Search the Community
Showing results for tags 'பித்தக் கல்'.
-
சிப்பிக்குள் முத்து (பித்தத்தில் கல்லு!) கூர்ப்பு ஒரு கோட்பாடு என்பதை விட ஆதாரங்கள் நிறைந்த ஒரு உண்மை எனலாம். கூர்ப்பு நிகழ்ந்தமைக்கான பல ஆதாரங்களில் ஒன்று எங்கள் உடல் உறுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள். சில உறுப்புகள், அவசியமின்மை காரணமாக, குறுகிப் போகின்றன (குடல் வால் -appendix ஒரு உதாரணம்). சில உறுப்புகள், பெரும்பகுதி அவசியமில்லாமல் போனாலும் சில உடற்றொழில்களுக்கு அவசியமாக இருப்பதால், தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கின்றன: இதற்கு உதாரணம் எங்கள் பித்தப் பை. எங்கள் மூதாதையர் வேட்டையாடி, பெருமளவு இறைச்சி, கொழுப்பு என்பவற்றை சந்தர்ப்பம் கிடைக்கும் போது மட்டும் வயிறு புடைக்க உண்ண வேண்டிய ஒரு காலம் இருந்தது. அந்த மூதாதையரில் கொழுப்பை இலகுவாகச் சமிக்கச் செய்ய பித்தப் பை உதவியது. மூன்று வேளையும் அதிக கொழுப்பு அல்லது கொழுப்பை உருவாக்கும் மாப்பொருள் என்பவற்றை உண்ணும் நவீன மனிதனில், பித்தப் பை ஒரு பிரச்சினையாக உருவாகியிருக்கிறது. இந்தப் பிரச்சினையின் பிரதான வடிவம், பித்தக் கல் (Gallstones). பித்தப் பையின் தொழில் என்ன? கொழுப்புணவு சமிக்க உதவும் பித்தம் (gall) என்ற சுரப்பை தயாராகச் சேமித்து வைத்துக் கொள்வது தான் பித்தப் பையின் பிரதான தொழில். பித்தம் ஈரலினால் சுரக்கப் படுகிறது. நீர், பித்த உப்புகள், கனியுப்புக்கள், சிறிது கொலஸ்திரோல் வகைக் கொழுப்பு என்பன தான் ஈரல் சுரக்கும் பித்தத்தின் கூறுகள். ஈரலில் இருந்து வரும் இந்த பித்தத்தை பித்தப் பை வாங்கித் தன்னுள் சேமித்து வைத்திருக்கும் போது, அதில் இருக்கும் நீரை உறிஞ்சிக் கொள்வதால் 3 - 4 மடங்குகள் செறிவான பித்தம் உருவாகிறது. பித்தப் பை (பச்சை நிறம்), ஈரல், முன் சிறு குடல், கணையம் ஆகியவற்றின் அமைவிடத்தைக் காட்டும் படம். ஈரலினுள் இருந்து வரும் பித்தம், ஈரல் கான் ஊடாக பித்தப் பையினுள் சேர்கிறது. உணவு உண்டு ஒரு மணி நேரத்தில், முன் சிறு குடலினுள் பித்தப் பையில் இருக்கும் பித்தம், கணையத்தின் சுரப்புகளையும் சேர்த்துக் கொண்டு நுழையும். பித்தம் கொழுப்பைச் சிறுகோளங்களாக மாற்றுவதால் கொழுப்பு சமிபாடடைய உதவும். பித்தப் பையில் சேரும் பித்தத்தில் பித்தக் கற்கள் உருவாகும் வாய்ப்புகள் பல காரணிகளால் அதிகரிக்கும். பெரும்பாலானவை கொலஸ்திரோல் கற்களாக இருக்கும். பட உதவி நன்றியுடன்: NIH, USA. சாதாரணமாக 30 முதல் 50 மில்லிலீற்றர்கள் வரையான செறிவான பித்தம் இப்படி பித்தப் பையில் சேமிக்கப் பட்டிருக்கும். உணவை எங்கள் உணவுக் கால்வாய் உணரும் வரை பித்தம் சேமிப்பில் இருக்கும். உணவு உள்ளே வருவதை எங்கள் சிறு குடல் உணரும் போது அது வெளிவிடும் ஓமோன் சுரப்புகளால் தூண்டப் பட்டு, பித்தப் பை சுருங்க ஆரம்பிக்கும். முன் சிறுகுடலினுள் திறக்கும் பித்தக் கால்வாய் திறந்து கொள்ளும். பித்தம் சிறு குடலினுள் நுழைந்து, கொழுப்பை சிறு சிறு கொழுப்புக் கோளங்களாக (micelles) உருமாற்றம் செய்யும். இப்படி உருமாற்றம் செய்யப் பட்ட கொழுப்பை, கொழுப்புடைக்கும் நொதியங்கள் இலகுவாக உடைத்து, குடல் உறிஞ்சிக் கொள்ள இலகுவாக இருக்கும். பித்தம் கொழுப்பு சமி பாட்டை இப்படி இலகுவாக்கா விட்டால், பெரும் பகுதி கொழுப்பு