Jump to content

கடைசி அடி. சாத்திரி


sathiri

Recommended Posts

http://eathuvarai.net/?p=1943

kadaisi-adi.jpg

“சூரிச்” புகையிரத நிலையத்தினுள் நுழைந்த அமுதன் அங்கிருந்த சிற்றுண்டி சாலையை நோக்கி நடந்தான். அங்கு இருந்த கதிரைகளில் பிஸ்கற்றை சாப்பிட்டபடி விளையாடிக்கொண்டிருந்த மாலதியும் தமிழினியும் பல நாட்களிற்கு பின்னர் அமுதனைக் கண்டதும், அப்பா என்றபடி ஓடிப்போனவர்களை முழந்தாளிட்டு இரண்டு கைகளாலும் கட்டியணைத்து மாறி மாறி முத்தமிட்டவன் . தான் வாங்கி உடைந்து விடாமல் பத்திரமாக பாதுகாத்தபடி கொண்டு வந்த இரண்டு Kinder சொக்கிலேற்றுக்களை இருவரிடமும் கொடுத்து விட்டு மேனகாவை பார்த்தான். தன்னை பாரக்கிறான் என்பதை கவனித்த மேனகா அவனை கவனிக்காதது போல் வாடிக்கையாளர் ஒருவரிற்கு குளிர் பானங்களை எடுத்து நீட்டிவிட்டு பணத்தை பெற்றுக்கொண்டிருந்தாள். அவசரமாக சொக்கிளேற்றுக்களை உடைத்த இருவரும் அதற்குள் இருந்த பொருத்தப்படாத விளையாட்டு சாமான்களை எடுத்தார்கள். மாலதிக்கு ஒரு காரும் தமிழினிக்கு ஒரு பொம்மையும் கிடைத்திருந்தது. இருவரும் அதனை பொருத்தித் தருமாறு அமுதனிடம் கொடுத்ததும் அவன் ஒரு கதிரையில் அமர்ந்து பொருத்தத் தொடங்கினான்.

அவர்கள் இருபக்கமாக அமர்ந்து கொண்டார்கள்.

“அப்பா நீங்கள் ஏனப்பா இப்ப வீட்டை வாறேல்லை “இது தமிழினியின் கேள்வி. அவளின் தலையை தடவியபடியே “அப்பாக்கு இப்ப தூரத்திலை வேலை அதுதான் வாறேல்லை ஆனால் நேரம் கிடைக்கேக்குள்ளை நான் அடிக்கடி உங்களை வந்து பாப்பன் . நீங்கள் அச்சா பிள்ளையள் தானே ,குளப்படி செய்யாமல் அம்மா சொல்லுறதை கேட்டு நல்லபடியா படிக்கவேணும். அப்பா கெதியிலை திரும்பவும் விட்டு வந்துடுவனாம்.சரியா? “என்றதற்கு ஓமென்று தமிழினி தலையாட்டினாலும், சமாதானமடையாதவளாய் “அப்பா நீங்களெண்டால் பள்ளிக்கூடம் முடிஞ்சதும் காரிலை வந்து வீட்டை கூட்டிக்கொண்டு போயிடுவிங்கள். ஆனா இப்ப நாங்கள் அம்மா வரும்வரைக்கும் இங்கை இருக்கவேண்டியிருக்கு எனக்குப் பிடிக்கேல்லை “முகத்தை சுழித்தாள். “எனக்கும் தான் “என்றாள் மாலதி. ஆனால் மாலதி அவனிடம் அதிகம் கேள்விகள் எதனையும் கேட்கவில்லை அவள் கொஞ்சம் பெரியவள் என்கிற படியால் தனது தாய்க்கும் தந்தைக்குமிடையில் ஏதோ பிரச்சனை அதனாலதான் தந்தை வீட்டிற்கு வருவதில்லை என்பது புரிந்திருந்தது. தமிழினிக்கு இப்பொழுதுதான் நான்கு வயது அவள்தான் இருவரிடமும் கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தாள்.

விளையாட்டு பொருள்களை பொருத்திக் கொடுத்தவன் ” அப்பாக்கு வேலைக்கு நேரமாகிது போகப்போறன் அப்பாக்கு உம்மா தாங்கோ ” எண்டதும் இருவரும் இரண்டு பக்க கன்னத்திலும் ஒரே நேரத்தில் முத்தத்தை பதிக்க அமுதனின் கண்கள் கலங்கி விட்டிருந்தது. “இனி எப்ப வருவிங்களப்பா” என்கிற தமிழினியின் அடுத்த கேள்வி. “அப்பா கெதியிலை திரும்ப வீட்டை வந்திடுவன் குளப்படி செய்யக் கூடாது ” என்று விட்டு புறப்பட தயாரானவனிடம் தமிழினி “அப்பா எனக்கு காரோடுற பார்பி பொம்மை வேணும்” என்றாள். மேனகாவை பார்த்தான் அவள் கவனிக்காதது போலவே நின்றிருந்தாள். அவளிடம் போய் நாளைக்கு வழக்கு முடிவு தீர்ப்பு சொல்கிற நாள். எப்பிடியும் எனக்கு சார்பாத்தான் தீர்ப்பு வரும் அதுக்கு பிறகு எங்களுக்குள்ளை உள்ள பிரச்சனையெல்லாம் முடிஞ்சிடும் என்று சொல்லி விடைபெற மனம் தவித்தது. ஆனால் தான் வந்து நிற்கிறது தெரிஞ்சும் தெரியாத மாதிரி நிக்கிறாள் கல்நெஞ்சக் காரி , கிட்ட கதைக்கபோக ஏதாவது சத்தம் போட்டு விட்டாளெண்டால் ரெயில்வே ஸ்ரேசனிலை மரியாதை போயிடும், எதுக்கு வம்பு என்று நினைத்தவன் பிள்ளைகளை இன்னொரு தடைவை முத்தமிட்டு விட்டு நடக்கத் தொடங்கியவன் இடையில் நின்று பிள்ளைகளை ஒரு தடைவை திரும்பிப் பார்த்தவன் என்ரை பிள்ளையள் இப்பிடி பிச்சையெடுக்கிற பிள்ளையள் மாதிரி இரயில் நிலையத்திலை குந்தியிருக்கிதுகள். மனிசி திரும்பியும் பாக்கிறாள் இல்லை . ஏன் இந்த நிலைமை? நான் யாருக்கு என்ன பாவம் செய்தனான் ?ஏன்?? ஏன்?? போய்க்கொண்டிருந்தான்………………………….

