Jump to content

மக்கள் அற உணர்வையும் ஆன்மிகத்தையும் பிரித்துவிட்டார்கள்: எழுத்தாளர் அசோகமித்திரன்


Recommended Posts

சின்ன அறை. சுவரில் பெருமாள், சமயபுரம் மாரியம்மன், ராமர், சீதை என்று ஏகப்பட்ட கடவுளர் படங்கள். சின்ன கட்டில். அதையட்டி மேஜை. சுற்றிலும் புத்தகங்கள். தமிழின் மகத்தான படைப்பாளி அசோகமித்திரனின் உலகம் இப்போது இவ்வளவுதான். ''சமீபத்தில் ஓர் இலக்கிய விழாவுக்குச் சென்றிருந்தேன். பேசி முடிக்கும்போது, 'இத்துடன் விடைபெறுகிறேன்...’ என்று சொன்னேன். விழாவில் இருந்த ஒரு கவிஞர் உடனே பதறிப்போய், 'நீங்கள் நூறாண்டு வாழ வேண்டும்’ என்று சொன்னார். இப்போது எனக்கு 81 வயது ஆகிறது. நூறாண்டு வாழ்வதைவிடக் கொடுமையான தண்டனை இருக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை...'' - கண்களை இடுக்கிச் சிரிக்கிறார்.

''இந்த வயதில் இருந்து பார்க்கும்போது, வாழ்க்கை எப்படி இருக்கிறது?''

''ரொம்பச் சோர்வாக இருக்கிறது. தள்ளாமையும் வியாதிகளும் வலியும் கொல்கின்றன. உலகம் விடை கொடுத்துவிடாதா என்று காத்திருக்கிறேன்.''

''வாழ்க்கை ஒரு சாமானியனுக்கும் படைப்பாளிக்கும் ஒரே மாதிரியானதாகத்தான் இருக்கிறதா?''

''ஷேக்ஸ்பியரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால், கவித்துவமாக ஏதாவது சொல்லி இருப்பார். படைப்பாளி என்ன பெரிய படைப்பாளி? அவரவர் வாழ்க்கை அவரவருக்கு.''

p78.jpg

''உங்கள் 60 ஆண்டு எழுத்து வாழ்க்கை திருப்தியைத் தருகிறதா?''

''இதுவரைக்கும் 9 நாவல்கள், முந்நூற்றிச் சொச்ச சிறுகதைகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கிறேன். என்னுடைய எழுத்து மேல் திருப்தி இருக்கிறது. வாழ்க்கை மேல் புகார்கள் கிடையாது. ஆனால், என் எழுத்தைப் படித்துவிட்டு எழுத்தாளனாகப்போகிறேன் என்று சொல்லிக்கொண்டு யாராவது என்னைப் பார்க்க வந்தால் மட்டும் எனக்குப் பொல்லாத கோபம் வரும். 'போடா மடையா... உருப்படியாக ஏதாவது வேலையைத் தேடிக்கொள்’ என்று கத்தத் தோன்றும். நான் எப்படியோ வாழ்ந்துவிட்டேன்... எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கை. மற்றவர்களுக்கு இந்தக் கஷ்டம் வேண்டாம்.''

''தமிழ், ஆங்கிலம்... இரண்டிலுமே சிறப்பாக எழுதக் கூடியவர் நீங்கள். ஆனால், தமிழைச் சுற்றியே உங்கள் படைப்பு உலகத்தை அமைத்துக்கொண்டீர்கள். ஏன்?''

''1952-ல் நான் எழுத வந்தேன். அப்போது, தமிழில்தான் செய்ய வேண்டியது நிறைய இருப்பதாகத் தோன்றியது. அதற்கு நிறையப் பேரின் தேவையும் இருந்தது. தமிழைத் தேர்ந்தெடுத்தேன்.''

''புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, கு.பா.ரா. எனப் பலர் அந்தக் காலகட்டத்திலேயே புதுப் புது முயற்சிகளில் ஈடுபட்டு இருந்தார்கள்... இல்லையா?''

''ஆமாம்; ஆனால் அது தொடக்கம்தான். செல்ல வேண்டிய தூரம் அதிகம் இருந்தது.''

''எழுத்தையே நம்பி வாழ்ந்தவர் நீங்கள்... பிரபல பத்திரிகைகளில் தொடர்கதைகள் எழுதுவது, சினிமாவுக்கு எழுதுவதுபோன்ற பிரயாசைகள் உங்களிடம் இல்லை. எப்படி வாழ்க்கையை நடத்தினீர்கள்?''

