Search the Community
Showing results for tags 'தொல்காப்பியர்'.
Found 1 result
-
என்னடா இது! இந்த மதுரைக்கு வந்த சோதனை!
பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம் posted a topic in தமிழும் நயமும்
என்னடா இது! இந்த மதுரைக்கு வந்த சோதனை! பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி திருவிளையாடல் புராணத்தில் வரும் பாண்டிய மன்னன் - ஏமனாதப் புலவர் - பாணபத்திரர் - மதுரைச் சொக்கநாதர் சோமசுந்தரக் கடவுள் போன்று அண்மையில் நிகழ்ந்த ஒரு நிகழ்வை பகிரலாம் என்றிருக்கிறேன். எடுத்துக்காட்டுகள் ஒரு பொது-ஒப்புமைக்காகச் சொல்லப்பட்டதே தவிர அதை அப்படியே எடுத்து, இதில் யார் மன்னன், யார் ஏமனாதப்புலவர், யார் அவைக்களப் புலவர், யார் சொக்கநாத சோமசுந்தரக்கடவுள் என்று ஆராய்ச்சியில் இறங்க வேண்டாம் என்று அன்புடன் வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறேன். இனி கதைக் களத்துக்கு வருவோம். கடவுட்கொள்கை சார்ந்த தத்துவ நிலைப்பாடுகளில் வடதுருவமும், தென் துருவமும் போன்று கருத்து நிலைப்பாடுகள் கொண்டவர்கள் நானும் என் கெழுதகை நண்பரும். ஐம்பத்தி ஐந்து ஆண்டுகள் வாழ்ந்து கிட்டிய பட்டறிவில், என் சிற்றறிவிற்கு எட்டிய வகையில் தைரியமாகச் சொல்வேன் - நட்பு என்னும் இலக்கணத்தின் எல்லாக் கூறுகளையும் கொண்டு ஆய்ந்தாலும், பெரும்பாலும் அனைத்துக் கூறுகளிலும் (கடவுட் கொள்கை இதில் வாராது) கருத்தொருமித்த எனது ஒரே நண்பர். என் கெழுதகை நண்பருடன் நான் ஒன்றாகப் பயணிக்கும் தளங்கள் மானுடம், பொதுவுடைமை, தமிழ் இலக்கியம் தமிழர் பண்பாடு உள்ளிட்ட சில இக்கதைக்களத்துக்கு பொருத்தமானவை. நான்கு தினங்கள் முன்பு, நள்ளிரவு நெருங்கும்வேளையில் நண்பர் என்னைக் கைப்பேசியில் அழைக்க, ஒலியமர்த்தப்பட்டிருந்த எனது கைப்பேசியின் அதிர்வுணர்ந்து நான் எடுக்குமுன்னர், நண்பரின் அழைப்பு முடிந்துவிட்டிருந்தது. நாங்கள் பின்னிரவு வேளைகளில் பேசுவது அவ்வப்போது நிகழும். உறக்கம் கண்களைத் தழுவத் தொடங்கிவிட்டதால், காலையில் பேசிக்கொள்ளலாம் என்று உறங்கத் தொடங்கினேன். வீட்டுத் தொலைபேசி மணி நண்பரின் மீள் அழைப்பைத் தெரிவிக்க, எழுந்து சென்றேன். "ஒன்றுமில்லை; என்னை பாதித்த ஒரு நெருடலை உங்களுடன் பகிரலாம் என்று நினைத்தேன். அதான். ஒருவர் என்னிடம் சொன்னார், "திருக்குறள் நாமெல்லாம் தலையில் தூக்கிக் கொண்டாடுமளவு அப்படி ஒன்றும் சிறந்த இலக்கியமில்லை; கூறியது கூறல் என்னும் குற்றம் ஆங்காங்கே விரவிக்கிடக்கும் நடுத்தர இலக்கியம்தான் திருக்குறள்; காட்டாக, 'செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்; அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை.' என்னும் திருக்குறளை எடுத்துக்கொண்டால், முதலடியும், பின்னடியும் ஒரே பொருளைத் திரும்பத் திரும்பக் கூறும் அவலத்தைக் காணலாம்" என்று. "சொன்னவர் ஒன்றும் பெரிதாக இலக்கியம் படித்தவரில்லைதான்; ஆனாலும், அவருக்கு உடனடியாக என்னால் பதிலிறுக்க இயலவில்லை. நமக்கெல்லாம் நன்றாகத் தெரியும் திருக்குறளில் அப்படியொரு குற்றம் இருக்க வாய்ப்பில்லை என்று. ஆனால், உரையாசிரியர்கள் பலரும் இக்குறளை அந்நோக்கில் ஊன்றிக் கவனித்து உரையெழுதவில்லை; சொன்னவர் பெரும்பாலான