Search the Community
Showing results for tags 'நரம்புப் பாதிப்பு'.
-
நீரிழிவும் எங்கள் நரம்புகளும் “Magic is organizing chaos” "குழப்பத்தை ஒழுங்கமைப்பது தான் மாயாஜால வித்தை" - The Witcher தொடரில் ஒரு பாத்திரம். என்னுடைய நண்பர் ஒருவருக்கு அடிக்கடி சமிபாட்டுப் பிரச்சினை, வாய்வு என்பன ஏற்படும். இவை ஏற்படும் சமயங்களிலெல்லாம் நீரிழிவு நோயாளியான அவரது இரத்த குழுக்கோஸ் அதிகரிக்கும். என்ன காரணத்தினாலோ, தனது சமிபாட்டுப் பிரச்சினையினால் தான் குழுக்கோஸ் அதிகரிக்கிறது, நீரிழிவுக் குணம் காட்டுகிறது என அவர் நம்ப ஆரம்பித்தார் (இதற்கு சமூக வலை ஊடகங்களில் பரவும் போலி மருத்துவத் தகவல்களும் காரணமாக இருக்கக் கூடும்). இதை அவரது மருத்துவரிடமும் கூறி, சமிபாட்டுப் பிரச்சினையை முதலில் தீர்த்தால் தனது நீரிழிவு மருந்தைக் குறைக்கலாம் என்று ஆலோசனையையும் நண்பர் முன் வைத்திருக்கிறார். இதன் பிறகு, அவருக்கும் மருத்துவருக்கும் இடையிலான தொடர்பாடல் அவ்வளவு சுமூகமாக இருக்கவில்லை என்பதோடு இந்தக் கதையை நிறைவு செய்யலாம்😂. நண்பருக்கு ஏற்பட்ட சமிபாட்டுப் பிரச்சினை, பல நீரிழிவு நோயாளிகளில் ஏற்படக் கூடிய இரைப்பை இயக்கச் செயலிழப்பு நிலை (gastric paresis). இதற்கான காரணங்களில் ஒன்று நீரிழிவினால் உடல் நரம்புகளின் இயக்கம் பாதிக்கப் படுவது. சில ஆய்வுகளின் படி, 10 ஆண்டுகளுக்கு மேலாக நீரிழிவினால் பாதிக்கப் பட்டிருக்கும் நோயாளிகளுள், அரைவாசிப்பேர் வரை நீரிழிவின் நரம்புப் பாதிப்பான diabetic neuropathy எனும் நிலையினால் பாதிக்கப் பட்டிருப்பர். இந்த நரம்புப் பாதிப்பில் பல் வேறு வகைகள் உண்டு, பாதிக்கப் படும் நரம்பைப் பொறுத்து குணங்குறிகள் ஆளுக்காள் மாறுபடும். நீரிழிவு எப்படி நரம்புகளின் தொழிலைப் பாதிக்கிறது? எங்களுடைய நரம்புத் தொகுதி என்பது ஒரு மாயாஜால வித்தகர்: உடலின் ஒவ்வொரு அங்கத்தையும், உடலின் நன்மை கருதி ஒழுங்கமைக்கும் வேலையை நரம்புத் தொகுதி செய்கிறது. முண்ணானில் இருந்து மின்சார வயர்கள் போல உடல் முழுவதும் நீழும் நரம்புகளை சுற்றயல் நரம்புகள் (peripheral nerves) என்போம். இவற்றுள் சில நரம்புகள், உணரும் நரம்புகள் (sensory nerves)- வலி, சூடு, தொடுகை போன்ற உடல் உணர்வுகளை உணர்பவை இவை. இன்னும் சில இயக்க நரம்புகள்(motor nerves) - கிடைக்கும் தகவல்களுக்கேற்ப உடலை இயக்குபவை இவை. இந்த இயக்க நரம்புகளில், இதயம், சமிபாட்டுத் தொகுதி, இரத்தக் குழாய்கள் போன்ற உறுப்புகளைக் கட்டுப் படுத்தும் ஒரு பகுதியை "இச்சையின்றி இயங்கும்" (involuntary) நரம்புகள் என்பர். உதாரணமாக, மேலே நான் குறிப்பிட்ட நண்பரின் இரைப்பையை, அவரது இச்சையின்றியே இயக்கும் நரம்புகளை, நீரிழிவு பாதித்தமையால் தான் அவருக்கு சமிபாட்டுக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. நீரிழிவினால் ஏற்படும் நரம்புப் பாதிப்புத் தான் சமிபாட்டுக் குறைவை ஏற்படுத்தியது, சமிபாட்டுக் குறைவினால் நீரிழிவு நிலை ஏற்படவில்லை. உணரும் நரம்புகளும் நீரிழிவு நரம்புப் பாதிப்பில் முக்கியமானவை. ஒரு