Jump to content

Search the Community

Showing results for tags 'வீரகத்தி தனபாலசிங்கம்'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • வலைப்போக்கன் கிருபன்'s செயற்கை நுண்ணறிவு உருவாக்கி
  • Ahal Media Network's Topics

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's சிறப்பு ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணக்கட்டுகள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's திரட்டுகள்
  • Home Appliances Spot's Home Appliances

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

  1. மோடியும் கச்சதீவும் April 9, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — இந்தியா கச்சதீவை இலங்கைக்கு விட்டுக்கொடுத்த பிறகு கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் அது தொடர்பாக சர்ச்சை கிளப்பிய முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. அதுவும் பத்து வருடங்களாக பதவியில் இருந்துவரும் அவர் இதுகாலவரை எதுவும் பேசாமல் இருந்துவிட்டு தற்போது பிரச்சினையை கிளப்புவது கச்சதீவை மீண்டும் இந்தியா வசமாக்குவதற்காக அல்ல, எதிர்வரும் லோக்சபா தேர்தலில் தனது பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழ்நாட்டு மக்களின் ஆதரவை பெறுலாம் என்ற எதிர்பார்ப்பிலேயே என்பதை புரிந்துகொள்வதற்கு அரசியல் ஞானம் தேவையில்லை. வடஇந்தியாவில் அமோகமான மக்கள் செல்வாக்குடைய தலைவராக இருந்துவரும் மோடி மூன்றாவது தடவையாகவும் பிரதமராக வருவார் என்று உறுதியாக நம்பப்படுகிறது. அவ்வாறு நடந்தால் ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு தொடர்ச்சியாக மூன்று தடவைகள் பிரதமராக பதவிக்கு வருபவர் என்ற பெருமையை அவர் தனதாக்கிக்கொள்வார். ஆனால், அவரின் பாரதிய ஜனதா தென்னிந்திய மாநிலங்களில் குறிப்பாக, சுமார் ஏழு தசாப்தங்களாக மாறி மாறி இரு பெரிய திராவிட இயக்கக் கட்சிகளின் ஆட்சியில் இருந்துவரும் தமிழ்நாட்டில் கணக்கில் எடுக்கத்தக்க ஆதரவைப் பெறமுடியாமல் இருக்கிறது. இது அவருக்கு ஒரு பெரும் சவாலாக இருக்கிறது. நீண்டகாலமாக கூட்டணி சேர்ந்து இயங்கிவரும் திராவிட முன்னேற்ற கழகத்தையும் காங்கிரஸ் கட்சியையும் தேர்தல் பிரசாரங்களில் ஒருங்கே தாக்குவதற்கு மோடியும் கட்சியும் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் உணர்ச்சியைக் கிளறக்கூடிய கச்சதீவு பிரச்சினையை பயன்படுத்த முனைந்து நிற்பதே தற்போதைய சர்ச்சைக்கு காரணமாகும். எதிர்க்கட்சியை தாக்குவதற்கு மோடி கச்சதீவு பிரச்சினையை பயன்படுத்துவது இதுதான் முதற்தடவை அல்ல. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரையொன்றில் அவர் “தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள கச்சதீவை இன்னொரு நாட்டுக்கு கொடுத்து விட்டார்கள். இந்திரா காந்தியின் தலைமைத்துவத்தின் கீழ்தான் அது நடந்தது….. அந்தத் தீவு பாரதமாதாவின் ஒரு பகுதியாக அல்லவா இருந்தது? ” என்று குறிப்பிட்டார். அவரது அந்தப் பேச்சு தற்போது மூண்டிருப்பதைப் போன்று ஊடகங்களின் அதீத கவனிப்புடன் கூடியதாக பெரும் சர்ச்சையை உருவாக்கவில்லை. லோக்சபா தேர்தல் பிரசாரங்களின் சூடு இயல்பாகவே தற்போதைய சர்ச்சை மீது கவனத்தை பெரிதும் திருப்பியிருக்கிறது. கச்சதீவை முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் காங்கிரஸ் அரசாங்கம் இலங்கைக்கு கையளிக்க எடுத்த தீர்மானம் தொடர்பில் விபரங்களை அறிவதற்கு பாரதிய ஜனதாவின் தமிழ்நாடு தலைவர் குப்புசாமி அண்ணாமலை தகவலைப் பெறுவதற்கான உரிமையின்( Right to Information) அடிப்படையில் வெளியுறவு அமைச்சை நாடியது ஒன்று தற்செயலானது அல்ல. “இந்திய அரசாங்கம் 1974 ஆம் ஆண்டில் கச்சதீவை இலங்கைக்கு விட்டுக்கொடுத்தது. அந்தத் தீவு பாரதத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை தமிழ்நாட்டுக்கு வெளியில் இருப்பவர்களும் விளங்கிக் கொள்வார்கள். ஆயிரக்கக்கான வருடங்களாக தமிழ்நாட்டு மீனவர்கள் எந்தவித இடையூறும் இன்றி மீன்பிடிக்கும் உரிமையைக் கொண்டிருந்த கச்சதீவு தமிழ்நாட்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். அது சூட்சுமமான முறையில் இலங்கைக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது. ஏன் அவ்வாறு நடந்தது? அதற்கு ஏதாவது தீர்வு இருக்கிறதா? ஆர்வமிகுதி காரணமாக அந்த காலப்பகுதியின் முக்கியமான ஆவணங்களை தந்துதவுமாறு நான் வெளியுறவு அமைச்சை அணுகினேன்” என்று அண்ணாமலை கூறினார். பாரதிய ஜனதா உயர்மட்டத்தின் முழுமையான அனுசரணையுடன்தான் அண்ணாமலை தகவலைக் கோரினார் என்பதில் சந்தேகமில்லை. அத்துடன் வெளியுறவு அமைச்சிடம் இருந்து ஆவணங்கள் கிடைக்கப் பெற்றதும் அவர் தனக்கு நெருக்கமான ஊடகங்களுடன் அவற்றைப் பகிர்ந்துகொண்டார். காங்கிரஸ் கட்சியின் பொதுத் தொடர்பாடலுக்கு பொறுப்பான பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காகவே இவ்வாறு பாரதிய ஜனதா செய்திருக்கிறது என்று குற்றஞ்சாட்டினார். “தமிழ்நாட்டில் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் ஒரு தந்திரோபாயமாகவே பாரதிய ஜனதா தகவல் அறியும் உரிமையைப் பயன்படுத்தி வெளியுறவு அமைச்சிடம் கச்சதீவு விவகாரம் தொடர்பில் விபரங்களைப் பெற விண்ணப்பித்தது. மக்கள் எதிர்நோக்கும் எரியும் பிரச்சினைகள் தொடர்பில் தகவல்களை அறிவதற்கு செய்யப்பட்டிருக்கும் இலட்சக்கணக்கான விண்ணப்பங்கள் அலட்சியம் செய்யப்பட்டு அல்லது நிராகரிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த விண்ணப்பம் அதிமுக்கியத்துவம் கொடுத்துக் கவனிக்கப்பட்டு பதில் வழங்கப்பட்டிருக்கிறது. பாரதிய ஜனதாவின் தமிழ்நாட்டு தலைவர் தனக்கு கிடைத்த பதிலை மிகவும் வசதியாகவே தனக்கு நெருக்கமான ஊடகங்களுடன் பகிர்ந்துகொண்டார். பிரதமர் மோடி உடனடியாகவே அதைப் பெரிதுபடுத்திச் சர்ச்சையாக்கிவிட்டார். இது கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெறும் ஆட்டநிர்ணயச்சதி (Match fixing ) போன்று இருக்கிறது ” என்று ரமேஷ் கூறினார். அண்ணாமலைக்கு வெளியுறவு அமைச்சிடம் இருந்து கிடைத்த ஆவணங்கள் தொடர்பில் கடந்தவாரம் ரைம்ஸ் ஒஃப் இந்தியா பத்திரிகையில் வெளியான விரிவான செய்தியை அடுத்தே பிரதமர் மோடி முதலில் ‘ எக்ஸ் ‘ சமூக வலைத்தளத்தில் பதிவைச் செய்தார். இந்திரா காந்தி மக்களின் உணர்வுகளை மதிக்காமல் கச்சதீவை இலங்கைக்கு விட்டுக்கொடுத்தார்; இலங்கையுடன் இந்திய அரசாங்கம் அன்று நடத்திய பேச்சுவார்த்தைகள் தொடர்பில் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த கலைஞர் மு. கருணாநிதிக்கு முழுமையாக தெரியப்படுத்தப்பட்டது ; கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்படுவதை வெளிப்படையாக கருணாநிதி எதிர்த்தாலும், முறைமுகமாக மத்திய அரசாங்கத்துடன் இணங்கிப்போனார் என்பனவே வெளியுறவு அமைச்சு வழங்கிய பதிலைப் பயன்படுத்தி காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்ற கழகத்துக்கு எதிராக செய்யப்படும் பிரசாரத்தின் முக்கிய அம்சங்களாகும். மேலும் காங்கிரஸ் ஒருபோதுமே இந்தியாவின் ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பில் அக்கறையுடன் செயற்பட்டதில்லை என்ற தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக பிரதமர் ஜவஹர்லால் நேரு கச்சதீவு குறித்து தெரிவித்த கருத்தையும் மோடி சுட்டிக் காட்டியிருக்கிறார். ” அந்த சிறியதொரு தீவுக்கு எந்த வகையிலும் நான் முக்கியத்துவத்தைக் கொடுக்கவில்லை. அதன் மீதான எமது உரிமைக் கோரிக்கையை கைவிடுவதில் எனக்கு எந்த தயக்கமும் கிடையாது. இந்த விவகாரம் காலவரையறையின்றி நீடிப்பதையும் பாராளுமன்றத்தில் பிரச்சினை கிளப்பப்படுவதையும் நான் விரும்பவில்லை ” என்று 1961 மே 10 நேரு குறிப்பிட்டதாக வெளியுறவு அமைச்சின் பதிலில் தெரிவிக்கப் பட்டிருப்பதாக ரைம்ஸ் ஒஃப் இந்தியா செய்தி கூறுகிறது. ” புதிய தகவல்கள் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் காங்கிரஸ் எவ்வாறு கச்சதீவை விட்டுக் கொடுத்தது என்பதை வெளிக்காட்டுகின்றன. அவை அதிர்ச்சியை தருகின்றன. திடுக்கிட வைக்கின்றன. இது ஒவ்வொரு இந்தியனையும் ஆத்திரமடையச் செய்திருக்கிறது. காங்கிரஸை நாம் ஒருபோதும் நம்பமுடியாது என்ற மக்களின் எண்ணத்தை இது மீண்டும் உறுதிப்படு்த்துகிறது. இந்தியாவின் ஐக்கியம், ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்தும் முறையிலேயே 75 வருடங்களுக்கும் அதிகமாக காங்கிரஸ் செயற்பட்டு வந்திருக்கிறது” என்று மார்ச் 31 மோடி ‘ எக்ஸ் ‘ பதிவில் கூறினார். ஏப்ரில் முதலாம் திகதி செய்த இரண்டாவது பதிவில் ரைம்ஸ் ஒஃப் இந்தியாவின் இரண்டாவது செய்தி ஒன்றைப் பகிர்ந்துகொண்ட இந்திய பிரதமர், ஆரவாரப் பேச்சைத் தவிர திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டின் நலன்களைப் பாதுகாப்பதற்கு எதையும் செய்யவில்லை. கச்சதீவு விவகாரம் தொடர்பில் வெளியாகும் புதிய விபரங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரட்டை வேடத்தை முற்றுமுழுதாக அம்பலப்படுத்துகின்றன. காங்கிரஸும் திராவிட முன்னேற்றக் கழகமும் குடும்பக்கட்சிகள். அவற்றுக்கு தங்களது சொந்த புதல்வர்கள், புதல்விகளின் முனனேற்றத்தில் மாத்திரமே அக்கறை. குடும்பங்களின் மேம்பாட்டுக்கே அவர்கள் முன்னுரிமை கொடுப்பார்கள் என்று குறிப்பிட்டார். அதே தினம் இந்த பிரச்சினை குறித்து புதுடில்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளர்கள் மகாநாட்டில் கருத்து தெரிவித்த வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் கச்சதீவு விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிவதற்கான உரிமை மக்களுக்கு இருக்கிறது என்றும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உடன்படிக்கையின் கீழ் கச்சதீவு இந்திய பிராந்தியத்திற்குள் வரப்போவதில்லை என்பதை முதலமைச்சர் கருணாநிதி நன்கு அறிந்திருந்தார் என்றும் குறிப்பிட்டார். ‘ இந்திரா காந்தி அரசாங்கம் இலங்கையுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் விபரங்கள் அவ்வப்போது கருணாநிதிக்கு கூறப்பட்டுவந்தன. 1973 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நடைபெற்ற வெளியுறவுச் செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு ஒரு வருடம் கழித்து 1974 ஜூனில் முதலமைச்சர் கருணாநிதிக்கு வெளியுறவுச் செயலாளர் கெவால் சிங் கச்சதீவுக்கு உரிமைகோருவதைக் கைவிடுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து கூறினார். ‘ அந்த தீர்மானத்தை இரு வருடங்களுக்கு தாமதிக்க முடியாதா என்று கெவால்சிங்கிடம் கேட்ட கருணாநிதி அரசியல் காரணங்களுக்காக உடன்படிக்கைக்கு ஆதரவான தீர்மானம் ஒன்றை தன்னால் எடுக்கமுடியாது. ஆனால் பெரிய எதிர்ப்புகள் கிளம்பாமல் பார்த்துக்கொள்ள முயற்சிப்பதாக கூறினார்’ என்று வெளியுறவு அமைச்சின் ஆவணங்களில் கூறப்பட்டிருப்பதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. உடன்படிக்கையை மீள்பரிசீலனை செய்வது குறித்து புதுடில்லி சிந்திக்கிறதா? இலங்கையுடன் அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா ? என்று செய்தியாளர்கள் ஜெய்சங்கரிடம் திரும்பத்திரும்ப கேட்டபோது அவர், ” அதுவல்ல முக்கியமான பிரச்சினை. கச்சதீவு விவகாரம் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது ” என்று கூறி நேரடியாக பதிலளிப்பதைத் தவிர்த்துக்கொண்டார். ஆனால், கச்சதீவு பிரச்சினை அரை நூற்றாண்டுக்கு முன்னர் தீர்த்துவைக்கப்பட்ட ஒன்று என்று கூறப்படுவதை அவர் திட்டவட்டமாக நிராகரித்தார். கச்சதீவை இலங்கைக்கு இந்திரா காந்தி விட்டுக் கொடுத்ததன் விளைவாகவே இந்திய மீனவர்கள் நெருக்கடியை எதிர்நோக்கவேண்டியிருக்கிறது என்பதை வலியுறுத்துவதிலேயே ஜெய்சங்கர் கூடுதல் அக்கறை காட்டினர். “கடந்த இருபது வருடங்களில் 6,184 இந்திய மீனவர்கள் இலங்கையினால் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள். 1175 இந்திய மீன்பிடிப் படகுகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. இதுவே நாம் ஆராய்கின்ற பிரச்சினையின் பின்னணி. காங்கிரஸும் திராவிட முன்னேற்றக் கழகமும் கச்சதீவு பிரச்சினையில் தங்களுக்கு பொறுப்பு எதுவும் இல்லை என்பது போன்று நடந்து கொள்கின்றன” என்று அவர் கூறினார். பாரதிய ஜனதாவின் பல முக்கிய தலைவர்களும் இந்த பிரச்சினை குறித்து காங்கிரஸ் கட்சியையும் திராவிட முன்னேற்றக் கழகத்யைும் கடுமையாக விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். இது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளைப் பாதிக்கக்கூடிய ஆபத்தைக் கொண்ட பிரச்சினை என்பதைப் பற்றிய கரிசனை எதுவும் இல்லாமல் வெறுமனே தேர்தல் அரசியல் நலன்களை நோக்கமாகக் கொண்ட கருத்துக்களாகவே அமைந்திருக்கின்றன. ” பந்து இப்போது மத்திய அரசாங்கத்தின் பக்கத்திலேயே இருக்கிறது. சாத்தியமான சகல தீர்வுகள் குறித்தும் பரிசீலிக்கப்படும். தமிழ் மீனவர்களைப் பாதுகாப்பது மாத்திரமே பாரதிய ஜனதாவின் நோக்கம். பிரதமர் மோடியும் வெளியுறவு அமைச்சரும் இந்த விடயத்தில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார்கள். கச்சதீவு இலங்கைக்கு சட்டவிரோதமாகவே கையளிக்கப்பட்டது. அந்த தீவை மீட்டெடுப்பதற்கு சாத்தியமான சகல நடவடிக்கைகளையும் மத்திய அரசாங்கம் எடுக்கின்றது” என்று கடந்த வாரம் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களிடம் கூறினார். மோடி கிளப்பியிருக்கும் சர்ச்சைக்கு ‘ எக்ஸ் ‘ சமூக வலைத்தளத்தில் உடனடியாகவே பதிலளித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பிரதமர் அவர்களே, உங்களது தவறான ஆட்சியின் பத்தாவது வருடத்தில் தீடீரென்று உறக்கத்தில் இருந்து எழுந்தவர் போன்று இந்தியாவின் ஆட்புல ஒருமைப்பாடு, தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளைக் கிளப்புகிறீர்கள். தேர்தல் தான் அதற்கு காரணம் போலும். என்ன செய்வது என்று தெரியாமல் நீங்கள் தடுமாற்றத்தில் இருப்பதை புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார். மோடி அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு பங்களாதேஷுடன் செய்துகொண்ட நில எல்லை உடன்படிக்கையுடன் கச்சதீவு உடன்படிக்கையை ஒப்பிட்ட கார்கே “உங்களது அரசாங்கத்தின் கீழ் ஒரு நட்புறவு அடையாளமாக இந்தியாவின் 111 நிலப்பகுதிகளை விட்டுக்கொடுத்து பங்களாதேஷிடமிருந்து 55 நிலப்பகுதிகளை மாத்திரம் இந்தியாவுடன் சேர்த்துக்கொண்டீர்கள். அப்போது நீங்கள் இரு நாடுகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட எல்லை உடன்படிக்கை நிலப்பகுதிகளைப் பரிமாறிக்கொள்ளும் ஒரு செயல் அல்ல, இதயங்களின் சந்திப்பு பற்றியது என்று கூறினீர்கள். அதே போன்றே கச்சதீவு உடன்படிக்கையும் இன்னொரு அயல்நாடான இலங்கையுடன் நட்புறவின் அடிப்படையில் செய்து கொள்ளப்பட்டதேயாகும்” என்று மோடிக்கு சுட்டிக்காட்டினார். “தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறவிருப்பதற்கு முன்னதாக உணர்ச்சிபூர்வமான பிரச்சினையை கிளப்பியிருக்கிறீர்கள். ஆனால், கச்சதீவு தொடர்பான வழக்கில் 2014 ஆம் ஆண்டில் உங்களது சொந்த அரசாங்கத்தின் சட்டமா அதிபர் ஸ்ரீ முகுல் றோராக்கி உயர்நீதிமன்றத்தில் கூறியதை மறந்துவிட்டீர்களா? ‘ 1974 உடன்படிக்கையின் மூலமே கச்சதீவு இலங்கை வசமானது…. அதை எவ்வாறு திருப்பியெடுக்கமுடியும்? கச்சதீவை மீளப் பெறவிரும்பினால், நீங்கள் போருக்கு போகவேண்டியிருக்கும் ‘ என்று அவர் கூறியிருந்தார். பிரதமர் அவர்களே கச்சதீவை மீட்டெடுத்து இந்த பிரச்சினைக்கு தீர்வைக்காண உங்களது அரசாங்கம் ஏதாவது நடவடிக்கையை எடுத்ததா என்பதை நீங்கள் கூறவேண்டும்” என்று ‘ எக்ஸ் ‘ மூலமாக மோடியை நோக்கி கேட்டிருக்கிறார் கார்கே. காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தலைவர்களும் பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்து வருகிறார்கள். ஆனால் சோனியா காந்தி, ராகுல் காந்தி போன்ற நேரு — காந்தி குடும்ப தலைவர்கள் இதுவரையில் எந்த கருத்தையும் கூறவில்லை. கச்சதீவு உடன்படிக்கையை நியாயப்படுத்திய ஜெய்ராம் ரமேஷ், “கச்சதீவு இலங்கையின் ஒரு பகுதியாக மாறிய அதே 1974 ஆம் ஆண்டில் இந்திரா காந்தி — சிறிமா பண்டாரநாயக்க உடன்படிக்கை இலங்கையில் இருந்து 6 இலட்சம் தமிழ் மக்கள் இந்தியாவுக்கு வருவதற்கு அனுமதித்தது. அந்த நடவடிக்கை மூலமாக பிரதமர் இந்திரா காந்தி அதுகாலவரை நாடற்றவர்களாக இருந்த 6 இலட்சம் மக்களின் மனித உரிமைகளையும் கண்ணியத்தையும் காப்பாற்றினார் ” என்று கூறினார். மோடி அரசாங்கம் பங்களாதேஷுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு வசதியாக நில எல்லை சட்டத்தைக் கொண்டுவந்தபோது அந்த உடன்படிக்கையின் விளைவாக இந்தியா 10,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை இழக்கப்போகின்ற போதிலும், மனிதாபிமான தேவையை ஏற்றுக்கொண்டு காங்கிரஸ் சிறுபிள்ளைத் தனமான குற்றச்சாட்டுக்களை முன்வைக்காமல் பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் ஆதரவை வழங்கியது என்றும் ரமேஷ் குறிப்பிட்டார். இலங்கை தரப்பின் பிரதிபலிப்பு : கச்சதீவு பிரச்சினை பாரதிய ஜனதாவினால் தேர்தல் பிரசாரப் பொருளாக்கப்பட்டு விட்ட நிலையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளில் அதனால் ஏற்படக்கூடிய தாக்கம் முக்கிய கவனத்துக் குரியதாகும். மோடி சர்ச்சையைக் கிளப்பி ஒரு வாரகாலம் கடந்துவிட்ட நிலையில் இலங்கை அரசாங்கம் எந்தவிதமான உத்தியோகபூர்வ பிரதிபலிப்பையும் வெளியிடாமல் மிகுந்த இராஜதந்திர விவேகத்துடன் நடந்துகொள்கிறது. வெளியுறவு அமைச்சர் அலி சப்பரி, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீர்விநியோக அமைச்சர் ஜீவன் தொண்டமான் போன்றவர்கள் தனிப்பட்ட முறையில் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்கள். அமைச்சரவை பேச்சாளரான பந்துல குணவர்தனவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது இந்தியாவில் தேர்தல் நடக்கிறது என்று மாத்திரம் பதிலளித்ததா செய்தி வெளியானது. ஆனால், இரு நாடுகளினதும் முக்கியமான ஆங்கிலப் பத்திரிகைகள் ஆசிரிய தலையங்கங்கள் மூலமாக வெளியிட்ட கருத்துக்கள் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. ” லோக்சபா தேர்தலை முன்னிட்டு பிரதானமாக உள்நாட்டுப் பாவனையை நோக்காகக்கொண்டு இந்தியாவில் அரசியல் விவாதம் மூண்டிருக்கின்ற போதிலும், கச்சதீவை இலங்கைக்கு விட்டுக்கொடுத்த உடன்படிக்கையை மாற்றியமைக்கும் நோக்கம் இந்தியாவுக்கு இல்லை” என்று டெயிலி மிறர் அதன் ஆசிரிய தலையங்கத்தில் கூறியிருக்கிறது. இந்திய உயர்மட்ட தலைவர்களை சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளாக அன்றி அறிவார்ந்த அரசியல்ஞானிகளாகப் பார்க்கவே இலங்கையர்கள் விரும்புகிறார்கள். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூட இராஜதந்திரப் பக்குவத்தை கைவிட்டு தமிழ்நாட்டில் சொற்ப வாக்குகளுக்காக பிரதமர் மோடியுடன் கைகோர்த்து நிற்பது பெரும் ஏமாற்றத்தை தருகிறது என்று டெயிலி மிறர் எழுதியிருக்கிறது. ” 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு குறிப்பாக கொவிட் பெருந்தொற்று / பொருளாதார நெருக்கடி காலப் பகுதிகளில் இலங்கையில் நல்லெண்ணத்தை வளர்ப்பதற்கு இந்தியா அயராது எடுத்துவந்த முயற்சிகளை பாதிக்கக்கூடிய ஆபத்தை கச்சதீவுச் சர்ச்சை கொண்டிருக்கிறது. மாலைதீவில் இந்தியா கண்டிருக்கும் பின்னடைவுக்கு பிறகு தேர்தல் நலனுக்காக குறுகிய நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் இந்த பிரசாரம் அனாவசியமானது. பாக்கு நீரிணைக்கு இடையில் உறவுகளை பலப்படுத்துவதற்கு இது உதவாது ” என்று த மோர்ணிங் பத்திரிகை எழுதியிருக்கிறது. பாக்குநீரிணைக்கு இடையில் நல்லெண்ண உறவுகளில் ஏற்படக்கூடிய பாதிப்பை தங்களுக்கு அனுகூலமாகப் பயன்படுத்துவதற்கு பல வல்லாதிக்க நாடுகள் நாட்டம் காட்டும் என்பது இந்திய அரசாங்கத்துக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் என்றும் அந்த பத்திரிகை தெரிவித்திருக்கிறது. ” தமிழ்நாடடில் உணர்ச்சிபூர்வமானதாக இருந்துவரும் ஒரு பிரச்சினையை இந்தியப் பிரதமர் கிளப்பியிருப்பது வேறு பிராந்தியங்களில் நண்பர்களை தேடுவது குறித்து சிந்திக்க இலங்கையை தூண்டுவதற்கு போதுமானதாகும். இந்தியாவில் அதிகார உயர்பீடத்தில் உள்ளவர்கள் இலங்கையின் பிராந்தியத்துக்கு தொடர்ச்சியாக உரிமை கோரினால் வேறு எங்காவது பாதுகாப்பு உத்தரவாதத்தை தேடவேண்டிய நிர்பந்தம் இலங்கைக்கு ஏற்படும் ” என்று ஃபைனான்சியல் ரைம்ஸ் ஆசிரிய தலையங்கத்தில் எழுதியிருக்கிறது. இந்திய பத்திரிகைகள் ” பிரதமரின் கருத்துக்கள் துரதிர்ஷ்டவசமானவை.குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக கூறப்படுபவை.பல வருடங்களுக்கு முன்னர் தீர்க்கப்பட்டுவிட்ட ஒரு பிரச்சினையை மீண்டும் கிளறுவது மிகவும் தவறானது. விவேகமானதல்ல. மக்களின் உணர்ச்சிகளைக் கிளறக்கூடிய பிரச்சினைகள் தொடர்பில் கருத்துக்களைக் கூறும்போது பிரதமர் பெருமளவுக்கு பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் ” என்று டெக்கான் ஹெரால்ட் கூறியிருக்கிறது. இலங்கையுடனான உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு பிரச்சினையை அரசியல் அனுகூலத்துக்கு பயன்படுத்த முனைந்திருப்பதன் மூலம் பிரதமர் மோடி ஆரோக்கியமற்ற ஒரு போக்கை தொடக்கி வைத்திருக்கிறார் என்று ‘ த இந்து ‘ பத்திரிகை குறிப்பிட்ட அதேவேளை, அரசியல் எதிரிகளுக்கு மேலாக புள்ளிகளை எடுப்பதற்கு பாரதிய ஜனதா தலைமைத்துவம் கச்சதீவு பிரச்சினையை கிளப்புவது பெரும் குழப்பத்தை தருகிறது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியிருக்கிறது. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்துக்களை மறுதலித்திருக்கும் இந்துஸ்தான் ரைம்ஸ் இந்திய மீனவர்களின் பாதுகாப்புப் பிரச்சினைக்கும் கச்சதீவுக்கும் தொடர்பு கிடையாது என்று கூறியிருக்கிறது. பழைய பிரச்சினைகளை கிளறாமல் இருப்பதில் தலைவர்கள் முதிர்ச்சியை வெளிப்படுத்த வேண்டும். தேர்தல் அனுகூலத்துக்காக நட்பு நாடொன்றுடனான உறவுகளை சீர்குலைக்கும் வகையில் நடந்துகொள்ளக்கூடாது. பெய்ஜங் அவதானித்துக் கொண்டிருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது என்று மோடிக்கும் ஜெய்சங்கருக்கும் அறிவுரை கூறுவது போன்று இந்துஸ்தான் ரைம்ஸ் எழுதியிருக்கிறது. இந்திய இராஜதந்திரிகள் 2004 — 2006 காலப்பகுதியில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக இருந்த நிருபமா ராவ் கருத்து தெரிவிக்கையில் தேர்தலுக்கு முன்னதாக இந்தியாவின் உள்நாட்டு அரசியலில் கச்சதீவு தொடர்பில் கிளம்புகின்ற சர்ச்சை தமிழ்நாட்டு அரசியலில் முக்கியமான தாக இருந்த பழைய பிரச்சினை மீண்டும் கிளப்பப்படுவதாக இலங்கையில் அர்த்தப்படுத்தப்படக்கூடிய சாத்தியம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். நீண்டகாலத்துக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட ஒரு சர்வதேச உடன்படிக்கையை மீள்பரிசீலனை செய்வதற்கு இந்தியா விரும்புகிறதா? அவ்வாறு செய்வதன் மூலம் சர்வதேச அரசியலில் வழமைக்கு மாறான முன்னுதாரணம் ஒன்றை வகுக்க இந்தியா விரும்புகிறதா? என்று வெளியுறவுச் செயலாளராகவும் பதவியில் இருந்த நிருபமா ராவ் கேள்வியெழும்பினார். இலங்கையில் இருந்த இன்னொரு இந்திய உயர்ஸ்தானிகரான அசோக் காந்தா ( 2009 — 2013 ) கச்சதீவு பிரச்சினை தற்போது கிளப்பப்பட்டிருப்பது இந்தியாவில் ஒரு தேர்தல் பிரச்சினை என்பதை கொழும்பு விளங்கிக்கொள்ளும் என்று குறிப்பிட்டார். மீட்புக்கோரிக்கை தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் கச்சதீவை இலங்கையிடம் இருந்து மீட்கவேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ச்சியாக முன்வைத்து வந்திருக்கின்றன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் ( 2008) திராவிட முன்னேற்றக்கழகமும் (2013 ) இந்த விவகாரம் தொடர்பில் இந்திய உயர் நீதிமன்றத்தையும் நாடின. ஆனால், மத்திய அரசாங்கங்கள் உடன்படிக்கையை மாற்றியமைக்க முடியாது என்ற நிலைப்பாட்டையே உறுதியாக அறிவித்தன. இன்றும் புதிய தலைமைத்துவங்களின் கீழும் திராவிடக் கட்சிகள் மீட்புக் கோரிக்கையை வலியுறுத்திய வண்ணமே இருக்கின்றன. தற்போது பிரதமர் மோடியும் பாரதிய ஜனதாவும் தமிழ்நாட்டு மக்களின் குறிப்பாக பெரிய வாக்கு வங்கியாக விளங்கும் மீனவர் சமூகத்தை இலக்கு வைத்து அரசியல் அனுகூலத்துக்காக திட்டமிட்டு இந்த பிரச்சினையைக் கிளப்புகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டு மக்கள் இந்த பிரசாரத்திற்கு எடுபடக்கூடிய சாத்தியமில்லை. இலங்கைத் தமிழர் பிரச்சினையை மாத்திரம் முன்னிலைப்படுத்தி தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை தேர்தல்களில் அந்த மாநில மக்கள் ஒருபோதும் பெரிதாக ஆதரித்ததில்லை. அதே கதியே கச்சதீவுப் பிரச்சினையை கிளப்புவதன் மூலமாக வாக்குகளைப் பெறலாம் என்ற பாரதிய ஜனதாவின் எதிர்பார்ப்புக்கும் ஏற்படும். இந்திரா காந்தி காலத்தில் கச்சதீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்தமைக்காக காங்கிரஸை மோடி குற்றஞ்சாட்டுகிறாரே தவிர தீவை மீட்டெடுக்கப் போவதாகக் கூறவில்லையே! https://arangamnews.com/?p=10609
  2. கோட்டாவின் புத்தகம் March 12, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — கோட்டாபய ராஜபக்ச கடந்த வியாழக்கிழமை ‘என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்றுவதற்கான சதி’ (The Conspiracy to oust me from the Presidency) என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் எழுதப்பட்டிருக்கும் அந்த நூலை இலங்கையின் முக்கியமான நூல் நிலையங்களில் பெற்றுக்கொள்ளமுடியும் என்று அவர் கடந்த வாரம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் அறியத் தந்திருக்கிறார். கொழும்பில் அரசியல்வாதிகளையும் இராஜதந்திரிகளையும் அழைத்து பெரும் ஆரவாரத்துடன் நூல் வெளியீட்டு வைபவத்தை நடத்துவதை அவர் தவிர்த்திருக்கிறார். உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்கள் இந்த நூலுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால், இலங்கையில் மக்கள் மத்தியில் பெரிய பரபரப்பை நூல் ஏற்படுத்தியிருப்பதாகக் கூறமுடியாது. இலங்கையில் இதுகாலவரையில் பதவியில் இருந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளில் மக்கள் கிளர்ச்சியின் விளைவாக அதிகாரத்தைத் துறக்க நிர்ம்பந்திக்கப்பட்ட முதல் ஆளான கோட்டாபய நூலுக்கு வேறு தலைப்பைக் கொடுத்திருந்தால் சிலவேளை கூடுதல் கவனத்தை ஈர்த்திருக்க முடியும். சதி முயற்சி என்பது ராஜபக்சாக்கள் நெடுகவும் கூறிவருகின்ற ஒன்று என்பதால் நூல் ஒரு பழைய கதை என்று பலரும் கருதவும் இடமிருக்கிறது. சதிக் கோட்பாடுகளைப் புனைவது ராஜபக்ச சகோதரர்களுக்கு கைவந்த கலை. 2015 ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த மகிந்த ராஜபக்ச தன்னை தோற்கடித்தது இந்திய புலனாய்வுப் பிரிவான ‘றோ’ தான் என்று பகிரங்கமாகவே கூறினார். இலங்கையில் முன்னென்றும் இல்லாத வகையில் இரு வருடங்களுக்கு முன்னர் தங்களை ஆட்சியதிகாரத்தில் இருந்து விரட்டிய ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சியை உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளின் சதி என்று ராஜபக்சாக்கள் நெடுகவும் கூறிவருகிறார்கள். படுமோசமான பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ஊழல் தலைவிரித்தாடிய தங்களது தவறான ஆட்சிமுறைக்கு எதிராகவே மக்கள் தன்னியல்பாக வீதிகளில் இறங்கி கிளர்ச்சி செய்தார்கள் என்பதை ராஜபக்சாக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. கோட்டாபயவுக்கு முன்னர் ராஜபக்சாக்களின் அதிவிசுவாசிகளில் ஒருவராக இருந்து, பிறகு அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதன் காரணமாக அவர்களை விட்டு வெளியேறிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவும் ‘ஒன்பது ; மறைக்கப்பட்ட கதைகள்’ (Nine ; The Hidden Story ) என்ற நூலை கடந்த வருடம் வெளியிட்டு மக்கள் கிளர்ச்சிக்கு பின்னணியில் வெளிநாட்டுச்சதி இருந்ததாகக் குற்றஞ்சாட்டினார். உள்நாட்டுப் போரின் முடிவுக்கு பிறகு கோட்டாபய அரசியலில் இறங்குவதற்கான ஒரு அச்சாரமாக 2012 ஆம் ஆண்டில் பத்திரிகையாளர் சி.ஏ. சந்திரப்பிரேமா ‘ கோட்டாவின் போர் ; இலங்கையில் தமிழ்ப் புலிகளின் பயங்கரவாதம் ஒழிப்பு ‘ ( Gota’s war ; The crushing of Tamil Tiger terrorism in Sri Lanka) என்ற நூலை எழுதி வெளியிட்டார். அந்த நூல் மகிந்த ராஜபக்ச ஆட்சியில் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபயவுக்கே போர் வெற்றிக்கான முழுப் பெருமையையம் உரித்தாக்கும் நோக்கில் எழுதப்பட்டது. நீண்டகால மௌனத்தைக் கலைத்து கோட்டாபய தற்போது தனது நூலை வெளியிட்டிருப்பது மீண்டும் அரசியலுக்கு வருவதற்கான களத்தை அமைப்பதில் முதல் அடியெடுத்துவைப்பாக இருக்கலாம் என்ற ஊகங்களும் ஒருபுறம் கிளம்புகின்றன. சர்வதேச சக்திகளின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட ஆட்சிமாற்ற நடவடிக்கையின் விளைவாகவே அதிகாரத்தில் இருந்து தான் இறங்கவேண்டி வந்தது என்று கோட்டாபய நூலில் விபரிக்கிறார். ஆட்சிக்கவிழ்ப்பு சதி பற்றிய தனிப்பட்டதும் நேரடியானதும் அனுபவத்தின் விளக்கம் என்று நூலை அவர் வர்ணிக்கிறார். எந்த நாட்டினதும் பெயரைக் குறிப்பிடுதை அவர் தவிர்த்திருக்கிறார். சீனாவுக்கும் ஏனைய நாடுகளுக்கும் இடையிலான புவிசார் அரசியல் போட்டியே தனது வீழ்ச்சிக்கு பொறுப்பு என்பது அவரது நிலைப்பாடு.2006 ஆம் ஆண்டுக்கு பிறகு சீனாவின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்ட உட்கட்டமைப்புத் திட்டங்கள் இலங்கையில் புவிசார் அரசியல் போட்டிப் போக்கு ஒன்றைக் கொண்டு வந்ததன் விளைவே தனது அரசியல் வீழ்ச்சி என்பது அவரது தர்க்க நியாயம். வெளிநாட்டுச் சதி இருக்கவில்லை என்று எவராவது கூறுவார்களேயானால் அவர்கள் உண்மையில் பத்தாம்பசலிகளாகவே இருக்கமுடியும் என்று வேறு அவர் கூறுகிறார். நூலின் நோக்கம் குறித்து அதை வாசிக்காமேயே சுருக்கமாக விளங்கிக் கொள்ளக்கூடியதாக கோட்டாபய கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கை அமைந்திருந்தது. ” விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் நாம் வெற்றிபெற்ற நாளில் இருந்து இலங்கையில் கடுமையான வெளிநாட்டுத் தலையீடு தொடங்கிவிட்டது. 2019 நவம்பரில் நான் ஜனாதிபதியாக தெரிவான நேரம் தொடக்கம் என்னை அதிகாரத்தில் இருந்து அகற்றும் நோக்குடன் உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் செயற்படத் தொடங்கிவிட்டன. ” நான் பதவியேற்ற உடனடியாகவே இலங்கையிலும் உலகம் முழுவதும் கொவிட் — 19 பரவத்தொடங்கிவிட்டது. அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் எனது இரண்டரை வருட பதவிக்காலத்தையும் செலவிடவேண்டியேற்பட்டது. தடுப்பூசி இயக்கத்தின் மூலமாக அந்த பெருந்தொற்று நோயை 2022 மார்ச் மாதமளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததை அடுத்து பொருளாதாரம் மீட்சிபெறத் தொடங்கியதும் என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை சதிகாரச்சக்திகள் தொடங்கிவிட்டன. “இன்று இலங்கையில் வெளிநாட்டுத் தலையீடும் உள்நாட்டு அரசியல் வெளிச்சக்திகளினால் சூழ்ச்சித்தனமாக கையாளப்படும் போக்கும் கசப்பான உண்மையாகிவிட்டது. இலங்கை தந்திரமடைந்ததற்கு பின்னர் முதல் அறுபது வருடங்களில் இத்தகைய ஒரு நிலை காணப்படவில்லை. என்னைப் பதவியில் இருந்து அகற்றுவதற்கான அரசியல் முயற்சிகள், சுதந்திரம் பெற்றபிறகு தேர்தல்கள் மூலமாக அமைதியான முறையில் மாத்திரம் ஆட்சி மாற்றங்களைக் கண்டுவந்த இலங்கையின் அரசியலில் புதிய போக்கைக் கொண்டு வந்துவிட்டன. ” அதனால் 2022 ஆம் ஆண்டின் நிகழ்வுகள் நாட்டின் எதிர்காலத்துக்கு பாரதூரமான விளைவுகளைக் கொண்டுவரும் ஆபத்து இருக்கிறது. சர்வதேச அனுசரணையுடனான ஆட்சிமாற்ற நடவடிக்கை ஒன்றின் நேரடியான, தனிப்பட்ட அனுபவத்தை விளக்கும் இந்த நூல் இலங்கையர்களுக்கு மாத்திரமல்ல, வெளிநாட்டவர்களுக்கும் அக்கறைக்கு உரியதாக இருக்கும்.” அறகலய பற்றிய வியாக்கியானம் கோட்டாபயவின் நூலில் மிகவும் முக்கியமான பகுதிகள் என்று ஊடகங்கள் தெரிந்தெடுத்து கடந்த இரு தினங்களாக வெளியிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டதாகவே இந்த கட்டுரை அமைகிறது. ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சி குறித்து அவர் எழுதிய பகுதிகளை பல ஊடகங்கள் மேற்கோள் காட்டி கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றன. அறகலயவுடன் தொடர்புடைய சகல போராட்டங்களையும் குறிப்பாக கொழும்பில் நடைபெற்ற போராட்டங்களை தொடர்ந்தும் தான் அதிகாரத்தில் இருந்தால் சிறுபான்மைச் சமூகங்களின் நலன்களுக்கு பாதகமான முறையில் சிங்கள பௌத்தர்கள் பலமடைந்துவிடுவார்கள் என்ற பயத்தின் காரணமாக முன்னெடுக்கப்பட்டவை என்று அவர் கூறுகிறார். அறகலய அதன் முதல் நாளில் இருந்தே சிங்களவர்களின் குறிப்பாக சிங்கள பௌத்தர்களின் நலன்களுக்கு விரோதமானதாக அமைந்திருந்ததாகவும் வெளிநாட்டு சக்திகளின் ஆதரவைக் கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.. மக்களின் அவலங்களுக்கு காரணமாக இருந்த பொருளாதார நெருக்கடிக்கு மூன்று ராஜபக்ச சகோதரர்களும் மத்திய வங்கியின் இரு ஆளுநர்கள் உட்பட அவர்களின் அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகித்த சில உயரதிகாரிகளுமே பொறுப்பு என்று 2023 நவம்பர் 14 உயர்நீதிமன்றம் தீர்ப்புக் கூறியபோதிலும், அந்த நெருக்கடிக்கு தனது அரசாங்கம் பொறுப்பு என்பதை கோட்டாபய நூலில் ஒத்துக் கொள்ளவேயில்லை. செய்ததற்கு இரங்கி பச்சாதாபம் கொள்கிற பக்குவத்தை அவர் வெளிக்காட்டவில்லை. பாதிக்கப்பட்ட ஒரு ஆளாகத் தன்னைக் காட்சிப்படுத்தும் அவரின் முயற்சியாகவே நூல் அமைந்திருக்கிறது எனலாம். அறகலய பற்றி அவர் எழுதிய பகுதிகள் வருமாறு ; ” 2022 ஏப்ரில் 9 கொழும்பு காலிமுகத்திடலில் அறகலய தொடங்கி போராட்டக்காரர்கள் கூடாரங்களை அமைத்து ‘கோட்டா கோ கம’ என்று பிரகடனம் செய்ததை அடுத்து ஊடகங்களில் சில விமர்சகர்கள் பொதுவான குறிக்கோள் ஒன்றுக்காக சகல இனக்குழுக்களையும் மதங்களையும் அறகலய ஒன்றிணைத்திருக்கிறது என்று கூறினார்கள். எனது அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்த இளைஞர்கள், யுவதிகள் இனவாதத்தைத் தோற்கடித்துவிட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டார்கள். ” ஆனால், காலிமுகத்திடல் அறகலயவில் கூடிநின்றவர்கள் யார் என்பதை எவரும் உண்மையில் ஆராய்ந்துபார்த்தால் அவர்கள் எந்த வகையிலும் எனக்கு எதிரான பிரிவுகளைச் சேர்ந்தவர்களே என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ளமுடியும். “அறகலயவில் சிறுபான்மைச் சமூகங்களின் பிரதிநிதித்துவத்தை பெருமளவில் காணக்கூடியதாக இருந்தது. ஏனென்றால் அங்கு வருவதற்கு சிறுபான்மைச் சமூகங்களைத் தூண்டிய காரணிகள் இருந்தன. விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் நாம் வெற்றிபெற்ற நாளில் இருந்து நான் தமிழர்களுக்கு எதிரானவனாகவே கருதப்பட்டேன். “ஒற்றையாட்சி அரசுக்கு (Unitary state ) பதிலாக ஐக்கிய இலங்கைக்கு (United SriLanka ) கோரிக்கை விடுக்கும் புலம்பெயர் தமிழர்களின் நிகழ்ச்சிநிரலை அறகலயவில் தெளிவாகக்க காணமுடிந்தது. இது சமஷ்டி அரசொன்றை வேண்டிநிற்பவர்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்துவருகிறது. அதனால் காலிமுகத்திடல் போராட்டங்களின்போது ஜனாதிபதி செயலகத்தின் சுவர்களில் அந்த சுலோகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. ” 2012 ஆம் ஆண்டில் பொதுபல சேனாவின் தோற்றம் மற்றும் அந்த அமைப்பில் எனக்கு ஈடுபாடு இருந்ததாக கிளம்பிய சந்தேம் காரணமாக நான் முஸ்லிம்களுக்கு எதிரானவனாகவும் நோக்கப்பட்டேன். கொவிட் — 19 பெருந்தொற்றின் விளைவாக சடலங்களை எரிப்பது தொடர்பில் பிரச்சினை கிளம்பியபோது நான் முஸ்லிம்களுக்கு எதிரானவன் என்று ஏற்கெனவே இருந்த எண்ணம் மேலும் வலுவடைந்தது. ” தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் வாக்குகள் என்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளருக்கே பெருமளவில் கிடைத்த போதிலும், 2019 ஜனாதிபதி தேர்தலில் நான் அதிகாரத்துக்கு தெரிவு செய்யப்பட்டேன். பதவியேற்பதற்கு சிங்கள பௌத்தர்களுக்கு முக்கியமான புனித தலமான ருவான்வெலிசேய வளாகத்தையே தெரிவுசெய்தேன். பதவியேற்ற பிறகு நான் நிகழ்த்திய உரையில் சிங்கள பௌத்தர்களின் வாக்குகளினாலேயே தெரிவுசெய்யப்பட்டதாக கூறியது பல்வேறு வியாக்கியானங்களுக்கு வழிவகுத்தது. ” தமிழ், முஸ்லிம் சமூகங்கள் பல்வேறு காரணங்களுக்காக என்னை எதிர்ப்பதற்கு அறகலயவுக்கு வந்தன. இதை சகல இடங்களிலும் குறிப்பாக கொழும்பில் இடம்பெற்ற போராட்டங்களில் தெளிவாகக் காணக்கூடியதாக இருந்தது. நான் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருந்தால் சிறுபான்மைச் சமூகங்களுக்கு பாதகமான முறையில் சிங்கள பௌத்தர்கள் பலமடைந்துவிடுவார்கள் என்ற பயமும் அவர்களைத் தூண்டியிருக்கக்கூடும். ” வெளிநாட்டு நிதியுதவியைப் பெறுகின்ற அரசாங்க சார்பற்ற தன்னார்வ நிறுவனங்களின் தாராளபோக்குடைய அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூக ஊடகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி, ஜனதா விமுக்தி பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் முன்னரங்க சோசலிஸ்ட் கட்சி என்று பல்வேறு எதிர்க்கட்சிகளும் அறகலயவில் பங்கேற்றன. காலிமுகத்திடலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு 17 கூடாரங்கள் இருந்ததாக அந்த கட்சியின் முக்கிய உறப்பினர் ஒருவரின் தகவல் மூலம் அறியமுடிந்தது. கிரிக்கெட் வீரர்கள், அவர்களின் மனைவிமார், நடிகர் நடிகைகள் என்று பல்வேறு தரப்பினரும் அங்கு நின்றார்கள். ” நூலின் முன்னுரையில் நான் சுட்டிக்காட்டியதைப் போன்று ஒரு புறத்தில் சிங்கள பௌத்தர்களின் நலன்களுக்கும் மறுபுறத்தில் சிங்களவர்களும் பௌத்தர்களும் அல்லாத சகல பிரிவினரின் நலன்களுக்கும் இடையிலான ஒரு போட்டியின் விளைவாகவே நான் அதிகாரத்துக்கு தெரிவு செய்யப்பட்டேன். கத்தோலிக்கத் திருச்சபையுடன் நான் அதுவரையில் உன்னதமான உறவைப் பேணிவந்தபோதிலும், 2021 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் இருந்து அவர்களும் எனக்கு எதிராகத் திரும்பினர். ” எரிபொருள், சமையல் எரிவாயு வரிசைகளையும் மருந்து வகைகள் மற்றும் அத்தியாவசிய பாவனைப் பொருட்களுக்கு நிலவிய தட்டுப்பாடுகளையும் இல்லாமற்செய்து மக்களின் இடர்பாடுகளை தணிப்பதுதான் அறகலயவின் குறிக்கோள் என்று ஒரு எண்ணம் எவருக்காவது இருந்திருந்தால் அது வெறும் மருட்சியே. “அறகலயவில் பங்கேற்றவர்களுக்கு பல்வேறு வித்தியாசமான குறிக்கோள்களும் முன்னுரிமைகளும் இருந்தன. அறகலய என்பது அதன் முதல் நாளில் இருந்தே சிங்களவர்களின் குறிப்பாக சிங்கள பௌத்தர்களின் நலன்களுக்கு பாதகமானதாகவே அமைந்திருந்தது. பெருமளவுக்கு அதே குறிக்கோள்களைக் கொண்ட வெளிநாட்டுச் சக்திகள் அறகலயவுக்கு ஆதரவளித்தன.” பெரும்பான்மை இனவாத அணிதிரட்டல் கோட்டாபயவின இந்த விளக்கம் மீண்டும் பெரும்பான்மையினவாத அணிதிரட்டலின் மூலம் மாத்திரமே தங்களால் அரசியலில் செல்வாக்கான நிலைக்கு வரமுடியும் என்ற ராஜபக்சாக்களின் உறுதியான தீர்மானத்தின் ஒரு தெளிவான வெளிப்பாடாகும். தங்களுக்கு எதிரான அரசியல் செயற்பாடுகளை அவர்கள் மிகவும் சுலபமாகவே வெளிநாட்டுச் சதி என்று கூறிவிடுவார்கள். அறகலய போராட்டம் தொடங்கிய நோக்கம் தெளிவானது. ஆனால், அமைதிவழியில் முன்னெடுக்கப்பட்டு முழு உலகத்தினதும் கவனத்தை இலங்கை நோக்கி திருப்பிய அந்த போராட்டத்தில் அரசியல் புரட்சியொன்றுக்கான பல பரிமாணங்கள் காணப்பட்டன. பரந்தளவிலான வெகுஜனப் போராட்டமாக அறகலய மாறியதும் பல்வேறு அரசியல் சக்திகள் அதற்குள் ஊடுருவி வன்முறை வழியில் திசைதிருப்பியதே அதற்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கைகளை அரசியல் அதிகார வர்க்கம் நியாயப்படுத்துவதற்கு வசதியான சூழ்நிலையை உருவாக்கிக்கொடுத்தது. அத்துடன் முறையான அரசியல் கோட்பாட்டின் வழிகாட்டலும் தலைமைத்துவமும் இல்லாத மக்கள் போராட்டங்களுக்கு நேரக்கூடிய கதிக்கு ஒரு அண்மைக்காலப் படிப்பினையாகவும் அறகலய அமைந்தது. ஆனால், சிங்கள மக்கள் தங்களுக்கு எதிராக இவ்வளவு விரைவாக கிளர்ந்தெழுவார்கள் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்காத ராஜபக்சாக்களினால் அதை தாங்கிக் கொள்ளமுடியவில்லை. விடுதலை புலிகளுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வந்ததற்காக சிங்கள சமுதாயம் என்றென்றைக்கும் தங்களுக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்றும் இலங்கையின் ஆட்சியதிகாரம் தங்களது ஏகபோக உரித்து என்றும் ஒரு எண்ணத்தை அவர்கள் வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். தங்களது செயற்பாடுகளை விமர்சனமின்றி சிங்களவர்கள் ஆதரிக்க வேண்டும் என்று ராஜபக்சாக்கள் எதிர்பார்த்தார்கள். அதில் தங்களுக்கு கிடைத்த தோல்வியை நிவர்த்திசெய்து மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கு ராஜபக்சாக்களுக்கு வெளிநாட்டுச்சதி என்ற பிரசாரத்தையும் சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான அரசியலையும் தவிர வேறு மார்க்கம் இல்லை. மக்கள் கிளர்ச்சியை சிங்கள பௌத்தர்களின் நலன்களுக்கு எதிரானது என்ற கோட்டாபயவின் கருத்து அந்த சமூகத்தின் விவேகத்தை அவமதிப்பதாகும். ஊழல் முறைகேடுகளையும் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் தவறான ஆட்சியையும் மூடிமறைப்பதற்கு இனிமேலும் பெரும்பான்மை இனவாத அணிதிரட்டலுக்கு இடமளித்தால் இலங்கைக்கு எதிர்காலமேயில்லை. ராஜபக்சாக்கள் அந்த அணிதிரட்டலை ஏற்கெனவே ஆரம்பித்து விட்டார்கள். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செல்வாக்கை மீளக்கட்டியழுப்பும் முயற்சிகளை முன்னெடுக்கும் ராஜபக்ச குடும்பத்தின் அரசியல்வாரிசு நாமல் ராஜபக்ச கிராமங் கிராமமாக விகாரைகளுக்கு சென்று பிக்குமாரைச் சந்தித்து வருகிறார். சிங்கள பௌத்தர்களிடம் ராஜபக்சாக்களின் இந்த இனவாத அணிதிரட்டல் முயற்சி மீண்டும் எடுபடுமா என்பதை அடுத்த தேர்தல் ஒன்றின் மூலமாக மாத்திரமே தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். தனது வீழ்ச்சிக்கு வெளிநாட்டுச்சதியே காரணம் என்று கூறும் கோட்டாபய, அவர் அதிகாரத்துக்கு வருவதற்காக சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான சுலோகங்களை முன்வைத்து மக்கள் மத்தியில் குரோதங்களை வளர்த்து சிங்கள மக்களின் வாக்குகளை அமோகமாகப் பெறுவதற்கு கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட நச்சுத்தனமான பிரசாரங்களும் கூட ஒரு அரசியல் சதிதான் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும் என்று அரசியல் அவதானியொருவர் தெரிவித்த கருத்து மிகவும் கவனிக்கத்தக்கது. இன்றைய புவிசார் அரசியல் நிலைவரங்களை நோக்கும்போது நாடுகளின் உள்விவகாரங்களில் வல்லாதிக்க நாடுகள் அவற்றின் மூலோபாய நலன்களுக்காக தலையிடும் போக்கு அதிகரித்து வருகிறது. ஆனால், அவ்வாறான தலையீடுகளுக்கு வசதியான சூழ்நிலைகளை ஆட்சியாளர்களே தவிர மக்கள் ஏற்படுத்துவதில்லை. இன்றைய இலங்கை நிலைவரத்தை நோக்கும்போது வரவிருக்கும் தேசிய தேர்தல்களில் வெற்றிபெறுபவர்கள் யார் என்பதை நாட்டுமக்கள் மாத்திரம் தீர்மானிக்கக்கூடியதாக இருக்கும் என்று சொல்லமுடியாமல் இருக்கிறது. வல்லாதிக்க நாடுகள் அவற்றின் நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்காக வெவ்வேறு அரசியல் கட்சிகளை தங்கள் செல்லாக்கிற்கு உட்படுத்தும் வியூகங்களை வகுக்கின்றன என்பது ஒன்றும் இரகசியமானது அல்ல. கோட்டாபயவின் நூல் குறித்து பல்வேறு விமர்சனங்கள் தொடர்ச்சியாக வரும் என்று எதிர்பார்க்கலாம். இது இவ்வாறிருக்க, ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் தன்னந்தனி உறுப்பினராக பாராளுமன்றத்தில் இருந்துகொண்டு எவ்வாறு ஜனாதிபதியாக வந்தார் என்ற கதையை நூலாக விரைவில் வெளியிடவிருப்பதாக கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன அறிவித்திருக்கிறார். அவர் ஏற்கெனவே ஜனாதிபதியைப் பற்றி பத்திரிகைகளில் வெளியான கேலிச்சித்திரங்களை தொகுத்து ஒரு நூலாக கடந்தவாரம் வெளியிட்டிருந்தார். அதிகாரத்தை விட்டு ஒடிப்போனவர் தனது கதையை வெளியிட்ட கையோடு அவரின் இடத்துக்கு அதிகாரத்துக்கு வந்தவரின் கதையும் வரவிருக்கிறது. வாசிப்போம். ( ஈழநாடு ) https://arangamnews.com/?p=10539
