Jump to content
  • Veeravanakkam
  • Veeravanakkam
  • Veeravanakkam

எம்.ஜி.ஆரும் இந்திரா காந்தியும் இருந்திருந்தால் இப்போது ஈழத்தில் வாழ்ந்திருப்போம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

First Published : 29 Apr 2012 12:00:00 AM IST

Last Updated :

Untitled-1.jpg

இன்னும் உயிருடன் இருக்கின்றன மருதாணி மரங்கள்

மற்றும் சில பூவரச மரங்கள்

பாதி நிழலை வைத்திருக்கிறது மருத மரம்

சாம்பல் சுவடுகளின் மேலாய்

புதிய கூடாரம் நாட்டப்பட்டிருக்கிறது

வானத்தின் காயம் ஆறிவிடும் என்று

அம்மா நம்புவதைப்போல

மீண்டும் வீடு வளரும் என்று தங்கை நம்புகிறாள்

காணி நிலத்தில் மீண்டும் பாடல்கள் முளைக்கின்றன

-தீபச்செல்வன்

கவிஞர். தீபச்செல்வன் ( 1983 ) ஈழத்தின் வன்னிப் பிரதேசத்தில் பிறந்தவர். போரின் பூமிக்குள்ளேயே வளர்ந்து வாழ்ந்து வருபவர். 2005ஆம் ஆண்டில் முதல் கவிதை பிரசுரமானது. கண்முன்னால் நடந்த கொடூரங்களை எல்லாம் இந்த உலகிற்கு சாட்சியமாகச் சொல்லிவிட வேண்டும் என்ற துடிப்பில் , இவரது எழுத்துக்கள் மிகக் குறுகிய காலத்தில் நான்கு கவிதை தொகுப்புகள் , இரண்டு கட்டுரைத் தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. சமீபத்தில் "பெருநிலம்' என்ற பெயரில் வெளிவந்துள்ள இவரது கவிதை தொகுப்பு, உலக அளவிலான கவிதைகளுடன் ஒப்பிடத் தகுந்தவை. தீபச்செல்வனுக்கு கவிதை என்பது வெறும் எழுத்தல்ல; ஆயுதம்.

கவிதையை உங்கள் ஆயுதமாக எப்படித்தேர்ந்தெடுத்தீர்கள்?

எப்பொழுதும் அழிக்கப்படக்கூடிய தேசத்தில் எப்பொழுதும் அழிக்கப்படக்கூடிய சனங்களில் ஒருவனாக வாழும்பொழுது எங்கள் போராட்டத்தையும் கனவையும் பதிவு செய்யும் ஓர் ஆயுதமாகத்தான் கவிதையைத் தேர்ந்தெடுத்தேன். போருக்குள் கடந்து வந்த துயர வழிகளின் தடங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன். இயல்பிலேயே கவிதை எழுதும் ஈடுபாடு இருந்தது. எனது நிலத்தில் போரும் அழிவும் தொடர்ந்து நிகழ்ந்த பொழுது அந்த பாதிப்பைக் குறித்து எழுத உந்தப்பட்டிருக்கிறேன்.

கவிதையை உண்மை சார்ந்த ஆவணப்

பதிவாக ஆக்க வேண்டும் என எது உங்களைத் தூண்டியது?

அழியப் போகிறோம் என்கிற பொழுது விட்டுச் செல்ல நினைத்தே கவிதைகளை எழுதியிருக்கிறேன். எங்களுடைய போராட்டமும் அதற்கெதிரான போர் நடவடிக்கைகளும் ஏற்படுத்திய பாதிப்பு கவிதை என்ற வடிவத்தின் வழியாக உண்மையை ஆவணப்படுத்தத் தூண்டியது. வாழ்வுக்கான எங்கள் மக்களது போராட்டத்தை உலகம் புரிந்து கொள்ளாத நிலையும் சிங்கள அரசுகளினால் அழிக்கப்படும் நிலையும் இருந்தது. கொடும் போரால் எல்லாம் சிதைக்கப்படும் நிலையில் போராட்டத்தையும் அதற்குள் வாழ்ந்த காலத்தையும் அதன் முழுமையான உண்மைத் தன்மைகளுடன் ஆவணப்படுத்த வேண்டும் என்கிற உணர்வு எனக்கு ஏற்பட்டிருந்தது.

எப்பொழுதுமே சராசரி ஈழத்து குடிமகனாக நின்றே எங்கள்அரசியலையும் எங்கள் மக்களின் வாழ்வையும் கவிதைகளாக எழுதுகிறேன். அழிக்கப்படும் என்னுடையஇனத்தின் துயரத்தை உலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் எழுதுகிறேன்.

எங்களுடைய கவிதைகளையும் வலியையும் மற்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்; ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில்தான் எழுதுகிறேன்.

புத்தரின் அன்புமயமான வார்த்தைகள் சிங்கள ஆட்சியாளர்களிடமும் அங்குள்ள புத்தபிட்சுக்களிடமும் ஏன் ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை? புத்தம் என்பது அங்கு என்ன?

ஈழத்தில் புத்தரின் பெயரால்தான் எங்கள் இனமும் நாடும்அழிக்கப்படுகிறது. காலம் காலமாக இதுவே நடக்கிறது. ஈழதேசத்தை பெüத்த சிங்கள தேசம் என்கிறார்கள் சிங்களஆட்சியாளர்கள். ஈழத்திற்கு எதிரான யுத்தத்தைதூண்டுபவர்களாகவும் ஆசி வழங்குபவர்களாகவும் புத்தபிக்குக்கள் உள்ளனர். சிங்கள ஆட்சியாளர்களும் சிங்களபிக்குகளும் புத்தரின் ஞானத்தைப் புரிந்து கொள்ளாமல்பெüத்தம், புத்தர் என்கிற படிமங்களைஇனவாதத்திற்காகவும் இன அழிப்பிற்காகவும் பயன்படுத்துகிறார்கள்.

தடுப்பு முகாம்களில் என்னவிதமான கொடுமைகளை தமிழ் மக்கள் எதிர்கொள்கிறார்கள்?

தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதே மிகப்பெரிய கொடுமைதான். அரசின் விளம்பரத்திற்காவும் அரசியலுக்காகவும் மிகக்கொடிய வாழ்வை எங்களது மக்கள் அனுபவிக்கிறார்கள். தடுப்பு முகாமின் வடிவமைப்பும் அதன் செயற்பாடுகளும் முழுக்க முழுக்க

சித்திரவதையை நோக்கமாக கொண்டது. அரசும் இராணுவமும் தடுப்பு முகாம்களை சொர்க்கபூமி என்கிறது. அங்கு வாழும் மக்களுக்குத்தான் அது எத்தகைய நரகம் என்று தெரியும். இந்த நூற்றாண்டின்,இன்றைய உலகில் மிகக் கொடிய சித்திரவதை முகாம்களாக அவை அமைக்கப்பட்டுள்ளன.

இப்போது தமிழர் பகுதிகளில் என்னதான் நடக்கிறது?

இப்பொழுது தமிழர் பகுதிகள் இராணுவத்தின் முகாம்களாலும் இராணுவத்தின் கட்டுப்பாடுகளாலும் புத்தர் சிலைகளாலும் வடிவமைக்கப்படுகின்றன. மீள்வாழ்க்கையின்றி பல்வேறு நெருக்கடிகள் மிகுந்த சூழலுக்குள் மக்கள் இருக்கிறார்கள். வன்னியில் மீள் குடியேறிய மக்கள் பலரும் அகதிக் கூடாரங்களில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வசித்தவர்கள். மக்களின் வாழ் நிலங்களில் குடியேறிய இராணுவம் நிலத்தை மறுக்கிறது. சிங்களக் குடியேற்றங்கள் சுதந்திரமாகச் செய்யப்படுகின்றன. முக்கியமாக ஈழத்தமிழர்களின் நிலங்களை அபகரிக்கும் செயல்பாடு மக்களைப் பெரும் தவிப்புக்குள்ளும் அபாயத்திற்குள்ளும் தள்ளியிருக்கின்றன.

தமிழகத் தமிழர்கள் பற்றி அங்குள்ள தமிழ் மக்கள் என்னவிதமாக நினைக்கிறார்கள்?

நமக்காக குரல் கொடுக்க உள்ள உறவுகள் என்ற வகையில் ஈழத் தமிழ் மக்கள் நம்பிக்கையோடு வாழ்வதற்கு தமிழக மக்களும் உந்துதல் அளிக்கின்றார்கள். தமிழக மக்கள் தொடர்பில் உணர்வுபூர்வமான ஒரு நெருக்கத்தை ஈழத்து மக்கள் உணருகிறார்கள். முள்ளிவாய்க்கால் போர் நடந்த காலத்தில் தமிழக மக்களின் ஈழ ஆதரவுப் போராட்டத்தையும் உணர்ச்சியையும் செயற்பாடாய் மாற்றக்கூடிய சர்வ சக்தி வாய்ந்த தலைவர் ஒருவர் வாய்க்கவில்லை என்பதே போரின் தோல்விக்குப் பெரிய காரணமாகி விட்டது. தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரும், இந்தியாவில் இந்திராகாந்தி அம்மையாரும் தலைவர்களாக இருந்திருந்தால் நாங்கள் இப்பொழுது விடுதலை பெற்ற ஈழத்தில் வாழ்ந்திருப்போம். ஈழத்து மக்கள் தாங்கள் இழந்தவற்றைப் பெறுவதில் தமிழ்நாட்டு உறவுகளின் உணர்வுப்பூர்வமான பங்கு மிகவும் அவசியமாகத் தேவைப்படுகிறது.

புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ் மக்கள் இனி என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்?

புலம்பெயர்ந்த ஈழ மக்கள் உணர்வுரீதியாகவும் போராட்டரீதியாகவும் ஈழத்து மக்களின் பலத்தை வெளிப்படுத்துகின்றவர்கள். இன்று முழுமையான அடக்குமுறைக்குள் நசிக்கப்படும் தாய்நிலத்து மக்களின் உணர்வை அவர்கள் பிரதிபலிக்கின்றார்கள். இலங்கைக்கு ஆதரவாக சிங்கள ஆட்கள் ஆர்பாட்டம் செய்கையில் இலங்கைக்கு எதிராக புலம்பெயர்ந்த ஈழ மக்களும் போராடுகிறார்கள். இவ்வாறுதான் ஈழ மக்களின் உணர்வை வெளிக்காட்ட முடிகிறது.

ஈழத் தமிழ் மக்களுக்கு இந்தியா செய்யவேண்டியது என்ன? சீனாவின் கைக்குள் இலங்கைசென்றுவிடும் என்ற இந்தியாவின் பயம் சரிதானா?

சீனாவின் கைக்குள் இலங்கை வசப்பட்டு விட்டது. இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியாவுக்கு துரோகம் இழைத்து விட்டார். எங்கள் மக்களை அழிக்க எங்கள் போராட்டத்தை சிதைக்க இலங்கைக்கு பெரிதும் உதவிய இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக சீனாவை இலங்கை அதிபர் அழைத்திருக்கிறார். எங்கள் தலைமீது ஊன்றப்பட்டுள்ள சீனாவின் கால்கள் இந்தியாவுக்கே அச்சுறுத்தலானது. இப்பொழுது இந்தியா எங்களைப் பாதுகாப்பதை விடவும் தன்னையே பாதுகாக்க வேண்டியிருக்கிறது.

இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்ட ஐ.நா தீர்மானம் ஈழத் தமிழ்மக்களுக்கு நன்மையளிக்குமா?

இந்தத் தீர்மானம் நேரடியாக ஈழ மக்களுக்கு நன்மை அளிக்காது. தவிரவும் இலங்கை அரசாங்கம் எந்தத் தீர்மானங்களுக்கும் அசையப் போவதில்லை. இந்தத் தீர்மானத்தில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை அரசோ இன நல்லிணக்கத்தை முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிந்த கணத்திலேயே தொடங்கியதாகச் சொல்கிறது. ஈழத்தில் மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பது உட்பட பல்வேறு அநீதிகளை மென்மையான முறையில் இந்தத் தீர்மானம் சுட்டி காட்டியிருக்கிறது. போர்க் குற்றங்களையும் இனப்படுகொலையையும் இழைத்த இலங்கை அரசின் இறுக்கமான ஆட்சியில் வாழும் ஈழத்து மக்களுக்கு ஐ.நா. தீர்மானம் சிறிய ஆறுதலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தத் தீர்மானத்திற்கே இவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கிறது என்பது உலகத்தின் முன் நிலைநாட்டப்பட்டிருக்கிறது. இலங்கை அரசின் இனப்படுகொலையையும் போர்க்குற்றத்தையும் தண்டிக்கத்தக்க தீர்மானத்தை உலகம் கொண்டு வருவதே பாதிக்கப்பட்ட ஈழ மக்களுக்கு நீதியை கொடுக்கும். கொடுக்க வேண்டும். இன்றில்லாவிட்டாலும் நாளை.

ஈழப்போராட்டத்தின் - ஈழத்து மக்களின் எதிர்காலம்என்ன?

இலங்கை அரசுகளின் அடக்குமுறைகளுக்கு எதிரான ஈழப்போராட்டத்தில் ஆயுதப் போராட்டம் சிதைக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த அடக்குமுறைகளுக்கும் உரிமைமீறல்களுக்கும் எதிராக ஈழமக்கள் போராடினார்களோ அந்த அடக்குமுறை இப்பொழுது இன்னும் அதிகரித்துவிட்டது. நாங்கள் வாழ வேண்டியிருக்கிறது. வாழ்வதற்காகப் போராட வேண்டியிருக்கிறது. ஈழம் எங்களின் தேசம். எங்களுக்கு எங்களுடைய வாழ்க்கை வேண்டும். விடுதலையும் வாழும் தேசமும் கிடைக்கும்வரை ஈழத்து மக்கள் போராட வேண்டிய நிர்பந்தத்திற்குள் தள்ளப்படுகிறார்கள். அதனால் ஈழப்போராட்டம் தாய்நிலத்தில் இப்பொழுதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

சந்திப்பு -பவுத்த அய்யனார்

http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Kadhir&artid=589566&SectionID=146&MainSectionID=146&SEO&Title=%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%9C%E0%AE%BF.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D++%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D++%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.