Search the Community
Showing results for tags 'நோயெதிர்ப்பு'.
-
ஒமிக்றோன் உலகின் முடிவா அல்லது பெருந்தொற்றின் முடிவா? தடுப்பூசி எடுத்துக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, தனி மனிதர்கள் மட்டுமன்றி முழு உலகுமே கோவிட் பெருந்தொற்றிலிருந்து விடுதலை பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. அவ்வாறு எடுத்துக் கொள்ளாதோர் வைரசைப் பல்கிப் பெருக அனுமதிக்கும் போது மேலும் மாறி வைரசுகள் உருவாவவது ஒரு பாதகமான விளைவாக இருக்கும் - இதை கோவிட் பற்றி எழுதிய எல்லாக் கட்டுரைகளிலும் சுட்டிக் காட்டி வந்திருக்கிறேன். "told you so!" என்ற தொனி இல்லாமல், இந்த ஆபத்து நிகழ்ந்தே விட்டது என்பதை இங்கே சுட்டிக் காட்ட வேண்டும்: ஒமிக்ரோன் என்ற மாறி வைரஸ் உருவான தென்னாபிரிக்காவில் தடுப்பூசி எடுத்துக் கொண்டோரின் வீதம் 25% இலும் குறைவாக இருந்திருக்கிறது. மேலும், உடலின் நோயெதிர்ப்பைப் பலவீனப் படுத்தும் எச்.ஐ.வி வைரசின் தொற்றுடையோரின் விகிதாசாரமும் தென்னாபிரிக்காவில் அதிகம் - இந்த இரு காரணிகளும் ஒமிக்ரோன் என்ற ஏராளமான விகாரங்கள் கொண்ட ஒரு வைரஸ் தடையின்றி உருவாகப் பங்களித்திருக்கலாம் என்று ஒரு சந்தேகம் பரவலாக இருக்கிறது. ஒமிக்ரோன் உருவான கதையை விட்டு விடலாம். இனி என்ன செய்யலாம்? வைரஸ் எங்களைத் தீர்த்து விடுமா அல்லது வைரசை நாம் கட்டுப் படுத்தலாமா? எதிர்காலம் (2022) எப்படியிருக்கும்? இவை மட்டும் பற்றிப் பார்க்கலாம். தடுப்பூசியின் இலக்கு மாறியிருக்கிறது மேற்கு நாடுகளில் பயன்பாட்டிலிருக்கும் நான்கு தடுப்பூசிகளின் பலம் ஒமிக்ரோனுக்கெதிராகக் குறைந்திருக்கிறது. வெறுமனே "குறைந்திருக்கிறது" என்பதை சற்று விரிவாகப் பார்ப்பது முக்கியமானது: ஒமிக்ரோன் தொற்றை தற்போதுள்ள தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்கள் தடுப்பது குறைந்து விட்டது. மூன்றாவது டோஸ் எடுத்துக் கொண்டோரிலும் தொற்றுத் தடுப்பு சிறிது வீழ்ச்சி கண்டிருக்கிறது. ஆனால், மிக முக்கியமானது, மூன்றாவாது டோஸ் எடுத்துக் கொண்டோரில் ஒமிக்ரோனால் தீவிர நோய் ஏற்படுவது வெகுவாகக் குறைக்கப் படுகிறது. எனவே, தான் தடுப்பூசியின் நோக்கம் தற்போது தொற்றை முற்றாகத் தடுத்தல் என்பதில் இருந்து மாறி, தொற்றினால் தீவிர நோய் ஏற்படாமல் தடுத்தல் என்று இப்போது மாறியிருக்கிறது. இதனால், மருத்துமனைகள் மீதான சுமையும், மரணங்களும் குறைக்கப் படுகின்றன. எனவே, தடுப்பூசியின் மூன்றாம் டோஸ் எடுத்துக் கொள்வதற்கு மருத்துவ ரீதியான காரணம் இருக்கிறது. எனவே ஒமிக்ரோன் தொற்றலை வேறு வழிகளால் தடுப்பது தேவையற்றதா? தற்போது பல நாடுகளில் ஒமிக்ரோன் வந்த பின்னர் உள்ளக நிகழ்வுகள், கூட்டம் கூடுதல், முகக் கவசம் என்பன பற்றிய விதிகள் இறுக்கப் பட்டிருக்கின்றன. வேகமாகப் பரவும் ஒமிக்ரோன், தீவிர நோயை உருவாக்குவதாகத் தெரியவில்லை என்ற செய்திகளின் பின்னணியில் இந்தக் கட்டுப்பாடுகள் ஏன் என்ற கேள்வி எழுகிறது. இரண்டு காரணங்கள்: 1. தீவிர நோய்க்குள்ளாகும் ஆட்களின் விகிதாசாரம் குறைவாக இருந்தாலும், மிக அதிக நோயாளிகளை ஒமிக்ரோன் உருவாக்குகிறது - அவர்களுள் தீவிர நோய்க்குள்ளாகி மருத்துவமனை வரை செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இது சாதாரணமான தொகுதியெண் , பகுதியெண் கணக்கு. 