மிகச்சூடான பொருளைத் தவறுதலாகக் கையினால் தொட்டு விட்டீர்ளென வைத்துக் கொள்ளுங்கள். மில்லி செக்கன் நேரத்தில் உங்கள் கை சூடான பொருளில் இருந்து பின்வாங்கிக் கொள்ளும். இந்தப் பின்வாங்கல், மூளை வரை தகவல் சென்று யோசித்து நிகழ்வதில்லை. எங்கள் முதுகுத் தண்டில் இருக்கும் முண்ணான் மட்டத்தில் தொழிற்படும் வலியுணர்வுக் கட்டமைப்பே இந்தக் கண நேரத் துலங்கலை வழி நடத்துகிறது. இத்தகைய உடனடிப் பாதுகாப்பு நடவடிக்கையின் மூலம், சூட்டைத் தொட்ட கை மேலும் சேதமடையாமல் காக்கும் வேலையை எங்கள் உணரும் நரம்புகளும், இயக்க நரம்புகளும் சேர்ந்து செய்கின்றன. வலியுணர்விழப்பினால் நிகழும் அபாயம் நீரிழிவினால் ஏற்படும் நரம்புப் பாதிப்பில், உணரும் நரம்புகள் (ஏனைய நரம்பு வகைகளை விட) சற்று அதிகமாகவே பாதிக்கப் படுகின்றன. எங்கள் உடலின் மிக நீளமான உணரும் நரம்புகள் எங்கள் கால்களில் இருக்கின்றன. முண்ணானில் தொடங்கி காலின் பாதங்களில் இவை முடிகின்றன என்றால் இவற்றின் நீளத்தை நீங்கள் கற்பனை செய்து கொள்ள முடியும். நீரிழிவு காரணமாக ஏற்படும் நரம்புப் பாதிப்பு, முதலில் இந்த நீள நரம்புகளையே பாதிக்கின்றன. இப்பாதிப்பினால் நீரிழிவு நோயாளிகளின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு விடும் உடல் ஊனம் கூட ஏற்படலாம். படத்தில் இருப்பது போல, பொதுவாகக் கால்களும், கைகளும் உணரும் நரம்புகளின் செயலிழப்பினால் பாதிக்கப் படுகின்றன. இதனை "stocking and gloves pattern" என்று அழைப்பர். பட உதவி நன்றியுடன்: Amthor et al., Essentials of Modern Neuroscience (2020). இந்தப் பாதங்களில் முடியும் உணர்வு நரம்புகள் செயலிழக்கும் போது, பாதங்களில் ஏற்படும் சிறு காயங்களால் உருவாகும் வலி உணரப்படுவது குறைய, காயங்கள் பெரிதாகும் வரை அல்லது கண்ணுக்குத் தெரியும் வரை கவனிக்கப் படாமல் போகின்றன. இதனால் தான், நீரிழிவு நோயாளிகளில், முள் குத்துவதால் ஏற்படும் சிறு காயங்கள் கூட பெரிதாகி பாதங்கள் அல்லது கால்களை அகற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதே போன்ற நரம்பு மரத்துப் போகும் நிலை, கைகளிலும் கூட ஏற்படலாம். ஆனால், கைகள் அடிக்கடி எங்கள் கவனத்திற்கு வரும் வகையில் அமைந்திருப்பதால், காயங்கள் அலட்சியப் படுத்தப் பட்டுப் பெரிதாகும் வாய்ப்புகள் மிக அரிது. இதனால் தான், நீரிழிவின் நரம்புப் பாதிப்பினால் கால்கள் இழக்கப் படுவதே பொதுவாக இருக்கிறது. சில நீரிழிவு நோயாளிகளில் இந்த உணரும் நரம்புகளின் பாதிப்பு, அதிகரித்த வலியுணர்வாக வெளிப்படும். இந்த வலி அனேகமாக, தொடை, இடுப்பு வலியாக வெளிப்படலாம். நீரிழிவு நரம்புப் பாதிப்பைப் பொறுத்த வரை, அடுத்த படி நிலையில் இருப்பவை எங்கள் உள் உறுப்புகளுக்கு தகவலை அனுப்பும் இச்சையின்றிய நரம்புகள். ஏற்கனவே மேலே குறிப்பிட்ட இரைப்பையின் இயக்கம், சிறு நீர்ப்பைச் செயல்பாடு, பிறப்புறுப்புகளின் செயல்பாடு என்பன இத்தகைய நரம்புகளின் பாதிப்பினால் பாதிக்கப் படும். நீண்டகாலம் நீரிழிவோடு வாழும் மக்களிடையே, கிட்டத் தட்ட