வரிப்பணத்தை மட்டும் அது செலவுசெய்யவில்லை. அது ஒட்டுமொத்த மக்களின் வரிப்பணத்தால் இயங்குகிறது. ஜனநாயகத்தின் அடிப்படை ஒன்று உண்டு. ஆட்சியைப் பிடிப்பது வரைத்தான் கட்சி அரசியலின் பார்வை இருக்கவேண்டும். அதற்குப் பிறகு இருக்கவேண்டியது அனைவருக்குமான ஆட்சியாளரின் பார்வை. கட்சிச்சார்புப் பார்வை இருந்தால் அது பண்பாட்டுக்குச் செயல்பாடுகளுக்குப் பேரழிவாக முடியும். அந்த ஒட்டுமொத்தப் பண்பாட்டையே கட்சிக்கருத்தியலாகச் சுருக்கிவிடுவதில் முடியும். திமுக ஆட்சியில் நடந்தது அதுவே. எஸ்.ராமகிருஷ்ணன் ஆகவேதான் புதுமைப்பித்தனுக்குக் கூட சென்னையில் ஒரு பண்பாட்டு நினைவகம் இல்லை. நவீன இலக்கியம் ஒட்டுமொத்தமாகவே திராவிட இயக்கத்தால் புறக்கணிக்கப்பட்டது. இங்குள்ள நவீன இலக்கியம் தமிழ்மொழி அடைந்த வெற்றிகளில் ஒன்று. தமிழ்ப்பண்பாடு என்றும் பெருமை கொள்ளவேண்டிய ஒன்று. ஆனால் ஐம்பதாண்டுகளாக அது அரசாலும், அரசின் கல்விநிறுவனங்களாலும், முற்றாகவே கைவிடப்பட்டது. இக்குற்றச்சாட்டுகளுக்கான பதிலாக திராவிட இயக்க எழுத்தை நவீன இலக்கியம் ஏற்றுக்கொண்டதா என்ன என்று கேட்கிறார்கள். அபத்தமான கேள்வி அது. இது கொடுக்கல்- வாங்கல் அல்ல. நவீன இலக்கியத்திற்கு அதற்கான அழகியல் கொள்கைகள், அதற்கான வாழ்க்கைப்பார்வைகள் உண்டு. அவற்றையே அது முன்வைக்கும். அதனடிப்படையிலேயே அது தன்னை வரையறை செய்துகொள்ளும். அதனடிப்படையிலேயே அது பிற இலக்கியங்களை மதிப்பிடும். அந்த அளவுகோல்களை இழந்தால் அதன்பின் அது நவீன இலக்கியமே அல்ல. அப்படி அது தன்னை அழித்துக்கொண்டு அடைவதற்கொன்றும் இல்லை. கலாப்ரியா திராவிட இயக்க இலக்கியப் போக்கு நவீன இலக்கியத்தை ஏற்காமல் போகலாம், அது இயல்பானதே. மு.கருணாநிதிக்கு அவை ஒவ்வாமையை அளிக்கலாம். திராவிட இயக்க அமைப்புகள் அளிக்கும் விருதுகள் நவீன எழுத்தாளர்களுக்கு வழங்கப்படவேண்டுமென எவரும் எதிர்பார்ப்பதில்லை. இங்கே பேசப்படுவது அரசைப் பற்றி, கல்வித்துறை பற்றி. அனைவரின் வரிப்பணத்தால் அனைவருக்குமாக அமைந்துள்ள அரசு செய்யவேண்டிய பண்பாட்டுப் பணிகள் பற்றி. ஓர் உதாரணம் சொல்கிறேன். கேரளத்தில் நேர்ப் பாதி ஆட்சிக்காலம் மார்க்சிய கம்யூனிஸ்டுக் கட்சியே ஆட்சியில் இருந்துள்ளது. மிகத்தெளிவான அரசியல்கொள்கையும், திட்டவட்டமான இலக்கியக்கொள்கையும் கொண்ட கட்சி அது. அதில் சமரசமே இருப்பதில்லை. ஆனால் அது அரசில் இருந்த காலகட்டத்தில் மார்க்ஸிய எழுத்தாளர்களை மட்டும் முன்னிறுத்தவில்லை. அதற்காக அரசுநிறுவனங்களை பயன்படுத்திக்கொள்ளவுமில்லை. சுரெஷ்குமர இந்திரஜித் மாறாக கேரள இலக்கியச் சூழலில் உள்ள மிகச்சிறந்த ஆளுமைகளை நடுவர்களாக, ஆலோசகர்களாகக் கொண்ட குழுக்களே பண்பாட்டுச் செயல்பாடுகளை நடத்தின. கம்யூனிஸ்டுக் கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில் பழுத்த காங்கிரஸ்காரர்கள், தீவிர கம்யூனிஸ்டு எதிரிகள் விருதுகளைப் பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு நினைவகங்கள் அமைந்துள்ளன. அரசுமரியாதைகள் அமைந்துள்ளன. முதல்வரே நேரில் சென்று அவர்களை பாராட்டிய, நோய்நலம் உசாவிய தருணங்கள் உண்டு. ஆனால் கம்யூனிஸ்டுக் கட்சியின் அமைப்புகள் அளிக்கும் விருதுகள் அவர்களுக்குரிய எழுத்தாளர்களுக்கே அளிப்பட்டன.பொதுவெளியில் அவர்களை மட்டுமே மிகத்தீவிரமாக முன்வைத்தனர் கம்யூனிஸ்டுகள். அவர்களுக்காக மாநாடுகளையே நடத்தினார்கள். கம்யூனிசத்தை ஏற்காத எழுத்தாளர்களை கட்சியின் விமர்சகர்கள் கடுமையாக மறுத்து கட்சி இதழ்களில் எழுதினர். இதுதான் வேறுபாடு. இமையம் டெல்லியில் ஆண்ட சென்ற காங்கிரஸ் அரசுகளையே உதாரணமாகக் கொள்ளலாம். காங்கிரஸ் அரசு இருந்த காலகட்டத்தில் தேசிய அளவிலேயே சாகித்ய அக்காதமி விருதுகளைப் பெற்றவர்கள் பெரும்பாலானவர்கள் இடதுசாரிகள், சோஷலிஸ்டுகள். காங்கிரஸ் அதில் தலையிடவில்லை. இன்றும் சு.வெங்கடேசன், எஸ்.ராமகிருஷ்ணன், இமையம் வரையிலான பாரதிய ஜனதா எதிர்ப்பாளர்கள் சாகித்ய அக்காதமி விருது பெறுகிறார்கள். அரசு அதில் தலையிடுவதில்லை. திராவிட இயக்க எழுத்தாளரான இமையம் பெற்ற ஒரே விருது பாரதிய ஜனதா ஆளும் மத்திய அரசு அளித்தது. இன்றைய ஆட்சியாளர்களுக்கு உகந்தவர்களுக்கோ ஆளும் கட்சியின் கொள்கையைச் சார்ந்தவர்களுக்கோ அவ்விருதுகள் வழங்கப்படுவதில்லை — இப்போதைய சூழலைப் பார்த்தால் எவ்வளவுநாள் அது நீடிக்குமென தெரியவில்லை என்பது வேறுவிஷயம். ஏனென்றால் சுதந்திரமாகச் செயல்பட்ட பல பண்பாட்டு நிறுவனங்கள் ஏற்கனவே சீரழிக்கப்பட்டுவிட்டன. சாரு இதுவே முறைமை. இந்த வகையான ஒரு நடுநிலைமை, அரசையும் கட்சியையும் ஆட்சியாளர்களையும் பிரித்துப்பார்க்கும் பார்வை, கலாச்சாரச் செயல்பாடுகளையும் அரசியல்செயல்பாடுகளையும் வேறுவேறாகப் பார்க்கும் நிதானம் இதுவரை திமுகவில் இருந்ததில்லை. திரும்பத் திரும்பச் சுட்டப்படுவது அதைத்தான். திமுக எழுத்தாளர்களை ஏற்றதில்லை என்று சொன்னதுமே திமுக கொண்டாடிய கட்சிசார் எழுத்தாளர்கள், குற்றேவல் எழுத்தாளர்களின் பெயர்பட்டியலுடன் வருபவர்களிடம் இதைச் சொல்லி புரியவைக்க முடியாது இங்கே தமிழ் என்றென்றும் பெருமைகொள்ளவேண்டிய மாபெரும் படைப்பாளிகள் எந்த ஏற்புமின்றி, எந்த வசதியுமின்றி ஏங்கி மறைந்தனர். அவர்களை கௌரவிக்க, அவர்களை விருதளிப்பவர்களுக்குச் சுட்டிக்காட்ட என்னைப் போன்ற எழுத்தாளர்களே இறங்கி நண்பர்களிடம் பணம் திரட்டியும், கைப்பணம் போட்டும் விருதுகளை அமைக்கவேண்டியிருந்தது. பலநூறுகோடி ரூபாயில் அரசின் ‘இலக்கிய மாநாடு’கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சில ஆயிரம் ரூபாய் செலவில் வெளியிடப்பட்ட சிற்றிதழ்களை நம்பி நவீன இலக்கியம் வாழ்ந்தது. யுவன் இரா முருகன் பா.ராகவன் அரசுக்கும் அரசமைப்புகளுக்கும் அணுக்கமாக ஆகும் கலையறிந்தோர் அறிஞர் என்றும் ஆய்வாளர் என்றும் முன்னிறுத்தப்பட்டனர். வெற்று மேடைப்பேச்சாளர்கள் மேடைமேடையாக மு.கருணாநிதியை வெட்கமின்றி புகழ்ந்து வெகுமதிகளை பெற்றுக்கொண்டனர். மெய்யான அறிஞர்கள் மூர்க்கமாக புறந்தள்ளப்பட்டனர். அவர்களில் திராவிட இயக்கச் சார்புள்ள பேரறிஞர்களும் உண்டு. கோவையில் திமுக நடத்திய சென்ற உலகத்தமிழ் மாநாட்டை எண்ணிப்பாருங்கள். அ.கா.பெருமாளுக்கு அங்கே இடமில்லை என்றால் தமிழகத்தில் வேறெந்த ஆய்வாளர் மேடையேறத் தகுதி கொண்டவர்? கோவையிலேயே இருந்த நாஞ்சில்நாடனுக்கு கோவையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டுக்கு அழைப்பில்லை என்றால் அது என்ன இலக்கியமாநாடு? சு.வேணுகோபால் சென்ற திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் பலர் நினைவில் இருக்காது. எழுத்தாளர்களுக்கு அரசுக் குடியிருப்புகளில் வீடு, நிரந்தரப் புத்தகக் கண்காட்சி அமைத்து அங்கே அனைவருக்கும் நிரந்தரமான கடைகள், சின்னத்திரை கலைஞர்களுக்கு வீடு, திரைத்துறையின் ஊழியர்களுக்கு வீடு… எவையும் நிறைவேறவில்லை. சின்னத்திரை கலைஞர்களுக்கு வீடு அளிப்பதற்கான ‘கூப்பன்’களை அளிக்க ஒரு திமுக செயல்பாட்டாளர் பணம் வசூல் செய்து எடுத்துக்கொண்டார் என்று பேசப்பட்டது. இவையெல்லாமே முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி மேடையில் அறிவித்தவை. ஆனால் அரசாணைகளாக ஆகவில்லை. அரசாணைக்காக எதிர்பார்த்து, பின்னர் நேரில் சென்று கேட்ட பதிப்பாளர்களிடம் ”அவர்தான் சொல்கிறார் என்றால் உங்களுக்கு தெரியவேண்டாமா? அரசிடம் வீடுகட்ட ஏது நிலம்? பெருநகர்நிலமும் வனநிலமும் தவிர சென்னையில் நிலம் எங்கே இருக்கிறது? அரசூழியர் குடியிருப்புக்கே நிலம்தேடிக்கொண்டிருக்கிறோம்” என்று ஸ்டாலின் நிலைமையை விளக்கியதாகச் சொல்வார்கள். தேவதச்சன் இப்போது திமுக அரசு அறிவித்துள்ள திட்டங்களின் செயல்முறை எப்படி