2. வழமையான காரணம் - வைரசைப் பல்கிப் பெருக அனுமதித்தால், ஒமிக்ரோன் போல மேலும் மாறி வைரசுகள் உருவாகும் வாய்ப்புகளும் அதிகரிக்கும். எனவே, சாதாரண வாழ்க்கையைப் பாதிக்காதவாறு, முகக் கவசம், கூட்டம் கூடுதல் குறைத்தல் போன்ற தொற்றல் கட்டுப் பாடுகளை தடுப்பூசி முற்றாக எடுத்துக் கொண்டோரும் பின்பற்றுவதற்கு காரணங்களாக இவை இருக்கின்றன. இனி என்ன செய்யலாம்? விஞ்ஞானம் என்ன தீர்வை வைத்திருக்கிறது? டெல்ரா மாறி உருவாகிப் பரவிய போதே கோவிட்டுக்கெதிரான நோயெதிர்ப்பு பற்றிய ஆய்வுகளில் ஒரு திருப்பு முனை ஏற்பட்டது. கோவிட் தடுப்பில் "பிறபொருளெதிரிகள்" என அழைக்கப் படும் அன்ரிபொடிகளின் பங்கு பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். எங்கள் உடலின் என்பு மச்சைகளில் உருவாகி, நிணநீர்க்கணுக்களிலும், மண்ணீரலிலும் வளரும் "பி" வகை நிணநீர்க்குழியங்கள் கோவிட் வைரசுக்கெதிரான அன்ரிபொடியை உருவாக்குகின்றன. ஆனால், கோவிட்டுக்கு எதிராக மட்டுமன்றி பல வைரசுகளுக்கெதிராக வேறுவழிகளில் பாதுகாப்பை வழங்கும் இன்னொரு வகை நிணநீர்க்குழியத்தின் மீது கடந்த வருடம் டெல்ரா அலையோடு கவனம் திரும்பியது. என்பு மச்சையில் பிறந்து, தைமஸ் சுரப்பியில் வளரும் நிணநீர்க்குழியங்களை "ரி" வகை நிணநீர்க்குழியங்கள் என்போம். இந்த "ரி" வகை நிணநீர்க்குழியங்களில் ஒரு பகுதி, நேரடியாகவே வைரசுகள் தொற்றிய உடற்கலங்களை தாக்கியழிக்கும் (எனவே கொலைக் குழியங்கள் -killer T-cells எனப் படுகின்றன). அது மட்டுமல்லாமல், இந்த "ரி' வகை நிணநீர்க்குழியங்களில் இன்னொரு வகை, அன்ரிபொடிகளை உருவாக்கும் "பி" வகை நிணநீர்க்குழியங்களை ஊக்குவிக்கும் தொழிலைச் செய்கின்றன (இதனால் "உதவிக் குழியங்கள்" -helper T-cells என அழைக்கப் படுகின்றன) கோவிட்டுக்கெதிரான நோயெதிர்ப்பை தடுப்பூசி மூலமோ, இயற்கையான தொற்றல் மூலமோ எமது உடல் பெறும் போது, இந்த "ரி" வகைக் கலங்களும் கோவிட் வைரஸ் குறித்த அடையாளத்தை எதிர்காலப் பாதுகாப்பிற்காகக் குறித்து வைத்துக் கொள்கின்றன. பின்னர், மீள கோவிட் வைரசை உடல் எதிர் கொண்டால், இந்த "ரி" வகைக் கலங்களும் நேரடியாக தொற்றுக்குள்ளான உடற்கலங்களைக் கொல்வதன் மூலமோ, "பி" வகைக் கலங்களைத் தூண்டுவதன் மூலமோ உடலின் நோயெதிர்ப்பை தட்டியெழுப்பும் வேலையைச் செய்கின்றன. "ரி" வகைக் கலங்களின் வைரசுகளுக்கெதிரான பணி பல காலமாகத் தெரிந்த விடயம். ஆனால், விஞ்ஞானிகள் தற்போது நவீன நுட்பங்கள் மூலம் "ரி" வகைக் கலங்களின் பணியை நீண்டகால கோவிட் தடுப்பிற்குப் பயன்படுத்த முயல்வது தான் புதிய விடயம். பல்வேறு முயற்சிகள் நடைபெற்றாலும்,"ரி" வகைக் கலங்களை, "பி" வகைக் கலங்களோடு சேர்த்துத் தூண்டும் வகையிலான தடுப்பூசிகள் பரீட்சிக்கப் படுகின்றன. இந்த முயற்சிகளின் ஒரு முக்கிய நோக்கம்: கோவிட் தொற்றை முற்றாகத் தடுக்காமல், தடுப்பூசி மூலமும், தடுக்கவியலாத தொற்றுக்கள் மூலமும் எங்கள் உடலின் நோயெதிர்ப்பை நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்க செய்தல். எனவே, எதிர்காலம் இப்போது உங்களுக்குத் தெளிவாகியிருக்கும்: கோவிட் எங்களோடு இருக்கப் போகிறது, ஆனால் முகக்கவசம், சமூக இடைவெளி பேணல் என்பன அவசியமில்லாத தீவிரமற்ற நோய் தரும் ஒரு வைரசாக இருக்கப் போகிறது. மேலதிக மூலங்கள்: https://www.nature.com/articles/d41587-021-00025-3 https://www.nature.com/articles/s41586-021-04232-5 சொற்பட்டியல்: நோயெதிர்ப்பு - immunity பிறபொருளெதிரிகள் - antibodies மாறி வைரஸ் – variant virus நிணநீர்க்குழியம் – lymphocyte "பி" வகை நிணநீர்க்குழியம்/ "பி" வகைக் கலம்: B-lymphocyte/ B- cell "ரி" வகை நிணநீர்க்குழியம்/"ரி" வகைக் கலம்: T-lymphocyte/T-cell என்பு மச்சை- bone marrow நிணநீர்க்கணு- lymph node மண்ணீரல் - spleen தைமஸ் சுரப்பி- thymus gland கொலைக் கலம்- Killer T-cell உதவிக் கலம் – Helper T-cell தொகுப்பு: ஜஸ்ரின்.
- 53 replies
-
- 18
-
-
-
- நோயெதிர்ப்பு
- கோவிட்19
-
(and 1 more)
Tagged with: