Search the Community
Showing results for tags 'நினைவு நாள்'.
-
பற்றி எரிகிறது இலங்கை! சரியாக 13 ஆண்டுகளுக்கு முன் தமிழர்களின் வயிறும் வாழ்வும் உடம்பும் உடைமைகளும் பற்றி எரிந்த அதே மே மாதம் இதோ அதற்கெல்லாம் காரணமான இராசபக்சவின் வீடு தீப்பற்றி எரிந்திருக்கிறது! தமிழர்கள் குழந்தை குட்டியுடன் கொத்துக் கொத்தாகச் செத்து விழுந்ததைப் பால்சோறு பொங்கிக் கொண்டாடிய சிங்கள மக்களின் வயிறு இன்று பசித் தீயால் எரிகிறது! ஆனால் இவற்றையெல்லாம் பார்த்து மகிழும் அளவுக்குக் கொடூர மனம்தான் நமக்கு வாய்க்கவில்லை. சிலர் இதைக் கடவுளின் தீர்ப்பு என்கிறார்கள். எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. ஒரு நிமையம் (minute) நீங்கள் உங்களைக் கடவுளாக நினைத்துக் கொள்ளுங்கள்! இப்படி ஓர் இனப்படுகொலை நடக்கும் நேரத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்? உடனே மக்களைக் காப்பாற்ற ஏதேனும் செய்வீர்களா? அல்லது, மக்கள் குண்டு வீச்சால் உடல் பிய்ந்து சாவது, வெட்டவெளியில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிக் கொடூரமாகக் கொல்லப்படுவது, இந்த உலகத்தை இன்னும் கண்ணால் கூடப் பாராத குழந்தைகள் தமிழச்சி வயிற்றில் உதித்த ஒரே காரணத்துக்காகக் கருவிலேயே அழிக்கப்படுவது ஆகியவற்றையெல்லாம் நடக்க விட்டுவிட்டுப் பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பின் செய்தவர்களுக்குத் தண்டனை கொடுத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பீர்களா? குற்றம் செய்தவனைத் தண்டிக்கத் தெரிந்த கடவுள் அவன் அந்தக் குற்றத்தைச் செய்யும்பொழுது மட்டும் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்றால், ஆக மொத்தம் அவன் எப்பொழுதும் யாராவது ஒருவர் துன்பப்படுவதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்க விரும்புகிறான் என்றுதானே பொருளாகிறது? சரி, அப்படியே இது கடவுளின் தீர்ப்பு என்றே வைத்துக் கொண்டாலும் ஈழத் தமிழ் மக்களைக் கொன்று அழித்த இலங்கைக்குக் கடவுள் தண்டனை வழங்கி விட்டார் என்றால் ஈராக், ஈரான் போன்ற பல நாடுகளில் ஏதுமறியா மக்களைக் கொன்று குவித்த அமெரிக்காவுக்கு ஏன் இதுவரை அவர் எந்தத் தண்டனையும் வழங்கவில்லை? காலங்காலமாகப் பாலத்தீன (Palestine) மக்களை அழிப்பதையே பொழுதுபோக்காக வைத்திருக்கும் இசுரேலை ஏன் கடவுள் தொட்டுப் பார்க்கக் கூட அஞ்சுகிறார்? எடுத்துக்காட்டுக்காக இரண்டு சொல்லியிருக்கிறேனே தவிர இப்படிக் கொலைகார நாடுகள் உலகில் இன்னும் நிறையவே இருக்கின்றன. அங்கெல்லாம் தீர்ப்பு வழங்காத கடவுள் தமிழர்களான நமக்காக மட்டும் மனமிரங்கி வந்து விட்டார் என நாம் நம்பினால் அது முட்டாள்தனம்! இதோ, அன்று உடன் வாழும் மக்களின் இன அழிப்பைக் கொண்டாடிய சிங்களர்கள் இன்று காலி முகத் திடலில் தமிழர்களோடு சேர்ந்து