Jump to content

இந்தியப் படைகளுக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் நினைவு நாள்.


Recommended Posts

அன்னை பூபதி என்று அழைக்கப்படும் தாய் இந்தியப் படைகளுக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நாள்.

யார் இந்த அன்னைபூபதியென்று சுருக்கமாகப் பார்க்கும் பதிவிது. இப்பதிவை எழுதுவதற்கு நட்சத்திரக் கிழமையில் எனக்கு வாய்ப்புக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி. சில சங்கடங்களைத் தாண்டி எழுதப்பட்டே ஆகவேண்டிய பதிவிது.பூபதியம்மாவின் கணவர் பெயர் கணபதிப்பிள்ளை. பத்துப்பிள்ளைகளின் தாய். மட்டு – அம்பாறை அன்னையர் முன்னணியின் துடிப்புள்ள முன்னணிச் செயற்பாட்டாளர்.

புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் சண்டை நடந்துகொண்டிருந்த காலம். இந்தியப்படை கிட்டத்தட்ட மக்கள் வாழிடங்கள் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டிருந்த காலம். அந்த இடைபட்ட காலத்துள் நடந்த கொடுமைகளை விவரிக்கவோ விளங்கப்படுத்தவோ தேவையில்லை.

இந்நிலையில் தான் இந்தியப்படைக்கெதிராக குரல் கொடுக்க, சாத்வீக போராட்டங்களை நடத்த மட்டு-அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி முடிவு செய்தது. அவர்கள் இரண்டு கோரிக்கையை வைத்து இந்திய அரசுக்கெதிராக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.

அவையாவன,

1.உடனடியாக யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்த வேண்டும்.

2. புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும்.

அன்னையர் முன்னணியின் கோரிக்கைகள் எதுவுமே இந்தியப்படையினரின் கவனத்தையீர்க்கவில்லை. ஆனால் தமிழ்ப் பெண்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் அணிதிரண்ட நிலையில் 1988ம் ஆண்டு ஜனவரி 4ம் திகதி அன்னையர் முன்னணியைத் திருமலைக்குப் பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதற்கமைய சென்ற அன்னையர் முன்னணிக் குழுவினருடன் இந்தியப் படையின் உயர் அதிகாரியான “பிரிக்கேடியர் சண்டேஸ்” பேச்சுக்கள் நடத்தினார். இந்தப் பேச்சுக்களின்போது அன்னையர் முன்வைத்த இரு கோரிக்கைகளையுமே மீளவும் நினைவூட்டினர். ஆனால் கோரிக்கைகள் எதுவும் நிறை வேற்றப்படவில்லை. போராட்டம் தொடர்ந்து நடந்தது.

இந்நிலையில் 1988 ம் ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதி அன்னையர் முன்னணியின் நிருவாகக் குழுவினரை இந்தியா பேச்சு வார்த்தைக்கு மீண்டும் அழைத்தது. இதற்கமைய கொழும்பு சென்ற அன்னையர் முன்னணியின் நிருவாகக் குழுவினருடன் பேச்சுக்களை மேற்கொண்ட இந்திய அதிகாரிகள் விடுதலைப் புலிகள் இந்தியப் படையிடம் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனைக் கடுமையாகக் கண்டித்த அன்னையர் முன்னணியினர், விடுதலைப்புலிகள் எங்கள் பாதுகாவலர்கள், நீங்கள்தான் போர் நிறுத்த உடன் பாட்டுக்கு வரவேண்டுமெனத் தெரிவித்தபோது அந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட இந்தியத் தூதுவர் டிக்சீத் அன்னையர் முன்னணி மீது கடுமையாக ஆத்திரத்தைக் கொட்டி தீர்த்துள்ளார்.

