Jump to content

Recommended Posts

பதியப்பட்டது

ஈழத்தின் புகழ்மிக்க ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் 7ம் ஆண்டு நினைவாக’

ஈழத்து ஊடகப் பரப்பில் எத்தனையோ ஊடகவியலாளர்கள் தமது பங்களிப்பை தாம் சார்ந்த சமூகத்துக்கும் ஊடகத்துறைக்கும் வழங்கியுள்ள போதிலும், சிவராமுக்கு இணையாக எவரும் இல்லையென்றே கூறுமளவிற்கு அவரது வெற்றிடம் அவர் எமைவிட்டுப் பிரிந்து ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் இன்னமும் நிரப்பப்படாமலேயே உள்ளது.

தனது சொந்த நலத்தைப் பொருட்டாக மதிக்காமல் தான் சார்ந்த சமூகத்தின் நலத்தைப் பெரிதாகக் கருதிச் செயற்பட்டமையினாலேயே அவர் சக ஊடகவியலாளர்களால் மட்டுமன்றி, தமிழ்த் தேசியத்தின்பால் வாஞ்ஞை கொண்ட அனைவராலும் நினைக்கப்படும், மதிக்கப்படும் ஒருவராகத் திகழ்கின்றார்.

Sivaram_002.jpgஇருபதாம் நூற்றாண்டின் இறுதிக் கூற்றில் சிறி லங்காவில் இன முரண்பாடு உச்சத்தைத் தொட்டபோது அகிம்சையும் வாய்ப் பேச்சும் தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தராது என்ற புரிதல் இளைஞர் மத்தியிலே உருவாகி அவர்கள் ஆயுதப் போராட்டத்தைத் தமது மார்க்கமாகத் தேர்ந்தேடுத்த போது இன உணர்வு மிக்க ஒவ்வொரு தமிழ் இளைஞனும் விடுதலைப் போராட்டத்தோடு தன்னை இணைத்துக் கொண்டான்.

பார்வையாளனாக இருப்பதைவிட பங்காளியாக மாறுவதே மேல் என்ற கொள்கையுடன் தனது வரலாற்றுப் பாத்திரத்தை உணர்ந்து சிவராம் எடுத்த முடிவும் அவர் பயணித்த பாதையில் அவருக்குக் கிட்டிய அனுபவமும், அதனால் சம்பாதித்துக் கொண்ட அறிவுமே பிற்காலத்தில் ஊடகத்துறையில் அவர் தனக்கெனத் தனியான முத்திரை பதிக்க பெரிதும் உதவியது.

போராளியாக இருந்த காலத்தில் கூட பத்தோடு பதினொன்றாக இருந்துவிட்டுப்போக அவர் விரும்பவில்லை என்பது அவரது முன்னாள் தோழர்கள் தற்போதும் நினைவு கூரும் ஒரு விடயம்.

இலக்கியத் துறையின்மீது இருந்த அதீத ஈடுபாடு காரணமாகவே பொதுவாழ்வுக்குள் பிரவேசித்த சிவராம் ஆரம்பம் முதலே கடைப்பிடித்துவரும் தீவிர விமர்சனக் கண்ணோட்டம் அவரது பிற்கால எழுத்துக்களில் நன்கு பரிணமித்தமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தில் சிவராமின் பங்கு எனும் தலைப்பிலே ஆய்வு செய்யப் புறப்படும் ஒருவர் சிவராமை வகைப்படுத்துவதில் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்வார் என்பது நிச்சயம். ஏனெனில் சிவராமின் ஆளுமையும் இயங்குதளமும் அத்துணை விசாலமானது.

ஒரு ஊடகவியலாளராகவே சிவராம் வெளிச்சத்துக்கு வந்தார். ‘தராகி’ என்ற புனைபெயருடன் சிங்கள இனத்துவேசத்தைக் கக்கும் பத்திரிகை என வர்ணிக்கப்படும் ‘தி ஐலண்ட்’ பத்திரிகையிலேயே அவர் பத்தி எழுத்தாளராக அறிமுகமானார்.

தீவிரத் தமிழ்த் தேசியவாதியான சிவராம் ஒரு சிங்கள இனவெறிப் பத்திரிகையில் எழுதுவதனூடாகத் தனது எழுத்துலக வாழ்வை ஆரம்பித்தமை ஒரு முரண்நகையே.

Tharakki-Sivaram-An-773x1024.jpg

ஆரம்ப காலங்களில் சிவராமின் எழுத்து கவனிக்கப்படாது விடப்பட்ட போதிலும் தான் சார்ந்த விடுதலை இயக்கமான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துடனான தொடர்புகளைத் துண்டித்த பின்னர் அவரின் எழுத்துக்களில் புதிய உத்வேகமும் சடுதியான மாற்றமும் ஏற்பட்டன.

ஆனால், சிவராமின் கருத்தின்படி 90 களின் நடுப்பகுதியில் அவர் வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு மேற்கொண்டிருந்த பயணமே அவரின் பிற்கால வாழ்க்கைக்கான செல்நெறியைத் தீர்மானித்தது எனலாம்.

இடதுசாரிக் கருத்துக்களில் நம்பிக்கை கொண்டவராக அறியப்பட்ட சிவராம் தீவிர தேசியவாதத்தைக் கைக்கொள்ளக் காரணமான இந்த பயணத்தின் விளைவு சிவராமுடைய எழுத்தின் போக்கை மட்டுமன்றி அன்றைய காலகட்டத்தில் பணியாற்றிய பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்களின் போக்கையும் மாற்றியமைத்தது.

sivaram-maamanithar-award.jpg

தமிழர்களின் போராட்டம் ஒரு ‘நியாயமற்ற, காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதம்’ எனச் சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் சிங்கள மக்களுக்குப் போதித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழர்களின் போராட்ட நியாயத்தையும், அவர்களுக்கு உரிமைகள் வழங்கப்படுவதால் மாத்திரமே இலங்கைத் தீவில் அமைதி நிலவும் என்ற யதார்த்தத்தையும் தர்க்க நியாயங்களோடு சிங்களவர்களுக்கும் புரியக் கூடியவாறு சிவராம் ஆங்கிலத்தில விளக்கினார்.

எவருமே துணிந்து செய்ய முன்வராத ஒரு காரியத்தை கொழும்பில் இருந்து கொண்டே செய்ய முன்வந்த சிவராமின் துணிச்சல் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

பத்திரிகைகளில் அவர் எழுதிய கட்டுரைகளுக்கு அப்பால் சிங்களத் தேசியம் பேசிய ஊடகவியலாளர்களுடனும் அவர் திரைமறைவில் தர்க்கிக்க வேண்டியிருந்தது. தான் பத்திரிகைகளில் முன்வைத்த கருத்துக்களுக்காக நேரில் கேள்வி எழுப்பப்பட்ட போதுகளில் அவற்றுக்கு அவர் ஆணித்தரமாகப் பதில் கூறவேண்டி ஏற்பட்டது.