உரையாசிரியர்களின் உரையை எடுத்துக்காட்டிச் சொன்னதால் , உடனடியாக என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அதான் உங்களிடமும் இதைப் பகிரலாம் என்றுதான் அழைத்தேன். வேறொன்றுமில்லை", என்றார் நண்பர். உறக்கம் நீங்கிப் பதற்றம் தொற்றியது என்னை. சிறிதுநேரம் தொடர்புடைய சிலவற்றைப் பேசிவிட்டு விடைபெற்றோம். கண்கள் மூட இமைகள் மறுத்ததால், இணையத்தில் அமர்ந்து நெடுநேரம் தேடினேன்; ஒன்றும் வரவில்லை; மூன்றாம் முறை ஒலித்த கூர்க்காவின் விசில் காலை நான்கு மணியானதை அறிவித்து ஓய்ந்தது. அலையடிக்கும் உள்ளம் உறங்காமல் உறங்கச் சென்றேன். எனக்கென்னவே பரிமேழகர் சரியாகச் சொல்வதாகப்பட்டது. ஆனால், அதில் அக்குற்றச்சாட்டுக்கு மறுப்புச் சொல்ல வெளிப்படையாக ஒன்றும் அகப்படவில்லை. யானைக்கும் அடி சறுக்கலாம்; ஆனால், திருவள்ளுவரின் தெய்வத்தமிழ் சறுக்காதல்லவா? விடையை நாம் தேடவேண்டும், அவ்வளவுதான்; 'மொழிப் பொருள் காரணம் விழிப்பத் தோன்றா' - (தொல் : சொல்லதிகாரம் - 394); ஒரு சொல்லுக்கான பொருளினை அறியமுடியும். ஆனால், அச்சொல் அப்பொருளை உணர்த்துவதற்கான காரணம் வெளிப்படையாகத் தோன்றாது என்று முதலாசான் தொல்காப்பியன் நம்பிக்கை ஊட்டினான். மீண்டும் பரிமேழகரின் உரையில் ஊன்றி விழித்தேன்; [பரிமேலழகர் உரை பின்வருமாறு: செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் - ஒருவருக்குச் சிறப்புடைய செல்வமானது செவியான் வரும் செல்வம், அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை - அச்செல்வம் பிற செல்வங்கள் எல்லாவற்றினும் தலையாகலான். ( செவியான் வரும் செல்வம் - கேள்வியால் எல்லாப் பொருளையும் அறிதல். பிற செல்வங்கள் - பொருளால் வருவன. அவை நிலையா ஆகலானும், துன்பவிளைவின ஆகலானும், இது தலையாயிற்று. அவற்றை ஒழித்து இதனையே செய்க என்பது குறிப்பெச்சம்.)] இக்குறளைப் பொறுத்தவரை, பரிமேழகர் மட்டுமே மெய்யியல் என்னும் தத்துவ நிலைப்பாட்டியலில் (philosophy of the poetry) நின்று உரை எழுதியுள்ளார். கலைஞர், சாலமன் பாப்பையா, அறிஞர் மு.வ., மணக்குடவர், திருக்குறள் முனுசாமி உள்ளிட்ட மற்ற அனைத்து உரையாசிரியர்களுமே மேம்போக்கான உள்ளீடற்ற உரை மட்டுமே தந்துள்ளனர். எனவே, பரிமேழகர் உரையை மீண்டும், மீண்டும் அசைபோட்டேன்; மூன்று நாட்கள் ஓடிவிட்டன. திங்கள் அதிகாலை ஏழரை மணிக்கே நண்பரின் அழைப்பைக் கைப்பேசி அறிவிக்கக், காலை வணக்கம் சார் என்றேன் நான். "என்ன குரல் ஒன்றும் சரியாக இல்லை; காலையிலேயே எழுப்பிவிட்டேனோ", என்றார் நண்பர். நள்ளிரவு தாண்டி, நடுச்சாமம் வரை வாசித்த களைப்பு ஒருபக்கம் இருந்தாலும் ஏழு மணிக்கே எழுந்துவிட்டேன்; இருந்தாலும், பல் துலக்காமல், திருக்குறள் பரிமேழகர் உரையின் நினைவிலேயே அசைபோட்டதால், குரல் தெளிவில்லாமல் இருந்தது போலும். நண்பர் பேசிய செய்தி திருவாசகம் குறித்த ஒரு காணொளித் துணுக்கில், அருட்தந்தை சகத் கசுபர் சொன்ன "தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி" என்ற திருவாசகப் பொன்னெழுத்துக்களுக்கான விளக்கத்தைப் பற்றியது: "தென்னாட்டவர்களாகிய நாங்கள் உன்னைச் சிவனே என்று அழைத்துப் போற்றுகிறோம்; ஏனைய நாட்டோர் அவரவர் சமயமொழியில் உன்னை இறைவா