Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Search the Community

Showing results for tags 'புருஜோத்தமன் தங்கமயில்'.

 • Search By Tags

  Type tags separated by commas.
 • Search By Author

Content Type


Forums

 • யாழ் இனிது [வருக வருக]
  • யாழ் அரிச்சுவடி
  • யாழ் முரசம்
  • யாழ் உறவோசை
 • செம்பாலை [செய்திக்களம்]
  • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
  • ஊர்ப் புதினம்
  • உலக நடப்பு
  • நிகழ்வும் அகழ்வும்
  • தமிழகச் செய்திகள்
  • அயலகச் செய்திகள்
  • அரசியல் அலசல்
  • செய்தி திரட்டி
 • படுமலைபாலை [தமிழ்க்களம்]
  • துளித் துளியாய்
  • எங்கள் மண்
  • வாழும் புலம்
  • பொங்கு தமிழ்
  • தமிழும் நயமும்
  • உறவாடும் ஊடகம்
  • மாவீரர் நினைவு
 • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
  • இலக்கியமும் இசையும்
  • கவிதைப் பூங்காடு
  • கதை கதையாம்
  • வேரும் விழுதும்
  • தென்னங்கீற்று
  • நூற்றோட்டம்
  • கவிதைக் களம்
  • கதைக் களம்
 • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
  • சமூகவலை உலகம்
  • வண்ணத் திரை
  • சிரிப்போம் சிறப்போம்
  • விளையாட்டுத் திடல்
  • இனிய பொழுது
 • கோடிப்பாலை [அறிவியற்களம்]
  • கருவிகள் வளாகம்
  • தகவல் வலை உலகம்
  • அறிவியல் தொழில்நுட்பம்
  • சுற்றமும் சூழலும்
 • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
  • வாணிப உலகம்
  • மெய்யெனப் படுவது
  • சமூகச் சாளரம்
  • பேசாப் பொருள்
 • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
  • நாவூற வாயூற
  • நலமோடு நாம் வாழ
  • நிகழ்தல் அறிதல்
  • வாழிய வாழியவே
  • துயர் பகிர்வோம்
  • தேடலும் தெளிவும்
 • யாழ் உறவுகள்
  • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
  • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
  • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
  • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
  • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
  • யாழ் ஆடுகளம்
  • யாழ் திரைகடலோடி
  • யாழ் தரவிறக்கம்
 • யாழ் களஞ்சியம்
  • புதிய கருத்துக்கள்
  • முன்னைய களம் 1
  • முன்னைய களம் 2
  • பெட்டகம்
 • ஒலிப்பதிவுகள்
 • Newsbot - Public club's Topics
 • தமிழரசு's நாபயிற்சி
 • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
 • தமிழரசு's வரவேற்பு
 • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
 • தமிழரசு's படித்ததில் பிடித்தது
 • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
 • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
 • தமிழ்நாடு குழுமம்'s Test
 • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
 • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
 • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
 • தமிழ்நாடு குழுமம்'s கணணி
 • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
 • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
 • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
 • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
 • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
 • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
 • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
 • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
 • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
 • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
 • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
 • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
 • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
 • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
 • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
 • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
 • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
 • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
 • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
 • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
 • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
 • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
 • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா

Calendars

 • நாட்காட்டி
 • மாவீரர் நினைவு

Blogs

 • மோகன்'s Blog
 • தூயவன்'s Blog
 • Mathan's Blog
 • seelan's Blog
 • கறுப்பி's Blog
 • lucky007's Blog
 • சந்தோஷ் பக்கங்கள்
 • தூயாவின் வலைப்பூ
 • vijivenki's Blog
 • sindi's Blog
 • சந்தியா's Blog
 • இரசிகை-இரசித்தவை
 • arunan reyjivnal's Blog
 • இலக்கியன்`s
 • PSIVARAJAKSM's Blog
 • blogs_blog_18
 • Tamil Cine's Blog
 • sujani's Blog
 • Iraivan's Blog
 • Thinava's Blog
 • குட்டியின் கோட்டை
 • வல்வை மைந்தன்
 • vishal's Blog
 • kural's Blog
 • KULAKADDAN's Blog
 • குறும்பன் வாழும் குகை
 • Thamilnitha's Blog
 • அடர் அவை :):):)
 • டுபுக்கு's Blog
 • வானவில்'s Blog
 • NASAMAPOVAN's Blog
 • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
 • vikadakavi's Blog
 • ravinthiran's Blog
 • Tamizhvaanam's Blog
 • hirusy
 • neervai baruki's Blog
 • இனியவள்'s Blog
 • senthu's Blog
 • tamil_gajen's Blog
 • சின்னப்பரின் பக்கம்
 • ADANKA THAMILAN's Blog
 • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
 • harikalan's Blog
 • antony's Blog
 • mugiloli's Blog
 • Kavallur Kanmani's Blog
 • jeganco's Blog
 • Waren's Blog
 • "வா" சகி 's Blog
 • nishanthan's Blog
 • semmari's Blog
 • Akkaraayan's Blog
 • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
 • தீபன்'s Blog
 • தமிழ் இளையோர் அமைப்பு
 • மாயன்'s Blog
 • Thumpalayan's Blog
 • Vani Mohan's Blog
 • mullaiyangan's Blog
 • NAMBY's Blog
 • பரதேசி's Blog
 • thamilkirukkan's Blog
 • Vakthaa.tv
 • colombotamil's Blog
 • மசாலா மசாலா
 • muththuran
 • கிருபா's Blog
 • நந்தவனம்
 • தமிழர் பூங்கா
 • TAMIL NEWS
 • dass
 • puthijavan's Blog
 • AtoZ Blog
 • mullaiiyangan's Blog
 • mullaiman's Blog
 • மல்லிகை வாசம்
 • karu's Blog
 • saromama's Blog
 • tamil92's Blog
 • athirvu
 • melbkamal's Blog
 • nedukkalapoovan's Blog
 • Loshan's Blog
 • ஜீவநதி
 • எல்லாளன்'s Blog
 • kanbro's Blog
 • nillamathy's Blog
 • யாழ்நிலவன்'s Blog
 • Vimalendra's Blog
 • Narathar70's Blog
 • நிரூஜாவின் வலைப்பதிவு
 • cyber's Blog
 • varnesh's Blog
 • yazh's Blog
 • MAHINDA RAJAPAKSA's Blog
 • விசரன்'s Blog
 • tamil paithiyam's Blog
 • TamilForce-1's Blog
 • பருத்தியன்
 • aklmg2008's Blog
 • newmank
 • ilankavi's Blog
 • இனியவன் கனடா's Blog
 • muthamil78
 • ரகசியா சுகி's Blog
 • tamileela tamilan's Blog
 • சுஜி's Blog
 • மசாலா மசாலா
 • Anthony's Blog
 • Gunda's Blog
 • izhaiyon's Blog
 • TamilEelamboy's Blog
 • sathia's Blog
 • லோமன்
 • kobi's Blog
 • kaalaan's Blog
 • sathiri's Blog
 • Voice Blog
 • தமிழ் செய்தி மையம் மும்பை
 • ஜீவா's Blog
 • தீபம்'s Blog
 • Iraivan's Blog
 • பிறேம்'s Blog
 • mullaikathir.blogspot.com
 • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
 • sam.s' Blog
 • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
 • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
 • sam.s' Blog
 • தயா's Blog
 • தயா's Blog
 • ஏராழன்'s Blog
 • Small Point's Blog
 • Rudran's Blog
 • ulagathamilargale.blogpsot.com
 • ramathevan's Blog
 • Alternative's Blog
 • Alternative's Blog
 • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
 • ஜீவா's Blog
 • மொழி's Blog
 • cawthaman's Blog
 • ilankavi's Blog
 • ilankavi's Blog
 • கனடா போக்குவரத்து
 • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
 • nirubhaa's Blog
 • nirubhaa's Blog
 • தமிழரசு's Blog
 • akathy's Blog
 • அறிவிலி's Blog
 • மல்லிகை வாசம்'s Blog
 • வல்வை சகாறா's Blog
 • விவசாயி இணையம்
 • அருள் மொழி இசைவழுதி's Blog
 • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's எழுத்து ஆவணங்கள்
 • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's படிமங்கள்
 • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's சிறப்பு ஆவணம்

Find results in...

Find results that contain...


Date Created

 • Start

  End


Last Updated

 • Start

  End


Filter by number of...

