Jump to content

Search the Community

Showing results for tags 'நிலாந்தன்'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • வலைப்போக்கன் கிருபன்'s செயற்கை நுண்ணறிவு உருவாக்கி
  • Ahal Media Network's Topics

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's சிறப்பு ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணக்கட்டுகள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's திரட்டுகள்
  • Home Appliances Spot's Home Appliances

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

  1. வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும்! - நிலாந்தன் வெடுக்குநாறி மலை விவகாரம் பெரும்பாலான தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளை ஒன்றுபடுத்தியிருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளாகத் தமிழ்க் கட்சிகளை ஒன்றுபடுத்துவது எதிர்த் தரப்புத்தான். சிவ பூசையில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்கான போராட்டக் களத்தில் எல்லாக் கட்சிகளும் ஒன்றாக நின்றன. பரவாயில்லை. குறைந்தது ஒரு விவகாரத்தை மையமாகக் கொண்டாவது கட்சிகள் அவ்வாறு ஒன்றாகத் திரள்வது நல்லது. ஆனால் இந்த விவகார மைய ஐக்கியம் மட்டும் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டப் போதாது. தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவது என்ற அடிப்படையில் கட்சிகள் ஒன்றிணையும் போதுதான் கடந்த 15 ஆண்டு காலத் தேக்கத்தில் இருந்து விடுபடலாம். அல்லது அவ்வாறு கட்சிகளை ஒன்றிணைக்கத்தக்க பலத்தோடு ஒரு கட்சி பலமானதாக மேற்கிளம்ப வேண்டும். எதுவாயினும் சிவராத்திரியன்று கைது செய்யப்பட்டவர்களை மீட்பதற்காக கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்டது வரவேற்கத்தக்கது. இது போன்ற “கலெக்டிவ்” ஆன அதாவது ஒன்றிணைந்த கூட்டு முயற்சிகள்தான் வெற்றியளிக்கும் என்பதற்கு இங்கு அரசியல் அல்லாத வேறு ஒரு உதாரணத்தைச் சுட்டிக் காட்ட வேண்டும். எங்களில் எத்தனை பேர் எமது வீடுகளில் உள்ள தென்னை மரங்களில் விளைச்சல் குறைந்து வருவதை அவதானித்திருக்கிறோம்? தென்னோலைகளில் மேற்பரப்பில் கறுப்பாக எண்ணெய்த் தன்மையோடு ஏதோ ஒட்டிக் கொண்டிருக்கிறது. ஓலைகளின் கீட் பகுதிகளில் பூஞ்சனம் போல வெள்ளையாக ஏதோ ஒட்டிக் கொண்டிருக்கிறது. அது தென்னை மரங்களில் இருந்து தொடங்கி கொய்யா,மா,நாவல்,வாழை, வெண்டி, எலுமிச்சை, செம்பருத்தி, சீத்தாப்பழம், கருவேப்பிலை என்று ஏனைய மரங்களின் மீதும் பரவுகிறது. ஒரு வீட்டில் மட்டுமல்ல, ஒரு கிராமம், ஒரு பிரதேசம் முழுவதும் அது பரவி வருகின்றது. குறிப்பாக வெக்கையான காலங்களில் தென்னை மரங்களைத் தாக்கும் வெள்ளை ஈ-Spiral Whitefly(Aleurodicus disperses)-அதுவென்று துறைசார்ந்த திணைக்களங்கள் தெரிவிக்கின்றன. அதன் தாக்கத்துக்கு இலக்காகிய தென்னோலைகள் சத்திழந்து, காய்ந்து கருகி ஒரு கட்டத்தில் மட்டையோடு கழண்டு விழுகின்றன. கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களிலும் வெள்ளை ஈயின் தாக்கம் அதிகரிக்கின்றது. புத்தளம் மாவட்டத்தில் தங்கொடுவ,நாத்தாண்டிய, சிலாபம், முகுனுவடவன,ஆரியகம,பட்டுலுஓயா,முந்தலம ஆகிய பிரதேசங்களில் வெள்ளை ஈயின் தாக்கம் உள்ளதாக அவதானிக்கப்பட்டுள்ளது. தீவிரமாகப் பரவும் வெள்ளை ஈயினால் இலங்கையில் சுமார் இரண்டாயிரம் ஏக்கர் தென்னந் தோப்புகள் சேதமடைந்துள்ளதாகத் தெரிய வருகிறது. மழைக் காலங்களில் வெள்ளை ஈயின் தாக்கம் குறைவாக இருக்கின்றது. தென்னோலைகள் கழுவப்படும் போது வெள்ளை ஈயின் பெருக்கம் குறைகிறது. ஆனால் வறட்சியான காலங்களில் வெள்ளை ஈ தென்னந் தோப்புக்களுக்கு எதிராக ஓர் உயிரியல் போரைத் தொடுக்கின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை விருதுகள் வழங்கும் நிகழ்வு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. அதில் பேசிய அந்த அமைப்பின் தலைவராகிய ஐங்கரநேசன் வெள்ளை ஈ தொடர்பாகவும் சுட்டிக்காட்டினார். வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்துவதற்கு ஒஸ்ரேலியாவைச் சேர்ந்த ஒரு தமிழர் கூறிய ஒரு பரிகாரத்தை அவர் மேடையில் வைத்துச் சொன்னார். வீடுகளில் நாங்கள் பயன்படுத்தும் சலவைத் தூளில் இரண்டு அல்லது மூன்று கரண்டிகளை எடுத்து 5 லிட்டர் நீரில் கரைத்த பின் அதனை தென்னோலைகளுக்குத் தெளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். சலவை தூளுடன் ஒரு மரத்துக்கு 200 மில்லி லீட்டர் வேப்பெண்ணெயையும் கலந்து அடித்தால் பயன் தரும் என்று தென்னை பயிர்ச் செய்கை சபையைச் சேர்ந்தவர்கள் கூறினார்கள். குறிப்பிட்ட கலவையை தென்னோலைகளின் மீது தெளிப்பதற்கு உயர் அழுத்தப் பம்பிகள் தேவை. வடபகுதி தென்னை பயிர்ச் செய்கை சபையிடம் 10 பம்பிகள் உண்டு என்று கூறப்படுகிறது. சீனாவில் இருந்து சிறிய பம்பி ஒன்றை கிட்டத்தட்ட 40,000 ரூபாய்க்கு இறக்குமதி செய்ய முடியும் என்று ஒரு வணிகர் கூறினார். வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்தத் தவறினால், ஒருகட்டத்தில் தேங்காய்த் தட்டுப்பாடு ஏற்படும். அது நேரடியாக வயிற்றில் அடிக்கும். இறுதிக்கட்டப் போரில் தேங்காய்க்கு அலைந்த ஒரு மக்கள் கூட்டம் நாங்கள். இறுதிக் கட்டப் போரில் 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆனந்தபுரத்தில் நடந்த சண்டையோடு பெரும்பாலும் தேங்காய் இல்லாமல் போய்விட்டது. முள்ளிவாய்க்கால் கடற்கரையில் தென்னைகள் இருந்தன. ஆனால் அங்கிருந்த அசாதாரண சனத்தொகைக்குப் போதுமான தேங்காய்கள் இருக்கவில்லை. ஆனந்தபுரத்தில்தான் ஒப்பீட்டளவில் அதிக தென்னை மரங்கள் இருந்தன. ஆனந்தபுரத்தை இழந்ததோடு தேங்காய்த் தட்டுப்பாடு தொடங்கியது. அதன் பின் முள்ளிவாய்க்கால் கஞ்சிக்குத் தேங்காய்ப் பாலுக்குப் பதிலாக பால்மாவை பயன்படுத்தப்பட்டது. ஒரு கஞ்சிக்கலயத்துக்கு இரண்டு பால்மா பக்கெட்டுகள். அது போர்க்காலம். ஆனந்தபுரத்தோடு தேங்காய் இருக்கவில்லை. ஆனால் இப்பொழுது 15 ஆண்டுகளின் பின் வெள்ளை ஈ ஏறக்குறைய ஒரு போரைத் கொடுத்திருக்கிறது. அது ஒரு கூட்டுத் தாக்கம். இத்தாக்கத்திலிருந்து தென்னை மரங்களைப் பாதுகாக்கத் தவறினால் தேங்காய்க்கு அலைய வேண்டி வரும். தேங்காய் எண்ணையின் விலை கூடும். தேங்காய் எண்ணெயை பயன்படுத்தும் எல்லா உணவுப் பொருட்களின் விலையும் கூடும். பொருளாதார நெருக்கடிக்கு முன்னரே தேங்காய் எண்ணெயின் விலை அதிகரித்துவிட்டது. இப்பொழுது ஒரு லிட்டர் 600 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய்க்கு மேல் வரை போகிறது. நுகர்வுக் கலாச்சாரத்துள் சமூக வலைத்தளங்கள் ஏற்படுத்திய நல் விளைவுகளில் ஒன்றை இங்கே சுட்டிக் காட்ட வேண்டும். பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் தேங்காய் எண்ணையின் தரம் குறித்த சந்தேகங்கள், சமூக வலைத்தளங்களில் பரவலாக வரத் தொடங்கிய ஒரு பின்னணியில், வீட்டில் தென்னைகளை வளர்ப்பவர்கள் தங்களுக்குத் தேவையான தேங்காய் எண்ணெயைத் தாங்களே உற்பத்தி செய்யத் தொடங்கினார்கள். அது ஒரு அற்புதமான செயல். தமிழ்ப் பகுதிகளில் அதிகம் தென்ன மரங்களைக் கொண்ட காணிகளை வைத்திருப்பவர்கள் தங்களுக்கு தேவையான தேங்காய் எண்ணெயைப் பல்பொருள் அங்காடிகளில் வாங்குவதைத் தவிர்க்கத் தொடங்கினார்கள். ஆனால், இப்பொழுது வெள்ளை ஈ எல்லாவற்றையும் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது. வெள்ளை ஈயின் உயிரியல் எதிரிகளான பூச்சிகளை, வண்டுகளைப் பெருக்குவதின்மூலம் அதைக் கட்டுப்படுத்தலாமா என்று தென்னை பயிர் செய்கை சபை கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் ஒரு பரிசோதனை முயற்சியைத் தொடங்கியிருக்கிறது. அதன் விளைவுகள் விரைவில் தெரிய வரலாம் என்று கூறப்படுகின்றது. வெள்ளை ஈயின் தாக்கத்துக்கு உள்ளாகிய தென்னை மர உரிமையாளர்கள், தென்னை பயிர்ச் செய்கை சபையை அணுகி பரிகாரத்தைப் பெறலாம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.ஒவ்வொரு பிரதேசத்துக்கும் உரிய கமநல சேவை நிலையத்தில் தென்னை பயிர்ச் செய்கை சபையின் ஒரு பிரிவு இயங்குவதாகவும் அங்கே பாதிக்கப்பட்டவர்கள் தமது முறைப்பாடுகளைச் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் பாதிக்கப்பட்ட ஒருவர் அல்லது சில பண்ணையாளர்கள் அதற்கு தீர்வு காண்பதன்மூலம் வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த முடியாது. அது ஒரு கூட்டுத் தாக்கம். ஒரு முழுப் பிரதேசத்தையும் அது தாக்குகின்றது. ஒரு வீட்டில் கட்டுப்படுத்தினால் சிறிது காலத்தின் பின் பக்கத்துக்கு வீட்டிலிருந்து வெள்ளை ஈ மீண்டும் வரும். எனவே ஒரு வீட்டில் அல்லது ஒரு பண்ணையில் மட்டும் அதை கட்டுப்பட்டுவதால் பிரியோசனம் இல்லை. அதை முழுச் சமூகத்துக்கும் உரிய ஒரு கூட்டு செயற்பாடாக முன்னெடுத்தால் மட்டுமே வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்தலாம் என்று சம்பந்தப்பட்ட துறைசார் திணைக்களங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே தமிழ் மக்கள் முள் முருக்கு மரத்தை பெருமளவுக்கு தொலைத்து விட்டார்கள். தமிழ் பண்பாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு நிகழ்வாகிய திருமணத்தில் கன்னிக்கால் என்று கூறி நடப்படுவது முள்முருக்கு. முள் முருக்கில் ஏற்பட்ட ஒரு நோய்த் தாக்கம் காரணமாகவும் நகரமயமாக்கத்தின் விளைவாக உயிர் வேலிகள் அருகிச் செல்வதன் காரணமாகவும் முள் முருக்கு அழிந்து செல்லும் ஒரு தாவரமாக மாறி வருகிறது. தமிழ் மக்கள் மத்தியில் உயர் கல்வி நிறுவனங்களில் தாவரவியல் ஓர் ஆராய்ச்சிப் பிரிவாக உண்டு. தமிழ் பண்பாட்டில் தனக்கென்று தவிர்க்க முடியாத ஒரு தாவரவியல் இருப்பைக் கொண்டிருக்கும் முள்முருக்கைக் காப்பாற்ற ஏன் அதில் சம்பந்தப்பட்ட துறைசார் நிபுணர்கள் அல்லது புலமையாளர்களால் முடியவில்லை? திருமணங்களில் முள்முருக்கிற்குப் பதிலாக குரோட்டன் முருக்கந்தடியைப் பயன்படுத்துவதுபோல, தேங்காய்க்குப் பதிலாக வேறு எதையாவது பயன்படுத்தப் போகிறோமா? முள் முருக்குப் போலவே வெள்ளை ஈயின் விடயத்திலும் பொருத்தமான துறை சார்ந்த ஆய்வுகள் அவசியம். வடக்குக் கிழக்குப் பகுதிகள் உலர் வலையத்துக்குரியவை. நாட்டில் உலர் வலையத்துக்கு என்று தென்னை ஆராய்ச்சி மையம் எதுவும் கிடையாது. அதனால், உலர் வலையத்துக்குரிய தென்னை ஆராய்ச்சி மையம் ஒன்று தமிழ்ப் பகுதிகளில் உருவாக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது. எனவே, வெள்ளை ஈயிடமிருந்து தமிழ்ச் சமையலைப் பாதுகாக்க, துறைசார் ஆராய்ச்சியாளர்களும் திணைக்களங்களும் சமூக நலன் விரும்பிகளும் சுற்றுச்சூழலியலாளர்களும் கிராமமட்ட அமைப்புகளும் குடிமக்கள் சமூகங்களும் ஊடகங்களும் ஒன்றிணைய வேண்டும். பொதுவாக சமூகம் தழுவிய கூட்டு முயற்சிகள் என்று வரும்பொழுது அங்கே அரசியல் தலைமைத்துவம் அல்லது சமூகச் செயற்பாட்டு அமைப்புக்களின் தலைமைத்துவம் தேவைப்படுவதுண்டு. எனவே வெள்ளை ஈ தமிழ் மக்களின் சாப்பாட்டு மேசைக்கு வரமுன்னரே அதைத் தடுக்கும் முயற்சிகளில் கூட்டாகத் தமிழ்ச் சமூகம் இறங்க வேண்டும். வெடுக்குநாறி மலையில் உள்ள தமிழ் மரபுரிமை சின்னத்தைப் பாதுகாப்பதற்காகத் தமிழ்க்கட்சிகள் ஒன்று திரண்டதைப்போல. https://www.nillanthan.com/6647/
  2. யு ரியூப்பர்களின் காலத்தில் தேசமாகச் சிந்திப்பது! நிலாந்தன். adminMarch 17, 2024 பார்க்க ஆசையா இருக்கு எண்டாலும் மனதில ஒரு கவலை இருக்கு கடத்த ஒன்பதாந் திகதி வெடுக்குநாறி மலையில் சிவ பூசைக்குள் போலீஸ் புகுந்தது. எட்டுப் பேர் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் சிறை வைக்கப்பட்ட அடுத்த நாள், 10ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்ற வெளியில் விமானப்படைக் கண்காட்சியின் கடைசி நாளன்று, ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே திரண்டார்கள். அங்கு திரண்ட சனத்தொகை சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்வில் திரண்ட தொகைக்குக் கிட்ட வரும் என்று கூறப்பட்டாலும், அது ஒரு மிகை மதிப்பீடு என்று கருதப்படுகின்றது. எனினும் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டார்கள் என்பது மட்டும் உண்மை. தமது மரபுரிமைச் சொத்து ஒன்று ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிராகவும், தமது வழிபாட்டு உரிமையை நிலை நிறுத்துவதற்காகவும் வெடுக்குநாறி மலையில் போராடிக் கொண்டிருக்கும் அதே மக்கள் மத்தியில் இருந்துதான் முற்ற வெளிக்கும் ஆட்கள் போனார்கள். இந்த முரண்பாட்டை எப்படி விளங்கிக் கொள்வது? வெடுக்கு நாறி மலைக் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நல்லூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர், முற்றவெளிக்குப் போன மக்களைக் கடுமையாக விமர்சித்தார். 15 ஆண்டுகளுக்கு முன் நடந்தவற்றை மறந்து முற்றவெளிக்குப் போன மக்கள் மீது அவருக்குக் கோபம். அந்தக் கோபம் நியாயமானது. ஆனால் அதைவிட ஆழமான, நியாயமான ஒரு கேள்வி உண்டு. அது என்னவெனில், தமது சொந்த அரசியலின் மீதும் நேரடியான மற்றும் மறைமுக ஒடுக்குமுறைகளின் மீதும் தமிழ் மக்களின் உணர் திறனை விழிப்பை அதிகப்படுத்தும் நிகழ்ச்சி நிரல் எந்தக் கட்சியிடம் உண்டு? ஒரு மக்கள் கூட்டத்தின் பொதுப் புத்தி அப்படித்தான் இருக்கும். அது வாழ்க்கையைக் கொண்டாடக் கிடைக்கும் எல்லாச் சந்தர்ப்பங்களையும் தேடிப் போகும். மக்களுக்கு பொழுது போக வேண்டும். அதுதான் அவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் பண்ணை வெளிக்கு வருகிறார்கள். யாழ்ப்பாணத்தின் ஏனைய உல்லாசத் தலங்களுக்குப் போகின்றார்கள். வசதி குறைந்தவர்கள் பண்ணைக்கும் ஏனைய சிறு பூங்காக்களுக்கும் போகின்றார்கள். வசதி கூடியவர்கள் யாழ்ப்பாணத்தின் நட்சத்திர அந்தஸ்துடைய விருந்தினர் விடுதிகளுக்கு போகின்றார்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள் முன்பு வரும்பொழுது தங்கள் சொந்தக்காரர்களின் வீடுகளில் தங்குவதுண்டு. இப்பொழுது கணிசமானவர்கள் விருந்தினர் விடுதிகளில் தங்குகிறார்கள். அதற்காக லட்சக்கணக்கில் செலவழிக்கின்றார்கள். அதாவது சமூகத்தின் வெவ்வேறு மட்டங்களில் இருப்பவர்கள் தங்கள் தங்கள் நிதித் தகமைக்கு ஏற்ப வாழ்க்கையைக் கொண்டாட விரும்புகிறார்கள். குறிப்பாக ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை வாழ்க்கையைக் கொண்டாட விரும்பும் அநேகருக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள்தான் ஒரு முன்னுதாரணம். மூன்றாவது புலப்பெயர்ச்சி அலைக்கு அது பிரதான காரணம். இப்படியாக வாழ்க்கையைக் கொண்டாட ஆசைப்படும் ஒரு மக்கள் கூட்டத்தை அவர்களுடைய சொந்த அரசியலின் மீது உணர்திறண் மிக்கவர்களாக மாற்றுவது எப்படி? அதை யார் செய்வது? விமானப்படைக் கண்காட்சிக்கு வந்த ஒரு நோர்வேத் தமிழர் கூறுகிறார் “பார்க்க ஆசையா இருக்கு, எண்டாலும் ஒரு கவலை இருக்கு மனதில ” என்று. ஆசையாக இருக்கிறது என்பது வாழ்க்கையை கொண்டாட ஆசையாக இருக்கிறது என்று பொருள். கவலை இருக்கிறது என்பது இறந்த காலத்தில் தமிழர்கள் பட்ட துயரங்களை நினைக்கும் போது ஏற்படுவது. ஆனால் அது இறந்த காலமல்ல, நிகழ்காலமுந்தான். அதனால்தான் வெடுக்கு நாறி மலையில் போராட வேண்டியிருக்கிறது; மயிலத்தமடுவில், மாதனையில் போராட வேண்டியிருக்கிறது; காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அன்னையர்கள் தொடர்ந்து போராட வேண்டியிருக்கிறது. போர் ஒரு விளைவு மட்டுமே, மூல காரணம் அல்ல. ஒடுக்கு முறைதான் மூல காரணம். அது இப்பொழுதும் உண்டு. எட்டுப் பேர் கைது செய்யப்பட்டிருக்கும் ஒரு சமூகத்தில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் முற்றவெளிக்குப் போயிருக்கிறார்கள். அங்கே படையினர் பரசூட்டில் இறங்குவதைப் பார்த்து ஆர்ப்பரிக்கிறார்கள். உலங்கு வானூர்தியில் ஏறுவதற்காக முண்டியடிக்கிறார்கள். அதைப் பெரும்பாலான யு ரியூப்பர்கள் கவர்ச்சியாக விற்கிறார்கள். இது யுடியூப்பர்கள் காலம். வாசிப்பதற்கான பொறுமை குறைந்து வருகின்றது. கேட்பதற்கான தாகம் அதிகரித்து வரும் ஒர் ஊடகச் சூழல். யுடியூப்பர்கள் எத்தனை பேர் தேசத்தை கட்டியெழுப்பும் பொறுப்புணர்ச்சியோடு செயல்படுகிறார்கள்? தான் பரப்புவது வதந்தியா செய்தியா என்று எத்தனை யுடியூப்பர்களுக்குத் தெரியும்? எத்தனை யுடியூப்பர்கள் தமிழுக்கு வெளியே போய் வாசிக்கின்றார்கள்? எத்தனை யுடியூப்பர்கள் தாங்கள் வெளியிடும் தகவலின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துகிறார்கள்? இதை இன்னும் கூர்மையாகக் கேட்டால் ஒரு யுடியூப்பருக்கு என்ன தகைமை இருக்க வேண்டும்? ஒரு நல்ல கமராவும் வேகமான இன்டர்நெற்றும் இருந்தால் மட்டும் போதுமா? தாங்கள் கூறும் விடயத்தின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்ற பொறுப்புணர்வு எத்தனை யுடியூப்பர்களுக்கு உண்டு? கடந்த சுதந்திர தினத்தன்று, ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார். அவருடைய வருகைக்கு எதிராக கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் பழைய பூங்கா வீதியில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அவர்களைத் தடுத்து நிறுத்த வீதியின் குறுக்கே போலீஸ் ஒரு பேருந்தை நிறுத்தி வைத்திருந்தது. அவ்வாறு பழைய பூங்கா வீதி முன்னறிவிப்பின்றி மூடப்பட்டதை எதிர்த்து அந்த வீதி வழியாக காரில் வந்த ஒருவர் போலீசாரோடு முரண்படுகிறார். அது தொடர்பாக ஒரு யுடியூப்பர் செய்தி வெளியிடுகையில் “காரில் வந்த இந்தியர், பார்த்து மிரண்ட இலங்கை போலீஸ்” என்று தலைபிடுகிறார். அக்காணொளி ஆறு லட்சத்து எட்டாயிரம் பேர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் பொலிசாரைக் கேள்வி கேட்கும் நபர் ஒர் இந்தியர் அல்ல. சுயாதீன திருச்சபை ஒன்றின் பாஸ்டர். அவருடைய காரின் “டாஷ் போர்ட்” பகுதியில் இந்திய தேசியக்கொடி காணப்படுகின்றது. அதை வைத்து அவர் ஒரு இந்தியர் என்று யுரியூப்பர் கூறுகிறார். ஆயின்,ஆறு லட்சத்துக்கும் அதிகமானவர்களிடம் அந்தப் பொய் சென்று சேர்ந்திருக்கின்றதா? இலங்கையில் பொருளாதாரம் நெருக்கடி ஏற்பட்ட பொழுது ஓர் இந்திய யுடியூபர் கூறினார், வெள்ளைக்காரர்கள் வாங்கி வைத்திருக்கும் பாணை உள்ளூர் மக்கள் பறித்துக் கொண்டு ஓடுவதாக. அது ஒரு பொய். பெரும்பாலான யுரியூப்பர்கள் தமது காணொளிகளைப் பார்பவர்களின் தொகையை எப்படி கூட்டுவது என்று தான் சிந்திக்கிறார்கள். பார்ப்பவர்களின் தொகை கூடக்கூட வருமானம் பெருகும். எனவே பெரும்பாலானவர்கள் உழைப்பை எப்படிப் பெருக்குவது என்றுதான் சிந்திக்கின்றார்கள். இது ஓர் ஆபத்தான வளர்ச்சி. யு ரியூப்பர்களின் காலத்தில் உண்மை எது? பொய் எது? ஊடக அறம் எது? உழைப்பு மட்டும்தான் யூரியுப் தர்மமா? சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு, தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு யு ரியூப்பர்ளுக்கு இல்லையா? வாசகரை அல்லது பார்வையாளரை விமர்சனபூர்வமாகச் சிந்திக்கும் விழிப்புடைய பிரஜைகள் ஆக்குவதே தேசத்தைக் கட்டியெழுப்பும் ஊடகவியலாளரின் வேலை. எனவே யுடியூப்பர்களின் காலத்தில் தேசத்தைக் கட்டியெழுப்புவது எத்தனை சவால்கள் மிக்கது என்பதனை விமானப்படை கண்காட்சி தொடர்பாக வெளிவந்த பெரும்பாலான யுடியூப்கள் மீண்டும் நிரூபித்தன. இது அரசியல் கட்சிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் பணி மேலும் கடினமாக்கப்படுகிறது என்பதைக் காட்டுகிறது. இப்படிப்பட்டதோர் ஊடகச் சூழலில், முற்றவெளியில் திரளும் மக்களைத் திட்டித் தீர்ப்பதனால் தேசத்தைக் கட்டியெழுப்ப முடியாது. தமது சொந்த அரசியலின் மீது அந்த மக்களை எப்படி உணர் திறண் மிக்கவர்களாக மாற்றுவது என்று கட்சிகள் சிந்திக்க வேண்டும். அதற்கு வேண்டிய வழிவகைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். தேசியவாத அரசியல் என்பது மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவது. தேசத்தை கட்டியெழுப்பும் கலையை; பண்பாட்டை; அறிவியலை; தேசத்தைக் கட்டியெழுப்பும் யுடியூப்பர்களை; தேசத்தைக் கட்டியெழுப்பும் ஊடகக் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். இப்படி எழுதுவதுகூட சமூகத்தின் ஒரு பிரிவினருக்கு எரிச்சலூட்டுவதாக இருக்கலாம். ஏனென்றால் வான்படைக் கண்காட்சி தொடர்பாக படித்தவர்கள் சிலர் தெரிவித்த கருத்துக்களில் அதைக் காண முடிந்தது. எல்லா பிரச்சினைகளும் முடிந்து விட்டன; நாங்கள் இப்பொழுது சந்தோஷமாகத்தான் இருக்கிறோம்; கண்டதையும் எழுதிக் குழப்பாதீர்கள்; மக்கள் சந்தோஷமாக இருக்க விரும்புகிறார்கள்; அவர்களை மீண்டும் பலியாடுகள் ஆக்காதீர்கள்… என்று கூறும் ஒரு போக்கு அதிகரித்து வருகிறது. மக்களைத் தமது நிகழ்காலத்தின் மீது உணர் திறண் மிக்கவர்களாக மாற்ற முற்படும் எழுத்துக்களுக்கு வாசிப்பும் வரவேற்பும் குறைந்து வருகிறது. பதிலாக மாயைகளின் மீதும் பொருளற்ற மகிழ்ச்சியின் மீதும் பொய்களின் மீதும் கட்டுக் கதைகளின் மீதும் தாகம் கொள்ளச் செய்யும் ஊடக கலாச்சாரம் மேலெழத் தொடங்கிவிட்டது. வெறுப்பர்கள்-haters-எல்லாவற்றையும் எதிர்மறையாக விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். சில மாத கால இடைவெளிக்குள் யாழ்ப்பாணம் முற்ற வெளியில் மக்கள் பெருந்திரளாகக் கூடிய நிகழ்வுகளிலிருந்து தமிழ் அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் குடிமக்கள் சமூகமும் புத்திஜீவிகளும் கலைஞர்களும் ஊடகங்களும் கற்றுக்கொள்ள வேண்டும். ஆழமான வாசிப்புக் குறைந்து, ஆழமான யோசிப்பும் குறைந்து,மேலோட்டமானவைகளை நோக்கி மொய்க்கும் ஒரு ஜன சமுத்திரத்தை புதிய ஊடக மரபு உற்பத்தி செய்து வருகிறது. செயற்கை நுண்ணறிவின் புதிய வளர்ச்சிகளின் பின்னணியில் “டீப் ஃபேக்” – deepfake- என்று அழைக்கப்படும் ஆழமான போலி உருவாக்கப்படுகின்றது. அது ஒரு வெகுசனப் பண்பாடாக வளர்க்கப்படுகிறது. ஆழமான பொய்களின் மத்தியில்; மறதி அதிகமுடைய ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில்; தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. https://www.nillanthan.com/6615/
  3. வானத்திலிருந்து யாழ்ப்பாணத்தைப் பார்த்த மாணவர்கள்! - நிலாந்தன் சிறீலங்கா விமானப்படையின் 73ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடக்கில் “நட்பின் சிறகுகள்” என்ற தலைப்பில், 125 மில்லியன் ரூபாய் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்களை விமானப்படை முன்னெடுக்கின்றது. இதில் 73 பள்ளிக்கூடங்களை புனரமைக்கும் திட்டமும், பள்ளிக்கூடங்களுக்கு 73000 புத்தகங்களை வழங்குவதும் அடங்கும். ”நட்பின் சிறகுகளின்” ஒரு பகுதியாக இம்மாதம் ஆறாந் திகதியிலிருந்து பத்தாம் திகதி அதாவது இன்றுவரையிலும் யாழ் முற்ற வெளியில் – Air tattoo 2024 -எயார் டாட்டு 2024 என்ற பெயரில் ஒரு கல்வி மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சி இடம்பெறுகிறது. இக்கண்காட்சியில் விமானப்படையினரின் செயற்பாடுகள் தொடர்பான தொழில்நுட்ப விளக்கங்களும் வான சாகசங்களும் இசை அணிநடைகளும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. அது ஒரு கல்வி மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சி என்ற அடிப்படையில் பாடசாலைப் பிள்ளைகள் இதில் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். விமானங்களின் இயக்கங்கள் தொடர்பாக மாணவர்கள் விளக்கம் தருகிறார்கள். மேலும் மாணவர்களுக்கு சிறிது நேரம் ஹெலிகொப்டரில் பயணம் செய்ய வாய்ப்புத் தரப்பட்டது. மாணவர்களும் உட்பட பெற்றோரும் ஏனையவர்களும் விருப்பத்தோடு உலங்கு வானூர்திகளில் ஏறிப் பயணம் செய்வதை காணக்கூடியதாக இருக்கிறது. வடக்கில் உள்ள வெவ்வேறு பாடசாலைகள் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிள்ளைகளுக்கு ஹெலிகொப்டரில் பறப்பதற்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. அவர்கள் அதை விருப்பத்தோடு அனுபவித்தார்கள். வானத்திலிருந்து யாழ்ப்பாணத்தைப் பார்ப்பதில் அவர்களுக்கு ஆர்வம் இருக்கும். முதலாவது பறப்பு அனுபவம் அவர்களுக்குப் பரவசமூட்டக்கூடும். ஆனால் இதே வானத்தை அவர்களுடைய பெற்றோர்களும் பெற்றோர்களின் பெற்றோர்களும் பயத்தோடும் பிரார்த்தனைகளோடும் அண்ணாந்து பார்த்த ஒரு காலம் உண்டு என்பதை அவர்களுக்கு யார் சொல்லிக் கொடுப்பது? 15ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்களுக்கு வானம் ஒரு மரணக் கூரையாக காணப்பட்டது. வானில் போர் விமானங்கள் தோன்றும்போது இந்த பிள்ளைகளின் பெற்றோரும் பெற்றோரின் பெற்றோரும் பதுங்கு குழிகளுக்குள் ஓடி ஒளித்தார்கள். அவ்வாறு பதுங்கு குழிகளுக்குள் புகலிடம் தேடிய சிலருக்கு பதுங்கு குழியே புதை குழியாகவும் மாறியதுண்டு. யுத்தம் வாழ்க்கையை விடவும் நிச்சயமானது போல தோன்றிய அக் காலகட்டத்தில் சிறீலங்காவின் வான் படை தமிழ் மக்கள் மீது குண்டுகளைப் போட்டது. வானத்தையும் காற்றையும் கிழித்துக்கொண்டு போர் விமானங்கள் தமிழ் மக்களின் தலைகளை நோக்கி குத்திப் பதிந்தன. பயணிகள் போக்குவரத்து விமானம் ஆகிய “அவ்ரோ” ரக விமானங்களில் இருந்து தொடங்கி சியா மாசற்றி; அன்ரனோவ்; புக்காரா; கிபிர்; சூப்பர்சோனிக்; மிக்; சீனத் தயாரிப்பான Y12 முதலாய் பல்வேறு நாட்டு தயாரிப்புகளும் தமிழ் மக்களின் இரவுகளையும் பகல்களையும் கனவுகளையும் குண்டுகளால் பிளந்தன. ஈழப் போரின் முதலாவது கட்டத்தின்போது பயன்படுத்தப்பட்ட அவ்ரோ என்று அழைக்கப்படும் பயணிகள் விமானம் பீப்பாய்க் குண்டுகள் என்று தமிழ் மக்களால் அழைக்கப்பட்ட குண்டுகளை வீசியது. சில சமயங்களில் பீப்பாய்களில் குண்டுகளுக்கு பதிலாக மனித மலம் நிரப்பப்பட்டிருந்தது. அப்படித்தான் சீனத் தயாரிப்பான Y12 விமானத்தை தமிழ் மக்கள் சகடை என்று அழைத்தார்கள். மெதுமெதுவாக மிக உயரத்தில் பறந்து போகும் அந்த விமானத்திலிருந்து எவ்வளவு பெரிய குண்டைப் போட முடியுமோ அவ்வளவு பெரிய குண்டு போடப்பட்டது. ஒரு குண்டு ஒரு பெரிய வீட்டை அப்படியே தரைமட்டமாக்கியது. ஈழப் போரின் அடுத்தடுத்த கட்ட வளர்ச்சிகளின் போது மிக நவீன குண்டு வீச்சு விமானங்கள் அரங்கினுள் பிரவேசித்தன. அவை காற்றையும் வானத்தையும் கிழித்துக்கொண்டு குத்தி பறந்து குண்டுகளை வீசின. சந்தைகள், சாவடிகள், பாடசாலைகள்,கோயில்கள்,தேவாலயங்கள் என்று பொதுசன இலக்குகளின் மீதும் குண்டுகள் வீசப்பட்டன. நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். அல்லது உடல் உறுப்புகளை இழந்தார்கள். சொத்துக்களை இழந்தார்கள். குண்டு வீச்சு விமானங்கள் மட்டுமல்ல, கண்காணிப்பு விமானங்கள் அதாவது வேவு விமானங்களும் தமிழ் மக்களின் இரவுகளையும் பகல்களையும் வேவு பார்த்தன. நான்கு கட்ட ஈழப் போர்களின் போதும் வானில் வேவு விமானங்கள் நிரந்தரமாக ரீங்காரமிட்டபடி பறந்தன. குறிப்பாக இறுதிக்கட்டப் போரில் வானில் வேவு விமானங்கள் சூரியனைப் போல சந்திரனைப் போல நட்சத்திரங்களைப் போல நிரந்தரமாக காணப்பட்டன. சோளகக் காற்று பலமாக வீசும் காலங்களில் யாழ்ப்பாணத்தின் கரையோரப் பகுதிகளில் பட்டங்கள் பறக்க விடப்படும். பிரம்மாண்டமான பட்டங்களில் விண் பொருத்தப்படும். காற்றில் விண் அதிரும் பொழுது ஒரு வித ரீங்கார ஒலியை எழுப்பும். யுத்தம் இல்லாத காலங்களில் சோழகக் காற்று வீசும் இரவுகளில் பட்டங்களின் விண் ஒலி வானத்தில் நிரந்தரமாக உறைந்து நிற்கும். அதுபோலவே யுத்த காலங்களில் வேவு விமானங்களின் ரீங்கார ஒலி வானில் நிரந்தரமாக உறைந்து நின்றது. இறுதி கட்டப் போரின் இறுதி நாளுக்கு பின்னரும் அது கேட்டது. சிறீலங்கா விமானப்படை தமிழ் மக்களை வீட்டுக்கும் பதுங்கு குழிக்கும் இடையே கிழிபட வைத்தது. போரில் குண்டுகளை, துண்டுப் பிரசுரங்களை வீசிய அதே வான் படை ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தபின் நல்லூர் தேர்த் திருவிழாவில் பூக்களைத் தூவியது. அந்தப் போரில் பயன்படுத்தப்பட்ட தொழிநுட்பம் இப்பொழுது முற்ற வெளியில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருக்கின்றது. ஒரு காலம் தமிழ் மக்களைக் கொல்லும் கருவிகளாக காணப்பட்டவை இப்பொழுது கண்காட்சிப் பொருட்களாக வைக்கப்பட்டிருப்பது ஒரு மாற்றம்தான். காங்கேசந்துறை வீதியில் அமைந்திருக்கும் “ஃபொக்ஸ் ரிசோர்ட்ஸ்” என்று அழைக்கப்படுகின்ற விருந்தினர் விடுதியில் யுத்தகாலத்தில் வெட்டப்பட்ட பதுங்கு குழிகள் காட்சிக் கூடங்களாக மாற்றப்பட்டுள்ளன. அந்தக் கட்டிடம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் யாழ்ப்பாணம் இருந்த காலகட்டத்தில் அவர்களுடைய பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமையகமாக இருந்தது. அந்தக் கட்டடத்துக்கு கீழே பாதுகாப்பான பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின் அக்கட்டிடத்தின் உரிமையாளர் அதை விருந்தினர் விடுதியாக மாற்றியுள்ளார். அங்கிருந்த பதுங்கு குழி ஞாபகச் சின்னமாக ஒரு “ஷோகேஸ் பீசாகப்” பேணப்படுகின்றது. அதன் சுவர்கள் செப்பனிடப்பட்டு, அழகாக்கப்பட்டு, அது ஒர் ஓவியக் கூடமாக, உல்லாசப் பயணிகளைக் கவரும் காட்சிப் பொருளாக மாற்றப்பட்டிருக்கிறது. அங்கே ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒரு காலம் துர்க்கனவாகக் காணப்பட்ட பதுங்குழி, இப்பொழுது ஃபொக்ஸ் விருந்தினர் விடுதியில் காட்சிப் பொருளாகப் பராமரிக்கப்படுகின்றது. அது ஒரு விருந்தினர் விடுதியின் விளம்பர உத்தி. ஆனால் முற்றவெளியில் நடப்பது என்ன? ஒரு காலம் தமிழ் மக்களின் தலைகளின் மீது மலத்தைக் கொட்டிய கொலைக் கருவிகளும் கொலை வாகனங்களும் இப்பொழுது முற்ற வெளியில் காட்சிப் பொருட்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. ஒரு தொகுதி யுடியூப்பர்கள் அதை ஒளி பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த மாற்றம் மேலோட்டமானது என்பதுதான் இங்குள்ள பிரச்சினை. போர் ஒரு விளைவு. அது மூல காரணம் அல்ல. மூல காரணம் இன ஒடுக்குமுறையாகும். இன ஒடுக்குமுறை எங்கிருந்து வருகிறது? தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ள மறக்கும் பொழுதுதான். தமிழ் மக்களின் தேசிய இருப்பை அழிக்க முற்படும்பொழுதுதான் இன முரண்பாடுகள் ஆயுத மோதலாக மாறின. எனவே போர் ஒரு விளைவு. இன ஒடுக்குமுறைதான் மூல காரணம். அது இப்பொழுதும் உண்டு. கண்காட்சியில் கலந்துகொள்ளும் படைப் பிரதானிகளின் பாதுகாப்புக்காக நடுப்பகல் வேளைகளில் பலாலி வீதி நீட்டுக்கும் பிரதான சந்திகளில் படையினர் நிறுத்தப்பட்டிருந்தார்கள். இக்கட்டுரை எழுதப்படுகையில், வெட்டுக்குநாறி மலையில் சிவராத்திரியை அனுஷ்டிப்பதற்கு தமிழ்மக்கள் போராட வேண்டியிருக்கிறது. இன முரண்பாடுகளை நீக்கும் விதத்தில் இனப்பிரச்சினைக்கு இன்றுவரையிலும் தீர்வு வழங்கப்படவில்லை. இப்போதுள்ள ஜனாதிபதி அதை வடக்கின் பிரச்சினை என்று வர்ணிக்கிறார். அவருக்கு முன்பிருந்த கோட்டாபய அதனை பொருளாதாரப் பிரச்சினை என்று வர்ணித்தார். ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த 15 ஆண்டுகளின் பின்னரும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. அவ்வாறு தீர்வு காணப்படுவதற்குரிய அரசியல் திடசித்தம் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பிடம் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே போரின் மூல காரணங்கள் அப்படியே இருக்கத்தக்கதாக, யுத்தவெற்றியின் நினைவுச் சின்னங்களைப் பேணும் ஒரு படைத்தரப்பு, தனது போர்க்கருவிகளையும் போர் வாகனங்களையும் காட்சிப் பொருட்களாக கண்காட்சியில் வைப்பது என்பது, போர் தொடர்பான கொடுமையான நினைவுகளை மறக்கச் செய்யும் உள்நோக்கமுடையது. மிலன் குந்தேரா கூறுவதுபோல “அதிகாரத்துக்கு எதிரான மனிதர்களின் போராட்டம் எனப்படுவது மறதிக்கு எதிரான நினைவுகளின் போராட்டமே” மாணவர்களுக்கு மறதிக்கு எதிரான ஞாபக சக்தி இருக்க வேண்டும். அது கற்றலுக்கு அவசியம். அதைவிட அவசியம் தமது சொந்த வரலாற்றை மறந்துவிடாமலிருக்க. ஈழத் தமிழர்கள் தாயகத்துக்கு வெளியே அதிக தொகையில் வாழும் நாடு கனடா. அங்கு இனப்படுகொலையை நினைவுகூர்ந்து அது தொடர்பான அறிவை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் நோக்கோடு இனப்படுகொலை அறிவூட்டல் வாரம் ஒன்றை அந்த நாட்டின் அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருக்கிறது. அதாவது அடுத்தடுத்த தலைமுறை தமிழ் பிள்ளைகளுக்கு இனப்படுகொலை தொடர்பாக அறிவூட்டப்பட ஓர் ஏற்பாடு. ஆனால் தாயகத்தில் இனப்படுகொலை புரிந்ததாக தமிழ் மக்கள் குற்றம் சாட்டும் ஒரு படைத்தரப்பின் விமானங்களை தமிழ் மாணவர்களே “எங்களுடைய விமானங்கள்” என்று கூறுகிறார்கள். ஆயின்,தமிழ் மக்கள் அரசியல் ரீதியாகவும் தோற்கடிக்கப்படுகின்றார்களா? https://www.nillanthan.com/6597/