தனது கருத்துக்களுக்காக சிங்கள ஊடகவியலாளர்களுடன் மோதவேண்டிய சூழல் உருவான போதிலும் அவர்களுடனான தொழில்முறை உறவை வளர்த்துக் கொள்ள சிவராம் தவறவில்லை.

அது மட்டுமன்றி சிங்களப் பேரினவாதத்தை எதிர்த்து நிற்கும் மாற்றின ஊடகவியலாளர்களுடனும் பல்வேறு தளங்களில் அவர் கரங் கோர்த்துக் கொண்டார்.

மறுபுறம், தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கிய பல பிரச்சினைகள் சிங்கள ஊடக அமைப்புக்களால் ‘கண்டு கொள்ளாமல்’ விடப்பட்டபோது ‘இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்’ என்ற அமைப்பை உருவாக்குவதில் முன்னோடியாக நின்றும் செயற்பட்டார்.

ஊடகவிலாளர்கள் தமது ஊடகப் பணிக்கு அப்பால் எத்தகைய சமூகப்பணியை ஆற்ற முடியும் என்பதற்கு இலக்கணம் வகுத்த சிவராம் செய்தி அளிக்கை தொடர்பிலும் ஒரு புதிய மாதிரியை அறிமுகஞ் செய்தார். அவரால் தொடங்கப்பட்ட ‘தமிழ்நெற்’ இணையத்தளம், ‘நோர்த் ஈஸ்ரன் ஹெரல்ட்’ ஆங்கில வாரப்பத்திரிகை ஆகியவை எழுத்தில் புதிய மாதிரியையும், பரிபூரண அளிக்கையின் பெறுமானத்தையும் அறிமுகஞ் செய்தன.

ஊடகவியலாளராக சிவராம் மேற்கொண்ட பணிகளுக்கு அப்பால் ஒரு தமிழ்த் தேசியவாதியாக அவர் மேற்கொண்ட துணிகரச் செயற்பாடுகளே அவரது உயிருக்கு உலை வைத்தது. தமிழ் மக்களின் தலைமை அரசியற் சக்தியாகத் திகழ்ந்த விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடம் அழிக்கப்பட்டதன் பின்னான இன்றைய காலகட்டத்தில் தமிழர்களின் அரசியல் தலைமையை ஏற்றுச் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிவராமின் சாதனைகளுள் ஒன்று எனக் கூறினால் அது மிகையாகாது.

ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம் தன்னளவில் மகத்தான சாதனைகளைப் படைத்த போதிலும் அது மக்கள் சார்ந்த போராட்டமாகப் பரிணமிப்பதில் சில பின்னடைவுகள் இருந்தே வந்தன. எனினும் சிவராமைப் போன்றோரின் முயற்சிகள் இப் போராட்டத்திற்கு குடிமக்கள் சார்பு முகத்தைத் தந்திருந்தது.

பொங்குதமிழ் போன்ற எழுச்சி நிகழ்வுகளாகட்டும், கடையடைப்பு போன்ற எதிர்ப்பு நிகழ்வுகளாகட்டும் அவற்றை ஏற்பாடு செய்வதிலும் நேரடியாகச் சென்று பங்கெடுத்துக் கொள்வதிலும் அவை தொடர்பிலான செய்திகளை அளிக்கை செய்வதிலும் சிவராம் எடுத்துக் கொண்ட சிரத்தை அபரிமிதமானது.

இது தவிர, இலங்கைத் தீவில் கொடூரமான சட்டங்களே அமுலில் இருந்த போதிலும் அவை குடிமக்களுக்கு வழங்கியுள்ள அற்ப சொற்ப பாதுகாப்பு நெறிமுறைகளை அறிந்து கொண்டு அவற்றை மக்களுக்குத் தெரியப்படுத்துவதன் ஊடாக, கொடுமைகளையும் அநீதிகளையும் தட்டிக் கேட்கும் வல்லமையுள்ள ஒரு சமூகத்தைப் படைக்க வேண்டும் என்ற ஆவல் சிவராமிடம் நிறையவே இருந்தது.

அதன் விளைவாக மட்டக்களப்பில் உதயமான தமிழர் மறுமலர்ச்சிக் கழகம் செயற்பாடுகளில் குறைவாகவே வெளிப்படுத்தப்பட்ட போதிலும் கழகத்தின் அறிக்கைகள் சிவராமின் கைவண்ணத்தில் அர்த்தம் பொதிந்தவையாகவும் அறிவூட்டக் கூடியவையாகவும் அமைந்திருந்தமையை மறுப்பதற்கில்லை.

‘ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைத் திருப்பிக் காட்டு’ என்ற தத்துவத்தில் சிவராமுக்கு என்றுமே நம்பிக்கை இருந்ததில்லை. வன்முறைக்கு வன்முறையே தீர்வு என்பதே அவரின் நிலைப்பாடு. படைத்துறை வெற்றிகளே தமிழர்களின் நியாயங்களை எதிரிக்குப் புரிய வைக்கும் என்பதில் அவர் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார்.

சிவராமின் வகிபாகம் தமிழர் அரசியலைப் பொறுத்தவரை எவ்வளவு காத்திரமானதாக விளங்கியதோ, அவ்வளவுக்கு அவ்வளவு எதிரிகளைப் பொறுத்தவரை அது அவர்களது செயற்பாடுகளுக்குப் பெருந்தடையாக விளங்கியது. தனது உயிருக்கு இருந்த அச்சுறுத்தல்கள் பற்றி நன்கு தெரிந்து வைத்திருந்த சிவராம் தனது பாதுகாப்பு விடயத்தில் கூடுதல் அக்கறை கொண்டிருந்தார்.

ஆனாலும் கூட அவரது உயிர் கொடூரமாகப் பறிக்கப்பட்டு விட்டது. சிவராமைக் கொலை செய்வதன் ஊடாக அவரின் சிந்தனைகளை தமிழர் மத்தியில் இருந்து அகற்றிவிட முடியும் எனக் கொலைகாரர்கள் மனப்பால் குடித்தனர்.