என்றழைத்துப் போற்றுகின்றனர். இறைவன் யார் என்பதை உயர்ந்த மன முதிர்ச்சி பேரறிவு நிலையில் மாணிக்கவாசகர் திருவாசகத்தில் பாடியுள்ளதை வியந்து போற்றியிருப்பார்" என்று அருட்தந்தை திருவாசகத்தை அருமையாக விளக்கியிருந்ததைக் குறித்துப் பேசினார். நண்பருடன் பேசிமுடித்துவிட்டு, அக்காணொளியில் அருட்தந்தை தந்த விளக்கத்தை அசைபோட்டுக்கொண்டே குளிக்கச் சென்ற எனக்குப் பட்டென பொறிதட்டியது - "செல்வத்துள் செல்வம் .. ." திருக்குறளுக்காக நான் தேடிய\ விளக்கம் கிடைத்துவிட்டது. குளிப்பதை ஒத்திவைத்துவிட்டு, மறப்பதற்குள் எழுதிவிடுவோம் என்று குளியலறையை விட்டு வெளியே வந்தேன் (தயவு செய்து ஆர்க்கிமிடிஸ் 'யுரேகா' கற்பனையெல்லாம் வேண்டாம்; நானொன்றும் சோப்புநுரையை ஆடையாக அணிந்து வெளியே வரவில்லை; நம்புங்கள்). இப்போது பரிமேழகர் உரைக்குப் புதுவிளக்கம் தெளிவானக் கிடைத்தது. 'செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்; அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை.' கண்ணெனத் தகும் எண்ணும், எழுத்தும் கற்கும் வாய்ப்பை இழந்துவிட்டாலும், கேட்டல் என்னும் செவிப்புலன் கொண்டு, செவிவழியாகவே ஒருவன், என்றும் அழியாத, ஏழேழு பிறவிக்கும் எடுத்துச் செல்லும் நிலையான செல்வங்களாகிய ஞானமும் கல்வியும் ஈட்ட இயலும்; மனிதனால் ஈட்டப்பட்ட ஏனைய செல்வங்கள் அனைத்தும் காலத்தால் அழிபவை; ஆனால் மனிதன் தன் செவிச்செல்வத்தால் ஈட்டிய ஞானமும், கல்வியும் காலத்தால் அழியாமல் அவனுடன் ஏழேழு பிறவிகளிலும் தொடர்ந்து பயணித்து, வீடுபேறு பலனைத் தருமாகையால், மனிதன் தன் செவிச்செல்வத்தால் ஈட்டிய செல்வமே, அவனால் ஈட்டப்பட்ட ஏனைய செல்வங்கள் அனைத்திலும் தலைமையானதாகும் என்பதை "அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை" என்று இரண்டாம் அடியில் கூறியுள்ளார் வள்ளுவர். மெய்ப்பொருள் உணராது, மேம்போக்காக பொருள் நோக்குவோர் சற்று அறிவைப் பயன்படுத்தட்டும் என்று நுணுக்கமான பொருள் வைத்துப் பாடியுள்ளார் தெய்வப்புலவர் என்ற தெளிவை இப்போது உணர முடிந்தது. பொறி-புலன்கள் கூடிய செவி என்னும் செல்வமே, மனிதனுக்குக் கிடைத்த செல்வங்களுள் எல்லாம் சிறந்த செல்வம் என்பதைச் சொல்ல, ''செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்' என்று முதலடியில் சொன்ன வள்ளுவர், செவிப்புலன் வழியாக ஒருவன் ஈட்டும் "என்றும் அழியாத ஞானமும் கல்வி"யுமே, இவ்வுலகில் அவன் ஈட்டிய மற்றெல்லாச் செல்வங்களையும் விடத் தலையானதாகும் என்பதை ஈற்றடியில் 'அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை' என்றார். எனவே 'செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்' என்பது அழியும் தன்மைகொண்ட உலகியல் செல்வங்களில் முதன்மையான செல்வம் 'செவிச்செல்வம் என்றும், அதன் வழியாக அவன் பெற்ற அழியாச் செல்வமாம் 'ஞானமும், கல்வியும்' அவனிடம் உள்ள ஏனைய செல்வம் அனைத்திற்கும் முதன்மையானது என்பதை 'அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை' எனபதில் குறித்தார். எனவே, வழியும், பயனுமாக முதலடியும், ஈற்றடியும் விளங்குவதால், கூறியது-கூறல் என்பது இக்குறளில் இல்லவே இல்லை என்பது தெளிவு.- 8 replies
-
- 4
-
-
- திருக்குறள்
- கூறியது கூறல்
- (and 5 more)