Search the Community
Showing results for tags 'பறனை உடுப்பு'.
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello), வணக்கம் மக்களே! உங்கள் எல்லோரையும் மற்றொரு ஆய்வுக்கட்டுரையில் சந்திப்பதில் மகிழ்சியடைகிறேன். இன்று நாம் பார்க்கப்போவது தமிழீழ வான்படையான வான்புலிகளால் அணியப்பட்ட சீருடைகள், வில்லைகள்(badges) மற்றும் பறனை உடுப்புகள்(flight suits) என்பனவற்றைப் பற்றித்தான். வான்புலிகள் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு நாட்டின் வான்படையாக திகழ்ந்தனர் என்பதற்கு மற்றுமொரு ஆதாரமாக இவ்வாய்வுக் கட்டுரை தமிழ்ப்பரப்பில் விளங்குமென நினைக்கிறேன். 'புலிகளின் வான்படையின் இலச்சினை | படிமப்புரவு: EelamView ' வான்புலிகளின் சீருடை: முதலாவதாக வான்புலிகளின் சீருடை பற்றிக் காண்போம். இவர்கள் இளநீல வண்ணத்திலான வரிப்புலிச் சீருடையை அணிந்திருந்தனர். அது அதிவெளிறிய இளநீலம், வான்நீலம் மற்றும் சாம்பல் நீலம் என நீலக் குடும்பத்தினைச் சேர்ந்த மூன்று நிறங்களைக் கொண்ட வரிப்புலிச் சீருடையாக இருந்தது. இச்சீருடை எப்போது முதற்தடவையாக அணியப்பட்டது என்பது பற்றிய எந்தவொரு தகவலும் இல்லை. தோராயமாக 2001/2002 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்துவாக இருக்கலாம் என்பது என் துணிபு. முன்குறிப்பிட்ட காலத்தில் இருந்து 2009 இறுதிப்போர் வரை அணிந்திருந்தனர். இறுதிப்போரில் எப்போது கடைசியாக அணிந்தனர் என்பது அறியில்லை. ஆனால் அவர்கள் வான்கரும்புலிகளாக செல்வதற்கு முன்னர் இதனை அணிந்திருந்தால், 2009 பெப்ரவரி எனக் கொள்ளலாம். (அதன் பிறகு வானூர்திக்கான தேவை எழவில்லை.) ஆனால் இவ்விரண்டு தேதிகளும் என்னுடைய துணிபு மட்டுமே. துல்லியமானவை அறியில்லை. வானோடிகளின் வில்லைகள்: அடுத்து இவர்கள் அணிந்த வில்லைகள் பற்றிப் பார்ப்போம். இவர்கள் இரண்டு விதமான வில்லையினை தமது மார்பினில் குத்தியிருந்தனர். வானோடிகள் வலது பக்க மார்பில் வானோடி என்னும் வாசகம் கொண்ட வில்லையினையும் இடது பக்கத்தில் பறப்பர் வில்லையினையும் (aviator badge) குத்தியிருப்பர். 