ஆனால், சிவராமின் எழுத்துக்கள் இன்றும் உயிர்வாழும் நிலையில் அவரைக் கொலை செய்தவர்களுக்கு சிவராமின் மரணம் ஒரு தோல்வியே அன்றி வேறில்லை.

http://thaaitamil.com/?p=17295

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழர்களின் ஒற்றுமையை அரசியல் ரீதியாக எதிரிக்குக் காட்டவேண்டும் என்ற நோக்கத்தில் சகல தமிழ் அரசியற்கட்சிகளையும் ஒருங்கிணைத்துத் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை உருவாக்கவேண்டும் என அதற்காக அயராது பாடுபட்டவர்களில் மாமனிதர் சிவராமும் ஒருவர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈழத்தின் குரல்களில் இவரும் ஒருவர்......சிங்களத்தின் புத்திசாலித்தனமான நடவடிக்கைகளில் இவரின் கொலையும் அடங்கும்.

Posted

நினைவுநாள் வணக்கம்..!

மாற்று இயக்கத்தவராகினும் தேசியச் செயற்பாட்டில் ஈடுபட்டவராயின் எவ்வாறு புலிகள் அரவணைத்துக் கொண்டார்கள் என்பதற்கு நல்ல உதாரணம் இவர். இவரைக் கொன்றது யார்? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நினைவுநாள் ஊடகவியலாளார் வீரவணக்கம்

Posted

PLOM TS

இது என்ன வாத்தியார்? :unsure:

PLOM: People's Liberation Organization of Maldives.. :D அது விளங்கிட்டிது.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

798px-A_-SOUTH_INDIAN_FOOD.jpg

PLOM: People's Liberation Organization of Maldives.

:lol:

Posted

ஒருமுறை ஏன் இவ்வளவு கடுமையான ஆங்கிலத்தில் எழுதுகின்றீர்கள் என ஒருவர் கேட்டபொழுது நீங்கள் அதை அறிய முயலுங்கள் அதன் மூலம் உங்கள் அறிவை வளத்துக்கொள்ளுங்கள் எனக்கூறியவர்.

மாமனிதருக்கு வீர வணக்கங்கள் !!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இழந்தவைகளைத் திரும்பிப் பார்க்கும் ஒவ்வொரு தடவையும், மீண்டும் வலிக்கின்றது~

மாமனிதருக்கு, வீர வணக்கங்கள்!

Posted (edited)

தோழனே... உன்னை மறப்போமா? -இதயச்சந்திரன்

ஊடகச் சமராடி, தோழர். 'தராகி சிவராம்' மறைந்து 7 ஆண்டுகளாகி விட்டன.

அவர், தமிழ் பேசும் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை, ஆழமான சர்வதேசப் பார்வை ஊடாக தெளிவாக முன்வைத்த ஒரே ஊடகவியலாளன் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

இந்தியாதான் எமது உலகம் என்று குறுகிக் கிடந்தவர்களின் சிந்தனைத் தளத்தினை விரித்துவிட்டவரே நண்பன் சிவராம்.

கிழக்கில் தமிழ்-முஸ்லிம் மக்களின் உறவு நிலை சீர்குலைந்து போனதிற்கான அடிப்படைக் காரணியை, தான் கற்றுக்கொண்ட மாக்சிய இயங்கியல் தத்துவத்தின் ஊடாக புரியவைத்தவரும் அவர்தான்.

மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக , கிழக்கில் பூர்வீகமாக வாழும் தமிழ்-முஸ்லிம் மக்களின் நீர்,நிலவளங்களை அபகரித்த சிங்களத்தின் செயற்பாடு, அவர்களிடையே எவ்வாறு முரண்நிலையைத் தோற்றுவித்தது என்பதனை ஒரு நேர்காணலில் விளக்கமாகக் கூறியிருந்தார் சிவராம்.

தராக்கி மறைந்த ஏழு ஆண்டுகளில் எத்தனையோ மாற்றங்கள். சீனாவின் எழுச்சி, மேற்குலகின் வீழ்ச்சி, 'பிரிக்ஸ்' இன் தோற்றம், ஆசியாவில் அமெரிக்காவின் 'புதிய பார்வை' என்று ஏகப்பட்ட திருப்பங்கள்.

அதுமட்டுமல்லாது, யுத்தம் முடிவடைந்ததும், இலங்கை ஊடகத்துறையில் புதிய பரிமாணங்களை உள்வாங்கும் வகையில், நிதியியல் ஊடகவியலின் [Financial Journalism ] காத்திரமான பங்கு முக்கியத்துவம் பெறுவதை அவதானிக்கலாம்.

தென்னிலங்கை சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களில் நிதியியல், வர்த்தகம் குறித்த பத்தி எழுத்துக்கள் அதிகமாகக் காணப்பட்டாலும், தமிழ் பரப்பில் இதன் வகிபாகம் போதுமானதாக இல்லை என்பதையும் இந்நாளில் குறிப்பிட்டாக வேண்டும்.

இருப்பினும் அரசியல், இராணுவம், பொருளாதாரம் என்கிற விடயங்களை தனது எழுத்துக்களில் ஆய்வுக்குட்படுத்திய , பேசுபொருளாக்கிய, மாமனிதர் சிவராமின் பங்கினை இந்நாளில் நினைவுகூருவது பொருத்தமானது.

துப்பாக்கிச்சன்னங்கள் அறிவியலாளனின் இயக்கத்தை நிறுத்தலாம். ஆனால் அவன் மக்களிடம் விதைத்த புதிய சிந்தனை முறைமைகளை அழிக்கமுடியாது .

நடேசன்,நிமலராஜன், சுகிர்தராஜன், சத்தியமூர்த்தி போன்ற எண்ணற்ற தமிழ்தேசிய ஊடக எழுத்துச் சமராடிகளை நாம் இழந்தாலும், அவர்கள் அக்காலத்தில் ஆற்றிய பெரும்பணி முடிவுறாமல் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.

ஒடுக்கப்படும் தமிழ் தேசிய இனத்தின் ஊடக வீச்செல்லை விரிந்து கொண்டு செல்கிறது.

அவர்களின் ஆளுமை, எமது ஒவ்வொரு எழுத்திலும் ஆழமாகப் புதைந்து கிடக்கிறது.

போராட்ட வடிவங்கள் மாறினாலும், விடுதலைக்காக எழுதிக் குவிக்கும் எழுத்தாளனின் இலக்கு மாறாது.

Edited by akootha
Posted

அஞ்சலிகள்.(பழகியது சில நாட்கள் தான்)

கொலை செய்வததே விடுதலை போராட்டம் என்று நினைத்த பலர் கொலையுண்டு போய்விட்டார்கள் ,

பல திறமைகள் உள்ள இவரும் இயக்க உட்கொலைகளில் ஒரு முன்னோடி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புத்தர் தன்னுடைய வாழ்க்கையை எல்லோரும்

பின் தொடர்வார்கள் என எண்ணினார்.

அவருடைய பெயரைக் கொண்டவர்களே

அவரைப் பின்பற்றவில்லை.