  4. சாந்தன்: இரண்டு ஆயுள் தண்டனைகள் ; இரண்டு பிரேத பரிசோதனைகள் - நிலாந்தன் சாந்தன் இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவர். பொதுவாக இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் ஆயுள் தண்டனை எனப்படுவது விடுமுறை நாட்களைக் கழித்து பார்த்தால் 15 ஆண்டுகள். சிறை, சிறப்பு முகாம் போன்ற இடங்களில் சாந்தன் தடுத்து வைக்கப்பட்டிருந்தது 33 ஆண்டுகள். அப்படிப்பார்த்தால் அவர் இரண்டு ஆயுள் தண்டனைகளை முடித்துவிட்டார். அதற்கு பின்னரும் அவர் தாயகம் திரும்புவதற்கு அனுமதிக்கப்படவில்லை. தமிழகத்தில் உள்ள சட்டச் செயற்பாட்டாளர்கள் தமிழக அரசைக் குற்றஞ்சாட்டுகின்றார்கள். இந்த விடயத்தில் தாயகத்தில் உள்ள அரசியல்வாதிகளும் பொறுப்புணர்ந்து செயல்படவில்லை. இந்திய மண்ணில் பாரதூரமான குற்றச் செயல்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள், விடுவிக்கப்பட்ட பின் அவர்கள் இந்தியர்களாக இருந்தால் வீட்டுக்கு போகலாம். வெளிநாட்டவர்களாக இருந்தால் நாடு கடத்தப்படுவார்கள். அல்லது இந்தியாவில் அவர்களைப் பொறுப்பேற்கக்கூடிய உறவினர்கள் இருந்தால் அவர்களிடம் போகலாம். சாந்தன் தாயகத்துக்கு வர விரும்பினார். தன் தாயுடன் இறுதிக் காலத்தைக் கழிக்க விரும்பினார். அவரோடு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏனையவர்கள் இப்பொழுதும் திருச்சி சிறப்பு முகாமில்தான். தண்டனைக் காலம் முடிந்த பின் விடுதலை செய்யப்ட்ட வெளிநாட்டவர்கள் அவர்களுடைய நாட்டுக்குத் திரும்பும் வரையிலும் அவ்வாறு தடுத்து வைக்கப்படுகின்றார்கள். விடுவிக்கப்பட்ட சாந்தன் நாட்டுக்குத் திரும்பினால் இலங்கைச் சட்டங்களின் பிரகாரம் அவருக்கு ஆபத்து ஏற்படுமா என்ற ஒரு பயம் அவருக்காக உழைத்த சட்டச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் காணப்பட்டது. நாட்டிலுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி, உரிய அமைச்சரிடம் உத்தியோகபூர்வமாக ஒரு பதிலை பெறுவது நல்லது என்றும் அவர்களிற் சிலர் அபிப்பிராயப்பட்டார்கள். ஆனால் அது தொடர்பாக எடுக்கப்பட்ட முயற்சிகள் எவையும் வெற்றி பெறவில்லை. தமிழ் அரசியல்வாதிகளில் ஒருவருக்கு அது தொடர்பாக எழுதப்பட்ட மின்னஞ்சலுக்குப் பதில் கிடைக்கவில்லை. சில அரசியல்வாதிகள் எங்கே, யாரிடம் அதைக் கேட்க வேண்டுமோ அங்கே கேட்காமல், சாந்தனின் வீட்டுக்கு போய் அவருடைய தாயாரைக் கண்டு படமெடுத்துக் கொண்டார்கள். இவ்வாறு சாந்தனை விடுவிப்பதற்கு யாரிடம் கதைக்க வேண்டும்? எங்கே போராட வேண்டும்? என்பது தொடர்பாக தமிழ் அரசியல் சமூகம் தெளிவற்றுக் காணப்பட்டது. அல்லது பொறுப்போடு நடந்து கொள்ளவில்லை. அல்லது மூத்த சட்ட மற்றும் சிவில் சமூகச் செயற்பாட்டாளரான ஒருவர் கூறுவது போல அதற்கு வேண்டிய அரசியல் பெருவிருப்பம்-political will-அவர்களிடம் இருக்கவில்லை. திருச்சி சிறப்பு முகாமானது இதற்கு முன்னிருந்த சிறைகளை விடக் கொடுமையானது என்று அங்கு இருப்பவர்கள் கூறுகிறார்கள். அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த போதைப் பொருள் வியாபாரிகள் சிறப்பு முகாமுக்குள் இருந்தபடியே தமது வியாபாரத்தைத் தொடர்ந்தமை கண்டு பிடிக்கப்பட்டது. அதன்பின் முகாமில் கட்டுப்பாடுகள் அதிகரித்தன. அது அரசியல் கைதிகளையும் பாதித்தது. சாந்தனைப் போன்றவர்கள் ஏனைய கைதிகளிடமிருந்து பிரிக்கப்பட்டு தனியறைகளில் வைக்கப்பட்டார்கள். சுற்றிவரக் கண்காணிப்பு. உடற்பயிற்சி செய்ய முடியாது. அவர்கள் தடுத்து வைக்கப்பட்ட அறைகளோடு கழிப்பறைகளும் இணைக்கப்பட்டிருந்தபடியால் வெளியே நடமாடுவதற்கும் வரையறைகள் இருந்தன. சிறைக்குள் சாந்தன் பெருமளவுக்கு ஒரு சன்னியாசி போலாகிவிட்டார் என்று வழக்கறிஞர் ஒருவர் சொன்னார். பெருமளவுக்குத் தனித்திருப்பதாகவும் எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டவர் போல காணப்பட்டதாகவும் அவர் சொன்னார். சிறப்பு முகாமில் அவர் சோறு சாப்பிடாமல் கஞ்சி மட்டும் தருமாறு கேட்பதாகவும் கூறப்பட்டது. சிறப்பு முகாமும் சாந்தனின் உடல் கெடுவதற்கு ஒரு காரணம். முடிவில் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் ஒரு நிலை வந்த பொழுது மீண்டும் அவரது குடும்பத்தவர்கள் தமிழ்த் தேசிய அரசியற் சமூகத்தை அணுகினார்கள். அப்பொழுதும் தமிழ்த் தேசிய அரசியற் சமூகம் அதே மந்தத்தனத்தோடு பொறுப்பின்றி நடந்து கொண்டது. சாந்தனை நாட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பான முடிவை இலங்கையில் எடுக்க வேண்டியது வெளிவிவகார அமைச்சும் பாதுகாப்பு அமைச்சும்தான். சம்பந்தப்பட்ட அமைச்சுக்களோடு மிகவும் பிந்தித்தான், அதாவது அவர் இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு கிட்டத்தட்ட 14 மாதங்களின் பின்னர்; அதிலும் குறிப்பாக அவர் இறப்பதற்குச் சில கிழமைகளுக்கு முன்புதான் தொடர்பு கொள்ளப்பட்டிருக்கிறது. தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த விடயத்தில் ஜனாதிபதியை, வெளி விவகார அமைச்சரை அணுகிய அதே காலப்பகுதியில் சாந்தனின் குடும்பத்தவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அணுகியிருக்கிறார்கள். மற்றொரு யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினராகிய அங்கஜனும் அதில் அக்கறை காட்டியிருக்கிறார். அதாவது சாந்தனின் விடயத்தில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, அதற்கு வெளியே உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சரும் அரசாங்கத்தை அணுகியதன் விளைவாகத்தான் நாடு திரும்புவதில் சாந்தனுக்கு இருந்த தடைகள் அகற்றப்பட்டன. ஆனால், அப்பொழுது எல்லாமே பிந்திவிட்டது. விமானத்தில் பயணம் செய்ய முடியாத அளவுக்கு சாந்தன் நோயாளியாகி விடடார் என்று ராஜீவ் காந்தி மருத்துவமனையின் டீன் ஒரு வழக்கறிஞரிடம் கூறியுள்ளார். முடிவில், சாந்தனின் உயிரற்ற உடலைத்தான் அவருடைய தாய்க்குக் காட்ட முடிந்தது. விடுதலை செய்யப்பட்ட பின்னரும் அவர் ஒரு கைதியாகவே இறந்தார். உயிருடன் இருக்கும் போது அவர் இரண்டு ஆயுள் தண்டனைகளை அனுபவித்தார். உயிர் பிரிந்தபின் அவருடைய உடலை இரண்டு தடவைகள் போஸ்மோர்டம் செய்திருக்கிறார்கள். முதலில் இந்தியாவில் பின்னர் இலங்கையில். சாந்தனுக்காக தாயகத்தில் உள்ள தமிழ் அரசியல் சமூகம் பெரிய அளவில் போராடவில்லை. இப்பொழுதும் சிறப்பு முகாம்களில் இருப்பவர்களை விடுதலை செய்யவதற்காக யார் போராடுகிறார்கள்? சாந்தனோடு சிறையில் வைக்கப்பட்டிருந்த இந்தியப் பிரஜையாகிய பேரறிவாளனை விடுவிப்பதற்காக அவருடைய தாயார் அற்புதம்மாள் தொடர்ச்சியாகப் போராடினார். ஒரு தாயின் நிகரற்ற போராட்டங்களில் அதுவும் ஒன்று. கிழக்கில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த அன்னை பூபதியின் போராட்டத்தைப்போல அது முன்னுதாரணமானது. ஈழத் தமிழ் அரசியலில் தாயக களத்துக்கு வெளியே நடந்த ஓர் அன்னையின் மகத்தான போராட்டமாக அற்புதம்மாளின் 32 ஆண்டுகாலப் போராட்டம் காணப்பட்டது. சாந்தனை விடுவிப்பதற்காக அல்லது நாட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழ் அரசியல் சமூகம் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய போராட்டம் எதையும் முன்னெடுத்திருக்கவில்லை. அது மட்டுமல்ல, சாந்தனை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதிலும் தமிழ் அரசியல்வாதிகளிடம் பொருத்தமான அணுகுமுறைகள் இருக்கவில்லை. சாந்தனின் குடும்பம் சலிப்படைந்து, களைப்படைந்து, ஒரு விதத்தில் விரக்தியடைந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நோக்கிப் போனது. ஆனால் தமிழ் தேசியக் கட்சிகள் தங்கள் சொந்தக் கட்சிக்குள் பதவிப் போட்டி என்று வரும் பொழுது எப்படியெல்லாம் போராடுகிறார்கள்? கடந்த வாரம் தமிழ்த் தேசிய அரசியலின் இயலாமைகளை நிரூபித்த ஒரு வாரம். முதலாவது சாந்தனின் மரணம். இரண்டாவது தமிழரசுக் கட்சி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டமை. அங்கே அவர்கள் புத்திசாலித்தனமாக நடந்தார்களா இல்லையா என்பது வேறு கதை. கட்சிக்குள் வந்த பிணக்கை கட்சிக்குள்ளேயே தீர்க்க முடியவில்லை என்பது ஒரு பாரதூரமான தோல்வி. அதனைத் தீர்ப்பதற்கு கட்சிக்கு வெளியேயும் சிவில் சமூகங்கள் இல்லை என்பது மற்றொரு தோல்வி. கடந்த 15 ஆண்டு காலத் தோல்விகளுக்கு அந்தக் கட்சி பொறுப்பு என்ற படியால் அது அழியட்டும்; அதன் வாக்குகள் தென்னிலங்கைக் கட்சிகளுக்குப் போனால்கூட பரவாயில்லை என்று கருதுமளவுக்கு சில சிவில் சமூகப் பிரதிநிதிகள் காணப்படுகிறார்கள் என்பது அதைவிடத் தோல்வி. இது ஒரு தேர்தல் ஆண்டு. ஜனாதிபதித் தேர்தலில் தற்போதுள்ள நிலவரங்களின்படி அரச தரப்பு; எதிர்க்கட்சி; ஜேவிபி என்று மூன்று அணிகள் போட்டியிடக்கூடிய வாய்ப்புகள் தெரிகின்றன. தென்னிலங்கையில் படித்த நடுத்தர வர்க்கத்தின் மத்தியில் ஜேவிபி ஆதரவு அலை ஒன்று வீசுகிறது. அது வாக்குகளாக மாறுமா? இல்லையா?அல்லது அதை கண்டு பயந்து ஏனைய வலதுசாரிக் கட்சிகள் தங்களுக்கு இடையே ஐக்கியத்துக்கு போகுமா? இல்லையா? என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். மேற்சொன்ன மூன்று தரப்புக்களும் போட்டியிட்டால், சிங்கள மக்களின் வாக்குகள் மூன்றாகப் பிரியும். அப்பொழுது தமிழ்த் தரப்பு ஒரு தீர்மானிக்கும் சக்தியாக மேலெழக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகும். ஆனால் அவ்வாறு அரசியல் களத்தில் துணிந்து புகுந்து விளையாடுவதற்கு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. உள்ளதில் பெரிய கட்சி நீதிமன்றம் ஏறத் தொடங்கிவிட்டது. மற்றொரு கட்சி தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துவிட்டது. அதாவது துணிந்து புகுந்து விளையாடத் தயாரில்லை. ஒரு பொது வேட்பாளரை நிறுத்தப் போவதாகக் கூறிய குத்து விளக்குக் கூட்டணி அதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறதே தவிர செயல்படுவதாகத் தெரியவில்லை. தமிழரசுக் கட்சி தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்காவிட்டால் குத்துவிளக்குக் கூட்டணி அந்தப் பரிசோதனையில் இறங்குமா? இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெல்லப்போகும் கட்சி அல்லது கூட்டு, அடுத்த ஆண்டு அனேகமாக பொது தேர்தலை வைக்கும். தொடர்ந்து மாகாண சபைத் தேர்தல், உள்ளுராட்சி சபைத் தேர்தல் போன்றன வைக்கப்படலாம். அதாவது வரும் இரண்டு ஆண்டுகளும் தேர்தல் ஆண்டுகளாக அமையக்கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. தமிழ் மக்கள் மத்தியில் இப்பொழுது மக்கள் இயக்கம் எதுவும் இல்லை. இருப்பதெல்லாம் தேர்தல் கேட்கும் கட்சிகள்தான். அடுத்தடுத்து வரும் இரு தேர்தல் ஆண்டுகளை எதிர்கொள்ள தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளிடன் என்ன உபாயம் உண்டு? நிர்ணயகரமான ஒரு காலகட்டத்தில், அரங்கில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக்கூடிய தரப்புக்களை இந்தியாவும் அமெரிக்காவும் ஏனைய பேரரசுகளும் அணுகிக் கையாள முற்படும் ஒரு காலகட்டத்தில், அரங்கில் துணிந்து புகுந்து விளையாட வேண்டிய தமிழ்த் தரப்பு என்ன செய்து கொண்டிருக்கிறது? அரசியலில் துணிந்து புகுந்து விளையாடும் தரப்புகள்தான் ரிஸ்க் எடுக்கும். ரிஸ்க் எடுக்கும் தரப்புகள்தான் கனவுகளை நோக்கி யதார்த்தத்தை வளைக்கும். தலைமை தாங்கும். துணிந்து புகுந்து விளையாடும் தரப்புகள்தான் வரலாற்றை உருவாக்குகின்றன. உட்கட்சிச் சண்டையை நீதிமன்றத்துக்கு கொண்டு போகும் கட்சிகள் வரலாற்றை உருவாக்குவதில்லை. அதுமட்டுமல்ல தேர்தல் வரும்பொழுது தமிழ்த் திரைப்படங்களில் கடைசி நேரத்தில் விசிலடித்துக் கொண்டு வரும் போலீஸ்போல அறிக்கை விடும் சிவில் சமூகங்களும் வரலாற்றைத் தீர்மானிப்பதில்லை. https://www.nillanthan.com/6582/
  5. கோர்ட்டுக்கு இழுக்கப்படும் கட்சி? - நிலாந்தன் 2014ஆம் ஆண்டு மன்னாரில், முன்னாள் ஆயர் ராயப்பு ஜோசப் ஆண்டகையின் தலைமையில் ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சித் தலைவர்களின் சந்திப்பு அது. ஆயர் அப்பொழுது தமிழ் சிவில் சமூக அமையத்தின் நிறுவனர்களில் ஒருவராகவும் அதன் அழைப்பாளராகவும் இருந்தார். அச்சந்திப்பில் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் பங்குபற்றினார்கள். சந்திப்பின் முடிவில் சம்பந்தர் ஆயரைப் பார்த்து பின்வருமாறு சொன்னார்… ”பிஷப் நீங்கள் சொல்லுறதச் சொல்லுங்கோ, ஆனால் கடைசியா முடிவெடுக்கிறது நாங்கள்தான்” என்று. அப்பொழுது அப்படிச் சொல்லக்கூடிய பலம் சம்பந்தருக்கு இருந்தது. ஆனால் அவர் எடுத்த முடிவுகளின் விளைவு என்ன? அப்படிச் சொன்ன சம்பந்தர் இப்பொழுது எங்கே நிற்கிறார்? அவருடைய முடிவுகளின் விளைவாக தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய மிகவும் வித்தியாசமான ஒரு கூட்டு உடைந்து போய்விட்டது. அதுமட்டுமல்ல அவருடைய சொந்த கட்சியே இப்பொழுது இரண்டாகி நீதிமன்றத்தில் நிற்கிறது. அது மட்டுமல்ல, அன்றைக்கு அப்படித் திமிராகச் சொன்ன சம்பந்தரை இன்றைக்கு அவருடைய சொந்த கட்சிக்காரர்களே மதியாத ஒரு நிலை. ஆம். “வரலாறு ஒரு கண்டிப்பான கிழவி. அவள் யாரையும் மன்னிப்பதில்லை” இப்பொழுது தமிழரசுக் கட்சி உடையக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகத் தெரிகின்றன. கடந்த வெள்ளிக்கு கிழமை கிளிநொச்சியில் நடந்த சந்திப்பின் பின் கட்சி நீதிமன்றதுக்குப் போக வேண்டிய வாய்ப்புக்கள் மேலும் அதிகரித்துள்ளனவா? ஒரு குடும்பத்துக்குள் பிணக்கு வந்தால் அதை அக்குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் தீர்த்து வைப்பதுண்டு. அல்லது அந்தக் குடும்பத்தின் நலனில் அக்கறை கொண்ட வெளியாட்கள் அதைத் தீர்த்து வைப்பதுண்டு. அதுவும் முடியாது போனால், விவகாரம் போலீஸ் நிலையத்துக்கோ, நீதிமன்றத்துக்கோ போகும். தமிழரசுக் கட்சிக்குள் நடப்பவற்றைப் பார்த்தால் அங்கே இரண்டு அணிகளுக்கும் இடையிலான மோதலைத் தீர்த்துவைக்க கட்சிக்குள் மூத்தவர்கள் யாரும் இல்லையா என்று கேட்கத் தோன்றுகிறது. கட்சிக்குள் மூத்தவர்களாகக் காணப்படும் சம்பந்தர், மாவை, குலநாயகம், கனகசபாபதி, சிவஞானம்… போன்றவர்கள் ஏதோ ஒரு பக்கம் உலாஞ்சுவதாகத் தெரிகிறது. அதனால் அவர்கள் நடுநிலையாக நின்று விவகாரத்தைக் கையாள முடியாதவர்களாகக் காணப்படுகிறார்கள் என்று தோன்றுகிறது. சம்மந்தரும் மாவையும் கனகசபாபதியும் அதிகம் சிறீதரனுக்கு நெருக்கமாகக் காணப்படுகிறார்கள். குலநாயகமும் சிவஞானமும் அதிகம் சுமந்திரனுக்கு நெருக்கமாகக் காணப்படுகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு பின்னணியில், கட்சிக்குள் வெடித்திருக்கும் பிளவைத் தீர்த்து வைப்பதற்கு கட்சியின் மூத்தவர்களால் முடியவில்லை. அதன் விளைவாகத்தான் விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கின்றது. இப்பொழுதும் கட்சியைப் பாதுகாக்க வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் முடிவெடுத்தால், விவகாரத்தைச் சுமூகமாகத் தீர்க்க முடியும். ஆனால் அப்படிப்பட்ட மூப்போடும்; முதிர்ச்சியோடும்; பக்குவத்தோடும்; மிடுக்கோடும் கட்சிக்குள் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. கொழும்பில் நிகழ்நிலைப் பாதுகாப்பு சட்டத்துக்கு எதிராக சுமந்திரன் வழக்கு தொடுத்த அதே காலப்பகுதியில், திருகோணமலையிலும் யாழ்ப்பாணத்திலும் அவருக்கு இணக்கமானவர்கள் என்று கருதப்படுகின்றவர்களால் இரண்டு வழக்குகள் கொடுக்கப்பட்டன. தென்னிலங்கையில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக சர்ச்சைக்குரிய ஒரு சட்டத்தை சுமந்திரன் எதிர்க்கிறார். ஆனால் அவருடைய சொந்தக் கட்சியை உடைக்கும் வேலைகளை அவர் தன்னுடைய விசுவாசிகளுக்கு ஊடாகச் செய்கிறார் என்று அவருடைய எதிரணி அவரை குற்றம் சாட்டுகின்றது. ஆனால் தான் அந்த வழக்குகளுடன் சம்பந்தப்படவில்லை என்று சுமந்திரன் மறுத்திருக்கிறார். எனினும், அவர்தான் எல்லாவற்றின் பின்னணியிலும் நிற்கிறார் என்ற அபிப்பிராயம் பரவலாகக் காணப்படுகின்றது. அவருடைய பெயர் மேலும் கெட்டுக்கொண்டே போகிறது. பிரச்சனை ஒரு சட்ட விவகாரம் ஆக்கப்பட்டதும் சிறீதரன் தன்னுடைய முகநூலில் “தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும்” என்று எழுதினார். அதன்பின் அவருக்குப் பதில் கூறுவது போல, சுமந்திரனுக்கு ஆதரவான வடமாராட்சியைச் சேர்ந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் அதே வசனத்தை தனது முகநூலில் எழுதினார். இதில் யார் தர்மத்தின் பக்கம் நிற்கின்றார்கள்? யார் அதர்மத்தின் பக்கம் நிற்கின்றார்கள்? எது தர்மம்? கட்சி பல ஆண்டுகளாக யாப்பை மீறி வழி நடத்தப்பட்டிருக்கிறது என்று சிவகரன் கூறுகிறார். அவர் தமிழரசு கட்சியின் இளைஞரணித் தலைவராக இருந்தவர். பின்னர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர். பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக சிவில் சமூகச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர். கட்சிக்குள் இரண்டு அணிகள் உருவாகிய போது அவர் சுமந்திரனின் பக்கம் நிற்கிறார் என்ற குற்றச்சாட்டு எதிரணியால் முன்வைக்கப்படுகின்றது. கட்சியின் யாப்பு நடந்து முடிந்த தேர்தலில் மட்டும் மீறப்படவில்லை. தேர்தலுக்கு முன்னரே அது மீறப்பட்டு விட்டது. அதற்குக் கட்சியின் முக்கியஸ்தர்களாகக் காணப்பட்ட எல்லாச் சட்டத்தரணிகளும் பொறுப்பு. சிவகரனின் வார்த்தைகளில் சொன்னால், கட்சிக்குள் “வழிப்போக்கர்கள்” தலையெடுத்ததே யாப்புக்கு முரணாகத்தான். சிங்கள பௌத்த அரசு கட்டமைப்பின் யாப்பானது தமக்கு நீதியைத் தரவில்லை என்று கூறிப் போராடும் ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில் உள்ள மூத்த பெரிய கட்சியானது தனது சொந்த யாப்பையே மீறிச் செலுத்தப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் கட்சியின் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் சட்டத்தரணிகள் பலர் உண்டு. சட்டத்தரணிகளின் அரசியல் அல்லது அப்புக்காத்துக்களின் அரசியல் ஒரு மூத்த பெரிய கட்சியை நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. கட்சிக்குள்ளேயே விவகாரத்தைத் தீர்த்து வைக்க முடியவில்லை என்பது கட்சி தோற்றுப் போய்விட்டதைக் காட்டுகின்றது. கட்சிக்குள் மூத்தவர்களாகக் காணப்படும் யாரும் அதைத் தீர்த்து வைக்கும் தகமையோடும் முதிர்ச்சியோடும் இல்லை என்பதையும் அது காட்டுகின்றது. கட்சிக்குள் மட்டுமல்ல கட்சிக்கு வெளியேயும் விவகாரத்தைத் தீர்த்து வைப்பதற்குப் பொதுவான யாரும் இல்லையா என்ற கேள்வி எழுகிறது. முன்பு கட்சிகளுக்கு இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்த முனைந்த சிவில் சமூகங்கள் இப்பொழுது கட்சிக்குள் ஐக்கியத்தை ஏற்படுத்தும் ஒரு விடயத்தில் தலையிடுவதாகத் தெரியவில்லை. வழமையாக கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் ஈடுபடும் சிவகரன் இப்பொழுது சுமந்திரனுக்குச் சார்பானவராகப் பார்க்கப்படுகிறார். ஆங்கிலம் பேசும் உலக சமூகத்துடன் அதிகம் இடையூடாடும் தமிழ் சிவில் சமூக அமையம்-இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்படும் அமைப்பு- அதுவும் தலையிடும் நிலமைகளைக் காணவில்லை. அந்த அமைப்பின் நிறுவுனர்களில் ஒருவரான குருபரன் தமிழரசுக் கட்சிக்கு எதிரான ஒரு வழக்கில் தோன்றுகிறார். இவ்வாறு சிவில் சமூகங்கள் இரு தரப்பையும் ஒரு மேசைக்கு அழைத்துக் கொண்டுவரும் சக்தியற்றிருக்கும் ஒரு சூழலில், மதத் தலைவர்களும் இந்த விடயத்தில் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. பொதுவாக சிவில் சமூகங்கள் முன்கை எடுக்கும் போதுதான் மதத் தலைவர்களும் அவற்றோடு இணைந்து செயல்படுவதுண்டு. இம்முறை சிவில் சமூகங்கள் இந்த விடயத்தில் அக்கறை காட்டவில்லை. கடந்த 15 ஆண்டுகளிலும் கட்சிகளுக்கு இடையே ஐக்கியத்தை ஏற்படுத்தும் விடயத்தில் சிவில் சமூகங்கள் தலையீடு செய்திருக்கின்றன. ஆனால் ஒரு கட்சிக்குள் பிணக்குகள் ஏற்படும்போது அதைத் தீர்ப்பதற்கு சிவில் சமூகங்கள் தலையிட்டது குறைவு. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் மணிவண்ணன் அணி உடைந்து வெளியே வந்த பொழுது, சில தனிநபர்கள்தான் தலையிட்டார்கள். எனினும் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. இப்பொழுது தமிழரசுக் கட்சிக்குள்ளும் உடைவு வந்திருக்கிறது. அதைத் தீர்ப்பதற்குச் சிவில் சமூகங்கள் தலையிடாத ஒரு நிலை காணப்படுகிறது. அதாவது தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள மூத்த கட்சிகளில் ஒன்றாகவும் உள்ளவற்றில் பெரியதாகவும் காணப்படும் ஒரு கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிணக்கைத் தீர்த்துவைக்க கட்சிக்குள் மூப்பாக உள்ளவர்களாலும் முடியவில்லை; கட்சிக்கு வெளியேயும் யாரும் இல்லையா? இது தமிழரசுக் கட்சியின் சீரழிவை மட்டும் காட்டவில்லை. தமிழ் அரசியலின் சீரழிவையும் காட்டுகின்றது. ஒரு பொதுவான, பலமான மக்கள் இயக்கம்; ஒரு தேசிய இயக்கம் இல்லாத பாரதூரமான வெற்றிடத்தை அது காட்டுகின்றது. அரங்கில் உள்ள புத்திஜீவிகள், கருத்துருவாக்கிகள், குடிமக்கள் சமூகங்கள், மதத்தலைவர்கள், ஊடகவியலாளர்கள் போன்ற யாருமே இந்த விடயத்தில் தலையிடாத ஒரு நிலை. பெரும்பாலானவர்கள் இது தங்களுக்குச் சம்பந்தமில்லாத ஒரு விடயம் என்று கருதிக்கொண்டு பார்வையாளர்களாகக் காணப்படுகிறார்கள். சிலர் அரசியற் கூர்ப்பின் வழியில், சிதைய வேண்டியது சிதையட்டும் என்று கூறுகிறார்கள். இது தமிழ் மக்கள் ஓர் அரசியல் சமூகமாகப் பலமாக இல்லை என்பதைக் காட்டுகின்றது. இது தமிழரசுக் கட்சிக்கு வந்த சோதனை மட்டுமல்ல, தமிழ் அரசியல் சமூகம் முழுவதற்கும் வந்த ஒரு சோதனை. அவ்வாறு கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியேயும் விவகாரத்தைத் தீர்த்து வைப்பதற்கு நீதியான, மூப்பான ஆட்கள் இல்லாத ஒரு வெற்றிடத்தில்தான் விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கிறது. இந்த நிலை தொடருமாக இருந்தால், கட்சியின் எதிர்காலத்தை நீதிமன்றம்தான் தீர்மானிக்கும். நீதிமன்றத்தில் இப்பொழுது தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளுக்கான தீர்ப்புக்களின் அடிப்படையில் அது தீர்மானிக்கப்படும். தமக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலை, போர்க் குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றுக்கு எதிராக நீதி கேட்டுப் போராடும் ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில் காணப்படும், உள்ளதில் பெரிய ஒரு கட்சி தனக்குள் நீதி கேட்டு நீதிமன்றத்தை நாடியிருக்கிறது. எந்த உள்நாட்டு நீதியை ஏற்றுக்கொள்ள மறுத்து பன்னாட்டு நீதியைக் கேட்கின்றதோ, அதே உள்நாட்டு நீதியின் முன் போய் நிற்கின்றது. இது, தமிழ் மக்கள் தொடர்ந்து தோற்றுக் கொண்டிருப்பதைத்தான் காட்டுகின்றதா? அல்லது அப்புக்காத்துமாரின் அரசியல் தமிழ் மக்களைத் தொடர்ந்தும் தோற்கடித்துக் கொண்டிருப்பதைக் காட்டுகின்றதா? https://www.nillanthan.com/6573/
  6. ஒரு பல்கலைக் கழகமும் ஒரு இசைநிகழ்ச்சியும்- நிலாந்தன் பாடசாலைகளை, பல்கலைக்கழகங்களைக் கட்டுவது உன்னதமானது. புலம்பெயர்ந்துபோன எல்லாத் தமிழர்களும் தாயகத்துக்கு திரும்பி வருவதில்லை. தாயகத்துக்கு திரும்பிவரும் எல்லாருமே தாயகத்தில் முதலீடு செய்வதில்லை. தாயகத்தில் முதலீடு செய்பவர்களிலும் மிகச்சிலர்தான் கல்வித்துறையில் முதலீடு செய்கிறார்கள். ஆளில்லா ஊரில் ஆலயங்களைக் கட்டுவதை விடவும் கல்விச்சாலைகளை கட்டுவது மகத்தானது. அப்படி ஒரு முதலீடுதான் கந்தர்மடம் சந்தியில் அமைக்கப்பட்டிருக்கும் நோர்தேன் யுனி என்று அழைக்கப்படும் தனியார் பல்கலைக்கழகம். போட்டிக் கல்வி வியாபாரமாக மாறிய ஒரு கல்விச்சூழலில், ஒரு முதலாளி கல்வியில் முதலீட்டைச் செய்யும்பொழுது அங்கேயும் வியாபார இலக்குகள் இருக்கும். ஆனால் தனது முதலீட்டை விளம்பரப்படுத்துவதற்காக சினிமாத் துறைப் பிரபல்யங்களை கொண்டு வரும்போதுதான் சர்ச்சை எழுகிறது. கடந்த இரு நூற்றாண்டுகளிலும் கிறிஸ்தவ மிஷனரிகளும் இந்து மத மறுமலர்ச்சியாளர்களும் போட்டிக்குப் பள்ளிக்கூடம் கட்டிய ஒரு பிரதேசம்தான் யாழ்ப்பாணம். நவீன யாழ்ப்பாணம் எனப்படுவது அவ்வாறு போட்டிக்குப் பள்ளிக்கூடம் கட்டிய ஒரு போக்கின் தேறிய விளைவு. அமெரிக்காவில் தமது சுகபோகங்களைத் துறந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து பள்ளிக்கூடங்களைக் கட்டிய மிஷன் தொண்டர்கள்; ஊரூராக பிடியரிசி சேர்த்து இந்துக் கல்லூரிகளைக் கட்டிய இந்து மறுமலர்ச்சியாளர்கள் என்ற மகத்தான முன்னுதாரணங்கள் ஈழத் தமிழர்களுக்கு உண்டு. இம்மாதம் ஆறாந் திகதி உடுவில் மகளிர் கல்லூரியில், அக்கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டு 200ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் கொண்டாட்டங்கள் தொடக்கின. சரியாக 200 ஆண்டுகளுக்கு முன் திருமதி.ஹரியற் வின்சிலோ என்று அழைக்கப்படும் அமெரிக்கப் பெண், தனது 28ஆவது வயதில் உடுவில் மகளிர் கல்லூரியைத் தொடங்கினார். தென்னாசியாவில் விடுதி வசதியோடு கூடிய முதலாவது பெண்கள் பள்ளி அது. யாழ்ப்பாணத்தில் ஹரியற் அம்மையார் தங்கியிருந்த காலத்தில் அவருடைய ஐந்து பிள்ளைகள் தொற்று நோய்க்கு இரையானார்கள். அமெரிக்காவுக்கு படிப்புக்காக அனுப்பப்பட்ட அவருடைய ஆண்பிள்ளை கடல் பயணத்தில் இறந்து போனார். தொடர்ச்சியான தனிப்பட்ட இழப்புகளால் நொறுங்கிப்போன போன ஹரியற் தன்னுடைய 37ஆவது வயதில், இளவயதில் இறந்து போனார். அவரோடு சேர்ந்து பணிபுரிய வந்த அவருடைய இரண்டு சகோதரிகள் அவருக்குப் பின் இறந்து போனார்கள். தன் மூன்று சகோதரிகளோடு சேர்ந்து பணிபுரிவதற்கென்று அமெரிக்காவிலிருந்து வந்த மற்றொரு சகோதரி யாழ்ப்பாணத்தில் வந்து இறங்கிய பின்னர்தான் தன்னுடைய ஏனைய மூன்று சகோதரிகளும் உயிரோடு இல்லை என்பதை அறிந்து கொண்டார். யாழ்ப்பாணத்தின் கல்வியை கட்டியெழுப்புவதற்காக எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்த வெள்ளைக்காரர்கள் இங்கு வந்து சந்நியாசிகள்போல வாழ்ந்து, தொண்டு புரிந்திருக்கிறார்கள். அவர்கள் மதம் மாற்றினார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அவர்களுடைய செயற்பாடுகளுக்கு எதிராக இந்து மறுமலர்ச்சியாளர்களும் இந்து அறக்கட்டளைகளும் பள்ளிக்கூடங்களைக் கட்டியெழுப்பினார்கள். மிஷன் பள்ளிக்கூடங்களை எதிர்கொண்டு ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணத்தில் சுதேசிகளின் பள்ளிக்கூடங்களைக் கட்டினார். அவ்வாறு பள்ளிக்கூடங்களைக் கட்டுவதற்கு அவர் பிடியரிசித் திட்டம் என்ற ஒரு சமூகப் பங்களிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். கிராமங்கள் தோறும் பிடியரசி சேகரிக்கப்பட்டு, அந்த நிதியில் யாழ்.இந்துக் கல்லூரியும் உட்பட பல்வேறு சுதேச பள்ளிக்கூடங்களை இந்து மறுமலர்ச்சியாளர்களும் இந்து அறக்கட்டளைகளும் கட்டினர். உடுவில் மகளிர் கல்லூரியில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் மருதனார் மடத்தில் ராமநாதனின் கல்லூரி கட்டப்பட்டது. அப்பள்ளிக்கூடத்தின் ஸ்தாபகர்களில் ஒருவராகிய திருமதி லீலா ராமநாதன் ஒரு ஒஸ்ரேலியப் பெண். அவருடைய சேவையை வியந்து போற்றுபவர்கள் அவருடைய வெண்ணிறப் பாதங்களில் அந்த ஊரின் செம்பாட்டுச் சாயம் நிரந்தரமாக ஒட்டிக் கொண்டிருக்கும் என்று கூறுவார்கள். உடுவில் மகளிர் கல்லூரியின் முதலாவது பட்டதாரி இவ்வாறு எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்த வெள்ளைக்காரப் பெண்களும் ஆண்களும், உள்ளூரில் சைவசமய மறுமலர்ச்சியாளர்களும் கல்விச்சாலைகளைக் கட்டியெழுப்பிய போது அவர்கள் அதை அதிகபட்சம் தொண்டாகவே செய்தார்கள். கல்விப் பணி என்பது உன்னதமான ஒரு தொண்டாகக் கருதப்பட்டு, போற்றப்பட்ட காலகட்டம் அது. இப்படிப்பட்ட கல்விச்சாலைகளைக் கட்டும் ஒரு பாரம்பரியத்தின் பின்னணியில் வைத்து நோர்தென் யூனியையைப் பார்க்க வேண்டும். அந்த பல்கலைக்கழகம் கட்டப்பட்டிருக்கும் கந்தர் மடம் சந்தியில் இருந்து அரசடிச் சந்தியை நோக்கி வரும் கந்தர் மடம் வீதியில், முன்பு ஒரு சைவப் பிரகாசா வித்தியாசாலை இருந்தது. அங்கே மாணவர்களின் வரவு குறைந்தபடியால் அப்பள்ளிக்கூடம் மூடப்பட்டு; பின்னர் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் இப்பொழுது ஏதோ ஒரு அரச கட்டடம் கட்டப்பட்டிருக்கிறது. அச்சிறிய பள்ளிக்கூடத்துக்கு ஈழப்போரில் ஒரு முக்கியத்துவம் உண்டு. 1983ஆம் ஆண்டு தொடக்கத்தில், உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடந்தபொழுது சைவப்பிரகாச வித்தியாசாலை ஒரு வாக்களிப்புச் சாவடியாக இருந்தது. அத்தேர்தலைப் பகிஷ்கரித்த விடுதலைப் புலிகள் இயக்கம் அந்தச் சாவடியில் காவலுக்கு நின்ற படையினர் மீது தாக்குதல் நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார். இப்பொழுது மாணவர்கள் இல்லை என்பதால் அப்பள்ளிக்கூடம் மூடப்பட்டு விட்டது. அது அமைந்திருக்கும் வீதி பலாலி வீதியில் வந்து ஏறும் சந்தியில் நோர்தேன் யூனி கட்டப்பட்டிருக்கிறது. கனடாவில் வசிக்கும் தமிழ் முதலீட்டாளர் அதைக் கட்டியிருக்கிறார். தனது தாயகத்தில் அவர் முதலீடு செய்ய விரும்புகிறார். குறிப்பாக அதனைக் கல்வித் துறையில் முதலீடு செய்ய விரும்புகிறார். தமிழ் மக்களுக்கு தனியார் பல்கலைக்கழகங்கள் வேண்டும். தமிழ்மக்கள் தங்களுக்கு வேண்டிய துறைகளை விருத்தி செய்வதற்கு அரசாங்கத்தில் தங்கியிராத அதுபோன்ற பல்கலைக்கழகங்கள் வேண்டும். அந்த அடிப்படையில் அந்த முதலீட்டை வரவேற்க வேண்டும். இராமநாதன் இணையர் அந்த முதலீட்டாளரின் மனைவி இந்தியாவின் சினிமாப் பிரபல்யங்களில் ஒருவரான ரம்பா. அதனால் அப்பல்கலைக்கழகத்தை விளம்பரப்படுத்த முயன்ற முதலீட்டாளர் தன்னுடைய மனைவியின் துறைசார்ந்து சிந்தித்து விட்டார். தன் மனைவியின் துறை சார்ந்த பிரபல்யங்களை கொண்டு வந்து பெருமெடுப்பில் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்துவதன்மூலம் தனது பல்கலைக்கழகத்திற்குப் பொருத்தமான விளம்பரம் கிடைக்கும் என்று அவர் கருதியிருக்கலாம். தமிழ் வெகுசனைப் பண்பாட்டில் சினிமாவின் தாக்கம் வலியது. பெருந்தமிழ் பரப்பில், குறிப்பாக தமிழகத்தில், அரசியல் எனப்படுவது ஏதோ ஒரு விகிதமளவுக்கு சினிமாவின் நீட்சியும் அகட்சியும்தான். ஊடகமாகட்டும் பொழுதுபோக்கு ஆகட்டும், எல்லாவற்றிலும் சினிமாவின் தாக்கம் உண்டு. கேபிள் தொலைக்காட்சி எனப்படுவது சுந்தர ராமசாமி கூறுவதுபோல வீட்டுக்கு வந்த திரைப்படம்தான். அது வீட்டில் வரவேற்பறையில் எப்பொழுதும் இருப்பது. எனவே தமிழ்ப் பொது உளவியலின் மீது தமிழ்ச் சினிமாவின் செல்வாக்குப் பெரியது. தென்னிந்திய வணிக சினிமாவானது மேலோட்டமானது; தமிழ்ப் பொதுப் புத்தியைச் சுரண்டுவது அல்லது அவமதிப்பது; பெண்ணுடலைப் போகப்பொருளாகப் பார்ப்பது. தமிழில் ஜனரஞ்சகமானவற்றுள் பெரும்பாலானவை மேலோட்டமானவை; ஆழமற்றவை; அறிவுக்கு விரோதமானவை. இந்த அடிப்படையில் பார்த்தால் அறிவைக் கட்டியெழுப்பும் ஓர் உயர்கல்வி நிறுவனத்துக்கு ஜனரஞ்சகமான விளம்பரஉத்தி ஒன்றைத் தெரிந்தெடுத்த விடயத்தில் அந்த முதலீட்டாளர் தவறிழைத்து விட்டார். நிகழ்வில் கூடிய கூட்டத்தைக் கட்டுப்படுத்த அவர் மேடையில் பேசுகிறார். தமிழ் மக்களுக்கு நன்மை செய்வதற்காகத்தான் புலம்பெயர்ந்து போன நாட்டில் இருந்து வந்திருப்பதாக கூறுகிறார். ஆனால் கூட்டம் அவருக்கு அடங்கவில்லை. அவருடைய மனைவி ரம்பா பேசுகிறார். கூட்டம் அடங்கவில்லை. போலீஸ் அதிகாரி பேசுகிறார் கூட்டம் அடங்கவில்லை. அப்படி ஒரு கூட்டத்தை எதிர்பார்த்து அதற்கு வேண்டிய முன்னேற்பாடுகள் செய்யப்படாததன் விளைவு அது. புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி அதிகாரத்துக்குள்ள வரையறைகளை உணர்த்திய ஒரு நிகழ்வும் அது. ஆனால் அந்தக் குழப்பம் புலம்பெயர்ந்த தமிழர்களின் முதலீடுகளுக்கு விரோதமானது அல்ல. முதலீட்டை விளம்பரப்படுத்த எடுத்துக்கொண்ட வியாபார உத்தியின் விளைவு அது. மேலும்,ஹரிஹரனின் இசையை பார்வையாளர்கள் அவமதித்ததாகவும் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. ஒரு தமிழ் முதலீட்டாளர் தமிழ் பொதுப்புத்தியை கையாள்வதில் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் உண்டு என்பதனை உணர்த்திய ஒரு குழப்பம் அது. தாயகத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களின் முதலீடுகள் தொடர்பாக முதலீட்டாளர்களும் தாயகத்தில் உள்ள அரசியல் சமூகமும் இணைந்து ஒன்றிணைந்த ஒரு வேலைத் திட்டத்துக்குப் போகவேண்டியிருப்பதை உணர்த்திய ஒரு நிகழ்வு அது. தாயகத்துக்கு முதலீடுகள் அவசியம். தாயகத்தில் தொழில் வாய்ப்புகள் இல்லை; அல்லது மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கை இல்லை; அல்லது முன்னேறுவது கடினம் என்று கருதும் ஒரு தொகுதி மக்கள் தாயகத்தைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டம் இது. “இந்த மண் எங்களின் சொந்த மண்”என்று பாடிய ஒரு மக்கள் கூட்டம், அந்த மண்ணை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறது. எனவே தாயகத்தைத் தொழிற் கவர்ச்சி மிக்கதாக மாற்ற வேண்டும். அதற்கு முதலீடுகள் அவசியம். ஆனால் அந்த முதலீடுகளை எந்த நோக்கு நிலையில் இருந்து முன்னெடுப்பது என்பதுதான் இங்குள்ள சவால். “நாங்கள் தானம் செய்கின்றோம் அல்லது தொண்டு செய்கிறோம்”என்ற நிதி அதிகார மனோநிலையில் இருந்து அல்ல, மாறாக, தமிழ்த் தேசத்தைக் கட்டியெழுப்புவது; அதற்கு வேண்டிய துறைசார் நிறுவனங்களைக் கட்டியெழுப்புவது என்ற நோக்குநிலையில் இருந்து புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்கள் தாயகத்தில் முதலீடுகளைச் செய்ய வேண்டும். அதாவது தேச நிர்மானத்தின் பங்காளிகள் என்ற அடிப்படையில் முதலீட்டாளர்கள் தாயகத்தை நோக்கி வரவேண்டும். புலம்பெயர்ந்த தமிழ் முதலாளிகளை எப்படி தேச நிர்மானத்தின் பங்காளிகளாக மாற்றுவது என்று தாயகத்தில் உள்ள அரசியல் சமூகம் சிந்திக்க வேண்டும். முதலாளிகள், அவர்கள் தமிழர்களோ, சிங்களவர்களோ,வெள்ளைக்காரர்களோ யாராக இருந்தாலும், முதலாளிகள்தான். அவர்களிடம் லாப நோக்கம் இருக்கும். முதலாளிகள் அப்படித்தான் சிந்திப்பார்கள். ரணில் விக்கிரமசிங்க புலம்பெயர்ந்த தமிழர்களின் முதலீடுகளை கொழும்புமைய நோக்கு நிலையில் இருந்துதான் அணுகுவார். அவர் அப்படித்தான் சிந்திப்பார். ஆனால்,முதலீடுகளை தேச நிர்மாணத்தின் ஒரு பகுதியாகத் திட்டமிட வேண்டியது தாயகத்தில் உள்ள அரசியல் சமூகத்தின் பொறுப்பு, கொழும்பின் நோக்கு நிலையில் இருந்தல்ல; அல்லது தனிய லாப நோக்கு நிலையில் இருந்தல்ல;தேசத்தைக் கடியெப்புவது என்ற நோக்கு நிலையிலிருந்து முதலீடு செய்யுமாறு,தமிழ் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கவேண்டும். அவர்களைத் தேச நிர்மாணத்தின் பங்காளிகளாக்க வேண்டும். பாரதி பாடியது போல “ஆலைகள் செய்வோம்;கல்விச் சாலைகள் செய்வோம்” https://www.nillanthan.com/6549/