இருக்குமெனத் தெரியவில்லை. அறிவிப்புக்கு அப்பால் சென்று நடைமுறையாகும் என்றாலும்கூட சென்றகால மனநிலைகளே நீடிக்குமென்று நம்பவே சூழல் உள்ளது. ஏனென்றால் கட்சியோ அமைப்போ பெரிதாக மாறவில்லை. ஊடகங்களில் கூச்சலிடும் உடன்பிறப்புகளும் திடீர் உடன்பிறப்புகளும் தரத்தில் பழையவர்களைவிட இன்னும் பின்னால் சென்றுவிட்டிருக்கிறார்கள் – சென்ற கால உடன்பிறப்புகளுக்கு திராவிட இயக்க எழுத்தாவது கொஞ்சம் அறிமுகம் இருந்தது. நான்கு முன்னோடிகளைச் சொல் என்றால் சொல்வார்கள். இவர்கள் தற்குறிகள். ஆகவே விருதுகள் இணையத்தில் கூச்சலிடும் திராவிட இயக்கத்து மொண்ணைகளுக்குச் சென்றுசேரவே வாய்ப்பு மிகுதி. பென் டு பப்ளிஷ் போன்ற விருதுகளையே அமைப்பாகத் திரண்டு வென்ற அரைவேக்காடுகள் இவற்றை விட்டுவைக்கப் போவதில்லை. அவர்களில் பலர் கவின்கலை விருதுகளுக்காக கோழிமுட்டைகள், தென்னைமரங்கள் என படங்கள் வரைய ஆரம்பித்திருப்பதாகவும் செய்தி. புலவர் செ இராசு ஒரு ஜனநாயகத்தில் நாம் எதிர்பார்க்கவேண்டிய செயல்பாடு என்பது கேரளத்தில் நிகழ்வதுபோல தகுதியானவர்களைக் கொண்டு அமைக்கப்படும் சுதந்திரமான அமைப்பு. அதன் வெளிப்படையான செயல்பாடு. அந்த தகுதி கட்சிச்சார்பு அல்ல, அறிவியக்கத் தகுதி. திட்டவட்டமான வெளிப்படையான சாதனை.எந்த அரசு வந்தாலும் தமிழகத்தில் ஒரு சிறு ‘அறிஞர்’குழு உள்ளே சென்று அமர்ந்துவிடும். என்ன எழுதியிருக்கிறார்கள் என்று பார்த்தால் பொருட்படுத்தத் தக்க ஒரு புத்தகம்கூட இருக்காது. சரியான குழுவே சரியான ஆளுமைகளை தெரிவுசெய்யமுடியும். கௌரவிக்கப் படுபவர்களும் நிறுவப்பட்ட இலக்கியத் தகுதி கொண்டிருத்தல் அவசியம். ஆனால் இன்று தமிழகத்தில் அதற்கான வாய்ப்புண்டு என நான் நினைக்கவில்லை. இந்த இலக்கியப்பரிசுகள் அறிவிக்கப்பட்டிருப்பதே இந்த அரசு பதவிக்கு வந்ததில் அதை ஆவேசமாக ஆதரித்த சில எழுத்தாளர்களுக்கு ஒரு பங்குண்டு என்பதனாலும், அவர்களுக்கு பதிலுக்கு எதாவது செய்யவேண்டும் என்பதனாலும்தான் என்றுதான் நினைக்கிறேன். ஏற்கனவே அவர்கள் கணக்குபேச ஆரம்பித்துவிட்டனர். கட்சியும் ஆட்சியும் வேறுவேறு என்றெல்லாம் இங்கே இவர்களிடம் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. பாவண்ணன் ஆகவே இங்கே அதிகபட்சம் நான் எதிர்பார்ப்பது, திமுக மீது சாய்வு கொண்டவர்களிலேயே கொஞ்சம் இலக்கிய முக்கியத்துவம் உடையவர்கள் கௌரவிக்கப்படுவதுதான். உதாரணமாக எஸ்.ராமகிருஷ்ணன், விக்ரமாதித்யன், இமையம், கலாப்ரியா, சுரேஷ்குமார இந்திரஜித், பாவண்ணன், தேவிபாரதி,சுப்ரபாரதி மணியன், சு.வேணுகோபால், எஸ்.செந்தில்குமார், தமிழ்மகன், அ.வெண்ணிலா போன்றவர்கள். கட்சிச் சார்பு இல்லையென்றாலும் இவ்வரசு மேல் நல்லெண்ணம் கொண்ட சாரு நிவேதிதா போன்றவர்களையும் பரிசீலிக்கலாம். இந்திரா பார்த்தசாரதி, நாஞ்சில்நாடன், பூமணி போன்று ஏற்கனவே உரிய அங்கீகாரம் பெற்ற முன்னோடிகளை விட்டுவிடலாம். அரசின் நிதியுதவி உடனடியாகத் தேவையாகும் இடத்தில் இருக்கும் ரமேஷ் பிரேதன், யூமா வாசுகி, கீரனூர் ஜாகீர்ராஜா, கண்மணி குணசேகரன், ஃப்ரான்ஸிஸ் கிருபாபோன்றவர்களுக்கு அது கிடைக்குமென்றால் அதன்பொருட்டு இந்த அரசை மனமுவந்து பாராட்டுவேன். தொடர்புகள் ஏதும் இல்லாதவர்கள் என்றாலும் அவர்களும் திமுக- இடதுசாரி ஆதரவு மனநிலை கொண்டவர்களே. ராஜ் கௌதமன் மெய்யாகவே பண்பாட்டியக்கம் மேல் ஆர்வம் கொண்ட ஒரு நவீன அரசு உவந்து கௌரவிக்கவேண்டும் என்றால் அதன் முதல் தெரிவு தேவதேவன் ஆகவே இருக்கும். அவரோ அரசியலுக்கு அப்பாற்பட்டவர். மனிதமுகங்களை நினைவுக்கூர்வதுமில்லை. ஆகவே தொடர்புகளும் இல்லை. ஒரு பொதுச்சூழலில் கருத்துக்களை முன்வைப்பவராகவும் அவர் இல்லை. ஆனால் அவரைத் தேடிச்செல்லும்போதே எந்த விருதும் பெருமை கொள்கிறது. தேவதச்சன் ஒரு முன்னோடியின் இடம் கொண்டவர். திமுக எப்படியும் பிராமணர்களை பொருட்படுத்தப் போவதில்லை. ஏற்கனவே காழ்ப்புக் கூச்சல்கள் எழத் தொடங்கிவிட்டன. ஆகவே யுவன் சந்திரசேகர், பா.வெங்கடேசன்,இரா.முருகன், பா.ராகவன்ஆகியோரை முன்வைத்துப் பயனில்லை. இருந்தாலும் இப்படி ஒரு பட்டியலில் அவர்களைச் சொல்லி வைக்கவேண்டும்—வாசகர்களுக்காக. அ.கா பெருமாள் இந்த அரசு பண்பாட்டுச் செயல்பாடுகளுக்காக, அறிவுச் செயல்பாடுகளுக்காக ஏதாவது மெய்யாகவே செய்யவேண்டும் என்றால் செய்யவேண்டிய சில உள்ளன. நோபல்பரிசு பெற்ற தமிழகத்து அறிவியலாளர்களுக்கான நினைவகங்களை இங்கே உருவாக்கவேண்டும். சர்.சி.வி.ராமன், சுப்ரமணியம் சந்திரசேகர். கணிதமேதை ராமானுஜனுக்கு ஒரு நினைவகம் உருவாகவேண்டும். அவை அவர்களின் துறை சார்ந்தவையாக இருக்கவேண்டும். அவர்களின் சாதி காரணமாக அவர்கள் இன்றுவரை புறக்கணிக்கப்பட்டனர். அந்த கீழ்மையிலிருந்து திமுக வெளிவரவேண்டும். கட்சிச் சார்புக்கு அப்பாற்பட்ட நோக்குடன் கலைக்களஞ்சியம் உருவாக்கிய பெ.தூரன், பேரகராதி உருவாக்கிய எஸ்.வையாபுரிப்பிள்ளை ஆகியோர் இனிமேலேனும் நினைவகங்கள் வழியாக அங்கீகரிக்கப்படவேண்டும். தமிழிசை இயக்கத்தின் முன்னோடியாகிய தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் இங்கே இன்னும்கூட அங்கீகரிக்கப்படவில்லை. அவருடைய நினைவு நிலைநிறுத்தப்படவேண்டும். குடவாயில் பாலசுப்ரமணியம் எப்போதுமே நம் ஆசைகள் இவை. இவற்றை நமக்குநாமே சொல்லிக்கொண்டே இருக்கிறோம். புதுமைப்பித்தனுக்கு சென்னையில் ஒரு சிலையை நானே நிதி திரட்டி வைக்கவேண்டும் என்னும் கனவு எனக்கு பத்தாண்டுகளாக உள்ளது. சொந்தமாக அமையும் சிறு இடத்தில். கோவையில் வைக்கலாமென்று சொல்லும் பல நண்பர்கள், புரவலர் இன்று உள்ளனர். அது ஒரு படைப்பூக்கமற்ற நிர்வாகச் செயல்பாடு என்பதனால்தான் தொடங்குவதற்குத் தயங்குகிறேன். அவ்வாறு அமையும் என்றால் அதுவே புதுமைப்பித்தனுக்குக் கௌரவம். எந்த அரசு இருந்தாலும் அவ்வரசு நோக்கி இவற்றையெல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். இந்த தளத்தில் ஒவ்வொரு விருதின்போதும் இதையெல்லாம் எழுதுகிறேன். ஒவ்வொரு விவாதத்திலும் குறிப்பிடுகிறேன். நம்பிக்கைதான், எதிர்பார்ப்புதான். ஒரு புதிய அரசு அமையும்போது அதைக் கோரலாம். சென்ற ஐந்தாண்டுகளில்தான், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைந்த பின்னர்தான், ஒரு முதல்வர் ஓர் இலக்கியமுன்னோடி மறைவுக்கு நான்குவரி அஞ்சலியை முன்வைக்கும் வழக்கமே ஆரம்பித்தது. அது இந்த ஆட்சியில் இன்னும் விரிவாக, இன்னும் பயனுள்ளதாகவேண்டும். இவ்வறிவிப்புகளை அவ்வண்ணம் நம்ப விரும்புகிறேன். சோ.தர்மன் ஆனால் அந்நம்பிக்கைகள் நிறைவேறும் இன்றில்லை என்றே தோன்றுகிறது. இணையவெளியில் திமுகச் சில்லறைகள் இங்குள்ள எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் மேல் பெய்துகொண்டிருக்கும் காழ்ப்புக் கூச்சல்கள் செவிகூச செய்கின்றன. இது தாங்கள் வேட்டையாடிப்பெற்ற இரை, தாங்களே பிய்த்துக்கிழித்து தின்போம் என்ற வெறியை மட்டுமே அதில் காணமுடிகிறது. அவர்கள் வெறும் தொண்டர்கள், அவர்களின் மனநிலை எப்போதும் அதுதான். ஆனால் அவர்களின் வெறிக்கூச்சலை சாதாரணமாகக் காணமுடியாது. அதற்கு மிகப்பெரிய செல்வாக்குண்டு. மெல்லமெல்ல அவர்களில் சிலரையே அறிஞர் என்றும் படைப்பாளர் என்றும் அரசு அங்கீகரிக்கவே இந்த பரிசுகள் வழிவகுக்கும். அந்த இரையை அடையும்பொருட்டு பிற அனைவரையுமே அவர்கள் கூட்டாக இழிவுசெய்வார்கள். அனைவரையும் பொதுவெளியில் சிறுமைப்படுத்துவார்கள். விளைவாக தமிழுக்குப் பெரும்பங்களிப்பாற்றியவர்கள் அவமதிக்கப்பட்டு இச்சில்லறைகள் அரங்கிலேறும் சூழல் அமைந்தால் அதைவிட கீழ்மை வேறில்லை. நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது இங்கேதான். ஸ்டாலின் ராஜாங்கம் இது முன்பும் நிகழ்ந்ததுதான். அவ்வாறு அரசால் வெற்றுக்கூச்சலிடும் கட்சிக்காரர்கள் இலக்கியவாதிகளாக, சிந்தனையாளர்களாக, ஆய்வாளர்களாக முன்னிலைப் படுத்தப் படும்போது அவர்கள் இலக்கியவாதிகளோ, சிந்தனையாளர்களோ ஆய்வாளர்களோ அல்ல என்று சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. அது விருதை எதிர்ப்பது அல்ல. அவ்விருதின் வழியாக நிறுவப்படும் ஒரு மதிப்பீட்டை எதிர்ப்பது. அடுத்த தலைமுறையினரிடம் எது இலக்கியம், எது சிந்தனை, எது ஆய்வு என்று சுட்டிக்காட்டுவது. அதைச் செய்யாவிட்டால் தவறான முன்னுதாரணங்கள் உருவாகி நிலைபெறு. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால்சென்று அதைச் செய்வது விமர்சகர்களின், இலக்கியச் செயல்பாட்டாளர்களின் கடமை. ப.சரவணன் இந்த அளவுகோல்கள் மிகக்கறாரானவை அல்ல. எவரைவிட எவர் மேல் என்றெல்லாம் துல்லியமாக எவரும் சொல்லிவிடமுடியாது. ஆனால் இப்படிச் சொல்லலாம், பொதுவாக தீவிர வாசிப்புச் சூழலிலும் ஆய்வுச்சூழலிலும் ஏற்கப்பட்ட இலக்கியப் படைப்பாளிகளும் ஆய்வாளர்களுமே முக்கியமானவர்கள். அங்கே வெற்றுக்கூச்சலிடும் அரசியலாளர்கள் இடம்பெறலாகாது. அவர்களே ஓசை கிளப்புபவர்கள், எங்கும் முண்டியடிப்பவர்கள், கும்பலாகச் செயல்படுபவர்கள். அவர்கள் அங்கே சென்று அமரவே வாய்ப்பு மிகுதி. ஆட்சியாளர்களின் விவேகமே அவர்களை வைக்கவேண்டிய இடத்தில் வைக்கும். கொரோனா ஒழிப்பு உட்பட பலதளங்களில் இந்த அரசின் செயல்பாடு மிகச்சிறப்பாக உள்ளது. இதை நேரடியான அனுபவத்தில் இருந்து சொல்கிறேன். இத்தனை திறன்மிக்க நிர்வாகத்தை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நிதானமும் அன்பும் கொண்ட முதல்வர் என ஸ்டாலின் இன்று தென்படுகிறார். நம்பிக்கையூட்டும் விஷயம் இது. இது நீடிக்கவேண்டும் என ஆசைப்படுகிறேன். குறைந்தபட்ச நல்லதேனும் நிகழும் என எண்ணுகிறேன்.அவ்வாறெனில் பாராட்டுவதும் அல்லவென்றால் விமர்சிப்பதுமே என் பணி. கரு ஆறுமுகத்தமிழன் பண்பாட்டு ஆய்வாளனாக, இலக்கிய விமர்சகனாக என்னை எப்போதுமே அந்நிலையில்தான் நிறுத்திக்கொள்வேன். க.நா.சுவும் சுந்தர ராமசாமியும் தன்னை நிறுத்திக்கொண்ட இடம் அது. எந்த புதிய அரசையும் நம்பிக்கையை அளித்தே எதிர்கொள்ளவேண்டும். இன்று அதையே செய்கிறேன். மேலே சொல்லப்பட்ட ஆசிரியர்கள், ஆய்வாளர்களின் பட்டியல் என்பது நான் எப்போதும் முன்வைப்பது. இவர்களைப்பற்றி எப்போதும் எழுதிக்கொண்டும் இருக்கிறேன். விமர்சனம் மட்டுமல்ல, பரிந்துரையும் இலக்கியச் செயல்பாட்டின் பகுதியே. ஆகவே இதை முன்வைக்கிறேன். இதையே மலையாளத்திலும் செய்வதுண்டு. எஸ்.செந்தில்குமார் இவற்றைப் பேசும்போது இப்படி பரிந்துரை செய்வதிலுள்ள சிக்கல்களையும் சொல்லியாகவேண்டும்– ஒரே கட்டுரையில் எல்லாம் இருந்தால் நல்லது என்பதனால். ஆய்வுகள் போன்றவற்றுக்கு புறவயமான அளவீடுகள் உண்டு. அ.கா.பெருமாள், குடவாயில் பாலசுப்ரமணியம். புலவர் செ.இராசு பேராசிரியர் பா.ஜம்புலிங்கம், ஆ.சிவசுப்ரமணியம், ஆ.இரா.வேங்கடாசலபதி, ப.சரவணன். கரு.ஆறுமுகத்தமிழன், ஸ்டாலின் ராஜாங்கம் போன்றவர்களின் பணி தெளிவானது, மறுக்கமுடியாதது. அவர்களின் நூல்களே சான்று. ஆனால் இலக்கியத்தின் தரமதிப்பீடுகள் அகவயமானவை. அவை புறவயமாக நிறுவப்படுவது தொடர்ச்சியான விமர்சனச் செயல்பாடுகள் வழியாகத்தான். இந்திரா பார்த்தசாரதியைவிட இந்திரா சௌந்தரராஜனை அறிந்தவர் பல மடங்கு. இந்திரா பார்த்தசாரதியைவிட இந்திரா சௌந்தரராஜனை மேலான எழுத்தாளர் என நினைப்பவர்களும் பற்பல மடங்கு இருப்பார்கள். ஆகவே ஜனநாயக அடிப்படையில், மக்களின் ஏற்பின் அடிப்படையில் விருது அளித்தால் இந்திரா சௌந்தரராஜனே இலக்கிய விருதுகளை எல்லாம் பெறவேண்டும். அ.இரா.வேங்கடாசலபதி ஆனால் இலக்கிய அழகியலை முன்வைக்கும் விமர்சனம் இந்திரா பார்த்தசாரதியை முன்வைத்து அவரே சிறந்தவர் என கூறுகிறது. அந்த இலக்கியவிமர்சனக் கருத்தும் ஒரு சிறுவட்டத்திலேயே திகழும். அதன் செல்வாக்கு இலக்கியவாசகர் நடுவே மட்டும்தான். ஆனால் மெல்லமெல்ல அந்தத் தரப்பு நிலைகொள்கிறது. அப்படித்தான் இலக்கியவாதிகள் நிலைபெறுகிறார்களே ஒழிய ‘மக்கள் ஏற்பினால்’ அல்ல. கி.ராஜநாராயணன் நூறாண்டு வாழ்ந்தார். அவரை அறிந்தோர் ரமணிசந்திரன் வாசகர் எண்ணிக்கையில் நூறிலொருவரே இருப்பார்கள். ரமணிச்சந்திரன் இலக்கியவாதி அல்ல, கி.ராஜநாராயணன் இலக்கியவாதி. இந்த வேறுபாடு என்றுமுள்ள ஓர் உண்மை. அதை ஜனநாயகப் பண்புகளால் நிறுவவில்லை, அழ்கையலால்தான் நிறுவியிருக்கிறோம். இச்சூழலில் ஓர் அரசு எவருக்கு விருதளிக்கவேண்டும், கௌரவிக்க வேண்டும்? மக்கள் கருத்தையா அது பொருட்படுத்தவேண்டும்? இல்லை, அங்கே அரசு மக்களுக்கு தந்தை எனும் இடத்தில் உள்ளது. எது மக்களுக்கு பிடிக்கிறதோ அதையல்ல, எது மக்களுக்குத் தேவையோ அதை அளிக்கவேண்டும். ரமேஷ் பிரேதன் கீரனூர் ஜாகீர்ராஜா யூமா வாசுகி கண்மணி ஆகவேதான் உலகமெங்கும் அரசுகள் மக்கள் அறியாத கலைஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் விருதளித்து அவர்களை முன்னிறுத்துகின்றன. சத்யஜித் ரே விருது பெறுகிறார், ரமேஷ் சிப்பி விருது பெறுவதில்லை. அடூர் விருது பெறுகிறார், ஐ.வி.சசி விருது பெறுவதில்லை. அவ்வகையான அங்கீகாரம் நிகழ்வதற்கு இரண்டு அடிப்படைகள் தேவையாக உள்ளன. ஒன்று, மதிப்பீடுகளை முன்வைத்து அதை நிறுவும் விமர்சன இயக்கம். இரண்டு, அவ்விமர்சன இயக்கத்திற்கு அரசு மற்றும் கல்வித்துறை சார்ந்த அங்கீகாரம். விமர்சன இயக்கம் தர்க்கங்களை உண்டுபண்ணுகிறது. அதற்கு தீவிர வாசகர்களின் ஏற்பு உருவாகிறது. கல்வித்துறை தொடர்ந்து வரவேண்டும். [அது நிகழாததனாலேயே இங்கே கி.ரா போன்ற இலக்கியமுன்னோடிகளுக்கு ஞானபீடம் போன்ற விருதுகள் வந்தமையவில்லை.] ஆ.சிவசுப்ரமணியம் தமிழில் விமர்சன இயக்கம் சென்ற தலைமுறை வரை வலுவாக இருந்தது. இன்றும் வாசகர்களிடம் அந்த விமர்சன இயக்கத்தின் செல்வாக்கு உள்ளது, ஆனால் அதற்கு அரசு அல்லது கல்வித்துறை அங்கீகாரம் இல்லை. அரசு தன் கட்சிச்சார்பாலும் கல்வித்துறை அதன் சாதியரசியல்- ஆள்பிடிப்பு அரசியலாலும் இலக்கியத்தை அணுகுகிறது. ஆகவே இன்று நவீன இலக்கியச் சூழலில் உள்ள மதிப்பீடுகளுக்கு எந்த புறவய மதிப்பும் இல்லை. தேவதேவனோ தேவதச்சனோ மாபெரும் கவிஞர்கள் என்பதில் இலக்கியவாசகனுக்கு ஐயமே இல்லை. ஆனால் அதை இந்தச் சின்ன வட்டத்திற்கு வெளியே கொண்டுசெல்ல முடியவில்லை. ஆகவே அரசு அல்லது கல்வித்துறையின் ஏற்பு அவர்களுக்கு அமைவதே இல்லை. சுப்ரபாரதிமணியன் சூழல் இப்படி இருக்கையில் நாம் நம் கலைஞர்கள் சமூக ஏற்பின்றி சிறுமை கொள்வதைப்பற்றி குறைப்பட்டுக்கொள்ள ஏதுமில்லை. சமூக ஏற்போ, கல்வித்துறை ஏற்போ இல்லாமல் அரசின் ஏற்பு இயலவேண்டுமென எதிர்பார்ப்பதிலும் பயனில்லை. அதை மாற்றுவது இந்த அறிவுச்சூழலில் இருந்து எவரேனும் அரசில் பங்குபெற்றால்தான் இயலும். கேரளத்தில் கலைப்பண்பாட்டு துறை என்ற ஒரு துறையும் அதற்கு அமைச்சரும் உள்ளனர். அதில் இலக்கியவாதிகள் அமைச்சராவதில்லை. இலக்கிய ஆர்வம் கொண்ட, இலக்கியஅறிவு கொண்ட அரசியல்வாதி ஒருவர் அமைச்சராகிறார் [இலக்கியவாதி அதற்கு முற்றிலும் தகுதியற்றவன். அவன் அந்த இடத்தை ஓர் இலக்கிய அதிகாரமாக ஆக்கிக்கொள்வான். அவ்வண்ணம் ஓர் இடம் ஓர் இலக்கியவாதிக்கு அளிக்கப்படும் என்றால் அவன் தன்னை இலக்கியவிமர்சகனாக, வெளிப்படையான அளவுகோல்களுடன் தன் தெரிவை முன்வைத்து நிறுவியவனாக, இருக்கவேண்டும். கேரளத்தில் அவ்வாறு அமைச்சரான இலக்கிய விமர்சகர் ஜோசப் முண்டச்சேரி. அகில இந்திய அளவில் டாக்டர் ஸ்ரீகாந்த் வர்மா, டாக்டர் கரன்சிங் மற்றும் கே.நட்வர்சிங்] ஜம்புலிங்கம் கேரள கலாச்சார அமைச்சர்களில் எம்.ஏ.பேபி [கம்யூனிஸ்ட்] ஜி.