பாவம் தர்ம சித்தாந்த சித்தார்த்த புத்தர்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புத்தர் தன்னுடைய வாழ்க்கையை எல்லோரும்

பின் தொடர்வார்கள் என எண்ணினார்.

அவருடைய பெயரைக் கொண்டவர்களே

அவரைப் பின்பற்றவில்லை.

பாவம் தர்ம சித்தாந்த சித்தார்த்த புத்தர்

என்னை பொருத்தவரை இவர்கள்தான் மிகபெரிய பயங்கரவாதிகள்....

Posted

கருணாவின் அதிகார மையத்துடன் தராக்கி என அழைக்கப்பட்ட பிரபல்யமான ஊடகவியலாளரான அமரர் தர்மரட்ணம் சிவராம் அவர்கள் கொண்டிருந்த வெளி உலகுக்குத் தெரியாத உறவு பற்றிச் சொல்லவேண்டியது எனது வரலாற்றுக் கடமையாகிறது. -நடராஜா குருபரன்

ஊடகத்தளத்தில் தனது எழுத்துக்களில் ஒன்றுபட்ட தமிழ்த் தேசியத்தைத் தூக்கிப்பிடித்திருந்த அமரர் திரு சிவராம் அவர்கள் நடைமுறையில் எவ்வாறான தளம்பலைக் கொண்டிருந்தார் என்பதை நான் சொல்லப்போகும் விடயங்கள் தெளிவுபடுத்தும்.

தமிழ்த்தேசியம் தனது விடுதலைக்காகப் போராடுவது என்பது தனக்குள்ளேயுள்ள பிற்போக்குத்தனங்களுக்கு எதிராகப் போராடுவதையும் உள்ளடக்கும் என்பது பல ஊடகவியலாளர்களுக்கும் புத்திசீவிகளுக்கும் தெரியாமற்போன அல்லது தெரிந்தும் சுயநலத்தால் அதிகாரங்களுடன் இணைந்து சென்ற துயரத்தை எமது வரலாற்றிலும் காணநேர்ந்தது துரதிஷ்டம். இதற்குச் சிவராம் அவர்களும் விதிவிலக்கல்ல.

விடுதலைப் புலிகளிடம் மத்தியில் குவிந்திருந்த அதிகாரமும் பிரதேசவாதம் குறித்த விழிப்புணர்வின்மையும் கருணா கிழக்கில் தனது தற்காலிக சாம்ராஜ்யத்தைக் கட்டுவதற்குக் களமமைத்துக் கொடுத்திருந்தன. இன்னும் துயரம் என்னவெனில் கருணாவின் சாம்ராஜ்யத்தை தற்போது இலங்கை அரசு முழுவதுமாக எடுத்துக்கொண்டும் விட்டது.

இலங்கைச் சமூகங்களுள் பிரதேச வாதம் நிலவுவது வெள்ளிடை மலை. ஆனால் தமிழ் சமூகத்திற்கிருந்த வாய்ப்பான சூழ்நிலை என்னவெனில் அது விடுதலைக்காக எழுச்சியடைந்த போது பிரதேசவாதம் உட்பட அனைத்துப் பிற்போக்குத் தனங்களுக்கும் எதிராக கொள்கைத் தெளிவுகளையோ ஆக்கபூர்வமான வேலைத் திட்டங்களையோ வைத்து மக்களை அறிவூட்டி இருக்க முடியுமென்பதுதான். ஆனால் துரதிஷ்டவசமாக இத்தகைய நிறுவனமயப்பட்ட முன்னெடுப்புக்கள் கடந்த மூன்று தசாப்தத்தில் நிகழவில்லை போரைத்தவிர.

2004 மார்ச் மாதம் 3ஆம் திகதி கருணா புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார். அதற்கான அறிக்கையை அப்போதைய கிழக்கின் அரசியற்துறைப் பொறுப்பாளர் கரிகாலன் கையொப்பம் இட்டு வெளியிட்டு இருந்தார். ஆனால் இந்த அறிக்கையைத் தயாரிப்பதற்கு தனது முழுமையான பங்களிப்பை திரு சிவராம் அவர்கள் வழங்கியிருந்தார் என்பது வெறும் வதந்தியன்று என்பதைக் கீழ் வரும் சம்பவத்தை வாசிப்பவர்கள் உணர்ந்துகொள்வார்கள்.

இந்த அறிக்கை வெளிவருவதற்கு முந்திய இரவு 10க்கும் 10.30ற்கும் இடையில் சிவராம் என்னுடைய 0777356036 என்ற டயலொக் கையடக்கத் தொலைபேசிக்குத் தொடர்பு கொண்டு“கருணா புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறுவது உறுதியாகிவிட்டது. அதற்கான அறிக்கையும் தயாராகிவிட்டது. அதனை நீ நிகழ்ச்சிகளை இடையீடு செய்து வரும் முக்கிய செய்தியாக (Breaking news) சூரியனில் ஒலிபரப்ப வேண்டும்” எனக்கேட்டார். உடனே நான் என்னால் அவ்வாறு செய்யமுடியாது எனக் கூறினேன். புலிகள் அமைப்பு உத்தியோகபூர்வமாக என்னுடன் தொடர்புகொண்டு இதனை அறிவித்தால் அதனை வெளியிட முடியும் எனவும் இது பாரிய சிக்கலுக்குரிய விடயம் இதனை முதலில் தமிழ் ஊடகமொன்றில் வெளியிடுவது மேலும் சிக்கலை உருவாக்கும் எனச் சொன்னேன். உடனே அவர் நீயும் அச்சடித்த யாழ்ப்பாணத்தான் (ரிப்பிக்கல் யாழ்ப்பாணி) போலவே இருக்கிறாய் என விமர்சித்தார்.

இருவருக்கும் இடையில் தொடர்ந்த வாக்குவாதத்தின் பின் “நீங்கள் இந்தச் செய்தியை உங்களது தமிழ்நெற்றில் வெளியிடுங்கள் அதனைக் கோடிட்டு நான் இச்செய்தியை ஒலிபரப்புகிறேன்” எனக் கூறினேன். “இல்லை அது முடியாத காரியம்” எனச் சிவராம் கூறினார். அப்படியாயின் இதுவும் முடியாத காரியம் என்றேன் நான். சிவராமோ “நீ எதற்குப்பயம் கொள்கிறாய் நாங்கள் தற்சமயம் தமிழ்அலை பத்திரிகைக் காரியாலத்தில் நிற்கிறோம். கருணா உள்ளிட்டவர்களும் கிழக்கின் ஊடகவியலாளர்களும் கூடவே நிற்கிறோம். அதனால் நீ பயப்படத் தேவையில்லை” எனக் கூறினார். எனினும் நான் உடன்படவில்லை. பின்னர் இதுகுறித்து உறுதிப்படுத்தும் முகமாக கிழக்கின் ஊடகவியலாளர்கள் சிலரைத் நான் தொடர்புகொண்டு கேட்டபோது அவர்கள் உண்மையிலும் தாங்கள் அன்று அங்கு இருந்திருக்கவில்லை என கூறி இருந்தனர்.