  3. அநுரகுமாரவின் இந்திய விஜயம்; ஜே.வி.பியின் இந்திய விரோத கடந்த காலத்தை பொருட்படுத்தாத மோடி அரசு Veeragathy Thanabalasingham on March 1, 2024 Photo, X, @DrSJaishankar தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவும் அவரது மூன்று தோழர்களும் ஐந்து நாள் விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியிருந்தார்கள். தங்களையும் கூட இந்திய அரசாங்கம் அழைத்துப் பேசவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகி வேண்டுகோள் விடுத்திருப்பதாக செய்திகள் வருகின்றன. அந்தளவுக்கு தேசிய மக்கள் சக்தி தலைவரின் இந்திய பயணம் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்புடன் கூடிய கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்தியா வழமையாக தமிழ் அரசியல் கட்சிகளுக்குப் புறம்பாக ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போன்ற பெரிய கட்சிகளுடனேயே ஊடாட்டங்களைச் செய்துவந்திருக்கிறது; ஆனால், தேசிய ஐக்கிய மக்கள் சக்தி போன்ற இடதுசாரிக் கட்சிகளை அழைத்துப் பேசியதில்லை. இந்திய, இலங்கை இடதுசாரி அரசியல்வாதிகள் அவர்களின் கட்சிகளின் மகாநாடுகளில் கலந்துகொள்வதற்காக பரஸ்பரம் விஜயங்களை மேற்கொள்வதுண்டு. அத்தகைய விஜயங்கள் குறிப்பிட்ட கட்சி வட்டாரங்களுக்கும் ஒரளவுக்கு ஊடக கவனிப்புக்கும் அப்பால் பெரிதாகக் அக்கறைக்குரியவையாக இருப்பதில்லை. ஆனால், இந்தத் தடவை தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களின் இந்திய பயணத்துக்கு அதிவிசேட முக்கியத்துவம் ஒன்று இருக்கிறது. திசாநாயக்கவையும் தோழர்களையும் இந்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அழைத்து இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கிறது. இலங்கை அரசியல் கட்சியொன்றின் தலைவர்களை இந்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அழைத்துப் பேசியிருப்பது அண்மைய தசாப்தங்களில் இதுவே முதற்தடவையாக இருக்கவேண்டும். திசாநாயக்கவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் கலாநிதி நிஹால் அபேசிங்க, தேசிய நிறைவேற்று குழு உறுப்பினர் பேராசிரியர் அனில் ஜயந்த ஆகியோரும் இந்தியா சென்றிருந்தனர். அவர்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் மற்றும் வெளியுறவு செயலாளர் வினாய் மோகன் கவாட்ரா ஆகியோர் இலங்கையின் பொருளாதாரம், அரசியல் நிலைவரம், எதிர்கால அரசியல் மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடியதாக செய்திகள் கூறின. திசாநாயக்கவுடனான சந்திப்புக்குப் பிறகு கலாநிதி ஜெய்சங்கர் ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் “இலங்கையின் தேசிய மக்கள் சக்தியினதும் ஜனதா விமுக்தி பெரமுனவினதும் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி. இருதரப்பு உறவுகள், பரஸ்பர நலன்கள், இலங்கையின் பொருளாதாரச் சவால்கள், முன்னோக்கிச் செல்வதற்கான பாதை குறித்து நல்ல பேச்சுவார்த்தையை நடத்தினேன்” என்று குறிப்பிட்டிருந்தார். ஐந்து நாள் விஜயத்தின்போது தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்துக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியில் உள்ள தென்னிந்திய மாநிலமான கேரளாவுக்கும் சுற்றுலாவை மேற்கொண்டு சிந்தனைக் குழாம்கள் உட்பட பல்வேறு தரப்புகளுடனும் கலந்துரையாடினார்கள். இவ்வருட பிற்பகுதியில் இரு தேசிய தேர்தல்களுக்கு இலங்கை தயாராகிவரும் நிலையில், ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக தன்னை அறிவித்திருக்கும் திசாநாயக்கவின் மக்கள் செல்வாக்கு பெருமளவுக்கு அதிகரித்திருப்பதாக தோன்றும் ஒரு நேரத்தில் இந்திய அரசாங்கம் அவரை அழைத்துப் பேசியிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. இரு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மக்கள் கிளர்ச்சிக்கு பின்னரான அரசியல் சூழ்நிலையைப் பயன்படுத்தி மக்கள் மத்தியில் ஆதரவைப் பெருமளவுக்கு வளர்த்துக்கொண்ட கூட்டணியாக கட்சியாக தேசிய மக்கள் சக்தி விளங்குகிறது. அதன் தலைமைக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) பொதுக் கூட்டங்களிலும் ஊர்வலங்களிலும் மக்கள் பெருமளவில் அணிதிரண்டாலும் அந்த திரட்சி தேர்தல்களில் வாக்குகளாக மாறுவதில்லை என்ற ஒரு வரலாறு இருக்கிறது. ஆனால், அதே வரலாறு இனிமேலும் தொடரும் என்று கூறமுடியாது என்றே தோன்றுகிறது. மக்களால் பெரிதும் விரும்பப்படும் ஜனாதிபதி வேட்பாளரா திசாநாயக்கவே விளங்குவதாக கொழும்பை தளமாகக் கொண்டியங்கும் ‘சுகாதாரக் கொள்கைக்கான நிறுவனம்’ என்ற ஆய்வு அமைப்பு ஜனவரியில் செய்த கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்திருக்கிறது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 50 சதவீதமானவர்கள் தேசிய மக்கள் சக்தியின் தலைவருக்கே வாக்களிக்கப்போவதாக கூறியிருக்கும் அதேவேளை, 33 சதவீதமானவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாகக் கூறியிருக்கிறார்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வெறுமனே 9 சதவீதமானவர்கள் மாத்திரமே ஆதரிப்பதாக கருத்துக்கணிப்பு கூறுகிறது. இந்த பிந்திய ஆய்வு கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது. தேசிய மக்கள் சக்தி அமைக்கப்பட்ட சில மாதங்களில் நடைபெற்ற 2019 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட திசாநாயக்க 3.1 சதவீத வாக்குகளையே பெறக்கூடியதாக இருந்தது. மக்கள் கிளர்ச்சிக்கு பிறகு தேசிய மக்கள் சக்தியின் ஆதரவு எவ்வளவுதான் அதிகரித்திருந்தாலும் திசாநாயக்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறவேண்டுமானால் அவரின் வாக்குகள் அந்த மூன்று சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக அதிகரிக்கவேண்டும். அது சாத்தியமா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. எது எவ்வாறிருந்தாலும், இலங்கையின் இன்றைய அரசியல் நிலைவரத்துக்கு மத்தியில் தேசிய மக்கள் சக்தியை புதுடில்லிக்கு உத்தியோகபூர்வமாக அழைத்துப் பேசும் அளவுக்கு முக்கியமான அரசியல் சக்தியாக இந்திய அரசாங்கம் நோக்குகிறது என்பது தெளிவானது. இந்திய விரோத கடந்த காலம் ஜே.வி.பியைப் பொறுத்தவரை அதன் ஆரம்பம் முதலிருந்தே மிகவும் வெறித்தனமான இந்திய விரோதக் கொள்கையைக் கடைப்பிடித்த வரலாற்றைக் கொண்டிருக்கிறது. காலஞ்சென்ற கம்யூனிஸ்ட் தலைவர் என். சண்முகதாசன் தலைமையிலான சீனச்சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் வாலிபர் இயக்கத்தின் முக்கிய தலைவராக இருந்த ரோஹண விஜேவீர 1960 களின் பிற்பகுதியில் கட்சியில் இருந்து வெளியேறி புதிதாக அமைத்துக்கொண்ட ஜே.வி.பியின் கொள்கைகளில் இந்திய விரோதம் முக்கியமான ஒரு கூறாக இருந்தது. இலங்கையின் ஏனைய சமூகங்களின் தொழிலாளர் வர்க்கத்தினருடன் ஒப்பிடும்போது மெய்யான பாட்டாளி வர்க்கத்தினராக நோக்கக்கூடிய தமிழர்களான இந்திய வம்சாவளி மலையக தோட்டத்தொழிலாளர்களை இந்தியாவின் ஐந்தாம் படையென்றும் இந்திய விஸ்தரிப்புவாதத்தின் கருவிகள் என்றும் விஜேவீர வர்ணித்தார். மலையக பெருந்தோட்டங்களில் தேயிலைச் செடிகளை அகற்றிவிட்டு உருளைக் கிழங்கை பயிரிடுவது குறித்து அவர் பேசியதாகவும் கூறப்பட்டது. 1980 களின் பிற்பகுதியில் கைச்சாத்திடப்பட்ட இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையை ‘இரண்டாவது மலைநாட்டு உடன்படிக்கை’ (Second Upcountry Pact) என்று விஜேவீர வர்ணித்ததாக இலங்கையில் இந்தியாவின் தலையீடுகள் தொடர்பில் அவரின் சிந்தனைகள் குறித்து 2019ஆம் ஆண்டில் உதேனி சமன் குமார என்ற என்பவர் எழுதிய விரிவான கட்டுரையொன்றில் பதிவு இருக்கிறது. கண்டி பிரதானிகளுக்கும் பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகளுக்கும் இடையில் கைச்சாத்திப்பட்ட உடன்படிக்கையே இறுதியில் முழு இலங்கையும் பிரிட்டிஷாரின் ஆட்சியின் கீழ் வருவதற்கு வழிவகுத்தது. அதுவே முதலாவது மலைநாட்டு உடன்படிக்கை எனப்படுகிறது. இந்தியாவுடனான சமாதான உடன்படிக்கையை இலங்கை முழுவதும் இந்தியாவின் ஆதிக்கத்தின் கீழ் வருவதற்கு வழிவகுக்கக்கூடியது என்று விஜேவீர சிங்கள மக்களுக்கு கூறினார் என்பதை இதில் இருந்து புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. அந்த சமாதான உடன்படிக்கையை அடுத்து இரண்டாவது ஆயுதக்கிளர்ச்சியை முன்னெடுத்த ஜே.வி.பி. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணமுடியும் என்ற நம்பிக்கையில் மாகாண சபை முறையை ஆதரித்த தென்னிலங்கை அரசியல்வாதிகள் பலரை படுகொலை செய்தது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் கணவர் விஜய குமாரதுங்கவும் அவர்களில் ஒருவர். ஆனால், விஜேவீரவின் மறைவுக்கு பிறகு சில வருடங்கள் கழித்து ஜே.வி.பி. தேர்தல்களில் போட்டியிட்டு மாகாண சபைகளில் அங்கம் வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஜே.வி.பியும் அதன் நவீன அவதாரமான தேசிய மக்கள் சக்தியும் மாகாண சபை முறைக்கு வழிவகுத்த அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றன. அந்த திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தனக்கு இருக்கும் விருப்பத்தை ஜனாதிபதி விக்கிரமசிங்க கடந்த வருட முற்பகுதியில் வெளியிட்டபோது கடும்போக்கு சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத அளவுக்கு தேசிய மக்கள் சக்தி அதை எதிர்த்தது. ஆனால், தற்போதைய புவிசார் அரசியல் நிலைவரங்களுக்கு மத்தியில் ஜே.வி.பியின் இந்திய விரோதக் கடந்தகாலத்தை மோடி அரசாங்கம் பொருட்படுத்தவில்லை. தேசிய மக்கள் சக்தியும் அதன் இந்தியா தொடர்பிலான அதன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது. இந்தியாவின் முக்கியமான ஆங்கிலப் பத்திரிகைகளில் ஒன்றான சென்னை இந்துவின் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசனுக்கு கடந்த டிசம்பரில் திசாநாயக்க வழங்கிய நேர்காணலில் இலங்கையின் நெருங்கிய அயல்நாடான இந்தியா முக்கியமான அரசியல் மற்றும் பொருளாதார மையமாக மாறிவிட்டது என்றும் அரசியல், பொருளாதாரத் தீர்மானங்களை எடுக்கும்போது அவை இந்தியாவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை எப்போதும் கவனத்திற்கொண்டே செயற்படப்போவதாகவும் கூறினார். சீனாவுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இந்திய விஜயத்தின் பின்னர் சீனாவை எவ்வாறு கையாளுவார்கள் என்பது முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியதாகும். கடந்த வாரம் கொழும்பு ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரியவிடம் அவரது கட்சி வல்லரசுகளுடனான உறவுகளை எவ்வாறு கையாளும் என்று கேள்வியழுப்பப்பட்டது. அதற்கு அவர், “எமக்கு சிறப்பான முறையில் பொருத்தமாக அமையக்கூடிய நிகழ்ச்சித்திட்டத்தின் அடிப்படையிலேயே நாம் எந்த நாட்டுடனும் விவகாரங்களைக் கையாளவேண்டும். சீனாவோ, இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ அவர்களுக்கென்று ஒரு நிகழ்ச்சித்திட்டம் இல்லாமல் எம்முடன் விவகாரங்களைக் கையாள வரப்போவதில்லை. எமக்கென்று ஒரு நிகழ்ச்சித்திட்டம் இல்லாவிட்டால் அவர்களின் நிகழ்ச்சித் திட்டத்தின் பிரகாரமே நாம் செயற்படவேண்டியிருக்கும்” என்று பதிலளித்தார். சீனாவின் வியூகங்கள் பற்றிய அக்கறை இலங்கை உட்பட இந்து சமுத்திரத்தின் கரையோர நாடுகளில் சீனா அதன் செல்வாக்கைத் திணிக்கும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியிருக்கும் பினபுலத்தில், இந்திய வெளியுறவு அமைச்சரும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் வெளியுறவுச் செயலாளரும் தங்களது நாட்டின் அக்கறைகளை தேசிய மக்கள் சக்தியின் தலைவரின் கவனத்துக்குக் கொண்டுவருவந்திருப்பார்கள் என்பது நிச்சயம். இலங்கையில் இந்தியாவின் நலன்கள் உறுதிசெய்யப்படுவதை ஆதரிக்கக்கூடிய மாற்றுக் கட்சியொன்றை புதுடில்லி தேடுவதன் அறிகுறியே தேசிய மக்கள் சக்திக்கு நீட்டப்பட்ட நேசக்கரமாகும் என்று இலங்கையில் சில அவதானிகள் உணருகிறார்கள். ஆனால், திசாநாயக்கவின் புதுடில்லி விஜயத்தை விக்கிரமசிங்க அரசாங்கம் முழுமையாக ஆதரிக்கிறது போன்று தெரிகிறது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவருவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவித் திட்டத்துக்கு தேசிய மக்கள் சக்தியின் ஒத்துழைப்பைப் பெறுவதில் ஜனாதிபதி அக்கறையாக இருக்கிறார். இது இந்திய நலன்களுடனும் ஒத்துப்போகக்கூடியது என்று கொழும்பை மையமாகக்கொண்டியங்கும் இந்தியப் பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான பி.கே. பாலச்சந்திரன் கூறுகிறார். பொருளாதார மறுசீரமைப்பு செயற்திட்டத்துக்கு சகல கட்சிகளினதும் ஒத்துழைப்பை நாடிநிற்பதாக நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை ஆரம்பித்துவைத்த பிறகு கொள்கைவிளக்க உரையில் விக்கிரமசிங்க கூறினார். தமிழர்களின் மனநிலை அதேவேளை, சமஷ்டி அரசாங்க முறையையோ அல்லது குறைந்தபட்சம் 13ஆவது திருத்தத்தையோ கூட ஆதரிக்காத தேசிய மக்கள் சக்தியுடனான இந்தியாவின் ஊடாட்டத்தை தமிழர்கள் விரும்பமாட்டார்கள் என்பது நிச்சயம். ஆனால், இந்தியாவுடன் ஆரம்பித்திருக்கும் நெருக்கம் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுதொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடுகளில் தளர்வுகளை ஏற்படுத்துவதற்கு உதவவும் கூடும் என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுவதாகவும் பாலச்சந்திரன் கூறுகிறார். ஆனால், தற்போதைய சூழ்நிலையில் இனப்பிரச்சினையுடன் தொடர்புடைய விவகாரங்கைளை திசாநாயக்க குழுவினருடன் இந்திய அதிகாரிகள் கலந்துரையாடியிருப்பார்கள் என்று பெரும்பாலும் எதிர்பார்ப்பதற்கில்லை. இது இவ்வாறிருக்க, இந்தியா நேசக்கரத்தை நீட்டியிருக்கும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தென்னிலங்கையில் உள்ள இந்திய விரோத அரசியல் சக்திகள் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக பிரசாரங்களை முன்னெடுக்கத் தொடங்கியிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. பெரும்பாலான இலங்கையர்கள் எதிர்க்கும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு ஆதரவைப் பெறும் நோக்குடனேயே தேசிய மக்கள் சக்திக்கு இந்தியா அழைப்பை அனுப்பியதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கூறியிருக்கிறார். தங்களுக்குக் கிடைத்திருக்கும் தகவல்களின்படி இந்தியா அந்த உடன்படிக்கையில் விரைவில் கைச்சாத்திடவிருக்கிறது என்று செய்தியாளர்களிடம் கூறிய வீரவன்ச, இலங்கையின் வர்த்தகத்தையும் தொழிற்சந்தையையும் இந்தியாவுக்கு திறந்துவிடுவதே அந்த உடன்படிக்கையின் நோக்கம். இலங்கையை தனது காலனி நாடாக மாற்றவிரும்பும் இந்தியா சகல அரசியல் கட்சிகளையும் பூனைக்குட்டிகள் போன்று கட்டுப்படுத்தி வைத்திருக்க விரும்புகிறது என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார். ஸ்ரீலங்கா ரெலிகோமுடன் இந்தியா உடன்பாடு ஒன்றுக்கு வருவதற்கான சாத்தியம் இருக்கும் பின்புலத்திலேயே தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் புதுடில்லிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான அனில் ஹேவத்த நெத்திக்குமார கூறியிருக்கிறார். தேசிய மக்கள் சக்தி தலைவர்களின் இந்திய விஜயத்துக்கு எதிரான பிரசாரங்கள் தேசிய தேர்தல்களுக்கு இலங்கை தயாராகும் சூழ்நிலையில் புதிய இந்திய விரோத உணர்வு அலைக்கு வழிவகுக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாக சில அவதானிகள் கருதுகிறார்கள். இலங்கையில் இந்திய முதலீடுகளுக்கு எதிராக குரலெழுப்பிவந்த தேசிய மக்கள் சக்தி இனிமேல் அத்தகைய முதலீடுகள் தொடர்பில் எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என்பதும் இந்திய விஜயம் தொடர்பில் தேசியவாத சக்திகளினால் முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு எவ்வாறு பதிலளிக்கும் என்பதும் முக்கியமான கேள்விகள். இந்திய விஜயம் தேசிய மக்கள் சக்திக்கும் அதன் தலைவர்களுக்கும் பிராந்திய மட்டத்தில் ஒரு பெரிய அரசியல் மற்றும் இராஜதந்திர வெற்றி என்று நோக்கப்படுகின்ற போதிலும், இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் மிக முக்கியமான ஒரு அரசியல் சக்தியாக அவர்களை இந்தியா நோக்குவது எந்தளவுக்கு விவேகமானது, பொருத்தமானது என்ற கேள்வி பல மட்டங்களில் எழுப்பப்படுகிறது. வீரகத்தி தனபாலசிங்கம் https://maatram.org/?p=11249
  4. சுமந்திரனின் சுயபரிசோதனை February 12, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — மூன்று வாரங்களுக்கு முன்னர் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் தேர்தலில் தனது தோல்விக்கு முக்கியமான காரணத்தை யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கடந்த வாரம் யூரியூப் தமிழ் அலைவரிசை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் விளக்கிக் கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது. தலைவர் தேர்தலுக்கு பின்னரான தனது நிலைப்பாடுகள் குறித்து விரிவாகக் கூறிய அவர், நேர்காணலின் இறுதிப்பகுதியில் தேர்தல் முடிவு தொடர்பில் செய்த சுயபரிசோதனை அல்லது உள்முகச் சிந்தனை பற்றி மனந்திறந்து பேசினார். கடந்த ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக தமிழரசு கட்சியின் செயற்பாடுகளில் முழுமையாக ஈடுபாட்டுன் உழைத்த உங்களுக்கு எதிராக கட்சிக்குள் ஏன் இந்தளவு எதிர்ப்பு என்று நேர்காணலைக் கண்ட பத்திரிகை ஆசிரியர் சுமந்திரனிடம் கேட்டபோது அவர் அளித்த பதில் வருமாறு ; ” நீங்கள் கேட்கின்ற விடயம் குறித்து நான் நிறையவே யோசித்தேன். ஒரு கருத்து எனது மனதில் இப்போது பதிகிறது. நான் கட்சிக்கு என்ன செய்தேன், எவ்வாறு செயற்பட்டேன் என்பதைப் பற்றிச் சொன்னால் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. ஆனால், நான் எவ்வளவுதான் செய்தாலும் கூட, எமது மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. அவை தீர்க்கப்படாமல் இருக்கும் வரை என்னுடைய அணுகுமுறை எமது மக்களின் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வருகின்ற உணர்வுகளை வெளிப்படுத்துவதாக இருக்கவில்லை. ” இது ஏனென்று சொன்னால், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதுடன் சர்வதேச மட்டத்தில் சந்திப்புக்களையும் நடத்துகின்ற நான் சில விடயங்களை, சில உணர்ச்சிகளை வெளிப்படுத்தமுடியாது. அதற்கேற்ற வண்ணமாக நான் சில நகர்வுகளைச் செய்யவேண்டும். நானும் தமிழ்த் தேசியத்தைப் பகிரங்கமாகப் பேசுகிறேன். ஆனால், நான் பேச்சுவார்த்தைகளை நடத்தும் தரப்புகளுக்கு ஒரு முகத்தையும் கட்சிக்கும் எமது மக்களுக்கும் வேறு ஒரு முகத்தையும் காட்டுவதில்லை. அவ்வாறு காட்டவும் முடியாது. ” பிரச்சினைத் தீர்வுக்கான ஒரு வழி வந்திருந்தால், மக்களுடைய நிலைப்பாடு வித்தியாசமானதாக இருந்திருக்கும். ஆனால் பிரச்சினை தீராமல் இருக்கும்போது, நம்பிக்கை இல்லாமல் இருக்கும்போது குறைந்தது தங்களது உணர்ச்சிகளையாவது வெளியில் சொல்லவேண்டும் என்று மக்கள் நினைத்திருக்கலாம். ஆனால், நான் அவ்வாறு சொல்கிறவன் அல்ல என்கிற ஒரு ஆதங்கம் அவர்களுக்கு இருந்திருக்கலாம். அது ஒரு காரணமாக இருக்கலாம். “இந்த நேரத்தில் எங்களுடைய உணர்வை தென்னிலங்கைக்கு வெளிப்படுத்தவேண்டிய தேவை இருப்பதாக எமது மக்கள் உணருகின்றார்கள் என்று நான் நினைக்கிறேன். “திருகோணமலையில் தலைவர் தேர்தல் முடிந்து கொழும்பு திரும்பியபோது பல கட்சிகளின் தலைவர்கள் தாங்கள் இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை. வியப்பாக இருக்கிறதே என்று என்னிடம் கூறினார்கள். எங்களுடைய பிரச்சினை கள் தீர்க்கப்படாமல் இருப்பதே இதற்கு காரணம். தோல்வியடைந்த ஒருவனாகவே என்னை எமது மக்கள் நோக்குகிறார்கள். உங்களுடன் பேசி எந்தப் பிரயோசனமும் இல்லை. அதுவே உண்மையான நிலைமை. நீங்கள் பிரச்சினையை தீர்க்காமல் இருக்கும் வரை எமது மக்கள், பிரச்சினைதான் தீராமல் விட்டாலும் சரி, தங்களுடைய உணர்ச்சிகளையாவது வெளிப்படுத்துகின்ற ஒருவர் தேவை என்று இந்த தேர்தல் மூலம் சொல்லியிருக்கிறார்கள். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். “நான் அந்த உணர்ச்சிகளை முழுமையாக வெளிப்படுத்திப் பேசியவனல்ல. அவ்வாறு இனிமேலும் செய்யப்போகிறவனும் இல்லை. அது என்னுடைய சுபாவமும் இல்லை. அரசியலுக்காக, கட்சித் தலைமையைப் பெறவேண்டும் என்பதற்காக அவ்வாறு செயற்படப்போகிறவனும் அல்ல. ஆனால், சிறிதரன் அடைய நினைக்கின்ற அதே இலக்கை அடைவதற்காகவே நானும் இவ்வளவு காலமும் பாடுபட்டிருக்கிறேன். அதை அவரும் இணங்கிக்கொள்வார். அதை நாங்கள் தொடர்ந்து செய்வோம். “ஆனால், எமது மக்களுக்கு இப்போது முக்கியமாக தேவைப்படுவது தங்களுடைய உணர்வுகளை வெளியுலகத்துக்கு குறிப்பாக தென்னிலங்கைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே. அதனால் அவர்கள் சிறிதரனை தெரிவு செய்திருக்கிறார்கள். நல்லது. அதற்குப் பின்னால் நான் முழு மூச்சையும் கொடுத்து ஒத்துழைப்பேன்.” இறுதியாக கட்சியின் பொதுச்செயலாளர் உட்பட நிருவாகிகள் தெரிவு குறித்து கிளம்பிய சர்ச்சை தொடர்பாக பேசியபோது பதவி விலகும் தலைவர் மாவை சேனாதிராஜா கட்சியின் யாப்பின் பிரகாரம் சகல விடயங்களையும் கையாளமுடியாது என்று கூறியதை நேர்காணலில் ஒரு கட்டத்தில் சுட்டிக்காட்டிய சுமந்திரன் அந்த யாப்பை தானே நீதிமன்றத்தில் காப்பாற்றிக் கொடுத்தாகவும் இப்போது அவர்கள் அதற்கு அப்பால் செயற்பட முனைவதாகவும் குறிப்பிட்டார். தமிழரசு கட்சி சமஷ்டி முறையிலான அரசாங்கம் ஒன்றுக்காக குரல் கொடுப்பதன் மூலமாக நாட்டுப் பிரிவினையை குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது என்று கூறி களனிப்பகுதியைச் பெரும்பான்மை இனத்தவர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் 2014 மார்ச்சில் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு 2017 ஆகஸட் 4 வழங்கப்பட்டது. அதில் தமிழரசு கட்சிக்காக சுமந்திரனே வாதாடினார். அன்றைய பிரதம நீதியரசர் பிரியசத் டெப் தலைமையில் நீதியரசர்கள் உபாலி அபேரத்ன, அனில் குணரத்ன ஆகியோரைக் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு சமஷ்டி முறை அரசாங்கம் ஒன்றுக்காக குரல் கொடுப்பது இலங்கையின் அரசியலமைப்பை மீறுவதாகவோ நாட்டுப் பிரிவினையைக் கோருவதாகவோ அமையாது என்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது. அந்த வழக்கில் தமிழரசு கட்சியின் யாப்பை நியாயப்படுத்தி சுமந்திரன் செய்த வாதம் தமிழ்த் தேசிய அரசியலுக்கு அவர் வழங்கிய முக்கியமான பங்களிப்பாக பரவலாக நோக்கப்படுகிறது. அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி அரசியலமைப்பு வழிமுறையின் ஊடாக இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக்காண முயற்சிகளை முன்னெடுத்த சகல தமிழ்த் தலைவர்களுக்கும் இறுதியில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தையே தனது குறுகிய கால அரசியல் வாழ்வில் சுமந்திரனும் சந்திக்கவேண்டியேற்பட்டது. அரசாங்கம் உட்பட தென்னிலங்கை அரசியல் சமுதாயம் காலங்காலமாக கடைப்பிடித்த ஏமாற்றுத்தனமான அணுகுமுறைகள் தமிழ் மிதவாத தலைவர்களை தமிழ் மக்களிடம் இருந்து தனிமைப்படுத்திய வரலாறு ஒன்று இருக்கிறது. அரசாங்கங்களுடன் தாங்கள் நடத்துகின்ற பேச்சுவார்த்தைகளை நியாயப்படுத்தி தங்களது மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடியதாக இடைக்காலத்தில் குறைந்தபட்ச பயன்களையாவது காண்பிப்பதற்கு தமிழ் தலைவர்களினால் முடியுமாக இருந்ததில்லை. அந்த நிலைவரத்துக்கு காரணமான அரசாங்கங்களின் அணுகுமுறைகளும் செயற்பாடுகளுமே தமிழ் மக்கள் மத்தியில் தீவிரவாத சிந்தனை கொண்ட சக்திகள் செல்வாக்கு பெறுவதற்கு வழிவகுத்து வந்திருக்கிறது. இந்த பின்புலத்திலேயே தமிழரசு கட்சியின் தலைவர் தேர்தலில் சிறிதரனின் வெற்றியையும் சுமந்திரனின் தோல்வியையும் நோக்கவேண்டும். தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்ற ஒருவரே தேவை என்பதால் சிறிதரனை கட்சியின் தலைவராக தமிழர்கள் தெரிவு செய்தார்கள் என்பதையும் தன்னால் அவ்வாறான அரசியலைச் செய்யமுடியாது என்பதையும் வெளிப்படையாக ஒத்துக்கொண்டிருக்கும் சுமந்திரன் புதிய தலைவருடன் முழுமையாக ஒத்துழைப்பதாக கடந்த மூன்று வாரங்களிலும் பல தடவைகள் உறுதியளித்தார். ஆனால், தலைவராக தெரிவுசெய்யப்பட்ட தினம் முதலாக சிறிதரன் வெளிப்படுத்திவரும் கருத்துக்களும் அணுகுமுறைகளும் சுமந்திரனைப் போன்றவர்களைப் பொறுத்தவரை அவருடன் ஒத்துழைத்து அரசியல் பயணத்தை தொடர்ந்து முன்னெடுப்பில் உள்ள பிரச்சினைகளை தெளிவாக உணர்த்துகின்றன. கட்சியின் நிருவாகப் பதவிகளுக்கு தெரிவுகளைச் செய்வதில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறை தொடர்பில் மூண்ட சர்ச்சையை அடுத்து ஒத்திவைக்கப்பட்ட மகாநாட்டை விரைவில் கூட்டி தலைவர் பதவியை முறைப்படி பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு சுமந்திரன் சில தினங்களுக்கு முன்னர் சிறிதரனுக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதினார். அதற்கு இன்னமும் அவர் பதில் அனுப்பியதாகத் தெரியவில்லை. இது இவ்வாறிருக்க, தலைவர் தெரிவுக்கு பிறகு சிறிதரன் வெளிப்படுத்திருக்கும் கொள்கை நிலைப்பாடுகளை சுருக்கமாகப் பார்ப்போம். திருகோணமலையில் ஜனவரி 28 நடைபெறவிருந்த கட்சியின் மகாநாட்டில் முறைப்படி பதவியை ஏற்றுக்கொண்டு சிறிதரன் தனது கொள்கை நிலைப்பாடுகளையும் எதிர்கால அணுகுமுறைகளையும் விளக்கிக்கூறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது சாத்தியமாகாமல் போய்விட்டது. அண்மையில் தமிழ் கார்டியன் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் சிறிதரன் கூறிய கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியலமைப்புக்கான 13 வது திருத்தம் தீர்வாக அமையப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருக்கிறார் என்பது தெளிவாகிறது. ஒற்றையாட்சி வரையறைக்குள் காணப்படக்கூடிய எந்தவொரு தீர்வும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்யப்போவதில்லை என்று கூறிய அவர் தமிழ் மக்களின் பயணம் சமஷ்டி முறையொன்றை அடிப்படையாகக் கொண்ட தீர்வை நோக்கியதே என்று குறிப்பிட்டார். தமிழர்களின் நிலம், மொழி மற்றும் கலாசார அடையாளங்களை அங்கீகரிக்கக்கூடிய வகையில் வட மாகாணமும் கிழக்கு மாகாணமும் இணைந்த தீர்வொன்றைக் காண்பதுவும் ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான ஒரு அரசியல் பாதையை வகுப்பதற்கு உதவுவதுமே தங்களது இலட்சியம் என்றும் அவர் கூறினார். மேலும், தாயகத்தில் உள்ள தமிழர்களையும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தையும் ஐக்கியப்படுத்தி அரசியல் பாதையொன்றை வகுப்பதில் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுடன் இணைவது முக்கியமானது என்று தமிழ் கார்டியனுக்கு கூறிய அவர், தமிழ் கட்சிகளின் ஐக்கியத்துக்கு அழைப்பு விடுத்ததுடன் தமிழ் தேசியவாத சக்திகளை ஐக்கியப்படுத்துவதிலும் சகல தமிழர்களுக்குமான ஒரு பாதையை வகுப்பதிலும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்துக்கு முக்கியமான வகிபாகம் இருக்கிறது என்றும் தெரிவித்தார். எல்லாவற்றுக்கும் மேலாக, தங்களது பயணம் ஈழத்தேசிய விடுதலை போராளிகளின் கல்லறைகளில் இருந்து தொடங்கவேண்டும் என்று அவர் கூறியது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும். புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தை குறிப்பாக அவர்கள் மத்தியில் இருக்கும் தீவிரவாத நிலைப்பாடுகளைக் கொண்ட சக்திகள் உட்பட கடுமையான தேசியவாத உணர்வுடைய தனது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தும் நோக்கிலேயே அவர் அந்த கருத்துக்களை வெளியிட்டார் என்பதில் சந்தேகமில்லை. தலைவராக தெரிவு செய்யப்பட்ட உடனடியாகவே கூட அவர் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தனது வெற்றிக்கு செய்த பங்களி்ப்புக்காக நன்றி தெரிவித்தார். நடந்துமுடிந்திருப்பது ஒரு உட்கட்சித் தேர்தல் மாத்திரமே. தற்போதைய சூழ்நிலையில் சிறிதரனின் நிலைப்பாடுகள் குறித்து பரந்துபட்ட வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது எவருக்கும் தெரியாது. உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து சுமார் 15 வருடங்கள் கடந்த நிலையில் இன்றைய உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் நிலைவரங்களுக்கு மத்தியில் இலங்கை தமிழர்களின் பிரதான அரசியல் கட்சியின் தலைவராக வந்திருக்கும் சிறிதரனுக்கு தமிழ் மக்களுக்கு முன்னால் உள்ள சவால்களை முறையாக விளங்கிக்கொண்டு செயற்படவேண்டிய தலையாய பொறுப்பு இருக்கிறது. தமிழர்களின் மூன்று தசாப்தகால ஆயுதப்போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த தலைவர்களையும் போராளிகளையும் நினைவு கூர்ந்து வணக்கம் செலுத்துவது என்பது வேறு. கடந்த காலப் போராட்டங்களின் நினைவுகளுடனேயே தமிழ் மக்களைக் கட்டி வைத்திருக்கக்கூடிய அரசியல் அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது என்பது வேறு. இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு விளங்கிக்கொள்ளப்பட வேண்டும். கடந்த காலப் போராட்டங்களின் நினைவுகளை அடிப்படையாகக் கொண்ட அரசியல் சிந்தனை அந்தப் போராட்டங்களில் இருந்து படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டு மாறிவரும் சூழ்நிலைக்கு பொருத்தமான முறையில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை (அடிப்படைக் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல்) அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கான தந்திரோபாயங்களை வகுப்பதற்கு வழிகாட்டுவதாக அமையவேண்டும். வெறுமனே உணர்ச்சிவசமான கற்பிதங்களுடன் கடந்த காலத்தைக் காவியம் போன்று நினைவுபடுத்திக் கொண்டிருப்பதில் உள்ள பொருந்தாத்தன்மையில் இருந்து தமிழரசு கட்சியின் தலைவர் தன்னை விடுவித்துக் கொள்ளவேண்டும். ஆயுதப்போராட்டத்தில் மாத்திரம் நம்பிக்கை வைத்துச் செயற்பட்ட ஒரு இயக்கத்தின் அரசியல் கோட்பாடுகளையும் சுலோகங்களையும் பாராளுமன்ற அரசியலுக்கு பிரயோகிப்பதில் உள்ள நடைமுறைச் சாத்தியமற்ற தன்மை புரிந்து கொள்ளப்படவேண்டும். மண்ணில் நிலவும் உண்மையைப் பற்றிய பிரக்ஞை இன்றி நடைமுறைக்கு ஒவ்வாத தீவிரவாதச் சிந்தனையுடன் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் இயங்கும் குழுக்களின் (இத்தகைய குழுக்களில் ஒன்றுதான் துவாரகா வீடியோ நாடகத்தையும் தயாரித்து ஒளிபரப்பியது) நிகழ்ச்சி நிரலுக்கு வசதியாக அமையக்கூடிய சூழ்நிலைகளை வடக்கு, கிழக்கில் தோற்றுவிக்கும் வகையிலான அணுகுமுறைகளும் செயற்பாடுகளும் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும். ஏற்கெனவே கட்டுப்படியாகாத போர் ஒன்றைக் கடந்து வந்து இன்னமும் கூட வழமை வாழ்வுக்கு திரும்புவதற்கு போராடிக் கொண்டிருக்கும் தமிழ் மக்களை மீண்டும் இடர்பாடுகளுக்குள் தள்ளிவிடக்கூடாது. https://arangamnews.com/?p=10465
  5. தமிழரசு கட்சியின் தலைவராக சிறிதரனும் தமிழர் அரசியலும் Veeragathy Thanabalasingham on February 9, 2024 Photo, TAMIL GUARDIAN தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத்தீர்வைக் காணும் முயற்சிகளிலும் வடக்கு, கிழக்கில் எதிர்நோக்கப்படும் பல்வேறு மனிதாபிமானப் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணும் முயற்சிகளிலும் தமிழ் அரசியல் கட்சிகள் ஐக்கியப்பட்டு ஒருமித்த அணுகுமுறையைக் கடைப்பிடிக்கவேண்டும் என்பதே தமிழ் மக்களினதும் அவர்களின் நலன்களில் அக்கறைகொண்ட சிவில் சமூகம் மற்றும் அவதானிகளினதும் இடையறாத வேண்டுகோளாக இருந்து வருகிறது. ஆனால், தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் அது குறித்து அக்கறை காட்டக்கூடிய மனநிலையில் இல்லை. ஏற்கனவே இருபது வருடங்களுக்கும் அதிகமான காலமாக பல்வேறு மாச்சரியங்களுக்கு மத்தியிலும் கூட நீடித்து நின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பும் கடந்த முற்பகுதியில் இல்லாமற் போய்விட்டது. கடந்தவாரம் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்த புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவும் அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை அந்தக் கட்சிகள் ஐக்கியப்பட்ட ஒரு அமைப்பாக ஒருமித்து முன்வைக்கவேண்டும் என்று வலியுறுத்திக் கூறியிருக்கிறார். ஆனால், மற்றைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதில் தங்களுக்குப் பிரச்சினை இருக்கிறது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேரடியாகவே உயர்ஸ்தானிகரிடம் கூறியதாகவும் அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தின் அடிப்படையில் அரசியல் தீர்வொன்றை தனது கட்சி ஏற்றுக்கொள்வில்லை என்பதை அதற்கான காரணமாகக் கூறியதாகவும் செய்திகள் வெளியாகின. வேறுபாடுகள் இருந்தாலும் ஒருமித்த நிலைப்பாட்டை எடுப்பது அறிவார்ந்த செயற்பாடாக இருக்கும் என்று சந்தோஷ் ஜா தமிழ் கட்சிகளின் தலைவர்களிடம் கூறியதாகவும் இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காணுமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியாவினால் கேட்கமுடியுமே தவிர அது தொடர்பில் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டியது இலங்கையர்களின் பொறுப்பு என்று குறிப்பிட்டதாகவும் அந்தச் செய்திகள் தெரிவித்தன. இலங்கை அரசாங்கத்துக்கு புதுடில்லி நெருக்குதலைக் கொடுக்கவேண்டும் என்பதே தமிழ் கட்சிகளின் நிலைப்பாடாக இருக்கிறது. புதிய உயர்ஸ்தானிகரின் கருத்துக்கள் அது விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை அவர்களுக்குத் தெளிவாக உணர்த்தியிருக்கும் எனலாம். தமிழ் கட்சிகளின் ஐக்கியத்தையும் ஒருமித்த நிலைப்பாட்டையும் குறித்த அவரின் அறிவுரையே இலங்கை தமிழர்களுக்கான அவரின் பிரதான செய்தி. ஆனால், அது தொடர்பில் தமிழ் மக்களின் நலன்கருதி விட்டுக்கொடுப்புடனும் அக்கறையுடனும் பரிசீலிக்க தமிழ்க்கட்சிகள் முனைப்புக்காட்டுவாக இல்லை. மாறாக ஐக்கியம் என்பதை ஒவ்வொரு கட்சியும் அவற்றின் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே அணுகப்பார்க்கின்றன என்றே தெரிகிறது.. இரு வாரங்களுக்கு முன்னர் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மறுநாளே தமிழ் கட்சிகளை மீண்டும் ஐக்கியப்படுத்தப்போவதாகவும் 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த நிலைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை மீட்டெடுக்கப்போவதாகவும் கூறினார். ஆனால், தமிழரசு கட்சியுடன் முரண்பட்டுக்கொண்டு கடந்த வருட முற்பகுதியில் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய சில தமிழ்க்கட்சிகள் சிறிதரனின் அறிவிப்புக்கு அனுகூலமான சமிக்ஞையைக் காட்டவில்லை. மாறாக, தாங்கள் ஏற்கெனவே அமைத்து வைத்திருக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் தமிழரசு கட்சி வேண்டுமானால் இணைந்துகொள்ளலாம் என்று கூறுகின்றன. ஆயுதப்போராட்ட இயக்கங்களாக இருந்து பிறகு ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைந்த இந்த கட்சிகள் கடந்த காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் கண்ட அனுபவங்கள் காரணமாக மீண்டும் தமிழரசு கட்சியின் தலைமைத்துவத்தின் கீழான கூட்டமைப்பு ஒன்றில் பங்கேற்கத் தயாராயில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிடுதற்கான அணுகுமுறை தொடர்பில் தமிழரசு கட்சியின் தலைவர்களுடன் ஏற்பட்ட வேறுபாடுகளை அடுத்து அந்தக் கட்சிகள் ஏற்கெனவே தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டிருந்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பிலேயே நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்தன. அந்தத் தேர்தல்கள் நடைபெறவில்லை என்பது வேறுவிடயம். தமிழ்க் கட்சிகளின் ஐக்கியம்தான் முக்கியம் என்றால் அந்தக் கூட்டணியில் சிறிதரன் தலைமையிலான தமிழரசு கட்சி இணைந்துகொள்வதே முறையானது என்று அதன் பேச்சாளரான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) தலைவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார். சிறிதரனிடம் இருந்து இது தொடர்பில் இதுவரையில் எந்த பிரதிபலிப்பும் வெளிவரவில்லை. பொதுச்செயலாளர் உட்பட கட்சியின் ஏனைய பதவிகளுக்கு தெரிவுகளைச் செய்ததில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறை தொடர்பில் மூண்டிருக்கும் சர்ச்சையை அடுத்து கட்சியின் மகாநாடு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. மகாநாட்டை விரைவில் கூட்டி தலைவர் பதவியை முறைப்படி பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கடந்தவாரம் சிறிதரனுக்கு நீண்டகடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதற்கு இன்னமும் அவர் பதில் அனுப்பியதாக தெரியவில்லை. தனது கட்சிக்குள் தோன்றியிருக்கும் தகராறுகளைத் தீர்த்துவைப்பதில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் சிறிதரன் தற்போதைக்கு தமிழ் கட்சிகளின் ஐக்கியம் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கமுடியாது. தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு கட்சிக்குள் தனது நிலையை வலுப்படுத்துவதற்கும் கட்சிக்குள் ஐக்கியத்தை உறுதிப்படுத்துவதற்கும் முன்னதாக ஏன்தான் சிறிதரன் தமிழ் தேசிய கூட்மைப்பை 2009 ஆண்டுக்கு முன்னர் இருந்த நிலைக்குக் கொண்டுவருவது குறித்து அவசரப்பட்டுப் பேசினாரோ தெரியவில்லை. கொள்கை நிலைப்பாடுகள் இது இவ்வாறிருக்க, தலைவர் தெரிவுக்குப் பிறகு சிறிதரன் வெளிப்படுத்தியிருக்கும் கொள்கை நிலைப்பாடுகள் குறித்து பார்ப்போம். அவர் ஊடகங்களுக்குக் கருத்துக்களை கூறியிருந்தபோதிலும், ஜனவரி 28 திருகோணமலையில் நடைபெறவிருந்த தமிழரசு கட்சியின் மகாநாட்டில் முறைப்படி பதவியை பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தை வழிநடத்துவதற்கு கடைப்பிடிக்கப்போகும் கொள்கைகளை விளக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மகாநாடு ஒத்திவைக்கப்பட்டதால் அந்த முக்கியத்துவம் வாய்ந்த உரையை அவரால் நிகழ்த்த முடியாமற்போய்விட்டது. உள்நாட்டுப்போரின் முடிவுக்குப் பிறகு 2010 பொதுத்தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்றப் பிரவேசம் செய்த 56 வயதான சிறிதரன் விடுதலைப் புலிகளின் தீவிரமான ஆதரவாளர். அதைப் பகிரங்கமாக சொல்வதற்கு ஒருபோதும் அவர் தயங்கியதில்லை. கடந்த 14 வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவரும் அவர் சபைக்கு உள்ளேயும் வெளியேயும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கருத்துக்களை அடிக்கடி கூறிவந்திருக்கிறார். அதற்காக அவர் சரத் வீரசேகர, விமல் வீரவன்ச போன்ற கடும்போக்கு சிங்கள தேசியவாத அரசியல்வாதிகளின் கடுமையான கண்டனங்களுக்கும் ஆளாகி வந்திருக்கிறார். தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவான பின்னரும் கூட அவர் வெளியிட்ட கருத்துக்கள் விடுதலைப் புலிகளின் கோட்பாடுகளின் அடிப்படையில் ஆனால், ஆயுதப்போராட்டம் இல்லாத அரசியல் பாதையில் கட்சியை வழிநடத்துவதில் அவர் நாட்டம் கொண்டிருக்கிறார் என்பதை வெளிக்காட்டின. அண்மையில் தமிழ் கார்டியன் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் கூறிய கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு 13ஆவது திருத்தம் தீர்வாக அமையப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் சிறிதரன் உறுதியாக இருக்கிறார் என்பது தெரிகிறது. ஒற்றையாட்சி வரையறைக்குள் காணப்படக்கூடிய எந்தவொரு தீர்வும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவுசெய்யப்போவதில்லை என்று கூறிய அவர் தமிழ் மக்களின் பயணம் சமஷ்டி முறையொன்றை அடிப்படையாகக் கொண்ட தீர்வை நோக்கியதே என்று குறிப்பிட்டார். தமிழர்களின் நிலம், மொழி மற்றும் கலாசார அடையாளங்களை அங்கீகரிக்கக்கூடிய வகையில் வட மாகாணமும் கிழக்கு மாகாணமும் இணைந்த தீர்வொன்றைக் காண்பதும் ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான ஒரு அரசியல் பாதையை வகுப்பதற்கு உதவுவதுமே தங்களது இலட்சியம் என்றும் அவர் கூறினார். மேலும், தாயகத்தில் உள்ள தமிழர்களையும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தையும் ஐக்கியப்படுத்தி அரசியல் பாதையொன்றை வகுப்பதில் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுடன் இணைவது முக்கியமானது என்று குறிப்பிட்ட சிறிதரன் தமிழ் கட்சிகளின் ஐக்கியத்துக்கு அழைப்பு விடுத்ததுடன் தமிழ் தேசியவாத சக்திகளை ஐக்கியப்படுத்துவதிலும் சகல தமிழர்களுக்குமான ஒரு பாதையை வகுப்பதிலும் புலம்பெயர் தமிழ் சமூகத்துக்கு முக்கியமான வகிபாகம் இருக்கிறது என்றும் கூறினார். எல்லாற்றுக்கும் மேலாக தங்களது பயணம் ஈழ தேசிய விடுதலை போராளிகளின் கல்லறைகளில் இருந்து தொடங்கவேண்டும் என்று அவர் கூறியது முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியதாகும். புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள தீவிரவாத நிலைப்பாடுகளைக் கொண்ட சக்திகள் உட்பட கடுமையான தேசியவாத உணர்வுடைய தனது ஆதரவாளர்களையும் திருப்திப்படுத்தும் நோக்கிலேயே அந்தக் கருத்துக்களை அவர் வெளியிட்டார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், தற்போது நடந்துமுடிந்திருப்பது ஒரு உட்கட்சித் தேர்தலேயாகும். தற்போதைய சூழ்நிலையில் சிறிதரனின் நிலைப்பாடுகள் குறித்து தமிழ் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது எவருக்கும் தெரியாது. உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து சுமார் 15 வருடங்கள் கடந்த நிலையில், இன்றைய உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் நிலைவரத்துக்கு மத்தியில் இலங்கை தமிழர்களின் பிரதான அரசில் கட்சியின் தலைவராக வந்திருக்கும் சிறிதரனுக்கு தமிழ் மக்களுக்கு முன்னால் உள்ள சவால்களை முறையாக விளங்கிக்கொள்ளவேண்டிய தலையாய பொறுப்பு இருக்கிறது. தமிழர்களின் மூன்று தசாப்த கால ஆயுதப் போராட்டத்தில் உயிர்த் தியாகத்தைச் செய்த தலைவர்களையும் போராளிகளையும் நினைவுகூர்ந்து வணக்கம் செலுத்துவதும் கடந்த காலப் போராட்டங்களின் நினைவுகளுடனேயே தமிழ் மக்களை கட்டிவைத்திருக்கக் கூடிய அரசியல் அணுகுமுறைகளைக் கடைப்பிடிப்பதும் வேறுபட்ட விவகாரங்கள். கடந்த காலப் போராட்டங்களின் நினைவுகளை அடிப்படையாகக் கொண்ட அரசியல் சிந்தனை என்பது அந்தப் போராட்டங்களில் இருந்து படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டு மாறிவிட்ட சூழ்நிலைக்கு பொருத்தமான முறையில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கான தந்திரோபாயங்களை வகுப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவேண்டும். வெறுமனே உணர்ச்சிமயமான கற்பிதங்களுடன் கடந்த காலத்தைக் காவியம் போன்று நினைவுபடுத்திக்கொண்டே இருப்பதில் உள்ள பொருந்தாத்தன்மையில் இருந்து தமிழரசு கட்சியின் தலைவர் தன்னை விடுவித்துக் கொள்ளவேண்டும். ஆயுதப் போராட்டத்தில் மாத்திரம் நம்பிக்கை வைத்துச் செயற்பட்ட ஒரு இயக்கத்தின் அரசியல் கோட்பாடுகளை நாடாளுமன்ற அரசியலுக்குப் பிரயோகிப்பதில் உள்ள அறவே நடைமுறைச் சாத்தியமற்ற தன்மைபுரிந்து கொள்ளப்படவேண்டும். வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு முன்னரான காலப்பகுதியில் உணர்ச்சிவசமான சுலோகங்களை முழங்கி அன்றைய தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி தலைவர்களினால் வடக்கு, கிழக்கில் தமிழர்களை பிரமாண்டமான முறையில் அணிதிரட்டக் கூடியதாக இருந்ததைப் போன்று இன்று செய்வது இயலாத காரியம். இன்று தமிழ் மக்களின் தேவைகளும் எதிர்காலம் பற்றிய சிந்தனைகளும் பெருமளவுக்கு மாறிவிட்டன. பெரும்பாலான தமிழர்கள் அதுவும் முக்கியமாக வடக்கு தமிழர்கள் மேற்கு ஐரோப்பாவுக்கும் வட அமெரிக்காவுக்கும் புலம்பெயர்வது பற்றியே கனவுகண்டு கொண்டிருக்கிறார்கள். மண்ணில் நிலவும் உண்மையை பற்றிய பிரக்ஞை இன்றி நடைமுறைக்கு ஒவ்வாத தீவிரவாத சிந்தனையுடன் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் இயங்கும் குழுக்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு வசதியாக அமையக்கூடிய சூழ்நிலையை தமிழ்ப் பகுதிகளில் தோற்றுவிக்கும் வகையிலான அணுகுமுறைகளும் செயற்பாடுகளும் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும். ஏற்கனவே கட்டுப்படியாகாத போர் ஒன்றைக் கடந்து வந்து இன்னமும் கூட வழமை வாழ்வுக்குத் திரும்புவதற்கு போராடிக் கொண்டிருக்கும் தமிழ் மக்களை மீண்டும் இடர்பாடுகளுக்குள் தள்ளிவிடக்கூடாது. இந்தச் சந்தர்ப்பத்தில் கடந்த காலச் சம்பவம் ஒன்றை நினைவுபடுத்துவது பொருத்தமானதாக இருக்கும். வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு முன்னதாக 1975 ஆகஸ்ட் மாதம் என்று நினைவு. இலங்கையில் தனித்தமிழ்நாடு சாத்தியமா இல்லையா என்று தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் மானிப்பாய் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ.தருமலிங்கத்துக்கும் (புளொட் தலைவர் சித்தார்த்தனின் தந்தையார்) சீனச்சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைலர் என். சண்முகதாசனுக்கும் இடையில் விவாதம் ஒன்று சுன்னாகம் சந்தை மைதானத்தில் இடம்பெற்றது. சுன்னாகம் அன்று கணிசமானளவுக்கு இடதுசாரிகளுக்குச் செல்வாக்கான பகுதியாக விளங்கியது. விவாதத்தின் நடுவராக தருமலிங்கத்தினதும் சண்முகதாசனினதும் ஆசிரியர் ஒறேற்றர் சுப்பிரமணியம் இருந்தார். ஒரு கட்டத்தில் சண்முகதாசன் தருமரை நோக்கி தனித்தமிழ்நாட்டை எந்த வழியில் அடையப்போகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு தருமர் எந்த வழி என்பது தங்களது இயக்கத்தின் இரகசியம் என்று பதிலளித்தார். மிகுந்த நகைச்சுவையுணர்வுடைய ஒறேற்றர் குறுக்கிட்டு தங்களது இயக்கத்தின் இரகசியம் என்று அவர் சொல்வதால் இரகசியத்தைக் கூறவேண்டும் என்று சண்முகதாசன் வலியுறுத்தக்கூடாது என்று கூறிவிவாதத்தை முடித்துவைத்தார். தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் அந்த இரகசியம் என்ன எனபதும் பிறகு தமிழர்களுக்கு நேர்ந்த அவலமும் கடந்த அரைநூற்றாண்டு வரலாறு. இலக்கை அடைவதற்குத் தெளிவானதும் நடைமுறைச் சாத்தியமுடையதுமான எந்தவிதமான சிந்தனையோ விளக்கப்பாடோ இன்றி மக்களின் உணர்ச்சிகளைக் கிளறிவிடும் அரசியல் முழக்கங்களைச் செய்த அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளினால் தமிழ் மக்களுக்கு நேர்ந்த அவலங்கள் இன்றைய தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடமாக அமையவேண்டும். இன்று சமஷ்டி முறையின் அடிப்படையிலான அரசியல் தீர்வே தங்களது இலட்சியம் என்று கூறும் எமது தமிழ் அரசியல்வாதிகளில் எவராவது அந்தத் தீர்வை எவ்வாறு காண்பது என்பது பற்றி ஏதாவது சிந்தனை இருக்கிறதா? அதுவும் தருமர் அன்று கூறியதைப் போன்ற இரகசியமா? இதற்குள் தமிழரசு கட்சியின் புதிய தலைவர் ஈழ தேசிய விடுதலை போராளிகளின் கல்லறைகளில் இருந்து பயணத்தைத் தொடங்குவது பற்றி பேசுகிறார். குழந்தையாக இராமர் இருந்தபோது வானத்தில் உள்ள நிலாவைப்பிடித்து கையில் தந்தால்தான் சாப்பிடுவேன் என்று அடம்பிடித்து அழுததாக ஒரு கதை உண்டு. தாயார் கோசலை எதுவும் செய்யமுடியாமல் வசிஸ்ட்ட முனிவரின் உதவியை நாடவே அவரும் சிறிது நேரம் யோசித்து விட்டு ஒரு கண்ணாடியை எடுத்துவந்து அதில் நிலாவைத் தெறிக்கவைத்து குழந்தை இராமரின் கையில் கொடுத்தாராம். அவரும் தனது கையில் நிலா கிடைத்துவிட்டது என்ற திருப்தியில் அழுகையை நிறுத்தி தாயார் உணவை ஊட்ட தாராளமாகச் சாப்பிட்டாராம். தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வாக தனித்தமிழ்நாட்டுக் கோரிக்கையை அன்று தமிழ் தலைவர்கள் முன்வைத்ததை பற்றி தருமருடனான அந்த விவாதத்தில் சண்முகதாசனே இந்த கதையையும் கூறினார். இன்று மீண்டும் அரை நூற்றாண்டுக்குப் பிறகு தமிழர்களுக்கு கண்ணாடியில் நிலாவைக் காட்டும் அரசியல் வேண்டாம். வீரகத்தி தனபாலசிங்கம் https://maatram.org/?p=11239
  6. நரகத்தில் ஒரு இடைவேளைக்குப் பிறகு….! Veeragathy Thanabalasingham on January 18, 2024 Photo, REUTERS மக்கள் கிளர்ச்சிக்கு வழிவகுத்த பொருளாதார நெருக்கடியின்போது கடுமையான பொருட்கள் தட்டுப்பாட்டுக்கும் மக்களை இரவுபகலாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் மைல் கணக்கில் வரிசைகளில் காத்துநிற்கவைத்த எரிபொருட்கள் தட்டுப்பாட்டுக்கும் பிறகு கடந்த வருடம் பெரும்பாலான மக்களினால் வாங்கமுடியாத விலைகளில் இருந்தாலும் பொருட்களைப் பெறக்கூடியதாக இருந்த காலப்பகுதியை கொழும்பு ஆங்கிலப் பத்திரிகை ஒன்று அதன் ஆசிரிய தலையங்கத்தில் ‘நரகத்தில் இடைவேளை’ (Interval in the Hell) என்று வர்ணித்திருந்தது. தற்போது புதுவருடம் பிறந்த நிலையில் வரி அதிகரிப்புகளின் விளைவாக பொருட்களின் விலைகளும் சேவைகளின் கட்டணங்களும் மக்களினால் தாக்குப் பிடிக்கமுடியாத அளவுக்கு உயர்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கும்போது அந்த வர்ணனை எவ்வளவு கச்சிதமானது என்பதைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. பெறுமதிசேர் வரியை (வற்) அரசாங்கம் 15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரித்ததுடன் ஏற்கெனவே விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்த பெருவாரியான பொருட்களும் அந்த வரிவிதிப்பு வீச்சுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து (ஏற்கெனவே, வாழ்க்கைச் செலவைச் சமாளிப்பதற்கு பல்வேறு சிக்கன உபாயங்களை கடைப்பிடித்துவந்த) பெரும்பாலான மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். செலவினங்களைக் குறைத்து அரச வருவாயை அதிகரிப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் விதித்திருக்கும் நிபந்தனைகளை அரசாங்கம் மக்களுக்கு நேரக்கூடிய இடர்பாடுகளைப் பற்றி சிந்திக்காமல் நடைமுறைப்படுத்துவதே இதற்குக் காரணமாகும். அரசாங்கத்தைப் பொறுத்தவரை சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியைத் தொடர்ந்து பெறுவதற்கு அதன் நிபந்தனைகளை நிறைவேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. பிச்சைக்காரர்களுக்குத் தெரிவு இல்லை. இந்த வருடம் தேர்தல் ஆண்டாக இருந்தாலும் கூட முன்னரைப் போன்று அரசியல் கட்சிகளிடம் இருந்து இனிப்பான பொருளாதார நிவாரண உறுதிமொழிகளைப் பெரிதாக எதிர்பார்க்கவும் முடியாது. ஏனென்றால், முக்கியமான எதிரணி கட்சிகளும் கூட ஆட்சிக்கு வந்தால் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒத்துழைத்துச் செயற்படப் போவதாகவே கூறுகின்றன. நிபந்தனைகளை குறித்து நாணய நிதியத்துடன் மீள் பேச்சுவார்த்தைகளை நடத்தப்போவதாக அந்த கட்சிகள் கூறினாலும் அது எந்தளவுக்கு சாத்தியமாகும் என்ற கேள்வி இருக்கிறது. எதிர்காலத்தில் பதவிக்கு வரக்கூடிய எந்த அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியத்துடனான உதவித்திட்டத்தை மீள்பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தமுடியும். ஆனால், சர்வதேச ஆதரவைப் பெறுவதற்கு தற்போது முன்னெடுக்கப்படும் பாதையையே தொடர்ந்து பின்பற்றவேண்டியிருக்கும் என்று சில தினங்களுக்கு முன்னர் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க செய்தியாளர்கள் மகாநாட்டில் கூறினார். “தற்போது தெரிவு செய்யப்பட்டிருக்கும் பாதையில் இருந்து விலகினால் சர்வதேச ஆதரவு கிடைக்காமல் போகும். சர்வதேச நாணய நிதியத்தின் உதவித்திட்டம் கடந்த வருடம் செப்டெம்பர் முதலாம் திகதி தொடங்கியது. கடனுதவியின் முதலாவது தவணைக் கொடுப்பனவு வழங்கப்பட்ட பிறகு அடுத்த தவணைக் கொடுப்பனவுக்கு முன்னதாக எமது கடப்பாடுகள் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இது அடுத்த நான்கு வருடங்களுக்கு எந்த அரசாங்கம் பதவியில் இருந்தாலும், காலப் பொருத்தமான முறையில் கொள்கைகளில் மாற்றத்தைச் செய்வதற்கு மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவேண்டிய ஒரு தொடர்ச்சியான செயன்முறையாகும். “பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. ஆனால், சர்வதேச ஆதரவைப் பெறுவதற்கு இதே திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியது அவசியம். அந்த விளக்கப்பாட்டின் அடிப்படையில்தான் வெளிநாடுகளின் அரசாங்கங்களும் ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்களும் கடன் நிவாரணத்துக்கு இணங்கியிருக்கின்றன. இதே கடன் மறுசீரமைப்பு பாதையில் அடுத்த பத்து வருடங்களுக்கு பயணம் செய்யவேண்டிய தேவை இருக்கிறது. “இதில் மாற்றத்தைச் செய்தால் அவர்களும் கடன் நிவாரணம் தொடர்பான தீர்மானத்தை மாற்றிவிடலாம். அதனால் தற்போதைய பாதையில் இருந்து விலகினால் தங்களால் தொடர்ந்து ஆதரவை வழங்கமுடியாது என்று அவர்களால் கூறமுடியும். அதற்கு பிறகு வருடாந்தம் நாம் 600 கோடி அமெரிக்க டொலர்கள் கடனைத் திருப்பிச்செலுத்தவேண்டியிருக்கும்” என்று அவர் கூறினார். இலங்கை அகப்பட்டிருக்கும் சிக்கலின் பாரதூரத்தன்மையை கலாநிதி வீரசிங்கவின் விளக்கம் தெளிவாக உணர்த்துகிறது. புதிய வருடத்தில் கடுமையான இடர்பாடுகளை எதிர்நோக்கவேண்டியிருக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வருடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் கூறியிருந்தார். பொருளாதார நிலைவரம் தொடர்பில் மக்களுக்கு பொய் கூறவிரும்பவில்லை என்றும் மக்களால் விரும்பப்படாத தீர்மானங்களை எடுப்பதற்கு தயங்கப்போதில்லை என்றும் கூறுவதன் மூலமாக அவர் தன்னை ஒளிவுமறைவற்ற தலைவராக காட்டிக்கொள்ளலாம். ஆனால், வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்கு முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் விளைவான சுமையை சாதாரண மக்களினால் எவ்வளவு காலத்துக்கு தாங்கிக் கொள்ளமுடியும்? அந்த சுமை சமுதாயத்தின் சகல பிரிவுகள் மீதும் ஒப்புரவான ஒரு முறையில் பகிரப்படுவதாகவும் இல்லை. மறைமுகமான வரிகளின் விளைவான சுமை சாதாரண மக்களையே கடுமையாக அழுத்துகிறது. நிலவர அறிக்கை இத்தகைய பின்புலத்தில், குடிசன மதிப்பு, புள்ளி விபரவியல் திணைக்களம் கடந்தவாரம் வெளியிட்ட அறிக்கையை நோக்குவது அவசியமானதாகும். நாட்டின் தற்போதைய நிலைவரம் மாத்திரமல்ல எதிர்கால நிலைவரமும் கூட இருள் கவிழ்ந்ததாகவே இருக்கப்போகிறது என்பதை அறிக்கை தெளிவாகப் புரிந்து கொள்ளவைக்கிறது. கடந்த வருடத்தின் முதல் காலாண்டில் 4.70 சதவீதமாக இருந்த வேலையில்லாத் திண்டாட்டம் இரண்டாவது காலாண்டில் 5.20 சதவீதமாக அதிகரித்தது. இன்று ஒரு குடும்பத்தின் அடிப்படை மாதாந்த வேதனம் 40 ஆயிரம் ரூபாவுக்கும் 50 ஆயிரம் ரூபாவுக்கும் இடைப்பட்டதாக இருக்கிறது. அது வெறுமனே உணவுத் தேவைக்கு மாத்திரமே போதுமானது. பிள்ளைகளின் கல்வி, உடை, மருத்துவ பராமரிப்பு, பயணங்கள் மற்றும் பொழுதுபோக்கு செலவினங்களுக்கு புறம்பாக பணம் தேவை. தாய், தந்தையையும் இரு பிள்ளைகளையும் கொண்ட ஒரு குடும்பத்தின் உணவுச் செலவுக்கு சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபா தேவைப்படுகிறது. 60.5 சதவீதமான குடும்பங்களின் மாதாந்த சராசரி வருமானம் கடுமையாகக் குறைந்துவிட்டது. அதேவேளை, 91 சதவீதமான குடும்பங்களின் மாதாந்த செலவின மட்டம் கடுமையாக உயர்ந்துவிட்டது.பொருளாதார நெருக்கடியின் காரணமாக 22 சதவீதமான குடும்பங்கள் வங்கிகளிடம் அல்லது தனியாரிடம் கடன் வாங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன. 75.2 சதவீதமான குடும்பங்களின் உணவு முறையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. 97.2 சதவீதமான குடும்பங்கள் செலவினங்களைச் சமாளிக்க பல்வேறு உபாயங்களைக் கடைப்பிடிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன. அதேவேளை 46.4 சதவீதமான குடும்பங்கள் சேமிப்பைக் குறைத்திருக்கின்றன அல்லது சேமிப்புக்களை அன்றாட தேவைக்கு செலவு செய்கின்றன. 2019ஆம் ஆண்டுக்கு பிறகு வறியவர்களின் தொகை சுமார் 40 இலட்சத்தில் இருந்து 70 இலட்சமாக அதிகரித்திருக்கிறது. சனத்தொகையில் 31 சதவீதத்தினர் வறுமைக்கோட்டின் கீழ் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. கொழும்பில் இயங்கும் ‘லேர்ண்ஏசியா’ என்ற சிந்தனைக்குழாம் கடந்த வருடம் மேற்கொண்ட ஆய்வொன்றின் மூலம் சனத்தொகையில் மூன்றில் ஒரு பிரிவினர் அல்லது 33 சதவீதமானோர் தினம் ஒருவேளை உணவைத் தவிர்ப்பதாகவும் 47 சதவீதமானவர்கள் உணவின் அளவுகளைக் குறைத்திருக்கும் அதேவேளை வயது வந்தவர்களில் 27 சதவீதமானவர்கள் பிள்ளைகளுக்குத் தேவை என்பதற்காக தங்களது உணவை கணிசமாகக் கட்டுப்படுத்திக்கொள்வதாகவும் கண்டறியப்பட்டிருக்கிறது. குறைந்த வருமானம் காரணமாக போதுமான உணவுப் பொருட்களைப் பெறமுடியாததால் முகங்கொடுக்கவேண்டியிருக்கின்ற சவால்களை சமாளிக்க பல குடும்பங்கள் உணவைக் குறைத்திருப்பது மாத்திரமல்ல, வழக்கமாக சாப்பிடுகின்ற உணவு வகைகளைக் கைவிட்டு மலிவான வேறு வகை உணவுகளை நாடியிருப்பதாக சில சிவில் சமூக அமைப்புக்கள் மேற்கொண்ட ஆய்வுகள் கூறுகின்றன. வழமையான உணவு வகைகளை வாங்குவது கட்டுப்படியாகாது என்பதால் குடும்பங்கள் கிரமமான உணவுளைத் தவிர்ப்பதாகவும் தங்களது அடுத்த வேளை உணவு எங்கிருந்து வரும் என்பது தெரியாத நிலையில் சிறுவர்கள் வெறுவயிற்றுடன் படுக்கைக்கு செல்கிறார்கள் என்றும் யுனிசெவ் அமைப்பின் தெற்காசிய பிராந்தியப் பணிப்பாளர் ஜோர்ஜ் லாறியீ அட்ஜே 2022 ஆகஸ்டில் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார். சிறுவர்கள் மத்தியிலான மந்தபோசாக்கைப் பொறுத்தவரை தெற்காசியாவில் ஆப்கானிஸ்தானுக்கு அடுத்ததாக இலங்கை இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்றும் அறிக்கைகள் கூறின. இது இவ்வாறிருக்க, இவ்வருடத்தின் முதல் காலாண்டின் இறுதியில் மக்களின் வாழ்க்கைச் செலவுச் சுமையில் 75 சதவீதம் குறைவடையக்கூடியதாக அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ கடந்த வாரம் கூறியிருக்கிறார். அரசியல்வாதிகள் உறுதிமொழிகளை அளிப்பார்கள். பிறகு அவற்றை நிறைவேற்றமுடியாமல் போய்விட்டால் அதற்கும் காரணங்களை தயாராகவே வைத்திருப்பார்கள். வாழ்க்கைச் செலவுச் சுமையில் 75 சதவீதக் குறைப்பு எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பது முக்கியமான கேள்வி. சர்வதேச நாணய நிதியத்தின் உதவியில்லாமல் அரசாங்கத்தினால் எதையும் செய்யமுடியாமல் இருக்கலாம். ஆனால், அதனால் விதிக்கப்படுகின்ற நிபந்தனைகளை நிறைவேற்றுகின்றபோது அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் கடுமுனைப்பான நடவடிக்கைகள் சமூக அமைதியின்மையை தோற்றுவிக்கக்கூடியவை. அறகலயவைப் போன்ற மக்கள் கிளர்ச்சி மீண்டும் மூளுவதற்கு சாத்தியம் இல்லை என்று அரசாங்கம் மெத்தனமாக நினைக்கிறது போலும். அவ்வாறு மூண்டாலும் கூட படைபலம் கொண்டு ஆரம்பத்திலேயே அடக்கிவிடலாம் என்று அதற்கு நம்பிக்கை இருக்கக்கூடும். சர்வதேச நாணய நிதியத்தின் இறுக்கமான கடனுதவி நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தியதன் விளைவாக ஆர்ஜன்டீனா போன்ற நாடுகளில் மூண்ட அரசியல் – சமூக எழுச்சிகளில் இருந்து எமது அரசாங்கம் மாத்திரமல்ல நாணய நிதியமும் பாடத்தைப் படிக்கவேண்டும். லத்தீன் அமெரிக்க, மத்திய கிழக்கு, வட ஆபிரிக்க பிராந்திய நாடுகளிலும் அத்தகைய எழுச்சிகள் ஏற்பட்டன. எமது பிராந்திய நாடான பாகிஸ்தானும் அதே பிரச்சினையை எதிர்நோக்குகிறது. மனித உரிமை மீறல்கள் சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகள் அசமத்துவத்தை அதிகரித்து அமைதியின்மையை தூண்டுவதாக பல சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் கடுமையான விமர்சனங்களை்முன்வைத்திருக்கின்றன. “சிக்கன நடவடிக்கைகள் என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய பொதுச்சேவைகள் மீதான அரசாங்கத்தின் செலவினக் குறைப்பும் பிற்போக்கான பெருமளவு வரிவிதிப்புகளும் மனித உரிமைகளை மலினப்படுத்தியிருக்கின்றன என்பதற்கு வரலாற்றில் தாராளமான சான்றுகள் இருக்கின்றன. வறுமையையும் அசமத்துவத்தையும் மேலும் தீவிரப்படுத்துவதற்கும் மனித உரிமைகள் மலினப்படுத்தப்படுவதற்கும் வழிவகுக்கும் கொள்கைகளை சர்வதேச நாணய நிதியம் நாடுகள் மீது திணிக்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் சொந்த உள்ளக ஆய்வுகளே அதன் கொள்கைகள் நாடுகளின் கடன்களைக் குறைப்பதில் பொதுவில் பயனுறுதியுடைய விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்பதைப் புலப்படுத்துகின்றன. 2023 ஏப்ரலில் வெளியிடப்பட்ட நிதியத்தின் ‘உலகப் பொருளாதார நோக்கு’ என்ற அறிக்கையில் சிக்கனத் திட்டங்கள் கடன் விகிதங்களை ஒரு சராசரி அடிப்படையில் குறைக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது” என்று மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு (Human Rights Watch) ‘சர்வதேச நாணய நிதியம்; சிக்கன கடன் நிபந்தனைகளினால் உரிமைகள் மலினப்படுத்தப்படும் ஆபத்து – அதிகரிக்கும் அசமத்துவம் குறைபாடுடைய நிவாரண முயற்சிகளும்’ என்ற தலைப்பில் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருக்கிறது. சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது அரசாங்கங்களும் நிதி நிறுவனங்களும் மனித உரிமைகள் மீதான தாக்கம் குறித்து மதிப்பீட்டைச் செய்யவேண்டும் என்று வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு வழிகாட்டல் கோட்பாடுகள் கூறுகின்றன. ஆனால், சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளும் நிபந்தனைகளும் அந்தக் கோட்பாடுகளுக்கு இசைவானவையாக இல்லை என்பதை அனுபவங்கள் உணர்த்துகின்றன. ஐ.எம்.எவ். கலகங்கள் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன்களைப் பெற்ற ஏனைய நாடுகளின் அனுபவங்களில் இருந்து இலங்கை அரசாங்கம் படிப்பனைகளைப் பெற்று நிதானமாக நடந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. அந்த நாடுகளில் மக்கள் மத்தியில் தோன்றிய அமைதியின்மையை ‘சர்வதேச நாணய நிதியக் கலகங்கள்’ (IMF Riots) என்றே அழைக்கப்படுகின்றன. இலங்கையும் அத்தகைய கலகம் ஒன்றைக் காணுமா இல்லையா என்பது அடுத்து வரும் நாட்களில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளிலேயே முற்றிலும் தங்கியிருக்கிறது. வீரகத்தி தனபாலசிங்கம் https://maatram.org/?p=11215
  7. ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவது குறித்து கூற மறுக்கும் ரணில் Veeragathy Thanabalasingham on November 21, 2023 Photo, THEQUINT ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலை தவிர வேறு எந்தத் தேர்தலைப் பற்றியும் பேசுவதில்லை. ஆனால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக இதுவரையில் அவர் அறிவித்ததுமில்லை. ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிட்டு பெருவெற்றி பெறுவார் என்று ஐக்கிய தேசிய கட்சி அரசியல்வாதிகள் மாத்திரமே பேசிக்கொண்டிருக்கிறார்கள். விக்கிரமசிங்கவை எதிர்த்து வேறு எவரும் போட்டியிடக்கூடாது என்று அந்தக் கட்சியின் தவிசாளரான நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன சில வாரங்களுக்கு முன்னர் கூறியதை எவரும் மறந்திருக்கமாட்டார்கள். அடுத்த ஜனாதிபதியாக விக்கிரமசிங்க போட்டியின்றி தெரிவாகவேண்டும் என்பது அவரின் விருப்பமாக இருக்கிறது போலும். கடந்த மாதம் கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மகாநாட்டில் உரையாற்றியபோது அரசியலமைப்பின் பிரகாரம் 2024 பிற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலும் அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலும் உள்ளூராட்சித் தேர்தலும் நடைபெறும் என்று அறிவித்த ஜனாதிபதி அந்தத் தேர்தல்களுக்கு தயாராகுமாறு தனது கட்சியினரை கேட்டுக்கொண்டாரே தவிர கட்சியின் வேட்பாளர் பற்றி எதுவும் கூறவில்லை. தேர்தல்களை இலக்குவைத்தது என்று எதிரணி அரசியல் கட்சிகளினால் வர்ணிக்கப்படும் 2024 பட்ஜெட்டை கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த ஜனாதிபதி மறுநாள் மாலை தனது செயலகத்தில் பத்திரிகை ஆசிரியர்களைச் சந்தித்தார். ஆங்கிலப் பத்திரிகை ஆசிரியர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போவதை உறுதிசெய்யவோ அல்லது போட்டியிடக்கூடிய சாத்தியத்தை நிராகரிக்கவோ இல்லை. பொறுத்திருந்து பார்க்கப்போவதாகவே அவர் கூறினார். நாட்டின் வங்குரோத்து நிலையை முடிவுக்குக் கொண்டுவருவதில் தற்போது முழுக் கவனத்தையும் செலுத்தியிருப்பதால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்று இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று கூறிய விக்கிரமசிங்கவிடம் ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்காலம் குறித்து கேட்டபோது பொருளாதாரம் குறித்து உண்மையைப் பேசியவர்கள் தனது கட்சியினர் மாத்திரமே என்பதால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தாங்கள் தோற்கடிக்கப்பட்டதாகவும் கட்சியை மீள அணிதிரட்டிக் கொண்டு அடுத்தவருடம் தேர்தல்களுக்கு தயாராகப்போவதாகவும் பதிலளித்தார். “எனது முதற்பணி வங்குரோத்து நிலையை முடிவுக்குக் கொண்டுவருவதே. அதை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சி போட்டியிடும். உண்மையை பேசுபவர்கள் என்பதால் வெற்றிபெறுவதில் நம்பிக்கை வைத்திருக்கிறோம். பல புதுமுகங்களும் வந்திருக்கிறார்கள். அரசாங்கத்திலும் எதிரணியிலும் உள்ள பல கட்சிகளும் போட்டியிடும்” என்று அவர் மேலும் கூறினார். ஜனாதிபதித் தேர்தல்கள் என்று வரும்போது வெற்றி பெறுவதற்கு தனக்கு வாய்ப்பு இல்லை என்று கண்டால் விக்கிரமசிங்க அவற்றில் போட்டியிடுவதில் இருந்து ஒதுங்கிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டவர். முதல் இரு தடவைகள் தோல்வி கண்ட அவர் கடந்த மூன்று ஜனாதிபதித் தேர்தல்களில் வேறு வேட்பாளர்களுக்கு ஆதரவளித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக மூன்று தசாப்தங்களாக இருந்துவரும் அவர் இரு நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றிபெற்று அரசாங்கத்தை அமைத்து பிரதமராக வரமுடிந்தபோதிலும் முழுமையாக ஐந்து வருடங்களுக்கு பதவியில் நீடிக்க முடிந்ததில்லை. இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிகவும் கூடுதலான காலம் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த ‘பெருமை’ அவருக்கே உரியது. இறுதியாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியினால் ஒரு ஆசனத்தைக் கூட வென்றெடுக்கமுடியாத நிலையில் தேசியப்பட்டியல் மூலமாக கிடைத்த ஒரேயொரு ஆசனத்தைப் பயன்படுத்தி பத்து மாதங்கள் கழித்து நாடாளுமன்றத்துக்கு மீண்டும் வந்த விக்கிரமசிங்க எவருமே எதிர்பார்த்திராத வகையில் மாற்றமடைந்த அரசியல் கோலங்களின் விளைவாக கால் நூற்றாண்டு காலமாக தன்னிடமிருந்து நழுவிக்கொண்டிருந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியை வசப்படுத்தக்கூடியதாக இருந்தது. இலங்கையில் நாடாளுமன்றத்தினால் தெரிவான முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான விக்கிரமசிங்க தேர்தல் ஒன்றில் மக்களின் ஆணையுடன் ஜனாதிபதியாக அதிகாரத்துக்கு வரவேண்டும் என்ற விருப்பத்தைக் கொண்டிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இன்னமும் ஒரு வருடத்துக்கும் குறைவான காலத்திற்குள் நடத்தப்பட வேண்டியதாக இருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவது குறித்து திட்டவட்டமாக எதையும் கூற அவர் தயாராயில்லை. விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்த ராஜபக்‌ஷர்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அவரை ஆதரிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய கட்டம் ஒன்று இருந்தது. ஆனால், இப்போது அந்த நிலைமை இல்லை. பொதுஜன பெரமுன அதன் வேட்பாளரைக் களமிறக்கும் என்று தொடர்ச்சியாகக் கூறிக் கொண்டிருக்கிறது. அந்த வேட்பாளர் ஒரு ராஜபக்‌ஷவை தவிர வேறு யாருமாக இருக்க பெரும்பாலும் வாய்ப்பு இல்லை. தேசிய தேர்தல்களை இலக்குவைத்து பரந்தளவிலான கூட்டணியொன்றை அமைப்பதில் விக்கிரமசிங்க அக்கறை காட்டுகின்றபோதிலும், அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படுவதாக தெரியவில்லை. பொதுஜன பெரமுனவில் இருந்தும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தன்பக்கம் இழுக்கும் ஜனாதிபதியின் வியூகத்துக்கு அண்மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நஷீர் அஹமட் பதவிகளை இழக்க காரணமாக இருந்த உயர்நீதிமன்ற தீர்ப்பு பெரும் பின்னடைவாகப் போய்விட்டது. உண்மையில், ஐக்கிய தேசிய கட்சியோ அல்லது பொதுஜன பெரமுனவோ தேர்தல் ஒன்றுக்கு முகங்கொடுக்கக்கூடிய செல்வாக்குடன் இல்லை. ஆனால், எந்தத் தேர்தல் நடந்தாலும், தங்களது கட்சி வெற்றிபெறும் என்று ராஜபக்‌ஷர்கள் ஒருவர்மாறி ஒருவர் நாட்டு மக்கள் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி சிந்திக்காமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பொருளாதார வீழ்ச்சிக்கு ராஜபக்‌ஷர்களே பொறுப்பு என்று கடந்த வாரம் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அவர்களின் நிலையை மேலும் பலவீனப்படுத்தியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இது இவ்வாறிருக்க, உள்ளூராட்சித் தேர்தலுக்கும் மாகாண சபை தேர்தலுக்கும் நேர்ந்த கதிக்குப் பிறகு தேசிய தேர்தல்களுக்கு என்ன நேருமோ என்ற பயம் மக்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இருக்கிறது. இதற்கு அரசாங்கத் தரப்பிலிருந்து வருகின்ற அறிவிப்புக்களே முக்கிய காரணமாகும். ஐக்கிய தேசிய கட்சியின் மகாநாட்டில் தேசிய தேர்தல்கள் குறித்து அறிவித்த சில தினங்களில் ஜனாதிபதி விக்கிரமசிங்க தேர்தல் சடடங்களையும் ஒழுங்குவிதிகளையும் விரிவாக ஆராய்ந்து சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான முறையில் தேர்தல் சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டுவர அவசியமான விதப்புரைகளைச் செய்வதற்கு முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசத் டெப் தலைமையில் பத்துப் பேரைக் கொண்ட விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்தார். பெண்கள், இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலத்திரனியல் வாக்குப்பதிவுக்கு வாய்ப்பளித்தல், வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் வாக்களிப்பதற்கு வசதிசெய்தல், நாடாளுமன்றத் தேர்தலிலும் மாகாண சபை தேர்தலிலும் போட்டியிடும் ஒருவர் மக்களினால் தெரிவுசெய்யப்படும் பட்சத்தில் இரு சபைகளிலும் ஏககாலத்தில் அங்கம் வகிப்பதற்கு வசதிசெய்தல் என்று பெருவாரியான ஏற்பாடுகளுக்கான சாத்தியம் குறித்து ஆராயுமாறு அந்த ஆணைக்குழுவிடம் கேட்கப்பட்டிருக்கிறது. ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆறு மாதகால அவகாசத்திற்குள் அல்லது அடுத்த ஜனாதிபதி தேர்தல் வருவதற்கு முன்னதாக அதனால் பணிகளை நிறைவுசெய்யக்கூடியதாக இருக்குமா என்று அரசியல் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புக்களும் ஏற்கனவே கேள்வியெழுப்பத் தொடங்கிவிட்டன. ஆணைக்குழு அதன் அறிக்கையை உரிய காலத்தில் கையளித்தாலும் கூட அதனால் முன் வைக்கப்படக்கூடிய விதப்புரைகள் தொடர்பில் சட்டவாக்க செயன்முறைகளை முன்னெடுப்பதற்கும் ஒரு கணிசமான காலம் எடுக்கும் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து ஜனாதிபதி பேசும்போது தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு அவர் உபாயங்களை தேடுகிறார் என்பது பொதுவெளியில் பரவலான கருத்தாக இருக்கிறது. கடந்த வருட நடுப்பகுதியில் பதவிக்கு வந்த பின்னர் இதுநாள் வரையில் தேர்தல்கள் தொடர்பில் அவர் கடைப்பிடித்த அணுகுமுறைகளே இதற்குக் காரணம். பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டலில் தனது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தனக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை அதிகரிக்கும் என்று விக்கிரமசிங்க நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால், அரச வருவாயை பெருக்குவதற்கு அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளின் போதாமை குறித்து சர்வதேச நாணய நிதியம் அதிருப்தி தெரிவித்ததைத் தொடர்ந்து அடுத்தடுத்து மேற்கொள்ளப்படும் வரிகள் மற்றும் சேவைகள் கட்டணங்களின் அதிகரிப்புக்கள் வாழ்க்கைச் செலவை மேலும் கடுமையாக அதிகரிக்கச் செய்து மக்களை திணறடித்துக் கொண்டிருக்கின்றன. அதனால் மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீதான வெறுப்பு கடுமையாக அதிகரிக்கிறது. சிவில் சமூக நிறுவனம் ஒன்றினால் சில தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ‘தேசத்தின் மனநிலை’ கருத்துக்கணிப்பு இதை தெளிவாக நிரூபிக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் தனக்கு வாய்ப்பான தருணத்துக்காக காத்திருக்கும் ஜனாதிபதி என்ன செய்வது என்று தடுமாறிக் கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது. தேர்தல்களில் வெற்றிபெற முடியாத சூழ்நிலை இருக்குமென்றால் அதற்கு மாற்றுவழி தேர்தல்களை நடத்தாமல் விடுவதோ அல்லது வாய்ப்பான சூழ்நிலை வரும்வரை தேர்தல்களைக் காலந்தாழ்த்திக் கொண்டு போவதோ அல்ல. அவ்வாறு செய்ய முயற்சிப்பது அதிகாரத்தில் இருப்பதற்கான நியாயப்பாடு தொடர்பில் ஏற்கனவே சவாலை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் அரசாங்கத்துக்கு பல முனைகளிலும் மேலும் நெருக்கடிகளையே கொண்டுவரும் என்பது நிச்சயம். அவருக்கு உபாயங்கள் அருகிக்கொண்டுபோகின்றன. ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான தீர்ப்பு கடந்த வருடத்தைய பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்‌ஷ சகோதரர்களும் அவர்களுக்கு நெருக்கமான உயர்மட்ட அதிகாரிகளுமே பொறுப்பு என்று கடந்த வாரம் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஆட்சிமுறையில் தவறிழைத்து மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம்செய்த முன்னாள் ஜனாதிபதிகளை குற்றவாளிகளாகக் கண்டு நாட்டின் அதியுயர் நீதிமன்றம் ஒரு வருட காலத்திற்குள் வழங்கிய இரண்டாவது தீர்ப்பாகும். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு பத்துக்கோடி ரூபா இழப்பீட்டை வழங்குமாறு இவ்வருட முற்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பானவர்களை விசாரிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட இரு அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் ராஜபக்‌ஷர்களும் ஏனைய பிரதிவாதிகளும் தங்கள் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை மீறிச் செயற்பட்டதாகவும் சட்டத்தின் சமத்துவமான பாதுகாப்பைப் பெறுவதற்கு மக்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமையை மீறிவிட்டதாகவும் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. முன்னாள் ஜனாதிபதிகள் கோட்டபாய ராஜபக்‌ஷ, மஹிந்த ராஜபக்‌ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷ, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவாட் கப்ரால், பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன், திறைசேரியின் முன்னாள் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிக்கல மற்றும் ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர்கள் பி.பி. ஜெயசுந்தர, சமான் குமாரசிங்க ஆகியோரே குற்றவாளிகளாகக் காணப்பட்டனர். இவர்களுடன் நாணய சபையும் மக்களின் நம்பிக்கைக்குத் துரோகமிழைத்ததாக தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், குண்டுத்தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை வழங்குமாறு சிறிசேனவுக்கு உத்தரவிட்டதைப் போன்று இந்த வழக்கின் பிரதிவாதிகளை பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டை வழங்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிடவில்லை. பதிலாக குற்றவாளிகளை நான்கு மனுதாரர்களுக்கும் வழக்கு செலவுத் தொகையாக தலா ஒன்றரை இலட்சம் ரூபாவை செலுத்துமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது. மனுதாரர்கள் இழப்பீடு வழங்கப்படவேண்டும் என்று கேட்கவில்லை என்பதால் அதற்கு உத்தரவிடவில்லை என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடவேண்டும் என்று மனுதாரர்கள் கோரிக்கை விடுத்திருந்தால் நீதியரசர்கள் எத்தகைய தீர்ப்பை வழங்கியிருப்பார்கள் என்பது முக்கியமான ஒரு கேள்வி. இந்தியா போன்ற நாடுகளில் அரசாங்கங்களின் தவறான போக்குகளை சுட்டிக்காட்டி தீர்ப்புக்களை பல சந்தர்ப்பங்களில் வழங்கிய நீதித்துறைச் செயலூக்கம் (Judicial Activism) இலங்கையிலும் இருந்திருந்தால் வித்தியாசமான தீர்ப்பை எதிர்பார்த்திருக்கமுடியும். சட்டத்தின் பிரகாரம் வழக்குகளை விசாரிப்பதற்கு அப்பால் நீதிபதிகள் பொது நலனை மனதிற்கொண்டு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் தங்களது நேர்மையான அபிப்பிராயத்தின் அடிப்படையில் தீர்ப்புக்களை வழங்குவதுண்டு. இந்தியாவில் இதற்கு பல உதாரணங்களைக் கூறமுடியும். நாட்டின் 2 கோடி 20 இலட்சம் மக்களும் அல்லவா இந்த நெருக்கடியினால் பாதிக்கப்பட்டிருந்தார்கள்? நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தில் கடந்த வியாழக்கிழமை உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் சுமந்திரன் நாட்டின் முழு சனத்தொகைக்கும் இழப்பீட்டை வழங்குவதற்கு போதுமான பணம் ராஜபக்‌ஷ சகோதரர்களிடம் இருக்கிறது என்று கூறினார். மனுதாரர்கள் கோரவில்லை என்பதால் உயர்நீதிமன்றம் இழப்பீடு குறித்து பரிசீலிக்கவில்லை என்றாலும் அதற்கான உத்தரவை நீதியரசர்கள் வழங்கியிருக்கமுடியும் என்று கூறிய அவர் ராஜபக்‌ஷர்கள் வெளிநாடுகளில் பதுக்கிவைத்திருக்கும் பணத்தை இந்த நோக்கத்துக்காக மீட்டுக் கொண்டவரமுடியும் என்றும் குறிப்பிட்டார். பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட சகலரும் இழப்பீட்டைக் கோர முன்வரவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்து அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி பிரதம கொறடாவுமான லக்ஸ்மன் கிரியெல்ல இலங்கையின் ஒவ்வொரு குடிமகனும் ஒன்றரை இலட்சம் ரூபா இழப்பீடு கோரி உயர்நீதிமன்றத்தை நாடுவதற்கு உரித்துடையவர்கள் என்று சபையில் கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது. அதேவேளை, பொருளாதாரம் தவறாகக் கையாளப்பட்டமைக்கு தாங்கள் பொறுப்பு என்ற தீர்ப்பை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்று மஹிந்த ராஜபக்‌ஷ கூறியிருக்கிறார். கடந்த புதன்கிழமை கண்டி தலதா மாளிகைக்கு வழிபாட்டுக்கு சென்ற அவரிடம் ஊடகவியலாளர்கள் தீர்ப்பு குறித்து கேட்டபோது, சந்தர்ப்பம் கிடைக்கும்போது பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களை விளக்கிக்கூறப் போவதாகப் பதிலளித்தார். எப்போதுஅந்தச் சந்தர்ப்பம் கிடைக்கும் என்பது அவருக்கே வெளிச்சம். கோட்டபாய ராஜபக்‌ஷவும் பசில் ராஜபக்‌ஷவும் உடனடியாக எந்தக் கருத்தையும் கூறியதாக செய்தி வந்ததாக இல்லை. ஆனால், ராஜபக்‌ஷ குடும்பத்தின் அரசியல் வாரிசான நாமல் ராஜபக்‌ஷ தங்களது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நீதித்துறையை எப்போதும் மதித்து வந்திருக்கிறது என்றும் பொருளாதார நெருக்கடியை ஆராய்வதற்கு சிறந்த இடம் நாடாளுமன்றமே என்றும் கூறினார். இந்த விடயத்தை ஒரு நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஆராயமுடியும். சாட்சியங்களை அழைத்து விரிவான விசாரணைகளை நடத்தக்கூடிய ஆற்றல் கொண்ட தெரிவுக்குழு ஒன்று ஏற்கனவே இருக்கிறது என்றும் அவர் சொன்னார். நாடு வங்குரோத்து நிலையை அடைந்தமைக்கான காரணங்களை ஆராய்வதற்கு கடந்த ஜூலையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்ற தெரிவுக்குழுவை ராஜபக்‌ஷர்களின் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவாசம் தலைமையில் நியமித்திருந்தார். ஆனால், இதுவரையில் ஒரேயொரு தடவை மாத்திரமே அந்தக் குழு கூடியது என்பதை நாமல் ராஜபக்‌ஷ அறியாதவர் அல்ல. அதில் பங்கேற்பதற்கு எதிரணி அரசியல் கட்சிகளின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறுத்துவிட்டார்கள். பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பானவர்களை அடையாளம் கண்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பொன்றை வழங்கியிருப்பதால் அந்தத் தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை நிறுத்தவேண்டும் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க சபாநாயகரை வலியுறுத்திக் கேட்டிருப்பது குறிப்பிடத்தக்கது இலங்கை முன்னென்றும் கண்டிராத பொருளாதார நெருக்கடி தொடர்பில் உயர்நீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியிருக்கும் பின்ணியில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது நாடாளுமன்றத்தினதும் பொருத்தமான நிறுவனங்களினதும் பொறுப்பு என்று இலங்கை ‘ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நாஷனல்’ சுட்டிக்காட்டியிருக்கிறது. ஆனால், அரசாங்கமும் நாடாளுமன்றமும் ஏற்கனவே நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவின் செயற்பாடுகளின் முடிவில் சமர்ப்பிக்கப்படக்கூடிய அறிக்கையைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து யோசிக்கலாம் என்று சாக்குப்போக்கை கூறக்கூடிய சாத்தியமே இருக்கிறது. பொருளாதார முறைகேடுகள் தொடர்பில் ஏற்கனவே தொடுக்கப்பட்ட பல்வேறு வழக்குகளில் இருந்து ராஜபக்‌ஷர்கள் சட்ட நுட்ப நுணுக்க காரணங்களின் அடிப்படையில் தங்களை விடுவித்துக்கொண்டார்கள். ஆனால், இந்த வழக்கில் இத்தகைய ஒரு தீர்ப்பு வரும் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சிக்குப் பிறகு மிகவும் தாழ்ந்த நிலைக்குச் சென்ற ராஜபக்‌ஷர்களின் மக்கள் செல்வாக்கை இந்தத் தீர்ப்பு மேலும் பாதிப்புக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவர்களுக்கு எதிரான அரசியல் சக்திகளுக்கு ஒரு வலுவான ‘ஆயுதமாக’ தீர்ப்பு கிடைத்திருக்கிறது. அடுத்துவரக்கூடிய எந்த தேர்தலிலும் ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான பிரசாரங்களில் தீர்ப்பு பிரதான பிரசாரக் கருவியாக இருக்கும். ஊடகங்களுக்குப் பதில் அளிப்பதில் எதிர்நோக்கக்கூடிய அசௌகரியங்களை மனதிற்கொண்டு பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் கிரமமாக நடத்தப்பட்டுவந்த செய்தியாளர்கள் மகாநாடு இரு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டதாக ஒரு தகவல். தற்போது ஜனாதிபதி விக்கிரமசிங்க இந்தத் தீர்ப்பின் பின்னரான நிலைவரத்தை தனக்கு அனுகூலமான முறையில் பயன்படுத்துவதற்கு கடைப்பிடிக்கக்கூடிய அணுகுமுறைகளை வரும் நாட்களில் காணக்கூடியதாக இருக்கும். வீரகத்தி தனபாலசிங்கம் https://maatram.org/?p=11161
  8. ஜனாதிபதி ரணிலும் தேர்தல்களும் November 12, 2023 — வீரகத்தி தனபாலசிங்கம் — ஜனாதிபதி தேர்தல்கள் என்று வரும்போது ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெறுவதற்கு தனக்கு வாய்ப்பு இல்லை என்று கண்டால் அவற்றில் இருந்து ஒதுங்கிவிடுவார். முதல் இரு தடவைகள் தோல்வியடைந்த அவர் கடந்த மூன்று ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிடாமல் வேறு வேட்பாளர்களுக்கு ஆதரவளித்ததைக் கண்டோம். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக மூன்று தசாப்தங்களாக இருந்துவரும் அவர் இரு பாராளுமன்ற தேர்தல்களில் வெற்றிபெற்று அரசாங்கத்தை அமைத்து பிரதமராக வரமுடிந்தபோதிலும் முழுமையாக ஐந்து வருடங்களுக்கு பதவியில் இருக்க நீடிக்கமுடியவில்லை. இலங்கையின் அரசியல் வரலாற்றில் கூடுதலான காலம் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்த ‘பெருமை ‘அவருக்கே உரியது. இறுதியாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியினால் ஒரு ஆசனத்தைக் கூட வென்றெடுக்க முடியவில்லை. தேசிய பட்டியல் மூலமாக கிடைத்த ஒரேயொரு ஆசனத்தைப் பயன்படுத்தி அதுவும் பத்து மாதங்கள் கழித்து பாராளுமன்றத்துக்கு மீண்டும் வந்த விக்கிரமசிங்க, எவரும் எதிர்பார்த்திராத வகையில் மாற்றமடைந்த அரசியல் கோலங்களின் விளைவாக தன்னிடமிருந்து கால் நூற்றாண்டு காலமாக நழுவிக்கொண்டிருந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை தன்வசப்படுத்தக்கூடியதாக இருந்தது. இவையெல்லாம் பழைய கதைகள் தான். ஆனால், ஜனாதிபதியாக வந்த பிறகு தேர்தல்கள் தொடர்பில் அவர் கடைப்பிடிக்கும் அணுகுமுறைகள் அரசியலில் ஏற்படுத்துகின்ற குழப்பங்கள் அவற்றை இங்கு குறிப்பிடவேண்டிய தேவையை ஏற்படுத்துகிறது. பாராளுமன்றத்தினால் தெரிவான முதலாவது இலங்கை ஜனாதிபதியான விக்கிரமசிங்க தேர்தல் ஒன்றில் மக்களின் ஆணையுடன் ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற விருப்பத்தைக் கொண்டிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், வேறு எந்த தேர்தல்களையும் தற்போதைக்கு நடத்தக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கும் அவர் ஜனாதிபதி தேர்தலைப் பற்றி மாத்திரம் பேசுவார். ஆனால், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஐக்கிய தேசிய கட்சி அரசியல்வாதிகளே அடுத்த ஜனாதிபதி தேர்தலில் விக்கிரமசிங்க போட்டியிட்டு பெரு வெற்றிபெறுவார் என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள். அவரை ஜனாதிபதியாக தெரிவுசெய்த ராஜபக்சாக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அடுத்த ஜனாதிபதி தேர்தலில் அவரை ஆதரிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய கட்டம் ஒன்று இருந்தது. ஆனால், இப்போது அந்த நிலைமை இல்லை. பொதுஜன பெரமுன அதன் வேட்பாளரை களத்தில் இறக்கும் என்று வெளிப்படையாக கூறுகிறது. அடுத்த தேசிய தேர்தல்களை இலக்குவைத்து பரந்தளவிலான கூட்டணியொன்றை அமைப்பதில் ஜனாதிபதி விக்கிரமசிங்க அக்கறை காட்டுகின்றபோதிலும், அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படுவதாக தெரியவில்லை. உண்மையில், ஐக்கிய தேசிய கட்சியோ அல்லது விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்கு பாராளுமன்ற ஆதரவை வழங்கிவரும் பொதுஜன பெரமுனவோ தற்போதைக்கு தேர்தல் ஒன்றுக்கு முகங்கொடு்க்கக்கூடிய நிலையில் இல்லை. எந்த தேர்தல் நடந்தாலும் தங்களது கட்சி வெற்றிபெறும் என்று ராஜபக்சாக்கள் மக்கள் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி சிந்திக்காமல் பேசிக்கொண்டிருப்பது வேறு விடயம். உள்ளூராட்சி தேர்தல்களுக்கும் மாகாணசபை தேர்தல்களுக்கும் நேர்ந்த கதிக்கு பிறகு தேசிய தேர்தல்களுக்கும் என்ன நேருமோ என்ற பயம் மக்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இருக்கிறது. இதற்கு அரசாங்கத் தரப்பில் இடைக்கிடை வெளியிடப்படும் அறிவிப்புக்களே காரணமாகும். பட்ஜெட்டில் தேர்தல்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தால் மக்களின் தேவைகளை அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடியாமல் போகும் என்று பேசும் அரசியல்வாதிகள் ஒருபுறமிருக்க, தேர்தல் முறை சீர்திருத்தங்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பதும் அந்த பயத்தை மேலும் அதிகரிக்கிறது. இத்தகைய பின்னணியில், கடந்த மாத பிற்பகுதியில் கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மகாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி விக்கிரமசிங்க, அரசியலமைப்பு ஏற்பாடுகளின் பிரகாரம் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்றும் அதைத் தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலும் உள்ளூராட்சி தேர்தல்களும் 2025 முதல் அரைப் பகுதியில் நடத்தப்படும் என்றும் அறிவித்தார். அதை அறிவித்து சில தினங்கள் கடந்த நிலையில் அவர் கடந்த வாரம் தற்போது நடைமுறையில் இருக்கும் தேர்தல் சட்டங்களையும் ஒழுங்கு விதிகளையும் விரிவாக ஆராய்ந்து சமகாலத் தேவைகளுக்கு பொருத்தமான முறையில் தேர்தல் சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு அவசியமான விதப்புரைகளைச் செய்வதற்கு முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசத் டெப் தலைமையில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்திருக்கிறார். பெண்களினதும் இளைஞர்களினதும் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலத்திரனியல் வாக்குப்பதிவுக்கு வாய்ப்பளித்தல், வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் வாக்களிப்பதற்கு வசதிகளைச் செய்தல் உட்பட பல்வேறு மாற்றங்கள் குறித்து ஆராயுமாறு ஆணைக்குழுவிடம் கேட்கப்பட்டிருக்கிறது. பாராளுமன்ற தேர்தலிலும் மாகாணசபை தேர்தலிலும் போட்டியிடும் ஒருவர் மக்களினால் தெரிவு செய்யப்படும் பட்சத்தில் இரு சபைகளிலும் ஏககாலத்தில் அங்கம் வகிப்பதற்கு வசதிசெய்யக்கூடிய ஏற்பாடு குறித்தும் ஆராயுமாறும் ஆணைக்குழு பணிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறான ஒரு ஏற்பாட்டினால் ஏற்படக்கூடிய பயன் என்ன என்பது குறித்து எவருக்கும் விளங்கவில்லை. எவருமே அத்தகைய கோரிக்கையை இதுகாலவரையில் முன்வைத்ததில்லை என்றாலும் ஜனாதிபதி அதில் விசித்திரமான அக்கறை காட்டுகிறார். பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை சம்பிரதாயபூர்வமாக தொடக்கிவைத்து தனது கொள்கை விளக்கவுரையை நிகழ்த்திய ஒரு சந்தர்ப்பத்தில் இந்த யோசனையை அவர் முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணை ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆறு மாதகால அவகாசத்திற்குள் அல்லது ஜனாதிபதி தேர்தல் வருவதற்குள் அதனால் பணிகளை நிறைவுசெய்யமுடியுமா என்று ஏற்கெனவே அரசியல் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புக்களும் கேள்வியெழுப்பத் தொடங்கிவிட்டன. கடந்த உள்ளூராட்சி தேர்தல்களில் பரீட்சித்துப் பார்க்கப்பட்டு எதிர்பார்த்த பயன்களை தரவில்லை என்று கண்டறியப்பட்ட கலப்பு தேர்தல் முறையை (தொகுதி அடிப்படையிலான முறையும் தற்போதைய விகிதாசாரப் பிரதிநிதித்துவமுறையும் கலந்தது) பாராளுமன்ற தேர்தலுக்கும் அறிமுகப்படுத்துவது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை நீதியமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ச கடந்த மாதம் சமர்ப்பித்திருந்த நிலையில் இந்த விசாரணை ஆணைக்குழுவை ஜனாதிபதி நியமித்திருப்பதும் விஜேதாசவின் யோசனைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து பிரதமர் தினேஷ் குணவர்தன கலந்தாலோசனை நடத்திக்கொண்டிருந்தவேளையிலேயே அவர் அந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்ட தகவலை அறிந்துகொண்டதும் அரசாங்கத்திற்குள் தீர்மானங்களை எடுப்பதில் அதன் தலைவர்களுக்கு இடையில் இருக்கக்கூடிய ஒருங்கிணைப்பின் இலட்சணத்தை தெளிவாக அம்பலப்படுத்துகிறது. ஜனாதிபதி விக்கிரமசிங்க இன்னமும் ஒரு வருடத்துக்கே பதவியில் இருக்கமுடியும். அதற்குள் அக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தவேண்டியிருக்கிறது. தன்னால் வெற்றிபெறக்கூடிய சூழ்நிலை வந்துவிட்டது என்று உறுதிசெய்யும் வரை அவர் தேர்தலில் களமிறங்குவது குறித்து திட்டவட்டமாக அறிவிக்கக்கூடிய சாத்தியமில்லை. தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து அவர் பேசும்போது தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு உபாயங்களை தேடுகிறார் என்பது இன்று பொதுவெளியில் பரவலான கருத்தாக இருக்கிறது. சில தினங்களுக்கு முன்னர் சிவில் சமூக அமைப்பு ஒன்று மேற்கொண்ட ‘ தேசத்தின் மனநிலை’ என்ற கருத்துக்கணிப்பில் மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் செல்வாக்கு மிகவும் தாழ்ந்த நிலையில் இருப்பதாக கண்டறியப் பட்டிருக்கிறது. பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டலில் தனது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் மறசீரமைப்பு நடவடிக்கைகள் தனக்கு மக்கள் மத்தியில் செலவாக்கை அதிகரிக்கும் என்று ஜனாதிபதி நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால், அரச வருவாயை அதிகரிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் சர்வதேச நாணய நிதியம் அதிருப்தி தெரிவித்ததை அடுத்து அண்மைய வாரங்களாக செய்யப்படும் வரி அதிகரிப்புகளும் விலைவாசி உயர்வும் மீண்டும் மேலும் வாழ்க்கைச் செலவை கடுமையாக அதிகரிக்கச் செய்து மக்களை திணறடித்துக்கொண்டிருக்கும் நிலையில் அரசாங்கத்தின் மீதான வெறுப்பு கடுமையாக அதிகரிக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், தனக்கு வாய்ப்பான தருணத்துக்காக காத்திருக்கும் ஜனாதிபதி உண்மையில் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுகிறார் என்றே தோன்றுகிறது. என்னதான் நீண்டகால அரசியல்வாழ்வு அனுபவத்தைக் கொண்டவராக இருந்தாலும், இலங்கையின் இன்றைய அரசியல் தலைவர்களில் வெளியுலகினால் பெரிதும் மதிக்கப்படுபவராக விளங்குகின்ற போதிலும் சொந்த மக்கள் மத்தியில் செல்வாக்கு கொண்ட ஒரு தலைவர் என்ற நிலைக்கு அவரால் வரமுடியாமல் இருக்கிறது. காலம் செய்த கோலம் காரணமாக ஜனாதிபதி பதவிக்கு வந்திருக்க முடியாவிட்டால் அவரது ஐக்கிய தேசிய கட்சியின் நிலை தற்போதையதை விடவும் மிகவும் பரிதாபகரமானதாக இருந்திருக்கும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் கண்ட வரலாற்றுத் தோல்விக்கு பிறகு தனது கட்சியை கலைத்துவிடுவது குறித்து விக்கிரமசிங்க யோசித்தாகவும் கூட கூறப்பட்டது. தேர்தல்களில் வெற்றிபெறமுடியாத சூழ்நிலை இருக்கும் என்றால் அதற்கு மாற்றுவழி தேர்தல்களை நடத்தாமல் விடுவதோ அல்லது தனக்கு வாய்ப்பான சூழ்நிலை வரும்வரை தேர்தல்களை காலந்தாழ்த்திக் கொண்டுபோவதோ அல்ல. அவ்வாறு செய்ய முயற்சிப்பது பதவியில் இருப்பதற்கான நியாயப்பாடு தொடர்பில் ஏற்கெனவே சவாலுக்குள்ளாகியிருக்கும் அரசாங்கத்துக்கு பலமுனைகளிலும் மேலும் நெருக்கடிகளைக் கொண்டுவரும். ஜனாதிபதியாக வந்த நாள் தொடக்கம் விக்கிரமசிங்க தேர்தல்கள் தொடர்பில் உறுதியான அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை. உள்ளூராட்சி தேர்தல்கள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அரசியலமைப்புக்கான 13 திருத்தத்தை நடைமுறைப்படுத்தி மாகாணசபை தேர்தல்களை நடத்துவது குறித்து ஒரு கட்டத்தில் பேசிய அவர் கிளம்பிய எதிர்ப்பையடுத்து அது குறித்து தீர்மானிப்பது பாராளுமன்றத்தின் பொறுப்பு என்று கூறி தனது பொறுப்பைக் கைகழுவிவிட்டார். உரிய காலத்துக்கு முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை அடுத்த வருட முற்பகுதியில் நடத்துவதற்கான சாத்தியம் குறித்தும் அதற்காக அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றைக் கொண்டுவருவது குறித்தும் கூட அரசாங்க வட்டாரங்களில் பேசப்பட்டது.பின்னர் அதுவும் கைவிடப்பட்டது. பாராளுமன்றத்தை எந்த நேரத்திலும் கலைக்கக்கூடிய அதிகாரத்தை தற்போது கொண்டிருக்கும் ஜனாதிபதி வெற்றி பெறக்கூடிய கூட்டணி ஒன்றை அமைக்கக்கூடிய நிலை இல்லை என்பதால் புதிய பாராளுமன்ற தேர்தலுக்கு போக விரும்பவார் என்று எதிர்பார்க்கமுடியாது. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறுவது சாத்தியமில்லை என்று ஒரு மதிப்பீட்டைச் செய்த விக்கிரமசிங்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு குறித்து அரசாங்க உறுப்பினர்களைப் பேசவைத்தார். பிறகு அந்தப் பேச்சும் அடங்கிப்போனது. இந்த நிலையில் இறுதியாக அவர் தேர்தல் சீர்திருத்தங்களை கையில் எடுத்திருக்கிறார். முன்னர் பிரதமர் தினேஷ் குணவர்தன எதிர்க்கட்சியில் இருந்தவேளையிலும் பிறகு அமைச்சராக பதவி வகித்த வேளையில் தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பிலான பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தலைமை தாங்கினார். அவர் அறிக்கைகளை சமர்ப்பித்த போதிலும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. அதனால் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடுகளை, அதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டிய சட்டவாக்கச் செயன்முறைகளை எல்லாம் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு இடையூறாக அமையாத வகையில் நிறைவுசெய்யக்கூடியதாக இருக்குமா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. இதனிடையே அடுத்த வருடம் தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு 3000 கோடி ரூபாவை திறைசேரியிடம் கேட்டிருக்கிறது என்று ஆகை்குழுவின் பணிப்பாளர் நாயகம் கடந்தவாரம் கூறினார். தேர்தல் ஆணைக்குழுவுக்கு நான்கு உறுப்பினர்கள் மாத்திரமே இதுவரை நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஐந்தாவது உறுப்பினரை அரசியலமைப்பு பேரவை இன்னமும் நியமிக்கவில்லை. ஆணைக்குழுவின் அமர்வுகளுக்கு தேவைப்படும் குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை மூன்று என்பதால் அது இயங்கக்கூடியதாக இருக்கிறது. உள்ளூராட்சி தேர்தல்களை நடத்தவிடாமல் தடுப்பதற்கு எடுத்த முயற்சிகளின்போது முன்னைய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் சிலரை தனது முடிவுகளுக்கு அனுகூலமாக ஜனாதிபதி பயன்படுத்தியதை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது தற்போதைய தேர்தல் ஆணைக்குழுவுக்கு முழு உறுப்பினர்களையும் நியமிப்பதில் அரசியலமைப்பு பேரவை காண்பிக்கும் தாமதம் சந்தேகத்தை ஏற்படுத்தவே செய்கிறது. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படவில்லை என்றால் மக்கள் வீதிகளுக்கு இறங்குவார்கள் என்று கொழும்பில் அல்ல நியூயோர்க்கில் இருந்து தேசிய ஐக்கிய சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க கடந்த வாரம் எச்சரிக்கை செய்திருக்கிறார். அமெரிக்காவில் வாழும் இலங்கையர்களில் ஒரு பிரிவினர் மத்தியில் உரையாற்றிய அவர், ” உள்ளூராட்சி சபைகளின் நிருவாகத்தை ஆணையாளர்களின் கீழும் மாகாணசபைகளின் நிருவாகத்தை ஆளுநர்களின் கீழும் கொண்டுவருவது சாத்தியம்.ஆனால், மக்களின் நிறைவேற்று அதிகாரம் மக்களினால் தெரிவுசெய்யப்படும் ஜனாதிபதியினாலேயே செயற்படுத்தப்படவேண்டும். அடுத்த வருடம் அக்டோபர் 17 க்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படவேண்டும். தேர்தலை தவிர்க்க ஜனாதிபதி முயற்சிப்பாரேயானால் அவர் அக்டோபர் 17 க்கு அப்பாலும் செலல வேண்டியிருக்கும்.ஜனாதிபதி தேர்தலுக்காக மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நடத்தப்படப்போவதில்லை ஒரு சமிக்ஞை கிடைத்த மறுகணமே மக்கள் வீதிகளுக்கு இறங்குவார்கள்” என்று கூறினார். ஜனாதிபதி விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை, தனக்கு வாய்ப்பான சூழ்நிலை வரும்வரை தேர்தல்களை தாமதிப்பதற்கான உபாயங்கள் அருகிக்கொண்டே போகின்றன என்பதே அரசியல் அவதானிகள் மத்தியில் பரவலான அபிப்பிராயமாக இருக்கிறது. (வீரகேசரி வாரவெளியீடு) https://arangamnews.com/?p=10130
