Search the Community
Showing results for tags 'covid-19'.
-
உலகின் பல்வேறு தேசங்களிலும் பரந்து வாழும் நாம் இன்றளவுக்கும் எத்தனையோ பொதுமுடக்கங்களை / பயணத்தடைகளை எதிர்கொண்டு சமாளித்து வருகிறோம். எனவே, இவ்வாறான சவாலான சூழ்நிலைகளைக் கையாளும் பக்குவத்தையும் நம்மில் பலர் பெற்றிருக்கக்கூடும். எனினும், இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்த அசாதாரணமான சூழல் நாம் வாழும் தேசங்களிலோ, தாயகத்திலோ நீடிக்கப் போகிறதோ என்று எவருக்கும் தெரியாது. இந்த நிலையில் இவ்வாறான பொதுமுடக்க / பயணத்தடை காலங்களை எவ்வாறு சமாளிக்கலாம் என்பது பற்றிய சில வழிமுறைகளைக் கீழே தருகிறேன். நம்மில் பலருக்கு ஏற்கெனவே தெரிந்த / பலரும் கைக்கொள்ளும் வழிமுறைகளாக இவை இருக்கலாம். எனினும், இந்த விடயத்தில் உதவி தேவைப்பட்டோருக்கும், ஒரு நினைவூட்டலுக்காகவுமே இந்தப் பதிவை இங்கு எழுதுகிறேன். இனி, அந்த வழிமுறைகளைப் பார்க்கலாம்: 1) கோயில்களே ஆயினும் அவை பலரும் புழங்கும் பொதுவெளிகள் ஆகும்; எம்பெருமான் சந்நிதியில் மனிதர்க்கு மட்டுமன்றி கொறோனாக்கும் இடம் உண்டு தானே! எனவே, வீட்டுப் பூஜை அறை, வீட்டு வளவில் உள்ள சிறு கோயில்களை இயன்றவரை வழிபாட்டிற்காகவும், வீட்டிலுள்ளோரின் கூட்டுப் பிரார்த்தனை / பஜனைகளுக்காகவும் பயன்படுத்துவது சிறந்தது. இது நமது ஆன்ம பலத்தை அதிகரித்து, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்; குடும்ப உறவுகளும் வலுப்பெறும். 2) அடிக்கடி பொழுதுபோக்காகவோ, வேலை நிமித்தமோ பயணம் செய்து பழகியோருக்கு பொதுமுடக்கத்தால் வீட்டிலேயே மணி/நாட்கணக்கில் முடங்கியிருப்பது மன அழுத்தத்தைத் தரலாம். அவர்கள் தமது கவனத்தைத் திசை திருப்பத் தமக்குப் பிடித்த ஓரிரு பொழுதுபோக்கான செயற்பாடுகளை ஆரம்பிக்கலாம். உதாரணமாக, வீட்டுத் தோட்டம் செய்வது, வீட்டிலுள்ள சிறுவர்களுக்குக் கற்பிப்பது, சமையல், தையல் போன்றவற்றைப் பழகுவது, ஆடல், பாடல், எழுத்து, ஓவியம், பேச்சு, இசைக்கருவிகள் இவற்றில் ஏதாவது ஒன்றையேனும் பயிற்சி செய்வது போன்றவற்றைக் கூறலாம். இதன் மூலம் நம் திறமைகளை வளர்ப்பது மட்டுமன்றி, நமது மனமும் பலவழிகளில் சிதறாது ஒருமுகப்படுத்தப்படுகிறது. உள்ளத்தில் இனம்புரியாத ஆனந்தமும், தன்னம்பிக்கையும் தோன்றுகிறது. அத்துடன் நம் வாழ்க்கையை வண்ணமயப்படுத்துவதுடன், மனநிறைவையும் தந்து நாம் வாழ்வதன் அர்த்தத்தையும் நமக்குப் புரிய வைக்கிறது. 3) நம் வாழ்வில் எவை வேண்டியன, எவை வேண்டாதவை என்பதை ஆற அமர இருந்து யோசித்து வேண்டாதவையைக் கழிக்கவும், வேண்டியவற்றைத் தேடவும் இந்தப் பொதுமுடக்க காலம் உகந்தது. அவை பொருட்களாக இருக்கலாம்; அல்லது உங்கள் நம்பிக்கை/கொள்கை போன்றனவாகவும் இருக்கலாம். எதுவாக இருப்பினும் உங்கள் விருப்பு - வெறுப்புக்களை அலசி ஆராய்ந்து அவற்றை மாற்றியமைத்துக் கொள்ள உதவும் அரிய சந்தர்ப்பமே இந்தப் பொதுமுடக்க காலம். அதை உங்கள் கற்பனா சக்தியிடமே விட்டுவிடுகிறேன்! 4) வீட்டிலுள்ள உறவுகளுடன் நமது தொடர்பாடல் திறனை அதிகரிக்க நமக்குக் கிடைத்திருக்கும் கால அவகாசமாகவும் இந்தப் பொதுமுடக்க காலத்தைக் கொள்ளலாம். 'தொடர்பாடல் திறனா!' என நீங்கள் ஏளனமாக நகைக்கலாம். ஆனால் நம்மில் பலர் நினைப்பது போல நாம் தொடர்பாடலில் சிறந்தவர்கள் அல்ல. தினமும் தெரிந்தோ, தெரியாமலோ ஏராளமான தொடர்பாடல் தவறுகளைச் செய்கிறோம். அதனால் ஏற்படும் விளைவுகள் சில சமயங்களில் பாரதூரமாகவும் இருக்கின்றன. எனவே சிறந்த தொடர்பாடல் திறனை வளர்ப்பதில் அதிக சிரத்தையையும், நேரத்தையும் தற்போது எடுத்துக்கொள்ளல் நீண்ட கால நோக்கில் மிகவும் பயனுள்ளது. ஆம், இது ஒரு மிகச் சிறந்த முதலீடு தான்! தொடர்பாடல் பற்றி YouTubeஇலும் பல்வேறு காணொளிகள் உள்ளன. அவற்றில் தரமானவற்றை இனங்கண்டு அவற்றிலிருந்து