ஓஸ்லோவில் இடம்பெற்ற மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை சிவராம்-கருணா தொடர்பு தொடர்பாகத் தெளிவான சித்திரமொன்றைத் தந்திருந்தது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது சிவராமும் பிரசன்னமாகியிருந்தார். பேச்சு வார்த்தை தொடர்பாக செய்தி சேகரிப்பதற்காகவே வந்ததாக கூறிய சிவராம் கருணாவை விசேடமாகச் சந்திப்பதற்காகவே ஒஸ்லோ வந்திருந்தார். அவ்வாறு வந்த சிவராம் கருணாவுடன் தனியாகப் பல தடவைகள் பேசியிருந்ததை ஊடகவியலாளர்களூடாக அறிந்திருந்தேன்.

ஒருதடவை இருவரும் உரையாடிக் கொண்டு இருந்ததை நேரிடையாகவும் கண்டிருந்தேன். இந்த சந்திப்புகளின் போது கிழக்கிற்கான முக்கியமாகக் கிழக்குப் புலிகளுக்கான தனியான ஊடகம் அவசியம் என்பதனை கருணாவுக்கு சிவராம் வலியுறுத்தி இருந்தார். அது குறித்து என்னிடம் ஒருமுறை பேசும் போதும் ‘இவன் மொக்கனுக்கு நான் சொல்லித்தான் சில விடயங்கள் இப்போ புரிகிறது’ எனக் கூறியதும் என் நினைவில் இருக்கிறது. அந்த வகையில் கருணா தரப்பினால் முன்னர் நடத்தப்பட்ட மீனகம் இணையம் மற்றும் தமிழ் அலை பத்திரிகையின் ஆரம்பம் என்பவற்றின் பின்னணியில் நின்றவர்களில் அமரர் சிவராம் முக்கியமானவர்.

2001 ஆம் ஆண்டில் ஜெயசிக்குறுவிற்குப்பின் தனது போராளிகளுடன் நடந்தே மட்டக்களப்புக்குத் திரும்பிய கருணாவுக்கு விடுதலைப் புலிகளின் தலைமையுடன் சில முரண்பாடுகள் ஏற்பட்டு இருந்ததனை திரு.சிவராம் அவர்கள் நன்கு அறிந்தேயிருந்தார்.

2002ல் யுத்தநிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டபோது நீண்ட இடைவெளிக்குப் பிற்பாடு புலிகளின் தலைவர் பிரபாகரன் நேரிடையாகக் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களுக்கான மகாநாட்டில் இந்திய ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார்.

உங்கள் போராட்ட வரலாற்றில் நீங்கள் எதிர் கொண்ட சிக்கலான சந்தர்ப்பம் அல்லது சவால் எது என அவர் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கேட்டிருந்தார். உண்மையில் இதற்குப் பதில் இந்திய அமைதிப்படைக் காலத்தில் புலிகளால் செய்யப்பட்ட நித்திகைக் குள முறியடிப்பு என்பதாக இருக்கும் என அந்தப் பத்திரிகையாளர் எதிர்பார்த்திருந்தார். ஆனால் இந்தியப் பத்திரிகையாளரின் எதிர்பார்ப்புக்கு மாறாக ஜெயசிக்குறு நடவடிக்கையை எதிர்கொண்டு முறியடித்தமையை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சிலாகித்திருந்தார்.

இதன்போது ஜெயசிக்குறு நடவடிக்கையை வெற்றிகரமாக எதிர்கொண்ட கருணாவையும் அருகில் இருத்தி அவரையும் புகழ்ந்திருந்தார். இது குறித்து சிவராம் நோத் ஈஸ்ற் கரால்ட்டில் எழுதிய கட்டுரை ஒன்று கருணாவை சிவராம் அப்போதே குறி வைத்து விட்டதனை புலப்படுத்தியிருந்தது. புலிகளின் தலைவர் இவ்வாறு கூறியமை கிழக்கு மக்களையும் கருணாவையும் கௌரவப்படுத்தவே என்பதாக கருணாவை மெச்சி சிவராம் அக்கட்டுரையை வரைந்திருந்தார். இதன் தொடர்ச்சியாக மறைமுகமாகக் கருணாவை நாயகனாக கிழக்கின் உன்னத வீரனாக சித்தரிக்கும் வகையில் ஐந்து அல்லது ஆறு கட்டுரைகளை நோத்ஈஸ்ற் கரால்டில் சிவராம் எழுதியிருந்தார்.

2002ஆம் ஆண்டில் மட்டக்களப்பில் கருணாவால் ஏற்பாடு செய்யப்பட்ட புலிகளின் உயர் மட்ட உறுப்பினர்களுக்கான கருத்துப்பட்டறையின் பிரதான கருத்தாளராக விளங்கிய சிவராம் கிழக்கின் தனித்துவம் பற்றியும் புலிகளில் கிழக்கு போராளிகளின் இன்றியமையாமை பற்றியும் வலியுறுத்திப் பேசியிருந்ததனைக் கிழக்கின் ஊடகவியலாளர்கள் அறிவர்.

தவிரவும் வடக்கின் மாவீரர் குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் கிழக்கின் மாவீரர் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்துடன் எவ்வளவு வேறுபட்டு இருக்கிறது என்ற ஒரு ஆய்வினையும் கருணாவிடம் சிவராம் வழங்கியிருந்ததாக பின்னர் அறிந்து கொண்டேன்.

இது போல் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் ஒருமுறை கிழக்கிற்கு விஜயம் செய்தபோது அங்கு இடம்பெற்ற சந்திப்பில் சிவராம் கிழக்கு நிலமைகள் குறித்தும் கிழக்கு குறித்தும் புலிகளின் பாராமுகம் பற்றியும், கிழக்கின் தனித்துவம் பற்றியும் கூறிக் கடுமையாக விமர்சித்து இருந்தார். பதிலுக்கு சிவராம் குறித்து தமிழ்ச்செல்வன் அவர்கள் கடுமையான அதிருப்தி அடைந்து இருந்தார் எனவும் அந்தக் கருத்துப்பட்டறையில் கலந்து கொண்டவர்கள் என்னிடம் கூறி இருந்தனர்.

