Search the Community
Showing results for tags 'நாவல் அறிமுகம்'.
-
ஓராயிரம் சூரியன்கள்! "மரியம் தன் கடைசி இருபது அடிகளை எடுத்து வைத்து நடந்து கொண்டிருந்தாள். அவள் பின்னால் தொடரும் இளம் தலிபான் ஆயுத தாரியின் நிழல் அவளோடு கூடத் தொடர்ந்தது. இவ்வளவு முயன்றும் இப்படித் தான் என் வாழ்வு முடியப் போகிறதா என்ற கேள்வியும் அவளுள் தொடர்ந்து வந்தது. ஆனால், ஒரு சிறு நல்ல காரியமாவது செய்து விட்ட திருப்தியோடு தான் போகிறேன் என்ற எண்ணமும் ஒரு மன மூலையில் இருந்தது!" (வரிக்கு வரி மொழிபெயர்ப்பல்ல) ஏற்கனவே நூற்றோட்டம் பகுதியில் நாம் பார்த்த பட்டமோடியை எழுதிய காலித் ஹொசைனியின் இன்னொரு படைப்பு இந்த "ஓராயிரம் சூரியன்கள்" நாவல். நாவலின் பின்புலம் கம்யூனிச பொம்மை ஆட்சியை ரஷ்யா ஏற்படுத்தி விட்ட பின்னர், தலிபான் உட்பட்ட யுத்தப் பிரபுக்களின் குழுக்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய காலப்பகுதிக்குரிய சம்பவங்களின் விபரிப்பு. மரியம் எனும் ஒரு சின்னப் பெண் - பிறப்பினால் தந்தையை உரிமை கோர இயலாத நிலையில் கனவுகளோடிருப்பவள் - எப்படி ஒரு பெரும்பயணத்தினூடு வாழ்வின் கடைசி இருபது காலடிகள் வரை வருகிறாள் என்பதே நாவலின் நடு இழை! இந்த இழையின் கிளைகளாக வரும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் தான் அன்றைய காலத்தின் (1989 - 2001) ஆப்கானிஸ்தானை எங்களுக்குக் காட்டும் கதை சொல்லிகளாக வருகின்றனர். ஆண்கள்: ஆப்கானிஸ்தானின் ஆண்கள் எல்லாரும் கட்டுப் பெட்டிகளாகவும், பெண்களைக் கொடுமை செய்வோராகவுமே இருப்பர் என்ற விம்பம் சிலரிடையே இருக்கலாம். ஆனால், ரஷ்யா அறிமுகம் செய்த கம்யூனிசத்தையும் அதனோடு இணைந்து வந்த முற்போக்கு அம்சங்களையும் வரவேற்று வாழ்ந்த பாத்திரங்கள் இந்தக் குறுகிய பார்வையை மறுதலிக்கின்றன. இன்றைய ஆப்கானிஸ்தானிலும் பெரு நகரங்களிலும், மசார் ஈ சரிfப் போன்ற நகரங்களிலும் இத்தகைய ஆண்கள் இருக்கிறார்கள் என்ற தகவல் ஆப்கானிஸ்தான் சவூதியை விட சமூக ரீதியில் முன்னேறிய நாடாக இருக்கக் கூடுமென்று கருத வைக்கிறது. இன்னொரு பக்கம், தீவிரமான பிற்போக்கு வாதிகளாகவும் இல்லாமல், நற்போக்கு வாதிகளாகவும் இல்லாமல், "சகோதரி!" என்று அல்லலுறும் பெண்களை விளித்து எஞ்சியவற்றையும் திருடிச் செல்லும் சந்தர்ப்பவாதிகளாகவும் ஆண்கள் வருகிறார்கள். ஆனால், ஒரு கிராமம் நிறைந்த முற்போக்குக் கொண்ட ஆண்களின் பிரகாசத்தை, ஒற்றைப் பிற்போக்கு வாதியும், சில ஆயுதங்களும் இருண்டு போகச் செய்து விடும் என்பதையும் நாவல் பதிவு செய்கிறது. பெண்கள்: காலித் ஹொசைனியின் பெண்கள் விசேடமானவர்கள்! காலித்தின் இரு நாவல்களிலும் (மூன்றாவதை நான் இன்னும் வாசிக்கவில்லை) பெண்களின் மனோ பலத்தை அவர் வெளிப்படுத்தி அவர்களை அழகாகக் காட்டி விடுவதைக் காண்கிறேன். ஆனாலும், ஒவ்வொரு வயது மட்டத்திலும் அவர் தனது பெண் பாத்திரங்களின் மௌனச் சிலுவை சுமத்தலை விபரிக்கும் போது நாமும் சேர்ந்தே சோகம் கொள்கிற நிலை வருகிறது. என்றாலும் இந்தக் கவலையை மீறி இறுதியில் ஒரு ஒளிக்கீற்றைக் காட்டி விடும் போக்கு காலித் ஹொசைனியின் இரு புனைவுகளிலும் காணப்படுகிறது. குழந்தைகள், குழந்தைகள், குழந்தைகள்! யுத்தங்கள் - அவை எவ்வளவு தான் அரசியல், சமூக நியாயப் படுத்தல்கள், மெருகு பூசுதல் என அழகு செய்யப் பட்டாலும் - பலி கொள்ளும் முதற் பலியாடுகள் குழந்தைகள். இந்தக் குழந்தைகளின் வாழ்க்கையும், பாடுகளும் ஒளி பாய்ச்சப் படும் யுத்த களத்தின் இருட்டான ஓரங்களில் நிகழும் பார்வையாளர்களற்ற காட்சிகள். இதையே காலித்தின் இந்தப் படைப்பும் சொல்லிச் செல்கிறது. எந்த யுத்தத்திலும் சமாதானத்திற்கு ஒரு காரணம் தேவையெனில், குழந்தைகள் படும் பாட்டைத் தான் முதற் காரணமாகச் சொல்ல முடியும். இதை ஆழமாகத் தைக்கும் விதத்தில் சொல்லும் மொழிவன்மை காலித் ஹொசைனிக்கு வாய்த்திருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து மீண்டும் மக்கள் இடம்பெயர ஆரம்பித்திருக்கிறார்கள். வசதி படைத்தோரும், வாய்ப்புக் கிடைத்தோரும் அமெரிக்காவினதும் மேற்கு நாடுகளினதும் மீட்பு விமானங்களில் ஏறி வெளியேறி விட்டார்கள். வசதியற்றோர் பாகிஸ்தானின் , ஈரானின் எல்லைப் பகுதிகளில் காத்திருக்கிறார்கள். இந்தப் படைப்பில் நாம் வாசிக்கும் பல சம்பவங்கள், ஊடகங்களின் பார்வைக்கு வெளியே மீண்டும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. எனவே, மரியத்தின் கடைசி இருபது காலடிகள் எங்கிருந்து ஆரம்பித்தன என அறிந்து கொள்ள இந்தப் படைப்பை இங்கே பரிந்துரைக்கிறேன். காலித் ஹொசைனியின் படைப்புகளை நீங்கள் வாங்கும் போது, அதன் பெறுமதியின் பெரும்பகுதி ஆப்கானிஸ்தானில் மருத்துவ மனைகளை புனரமைக்கவும், புதிதாகக் கட்டவும் பயன் படுத்தப் படுமென அறிகிறேன். ஆப்கான் மக்களின் வாழ்வை அறிந்து, அங்கேயே தங்கி விட்ட மக்களுக்கு உதவ இதுவோர் நல்ல வழியென நினைக்கிறேன். புத்தக முகப்புப் படம்- நன்றியுடன் அமேசன் தளத்திலிருந்து: - ஜஸ்ரின்