கற்று உங்கள் தொடர்பாடல் திறனை விருத்தி செய்யலாம். இது பெரும் சமுத்திரம் போல் பரந்த விசாலமான விடயம். ஓரிரவில் வளர்த்துக் கொள்ளும் திறனல்ல. எனினும் இன்றே அதனைப் பயிற்சி செய்யத் தொடங்குதல் உங்கள் உறவு, நட்பு, சமூகத்துடன் நல்ல ஆரோக்கியமான உறவைப் பேண உதவும். (Search in YouTube 'Communication skills', 'listening skills' etc.) 5) பொதுமுடக்க காலத்தில் நாம் வீட்டிலிருந்து அலுவலக வேலை பார்க்கும்போதோ, அல்லது சமையல், சுத்தம் செய்தல் போன்ற வீட்டுவேலைகளைச் செய்யும்போதோ பின்னணியில் அமைதிதரும் இசையை இசைக்கவிட்டுவிட்டு நம் கருமங்களை ஆற்றும்போது ஓர் நேர்மறையான சூழலில் இருப்பதாக உணர்வோம். இது நாம் செய்யும் கருமங்களை மனமொன்றிச் செய்ய உதவும். அது மட்டுமன்றி வீட்டுச் சூழல் நிம்மதியானதாகவும், நேர்மறை எண்ணங்களைத் தருவதாகவும் அமைய இனிய இசை உதவும். YouTubeஇல் வீணை, வயலின், புல்லாங்குழல், சக்க்ஷபோன், பியானோ இசை வடிவங்கள் இந்தியா, சீனா போன்ற கீழைத்தேச இசைவடிவங்களிலும், இன்னும் பல மேலைத்தேச இசை வடிவங்களிலும் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. தவிரவும் எத்தனையோ meditation music கோர்வைகள் பலவும் மணிக்கணக்கான videoகளாக உள்ளன. (உங்களிடம் unlimited internet வசதி இருந்தால் இன்னும் நல்லது!) அமைதியான இசை நாம் இருக்கும் சூழலை இனிமையானதாகவும், நிம்மதியானதாகவும் மாற்றவல்லது. 6) பிரார்த்தனை: வீட்டுப் பூஜை அறையிலோ அல்லது ஒரு அமைதியான இடத்திலோ அமர்ந்துகொண்டு சற்று நேரம் சுவாசப்பயிற்சி செய்து நம் மனதை ஒருநிலைப்படுத்தி அமைதிப்படுத்திக்கொண்டு, நமக்கெல்லாம் மேலான பிரபஞ்சப் பேராற்றலை / இறைவனை வணங்கிவிட்டுப் பின்வருவனவற்றை நாம் நமது கற்பனா சக்திக்கேற்பச் செய்யலாம்: 1. நன்றியுணர்ச்சியை வெளிக்காட்டுதல் - உதாரணத்துக்கு, நமக்கெல்லாம் சக்தியையும், வளங்களையும் தந்து நம்மை வாழ வைத்துக்கொண்டிருக்கும் இந்தப் பிரபஞ்சப் பேராற்றலுக்கு நன்றி! இந்தச் சவாலான சூழலில் நம்மைக் காக்க இயன்ற நடவடிக்கைகளை எடுக்கும் நாட்டு/நகர/பிரதேச நிர்வாகத்துக்கு நன்றி! வைத்திய நிலையங்களில் போராடிக்கொண்டிருக்கும் மருத்துவர், தாதியர் போன்ற சுகாதாரத் தொழிலாளர்களுக்கு நன்றி! நம்முடன் கூட இருக்கும் உறவுகளுக்கு நன்றி! - இப்படி யாருக்கெல்லாம் நாம் நன்றி சொல்ல விரும்புகிறோமோ அதை நாம் உளமாரவும், உண்மை அன்புடனும் உணர்ந்து சொன்னால் நம்முள்ளேயே ஒரு பெரிய ஆத்ம திருப்தியும், நேர்மறை எண்ணங்களும் உருவாகும். இந்த உணர்வு நமது நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம். 2. இதுபோலவே, 'மன்னிப்பு (கேட்டல்/கொடுத்தல்)', 'வாழ்த்துதல்' போன்ற ஏனைய நல்ல உணர்வுகளுக்கும் உங்கள் கற்பனா சக்தியைப் பொறுத்துச் செய்யலாம். இந்தப் பயிற்சி ஒரு வேடிக்கையானதாகவோ, கேலிக்குரியதாகவோ தோன்றலாம். எனினும் அதைப் பயிற்சி செய்து அனுபவித்தால் அவற்றின் நன்மை உங்களுக்கே புரியும். 7) பொதுமுடக்கத்தால்/பயணத்தடையால் வீட்டில் முடங்கியிருக்கும் நிலையில், எவ்வளவு தான் நாம் நேர்மறை எண்ணங்கள் மூலம் அதனைச் சமாளிக்க முயன்றாலும் ஒருவித சலிப்புத் தன்மை, வெறுமை, மன அழுத்த உணர்வு போன்றவை அவ்வப்போது தோன்றுவது இயல்பு. இந்த இயல்பான உணர்வுகளை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ளப் பழகினால் மேலும் மன அழுத்தமடைவதை நாம் தவிர்க்கலாம். அது தவிரவும், பொதுமுடக்கத்தை எதிர்கொள்ளும் நம்மில் பலர் யுத்தகாலத்தில் ஊரடங்கிற்கு நன்கு பழக்கப்பட்டிருப்போம். அதே யுத்த காலங்கள் தாம் நம் சமூகத்திடையே நெருக்கமான நல்ல உறவுகளைப் பேண உதவின என்று சொல்வது மிகையல்ல. நமக்கெல்லாம் பொதுவான ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டிய அந்த யுத்தச் சூழலில் நாமெல்லாம் ஒற்றுமையாக