இனப் படுகொலையில் கொல்லப்பட்ட நம் தமிழ் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்! கண்ணெதிரே வாழும் இத்தகைய மனிதர்களின் மனமாற்றத்தை வேண்டுமானால் நம்பலாம். ஆனால் கண்ணுக்கே தெரியாத கடவுளின் காலங்கடந்த தீர்ப்புகள் ஒருபொழுதும் நம்பத் தக்கவையல்ல! சரி, இனப்படுகொலை நினைவு நாளில் எதற்காக இந்தக் கடவுள் ஆராய்ச்சி என்றால் ‘கடவுளின் தீர்ப்பு’ எனும் சொல்லாடல் நம் போராளித்தனத்தை மட்டுப்படுத்தி விடக்கூடாது என்பதற்காகத்தான். இனப்படுகொலைக்கான நீதியைப் பெற நாம் செல்ல வேண்டிய தொலைவு இன்னும் ஏராளம். அதற்குள் கடவுளே இராசபக்சவைத் தண்டித்து விட்டார், சிங்கள மக்களுக்குப் பாடம் புகட்டி விட்டார் எனவெல்லாம் நாம் நம்பத் தொடங்கினால் நீதிக்கான போராட்டத்தில் அது பெரும் தொய்வை ஏற்படுத்தி விடும். கொடுமை நடந்து பன்னிரண்டு ஆண்டுகள் கழித்துக் கடந்த ஆண்டுதான் இனப்படுகொலை குறித்து ஆராயவே முன்வந்திருக்கிறது பன்னாட்டுச் சமுகம். அதுவும் அன்னை அம்பிகை செல்வகுமார் அவர்கள் நடத்திய பின்வாங்காத உண்ணாநிலைப் போராட்டத்தால்தான். இனி ஆய்வு முடிந்து... நடந்தது இனப்படுகொலைதான் என உறுதிப்படுத்தப்பட்டு... அதன் பேரில் இலங்கை மீது நடவடிக்கை கோரி... அதற்கு உலக நாடுகள் ஒப்புக்கொண்டு... என நீதியை அடைய இன்னும் எவ்வளவோ கட்டங்கள், எத்தனையோ பெருந்தடைகள் இருக்கின்றன! இந்நிலையில் கடவுள், தீர்ப்பு போன்ற நம்பிக்கைகள் நம்மிடையே பரவினால் இனப்படுகொலைக்கான நீதிப் போராட்டத்தை முன்னெடுக்கும் தலைவர்கள், போராளிகள், மக்கள் மத்தியில் அது சுணக்கத்தை உண்டாக்கும். செய்த குற்றத்துக்குக் கடவுளே அவர்களைத் தண்டித்து விட்டார் இனி நாம் வேறு ஏன் அவர்களைத் தொல்லைப்படுத்த வேண்டும் என்கிற மனப்பான்மை வந்து விடும். அப்படி வந்து விட்டால் அதன் பின் இனப்படுகொலைக்கான நீதி என்பது என்றைக்கும் எட்டாக்கனியாகி விடும்! கொடுமைக்காரக் கணவனைச் சட்டத்தின் மூலம் தண்டிக்காமல் கடவுள் தண்டிப்பார் என நம்பிக் காலமெல்லாம் காத்திருந்து ஏமாந்து உயிர் விட்ட எத்தனையோ முட்டாள் பெண்களை நாம் பார்த்திருக்கிறோம். தொழிலில் ஏமாற்றியவனையும், கடன் வாங்கித் திருப்பித் தராதவனையும் நீதிமன்றத்துக்கு இழுக்காமல் கடவுள் பார்த்துக் கொள்ளட்டும் என விட்டுவிட்டுக் கடைசியில் பெற்ற பிள்ளைகளைக் கரை சேர்க்கக் கூட வழி தெரியாமல் விழி பிதுங்கி நின்ற எத்தனையோ மூடர்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். கடவுளின் தண்டனை, காலத்தின் தீர்ப்பு போன்றவற்றுக்காகக் காத்திருப்பது இத்தகைய ஏமாற்றங்களைத்தாம் தருமே தவிர எந்தக் காலத்திலும் நீதியைப் பெற்றுத் தராது. எனவே இத்தனை காலமும் கடவுளின் பெயரால் நாம் ஏமாந்தது போதும். இதுநாள் வரை தனிமனிதனுக்கு நீதி கிடைக்கத் தடையாயிருந்த இந்த மூடநம்பிக்கை நம் ஒட்டுமொத்த