Joined

 • Start

  End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

 1. மாகாண சபைத் தேர்தலுக்காக காத்திருக்கும் தமிழ்க் கட்சிகள் புருஜோத்தமன் தங்கமயில் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த மாகாண சபைகளுக்கான தேர்தல், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நடத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடியால், அரசியல்வாதிகள் முடங்கியிருந்த நிலையில், மாகாண சபைத் தேர்தலுக்கான அறிவிப்பு, அவர்களை உற்சாகமடைய வைத்திருக்கின்றது. முதலமைச்சர் கனவோடும் அமைச்சர் கனவுகளோடும் பலரும் பல மாதங்களாகக் காத்திருக்கிறார்கள். அதிலும், பாராளுமன்றத் தேர்தலில் தோற்றவர்களின் பதவிக்கான காத்திருப்பு என்பது, சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அரசியல் தலைவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்குமான வித்தியாசம் என்பது பதவி, பகட்டுச் சார்ந்தது. மக்களுக்கான உண்மையான அரசியல் தலைவர்களுக்கு பதவியும் பட்டமும் முக்கியமல்ல. அவர்கள், தேர்தலில் வென்றாலும் தோற்றாலும், மக்களுக்காகத் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால், அரசியல்வாதிகளைப் பொறுத்தளவில், அவர்களால் பதவி, பகட்டு இன்றி வாழவே முடியாது. தேர்தல் வெற்றிகளுக்காக எல்லாவிதமான தந்திரங்களையும் அரங்கேற்றத் துணிவார்கள். இப்படியானவர்களால் தமிழ் அரசியல் பரப்பும், கடந்த பத்து ஆண்டுகளில் நிரப்பப்பட்டுவிட்டது. பதவி, பகட்டை எதிர்பார்த்து, அரசியல் கட்சிகளையும் அரசியல்வாதிகளையும் நெருங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. மக்களுக்கான அரசியல் என்பது, மக்களின் எண்ணங்களை, அவர்களின் ஆழ்மனதில் இருந்து பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். ஆனால், தமிழ் அரசியல் சூழலில், அவ்வாறான நிலை பெரும்பாலும் இல்லை. அநேகமானவர்களின் அரசியல் அரங்காற்றுகைகள், தேர்தல்களைக் குறிவைத்து நிகழ்த்தப்படுகின்றன. ஒத்திவைக்கப்பட்டு வந்த மாகாண சபைத் தேர்தல்களுக்காக, அதிகமான முக்கியத்துவத்துடன் காத்திருந்த தரப்பினர் என்றால், தமிழ்த் தேசிய கட்சிகளைச் சொல்ல முடியும். தென் இலங்கையின் பெரும்பான்மைக் கட்சிகள் கூட, மாகாண சபைத் தேர்தல் தொடர்பில், பெரிய கரிசனையை வெளிப்படுத்தியிருக்கவில்லை. ஆனால், மாகாண சபை முறையைத் தொடர்ச்சியாக நிராகரித்து வந்திருக்கின்ற தமிழ்த் தேசிய கட்சிகள், அந்த நிர்வாகக் கட்டமைப்புக்கான தேர்தலுக்காக, அதிக முக்கியத்துவத்துடன் காத்திருக்கின்றன. இது, அடிப்படையில் முரண்நகை. இந்த முரணுக்குள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும், எந்தவித பாகுபாடுமின்றி இருக்கின்றன. கடந்த காலங்களில், இந்தியாவையும் 13ஆவது திருத்தத்தையும் எதிர்த்துவந்த முன்னணியினர், அந்த நிலையிலிருந்து மாறிவிட்டனர். மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது என்பது, 13ஆவது திருத்தச் சட்டத்தையும் மாகாண சபை முறைமையையும் அங்கிகரிக்கும் செயல் என்று, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூறி வந்திருக்கின்றது. 2013ஆம் ஆண்டு, வடக்கு மாகாண சபைத் தேர்தலிலும் மேற்கண்ட விடயத்தைக் கூறியே, தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டது. ஆனால், சில ஆண்டுகளிலேயே முன்னணியிடம் மனமாற்றம் ஏற்பட்டு விட்டது. மாகாண சபைத் தேர்தலுக்காக, முன்னணியின் முக்கியஸ்தர்கள் தயாராகத் தொடங்கிவிட்டார்கள். முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் தொடங்கி, அந்தக் கட்சியின் உறுப்பினர்களிடத்திலேயே கூட, இந்தியாவுடனான அணுகுமுறை மாறிவிட்டது. அண்மையில், யாழ்ப்பாணம் வந்த இந்திய வெளியுறவு செயலாளர், கூட்டமைப்பு தவிர்ந்த தமிழ்க் கட்சிகள், அரசியல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட குழுவினருக்கு இரவு விருந்தளித்தார். அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த கஜேந்திரகுமாரின் உடல்மொழி, பல செய்திகளை அப்பட்டமாகச் சொல்லியது. கடந்த காலங்களில், ஊடக மையத்திலும் தேர்தல் மேடைகளிலும், இந்தியா தொடர்பில் அவர் முழங்கி வந்திருக்கின்ற கருத்துகள் எல்லாமும் பொய்யானவையோ என்று தோன்றுமளவுக்கு இருந்தன. ஏற்கெனவே, முன்னணியில் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தரப்புக்கும் கஜேந்திரகுமார் தரப்பினருக்குமான முரண்பாடுகள் பெரியளவில் சென்றுவிட்டன. கஜேந்திரகுமாரின் அழுத்தங்களைத் தாண்டி, மணிவண்ணன் தரப்பினர் யாழ்ப்பாணம் மாநகர சபையையும் நல்லூர் பிரதேச சபையையும் வெற்றி கொண்டுவிட்டார்கள். இதனால், முன்னணியின் உண்மையான உரித்தாளர்கள் யார் என்கிற கேள்வி இன்னமும் தொக்கி நிற்கின்றது. அப்படியான நிலையில், முன்னணியின் அடையாளத்தைப் பேணுவதற்கு மாகாண சபைத் தேர்தலில், தன்னுடைய அணியினரை அகில இலங்கை காங்கிரஸின் ‘சைக்கிள்’ சின்னத்தில் போட்டியிட வைத்து, வெற்றிபெற வைக்க வேண்டும் என்கிற தன்முனைப்பு, கஜேந்திரகுமாருக்கு ஏற்பட்டுவிட்டது. மாகாண சபைத் தேர்தலில் ஒரு சில உறுப்பினர்களையாவது வெற்றிவெற வைத்தால், முன்னணி உண்மையிலேயே தன்னுடனேயே இருப்பதாகக் காட்டிக் கொள்ளலாம் என்பது அவரது நிலைப்பாடு. இல்லையென்றால், முரண்பாடுகளுக்குப் பின்னராக, மணிவண்ணன் அணி பெற்றிருக்கின்ற முக்கியத்துவம் இன்னமும் அதிகரித்து, முன்னணியின் உரித்துச் சார்ந்த பிரச்சினைகள், எதிர்காலத்தில் இன்னும் பலமாக எழுவதற்கு வாய்ப்பிருக்கின்றது. கூட்டமைப்பைப் பொறுத்தளவில், பாராளுமன்றத் தேர்தலில் பதவி இழந்தவர்களும், ஏற்கெனவே மாகாண சபையில் உறுப்பினர்களாக இருந்தவர்களுமே, மாகாண சபைத் தேர்தலுக்காகக் காத்திருக்கின்றார்கள். இவர்களின் அநேகருக்கு, மாகாண சபையின் நிர்வாகக் கட்டமைப்பின் அதிகார அளவுகள் குறித்துக்கூட, எந்தத் தெளிவும் இல்லை. பெரும்பாலானவர்கள், மாகாண சபைத் தேர்தலை, பதவிகளுக்கான ஒரு கருவியாக மாத்திரமே காண்கின்றார்கள். வடக்கு மாகாண சபையின் முதலாவது ஆட்சியைப் பிடித்தவர்கள் என்கிற ரீதியில், ஒன்பது மாகாண சபைகளிலும், இறுதி இடத்தையே பெற்றுக் கொள்ளும் அளவுக்கு மிகமிகக் குழப்பகரமாக மாகாண சபையை நடத்தியவர்கள் கூட்டமைப்பினர். கொழும்பிலிருந்து முதலமைச்சர் வேட்பாளராக அழைத்துவரப்பட்ட சி.வி. விக்னேஸ்வரன், தனக்கான பணி என்னவோ அதைச் செய்வதைத் தவிர்ந்து, மற்ற அனைத்து வேலைகளையும், முதலமைச்சர் என்கிற பதவி பிம்பத்தோடு செய்தார். தமிழ் மக்கள் பேரவையும் அவரின் புதிய கட்சியும் அப்படி உருவானவைதான். விக்னேஸ்வரன்தான் தன்னுடைய தனிப்பட்ட அரசியலைச் செய்கின்றார் என்றால், அவரைத் தவிர்த்து கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களைச் சரியான புள்ளியில் ஒருங்கிணைத்து, மாகாண சபையை கூட்டமைப்பின் தலைமை நடத்தியதா என்றால், அதுவும் இல்லை. மாகாண சபைக்குள் குழப்பங்கள் ஏற்பட்ட அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் இரா.சம்பந்தன், சரியான முடிவுகளை எடுக்கவேண்டிய பல தருணங்களிலும், கடிதங்களை எழுதி விடயங்களைச் சமாளிக்கவே முயன்றார். அப்படி மாகாண சபையை, முழுவதுமாகத் தோற்கடித்தவர்களின் தரப்பினரான கூட்டமைப்பினர், இன்றைக்கு மீண்டும் மாகாண சபைக் கனவுகளோடு இருக்கின்றார்கள். குறிப்பாக, பாராளுமன்றத் தேர்தலில் மோசமான தோல்வியைத் தழுவிய மாவை சேனாதிராஜாவும் அவரோடு தோற்றுப் போனவர்களும், தங்களது அரசியல் எதிர்காலத்தைத் தக்க வைப்பதற்காக, மாகாண சபைத் தேர்தலை குறிவைக்கின்றார்கள். ஏற்கெனவே பாராளுமன்றத் தேர்தலில், இளைஞர்களுக்கான வாய்ப்புகளை மறுத்தவர்கள், தற்போது மாகாண சபைத் தேர்தலிலும் அதையே செய்ய எத்தனிக்கிறார்கள். ஆற்றலும் ஆளுமையும் உள்ள இளம்தலைமுறையை, செயற்பாட்டு அரசியலுக்கு அழைத்துவந்து, அவர்களிடம் பொறுப்புகளை வழங்க வேண்டும் என்கிற எந்தவித எண்ணமும், கூட்டமைப்பின் தலைவர்களிடம் இல்லை. சுயநலம் மட்டுமே வாழ்வாகப் போய்விட்ட நிலைக்கு, கூட்டமைப்பு எனும் கட்டமைப்பைக் கொண்டு வந்து சேர்ந்துவிட்டார்கள். அப்படிப்பட்டவர்களின் எதிர்பார்ப்பே, மாகாண சபைத் தேர்தல் என்றாகிவிட்டது. கிழக்கு மாகாண சபையைப் பொறுத்தளவில், அங்கு மீண்டும் முதலமைச்சராகிவிடலாம் என்கிற கனவோடு பிள்ளையான் இருக்கிறார். ராஜபக்‌ஷர்களின் அனுசரணை, அவருக்கு இருக்கவே செய்கின்றது. ஏற்கெனவே, எதிர்க்கட்சியில் இருந்தாலும், முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும் முக்கியஸ்தர்களும் ராஜபக்‌ஷர்களின் விசுவாசிகளாக வலம் வரும் நிலையில், அவர்களின் ஆதரவையும் வைத்து, கிழக்கு மாகாண சபையில் பிள்ளையானை அமர்த்தும் வாய்புகளை, ராஜபக்‌ஷர்கள் புறந்தள்ள மாட்டார்கள். அங்கு, தமிழ்த் தேசிய கட்சிகள் வேண்டுமென்றால், எதிர்க்கட்சி எனும் நிலையை அடையும் அளவுக்கான பலத்துடன் மாத்திரமே இருக்கின்றன. அப்படியான நிலையில், தமிழ்த் தேசிய கட்சிகள், ஆட்சியமைக்கக் கூடிய ஒரே மாகாண சபையாக, வடக்கு மாகாண சபை இருக்கின்றது. அதனை, மீண்டும் கைப்பற்றும் போது, குறைந்தபட்ச அர்ப்பணிப்போடாவது நடத்திச் செல்ல வேண்டும். இல்லையென்றால், எதற்கும் தமிழர்கள் தகுதியற்றவர்கள் என்கிற எண்ணம், அனைத்து இடங்களிலும் பரவிவிடும். அது, எதிர்காலத்தை இன்னும் மோசமாகச் சிதைத்துவிடும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மாகாண-சபைத்-தேர்தலுக்காக-காத்திருக்கும்-தமிழ்க்-கட்சிகள்/91-283046
 2. புதுடெல்லியுடன் நெருக்கும் ராஜபக்‌ஷர்கள்: கூட்டமைப்பின் நிலை என்ன? புருஜோத்தமன் தங்கமயில் சீர்கெட்டிருந்த இந்தியாவுடனான உறவைப் புதுப்பிக்கும் முடிவுகளுக்கு, ராஜபக்‌ஷர்கள் வந்திருக்கிறார்கள். சீனாவை மட்டும் நம்பியிருந்த ராஜபக்‌ஷர்கள், இந்தியாவை வேண்டாத பங்காளியாகவே இதுவரை காலமும் கையாண்டு வந்திருக்கிறார்கள். குறிப்பாக, முள்ளிவாய்க்காலில் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர், ராஜபக்‌ஷர்கள் சீனாவையே முழுவதுமாக நம்பியிருக்கத் தலைப்பட்டார்கள். அது, இராஜதந்திர ரீதியில் இந்தியாவுடனான உறவைப் பலமாகச் சீர்குலைத்தது. ராஜபக்‌ஷர்களின் சீன விசுவாசம், பிராந்தியத்தின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்குவதாகத் தெரிவித்து இந்தியா, தன்னுடைய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவு செயலர் உள்ளிட்டவர்களை பல தடவைகள் கொழும்புக்கு நேரடியாக அனுப்பி அறிவுறுத்தியும் வந்திருந்தது. ஆனாலும், அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த தற்போதையை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்‌ஷ, இந்தியாவின் அழுத்தங்களையும் அறிவுறுத்தல்களையும் கணக்கில் எடுத்திருக்கவில்லை. மாறாக, இந்தியாவை ஆத்திரப்படுத்தும் காரியங்களை சீனாவோடும், பாகிஸ்தானோடும் இணைந்து பல தருணங்களிலும் செய்திருந்தார். அதுமட்டுமல்லாமல், இந்தியாவை ராஜபக்‌ஷர்கள் எவ்வளவுக்கு வெறுத்தார்கள் என்றால், தன்னுடைய ஜனாதிபதித் தேர்தல் தோல்விக்கு இந்தியா(வும்) முக்கிய காரணமென்று, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ வெளிப்படையாக குற்றஞ்சாட்டியிருந்தார். அப்படிப்பட்ட நிலையில், இந்தியாவுடனான உறவைப் புதுப்பிக்கும் ராஜபக்‌ஷர்களின் முடிவு என்பது கவனிக்கத்தக்கது. அதுவும், இந்தியாவுடனான ராஜபக்‌ஷர்களின் இன்றைய உடல்மொழியே, தலைகீழாக மாறியிருக்கின்றது. இலங்கைக்கான மூன்று நாள் விஜயத்தினை மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷரிங்லா, செவ்வாய்க்கிழமை (05) ஜனாதிபதி கோட்டாவை சந்தித்தார். இதன்போது, வழக்கத்துக்கு மாறாக ஜனாதிபதி நீண்ட விளக்கத்தை, இந்திய வெளியுறவு செயலாளரிடம் கொடுத்திருக்கின்றார். அந்த விளக்கங்களில், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் எந்தவொரு நிலைப்பாடுகளுக்கும், இலங்கை ஒத்துழைப்பு வழங்காது, சீனாவுடனான தங்களின் உறவு, இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமையாது; மற்றும், திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொடர்பிலான பிரச்சினைக்கு, உடனடியாகத் தீர்வு காணப்படும் என்கிற விடயங்கள் முக்கியமானவை. அத்தோடு, 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் வழக்கத்துக்கு மாறாக கோட்டா, இந்தியாவை மகிழ்ச்சிப்படுத்தும் கருத்துகளையே இம்முறை வெளியிட்டிருக்கின்றார். அதாவது, 13ஆவது திருத்தம் அவசியமில்லாத ஒன்று. அது நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலானது என்று, தென் இலங்கை முழுவதும் கடந்த காலங்களில் ராஜபக்‌ஷர்கள் முழங்கி வந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலையில், 13ஆவது திருத்தம் பலமும் பலவீனங்களும் கொண்டிருக்கின்றன. அதன் பலங்களை இனங்கண்டு கையாள வேண்டும் என்று கோட்டா கூறியிருக்கின்றார். இந்த விடயங்கள், இந்தியாவைக் குளிர்விக்க போதுமாவை என்பது, ராஜபக்‌ஷர்களின் எண்ணம். இந்தியாவைப் பொறுத்தளவில் வடக்கு - கிழக்கில் சீனாவின் கரங்கள் நீளாது இருப்பது முக்கியமானது. அந்த உத்தரவாதத்தை ராஜபக்‌ஷர்கள் வழங்கினாலே, அவர்களை அரவணைக்கத் தயாராக இருக்கின்றது. ஏனெனில், இந்தியாவைச் சுற்றியுள்ள அனைத்து நாடுகளையும் சீனா கடன் பொறியினால் தன்னுடைய சேவகர்களாக மாற்றி வைத்திருக்கின்றது. பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் என்று இந்தியாவின் பெரும் எல்லைப்பகுதிகளைப் பகிரும் நாடுகளில் சீனாவின் முதலீடுகளும், கடன் உதவிகளும் என்றைக்கும் இல்லாதளவுக்கு அதிகரித்திருக்கின்றது. குறிப்பாக, 2015இல் ஏற்பட்ட நில அதிர்வினால் நேபாளம் சிதைவடைந்தது. 9,000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தார்கள். அதன் பின்னராக மீள்கட்டுமானத்துக்காக இந்தியாவின் உதவியை நேபாளம் எதிர்பார்த்தது. ஆனால், அதனை இந்தியா தட்டிக்கழித்த போது, அந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு சீனா, நேபாளத்துக்குள் நுழைந்தது. இன்றைய காத்மண்டுவின் பெரும் கட்டுமானங்கள் எல்லாமும் சீனாவின் உதவியுடன் நிகழ்ந்தவை. அப்படிப்பட்ட நிலையில், இந்தியாவைத் தாண்டிய நெருக்கத்தை, சீனாவோடு பேணுவதற்கு நேபாளம் தள்ளப்பட்டிருக்கின்றது. இப்படித்தான், மாலைதீவு, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளையும் சீனா ஆக்கிரமித்துக் கொண்டது. இலங்கையையும் அதே பாணியிலேயே சீனா அணுகியது. கடன் பொறியை உடைக்கும் சீனாவின் வல்லமை, இந்தியாவிடம் இல்லை என்பதுதான் பெரும் பிரச்சினை. இந்தியப் பொருளாதாரம் என்பது, சில தனி மனிதர்களின் சாம்ராஜ்யத்தை முன்னேற்றும் அடிப்படைகளைக் கொண்டது. பிராந்திய இராஜதந்திர அணுகுமுறையிலும் கூட, அப்படிப்பட்ட நடவடிக்கைகளையே இந்திய ஆட்சியாளர்கள் முன்னிறுத்துவார்கள். அண்மையில், கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனையம் இந்தியாவின் அதானி குழுமத்திடம் வழங்கப்பட்டதும் அப்படித்தான். ஆனால், சீனா எந்தவொரு நாட்டில் முதலிட்டாலும், கடன் வழங்கினாலும் அதன் உரித்தினை சீன அரசே கொண்டிருக்கும். சீன நிறுவனங்களும் வங்கிகளும் அரசின் முழுமையான கட்டுப்பாட்டிலேயே இருக்கும். அங்கு தனி நபர்களை இராஜதந்திர கட்டமைப்புக்குள் உள்வாங்கும் அல்லது வளர்த்துவிடும் நோக்கம் இருப்பதில்லை. அதனால், சீனாவின் முதலிடுகளும் அதன் பின்னரான பிரதிபலன்களும் அரசினுடையதாகவே இருக்கும். அப்படிப்பட்ட நிலையில், சீனாவுடனான ஒப்பந்தங்களை மீறுவதோ அல்லது முறித்துக் கொள்வதோ இன்னொரு நாட்டுக்கு பெரும் சிக்கலானது. இலங்கையில் சீனா முதலீடுகளும் கடன்களும் வேறு வேறு நிறுவனங்கள், வங்கிகளின் பெயர்களில் வழங்கப்பட்டாலும், அவை அனைத்தும் சீன அரசின் நேரடி நிறுவனங்களே. இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளில் அனைத்து நாடுகளையும் சீனா கையாளத் தொடங்கிவிட்ட பின்னர், இலங்கையின் வடக்கு - கிழக்கை தன்னுடைய கரிசனையோடு பேண, இலங்கையின் ஆட்சியாளர்கள் முன்வருகிறார்கள் என்றால், இந்தியா அவர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும். குறிப்பாக, அவர்களின் எந்த இழுப்புக்கும் இணங்கும். இதனால், பாதிக்கப்படப் போவது என்னவோ தமிழ் மக்களே. இந்தியாவோடு உறவினைப் பேணுவது சார்ந்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆர்வத்தோடு இருந்து வந்திருக்கின்றது. ஆனால், அந்த உறவு தென் இலங்கையில் தங்கள் மீதான நல்லெண்ணத்தை இல்லாமல் செய்துவிடாது இருக்க வேண்டும் என்று கருதி, இரா.சம்பந்தனும் எம்.ஏ.சுமந்திரனும் ஒரு வகையிலான சமநிலையைப் பேணவே விரும்பினார்கள். கூட்டமைப்பின் ஏனைய முக்கியஸ்தர்கள் இந்தியாவுடனான வரையறையற்ற நெருக்கத்தை வெளிப்படுத்த விரும்பினாலும் சம்பந்தன், சுமந்திரனின் நிலைப்பாடுகளால் அது பெரியளவில் சாத்தியமாகியிருக்கவில்லை. உத்தரவாதங்கள், உறுதிப்பாடுகளற்ற எந்தவோர் இராஜதந்திர நகர்வும், தெளிவான செயற்பாடுகள் அல்ல என்கிற அடிப்படையில், சம்பந்தனின் அணுகுமுறை சரியானதுதான். ஆனால், இந்தியாவுக்கு சீனாவினால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்கு முன்னால், தமிழ் மக்களின் அரசியல் நலன்கள் சார்ந்து இந்தியா முடிவுகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கவே முடியாது. அதனால்தான், கூட்டமைப்பைத் தாண்டி ராஜபக்‌ஷர்களுடனான நெருக்கத்தை இந்தியா பேண முயலும். இதனால், ‘அணிலை மரத்தில் ஏறவிட்ட நாயின் நிலை’க்கு தமிழ் மக்களின் நிலை வந்திருக்கின்றது. தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகளை தங்களது நலன்களுக்கான கருவியாகவே இந்தியாவும் மேற்கு நாடுகளும் இவ்வளவு காலமும் கையாண்டு வந்திருக்கின்றன. அவ்வாறானதொரு தருணமே மீண்டும் ஏற்பட்டிருக்கின்றது. தமிழ் மக்களைக் காட்டி ராஜபக்‌ஷர்களை கையாள முயற்சித்த இந்தியா, இன்றைக்கு அவர்கள் இணக்கமான நிலை எடுத்ததும் தமிழ் மக்களை சில காலத்துக்கு தள்ளிவைக்கும் நிலையையே வெளிப்படுத்தும். இந்திய வெளியுறவுச் செயலாளர் அண்மைய வருகையின் போது, கூட்டமைப்பினை புதுடெல்லிக்கு அழைத்திருக்கின்றார். கூட்டமைப்பினை புதுடெல்லிக்கு ஏற்கெனவே அழைத்து ஒன்றரை வருடங்களாகிவிட்டது. ஆனால், புதுடெல்லில் இருந்து அதற்கான நேரம் ஒதுக்கப்படவே இல்லை. கூட்டமைப்பினை ஒரு கட்டம் வரையில், கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரை வைத்தே கையாண்டு கொள்ளலாம் என்பது இந்தியாவின் நிலைப்பாடு. ராஜபக்‌ஷர்கள் இந்தியாவோடு முறுக்கிக் கொண்டிருந்த தருணத்திலேயே நிலைமை அப்படியிருந்தது. அப்படியான நிலையில், தற்போது இந்தியாவோடு நெருங்கிக் குழைய ராஜபக்‌ஷர்கள் தயாராக இருக்கும் போது, கூட்டமைப்பின் மீதான அணுகுமுறை என்பது இன்னும் கரிசனையற்ற ஒன்றாகவே இருக்கும். கூட்டமைப்பைத் தாண்டிய தமிழ்த் தரப்புகளை, இந்தியா உதிரிகளாகவே கருதுகின்றது. அதனால், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் சார்ந்து இராஜதந்திர நகர்வுகள் என்றால் அது கூட்டமைப்பின் கைகளிலேயே இன்னமும் இருக்கின்றது. அதனால், தக்க தருணத்தில் சரியான முடிவுகளை எடுக்காது விடுத்து, வேண்டப்படாத தரப்பாக கூட்டமைப்பு தன்னை மாற்றிக் கொள்ளக் கூடாது. அது, அவர்களை மாத்திரமல்ல, ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் பாதிக்கும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/புதுடெல்லியுடன்-நெருக்கும்-ராஜபக்-ஷர்கள்-கூட்டமைப்பின்-நிலை-என்ன/91-282481
 3. தமிழ்க் கட்சிகளும் ஒற்றுமைக்கான அழைப்பும் புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசிய கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியொன்றை முன்னெடுத்துள்ளதாக திருமலை ஆயர், தென் கயிலை ஆதீனம் ஆகியோரின் தலைமையிலான குழுவொன்று, கடந்த வாரம் அறிவித்தது. பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, அரசியல் கட்சிசாரா பிரபல சட்டத்தரணிகள் அடங்கிய குழுவொன்றை நியமிக்க உள்ளதாகவும் அந்தக்குழு குறிப்பிட்டிருந்தது. ஆனால், அந்த அறிவிப்பு, ஊடகங்களில் ஒருநாள் செய்தியாக மட்டுமே இடம்பெற்றிருந்தது. அதற்கு மேல் அந்த அறிவிப்புக்கான முக்கியத்துவத்தை, அரசியல் கட்சிகளோ ஊடகங்களோகூட வழங்கியிருக்கவில்லை. தமிழ்த் தேசிய கட்சிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் ஒற்றுமையையும், அதன் ஊடாக ஒருங்கிணைவையும் ஏற்படுத்தும் நோக்கத்துடன், உளப்பூர்வமாக யார் ஈடுபட்டாலும் அது வரவேற்கக் கூடியது. ஆனால், தமிழ் அரசியல் பரப்பில் ‘ஒற்றுமை’, ‘ஓரணி’, ‘ஒருங்கிணைவு’ என்கிற சொற்களுக்கான அர்த்தம், அரசியல்வாதிகளாலும் சில சிவில் அமைப்புகளாலும் அரசியல் ஆய்வாளர்களாலும் மலினப்படுத்தப்பட்டுவிட்டன. தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தளவில் கட்சிகள், தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு இடையிலான ஒருங்கிணைவும் அதனூடான தொடர் ஊடாட்டமும் அவசியமான ஒன்று. தமிழ்த் தேசிய அரசியலில் தனியாவர்த்தனம் என்பது, கட்சிகளுக்கு மாத்திரமல்ல, தமிழ் மக்களுக்கும் நன்மை பயக்காது. வேண்டுமென்றால், ஒருசில நபர்களுக்கு தனிப்பட்ட இலாபங்களை வழங்கலாம். அப்படியான நிலையில், தமிழ்த் தேசிய கட்சிகள், தலைவர்களுக்கு இடையிலான ஒற்றுமைக்கான அழைப்பு என்பது, கவனிக்கப்பட வேண்டியது. ஆனால், அவ்வாறான நிலையொன்று திட்டமிட்ட ரீதியாக, இன்று இல்லாமல் செய்யப்பட்டு இருக்கின்றது என்பதுதான் பெரும் வேதனையானது. தமிழ்த் தேசிய அரசியலில் தனியாவர்த்தனம் செய்து கொண்டிருந்த கட்சிகள், பெரும்பான்மையினக் கட்சிகளிடம் தோற்றுப்போக ஆரம்பித்த தருணங்களில் எல்லாம், ஒற்றுமையாக ஓரணியில் இணைந்திருக்கின்றன. அதன்மூலம், தமிழ்த் தேசிய அரசியலை உறுதிப்படுத்தி இருக்கின்றன. தமிழர் விடுதலைக் கூட்டணியாக தமிழரசுக் கட்சியும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸும் அப்படித்தான் ஆரம்பத்தில் இணைந்தன. அதுபோல, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கமும் தமிழ்த் தேசியத்தைப் பேசும் கட்சிகளை பாராளுமன்றத்துக்குள் பலப்படுத்தும் நோக்கிலேயே நிகழ்ந்தது. தமிழ்த் தேசிய அரசியலில் நிகழ்ந்தப்பட்ட இருபெரும் ஒருங்கிணைவுகள் என்றால், தமிழர் விடுதலைக் கூட்டணியினதும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினதும் உருவாக்கம்தான். தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் ஓர் அங்கமாக மாறிய தமிழர் விடுதலைக் கூட்டணி, வீ. ஆனந்தசங்கரியின் நிலைப்பாடுகளின் நிமித்தம் அதிலிருந்து வெளியேற, கூட்டணிக்குப் பதிலாக தமிழரசுக் கட்சியை தூசு தட்டிக் கொண்டுவந்து கூட்டமைப்புக்குள் இணைத்தார்கள். இன்றைக்கு தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய பரப்பில் முதன்மைக் கட்சியாகத் தாக்கம் செலுத்துவதற்கும், அதன் கட்சிக் கட்டமைப்பை அடிமட்டத்திலிருந்து பேணுவதற்கும் கூட்டமைப்பின் உருவாக்கம் பாரிய பங்களிப்பைச் செய்தது. அதுபோல, கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சியின் ஆதிக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மாறிய போது, கூட்டமைப்புக்குள் இருந்து பல தரப்புகளும் காலத்துக்கு காலம் பிரிந்து சென்றன. இன்றைக்கு, கூட்டமைப்புக்கு வெளியிலுள்ள தமிழ்த் தேசிய கட்சிகள், அந்தக் கட்சிகளின் மூலம் பாராளுமன்றம் சென்றவர்கள் எல்லோரும் கூட்டமைப்பில் இருந்தவர்கள்தான். கூட்டமைப்புக்குள் இருந்து, தமிழரசுக் கட்சித் தலைவர்களின் நிலைப்பாடுகளில் அதிருப்தியுற்று வெளியேறிய தரப்புகளை எல்லாம் ஒருங்கிணைத்து, பலமான மாற்று அணியொன்றை அமைக்கும் முயற்சிகள், 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னரான நாள்களிலேயே ஆரம்பித்துவிட்டன. தமிழ் சிவில் சமூக அமையமும் அதன் இணக்க சக்திகளும் கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணியை அமைப்பதில் குறிப்பிட்டளவு வெற்றியை, தமிழ் மக்கள் பேரவை ஆரம்பித்ததன் மூலம் எட்டின. ஆனால், பேரவையோ, மாற்று அணியை அமைப்பதற்குப் பதிலாக, சி.வி.விக்னேஸ்வரனுக்கான அரசியல் எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பதில் அக்கறை காட்டியதால், பேரவையில் புதிய நம்பிக்கையோடு ஆரம்பத்தில் இணைந்த கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஒரு கட்டத்தில் விலகி விட்டது. பின்னரான நாள்களில், விக்னேஸ்வரன் தலைமையில் சுரேஷ் பிரேமசந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எப் இன்னும் சில உதிரிக் கட்சிகளும் இணைந்து, ஒரு கூட்டணியை அமைத்தன. அந்த அணி, யாழ்ப்பாணத்தில் ஒரு பாராளுமன்ற ஆசனத்தை வெற்றி கொண்டது. தமிழ்த் தேசிய அரசியலுக்குள் புது இரத்தம் பாய்ச்சி, நம்பிக்கையை விதைக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டு வந்த பேரவை, ‘எழுக தமிழ்’ என்கிற எழுச்சிப் பேரணிகளை வடக்கு - கிழக்கில் பெருமெடுப்போடு நடத்தியும் காட்டியது. ‘எழுக தமிழ்’ பேரணிகளில் கட்சி ஆதரவு, எதிர்ப்பு நிலைப்பாடுகளைத் தாண்டி, தமிழ் மக்கள் பங்கெடுத்தார்கள். ஆனால், பேரவையும் அதன் முக்கியஸ்தர்களும் ஒரு சில தனிநபர்களின் அரசியல் எதிர்காலத்துக்காக இயங்கி, தமிழ் மக்களின் நம்பிக்கையைச் சிதைத்தன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவாக்கத்துக்குப் பிறகு, தமிழ் மக்கள் பேரவையிலேயே தமிழ்த் தேசிய கட்சிகள் பலவும் ஓரணியில் இணைந்தன. ஆனால், அவ்வாறான அரிய வாய்ப்பை, சில மாதங்களுக்குள்ளேயே பேரவை வீணடித்தது. இன்றைக்கு யாழ்ப்பாணத்திலிருந்து மூன்று தமிழ்த் தேசிய கட்சிகள், பாராளுமன்ற அங்கத்துவத்தைப் பெற்றிருக்கின்றன. ஆனால், பெரும்பான்மையினக் கட்சியான சுதந்திரக் கட்சி, சில தசாப்தங்களுக்குப் பின்னர் ஆசனமொன்றை வெல்வதற்கும் அது குறிப்பிட்டளவு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. கூட்டமைப்புக்கு மாற்றான அணியொன்றை, பேரவையில் உருவாக்கும் நோக்கமாவது, உருப்படியாக முன்னெடுக்கப்பட்டிந்தால், தமிழ்த் தேசிய வாக்குகள் கூட்டமைப்பு, மாற்று அணி என்கிற இரண்டு அணிகளுக்கு இடையில் மாத்திரமே பகிரப்பட்டிருக்கும்; தமிழ்த் தேசிய வாக்குகளின் திரட்சி, குறிப்பிட்டளவு காக்கப்பட்டிக்கும். ஆனால், அவ்வாறான நிலை ஏற்படவில்லை. கூட்டமைப்பு, முன்னணி, விக்னேஸ்வரன் அணி என்று, மூன்று அணிகளாகப் பிரிந்து நின்றபோது, பெரும்பான்மையினக் கட்சிகளுக்கும், அதன் இணைக் கட்சிகளுக்கும், அது சாதகமாக அமைந்துவிட்டது. பேரவையினது உருவாக்கம், எதைச் சாதித்தது என்றால், இவ்வாறான நிலையை ஏற்படுத்தியதைச் சொல்லலாம். அதுதவிர்ந்து, ஒற்றுமை, ஓரணி போன்ற கோரிக்கைகளை மலினப்படுத்தியதைச் சொல்ல முடியும். மக்களுக்கான நோக்கம் என்பது, தனிநபர்கள் சார்ந்து உருவாக்கப்பட முடியாது. விக்னேஸ்வரனைத் தனி ஆளுமையாக முன்னிறுத்திக் கொண்டு பேரவை செயற்பட்டதும், அதனால் ஏற்பட்ட விளைவுகளும்தான் இதுவாகும். தமிழ் சிவில் சமூக அமையத்தின் அங்கத்தவர்கள், அதன் ஆலோசகர்கள் உள்ளிட்ட தரப்பினர்தான், பேரவையின் உருவாக்கத்தில் இருந்தார்கள். கிட்டத்தட்ட தமிழ் சிவில் சமூக அமையத்தின் பெயர் மாற்றப்பட்ட அமைப்பாகவே பேரவை செயற்பட்டு மறைந்தது. மக்கள் திரட்சிக்கான நம்பிக்கைகள் எல்லாவற்றையும் சிதைத்துவிட்டு ஒதுங்கிவிட்டார்கள். கடந்த பொதுத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரும், தமிழ்க் கட்சிகளுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சிகளை மாவை சேனாதிராஜா உள்ளிட்ட தமிழரசுக் கட்சியின் (பாராளுமன்ற பதவிகளை இழந்த) தலைவர்களும் பிறிதொரு தருணத்தில் டெலோவும் முன்னெடுத்தன. மாவை அணி முன்னெடுத்த ஒற்றுமைக்கான அழைப்பை நிராகரித்த டெலோ, சில நாள்களின் பின்னர், தானே அப்படியான அழைப்பொன்றை விடுத்தது. இந்த இரண்டு அழைப்புகளுக்குள்ளும் தனிப்பட்டவர்களின் பதவி ஆசை, தங்களை முன்னிறுத்தும் நோக்கங்கள் ஆகியவையே முனைப்புப் பெற்று இருந்தன. அதனால், அவ்வாறான முயற்சிகள் ஆரம்பத்திலேயே பிசுபிசுத்துப் போய்விட்டன. இவ்வாறான நிலையில்தான், திருமலை ஆயர் மற்றும் தென் கயிலை ஆதீனம் ஆகியோர் தலைமையிலான குழுவின், ஒற்றுமைக்கான அழைப்பும் மதிக்கப்படாமல் போயிருக்கின்றது. தமிழ்த் தேசிய அரசியல், தேர்தல் அரசியலுக்குள் சுருங்கிய பின்னர், பதவி, பகட்டு போன்றவற்றுக்காக அலையும் கும்பல், தமிழ்த் தேசிய அரசியலை ஆக்கிரமித்துவிட்டது. அதனால்தான், அர்த்தமுள்ள ஒற்றுமையும் ஒருங்கிணைவும் கானல் நீராகிவிட்டன. அந்த நிலையை மாற்றுவது அவ்வளவு இலகுவான ஒன்றல்ல. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்க்-கட்சிகளும்-ஒற்றுமைக்கான-அழைப்பும்/91-282227
 4. ஐக்கிய நாடுகள் சபையில் கோட்டாவின் அறிவிப்புகளும் அபத்தங்களும் புருஜோத்தமன் தங்கமயில் உள்ளகப் பொறிமுறை ஊடாகப் பாதிக்கப்பட்ட (தமிழ்) மக்களுக்கு நீதி வழங்க முடியும் என்று, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பிரஸ்தாபித்திருக்கிறார். அத்தோடு, இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்காக, புலம்பெயர் (தமிழர்கள்) தரப்புகள் முன்வர வேண்டும் என்றும் கோரியிருக்கின்றார். ராஜபக்‌ஷர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து நி‌ற்கின்ற நிலையில், கோட்டாவின் இந்த அறிவிப்புகள் கவனம் பெறுகின்றன. தென் இலங்கையில் பேரினவாதத்தின் காவல் முகங்களாக, ராஜபக்‌ஷர்கள் பார்க்கப்படுகிறார்கள். அவர்களின் ஆட்சி அதிகாரத்துக்கான எழுச்சி, தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறை, போர் வெற்றிவாதக் கோசங்களில் தங்கியிருப்பது. ராஜபக்‌ஷர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றிக்கான முதலீடாக, அதை இனவாதத் தீயாக வளர்த்துக் கொள்வார்கள். கடந்த ஜனாதிபதி, பொதுத் தேர்தல் ஆகியவற்றிலும் அந்தத் தீயிலேயே வெற்றியைச் சமைத்தார்கள். ஆனால், அந்த வெற்றி சில மாதங்களுக்குள்ளேயே காணாமல் போகும் அளவுக்கு நிலைமை மாறியது. இன்றைக்கு நாட்டு மக்கள், ராஜபக்‌ஷர்களின் மீது பெரும் அதிருப்தியோடு இருக்கிறார்கள். நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதாளத்துக்குள் தள்ளிவிட்டார்கள் என்கிற கோபம் பெருந்தீயாக எரிகின்றது. சீனாவை மட்டும் நம்பிக்கொண்டு ஒட்டுமொத்த சர்வதேச நாடுகளையும் வேண்டா வெறுப்பாகக் கையாண்டு, நாட்டின் இராஜதந்திர நகர்வுகளை மாத்திரமல்லாமல் பொருளாதாரத்தையும் ராஜபக்‌ஷர்கள் சிதைத்ததுதான் அந்தக் கோபத்துக்கான காரணமாகும். சீனா என்கிற பெயரைக் கேட்டதும் ஒரு காலம் வரையில், தென் இலங்கை மக்களிடம் பெரும் வரவேற்புக் காணப்பட்டது. அது, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் மீதான அதிருப்தியால் எழுந்தது. ஆனால், இன்றைக்கு மேற்கு நாடுகளையும் விட, சீனா மீதான அதிருப்தி மக்களிடம் எழுந்திருக்கின்றது. அது, நாட்டைத் திட்டமிட்டு பெரும் கடனாளியாக்கிவிட்டமை மீதான கோபம். இன்றைக்கு சீனாவும் தன்னுடைய கடன் வழங்கும் மூலங்களை மட்டுப்படுத்திவிட்டு, ராஜபக்‌ஷர்களை நோக்கி, கடன்களுக்கான வட்டிகளைக் கோருகின்றது. அந்த வட்டிகளுக்காக, நாட்டின் பிரதான பகுதிகளையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான நிலையை, காலம் கடந்து உணர்ந்திருக்கின்ற ராஜபக்‌ஷர்கள், மேற்கு நாடுகளை நோக்கி, புதிதாக நேசக்கரம் நீட்ட எத்தனிக்கிறார்கள். அதனைத்தான், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வுகளில் கலந்து கொள்ளச் சென்ற கோட்டாவின் அறிவிப்புகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. புலம்பெயர் அமைப்புகள், தனிநபர்கள் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட தரப்புகள் மீதான தடையை, கடந்த மார்ச் மாதம் இலங்கை அரசு வர்த்தமானியில் அறிவித்தது. இந்தத் தரப்புகளில் பெரும்பாலான அமைப்புகள், தனிநபர்கள் மீதான தடை, கடந்த நல்லாட்சிக் காலத்தில் நீக்கப்பட்டிருந்தது. ஆனால், ராஜபக்‌ஷர்கள், தங்களின் ஆட்சி அதிகார வரலாறு, தமிழர் விரோத நிலைப்பாடுகளால் நிலைத்திருப்பது என்பதை அறிவிப்பதற்காகவே, புலம்பெயர் அமைப்புகள், தனிநபர்கள் மீதான தடையை மீண்டும் அமல்படுத்தினார்கள். எனினும், இன்றைக்கு புலம்பெயர் தரப்புகளை முதலீடு செய்வதற்கு, கோட்டா அழைக்கும் நிலை வந்திருக்கின்றது. அதற்குப் பொருளாதாரம் நலிவடைந்து, நாடு திவாலாகும் நிலையை அடைந்திருப்பதே ஒரே காரணமாகும். ஆயுத மோதல்கள், முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்த போது, வடக்கு - கிழக்கில் மட்டுமல்லாது, நாடு முழுவதுமாக முதலீடுகளை மேற்கொள்வதற்கான முன்வைப்புகளோடு புலம்பெயர் தமிழர் தரப்புகள் முன்வந்தன. ராஜபக்‌ஷர்களின் முதல் ஆட்சிக் காலத்தில், அதற்காகப் பல தடவைகள் பேச்சுகளும் நடத்தப்பட்டன. ஆனாலும், சீனா வழங்கும் கடன்களால் செழிக்க முடியும் என்கிற நம்பிக்கையும் தமிழர் விரோதப் போக்கும், புலம்பெயர் தரப்புகளை ராஜபக்‌ஷர்கள் விரட்டியடிப்பதற்கு காரணமாயின. குறிப்பாக, வடக்கு மாகாண சபைத் தேர்தல்களில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெற்றிபெற்று ஆட்சி அமைத்ததும், முதலமைச்சர் நிதியமொன்றை ஆரம்பித்து, அதனூடாகப் புலம்பெயர் தரப்புகளினூடாக முதலீடுகளை உள்வாங்க முயற்சிக்கப்பட்ட போதும், அதனை ராஜபக்‌ஷர்கள் நிராகரித்தார்கள். அவர்களைத் தொடர்ந்து வந்த நல்லாட்சி அரசாங்கமும் அதனை நிராகரித்தது. முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னராக நாள்களில், குறிப்பாக வடக்கு மாகாண சபை தேர்தலுக்குப் பின்னரான காலத்தில், புலம்பெயர் தரப்புகளை நாட்டில் முதலிடுவதற்கு அனுமதித்திருந்தால், நாட்டின் பொருளாதாரத்தில் கணிசமான முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் இருந்திருக்கும். குறிப்பாக, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் இலட்சக்கணக்கில் உருவாக்கப்பட்டிருக்கும். கடந்த மார்ச் மாதம், புலம்பெயர் தரப்புகள் மீதான தடையை அறிவித்துவிட்டு, ஆறு மாதங்களிலேயே புலம்பெயர் தரப்புகளை முதலீடுகளை செய்ய அழைப்பது என்பது, ‘ராஜபக்‌ஷர்கள் என்னத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்கிற நிலைக்கு வந்திருப்பதைக் காட்டுகின்றது. முள்ளிவாய்க்கால் இறுதி மோதல் நாள்களில், தங்களது உறவுகளை இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினரிடம் நேரடியாகக் கையளித்த ஆயிரக்கணக்கானவர்கள், இன்னமும் உயிரோடு இருக்கிறார்கள். தாங்கள் உயிரோடு கையளித்தவர்களின் நிலை என்ன, அவர்கள் மீண்டும் வீடு திருப்புவார்களா என்பதை அறிவதற்காக, கடந்த 12 வருடங்களாக அவர்கள் பல தரப்புகளின் கதவுகளையும் தட்டிவிட்டார்கள். இலங்கை அரசின் கதவுகள் எப்போதோ மூடப்பட்ட போதிலும், தங்களது உறவுகள் உயிரோடு திரும்பிவிடுவார்கள் என்கிற நம்பிக்கை, அந்த மக்களிடம் கதவுகளை ஓங்கித் தட்டுவதற்கான ஓர்மத்தை வழங்குகின்றது. ஆனால், அந்த மக்களின் உறவுகளை உயிரோடு கையேற்ற இலங்கை அரச கட்டமைப்போ, மரணச் சான்றிதழ்களை வழங்குவதற்கு ஆர்வமாக இருக்கின்றது. ஒருவர் மரணமடைந்துவிட்டார் என்றால், அந்த மரணம் எவ்வாறு நிகழ்ந்தது, எப்போது நிகழ்ந்தது என்பதை அறிவித்து வழங்கப்படும் ஆவணமே, மரணச் சான்றிதழாகும். விடயம் அப்படியிருக்க, உயிரோடு கையளிக்கப்பட்டவர்கள் எவ்வாறு மரணித்தார்கள்; மரணத்தின் சூத்திரதாரிகள் யார் என்பதை அறிவிக்காமல், எவ்வாறு மரணச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடியும்? வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்ந்து, இலங்கையின் ஆட்சியிலிருந்த அனைத்து அரசாங்கங்களும் மரணச்சான்றிதழை வழங்கி, விடயத்தை முடிக்கவே முயற்சிக்கின்றன. மாறாக, அது தொடர்பில் எழுப்பப்படும் நியாயமான எந்தக் கேள்வியையும் எதிர்கொள்வதற்குத் தயாராக இருப்பதில்லை. இப்போது, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்குவது தொடர்பில், கோட்டா அறிவித்திருப்பதும் அவ்வாறானதோர் அறிவித்தலே! அதிலும் முக்கியமாக, முள்ளிவாய்க்கால் இறுதி நாள்களில் இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினருக்கு உத்தரவுகளை வழங்கும் அதிகாரியாகச் செயற்பட்டவர்களில் கோட்டா பிரதானமானவர். அப்போது, பாதுகாப்பு அமைச்சராக இருந்த மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு அடுத்து, அந்த அமைச்சின் செயலாளராக செயற்பட்ட கோட்டாவே பொறுப்புக்கூற வேண்டியவராகிறார். ஆனால், அவரோ தனக்கும் முள்ளிவாய்க்காலில் வைத்து பாதுகாப்புத் தரப்பினரிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாதது மாதிரியாகப் பேசிக் கொண்டிருக்கிறார். போர்க்குற்றத்துக்கான ஏதுகைகள் கொண்டிருக்கின்ற ஒரு விடயத்தை, மரணச் சான்றிதழ் ஊடாகக் கடந்துவிட முடியும் என்பது, எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படிப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மக்களிடம் உள்ளகப் பொறிமுறை ஊடாக நீதியை வழங்குவது தொடர்பில், கோட்டா பிரஸ்தாபித்திருப்பது அபத்தங்களின் நீட்சி. கொலைக் குற்றத்தைப் புரிந்த ஒருவனிடம், அந்தக் கொலை தொடர்பிலான விசாரணையைக் கையளிப்பதன் மூலம், நீதியான விசாரணை நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட்டுவிடும் என்கிற புதிய நிலைப்பாட்டைக் கட்டமைப்பதற்கு, ராஜபக்‌ஷர்களும் பேரினவாத சக்திகளும் தொடர்ச்சியாக முயற்சித்து வருகின்றன. அதாவது, மிருசுவில் படுகொலைக் குற்றவாளியான சுனில் ரட்ணாயக்கவுக்கும் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலை வழக்கின் குற்றவாளியான துமிந்த சில்வாவுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதும் ராஜபக்‌ஷர்களின் புதிய நீதியின் படியே! அவ்வாறான நீதியொன்றை வழங்குவதற்காகவே, உள்ளகப் பொறிமுறை ஊடாக, விடயங்களைக் கையாளலாம் என்று கோட்டா அறிவித்திருக்கின்றார். இந்த அறிவிப்புகளால் எல்லாம், தமிழ் மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றிவிடலாம் என்பதெல்லாம் ராஜபக்‌ஷர்களின் பகற்கனவு என்பதே யதார்த்தம் ஆகும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஐக்கிய-நாடுகள்-சபையில்-கோட்டாவின்-அறிவிப்புகளும்-அபத்தங்களும்/91-281489
 5. சிறிதரனின் ‘குறளி வித்தை’ புருஜோத்தமன் தங்கமயில் இன்றைய தமிழர் அரசியலில், தமிழரசுக் கட்சிக்குள் இருப்பவர்கள், ‘குறளி வித்தை’ காட்டும் அளவுக்கு, வேறு யாரும் காட்டுவதில்லை. கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தொடங்கி, அந்தக் கட்சியின் பெரும்பாலான தலைவர்களும், நாளொரு வண்ணமும் பொழுதொரு நடிப்புமாக, வித்தை காட்டிக் கொண்டிருப்பார்கள். கடந்த சில நாள்களாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், நடிகர் திலகமாகவே மாறி நின்று அரங்காற்றிக் கொண்டிருந்தார். சிறிதரன், அரசியலுக்கு வந்த கடந்த ஒரு தசாப்த காலத்தில், தன்னையொரு நல்ல நடிகரென்று பலமுறை நிரூபித்திருக்கிறார். ஆனால், கடந்த வாரம் அவர் வெளிப்படுத்திய நடிப்பு, நடிகர் திலகத்தை மீஞ்சும் அளவுக்கானது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர்களை, அதன் கனதி, நோக்கம் அறிந்து அணுகும் தரப்புகள் தமிழ்த் தேசிய பரப்பில் மிகவும் குறைவு. ஒவ்வொரு கூட்டத் தொடரின் போதும், தாயகத்திலிருந்தும் புலம்பெயர் தேசங்களிலிருந்தும் ஜெனீவாவை நோக்கி பலரும் படையெடுப்பார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள், மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளையோ, ஆளுமை செலுத்தும் மனித உரிமை அமைப்புகளையோ சந்தித்ததில்லை; தமிழ் மக்களின் நீதிக் கோரிக்கைகளுக்கான ஏற்பாடுகளுக்காக முயன்றதும் இல்லை. மாறாக, பக்க அறைகளில் நடைபெறும் அமர்வுகளில் பார்வையாளர்களாக இருந்து விட்டு, அங்குள்ள உணவகங்களில் சாப்பிட்டுவிட்டு வருவார்கள்; சில வேளை தமிழ் ஊடகங்களுக்கு பேட்டிகளை வழங்குவார்கள். அந்தப் பேட்டிகள், ஏற்கெனவே கேள்வி - பதில் தயாரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது மாதிரியிருக்கும். அவர்களின் அதியுச்ச பங்களிப்பு, அந்தப் பேட்டியாகத்தான் இருக்கும். அந்தப் பேட்டியின் பகுதிகளை, தாயகத்திலுள்ள ஊடகங்களும் செய்தியாக வெளியிடும். அதன் மூலம், ஜெனீவாவில் தாங்கள்தான் பெரும் முயற்சிகளை, இலங்கை அரசுக்கு எதிராக மேற்கொண்டது மாதிரியாகக் காட்டிக் கொள்ள முயல்வார்கள். அத்தோடு, ஜெனீவா பயணத்துக்காக சுவிஸ் வழங்கிய விசா அனுமதியை வைத்துக் கொண்டு, அங்குள்ள உறவுகள், நண்பர்களைப் பார்த்துவிட்டு வருவதுதான், பலரின் பிரதான நோக்கம். இவ்வாறானவர்களின் பயணத்துக்காக, புலம்பெயர் தரப்புகள் மில்லியன் பெறுமதியில் பணத்தைச் செலவிட்டிருக்கின்றன. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொவிட்-19 பெருந்தொற்று நெருக்கடிகளால் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் இணைய வெளியில் நடத்தப்படுவதால், ‘நாங்களும் ஜெனீவாவுக்கு செல்கிறோம்’ என்று கடந்த காலத்தில் படம் காட்டியவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரை முன்வைத்து, ஊடகங்களில் செய்தியாக முடியவில்லை. குறிப்பாக, மக்களின் மண்டையில் மசாலா அரைக்க முடியவில்லை. அதனால்தான், மனித உரிமைகள் பேரவைக்கு நாங்களும் கடிதங்களை அனுப்புகிறோம் என்கிற பெயரில், ‘குறளி வித்தை’ காட்டியிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் சார்பில், பிரதிநிதிகளாகத் தேர்தெடுக்கப்பட்டவர்களுக்கு, குறைந்த பட்சம் ஜெனீவா அமர்வுகளின் கால அட்டவணை, அதன் முக்கியத்துவமாவது தெரிந்திருக்க வேண்டும். இலங்கை விவகாரத்துக்கு எந்தெந்தக் கூட்டத் தொடரில் அதிக கரிசனை வெளிப்படுத்தப்படுகின்றது? இலங்கை மீதான தீர்மானங்களின் படிமுறை என்ன என்றாவது தெரிந்திருக்க வேண்டும். ஆனால், இங்குள்ள தமிழ்க் கட்சிகளுக்கும் அதிலுள்ள முக்கியஸ்தர்கள் பலருக்கும், அவ்வாறான எதுவுமே பெரும்பாலும் தெரிவதில்லை. குறிப்பாக, தெரிந்து கொள்ள முயல்வதில்லை. ஏனெனில், அவர்களின் நோக்கம், இங்குள்ள ஊடகங்களில் ஜெனீவா கூட்டத் தொடர்களை முன்வைத்து, தாங்கள் செய்தியாக வேண்டும் என்பது மட்டுந்தான். அவ்வாறானதொரு ‘குறளி வித்தை’யைத் தான், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளை முன்வைத்து, பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் முன்னெடுத்தனர். தமிழ்த் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் எனும் கடிதத் தலைப்பில், மனித உரிமைகள் ஆணையாளருக்கான கடிதமொன்றை தயாரித்திருக்கின்றனர். அந்தக் கடிதம் அனுப்பப்பட்டதாக, அந்தக் கடிதத்தில் கையெடுத்திட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கின்றது. ஆனால், அந்தக் கடிதம் தயாரிக்கப்பட்டது உண்மை. ஆனால் அனுப்பப்படவில்லை என்று சிறிதரன் மறுத்திருக்கின்றார். குறித்த கடிதத்தின் பிரதியொன்று, இணைய ஊடகமொன்றில் அண்மையில் வெளியானது. அதிலிருந்து கடிதம் தயாரிக்கப்பட்ட விதம், நோக்கம் என்பன சிரிப்புக்குள்ளாகியுள்ளன. சிறிதரனும் அவரது பரிவாரமும், இவ்வளவுக்கு ‘நக்கல்’ செய்யப்பட்டது இல்லை எனும் அளவுக்கு, நையப்புடைப்புகளைச் சந்தித்து வருகின்றனர். கடிதமொன்று என்ன நோக்கத்துக்காக எழுதப்படுகின்றது என்பதை வைத்து, அந்தக் கடிதம் எப்படி எழுத வேண்டும் என்ற வரையறை இருக்கின்றது. உறவுகளுக்கு எழுதப்படும் கடிதம் கொண்டிருக்கும் அம்சங்களை ஒத்த விதத்தில் உத்தியோகபூர்வமாக எழுதப்படும் கடிதங்கள் கொண்டிருக்க முடியாது. அதனால்தான், பாடசாலை மாணவப் பருவத்தில், கடிதம் எழுதுதல் என்பது ஒரு பிரதான பாடவிதானமாக அநேக நாடுகளில் பேணப்படுகின்றது. அதனை, நீண்ட காலமாக ஆசிரியராகவும் அதிபராகவும் இருந்த சிறிதரன் அறிந்திருக்கவில்லையா என்கிற கேள்வி, அவர் தயாரித்த கடிதத்தைப் பார்க்கும் போது எழுகின்றது. அத்தோடு, அந்தக் கடிதம் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட தயாரிக்கப்பட்டதாக காட்டப்பட்டாலும், அது இங்குள்ள ஊடகங்களில் கவனத்தைப் பெறுவதற்காக எழுதப்பட்டதை காண முடியும். ‘தமிழ்த் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் - இலங்கை’ எனும் அர்த்தத்தில் கடிதத்துக்கான தலைப்பையிட சிறிதரன் முயற்சித்திருக்கிறார். ஆனால், அவரது அவசரமோ அல்லது மொழிப் பிரச்சினையோ, ‘தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் - இலங்கை’ என்றவாறாக கடிதத்தலைப்பு அமைந்திருக்கின்றது. ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு, ‘பாராளுமன்ற உறுப்பினர்’ என்று எழுதுவதில் என்ன பிரச்சினையென்று தெரியவில்லை. அவர் ஏன், ‘பராளுமன்ற உறுப்பினர்கள்’ என்று எழுதினார் என்பது கேள்வி. அத்தோடு, அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்ட சாள்ஸ் நிர்மலநாதன், கலையரசன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும், ஏனைய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆறு பேரும்கூட கடிதத்தின் தலைப்பை கவனிக்காமலா கையெழுத்திட்டிருக்கிறார்கள்? கடிதத்தில் தலைப்பையே சரியாக எழுத முடியாதவர்கள், எப்படி கடிதத்தின் உள்ளடக்கத்தில் என்ன இருக்கின்றது என்பதை வாசித்து அறிந்திருப்பார்கள்? இவர்களின் உண்மையாக நோக்கம் என்பது, எவ்வளவு அபத்தமானது. புலம்பெயர் தேசங்களில் ஐக்கிய நாடுகளுக்கு கடிதம் எழுதுகிறோம் என்று முன் தயாரிக்கப்பட்ட வரைவுகளுடன் பலரும் இருக்கிறார்கள். அவர்களுக்கு தங்களின் ஏவலாளர்களாக இங்கு சிலர் தேவைப்படுகிறார்கள். அப்படியானவர்களின் ஒருதரப்பாக சிறிதரன் தரப்பு செயற்பட முனைந்திருக்கின்றது. சிறிதரன் தயாரித்த கடிதத்தின் உள்ளடக்கம் தொடர்பில், தமிழரசுக் கட்சியின் இன்னொரு பாராளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியன், தொலைக்காட்சி பேட்டியொன்றில் நையாண்டி செய்திருந்தார். அதாவது, அந்தக் கடிதத்தை பத்தாம் தரத்தில் பயிலும் மாணவன் எழுதும் கடிதத்தோடு ஒப்பிட்டிருந்தார். எந்தவொரு தருணத்திலும் பொறுப்புள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும், இவ்வாறு சிறுபிள்ளைத்தனங்களைப் புரிய மாட்டார்கள் என்றும் சொன்னார். இவற்றையெல்லாம்விட சிறிதரன், குறித்த கடிதம் தொடர்பில் இரண்டு, மூன்று நாள்களாக ஊடகங்களிடம் தொடர்ச்சியாகப் பொய்களையே கூறி வந்தார். தமிழரசுக் கட்சிக்குள் தலைமைக்கு தெரியாமல், ஒரு குழு, மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதம் எழுதியிருக்கின்றது என்ற விவரம் ஊடகங்களில் வெளியானதும், அப்படியொரு கடிதத்தில் கையெழுத்திடவில்லை என்று பாய்ந்தடித்துக் கொண்டு சிறிதரன் அறிவித்தார். அத்தோடு, கடிதத்தில் இருந்த இலத்திரணியல் கையொப்பங்கள் திருடப்பட்டு இருக்கலாம் என்ற கருத்து பலராலும் பகிரப்பட்டது. பின்னர், தமிழரசுக் கட்சியின் தலைவரும் பேச்சாளரும் நடத்திய ஊடக சந்திப்பில், குறித்த கடிதத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் திருடப்பட்டு இடப்பட்டிருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்கள். அதன் பின்னர்தான், இனியும் பொய் புரட்டு நாடகம் ஆடினால் மோசமாக மாட்டிக் கொள்ள வேண்டி வரும் என்று தெரிந்து சிறிதரன், அந்தக் கடிதம் தன்னுடைய ஏற்பாட்டில் தயாரிக்கப்பட்ட விவரத்தை வெளிப்படுத்தினார். அப்போது, சிங்கக் கொடியை ஏந்திய சம்பந்தன், பின்னர் தான் சிங்கக் கொடியை ஏந்தவில்லை, காளியின் கொடியையே ஏந்தியதாகபட பொய் சொன்ன போது தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல, தன்னுடைய பொய் பித்தலாட்டங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற தோரணையில் பேசிக் கொண்டிருந்தார். தமிழ் மக்களின் நீதிக் கோரிக்கை, அரசியல் உரிமைப் பிரச்சினைகளை மறந்துவிட்டு பதவி, பகட்டுக்காக பொய்களாலும் புரட்டுக்களாலும் அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் பெரும் வியாதிகளே. தமிழ்த் தேசிய பரப்பில் அரசியல் தலைவர்களைக் காட்டிலும் ‘அரசியல் வியாதி’களே கோலொச்சிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் மிகப்பெரும் சோகம். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சிறிதரனின்-குறளி-வித்தை/91-281056
 6. இனியும் சம்பந்தன் கூட்டமைப்பின் தலைவரா? புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தொடர்ந்தும் ‘கூட்டமைப்பின் தலைவர்’ என்கிற தகுதியோடு இருக்கிறாரா? என்கிற கேள்வி எழுந்திருக்கின்றது. கூட்டமைப்பில் தற்போது அங்கம் வகிக்கும் மூன்று பங்காளிக் கட்சிகளில், தமிழரசுக் கட்சி தவிர்ந்த தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (டெலோ), தமிழ் ஈழ விடுதலைக் கழகம் (புளொட்) ஆகியவை, சம்பந்தனை நிராகரித்துக் கொண்டு, சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணி ஒன்றுக்கான பூர்வாங்க வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 47ஆவது கூட்டத் தொடரை முன்வைத்து, கூட்டமைப்பு என்ற அடையாளத்தைத் தவிர்த்துக் கொண்டு, டெலோவும் புளொட்டும் இன்னும் சில கட்சிகளும் இணைந்து அனுப்பியுள்ள கடிதத்தின் மூலம், அது அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடரை, தமிழ்த் தேசிய கட்சிகளும் தரப்புகளும், தமிழ் மக்களுக்கான நீதிக் கோரிக்கைகளை அடைவதற்கான வாய்ப்புகளாகப் பயன்படுத்துவதைக் காட்டிலும், தங்களது தனிப்பட்டதும் கட்சி சார் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகவே பயன்படுத்தி வந்திருக்கின்றன. இம்முறையும் அவ்வாறான காட்சிகளே அரங்கேறுகின்றன. தமிழ்த் தேசிய கட்சிகளிடம் இருந்து, இம்முறை மூன்று கடிதங்கள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. கூட்டமைப்பின் தலைவர் எனும் அடையாளத்தோடு சம்பந்தனால் ஒரு கடிதமும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் இன்னொரு கடிதமும் டெலோவின் அழைப்பின் பேரில் புளொட், விக்னேஸ்வரன் உள்ளிட்ட கூட்டினால் மற்றொரு கடிதமும் அனுப்பப்பட்டிருக்கின்றன. இலங்கை தொடர்பில், இந்தக் கூட்டத்தொடரில் வாய்மூல அறிக்கையே சமர்ப்பிக்கப்படவுள்ள சூழலில், அது தொடர்பிலான அறிக்கையை, மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் ஏற்கெனவே தயாரித்து முடித்துவிட்டது. ஆனாலும், தங்களது தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்காக, தமிழ்த் தேசிய கட்சிகள் கடிதங்களை அனுப்பி நாடகம் ஆடுகின்றன. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பத்துப் பேரும், பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் கையெழுத்திட்ட கடிதமொன்றை அனுப்புவது தொடர்பில் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரனிடம் அறிவித்து, அந்தக் கடிதத்தைத் தயாரிக்கும் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. அந்த விடயம், டெலோவின் அழைப்பின் நிமித்தம் கூடிய கட்சிகளிடமும் உதிரிகளிடமும் இணைய வழி கலந்துரையாடலொன்றின் போது அறிவிக்கப்பட்டதாக சுமந்திரன் கூறுகிறார். சம்பந்தனின் கடிதத்தின் பிரதிகள், ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டு, கருத்துகள் கேட்கப்பட்டு, அதன் பின்னர் கையெழுத்துகள் பெறப்படுவதற்கு முன்னராகவே, அவசர அவசரமாக டெலோவின் அழைப்பில் கூடிய குழுவினர், இன்னொரு கடிதத்தை அனுப்பி இருக்கிறார்கள். டெலோவின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் புளொட்டின் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோரைத் தவிர்ந்தால், கூட்டப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடையாளத்தோடு ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழரசுக் கட்சியின் தலைவரும் மாத்திரம் கடிதத்தில் கையெழுத்திட முடியும். அப்படி நடந்தால், தமிழரசுக் கட்சியின் கடிதம் எனும் அடையாளத்தைப் பெறும் என்பதால் அது தவிர்க்கப்பட்டு இருக்கின்றது. அதனாலேயே, சம்பந்தனின் கூட்டமைப்பின் தலைவர் எனும் அடையாளத்தோடு, குறித்த கடிதம் அனுப்பப்பட்டு இருக்கின்றது. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் தொடர்பில், தமிழ்த் தேசிய கட்சிகளை இணைத்துக் கொண்டு கடிதமொன்றை வரைவது தொடர்பில் டெலோ, கூட்டமைப்பின் தலைவர் என்ற ரீதியில் சம்பந்தனுக்கு, எந்தவொரு தருணத்திலும் அறிவிக்கவில்லை. தமிழரசுக் கட்சித் தலைவரான மாவை சேனாதிராஜாவுக்கு அழைப்பு விடுத்து, அவரும் அந்தச் சந்திப்புகளில் கலந்து கொண்டிருக்கின்றார். இரு தசாப்த காலமாக, தாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பின் தலைமைக்கு அறிவிப்பு விடுக்காமல், இன்னோர் அணியொன்றை அமைக்கும் முயற்சிகளை டெலோ முன்னெடுக்கின்றது என்றால், அது செல்வம் அடைக்கலநாதனதோ, குருசாமி சுரேந்திரன் உள்ளிட்டவர்களின் துணிச்சலான நடவடிக்கை என்று மாத்திரம் கொள்ள முடியாது. ஏனெனில், கூட்டமைப்பு சார்ந்து தமிழரசுக் கட்சி ஏக நிலையில் முடிவுகளை எடுத்த அனைத்துத் தருணங்களிலும், டெலோ அதற்கு இணங்கியே சென்றிருக்கின்றது. அவ்வாறான இணக்கம், தவறு என்று சுட்டிக்காட்டப்பட்ட போதெல்லாம், தேர்தல் வெற்றி - தோல்விகளைக் கருத்தில் கொண்டு செல்வம் அடைக்கலநாதன் அமைதியாகவே இருந்தார். அப்படிப்பட்ட சுபாவத்தைக் கொண்டிருப்பவரின் எண்ணங்களில், கூட்டமைப்பைத் தாண்டிய சிந்தனையொன்று ஏற்பட்டு, அது செயலுருவம் பெறுகின்றது என்றால், அந்தப் பின்னணியை ஆய்ந்து ஆராய வேண்டியும் ஏற்படுகின்றது. சம்பந்தன் காலத்துக்குப் பின்னராக கூட்டமைப்பின் தலைமைத்துவம் என்பது, தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அல்லது சிவஞானம் சிறிதரன் உள்ளிட்டவர்களிடம் பகிரப்படும் சூழலே காணப்படுகின்றது. சிறிதரனின் இலக்கு, தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவம் என்கிற அடிப்படையில், கூட்டமைப்பின் தலைமைத்துவம் சுமந்திரனிடம் செல்லும் வாய்ப்புகளே உண்டு. கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னரான நாள்களில், பிராந்திய வல்லரசின் தூதுவராலய அரசியல் பிரிவு அதிகாரிகள், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் நடத்திய பேச்சுகளின் போது, இந்த விடயம் அதிகமாக விவாதிக்கப்பட்டது. பிராந்திய வல்லரசுக்கு, சுமந்திரன் மீது குறிப்பிட்டளவான அதிருப்தி உண்டு. ஏனெனில், தங்களது எல்லா இழுப்புகளுக்கும் அவர் வளைந்து கொடுக்கமாட்டார் என்பது அதற்கான காரணம். அப்படியான சூழலில், கூட்டமைப்புக்கு மாற்றாக பலமான கூட்டணியொன்றைத் தமிழ்ச் சூழலில் உருவாக்கி, தங்களது அனைத்து ஆணைக்கும் ஆடும் ஒரு பொம்மையைத் தலைவராக்க வேண்டும் என்பது அவா. அந்த எண்ணப்பாடுகளின் போக்கில்தான், டெலோவையும் புளொட்டையும் கூட்டமைப்பில் இருந்து வெளியேற வைத்து, விக்னேஸ்வரன் தலைமையில் புதிய கூட்டணிக்கான அத்திவாரத்தைப் போடுகின்றது. இந்தப் பின்னணியில்தான், தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் வெற்றிக்காகத் தங்கியிருக்கும் சூழலில் இருந்து வெளியேறும் துணிவு டெலோவுக்கு வருவதற்கு காரணமாகும். கூட்டமைப்பின் நிலைப்பாடுகளுக்கு மாறாக, தலைமைக்கு அறிவிக்காமல் டெலோவும் புளொட்டும் நடந்து கொண்ட விதம், தார்மிகத்துக்கு புறப்பானது என்று தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் சுமந்திரன் குறைபட்டார். அவர், ‘துரோகிகள்’ என்கிற வார்த்தையை பயன்படுத்தவில்லையே அன்றி, அவர்களை நோக்கி, கடந்த கால ‘அரச ஒத்தோடிகள்’ என்கிற அடையாளத்தையும் பதிவு செய்தார். இவ்வாறான பிரளங்களுக்குப் பின்னரும் சம்பந்தனோ, கூட்டமைப்பை யாராலும் பிளவுபடுத்த முடியாது, கூட்டமைப்பு தொடர்ந்தும் ஒற்றுமையாகப் பணிக்கும் என்று கூறியிருக்கின்றார். கூட்டமைப்பு தோற்றம் பெற்றது முதல், அதன் தலைவராக சம்பந்தன் இருந்து வந்தாலும், உத்தியோகபூர்வ கடிதங்களில் கையெழுத்திடும் போது, அவர் தன்னை தமிழரசுக் கட்சியின் பாராளுன்றக் குழுத் தலைவர் என்றே குறிப்பிட்டு வந்திருக்கின்றார். 2015க்குப் பின்னரே, அவர் தன்னை கூட்டமைப்பின் தலைவர் என்று குறிப்பிட்டு கடிதங்களில் கையெழுத்திட்டார். ஆனால், இன்றைக்கு மீண்டும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் எனும் அடையாளத்துக்கே சம்பந்தன் செல்ல வேண்டியிருக்கின்றது. ஏனெனில், கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியைத் தவிர, இருந்தவர்கள் எல்லோரும் வெளியேறிச் சென்றுவிட்டதான சூழலே இன்றிருக்கின்றது. 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், கூட்டமைப்பு பெற்ற ஏக நிலை வெற்றியோடு, அதன் வீழ்ச்சி ஆரம்பித்திருந்தது. இந்தப் பத்தியாளர் அதனை அடிக்கடி சுட்டிக்காட்டியும் வந்திருக்கின்றார். கடந்த பொதுத் தேர்தல் காலத்தில், அது அப்பட்டமாக வெளிப்பட்டது. மக்களுக்கான நலன், நீதிக் கோரிக்கைகள் என்கிற நிலைகள் தாண்டி தனிப்பட்ட நலன், பதவி, பகட்டு அதற்கான குழிபறிப்புகள் என்பதே அரசியல் என்ற நிலைப்பாட்டுக்குள், கூட்டமைப்பின் கட்சிகளும் அதன் தலைவர்களும் எப்போதோ வந்துவிட்டார்கள். அந்த நிலைதான், இந்தச் சீரழிவுக்கு முக்கிய காரணம். அதற்கான பொறுப்பை சம்பந்தன் உள்ளிட்ட அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் விடுதலைக்காக, பல பேரின் இரவு - பகல் பாராத உழைப்பால் உருவாகிய கூட்டமைப்பு என்கிற ஓர் உன்னத அடையாளம், கண் முன்னாலேயே, அழிந்து போவதைக் காணுவது வேதனையானது. இப்போது அதுதான் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இனியும்-சம்பந்தன்-கூட்டமைப்பின்-தலைவரா/91-280584
 7. ராஜபக்‌ஷர்களின் சீரற்ற நிர்வாகமும் மக்கள் மீதான சுமையும் புருஜோத்தமன் தங்கமயில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை அண்மிக்கின்றது. ஒவ்வொரு நாளும் 150க்கு மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். கொரோனா வைரஸ் பரவலின் முதல் அலையை, குறிப்பிட்டளவு வெற்றிகரமாகக் கையாண்ட அரசாங்கம், இரண்டாம் மூன்றாம் அலையின்போது, எதுவும் செய்யமுடியாதளவு தடுமாறுகின்றது. கொரோனா முதல் அலையில், நாட்டை முழுமையாக முடக்கி, பரவலின் தாக்கத்தை கட்டுப்படுத்திய அரசாங்கத்தால், இரண்டாம் மூன்றாம் அலைகளின் போது, நாட்டை ஏன் முழுமையாக முடக்க முடியவில்லை என்கிற கேள்வியை, வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறையினர் எழுப்பினர். கொரோனா இரண்டாம் அலையின் பரவலின் போதே, மூன்றாம் அலை இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடங்கி, அனைத்து சுகாதார தரப்புகளும் அரசாங்கத்தை எச்சரித்தன. ஆனால், அரசாங்கம் நாட்டை முடக்குவதிலோ கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்துவதிலோ, குறிப்பிட்டளவு பாராமுகமாக இருந்தது. மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தாலும், மாகாணங்களுக்கு உள்ளான பயணத்தடை பெயரளவிலேயே இருந்தது. வாகனங்களில் பயணிப்போர் எண்ணிக்கை, சாதாரண நாள்களைப் போன்றே இருந்தது. அவ்வாறான நிலை, கொரோனா பரவல் வேகத்தை அதிகரிக்கச் செய்தது. கொரோனா முதல் அலையின் காலத்திலேயே, தங்களது வேலை நேரத்துக்கு அதிகமான பணிச்சுமைக்குள் வைத்தியர்கள், தாதியர்கள் தொடங்கி அனைத்து சுகாதாரத்துறையினரும் உள்ளானார்கள். ஆனால், இன்றைக்கோ நிலைமை இன்னும் மோசமானது. அவர்களுக்கான பணி நேரம், இரண்டு மடங்கால் அதிகரித்துவிட்டது. நோயாளர்களின் எண்ணிக்கை, பலமடங்கு அதிகரித்துவிட்டது. இதனால், நெருக்கடி நிலை, இன்னும் இன்னும் இறுகிக் கொண்டே செல்கின்றது. இவ்வாறான நிலையொன்று இருக்கும் போதுதான், கண்டிப் பெரஹராவை நடத்துவதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அக்கறையோடு இருந்தார். பெரஹரா முடியும் வரையில், நாட்டை முடக்கப்போவதில்லை என்பதிலும் அவர் குறியாக இருந்தார். கொரோனா வைரஸ் தொற்று, கையை மீறிச் சென்று கொண்டிருக்கின்றது. அதனால் நாட்டை முடக்குவதைத் தவிர, வேறு வழியில்லை என்று பௌத்த மகா சங்கங்கள் அறிவித்த பின்னரும் கூட, கண்டிப் பெரஹராவை நடத்துவது தொடர்பில், ஜனாதிபதி வெளியிட்ட கரிசனை அபத்தமானது. அந்தப் பெரஹராவில் கலந்து கொண்ட 45க்கும் மேற்பட்டோர், கொரோனா வைரஸ் தொற்றுகளுடன் அடையாளம் காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. நாட்டின் நிலை என்ன, அதை எவ்வாறு எதிர்கொள்வது என்கிற எந்தவித தெளிவும் இல்லாமலேயே, இன்றைய ராஜபக்‌ஷர்களின் அரசாங்கம் செயற்படுகின்றது என்பதற்கு, கண்டிப் பெரஹராவை நடத்தியமை ஒரு சான்று. அதுபோல, நாட்டின் வருமானம் படுவீழ்ச்சி கண்டிருக்கின்ற நிலையில், அரசாங்கம் அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரி விதிப்பை அதிகரித்திருப்பதன் மூலம், அதனைச் சரி செய்ய முடியும் என்கிற யோசனைக்குள் சென்றிருக்கின்றது. கடந்த ஆண்டு, 135 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோகிராம் சீனியின் விலை, இன்றைக்கு 240 ரூபாயளவில் வந்து நிற்கின்றது. நாட்டின் வருமானம் இழக்கப்பட்டு இருக்கின்றது என்பதற்குள், மக்களின் வருமானமும் இழக்கப்பட்டிருக்கின்றது. ஆனால், அரசாங்கம் அந்த விடயங்களை மறந்துவிட்டு, மக்களின் மீதான சுமையை அதிகரிப்பதிலேயே குறியாக இருக்கின்றது. சாதாரண மக்களின் ஆண்டு வருமானம் என்று, கடந்த காலங்களில் கணிக்கப்பட்ட தொகையின் பாதியிலும் குறைவான வருமானத்தையே, தற்போது மக்கள் பெறும் சூழ்நிலை உள்ளது. அப்படியான நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலையை, 25 தொடக்கம் 45 சதவீதம் வரையில் அதிகரிப்பது அபத்தமானது. அது, எந்தக் காலத்திலும் பொருளாதார அறிவுள்ள எந்தத் தரப்பும் செய்ய முன்வராதது. வரி வருமானங்களுடாகத்தான் நாடு தன்னுடைய வருமானத்தை ஈட்டுகின்றது; அதில் பிழையில்லை. ஆனால், மக்களே பட்டிணியில் அல்லாடும் போது, அந்தப் பட்டிணியின் மீது, இன்னும் மிகப்பெரிய பாரத்தை இறக்குவது, நடைமுறை சார்ந்த அரசியல் அல்ல. ஆனால், ராஜபக்‌ஷர்களும் அவர்களின் ஆலோசகர்களும் அவ்வாறான நிலையொன்றையே செய்து வருகிறார்கள். கொரோனா வைரஸ் பரவல் காலத்தில், வருமானம் இழப்பு என்பது எல்லோருக்கும் பொதுவான ஒன்று. அதனை, மெல்ல மெல்லக் கடப்பதுதான், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த உதவும். திங்கட்கிழமை (30) நள்ளிரவு முதல் அவசரகாலச் சட்ட விதிமுறைகள் நடைமுறைக்கு வந்திருக்கின்றன. அத்தியாவசிய உணவு விநியோகத்தை சீர்படுத்தும் நோக்கிலேயே அவசரகாலச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. அதன் போக்கில், அத்தியாவசிய உணவு விநியோகம் தொடர்பிலான பணிக்குழுவுக்கு முன்னாள் இராணுவ அதிகாரியொருவர் பணிப்பாளராக நியமிக்கப்பட்டும் இருக்கின்றார். ராஜபக்‌ஷர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தது முதல், நாட்டில் அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்கும் செயற்பாடு அதிகரித்திருந்தது. சினி, பருப்பு, அரிசி உள்ளிட்ட பொருட்களின் பொதிகளில், உற்பத்தித் திகதி, காலாவதித் திகதி உள்ளிட்டன குறிப்பிடப்பட்டிருந்தாலும், விலை எனும் இடம் வெறுமையாக விடப்பட்டிருக்கின்றது. அத்தியாவசியப் பொருட்களில் விலை, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அதிகரிக்கும் சூழ்நிலையில், அத்தியாவசிப் பொருட்களின் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், இடைத்தரகர்கள் குழுவொன்று, பதுக்கல் பாணியை முன்னெடுக்கின்றது. இதற்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இருப்பதாகவே, மக்கள் சந்தேகிக்கின்றனர். ஏனெனில், அத்தியாவசியப் பொருட்களில் விலை, ராஜபக்‌ஷர்கள் ஆட்சிக்கு வந்தது முதல், அதிகரித்து வரும் சூழ்நிலைகளைப் பார்க்கும் போது, அதனைப் புரிந்து கொள்ள முடியும். ஒருசில முதலாளிகளுக்காக, ஓர் அரசாங்கம் இயங்கும் சூழலொன்று பேணப்படுகின்றது. இவ்வளவு தப்பான முயற்சிகளுக்கான களத்தை அமைத்து, கறுப்புச் சந்தையையும் பதுக்கல்காரர்களையும் வளர்த்துவிட்டு, இன்றைக்கு அத்தியாவசிய உணவு விநியோகம் அவசரகால விதிமுறைகளின் கீழ் கொண்டுவரப்படுகின்றது என்றால், அதன் உண்மைத்தன்மையை சந்தேகிக்காமல் இருக்க முடியாது. கடைகளில் அரிசி, சீனி, பால்மா, கருவாடு, உழுந்து, பயறு உள்ளிட்ட பொருட்களைப் பெற்றுக்கொள்வது, குதிரைக் கொம்பான விடயமாக இன்றைக்கு மாறிவிட்டது. சிறிமாவோ காலத்தில் நிலவிய அத்தியாவசியப் பொருட்களுக்கான நெருக்கடிக்கு ஒப்பான ஒரு காலத்தை நோக்கி, ராஜபக்‌ஷர்கள் நாட்டை நகர்த்தி வருகின்றார்கள். எந்தவொரு காரியத்திலும் துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளை உள்வாங்கப்படுவதில்லை. மாறாக, தனி முதலாளிகள், இராணுவத்தினர் உள்ளிட்ட தரப்பினரின் ஆலோசனைகளுக்கு அமைய, அரசாங்கத்தின் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அதனால்தான், இவ்வளவு நெருக்கடிகள் ஏற்படுகின்றன. கொரோனா வைரஸ் தொற்று தொடர்பிலான பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு, கடந்த மாதம் வரையில் 7,000 முதல் 10,000 ரூபாய் வரையில் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், அதே பரிசோதனைகளுக்காக இந்தியாவின் சில மாநிலங்கள், இலங்கை மதிப்பின்படி பார்த்தால் 1,500 முதல் 2,000 ரூபாயே அறவிடுகின்றன. பி.சி.ஆர் பரிசோதனையை ஒருவர் மேற்கொள்ளவதற்கான செலவை 2,000 ரூபாய்க்குள் கொண்டு வந்தாலும் அதில் குறிப்பிட்டளவான இலாபம் வைத்தியசாலைக்கு இருக்கின்றது.அப்படியான நிலையில், ஒரு பி.சி.ஆர் பரிசோதனைக்காகவே 5,000 முதல் 8,000 ரூபாய் வரையில் அதிகமாக அறிவிடப்பட்டதன் நோக்கம் என்ன? பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கான கருவிகள் இறக்குமதி உள்ளிட்ட அனுமதி ராஜபக்‌ஷர்களுக்கு இணக்கமான தனியார் முதலாளி ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது ஏன்? இவ்வாறான கேள்விகள், அரசாங்கத்தின் மீதான கள்ளத்தத் தனங்களை வெளிப்படுத்தி நிற்கின்றன. கொரோனா மக்களை தின்று கொண்டிருக்கின்றது; அந்தக் கொரோனா காலத்தில் மக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசாங்கமோ, அதனையெல்லாம் மறந்து, தான்தோன்றித்தனமாக நடத்து, மக்களை ஆபத்துக்குள் இன்னும் இன்னும் தள்ளுகின்றது. அவ்வாறான நிலையில், மக்கள்தான் தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும். வேறு ஆபத்பாண்டவர்கள் யாரும் வரமாட்டார்கள். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ராஜபக்-ஷர்களின்-சீரற்ற-நிர்வாகமும்-மக்கள்-மீதான-சுமையும்/91-280287
 8. மங்கள: இனவாத அரசியலின் லிபரல் முகம் புருஜோத்தமன் தங்கமயில் இலங்கையின் பௌத்த சிங்கள இனவாத அரசியல் களத்தில், ஒரு லிபரல் (தாராளவாத) முகமாக வலம் வந்த மங்கள சமரவீர மறைந்திருக்கின்றார். கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த அவர், சிகிச்சை பலனளிக்காத நிலையில், செவ்வாய்க்கிழமை (24) உயிரிழந்தார். தெற்காசியாவில் அதிகம் நிகழ்வது போலவே, மறைந்த பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவால், மங்களவும் ஓர் அரசியல் வாரிசாக அரசியலுக்கு அழைத்துவரப்பட்டார். மங்களவின் மூன்று தசாப்தங்களைத் தாண்டிய அரசியல் வாழ்வில், மூன்று ஜனாதிபதிகளை உருவாக்குவதில் மூளையாக செயற்பட்டிருக்கின்றார். அதுபோல, மூன்று அரசாங்கங்களைத் தோற்கடிப்பதிலும் பங்களித்திருக்கின்றார். அதாவது, சுருங்கச் சொன்னால், அவரை ஒரு ‘கிங் மேக்கர்’ ஆக, இலங்கை மக்கள் பார்த்திருக்கிறார்கள். ஜே.ஆர். ஜெயவர்தனவோடு மீண்டும் ஆரம்பித்த ஐக்கிய தேசிய கட்சியின் யுகத்தைத் தோற்கடிப்பதில், மங்களவின் பங்கு கணிசமானது. ரணசிங்க பிரேமதாஸ ஆட்சிக் காலத்தில், தென் இலங்கையில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கு எதிராக, ‘அன்னையர் முன்னணி’ ஊடாக, மஹிந்த ராஜபக்‌ஷவும் மங்களவும் முன்னெடுத்த போராட்டங்கள், சுதந்திரக் கட்சியை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏற்றுவதற்குத் துணை புரிந்தன. குறிப்பாக, சந்திரிகா குமாரதுங்கவை சமாதானத்தின் முகமாக, நாடு பூராகவும் சேர்ப்பித்ததிலும், மங்களவின் பங்களிப்பிருந்தது. அதுதான், சந்திரிகாவின் ஆட்சியிலும் கட்சியிலும், மங்ளவை முக்கிய நபராக்கியது. தன்னையொரு லிபரல்வாதியாக மங்கள முன்னிறுத்திக் கொண்டாலும், அரசியலில் ஆட்சியை பிடிப்பதற்கும், அதைத் தக்கவைப்பதற்கும் எந்தத் தரப்போடும் எவ்வகையான உறவையும் பேணலாம் என்கிற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். 2002ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், ரணில் விக்கிரமசிங்க ஆட்சியைப் பிடித்த போது, அதைத் தோற்கடிப்பதற்கான வேலைத் திட்டங்களை, சந்திரிகாவுக்காக மங்கள முன்னெடுத்திருந்தார். ரணிலின் ஆட்சியைக் கலைத்து, 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு சந்திரிகா சென்ற போது, சுதந்திரக் கட்சியோடு ஜே.வி.பியை கூட்டுக்குள் கொண்டு வந்ததிலும், மங்கள மூளையாகச் செயற்பட்டார். அதுபோல, சந்திரிகா ஆட்சியின் இறுதிக் காலங்களில், மஹிந்தவுக்காக அவரோடு மோதிக் கொண்டதிலும், மஹிந்தவை ஜனாதிபதி வேட்பாளர் ஆக்கியதிலும், காரண கர்த்தாவாக மங்கள இருந்தார். 2005ஆம் ஆண்டு, ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்‌ஷர்களை, தென் இலங்கையின் புதிய காவலர்களாக, நம்பிக்கை நட்சத்திரங்களாக முன்னிறுத்தி, பிரசாரங்களை ஒழுங்கமைத்தவரும் மங்களவே தான். அதற்காகத்தான், மஹிந்த அமைச்சரவையில் மங்கள வெளிநாட்டு அமைச்சர் ஆக்கப்பட்டார். ஆனால், மங்களவின் அரசியல் நிலைப்பாடுகளுக்கும் ராஜபக்‌ஷர்களின் நடவடிக்கைகளுக்கும் இடையில் முரண்பாடுகள் ஆரம்பித்த 2007களில், மங்கள அரசாங்கத்திலிருந்து வெளியேறினார். அப்போது, ராஜபக்‌ஷர்களின் வீழ்ச்சி, மங்களவாலேயே நிகழ்த்தப்படும் என்றவாறாக, தென் இலங்கை ஊடகப் பரப்பு பேசியது. அது, உடனடியாக நிகழாவிட்டாலும், எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர், அதுவே நிதர்சனமும் ஆகியது. 2004இல் ரணில் ஆட்சியைத் தோற்கடிப்பதற்காக, ஜே.வி.பி உள்ளிட்ட தென் இலங்கையில் அனைத்துச் சக்திகளோடும் பேச்சுகளை நடத்தி, எப்படி ஓரணியில் திரட்டினாரோ, அதே மாதிரியே, 2015இல் ராஜபக்‌ஷர்களைத் தோற்கடிப்பதற்காகவும் ஜே.வி.பி உள்ளிட்ட தென் இலங்கை தரப்புகள், புலம்பெயர் தமிழ் அமைப்புகள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்று, அனைத்துத் தரப்புகளோடு நீண்ட காலப் பேச்சுகளை முன்னெடுத்து, மைத்திரிபால சிறிசேனவுக்கான பாதையை மங்கள அமைத்தார். மைத்திரியை பொது வேட்பாளராக முன்னிறுத்துவதற்காக, சந்திரிகாவையும் இரா.சம்பந்தனையும் பாவித்து, ரணிலை போட்டியிலிருந்து விலகவைத்ததும் மங்கள காய்களை நகர்த்தியிருந்தார். மங்களவின் அரசியல் வாழ்வில், அவர் அரசாங்கத்தில் இருந்தாலும் எதிரணியில் இருந்தாலும் முக்கியமான ஒருவராகவே இருந்தார். மங்கள, யாரோடு முரண்படுகிறாரோ, அவர் ஆட்சியை இழக்கப்போகிறார் அல்லது ஆட்சிக்கே வர முடியாது போகும் சூழல் உருவாகிவிடும் என்கிற அச்சம், இயல்பாக எழுந்திருந்தது. மீண்டும் ராஜபக்‌ஷர்கள் ஆட்சியில் ஏறியதும், சிறிதுகாலம் அமைதியாக இருந்த மங்கள, கடந்த சில மாதங்களாக இளைஞர்களை இணைத்துக் கொண்டு, ஜனநாயகத்துக்கான புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். அதற்கான ஊடக சந்திப்பொன்றையும் அண்மையில் நடத்தியிருந்தார். அத்தோடு, ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக, மீண்டும் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட ஆரம்பித்திருந்தார். தென் இலங்கையின் முற்போக்கு சக்திகளும் தமிழ்க் கட்சிகளும் கூட, மங்களவை ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகவே பார்த்தன. அதாவது, எதிர்க்கட்சியாக இருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியையோ, எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சஜித்தையோ கூட நம்பாது, பாராளுமன்றத் தேர்தலில் இருந்து விலகி, சிறிது காலம் ‘ரிக்-டாக்’ இணைய செயலியில் பொழுது போக்காக காலம் கடத்திக்கொண்டிருந்த மங்களவை, தென் இலங்கையின் முற்போக்கு சக்திகளும் தமிழ்க் கட்சிகளும் நம்பின. அதுதான், அவர் ஒதுங்க நினைத்தாலும் அரசியலுக்குள் மீண்டும் இயங்கும் ஒருவராக அவரை மாற்றியது. தன்னுடைய அரசியல் வாழ்வில் நிகழ்ந்த தவறுகளுக்காக அவர், வெளிப்படையாக மன்னிப்புக் கோரவும், கடந்த காலத் தவறுகளைத் திருத்துவதற்கான வாய்ப்புகள் கிடைத்த தருணங்களில் அதைப் பயன்படுத்தவும் செய்தார். சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்ட தருணத்தில், களுபோவில வைத்தியசாலை வளாகத்தில் இருந்துகொண்டு, “...கொலைகார ராஜபக்‌ஷர்களை ஆட்சிக்குக் கொண்டு வந்ததற்காக, நான் அனைவரிடத்திலும் மன்னிப்புக் கேட்கிறேன்...” என்று கூறியிருந்தார். அதுபோல, மஹிந்தவோடு இணைந்து மைத்திரி சதிப்புரட்சி செய்த போது, மைத்திரியை ‘ஒட்டுண்ணி’ என்றும் விமர்சித்திருந்தார். பதவியில் இருக்கிறார்கள் என்பதற்காக, மங்கள என்றைக்குமே அவர்களிடத்தில் பயத்தை வெளிப்படுத்தியதில்லை. இனவாத அரசாங்கங்களை உருவாக்குவதில், குறிப்பிட்ட காலம் வரையில் பங்காளியாக இருந்த அவர், நல்லாட்சி அரசாங்கத்தை, தன்னுடைய லிபரல்வாத நம்பிக்கைகளின் போக்கிலேயே அமைக்க முயன்றார். நாட்டின் இனமுரண்பாடுகளுக்கு, புதிய அரசியலமைப்பின் ஊடாகத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதும் அவரின் இறுதிக்கால விருப்பங்களில் ஒன்று. அதற்காக அவர் யாரோடும் பேசவும் யாரை வேண்டுமானாலும் எதிர்க்கவும் தயாராக இருந்தார். மங்கள, ஓர் அரசியல் பட்டாம்பூச்சியாக இருந்தார். கட்சிகள், சிவில் அமைப்புகள் என்கிற பூக்களுக்கு இடையில், மகரந்தச் சேர்க்கைக்கு உதவினார். அதில் பிறந்ததுதான் நல்லாட்சி என்கிற கனி. அந்தக் கனியைச் சரியாகப் பயன்படுத்துவதில் ரணிலும் மைத்திரியும் கோட்டை விட்டிருந்தார்களே அன்றி, நல்லாட்சியின் தோல்விக்கு மங்கள ஒருபோதும் காரணமாக இருக்கவில்லை. மங்களவை நோக்கி ‘பட்டாம்பூச்சி’ என்கிற பால்புதுமையினரை நோக்கிய பாலியல் வசையொன்றை, தென் இலங்கை தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வந்தது. ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்திலேயே மைத்திரி, அவ்வாறு மங்களவை நோக்கி நையாண்டி செய்திருந்தார். ஆனால், மங்கள, தன்னை ஒரு தன்பாலீர்ப்பாளராக வெளிப்படையாக அறிவித்துக் கொண்ட ஒருவர். பௌத்த சிங்களவாதம் கோலொச்சும் அரசியலில், அடிப்படை மதவாதக் கோட்பாடுகளை கேள்விக்குள்ளாக்கும் வகையில், தன்னுடைய பாலியல் தெரிவை வெளிப்படையாக அறிவித்துக் கொண்ட மங்கள, இலங்கையில் பால்புதுமையினருக்கான அங்கிகாரத்துக்காகவும் உழைத்த ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மக்களைப் பொறுத்தளவில், இனவாத அரசாங்கங்களின் மூளையாக மங்கள இயங்கி இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக அந்த ‘மூளை’, இனவாத அரசாங்கங்களின் தேவைகளுக்கு அப்பாலும் நின்று இயங்கி இருக்கின்றது. அதுதான், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பிலான தீர்மானத்துக்கு இலங்கை அனுசரணை வழங்கியதற்குக் காரணமாகும். அத்தோடு, காணாமற்போனவர்களுக்கான அலுவலகம் உள்ளிட்ட விடயங்களிலும் அக்கறையோடு இருந்தார். அதுதவிர, தென் இலங்கையோடு ஊடாடுவதற்கான ஒரு கருவியாக, தமிழ்த் தரப்புகள் மங்களவை நம்பவும் தொடங்கியிருந்தன. அந்தத் தருணத்தில்தான் அவர் மறைந்திருக்கின்றார். தமிழ்த் தரப்புகளைப் பொறுத்தளவில், மங்களவின் மறைவு பின்னடைவாகும். இனவாத அரசியலின் லிபரல் முகம், மறைந்திருக்கின்றது... தன்னுடைய அடையாளங்களை ஆழப் பதித்துவிட்டு! https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மங்கள-இனவாத-அரசியலின்-லிபரல்-முகம்/91-280044
 9. சுய பாதுகாப்பு எனும் ஒற்றை வழி புருஜோத்தமன் தங்கமயில் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற கட்டத்தில், நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் அல்லாடுகிறார்கள். கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் பரவல் வேகம், சொல்லிக் கொள்ள முடியாதளவுக்கு அதிகரித்து இருக்கின்றது. வீதியில் இறங்கினாலே, நாம் சந்திக்கும் நபர்களில் ஒருவராவது, கொரோனா தொற்றோடு இருப்பார் என்கிற அளவுக்கு அந்த நிலை இருக்கின்றது. உலக அளவில், கொவிட்-19 பெருந்தொற்றால் இறப்பவர்களின் வீதத்தில், இலங்கை முதலிடத்தில் இருக்கின்றது. வைத்தியசாலைகள் தொற்றாளர்களால் நிரம்பி வழிகின்றன. ஒரு படுக்கையில், ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை வைத்துப் பராமரிக்கும் நிலையில், அரச வைத்தியசாலைகளில் நெருக்கடி நீடிக்கின்றது. ‘1990’ என்கிற நோயாளர் காவு வண்டிகளுக்கான அழைப்பை ஏற்படுத்தினால், அது கிடைப்பதற்கே பல மணி நேரமாகிறது. அவ்வளவு நெருக்கடியான நிலையொன்றை, கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்தி இருக்கின்றது. இவ்வாறான நிலையில்தான், சுகாதார அமைச்சராக இருந்த பவித்திரா வன்னியாராச்சி மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக கெஹலிய ரம்புக்வெல, புதிய அமைச்சராகி இருக்கிறார். ராஜபக்‌ஷர்களின் அரசாங்கத்தின் வைத்தியத்துறைசார் நிபுணர்கள் பலர், பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த போதிலும், பவித்திரா வன்னியாராச்சிக்கு சுகாதார அமைச்சு வழங்கப்பட்டது. அவருக்கு அந்த அமைச்சு வழங்கப்பட்ட போதே, விமர்சனங்கள் எழுந்திருந்தன. அவரும், அந்த விமர்சனங்களுக்குத் தகுதியானவர் போலவே பல நேரங்களில் நடந்தும் இருந்தார். குறிப்பாக, கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க, மந்திரித்த பானையை ஆற்றில் விட்ட சம்பவம் எல்லாமும் நடந்தது. ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல், சுகாதார அமைச்சரான அவரிடத்தில் இருந்த, முடிவுகளை எடுக்கும் அதிகாரங்கள் அனைத்தும், ஜனாதிபதியிடமும் அவரால் அமைக்கப்பட்ட கொரோனா தடுப்புச் செயலணியிடமும் சென்றன. சுகாதார அமைச்சர் என்கிற ஓர் அடையாளத்தோடு மாத்திரமே, அவர் இருக்க நேர்ந்தது. கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடங்கி தொற்றாளர்கள், மரணிப்பவர்களின் விவரங்கள் வரையில், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிய கொரோனா தடுப்புச் செயலணியின் அனுமதியோடு வெளிவர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இன்றைக்கு புதிய சுகாதார அமைச்சர் பதவியேற்றுவிட்ட போதிலும், அந்த நிலையில் எந்த மாற்றமும் இல்லை. தற்போதும் இராணுவத்தினர் வெளியிடுவதுதான் தரவுகள்; சுகாதார துறையினரோ அமைச்சரோ அதுபற்றி எதுவித விடயங்களையும் பகிரங்கப்படுத்த முடியாது. இவ்வாறான நிலை நீடிக்கும் போதுதான், பவித்திரா வன்னியாராச்சியிடம் இருந்து சுகாதார அமைச்சு பறிக்கப்பட்டிருக்கின்றது. அமைச்சரவைக்குள் சில மாற்றங்கள் செய்யப்பட்ட போதிலும், அமைச்சு மாற்றம் தொடர்பில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், பவித்திரா வன்னியாராச்சியிடம் இருந்து சுகாதார அமைச்சு மாற்றப்பட்டது. அதனை, அவர் வெளிப்படையாகப் பேசவும் செய்தார். அதாவது, சுகாதார அமைச்சக ஊழியர்களிடம் பிரியாவிடை பெற்றுச் செல்லும் போது, “...நான் ஜனாதிபதி செயலகம் செல்லும் வரையில், என்னுடைய அமைச்சுப் பதவியில் மாற்றம் செய்யப்படப் போகின்றது என்பதை அறியவில்லை...” என்றார். அத்தோடு, அரசனும் ஆலோசகரும் காட்டுவழியாக நடந்து செல்லும் கதையொன்றைக்கூறி, எது நடந்தாலும் நன்மைக்கே என்று சொல்லி, தன்னுடைய கவலையை மறைப்பதற்கு முனைந்தார். இன்னொரு பக்கம், புதிய சுகாதார அமைச்சராகப் பதவியேற்ற கெஹலிய ரம்புக்வெல, “மக்கள், பொது இடங்களில் கூடுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதனைத் தவிர, இப்போது செய்வதற்கு ஏதுமில்லை. நாட்டினை மீண்டும் முடக்க முடியாது. அப்படிச் செய்தால் பொருளாதாரம் இன்னும் பாதிக்கப்படும்” என்றிருக்கின்றார். நாடு எதிர்கொண்டிருக்கின்ற கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடியை, எவ்வாறு கடக்க வேண்டும் என்கிற எந்தவித சிந்தனையும் அரசாங்கத்திலுள்ள யாரிடத்திலும் இல்லை. ஆலோசனையைக் கூறக்கூடிய துறைசார் நிபுணர்களையும், அரசாங்கம் பக்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை. வெளியில் இருந்து சொன்னாலும் அதனை ஏற்றுக்கொள்வதுமில்லை. இப்படியான நிலையில்தான், இவ்வாறான அமைச்சரவை மாற்றம், பசில் ராஜபக்‌ஷவுக்கு நிதி அமைச்சு என்று ஊடகங்களில் கவனத்தைச் சிதறடிக்கிறார்கள். பசில் நிதியமைச்சரானதும் நாட்டின் டொலர் இருப்பு அதிகரித்துவிடும், பொருளாதார சிக்கல்கள் தீர்ந்துவிடும் என்பது மாதிரியான பிம்பம் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், திவாலடையும் நிலையில் இருக்கும் நாட்டை, ஒரே நாளில் மாற்றுவதற்கு யாராலும் முடியாது. பசிலும் அதற்கு விதிவிலக்கல்ல. அவர், நிதி அமைச்சரானதும் அத்தியாவசியப் பொருட்களில் விலைகளில் அதிகரிப்பும், சமையல் எரிவாயு, பால்மா உள்ளிட்ட பொருட்களுக்கான தட்டுப்பாடுமே ஏற்பட்டிருக்கின்றது. திறைசேரியில் பணம் இல்லை; தங்கமும் இல்லை எனும் போது, நாட்டை மீண்டும் முடக்கும் அளவுக்கான தைரியம் அரசாங்கத்திடம் இல்லை. ஏனெனில், கடன்களை வழங்கவும் தற்போது சீனா பெரிய ஆர்வத்தைக் காட்டவில்லை. அப்படிக் கடன்களை வழங்கினாலும் அந்தக் கடன் பெறுமதிகள் என்ன துறையில் முதலிடப்பட வேண்டும் அல்லது செலவழிக்கப்பட வேண்டும் என்கிற வரையறைகளை சீனா கடுமையாக விதித்திருக்கின்றது. அப்படியான நிலையில், நாளாந்த அரச நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்குக் கூட அரசாங்கம் நிதி நெருக்கடிகளால் தள்ளாடுகின்றது. இந்நிலையில், மக்களின் மீது அக்கறை கொள்ளும் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது. கொரோனா வைரஸ் நெருடிக்கடி என்பது, நாட்டின் சாதாரண மக்களை மாத்திரமல்ல, இன்றைக்கு மேல் மத்தியதர வர்க்கத்தினரைக்கூட அலைக்கழிக்கத் தொடங்கிவிட்டது. எவ்வளவு பணம் இருந்தாலும்கூட, வைத்தியசாலைகளிலோ, அல்லது கொரோனா மையங்களிலோ அனுமதியைப் பெறுவது என்பது குதிரைக் கொம்பாகிவிட்டது. இன்றைக்கு நாட்டில் அரசியல் அதிகார உச்சமட்டங்களில் இருப்பவர்களுக்குத்தான் அனைத்துவிடயங்களும் இலகுவாக கிடைக்கக் கூடியதாக இருக்கின்றன. வைத்தியசாலைகளில் அனுமதி தொடங்கி, மருந்துகள் வரையிலும் அத்தியாவசிய தேவைகள் முதல் சேவைகள் வரையிலும் அவர்களுக்குத்தான் தட்டுப்பாடில்லாமல் கிடைக்கப்பெறுகின்றன. அப்படியான நிலையில், அதிகார மட்டத்தில் உச்சபட்ச செல்வாக்கு இல்லாத யாருமே, பெரும் அச்சுறுத்தலுக்குள் இருப்பதாகவே கொள்ள முடியும். ஆடி அமாவாசை விரதத்துக்காக மாமாங்கப் பிள்ளையாரில் ஆயிரக்கணக்கில் கூடுவதோ, நல்லூர் கொடியேற்றத்துக்காக படையெடுத்துச் சென்று அனுமதி மறுக்கப்பட்டதும் வீதிகளில் நெருக்கமாக அமர்ந்து போராடும் தோரணையை வெளிப்படுத்துவதோ தற்போதையை சூழ்நிலையில் மிகவும் பொறுப்பற்ற செயலாகும். அது, எந்தவித மத மார்க்க நிறுவனங்களிலும் கூட, அவ்வாறாக மக்கள் கூட்டங்களை அனுமதி என்பது முட்டாள்தனமானது. கையால் ஆகாத அரசாங்கமொன்று நாட்டை நிர்வகித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், மக்கள், தாங்கள்தான் தங்களது பாதுகாப்பில் அக்கறை கொள்ள வேண்டும். தனித்திருத்தல், சுத்தமாக இருத்தல் என்பது கொரோனா நெருக்கடிகளை தாண்டுவதற்கான முக்கிய விடயங்களாகும். அதைத் தவிர்க்கும் எந்தச் சிறிய சூழலும் மரணத்தின் பக்கத்தில் மக்களை நிறுத்தும் என்பது, நாளாந்தம் 150க்கும் மேற்பட்ட கொரோனா மரணங்களைக் காணும் போது உணர்ந்து கொள்ள முடியும். ஏற்கெனவே, அரசாங்கம் வெளியிடும் எண்ணிக்கைகளைவிட தொற்றாளர்களினதும் மரணிப்பவர்களினதும் எண்ணிக்கை சில மடங்குகளாவது அதிகமாக இருக்கலாம் என்று, சுகாதார துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்ற நிலையில், மக்கள் அலட்சியங்களைக் குறைத்துக் கொண்டு, தம்முடைய பாதுகாப்பில் அக்கறை கொள்ள வேண்டும். தம்முடைய பாதுகாப்பு என்பது, சமூகப் பாதுகாப்பாகவும் நாட்டினது பாதுகாப்பாகவும் மாறும். ஆள்பவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதற்காக, மக்கள் மரணிக்க வேண்டியதில்லை. சுய கட்டுப்பாடு, பாதுகாப்போடு நெருக்கடியை கடக்க வேண்டும். அதுதான் இப்போதைக்கு இருக்கும் ஒரே வழி! https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சுய-பாதுகாப்பு-எனும்-ஒற்றை-வழி/91-279166
 10. மக்களின் பசியோடு விளையாடும் ராஜபக்‌ஷர்கள் புருஜோத்தமன் தங்கமயில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் பழைய காணொளியொன்று, சமூக ஊடகங்களில் கடந்த இரண்டு, மூன்று நாள்களாகப் பகிரப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதில், “நாட்டு மக்களுக்கு சமையல் எரிவாயுவைக் கிரமமாக வழங்க முடியாத நல்லாட்சி அரசாங்கத்தினர், தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றுவார்கள்...?” என்று கேள்வியெழுப்புகின்றார். நல்லாட்சிக் காலத்தில், எதிரணி வரிசையில் இருந்த ராஜபக்‌ஷ(ர்கள்) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைக் கட்டியெழுப்பிக் கொண்டிருந்த தருணத்தில், ஆற்றப்பட்ட உரையின் காணொளி அது. அந்த உரை நிகழ்த்தப்பட்டு சில ஆண்டுகளுக்குள்ளேயே, ராஜபக்‌ஷர்களின் அரசாங்கம், நாட்டு மக்களை சமையல் எரிவாயுவுக்காக, நீண்ட வரிசைகளில் காத்திருக்க வைத்திருக்கின்றது. நாட்டில், சமையல் எரிவாயுவை இன்றைக்குப் பெறுவது, பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகின்றது. எரிவாயு சிலிண்டர்களைச் சுமந்து கொண்டு, நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருந்த காட்சிகளை, கடந்த சில நாள்களாகக் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் நகரங்கள் காட்டின. நீண்ட வரிசையில் காத்திருந்தும், சமையல் எரிவாயு நிரப்பிய சிலிண்டர்களைப் பெற முடியாது, காலிச் சிலிண்டர்களை சுமந்து கொண்டு, வீட்டுக்கு சென்றோரின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கானது. நகரப் பகுதிகளில் நிலை இப்படியென்றால், கிராமங்களில் நிலைமை இன்னும் மோசமானது. ஒரு மாத காலத்துக்கு முன்னர் இருந்தே, சமையல் எரிவாயுவைக் கிராமங்களில் பெறமுடியாமல் இருந்தது. ராஜபக்‌ஷர்களை நாட்டின் நம்பிக்கையான தலைவர்களாக, நிர்வாகிகளாக முன்னிறுத்தி, தேர்தல் காலத்தில் முழங்கிக் கொண்டிருந்த பெண்மணி ஒருவர், கடந்த சில நாள்களுக்கு முன்னர், சமையல் எரிவாயு கிடைக்காத நிலையில், மண்ணெண்ணை அடுப்பைப் பாவிப்பது பற்றிப் பேசியிருந்தார். இன்னொருவர், களிமண் அடுப்பைப் பயன்படுத்தத் தொடங்கியிருப்பது பற்றியும் அந்த அடுப்பை எரிப்பதற்கு, தேங்காய் சிரட்டைகளைப் பெறுவது பற்றியும், சமூக ஊடகமொன்றில் பிரஸ்தாபித்துக் கொண்டிருந்தார். இவர்கள் எல்லோரும் கொழும்பு மேல்வர்க்கத்தைச் சார்ந்தவர்கள். யாருக்கு என்ன கிடைக்கிறதோ இல்லையோ, கொழும்பு மேற்றட்டு வர்க்கத்தைச் சேர்ந்த மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களும் சேவைகளும் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட, நாட்டை ஆண்ட எந்த அரசாங்கமும் அனுமதித்ததில்லை. அதனால், அவர்களுக்கு நாட்டின் பெரும்பான்மை மக்களின் அன்றாடப் பிரச்சினை தொடர்பிலான எந்த அறிவும் அனுபவமும் இருந்ததும் இல்லை. ஆனால், இன்றைக்கு ராஜபக்‌ஷர்களின் ஆட்சிக் குழப்பத்தால், அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும், அதனால் எழும் நெருக்கடி என்றால் என்ன என்று புரியத் தொடங்கி இருக்கின்றது. ராஜபக்‌ஷர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் உழுந்து, மஞ்சள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதிக்கான தடையை, எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் விதித்தார்கள். உழுந்தின் விலை கிலோகிராம் ஒன்றுக்கு இரண்டாயிரம் ரூபாய் வரை எட்டியது. உழுந்தின் மீதான இறக்குமதித் தடையை நீக்குமாறு, கொழும்பு மொத்த வியாபாரிகள் உள்ளிட்ட தரப்புகள் அரசாங்கத்திடம் கோரிய போது, உழுந்தை தமிழ் சிறுபான்மை மக்களே, அதிகமாக நுகர்பவர்கள்; அதனால், அதன் மீதான இறக்குமதிக்கான தடையை நீக்க வேண்டியதில்லை என்ற தோரணையிலான பதில் வழங்கப்பட்டது. உழுந்தின் மீதான தடை, சிங்கள மக்களைப் பெரியளவில் பாதிக்கவில்லை. அவர்களின் உணவுப் பழக்கத்தில், உழுந்து அவ்வளவு பெரிய வகிபாகத்தை எடுத்துக் கொள்ளவில்லை. இன்னொரு நாளில், அரிசி இறக்குமதியை அரசாங்கம் மட்டுப்படுத்தியது. இலங்கையின் அரிசி ஆலை முதலாளிகள், இதுதான் சந்தர்ப்பம் என்று, அரிசி விலையைத் தாறுமாறாக உயர்த்தினர். கடந்த இரண்டு ஆண்டுகளில் அரிசியின் விலை 30 சதவீதத்தால் அதிகரித்து இருக்கின்றது. இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தல் என்பது, இலங்கையின் பணம் வெளிச் செல்வதைத் தடுக்கும் நோக்கில் என்ற பொருளாதார சிந்தனை முன்வைக்கப்படுகின்றது. அதில், குறிப்பிட்டளவு உண்மையும் இருக்கின்றது. ஆனால், நாட்டு மக்களின் வயிற்றுப் பசியோடு விளையாடிக் கொண்டு, ‘எடுத்தோம் கவிழ்த்தோம்’ என்று எந்தவோர் அரசாங்கமும் முடிவுகளை எடுக்க முடியாது. ராஜபக்‌ஷர்கள் அதனை எந்தவித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் செய்து கொண்டிருக்கிறார்கள். கொவிட்-19 பெருந்தொற்று, மக்களின் வாழ்வாதாரத்தைக் கிட்டத்தட்ட முடக்கிப் போட்டுவிட்டது. வட்டிக் கடைகளிலும் கடன்களிலும் காலத்தைக் கடத்தும் நிலையொன்றுக்குள் நாட்டின் பெரும்பான்மையானவர்கள் சென்றுவிட்டார்கள். அப்படியான நிலையில்தான், அத்தியாவசியப் பொருட்களுக்கான இறக்குமதித் தடையும் அதனால் உள்நாட்டில் பொருட்களின் விலை அதிகரிப்பும், பெரும் சுமையாக மாறுகின்றது. நாட்டின் எந்தவொரு பாகத்திலும், பால்மா பைகளைப் பெற முடியாத சூழல் இருக்கின்றது. இலங்கை மக்களின் உணவு, தேநீரோடு ஆரம்பிப்பது! பல இலட்சக்கணக்கான மக்களின் காலை உணவே, பால் தேநீர் மட்டுந்தான். அப்படியான நிலையில், பால்மா பைகளுக்கான தட்டுப்பாடு, அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதார கொள்கைகளால் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றது. டிஇந்தியா உள்ளிட்ட நாடுகள் போல, இலங்கையில் பால் தேநீர், நேரடியாகப் பாலைக் கொண்டு தயாரிக்கப்படுவதில்லை. ஏனெனில், நேரடியான பாலின் விலை, பால்மா விலையோடு ஒப்பிடும் போது மிகவும் அதிகம். எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது, நல்லாட்சி அரசாங்கத்தினரின் சமையல் எரிவாயு விநியோக குழப்பத்தை விமர்சித்த ராஜபக்‌ஷர்கள், இன்றைக்கு தேநீர் தயாரிப்புக்கான பால்மாவுக்கான தட்டுப்பாடு, உணவுத் தயாரிப்பில் பெரும் பங்கை எடுத்துக் கொள்ளும் அரிசிக்கான விலை அதிகரிப்பு என்று செய்து, இறுதியில் சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு வரையில் கொண்டு வந்து சேர்ந்திருக்கின்றார்கள். நாட்டின் உள்ளூர் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது என்பது, எந்தவோர் அரசாங்கமும் செய்ய வேண்டியதுதான். ஆனால், மக்களின் பொருளாதார நிலை, அத்தியாவசியப் பொருட்களின் நெருக்கடிகள் குறித்து, எந்தவித தெளிவும் இல்லாமல், முடிவுகளை எடுக்கும் போது, நாடு இவ்வாறான நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டி வரும். இதனால், நாட்டில் கறுப்புச் சந்தையொன்று பெரிய அளவில் வளரும். ஒரு சில பண முதலைகள் மாத்திரம் கறுப்புப் பணத்தை சேர்க்கும். கறுப்புப் பணத்தால் நாட்டுக்கு எந்தவொரு பயனும் ஏற்படாது. அதுதான், துறைசார் நிபுணர்களுடன் ஆலோசித்து, ஆட்சியாளர்கள் முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதாகும். நாடு ஏற்கெனவே கடனில் முழ்கிக் கொண்டிருக்கின்றது. நாட்டின் பணப்பெறுமதி என்பது படுவீழ்ச்சி கண்டுள்ளது. அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதி, இன்றைய சூழலில் 230 ரூபாய் அளவுக்கு வந்துவிட்டது. வங்கிகளுக்கு ஊடாக 200 ரூபாய் அளவில் பேணப்பட்டாலும், உண்மை நிலை மோசமானது. அதனால்தான், அத்தியாவசியப் பொருட்களில் விலை உயர்வும் கிடுகிடுவென அதிகரித்திருக்கின்றது. ராஜபக்‌ஷர்களின் புதிய இலங்கைக்கான இலக்கு என்பது, அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு, விலை அதிகரிப்பு என்கிற சாதாரண மக்களின் மீதான நெருக்கடிகளுடன் ஆரம்பித்திருக்கின்றது. ராஜபக்‌ஷர்களுக்காக அளிக்கப்பட்ட 69 இலட்சம் வாக்குகளும் இவ்வாறான கறுப்பு விடியலுக்கானதா என்று தென் இலங்கை கண்ணீர் வடிக்கத் தொடங்கியிருக்கின்றது. இந்த நிலையிலிருந்து நாடு மீள்வதற்கான எந்தவோர் ஏற்பாடுகளையும் காண முடியவில்லை. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மக்களின்-பசியோடு-விளையாடும்-ராஜபக்-ஷர்கள்/91-278637
 11. ‘அரந்தலாவ படுகொலை’ விசாரணைகள்: ராஜபக்‌ஷர்களின் புதிய திட்டம் புருஜோத்தமன் தங்கமயில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம், ‘அரந்தலாவ படுகொலை’ தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக, சட்டமா அதிபர் திணைக்களம், உயர்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) அறிவித்திருக்கின்றது. 1987ஆம் ஆண்டு, ஜூன் இரண்டாம் திகதி, அம்பாறை, அரந்தலாவ பகுதியில் வைத்து, இளம் பிக்குகள் அடங்கிய 33 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் படுகொலையை, தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டதாக, அரசாங்கம் குற்றஞ்சாட்டி வந்திருக்கின்றது. இந்த நிலையில், குறித்த படுகொலைச் சம்பவத்தில், மயிரிழையில் உயிர்தப்பிய ஒருவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையிலேயே, 34 வருடங்களுக்குப் பிறகு, அரந்தலாவ படுகொலை தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும், இலங்கையில் திட்டமிட்ட இனவன்முறைகள், கலவரங்கள், படுகொலைகள், வன்முறைச் சம்பவங்கள் என்று தொடர்ச்சியாக இடம்பெற்று வந்திருக்கின்றன. 1915இல் கண்டியில் ஆரம்பித்து, தென் இலங்கை பூராவும் பரவிய சிங்கள - முஸ்லிம் கலவரம் தொடங்கி, 2018இல் கண்டி, திகனவில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட வன்முறைகள் வரையில், ‘கறுப்பு’ வரலாற்றை நாடு கொண்டிருக்கின்றது. 1958, 1977களில் தமிழ் மக்களுக்கு எதிராக, பௌத்த சிங்களப் பேரினவாதம், தனது அரசியலின் பிரதான அம்சமாக, அடக்குமுறையைப் பயன்படுத்திக் கொண்டது. நாட்டுக்காக உழைத்து, ஓடாய்த் தேய்ந்த மலையக மக்களை, அவர்களின் வாழ்விடங்களில் இருந்து துரத்தியடித்த சிங்களப் பேரினவாதம், அதே பாணியிலான அடக்குமுறையை கொழும்பிலும் அதை அண்மித்த பகுதிகளிலும் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு எதிராக, 1983ஆம் ஆண்டு திட்டமிட்ட கலவரமாக ‘கறுப்பு ஜுலை’யை அரங்கேற்றி, குருதி குடித்தது. அத்தோடு, வடக்கு - கிழக்கில் தன்னுடைய கொடுங்கரங்களை நீட்டத் தொடங்கியது. 2009இல் முள்ளிவாய்க்கால் பேரழிவு, அதன் உச்சமாக அமைந்தது. நாட்டில் இனமுரண்பாடுகள் என்கிற பெயரில், திட்டமிட்ட இனவன்முறைகள் அரங்கேற்றப்பட ஆரம்பித்தது முதல், அனைத்துச் சமூகங்களுக்குள்ளும் இருந்தும், மனித மாண்புகளுக்கு எதிரான படுகொலைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, புல்லுமலைப் படுகொலைகள், தங்கவேலாயுதபுரம் படுகொலைகள், அரந்தலாவ படுகொலைகள், சத்துருக்கொண்டான் படுகொலைகள், காத்தான்குடி படுகொலைகள், நவாலி தேவாலய படுகொலைகள், நாகர்கோவில் பாடசாலைப் படுகொலைகள், கெப்பட்டிக்கொல்லாவ படுகொலைகள், செஞ்சோலைப் படுகொலைகள் என்று படுகொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதவை. இவ்வாறான படுகொலைகள் தொடர்பில், அது இடம்பெற்ற காலத்திலும் சரி, அதன் பின்னரும் சரி, நீதியான விசாரணைகள் ஏதும் இடம்பெற்றிருக்கவில்லை. அதிக தருணங்களில், அந்தப் படுகொலையைப் புரிந்த தரப்புகள், அந்தப் படுகொலைகளில் கொல்லப்பட்ட மக்களைப் பயங்கரவாதிகளாகவே சித்திரித்திருக்கின்றன. ஆனால், அங்கு இன- மத பேதமின்றி, அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கான நீதி என்பது, என்றைக்குமே கிடைக்காத ஒன்றாகவே இருந்திருக்கின்றது. இந்தப் படுகொலைகளின் சாட்சிகள், இன்றைக்கும் நடைப்பிணங்களாக இருக்கிறார்கள். படுகொலைகளைப் புரிந்தவர்களும் அவர்களை ஏவியவர்களும் கூட, இன்றைக்கும் இருக்கிறார்கள். முள்ளிவாய்க்கால் இறுதி நாள்களில், தங்களது உறவுகளைப் பாதுகாப்புத் தரப்பிடம் கையளித்தவர்கள், 12 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர்களைத் தேடி அலைகிறார்கள்; வீதிகளில் காத்திருக்கிறார்கள்; நீதிமன்றங்களின் படிகளிலும் ஏறுகிறார்கள். ஆனால், அவர்களுக்கான பதில் சூனியமாகவே இருக்கின்றது. அப்படி அலைந்து திரிந்த பல தாய்மாரும் தந்தைமாரும், நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கிறார்கள். இவையெல்லாம் நாளாந்த கட்சிகளாக, வடக்கு - கிழக்கில் அரங்கேறி வருகின்றன. இவ்வாறான கட்டத்தில்தான், அரந்தலாவ படுகொலைகள் தொடர்பிலான விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றன. மனித குலத்துக்கு எதிரான எந்தவொரு நிகழ்வையும் அனுமதிக்க வேண்டியதில்லை. அவற்றுக்கு எதிரான நீதி என்பது, உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதுதான், அவ்வாறான குற்றங்கள் மீள நிகழாது இருப்பதை உறுதி செய்யும். ஆனால், தற்போது அரந்தலாவ படுகொலைகள் தொடர்பிலான விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டு இருப்பதை, நீதிக்கான தேடலாக மட்டும் கொள்ள முடியவில்லை என்பதுதான் இங்குள்ள முக்கிய விடயம். ராஜபக்‌ஷர்கள் எனும் பெரும் கப்பல், தென் இலங்கையின் எதிர்பார்ப்புகளை எல்லாமும் பொய்ப்பித்துக் கொண்டு முழ்கிக் கொண்டிருக்கின்றது. அப்படியான நிலையில், ராஜபக்‌ஷர்கள் வழக்கமாகக் கையாளும் இன, மத அடிப்படைவாதத்தை முன்னிறுத்திக் கொண்டு, தப்பித்துக் கொள்ளலாம் என்ற நோக்கில் முயற்சிப்பதாகக் கொள்ளலாம். நல்லாட்சிக் காலத்தில், அரசாங்கத்துக்கு எதிராக வீதியில் இறங்கிய ராஜபக்‌ஷ ஆதரவு தொழிற்சங்கங்களில் அநேகமானவை, இன்றைக்கு ராஜபக்‌ஷர்களுக்கு எதிராகவே வீதியில் இறங்கி இருக்கின்றன. கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில், அனைத்துத் தரப்பினரும் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்ற நிலையில், ராஜபக்‌ஷர்களுக்கு ஆதரவாகக் கடந்த காலத்தில் வீதிகளில் இறங்கிய தரப்பினரும், இன்றைக்கு அவர்களுக்கு எதிராகவே வீதியில் இறங்கியிருப்பது, தென் இலங்கையின் ஒட்டுமொத்த மனநிலையையும் வெளிப்படுத்துகின்றது. குறிப்பாக, ராஜபக்‌ஷர்களுக்காக பௌத்த விகாரைகளுக்கு ஊடாக, பெரும் பிரசாரங்களை முன்னெடுத்த பௌத்த மகாசங்கங்களும் தலைமைப் பிக்குகளும், ராஜபக்‌ஷர்களுக்கு எதிராகவே இன்றைக்குத் திரும்பியிருக்கின்றனர். அவ்வாறான நிலையில்தான், 34 வருடங்களுக்கு முன்னரான பௌத்த பிக்குகள் படுகொலை செய்யப்பட்ட அரந்தலாவ படுகொலை விசாரணைகள், மேலெழுந்திருப்பதைக் கொள்ள வேண்டியிருக்கின்றது. அதன்மூலம், பௌத்த மகாசங்கங்களை ஒரு வகையில் கையாளலாம் என்பது, ராஜபக்‌ஷர்களின் எதிர்பார்ப்பாக இருக்கலாம். ராஜபக்‌ஷர்கள் மீது மாத்திரமல்ல, அவர்களின் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையும் மக்கள் மத்தியில் மாத்திரமல்ல, அரச பங்காளிகளிடமும் இழக்கப்பட்டு விட்டது. அரச பங்காளிகள், புதிய அரசியல் தலைமையை நோக்கி நகர்வதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். 2015இல் மைத்திரிபால சிறிசேனவை முன்னிறுத்திக் கொண்டு எழுந்த அணி போன்றதொரு நிலையை, மீண்டும் உருவாக்கலாம் என்ற யோசனையோடு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. மங்கள சமரவீர, குமார வெல்கம உள்ளிட்ட தரப்புகள், பண்டாரநாயக்க குடும்பத்திலிருந்து ஒருவரை, மீண்டும் அரசியலுக்கு அழைத்து வருவதன் மூலம், ராஜபக்‌ஷர்களை அரங்கிலிருந்து சிறிய காலத்துக்காவது அகற்றலாம் என்று சிந்திக்கிறார்கள். குறிப்பாக, சந்திரிகா குமாரதுங்கவின் மகனை, ‘கற்ற கனவான்’ மற்றும் ‘பரம்பரை அரசியல்வாதி’ என்கிற அடையாளங்களோடு தென் இலங்கையில் முன்னிறுத்தும் சூழல் உருவாகி இருக்கின்றது. அவ்வாறானதொரு சந்தர்ப்பம் எழுந்தால், பண்டாரநாயக்க குடும்பத்தை நோக்கி, மகா நாயக்க பீடங்கள் செல்லும் வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக, கண்டிச் சிங்கள பீடங்கள், தங்களது பிடியை மீண்டும் பண்டாரநாயக்க குடும்பத்தினூடாக நிறுவலாம் என்றும் யோசிக்கலாம். பௌத்த பீடங்கள் மீது, ராஜபக்‌ஷர்கள் போல வேறெந்தத் தரப்பும் எப்போதுமே ஆளுமை செலுத்தியதில்லை. தங்களது நிலைப்பாடுகளை விமர்சிக்கின்ற தருணங்களில், பௌத்த பீடங்களுக்குள்ளேயே பிளவுகளை ஏற்படுத்தும் அளவுக்கான ஏற்பாடுகளை ராஜபக்‌ஷர்கள் அவர்களின் முதல் ஆட்சிக் காலங்களில் செய்திருக்கிறார்கள். அவ்வாறானநிலை, ராஜபக்‌ஷர்களின் ஆட்சி, காலவரையறையின்றி தொடர்ந்தால், மீண்டும் உருவாகலாம் எனும் நிலையில், பண்டாரநாயக்க குடும்பத்தை நோக்கி ஆதரவுக் கரத்தை, பௌத்த பீடங்கள் நீட்டுவது இயல்பானது. அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்கிற கேள்வி, ராஜபக்‌ஷ குடும்பத்துக்குள் தலையெடுத்து விட்டது. கோட்டாபய ராஜபக்‌ஷ, “மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவேன்” என்று அண்மையில் அறிவித்திருக்கின்றார். அவரது இளைய சகோதரரான பசில் ராஜபக்‌ஷ, 2024ஐ தன்னுடைய ஜனாதிபதிக்கான பயணமாகக் கட்டமைக்கின்றார். இன்னொரு பக்கம், மஹிந்த ராஜபக்‌ஷவுக்குத் தன்னுடைய மூத்த மகனான நாமலின் எதிர்காலம் குறித்த பயம் தொற்றிக் கொண்டிருக்கின்றது. அப்படியான முரண்பாடுகள், ராஜபக்‌ஷர்களுக்கு இடையில் உருவாகியிருக்கும் நிலையில், பண்டாரநாயக்க குடும்ப வாரிசு பற்றிய அச்சம், அவர்களுக்கு எழுவது இயல்பானது. அந்தவொரு நிலைமையைக் கையாள்வதற்கான ஒரு கருவியாக, அரந்தலாவ படுகொலை விசாரணை விடயம், தென் இலங்கையில் மேலே கொண்டுவரப்பட்டு இருக்கின்றது என்றும் கொள்ளலாம். காலம் தன்னுடைய பதிலைச் சொல்லும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அரந்தலாவ-படுகொலை-விசாரணைகள்-ராஜபக்-ஷர்களின்-புதிய-திட்டம்/91-278122
 12. வடக்கு செயலாளர் நியமனமும் ராஜபக்‌ஷர்களின் திட்டமும் புருஜோத்தமன் தங்கமயில் வடக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலாளராக சமன் பந்துலசேன, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கெனவே, வவுனியா மாவட்டத்தின் செயலாளராகப் பதவி வகித்தவர். ராஜபக்‌ஷர்களின் ஆட்சியில், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஆளுநர்களாக, முன்னாள் படைத்துறை அதிகாரிகளை நியமிப்பது வழக்கம். ஏற்கெனவே, ஜி.ஏ. சந்திரசிறி வடக்கு ஆளுநராக ஆறு வருடங்கள் அளவில் பதவி வகித்திருக்கின்றார். அப்படிப்பட்ட நிலையில், 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலோடு, ராஜபக்‌ஷர்களின் மீள் வருகையின் போது, வடக்கு ஆளுநராக பி.எஸ்.எம். சார்ள்ஸ் நியமிக்கப்பட்டார். அந்த நியமனம், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் பரிந்துரையின் பேரில் நிகழ்ந்ததாகச் சொல்லப்பட்டது. ராஜபக்‌ஷர்கள் மீண்டும் அதிகாரத்துக்கு வந்ததும், இராணுவம் உள்ளிட்ட படைத்துறை அதிகாரிகளைக் கொண்டு, வடக்கு, கிழக்கை ஆக்கிரமிக்கிறார்கள் என்கிற விமர்சனங்கள் எழுவதைத் தடுக்கும் நோக்கில், வடக்கு ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸும், கிழக்கு ஆளுநராக அநுராதா யகம்பத்தும் நியமிக்கப்பட்டார்கள். மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், மாகாணங்களில் நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும், ஆளுநர் ஊடாக மத்திய அரசால் முன்னெடுக்கப்படுகின்றன. ஏற்கெனவே, வடக்கு, கிழக்கை நோக்கி, பௌத்த சின்னங்களை தேடுகிறோம் என்கிற பெயரில், ஜனாதிபதியின் கீழான செயலணிகள், தமிழரின் பாரம்பரிய நிலங்களை ஆக்கிரமித்து வருகின்றன. அதன் போக்கிலும், வடக்கு மாகாணத்தின் புதிய செயலாளராக சமன் பந்துலசேனவின் நியமனத்தையும் கொள்ள வேண்டியிருக்கின்றது. அதுபோல, இந்த நியமனத்துக்கு இன்னொரு வடிவமும் உண்டு. ராஜபக்‌ஷர்கள் மீதான அதிருப்தி, தென் இலங்கையில் வரலாறு காணாத அளவில் அதிகரித்திருக்கின்ற நிலையில், அதை அவர்கள் கடப்பதற்கான வழக்கமான யுக்திகளைக் கையாண்டு வருகிறார்கள். அதாவது, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் ஊடாக, பௌத்த சிங்களவர்களின் பாதுகாவலர்கள் தாங்கள்தான்; எனவே, தங்களை விட்டால் தென் இலங்கையர்களுக்கு யாரும் இல்லை என்கிற விடயத்தை, மீண்டும் முன்வைக்கிறார்கள். அதன் போக்கிலும், வடக்கு மாகாணத்தின் செயலாளர் நியமனத்தைக் கொள்ள முடியும். ஏனெனில், தமிழ் சரளமாக அறியாத ஒருவரை, வடக்கு மாகாணத்தின் செயலாளராக நியமிக்கும் போது, அதைத் தமிழ்த் தலைவர்களும் கட்சிகளும் எதிர்க்கும். அதை ஊடகங்களினூடாகத் தென்இலங்கையில் பிரசாரப்படுத்தி, தங்கள் மீதான உண்மையான அதிருப்தியை, இனவாத அடையாளங்கள் ஊடாகக் கடக்க நினைப்பதாகக் கொள்ளலாம். ‘வடக்கு மாகாணத்தின் மக்கள் தொகையில் 95 சதவீதமானவர்கள் தமிழ் பேசுபவர்கள். அங்கிருந்து தெரிவாகியிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 10 பேரும், தமிழ் பேசுபவர்கள். அப்படியான நிலையில், தமிழ்மொழியை சரளமாகப் பேசக்கூடிய ஒருவர், வடக்கு மாகாணத்தின் செயலாளராக நியமிக்கப்பட வேண்டும்..’ என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எழுதி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதுபோல, வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்களும், சமன் பந்துலசேனவின் நியமனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். ஆனால், இந்த எதிர்ப்புகளையெல்லாம் மீறி, திங்கட்கிழமை (26) சமன் பந்துலசேன, வடக்கின் புதிய செயலாளராக பதவியேற்றுவிட்டார். நாட்டின் பொருளாதாரம், மீட்கப்பட முடியாத வீழ்ச்சியைச் சந்தித்து நிற்கின்றது. ராஜபக்‌ஷர்களின் வருகை, நாட்டை ‘திவால்’ நிலைக்கு இட்டுச் சென்றுவிட்டதான நிலையை, தென் இலங்கை மக்களேகூட உணரத் தொடங்கிவிட்டார்கள். பஷில் ராஜபக்‌ஷ நிதி அமைச்சராகப் பொறுப்பேற்பதன் ஊடாக, நாட்டின் பொருளாதாரத்தைக் காப்பாற்றிவிடுவார் என்று, ராஜபக்‌ஷர்களுக்கு ஆதரவான தென் இலங்கை ஊடகங்கள், நாளொரு வண்ணமாகப் புளுகிக் கொண்டிருந்தன. ஆனால், அவரின் பொருளாதாரத் திட்டங்கள், முன்வைப்புகள் குறித்து, அவர் பதவியேற்ற கடந்த இரண்டு வாரங்களில், மெச்சக்கூடிய அளவுக்கு எதுவும் நிகழ்ந்துவிடவில்லை. மாறாக, ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற முழக்கத்தை, தேர்தல் மேடைகளில் முழங்கிய ராஜபக்‌ஷர்கள், இன்றைக்கு சமையல் எரிவாயுவின் விலையை மாவட்ட ரீதியாக வகைப்படுத்தி வெளியிட்டிருக்கிறார்கள். கொழும்பில் இருப்பவர்கள் ஒப்பீட்டளவில் குறைந்த விலையிலும், யாழ்ப்பாணத்தில் இருப்பவர்கள் அதிக விலையிலும் சமையல் எரிவாயுவைப் பெறும் நிலையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். சமையல் எரிவாயு விநியோக நடவடிக்கைகளின் செலவுகளை முன்னிறுத்தி, இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டாலும், ஒரு பொருளின் விற்பனை விலை என்பது, நாட்டிலுள்ள அனைவருக்கும் பொதுவான ஒன்றாக இருக்க வேண்டும். இதை ஓர் ஒழுங்காக, உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்களுக்கான விதிகளில் அரசாங்கம் பேண வேண்டும். அதன்மூலமே நுகர்வோரின் உரிமையைப் பாதுகாக்க முடியும். இன்றைக்கு சமையல் எரிவாயுவின் விலையை, விநியோகத்துக்கான தூரத்தைக் கணக்கிட்டு நிர்ணயிக்கும் போது, ஏனைய உற்பத்தியாளர்களும் விநியோகஸ்தர்களும் மற்றைய அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகளையும் பிரதேசவாரியாக உயர்த்திக் கொள்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திவிடும். அது, கொழும்பிலிருந்து தூரவுள்ள பிரதேச மக்களின் மீதான சுமையாக மாறும். நாட்டின் பொருளாதார அடிப்படை என்ன, அதை எவ்வாறு காப்பாற்றிக் கொள்ளலாம் என்கிற விடயங்கள் குறித்து, தூரநோக்குள்ள பார்வைகள் அற்றவர்களின் கைகளில், நாட்டின் நிதித்துறையும் திறைசேரியும் சென்றால், என்னவெல்லாம் நடக்கும் என்பதற்கு, இலங்கை நல்லதோர் உதாரணம். ராஜபக்‌ஷர்களின் முதலாம் ஆட்சிக்காலத்தில், நாட்டின் பொருளாதாரம் என்பது, வெளிநாட்டுக் கடன்களில் தங்கியிருக்க முடியும் என்கிற நிலை உருவாக்கப்பட்டது. கிடைக்கின்ற அனைத்து இடங்களிலும் கடன்கள் வாங்கிக் குவிக்கப்பட்டன. வாங்கிய கடன்களை எப்படி மீளச் செலுத்துவது, குறைந்தது அந்தக் கடன்களுக்கான வட்டிகளையாவது எப்படிச் செலுத்துவது என்கிற அடிப்படை குறித்து, எந்தச் சிந்தனையும் வெளிப்படுத்தப்படவில்லை. அதன் விளைவுகளை, ஒரு சில ஆண்டுகளுக்குள்ளேயே நாடு சந்தித்து நின்றது. மீண்டும் ஆட்சிக்கு வந்த போதும், ராஜபக்‌ஷர்கள் கடன்களைக் பெற்றுக் கொண்டு, ஆட்சி நடத்திவிட முடியும் என்று நம்பினார்கள். ஆனால், அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கான கடன்களைப் பெற முடியவில்லை. ஏன், அவர்களின் நெருங்கிய சகாவான சீனாவும் கூட, இம்முறை பெரியளவிலான கடன்களை வழங்குவதைத் தவிர்த்துவிட்டது. மாறாக, கடந்த காலத்தில் வழங்கிய கடன்களைக் காட்டிக் கொண்டு, தங்களின் திட்டங்களை இலங்கையில் நிறைவேற்றத் தொடங்கியிருக்கிறார்கள். சீனாவின் கடன்களுக்கான வட்டிகளை செலுத்துவது கூட, இன்றைக்கு இலங்கையால் முடியாத காரியம். அப்படியான நிலையில், புதிய கடன்களை இலங்கைக்கு வழங்கும் தேவை ஏதும் சீனாவுக்கு இல்லை. அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி, பயங்கர வீழ்ச்சியில் இருக்கின்றது. மத்திய வங்கியூடாக நடைமுறைக்கு மாறாக, தற்போது ரூபாயின் வீழ்ச்சியைத் தடுத்து வைத்திருந்தாலும், நாட்டில் வங்கிகளுக்கு வெளியிலான டொலர் பரிமாற்றங்களின் போது, ஒரு டொலருக்காக 220 ரூபாய் கொடுக்கப்படும் நிலை காணப்படுகின்றது. அரசாங்கத்தின் இவ்வாறான பின்னடைவுகளையும் அதிருப்தியையும், சமாளிப்பதற்கு வடக்கில் தமிழ் அறியாத ஒருவரை செயலாளராக நியமித்து, அதன்மூலம் எழும் எதிர்வினைகளை, கவனக் கலைப்பானாக தென் இலங்கையில் காட்ட ராஜபக்‌ஷர்கள் முயற்சிக்கிறார்கள். அதுபோல, பல விடயங்களை தமிழ், முஸ்லிம் மக்களை நோக்கி இன்னும் நிகழ்த்துவார்கள். அவ்வாறான கட்டங்களில் ஜனநாயக ரீதியாக விடயங்களை எதிர்கொண்டு, தென் இலங்கை மக்களிடம் விடயங்களை விளக்கி, ராஜபக்‌ஷர்களின் சதித் திட்டங்களை முறியடிக்க வேண்டியது முக்கியமானது. அதற்கு, எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புகள் உள்ளிட்ட தரப்புகளின் கூட்டு முயற்சி முக்கியமானது. ஆனால், அவ்வாறானதொரு நிலையொன்று, இன்னமும் தோன்றியிருக்கவில்லை என்பதுவும் ராஜபக்‌ஷர்களுக்கான சாதகமான அம்சம் ஆகும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-செயலாளர்-நியமனமும்-ராஜபக்-ஷர்களின்-திட்டமும்/91-277578
 13. சிறுமியை தீயில் தள்ளிய கொடுங்கரங்கள் புருஜோத்தமன் தங்கமயில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் கொழும்பிலுள்ள வீட்டில் பணிபுரிந்த நுவரெலியா, டயகமவைச் சேர்ந்த சிறுமி ஹிஸாலினி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அண்மையில் உயிரிழந்தார். ஆரம்பத்தில் தற்கொலை முயற்சி என்று கூறப்பட்டாலும், முக்கிய பிரமுகர் ஒருவர் வீட்டில் பணிபுரியும் சிறுமியின் கைக்கு, மண்ணெண்ணெயோ அல்லது ஏதோவோர் எரிபொருளோ எப்படிக் கிடைத்தது என்று ஆரம்பித்து, பல சந்தேகங்கள் தொடர்ச்சியாக எழுந்தன. அந்தச் சந்தேகங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக, மரண விசாரணை அறிக்கையும் வெளியாகி இருக்கின்றது. சிறுமி, பாலியல் ரீதியான வன்முறைகளை எதிர்கொண்டிருந்தமை, அதில் வெளிப்பட்டிருக்கின்றது. இலங்கையில், 16 வயது வரையில் அனைவரும் கட்டாயக் கல்வியைப் பெற வேண்டும் என்கிறது சட்டம். ஆனால், 14 வயது நிரம்பியவர்கள் வேலைக்குச் செல்லலாம் அல்லது அமர்த்தப்படலாம் என்றும் இன்னொரு முரணான விடயத்தை, சட்டம் தன்னுள்ளே வைத்திருக்கின்றது. இந்த முரணைச் சரிசெய்யும் நோக்கில், வேலைக்கு செல்லும் வயதை, 16ஆக அதிகரிக்கும் சட்டமூலத்துக்கான அமைச்சரவைப் பத்திரத்தை, 2020ஆம் ஆண்டு அரசாங்கம் ஏற்றிருந்தது. ஆனால், அந்தச் சட்டமூலம் கொவிட்-19 பெருந்தோற்றுக் காலத்தில் நிறைவேற்றப்படாமல் காணாமற்போனது. பாராளுமன்றத்தில் தங்களுக்குத் தேவையான அனைத்துச் சட்டத்திருத்தங்களையும் நிறைவேற்றிய அரசாங்கம், இந்தவிடயத்தில் தவறியது. அதுதான், 15 வயது நிரம்பிய ஹிஸாலினியை வீட்டுப் பணிப்பெண்ணாகச் சேர்த்துக் கொள்வதற்கான சட்டத் தடையை இல்லாமல் செய்திருக்கின்றது. இவ்வாறான கவனயீனங்களும், பொறுப்பற்ற தனங்களாலும் கொழும்பு உள்ளிட்ட நகரப் பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் ஆயிரக்கணக்கான சிறுமிகள் பணிப்பெண்களாக அனுப்பப்படுகிறார்கள். அங்கு அவர்கள் தங்களுடைய வயதுக்கு மீறிய பணிச்சுமையையும் உடல் ரீதியான வன்முறைகளையும் எதிர்கொள்கிறார்கள். சவுதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்று, அங்கு கொடூரமாக மரண தண்டனையை எதிர்கொண்ட ரிஷானா நபீக்குக்கு அப்போது 17 வயது. ஆனால், உள்நாட்டிலேயே, அதுவும் மக்கள் பிரதிநிதி ஒருவர் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்து மரணித்திருக்கின்ற ஹிஸாலினியின் வயது 16. இங்கு இருவரும் சிறுமிகளே. வயதுக்குப் பொருந்தாக சூழலில் பணிக்கு அமர்த்தப்பட்டு பலிவாங்கப்பட்டு இருக்கின்றார்கள். ரிஷானா நபீக் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அதுவேகூட மனித உரிமைகளின் தடத்தில் அணுகப்படாத நிகழ்வு. கிட்டத்தட்ட அதுவும் ஒரு படுகொலையே. ஆனால், ஹிஸாலினியின் மரணத்தில் அயோக்கியத்தனமான கரங்கள் நீண்டிருப்பதற்கான காட்சிகள் வெளிப்படுகின்றன. “...எனது மகள் நெருப்புக்கு பயப்பிடுபவர். அவர் தீமூட்டிக் கொள்ளவில்லை; தீமூட்டியுள்ளனர். ‘இங்கு வேலை செய்ய முடியாது அழைத்துச் செல்லுங்கள்; இங்கு வேலை செய்பவர் என்னைத் தும்புத்தடியால் தாக்குகிறார்’ என மகள் இறுதியாகக் கூறினார். அவர் சிறிய பிள்ளை; தாக்க வேண்டாமெனக் கூறுங்கள் என்று மெடத்திடம் (ரிஷாட்டின் மனைவியிடம்) கூறினேன். மகளே ஏதேனும் செய்திருப்பார் எனக் கூறுவதாக இருந்தால், அந்தவீட்டில் ஏதோ நடந்துள்ளது...” என்று ஹிஸாலினியின் பெற்றோர் கூறியிருக்கின்றனர். ரிஷாட் பதியுதீனின் வீட்டில், சிறுமி ஹிஸாலினி தாக்கப்பட்டமை தொடர்பில், ரிஷாட்டின் மனைவியிடம் முறையிட்டுள்ளதாக சிறுமியின் பெற்றோர் கூறுகின்றனர். அப்படியானால், சிறுமி மீதான வன்முறை தொடர்பில், ஏற்கெனவே அறிந்திருந்த ரிஷாட்டின் மனைவி, அது குறித்து எந்த நடவடிக்கையையாவது எடுத்தாரா? எடுத்திருந்தால், அந்தச் சிறுமியின் மரணம் நிகழாமல் தடுக்கப்பட்டிருக்கும் இல்லையா? என்ற கேள்விகள் நிராகரிக்க முடியாதவை. அரசியல் ரீதியான நெருக்கடிகளை, ரிஷாட் பதியுதீன் தற்போது எதிர்கொண்டிருக்கின்றார். சிறுபான்மை இனமொன்றின் தலைவராக அவர் மீதான ஜனநாயக மீறல்களை, சட்டத்துக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்ப்பதும், போராடுவதும் அனைவரதும் கடமை. அதேபோல, அவரது வீட்டுக்குள் சிறுமி ஒருவருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் தொடர்பிலும், மரணத்துக்கான உண்மையான காரணங்களைக் கண்டறிவதும் அவசியமானது. அதனை, எந்தக் காரணம் கொண்டும் தவிர்த்துவிட முடியாது. அப்படியான நிகழ்வுகளுக்கு அல்லது பொய் பித்தலாட்டங்களுக்கு யாராவது துணை போகிறார்கள் என்றால், அவர்கள் சிறுமியின் மரணத்தின் பங்காளிகளாவார்கள். இன்றைக்கு நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியோ, அதன் பங்காளிகளோ சிறுமி ஹிஸாலினியின் மரணம் தொடர்பில் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான முஜிபூர் ரஹ்மான், சிறுமியின் மரணத்தை ரிஷாட்டுக்கு எதிரான சதி வலை எனும் நோக்கில் பேசுகிறார். இந்த மரணத்தை வைத்து, அரசாங்கமோ, வேறு எந்தத் தரப்போ தனிப்பட்ட நலன்களை அடைய முயற்சிக்கலாம். அதை நிராகரிக்க முடியாது. ஆனால், அதற்காக சிறுமியின் மரணத்தை அப்படியே விட்டுவிட்டு நகர முடியாது. அது, தொடர்ச்சியாக இவ்வாறான மரணங்களை ஊக்குவிக்கும் நடவடிக்கையாகும். பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு எதிரான வீட்டு வன்முறையை, வாழ்வின் ஓர் அம்சமாகவே இலங்கை போன்ற நாடுகள் கொண்டு சுமக்கின்றன. எவ்வளவு சட்டங்களை இயற்றினாலும், வீட்டு வன்முறைகளை, பாரம்பரிய நெறியாகக் கருதி முன்னெடுக்கின்றவர்கள் இன்னமும் ஏராளம் பேர் உண்டு. தன்னுடைய மனைவி, பிள்ளைகள் மீதே இவ்வாறான வன்முறைகளைப் புரிபவர்களை தண்டிக்காத சமூக மனநிலை, வீட்டுப் பணிப்பெண்கள் மீதான வன்முறைகளை எவ்வாறு கண்டுகொள்ளும் என்பது மேலான கேள்வியாகும்? பெரிய வசதி வாய்ப்புகளுக்காக வீட்டுப் பணிப்பெண்களாக யாரும் செல்வதில்லை. வறுமையும் பசி நெருக்கடியும் இவ்வாறான பணிகளை நோக்கி, பெண்களைத் தள்ளுகின்றன. வேலைக்குச் செல்லும் இடங்களில் ஒழுங்கான தங்குமிடம், உணவு, ஊதியம் இன்றி, சமயலறை, குளியலறை ஓரங்களில் படுத்துறங்கி உழைக்கும் ஆயிரக்கணக்கான சிறுமிகளும் பெண்களும், ஹிஸாலினி எதிர்கொண்டது மாதிரியான வன்முறைகளை நாளாந்தம் எதிர்கொள்கிறார்கள். இலங்கையில் வீட்டுப் பணிப்பெண்களின் மரணங்கள் அடிக்கடி பதிவாகின்றன. மாடியில் இருந்து குதித்து இறந்தவர்களாக, திருட்டை மறைப்பதற்காக தற்கொலை செய்தவர்களாக என்று அந்த உயிரிழப்புகள் சட்டத்தின் முன்னால் கட்டப்பட்டு அல்லது, பெரும் பணத்தின் முன்னால் ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டுமிருக்கின்றன. சிறுமி ஹிஸாலினியின் மரணத்தையும் அவ்வாறான ஒழுங்கொன்றின் ஊடாகக் கடந்துவிட முடியும் என்று ரிஷாட் பதியுதீனின் தரப்பினர் நினைக்கலாம். அவ்வாறான முயற்சியொன்று முன்னெடுக்கப்பட்டு இருப்பதாகப் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டுகின்றார். அதனாலேயே, சிறுமியின் மரணத்தை விசாரிக்கும் பொலிஸ் அதிகாரியின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் எழுப்பியிருக்கின்றார். அதிக தருணங்களில் வலியவர்களின் நீதி, அதிகாரத்தாலும் பணத்தாலும் வரையறுக்கப்படுகின்றன. அது, எளியோரை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. இன்றைக்கு, சிறுமி ஹிஸாலினியின் மரணத்தை முறையாக விசாரித்து, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதைத் தடுக்க முயற்சிக்கும் அனைத்துத் தரப்பினரும் வலியோருக்கான ஏவல் அடிமைகளே ஆவார். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சிறுமியை-தீயில்-தள்ளிய-கொடுங்கரங்கள்/91-277018
 14. சீனாவை மகிழ்விக்கும் ராஜபக்‌ஷர்கள் புருஜோத்தமன் தங்கமயில் சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இலங்கையில் புதிய 1,000 ரூபாய் நாணயக் குற்றி, செவ்வாய்க்கிழமை (ஜூலை 06) வெளியிடப்பட்டது. சர்வதேச ரீதியில், நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவை மேம்படுத்தும் நோக்கில், இன்னொரு நாட்டின் பெருமையான விடயங்கள் குறித்து, மற்றொரு நாடு, தன்னுடைய கௌரவங்களை வெளிப்படுத்துவது உண்டு. ஆனால், ஒரு நாட்டை ஆளும் கட்சியொன்றைக் கௌரவப்படுத்தும் நோக்கில், இன்னொரு நாட்டில் நாணயக் குற்றி வெளியிடப்படுவது ஆச்சரியமானது. ஏனெனில், இராஜதந்திர உறவு அல்லது, வெளிநாட்டு உறவு என்பது, அரசுகளுக்கு இடையிலான ஒன்றாகவே பார்க்கப்பட்டு வந்திருக்கின்றது. கட்சிகள், அமைப்புகள் உள்ளிட்ட கட்டமைப்புகளுடன், இன்னொரு நாடு உறவைப் பேணினாலும், அதைப் பெரிய கௌரவமாக வெளிப்படுத்துவது, அரசுகளின் நெறியல்ல. ஆனால், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைக் கௌரவப்படுத்துவதற்காக நாணயக் குற்றி வெளியிட்டதன் மூலம், இலங்கை அரசு அதைச் செய்திருக்கின்றது. பல நாடுகளும், நாணயங்களில் தங்களது தலைவர்களது படங்களைப் பொறிப்பதுண்டு. இந்திய ரூபாய்களில் காந்தியின் படம் இருக்கும். மன்னராட்சி அல்லது, அதையொத்த ஆட்சி முறையைக் கொண்ட நாடுகள், ஆட்சியிலுள்ள தலைவர்களின் படங்களையே பொறித்திருக்கின்றன. அவ்வாறானதொரு நிலையை, முள்ளிவாய்க்கால் மோதல்கள் முடிவுக்கு வந்த தருணத்தில், அப்போதைய மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கமும் செயற்படுத்தியது. நீல வண்ணத்தில், மஹிந்த ராஜபக்‌ஷவின் படத்துடன் ஆயிரம் ரூபாய் பணத்தாள் வெளியிடப்பட்டது. அது, நாட்டு மக்கள் மத்தியில் ஒருவித எரிச்சலை உண்டாக்கியது. அதாவது, தங்களது உழைப்பைக் கொட்டி ஊதியமாகவோ, வருமானமாகவோ பெறும் பணத்தில், அரசியல் தலைவர் ஒருவர் அத்துமீறி அமர்ந்திருப்பது மாதிரியான உணர்வை, மக்களிடம் ஏற்படுத்தியது. தேசத் தந்தையாக பார்க்கப்படும் மறைந்த தலைவர் ஒருவரது படம், பணத்தாள்களில் அச்சிடப்பட்டு இருப்பதற்கும், ஆட்சியிலுள்ள தலைவர் ஒருவர் பணத்தாள்களில் படமாக வலம் வருவதற்குமான வித்தியாசம் பெரியளவானது. மஹிந்தவின் படத்தைத் தாங்கிய பணத்தாள்கள், மன்னராட்சிக்குரிய அம்சங்களில் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. ராஜபக்‌ஷர்கள் தோற்கடிக்கப்பட்ட 2015ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியில், மஹிந்தவின் படத்தைத் தாங்கிய ஆயிரம் ரூபாய் பணத்தாள்கள், மெல்ல மெல்ல காணாமற்போயின. அது, வங்கிகளுக்கு ஊடாக, அரசாங்கத்தால் மீளப்பெறப்பட்டு இருக்கலாம். வெளிப்படையாக எந்த அறிவித்தலும் விடுக்கப்பட்டு இருக்கவில்லை. ஆனாலும் இன்றைக்கு அந்தப் பணத்தாள்கள், பாரியளவில் புளக்கத்தில் இல்லை. தென் இலங்கையால், பிரிவினையைத் தோற்கடித்த தலைவராக, பௌத்த சிங்களத்தின் தலைவராக, துட்டகைமுனுவின் வாரிசாகப் பார்க்கப்பட்ட மஹிந்த ராஜபக்‌ஷவின் படம் அச்சிடப்பட்ட பணத்தாள்கள் மீதான அதிருப்தியே, பலமாக இருந்திருக்கின்றது. அப்படியான நிலையில், சீனாவை ஆளும் கட்சியொன்றுக்காக, நாணயக்குற்றியை வெளியிடுவது என்பது, ஏற்படுத்தும் அதிருப்திகள் சொல்ல முடியாதவை. தென் இலங்கையில் ராஜபக்‌ஷர்கள் மீதான அதிருப்தி, என்றும் இல்லாதளவுக்கு அதிகரித்து இருக்கின்றது. குறிப்பாக, நாட்டைச் சீனாவிடம் ஒட்டுமொத்தமாக அடகுவைக்கும் நிலைக்கு தற்போதைய ஆட்சியாளர்கள் கொண்டு சென்றுவிட்டார்கள் என்பது, அதற்கான காரணமாகும். வீதி அபிவிருத்திப் பணிகள், பாரிய கட்டட கட்டுமானப் பணிகள், குளங்கள் அபிவிருத்திப் பணிகள், கடலட்டை பிடிப்பு தொடங்கி, நாட்டின் அனைத்து தொழிற்றுறைக்குள்ளும் சீனா நுழைந்துவிட்டது. நாட்டில் வேலையில்லாப் பட்டதாரிகளின் போராட்டம் என்பது, தொடர் கதையானது. ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் ஆட்சிக்கு வரத் துடிக்கும் கட்சிகள், வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான வாக்குறுதிகளைத் தேர்தல் அறிக்கையின் ஒரு சரத்தாகவே பேணுவதுண்டு. கடந்த ஜனாதிபதித் தேர்தலில், கோட்டாபய ராஜபக்‌ஷவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் கூட, வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான வாக்குறுதிகளை வழங்கி இருக்கின்றன. குறிப்பாக, ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு என்கிற விடயத்தை முன்வைத்திருந்தன. ஆனால், அப்படியான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் அளவுக்கு, அரசாங்கத்திடம் திட்டங்கள் ஏதும் இல்லை. ஏற்கெனவே முறையான திட்டங்கள் இன்றி, தேர்தல் நோக்கங்களுக்காக அரச பணியில் இணைக்கப்பட்ட இலட்சக்கணக்கானவர்கள் இருக்கிறர்கள். அவர்களுக்கான பணி, அதன் பொறுப்புப் பற்றியெல்லாம் எந்த வரையறையும் இல்லை. பலரும் பிரதேச செயலகங்கள், மாவட்டச் செயலகங்கள் உள்ளிட்ட அரச செயலகங்களில் பணியாளராக இணைக்கப்பட்டு இருக்கிறார்களே அன்றி, அவர்களுக்கான உண்மையான பணி என்ன என்பது குறித்த தெளிவு இல்லை. மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என்ற பெயரில் இணைக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களின் நிலை, அதற்கு நல்ல உதாரணமாகும். அத்தோடு, தேவைக்கு அதிகமாக பணியாளர்களை அரச சேவையில் இணைத்துவிட்டு, அவர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காகவும் வெளிநாடுகளிடம் கையேந்தும் நிலையும் ஏற்பட்டிருக்கின்றது. இப்படியான நிலையில், ஆக்கபூர்வமான வேலை வாய்ப்புகளின் பக்கம், இளைஞர் யுவதிகளைத் திருப்பாது, அந்த இடங்களில் வெளிநாட்டுப் பிரஜைகளைப் பணிக்கு அமர்த்திவிட்டு, சொந்த நாட்டு இளைஞர்களின் திறன்களை மழுங்கடிக்கும் வேலைகளை அரசாங்கம் செய்கின்றது. நாட்டுக்குள் ஆயிரக்கணக்கான சீனப் பிரஜைகள் கட்டுமானப் பணியாளர்களாக, பொறியியலாளராக, ஒப்பந்தக்காரர்களாகப் பணியாற்றுகிறார்கள். அவர்கள் தொடர்பில், எவ்வாறான நெறிமுறைகளை அரசாங்கம் பேணுகின்றது என்ற தெளிவும் இல்லை. இந்நிலையில், தென் இலங்கையில், அரசாங்கத்துக்கு எதிரான அதிருப்தி பாரியளவில் எழுந்திருக்கின்றது. இக்கட்டத்தில்தான், சீனாவை ஆளும் கட்சியைக் கௌரவப்படுத்துவதற்காக நாணயமும் வெளியிடப்பட்டு இருக்கின்றது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக யுத்தம் இடம்பெற்ற நாடு என்ற போதிலும், இலங்கை கடந்த ஆண்டு வரையில், மத்திய தர வருமானமுள்ள அபிவிருத்தி அடைந்து வரும் நாடாகவே கணிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு, அந்த இடத்திலிருந்து கீழிறக்கி, மிகவும் பின்தங்கிய மத்தியதர வருமானமுள்ள நாடாக இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வருமானம் என்பது, தொடர்ச்சியாக வீழ்ச்சியடையும் நிலையில், மக்களின் வாழ்க்கைத்தரம் மோசமாகி வருகின்றது. அதுவும், கொரோனா வைரஸ் பெருந்தொற்றால், வாழ்வாதாரச் சிக்கல்களோடு இருக்கின்ற மக்கள் மீது, பொருளாதாரக் கட்டுப்பாடுகள், வரிச்சுமைகள் பாரியளவில் ஏற்றி வைக்கப்படுகின்றன. நீண்டகாலத் திட்டங்கள் ஏதுமின்றி, பொருளாதாரக் கட்டமைப்பொன்றை தற்போதைய அரசு பேணுவதாலேயே, இவ்வாறான நிலை ஏற்பட்டு இருக்கின்றது. இன்றைய அரசாங்கம், இந்த மாதம், இந்தக் கால எல்லைக்குள் இவ்வளவு பில்லியன் டொலர் மீளச் செலுத்தப்பட வேண்டிய கடன்கள் அல்லது அதற்கான வட்டி என்பதைச் சிந்தித்து, நாட்டின் பொருளாதாரத் திட்டங்களை வகுக்கின்றது. கடனை ஒரு தரப்பிடம் இருந்து வாங்கும் போது, அதை மீளச் செலுத்துவதற்கான வருமானத்தை எங்கிருந்து பெற்றுக்கொள்ளப் போகிறோம் என்ற சிந்தை, இலங்கையை ஆண்ட எந்த அரசாங்கத்துக்கும் இல்லை. அதனாலேயே, ஒரு தரப்பிடம் வாங்கிய கடனைசச் செலுத்துவற்காக, இன்னொரு தரப்பிடம் கடன் வாங்கும் நிலை ஏற்பட்டு இருக்கின்றது. அமெரிக்க டொலர் ஒன்றுக்கு எதிரான, இன்றைய இலங்கை ரூபாயின் பெறுமதி 220 ரூபாய்கள் அளவில் இருக்கும் என்று கருதப்படுகின்றது. கடந்த இரு வாரங்களாக, டொலரின் பெறுமதி தொடர்பிலான வெளிப்படைத் தன்மையை இலங்கை மத்திய வங்கி வெளிப்படுத்தவில்லை. இவ்வாறான நிலைகளால், வாங்கிய கடன்களுக்காக, நாட்டை மெல்ல மெல்ல வெளிநாடுகளுக்கு எழுதிக் கொடுத்து வருகின்றார்கள். குறிப்பாக, இலங்கை சில தசாப்த காலங்களுக்குள், மீளச் செலுத்த முடியாத அளவு கடன்களை, சீனாவிடம் பெற்றிருக்கின்றது. அப்படியான நிலையில், கடன் கொடுத்தவர்கள் எஜமானர்களாவது இயல்பானது. அந்த எஜமானர்களை மகிழ்விப்பதற்காக, எந்த வேலையையும் செய்யும் நிலைக்கு, கடனாளிகள் செல்வார்கள். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைக் கௌரவித்து வெளியிடப்பட்ட நாணயக்குற்றியும் அதன் ஓர் அம்சமேயாகும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சீனாவை-மகிழ்விக்கும்-ராஜபக்-ஷர்கள்/91-275978
 15. ராஜபக்‌ஷர்களின் ஆட்சியில் திவாலாகும் நாடு புருஜோத்தமன் தங்கமயில் ராஜபக்‌ஷர்கள் மீண்டும் ஆட்சி பீடமேறி, ஒன்றரை ஆண்டுகளுக்கு உள்ளேயே, நாடு திவாலாகும் கட்டத்தை அடைந்திருக்கின்றது. ஏற்கெனவே பெறப்பட்ட கடன்களுக்கான வட்டிகளைச் செலுத்துவதற்கே, கடன்களைப் பெற வேண்டிய நிலை; உணவுப் பொருட்களின் இருப்பு அபாயக்கட்டத்தை அடைந்திருக்கின்றது; ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வழங்குமா என்ற சந்தேகம் நீடிக்கின்றது; உள்நாட்டு உற்பத்தி பாரிய வீழ்ச்சியைச் சந்தித்து இருக்கின்றது; விவசாயிகள் உரத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம், கறுப்புச் சந்தை பெரியளவில் விரிந்திருக்கின்றது. அங்கு ஒரு சில பண முதலைகளுக்கான வசதி வாய்ப்புகள் தங்கு தடையின்றி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருகின்றன. மக்களின் வியர்வையை மெல்ல மெல்ல உறிஞ்சி முடித்து, இப்போது இரத்தத்தையும் உறிஞ்சும் வேலைகளை ஆரம்பித்து இருக்கிறார்கள். நாட்டின் தேசிய வீரர்களாக, பாதுகாவலர்களாக முன்னிறுத்தப்பட்டே ராஜபக்‌ஷர்கள் மீண்டும் ஆட்சியில் அமர்த்தப்பட்டார்கள். அவர்களை ஆட்சியில் அமர்த்துவதற்காக, பௌத்த விகாரைகளுக்குள் இருந்து பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. தென் இலங்கையின் சமூகக் கட்டமைப்பின் ஆணி வேர், விகாரைகளுக்குள் இருக்கின்ற நிலையில், ராஜபக்‌ஷர்களின் மீள் வருகைக்கான கட்டியத்தை பௌத்த பிக்குகளே தலைமையேற்று மொழிந்தனர். ஆனால், அந்தப் பிக்குகளே ராஜபக்‌ஷர்கள் ஆட்சியில் அமர்ந்த குறுகிய காலத்துக்குள்ளேயே அவர்களுக்கு எதிராகத் திரும்பி இருக்கிறார்கள். மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அண்மித்த வெற்றியைப் பொதுத் தேர்தலில் பெற்று, தங்களுக்கு வேண்டிய அனைத்துச் சட்டத் திருத்தங்களையும் ராஜபக்‌ஷர்கள் குறுகிய காலத்துக்குள்ளேயே செய்தார்கள். ஆனால், ஆட்சியை ஒருமைப்படுத்தி முன்நகர்த்துவதற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்துவது குறித்துச் சிந்திக்க மறந்துவிட்டார்கள். அதனால், அரசாங்கத்தின் பங்காளிகள், அனுதாபிகள், திட்டம் வகுப்பாளர்கள் தொடங்கி அனைத்துத் தரப்பினரும் ராஜபக்‌ஷர்கள் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக, தென் இலங்கை தற்போது வெளிப்படுத்தியுள்ள அதிருப்தியின் அளவை, எந்தக் காலத்திலும் வெளிப்படுத்தியது இல்லை. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ தோற்கடிக்கப்பட்ட தருணத்திலும் கூட, தென் இலங்கை மக்கள் தற்போதுள்ள அதிருப்தியின் அளவை வெளிப்படுத்தி இருக்கவில்லை. ஆனால், இன்றைக்கு ராஜபக்‌ஷர்களின் நிலை என்பது, அபாயத்துக்குரிய கட்டத்தை அடைந்திருக்கின்றது. குறைந்தது பத்து ஆண்டுகளுக்கான ஆட்சியில் இருக்க வேண்டும் என்கிற திட்டத்தோடு 2019இல் ஆட்சி பீடமேறிய ராஜபக்‌ஷர்களுக்கு முதல் ஐந்து ஆண்டுகளையே பிரச்சினைகள் இன்றிக் கடக்க முடியுமா என்ற சிக்கல் ஏற்பட்டிருக்கின்றது. அண்மையில், எரிபொருள் விலையேற்றத்தை எதிர்த்து ஆளுங்கட்சியின் பிரதான கட்சியான பொதுஜன பெரமுனவே கண்டன அறிக்கை வெளியிடும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ, அந்தக் கட்சி முன்னிறுத்தி ஜனாதிபதியான கோட்டாய ராஜபக்‌ஷ, அந்தக் கட்சியின் கூட்டணியில் அங்கம் வகித்து மொட்டுச் சின்னத்திலேயே தேர்தலில் வென்ற உதய கம்மன்பில உள்ளிட்டவர்கள் கூடிப்பேசி, முடிவெடுத்து அறிவித்த எரிபொருள் விலையேற்றத்தை, பொதுஜன பெரமுன அறிக்கை ஊடாகக் கண்டிக்கிறது. அதிலும், எரிபொருள் அமைச்சராக கம்மன்பிலவை பதவி விலகுமாறும் கோருகிறது என்றால், ஆளுங்கட்சிக்குள் காணப்படும் குழப்பங்களின் அளவைப் புரிந்து கொள்ள முடியும். பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ பதவி வகிக்கின்ற போதிலும், 20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம், அவரின் அதிகாரங்கள் பிடுங்கப்பட்டுவிட்டன. அவ்வாறான நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினதும் அவரது இராணுவ செயலணியினதும் திட்டங்களின் படியே நாடு நிர்வகிக்கப்படுகிறது. இங்கு, அமைச்சர்களாக இருந்தாலும் அவர்களின் அதிகாரம் செல்லாக்காசான நிலைதான். அப்படியான நிலையில், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்‌ஷவை மீண்டும் பாராளுமன்றத்துக்குள் நுழைந்து அமைச்சராகப் பதவியில் அமர்த்தினால், தங்களின் அதிகாரங்களை மீளப்பெற முடியும் என்று பொதுஜன பெரமுனவில் குறிப்பிட்டளவான அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள். அதன்போக்கில்தான், பசிலின் பாராளுமன்ற பிரவேசத்துக்கான துதிபாடல்களும் ஆராதனைகளும் செய்யப்படுகின்றன. ஆனால், பசில் மீண்டும் அமைச்சரவைக்குள் வந்தால், ஆட்சி அதிகார மையம் இரு துருவங்களாக மாறும்; அது, ஜனாதிபதிக்கு அவ்வளவு இனிப்பானதாக இருக்காது என்று அவரது சகாக்கள் அச்சப்படுகிறார்கள். அத்தோடு, ஆளுங்கட்சியின் பங்காளிக் கட்சிகளுக்கு பசில் மீதான பயம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ஏனெனில், தங்களது கட்சிகளை இல்லாதொழித்து, ஒரே கட்சியாகப் பெரமுனவை, பசில் வளர்க்க நினைக்கிறார். அதன்மூலம், பங்காளிக் கட்சிகளின் தலையீடுகள் இன்றி, அடுத்த ஜனாதிபதி வேட்பாளராகத் தன்னை நிலைப்படுத்தலாம் என்பது பசிலின் திட்டம். அதனால்தான், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட பங்காளிக் கட்சிகளுக்கு எதிரான நிலையை, தன்னுடைய விசுவாசிகளைக் கொண்டு பசில் செய்கிறார். எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிராக வெளியிடப்பட்ட அறிக்கை, உண்மையில் உதய கம்மன்பிலவை இலக்கு வைத்து வெளியிடப்பட்டது. அண்மையில், விமல் வீரவன்சவின் அமைச்சின் கீழிருந்த அரச நிறுவனமொன்று, அவரிடமிருந்து மஹிந்த அமரவீரவின் அமைச்சுக்கு மாற்றப்பட்டது. அது தொடர்பில், அவருக்கு எந்தவித முன்னறிவிப்பும் விடுக்கவில்லை. அது குறித்து, விமல் வீரவன்ச ‘பேஸ்புக்’கில் புலம்பும் அளவுக்கு அரசாங்கத்தின் உள்குளறுபடிகள் இருக்கின்றன. இன்னொரு பக்கம், ராஜபக்‌ஷர்களின் பிரசார பீரங்கிகளாக இருந்த ஊடகங்கள் கூட, இன்றைக்கு எதிரான நிலையெடுத்து விமர்சிக்கத் தொடங்கிவிட்டன. ராஜபக்‌ஷர்களின் வருகை, நாட்டில் தேனையும் பாலையும் ஓட வைக்கும் என்று 24 மணி நேரமும் ஓதிக்கொண்டிருந்த சம்பந்தப்பட்ட ஊடகங்கள், அரசாங்கத்தின் மீதான மக்களின் அதிருப்தியைச் சமாளிக்க முடியாமல், அதனை மெல்ல மெல்ல வெளிப்படுத்த ஆரம்பித்துவிட்டன. கொரோனா பெருந்தொற்று, நாட்டு மக்களை அனைத்து விதத்திலும் பாதித்துவிட்டது. வருமானம் என்பது வெகுவாகக் குறைந்துவிட்டது. மக்கள் அடக்குக்கடைகளை நோக்கிச் செல்வது வாடிக்கையாகி விட்டது. நகை நட்டுகள் இல்லாத மக்களின் நிலை, இன்னும் மோசம். அப்படியான நிலையில், நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதாகக் கூறிக் கொண்டு, பௌத்த விகாரையின் பின்னணியில், ஒரு மணித்தியாலத்துக்கு மேலாகக் கடந்த கால ஆட்சிகளைக் குறைகூறி, மக்களை எரிச்சலூட்டுகிறார் ஜனாதிபதி. நாடு மீளமுடியாத பொருளாதார அபாயத்தின் இருக்கும் போது, அது குறித்துச் சிந்திக்காமல், மீண்டும் மீண்டும் தங்களின் அனைத்துத் தோல்விகளையும் கடந்த கால ஆட்சியாளர்கள் மீது போட்டுவிட்டு நழுவிவிட முடியும் என்பது, எவ்வளவு அபத்தமானது. அதிலும் நகைப்புக்குரியது என்னவென்றால், நல்லாட்சிக் காலம் என்கிற ஐந்து வருடங்களுக்கு முன்னாலுள்ள பத்து ஆண்டுகளையும் இதே ராஜபக்‌ஷர்கள்தான் ஆட்சி செலுத்தினார்கள். ஆனால், அதையெல்லாம் மறந்து நின்று, நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நல்லாட்சிக் காலம் மட்டுமே காரணம் எனும் தோரணை, ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்ற நிலைக்கு ஒப்பானது. ராஜபக்‌ஷர்கள் தொடர்ச்சியாக, போர் வெற்றி வாதத்தைத் தங்களது பிரதான காப்புக் கருவியாக கையில் ஏந்தி இருக்கின்றார்கள். இப்போதும் அதையே தூக்கிக் கொண்டு வருகிறார்கள். ஆனால், மக்களின் வயிற்றின் பசி, நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் போது, போர் வெற்றி வாதம் ஒரு பொருட்டுக்கும் உதவாது என்பது ராஜபக்‌ஷர்களுக்கு விளங்கவில்லை. நாட்டின் எதிர்காலம் குறித்த எந்தக் கரிசனையும் இன்றி, தங்களின் குடும்பங்கள், எதிர்கால ஆட்சிக்கான திட்டங்களை மாத்திரமே வைத்துக் கொண்டு, ராஜபக்‌ஷர்கள் முன்நகர்த்து கொண்டிருக்கிறார்கள். மற்றப்படி, அரசாங்கத்துக்குள் நிகழும் குளறுபடிகளும் கூட ராஜபக்‌ஷர்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டியின் போக்கிலானவைதான். ஆனால், நாடும் நாட்டு மக்களும் இவ்வளவு அபாயங்களைச் சந்தித்து நிற்கும் போது, பிரதான எதிர்க்கட்சியோ எந்தவித பொறுப்பும் இன்றி, தூங்கியே காலத்தைக் கழித்து வருகின்றது. அடுத்த தேர்தல் வர, இன்னமும் காலம் இருக்கின்றது. அப்போது விழித்தால் போதும் என்பது அவர்களின் உத்தேசம். அப்படியான நிலையில், நாடு எப்படித் தப்பித்துக் கொள்ளும்?` https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ராஜபக்-ஷர்களின்-ஆட்சியில்-திவாலாகும்-நாடு/91-275626
 16. ராஜபக்‌ஷர்கள் மீதான அதிருப்தியும் எதிர்க்கட்சிகளும் புருஜோத்தமன் தங்கமயில் ராஜபக்‌ஷர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து, 18 மாதங்களுக்குள்ளேயே தென் இலங்கை மக்களிடம் பெரும் அதிருப்திகளைச் சந்தித்து நிற்கின்றார்கள். ஜனாதிபதித் தேர்தலில் 69 இலட்சம் வாக்குகளையும் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அண்மித்த வெற்றியையும் ராஜபக்‌ஷர்கள் பெற்றிருந்தார்கள். அடுத்த பத்து ஆண்டுகளில், அசைத்துப் பார்க்க முடியாத ஆட்சிக் கட்டமைப்பொன்றை, ராஜபக்‌ஷர்கள் நிலைப்படுத்துவார்கள் என்று நம்பப்பட்டது. ஆனால், சில மாதங்களுக்குள்ளேயே ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான மனநிலை தென் இலங்கையில் எழுந்திருக்கின்றது. கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்து நெருக்கடிகள், மக்களைப் பாடாய்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், சாதாரண மக்களை மேலும் மேலும் நெருக்கடிக்குள் தள்ளும் முகமான அறிவித்தல்களை, அரசாங்கம் விடுத்திருக்கின்றது. ஆட்சிக்கு வந்த சில காலத்துக்குள்ளேயே உழுந்து, பயறு, மஞ்சள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மீதான இறக்குமதிக்கான தடை, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி விதிக்கப்பட்டது. அண்மைக்காலத்தில் அரிசி, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகள் அதிகரித்திருக்கின்றன. அரிசியை அடிப்படையாகக் கொண்டதே, இலங்கையர்களின் உணவு முறை. அப்படிப்பட்ட நிலையில், அரிசியின் விலை அதிகரிப்பு என்பது, கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்திருக்கின்றது. அதிலும், அரிசிக்கான தட்டுப்பாடு, இடைத்தரகர்கள் உள்ளிட்ட முதலைகளால் செயற்கையாக ஏற்படுத்தப்படுகின்றது. கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக் காலத்தில், அரிசிக்கான தட்டுப்பாடு உருவாகி இருக்கின்றது. அதை, சீர்செய்யும் நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவில்லை. இன்னொரு கட்டத்தில், விவசாய உர இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, அரசாங்கம் விதித்திருக்கின்றது. இயற்கை உர விவசாய முறைமையை நோக்கி, நாட்டை முன்நகர்த்த வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்‌ஷ கூறியிருக்கின்றார். அதற்காக எந்தவிதமான சவால்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டிருக்கின்றார். நாட்டின் விவசாயத்தை, இயற்கை உரத்தைப் பயன்படுத்தும் கட்டங்களை நோக்கித் திருப்புவது வரவேற்கக் கூடியதுதான். ஆனால், அதனை ஒரு சில நாள்களில், ஏன் சில வருடங்களில் கூட ஏற்படுத்திவிட முடியாது. அதற்கு நீண்ட காலத் திட்டமிடலுடன் கூடிய முன்னாயத்தமும் வேண்டும். மாறாக, ஒரே நாளில் தீர்மானத்தை எடுத்து அறிவித்துவிடுவதால், விவசாய முறைமையை மாற்ற முடியாது. நாட்டிலுள்ள விவசாயிகள், பெரும்போக விவசாயத்துக்காகத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருக்கின்ற நிலையில், உரத்துக்கான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக் காலத்திலும், உரத்துக்காகக் கடைகளுக்கு முன்னால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் காத்திருக்கிறார்கள். சரியான தருணத்தில் உரம் கிடைக்காமையால், வாடிக் கருகிய பயிர்கள் முன்னால் நின்று அழும் விவசாயிகளைக் காண வேண்டியிருக்கின்றது. ராஜபக்‌ஷர்களின் தேர்தல் கால வாக்குறுதிகளில் விவசாயிகளைக் காத்தல், குறிப்பாக, உரமானியங்களின் ஊடாக விவசாயத்துக்குப் புத்துயிர் அளிப்பது என்பன, முக்கியமான வாக்குறுதிகளாக வழங்கப்பட்டன. ஆனால், சதாரண விவசாயிகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்ளாமல், மேல் மட்ட சிந்தனைகளின் தீர்மானங்களில் அடிப்படையில் நெருக்கடி ஏற்படுத்தப்படுகின்றது. உணவுப் பொருட்களுக்கான கேள்வி அதிகமிருக்கின்ற நிலையில், நாட்டின் விவசாய முறைமை, இயற்கை வழிமுறையில் மாத்திரம் தங்கியிருக்க முடியாது. அதற்கான தயார்படுத்தல் ஏதும், கடந்த காலத்தில் முன்னெடுக்கப்படவில்லை. அப்படியான நிலையில், மக்களின் மீது நெருக்கடிகளை ஏற்படுத்தாத வகையில் திட்டங்களை வகுத்துச் செயற்படுத்த வேண்டும். ஆனால், அதனை ராஜபக்‌ஷர்களும் அவர்களின் ஆலோசகர்களும் செய்கிறார்கள் இல்லை. கடந்த சில மாதங்களுக்குள்ளேயே, விவசாய அமைச்சின் செயலாளர்கள் இருவர் இராஜினாமாச் செய்திருக்கிறார்கள். அது ஏன் என்று ஆராய்ந்தாலே, அரசாங்கத்தின் முறையற்ற சிந்தனைகள் தெளிவாகத் தெரியும். கடந்த வாரம், ‘ஷும்’ செயலி மூலமான கலந்துரையாடலொன்றில், ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சுரேன் ராகவன், “ராஜபக்‌ஷ அரசாங்கம், என்றைக்கும் இல்லாதளவுக்கு, தென் இலங்கை மக்களிடம் நம்பிக்கை இழந்திருக்கிறது” என்று கூறினார். ஆளுங்கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கிற ஒருவரால், பொது உரையாடல் தளத்தில், தனக்கு இருக்கின்ற நெருக்கடிகளை எல்லாம் தாண்டி நின்று, தென் இலங்கை மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்க முடிந்திருப்பது என்பது, கவனத்தில் கொள்ளக்கூடியது. நாட்டில் எதிர்க்கட்சி(கள்) எப்போதும் போல, இப்போதும் அமைதியாகவே இருக்கின்றன. நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து எதிர்வினையாற்றுவதற்கு, எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸ, நீண்ட காலத்தை எடுத்துக் கொள்கின்றார். சிலவேளை, ஒரு பிரச்சினை நடத்து முடிந்து, சில வாரத்துக்குப் பின்னர்தான் அவர், அந்தப் பிரச்சினை குறித்து எதிர்வினையாற்றுகிறார். அரசாங்கத்தின் தவறுகளை, அந்த நொடியிலேயே சுட்டிக்காட்டி, மக்களின் பிரச்சினைக்காகத் தொடர்ச்சியாகச் செயற்படும் எண்ணம் என்பது, எதிர்க்கட்சிகளிடம் காணக்கிடைக்கவில்லை. ராஜபக்‌ஷர்களின் ஆட்சியின் காலம் முடிவதற்கு, இன்னும் மூன்றரை ஆண்டுகள் இருக்கின்றன. அப்படியான நிலையில், பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை’ எனும் போக்கில், எதிர்க்கட்சியினர் செயற்படுகின்றனர். இன்னொரு தேர்தலொன்று அறிவிக்கப்பட்டால் அன்றி, எதிர்க்கட்சிகளை செயற்பாட்டுத் தளத்துக்குக் கொண்டு வருவது என்பது முடியாத காரியம். நாடும், நாட்டு மக்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்காகச் சிந்திப்பதற்கான தரப்புகள், நீர்த்துப் போயுள்ள நிலையில், மக்கள் என்ன செய்வதென்று தெரியாது, குழம்பிப் போயிருக்கிறார்கள். தேர்தல் அரசியலால் ஆட்கொள்ளப்பட்டுவிட்ட மக்களுக்கும், பிரச்சினைகளைத் தேர்தல்கள் மாத்திரமே தீர்க்கும் என்ற எண்ணம் புகுத்தப்பட்டு இருக்கின்றது. அதனால், அவர்களும் தேர்தல்கள் வரும் வரையில், எதிர்கொள்ளும் பிரச்சினைகளுடன் புளுங்கிக் கொண்டிருப்பது வழக்கமாகிவிட்டது. ஆனால், வழக்கத்துக்கு மாறாக, ராஜபக்‌ஷர்கள் ஆட்சியமைத்து சில மாதங்களுக்கு உள்ளேயே, ஆட்சிப் பங்காளிகளுக்கு இடையில் பெரிய குழப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதாவது, ராஜபக்‌ஷர்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்காக உழைத்த தரப்புகள், குறிப்பாக பௌத்த அதிகார பீடங்கள், ஊடகங்கள், தென் இலங்கை அடிப்படைவாத சக்திகள், இன்றைக்கு தங்களுக்குள் முரண்படத் தொடங்கிவிட்டன. அமைச்சர்களுக்கு இடையிலான மோதல்கள் ஊடகங்களில் ‘பல்லிளிக்கிறது’. ராஜபக்‌ஷ சகோதர்களுக்கு இடையிலான அதிகார மோதல், ஆளுங்கட்சிக்கு உள்ளேயே குழுக்களை உருவாக்கி இருக்கின்றது. 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம், ஆட்சி ரீதியாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ செலுத்தி வந்த அதிகாரங்களும் கட்சி ரீதியில் அவர் செலுத்தி வந்த அதிகாரங்களும், சகோதரர்களான கோட்டா, பஷில் ஆகியோரால் பறிக்கப்பட்டிருக்கின்றது. இன்றைக்கு, மஹிந்த ராஜபக்‌ஷ தீர்மானங்களை எடுக்கும் ஒருவர் அல்ல. ஆட்சி அதிகாரம் கோட்டாவிடமும் கட்சி சார் அதிகாரமும் அடுத்த கட்டத் தீர்மானங்களும் பஷிலிடமும் சென்று சேர்ந்துவிட்டன. வழக்கமாக இலங்கையின் அரசியல் ஆட்சி அதிகாரக் கட்டமைப்பு, ஒருவரை மையப்படுத்தியே இருந்திருக்கின்றது. அவ்வாறுதான், ஆளுங்கட்சியும் அதன் பங்காளிகளும் ஒரே புள்ளியில் சுற்றியிருக்கின்றன. கட்சி ஒருவரிடமும், ஆட்சி இன்னொருவரிடமும் இருந்த தருணங்களில் அவை, குழப்பங்களில் முடிந்திருக்கின்றன. ஏனெனில், அவ்வாறானதோர் அரசியல் ஒழுங்கு, இங்கு வளர்த்தெடுக்கப்படவில்லை. அதாவது, கேள்விகளுக்கு அப்பாலான மன்னர் ஆட்சிக் கட்டமைப்பு ஒன்றைப் பேணுவது சார்ந்தே, ஆட்சியாளர்கள் கவனமாக இருந்திருக்கிறார்கள். அதன் விளைவுதான், ஆட்சியும் கட்சியும் இரு வேறு நபர்களிடம் இருக்கும் போது வருவது. இப்போதும், அதுதான் நிலை. ராஜபக்‌ஷர்கள் மீதான அதிருப்தி, நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. அந்த அதிருப்திக்களுக்கான காரணங்களை, ராஜபக்‌ஷர்களே ஏற்படுத்துகிறார்கள். ஆனால், எதிர்க்கட்சி உள்ளிட்ட ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக உழைக்க வேண்டிய தரப்புகள் எல்லாமும், அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கின்றன. அவ்வாறான நிலையில், ராஜபக்‌ஷர்கள் மீதான அதிருப்தி, ஒரு கட்டத்தில் மக்களுக்கு பழகிவிடும். அது, இன்னும் இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ராஜபக்-ஷர்கள்-மீதான-அதிருப்தியும்-எதிர்க்கட்சிகளும்/91-273939
 17. சீனாவின் கடன் பொறியில் சிதைந்த ‘கொழும்பு’ புருஜோத்தமன் தங்கமயில் கொழும்புத் துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டம், கடந்த வாரம் நடைமுறைக்கு வந்தது. தெற்காசியாவின் பிரதான துறைமுகங்களில் ஒன்றான, கொழும்புத் துறைமுகத்தோடு இணைந்த கடற்பகுதிக்குள் மணலை நிரப்பி, புதிய துறைமுக நகர் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. கொழும்பு மாவட்டத்தின் ஒரு பகுதியாக துறைமுக நகர், கடந்த நல்லாட்சிக் காலத்தில் இணைக்கப்பட்டாலும், அதன் ஆட்சியுரிமை என்பது, துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டத்தின் ஊடாக, சீனாவிடம் வழங்கப்பட்டு இருக்கின்றது. நாட்டின் இறைமை, ஒருமைப்பாடு பற்றியெல்லாம், தென் இலங்கையில் கடந்த காலங்களில் பேசிக் கொண்டிருந்த தரப்புகள் எல்லாமும், துறைமுக நகர் விடயத்தில் கிட்டத்தட்ட பேசாமடைந்தைகளாக மாறிவிட்டன. இலங்கை, பௌத்த சிங்களவர்களுக்கானது என்று, மதவாத பேரினவாத சிந்தனைகளைக் கடந்த காலங்களில் கொண்டு சுமந்தவர்கள் எல்லோரும், கொழும்புத் துறைமுக நகர் விடயத்தில், மூச்சைக்கூட விடவில்லை. தமிழ் மக்களின் சமஷ்டிக் கோரிக்கைகளைக்கூட, பிரிவினைவாதமாக முன்னிறுத்தி, அயோக்கியத்தனம் புரிந்தவர்கள், இன்றைக்குத் தனி நாடு ஒன்றுக்கான அதிகாரத்தை, துறைமுக நகருக்கு வழங்கும் போது, வாய்மூடி மௌனிகளாகி விட்டனர். அவர்களின் வாய்களை, எத்தனை மில்லியன் ‘யுவான்’கள் நிறைத்தன என்பது இப்போதைய கேள்வி. பிரித்தானியர்களின் ஆட்சிக் காலத்தில், கொழும்புத் துறைமுகம் மிகவும் திட்டமிட்ட முறையில், தெற்காசியாவின் முதன்மைத் துறைமுகமாக உருவாக்கப்பட்டது. பம்பாய், கொல்கத்தா துறைமுகங்கள் போல, கொழும்புத் துறைமுகத்தின் உட்புற - வெளிப்புற கட்டமைப்புகளும் முதலிடத்தில் பேணப்பட்டன. இன்றைக்கும் கொழும்புத் துறைமுகத்தின் கட்டமைப்பு, பிரித்தானியர்களின் ஆட்சிக் காலத்திலிருந்து பெரியளவில் மாறிவிடவில்லை. கொழும்புத் துறைமுகம், பம்பாய், கொல்கத்தா துறைமுகங்களை விட, அதன் அமைவிடத்தால், எப்போதுமே முதன்மையாக விளங்கி வந்திருக்கின்றது. அதாவது, உலகம் பூராவும் பயணிக்கும் கப்பல்களில், மூன்றில் ஒரு மடங்கு கப்பல்கள் பயணிக்கும் வழித்தடத்தில், கொழும்புத் துறைமுகம் அமைந்திருக்கின்றது. சரக்குகளை ஏற்றி இறக்குதல் மாத்திரமின்றி, கப்பல்களுக்கான எரிபொருள் நிரப்புதல், உணவுக் கொள்வனவு தொடங்கி இன்னோரன்ன தேவைகளுக்காகவும் ஒரு தரிப்பிட மையமாகவும் கொழும்புத் துறைமுகம் விளங்கி வருகின்றது. சிங்கப்பூர் தன்னுடைய பொருளாதாரத்தைப் பல வழிகளில் பெருக்கிக் கொண்டது. ஆனால், அதில் துறைமுகத்தைக் கொண்டு உருவாக்கிய பரிவர்த்தனை மிக முக்கியமானது. கடந்த 50 ஆண்டுகளில், சிங்கப்பூரின் வளர்ச்சியானது அதன் துறைமுகக் கட்டமைப்பில் பெருமளவு தங்கியிருக்கின்றது. பசிபிக் - இந்து சமுத்திர கப்பல் வழித்தடங்களில் கொழும்புத் துறைமுகத்தை மீறி, சிங்கப்பூர் துறைமுகம் தன்னைப் பல மடங்கு வளர்த்துக் கொண்டது. ஆனாலும் கூட, இன்றைக்கும் இந்தியத் துறைமுகங்களை விட வெளிநாட்டுக் கப்பல்களின் போக்குவரத்து என்பது, கொழும்புத் துறைமுகத்துடனே பேணப்பட்டு வருகின்றது. அப்படியான நிலையில், கொழும்புத் துறைமுகத்தின் தேவை என்பது பிராந்திய வல்லரசுகளுக்கு அவசியப்படுவது இயல்பானதுதான். அதாவது, ‘நலிந்தவனிடம் இருக்கும் அனைத்துமே, வலியவனுக்கு உரியது’ என்பது அதர்மத்தின் விதி. அந்த விதியின் தளத்தில் நின்றுகொண்டுதான், சீனாவும் இந்தியாவும் மல்லுக்கட்டின. கொழும்புத் துறைமுகத்தைப் பகுதி பகுதியாகக் கூறுபோடும் வேலைகளைச் செய்தன. அதில், சீனா கிட்டத்தட்ட முழுமையான வெற்றியைப் பெற்றுவிட்டது. கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியா கோரிய போது, நல்லாட்சி அரசாங்கம் அதற்கு ஒத்துழைத்தது. ஆனால், அதற்கு எதிராக தென் இலங்கையின் பௌத்த சிங்கள அடிப்படைவாதத் தரப்புகள் தொடங்கி, பல்வேறு தரப்புகளும் பெரும் போராட்டங்களை முன்னெடுத்தன. கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதில்லை என்ற முடிவுக்கு அரசாங்கம் வந்தது. வேணுமென்றால் மேற்கு முனையத்தை இந்தியா பெற்றுக் கொள்ளலாம் என்றவாறாக முன்வைப்புச் செய்யப்பட்டது. கிழக்கு முனையம் விவகாரத்தில் பெரும் போராட்டங்களை முன்னெடுத்த தரப்புகளின் பின்னால், சீனா இருந்தமைக்கான சந்தேகம் வெளியிடப்பட்டது. ஏனெனில், அந்தச் சக்திகள், கொழும்புத் துறைமுக நகர் விடயத்தில் அமைதியாவிட்டன. கொழும்புத் துறைமுக நகருக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அதிகாரங்கள், கிட்டத்தட்ட தனி நாட்டுக்கு ஒப்பானவை. அப்படியான நிலையில், அங்கு ஆட்சி செலுத்தும் தரப்புகள், தங்களது நலன்களுக்காக அனைத்து வகை ஏற்பாடுகளையும் அங்கு செய்யும். அத்தோடு, தன்னைச் சுற்றியுள்ள கட்டமைப்புகளை உடைப்பது முதல், உளவு பார்ப்பது வரையில் செயற்படும். இலங்கையின் ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பு என்பது, கொழும்புக்கு உள்ளேயே சுருக்கப்பட்டிருக்கின்ற நிலையில், அதைக் கண்காணிப்பது, துறைமுக நகரின் ஆட்சித் தரப்புகளுக்கு இலகுவானது. அத்தோடு, கொழும்புத் துறைமுகத்தின் இயக்கத்தை, முழுவதுமாகக் கண்காணித்து, எதிர்காலத்தில் கட்டுப்படுத்தும் தளத்துக்கும் தன்னை முன்னிறுத்தும். சீனாவின் கடன்பொறிக்குள் இலங்கை முழுவதுமாக விழுந்துவிட்டது. அதிலிருந்து மீள்வது என்பது, அவ்வளவு இலகுவானதல்ல. ஏனெனில், வறிய ஆபிரிக்க நாடுகள் பலவற்றுக்கு, சீனா வழங்கிய கடன்கள் மீளப்பெறும் நோக்கோடு வழங்கப்பட்டவை அல்ல. மாறாக, அந்தக் கடன்களுக்காக அந்த நாடுகளின் வளங்களைச் சுரண்டுவதற்கான முழுமையான அனுமதியைப் பெறும் நோக்கில் வழங்கப்பட்டவை. எத்தியோப்பியா, நைஜீரியா, சம்பியா, அங்கோலா தொடங்கி, பல ஆபிரிக்க நாடுகளிலும் ஆட்சிகள் மாறினாலும், சீனாவின் வளச்சுரண்டலுக்கான அனுமதியில் யாரும் தலையிடுவதில்லை. ஏனெனில், அந்த நாடுகள் சீனாவின் கடன்பொறிக்குள் முழுவதுமாகச் சிக்கிவிட்டவை. கேள்விகளைக் கேட்க முடியாது என்ற நிலையை, சீனா அங்கு பெற்றுவிட்டது. அப்படியான நிலையையே, இலங்கையிலும் சீனா இன்றைக்குச் செய்து கொண்டிருக்கின்றது. கொழும்புத் துறைமுக நகருக்கான தங்கு தடையின்றிய அனுமதியை, ஆணைக்குழு சட்டத்தை நிறைவேற்றிப் பெற்றுக்கொண்டதோடு, கொழும்பின் பிரதான பகுதிகளிலுள்ள அரச நிலங்களையும் கொள்வனவு செய்யும் முனைப்போடு சீனா இயங்கிக் கொண்டிருக்கின்றது. பொலிஸ் தலைமையகம் அமைந்திருக்கின்ற கொழும்பின் மையப்பகுதி தொடங்கி, காலி முகத்திடலை அண்மித்த பல பகுதிகளையும் சீனாவுக்கு 99 வருட குத்தகைக்கு வழங்க அரசாங்கம் முயல்வாக, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. ராஜபக்‌ஷர்களின் முதல் ஆட்சிக் காலத்தில், காலி முகத்திடலுக்கு முன்னால் அமைந்திருந்த இராணுவத் தலைமையகம், அங்கிருந்து கொழும்பின் புற நகருக்கு மாற்றப்பட்டு, அந்தப் பகுதி, சீனாவின் முக்கிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இன்றைக்கு அந்தப் பகுதியில் பிரதான நட்சத்திர விடுதிகள், கடைத் தொகுதிகள் முளைத்திருக்கின்றன. அவ்வாறானதொரு நிலை, கொழும்பின் பல பகுதிகளுக்கும் எதிர்காலத்தில் நேரலாம் என்ற அச்சம் அதிகரித்திருக்கின்றது. இப்படியாக, இலங்கையைச் சீனா கூறுபோட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ‘அணிலை மரத்தில் ஏறவிட்ட பூனை’யின் நிலைக்கு இந்தியா வந்திருக்கின்றது. ஒரு காலத்தில், இலங்கையைப் ‘பெரியண்ணன்’ நிலையில் இருந்து இந்தியா கையாண்டிருக்கின்றது. ஆனால், அந்த நிலை இன்று இல்லை. கொழும்பு நிலப்பகுதிகள் மாத்திரமல்ல, கொழும்பு ஆட்சிக் கட்டமைப்பும் சீனாவின் பிடிக்குள் சென்றுவிட்டது. அப்படியான நிலையில், அந்தக் கட்டமைப்புக்குள் ஆளுமை செலுத்துவது, இந்தியாவால் இனி முடியாத காரியம். கொழும்பை முன்னிறுத்திய சர்வதேச ஆட்டத்தில், பெரும் நிதியைக் கொட்டி, சீனா வெற்றியீட்டி இருக்கின்றது. சீனாவின் வெற்றிக்கு, தென் இலங்கையின் ஆட்சியாளர்கள், பலமாக ஒத்துழைத்து இருக்கிறார்கள். அந்த ஒத்துழைப்பு என்பது, நாட்டின் எதிர்காலத்தைக் குறித்த சிந்தனையோடு வழங்கப்பட்டது அல்ல. மாறாக, அவர்களின் தனிப்பட்ட குடும்ப ஆட்சி நலன்களை முன்னிறுத்தி வழங்கப்பட்டவை. அது, நாட்டைத் தீராத கடன்களுக்குள் சிக்க வைத்துள்ளதுடன், நாட்டு மக்களை பெரும் பொருளாதார சுமைக்குள் தள்ளியிருக்கின்றது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சீனாவின்-கடன்-பொறியில்-சிதைந்த-கொழும்பு/91-273461
 18. கொரோனா கட்டுப்பாடுகளும் குளறுபடிகளும் -புருஜோத்தமன் தங்கமயில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலம், மக்களை நாளாந்தம் நெருக்கடிக்குள் தள்ளிக் கொண்டிருக்கின்றது. கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை, நாளொன்றுக்கு 3,000 என்கிற அளவைத் தொட்டிருக்கின்றது; உயிரிழப்புகளும் 30 என்கிற அளவில் ஒவ்வொரு நாளும் பதிவாகின்றது. உத்தியோகபூர்வ அறிவிப்புக்கு அப்பால், தொற்றாளர்கள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை, இன்னும் அதிகமிருக்கலாம் என்பது, சுகாதாரத்துறையினர் உள்ளிட்ட தரப்புகளின் அச்சமாகி இருக்கிறது. கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு விதிகள், கடந்த இரண்டு வாரங்களாக மீண்டும் அமலுக்கு வந்திருக்கின்றன. மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடையோடு ஆரம்பித்த கட்டுப்பாடுகள், தற்போது வீடுகளுக்குள் மக்களை முடக்கும் அளவுக்குச் சென்றிருக்கின்றது; கிட்டத்தட்ட ஊரடங்கு போன்றதொரு நிலை. கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு விதிகள் என்பது, அச்சமூட்டும் பெருந்தொற்றுக் காலத்தில் தவிர்க்க முடியாதவை. ஆனால், அதை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் பாரிய குளறுபடிகளைச் செய்து வருகின்றது. அதனால், மக்கள் இன்னும் இன்னும் பாதிப்புக்குள்ளேயே சென்றுகொண்டு இருக்கின்றார்கள். மூன்று நாள்கள் தொடர் முடக்கத்துக்குப் பிறகு, செவ்வாய்க்கிழமை (25) அத்தியாவசிப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக, மக்களை வெளியில் செல்வதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியிருந்தது. குறிப்பாக, நடந்து சென்று பொருட்களைக் கொள்வனவு செய்யுமாறு பணித்தது; வாகனங்களில் பயணிப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியது. அதன்மூலம், நடந்து செல்லக் கூடிய, சில நூறு மீற்றர் தூரத்துக்குள் இருக்கும் கடைகளில் மாத்திரம், பொருட்களைக் கொள்வனவு செய்யுமாறு வலியுறுத்துவதே, அரசாங்கத்தின் நோக்கமாக இருந்தது. ஆனால், இவ்வாறான கட்டுப்பாடுகள், அறிவுறுத்தல்கள் போன்றவை, நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களினதும் தேவைகள், நெருக்கடிகளை உணர்ந்து கொண்டா விதிக்கப்படுகின்றன என்ற கேள்வி எழுகின்றது. நாட்டில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், கொழும்பைப் பிரதானப்படுத்தியே தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்திலும், கொழும்பிலுள்ள மக்களையே பிரதானமாக முன்னிறுத்தி, முடிவுகள் எடுக்கப்படுகின்றன. கொரோனாவுக்கான தடுப்பூசி செலுத்துவதாக இருந்தாலும், அத்தியாவசிய தேவைகள் பற்றிய கரிசனை என்றாலும் கொழும்பில் வாழ்பவர்களைக் குறித்தே அதிக அக்கறை வெளிப்படுத்தப்படுகின்றது. இதனால், கொழும்பிலிருந்து பல நூறு கிலோ மீற்றர் தூரத்துக்கு அப்பாலுள்ள கிராமங்களில் வாழும் மக்கள், நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டி வருகின்றது. நடந்து சென்று பொருட்களை வாங்குங்கள் என்பது, கொழும்பு போன்ற வசதி வாய்ப்புகள் அதிகமுள்ள நகரப் பகுதிகளுக்குப் பொருத்தமாக இருக்கும். ஆனால், சில குடும்பங்கள் வாழும் கிராமங்கள், நாட்டில் இன்னமும் உண்டு. அங்கு ஒருசில சின்னக் கடைகளைத் தவிர வாரக் கணக்கில் பொருட்களைக் கொள்வனவு செய்யக் கூடிய வாய்ப்புகள் இருக்காது. அவ்வாறான தருணத்தில், தங்களது கிராமங்களில் இருந்து, அடுத்துள்ள நகரப் பகுதிகளை நோக்கி மக்கள் செல்ல வேண்டி ஏற்படும். அந்த நகரப் பகுதி, சிலவேளை 20 கிலோ மீற்றருக்கு அப்பால் இருக்கலாம். இப்படியான கிராமங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நூற்றுக்கணக்கில் உண்டு; தென் இலங்கையிலும் ஆயிரக் கணக்கில் உண்டு. அந்தக் கிராமங்களில் வாழும் மக்கள், தமது அத்தியாவசியத் தேவைகளை, நடத்து செல்லக் கூடிய தூரத்துக்குள் எவ்வாறு நிறைவேற்றுவது? அத்தியாவசித் தேவைகளுக்காக அடுத்துள்ள நகரப் பகுதிக்கு சென்ற இலட்சக் கணக்கான மக்கள், கடந்த செவ்வாய்க்கிழமை இராணுவத்தினராலும் பொலிஸாராலும் திருப்பி அனுப்பப்பட்டார்கள். வங்கிச் சேவைகளை அணுகுவதற்குக் கூட அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஏன், அடகு வைத்து வாழ்வாதாரச் சுமைகளை சமாளிக்கக் கூடியவர்களுக்குக் கூட, அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது. இன்னொரு பக்கம், கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதித்தாலும் அந்தக் கட்டுப்பாடுகள், வசதி வாய்ப்புகள் உள்ளவர்களுக்கானது இல்லை என்கிற நிலை பேணப்படுகின்றது. சொகுசு வாகனங்கள் உள்ளிட்ட விலை அதிகமுள்ள வாகனங்களில் செல்பவர்கள் பொலிஸாரினாலோ, இராணுவத்தினராலோ நகரப் பகுதிகளில் நிறுத்தப்படுவதில்லை. அத்தியாவசியப் பொருட்கள் மாத்திரமல்ல, ஆடம்பரத்துக்குத் தேவையான பொருட்களும், எவ்வளவு தூரத்துக்கு அந்த வாகனங்களில் சென்றும் கொள்வனவு செய்ய அனுமதிக்கப்படுகின்றது. அதுவே, மோட்டார் சைக்கிள்களோ, ஓட்டோக்களிலோ செல்லும் சாதாரண மக்கள், பாதுகாப்புத் தரப்பினரின் பாரிய நெருக்கடியைச் சந்திக்கிறார்கள். அதிக தருணங்களில், அவர்களிடம் விளக்கம் ஏதும் கேட்கப்படாமலேயே திருப்பி அனுப்பப்படுகிறார்கள். கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள், வாரக் கணக்கில் தொடரும் அனைத்துத் தருணத்திலும் இரு காட்சிகளைக் காணக் கூடியதாக இருக்கின்றது. ஒன்று, அடகு நிலையங்களில், ஆயிரக்கணக்கான மக்கள் அதிகாலையிலேயே வரிசையில் காத்து நிற்பது. இன்னொன்று, பெரிய வாகனங்கள், அனைத்துப் பல்பொருள் அங்காடிகளையும் மொய்த்திருப்பது. அந்தப் பல்பொருள் அங்காடிகளில் அரிசி, பருப்பு தொடங்கி ஐஸ்கிரீம்கள் வரையில் வழித்துத் துடைக்கப்பட்டு, கொள்வனவு செய்யப்பட்டு செல்லப்படுகின்றது. அப்படிக் கொள்வனவு செய்யப்படும் பொருட்கள், அதிக தருணங்களில் சில மாதங்களுக்கு போதுமானதாக இருக்கின்றன. அடகு நிலையங்களில் காத்திருந்து பெற்ற பணத்தைக் கொண்டு, பல்பொருள் அங்காடியை அடைவதற்கே மதியம் தாண்டிவிடும் சூழல்; அங்கு அரிசி, பருப்பு, மரக்கறிகள் என்று உணவுப் பொருட்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்ட நிலையில், சாதாரண மக்கள் அவஸ்தைப்பட வேண்டி வருகின்றது. யாராக இருந்தாலும், தமது தேவைக்குப் போதுமானதைக் கொள்வனவு செய்து செல்வதுதான், நெருக்கடியான காலகட்டத்தில் வெளிப்படுத்தப்பட வேண்டிய மனிதம். அதுதான், மற்றவர்களைக் குறித்துக் கொஞ்சமாவது சிந்திக்கக் கூடிய யாரும் செய்ய வேண்டியது. ஆனால், அவ்வாறான சிந்தனை என்பது, மக்களிடம் பெரியளவில் இல்லை என்பதுதான், இன்னுமின்னும் சிக்கல்களை ஏற்படுத்துகின்றது. பகுத்துண்டு வாழ்தல் என்பது, தன்னிடம் உள்ளதை மற்றவர்களுடன் பகிர்வது மாத்திரமல்ல; தனது தேவைகளுக்கு அதிகமானவை, தேவையற்று வீணடிக்காது மற்றவர்கள் பயன்படுத்தும் சூழலைப் பேணுவதுமாகும். ஆனால், அவ்வாறான கட்டத்தைப் பலரும் தாண்டி, நின்று சுயநலத்துக்குள் உழல்கிறார்கள். அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதிக்கும் போது, அனைத்துத் தரப்பு மக்கள் குறித்தும் சிந்திக்க வேண்டும். ஒரே நாளில் முழு நாட்டையும் திறந்து சிக்கல்களை உருவாக்காது, பகுதி பகுதியாக ஒவ்வொரு நாளும் திறந்து, அத்தியாவசிய தேவைகளுக்கு அனுமதிக்க வேண்டும். அப்படியான கட்டம் தேவையற்ற நெருக்கடிகளைக் குறைக்கும். இல்லையென்றால், பொது முடக்கம் பலன்களை விளைவிக்காது. ஏனெனில், தொடர்ச்சியாக மூன்று, நான்கு நாள்கள், வீடுகளுக்குள் முடக்கப்படும் மக்கள், ஐந்தாவது நாளில் கடைகளிலும் சந்தைகளிலும் அதிகமாகத் திரள்கிறார்கள். அப்போது, தொற்றுக்கான வாய்ப்பும் அதிகரிக்கின்றது. அதனால்தான், ஒவ்வொரு பிரதேசத்தையும் ஒவ்வொரு நாளில் திறந்து, அத்தியாவசிய தேவைகளுக்கு அனுமதிப்பது என்பது, நெருக்கடிகளையும் மக்கள் திரட்சியையும் பாரியளவில் கட்டுக்குள் வைத்திருக்கும். இல்லையென்றால், கொரோனா வைரஸ் தொற்று, இன்னும் இன்னும் அதிகரித்தே செல்லும். அப்போது, வடக்கு இந்தியாவில் மக்கள் கொத்துக் கொத்தாகச் செத்து விழும் நிலை, இலங்கையிலும் உருவாகிவிடலாம். ஓர் அரசாங்கமாக, இவற்றை எல்லாம் குறித்து, சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கொரோனா-கட்டுப்பாடுகளும்-குளறுபடிகளும்/91-272746
 19. முள்ளிவாய்க்காலும் காசாவும் கற்றுத்தரும் பாடங்கள் புருஜோத்தமன் தங்கமயில் இஸ்‌ரேலும் பலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கமும், கடந்த சில நாள்களாக ஆயுத முனையில் மீண்டும் பொருதிக் கொண்டிருக்கின்றன. இஸ்‌ரேலை நோக்கி, ஹமாஸ் இயக்கம் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, பலஸ்தீனத்தின் காசாப் பகுதியை இடைவிடாது இஸ்‌ரேல் தாக்கி வருகின்றது. ஹமாஸ் இயக்கத்தின் தாக்குதல்களில் இதுவரை 10 இஸ்‌ரேலியர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இஸ்‌ரேலிய தாக்குதல்களில் காசாப் பகுதியில், 200க்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இஸ்‌ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்துக்குமான இந்த மோதல்களின் ஆரம்பம், மேற்குக் கரையின் ஜெருசலேமிலுள்ள பலஸ்தீனியர்களின் பிரதான பள்ளிவாசலில், நோன்புக் கால தொழுகைக்கு இஸ்‌ரேல் கட்டுப்பாடுகளை விதித்ததைத் தொடர்ந்து எழுந்தது. அத்தோடு, மேற்குக் கரையின் பாதுகாப்பு, இஸ்‌ரேலிய அரசிடம் இருக்கின்ற நிலையில், அங்கு இனமுறுகல்களுக்கான ஏற்பாடுகள் குண்டர்கள், கூலிப்படைகளைக் கொண்டு திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்டதாக நடுநிலை நோக்கர்கள் கூறுகிறார்கள். இந்தப் பின்னணியில்தான், ஹமாஸ் இயக்கத்தின் ஆயுதப் பிரிவு காசாவில் இருந்து இஸ்‌ரேலின் ரெல்அவீவ் உள்ளிட்ட நகரங்களை நோக்கி, ஏறிகணைத் தாக்குதல்களை நடத்தியது. அந்தத் தாக்குதல்களை, ஏறிகணை எதிர்ப்புப் பீரங்கிகளைக் கொண்டு, இஸ்‌ரேல் பெருமளவு தடுத்துவிட்டது. ஆனாலும், பத்து இஸ்‌ரேலியர்கள் கொல்லப்பட்டார்கள். இந்தத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இலக்கு வைத்த தாக்குதல்களை, இஸ்‌ரேல் தொடர்ந்து நடத்தி வருகின்றது. சர்வதேச ஊடக நிறுவனங்களின் அலுவலகங்கள் இருந்த கட்டடத் தொகுதியை, ஒரு மணித்தியால முன் அறிவுப்புடன் தாக்கி அழித்திருக்கின்றது. அதற்கு, அந்தக் கட்டடத் தொகுதியில் ஹமாஸ் இயக்கத்தின் ஆயுதங்கள் இருந்ததாக இஸ்‌ரேல் கூறியிருக்கின்றது. இஸ்‌ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ள 200க்கும் அதிகமான பலஸ்தீனியர்களில் 100க்கும் அதிகமானவர்கள் பெண்கள்; 60க்கும் அதிகமானவர்கள் குழந்தைகள். ஆனால், ஹமாஸ் இயக்கத்தின் முக்கியஸ்தர்களையே இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பதாக இஸ்‌ரேல் கூறுகின்றது. இஸ்‌ரேல் - பலஸ்தீனத்தின் காசாப் பகுதியில் நடைபெற்றுவரும் ஆயுத மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில், உறுப்பு நாடுகளுக்கு இடையில் உரையாடல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. ஆனால், அந்த உரையாடல்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்குத் தடையாக, அமெரிக்கா இருந்தது. குறிப்பாக, போர் நிறுத்தமொன்றை வலியுறுத்தும் தீர்மானத்தைப் பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றும் நோக்கத்தை, அமெரிக்க ஆரம்பத்திலேயே நிராகரித்தது; கிட்டத்தட்ட இஸ்‌ரேலின் தாக்குதல்களை வெளிப்படையாக ஆதரித்தது. இதனால், பாதுகாப்புச் சபையில், இஸ்‌ரேல்- காசா போர் நிறுத்தம் தொடர்பிலான தீர்மானம் கைவிடப்பட்டது. அரபு நாடுகளைக் கட்டுப்படுத்தும் தன்னுடைய ஏவலாளியாகவே, இஸ்‌ரேலின் உருவாக்கத்துக்கு அமெரிக்கா ஒத்தாசைகளை வழங்கியிருந்தது. ஆனால், ஒரு கட்டத்தில், அமெரிக்காவின் ஏவலாளி எனும் கட்டத்தில் இருந்து இஸ்‌ரேல் விலகி, இஸ்‌ரேல் தனது சர்வதேச ஏவலாளியாக, அமெரிக்காவை மாற்றிவிட்டது. இன்றைக்கு இஸ்‌ரேலின் நில ஆக்கிரமிப்புகள் தொடங்கி, ஜனநாயகத்துக்கு முரணான அனைத்துச் செயற்பாடுகளையும் நியாயப்படுத்துவதுதான் அமெரிக்காவின் வேலையாகி விட்டது. குறிப்பாக, ஐக்கிய நாடுகளில் இஸ்‌ரேலுக்கு எதிராக, எந்தத் தீர்மானங்கள் வந்தாலும், அதற்கு எதிராக ‘வீற்றோ’ அதிகாரத்தை, அமெரிக்கா பயன்படுத்த வேண்டும் எனும் அளவுக்கான ஏவலாளியாகி விட்டது. காசாப் பகுதியில் பெண்களும் குழந்தைகளும் அதிகமாகக் கொல்லப்படுகிறார்கள் என்று சர்வதேச ஊடகங்களும் மனித உரிமை அமைப்புகளும் ஆதாரங்களுடன் அறிக்கையிடுகின்றன. ஆனாலும், இஸ்‌ரேலின் நிகழ்ச்சி நிரலை நியாயப்படுத்தும் வேலைகளை அமெரிக்கா செய்கின்றது. குறிப்பாக, ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவர்களும் ஆயுதக் கிடங்குகளும் அழிக்கப்படும் வரையில், இஸ்‌ரேலின் தாக்குதல்கள் தொடரப்பட வேண்டும் என்பதை அமெரிக்கா விரும்புகின்றது. அதற்காக, எந்தவித போர்க்குற்றங்களையும் நியாயப்படுத்தும் வேலைகளையும் செய்வதற்குத் தயாராக இருக்கின்றது. இன்று இஸ்‌ரேல் - பலஸ்தீனத்தின் காசா பகுதிக்கு இடையிலான ஆயுத மோதல்களையும் அதனை, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை எப்படிக் கையாள்கின்றது என்பதையும் காணும் போது, 12 ஆண்டுகளுக்கு முன்னர், ஈழத் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலுக்குள் வைத்துப் பலிவாங்கப்பட்ட நாள்களும் அதன் சர்வதேச அரசியல் பின்னணியும் ஞாபகத்துக்கு வருகின்றன. இறுதி மோதல்கள், முள்ளிவாய்க்காலை நோக்கி நகர்த்து கொண்டிருந்த போது, பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது அந்த மக்களைப் போர் நிறுத்தம் ஒன்றின் ஊடாக, போர் வலயத்துக்குள் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்ற குரல்கள் தொடர்ந்தும் எழுப்பப்பட்டன. அந்தத் தருணத்திலும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில், போர் நிறுத்தத்தின் ஊடாக மக்களை வெளியேற்றும் தீர்மானம் பற்றிப் பேசப்பட்டது. ஆனால், அதற்கு எதிராக சீனாவும் ரஷ்யாவும் தங்களுடைய ‘வீற்றோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தப் போவதாக மிரட்டின. அதனால், போர் நிறுத்தம் பற்றிய தீர்மானம், 2009களின் ஆரம்ப நாள்களிலேயே பேச்சளவிலேயே கைவிடப்பட்டது. அங்கும், தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக, எவ்வளவு விலை கொடுக்கப்பட்டாலும் அதனை ஏற்கும் சர்வதேச, பிராந்திய அரசியலே கோலோச்சி நின்றது. அங்கு மனித உரிமைகளும் போர்க் குற்றங்களும் கண்டும் காணாமல் விடப்பட்டன. புலிகளை அழிப்பதில், இலங்கைக்கு சீனா, ரஷ்யா மாத்திரமல்ல, அமெரிக்காவும் கணிசமான உதவிகளை வழங்கியது. பாதிக்கப்பட்டவர்களாக, சர்வதேசத்திடம் நீதி கோருவது என்பது நியாயமானதுதான். ஆனால், அந்த நீதியைத் தார்மிக அடிப்படைகளோடு சர்வதேசமும் ஐக்கிய நாடுகளும் வழங்கிவிடும் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், ஒவ்வொரு பிராந்தியத்தினதும் அரசியல், இராஜதந்திர முக்கியத்துவம் உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தித்தான், நீதியும் வழங்கப்படுகின்றது. ஆயுத மோதல்களோடு தொடர்புபடாத பெண்களையும் குழந்தைகளையும் இலக்கு வைத்துத் தாக்குதவது என்பது, மனித அறத்துக்கு எதிரானது. அது போர்க்குற்றங்களில் சேர்வது. ஆனால், அவ்வாறான நிகழ்வுகளைத் தங்களது ஆதரவு - எதிர்ப்பு நிலைப்பாடுகளின் போக்கில்தான், சர்வதேச நாடுகள் கையாளுகின்றன. தங்களுக்கு எதிரான நாடொன்று, அவ்வாறான குற்றங்களை நிகழ்த்தினால், அதற்கு எதிரான நிலைப்பாட்டில் நின்று கூச்சலிடுவதும், தன் ஆதரவு நாடு அவ்வாறான குற்றங்களை இழைத்தால், அதனை நியாயப்படுத்துவதும் வழக்கமானது. இதுதான், சர்வதேசம் போதிக்கும் நீதியாகும். அவ்வாறான கட்டத்தில்தான், பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைத் தேடுவது என்பது, தார்மிக அடிப்படைகளையும் தாண்டி, இராஜதந்திர கட்டங்களில் நின்றும் அணுகப்பட வேண்டி இருக்கின்றது. ஈழத்தமிழர்களும் அதன் இணக்க சக்திகளும் அவ்வாறான நிலையொன்றை நோக்கி, தம்மைக் கட்டமைத்து, வளர்த்துக் கொள்ள வேண்டும். மாறாக, வாய்ச் சொல் வீரர்களாக மாத்திரம் இருப்பதால், யாருக்கும் எந்தப் பிரயோசனமும் இல்லை. ஏனெனில், ஈழத்தமிழ் மக்கள், இப்போது அரசுகளின் அங்கம் அல்ல. அவர்கள் அதிக தருணங்களில், அரசுகளுக்கு எதிரான அங்கமாகவே இருக்கிறார்கள். தாயகத்தில் மட்டுமல்ல, புலம்பெயர் தேசங்களிலும் அதுதான் நிலை. அழுது புரண்டு விட்டால், சர்வதேசம் நீதி வழங்கிவிடும் என்றில்லை. ஏனெனில், எம்மிடம் நீதிவான்களாகக் காட்டிக் கொள்ளும் பல தரப்புகள், இன்னொரு பாதிக்கப்பட்ட சமூகத்திடம் எதிரிகளாக முகம் காட்டும் நிலைமையே காணப்படுகின்றது. ஏனெனில், ஒவ்வொரு தரப்புகளும் தம்முடைய தனிப்பட்ட நலன்களை முன்னிறுத்தியே இயங்கும். அப்படியான நிலையில், இவ்வாறான தரப்புகளை, அதாவது சர்வதேசத்தைக் கையாள்வது என்பது, தார்மிக அடிப்படைகளுக்குள் சுருங்கிவிடக் கூடாது. மாறாக, அந்தத் தரப்புகளின் விடயங்களிலும் தலையீடு செய்யும் அளவுக்கு ஆளுமை செலுத்தும் நிலையொன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அது, அரசியல் இராஜதந்திர ரீதியில் நிகழ்ந்தாலே, ஈழத் தமிழர்களுக்கான நீதி கிடைக்கும். இல்லையென்றால், ஒப்பாரி வைத்து ஓய்வதோடு, எல்லாமும் கடந்துவிடும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/முள்ளிவாய்க்காலும்-காசாவும்-கற்றுத்தரும்-பாடங்கள்/91-272206
 20. கொரோனாவால் தடுமாறும் அரசாங்கம்: அச்சுறுத்தலுக்குள் மக்கள் -புருஜோத்தமன் தங்கமயில் கொரோனா வைரஸ் தொற்றால் முழு உலகமும் ஓர் அசாதாரண சூழ்நிலைக்குள் சிக்கிக் கொண்டிருக்கின்றது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில், கொரோனா வைரஸ் தொற்றின் ‘மூன்றாவது அலை’ பரவல் கட்டத்தை அடைந்திருக்கின்றது. ஒவ்வொரு கட்டமும் ஏற்கெனவே ஏற்படுத்திய பாதிப்புகளைவிட, இன்னும் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. கொரோனா வைரஸ் என்ற கிருமியால் உருவாக்கப்படும் ‘கொவிட்-19’ என்ற பெருந்தொற்றுநோய், ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒவ்வொரு வடிவம் எடுக்கின்றது; திரிபடைந்த வீரியமான கொரோனா வைரஸ்களாக மக்களுடன் கலக்கின்றது. இந்த அச்சுறுத்தல் கட்டத்தை எதிர்கொள்வதில், இலங்கை அரசாங்கம் பாரிய தோல்வியை அடைந்திருக்கின்றது. பரந்துபட்ட சுகாதாரக் கட்டமைப்பொன்று, காலங்காலமாக நாட்டில் பேணப்பட்டாலும், தீர்மானம் எடுக்கும் சக்தியாக இருக்கின்ற அரசாங்கத்தின், தூர நோக்கற்ற செயற்பாடுகளால், பாரிய பின்னடைவு ஏற்பட்டு இருக்கின்றது. முதல் இரண்டு அலைகளில், கொரோனா வைரஸ் பரவல் கட்டங்களில், ஒவ்வொரு நாளும் 200 பேரைத் தாண்டாத அளவிலேயே தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டார்கள். உயிரிழப்புகளும் மிகவும் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. ஆனால், இன்றைக்கு ஒவ்வொரு நாளும், 2,000 பேரளவில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுகின்றனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் ஒவ்வொரு நாளும் 20க்குக் குறையாமல் பதிவாகி வருகின்றது. 22 மில்லியன் மக்கள் வாழும் நாடொன்றில், மேற்கண்ட எண்ணிக்கைகள் அச்சுறுத்தலான அளவிலானவை. கொரோனா வைரஸின் இரண்டாவது அலையால், இந்தியா தள்ளாடிக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு நாளும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஆயிரங்களைத் தொடுகின்றது. உத்தரப்பிரதேசம், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் சுகாதாரத்துறை கிட்டத்தட்ட செயலிழந்துவிட்டது. மக்கள் வைத்தியசாலையில் இடம் கிடைக்காமல், சுவாசிப்பதற்கான ஒட்சிசன் சிலிண்டர்கள் இல்லாமல் செத்து வீழ்கிறார்கள். கண்ணுக்கு முன்னாலேயே உறவுகளின் மரணங்களைக் கண்டு மக்கள் வெதும்புகிறார்கள். மயானங்களில் சடலங்களை எரிப்பதற்கே இடம் போதாமல் ‘டோக்கன்’ முறை நடைமுறைப்படுத்தப்படுகின்றது. மத்திய அரசும் மாநில அரசுகளும், பாதிப்பை எவ்வாறு கையாள்வது என்று தெரியாமல் திணறுகின்றன. இவ்வாறான நிலையொன்றை நோக்கி, இலங்கையும் விரைவில் செல்லக்கூடும் என்று, சுகாதாரத் துறையினர் எச்சரிக்கின்றனர். நாட்டிலுள்ள பிரதான வைத்தியசாலைகளில், நோயாளர்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு நாளும் பல மடங்காக அதிகரித்து வருகின்றது. படுக்கை நெருக்கடி, ஒட்சிசன் சிலிண்டர் பற்றாக்குறை பற்றிய அறிவித்தல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், இவற்றையெல்லாம் எவ்வாறு எதிர்கொண்டு, மக்களைப் பாதுகாப்பான கட்டத்துக்குள் வைத்துக் கொள்வது என்பதில், அரசாங்கத்துக்குள் பாரிய குழப்பம் நீடிக்கின்றது. சுகாதார அமைச்சர் ஒரு கதை கூறுகிறார்; கொவிட்-19 அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் இன்னொரு தகவல் சொல்கிறார்; கொரோனா தடுப்பு பணிப்பாளரான இராணுவத் தளபதியோ வேறொரு செய்தி சொல்கிறார்; அரசாங்கத்தின் பேச்சாளர்களோ வேறு மாதிரியாகப் பேசுகிறார்கள். தீர்மானம் எடுக்கின்ற ஒரே கட்டமைப்புக்குள் இருந்தே, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரியாகப் பேசுகிறார்கள். அவை, ஊடகங்களில் வெளியாகி, இன்னும் இன்னும் மக்களைக் குழப்புகின்றன. கொரோனா வைரஸ் என்பது கண்ணுக்குத் தெரியாத எதிரி. அதை எதிர்கொள்வது என்பது, நாட்டு மக்களின் சுய கட்டுப்பாட்டோடும் சம்பந்தப்பட்ட ஒன்று. ஆனால், அதை எதிர்கொள்வது சார்ந்து, அரசாங்கம் மாத்திரமல்ல, நாட்டு மக்களும் பாரிய அசமந்தமான போக்கை வெளிப்படுத்துகிறார்கள். கொரோனா வைரஸின் ‘மூன்றாவது அலை’ மோசமாகத் தாக்குவதற்கு, மக்களும் பாரிய பொறுப்பை ஏற்றாக வேண்டும். கடந்த, சித்திரை வருடப் பிறப்புக் காலத்தில், அதிகளவிலான மக்களின் பங்கெடுப்போடு, கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. நகரங்களில் ஆடைக் கொள்வனவு, பொருட்கள் கொள்வனவு என்று, வழக்கத்துக்கு அதிகமான மக்கள் திரட்சி ஏற்பட்டது. அந்தத் திரட்சிகளின் போது, சுகாதார வழிமுறைகள் பெரியவில் பின்பற்றப்படவில்லை. அதன் இன்னொரு கட்டமாக, நுவரெலியாவில் அரசாங்க கட்டமைப்பின் ஆதரவோடு, ‘வசந்த விழா’ கொண்டாட்டங்கள் நடைபெற்றன. தற்போதும், பண்டிகைகளை முன்வைத்து மக்கள் திரட்சி, பாரியளவில் புடவைக் கடைகள், விருந்தகங்களில் நிகழ்த்தப்படுகின்றன. மேற்கு நாடுகள், கொரோனா வைரஸைக் குறிப்பிட்டளவு வெற்றிகரமாக எதிர்கொண்டு, இயல்பு நிலையை நோக்கி நகரத் தொடங்கி இருக்கின்றன. ஆனாலும், அந்த நாடுகளில் நிர்வாகக் கட்டமைப்பும் சுகாதாரத் துறையும் எந்தவொரு தருணத்திலும், கொரோனா வைரஸைக் குறித்து, எந்தவிதத்திலும் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், இந்தியாவிலும் இலங்கையிலும், கொரோனா வைரஸ் குறித்த மதிப்பீடுகள் குறைந்திருந்தன. இந்திய அரசு, கொரோனா வைரஸை வென்றுவிட்டதாக அறிவிக்கவும் செய்தது. அவ்வாறான கட்டமொன்றை நோக்கி, இலங்கை அரச கடமைப்பும் சென்றிருந்தது. பொதுக் கூட்டங்கள் தொடங்கி, பாரிய மக்கள் திரட்சியுள்ள நிகழ்வுகள் இடம்பெற்று இருக்கின்றன. அத்தோடு, பாதுகாப்பு நடவடிக்கைகள், அதிக பட்சம் நகரங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டன. கொரோனா வைரஸ் பரவலால் மக்கள் நோய்வாய்ப்படுவதைத் தடுக்கும் வகையில், முதல் கட்டத்தில் கிடைத்த தடுப்பூசிகளைச் செலுத்துவதை, சுகாதாரத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் நிர்வாகக் கட்டமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும் கொழும்பு உள்ளிட்ட நகரப் பகுதிகளில் வசிப்பவர்கள் என்றுமே அரசாங்கம் மட்டுப்படுத்தியது. அத்தோடு, முதல் கட்டமாகத் தடுப்பூசிக்களைக் பெற்ற பின்னர், இரண்டாம் கட்டமாக எவ்வாறு தடுப்பூசிகளைப் பெறுவது என்பது சார்ந்தும், தடுப்பூசிகளை மக்களுக்குச் செலுத்துவது தொடர்பான பொறுப்புமிக்க அதிகார மட்டம் அசமந்தமாக இருந்தது. அதுதான், இன்றைக்கு மூன்றாவது அலையின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், ஒவ்வொரு நாட்டிடமும் தடுப்பூசிகளுக்காகக் காத்திருக்க வேண்டிய நிலை வந்திருக்கின்றது. ஏற்கெனவே, இந்தியாவிலிருந்து கிடைக்கப்பெற்ற ‘கொவிசீல்ட்’ தடுப்பூசியைப் பெற்ற இலட்சக்கணக்கான மக்கள், அதன் இரண்டாவது தடுப்பூசிக்காக காத்திருக்கிறார்கள். ஒரு தயாரிப்பு வகையான தடுப்பூசியை, ஏற்கெனவே செலுத்தினால், அதே தயாரிப்பு வகையான தடுப்பூசியையே இரண்டாவது தடவையாகவும் செலுத்த வேண்டும் என்கிற அறிவுறுத்தல் உலகம் பூராவும் காணப்படுகின்றது. அவ்வாறான நிலையில், அரசாங்கத்தின் பேச்சாளரான உதய கம்மன்பில, இரண்டாவது தடுப்பூசியாக, இன்னொரு தயாரிப்பு வகையான ஊசியொன்றைச் செலுத்த முடியும் என்கிறார். ஆனால், அது தொடர்பில் சுகாதாரப் பிரிவினர் எந்தவித உத்தரவாதத்தையும் இதுவரை வழங்கவில்லை. சுகாதாரத் துறையினரின் ஆலோசனைகள் இன்றி, தான்தோன்றித்தனமாக, தீர்மானங்களை, அரசாங்கம் மக்களை நோக்கி வீசுகின்றது. இவை, தேர்தல் மேடைகளில் வழங்கப்படும் வாக்குறுதிகளுக்கு ஒப்பானவையாகவே இருக்கின்றன. மாறாக, தூர நோக்கும் கண்ணியமும் உள்ள மக்களின் பாதுகாப்பில் அக்கறையுள்ள ஒரு பொறுப்புமிக்க அரசாங்கத்தின் செயற்பாடுகளில் ஒன்றாகத் தெரியவில்லை. உலகில் வல்லரசு நாடுகள், பணக்கார நாடுகளையே கதிகலக்கி கொண்டிருக்கும் கொரோனா வைரஸூக்கு, ஏழை நாடுகள் எம்மாத்திரம்? அதிலும், பொருளாதார ரீதியில் அதிகம் பின்னடைவைச் சந்தித்துள்ள நாடான இலங்கை, பாரிய அச்சுறுத்தலுள்ள கொரோனா வைரஸை எதிர்கொள்வது அவ்வளவு இலகுவானது இல்லைத்தான். அப்படியான நிலையில், கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கான திட்டமிடமும் அதற்கான திறனும் அதியுச்சத்தில் பேணப்பட வேண்டும். கிடைக்கின்ற ஒவ்வொரு வாய்ப்பிலும், அதியுச்ச பலனைப் பெற முயற்சிக்க வேண்டும். அதற்கு, கொரோனோ வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளில், அரசியலுக்கு அப்பாற்பட்டு நின்று, திறந்த மனதோடு அரச கட்டமைப்பு பயணிக்க வேண்டும். மாறாக, நெருக்கடியான கட்டங்களில் நின்று, அரசியல் ஆதாயங்களை தேடும் கீழ்த்தரமான வேலைகளைச் செய்யக்கூடாது. கொரோனா வைரஸ் என்ற கொடியோனை தோற்கடிக்கவில்லை என்றால், இலங்கையை பொருளாதார பின்னடைவுகள் மாத்திரமல்ல, சமூக, சுகாதார பின்னடைவுகளும் ஆக்கிரமிக்கும். அதிலிருந்து மீள்வதென்பது, சில தசாப்தங்களுக்கு முடியாது போகலாம். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கொரோனாவால்-தடுமாறும்-அரசாங்கம்-அச்சுறுத்தலுக்குள்-மக்கள்/91-271683
 21. இலங்கை தமிழர்களுக்கானதா சீமானின் அரசியல்? புருஜோத்தமன் தங்கமயில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றிருக்கின்றது. கலைஞர் மு. கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர், தி.மு.கவின் தலைவராக மு.க. ஸ்டாலின் எதிர்கொண்ட, முதலாவது சட்டமன்றத் தேர்தலிலேயே அவர், அறுதிப் பெரும்பான்மையுள்ள வெற்றியைப் பெற்றிருக்கின்றார். தொடர்ச்சியாக இரண்டு தடவைகள், ஆட்சியில் அமர்ந்திருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், இம்முறை ஆட்சியை இழந்திருக்கின்றது. முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பங்கள், பிளவுகளைத் தாண்டி, அ.தி.மு.க தன்னுடைய வாக்கு வங்கியை, பாரிய வீழ்ச்சிகள் ஏதுமின்றித் தக்க வைத்துள்ளது. இதன்மூலம், தமிழக அரசியல் களம் என்பது, மீண்டும் தி.மு.க எதிர் அ.தி.மு.க என்கிற நிலைக்குள் பேணப்பட்டு இருக்கின்றது. ஏனெனில், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க பல துண்டுகளாக உடைந்துவிடும், ஆளும் பாரதிய ஜனதாக் கட்சிக்குள் கரைந்துவிடும் என்கிற எதிர்பார்ப்புகள் எல்லாம் வெளியிடப்பட்டன. தமிழக சட்ட மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இந்தப் பத்தியில், தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளினதும் வெற்றி, தோல்விகளுக்கான காரணங்களை ஆராயும் எண்ணம் இல்லை. மாறாக, தமிழகத்தின் பிரதான இரு கட்சிகளையும் தாண்டி, புலம்பெயர் தமிழர்களிடம் தலையை நீட்டிக் கொண்டிருக்கும் ‘நாம் தமிழர் இயக்கம்’ பற்றிப் பேசவே விளைகின்றது. நாம் தமிழர் இயக்கத்தை சீமான் ஆரம்பித்த காலம் முதல், தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை முன்னிறுத்திய, தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுப்பதான காட்சிகளை அவர் அரங்கேற்றி வருகிறார். அதுதான், ஆரம்ப நாள்களில் அவருக்கான அத்திவாரத்தைப் போடுவதற்கும் உதவியது. குறிப்பாக, புலம்பெயர் தேசங்களில் இருந்து, நிதி ஆதாரங்களைப் பெறுவதற்கு உதவியது. நாம் தமிழருக்கும், சீமானுக்கும் நிதியளிக்கும் மூலங்களில், இன்றைக்கும் புலம்பெயர் தமிழர்களே முதலிடத்தில் இருக்கிறார்கள். நடந்து முடிந்த தேர்தலில் சுமார் 30 இலட்சம் வாக்குகளை, நாம் தமிழர் இயக்கம் பெற்றிருக்கின்றது. அது, மொத்த வாக்குகளில் 6.6 சதவீதமாகும். இதன்மூலம் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக, நாம் தமிழர் அமைப்பு தன்னை முன்னிறுத்துகின்றது. இலங்கையில் உள்ளது போல விகிதாசாரத் தேர்தல் முறைமை இந்தியாவில் இருந்திருந்தால், பத்து, பன்னிரண்டு ஆசனங்களை வெற்றிகொள்வதற்கான வாக்கு சதவீதத்தை நாம் தமிழர் கொண்டிருக்கின்றது. ஆனால், இந்தியாவில் நடைமுறையில் உள்ளது, தொகுதிவாரித் தேர்தல் முறை ஆகும். அங்கு, கூட்டணிகளில் பங்களிக்காமல் நாம் தமிழர் வெல்ல வேண்டுமானால், ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 35 சதவீதத்துக்கும் குறையாத வாக்குளைப் பெற்றாக வேண்டும். மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிட்டிருக்கின்ற ‘நாம் தமிழர்,’ ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக 12,800 வாக்குகளைப் பெற்றிருக்கின்றது. ஒவ்வொரு தொகுதியிலும் பருமட்டாக 275,000 வாக்குகள் காணப்படும் நிலையில், பல முனைப் போட்டி காணப்பட்டாலும், வெற்றிக்கான வாக்குகள் என்பது கிட்டத்தட்ட 80,000க்கு அண்மித்தாக இருக்க வேண்டியிருக்கும். பிரதான இரு கட்சிகளும் 85 சதவீதமான வாக்குகளைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்ட பின்னர், மீதமுள்ள 15 சதவீத வாக்குகளில், 6.6 சதவீதத்தைப் பெற்றுக்கொண்டு, மூன்றாவது இடம் என்கிற நிலை குறித்துப் பெருமிதம் கொள்வது, அவ்வளவு முக்கியமான ஒரு காரியமல்ல. சீமானுக்கும் நாம் தமிழர் இயக்கத்துக்கும் அரசியலில் என்ன நிலை எடுப்பது, எப்படி இயக்குவது என்றெல்லாம் போதிப்பது இந்தப் பத்தியின் நோக்கமில்லை. ஆனால், சீமானும் நாம் தமிழர் இயக்கமும் முன்னெடுக்கும் அரசியலால், இலங்கை தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், இராஜதந்திரப் பின்னடைவுகள் குறித்து அவதானம் கொள்வது தவிர்க்க முடியாதது. இலங்கை தமிழர்களைப் பொறுத்தவரையில், விரும்பியோ விரும்பாமலோ, இந்திய மத்திய அரசாங்கத்தோடும், தமிழக அரசாங்கத்தோடும் இணக்கமாகச் செயற்பட வேண்டியிருக்கும். மத்தியிலும் மாநிலத்திலும் எந்தக் கட்சி ஆண்டாலும், அவர்களோடு அந்த உறவைப் பேணியாக வேண்டும். ஆனால், அவ்வாறான நிலை சுமூகமாகப் பேணப்படுவதை, இந்தியாவிலும் சரி, இலங்கையிலும் சரி, அக - புற சக்திகள் பெரியளவில் அனுமதிப்பதில்லை. அதனால், தொடர்ச்சியாகப் பின்னடைவை இலங்கை தமிழர்கள் சந்தித்து வந்திருக்கிறார்கள். தனிப்பட்ட அரசியல், கொள்கை நிலைப்பாடுகள் சார்ந்து, இந்தியாவை ஆளும் கட்சிகள் மீது ஆதரவு, எதிர்ப்பு மனநிலை இருக்கலாம். ஆனால், அதனை ஓர் இராஜதந்திக் கட்டத்தில் முன்னிறுத்தி செயற்பட முடியாது. மத்தியை நரேந்திர மோடி ஆண்டாலும், நாளை ராகுல் காந்தி ஆண்டாலும், அவர்களுடனான உறவைப் பேணியாக வேண்டும். அதுபோலவே, தமிழகத்திலும் ஆட்சியில் தி.மு.க இருந்தாலும் அ.தி.மு.க இருந்தாலும், அந்த உறவைப் பேணியாக வேண்டும். மாறாக, ஆயுதப் போராட்ட இயக்கங்கள் இந்தியாவில் பயிற்சி பெற்ற காலங்களில், ஒரு கட்சிக்கு இணக்கமாகச் செயற்பட்ட இயக்கமொன்று, இன்னொரு கட்சியைத் தூர நிறுத்திப் பயணித்த வரலாற்றை, இலங்கை தமிழர்கள் மீண்டும் தொடர முடியாது. ஏனெனில், அவ்வாறான நிலை, ஆயுதப் போராட்ட இயக்கங்களின் வளர்ச்சிக்கு உதவியதைக் காட்டிலும், வீழ்ச்சிக்கே துணை போயின. அத்தோடு, இப்போது இலங்கை தமிழர்கள் போராட்டத்தை, அஹிம்சை வழிக்குள் மட்டுப்படுத்திக் கொண்ட பின்னர், கட்சிகள் ரீதியாகப் பிரிவதோ, ஆட்சிகள் ரீதியாகத் துருவ மயப்படுவதோ நிகழ முடியாது. அது, இராஜதந்திர ரீதியில் பாரிய பின்னடைவுகளைத் தரும். தி.மு.க அணியினருக்கும் இலங்கை தமிழர்களுக்கும் இடையிலான உறவு என்பது, என்றைக்கும் இல்லாதளவுக்கு படுமோசமாகவே கடந்த பத்து ஆண்டுகளில் இருந்திருக்கின்றது. அதற்கு, சீமானை முன்னிறுத்திய புலம்பெயர் தரப்புகளின், தூர நோக்கற்ற நடவடிக்கைகள் காரணமாகும். முள்ளிவாய்க்கால் இறுதி நாள்களில், தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர் மு.கருணாநிதி நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பில் பெரும் விமர்சனங்கள் உண்டு. அந்த உண்ணாவிரதப் போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்ட போது, கலைஞரால் வெளிப்படுத்தப்பட்ட போர் நிறுத்தம் பற்றிய அறிவித்தல் எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாதவை. ஆனால், அவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிர்வினையாற்றுகிறோம் என்கிற நிலையை எடுத்து, எதிர்காலங்களைப் பற்றிச் சிந்திக்காது, படுவீழ்ச்சியான கட்டத்தை நோக்கி, இலங்கை தமிழர்களின் ஒரு பகுதியினர் நகர்ந்தார்கள். அவர்களைத் தான், சீமான் தனக்கான கொடையாளர்கள் ஆக்கினார். சீமான் முன்வைக்கும் தமிழ்த் தேசிய அரசியலுக்கும், இலங்கையில் தமிழ்த் தேசிய அரசியலுக்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு. தலைவர் பிரபாகரன், எந்தவொரு தருணத்திலும் இன்னொரு சமூகத்தை எதிரிகளாகக் கருதியதில்லை. மாறாக, பேரினவாத சிந்தனையையும் அதன் இயந்திரத்தையும் எதிர்த்துப் போரிட்டார். ஆனால், பிரபாகரனைத் தன்னுடைய முன்னோடியாக ஒரு கட்டம் வரையில் முன்னிறுத்திய சீமான், “நான் ஈழத்தில் ஆயுதப் போராட்டத்தை நடத்தியிருந்தால், சிங்களப் பெண்களை வன்புணர உத்தரவிட்டிருப்பேன்” என்று பல்லாயிரம் மக்கள் கூடியிருக்கும் மேடையில் பேசியிருக்கிறார். அடிப்படையில் சீமானின் முன்னோடி ஹிட்லர், முசோலினி போன்றவர்கள். அவர்கள், தங்களது காலத்தில், மனித குலத்துக்கு எதிரான அடிப்படைவாதத்தை விதைத்தவர்கள். அவர்களை ஒத்த சிந்தனைகளை விதைப்பதை, சீமான் தொடர்ந்துவருகிறார். ஒரு ஜனநாயகக் கட்டமைப்புள்ள அரசியல் கட்சியோ, இயக்கமோ அடிப்படையில் தொண்டர்கள், ஆதரவாளர்களின் கேள்விகளுக்குப் பதில் வழங்கும் தன்மையோடு இருக்க வேண்டும். ஆனால், சீமானிடம் யாரும் கேள்வி கேட்க முடியாது. கட்சியின் முடிவுகள் அனைத்தும் தன்னுடைய ஏக அதிகாரம் சம்பந்தப்பட்டது என்பதுதான் சீமானின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டோடு, ஓர் அமைப்பு மேலெழுவது என்பது சர்வாதிகார தோரணையிலானது. அங்கு கேள்விகளுக்கு இடமில்லை; கேள்விகள் இல்லாத அமைப்பு, ஜனநாயகத்துக்கு விரோதமானது. அத்தோடு, ஒரு கட்டம் வரையில் தலைவர் பிரபாகரனைத் தன்னுடைய வளர்ச்சிக்காக முன்னிறுத்திய சீமான், இன்றைக்கு பிரபாகரனைத் தாண்டிய ஒருவராகத் தன்னை முன்னிறுத்த முனைகிறார். புலம்பெயர் தமிழர்கள், முதலில் தங்களது ஆதரவையும் நிதிப்பங்களிப்பையும் எங்கு கொட்டுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதனால், ஏற்படும் நன்மைகள் குறித்துச் சிந்திக்க வேண்டும். நன்மைகள் ஏற்படவில்லை என்றாலும் பரவாயில்லை, தீமைகள் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஆனால், சீமானைக் கொண்டு சுமப்பவர்களோ விஷச்செடிக்கு தண்ணீருற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்தச் செடி வீசிய விஷத்தின் எதிர்வினைகளை, ஈழத் தமிழ் அரசியல் எதிர்கொண்டிருக்கின்றது. இனியாவது, சீமான் போன்றவர்களைக் கடந்து நின்று, தூரநோக்கோடு அண்டை நாட்டு அரசியலை அணுகத் தொடங்க வேண்டும். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இலங்கை-தமிழர்களுக்கானதா-சீமானின்-அரசியல்/91-271186
 22. துறைமுக நகர்: ராஜபக்‌ஷர்கள் வைத்த தீ புருஜோத்தமன் தங்கமயில் தென் இலங்கையின் பௌத்த சிங்கள அடிப்படைவாத சக்திகள், ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்கிற இக்கட்டான கட்டத்துக்கு வந்திருக்கின்றன. இனவாதத்தையும் மதவாதத்தையும் மூலதனமாக்கி, நாட்டின் ஆபத்பாண்டவர்கள் ‘ராஜபக்‌ஷர்களே’ என்று முழங்கி, 69 இலட்சம் வாக்குகளைப் பெற்றுக்கொடுத்து, அவர்களை மீண்டும் ஆட்சிக் கட்டிலில், இந்தச் சக்திகள் ஏற்றின. ஆனால், அடிப்படைவாத சக்திகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பையும் தவிடுபொடியாக்கி, சீனாவின் செல்லப்பிள்ளைகளாக நடப்பதை, ராஜபக்‌ஷர்கள் தமது தலையாய கடமையாக இன்றைக்கு வரிந்து கொண்டிருக்கிறார்கள். இதனால்தான், ராஜபக்‌ஷர்களுக்கும் தென் இலங்கையின் அடிப்படைவாத சக்திகளுக்கும் இடையிலான முரண்பாடுகள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கொழும்புத் துறைமுக நகரத் திட்டம், இலங்கையைத் தன்னுடைய கொலனியாக மாற்றுவதற்கான சீனாவின் நீண்டகாலத் திட்டமிடல் என்ற கருத்துகளை, தென் இலங்கையின் அடிப்படைவாத சக்திகளும் உள்வாங்கிப் பிரதிபலிக்க ஆரம்பித்திருக்கின்றன. கொழும்புத் துறைமுக நகருக்கான சிறப்புச் சட்டமூலம், இலங்கையில் இருந்து துறைமுக நகரை இன்னொரு நாடாகப் பிரகடனப்படுத்தும் அளவுக்கான அதிகாரங்களை வழங்குவதாகக் குற்றஞ்சாட்டப்படுகின்றன. துறைமுக நகருக்கான ஆணைக்குழு ஒன்று மாத்திரமே, இலங்கை அரசுக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒரு தொடர்பாடலாக இருக்கும் நிலை உருவாகி இருக்கின்றது. அதுவும், ஜனாதிபதி நினைத்தால், துறைமுக நகருக்கான ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக வெளிநாட்டினரை நியமிக்க முடியும் என்கிற அதிகாரங்களையும் குறித்த சட்டமூலம் வழங்குகின்றது. அப்படியான நிலையில், ஏற்கெனவே சீனாவின் செல்லப்பிள்ளைகளாக, அவர்களின் சொற்படி ஆடிக் கொண்டிருக்கும் ராஜபக்‌ஷர்கள், சம்பந்தப்பட்ட ஆணைக்குழுவுக்கும் சீனப் பிரதிநிதிகளையே நியமித்து, துறைமுக நகரைத் தனிநாட்டுக்குரிய அதிகாரங்களோடு சீனாவிடம் வழங்கிவிடும் வாய்ப்புகள் நிறையவே உண்டு. துறைமுக நகரச் சிறப்புச் சட்டமூலம் தொடர்பிலான உயர்நீதிமன்ற வழக்கொன்றில், ஜனாதிபதி செயலாளரின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, “இலங்கை அரசியலமைப்பில், நாட்டின் பிரதம நீதியரசராக இலங்கையர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்கிற கோடிடல்கள் இல்லை. எனவே, வெளிநாட்டினர் ஒருவரைக் கூட நியமிக்கலாம்” என்று வாதிட்டிருக்கின்றார். அதன்மூலம், துறைமுக நகர ஆணைக்குழுவுக்கு எந்தத் தரப்பினரையும் நியமிக்க முடியும் என்ற தொனிப்பட பேசியிருக்கின்றார். இப்படி, நீதிமன்றத்தில் தன்னுடைய வாதங்களை முன்வைத்த ரொமேஷ் டி சில்வாவைத்தான், ராஜபக்‌ஷர்கள் புதிய அரசியலமைப்பை வரைவதற்கான குழுவின் தலைவராக நியமித்து இருக்கிறார்கள். தமிழ் மக்களின் சமஷ்டிக் கோரிக்கையைப் பிரிவினைவாதக் கோரிக்கையாக தென் இலங்கை பூராவும் கொண்டு சேர்ந்ததில் தென் இலங்கையின் அடிப்படைவாத சக்திகளுக்கு முக்கிய பங்குண்டு. “ஒரே நாட்டுக்குள் அதிகாரப் பகிர்வு என்கிற விடயத்தை முன்வைத்து, புதிய அரசியலமைப்பை உருவாக்குகின்றார்கள். இதன்மூலம், இரா.சம்பந்தனும் எம்.ஏ. சுமந்திரனும் எதிர்பார்க்கும் தனி நாட்டை, மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்ரமசிங்கவும் வழங்கப்போகிறார்கள்” என்று ராஜபக்‌ஷர்களின் ஏவலாளிகளாக நின்று, நல்லாட்சிக் காலத்தில் இந்த அடிப்படைவாத சக்திகள் முழங்கின. ஆனால், நல்லாட்சிக் காலத்தில் வரையப்பட்ட அரசியலமைப்புக்கான யோசனைகளில், தமிழ் மக்கள் எதிர்பார்த்த சமஷ்டி அதிகாரம் என்பது ஒப்புக்காகக்கூட வழங்கப்படவில்லை. மாறாக, தற்போதுள்ள மாகாண சபையை ஒத்த ஒரு கட்டமைப்புப் பற்றியே பேசப்பட்டது என்பது, அனைவருக்கும் தெரிந்த உண்மை. பௌத்த பீடங்கள் தொடங்கி, தென் இலங்கையின் அனைத்துச் சக்திகளும், புதிய அரசியலமைப்பு யோசனைகளை முன்வைத்து, நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிரான நிலையை எடுத்தன. அதுபோல, ‘ஒரே நாடு; ஒரே சட்டம்’ என்கிற நிலைப்பாட்டின் ஊடாகத் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்களின் பாரம்பரிய நிலைப்பாடுகள் சார்ந்த, சில சட்ட அனுமதிகளை இல்லாமல் செய்துவிட வேண்டும் என்றும் ராஜபக்‌ஷர்களோடு சேர்ந்து நின்று, இந்த அடிப்படைவாத சக்திகள் திட்டமிட்டன. குறிப்பாக, முஸ்லிம்களின் திருமணச் சட்டத்தை அகற்றிவிட வேண்டும் என்ற நோக்கில் செயற்பட்டன. அதை ஒரு பிரிவினைவாதத்துக்கு எதிரான போராக, அந்தச் சக்திகள் தென் இலங்கை பூராகவும் பிரசாரம் செய்தன. ஒரு நாட்டின் இறைமை என்பது, அந்த நாட்டின் மக்களுக்கானது. மாறாக, அது ஆட்சியாளர்களுக்கு உரித்தானது அல்ல. அப்படியான கட்டத்தில், நாட்டு மக்களின் இறைமையை, இன்னொரு நாட்டிடம் அடகு வைக்கும் வேலைகளில் ராஜபக்‌ஷர்கள் ஈடுபடுகிறார்கள். நாட்டின் ஒரு தரப்பின் பாரம்பரிய சட்டங்களின் மீதே, ‘ஒரே நாடு; ஒரே சட்டம்’ என்ற பெயரில் அத்துமீறல்களை நடத்திய சக்திகள், இன்றைக்கு நாட்டு மக்களின் இறைமை இன்னொரு நாட்டிடம் எந்தவித அனுமதியும் இன்றி அடகு வைக்கப்படும் சூழலை, எவ்வாறு எதிர்கொள்வது என்று தெரியாமல் திணறுகின்றன. கொழும்புத் துறைமுக நகருக்கான சட்டமூலத்தில், குடிவரவு - குடியகல்வு விடயங்களை, துறைமுக நகரமே கொண்டிருக்கும். அதாவது, இலங்கையின் குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்துக்கும் துறைமுக நகருக்குள் வந்து செல்லும் எந்தவொரு வெளிநாட்டுப் பிரஜைக்கும் சம்பந்தமில்லை என்பது, தனி நாட்டுக்கான உரித்துக்கான எளிய சான்று. 2001 -2004 காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் சமாதான ஒப்பந்தம் செய்த அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, தென் இலங்கையின் அடிப்படைவாத சக்திகள், துரோகியாகப் பிரிவினைக்கு ஒத்துழைத்த தலைவராகக் காட்டின. அதனை முன்வைத்தே, ராஜபஷக்களுக்கான முதலாவது ஆட்சிக்காலம் உருவாக்கப்பட்டது. ஆனால், இன்றைக்கு அதே ரணில், “வடக்கில் பிரபாகரன் ஆளுகை செலுத்திய பகுதிகளைவிட, கொழும்புத் துறைமுக நகர், அதிக அதிகாரங்களைக் கொண்டிருக்கின்றது; அது தனிநாட்டுக்கு ஒப்பான ஒன்று” என்று கூறுகிறார். சிங்கப்பூர் போன்று, துறைமுகங்களைப் பிரதானப்படுத்தி தெற்காசியாவின் சிறப்பு பொருளாதார மண்டலத்தைக் கொழும்பை மையப்படுத்தி ஆரம்பிக்க வேண்டும் என்கிற யோசனையின் சொந்தக்காரர் ரணில். அவரின் 2001- 2004 ஆட்சிக் காலத்தில் அதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், அவர் பதவியிழந்ததும், கொழும்புத் துறைமுக நகர் திட்டத்தோடு சீனா, ராஜபக்‌ஷர்களை ஆட்கொண்டது. இன்றைக்கு அதன் திட்டங்களை ஒவ்வொரு கட்டமாக, சீனாவின் கட்டளைகளுக்கு அமைய ராஜபக்‌ஷர்கள் நிறைவேற்றி வருகிறார்கள். கடந்த சில நாள்களாக, சீன இளைஞர்கள் யுவதிகள், இலங்கையின் பெருமைகளை சிங்களத்தில் பேசுவது, காலாசார நடனங்கள் ஆடுவது என்று காணொளிகள் சமூக ஊடகங்களை ஆக்கிரமிக்கின்றன. அதன்மூலம், தென் இலங்கையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுந்திருக்கின்ற துறைமுக நகரத் திட்டத்துக்கு எதிரான அலைகளை அடக்க முடியும் என்று சீனாவும், அதன் ஏவலாளிகளும் நினைக்கின்றன. கொரோனா வைரஸின் பெருந்தொற்று அச்சுறுத்தல் என்பது, நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கின்றது. நாட்டின் பொருளாதாரம் என்றைக்கும் இல்லாத அளவுக்குப் பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. இப்படியான நெருக்கடியான நிலையில், அதைக் காட்டிலும் மாபெரும் அச்சுறுத்தலான விடயத்தைக் கொழும்புத் துறைமுக நகரச் சட்டமூலத்தின் மூலம், ராஜபக்‌ஷர்கள் நாட்டுக்கு வழங்கத் துணிந்திருக்கிறார்கள். அதன் மீதான அதிருப்திகள், விமர்சனங்களைக் கடப்பதற்காக, சிறுபான்மை இன மக்களுக்கு எதிராகத் திட்டமிட்ட இனவாத - மதவாத நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி, ரிஷாட் பதியூதின் உள்ளிட்டவர்களைக் கைது செய்தமையும், புர்கா உள்ளிட்ட முகத்தை மூடும் ஆடைகளுக்கான தடைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியமையும் அதன் உதாரணங்களாகக் குறிப்பிட முடியும். ஆட்சி அதிகாரத்துக்காக,க இனவாதத்தையும் மதவாதத்தையும் கையிலெடுக்கும் எந்தத் தரப்பும், அடிப்படையில் அறமற்ற தரப்புகளே ஆகும். ஆட்சி அதிகாரத்தை அடைந்ததும் அந்தத் தரப்புகள், தங்களது அதிகாரத்தைத் தக்க வைக்கவும், தங்களது தவறுகளை மறைக்கவும் அந்த இனவாத - மதவாதத் தீயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகின்றன. அதைத் தாண்டி, நாட்டின் பாதுகாப்புக்காகவோ, முன்னேற்றத்துக்காகவோ எந்தவொரு தரப்பும் இனவாதத் தீயைக் கையிலேந்தத் துணியாது. ராஜபக்‌ஷர்களுக்காக இனவாத - மதவாதத் தீயைக் கையிலேந்தியவர்கள், இன்றைக்கு நாட்டைச் சீனாவின் கொலனியாக மாற்றுவதற்குப் பங்களித்திருக்கிறார்கள். அவ்வளவுதான்! அவர்கள் தங்களின் பித்தத்தைப் போக்குவதற்காக, தின்பதற்கு இங்கு ஏதுமில்லை. http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/துறைமுக-நகர்-ராஜபக்-ஷர்கள்-வைத்த-தீ/91-270588
 23. குட்டையைக் குழப்பும் விக்கி -புருஜோத்தமன் தங்கமயில் முதலமைச்சர் பதவிக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தகுதியற்றவர் என்று, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்து, அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. சித்திரை வருடப் பிறப்புக்கு முதல் நாள், சமூக காணொளி ஊடகமொன்றுக்கு விக்னேஸ்வரன் பேட்டியளித்தார். வழக்கம் போலவே, அந்தப் பேட்டியும் முன்னதாகவே கேள்வி- பதில்கள் தயார்படுத்தப்பட்டு, அதன் பிரதிகளை வைத்துக் கொண்டு ஒளிப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அதாவது, ஏற்கெனவே தயார்படுத்தப்பட்ட கேள்விகளை நெறியாளர் கேட்டதும், அதற்குப் பதில்களை பிரதித் தாள்களைப் பார்த்து, விக்னேஸ்வரன் வாசிப்பார். அப்படித்தான் அந்தப் பேட்டியும் போய்க் கொண்டிருந்தது. ஆனால், வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பிலான கேள்விக்கு, விக்னேஸ்வரன் ஏற்கெனவே தயார் செய்யப்பட்ட பதில்களுக்குப் பதிலாக, அந்தத் தருணத்தில் தோன்றிய பதிலை வழங்கியது போன்ற தோற்றம் காணப்பட்டது. அந்தப் பதில், “....முதலமைச்சர் பதவிக்கு மாவை சேனாதிராஜா தகுதியற்றவர். அதனால்தான், 2013இல் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் என்னை முன்னிறுத்தினார். வடக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக வேலன் சுவாமியை முன்னிறுத்தலாம். அனைத்துக் கட்சிகளும் இணைந்து கோரிக்கை விடுத்தால், மீண்டும் நான் முதலமைச்சர் வேட்பாளராகுவது குறித்துச் சிந்திப்பேன்...” என்றவாறாக இருந்தது. அடிப்படை அரசியல் நாகரிகம், அரசியல் அறம் பற்றிய எந்தவித எண்ணமும் இல்லாத ஒருவராக விக்னேஸ்வரன், தேர்தல் அரசியலுக்கு வந்த காலம் முதல் காண்பித்து வந்திருக்கிறார். அத்தோடு, அவர் நேரடி அரசியலுக்கு வந்து சுமார் எட்டு ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும், அரசியலில் இன்னமும் முன்பள்ளிக் காலத்து பிள்ளைகளின் நடவடிக்கைகளுக்கு ஒப்பான ஓர் அரசியல்வாதியாகவே இருக்கிறார். அரசியல் உரையாடல்களில், ஏற்கெனவே தயார்படுத்தப்பட்ட உரைகள், கேள்வி- பதில்கள் இல்லாத பல சந்தர்ப்பங்களில், தன்னுடைய உண்மையான அரசியல் அறிவின் அளவு எப்படி என்று நிரூபித்து இருக்கின்றார். மாவை குறித்த ‘முதலமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர்’ என்கிற கூற்றும், அப்படிப்பட்ட ஒன்றுதான். அரசியல்வாதிகளோ, பேச்சாளர்களோ யாராக இருந்தாலும், ஏற்கெனவே தயார்படுத்தப்பட்ட உரைகளை ஆற்றுவது குறித்து, எவ்வித பிரச்சினைகளும் இல்லை. அப்படியான உரைகள், பல நேரங்களில் நேர்த்தியாக அமையும் என்பது திண்ணம். ஆனால், ஓர் அரசியல்வாதி அல்லது சமூகத்தின் தலைவனாகத் தன்னை முன்னிறுத்தும் ஒருவர், கேள்விகளுக்கான பதில்களை உடனடியாக வழங்கும் வன்மையோடும் இருக்க வேண்டும். அது, மக்களின் மனங்களைப் பிரதிபலிப்பதனூடும், அரசியல் மாற்றங்களை உள்வாங்கி, சமயோசிதமாகச் சிந்திப்பதனூடும் வருவது. அது, சிலருக்கு இயல்பாக வாய்க்கும். இன்னும் சிலரோ, படிப்பினைகள் மூலம் அதை வளர்த்துக் கொள்வார்கள். ஆனால், விக்னேஸ்வரன், தனக்கு இல்லாத ஒன்றை, வளர்த்துக் கொள்ள விரும்பவில்லை. அதுதான், அவரின் முன்பள்ளிக்காலத்து அரசியல் நடவடிக்கைகளுக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக, எண்பது வயதை அண்மிக்கும் மாவை சேனாதிராஜா முன்னிறுத்தப்பட்டால், அது கடுமையான விமர்சனத்துக்குரியது. ஏற்கெனவே ஒரு தடவை, வடக்கு மாகாண சபையின் ஆட்சியைக் கைப்பற்றி, ஏதும் செய்யாது கோட்டைவிட்ட பெருமை கூட்டமைப்புக்கு இருக்கிறது. அப்படியான நிலையில், அரசியல் தூரநோக்கும், நிர்வாக அனுபவமும் உள்ள ஒருவர், குறிப்பாக, வயது மூப்பால் அல்லாடாத ஒருவர், கூட்டமைப்பால் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட வேண்டும்; அதன்மூலம், செயற்பாட்டுத் திறனுள்ள மாகாண சபையைக் கட்டமைக்க வேண்டும். மாறாக, பதவிகளுக்காக அங்கலாய்க்கும் தரப்புகளால் ஆக்கிரமிக்கப்படும் மாகாண சபையொன்று, இனியும் உருவாகக் கூடாது. கடந்த பொதுத் தேர்தலில் மாவை சேனாதிராஜா தோற்றதும், அவரை முதலமைச்சர் கனவுக்குள் பல தரப்புகளும் சேர்ந்து தள்ளின. குறிப்பாக, அவரோடு சேர்ந்து கடந்த தேர்தலில் தோற்றுப்போனவர்களும் அவரை முதலமைச்சர் கதிரையில் ஒப்புக்கு இருந்திவிட்டு, மாகாண சபையைத் தாங்கள் ஆக்கிரமிக்கலாம் என்று காத்திருக்கும் சில குள்ள நரிகளுமே, இத்தகைய உசுப்பேத்தல்களின் பின்னணியில் இருக்கிறார்கள். 2013ஆம் ஆண்டு காலத்தில் முதலமைச்சர் வேட்பாளராக, மாவை முன்மொழியப்பட்டிருந்தால் அது வரவேற்கப்பட்டிருக்கும். அதன் மீதான விமர்சனங்கள் பெரியளவில் எழுந்திருக்கவும் வாய்ப்பில்லை. ஆனால், தற்போதுள்ள நிலையில், உடல்நிலை, வயது மூப்பு அத்தோடு குடும்ப அரசியல் ஒன்றுக்கான ஆர்வம் உள்ளிட்ட பாதகமான விடயங்கள், அவரை முதலமைச்சர் பதவிக்கு முன்னிறுத்துவதில் முட்டுக்கட்டைகளாக இருக்கின்றன. அத்தோடு, கடந்த சில ஆண்டுகளாக அவர், தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த போதிலும், கட்சியைக் கட்டுக்கோப்பாகப் பேணாத நிலையில், அவர் தலைமையில் அமையும் மாகாண சபைக்குள், அதன் அமைச்சர்களும் உறுப்பினர்களும் எப்படி கட்டுப்படுவார்கள் என்ற கேள்வி முக்கியமானது? தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து, வயது மூப்பு குறிப்பாக, நாளாந்த அரசியல் நடவடிக்கைகளை மற்றவர்களின் உதவியின்றிச் செய்ய முடியாத நிலையில் இருக்கின்ற அனைத்து அரசியல்வாதிகளும், தேர்தல் மைய அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டு கட்சிகளின், அமைப்புகளின் போசகர்கள் நிலையை எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு இரா.சம்பந்தன், சி.வி.விக்னேஸ்வரன், மாவை சேனாதிராஜா உள்ளிட்ட யாரும் விதிவிலக்கல்ல. மக்கள் நலன் சார் அரசியலில், அடுத்த தலைமுறைத் தலைவர்களை அடையாளம் கண்டு, அவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்தல் என்பது தார்மீகமாகும். ஆனால், அந்தத் தார்மீகத்தை, தந்தை செல்வாவுக்குப் பிறகு எந்த தமிழ்க் கட்சியின் தலைவரும் செய்யவில்லை என்பது வெட்கக் கேடானது. இதில், பல தலைவர்களும் அடுத்த கட்டத் தலைவர்கள் உருவாகுவதைத் தடுத்துக் கொண்டிருப்பவர்கள். அதில் சம்பந்தன் ஓரளவுக்குப் பொறுப்புடன் இருந்திருக்கின்றார். அடுத்த தலைமுறைத் தலைவர்களாக ஒரு சிலரை, அவர் அடையாளப்படுத்தி இருக்கிறார். ஆனால், விக்னேஸ்வரனைப் பொறுத்தளவில், தன்னுடைய எழுபது வயதின் பின்னர், அரசியல் கட்சியை ஆரம்பித்த அவர், தனது கட்சிக்குள் இரண்டாம் நிலைத் தலைவர் என்ற ஒருவரை, இதுவரை அடையாளப்படுத்தவே இல்லை. மாறாக, தானே ஏகமும் என்கிற நிலைப்பாட்டில் இருந்து கொண்டிருக்கிறார். அப்படியான நிலையில் இருந்து கொண்டு, மற்றவர்களின் தகுதி குறித்துக் கருத்துக்கூற முனைவது, அரசியல் அறமன்று. கடந்த பொதுத் தேர்தலில், விக்னேஸ்வரன் வெற்றி பெற்றிருக்கிறார். அவருக்கு ஒரு தொகுதி மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். அதனை மதிக்க வேண்டியது அனைவரதும் பொறுப்பாகும். ஆனால், அந்த மக்களின் எதிர்பார்ப்புகளைப் புரிந்து கொள்ளாமல், தனியாவர்த்தனம் செய்து, குட்டையைக் குழப்பும் வேலையை, விக்னேஸ்வரன் செய்து கொண்டிருக்கும் போது, அவரின் அரசியலுக்கான தகுதி குறித்து, மற்றவர்களும் கருத்துக்கூறவும் விமர்சிக்கவும் விளைவார்கள். தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தளவில், சிறிய இடைவெளியொன்றை நிரப்பிக் கொண்டிருக்கும் ஒருவர் என்கிற அளவைத் தாண்டி, விக்னேஸ்வரனது அரசியல் ஆளுமை தொடர்பில் பட்டியல் இடுவதற்கு ஏதுமில்லை. கடந்த காலத்தில், விக்னேஸ்வரனைச் சுற்றி ஒளிவட்டங்களை வரைந்தவர்களும் ஜனவசியக் கட்டுரைகளை எழுதியவர்களும் கூட, இன்றைக்கு அவரை விமர்சனத்துக்குரிய அரசியல்வாதியாகவே நோக்குகிறார்கள். தன்னுடைய நீதியரசர் ஓய்வு காலத்தை, கம்பன் கழக மேடைகளில் கௌரவமாகக் கழித்துக் கொண்டிருந்த விக்னேஸ்வனை, வடக்கு அரசியலுக்கு, சம்பந்தனும் சுமந்திரனுமே அழைத்து வந்திருந்தார்கள். அரசியலில் அவரது பாதை சீர்செய்யப்படும் வாய்ப்புகள் அமைந்த போது, யாழ். மையவாதக் குழுவொன்று தமிழ் மக்கள் பேரவையை அமைத்து, விக்னேஸ்வரனுக்கு வாழ்வளித்தது. அது அவரை பாராளுமன்ற உறுப்பினராக்கியது. ஒவ்வொரு கட்டத்திலும் விக்னேஸ்வரனைத் தாங்கி நின்றவர்கள், அவரைக் காப்பற்றினார்கள்; ஆனால், அவர் யாரையும் காப்பாற்றவில்லை. அதன் வெளிப்பாடே ‘மாவைக்கு தகுதியில்லை’ என்கிற அவரது எண்ணக் கருத்தாகும். 2013இல் மாவை சேனாதிராஜா, விக்னேஸ்வரனுக்கு வழிவிட்டிருக்காது விட்டால், விக்னேஸ்வரன் இன்னமும் கொழும்பில், ஏதாவது மேடையில் ஒரு பிரசங்கியாக இருந்திருப்பார். சிலவேளை, அவர் அதில் நன்றாகச் செயற்பட்டிருக்கக் கூடும். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/குட்டையைக்-குழப்பும்-விக்கி/91-270169
 24. இளைஞர்களைப் புறக்கணிக்கும் தமிழ்க் கட்சிகள் -புருஜோத்தமன் தங்கமயில் தாயக அரசியலில் ஆர்வம் காட்டிவரும் புலம்பெயர் தேசங்களிலுள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள், புலமையாளர்கள் சிலருக்கு இடையிலான இணையவழி உரையாடலொன்று அண்மையில் நடைபெற்றது. அதன்போது, ‘தமிழ்த் தேசிய கட்சிகள், இளைஞர்களை அரசியலுக்குக் கொண்டுவரத் தயங்குவது ஏன்? குறைந்த பட்சம், அரசியல் விழிப்புணர்வுக் கருத்தரங்குகளைக்கூட இளைஞர்களை இணைத்துக் கொண்டு கட்சிகள் நடத்துவதற்குப் பின்நிற்பது ஏன்?’ என்ற தொனியிலான கேள்விகள் முன்வைக்கப்பட்டு, உரையாடப்பட்டன. குறித்த உரையாடலில், தாயகத்திலிருந்து பங்குகொண்ட ஒருவராக, இதற்கான பதில்களை நான் வழங்க வேண்டியிருந்தது. உண்மையிலேயே, தமிழ்த் தேசிய கட்சிகள் இளைஞர்களை அரசியலுக்குள் உள்வாங்குவதற்கு தயங்குகின்றனவா? என்றால் “இல்லை” என்று பதிலளிக்கவே கட்சிகளின் தலைவர்கள், சிரேஷ்ட உறுப்பினர்கள் முனைவார்கள். அதற்கு உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகளில் உறுப்பினர்களாக இளைஞர்கள் இருப்பதை காட்டுவார்கள். ஆனால், இளைஞர்கள் அரசியலுக்குள் உள்வாங்கப்படுவது என்பது, உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகளில் சிலரை உறுப்பினராக்குவதற்கு மட்டும்தானா? தமிழ்த் தேசிய அரசியலின் உந்துவிசையாக எப்போதுமே இளைஞர்களே இருந்திருக்கிறார்கள். தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி, பல தலைவர்களை உருவாக்கி இருக்கின்றது. தமிழரசுக் கட்சியின் இன்றைய தலைவர் மாவை சேனாதிராஜா கூட, வாலிபர் முன்னணிக்கூடாக அடையாளப்படுத்தப்பட்ட ஒருவர்தான். அதுபோல, தனி நாட்டுக் கோரிக்கையை மூத்த அரசியல் தலைவர்கள் ஒரு தீர்வாக முன்வைத்து, ஆக்ரோச வீர உரைகளை ஆற்றிய போது, அதற்கு செயல்வடிவம் கொடுத்தவர்கள் இளைஞர்கள். அதுதான், 30 ஆண்டுகளையும் தாண்டி, ஆயுதப் போராட்டம் நிலைபெற்றதற்கும் காரணம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு, அதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலையீடு இருந்த காலம் வரையில்கூட, இளைஞர்களின் பங்களிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. மூத்த தலைவர்களுடன் இளம் தலைவர்கள் அரசியல், இராஜதந்திர சந்திப்புகளில் கட்டாயம் சேர்க்கப்பட்டார்கள். அப்படித்தான், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒருகட்டம் வரையில் அடையாளம் பெற்றார். அவர், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் வாரிசு அரசியல்வாதியாக இருந்தாலும், அவரை இளம் தலைவராக முன்னிறுத்தியதில் புலிகளின் பங்கு கணிசமானது. அதுதான், முள்ளிவாய்க்கால் முடிவுகளின் பின்னரான காலத்தில் கூட்டமைப்போடு அவர் முரண்பட்டபோது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை கட்டுவதற்கான ஆதாரமாக அமைந்தது. முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான கடந்த 12 ஆண்டுகளிலும்கூட தமிழ்த் தேசிய அரசியல் போராட்டங்களில் பெரும் சக்தியாக, தேர்தல்களில் வாக்குகளாக திரள்வதும் இளைஞர்கள்தான். அண்மையில் நடைபெற்ற ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’யிலான போராட்டமும்கூட, ஒருசில அரசியல்வாதிகளின் துணிச்சலான நகர்வோடு ஆரம்பித்தாலும், அது பெருந்திரளாக மாறி அடையாளம் பெறுவதற்குக் காரணமாக இருந்தவர்கள் தன்னலம் நோக்காது பாடுபடும் இளைஞர்கள்தான். போராட்டங்களில் கூட்டமாகத் திரள்வதற்கும் தேர்தல்களில் பிரசாரங்களில் பங்களித்து வாக்குச் சேகரிப்பதற்கும் தேவைப்படும் இளைஞர்கள், அரசியல் முடிவுகளை எடுப்பது, அடுத்த கட்டங்களைத் திட்டமிடுதல் போன்ற செயற்பாடுகளில் கட்சிகளால் தொடர்ச்சியாகத் தவிர்க்கப்படுகிறார்கள். சிலவேளை, இளைஞர்களின் பங்களிப்போடுதான் கட்சி அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மாவை சேனாதிராஜாவோ, கஜேந்திரகுமாரோ, செல்வம் அடைக்கலநாதனோ, தர்மலிங்கம் சித்தார்த்தனோ வாதிடுவார்கள் என்றால், தேர்தல்கள், போராட்டங்களுக்கு அப்பால் இளைஞர்களை அரசியல் ரீதியாக இவர்கள் எங்கு முதன்மைப்படுத்தி இருக்கிறார்கள் என்கிற கேள்விக்குப் பதிலளிக்க வேண்டி வரும். மாவை, வாலிபர் முன்னணிக்கூடாக வந்தவர்; கஜேந்திரகுமார் இளைஞர் என்பதற்காக(வும்) முன்னிலைப்படுத்தப்பட்டவர். செல்வமும் சித்தார்த்தனும் ஆயுத இயக்கங்களில் இருந்து கட்சி அரசியலுக்கு வந்தவர்கள். ஆயுதப் போராட்டம் என்பதே, இளைஞர்களுக்கான அடையாளம்தான். ஆனால், இவர்கள் யாரும் இளைஞர்களை முன்னிறுத்திய அரசியலை நடத்துவதற்குத் தயாராக இல்லை. ஏனெனில், இளைஞர்கள் கட்சிகளுக்குள் முடிவெடுக்கும் நிலையை அடைந்தால், அது தங்களின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கும் என்று அஞ்சுகிறார்கள். தமிழரசுக் கட்சியில் இன்றைக்கும் வாலிபர் முன்னணி, தேர்தல் காலத்தில் ஒரு பலமான அங்கம்தான். ஆனால், அதிலுள்ள முக்கியஸ்தர்கள் கட்சிக்குள் முடிவுகளை எடுக்கக்கூடிய நிலையில் இல்லை. வாக்கு அரசியலுக்கான கட்டத்தில்தான் வாலிபர் முன்னணி கையாளப்படுகின்றது. வாலிபர் முன்னணிக்குள் சேர்க்கப்பட்டிருக்கும் கணிசமான இளைஞர்களுக்கு பரந்துபட்ட அரசியல் அறிவு என்பது இல்லை. பொதுத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல்களில் வாக்குச் சேர்ப்பதற்கு ஒருவர் உதவுவார் என்று கருதினால், அவரை வாலிபர் முன்னணிக்குள் கொண்டுவந்து, முக்கியத்துவம் வழங்கும் வழக்கத்தை தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கும் மாவை அப்படியானவர்களையே அதிகம், வாலிபர் முன்னணிக்குள் கொண்டுவர நினைக்கிறார். கட்சியினதும் தலைவர்களினதும் செயற்பாடுகளை தர்க்கபூர்வமாக விமர்சிக்கும் இளைஞர்களை, வாலிபர் முன்னணிக்குள் உள்வாங்குவதற்கான வாய்ப்புகளைத் திட்டமிட்டுத் தவிர்க்கிறார்கள். தேர்தல் காலங்களில் வாலிபர் முன்னணி அடையாளத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பல காவாலித்தனமாக சேட்டைகளை புரிந்து, கட்சியினது தோல்விக்குக் காரணமானவர்களை, தமிழரசுக் கட்சி இன்னமும் வைத்துக் கொண்டிருக்கிறது. தமிழரசுக் கட்சிக்குள் யாராவது இளைஞர்களுடனான திறந்தவெளிக் கலந்துரையாடல்களை நடத்தினால், அது தொடர்பில் மாவை அச்சப்படும் சூழல் காணப்படுகின்றது. ஒரு சமூகம் முன்னோக்கிப் பயணிப்பது, இளைஞர்களின் கணிசமான பங்களிப்பில் தங்கியிருக்கின்றது. அப்படியான கட்டத்தில் தமிழ் மக்களின் முதன்மைக் கட்சியாக இருக்கும் தமிழரசுக் கட்சி, இளைஞர்களின் கருத்துகளைத் திறந்த மனதோடு எதிர்கொள்ள வேண்டும். ஆனால், அதற்குப் தயாராக இல்லாமல், அனைத்துக்கும் பதவி, தேர்தல் பற்றிய அடையாளங்களைச் சுமத்தி, விலத்தியோடுவது என்பது அயோக்கியத்தனமானது. கஜேந்திரகுமாரைப் பொறுத்தளவில், அவர், தன்னை எதிர்காலத்தில் பிரதான கட்சித் தலைவராக்க நினைக்கிறார். அத்தோடு, பொன்னம்பலங்களின் அடையாளம் என்றைக்கும் நிலைத்திருக்க வேண்டும் என்றும் விரும்புகின்றார். பொன்னம்பலங்களின் மூன்றாம் தலைமுறை வாரிசாக அவர், தனது முன்னோர்களுக்காகச் செயற்படுவதைக் குறை சொல்ல முடியாது. ஆனால், அவர் தன்னையும் தன்னுடைய வாரிசு அரசியலையும் ஸ்திரப்படுத்துவதற்காக மாத்திரம் இளைஞர்களைக் கையாள்கிறார். இந்த விமர்சனத்தை, இந்தப் பத்தியாளர் கடந்த சில ஆண்டுகளாக முன்வைத்து வருகிறார். ஆனால், அப்போதெல்லாம், அதனை மூர்க்கமாக எதிர்த்து வந்த கஜேந்திரகுமார் ஆதரவு இளைஞர்கள், இன்றைக்கு அதே விமர்சனங்களைப் பொதுவெளியில் முன்வைக்கிறார்கள். அதாவது, முன்னணி என்கிற போலி அடையாளத்துக்கு ஊடாக காங்கிரஸை வளர்ப்பதற்காக தங்களை பகடைக்காய்களாக கஜேந்திரகுமார் பயன்படுத்திவிட்டு, தேர்தலில் வென்றதும் தூக்கி எறிந்துவிட்டார் என்று அழுது புலம்புகிறார்கள். அத்தோடு, இன்றைக்கு முன்னணியில் இருந்து வெளியேறிய இளைஞர்களை நோக்கி, ‘ரவுடிக்கூட்டம்’ என்கிற அடையாளம் கஜேந்திரகுமார் அணியால் வழங்கப்படுகின்றது. அதைக் காணும் போது, தேர்தல் மைய அரசியல்வாதிகளின் அப்பட்டமான முகம் தெரிகின்றது. செல்வத்துக்கோ, சித்தார்தனுக்கோ தங்களது கட்சியை வளர்க்க வேண்டும் என்கிற எந்தவித எண்ணமும் இல்லை. தங்களது காலம் முழுவதும் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதற்கான வாய்ப்புகளை எப்படித் தக்க வைப்பது என்பது மட்டுமே அவர்களது ஒற்றை இலக்கு. அவர்கள் தலைமையேற்றிருக்கும் கட்சிகளில் புதிதாக இளைஞர்கள் யாரும் சேருவதில்லை. அண்மைக்காலத்தில் சேர்ந்திருப்பதாக அடையாளப்படுத்தப்படும் இளைஞர்கள் பெரும்பாலும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களாக இருந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல்களில் ஆசனங்களுக்காக டெலோவுக்கும் புளொட்டுக்கும் சென்றவர்கள். அவர்களும்கூட தங்களை கூட்டமைப்பு அடையாளத்துக்குள் பேணவே முயல்கிறார்கள். செல்வம் மன்னாரின் கத்தோலிக்க வாக்குகளிலும், சித்தார்த்தன், தந்தையார் தர்மலிங்கத்தின் பெயருக்காக விழும் வாக்குகளிலும் தங்கியிருப்பவர்கள். அவர்களுக்கு தங்களுக்கு காலத்துக்குப் பின்னரான எந்தவித அரசியல் எதிர்பார்ப்பும் இல்லை. தன்னுடைய 70 வயதுகளில் தமிழ்த் தேசிய அரசியலுக்குள் வந்த சி.வி. விக்னேஸ்வரன், தன்னுடைய காலம் பூராவும் பதவியோடு இருப்பதற்கான ஏற்பாடுகளில் மாத்திரம் கவனம் செலுத்துகிறார். அவரது கட்சியில் இரண்டாம் நிலைத் தலைவர்கள் என்று ஒருவர் கூட இல்லை. அப்படி அடையாளப்படுத்தப்படுவதைக்கூட அவர் விரும்புவதில்லை. அவரிடத்திலும் இளைஞர்களின் அரசியல் பங்களிப்பு குறித்து எதிர்பார்க்க முடியாது. இவர்களுக்கு எல்லாமும் முன்னோடியான இரா.சம்பந்தன் பற்றி, இந்தப் பத்தியில் எழுதப்படவில்லை. ஏனெனில், வயது மூப்பின் காரணமாக அவர் தளர்ந்திருக்கிறார். இன்றைக்கும் அவர் கூட்டமைப்பின் தலைவராக இருந்தாலும், முடிவுகளை எடுக்கும் கட்டத்தில் இல்லை. அவரிடத்தில் இனி இளைஞர்கள் பற்றிப் பேசுவதால் எந்தப் பயனும் இல்லை. தமிழ்த் தேசிய அரசியலில் இளைஞர்களின் பங்களிப்பு என்பது, தேர்தல் நோக்குக்குள் மாத்திரம் சுருக்கப்படாமல், அரசியல் இராஜதந்திர ஊடாடல் கட்டங்களில் பங்களிக்கும் அளவுக்கு வலுப்படுத்தப்பட வேண்டும். அதுதான், எதிர்காலத் தலைவர்களை பரந்துபட்ட அறிவோடு வளர்ப்பதற்கு உதவும். அதற்கான வழிகளை தமிழ்த் தேசிய கட்சிகளே அடைத்துக் கொண்டிருக்கின்றன என்பதுதான் பெரும் வேதனையானது. http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இளைஞர்களைப்-புறக்கணிக்கும்-தமிழ்க்-கட்சிகள்/91-269567
 25. புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடை சொல்லும் புதிய செய்தி -புருஜோத்தமன் தங்கமயில் பிரித்தானியத் தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை உள்ளிட்ட ஏழு புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கும் 388 தனிநபர்களுக்கும் எதிரான தடையை, இலங்கை அரசாங்கம் மீண்டும் விதித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பிலான 46/1 பிரேரணை நிறைவேற்றப்பட்ட சில நாள்களுக்கு உள்ளேயே, புலம்பெயர் தமிழ் அமைப்புகள், தனிநபர்களுக்கு எதிரான தடையை அரசாங்கம் விதித்துள்ளது. குறித்த அமைப்புகளுக்கும் தனி நபர்களுக்கும் எதிரான தடை, ராஜபக்‌ஷர்களின் கடந்தகால ஆட்சியின் போதும் விதிக்கப்பட்டிருந்தது. எனினும், நல்லாட்சிக் காலத்தில், குறிப்பாக 2016ஆம் ஆண்டில் சம்பந்தப்பட்ட அமைப்புகள், தனி நபர்கள் மீதான தடை நீக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே, மீண்டும் தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது. இலங்கையில் இருந்து சுயமாக வெளியேறிய தமிழ்த் தரப்பினரால் தோற்றுவிக்கப்பட்ட குறித்த தமிழ் அமைப்புகள், விடுதலைப் புலிகளுக்கு உதவிகளை வழங்கி, இலங்கைக்கு எதிராகத் தொடர்ந்தும் செயற்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியே அரசாங்கம் தடை விதித்துள்ளது. அத்தோடு, சம்பந்தப்பட்ட தமிழ் அமைப்புகளையும் ‘புலம்பெயர் தமிழ் அமைப்புகள்’ என்று அழைப்பதையும் அரசாங்கம் தவிர்த்துக் கொள்கின்றது. ஏனெனில், ‘புலம்பெயர் சமூகம்’ என்கிற அடையாளம், தங்களது தாயகப் பகுதிகளிலிருந்து, இன்னொரு சக்தியினரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்களைக் குறிக்கும் என்பதால், அது வெளிநாடுகளிலுள்ள தமிழ் மக்களுக்குப் பொருந்தாது என்று இலங்கை அரசாங்கம் வாதிடுகிறது. அதாவது, இலங்கையிலிருந்து வெளியேறியுள்ள தமிழ் மக்களை, யாரும் வெளியேற்றவில்லை; அவர்களே சுயவிருப்பத்தின் பேரில் வெளியேறினர் என அரசாங்கம் கூறுகின்றது. இதன்பிரகாரம், வெளிநாட்டிலுள்ள தமிழ் அமைப்புகள் அல்லது புலிகளுக்கு ஆதரவளித்த தமிழ் அமைப்புகள் மீதான தடை என்றே, புலம்பெயர் சமூகத்தை அரசாங்கம் வரையறுக்கின்றது. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், தாங்கள் சந்தித்த தோல்வி எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புகளால் மாத்திரம் நிகழ்த்தப்பட்டது அல்ல என்பது, ராஜபக்‌ஷர்களின் வாதம். மேற்கு நாடுகளும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் தங்களுக்கு எதிராகக் கணிசமான பங்கை ஆற்றின என்பது, அவர்களின் தொடர் குற்றச்சாட்டுகள். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தன்னுடைய தோல்வியை ஏற்றுக்கொண்டு தங்காலை சென்ற மஹிந்த, அங்கு கூடியிருந்த மக்களிடம், “தமிழ் மக்களாலும் பிரிவினை சக்திகளாலும் நான் வீழ்த்தப்பட்டேன்” எனக் கூறினார். அந்த இடத்தில் இருந்துதான் ராஜபக்‌ஷர்கள், தங்களது மீள்வருகைக்கான பயணத்தை, மீண்டும் ஆரம்பித்தார்கள். இனவாதம், மதவாதம் என்கிற அடிப்படைவாதங்களை அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் இன்னும் மோசமாக முன்னிறுத்தி, ராஜபக்‌ஷர்கள், தங்களை மீளநிறுவினார்கள். அதுதான், 2017ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் பிரதிபலித்தது. நல்லாட்சி அரசாங்கத்தின் உள்முரண்பாடுகள், மைத்திரியின் சதிப்புரட்சி என்று, ஆட்சியின் மீது கடும் விமர்சனங்களோடு மக்கள் இருந்தபோது, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள், நல்லாட்சியாளர்களை ஒட்டுமொத்தமாக ஆட்டம்காண வைத்தன. இவ்வாறான ஒரு பலவீனமான ஆட்சிக்கு எதிராக, ராஜபக்‌ஷர்களின் எழுச்சி என்பது, தென்னிலங்கையில் இயல்பாக எழுந்தது. அதில், மதவாத எண்ணெயை ஊற்றி, இனவாதத் தீயைப் பற்ற வைத்து, ராஜபக்‌ஷர்கள் பெருவெற்றி கண்டார்கள். தேர்தல் காலத்தில் இலகுவாக வாரி வழங்கிவிடக் கூடிய வாக்குறுதிகள் போல, ஆட்சியை கொண்டு செலுத்துதல் அவ்வளவு இலகுவாக அமைந்துவிடுவதில்லை. ராஜபக்‌ஷர்கள் அவ்வாறானதொரு சிக்கலைத் தற்போது சந்தித்து நிற்கிறார்கள். 2015க்கு முன்னரான காலத்தில், போர் வெற்றி மமதையோடு ராஜபக்‌ஷர்கள், மக்களின் மனநிலை, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை உள்வாங்காது ஆடிய ஆட்டம், அவர்களைத் தோற்கடித்திருந்தது. அப்படியானதொரு நிலை மீண்டும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில், அவர்கள் கவனமாக இருக்கிறார்கள். ஆனாலும், ஓர் இராணுவ அதிகாரியின் சிந்தனைகளும் அரசியல்வாதியின் சிந்தனைகளும் முரண்படும் புள்ளியில், ராஜபக்‌ஷர்களின் தற்போதையை ஆட்சி தடுமாறுகிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, இராணுவ அணுகுமுறையோடு ஆட்சியை முன்னெடுக்க எத்தனிக்கும் போது, பிரதமர் மஹிந்தவும் பசில் ராஜபக்‌ஷவும் அரசியல்வாதிகளுக்கே உரிய அணுகுமுறை, நெகிழ்வுப் போக்கோடு இருக்க எத்தனிக்கிறார்கள். இதனால், அமைச்சரவை உள்ளிட்ட ஆளுங்கட்சிக்குள் முரண்பாடான நிலைகொண்ட குழுக்கள் நிலைபெறுகின்றன. முன்னுக்குப் பின் முரணான கருத்துகளை முன்வைத்து, பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். தேர்தல் மேடைகளில் பேசப்படும் அடிப்படைவாதம் போல, அதை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் இலகுவானவை அல்ல. ஏனெனில், ஒவ்வோர் அடிப்படைவாத நடவடிக்கைகளும் இன, மத சுதந்திரம், சர்வதேச உறவுகளில் தாக்கம் செலுத்த வல்லன. கொரோனா வைரஸ் தடுப்பு விதிகளைப் பயன்படுத்தி ஜனாஸாக்களை எரித்தமை, முஸ்லிம் நாடுகளைக் கோபப்படுத்தியது. அதுபோல, புர்கா தடை பற்றிய அமைச்சர்களின் பேச்சு, ஜெனீவாவில் இலங்கை தோற்றுப்போவதற்கு காரணமாக அமைந்தது. என்னதான், பாகிஸ்தான் பிரதமரை இலங்கைக்கு அழைத்து உபசரித்த போதிலும், பங்களாதேஷுக்கு உடல்நலக்குறைவோடு சிரமப்படும் மஹிந்த ராஜபக்‌ஷவை அனுப்பி ஆதரவு கோரிய போதும்கூட, அனைத்து முஸ்லிம் நாடுகளும் இலங்கைக்கு ஆதரவளிக்கவில்லை. பல நாடுகள் வாக்களிப்பைப் புறக்கணித்து, புதிய பிரேரணை நிறைவேறுவதற்கு உதவின. இப்படி, உள்நாட்டில் முன்னெடுக்கப்படும் அடிப்படைவாத நடவடிக்கைகள், சர்வதேச ரீதியில் சிக்கல்களை ஏற்படுத்தும். அது தொடரும் போது, ஆட்சி மாற்றமொன்றுக்கான ஏதுகைகளுக்கு வெளிநாடுகள் ஆதரவளிப்பதும் உண்டு. ராஜபக்‌ஷர்களின் மீள்வருகையின் போது, தமிழ் மக்களுக்கு எதிரான இனவாதப் பேச்சுகளையும் தாண்டி, முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாத மதவாதப் பிரசாரம் முன்னணியில் இருந்தது. அமைச்சரவையில் அலி சப்ரி என்கிற கோட்டாவின் தீவிர ஆதரவாளர் தவிர, எந்தவொரு முஸ்லிமும் சேர்க்கப்படவில்லை. இனியும் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புகளும் இல்லை. ஆனாலும், முஸ்லிம்களுக்கு எதிரான எதிர்ப்புப் பிரசாரம் என்கிற நிலையிலிருந்து, தமிழ் மக்களுக்கு எதிரான எதிர்ப்பு பிரசாரம் என்கிற உத்தியை நோக்கி, ராஜபக்‌ஷர்கள் நகர்வதற்கான காட்சிகளை, புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடை காட்டுகின்றது. ஏனெனில், முஸ்லிம்களுக்கு எதிரான எதிர்ப்புப் பிரசாரத்தை முதன்மையாகப் பேணியதன் விளைவு, முஸ்லிம் நாடுகளை குறிப்பிட்டளவு கோபப்படுத்தி இருக்கின்றது. கடந்த காலத்தில், இலங்கையின் செயற்பாடுகளை சர்வதேச ரீதியில் ஆதரித்து வந்த முஸ்லிம் நாடுகள், தற்போது விமர்சனங்களை முன்வைக்கின்றன. ஜெனீவா பிரேரணை போன்ற முக்கிய தருணத்தில் கூட கைவிடுகின்றன. இப்படியான நிலை தொடர்ந்தால் சீனச் சார்பு நாடுகளைத் தவிர, சர்வதேச ரீதியில் இலங்கையை ஆதரிப்பதற்கான நாடுகள் இல்லை எனும் சூழல் ஏற்படலாம். அதைத் தவிர்த்துக் கொள்ளும் தேவை என்பது, ராஜபக்‌ஷர்களுக்குத் தவிர்க்க முடியாதது. அதன்போக்கிலேயே, தமிழ் மக்களுக்கு எதிரான எதிர்ப்புப் பிரசாரத்தை முதன்மைப்படுத்தும் கட்டத்துக்கு ராஜபக்‌ஷர்கள் மீண்டும் வந்திருக்கிறார்கள். தடைவிதிக்கப்பட்டுள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புகள், தனிநபர்கள் ஆகியவர்களோடு தொடர்புகளைப் பேணுபவர்கள், கடந்த காலத்தில் பேணியோர் என்று அவர்களுக்கு எதிரான விசாரணைகளை அரசாங்கம் ஆரம்பித்து இருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் இருந்து இயங்கும் தமிழ் தொலைக்காட்சியொன்றின் ஊடகவியலாளர் ஒருவர், பேஸ்புக் பக்கத்தில் வெளிநாட்டு வாழ் நபர் ஒருவரோடு நட்புப் பட்டியலில் இருந்தார் என்பதற்காக, கொழும்புக்கு அழைத்து விசாரிக்கப்பட்டு இருக்கின்றார். இதைத் தொடர் அச்சுறுத்தலுக்கான பெரும் எச்சரிக்கையாகத் தமிழ் மக்கள் கொள்ளலாம். அதிலும், சம்பந்தப்பட்ட தொலைக்காட்சியின் உரிமையாளர் ராஜபக்‌ஷர்களுக்கு மிகவும் நெருக்கமானவர். அப்படிப்பட்ட நிலையிலேயே, விசாரணை வளையத்துக்குள் பேஸ்புக் நட்புப் பட்டியலை முன்வைத்து ஒருவர் வருகிறார் என்றால், ஏனையவர்களின் நிலை எப்படியானது என்பது தெரியும். பேஸ்புக் நட்பு, தொடர்பு, சமூக ஊடாடல் என்று ஆரம்பித்து எல்லாவற்றுக்கும் பயங்கரவாத சிந்தனை, பிரிவினைவாத சூழ்ச்சி என்று வர்ணம் பூசப்படும். அதனை தென்னிலங்கையில் பெரும் பேசு பொருளாக்கி, மீண்டும் தங்களை நாட்டின் காவலர்களாக காட்டி ஆட்சியை தக்க வைப்பதற்கு ராஜபக்‌ஷர்கள் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறான கட்டங்களில், ஆர்வக்கோளாறு வேலைகளில் சிக்காமல், சூழலைப் புரிந்து கொண்டு, கவனமாக அடுத்த கட்டங்களை நோக்கி நகர்வது தமிழ் மக்களின் பொறுப்பாகும். ஏனெனில், தமிழ் மக்களின் சின்ன சறுக்கல்களைக்கூட ராஜபக்‌ஷர்கள் தங்களின் பெரு வெற்றிகளுக்காகப் பயன்படுத்திக் கொள்வார்கள். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/புலம்பெயர்-தமிழ்-அமைப்புகள்-மீதான-தடை-சொல்லும்-புதிய-செய்தி/91-269189
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.