''சிரமம்தான். எஸ்.எஸ்.வாசனும் என்னுடைய தகப்பனாரும் நெருங்கிய சிநேகிதர்கள். அந்த நட்பில்தான் என்னை ஜெமினி ஸ்டுடியோவுக்கு வேலைக்கு வரச் சொன்னார் வாசன். ஒரு கட்டத்தில் அந்த வேலை எனக்குப் பிடிக்காமல் போனது. வெளியே வந்தால் வேறு வேலை கிடைக்கவில்லை. முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களை அப்போதெல்லாம் அரைக் கிழம் என்று சொல்லி வேலைக்கு எடுக்க மாட்டார்கள். பத்திரிகைகளில் கதை எழுதினேன். சன்மானம் குறைவு. கஷ்டப்பட்டேன். ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதுவதில் ஓரளவுக்கு வருமானம் வந்தது. ஆனால், என் மூன்று மகன்களைப் படிக்கவைப்பதில் பெரிய சிரமம் இருக்கவில்லை. அரசுப் பள்ளிக்கூடங்கள், இனாம் பள்ளிக்கூடங்களில்தான் மூவரும் படித்தார்கள். அதே சமயம், அன்றைக்கு அங்கு நல்ல கல்வி கிடைத்தது. இன்று அதை எல்லாம் கற்பனையே செய்ய முடியாது. என்னுடைய 'தண்ணீர்’ நாவலைப் படமாக்க வேண்டும் என்று இயக்குநர் வஸந்த் ரொம்பவும் ஆசைப்பட்டார். என் எழுத்து சினிமாவுக்குச் சரியாக வராது என்று சொல்லிவிட்டேன்.''

''ஆங்கிலத்தில் எழுதுவது ஒரு படைப்பாளிக்குப் பெரும் பிரபலத்தைத் தருவதாக

நினைக்கிறீர்களா?''

''அமிதவ் கோஷ், கிரண் தேசாய் போன்றவர்கள் ஆங்கிலத்தில் எழுதி சர்வதேச அங்கீகாரம் பெற்று இருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், அவர்கள் இங்கிலாந்திலும் அமெரிக்கா விலும் படித்தவர்கள். அதுவும் அவர்களுடைய வெற்றிக்கு ஒரு காரணம்.''

''இதிகாசங்களும் புராணங்களும் நிறைந்த இந்தியாவில், தத்துவ விசாரணைகளைக் களமாகக்கொண்ட ராபர்டோ கலாஸோவின் 'க’ போன்றோ, ஒரு பெரிய பரப்பில் இயங்கும் மார்க்வெஸின் 'ஒன் ஹன்ட்ரட் இயர்ஸ் ஆஃப் சாலிட்யூட்’ போன்றபடைப்பு கள் குறிப்பிடத்தக்க அளவில் வரவில்லையே... ஏன்?''

''முதலில், அப்படிப்பட்ட முயற்சிகளில் இறங்க ஒரு படைப்பாளிக்குப் பெரிய துணிச்சல் வேண்டும். இரண்டாவது, சமூகத்தில் அதற்கான தேவை இருக்க வேண்டும். இதிகா சங்கள், புராணங்கள் எல்லாம் இருப்பது வாஸ்தவம்தான். மக்களின் அன்றாட வாழ்வில் அவற்றுக்கு என்ன மதிப்பு இருக்கிறது என்பதும் முக்கியம் இல்லையா? ஆனால், பெரிய தளத்தில் இயங்கும் படைப்புகளில் எனக்கு p78a.jpgநம்பிக்கை இல்லை. மார்க்வெஸினுடைய 'ஒன் ஹண்ட்ரட் இயர்ஸ் ஆஃப் சாலிட் யூட்’டை விடவும் அவருடைய 'தி ஜெனரல் இன் ஹிஸ் லாபரின்த்’ அற்புதமான படைப்பு.''

''பொதுவாகவே, தமிழ்ப் படைப்பாளிகள் சமகால வரலாற்றைப் பற்றி அலட்டிக்கொள்வது இல்லை... நீங்கள் உட்பட. ஏன்?''

''சம கால வரலாற்றைப் புரிந்துகொள்ள முடியவில்லை. சம காலத்தின்மீது - இன்றைக்கு நடந்துகொண்டு இருக்கும் ஒரு விஷயம் சரியானதா, தவறானதா என்று முடிவெடுக்கக் குறைந்தது 20 வருஷங்கள் தேவைப்படுகின்றன. அதற்குள் அடுத்த சம காலம் வந்துவிடுகிறது. இன்றைய அரசியல் செயல்பாடுகளைப் பற்றி இன்றைக்கே ஒரு முடிவுக்கு வந்து எழுதிவிடுவது பெரும்பாலும் தவறாகவே முடிகிறது.''

''தமிழில், சிறுகதைக்குக் கிடைத்த வெற்றிகள் நாவலுக்கும் கவிதைக்கும் கிடைக்காமல் போனது ஏன்?''

''ஒரு மேற்கோள் உண்டு... 'ஒரு வாசகனும் இல்லாத கவிஞன், கவிஞனே இல்லை’ என்று. நாவல்கள், கவிதைகளைவிடவும் இங்கு சிறுகதைகளே அதிகமாக பத்திரிகைகளில் வெளியிடப்படுகின்றன; அதிகமான வாசகர் களைச் சிறுகதைகளே சென்று அடைகின்றன. எதை விரும்பிப் படிக்கிறார்களோ, அதை எழுதுகிறோம். உங்கள் கவனம் எங்கே இருக்கிறதோ, அங்கேதான் சாதிப்பீர்கள்.''

''இப்போதும் முன்புபோல வாசிக்கிறீர்களா?''

''எந்தச் சூழலிலும் வாசிப்பை விட முடியாது. ஒரு நாளைக்கு அரை மணி நேரம் எழுதுவேன். எப்படியும் வாரத்துக்கு இரண்டு புத்தகங்களாவது வாசித்துவிடுவேன்.'

'

''ஒரு வாசகராக உங்களை மிகவும் பாதித்த படைப்புகளைச் சொல்லுங்கள்?''

''உ.வே.சா-வின் 'என் சரித்திரம்’, நாமக்கல் கவிஞரின் 'என் கதை’, கல்கியின் 'தியாக பூமி’, புதுமைப்பித்தனின் 'சித்தி’, சரத்சந்தர் சாட்டர்ஜியின் 'சந்திரநாத்’, அலெக்சாண்டர் டூமாஸின் 'தி கவுன்ட் ஆஃப் மான்டிகிறிஸ்டோ’, சார்லஸ் டிக்கன்ஸின் 'எ டேல் ஆஃப் டு சிட்டிஸ்’.

''கடந்த ஒரு நூற்றாண்டில் இந்திய அளவில் மகத்தான இலக்கியச் சாதனையாக எதைச் சொல் வீர்கள்?''

''தாகூரின் 'கோரா’.''

''ஒரு விமர்சகராக நீங்கள் கறாராகச் செயல்பட்டது இல்லை என்ற குற்றச்சாட்டு உண்டு...''

''ஏன் கறாராகச் செயல்பட வேண்டும்? விமர்சகனாக அடையாளப்படுத்திக்கொள்ளக் கூட நான் பிரியப்பட்டது இல்லை.''

''உங்கள் அளவில் நல்ல இலக்கியத்துக்கான வரையறை என்ன?''

''மனிதன் மீது அக்கறை காட்டுகிற எல்லாமே இலக்கியம்தான். மனிதர்களைப் பிரிக்கிற எதுவுமே இலக்கியம் இல்லை.''

''தமிழில் இப்போது எழுதுபவர்களில் நம்பிக்கை அளிப்பவர்களாக யாரைக் கருதுகிறீர்கள்?''

''ஜெயமோகன். அவருக்கு இருக்கும் அனுபவங்களும் வாசிப்பும் இன்னும் அவரைப் பெரிய உயரங்களுக்குக்கொண்டு செல்லும் என்று நினைக்கிறேன். ஆனால், படைப்புகளைத் தாண்டி அவர் எழுது வதும் பேசுவதும்... ம்ஹூம்...''

''தமிழ் இலக்கியத்தில் இவ்வளவு சின்ன கூட்டத்தில் இவ்வளவு அரசியல் ஏன்?''

''எங்கே அரசியல் இல்லை? எழுத்துத் துறையில் மட்டும் கூடாதா என்ன? சந்தோஷப்படுங்கள். வேறு எங்கும்தான் சுதந்திரம் இல்லை... எழுத்துலகத்திலாவது இருக்கிறதே என்று!''

''உங்களை நீங்கள் சுயவிமர்சனம் செய்துகொள்வது உண்டா? உங்கள் படைப்புகளை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?''

''ஒவ்வொருவருக்கும் அது அவசியம் இல்லையா? எல்லாக் காலங்களிலுமே என்னை சுயவிமர்சனம் செய்துவந்திருக் கிறேன். உலகத் தரத்தில் என் எழுத்துகளை ஒப்பிடச் சொன்னால், நான் யாருக்கும் தாழ்ந்தவன் இல்லை என்றுசொல்வேன்.''