இனத்துக்குக் கிடைக்க வேண்டிய நீதிக்கும் தடையாகி விடாமல் நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டியது முக்கியம்! இராசபக்சவுக்கு இன்று கிடைத்திருக்கும் தண்டனை அவன் செய்த கொடுமையில் நூறாயிரத்தில் ஒரு பங்கு கூடக் காணாது! சிங்கள மக்கள் இன்று படும் வறுமையின் துன்பம் கொடுமையானதுதான் என்றாலும் நாம் கேட்கும் இனப்படுகொலைக்கான நீதியும் தனி ஈழ விடுதலையும் அவர்களை எந்த வகையிலும் பாதிக்கப் போவதில்லை. அவர்களைப் பாதிப்புக்கு ஆளாக்குவது நம் எண்ணமும் இல்லை. எனவே கடவுள், தீர்ப்பு போன்ற மூடநம்பிக்கைகளை விட்டொழிப்போம்! நீதிக்கான போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்போம்! தமிழினத்தின் விடுதலையை வென்றெடுப்போம்! நினைவேந்தல் சுடர்தனை ஏற்றி வைப்போம்! வாழ்க தமிழ்! வெல்க தமிழர்!! ❀ ❀ ❀ ❀ ❀ படங்கள்: நன்றி இந்தியா டைம்சு, தமிழ் ABP நாடு. தொடர்புடைய பதிவுகள்: 📂 நினைவேந்தல் தொடர்புடைய வெளி இணைப்புகள்: ✎ முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: இலங்கைத் தலைநகர் கொழும்பு காலிமுகத் திடலில் தமிழர்கள் - சிங்களர்கள் இணைந்து அஞ்சலி
- 3 replies
-
- 1
-
-
- நினைவு நாள்
- இனப்படுகொலை
- (and 5 more)
-
உலகத்தமிழ் உள்ளங்களே! இதோ தமிழினப் படுகொலையின் பன்னிரண்டாம் ஆண்டு நினைவேந்தல்! இத்தனை ஆண்டுகள் போலில்லை. இந்த நினைவேந்தல் கொஞ்சம் சிறப்பானது. இந்தாண்டு நாம் ஏற்றும் மெழுகுத்திரிகள் நம் நெஞ்சில் எரியும் வேதனைக் கனலாக மட்டுமில்லை எதிர்காலத்துக்கான நம்பிக்கைச் சுடராகவும் ஒளிர்கின்றன. அதற்குக் காரணமாகத் திகழ்பவர் அன்னை அம்பிகை செல்வகுமார்! ஐ.நா-வில் மனித உரிமை ஆணையம் கூடும்பொழுதெல்லாம் இனப்படுகொலை தொடர்பாக இலங்கை மீது தீர்மானம் கொண்டு வரத் தமிழர்கள் நாம் வலியுறுத்துவோம். ஐ.நா-வும் வல்லரசு நாடுகளின் செல்லப்பிள்ளையான இலங்கையைப் பகைத்துக் கொள்ளாதிருக்கும் பொருட்டு பெயருக்கு ஒரு தீர்மானத்தை முன்மொழியும். இலங்கையே வரவேற்கும் அளவுக்கு அந்தத் தீர்மானம் நீர்த்துப் போனதாக இருக்கும். பின்னர் அந்த அரைகுறைத் தீர்மானத்தின் பரிந்துரைகளைக் கூட நிறைவேற்ற மாட்டோம் என இலங்கை திமிராக அறிவிக்கும்; அதையும் இந்த உலக நாடுகளும் ஐ.நா-வும் கைக்கட்டி வேடிக்கை பார்க்கும். இந்தக் காட்சிகளைத்தாம் பன்னிரண்டு ஆண்டுகளாக நாம் பார்த்து வந்தோம். இதன் உச்சக்கட்டமாக இந்த ஆண்டு மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட இருந்த தீர்மானத்தின் வரைவில் “இனப்படுகொலை குறித்த ஆதாரங்களைத் திரட்டவும் புலனாய்வு செய்யவும் மனித உரிமை ஆணையர் அலுவலகம் மூலம் சார்பற்ற பன்னாட்டுப் புலனாய்வு அமைப்பை (International Independent Investigative Mechanism) ஏற்படுத்த வேண்டும்” என்ற அடிப்படையான ஒரே ஒரு பரிந்துரை கூட நீக்கப்பட இருக்கிற