  9. இனவெறிக் கூச்சலும் மன்னிப்புக் கோரலும் November 5, 2023 — வீரகத்தி தனபாலசிங்கம் — மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் ஒரு மதகுருவிடம் இருக்கவேண்டிய பண்புகளுடன் பொதுவெளியில் நடந்துகொள்வதில்லை என்பதை ஏற்கெனவே நடந்தேறிய ஒன்று இரண்டு அல்ல பல்வேறு சம்பவங்கள் மூலமாக நாமெல்லோரும் அறிவோம். ‘ வணக்கத்துக்குரியவராக’ இருக்கவேண்டிய தேரர் பெருமளவுக்கு ‘சர்ச்சைக்குரியவராகவே ‘ பொதுவில் அறியப்பட்டிருக்கிறார். அவரது அட்டகாசங்களும் ஆவேசப்பேச்சுக்களும் மகாசங்கத்துக்கே பெரும் அவமானம் என்பது குறித்து பௌத்த உயர்பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கூட கவலைப்படடதாகத் தெரியவில்லை. அவர்கள் அழைத்து அறிவுறுத்தியிருந்தால் அவர் தொடர்ந்தும் பண்பில்லாத முறையில் நடந்துகொள்வதை தவிர்த்திருக்கவும் கூடும். அல்லது அத்தகைய ஒரு’அட்டகாசமான ‘ தேரர் இன உறவுகளைப் பொறுத்தவரை உணர்ச்சிபூர்வமான ஒரு பிரதேசத்தில் இருக்கவேண்டியது அவசியம் என்று அவர்கள் நினைக்கிறார்களோ தெரியவில்லை. சில தினங்களுக்கு முன்னர் சுமணரத்ன தேரர் மட்டக்களப்பில் நடுவீதியில் பொலிசாரும் பார்த்துக் கொண்டிருக்க தென்னிலங்கையில் வாழும் தமிழர்களை துண்டுதுண்டாக வெட்டிக்கொலை செய்வேன் என்று ஆவேசத்தின் உச்சியில் கூச்சலிட்டதை நாமெல்லோரும் காணொளியில் பார்க்கக்கூடியதாக இருந்தது. அந்தக் ‘கொலைப்பேச்சு’ அவர் வெளிச்சத்துக்கு கொண்டுவர முயற்சித்த பிரச்சினை எதுவாக இருந்தாலும், அவரின் அணுகுமுறையில் இனவெறியைத் தவிர வேறு எந்த தர்க்கநியாயமும் இருந்திருக்கும் என்று நம்புவதற்கு இடந் தரவில்லை. இனங்களுக்கு இடையில் வன்முறையைத் தூண்டிவிடக்கூடிய பேச்சுக்களை விடவும் பாரதூரமான வெறுப்புப்பேச்சு இருக்கமுடியாது. ஆனால், அவர் அதனை நீண்டகாலமாக சர்வ சாதாரணமாகச் செய்துகொண்டு வந்திருக்கிறார். அதனால் எந்தப் பிரச்சினையையும் அவர் எதிர்நோக்கவில்லை. இந்த தடவையும் அவ்வாறே அவருக்கு எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. அவரைப் போன்று வேறு மதங்களைச் சேர்ந்த ஒரு குருவானவர் செய்திருந்தால் பொலிசார் எந்த விதமாக நடந்திருப்பார்கள் என்பதை சொல்லித்தான் எவரும் தெரிந்துகொள்ளவேண்டும் என்றில்லை. சுமணரத்ன தேரரின் பேச்சு குறித்து அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததைக் கண்டித்து தமிழ் அரசியல் தலைவர்கள் குரலெழுப்பிய போதிலும், அரசாங்கத் தரப்பில் அதற்கு பதில் கூறப்படவேயில்லை. அது மாத்திரமல்ல, தேரரின் அட்டகாசம் குறித்து சிங்கள அரசியல்வாதி எவரும் ஆட்சேபம் தெரிவித்ததாக செய்தி வந்ததாக இல்லை. ஆனால், திடீரென்று சுமணரத்ன தேரர் தனது அந்த ‘கொலைப் பேச்சுக்காக’ தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்டு உரையாற்றும் காணொளியொன்று வெளியிட்டப்பட்டது . அவரது ஆவேசப்பேச்சு சட்ட நடவடிக்கை எடுக்காமல் சாதாரணமாக அலட்சியம் செய்துவிடக்கூடியது அல்ல என்று அவருக்கு அரசாங்கத் தரப்பில் இருந்தோ அல்லது மகாசங்கத்திடமிருந்தோ கூறப்பட்டிருக்கக்கூடும். அத்தகைய ஒரு பின்னணியில் தான் அவரது மன்னிப்புக் கோரல் வந்திருக்கிறது என்று நினைக்க வேண்டியிருக்கிறது. தமிழ் மக்கள் எளிதில் மறந்துவிடவோ மன்னித்துவிடவோ கூடியது அல்ல சுமணரத்ன தேரரின் பேச்சு. அவ்வாறானால் எவரும் இனங்களுக்கு இடையிலும் மதங்களுக்கு இடையிலும் வன்முறையை தூண்டிவிடக்கூடிய ஆவேசப்பேச்சுக்களை நிகழ்த்திவிட்டு மறுநாள் ஒரு காணொளியில் அல்லது ஊடக அறிக்கையில் மன்னிப்புக் கேட்டுவிட்டால் எல்லாம் சரியாகிப் போய்விடும் என்றாகிறது. இது மிகவும் தவறான ஒரு உதாரணமாக வந்துவிடும். கிழக்கில் உருவான சர்ச்சைக்காக தென்னிலங்கையில் வாழும் தமிழர்களை எல்லாம் துண்டுதுண்டாக வெட்டிக்கொலை செய்யப்போவதாக அவர் விடுத்த அச்சுறுத்தல் நாடுபூராவும் இனங்களுக்கு இடையில் பதற்றநிலையை தோற்றுவிக்கக்கூடிய ஆபத்தைக் கொண்டிருந்தது. அது குறித்து கண்டனம் செய்த தமிழ் அரசியல் தலைவர்கள் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தின் குறிப்பிட்ட சில பிரிவுகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றச்செயல் என்று சுட்டிக்காட்டினார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பொலிஸ்மா அதிபருக்கு அது குறித்து கடிதமும் எழுதியிருந்தார். குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை ( International Covenant on Civil and Political Rights — ICCPR ) என்பது 1966 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட ஒரு சர்வதேச மனித உரிமைகள் உடன்படிக்கையாகும். அதை இலங்கை 1980 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொண்டது. ஆனால் அது தொடர்பிலான சட்டம் 27 ஆண்டுகள் கழித்து 2007 ஆம் ஆண்டில்தான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைச் சட்டம் என்று அழைக்கப்படும் இந்த சட்டம் பாரபட்சத்தை, பகைமையை அல்லது வன்முறையை தூண்டிவிடும் வகையில் அமையக்கூடியதாக போர் அல்லது தேசிய,இன,மத வெறுப்புணர்வை பிரசாரப்படுத்துவதை குற்றச்செயலாகக் கருதுகிறது. அத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக குற்றஞ் சாட்டப்படக்கூடிய எவரையும் மேல்நீதிமன்றத்தைத் தவிர அதற்கு கீழ் நிலையில் உள்ள எந்த நீதிமன்றமும் பிணையில் விடுவிக்க முடியாது. ஆனால், அந்த சட்டம் வியாக்கியானப்படுத்தப்படுகின்ற அல்லது பிரயோகிக்கப்படுகின்ற விதம் அரசாங்கங்கள் எதிர்க்கருத்துக்களைக் கொண்டவர்களை அடக்குவதற்கும் சிறுபான்மை இனத்தவர்களை கொடுமைப்படுத்துவதற்கும் தவறாக பயன்படுத்தப்படுகிறதே தவிர உண்மையில் அதன் மூலமாக தண்டிக்கப்படக்கூடிய குற்றச்செயல்களைச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களினால் முன்வைக்கப்படுகிறது. இனக்கலவரம் மூளும் என்று எச்சரிக்கை செய்வதை விடவும் நாட்டு மக்களில் ஒரு பிரிவினருக்கு எதிராக இன்னொரு பிரிவினரை தூண்டிவிடும் மோசமான செயல் வேறு என்னதான் இருக்கப்போகிறது? அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப் படுத்துவதற்கு தனக்கு இருக்கும் விருப்பத்தை இவ்வருட முற்பகுதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டபோது அவ்வாறு செய்யமுயன்றால் இலங்கை இதுகாலவரையில் கண்டிராத படுமோசமான இனக்கலவரம் வெடிக்கும் என்று முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்சவும் சரத் வீரசேகரவும் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அடிக்கடி கூறினார்கள். அவர்களுக்கு எதிராக அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வேண்டுமானால் அவ்வாறு இனக்கலவர எச்சரிக்கையை அவர்கள் மீண்டும் வெளியிடுவதற்கும் கூட தயங்கப்போவதில்லை என்கிற அளவுக்கே நாட்டில் இன உறவுகள் தொடர்பிலான நிலைவரம் இருக்கிறது. இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் குரோதத்தை தூண்டிவிடக்கூடியவை என்று கருதப்படும் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அண்மைக்காலத்தில் அரசாங்கம் எடுத்த சில சட்ட நடவடிக்கைகளை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும். முதலாவதாக, தலதாமாளிகையை இழிவுபடுத்தும் வகையில் யூரியூப் மூலமான தனது கிரமமான நிகழ்ச்சிகளில் கருத்துக்களை வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட சமூக ஊடகச் செயற்பாட்டாளரான சேபால் அமசிங்க கடந்த வருடம் டிசம்பரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். பௌத்தர்களின் மத உணர்வுகளை புண்படுத்திய தனது செயலுக்காக அமரசிங்க மகாநாயக்க தேரர்களிடம் மன்னிப்புக் கேட்டதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டார். இரண்டாவதாக, கிறிஸ்தவ மதப்போதகரான ஜெரோம் பெர்னாண்டோ கடந்த மேமாதம் பௌத்த மதத்தை மாத்திரமல்ல, இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களையும் இழிவுபடுத்தும் கருத்துக்களை வெளியிட்டு பிரசங்கம் செய்த காணொளி சமூக ஊடஙங்களில் பரவியதையடுத்து பெரும் சர்ச்சை மூண்டது. ஜனாதிபதி விசாரணைக்கு உத்தரவிட்டபோதிலும் தனக்கு எதிராக வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்படுவதற்கு முன்னதாகவே பெர்னாண்டோ நாட்டிலிருந்து வெளியேறிவிட்டார். இன்றுவரை அவர் திரும்பிவரவில்லை. மூன்றாவதாக, கடந்த ஏப்ரல் முதலாம் திகதி கொழும்பின் பிரபலமான பெண்கள் கல்லூரி ஒன்றில் இடம்பெற்ற ‘ஏப்ரல் முட்டாள்தினச் சவால் ‘ என்ற நிகழ்ச்சியில் நகைச்சுவை மேடைப் பேச்சாளரான நடாஷா எதிரிசூரிய என்ற இளம் பெண் கலைஞர் புத்தபெருமானின் குழந்தைப் பராயத்தைக் கிண்டல்செய்யும் தொனியில் கருத்துக்களை தெரிவித்த காணொளிப் பதிவும் சமூக ஊடகங்களில் வெளியானது. அதை தொடர்ந்து மூண்ட சர்ச்சைக்கு மத்தியில் நடாஷா வெளிநாடு செல்வதற்கு முயற்சித்தபோது விமானநிலையத்தில் கைதுசெய்யப்ட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். சில வாரங்கள் கழித்து அவரும் பிணையில் விடுவிக்கப்பட்டார். நான்காவதாக, சமூக ஊடகங்களில் பிரபல்யமானவர் என்றும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்திக் கருத்துக்களை வெளியிடுபவர் என்றும் அறியப்பட்ட ராஜாங்கன சித்தார்த்த தேரர் இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் அமைதியின்மையை தூண்டிவிடக்கூடிய முறையிலும் குறிப்பிட்ட சிலரை அச்சுறுத்தும் வகையிலும் கருத்துக்களை வெளியிட்டதாக அவருக்கு எதிராக வேறு ஒரு பிக்கு செய்த முறைப்பாட்டையடுத்து இவ்வருட நடுப்பகுதியில் கைதாகி பல வாரகால விளக்கமறியலுக்கு பிறகு விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவங்களின்போது வெறுப்புப் பேச்சுக்களுக்கு எதிராக தென்னிலங்கையில் பரவலாக குரல்கள் கிளம்பின. ஆனால், தமிழர்களை துண்டுதுண்டாக வெட்டிக்கொலை செய்வேன் என்ற மட்டக்களப்பு விகாராதிபதியின் இனவெறிக்கூச்சலை கண்டிப்பதில் தென்னிலங்கையில் அக்கறை காட்டப்படவே இல்லை. பொதுவில் பௌத்த மதத்தையும் சிங்கள மக்களையும் புண்படுத்துபவையாக கருதப்படும் செயற்பாடுகளுக்கு காண்பிக்கப்படுகின்ற ஆக்ரோஷமான எதிர்வினையை மற்றைய சமூகங்கள் மற்றும் மதங்களை புண்டுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் காணமுடிவதில்லை. குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தை அரசாங்கம் பாரபட்சமான முறையில் — குறிப்பிட்ட சிலரை தெரிவுசெய்து பிரயோகிக்கிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. சர்வதேச மன்னிப்புச்சபை இது விடயத்தில் அரசாங்கத்தை வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டியிருந்தது. அதேவேளை, சுமணரத்ன தேரரின் விவகாரத்தில் இலங்கையில் காலங்காலமாக அரசியல் அனுசரணையுடன் ஊக்கப்படுத்தப்பட்டு வந்திருக்கும் ஆரோக்கியமற்ற ஒரு கலாசாரத்தைப் பற்றி இங்கு குறிப்பிட வேண்டியிருக்கிறது. சிங்கள அரசியல் சமுதாயம் அதன் தவறான கொள்கைகளையும் செயற்பாடுகளையும் நியாயப்படுத்துவதற்கு மகாசங்கத்தை தாராளமாகப் பயன்படுத்தி வந்திருப்பதால் தங்களால் அரசாங்கத்தை தட்டிக்கேட்க முடியுமே தவிர தங்களுடன் அவ்வாறு அரசாங்கம் நடந்துகொள்ளப்போவதில்லை என்ற உறுதியான நம்பிக்கையை பௌத்த பிக்குமார் வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். நாட்டின் அரசியலமைப்பு பௌத்த மதத்துக்கு வழங்கியிருக்கும் அதிமுதன்மை அந்தஸ்தை தங்களுக்கு அனுகூலமாகப் பயன்படுத்தி பெரும்பாலான பிக்குமார் சட்டத்தின் ஆட்சிக்கே சவால் விடுக்கும் வகையில் நடந்துகொள்கிறார்கள். சுமணரத்ன தேரர் இந்த வகையான பிக்குமாரில் ஒருவரே. அரசியல்வாதிகள் கையில் எடுக்கவேண்டிய பிரச்சினைகளை பிக்குமார் கையாளுவதற்கு தூண்டிவிடும் அல்லது அனுமதிக்கும் அரசியல் கலாசாரம் இலங்கையில் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. இனப்பிரச்சினைக்கு இன்று வரையில் அரசியல் இணக்கத்தீர்வு ஒன்றை காணமுடியாமல் இருப்பதற்கான பிரதான முட்டுக்கட்டைகளில் ஒன்று மகாசங்கம் கொண்டிருக்கும் நிலைப்பாடாகும். அரசாங்கம் முன்னெடுக்கும் அரசியல் தீர்வு முயற்சிகளை எதிர்ப்பதற்கு எதிர்க்கட்சி மகாசங்கத்தை பிரதான நேச அணியாகப் பயன்படுத்துவது இலங்கையில் ஒரு பாரம்பரியமாகவே இருந்துவருகிறது. சிறுபான்மை இனத்தவர்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளுக்கு எதிரான முன்னரங்கப் படையாக மகாசங்கம் விளங்குகிறது. இலங்கையின் சுயாதிபத்தியம் அல்லது இறைமை அல்லது ஆட்புல ஒருமைப்பாடு என்பதை அரசுக் கட்டமைப்பு மீதான சிங்கள பௌத்த மேலாதிக்கம் என்பதை தவிர வேறு எதுவுமாக பெரும்பாலான பிக்குமார் விளங்கிக்கொண்டிருப்பார்கள் என்று நம்புவதற்கில்லை. இன உறவுகளைப் பொறுத்தவரை, சிங்களவர்கள் மத்தியில் நிலவும் சிந்தனைக் குழப்பம், செயல் குழப்பம் ஆகியவற்றுக்கு சிங்கள பௌத்த சிந்தனையில் ஒழுக்க நியாயப்பாரம்பரியம் ஒன்று இல்லாதமை ஒரு முக்கிய காரணமாகும் என்று முற்போக்கு சிந்தனையுடைய வரலாற்றாசிரியர்கள் கூறியிரு்கிறார்கள். இலங்கையின் மாபெரும் வரலாற்றுப் பதிவேடான மகாவம்சம் ஒரு பௌத்த மதகுருவினால் எழுதப்பட்டதேயாகும். சிங்கள பௌத்தர்களின் இனரீதியான சிந்தனைக்கு மகாவம்சம் பெரிதும் பொறுப்பு என்று வேறு எவரும் அல்ல மதிப்புக்குரிய சிங்கள கல்விமான் கலாநிதி ஈ.டபிள்யூ. அதிகாரம் எழுதியது பதிவில் இருக்கிறது. மகாவம்சத்தின் பிரதிகளை என்ன செய்யவேண்டும் என்று அவர் கூறியது அதன் கூருணர்வுத் தன்மை கருதி இங்கு தவிர்க்கப்படுகிறது. இலங்கை அரசியலில் பௌத்த மதகுருமாரின் பாத்திரம் பெரும்பாலும் எதிர்மறையானதாகவும் பிற்போக்கானதாகவும் இருந்தது.அவர்கள் ஆக்கபூர்வமான பாத்திரத்தை வகித்த காலமும் இடைக்கிடை இருந்தது. சில குறிப்பிட்ட புறநடைகள் இருந்தபோதிலும் பிக்குமார் பெரும்பாலும் கல்வியறிவற்றவர்களாகவும் அறியாமையுடையவர்களாகவும் குறுகிய மனப்பான்மை கொண்டவர்களாகவும் இருந்து வந்திருக்கிறார்கள் என்பதை வரலாறு காட்டுகிறது. இனக்கலவரங்களின்போது பிக்குமார் தங்களது காவியுடையை உயர்த்திப் பிடித்தவண்ணம் வெறிபிடித்த மக்கள் கூட்டத்துக்கு தலைமை தாங்கிச்செல்வதை நாம் அனுபவ வாயிலாகக் கண்டிருக்கிறோம். அத்துடன் இலங்கையில் பெரும்பாலும் பிக்குமார் புத்தபிரான் போதித்தவாறு உலோகாயதப் பொருட்கள் மீது பற்று இல்லாத வாழ்க்கையை வாழவில்லை. இலங்கையில் மகாசங்கம் பெரும்பாலும் எதிர்மறையான பாத்திரத்தையே வகித்திருக்கிறது. சிங்கள மக்கள் மகாசங்கத்தின் செல்வாக்கில் இருந்து விடுபடாத பட்சத்தில் இலங்கையின் எதிர்காலம் இருண்டதாகவே இருக்கும். அரசியலில் இருந்து மதத்தைப் பிரிக்காவிட்டால் இலங்கைக்கு எதிர்காலமே இல்லை. ( வீரகேசரி வாரவெளியீடு) https://arangamnews.com/?p=10112
  10. தேர்தல்களை தவிர்த்து சாத்தியமானளவு காலம் அதிகாரத்தில் இருக்க வியூகம் October 17, 2023 — வீ. தனபாலசிங்கம் — தேசிய தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுமா? அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்படுமா? பாராளுமன்ற தேர்தல் முறையில் மாற்றத்தைச் செய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது என்ற தலைப்புகளுடன் கடந்த வாரம் வெளியான பத்திரிகைச் செய்திகள் இலங்கை அரசியல் நிலைவரம் எந்தளவுக்கு குழப்பகரமானதாக இருக்கிறது என்பதையும், மக்கள் முன்னால் செல்வதற்கு அஞ்சும் அரசாங்கம் தேர்தல்களைச் சந்திப்பதை தவிர்த்து எவ்வளவு காலத்துக்கு அதிகாரத்தில் இருக்கலாம் என்று தடுமாறிக் கொண்டிருப்பதையும் பிரகாசமாக வெளிக்காட்டுகின்றன. பாராளுமன்ற தேர்தலையும் பழைய தொகுதி அடிப்படையிலான முறை மற்றும் தற்போதைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையை உள்ளடக்கிய கலப்பு முறையில் நடத்துவதற்கான யோசனை அடங்கிய அமைச்சரவை பத்திரம் ஒன்றை நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தயாரித்திருப்பதாக கூறப்படுகிறது. அதன் பிரகாரம் தொகுதி அடிப்படையில் பாராளுமன்றத்துக்கு 160 உறுப்பினர்களை மக்கள் தெரிவுசெய்யும் அதேவேளை விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் 65 ஆசனங்கள் ஒதுக்கப்படும். இந்த முயற்சி உள்ளூராட்சி தேர்தல்களை காலவரையறையின்றி ஒத்திவைத்ததைப் போன்று அடுத்த வருட பிற்பகுதியில் நடத்தப்பட வேண்டியிருக்கும் ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கான ஒரு முயற்சி என்று எதிரணி கட்சிகள் உடனடியாகவே சந்தேகத்தை கிளப்பியிருக்கின்றன. உள்ளூராட்சி தேர்தல்கள் கலப்பு முறையில் ஏற்கெனவே ஒரு தடவை 2018 பெப்ரவரியில் நடத்தப்பட்டன. மாகாண சபைகளுக்கும் அதே கலப்புமுறையில் தேர்தல்களை நடத்துவதற்கு ‘நல்லாட்சி’ அரசாங்க காலத்தில் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியது. ஆனால் தொகுதி எல்லை நிர்ணயக் குழுவொன்று நியமிக்கப்படாத காரணத்தால் மாகாணசபை தேர்தல்கள் ஐந்து வருடங்களுக்கும் அதிகமான காலமாக நடத்தப்படாமல் இருக்கின்றன. அதனால் அரசாங்கத்தின் தற்போதைய முயற்சி குறித்து அரசியல் கட்சிகள் மத்தியில் மாத்திரமல்ல மக்கள் மத்தியிலும் வலுவான சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாதது. விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையும் விருப்பு வாக்கு முறையும் படுமோசமான ஊழலுக்கும் முறைகேடு களுக்கும் காரணமாக அமைந்து பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை நான்கு தசாப்தங்களாக கேலிக்கூத்தாக்கியிருக்கும் நிலையில் மக்கள் தேர்தல் முறையில் மாற்றங்கள் தேவை என்று விரும்புகிறார்கள். பல வருடங்களாக இது தொடர்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் செய்யப்படக்கூடிய மாற்றங்கள் எந்தவொரு தேசிய தேர்தலையும் ஒத்திவைப்பதற்கு வழிவகுப்பதை மக்களால் ஏற்றுக் கொள்ளமுடியாது. கடந்த வருடத்தய மக்கள் கிளர்ச்சியை அடுத்து ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகிய காரணத்தினால் இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் நாட்டு மக்கள் வழங்கிய ஆணை இனிமேலும் செல்லுபடியாகக் கூடியது என்று வாதாடுவது உண்மையில் அர்த்தமற்றது. புதிய ஜனாதிபதி அரசியலமைப்பின் பிரகாரம் தெரிவு செய்யப்பட்டு, அதே பாராளுமன்ற பெரும்பான்மையின் ஆதரவுடன் அவர் ஆட்சி செய்துவருகின்ற போதிலும், அரசாங்கத்தின் இருப்பின் நியாயப்பாடு கடுமையாகக் கேள்விக் குள்ளாகியிருக்கிறது. புதிய தேர்தல்களின் மூலமாக மக்கள் தங்களது பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்கு அனுமதிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்திருக்கிறது. இதற்கு மத்தியில் தேசிய தேர்தல்களை ஒத்திவைப்பது நிச்சயமாக ஜனநாயக விரோத செயலாகவே அமையும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்பட்டு நிறைவேற்று அதிகார பிரதமருடன் கூடியதாக பாராளுமன்ற ஆட்சிமுறை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரப்படவேண்டுமா இல்லையா என்பது குறித்து சர்வஜனவாக்கெடுப்பு ஒன்றுக்கு இறுதியில் வழிவகுக்கக்கூடிய ஒரு முயற்சியின் அங்கமாகவும் விஜேதாச ராஜபக்சவின் அமைச்சரவைப் பத்திரம் இருப்பதாகவும் இது தொடர்பில் அவரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் விரிவான கலந்தாலோசனையை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இவை தொடர்பில் ஆராய்வதற்கு அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட விருப்பதாக விஜேதாச ராஜபக்ச கூறுகிறார். தேர்தல் சீர்திருத்தம் குறித்த அமைச்சரவை பத்திரம் அங்கீகரிக் கப்படுமானால், அரசியல் சூழ்நிலையும் உகந்ததாக அமையும் பட்சத்தில் அரசியல் உயர்மட்ட கலந்தாலோசனைகளின் பின்னர் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செயயப்படும். ஜனாதிபதியினால் மாத்திரமே சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றுக்கு உத்தரவைப் பிறப்பிக்கமுடியும். அந்த சர்வஜனவாக் கெடுப்பின் முடிவுகளின் அடிப்படையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்படுவதற்காக மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெறுவதற்காக இந்த விவகாரம் பாராளுமன்றத்துக்கு கொண்டு வரப்படும். அவ்வாறு நடைபெறுமானால் அவசியமான சட்டத்திருத்தங்களை செய்வதற்காக ( 2024 நவம்பரில் நடத்தப்படவேண்டியிருக்கும் ) ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்படக்கூடிய சாத்தியம் இருக்கிறது என்று ஊகிக்கப்படுவதாக மூத்த பாராளுமன்ற உறுப்பினர்களை மேற்கோள் காட்டி பத்திரிகைகள் கடந்த வாரம் செய்திகளை வெளியிட்டன. கடந்த வருடத்தைய பொருளாதார நெருக்கடியின் விளைவான மக்கள் கிளர்ச்சியின் பின்னரான அரசியல் சூழ்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடையக் கூடியதாக எந்தவொரு கட்சியின் வேட்பாளரும் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறப்போவதில்லை என்ற நம்பிக்கையும் அரசாங்கத்தின் புதிய முயற்சிக்கு ஒரு காரணம் என்றும் அந்த செய்திகள் கூறின. ஆனால், எதிரணி கட்சிகள் மாத்திரமல்ல, ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் கூட அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பது சாத்தியமில்லை என்றே தெரிகிறது. இது விடயத்தில் ஒரு விசித்திரமான அம்சத்தை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. அதாவது அரசாங்கத்தின் முயற்சியை எதிர்ப்பதற்கு ஆளும் பொதுஜன பெரமுனவும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.)வும் கூட ஒரேவிதமான காரணத்தை கூறுவதாக அறியமுடிகிறது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை நீடிக்கவேண்டும் என்ற ஆணையுடன் தற்போதைய அரசாங்கம் தெரிவுசெய்யப்பட்டதன் காரணத்தால் குறைந்த பட்சம் 2025 பாராளுமன்ற தேர்தல் வரையாவது அந்த ஆட்சிமுறை தொடரவேண்டும். அதை ஒழிப்பதானால் அந்த பாராளுமன்ற தேர்தலில் தெரிவு செய்யப்படக்கூடிய புதிய அரசாங்கத்தின் கீழேயே செய்யவேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் உயர்மட்ட வட்டாரங்கள் கூறுவதாக தகவல். ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்புக்கு வாக்களிக்கு முகமாக முதலில் 2025 பாராளுமன்ற தேர்தலில் புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்படவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்துகின்ற அதேவேளை அடுத்த அரசாங்கம் மக்களின் புதிய ஆணையுடன் பதவிக்கு வரும் என்பதால் அதுவரைக்கும் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பது குறித்து தீர்மானிக்க முடியாது. அதற்கு முன்னதாக முன்னெடுக்கப் படக்கூடிய எந்த முயற்சியும் வெற்றியளிக்காது என்று ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) கூறுகிறது. இந்த கட்சிகளின் நிலைப்பாடுகள் தொடர்பில் வெளிவருகின்ற தகவல்களை அடிப்படையில் நோக்கும்போது அவற்றுக்கு அரசாங்கத்தின் உத்தேச முயற்சிகளின் நோக்கம் சாத்தியமானவரை தேர்தல்களை ஒத்திவைப்பதே என்ற வலுவான சந்தேகம் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். அதனால் அவை அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பை வழங்கப்போவதில்லை என்பது நிச்சயம். ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் இருந்துவரும் அரசாங்கம் திடீரென்று அதைப் பற்றி சிந்திக்கத் தொடங்கியிருப்பது தான் மிகப் பெரிய ஆச்சரியம். தேர்தல்களுக்கு முகங்கொடுப்பதை தவிர்ப்பதற்காக, கடந்த நான்கு தசாப்தங்களாக சாத்தியப்படாமல் இருந்துவரும் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு குறித்து யோசனையை மீண்டும் அரசாங்கம் முன்வைக்கும் விசித்திரத்தை காண்கிறோம். ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதாக தேர்தல்களில் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கி அதிகாரத்துக்கு வந்த எந்த ஜனாதிபதியும் அதை நிறைவேற்றவில்லை. தற்போதைய அரசியலமைப்பை மாற்றுவதற்கு மிகுந்த அக்கறையுடன் முன்னெடுக்கப்பட்ட ஒரு முயற்சி என்றால், அது 2000 ஆம் ஆண்டில் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த புதிய அரசியலமைப்பு வரைவாகவே இருக்கமுடியும். திருமதி குமாரதுங்க தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முடிவில் மீண்டும் பிரதமராக பாராளுமன்றத்துக்கு வரும் திட்டத்தை மனதிற்கொண்டே அந்த வரைவை சமர்ப்பித்ததாக குற்றஞ்சாட்டிய அன்றைய எதிரணி குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சி அவரது முயற்சியை சீர்குலைத்தது. எதிர்க்கட்சி தலைவராக விக்கிரமசிங்க அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க அவரது கட்சியின் உறுப்பினர்கள் சபைக்குள் வரைவின் பிரதிகளை தீயிட்டுக் கொளுத்தி அட்டகாசம் செய்தததை நாம் எல்லோரும் கண்டோம். அதற்கு பிறகு ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு தொடர்பில் அக்கறையுடனான முயற்சி எதுவும் முன்னெடுக்கப்பட்டதாக இல்லை. இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு குறித்து பேசப்பட வேயில்லை. தற்போதைய அரசாங்கம் பாராளுமன்றத்தில் அதன் பெரும்பான்மையை தக்கவைத்துக் கொள்வதற்கு பெரும் கஷ்டப்படுகிறது. முக்கியமான ஒவ்வொரு சட்டமூலமும் அல்லது தீர்மானமும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டவுடன் வாக்குகளின் எண்ணிக்கையை காட்டி அரசாங்கம் அறுதிப் பெரும்பான்மையை விடவும் மேலதிகமாக கொண்டிருக்கும் ஒவ்வொரு வாக்கு குறித்தும் பெருமைப்பட்டுக் கொள்கிறது. இத்தகைய பின்புலத்தில், அதுவும் ஜனாதிபதி ஆட்சிமுறை தொடர்பில் பொதுஜன பெரமுனவின் நிலைப்பாட்டை நன்கு தெரிந்துகொண்ட நிலையில் அதை ஒழிப்பதற்கான யோசனை முன்வைக்கப்படுகிறது என்றால் அதன் பின்னணியில் ஒரு அந்தரங்கத் திட்டம் இருக்கிறது என்று எவரும் சந்தேகப்படவே செய்வர். அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தைப் பொறுத்தவரையிலும் கூட அதை நடைமுறைப்படுத்தும் தனது யோசனைக்கு ஆதரவு கிடைக்காது என்பதை நன்கு தெரிந்துகொண்டுதான் ஜனாதிபதி விக்கிரமசிங்க அது தொடர்பில் தீர்மானிக்கும் பொறுப்பை தற்போதைய பாராளுமன்றத்திடம் ஒப்படைத்துவிட்டு தனது பொறுப்பைக் கைகழுவிவிட்டார். தற்போதைய பாராளுமன்றத்தைப் பயன்படுத்தி எதைச் செய்யமுடியும்? எதைச் செய்யமுடியாது என்பதை விக்கிரமசிங்க நன்கு அறிவார். அதனால் பாராளுமன்ற தேர்தல் முறையில் மாற்றத்தை கொண்டு வருவதற்கும் அதன் நீட்சியாக ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கும் என்று கூறிக்கொண்டு அரசாங்க உயர்மட்டம் முன்வைக்கும் யோசனை ஒப்பேறக்கூடிய ஒன்றாக தெரியவில்லை. அதேவேளை 2025 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு மக்களின் புதிய ஆணையுடன் பதவிக்கு வரக்கூடிய அரசாங்கமே ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு விவகாரத்தைக் கையாளவேண்டும் என்று கூறும் பொதுஜன பெரமுனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியும் ஜே.வி.பி.யும் அந்த தேர்தலில் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்புக்கு மக்களின் ஆணையைக் கேட்டு விஞ்ஞாபனத்தை முன்வைக்கவேண்டும். அந்த ஆட்சிமுறை ஒழிப்பு குறித்து உறுதியான நிலை்பாட்டைக் கொண்டிருக்கும் ஜே.வி.பி. அண்மைக்காலமாக அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளராக அதன் தலைவர் அநுரா குமார திசாநாயக்கவை ஏற்கெனவே அறிவித்துவிட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக பிரேமதாச சில மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டுவிட்டார். இவர்கள் எல்லோரும் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு குறித்து அண்மைக்காலமாக முன்னைய உறுதிப்பாட்டுடன் பேசுவதில்லை. அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தலுக்கு முகங்கொடுக்க முடியாத நிலையில் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு குறித்தும் பாராளுமன்ற தேர்தல் முறையில் மாற்றம் குறித்தும் கதையை அவிழ்த்துவிட்டிருக்கும் அரசாங்கம் அவை தொடர்பிலான சட்டவாக்க செயன்முறைகளை முன்னெடுக்க கால அவகாசம் தேவை என்று ஒரு விளக்கத்தைக் கூறி ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கலாம் என்று நினைக்கிறது போலும். தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம் 2025 ஆகஸ்ட் வரை நீடிக்கிறது. அது வரைக்கும் அதிகாரத்தில் இருந்து பிறகு வேறு ஒரு வியூகத்தை வகுக்கலாம் என்ற விபரீதமான நம்பிக்கையில் அரசாங்கத் தலைவர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்க வேண்டியிருக்கிறது. (ஈழநாடு ) https://arangamnews.com/?p=10054
  11. சர்ச்சைக்குரிய இணையவெளி பாதுகாப்பு சட்டமூலம் October 9, 2023 — வீரகத்தி தனபாலசிங்கம் — மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து அன்றைய பிரதமர் டி.பி. விஜேதுங்க ஜனாதிபதியாக பதவியேற்றார். கைத்தொழில் துறை அமைச்சராக இருந்த ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார். முதற்தடவையாக பிரதமர் பதவிக்கு வந்த அவர் லேக்ஹவுஸ் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் “அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் பத்திரிகை ஆசிரியராகியிருப்பேன் என்று பதிலளித்தார். விக்கிரமசிங்கவுக்கு பத்திரிகை ஆசிரியராக வருவது ஒன்றும் சிரமமானதாக இருந்திருக்காது. அவரின் குடும்பம் ஊடக நிறுவனங்கள் பலவற்றை சொந்தமாகக் கொண்டிருந்தது. இன்றும் கூட அப்படித்தான். அவரது தந்தையார் எஸ்மண்ட் விக்கிரமசிங்க லேக்ஹவுஸ் பத்திரிகைகளைப் பயன்படுத்தி அரசாங்கங்களை பதவிக்கு கொண்டுவரவும் பதவி கவிழ்க்கவும் கூடிய வல்லமைகொண்ட பத்திரிகைத்துறை ஜாம்பவானாக விளங்கினார் என்று கூறப்படுவதுண்டு. கடந்த வாரம் ஜேர்மனியின் முக்கியமான செய்திச்சேவை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் செய்தியாளரின் சில கேள்விகளுக்கு தனது வழமையான சுபாவத்துக்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் அமைதியிழந்து பதிலளித்த வேளையில் கூட ஜனாதிபதி விக்கிரமங்க தனக்கு ஊடகங்களுடன் இருந்த ஈடுபாடுகள் பற்றி குறிப்பிட்டதை காணக்கூடியதாக இருந்தது. அந்த நேர்காணலில் விக்கிரமசிங்க நடந்துகொண்ட முறை பலரையும் ஆச்சரியப்படவைத்தது. நேர்காணர்களில் அவர் ஊடகவியலாளர்களுடன் மிகவும் மகிழ்சிச்சியாகவும் நட்புரிமையுடனும் பேசுவதே வழமை. அவர் பிரதமராக இருந்த காலப்பகுதிகளில் ஊடகநிறுவனங்களோ அல்லது ஊடகவியலாளர்களோ பெரிதாக அச்சுறுத்தலை எதிர்நோக்கியதாகக் கூறமுடியாது. ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் எதிரான வன்முறைகளை கண்டிப்பதிலும் அவர் முன்னணியில் நின்றிருக்கிறார். இரு தசாப்தங்களுக்கும் அதிகமான காலத்துக்கு முன்னர் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது ஊடகத்துறைக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த குற்றவியல் அவதூறு சட்டம் (Criminal Defamation Law ) நீக்கப்பட்டது. பிறகு மீண்டும் ஒரு தடவை அவர் பிரதமராக இருந்த அரசாங்கமே தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டத்தை (Right to Information Act.) பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. பொதுவில் அவர் லிபரல் ஜனநாயக எண்ணப்போக்குடைய ஒரு அரசியல் தலைவராகவே நோக்கப்பட்டார். மேற்குலகமும் கூட இலங்கை அரசியல் தலைவர்களில் விக்கிரமசிங்கவை பெருமளவுக்கு ஆதரித்தது. ஆனால், கடந்த வருடம் ஜனாதிபதியாக வந்த பிறகு அவர் தலைமையிலான அரசாங்கம் ஜனநாயக விரோத சட்டங்களைக் கொண்டுவருவதில் அடிக்கடி நாட்டம் காட்டுவதை காணக்கூடியதாக இருக்கிறது. அதற்கு இலங்கையின் வரலாறு முன்னென்றும் கண்டிராத வகையில் கடந்த வருடம் இடம்பெற்றதைப் போன்று மீண்டும் மக்கள் கிளர்ச்சி மூண்டு விடாதிருப்பதை உறுதிசெய்வதில் அரசாங்கத்துக்கு இருக்கும் முனைப்பை தவிர வேறு முக்கிய காரணம் எதுவும் இருக்கமுடியாது. தற்போது இரு சட்டமூலங்கள் சர்ச்சையை தோற்று வித்திருக்கின்றன. கடந்த மாதம் வர்த்தமானியில் வெளியிட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்மூலமும் (Anti – Terrorism Bill) இணையவெளி பாதுகாப்பு சட்டமுலம் (Online Safty Bill ) ஆகியவையே அவையாகும். கடந்த 44 வருடங்களாக நடைமுறையில் இருந்துவரும் மிகவும் கொடூரமான பயங்கரவாத தடைச்சட்டத்தை (Prevention of Terrorism Act.) பதிலீடு செய்வதற்காக வரையப்பட்டதே பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம். கடந்த மார்ச் மாதத்தில் வெளியிட்டப்பட்ட சட்டமூல வரைவு உள்நாட்டிலும் வெளியுலகிலும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானதை அடுத்து அதை மீளாய்வு செய்வதாக அரசாங்கம் உறுதியளித்தது. தற்போது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்திலும் இடம்பெற்றிருக்கும் சட்டமூலம் அரசாங்கம் கூறிய அந்த மீளாய்வுக்கு பின்னரான வடிவமேயாகும். அதை ஆய்வசெய்த சட்டத்துறை நிபுணர்களும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் புதிய வரைவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்ற போதிலும், மக்கள் மீது அடக்குமுறையைப் பிரயோகிக்கக்கூடியதாக நிறைவேற்று அதிகாரத்தை விரிவாக்கும் ஏற்பாடுகளைக் கொண்டதாகவே இருக்கிறது என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். குறிப்பாக, நவீன இலங்கையின் வரலாற்றில் முன்னென்றும் இல்லாத வகையில் மூண்டிருக்கும் அரசியல் — பொருளாதார நெருக்கடிகள் அரசுக்கும் மக்களுக்கும் இடையில் ஆழமான அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும் ஒரு நேரத்தில் இத்தகைய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அது பெரும் ஆபத்தாக அமையும் என்பதே அவர்களின் உறுதியான நிலைப்பாடாக இருக்கிறது. புதிய சட்டமூலத்தை மீண்டும் ஒரு தடவை மீளாய்வுக்கு அரசாங்கம் உட்படுத்துமா என்பது முக்கியமான ஒரு கேள்வி. பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் மார்ச் வடிவம் குறித்து தங்களால் முன்வைக்கப்பட்ட அவதானங்களை அரசாங்கம் கவனத்தில் எடுக்கவில்லை என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விசனம் தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை அரசாங்கம் கடந்தவாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. ஆனால் அதேவேளை இணையவெளி பாதுகாப்பு சட்டமூலத்தை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரிறான் அலஸ் கடந்த செவ்வாய்கிழமை சபையில் சமர்ப்பித்தார். பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தைப் போன்றே இணையவெளி பாதுகாப்பு சட்டமூலமும் பொதுவெளியில் பெரும் விவாதத்தை மூளவைத்திருக்கிறது. சமூக ஊடகங்களை ஒழுங்கமைப்பதை நோக்கமாகக் கொண்டே இந்த சட்டமூலத்தைக் கொண்டுவந்திரு்பதாக அரசாங்கம் கூறுகிறது ஆனால் சட்டமூலம் இணையத்தை அரசியல் தொடர்பாடல் நோக்கங்களுக்கு பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் ஆபத்தைக் கொண்டிருப்பதாக எதிரணி அரசியல் கட்சிகளும் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களும் சுட்டிக்காட்டுகின்றன. ஊடக சுதந்திரத்தை இந்த சட்டமூலம் பாரதூரமான ஆபத்துக்குள்ளாக்கும் என்று ஊடகத்துறை அமைப்புக்கள் பலவும் கவலை வெளியிட்டிருக்கின்றன. சட்டமூலத்தை கணிசமானளவுக்கு மாற்றியமைக்க வேண்டும் அல்லது முற்றாகவே கைவிடவேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு மத்தியில் அரசாங்கம் அதை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறது. எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று, அன்றைய தினமே சட்டமூலத்தின் அரசியலமைப்புப் பொருத்தப்பாடு குறித்து கேள்வியெழுப்பி அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் முதல் மனுவை ஊடகவியலாளர் ஒருவர் தாக்கல் செய்திருக்கிறார். அரசியல் கட்சிகள், மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களினால் மேலும் பல மனுக்கள் தாக்கல் செய்யப்படும் என்பது நிச்சயம். இணையவெளி பாதுகாப்பு சட்டமூலம் இணையத்தள உள்ளடக்கங்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து உறுதிப்படுத்தும் பணிக்காக ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஆணைக்குழு ஒன்றை ஜனாதிபதி நியமிப்பதற்கான ஏற்பாட்டைக் கொண்டிருக்கிறது. எந்தவொரு சமூக ஊடகக் கணக்கையும் இணையப் பிரசுரங்களையும் தடைசெய்வதற்கு அல்லது இடைநிறுத்துவதற்கு அதிகாரத்தைக் கொண்டிருக்கும் ஆணைக்குழு சட்டமூலத்தில் குறி்பிடப்பட்டுள்ள இணையவெளிக் குற்றச் செயல்களுக்கு சிறைத் தண்டனையையும் கூட சிபாரிசு செய்யமுடியும். கடந்த வருடம் அக்டோபரில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான 21 வது திருத்தத்தின் பிரகாரம் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை அரசியலமைப்பு பேரவை சிபாரிசு செய்வதற்கு வகைசெய்யும் ஏற்பாட்டுக்கு புறம்பாக இணையவெளி பாதுகாப்பு விவகாரத்தில் ஆணைக்குழு உறுப்பினர்கள் ஐவரையும் நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படுகிறது. அதனால் ஆணைக்குழுவின் சுயாதீனம் குறித்து வலுவான சந்தேகம் எழுகிறது. உத்தேச ஆணைக்குழுவின் தலைவரையும் உறுப்பினர்களையும் ஜனாதிபதி நியமிக்கும் ஏற்பாட்டைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி தானே தெரிவுசெய்து நியமிக்கும் ஒரு குழுவினரின் ஊடாக சமூக ஊடகங்களில் மக்கள் செய்யும் பதிவுகளை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார் என்று குற்றஞ்சாட்டுகிறார். இணையத்தை அடிப்படையாகக் கொண்ட தகவல் பரிமாற்றச் சேவைகளைப் (Internet based communication services) பயன்படுத்து கிறவர்களினால் காணப்படுகின்ற, கேட்கப்படுகின்ற அல்லது உணரப்படுகின்ற எதையும் ‘ உண்மை’ (Fact) என்று சட்டமூலம் வரைவிலக்கணம் செய்கிறது. அவமதிப்புக்கு நிகரான பொய்யான வாசகங்கள் (False statements ) தொடக்கம் அமைதியைக் குலைக்கும் நோக்குடன் பொய்யான வாசகத்தின் மூலம் திட்டமிட்ட முறையில் நோக்கத்தோடு அவமதிப்பைச் செய்வது வரை தண்டனைக்குரிய பல்வேறு குற்றச்செயல்கள் சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இந்த விசாலமான வார்த்தைப் பிரயோகங்களுடனான குற்றங்கள் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் ஆபத்தைக் கொண்டிருக்கின்றன என்று ஊடகத்துறை தொடர்பான சட்டங்களில் நிபுணத்துவம் கொண்டவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள். இணையவெளி பாதுகாப்பு சட்டமூலம் தற்போதைய வடிவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமேயானால் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை மிகவும் மோசமாகப் பாதிக்கும் என்பதுடன் இலங்கையில் ஏற்கெனவே சுருங்கிக் கொண்டிருக்கும் சிவில் பரப்பை (Civic Space) மேலும் குறுகச்செய்துவிடும் என்று சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழு (Internatinal Commission of Jurists) கூறியிருக்கிறது. தகவலைப் பெறுவதற்கும் கருத்தை வெளிப்படுத்துவதற்குமான சுதந்திரம் உட்பட மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளை பயன்படுத்துவதை சட்டமூலம் மலினப்படுத்தும் என்றும் அந்த ஜூரர்கள் ஆணைக்குழு கடந்த வாரம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. அதேவேளை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தையும் இணையவெளி பாதுகாப்பு சட்டமூலத்தையும் கைவிடவேண்டும் என்று அரசாங்கத்தைக் கேட்டிருக்கிறது. இரு சட்டமூலங்களுமே மக்களின் சுதந்திரங்களை பாரதூரமாகப் பாதிக்கும் என்பதுடன் நாட்டில் ஜனநாயகத்துக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் பாரிய பாதிப்பைக் கொண்டுவரும் என்று கூறியிருக்கும் சட்டத்தரணிகள் சங்கம் சடடத்துறை சமூகம் உட்பட இந்த விவகாரங்களில் பங்கும் ஈடுபாடும் கொண்ட தரப்புகளுடன் கலந்தாலோசிக்காமல் சட்டமூலங்களை அரசாங்கம் கொண்டுவந்திருப்பதை கடுமையாக கண்டனம் செய்திருக்கிறது. இணையவெளி பாதுகாப்பு சட்டமூலத்தை கொண்டுவரும் தருணம் குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு அமைச்சர் ரிறான் அலஸுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டிருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டமூலங்களின் ஊடாக கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை ஆபத்துக் குள்ளாக்குவதை தவிர்த்து சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அமைப்புக்களின் நிறுவனரீதியான ஆற்றல்களை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு கூறியிருக்கிறது. சட்டமூலத்துக்கு ஏழு திருத்தங்களையும் ஆணைக்குழு முன்மொழிந்திருக்கிறது. சட்டமூலத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பெயர் இணையவெளி ஆபத்துக்களில் இருந்து சிறுவர்களைப் பாதுகாக்கும் நோக்கமுடையது என்று பெற்றோர்கள் தவறாக நம்புவதற்கு வழிவகுக்கிறது என்று கூறியிருக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் சட்டமூலம் உண்மையில் சமூக ஊடகங்களினால் விமர்சிக்கப்படுகின்றவர்களைை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது என்று குறிப்பிட்டார். “பல்வேறு விமர்சனங்களில் இருந்தும் அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் பாதுகாப்பதே இணையவெளி பாதுகாப்பு சட்டமூலத்தின் நோக்கமாகும் என்று சுட்டிக்காட்டும் சாலிய பீரிஸ் சமூக ஊடகங்களை ஒழுங்கமைப்பது தான் அரசாங்கத்தின் உண்மையான நோக்கமாக இருந்தால் அதற்கு புதிய சட்டங்கள் தேவையில்லை. இணையவெளிக் குற்றச்செயல்களைை கையாளுவதற்கு தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டங்களே போதுமானவை என்று சுட்டிக்காட்டியிருக்கிறார். தகவல் அறிவதற்கான உரிமைச்சட்டத்தை புறமொதுக்கிவிடக்கூடிய தும் அந்த சட்டத்தின் மூலமாக கடந்த சில வருடங்களாக அடையக்கூடியதாக இருக்கும் நேர்மறையான விளைவுகளை பயனற்றவையாக்கிவிடக்கூடியதுமான சட்டங்களைக் கொண்டுவருவதை அரசாங்கம் தவிர்க்கவேண்டும். பிரதமராக இருந்தபோது தானே நீக்கிய குற்றவியல் அவதூறுச் சட்டத்தை பின்கதவின் ஊடாக மீண்டும் கொண்டவரும் ஒரு முயற்சியாக இணையவெளி பாதுகாப்பு சட்டமூலம் அமையும் என்பதை ஜனாதிபதி விக்கிரமசிங்க உணர்ந்து கொள்ளவேண்டும் என்று சண்டே ரைம்ஸ் பத்திரிகை கடந்தவாரம் அதன் ஆசிரிய தலையங்கத்தில் குறிப்பிட்டது. பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை கொண்டுவருவரும் விவகாரத்தில் நடந்து கொண்டதைப் போன்றே இணையவெளி பாதுகாப்பு சட்டமூல விவகாரத்திலும் பொது விவாதத்துக்கு அல்லது பரந்தளவிலான கலந்தாலோசனைக்கு அரசாங்கம் வாய்ப்பைத் தரவில்லை என்பது முக்கியமான குற்றச்சாட்டாக இருக்கிறது. சட்டங்களை கொண்டுவரும்போது பரந்தளவிலான கருத்தாடலுக்கு வாய்ப்புக்களை வழங்காமல் இருப்பது பொதுவில் இலங்கை அரசாங்கங்களின் வழக்கமாக இருந்து வருகிறது. சட்டவாக்கச் செயன்முறைகள் அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கம் அல்லது ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்காக அன்றி நாட்டினதும் மக்களினதும் நல்வாழ்வை உறுதி்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கவேணடும். அந்த செயன்முறைகளை அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுக்கவேண்டும். சட்டங்கள் நீதியானவையாகவும் பயனுறுதியுடையவையாகவும் அமைவதை உறுதிப்படுத்துவதற்கு முன்னதாக சமூக நலனில் அக்கறைகொண்ட சட்டநிபுணர்கள்,கல்விமான்கள், மதத்தலைவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களுடன் விரிவான கலந்தாலோசனைகளை நடத்துவதும் மக்களின் கருத்துக்களை அறிந்துகொள்வதற்கு ஏற்பாடுகளைச் செய்வதுமே ஆரோக்கியமான ஜனநாயக செயன்முறைகளாக இருக்கும். இணையவெளி பாதுகாப்பு சட்டத்தைக் கொண்டுவருவதற்கு முன்னதாக அகல்விரிவான விவாதங்கள் முன்னெடுக்கப்பட்ட இரு சர்வதேச உதாரணங்களை அவதானிகள் கவனத்துக்கு கொண்டு வந்திருக்கிறார்கள் நான்கு வருடகால பொது விவாதத்துக்கு பின்னரே பிரிட்டிஷ் பாராளுமன்றம் இரு வாரங்களுக்கு முன்னர் இணையவெளி பாதுகாப்பு சட்டமொன்றை நிறைவேற்றியது. உலகளாவிய சமூக ஊடகத் தளங்களுடன் மாத்திரமல்ல, சட்டத்தரணிகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஈடுபாடு கொண்ட அமைப்புக்களுடனும் விரிவான கலந்தாலோசனைகள் நடத்தப்பட்டன. அந்த சட்டத்தின் உள்ளடக்கங்கள் கணிசமானளவுக்கு மீளாய்வு செய்யப்பட்டதுடன் பொதுமக்களினாலும் பாராளுமன்றத்தின் மக்கள் சபை மற்றும் பிரபுக்கள் சபையினாலும் முன்மொழியப்பட்ட திருத்தங்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டன.அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு இலங்கை சட்டமூலத்தில் கூறப்பட்டிருப்பதைப் போன்று அரசாங்கத் தலைவரினால் நியமிக்கப்டும் ஒரு ஆணைக்குழுவிடம் அல்ல ஐக்கிய இராச்சியத்தின் அரச ஒழுங்கமைப்பு நிறுவனமான தகவல் தொடர்பு அலுவலகத்திடமே ( UK Office of Communications) ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.பிரிட்டிஷ் சடடம் கருத்துவெளிபாட்டு சுதந்திரத்தை பாதுகாப்பதில் கருத்தூன்றிய கவனத்தைச் செலுத்தியிருக்கிறது என்று தகவல் அறிவதற்கான உரிமை ஆணைக்குழுவின் உறுப்பினரும் குடியியல் மற்றும் மனித உரிமைகள் விவகாரங்களில் மிகுந்த அக்கறைகொண்டவருமான சட்டத்தரணி கிஷாலி பின்ரோ ஜெயவர்தன எழுதியிருக்கிறார். இலங்கையின் இணையவெளி பாதுகாப்புச் சட்டமூலம் சிங்கப்பூரின் சமூக ஊடக பாதுகாப்பு சடடத்தை(Protection from Online Falsehood and Monipulation Act) பின்பற்றியதாக வரையப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அரசியல் நோக்கங்களுக்காக சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கும் பேச்சு சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலை தோற்றுவிக்கவும் கூடியவை என்று நியாயமான அச்சத்தை தரக்கூடியதாக சில ஏற்பாடுகள் இலங்கையின் சட்டமூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன என்று அவதானிகள் கூறுகிறார்கள். ஒளிவுமறைவின்றி பரந்தளவிலான பொது ஆலோசனைச் செயன்முறைகளுக்குப் பின்னரே சிங்கப்பூர் பாராளுமன்றத்துக்கு அந்த சட்டமூலம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இலங்கையில் அரசாங்க வர்த்தமானியில் சட்டமூலம் வெளியான பின்னரே விவாதம் அதுவும் அரசாங்க தரப்பின் ஈடுபாடு இன்றி சிவில் சமூக அமைப்புக்களினால் முன்னெடுக்கப்படுகிறது. இந்த விவாதங்களில் முன்வைக்கப்படுகின்ற கருத்துக்களை அரசாங்கம் கவனத்தில் எடுத்து மாற்றங்களைச் செய்யமுன்வருமா என்று நம்பிக்கை வைக்கக்கூடியதாக நிலைவரம் இல்லை. ஏனென்றால் இன்னொரு மக்கள் கிளர்ச்சி மூண்டுவிடுமோ என்று அஞ்சிக்கொண்டிருக்கும் அரசாங்கத்தைப் பாதுகாப்பதே சட்டமூலத்தின் உண்மையான நோக்கமாக இருக்கிறது. இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படுமேயானால் தோன்றக்கூடிய நிலைவரம் எவ்வாறானதாக இருக்கும் என்பதை உணர்த்துவதற்கு உகண்டாவின் முன்னாள் சர்வாதிகாரி இடி அமீன் தனது நாட்டில் பேச்சு சுதந்திரம் பற்றி ஒரு தடவை தெரிவித்த கருத்தை நினைவுபடுத்துவது பொருத்தமானதாக இருக்கும். “உகண்டாவில் பேச்சுச் சுதந்திரம் இருக்கிறது. ஆனால் பேச்சுக்கு பிறகு அந்த சுதந்திரத்தை உறுதிப்படுத்த முடியாது.” (வீரகேசரி வாரவெளியீடு) https://arangamnews.com/?p=10023
  12. எமது முன்னாள் ஜனாதிபதிகளின் அரசியல் September 18, 2023 —- வீரகத்தி தனபாலசிங்கம் — றொடீசியா என்று முன்னர் அழைக்கப்பட்ட ஆபிரிக்க நாடான சிம்பாப்வேயில் சிறுபான்மை வெள்ளையரின் ஆட்சிக்கு எதிரான கறுப்பின மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு தலைமை தாங்கியவர் றொபேர்ட் முகாபே. வெள்ளையர் ஆட்சிக்கு முடிவுகட்டப்பட்ட பிறகு அவர் 1980 தொடக்கம் 1987 வரை அந்த நாட்டின் பிரதமராகவும் 1987 தொடக்கம் 2017 வரை ஜனாதிபதியாகவும் பதவிவகித்தார். மொத்தமாக 37 வருடங்கள் அவர் ஆட்சியதிகாரத்தில் இருந்தார். அதிகாரத்தில் இருந்து இறங்கவிரும்பாமல் நீண்டகாலமாக பதவியில் இருந்த முகாபேயிடம் ஒரு தடவை செய்தியாளர் ஒருவர், “நீங்கள் எப்போது சிம்பாப்வே மக்களுக்கு பிரியாவிடை கொடுக்கப்போகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு பதிலாக அவர், “ஏன் எனது நாட்டு மக்கள் வேறு எங்காவது போகப்போகிறார்களா?” என்று கிண்டலாக ஒரு கேள்வியைத்தான் கேட்டார். இன்னொரு தடவை வேறு ஒரு செய்தியாளர் முகாபேயிடம் ‘”நீங்கள் எப்போது ஓய்வுபெறுவீர்கள்? உங்களுக்கு பிறகு பதவிக்கு வரப்போகிறவர் யார்?” என்று கேட்டார். அதற்கு அவர், “எனக்கு ஓய்வுபெறும் நோக்கம் இல்லை. எனக்கு பிறகு பதவிக்கு வருவதற்கு எவரையும் நான் நியமிக்கப்போவதில்லை. நான் 100 வயது வரை வாழ்வேன்” என்று பதிலளித்தார். அப்போது அவருக்கு 92 வயது. அந்த செய்தியாளர் தொடர்ந்தும் ஓய்வு குறித்து கேள்விகளைக் கேட்கவே முகாபே ஆத்திரமடைந்து “நான் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருக்கிறேன் என்பதை உங்களுக்கு ஒரு குத்துவிட்டு நிலத்தில் வீழ்த்தித்தான் நிரூபித்துக்காட்டவேண்டும் என்று விருப்புகிறீர்களா?” என்று கேட்டார். சிம்பாப்வே மக்களுக்கு விடுதலை வேண்டிக்கொடுத்த முன்னாள் புரட்சிவாதி அதிகாரவெறி காரணமாக மிகவும் அவமானப்படுத்தப்பட்ட நிலையில் தான் பதவியில் இருந்து இறங்கவேண்டிவந்தது. முகாபேயின் கட்சியினரே அவருக்கு எதிராக சதி செய்து உப ஜனாதிபதியை பதவிக்கு கொண்டுவந்தார்கள். அல்லாவிடடால் அவர் இறங்கியிருக்கவே மாட்டார். இறுதியில் 2019 செப்டெம்பரில் தனது 95 வயதில் முகாபே மரணமடைந்தார். இவரைப் போன்றே ஆபிரிக்காவில் வெள்ளையர் ஆட்சியில் இருந்து கறுப்பின மக்களுக்கு விடுதலை பெற்றுக்கொடுத்த இன்னொரு வரலாற்று முக்கியத்துவம் கொண்ட போராட்டத்துக்கு தலைமை தாங்கிய ஒரு தலைவர் பதவி ஆசை கிஞ்சித்தும் இல்லாமல் அரசியல் ஞானியாக நடந்துகொண்ட காரணத்தால் உலகின் பெருமதிப்பைப் பெற்றார். அவர் தான் தென்னாபிரிக்காவின் நெல்சன் மண்டேலா. சிறுபான்மை வெள்ளையரின் இன ஒதுக்கல் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக 1994 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த மண்டேலா ஒரு ஐந்து வருடப் பதவிக்காலத்துக்கு பிறகு 1999 ஆம் ஆண்டில் பதவியில் இருந்து இறங்கி ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் அடுத்த மட்டத் தலைவர்களுக்கு வழிவிட்டார். அவர் தொடர்ந்தும் ஜனாதிபதியாக பதவியில் இருக்கவேண்டும் என்று விரும்பியிருந்தால் எவரும் எதிர்த்திருக்க மாட்டார்கள். 2004 ஆம் ஆண்டு அரசியலில் இருந்து முற்றாக ஓய்வுபெற்றுக்கொண்ட மண்டேலா 2013 டிசம்பரில் தனது 95 வயதில் மரணமடைந்தார். தங்களது மக்களுக்கு வெள்ளையர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றுக்கொடுத்த இரு ஆபிரிக்கத் தலைவர்களில் ஒருவர் பதவிவெறி காரணமாக சொந்த மக்களினால் வெறுக்கப்பட்டு அபகீர்த்திக்குள்ளான அதேவேளை மற்றவர் பதவி ஆசையே இல்லாமல் இலட்சிய வாழ்க்கை வாழ்ந்தமைக்காக உலகில் எமது யுகத்தின் தலைசிறந்த அரசியல்ஞானிகளில் ஒருவராகப் போற்றப்படுவதைக் காண்கிறோம். இந்த கதைகளை இன்று கூறி ஒரு பீடிகையைப் போடுவது நாட்டின் உயர் பதவியை வகித்து பதவிக்காலம் முடிந்து வீட்டுக்கு போய்விட்ட பின்னரும் அரசியலைக் கைவிட மனமில்லாதவர்களைப் பற்றியும் மற்றும் அதிகாரத்தில் இருந்து மக்களால் விரட்டியடிக்கப்பட்டாலும் கூட மீண்டும் பதவிக்கு வருவதற்கு துடிக்கும் அரசியல்வாதிகளைப் பற்றியும் வெளியாகின்ற செய்திகள் மீது ஒரு பார்வையை செலுத்துவதற்கேயாகும். தற்போது இலங்கையில் நான்கு முன்னாள் ஜனாதிபதிகள் இருக்கிறார்கள். சந்திரிகா குமாரதுங்கவும் மகிந்த ராஜபக்சவும் இரு பதவிக்காலங்களுக்கு அதிகாரத்தில் இருந்தவர்கள். மைத்திரிபால சிறிசேன ஒரு பதவிக்காலத்துக்கு மாத்திரம் அதிகாரத்தில் இருந்த அதேவேளை கோட்டாபய ராஜபக்ச தனது பதவிக்காலத்தின் இடைநடுவில் கடந்த வருடம் மக்கள் கிளர்ச்சியை அடுத்து பதவியில் இருந்து விலகியவர். இவர்களில் எவருமே அரசியலில் இருந்து ஓய்வுபெறத் தயாராயில்லை. வாழும் முறையால் வழிகாட்டவேண்டும் என்று நினைக்கக்கூடிய அளவுக்கு நயநாகரிகம் இல்லாதவர்கள். திருமதி குமாரதுங்கவைப் பொறுத்தவரை பதவியில் இருந்து இறங்கிய பின்னர் அவரது அரசியல் ஈடுபாடு என்பது பெருமளவுக்கு ராஜபக்சாக்களுக்கு எதிரான அணிதிரட்டல்களுக்கு உதவும் நோக்குடனேயே இருந்து வந்திருக்கிறது. மகிந்தவுக்கு எதிராக இரு ஜனாதிபதி தேர்தல்களில் எதிரணியின் பொது வேட்பாளர்களை களமிறக்குவதில் திருமதி குமாரதுங்க முன்னின்று செயற்பட்டார். மற்றும்படி முக்கியமான பிரச்சினைகள் தொடர்பில் அவ்வப் போது ஊடகங்களுக்கு நேர்காண்களை வழங்குவது, அறிக்கைளை வெளியிடுவதுடன் அவரது செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டவையாகவே உள்ளன. கடந்த நூற்றாண்டில் ஐக்கிய தேசிய கட்சியின் 17 வருடகால ஆட்சிக்கு பிறகு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவந்த பெருமைக்குரிய திருமதி குமாரதுங்க இந்த நூற்றாண்டின் முற்பகுதிவரை தங்களது குடும்பத்தின் தலைமைத்துவத்தில் இருந்த கட்சி இன்று சிறிசேனவின் தலைமைத்துவத்தில் மக்கள் செல்வாக்கை இழத்து நிற்பதை கைகட்டிப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. மீட்பு முயற்சி எதையும் முன்னெடுக்கக்கூடிய வல்லமை அவரிடம் இல்லை. மகிந்தவைப் பொறுத்தவரை 2005 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு சுதந்திர கட்சியை பண்டாரநாயக்க குடும்பக் கட்சி என்ற நிலையில் இருந்து ராஜபக்ச குடும்பக் கட்சியாக மாற்றினார். இரு பதவிக் காலங்களுக்கு ஜனாதிபதியாக இருந்த அவரினால் 2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் சிறிசேனவிடம் தோல்விகண்ட பிறகு சுதந்திர கட்சியின் தலைமைத்துவத்தை தங்கள்வசம் வைத்திருக்கமுடியாமல் போய்விட்டது. பிறகு ராஜபக்சாக்கள் தங்களுக்கென்றே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை தொடங்கி மீண்டும் ஆட்சியையும் பிடித்தார்கள். ஆனால், ராஜபக்சாக்கள் கனவிலும் ஒருபோதும் நினைத்துப்பார்த்திருக்க முடியாதவகையில் கடந்த வருடம் மக்கள் கிளர்ச்சி அவர்களை அதிகாரத்தில் இருந்து விரட்டியது. ஆனால் மீண்டும் அதிகாரத்துக்கு வருவது குறித்து கனவுகண்டு கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் முன்னென்றும் இருந்திராத பல படுமோசமான தவறான அரசியல் மற்றும் ஆட்சிமுறைப் போக்குகளுக்கு வழிவகுத்தவராக விளங்கும் மகிந்த நாட்டின் உயர்பதவியை வகித்துவிட்டு சாதாரண ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதில் எந்த அளெகரியத்தையும் எதிர்நோக்கியதாக தெரியவில்லை. 2015 ஆகஸ்ட் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்தில் கூட்டு எதிரணியின் தலைவராக இருந்த அவர் 2020 பொதுத்தேர்தலில் போட்டியிட்டு தனது சகோதரரின் அரசாங்கத்தில் பிரதமராக பதவிக்கு வந்தார். அதற்கு பிறகு நடந்தவை எல்லாம் அண்மைக்கால வரலாறு. இலங்கையின் அரசியல் வரலாற்றிலே மக்கள் கிளர்ச்சியின் விளைவாக பதவியில் இருந்து இறங்கிய அரசாங்கம் என்றால் அது ராஜபக்சாக்களின் அரசாங்கம்தான். 1953 ஆகஸ்ட் ஹர்த்தால் போராட்டம் பிரதமர் டட்லி சேனநாயக்கவின் அரசாங்கத்தை உலுக்கியது எனினும் அவர் உடனடியாகப் பதவி விலகவில்லை. இரு மாதங்கள் கழித்து அக்டோபர் மாதமே அவர் பதவி விலகினார். முன்னரும் இலங்கை அரசியல் குறிப்பிட்ட சில உயர்வர்க்கக் குடும்பங்களின் ஆதிக்கத்தில் இருந்திருக்கிறது என்றபோதிலும் ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராக வீதிகளில் இறங்கியதைப் போன்று அந்த குடும்பங்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழவில்லை. இத்தகைய வரலாற்று அவமதிப்புக்குள்ளான ஒரு குடும்பம் இன்னமும் கூட அரசாங்கத்தை பின்னணியில் இருந்து இயக்கக்கூடியதாக இருப்பது இலங்கை அரசியலின் ஒரு பெரிய முரண்நகையாகும். மகிந்தவைப் பின்பற்றி முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவும் கடந்த பொதுத்தேர்தலில் அதுவும் பொதுஜன பெரமுவுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு வந்தார். ஜனாதிபதியாக நாட்டை ஆட்சிசெய்த இலட்சணத்தில் மீண்டும் ஜனாதிபதியாவதற்கான தனது விருப்பத்தை அவர் இடைக்கிடை வெளியிடுவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. இரு முன்னாள் ஜனாதிபதிகள் இலங்கை பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். சந்திரிகா குமாரதுங்க மாத்திரம் அவ்வாறு செய்வில்லை. அடுத்து கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவது குறித்து வெளிப்படையாக எதையும் பேசாவிட்டாலும், அவரைப் பயன்படுத்தி தங்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை தேடிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் சில சக்திகள் செயலில் இறங்கியிருக்கின்றன. உலகின் வேறு எந்த நாட்டிலும் மக்கள் கிளர்ச்சியை அடுத்து வெளியேறிய எந்தவொரு தலைவரும் கோட்டாபய போன்று விரைவாக நாடு திரும்பக்கூடியதாக இருந்ததில்லை. வெளிநாடுகளில் தஞ்சமடைவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்காத நிலையில் அவருக்கு இப்போது இலங்கையைத் தவிர பாதுகாப்பான நாடு இல்லை என்ற நிலை. கோட்டாபய பதவி விலகிய பின்னர் அவரை மீண்டும் அரசியலுக்கு இழுப்பதற்கு விசுவாசிகள் பல தடவைகள் விருப்பத்தை வெளிப்படுத்திவந்தனர். கடந்த வருடம் ஆகஸ்டில் தாய்லாந்தில் தங்கியிருந்த வேளையில் கூட அவரை பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் மூலமாக பாராளுமன்றத்துக்கு கொண்டுவருவதற்கு உத்தேசிக்கப்பட்டதாகவும் அதற்கு வசதியாக தனது பதவியை துறக்க அந்த கட்சியின் பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தயாராக இருந்ததாகவும் செய்திகள் வெளியாகின. பிறகு ஒரு கட்டத்தில் கோட்டாயவை பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்து பிரதமராக்கவேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் பாராளுமன்றக் குழுவில் செல்வாக்கு மிக்க ஒரு பிரிவினர் முயற்சிப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இப்போது ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்காரவின் சகோதரர் ஹேமகுமார நாணயக்கார வசமிருந்த மௌபிம (தாய்நாடு ) ஜனதா கட்சியை கோட்டாபயவின் நெருங்கிய சகாவும் பல ஊடக நிறுவனங்களின் உரிமையாளருமான திலித் ஜயவீர பொறுப்பேற்றிருப்பதாகவும் அதற்கு அவர் தனது ஆசீர்வாதத்தையும் ஆதரவையும் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கடந்த வாரம் செய்திகள் வெளியாகின. மக்கள் கிளர்ச்சிக்கு வழிவகுத்த ஆட்சிமுறைத் தோல்விக்கு கோட்டாபய மாத்திரமே காரணம் என்று கூறி அவரை தனிமைப்படுத்த பொதுஜன பெரமுன முயற்சிக்கும் ஒரு நேரத்தில் — அதுவும் அடுத்த வருடத்தைய ஜனாதிபதி தேர்தல் குறித்து பேசப்படும் நிலையில் அவர் தனது சகாவின் கட்சியை ஆதரிக்கக்கூடும் என்ற பேச்சுக்கள் கிளம்பியிருக்கின்றன. எது எவ்வாறிருந்தாலும், அவருக்கு அரசியலில் ஒரு இடத்தை தேடிப்பிடிப்பிடித்து கொடுப்பதற்கு விசுவாசிகள் இயன்றவரை முயற்சிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. வெளிநாட்டுக்கு செல்லாமல் இலங்கையில் தொடர்ந்து வசிப்பதற்கு அவர் முடிவெடுத்தால் அவருக்கு எதிர்காலத்தில் ‘ சிறப்புரிமைகளுடன் ‘ வாழ்வதற்கு குறைந்தபட்சம் பாராளுமன்றத்தில் ஒரு ஆசனமாவது வேண்டாமா என்ன? இரு முன்னாள் ஜனாதிபதிகள் அதற்கு ஏற்கெனவே வழிகாட்டியிருக்கிறார்களே! ராஜபக்சாக்கள் என்னதான் மக்கள் ஆதரவை இழந்திருந்தாலும், அவர்களை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டுவரவேண்டும் என்று பாடுபடும் கணிசமான ஒரு பிரிவினர் இருக்கவே செய்கிறார்கள். ராஜபக்சாக்கள் அதிகாரத்தில் இருந்தபோது அவர்களின் முழுமையான அனுசரணையுடன் முறைகேடான வழிகளில் சொத்துக்களைக் குவித்த அரசியல்வாதிகளும் கோர்ப்பரேட் முதலாளிகளுமே அவர்கள். தாங்களும் தங்களைச் சார்ந்தவர்களும் பொதுச்சொத்துக்களை வாரிச்சுருட்டுவதற்கு வசதியாக ராஜபக்சாக்கள் கடைப்பிடித்த ‘புரவுக் கலாசாரம்’ ( Patronage Culture ) இத்தகைய பழிபாவத்துக்கு அஞ்சாத கும்பல்களை உருவாக்கியிருக்கிறது என்று முன்னரும் ஒரு தடவை இந்த பத்தியில் எழுதப்பட்டது. இந்த கும்பல்களின் விசுவாசம் ராஜபக்ச குடும்பத்தின் உறுப்பினர்களிடையே பரவலாக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒரு பகுதி கோட்டாபயவுக்கும் சேரும். ஜனாதிபதி தேர்தல் நெருங்க நெருங்க கோட்டாபய நெடுகவும் மௌனம் சாதிக்கமுடியாமல் போகும் என்பது நிச்சயம். தனது இரண்டில் ஒரு நிலைப்பாட்டை அவர் பகிரங்கமாகக் கூறவேண்டியிருக்கும். இவ்வாறாக எமது முன்னாள் ஜனாதிபதிகளின் அரசியல் பற்றி நாம் பேசும்போது இன்னொரு முக்கிய விடயத்தை அவதானிக்கவும் தவறக்கூடாது. இவர்கள் எல்லோரும் தொடர்ந்தும் கோடிக்கக்கில் மக்களின் பணத்தில்தான் பராமரிக்கப் படுகிறார்கள். ஓய்வூதியம், பாதுகாப்புடன் கூடிய சிறப்புவசதிகளை அனுபவிக்கிறார்கள். இவர்களில் எவருமே தங்கள் சொந்தத்தில் வசதியாக வாழ முடியாதவர்கள் அல்ல. பொருளாதார மீட்சிக்கு தவிர்க்கமுடியாதவை என்று கூறிக்கொண்டு மக்களினால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு சேவைகளுக்கான கட்டணங்களையும் பல்வேறு வரிகளையும் அதிகரித்து பொருளாதார மறுசீரமைப்பின் சுமையின் பெரும்பகுதியை நாட்டு்மக்கள் மீது சுமத்தும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் அரசாங்கமும் ஓய்வுபெற்ற பிறகு மீண்டும் அரசியலுக்கு வராமல் இருந்தால் மாத்திரமே முன்னாள் ஜனாதிபதிகளை அரசாங்கம் பராமரிக்கும் என்று ஒரு புதிய நடைமுறையையாவது குறைந்தபட்சம் கொண்டுவந்தால் என்ன? மகிந்தவும் சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு இருக்கும் வசதி வாய்ப்புகளுடன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமைகளையும் அல்லவா அனுபவிக்கிறார்கள். https://arangamnews.com/?p=9960