  7. தமிழரசுக் கட்சி ஒட்டுமா உடையுமா? - நிலாந்தன் தமிழரசுக் கட்சிக்குள் சுமந்திரன் அணியெனப்படுவது ஒரு புதிய தோற்றப்பாடு அல்ல. அது தமிழரசுக் கட்சியின் பாரம்பரியத்திலேயே இருக்கிறது. தமிழரசுக் கட்சியின் தொடக்கம் ஒப்பீட்டளவில் புரட்சிகரமானதாக இருக்கலாம். ஆனால் அதன் கடந்த 73 ஆண்டுகால வரலாற்றையும் தொகுத்துப் பார்த்தால் அக்கட்சியானது இலட்சியத்தில் சறுக்காத கட்சி என்று கருதத் தேவையில்லை. 1976இல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றி,தனி நாட்டுக் கோரிக்கையை முன்வைத்த தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் தமிழரசுக் கட்சியே முதன்மையானது. அவ்வாறு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றிய ஒரு கட்சி 1981இல் அதாவது ஐந்து ஆண்டுகளில் நடந்த மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் பங்குபற்றியது. 1977இல் நடந்த தேர்தலில், தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து அமோக வெற்றிபெற்ற ஒரு கட்சி, ஐந்தே ஆண்டுகளில் மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் பங்குபற்றியது. மாவட்ட அபிவிருத்தி சபைகளுக்குள் எதுவும் இல்லை என்பதனை 1980ஆம் ஆண்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சுட்டிக்காட்டினார்கள். இந்திரபாலா, பாலகிருஷ்ணன், சீலன் கதிர்காமர், மு.நித்தியானந்தன், மு.திருநாவுக்கரசு ஆகியோர் அக்கருத்தரங்கில் பேசினார்கள். அவர்களுடைய கருத்தை, அப்பொழுது தமிழரசுக்கட்சியின் தலைவராக இருந்த அமிர்தலிங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், எது சரி என்பதை வரலாறு பின்னர் நிரூபித்தது. தமிழ் மிதவாதிகளின் மேற்கண்ட உறுதியின்மை, சமரசப்போக்கு போன்றவற்றின் மீது நம்பிக்கையிழந்த இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தின் பக்கம் போனார்கள். எனவே தமிழரசுக் கட்சியானது தன் இலட்சியத்தில் இருந்து சறுக்காத ஒரு கட்சி என்று எடுத்துக் கொள்ளத்தேவையில்லை. ஏன் அதிகம் போவான்? 2015இல் மன்னாரில் நடந்த “தடம் மாறுகின்றதா தமிழ்த் தேசியம்?”என்ற தலைப்பிலான கருத்தரங்கில், நான் ஆற்றிய உரையில், சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் வெளியாரின் நிர்பந்தங்களின்றித் தானாக ஒரு தீர்வுக்கு இறங்கி வராது என்று கூறினேன். அதற்குப் பதிலளித்த சம்பந்தர் “அது ஒரு வறண்ட வாதம் வறட்டு வாதம்” என்று கூறினார். 2015இல் இருந்து 2018வரையிலும் சம்பந்தர், ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தோடு ஒத்துழைத்து “எக்கிய ராஜ்ய” என்ற ஒரு தீர்வு முயற்சிக்காக உழைத்தார். அதை அவர் சமஷ்டிப் பண்புடையது என்று சொன்னார். ஆனால் சிங்கள அரசியல்வாதிகள் அதனை ஒற்றைட்சியாட்சிதான் என்று சொன்னார்கள். சிங்களத் தலைவர்கள் தமது வாக்காளர்களுக்கு ஒன்றைச் சொன்னார்கள், தமிழ்த் தலைவர்கள் தமது வாக்காளர்களுக்கு வேறு ஒன்றைச் சொன்னார்கள். எனவே தமிழரசுக் கட்சி தூய இலட்சியவாதக் கட்சியல்ல. அது கொழும்புடன் சமரசத்துக்குப் போகாத கட்சியுமல்ல. இதில் ஆகப்பிந்திய உதாரணம் சம்பந்தர். அவர் தனது செயல் வழியைப் பலப்படுத்துவதற்காக உள்ளே கொண்டு வந்தவர்தான் சுமந்திரன். சுமந்திரன் மட்டுமல்ல சாணக்கியனும் அப்படிப்பட்டவர்தான். அண்மையில் யாழ்ப்பாணம் ராஜா கிறீம் ஹவுஸ் மண்டபத்தில் நடந்த ஒர் இளையோர் ஒன்றுகூடலில் சாணக்கியனும் உரையாற்றினார். அதில் அவர் எனது உரையை மேற்கோள்காட்டி பிரச்சனைகளைத் தீர்ப்பதே தன்னுடைய அரசியல் செயல்வழி என்று சொன்னார். பின்னர் அவரோடு உரையாடும்போது நான் அவரிடம் சுட்டிக் காட்டினேன் “அது அரசு சார்பற்ற நிறுவனங்களின் அகராதியில் உள்ள ஒரு வார்த்தை…நீங்கள் தமிழ் மக்களின் தாயகத்தை ஒன்றிணைக்க வேண்டிய பொறுப்பை ஏற்றிருக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். உங்களுடைய அரசியல் ஒழுக்கம் என்பது தேசத்தை நிர்மாணிப்பது”என்று. அதற்கு அவர் திரும்பிக் கேட்டார் “அதுவும் ஒரு பிரச்சனைதானே? அந்தப் பிரச்சினையையும் தீர்க்க வேண்டும்தானே?” என்று. அப்பொழுது நான் சொன்னேன்…. ”தேச நிர்மாணம் என்பது ஓர் அரசியல் பதம் . பிரச்சனைகளைத் தீர்ப்பது என்பது அரசு சார்பற்ற நிறுவனங்களின் அகராதியில் அதிகம் உள்ள ஒரு வார்த்தை. நீங்கள் தமிழ்த் தேசியக்கட்சி ஒன்றின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் அரசியல் அடர்த்தி மிக்க வார்த்தையைத்தானே பயன்படுத்தலாம் ?” என்று. சுமந்திரன் சாணக்கியனைப் போன்றவர்களின் சிந்தனாமுறை அது. தமிழரசுக் கட்சிக்குள் ஏற்கனவே இருந்து வந்த ஒரு பாரம்பரியத்தின் தொடர்ச்சியது. அக் கட்சிக்குள் அது ஒரு புதிய தோற்றப்பாடு அல்ல. எனவே சுமந்திரன் அணி என்பது கட்சிக்குள் ஒரு புதிய தோற்றப்பாடு அல்ல. எனவே, சுமந்திரனுக்கு வாக்களித்தவர்களை துரோகிகள் என்று முத்திரை குத்தத் தேவையில்லை. அப்படித்தான் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் பிள்ளையானுக்கும் வாக்களிக்கும் தமிழ் மக்களை தமிழ்த் தேசத்துக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்தலாமா? இல்லை. அவர்கள் தமிழ் மக்கள். அவர்களை எப்படித் தேசத் திரட்சிக்குள் உள்ளீர்ப்பது என்றுதான் சிந்திக்க வேண்டுமே தவிர அவர்களை தேசத்துக்கு வெளியே தள்ளிவிட முடியாது. இது சுமந்திரன் அணிக்கும் பொருந்தும். இந்த தமிழ் யதார்த்தத்தை சிறீதரன் உள்வாங்க வேண்டும். தேசத் திரட்சியை எப்படிப் பலப்படுத்துவது என்று அவர் சிந்திக்க வேண்டும். கிளிநொச்சியில் அவருடைய நடவடிக்கைகளை விமர்சிக்கும் அவருடைய அரசியல் எதிரிகள் அவரை “கிளிநொச்சியின் ஜமீன்” என்று அழைப்பார்கள். தமிழரசுக் கட்சியின் ஏனைய மாவட்டக் கிளைகளோடு ஒப்பிடுகையில் கிளிநொச்சியில் தமிழரசுக் கட்சியானது அதன் அரசியல் எதிரிகளை துரோகிகள் அல்லது இனப்படுகொலையின் பங்காளிகள் என்று வகைப்படுத்துவது உண்டு. போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டம் என்பதனால் கிளிநொச்சியில் அப்படிக் கூறமுடிந்தது. ஆனால் இப்பொழுது சிறீதரன் ஒரு மாவட்டத்தின் பிரதிநிதி அல்ல. தமிழ்த் தேசிய அரங்கில் உள்ள பெரிய கட்சியின் தலைவர்களில் ஒருவர். ஏனைய கட்சிகளையும் இணைத்து ஒரு கூட்டு முன்னணியை உருவாக்கப் போவதாக வேறு கூறிவருகிறார். எனவே அவர் அதற்கு வேண்டிய தகுதிகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். சுமந்திரன் அணியின் எழுச்சி என்பது தேர்தலோடு ஏற்பட்ட ஒரு தோற்றப்பாடு அல்ல. தேர்தலோடு அது மேலும் பலமடைந்தது என்பதே சரி. அது கட்சிக்குள் ஏற்கனவே காணப்பட்ட ஒரு தோற்றப்பாடு. இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டது போல மாவட்ட அபிவிருத்தி சபைகளை ஏற்றுக் கொள்கின்ற; ஐக்கிய ராஜ்ஜியத்தை ஏற்றுக் கொள்கின்ற ஒரு தரப்பு கட்சிக்குள் எப்பொழுதும் இருந்து வந்துள்ளது. எனவே அந்த உட்கட்சி யதார்த்தத்தை உள்வாங்கி சிறீதரன் கட்சியைச் சீரமைக்க வேண்டியவராக இருக்கிறார். சுமந்திரன் கட்சியைத் தேசிய நீக்கம் செய்தார் என்று அவர் கருதினால், கட்சியை முன்னரை விட அதிகமாக தேசிய மயப்படுத்த வேண்டியது இப்பொழுது சிறீதரனுடைய பொறுப்பு. குறிப்பாக கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவு தொடர்பான சர்ச்சைகளின் விளைவாக கட்சிக்குள் மற்றொரு சிறு பிளவு மேற் கிளம்பும் ஆபத்துத் தெரிகிறது. அது மட்டக்களப்பு- திருகோணமலை என்ற முரண்பாடு. கிழக்கை யார் பிரதிநிதித்துவப்படுத்துவது என்பதில் மட்டக்களப்பா? திருக்கோணமில்லையா? என்ற ஒரு போட்டி அங்கே தோன்றியிருக்கிறது. சம்பந்தரின் தலைமைத்துவம் தமிழரசுக் கட்சிக்கு விட்டுச் சென்றிருக்கும் மற்றொரு தீங்கான விளைவு அது. கிழக்கை மையமாகக் கொண்ட சம்பந்தர் தலைவராக இருந்த ஒரு காலகட்டத்தில்தான் கிழக்கில் பிள்ளையானின் கட்சிக்கு பலமான வாக்காளர் வங்கி ஒன்று உருவாகியது. அது கிழக்கின் யதார்த்தங்களில் ஒன்று. பிள்ளையானின் வாக்காளர்களில் குறிப்பிடத்தக்க தொகையினர் முன்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் வசித்தவர்கள் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அதுவும் கிழக்கின் யதார்த்தம்தான். இவ்வாறு ஏற்கனவே வடக்குக் கிழக்காகப் பிரிந்து போயிருக்கும் தமிழ்த் தேசிய அரசியற் பரப்பில், இப்பொழுது கிழக்குக்குள்ளேயே ஒரு பிரிவு தோன்றக்கூடிய ஆபத்துத் தெரிகிறது. அதாவது ஏற்கனவே பல துண்டுகளாக உடைந்து போயிருக்கும் ஒரு தமிழ்த் தேசிய பரப்பில் ஒரு புதிய உடைவுக்கான அறிகுறிகள் தெரிகின்றன. சிறீதரன் அதையும் கையாள வேண்டியுள்ளது அவர் பதவியேற்றவுடன் மாவீரர் துயிலும் இல்லத்துக்குச் சென்றார். அது கொழும்பில் உள்ள மேற்கத்திய தூதரகங்களால் பெரிய அளவிற்கு ஆர்வத்துடன் பார்க்கப்படவில்லை என்று சுமந்திரனுக்கு நெருக்கமான சிலர் கூறியதாக அறிகிறேன். எனினும் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட பின் மேற்கு நாடுகளின் தூதுவர்கள் சிலர் சிறீதரனை சந்தித்திருக்கிறார்கள். அவர் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டதும் சிங்கள ஊடகவியலாளராகிய சுனந்த தேசப்பிரிய பின்வருமாறு ருவிற் பண்ணியிருந்தார் “தமிழரசுக் கட்சியின் தலைவருக்கான தேர்தலில் சுமந்திரனை சிறீதரன் வென்றமையானது தமிழ் அரசியல் தீவிரப்போக்கடைவதைக் காட்டும் ஒரு சமிக்ஞையாகும்” அதாவது சிறிதரனின் தலைமைத்துவம் தமிழ் அரசியலில் தீவிரவாத போக்கை மேலும் அதிகப்படுத்தப்போகிறது என்று கொழும்பில் இருப்பவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சிங்களக் கடும்போக்கு வாக்குகளைக் கவர விரும்புகிறவர்களுக்கு அது வழிகளை இலகுவாக்கிக் கொடுக்குமா? குறிப்பாக நடந்து முடிந்த சுதந்திர தினத்திலன்று சிறீதரன் தலைமையில் கிளிநொச்சியில் நடந்த ஆர்ப்பாட்டமும் அதில் சிறீதரன் நடந்து கொண்ட விதமும், அவர் கட்சியை எந்த திசையில் செலுத்த விரும்புகிறார் என்பதனை உணர்த்துகின்றதா? சில சிங்கள ஊடகவியலாளர்கள் கூறுவதுபோல தமிழ் மக்களுக்கு மேலும் ஒரு கஜேந்திரகுமார் கிடைத்திருக்கிறாரா? சுதந்திர தினமன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் சிறிதரன் நடந்து கொண்ட விதம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாணியிலானது. கட்சிக்குள் தன்னுடைய நிலையைப் பலப்படுத்துவதற்கு அது சிறிதரனுக்கு உதவும். சிறீதரன் முதலில் கட்சிக்குள் தன்னை பலப்படுத்த வேண்டியிருக்கிறது. சம்பந்தரின் தலைமைத்துவத்தின் கீழ் கட்சியானது கொழும்பை நோக்கி அதிகம் அதிகம் திருப்பப்பட்டு விட்டது. அதை மீண்டும் வாக்காளர்கள் நோக்கித் திருப்பவேண்டும். அதே சமயம் கட்சி அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறுவதுபோல ஒரு சமஸ்ரியை அடைவதற்கான வழிவகைகளையும் கண்டுபிடிக்க வேண்டும். சுதந்திர தினத்தன்று ஆதரவாளர்களுக்கு வீரமாகத் தலைமை தாங்குவது கட்சிக்குள் சிறிதரனை பலப்படுத்த உதவலாம். அதற்குமப்பால் சமஸ்ரியை அடைவதற்கான செயல்பூர்வமான வழியை அவர் தனது தொண்டர்களுக்குக் காட்ட வேண்டும்; மக்களுக்கும் காட்ட வேண்டும். https://www.nillanthan.com/6533/
  8. தமிழரசுக் கட்சியை அக்கட்சிக்காரர்களிடமிருந்தே காப்பாற்றுவது யார்? சில மாதங்களுக்கு முன்பு தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த பசுபதிப்பிள்ளை நினைவு நாள் கிளிநொச்சியில் அனுஷ்டிக்கப்பட்டடது. அதில் நினைவுரை ஆற்றிய இக்கட்டுரையாசிரியர் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டியிருந்தார். இரண்டு தேர்தல்கள் நடந்தால் அவை தமிழ் மக்களின் தோல்வியை வெளிக் கொண்டுவரும் என்று. ஒன்று, தமிழரசுக் கட்சிக்குள் நடக்கும் தேர்தல். இரண்டாவது,மாகாண சபைத் தேர்தல். அண்மையில், தமிழரசுக் கட்சிக்குள் நடந்த தேர்தல் தமிழ் அரசியலின் சீரழிவை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. அரசியல் விமர்சகர் ஜோதிலிங்கம் கூறுவதுபோல,தமிழ்மக்கள் மத்தியில் கட்சிகள் கிடையாது, தேர்தலில் வாக்குக் கேட்கும் குழுக்கள்தான் உண்டு என்பது சரியா?ஏனென்றால் கட்சிகளுக்குரிய கட்டுக்கோப்பு; யாப்பு; கூட்டுப் பொறுப்பு என்பன இருந்திருந்தால் பொதுச் செயலாளர் தெரிவில் அப்படி ஒரு குழப்பம் நடந்திருக்காது. அந்தக் குழப்பம் பின்வரும் விடயங்களை நமக்கு உணர்த்துகின்றது. முதலாவது, தமிழரசுக் கட்சி ஒரு கட்டுக்கோப்பான கட்டமைப்பாக இல்லை. அது சிதைந்து போய்விட்டது. ஒரு பொது முடிவை எடுக்க முடியாத அளவுக்கு கட்சி அதன் கூட்டுணர்வை இழந்துவிட்டது. இரண்டாவது, சிறீதரனின் தலைமைத்துவத்தை அவருடைய எதிரணி ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் தோல்வியை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. அதாவது தொகுத்துப் பார்த்தால் தமிழரசுக் கட்சி தலைவருக்கான தேர்தலோடு இரண்டாகி நிற்கின்றது. ஆனால் இதுவிடயத்தில் தமிழரசுக் கட்சியின் சீத்துவக்கேட்டை விமர்சிக்கும் ஏனைய கட்சிகள் மட்டும் ஜனநாயகக் கட்டமைப்பாக உள்ளனவா? அங்கேயும் பரம்பரைத் தலைவர்கள்; கேள்விக்கிடமற்ற நிரந்தரத் தலைவர்கள் என்ற ஏற்பாடுகள்தானே உண்டு ? கட்சி மாநாடுகள் வைக்கிறார்கள். ஆனால் திரும்பத் திரும்ப ஒருவரே தலைவராகத் தெரிவு செய்யப்படலாமென்றால் அதன் பொருள் என்ன? கட்சிக்குள் வேறு தலைவர்கள் வரவில்லை என்பதா? அல்லது இருக்கின்ற தலைவர் கடவுளா? எனவே தமிழரசுக் கட்சியை விமர்சிக்கும் யோக்கியதை ஏனைய கட்சிகளுக்கு கிடையாது. தமிழரசுக் கட்சியைப் பின்பற்றி ஏனைய கட்சிகளும் தமது உயர்மட்டப் பொறுப்புகளை தேர்தல்மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும். உட்கட்சி ஜனநாயகத்தைப் பாதுகாக்கவில்லையென்றால், தமிழ் அரசியலின் ஜனநாயக இதயத்தைப் பலப்படுத்த முடியாது. தமிழ் அரசியலின் ஜனநாயக இதயத்தைப் பலப்படுத்தவில்லையென்றால் தமிழ்த் தேசியத்தைப் பலப்படுத்த முடியாது. ஏனென்றால், தேசியத்தின் இதயம் ஜனநாயகம்தான். தேசியவாதம் தொடர்பான மேற்கத்திய அறிஞர்களின் மேற்கோள்களின்படி, தேசியவாதத்தின் உள்ளடக்கம் ஜனநாயகமாக இருக்க வேண்டும். கட்சிகளுக்குள் ஜனநாயகம் இல்லையென்றால், அவை தங்களைத் தேசியக்கட்சிகள் என்று கூறிக் கொள்வதில் பொருள் இல்லை. எனவே தமிழரசுக் கட்சிக்குள் நடந்த தேர்தல் எல்லா விதமான விமர்சனங்களோடும் முற்போக்கானது. அது ஜனநாயகத்தின் மீது கொண்ட நம்பிக்கையால்,அல்லது கட்சிக்குள் உட்கட்சி ஜனநாயகம் செழித்தோங்கியிருக்கிறது என்பதற்காக நடத்தப்பட்ட ஒரு தேர்தல் அல்ல. கட்சிக்குள் ஜனநாயகமே இல்லை;கூட்டு முடிவுகள் எடுக்கப்படுவதில்லை; தனியோட்டங்கள்தான் உண்டு; சுமந்திரனும் சம்பந்தரும் தங்களுக்கு இடையே பேசி முடிவுகளை எடுத்தார்கள்; சுமந்திரன் யாரையும் பொருட்படுத்தாமல் தனியோட்டம் ஓடினார்; என்ற குற்றச்சாட்டுக்கள் பல ஆண்டுகளாக இருந்து வருகின்றன. ஆனால் சுமந்திரன் கூறுகிறார், கூட்டுப் பொறுப்பு என்று கூறி ஏனைய கட்சி முக்கியஸ்தர்களையும் அழைத்துக்கொண்டு சந்திப்புகளுக்குச் சென்றால், சந்திப்பு முடிவதற்கு இடையில் ஊடகங்களுக்குத் தகவல்கள் கசிய விடப்படுகின்றன என்று. அதாவது கட்சியின் முக்கியஸ்தர்கள் கூட்டுப் பொறுப்புடன் நடந்து கொள்வதில்லை என்று.அவ்வாறு கட்சியின் கூட்டுப் பொறுப்பை சிதைத்தமைக்கு அவருடைய தனி ஓட்டங்கள்தான் காரணம் என்று கட்சியின் மேல்மட்ட உறுப்பினர்கள் கூறுகிறார்கள். இவ்வாறு கட்சிக்குள் ஜனநாயகம் சிதைந்து போயிருந்த ஒரு காலகட்டத்தில், தலைமைப் பொறுப்புக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிலைமைகளை சுமந்திரனை உருவாக்கினார். அவர் அதை உருவாக்கக் காரணம் கட்சிக்குள் ஜனநாயகத்தை பலப்படுத்த வேண்டும் என்பதற்காகவா? அல்லது கதிரைகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் சம்பந்தரையும் மாவையும் கதிரைகளை விட்டு அகற்ற வேண்டும் என்பதற்காகவா? நடப்பு நிலைமைகளைத் தொகுத்துப்பார்த்தால், இருவரையும் கதிரைகளை விட்டு அகற்றுவதற்காகத்தான் சுமந்திரன் ஒரு தேர்தலை நோக்கி நிலைமைகளை நகர்த்தினார் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு தேர்தல் நடந்தால் அதில்,தான் வெல்வேன் என்று அவர் உறுதியாக நம்பினார். அதற்குரிய வேலைகளை அவர் ஏற்கனவே செய்துவிட்டார். எனவே,வெற்றி நிச்சயம் என்று நம்பியபடியால்தான் அவர் தேர்தலை நோக்கி நிலைமைகளை நகர்த்தினார். தனக்கு வெற்றி நிச்சயம் என்பதனால்,கட்சியை ஒரேடியாகத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என்று அவர் நம்பினார். ஆனால் சிறீதரன் தொடக்கத்திலிருந்து நம்பிக்கை தளராமல் உழைத்தார். கடைசிக் கட்டத்தில் தளம்பிக் கொண்டிருந்த வாக்காளர்கள் தமிழ்த் தேசிய உணர்வுக்குப் பயந்து விட்டார்கள். தமிழ்த் தேசிய உணர்வின் அடிப்படையில் சிறீதரன் வெல்லலாம் என்ற சந்தேகத்தில், தளம்பிக் கொண்டிருந்த வாக்காளர்கள் சுமந்திரனுக்கு எதிராக முடிவெடுத்தார்கள். வீட்டுச் சின்னத்துக்கு விழும் வாக்குகள் ஒரு கூட்டுணர்வின் அடிப்படையில் விழும் வாக்குகளே. அக்கூட்டுணர்வுதான் தமது ஆதரவுத் தளம் என்று நம்பும் அரசியல்வாதிகள் அதற்குப் பயப்படுவார்கள். ஆனால் அதற்காக, அதை ஒரு முழுமையான கொள்கை வெற்றியாக வியாக்கியானம் செய்யத் தேவையில்லை. குறிப்பாக இது கட்சிக்குள் நடந்த தேர்தல். இதில் பங்குபற்றியவர்கள் அரசியல்வாதிகள். பொதுமக்கள் அல்ல. அதாவது அரசியல் விலங்குகள். அரசியல் விலங்குகள் கொள்கைக்கு உண்மையாக இருக்கும் என்றெல்லாம் கற்பனை செய்யத் தேவையில்லை. அது சுமந்திரன் எதிர்பாராத தோல்வி.அவருடைய ஆதரவுத் தளம் நலன்களின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டது. கட்சிக்குள் நுழைந்ததிலிருந்து அவர் எப்பொழுதும் ஒரு “கிங்மேக்கராகவோ” அல்லது பட்டத்து இளவரசனாகவோதான் தன்னைக் கட்டமைத்துக் கொண்டார். அதற்கு சம்பந்தரும் ஆதரவு. கட்சிக்குள் இரண்டாம் மூன்றாம் நிலைகளில் இருப்பதற்கு அவர் பழக்கப்படவில்லை. தோற்கடிக்கப்பட்ட பின் அவரைப் பொறுத்தவரை அவரைவிடத் தகுதி குறைந்தவர் என்று அவர் கருதிய சிறீதரனின் கீழ் அவர் செயற்பட வேண்டியுள்ளது. அதற்கு அவருடைய “ஈகோ” இடம் கொடுக்குமா? மேலும் இத்தோல்வியானது,அவருடைய எதிர்காலத் தேர்தல் தோல்விகளையும் தீர்மானிக்ககூடும். அப்படிப்பட்டதோர் சூழலில்,அவர் தேசியப் பட்டியல் ஆசனத்தைக் குறி வைக்கக்கூடும். அதற்கு செயலாளர் அவருடைய ஆளாக இருக்க வேண்டும். அதனால்தான் தன்னைச் செயலாளராக நியமிக்கக் கேட்டிருக்கிறார். அது நடக்கக்கூடிய காரியம் இல்லையென்று அவருக்கே தெரியும். ஆனால் அதன்மூலம் கிழக்கில் உள்ள தன்னுடைய ஆளை செயலாளராக நியமிக்குமாறு நிர்பந்திக்கலாம் என்பதை அவர் சரியாகவே கணித்திருந்தார். இது அவர் எதிர்காலத்தில் தேசியப் பட்டியல் ஆசனத்தைக் கைப்பற்றுவதற்கான முஸ்தீபு. அதாவது சுமந்திரன் கட்சிக்குள் தொடர்ந்தும் தனது முதன்மையைத் தக்கவைக்க முற்படுகிறார் என்று பொருள். அவர் சிறிதரனுக்கு எழுதிய பகிரங்கக் கடிதத்தில் அது தெரிகிறது. கடிதம் எழுத வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? சிறிதரனோடு அதை நேரடியாக காதும் காதும் வைத்ததுபோல ஏன் பேச முடியவில்லை? அது இருவரும் தூரமாக இருப்பதைக் காட்டுகின்றதா? அதனை பகிரங்கப்படுத்துவதன்மூலமும்,அதை எழுத்தில் முன்வைப்பதன்மூலமும், குறிப்பாக கடிதத்தில் சில சட்ட நுணுக்கங்களைச் சுட்டிக்காட்டுவதன் மூலமும் எதிர்காலத்தில் சிறீதரனின் அணிக்கு எதிராகச் சட்டரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்ற மிரட்டல் அங்கே உண்டா? கட்சிக்குள் தன்னுடைய முக்கியத்துவத்தைத் தக்கவைக்க முடியவில்லை என்றால் அவர் கட்சிக்கு வெளியே போவாரா? ஒரு புதிய கட்சியை உருவாக்குவாரா? அதாவது தமிழரசுக் கட்சி உடையுமா? சுமந்திரன் ஒரு “கிங் மேக்கர்”தான். ஒரு “கிங்கைப்”போல ஒரு புதிய கட்சியைக் கட்டியெழுப்புவாரா? ஆனால் செயலாளர் தெரிவில் ஏற்பட்ட குழப்பம் மக்கள் மத்தியில் சுமந்திரனுக்குப் பாதகமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தியிருக்கின்றது. சுமந்திரன் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து அளாப்புகிறார் என்ற அபிப்பிராயம் மேலெழுந்திருக்கிறது. அவர் சிறீதரனுக்கு எழுதிய கடிதம் சாதாரண மக்களை அதிகம் சென்றடையாது. அரசியல் ஈடுபாடுடைய; அரசியல் கட்டுரைகளை வாசிக்கின்றவர்கள் மத்தியில் அதற்கு ஒரு கவனிப்பு இருக்கும். ஆனால் சாதாரண வாக்காளர்கள் சுமந்திரனை ஓர் அளாப்பியாகத்தான் பார்க்கிறார்கள். சிறீதரனைப் பொறுத்தவரை அவர் பழைய கூட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் ஏனைய கட்சிகளை ஒருங்கிணைக்க முன்பு அவர் தன்னுடைய சொந்தக் கட்சிக்குள் தன்னுடைய நிலையைப் பலப்படுத்தி கட்சியை ஒரு கட்டிறுக்கமான நிறுவனமாகக் கட்டியெழுப்ப வேண்டியவராகக் காணப்படுகிறார். கட்சி இரண்டாக உடைவதைத் தடுப்பதென்றால் இப்போதைக்கு சுமந்திரன் அணியை அனுசரித்துப் போகவேண்டும். கடந்த சில தசாப்தங்களுக்குள் தென்னிலங்கையில் இரண்டு பாரம்பரியக் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஏற்கனவே சிதைந்து விட்டன. அது ஈழப் போரின் நேரடி விளைவு. ஆனால் தமிழ்மக்கள் மத்தியில் ஈழப் போரின் நேரடி விளைவாக இரண்டு பாரம்பரிய கட்சிகளும் இப்பொழுதும் அரங்கில் நிற்கின்றன.அவை பண்புருமாற்றத்துக்குத் தயாரா? பல ஆண்டுகளுக்கு முன் தமிழகம்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் யாழ்ப்பாணம் வந்திருந்தபொழுது தனிப்பட்ட சந்திப்பின்போது இக்கட்டுரை ஆசிரியரிடம் சொன்னார்…”உங்களுடைய தலைவர்களில் பலர் தீர்ந்துபோன சக்திகள்-spent forces-என்று”.தீர்ந்துபோன சக்திகளை வைத்துக்கொண்டு கட்சிகளைப் புதுப்பிக்கலாமா ? பல தசாப்தங்களுக்கு முன்பு செல்வநாயகம் சொன்னார்…தமிழ் மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று.ஆனால் இப்பொழுது அவருடைய கட்சியை அவருடைய கட்சிக்காரரிடம் இருந்தே காப்பாற்றுவது எப்படி? https://www.nillanthan.com/6511/
  9. சிறீதரனுக்கு முன்னுள்ள பொறுப்புக்கள் – நிலாந்தன். January 28, 2024 தமிழரசு கட்சிக்குள் நடந்த தேர்தல் ஏன் முக்கியத்துவமுடையது? செல்வநாயகம் தமிழ் மக்களைக் கடவுளிடம் ஒப்படைத்த பொழுதே அக்கட்சி செயல்பூர்வமாக இறந்து போய்விட்டது. அப்படிப்பட்ட ஒரு கட்சிக்கு யார் தலைவராக வந்தாலும் எதுவும் நடக்கப் போவதில்லை என்று ஒரு விமர்சனம் சமூக வலைத்தளங்களில் வைக்கப்படுகின்றது. கோட்பாட்டு ரீதியாக அது சரி. ஆனால் நடைமுறையில் தமிழரசுக் கட்சி இப்பொழுதும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. உள்ளதில் பெரிய கட்சி அது. தமிழ் மக்கள் மத்தியில் மக்கள் இயக்கம் எதுவும் கிடையாது. இருக்கின்ற கட்சிகளின் பிரதிநிதிகள்தான் தமிழ் அரசியலை முன்னெடுக்கின்றார்கள். அரசியல் என்பது சாத்தியக்கூறுகளின் கலை. இருப்பதை வைத்துத்தான் அரசியல் செய்யலாம். இருப்பதை வைத்துத்தான் அரசியலை எழுதலாம். கற்பனைகளில் இருந்தோ அல்லது விருப்பங்களில் இருந்தோ அரசியலை ஆய்வு செய்ய முடியாது. உள்ளதில் பெரிய கட்சி; அதற்குள் நடக்கும் தேர்தல் என்று பார்க்கும்பொழுது தமிழரசு கட்சிக்குள் நடக்கும் தேர்தலுக்கு முக்கியத்துவம் உண்டு. அதே சமயம் அது தமிழ் அரசியலின் இயலாமையைக் காட்டும் ஒரு தேர்தல் என்பதிலும் சந்தேகம் இல்லை. ஏனென்றால் தமிழ் அரசியல் கட்சி தேர்தல் மைய அரசியலாகச் சுருங்கிபோய் இருப்பதை அது காட்டுகின்றது. இது முதலாவது காரணம். இரண்டாவது காரணம், தமிழரசுக் கட்சியின் ஆங்கிலப் பெயர் சமஸ்டி கட்சி. அதற்கு இப்பொழுது 73 வயது. 73 ஆண்டுகளாக கட்சி தன் பெயரில் வைத்துக் கொண்டிருக்கும் சமஸ்டியை அடைய முடியவில்லை. எனவே அதன் தேர்தல் வாக்குறுதிகள், இலட்சியங்கள் என்பவற்றின் அடிப்படையில் சொன்னால், தமிழரசுக் கட்சி ஒரு தோல்வியுற்ற கட்சி. அதன் புதிய தலைவர் கட்சியை வெற்றிப் பாதையில் செலுத்துவாரா? அதற்கு என்ன செய்ய வேண்டும்? அவர் கடந்த 73 ஆண்டு கால தோல்விகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அதுபோல, அண்மையில் கட்சிக்குள் நடந்த தேர்தலில் இருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும். 73 ஆண்டு கால தோல்விக்குக் காரணம் தமிழரசுக் கட்சியிடம் பொருத்தமான வினைத்திறன் மிக்க வழிவரைபடம் இருக்கவில்லை என்பதுதான். விக்னேஸ்வரன் கூறுவது போல எல்லாருமே சமஸ்டிப் பண்புடைய தீர்வைதான் கேட்கின்றார்கள். ஆனால் ஒருவரிடமும் சமஷ்டிக்கான வழிவரைபடம் கிடையாது. சமஸ்டியை எப்படி அடைவது? நிச்சயமாக நாடாளுமன்ற அரசியலுக்கு ஊடாக மட்டும் அடைய முடியாது. நாடாளுமன்ற அரசியலுக்கு வெளியே ஒரு மக்கள் இயக்கம் தேவை. அதே சமயம் அந்த மக்கள் இயக்கத்தின் வழிநடத்தலின் கீழ் பொருத்தமான ஒரு வெளிவிவகாரக் கொள்கையை முன்னெடுக்கும் வினைத்திறன் மிக்க ஒரு வெளிவிவகாரக் கட்டமைப்பு வேண்டும். ஏனென்றால், எல்லாத் தேசிய இனப் பிரச்சினைகளும் சாராம்சத்தில் பிராந்திய மற்றும் அனைத்துலகப் பிரச்சினைகள்தான். அவற்றுக்கு அனைத்துலகத் தீர்வுதான் உண்டு. அவை உள்நாட்டுப் பிரச்சினைகள் அல்ல. உள்நாட்டுப் பிரச்சினை ஒன்றை வெளிநாடுகள் கையாளும்போது அது அனைத்துலகப் பரிமாணத்தைப் பெறுகின்றது. எனவே வெளிநாடுகளின் அழுத்தத்தால்தான் அதற்குத் தீர்வு வரும். இந்த அடிப்படையில் பார்த்தால்,வெளிநாடுகளைக் கையாள்வதற்குத் தேவையான பொருத்தமான வினைத்திறன்மிக்க ஒரு வெளியுறவுத் தரிசனமும் வெளியுறவுக் கட்டமைப்பும் வேண்டும். தமிழ் அரசியலில் அப்படியேதும் உண்டா? தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் இந்தச் சவால்களை எதிர்கொள்ள வேண்டும். சிறீதரன் இப்பொழுது ஒரு மாவட்டத்தின் பிரதிநிதி மட்டுமல்ல. அவர் ஒரு கட்சியின் தலைவர். எனவே மூன்று தளங்களில் அவர் ஒருங்கிணைப்பைச் செய்ய வேண்டும். முதலாவதாக, கட்சிக்குள் ஐக்கியத்தை ஏற்படுத்த வேண்டும். தேர்தலின் விளைவாக கட்சி துருவமயப்பட்டிருக்கிறது. இரண்டு பகை அணிகளையும் ஒன்றாகச் சேர்ந்து செயல்படும் ஒரு சூழலை ஏற்படுத்த வேண்டும். தேர்தலை நடத்தி ஒரு தலைவரை தேர்வு செய்த விடயத்தில் தமிழரசுக் கட்சி ஒரு முன்னுதாரணத்தை ஏனைய கட்சிகளுக்குக் காட்டியிருக்கின்றது. பெருமளவுக்கு பரம்பரை பரம்பரையாக வரும் தலைவர்களையும் கேள்விக்கிடமற்ற தலைவர்களையும் கொண்ட ஒரு பிராந்தியத்தில், தமிழரசுக் கட்சியின் முன்னுதாரணம் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளும் பின்பற்ற வேண்டிய ஒன்று. தேர்தலில் தோற்ற தரப்பு கட்சியை விட்டு வெளியேறினால், அந்தத் தேர்தல் மூலம் வெளிப்படுத்தப்பட்ட ஜனநாயக மாண்பு சிதைந்து விடும். சுமந்திரன் அனைத்துலகத் தொடர்புகளை அதிகமாக வைத்திருப்பவர். அது ஒரு வளம். ஒரு வெளியுறவுக் கட்டமைப்புக்குள் அவருக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் ஒரு வெளியுறவுக் கொள்கைக்கு அவர் பொறுப்புக்கூற வேண்டும். ஒரு தேர்தலை நோக்கி நிலைமைகளை நகர்த்தியவர் அவர்தான். ஏனெனில் வெற்றி தனக்கே என்று அவர் திட்டவட்டமாக நம்பினார். அதற்காக அவர் பல ஆண்டுகள் உழைத்துமிருக்கிறார். சிறீதரன் அவமானகரமான ஒரு தோல்வியைத் தழுவுவார் என்று சுமந்திரனின் ஆதரவாளர்கள் தொடக்கத்தில் நம்பினார்கள். ஆனால் சிறீதரன் கடுமையாக உழைத்தார். அவருடைய பிரதான பலம் கிளிநொச்சியில் இருக்கின்றது. அதோடு, மட்டக்களப்பு தொடக்கத்திலிருந்து அவரோடு நின்றது. சிறுதொகுதி உறுப்பினர்கள் சாணக்கியனோடு நின்றார்கள். ஏனையவர்கள் திட்டவட்டமாக சிறிதரனை ஆதரித்தார்கள். வெற்றிக்குரிய அடிப்படை வாக்குகளில் மட்டக்களப்பு வாக்குகள் உண்டு. அடுத்தது, யாழ்ப்பாணம் தீவுப்பகுதி. அமிர்தலிங்கத்திற்கும் காவலூர் நவரத்தினத்துக்கும் இடையிலான பகிரங்க விவாதத்தில் தொடங்கி தீவுப் பகுதிக்கு என்று சிறப்பான முன்னுதாரணங்கள் உண்டு. நவரத்தினம் தனிநாட்டுக் கோரிக்கையின் பிதாக்களில் ஒருவர். பலமான தமிழரசுக் கட்சியின் தலைமையை அவர் எதிர்த்தார். அவரோடு பக்கபலமாய் நின்றவர்கள் அநேகர் தீவுகளைச் சேர்ந்தவர்கள்தான். அண்மையில் கட்சிக்குள் நடந்த தேர்தலில் தீவுப்பகுதி உறுப்பினர்கள் ஒரு சிறிய தொகை. எனினும் அச்சிறு தொகை அசையாது சிறீதரனோடு நின்றது. இவைதவிர கடைசி நேரத்தில் வெல்பவரின் பக்கம் சாய்பவர்கள் சிறீதரனை வெற்றிபெற வைத்தார்கள். சிறீதரன் அதற்காகத் திட்டமிட்டு உழைத்தார். வெல்லமுடியும் என்ற நம்பிக்கையை அவர் தொடக்கத்திலிருந்து இழக்கவில்லை. அதை ஒரு கொள்கை வெற்றி என்று கூறுவது மிகைப்படுத்தலாக இருக்கலாம். தமிழரசுக் கட்சி மட்டுமல்ல ஏனைய கட்சிகளுக்குள்ளும் விசுவாசக் கட்டமைப்புகள் கொள்கையின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படவில்லை. அவை நலன்களின் அடிப்படையில்தான் கட்டியெழுப்பப்பட்டிருக்கின்றன. தமிழ் அரசியல்வாதிகளில் எத்தனை பேர் நேர்மையானவர்கள்? எத்தனை பேர் தேசியம் என்றால் என்ன என்பதனை அதன் நடைமுறை அர்த்தத்தில் விளங்கி வைத்திருக்கிறார்கள்? கடந்த 15 ஆண்டுகளில் தேசியம் எனப்படுவது திருடர்களும் பொய்யர்களும் பாலியல் குற்றவாளிகளும் எடுத்தணியும் முகமூடியாக மாறியிருக்கிறது. இதை இவ்வாறு கூறுவதன்மூலம் தமிழரசுக் கட்சிக்குள் இருக்கக்கூடிய நேர்மையான தேசியவாதிகளை இக்கட்டுரை கொச்சைப்படுத்தவில்லை. ஆனால் அது ஒரு பொதுப்போக்கு. கடந்த 15 ஆண்டு கால தேசிய நீக்க அரசியலின் விளைவு. எனவே கட்சியை கொள்கை ரீதியாக வார்த்தெடுக்க வேண்டிய ஒரு பொறுப்பு சிறீதரனுக்கு உண்டு. அவர் இப்பொழுது தனது சொந்த வெற்றியின் கைதி. தனக்குக் கிடைத்த வெற்றி கொள்கை வெற்றிதான் என்று அவர் நிரூபித்துக்காட்ட வேண்டும். இது முதலாவதாக சிறீதரன் செய்ய வேண்டியது. அதாவது கட்சிக்குள் கூட்டொருமைப்பாட்டை ஆகக்கூடியபட்சம் கட்டியெழுப்புவது. இரண்டாவதாக, சிறீதரன் தனது சொந்த மாவட்டத்திலேயே தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்க வேண்டும். அங்கே அவர் அரசியலை துருவமயப்படுத்தி வைத்திருக்கின்றார். தமிழரசுக் கட்சியின் ஏனைய மாவட்டக் கிளைகளோடு ஒப்பிடுகையில், கிளிநொச்சியில்தான் துரோகி-தியாகி என்ற உரையாடல் அதிகமாக உண்டு. அதற்குக் காரணம் சந்திரகுமாரின் சமத்துவக் கட்சி அங்கே ஒரு பலமான வாக்குத் தளத்தைக் கொண்டிருப்பதுதான். அதற்கு ஒரு பலமான காரணம் உண்டு. கிளிநொச்சி போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டம். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் இறுதிக்கட்டத் தலைநகரமாக இருந்தது. 2009க்குப் பின் அங்குள்ள புனர்வாழ்வு பெற்ற போராளிகளில் ஒரு பகுதியினருக்குச் சந்திரக்குமார் பெருமளவுக்குப் புகலிடம் கொடுத்தார்; பாதுகாப்புக் கொடுத்தார்; தொழில் கொடுத்தார். அவ்வாறு அவரால் அரவணைக்கப்பட்ட முன்னாள் இயக்கத்தவர்கள் பலர் முன்பு இயக்கத்தில் நிர்வாகப் பொறுப்புகளில் இருந்தவர்கள். அந்த ஊரவரல்லாத சந்திரக்குமாருக்கு அவர்கள் பலமான ஒரு வாக்குத்தளத்தைக் கட்டியெழுப்பினார்கள். சந்திரகுமாரின் சமத்துவக் கட்சியில் மாவட்ட அமைப்பாளரும் உட்பட முக்கிய பொறுப்புக்களில் பல முன்னாள் புலிகள் இயக்கத்தவர்கள் உண்டு. தமிழ்த் தேசியப் பரப்பில் ஜனநாயகப் போராளிகள் கட்சிக்கு வெளியே அதிகம் முன்னாள் விடுதலைப் புலிகளைக் கொண்ட கட்சி சமத்துவக் கட்சிதான். மேலும் சந்திரக்குமார் அங்கே பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில் அதிகமாக வேலை செய்திருக்கிறார். அவருடையது அபிவிருத்தி மைய அரசியல். இவ்வாறு சிறீதரனின் சொந்த மாவட்டத்துக்குள்ளேயே அவருக்குச் சவாலாக பலமான எதிர் வாக்குத்தளம் உண்டு. அது இனப்படுகொலையாளிகளின் வாக்குவங்கி என்று கூறி முத்திரை குத்திவிட்டுப் போக முடியாது. அல்லது தியாகி-துரோகி என்ற அளவுகோல்களால் அதை மதிப்பிடவும் முடியாது. இந்த விடயத்தில் சிறீதரன் பண்புருமாற்றம் ஒன்றுக்குத் தலைமை தாங்கத் தயாராக இருக்க வேண்டும்.இது இரண்டாவது. மூன்றாவது,கட்சிகளை ஒருங்கிணைப்பது. 2009க்கு முன் இருந்த அதே ஐக்கியத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது. கடந்த 15 ஆண்டுகால அனுபவத்தின் அடிப்படையில் தேசத் திரட்சியை எப்படிப் பாதுகாப்பது என்று சிந்திக்க வேண்டும். எல்லாவற்றையும் கடடமைப்புக்குள்ளால் சிந்திக்க வேண்டும். குறைந்தபட்சம்வெளி விவகாரத்திலாவது கட்சிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு தேசிய கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இந்தியாவையும் ஐநாவையும் மேற்கு நாடுகளையும் அக்கட்டமைப்புத்தான் கையாள வேண்டும். தனிநபர்கள் தனியோட்டம் ஓடுவதற்கு அனுமதிக்கக்கூடாது. அது சிறீதரனுக்கும் பொருந்தும். எனவே சிறீதரன் முதலில் கட்சிக்குள் துருவ நிலைப்பட்டிருக்கும் உறுப்பினர்களை ஒரு திரளாக வார்த்தெடுக்க வேண்டும். ஒரு கூட்டுணர்வை உருவாக்கவேண்டும். இரண்டாவதாக, தனது மாவட்டத்தில் அதைச் செய்ய வேண்டும். மூன்றாவதாக,தேசிய மட்டத்தில் அதைச் செய்யவேண்டும். அதாவது ஒரு பண்புரு மாற்றத்திற்குத் தலைமை தாங்க வேண்டும்.அதற்கவர் தயாரா? https://globaltamilnews.net/2024/200153/