போய்க்கொண்டிருந்த அமுதனையே மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்தாள் மேனகா. பாவம் மனுசன் மெலிஞ்சு போச்சுது கனக்க தண்ணியடிக்கிறார் போலை. காரிலையே திரிஞ்ச மனுசன் எந்த பஸ் எங்கை போகுதெண்டே தெரியாதவர் காரையும் வித்துப்போட்டு பஸ்சிலை ஏறி இறங்கி என்ன கஸ்ர படுறாரோ.எண்டாலும் என்னட்டை வந்து ஒரு வசனம் கதைக்காமல் போறார் போகட்டும். நாளைக்கு வழக்கு முடிவு தெரிஞ்சிடும். கடவுளே நல்ல முடிவா வரவேணும் என மனதிற்குள் வேண்டியவள். எவ்வளவு மகிழ்ச்சியா இருந்த எங்களுக்கு இவ்வளவு பிரச்சனை ஏன்??………………………

௦௦௦

/நித்திரையா தமிழா நீயும் எழுந்து பாரடா…/

பாடல் சி டியில் ஓடிக்கொண்டிருக்க அதையே முணு முணுத்தபடி பாடசாலையால் கூட்டி வந்த பிள்ளைகளிற்கு உணவை தயாரித்துக்கொண்டிருந்தான் அமுதன்.வீட்டு அழைப்பு மணி சத்தம்.திறந்து பார்த்தான் அப்பாத்துரையும் பக்கத்தில் இன்னொரு புதியவர் அதுவரை அவன் பார்த்தேயில்லை. வரவேற்றவன் ஒரு நிமிசம் பிள்ளையளிற்கு சாப்பாடு குடுத்திட்டு வாறன் என்றவன் அவர்களிற்கு உணவை கொடுத்து விட்டு வந்து அமர்ந்தான். அப்பாத்துரையிடம் “சொல்லுங்கோ என்ன புதினங்கள். கிளிநொச்சியையும் விட்டாச்சு எண்டு செய்தியள் சொல்லுது எவ்வளவு கஸ்ரப் பட்டு கசை கொட்டி கட்டியெழுப்பின இடம் மனசுக்கு கஸ்ரமாயிருக்கு ஏன் அதை விட்டவை” என்று விட்டு இருவரையும் மாறி மாறி பார்த்தான்.

“இடங்களை விடுறதும் பிறகு பிடிக்கிறதும் இது முதல் தரம் இல்லைத்தானே இதுவும் தந்திரோபாயமான பின் வாங்கல்தான். இந்த தடைவை கொஞ்சம் கூடுதலாய் பின்வாங்கினம் ஏனெண்டால் இழப்புகளை குறைச்சு பலத்தை தக்க வைக்கவேணும்.தலைவர் பெரிய திட்டம் ஒண்டு வைச்சிருக்கிறார் அதுதான் கடைசி அடி. அதுக்கு இந்த தடைவை பெரிய தொகை ஒண்டு உடனடியா அனுப்ப சொல்லி கேட்டிருக்கினம். அது மட்டுமில்லை இதுதான் நாங்கள் சேக்கிற கடைசி நிதி அதாலை உங்களிட்டை இருந்து பெரிய பங்களிப்பை எதிர் பாக்கிறம். அதுக்காவவே இவரை நாட்டிலையிருந்து நேரடியா தலைவர் அனுப்பியிருக்கிறார். இவரின்ரை பெயர் விடுதலை ” என்று வலக்கை விரல்களை குவித்து விளக்கத்தை சொல்லி முடித்தான் அப்பாத்துரை.

“பெரிய தொகையெண்டால் எவ்வளவு ” புருவத்தை உயர்த்தினான் அமுதன்.

“குறைஞ்சது பத்தாயிரம் பிறாங்காவது எதிர் பாக்கிறம்”.

பத்தாயிரமா?..வாயை பிளந்தவன்.இரண்டு வருசத்தக்கு முதல் நீங்கள் கடனடிப்படையிலை வாங்கின நாலாயிரமே திருப்பி தரேல்லை ஆனாலும் நான் அதை கடனா நினைக்காமல் பங்களிப்பா தான் தந்தனான். மாத காசு வேறை தாறனான் ஆனால் பத்தாயிரம் கொஞ்சம் கஸ்ரம்.

அமுதன் நீங்கள் காசு தரத் தேவையில்லை கடன் மட்டும் எடுத்துத் தந்தால் போதும் நாங்கள் மாதா மாதம் காசை கட்டுவம். அவ்வளவுதான்.

என்ரை பாங்கிலை கடன் எடுக்கேலாது ஏற்கனவே வீட்டுக்கடன் ,கார் கடன் எல்லாம் எடுத்திட்டன்.அதுவும் பத்தாயிரம் கஸ்ரம்.தலையை சொறிந்தான் அமுதன்.

kadaisi-adi1-909x1024.jpg

நீங்கள் ஒண்டும் கஸ்ரப் படவே தேவையில்லை இதிலை கையெழுத்து மட்டும் போட்டால் போதும் உங்கடை விசா போட்டோ கொப்பி ஒண்டு அவ்வளவுதான் என்றபடி சில படிவங்களை பையிலிருந்து வெளியே எடுத்தான் அப்பாத்துரை. ஆனாலும் அமுதனிற்கு கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. இல்லை வந்து என்று இழுத்தான். அதை கவனித்த அப்பாத்துரை என்ன யோசிக்கிறீங்கள் நீங்கள் ஒரு மாவீரரின்ரை அண்ணன். அது மட்டுமில்லை எங்கடை பொறுப்பாளர் கஸ்ரோ அண்ணையே தன்ரை குரலிலை பதிஞ்சு ஒரு சி.டி அனுப்பியிருக்கிறார் கேட்டுப்பாருங்கோ என்றதும் பக்கத்தில் இருந்த விடுதலை ஒரு சிடியை எடுத்து நீட்டினான். பாடலை நிறுத்திய அமுதன் அந்த சிடியை ஓடவிட்டான். அதற்கு முன்னர் அவன் கஸ்ரோவின் குரலை கேட்டதே கிடையாது ஆனாலும் அது கஸ்ரோதான் என நம்பினான். சுமார் ஏழு நிமிடங்கள் ஓடிய சிடியை கேட்டவன் சரி எங்கை கையெழுத்து போடவேணும் என்றான்.