நிலமை மோசமாகிக்கொண்டே சென்ற நிலையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடக்கத் தீர்மானித்தனர். அப்போது பலர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பதற்காக முன்வந்தனர். இறுதியில் குலுக்கல் முறையில் தேர்வு இடம் பெற்றது.முதலில் “அன்னம்மா டேவிட்” தெரிவு செய்யப்பட்டார். 1988ஆம் ஆண்டு பெப்ரவரி 16ஆம் நாள் அன்னம்மா டேவிட் அன்னையர் முன்னணி சார்பாக உண்ணாவிரதத்தில் குதித்தார். அமிர்தகழி மாமாங்கேஸ்வர் ஆலய குருந்தை மரநிழலில் அன்னம்மாவின் உண்ணாவிரதப்போராட்டம் தொடங்கப்பட்டது. இந்திய அரசோ, இந்தியப்படையோ அன்னம்மாவின் போராட்டத்துக்குச் செவிசாய்க்கவில்லை. மக்கள் அமிர்தகழி குருந்தை மரம் நோக்கி அணி அணியாகத் திரண்டனர். உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவர இந்தியப்படை திட்டமிட்டது. பல்வேறு மிரட்டல், கெடுபிடிகளுக்கு மத்தியில் போராட்டம் தொடர்ந்தது.

இறுதியில் சதித்திட்டம் வரைந்தது இந்தியப் படை. அன்னம்மாவின் பிள்ளைகளைக் கைது செய்தனர். அவர்களை மிரட்டி ‘பலாத்கார அச்சுறுத்தல் காரணமாகவே அன்னம்மா உண்ணா விரதமாயிருக்கிறார்’ என்ற ஒரு கடிதத்தைக் கையொப்பத்துடன் வாங்கி, அதனைச் சாட்டாக வைத்து அன்னம்மாவைக் காப்பாற்றுவது போல் உண்ணாவிரத மேடையில் இருந்தவரைக் கடத்திச் சென்றனர்.

இந்தநிலையில்தான் பூபதியம்மாள் தன்போராட்டத்தைத் தொடங்க எண்ணினார். முன்னெச்சரிக்கையாக “சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமாயிருக்கிறேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது” எனக் கடிதம் எழுதி வைத்தார்.

உண்ணாவிரதப் போராட்டம் 19.03.1988 அன்று மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் அதேயிடத்தில் தொடங்கியது. நீர் மட்டும் அருந்தி சாகும்வரை போராட்டம்.

இடையில் பல தடங்கல்கள் வந்தன. இந்தியப்படையால் அன்னையர் முன்னணியினரிற் சிலர் வெருட்டப்பட்டனர். உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி பூபதியம்மாள் வற்புறுத்தப்பட்டாள். உண்ணாவிரதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய முக்கியஸ்தர்களையும் அன்னை பூபதியின் பிள்ளைகள் சிலரையும் இந்திய இராணுவம் கைது செய்தது. ஆயினும் போராட்டம் நிறுத்தப்படவில்லை. அவர் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.

கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் சரியாக ஒருமாத்தின்பின் 19.04.1988 அன்று உயிர்நீத்தார். அவரது உடலைக் கைப்பற்ற இந்திய இராணுவம் எடுத்த முயற்சிக்கெதிராக மக்கள் கடுமையாகப்போராடி உடலைக் காத்தனர்.

ஏற்கனவே திலீபன் இந்திய அரசுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாமல் பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து சாவடைந்தார். அதற்குப்பின்னும் உண்ணாநோன்பிருந்த பூபதியின் செயல் முட்டாள் தனமானது என்றுகூட அவர்மீது சிலர் விமர்சனங்கள் வைப்பதுண்டு. ஆனால் பொதுமக்களிடமிருந்து தன்னிச்சையாக எழுந்த ஒரு போராட்டமிது. திலீபனின் சாவின் பின்னும் இந்திய அரசிடம் அவர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்று கருதமுடியுமா என்று தெரியவில்லை. சொல்லப்போனால் திலீபனை விடவும் பூபதியம்மாவின் சாவு உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று என்றே நினைக்கிறேன். ஆனாலும் தங்கள் எதிர்ப்பைக் காட்ட அவர்கள் எடுத்த ஆயுதம் அது. அன்றைய நேரத்தில் மட்டுமன்றி, பின்னாட்களிற்கூட அகிம்சை பற்றி எங்களுக்கு யாரும் போதிக்கமுன் யோசிக்க வைக்கும் ஓர் ஆயுதம்தான் அன்னைபூபதியுடையது.