உறவு, நட்புக்களை மதித்து கூட்டுறவாய் வாழ்ந்தோம். பின்னர் வந்த நுகர்வோர் கலாசாரம், அவசர வாழ்க்கை முறை இந்தக் கூட்டுறவு வாழ்க்கையைச் சாத்தியமற்றதாக்கிவிட்டது. எனினும் தற்போது நாம் எதிர்கொள்வதும் உலகளாவிய ரீதியில் ஒரு பெரும் யுத்த சூழ்நிலையைத்தான் - அதுவும் கண்ணுக்குத் தெரியாத அந்தக் கிருமி தான் நம் எதிரி. எனவே ஊரடங்கு காலங்களைச் சமாளித்து இன்றளவும் நலமாக வாழும் நாம் தற்போதய பொதுமுடக்க காலத்தையும் தைரியமாக எதிர்கொள்வோம். இதுவும் கடந்து போகும் என்ற உறுதியான மனநிலையுடன் பொதுமுடக்க விதிமுறைகளை மதித்து அநாவசிய ஊர் சுற்றல்களைத் தவிர்ப்போம் - இயன்றவரை வீட்டு வளாகங்களுக்குள்ளே இருப்போம். உறவுகளை வளம்படுத்த அரிய ஓர் சந்தர்ப்பமாக இந்தப் பொதுமுடக்க காலத்தைப் பயன்படுத்துவோம். வீட்டிலுள்ள உறவுகளோடு செலவழிக்க நேரமில்லையே என்ற குறை முன்பு இருந்திருக்கும். எனவே தற்போது கிடைத்த வாய்ப்புக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம். நிலைமை சுமுகமடைந்ததும் பின்னாளில் இப்படி ஓர் வாய்ப்பு அமையுமோ தெரியாது. எனவே நல்ல இனிய நினைவுகளைச் சேகரிப்போம். அன்பே சிவம். 8 ) வாசிப்புப் பழக்கம்: இதில் நான் சொல்ல புதிதாக ஒன்றும் இல்லை. எனினும் இதை ஒரு நினைவூட்டலாக (reminder) எழுதுகிறேன். அதுவும் இந்த பொதுமுடக்க காலம் வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கவோ, மீள ஆரம்பிக்கவோ உகந்ததாக இருக்கும் என்பதாலேயே இதையும் குறிப்பிடுகிறேன். வாசிப்புப் பழக்கத்தின் நன்மைகளையும் நான் சொல்லித் தான் நீங்கள் தெரிய வேண்டும் என்பதில்லை. எனினும் நினைவூட்டலாக சில நன்மைகளை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்: 1. அறிவு வளர்ச்சி மட்டுமல்லாது, ஒரு மொழியில் ஆளுமையையும் வளர்க்கிறது. அதாவது வாசிப்புப் பயிற்சியால் புதிய சொற்களை, வசன அமைப்புக்களை, அவற்றை எந்தச் சந்தர்ப்பங்களில் பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவைத் தருகிறது. வெறுமனே இலக்கணத்தைக் கற்பதாலும், சொற்களை மனப்பாடம் செய்வதாலும் எந்த ஒரு மொழியிலும் புலமை பெற்றுவிட முடியாது. இவற்றுடன் வாசிப்புப் பழக்கத்தையும் சேர்த்தல் மிகவும் அவசியமாகும். வாசிப்புப் பழக்கம் உங்களது மொழிப் பயிற்சியை துரிதப்படுத்துகிறது. உங்களுக்குப் பிடித்த விடயங்கள் சம்பந்தமான புத்தகங்களை வாசிப்பது அதனை இன்னும் துரிதப்படுத்தும். 2. மனமொன்றி வாசிப்பதில் மூழ்குவது ஒருவிதத்தில் தியானப் பயிற்சி போன்றது. 'அதே தியானமாக இருக்கிறார்' என்று பேச்சுவழக்கில் சொல்வது இதைத்தானோ என்று தெரியவில்லை! மனதை ஒருமுகப்படுத்த வாசிப்புப் பயிற்சி மிகவும் உதவுகிறது. நித்திரைக்குச் செல்லும் முன் தொலைக்காட்சி, செல்போன் இவற்றில் மூழ்குவதை விட, புத்தக வாசிப்பைச் செய்வது மிகவும் ஆரோக்கியமானது. நிம்மதியான உறக்கத்தைத் தரலாம்; கண்களுக்கும் பாதகமில்லை. எனவே, பொதுமுடக்கத்தை நல்ல முறையில் பயன்படுத்தும் ஒரு வழியாக வாசிப்புப் பழக்கத்தையும் நடைமுறைப்படுத்தலாமே! 9) உடற்பயிற்சி: பொதுமுடக்கமல்லாத சூழ்நிலையில் பல்வேறு அலுவல்கள் நிமித்தம் ஓடியாடித் திரிந்த நமது இயக்கத்தை இந்த அசாதாரண சூழல் மட்டுப்படுத்துவதால் ஏற்படும் விசனம் இயல்பானதே. இதனை ஆரோக்கியமாகக் கையாளும் வழிமுறைகள் சிலவற்றை மேலே குறிப்பிட்டிருந்தேன். எனினும், பலருக்குத் தெரிந்திருந்தாலும் நடைமுறைப்படுத்த தயங்கும் ஒரு செயல் இந்த உடற்பயிற்சியாகும். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதன் அவசியம் தற்போது அதிகரித்துள்ளது. பொதுவெளிகளில் மட்டுப்படுத்தப்பட்ட நமது உடல் இயக்கத்துக்கு ஓரளவுக்கேனும் மாற்றீடே இந்த உடற்பயிற்சி. வீட்டில் இருந்து நொறுக்குத் தீனிகளை அதிகம் உண்ணும் வாய்ப்பு இருப்பதால் நமது உடல் எடையும் அசாதாரணமான அளவுக்கு அதிகரிக்கலாம். எனவே உடற்பயிற்சி அவசியமாகிறது. பரந்த வளவுடன் கூடிய வீட்டில் வாழ்ந்தாலும் சரி, சிறு பிளாட்டில் வாழ்ந்தாலும் சரி நம் சூழலுக்கும், உடல்நிலைக்கும் உகந்த உடற்பயிற்சிகளைச் செய்யலாம். இது பற்றிய பல காணொளிகள் YouTubeஇல் உண்டு. எனினும், அவற்றைப் பின்பற்றும்போது உங்கள் பொது அறிவையும் பயன்படுத்துதல் பாதுகாப்பான முறையில் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள உதவும்! உங்கள் வைத்திய நிபுணர்கள், உடற்பயிற்சி பயிற்றுனர்கள் போன்றோரின் ஆலோசனையை இந்த விடயத்தில் பெறுவது சிறந்தது. 10) 'சின்னச் சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே எங்கும் எங்கும் கொட்டிக் கிடக்கு!' என்ற சினிமாப் பாடலை நாம் கேட்டிருப்போம். அதன் அர்த்தம் இன்றைய காலத்தில் இன்னமும் ஆழமானதாகத் தோன்றுகிறது. எத்தனை பெரிய சவாலான சூழல் வந்தாலும், நம்மைச் சூழவுள்ள சின்னச் சின்ன நல்ல விடயங்களையும் ரசித்து அனுபவிக்கக் கற்றுக்கொள்வோம். உதாரணத்துக்கு, வீட்டுத் தோட்டத்தில் உள்ள மலர்களின் அழகை ரசிக்கலாம்; அதைக் கவிதையால் வர்ணிக்கலாம்; கமராவில் படமாக்கலாம். அவரவர் விருப்பங்களுக்கேற்ப ரசிக்கக்கூடிய ஏராளமான சின்ன விடயங்கள் நம்மைச் சுற்றி இருக்கின்றன. கண்ணுக்கு, காதுக்கு, மூக்குக்கு, வாய்க்கு, தோலுக்கு என ஐம்புலன்களுக்கும் விருந்தாகும் விடயங்கள் பல உள்ளன. அவற்றைக் கண்டறிந்து ரசிப்போம். ஐம்புலன்களை அடக்க வேண்டியதில்லை; ஆரோக்கியமான முறையில் நெறிப்படுத்துதலே முக்கியம். நல்ல ரசனையாலும் அவை நெறிப்படுத்தப்படும் - நல்ல ரசனையும் ஒரு வித தியானமே! ************************************ நான் கற்ற, அனுபவித்து உணர்ந்த வகையில் மேலுள்ள தகவல்களை எழுதியுள்ளேன். இந்த விடயத்தில் நம் எல்லோருக்கும் பயன் தரக்கூடிய உங்களது ஆலோசனைகளை / தகவல்களையும் கீழே பின்னூட்டமாகப் பதியலாம். நன்றி
-
கொவிட் 19 அல்லது கொரானோ பலருக்கு பதட்டம். சிலருக்கு உயிர்க்கொல்லி. நமக்கு விளையாட்டு. தினமும் கொவிட் பி சி ஆருடன் (PCR- Polymerase Chain Reaction) காலை தொடங்கி மாலை வரை.. முதலில்.. கோழி உரிப்பது போல கொவிட்டை உரித்தல்.. அல்லது கொழுக்கட்டையை பிய்ப்பது போல் பிய்த்தல்... கொவிட்டை உரித்து.. இதற்கு எக்ஸ்ராக்சன்.. extraction என்பது. கொவிட் கோதை உடைத்து அதன் உள்ளீட்டில் உள்ள ஆர் என் ஏ (RNA- Ribo Nucleic Acid)யை அதாவது கொழுக்கட்டையை பிச்சு உள்ளீட்டை எடுத்து அதற்குள் உள்ள அவித்த பயறைப் பொறுக்கி உண்பது போல்... தனியாக்குதல். இதனை நாம் செய்யத் தேவையில்லை. ஒரு ரோபோவே செய்யும்... இவர் தான் அவர்.. இவர் இந்த அலுவலை ஒரு மணி நேரத்துக்குள் செய்திடுவார்.. அதன் பின்... பிரித்தெடுத்த கொவிட் ஆர் என் ஏ ( RNA) ஐ.. வைச்சுக் கொண்டு வாய்தான் பார்க்கனும்.. ஏனெனில் ஆர் என் ஏயை அப்படியே பெருக்கி எடுக்க இன்னும் வழிமுறைகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றே சொல்லலாம்.. இங்கும் இயற்கை மனிதனை வென்றுவிடுகிறது.. அதனால்.. கில்லாடி மனிதன்.. என்ன செய்கிறான் என்றால்.. ஆர் என் ஏ யை டி என் ஏ.. கொம்பிலிமென்ரரி (Complementary DNA) cDNA ஆக்கி இந்த கொவிட் 19 இன் மரபணுத்தகவல்கள் கொப்பிகளை மில்லியன் கணக்கில் உருவாக்கிக் கொள்கிறான். இந்த ஆர் என் ஏ அல்லது சி டி என் ஏ யோ தொற்றாது. கொவிட் கொழுக்கட்டையாக இருந்தால் மட்டுமே தொற்றும். அதனை கோது.. உள்ளீடு என்று பிரித்துவிட்டால்.. ஆள் காலி. இதனையே மேலே உள்ள ரோபோ செய்கிறது. இதன் பின் பிரித்தெடுத்த ஆர் என் ஏயை பயன்படுத்தி.. மேற்சொன்ன சி டி என் ஏ யை உருவாக்கி.. கொப்பி பண்ணி அதில் உள்ள கொவிட் தனித்துவ ஜீன்களை அடையாளம் கண்டு.. கொவிட் தொற்றை அடையாளம் காண வேண்டும். இந்த