செய்தி கேட்டுக் கொதித்தெழுந்தார் இங்கிலாந்து வாழ் ஈழத் தமிழரான அம்பிகை செல்வகுமார் அவர்கள். இங்கிலாந்தின் முன்னாள் குடிமையியல் சேவகரும் பன்னாட்டு இனப்படுகொலைத் தடுப்பு மையத்தின் (ICPPG) இயக்குநர்களில் ஒருவரும் இங்கிலாந்து அரசில் முக்கியப் பொறுப்புக்களில் இருந்தவருமான இவர் இந்தாண்டு பிப்பிரவரி மாதம் 27 அன்று பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் சார்பில் நீதி வேண்டி இலண்டனில் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் அமர்ந்தார். ஏற்கெனவே ஈழத் தமிழர்களுக்காக உண்ணாநிலைப் போராட்டம் நடத்தித் தங்கள் இன்னுயிரை ஈந்த ஈகைச்சுடர் திலீபன் – அன்னை பூபதி ஆகியோரை வணங்கி அவர் போராட்டத்தைத் தொடங்கியபொழுது மீண்டும் நம் கண்ணெதிரே ஒருவர் சிறுகச் சிறுக உயிர் விடுவதைக் காணப் போகிறாமா என்றுதான் உலகெங்கும் உள்ள தமிழ்ப்பற்று கொண்ட நெஞ்சங்கள் பெருங்கவலையில் ஆழ்ந்தன. ஆனால் அன்னை அம்பிகை வரலாற்றை மாற்றி எழுதினார்! உண்ணாநிலையில் இறங்கும் முன்பு இலண்டன் சாலையில் இறங்கினார். மக்கள் பார்க்க ஈழ விடுதலைப் போராட்டம் பற்றித் தெள்ளத் தெளிவாக ஓர் உரையை வழங்கினார். இந்த விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது? இதன் பின்னால் உள்ள நயன்மைகள் (rightness) என்ன? தாங்கள் பட்ட கொடுமைகள் என்ன? கடைசியில் எவ்வளவு கொடூரமான இனப்படுகொலையில் தங்கள் போராட்டம் முடித்து வைக்கப்பட்டது? இவற்றையெல்லாம் சுருக்கமாகவும் அழுத்தமாகவும் எடுத்துரைத்தார். அடுத்து, 1. இலங்கை அரசைப் பன்னாட்டுக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டும் 2. நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் என அனைத்துக்குமான ஆதாரங்களைத் திரட்டக் காலவரையறையுள்ள சார்பற்ற பன்னாட்டுப் புலனாய்வு அமைப்பை (IIIM) ஏற்படுத்த வேண்டும் 3. மனித உரிமை உயர்நிலை ஆணையரின் அலுவலகச் (Office of the High Commissioner for Human Rights) சார்பில் இலங்கையைக் கண்காணிக்கச் சிறப்பு அறிக்கையாளரைப் பணியமர்த்த வேண்டும் 4. தமிழர்களின் தாய்நிலத்தையும் ஆட்சியுரிமையையும் நிலைநிறுத்தும் அடிப்படையில் ஐ.நா., மூலம் தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என மொத்தம் நான்கு கோரிக்கைகளை இங்கிலாந்து அரசிடம் முன்வைத்தார். இவற்றையெல்லாம் ஏன் இங்கிலாந்திடம் முன்வைக்க வேண்டியிருக்கிறது என்பதற்கும் காரணங்களைப் பட்டியலிட்டு, தன்னுடைய இக்கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டிய கடமை இங்கிலாந்துக்கு இருக்கிறது என்பதை ஆணித்தரமாக நிறுவிப் போராட்டத்தில் அமர்ந்தார். ‘உண்மைக்கும் நீதிக்குமான உணவு தவிர்ப்புப் போராட்டம்’ (Hunger Strike for Truth and Justice) எனும் பெயரில் தன் போராட்டத்தைத் தொடங்கியவர் யூடியூபில் அதற்கெனத் தனி