'வானோடி என்னும் வாசகம் கொண்ட வில்லை(badge) - வலது மார்பு' 'பறப்பர் வில்லை(Aviation badge) - இடது மார்பு' (கீழே உள்ள 4 படத்திலும் வெவ்வேறு தமிழீழ வானோடிகள் , துணை வானோடிகள் மற்றும் வான்கலவர்(airmen) உள்ளனர்... இப்படங்களில் உள்ள வானோடிகளில் ஒருவரைத் தவிர்த்து ஏனைய 3 வானோடிகளும் வீரச்சாவடைந்து விட்டனர்) 'வானோடிகளின் மார்பில் அந்தக் கறுப்பு நிறத்தில் தெரிபவை வில்லைகளைக் குத்துவதற்கான பிணையொட்டிகள்(velcro) ஆகும்.' வானோடிகளுக்கான விருதுகள்: ஈழப்போரில் விடுதலைப்புலிகளால் தமிழீழ வானோடிகளுக்கென தனித்துவமான ஒரு விருது வழங்கப்பட்டது. அதன் பெயர் "நீலப்புலி" என்பதாகும். இது ஐந்து தடவை தொடர்ந்து வானேறி வெற்றிகர வான்தாக்குதல் மேற்கொண்ட வானோடிகளிற்கு வழங்கப்படும் விருதாகும். 'நீலப்புலி விருது' இது வான்புலிகளில், வான்கரும்புலி வானோடி கேணல் ரூபன்(மாவீரர்) வான்கரும்புலி வானோடி லெப் கேணல் சிரித்திரன்(மாவீரர்) வானோடி (நிலை இல்லை) தெய்வீகன்/தேவியன் (மாவீரர்) ஆகியோரிற்கு வழங்கப்பட்டன. மேலும் துணைவானோடிகளாக செயற்பட்டோரிற்கு 'மறவர்' என்ற விருதும் வழங்கப்பட்டது. இதனைப் பெற்றோரின் பெயர்க் குறிப்புகள் அறியில்லை. இவற்றைப் பெற்றோரின் படிமங்களைக் காண இங்கே சொடுக்கவும்: வான்புலி வானோடிகளின் பறனை உடுப்புகள் (Pilots Flight Suits) : உலகில் இருக்கும் ஒவ்வொரு நாடும் தன்னுடைய வான்படைக்கென பறனை உடுப்புகள் வழங்குவது வழக்கம். இவை கூடுதலாக பாசிபச்சையும் சாம்பல் நிறமும் கலந்த நிறத்தில் இருப்பது வழக்கம். நமது பண்டாக்கள் அணிவதும் இந்நிறத்திலான உடுப்பினையே. இதே போன்றே எமது வான்படை வானோடிகளும் பறனை உடுப்பினை அணிந்திருந்தனர் என்பது உங்களுக்குத் தெரியுமா? ம்ம். சிலபேர் அறிந்திருப்பீர்கள்; பலபேர் அறிந்திருக்கமாட்டீர்கள். எனவே நாம் அடுத்ததாக எம்மவர் அணிந்திருந்த இந்த பறனை உடுப்பினைப் பற்றிக் காண்போம். வான்புலிகளின் முதற்பறப்பு மூன்றாம் ஈழப்போர் காலத்தில்தான். அவர்கள் பறந்த ஆண்டு - என்னிடம் இருக்கிற தகவல்களின் அடிப்படையில் - தோராயமாக 1998 ஆம் ஆண்டு என வைக்கிறேன். இதன் அடிப்படையில் அவர்கள் இச்சீருடையினை முதன் முதலில் அணிந்தது 1998 ஆம் ஆண்டாக இருக்கலாம் எனக் கணிக்கிறேன்(மாதம், நாள், நேரம், தாரகை எல்லாம் நான் அறியேன் மக்காள்). இந்த 1998 ஆம் ஆண்டில் அவர்கள் இரு நிறத்திலான பறனை உடுப்பினை அணிந்திருந்தனர். --> 1998இல் கொச்சு இலகு கீழிதை(Micro Light Glider) ஓட்டிய வானோடிகள் அணிந்திருந்தது: இந்த ஆண்டில் கீழிதையினை ஓட்டிய வானோடிகள் மற்றும் அவர்களுக்கு உதவியாக நின்ற இன்னொரு அண்ணா என மொத்தம் மூன்று பேர் ஒரு வெளிறிய இளநீல நிறத்திலான பறனை உடுப்பினை அணிந்திருந்தனர். இவர்கள் பராக்குடையோ அல்லது தேவையான பாதுகாப்பு அணியங்களோ(accessories) அணிந்திருக்கவில்லை. ஆனால் வானோடிகள் இருவரும் தலைக் கவசமாக ஒரு வெள்ளை நிறத்திலான வானோடி தலைச்சீரா அணிந்திருந்தனர். இவை யாவும் கீழ்வரும் படிமங்கள் மூலம் அறியப்பட்டவையே. 'இடது பக்கத்தில் நிற்கும் வான்கலவரும் இப்பறனை உடுப்பினை அணிந்துள்ளதை கவனிக்குக. ஆக மொத்தம் மூன்று பேர் இப்பறனை உடுப்பினை அணிந்துள்ளனர், 1998இல்.' --> 18 செப்ரெம்பர், 1998இல் ஒட்டுசுட்டானில் வான்புலிகளின் தற்சுழல்பறனை(Gyroplane) பறப்பின் போது: இந்த ஆண்டில் தற்சுழல்பறனை ஓட்டிய வானோடிகள் இருவரில் ஒருவர் மட்டும் (அச்சுதன் அவர்கள்) அக்காலத்தில் சிங்கள வானோடிகளின் பறனை உடுப்பு நிறமான பாசிப்பச்சை நிறத்திலான பறனை உடுப்பினை அணிந்திருந்தார். இவர் பராக்குடையோ(parachute) அல்லது தேவையான பாதுகாப்பு அணியங்களோ அணிந்திருக்கவில்லை. ஆனால் வானோடிகள் இருவரும் அதே பாசிப்பச்சை நிறத்திலான முந்தையதைக் காட்டிலும் தொழில்நுட்பம் கொஞ்சம் முன்னேறியதாக உள்ள ஒரு தலைச்சீராவினை அணிந்திருந்தனர். இவை யாவும் கீழ்வரும் படிமங்கள் மூலம் அறியப்பட்டவையே. 'இடமிருந்து வலமாக: கேணல் சங்கர் , மற்றும் அச்சுதன் அவர்கள்' 'இடமிருந்து வலமாக: லெப் கேணல் குசந்தன், பெயர் அறியா வான்கலவர் மற்றும் அச்சுதன் அவர்கள்' --> 2005< சிலின் சி 143(Zlin Z 143) மற்றும் செசுனா வித(Cessna type) வானூர்தி ஆகியவற்றை ஓட்டிய வானோடிகள் அணிந்தவை: இடமிருந்து வலமாக: சிரித்திரன், தெய்வீகன்/தேவியன் மற்றும் ரூபன் ஆகியோர் தாக்குதல் வானூர்தியாக மாற்றப்படாத சிலின் 143 இற்கு முன்னால் நிற்கின்றனர். இவ்வானூர்திகள் 2005 ஆம் ஆண்டிற்குப் பின்னர் விடுதலைப் புலிகளால் ஓட்டப்பட்டவை ஆகும்(என்னிடம் இருக்கின்ற வான்புலிகளின் 10 படிமங்களின் காலம் 03/04/2005 ஆகும்). இக்காலத்தில் இதனை ஓட்டிய தமிழீழ வானோடிகள் இரண்டு நிறத்திலான பறனை உடுப்பினை அணிந்திருந்தனர். ஒன்று கறுப்பு மற்றொன்று கடுநீலம் ஆகும். இவை இரண்டையும் நீங்கள் மேலுள்ள படிமத்தினை நன்கு அண்மையாக்கி ஒளியினை அதிகரிப்பதன் மூலம் காணலாம். மேலுள்ள படிமத்தில், லெப் கேணல் சிரித்திரன் மற்றும் தேவியன்(நிலை இல்லை) ஆகியோர் கறுப்பு நிற பறனை உடுப்பினை அணிந்துள்ளனர். ஆனால் இவர்கள் இருவரும் அணிந்துள்ள வான்படை கத்தனத்தின் கழுத்துப்பட்டையில் நீல நிற உடுப்பு ஒன்றின் கழுத்துப்பட்டை தெரிகிறது. அது