இங்கு ஞாபகத்திற்கு வரும் பிறிதொரு விடயத்தையும் பதிவிட வேண்டும். இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த காலத்தில் கருணாவின் கொலைப்பட்டியலில் சிவராம் இருந்தார். இது தொடர்பாக ஒருமுறை சிவராம் என் நண்பர் ஒருவருடன் உரையாடும் போது இந்திய அமைதிப்படைக் காலத்தில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றைப் பற்றிக் கூறியிருந்தார். அக்காலத்தில் கருணா குழுவினரால் புளொட்டின் மத்தியகுழு உறுப்பினரும் படைத்துறைச் செயலருமான கண்ணன் எனப்படும் ஜோதீஸ்வரன், புளொட்டின் மத்திய குழு உறுப்பினரும் அரசியற்துறைச் செயலாளருமான வாசுதேவா ஆகியோர் உள்ளிட்ட ஏழுக்கும் மேற்பட்டவர்கள் பேச்சுவார்தைக்கென அழைக்கப்பட்டுக் குண்டு வைத்தும் சுட்டும் கொல்லப்பட்டதாகவும், அக்குறித்த பேச்சுவார்த்தையில் சிவராமும் கலந்து கொள்ளக்கூடுமென எதிர்பார்த்திருந்த கருணா அந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் சடலங்களைப் பார்த்த பின்னர் ‘சிவராம் எங்கே’ எனக் கேட்டிருந்ததாகவும் கூறிய சிவராம் ‘இவனெல்லாம் மனிசனா’ என அன்று கருணா குறித்துக் கடும்கோபத்தைக் கொண்டிருந்தார்.

இதற்கான பழிவாங்கலாக புலிகளை உடைக்கச் சிவராம் முயன்றிருப்பாரா எனச் சிவராமுக்கும் எனக்கும் நண்பரான ஒருவர் என்னிடம் கேட்டார்.

அல்லது கருணாவுக்குப் பிரதேசவாதத்தை ஊட்டி அவரைப்புலிகளிடம் இருந்து உடைத்துப் புலிகளைப் பலவீனப்படுத்தும் நோக்கத்துடன் வேறு சக்திகளின் நிகழ்ச்சி நிரலில் சிவராம் செயற்பட்டாரா?

இவற்றுக்கான பதிலைத் தேடுவதற்கு இன்னும் சில அனுபவங்களூடாகப் பயணிக்க விரும்புகிறேன்.

காரணம் புளொட் இயக்கம் கோலோச்சிய காலத்தில் அவ்வியக்கத்தில் இருந்த சிவராம் அதன் கிழக்கு பொறுப்பாளர்களுக்கு கிழக்கு மையப்பட்ட சிந்தனைகளை ஊட்டி கிழக்கில் இருந்து தலைமைகள் உருவாக வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். அதன் அடிப்படையில் 80களின் நடுப்பகுதியிலேயே புளோட் அமைப்பினுள் ‘கிழக்கு புளொட்’ என்ற கருத்தை முன்னிலைப்படுத்த முயன்று தோல்வி கண்டவர். அதனால் அவரை கிழக்கிஸ்த்தான் என நண்பர்கள் கேலி செய்த சந்தர்ப்பங்களும் உண்டு.

நல்ல ஆங்கில அறிவும், செறிந்த தமிழ் இலக்கிய அறிவும் கொண்டு ஒரு புத்துஜீவிக்குரிய பண்புகளை வெளிப்படுத்திய சிவராம் அவர்கள் ஒரு போராளிக்குரிய கடின உழைப்பினூடாக மெலெழுந்து அதிகார நிலைகளுக்கு வரக்கூடிய இயல்பைக் கொண்டிருக்கவில்லை என்பதை புளொட் அமைப்பில் இருந்தவர்கள் அறிவர்.

80களின் ஆரம்பத்தில் புளொட்டின் அதிகார மையத்தையும் தலைவர் உமா மகேஸ்வரனையும் விரைவாக நெருங்க முனைந்த போதும் சிவராம் அவர்களால் புளொட் இயக்கம் பலவீனப்பட்ட 84களின் பிற்பகுதியிலேயே உமாமகேஸ்வரனின் நம்பிக்கையை பெறமுடிந்தது. இதன் விளைவாக 1990களில் அவ்வியக்கத்தின் அரசியல் கட்சியின் செயலாளரானார். 1999ன் இறுதிப் பகுதி புளொட்டின் உறுப்பினராக அதன் அரசியல் கட்சியின் செயலாளராக சிவராம் விளங்கியிருந்தார்.

ஆயினும் விடுதலைப்புலிகள் எழுச்சியடைந்தது வந்த காலத்தில் இலங்கை வரலாற்றில் நிகழ்ந்த இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்தேசியம் என்னும் எண்ணக்கருவின் அடிப்படையில் அவர் ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கியிருந்த இராணுவ ஆய்வுக்கட்டுரைகள் உள்ளிட்ட கட்டுரைகள் காரணமாக பிரபல்யமானார். தமிழ் ஈழப்பிரதேசங்களின் புவியியல் அமைப்பு பற்றிய தெளிவான அறிவு மற்றும் இராணுவ விடயங்களில் பரந்த வாசிப்பின் மூலம் பெற்றுக்கொன்ட நுண்ணறிவு காரணமாக அவரது கட்டுரைகள் வாசிப்பவர்களை ஈர்க்கக் கூடியனவாக இருந்தன. இந்த வகையில் சிவராம் அவர்கள் தனது கட்டுரைகள் மூலம் புலிகளின் முக்கியஸ்த்தர்களின் கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

முன்னர் புலிகளை விமர்சித்த பல புத்திஜீவிகள் ஆய்வாளர்கள் ஊடகவியலாளர்கள் 2000 ஆண்டின் பின் புலிகள் எழுச்சி அடைந்திருந்த காலத்தில் அந்த அலையினுள் ஈர்க்கப்படிருந்தார்கள். அதற்குச் சிவராமும் விதிவிலக்கல்ல.

யுத்தநிறுத்த உடன்பாடு ஏற்பட்டு அமைதி நிலவிய அந்தக்காலத்தில் முன்னர் புலிகளுடன் முரண்பட்டு இருந்த அல்லது அவர்களின் விரும்பப்படாதவர்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்த பலருக்கு (நான் உட்பட) வன்னிக்குச் சென்று அவர்களுடன் பழகுவதற்கான உரையாடுவதற்கான சூழல் உருவாகிற்று.

இந்தச் சூழலைப் புரிந்துகொண்ட சிவராம் விடுதலைப் புலிகளை இன்னும் நெருங்க முயற்சித்திருந்தார். இயக்கத்தில் சர்வதேசப்பரிட்சயம் கொண்டிருந்த புத்திசீவிகளுக்கு நிலவிய வெற்றிடத்தையும் அவர் அறிந்தே இருந்தார். தனது ஆங்கிலக் கட்டுரைகள் மூலம் இலங்கையில் இருந்த அனைத்துலக இராசதந்திரிகளிடத்தும் அவர் பிரபல்யம் பெற்றிருந்தார்.

இன்றைக்கும் தமிழ் மக்களின் பிரதிநிதியாக இருக்கிற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் முக்கிய பங்கை வகித்த சிவராம் அவர்கள் தமிழ் தேசியக்கூடமைப்பின் மூலம் புலிகளுக்கு சட்ட ரீதியான ஒரு குரலைக் கொழும்பில் ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். வன்னிநாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் நெருக்கமான உறவை பேணிக்கொண்ட சிவராம் புளொட்டுடன் கடைசிக் காலத்தில் இருந்த சில முரண்பாடுகளால் புளொட்டைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இணையவிடாமல் பாரத்துக்கொண்டார் எனப்பல நண்பர்கள் என்னிடம் கூறியிருந்தனர்.

புலிகளும் புளொட் தொடர்பாக ஆழமான வெறுப்புணர்வைக் கொடிருந்ததை சிவராம் கணக்கிட்டிருக்கவும் கூடும். ஒரு கட்டத்தில் ஊடகவியலாளர் நடேசனூடாக வீரகேசரியில் அன்ரன் பாலசிங்கம் அவர்களையும் சிவராம் கடுமையாக விமர்சித்தும் இருந்தார். அத்துடன் கிழக்கில் புலிகளின் நன்மதிப்பைப் பெற்றவரும் ஆங்கிலப் புலமை மற்றும் ஊடக அனுபவங்களோடு கூடிய புத்திஜீவித்தனத்தையும் அரசியல் ஆளுமையையும் கொண்டிருந்த ஜோசப் பரராஜசிங்கத்தை கடுமையாக விமர்சித்தும் புலிகளிடத்தில் நன்மதிப்பை குலைக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு இருந்தார். இவற்றையெல்லாம் அவதானிக்கும் போது சிவராம் அவர்கள் இலக்கு வைத்து நகர்ந்த புள்ளி ஊகிப்பதற்குக் கடினமானதல்ல…

ஆனாலும் வழமை போலவே சிவராம் அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற அந்தஸ்த்து புலிகளிடமும் கிடைக்கவில்லை. புலிகள் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களைத்தவிர எனைய எல்லாப் புத்திசீவிகளையும் தமது அமைப்பிற்கு வெளியிலேயே வைத்திருந்தனர். அமரர் அன்ரன் பாலசிங்கம் அவர்களைக் கூட பிற்காலதில் ஒதுக்கி விட்டார்கள் என்ற விமர்சனமும் இப்போது வெளிவருகிறது. எனவே சிவராம் அவர்கள் எவ்வளவு முயன்றபோதும் புலிகள் அவரைத் தமிழ்த்தேசிய ஆதரவாளர், கட்டுரையாளர், ஆய்வாளர், ஊடகவியலாளர் என்ற நிலையிலேயே வைத்திருந்தனர். இது குறித்து சிவராம் அதிருப்தியும் எரிச்சலும் அடைந்திருந்ததை அவருடனான பல உரையாடல்களின் போது உணர முடிந்திருந்தது.

எனினும் விடுதலைப் புலிகளிடமிருந்து கருணா பிரிந்தபோது கருணாவுக்குத் தேவைப்பட கொள்கை ரீதியான நியாயப்படுத்தலை வழங்கக்கூடிய அறிவுஜீவியாக விளங்கிய சிவராமால் கருணாவை இலகுவாக நெருங்க முடிந்திருந்தது. நான் முன்பே கூறிய கருணாவை முன்னிலைப்படுத்தி நோர்த் ஈஸ்ற் ஹரால்ட்டில் அவர் எழுதிய கட்டுரைகளும் உதவியிருக்கக் கூடும்.

கிழக்கில் கருணாவை முன்னிலைப்படுத்தி கிழக்கின் தலைவராக அவரை உருவாக்கி அவரின் ஆலோசகராக தான் மாறும் எண்ணத்தை சிவராம் அவர்கள் கொண்டிருந்தார் என்பதைப் பிறிதொரு இடத்தில் மிகத்தெளிவாக அறிந்து கொண்டேன். அதாவது கருணாவின் பிளவு 2004 மார்ச் 3ஆம் திகதி இடம்பெற்ற போது பலரும் பல்வேறு சமரச முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். எனினும் சிவராம் தொலைபேசியில் என்னுடன் உரையாடும் போது புலிகளில் இருந்து கருணா பிளவுபட்டுச் செல்லவில்லை எனவும் சில நிபந்தனைகளை விதித்து அவற்றைப் புலிகளின் தலைவர் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் பிரபாகரனைக் கருணா தனது தலைவராக ஏற்றுக்கொள்வார் எனவும் கூறினார்.

குறிப்பாக கிழக்கில் புலிகளின் அனைத்து நடவடிக்கைகளும் கருணாவின் தலைமையின் கீழ் தனித்தே இடம்பெறும் நிதிக் கட்டுப்பாடு, ஆட்சேர்ப்பு, உள்ளிட்ட விடயங்களில் கிழக்குப் புலிகள் சுயாதீனமாகவே இயங்குவர்; ஆயுத விநியோகம் வன்னியில் இருந்து கிடைக்கப் பெறவேண்டும்; புலிகளின் புலனாய்வுத்துறை, காவற்துறை அரசியல்துறை என எந்தத் துறைகளும் கிழக்குப் புலிகளின் நடவடிக்கைகளில் தலையிடக்கூடாது. தலைவர் பிரபாகனுக்கு மட்டுமே கருணா கிழக்குப்புலிகளின் செயற்பாடுகள் குறித்து விளக்கமளிப்பார். புலனாய்வுத்துறைத் தலைவர் பொட்டு அம்மான், நிதிப்பொறுப்பாளர் புகழேந்தி, காவற்துறைப் பொறுப்பாளர் நடசேன் ஆகியோரை புலிகள் அமைப்பின் பதவிகளில் இருந்து நீக்கவேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளை வன்னித் தலைமைக்கு முன்வைக்க உள்ளோம் அதற்கான அறிக்கைகள் தயாராகி விட்டன எனவும் சிவராம் கூறியிருந்தார்.

‘சில நிபந்தனைகளை விதித்து நாம் பிளவை தவிர்க்க முயல்கிறோம்’ என் அவர் கூறியதிலிருந்து கருணாவின் அதிகார மையத்தில் அவரது வகிபாகமும் பதவியும் தெளிவுபட்டிருந்தது. இது புலிகளின் அதிகாரமையத்தில் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் கொண்டிருந்த வகிபாகத்திற்கும் பதவிக்கும் சமனானது. அன்றிருந்த சூழலில் புலிகளின் தலைமை இந்த நிபந்தனைகளுக்கு இணங்கும் எனச் சிவராம் உள்ளிட்டவர்கள் நம்பியிருந்தனர்.