கார்த்திகேயன் [காங்கிரஸ்] போன்றவர்கள் கட்சி எல்லை கடந்து நீடித்த பங்களிப்புக்காக இன்றும் நினைக்கப்படும் ஆளுமைகள். அப்படி எவரும் திராவிட ஆட்சி உருவானபின் இருந்ததில்லை. அதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் டி.எஸ்.அவினாசிலிங்கம் செட்டியார் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறார். அவருடைய ஆட்சிக்காலத்தில்தான் தமிழ் கலைக்களஞ்சியம் [பெ.தூரன்] தமிழ்ப்பேரகராதி [எஸ்.வையாபுரிப்பிள்ளை] போன்ற பெரும்பணிகள் நிகழ்ந்தன. [ஆனால் தமிழ்வழிக் கல்வி என்னும் தளத்தில் நெடுஞ்செழியன், அன்பழகன், அரங்கநாயகம் மூவருமே பெரும்பணி ஆற்றியிருக்கிறார்கள்] தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் உண்மையான பண்பாட்டுச் செயல்பாடுகள் அரசியலுக்கு அப்பால் நின்றிருக்கும் அளவுகோல்களால் மதிப்பிடப்பட்டு, கௌரவிக்கப்படும் ஒரு சூழல் தமிழில் மெல்லமெல்ல உருவாகலாம். அவ்வண்ணம் உருவானால் இலக்கிய விழுமியங்கள் விருதுகளுக்கான அளவுகோல்களாக ஆகலாம். அதற்குரிய காலம் இன்னும் கனியவேண்டும். சரி, என்னை எங்கே வைத்துக்கொள்வேன்? ஏற்கனவே சொன்னதுதான். எந்த அரசுக்கும் என் பணிவை, முழுதேற்பை அளிக்க முடியாது. குடிமகனுக்குரிய உரிமைகளுக்கு அப்பால் அரசுகள் அளிக்கும் எவற்றையும் பெற்றுக்கொள்ள முடியாது. எந்த மேடையிலும் எவர் முன்பும் கொஞ்சம் தணிந்து, சிலரில் ஒருவனாக நிற்க முடியாது. கொஞ்சம் மோசமான ஆணவம்தான். ஒன்றும் செய்வதற்கில்லை. ஜெ https://www.jeyamohan.in/147882/
  10. வண் டே மாஸ்க்கும் சமூக விழிப்பும்! - நிலாந்தன். June 6, 2021 இந்தியாவில் வசிக்கும் ஓர் ஈழத்தமிழர் கூறினார் கொரோன வைரஸ் எனப்படுவது எங்களுடைய முதுகில் படிந்திருக்கும் அழுக்கை போன்றது. அது எங்களோடேயே இருக்கிறது என்று. நடப்பு நிலவரங்களை வைத்து பார்த்தால் அது சரி என்றே தோன்றுகிறது. சோதிக்கப்படாதவரை எல்லாருமே சுகதேகிகள்தான். சோதித்தால்தான் தெரியும் யாரெல்லாம் குணக்குறியற்ற நோய்க்காவிகள் என்று. கிளிநொச்சியில் அண்மையில் ஒரு பதினைந்து வயது பெண் தற்கொலை செய்து கொண்டார். அவர் இறந்த பின்தான் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அப்படித்தான் இப்போது இயல்பாக இறக்கும் பலருக்கும் இறந்த பின்னர்தான் அவர்களுக்கு தொற்று இருப்பது தெரியவருகிறது. அப்படி என்றால் துரித அன்டிஜென் சோதனைகளை செய்தால் என்ன? இது தொடர்பில் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் கூறுகிறார்கள் அது செலவு கூடிய ஒரு பயிற்சி என்று. இலங்கைத் தீவு போன்ற ஒரு வழங்குறைந்த நாடு அதைத் தாங்காது என்று. எல்லாப் பிரஜைகளையும் சோதனை செய்வதை விடவும் நோய்த்தொற்றுச் சங்கிலியை உடைப்பதே புத்திசாலித்தனமானது செலவு குறைந்தது என்று அவர்கள் கூறுகிறார்கள். அவ்வாறு நோய்த்தொற்று சங்கிலியை உடைப்பது என்றால் தடுப்பூசி; சமூக விழிப்பு; சமூக முடக்கம் போன்றனவே பயன்பொருத்தமானவை என்றும் கூறுகிறார்கள். ஆனால் தடுப்பூசி விடயத்திலும் இலங்கைத்தீவு பின்தங்கியிருப்பதாகவே புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மேல் மாகாணத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஒன்பதுலட்சத்து இருபத்திஐயாயிரம் பேருக்கு பல கிழமைகளுக்கு முன்பு முதற்கட்ட தடுப்பூசி ஏற்றப்பட்டது. இரண்டாங்கட்ட தடுப்பூசியை ஏற்றுவதற்கான மூன்றுமாத காலஎல்லை இன்னும் சில நாட்களில் முடிந்துவிடும். ஆனால் அவர்களில் ஐந்து லட்சத்து எழுபத்திஐயாயிரம் பேருக்கு இரண்டாங்கட்ட தடுப்பூசி இன்னமும் ஏற்றப்படவில்லை. இதற்கிடையே சீனா ஐந்துலட்சம் தடுப்பூசிகளை வழங்கியிருக்கிறது. அது வேறுவகை. இதை மாவட்டங்கள் தோறும் அரசாங்கம் பிரித்துக் கொடுக்கிறது. இவ்வாறு கிள்ளிக் கொடுத்து முழு நாட்டுக்கும் தடுப்பூசியை ஏற்றி முடிப்பது எந்தக் காலம்? எனவே தடுப்பூசி விடயத்திலும் அரசாங்கம் திருப்தியாக செயல்பட முடியவில்லை. ஆயின், சமூக முடக்கந்தான் ஒரே வழியா ? இல்லை அதுவும் செலவு கூடிய ஒரு செய்முறை என்பதை பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கக்கூடியது.. அண்மை வாரங்களாக அரசாங்கம் தொடர்ச்சியாக சமூகத்தை முடக்கி வருகிறது. இது விடயத்தில் வெளிப்படைத்தன்மையும் சிவில் தன்மையும் குறைவாக இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது. எவ்வளவு காலத்துக்கு சமூகம் முடக்கப்படும் என்பதை முன்கூட்டியே தெளிவாக அறிவித்திருக்கவில்லை. பதிலாக ஊடகங்கள் ஒருபக்கம் குழப்புகின்றன. தவிர அரசாங்கமும் இத்தனை நாள் சமூகமுடக்கம் என்று முதலில் கூறிவிட்டு பின்னர் நாட்களை மேலதிகமாக நீடிக்கின்றது. இது ஒருவிதத்தில் மக்கள் முன்கூட்டியே உசாராவதைத் தடுக்கின்றது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது அன்றாடங்காய்ச்சிகள் மட்டுமல்ல நடுத்தர வர்க்கமும்தான். ஏனென்றால் இலங்கைத்தீவில் பெருநகரங்களில் உள்ளதுபோல ஒன்லைன் விநியோக வலைப்பின்னல் சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் பரவலாகவும் பலமாகவும் இல்லை. இதனால்தான் உள்வீதிகளில் சமூகத்தை முழுமையாக முடக்க முடியவில்லை. எனவே சமூக முடக்கம் எத்தனை நாட்களுக்கு என்பதனை அரசாங்கம் முன்கூட்டியே தெளிவாக அறிவிப்பதன் மூலம் மக்கள் உரிய ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம். ஆனால் வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் ஒரு போரைப் போலவே முன்னெடுக்கின்றது. அதில் சிவில்த்தனத்தை விடவும் ரானுவத்தனமே அதிகமாக காணப்படுகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக உண்டு. “ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்தின் முதலாவது தவறு கோவிட்-19ஐ இன்னொரு போர் என்றும் அதை இராணுவத்தைப் பயன்படுத்தி வெல்லலாம் என்றும் சிந்தித்ததும் தான்” என்று தனது ருவிற்றர் பக்கத்தில் இமேஷ் ரணசிங்க என்ற சிங்கள ஊடகவியலாளர் கூறுகிறார். உலகளாவிய தொற்றுநோய் காலத்தில் மையத்தில் அதிகாரங்களை குவித்த ஒரு நாடாக ஸ்ரீலங்கா சுட்டிக்காட்டப்படுகிறது. கோத்தாபய ராஜபக்ச அரசுத் தலைவராக தெரிவு செய்யப்பட்ட பின் ஒரு பெருந் தொற்றுநோய் சூழலை காரணம் காட்டி நாட்டின் சிவில் கட்டமைப்புக்கள் அதிகபட்சம் ராணுவமயப்படுத்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. கோவிட்-19ஐ கட்டுப்படுத்தும் செயலணியின் தலைவரான படைத்தளபதி ஊடகச் சந்திப்புக்களில் மருத்துவர்களைவிடக் கூடுதலாகக் கதைக்கிறார். சமூக முடக்க நாட்களில் மட்டுமல்ல சாதாரண நாட்களிலும் தெருக்களையும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளையும் படைத்தரப்பே பெருமளவுக்கு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. நாட்டின் எல்லா covid-19 தடுப்பு மையங்களும் படைத்தரப்பினரால்தான் நிர்வகிக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக கடந்த செவ்வாய்க்கிழமையும் வியாழக்கிழமையும் அரசாங்கம் மூன்று நியமனங்களை செய்திருக்கிறது. காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்துக்கு ஒரு ஓய்வு பெற்ற பொலிஸ் பிரதானியும் ஓரு ஓய்வுபெற்ற படைப்பிரதானியும், இழப்பீட்டு நீதிக்கான அலுவலகத்துக்கு ஒரு ஓய்வு பெற்ற படைப்பிரதானியும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த இரண்டு அலுவலகங்களும் ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் நிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டவை. அதாவது நிலைமாறுகால நீதிக்குரிய கட்டமைப்புகளுக்கு ஓய்வுபெற்ற படைப்பிரதானிகள் ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு ஒரு நோய்த்தொற்றுச் சூழலை முன்னிறுத்தி நாட்டின் வெவ்வேறு நிர்வாகக் கட்டமைப்புகளை அரசாங்கம் படைமயப்படுத்தி