நீட்டிய பத்திரங்களில் கையெழுத்தை போட்டவன் தனது விசாவையும் ஒரு போட்டோ கொப்பி எடுத்து கொடுத்தான். எல்லாவற்றையும் பத்திரப் படுத்திய அப்பாத்துரை இந்தாங்கோ புதிசா ஒரு சி.டி வந்திருக்கு ஏழு பிறாங் . எந்த பிரசுரமோ சி.டிக்களோ கலண்டர்களோ அமுதன் தவற விடுவதில்லை. சி.டி யை வாங்கியவன் பத்து பிறாங்கை நீட்டி விட்டு வைச்சிருங்கோ என்றான். அப்பொழுது வேலையால் வந்து நுழைந்த மேனகா இருவரிற்கும் வணக்கம் சொல்லிவிட்டு அமுதனிடம் வந்தவைக்கு ஏதாவது குடிக்க குடுத்தனிங்களோ என்றதும் தான் அமுதனிற்கு அந்த நினைவே வந்தது. இல்லையப்பா இனித்தான் .. அதற்குள் சமையலறைக்குள் போனவள் எனக்கு உங்களை பற்றி தெரியும்தானே ஊர் கதை எண்டால் உலகத்தையே மறந்திடுவீங்கள் என்றபடி தேனீரை தயாரிக்க தொடங்கி விட்டிருந்தாள்.அமுதனோ அதற்கிடையில் மேனகாவிற்கு எதுவும் தெரிய வேண்டாம் என்று அப்பாத்துரைக்கு சைகை காட்டி விட்டிருந்தான். அவர்கள் விடை பெற்று போனதும் அமுதனும் வேலைக்கு புறப்பட்டவன் புதிதாய் வாங்கிய சி.டி யின் பொலித்தீன் உறையை பல்லால் கடித்து பிரித்து எடுத்து காரில் ஓடவிட்டு காரை இயக்கினான். “இதுதாண்டா கடைசி அடி “செல்லப்பா பாடிக்கொண்டிருந்தார்…………

00000

வேலையால் வந்து தபால் பெட்டியை திறந்து கடிதங்களை எடுத்த அமுதன் முதலில் வங்கி கடிதத்தை பிரித்தவன் திடுக்கிட்டவனாய் வந்திருந்த தொகையை திரும்ப திரும்ப பார்தான் .கடைசியில் ஒண்டு ,பத்து, நூறு ,ஆயிரம்.,பத்தாயிரம், இலச்சம் எண்டு . கை விரல்களினாலும் எண்ணிப் பார்த்தான் ஆறாவது விரலில் வந்து நின்றது. அவசரமாய் கைத்தொலைபேசியை எடுத்து அப்பாத்துரையின் இலக்கங்களை அழுத்தியவன், “அப்பாத்துரை பாங்கிலை இருந்து கடிதம் வந்திருக்கு ஆனால் நீங்கள் பத்தாயிரம் தானே கேட்டனீங்கள் ஒரு லச்சம் வந்திருக்கு இப்ப என்ன செய்யிறது”. மறுமுனையில்” ஓ அப்பிடியா” என கேட்டவன். “தலைவர் கேட்ட தொகையை குடுக்கிறதுக்காக சில பேரின்ரை பெயரிலை கூடுதலா எடுத்தனாங்கள் அதிலை உங்கடை பேரும் வந்திட்டுது போலை…….. ம்.. ஒரு பிரச்சனையும் இல்லை நான் தாற எக்கவுண்டுக்கு மாத்தி விடுங்கோ ” என்றான் சாதாரணமாக. “இல்லை என்னட்டை ஒரு சொல்லு சொல்லியிருக்கலாமல்லோ நம்பி கையெழுத்து போட்டால் இப்பிடியா செய்யிறது ” கொஞ்சம் கோபமாகத்தான் கேட்டான்.

“அமுதன் காசு எங்களிட்டையா வந்திருக்கு உங்களிட்டை தானே வந்திருக்கு ,ஏன் ரென்சன் ஆகிறீங்கள். உங்களுக்கே தெரியும் போராட்டத்துக்கு நிதி உதவி செய்யிறதிலை இண்டு வரைக்கும் சுவிஸ்தான் முதலாவதா நிக்கிது. சின்ன நாடு நாங்கள் கொஞ்சப்பேர் ஆனால் கூடுதலாய் குடுக்கிறம் . தலைவரே அதை தன்ரை வாயாலை புகழ்ந்து சொல்லியிருக்கிறார். அவசரம் எண்ட படியாலை எங்களாலை ஒவ்வொருத்தராய் தொடர்பு கொண்டு விபரம் சொல்ல முடியேல்லை கடனை நாங்கள் தானே கட்டப் போறம் பிறகெதுக்கு பயப்பிடுறீங்கள்”. ஆனாலும் சமாதானமடையாத அமுதன் “அதில்லை வந்து”….. என்று தொடங்கவும் குறுக்கிட்ட அப்பாத்துரை , “அமுதன் அவனவன் நாட்டுக்காக உயிரையே குடுக்கிறாங்கள் நீங்கள் காசை கடனெடுத்து குடுக்க யோசிக்கிறீங்கள். நீங்கள் யோசிக்கிறதை பாத்தால் நாட்டுக்காக போராடுற போராளியள் மட்டுமில்லை எங்களுக்காக உயிரை குடுத்த மாவீரர்களையும் அவமதிக்கிறமாதிரிக் கிடக்கு “, பதறிப்போன அமுதன் “ஜயையோ அப்பிடியெல்லாம் இல்லை என்ரை தங்கச்சியும் மாவீரர் தான் எனக்கும் அந்த வலி தெரியும் .எக்கவுண்ட் நம்பரை எஸ்.எம். எஸ் பண்ணி விடுங்கோ இப்பவே போய் காசை மாத்தி விடுறன்” என்று விட்டு தொலைபேசியை நிறுத்தினான். ஒரு நிமிடத்திலேயே எஸ்.எம். எஸ் . வந்திருந்தது.