  10. உலக நீதி : காசாவும் முள்ளிவாய்க்காலும் - நிலாந்தன் “அனைத்துலக நீதியின் மாண்பு தராசில் தொங்கிக்கொண்டிருக்கிறது” இவ்வாறு அனைத்துலக நீதிமன்றத்தில் வைத்துக் கூறியிருப்பவர் தென்னாபிரிக்காவின் பிரதிநிதி. காசாவில் இஸ்ரேல் புரியும் இனப்படுகொலைக்கு எதிராகத் தென்னாபிரிக்கா உலக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறது. அந்த வழக்கின் தொடக்கத்தில் மேற்கண்டவாறு கூறப்பட்டிருக்கிறது. உலக நீதி மட்டுமல்ல மேற்கு நாடுகளின் அரசியல் அறமும் கூட தராசில் வைக்கப்பட்டிருக்கிறது. முழு உலகத்துக்கும் ஜனநாயகம் மனித உரிமைகள் போன்றவற்றின் மாண்பைக் குறித்து வகுப்பெடுக்கும் மேற்கு நாடுகளின் அரசியல் அறத்தை மிக இளைய ஜனநாயகங்களில் ஒன்று ஆகிய தென்னாபிரிக்கா கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது. காசாவில் இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கும் பொழுதே, ரத்தம் காய முன்பே, தென்னாபிரிக்கா வழக்குத் தொடுத்திருக்கின்றது. அதுபோல ஏற்கனவே மற்றொரு ஆபிரிக்க நாடாகிய காம்பியா மியான்மரில் ரோஹிங்கா முஸ்லிம்களுக்காக நீதி கேட்டு 2019 ஆம் ஆண்டு அனைத்துலக நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தது. அனைத்துலக நீதிமன்றம் எனப்படுவது ஐநாவின் ஆறு பிரதான உறுப்புகளில் ஒன்று. ஐநாவின் நீதி பரிபாலனக் கட்டமைப்பு அது. ஐநாவின் ஏனைய உறுப்புக்கள் நியூயோர்க்கில் உள்ளன. ஆனால் அனைத்துலக நீதிமன்றம் நெதர்லாந்தின் தலைநகரமான ஹேக்கில் அமைந்துள்ளது. ஐநாவின் சுயாதீனமான உறுப்பாக அது கருதப்பட்டாலும் அதன் தீர்ப்புக்களின் அடுத்தடுத்த கட்டங்களைத் தீர்மானிப்பது ஐநா பொதுச் சபையும் பாதுகாப்புச் சபையுந்தான். பாதுகாப்புச் சபையில் சக்திமிக்க நாடுகளுக்கு வீற்ரோ அதிகாரம் உண்டு. எனவே அங்கு விவாதிக்கப்படும் தீர்ப்புகளின் மீது சக்தி மிக்க நாடுகள் வீற்ரோ வாக்கைப் பிரயோகிக்க முடியும். ரோஹியங்கா முஸ்லிம்களின் விடயத்தில் மியான்மருக்குச் சார்பாக சீனா அவ்வாறு வீற்ரோ வாக்கைப் பிரயோகித்திருக்கிறது. அதுபோலவே இஸ்ரேலுக்கு எதிரான ஐநா தீர்மானங்களின் போதும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக தன்னுடைய வீற்ரோ அதிகாரத்தைப் பயன்படுத்தியிருக்கிறது. ஐநாவின் வரலாற்றிலேயே அமெரிக்கா அதிகம் எண்ணிக்கையிலான வீற்ரோ வாக்குகளைப் பிரயோகித்தது இஸ்ரேலுக்கு ஆதரவாகத்தான் என்று ஒரு கணக்கு உண்டு. எனவே ஐநாவின் உறுப்புக்களில் ஒன்று என்ற அடிப்படையில் அனைத்துலக நீதிமன்றம் ஐநாவுக்குள்ள எல்லா வரையறைகளையும் பலவீனங்களையும் இயலாமைகளையும் கொண்டிருக்கும். இந்த விளக்கத்தின் பின்னணியில் வைத்தே, குறிப்பாக மியான்மருக்கு எதிராக கம்பியா தொடுத்த வழக்கின் கடந்த நான்கு ஆண்டுகால அனுபவத்தின் பின்னணியில் வைத்தே தென்னாபிரிக்கா இஸ்ரேலுக்கு எதிராக தொடுத்திருக்கும் வழக்கையும் விளங்கிக் கொள்ள வேண்டும். ரோஹியங்கா முஸ்லிம்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக பொருத்தமான நீதி வழங்கப்படவில்லை. ஐநா உருவாக்கப்பட்டதிலிருந்து அது பெருமளவுக்கு இனப்படுகொலைகளின் பார்வையாளராகத்தான் இருந்து வந்துள்ளது. ஐநாவின் இயலாமையை,கையாலாகத்தனத்தை நிரூபிக்கும் ஆகப்பிந்திய இனப்படுகொலைக் களந்தான் காசா. தென்னாபிரிக்கா தொடுத்திருக்கும் வழக்கின்மூலம் பலஸ்தீனர்களுக்கு நீதி கிடைக்குமா? அல்லது அந்த வழக்கு ஐநாவின் கையாலாகத்தனத்தை மீண்டும் ஒரு தடவை நிரூபிக்குமா ? ஏனெனில், உலகில் தூய நீதி என்று எதுவும் கிடையாது இருப்பதெல்லாம் அரசியல் நீதிதான். நீதிபதிகள் தனிப்பட்ட முறையில் நீதியாக நடக்கலாம். ஆனால் அந்த நீதியை நடைமுறைப்படுத்தப் போவது அரசுகள்தான். அரசுகள், நலன்களின் அடிப்படையில்தான் முடிவுகளை எடுக்கும். அரசியலில் அறம் நீதி என்பவையெல்லாம் கிடையாது. நிலையான ராணுவப் பொருளாதார நலன்கள்தான் உண்டு. அது சார்ந்த முடிவுகள்தான் உண்டு. அதனால்தான் அமெரிக்க அறிஞராகிய நோஆம் சொம்ஸ்கி பின்வருமாறு சொன்னார். அரசியல் அறத்தைக் கடைப்பிடிக்கும் காலம் வரும்வரை இனப்படுகொலை என்ற சொல்லை அகராதியில் இருந்து எடுத்துவிடுவதே நல்லது என்று. தென்னாபிரிக்கா தொடுத்திருக்கும் வழக்கு இஸ்ரேலுக்கு மட்டும் எதிரானது அல்ல. இஸ்ரேலை ஆதரிக்கும் எல்லா மேற்கு நாடுகளுக்கும் எதிரானதுதான். அனைத்துலக நீதிமன்றத்தை ஸ்தாபிக்கும்பொழுது அதில் முக்கிய பங்களிப்பை நல்கியது அமெரிக்காவும் பிரித்தானியாவுந்தான். அதே நாடுகள் இப்பொழுது தென்னாபிரிக்காவின் நகர்வை ஆதரிக்கவில்லை. எந்த ஒரு மேற்கத்திய நாடும் இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் அனைத்துலக நீதிமன்றத்தில் தென்னாபிரிக்கா தொடுத்திருக்கும் வழக்கை ஆதரிக்கவில்லை. ஆனால் அதே மேற்கு நாடுகள்தான் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றன. இதை எப்படி விளங்கிக் கொள்வது? இஸ்ரேலுக்கு எதிராக வழக்குத் தொடுத்திருக்கும் தென்னாபிரிக்காவும் மியான்மருக்கு எதிராக வழக்குத் தொடுத்திருக்கும் காம்பியாவும் ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ளன. இந்த நாடுகள் எவையும் உக்ரைனில் ரஷ்யா முன்னெடுக்கும் ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து வழக்கு தொடுக்கவில்லை. அது மேற்கு நாடுகளுக்கு எதிரான ஆபிரிக்க நிலைப்பாடு. ரஷ்யா ஆபிரிக்க கண்டத்தை அதிகம் அரவணைத்து வைத்திருக்கின்றது. அங்குள்ள முன்னால் பிரெஞ்சுக் கொலனிகளில் நடக்கும் ராணுவச் சதிப் புரட்சிகளின் பின்னணியில் ரஷ்சியாவின் மறைகரங்கள் இருப்பதாக ஊகங்கள் உண்டு. அதேசமயம் காசாவில் நடப்பது இனப்படுகொலை என்று சொல்லாத மேக்கு நாடுகள், அதற்கு எதிராக வழக்கு தொடுத்திருக்கும் தென்னாபிரிக்காவை ஆதரிக்காத மேற்கு நாடுகள், ரஷ்ய-உக்ரைன் போரில் ரஷ்யா இனப்படுகொலை செய்வதாகக் குற்றம் சாட்டின. போர் தொடங்கிய குறுகிய காலத்துக்குள்ளேயே அமெரிக்கா அதை இனப்படுகொலை என்று சொன்னது. அது ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் நிலைப்பாடு. பேரரசுகள் மட்டுமல்ல சிறிய அரசுகளும்கூட அறம் சார்ந்து அரசியல் முடிவுகளை எடுப்பதில்லை. உதாரணமாக தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகிய பொழுது, பலஸ்தீனம் தமிழ் மக்களுடன் நிற்கவில்லை. பாலஸ்தீன அதிகார சபையானது மஹிந்த ராஜபக்சவின் நண்பனாகத்தான் காணப்படுகின்றது. 2009க்கு பின்னர் 2014ஆம் ஆண்டு பாலஸ்தீனம் மகிந்தவிற்கு அந்த நாட்டின் உயர் விருதாகிய “பலஸ்தீன நட்சத்திரம்” என்ற விருதை வழங்கியது. அங்குள்ள வீதி ஒன்றுக்கும் அவருடைய பெயரைச் சூட்டியது. அதாவது ஈழத் தமிழர்களால் இனப்படுகொலை தெரிந்தவர் என்று குற்றச்சாட்டப்படும் ஒருவருக்கு பலஸ்தீனம் நாட்டின் உயர் விருதை வழங்கியிருக்கிறது. இதை எப்படி விளங்கிக் கொள்வது? அப்படித்தான் கியூபாவும். ஒரு காலம் போராடும் இயக்கங்களுக்கு அது முன்மாதிரியாக இருந்தது. ஈழப் போராட்ட இயக்கங்கள் சில தமது பொறுப்பாளர்களுக்கு கஸ்ட்ரோ என்று பெயர் வைத்தன. ஆனால் 2009க்கு முன்னரும் பின்னரும் குறிப்பாக ஐநாவில் கியூபா யாருடைய பக்கம் நிற்கின்றது? ஐநா தீர்மானங்களின் போது கியூபா அரசாங்கத்திற்கு ஆதரவாகத் தான் வாக்களித்து வருகின்றது. இதை எப்படி விளங்கிக் கொள்வது? அதாவது மேற்கண்டவைகளைத் தொகுத்துப் பார்க்கும்போது தெளிவாக தெரிவது என்னவென்றால், சக்தி மிக்க நாடுகளோ அல்லது சிறிய நாடுகளோ எவையானாலும் அறத்தின் பாற்பட்டோ நீதியின் பாற்பட்டோ முடிவுகளை எடுப்பது குறைவு. பெருமளவுக்கு நிலையான அரசியல் நலன்களின் அடிப்படையில்தான் அவை முடிவுகளை எடுக்கின்றன. இப்படிப்பட்டதொரு குரூர உலகில் பலஸ்தீனர்களுக்கு அனைத்துலகை நீதிமன்றம் எப்படிப்பட்ட ஒரு நீதியை வழங்கும்? தென்னாபிரிக்காவின் நகர்வை, ஆபிரிக்கக் கண்டத்தில் தற்பொழுது மேலோங்கிக் காணப்படும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான உணர்வுகளின் பிரதிபலிப்பாகவும் விளங்கிக் கொள்ளலாம். எனினும் எல்லாவிதமான வாதப்பிரதிவாதங்களுக்கும் அப்பால் அது இனப்படுகொலைக்கு உள்ளாக்கி கொண்டிருக்கும் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவது. தாங்கள் தனித்துவிடப்படவில்லை என்ற உணர்வை அது அவர்களுக்கு கொடுக்கும். இந்த விடயத்தில் பலஸ்தீனர்கள் ஈழத் தமிழர்களை விடவும் பாக்கியசாலிகள் என்று கூறலாமா? ஏனெனில், இறுதிக்கட்டப் போரில் வன்னி கிழக்கில் தமிழ்மக்கள் சுற்றி வளைக்கப்பட்டிருந்தார்கள். யாரும் உதவிக்கு வரவில்லை. எந்த ஒரு நாடும் உத்தியோகபூர்வமாக அவர்களை ஆதரிக்கவில்லை. தென்னாபிரிக்கா ஆதரிப்பதாகக் கூறப்பட்டாலும் நடைமுறையில் எதுவும் நடக்கவில்லை. தனது சேவைக் காலத்தில் தான் கண்ட மிக மோசமான நரகம் அதுவென்று அப்பொழுது ஐ.சி.ஆர்.சியின் தென்னாசியாவுக்குப் பொறுப்பான அதிகாரி கூறினார். உதவிக்கு யாரும் வராத அந்த ஒடுங்கிய கடற்கரையில் தனித்து விடப்பட்டிருந்த தமிழ் மக்களுக்கு எதிராக உலகின் பெரும்பாலான நாடுகள் ஒன்றாக நின்றன. அல்லது ஈழத் தமிழர்களுக்கு எதிரான தரப்புக்களோடு நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டுச் சேர்ந்திருந்தன. ஐநா போரில் நேரடியாகத் தலையிடாமல் விட்டதன்மூலம் இனப்படுகொலையை மறைமுகமாக அங்கீகரித்தது. இந்தியாவும் சீனாவும் பிராந்தியத்தில் ஒன்றுக்கொன்று நட்பு நாடுகள் அல்ல. ஆனால் இரண்டு நாடுகளுமே ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஒரே கோட்டில் நின்றன. இந்தியாவும் பாகிஸ்தானும் பிராந்தியத்தில் எதிரிகள். ஆனால் ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஒரே கோட்டில் நின்றன. சீனாவும் அமெரிக்காவும் உலக அளவில் நடப்பு நாடுகள் அல்ல. ஆனால் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இரண்டும் ஒன்றாக நின்றன. உலகில் பிராந்திய மட்டத்திலும் உலகளாவிய மட்டத்திலும் தங்களுக்கு இடையே பகைவர்களாகக் காணப்படும் நாடுகள் ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஒன்றாக நின்றன. அப்பொழுது எந்த ஒரு நாடும் அதை இனப்படுகொலை என்று கூறவில்லை. இப்பொழுதும் எத்தனை நாடுகள் கூறுகின்றன? அனைத்துலக நீதியின் மீது நம்பிக்கையிழந்த பின்னரும்கூட கடந்த 15 ஆண்டுகளாக விடாமல் போராடும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வழக்குத் தொடுக்க இக்கொடிய உலகில் யாருண்டு? https://www.nillanthan.com/6487/
  11. தை பிறக்கும் வழி பிறக்குமா ? நிலாந்தன். adminJanuary 7, 2024 அண்மையில் கோண்டாவில் உப்புமடச் சந்தியில், ஒரு சமகால கருத்தரங்கு இடம்பெற்றது. தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் அக் கருத்தரங்கை ஒழுங்குபடுத்தியது. அதற்குத் தலைமை தாங்கிய ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் சொன்னார்… தனக்கு தெரிந்த பலர் ஒரு வேளை உணவை, குறிப்பாக காலை உணவைத் தவிர்ப்பதாக. காலை உணவைக் கட்டாயம் எடுக்க வேண்டும், இரவு உணவைத் தவிர்க்கலாம் என்று தான் ஆலோசனை கூறியபோது, அவர்கள் சொன்னார்களாம், காலை சாப்பிடாவிட்டால் அன்றைய அலுவல்களில் மூழ்கும்போது பசி தெரியாது. ஆனால் இரவு சாப்பிடாவிட்டால் பசி தெரியும்; நித்திரை வராது என்று. இதுதான் பெரும்பாலான கீழ் மத்தியதர வர்க்க குடும்பங்களின் நிலைமை. ஆண்டு இறுதியில் இதுதான் நிலைமை என்றால் தை பிறந்தாலும் வழி பிறக்குமா? சாதாரண மக்களுக்கு வழி பிறக்குமோ இல்லையோ,அரசியல்வாதிகள் அதிகாரத்தைச் சுவைப்பதற்கான புதிய வழிகளைத் தேடித் திறக்கத் தொடங்கிவிட்டார்கள். ரணில் விக்கிரமசிங்கவை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற வைப்பதற்காகப் புதிய கூட்டணி ஒன்றை நோக்கி ஒரு புதிய அலுவலகம் கடந்த முதலாம் தேதி ராஜகிரியவில் திறந்து வைக்கப்பட்டது. அதே நாளில், மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகிய ஷான் விஜயலால் டி சில்வா எதிரணியோடு அதாவது ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து கொண்டார். இவர் தென்மாகாண சபையின் முதலமைச்சராக இருந்தவர். அவர் எதிரணியில் இணைந்து கொண்டதன் மூலம் எதிரணி தானும் பலமடைவதான ஒரு தோற்றத்தைக் கட்டியெழுப்ப முயற்சிக்கின்றது. அதாவது ,புதிய ஆண்டு அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான தயாரிப்புகளோடு பிறந்திருக்கிறது என்று பொருள். மக்கள் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் இருக்கலாம். மரக்கறிகளின் விலை வாங்க முடியாத அளவுக்கு உயர்ந்து போகலாம். வரியானது மக்களை ஈவிரக்கமின்றிக் கசக்கிப்பிழியலாம். மோட்டார் சைக்கிள் ஒரு லக்சறிப் பொருளாக மாறலாம். ஆனால் அரசியல்வாதிகளின் அதிகாரப்பசி குறையப் போவதில்லை என்பதைத்தான் ஆண்டின் தொடக்கம் நமக்கு உணர்த்துகின்றது. இவ்வாறு தென்னிலங்கையில் ஒரு ஜனாதிபதி தேர்தலை நோக்கி பிரதான கட்சிகள் ஏற்கனவே உழைக்க தொடங்கி விட்டிருக்கும் ஒரு பின்னணியில், தமிழ்த்தரப்பு என்ன செய்து கொண்டிருக்கிறது? ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக முதலில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது குத்துவிளக்கு கூட்டணிதான். சில மாதங்களுக்கு முன் கூட்டணியின் கூட்டம் மன்னாரில் நடந்த பொழுது ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டது. ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்துவது என்று அக்கூட்டு முடிவெடுத்தது. அந்த முடிவை வலியுறுத்தி கூட்டுக்குள் அங்கம் வகிக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறார். சுரேஷ் அவ்வாறு கருத்து தெரிவித்த பின் அண்மையில் விக்னேஸ்வரன் அதற்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்திருந்தார். ஒரு தமிழ் பொது வேட்பாளராகத் தான் களமிறங்கத் தயார் என்றும் அவர் அறிவித்துவிட்டார். இவ்வாறு விக்னேஸ்வரன் அறிவித்த பின் கஜேந்திரக்குமார் அதற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்திருந்தார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேர்தலை பகிஷ்கரிக்கும் என்பது அக்கட்சியின் நிலைப்பாடாகும். அதே சமயம் தமிழரசுக் கட்சி அதன் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. அது தன் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் மினக்கெடுகின்றது. எனினும் சுமந்திரனுக்கு நெருக்கமான சாணக்கியன் தமிழ்ப்பொது வேட்பாளர் என்ற தெரிவுக்கும் பகிஷ்கரிப்புக்கும் எதிராகக் கருத்து தெரிவித்திருக்கிறார். தமிழரசுக் கட்சி யாராவது ஒரு சிங்கள வேட்ப்பாளரை நோக்கித் தமிழ் வாக்குகளைத் திருப்பும் நோக்கத்தோடிருந்தால், அக்கட்சி பொது வேட்பாளரை எதிர்க்கும். கடந்த 15 ஆண்டுகளில் நடந்த மூன்று ஜனாதிபதி தேர்தலின் போதும் ஒரு தமிழ்ப்பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலிமையாக முன்வைத்தது, தமிழ்மக்கள் பேரவையால் உருவாக்கப்பட்ட சுயாதீனக் குழுதான். கடைசியாக நடந்த ஜனாதிபதி தேர்தலையொட்டி உருவாக்கப்பட்ட அக்குழுவின் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. எனினும்,அக்குழு அந்த முடிவை நோக்கி கருத்துருவாக்க வேலைகளைச் செய்தது. இம்முறை குத்துவிளக்குக் கூட்டணி அந்த முடிவை எடுத்திருக்கின்றது. குத்துவிளக்கு கூட்டணி இந்தியாவுக்கு விசுவாசமான ஒரு கூட்டணியாகப் பார்க்கப்படுகின்றது. இந்தியாவுக்கு ஆதரவான ஒரு கூட்டு என்று கருதப்படும் குத்துவிளக்கு கூட்டணி தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற கருத்தை கையில் எடுத்ததனால் அது இந்தியாவின் வேலையோ என்ற சந்தேகம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஏற்பட்டிருக்கலாம். முதலில் ஒரு தமிழ் பொது வேட்பாளரை ஏன் நிறுத்த வேண்டும் என்று பார்ப்போம். ஒரு தமிழ் பொது வேட்பாளர் நிச்சயமாக வெல்லப் போவதில்லை. ஆனால் அவர் பிரதான சிங்கள வேட்பாளர்களின் வெற்றிகளை சவால்களுக்கு உட்படுத்துவார். எப்படியென்றால்,ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழ் கட்சிகள் கடுமையாக உழைத்தால்,தமிழ் வாக்குகள் பெருமளவுக்கு அவருக்குத்தான் விடும். அப்படி விழுந்தால்,பிரதான சிங்கள வேட்பாளர்களுக்கும் 50 வீதத்துக்கு மேலான வாக்குகள் கிடைக்காமல் போகக்கூடும். இம்முறை இரண்டுக்கு மேற்பட்ட சிங்கள வேட்ப்பாளர்கள் அரங்கில் காணப்படுகின்றார்கள். அதாவது சிங்கள வாக்குகளே சிதறும் ஒரு நிலமை. இதில் தமிழ் வாக்குகளின் கிடைக்கா விட்டால், எவருக்குமே முதற் சுற்று வாகுக்கு கணக்கெடுப்பில் வெற்றி கிடைக்காமல் போகலாம். அப்பொழுது இரண்டாவது சுற்று வாக்கு கணக்கெடுப்புக்கு போக வேண்டிவரும். அதில் தமிழ் மக்கள் யாருக்கு தமது இரண்டாவது விருப்பு வாக்கை வழங்குகிறார்களோ அவரே வெற்றி பெறுவார். அதாவது யார் ஜனாதிபதியாக வர வேண்டும் என்பதனை தமிழர்கள் தீர்மானிக்கக்கூடிய பேர வாய்ப்பைப் பரிசோதிக்கும் ஒரு முயற்சியே அது. பிரதான சிங்கள வேட்பாளர்களுக்கு தமிழ் வாக்குகள் கிடைக்காது என்றால், அவர்கள் தமிழ்த் தரப்போடு பேரம்பேச வருவார்கள். அப்பொழுது தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் ஒருவருக்கு தமிழ்மக்கள் தமது இரண்டாவது விருப்பு வாக்கை அளிக்கலாம். அதாவது தமிழ் வாக்குகளை ஒரு சிங்கள வேட்பாளருக்கு “பிளாங்க் செக்”காக வழங்குவதற்கு பதிலாக பேர வாய்ப்பாக அதைப் பயன்படுத்துவது. ஆனால் இதில் உள்ள பிரச்சினை என்னவென்றால் தமிழ் மக்களோடு வெளிப்படையான ஓர் உடன்பாட்டுக்கு வரும் சிங்கள வேட்பாளர் தென்னிலங்கையில் தோற்கடிக்கப்படும் ஆபத்து அதிகமுண்டு என்பதுதான். அதனால் எந்த ஒரு சிங்கள வேட்பாளரும் தமிழ் மக்களோடு பேரம்பேசத் தயங்குவார். ஆனால் அதுகூட தமிழ் மக்கள் வெளி உலகத்துக்கு ஒரு உண்மையைச் சொல்வதற்குரிய வாய்ப்பை உருவாக்கும். அது என்னவெனில், சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்கள் யாருமே இனப்பிரச்சினை தொடர்பில் தமிழ் மக்களுக்கு வெளிப்படையான வாக்குறுதிகளை வழங்கத் தயாரில்லை என்பதுதான். எனவே ஒரு தமிழ்ப்பொது வேட்பாளர் தமிழ் மக்களுக்கு உள்ள பேர வாய்ப்புகளை பரிசோதிக்கலாமோ இல்லையோ,தமிழ் மக்களின் மக்கள் ஆணையை புதுப்பிப்பதற்கு உதவுவார். அவர் தமிழ் மக்களின் உச்சபட்ச கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் வாக்குகளைக் கேட்பார். தேர்தல் என்று வந்தால் அது ஒரு ஜனநாயகக் கொண்டாட்டம். அங்கே கட்சிகளுக்கு புது ரத்தம் பாச்சப்படும். கட்சித் தொண்டர்கள் உற்சாகமாக இறங்கி வேலை செய்வார்கள். கிராமங்கள்தோறும் கட்சி அலுவலகங்கள் திறக்கப்படும். கிராம மட்டத்தில் கட்சி வலையமைப்புகள் பலப்படுத்தப்படும். ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி எல்லா கட்சிகளும் அவ்வாறு உழைக்கும் பொழுது, அது தமிழ் மக்களை ஆகக்கூடிய பட்சம் ஒரு தேசமாகத் திரட்டும். ஏற்கனவே கடந்த 15 ஆண்டுகளிலும் நடந்த மூன்று ஜனாதிபதித் தேர்தலில் போதும் தமிழ் மக்கள் ராஜபக்சங்களுக்கு எதிராகத் திரளாக வாக்களித்து இருக்கிறார்கள். அவ்வாறு ஒரு சிங்கள வேட்பாளருக்கு எதிராக விழும் வாக்குகளை தமிழ் மக்கள் ஆணைக்கான வாக்குகளாக மாற்றினால் என்ன? கஜேந்திரகுமார் கூறுகிறார்,ஒரு தமிழ்ப்பொது வேட்பாளர் இறுதியாக யாராவது ஒரு சிங்கள வேட்பாளரை ஆதரிப்பார் என்பதனால் அந்தத் தெரிவை தாம் ஏற்கவில்லை என்று. மேலும் ஒற்றை ஆட்சிக்குள் ஒரு தீர்வை ஏற்றுக் கொள்ளும் கட்சிகள் அவ்வாறு ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டுகிறார். ஆனால் இங்கு ஏற்கனவே பார்த்ததுபோல,பிரதான சிங்கள வேட்பாளரோடு பேரம் பேசக்கூடிய நிலைமைகள் குறைவாக இருக்குமென்றால்,அதை தமிழ் மக்களின் ஆகப்பிந்திய ஆணையைப் பெறுவதற்கான ஒரு மறைமுக வாக்கெடுப்பாக தமிழ்மக்கள் பயன்படுத்தலாம். தமது உச்சமான கோரிக்கைகளை முன்வைத்து அதற்கு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்பதனை வெளியுலகத்துக்கு எடுத்துக் கூறலாம். இந்த கோரிக்கையை முன்வைப்பது சுரேஷ் பிரேமச்சந்திரன் அல்லது குத்து விளக்கு கூட்டணி அல்லது விக்னேஸ்வரன் என்பதற்காக அதனை எதிர்க்கத் தேவையில்லை. அது தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டும் வாய்ப்புகளை அதிகப்படுத்தும் என்ற அடிப்படையிலாது அதைப் பரிசோதிக்கலாம். ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் ரணில்,சஜித் உட்பட எல்லா சிங்கள வேட்பாளர்களையும் சவால்களுக்கு உட்படுத்துவார். அவர்களை தமிழர்களை நோக்கி வரச்செய்வார். அல்லது அவர்கள் தமிழர்களுக்கு எதிரான வெளிப்படையான நிலைப்பாட்டை எடுக்கக்கூடிய நிலைமைகளை ஏற்படுத்துவார். அதாவது சிங்கள வேட்பாளர்களை அம்பலப்படுத்துவார். ஆனால் இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, அவர் தமிழ் மக்களின் ஆகப் பிந்திய மக்கள் ஆணையை வெளிக்கொண்டு வருவார். தமிழ் மக்களை ஐக்கியப்படுத்துவார். அந்த ஐக்கியத்துக்கு தகுதியானவர்கள் தலைமை தாங்கலாம். ஒரு தமிழ்ப்பொது வேட்பாளர் கட்டாயமாக விக்னேஸ்வரனாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. கிழக்கிலிருந்து ஒருவரைத் தெரிவு செய்யதால் அது மிகச்சிறப்பு. ஒரு பெண்ணாக இருந்தால் அதுவும் சிறப்பு. அவர் ஒரு குறியீடு. கட்சிகளாக,வடக்குக் கிழக்காக,சமயங்களாக,சாதிகளாக,ஒரே கட்சிக்குள் இருவேறு குழுக்களாக,முகநூல் குழுக்களாக,சிதறிக்கிடக்கும் ஒரு சமூகத்தை,ஒரு தேர்தலை நோக்கியாவது ஆகக்கூடிய பட்சம் ஒரு தேசமாகத் திரட்ட அவருக்கு வாய்ப்பளித்தால் என்ன ? https://globaltamilnews.net/2024/199465/
  12. 2024: வெற்றி ஆண்டா? தோல்வி ஆண்டா? நிலாந்தன். December 31, 2023 கடந்த 24ஆம் திகதி இரவு பதினோரு மணிக்கு அதாவது நத்தார் பிறப்புக்கு முன், மட்டக்களப்பில் ஒரு சோகமான சம்பவம் இடம்பெற்றது. 42 வயதான ஒரு குடும்பஸ்தர் கல்லடி பாலத்தில் இருந்து வாவிக்குள் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்தார். ஆனால் நீரில் மூழ்கத் தொடங்கியதும் சாகப் பயந்து பாலத்தின் தூண் ஒன்றைப் பிடித்துக் கொண்டு தத்தளித்திருக்கிறார். படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் அவரைக் காப்பாற்றினார்கள். போலீஸ் அவரை தற்கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்திருக்கிறது. அவர் ஒரு ஏழை மேசன். ஐந்து பிள்ளைகளின் தந்தை. கட்டிடப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதால், அவருக்கு தொழில் இல்லை. நத்தார் சீசனை முன்னிட்டு ஆடைகள் வாங்கக் காசு இல்லை. வீட்டில் மனைவி நச்சரித்திருக்கிறார். எனவே, வாழ்க்கை வெறுத்துப்போன அக்குடும்பத் தலைவர், இயேசு நாதர் பிறந்த நாள் எனது இறந்த நாளாக அமையட்டும் என்று கூறி பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயற்சித்திருக்கிறார். இயேசு பிறப்பை தனது இறப்பாக அறிவிக்கும் அளவுக்கு ஒரு ஏழை கிறிஸ்தவரை வறுமை தாக்கியிருக்கிறது. இதுதான் நாட்டில் ஆண்டு இறுதி நிலவரம். நாட்டில் நத்தார் மரத்தின் விலையை வைத்து நாட்டின் பொருளாதாரத்தை மதிப்பிடலாம். டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் ஒன்றரை அடி உயரமான ஒரு நாத்தார் மரம் கிட்டத்தட்ட 3500 ரூபாய்க்கு விற்கப்பட்டது. எனினும் ஒரு கிழமைக்கு பின் சுமார் 4 அடி உயரமான நத்தார் மரம் 6000 ரூபாய்க்கு வந்தது. ஆனால் முட்டை விலை குறையவில்லை. கூடியது. ஒரு மூட்டை 60ரூபாய். இம்முறை பெரும்பாலான எழைகளின் வீடுகளில் கேக் இல்லாத கிறிஸ்மஸ்தான். முட்டை விலை மட்டுமல்ல பச்சை மிளகாய், தக்காளி உள்ளிட்ட அனைத்து மரக்கறிகளின் விலைகளும் உயர்ந்து விட்டன. வழமையாக கிறிஸ்மஸ் சீசனில் மரக்கறி விலைகள் உயர்வதுண்டு. தைப் பிறப்போடு குறைவதுண்டு. ஆனாலும் இம்முறை விலை உயர்வு அசாதாரணமாகக் காணப்பட்டது. பச்சை மிளகாய் ஒரு கிலோ 1400 ரூபாயிலிருந்து 2000 ரூபாய்வரை போனது. வெங்காயம் தக்காளியின் விலைகளும் அதிகம். சிங்கள யூ டியூப்பர்கள் மரக்கறி விலை உயர்வைக் காட்ட சில வேடிக்கையான காணொளிகளை வெளியிட்டார்கள். அதில் ஒரு காணொளியில் ஒரு பச்சை மிளகாயை நூலில் கட்டி கறிக்குள் போடுகிறார்கள். கறி காய்சியதும் அதை எடுத்து மற்றொரு கறிக்குள் போடுகிறார்கள். வேறு ஒரு காணொளியில் ஐந்தாறு பச்சை மிளகாய்கள் ஒரு பக்கம் இன்னொரு பக்கம் ஒரு தக்காளிப் பழம் மட்டும். அதாவது ஒரு தக்காளி பழத்தின் பெறுமதிதான் ஐந்தாறு பச்சை மிளகாய்கள் என்று பொருள். இப்படித்தான் இம்முறை நாட்டில் ஆண்டிறுதி அமைந்தது. இந்த லட்சணத்தில் அடுத்த ஆண்டு நெல் உற்பத்தி பாதிக்கப்படலாம் என்று விவசாயிகள் எச்சரிக்கிறார்கள். நெற் பயிர்களைத் தாக்கும் வெள்ளைத் தத்தியை அழிப்பதற்கு விவசாயத் திணைக்களம் முயற்சிக்கவில்லை என்றும் அதனால் விளைச்சல் பாதிக்கப்படலாம் என்று விவசாயிகள் கூறுகிறார்கள். அதாவது பழைய ஆண்டு நல்ல செய்திகளோடு முடியவில்லை. புதிய ஆண்டும் நல்ல செய்திகளோடு பிறக்கவில்லை என்று பொருள். புதிய ஆண்டில், அரசாங்கம் வற் வரியை அதிகரிக்க உள்ளது. இருபது ஆண்டுகளில், ஆகப்பெரிய வரி அதிகரிப்பு இது. புதிய ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட அனைவரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிந்து வரிசெலுத்துனர் அடையாள இலக்கத்தை வைத்திருப்பது கட்டாயமாகும். அவ்வாறு பதிவு செய்யாதிருப்பது 50,000 ரூபாய்க்குக் கூடாத அபராதத்தை விதிக்கக்கூடிய தண்டனைக்குரிய குற்றம் என்று ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பரவி வருகிறது. புதிய ஆண்டு வரி அதிகரிப்பின் ஆண்டாக மட்டும் அமையப் போவதில்லை. அது ஒரு தேர்தல் ஆண்டாகவும் அமையப் போகின்றது என்பதுதான் இலங்கைத் தீவின் அரசியல் அவலம். ஆண்டின் தொடக்கத்தில் தமிழரசு கட்சிக்குள் தலைவர் யார் என்பதற்குத் தேர்தல் நடக்கும். ஆண்டின் இறுதியில் அடுத்த ஜனாதிபதி யார் என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல். ஒரு தேர்தலில் தொடங்கி மற்றொரு தேர்தலில் முடியப்போகும் ஆண்டு. நாடு இப்போதுள்ள நிலையில்; தமிழரசியல் இப்போதுள்ள நிலையில்; தமிழரசுக் கட்சிக்குள் ஒரு தேர்தல் அவசியமா? என்று ஒரு நண்பர் கேட்டார். கடந்த 15 ஆண்டுகளாக தமிழரசுக் கட்சி தமிழ்மக்களுக்கு எதைப் பெற்று தந்திருக்கின்றது? எதையுமே பெற்று தரவில்லை. அதற்கு அதன் தலைமைதான் காரணமா? ஒரு புதிய தலைமை கிடைத்துவிட்டால், தமிழரசுக் கட்சி அதிசயங்களையும் அற்புதங்களையும் நிகழ்த்திவிடும் என்று எதிர்பார்க்கலாமா ? என்றும் அவர் கேட்டார். உண்மைதான். தமிழரசுக் கட்சிக்குள் இப்பொழுது நடப்பவை யாவும் கடந்த 15 ஆண்டுகாலத் தோல்வியின் விளைவுகளே. அந்தத் தோல்விக்கு எல்லாருமே கூட்டுப்பொறுப்பு. இப்பொழுது தலைமைப் பதவிக்காகப் போட்டியிடும் அனைவருமே அதற்குக் கூட்டுப்பொறுப்பு. தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள மிகப்பெரிய கட்சி அது என்ற அடிப்படையில், அக்கட்சியின் தோல்விதான் தமிழரசியலின் தோல்வியும் எனலாம். அக்கட்சியின் எல்லா மூத்த தலைவர்களும் அதற்குப் பொறுப்புக்கூற வேண்டும். இவர்களில் யார் தெரிவு செய்யப்பட்டாலும் தமிழரசியலை வெற்றிப்பாதையில் செலுத்த முடியுமா? யார் தலைவராக வந்தாலும் அவர்கள் முன் இரண்டு பெரிய பொறுப்புக்கள் உண்டு. முதலாவது பொறுப்பு, கடந்த 15 ஆண்டுகளாக உடைந்து உடைந்து சிறுத்துக் கொண்டு வரும் தமிழ் ஐக்கியத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டும். கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் ஐக்கியம் உடைந்து போனதற்கு தமிழரசுக் கட்சி தான் பெரும் பொறுப்பு. அக்கட்சி ஏனைய கட்சிகளை அவமதித்தது, அல்லது ஏனைய கட்சிகளுக்குள்ளால் தேர்தல் கேட்டு வெற்றி பெற்றவர்களை உருவி எடுத்துத் தன்னுடன் சேர்த்துக் கொண்டது. இவ்வாறு, தான் ஒரு பெரிய கட்சி என்ற அடிப்படையில் மூத்த கட்சி என்று அடிப்படையில்,அதற்குரிய பக்குவத்தோடு பெருந்தன்மையோடு தமிழரசுக் கட்சி நடந்து கொள்ளவில்லை. தன்னுடைய பெயருக்குத்தான், தன்னுடைய சின்னதுக்குத்தான் தமிழ் மக்கள் வாக்களிக்கிறார்கள் என்று தமிழரசுக் கட்சி நம்பியது. தான் ஒரு தும்புத் தடியை தேர்தலில் முன்னிறுத்தினாலும் மக்கள் கண்ணை மூடிக்கொண்டு வாக்களிப்பார்கள் என்று தமிழரசுக் கட்சி திமிரோடு நம்பியது. அதனால் ஏனைய பங்காளிக் கட்சிகள் தன்னுடைய பலத்தில்தான் கூட்டமைப்புக்குள் தொங்கிக் கொண்டிருக்கின்றன என்றும் கருதியது. அதனால் பங்காளிக் கட்சிகளை அவமதித்தது; புறக்கணித்தது; ஒன்றாக இருக்க முடியாதபடி அவமானகரமான ஒரு சூழலை ஏற்படுத்தியது. விளைவாக, ஐக்கியம் உடைந்தது; கூட்டமைப்பு சிதைந்தது. இப்பொழுது தமிழரசு கட்சிக்குள்ளேயே உடைவுகள் சிதைவுகள் உருவாகிவிட்டன. எனவே ஒரு மூத்த பழம்பெரும் கட்சியின் தலைவராக வரப் போகும் ஒருவர் முதலில் உடைந்து சிதறிய ஐக்கியத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டும். அதன்பின், அடுத்த கட்டமாக தமிழ் மக்களின் அரசியல் இலக்கை வென்றெடுப்பதற்கான வழி வரைபடத்தை தயாரிக்க வேண்டும். எல்லாருமே சமஸ்டியைத்தான் கேட்கின்றார்கள். ஆனால் யாரிடமாவது சமஸ்ரியை அல்லது அதைவிட உயர்வான ஒரு தீர்வைப் பெறுவதற்கான வழிவரைபடம் உண்டா? தமிழரசுக் கட்சிக்கு ஆங்கிலப் பெயர் சமஸ்ரிக் கட்சி என்பதுதான். ஆனால் செல்வநாயகம் காலத்தில் இருந்து இன்றுவரையிலும் 73 ஆண்டுகளாக சமஸ்ரியைப் பெற முடியவில்லை. கட்சியின் புதிய தலைமை அதற்குரிய வழிவரைபடத்தை தெளிவாக முன் வைக்குமா ? அந்த வழிவரைபடத்தின் அடிப்படையில் தமிழரசியலை வழிநடத்தத் தேவையான தகைமை; கொள்ளளவு;தியாக சிந்தை;விசுவாசம் போன்றன தமிழரசுக் கட்சிக்குள் உள்ள எந்தத் தலைவரிடம் உண்டு? அப்படி ஒரு தலைவரிடம் எல்லா தகமைகளும் இல்லையென்றால், பல்வேறு வகைப்பட்ட ஆளுமைகள் இணைந்த இணைத்தலமையை உருவாக்கலாம். அதுதான் இப்போதிருக்கும் நடைமுறைச் சாத்தியமான ஒரே வழி. இது தொடர்பாக அரசியல் விமர்சகர் ஜோதிலிங்கம் ஏற்கனவே தமிழரசுக் கட்சிக்குக் கூட்டுத் தலைமை வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்கு அவர் தமிழர் விடுதலைக் கூட்டணியை உதாரணமாக காட்டியிருக்கிறார். தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் வேறு வேறு கட்சிகள் இணைந்தன. அதனால் அக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டுத் தலைமையை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் தமிழரசுக் கட்சி ஒரே கட்சி.அங்கே ஒருவர் மற்றவரை விட தன்னை மேலானவராக கருத முற்பட்டதன் விளைவாகத்தான் போட்டோ போட்டிகள் ஏற்பட்டன. எனவே ஒரே கட்சிக்குள் இணைத் தலைமைகளை ஏற்றுக் கொள்வது என்பது உயர்ந்த பட்ச ஜனநாயகம் ஆகும். 2009 க்குப்பின் தோன்றிய தமிழ் மக்கள் பேரவையும் இணைத் தலைமைகளைக் கொண்டிருந்தது என்பதனை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இணைத் தலைமையை ஏற்றுக்கொள்வது என்பது, தன்னிடம் இல்லாத தகுதி வேறு யாரிடமோ இருக்கிறது என்பதனை ஏற்றுக் கொள்வதுதான். சட்டப் புலமை,ஆங்கில அறிவு போன்ற தகுதிகள் மட்டும் தலைமை தாங்கப் போதுமானவை அல்ல. போராட்டப் பாரம்பரியமும் பலமான வாக்கு வங்கியும் மட்டும் தலைமை தாங்கப் போதுமானவையல்ல. 2009க்குப் பின்னரான தமிழ்த் தலைமைகளுக்கு அதைவிடக் கூடுதலாக,பண்புருமாற்றத்திற்குத் தேவையான தகமைகள் அதிகம் வேண்டும். பண்புருமாற்றம் என்பது கட்சித் தலைமையை கைப்பற்றுவதற்காக மற்றவர்களைச் சுதாகரித்து;தமிழ்த் தேசிய முகமூடி அணிந்து; நடிப்புக்கு உறவு பாராட்டுவது அல்ல. ஆயுதப் போராட்டம் ஒன்றுக்கு பின்னரான மிதவாத அரசியலுக்குத் தேவையான; பிராந்திய மற்றும் பூகோள நிலைமைகளைப் பொருத்தமாகக் கையாளத் தேவையான; புதிய தொழில்நுட்ப வளர்ச்சியை உள்வாங்கி;புதிய மாற்றங்களுக்கு தயாரான; தலைமைகளே தமிழ் மக்களுக்குத் தேவை. தமிழரசுக் கட்சி அதற்குத் தயாரா? 2023முடியும்போது காணாமல்போகச் செய்யப்பட்டவர்களுக்கான போராட்டம் 2500ஆவது நாளைக் கடந்திருக்கிறது. மயிலத்தமடுவில் மேச்சல் தரையை மீட்பதற்கான போராட்டம் நூறாவது நாளைக் கடந்திருக்கிறது. சமஷ்ரிக் கட்சி அதாவது தமிழரசுக் கட்சி சமஸ்ரியை அடையத் தவறிய 73ஆவது ஆண்டு கடந்திருக்கிறது. புதிய ஆண்டு தமிழரசுக் கட்சியின் 74ஆவது தோல்வியாண்டாக அமையுமா? அல்லது,கடந்த ஒரு நூற்றாண்டு காலத் தோல்வியில் இருந்து கற்றுக்கொண்ட ஆண்டாக அமையுமா? https://globaltamilnews.net/2023/199195/
  13. இமாலயப் பிரகடனம்: தமிழ் மக்களுக்கு யார் பொறுப்பு? நிலாந்தன்! December 17, 2023 நோர்வீஜிய மத குருவாகிய அருட் தந்தை. ஸ்டிக் உட்னெம்-Fr.Stig Utnem- இலங்கைத தீவின் நல்லிணக்க முயற்சிகளில் மதத்தலைவர்கள் பங்களிப்புச் செய்யலாம் என்று சிந்திப்பவர். அதற்காக உழைப்பவர். 2014இல் நான் நோர்வேக்குச் சென்றபொழுது அவரைச் சந்தித்தேன். இலங்கையில் திருச்சபைகளின் பங்களிப்போடு இன நல்லிணக்க முயற்சி ஒன்றினை முன்னெடுக்கவிருப்பதாக அவர் என்னிடம் சொன்னார். அதற்கு நான் சொன்னேன், நல்ல விஷயம். ஆனால் நல்லிணக்க முயற்சிகளை திருச்சபைகளில் இருந்து தொடங்குவதற்கு பதிலாக விகாரைகளில் இருந்து தொடங்குவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று. ஏனென்றால் யுத்தம் அங்கிருந்துதான் தொடங்குகின்றது. எனவே அங்கிருந்துதான் சமாதானமும் தொடங்க வேண்டும். மாறாக திருச்சபைகளில் இருந்து அதைத் தொடங்க முற்பட்டால் புலம்பெயர்ந்த தமிழர்களும் அவர்களுக்குச் சார்பான வெள்ளைக்கார நாடுகளும் கிறிஸ்தவ அமைப்புக்களுக்குடாக தமது யுத்த வெற்றியைத் தட்டிப்பறிக்க பார்க்கின்றனர் என்று சிங்கள பௌத்த அரசியல்வாதிகள் வியாக்கியானம் செய்வார்கள் என்று. கடந்த மாதம் 23-29ஆம் திகதி வரையும் இலங்கையிலிருந்து மதத் தலைவர்களின் குழு ஒன்று நோர்வேக்கு விஜயம் செய்தது. ஒஸ்லோ முருகன் ஆலயத்தில் கடந்த 24 ஆம் திகதி ஒரு மத நல்லிணக்க ஒன்றுகூடல் ஒழுங்கு செய்யப்பட்டது. அதில் உரையாற்றிய திருகோணமலை கத்தோலிக்க மறை மாவட்டத்தின் ஆயர் தன்னுடைய மறை மாவட்டத்தில், சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இரு வேறு சட்டங்கள் நடைமுறையில் உள்ளன என்ற தொனிப்பட கருத்து தெரிவித்துள்ளார். அதாவது திருக்கோணமலையில் சிங்கள பௌத்த மயமாக்கல் தொடர்பில் சட்டம் அப்படித்தான் பிரயோகிக்கப்படுகிறது என்று பொருள். மேற்படி மதத் தலைவர்கள் குழுவின் நோர்வேப் பயணத்திற்குரிய ஏற்பாடுகளின் பின்னணியிலும் அருட்தந்தை.ஸ்டிக் உட்னெம் இருந்திருக்கிறார். இலங்கைத்தீவில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்க முயற்சிகள் தொடர்பில் அவர் இப்பொழுது ஏறக்குறைய களைத்துப் போய்விட்டார் என்று அவரைத் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள். இப்படிப்பட்டதோர் மத அரசியல் பின்னணியில்தான் கடந்த வாரம் ஹிமாலய பிரகடனம் என்ற ஒரு பிரகடனம் வெளியிடப்பட்டிருக்கிறது. ஜி.ரி.எஃப் என்று அழைக்கப்படும் உலகத் தமிழர் பேரவையும், ”சிறந்த இலங்கைக்கான பௌத்த சங்கமும்” இணைந்து உருவாக்கியதே மேற்படி இமாலய பிரகடனம் ஆகும். கடந்த ஏப்ரல் மாதம் நேபாளத்துக்கு ஒரு தொகுதி பிக்குகளை அழைத்துச் சென்ற ஜி.ரி.எஃப்., அங்கு வைத்து அப்பிரகடனத்தைத் தயாரித்திருக்கின்றது. கிட்டத்தட்ட 9 மாதங்களின் பின் அதை இப்பொழுது வெளியிட்டிருக்கிறார்கள். கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் கண்டுபிடிக்கும் நோக்கத்தோடு பௌத்த குருமாரோடு இணைந்து ஒரு தமிழ்த் தரப்பு இவ்வாறு பிரகடனம் ஒன்றை வெளியிட்டிருப்பது இதுதான் முதல் தடவை. இலங்கை இனப்பிரச்சினைக்குத் தனி நாட்டைத் தவிர வேறு எந்த ஒரு தீர்வைப் பெறுவதாக இருந்தாலும், பௌத்த மகா சங்கத்தோடு உரையாடத்தான் வேண்டும். சமாதானம் ஆகட்டும், நல்லிணக்கமாகட்டும் எதுவும் பௌத்த விகாரைகளில் இருந்துதான் ஆரம்பிக்கப்பட வேண்டும். கடந்த ஒரு நூற்றாண்டு காலம் முழுவதிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளின் போது, அவற்றைத் தடுத்ததில் அல்லது குழப்பியதில் மகா சங்கத்துக்கு முக்கிய பங்கு உண்டு. இலங்கைத் தீவின் பௌத்தம், ஓர் அரச மதம், அரசியலில் தீர்மானிக்கும் சக்திகளாக காணப்படும் அரசியல்வாதிகள்; படைத் தரப்பு;சிங்கள பௌத்த ஊடகங்கள் என்பவற்றோடு பௌத்த மகாசங்கமும் ஒன்று. எனவே மகாசங்கத்தின் ஆசீர்வாதங்களின்றி இலங்கைத்தீவில் சமாதானத்தைக் கொண்டு வர முடியாது. ஆனால் கடந்த ஒரு நூற்றாண்டு காலப் பகுதிக்குள் தமிழ்த் தரப்பிலிருந்து மகா சங்கங்களை நோக்கிச் சென்றவர்கள் மிகக்குறைவு. விக்னேஸ்வரன் முதலமைச்சராகப் பதவியேற்றதும் மகாநாயக்கர்களைச் சந்திக்கச் சென்றார். அதில் ஒரு பீடம் அவரை மதித்து நடத்தியதாகவும் மற்றொரு பீடம் அவரை மதிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. அதன்பின் தமிழ் அரசியற் சமூகத்தில் இருந்து யாரும் மகாநாயக்கர்களோடு உரையாடவில்லை. அரசாங்கம் தமிழ்ப் பகுதிகளுக்குத் திட்டமிட்டு நியமிக்கும் தமிழ் ஆளுநர்கள் மகாநாயக்கர்களிடம் சென்று ஆசீர்வாதங்களைப் பெற்றார்கள். அதுபோல அண்மையில் கொழும்பில் பெரிய அளவில் முதலீடு செய்வதற்கு வந்த புலம் பெயர்ந்த தமிழ் முதலாளி ஒருவரும் தன் மனைவியோடு சென்று மகா சங்கத்தினரிடம் ஆசீர்வாதங்களைப் பெற்றிருந்தார். மேலும் இந்தியாவில் இருந்து வரும் அமைச்சர்களும் தூதுவர்களும் மகா சங்கத்தினரிடம் சென்று ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள். இப்படிப்பட்டதோர் பின்னணியில், மகா சங்கத்தின் ஆசிர்வாதத்தோடு ஒரு தீர்வு முயற்சியை ஜி.ரி.எஃப் தொடங்கியிருக்கிறது. மகாசங்கத்தின் ஆசீர்வாதம் கிடைத்திருப்பதால் அம்முயற்சிக்கு அதிக கவனிப்புக் கிடைத்திருக்கிறது. ஹிமாலயா பிரகடனம், இனப்பிரச்சினைக்கான தீர்வுக்குரிய மென்மையான வரையறைகளை கொண்டிருப்பதாக ஜி.ரி.எஃப்பின் தலைவர் சுரேன் சுரேந்திரன் கூறுகிறார். ஆம். அவை மென்மையான வரையறைகள்தான். ஆனால், அதை மிகச்சரியான வார்த்தைகளிற் சொன்னால், மகா சங்கத்தின் ஆசிர்வாதங்களைப் பெறுவதற்காகத் தமிழ் மக்களின் கோரிக்கைகள் அங்கே மென்மையாக்கப்பட்டிருக்கின்றன என்பதே உண்மை. மகாநாயக்கர்களை வணங்க வேண்டும்; மதிக்க வேண்டும். எப்பொழுது என்றால் புத்தபகவான் கூறியதுபோல அவர்கள் சகலவற்றையும் துறந்த சன்னியாசிகளாக இருக்கும்பொழுது அவர்களை வணங்கலாம். அது ஆன்மீகம். ஆனால் புத்தபகவான் வாழ்ந்து காட்டியதற்கு மாறாக மகாசங்கம் அதிகாரத்தின் ஒரு பகுதியாக இருக்கும் பொழுது, அந்தக் கட்டமைப்புடன் பேசப் போகும் தமிழர்கள் மண்டியிட முடியாது. ஏனெனில் அது அரசியல். தமிழ் மக்கள் தமது கோரிக்கைகளை நீர்த்துப் போகச்செய்து மகாசங்கத்தின் ஆசிர்வாதங்களைப் பெறத் தேவையில்லை. பதிலாக தமிழ்மக்கள் தங்களுடைய பேர பலத்தை அதிகப்படுத்திக் கொண்டு மகா சங்கத்தோடு பேசப் போகலாம். ஜி.ரி.எஃப் உடனான சந்திப்பின்போது அஸ்கிரிய பீடாதிபதி கூறியதாக ஒரு தகவலை சுரேன் சுரேந்திரன் தெரிவித்திருந்தார். யுத்த காலத்தில் தான் வன்னிக்கு வர விரும்பியதாக மகாநாயக்கர் கூறியுள்ளார். இருக்கலாம். அப்பொழுது தமிழ் மக்களிடம் பேர பலம் இருந்தது. அதனால் மகாநாயக்கர் வன்னிக்கு வர விரும்பியிருக்கலாம். இப்பொழுது தமிழ் மக்களின் பேர பலம் குறைந்து போய்விட்டது. அதனால்தான் தாயகத்துக்கு வெளியில் இருந்து தாயகத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் பிரகடனங்களை உருவாக்கும் ஒரு நிலை. ஜி.ரி.எஃப் புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தை முழுமையாகப் பிரதிநிதித்துவ படுத்தவில்லை. முதலில் அவர்கள் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மத்தியிலும் இது தொடர்பாக விவாதித்திருக்க வேண்டும். அதன்பின் தாயகத்தில் உள்ள தமிழ்க் கட்சிகள், செயற்பாட்டாளர்கள், குடிமக்கள் சமூகங்களோடு உரையாடியிருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் வெளிப்படையாக நடக்கவில்லை. யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இமாலய பிரகடனக் குழுவினரோடு வடமராட்சியைச் சேர்ந்த ஒரு முன்னாள் மாநகர சபை உறுப்பினர் காணப்பட்டார். இவர் சுமந்திரனுக்கு நெருக்கமானவர். ஆனால் யாழ்ப்பாணத்துக்கு வந்த பிரகடனக்குழு வெளிப்படையாக எந்த அரசியல்வாதியோடும் தன்னை நெருக்கமாகக் காட்டிக் கொள்ளவில்லை. ஜி.ரி.எஃப் பிரதிநிதிகளும் பிக்குகளும் நல்லை ஆதீனத்தில் சைவ சமயத் தலைவர்களைச் சந்தித்தபொழுது, அதில் பங்குபற்றிய சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு.திருமுருகன் ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்டினார். உங்களை எனக்குத் தெரியாது என்பதே அது. அதுதான் உண்மை. அதாவது தாயகத்தில் உள்ள தரப்புகளோடு ஜி.ரி.எஃப் உரையாடியிருக்கவில்லை. இதுபோன்ற முயற்சிகளை தாயகத்தை மையமாகக் கொண்டுதான் முன்னெடுக்க வேண்டும். தாயகத்துக்கு வெளியில் இருந்து அல்ல. அந்த அடிப்படையில் பார்த்தால், இது ஒரு தலைகீழ் முயற்சி. இது புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் ஒரு திரட்சியாக இல்லை என்பதைக் காட்டுகின்றது. அங்கேயும் தனி ஓட்டங்கள் பலமாக உள்ளதைக் காட்டுகின்றது. அதுமட்டுமல்ல, மேற்கு நாடுகளிடம் கடனுக்காகத் தங்கியிருக்கும் ஒரு ஜனாதிபதியை; ஐநாவிற்கு வீட்டு வேலைகள் செய்ய வேண்டிய ஒரு ஜனாதிபதியை; அந்த வீட்டு வேலைகளில் ஒன்று ஆகிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவை உருவாக்க முயற்சிக்கும் ஒரு ஜனாதிபதியை ; அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் கூடிய ஒரு ஜனாதிபதியை; பாதுகாப்பதுதான் இந்த நகர்வின் உள்நோக்கமா என்ற சந்தேகங்களை அதிகப்படுத்துகின்றது. இந்த இடத்தில் தாயகத்தில் உள்ள கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் குடிமக்கள் சமூகங்களும் ஒரு விடயத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். தாயகத்தில் பலமான ஒரு அரசியல் இயக்கம் அல்லது கட்சிகளின் கூட்டு இல்லாத வெற்றிடந்தான் இதற்கெல்லாம் காரணம். தாயகத்தில் பலமான ஒரு மக்கள் இயக்கம் அல்லது மக்கள் அதிகாரம் இருந்திருந்தால் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் தாயகத்தை நீக்கிவிட்டு இதுபோன்ற செயற்பாடுகளில் ஈடுபட முடியாது. அல்லது தாயகத்தில் உள்ள சில அரசியல்வாதிகளின் மறைமுக அனுசரணையோடு இதை முன்னெடுத்திருக்க முடியாது. தாயகத்தில் தமிழ்மக்கள் ஒரு பலமான பேரம் பேசும் சக்தியாக இல்லை. அதனால்தான் தமிழ்மக்களின் தலைவிதியை பெருமளவுக்கு வெளிச் சக்திகளே தீர்மானிக்க முயற்சிக்கின்றன. ஜெனிவாவில் தீர்மானங்களை நிறைவேற்றுகிறார்கள். அல்லது,துவாரகா வருகிறார் என்று படங்காட்டுகிறார்கள். அல்லது தமிழ் மக்களுக்குத் தெரியாமல் ஒரு பிரகடனத்தைத் தயாரித்துவிட்டு, அதைக் கொழும்பில் வைத்து வெளியிடுகிறார்கள். தமிழ் மக்களுக்கு யார் பொறுப்பு? https://globaltamilnews.net/2023/198697/
  14. தமிழரசுக் கட்சி உடையுமா? - நிலாந்தன் தமிழரசுக் கட்சியின் தலைவர் யார் என்பதை தெரிவு செய்வதற்கு வரும் ஜனவரி மாதம் தேர்தல் நடக்கவிருக்கிறது. தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பெரிய கட்சி அது. அக்கட்சித் தலைவரை இதுவரை காலமும் தேர்தல் இன்றி ஏகமனதாக தெரிவு செய்து வந்தார்கள். அதாவது போட்டிக்கு ஆள் இருக்கவில்லை. ஆனால் இம்முறை போட்டி ஏற்பட்டிருக்கிறது. இப்போட்டிக்குக் காரணம் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் அந்த பதவியை அடைய விரும்புவதுதான். கடந்த 14 ஆண்டுகளாக தமிழரசுக் கட்சியின் பட்டத்து இளவரசர் போல சுமந்திரனே தோன்றினார். அதை நோக்கி அவர் தன்னை வளர்த்துக் கொண்டார். உள்ளூராட்சி சபை, மாகாண சபை போன்ற எல்லா மட்டங்களிலும் அவர் தன்னுடைய ஆதரவுத் தளத்தைப் பெருக்கிக் கொண்டார். அதற்கு முது தலைவராக இருந்த சம்பந்தரின் ஆசிர்வாதமும் இருந்தது. அதாவது பல ஆண்டுகளாகத் தலைமைப் பதவியை இலக்கு வைத்து திட்டமிட்டு உழைத்தவர் சுமந்திரன். அவரிடமிருந்த மொழிப்புலமை, சட்டப் புலமை, நிதிப்பலம் போன்றவை காரணமாக அவர் திட்டமிட்டுத் தன்னுடைய நிலையை பலப்படுத்தி வந்தார். சிறீதரன் அவருக்கு சவாலாக எழாதவரை அவர்தான் ஏகமனதாக தெரிவு செய்யப்பட வேண்டிய ஒரு தலைவர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது சிறீதரனும் அவரும் இணைந்து செயல்பட்டார்கள். சிறீதரன் சுமந்திரனை அன்ரன் பாலசிங்கம் என்றும் அழைத்தார். அது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. கட்சிக்குள் சுமந்திரனின் எழுச்சி என்பது கடந்த 14 ஆண்டுகளிலும் படிப்படியாக திட்டமிட்டு கட்டியெழுப்பப்பட்ட ஒன்று. சம்பந்தர் அதைத் தொடங்கி வைத்தார். கட்சியை தீவிரவாத நீக்கம் செய்யவேண்டும், சிங்கள மக்களின் நன்மதிப்பை வென்றெடுக்க வேண்டும் என்றெல்லாம் சிந்தித்து சம்பந்தர் உள்ளே கொண்டு வந்தவர்தான் சுமந்திரன். ஆயுதப் போராட்டமானது சிங்கள மக்களைப் பகை நிலைக்குத் தள்ளி விட்டது என்று சம்பந்தர் கருதினார். ஒரு தீர்வை பெறுவதாக இருந்தால் சிங்கள மக்களின் ஒப்புதல் அவசியம் என்றும் அவர் நம்பினார். எனவே சிங்கள மக்களின் மனங்களை வென்றெடுப்பதற்கு கொழும்பை மையமாகக் கொண்ட மொழியாளுமை கொண்ட சுமந்திரனைப் போன்றவர்கள் விக்னேஸ்வரனைப் போன்றவர்கள் அவசியம் என்றும் அவர் நம்பினார். எனவே சுமந்திரன், விக்னேஸ்வரன் போன்றவர்களை சம்பந்தர் கட்சிக்குள் இறக்கியமை என்பது தற்செயலானது அல்ல. அவரிடம் அதற்கென்று தெளிவான ஒரு வழிவரைபடம் இருந்தது. அதன்படியே காரியங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதனால்தான் சுமந்திரன் பட்டத்து இளவரசராக மேல் எழுந்தார். ஆனால் சம்பந்தரின் வழி தோற்றுவிட்டது. அவர் எதிர்பார்த்ததுபோல ஒரு தீர்வைப் பெற முடியவில்லை. அதுமட்டுமல்ல, அவர் உள்ளே இறக்கிய விக்னேஸ்வரன் அவருக்கு எதிராகத் திரும்பினார். அதன்பின் இறக்கப்பட்ட குகதாசன் எதிராகத் திரும்பி விட்டார். சுமந்திரன் சாணக்கியர் கூறியது போல “நண்டாக” மாறிவிட்டார். “இளவரசர்கள் நண்டுகளைப் போன்றவர்கள். அவர்கள் தகப்பனைத் தின்னிகள்” என்று சாணக்கியர் கூறுவார். மொத்தத்தில் சம்பந்தர் ஒரு தோல்வியுற்ற தலைவராக ஓய்வு பெறப் போகின்றாரா?. ஆனால் அவர் தமிழ் அரசியலைச் சீரழித்து விட்டார். கடந்த 14 ஆண்டுகளில் அவரால் உருப்படியான ஒரு தீர்வை பெற்றுத்தர முடியவில்லை. கூட்டமைப்பு என்ற ஐக்கிய கட்டமைப்பையும் பாதுகாக்க முடியவில்லை. அவருடைய வாரிசுகளே அவரைத் தூக்கி எறியும் ஒரு நிலை. அவர் கடந்த 14 ஆண்டுகளாக திட்டமிட்டு முன்னெடுத்த அரசியல் வழியின் விளைவாக அவருடைய சொந்தக் கட்சிக்குள்ளேயே சிதைவுகள் தொடங்கிவிட்டன. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிறீதரன் சுமந்திரனின் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொண்டிருந்தார். அதனால்தான் சுமந்திரனை அன்ரன் பாலசிங்கம் என்றும் அழைத்தார். ஆயின் இப்பொழுது சிறீதரனுக்கும் சுமந்திரனுக்கும் இடையே ஏற்பட்டிருப்பது தனிப்பட்ட முரண்பாடா?அல்லது,கொள்கை முரண்பாடா?கூட்டமைப்புத் தேய்ந்து தமிழரசுக் கட்சியாகியதற்கு சுமந்திரனையே பலரும் குற்றஞ்சாட்டுவதுண்டு. சிறீதரனின் செல்வாக்கு அடித்தளமாக காணப்படும் கிளிநொச்சிக்குள் சுமந்திரன் தனக்கு ஆதரவான ஒரு சிறு அணியை உருவாக்கி வைத்திருக்கிறார். ஏற்கனவே சிறீதரனோடு இருந்தவர்கள் அவர்கள். சிறீதரனின் கோட்டைக்குள் சுமந்திரன் ஊடுருவ முற்பட்டமையும், முரண்பாடுகள் தீவிரமடைய ஒரு காரணம். முதலில் இருவருக்கும் இடையிலான அடிப்படை வேறுபாடுகளை பார்க்கலாம். சுமந்திரன் புரட்டஸ்தாந்து பாரம்பரியத்தில் வந்தவர். கொழும்புமைய வாழ்க்கைக்கு அதிகம் பழக்கப்பட்டவர். கொழும்புமைய உறவுகளைக் கொண்டவர். ஒரு தமிழ் மக்களின் பிரதிநிதியாக கொழும்பில் தன் செல்வாக்கை மேலும் பலப்படுத்திக் கொண்டவர். யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட ஓர் ஊடக முதலாளி ஒருமுறை சொன்னார் “தமிழ் மக்களின் வாக்குகளால் அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக வருகிறார். அதேசமயம் தென்னிலங்கையில் அவர் அரசியல் உயர் குழாம், படைத்துறை உயர் குழாம், புத்திஜீவிகள், ஊடகங்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராக வளர்ந்திருக்கிறார். தென்னிலங்கை அரசியலில் அதிகம் செல்வாக்கு மிக்க ஒரு தமிழ் அரசியல்வாதி அவர்தான். தமிழ் மக்களின் வாக்குகளால் அவர் கொழும்பில் ஒரு பிரமுகராக வலம் வருகிறார்” என்று. தனது மொழிப்புலமை, வாழ்க்கைப் பின்னணி காரணமாக சுமந்திரன் தென்னிலங்கையில் மட்டுமல்ல, உலக அளவில் ராஜதந்திரிகள் மத்தியிலும் ராஜதந்திர வட்டாரங்களிலும் அதிகம் தெரியவந்த ஒருவராகக் காணப்படுகிறார். இப்பொழுது சிறீதரனைப் பார்க்கலாம். அவருடைய வேர் தீவுகளில் இருக்கிறது. அவர் தன்னைப் பலப்படுத்திக்கொண்டது கிளிநொச்சியில். போராட்டப் பாரம்பரியத்தில் வந்தவர். அதிகம் உள்ளூர் பண்புடையவர். உள்ளூர் உணர்வுகளை அதிகம் பிரதிபலிப்பவர். தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னரான ஒரு காலகட்டத்தில் போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர் என்ற அடிப்படையில் அவருடைய பாரம்பரியம் அவருடைய வாழ்க்கைமுறை போன்றன சுமந்திரனிடமிருந்து வேறுபாடானவை. இந்த வேறுபாடுகளை சிறீதரனை ஆதரிப்பவர்கள் கொள்கை வேறுபாடுகளாக வியாக்கியானம் செய்கிறார்கள். சுமந்திரனின் அணுகுமுறை அதிகம் மிதவாதத் தன்மைமிக்கது இணங்கிச் செல்லும் தன்மை மிக்கது. அதனை அவருடைய கொழும்புமைய நிலையான நலன்கள் பெருமளவுக்குத் தீர்மானிக்கின்றன. ஆனால் சிறிதரனின் அணுகுமுறை அதிகம் எதிர்ப்புத்தன்மை மிக்கது. ஒப்பீட்டளவில் சுமந்திரனை விடத் தீவிரமானது. எதுவாயினும் ஒரு தேர்தல் நடக்குமாக இருந்தால், அதாவது தேர்தலை தவிர்ப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்றால், தேர்தலில் இருவருக்கும் இடையிலான முரண்பாடு கொள்கை முரண்பாடாகவே காட்டப்படும். சிலசமயம் அது பிரதேச வாதமாகவோ அல்லது மத வாதமாகவோ மாறக்கூடிய ஆபத்துகளும் உண்டு. அதை ஒரு கொள்கை வேறுபாடாக காட்டுவது சிறீதரனுக்கு ஒப்பீட்டளவில் பாதுகாப்பாக இருக்கும். அனுகூலமாகவும் இருக்கும். தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுக்கும் கொழும்பு மைய தமிழ் நிலைப்பாட்டுக்கும் இடையிலான ஒரு மோதலாக அதை உருவகித்தால் தனக்கு அதிகரித்த ஆதரவு கிடைக்கலாம் என்று அவர் நம்பக்கூடும். அதாவது கொள்கை அடிப்படையில் தன் பக்கம் பலமாக உள்ளது என்று அவர் நம்பக்கூடும். ஆனால், கடந்த 14 ஆண்டுகளிலும் அப்படியெல்லாம் கொள்கை வழியில் கட்சிகள் கட்டியெழுப்பப்பட்டனவா? தமிழ்மக்கள் கொள்கைகளுக்கு வாக்களிக்கிறார்கள் என்பது ஒரு “டெம்ப்லட்” வகை வசனமாக மாறி வருகிறதா? ஏனெனில் தமிழ் அரசியல்வாதிகள் தமது விசுவாசிகள் கூட்டத்தை கொள்கை அடிப்படையில் கட்டியெழுப்பியதை விட அதிகமாக எதிர்கால நலன்களின் அடிப்படையில்தான் கட்டியெழுப்பி வைத்திருக்கிறார்கள். எந்த நாடாளுமன்ற உறுப்பினரோடு நின்றால் தனக்கு உள்ளூராட்சி சபையில் ஆசனம் கிடைக்கும்; அல்லது மாகாண சபையில் ஆசனம் கிடைக்கும்; அல்லது நாடாளுமன்றத்தில் ஆசனம் கிடைக்கும் என்று கணக்குப் பார்த்தே பெரும்பாலான தொண்டர்கள் தலைவர்களைச் சூழ்ந்து காணப்படுகிறார்கள். அதாவது தேர்தல்மைய நோக்கு நிலையில் இருந்து சிந்தித்தே பெரும்பாலான கட்சி வலைப்பின்னல்கள் கட்டியெழுப்பப்பட்டுள்ளன. யாரோடு நின்றால் கட்சிக்குள் தங்களுடைய அடுத்தடுத்த கட்டப் பதவி உயர்வுகளைப் பாதுகாக்கலாம் என்றுதான் பெரும்பாலான கட்சித் தொண்டர்கள் சிந்திக்கிறார்கள். கொள்கைகளால் உருகிப் பிணைந்த ஒரு கட்டமைப்பாக கட்சி இருந்திருந்தால் கட்சிக்குள் உடைவு வரும்பொழுது அதை நாகரிகமாக கடந்து போக தெரிந்திருக்கும். சமூக வலைத்தளங்களில் நிகழும் மோதல்களில் தேசத் திரட்சியைப் பாதுகாக்கும் குறைந்தபட்ச அரசியல் நாகரீகமாவது பேணப்பட்டு இருந்திருக்கும். ஆனால் அதைக் காணவில்லை. இது தமிழரசு கட்சிக்குள் மட்டும் நடக்கவில்லை. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்குள்ளும் நடந்தது. மணிவண்ணன் பிரிந்தபோது அதைக் காண முடிந்தது. நேற்றைய தோழன் இன்றைய துரோகி. இவ்வாறு முன்னாள் தோழர்களை இந்நாள் துரோகிகளாக்கும் அரசியல் பண்பாடு புதியது அல்ல. இது தமிழ் ஆயுத அரசியலில் இருந்து மிதவாத அரசியல் வரை உண்டு. ஏற்கனவே பல தசாப்தங்களுக்கு முன்பு தமிழரசுக் கட்சிக்கும் தமிழ் கொங்ரசுக்கும் இடையே மோதல்களின்போது, இரு கட்சி ஆதரவாளர்களும் மல முட்டிகளை பயன்படுத்துவார்கள். அதாவது மண் முட்டிகளுக்குள் மலத்தை நிரப்பிக் கொண்டு வந்து எதிராளியின் வீட்டு முற்றத்தில் உடைத்து விட்டுப் போவார்கள். அதே மலமுட்டிப் பாரம்பரியம் இப்பொழுது சமூக வலைத்தளங்களுக்கும் வந்துவிட்டது. முன்பு கட்சிகளுக்கு இடையே அது இருந்தது. இப்பொழுது கட்சிகளுக்குள்ளேயே வந்துவிட்டது. அது தேசத் திரட்சியைப் பாதுகாக்கும் ஒர் அரசியல் பண்பாடு அல்ல. கொள்கைப் பற்றுறுதி இருந்தால் அப்படியெல்லாம் பொது வெளியில் விமர்சனங்கள் வராது. தமிழ்க் கட்சிகளின் விசுவாசக் கட்டமைப்புக்கள் பெருமளவுக்கு கொள்கையை விடவும் எதிர்காலப் பதவி உயர்வுகளை மையமாகக் கொண்டு வளர்த்தெடுக்கப்பட்டவைதான். இப்படிப்பட்டதோர் அரசியற் சூழலில் தமிழரசுக் கட்சிக்குள், தலைவருக்கான ஒரு தேர்தல் நடந்தால், அது தமிழரசியலின் ஜனநாயகச் செழிப்பை நிரூபிக்குமா? அல்லது தேசத் திரட்சியை உடைக்குமா? தேர்தலில் யார் வென்றாலும் குறிப்பாகக் கிளிநொச்சியில் தமிழரசுக்கட்சிக்குள் உடைவு ஏற்படுமா? https://www.nillanthan.com/6411/
  15. மீட்பருக்காகக் காத்திருப்பது - நிலாந்தன் “சிறிய,சிந்தனைத்திறன் மிக்க,அர்ப்பணிப்பு மிக்க பிரஜைகள் உலகை மாற்றமுடியும் என்பதைஎப்பொழுதுமே சந்தேகிக்கக்கூடாது. மெய்யாகவே, அது ஒன்றுதான் உலகில் எப்பொழுதும் நடந்திருக்கிறது” – மார்கரட் மீட் கடந்த புதன்கிழமை,நொவம்பர் 29ஆம் திகதி,கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் உள்ள “ஆதாரம்” மண்டபத்தில் நடந்த ஒர் நிகழ்வில், ”கிளிநொச்சி உளநல வலையமைப்பு” என்ற ஓர் அமைப்புத் தொடங்கப்பட்டது. அந்நிகழ்வில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த துறைசார் மருத்துவர்களும் இக்கட்டுரை ஆசிரியரும் உரையாற்றினார்கள் அம்மாவட்டத்துக்குரிய உளநல ஒருங்கிணைப்பு மருத்துவரான ஜெயராஜ் நிகழ்வுக்கு தலைமை தாங்கினார். தனது தலைமை உரையில் அவர் ஆயுத மோதல்களுக்குப் பின்னரான கிளிநொச்சி மாவட்டத்தின் உளவியல் நெருக்கடிகள் குறித்துப் பேசினார். பேச்சின் ஒரு கட்டத்தில் அவர் சொன்னார் “நான் களைத்து விட்டேன். அதனால் மேற்படிப்புக்காக சற்று ஓய்வெடுக்கப் போகிறேன்” என்று. உண்மை. ஆயுத மோதல்களுக்குப் பின்னரான தமிழ்ச்சமூகத்தின் அசாதாரணமான கூட்டு உளவியலைக் கையாள்வதற்குத் தேவையான அளவு மனநிலை மருத்துவநிபுணர்கள் இல்லை. இருக்கின்ற கொஞ்சம் மருத்துவர்களிடமே எல்லாச் சுமைகளும் சுமத்தப்படுகின்றன. கடைசிக்கட்டப் போரில் அதிகம் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கு நிரந்தர மனநல மருத்துவ நிபுணர்கள் இப்பொழுது இல்லை. யாழ்ப்பாணத்தில் மூன்று மருத்துவ நிபுணர்கள் உண்டு. கிளிநொச்சி, முல்லைத்தீவு இரண்டையும் ஒரு மருத்துவ நிபுணர் தற்காலிகமாக பார்க்கிறார். வவுனியாவிலும் அதுதான் நிலைமை. 2009க்குப் பின், பாதிக்கப்பட்ட தமிழ் மாவட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மனநிலை மருத்துவர் நிபுணர்கள் பொறுப்பாக நியமிக்கப்பட்டார்கள். எனினும் போரின் உளவியல் விளைவுகளைக் கையாள்வது என்ற அடிப்படையில் தமிழ் மாவட்டங்களை ஒருங்கிணைத்த ஒரு மனநல மருத்துவக் கட்டமைப்பு உருவாக்கப்படவில்லை. அதே சமயம், 2009க்கு பின்னரான தமிழ்ச்சமூகத்தின் கூட்டு உளவியல் நெருக்கடிகளைக் கையாள்வதற்கு தனியாக மனநல மருத்துவர்களால் மட்டும் முடியாது. ஆஸ்பத்திரிகளால் மட்டும் முடியாது. அது ஒரு கூட்டுப் பிரச்சினை. அது ஒரு சமூகத்தின் கூட்டு உளவியல் சம்பந்தப்பட்ட விடயம். மருத்துவர்களோடு அரசியல்வாதிகள்; அரசியல் செயற்பாட்டாளர்கள்; சமூகத் தலைவர்கள்; சமூகப் பெரியார்கள்; மதத் தலைவர்கள்; கருத்துருவாக்கிகள்; அரச சார்பற்ற நிறுவனங்கள் முதலாக பல்வேறு வகைப்பட்ட தரப்பினரும் இணைந்து கூட்டாகச் செயல்பட வேண்டும். ஒரு கூட்டுச் சிகிச்சையாக, கூட்டுக் குணப்படுத்தலாக அமையவல்ல அரசியல், சமூகப்பொருளாதாரா வழி வரைபடம் ஒன்று வேண்டும். ஆனால் அவ்வாறான கூட்டச்செயற்பாடு இல்லாத வெற்றிடத்தில் மருத்துவர்களின் தலையில் மொத்தச் சுமையும் சுமத்தப்படுகிறது. . வயதால் மிக இளைய தமிழ் நகரங்களில் ஒன்று கிளிநொச்சி. ஒரு குடியேற்ற நகரம் என்ற அடிப்படையில் வயதால் இளைய ஒரு நடுத்தர வர்க்கத்தை கொண்டிருக்கிறது. இரணைமடுப் பெருங்குளத்தை மையமாகக் கொண்ட குடியேற்றங்களின் மூலம் கட்டியெழுப்பப்பட்ட ஒரு நகரம். ஆயுத மோதல்களுக்கு முந்திய காலகட்டத்தில் அந்நகரத்தைக் கட்டியெழுப்பியவர்களில் ஆனந்தசங்கரி குறிப்பிடத்தக்கவர். அதுபோல ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் எல்லா ஆயுதப் போராட்ட இயக்கங்களும் அதைக் கட்டியெழுப்பின. குறிப்பாக மூன்றாங்கட்ட ஈழப்போரின் விளைவாக கிளிநொச்சி சமாதானத்தின் தலைநகரமாக மேலெழுந்தது. அது சமாதானத்தின் காட்சி அறையாகவும் பிரகாசித்தது. ஆனால் நாலாங்கட்ட ஈழப்போர் வெடித்த போது அது ஒரு பேய் நகரமாக மாறியது. ஏனைய தமிழ் நகரங்களோடு ஒப்பிடுகையில் அதிக சேதமடைந்த ஒரு நகரமும் அது. ஆயுத மோதல்களுக்குப் பின்னரான கூட்டுக்காயங்கள்; கூட்டு மனவடுக்கள்; கூட்டு அவமானங்கள்… போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு நகரம். கூட்டுத் தண்டனைக்கு உள்ளாகிய ஒரு நகரம். அந்த நகரத்தை, மாவட்டத்தை 2009க்குப்பின் சிறீதரனும் சந்திரகுமாரும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியில் உள்ள அமைப்புகளும் தனிநபர்களும் கட்டியெழுப்பினார்கள். சிறீதரனும் சந்திரகுமாரும் இருவேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தவர்கள். ஒருவர் உரிமை மைய அரசியல். மற்றவர் அபிவிருத்தி மைய அரசியல். இந்த இரண்டு அரசியல்வாதிகளுக்கும் இடையிலான அரசியல் முரண்பாடு கிளிநொச்சியின் 2009க்குப் பின்னரான அரசியற் சூழலை பெரிதும் தீர்மானித்தது. அடுத்த ஜனவரி மாதம் தமிழரசுக் கட்சியின் தலைமையைத் தீர்மானிப்பதற்கான ஒரு தேர்தல் நடக்கக்கூடும். அப்படி நடந்தால், சிறீதரன் ஒரு போட்டியாளர். ஆயுத மோதல்களுக்கு பின்னரான தமிழ் அரசியலில் கிளிநொச்சிக்குரிய முக்கியத்துவத்தை இது காட்டுகின்றது. கிளிநொச்சியும் உட்பட, போரால் அதிகம் பாதிக்கப்பட்ட தமிழ் மாவட்டங்களின் மீது அதிகரித்த கவனக்குவிப்பு இருந்திருக்க வேண்டும். அந்த மாவட்டங்களைக் கட்டியெழுப்புவதற்கான கூட்டுச்சிகிச்சையாக அமையவல்ல கூட்டுச் சமூக, அரசியல், பொருளாதாரத் திட்டங்களை வகுத்திருந்திருக்க வேண்டும். வடமாகாண சபை உருவாக்கப்பட்டபோது அதைக் குறித்து மேலும் ஆழமாகச் சிந்தித்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. ஆயுத மோதல்களுக்குப் பின்னரான கடந்த 14 ஆண்டுகளிலும் தமிழ்மக்கள் அரசியல் ரீதியாக; பொருளாதார ரீதியாக; உளவியல் ரீதியாக; முழுமையாகக் குடியமராத (unsettled) ஒரு நிலைமைதான் காணப்படுகின்றது. சமூகத்தின் பெரும் பகுதி இப்பொழுதும் கொந்தளிப்பான ஒர் உளவியல் சூழலுக்குள்தான் காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு மூத்த மனநல மருத்துவர் சிவதாஸ் கூறுவதுபோல, சமூகம் இப்பொழுதும் தப்பிப்பிழைக்கும் வழியைத்தான் தேடுகின்றது. Survival mode. 2009க்குப் பின்னரான புனர்வாழ்வு பெற்ற போராளிகள்; உறுப்புகளை இழந்த போராளிகள்; போர் விதவைகள்; முதியோர்; போர் அனாதைகள்; மாவீரர் குடும்பங்கள் உள்ளிட்ட பல தரப்பட்டவர்களுக்கும் கூட்டுச்சிகிச்சை தேவைப்படுகின்றது. கூட்டுக் குணமாக்கல் தேவைப்படுகிறது. தமிழ்ச்சமூகம் இப்பொழுதும் கொந்தளிப்பான ஒரு மனநிலையோடு காணப்படுகிறது. அதைப் பின்வரும் காரணங்கள் தீர்மானிக்கின்றன… முதலாவது, அரசியல்ரீதியாக நிலைமாற்றம் ஏற்படாமை. அதாவது ஒடுக்குமுறையின் விளைவாகத் தோன்றிய ஆயுதப் போராட்டந்தான் நசுக்கப்பட்டிருக்கிறது. போருக்கு மூல காரணமான இன ஒடுக்குமுறை தொடர்ந்து நீடிக்கின்றது. அது ஆயுத ரீதியாக தோற்கடிக்கப்பட்ட மக்களை அரசியல் ரீதியாகவும் தோற்கடிக்கும் நிகழ்ச்சிநிரலோடு காணப்படுகின்றது. இரண்டாவதாக, மேற்படி நிகழ்ச்சிநிரலை எதிர்கொண்டு, ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரான ஒரு புதிய மிதவாத அரசியலுக்கு,ஒரு புதிய பண்புருமாற்ற அரசியலுக்குத் தலைமை தாங்கவல்ல தலைமைகள் தமிழ்மக்கள் மத்தியில் இல்லை என்ற வெற்றிடம். மூன்றாவது, புலம்பெயர்ந்து வாழும் நிதிப்பலம்மிக்க தமிழர்கள் தாயக அரசியலின் மீது தலையீடு செய்கிறார்கள். அவர்கள் கள யதார்த்தத்திற்கு வெளியே இருந்தபடி, பிரிவேக்கத்தோடு தாயக அரசியலின் மீது ஏதோ ஒரு விதத்தில் தலையீடு செய்ய முயற்சிக்கிறார்கள். அவர்களுடைய நிதி அதிகாரம் நல்லதையும் செய்கின்றது; கெட்டதையும் செய்கின்றது. நாலாவது, உலகளாவிய தொழில்நுட்ப மாற்றமானது ஒருபுறம் தமிழ் மக்களை இணைய வலையில் பிணைக்கின்றது. இன்னொருபுறம் அது தமிழ் மக்களைச் சிதறடிக்கின்றது. ஒரு தாங்க முடியாத தோல்விக்கு பின், கடந்த 14 ஆண்டுகளாக கொத்தளித்துக் கொண்டிருக்கும் கூட்டு உளவியலின் விளைவாக, தமிழ் மக்கள் இணைய வெளியில் தங்களுடைய கண்களைத் தாங்களே தோண்டுகிறார்கள்; தங்களுடைய கழுத்தைத் தாங்களே அறுக்கிறார்கள்; தங்களுடைய புனிதங்களின் மீது தாங்களே மலத்தைப் பூசுகிறார்கள். இறந்த காலத்தில் கல்வியைத் துறந்து சுகபோகங்களைத் துறந்து போராடி, கண்ணை, கையை, காலை, இழந்தவரெல்லாம் ஓரமாகநின்று அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்க, பாதுகாப்பான இறந்த காலத்தை பெற்றவரெல்லாம் நிகழ்காலத்தின் பேச்சாளர்களாக மினுங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மற்றவர்களை நோக்கிச் சூழ்ச்சிக் கோட்பாடுகளைப் புனைகிறார்கள். ஐந்தாவது காரணம், ஆயுதப் போராட்டத்திற்கு முன்பு தமிழ்ச்சமூகத்தில் இயல்பான சமூகப், பொருளாதார, அரசியல் கட்டமைப்புக்கள் இருந்தன. ஆயுதப் போராட்டம் புதிய கட்டமைப்புகளையும் புதிய விழுமியங்களையும் புதிய பண்பாட்டையும் கொண்டு வந்தது. ஏற்கனவே இருந்த பலவற்றை நீக்கியது. ஆனால் அது தோற்கடிக்கப்பட்ட போது அது கொண்டு வந்த புதிய கடடமைப்புக்களும் சிதைந்து விட்டன. அதற்கு முன் இருந்த சமூகக் கட்டமைப்புகளும் சிதைந்து போய்விட்டன. அதனால் கடந்த 14 ஆண்டுகளாக நிறுவன உருவாக்கிகளும் அமைப்புருவாக்கிகளும் அதிகரித்த அளவில் தேவைப்படுகிறார்கள். மேற்கண்ட பிரதான காரணங்களின் தொகுக்கப்பட்ட விளைவாக, ஈழத்தமிழ் கூட்டு உளவியலானது, பண்புரு மாற்றத்துக்குத் தேவையான ஆளுமைகள் இல்லாத வெற்றிடத்தில், அதற்கு வேண்டிய கட்டமைப்புகள் இல்லாத வெற்றிடத்தில், தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்டதோர் அமைதியுறாத, கொந்தளிப்பான, காத்திருக்கின்ற கூட்டு உளவியலைத்தான் வெளிச்சக்திகள் வெவ்வேறு வடிவங்களில் கையாளப் பார்க்கின்றன. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவருடைய மகள் வருகிறார் என்ற அறிவிப்பும் எதிர்பார்ப்பும் இந்தப் பின்னணிக்குள்தான் நிகழ்ந்தது. ஒரு மீட்பருக்காக காத்திருக்கும் ஒரு நிலை உள்ளவரை, தங்களுக்குள் தீர்க்கதரிசனமும் அர்ப்பணிப்பும் மிக்க தலைமைகளைக் கட்டி எழுப்ப முடியாதவரை ; திரும்பப்பெற முடியாத இறந்த காலத்தை “மம்மியாக்கம்” செய்து காவும்வரை; இறந்த காலத்தில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளாத வரை;அரசியலை அறிவியலாக விளங்கிக் கொள்ளாதவரை ; இந்த நிலைமை தொடர்ந்துமிருக்கும் துவாரகாவைக் கொண்டு வருவது எனப்படுவது ஏற்கனவே கடந்த 14 ஆண்டுகளாக இருந்து வரும் ஓர் அரசியல் போக்கின் தொடர்ச்சிதான். தலைமையை அல்லது தகைமையை வெளியே தேடுவது. சம்பந்தரும் அதைத்தான் செய்தார். முதலில் சுமந்திரனை உள்ளே கொண்டுவந்தார். அதன்பின் விக்னேஸ்வரனைக் கொண்டுவந்தார். அதன்பின் தன் சொந்த மாவட்டத்திற்குக் குகதாசனைக் கொண்டு வந்தார். பட்டப்படிப்புகள் இல்லாத போராட்டத் தலைமைகள் தமிழ் சிங்கள உறவுகளை பகை நிலைக்கு தள்ளி விட்டன என்று அவர் நம்பினார். எனவே மெத்தப் படித்த, சட்டப் பின்னணியைக் கொண்ட,புதியவர்களை கட்சிக்குள் இறக்கி, சிங்கள மக்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும் என்றும் அவர் சிந்தித்தார். அந்த அடிப்படையில் கட்சியை முதலில் புலி நீக்கம் செய்தார். அதன் பின் ஆயுதப் போராட்ட நீக்கம் செய்தார். அதற்கு வேண்டிய ஆட்களைக் கட்சிக்குள் கொண்டு வந்தார். ஆனால் அவருடைய சொந்தக் கட்சியே இப்பொழுது இரண்டாக உடையும் நிலை. அவருடைய சொந்த மாவட்டத்திலேயே ஆசனத்தை இழக்கும் ஆபத்து. சம்பந்தரின் அரசியல் வழியானது அவருடைய வாரிசுகளே அவரைத் தூக்கி எறியும் ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த அரசியலின் தோல்விதான் கடந்த 14 ஆண்டு கால காத்திருப்பு அரசியலும். ஒரு மீட்பரின் வருகைக்காக காத்திருப்பது. அவ்வாறு ஒரு மீட்பரின் வருகைக்காக காத்திருக்கும் நிலைமை தொடரும்வரை வெளியில் இருந்து மீட்பர்கள் உற்பத்தி செய்யப்படுவார்கள். இந்த நிலைமையை மாற்றுவதென்றால், தமிழ்மக்கள் மத்தியில் இருந்து பண்புருமாற்றத்திற்குத் தலைமை தாங்கும் ஆளுமைகள் மேற்கிளம்ப வேண்டும். ஆயுத மோதல்களுக்குப் பின்னரான கூட்டுக்காயங்களுக்கும் கூட்டு மனவடுக்களுக்கும் கூட்டுக் கொந்தளிப்புக்கும் கூட்டுச் சிகிச்சையாக அமையத்தக்க கூட்டுச் செயற்பாட்டுகளுக்கு தேவையான பொருத்தமான கட்டமைப்புகளை தமிழ்மக்கள் உருவாக்க வேண்டும். கடந்த 29 ஆம் தேதி கிளிநொச்சியில் உருவாக்கப்பட்ட உளநல வலையமைப்பு அவ்வாறான கட்டமைப்புகளில் ஒன்றாக வளர்ச்சிபெற வேண்டும். ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் 1987 இலிருந்து “சாந்திகம்” என்ற உளவளத் துணை நிலையம் செயற்பட்டு வருகின்றது. மேலும், விதவைகளுக்கான கட்டமைப்பு; முதியோருக்கான கட்டமைப்பு; அனாதைச் சிறுவர்களுக்கான கட்டமைப்பு; உறுப்புகளை இழந்தவர்களுக்கான கட்டமைப்பு; போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கட்டமைப்பு; நினைவு கூர்தலுக்கான கட்டமைப்பு; கலை பண்பாட்டுக் கட்டமைப்பு; முதலீட்டுக் கட்டமைப்பு; உலகளாவிய ஒரு வங்கி, உலகளாவிய ஒரு தொண்டு நிறுவனம்… போன்ற பல்வேறு கட்டமைப்புகளையும் தமிழ்மக்கள் உருவாக்க வேண்டும். புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் போதிய நிதி உண்டு; வளங்கள் உண்டு. தாயகத்தில் தேவை உண்டு. இரண்டையும் இணைப்பதற்கு அரசியல் தலைமைகளால் முடியவில்லை என்றால், நிறுவன உருவாக்கிகள் அதைச்செய்யலாம். அமைப்பு உருவாக்கிகள் அதைச் செய்யலாம். தமிழ் மக்களுக்குத் தேவையாக இருப்பது தொண்டுத் தேசியந்தான். முன்னுதாரணம் மிக்க செயற்பாட்டாளர்கள்; முன்னுதாரணம் மிக்க தொண்டர்கள். ஆயுத மோதல்களுக்குப் பின்னரான ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பத் தேவையான பொருத்தமான நிறுவனங்களை புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி மற்றும் துறைசார் அறிவுப் பங்களிப்புடன் கட்டியெழுப்ப வேண்டும். அதாவது தேசத்தை கட்டியெழுப்ப வேண்டும். தேசத்தைக் கட்டியெழுப்பும் அரசியலுக்கு தலைமைதாங்கத் தக்கவர்கள் மேலெழும் பொழுது சமூகம் வெளியாருக்காக காத்திருக்காது. அதிசயங்கள் அற்புதங்களுக்காகக் காத்திருக்காது. மாறாக தானே அதிசயங்களையும் அற்புதங்களையும் பெருஞ் செயல்களையும் செய்யத் தொடங்கிவிடும். https://www.nillanthan.com/6389/#google_vignette