  13. இலங்கைக்கு தேவை ஒரு தர்மன் அல்ல…! September 13, 2023 — வீரகத்தி தனபாலசிங்கம் — வெளிநாடுகளில் குறிப்பாக மேற்கு ஐரோப்பாவில் அல்லது வட அமெரிக்காவில் சிறுபான்மை இனத்தவர்கள் அல்லது புலம்பெயர்ந்த சமூகத்தவர்கள் மக்களால் தெரிவு செய்யப்படும் அரசியல் உயர் பதவிகளுக்கு வரும்போது இலங்கையிலும் அவ்வாறு நடைபெறமுடியுமா என்று மக்கள் மத்தியில் பேசப்படுவதும் ஊடகங்களில் அலசப்படுவதும் வழமையாகிவிட்டது. அமெரிக்காவில் கறுப்பினத்தவரான பராக் ஒபாமா ஜனாதிபதியாக தெரிவானபோது, இந்திய — ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹரிஸ் துணை ஜனாதிபதியாக வந்தபோது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனாக் கடந்த வருடம் பிரிட்டிஷ் பிரதமராக வந்தபோது அவ்வாறெல்லாம் பேசப்பட்டது. இப்போது யாழ்ப்பாணப் பூர்வீகத்தைக் கொண்ட தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூரின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருப்பதை அடுத்தும் அதே நிலைமையை காண்கிறோம். செப்டெம்பர் முதலாம் திகதி நடைபெற்ற சிங்கப்பூரின் ஆறாவது ஜனாதிபதி தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இரு சீன வேட்பாளர்களை தோற்கடித்து அமோக வெற்றியைப் பெற்ற பிறகு நிகழ்த்திய எந்தவொரு உரையிலும் தர்மன் தனது பூர்வீகத்தைப் பற்றி எதையும் குறிப்பிட்டதாகக் காணவில்லை. என்றாலும் அவரின் வெற்றி குறித்து இலங்கைத் தமிழர்கள் பெருமைப்படுவது இயல்பானதே. சிங்கப்பூரின் ஜனாதிபதியாக தெரிவாகியிருக்கும் முதலாவது தமிழர் தர்மன் அல்ல. அவருக்கு முதல் இந்திய வம்சாவளி தமிழரான எஸ். ஆர். நாதன் இரு தடவைகள் ( 1999, 2005 ஜனாதிபதி தேர்தல்களில் ) ஜனாதிபதியாக அதுவும் போட்டியின்றித் தெரிவானார். தர்மன் தெரிவாகியிருப்பது ஒரு தசாப்தத்துக்கு அதிகமான காலத்துக்கு பிறகு அங்கு நடைபெற்ற போட்டித் தேர்தலில் என்பது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணப் பூர்வீகத்தைக்கொண்ட தமிழர்களோ அல்லது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்களோ சிங்கப்பூரில் அரசியல் பதவிகளுக்கு வருவது ஒன்றும் புதுமையல்ல. பலர் முக்கிய பதவிகளில் காலங்காலமாக இருந்திருக்கிறார்கள். கடந்த நூற்றாண்டில் வெளியுறவு அமைச்சராக பதவி வகித்த யாழ்ப்பாணப் பூர்வீகத்தைக் கொண்ட சின்னத்தம்பி இராஜரத்தினம் அந்த நாட்களில் உலக அரங்கில் மிகவும் பிரல்யமானவராக விளங்கினார். தற்போதும் தமிழர்கள் பலர் சிங்கப்பூரில் பல்வேறு முக்கிய அமைச்சர் பதவிகளில் இருக்கிறார்கள். பொருளாதார நிபுணரான 66 வயதான தர்மனும் கூட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு முன்னதாக பல வருடங்களாக நிதியமைச்சர், கல்வியமைச்சர் உட்பட பல்வேறு அமைச்சர் பதவிகளை வகித்துவந்ததுடன் இறுதியாக பிரதி பிரதமராகவும் இருந்தார். அந்த நாட்டில் காணப்படுகின்ற அரசியல் கலாசாரமும் ஆட்சிமுறைமையும் அவ்வாறு பல்வேறு சமூகங்களையும் சேர்ந்தவர்கள் முக்கிய அரசியல் பதவிகளுக்கு வருவதற்கு வாய்ப்பான சூழலை உருவாக்கிக் கொடுத்திருக்கின்றன. தர்மனின் தேர்தல் வெற்றியை அடுத்து முன்னாள் அமைச்சரும் தற்போதைய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான எரான் விக்கிரமரத்ன ருவிட்டரில் செய்த பதிவொன்றில் “சிங்கள இனத்தைச் சாராத இலங்கையர்கள் சொந்த நாட்டில் பிரதமராகவோ அல்லது ஜனாதிபதியாகவோ வருவதற்கு முன்னதாக இன்னொரு நாட்டில் பிரதமராக அல்லது ஜனாதிபதியாக வருவார்கள் என்று நான் எதிர்வு கூறியிருந்தேன். இனம், சாதி, மதம் மற்றும் வர்க்க வேறுபாடுகளில் இருந்து விலகி நாமும் திறமை,தகுதியின் அடிப்படையில் நியமனங்கள் இடம்பெறுவதற்கு வழிவகுக்கவேண்டும் ” என்று குறிப்பிட்டிருந்தார். இன,மத,சாதி வேறுபாடுகளுக்கு அப்பால் தகுதியும் திறமையும் அனுபவமும் கொண்டவர்கள் அரசியல் உயர்பதவிகளுக்கு வரக்கூடியதாக ஒரு மாற்றத்தை இலங்கையில் வேரூன்றியிருக்கும் அரசியல் கலாசாரம் அனுமதிக்குமா இல்லையா என்பதை விக்கிரமரத்ன நன்கு அறிவார் என்ற போதிலும், சீனர்களைப் பெரும்பான்மை இனத்தவர்களாகக் கொண்ட சிங்கப்பூரில் யாழ்ப்பாணப் பூர்வீகமுடைய தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக மக்களினால் தெரிவு செய்யப்பட்டது (இலங்கையின் இன உறவுகள் நிலைவரத்தை மனதிற்கொண்டு பார்க்கும்போது) ஏதோ ஒரு வகையில் அவரை உறுத்தியிருக்கிறது போலும். அவரது கருத்துக்கு பலரும் ருடிவிட்டரில் எதிர்வினையாற்றி பதிவுகளை செய்திருந்தார்கள். இலங்கையின் சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் கலாசாரத்தின் மத்தியில் சிறுபான்மை இனத்தை சார்ந்தவர்கள் அத்தகைய உயர் அரசியல் பதவிகளுக்கு வருவது ஒருபோதும் சாத்தியமாகாது என்று பெரும்பாலும் தமிழர்கள் பதிவுகளைச் செய்த அதேவேளை, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிலர் “சிங்கப்பூரில் ஜனாதிபதி பதவி பெருமளவுக்கு சம்பிரதாயபூர்வமானது. சீனர் அல்லாத ஒருவர் அந்த நாட்டின் பிரதமராக வரமுடியுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்” என்று கூறியிருந்தனர். சிங்கப்பூர் ஜனாதிபதி பாராளுமன்றத்தினால் தெரிவுசெய்யப்படும் நடைமுறையே முதலில் இருந்தது. ஆனால், ஜனாதிபதியை மக்கள் தெரிவு செய்வதற்கான நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அந்த பதவியை முற்றிலும் சம்பிரதாயபூர்வமானது என்று கூறமுடியாத அளவுக்கு சில அதிகாரங்கள் அதற்கு இருப்பதை அறியக்கூடியதாக இருக்கிறது. தனது மக்கள் நடவடிக்கை கட்சிக்கு .(People Action Party) பாராளுமன்றத்தில் இருந்த 14 வருடகால ஏகபோகத்தை தகர்க்கும் வகையில் 1981 ஆம் ஆண்டில் இடைத்தேர்தல் ஒன்றில் தொழிற்கட்சி தலைவரான ஜொஷுவா பெஞ்சமின் ஜெயரத்தினம் (இவரும் யாழ்ப்பாணப் பூர்வீகத்தைக் கொண்டவரே ) வெற்றி பெற்றதை அடுத்தே ஜனாதிபதியை மக்கள் நேரடியாக தெரிவுசெய்யும் நடைமுறையைக் கொண்டுவரவேண்டும் என்ற யோசனை அன்றைய பிரதமர் லீ குவான் யூவுக்கு பிறந்ததாகக் கூறப்படுகிறது. அந்த இடைத்தேர்தலுக்கு பிறகு 1984 ஆம் ஆண்டில் நடைபெறவிருந்த பொதுத்தேர்தல் அதிர்ச்சியைத் தரக்கூடிய முடிவுகளைக் கொண்டுவரலாம் என்று அச்சமடைந்த பிரதமர் லீ நாட்டின் கையிருப்புக்களை சூறையாடக்கூடிய ஊழல் பேர்வழிகள் ஆட்சிப்பொறுப்புக்கு வந்தால் ஏற்படக்கூடிய ஆபத்தை உணர்ந்து அதிகார துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கு மக்களால் ஜனாதிபதி தெரிவுசெய்யப்படும் நடைமுறை குறித்து தீவிர கவனம் செலுத்தினார் என்று ஜனாதிபதி தேர்தல் முறை தொடர்பிலான ஆவணம் ஒன்றில் வாசிக்கக்கிடைத்தது. ஏழு வருடங்கள் கழித்து 1991 ஆம் ஆண்டில் ஜனாதிபதியின் வகிபாகம், கடமைகள் மற்றும் அந்த பதவி தெரிவுசெய்யப்படும் முறையில் மாற்றங்களைச் செய்வதற்கு சிங்கப்பூர் குடியரசின் அரசியலமைப்புக்கு திருத்தம் ஒன்று கொண்டுவரப்பட்டது. நாட்டின் கையிருப்புகளைப் பயன்படுத்துதல் மற்றும் முக்கியமான பொதுச்சேவைப் பதவிகளுக்கு நியமனங்களைச் செய்தல் தொடர்பில் ஜனாதிபதிக்கு ‘வீட்டோ ‘ அதிகாரத்தை கொடுப்பது அந்த மாற்றங்களில் முக்கியமானது. இத்தகைய அதிகாரத்தைக் கொண்டிருக்கக்கூடிய ஜனாதிபதி மக்களின் ஆணையைப் பெற்றவராக இருக்கவேண்டும் என்பதாலேயே அவரை மக்கள் நேரடியாக தெரிவுசெய்யவேண்டிய அவசியம் உணரப்பட்டது. அதனால் பல நாடுகளில் இருப்பதைப் போன்ற சம்பிரதாயபூர்வ ஜனாதிபதி பதவிகளுடன் சிங்கப்பூர் ஜனாதிபதி பதவியை ஒரே விதமாகப் பார்ப்பது பொருத்தமானது எனலாம். முதலாவது ஜனாதிபதி தேர்தல் 1993 செப்டெம்பர் முதலாம் திகதி நடைபெற்றது. தர்மனின் தெரிவில் இருக்கக்கூடிய அரசியல் முக்கியத்துவத்தை சிறுமைப்படுத்தும் நோக்குடனேயே சிங்கப்பூரின் பிரதமர் பதவிக்கு சீனர் அல்லாதவர் வருவது சாத்தியமில்லை என்ற தொனியில் சிலர் கருத்துக்களை வெளியிடுகிறார்கள். பெரும்பான்மையினராக சீனர்களைக் கொண்ட நாட்டில் அதே இனத்தைச் சேர்ந்த இரு வேட்பாளர்களுக்கு மேலாக தர்மனை சிங்கப்பூர் மக்கள் அமோகமாக வாக்களித்து (70.4 சதவீத வாக்குகள் ) ஜனாதிபதியாக தெரிவுசெய்திருப்பது இன அடிப்படையில் அந்த மக்கள் அரசியலைப் பார்க்கவில்லை என்பதற்கு பிரகாசமான சான்று. நாய்க்கு அதன் உடலின் எந்தப் பாகத்தில் அடிபட்டாலும் அது பின்னங்காலையே தூக்கிக்கொண்டு ஓடுவது போன்று இலங்கையில் நாம் எந்தப் பிரச்சினையையும் பெரும்பாலும் இனவாத அடிப்படையில் நோக்குவதற்கு பழக்கப்பட்டுவிட்ட துரதிர்ஷ்டவசமான போக்கினால் போலும் சிங்கப்பூரின் அரசியலைப் பேசும்போதும் எமது பழக்கதோசத்தை பிரயோகிப்பதை தவிர்க்கமுடியாமல் இருக்கிறோம். இதுவரையில் சிங்கப்பூரில் ஆறு ஜனாதிபதி தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. அவற்றில் முதல் ஐந்து தேர்தல்களிலும் ஜனாதிபதியாக தெரிவாவதற்கு வாய்ப்புக்கிட்டியிராத ஒரு சமூகத்துக்கு அந்த வாய்ப்புக்கிடைப்பதை உறுதிசெய்வதற்காக — அடுத்த தேர்தலில் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர் ஜனாதிபதியாக தெரிவாவதற்கு வகைசெய்யக்கூடியதாக 2016 ஆம் ஆண்டில் இன்னொரு அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன் விளைவாகவே மலே சமூகத்தைச் சேர்ந்த ஹலீமா ஜாக்கோப் 2017 ஜனாதிபதி தேர்தலில் போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டு கடந்த ஆறு வருடங்களாக அந்த பதவியில் இருந்தார். தர்மன் எதிர்வரும் வியாழக்கிழமை சிங்கப்பூரின் ஒன்பதாவது ஜனாதிபதியாக பதவியேற்கிறார். 1959 ஆம் ஆண்டு முதல் அந்த நாட்டை ஆட்சிசெய்துவரும் மக்கள் நடவடிக்கை கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்சியில் இருந்து விலகினார். ஆட்சியதிகார வர்க்கத்துக்கு மிகவும் நெருக்கமானவராக நோக்கப்படும் அவரின் மாபெரும் வெற்றியை மக்கள் நடவடிக்கை கட்சி மீது சிங்கப்பூர் மக்கள் தொடர்ந்து வைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடு என்று அவதானிகள் கூறுகிறார்கள். சிங்கப்பூரை விட முன்கூட்டியே பிரிட்டனிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்ற இலங்கை உட்பட சில நாடுகளின் தவறுகளில் இருந்து பாடத்தைக் கற்றுக்கொண்டதன் விளைவாகவே தனது நாட்டை இன மோதல்கள், மொழிச்சர்ச்சை, மதரீதியான தகராறுகள் இல்லாத வெற்றிகரமான அரசாக கட்டியெழுப்பக் கூடியதாக இருந்தது என்று முன்னாள் பிரதமர் லீ குவான் யூ பல தடவைகள் கூறியதை இசசந்தர்ப்பத்தில் நினைவு படுத்துவது பொருத்தமானதாகும். தோல்வி கண்ட அரசுகளின் (Failed States ) உதாரணங்கள் தங்கள் முன்னால் இருந்ததால் நாட்டைக் கட்டியெழுப்பும் பணிகளில் எவற்றைத் தவிர்க்கவேண்டும் என்பதை தெளிவாகத் தெரிந்து கொண்டதாகவும் சிங்கப்பூர் மக்களில் சீனர்களே பெரும்பான்மையானவர்களாக இருந்தபோதிலும், தங்களது செயற்பாட்டு மொழியாக ஆங்கிலத்தையே தெரிவுசெய்ததாகவும் லீ கூறியிருந்தார். சுதந்திரத்தின் பின்னரான இலங்கையின் அனுபவத்தையும் சிங்கப்பூரின் அனுபவத்தையும் நோக்கும்போது அந்த நாட்டில் காணக்கூடியதாக இருக்கின்ற மாற்றங்கள் எங்களுக்கு மருட்சியை ஏற்படுத்துவதற்கு எந்த தர்க்க நியாயமும் இல்லை என்றுதான் கூறவேண்டும். ஏழு தசாப்தங்களுக்கும் அதிகமான கால இனப்பிரச்சினை மற்றும் அதன் விளைவான மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போருக்கு பின்னரும் கூட இனங்களுக்கு இடையிலான உறவுகளைப் பொறுத்தவரை சிங்கள அரசியல் சமுதாயத்தின் சிந்தனையில் நேர்மறையான எந்த மாற்றமும் ஏற்பட்டதாக இல்லை.. கடந்த கால அவல அனுபவங்களுக்கு பிறகு எவற்றைத் தவிர்க்க வேண்டுமோ அவற்றை முன்னரை விடவும் உறுதியாக தொடர்ந்து கடைப்பிடிப்பதில் சிங்கள அரசியல் சமுதாயத்தின் பெரும்பகுதி அக்கறை காட்டுவதையே எமது இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் தொடர்பிலான அண்மைக்கால நிகழ்வுப்போக்குகள் பிரகாசமாக வெளிக்காட்டுகின்றன. இன அடிப்படையிலான தப்பெண்ணங்களையும் பிளவுகளையும் இனிமேலாவது கைவிடக்கூடியதாக மக்களை வழிநடத்த இலங்கை அரசியல் சமுதாயம் தயாராயில்லை. ஒபாமா அமெரிக்கர்களினால் குறிப்பாக, வெள்ளை அமெரிக்கர்களினால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவராக இருந்ததற்கு பிரதான காரணம் அமெரிக்காவின் ஆங்கில கிறிஸ்தவ கலாசாரத்தின் முக்கியத்துவத்தை (மறுவாத்தைகளில் மேலாதிக்கம்) அவர் ஏற்றுக்கொண்டமையேயாகும் என்று ஒபாமாவின் தேர்தல் வெற்றியை அடுத்து அன்று கடும்போக்கு சிங்கள பௌத்த தேசியவாதியான போராசிரியர் நளின் டி சில்வா பத்திரிகையில் எழுதியதை வாசித்தது நன்றாக நினைவில் இருக்கிறது. இலங்கையில் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகளில் சிங்கள பௌத்த கலாசாரத்தின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் கூட அதிகாரம் எதுவும் இல்லாத பிரதமர் பதவிக்கேனும் வரமுடியாது என்பதை முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமருக்கு 2004 பொதுத்தேர்தலுக்கு பிறகு ஏற்பட்ட அனுபவம் எமக்கு உணர்த்துகிறது. அதனால், இலங்கைக்கு தேவை ஒரு தர்மன் அல்ல, இனப்பிரச்சினைக்கு சிறுபான்மை இனங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய உருப்படியான அரசியல் தீர்வொன்றைக் காணவேண்டிய அவசியத்தையும் இனிமேலும் அத்தகைய தீர்வொன்றைக் காணத்தவறினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களையும் சிங்கள மக்களுக்கு முறையாக விளங்கவைத்து அவர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய அரசியல் துணிவாற்றலும் தொலைநோக்கும் கொண்ட ஒரு சிங்களத் தலைவரேயாகும். ( வீரகேசரி வாரவெளியீடு ) https://arangamnews.com/?p=9940
  14. தெற்கில் இருந்து கிளம்பும் சர்வதேச விசாரணைக் கோரிக்கைகள் September 12, 2023 — வீரகத்தி தனபாலசிங்கம் — பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி அலைவரிசை இலங்கை விவகாரங்கள் தொடர்பில் விவரணக் காணொளிகளை வெளியிடும் சந்தர்ப்பங்களில் எல்லாம் கிளம்பும் சர்ச்சைகள் சர்வதேச கவனத்தை ஈர்த்துவிடுகின்றன. உள்நாட்டுப் போரின் இறுதி வாரங்கள் பற்றி ‘இலங்கையின் கொலைக்களங்கள்’ ( Sri Lanka’s Killing fields ) என்ற தலைப்பில் 12 வருடங்களுக்கு முன்னர் சனல் 4 வெளியிட்ட புலனாய்வு விவரணக் காணொளியை நாம் எல்லோரும் பார்த்தோம். 2011 ஜூன் 14 ஒளிபரப்பான ‘இலங்கையின் கொலைக்களங்கள்’ பிரிட்டனின் தொலைக்காட்சி வரலாற்றில் மிகவும் விரிவிளக்கமான விவரணக் காணொளிகளில் ஒன்று என்று கூட வர்ணிக்கப்பட்டது. அது மோதல் வலயத்தில் இடம்பெற்ற அதிர்ச்சியும் அச்சமும் தருகின்ற கொடூரமான போர்க் குற்றங்களை உலகிற்கு காண்பித்தது. ஸ்கொட்லாந்து திரைப்படத் தயாரிப்பாளரும் பத்திரிகையாளருமான கலம் மக்ரேயின் நெறியாள்கையில் பிரிட்டிஷ் தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஜோன் சினோவின் விளக்கத்துடன் வெளியான அந்த காணொளியில் போரில் உயிரத்தப்பிய குடிமக்கள், அந்த காலப்பகுதியில் இலங்கையில் இருந்த ஐக்கிய நாடுகள் பணியாளர்கள், மனித உரிமைகள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச சட்ட நிபுணர்களின் நேர்காணல்களும் இடம்பெற்றிருந்தன. இலங்கை அரசாங்கத்தினால் ‘போலியானது’ என்று வர்ணிக்கப்பட்ட காணொளியை மறுதலிக்க பாதுகாப்பு அமைச்சு ‘திட்டமிட்ட பொய்கள்’ ( Lies Agreed upon ) என்ற தலைப்பில் விவரணக் காணொளியை தயாரித்து வெளியிட்டது. ஆனால் ‘இலங்கையின் கொலைக்களங்களுக்கு’ சிறந்த விவரணக் காணொளிகளுக்கான சர்வதேச விருதுகள் சிலவும் கிடைத்தன. இப்போது 12 வருடங்களுக்குப் பிறகு கடந்தவாரம் ( செப்.5) இலங்கை தொடர்பில் சனல் 4 வெளியிட்டிருக்கும் இன்னொரு விவரணக் காணொளி மீண்டும் பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்திருக்கிறது. 2019 ஈஸ்டர் ஞாயிறு (ஏப்ரில் 21 ) கொழும்பிலும் நீர்கொழும்பிலும் மட்டக்களப்பிலும் கிறிஸ்தவ தேவாலயங்களிலும் ஆடம்பர ஹோட்டல்களிலும் பல வெளிநாட்டவர்கள் உட்பட 269 பேரைப் பலிகொண்ட குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் ‘இலங்கையின் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் — செய்தி அனுப்பீடுகள் ‘ ( Sri Lanka’s Easter Bombings — dispatches ) என்ற தலைப்பிலான புதிய காணொளி அந்த குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் பெரிய அரசியல் சதித்திட்டம் ஒன்று பற்றிய தகவல்களை பிரதானமாக சுவிட்சர்லாந்தில் தஞ்சம் கோரியிருக்கும் இலங்கையர் ஒருவரின் நேர்காணலின் மூலம் வெளிப்படுத்துகிறது. தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என்ற சிவனேசதுரை சந்திரகாந்தனின் ஊடகப் பேச்சாளராகவும் நிதிச் செயலாளராகவும் முன்னர் பணியாற்றிய ஹன்சீர் அசாத் மௌலானா என்பவரே சனல் 4 அலைவரிசைக்கு நேர்காணலை வழங்கியிருப்பவர். ராஜபக்சாக்களை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டுவருவதற்கு குறிப்பாக கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறவைப்பதற்கு வசதியாக நாட்டில் பாதுகாப்பற்ற அச்சமான சூழ்நிலையை உருவாக்கும் நோக்குடன் தீட்டப்பட்ட சதித்திட்டத்தின் விளைவே ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்கள் என்று நிறுவுவதை இலக்காகக் கொண்டே அசாத் மொலானா தகவல்களை கூறுகிறார். குண்டுத் தாக்குதல்களை நடத்த இஸ்லாமிய தீவிரவாதிகளை பயன்படுத்துவதற்கு தனது உதவியை இராணவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்த மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே நாடியது பற்றியும் அதுவிடயத்தில் தான் செய்த காரியங்களையும் கூறும் அவர், பிள்ளையானையும் அந்த சதித்திட்டத்தின் ஒரு பங்காளியாக காண்பிக்கிறார். ‘சதித்திட்டம் பற்றிய தகவல்களுக்கு அப்பால் ‘சண்டே லீடர் ‘ ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை, பிள்ளையானை முன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலைவழக்கில் இருந்து விடுவிக்க நீதித்துறையில் செய்யப்பட்ட தலையீடுகள் போன்ற வேறு விவகாரங்கள் தொடர்பிலும் மௌலான பல விடயங்களை கூறியிருக்கின்றார் என்ற போதிலும் இந்த கட்டுரையின் நோக்கம் சனல் 4 காணொளிக்கு பிறகு ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு விடு்க்கப்படும் கோரிக்கைகளில் கவனம் செலுத்துவதே என்பதால் அவற்றை அலசவதை இங்கு தவிர்க்கிறோம். ‘இலங்கையின் கொலைக்களங்கள்’ காணொளியை நிராகரித்து அன்றைய அரசாங்கம் அதன் எதிர்வினையைக் காட்டுவதில் அவதானிக்கக்கூடியதாக இருந்த முனைப்பை புதிய காணொளி விவகாரத்தில் தற்போதைய அரசாங்கத்திடம் காணமுடியவில்லை. ஜெனீவாவில் ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 வது கூட்டத் தொடருக்கு முன்னதாக அரங்கேற்றப்படும் ஒரு ‘நாடகமாக’ சனல் 4 காணொளியை நோக்கும் அரசாங்கம் அதில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஒரு வரம்புக்கு உட்பட்டதாக பதிலளிப்பதே பொருத்தமானது என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகக் கூறப்பட்டது. காணொளியில் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகளில் குறிப்பிடப்படுபவர்கள் மாத்திரம் பதிலளிக்க வேண்டுமே தவிர முழு அரசாங்கமும் அதைச் செய்யத் தேவையில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக் கூடடத்தில் கூறியதாக கடந்த வாரம் செய்திகள் வெளியான போதிலும், நேற்று சனிக்கிழமை அரசாங்கத்தின் சார்பில் பாதுகாப்பு அமைச்சு குற்றச்சாட்டுக்களை திடடவட்டமாக மறுத்து அறிக்கையொன்றை வெளியிட்டது. காணொளி குறித்து அரசாங்கம் புதிய விசாரணையொன்றை நடத்தும் என்றும் பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைப்பது தொடர்பிலான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் பாராளுமன்றத்தில் அமைச்சர் மனுஷ நாணயக்கார முதலில் அறிவித்தார். அதேவேளை இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் கடந்தவாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது தனது முன்னாள் செயலாளர் ஒரு ஏமாற்றுப்பேர்வழி என்றும் அவர் தான் தப்பிப்பிழைப்பதற்காக மற்றவர்களுக்கு துரோகமிழைக்கிறார் என்றும் குறிப்பிட்டார். இலங்கையில் தன்னால் வாழமுடியாது என்று பொய் கூறி மௌலானா வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் கோருகிறார். ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரிகள் இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவினரே என்பதை கத்தோலிக்கத் திருச்சபையும் மற்றையவர்களும் விளங்கிக்கொள்ளவேண்டும் என்று பிள்ளையான் கூறினார். இவை எல்லாவற்றுக்கும் மேலாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த வியாழக்கிழமை நீண்டதொரு அறிக்கையை வெளியிட்டு சனல் 4 காணொளி ராஜபக்சாக்களுக்கு எதிரான வசைமாரி என்றும் அதன் பிரதான நோக்கம் 2005 தொடங்கி ராஜபக்சாக்களின் மரபுக்கு கரிபூசுவதேயாகும் என்றும் கூறியிருக்கிறார். அந்த அலைவரிசையினால் முன்னர் வெளியிடப்பட்ட காணொளிகளைப் போன்றே இதுவும் பொய்கள் நிரம்பியதாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். சனல் 4 காணொளி கிளப்பியிருக்கும் சர்ச்சை தென்னிலங்கையில் இருந்து சர்வதேச விசாரணைக் கோரிக்கை கிளம்புகின்ற சூழ்நிலையை தவிர்க்கமுடியாமல் தோற்றுவித்திருப்பது ஒரு புதிய திருப்பமாகும். காணொளியின் தகவல்கள் குறித்து சர்வதேச விசாரணையொன்று நடத்தப்படவேண்டும் என்று கொழும்பு அதிமேற்றிராணியார் கார்டினல் மல்கம் ரஞ்சித், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்கள் குறித்த விசாரணைகளில் ஆரம்பத்தில் ஈடுபடுத்தப்பட்டு பின்னர் அரசாங்கத்தினால் இடமாற்றம் செய்யப்பட்ட உள்நாட்டு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் உதவியுடன் சுயாதீன சர்வதேச குழுவொன்றினால் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கூறிய கார்டினல் மீண்டும் ஒரு பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அமைப்பது நேரத்தையும் வளங்களையும் விரயம் செய்யும் ஒரு காரியமாகவே முடியும் என்று குறிப்பிடடார். உள்நாட்டில் வெளிப்படையானதும் நியாயமானதுமான விசாரணையொன்று நடத்தப்படவில்லை என்பதனாலேயே சர்வதேச விசாரணையைக் கோருவதாக கூறிய பிரேமதாச குண்டுத்தாக்குதல்கள் குறித்து முன்னர் வெற்றிகரமாக விசாரணையை நடத்திக்கொண்டிருந்தபோது அதில் இருந்து நீக்கப்பட்ட குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிடம் புதிய விசாரணையை ஒப்படைக்கவேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகிறார். பொன்சேகாவும் கடந்தவாரம் பாராளுமன்றத்தில் சர்வதேச விசாரணையே வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். கார்டினல் மல்கம் ரஞ்சித்தைப் பொறுத்தவரை ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்களில் பலியானவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்காவிட்டால் சர்வதேச நீதிமன்றம் ஒன்றின் விசாரணையைக் கோரும் நிர்ப்பந்தம் ஏற்படும் என்று இரு வருடங்களுக்கு முன்னரே கூறியிருந்தார் என்பதும் கடந்த வருடம் மார்ச் மாதம் ஜெனீவா சென்று அன்றைய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பாச்லேயை சந்தித்து குண்டுத்தாக்குதலில் பலியானவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவது குறித்து தனது விசனத்தை வெளிப்படுத்தி முறையிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேவேளை, உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் காட்டும் அக்கறையை கார்டினல் கடுமையாக கண்டனம் செய்தார் என்பது முக்கியமாக நினைவுபடுத்தப்பட வேண்டியதாகும். காலாதிகாலமாக மத நம்பிக்கையுடையதாக விளங்கிவரும் இலங்கை போன்ற நாடொன்றுக்கு மேற்குலக நாடுகள் மனித உரிமைகள் குறித்து ‘போதனை’ செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. மேற்குலகின் புதிய மதமாக மனிதஉரிமைகள் வந்துவிட்டன என்று ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்கு முன்னரான காலப்பகுதியில் 2018 செப்டெம்பரில் ஞாயிறு ஆராதனையொன்றில் கார்டினல் கூறியதாக பதிவுகள் உள்ளன. வேறு பல சந்தர்ப்பங்களிலும் அவர் சர்வதேச தலையீடுகளுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார். இதனிடையே, கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றிய நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச சனல் 4 காணொளி குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணையின் தன்மையை பாராளுமன்றமே தீர்மானிக்கவேண்டும் என்று கூறினார். ஜனாதிபதியாக பதவியேற்ற உடனடியாகவே ரணில் விக்கிரமசிங்க சர்வதேச விசாரணை குறித்து யோசனையை முன்வைத்தார். ஆனால் அதற்கு எந்தவொரு தரப்பிடமிருந்தும் சாதகமான பதில் கிடைக்கவில்லை. அதனால் விசாரணையின் தன்மையை தீர்மானிக்கவேண்டியது இப்போது பாராளுமன்றத்தின் பொறுப்பு என்று அவர் குறிப்பிட்டார். இத்தகைய பின்புலத்தில் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் குறித்து இதுவரையில் நடத்தப்பட்ட விசாரணைகளை ஒரு தடவை திரும்பிப்பார்ப்பது அவசியமானதாகும். குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்ற மறுநாளான ஏப்ரில் 22, 2016 அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர்நீதிமன்ற நீதிபதி விஜித் மலலகொட தலைமையில் குழுவொன்றை நியமித்தார். அந்தக் குழு ஜூன் 10, 2019 அதன் அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்தது. தாக்குதல்கள் நடைபெற்று ஒரு மாதம் கழித்து மே 22, 2019 பாராளுமன்றம் தீர்மானம் ஒன்றின் மூலம் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் தெரிவுக்குழு ஒன்றை நியமித்தது. மலலகொட குழுவின் அறிக்கையும் கூட தெரிவுக்குழுவின் தலைவரிடம் கையளிக்கப்பட்டது. பிறகு செப்டெம்பர் 20, 2019 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலமாக சிறிசேன ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை உயர்நீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வா தலைமையில் நியமித்தார். அந்த ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை தலைவர் பெப்ரவரி 1, 2021 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளித்தார். ஆனால், அந்த அறிக்கையின் பல பகுதிகள் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படு்த்தக் கூடியவையாக இருப்பதாகக் காரணம் கூறி ஜனாதிபதி செயலகம் அவற்றை வெளியிடாமல் நிறுத்திவைத்தது. என்றாலும், அந்த பகுதிகள் உள்ளடங்கலாக இறுதி அறிக்கை ஜனாதிபதி கோட்டாபயவின் அறிவுறுத்தலின் பேரில் பாராளுமன்ற சபாநாயகரிடம் பெப்ரவரி 22, 2022 கையளிக்கப்பட்டது. ஆனால், இந்த குழுக்கள், பாராளுமன்றத் தெரிவுக்குழுக்கள் மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் எல்லாமே குண்டுத் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டவர்களும் கத்தோலிக்க திருச்சபையும் அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு சிவில் சமூக அமைப்புக்களும் கிளப்பிய சகல கேள்விகளுக்கும் பதில்களைத் தரத்தவறிவிட்டன. இது உள்நாட்டு விசாரணைகள் மீது இதுகாலவரையில் தமிழர்கள் மத்தியில் இருந்த நம்பிக்கையீனம் தவிர்க்கமுடியாமல் தென்னிலங்கையில் சிங்கள சமூகத்துக்கு பரவுவதற்கு வழிவகுத்திருக்கிறது. சர்வதேச சமூகமும் இலங்கையின் உள்நாட்டு விசாரணைகளில் நம்பிக்கையீனத்தை அண்மைக்காலமாக வெளியிட்டு வருவதும் கவனிக்கத்தக்கது. ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 வது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் 2019 ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்கள் போன்ற அடையாளபூர்வ முக்கியத்துவம் வாய்ந்த மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் சரவதேச உதவியுடன் சர்வதேச நியமங்களுக்கு இசைவான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் மனித உரிமைகள் காண்காணிப்பகம் ( Human Rights Watch ) உட்பட ஒன்பது சரவதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் கூட்டாக கடந்தவாரம் வெளியிட்ட அறிக்கையொன்றில் இலங்கையின் முன்னைய விசாரணைக் குழுக்கள் உண்மையை வெளிக்கொணரவும் நீதியை வழங்கவும் தவறிய நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கின்றன என்றும் அதனால் அரசாங்கத்தின் உத்தேச ‘தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு’ குறித்தும் கடுமையான சந்தேகங்கள் கிளம்புகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவையெல்லாம் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கைகளை வலுப்படுத்தக்கூடியவையாக அமைந்திருக்கின்றன. சனல் 4 காணொளியின் நம்பகத்தன்மை குறித்து வேறுபட்ட அபிப்பிராயங்கள் இருக்கலாம். அது வேறு விடயம். ஆனால், குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் காணப்படுகின்ற வழமைக்கு மாறான தாமதங்களும் உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டறிவதில் காணப்படும் அக்கறையின்மையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி மறுக்கப்படுகின்றது என்ற குற்றச்சாட்டை மாத்திரமல்ல, பின்னணியில் இருந்திருக்கக் கூடியவர்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்தப்படுகின்றது என்ற சந்தேகத்தையும் கடுமையாக வலுப்படுத்துகிறது. இந்த நிகழ்வுப் போக்குகள் எல்லாம் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையில் பல வருடங்களாக உறுதியாக இருக்கும் தமிழர்களின் நிலைப்பாட்டின் நியாயத்தையே பிரகாசமாக துலங்க வைக்கின்றன. ஆனால், தென்னிலங்கையில் இன்று சர்வதேச விசாரணையைக் கோருபவர்கள் தங்களின் கோரிக்கையை நியாயப்படு்த்துவதற்கு கூறும் காரணங்களே அடிப்படையில் தமிழர்களின் கோரிக்கையின் பின்னணியிலும் இருக்கிறது என்பதை இனிமேலாவது ஒத்துக்கொள்ள முன்வருவாரகள் என்று எதிர்பார்க்க முடியாது. அது தான் இலங்கை அரசியல். ( ஈழநாடு ) https://arangamnews.com/?p=9936
  15. புதிய அரசியல் அணிசேருகைகள் August 28, 2023 —- வீரகத்தி தனபாலசிங்கம் —- கடந்த வருடத்தைய பொருளாதார நெருக்கடியும் மக்கள் கிளர்ச்சியும் நவீன இலங்கை அதன் வரலாற்றில் முன்னென்றும் கண்டிராதவை. அதே போன்றே அவற்றுக்கு பின்னரான அரசியல் நிகழ்வுப் போக்குகளும் கட்சிகளின் புதிய அணிசேருகைகளும் கூட முன்னர் எவரும் நினைத்துப் பார்த்திராதவை. அண்மையாநாட்களாக அரசியல் கட்சிகள் புதிய கூட்டணிகளை அமைக்கும் முயற்சிகளில் தீவிர அக்கறை காட்டத் தொடங்கியிருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. ஜனாதிபதி தேர்தலை தவிர வேறு எந்த தேர்தலையும் அண்மைய எதிர்காலத்தில் எதிர்பார்க்கமுடியாது என்பதே யதார்த்த நிலையாக இருக்கும்போது சில முக்கிய எதிரணி கட்சிகளின் கூட்டணி அமைக்கும் முயற்சிகளை நோக்கும்போது அவை ஜனாதிபதி தேர்தலுக்கு மாத்திரமல்ல, பாராளுமன்ற தேர்தலுக்கும் கூட தங்களை தயார்படுத்தத் தொடங்கிவிட்டன போன்று தெரிகிறது. ஜனாதிபதி தேர்தலை தவிர வேறு எந்த தேர்தலிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அக்கறை இல்லை. வேறு தேர்தல்களைப் பற்றி அவர் முன்னிலையில் எவராவது பேசினால் அவருக்கு ஆத்திரமும் கூட வருகிறது. வேறு எந்த தேர்தலையும் தற்போதைக்கு நடத்துவதற்கு அவரும் அரசாங்கமும் அனுமதிக்கப் போவதுமில்லை என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டிருக்கும் உள்ளூராட்சி தேர்தல்களையோ அல்லது அண்மைய வாரங்களாக வலியுறுத்தும் மாகாணசபை தேர்தல்களையோ நடத்த இறங்கிவரக்கூடியதாக அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுக்க மக்களை அணிதிரட்டி வீதிகளில் இறக்கக்கூடிய வல்லமையும் எதிரணிக் கட்சிகளிடம் இல்லை. இரு மாதங்களுக்கு முன்னர் நுவரேலியாவில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேசிய சட்ட மகாநாட்டில் உரையாற்றிய விக்கிரமசிங்க இளைஞர்கள் உட்பட நாட்டு மக்களில் அதிகப்பெரும்பான்மையானவர்களுக்கு தேர்தல்களில் மாத்திரமல்ல, அரசியல் கட்சி முறையிலும் நம்பிக்கை இல்லாமற்போய்விட்டது என்றும் தேர்தல் ஒன்று நடைபெறும் பட்சத்தில் சகல கட்சிகளும் சேர்ந்து பெறக்கூடிய வாக்குகளும் கூட ஐம்பது சதவீதத்தை தாண்டப்போவதில்லை என்றும் கூறியது எல்லோருக்கும் நினைவிருக்கும். தேர்தல்களுக்கு முகங்கொடுக்கத் தயங்கும் ஒரு ஜனாதிபதி அவ்வாறு கூறுவதில் உள்ள பொருத்தப்பாடு குறித்து கேள்விகள் உண்டு. ஆனால், இன்றைய நிலையில் எந்த அரசியல் கட்சியுமோ அல்லது அரசியல் அணியுமோ மக்களின் அமோக செல்வாக்குடன் இல்லை என்பது உண்மையே. ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றால் பிரதான வேட்பாளர்களில் எவருமே ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை முதல் சுற்று எண்ணிக்கையில் பெறக்கூடிய சாத்தியம் குறித்தும் பாராளுமன்ற தேர்தலில் எந்தவொரு அணியுமே அறுதிப் பெரும்பான்மையைப் பெறும் சாத்தியம் குறித்தும் வலுவான சந்தேகங்களை அரசியல் அவதானிகள் எழுப்புகிறார்கள். சில மாதங்களுக்கு முன்னர் சில சிவில் சமூக அமைப்புக்களினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்புகளும் இதையே உணர்த்தி நின்றன. இத்தகைய பின்புலத்திலேயே தற்போது அரசியல் கட்சிகள் முன்னெடுக்கும் கூட்டணி முயற்சிகளை நோக்கவேண்டியிருக்கிறது. உள்ளூராட்சி தேர்தல்களுக்கு நியமனப்பத்திரங்கள் கோரப்பட்டபோது கூட்டணி அமைப்பது குறித்து அக்கறை காட்டாத எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவருமான சஜித் பிரேமதாச தற்போது எந்த தேர்தல் பற்றியும் உறுதியான அறிவிப்பு வெளிவராத நிலையில் கூட கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் இறங்கியிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ராஜபக்சாக்களின் பொதுஜன பெரமுனவில் இருந்து வெளியேறி பாராளுமன்றத்தில் சுயாதீனமான அணிகளாக செயற்படுபவற்றில் ஒன்றான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்,டலஸ் அழகப்பெரும தலைமையிலான அணியுடன் முக்கியமான பேச்சுவார்த்தைகளை பிரேமதாச அண்மையில் நடத்தியிருந்தார். 13 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அந்த அணியுடன் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி அமைக்கும் தறுவாயில் இருக்கிறது என்றும் ஜனாதிபதி தேர்தலில் அந்த அணி பிரேமதாசவை ஆதரிக்கும் என்றும் கூறப்படுகிறது. அதேவேளை அந்த அணி பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சின்னத்தில் போட்டியிடக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் அழகப்பெருமவை பிரதமர் பதவிக்கு நியமிக்கவேண்டும் என்று அவர்கள் விருப்பத்தை வெளியிட்டிருப்பதாகவும் கடந்தவாரம் செய்திகள் வெளியாகியிருந்தன. கடந்த வருடம் பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அழகப்பெருமவுக்கு ஆதரவாக தனது வேட்புமனுவை பிரேமதாச வாபஸ் பெற்றுக்கொண்டதை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது இரு தரப்பினரும் ராஜபக்சாக்களுக்கும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கும் எதிராக எதிர்காலத்திலும் ஒத்துழைத்துச் செயற்படக்கூடிய வாய்ப்புக்கள் தாராளமாக இருக்கின்றன என்று நம்பலாம். அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரோ பலரோ தங்கள் பழைய தலைவரான விக்கிரமசிங்கவிடம் சென்றுவிடக்கூடிய சாத்தியத்தையும் நிராகரிப்பதற்கில்லை. பிரேமதாச தனது கட்சியை முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் தெரியவில்லை. அதனால் பலமான கூட்டணியொன்றை அமைத்து தன்னை வலுப்படுத்தவேண்டிய அவசியமும் அவருக்கு இருக்கிறது. இது இவ்வாறிருக்க, உள்ளூராட்சி தேர்தல் களுக்காக பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்து நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்த ஜனாதிபதியின் ஐக்கிய தேசிய கட்சி தற்போது பெரமுனவில் இருந்து உறுப்பினர்களை இழுத்தெடுத்து தன்னுடன் ஒத்துப்போகக்கூடிய வேறு கட்சிகளையும் சேர்த்துக்கொண்டு பரந்த கூட்டணியொன்றை அமைக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறது. அடுத்துவரக்கூடிய ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சாக்களின் ஆதரவுடன் விக்கிரமசிங்க களமிறங்கக்கூடிய சாத்தியம் குறித்து பேசப்பட்ட காலம் ஒன்று இருந்தது. அந்த நிலைமை இப்போது இல்லை. எந்த தேர்தலிலும் ராஜபக்சாக்களை முன்னிலைப்படுத்தி களமிறங்குவது குறித்தே பொதுஜன பெரமுனவின் முக்கிய அரசியல்வாதிகள் பேசிவருகிறார்கள். இலங்கை வரலாறு முன்னென்றும் காணாத மக்கள் கிளர்ச்சி தங்களை ஆட்சியதிகாரத்தில் இருந்து விரட்டியதை மறந்தவர்களாக மக்களின் ஆதரவுடன் ‘ மீண்டெழுவது ‘ பற்றி கனவு கண்டு கொண்டிருக்கும் ராஜபக்சாக்களைப் பொறுத்தவரை கடந்த கால தவறுகளுக்கு பொறுப்புக் கூறவேண்டிய கடப்பாட்டில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கு விக்கிரமசிங்கவை விடவும் பொருத்தமான அரசியல்வாதி கிடையாது என்றாலும், அவருடன் அவர்கள் பெருமளவுக்கு முரண்படக்கூடிய திசையிலேயே அரசியல் நிகழ்வுப்போக்குகள் அமைகின்றன. பொதுஜன பெரமுனவின் சில முக்கிய உறுப்பினர்கள் குறிப்பாக அமைச்சர்கள் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதற்கான தங்கள் விருப்பத்தை ஏற்கெனவே வெளியிட்டிருந்த நிலையில், தற்போது கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிமால் லான்ச ‘ முதன்மையான கூட்டணி ‘ (Alliance Number One ) என்று தனது அணிக்கு பெயரிட்டு அலுவலகமொன்றையும் திறந்து பொதுஜன பெரமுனவில் இருந்து உறுப்பினர்களை ஜனாதிபதி பக்கம் இழுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். தனது முயற்சிக்கு பொதுஜன பெரமுனவின் 40 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும் மேலும் பலர் இணையவிருக்கிறார்கள் என்று உரிமைகோரும் நிமால் லான்ச ஐக்கிய தேசிய கட்சியுடனும் வேறு பல கட்சிகளுடனும் சேர்ந்து பரந்த கூட்டணியொன்றை அமைப்பதே நோக்கம் என்பதை வெளிப்படையாகவே கூறுகிறார். இவரது செயற்பாடுகளுக்கு உடந்தையாக இருக்கவேண்டாம் என்று பொதுஜன பெரமுனவின் ‘ உண்மையான ‘ தலைவரான பசில் ராஜபக்ச ஏற்கெனவே ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின. அவர் இவ்வாறு தன்னிடம் வேண்டுகோள் விடுத்தபோது ராஜபக்சாக்கள் தங்களது ஆட்சிக்காலத்தில் தனது கட்சியை எவ்வாறாக எல்லாம் சீர்குலைத்தார்கள் என்பதை விக்கிரமசிங்க நினைத்துப் பார்க்காமலா இருந்திருப்பார்? தற்போது முன்னெடுக்கப்படும் முயற்சிகளை அடுத்து பரந்தளவிலான கூட்டணிகள் அமைக்கப்படும் பட்சத்தில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியும் ஐக்கிய தேசிய கட்சியுடனான நிமால் லான்ச அணியின் கூட்டணியுமே எதிர்காலத் தேர்தல்களில் பலம்பொருந்திய அரசியல் அணிகளாக விளங்கக்கூடும் என்று சில அரசியல் அவதானிகள் எதிர்பார்க்கிறார்கள். ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பேரணிகளுக்கும் வீதிப் போராட்டங்களுக்கும் மக்களை அணிதிரட்டுவதில் வியக்கத்தக்க ஆற்றல் கொண்ட சக்தியாக இருக்கின்ற போதிலும் மக்கள் கிளர்ச்சிக்கு பின்னரான சூழ்நிலைகளில் அதற்கு அதிகரித்திருப்பதாக நம்பப்படும் மக்கள் செல்வாக்கை பரீட்சித்துப் பார்ப்பதற்கு தேர்தல் வாய்ப்பொன்று கிடைக்கவில்லை. ஜே.வி.பி.யின் கூட்டங்களிலும் ஊர்வலங்களிலும் மக்கள் பெருமளவில் கலந்துகொள்கின்ற போதிலும் தேர்தல்களில் அந்த ஆதரவு வாக்குகளாக மாறுவதில்லை என்ற வழமையான வாய்ப்பாட்டை தற்போது அந்த கட்சிக்கு அதிகரித்திருக்கும் மக்கள் ஆதரவுக்கு பிரயோகிப்பது பொருத்தமானது அல்ல என்று பரவலாக நம்பப்படுகிறது. அதை ஒரு தேர்தலில்தான் பரீட்சித்துப் பார்க்கமுடியும். உள்ளூராட்சி தேர்தல்கள் அதற்கு சிறந்த களமாக அமையும் என்று ஜே.வி.பி. தலைவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அது சாத்தியமாகவில்லை. தேர்தல்களை நடத்தாமல் காலத்தைக் கடத்திக்கொண்டு போனால் நாளடைவில் ஐக்கிய மக்கள் சக்தியின் மக்கள் செல்வாக்கு அருகிவிடும் என்று ஜனாதிபதியும் அரசாங்கமும் நினைக்கவும் கூடும். ஆனால் அந்த கட்சியின் பேரணிகளில் மக்கள் தொடர்ந்தும் பெருமளவில் கலந்துகொள்கிறார்கள். பொதுஜன பெரமுன கூட்டணியில் இருந்து வெளியேறி தனியான அணியாக செயற்படும் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி, உதய கம்மன்பிலவின் பிவிதுரு ஹெல உறுமய, கெவிந்து குமாரதுங்கவின் யுத்துகம தேசிய இயக்கம், அத்துரலியே ரதன தேரரின் கட்சி போன்ற கடும்போக்கு இனவாத அரசியல் கட்சிகளும் ‘ உத்தர லங்கா சபாகய’ (Supreme Lanka Coalition) என்ற கூட்டணியை அமைத்திருக்கின்றன. அதில் ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜ கட்சி, வாசுதேவ நாணயக்காரவின் ஜனநாயக இடதுசாரி முன்னணி போன்ற இடதுசாரிக்கட்சிகளும் அங்கம் வகிப்பது இலங்கை அரசியலின் மிகப்பெரிய நகைச்சுவை. இந்த இடதுசாரிக் கட்சிகளுக்கு அவை அங்கம் வகிக்கும் கூட்டணியின் திசைமார்க்கத்தை தீர்மானிப்பதில் உருப்படியான எந்தப் பங்கும் இல்லை என்பது வெளிப்படையானது. வீரவன்ச, கம்மன்பில போன்ற இனவாத அரசியல்வாதிகளுக்கு ராஜபக்சாக்களிடம் இருந்து பிரிந்த பிறகு குறிப்பாக கடந்த வருடத்தைய பொருளாதார நெருக்கடிக்கு பின்னரான சூழ்நிலையில், அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க சிங்கள மக்கள் மத்தியில் முன்வைப்பதற்கு உருப்படியான கொள்கைகளோ செயற்திட்டங்களோ இருக்கவில்லை. ஆனால், திடீரென்று அரசியலமைப்புக்கான 13 திருத்தம் தொடர்பில் மூண்டிருக்கும் சர்ச்சையும் வடக்கு,கிழக்கில் பௌத்த விகாரைகளை அமைப்பது தொடர்பிலான தகராறுகளும் அவர்களுக்கு கைகொடுத்திருக்கிறது. அவற்றை தங்களால் இயன்றவரை பயன்படுத்தி அவர்கள் தென்னிலங்கையில் மீண்டும் பேரினவாத அரசியல் அணிதிரட்டலை தீவிரமாக முன்னெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தெரிந்த அரசியலும் அதுதான். அவ்வாறான அணிதிரட்டல் அடுத்து வரக்கூடிய எந்தவொரு தேசிய தேர்தலிலும் பிரசாரக் களத்தில் பேரினவாத உணர்வுகளை மேலோங்கச்செய்யும் என்பதில் சந்தேகமில்லை. இது அடிப்படையில் ராஜபக்சாக்களின் அரசியலுக்கு வாய்ப்பானதே தவிர ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு உதவப்போவதில்லை. 13 வது திருத்தத்தை சரியான முறையில் கையாளத் தவறியதன் விளைவை அவரே இறுதியில் அனுபவிக்க வேண்டியும் வரலாம். ஐக்கிய தேசிய கட்சியும் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியும் அமைக்க முயற்சிக்கும் கூட்டணிகள் ராஜபக்சாக்களிடமிருந்து பிரிந்த அரசியல் அணிகளையும் வரும் நாட்களில் பிரிந்துவரக்கூடியவை என்று எதிர்பார்க்கப்படும் அணிகளையும் குறி வைப்பவையாகவே இருக்கின்றன. தங்களை மேலும் பலவீனப்படுத்தக்கூடிய இந்த முயற்சிகளை ராஜபக்சாக்கள் எவ்வாறு கையாளப்போகிறார்கள் என்பது முக்கியமான கேள்வி. ராஜபக்சாக்களை பொறுத்தவரை பேரினவாத அணிதிரட்டல் என்பது அவர்களுக்கு கைவந்தகலை. மீண்டெழுவதற்கு அவர்களுக்கு இருக்கக்கூடிய ஒரே வழிமுறை திரும்பவும் பேரினவாத அணிதிரட்டலே. இலங்கையில் பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்த ஒரு வாய்ப்புத் தாருங்கள் என்று அவர்கள் கேட்டால் மக்கள் ஒருபோதும் நம்பப்போவதில்லை. ஆனால், தவறான ஆட்சிமுறையையும் ஊழலையும் மூடிமறைக்க இனிமேலும் பேரினவாத அணிதிரட்டலுக்கு அனுமதிக்கக்கூடாது என்பது ராஜபக்சாக்களின் அரசியல் மூலமாக நாடும் மக்களும் அனுபவிக்க நேர்ந்த துன்பங்கள் மூலமாக கற்றுக்கொண்ட முக்கியமான படிப்பினையாகும். இது எந்தளவுக்கு சிங்கள மக்களின் அரசியல் சிந்தனைகளில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அடுத்த ஒரு தேர்தல் மாத்திரமே வெளிக்காட்டும். https://arangamnews.com/?p=9904