00000

kadaisi-adi21-266x300.jpg

ஒரு மாதம் ஓடிவிட்ட நிலையில் செய்திகள் எல்லாமே குழப்பமானதாகவே வந்து கொண்டிருந்தது அமுதனிற்கும் ஒண்டும் புரியவில்லை. வங்கியில் அந்த மாதத்திற்கான கடன் பணமும் கழிந்து விட்டிருந்தது. ஆனால் அப்பாத்துரையிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. போனடித்து காசு என்று கேட்கவும் அமுதனிற்கு சங்கடமக இருந்தது. அப்பாத்துரையிடம் காசு எண்டு கேக்காமல் நிலவரத்தை கேக்கிற மாதிரி அடிச்சு பாப்பம் என நினைத்து போனடித்து “என்ன புதினங்கள் சாலை கடற்கரையை பிடிச்சிட்டதாவும் புலிகளையும் தலைவரையும் முற்றுகைக்குள்ளை கொண்டு வந்திட்டதா செய்தியள்ளை சொல்லுறாங்கள்.உண்மையோ “என்றதும், சிரித்தபடியே அப்பாத்துரை தொடங்கினான் “இலங்கை அரசுதான் புலிகள் முற்றுகைக்குள்ளை அகப்பட்டிட்டினம் எண்டு சொல்லுது ஆனால் உண்மையிலை இலங்கை இராணுவம்தான் முற்றுகைக்குள்ளை சிக்கு பட்டு நிக்கிது.வன்னிக்குள்ளை முழு ஆமியும் போய் நிக்கிறாங்கள் ஆனால் திருகோணமலை மட்டக்கிளப்பிலை உள்ள எங்கடை படையணியள் அவங்களை சுத்தி வளைச்சு நிக்கிது. வடிவா பாத்தீங்கள் எண்டால் நாங்கள் தேள் வடிவத்திலை ஒரு தாக்குதலை நடத்தப் போறம்.தேள் எண்டால் தெரியும்தானே ? ” தட்டுத் தடுமாறிய அமுதன் “ஓம் தேள் எண்டால் நட்டுவாக்காலிதானே” என்றான். “ஓம் அதுதான் அது முன்னங்காலாலை கடிக்கிற நேரம் பின் வாலாலையும் குத்தும் வாலாலை குத்துறதுதான் மோசமாயிருக்கும். அதைப்பற்றி ஒரு பெரிய இராணுவ ஆய்வாளரே எழுதியிருக்கிறார் படிச்சனீங்களோ?” . “இல்லை படிக்கேல்லை” . “வெப்சைற்றுகளிலை இருக்கு படிச்சு பாருங்கோ அதைவிட நாங்கள் வாங்கின பிளேனுகளின்ரை படங்கள் உங்களுக்கு மெயில் போட்டு விடுறன் பாருங்கோ பிறகு சந்திப்பம் “என்று அப்பாத்துரை இணைப்பை துண்டித்தான்.

அமுதனுக்கு இன்னும் குழப்பமாயிருந்தது அவங்கள் இவங்களை சுத்தி வளைச்சிருக்கிறம் எண்டுறாங்கள். இவங்கள் அவங்களை சுத்தி வளைச்சிருக்கிறம் எண்டுறாங்கள். இவன் வேறை தேள் மாதிரி வாலாலை குத்தப் போறம் எண்டுறான். புலியள் புலிமாதிரி பாயாமல் எதுக்கு தேள் மாதிரி வாலாலை குத்துவான் என்றபடியே கணணியை போட்டு மின்னஞ்சலை திறந்தான். ஈழம் எயார் போஸ்(Eelam Air Force)என்று எழுதிய நவீன குண்டு வீச்சு விமானங்களின் படங்கள் வந்திருந்தது . அவனிற்கு தெரிந்ததெல்லாம் சியாமா செட்டியும். அவ்ரோவும் புக்காராவும் தான் ஆனால் இதுகள் ஒண்டு கிபீர் மாதிரி இருந்தது மற்றது மிராச்சா இருக்குமோ?? யோசித்தவன் எதுவாயிருந்தாலும் படங்களை பார்க்க அவனிற்கு புல்லரித்தது. இவ்வளவு வாங்கியிருக்கிறாங்கள் சரி ஒரு மாத காசு தானே போனால் போகட்டும் என்று நினைத்தவன். வேலையிடத்திலை எல்லாருக்கும் காட்டவேணும் என்று நினைத்தபடி கிறாபிக் குண்டு வீச்சு விமானங்களை பிறின்ற் எடுத்துக்கொண்டான்.

அடுத்த மாதக் காசும் கழிந்து விட்டிருந்தது. மகிந்தா நிலத்தை முத்தமிட்டு பயங்கரவாதத்தை அழித்து விட்டேன் என்று அறிவித்த அடுத்தடுத்த நாட்களில் அனைத்து செய்திகளிலும் புலிகள் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டு விட்டதாக தலையின் வலப்பக்கம் காயமடைந்த படத்தினை திரும் திரும்ப போட்டுக்காட்டிக் கொண்டிருந்தார்கள். அமுதனிற்கு உடல் விறைத்து பைத்தியம் பிடித்ததை போல ஒரு உணர்வு பி.பி.சி…தொடங்கி சி.என்.என். என்று உள்ளுர் செய்தி அனைத்தையும் மாறி மாறி பார்த்தவன், அப்பாத்துரைக்கு போனடித்து விடயத்தை கேட்டான். பெரும் சத்தமாய் சிரித்த அப்பாத்துரை “பாத்தீங்களோ நீங்களும் ஏமாந்திட்டியள்.

இதுதான் எதிரிக்கு தேவை அவன் எங்களையும் சர்வதேசத்தையும் குழப்பிறதுக்கு செத்துப்போன ஒருத்தரின்ரை தலையிலை தலைவரின்ரை முகம் மாதிரி பிளாஸ்ரிக்கிலை செய்து வைச்சு படமெடுத்து போட்டிருக்கிறாங்கள்.ஆனால் தலைவர் ஆறாயிரம் போரோடை முல்லைத்தீவை விட்டு தப்பி காட்டுக்குள்ளை போட்டார்” என்றான் .உண்மையாவே என்று கேட்ட அமுதனிற்கு தலைவர் தப்பிட்டார் என்ற செய்தி கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது ,ஆனால் “வாங்கின பிளேனுகள் எல்லாம் எங்கை ? அதுகளை ஏன் பாவிக்கேல்லை “என்று கேட்டான். “அதெல்லாம் பத்திரமா எரித்தியாவிலை நிக்கிது. தலைவர் அடுத்த சண்டையை தொடங்கினதும் இவங்கள் எரித்தியாவிலை இருந்து போய் அடிச்சிட்டு வருவாங்கள் சரி நான் கொஞ்சம் அலுவலாய் நிக்கிறன் பிறகு கதைக்கிறன் “என்று தொடர்பை துண்டித்தான் அப்பாத்துரை. இந்த மாதமும் அமுதன் காசைப் பற்றி கதைக்கவில்லை.