யாதென எனக்குத் தெரியவில்லை. இவர்களில் மூன்றாமவரான கேணல் ரூபன் அவர்கள் நீல நிறத்திலான பறனை உடுப்பினை அணிந்துள்ளார். அதேநேரம் இவர்கள் மூவரும் தத்தமது பறனை உடுப்பின் மேல் கறுப்பு நிற வான்படை கத்தனம்(Air Force jacket) ஒன்றினையும் அணிந்துள்ளனர். மேலும் மேற்கண்ட படிமத்தில் வானோடி தேவியன் அவர்கள் கையில் பச்சை நிற கைமேசினை(gloves) அணிந்துள்ளதையும் கவனிக்குக. சிங்களம் கைப்பற்றிய பறனை உடுப்பும் கொளுத்திய வெடியும்: இவ்வுடுப்பினில் ஒன்றினை சிங்களப் படைகள் இறுதிப் போரில் கைப்பற்றி இருந்தன. கைப்பற்றிய உடுப்பு விடுதலைப் புலிகளினதுதான், ஆனால் அதில் குத்தப்பட்டிருந்த இரு வில்லைகளும் விடுதலைப் புலிகளினது இல்லை. ஏனெனில் புலிகளினால் வெளியிடப்பட்ட பறப்பர் வில்லை மற்றும் 'வானோடி' என எழுதப்பட்ட வாசகம் கொண்ட வில்லை ஆகிய இரண்டிலும் புலிச் சின்னம் இருப்பதோடு அவை தமிழிலும் உள்ளன. ஆனால் இந்த உடுப்பில் குத்தப்பட்டுள்ள வில்லைகளில் புலிச்சின்னமும் இல்லை, வானோடி என்ற வாசகம் தமிழிலும் இல்லை! பகரமாக 'Pilot' என்ற ஆங்கில வாசகமே உள்ளது. தமிழ் கொண்டு ஆண்ட நாட்டின் படையில் ஆங்கிலமா? வாய்ப்பேயில்லை! அத்துடன் அவற்றினது வடிவமும் தோற்றமும் புலிகளால் வெளியிடப்பட்ட வில்லையில் இருந்து முற்றாக வேறுபடுகிறது. மேலும், இந்த உடுப்பானது வில்லைகள் குத்தப்பட்ட நிலையில்தான் சிங்களத்தால் மீட்கப்பட்டுள்ளது. இதுதான் மிகப் பெரிய சந்தேகத்தினை ஏற்படுத்துகிறது. ஏனெனில் எந்தவொரு வானோடியும் தனது உடையில் வில்லையினை குத்திவைத்த நிலையில் புதைத்துவிட்டுச் செல்ல மாட்டான். ஆனால் இங்கு சிங்களமோ அப்படியே புதைத்து வைக்கப்பட்ட நிலையில் இருந்து கிளப்பி எடுத்ததாக அறிவித்திருக்கிறது. நான் எண்ணுவது யாதெனில் உங்கள் மனதில் இப்போது தோன்றுவதே. ஓம், எடுத்த பின்னர் ஊடக்கத்திற்காக இப்படி ஏதேனும் குத்திவிட்டிருக்கலாம் என்பது என் துணிபு. ஆக, இந்த பறனை உடுப்பு வான்புலிகளினதுதான், ஆனால் அதில் குத்தப்பட்டிருக்கும் வில்லைகள் வான்புலிகளினது அல்ல! அவை புலிகளினது பொருள் ஒன்றினை கைப்பற்றி விட்டோம் என சிங்கள மக்களுக்கு தெரிவித்து சிங்கள மக்களை உற்சாகப்படுத்துவதற்காக சிங்களம் செய்த உத்தியே ஒழிய இது புலிகளினது வில்லைகள் அன்று. 