  16. இனப்பிரச்சினைத் தீர்வுக்கு எதிரான சக்திகளை மேலும் வலுப்படுத்தும் ஜனாதிபதியின் அணுகுமுறைகள் Veeragathy Thanabalasingham on August 17, 2023 Photo, THE TIMES OF INDIA இலங்கையின் தற்போதைய அரசியலமைப்புக்கு அது நடைமுறையில் இருந்துவரும் நான்கரை தசாப்தங்களுக்கும் அதிகமான காலகட்டத்தில் கொண்டுவரப்பட்ட இருபதுக்கும் அதிகமான திருத்தங்களில் வேறு எதுவும் 13ஆவது திருத்தம் போன்று பெரும் சர்ச்சைக்குள்ளாகியது இல்லை என்று இந்தப் பத்தியில் ஏற்கெனவே சில தடவைகள் குறிப்பிட்டிருந்தோம். கடந்த வருடம் நடுப்பகுதியில் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு இனப்பிரச்சினைக்கு விரைவில் அரசியல் தீர்வைக் காணப்போவதாகக் கூறிக்கொண்டு 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ரணில் விக்கிரமசிங்க பேசத் தொடங்கிய நாள் முதல் அது தொடர்பில் அரசியல் சர்ச்சை தீவிரமடையத்தொடங்கியது. அரசியலமைப்பில் நீண்டகாலமாக இருந்துவரும் ஒரு திருத்தத்துக்கு எதிராக இலங்கையில் கிளம்பியிருக்கின்றதைப் போன்ற எதிர்ப்பை அண்மைய வரலாற்றில் உலக நாடுகளில் வேறு எங்கும் ஒரு அரசியலமைப்பு ஏற்பாடு சந்தித்ததாக நாம் இதுவரை அறியவில்லை. அரசியலமைப்பு மீறப்படுவதற்கு எதிராகவே போராட்டங்கள் நடத்தப்படவேண்டும். ஆனால், எமது நாட்டில் நீண்டகாலமாக தொடரும் அரசியலமைப்பு மீறல் ஒன்றை தொடருமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி போராட்டங்கள் இடம்பெறுகின்றன. ஆசியாவின் பழமைவாய்ந்த ஜனநாயக நாடுகளில் ஒன்றின் அரசியல் சமுதாயத்தின் இனவாத அடிப்படையிலான கோணல் போக்கின் வெளிப்பாடு இது. 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு புறப்பட்ட ஜனாதிபதி விக்கிரமசிங்க இப்போது அதன் அதிகாரங்களைக் குறைக்கும் ஒரு செயன்முறையை, அறிந்தோ அறியாமலோ முடுக்கிவிட்டிருக்கிறார் என்றுதான் கூறவேண்டும். மாகாணங்களுக்கான பொலிஸ் அதிகாரங்களை நீக்கி அந்தத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வழிவகைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கருத்தொருமிப்பை எதிர்பார்த்து அரசியல் கட்சிகளிடம் அவர் ஆகஸ்ட் 15 இற்கு முன்னர் யோசனைகளைக் கோரியிருக்கும் நிலையில், சில கடும்போக்கு சிங்கள தேசியவாத சக்திகள் காணி அதிகாரம் குறித்தும் கேள்வியெழுப்பத் தொடங்கியிருப்பது கவனிக்கத்தக்கது. கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய விசேட உரை தொடர்பில் முன்கூட்டியே பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டுவந்து கடந்த மாத இறுதியில் (ஜூலை 26) அவர் கூட்டிய நாடாளுமன்ற கட்சிகளின் மகாநாட்டில் (சர்வகட்சி மகாநாடு) அவர் வெளியிட்ட கருத்துக்களுடன் ஒப்பிடும்போது சபையில் ஆற்றிய உரை சாராம்சத்தில் பெரிய வித்தியாசத்தைக் கொண்டிருக்கவில்லை எனலாம். 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக கூறிய விக்கிரமசிங்க ஒரு நாடு என்ற வகையில் நாம் முன்னோக்கிச் செல்வதற்கு இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வைக்காண வேண்டியிருக்கிறது என்று குறிப்பிட்டார். நாட்டின் அபிவிருத்திக்கும் எதிர்காலத்துக்கும் பொருத்தமான முறையில் அந்தத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டியது அவசியம் என்று கூறிய அவர் திறந்த மனதுடனான விரிவான பேச்சுவார்த்தைகள், கலந்தாலேசனைகள் மூலம் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் கருத்தொருமிப்புக்கு வந்தால் மாத்திரமே அதைச் சாதிக்கமுடியும் என்றும் சுட்டிக்காட்டினார். ஜூலை 26 சர்வகட்சி மகாநாடு பற்றி குறிப்பிட்ட ஜனாதிபதி 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் குறிக்கோள் தொடர்பில் அன்றைய தினம் கருத்தொருமிப்பு எதுவும் காணப்படவில்லை என்பதையும் அதிகாரப்பரவலாக்கப் பொறிமுறை குறித்து எந்தக் கருத்தும் வெளிப்படையாக முன்வைக்கவில்லை என்பதையும் ஒத்துக்கொண்டார். சில கட்சிகள் அவற்றின் கருத்துக்களை முன்வைப்பதற்கு தயக்கம் காட்டுகின்றன. வேறு சில கட்சிகள் அவநம்பிக்கையுடனேயே மகாநாட்டுக்கு வந்தன. கடந்த கால சர்வகட்சி மகாநாடுகளின் எதிர்மறையான அனுபவங்கள் அதற்கு காரணமாக இருக்கலாம். இனிமேல் இந்த நிலைமையை மாற்றுவோம் என்று கூறிய விக்கிரமசிங்க அரசாங்கத்தின் சகல செயற்பாடுகளையும் எதிர்ப்பதே எதிர்க்கட்சியின் பங்கு என்று நோக்கும் மரபில் இருந்தும் எதிர்க்கட்சியின் கருத்துக்களை பொருட்படுத்தாமல் அரசாங்கம் செயற்படும் வழக்கத்தில் இருந்தும் விலகியிருப்போம் என்று ஒரு புதிய அரசியல் கலாசாரம் பற்றியும் பிரசங்கம் செய்தார். நாடாளுமன்றத்தின் இணக்கப்பாட்டுடன் மாகாண சபைகள் சட்டங்களை மீளாய்வு செய்வதற்கும் புதிய சட்டங்களைக் கொண்டு வருவதற்குமான திட்டங்கள் குறித்து பேசிய அவர் உத்தேச மாற்றங்களில் வாக்களிப்புக்கு மாவட்ட விகிதாசார முறையைக் கடைப்பிடித்தல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு வகைசெய்தல், பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25 சதவீதமாக அல்லது அதற்கும் கூடுதலாக அதிகரித்தல் போன்ற நோக்கங்கள் அடங்குவதாக குறிப்பிட்டார். இலங்கை அரசியல் விவகாரங்கள் குறித்து இடையறாது எழுதிவரும் இந்திய மூத்த அரசியல் ஆய்வாளரான என். சத்தியமூர்த்தி ஜனாதிபதியின் நாடாளுமன்ற உரை குறித்து கருத்து வெளியிடுகையில், “13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது நாட்டின் அபிவிருத்திக்கும் எதிர்காலத்துக்கும் அவசியம் என்று கூறிய விக்கிரமசிங்க அதை எவ்வாறு என்று விளக்கிக் கூறவில்லை. அதேபோன்றே அதன் நடைமுறைப்படுத்தலுக்கு அரசியலமைப்பு திருத்தங்களும் மாகாண சபைகள் சட்டங்களில் மாற்றங்களும் தேவை என்று குறிப்பிட்டார். ஆனால், அது குறித்தும் விளக்கமாகக் கூறவில்லை. அவர் இதுவரையில் கூறியதெல்லாம் மாகாண சபைகள் பொலிஸ் அதிகாரங்களை எதிர்பார்க்கமுடியாது என்பதேயாகும். ஆனால், மாகாண சபைகளுக்கான பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களே இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையின் மையக்கூறாகவும் 13ஆவது திருத்தத்தின் அடிப்படையாகவும் அமைந்தன” என்று கூறியிருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, விக்கிரமசிங்க தனதுரையில், ” கடந்த 36 வருடங்களாக 13ஆவது திருத்தத்தின் மூலமாக மாகாண சபைகளை நடைமுறைப்படுத்துவதில் நாம் வெற்றி கண்டிருக்கின்றோமா? அல்லது அது ஒரு தோல்வியாகப் போய்விட்டதா? இந்த விளைவுகளுக்கும் பங்களிப்புச் செய்த காரணிகள் எவை?” என்று ஏதோ எதுவும் அறியாதவர் போன்று கேள்விகளை வேறு கிளப்பியிருக்கிறார். இப்போது இறுதியாக 13ஆவது திருத்தத்தை அதன் அதிகாரங்களில் குறைப்புச்செய்தாவது நடைமுறைப்படுத்துவதை முற்றுமுழுதாக நாடாளுமன்றத்தின் பொறுப்பில் ஜனாதிபதி விட்டுவிட்டார். நாடாளுமன்றத்தினால் தெரிவுசெய்யப்பட்ட காரணத்தினால் மாத்திரமல்ல, முன்னைய எந்தவொரு ஜனாதிபதியையும் போன்று இல்லாமல் நாடாளுமன்றத்தில் அடிக்கடி உரையாற்றிவரும் ஜனாதிபதியாகவும் விக்கிரமசிங்க விளங்குவதால் அவரை ‘நாடாளுமன்ற ஜனாதிபதி’ என்று அரசியல் விமர்சகர்கள் சிலர் வர்ணிக்கிறார்கள். அவரும் சட்டரீதியாக தன்னால் செய்யக்கூடிய பல கடமைகளையும் கூட நாடாளுமன்றத்தின் பொறுப்பில் விட்டுவிட்டு தனக்கு சேதம் இல்லாத ஒரு வலயத்திற்குள் நின்றுகொள்கிறார். இந்நிலையில், ராஜபக் ஷகளின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களை பெரும்பான்மையாகக் கொண்ட தற்போதைய நாடாளுமன்றத்தினால் 13ஆவது திருத்தம் தொடர்பில் காணப்படக்கூடிய கருத்தொருமிப்பின் இலட்சணம் எவ்வாறிருக்கும் என்பதை விளங்கிக்கொள்வதில் எவருக்கும் சிரமம் இல்லை. ஜனாதிபதி விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை, 13ஆவது திருத்தம் தொடர்பில் கிளம்பியிருக்கும் சர்ச்சையில் ஒரு புறத்தில் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண விரும்புகின்ற ஒரு தலைவராகவும் அதேவேளை மறுபுறத்தில் சிங்கள தேசியவாத சக்திகளின் அக்கறைகளை கருத்தில் எடுத்து செயற்படுகின்ற தலைவராகவும் தன்னை காட்சிப்படுத்தக்கூடிய அணுகுமுறைகளை கடைப்பிடிக்கிறார். 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் விவகாரத்தில் சிங்கள மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க எவரும் இல்லை. விக்கிரமசிங்கவும் கூட தனது நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் கொண்டுசெல்வதற்கு முயற்சிக்கப்போவதில்லை. அதேவேளை அந்தத் திருத்தத்துக்கு எதிரான சக்திகளே முன்னெப்போதையும் விட வலுவடைந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் உள்ள சிங்கள கட்சிகளில் எதுவுமே கருத்தொருமிப்பைக் காண ஒத்துழைப்பதற்குப் பதிலாக அடுத்துவரக்கூடிய தேர்தல்களில் சிங்கள மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக முன்னரையும் விட கூடுதலான அளவுக்கு சிறுபான்மை இனங்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எதிரான தேசியவாத நிலைப்பாடுகளை எடுப்பதிலேயே அக்கறை காட்டும். 13ஆவது திருத்தத்தை அரசியலமைப்பில் இருந்து முற்றாக நீக்கிவிடவேண்டும் என்ற கோரிக்கை தென்னிலங்கையில் ஓங்கி ஒலிக்கத்தொடங்கிவிட்டது. அடுத்துவரக்கூடிய எந்தவொரு தேர்தலிலும் தென்னிலங்கையில் சிங்கள தேசியவாத அரசியல் நிகழ்ச்சி நிரலே முன்னுரிமை பெறக்கூடிய சூழ்நிலை தோற்றுவிக்கப்படுகிறது. உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் முக்கிய பங்கு வகித்த இராணுவ அதிகாரிகளை 13ஆவது திருத்தத்துக்கு எதிராக தூண்டிவிடும் செயற்பாடுகளையும் சிங்கள தேசியவாத அரசியல் சக்திகள் முன்னெடுக்கின்றன. அந்தத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிப்பது நாட்டுப்பிரிவினையை தடுக்க தங்கள் உயிர்களை தியாகம் செய்த படைவீரர்களுக்கு செய்யும் துரோகம் என்று கூறி மீண்டும் அரசியலில் இராணுவவாதப் போக்கிற்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது. ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் முயற்சிகள் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக்காண்பதற்கு ஆதரவான சக்திகளை வலுப்படுத்துவதற்குப் பதிலாக அதற்கு எதிரான சக்திகள் முழுவீச்சில் களத்தில் இறங்குவற்கு வாய்ப்பான சூழலையே இறுதியில் தென்னிலங்கையில் உருவாக்கியிருக்கின்றன. அது அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பாலும் அவருக்குப் பாதகமாகவே அமையக்கூடும். வீரகத்தி தனபாலசிங்கம் https://maatram.org/?p=11008
  17. 13 படும்பாடு August 4, 2023 — வீரகத்தி தனபாலசிங்கம் — இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பு 45 வருடங்களுக்கும் அதிகமான காலமாக நடைமுறையில் இருந்துவருகிறது. இதுவரையில் அதற்கு 21 திருத்தங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. பதவியில் இருந்த ஜனாதிபதிகள் தங்களது அரசியல் நலன்களுக்கு வசதியான முறையில் கொண்டுவந்த திருத்தங்களே — அடிப்படையில் ஜனநாயக விரோதமான ஏற்பாடுகளைக்கொண்ட திருத்தங்களே அவற்றில் அதிகமானவை எனலாம். ஆனால், அத்தகைய ஜனநாயக விரோத திருத்தங்களையும் விட மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்கம் செய்வதை நோக்கமாகக் கொண்ட — ஜனநாயக பரிமாணத்தைக் கொண்ட 13 வது திருத்தமே மிகவும் நீண்டகாலமாக கடுமையான அரசியல் சர்ச்சைக்குரியதாக இருந்து வருகிறது. 1983 கறுப்பு ஜூலைக்கு பிறகு இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியாவின் நேரடித் தலையீட்டை அடுத்து 1987 ஜூலை 29 இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட சமாதான உடன்படிக்கையின் பிரகாரம் மாகாணசபைகளை அமைப்பதற்கு வசதியாக அதே வருடம் நவம்பர் 14 பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அந்த திருத்தம் தற்போது 36 வருடங்களுக்கு பிறகு முன்னென்றும் இல்லாத அளவுக்கு பெரும் சர்ச்சைக்குள்ளாக்கப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வந்த பிறகு இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கென்று கூறிக்கொண்டு முன்னெடுக்கும் முயற்சிகளே இதற்கு காரணமாகும். இந்த சர்ச்சை குறித்து ஆராய்வதற்கு முன்னதாக மாகாணசபைகளின் வரலாற்றை சுருக்கமாக நோக்குவது பொருத்தமாக இருக்கும். 13வது திருத்தத்துடன் சேர்த்து மாகாணசபைகள் சட்டமும் நிறைவேற்றப்பட்டு முதன்முதலாக 1988 ஏப்ரில் 28 வடமத்திய, வடமேற்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணசபைகளுக்கும் அடுத்து அதே வருடம் ஜூன் 2 மத்திய, தென் மற்றும் மேல் மாகாண சபைகளுக்கும் தேர்தல்கள் நடத்தப்பட்டன. சமாதான உடன்படிக்கையின் பிரகாரம் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக1988 செப்டெம்பரில் இணைக்கப்பட்டன. ஒரே இணைந்த மாகாணத்துக்கு (இந்திய அமைதி்காக்கும் படை நிலைகொண்டிருந்த காலப்பகுதியில்) 1988 நவம்பர் 19 தேர்தல் நடத்தப்பட்டது. இந்தியப் படைகள் 1990 மார்ச் இறுதியில் இலங்கையில் இருந்து முற்றாக வாபஸ் பெறப்படுவதற்கு முன்னதாக இணைந்த மாகாணத்தின் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப்பெருமாள் ‘ஒருதலைப்பட்ச சுதந்திர பிரகடனத்தை’ செய்துவிட்டு இந்தியாவுக்கு சென்ற பிறகு அன்றைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அந்த மாகாணசபையைக் கலைத்துவிட்டு நேரடி ஆட்சியைக் கொண்டுவந்தார். இணைந்த மாகாணம் 2008 வரை ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஆளுநர்களினாலேயே நிருவகிக்கப்பட்டுவந்தது. இரு மாகாணங்களும் இணைக்கப்பட்டு ஒரு வருடத்துக்கு பிறகு இணைப்பு தொடரவேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் சர்வஜனவாக்கெடுப்பொன்றை நடத்துவதற்கான ஏற்பாடு சமாதான உடன்படிக்கையில் இருந்தது. அந்த வாக்கெடுப்பை முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவினாலோ அல்லது அவருக்கு பிறகு பதவிக்கு வந்த வேறு எந்த ஜனாதிபதியினாலுமோ நடத்தக்கூடியதாக இருக்கவில்லை. ஒவ்வொரு வருடமும் இணைப்பை நீடிக்கும் பிரகடனங்களை ஜனாதிபதிகள் தொடர்ச்சியாக பிறப்பித்துக்கொண்டே வந்தனர். தற்காலிக இணைப்பு சுமார் இருபது வருடங்கள் நீடித்தது. ஆனால், இணைப்பை துண்டித்து இரு மாகாணங்களுக்கும் தனித்தனியான மாகாணசபைகள் அமைக்கப்படவேண்டும் என்று கோரி ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) 2006 ஜூலை 14 தாக்கல்செய்த மூன்று மனுக்களை விசாரணைசெய்த உயர்நீதிமன்றம் இரு மாகாணங்களையும் இணைப்பதற்கு ஜனாதிபதி ஜெயவர்தன செய்த பிரகடனங்கள் செல்லுபடியற்றவை என்றும் சட்டரீதியாக வலுவற்றவை என்றும் கூறி 2006 அக்டோபர் 16 தீர்ப்பளித்தது. 2007 ஜனவரி முதலாம் திகதி வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும் உத்தியோகபூர்வமாக பிரிக்கப்பட்டன. தனியான கிழக்கு மாகாணசபைக்கு 2008 மே மாதத்திலும் நீண்டகால இழுபறிக்கு பிறகு வடக்கு மாகாணசபைக்கு 2013 செப்டெம்பரிலும் தேர்தல்கள் நடத்தப்பட்டன. மாகாணசபைகள் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய ஏழு மாகாணங்களிலும் இரண்டாவது தடவையாக 1993 ஆம் ஆண்டிலும் மூன்றாவது தடவையாக 1999 ஆம் ஆண்டிலும் நான்காவது தடவையாக 2004 ஆம் ஆண்டிலும் தேர்தல்கள் நடத்தப்பட்டன. ஐந்தாவது தடவையாக 2008/09 ஆண்டுகளில் கிழக்கு மாகாணம் உட்பட எட்டு மாகாணங்களில் கட்டங்கட்டமாக தேர்தல்கள் நடத்தப்பட்டன. ஆறாவது தடவையாகவும் 2012/14 ஆண்டுகளில் வடக்கு மாகாணம் ( 25 வருடங்களுக்கு பிறகு முதற்தடவையாக ) உட்பட எட்டு மாகாணங்களுக்கு கட்டங்கட்டமாக தேர்தல்கள் நடத்தப்பட்டன. இறுதியாக தேர்தல்கள் நடந்த மாகாணசபைகளின் பதவிக்காலங்கள் முடிவடைந்த பிறகு தற்போது ஒன்பது மாகாணங்களும் ஐந்து வருடங்களாக — அதிகாரப்பலவலாக்க கோட்பாட்டை அவமதிக்கும் வகையில் — ஆளுநர்களின் நிருவாகத்தின் கீழ் இருந்துவருகின்றன. மாகாணசபை முறையை எதிர்க்கும் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் தேர்தல்கள் மூலம் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் இல்லாமல் இவ்வளவு நீண்டகாலத்துக்கு மாகாணசபைகள் ஆளுநர்களினால் நிருவகிக்கப்பட்டு வருவதற்கு எதிராக நாட்டு மக்கள் கிளர்ந்தெழவில்லையே என்று கூறுவதையும் காண்கிறோம். உள்ளூராட்சி சபைகளைப் போன்று மாகாண சபைகளுக்கும் கலப்பு தேர்தல் முறையை ( விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் தொகுதி முறையும் ) அறிமுகம் செய்வதற்கு ‘ நல்லாட்சி ‘ அரசாங்க காலத்தில் 2017 செப்டெம்பரில் மாகாணசபை தேர்தல்கள் சட்டத்துக்கு ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டது. எல்லை நிர்ணயக்குழு 2018 ஆகஸ்டில் சமர்ப்பித்த அறிக்கையை பாராளுமன்றம் அங்கீகரிக்க மறுத்ததை அடுத்து மீளாய்வுக்கு பிரதமர் விக்கிரமசிங்க தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவும் சட்டத்தின் பிரகாரம் இரு மாதங்களுக்குள் அதன் அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்கத் தவறியது. அதனால் மாகாணசபை தேர்தல்கள் ஐந்து வருடங்களாக நடத்தப்படாமல் இருக்கின்றன. இத்தகையதொரு பின்புலத்திலேயே 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் முயற்சிகள் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் மீண்டும் வாதங்களை மூளவைத்திருக்கின்றன. கடந்த வருட பிற்பகுதியில் பாராளுமன்றத்தில் பட்ஜெட் விவாதத்தின்போது இனப்பிரச்சினைக்கு இலங்கையின் 75 வது சுதந்திர தினத்துக்கு (2023 பெப்யவரி 4) முன்னதாக அரசியல் தீர்வைக் காணப்போவதாக அறிவித்த ஜனாதிபதி விக்கிரமசிங்க டிசம்பரிலும் இவ்வருடம் ஜனவரியிலும் இரு தடவைகள் பாராளுமன்ற கட்சிகளின் மகாநாட்டைக் கூட்டினார். எமது இனப்பிரச்சினை திகதி குறித்து தீர்வு காணக்கூடிய ஒரு விவகாரம் அல்ல என்பதை புரிந்துகொள்ளமுடியாத அளவுக்கு அவர் அரசியல் அனுபவம் இல்லாதவர் அல்ல என்றபோதிலும், அவ்வாறு தன்னை ஒரு பொருந்தாத் தன்மைக்கு ஏன் உட்படுத்தினார் என்பதை புரிந்துகொள்ளமுடியவில்லை. பாராளுமன்ற கட்சிகளின் அந்த மகாநாட்டில் வடக்கு,கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணுமாறு தமிழ் அரசியல் கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு இணக்கத்தை ஜனாதிபதி தெரிவித்த போதிலும் அதில் முன்னேற்றம் காணமுடியாமல் போய்விட்டது. அதனால் மகாநாட்டில் தொடர்ந்தும் பங்கேற்பதில் பயனில்லை என்ற முடிவுக்கு அந்த கட்சிகள் வந்தன. தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரை,விக்கிரமசிங்கவின் முயற்சிகளின் ஊடாக இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணமுடியும் என்ற நம்பிக்கையில் அல்ல, அவரின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்ற பழி தங்களுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே மகாநாட்டில் பங்கேற்பதற்கு முன்வந்ததாக வெளிப்படையாகவே கூறத்தவறவில்லை. இதற்கிடையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் விழாவில் உரையாற்றிய விக்கிரமசிங்க 13 வது திருத்தத்தை இரு வருடங்களில் முழுமையாக நடைமுறைப்படுத்த தனது அரசாங்கம் படிப்படியாக நடவடிக்கைகளை எடுக்கும் என்று அறிவித்தார். அவரின் அந்த ‘ தைப்பொங்கல் பிரகடனத்துக்கு ‘ தென்னிலங்கையில் குறிப்பாக மகாசங்கம் மற்றும் சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. முன்னைய ஜனாதிபதிகளில் எவருமே 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஒருபோதும் முயற்சிக்கவில்லை என்பதால் விக்கிரமசிங்கவும் அவர்களைப் போன்றே நடந்துகொள்ள வேண்டும் என்று பௌத்த பீடங்களின் மகாநாயக்கர்கள் கூட்டாக அவருக்கு கடிதம் எழுதினர். அந்த திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் இலங்கை முன்னென்றும் காணாத மிகப்பெரிய இனக்கலவரம் மூளும் என்ற விமல் வீரவன்ச, சரத் வீரசேகர போன்ற கடும்போக்கு சிங்கள தேசியவாத அரசியல் வாதிகள் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் எச்சரிக்கை செய்தனர். கிளம்பிய எதிர்ப்பைக் கண்டு பின்வாங்கிய ஜனாதிபதி சுதந்திர தினத்தன்று மாலை நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் ஆற்றிய உரையிலும் பெப்ரவரி 8 பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்து நிகழ்த்திய கொள்கைவிளக்க உரையிலும் 13 வது திருத்தத்தை பற்றி வாய்திறக்கவேயில்லை. கொள்கைவிளக்க உரையை அவர் நிகழ்த்திக்கொண்டிருந்தபோது பாராளுமன்றத்துக்கு அண்மையாக கூடி ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய பிக்குமார் 13 வது திருத்தத்தின் பிரதிகளை தீயிட்டுக் கொளுத்தியதைக் கண்டோம். அரசியலமைப்பில் ஏற்கெனவே இருப்பதை நடைமுறைப்படுத்த வேண்டிய கடமை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற முறையில் தனக்கு இருப்பதாக ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்று கூட்டத்தில் கூறிய விக்கிரமசிங்க, ஒன்றில் 13 திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் அல்லது அதை இல்லாதொழிக்கவேண்டும் என்று அதை எதிர்க்கும் சிங்கள அரசியல்வாதிகளைப் பார்த்துக் கூறினார். அந்த திருத்தத்தை இல்லாதொழிக்க பாராளுமன்ற உறுப்பினர்களில் எவராவது அரசியலமைப்புக்கான 22 வது திருத்தச்சட்ட மூலத்தை தனிநபர் பிரேரணையாகக் கொண்டுவரலாம் என்று யோசனை சொல்லிக்கொடுத்தார். சிங்கள தேசியவாத சக்திகளைப் பொறுத்தவரை, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு குறிப்பாக 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதற்கு விக்கிரமசிங்கவுக்கு மக்கள் ஆணை கிடையாது என்பதும் அவ்வாறு அவர் செய்யவிரும்பினால் ஜனாதிபதி தேர்தல் ஒன்றில் மக்களிடம் புதிய ஆணையைப் பெறவேண்டும் என்பதுமே நிலைப்பாடாக இருக்கிறது. கடந்த வாரம் கூட ராஜபக்சாக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவாசம் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் மக்களுக்கு நிவாரணங்களை அளிக்கவுமே விக்கிரமசிங்கவை தாங்கள் ஜனாதிபதியாக பாராளுமன்றத்தின் மூலம் தெரிவுசெய்ததாக கூறியிருந்தார். சிங்கள பெரும்பான்மையினவாத அணிதிரட்டலின் மூலமாக ராஜபக்சாக்கள் கட்டியெழுப்பிய ஒரு கட்சியின் பாராளுமன்ற ஆதரவில் தனது ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கும் ஜனாதிபதி எந்த நம்பிக்கையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக்காணும் முயற்சிகளை முன்னெடுக்கத் தைரியம் கொண்டார் என்பது புரியவில்லை. ஜெயவர்தனவும் அவருக்கு பிறகு பதவிக்கு வந்த சகல ஜனாதிபதிகளும் வெறுமனே மாகாண சபைகளுக்கு தேர்தல்களை நடத்தினார்களே தவிர 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி மாகாணசபைகள் முறையாக இயங்குவதை உறுதிப்படுத்த ஒருபோதும் முன்வந்ததில்லை. மாறாக இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கையின் ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்வதில்தான் அவர்கள் அக்கறையாக இருந்தார்கள் எனலாம். ஜனாதிபதி பதவியில் இருந்து இறங்கிய பின்னர், ராஜீவ் காந்தி பற்றி அவரின் நெருங்கிய சகாவும் முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் ஐயர் எழுதிய நூல் ஒன்றின் வெளியீட்டு வைபவத்தில் கலந்துகொள்ளச் சென்ற முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா குமாரதுங்க அதை வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப் படுத்துவதில் இந்திய அரசாங்கத்தினால் கூட இலங்கை ஆட்சியாளர்களை வழிக்குக் கொண்டுவர முடியவில்லை என்பதே உண்மையாகும். இந்தியாவையும் கடந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களின் வாயிலாக அந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை சர்வதேச சமூகத்தின் ஒரு வலியுறுத்தலாக மாறிய பின்னரும் கூட இலங்கை அரசாங்கங்கள் அவற்றின் போக்கை மாற்றவில்லை. அதேவேளை, முன்னைய ஜனாதிபதிகளைப் போலன்றி 13 வது திருத்தத்தின் நடைமுறைப்படுத்தல் தொடர்பில் கூடுதலானளவுக்கு வெளிப்படையாகப் பேசுகின்ற விக்கிரமசிங்கவினால் கூட நிலைவரத்தில் நேர்மறையான ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல் இருக்கிறது. தனது முயற்சிகளுக்கு எதிரான சிங்கள தேசியவாத சக்திகளின் நெருக்குதல்களின் விளைவாக அவர் தனது முன்னைய நிலைப்பாடுகளில் தளர்வை ஏற்படுத்தவேண்டியிருக்கிறது. அடுத்த ஜனாதிபதி தேர்தலை குறிவைத்து வியூகங்களை வகுக்கும் அவர் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் பெரிய நகர்வுகளைச் செய்வது சாத்தியமில்லை என்பது தெளிவானது. அண்மையில் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியாவுக்கு செல்வதற்கு முன்னதாக ஜூலை 18 தமிழ்க்கட்சிகளின் தலைவர்களை அழைத்துப் பேசிய விக்கிரமசிங்க தேசிய நல்லிணக்கம் மற்றும் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி குறித்த 16 பக்கங்கள் கொண்ட திட்டத்தை சமர்ப்பித்து பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் யோசனையை முன்வைத்தார். அதை திட்டவட்டமாக நிராகரித்த தமிழ்க்கட்சிகள் ‘ அபிவிருத்திக்கும் அதிகாரப்பரவலாக்கலுக்குமான ‘அவரது யோசனையை’ இன்னொரு வெற்று உறுதிமொழி ‘ என்று வர்ணித்தன. அரசியலமைப்பில் ஏற்கெனவே இருப்பதை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாராயில்லையானால், 13 வது திருத்தத்துக்கு அப்பால் செல்வதற்கும், அர்த்தபுஷ்டியான அதிகாரப் பரவலாக்கத்தை செய்வதற்கும் அதற்கு அரசியல் விருப்பமோ துணிவாற்றலோ இல்லை என்பதே உண்மையாகும் என்றும் தமிழ்க்கட்சிகள் சுட்டிக்காட்டின. தங்களால் இனிமேலும் ஏமாறமுடியாது என்று இரா. சம்பந்தன் அவர்கள் நேரடியாகவே ஜனாதிபதியிடம் கூறவும் தவறவில்லை. அதனால் ஆத்திரமடைந்த அவர் தன்னுடன் பேசவிரும்பினால் பேசலாம் அல்லது வெளியேறிச் செல்லலாம் என்று ஆவேசமாகக் கூறியதாகவும் செய்திகள் வெளியாகின. பொலிஸ் அதிகாரம் இல்லாத 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் யோசனையை தமிழ்க்கட்சிகளுக்கு முன்வைத்ததன் மூலம் தற்போதைய சூழ்நிலையில் தன்னால் செய்யக்கூடியதாக இருப்பதைப் பற்றிய செய்தியை தனது புதுடில்லிக்கு விஜயத்துக்கு முன்னதாக இந்திய அரசாங்கத்துக்கு ஜனாதிபதி தெரியப்படுத்தினார். புதுடில்லியில் ஹைதராபாத் இல்லத்தில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி அவருடன் கூட்டாக நடத்திய செய்தியாளர்கள் மகாநாட்டில் எமது இனப்பிரச்சினை மற்றும் உத்தேச தீர்வு குறித்து பின்வருமாறு கூறினார் ; ” தமிழர்களின் அபிலாசைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் என்றும் சமத்துவம், நீதி மற்றும் சமாதானத்துக்கான செயன்முறையை முன்னெடுக்கும் என்றும் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி மாகாணசபை தேர்தல்களை நடத்துவதுடன் இலங்கை தமிழ்ச் சமூகத்தின் கௌரவத்துடனும் கண்ணியத்துடனுமான வாழ்வை உறுதிப்படுத்தும் என்றும் நம்புகிறோம்.” அதற்கு பதிலளித்த விக்கிரமசிங்க இந்தியாவுக்கு வருவதற்கு முன்னதாக அந்த வாரம் தன்னால் முன்வைக்கப்பட்ட பரவலாக்கம் மற்றும் வடக்கு அபிவிருத்தி திட்டத்தின் பல்வேறு அம்சங்கள் ஊடாக நல்லிணக்கத்தையும் அதிகாரப்பகிர்வையும் முன்னெடுப்பதற்கான யோசனைகளை இந்திய பிரதமருடன் பகிர்ந்துகொண்டதாக கூறினார். “இந்த முன்னெடுப்புகள் தொடர்பில் கருத்தொருமிப்பைக் கண்டு தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்துவதை நோக்கி பணியாற்றுவதற்கு பாராளுமன்றத்தில் உள்ள சகல கட்சிகளினதும் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறேன். அதற்கு பிறகு பொருத்தமான அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு கொண்டுவரும் ” என்றும் அவர் கூறினார். இந்த முயற்சிகளுக்கான தனது ஒருமைப்பாட்டையும் நல்லெண்ணத்தையும் பிரதமர் மோடி வெளிப்படுத்தியதாக அவர் முன்னிலையில் செய்தியாளர்களுக்கு விக்கிரமசிங்க தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இரு தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை தொடர்ந்து விசேட செய்தியாளர்கள் மகாநாட்டில் உரையாற்றிய இந்திய வெளியுறவு செயலாளர் வினாய் குவாட்ரா தமிழ்ச் சமூகத்தின் அபிலாசைகளை, ஐக்கியப்பட்டதும் சுபிட்சமுடையதுமான இலங்கை கட்டமைப்புக்குள் சமத்துவம்,நீதி மற்றும் சுயமரியாதைக்கான அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய ஒரு அரசியல் தீர்வை இந்தியா தொடர்ந்து எதிர்பார்க்கிறது என்று குறிப்பிட்டார். “அர்த்தபுஷ்டியான அதிகாரப்பரவலாக்கமும் 13 வது திருத்தத்தின் முழுமையான நடைமுறைப்படு்த்தலும் இலங்கையில் நல்லிணக்கச் செயன்முறையை வசதிப்படுத்துவதற்கு அவசியமான அம்சங்கள் என்ற எமது நம்பிக்கையை பிரதமர் வெளிப்படுத்தினார். இதுவே எமது உறுதியான நிலைப்பாடாக இருந்துவருகிறது. இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பின்போது இது முன்வைக்கப்பட்டது ” என்றும் வெளியுறவு செயலாளர் கூறியிருந்தார். ஆனால், விக்கிரமசிங்கவின் விஜயத்தின்போது வெளியிடப்பட்ட எந்தவொரு எழுத்துமூல ஆவணத்திலும் இந்த விடயங்கள் எதுவும் இடம்பெறவில்லை. இதை சுட்டிக்காட்டி ஆசிரிய தலையங்கம் தீட்டிய இந்தியாவின் முக்கியமான தேசிய ஆங்கிலப் பத்திரிகைகளில் ஒன்றான ‘தி இந்து ‘ விக்கிரமசிங்க டில்லியில் வெளியிட்ட கருத்துக்களிலோ அல்லது கூட்டு அறிக்கையிலோ இந்த முக்கிய விடயங்கள் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படாதமையே இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பின் மூலமான முக்கியமான செய்தியாக இருக்கக்கூடும் என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளுக்குள் தமிழர் பிரச்சினை தொடர்பிலான வரலாற்று ரீதியான அக்கறைகளை இந்திய அரசாங்கம் கொண்டுவருவதை இனிமேலும் கொழும்பு வரவேற்கப்போவதில்லை என்பதே பிரதமர் மோடிக்கும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு கூறும் மிகப்பெரிய செய்தி என்று அந்த பத்திரிகை குறிப்பிட்டிருக்கிறது. அதேவேளை, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எதிர்காலத்துக்கான எந்தவொரு நோக்கும் இனப்பிரச்சினைக்கு இணக்கமான ஒரு தீர்வை உள்ளடக்காத பட்சத்தில் பூரணத்துவமானதாக இருக்கப்போவதில்லை என்று கூறிவைக்கவும் ‘இந்து ‘ தவறவில்லை. இதை வெறுமனே ஒரு பத்திரிகையின் கருத்தாக மாத்திரம் நோக்கிவிடமுடியாது. தமிழர் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இந்தியாவிடம் இருந்து இனிமேலும் நெருக்குதல்களோ அல்லது நல்லெண்ண அடிப்படையிலான வேண்டுகோள்களோ வருவதை இலங்கை ஆட்சியாளர்கள் இனிமேல் விரும்பமாட்டார்கள் என்ற ஒரு கசப்பான புரிதல் இந்திய அரசின் உயர்மட்டத்தில் ஏற்படத் தொடங்கியிருப்பதன் ஒரு பிரதிபலிப்பாகவே நோக்கவேண்டியிருக்கிறது. இலங்கை திரும்பிய கையோடு கடந்த வாரம் ஜனாதிபதி விக்கிரமசிங்க பாராளுமன்ற கட்சிகளின் மகாநாட்டைக் கூட்டினார். தேசிய நல்லிணக்கத் திட்டத்தையும் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி திட்டத்தையும் ஆராய்ந்து கருத்தொருமிப்புக்கு வருவதே மகாநாட்டின் நோக்கமாக கூறப்பட்டாலும் 13 வது திருத்தம் தொடர்பில் தற்போது தோன்றியுள்ள சர்ச்சையை கையாளுவதே அதன் உண்மையான நோக்கமாகும். அந்த திருத்தத்தை அதுவும் மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்கள் நீங்கலாக நடைமுறைப் படுத்துவதாக இருந்தாலும் பாராளுமன்றத்தின் ஆதரவுடன்தான் தன்னால் செய்யமுடியும் என்பதே மகாநாட்டில் ஜனாதிபதி வெளிப்டுத்திய கருத்துக்களின் மூலமான செய்தியாகும். அதேவேளை தமிழ்க்கட்சிகள் உட்பட எதிரணிக்கட்சிகளின் தலைவர்கள் மாகாணசபை தேர்தல்களை விரைவில் நடத்தவேண்டும் என்று விடுத்த கோரிக்கை ஜனாதிபதிக்கு ஆவேசத்தை ஏற்படுத்தியது. ஒன்றில் அதிகாரப் பரவலாக்கத்தைப் பற்றி பேசவேண்டும் அல்லது மாகாணசபை தேர்தல்களைப் பற்றி பேசவேண்டும். இரண்டையும் ஒன்றாக பேசமுடியாது என்பதே அவரது நிலைப்பாடாக இருக்கிறது. உண்மையில் இதை புரிந்துகொள்ள முடியவில்லை. ஜனாதிபதி தேர்தலை தவிர வேறு எந்த தேர்தலையும் பற்றி அவர் சிந்திக்கத் தயாராக இல்லை. இந்த நிகழ்வுப்போக்குகள் எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக நோக்கும்போது 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது மாத்திரமல்ல, பொலிஸ் அதிகாரம் உட்பட பல அதிகாரங்கள் இல்லாமல் கூட அதை நடைமுறைப்படுத்துவதும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. கறுப்பு ஜூலைக்கு பிறகு 40 வருடங்கள் கடந்த நிலையில் இலங்கையில் அதிகாரப்பரவலாக்கத்துக்கான ஒரேயொரு சட்டரீதியான ஏற்பாடாக இருந்துவரும் அந்த திருத்தத்தின் இலட்சணம் இவ்வாறாக இருக்கிறது. தமிழர்களுக்கு எவற்றைக் கொடுக்கக்கூடாது என்பதில் தென்னிலங்கையில் சிங்கள அரசியல் சமுதாயத்திற்குள் ( பல்வேறு முரண்பாடுகளுக்கு மத்தியிலும் ) ஒரு கருத்தொருமிப்பு காணப்படுகிறது. ஆனால் தமிழ் மக்களுக்கு எது தேவை என்பதை கேட்பதில் ஒருமித்து நிற்க முடியாததாக தமிழ் அரசியல் சமுதாயம் சிதறுண்டு காணப்படுகிறது. இந்தியாவினாலும் கூட எதையும் செய்ய இயலாமல் போயிருக்கும் நிலையில், மிகவும் பலவீனப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் சமுதாயத்துக்கு இருக்கக்கூடிய மாற்று வழி என்ன என்ற கேள்வி முன்னால் வந்து அச்சுறுத்துகிறது. https://arangamnews.com/?p=9878
  18. கறுப்பு ஜூலைக்குப் பிறகு நான்கு தசாப்தங்கள் கடந்த பிறகும் நழுவிக்கொண்டு போகும் அரசியல் தீர்வு Veeragathy Thanabalasingham on July 23, 2023 Photo, FOREIGNPOLICY கறுப்பு ஜூலையில் இருந்தும் உள்நாட்டுப்போரில் இருந்தும் படிப்பினைகள் பெற்றுக்கொள்ளப்பட்டதற்கான எந்த அறிகுறியையும் சிங்கள அரசியல் சமுதாயத்தின் நிலைப்பாடுகளில் காணவில்லை. மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை நிகழாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை. இலங்கையில் இனங்களுக்கு இடையிலான உறவுகளைப் பொறுத்தவரை, ஒரு எல்லைக்கோடாக அமைந்த 1983 ஜூலை இனவன்செயல்களுக்குப் பிறகு இந்த வாரத்துடன் நான்கு தசாப்தங்கள் உருண்டோடிவிட்டன. ஒரு வாரத்துக்கு மேலாக தலைவிரித்தாடிய வன்செயல்களின் கொடூரம், அதனால் நேர்ந்த உயிரிழப்புகள், சொத்து அழிவுகளுக்கு அப்பால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட வேதனை அதிர்ச்சியும் உளவியல் தாக்கமும் கணிப்பிடமுடியாதவை. 1983 ஜூலை 22 வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணக் குடாநாட்டில் திருநெல்வேலியில் விடுதலைப் புலிகள் நடத்திய கெரில்லாத் தாக்குதலில் 13 இலங்கை இராணுவத்தினர் பலியான சம்பவம் அன்றைய அரசாங்கத்திற்குள் ஆதிக்கம் செலுத்திய சிங்கள இனவாதச் சக்திகள் நாடு பூராவும் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்வதற்கு ஏற்கெனவே திட்டமிட்டுவந்த வல்செயல்களை கட்டவிழ்த்துவிடுவதற்கு வாய்ப்பாக அமைந்தது. இலங்கை அரசியலில் முன்னரைப் போன்று மீண்டும் எதுவுமே இருக்காது என்பதை நிறுவிய அனர்த்தங்கள் நிறைந்த அந்த மாதத்தை காலஞ்சென்ற பிரபல பத்திரிகையாளர் மேர்வின் டி சில்வா ‘கறுப்பு ஜூலை’ (BLACK JULY ) என்று வர்ணித்தார். அரசாங்கத்தின் மனநிலை கறுப்பு ஜூலை வன்செயல்களுக்கு ஒரு வாரம் முன்னதாக லண்டன் ரெலிகிராவ் பத்திரிகைக்கு அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன அளித்த பேட்டியொன்றில் தெரிவித்த கருத்துக்கள் தமிழர்கள் தொடர்பில் அரசாங்கம் எத்தகைய மனநிலையில் இருந்தது என்பதை தெளிவாக வெளிப்படுத்தியது. “இப்போது நான் யாழ்ப்பாண மக்களின் அபிப்பிராயத்தைப் பற்றி கவலைப்படவில்லை. அவர்களைப் பற்றி அல்லது அவர்களது உயிர்களைப் பற்றி அல்லது எம்மைப் பற்றி அவர்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயத்தைப் பற்றி இப்போது எங்களால் சிந்திக்கமுடியாது. வடக்கு மீது எந்தளவுக்கு நெருக்குதல்களைப் பிரயோகிக்கின்றோமோ அந்தளவுக்கு சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்” என்று அவர் சொன்னார். ஜெயவர்வர்தனாவின் அந்தக் கருத்துக்கள் கறுப்பு ஜூலை வன்செயல்கள் யாழ்ப்பாணத்தில் படைவீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தினால் சிங்களவர்கள் ஆவேசமடைந்ததால் மாத்திரம் மூண்டதல்ல, இனவாதச் சக்திகள் நீண்ட நாட்களாக தீட்டிவந்த திட்டத்தின் விளைவானது என்பதை அம்பலப்படுத்தியது. உள்நாட்டுப்போரில் தமிழ் மக்கள் அனுபவித்த அவலங்களும் உயிரிழப்புகளும் சொத்து அழிவுகளும் கறுப்பு ஜூலையில் அவர்கள் அனுபவித்தவற்றை விடவும் விபரிக்கமுடியாத அளவுக்கு அதிகமானவை என்றபோதிலும், அந்த ஜூலையே தமிழர்கள் மத்தியில் ஆயுதப்போராட்ட இயக்கங்கள் பெருகுவதற்கு வழிவகுத்து உள்நாட்டுப்போரை மூளவைத்தது என்பதால் இலங்கையின் அரசியல் வரலாற்றில் அதற்கு பித்தியேகமான ஒரு எதிர்மறைக் குறியீடு இருக்கிறது. அந்த வன்செயல்களில் நாடுபூராவும் சொல்லொணா அவலங்களைச் சந்தித்து ஆயிரக்கணக்கில் அகதிமுகாம்களில் தஞ்சமடைந்த தமிழ் மக்களுக்கு அனுதாபமாக ஒரு வார்த்தையையேனும் கூறுவதற்கு அரசாங்கத்தின் எந்தவொரு தலைவரும் முன்வரவில்லை. வன்செயல்களை நியாயப்படுத்திய ஜனாதிபதி வன்செயல்கள் மூண்டு கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு பிறகு ஜூலை 28 வியாழக்கிழமை தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி ஜெயவர்தன அந்த வன்செயல்களை தமிழ் அரசியல்வாதிகளின் நாட்டுப் பிரிவினைக் கோரிக்கைக்கு எதிரான சிங்கள மக்களின் இயல்பான பிரதிபலிப்பு என்று கூறி நியாயப்படுத்தினாரே தவிர பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்று கிஞ்சித்தேனும் நினைக்கவில்லை. வன்செயல்களை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது மாத்திரமல்ல, படையினரும் பொலிஸாரும் வன்முறைக் கும்பல்களுக்கு அனுசரணையாகவே செயற்பட்டனர். அரசாங்க அரசியல்வாதிகள் பல அமைச்சர்களும் கூட தங்கள் பகுதிகளில் முன்னணியில் நின்று தமிழர்களுக்கு எதிராக வன்முறைகளை தூண்டிவிட்டார்கள். வன்முறைக் கும்பல்களைக் கலைக்க படையினர் ஏன் துப்பாக்கிப் பிரயோகம் செய்யவில்லை என்று ஜெயவர்தனவிடம் பி.பி.சி. பேட்டியொன்றில் கேட்கப்பட்டபோது, “படையினர் மத்தியில் தமிழர்களுக்கு எதிரான உணர்வுகள் பெருமளவுக்கு இருந்தது என்று நான் நினைக்கிறேன். கலவரங்களில் ஈடுபட்ட சிங்களவரைச் சுடுவது சிங்கள சமூகத்துக்கு விரோதமான செயலாக இருக்கும் என்று படையினர் உணர்ந்திருக்கக்கூடும். சில இடங்களில் கலகக்காரர்களை படையினர் உற்சாகப்படுத்தியதையும் கண்டோம் ” என்று பதிலளித்தார். கறுப்பு ஜூலை வன்செயல்களுக்காக ஜெயவர்தனவோ அல்லது அன்று பிரதமராக இருந்து பிறகு ஜனாதிபதியாகவும் வந்த ரணசிங்க பிரேமதாசவோ அல்லது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் முக்கியமான பதவிகளில் இருந்த அரசியல்வாதிகளில் எவருமோ உயிருடன் இருந்தவரை தமிழ் மக்களிடம் வருத்தம் தெரிவித்ததில்லை. மன்னிப்புக் கோரிய சந்திரிகா பின்னாளில் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மாத்திரமே இலங்கை அரசின் சார்பில் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். கறுப்பு ஜூலையின் 21ஆவது வருட நினைவைக் குறிக்குமுகமாக கொழும்பில் வைபவம் ஒன்றில் உரையாற்றிய அவர், “அந்த வன்செயல்களுக்காக இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் கூட்டாக குற்றப்பொறுப்பை ஏற்றுக்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும். இலங்கை அரசு மற்றும் இலங்கையின் சகல குடிமக்கள் சார்பிலும் மன்னிப்புக்கோரும் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார். இந்தியத் தலையீடு இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியாவின் நேரடித் தலையீட்டுக்கு கறுப்பு ஜூலை வழிவகுத்தது. அன்றைய இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி நிலைவரங்களை அவதானிக்க தனது வெளியுறவு அமைச்சர் பி.வி. நரசிம்மராவை கொழும்புக்கு அனுப்பினார். அவர் வந்திறங்கிய தினமான (29 ஜூலை 1983) கொழும்புக்கு விடுதலைப் புலிகள் வந்துவிட்டதாக புரளியைக் கிளப்பிய இனவாதச் சக்திகள் தமிழர்கள் மீது மீண்டும் படுமோசமான தாக்குதல்களை மேற்கொண்டன. அன்றைய தினமே பெருமளவு கொலைகள் இடம்பெற்றதாகக் கூறப்படுவதுண்டு. தமிழர்கள் சார்பில் இந்தியா தலையீடு செய்வதற்கு சிங்களவர்களின் எதிர்ப்பை வெளிக்காட்டவே நரசிம்மராவ் கொழும்பில் இருந்தவேளை இனவாதச் சக்திகள் மீண்டும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டன என்பதில் சந்தேகமில்லை. கறுப்பு ஜூலைக்குப் பிறகு ஐக்கிய தேசிய கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் கூட்டமொன்றில் உரையாற்றிய அமைச்சர் காமினி திசாநாயக்க இந்தியா இலங்கை மீது படையெடுத்தால் 24 மணித்தியாலங்களுக்குள் தமிழர்கள் கொல்லப்படுவார்கள் என்று பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. கறுப்பு ஜூலைக்குப் பின்னரான காலகட்டத்தில் அதிகாரத்தில் இருந்த சகல அரசாங்கங்களுமே இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத்தீர்வைக் காண்பதற்கு முயற்சிப்பதாகக் கூறிக்கொண்டு மறுபுறத்தில் இராணுவத்தீர்விலேயே அக்கறை காட்டின. ஐரிஷ் குடியரசு அரசியல்வாதியும் சின் ஃபீன் இயக்கத்தின் முன்னாள் தலைவருமான ஜெரி அடம்ஸ் வட அயர்லாந்து நெருக்கடிக்கு தீர்வைக் காண்பதற்கு முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகள் தொடர்பில் கருத்து வெளியிட்டபோது, “சமாதான முயற்சிகள் வேறு மார்க்கங்களிலான போர்தான்” (Peace process are war by other means) என்று குறிப்பிட்டார். இலங்கையின் சமாதான முயற்சிகளும் அவ்வாறே அமைந்தன என்பதை அனுபவ வாயிலாக நாம் கண்டோம். போர்ப்பிரமை சிங்கள அரசியல் தலைவர்கள் அடிப்படையில் தமிழர் பிரச்சினை தொடர்பிலான தங்களது சிந்தனையில் ‘போர்’ பற்றிய ஒரு பிரமையைக் கொண்டிருந்தார்கள். இதற்கு இரு உதாரணங்களை நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும். 1977 ஜூலை நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி மாபெரும் வெற்றிபெற்று ஜெயவர்தன பிரதமராக பதவியேற்ற சில வாரங்களில் தலைநகர் கொழும்பு உட்பட பல நாட்டின் பல பாகங்களிலும் தமிழர்களுக்கு எதிராக வன்செயல்கள் மூண்டன. அப்போது தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர். அந்த வன்செயல் நாட்களில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ஜெயவர்தன அமிர்தலிங்கத்தை நோக்கி “சமாதானம் என்றால் சமாதானம். போர் என்றால் போர் ” என்று கூறினார். அதற்கு இரு தசாப்தங்களுக்கு முன்னர் 1956 ஜூன் 5 பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க அரசாங்கம் சிங்களத்தை மாத்திரம் அரசகரும மொழியாக்கும் சட்டத்தை கொண்டுவந்ததை எதிர்த்து தந்தை செல்வா தலைமையில் இலங்கை தமிழரசு கட்சி கொழும்பு காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தியது. அரசாங்கத்தின் தூண்டுதலுடன் காடையர்கள் பொலிஸார் பார்த்துக்கொண்டு நிற்க சத்தியாக்கிரகிகளை கொடூரமாக தாக்கினார்கள். அந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்களில் ஒருவரான அமிர்தலிங்கம் தலையில் தனது காயத்துக்கு கட்டுப்போட்டுக்கொண்டு நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்தபோது அவரை விளித்து “கௌரவ போர்க்காயங்களே” (Honourable Wounds of War) என்று பண்டாரநாயக்க பேசினார். தமிழர்கள் ஆயுதமேந்துவதற்கு வெகு முன்னதாகவே தமிழர்களின் நியாயபூர்வமான உரிமைப் போராட்டத்தை சிங்களத் தலைவர்கள் ஒரு போர் மனோபாவத்துடனேயே நோக்கினார்கள் என்பது தெளிவாகிறது. இறுதியில் அந்தப் போர் வருவதை எவராலும் தடுக்கக்கூடியதாக இருக்கவில்லை. அதற்குப் பின்னரானவை அண்மைக்கால வரலாறு. இராணுவத் தீர்வு சகல ஜனாதிபதிகளும் உலக ஒப்பாசாரத்துக்காக அரசியல் தீர்வைப் பற்றி பேசினார்களே தவிர இராணுவத் தீர்வை காணும் முயற்சிகளுக்கு தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கிவிட்டே சென்றார்கள். இந்தியாவின் தலையீடோ அல்லது சர்வதேசத்தின் பங்களிப்போ இலங்கையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்குப் பதிலாக இராணுவத் தீர்வை நோக்கிய செயன்முறைகள் முனைப்படைந்து இறுதியில் முழுவீச்சிலான போர் மூளுவதையே உறுதிசெய்ததைக் காணக்கூடியதாக இருந்தது. சர்வதேச அரசியல் நிகழ்வுப்போக்குகளில் ஏற்பட்ட மாறுதல்கள் வன்னியில் விடுதலை புலிகளை தோற்கடித்து உள்நாட்டுப்போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வாய்ப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு கிடைக்கச் செய்தன. போரில் அரசாங்கப் படைகள் வெற்றிபெறுவதற்கு உறுதியான அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிய ஒரே ஜனாதிபதி தானே என்று உரிமைகோரிய ராஜபக்‌ஷ போர்வெற்றியை மையப்படுத்தி சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரங்களை முன்னெடுத்து உச்சபட்ச அரசியல் ஆதாயத்தை அறுவடை செய்தார். இராணுவவாத அணுகுமுறையுடன் சிங்கள பௌத்த பெரும்பான்மை இனவாத அரசியல் கொள்கைகளை முன்னெடுத்த ராஜபக்‌ஷர்கள் இறுதியில் தங்களது தவறான ஆட்சிமுறை, ஊழல் மோசடி, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் குடும்ப ஆதிக்க அரசியலுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்களினால் ஆட்சியதிகாரத்தில் இருந்து தூக்கியெறியப்பட்டார்கள். அவர்களின் வீழ்ச்சி உண்மையில் பெரும்பான்மை இனவாத அரசியலின் தோல்வியைப் பறைசாற்றியது எனலாம். நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்பவும் தவறான ஆட்சிமுறையை மூடிமறைக்கவும் இனிமேலும் பெரும்பான்மை இனவாத அணிதிரட்டல்களுக்கு இடமளிக்கக்கூடாது என்பதே இலங்கை வரலாறு காணாத படுமோசமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் உணர்த்தி நிற்கும் முக்கிய படிப்பினையாகும். ஆனால் அண்மைக்காலமாக மீண்டும் இனவாத அரசியல் அணிதிரட்டல்கள் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதைக் காண்கிறோம். இன அடிப்படையிலான பிரச்சினை இப்போது தீவிரமாக மதங்களுக்கு இடையாலான பிரச்சினையாகவும் திசை திருப்பப்படுகிறது. மீண்டும் இனக்கலவரம் பற்றிய பேச்சுக்கள் அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் இலங்கை இதுவரை காணாத மிகப்பெரிய இனக்கலவரம் மூளும் என்ற விமல் வீரவன்ச, சரத் வீரசேகர போன்ற இனவாத அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அடிக்கடி அச்சுறுத்தல் விடுக்கிறார்கள். சிங்கள பௌத்த மக்களின் பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இத்தகைய பின்னணியிலே, மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை நிகழாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கறுப்பு ஜூலையில் இருந்தும் அதற்குப் பின்னரான நான்கு தசாப்தகால அரசியல் நெருக்கடிகளில் இருந்தும் சிங்கள அரசியல் சமுதாயம் எதாவது படிப்பினையை பெற்றிருக்கிறதா என்ற கேள்வி தவிர்க்கமுடியாமல் எழுகிறது. தமிழ் மக்களின் இன்றைய நிலை உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்த பிறகு கறுப்பு ஜூலையை நாம் நினைவுகூருவது இது பதினான்காவது வருடமாகும். இந்தக் கட்டத்தில் இலங்கைத் தமிழர்களின் நிலை என்னவாக இருக்கிறது? நான்கு தசாப்தங்களிலும் 15 இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு குறிப்பாக மேற்கு ஐரோப்பாவுக்கும் வட அமெரிக்காவுக்கும் புலம்பெயர்ந்து நவீன யூதர்கள் போன்று வாழ்கிறார்கள். மேற்கு நாடுகளில் உள்ள செல்வாக்குமிக்க ஆசிய புலம்பெயர் சமூகங்களில் குறிப்பிடத்தக்க ஒரு பிரிவினராக இலங்கை தமிழர்கள் விளங்குகிறார்கள். இலங்கையில் வந்து முதலீடுகளைச் செய்து தாய்நாட்டின் வளர்ச்சிக்கு உதவுமாறு அரசாங்கத் தலைவர்கள் கோரிக்கை விடுக்கின்ற அளவுக்கு புலம்பெயர் இலங்கை தமிழர்களில் பலர் பொருளாதார ரீதியில் வலிமைமிக்கவர்களாக இருக்கிறார்கள். இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகள் மற்றும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக்காணும் முயற்சிகள் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் குறிப்பாக மேற்குலக நாடுகளின் கவனத்தை இடையறாது ஈர்க்கும் அரசியல் செயற்பாடுகளிலும் அவர்கள் மத்தியில் உள்ள அமைப்புக்கள் ஈடுபட்டுவருகின்றன. வடக்கு கிழக்கில் போரின் விளைவான அவலங்களில் இருந்து இன்னமும் முழுமையாக விடுபடமுடியாமல் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடர்பாடுகளை அனுபவித்துக்கொண்டிருக்கின்றன. போரின் முடிவுக்குப் பின்னரும் தமிழ்ப் பிரதேசங்களில் இராணுவமயத்தை வலுப்படுத்துவதிலேயே அரசாங்கங்கள் அக்கறை காட்டுகின்றன. தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகத்தில் குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்குடன் அரசாங்க அனுசரணையுடன் திட்டமிட்ட குடியேற்றங்கள் மதவாத சக்திகளின் துணையுடன் தீவிரப்படுத்தப்படுவதையே காணக்கூடியதாக இருக்கிறது. தொல்பொருள் ஆராய்ச்சி, வனப்பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புத் தேவைகள் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்பு நடவடிக்கைகள் இன்று வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பாரதூரமான உடனடிப் பிரச்சினையாக இருக்கிறது. கறுப்பு ஜூலைக்குப் பிறகு இந்தியாவின் நேரடித் தலையீட்டை அடுத்து 1987 ஜூலை இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கை மாகாண சபைகள் அமைக்கப்படுவதற்கு வழிவகுத்தது. அதற்காகக் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தம் 36 வருடங்கள் கடந்தும் கூட முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. சமாதான உடன்படிக்கையின் ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதை சகல அரசாங்கங்களுமே உறுதிசெய்துகொண்டன . இந்தியாவினால் கூட அது விடயத்தில் இலங்கையை வழிக்குக் கொண்டுவர முடியவில்லை. சமாதான உடன்படிக்கை்குப் பின்னரான காலப்பகுதியில் அரசியல் தீர்வை நோக்கிய பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தின் 1991 மங்கள முனசிங்க தலைமையிலான நாடாளுமன்ற தெரிவுக்குழு, திருமதி குமாரதுங்கவின் ஆட்சியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2000 புதிய அரசியலமைப்புக்கான யோசனைகள், மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சியில் 2006 பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி பிரதிநிதித்துவக் குழுவின் யோசனைகள் மற்றும் மைத்திரிபால – ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் புதிய அரசியலமைப்பை வரைவதற்கு முன்னெடுக்கப்பட்ட செயன்முறை ஆகியவையே அவையாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருந்த இரா.சம்பந்தன் அரசாங்கங்களுடனான பேச்சுவார்த்தைகளிலும் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பல சந்தர்ப்பங்களிலும் இந்த முயற்சிகளைப் பற்றி திரும்பத்திரும்ப விளக்கிக் கூறிவந்தார். இறுதியாக ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் நடத்திவந்த பேச்சுவார்த்தைகளிலும் கூட சம்பந்தன் அவற்றைப் பற்றி சிலாகித்தார். ஆனால், ஜனாதிபதி அவற்றில் அக்கறை காட்டக்கூடிய மனநிலையில் இல்லை. சம்பந்தனைப் பொறுத்தவரை அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் இனப்பிரச்சினைக்கு அதிகபட்ச அதிகாரப்பரவலாக்கலுடன் கூடிய அரசியல் தீர்வொன்றைக் வகுப்பதற்குப் புதிதாக எதையும் ஆராயத் தேவையில்லை, மேற்கூறப்பட்ட முயற்சிகளின்போது வரையப்பட்ட யோசனைகளை பரிசீலனைக்கு எடுத்தால் போதும் என்பதே நிலைப்பாடாக இருந்தது. அண்மைக்காலமாக தமழ்க்கட்சிகளுடன் ஜனாதிபதி விக்கிரமசிங்க நடத்திவந்த பேச்சுவார்த்தைகளிலும் முன்னேற்றத்தைக் காணமுடியாமல் இருக்கிறது. இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னதாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்போவதாகக் கூறிக்கொண்டு விக்கிரமசிங்க கடந்த டிசம்பரிலும் ஜனவரியிலும் இரு தடவைகள் சர்வகட்சி மகாநாடு என்ற பெயரில் நாடாளுமன்ற கட்சிகளின் மகாநாட்டை கூட்டினார். அந்த முயற்சியைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியாமல்போன நிலையில் இறுதியாக தமிழ்க்கட்சிகளுடன் மாத்திரம் அவர் பேசினார். 13ஆவது திருத்தத்தை இரு வருடங்களில் முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தனது அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கும் என்று யாழ். நகரில் தைப்பொங்கல் விழாவில் விக்கிரமசிங்க அறிவித்தார். அரசியலமைப்பில் இருக்கும் அந்தத் திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஜனாதிபதி என்ற வகையில் தனது கடமை என்று அதை எதிர்க்கும் அரசியல் சக்திகளுக்கு கூறிய அவர் ஒன்றில் அந்தத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் அல்லது அதை ஒழித்துவிட எவராவது நாடாளுமன்றத்தில் புதிய திருத்தச்சட்டம் ஒன்றை தனிநபர் பிரேரணையாகக் கொண்டுவரவேண்டும் என்றும் கூட குறிப்பிட்டார். பொலிஸ் இல்லாத பதின் மூன்று ஆனால், தென்னிலங்கையில் கிளம்பிய எதிர்ப்பையடுத்து அவர் பிறகு பதின் மூன்றைப் பற்றி பேசுவதைத் தவிர்த்துக்கொண்டார். இப்போது இறுதியாக இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வதற்கு முன்னதாக கடந்தவாரம் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் பொலிஸ் அதிகாரங்களை தவிர்த்து 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அவர் யோசனையை முன்வைத்தார். ஆனால், தமிழ்க்கட்சிகள் அதை திட்டவட்டமாக நிராகரித்துவிட்டன. இந்தியாவுக்குச் செல்வதற்கு முன்னதாக அந்த யோசனையை விக்கிரமசிங்க வெளியிட்டதற்கு ஒரு அந்தரங்க நோக்கம் இருந்தது என்பதில் சந்தேகமில்லை. புதுடில்லியில் இந்திய அரசாங்கத்திடமிருந்து 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி விரைவில் மாகாண சபை தேர்தல்களை நடத்தவேண்டும் என்று வலியுறுத்தல் வரும்போது தன்னால் அது விடயத்தில் செய்யக்கூடியது என்ன என்பதை அவர்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தும் நோக்குடன்தான் பொலிஸ் இல்லாத 13 பற்றி ஜனாதிபதி கொழும்பில் பேசினார். தமிழ்க்கட்சிகள் அதை நிராகரித்துவிட்ட நிலையில் இனப்பிரச்சினை தீர்வு முயற்சிகளை மீண்டும் எவ்வாறு தொடங்குவது என்பதில் பெரிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. ஜனாதிபதி தேர்தல் பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கும் விக்கிரமசிங்க தமிழர்களை வென்றெடுப்பதை விடவும் தென்னிலங்கை தேசியவாத சக்திகளைப் பகைத்துக்கொள்ளாமல் இருப்பதிலேயே கூடுதல் அக்கறை காட்டக்கூடும். கறுப்பு ஜூலைக்கும் உள்நாட்டுப் போருக்கும் வழிவகுத்த இனப்பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வொன்றைக் காணவேண்டிய அவசியம் இருப்பதாக தென்னிலங்கை அரசியல் சமுதாயம் உணருவதாக இல்லை. தீர்வு முயற்சிகளுக்கு எதிரான நிலைப்பாடு இன்று மூன்றரை தசாப்தங்களுக்கும் கூடுதலான காலமாக அரசியலமைப்பில் இருந்து வரும் ஒரு திருத்தத்தைக் கூட கைவிடவேண்டும் என்று போர்க்கொடி தூக்குகின்ற அளவுக்கு வலுவடைந்திருக்கிறது. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு நழுவிக்கொண்டே போகிறது. வீரகத்தி தனபாலசிங்கம் https://maatram.org/?p=10953
  19. கோட்டாபய பதவி விலகி ஒரு வருடம் கடந்த நிலையில்……! Veeragathy Thanabalasingham on July 10, 2023 Photo, SELVARAJA RAJASEGAR ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சி குறித்து ஒரு மீள்பார்வை இலங்கை வரலாறு முன்னென்றும் கண்டிராத மக்கள் கிளர்ச்சி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவை அதிகாரத்தில் இருந்து விரட்டி நாட்டை விட்டு வெளியேற வைத்து சரியாக ஒரு வருடம் கடந்தோடிவிட்டது. ஜூலை 9 இலங்கை அரசியலில் மாத்திரமல்ல, தெற்காசிய பிராந்திய அரசியலிலும் கூட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தினமாக பதிவாகிவிட்டது எனலாம். எமது பிராந்தியத்தின் வேறு எந்தவொரு நாட்டிலும் ஜனநாயகத் தேர்தல் ஒன்றில் மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு ஆட்சியாளரை அதே மக்கள் கிளர்ச்சிசெய்து பதவியில் இருந்து இறங்கச் செய்ததாக வரலாறு இல்லை. அரசியல் புரட்சி ஒன்றின் பரிமாணங்களை எடுத்திருந்த ‘அறகலய’ என்று அழைக்கப்படும் அந்த மக்கள் கிளர்ச்சி அதன் முதற்கட்ட வெற்றியை அடைந்த பிறகு படைபலம் கொண்டு அரசாங்கத்தினால் அடக்கியொடுக்கப் பட்டிருந்தாலும், அதன் மூலமான வலுவான ‘அரசியல் செய்தி’ ஆட்சியதிகார வர்க்கத்தை இன்றும் கலங்கவைத்துக் கொண்டேயிருக்கிறது. மீண்டும் ஒரு மக்கள் கிளர்ச்சி மூளாதிருப்பதை உறுதிசெய்வதற்கு விதம்விதமான கொடூரமான சட்டங்களைக் கொண்டுவருவதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் இடையறாது கவனம் செலுத்திக் கொண்டிருப்பதில் இருந்து இதை விளங்கிக்கொள்ள முடியும். எதிர்ப்புக்களை அடக்குவதில் ஈவிரக்கமற்ற போக்கை கடைப்பிடிக்கக்கூடியவர் என்று பரவலாக நம்பப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரியான ஒரு தலைவரை அரசியல் அதிகார பீடங்களின் வாசல்களுக்கு திரண்டுவந்து பதவியில் இருந்து விரட்டியதன் மூலம் எதிரணி அரசியல் கட்சிகளோ அல்லது சிவில் சமூக அமைப்புக்களோ கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கமுடியாத ‘சாதனையை’ இலங்கை மக்கள் நிகழ்த்திக் காட்டினார்கள். சுதந்திர இலங்கையின் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சொல்லொணா துன்பங்களை அனுபவித்த மக்கள் ஒரு எல்லைக்கு அப்பால் பொறுத்துக்கொள்ள முடியாமல் வீதிகளில் இறங்கி செய்த கிளர்ச்சி ஆட்சியதிகாரத்தின் வலுவற்ற தன்மையையும் மக்கள் சக்தியின் பலத்தையும் வெளிக்காட்டியது; அதுபோக, ராஜபக்‌ஷ குடும்பத்தின் தணியாத அதிகாரத் தாகத்தையும் நாட்டு மக்களின் வாழ்வு மற்றும் கண்ணியம் மீதான அவர்களின் அலட்சியத்தையும் அம்பலப்படுத்தியது. தெளிவான அரசியல் தலைமைத்துவமோ அல்லது ஒழுங்கமைப்போ இல்லாமல் ஒரு மக்கள் போராட்டம் ஆட்சியாளர்களை உலுக்கும் அளவுக்கு பிரமாண்டமான சக்தியாக வெளிப்பட்டது என்பது உண்மையில் ஆச்சரியமான ஒன்றுதான். ஆனால், ஒரு நான்கு தசாப்த காலப்பகுதிக்குள் ஒரு உள்நாட்டுப் போரையும் இரு ஆயுதக் கிளர்ச்சிகளையும் கண்ட நாட்டில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் என்பது ஒன்றும் புதுமையானவையல்ல. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஆட்சியாளர் முன்னரும் ஒரு தடவை போராட்டத்தின் விளைவாக பதவியில் இருந்து இறங்க நிர்ப்பந்திக்கப்பட்டதை நாடு கண்டது. பிரதமர் டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் உணவு மானியங்களில் குறைப்பு செய்ததை அடுத்து 1953 ஆகஸ்ட் 12 இடதுசாரி கட்சிகளின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் போராட்டம் இலங்கையில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கம் ஒன்றுக்கு எதிரான முதலாவது மக்கள் போராட்டமாக அமைந்தது. அதை ஒடுக்குவதற்கு அரசாங்கம் எடுத்த கடுமையான நடவடிக்கைகளில் குறைந்தது பத்துப் பேர் பலியான கொந்தளிப்பான நிலைவரத்துக்கு மத்தியில் அமைச்சரவையே கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்ற பிரிட்டிஷ் கப்பலில் தான் கூடியது. ஆனால், கடந்த வருடம் கோட்டபாய பதவி விலகியதைப் போன்று டட்லி சேனநாயக்க உடனடியாக பிரதமர் பதவி விலகவில்லை. இரு மாதங்கள் கழித்து அக்டோபரில் தான் பதவி விலகினார். அவருடன் பணியாற்றிய சில உயரதிகாரிகள் பிற்காலத்தில் எழுதிய தங்களது நினைவுக் குறிப்புகளில் அவர் சுகவீனம் காரணமாக பதவி விலகியதாக குறிப்பிட்டிருக்கின்ற போதிலும், ஹர்த்தால் போராட்டத்தின் விளைவாக தோன்றிய அரசியல் நெருக்கடிகளே பதவி விலகலுக்கான உண்மையான காரணம் என்பதில் சந்தேகமில்லை. ஹர்த்தாலுக்கு இடதுசாரிக் கட்சிகள் தலைமைதாங்கி வழிநடத்தியதைப் போன்று ‘அறகலய’வுக்கு அரசியல் தலைமை எதுவும் இருக்கவில்லை. அதில்தான் அந்தக் கிளர்ச்சியின் தனித்துவம் வெளிப்பட்டது. தன்னியல்பான மக்கள் கிளர்ச்சியின் இறுதிக்கட்டங்களில் தீவிரவாத அரசியல் சக்திகள் ஊடுருவி வன்முறைகளுக்கு வழிவகுத்துவிட்டதாக அதிகார வர்க்கம் குற்றஞ்சாட்டி அடக்குமுறைக்கு நியாயம் கற்பித்த போதிலும், தங்களது வாழ்வை அவலத்துக்குள்ளாக்கிய தவறான ஆட்சிமுறைக்கும் ஊழல் முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் குடும்ப அரசியல் ஆதிக்கம் ஆகியவற்றுக்கு எதிரான வெகுஜனங்களின் சீற்றம் இலங்கையை நோக்கி முழு உலகத்தையும் பார்க்கவைத்தது. ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சியின் குறுகிய வரலாற்றை நான்கு கட்டங்களாக சுருக்கமாக கூறலாம். இயற்கைப் பசளை பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கென்று கூறிக்கொண்டு இரசாயன பசளை வகைகள் இறக்குமதிக்கு தடைவிதித்த கோட்டபாயவின் முன்யோசனையற்ற தீர்மானத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் முதலில் நாட்டுப்புறங்களில் எதிர்ப்பியக்கங்களை பல மாதங்களாக முன்னெடுத்தனர். பிறகு பொருளாதார இடர்பாடுகளை தாங்க முடியாமல் சில வாரங்களாக தலைநகரிலும் புறநகர்ப் பகுதிகளிலும் ஆங்காங்கே சிறிய கவன ஈர்ப்பு எதிர்ப்பியக்கங்களை நடத்திய மக்கள் தினமும் பல மணிநேர மின்வெட்டு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பாவனைப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு என்று நிலைமை தொடர்ந்து மோசமடையவே 2022 மார்ச் 31 கொழும்புக்கு வெளியே மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டபாயவின் வீட்டுக்கு வெளியே திரண்டு ‘கோட்டா வீட்டுக்கு போ’ என்று முழக்கங்களை எழுப்பினார்கள். பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்ப்பீரங்கி தாக்குதல்களை நடத்தி அவர்களைக் கலைத்தார்கள். நிலைவரத்தை கட்டுப்படுத்த இராணுவமும் அழைக்கப்பட்டது. மக்கள் வீதிகளில் இறங்குவதைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவசரகாலச் சட்டப் பிரகடனமும் வந்தது. ஆர்ப்பாடடம் செய்தவர்களை தீவிரவாதிகள் என்று வர்ணித்து அறிக்கை வெளியிட்ட ஜனாதிபதி இலங்கையில் ‘அரபு வசந்தம்’ ஒன்றை முன்னெடுக்க அவர்கள் சதி செய்வதாக குற்றஞ்சாட்டினார். ஊரடங்கு சட்டத்தையும் அவசரகாலச் சட்டத்தையும் அலட்சியம் செய்த மக்கள் பெரும் எண்ணிக்கையில் வீதிகளில் இறங்கி ஆட்சியாளர்கள் மீதான தங்கள் ஆவேசத்தை வெளிக்காட்டினார்கள். அடுத்து ஒரு வாரத்தில் காலிமுகத்திடலில் ‘கோட்டா கோ கம’ போராட்டக் கிராமம் அமைக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டு ஜனாதிபதி செயலகத்துக்கு அண்மையாக பேரை வாவிக்கு பக்கத்தில் ‘ஆர்ப்பாட்ட இடம்’ ஒன்றை பிரகடனம் செய்து எதிர்ப்பியக்கங்களை மதிக்கும் ஒருவராக உலகிற்கு தன்னைக் காட்டிக்கொள்ள முயன்ற கோட்டபாய காலிமுகத்திடல் முழுவதையும் முற்றுகை செய்து தனக்கு எதிராக ஒரு போராட்டக் கிராமமே நாளடைவில் உருவாகும் என்று ஒருபோதும் நினைத்திருக்கமாட்டார். மக்கள் கிளர்ச்சியின் உலகறிந்த சின்னமாக ‘கோட்டா கோ கம’ மாறியது. அதேபோன்ற கிராமங்கள் வேறு நகரங்களிலும் போராட்டக்காரர்களினால் அமைக்கப்பட்டது. குறிப்பாக காலிமுகத்திடல் ‘கோட்டா கோ கம’ ராஜபக்‌ஷ அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கான மக்கள் போராட்டத்துக்கு ஒருமைப்பாட்டை வெளிக்காட்டுவதற்கு சமூகத்தின் சகல பிரிவுகளையும் சேர்ந்தவர்களுக்கு ஒரு பரந்த அடையாளபூர்வமான களமாக அமைந்தது. மூன்று மாத காலமாக இன, மத பேதமின்றி ஆண்கள், பெண்கள், முதியவர்கள், ஊனமுற்றவர்கள், சிறுவர்கள், குழந்தைகளை கையில் ஏந்திய இளம் தாய்மார்கள், கல்விமான்கள், மதத்தலைவர்கள், அறிவுஜீவிகள், கலைஞர்கள், அரசியல், சமூக செயற்பாட்டாளர்கள் என்று பல தரப்பினரும் ‘கோட்டா கோ கம’வுக்கு படையெடுத்தனர். ஏப்ரில் 9ஆம் திகதியில் இருந்து போராட்டங்கள் கடுமையாக தீவிரமடையத் தொடங்கின. அலரிமாளிகை முன்பாகவும் போராட்டக்காரர்கள் ‘மைனா கோ கம’வை அமைத்து பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவை பதவி விலகுமாறு கோரினர். ஜனாதிபதி செயலகமும் முற்றுகைக்குள்ளானது. பிறகு முக்கிய சம்பவங்கள் எல்லாமே ஒரு நாடக பாணியில் 9ஆம் திகதிகளிலேயே நடந்தேறியதை காணக்கூடியதாக இருந்தது. சரியாக ஒரு மாதம் கழித்து மே 9ஆம் திகதி தனது பெருமளவு ஆதரவாளர்களை அலரிமாளிகைக்கு வரவழைத்த மஹிந்த ஆவேசமாக உரையாற்றி காலிமுகத்திடலில் முகாமிட்டிருந்த போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு அவர்களைக் கட்டவிழ்த்துவிட்டார். பொலிஸார் பார்வையாளர்களாக இருந்தனரே தவிர வன்முறையை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அந்தத் தாக்குலுக்கு பதிலடியாக நாட்டின் பல பாகங்களிலும் வன்முறைகள் மூண்டன. எழுபதுக்கும் அதிகமான அரசாங்க அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த விலக வேண்டியேற்பட்டது. அலரிமாளிகையை மக்கள் முற்றுகையிட்ட நிலையில் தனது குடும்பத்தினருடன் அங்கிருந்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஹெலிகொப்டர் மூலம் வெளியேறிய அவர் திருகோணமலையில் கடற்படை தளத்தில் சில நாட்கள் தங்கியிருந்தார். அதற்கு பிறகு ஒரு தடவை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ராஜபக்‌ஷ சகோதரர்களில் மூத்தவரான சமல் ராஜபக்‌ஷ சகோதரர் மஹிந்த ஜனாதிபதியாக தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முடிவில் அரசியலில் இருந்து ஓய்வுபெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். ஜூன் மாதம் 9ஆம் திகதி முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷ தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்தார். அன்றைய தினம் செய்தியாளர்கள் மகாநாட்டைக் கூட்டிய அவர் தங்களது தவறான ஆட்சிமுறையின் விளைவாக நாடு வங்குரோத்து நிலையடைந்ததற்காக மக்களிடம் வருத்தம் தெரிவிப்பதற்குப் பதிலாக மக்களும் கூட நெருக்கடி நிலைக்குப் பொறுப்பு என்று கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது. அடுத்து ஜூலை 9 நாடு பூராவுமிருந்து இலட்சக் கணக்கில் மக்கள் தலைநகரில் திரண்டு ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டனர். இராணுவத்தின் உறுதியான ஆதரவைக் கொண்டவர் என்று நம்பப்பட்ட கோட்டபாய கிளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்க முடியாத நிலையில் ஜனாதிபதி மாளிகையின் கொல்லைப்புறமாக வெளியேறி துறைமுகத்தில் கப்பல் ஒன்றில் தங்கியிருந்து பிறகு வெளிநாடு சென்றார். முதலில் மாலைதீவுக்கும் சிங்கப்பூருக்கும் பிறகு தாய்லாந்துக்கும் மனைவி சகிதம் சென்ற அவருக்கு எந்த நாடுமே தஞ்சமளிக்க முன்வராத நிலையில் இறுதியில் செப்டெம்பர் முதல் வாரத்தில் நாடு திரும்பி முன்னாள் ஜனாதிபதிக்குரிய அரசாங்க வசதிகளுடன் தற்போது வாழ்ந்துவருகிறார். அடிக்கடி வெளிநாடுகளுக்கும் போய்வருகிறார். உலகில் மக்கள் கிளர்ச்சியை அடுத்து நாட்டில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட வேறு எந்த ஆட்சியாளரும் கோட்டபாயவைப் போன்று சுலபமாகவும் விரைவாகவும் நாடு திரும்பக்கூடியதாக இருந்ததாக நாம் அறியவில்லை. இலங்கையில் முன்னைய எந்த ஜனாதிபதிக்கும் எதிராக மக்கள் கிளர்ச்சி செய்ததில்லை. கோட்டபாயவே பதவிக்காலத்தின் இடைநடுவில் அதிகாரத்தைக் கைவிட நிர்ப்பந்திக்கப்பட்ட முதல் இலங்கை ஜனாதிபதியாவார். நீண்டகாலத்துக்கு தங்களது குடும்ப ஆட்சியை தொடருவதை எவராலும் தடுக்கமுடியாது என்று நம்பிக்கொண்டிருந்த ராஜபக்‌ஷர்கள் தங்களுக்கு எதிராக சிங்கள மக்கள் இவ்வளவு விரைவாக கிளர்ந்தெழுவார்கள் என்று கனவிலும் ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார்கள். விடுதலை புலிகளை தோற்கடித்து உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தமைக்காக சிங்கள மக்கள் என்றென்றைக்கும் தங்களுக்கு கடமைப்பட்டவர்கள் என்று கர்வத்தனமாக கருதிய ராஜபக்‌ஷர்கள் அதனால் ஆட்சியதிகாரம் என்பது ஏதோ தங்களிடம் இருந்து பறிக்கமுடியாத உரித்து என்ற நினைப்பில் தங்களின் முறைகேடான ஆட்சியை மக்கள் பொருட்படுத்த மாட்டார்கள் என்று விபரீதமாக நம்பினார்கள். சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான பேரினவாத அணிதிரட்டல் என்றென்றைக்கும் தங்களுக்கு கைகொடுக்கும் என்றும் ராஜபக்‌ஷர்கள் நம்பினார்கள். இலங்கை அரசியல் முன்னரும் கூட சில உயர்வர்க்க குடும்பங்களின் ஆதிக்கத்தில் இருந்து வந்திருக்கிறது. ஆனால், அந்தக் குடும்பங்களுக்கு எதிராக மக்கள் ஒரு போதும் கிளர்ச்சி செய்ததில்லை. குடும்ப ஆதிக்க அரசியலை ராஜபக்‌ஷர்கள் மிகவும் அருவருக்கத்தக்க மட்டத்துக்குக் கொண்டுசென்றார்கள். ஆனால், மக்கள் கிளர்ச்சியில் இருந்து அவர்கள் பாடம் எதையும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. வெளிநாடுகளின் குறிப்பாக மேற்குலக நாடுகளின் சதி முயற்சியின் காரணமாகவே தாங்கள் அதிகாரத்தை இழக்கவேண்டி வந்ததாக கூறும் அவர்கள் மீணடும் தங்களால் தேர்தல்கள் மூலம் ஆட்சியதிகாரத்துக்கு வரமுடியும் என்று மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் வகையில் கூறுகிறார்கள். தவறான ஆட்சிமுறைக்கும் வங்குரோத்து நிலைக்கு நாட்டைக் கொண்டுவந்த பொருளாதாரக் கொள்கைகளுக்கும் கோட்டபாயவும் அவருக்கு ஆலோசனை கூறியவர்களும் மாத்திரமே பொறுப்பு என்பது போல அவரின் ஆட்சிக்கால செயற்பாடுகளில் இருந்து தங்களை தூரவிலக்கும் ஒரு தந்திரோபாயத்தை கடைப்பிடிக்க ஏனைய ராஜபக்‌ஷர்கள் முயற்சிப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால், கோட்டபாயவை ஒரு ‘அப்பாவி’ போன்று காட்டுவதற்கு அவருக்கு நெருக்கமானவர்கள் முயற்சிக்கிறார்கள். ஜூன் 20 கோட்டபாயவின் 74ஆவது பிறந்ததினம். அவரின் அந்தரங்க செயலாளராக இருந்த சுஜீஸ்வர பண்டார என்பவர் அதற்கு இரு நாட்கள் முன்னதாக சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். ‘வரலாற்றினால் தவறிழைக்கப்பட்ட ஒரு ஜனாதிபதி’ என்பது அதன் தலைப்பு. “பண்டார ஒரு விசித்திரமான சில கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். பதவி விலகிய நேரத்தில் கோட்டபாய மக்கள் செல்வாக்குடன் இருந்தாரா இல்லையா என்பதைத் தேர்தல் ஒன்றின் மூலம் மாத்திரமே அறிந்துகொள்ளக்கூடியதாக இருந்திருக்கும். அத்தகைய ஒரு தேர்தல் இல்லாத நிலையில் தீய நோக்குடைய நிகழ்ச்சி நிரலைக் கொண்டவர்கள் வெற்றிபெற்றுவிட்டார்கள். “முன்னாள் ஜனாதிபதியின் கோட்பாடுகளையும் கொள்கைகளையும் அறியாதவர்கள் குடும்பத்தவர்களுடன் சேர்த்து அவரையும் குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆளுமையைப் பொறுத்தவரையிலும் கூட அவர் ஏனைய சகோதரர்களையும் விட வித்தியாசமானவர். அவர் பதவியேற்றபோது நாட்டின் பொருளாதாரம் ஏற்கெனவே வீழ்ச்சியின் விளிம்பில் இருந்தது. கொவிட் – 19 பெருந்தொற்று நோயே வீழ்ச்சியை விரைவுபடுத்தியது. “உண்மை ஒரு நாள் வெளிச்சத்துக்கு வந்து தவறான குற்றச்சாட்டுக்கள் சகலவற்றில் இருந்தும் முன்னாள் ஜனாதிபதியை விடுவிக்கும் என்று அவருடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றியவன் என்ற முறையில் நான் உறுதியாக நம்புகிறேன் ” என்று பண்டார எழுதியிருக்கிறார். கடந்த வருடம் ஜூலை 9ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டபோது அவர்களை சுடுவதற்கு உத்தரவைத் தருமாறு இராணுவ அதிகாரிகள் கோட்டபாயவை கேட்டதாகவும் அதனால் அமைதியிழந்த அவர், “உங்களுக்கு என்ன பைத்தியமா? இந்த மக்கள்தான் எனக்கு வாக்களித்து அதிகாரத்துக்குக் கொண்டுவந்தவர்கள். அவர்களை எவ்வாறு சுட முடியும்?” என்று அவர்களைப் பார்த்து திருப்பிக் கேட்டதாகவும் பண்டார கூறுகிறார். ஆர்ப்பாட்டக்காரர்கள் தன்னை பதவி விலகுமாறு கோரியபோது 69 இலட்சம் வாக்குகள் பெற்று ஜனாதிபதியாகத் தெரிவான தான் எதற்காக சொற்ப எண்ணிக்கையானவர்களின் வற்புறுத்தலுக்காக பதவி விலகவேண்டும் என்று கேட்டவர் இந்த கோட்டபாய. ஆனால், இறுதியில் கிளர்ச்சியில் இறங்கியவர்கள் தன்னை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்த மக்களே என்பதை ஒத்துக்கொள்கின்ற அளவுக்காவது அவரிடம் ஒருவித ‘நேர்மை’ இருந்திருக்கிறது. வரலாற்றினால் தவறிழைக்கப்பட்டவரா கோட்டபாய அல்லது வரலாறு தந்த வாய்ப்பை பயன்படுத்துவதற்கு பரிதாபகரமான முறையில் தவறியவரா கோட்டபாய என்பதே முக்கியமான கேள்வி. வீரகத்தி தனபாலசிங்கம் https://maatram.org/?p=10936
  20. ராஜபக்‌ஷர்களின் எதிர்கால அரசியல் வியூகங்கள் Veeragathy Thanabalasingham on May 25, 2023 Photo, AFP, THE HINDU மூன்றரை வருடங்களுக்கு முன்னர் ராஜபக்‌ஷர்கள் மீண்டும் பதவிக்கு வந்தபோது இலங்கையின் ஆட்சியதிகாரத்தில் இருந்து தங்களது குடும்பத்தை நீண்ட காலத்துக்கு அசைக்கமுடியாது என்று அவர்களுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. அவர்களின் அதிவிசுவாசிகள் குறைந்தது ஒரு இருபது வருடங்களுக்காவது தங்களது அரசியல் எசமான்கள் ஆட்சியில் இருப்பார்கள் என்று பேசினார்கள். தங்களில் யார் யார் அடுத்தடுத்து ஜனாதிபதியாக வருவது என்று ராஜபக்‌ஷர்கள் ஒரு பட்டியல் போட்டு செயற்பட்டார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவைப் பொறுத்தவரை மூத்த மகன் நாமல் ராஜபக்‌ஷவை அரியாசனம் ஏற்றுவதே அவரின் குறிக்கோளாக இருக்கிறது என்றபோதிலும், மகன் நாட்டின் உயர் பதவியை வகிப்பதற்கு உரிய அனுபவத்தைப் பெற்று தயாராகும் வரை தனது சகோதரர்களில் எவராவது ஒருவருக்கு அந்த வாய்ப்பை கொடுப்பதே அவர் தீட்டிய குடும்ப அரசியல் நிகழ்ச்சித் திட்டம். கோட்டபாய ராஜபக்‌ஷவுக்கு அடுத்து ஜனாதிபதியாக வருவதற்கு நம்பிக்கையைக் கொண்டிருந்தவர் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷ. ஆனால், ராஜபக்‌ஷர்கள் குறுகிய காலத்திற்குள் தங்களது அரசியல் ஆதிக்கத்துக்கு ஆபத்து வரும் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டாரகள். தங்களுக்கு எதிராக சிங்கள மக்கள் கிளர்ந்தெழுந்ததை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. குறிப்பாக விடுதலைப் புலிகளை தோற்கடித்து உள்நாட்டுப்போரை முடிவுக்குக் கொண்டு வந்தமைக்காக சிங்கள மக்கள் தங்களது குடும்பத்துக்கு என்றென்றைக்கும் கடமைப்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்ற ஒரு எண்ணத்தை வளர்த்துக்கொண்ட ராஜபக்‌ஷர்கள் ஆட்சியதிகாரம் மீது தங்களுக்கு ஒரு உரித்து இருப்பது போன்று நடந்துகொண்டார்கள். போர் வெற்றியைப் பயன்படுத்தி இடையறாது முன்னெடுத்து வந்த சிங்கள பௌத்த பெரும்பான்மை இனவாத அணிதிரட்டல் என்றென்றைக்கும் தங்களுக்கு கைகொடுக்கும் என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள். கடந்த வருடத்தைய ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சிக்கு தங்களது தவறான ஆட்சிமுறையின் விளைவாக தோன்றிய – இலங்கை வரலாறு காணாத படுமோசமான பொருளாதார நெருக்கடியே காரணம் என்பதை இன்னமும் கூட ராஜபக்‌ஷர்கள் ஒத்துக்கொண்டதாக இல்லை. மக்கள் கிளர்ச்சியின் பின்னணியில் வெளிநாட்டு சதி இருந்ததாக முன்னரும் அவர்கள் கூறியபோதிலும், அண்மைக்காலமாக அது குறித்து பேசுவதை கடுமையாக தீவிரப்படுத்தியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அதேவேளை, எந்தத் தேர்தலையும் எந்த நேரத்தில் நடத்தினாலும் பொதுஜன பெரமுன வெற்றிபெறும். மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் ராஜபக்‌ஷர்களும் அவர்களின் பரிவாரங்களும் இடையறாது பேசிக்கொண்டிருக்கிறார்கள். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தங்களது கட்சியின் வேட்பாளராக பசில் ராஜபக்‌ஷவை நிறுத்துவதற்கான சாத்தியம் குறித்தும் அவரின் அதிவிசுவாசிகளான கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் போன்றவர்கள் அடிக்கடி கூறுகிறார்கள். பொதுஜன பெரமுன ஆரம்பிக்கப்பட்டு மிகவும் குறுகிய காலத்திற்குள் ஆட்சியைப் பிடிக்கக்கூடியதாக அதை கட்டியெழுப்பியவர் பசில் ராஜபக்‌ஷ என்றபோதிலும், இன்று ராஜபக்‌ஷ குடும்ப உறுப்பினர்களில் மக்களால் மிகவும் வெறுக்கப்படுபவராக அவரே விளங்குகிறார் எனலாம். இதுவரையில் கட்சியின் தேசிய அமைப்பாளராக இருந்துவரும் பசில் ராஜபக்‌ஷ தலைவராக வருவதை அல்லது ஜனாதிபதி வேட்பாளராக அவரை நிறுத்தும் யோசனையை கட்சிக்குள் கணிசமான பிரிவினர் கடுமையாக எதிர்க்கிறார்கள். அவரின் தலைமையில் கட்சி தேர்தல்களில் படுதோல்வி அடையும் என்று அஞ்சும் அவர்கள் தங்களது எதிர்கால அரசியல் வாய்ப்புக்கள் குறித்து நம்பிக்கையற்றவர்களாக இருக்கிறார்கள். அதேவேளை, மஹிந்த ராஜபக்‌ஷ தொடர்ந்தும் தலைவராக இருந்தால் பொதுஜன பெரமுனவின் செல்வாக்கை மீளக்கட்டியெழுப்பமுடியும் என்ற அவர்களின் எதிர்பார்ப்பும் கூட நாட்டு மக்களின் உண்மையான மனநிலையை விளங்கிக்கொண்ட ஒன்றாகத் தெரியவில்லை. அதேவேளை, இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட பசில் ராஜபக்‌ஷ தனது அமெரிக்க குடியுரிமையைக் கைவிடுவது குறித்தோ அல்லது ஜனாதிபதி வேட்பாளராக வருவது குறித்தோ இதுவரையில் பகிரங்கமாக எதையும் கூறவில்லை. அவர் தொடர்பில் கட்சிக்குள் தோன்றியிருக்கும் முரண்பாடுகள் குறித்து மஹிந்த ராஜபக்‌ஷவும் எதுவும் பேசுவதில்லை. பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு மாற்றமும் கட்சியில் மேலும் பிளவுக்கு வழிவகுக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது. பசில் ராஜபக்‌ஷவின் தலையீடுகள் காரணமாகவே ஏற்கெனவே பல முக்கிய அரசியல்வாதிகள் கட்சியில் இருந்து வெளியேறினார்கள். எது எவ்வாறிருந்தாலும் ராஜபக்‌ஷ சகோதரர்கள் தங்களுக்குள் அரசியல் ரீதியில் பிளவுபட்டுச் செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது. அதேவேளை, ஒரு ராஜபக்‌ஷவை தவிர வேறு எவரும் அந்தக் கட்சியின் தலைவராக வருவதும் கூட சாத்தியமில்லை. மக்கள் கிளர்ச்சிக்குப் பிறகு அதிகாரப் பதவிகளில் இருந்து இறங்கிய ராஜபக்‌ஷர்கள் தங்கள் கட்சியின் செல்வாக்கை மீளக்கட்டியெழுப்புவதற்கு அண்மைய மாதங்களில் முன்னெடுத்த முயற்சிகள் பயனைத்தரவில்லை. இறுதியாக கொழும்பு கெம்பல் பூங்காவில் பொதுஜன பெரமுனவின் மேதினக் கூட்டத்தில் காலியாகக்கிடந்த கதிரை வரிசைகள் தங்களுக்கு மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய ஆதரவின் இலட்சணத்தை ராஜபக்‌ஷர்களுக்கு தெளிவாக உணர்த்தியிருக்கவேண்டும். இதனிடையே மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் பிரதமராக பதவியேற்பது குறித்த கதைகள் அடிக்கடி பேசப்படுகின்றன. கடந்த வாரமும் கூட அவ்வாறு ஒரு கதையை கேள்விப்படக்கூடியதாக இருந்தது. வழமை போன்றே சாகர காரியவாசம் அவ்வாறு பிரதமராக அவர் பதவியேற்கப்போவதில்லை என்று மறுப்பை வெளியிட்டார். தற்போதைக்கு பிரதமராகப் பதவியேற்கிறாரோ இல்லையோ அரசியலில் தொடர்ந்து இருக்கப்போவதாகவும் பொருத்தமான தருணம் வரும்போதே ஓய்வுபெறப் போவதாகவும் மகிந்த ராஜபக்ச எப்போதோ கூறிவிட்டார். ஜனாதிபதியாக தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முடிவுக்கு பிறகு அவர் அரசியலில் இருந்து ஓய்வுபெற்றிருக்கவேண்டும் என்று கடந்த வருடம் ராஜபக்‌ஷ குடும்பத்தின் மூத்தவர் சமல் ராஜபக்‌ஷ நாடாளுமன்றத்தில் ஒரு தடவை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜபக்‌ஷர்களைப் பொறுத்தவரை அதிகாரத்தைக் கைவிட்டு இருப்பதென்பது அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாத விடயம். அதிகாரத்தைச் செலுத்திக்கொண்டிருப்பதற்கு அவர்களுக்கு ஒரு அரசாங்கம் தேவைப்படலாம். ஆனால், மீண்டும் ஒரு ராஜபக்‌ஷ ஆட்சி நாட்டு மக்களுக்குத் தேவையா? மீண்டும் அவர்களின் ஆட்சி என்ற யோசனை ஒரு கெடுதியான வேடிக்கை மாத்திரமல்ல கொடுமையான வேடிக்கையும் கூட என்று கடந்த வாரம் ஒரு அரசியல் அவதானி எழுதியிருந்தார். 2015 ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு நான்கு வருடங்களில் மீண்டும் ஆட்சியதிகாரத்துக்கு ராஜபக்‌ஷர்கள் வரக்கூடியதாக இருந்த நிலைவரத்துக்கும் மக்கள் கிளர்ச்சி அவர்களை அதிகாரத்தில் இருந்து தூக்கியெறிந்த பின்னரான தற்போதைய நிலைவரத்துக்கும் இடையில் பாரிய வேறுபாடு இருக்கிறது. கடந்த காலத்திலும் இலங்கை அரசியல் சில உயர் வர்க்கக் குடும்பங்களின் ஆதிக்கத்தில் இருந்திருக்கிறது. ஆனால், மஹிந்த ராஜபக்‌ஷ அதிகாரத்துக்கு வந்த பிறகு அவரது குடும்பம் அரசியலிலும் ஆட்சிமுறையிலும் அருவருக்கத்தக்க முறையில் மட்டுமீறிய ஆதிக்கத்தைச் செலுத்தியதைப் போன்று அந்தக் குடும்பங்கள் நடந்துகொண்டதாகக் கூறமுடியாது. ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்ததைப் போன்று அந்தக் குடும்பங்களுக்கு எதிராக மக்கள் ஒருபோதும் செய்ததில்லை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக அரச நிருவாகத்தில் எதேச்சாதிகாரப் போக்கை படிப்படியாக அதிகரித்து வந்திருக்கிறது. ஆனால், ராஜபக்‌ஷர்கள் ஜனாதிபதியாக வந்த பிறகுதான் அந்த எதேச்சாதிகாரம் உச்ச அளவுக்குப் போனது. தங்களிடம் அதிகாரங்களைக் குவித்துவைத்திருப்பது ஏதோ தங்கள் பிறப்புரிமை என்ற சிந்தனையில் அவர்கள் நடந்துகொண்டார்கள். ஆட்சிமுறை தொடர்பிலான முக்கிய தீர்மானங்களை சகோதரர்கள் மாத்திரமே ஒன்று கூடி எடுத்தார்கள். அதன் விளைவே நாட்டின் இன்றைய அவல நிலை. ஊழல் மோசடி, அதிகார துஷ்பிரயோகம், சட்டத்தின் ஆட்சி சீர்குலைவு மற்றும் குடும்ப அரசியல் ஆதிக்கம் என்று ஆட்சிமுறையின் கெடுதியான போக்குகள் சகலவற்றையும் உருவகிப்பவர்களாக ராஜபக்‌ஷர்கள் விளங்கினார்கள். இந்த நூற்றாண்டின் இதுவரையான இரு தசாப்தங்களுக்கும் அதிகமான காலப்பகுதியில் கூடுதல் வருடங்கள் அவர்களே அதிகாரத்தில் இருந்தார்கள். 2005 தொடக்கம் இதுவரையான 18 வருடங்களில் இடையில் ஒரு நான்கு வருடங்களைத் தவிர மிகுதி காலப்பகுதியில் நாடு அவர்களின் ஆட்சியிலேயே இருந்தது. மஹிந்த ராஜபக்‌ஷ 11 வருடங்கள் நிதியமைச்சராகவும் பதவி வகித்த அதேவேளை பசில் ராஜபக்‌ஷ பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்தது மாத்திரமல்ல, கோட்டபாய ஆட்சியில் இறுதியாக நிதியமைச்சராகவும் இருந்தார். அதனால் வங்குரோத்து நிலைக்கு நாட்டை இட்டுச்சென்ற தவறான பொருளாதார முகாமைத்துவத்தை பொறுத்தவரை ராஜபக்‌ஷர்களுக்கே முக்கிய பொறுப்பு இருக்கிறது. இவ்வாறாக சகல முனைகளிலும் நாட்டை படுமோசமான நிலைக்குக் கொண்டுவந்து விட்டு தங்களுக்கு இருக்கும் பொறுப்புக்கூறல் கடப்பாட்டை அலட்சியம் செய்துகொண்டு மீண்டும் அதிகாரத்துக்கு வருவது குறித்து கனவு காணும் அவர்கள் இனிமேல் தங்களால் எதைச் சாதிக்கமுடியும் என்று நம்புகிறார்களோ தெரியவில்லை. ராஜபக்‌ஷர்களைப் பொறுத்தவரை, மீண்டும் அதிகாரத்துக்கு வரவேண்டும் என்ற பேராசை ஒரு புறமிருக்க, கடந்த கால தவறுகளுக்காக தங்களைப் பொறுப்புக் கூறவைக்கக்கூடிய ஒரு அரசாங்கம் பதவிக்கு வராமல் இருப்பதை உறுதிசெய்வதும் கூட முக்கியமானது. நாட்டு மக்களின் மனநிலையையும் பொருட்படுத்தாமல் அந்தக் குடும்பத்தின் எதிர்கால வியூகங்கள் அந்த நோக்கிலேயே அமையும் என்பதே விசித்திரமான உண்மை. வீரகத்தி தனபாலசிங்கம் https://maatram.org/?p=10870
  21. அரசியல் தீர்வில் உண்மையான அக்கறை இருந்தால் ஜனாதிபதி இன்று முதலில் செய்யவேண்டியது… Veeragathy Thanabalasingham on May 17, 2023 Photo, AFP, Saudigazette இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை திகதி குறிப்பிட்டு அல்லது குறுகிய கால அவகாசத்திற்குள் அரசியல் இணக்கத் தீர்வைக் காணக்கூடிய ஒன்றல்ல. ஆனால், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வந்த பிறகு குறுகிய காலத்திற்குள் தீர்வு காண்பது குறித்து அடிக்கடி பேசுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஐக்கிய தேசிய கட்சியின் மேதினக்கூட்டத்தில் இணைய வழியாக உரையாற்றியபோது புதிய அரசியலமைப்பு ஒன்றின் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காணக்கூடிய அரசியல் செயற்திட்டம் ஒன்று வகுக்கப்படும் என்றும் இவ்வருட இறுதிக்குள் சகல அரசியல் கட்சிகளினதும் இணக்கத்தைப் பெறுவதற்கு நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். அத்துடன், தமிழ் கட்சிகள் ஒத்துழைப்பதற்கு தயங்குவதன் காரணத்தினால் தன்னால் இனப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வைக்காண முடியாமல் இருப்பதாகவும் கூட அவர் தெரிவித்தார். அரசியல் தீர்வைக் காண்பதற்கு தமிழ் கட்சிகள் எப்போதும் ஒத்துழைப்பை வழங்கி வந்திருக்கின்றன. ஆனால், தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு போதுமானதல்லாத – சிங்கள அரசியல் சமுதாயத்தின் நிபந்தனைகளின் வழியிலான – அரைகுறைத் தீர்வொன்றுக்கு தமிழர்களின் பிரதிநிதிகளினால் இணங்கமுடியாது என்பதே அடிப்படைப் பிரச்சினை. தமிழ் கட்சிகளிடம் தயக்கம் இருப்பதாக கூறிய ஜனாதிபதி விக்கிரமசிங்க இனப்பிரச்சினையின் வரலாற்றில் இதுகாலவரையில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் தீர்வு முயற்சிகள் தோல்வியடைந்தமைக்குப் பிரதான காரணம் சிங்கள பௌத்த மேலாதிக்கப் போக்கும் தென்னிலங்கை கட்சி அரசியலுமே என்பதை தெரியாதவரல்ல. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அத்தகைய தீர்வு முயற்சியொன்றின் தோல்விக்கு எதிர்க்கட்சி தலைவராக அவரும் கூட பெருமளவுக்குப் பொறுப்பாக இருந்தார். 1987 ஜூலை இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையைத் தொடர்ந்து மாகாண சபைகளை அறிமுகப்படுத்துவதற்குக் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தான் கொண்டிருக்கும் விருப்பத்துக்குத் தடையாக இருக்கும் சக்திகளையும் விக்கிரமசிங்க தெளிவாக அறிவார். அதனால் அரசியல் தீர்வைக் காணமுடியாமல் இருப்பதற்கு தமிழ்க்கட்சிகள் பின்னடிப்பதாக அவர் காரணம் கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. இனப்பிரச்சினைத் தீர்வுக்கு காலங்காலமாக முட்டுகட்டையாக இருந்து வந்திருக்கும் தென்னிலங்கை சக்திகளையும் அவர் தனது மேதின உரையில் குறிப்பிட்டிருந்தால் ஒரு பொருத்தப்பாடு இருந்திருக்கும். என்றாலும் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்று சர்வதேச சமூகத்தின் முன்னால் அரசாங்கம் தங்கள் மீது பழியைச் சுமத்திவிடக்கூடாது என்பதற்காக தமிழ்க்கட்சிகள் தற்போது ஜனாதிபதியுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றன. ஜனாதிபதியாக பதவியேற்று கடந்து போய்விட்ட சுமார் பத்து மாத காலத்தில் விக்கிரமசிங்க இனப்பிரச்சினை தீர்வு குறித்து பேசிய சந்தர்ப்பங்களை ஒரு தடவை நோக்குவோம். நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை சம்பிரதாயபூர்வமாக தொடக்கிவைத்து முதற் தடவையாக கடந்த வருடம் ஆகஸ்ட் மூன்றாம் திகதி தனது கொள்கை விளக்கவுரையை நிகழ்த்திய அவர், “தமிழ்ச்சமூகம் நீண்டகாலமாக எதிர்நோக்கிவருகின்ற பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வொன்றைக் காணவேண்டியது அவசியமாகும். தமிழ் மக்கள் போரின் விளைவான சமூக மற்றும் பொருளாதார துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். தீர்க்கப்படவேண்டிய இனப்பிரச்சினைகளும் உள்ளன. வடக்கின் அபிவிருத்திப் பணிகள் குறித்து புதிதாக சிந்திக்கவேண்டியிருக்கிறது. இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதில் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுடன் நெருக்கமாக பணியாற்றுவதன் மூலம் அவர்களின் ஆதரவைப் பெறலாம் என்று நம்புகிறேன். தாய்நாட்டுக்கு வந்து அவர்கள் முதலீடுகளைச் செய்வார்கள் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டார். பிறகு மூன்று மாதங்கள் கழித்து நாடாளுமன்றத்தில் பட்ஜெட் விவாதத்தின்போது இலங்கையின் 75ஆவது சுதந்திர தினமான பெப்ரவரி 4 க்கு முன்னதாக சிறுபான்மை இனங்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண விரும்புவதாக ஜனாதிபதி கூறினார். தனது முயற்சியில் இணைந்து செயற்பட முன்வருமாறு தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு சபையில் அழைப்பு விடுத்த அவர் சம்பந்தப்பட்ட சகல தரப்பினருடனும் கலந்துரையாடி இன நல்லிணக்கத்துக்கான திட்டத்தை வகுக்க பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அமைச்சரவைக் குழுவொன்றையும் நியமித்தார். அதைத் தொடர்ந்து டிசம்பரில் நாடாளுமன்றக் கட்சிகளின் மகாநாட்டை ஜனாதிபதி கூட்டினார். அந்த மகாநாட்டின் இரண்டாவது சுற்று இவ்வருடம் ஜனவரி 26 இடம்பெற்றது. இரு சுற்றுக்கும் இடைப்பட்ட நாட்களில் தமிழ்க்கட்சிகளின் தலைவர்களின் தலைவர்களுடன் தனியாகவும் ஜனாதிபதி இடையில் நான்கு தடவைகள் பேச்சுக்களை நடத்தினார். இந்தப் பேச்சுக்களின்போதும் முன்னதாக நாடாளுமன்ற கட்சிகளின் மகாநாட்டிலும் வடக்கிலும் கிழக்கிலும் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு உடனடிப் பிரச்சினைகள் தொடர்பில் காணப்பட்ட இடைக்கால இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தவறியதால் தமிழ்த் தரப்பு மேற்கொண்டு பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதைத் தவிர்த்தது. இதற்கிடையே யாழ்ப்பாணத்தில் தைப்பொங்கல் விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை இரு வருடங்களில் முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தனது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்தார். அவரின் இந்த ‘தைப்பொங்கல் பிரகடனத்துக்கு’ எதிராக சிங்கள தேசியவாத சக்திகள் போர்க்கொடி தூக்கின. இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ஆட்சியாளர்களுக்கு எதிராக நாடுபூராவும் மக்கள் செய்த கிளர்ச்சியை அடுத்து சில மாதங்களாக ‘தலைமறைவாக’ இருந்த இந்தச் சக்திகள் மீண்டும் வெளியில் வந்து இனங்களுக்கிடையில் குரோதத்தை வளர்க்கும் தங்களது நச்சுத்தனமான பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதியின் அந்த அறிவிப்பு எதிர்பார்த்திராத ஒரு வாய்ப்பாக அமைந்தது. முன்னைய ஜனாதிபதிகளில் எவரும் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. அதேபோன்றே நீங்களும் நடந்துகொள்ள வேண்டும் என்று பௌத்த பீடாதிபதிகள் விக்கிரமசிங்கவுக்கு கூட்டாக கடிதம் எழுதினார்கள். அந்தத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் நாட்டில் முன்னென்றும் இல்லாத வகையில் பெரிய இனக்கலவரம் வெடிக்கும் என்று விமல் வீரவன்ச, சரத் வீரசேகர போன்ற இனவாத அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக எச்சரிக்கை செய்துவருகிறார்கள். நாடாளுமன்றத்தினால் ஜனாதிபதியாகத் தெரிவான விக்கிரமசிங்கவுக்கு 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆணை கிடையாது என்றும் அவ்வாறு நடைமுறைப்படுத்த விரும்பினால் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றில் மக்களிடம் அவர் ஆணையைப் பெறவேண்டும் என்றும் சிங்கள தேசியவாதிகள் கூறினர். ஜனவரி 26 நாடாளுமன்ற கட்சிகளின் இரண்டாவது சுற்று மகாநாட்டில் 13ஆவது திருத்தத்தின் முழுமையான நடைமுறைப்படுத்தலுக்கு எதிராக கருத்து வெளியிட்ட அரசியல்வாதிகளுக்கு பதிலளித்த விக்கிரமசிங்க பின்வருமாறு கூறினார்; “நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற வகையில் தற்போதைய சட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டியது எனது பொறுப்பு. 13ஆவது திருத்தம் 36 வருடங்களாக அரசியலமைப்பின் அங்கமாக இருந்துவருகிறது. அதை நான் நடைமுறைப்படுத்த வேண்டும் அல்லது அரசியலமைப்புக்கு புதிய திருத்தம் ஒன்றை நாடாளுமன்றத்தில் எவராவது தனிநபர் சட்டமூலமாகக் கொண்டுவந்து அதை ஒழிக்கவேண்டும். “அத்தகைய சட்டமூலம் சபையில் பெரும்பான்மை வாக்குகளினால் தோற்கடிக்கப்படுமானால் பிறகு 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கும். அதை நடைமுறைப்படுத்தப்போவதுமில்லை, ஒழிக்கப்போவதுமில்லை என்று இரண்டுங்கெட்டான் நிலைப்பாட்டில் தொடர்ந்து இருக்கமுடியாது.” குறுகிய காலப்பகுதிக்குள் மீண்டும் ஒரு தடவை நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைத்து சில நாட்களுக்குள்ளாகவே புதிய கூட்டத்தொடரை பெப்ரவரி 8 சம்பிரதாயபூர்வமாக தொடக்கிவைத்து ஜனாதிபதி கொள்கை விளக்கவுரையை நிகழ்த்திக்கொண்டிருந்தபோது நாடாளுமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குமார் 13ஆவது திருத்தத்தின் பிரதிகளை தீயிட்டுக் கொளுத்தினர். ‘தைப்பொங்கல் பிரகடனத்தைச்’ செய்து ஒரு மாத காலம் கூட கடந்துவிடுவதற்கு முன்னதாக நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கு விக்கிரமசிங்கவுக்கு இரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பங்கள் கிடைத்தன. ஒன்று நாட்டின் 75ஆவது சுதந்திரதினம். மற்றையது பெப்ரவரி 8 கொள்கை விளக்கவுரை. கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்ற சுதந்திரதின தேசிய கொண்டாட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றவில்லை. அன்றைய தினம் மாலையில் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றினார். அதில் 13ஆவது திருத்தம் பற்றி எதுவும் கூறவில்லை. அதேபோன்றே கொள்கை விளக்கவுரையிலும் அதைப் பற்றி வாய்திறக்கவில்லை. தற்போது சிங்கள அரசியல் சமுதாயத்தில் எவரும் 13ஆவது திருத்தத்தைப் பற்றி பேசுவதில்லை. அது விடயத்தில் சிங்கள பௌத்த சக்திகளையும் மகாசங்கத்தையும் மீறி எதையும் செய்யமுடியாது என்ற நிலை. ஆனால், இனப்பிரச்சினைக்கு ஒரு முழுமையான தீர்வாக அந்த திருத்தம் அமையாவிட்டாலும் நிலையான அரசியல் தீர்வை நோக்கிய செயன்முறைகளின் முதற்படியாக அதை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே பொதுவில் தமிழ்க்கட்சிகளின் நிலைப்பாடாக இருக்கிறது. இத்தகையதொரு பின்புலத்திலேயே ஜனாதிபதி விக்கிரமசிங்க இவ்வருட இறுதிக்குள் அதாவது ஏழு மாதங்களுக்குள் அரசியல் தீர்வொன்றைக் காண சகல அரசியல் கட்சிகள் மத்தியிலும் இணக்கத்தை காண்பது குறித்து மேதினத்தன்று கூறியிருக்கிறார். முதலில் ஜனாதிபதி அழைத்துப் பேசவேண்டியது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை அல்ல. குறைந்தபட்சம் 13ஆவது திருத்தத்தையாவது நடைமுறைப்படுத்துவதற்கு உகந்த சூழ்நிலையை தோற்றுவிக்க மகாசங்கம் உட்பட தென்னிலங்கை அரசியல் சக்திகள் மத்தியில் ஓரளவுக்கேனும் கருத்தொருமிப்பை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்காமல் வருட இறுதிக்குள் தீர்வு காண்பது பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. தென்னிலங்கையில் அத்தகைய ஒரு கருத்தொருமிப்பை ஏற்படுத்துவதுடன் தமிழ் பிரதேசங்களில் நில அபகரிப்பு மற்றும் கலாசார ஆக்கிரமிப்பு போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் ஒருவித நம்பிக்கையைத் தோற்றுவித்த பிறகு தமிழ்க்கட்சிகளை மீண்டும் பேச்சுக்கு அழைத்திருந்தால் பொருத்தமானதாக இருந்திருக்கும். தற்போது தமிழ்க்கட்சிகளுடன் நடத்துகின்ற பேச்சுவார்த்தைகளுக்கு சமாந்தரமாக தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தின் மத்தியில் கருத்தொருமிப்பை ஏற்படுத்தும் முயற்சிகளையும் ஜனாதிபதி செய்தால் தனது முன்னெடுப்புகளுக்கு ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதாக அமையும். வீரகத்தி தனபாலசிங்கம் https://maatram.org/?p=10865