ஆனால் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஏகத்துவத் தலைமைக் கோட்பாட்டின் முன்னே இவை சுக்குநூறாகிப் போகும் என்பது கால்நூற்றாண்டாக அவரது தலைமையின் கீழ் செயற்பட்ட கருணாவுக்கோ புவியியல் சார் இராணுவ ஆய்வாளர் சிவராமுக்கோ புரியாமற்போனது அதிசயம் தான். இந்தநிலையில் புலிகளின் தலைமை கருணாவுக்கு எதிராக எடுத்த கடுமையான நடவடிக்கை மூலம் புலிகளின் கை ஓங்கிய காரணத்தால் கருணா பிரிந்த மூன்றே நாட்களில் சிவராம் அவருக்கான ஆதரவை விலக்கிக் கொண்டுவிட்டார். அவருடன் சேர்ந்து முன்பு கருணாவை ஆதரித்த தற்போதய தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் சிலரும் தமது ஆதரவை விலக்கிக் கொண்டுவிட்டனர்.

இந்த நிலையில் சிவராம் அவர்கள் புலிகளால் வன்னிக்கு அழைக்கப்பட்டார். இந்த அழைப்பினால் அச்சமடைந்த சிவராம் அவர்கள் சில நாட்கள் குழப்பத்திலிருந்தார். எனினும் வவுனியா சென்று அங்கிருந்து புலிகளிடம் சமரசம் செய்தபின்னர் வன்னி சென்றார். அங்கு விடுதலைப்புலிகள் விடுத்த ‘வேண்டுகோளை’ ஏற்று கருணாவுக்கு எதிரான காரசாரமான கடிதமொன்றை வீரகேசரிக்கு எழுதினார். அக்கடிதம் வீரகேசரியில் வெளிவரமுன்பும் சிவராம் மட்டக்களப்புக்குச் சென்று சேர முன்பும் கிழக்கில் துண்டுப்பிரசுரமாக புலிகளால் வெளியிடப்பட்டுவிட்டதாக சிவராம் தனது சில நண்பர்களிடம் சொல்லியிருக்கிறார்.

இங்கே முக்கியமாகக் இரு கேள்விகள் எழுகின்றன. கருணாவூடாகச் சிவராமும் கிழக்கின் முக்கியஸ்தர்களும் புலிகளின் தலைமையிடம் வைத்த கோரிக்கைகள் புலிகளின் வன்னி மையப்பட்ட அதிகாரத்திற்கெதிரான கோரிக்கைகள்… அதிகாரத்தை கிழக்கிற்குப் பகிரக் கோரிய அரசியற்கோரிக்கைகள்….

ஆனால் இந்த அரசியற் கோரிக்கைகளை எத்தகைய தலைவரினூடாக (கருணா) வைக்கிறோம் என்ற தெளிவு இந்த கோரிக்கைகளை வைத்தவர்களிடம் இருக்கவில்லையா அல்லது தங்களது நலன்களைப் பற்றி மட்டுமே சிந்தித்தனரா? என்பது முதலாவது கேள்வி.

கிழக்கின் முக்கியத்துவம் குறித்தும் கிழக்குப்பற்றிய புலிகளின் பாராமுகம் குறித்தும் சிவராம் விமர்சித்தபோது அந்த விமர்சனங்களில் உள்ள நியாயம் குறித்து ஆராயாமல் சிவராம் மீது தமிழ்செல்வன் அதிருப்தி அடைந்தது போல கருணாவின் பிளவின்போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின் அரசியற் பரிமாணத்தை உணராதிருந்தனரா?

இரண்டாவது கேள்விக்கான பதில் கடினமானதல்ல.

விடுதலைப்புலிகள் ஏக தலைமைத்துவக் கோட்பாடும், நேரிடையாகவும் மறைமுகமாகவும் தொழிற்பட்ட பிரதேச வாதம் என்பன காரணமாக பிரச்சனையின் அரசியற் பரிமாணங்களை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை.

முதலாவது கேள்விக்கான பதிலும் மேலே இக்கட்டுரையில் சிவராம் புலிகளைப் பழிவாங்கச் செயற்பட்டாரா அல்லது வேறு சக்திகளின் நிகழ்ச்சி நிரலில் செயற்பட்டாரா என்ற கேள்விக்கும் பதில் கீழேஉள்ளது.

கிழக்கின் அதிகார மையத்தின் ஆலோசகராகும் ஆசையில் சிவராம் அவர்களும் கருணாவின் ஆசீர்வாதத்துடன் நாடாளுமன்றக் கதிரைகளை அலங்கரிக்கலாம் என்ற ஆசையில் கிழக்கின் சமூகப்பிரதிநிதிகளும் கிழக்கின் பொறுப்பாளர்களாக இருந்த வடக்குப் புலிகள் வன்னிக்குத் திருப்பி அழைக்கப்பட்டால் அவ்விடங்களைக் கைப்பற்றலாம் என்ற ஆசையில் பல மூத்த போராளிகளும் பகற்கனவில் மிதந்து கொண்டிருந்ததனால் கருணா ஐக்கியதேசிய முன்னணி அரசாங்கத்தினதும் இராணுவத்தினரதும் மாய வலைக்குள் விழுந்து விட்டிருந்தததை உணரவில்லை.

கருணா காட்டு வாழ்வுக்கும் போராட்ட வாழ்வுக்கும் விடைகொடுக்கும் நிலையில் இருந்ததை அவர்கள் அறியவில்லை. விடுதலைப் புலிகளின் தலைமைக்கும் கருணாவுக்கும் இடையில் இருந்த முரண்பாட்டுக்கு பிரதேசவாத முலாத்தை தமது சொந்த நலன்கள் காரணமாக பூச முற்பட்ட இவர்கள் அந்த நெருப்புக்கு எண்ணை வார்ப்பதிலேயே கரிசனையாக இருந்தனரே தவிர கருணா அரசாங்கத்துடனும் இராணுவத் தரப்புடனும் கொண்டிருந்த நெருக்கத்தை உணரவில்லை. ஆக புலிகளின் தலைமையிடம் அதிகாரப்பகிர்வைக் கோரிய இவர்களும் தாம் நேசித்த ஒட்டுமொத்த தமிழ்தேசியமும் பலவீனப்படுவதை உணரவில்லை....................

மௌனம் கலைகிறது - 05 நடராஜா கருபரன்

http://www.ilankathir.com/?p=3201



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.