மாதம் மூன்றை தாண்டி அந்த மாத காசும் கழிந்து விட்டிருந்தது அமுதனின் நிலைமை கவலைக்கிடமாகி விட்டிருந்தது அப்பாத்துரையை தொலைபேசியில் பிடிக்க முடியவில்லை. மேனகா அன்று வழைமை போல் தனது காரிற்கு பெற்றோலை நிரப்பிவிட்டு எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் கடன் அட்டையை நீட்டிளாள்.அது வேலை செய்யவில்லை அவசரத்திற்கு என வைத்திருக்கும் பணத்தை எடுத்து கொடுத்து விட்டு, வீட்டிற்கு போகிற வழியில்தான் வங்கி ,போய் கேட்கலாமென நினைத்து வங்கிக்கு போயிருந்தாள்.

வீட்டின் வரவு செலகு கணக்குகள் அனைத்தையும் அமுதனே கவனிப்பதால் மேனகா அவற்றை கவனிப்து கிடையாது. வங்கிக்கு போய் நிலைமையை கேட்டதும் தான் அவளிற்கு புரிந்தது. அந்த மாத கடன் காசு கழியாமல் கடன் அட்டைகள் முடக்கப்பட்டிருந்ததோடு அனைத்து பண கொடுப்பனவுகள் வீட்டுக் கடன் உட்பட வங்கியால் திருப்பிவிடப் பட்டிருந்தது. இவ்வளவு நிலைமை மோசமாகியும் தனக்கு எதுவும் தெரியாமல் மறைத்த அமுதன் மீது ஆத்திரமாய் வந்தது. வீட்டிற்கு போனவள் நேரடியாக அமுதனிடம் போய் பாங்கிற்கு என்ன நடந்தது என்றதும் தான் மேனகாவிற்கு எல்லாம் தெரிந்து விட்டது என்பதை உணர்ந்தவன் தயக்கத்தோடு நடந்து முடிந்தது அனைத்தையும் சொல்லி முடித்தான். மேனகாவிற்கு கோபம் அதிகரித்ததே தவிர குறையவில்லை.

௦௦௦௦௦௦

அன்றாடக் கடனை ஈடு செய்வதற்காக மேனகாவின் நகைகள் எல்லாம் ஒவ்வொன்றாக விலைபோய் தாலியும் இறுதியாக அடைவு வைத்தாகிவிட்டது.அமுதனிற்கும் மேனகாவிற்கும் சின்ன சின்ன பேச்சுக்கள் கூட பெரும் சண்டையாக மாறத்தொடங்கி ஆறு மாதங்கள் கடந்த நாளென்றின் இரவில் பிள்ளைகள் இருவரும் நித்திரையாகிப் போன பின்னர் வேலையால் வந்த அமுதனிடம் ” அப்பாத்துரை தன்ரை மச்சானின்ரை பேரிலை ஒரு றெஸ்ரோரண் வாங்கிட்டானாம் தெரியுமோ?” ம்…என்றான்.

“அவனிட்டை காசு கேட்டினீங்களோ? ” அதற்கும். ம்…தான் பதிலாக வந்தது.மேனகா தொடர்ந்து பேசிக்கொண்டே போனாள் அமுதனிடமிருந்து ம்…மட்டுமே பதிலாக வந்துகொண்டிருக்க வெறுப்பின் உச்சத்தை மேனகாவும் கோபத்தின் உச்சத்தை அமுதனும் தொட்டுக்கொண்டிருந்த அந்த தருணங்களில் ” சே நீங்களெல்லாம் ஒரு மனுசன் ஏதாவது வாயை துறந்து கதையுங்கோ உங்களை ஒரு ஆம்பிளை எண்டவே வெக்கமாயிருக்கு ” எண்டவும் மேனகா என கத்தியபடி அமுதனின் கை அவள் கன்னத்தில் இறங்கியது மட்டுமல்ல எட்டி உதைத்தும் விட்டான்.

சத்தம் கேட்டு பிள்ளைகள் எழுந்து வந்து அழத் தொடங்கத்தான். தன்னிலைக்கு திரும்பிய அமுதனிற்கு ஆத்திரத்தில் எவ்வளவு பெரிய தவறை செய்து விட்டோம் என்று புரிந்தது. பிள்ளைகளை சமாதானப்படுத்தி அவர்களை படுக்கைக்கு கொண்டு போய் விட்டான் . மேனகா அழுதபடியே படுக்கையறைக்குள் போய் கதவை பூட்டிக்கொண்டு விட்டாள்.கதவருகே வந்து நின்று மன்னிப்பு கேட்டுப்பார்த்தான் கதவு திறக்கவேயில்லை. அவள் ஏதாவது செய்து விடுவாளோ என்றும் அமுதனிற்கு பயமாக இருந்தது.போலிசிற்கு போனடிக்கலாமா என்றும் யோசித்தான். வேண்டாம் அவங்கள் வந்தால் சும்மா உள்ள பிரச்சனையையும் பெரிசாக்கிபோடுவாங்கள். எதற்கும் விடியட்டும் என நினைத்தவன் விஸ்கியை திறந்து கிளாசில் ஊற்றி குடித்தபடி படுக்கை அறை கதவையே பார்த்தபடி சத்தம் ஏதாவது கேட்கிறதா என கவனித்தபடி இருந்தான்.

காலை மேனகா பிள்ளைகளை பாடசாலைக்கு தயார்பண்ணிக்கொண்டிருக்கும் சத்தத்தத்தில் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தான் , சே கலியாணம் கட்டி இத்தினை வருசத்திலை ஒரு நாள் இப்பிடி மோசமாய் நான் நடந்ததேயில்லை.இண்டைக்கு அவளுக்கு பிடிச்ச சொக்கிலேற் கேக் வாங்கி கொண்டு போய் குடுத்து காலிலை விழுந்தாவது மன்னிப்பு கேட்கவேணும்.என்று நினைத்தவன். மாலை பாடசாலையால் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு கேக்கோடு போயிருந்தான். வேலையால் மேனகா வந்ததும் பிள்ளைகளை அறைக்குள் அனுப்பிவிட்டு கேக் பெட்டியை கையில் எடுக்கும் போதே அவள் “உங்களோடை கொஞ்சம் கதைக்கவேணும் கோபப் படாமல் ஆறுதலா கேளுங்கோ “,அவள் மேசையில் அமர எதிரே அவன். கேக் பெட்டியை இருவரிற்கும் நடுவில் வைத்தவன் சரி சொல்லு என்றான். நான் இண்டைக்கு வேலைக்கு போகேல்லை என்றபடி பையில் இருந்து சில காகிதங்களை எடுத்தவள் நான் நல்லா யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்திட்டன் நாங்கள் பேசாமல் டிவோஸ் எடுப்பம் இதை தவிர வேறை வழி இல்லை.

அதிர்ந்துபோனவன் என்ன கதை கதைக்கிறாய் பிள்ளையளையாவது கொஞ்சம் யோசிச்சியா?

பிள்ளையளை யோசிச்சு அதுகளின்ரை எதிர் காலத்தை நினைச்சுத்தான் இந்த முடிவே எடுத்தனான்.

என்ன சொல்லுறாய்.?

நாங்கள் கட்ட வேண்டிய காசுகளை கணக்கு பாத்தன் எங்கடை வருமானத்தை விட மூண்டு மடங்கு வருது. நாங்கள் இருபத்து நாலு மணித்தியாலமும் வேலை செய்தாலும் காணாது. நகைகளும் வித்தாச்சு தெரிஞ்சாக்களிட்டை கடனும் வாங்கியாச்சு இந்த மாதம் வீட்டு கடன் கட்ட முடியேல்லை இப்பிடியே போனால் வீட்டை பிடுங்கிபோடுவாங்கள். பிறகு நாங்கள் பிள்ளையளோடை சேர்ந்து தற்கொலை செய்யவேணும் இல்லாட்டி சூறிச் ரெயில்வே ஸ்ரேசனிலை தான் போய் படுத்திருந்து பிச்சையெடுக்கவேணும். இந்த இரண்டும்தான் தெரிவு இதிலை எதை செய்யலாமெண்டு நீங்களே சொல்லுங்கோ.

பிள்ளையளோடை தற்கொலையா என்ன விசர் கதை கதைக்கிறாய் .டிவோஸ் எடுத்தால் எல்லாம் சரியாயிடுமா என்றவன் விவாதங்கள் தொடர்ந்தது .சண்டை பிடித்தபடி சேர்ந்து இருப்பதை விட பிரிந்து போவது நல்லதாகத்தான் தெரிந்தது.கடைசியில் மேனகா சொன்னவைகள் அவனிற்கு சரியாகப்படவே மன வேதனையுடன் விவாகரத்து எடுக்க சம்மதித்தான்.அவன் ஆசையாய் வாங்கி வந்த கேக் குப்பைக் கூடையை நிரப்பியிருந்தது.

௦௦௦

அப்பாத்துரையோ சிறிய தொகை கொடுத்தவர்களிற்கு தலைவர் கெதியிலை வருவார் வந்ததும் கணக்கு தரலாமென்று பதில் சொல்லிவிட்டிருந்தான். பெருமளவில் கடனெடுத்து கொடுத்தவர்களிற்கு ஒரு புதிய திட்டத்தை அறிவித்தான். அதுதான் கொத்து றொட்டித் திட்டம். சூரிச்சில் உள்ள அனைத்து தமிழர்களும் தினமும் தனது கடையில் கொத்து றொட்டி வாங்கவேண்டும். அதன் வருமானத்தை சேர்த்து மொத்தமாக்கி ஒவ்வொருத்தரின் கடனாக அடைக்கலாம். வேறு வழியின்றி கடன் கொடுத்தவர்களே சம்மதித்தும் இருந்தார்கள்.உணவு விடுதியில் வேலை செய்த அமுதனும் பசிக்காவிட்டாலும் கொத்து றொட்டி வாங்க தொடங்கியிருந்தான். வருடம் ஒன்றை தாண்டி விட்டதொரு நாளில் தற்செயலாக அவனைப் போலவே பெருந்தொகை கடன் வாங்கி கொடுத்திருந்த மோகனை சந்தித்த போது, அமுதன் உங்கடை கடனை ஒரு மாதிரி கட்டிட்டாங்களாம் என்று மோகன் சொன்னபோதுதான் தாங்கள் எல்லாருமே ஒட்டுமொத்தமாக ஏமாற்றுப் படுவதை உணர்ந்தார்கள். அவர்களைப் போலவே பெருந்தொகை கடன் எடுத்துக்கொடுத்த அனைவரையும் தொடர்பு கொண்டார்கள். கடையிசில் ஆறு பேர் சேர்ந்து அப்பாத்துரைக்கு எதிராக வழக்கு போடுவது என முடிவு செய்து வழக்கும் தாக்கல் செய்திருந்தார்கள்.

அன்று வழக்கின் இறுதிநாள் ,வழக்கு போட்ட ஆறு பேரும் வந்திருந்தார்கள் . வழக்கில் நல்லபடியாய் தீர்ப்பு வந்தால் சூரிச் சிவன்கோவிலுக்கு அடுத்த திருவிழாவிற்கு காவடி எடுப்பதாக நேர்த்தி வைத்தபடி அமுதனும் போயிருந்தான். ஆனால் அவர்களில் ரமேஸ் மட்டும் நீதிமன்றத்திற்குள்ளே வராமல் வெளியேயே நின்றிருந்தான். அவனது நடவடிக்கைகள் வித்தியாசமாய் இருந்ததை கவனித்த அமுதன் அவனருகே போய் நேரமாகிது உள்ளை வாடா என்று அழைத்தான்.நான் வரேல்லை நீ உள்ளைபோ என்றான் . றமேஸ் நிறைய குடித்திருந்தான் என்றது அமுதனிற்கு புரிந்தது .என்னடா செய்யப் போறாய் என்றதற்கு தனது ஜக்கெற்ரை விலக்கி இடுப்பில் செருகியிருந்த கத்தியை காட்டியவன் இண்டைக்கு அப்பாத்துரையை போடப்போறன்.

டேய் விளையாடாதை தீர்ப்பு எங்களுக்கு சாதகமாய்தான் வரும். அவசரப் படாதை…

சும்மா போங்கோ அவனிட்டை காசு இருக்கு கிரிமினல் லோயரை வைச்சு வாதாடிட்டான் ,எங்கடை அரசாங்க லோயர் என்னத்தை கிழிச்சவன். அது மட்டுமில்லை காசையும் குடுத்திட்டு கையெழுத்து வைச்ச எங்களுக்கு விசரோ இல்லையோ எண்டு டெக்ரர் சேட்டிபிக்கற் வேறை எடுக்க வைச்சு கொத்து றொட்டி வேறை தீத்திட்டாங்கள்.

எனக்கு நம்பிக்கை இருக்கடா நாங்கள் யாருக்கும் துரோகம் செய்யேல்லை யாரையும் ஏமாத்தேல்லை கடவுள் ஒண்டு ஒருத்தர் இருக்கிறார் எல்லாம் நல்லபடி நடக்கும்.

சும்மா போங்கோ நீங்களும் உங்கடை கடவுளும் அவரே காசு உள்ளவன் ஏமாத்திறவன் பக்கம் தான் நிக்கிறார்.