அரைவாசிப்பேருக்கு வரக்கூடிய இந்த நரம்புப் பாதிப்புகளை எப்படித் தடுப்பது அல்லது குணமாக்குவது? தடுப்பு முறைகள் நீரிழிவின் போது நரம்புகள் பாதிக்கப் படும் பொறிமுறைகள் பற்றி இன்னும் ஆராய்ந்து வருகிறார்கள். நரம்புகளை உருவாக்கும் நியூரோன்களும், அந்த நரம்புகளை ஒரு பாதுகாப்புக் கவசம் மூலம் சூழ்ந்து பாதுகாக்கும் ஸ்வான் (Schwann) கலங்களும் பாதிக்கப் படுவதாகத் தான் ஆய்வுத் தகவல்கள் காட்டுகின்றன. ஆனால், பொறி முறை இன்னும் தெரியாமையால், இந்தப் பாதிப்புகளைத் தடுக்கும் மருந்துகள் இன்னும் உருவாக்கப் படவில்லை. எனவே, தடுப்பு முறைகள் தான் தற்போதைக்கு நீரிழிவினால் ஏற்படும் நரம்புப் பாதிப்பைக் குறைக்கும் வழிகளாக இருக்கின்றன. யார் அதிகம் நரம்புப் பாதிப்புக்குள்ளாகின்றனர்? ஆய்வுகளின் படி, இரத்த குழுக்கோஸ் (அல்லது அதன் குறிகாட்டியான HbA1c அளவு) கட்டுப்பாட்டில் இல்லாதோரில் நரம்புப் பாதிப்பிற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. நரம்புப் பாதிப்பின் வாய்ப்பை அதிகரிக்கும் இரண்டாவது பெரிய காரணியாக உடலின் கொலஸ்திரோல் மட்டம் இருக்கிறது. அதிக உடற்பருமன் உடையோரிலும், நீரிழிவு காரணமான நரம்புப் பாதிப்பு வரும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. எனவே, தடுப்பு முறைகள்: 1. இரத்த குழூக்கோஸ் (அல்லது அதன் குறிகாட்டியான HbA1c) மிகையாக அதிகரிக்காமல் பாதுகாத்தல். 2. இரத்த கொலஸ்திரோல் அளவைக் கட்டுப் பாட்டில் வைத்திருத்தல். 3. உடற் பருமனை ஆரோக்கிய மட்டத்தில் பேணுதல். இதை விட, நான்காவதாக நீரிழிவு நோயுடையோர் பாதப் பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும். நரம்புப் பாதிப்பு ஏற்படாவிட்டாலும் கூட, நீரிழிவு உடையோர் கால் பாதங்களைத் அன்றாடக் கவனத்திற்குட்படுத்த வேண்டும்: 1. பாதணிகள் அணியாமல் கல்லு முள்ளு நிறைந்த பரப்புகளில் நடப்பதைத் தவிர்க்க வேண்டும். ஊரில், குறிப்பாக வன்னிப்பகுதியில், கம்பிக் கட்டைகளால் ஏற்படும் கால் காயங்கள் இந்த இடத்தில் சுட்டிக் காட்டப் பட வேண்டியவை. இது, நீரிழிவு நோயாளிகள், முற்றாகத் தவிர்க்க வேண்டிய ஒரு காயம். 2. ஒவ்வொரு இரவும், படுக்கைக்குப் போகும் முன், பாதங்களை நீரில் கழுவிய பின், துடைத்து காயங்கள் எவையும் இருக்கின்றனவா எனப் பரிசோதிக்க வேண்டும். ஏதாவது காயங்கள் இருப்பின், மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும். சுருக்கமாக: நீரிழிவைக் கட்டுப் பாட்டில் வைத்திருப்பதாலும், சில எளிமையான தடுப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவதாலும், நீரிழிவினால் ஏற்படும் நரம்புப் பாதிப்பை வராமல் தவிர்க்கலாம். அல்லது, வந்த பின்னர் அங்க இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம். தகவல் மூலங்கள்: 1. https://www.niddk.nih.gov/health-information/diabetes/overview/preventing-problems/nerve-damage-diabetic-neuropathies. அமெரிக்க சுகாதார அமைப்பின் நீரிழிவு, சிறுநீரகப் பிரிவு, விரிவான தகவல்களைக் கொண்டது.