Jump to content

தியாகி லெப்.கேணல் திலீபனுடன் இரண்டாம் நாள் -16-09-1987


Recommended Posts

அதிகாலை 5.00 மணிக்கே திலீபன் உறக்கத்தை விட்டு எழுந்து விட்டார். முகம் கழுவித் தலைவாரிக் கொண்டார்.

சிறுநீர் கழித்தார், ஆனால் மலம் இன்னும் போகவில்லை. அவர் முகம் சோர்வாகக் காணப்பட்டாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல் எல்லோருடனும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்.

சகல தினசரிப் பத்திரிகைகளையும் ஒன்றுவிடாமல் படித்து முடித்தார். பத்து மணியளவில் பக்கத்து மேடையிலே நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. நிகழ்ச்சிகளுக்குத் “தேவர்” தலைமைதாங்கிக் கொண்டிருந்தார்.

கவிதைகளை படிப்பதற்காக இளம் சந்ததியினர் முண்டியடித்துத் தம் பெயர்களைப் பதிவு செய்து கொண்டிருந்தனர். “நிதர்சனம்” ஒளிபரப்பாளர்களின் வீடியோ கமெரா, நாலா பக்கங்களிலும் சுழன்று படம் பிடித்துக் கொண்டிருந்தது. மேடையில் கவிதைகள் முழங்கி கொண்டிருந்தபோது திலீபன் என் காதுக்குள் குசுகுசுத்தார்.

“நான் பேசப்போகின்றேன். மைக்கை வாங்கித் தாருங்கோ வாஞ்சியண்ணை”

“சாப்பிடாமல் குடிக்காமல் இருக்கிறீங்கள், களைத்து விடுவீங்கள்”

என்று அவரைத் தடுக்க முயன்றேன்.

“இரண்டு நிமிசம் மட்டும் நிற்பாட்டிவிடுவேன். பிளீஸ்…… மைக்கை வாங்கித் தாங்கோ”

என்று குரல் தளதளக்கக் கூறினார். அவரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. கண்கள் குழிவிழுந்து, முகம் சோர்ந்து காணப்பட்டாலும் அந்தப் பசுமையான சிரிப்பு மட்டும் இன்னும் மாறாமல் அப்படியே இருந்தது.

“இரண்டு நிமிடத்துக்கு மேல் பேசக்கூடாது” என்ற நிபந்தனையுடன், மேடையில் நின்ற தேவரிடம் மைக்கைப் பெற்றுக் கொடுக்கிறேன். திலீபன் பேசப்போவதை தேவர் ஒலிபெருக்கியில் அறிவித்ததும் மக்கள் கூட்டம் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தது.

திலீபன் பேசுகிறார்.!

thelipan-1-1024x685.jpg

“எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய மக்கள் அனைவருக்கும் எனது வணக்கம். நின்றுகொண்டு பேசமுடியாத நிலையில் இருப்பதால் இருந்து பேசுகிறேன். நாளை நான் சுய நினைவுடன் இருப்பேனோ என்பது தெரியாது. அதனால் அன்று உங்களுடன் பேச வேண்டும் என்று விரும்பினேன்.

நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக இருக்கின்றோம், அறுநூற்று ஐம்பது பேர் இன்று வரை மரணித்துள்ளோம். மில்லர் இறுதியாகப் போகும்போது என்னிடம் ஒரு வரி கூறினான். நான் அவனுடன் இறுதிவரை இருந்தேன்.

“நான் எனது தாய்நாட்டிற்காக உயிர் துறப்பதை எண்ணும் போது மகிழ்ச்சியும் திருப்தியும் அடைகிறேன். மக்கள் விடுதலை அடையும் காட்சியை என் கண்ணால் காணமுடியாது என்பதே ஒரே ஏக்கம்” என்று கூறிவிட்டு, வெடிமருந்து நிரபப்பிய லொறியை எடுத்துச் சென்றான். இறந்த அறுநூற்று ஐம்பது பேரும் அநேகமாக எனக்குத் தெரிந்துதான் மரணித்தார்கள். அதனை நான் மறக்கமாட்டேன்.

உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கத் தலைவரின் அனுமதியினைக் கேட்டேன். அப்போது தலைவர் கூறிய வரிகள் எனது நினைவில் உள்ளன.

“திலீபன்! நீ முன்னால் பேர் நான் பின்னால் வருகிறேன்” என்று அவர் கூறினார். இத்தகைய ஒரு தெளிவான தலைவனை, தனது உயிரைச் சிறிது கூட மதிக்காத தலைவனை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்.

அந்த மாபெரும் வீரனின் தலைமையில் ஒரு மக்கள் புரட்சி இங்கு வெடிக்கட்டும். அது நிச்சயமாக தமிழீழத்தை, தமிழர்களின் அடிப்படை உரிமைகளைப் பெற்றுத் தரும். இதனை வானத்தில் இருந்து, இறந்த அறுநூற்று ஐம்பது போராளிகளுடன் சேர்ந்து, நானும் பார்த்து மகிழ்வேன்.

நான் மன ரீதியாக, ஆத்மார்த்தமாக எமது மக்கள் விடுதலை அடைவார்கள் என உணர்கிறேன். மகிழ்ச்சியுடனும் பூரண திருப்தியுடன் உங்களிடம் இருந்து இறுதி விடைபெறுகின்றேன்.

விடுதலைப் புலிகள் உயிரிலும் மேலாக சிறுவர்களை, சகோதரிகளை, தாய்மார்களை, தந்தையர்களை நினைக்கின்றார்கள். உண்மையான, உறுதியான இலட்சியம். அந்த இலட்சியத்தை எமது தலைவருடன் சேர்ந்து நீங்கள் அடையுங்கள். எனது இறுதி விருப்பமும் இதுதான்.”

மிகவும் ஆறுதலாக – சோர்வுடன் — ஆனால், திடமாகப் பேசிய அவரின் பேச்சைக் கேட்டு மக்கள் கண்ணீர் சிந்தினர்.

அன்றிரவு தலைவர் வந்து திலீபனைப் பார்த்தார். சோர்வுடன் படுத்திருந்த திலீபனின் தலையை அவர் தன் கரங்களால் வருடினார். ஒரு தகப்பனின் அன்பையும் – தாயின் பாசத்தையும் ஒன்றாகக் குழைத்தது போன்றிருந்தது அந்த வருடல், இரண்டு இமய மலைகளையும் என் கண்கள் விழுங்கிக்கொண்டிருந்தன.

இரவு 12 மணிக்கு திலீபன் உறங்கத் தொடங்கினார். நானும் அவர் அருகிலேயே படுத்துவிட்டேன்.

٭٭

திலீபனின் வீட்டில் குணபாலன் என்ற சிறுவன் வேலை செய்வதற்காக இருந்தான். அவனது வறுமை நிலையைக் கண்ட திலீபன் தன் கையில் கிடைக்கும் பணத்தை அவனிடம் அடிக்கடி கொடுப்பார்.

யாழ். இந்துவில் அவர் படிக்கும்போது, வீட்டுக்கு வரும்போதெல்லாம் குணபாலனுக்காக கைநிறைய “டொபி”களுடன் வருவார். குணபாலனுக்கு ரீ.வி. பார்க்கும் பழக்கம் இருந்தது. தன் வேலைகளை முடித்துவிட்டு இரவு எட்டு மணிக்குப்பின், பக்கத்துவீட்டிற்குச் சென்று அவன் ரீ.வி. பார்ப்பது வழக்கம்.

குணபாலனுக்காகத் திலீபன் தன் தந்தையிடம் ஒரு ரீ.வி. வாங்கி வைக்குமாறு பலமுறை கெஞ்சிக் கேட்டார். இவரது தொல்லை தாங்கமுடியாமல் இராசையா ஆசிரியர் ஒருநாள் ரீ.வி. யை வாங்கி வந்துவிட்டார். குணபாலனும் அன்றிலிருந்து எதுவித சிரமமுமின்றி ரீ.வி. பார்த்துவரத் தொடங்கினான்.

யார் மீதும் எளிதில் அன்பு வைப்பதிலும், இரக்கம் காட்டுவதிலும் திலீபனுக்கு நிகர் அவரேதான். அதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

திலீபன் யாழ். இந்துவில் படிக்கும் போது அவரது நெருங்கிய நண்பனாக இருந்தவர்களில் கணேசன் என்பவரும் ஒருவர்: இவர் இப்போது ஒரு டொக்ரராக இருக்கின்றார்.

ஒருநாள் திலீபன், கணேசன் மற்றும் சிலர் ஊரெழுவிலுள்ள திலீபனின் வீட்டுக்கு வந்தனர். அப்போது யாழ். இந்துவில் பொருட்காட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது.

திலீபனின் வீட்டிலே சில மாதங்களுக்குமுன் ஒரு நாய் செத்து விட்டதால், அதை ஒரு மரத்தின் கீழ் கிடங்கு வெட்டித் தாட்டிருந்தார்கள். திலீபனும் நண்பர்களும் அந்தக் கிடங்கைக் கிண்டி நாயின் எலும்புக் கூட்டை வெளியில் எடுத்துத் துப்புரவு செய்தார்கள்.

அப்போது ஏற்பட்ட துர்நாற்றம் காரணமாக வீட்டில் இருந்தவர்கள் வெளியே போனாலும், திலீபனும் நண்பர்களும் அதைப் பொருட்படுத்தாமல் தமது வேலையை முடித்துவிட்டு, அந்த எழும்புக்கூட்டை அன்றே எடுத்துச்சென்று பொருட்காட்சியில் வைத்தனர்.

எதையும் ஆராய்ச்சி செய்துபார்ப்பதில் திலீபனுக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. அதனால்தான் தான் இந்த உண்ணவிரதப் போராட்டத்தில் இறக்க நேரிட்டால் தனது உடலை யாழ். வைத்திய பீடத்துக்கு ஆராய்ச்சிப் படிப்புக்காக அனுப்பிவைக்கும்படி அவர் கூறினார் போலும்?

பயணம் தொடரும்……..

http://thaaitamil.com/?p=32281

Link to comment
Share on other sites

[size=5]பகிர்விற்கு நன்றிகள். [/size]

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.