வருகிறது. ராணுவத்தனமாக முடிவுகளை எடுத்து படைத் தரப்பை முன்னிறுத்தி வைரசை எதிர்கொண்ட போதிலும் அரசாங்கம் எதிர்பார்த்த வெற்றிகளை பெறத் தவறிவிட்டது என்பதைத்தான் இமேஷ் ரணசிங்க போன்ற ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால் இது விடயத்தில் வெற்றிபெற்ற நாடுகளை தொகுத்து கவனித்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரியவரும். மையத்தில் அதிகாரத்தை குவித்து நோயெதிர்ப்பு நடவடிக்கைகளை இராணுவத்தனமாக முன்னெடுத்த நாடுகள் என்று பார்த்தால் சீனாவை மட்டும்தான் பெருமளவுக்கு முன்னுதாரணமாக காட்டமுடியும். ரஷ்யாவும் பெருமளவுக்கு ராணுவ தனமாகவே நிலைமைகளை அணுகியது. எனினும் சீனா அளவுக்கு அவர்கள் நிலைமையை கட்டுப்படுத்த முடியவில்லை. அதிலும்கூட சீனா எந்தளவுக்கு கட்டுப்படுத்தியிருக்கிறது என்பது தொடர்பில் வெளிப்படையான பக்கச்சார்பற்ற செய்திகளை பெற முடியவில்லை என்பதனை ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அதேசமயம் வைரஸ் தொற்றை இப்போதைக்கு ஒப்பீட்டளவில் வெற்றிகரமாகக் கையாண்ட நாடுகள் என்று வரிசைப் படுத்தப்படும் நாடுகளை தொகுத்துப் பார்த்தால் அவை பெரும்பாலும் சிவில் விழுமியங்களையும் வெளிப்படைத் தன்மையையும் அதிகளவு மதித்த நாடுகள்தான். மையத்தில் அதிகாரத்தை குவித்து ராணுவத்தனமாக முடிவுகளை எடுத்த நாடுகள் அல்ல. எனவே பெரும் தொற்று நோய்க்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை அதிகமதிகம் ராணுவ மயப்படுத்துவதற்கு பதிலாக மக்கள் மயப்படுத்த வேண்டும். மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஒன்றுதான் இது விடயத்தில் அதிகபட்சம் வினைத்திறன் மிக்கது என்பது கடந்த ஓராண்டு காலத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மக்களை வைரசுக்கு எதிராக உளவியல் ரீதியாகவும் சுகாதார ரீதியாகவும் தயார்படுத்த வேண்டிய ஒரு தேவை இருக்கிறது. வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளை அதிகபட்சம் வெளிப்படைத் தன்மையோடு மக்கள் மயப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. இதில் சிவில் சமூகங்களையும் மத நிறுவனங்களையும் ஒன்றிணைக்க வேண்டும். அவ்வாறு மக்கள் மையப்படுத்தப்படாத ஒரு பின்னணியில்தான் வண் டே மாஸ்கை அணிபவர்களின் தொகை ஒப்பீட்டளவில் அதிகமாக காணப்படுகிறதா? நமது தெருக்களில் ஒரு கணக்கெடுப்பை செய்தால் அதில் அதிகமானவர்கள் வண் டே மாஸ்க் அணிந்திருக்கக் காணலாம். ஒரு நாள் மாஸ்க் எனப்படுவது மீளப் பயன்படுத்த முடியாதது. ஆனால் நாட்டில் வண் டே மாஸ்கை திரும்ப திரும்ப துவைத்து பயன்படுத்தும் ஒரு நிலைமையை காணலாம். வீதிகளிலும் அலுவலகங்களிலும் பள்ளிக்கூடங்களிலும் மக்கள் கூடும் இடங்களிலும் வண் டே மாஸ்கை அணிபவர்களே அதிகம். அவர்களெல்லாம் வண் டே மாஸ்கை ஒருநாள் மட்டும் பயன்படுத்தி விட்டு ஏறிவதில்லை. .வண் டே மாஸ்க் அவ்வாறு பல நாட்கள் பல தடவைகள் துவைத்துப் பயன்படுத்தக் கூடியது அல்ல. அதற்கென்று மீளப் பயன்படுத்தக்கூடிய வகைகள் உண்டு. ஆனால் மக்கள் பெருமளவுக்கு வண் டே மாஸ்கைத்தான் அணிகிறார்கள். ஏனெனில் அதற்கு பின்வரும் காரணங்கள் கூறப்படுகின்றன…. முதலாவது அது பயன்படுத்த இலகுவானது. இரண்டாவது விலை குறைந்தது. மூன்றாவது துவைத்துப் பாவிக்க இலகுவானது. நாலாவது கண்ணாடி அணிபவர்களுக்கும் ஹெல்மெட் அணிபவர்களுக்கும் இலகுவானது. ஐந்தாவது வாகனம் ஓட்டும் பொழுது அணிந்திருக்க வசதியானது. போன்ற பல காரணங்கள் காட்டப்படுகின்றன. ஆனால் இக்காரணங்கள் யாவும் அந்த மாஸ்க் தொடர்ந்து பல நாட்களுக்குப் பாவிக்கமுடியாதது என்ற அடிப்படையான சுகாதார விளக்கத்தை புறக்கணிப்பவை. இது விடயத்தில் ஏனைய நாடுகளில் நிலைமை எப்படியிருக்கிறது என்று இக்கட்டுரைக்கு தெரியாது. பிரான்சில் வசிக்கும் ஒருவர் சொன்னார்….நோய்த்தொற்றின் தொடக்கத்தில் ஒரு பெட்டி வண்டே மாஸ்க் முப்பது யுரோக்களுக்கு விற்ககப்பட்டதாம் ஆனால் இப்பொழுது ஒரு பெட்டி இரண்டரை யுரோக்கு விற்க்கப்படுகிறதாம். முன்பு ஒரு குப்பி சனிடைசர் ஐந்து யூரொ. இப்பொழுது ஒரு லீற்றர் ஐந்து யூரோவாம். அதாவது பிரெஞ்ச் அரசாங்கம் விலைகளைக் குறைத்திருக்கிறது. ஆனால் நமது நாட்டில் கொரோனாவுக்கு முன் ஒரு பெட்டி வண்டே மாஸ்க் நானூறு ரூபாய். இபொழுது நல்ல மாஸ்க் ஒரு பெட்டி எழுநூறு ரூபாய். மாஸ்க்கின் விலை குறைந்தால் அதைத் தோய்த்துப் பாவிப்பது குறையுமா? எதுவோ,இலங்கைத் தீவின் தமிழ் பகுதிகளைப் பொறுத்தவரை இதுதான் நிலைமை. அதாவது மக்கள் வைரஸிடம் இருந்து தங்களை பாதுகாப்பதற்காக மாஸ் அணிகிறார்களா? அல்லது பொலிசாரிடமிருந்தும் படைத்தரப்பிடமிருந்தும் குறிப்பாக சட்டத்திடமிருந்தும் தங்களை பாதுகாப்பதற்காக மாஸ்க் அணிகிறார்களா? என்ற கேள்விக்கு விடை முக்கியம். இப்படித்தானிருக்கிறது வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளின் மக்கள் மயப்பட்ட தன்மை. இப்படியே போனால் அடுத்தடுத்து ஏற்படக்கூடிய தொற்று அலைகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே இதுவிடயத்தில் அரசாங்கம் கண்டிப்பாக செய்ய வேண்டியது என்னவென்றால் வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆகக்கூடியபட்சம் வெளிப்படைத்தன்மை மிக்கதாக மக்கள் மயப்படுத்துவதுதான். மாறாக அவற்றை ராணுவ மயப்படுத்துவது அல்ல. https://globaltamilnews.net/2021/161985/
  11. மலேசியா சிங்கப்பூரில் தமிழ்நூல்களை விற்பனைசெய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள தமிழாசியா என்னும் தளத்தின் தொடக்கவிழாவுக்காக ஆற்றிய வாழ்த்துரை. https://tamilasiabooks.com/ https://www.jeyamohan.in/145363/
  12. இந்து என உணர்தல் - ஜெயமோகன் March 29, 2021 உங்களை தூரத்தில் இருந்து மட்டுமே பார்த்திருக்கிறேன். சென்னையில் ஒரு திரைப்பட விழாவில், விருது விழாவில் மற்றும் புத்தக வெளியீட்டு விழாவில். உங்களிடம் பேசியதில்லை. ஒரு தயக்கம். என்ன பேசுவது. என்னை யார் என்று அறிமுகம் செய்து கொள்வது. உங்களின் வாசகன் என்னும் தகுதியைக்கூட நான் இன்னும் அடையவில்லை என நினைக்கிறேன். பலரையும் போல நானும் உங்கள் “அறம்” தொகுப்பின் வழியே உங்களை அடைந்தேன். அதன்பின் “வெண்கடல்”, “ரப்பர்”, “பனிமனிதன், “வெள்ளையானை”, “ஏழாம் உலகம்” போன்ற புனைவுகளையும், “முன்சுவடுகள்”, “இன்று பெற்றவை” போன்ற அபுனைவுகளையும் மற்றும் “இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள்” என்ற தத்துவ நூலையும் வாசிப்பதன் வழி உங்களுடன் ஒரு நெருக்கமான அக பயணத்தை மேற்கொண்டேன். இப்போது உங்கள் வலைதளத்தின் வாயிலாக தினமும் உங்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறேன். பின் நவீனத்துவத்தின் மீதான என் காதலை வார்த்தெடுத்தவர் நீங்கள் தான். தர்க்கத்தையும் தாண்டிய உச்ச நிலைகளை உங்கள் படைப்பின் மூலம்தான் கண்டுணர்ந்தேன். ஆனாலும் உங்களின் உன்னத படைப்புகளாகக் கருதப்படும் விஷ்ணுபுரம் மற்றும் வெண்முரசு போன்றவற்றை நான் வாசித்தது இல்லை. இன்னும் நான் அவ்வளவு வளரவில்லை அல்லது இன்னும் நான் அங்கு வந்து சேரவில்லை என்றே எண்ணிக்கொள்கிறேன். அதனாலேயே உங்களின் தீவிர வாசகன் என கூறிக்கொள்ளும் நிலையை நான் அடையவில்லை என்றே நினைக்கிறேன். நிறைய முறை உங்களுக்கு எழுத எண்ணித் தோற்றிருக்கிறேன். என்ன எழுதுவது?. நான் எழுத நினைப்பவற்றையும், எனக்கு தேவைப்படுவன பற்றியும் முன்பே அறிந்ததைப்போல் எழுதித் தீர்த்துவிடும் ஆசானிடம் புதிதாக என்ன கேட்பது. நிறைய கட்டுரைகளை நீங்கள் எனக்காக எழுதியதாகவே எண்ணி உள்ளம் மகிழ்ந்திருக்கிறேன். இன்றும் வழக்கம் போல் தோற்றுப்போகாமல் உங்களுக்கு எழுதிவிடுகிறேன். எனது