'கைப்பற்றப்பட்ட புலிகளின் கடுநீல நிற பறனை உடுப்பு' '13-மே-2009 அன்று சிங்களத்தால் கைப்பற்றப்பட்டு உலகிற்கு புலிகளின் பறனை உடுப்பு என அறிவிக்கப்பட்டது | படிமப்புரவு: யூடியூப் & ITN News| மூன்று திரைப்படிப்புகளை ஒன்றாக ஒட்டி இப்படிமத்தை உருவாக்கியுள்ளேன்' தமிழரின் பறனை உடுப்பில் குத்தப்பட்டிருக்கலாம் என நான் கணிக்கும் வில்லைகள்: மேலே சிங்களம் கொழுத்திய வெடியை வைத்துப் பார்க்கும்போது எம்முடைய வானோடிகளின் பறனை உடுப்பில் வலது மார்புப் பக்கத்தில் நான் மேலே கூறியுள்ளது போன்ற 'வானோடி' என்ற வாசகம் கொண்ட மஞ்சள் நிற வில்லை குத்தப்பட்டிருந்திருக்கலாம்; இடது பக்கத்தில் 'நீலப்புலி' என்ற பறப்பர் வில்லை குத்தப்பட்டிருந்திருக்கலாம்; இரு தோட்களிலும் தோள்மணை(Shoulder boards) மேலுள்ளது போல குத்தப்பட்டிருந்திருக்கலாம். அந்த தோள்மணையில் குறுக்குப்பாட்டிற்கு - இனமறியா பொருளால் ஆன - ஒன்றிணைக்கப்பட்ட மூன்று வெண்ணிற பட்டைகள் பிணைக்கப்பட்டிருக்கலாம் என எண்ணுகிறேன். மாறாக இவ்வில்லைகளை குத்தாமல் வெறுமனே அணிந்திருக்கவும் வாய்ப்புண்டு. இந்த வில்லைகள் குத்தப்பட்டிருக்கலாம் என்பது வெறும் கருதுகோள் மட்டுமே. ஆனால் வான்புலிகள் இப்பறனை உடையினை அணிந்திருக்கின்றனர் என்பது வரலாறு எமக்குச் சொல்லும் செய்தி, அந்தப் படிமம் மூலமாக! உசாத்துணை: https://eelam.tv/watch/வ-ன-ப-ல-கள-ன-இரண-ட-வத-பறப-ப-ltte-airforce-light-glider-skytigers_QoiFA5YoVHx3q8j.html https://eelam.tv/watch/sky-tigers-planes-flying-clear-video-வ-ன-ப-ல-கள-gyroplane-ltte-air-force-tamil-tigers_pKPYEXSJjezSrqV.html https://eelam.tv/watch/sky-tigers-aircraft-accessories-வ-ன-ப-ல-கள-பறன-உட-ப-ப-sky-tigers-flight-suit_ZZIOE7E9guMrWAD.html கிடைத்த படிமங்களை ஆராய்ந்து எழுதியுள்ளேன். படிமப்புரவு: dossier on LTTE Tamilnet.com eelamview.com ஏனையவை திரைப்பிடிப்புகள் ஆகும் (youtube.com, eelam.tv) ஆக்கம் & வெளியீடு நன்னிச்சோழன்
- 1 reply
-
- 1
-
-
- ltte air force
- ஈழ வான்படை
-
(and 17 more)
Tagged with:
- ltte air force
- ஈழ வான்படை
- வான்புலி சீருடை
- ltte sky tigers uniform
- வானோடி உடுப்பு
- வான்புலிகளின் சீருடைகள்
- வான்புலி
- ஈழ வான்படை உடுப்பு
- வான்புலிகளின் உடுப்பு
- ltte sky tigers flight suit
- உடுப்பு
- வான்புலி உடுப்பு
- பறனை உடுப்பு
- பறனை உடுப்புகள்
- வானோடி பறனை உடுப்பு
- தமிழீழ பறனை உடுப்புகள்
- சீருடை
- வான்புலிகளின் பறனை உடுப்புகள்
- eelam flight suit