  22. புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிர்ப்பு அலை! Veeragathy Thanabalasingham on April 12, 2023 Photo, SELVARAJA RAJASEGAR – கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் நாஜி சிந்தனைகளையும் தீவிர வலதுசாரி இயக்கங்களையும் ஆதரித்தவரும் பிறகு ஹிட்லரின் ஆட்சி புரட்டஸ்தாந்து திருச்சபையில் செய்த தலையீடுகளை வெளிப்படையாகக் கடுமையாக எதிர்த்தமைக்காக சிறையிலும் சித்திரவதை முகாமிலும் அடைக்கப்பட்டவருமான ஜேர்மனிய போதகர் மார்ட்டின் நிமொல்லர் இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு கூறிய வார்த்தைகள் இவை. பயங்கரவாதத் தடைச்சட்டம் சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராக குறிப்பாக நான்கு தசாப்தங்களுக்கு அதிகமான காலமாக தமிழர்களுக்கு எதிராக கொடூரமான முறையில் பிரயோகிக்கப்பட்டபோது விரல் விட்டு எண்ணக்கூடிய சில மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் காட்டிய எதிர்ப்பைத் தவிர, தென்னிலங்கையில் பொதுவில் காணப்பட்ட மௌனத்தையும் பிறகு கடந்த வருடம் ‘அறகலய’ மக்கள் போராட்ட இயக்கத் தலைவர்களுக்கு எதிராக அதே சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்தியபோது எழுந்த எதிர்ப்பு ஆரவாரக் குரல்களையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது அந்த வார்த்தைகளே நினைவுக்கு வந்தன. ஆனால், அண்மைய அனுபவங்களுக்குப் பிறகு பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டங்களை அரசாங்கம் துஷ்பிரயோகம் செய்வதற்கு எதிராக தென்னிலங்கையில் கிளம்பியிருக்கும் மிகுந்த முனைப்புடன் கூடிய எதிர்ப்பு பெரிதும் வரவேற்கத்தக்க – ஆரோக்கியமான மாற்றத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது. உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் கடுமையான கண்டனத்துக்கு உள்ளாகிவந்திருக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம் (Prevention of Terrorism Act.) 44 வருங்களாக நடைமுறையில் இருந்துவருகிறது. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தீவிரமடையத் தொடங்கிய தமிழ் ஆயுதப்போராட்டத்தை ஒடுக்குவதற்கு ஜே.ஆர். ஜெயவர்தன அரசாங்கத்தினால் தற்காலிகமானதாக 1979ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டு பிறகு 1982ஆம் ஆண்டு நிரந்தரமானதாக்கப்பட்ட அந்தக் கொடிய சட்டத்துக்குப் பதிலாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முன்வைத்திருக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்துக்கு (Anti – Terrorism Bill) இப்போது மனித உரிமைகள் அமைப்புக்கள், சிவில் சமூகம், சட்டத்துறை சமூகம், தொழிற்சங்கங்கள் மற்றும் மாணவர் அமைப்புக்களிடம் இருந்து கிளம்பியிருப்பதைப் போன்ற எதிர்ப்புக்கு வேறு எந்தவொரு சட்டமூலமும் அண்மைய தசாப்தங்களில் முகங்கொடுத்திருக்கும் என்று கூறமுடியாது. எதிர்க்கட்சிகள், சட்டத்தரணிகள் மற்றும் சமூக, அரசியல் செயற்பாட்டாளர்களின் வேண்டுகோள்களைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை தாமதிப்பதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ கடந்தவாரம் அறிவித்தார். புதிய சட்ட மூலம் மார்ச் 23 அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. இதற்கு உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் போதுமான கலந்தாலோசனை இல்லாமல் சட்டமூலம் வெளியிடப்பட்டிருப்பது குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியது. நாடாளுமன்றத்தில் சட்ட மூலத்தின் முதலாவது வாசிப்பு ஏப்ரில் நான்காம் திகதிக்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சட்ட மூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாட விரும்புபவர்கள் ஏப்ரில் 6ஆம் திகதி தொடங்கிய மூன்று வாரகால நீதிமன்ற விடுமுறை காரணமாக பிரச்சினைகளை எதிர்நோக்குவதைத் தவிர்க்கும் நோக்குடன் நாடாளுமன்றத்தில் அதை சமர்ப்பிப்பதை அரசாங்கம் தாமதிப்பதாக விஜேதாச கூறினார். ஏப்ரில் கடைசி வாரத்தில் அல்லது மே முதல் வாரத்தில் சட்ட மூலம் சபையில் சமர்ப்பிக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். சட்ட மூலம் வர்த்தமானியில் வெளியிடப்படுவதற்கு முன்னதாக பொது விவாதத்துக்கும் கலந்துரையாடலுக்கும் வசதியாக அதன் வரைவு பகிரங்கப்படுத்தப்படவேண்டும் என்று கடந்த மாதமே சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கும் நீதியமைச்சருக்கும் வெளியுறவு அமைச்சருக்கும் கடிதங்களை எழுதியது. ஆனால், அதிகாரத்தில் உள்ளவர்கள் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடியதாக சட்ட வரைவை பொது விவாதத்துக்கு உட்படுத்த விரும்பவில்லை. அதற்கான காரணத்தை சட்டமூலத்தின் ஏற்பாடுகளை வாசிக்கும்போது தெளிவாக புரிந்து கொள்ளமுடியும். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் பல அம்சங்கள் அபாயகரமானவை. பயங்கரவாதத் தடைச்சட்டமாக இருந்தாலென்ன வேறு கிறிமினல் சட்டங்களாக இருந்தாலென்ன அவை பரந்தளவில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுவந்த இலங்கையின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது சட்ட மூலத்தின் பல ஏற்பாடுகள் குறித்து கடுமையான ஐயம் எழுகிறது. அதில் உள்ள பயங்கரவாதத்துக்கான வரைவிலக்கணம் மிகவும் விசாலமானதாக இருக்கிறது என்று கடந்த இரு வருடங்களாக இலங்கை சடடத்தரணிகள் சங்கத்தின் தலைவராக இருந்த சாலிய பீரிஸ் கடந்த வாரம் நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார். கடந்த வருடத்தைய மக்கள் கிளர்ச்சியின்போது போராட்டக்கார்களின் உரிமைகளுக்காக துணிச்சலுடன் குரல் கொடுத்த அவர் புதிய சட்டமூலம் நிறைவேற்றப்படுவதற்கு எதிராக பரந்தளவிலான இயக்கம் முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் சட்டமூலத்தின் ஆபத்துக்கள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார். சட்டமூலம் ஜனநாயக ரீதியான எதிர்ப்பையும் தொழிற்சங்கப் போராட்டங்களையும் நசுக்கி (பொருளாதார மீட்சியை சாதிப்பதற்கு அவசியமானது என்று அதிகாரத்தில் இருப்பவர்கள் தவறுதலாக நம்பும்) எதேச்சாதிகார ஆட்சியை நிறுவும் நோக்கத்துடன் வரையப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் சட்டமூலத்தை சமர்ப்பிப்பதை அரசாங்கம் தாமதித்திருக்கின்ற போதிலும் பரந்தளவிலான ஒரு கலந்துரையாடலுக்கு அதை அனுமதிப்பதில் அரசாங்கம் எந்தளவுக்கு அக்கறை கொண்டிருக்கிறது என்பது சந்தேகத்துக்குரியதே. கடுமையான விமர்சனங்கள் கிளம்பியிருப்பதற்கு மத்தியிலும் கூட சட்டமூலத்தில் பெரிய மாற்றங்கள் செய்யப்படமாட்டாது என்று அமைச்சர் விஜேதாச கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. பயங்கரவாதத்துக்கு வரைவிலக்கணம் வகுப்பது என்பது ஒரு சர்வதேசப் பிரச்சினை. பயங்கரவாதம் என்றால் என்ன என்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையினால் கூட உலகளாவிய கருத்தொருமிப்பை இதுவரையில் எட்ட முடியவில்லை. இத்தகைய பின்னணியில் சட்டமூலம் குறித்து நியூயோர்க்கை தலைமையகமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு (Human Rights Watch ) வெளியிட்ட நீண்டதொரு அறிக்கையின் முக்கிய அம்சங்கள் கவனத்தை பெரிதும் தூண்டுபவையாக அமைந்திருக்கின்றன. “உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அடிப்படை மனித உரிமைகளை திட்டமிட்டமுறையில் மீறுவதற்கு அரசாங்கத்துக்கு அதிகாரமளிக்கும். சட்ட மூலத்தை அரசாங்கம் திரும்பப்பெற்று, பயங்கரவாதத்துக்கு எதிரான எந்தவொரு சட்டமும் சர்வதேச மனித உரிமைகள் தராதரங்களை மதித்துப் போற்றுவதாக அமைவதை கலந்தாலோசனைகள் ஊடாக உறுதிசெய்யவேண்டும். “தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் இடம்பெற்று வந்த துஷ்பிரயோகங்கள் தொடர்பில் உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் கிளம்பிய கண்டனங்களையடுத்து மேம்பட்ட சட்டம் ஒன்றைக் கொண்டுவருவதாக இலங்கை அரசாங்கம் உறுதியளித்தது. ஆனால், குறைபாடுகளையும் பிரச்சினைகளையும் கையாளுவதற்குப் பதிலாக புதிய சட்ட மூலம் சொத்துச் சேதம், களவு, கொள்ளை போன்ற குற்றச் செயல்களையும் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதையும் உள்ளடக்கியதாக பயங்கரவாதத்தின் வரைவிலக்கணத்தை விசாலப்படுத்துகிறது. “அமைதியான முறையில் வெளிப்படுத்தப்படும் எதிர்ப்பை ஒடுக்குவதற்கும் சிறுபான்மையினரை இலக்கு வைப்பதற்கும் கொடூரமான செயன்முறைகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு அரசாங்கத்தை சட்டமூலம் அனுமதிக்கும். எதிர்ப்பியக்கத்தை ஒடுக்குவதற்கு அண்மைக்காலமாக அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்களை நியாயமற்ற முறையில் தடுத்துவைப்பதற்கு தற்போதைய பயங்கரவாதத் தடைச்சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்ற போக்கையும் நோக்கும்போது புதிய சட்டமும் துஷ்பிரயோகம் செய்யப்படக்கூடிய வெளிப்படையான பேராபத்தை உணரக்கூடியதாக இருக்கிறது. “சட்டமூலம் சில முன்னேற்றகரமான ஏற்பாடுகளை உள்ளடக்கியிருக்கின்ற போதிலும் துஷ்பிரயோகத்துக்கு உதவக்கூடிய ஏற்பாடுகளும் இருக்கின்றன. சான்று இல்லாமல் மக்களை தடுத்து வைப்பதற்கும் தெளிவாக வரையறுக்க முடியாத உரைகளை குற்றச் செயலாக்குவதற்கும் மக்கள் ஒன்றுகூடுவதையும் அமைப்புக்களையும் நீதித்துறையின் மேற்பார்வை இல்லாமல் நியாயமற்ற முறையில் தடைசெய்வதற்கும் சட்டமூலம் ஜனாதிபதியையும் பொலிஸாரையும் இராணுவத்தினரையும் அனுமதிக்கும். “இந்தச் சட்டமூலம் பெருமளவுக்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது 2018ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட யோசனைகளின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. மனித உரிமைகள் மீதான அக்கறைகளின் நிமித்தம் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களை அடுத்து 2018 சட்டமூலம் நிறைவேற்றப்படவில்லை. புதிய வரைவில் திருப்தி வெளியிட்டிருக்கும் அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ தற்போதைய வடிவத்தில் எந்தவொரு பெரிய மாற்றமும் செய்யப்படமாட்டாது என்று அண்மையில் கூறியிருந்தார். “தங்களைப் பொறுத்தவரை நியாயமான காரணங்கள் இருப்பதாக பொலிஸாரும் இராணுவத்தினரும் நம்பினால் எவரையும் தடுத்துநிறுத்தி விசாரிக்கவும் தேடுதல் நடத்தி கைது செய்யவும் எந்தவொரு ஆவணத்தையோ பொருளையோ பிடியாணையின்றி கைப்பற்றவும் அவர்களுக்கு சட்டமூலம் பரந்தளவு அதிகாரங்களை வழங்குகிறது. இராணுவத்தினரால் கைது செய்யப்படும் எவரையும் பொலிஸாரிடம் கையளிப்பதற்கு அவர்களுக்கு 24 மணிநேர அவகாசம் வழங்கப்படுகிறது. சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பயிற்சி இல்லாத இராணுவத்துக்கு அத்தகைய அவகாசத்தைக் கொடுப்பது கைதிகள் துஷ்பிரயோகம் செய்யப்படக்கூடிய ஆபத்தை உண்டாக்கும். “பொலிஸ் அல்லது இராணுவத்தின் ஆலோசனையின் பேரில் எந்தவொரு இடத்தையும் ‘தடைசெய்யப்பட்ட பகுதியாக’ ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்த முடியும். இந்த ஏற்பாடு 2022 கொழும்பில் இடம்பெற்றதைப் போன்ற பாரிய அமைதிவழிப் போராட்டங்கள் மீண்டும் இடம்பெறாதிருப்பதை தடுப்பதற்கான ஒரு முயற்சியாக தோன்றுகிறது. பயங்கரவாத செயல்களில் ஈடுபடுமாறு அல்லது அதற்கு தயாராகுமாறு தூண்டுவதாக விளங்கிக்கொள்ளப்படக்கூடிய எந்தவொரு பேச்சையும் குற்றச்செயலாக்கக்கூடியதாக பரந்தளவு அதிகாரங்களை அரசாங்கத்துக்கு சட்டமூலம் வழங்குகிறது. “தற்போதைய பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சந்தேகநபர் ஒருவரை அதிகாரிகள் பாதுகாப்பு அமைச்சரினால் கைச்சாத்திடப்படும் உத்தரவுகளின் பேரில் ஒரு வருட காலத்துக்கு தடுத்துவைக்கமுடியும். ஆனால், புதிய சட்டமூலம் தடுப்புக்காவல் உத்தரவுகளை வழங்கும் அதிகாரத்தை பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு வழங்குகிறது. இது பாரதூரமான துஷ்பிரயோகம் இடம்பெறுவதற்கான ஆபத்தை அதிகரிக்கிறது. சந்தேகநபரை விசாரணைக்கு முன்னரான தடுப்புக்காவலில் இருந்து தங்களின் காவலுக்கு பொலிஸாரினால் திரும்ப எடுத்துக்கொள்ளமுடியும். சந்தேகநபரை ‘எந்தவொரு அதிகாரியின்’ காவலுக்கும் பாதுகாப்பு செயலாளரினால் மாற்றமுடியும். இது சந்தேகநபர் சித்திரவதைக்கும் துஷ்பிரயோகத்துக்கும் உள்ளாகக்கூடிய ஆபத்தை தோற்றுவிக்கும். “சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கு தொடுப்பதை தாமதிப்பதற்கு அல்லது இடைநிறுத்துவதற்கு சட்டமா அதிபர் தீர்மானிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ‘புனர்வாழ்வு’ அளிப்பதற்கான திட்டங்களுக்கு ஒழுங்குவிதிகளை பிறப்பிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு புதிய சட்டமூலம் வழங்குகிறது. பிறகு சட்டமா அதிபர் எந்தவொரு குற்றச்செயல் தொடர்பிலும் குற்றவாளியாகக் காணப்படாத நபர் மீதும் புனர்வாழ்வை திணிக்கமுடியும். இதேபோன்ற ஒழுங்குவிதிகளை 2021ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் நிறுத்திவைத்தது குறிப்பிடத்தக்கது “மனித உரிமைகள் பேணிப் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யக்கூடியதாக புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் வரையப்படும் வரை தற்போதைய பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் முழு அளவிலான முடக்கத்தை (Moratorium) செய்யவேண்டும். “பயங்கரவாதத்துக்கு எதிரான அதிகாரங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வந்த இலங்கையின் வரலாற்றினதும் அமைதிவழிப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளினதும் வெளிச்சத்திலேயே புதிய சட்ட மூலத்தை நோக்கவேண்டியது அவசியமாகும். இத்தகைய துஷ்பிரயோகங்களுக்கு வாணிப முன்னுரிமைகள் மற்றும் ஆதரவு மூலம் ‘வெகுமதி’ வழங்கப்படமாட்டாது என்பதை இலங்கைக்கு அதன் சர்வதேச பங்காளிகள் தெட்டத்தெளிவாக உணர்த்தவேண்டும்” என்று மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் தெற்காசிய பணிப்பாளர் மீனாக்சி கங்குலி அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். அதேவேளை, சட்டமூலம் வரவேற்கத்தக்க சில புதிய பாதுகாப்பு செயன்முறைகளை உள்ளடக்கியிருப்பதை அவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை. பொலிஸாருக்கு அளிக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலம் சான்றாக முன்வைக்கப்படுவதற்கு அனுமதிக்கப்படப்போவதில்லை. பெண் சந்தேகநபர்களை பெண் அதிகாரிகளே சோதனை செய்யவேண்டும். கைதுக்கான காரணத்தை கூறுவதை வலியுறுத்தும் புதிய நடைமுறையும் உள்ளது. தங்களால் விளங்கிக்கொள்ள முடியாத மொழியில் இருக்கக்கூடிய ஆவணத்தின் மொழிபெயர்ப்பை சந்தேகநபர்களினால் பெற்றுக்கொள்ளமுடியும். தடுப்புக்காவலில் உள்ள நபர்களை 14 நாட்களுக்கு ஒரு தடவை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தவேண்டும். கைதி சித்திரவதை செய்யப்பட்டிருப்பதாக தோன்றினால் மாஜிஸ்திரேட் பின்பற்றவேண்டிய நடைமுறைகளையும் சட்டமூலம் விளக்கியிருக்கிறது. எது எவ்வாறிருந்தாலும், தற்போதைய பயங்கரவாத தடைச்சட்டத்தை விடவும் கொடூரமானதாக புதிய சட்டமூலம் அமைந்திருக்கிறது என்பதே உண்மை. அரசாங்கத்துக்கு எதிரான எந்த வகையான போராட்டத்தையும் பயங்கரவாதச் செயல் என்று வியாக்கியானப்படுத்துவதற்கு வகைசெய்வதாக அது அமைந்திருக்கிறது. அரசாங்கத்தின் எந்தவொரு நடவடிக்கைக்கும் எதிராக கேள்வியெழுப்புவதையோ அல்லது விமர்சிப்பதையோ பயங்கரவாத செயல் என்று வியாக்கியானப்படுத்த முடியும். அமைதிவழிப் போராட்டங்கள் மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் உட்பட அரசாங்கம் ஒன்றை பதவி விலகுமாறு அல்லது தவறான ஆட்சிமுறைக்கு பொறுப்பான ஜனாதிபதியொருவரை வீட்டுக்கு செல்லுமாறு கோருவது முற்றிலும் நியாயபூர்வமானதே. ஆனால், புதிய சட்டமூலத்தின் ஏற்பாடுகளை பயன்படுத்தி அவற்றை பயங்கரவாத செயல்களாக வர்ணிக்க முடியும். பயங்கரவாதத் தடைச்சட்டத்தைக் கொண்டுவந்தபோது அது தமிழ் தீவிரவாத இயக்கங்களின் பிரிவினைவாத ஆயுதப் போராட்டத்தை ஒடுக்குவதையே முற்றிலும் நோக்கமாகக் கொண்டது என்று கூறி அன்றைய ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் தென்னிலங்கையில் எதிர்ப்புக் கிளம்பாதிருப்பதை உறுதிசெய்துகொண்டது. அந்தச் சட்டத்தின் கீழ் பிரகடனம் செய்யப்பட்ட பல ஒழுங்குவிதிகள் குடியியல் உரிமைகளையும் சுதந்திரங்களையும் மீறுபவையாக இருந்தபோதிலும் பயங்கரவாதத்துக்கு எதிரான போரின் பேரில் தென்னிலங்கை அமைதியாக இருந்தது. அதேபோன்றே இப்போது புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் கொண்டுவரப்படுகின்ற வேளையில் பொருளாதார மீட்சிக்கு இன்றியமையாத அரசியல் உறுதிப்பாட்டுக்குப் பாதகமாக அமையக்கூடியவை என்று மக்களின் நியாயபூர்வமான அமைதிவழிப் போராட்டங்களை வர்ணித்து அரசாங்கம் தென்னிலங்கையை அமைதியாக வைத்திருக்க முயற்சிக்கிறது. ராஜபக்‌ஷ ஆட்சியில் படுமோசமான ஊழல் முறைகேடுகளுக்கும் அதிகார துஷ்பிரயோகங்களுக்கும் பொறுப்பானவர்களாக இருந்த அரசியல்வாதிகளும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்டு பிறகு விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வந்ததும் மீண்டும் அதிகாரத்தை அனுபவிக்கத் தொடங்கியிருக்கும் ஐக்கிய தேசிய கட்சி அரசியல்வாதிகளும் புதிய சட்டமூலத்தின் தீவிர ஆதரவாளர்களாக குரல்கொடுப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. வீரகத்தி தனபாலசிங்கம் https://maatram.org/?p=10811
  23. ஆட்சிமுறை சர்வதேச நாணய நிதியத்தின் ‘ராடருக்குள்’ வரும் முதல் ஆசிய நாடாக இலங்கை Veeragathy Thanabalasingham on March 27, 2023 Photo, The New York Times இலங்கை அரசாங்கம் கடந்த செப்டெம்பரில் சர்வதேச நாணய நிதியத்துடன் கண்ட உடன்பாட்டுக்கு அதன் நிறைவேற்று சபை ஏழு மாதங்களுக்கு பிறகு கடந்தவாரம் (மார்ச் 20) அங்கீகாரம் வழங்கியதையடுத்து விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதியாக (Extended Fund Facility) 300 கோடி அமெரிக்க டொலர்கள் கடனுதவி கிடைத்திருக்கிறது. நான்கு வருட காலத்தில் எட்டு தவணைகளில் வழங்கப்படவிருக்கும் இந்த கடனுதவியின் முதல் தவணைக் கொடுப்பனவு 30 கோடி 30 இலட்சம் டொலர்கள் உடனடியாகவே கடந்த வாரம் கிடைத்தது. இதில் 12 கோடி 10 இலட்சம் டொலர்கள் இந்தியாவிடம் இருந்து பெற்ற தொடர் கடனை (Credit Line) திருப்பிச் செலுத்துவதற்கான முதல் தவணைக் கொடுப்பனவுக்கு பயன்படுத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெறுவதற்கு முற்றுமுழுதாக நாணய நிதியத்தின் இந்தக் கடனுதவியை நம்பியிருக்கும் அரசாங்கம் ஒரே குதூகலத்தில் இருக்கிறது. நிறைவேற்று சபை உடன்பாட்டுக்கு அங்கீகாரம் வழங்கிய செய்தி வெளியான உடனே கொழும்பில் அரசாங்க ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். இவர்கள் பெரும்பாலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களே என்று கூறப்படுகிறது. கட்சியின் தலைமையகம் ஸ்ரீகோத்தாவின் முன்பாகவும் பட்டாசுகள் வெடித்தன. வெளிநாட்டுக் கடனை திருப்பிச்செலுத்த முடியாமல் வங்குரோத்து நிலையை பிரகடனம் செய்து பிறகு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெறுவதற்கு நாணய நிதியத்திடமிருந்து கடனுதவி கிடைக்கப்பெற்ற வேறு எந்தவொரு நாட்டிலாவது பட்டாசு வெடித்து கொண்டாட்டங்கள் இடம்பெற்றிருக்குமோ தெரியவில்லை. உள்நாட்டுப் போரில் அரசாங்கப் படைகள் விடுதலைப் புலிகளை வெற்றிகொண்ட பிறகு ராஜபக்‌ஷர்களிடம் காணப்பட்டதைப் போன்ற குதூகலத்தை ‘பொருளாதாரப் போரை’ வெற்றி கொண்டவராக தன்னை காட்டிக்கொள்ளும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவிடம் இப்போது காணக்கூடியதாக இருந்தது. இலங்கை இனிமேலும் வங்குரோத்து அடைந்த நாடாக கணிக்கப்படமாட்டாது. தனது கடனை மறுசீரமைக்கக்கூடிய ஆற்றல் கொண்ட நாடு என்று இலங்கையை நாணய நிதியம் உறுதிப்படுத்தியிருக்கிறது. இதையடுத்து வழமையான பொருளாதார நடவடிக்கைகளை தொடரக்கூடியதாக இருக்கும் என்று நிறைவேற்று சபையின் அங்கீகாரம் கிடைத்த உடனடியாகவே விக்கிரமசிங்க அறிவித்தார். நாணய நிதியத்தின் கடனுதவி முற்றிலும் புதியதொரு யுகத்துக்குள் பிரவேசிப்பதற்கான ஒரு அரிய வாய்ப்பை இலங்கைக்கு வழங்குகின்றது என்பது போன்று மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் முயற்சிப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. கடன் மறசீரமைப்பு மாத்திரமல்ல நாட்டின் எதிர்காலமே நாணய நிதியத்துடனான உடன்பாட்டை முழுமையாக நடைமுறைப்படுத்துவதிலேயே தங்கியிருக்கிறது என்று கூறும் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை இந்த உடன்பாட்டை கைவிட்டால் இலங்கைக்கு மீட்சி இல்லை என்ற நிலைப்பாட்டை கொண்டவராக இருக்கிறார் என்பது தெளிவானது. கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் உடன்பாட்டை சமர்ப்பித்து விசேட உரையாற்றிய ஜனாதிபதி ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கக்கூடிய பொருளாதார சீர்திருத்தங்களுக்கு மேலதிகமாக பல சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் நாணய நிதியத்தின் விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதி செயற்திட்டத்தின் மூலமாக புதியதொரு நிதிக்கலாசாரம் உருவாக்கப்படும் என்றும் கூறினார். இந்த உடன்பாட்டுடன் மாத்திரம் இலங்கை திருப்திப்பட்டுவிட முடியாது. இது முடிவு அல்ல. இன்னொரு நீண்ட பயணத்தின் தொடக்கம் என்று அவர் பிரகடனம் செய்தார். நாணய நிதியத்தின் நிபந்தனைகளை முழுமையாக அரசாங்கம் ஏற்றுக்கொண்டதன் காரணமாகவே அதன் கடனுதவி கிடைக்கப்பெற்றிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அந்த நிபந்தனைகளை நிறைவேற்றும் செயற்பாடுகளையே அரசாங்கம் ‘பொருளாதார சீர்திருத்தங்கள்’ என்று சொல்கிறது. விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் கடந்த வருடம் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால பட்ஜெட் மற்றும் 2023 பட்ஜெட் மூலமாக ஏற்கெனவே நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றும் நடவடிக்கைகள் கணிசமானளவுக்கு முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் மூலமாக அதிகரிக்கப்பட்ட நேரடி வரிகளும் மறைமுக வரிகளும் சேவைகள் கட்டணங்களும் ஏற்கெனவே மக்களுக்கு பெரும் சுமையாக இருக்கின்றன. பொருளாதார சீர்திருத்தங்கள் என்று கூறிக்கொண்டு நாணய நிதியத்தின் வழிகாட்டலில் அரசாங்கம் வரும் நாட்களில் முன்னெடுக்கப்போகும் நடவடிக்கைகள், வானளாவ உயர்ந்திருக்கும் வாழ்க்கைச் செலவின் சுமையில் இருந்து விடுபடுவதற்கு கிடைக்கப்பெற்றிருக்கும் கடனுதவியின் மூலம் நிவாரணங்களை எதிர்பார்த்திருக்கும் மக்களுக்கு ஏமாற்றத்தை தரக்கூடாது. வரும் நாட்களில் இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடுகள் தளர்வு, எரிபொருட்கள் உட்பட அத்தியாவசிய பாவனைப் பொருட்களின் விலைகள் குறைப்பு தொடர்பில் அரசாங்கம் தெளிவான சில சமிக்ஞைகளைக் காட்டியிருப்பது வரவேற்கத்தக்கது. தற்போதைய தடவையுடன் சேர்த்து இலங்கை இதுவரையில் நாணய நிதியத்தை 17 தடவைகள் நாடியிருக்கிறது. முன்னைய சந்தர்ப்பங்களில் காணப்பட்ட உடன்பாடுகளின் நிபந்தனைகளை இலங்கை அரசாங்கங்கள் ஒருபோதும் முற்றாக நிறைவேற்றவில்லை. அதனால் கடனுதவியின் முழுத்தொகையையும் அந்த அரசாங்கங்களினால் பெறமுடியவில்லை. நாணய நிதியத்துடனான உடன்பாடுகளை மதிப்பதில்லை என்ற ஒரு கெட்டபெயர் இலங்கைக்கு இருந்தது. ஆனால், முதற்தடவையாக தற்போதைய அரசாங்கம் முழு நிபந்தனைகளையும் நிறைவேற்றியிருக்கிறது என்று கடந்த வாரம் அமைச்சரவை பேச்சாளரான பந்துல குணவர்தன கூறினார். மக்களின் அதிருப்தியை சம்பாதிக்கூடிய கடுமையான தீர்மானங்களை எடுக்கத் தயங்கிய காரணத்தினால் கடந்த காலத்தில் நாணய நிதியத்தின் நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்ற அரசாங்கங்கள் தவறியிருக்கக்கூடும். ஆனால், தற்போதைய அரசாங்கத்திடம் அத்தகைய தயக்கம் எதையும் காணவில்லை. முன்னைய ஆட்சியாளர்களின் ஊழல் முறைகேடுகள் மற்றும் தவறான பொருளாதார முகாமைத்துவம் காரணமாக இலங்கை அதன் வரலாற்றில் இதுவரை காணாத பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளவேண்டுமானால் நாணய நிதியத்தின் நிபந்தனைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டு நிறைவேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று விக்கிரமசிங்க அரசாங்கம் மக்களை ஒரு விதமான ‘பணயக்கைதிகளாக’ வைத்திருக்கிறது. வழமையாக அமெரிக்கா மற்றும் மேற்குலக வல்லாதிக்க நாடுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற பல்தரப்பு நிதி நிறுவனங்களை நாடுவதை எதிர்க்கின்ற ஜனதா விமுக்தி பெரமுன போன்ற இடதுசாரி கட்சிகளினால் கூட நாணய நிதியத்தை அரசாங்கம் நாடுவதை எதிர்க்கமுடியவில்லை. இது நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்றுவதனால் ஏற்படக்கூடிய எதிர்கால பாதக விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் அரசாங்கம் அதன் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு வசதியான சூழ்நிலையை உருவாக்கிவிட்டது. உருப்படியான மாற்றுத் திட்டங்களை எதிரணியினால் முன்வைக்க முடியாமல் இருப்பது அரசாங்கத்துக்கு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. பொருளாதார மீட்சிக்கான சகல நடவடிக்கைகளும் நாணய நிதியத்தின் மூலோபாயத் திட்டத்தின் பிரகாரமே முன்னெடுக்கப்படவிருக்கின்றன என்பது வெட்ட வெளிச்சமானது. நிபந்தனைகளில் சிலவற்றை அரசாங்கம் இன்னமும் பகிரங்கமாக கூறவில்லை என்ற குற்றச்சாட்டும் எதிரணி கட்சிகளிடமிருந்து வருகிறது. அதேவேளை, கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களின் ஆசிரியர்களைச் சந்தித்துப் பேசிய விக்கிரமசிங்க தெற்காசியாவிலேயே மிகவும் சிறந்த ஊழல் தடுப்புச்சட்டமொன்றை நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றுவதற்கு தனது அரசாங்கம் உத்தேசித்திருக்கிறது என்று அறிவித்தார். ஆனால், தற்போதைய நாடாளுமன்றத்தை வைத்துக்கொண்டு ஊழலுக்கு எதிராக உருப்படியான நடவடிக்கைகளை ஜனாதிபதியினால் எடுக்கக்கூடியதாக இருக்கும் என்று மக்கள் நம்பமாட்டார்கள். ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் என்று வரும்போது அண்மைய கடந்த கால பொருளாதாரக் குற்றங்களைச் செய்தவர்களைப் பொறுப்புக்கூற வைக்கவேண்டியது முக்கியமான விடயமாகும். ஆனால், கடந்த மாத தொடக்கத்தில் நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை சம்பிரதாயபூர்வமாக தொடக்கி வைத்து கொள்கை விளக்க உரையை நிகழ்த்திய விக்கிரமசிங்க வங்குரோத்து நிலையடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுத்து நிலையுறுதிப்படுத்துவதே தனது முன்னுரிமைக்குரிய பணி என்றும் கடந்த கால பொருளாதாரக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் விவகாரத்தை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றும் கூறியது ராஜபக்‌ஷர்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற ஆதரவில் ஆட்சியை நடத்தும் அவருக்கு அது விடயத்தில் இருக்கும் சிக்கலை தெளிவாக உணர்த்துகிறது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் ஆட்சிமுறைச் சீர்திருத்தங்களுக்கும் நாணய நிதியம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. இதை இலங்கையை வங்குரோத்து நிலைக்கு கொண்டுவந்ததில் ஊழலுக்கும் தவறான ஆட்சிமுறைக்கும் இருக்கும் பிரதான பங்கின் பின்னணியிலேயே நோக்கவேண்டும். ஆசியப் பிராந்தியத்தில் ஆட்சிமுறை நாணய நிதியத்தின் உன்னிப்பான கண்காணிப்பின் கீழ் வருகின்ற முதல் நாடாக இலங்கை இருக்கிறது என்று அவதானிகள் சுட்டிக்காட்டுகிறார்கள். இலங்கையில் நிலவும் ஊழல் முறைகேடுகளுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொள்ளப்போகும் நடவடிக்கைகளையும் ஆட்சிமுறைக் குறைபாடுகள் மற்றும் நிதி முகாமைத்துவம் தொடர்பில் கண்காணித்து கிரமமான அறிக்கைகளை நாணய நிதியம் வெளியிடும். இது உடன்பாட்டின் முக்கியமான ஒரு மைல்கல் என்று அதன் அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். அந்த அறிக்கைகளைப் பொறுத்தே கடனுதவியின் அடுத்தடுத்த கட்ட கொடுப்பனவுகள் அமையக்கூடும். ஒட்டுமொத்தத்தில் இலங்கையின் ஆட்சி நிருவாகம் நாணய நிதியத்தின் ராடாருக்குள்’ வருகிறது. வீரகத்தி தனபாலசிங்கம் https://maatram.org/?p=10770
  24. இனப்பிரச்சினை தீர்வு குறித்த தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு Veeragathy Thanabalasingham on March 21, 2023 Photo, @anuradisanayake இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு சகல இனங்களையும் சேர்ந்த மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றே நிரந்தரமான தீர்வாக அமையும் என்று பேசவும் கேட்கவும் நன்றாகத்தான் இருக்கும். எந்த இனத்தவருக்கும் பாதிப்பு இல்லாதவகையில் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் உயரிய நோக்குடன் கூறப்படுகின்ற யோசனையாகவும் தெரியும். அதை எதிர்த்து பெரிதாக வாதிடுவதும் கஷ்டமானதாக தோன்றும். ஆனால், அவ்வாறு நடைமுறையில் சாத்தியமானதாக உலகில் எங்குமே முன்னுதாரணம் ஒன்றை எவராலும் கூறமுடியாது. அந்தக் கருத்தை எமது நாட்டில் எத்தனையோ தலைவர்கள் முன்னர் கூறினார்கள். தற்போது உள்ள தலைவர்களும் கூறுகிறார்கள். இந்த வரிசையில் இறுதியாக தன்னைச் சேர்த்துக்கொண்டிருப்பவர் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) இன் தலைவரான அநுரகுமார திசாநாயக்க. ஜே.வி.பியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவராகவும் இருக்கும் திசாநாயக்க தென்னிலங்கை செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும்போது தென்னிலங்கை மக்களால் நிராகரிக்கப்படும் எந்தவொரு தீர்வும் தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வாக அமையாது என்றும் அரசியலமைப்பிற்கான 13ஆவது திருத்தத்தின் மூலமோ அல்லது அதை மாற்றியமைப்பதன் மூலமோ தமிழர் பிரச்சினைக்கு முழுமையான தீர்வை வழங்கமுடியாது என்றும் பதிலளித்ததாக ஈழநாடு கடந்த வெள்ளிக்கிழமை முன்பக்கத்தில் தலைப்புச் செய்தி வெளியிட்டதை காணக்கூடியதாக இருந்தது. சகல இனங்களையும் சேர்ந்த மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய புதிய அரசியலமைப்பு ஒன்றின் மூலமாகவே தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு வழங்கப்படும். இதனை தமிழர்களின் மூத்த தலைவர் இரா.சம்பந்தனும் கூறியிருக்கிறார். எனவே, தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என்றும் திசாநாயக்க தெரிவித்ததாக அந்தச் செய்தி கூறியது. கடந்த வருடத்தைய ‘அறகலய’ மக்கள் போராட்டத்துக்குப் பின்னரான அரசியல் சூழ்நிலையில் தேசிய மக்கள் சக்திக்கு தென்னிலங்கை மக்களின் ஆதரவு பெருமளவு அதிகரித்திருப்பதாக நம்பப்படுகிறது. அண்மைய பல கருத்துக்கணிப்புகளின் முடிவுகளும் இதை உறுதிப்படுத்தின. நாடாளுமன்ற தேர்தல் ஒன்று நடைபெறும் பட்சத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கும் திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் மிகவும் நெருக்கமான போட்டி நிலவும் என்றும் அந்தக் கருத்துக்கணிப்புகள் கூறின. இதனால் மிகுந்த உற்சாகமடைந்திருக்கும் திசாநாயக்கவும் அவரது தோழர்களும் நாட்டின் ஆட்சிப்பொறுப்பை தங்களிடம் ஒப்படைத்துப் பார்க்குமாறு தங்களது பேரணிகளில் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துவருகிறார்கள். அத்துடன், தங்களுக்கு இருக்கக்கூடிய மக்கள் ஆதரவை நிரூபிப்பதற்கான உடனடி வாய்ப்பாக உள்ளூராட்சி தேர்தல்களை நோக்கும் அவர்கள் அதன் காரணத்தினாலேயே தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளை கடுமையாக எதிர்க்கிறார்கள் எனலாம். தேசிய மக்கள் சக்தி தேர்தல்கள் மூலம் என்றாலும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதை முதலாளித்துவ அரசியல் அதிகாரவர்க்கம் எவ்வாறு நோக்கும்? எத்தகைய சூழ்ச்சித்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டு அதைத் தடுக்க முயற்சிக்கும் என்பது பிறிதொரு கட்டுரையில் விரிவாக ஆராயப்படவேண்டிய விடயம். ஆனால், மக்களின் ஆதரவுடன் ஆட்சியதிகாரத்தை ஜனநாயக தேர்தல்கள் மூலமாக கைப்பற்றக்கூடிய நிலையை நோக்கி தங்களது அரசியல் பயணம் விரைவாக நகருகிறது என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் கடுமையாக நம்புகிறார்கள். அதன் காரணத்தினால்தான் தங்களது ஆட்சியில் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவந்து நாட்டின் ஏனைய பிரச்சினைகளுக்கு மாத்திரமல்ல, நீண்டகால இனப்பிரச்சினைக்கும் நிரந்தரமான தீர்வைக் காணமுடியும் என்ற அவர்களின் பேச்சுக்களை நோக்கவேண்டும். இதுகாலவரையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத்தீர்வைக் காண்பதற்கு அரசாங்கங்கள் மேற்கொண்ட சகல முயற்சிகளையும் கடுமையாக எதிர்த்த எதிர்மறையான ஒரு வரலாற்றை ஜே.வி.பி. கொண்டிருக்கிறது. அந்தப் போக்கில் எந்த மாறுதலையும் அவர்களிடம் இபபோதும் காணமுடியவில்லை. 1987 ஜூலை இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையை அடுத்து மாகாண சபைகளை அறிமுகப்படுத்துவதற்குக் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தனது அரசாங்கம் கட்டங்கட்டமாக முன்னெடுக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தைப்பொங்கல் விழாவில் வைத்து அறிவித்ததை அடுத்து அதற்கு எதிராக தென்னிலங்கையில் கடும்போக்கு சிங்கள தேசியவாத சக்திகளிடம் இருந்து கிளம்பிய எதிர்ப்புக்குப் பின்னரான அரசியல் நிகழ்வுப் போக்குகள் அந்தத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிரான பிரதான அரசியல் சக்திகளையும் வெளிச்சம் போட்டுக்காட்டின. இலங்கையின் அரசியலமைப்பில் 13ஆவது திருத்தம் 37 வருடங்களாக இருந்து வருகின்ற போதிலும் அதற்கு எதிராகவே பொதுவில் சிங்கள அரசியல் சமுதாயம் நிற்கிறது என்பதை ஜனாதிபதியின் அறிவிப்பின் பின்னரான நிலைவரங்கள் உணர்த்துகின்றன. இந்தியாவுடனான சமாதான உடன்படிக்கையை அடுத்து கொண்டுவரப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காகவே 13ஆவது திருத்தம் இன்றுவரை நிலைத்து நிற்கிறது. அல்லாவிட்டால் எப்போதோ சிங்கள தலைவர்கள் அதை நீக்கியிருப்பார்கள். சமாதான உடன்படிக்கையை எதிர்த்து விஜேவீர தலைமையில் ஜே.வி.பி. 1980 களின் பிற்பகுதியில் நாட்டில் இரத்தக்களரியை ஏற்படுத்திய போதிலும் பின்னர் வந்த தலைவர்களின் கீழ் அந்தக் கட்சி குறிப்பாக 1990 களின் நடுப்பகுதியில் இருந்து மாகாண சபை தேர்தல்களில் போட்டியிட்டுவந்தது. அண்மைக்காலமாக அதன் புதிய தலைவர்கள் 13ஆவது திருத்தத்துக்கு எதிராக பெரிதாக பேசியதுமில்லை. திசாநாயக்க கூட கடந்த வருட பிற்பகுதியில் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற கருத்தரங்கொன்றில் தமிழர்கள் தங்களுக்கான ஒரு தீர்வாக அந்தத் திருத்தத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்றால் அது குறித்து தங்களுக்கு பிரச்சினை இல்லை என்று கூறியிருந்தார். அதேவேளை, ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் அறிவிப்பையடுத்து 13ஆவது திருத்தம் தொடர்பில் மூண்ட அரசியல் விவாதங்களுக்கு மத்தியில் தேசிய மக்கள் சக்தியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய அந்தத் திருத்தம் குறித்து தங்கள் கட்சிக்குள் விவாதம் இருக்கின்ற போதிலும் ஏற்கெனவே தமிழர் பிரச்சினைக்கு ஒரு தீர்வாக முன்வைக்கப்பட்டிருப்பதால் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். ஆனால், அந்தத் திருத்தத்துக்கு எதிராக தென்னிலங்கையில் பரவலாக கிளம்பிய எதிர்ப்பு அலையில் இருந்து வேறுபட்ட ஒரு நிலைப்பாட்டை எடுப்பது தங்களுக்கு சிங்கள மத்தியில் மக்கள் வளர்ந்துவரும் ஆதரவுக்குப் பாதிப்பாக வந்துவிடும் என்று கருதிய காரணத்தினால் போலும் அதை எதிர்த்து தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் வெளிப்படையாக பேசத்தொடங்கினார்கள். அதன் மூலமாக அவர்கள், பல்வேறு போதாமைகள், குறைபாடுகளுக்கு மத்தியிலும் அதிகாரப்பரவலாக்கத்துக்கான ஒரேயொரு சட்ட ஏற்பாடாக நிலைத்திருக்கும் 13ஆவது திருத்தத்தையும் ஒழித்துவிடவேண்டும் என்று கங்கணங்கட்டி நிற்கும் கடும்போக்கு சிங்கள தேசியவாத சக்திகளையே அவர்கள் இறுதியில் வலுப்படுத்தியிருக்கிறார்கள். அதேவேளை, தங்களது ஆட்சியில் புதிய அரசிலமைப்பின் மூலம் இனப்பிரச்சினைக்கு சகல இனத்தவர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வைக் காண்பது குறித்து தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் கூறுவது கையில் இருக்கும் பிரச்சினையை கையாள்வதில் இருந்து நழுவும் ஒரு தந்திரோபாயமே. தென்னிலங்கை மக்களினால் நிராகரிக்கப்படும் எந்தவொரு தீர்வும் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வாக அமையாது என்று கூறும் திசாநாயக்க தனக்கு துணையாக மூத்த அரசியல் தலைவர் சம்பந்தன் அவர்களை இழுக்கிறார். சிங்கள மக்களும் ஆதரிக்கக்கூடிய ஒரு அரசியல் தீர்வே நிலையானதாக இருக்கமுடியும் என்று சம்பந்தன் அடிக்கடி கூறுவது சிங்கள மக்களின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு பரஸ்பர விட்டுக்கொடுப்புடன் தீர்வைக் காண்பதற்கு தமிழர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதை விளக்கவே தவிர சிங்கள மக்கள் எதிர்ப்பதனால் எமக்கு எந்தத் தீரவு வேண்டாம் என்று அறிவிப்பதற்கல்ல. உள்நாட்டுப் போரின் விளைவுகளினால் சிங்கள மக்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அரசியல் உரிமைகள் பற்றிய பிரச்சினை என்று வரும்போது இன அடிப்படையில் சிங்கள மக்கள் பாதிக்கப்படவில்லை. அவ்வாறு பாதிக்கப்படாத மக்களின் இணக்கத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வைக் காண்பது என்பது அதுவும் இலங்கையின் இதுகாலவரையான அனுபவங்களின் அடிப்படையில் நோக்கும்போது நடைமுறையில் சாத்தியப்படுவதற்கில்லை. இதுகாலவரையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு அரசாங்கங்கள் மேற்கொண்ட முயற்சிகள் என்றால் 1957 பண்டா – செல்வா ஒப்பந்தம், 1965 டட்லி – செல்வா ஒப்பந்தம் தொடக்கம் மைத்திரிபால சிறிசேன – விக்கிரமசிங்க தலைமையிலான ‘நல்லாட்சி’ அரசாங்கம் முன்னெடுத்த புதிய அரசியலமைப்பு வரைவு முயற்சிவரையானவையே அவை. இவற்றில் எதை தென்னிலங்கை மக்கள் ஆதரித்தார்கள்? அல்லது அந்த முயற்சிகளுக்கு அந்த மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கு எந்த சிங்கள தலைவர் மானசீகமாக முயற்சிசெய்தார்? எதிர்ப்புக்களுக்கு முகங்கொடுத்து தாங்கள் எடுத்த நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் துணிவு எந்தத் தலைவருக்கு வந்தது? வரவில்லை. மக்களின் தவறான உணர்வுகளுக்கு அல்லது கருத்துக்களின் பின்னால் இழுபட்டுச்செல்வதற்கு தலைவர்கள் தேவையில்லை. பிழையான சிந்தனைகளைச் சுட்டிக்காட்டி அவற்றினால் ஏற்படக்கூடிய பாதக விளைவுகளை மக்களுக்கு விளக்கி சரியான மார்க்கத்தில் அவர்களை வழிநடத்திச் செல்வதற்கே தலைவர்கள் தேவை. அத்தகைய பாத்திரத்தை வகிக்க இதுவரையில் ஆட்சிப்பொறுப்பில் இருந்த எந்த சிங்கள தலைவருக்கும் அரசியல் துணிவாற்றல் வரவில்லை என்பதே வரலாறு. தேசிய மக்கள் சக்தியின் தலைவர் திசாநாயக்க தன்னை அந்தத் தலைவர்களிடம் இருந்து வேறுபட்டவராக காட்டிக்கொள்ளவேண்டுமே தவிர, மக்களின் உணர்வுகளின் தவறான உணர்வுகளுக்கு பின்னால் இழுபட்டுச் சென்ற பாரம்பரிய சிங்கள அரசியல் தலைவர்களின் பாதையிலேயே செல்லக்கூடாது. தங்களது கட்சி சமகால சர்வதேச அரசியல் நிலைவரங்களுக்குப் பொருத்தமான முறையில் அதன் கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் மாற்றிக்கொண்டுள்ளதாக அண்மையில் திசாநாயக்க கூறியிருந்தார். ஆனால், இனப்பிரச்சினை விவகாரத்தில் அவர்களின் நிலைப்பாட்டில் மாறுதல் ஏற்பட்ட அறிகுறியைக் காணமுடியவில்லையே. இனப்பிரச்சினைக்கு உருப்படியான அரசியல் தீர்வொன்றைக் காணத்தவறியதால் நாடும் மக்களும் பல தசாப்தங்களாக அனுபவித்த அவலங்களில் இருந்து படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டு முன்னைய தவறான போக்குகளில் இருந்து தென்னிலங்கை மக்களை விடுவிக்கவேண்டிய பொறுப்பை தேசிய மக்கள் சக்தியின் தலைவர் உணர்ந்து செயற்படவேண்டும். தேர்தல் அரசியல் என்று வரும்போது நாளடைவில் இயல்பாகவே சந்தர்ப்பவாத அணுகுமுறைகளை கடைப்பிடிக்கவேண்டிய நிர்ப்பந்தம் வந்துவிடுகிறது. இதில் இருந்து விடுபடுவதற்கு அடுத்த தேர்தலுக்கு அப்பால் நாட்டினதும் மக்களினதும் எதிர்கால நலன்களைப் பற்றிய மானசீகமான அக்கறையுடன் கூடிய அரசியல் நேர்மையும் துணிவாற்றலும் தேவை. அவற்றை வரவழைத்துக்கொள்வதற்கு தயாரில்லாத தலைவர்களினால் இலங்கையின் அரசியல் கலாசாரத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டுவந்துவிடமுடியாது. வீரகத்தி தனபாலசிங்கம் https://maatram.org/?p=10753
  25. ஜே.வி.பி.யிடம் ஏற்படவேண்டிய முக்கியமான ஒரு மாறுதல் March 2, 2023 — வீரகத்தி தனபாலசிங்கம் — கடந்த வருடத்தைய மக்கள் கிளர்ச்சிக்கு பின்னர் தோன்றிய அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புகள் சகலதுமே ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.)வுக்கு தென்னிலங்கையில் மக்கள் ஆதரவு பெருமளவுக்கு அதிகரித்திருப்பதாகவே காட்டுகின்றன. வழமையாக ஜே.வி.பி.யின் ஊர்வலங்களிலும் பொதுக் கூட்டங்களிலும் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டாலும் அதை தேர்தல்களில் வாக்குகளாக மாற்றுவதற்கு அவர்களால் முடிவதில்லை என்பதே இது காலவரையான அனுபவமாக இருந்திருக்கிறது. ஆனால், இனிமேலும், அவ்வாறு இருக்கப்போவதில்லை என்பதே பொதுவில் அரசியல் அவதானிகளின் நம்பிக்கையாக இருக்கிறது. கடந்த வாரம் வெளியான கருத்துக் கணிப்பு ஒன்று பொதுத்தேர்தல் நடைபெறும் பட்சத்தில் ஜே.வி.பி.தலைமையிலான கூட்டணியான தேசிய மக்கள் சக்திக்கும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையே நெருக்கமான போட்டி நிலவும் என்றும் இவ்விரு கட்சிகளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை விடவும் மக்கள் ஆதரவில் வெகுவாக முன்னிலையில் இருக்கின்றன என்றும் கூறியிருக்கிறது. ஆனால், அதேவேளை தேசிய மக்கள் சக்தியோ ஐக்கிய மக்கள் சக்தியோ மொத்த வாக்குகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் கூடுதலாகப் பெறக்கூடிய சாத்தியம் இல்லை என்றும் அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டது. அண்மைக் காலமாக தேசிய மக்கள் சக்தியின் பேரணிகளில் முன்னரை விடவும் மிகவும் பெருமளவில் மக்கள் திரளுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இதனால் பெரும் உற்சாகம் அடைந்திருக்கும் அதன் தலைவர்கள் அடுத்த பொதுத்தேர்தலில் தங்களிடம் ஆட்சிப்பொறுப்பை கையளிக்குமாறு பகிரங்கமாக மக்களைக் கேட்கிறார்கள். மக்கள் மத்தியில் தங்களுக்கு வளர்ந்திருப்பதாக நம்பப்படும் ஆதரவை நிரூபிப்பதற்கான ஒரு அரிய வாய்ப்பாக உள்ளூராட்சி தேர்தல்களை அவர்கள் கருதுகிறார்கள். அந்த தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சிகளை மிகவும் கடுமையாக ஜே.வி.பி. எதிர்ப்பதற்கு அதுவும் ஒரு காரணமாகும். கடந்த வாரம் கொழும்பில் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜே.வி.பி.யின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க உள்ளூராட்சி தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி கணிசமான வெற்றியைப் பெறக்கூடிய அறிகுறிகள் அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக்கும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது என்றும் தனது அணிக்கு மக்கள் வெளிக்காட்டிவரும் ஆதரவு பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியையும் மைத்திரிபால சிறிசேனவின் சுதந்திர கட்சியையும் பெருமளவுக்கு குழப்பத்துக்குள்ளாக்கியிருக்கிறது என்றும் குறிப்பிட்டார். விரைவாக மாறிவரும் அரசியல் சூழ்நிலையினால் அச்சமடைந்திருக்கும் அரசாங்கமும் எதிர்க்கட்சியும் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக பிரசாரங்களை முன்னெடுப்பதில் ஒரே நோக்கத்துடன் செயற்படுகின்றன என்றும் அவர் கூறினார். மக்கள் கிளர்ச்சியினால் ஆட்சியதிகாரத்தில் இருந்து விரட்டப்பட்ட ராஜபக்சாக்களின் பொதுஜன பெரமுனவின் மக்கள் ஆதரவு படுமோசமாக வீழ்ச்சி கண்டிருக்கிறது. கடந்த பொதுத்தேர்தலில் பாராளுமன்றத்தில் ஒரு ஆசனத்தைக் கூட கைப்பற்ற முடியாமல் போன ஐக்கிய தேசிய கட்சியின் நிலையும் எந்தவித முன்னேற்றத்தையும் கண்டதாக இல்லை. மக்கள் ஆணையை இழந்துவிட்டதாக பொதுவில் கருதப்படும் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற ஆதரவில் அரசாங்கத்தை நடத்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மைய எதிர்காலத்தில் தேர்தல்களைச் சந்திப்பது குறித்து நினைத்துப் பார்க்கவும் தயாராயில்லை. கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் அவரின் உரை இதை மேலும் தெளிவாக்கியிருக்கிறது. இத்தகைய பின்புலத்தில், கருத்துக்கணிப்புகளின் பிரகாரம் மக்கள் ஆதரவில் முன்னணியில் நிற்கும் ஐக்கிய மக்கள் சக்தியும் தேசிய மக்கள் சக்தியும் ஊள்ளூராட்சி தேர்தல்களில் அடையக்கூடிய வெற்றிகள் பதவியில் இருப்பதற்கான நியாயப்பாடு தொடர்பில் ஏற்கெனவே சவாலுக்குள்ளாகியிருக்கும் அரசாங்கத்துக்கு மேலும் நெருக்கடிகளை உருவாக்கும் என்பதாலேயே அந்த தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு அதனால் இடையறாது முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் உணர்வு உத்வேகத்தை தணிப்பதற்கு அரசாங்கத்துக்கு இருக்கக்கூடிய ஒரே மார்க்கம் தேர்தல் ஒத்திவைப்பேயாகும். அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியும் தேசிய மக்கள் சக்தியும் மக்கள் ஆதரவில் முன்னணியில் இருப்பதற்கு பிரதான காரணம் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு இருக்கும் கடுமையான வெறுப்பே தவிர, மற்றும்படி இந்த கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு விரைவாக தீர்வுகளைக் காணக்கூடிய உருப்படியான மாற்றுத் திட்டங்கள் அவை கொண்டிருக்கின்றன என்ற நம்பிக்கையல்ல. மக்களின் நம்பிக்கையை பெருமளவுக்கு வென்றெடுக்கக்கூடிய பயனுறுதியுடைய திட்டங்களை அவை இதுவரை முன்வைத்ததாகவும் இல்லை. ஆனால், அரசாங்கத்தின் மீதான தங்களது வெறுப்பை வெளிப்படுத்த வீதிப் போராட்டங்களுக்கு அப்பால் மக்களுக்கு ஒரு வடிகாலாக அமையக்கூடிய எந்தவொரு தேர்தலும் இந்த இரு கட்சிகளுக்கும் வாய்ப்பாக அமையும். அந்த வாய்ப்பை சாத்தியமானளவுக்கு தாமதிப்பதே அரசாங்கத்திடம் இருக்கக்கூடிய முக்கிய தந்திரோபாயமாகும். அதேவேளை, அரசாங்கமும் ஐக்கிய மக்கள் சக்தியும் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக பிரசாரங்களை தீவிரப்படுத்தியிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. கடந்த கால கிளர்ச்சிகளில் ஜே.வி.பி.யின் பயங்கர நடவடிக்கைகளையும் தீவிர இடதுசாரிக் கொள்கைகளையும் அந்த பிரசாரங்களில் அவர்கள் மீண்டும் நினைவுபடுத்துகிறார்கள். எதிர்க்கட்சி தலைவர் பிரேமதாசவை பொறுத்தவரை, தேர்தல் போட்டி என்று வரும்போது ஜே.வி.பி.க்கு எதிரான பிரசாரங்களை தீவிரப்படுத்தவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. எதிர்கால பாராளுமன்ற தேர்தல் ஒன்றில் அவரது ஐக்கிய மக்கள் சக்திக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் நெருக்கமான போட்டி நிலவுவது மாத்திரமல்ல, சில முக்கிய மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தி முன்னணியில் இருப்பதாகவும் கிராமப்புறங்களிலும் அந்த கட்சி பெருமளவு வெற்றியைப் பெறக்கூடிய நிலையில் இருக்கிறது என்றும் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. ஜே.வி.பி.யின் முன்னைய தீவிர இடதுசாரிக் கொள்கைகளை நினைவுபடுத்தும் பிரேமதாச தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் அவர்கள் தனியார் சொத்துக்களை அரசுடைமையாக்குவார்கள் என்று அண்மையில் கூறியிருந்தார். அது முதலாளித்துவ மற்றும் நிலவுடைமை வர்க்கத்தவர்களுக்கு அவர் விடுத்த ஒரு பயமுறுத்தலேயாகும். கடந்தவாரம் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் கருத்தரங்கொன்றில் இதற்கு பதிலளித்த அநுரா குமார திசாநாயக்க சேறு பூசும் வழமையான அரசியல் செயற்பாடுகளை விடுத்து பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பில் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு பிரேமதாசவுக்கு சவால் விடுத்தார். “43 வருடங்களுக்கு முன்னர் 1980 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கொள்கை அறிக்கை ஜே.வி.பி.யின் இணையத்தளத்தில் இருக்கிறது. எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் அதை மேற்கோள்காட்டி இன்று எமக்கு எதிராக பேசுகிறார்கள். தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் நவீன உலகிற்கு பொருத்தமான முறையில் இப்போது மாறிவிட்டன.” “அந்த கொள்கை அறிக்கை உலகில் சோசலிச முகாம் பலம் பொருந்தியதாக விளங்கிய காலகட்டத்தில் ஜே.வி.பி.யின் 1979 மகாநாட்டில் அங்கீகரிக்கப்பட்டு 1980 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. சோசலிச முகாம் வீழ்ச்சிகண்டு இப்போது நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான காலத்துக்குப் பிறகு அமெரிக்கா, ஐரோப்பா, சீனா, ரஷ்யா என்று புதிய அரசியல் முகாம்கள் வெளிக்கிளம்பிவிட்டன.” “மக்களின் அபிலாசைகளும் தொழில் நுட்பம், சந்தை மற்றும் தொடர்புச் சாதனங்களும் முன்னென்றும் இல்லாத வகையில் மாற்றம் கண்டுவிட்டன. 1980 களின் உலகத்தை விடவும் முற்றிலும் வேறுபட்ட ஒரு உலகிலேயே நாம் இன்று வாழ்கிறோம். நெகிழ்ச்சிப் போக்குடைய அரசியல் சக்தியாக விளங்கும் நாம் உலக அரங்கின் மாறுதல்களைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப எம்மை மாற்றிக்கொள்ளக்கூடியவர்களாக இருக்கிறோம்.” “உலகின் மாறுதல்களுக்கு இசைவான முறையில் 2000, 2015, 2019 ஆம் ஆண்டுகளில் ஜே.வி.பி. பல்வேறு செயற்திட்டங்களை வெளியிட்டது.1980 ஆண்டில் இருந்ததை மேற்கோள் காட்டி சஜித் இப்போது ருவிட்டரில் பதிவுகளைச் செய்கிறார். அவருக்கு அந்தக் கால அரசியல் நிலைவரம் பற்றியோ அல்லது இந்தக்கால நிலைவரம் பற்றியோ எந்த விளக்கமும் இல்லை. புதிய நிவைரங்களை அவர் விளங்கிக்கொள்ள வேண்டும்” என்று திசாநாயக்க கூறினார். நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் இருந்த ஜே.வி.பி. இப்போது இல்லை என்பதும் அதன் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி நவீன உலகின் நிலைவரங்களுக்கு இசைவான முறையில் புதிய கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் கடைப்பிடிக்கும் புதிய அரசியல் சக்தியாக விளங்குகிறது என்பதுமே அந்த உரையின் மூலமாக அவர் செய்ய முனையும் பிரகடனமாகும். தங்களிடம் ஏற்பட்டிருப்பதாக திசாநாயக்க கூறுகின்ற அந்த ‘மாறுதல்’ நாடும் மக்களும் நீண்டகாலமாக எதிர்நோக்கி வந்திருக்கி்ன்ற முக்கியமான சகல பிரச்சினைகளையும் தழுவியதாக அமைந்திருக்கிறதா என்ற ஒரு கேள்வி எழுகிறது. இந்த பத்தியில் ஏற்கெனவே சுட்டிக்காட்டியதைப் போன்று, ஜே.வி.பி. அரசியல் அரங்கிற்கு வந்த பிறகு இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வைக் காண்பதற்கு அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட சகல முயற்சிகளையும் எதிர்த்த ஒரு எதிர்மறையான வரலாற்றைக் கொண்டிருக்கிறது. அந்த வரலாற்றையும் மாற்றக்கூடியதாக தேசிய மக்கள் சக்தியின் மாறுதல் அமையாத பட்சத்தில், முன்னைய தவறான அரசியல் போக்குகளில் இருந்து விடுபட்ட புதிய ஒரு அரசியல் கலாசாரத்தை உருவாக்குவது அதனால் சாத்தியமில்லை. இனப்பிரச்சினை விவகாரத்தில் ஜே.வி.பி.யின் கடந்த கால கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் விளக்குவதற்கு இங்கு இடவசதியில்லை. அதனால், அந்த பிரச்சினையில் அவர்களின் மாறாத அணுகுமுறையின் ஒரு பிந்திய உதாரணமாக, 1987 ஜூலை இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கையை தொடர்ந்து மாகாணசபைகள் முறையை அறிமுகப்படுத்துவதற்காக 37 வருடங்களுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்போவதாக ஜனாதிபதி விக்கிரமசிங்க அறிவித்ததை அடுத்து மூண்டிருக்கும் தற்போதைய சர்ச்சையில் தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு தொடர்பில் சில விடயங்களை சுட்டிக்காட்டுவது அவசியமாகிறது. இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வாக 13 வது திருத்தம் ஏற்கெனவே முன்வைக்கப்பட்டு அரசியலமைப்பிலும் உள்ளடக்கப்பட்டிருப்பதால் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தாங்கள் விரும்புவதாகவும் ஆனால் அந்த திருத்தம் இனப்பிரச்சினைக்கு ஏற்புடைய ஒரு தீர்வாக அமையமுடியுமா என்பது குறித்து தங்கள் கட்சிக்குள் விவாதம் ஒன்று இருப்பதாகவும் தேசிய மக்கள் சக்தியின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான கலாநிதி ஹரினி அமரசூரிய இம்மாத தொடக்கத்தில் கூறினார். தேசிய மக்கள் சக்தியின் தலைமைப் பொறுப்பை அவரிடம் கையளிக்க வேண்டும் என்று அவதானிகள் கருத்து தெரிவிக்கின்ற அளவுக்கு முற்போக்கான சிந்தனை கொண்ட ஒரு அறிவுஜீவியாக அடையாளம் காணப்பட்டிருப்பவர் அமரசூரிய.13 வது திருத்தத்தின் முழுமையான நடைமுறைப்படுத்தல் குறித்து முதலில் கருத்தை வெளியிட்ட தேசிய மக்கள் சக்தியின் பிரமுகரும் அவரே. ஆனால், ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பான விவாதத்தைப் பயன்படுத்தி பிரதான அரசியல் கட்சிகள் இனவாத உணர்வுகளைக் கிளறுகின்றன என்றும் அண்மைக்காலம் வரை நாட்டில் எவரும் அந்த திருத்தம் குறித்து கவலைப்படவில்லை. ஜனாதிபதி விக்கிரமசிங்கவே இந்த விவாதத்தை மூளவைத்திருக்கிறார். இந்த பொறியில் மக்கள் சிக்கிக்கொள்ளக்கூடாது என்றும் கூறினார்.தேசிய மக்கள் சக்தியினால் அமைக்கப்படக்கூடிய அரசாங்கம் ஒன்று தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கான ஏற்பாடுகளுடன் கூடிய அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டுவரும் என்றும் அவர் தெரிவித்தார். இறுதியாக, அநுரா குமார திசாநாயக்க 13 வது திருத்தத்தை அல்லது 13 பிளஸை நடைமுறைப்படுத்துவது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையப்போவதில்லை என்றும் சகல குடிமக்களினதும் உரிமைகளைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய அரசியலமைப்பு ஒன்று தேவைப்படுகிறது. புதிய அரசியலமைப்பு தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படவேண்டும் என்றும் சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்தார். 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதால் இனப்பிரச்சினைக்கு தீர்வுகிட்டுமோ இல்லையோ என்பது வேறு விடயம். ஆனால், ஜனாதிபதியின் அறிவிப்புக்கு எதிராக கடும்போக்கு சிங்கள தேசியவாத சக்திகளும் மகாசங்கமும் கிளர்ந்தெழுந்ததை அடுத்து நாட்டில் மீண்டும் பெருமெடுப்பில் தலையெடுக்கக்கூடிய பெரும்பான்மையினவாத அணி திரட்டல் ஆபத்தை, மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுவரும் முக்கியமான அரசியல் சக்தியாக தன்னைக் கருதும் ஒரு கட்சி எவ்வாறு அணுகுகின்றது என்பது இங்கு முக்கியமானது. நவீன உலகின் போக்குகளுக்கு இசைவான முறையில் மாறுதலுக்குள்ளாகியிருப்பதாக உரிமை கோரும் தேசிய மக்கள் சக்தி இது விடயத்தில் அதற்குரிய பொறுப்பை உணர்ந்து செயற்பட முன்வருவதாக இல்லை. தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்து புதிய அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டுவந்து இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் என்ற அறிவிப்பு உடனடியாக முகங்கொடுக்க வேண்டிய பிரச்சினையில் இருந்து நழுவும் ஒரு தந்திரோபாயமே. அதன் மூலமாக 13 வது திருத்தத்துக்கு எதிரான தென்னிலங்கை சக்திகள் மாத்திரமல்ல, சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளில் குறைந்த பட்சமானவற்றைக்கூட ஏற்றுக்கொள்ள மறுக்கும் சக்திகளும் வலுவடைகின்றன. தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு இதற்கு உதவுமேதவிர, இனப்பிரச்சினைக்கு பயனுறுதியுடைய தீர்வைக் காண்பதற்கு ஒருபோதும் உதவப்போவதில்லை. தேசிய மக்கள் சக்தியின் ‘மாறுதல்’ அர்த்தமுடையதாக அமைய இனப்பிரச்சினை தொடர்பிலான அதன் நிலைப்பாட்டிலும் பழைய போக்கில் இருந்து முற்றிலும் விடுபட்ட உருப்படியான மாற்றம் அவசியம். (நன்றி: வீரகேசரி வாரவெளியீடு) https://arangamnews.com/?p=8824
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.