  16. முத்த வெளியில் திரண்ட சனங்கள் - நிலாந்தன் இந்திய அமைதிகாக்கும் படையினரால் யாழ்.பொது வைத்தியசாலையில் தமிழ்மக்கள் கொல்லப்பட்ட நாள் அது என்பதனால்,சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சியை வேறொரு நாளில் வைக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கேட்டிருந்தது. அக்கோரிக்கையை சந்தோஷ் நாராயணன் ஏற்கவில்லை. ஆனால் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் போரில் உயிர்நீத்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் ஈழப்போரைப் பிரதிபலிக்கும் பாடல்கள் பாடப்பட்டன. அப்பொழுது அங்கு கூடியிருந்த மக்கள் ஆர்ப்பரித்து அதைக் கொண்டாடினார்கள். அது ஒரு மழை நாள். அன்று பின்னேரம் மழை விட்டுத் தந்தது. முத்த வெளியில் கடந்த 15 ஆண்டுகளில் இதுவரை காணாத சன வெள்ளம். அந்த இடத்தில் இதற்கு முன் வர்த்தகக் காட்சிகள் நடந்திருக்கின்றன. அவற்றுக்கும் மக்கள் திரண்டு வந்தார்கள். ஆனால் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சிக்கு முன்னப்பொழுதும் இல்லாத அளவுக்கு சனம் திரண்டது. முனியப்பர் கோயிலுக்கு முன்னுள்ள வெளியிலும் சாலைகளின் இரு புறங்களிலும் வாகனங்கள் வரிசையாக நின்றன. பால் வேறுபாடு இன்றி,வயது வேறுபாடு இன்றி பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சி அது. பாடகர்கள் பாடப்பாட அங்கு கூடியிருந்த இளையோர் உற்சாகமாக ஆடினார்கள். அது தமிழ் மக்களின் கூட்டு மனோநிலையைக் காட்டியது. அவர்கள் கொண்டாட விரும்புகிறார்கள். கொண்டாடுவதற்கு கிடைக்கும் எந்த ஒரு தருணத்தையும் அவர்கள் இழக்க விரும்பவில்லை. பெருவிழாக்கள், பெருஞ் சந்தைகள் தொடக்கம் தனிப்பட்ட கொண்டாட்டங்கள் வரை மக்கள் ஆடிப்பாடி சந்தோசமாக இருக்க விரும்புகிறார்கள். அவர்கள் சன்னியாசிகள் இல்லை. இச்சைகளைத் துறந்தவர்கள் இல்லை. எனவே கொண்டாடுவார்கள். அப்படிப்பட்ட கொண்டாட்டங்களை எப்பொழுது ஒழுங்குபடுத்த வேண்டும் எப்பொழுது ஒழுங்குபடுத்தக் கூடாது என்பதனை தீர்மானிக்க முற்படும் கட்சி அல்லது மக்கள் இயக்கம் ஒன்றில், ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அல்லது அங்கு திரளும் மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். ஏற்பாட்டாளர்கள் கேட்கவில்லை என்று சொன்னால் தமது மக்களை அந்த நிகழ்ச்சியைப் புறக்கணிக்குமாறு கேட்க வேண்டும். ஆனால் அவ்வாறு தமிழ் மக்களை வழிநடத்தும் அளவுக்கு தமிழ் தேசியப்பரப்பில் ஒரு கட்சியோ மக்கள் இயக்கமோ இல்லை. அதாவது தமிழ் மக்கள் மத்தியில் பொதுக் கருத்தைத் திரட்டுமளவுக்கு சக்திமிக்க கட்சியும் கிடையாது; மக்கள் இயக்கமும் கிடையாது. முதலாவதாக கட்சிகளிடம் 2009க்குப் பின்னரான இளைய தலைமுறையின் கூட்டு மனோநிலையை வசப்படுத்தவல்ல பொருத்தமான ஒரு கலைத்தரிசனம் இருக்க வேண்டும். சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சியில் பங்கு பற்றிய ஊடகவியலாளர் ஒருவர் என்னிடம் கேட்டார்… மக்களுடைய இக்கூட்டு மனோநிலையை கட்சிகள் விளங்கி வைத்திருக்கின்றனவா? மக்களை விடுதலைக்கான கலையை நோக்கி ஈர்க்கத்தக்க செயல் திட்டங்கள் எந்த ஒரு கட்சியிடமாவது உண்டா? எந்த ஒரு கட்சியிடமாவது கலை பண்பாட்டு இயக்கங்கள் உண்டா? என்று. கலை இல்லாத ஒரு படை மந்தப்படை என்று சீனப் புரட்சியின் தலைவர் மாவோ சே துங் சொன்னார். “பண்பாடுதான் தேசிய விடுதலையின் திறப்பு” என்று ஆபிரிக்க அறிஞரும் சுதந்திரப் போராட்டத் தலைவருமான அமில்கார் கப்ரால் சொன்னார். ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் எல்லா விடுதலை இயக்கங்களிடமும் கலை கலாச்சார அமைப்புகள் இருந்தன. ஆயுதப் போராட்டம் தீவிரமடையத் தொடங்கிய காலகட்டத்தில் யாழ். பல்கலைக்கழகத்தில் மறுமலர்ச்சிக் கழகம் என்ற அமைப்பு இயங்கியது. அது விடுதலையை ஒரு மறுமலர்ச்சியாகப் பார்த்தது. பண்பாட்டு மறுமலர்ச்சி. அரசியல் மறுமலர்ச்சி. ஈழ விடுதலைப் போராட்டத்தில் கலை ஒரு பிரிக்கப்படவியலாத பகுதியாக இருந்தது. பொங்குதமிழ் பேரெழுச்சிகளிலும் அப்படித்தான். ஆனால் கடந்த 15 ஆண்டுகளில் தமிழ் அரசியல் அரங்கில் காணாமல் போனவற்றின் பட்டியலில் கலை பண்பாட்டு இயக்கங்களும் சேர்ந்து விட்டன. எழுக தமிழ்களுக்கு இசை இருக்கவில்லை; கலை இருக்கவில்லை. பொங்குதமிழ் எழுச்சிகளை ஒழுங்கமைத்தவரும் அரங்கச் செயற்பாட்டாளரும் ஆகிய கலாநிதி சிதம்பரநாதன் கந்தர்மடத்தில் பண்பாட்டு மறுமலர்ச்சிக் கூடம் என்ற பெயரில் ஓர் அமைப்பை நடத்தி வருகிறார். ஆனால் கட்சிகள் மத்தியில் அவ்வாறான கலை விளக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. தமது மக்களை தமது அரசியல் இலக்குகளை நோக்கித் திரட்டுவதற்குத் தேவையான கலைத் தரிசனம் எந்த ஒரு கட்சியிடமும் கிடையாது. சில பாடல்கள் சில நாடகங்கள் தவிர,கடந்த 15 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒரு பெரிய கலை வறட்சி நிலவுகிறது. கடந்த ஆண்டு நிகழ்ந்த கோட்டா கோகமவின் கலை வெளிப்பாட்டோடு ஒப்பிடுகையில் இது பாரதூரமான வறட்சி. ஓர் ஆயுதப் போராட்டத்தின்போது சமூகம் பெருமளவுக்கு மூடப்பட்டி ருக்கும். அது காவலரண்களால் திட்டவட்டமாக மூடப்பட்டிருக்கும். ஆனால் போரில்லாத நாட்களில் அவ்வாறல்ல. குறிப்பாக போரில் தோற்கடிக்கப்பட்ட ஒரு சமூகத்தை எப்படித் திறப்பது? எங்கே திறப்பது? எதை நோக்கித் திறப்பது? என்பதனை போரில் வெற்றி பெற்ற தரப்பே தீர்மானிக்கின்றது. கடந்த 15 ஆண்டுகளில் அவ்வாறு திறக்கப்பட்ட வழிகளின் ஊடாக நுண்கடன் நிதி நிறுவனங்கள் வந்தன. பிளாஸ்டிக் வியாபாரிகளும் அரும்பொருட்களைக் கவர்ந்து செல்வோரும் வந்தார்கள். போதைப்பொருள் வியாபாரிகளும் முகவர்களும் வந்தார்கள். கிரீஸ் மனிதன் வந்தான். குள்ள மனிதன் வந்தான். வேறு யார் யாரோ எல்லாம் வந்தார்கள். ராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட ஒரு மக்களை எப்படிப் பண்பாட்டு ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தோற்கடிப்பது என்று சிந்தித்து திட்டமிட்டு வெளியில் இருந்து பல்வேறு வகைப்பட்ட சக்திகளும் தமிழ்ச் சமூகத்தில் உட் பாய்ச்சப்படுகின்றன. ஒரு காலம் இளையவர்கள் உன்னதமான இலட்சியங்களால் வழிநடத்தப்பட்டார்கள். ஆனால் இப்பொழுது அப்படியல்ல. இளையவர்களை எப்படி அரசியல் நீக்கம் செய்யலாம்? அவர்களை எப்படிப் போதைக்குள் மூழ்கடிக்கலாம்? அவர்களுடைய கைகளில் எப்படி வாள்களைக் கொடுத்து மோத விடலாம்? அவர்களுடைய நம்பிக்கைகளை; விசுவாசத்தை; கவனக் குவிப்பை எப்படி இடம் மாற்றலாம்? அவர்கள் மத்தியில் இருந்தே எப்படி முகவர்களை உருவாக்கலாம்? என்றெல்லாம் சிந்தித்து செயல்படுவதற்கு அரச பலமும் அரச வளங்களும் பயன்படுத்தப்படுகின்றன. அது ஒரு மையத்தில் இருந்து திட்டமிடப்படுகின்றது; ஒருங்கிணைக்கப்படுகிறது. அது ஒரு பண்பாட்டுச் சிதைப்பு; ஒரு பண்பாட்டு நீக்கம். அதை எதிர்கொள்வதற்கு தமிழ்ச் சமூகம் தயாராக உள்ளதா? அதை குறித்து தமிழ்க் கட்சிகளிடம் பொருத்தமான அரசியல் கலைத் தரிசனங்கள் உண்டா? இந்த மண் எங்களின் சொந்த மண் என்று பாடிய ஒரு மண்ணை விட்டு எப்படி வெளியேறலாம் என்று இளையவர்கள் சிந்திக்கும் ஒரு காலகட்டம் இது. வெளிநாட்டுக்கு போவதற்காக தங்களை தயார்படுத்தும் இளையோர் மத்தியில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக அண்மையில் ஒரு மனநல மருத்துவர் சுட்டிக்காட்டினார். இது என்னுடைய நாடில்லை; இங்கே நான் இருக்கப் போவதில்லை, இருக்கின்ற கொஞ்ச காலத்துக்கு எப்படியும் இருந்து விட்டு போகலாம் என்று சிந்திக்கும் ஒரு போக்கு அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். எப்படியும் இருந்துவிட்டுப் போகலாம் என்பதுதான் பண்பாட்டுச் சிதைவு. 1956இல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்ட பொழுது நாடாளுமன்றத்தில் கொல்வின்.ஆர்.டி.சில்வா பின்வருமாறு சொன்னார்… “தமிழர்களை நீங்கள் அவமதித்தால்; கேவலமாக நடத்தினால்; துஷ்பிரயோகம் செய்தால்;ஒடுக்கினால்; அவர்களுக்குக் கரைச்சல் கொடுத்தால், அந்தப் போக்கின் விளைவாகசிலோனில் (இலங்கையில்)தனக்கென்று குறிப்பிட்ட ஒரு மொழியை, ஒரு பண்பாட்டைக் கொண்டிருக்கும் குறிப்பிட்ட அந்த இனத்துவ இருப்பிற்குள் இருந்து ஒரு புதிய தேசியவாதம் எழுவதற்கு நீங்கள் காரணமாக அமைவீர்கள். இப்பொழுது அவர்கள் கேட்பதை விடவும் அப்பொழுது அவர்கள் அதிகமாக கேட்பார்கள். அதை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டி வரும்” அதாவது பலமான ஒரு பண்பாட்டை கொண்டிருக்கும் தமிழர்களை ஒடுக்கினால் வரக்கூடிய விளைவுகளை குறித்து அவர் எச்சரிக்கின்றார். அதுதான் உண்மை. தமிழ் மக்கள் ஆழமான பண்பாட்டு வேர்களைக் கொண்டவர்கள். கீழடி ஆய்வுகளின்படி தமிழ் வேர்கள் மேலும் ஆழத்துக்குச் செல்கின்றன. ஆழமான பண்பாட்டு வேர்களைக் கொண்ட மக்களை; மிகப் பலமான பண்பாட்டு நடுத்தர வர்க்கத்தை கொண்டிருக்கும் மக்களை; ராணுவ ரீதியாகத் தோற்கடிக்கடித்தாலும், அரசியல் ரீதியாக, பண்பாட்டு ரீதியாகத் தோற்கடிப்பது கடினம் என்பதைத்தான் கடந்த 14 ஆண்டுகள் நிரூபித்திருக்கின்றன. ஆயுதப் போராட்ட காலகட்டமும் கடந்த 14 ஆண்டுகளும் ஒன்றல்ல. மாறிவரும் தொழில்நுட்பச் சூழலை; மாறிவரும் அரசியல் பண்பாட்டுச் சூழலை; தமிழ் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழ் கூட்டுக் உளவியலின் மீது எப்படிச் செல்வாக்கு செலுத்துவது? அதை அரசியல் நீக்கம் செய்ய முற்படும் சக்திகளிடம் இருந்து அதை எப்படிக் காப்பாற்றுவது? அதைப் பண்பாட்டு நீக்கம் செய்ய முற்படும் சக்திகளிடம் இருந்து எப்படிக் காப்பாற்றுவது?அதை விடுதலைக்கான பண்பாட்டை நோக்கி எப்படி வழி நடத்துவது? கொல்வின்.அர்.டி.சில்வா கூறியதுபோல தமிழ் மக்களின் தனித்துவமான பண்பாடுதான் தமிழ் மக்களை ஒரு தேசமாக வனையும் பிரதான மூலக்கூறுகளில் ஒன்று ஆகும். ஒரு மக்கள் கூட்டத்தை ஒரு தேசமாக வனையும் அம்சங்கள் ஐந்து. நிலம் அதாவது தாயகம்;இனம்;பொதுமொழி;பொதுப் பண்பாடு;பொதுப் பொருளாதாரம் என்பனவே அந்த ஐந்து மூலக்கூறுகளும் ஆகும். எனவே 2009 க்குப் பின்னரான பண்பாட்டு மறுமலர்ச்சியை ஏற்படுத்த விரும்பும் எவரும் அதன் தக்கபூர்வ விளைவாக தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுகிறார்கள். அதை மறுவளமாகச் சொன்னால் தமிழ்மக்களை ஒரு தேசமாக திரட்டாமல் கட்சிகளாகப் பிரிக்கும் எவரும் பண்பாட்டு விழிப்பை ஏற்படுத்த முடியாது. https://www.nillanthan.com/6330/
  17. குஷ்பு முற்ற வெளிக்கு வர மாட்டார்? நிலாந்தன். யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர் தர வாரா. adminNovember 19, 2023 மற்றொரு இசை நிகழ்ச்சியும் சர்ச்சையாக மாறியிருக்கிறது. அடுத்த மாதம் 21 ஆம் தேதி யாழ்.முத்த வெளியில் தமிழகப் பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. அந்நிகழ்ச்சியைப் பிரபல்யப் படுத்துவதற்காக களமிறக்கப்பட்ட இரண்டு தமிழகப் பிரபல்யங்கள் சர்ச்சையாக மாறியிருக்கிறார்கள். ஒருவர் நடன ஆசிரியர் கலா மாஸ்டர். மற்றவர் நடிகை குஷ்பு. கலா மாஸ்டர் கலைஞர் டிவியில் மானாட மயிலாட நிகழ்ச்சியை நடாத்தியவர். இறுதிக்கட்டப் போரில் ஈழத் தமிழர்கள் துன்பப்பட்டுக் கொண்டிருந்தபோது அவர் தமிழக மக்களைத் திசை திருப்புவதற்காக அந்த நிகழ்ச்சியை நடாத்தினார் என்று அவர் மீது குற்றச்சாட்டு. குஷ்பு தன்னிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதில் கூறும் போது, விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாதிகள் என்று வர்ணித்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டு. அந்த நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்துவது கனடாவில் வசிக்கும் ஓர் ஈழத் தமிழர். இந்திய நடிகை ரம்பாவின் துணைவர். புலம்பெயர்ந்த நாடுகளில் வெற்றி பெற்ற முதலீட்டாளர்களில் ஒருவர். யாழ்ப்பாணம் கந்தர் மடம் சந்தியில் நோர்தேன் யுனி என்ற பெயரில் சிறிய பல்கலைக்கழகத்தை கட்டியிருக்கிறார். அவர் ஹரிஹரனை முத்த வெளியில் பாட வைக்க விரும்புகிறார். அந்த நிகழ்ச்சியின் கவர்ச்சியைக் கூட்டுவதற்காக இரண்டு பிரபல்யங்களை இணைத்திருக்கிறார். அதுதான் இப்பொழுது பிரச்சினை. அப்படித்தான் கடந்த மாதம் நடந்த சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சியும் சர்ச்சையாக மாறியது. ஆனால் சந்தோஷ் நாராயணன் கூறுகிறார் “நான் ஈழத்தமிழ்க் குடும்பத்தில் ஒருவன்” என்று. அவருடைய மனைவி கோண்டாவிலைச் சேர்ந்தவர். சீ தமிழ் தொலைக்காட்சியில் சரிகமப நிகழ்ச்சியில் பேசும்போது, அவர் புலம்பெயர்ந்த தமிழர்களே தன்னைப் போன்ற இசையமைப்பாளர்களுக்கு “சாப்பாடு போடும் கடவுள்கள்” என்று வர்ணிக்கின்றார். இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை என்றும் கூறுகிறார். அவரை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துக் கொண்டு வந்தவர் ஒரு புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர். கோடம்பாக்கத்தில் வெற்றிகரமாக முதலீடு செய்தவர். இயக்குனர் சங்கருக்கும் வடிவேலுவுக்கும் இடையிலான முரண்பாட்டைத் தீர்த்து வைக்குமளவுக்கு கோடம்பாக்கத்தில் செல்வாக்கு மிக்கவர். கொழும்பில் வங்குரோத்தாகிய எதிரிசிங்க வணிகக் குழுமத்தை விலைக்கு வாங்கியவர். ஐந்து சிங்களப் படங்களில் அவர் முதலீடு செய்கிறார். அண்மையில் அவர் தனது மனைவியோடு சென்று மகாநாயக்க தேரர்களைச் சந்தித்தார். இலங்கையில் தனது சொத்துக்களையும் முதலீட்டையும் பாதுகாப்பதற்கு அவருக்கு அது தேவையாக இருக்கலாம். சந்தோஷ் நாராயணன், ஹரிஹரன் போன்றவர்களின் இசை நிகழ்ச்சிகளுக்கு முதலீடு செய்வது புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்கள். அவர்களும் போரின் விளைவுகள்தான். அவர்களும் ஈழத் தமிழ் ரத்தம்தான். அவர்கள் அந்நியர்கள் அல்ல. அவர்களோடு தமிழ் செயற்பாட்டாளர்களும் கட்சிகளும் உரையாட வேண்டும். முதலாளிகள் எப்பொழுதும் லாபத்தை நோக்கியே சிந்திப்பார்கள். அது அவர்களுடைய தொழில் ஒழுக்கம். ஆனால் அரசியல் செயற்பாட்டாளர்கள் அந்த முதலாளிகளை எப்படி ஆகக்கூடிய பட்சம் தேசியப் பண்பு மிக்கவர்களாக மாற்றுவது என்று சிந்தித்து உழைக்க வேண்டும். அதுதான் தேசிய அரசியல் ஒழுக்கம். அவர்களை எப்படித் தேச நிர்மாணத்தின் பங்காளிகளாக மாற்றுவது? முதலில் ஈழத் தமிழர்கள் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். தோல்விகளுக்கும் பின்னடைவுகளுக்கும் பிறத்தியாரை எப்பொழுதும் குறை சொல்லிக் கொண்டிருக்க முடியாது. ஈழத் தமிழர்களுக்காக ஈழத் தமிழர்கள்தான் போராட வேண்டும். தமிழகத்தவர்களோ அல்லது வெளிநாடுகளில் இருப்பவர்களோ எந்தளவுக்குப் போராடலாம் என்பதில் வரையறைகள் உண்டு. இந்த அடிப்படையில் சிந்தித்தால் ஈழத் தமிழர்கள் அல்லாதவர்களிடம் எதை எதிர்பார்க்கலாம்? எந்த அளவுக்கு எதிர்பார்க்கலாம்? என்பதில் பொருத்தமான விளக்கங்கள் இருக்க வேண்டும். உதாரணமாக ஒரு சிங்கள முற்போக்குவாதியிடம் அவர் தமிழ்த் தேசியவாதியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கத் தேவையில்லை. அவர் இனவாதத்துக்கு எதிராக இருந்தாலே போதும். சிங்கள திரைப்படக் கலைஞர் பிரசன்ன விதானகே எடுக்கும் படம், தமிழ் மக்களின் போராட்டத்தை ஆதரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கத் தேவையில்லை. அது இனவாதத்தை எதிர்த்தாலே போதும். அதுவே தமிழ் அரசியலுக்கு வெற்றிதான். தமிழரல்லாத வேற்று இனத்தவர் ஒருவர் கட்டாயம் தமிழ்த் தேசியவாதியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அவர் தமிழ் மக்களின் நியாயத்தை ஏற்றுக் கொண்டாலே போதும். அப்படித்தான் தமிழகமும். தமிழகத்தில் இருப்பவர்கள் 100% ஈழத் தமிழ் அபிமானிகளாக இருக்க வேண்டும் என்றில்லை. அங்கே 19 பேர் தீக்குளித்து இறந்திருக்கிறார்கள் என்பது மகத்தானது. அதற்காக எல்லாரையும் தீக்குளிக்கக் கேட்கலாமா? அவர்கள் ஈழத் தமிழர்களுக்காக மாநில அரசாங்கத்தின் மீதும் மத்திய அரசாங்கத்தின் மீதும் அழுத்தங்களைக் கொடுத்தாலே அது மகத்தான விளைவுகளைத் தரும் 2009க்குப் பின் தமிழகத்தில் உள்ள இரண்டு பெரிய கட்சிகளும் ஈழத்தமிழ் அரசியலில் இருந்து விலகிச்செல்லும் போக்கு அதிகரித்துவரும் ஒரு பின்னணியில், ஈழத் தமிழ் நோக்கு நிலையிலிருந்து தமிழகத்தை எப்படிக் கையாள்வது என்ற அடிப்படையிலும் தமிழகப் பிரபல்யங்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களை அணுக வேண்டும். . ஏன் அதிகம் போவான்? தாயகத்தில் சொந்தத் தமிழ் மக்களில் ஒரு தொகுதியினர் தமிழ்த் தேசிய அரசியற் பரப்புக்கு வெளியே நிற்கிறார்கள். டக்ளஸ் தேவானந்தாவுக்கும் அங்கஜனிற்கும் பிள்ளையானுக்கும் வாக்களித்தவர்களை எதிரிகளாகப் பார்க்கலாமா? அவர்கள் எங்களுடைய மக்கள் இல்லையா?அவர்களை எப்படித் தமிழ்த் தேசிய நீரோட்டத்துக்குள் ஈர்த்தெடுப்பது என்றுதானே சிந்திக்க வேண்டும்? தாயகத்திலேயே தமிழ்ச் சனத் தொகையில் ஒரு தொகுதி தமிழ்த் தேசிய அரசியலுக்கு வெளியே நிற்கின்றது. அப்படியென்றால் தாயகத்துக்கு வெளியே நிலைமை எப்படியிருக்கும்? அவ்வாறு தமிழ்த் தேசிய அரசியலுக்கு வெளியே நிற்பவர்களை தமிழ்த் தேசிய நீரோட்டத்துக்குள் ஈர்த்தெடுப்பதுதான் தேசத்தை திரட்டும் அரசியல். புலம்பெயர்ந்த தமிழர்களிடம்கூட எதுவரை எதிர்பார்க்கலாம் என்பதில் வரையறைகள் உண்டு. ஏனெனில் அவர்கள் கள யதார்த்தத்திற்கு வெளியே வசிக்கின்றார்கள். அவர்களை எப்படி ஆகக்கூடிய பட்ஷம் தேச நிர்மாணத்தின் பங்காளிகளாக மாற்றுவது என்றுதான் சிந்திக்கலாம். புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒரு விதத்தில் தாயகத்தின் நீட்சியும் அகற்சியுந்தான். ஆனால் அவர்கள்தான் தமிழக சினிமா பிரபல்யங்களை அழைத்து கோடிக்கணக்கான காசைச் செலவழித்து நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகிறார்கள். அண்மையில் கனடாவில் நடந்த சிற் சிறீராமின் இசை நிகழ்ச்சிக்குரிய பட்ஜெட் 10 லட்சம் கனேடிய டொலர்கள் என்று கூறப்படுகிறது. குஷ்பு ஒரு நடிகை மட்டுமல்ல. அரசியல்வாதியும் கூட. 2010ல் அவர் திமுகவில் சேர்ந்தார் .2014 இல் அவர் கொங்கிரஸில் சேர்ந்தார். 2020இல் அவர் பாரதிய ஜனதாவில் சேர்ந்தார். அதாவது இப்பொழுது அவர் ஆளுங்கட்சியில் இருக்கிறார் 2014 இல் அவர் கனடாவுக்குப்போனவர். மார்க்கம் fஏயர் மைதானத்தில் நடந்த அவருடைய நிகழ்வில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கு பற்றினார்கள். அதில் அவருடைய ரசிகர்கள் அவருடைய காலில் விழுந்ததைத் தான் கண்டதாக ஒரு சமூக செயற்பாட்டாளர் சொன்னார். பிந்திக் கிடைத்த தகவலின்படி ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டிருப்பதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருக்கிறார்கள். ஒருபுறம் புலம்பெயர் தமிழர்கள் தமிழகச் சினிமாப் பிரபல்யங்களை அழைத்து கோடிக்கணக்கில் காசைக்கொட்டிக் கொண்டாடுகிறார்கள். இன்னொரு புறம் நீதிக்கான போராட்டத்தின் ஈட்டி முனையாகவும் காணப்படுகிறார்கள். இந்த இரண்டும் கலந்ததுதான் புலம்பெயர்ந்த வாழ்வின் யதார்த்தம். எனவே புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்கள் தாயகத்தில் முதலீடு செய்யும் பொழுது அதனை கொழும்பு மைய நோக்கு நிலையில் இருந்து செய்வதற்கு பதிலாக தேச நிர்மாணம் என்ற நோக்கு நிலையில் இருந்து செய்யுமாறு ஊக்குவிக்க வேண்டும். தாயகத்தில் உள்ள கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் கருத்துருவாக்கிகளும் புலம்பெயர்ந்த தமிழ்ச் செயற்பாட்டாளர்களும் அதை நோக்கி முதலீட்டாளர்களை ஊக்குவிக்க வேண்டும். 2009 க்கு பின் கைபேசியால் காட்டிக் கொடுக்கப்பட்ட நாடு இலங்கை. மே18க்கு பின் யுத்தகளத்தில் எடுக்கப்பட்ட எல்லா படங்களும் இலங்கை அரச படைகள் தமது கமராக்களினாலும் தமது கைபேசிகளாலும் எடுத்த படங்கள்தான். அந்தப் படங்கள்தான் பிந்நாளில் இலங்கைக்கு எதிரான போர்க் குற்றச் சான்றுகளாக மாறின. அதாவது கைபேசியால் காட்டிக் கொடுக்கப்பட்ட ஒரு நாடு. அதுபோலவே ஈழத் தமிழர்களும் 2009க்கு பின் சமூக வலைத்தளங்களால், கைபேசிச் செயலிகளால் சிதறடிக்கப்பட்ட ஒரு தேசிய இனமாக மாறி வருகிறார்கள். ஈழத் தமிழர்கள் ஒருவர் மற்றவருக்கு எதிராக அள்ளி வீசும் அவதூறுகளால் தேசம் சிதறிக் கொண்டே போகிறது. சமூக வலைத்தளங்களால் சிதறடிக்கப்பட்ட ஒரு தேசம்? இனப்படுகொலையால் புலப் பெயர்ச்சியால் மெலிந்து சிதறிய ஒரு சிறிய தேசம், சமூக வலைத்தளங்களில் மேலும் மேலும் சிதறி கொண்டு போகிறது. யாதும் ஊராகப் புலம் பெயர்ந்து விட்டோம். ஆனால் யாவரும் கேளீரா ? அதாவது யாவரும் நண்பர்களா? தீதும் நன்றும் பிறர் தருவதில்லை. நாமே நமக்குத் தேடிக் கொள்பவையா? https://globaltamilnews.net/2023/197527/
  18. அலப்பறை கிளப்புறோம் : யாழ்ப்பாணத்தின் சுவை மாறுகின்றதா? - நிலாந்தன். November 12, 2023 கடந்த நான்காம் திகதி யாழ்ப்பாணம் டில்கோ ஹோட்டலில் ஒரு விருந்து இடம்பெற்றது. ”அலப்பறை கிளப்புறோம்” என்ற தலைப்பில் ஒழுங்கு செய்யப்பட்ட “டிஜே பார்ட்டி”அது. அந்நிகழ்வை குறித்து யாழ். மாநகர சபை நிர்வாகமும் கச்சேரியும் ஹோட்டல் நிர்வாகத்தோடு தொடர்புகொண்டு கேட்டிருக்கின்றன. அந்த நிகழ்வை ஒழுங்குபடுத்தும் “Shuttle Vibe” என்ற கொழும்புமைய நிறுவனத்தோடு கதைக்குமாறு கூறி அந்த நிறுவனத்தின் தொடர்பிலக்கத்தை ஹோட்டல் நிர்வாகம் கொடுத்திருக்கிறது. நிகழ்வில் “டிஜே” இசை வழங்குனரோடு சிலர் தொலைபேசியில் எடுத்துப் பேசியிருக்கிறார்கள். மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி அவருடைய வீட்டுக்குச் சென்ற இருவர் மிரட்டியிருக்கிறார்கள். போலீஸ் பாதுகாப்போடு அந்த நிகழ்வை நீங்கள் நடத்தினாலும் நிகழ்வு முடிந்த பின் நீங்கள் வெளியே வரத்தான் வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. எனினும் நிகழ்வு குறித்த தினத்தில் நடந்திருக்கிறது. அந்நிகழ்வில் மொத்தம் 100க்கும் குறையாதவர்கள் பங்குபற்றியதாகவும் அவர்களில் எட்டுப் பேர்களே பெண்கள் என்றும் ஹோட்டல் நிர்வாகம் கூறுகின்றது. அந்த எட்டுப் பேர்களில் இரு பெண்கள் தமது துணைவர்களோடு வந்தார்கள் என்றும், இருவர் சகோதரிகள் என்றும், நால்வர் ஒரே உறவு வட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. அங்கு மது பரிமாறப்பட்டுள்ளது. ஆனால் போதைவஸ்து பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவது பிழையான தகவல் என்றும் ஹோட்டல் நிர்வாகம் கூறுகின்றது. அந்நிகழ்வை எதிர்ப்பவர்கள் இரண்டு நோக்கு நிலைகளிலிருந்து அதை எதிர்க்கிறார்கள். முதலாவது பண்பாட்டு நோக்கு நிலையில் இருந்து. இரண்டாவது அரசியல் நோக்கு நிலையில் இருந்து. அதாவது இது மாவீரர் மாதம் என்பதனால் இது போன்ற நிகழ்வுகளை ஒழுங்கு செய்யக்கூடாது என்று. மாவீரர் வாரம் இம்மாத இறுதியில் வருகிறது. மாதத்தின் முதல் வாரத்தில் தீபாவளி வருகிறது. கடந்த வாரம் முழுவதும் யாழ் நகரத்தின் தெருக்களில் ஜனங்கள் நிரம்பி வழிந்தார்கள். ஆனால் அதற்காக தீபாவளியைக் கொண்டாடுபவர்கள் மாவீரர் நாளை அனுஷ்டிக்க வரமாட்டார்கள் என்பதல்ல. ஏன் டிஜே பார்ட்டியில் ஆடிக் களித்திருப்பவர்கள் நினைவுகூர மாட்டார்கள் என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. பொதுவாக ஒரு மக்கள் கூட்டம் அப்படித்தான் இருக்கும். முதலாவதாக அது மகிழ்ந்திருக்க விரும்பும். ஆடக் கிடைத்த சந்தர்ப்பங்களையும் பாடக்கிடைத்த சந்தர்ப்பங்களையும் அனுபவிக்கக்கிடைத்த சந்தர்ப்பங்களையும் யாரும் இழக்க விரும்புவதில்லை. அதே சமயம் தங்களுக்காக உயிர் நீத்தவர்களை அவர்கள் மறந்துவிடுவதுமில்லை. ஜனங்களை, அவர்களை அவர்களாக விளங்கிக் கொள்ளவேண்டும். அவர்களுடைய ஆசாபாசங்கள்; விருப்பு வெறுப்புக்கள்; சின்னச்சின்னச் சந்தோசங்கள்; சலனங்கள்… போன்ற எல்லாவற்றுக்குள்ளாலும் விளங்கிக்கொள்ள வேண்டும். ஒரு மக்கள் கூட்டத்தை இதைச் செய்யாதே என்று கட்டளையிட முடியாது. அவ்வாறு கட்டளையிடுவது ஒரு போர்க்காலத்தில் சாத்தியமாக இருக்கலாம். ஆனால் ஆயுத மோதல்களற்ற ஒரு காலகட்டத்தில் அதை எப்படிச் செய்வது? தீபாவளியை, வருசப் பிறப்பைக் கொண்டாடுமாறு; ஆடி அமாவாசையை, சித்ராப் பௌர்ணமியை அனுஷ்டிக்குமாறு யாரும் மக்களுக்குக் கட்டளையிடுவதில்லை. நல்லூர் கோயிலுக்கு மடுத் தேவாலயத்துக்கு போகுமாறு யாரும் மக்களுக்குக் கட்டளை இடுவதில்லை. துர்கா மணி மண்டபத்தில் நடக்கும் சுழலும் சொற்போர்களுக்கு, விவாத மேடைகளுக்கு மக்களை யாரும் வாகனம் விட்டு ஏற்றிக்கொண்டு போவதில்லை. இவற்றையெல்லாம் சனங்கள் தாமாகவே செய்கிறார்கள். ஏனென்றால் அவையனைத்தும் மதப் பண்பாட்டினடியாக, நம்பிக்கைகளினடியாக மக்கள் மயப்பட்ட விடயங்கள். எனவே நினைவு கூர்தலை மக்கள் மயப்படுத்துவது எப்படி என்பதுதான் இங்குள்ள பிரச்சினை. நினைவுகளை; நினைவுகளின் அடியில் மண்டிக்கிடக்கும் துக்கத்தை; கோபத்தை எப்படி அரசியல் ஆக்கசக்தியாக மாற்றுவது என்று சிந்திக்கும் எல்லாக்கட்சிகளும், அரசியல் செயற்பாட்டாளர்களும் நினைவு கூர்தலை எப்படி மக்கள் மயப்படுத்துவது என்று சிந்திப்பதுதான் பொருத்தமாக இருக்கும். கலை இலக்கியங்கள், திருவிழாக்கள், கொண்டாட்டங்கள் போன்றன மக்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்புவதை காட்டுகின்றன. எனவே பொருத்தமான விதங்களில் மக்களை மகிழ்விப்பதற்குரிய கலைபண்பாட்டுத் தரிசனத்தை கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் கொண்டிருக்க வேண்டும். பூகோளமயமாதலின் விளைவாக, தொழில்நுட்பப் பெருக்கத்தின் விளைவாக சமூகங்களின் ருசி ரசனைகள் மாறி வருகின்றன. டிஜே பார்ட்டி எனப்படுவது அவ்வாறான ஒன்றுதான். டி.ஜே. என்பது டிஸ்க் ஜோக்கி எனப்படும் ஆங்கில வார்த்தையின் சுருக்கம். அதன் பொருள், ஒரு விருந்தில் அல்லது பொதுமக்கள் கூடும் இடங்களில் சுவாரசியமாக பாடல்களை இசைப்பது. அதற்கேற்ப ஆடுவது. 1935இல் ஓர் அமெரிக்கர் அதை அறிமுகப்படுத்தினார். 1943இல் முதலாவது டிஜே பார்ட்டி இங்கிலாந்தில் இடம் பெற்றது. தமிழ்ப்பகுதிகளில் டிஜே இசை என்பது ஏற்கனவே உள்ள சினிமா பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை ஆடுவதற்கு ஏற்றாற்போல ரீமேக் செய்வதுதான். அதில் குறிப்பாக தாளம் தூக்கலாகக் கேட்கும். டும்டும்டும் என்று. அது இதயத்தில் அறைவது போலிருக்கும். ஆனால் அதற்கு ஒரு தலைமுறை ஆடுகிறது. இளையவர்கள் மட்டுமல்ல நடுத்தர வயதினரும் சேர்ந்து ஆடுவார்கள். ஆடுவது நல்லது. அது உடலிறுக்கத்தையும் மன இறுக்கத்தையும் நீக்கும். ஈகோவைத் தளர்த்தும். அது ஒரு நல்ல உடற்பயிற்சியும் மனப் பயிற்சியும் ஆகும். ஆனால் எதற்கு ஆடுகிறோம்? எப்பொழுது ஆடுகிறோம்? எங்கே ஆடுகிறோம் ? பெரும்பாலான இளையோர் ஒன்றுகூடல்களில் டிஜே ஆட்டம் இருக்கும். அங்குள்ள ஒலி பெருக்கிகள் அதிரும் பொழுது அது காதுக்கு இதமாக இருக்கிறதா அல்லது மனதுக்கு இதமாக இருக்கிறதா என்பதைக் குறித்து யாருக்கும் கவலையில்லை. ஆடுவதற்கு ஒர் இசை தேவை அவ்வளவுதான். அதேசமயம் எமது நரம்புகளும் காதுகளும் மரத்துப்போய் விட்டன எதையும் அது காட்டுகின்றதா? நல்ல இசையை கேட்கும் காதும் நல்ல இசையை ரசிக்கும் மனமும் மரத்துக் கொண்டு போகின்றனவா? அது ஒரு ருசி மாற்றம். ரசனை மாற்றம். இதுபோல இன்னுமொரு மாற்றத்தை இங்கு சுட்டிக் காட்டலாம். கரஞ்சுண்டல் வண்டில் என்பது நமது சிறுபிராய ஞாபகங்களோடு சேர்ந்து வருவது. பெற்றோமக்ஸ் விளக்கின் ஒளியில் மணியொலித்தபடி இரவுகளில் எமது தெருக்களில் அது வரும். அதை லாலா மிட்டாய் வண்டில் என்றும் அழைப்பதுண்டு. உறைப்பும் புளிப்பும் கலந்த, சூடு பறக்கும் கரஞ் சுண்டலின் பிறப்பிடம் வட இந்தியா என்று கூறப்படுகிறது. அதில் பயன்படுத்தப்படும் கடலை இடத்துக்கிடம் வேறுபடுவதாக விடயம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இப்பொழுது நமது திருவிழாக்களில் கரஞ்சுண்டல் கிடைப்பது அரிது. நல்லூர் திருவிழாவில் கடைசி மூன்று நாட்களில்தான் கரஞ்சுண்டல் கிடைப்பதுண்டு. பதிலாக ஸ்பெஷல் என்ற ஒன்று விற்கப்படுகிறது. கொஞ்சம் மரவள்ளிச் சீவல்; கொஞ்சம் பகோடா: சில சிறிய உருண்டையான கடலை வடைகள்; சிறிய புளித்த கோதுமை மா வடைகள்; அவித்த நூடில்ஸ்…. என்று பலதையும் பத்தையும் ஒரு தட்டில் போட்டு அதன் மீது சிறிதளவு கரஞ்சுண்டலைக் கொட்டி ஏதோ ஒரு குழம்பை ஊற்றித் தருவார்கள். அதுதான் ஸ்பெஷல். ஆனால் மொறு மொறுவென்று இருக்கும் மரவள்ளிச் சீவலுக்குள், பொரித்த சிறிய கடலை வடைக்குள் ஏதோ ஒரு பெயர் தெரியாத குழம்பை ஊற்றினால் என்ன நடக்கும்? மொறு மொறுவென்று இருப்பது இழகிப் போய்விடும்.அதற்குள் கரஞ் சுண்டலையும் கலக்க எல்லாமே பதம் கெட்டுவிடும். ஒர் உணவின் சுவையை அதன் பௌதீகப் பண்பிலிருந்து பிரிக்க முடியாது. ஆனால் ஒவ்வொரு தின்பாண்டத்தினதும் தனித்துவமான பௌதீகப் பண்பைக் கெடுத்து ஒன்றடிமன்றடியாக எல்லாவற்றையும் ஒன்றாக்கி விடுவது சுவையாக இருக்குமா? ஆனால் அதைத்தான் புதிய சுவை என்று கூறி விற்கிறார்கள். சனங்களும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். அது ஒரு ருசி மாற்றம்; ரசனை மாற்றம். டிஜே பார்ட்டியைப் போலவே, அதுவும் யாழ்ப்பாணத்தின் மாறிவரும் சுவையைக் காட்டுகின்றதா? எங்களுடைய செவிகள் ஏன் மரத்துப்போயின? எங்களுடைய சுவை நரம்புகள் ஏன் மரத்துப் போயின? நெஞ்சை உதைக்கும் இசைக்கு எப்பொழுது ஆடப் பழகினோம்? ஒரு சமூகத்தின் புலன்கள் மரத்துப்போய் கூருணர்வு மழுங்கிப் போனால் பிறகு என்ன நடக்கும்? அதை ஏனைய சமூகங்கள் இலகுவாக வேட்டையாடி விடும். அல்லது தோற்கடித்து விடும். இது யாழ்ப்பாணத்திற்கு மட்டுமல்ல, உலகம் முழுவதுமான பூகோளமயமாதலின் விளைவுகளில் ஒன்று. இவ்வாறு மாறிவரும் ருசி ரசனைகளைக் கவனத்தில் எடுத்துத்தான் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் கலை பண்பாட்டு இயக்கங்களும் தமது படைப்புகளை உருவாக்க வேண்டியிருக்கிறது. போர்க்காலங்களில், குறிப்பாக ஒரு ஆயுதப்பின் போராட்டத்தின் விளைவாகத் தோன்றிய ஒரு கருநிலை அரசு நிலத்தைக் கட்டுப்படுத்திய காலகட்டத்தில், மாவீரர் நாளை ஓர் அரச நிகழ்வாக அனுஷ்டித்து வந்தது. ஆனால் இப்பொழுது மனங்களைக் கட்டுப்படுத்தினால்தான் நிலங்களைக் கட்டுப்படுத்தலாம். அரசியலை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம். எனவே மாறிவரும் அரசியல், பொருளாதார, தொழில்நுட்பச் சூழலுக்குள் தமிழ் மக்களுடைய மனங்களை எப்படிக் கவர்வது என்று கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் குடிமக்கள் சமூகங்களும் சிந்திக்க வேண்டும். அதற்கு வேண்டிய கலை பண்பாட்டுக் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் ஒரு மக்கள் கூட்டம் எதை ரசிக்க வேண்டும்? எதை ருசிக்க வேண்டும்? எதைக் எப்பொழுது கொண்டாட வேண்டும்? எப்படிக் கொண்டாட வேண்டும்? எப்பொழுது கொண்டாட வேண்டும் போன்ற விடயங்களில், மக்களைப் பொருத்தமான இடங்களில் வழிநடத்தத் தேவையான கலை பண்பாட்டுத் தரிசனங்களை கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் கொண்டிருக்க வேண்டும். மாணவர்கள் மத்தியில் எதை விவாதப் பொருளாக மாற்றுவது என்பதனை கல்விச் சமூகம் தீர்மானிக்க வேண்டும். நாட்டில் எத்தனை தமிழ் கட்சிகளிடம் மாணவ அமைப்பு உண்டு? எத்தனை தமிழ் கட்சிகளுக்கு பல்கலைக்கழகங்களில் மாணவ அமைப்பு உண்டு? அண்மை நாட்களாக சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருட்களாக மாறியிருக்கும் விவாத மேடைகள், டிஜே பாட்டிகள் போன்றவை யாவும் தமிழ் மக்களுக்கு ஒரு விடயத்தை உணர்த்துகின்றன. நீதிக்காகப் போராடும் ஒரு சமூகம், தனக்கு வேண்டிய கட்டமைப்புகளை உருவாக்கத் தவறிய வெற்றிடத்தில்தான் இவ்வாறெல்லாம் நடக்கின்றன. கலை பண்பாட்டு அமைப்புக்கள், மாணவ அமைப்புகள் போன்றன அவ்வாறான தேச நிர்மானத்துக்குரிய கட்டமைப்புகள்தான். https://globaltamilnews.net/2023/197189/
  19. அம்மாக்களும் அப்புக்காத்துமாரும்- நிலாந்தன் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த வாரம் வவுனியாவில் தங்களுக்கிடையே மோதிக் கொண்டார்கள். ஆளுக்காள் அடிபட்டு, அதன் விளைவாக போலீஸ் நிலையம்வரை போயிருக்கிறார்கள். போலீசாரை சம்பவ இடத்துக்கு அழைத்ததும் அவர்கள்தான். எந்தப் போலீசுக்கு எதிராக இதுவரை காலமும் போராடினார்களோ, அதே போலீஸிடம் போய் ஆளுக்காள் முறைப்பாடு செய்திருக்கிறார்கள். இந்த மோதல் தொடர்பில் வடக்கு-கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் சங்கம் ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் மோதலைப் பற்றிய விளக்கம் உண்டு. ஆனால் அது முழுமையானதாக தெரியவில்லை. தமிழர் தாயகத்தில் உள்ள எல்லாச் சங்கங்களையும் ஒருங்கிணைகின்ற எல்லாச் சங்கங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மையக் கட்டமைப்பு இல்லை. கடந்த 14 ஆண்டுகளாக, சங்கங்களையும், தனித்தனிய அம்மாக்களையும் தனித்தனியாக பிரித்துக் கையாண்ட கட்சிகளும் புலம்பெயர்ந்த தமிழ்ச் செயற்பாட்டாளர்களும் இந்த மோதல்களுக்குப் பொறுப்பு கூற வேண்டும். தமிழ்த் தேசிய அரசியலில் ஏற்பட்ட ஆகப்பிந்திய வீழ்ச்சி அது. கடந்த 14 ஆண்டுகளாக எல்லாப் போராட்டங்களிலும் ஊர்வலங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் முன்னணிப் படையாக நிற்பது அந்த அம்மாக்கள்தான். கண்ணீரோடு மண்ணை அள்ளி வீசி அரசாங்கத்தைச் சபித்தபடி, எல்லாப் போராட்டங்களிலும் முன்னரங்கில் காணப்படுவார்கள். கடந்த 14 ஆண்டுகளாக தமிழ் மக்கள் மத்தியில் நீதிக்கான போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பது இந்த அம்மாக்கள்தான். கட்சிகளோ குடிமக்கள் சமூகங்களோ அல்ல. கடந்த 14 ஆண்டுகளாக வவுனியாவிலும் முல்லைத் தீவிலும் இரண்டு குடில்களில் மிகச் சில அம்மாக்கள் இருந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவருடைய போராட்டத்தை மக்கள் மயப்படுத்த அவர்களுக்கு தெரியவில்லை. மக்களும் அவர்களை நோக்கிச் செல்வது குறைவு. ஆனாலும் அவர்கள் தொடர்ந்து போராடுகிறார்கள். முழுத் தமிழ் மக்களுக்குமான போராட்டத்தின் உணர்ச்சிக் கூர்முனையாக அவர்களே காணப்படுகிறார்கள். அவர்கள் மத்தியில் கணிசமானவர்கள் மூப்பினாலும் களைப்பினாலும் ஏமாற்றத்தினாலும் நோய்களினாலும் இறந்து போய்விட்டார்கள். எனினும் விடாது போராடுகிறார்கள். அவர்களுடைய கண்ணீருக்குத் தமிழ் அரசியலில் ஒரு மகத்தான சக்தி உண்டு. கடந்த 14 ஆண்டு கால நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தில் உணர்ச்சிகரமான ஈட்டி முனையாக அவர்களே காணப்படுகிறார்கள். அதனால்தான் அவர்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு கட்சிகளும் முயற்சிக்கின்றன ;புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளும், தனி நபர்களும் முயற்சிக்கிறார்கள். அதனால்தான் அரசாங்கம் ஒரு முறை அவர்களை, அவர்கள் பயணம் செய்த பேருந்துக்குள் அடைத்துவைத்து வெளியேறவிடாமல் தடுத்தது; அவர்களை முரட்டுத்தனமாகக் கையாண்டது. அதனால்தான் அமெரிக்க தூதுவர் அவர்களைச் சந்தித்து அவர்களோடு படமெடுத்து அதைத் தனது ருவிட்டர் பக்கத்தில் பிரசுரிக்கிறார். அமெரிக்கத் தூதர் மட்டுமல்ல, இலங்கைக்கு வரும் மேற்கத்திய ராஜதந்திரிகள், ஐநாவின் முக்கியஸ்தர்கள் போன்றோர் அந்த அம்மாக்களைச் சந்திக்காமல் செல்வது குறைவு. ஐநா கூட்டத் தொடரில் ஈழத் தமிழர்களுக்கான கண்ணீர் சாட்சியங்கள் அவர்கள்தான். அந்த அம்மாக்களின் சங்கங்களின் பொறுப்பில் இருப்பவர்கள் எல்லாரும் அரசியல் தெளிவுடையவர்கள் என்றில்லை. அந்த அம்மாக்களின் கண்ணீர்தான் அவர்களுடைய பலம். ஆனால் கண்ணீருக்கு அரசியல் தெளிவு இருக்க வேண்டும் என்று இல்லை. இது அந்த அமைப்புகளில் காணப்படும் பிரதான பலவீனம். அடுத்த பலவீனம், அவர்களுக்கு உதவி புரியும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளும் தனி நபர்களும். அவர்கள்தான் உதவி புரிகிறார்கள்; அவர்கள் தான் தொலை இயக்கியால் இந்த அமைப்புகளை கட்டுப்படுத்தவும் முயல்கின்றார்கள். மூன்றுக்கும் குறையாத புலம்பெயர்ந்த தரப்புக்கள் இந்த அம்மாக்களைத் தத்தெடுக்க முயற்சிப்பதாக அவதானிக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய உதவிகள் இல்லையென்றால் கடந்த 14 ஆண்டுகளாக இந்த அம்மாக்கள் தொடர்ச்சியாகப் போராடியிருக்க முடியாது. அவர்களுடைய உதவிகள் இல்லையென்றால் இந்த அம்மாக்கள் ஐநா போன்ற உலக அவைகளுக்குச் சென்று தமது கண்ணீரைச் சாட்சியமாகக் கொடுத்திருக்க முடியாது. ஆனால் அவ்வாறு உதவி செய்யும் அமைப்புகளும் தனி நபர்களுமே இந்த அம்மாக்கள் பிரிந்திருப்பதற்கு ஒருவிதத்தில் காரணம். கட்சிகளும் காரணந்தான். சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் மக்கள் பேரவை பலமாக இருந்த காலகட்டத்தில் இந்த அம்மாக்களின் சங்கங்களை ஒற்றுமைப்படுத்த முயற்சித்தது. முடியவில்லை. சில குடிமக்கள் சமூகங்கள் முயற்சித்தன. முடியவில்லை. எனினும், வெளிநாட்டுத் தூதுவர்களுடான சந்திப்புகளின்போது சில சிவில் செயற்பாட்டாளர்கள் இந்த அம்மாக்களுக்கு உதவுவதுண்டு. ஆனால் எந்த ஒரு குடிமக்கள் சமூகத்தாலும் இந்த அம்மாக்களின் சங்கங்களை கட்டுக்கோப்பான ஐக்கிய அமைப்பாக திரட்டியெடுக்க முடியவில்லை. கடந்த 14ஆண்டுகளாக தமிழ்மக்கள் மத்தியில் போராட்டத்திற்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்கமுடியாத கட்சிகளும், தாயக அரசியலில் நிர்ணயகரமான விதங்களில் தலையிட முயற்சிக்கும் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளும் இந்த அம்மாக்களை எப்படித் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம் என்று எத்தனிக்கின்றன. போராடத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்க முடியாத மேற்கண்ட தரப்புகள் உணர்ச்சிகரமாக எப்பொழுதும் போராட்டத் தயார் நிலையில் காணப்படும் அம்மாக்களைத் தயார் நிலை முன்னணிப் போராளிகளாகப் பார்க்கின்றன. எனவே அவர்களைத் தத்தெடுக்க முயற்சிக்கின்றன. அவர்களாலும் கட்டமைப்புகளை உருவாக்க முடியவில்லை, உணர்ச்சிகரமான ஒரு பொது அடித்தளத்தில் ஓரளவுக்கு அமைப்பாகக்கூடிய அம்மாக்களையும் ஐக்கியப்பட விடுகிறார்கள் இல்லை. அதன் விளைவாகவே அம்மாக்களை கட்டுக்கோப்பான ஒரு மையக் கட்டமைப்புக்குள் கொண்டு வர முடியவில்லை. வவுனியாவில் ஏற்பட்ட மோதல்களின் பின்னணியிலும் புலம்பெயர்ந்த நபர்கள் சிலர் உண்டு என்று அம்மாக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். வவுனியா மோதலுக்குக் காரணம் கொள்கை முரண்பாடு அல்ல. கொள்கை ரீதியாக அந்த அம்மாக்களுக்கிடையே முரண்பாடுகள் கிடையாது. அந்த முரண்பாடுகளின் தோற்றுவாய் சில புலம்பெயர்ந்த தமிழர்கள் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது. இது தமிழ்த் தேசியப் பரப்புக்குள் ஏற்பட்ட ஒரு முரண்பாடு. அகமுரண்பாடு. இதனைப் பகை முரண்பாடு ஆக்காமல் நேச முரண்பாடாக அணுகியிருந்திருக்க வேண்டும். அல்லது அது பகை முரண்பாடாக மாறுவதை தடுத்து இந்த அம்மாக்களை ஒரு கட்சியோ சிவில் அமைப்போ ஐக்கிய படுத்தியிருந்திருக்க வேண்டும். ஆனால் தங்களுக்கு இடையே ஐக்கியபட முடியாத கட்சிகளும், கட்சிகளை ஐக்கியப்படுத்த முடியாத குடிமக்கள் சமூகங்களும் இந்த வயோதிப அம்மாக்களை எப்படி ஐக்கியப்படுத்தும்? தமிழ்த் தேசிய அரசியலானது அக முரண்பாடுகளைக் கையாளும் பக்குவம் குறைந்தது என்பதற்கு ஆகப்பிந்திய உதாரணம் இது. மற்றொரு உதாரணம், அண்மையில் இடம்பெற்றது. அம்மாக்கள் சண்டை போடுவதற்கு சில நாட்களுக்கு முன் நடந்தது. தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரான சுமந்திரன் ஓர் ஆங்கில ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில், சம்பந்தர் ஓய்வு பெற வேண்டும் என்று கேட்டிருந்தார். முதுமை காரணமாக சம்பந்தர் இயலாதவர் ஆகிவிட்டார் என்பதனால் அவர் ஓய்வு பெற வேண்டும் என்று சுமந்திரன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். கட்சியின் மிக மூத்த தலைவரைப்பற்றி அடுத்த நிலைத் தலைவர் ஒருவர் அவ்வாறு பகிரங்கமாகக் கூறுவது எதைக் காட்டுகிறது ? அது ஒர் உட்கட்சிப் பிரச்சினை. அதை ஏன் அவர் பகிரங்கமாக கூற வேண்டி வந்தது ? ஏற்கனவே கூட்டமைப்பாக இருந்தது படிப்படியாக உடைந்துடைந்து வந்து இப்பொழுது தமிழரசுக் கட்சியாகச் சுருங்கிப் போய்விட்டது. இபொழுது அக்கட்சி தனக்குள்ளேயும் மோதத் தொடங்கி விட்டதா? தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்று போட்டிதான் அதற்கு காரணம். அது எல்லா கட்சிகளுக்குள்ளும் ஏற்படும் ஜனநாயகப் போட்டி. அதில் சுமந்திரனும் சிறீதரனும் போட்டியிடக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உண்டு. சி.வி.கே.சிவஞானத்துக்கும் விருப்பம் உண்டு. ஆனால் மாவையும் சம்பந்தரும் தேர்தலை வைக்கிறார்கள் இல்லை. அரசாங்கம் தேர்தல்களை வைக்கவில்லை என்று கேட்கும் ஒரு கட்சி, தன்னுடைய தலைமைக்கான தேர்தலை ஒத்திவைத்து வருகிறது. அதன் விளைவாக கட்சியின் அடுத்த நிலைத் தலைவர் ஒருவர் உட்கட்சி விவகாரத்தை பொதுவெளியில் வைத்துப் பேசியிருக்கிறார். தமிழ்த் தேசிய அரசியலின் சீரழிவை மேற்கண்ட இரண்டு உதாரணங்களும் நமக்குக் காட்டுகின்றன. தங்களுக்கிடையே தீர்க்க வேண்டிய பிரச்சினைகளை பொது வெளிக்குக் கொண்டு வந்து, தங்களையும் கீழ்மைப்படுத்தி, தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தையும் பலமிழக்கச் செய்யக்கூடியவைகளாக மேற்படி சம்பவங்கள் காணப்படுகின்றன. தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பலமான தேசிய இயக்கம் இல்லாத வெற்றிடத்தில்தான் இவ்வாறான மோதல்கள் ஏற்படுகின்றன. மூத்த, பாரம்பரியம் மிக்க ஒரு கட்சியின் அப்புக்காத்துமாரும் பொறுப்பாக நடந்து கொள்ளவில்லை; பாதிக்கப்பட்ட முதிய அம்மாக்களும் பொறுப்பாக நடந்து கொள்ளவில்லை. https://www.nillanthan.com/6344/
  20. பலஸ்தீன இஸ்ரேல் யுத்தம்: தமிழர்கள் யாருடைய பக்கம்? - நிலாந்தன் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் வேகமெடுக்கத் தொடங்கியபோது 1970களின் இறுதியாண்டுகளிலும், 1980களின் முற்கூறிலும், தமிழ் இயக்கங்களான ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் போன்றன பாலஸ்தீனத்தில் படைதுறைப் பயிற்சிகளைப் பெற்றன. அவ்வாறு பயிற்சி பெற்றவர்கள் தாயகத்தில் “பிஎல்ஓ ரெய்னிஸ்” என்று அழைக்கப்பட்டார்கள். அவர்களிற் பலர் அந்த இயக்கங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்திருக்கிறார்கள். அவர்களிற் சிலர்-சுரேஷ் பிரேமச்சந்திரன், டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள்- இப்பொழுதும் தமிழ் அரசியலரங்கில் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பக் காலகட்டங்களில் பலஸ்தீனம் தமிழ் மக்களின் நட்பு சக்தியாக இருந்தது. அந்நாட்களில் கவிஞர் நுகுமான் தொகுத்த பாலஸ்தீனக் கவிதைகள் என்ற தொகுப்பு தமிழ்ப் போராளிகளால் விரும்பி வாசிக்கப்பட்டது. அந்நூல் பல இளம் கவிஞர்கள் மீது செல்வாக்குச் செலுத்தியது. அக்காலகட்டத்தில் இஸ்ரேல் இலங்கை அரசாங்கத்திற்கு போர்த் தளபாடங்களை வழங்கியது. அது கெடுபிடிப் போர்க் காலகட்டம். 1992இல் இரஸ்ரேலிய உளவு நிறுவனமாகிய மொசாட்டின் உளவாளிகளில் ஒருவரான விக்டர் ஒஸ்ரோவ்ஸ்கி என்பவர் ஒரு நூலை வெளியிட்டார். By Way of Deception:The Making and Unmaking of a Mossad Officer எனப்படும் அந்த நூல் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அந்த நூலை வெளியிட்ட விக்டர் ஒஸ்ரோவ்ஸ்கி கனடாவில் தஞ்சமடைந்து விட்டார். அந்த நூலானது மொசாட் எவ்வாறு இலங்கைத்தீவில் போரில் ஈடுபட்ட இரண்டு தரப்புகளுக்கும் உதவிகளை புரிந்தது என்ற தகவல்களை வெளிப்படுத்தியது .விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகளுக்கும் இலங்கை அரச படைகளுக்கும் ஒரே மைதானத்தின் இருவேறு பகுதிகளில் பயிற்சி வழங்கப்பட்டது பற்றிய விபரங்கள் அந்நூலில் உண்டு. மேலும் இலங்கை அரச படை அதிகாரிகள் தொடர்பாக தரக்குறைவாகச் சித்தரிக்கும் பகுதிகளும் உண்டு. இலங்கை அரச படை அதிகாரிகள் ஒருவர் துறைமுகத்தில் “வக்யூம் கிளினரோடு” இணைக்கப்பட்டிருந்த ஸ்கானிங் திரையைக் காட்டி இதில் என்ன தெரியும் என்று கேட்டபொழுது, நீருக்கடியில் ரகசியமாகச் சுழியோடி வருபவர்களின் குருதிப்பிரிவு உட்பட எல்லா விவரங்களையும் இது காட்டும் என்று ஒரு மொசாட் அதிகாரி அவருக்கு கூறுகிறார். ஏன் அப்படி பொய் சொன்னாய் என்று கேட்டதற்கு அவர்கள் இப்பொழுதுதான் காட்டிலிருந்து வந்திருக்கிறார்கள் என்ற தொனிப்பட அவர் பதில் கூறியதாக ஒரு ஞாபகம். இந்த நூலை விடுதலைப் புலிகள் இயக்கம் “வஞ்சகத்தின் வழியில்” என்ற தலைப்பில் மொழிபெயர்த்து தனது போராளிகளுக்கு விநியோகித்ததாகவும் ஒரு ஞாபகம். அந்த நூல் இலங்கை அரசு படைகளை அவமதிக்கிறது என்று கூறி அப்போதிருந்த ஜனாதிபதி பிரேமதாச விக்டர் ஒஸ்ரோவ்ஸ்கிக்கு எதிராக வழக்குத் தொடுக்க முற்பட்டதாகவும் ஒரு ஞாபகம். இந்நூல் வெளிவந்த அடுத்தாண்டு, 1993இல் நோர்வேயின் அனுசரணையுடனான சமாதான முயற்சிகளின் விளைவாக இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையில் ஒஸ்லோ உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. உடன்படிக்கையின்படி பலஸ்தீனர்களுக்கு ஒரு தன்னாட்சி அதிகாரக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இக்கட்டமைப்பு இலங்கைத்தீவில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அதிகம் நட்பாக காணப்பட்டது. தொடக்க காலத்தில் இருந்தே மகிந்த பாலஸ்தீனத்தின் நண்பனாக இருந்து வருகிறார். பலஸ்தீன-சிறீலங்கா சகோதரத்துவ அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் அவர். 2014 ஆம் ஆண்டு அவர் பலஸ்தீன அதிகார சபையின் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கு விஜயம் செய்தார். அங்கே அவருக்கு அந்நாட்டின் அதி உயர் விருது ஆகிய “Star of Palestine”-பலஸ்தீன நட்சத்திரம் விருது வழங்கப்பட்டது. அங்குள்ள ஒரு வீதிக்கு மகிந்தவின் பெயர் சூட்டப்பட்டது. இனப்படுகொலை மூலம் மகிந்த, தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தைத் தோற்கடித்ததாக தமிழ் மக்கள் குற்றஞ் சாட்டிக் கொண்டிருந்த ஓர் அரசியற் சூழலில், ஐநாவில் மகிந்தவுக்கு எதிராகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில், பலஸ்தீனம் மேற்கண்டவாறு மஹிந்தவைக் கௌரவித்தது. இப்படிப்பட்டதோர் வரலாற்றுப் பின்னணியில், இப்பொழுது வெடித்திருக்கும் இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையிலான போரில் தமிழ் மக்கள் எப்படிப்பட்டதொரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்? தர்மத்தின் அடிப்படையில் சொன்னால், போராடும் தேசிய இனம் என்ற அடிப்படையில் சொன்னால், பாலஸ்தீனத்தைத்தான் ஆதரிக்க வேண்டும். காசாவில் இப்பொழுது என்ன நடக்கின்றதோ அது தான் வன்னி கிழக்கிலும் நடந்தது. ஆனால் ஒரே ஒரு வித்தியாசம். பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக பெரும்பாலான அரபு நாடுகள் உண்டு. ஆனால் தமிழ் மக்களுக்கு ஆதரவாக வெளிப்படையாக எந்த ஒரு நாடும் அன்றைக்குக் குரல் கொடுக்கவில்லை. தமிழ்மக்கள் தனித்துவிடப்பட்டிருந்தார்கள். ஏறக்குறைய முழு உலகத்தாலும் சுற்றிவளைக்கப்பட்டிருந்த ஒரு நிலை. பலஸ்தீனர்களுக்கு உணவு, மருந்து, தார்மீக ஆதரவு போன்றவற்றைக் கொடுப்பதற்கு அரபு நாடுகள் உண்டு. ஆனால் ஈழத் தமிழர்களுக்கு யார் இருந்தார்கள்? அதேசமயம் இஸ்ரேலுக்கு அதன் தொட்டப்பாக்களாகிய மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து தார்மீக ஆதரவையும் ஆயுத தளபாடங்களையும் வழங்கி வருகின்றன. குறிப்பாக ஆசிய வட்டகைக்குள் இந்தியா போர் தொடங்கிய உடனேயே இஸ்ரேலுக்கு தன் ஆதரவை தெரிவித்துவிட்டது. இப்பொழுது மேற்சொன்னவற்றை தொகுத்துப் பார்க்கலாம். ஒரு காலம் தமிழ் மக்களுக்கு ஆதரவாக காணப்பட்ட பலஸ்தீனம் பின்னாளில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அதிஉயர் விருதை வழங்கியது. அதே சமயம் இலங்கை அரசாங்கத்துக்கு ஆயுதங்களை விநியோகித்த இஸ்ரேல் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் பயிற்சிகளை வழங்கியதாக விக்டர் ஒஸ்ரோவ்ஸ்கி கூறுகிறார். இப்பொழுது இஸ்ரேலை ஆதரிக்கும் மேற்கு நாடுகள் ஐநா மனித உரிமைகள் பேரவையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றன. அப்படியென்றால் இது விடயத்தில் ஈழத் தமிழர்கள் யாருடைய பக்கம் நிற்க வேண்டும்? தர்மத்தின் அடிப்படையில் சொன்னால் பலஸ்தீனத்தின் பக்கம்தான். ராஜதந்திரத்தின் அடிப்படையில் பார்த்தால்? முதலில் அரசியலில் தர்மம் சார்ந்த நிலைப்பாடுகள் உண்டா என்று பார்க்கலாம். நவீன அரசியலைப் பொறுத்தவரை அறம், தர்மம், நீதி என்று எதுவும் கிடையாது. அரசியல், ராணுவ, பொருளாதார நலன்சார்ந்த அருவருப்பான பேரம் மட்டும்தான் உண்டு. உதரணமாக, யூதர்களை எடுத்துக் கொள்வோம். உலகின் மிக நீண்டகாலம் புலப்பெயர்ந்த மக்கள் யூதர்கள்தான். சுமார் இரண்டு ஆயிரம் ஆண்டு கால புலப்பெயர்ச்சி அது. அதனால் உலகில் அதிகம் ஐரோப்பிய மயப்பட்ட ஆசியர்களாக அவர்கள் மாறினார்கள். கடந்த நூற்றாண்டில் யூதர்கள் ஐரோப்பாவெங்கும் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். இரண்டாம் உலகமகா யுத்தச் சூழலில் சுமார் 6 மில்லியன் யூதர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். அந்த இனப்படுகொலையின் குழந்தைதான் இஸ்ரேல். இன்னொரு விதமாகச் சொன்னால் யூதப் புலப்பெயர்ச்சியின் குழந்தையே இஸ்ரேல். ஆனால் ஓர் இனப்படுகொலையின் விளைவாக உருவாகிய யூததேசம், இன்னொரு இனப்படுகொலைக்குக் காரணமாகியது. உலகில் அதிகம் இனப்படுகொலைக்கு உள்ளாகிய ஒரு மக்கள் கூட்டம் சிறிய பலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்கின்றது. உலகின் மிகப்பெரிய இனப்படுகொலையில் இருந்து இஸ்ரேல் கற்றுக்கொள்ளாத அறத்தை, தர்மத்தை, நீதியை வேறு யாரிடமிருந்து எதிர்பார்க்கலாம் ? ஜனநாயகம், மனிதஉரிமைகள் போன்றவற்றை அரசியல் உபகரணங்களாகப் பயன்படுத்தும் மேற்கத்திய நாடுகள்தான் இஸ்ரேலின் தொட்டப்பாக்கள். கடந்த 18 ஆம் திகதி ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்கப் பிரதிநிதி பேசத் தொடங்கிய பொழுது, அங்கே பிரசன்னமாகியிருந்த பெரும்பாலான நாடுகளின் பிரதிநிதிகள் எழுந்து நின்று அமெரிக்கப் பிரதிநிதிக்கு தமது முதுகைக் காட்டியபடி நின்றார்கள். நிகழும் யுத்தத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு எதிரான நடவடிக்கை அது. ஆனால் அதே அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள்தான் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகத் தீர்மானங்களைக் கொண்டு வருகின்றன. இஸ்லாமிய நாடாகிய துருக்கி அமெரிக்கா தலைமையிலான நோட்டோவுக்குள் அங்கம் வகிக்கின்றது. ஆனால் ஹமாசுக்கு உதவி புரியும் நாடுகளில் துருக்கி முக்கியமானது. ஒருபுறம் அது ஹமாசுக்கு உதவி செய்கிறது; இன்னொருபுறம் அமெரிக்கக் கூட்டணிக்குள் காணப்படுகின்றது. கியூபா ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் பக்கம் தான் நிற்கின்றது. அது போராடி வென்ற ஒரு நாடு. ஈழப் போராட்டத்தின் தொடக்கத்தில் கியூபாவும் ஓர் இலட்சிய முன்மாதிரியாகப் போற்றப்பட்டது. ஈழப் போராளிகள் சிலர் தமக்கு கஸ்ரோ என்று பெயர் வைத்துக் கொண்டார்கள். ஆனால் கியூபா, ஐநாவில் தமிழ் மக்களின் பக்கம் நிற்கவில்லை. எனவே இங்கு தர்மம் ஒர் அளவுகோல் அல்ல.உலகில் எந்த ஒரு நாடும் அது சிறியதோ அல்லது பெரியதோ, தனது நலன் சார்ந்த முடிவுகளைத்தான் எடுக்கும். நலன்சார்ந்த உறவுகளைத்தான் வைத்துக் கொள்ளும். அறம் சார்ந்து அல்ல. அரசுடைய தரப்புக்களே அவ்வாறு முடிவு எடுக்கும் பொழுது அரசற்ற சிறிய மக்கள் கூட்டமாகிய ஈழத் தமிழர்கள் எப்படிப்பட்ட முடிவை எடுக்க வேண்டும்? நீதிமான்களிடம் தான் ஈழத்தமிழர்கள் நீதியை கேட்கலாம் என்றால் உலகில் எங்கேயும் நீதியை கேட்க முடியாது. தேவராஜ்யத்திடம்தான் கேட்கலாம். அல்லது மறைந்த மலையக தலைவர் சௌமியமூர்த்தி தொண்டைமானைப்போல யாகம் செய்யலாம். நவீன அரசியலைப் பொறுத்தவரை பூமி தர்மத்தின் அச்சில் சுற்றவில்லை. அது முழுக்கமுழுக்க நலன்களின் அச்சில்தான் சுற்றிக் கொண்டிருக்கிறது. அப்படியென்றால் ஈழத்தமிழர்கள் இப்பொழுது என்ன நிலைப்பாட்டை எடுப்பது? ஈழத்தமிழர்கள் மத்தியில் தோன்றிய ஆன்மீகவாதியும் எழுத்தாளரும் அறிஞரும் ஆகிய மு.தளையசிங்கம் ஒரு வார்த்தையை பயன்படுத்துவார். அதுதான் “சத்திய தந்திரம்”. மு.தளையசிங்கம் ஈழப்போரின் முன்னோடி இலக்கியவாதிகளில் ஒருவர். அவர் எழுதிய” ஒரு தனி வீடு” நாவல் ஒரு தனி நாட்டுக்கான போராட்டத்தை தீர்க்கதரிசனமாக வெளிப்படுத்தியது என்று அவருடைய ஆன்மீக நண்பர்கள் கூறுவார்கள். சத்திய தந்திரம் என்றால் என்ன? மகாபாரதத்தில் கிருஷ்ணர் செய்வது அதைத்தான். பாரதப்போரில் பாண்டவர்கள் வென்றது புஜபலத்தால் அல்லது ஆயுத பலத்தால் அல்லது படை பலத்தால் மட்டும் அல்ல. பெருமளவுக்கு கிருஷ்ணருடைய புத்தி பலத்தால்தான். மகாபாரதத்தை வேறு வார்த்தைகளில் சொன்னால் கிருஷ்ண தந்திரம் எனலாம். அதைத்தான் தளையசிங்கம் சத்திய தந்திரம் என்று சொன்னாரோ தெரியவில்லை. ஆனால் தமிழ் மக்கள் தமது போராட்டத்தின் இதயமாக இருக்கும் அறத்தைக் கைவிடாமல், உலக ஒழுங்குக்கு ஏற்ப நெளிவு சுழிவோடு நடந்து கொள்வது என்றால் அதுதான் ஒரே வழி. அதை கிறிஸ்துவின் வார்த்தைகளில் சொன்னால் “இதயத்தில் புறாக்களைப்போல் கபடம் இல்லாமலும் செயலில் பாம்புகளைப் போல் தந்திரமாகவும்” நடந்து கொள்வது. https://www.nillanthan.com/6314/
  21. நோகாமல் போராடும் கட்சிகளின் கடையடைப்பு? - நிலாந்தன் "நோகாமல் தின்னும் நுங்கு" காந்தி சொல்வார்…. அகிம்சை என்பது சாகத் துணிந்தவரின் ஆயுதம், அது சாகப் பயந்தவரின் ஆயுதம் அல்லவென்று. அகிம்சையில் மட்டுமல்ல வன்முறை போராட்டத்திலும் அதுதான் அடிப்படை விதி. அர்ப்பணிப்புக்குத் தயாராக இருப்பவர்கள்தான் தலைமை தாங்கலாம். தியாகத்துக்கு தயாராக இருக்கும் தலைமையின் கீழ் மக்கள் துணிந்து அணி திரள்வார்கள். முன்னுதாரணம் மிக்க தலைவர்களின் பின்தான் மக்கள் அணி திரண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழரசியல் அரங்கில் முல்லைத்தீவு நீதிபதிக்கு ஆதரவாக நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களைத் தொகுத்துப் பார்த்தால், ரிஸ்க் எடுப்பதற்கு தயாரில்லாத தலைவர்கள் பொதுமக்களை ரிஸ்க் எடுக்குமாறு தூண்டுகிறார்களா? என்று கேட்கத் தோண்றுகிறது. ஏழு கட்சிகள் இணைந்து கடந்த வாரம் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தின. அது பெரிய வெற்றியைப் பெறவில்லை. இப்பொழுது ஒரு கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. முல்லைத்தீவு நீதிபதி; நிலப் பறிப்பு; சிங்களபௌத்த மயமாக்கல்; மேய்ச்சல் தரை போன்ற எல்லா விவகாரங்களுக்குமாக வடக்குக் கிழக்கு முழுவத்துக்குமாக கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் கொங்கிரசும் அதற்கு ஆதரவு தருவதாக வாக்குறுதி அளித்ததாக ஒரு தகவல். முதலில் இந்த வாரம் கடையடைப்பு என்று கூறப்பட்டது. ஆனால் ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சை காரணமாக திகதியை ஒத்திவைக்குமாறு கேட்கப்பட்டது. அதனால் வரும் இருபதாம் திகதி, வெள்ளிக்கிழமை பூரண கடையடைப்பு என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏன் வெள்ளிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதற்கு பின்வரும் காரணங்கள் கூறப்படுகின்றன. முதலாவது காரணம், குறுகிய காலத்துக்குள் ஒழுங்கு செய்யக்கூடிய ஒரு போராட்டம் அதுதான் என்பது. இரண்டாவது காரணம், பெரிய போராட்டங்களுக்குத் தேவையான நிதியை உடனடியாகத் திரட்டுவதில் உள்ள சவால்கள். மூன்றாவது காரணம், வடக்குக் கிழக்கு தழுவிய ஒரு போராட்டம் குறிப்பாக முஸ்லிம்களையும் உள்ளடக்குவது என்று பார்த்தல் கடையடைப்பே வசதியானது. நாலாவது காரணம், அது வார இறுதி என்பதால் அன்றைக்கு வியாபாரம் பெரியளவு நடக்காது. எனவே வணிகர்கள் கடைகளை மூடச் சம்மதிப்பார்கள். ஐந்தாவது காரணம், அன்றைக்கு ஒன்பதாம் ஆண்டுக்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு தனியார் வகுப்புகள் நடக்காது. எனவே அந்தக் கடையடைப்பால் பிள்ளைகளின் படிப்பு அதிகம் பாதிக்கப்படாது. ஆறாவது காரணம், வெள்ளிக்கிழமை என்பதனால் முஸ்லிம்களும் அந்நாளில் கடைகளை மூடத் தயார் என்பது. இக்காரணங்களினால் அந்த வெள்ளிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அதைவிட முக்கியமாக மூன்று காரணங்கள் உண்டு. முதலாவது காரணம், தமிழ் அரசியல்வாதிகளிடம் 2009க்குப் பின்னரான அறவழிப் போராட்டம் தொடர்பாக பொருத்தமான தரிசனங்கள் இல்லை என்பது. அவர்கள் போராடுவோம் போராடுவோம் என்று கூறுகிறார்கள், ஆனால் எப்படிப் போராடுவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. புதிய போராட்ட வடிவங்களைக் கண்டுபிடிக்க அவர்களால் முடியவில்லை. அதனால்தான் பழைய, வழக்கொழிந்த, அல்லது சிறு திரள், கவனஈர்ப்புப் போராட்டங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். பெருந்திரள் மக்கள் போராட்டங்களை ஒழுங்குபடுத்த அவர்களால் முடியவில்லை. இரண்டாவது காரணம், அவர்களிடம் மக்களைத் திரட்டத் தேவையான அடிமட்டக் கட்டமைப்புக்கள் இல்லை. ஏற்கனவே பலமாக உள்ள கட்டமைப்புக்களில்தான் தங்கியிருக்கிறார்கள். ஏற்கனவே உள்ள சிவில் கட்டமைப்புக்கள் சம்மதித்தால், ஒருநாள் வாழ்க்கையை ஒப்பீட்டளவில் முடக்கலாம். உதாரணமாக வணிகர் கழகங்கள், தனியார் வாகன உரிமையாளர்கள், சந்தை நிர்வாகங்கள்… போன்றன ஒத்துழைத்தால் கடைகளை, சந்தைகளை மூடலாம்; பொதுப் போக்குவரத்தை முடக்கலாம். மூன்றாவது காரணம், அவர்கள் ரிஸ்க் எடுக்கத் தயாரில்லை. இதை இன்னும் ஆழமான பொருளில் சொன்னால், அவர்கள் தங்களுடைய மக்களுக்கு; தங்களுடைய அரசியல் இலக்குகளுக்கு விசுவாசமாக இல்லை. அதற்காக அர்ப்பணிப்போடு போராடத் தயாரில்லை. சிவப்பு மஞ்சள் கொடிகளைக் கட்டி, தாயகம்; தேசியம்; சுயநிர்ணயம்…. என்று கோஷம் வைத்தால் தமிழ் மக்கள் தங்களின் பின் வருவார்கள் என்று கற்பனை செய்கிறார்கள். அல்லது ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்ட பெயர்களை முன்னிறுத்தி அல்லது ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்ட சின்னங்களை முன்னிறுத்தி வாக்குகளைத் திரட்ட ஆசைப்படுகிறார்கள். ஆனால் ஒரு புதிய சின்னத்தை ஒரு புதிய கொடியை அறிமுகப்படுத்தி அதற்காக அர்ப்பணித்து தம்மை உருக்கிப் போராடி அந்தச் சின்னத்தை, அந்தப் புதிய பெயரை மக்களுடைய மனங்களில் ஆழமாகப் பதிய வைக்க அவர்களால் முடியவில்லை. இந்த இயலாமைகள்தான் அரசியல்வாதிகள் தங்களுக்கு நோகாத போராட்டங்களை தேர்ந்தெடுக்க காரணம். தாங்கள் ரிஸ்க் எடுத்து; தாங்கள் முன்நின்று போராடத் தயாரில்லாத அரசியல் தலைவர்கள் மக்களுக்கும் நோகாமல் தங்களுக்கும் நோகாமல் எப்படிப் போராடுவது என்று சிந்தித்து கண்டுபிடித்த ஒரு போராட்டந்தான் கடையடைப்பா? கடந்த வாரம் அவர்கள் ஒழுங்குபடுத்திய மனிதச் சங்கிலிப் போராட்டம் போராட்டம் ஏன் வெற்றி பெறவில்லை என்பதிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளாத கட்சிகள் மீண்டும் ஒரு தடவை தங்களுக்கு நோகாத ஒரு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கின்றனவா? ஏற்கனவே, இந்த ஆண்டு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிக்கு நீதி கேட்டு ஒரு கடையடைப்பு நடத்தப்பட்டது. இப்பொழுது மேலுமொரு கடையடைப்பு. எந்த ஒரு போராட்டமும், அது ஆயுதப் போராட்டமாக இருந்தாலும் சரி, அகிம்சைப் போராட்டமாக இருந்தாலும் சரி, அது பிரதானமாக இரண்டு விளைவுகளை ஏற்படுத்த வேண்டும். முதலாவது விளைவு, அகவயமானது. அது மக்களை போராட்டத்தை நோக்கித் திரட்ட வேண்டும். குறிப்பிட்ட அமைப்பின் கீழ் அல்லது கட்சியின் கீழ் மக்கள் ஒரு திரண்ட சக்தியாக, ஆக்க சக்தியாக மாற்றப்பட வேண்டும். அந்த மக்கள் திரட்சிதான் எதிரியைப் பணிய வைக்கும்; வெளி உலகத்தைப் போராட்டத்தை நோக்கி ஈர்க்கும். எனவே எந்த ஒரு போராட்டமும் மக்களை ஒரு மையத்தில் திரட்டி மகத்தான ஆக்க சக்தியாக மாற்றக் கூடியதாக இருக்க வேண்டும். இரண்டாவது விளைவு புறவயமானது. அப்போராட்டமானது எதிர்த்தரப்புக்கு வலியை ஏற்படுத்த வேண்டும். சேதத்தை; தாக்கத்தை; இழப்பை ஏற்படுத்த வேண்டும். எதிர்த் தரப்பின் பொருளாதாரத்தை அல்லது நிர்வாகத்தை முடக்க வேண்டும். எந்த ஒரு போராட்டமும் எதிர்த் தரப்புக்கு தாக்கமான சேதத்தை ஏற்படுத்தவில்லையென்றால் அங்கே அரசியல் வலுச்சமநிலை மாறாது. அரசியல் வலுச்சமநிலையை மாற்றக்கூடிய சக்தி போராட்டத்திற்கு இருக்க வேண்டும். இந்த விளக்கத்தின் அடிப்படையில் கடையடைப்பு என்ற போராட்ட வடிவத்தைப் பார்ப்போம். இக்கட்டுரை கடையடைப்பை நிராகரிக்கவில்லை. கடையடைப்பில் ஒரு அடிப்படை நன்மை உண்டு. என்னவெனில்,மக்கள் தாமாக முன்வந்து கடைகளை மூடும்பொழுது அங்கே ஒரு கூட்டுணர்வு ஏற்படும். ஒரு நாள் உழைப்பை இழப்பதற்கு தயாராகும் மக்கள் தங்களால் இயன்ற தியாகத்தை அன்றைக்குச் செய்கிறார்கள். அதனால் வரும் இழப்பை ஏற்றுக் கொள்ளச் சித்தமாய் இருக்கிறார்கள். எனவே போராட்ட நெருப்பை ஒரு சிறு அளவுக்கேனும் அணையாமல் வைத்திருக்க அந்த நாள் உதவும். மக்களை குறைந்தபட்சம் ஒரு தேசமாகத் திரட்ட அது உதவும். அதாவது கடையடைப்பால், அகவயமான நன்மையுண்டு. இந்த ஒரு நன்மைதான் கடையடைப்பில் உண்டு. மற்றும்படி ஒருநாள் கடையடைப்பு தமிழ் வணிகர்களுக்கும் அன்றாடம் உழைப்பவர்களுக்கும் ஏற்படுத்தக் கூடிய இழப்பை விடவும் அதிகரித்த இழப்பை அரசாங்கத்திற்கு ஏற்படுத்துமா? அல்லது அது உலகத்தை திரும்பிப் பார்க்க வைக்குமா? கடந்த ஆண்டு டெல்லியில் விவசாயிகள் தொடர்ச்சியாகப் போராடினார்கள். ஆசிரியர்கள் அதிபர்கள் தொடர்ச்சியாகப் போராடினார்கள். கோட்டா கோகம போலவே விவசாயிகளின் போராட்டமும் உலகின் கவனத்தை ஈர்த்தது. முடிவில் இந்திய அரசாங்கம் விவசாயிகளின் கோரிக்கைகளுக்குப் பணிந்தது. ஆனால் ஏழு கட்சிகளின் ஒரு நாள் கடையடைப்பு அரசாங்கத்தைப் பணிய வைக்குமா? அல்லது தமிழ் மக்கள் எதிர்க்கிறார்கள் என்ற ஒரு விடயத்தை உலகத்துக்கும் அரசாங்கத்துக்கும் உணர்த்துவது மட்டும்தான் கடை யடைப்பின் நோக்கமா? அல்லது தமிழ்க் கட்சித் தலைவர்கள் நோகாமல் போராடுவதற்கு வசதியான ஒரு போராட்ட முறைதான் கடையடைப்பா? https://globaltamilnews.net/2023/196123/
  22. அரோகராப் போராட்டம்? - நிலாந்தன் ஒரு நீதிபதிக்கு நீதி கேட்டுத் தமிழ் மக்கள் ஒன்று திரளும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த வாரத்திலிருந்து தமிழ்ப் பகுதிகளெங்கும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பாக கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட மனிதச் சங்கிலிப் போராட்டத்தைக் குறிப்பிட வேண்டும். இது குத்துவிளக்குக் கூட்டணியால் ஒழுங்கு செய்யப்பட்டது. எனினும் ஏனைய கட்சிகளும் அதற்கு ஆதரவைக் காட்டின. அந்தப் போராட்டம் சரியான நேரத்தில் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் அது சொந்த மக்களின் கவனத்தையும், உலக சமூகத்தின் கவனத்தையும் ஈர்க்கத்தக்க விதத்தில் பிரம்மாண்டமானதாக முன்னெடுக்கப்பட்டதா? மருதனார் மடத்திலிருந்து தொடங்கி யாழ்ப்பாணம் வரையிலும் மனிதச் சங்கிலிப் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது. போராட்டத்தில் இணையுமாறு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டன. எனினும் அது ஒரு நீண்ட மனிதச் சங்கிலிப் போராட்டமாக அமையவில்லை. மனிதச் சங்கிலி தொடர்ச்சியானதாக அமையவில்லை. கொக்குவில் சந்தியில் கட்சித் தலைவர்களும் செயற்பாட்டாளர்களும் சட்டத்துறையைச் சேர்ந்தவர்களும் முழந்தாளிட்டு நீதி தேவதையிடம் முறைப்பாடு செய்தார்கள். அங்கே அரோகரா கோஷமும் எழுப்பப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தன்பங்குக்கு ஒரு மனிதச் சங்கிலிப் போராட்டத்தைச் செய்தது. இரண்டு மனிதச் சங்கிலிகளுக்கும் இடையே தொடுப்பு இருக்கவில்லை. இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் அங்கே காணப்பட்டார்கள். ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் காணவில்லை. முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களில் ஒரு பகுதியினரும் உள்ளூராட்சி சபைகளைச் சேர்ந்தவர்களில் ஒரு பகுதியினரும் அங்கே காணப்பட்டார்கள். சட்டத் துறையை சேர்ந்தவர்கள் அதிகரித்த அளவில் பங்குபற்றவில்லை. சிவில் சமூகங்களும் குறைவு. பல்கலைக்கழக மாணவர்களைக் காணவில்லை. கட்சி ஆதரவாளர்கள்கூட முழு அளவுக்குப் பங்குபற்றியதாகத் தெரியவில்லை. அப்படி ஒரு போராட்டத்தை முதலில் சிந்தித்த கட்சிகள் அதைக் குறித்து நடைமுறைச் சாத்தியமான வழிகளில் திட்டமிட்டிருக்கவில்லையா? அது மிக எளிமையான ஒரு கணிதம். மருதனாமடத்திலிருந்து யாழ்ப்பாணம் வரையிலுமான மொத்தத் தூரத்தைக் கணக்கிட்டு அவ்வளவு தூரத்துக்கும் கைகோர்த்தபடி நிற்பதற்கு எத்தனை பேர் தேவை என்பதை கண்டுபிடித்திருக்கலாம். அதன்பின் அத்தூரத்தைப் பங்கு கொள்ளும் கட்சிகளின் தொகையால் பிரித்து, ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கிலோமீட்டர் என்று பிரித்துக் கொடுத்திருக்கலாம். அதன்படி ஒவ்வொரு கட்சியும் தனக்குரிய தூரத்துக்கு வேண்டிய ஆட்களை அழைத்துக் கொண்டு வந்திருந்தாலே போதும். மனிதச் சங்கிலி வெற்றிகரமானதாக அமைந்திருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை. துண்டுப் பிரசுரத்தைக் கொடுத்தால் மக்கள் வருவார்கள் என்று கட்சிகள் நம்பினவா? ஆனால் இதுபோன்ற மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தேவையான அடிமட்டக் கட்டமைப்புகள், வலையமைப்புகள் கட்சிகளிடம் குறைவு என்பதைத்தான் போராட்டம் மீண்டும் ஒரு தடவை உணர்த்தியது. தாங்கள் அழைத்தால் மக்கள் வருவார்கள் என்று கட்சிகள் நம்பினவா? எந்த ஒரு போராட்டத்திற்கும் வீட்டு வேலை அவசியம். எல்லாவற்றையும் கணிதமாக கணக்கிடலாம். அதில் எங்கேயும் கற்பனையான எதிர்பார்ப்புகளுக்கு இடமில்லை. கடந்த சில தசாப்தங்களாக தமிழ் மக்கள் மத்தியில் வெற்றி பெற்ற எல்லாப் போராட்டங்களின் பின்னணியிலும் கடுமையான உழைப்பு இருந்திருக்கிறது. ஒன்றிணைவு இருந்திருக்கிறது. மக்கள் தாமாகத் திரள்வதற்கு இது ஒன்றும் கோவில் திருவிழா அல்ல. அல்லது பண்டிகைக்காலச் சந்தையும் அல்ல. கட்சிகள் தங்களுடைய கீழ்மட்ட வலையமைப்புக்கள் ஊடாக மக்களைத் திரட்டிக் கொண்டுவர வேண்டும். ஆனால் கடந்த புதன்கிழமை அது நடந்ததாகத் தெரியவில்லை. போதாக்குறைக்கு போராட்டத்தின் முடிவில் கொக்குவில் நீதி தேவதையிடம் முழந்தாளிட்டு மன்றாடப்பட்டது. முழந்தாளிட்டு மன்றாடுவது போராட்டமாகி விடாது. அதைத் தேவாலயங்களில் செய்யலாம். சில ஆண்டுகளுக்கு முன் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு நினைவு கூர்தல் நிகழ்வில் அவ்வாறு முழந்தாளிட்டு நின்றதாக ஞாபகம். அமெரிக்காவில் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு கறுப்பினத்தவர் போலீசாரால் கொல்லப்பட்டதையடுத்து போராட்டங்கள் வெடித்தன. அதன்போது அமெரிக்க போலீஸ் கொல்லப்பட்ட கறுப்பினத்தவரிடம் மன்னிப்பு கேட்கும் விதத்தில் ஒரு காலில் முழந்தாளிட்டு அமர்ந்து மன்னிப்பு கேட்டது. அது மன்னிப்புக் கேட்பது. போராட்டம் அல்ல. ஆனால் கொக்குவில் நடந்தது ஒரு போராட்டம். தமிழ் மக்கள் ஆலயங்களில் மன்றாடியிருக்கிறார்கள். ஆனால் அரசியல் காரணங்களுக்காக மன்றாடவில்லை. வீரமாகப் போராடியிருக்கிறார்கள். விதி திரைப்படத்தில் நீதிமன்றக் காட்சியில் கதாநாயகி சுஜாதா தனது தர்க்கத்தை முன்வைத்த பின் அழுது மன்றாடி மயங்கி விழுந்து நீதி கேட்கின்றார். ஆனால் நீதிக்காகப் போராடும் மக்கள் அப்படியெல்லாம் மன்றாட முடியாது. பைபிளில் ஒரு வசனம் உண்டு “நீதியின் கிரீடம் முட்களாலானது” என்று. நீதிக்கான போராட்டம் அத்தகையதுதான். கண்ணகி தன் கணவனுக்கு நீதி கேட்டு பாண்டிய மன்னனிடம் மன்றாட வில்லை. அவளுடைய கோபம் பாண்டியனை கொன்றது; மதுரையைச் சுட்டெரித்தது. சாவித்திரி தன் கணவனைக் காப்பாற்றுவதற்காக யமனோடு அதாவது மரணத்தோடு போராடினாள். இவை காப்பியகால உதாரணங்கள். போராட்டங்கள் மன்றாட்டங்களாக இருக்க முடியாது. அவை வீரமானவைகளாகவும் அர்ப்பணிப்புக்கு தயாரானவைகளாகவும் இருக்க வேண்டும். நவீன காலத்தில் தமிழ்மக்கள் மன்றாடி எதையும் பெறவில்லை. போராடித்தான் பெற்றார்கள். பதின்மூன்றாவது திருத்தமே தமிழ் மக்களின் போராட்டத்தின் விளைவுதான். ஆனால் தமிழ்க் கட்சிகள் நோகாமல் போராடப் பார்க்கின்றனவா? அல்லது கடமைக்கு போராடுகின்றனவா? அல்லது 2009க்குப் பின்னரான அறவழிப் போராட்ட வடிவத்தை குறித்துத் தமிழ்க் கட்சிகளிடம் படைப்புத்திறன் மிக்க தரிசனம் எதுவும் கிடையாதா? போதாக்குறைக்கு போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் கோஷம் எழுப்பும் போது ஒவ்வொரு கோஷத்தின் முடிவிலும் “அரோகரா” சொல்லப்பட்டது. அரோகரா என்றால் என்ன? அரன் – சிவன் ; ரோகம் – துன்பம், தீவினை, வலி; அர-அறுக்க. “ சிவனே ரோகம் அறுக்க” என்றும் பொருள்படும். அரோகரா முதலில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரால் பயன்படுத்தப்பட்டது என்று ஒரு தகவல் உண்டு. திருஞானசம்பந்தர் ஒருமுறை பல்லக்கில் அமர்ந்து பயணம் செய்யும்போது, அவரைச் சுமந்து கொண்டு வந்தவர்கள் ‘ஏலேலோ ஏலேலோ’ என்று களைப்பைக் குறைப்பதற்காக பாடிக்கொண்டு வந்தனர். அதைச் செவிமடுத்த திருஞானசம்பந்தர், பொருளற்ற ஒன்றைச் சொல்வதைவிட பொருளோடு ஒன்றைச் சொன்னால் நல்லது என்று, ’அர ஹரோ ஹரா’ என்பதைக் கற்றுக் கொடுத்தார். அதன்பிறகு ‘அர ஹரோஹரா’ என்றுச்சொல்வது வழக்கமாயிற்று என்று ஒரு தகவல் உண்டு. அது மருவி அரோகரா ஆயிற்று அரோகரா என்ற சொல் மங்களமானது. நேர்க்கணியமானது. திட்டுவதற்கும் சபிப்பதற்கும் பயன்படுத்தப்படும் ஒரு சொல் அல்ல. ஆனால் கடந்த புதன்கிழமை கொக்குவிலில் அரோகரா எப்படிப் பயன்படுத்தப்பட்டது? “நாடாளுமன்றத்துக்கு அரோகரா… நீதிபதிக்கு அரோகரா… நீதித்துறைக்கு அரோகரா…. ஜனாதிபதிக்கு அரோகரா…. சிறீலங்காவுக்கு அரோகரா”… என்றால் என்ன பொருள்? பண்பாட்டு ரீதியிலான சடங்குகளை, மத நம்பிக்கைகளை போராட்டங்களில் இணைப்பது ஒர் உத்தி. அது ஒரு மக்கள் கூட்டத்தை உணர்வுபூர்வமாக இணைப்பதற்கு உதவும். ஈழப்போராட்த்தின் முதலாவது தெரு நாடகம் “விடுதலைக் காளி” அது கலையாடிக் குறி சொல்லும் மத நம்பிக்கையை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அரகலயவின்போது சிங்களச் செயற்பாட்டாளர்கள் அவ்வாறான மகத்தான புத்தாக்கத் திறனை வெளிப்படுத்தினார்கள். தமிழ்க் கட்சிகள் அங்கிருந்துகூட எதையும் கற்றுக் கொள்ளவில்லையா? தமிழ்க் கட்சிகளின் கற்பனை வறட்சியை; தமிழ் கட்சிகளுடைய அரோகராப் போராட்டம் காட்டியதா? ஒரு போராட்டத்தில் படைப்புத்திறன் எங்கே வெளிப்படுகிறது என்றால் போராடுபவர்கள் அந்தப் போராட்டத்துக்கு ஆகக்கூடிய பட்சம் உண்மையாகவும் அர்ப்பணிப்போடும் இருக்கும்போதுதான். மக்களை நேசித்த எல்லாப் போராட்டங்களிலும் படைப்புத்திறன் அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் அதற்கு உதாரணங்களைக் காட்டலாம். ஆனால் துரதிஷ்டவசமாக தமிழ்க் கட்சிகளால் அவ்வாறான படைப்புத்திறனை வெளிப்படுத்த முடியவில்லை. ஏன்? 2009இல் இறுதிக்கட்ட போரின்போது தமிழ்நாட்டில் நடந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்தை இங்கே சுட்டிக்காட்டலாம். அது மிக நீண்டது; பிரமாண்டமானது. கொட்டும் மழைக்குள் நனைந்து தோய்ந்த ஆடைகளில் நீர் சொட்டச் சொட்ட மனிதர்கள் சங்கிலிகளாகப் பிணைந்து நின்றார்கள். ஆனால் கடந்த புதன்கிழமை நடந்தது அத்தகையது அல்ல. அது ஓர் அறுந்த சங்கிலிப் போராட்டம். அடுத்ததாக ஒரு கடையடைப்புக்கு அழைப்பு விடப்போவதாக ஏழு கட்சிகள் கூடி முடிவெடுத்திருக்கின்றன. ஆயின், தமிழ் அரசியல்வாதிகள் தங்களுக்கு நோகாத போராட்டங்களைத்தான் தெரிந்தெடுக்கிறார்களா? https://www.nillanthan.com/6300/