''எழுத்தையே வேலையாக்கிக்கொண்டது வரை பல விஷயங்களில் ஜெயகாந்தனுடன் ஒப்பிடத் தக்கவர் நீங்கள். ஆனால், அவருக்குக் கிடைத்த வசதியோ, அங்கீகாரங்களோ உங்களுக்குக் கிடைக்க வில்லை. இதை எப்படி உணர்கிறீர்கள்?''

''இங்கு உள்ள அரசியல் சூழ்நிலைகள் அப்படி. இங்கு எழுத்தாளன் மட்டும் பார்க்கப்படுவது இல்லையே? அவனுடைய அப்பா யார் என்பதில் தொடங்கி, அவனை அங்கீகரித்தால் நமக்கு என்ன கிடைக்கும் என்ற கணக்கு வரை எல்லாம் முக்கியம். சொல்லப்போனால், எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா என்று எல்லோரையுமே வசை மாறிப் பொழிந்தவர் ஜெயகாந்தன். ஆனால், அவருடைய வசை மழைகூட இவர்களுக்குப் பூ மழையானது!''

''நாட்டுநடப்புகள், அரசியல் போக்குகள்பற்றி நீங்கள் அதிகம் விமர்சித்தது இல்லை...''

''வாழ்க்கையோடு முட்டி மோதி நின்றவன் அல்ல நான். வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்தவன். அரசியலையும் அப்படித்தான் பார்த்தேன்.''

''இந்திய நடுத்தர வர்க்கத்தைப் பற்றி அதிகம் எழுதியவர் என்ற முறையில் சொல்லுங்கள்... நம்முடைய நடுத்தர வர்க்கம் கைவிட வேண்டிய விஷயங்கள் என்னென்ன?''

''இந்திய நடுத்தர வர்க்கத்தால் எதையும் கைவிட முடியாது. அவர்கள் இந்த நிலையிலேயே இருப்பதைத்தான் ஆளும் வர்க்கம் விரும்புகிறது. அதுதான் யார் யாரை எந்தெந்த நிலையில் வைக்கலாம் என்று தீர்மானிக்கவும் செய்கிறது.''

''சமூகத்தில் ஒருபுறம் அற உணர்வுகளுக்கு மதிப்பே இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது. மறுபுறம் கோயில்கள், திருவிழாக்களில் கூட்டம் குவிகிறது; சாமியார்கள் சாம்ராஜ்யங்களை உருவாக்குகிறார்கள். ஓர் இறைநம்பிக்கையாளராக இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

p78b.jpg''தமிழ்நாட்டில் எந்த ஆட்டோவிலாவது மீட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறதா? ஆனால், சபரிமலை சீஸனில் போய்ப் பாருங்கள். ஆட்டோக்காரர்களில் முக்கால்வாசிப் பேர் மாலை போட்டு இருப்பார்கள். திருப்பதியில் பெருமாள் உண்டியலில் லட்ச லட்சமாகப் போடும் முதலாளிகளில் பாதிப் பேர் தன்னுடைய தொழிலாளிகள் வயிற்றில் அடிப்பவர்கள். மக்கள் அற உணர்வையும் ஆன்மிகத்தையும் பிரித்துவிட்டார்கள்.''

''திடீரென ஒரு நாள் விஞ்ஞானிகள் கடவுள் இல்லை என்பதை அறிவியல்ரீதியாக நிரூபித்து அறிவித்தால், அதற்குப் பின் இந்த உலகம் எப்படி இருக்கும்?''

''நான் ஒரு நாள் கோமாவில் இருந்திருக்கிறேன். அந்த நாளை ஞாபகப்படுத்திப் பார்க்கும்போது, ஒன்றுமே இல்லாத சூழலில் இருந்த மாதிரிதான் உணர்கிறேன். கிட்டத்தட்ட சாவுக்குப் பிறகான நிலை அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

நாம் ஒன்றுமே இல்லை என்பதுதான் பெரிய உண்மை. என்னுடைய சாம்பலைக் கூடத் திரும்பிப் பார்க்காதீர்கள் என்றுதான் என் குடும்பத்தாருக்கே சொல்லி இருக் கிறேன். இந்த உலகத்தை ஏதோ ஒரு சக்தி, அவன் அல்லது அவள் அல்லது அது ஆள்கிறது என்று நம்புகிறோம். அதுவும் இல்லாமல் போனால்... எனக்குச் சொல்லத் தெரியவில்லை!''

மிகவும் நன்றியுடன் விடகனில் இருந்து:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி நிழலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி நல்லதொரு இணைப்புக்கு அண்ணா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இணைப்பிற்கு நன்றி நிழலி. [/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.