சாவு பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்பிராயம். அதன்மீதான பார்வையும் பெறுமதியும் சூழலைப்பொறுத்து மாறுபடும். சாவைத் தேர்ந்தெடுத்தலென்பது அப்படியொன்றும் இமாலயச் சாதனையாகவோ செய்ய முடியாத தியாகமாகவோ பார்க்கும் நிலையைத்தாண்டி வந்தாயிற்று. ஆனால் அவை தெரிவுசெய்யப்படும் விதம் பற்றி இருக்கும் மதிப்பீடுகள்தான் வித்தியாசமானவை. அவ்விதத்தில் அன்னை பூபதியுடைய, திலீபனுடைய வடிவங்கள் எம்மால் நெருங்க முடியாத, செய்ய முடியாத வடிவங்களாகப் பார்க்கிறேன்.

ஒவ்வொரு முறை திலீபன் நினைவுநாளுக்கும் உண்ணாமலிருப்பது பலரது வழக்கம். அன்றைக்குத் தெரியும் உண்ணாநோன்பின் வேதனை. (சிலநேரங்களில் இரண்டுநேரம் உணவின்றி வெறும் தண்ணியோடு சைக்கிளில் திரிந்த நிலைகூட உண்டு. ஆனால் அந்தநேரங்களில் வராத துன்பம், ஓரிடத்தில் இருந்து உண்ணாநோன்பென்று செய்தால் வந்துவிடும்) பன்னிரண்டு நாட்கள் ஒருதுளி நீர்கூட அருந்தாது தன்னையொறுத்து -அணுவணுவாக என்று சொல்வார்களே- அப்படிச் செத்துப்போன திலீபனின் சாவை நினைத்துப்பார்க்கவும் முடியாது. அன்னை பூபதியின் சாவும் அப்படியே. அன்னை பூபதியின் நினைவுநாளே ‘தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்’ என்றும் நினைவு கூரப்படுகிறது.

“ஈழத்தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத

இன்னொருநாள் இன்று. தமிழ் மக்களைக் கொன்றொழித்து, சொத்துக்களை நாசமாக்கி,இலட்சக்கணக்காண தமிழ் மக்களை அகதிகளாக்கிய ‘சூரியக்கதிர்-02’ எனும் குறியீட்டுப்பெயர் கொண்ட இராணுவ நடவடிக்கையை 19.04.1996 அன்று சிறீலங்கா அரசபடைகள் தொடக்கின. ஏற்கெனவே ‘சூரியக்கதிர்-01′ என்ற பெயரில் வலிகாமத்தைக் கைப்பற்றியிருந்த அரசபடை, யாழ்ப்பாணத்தை முழுவதும் கைப்பற்றவென தன் இரண்டாவது நகர்வைத் தொடங்கிய நாள் இன்றாகும். ஆயிரக்கணக்கான மக்கள் வன்னிவர கிழாலிக்கடற்கரையிற் காத்திருந்தும் பயனில்லை. அவர்கள் மீதும் வான்படை தாக்குதல் நடத்தியது.”

http://thaaitamil.com/?p=16116

Link to comment
Share on other sites

ஏற்கனவே திலீபன் இந்திய அரசுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாமல் பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து சாவடைந்தார். அதற்குப்பின்னும் உண்ணாநோன்பிருந்த பூபதியின் செயல் முட்டாள் தனமானது என்றுகூட அவர்மீது சிலர் விமர்சனங்கள் வைப்பதுண்டு. ஆனால் பொதுமக்களிடமிருந்து தன்னிச்சையாக எழுந்த ஒரு போராட்டமிது. திலீபனின் சாவின் பின்னும் இந்திய அரசிடம் அவர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்று கருதமுடியுமா என்று தெரியவில்லை. சொல்லப்போனால் திலீபனை விடவும் பூபதியம்மாவின் சாவு உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று என்றே நினைக்கிறேன். ஆனாலும் தங்கள் எதிர்ப்பைக் காட்ட அவர்கள் எடுத்த ஆயுதம் அது. அன்றைய நேரத்தில் மட்டுமன்றி, பின்னாட்களிற்கூட அகிம்சை பற்றி எங்களுக்கு யாரும் போதிக்கமுன் யோசிக்க வைக்கும் ஓர் ஆயுதம்தான் அன்னைபூபதியுடையது.

அகிம்சைவழியில் போராடியவருக்கு வீரவணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites

அன்னை பூபதிக்கு தலை வணங்குகின்றேன்.

பகிவுக்கு நன்றி சின்னவன்.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.