வேலைகளையும் ஒரு ரோபோவே செய்யும்.. அவர் இவர் தான். இவர் தன் தொழிலை ஆட்டம் 1 மற்றும் ஆட்டம் 2 என்று ஆடி முடிப்பார். இதற்கான மொத்த நேரம் 2 மணித்தியாலங்கள். இவருக்குள் பல அயிட்டங்கள் வைக்கப்பட்டால் தான் அவர் இந்த வேலையை செய்வார்.. இவரை கணனி கட்டுப்படுத்தும்.. இவருக்குள் இத்தனை அயிட்டங்களை அடக்கனும். இல்லாவிடில் இவருக்குரிய வேலையை இவர் செய்யமாட்டார். இதற்குள்.. ஆர் என் ஏ யை சி டி என் ஏ ஆக்கி பல்கிப் பெருகச் செய்யும் அதன் பின்.. பல்கிப் பெருகின சி டி என் ஏ யில்.. கொவிட் 19 ஐ அடையாளம் காட்டக் கூடிய அதற்கு என்றே தனித்துமான அடையாள அறிகுறிகளை கண்டறியச் செய்யச் செய்வது. அதாவது தனித்துவமான மரபணுக்களை (Genes) தெரிவு செய்து அடையாளம் காட்டுதல். கொவிட்டை அடையாளம் காண இரண்டு அல்லது அதற்கு மேலதிகமான.. தனித்துவமான மரபணுக்கள் பாவிக்கப்படுகின்றன. கொவிட்-19 தெரிவு மரபணுக்களின் தொகையை இந்த வரைபுகள் மூலமாக நமக்கு கணனிகள் கணித்துக் காட்டும். இதில் குறித்த கொவிட் 19 ஜீன் வரைபுகளில் Ct (Cycle Threshold value) அளவீடு..9 தொடங்கி 30 க்குள் அமையின் அதனை கொவிட் 19 தொற்று பாசிட்டிவ் என்று கொள்வார்கள். குறிப்பாக Ct குறைவாக இருப்பின் தொற்று அதிகம்.. கூடியதாக இருப்பின் தொற்றுக் குறைந்து செல்கிறது என்று அர்த்தப்படுத்தப்படும். தொற்றின் மிக ஆரம்பத்திலும் Ct கூடியதாக இருக்கலாம். அதலால் இதனை வாசிப்பதில் கவனமாக இருப்பது அவசியம். ஆக இந்த பி சி ஆர் (இங்கு உண்மையில் பாவிக்கப்படுவது.. rRT-PCR (The COVID-19 RT-PCR test is a real-time reverse transcription polymerase chain reaction (rRT-PCR)) ஆகும். மேற்சொன்ன முறையில் இதனைச் செய்து முடிக்க.. கிட்டத்தட்ட 4 மணி நேரங்கள் எடுக்கும். இதனை விட குறுகிய நேரத்தில் செய்யக் கூடிய வழிமுறைகளும் உண்டு. ஆனால்.. இந்த முறையில்.. சென்சிர்ரிவிற்றி -sensitivity அதிகமாகும். எனி மாறல்கள் தொடர்பில் பார்ப்போம்.. என்னதான் மாறல் (variant).. தோற்றம் மாறிய கொவிட் என்று உலகம் உங்களை வெருட்டினாலும்.. அதன் சில ஜீன்கள் அப்படியே தனித்துவமாகவே தான் உள்ளன. இந்த மாறல்கள்..கொவிட் 19 இல் வெளித்தள்ளிக் கொண்டிருக்கும்.. ஒட்டும் கிளைகோபுரதத்தில் (Glycoprotein -Spike) தான் மாறல் வருகிறது. அதன் ஒட்டும் தன்மையில் தான் தொற்றும் தன்மை உள்ளது. கொவிட் 19 வெறும் 30 ஆயிரம் bp (base pairs)தான்.. 30 ஆயிரம் மரபணு அலகுகள் என்று வைச்சுக் கொண்டால்.. இது ஆட்டிப்படைக்கும் மனிதனில் இதே 6.4 பில்லியன் bp கள். கொவிட் - 19 எமது உடலுக்குள் போடும் ஆட்டத்தை விளங்கிக் கொண்டாலே.. போதும்.. இவரை மடக்கிற பல வழிகளை கண்டறியலாம். எல்லா வைரஸ் போலவும் கொவிட் டும் கொட்டிக்காரன் அல்ல அல்ல சுழியன். எமது உடலுக்குள் நுழைந்து எமது கலங்களில் உள்ள இரசாயனப் பொறிகளை பயன்படுத்தி தன் இனத்தைப் பெருப்பித்துக் கொள்கிற.. திறமை உள்ள சுழியன். சரி.. எனி எப்படி கொவிட் இருக்கா இல்லையா என்று சொல்லுறது.. கொவிட் எல்லா கலங்களிலும் தொற்ற முடியாது. அவரின் ஒட்டுந்தன்மையுள்ள முள்ளுத்தொப்பியில் உள்ள முள்ளு ஒட்டக்கூடிய கலங்களை தான் அவர் ஆரம்பித்தில் தாக்குவார். அது எமது சுவாசப்பாதை வழி மென்மையான இழையங்கள்.. அமைந்திருப்பது அவருக்கு இந்தச் செயலைச் செய்ய இலகுவாகிவிட்டது. எனவே சுவாசப் பாதையில்.. குறிப்பாக உள் மூக்குத்துவாரங்கள்.. அடித்தொண்டைப் பகுதியில் இருந்து பெறப்படும்.. பரிசோதனை மாதிரிகள் அடங்கிய காதுக்குடம்பி போன்ற ஆனால் இதற்கு என்று தயாரித்த மென் குடம்பிகளை (swab) பயன்படுத்தி செய்வார்கள். மேலே படத்தில் இருப்பது துரித பரிசோதனை (Rapid test kit or Lateral flow test kit) தொகுதி. இதனை வீட்டிலேயே செய்யலாம். இதில் கொவிட் அன்ரிஜென் (Antigen) இருக்கா என்று அதாவது