ஐயங்கள் அ) இந்துக்களுக்கும் இந்துத்துவர்களுக்கும் உள்ள வேறுபாட்டைப் பற்றி நீங்கள் நிறைய எழுதிவிட்டீர்கள். சலித்திருக்கூடும். என்னுடைய கேள்வியும் இதை ஒட்டிதான். அந்த வேறுபாட்டை என்னால் நன்கு உணரமுடிகிறது. ஆனால் ஒரு இந்துவாக நான் ஏன் பெருமைப்பட வேண்டும்? உங்களின் சாதியாதல் கட்டுரையில் “ஒரு மனிதனை அவனுடைய சொந்த ஆளுமையை வைத்து மதிப்பிடும்போதுதான் அவனுக்குரிய உண்மையான மதிப்பு வெளிப்படுகிறது” என்ற உங்கள் சொற்கள் காட்டும் வெளிச்சத்தின்வழி பார்த்தால் இந்துவாக பிறந்ததைத்தவிர வேறு என்ன செய்துவிட்டேன் நான் பெருமை கொள்வதற்கு? சாதியைப் போல் மதமும் ஒரு குறுகலான மனப்பான்மைதானே? ஆ) நான் அண்ணல் அம்பேத்கரின் கண்களால் இந்து மதத்தை அணுகியவன். எனக்கு இந்துக்கள் என்பவர்கள் சாதிகளால் பிணைக்கப்பட்ட குழுமம் என்ற புரிதலே மேலோங்கி இருக்கிறது. ஒரு சக இந்து வலியால் துடித்துக்கொண்டிருக்க, நான் மட்டும் எவ்வாறு ‘இந்து’ எனக் கூறி பெருமிதம் அடைய முடியும். நீங்கள் சொல்லும் ஆசாரங்கள் வேறு இந்து தரிசனம் வேறு என்ற வேறுபாட்டை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அந்த புரிதல் யாருடைய வலியையும் நீக்கப் போவதில்லை. அப்படியிருக்க, இப்போதைய இந்துக்கள் யாரும் இந்து மதம் போதிக்கும் தத்தவங்களை அறியாதவர்களா? அந்த அறியாமையில் என்ன பெருமை? இந்த ஐயங்களை உங்களிடம் சமர்பிக்கிறேன். இவற்றில் ஏதேனும் பிழையிருப்பின் மன்னிக்கவும். இப்படிக்கு கருப்பன் [விக்னேஷ் முத்துக்கிருஷ்ணன்] அன்புள்ள கருப்பன், உங்கள் புனைபெயருடன் உண்மைப்பெயரையும் பிரசுரிக்கிறேன். ஏனென்றால் இளமையில் நாம் இப்படிச் சில அடையாளங்களை சூட்டிக்கொண்டு அதனூடாகச் சிந்திக்கிறோம். பிறரையும் அப்படி நம்மை பார்க்கும்படி கட்டாயப்படுத்துகிறோம். இதனால் நம்மை பிறர் பார்க்கும் பார்வையையும் கட்டுப்படுத்திவிடுகிறோம். மெய்யான எதிர்வினைகள் வராமல் செய்துவிடுகிறோம். உங்களுடைய ஐயங்கள் மெய்யானவை. இந்த ஐயங்களை அல்லது இவற்றுக்குப் பின்னாலுள்ள அறவுணர்வை மழுங்கவைக்க நான் முயலப்போவதில்லை. அவை அவ்வாறே கூர்மையுடன் நீடிக்கட்டும் என்றே சொல்ல விரும்புகிறேன். * முதலில் ஏன் இந்து என்ற அடையாளம் அல்லது மரபுத்தொடர்ச்சி தேவை என நான் நினைக்கிறேன்? இது என் தரப்பு, நான் ஏன் அப்படி நினைக்கிறேன் என்பதற்கான பதில். நீங்கள் இதை யோசித்துப்பார்க்கலாம் என்று மட்டுமே சொல்வேன். நான் மானுட அறிதல் என்பது நிகழ்காலத்தின் எல்லைக்குள் நின்றிருப்பது அல்ல என்று உறுதியாக அறிகிறேன். நிகழ்காலத்தின் அரசியல், சமூகவியல், பண்பாட்டுச்சூழலில் இருந்து அறிதல்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. அவற்றை தவிர்க்கமுடியாது, அது இயல்பான செயல்பாடு. ஆனால் அறிதல் என்பது தொடர்ச்சியானது. மிகமிகத் தொன்மையான காலத்தில் இருந்து, பழங்குடிக் காலத்திற்கும் முன்பிருந்து, திரண்டு வந்துகொண்டிருப்பது. நம் வழியாக முன்செல்வது. யோசித்துப்பாருங்கள், இப்படி புரிந்துகொண்டால் ஒழிய சிந்தனைக்கும் பண்பாட்டுச் செயல்பாடுகளுக்கும் எப்பொருளும் இல்லை. நமக்கு நேற்று பொருட்டல்ல என்றால் நாளை வருபவர்களுக்கு நமது இன்றைய சிந்தனைகளும் பண்பாடும் பொருட்டே அல்ல. அப்படியென்றால் நாம் சிந்திக்கவேண்டாம், கலைகளை உருவாக்கவும் வேண்டாம், இல்லையா? மானுட அறிவு மிகத்தொன்மையான காலம் முதல் தொடர்ச்சியாக உருவாகி, ஒன்றுடன் ஒன்று மோதி முரண்பட்டு இணைந்து, தன்னைத்தானே திரட்டிக்கொண்டு நம்மை வந்தடைந்திருக்கிறது. நாம் சிந்திப்பதும் கனவுகாண்பதும் அதன் நீட்சியாகவே. சமகாலத்திலேயே உழல்பவர்கள் கூட அந்த நீட்சியிலேயே இருக்கிறார்கள். அன்றாட வணிகம்,அன்றாட அரசியல் ஆகியவற்றிலேயே திளைப்பவர்களின் அகம்கூட தொன்மையிலிருந்து நீண்டு வரும் மரபின் மேலேதான் நிகழ்கிறது. அவர்கள் என்னென்ன தர்க்கம் பேசினாலும் அவர்களின் எளிய அறிவால் பதில் சொல்லிவிட முடியாத கேள்விகளுக்கு மரபின் பதில்களையே நாடுவார்கள். அன்றாடத்தில்கூட தன்னையறியாமலேயே மரபின் பதில்களை மறுசமையல் செய்து கையாள்வார்கள். அறிவியக்கத்தில் செயல்படுபவன் அந்த மரபு குறித்து அறிந்திருக்கவேண்டும், அதை ஆராயவேண்டும், தன்னுணர்வுடன் அதைக் கையாளவேண்டும் என்று மட்டுமே நான் சொல்கிறேன். என் பயணங்களை நீங்கள் பார்க்கலாம். தொல்பழங்காலச் சின்னங்கள் முதல் இன்றைய பண்பாட்டுநிலைகள் வரை சென்றுகொண்டே இருக்கிறேன். அது இந்த தேடலால்தான். மரபின் சிந்தனைகளின் பெரும்பகுதி மதத்திலேயே உள்ளது.மதம் என்பது வெறும் நம்பிக்கை அல்ல.ஆசாரங்களின் தொகுதி மட்டும் அல்ல. சட்டதிட்டங்கள் அல்ல. அது ஒரு மாபெரும் அறிவுத்தொகை. எந்த மதமாக இருந்தாலும் சரி, அது குறைந்தது ஆயிரமாண்டுகளாக மானுடசிந்தனை செயல்பட்ட ஒரு பெருக்கின் பதிவாகவே நமக்கு கிடைக்கிறது. அதை எந்தச் சிந்திக்கும் மனிதனும் முற்றாக நிராகரிக்க முடியாது. அதிலும், இந்துமதம், பௌத்தமதம், சமணமதம் போன்றவை மிகமிகத் தொன்மையானவை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக சிந்தனையில், பண்பாட்டுத்தளத்தில் செயல்பட்டு வருபவை. பல்லாயிரம் அறிஞர்கள் மற்றும் ஞானிகளின் சிந்தனைகள், இலக்கியங்கள், கலைப்படைப்புக்கள் அவற்றில் திரட்டப்பட்டுள்ளன. அவை மாபெரும் மானுடச்செல்வங்கள். அவற்றிலேயேகூட இந்துமதம் மேலும் தொன்மையானது. அதன் ஒருபகுதி வரலாற்றுக்கும் முந்தைய பழங்காலத்தில் உள்ளது. கற்காலத்துத் தொல்குடி வாழ்க்கையில் உள்ளது.மறுபகுதி இதோ நம் கண்ணெதிரில் உள்ளது. இன்று, இந்த உலகப்பரப்பில் வேறெந்த மதத்துக்கும் இந்த தனித்தன்மை இல்லை. மானுட சிந்தனை, மானுடக்கலை இத்தனை நூற்றாண்டுகளில் எப்படி உருவாகி வந்தது என்று கண்கூடாக காணும் வாய்ப்பை அளிக்கும் பிறிதொரு களமே உலகில் இல்லை. இது கொஞ்சம் புரட்டிப்படிக்கும் பழக்கமுள்ள, காழ்ப்பற்ற, எவரும் காணக்கூடிய உண்மை. ஓர் உதாரணம் சொல்கிறேன். கற்காலத் தொல்குடிச் சின்னங்களில் இரண்டு மான்களை வேட்டையாடி கையிலேந்தி நின்றிருக்கும் ஒரு வேடனின் உருவம் காணப்படுகிறது. Master of Animals என அதை ஆய்வாளர் சொல்கிறார்கள். எல்லா தொல்குடிப் பண்பாடுகளிலும் அந்த வடிவம் ஏதோ ஒருவகையில் உள்ளது. மெசபடோமியா, எகிப்து பண்பாடுகளில் உள்ளது. அதை ‘அதிருஷ்டம் கொண்டுவருபவன்’ என்று சொல்கிறார்கள். ஆனால் பசித்தபோது உணவுடன் வரும் தந்தை என்றும் கொள்ளலாம். கனவில் உணவுடன் வந்த தந்தை வடிவமாக இருக்கலாம். நாம் ஊகிக்கவே முடியாத ஒரு காலகட்டத்தின் வடிவம் அது. அவ்வடிவங்கள் இந்தியாவின் கற்காலச் சின்னங்களில் உள்ளன. அதே வடிவம் கொஞ்சம் உருமாறி இந்தியாவின் மிகத்தொன்மையான சிவவடிவமான குடிமல்லம் சிவலிங்கத்தில் உள்ளது. மானை தலைகீழாகப் பிடித்து ஒரு கையில் வேட்டை ஆயுதத்துடன் இருக்கும் சிவன். பின்னர் அந்த மான் அருகே துள்ளி நின்றிருப்பதாக மாறியது. சிவனின் வடிவங்களில் அவர் வேடனாக வரும் பிட்சாடனர், கிராத மூர்த்தி போன்ற உருவங்கள் முக்கியமானவை. யோசித்துப்பாருங்கள், கண்ணெதிரே ஐம்பதாயிரம் ஆண்டுக் காலம் நீண்டு வளர்ந்து வந்திருக்கும் ஒரு மகத்தான படிமம் நின்றிருக்கிறது. நினைப்புக்கெட்டா தொல்வடிவிலிருந்து நம் மூதாதையர் எண்ணி எண்ணி, கனவுகண்டு கனவுகண்டு, திரட்டி எடுத்த ஒன்று. நம் ஊரில் ஆலயத்தில் கரிய மழமழப்பான கல்லென அமர்ந்திருக்கிறது அது. எத்தனை அரியது அது. மானுடகுலத்தில் எத்தனைபேருக்கு அப்படி ஒன்று மரபில் இருந்து வந்து சேர்ந்திருக்கிறது?