உறிஞ்சப் படாமல் கழிவுடன் வெளியேறும். கொழுப்பை சரியாக உடல் அகத்துறிஞ்சினால் தான் கொழுப்பின் பலன்களான கொழுப்பமிலங்களும், கொழுப்பில் மட்டும் கரையக் கூடிய விற்றமின் ஏ, டி போன்ற போசணைகளும் எங்கள் உடலுக்குக் கிடைக்கும். எனவே, பித்தப் பையும், பித்தமும் நவீன மனிதனுக்கு ஓரளவுக்கு அவசியமான எஞ்சியிருக்கும் உறுப்புகள் தான். ஆனால், நவீன மனிதனுக்கு நோய் தரும் பித்தக் கல் எப்படி ஒரு கூடவே வரும் சூனியமாக வருகிறது? பித்தக் கல் என்பது என்ன? பித்தப் பையில் உருவாகும் திண்மையான படிவுகளே பித்தக் கற்கள். இந்தக் கற்களில் 90% ஆனவை கொலஸ்திரோல் கற்கள். மிகக் குறைந்த வீதமானோரில் பித்தக் கற்கள் பித்தத்தின் நிறமிகளான பிலிருபின் போன்றவற்றால் உருவாக்கப் படுகின்றன. இந்த இரண்டாவது வகைக் கற்கள் உருவாவதற்கு சில நோய்கள் ஏற்கனவே இருப்பது காரணமாக இருக்கலாம் - அதிக குருதிக் கல அழிவுகளை ஏற்படுத்தும் தலசீமியா போன்ற நோய்கள் சிறந்த உதாரணங்கள். ஆனால், பெரும்பான்மையானோரில் உருவாகும் கொலஸ்திரோல் கற்கள் பரம்பரை காரணிகள், வாழ்க்கை முறை என்பவற்றால் உருவாகின்றன. கொழுப்பான கொலஸ்திரோல் எப்படிக் கல்லாகிறது? பித்தத்தில் ஏனைய பொருட்களோடு, ஈரல் சுரக்கும் கொலஸ்திரோலும் கலந்திருக்கிறது எனப் பார்த்தோம். சாதாரணமாக பித்தத்தில் 4% ஆக இருக்கும் கொலஸ்திரோலின் அளவு 8 முதல் 10% ஆக அதிகரிக்கும் தருணங்களில், பித்தத்தில் இருக்கும் கொலஸ்திரோல் பளிங்காகப் படிவாகும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. ஆனாலும், அதிகரித்த கொலஸ்திரோல் தான் பெரும்பாலான பித்தக் கற்களுக்குக் காரணம் என்று சொல்லி விட முடியாது - பித்தக் கல் உருவாகும் பொறிமுறை அதை விடச் சிக்கலானது. அதிகரித்த கொலஸ்திரோலோடு, வேறு சில காரணிகள் சேரும் போது, கொலஸ்திரோல் பித்தக் கற்களை உருவாக்கும். இந்தக் காரணிகளில் சில மாற்ற இயலாதவை, சில மாற்றக் கூடியவை. மாற்ற இயலாத காரணிகள்: பரம்பரை/ஜீன் வழி மாற்றம் இந்த மாற்ற இயலாத காரணிகளில் முதன்மையானது. சிலரில், பித்தத்தின் கொலஸ்திரோல், ஏனையோரை விட மிக விரைவாகப் பளிங்காகப் படிவடைகின்றன. இதற்கு கொலஸ்திரோல் அளவு மட்டுமன்றி, வேறு சில "கருவாக்கும்" (nucleation) காரணிகளும் பங்களிப்புச் செய்கின்றன. இந்தக் கருவாக்கும் காரணிகள் எல்லாம் அடையாளம் காணப் படவில்லை. எனவே,எங்கள் நெருக்கமான இரத்த உறவுகளில் பித்தக் கல் இருந்திருந்தால், எங்களில் அது ஏற்படும் வாய்ப்பும் சிறிது அதிகரிக்கிறது. இரண்டாவது: பித்தக் கல் ஏற்படும் வாய்ப்புகள் ஆண்களை விடப் பெண்களில் அதிகம். பெண்களின் மாத விடாய் சக்கரம், கர்ப்பமுறும் இயலுமை காரணமாக உருவாகும் ஓமோன் மாற்றங்கள் பித்தப் பையில் இருந்து பித்தம் வெளியேறுவதைப் பாதிக்கின்றன - இதனால் இந்த அதிகரித்த ஆபத்து பெண்களில். மாற்றக் கூடிய காரணிகள்: எங்கள் உணவு, உடலுழைப்பு உட்பட்ட வாழ்க்கை முறை தான் மாற்றக் கூடிய காரணி. எங்கள் வாழ்க்கை முறை காரணமாக கொலஸ்திரோல் பித்தக் கற்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன என பல ஆய்வுகள் கண்டறிந்திருக்கின்றன. அதிகரித்த கொலஸ்திரோலை ஈரல் பித்தத்தின் வழியாக சுரப்பதற்கு, அதிக கொழுப்பு, அல்லது அதிக மாப்பொருள் என்பன கொண்ட உணவு முறை ஒரு காரணம். இதனால் உடற்பருமன் அதிகரித்தோர், நீரிழிவு நோய் ஏற்கனவே