கொவிட் தொற்றி இருக்கா என்று கண்டுபிடிக்கலாம். இதனை வெறும் 30 நிமிடத்துக்குள் செய்யலாம். ஆனால்.. உண்மையில் 10 நிமிடத்துக்குள் முடிவை சொல்லலாம். இதற்கு மேலதிகமாக.. அன்ரிபாடி.. (antibody test) ரெஸ்ட் செய்வது. அதாவது எமது உடலில் கொவிட் -19 க்கு எதிரான எதிர்ப்பு சக்தி இருக்கான்னு கண்டறிதல். இதற்கு சில துளி இரத்த மாதிரிகள் போதும். இறுதியாக.. என்னதான் கொவிட் 19 தோடு விளையாடினாலும்.. பாதுக்காப்புக் கவசங்கள் அணிந்து கொண்டு போர்க்களச் சண்டைக்கு போவது போல் தான் போக வேண்டி இருக்குது. காரணம்.. கொவிட் நேரடியாக விளைவிக்கும் பாதிப்பை விட எமது உடல் கொவிட்டுக்கு எதிராக அபரிமிதமாக தொழிற்பட ஆரம்பித்தால் தான்.. எமது உடல் எம்மையே அதிகம் பாதிக்கச் செய்துவிடும். அதனால்.. கொவிட்19 தொற்றுக்கண்டால்.. அச்சம் தவிர்த்து நோயெதிர்ப்பு சக்தி/ நிர்பீடணச் செயற்பாட்டை அதிகரிக்கவல்ல.. உணவுகளை உட்கொள்வதோடு.. தொண்டை.. நாசிப் பகுதியில் இருக்கும் கிருமிகளை கொல்லக் கூடிய அல்லது வெளியேற்றக் கூடிய.. உணவுகளை.. சிகிச்சை முறைகளை முன்னெடுக்கலாம். சுவாச அல்லது நாட்பட்ட நீண்ட கால நோயாளிகள்.. நிர்பீடணம் அல்லது நோய் எதிர்ப்புசக்தி.. பலவீனமானவர்கள்.. கொவிட் 19 எதிரான அவர்களின் உடற்தொழிற்பாடு காரணமாக.. பாதிப்பை அதிகம் சந்திக்க வாய்ப்புள்ளது. அவர்கள்.. தேவை உணர்ந்து வைத்திய சேவைகளிடம் உதவி நாட வேண்டும். சரி.. எனி தனிமைப்படுத்தல்... முகக்கவசம் அணிதல்.. கைகழுவுதல்.. தனிமனித இடவெளி.. இதெல்லாம்.. தொற்றுக்கான வாய்ப்பை.. குறைக்கும் வழிமுறைகளே தவிர.. இவை தொற்றுக்களை முற்றாக தடுக்காது. எனி வக்சீனுக்கு (vaccine) வருவோம்.. பெறப்பட்டுள்ள வக்சீன்கள்.. இந்த வைரசின்.. சில ஆர் என் ஏ பகுதிகளை பயன்படுத்தி.. அதனை பிரதிநிதித்துவப்படுத்தும்.. கூறுகளை உருவாக்கி.. பெறப்பட்டதே இந்த வக்சீன். ஆனால் வேறு சில வழிமுறைகளிலும் இந்த வக்சீன்கள் பெறப்படலாம். இந்த வக்சீனை செலுத்தினால்.. உங்கள் உடல் இந்த வைரசுக்கு எதிரான அன்ரிபாடிகளை உருவாக்கி வைச்சுக் கொள்ளும். ஒருவேளை உடலில் வைரஸ் தொற்று ஏற்பட்டால்.. உடனடியாகவே இந்த அன்ரிபாடிகள் தொழிற்பட ஆரம்பிப்பதால்.. இந்த வைரஸ்கள் உடலுக்குள் புகுந்து பெருகிக் கொள்ள முதலே அழிக்கப்பட்டு விடும். அதனால்.. இதன் தாக்கத்தில் இருந்தும் தப்பித்துக் கொள்ளலாம். இந்த வக்சீன்களை எடுப்பதால்.. பின்விளைவுகள் வருமா என்றால்.. பாரிய பின்விளைவுகள் வர வாய்ப்புக்குறைவு. ஆனால்.. தனிப்பட்ட நபர்களின் உடல்நிலைகு ஏற்ப இதனை தெரிவு செய்வது நல்லம். குறிப்பாக சிலருக்கு.. பென்சிலின் அலேர்ஜி (Allergy)/ ஒவ்வாமை இருந்தால்.. எப்படி பென்சிலின் எடுக்க முதல் பரிசோதித்து எடுக்கச் சொல்வார்களோ அப்படி. இந்த வக்சீன்கள் எமக்கு புதிதல்ல. நாம் பிறந்த காலத்தில் இருந்து பல வக்சீன்கள் எமக்குள் ஊட்டப்பட்டே உள்ளன. சில வக்சீன்கள்.. உடலில் மாறா வடுக்களை ஏற்படுத்தி இருப்பதையும் பார்ப்பீர்கள். அந்தளவுக்கு இது இல்லை. மேலும்.. குருதிப் பிளாஸ்மா (Blood Plasma) ஏற்றுதல்.. கொவிட் 19 தொற்றுக்கண்டு.. தேறிய 35 வயதுக்கும் மேற்பட்ட ஆண்களின் குருதியில் இருந்து பெறப்படும் பிளாஸ்மாவை பயன்படுத்தி அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் கொவிட் நோயாளிகள்.. கொவிட்டை எதிர்த்துப் போராடக் கூடிய அன்ரிபாடிகளை கொடுப்பதுண்டு. ஏலவே இப்படியான வழிமுறைகள் வேறு சில நோய்களுக்கு எதிராகவும் பாவிக்கப்படுவதுண்டு. சரி.. இத்தோடு.. கொவிட்-19 முள்ளுப்பந்து விளையாடி முடிந்துவிட்டது. இயன்றவரை எளிமைப்படுத்தி தனித்தமிழில் தர முயன்றிருக்கிறோம். எமது சமூகம்.. இந்த கொவிட் 19 சார்ந்தும்.. அதன் தற்போதைய நிலவரம் குறித்தும் அறிந்து அச்சம் நீக்கி வாழ. ஆக்கம்.. யாழிற்காக.. நெடுக்ஸ்.
-
கோவிட் 19: மாறும் வைரசும், மாறாத மனிதர்களும்! தென்கிழக்கு இங்கிலாந்தின் நகரங்களில் புதிதான நிலை 4 கட்டுப்பாடுகள் அறிமுகம் செய்யப் பட்டிருக்கின்றன. இதற்குக் காரணமாக, புதிதாக விகாரமடைந்த நவீன கொரனா வைரஸ் அங்கே இனங்காணப் பட்டிருப்பது சொல்லப் பட்டிருக்கிறது. இதைப் பற்றிச் சுருக்கமாகப் பார்க்கலாம். வைரசுகளுக்கு மாற்றமே வாழ்க்கை! வைரசுகள் ஆர்.என்.ஏ (RNA) அல்லது டி.என்.ஏ (DNA) எனப்படும் நியூக்கிளிக் அமிலங்களால் ஆக்கப் பட்டவை. ஆர்.என்.ஏ வைரசுகள் இயற்கையாகவே பெருகும் போது விகாரமடைந்து புதிய விகாரிகளை உருவாக்கும் தன்மை கொண்டவை. தடுப்பூசி இது வரை கண்டு பிடிக்கப் படாத எயிட்ஸ் வைரசான எச்.ஐ.வி (HIV) வேகமாக விகாரமடைவதில் பிரபலமான ஒரு வைரஸ் குடும்பம். இன்னொரு வேகமாக மாறும் தன்மை கொண்ட ஆர்.என்.ஏ வைரசு வருடா வருடம் எம்மைத் தாக்கும் இன்ப்ளூழுவன்சா ஏ வைரஸ். இதனால் தான் இன்புழுவன்சாக் காய்ச்சலுக்கான தடுப்பூசியை ஒவ்வொரு ஆண்டும் புதிதாக தயாரித்துப் போட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. நவீன கொரனா வைரசும் ஒரு ஆர்.என்.ஏ வைரஸ். எச்.ஐ.வி அல்லது இன்புழுவன்சா போல வேகமாக விகாரமடையா விட்டாலும், விகாரமடையக் கூடிய வைரஸ் தான் இந்த நவீன கொரனா வைரஸ். கடந்த வருடம் கண்டறியப் பட்டதில் இருந்து 4000 வரையான விகாரங்கள் நவீன கொரனா வைரசில் அடையாளம் காணப் பட்டிருக்கின்றன. ஏன் மாற்றங்களும் விகாரங்களும்? "மாறாததெல்லாம் மண்ணோடு" என்ற கோச்சடையான் வரிகள் தான் இந்தக் கேள்விக்கு ஒரு வரிப் பதில். வைரசுகளின் வாழ்க்கை என்பது ஏனைய சிக்கலான உயிர்கள் போன்றது அல்ல. வைரசுகளின் வாழ்வுக்கு ஒரே நோக்கம் "நிலைத்திருப்பது" தான்!. அப்படி நீண்ட காலம் நிலைத்திருக்க இரண்டு வேலைகள் செய்ய வேண்டும்: ஒன்று - தாம் தங்கிப் பெருக்கக் கூடிய உயிர்களைத் தேடி அடைய வேண்டும். இரண்டு: அப்படியான ஒரு உயிர் கிடைக்கும் போது வேகமாகப் பெருக வேண்டும். இந்த இரண்டாவது வேலையை ஆர்.என்.ஏ வைரசுகள் செய்யும் போது, ஒரு சிக்கல் ஏற்படுகிறது. வேகமாக பெருகும் அவசரத்தில், தங்கள் ஆர்.என்.ஏ மூலக் கூறுகளைப் பிரதி செய்வதில் சில தவறுகளை விடுகின்றன. இது நாம் பார்த்தெழுதல் போட்டியில், வேகமாக எழுதும் போது சில எழுத்துப் பிழைகள் விடுவது போன்ற ஒரு நிலைமை. மேலே நாம் பார்த்த நவீன கொரனா வைரசின் 4000 விகாரங்களில் பெரும்பகுதி இப்படியான தவறுகள் தான். இந்த தவறுகளில் சில வைரசைப் பலவீனப் படுத்தி அது தப்பி வாழ இயலாதவாறு மாற்றி விடக் கூடியவை: எனவே இந்த விகாரங்களால் நவீன சார்ஸ் வைரஸ் பலமிழந்தால் அது மனிதனின் அதிர்ஷ்டம். அப்படியல்லாமல், இந்த விகாரங்களில் சில வைரசின் தப்பி வாழும் திறனை அதிகரித்தால், வைரசுக்கு அதிர்ஷ்டம், மனிதனுக்கு ஆப்பு! மனிதனுக்கு ஆப்பு! இப்போது தென்கிழக்கு இங்கிலாந்தில் நடந்திருப்பது இது தான்: செப்ரெம்பர் மாதத்தில் இருந்து தென்கிழக்கு இங்கிலாந்தின் 60 நிர்வாகப் பிரிவுகளில் VUI202012/01 என்ற விகாரி வைரஸ் பரவலாக அதிகரித்து வந்திருக்கிறது. அப்படியானால் ஏன் செப்ரெம்பரிலேயே அரசு எச்சரிக்கை செய்யவில்லை என்ற கேள்வி எழலாம்! பதில் - செப்ரெம்பர் மாதத்தில் இந்த விகாரி வைரஸ் கண்டு பிடிக்கப் பட்டாலும், அதைத் தொடர்ந்து கண்காணித்து வந்த போது தான் இந்த விகாரி வைரசின் பரவல் அதிகமாக இருப்பதை அறிந்திருக்கிறார்கள். இதில் ஒழிப்பு மறைப்பு எதுவும் இல்லை, இது சாதாரணமாக நடக்கும் epidemiological surveillance என்ற ஆய்வு நடவடிக்கை. இது வரை இந்த விகாரி வைரசில் 17 வெவ்வேறு விகாரங்களை அடையாளம் கண்டிருக்கிறார்கள். இந்த 17 மாற்றங்களில் முக்கியமானது, N502Y எனப்படும் விகாரமாக இருக்கிறது. இந்தக் குறிப்பிட்ட மாற்றம் நவீன சார்ஸ் வைரசு எங்கள் உடலில் உள்நுழையப் பயன்படுத்தும் வைரசின் புரத (spike protein) மூலக்கூற்றில் ஏற்பட்டிருக்கிறது. இதனால் இந்த விகாரி வைரஸ் எங்கள் உடலில் இலகுவாக நுழைந்து கொள்ளும் திறனைப் பெற்றிருக்கிறது. முன்னர் இருந்த நவீன கொரனா வைரசுகளோடு ஒப்பிடுகையில், இந்த விகாரி வைரஸ் 70% அதிக தொற்றும் திறனைக் கொண்டிருக்கிறது. தொற்றும் திறனில் 70% அதிகரிப்பு, எங்களுக்கு என்ன விளைவுகள்? 