[கற்காலத்து மழை] என்னை அது வெறும் தூசியென, காலக்குமிழியென உணரச் செய்கிறது. கூடவே மானுடமென இந்த முப்பதாயிரம் ஆண்டுகளும் அறுபடாது நீடித்த மரபுத்தொடர் நான் என்னும் பெருமிதத்தையும் அளிக்கிறது. இதை நான் ஏன் இழக்கவேண்டும்? இழந்து நான் அடைவதுதான் என்ன? நான் அதனுடன் என்னை அடையாளப்படுத்திக் கொள்ளும்போது ஒரு மகத்தான மரபுடன் இணைகிறேன். என் அடையாளத்தை அவ்வாறு உருவாக்கிக் கொள்கிறேன். பெரும் கனவுகளைக் காண்கிறேன். அதை தவிர்த்துவிட்டு நான் எந்த அடையாளத்தைச் சூடிக்கொள்ளவேண்டும்? அரசியல்வாதிகள் சமைத்தளிக்கும் மந்தை அடையாளங்களையா? அல்லது தொழில்நுட்பம் உருவாக்கி அளிக்கும் நுகர்வோர் அடையாளத்தையா? கிமு 350 எகிப்து மேய்க்கோப் பண்பாடு, கிமு 2600 ரத்னகிரி அருகே, குடோப்பி. கற்கால பாறைச்செதுக்கு குடிமல்லம் சிவன் பிட்சாடன சிவன் கிராதமூர்த்தி [வேடனாகிய சிவன்] சோழர்கால செப்புத்திருமேனி. ஐரோப்பாவிலும் மத்திய ஆசியாவிலும் கிறிஸ்தவமும் இஸ்லாமும் அங்கிருந்த பாகன் மதங்களை அழித்தன. தடையமே இல்லாது செய்தன. இன்று பேரறிஞர்கள் மிகப்பெரிய உழைப்பு செலுத்தி துளித்துளியாக அவற்றை மீட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்தப்பணி தொடங்கி இருநூறாண்டுகளாகின்றன. சாதாரணமாக இணையத்திற்குச் சென்று பார்த்தாலே அந்த அறிவுச்செயல்பாட்டின் பேருருவை காணமுடியும். அப்படி இருக்க கண்ணெதிரே ஏறத்தாழ முழுமையுடன் நின்றிருக்கும் அத்தகைய ஒரு தொல்மதம் எத்தனை பெரிய பண்பாட்டுச் சொத்து. எவ்வளவு பெரிய மானுடச்செல்வம். அதை அழியவேண்டும் என்பவர்கள் அறியாமூடர்கள் அன்றி வேறல்ல. இந்து மதத்தின் அறிவுத்தொகுப்பு, பண்பாட்டுத் தொகுப்பு மனம் பிரமிக்கச் செய்யும் அளவுக்குப் பிரம்மாண்டமானது. மானுடசிந்தனை தவிர்க்கவே முடியாதவர்கள் என இருநூறு தத்துவஞானிகளை அதில் சுட்டமுடியும். மானுடன் கொண்டாடவேண்டிய முந்நூறு பெரும்படைப்பாளிகளை அட்டவணையிட முடியும். ஞானிகளின் நிரை மிகப்பெரியது. அதில் ஓர் உறுப்பினர் என்று சொல்வதில் எந்த இழிவும் இல்லை. அது பெருமிதத்திற்குரியது. அது இழிவு என நமக்கு கற்பிக்கப்பட்டுள்ளது – கற்பிப்பவர்கள் உள்நோக்கம் கொண்டவர்கள். மானுடத்தின் செழிப்பான ஒருபகுதியை ஏற்கனவே அழித்தவர்கள். எஞ்சுவதை அழிக்க நினைப்பவர்கள். இந்த பெரும்பெருக்கின் தொடர்ச்சியாக என்னை நான் உணரும்போது சிந்தனையில் பண்பாட்டில் ஒரு பெருஞ்செல்வத்தை அடைந்தவனாகிறேன். அதை என்னால் இழக்கமுடியாது. ஆகவேதான் நான் இந்து. அதைச் சொல்வதற்காக சென்ற முப்பதாண்டுகளில் இங்குள்ள மூளைச்சலவை செய்யப்பட்ட அரசியல்கும்பலால் இழிவுசெய்யப்படுகிறேன், பல தளங்களில் வெளியேற்றப்படுகிரேன். ஆனால் அதைச் சொல்லாமலிருக்க மாட்டேன். * அறிவு- கலைச்செல்வத்தின் நுட்பமான தொடர்ச்சியாகச் சொல்லத்தக்கது ஆழ்படிமங்கள்.[ Archetype] தொன்மங்கள், படிமங்கள், நம்பிக்கைகள், கதைகள் என அது பலமுகம் கொண்டிருக்கிறது. ஆழ்படிமங்கள் வழியாகவே மானுட உள்ளம் ஆழ்ந்து யோசிக்கமுடியும். தன் அடிப்படைகளைப் பற்றி உசாவமுடியும். இப்படிச் சொல்கிறேன், நீங்கள் உங்கள் அன்றாடச் சிக்கல்களைப் பற்றிப் பேச அன்றாட அடையாளங்களும் குறியீடுகளும் போதும். அடிப்படைகளைப் பற்றிப் பேச ஆழ்படிமங்கள் தேவை. நீங்கள் நீங்கள்மட்டுமாக நின்று சிந்திக்க அன்றாட விஷயங்கள்போதும், பல்லாயிரம் ஆண்டு தொன்மைகொண்ட மானுட உள்ளமாக நின்று யோசிக்க ஆழ்படிமங்கள் தேவை. அந்த ஆழ்படிமங்கள் பழங்குடி வாழ்க்கையிலிருந்து தொடங்கி மெல்லமெல்ல வேரூன்றியிருப்பவை. அவற்றை உருவாக்க முடியாது, அவை காலத்தில் உருவாகி வரவேண்டும். அவற்றுக்கு எந்த தர்க்கமும் ஒழுங்கும் இல்லை. அவை நம் என்றுமுள்ள தேடல்கள், அச்சங்கள், கண்டடைதல்களிலிருந்து பிறப்பவை. அவை மதங்களில்தான் தொகுக்கப்பட்டுள்ளன. இந்துமதம்போன்று மிகமிகத் தொன்மையான ஒரு மதத்தில், பழங்குடிப் பண்பாடு அப்படியே உள்ளே உறையும் ஒரு மதத்தில் அவை அழியாது பேணப்படுகின்றன. அவை எந்த புனைவிலக்கியவாதிக்கும், எந்த சிந்தனையாளனுக்கும் பெருஞ்செல்வம். அவன் உள்ளத்தை கட்டமைக்கின்றன, மேலும் சிந்திக்க வழியமைக்கின்றன பசுபதி, மொகஞ்சதாரோ யோகேஸ்வர சிவன் ஐரோப்பாவின் மாபெரும் மறுமலர்ச்சி என்பது அது தன் புதைக்கப்பட்ட பாகன் பண்பாட்டின் ஆழ்படிமங்களை மீட்டெடுத்ததில் இருந்து தொடங்குகிறது. அதன் சிந்தனை, கலை எல்லாம் அங்கிருந்தே பெருகிப் பேருருக்கொண்டன. அதன் தத்துவம் அங்கிருந்தே உருவாகியது. அந்த தத்துவமே அறிவியலை உருவாக்கியது. நம் கண்முன் நமது தொன்மை விரிந்து கிடக்கிறது. எவரோ சொன்னார் என்று நாம் புறந்திரும்பி நின்று கொண்டிருக்கிறோம். அந்த ஆழ்படிமங்களை நான் அடையவேண்டும் என்றால் நான் அதனுடன் அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும். நன் அதன் நீட்சியாக என்னை உணரவேண்டும். ஆகவேதான் நான் இந்து. நான் இப்போது பதினேழாம்நூற்றாண்டு பிரிட்டிஷ் கற்பனாவாதக் கவிஞர்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள்தான் உலகமெங்கும் புதியகவிதையின் அடிப்படைகளை உருவாக்கிய முன்னோடிகள். அவர்கள் அனைவரிலும் இருக்கும் பாகன் பண்பாட்டு அடிப்படைகள் பிரமிக்கவைக்கின்றன. அவர்களை அந்தப் பண்பாட்டுக் கூறுகள் இல்லாமல் புரிந்துகொள்ளவே முடியாது. அந்த பாகன் பண்பாடு பன்மைத்ன்தமை, இயற்கையுடனான அணுகுமுறை, பிரபஞ்சப்பார்வை ஆகியவற்றில் இந்துமதத்திற்கு மிக அணுக்கமானது. நமக்கு என்ன தடை? எவர் அளிக்கும் தடை? இந்த மாபெரும் தொடர்ச்சியை நான் ஏன் உதறவேண்டும்? உதறியபின் எனக்கு எஞ்சுவது என்ன? ஐரோப்பாவில் இருந்தும் மத்திய ஆசியாவில் இருந்தும் வந்துசேரும் எளிமையான தீர்க்கதரிசன மதங்கள். அவற்றின் ஒற்றைநூல் நம்பிக்கைகள். அவற்றை நோக்கி என்னை செலுத்தும்பொருட்டுத்தானே இந்த மூர்க்கமான இந்து எதிர்ப்பு இங்கே கட்டமைக்கப்படுகிறது? அந்தத் தீர்க்கதரிசன மதங்கள் உலகமெங்கும் பேரழிவுகளை உருவாக்கியவை. தங்களுக்குள்ளேயே தீராப்போர்களை உருவாக்கி தங்களையே அழித்துக் கொண்டவை, கொள்பவை. அடிமைமுறையை பலநூறாண்டுக்காலம் நிலைநிறுத்தியவை. இனவெறுப்பை பேணுபவை. அம்பேத்கரே அவற்றைப் பற்றி எழுதியிருக்கிறார். சரி, அதீத கூர்மையுடன் நான் தேடிச்சென்றால்கூட ஐரோப்பா உருவாக்கிய மறுமலர்ச்சிக்கால பொருள்முதல்வாத பண்பாட்டை அல்லது அறிவொளிநோக்குப் பண்பாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவை அங்குள்ள பாகன் மதத்தின் ஊற்றுக்களில் இருந்து அவர்களால் உருவாக்கப்பட்டவை. அவற்றை நான் ஏன் இங்கேயே தேடிக்கொள்ள கூடாது? அறிவொளிநோக்கு வேண்டுமென்றால் எனக்கு சங்கரர் போதுமே. பொருள்முதல்வாதம் வேண்டுமென்றால் கபிலரோ கணாதரோ போதுமே? நான் ஏன் இரவல் சிந்தனையாளனாக ஆகவேண்டும்? எவருடைய நலனுக்காக? * சரி, நீங்கள் கேட்ட கேள்விகள். முதலில், இந்துமதம் சாதிகளால் கட்டமைக்கப்பட்டதா? ஆமாம், அது உருவாகி வந்த பரிணாமத்தில் அது பிறப்படிப்படையிலான சாதியடுக்குகளாகவே திரண்டு வந்தது. அது எவராலும் அப்படி கட்டமைக்கப்படவில்லை. பலநூறு இனக்குழுக்கள் பொதுவான நம்பிக்கைகள் ஆசாரங்களின் அடிப்படையில் ஒருங்கிணைக்கப்பட்டு இந்துசமூகம் உருவானபோது அவர்களின் எண்ணிக்கை, போர்வல்லமை, ஆதிக்கத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் மேல் கீழ் என்னும் அடுக்கு உருவானது. அது பின்னர் தத்துவார்த்தமாக விளக்கப்பட்டது.