வலைக்காட்சி (YouTube channel) துவங்கினார். ஒவ்வொரு நாளும் உண்ணாநிலைப் போராட்டக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. இணைய இதழ்கள் இதைப் பற்றி எழுதின. சமுக ஊடகங்களிலும் தமிழ்ப் பற்றாளர்கள் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். மொத்த உலகத்திடமும் நீதி வேண்டி ஒற்றைப் பெண்மணி போராடும் செய்தி உலகெங்கும் உள்ள ஈழத் தமிழர்களிடம் பரவியது. நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முதலான ஈழ ஆதரவுத் தமிழர் தலைவர்கள் இணைய வழிக் காணொளி அழைப்புகள் வாயிலாக அவருடன் நாள்தோறும் உரையாடி ஆதரவளித்தார்கள். கமலகாசன், சத்தியராசு போன்ற திரைக்கலைஞர்கள் அவருக்காகக் குரல் கொடுத்தார்கள். இலங்கையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்துக்கு வலுச் சேர்க்கத் தாங்களும் சுழற்சி முறையிலான உண்ணாநிலைப் போராட்டத்தில் குதித்தார்கள். பிரான்சு, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் போராட்டத்துக்கு ஆதரவாக ஊர்வலங்கள் புறப்பட்டன. ம.தி.மு.க., தலைவர் வைகோ, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தி.மு.க., தலைவர் தாலின் முதலானோர் அன்னையின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளிக்கும்படி இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்தினர். தொடர்ந்து ஆத்திரேலியா, கனடா எனப் பிற நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் போராட்டத்துக்கு ஆதரவுகள் குவிந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக, இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களே இதற்கு ஆதரவாகப் பேசத் தொடங்கினர். அதுவும் இங்கிலாந்துத் தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாம் டெரி இப்போராட்டத்துக்கும் ஈழத் தமிழர்களுக்கும் ஆதரவாகக் காணொளியே வெளியிட்டதோடு இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சருக்குத் தான் எழுதவிருப்பதாகவும் தெரிவிக்க விவகாரம் தீப்பிடித்தது. நெருக்கடியைச் சமாளிப்பதற்காக உண்ணாநிலைப் போராட்டத்தை நிறுத்தக் காவல்துறையை அனுப்பியது இங்கிலாந்து அரசு. ஆனால் இப்பேர்ப்பட்ட அறவழிப் போராட்டத்தை ஒடுக்குவதா என இலண்டன் மாநகர்ச் சாலைகளில் புலிக்கொடி ஏந்தித் திரண்டார்கள் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ச் செல்வங்கள்! காவல்துறை அவர்களை அடக்க முயல, தமிழர்கள் திமிறி எழ, சிறு கைக்கலப்புக்கும் காவல்துறைத் தாக்குதல்களுக்கும் பின்னர் குறைந்தது ஒருவரைக் கைது செய்ததோடு அரசின் அந்த முயற்சி தோல்வியடைந்தது. மக்கள் ஆதரவு முதல் மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவு வரை பெற்று விட்ட இந்தப் போராட்டத்தை இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது என்று உணர்ந்து இறங்கி வந்தது இங்கிலாந்து அரசு. அன்னையின் ஒன்றுக்கு மேற்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக இங்கிலாந்து அரசு உறுதியளித்ததன் பேரில் தன் போராட்டத்தை உரிய இடத்துக்கு எடுத்துச் சென்ற அனைவருக்கும் அதன் வெற்றியைக் காணிக்கையாக்கி 17.03.2021 அன்று உண்ணாநிலையை நிறைவு செய்தார் அம்பிகை செல்வகுமார் அவர்கள். மறுநாளே நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதித்தார்கள் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள். ஒரு மணி நேர விவாதத்தில் அனைத்துக் கட்சிகளையும் சார்ந்த எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் இலங்கைக்கு எதிராகத் தீவிர நடவடிக்கை தேவை என ஒப்புக் கொண்டார்கள். இதையடுத்து கனடா, செருமனி என மொத்தம் ஐந்து நாடுகளுடன் இணைந்து இங்கிலாந்து அரசு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் 46ஆவது கூட்டத்தொடரில் 23.03.2021 அன்று இலங்கைக்கு எதிரான அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானத்தைத் தாக்கல் செய்தது. இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்த தடயங்களைத் ‘திரட்டுவதோடு’ அவற்றைத் ‘தொகுத்து’, ‘பகுப்பாய்வு செய்து’, எதிர்காலப் போர்க்குற்ற வழக்குகளில் பயன்படுத்த உதவும் வகையில் ‘பாதுகாக்கவும்’ செய்யுமாறு மனித உரிமை உயர்நிலை ஆணையரின் அலுவலகத்துக்குப் பரிந்துரைத்தது தீர்மானம். அன்னை அம்பிகை அவர்கள் வேண்டுகோளுக்கு மாறாக இந்தியா இந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பைப் புறக்கணித்து வழக்கம் போல் ஈழத் தமிழர்களுக்கு இரண்டகம் (betrayal) இழைத்தது. ஆனாலும் மனிதநேயம் கொண்ட 22 நாடுகளின் பேராதரவில் வெற்றி பெற்றது தீர்மானம்! ஒற்றைப் பெண்மணியாகத் தன் உயிரையே துச்சமாக மதித்துப் போராடி, உலகையே தமிழர்களின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்து, இலங்கையும் அதற்கு ஆதரவான வல்லரசு நாடுகளும் செய்த உலகளாவிய காய்நகர்த்தல்களையெல்லாம் உட்கார்ந்த இடத்திலிருந்தே தவிடுபொடியாக்கி, பன்னாட்டு சமுகத்தின் தீர்மான வரைவையே திருத்தி எழுதிய அன்னை அம்பிகை செல்வகுமார் அவர்கள் ஈடு இணையற்ற ஈகத்தமிழ் மாவீராங்கனையாக என்றென்றும் வரலாற்றில் நிலைபெற்றிருக்கிறார். அதே நேரம், இந்தத் தீர்மானம் உண்மையிலேயே பலன் அளிக்குமா இல்லையா எனவெல்லாம் பல்வேறு மாற்றுக் கருத்துக்களும் நிலவுகின்றன. இலங்கை வாழ் ஈழ ஆதரவுத் தலைவர்கள், அமைப்பினர் போன்றோருடன் பி.பி.சி., தமிழ் மேற்கொண்ட செவ்வியில் அவர்கள் யாரும் இது குறித்துப் பெரிய அளவில் வரவேற்பு தெரிவிக்கவில்லை. ஈழச் சிக்கல் பற்றி அவர்கள் அளவுக்கெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாவிட்டாலும் இனப்படுகொலைக்குப் பிறகான இத்தனை ஆண்டுகளில் பன்னாட்டுச் சமுகம் இலங்கைக்கு எதிராக எடுத்துள்ள உருப்படியான ஒரே நடவடிக்கை இதுதான் என்பதை யாரும் மறுக்க மாட்டார்களெனவே நம்புகிறேன். இனி பன்னாட்டு அவைகளில் இனப்படுகொலை தொடர்பாக இலங்கைக்கு ஆதரவாய் எந்த ஒரு நடவடிக்கை முன்மொழியப்பட்டாலும் அதற்கு மிகப் பெரிய தடையாக இந்தத் தீர்மானம் இருந்தே தீரும். இலங்கையில் தமிழர்கள் தனி நாடு கோருவதே ஒரே நாட்டில் இணக்கமாய் வாழ முடியாத அளவுக்கு சிங்களர்கள் தங்களை அங்கே கொடுமைப்படுத்துகிறார்கள் என்பதால்தான். அந்தக் கொடுமைகளின் உச்சம்தான் 2009-இல் நடந்த தமிழினப்படுகொலை. இதோ இப்பொழுது கூட இந்தப் பன்னிரண்டாம் ஆண்டு நினைவேந்தலைக் கூட நடத்த விடாமல் இலங்கை அரசு இனப்படுகொலை நினைவுத்தூணை இடிப்பதையும், மகுடை (Corona) பரவலைக் காரணம் காட்டி நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு நீதிமன்றத் தடை பெற முனைவதையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். எனவே தனி ஈழம் மலர வேண்டுமானால் தங்களால் சிங்களர்களுடன் இணைந்து வாழ முடியாத சூழல் அந்நாட்டில் நிலவுவதைத் தமிழர்கள் முதலில் உறுதிப்படுத்தியாக வேண்டும். அதை உறுதிப்படுத்த, நடந்தது இனப்படுகொலைதான், அதை நடத்தியது இலங்கை அரசுதான் என்கிற உண்மையை நிறுவ வேண்டும். அதை நிறுவத் தேவை பாகுபாடற்ற ஒரு பன்னாட்டு உசாவல் (inquiry) அமைப்பு. அப்படி உசாவல் அமைப்பு ஏற்படுத்தப்படத் தேவையானது இனப்படுகொலை நடந்திருக்கக்கூடும் எனச் சொல்லும் முறையான அறிக்கை. அப்படி ஓர் அறிக்கை வெளிவர அதற்கு ஆதாரமாக அடிப்படைச் சான்றுகள், தடயங்கள் போன்றவை முறையான அமைப்பால் திரட்டப்படுவது இன்றியமையாதது. அதற்கான வழிவகையைத்தான் இந்தத் தீர்மானம் ஏற்படுத்தியுள்ளது. ஆக, கடக்க வேண்டிய தொலைவு இன்னும் எவ்வளவோ இருப்பினும் அதற்கான முதல் அடியை இந்தத் தீர்மானத்தின் மூலம் தமிழர்கள் நாம் எடுத்து வைத்துள்ளோம் என்பதுதான் ஐயம் திரிபற்ற உண்மை. எனவே இத்தனை ஆண்டுகளும் இழந்த உயிர்களையும் உறவுகளையும் எண்ணித் துயரத்துடன் மட்டுமே நினைவேந்திய நாம் இந்த முறை அவர்களுக்கான நீதியையும் அவர்களுடைய தனி ஈழ வேட்கையையும் நோக்கி ஓரடியாவது முன்னேறியிருக்கிறோம் எனும் பெருமையுடனும் நினைவேந்தலாம் என்பதில் துளியும் ஐயம் இல்லை. ஒளிர்ந்திடும் நினைவேந்தல் சுடர்கள் – அதில் ஒழிந்திடும் தமிழினத்தின் இடர்கள்! தொடர்ந்திடும் நம் நீதிக்கான புறப்பாடு – கட்டாயம் மலர்ந்திடும் நம் தமிழீழத் திருநாடு! (நான் ‘கீற்று’ இதழில் 17.05.2021 அன்று எழுதியது) தரவுகள்: நன்றி ஐ.பி.சி தமிழ், உண்மைக்கும் நீதிக்குமான உணவு தவிர்ப்புப் போராட்டம் வலைக்காட்சி, தமிழ் கார்டியன். படங்கள்: நன்றி மனித உரிமை ஆணையம், குமணன், மே பதினேழு இயக்கம். காணொளி: நன்றி ஐ.பி.சி தமிழ். தொடர்புடைய பதிவுகள்: 📂 நினைவேந்தல்
-
- england
- ambihai selvakumar
- (and 16 more)