  23. நீதிபதிக்கே கிடைக்காத நீதி? - நிலாந்தன் கடந்த வாரம் திலீபன். இந்த வாரம் ஒரு நீதிபதி. முல்லைத்தீவு நீதிபதிக்கு எதிரான சரத் வீரசேகரவின் கருத்துக்கள் வெற்றிடத்தில் இருந்து வரவில்லை. அவை ஒரு தனி நாடாளுமன்ற உறுப்பினரின் கூற்றுகள் என்றும் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அவை ஒரு கூட்டு உளவியலின் வெளிப்பாடுகள். கடந்த பல தசாப்தங்களாக சுமார் அரை நூற்றாண்டுக்கு மேலாக ஸ்ரீலங்கா நாடாளுமன்றம் எனப்படுவது வெறுப்பு பேச்சுக்களைக் கக்கும் ஓரிடமாகத்தான் காணப்படுகிறது. இனப்படுகொலை தொடர்பான ஐநாவின் நிபுணத்துவக் கூற்று ஒன்று உண்டு. ” யூத இனப்படுகொலை எனப்படுவது காஸ் சேம்பர்களில் இருந்து-நச்சு வாயுக் கொலைக்கூடங்களில் இருந்து தொடங்கவில்லை. வெறுப்புப் பேச்சுகளில் இருந்துதான் தொடங்கியது” என்று. இலங்கை நாடாளுமன்றம் கடந்த பல தசாப்தங்களாக தமிழ் மக்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்களை அச்சமின்றிக் கூறும் ஓரிடமாகக் காணப்படுகின்றது. நாடாளுமன்றப் பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்ட மற்றும் நீக்கப்படாத வெறுப்புப் பேச்சுக்களைத் தொகுத்தாலே போதும், இனப்பிரச்சினையின் ஊற்றுக்களை; இனப்படுகொலையின் ஊற்றுக்களைத் தெளிவாகக் காணலாம். சரத் வீரசேகர ஒரு தனி நாடாளுமன்ற உறுப்பினராக முல்லைத்தீவு நீதிபதியை அவமதிக்கவில்லை. அவர் ஒரு சமூகத்தின் கூட்டு உளவியலைத்தான் பிரதிபலித்தார். ஒரு நாடாளுமன்றத்தின் அபகீர்த்திமிக்க ஒரு பாரம்பரியத்தின் ஆகப்பிந்திய வாரிசு அவர். முன்னாள் ஜனாதிபதி ஜெயவர்த்தன தனக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கிய பிரதம நீதியரசர் நெவில் சமரக்கோனின் வீட்டை கற்களால் தாக்குமாறு தனது ஆதரவாளர்களை ஏவியதாக குற்றம் சாட்டப்படுகிறது. எந்தப் பிரதம நீதியரசரின் முன் அவர் பதவியேற்றாரோ, அதே பிரதம நீதியரசரின் வீட்டைத் தாக்குமாறு குண்டர்களே ஏவி விட்டார். ராஜபக்சக்கள் இலங்கைத் தீவின் முதற் பெண் பிரதம நீதியரசரான சிராணி பண்டாரநாயக்காவை நாடாளுமன்றத்தின் மூலம் பதவி நீக்கினார்கள். தங்கள் சொந்த இனத்தைச் சேர்ந்த பிரதம நீதியரசர்களையே அவமதிக்கும் ஓர் அரசியல் பாரம்பரியத்தில், ஒரு மாவட்ட நீதிபதிக்கு இவ்வாறு நடந்தமை புதுமையானது அல்ல. அதுமட்டுமல்ல இந்த விடயத்தில் தமிழ் மக்கள் மேலும் ஆழமாக விளங்கிக் கொள்ள வேண்டிய ஒரு விடயம் உண்டு. சட்டம், நீதி பரிபாலனக் கட்டமைப்பு போன்றவை சுயாதீனமானவை என்று கூறப்படுவது ஒரு தோற்றமாயைதான். ஜனநாயக இதயம் செழிப்பாக இருக்கும் ஒரு நாட்டில் நீதிபரிபாலனத் துறைக்கும் சட்டவாக்கத்துறைக்கும் இடையே வலு வேறாக்கம் இருக்கக்கூடும். ஆனால் ஜனநாயகத்துக்குப் பதிலாக இனநாயகம் பயிலப்படும் ஒரு நாட்டில், இனநாயகத்தின் பாதுகாப்பிடமாகக் காணப்படும் ஒரு நாடாளுமன்றம் இனரீதியாக பாரபட்சமுள்ள சட்டங்களைத்தான் நிறைவேற்றும். அதாவது ஓர் அரசுக் கட்டமைப்பின் அரசுக் கொள்கை எதுவோ அதைத்தான் அவர்கள் சட்டமாக நிறைவேற்றுவார்கள். அந்த சட்டத்தைத்தான் நீதிபரிபாலானக் கட்டமைப்பு அமுல்படுத்தும். அதாவது சட்டமும் நீதிபரிபாலனக் கட்டமைப்பும் அரசின் உபகரணங்கள்தான். இதில் சில தனிப்பட்ட நீதிபதிகள் அந்த சிஸ்டத்தின் கைதிகளாக இருக்க மறுக்கும் பொழுது நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டி வரும். சட்டம் என்பது அதிகாரத்தின் சேவகன்தான். அதிகாரத்தில் இருப்பவர்கள் தமது ஆட்சிக் கொள்கையை அமுல்படுத்த சட்டங்களை இயற்றுவார்கள். பயங்கரவாதத் தடைச்சட்டம், இப்பொழுது விவாதிக்கப்படும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம், நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் போன்ற எல்லாமே ஒடுக்கும் அரசுக்கட்டமைப்பின் உபகரணங்களே. இவை மட்டுமல்ல பெருந்தொற்று நோய்க் காலத்தில் தனிமைப்படுத்தல் சட்டமானது தமிழ் மக்களின் நினைவு கூரும் உரிமைக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டதை இங்கு சுட்டிக்காட்டலாம். இதுதொடர்பில் அதிகம் பகிரப்படும் ஓர் ஆங்கிலக் கூற்று உண்டு. “தென்னாபிரிக்காவின் இனஒதுக்கல் சட்டபூர்வமாகத்தான் செய்யப்பட்டது. ஹிட்லர் யூதர்களை இனப்படுகொலை புரிந்தமை சட்டபூர்வமாகத்தான் செய்யப்பட்டது. அடிமை முறைமை சட்டபூர்வமானது. கொலோனியலிசம் அதாவது குடியேற்றவாதம் சட்டபூர்வமானது. எது சட்டபூர்வமானது என்பது நீதியின் பாற்பட்ட ஒரு விவகாரம் அல்ல. அது அதிகாரத்தின் பாற்பட்ட ஒரு விவகாரமே” இலங்கைத்தீவில் நாடாளுமன்றம் இனரீதியிலான அதிகாரத்தைப் பிரதிபலிக்கும்போது இங்கு சட்டமும் அந்த அதிகாரத்தின் சேவகனாகவே காணப்படும். இந்த விளக்கத்தின் பின்னணியில் வைத்துத்தான் முல்லைத்தீவு நீதிபதியின் விவகாரத்தைப் பார்க்க வேண்டும். இலங்கைத்தீவின் உள்நாட்டு நீதியெனப்படுவது ஏற்கனவே கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு விட்டது. 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஐநாவின் நிலைமாறுகால நீதிக்கான அல்லது பொறுப்புக் கூறலுக்கான தீர்மானம் எனப்படுவது உள்நாட்டு நீதியின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்குகின்றது. உள்நாட்டு நீதி போதுமாக இருந்தால் எதற்காக நிலைமாறு கால நீதி என்ற அனைத்துலக ஏற்பாட்டைக் குறித்துச் சிந்திக்க வேண்டி வந்தது? மேலும் அண்மையில் வெளியிடப்பட்ட சனல் நாலு வீடியோவும் உள்நாட்டு நீதி தொடர்பாக ஏற்கனவே உள்ள சந்தேகங்களைப் பலப்படுத்துகின்றது. கடந்த ஆண்டு ஐநாவில் நிறைவேற்றப்பட்ட 56/1 தீர்மானத்தின் அடிப்படையில் சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரித்துத் தொகுப்பதற்கான ஒரு கட்டமைப்பு ஐநா மனித உரிமைகள் ஆணையருடைய அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றது. இதில் சேகரிக்கப்படும் தகவல்கள் என்றைக்கோ ஒரு நாள் இலங்கைக்கு எதிராக பயன்படுத்தப்படத்தக்கவை. அவை நிச்சயமாக இலங்கைத் தீவின் உள்நாட்டு நீதிபரிபாலனக் கட்டமைப்பிடம் வழங்கப்படப் போகும் தகவல்கள் அல்ல. இலங்கைத் தீவின் உள்நாட்டுப் புலனாய்வுக் கட்டமைப்பு மற்றும் நீதிபரிபாலான கட்டமைப்பு என்பவற்றின் மீதான நம்பகத்தன்மையை அந்த அலுவலகம் கேள்விக்கு உள்ளாக்குகின்றது. இவ்வாறான அனைத்துலகச் சூழலில்தான் முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல் நடந்திருக்கிறது. இது பொறுப்புக் கூறல் தொடர்பில் இலங்கைத் தீவின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மேலும் பலப்படுத்தக்கூடியது. தமிழ் மக்கள் ஏன் அனைத்துலக விசாரணையைக் கேட்கின்றார்கள் என்பதனை நிரூபிப்பதற்கு ஆகப்பிந்திய சான்று இது. தென்னிலங்கையில் உள்ள பேராயர் மல்கம் ரஞ்சித், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போன்றவர்கள் அனைத்துலக விசாரணை குறித்த தமது கோரிக்கைகளிலிருந்து பின்வாங்கும் ஓர் அரசியல் சூழலில், இந்த விவகாரம் தமிழ் நோக்கு நிலையில் பொருத்தமாகக் கையாளப்பட வேண்டிய ஒன்று. பேராயர் மல்கம் ரஞ்சித், மைத்திரிபால சிறிசேனா போன்றவர்கள் தொடக்கத்தில் அனைத்துலக விசாரணை தேவை என்று கேட்டார்கள். ஆனால் இப்பொழுது அவர்களுடைய கோரிக்கை தளம்பத் தொடங்கி விட்டது. சிங்கள பௌத்த கூட்டு உளவியலைப் பாதுகாப்பதற்காக அவர்கள் தளம்பத் தொடங்கி விட்டார்கள். எந்த ஒரு கூட்டு உளவியலின் பிரதிநிதியாக சரத் வீரசேகர பேசுகிறாரோ, அதே கூட்டு உளவியலின் வெவ்வேறு முகங்கள்தான் பேராயரும் முன்னாள் ஜனாதிபதியும். எனவே அனைத்துலக விசாரணைக்கான கோரிக்கையை தமிழ் மக்கள் பெரும்பாலும் தனியாகத்தான் முன்னெடுக்க வேண்டியிருக்கும். ஆனால் அதைக்கூட ஒரு கட்சியாக முன்னெடுப்பதற்குப் பதிலாக பல கட்சிகளாக முன்னெடுப்பதே பலம். கடந்த கிழமை திலீபன், இந்தக் கிழமை ஒரு நீதிபதி…. என்றவாறாக தமிழ் மக்களின் கவனமும் ஊடகங்களின் கவனமும் புதிய புதிய விடயங்களின் மீது குவிக்கப்படுகின்றது. ஆனால் அவை வெவ்வேறு விடயங்கள் அல்ல. ஒரே ஒடுக்கும் கட்டமைப்பின் வெவ்வேறு வெளிப்பாடுகளே அவை. அவற்றை அவற்றுக்கேயான ஒட்டுமொத்த வரைபடத்துக்குள் வைத்து தமிழ்மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். அதாவது ஒடுக்குமுறைக்கு ஒரு நீண்ட கால வழி வரைபடமும் மாறாத நிகழ்ச்சி நிரலும் ஒன்றிணைந்த செயல்பாடும் உண்டு. எனவே அதற்கு எதிரான போராட்டங்களும் ஒன்றிணைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். தாயகம், புலம்பெயர் சமூகம், தமிழகம் ஆகிய மூன்று தரப்புகளும் ஒன்றிணைந்து அந்தக் கோரிக்கையை உக்கிரமாக முன்வைக்க வேண்டும். அனைத்துலக குற்றவியல் நீதிமன்றங்களை நோக்கி செல்வதற்கான வழி வரைபடம் ஒன்று தமிழ் கட்சிகளிடமும் செயற்பாட்டாளர்களிடமும் இருக்க வேண்டும். அனைத்துலக விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை ஐநாவுக்கு எழுதும் கடிதங்களில் மட்டும் இருந்தால் போதாது. அல்லது ஐநாவின் பக்க நிகழ்வுகளில் அல்லது ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் ஆற்றப்படும் உரைகளில் இருந்தால் மட்டும் போதாது. அல்லது ஊடகங்களுக்கு வழங்கப்படும் நேர்காணல்களில் இருந்தால் மட்டும் போதாது. அல்லது தேர்தல் கால விஞ்ஞாபனங்களில் இருந்தால் மட்டும் போதாது. அதற்குமப்பால், அதைவிட ஆழமான பொருளில், அதற்கு வேண்டிய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். அனைத்துலக விசாரணையைக் கோருவது அல்லது பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றங்களை நோக்கி விவகாரத்தை எடுத்துச் செல்வது போன்றன அறநெறியின் பாற்பட்ட அல்லது நீதிநெறியின் பாற்பட்ட கோரிக்கைகள் அல்ல. அவை முழுக்க முழுக்க வெளியுறவுச் செயற்பாடுகள். பலம் வாய்ந்த நாடுகள் அப்படி ஒர் அரசியல் தீர்மானத்தை எடுக்க வேண்டும். ஏனென்றால் இந்த பூமியிலே தூய நீதி என்று எதுவும் கிடையாது. அரசியல் நீதிதான் உண்டு. நிலைமாறுகால நீதியோ அல்லது பரிகார நீதியோ எதுவானாலும், அரசியல் நீதி என்பது நாடுகளுக்கு இடையிலான அரசியல், பொருளாதார, படைத்துறை நலன்களின் அடிப்படையில் எடுக்கப்படுவதுதான். https://www.nillanthan.com/6294/
  24. ஒரு புலப்பெயர்ச்சி அலை? நிலாந்தன். கனடாவில் வசிக்கும் ஒரு நண்பர் சொன்னார்..கனடாவுக்கு விசிட் விசாவில் வருபவர்களுக்கு படிவங்களை நிரப்பி கொடுப்பதற்கு என்று கிட்டத்தட்ட 30 மையங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன என்று.அம்மையங்களில் ஒரு படிவத்தை நிரப்புவதற்கு ஆயிரம் கனேடியன் டாலர்கள் அறவிடப்படுகின்றன என்றும் அவர் சொன்னார்.கிட்டத்தட்ட இலங்கை ரூபாயில் இரண்டரை லட்சம். கனடாவில் இருக்கும் தமிழர்கள் தாயகத்தில் உள்ள தமது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் போன்றவர்களை அவ்வாறு அழைக்கலாம் என்று ஒரு கதை பலமாக உலாவுகிறது. அதனால் நெருங்கிய உறவினர்கள் மட்டுமல்ல, நண்பர்கள் தெரிந்தவர்கள் போன்றவர்களும் கனடாவில் இருப்பவர்களை அனுகி தமக்கு விசா பெற்றுத் தருமாறு கேட்கின்றார்கள். இது சம்பந்தமாக அண்மையில் அரசியல் விமர்சகர் யதீந்திரா ஒரு கட்டுரையும் எழுதியிருக்கிறார். கனடாவை நோக்கி மட்டுமல்ல லண்டனை நோக்கியும் ஏனைய ஐரோப்பிய நாடுகளை நோக்கியும் ஒரு புலப்பெயர்ச்சி அலை எழுந்திருக்கின்றது. தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய மூன்றாவது புலப்பெயர்ச்சி அலை என்று இதனை அழைக்கலாமா? ஏனெனில் ஜூலை 83 க்கு முன்பு ஒரு புலப்பெயர்ச்சி இருந்தது. அது ஒரு அலை அல்ல.தமிழ் மக்கள் மத்தியில் இருந்து படித்தவர்கள், பணக்காரர்கள்,ஐரோப்பிய அமெரிக்க கண்டங்களை நோக்கிப் போனார்கள். ஒரு சிறிய தொகையினர் ஆசிரியர்களாக ஆப்பிரிக்கக் கண்டத்துக்குப் போனார்கள்.அதுபோலவே இன்னொரு தொகுதியினர் மேற்காசிய நாடுகளுக்குப் போனார்கள். அவ்வாறு மேற்காசிய நாடுகளுக்கு போனவர்களில் ஒரு பகுதியினர் அங்கே தங்களை நிதி ரீதியாகப் பலப்படுத்திக் கொண்ட பின் தமக்கு கிடைத்த தொடர்புகளைப் பயன்படுத்தி ஐரோப்பா, அமெரிக்க போன்ற கண்டங்களுக்குப் போனார்கள். இது முதலாம் கட்டப் புலப்பெயர்ச்சி. இரண்டாவதாக 83 ஜூலைக்குப் பின் ஒரு புலப்பெயர்ச்சி அலை எழுந்தது. உண்மையாகவே இதைத்தான் அலை என்று வர்ணிக்கலாம். படித்தவர், படிக்காதவர், பணக்காரர், ஏழை என்ற வேறுபாடு இன்றி ஈழத் தமிழர்கள் தொகையாக குறிப்பாக சட்டவிரோத வழிகளின் ஊடாக ஐரோப்பிய அமெரிக்கக் கண்டங்களை நோக்கிப் புலம் பெயரத் தொடங்கினார்கள். இந்த புலப்பெயர்ச்சி அலையின் விளைவாக ஒரு பலமான தமிழ் புலம்பெயர்ந்த சமூகம் உலகம் முழுவதும் உருவாகியது. இது ஏறக்குறைய மொத்த தமிழ் ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதி என்று உத்தியோகப் பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், கனடாவில் வசிக்கும் கவிஞர் சேரன் கூறுவார் அந்த எண்ணிக்கை சற்று மிகைப்படுத்தப்பட்டது என்று.நான்கு தமிழர்களின் ஒருவர் புலம்பெயர்ந்து விட்டார் என்பதுதான் திருத்தமாக இருக்கும் என்று. எதுவாயினும், தாய் நாட்டுக்கு வெளியே ஈழத் தமிழர்கள் அதிகரித்த அளவில் வசிக்கும் ஒரு நாடாக கனடா மாறிவிட்டது. அங்கே மூன்றரை லட்சத்திலிருந்து 5 லட்சம் வரையிலுமான ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்வதாக கணிப்பிடப்படுகிறது. இந்த எண்ணிக்கை கனடாவில் வசிக்கும் சீக்கியர்களின் எண்ணிக்கைக்கு அடுத்தபடியானது என்றும் ஒர் கணிப்பீடு உண்டு. இது இரண்டாவது புலப்பெயர்ச்சி அலை.மூன்றாவது புலப்பெயர்ச்சி அலை கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியோடுயோடு தொடங்கியது.முதலில் அது தென்னிலங்கையில்தான் தொடங்கியது. சிங்கள இளையோர் மத்தியில்தான் தொடங்கியது. அங்கெல்லாம் சிங்கள இளையோர் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு முன் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகின. முதலில் சிங்கள மக்கள் மத்தியில் தோன்றிய அந்த அலை பின்னர் தமிழ் மக்களுக்கும் பரவியது. அதன் விளைவாக தமிழ் மக்கள் மத்தியிலிருந்து வயது வேறுபாடு இன்றி பெரும் தொகையினர் புலம்பெயர்வதற்கு தயாராகி வருகிறார்கள். இளையவர்கள் மட்டுமல்ல, வயதானவர்களும் அவ்வாறு போகலாமா என்று சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள். 15 வளர்ந்த பிள்ளைகள் படிக்கும் ஒரு வகுப்பில் எத்தனை பேர் வெளிநாட்டுக்கு போகத் தயார் என்று கேட்டால் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் கையை உயர்த்தும் ஒரு நிலைமை தோன்றி விட்டது. பாடசாலைக் கல்வியை முடித்தவர்கள் மட்டுமல்ல, முடிக்காதவர்களும் வெளியேறத் துடிக்கிறார்கள். சாதாரண வேலைகளில் இருப்பவர்கள் மட்டுமல்ல,உயர் பதவிகளில் இருப்பவர்களும் புலம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். சிலமாதங்களுக்கு முன் வவுனியாவில் உள்ள உப பாஸ்போர்ட் அலுவலகத்தில் டோக்கனை பெறுவதற்காக இரவிலிருந்து வரிசையில் காத்திருக்கும் ஒரு போக்கு அதிகரித்தது.அவ்வாறு வரிசையில் நின்று டோக்கனைப் பெற்றுக் கொடுப்பது அங்கு ஒரு தொழிலாக மாறிவிட்டது.ஒருவர் 5000 ரூபாய் வரை கூலியைப் பெற்றார். அதுமட்டுமல்ல,ஆங்கில மொழி பேசும் நாடுகளை நோக்கி புலம்பெயர முற்படுகிறவர்கள் அதற்குரிய பரீட்சைகளை எழுத வேண்டியிருக்கிறது. அதனால் இப்பொழுது தமிழ்ப் பகுதிகளில் ஐஈஎல்ரி எஸ் என்று அழைக்கப்படும் ஆங்கில மொழித் திறன் காண் பரீட்சைக்கு ஆட்களைத் தயார்படுத்தும் நிறுவனங்களின் தொகையும் ஆசிரியர்களின் தொகையும் அதிகரித்து வருகின்றன.அவ்வாறான பயிற்சிகளுக்கு பெருந்தொகைப் பணம் அறவிடப்படுகிறது. கனடாவுக்கு விசிட் விசாவில் போகலாம், லண்டனுக்கு கடைகளில் வேலை செய்வதற்கான அனுமதியை பெற்றுக் கொண்டு போகலாம் என்று நம்பி ஆங்கிலம் படிப்பவர்களின் தொகை அதிகரித்து வருகிறது. குறிப்பாக லண்டனில் சொந்தமாகத் தொழில் நடத்துபவர்கள் தமது தொழில் நிலையங்களுக்கு ஆட்கள் தேவை என்று கூறி குறிப்பிட்ட தொகையினரை லண்டனுக்கு அழைப்பதற்கான அனுமதியைப் பெறலாம் என்ற ஒரு நிலை தோன்றி விட்டது. இதனால் கல்வித் தேவைகளுக்காகவன்றி தொழிற் தேவைகளுக்காகவும் பரீட்சைகளை எழுதிவிட்டு லண்டனுக்குப் போகத் தயாராகுபவர்களின் தொகை அதிகரித்து வருகிறது. குறிப்பிட்ட ஒரு வயதுக்காரர்களை சந்திக்கும் பொழுது பெரும்பாலானவர்கள் எந்த நாட்டுக்கு போகலாம்? எப்படிப் போகலாம்? அதற்கு என்னென்ன ஏற்பாடுகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்? என்று கதைப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது என்று கிளிநொச்சியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் சொன்னார். அவர் யுத்தத்தின் இறுதி கட்டம் வரையிலும் வன்னி கிழக்கில் வசித்தவர். அவர் மேலும் சொன்னார்…யுத்தத்தின் இறுதி நாட்களில் அந்த மூன்று கிராமங்களுக்குள் வசித்தவர்கள் எந்த வழியால் தப்பிச் செல்லலாம் என்று தங்களுக்கிடையே கதைத்துக் கொள்வார்கள். கடலை ஏக்கத்தோடு பார்ப்பார்கள்.ஏறக்குறைய அப்படி ஒரு நிலைமைதான் இப்பொழுது தோன்றியுள்ளதா? என்று.அவர் அப்படிக் கேட்கும் அளவுக்கு புலம்பெயர வேண்டும் என்ற தாகம் ஒரு குறிப்பிட்ட வயதினர் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதற்கு என்ன காரணம்? பொருளாதார நெருக்கடி மட்டும் காரணமா? அல்லது கனடா போன்ற நாடுகள் தமது குடி வரவு விதிகளில் தளர்வுகளை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுவது ஒரு காரணமா? அல்லது புலம் பெயர்ந்து ஏற்கனவே மேற்கத்திய நாடுகளில் மிகப் பலமாக தங்களை ஸ்தாபித்துக் கொண்ட தமிழர்கள், இப்பொழுது மற்றவர்களுக்கு விசா எடுத்துக் கொடுக்கும் தகைமையை அடைந்திருப்பதன் விளைவா இது? இவ்வாறு பெருந்தொகையாக தமிழர்கள் புலம் பெயர்வார்களாக இருந்தால் ஓர் அரசியல் சமூகமாக தமிழ் மக்கள் மேலும் திரையக்கூடிய ஆபத்து உண்டு. ஏற்கனவே போர், புலப்பெயர்ச்சி போன்றவற்றால் மெலிந்து கொண்டு போகும் சனத்தொகையானது, பிள்ளைப் பேறு விகிதம் குறைந்து வருவதனால் மேலும் மெலிகிறது. தவிர புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் மணமக்களை நோக்கிச் செல்லும் வம்சவிருத்தி செய்யக்கூடிய இளம் தலைமுறையின் வெளியேற்றத்தால் அது ஏற்கனவே மெலிந்து வருகிறது.இப்பொழுது மூன்றாவது புலப்பெயர்ச்சி அலையின் விளைவாக அது மேலும் மெலியக்கூடிய ஆபத்துத் தெரிகிறது. அண்மையில் திருகோணமலையைச் சேர்ந்த ஒரு நண்பர் கூறினார்…ஒரு பாடசாலையில் பாலர் வகுப்பில் படிப்பிக்கும் ஓர் ஆசிரியை சொன்னாராம்… தனது வகுப்பில் இருந்து கடந்த வாரத்தில் மட்டும் ஆறு பிள்ளைகள் வெளிநாடு சென்று விட்டதாக. அதாவது குடும்பமாகப் புலம் பெயர்கிறார்கள் என்று பொருள். இதனால் திருகோணமலையில் வாடகைக்கு வீடுகளை எடுப்பது ஒப்பீட்டளவில் இலகுவானதாகிவிட்டது என்றும், தமிழர்கள் பெறுமதியான தங்களது வீடுகளையும் சொத்துக்களையும் விற்றுவிட்டு புலம்பெயர்ந்து வருவதாகவும் அவர் சொன்னார்.இவ்வாறு தமிழர்கள் தொடர்ச்சியாகப் புலம்பெயர்ந்தால் ஓர் அரசியல் சமூகமாக இலங்கைத் தீவில் அவர்கள் மேலும் பலவீனமடைய நேரிடும். சனத்தொகை என்பது ஒரு மக்கள் கூட்டத்தைத் தேசமாக வனையும் அடிப்படை அம்சங்களில் ஒன்று. ஒரு மக்கள் கூட்டத்தை ஐந்து அடிப்படை அம்சங்கள் ஒரு தேசமாகக் கூட்டிக்கட்டுகின்றன. சனம் அல்லது இனம்; நிலம் அல்லது தாயகம்; பொது மொழி,;பொதுப் பொருளாதாரப் போன்றனவே அந்த ஐந்து அம்சங்களும் ஆகும். திட்டமிட்ட குடியேற்றங்கள் போர் போன்றவற்றின் காரணமாக கிழக்கில் திருகோணமலை அம்பாறை ஆகிய மாவட்டங்களில் நிலம் பெருமளவுக்கு பறிபோய் விட்டது. இப்பொழுது மட்டக்களப்பிலும் நிலத்தை அபகரிக்கும் வேலைகள் முழுமூச்சாக நடக்கின்றன. வடக்கிலுந் தான். இவ்வாறு ஏற்கனவே நிலம் சிறுத்தை கொண்டுவரும் ஒரு பின்னணியில், சனத்தொகையும் சிறுத்துக்கொண்டே போனால் என்ன நடக்கும்? தமிழ் மக்கள் ஓர் அரசியல் சமூகமாக தங்களுக்குரிய அரசியல் இலக்குகளை முன்வைத்துப் போராடும் வலிமையை இழந்து விடுவார்கள் அல்லவா? இது தொடர்பாக தமிழ்த்தேசியப் பரப்பிலுள்ள அரசியல்வாதிகள்,கட்சிகள், செயற்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் போன்றவர்கள் இப்பொழுதே குரல் கொடுக்க தொடங்க வேண்டும். இல்லையென்றால் ஆளற்ற வீடுகளின் மத்தியில் விகாரகள் கட்டப்படுவதை எதிர்ப்பதற்கு யார் இருக்கப் போகிறார்கள்? https://athavannews.com/2023/1350993
  25. முன்னணி குளவிக் கூட்டுக்குக் கல்லெறிகின்றதா ? - நிலாந்தன் திருகோணமலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வாகன ஊர்தி தாக்கப்பட்டிருக்கிறது. திலீபனின் படத்தை ஏந்திய அந்த ஊர்தி கடந்த ஆண்டும் அந்த வழியால் சென்றிருக்கிறது. இது இரண்டாவது தடவை. அது தாக்கப்பட்ட இடம் கல்லோயா குடியேற்றத் திட்டத்தின் கீழ் அபகரிக்கப்பட்ட தமிழ் நிலம். கடந்த ஆண்டு அந்த ஊர்தி குறிவைக்கப்படவில்லை. இந்தமுறை தான் அது குறிவைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஊர்தியை குறிவைத்து அசம்பாவிதங்கள் நடக்கலாம் என்பது ஏற்கனவே மட்டக்களப்பில் உணர்த்தப்பட்டிருக்கிறது. அப்படி ஒரு தாக்குதலை முன்னணி எதிர்பார்க்கவில்லை என்பது காணொளிகளைப் பார்க்கும் பொழுது தெரிகிறது. தம்மைத் தற்காத்துக் கொள்ளத் தேவையான ஆளணிகளோடு அவர்கள் வரவில்லை என்பதும் தெரிகிறது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எனப்படுகிறவர் தனியன் அல்ல. அவர் ஒரு சமூகம். அவருக்கு வாக்களித்த மக்களின் பிரதிநிதி. ஆனால் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மிகச் சிலரோடு நிற்கிறார். அதுவும் தாக்கியவர்களுக்குத் துணிச்சலைக் கொடுத்திருக்கும்.போலீசார் தாக்குதலைத் தடுக்கவேண்டும் என்ற வேகத்தோடு செயல்படவில்லை. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மத்தியில் ஊடகவியலாளர்களும் இருந்திருக்கிறார்கள். அந்த ஊடகவியலாளர்களில் சிலர் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினரைப் பாதுகாக்க முற்பட்டிருக்கிறார்கள். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மத்தியில் பெண்கள் காணப்படுகிறார்கள். அதை ஒரு சமூகத்தின் தாக்குதலாகக் காட்ட வேண்டும் என்று நன்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. முன்னணி கடந்த சில மாதங்களாக தமிழ் அரசியலை நொதிக்கச் செய்கின்றது. தமிழ் எதிர்ப்பு அரசியலின் ஈட்டி முனையாக அக்கட்சி மேலெழுந்து வருகிறது. குறிப்பாக நிலப்பறிப்பு, விகாரைகளைக் கட்டுவது போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக அக்கட்சி தீவிரமாக எதிர்ப்பை காட்டி வருகிறது. எனவே அக்கட்சிக்கு அதன் வரையறைகளை உணர்த்தும் விதத்தில் அச்சுறுத்தலைக் கொடுப்பதே அத்தாக்குதலின் நோக்கமாக இருக்கலாம். ஏற்கனவே கஜேந்திரகுமாரைக் கைது செய்து பின் வெளியில் விட்டமையும் அவருடைய கொழும்பு வீட்டை முற்றுகையிட முற்பட்டமையும் அந்த நோக்கத்தோடுதான். கொழும்பு வீட்டை முற்றுகையிட முற்பட்டமை, கஜேந்திரக்குமாரை விடவும் அவருடைய தாயாருக்கு அச்சுறுத்தலானது. ஏற்கனவே கணவனைப் பறிகொடுத்தவர். அவரைப் பொறுத்தவரை அதுதான் அவருடைய வசிப்பிடம். அங்கே அவருக்கு நெருக்கடியைக் கொடுப்பதன் மூலம் அவருடைய மகனுக்கு நெருக்கடியைக் கொடுக்கலாம். எனவே திருகோணமலையில் நடந்த தாக்குதலானது 2009க்குப் பின் தமிழ் எதிர்ப்பு அரசியலுக்கு இருக்கக்கூடிய வரையறைகளை உணர்த்தும் நோக்கிலானது என்று சொல்லலாம். ஒருபுறம் அது முன்னணியை அச்சுறுத்தும் நோக்கிலானது. இன்னொருபுறம் அதன்மூலம் முன்னணியை ஓரளவுக்கு பலப்படுத்தும் உள்நோக்கமும் இருக்கலாம். தமிழ்த் தேசியப் பரப்பில் வெளிப்படையாக இந்திய எதிர்ப்பை முன்னெடுக்கும் கட்சி அது. அக்கட்சியை குறிப்பிடத்தக்க அளவுக்கு பலப்படுத்தினால், தமிழ்மக்கள் மத்தியிலேயே இந்திய எதிர்ப்பை நிறுவனமயப்படுத்தலாம். அதன்மூலம் அரசாங்கத்தின் வேலை இலகுவாகிவிடும் என்ற உள்நோக்கமும் அத்தாக்குதலுக்கு இருக்கக்கூடும். அந்த ஊர்தி அந்த வழியால் போனதால் சிங்கள மக்கள் ஆத்திரமூட்டப்பட்டார்கள் என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. பொதுவாக எல்லா எதிர்ப்பு அரசியற் களங்களிலும் இந்த வாதம் முன்வைக்கப்படுவதுண்டு. ஆயுதப் போராட்டத்தின் தொடக்க காலங்களில் கொரில்லாத் தாக்குதல்கள் நடந்த போதும் இந்த வாதம் முன்வைக்கப்பட்டது. குளவிக் கூட்டுக்குக் கல்லெறிகிறார்கள். அதனால் குளவிகள் கலைந்து அப்பகுதியில் இருக்கும் சாதாரண மக்களைக் கொட்டும் என்றும் விளக்கம் தரப்பட்டது. எதிர்ப்பு அரசியலின் பண்பே அத்தகையதுதான். எதிர்ப்பு கூர்மையடையும் பொழுது அதற்கு எதிரான ஒடுக்குமுறையும் கூர்மை அடையும்.ஒடுக்கும் தரப்பு அதன் மூலம் தன்னை அம்பலப்படுத்தும். அதனால் ஒடுக்கப்படும் தரப்பு மேலும் அரசியல் மயப்படுத்தப்படும். ஒடுக்குமுறைக்கு எதிராக அணி திரளும். உலகமெங்கிலும் எதிர்ப்பு அரசியல் அப்படித்தான் வளர்ந்திருக்கிறது. திருமலைச் சம்பவம் முன்னணியின் வாக்கு வங்கியைப் பலப்படுத்தும். அதேசமயம் அது திருகோணமலையில் இளம் தலைமுறையினர் மத்தியில் விழிப்பை ஏற்படுத்தக் கூடியது. கடந்த 14 ஆண்டுகளாக ஒரு தலைமுறை அரசியல் நீக்கம் செய்யப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதி ஏன் சிங்கள பௌத்தத்தை எதிர்க்க வேண்டும் என்று கேட்கத் தொடங்கிவிட்டது. இன்னொரு பகுதி ஏன் பொது எதிரி என்று அழைக்க வேண்டும் என்றும் கேட்க தொடங்கிவிட்டது. இப்படிப்பட்டதோர் அரசியல் சூழலில் திருமலைச் சம்பவமானது ஒடுக்கு முறைக்கு எதிரான விழிப்பை அதிகப்படுத்தக் கூடியது. சம்பவத்தின் பின் அங்குள்ள இளையோரின் சமூகவலைத்தளச் செயற்பாடுகளில் அதைக் காணக் கூடியதாக இருப்பதாக ஒரு சமூகச் செயற்பாட்டாளர் சொன்னார். சம்பவத்துக்கு முன் திலீபன் யார் என்று கேட்டால் தெரியாது என்று சொல்லக்கூடிய பலரும் இப்பொழுது திலீபனைத் தேடி வாசிக்கிறார்கள் என்றுமவர் சொன்னார். அதுமட்டுமல்ல. சம்பவத்தின் பின் தமிழ்த் தேசிய பரப்பில் உள்ள பெரும்பாலான கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் முன்னணியுடன் தமது சகோதரத்துவத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக முன்னணியில் இருந்து பிரிந்து சென்ற மணிவண்ணன் உட்பட தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களும் முன்னணிக்கு ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்கள். தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்டிராத அரசியல்வாதிகளும் சம்பவத்தைக் கண்டித்திருக்கிறார்கள். நாட்டுக்கு வெளியே தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் உட்பட பலரும் கண்டித்திருக்கிறார்கள். ஒடுக்குமுறை என்று வரும்பொழுது தமிழ்மக்கள் இனமாகத் திரள்வார்கள் என்பதனை இச்சம்பவத்தின் பின்னரான நிலமைகள் காட்டுகின்றன. இங்கேதான் முன்னணி கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு விடயமும் இருக்கின்றது. காலத்துக்கு காலம் தமிழ் மக்கள் ஏதோ ஒரு பொது நிலைப்பாட்டின் கீழ் ஆகக் கூடிய பட்சம் பெருந்திரளாகத் திரண்டிருக்கிறார்கள். தமிழ்க் கட்சிகளால் அவர்களை அவ்வாறு திரட்ட முடியவில்லை என்பதுதான் கடந்த 14 ஆண்டு காலத் துயரம். அவ்வாறு தமிழ்க் கட்சிகளையும் செயற்பாட்டாளர்களையும் ஒப்பீட்டளவில் ஒன்றாகத் திரட்டிய ஆகப்பிந்திய சம்பவமாக திருமலைத் தாக்குதலை கூறலாம். திருமலையில் முன்னணி தாக்கப்பட்ட இடம் எதுவென்று பார்த்தால் அது திட்டமிட்ட குடியேற்றங்களின் மூலம் சிங்களமயப்படுத்தப்பட்ட ஒரு பகுதிதான். கடந்த பல தசாப்தகால தமிழ் அரசியலால் அப்பகுதியை மீட்க முடியவில்லை. அதுமட்டுமல்ல, இப்பொழுது அங்கே வைத்து ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் தாக்கப்பட்டிருக்கிறார். கிழக்கில் தொடங்கிய நிலப்பறிப்பு திருகோணமலையில், அம்பாறையில் குறிப்பிடத்தக்க அளவிற்கு வெற்றி பெற்றுவிட்டது. அது வடக்குக்கும் படர்ந்து வருகிறது. அதை எதிர்த்த காரணத்தால் முன்னணி தாக்கப்படுகிறது. தாக்கப்பட்ட போது திருமலை யாழ் பெருஞ்சாலையில் முன்னணி ஒற்றைக் கட்சியாகத்தான் நின்றது. அதன் நாடாளுமன்ற உறுப்பினர் மிகச் சில ஆதரவாளர்களோடு காணப்பட்டார். அந்த ஊர்தி சில வாகனங்களோடுதான் நகர்ந்து சென்றது. அது ஒரு மக்கள் மயப்பட்ட வாகனப் பேரணி அல்ல. தமிழ்த் தேசிய எதிர்ப்பு அரசியலின் ஈட்டி முனையாகக் காணப்படும் ஒரு கட்சி மிகச் சிலரோடு ஒரு தாக்குதலை எதிர்கொண்டமை என்பது எதைக் காட்டுகின்றது? அது தமிழ்த் தேசிய எதிர்ப்பு அரசியலின் பலவீனமா? அல்லது அந்தக் கட்சியின் பலவீனமா? இதே திலீபனின் நாளில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 2020ல் எல்லாக் கட்சிகளும் இணைந்து எதிர்ப்பைக் காட்டின. அப்பொழுது போலீசார் நீதிமன்றத் தடை உத்தரவின் மூலம் அந்த எதிர்ப்பு நடவடிக்கையை முறியடிக்க முயற்சித்தார்கள். ஆனால் அங்கே ஒன்றுபட்டு நின்றதால் போலீசார் அந்த நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. இதை இங்கு எழுதுவதன் மூலம் இக்கட்டுரையானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏனைய கட்சிகளோடு இணைந்து ஐக்கிய முன்னணியை உருவாக்க வேண்டும் என்றெல்லாம் சிறுவர் சித்திரக் கதை எழுத வரவில்லை. ஆனால், பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் தமிழ் மக்கள் மத்தியில் புலப்பெயர்வு அதிகரித்து வரும் ஓர் அரசியல் சூழலில், தமிழ்த் தேசிய எதிர்ப்பு அரசியல் எனப்படுவது இவ்வாறு மக்கள் மயப்படாத சிறு திரள் நடவடிக்கையாகச் சுருங்கி விட்டதை, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு நெடுஞ்சாலையில் வைத்துத் தாக்கப்படுவதை, அவரைச் சூழ்ந்து மிகச் சில ஆதரவாளர்களே நிற்பதை, சிங்களபௌத்த அரசியலும் வெளியுலகமும் எப்படிப் பார்க்கும்? https://www.nillanthan.com/6289/
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.