70% அதிகரிப்பு என்பது கிட்டத்தட்ட இந்த விகாரி வைரஸ் தன் தொற்றும் திறனை இரட்டிப்பாக்கியிருக்கிறது என்று கொள்ள முடியும். இது வரை வைரசைக் காவிய ஒருவர் இருவருக்கு தன் வைரசுத் தொற்றை வழங்கி வந்திருந்தால், இந்த விகாரியால் தொற்றப் பட்ட ஒருவர் , இனி 4 பேருக்கு தன் தொற்றைக் கடத்துவார் என்று அண்ணளவாகக் கூற முடியும்!. இதனால் தொற்றுக்கள் மிக வேகமாகப் பரவும். இப்படிப் பரவும் போது, மருத்துவக் கவனிப்புத் தேவையான தொற்றுக்களும், மரணங்களும் அதிகரிக்கும். எனவே, இந்த விகாரி வைரஸ் கோவிட் நோயின் தீவிரத்தை நோயாளியில் அதிகரிக்கா விட்டாலும் அதிகரித்த பரவலால் மருத்துவமனைகள் மீதான சுமையும், மரணங்களும் அதிகரிக்கும் என்பது முக்கியமான ஒரு விடயம்! யார் மேல் தவறு? இந்த விகாரி வைரஸ் மிகப் பெரும்பான்மையாக தென்கிழக்கு இங்கிலாந்தில் தான் காணப்படுகிறது. அதனால் இது அந்தப் பிரதேசத்திலேயே உருவாகியிருக்கிறது என்பது தான் தற்போதைய முடிவு. இது வைரசின் தன்னிச்சையான மாற்றத்தினால் உருவாகியிருப்பதால், மனிதர்களின் நேரடியான தவறால் இது உருவானதாகக் கூற இயலாது. ஆனால், நவீன கொரனா வைரஸ் கட்டுப் பாடின்றிப் பரவ மனிதர்கள் இடங்கொடுக்கும் போது தான் இப்படியான விகாரங்கள் நடக்கவும் மேடை அமைக்கப் படுகிறது. தொற்ற வாய்ப்புகள் இல்லையேல், வைரசுக்கு தன்னைப் பெருக்கிக் கொள்ளவும் தேவையும் சந்தர்ப்பமும் இல்லாமல் போய் விடுகிறது. எனவே, மனித நடத்தைகள் மறைமுகமாக புதிய விகாரிகள் உருவாவதற்குக் காரணமாக அமைந்திருக்கின்றன. என்ன செய்யலாம்? மேலே குறிப்பிட்டிருப்பது போல: மனித நடத்தையை நாம் இதற்கேற்ப மாற்றிக் கொள்ள வேண்டியதே ஒரே வழி. அதிர்ஷ்டவசமாக, இந்த விகாரி உடலுக்கு வெளியே தப்பி வாழும் கால அளவு, சவர்க்காரத்தினால் அழிக்கப் படும் இயல்பு என்பவற்றை மாற்றிக் கொள்ளவில்லை. எனவே, நாம் அதே சமூக இடைவெளி பேணல், கைகளைக் கழுவுதல் போன்ற தடுப்பு முறைகளைப் பின்பற்றுவதே போதுமானது. என் புலம்பல்! இங்கே விஞ்ஞானத் தகவல்களில் இருந்து நகர்ந்து என் தனிப்பட்ட அவதானங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். இங்கிலாந்து வாசிகள் மன்னித்தருள்க! கோவிட் 19 இனைக் கையாண்ட விதத்தைப் பொறுத்தவரை, நான் அதிகம் எதிர்பார்த்து ஏமாந்த நாடு பிரிட்டன் (குறைவாக எடை போட்டு ஆச்சரியப் பட்ட நாடு: சிறிலங்கா). ஆயிரக்கணக்கான ஆய்வுப் பல்கலைக் கழகங்களை வைத்துக் கொண்டு அமெரிக்கா செய்யும் அறிவியல் சாதனைகளை சில டசின் பல்கலைக் கழகங்களை வைத்துக் கொண்டே சமம் செய்யும் வினைத் திறன் கொண்ட நாடு பிரிட்டன். இத்தகைய அறிவியல், மருத்துவ பாரம்பரியம் கொண்ட நாட்டில் ஆரம்பக் கட்டுப்பாடுகளைக் கொண்டு வர தலைமை விஞ்ஞானியாக இருந்தவர் காரணமின்றித் தயங்கியதும், பின்னர் அடுத்தடுத்து அரசு அறிவுறுத்தலில் விட்ட தவறுகளும் நியாயப் படுத்த முடியாத தோல்விகள்! பிரிட்டனின் மையக் கட்டுப்பாடு குறைபாடாக இருந்தாலும், மக்கள் நடந்து கொண்ட விதத்தினால் கோவிட் 19 இனை கொஞ்சம் வீரியமற்றதாக மாற்றியிருக்க முடியும். நடந்ததோ எதிரானதாக இருந்தது: கோடை கால விடுமுறைக்கு வழமை போல சென்று, பிரிட்டன் திரும்பி, தனிமைப் படுத்தலையும் நிராகரித்து பிரித்தானிய, பிரதானமாக இங்கிலாந்து வாசிகள் நடந்து கொண்டது கோவிட் 19 கட்டுப்பாட்டில் ஏற்பட்ட இரண்டாவது பாரிய ஓட்டை! இப்போது இருக்கும் கேள்வி: இந்த பரவல் சக்தி கூடிய வைரசின் பின்னராவது பிரித்தானிய, இங்கிலாந்து வாசிகள் தங்கள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களைத் தவிர்த்து பரவலைத் தடுப்பார்களா என்பது தான்! தொகுப்பு : ஜஸ்ரின் மூலங்களும், மேலதிக தகவல்களும்: 1. விகாரி வைரஸ் பற்றிய தகவல்கள்: https://www.bmj.com/content/371/bmj.m4857 2. இன்னொரு விகாரம் பற்றிய அறிக்கை https://pubmed.ncbi.nlm.nih.gov/32697968/
- 4 replies
-
- 11
-
-
- கோவிட்- 19
- கொவிட் 19
-
(and 1 more)
Tagged with: