Search the Community
Showing results for tags 'நாடாளுமன்றத் தேர்தல் 2024: தமிழ்க்கட்சிகள் விளங்கிக்கொள்ள வேண்டிய எளிமையான பேருண்மைகள்'.
-
தமிழ்த் தேசியப் பிரதிநிதித்துவம் படிப்படியாகக் குறைவதைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. கடந்த நாடாளுமன்றத்தில் 13 ஆசனங்கள். இந்த முறை ஒன்பது ஆசனங்கள். மருத்துவர் அர்ஜுனாவின் அரசியல் நிலைப்பாடுகள் ஸ்திரமானவை அல்ல. எனினும் அவரையும் இணைத்துக் கொண்டால் பத்து ஆசனங்கள். தமிழ்த் தேசியத் தரப்புக்குக் கிடைக்காத ஆசனங்கள் தமிழ்த் தேசிய பரப்புக்கு வெளியே போயிருக்கின்றன. வடக்கில் மொத்தம் ஐந்து என்பிபி வேட்பாளர்களும் கிழக்கில் இரண்டு என்பிபி தமிழ் வேட்பாளர்களும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இருவரும் வடக்கிலிருந்தும், பிள்ளையான் கிழக்கில் இருந்தும் சென்றார்கள். மூன்று வேறு கட்சிகளைச் சேர்ந்த மூன்று தமிழ் பிரதிநிதிகள். இப்பொழுது ஒரே தென்னிலங்கைக் கட்சியைச் சேர்ந்த ஏழு பேர். என்பிபி இனப்பிரச்சினையைத் தீர்க்கும் என்று நம்பி தமிழ் மக்கள் அதற்கு வாக்களிக்கவில்லை. தமிழ்த் தேசிய அரசியல் பிரதான தமிழ்த் தேசியக் கட்சிகள் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டத் தவறியதன் விளைவே அது. தமிழ்ச் சமூகமானது ஒருவர் மற்றவரை நம்பாத; தன் பலத்தை தானே நம்பாத; ஒருவர் மற்றவரை சந்தேகத்தோடு பார்க்கின்ற; ஒருவருக்கு எதிராக மற்றவர் சூழ்ச்சிக் கோட்பாடுகளைப் புனைகின்ற; சமூகத்தில் மினுங்கிக் கொண்டு தெரியும் ஒருவரை சந்தேகத்தோடு வெறுப்போடு அணுகுகின்ற; வெறுப்பர்கள் அதிகம் நிறைந்த; கூட்டுணர்வு குறைந்த; தாய் நிலத்தை விட்டுப் புலம்பெயரும் வேட்கை மிகுந்த ஒரு சமூகமாக மாறி வருகின்றது. அவ்வாறு தூர்ந்து கொண்டு போகும் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசிய அரசியலுக்கு உண்டு. தன் பலம் உணர்ந்து ஒருவர் மற்றவரை நம்பிக்கையோடு பார்க்கின்ற; உருகிப்பிணைந்த ஒரு திரட்சியாக தமிழ் மக்களைத் திரட்ட வேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு உண்டு. ஆனால் தேசியவாத அரசியல் என்றால் மக்களைத் திரளாக்குவதுதான் என்ற எளிமையான பேருண்மையை விளங்கிக் கொள்ளாத அல்லது அதை விளங்கிக் கொள்ளத் தேவையான பண்பாட்டு இதயத்தைக் கொண்டிராத; தேசிய கூட்டுணர்வைக் கொண்டிராத, பிரதான தமிழ்த் தேசியக் கட்சிகளின் தோல்வியின் விளைவே, அதிகரித்த சுயேச்சைகளும் கட்சிகளும் ஆகும். இதனால் ஏற்பட்ட சலிப்பினாலும் விரக்தியினாலும் வெறுப்பினாலும் ஒரு பகுதி தமிழ் வாக்காளர்கள் என்பிபியை நோக்கிப் போனார்கள். நாடாளுமன்றத்தில் என்பிபி பெற்றிருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பது திருப்பகரமான மாற்றங்களைச் செய்யப் போதுமான ஒரு பெரும்பான்மை. பெரும்பான்மை அப்படிப் பார்த்தால் என்பிபி இனப்பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் புரட்சிகரமான முடிவை எடுக்குமா? அல்லது மகாவம்ச மனோநிலையின் கைதியாக மாறி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைத் தானே தோற்கடிக்குமா? இலங்கைத் தீவியின் எந்த ஒரு தேர்தல் வெற்றியும் எப்பொழுது முழு வெற்றியாக மாறுகிறது என்றால், இனப்பிரச்சினையைத் தீர்க்கும் போதுதான். என்பிபி கருதுவதுபோல இனப்பிரச்சினை, ஒரு மனிதாபிமானப் பிரச்சினையல்ல. அது இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக்கொள்ளாமையின் விளைவுதான். இச்சிறிய தீவில் ஒன்றுக்கு மேற்பட்ட தேசங்கள், தேசிய இனங்கள் உண்டு என்பதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் மக்களை இறமையும் சுய நிர்ணய உரிமையும் கொண்ட ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொண்டு, இலங்கைத் தீவின் அரசுக் கட்டமைப்பை பல்லினத் தன்மை கொண்ட ஒன்றாகக் கட்டமைக்க வேண்டும். அவ்வாறான அடிப்படை மாற்றம் ஒன்றைச் செய்வதற்கு என்பிபி தயாரா? இப்போதிருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதைச் செய்யப் போதுமானது. அதேசமயம் இம்முறை தேர்தல் முடிவுகளில் தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் நம்பிக்கையூட்டும் விடயங்கள் எவை என்று பார்த்தால்,கிழக்கில் பிரதேச வாதத்தை முன்வைக்கும் பிள்ளையான் தோற்று விட்டார். அது பெரிய வாக்கு வித்தியாசத்தில் கிடைத்த தோல்வியல்ல. சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் கிடைத்த தோல்விதான். சங்குக்கு யாழ்ப்பாணத்தில் கிடைத்த தோல்வி போல. எனினும், தேர்தல் கணக்கில் அது தோல்வி. கிழக்கில் தமிழரசுக் கட்சிக்கு ஐந்து ஆசனங்கள் கிடைத்திருக்கின்றன. இது கிட்டத்தட்ட ஒன்றரை மாதத்துக்கு முன் நடந்த ஜனாதிபதி தேர்தலில் தாயக ஒருமைப்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியின் அடுத்த கட்ட வளர்ச்சி. ஜனாதிபதித் தேர்தலில் கிழக்கிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு வேட்பாளருக்கு வடக்கில் மட்டும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன. தமிழ் தேசியப் பிரதிநிதித்துவம் நாடாளுமன்ற தேர்தலில் கிழக்கு மைய பிரதேச வாதத்துக்கு தலைமை தாங்கும் அரசியல்வாதி தோல்வியுற்றிருக்கிறார். ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, தாயக ஒருமைப்பாட்டை நிரூபித்தது. நாடாளுமன்றத் தேர்தலில் கிழக்கு தாயக ஒருமைப்பாட்டை நிரூபித்திருக்கிறது. வடக்கையும் கிழக்கையும் பிரித்த ஜேவிபிக்கு வடக்கு கிழக்கில் 7 ஆசனங்கள் கிடைத்திருக்கும் ஒரு பின்னணியில் கிழக்கில் தாயக ஒருமைப்பாட்டுக்கான பலமான மக்கள் ஆணை கிடைத்திருக்கிறது. மேலும், தமிழரசுக் கட்சி அதிகம் ஆசனங்களை பெற்ற ஒரு தனிக் கட்சியாக மேலெழுந்திருக்கிறது. கடந்த முறையைவிட இந்த முறை இரண்டு ஆசனங்கள் அதிகம். ஒரு கட்சியாக அந்த வெற்றியைக் கொண்டாடலாம். ஆனால் தேசத்தைத் திரட்டுவது என்பது கட்சியைப் பலப்படுத்துவது மட்டும் அல்ல. கடந்த நாடாளுமன்றத்தோடு ஒப்பிடுகையில் மொத்த தமிழ் தேசியப் பிரதிநிதித்துவத்தில் மூன்று ஆசனங்கள் இழக்கப்பட்டமை வீழ்ச்சி. என்பிபி யாழ்ப்பாணத்தில் அதிக ஆசனங்களை வென்றிருக்கிறது. கிழக்கிலும் அதற்கு ஆசனங்கள் கிடைத்துள்ளன. அவை தமிழ்த் தேசிய அரசியலின் தோல்விகள். இந்தத் தோல்விகளுக்கு ஊடாகப் பார்த்தால் தமிழரசுக் கட்சி பெற்ற வெற்றியைக் கொண்டாட முடியாது. ஆனால் சுமந்திரன் கட்சியின் வெற்றியைக் கொண்டாடுகிறார். கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலாகத் தமிழரசியலைத் தீர்மானிக்கும் சக்திபோல செயற்பட்ட சுமந்திரனும் இந்தத் தோல்விக்குப் பொறுப்பு. அதற்குரிய தண்டனையை வாக்காளர்கள் அவருக்குக் கொடுத்திருக்கிறார்கள். ஒட்டுமொத்தத் தமிழ்த் தேசிய அரசியலில் பின்னடைவை ஏற்படுத்திவிட்டு கட்சி பெற்ற சிறு வெற்றியை எப்படிக் கொண்டாட முடியும்? ஏனைய கட்சிகள் இல்லாமல் தனிக் கட்சியாக வெல்ல முடியும் என்று மார்தட்டுவதே தேசியவாத அரசியலுக்கு, தேசத் திரட்சிக்கு எதிரானது. https://tamilwin.com/article/parliament-election-2024-political-essay-1731876493