அதுவே சாதிமுறை. அவ்வண்ணம் பிறப்பு அடிப்படையிலான அடுக்குமுறை இல்லாத ஒரு சமூகம்கூட உலகில் எங்கும் இல்லை. நிலப்பிரபுத்துவத்தின் இயல்பு அது. உலகமெங்கும் அது ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வகையானது. இந்தியாவில் அது சாதிமுறை. அதில் ஒடுக்குமுறை இருந்தது. ஆனால் உலகமெங்கும் அதே ஒடுக்குமுறை இருந்தது என்பதே வரலாறு. உலகம் முழுக்க நிலப்பிரபுத்துவம் அழிந்துவருகிறது. அன்றிருந்த சமூக அமைப்புக்களும் அழியும். அவற்றை நிலைநிறுத்தும் உளப்போக்குகள் மேலும் சில தலைமுறைகளில் அழியும். சாதியும் அவ்வண்ணமே நம் கண்முன் அழிந்து வருகிறது. இன்று அது மேல்கீழ் அதிகார அடுக்கு அல்ல. அரசியலுக்கான திரளடையாளம் மட்டுமே. அதுவும் மறையலாம். நீங்கள் இந்த வரலாற்று உண்மையை ‘இந்துமதம் என்பது சாதிகள் மட்டுமான ஒன்று’ என்று திரித்துக்கொள்கிறீர்கள். நம் சூழலில் செய்யப்படும் பொதுவானதிரிபு இது. இளைஞர்கள் அதை அரசியலில் இருந்து கற்றுக்கொள்கிறார்கள். இந்துமதம் என்பது சாதிமுறை மட்டும் அல்ல. அதன் சமூகக் கட்டமைப்பில் ஒரு சிறு பகுதிதான் சாதி. அதன் மெய்யியல் சாதி சார்ந்தது அல்ல. அதன் அடிப்படை ஞானம் சாதிச்சார்பு கொண்டது அல்ல. சாதி ஒழிந்தாலும் இந்துமெய்ஞானம் எந்த ஊறுமின்றி நிலைகொள்ளும். மேலும் வளரும். இந்து மதத்தின் மெய்யியல், தத்துவம், இலக்கியம், கலை ஆகியவை அனைத்துமே சாதிமுறைக்காக மட்டுமே நிலைகொள்பவை என ஒருவன் எண்ணுவான் என்றால், அவன் எந்தத் தரப்பினன் ஆயினும், அறிவிலியே. சாதிமுறையின் பொருட்டு அவை அனைத்தையும் ஒருவன் துறப்பான் என்றால் அவன் கண்மூடிக்கொண்டவன் மட்டுமே. இந்துமதத்தின் வரலாற்றிலேயே சாதிகள் தொடர்ந்து முன்னும் பின்னும் படிநிலைகளில் நகர்ந்துகொண்டே இருந்திருக்கின்றன. சாதிமுறையில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்த புரட்சிகள் உருவாகியிருக்கின்றன. சாதிமுறை இன்று தளரும்போதும் இந்துமதம் எவ்வகையிலும் தளர்வடையவில்லை. வளர்ச்சியே அடைகிறது. ஒரு குறிப்பிட்ட கோணத்தில் அரசியல் தளத்தில் செயல்படும் அறிஞர்கள் வரலாற்றை நோக்கி விளக்கியிருக்கலாம். அவர்கள் காலகட்டத்தின் அரசியல் தேவைகள், வரலாற்றுப் பார்வைகள் அவர்களை இயக்கியிருக்கலாம். நமக்குத்தேவை நாமே அறியும் வரலாற்று நோக்கு, பண்பாட்டு நோக்கு. * மதம் அளிப்பது மெய்யியலை. அந்த மெய்யியலை தத்துவம் என்றும், கலை என்றும், அறவியல் என்றும் விரித்துக்கொள்வது அந்தச் சமூகத்தின் பொறுப்பு. அச்சமூகத்தின் தோல்விகளுக்கு மதமே காரணம் என்று சொல்வதென்றால் அதை அத்தனை சிந்தனை, கலை, இலக்கியம் அனைத்துக்கும் போட்டுப்பார்க்கலாமே? சரி, இந்துமதம் எளியோருக்காக ஒன்றும் செய்யவில்லை. வேறு எந்த மதம் செய்கிறது? அடிமைமுறையை பல நூறாண்டுகள் நிலைநிறுத்திய மதங்களா? அயல்நிலங்களை ஆக்ரமித்து அங்குவாழ்ந்த கோடானுகோடி மக்களை வேரோடு அழித்த மதங்களா? அச்செயல்களுக்கு பலநூறாண்டுகள் நியாயம் கற்பித்த மதங்களா? இனவாதத்தை இன்றும் பின்னின்று இயக்கும் மதங்களா? வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். உங்கள் பார்வையில் பார்த்தால்கூட பாவக்கணக்கு மிகக்குறைவான மதங்கள் மூன்று இந்திய மதங்கள் மட்டுமே. சரி, மதங்களை விடுவோம். நவீனச் சிந்தனைகளை எடுத்துக் கொள்வோம். ஐரோப்பாவின் களத்தில் உருவானவை நவீன ஜனநாயகச் சிந்தனைகள். நவீன இலக்கிய- தத்துவச் சிந்தனைகள். நவீனக் கலைகள். ஆனால் காலனியாதிக்கம் அந்த ஐரோப்பாவின் கொடை. உலகை பஞ்சத்திலாழ்த்திச் சூறையாடியவை ஐரோப்பிய நாடுகள். உலகப்போர்களை விட பலமடங்கு மக்களை பட்டினியில் சாகவிட்டவை. ஐரோப்பியச் சிந்தனைகள் அனைத்துமே காலனியத்தின் கறைபடிந்தவை என தூக்கி வீசிவிடலாமா? சரி, அது நேற்று. இன்று? நீங்கள் சொல்லும் பின்நவீனச் சிந்தனைகள் எங்கே உருவாகின்றன? முதன்மையாக ஃபிரான்ஸில். ஜெர்மனி, பிரிட்டன், அமெரிக்காவில். அங்குள்ள கல்விநிலையங்களில். பெரும் ஊதியத்தையும் நிதிக்கொடைகளையும் பெறும் பேராசிரியர்கள் அவற்றை உருவாக்குகிறார்கள். அந்த பல்கலைகளுக்கு நிதியளிப்பவர்கள் யார்? பெரும்வணிகர்கள், வணிக நிறுவனங்கள், அங்குள்ள அரசு. அந்த வணிகர்கள் , நிறுவனங்கள் செய்யும் தொழில் என்ன? அங்குள்ள அரசுகளின் வருவாய் முதன்மையாக எது? ஆப்ரிக்க ஆசிய நாடுகளில் போலி ஆட்சியாளர்களை நிறுவி அவர்களின் வளங்களைச் சுரண்டுவது. ஆயுதங்களை உற்பத்திசெய்து ஆசிய ஆப்ரிக்க நாடுகளுக்கு விற்று அவர்களை சுரண்டுவது. அவர்கள் ஓயாது போர்புரியும்பொருட்டு உட்பூசல்களை, தேசியமோதல்களை உருவாக்குவது. அந்தச் சிந்தனைகளை ஏற்க ,பயில இந்த உண்மைகள் உங்களுக்கு தடையாக அமையவில்லை இல்லையா? இந்தச் சிந்தனைகள் அவர்களுக்கு அளிக்கப்படும் நேரடி நிதிகள் எவ்வாறு உருவாகின்றன என்னும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டியவை என்று தோன்றவில்லை இல்லையா? உங்கள் அளவுகோல்களின்படி இங்கே அநீதி உள்ளது, சுரண்டல் உள்ளது. ஆகவே திருக்குறள் தேவையில்லை. சங்க இலக்கியம் பயனற்றது. அத்தனை தத்துவங்களும் வீண், இல்லையா? அப்படிச் சொல்லமாட்டீர்கள். ஆனால் ஆனால் சாதிமுறையை, அல்லது சமகாலத்தில் உள்ள சுரண்டலை இந்து மெய்ஞானம் பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும் என்பீர்கள். அதை ஒட்டுமொத்தமாக நிராகரிக்க அதை காரணமாக ஆக்குவீர்கள், இல்லையா? அந்த மனநிலையை உங்களில் உருவாக்கியவர் யார்? அதை யோசியுங்கள். உங்கள் பிழையை நான் செய்ய மாட்டேன். பிரான்ஸ் அரசு ஆயுத வியாபார அமைப்பு என்பதனால், சார்போன் பல்கலை ஆயுதவியாபாரிகளின் நன்கொடையால் இயங்குகிறது என்பதனால், எனக்கு சார்த்ர் முதல் ஃபூக்கோ வரையிலானவர்கள் பொருளற்றவர்களாக தோன்றமாட்டார்கள். ஐரோப்பா காலனியாதிக்கம் செலுத்தியது என்பதனால் ஐரோப்பியச் சிந்தனையாளர்கள் அன்னியமாக தோன்றமாட்டார்கள். கிறிஸ்தவ மத அமைப்பு அடிமைமுறையை பரப்பியது, உலகமெங்கும் தொல்குடிகளை முற்றழித்தது என்பதனால் நான் கிறிஸ்தவ மெய்ஞானத்தை பழிக்கமாட்டேன். அந்த மெய்ஞானம் எனக்கு தேவை. அது வேறொரு தளம். எனக்கு எந்நிலையிலும் கிறிஸ்து தேவை. மதத்திலுள்ள மெய்யியல், தத்துவம், கலை ஆகியவை ஓர் இலட்சியதளத்தில் செயல்படுகின்றன. மதமென்னும் உலகியல் அமைப்பு வேறொரு தளத்தில் செயல்படுகிறது. உலகியலை இலட்சியவாதம் கட்டுப்படுத்தவும் வழிநடத்தவும் முயல்கிறது. ஆனால் உலகியல் ஒருபோதும் இலட்சியவாதத்தின் முழுக்கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. ஒரு பண்பாட்டின் உலகியல் நடத்தையை வைத்து அப்பண்பாட்டில் உள்ள இலட்சியவாதத்தை நிராகரித்தால் உலகின் எந்தச் சமூகமும் பொருட்டாக மிஞ்சாது. நாம் மதத்தில் இருந்து அதன் இலட்சியவாதத்தைப் பெற்றுக்கொள்ளலாம். அதை சமகால இலட்சியவாதத்துடன் இணைத்து மேலெடுக்கலாம். மதம் உருவாக்கும் உலகியல் அமைப்புக்களை அந்த இலட்சியவாதத்தின் அடிப்படையில் காலந்தோறும் மறு அமைப்பு செய்யலாம். மதத்திற்குள் உருவாகும் அத்தனை சீர்திருத்தவாதிகளும் செய்தது அதையே. சங்கரர், ராமானுஜர் முதல் நாராயண குரு, வள்ளலார் வரை. * கடைசியாக ஒன்று. இதெல்லாம் சிந்தனை, கலை, இலக்கியம் போன்ற தளங்களைச் சார்ந்தவை. இவற்றுக்கு அப்பால் மானுடன் தேடும் மீட்பு ஒன்றுண்டு. முழுமையறிதல், நிறைவடைதல் என அதை சொல்கிறேன். வாழ்வினூடாகச் சென்றடையும் நிறைநிலை அது. அதை நான் வேதாந்தத்தில் கண்டடைகிறேன். நான் நேற்றுவரை அதை கொஞ்சம் ஐயத்துடன் கற்றறிந்ததாக மட்டுமே முன்வைப்பேன். ஒன்று அந்த தயக்கமேதுமில்லை. வேதாந்தம் மெய்மையின் வழி. வேதாந்தம் எனக்கு மெய்ஞானத்தை ’வழங்கவில்லை’, நான் செல்லவேண்டிய பாதையை அளித்தது. உரிய ஆசிரியர்கள் வழியாக, நூல்கள் வழியாக, குறியீடுகள் வழியாக, ஊழ்கம் வழியாக…. ஆகவே நான் வேதாந்தி. வேதாந்தம் இந்துமதத்தின் ஒரு பிரிவு என்பதனால் நான் இந்து. நீங்கள் இந்துமதத்தில் பிறந்தமையால் ’மட்டும்’ பெருமிதம் கொள்ள வேண்டியதில்லை. ஆனால் இந்துமதத்தை அறிய வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது, பிறப்பாலேயே சில அடிப்படை உருவகங்கள் ஆழ்மனதில் உருவாகியிருக்க வாய்ப்பிருக்கிறது என்பதனால் மகிழ்ச்சி அடையலாம். கற்கலாம், கற்றபின் பெருமிதம் கொள்ளலாம். ஜெ https://www.jeyamohan.in/145231/
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.