இருப்போர் ஆகியோரில் கொலஸ்திரோலினால் ஏற்படும் பித்தக் கற்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. இந்த இடத்தில் மீண்டும் வலியுறுத்த வேண்டியிருக்கும் ஒரு விடயம்: கொலஸ்திரோலை மட்டும் குறி வைத்து மருந்து எடுத்துக் கொள்வதால் பித்தக் கற்களின் ஆபத்தைக் குறைப்பது சாத்தியமில்லை. உதாரணமாக, கொலஸ்திரோலைக் குறைக்கும் மருந்துகள் பித்தக் கற்கள் உருவாவதைக் குறைக்கின்றனவா என்று தேடிய ஆய்வுகளில் உறுதியான முடிவுகள் கிடைக்கவில்லை. ஈரல் சுரக்கும் கொலஸ்திரோலோடு, வேறு அடையாளம் காணப் படாத காரணிகளும் பித்தக் கற்கள் உருவாவதைத் தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கலாம், அந்தக் காரணிகள் எங்கள் வாழ்க்கை முறையோடு தொடர்புற்றிருக்கலாம். ஆனால், ஒட்டு மொத்தமாக, உடலின் அனுசேபத் தொழிற்பாட்டைச் சீராக வைத்திருக்கும் உணவு முறை, நீரிழிவுக் கட்டுப் பாடு, உடல் பருமன் கட்டுப் பாடு என்பன பித்தக் கல் உருவாகும் ஆபத்தைக் குறைக்கின்றன என்பது தெளிவாகியிருக்கிறது. சில மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வோரிலும் பித்தக் கற்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகரிக்கலாம். நெஞ்செரிவு (heartburn) என (தவறாக) அழைக்கப் படும் இரைப்பை அமில எரிவு (acid reflux) நிலைக்கு நிவாரணியாகப் பாவிக்கப் படும் H2R blocker மருந்துகள் (cimetidine, ranitdine), பித்தக் கற்கள் உருவாக்கும் வாய்ப்பை அதிகரிப்பதாக சில ஆய்வுகள் சொல்கின்றன. பித்தக் கற்களால் தோன்றும் வலியை எப்படிக் கண்டறிவது? எங்கள் வயிற்றை, வெளி மேற்பரப்பில் நான்கு கால் பங்குகளாகப் (quadrants) பிரித்து, அந்தக் கால்பங்குகளில் எந்தப் பங்கில் வலி மையங் கொண்டிருக்கிறது என்பதை ஆராய்ந்து எந்த உறுப்புப் பாதிக்கப் பட்டிருக்கிறது எனக் குத்து மதிப்பாகச் சொல்ல முடியும். வயிற்றின் வலது மேல் காற் பங்கில் (upper right quadrant) மையங் கொண்ட தீவிர வலி, பெரும்பாலும் ஈரல், பித்தப் பை ஆகியவற்றின் பாதிப்பினால் உருவாகிறது எனலாம். ஆனாலும், பித்தப் பையின் அமைவிடம் ஆளுக்காள் சிறிது வேறுபடுகிறது. இதனால், பித்தக் கற்களால் ஏற்படும் வலி, மேல் இடது, வலது காற்பங்குகளில் சம அளவில் உணரப் படும் வாய்ப்பும் இருக்கிறது. எனவே, தீவிர வயிற்று வலி தொடர்ந்து அல்லது விட்டு விட்டுப் பல தடவைகள் உருவானால், உடனே மருத்துவ உதவி நாட வேண்டும். மருத்துவ மனையில், மீயொலித் தெறிப்புக் (ultra-sound) கருவி மூலம், பெரும்பாலான பித்தக் கற்களை அடையாளம் கண்டு கொள்ள முடியும். அவ்வாறு அடையாளம் காண இயலாத கற்களை CT ஸ்கான் மூலம் அடையாளம் காண்பர். சுருக்கமாக, பித்தக் கற்கள் பெரும்பாலும் கொலஸ்திரோல் கற்கள். பெண்களில் தான் அதிகம் உருவாகக் கூடியவையானாலும், இரு பாலாரும் பாதிக்கப் படும் வாய்ப்புகள் இருக்கின்றன. தவிர்க்க இயலாத பரம்பரைக் காரணியை விட்டு விட்டாலும், தவிர்க்கக் கூடிய உடல் அனுசேபத்தோடு தொடர்பான நோய்களைத் தவிர்ப்பதால் பித்தக் கற்களின் ஆபத்தைக் குறைக்கலாம். தொகுப்பு: ஜஸ்ரின் தகவல் மூலங்கள், மேலதிக தகவல்கள்: https://www.niddk.nih.gov/health-information/digestive-diseases/gallstones/definition-facts https://pharmacy.uconn.edu/wp-content/uploads/sites/2740/2023/06/Gallbladder-Disease-YAFI-JUN2023-FINAL.pdf