டேய் உனக்கு இப்பதான் கலியாணமாகி ஒரு பிள்ளை வேறை பிறந்திருக்கு காசையும் குடுத்திட்டு நீ ஜெயிலுக்கு போனால் உன்ரை குடும்பத்தை ஒருக்கா நினைச்சு பார்.

என்ரை குடும்பம் நாசமா போனாலும் பரவாயில்லை பலபேரின்ரை குடும்பம் நிம்மதியா இருக்கும். காசை சுத்தினவங்களுக்கு லண்டனிலை குணத்துக்கும் பாரிசிலை யோகனிற்கும் ஆசை தீர அடியாவது போட்டாங்கள் நாங்கள்தான் காசை குடுத்திட்டு வாயை பார்த்துக்கொண்டு நிக்கிறம்.

அதற்கு மேல் அவனுடன் கதைத்து பிரயோசனம் இல்லையென நினைத்த அமுதன் மற்றவர்களிடம் போய் நிலைமையை விளங்கப் படுத்தி அவர்களை அழைத்து வந்ததும் அவர்கள் ரமேசை அமத்தி பிடிக்க அவன் செருகி வைத்திருந்த கத்தியை உருவி எடுத்தவன் அவனை விடவேண்டாம் என்றபடி ஒதுக்குப் புறமாக இருந்த ஒரு குப்பை கூடையில் கத்தியை கொண்டுபோய் எறிந்துவிட்டு வரும்போது ,புதிய AUDI கார் ஒன்றில் அப்பாத்துரை நீதிமன்ற பகுதிக்குள் நுழைந்துகொண்டிருந்தான்.

நீதி மன்றத்திகுள் அனைவரும் எழுந்து அமர்ந்ததும் நீதிபதி தீர்ப்பினை படிக்க ஆரமப்பித்தார். இதுவரை நடந்து முடிந்த விசாரனைகள் விவாதங்கள் பரிசோதனைகளின் அடிப்படையில் வழக்கை தொடர்ந்த ஆறு பேரும் கடன் பத்திரங்களில் அவர்களே கையெழுத்திட்டுள்ளனர். அவை போலியானவை அல்ல என்பதை பரிசோதனைகள் நிருபிக்கின்றது.

அதே வேளை சம்பத்தப் பட்டவர்கள் மீது நடாத்தப்பட்ட உளவியல் பரிசோதனைகளில் அவர்கள் அனைவருமே எவ்வித உளவியல் தாக்கங்கள் பிரச்சனைகளுமற்றவர்கள் என்கிற அவர்களது மருத்துவ பரிசோதனை உறுதி செய்திருப்பதால் அவர்கள் அனைவருமே தங்கள் சுய விருப்பின் பேரில் சரியான மனநிலையில் இருந்தே கையெழுத்தை இட்டிருக்கும் சாத்தியம் தெளிவாகின்றது. ஆகவே அவர்கள் பெற்றுக்கொண்ட கடன்களிற்கு அவர்களே பொறுப்பாளிகள் ஆகின்றார்கள். அடுத்ததாக அவர்களை அப்பாத்துரை மோசடி செய்தார் என்பதற்கான சரியான வலுவான ஆதாரங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை. அப்பாத்துரையின் தனிப்பட்ட வங்கி கணக்கிற்கு பணம் ஏதும் மாற்றம் செய்யப் பட்டிருக்கவில்லை. எனவே அப்பாத்துரை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறார். ஆனால் சுவிஸ் நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பான புலிகள் அமைப்பு கடந்த காலங்களில் நிதி மோசடிகளில் ஈடு பட்டது காவல்துறையாலும் நீதிமன்றங்களாலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைப் போல இந்த சம்பவத்திலும் நிதி மோசடிகள் நடந்திருக்கின்றதா என்பதனை காவல்துறையினர் கண்டு ஆராயவேண்டும். மேலதிகமாக அப்பாத்துரை நிதிகளை பெறுவதற்காக சம்பந்தப் பட்டவர்களை மிரட்டியோ அல்லது அழுத்தங்களை பிரயோகித்திருந்தாலோ சரியான ஆதாரங்களுடன் அவர்கள் மீண்டும் காவல்துறையின் உதவியுடன் இந்த வழக்கை மீளாய்விற்குட்படுத்தலாம். வழக்கு முடிந்தது என்றுவிட்டு நீதிபதி எழுந்து போய் விட்டார்.

அப்பாத்துரை அவர்களை பார்த்து நக்கல் சிரிப்பு ஒன்றை வீசி விட்டு காரில் ஏறி போய்விட்டான். அப்பவும் சொன்னான் இந்த கோட்டு கேசிலை எனக்கு நம்பிக்கையிலையெண்டு கேட்டியா. ஏதோ தர்மம் நியாயம், கடவுள் எண்டாய் எங்கை எல்லாம் போனது. போடா நீயும் உன்ரை சாமியும் என்று அமுதனை திட்டிவிட்டு ரமேஸ் போய்விட மற்றையவர்கள் எதுவும் பேசாமல் அங்கிருந்து போய் விட்டார்கள். சோர்வோடு பஸ் நிலையத்தில் வந்து இருந்தவன் சட்டைப் பையை தடவிப்பார்த்தான். வழக்கு நல்லபடியாய் முடிந்த பின்னர் தமிழினிக்கு கார் ஓடுற பார்பி பொம்மை வாங்குவதற்காக வைத்திருந்த பணத்தை எடுத்தபடி ஒரு கடைக்குள் நுழைந்தவன் ஒரு விஸ்கி போத்தலை வாங்கி விட்டு ரமேசிடம் இருந்து பறித்த கத்தி எறிந்த குப்பைக் கூடை பக்கம் போய் கத்தியை தேடியெடுத்து இடுப்பில் செருகி விட்டு வந்த பஸ் ஒன்றில் ஏறிக்கொண்டான்.

௦௦௦

அப்பாத்துரையின் கார் அதன் நிறுத்துமிடத்தில் நுழைந்து நிறுத்துமிட கதவு சாத்தப்படுவற்கு முன்னராக அவரசரமாக ஓடிப்போய் வாகனத் தரிப்பிடத்திற்குள் நுழைந்துகொண்டான். காரை விட்டு இறங்கிய அப்பாத்துரை அமுதனை பார்த்து அதிர்ச்சியடைந்திருந்தாலும் தன்னை சுதாகரித்துக்கொண்டு .”என்ன அமுதன் இந்த நேரத்திலை அதுவும் இஞ்சை என்று வில்லங்கத்திற்கு ஒரு சிரிப்பை வரவழைத்துக்கொண்டு கேட்டான். எதுவும் போசாமல் அப்பாத்துரையை நோக்கி முன்னேறிய அமுதன் திடீரென அவனை நோக்கி பாய்ந்தவன் காரோடு அப்பாத்துரையை சாத்தி அழுத்திப் பிடித்தபடி இடுப்பில் செருகியிருந்த கத்தியை உருவினான் . அப்பாத்துரை பதறியவனாய் அமுதன் சொல்லுறதைக்கேள் சத்தியமா என்னட்டை ஒரு சதமும் இல்லை எல்லாம் ஊருக்கு அனுப்பிட்டன் என்னை நம்பு,அமுதன் அப்பாத்துரையின் அடிவயிற்றில் கத்தியை செருகி இழுத்தான். அடி வயிற்றை பொத்திய அப்பாத்துரை என்னை ஒண்டும் செய்யாதை உன்ரை காசு முழுக்க நான் திருப்பி தாறன் என்னை விட்டிடு என்றபடி அடிவயிற்றை பொத்தியிருந்த கைகளை எடுத்து கும்பிட்டான் அவனது கைள் இரத்தத்தால் நனைந்து போயிருந்தது. ” அட ஒரு குத்திலையே ஊருக்கு அனுப்பின காசு திரும்பி வந்திட்டுது” என்றபடி அமுதன் கத்தியை அப்பாத்துரையின் வயிற்றிக்கும் மார்பிற்கும் இடையில் ஓங்கி இறக்கினான்.

என்னை விட்டுடடா நான் பிள்ளை குட்டிக்காரன் கும்புடறனடா அவனது நாக்கு குளறி சத்தம் கம்மியது.. நானும் கூடத்தான் பிள்ளை குட்டிக்காரன் உன்ரை மனிசி பிள்ளையள் கடைசி வரைக்கும் சந்தோசமா வாழுறதுக்கு எங்கடை காசு உன்னட்டை இருக்கு ஆனால் எங்கடை பிள்ளை குட்டியளை பற்றி நீ யோசிச்சியா என்று கத்தியபடி அப்பாத்துரையை கீழே விழுத்தியவன் அவன் மீது செருகியிருந்த கத்தியை உருவிவிட்டு அவனது மார்பில் ஏறி அமர்ந்து ,கத்தியை இரண்டு கைகளாலும் இறுக்கிப் பிடித்து தலைக்கு மேலாக தூக்கி ஓங்கி அவனது நெற்றியில் குத்தினான். டக் என்ற சத்தத்துடன் ஒரு அங்குலமளவு மட்டுமே நெற்றியில் கத்தி இறங்கும்போதே அமுதனின் கைகள் வழுக்கி அவனது கையொன்று அறுக்கப்பட்டு இரத்தம் வழியத் தொடங்கியிருந்தது. ஆனால் அவனது மது வெறியும் கொலை வெறியும் சேர்ந்திருந்தில் கை அறு பட்ட வலியை அவன் உணர்ந்திருக்கவில்லை. மெல்ல எழுந்தவன் அப்பாத்துரையின் நெற்றியில் குத்திநின்ற கத்தியின் அடிப்பாகத்து பிடியில் ” இது தாண்டா கடைசி அடி “என்றபடி தனது வலது சப்பாத்து காலால் ஓங்கி அடித்தான் சறக் என்கிற சத்தத்தோடு அப்பாத்துரையின் மண்டையோடு உடைந்து கத்தி மண்டைக்குள் இறங்கியது.

தனது கைத்தொலை பேசியை எடுத்து காவல்துறையின் இலக்கங்களை அழுத்தினான். அவனிற்கு அருகாகா காவல்துறையின் வாகனங்களின் சைரன் ஒலிக்கத்தொடங்கியிருந்தது.

எமது கைகளின் ஆயுதங்களை எதிரி மட்டுமல்ல துரோகிகளும் தீர்மானிக்கிறார்கள்.

௦௦௦

யாவும் கற்பனை அல்ல.

பிற்குறிப்பு. கடைசி அடி சிறுகதை கடந்த மூன்று வாரங்களிற்கு முன்னரே எழுவரை சஞ்சிகைக்காக எழுதி அனுப்பி விட்டிருந்தேன். எனவே இதனை அண்மைய பாரிஸ் சம்பவத்துடன் போட்டு குளப்பி கொள்ளதோவையில்லை. ஆனாலும் கதையில் கூறப்பட்டுள்ளது போல் நடப்பதற்கான சாத்தியங்களை மறுப்பதற்கும் இல்லை

Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply

எமது கைகளின் ஆயுதங்களை எதிரி மட்டுமல்ல துரோகிகளும் தீர்மானிக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்து, இதைப்போன்ற ஒரு சம்பவம் எனது உறவினர் ஒருவருக்கு சுவிசில் நிகழ்ந்திருக்கிறது. உங்கள் கதையின் முடிவு போன்று அல்ல இப்போது அவர் மனநலம் குன்றியவராக இருக்கிறார் என்பது மிகவும் கசப்பான உண்மை. இந்தக்கதையை வாசிக்கும்போது மனம் கனக்கத்தான் செய்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம் இருக்குமல்லவா.... :(

Link to comment
Share on other sites

பகிர்வுக்கு நன்றிகள் சாத்திரி.

தேசியத்தை அளவுகடந்து நேசித்தவர் பலரின் வாழ்க்கை நிலத்திலும் புலத்திலும் நரகமாக இருப்பதுக்கு சிங்களம் மட்டும் காரணமில்லை.

ஒரு சமூகம் மிக மோசமாக இருந்தால் அது காலப்போக்கில் தன்னைத் திருத்தி நல்ல சமூகமாக மாற்றிக்கொள்ளும் என்பது இயற்கையானது, இந்த இயற்கை விதி கூட எமக்கு விதிவிலக்கானது போலுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை சம்பவங்களின் தொகுப்பாக இருக்கின்றது. பணத்தை மனிசிக்கே தெரியாமல் கொடுக்கும் தேசிய செயற்பாட்டின் பின்னாலுள்ள உளவியலின் விபரிப்புப் போதாது. எனக்குத் தெரிந்தவரும் அப்படிக் கொடுத்திருந்தார் ஆனால் இப்படியெல்லாம் குடும்பத்திற்குள் பிரச்சினை வரவில்லை.

அத்தோடு குளிரிலும், பனியிலும் கஷ்டப்பட்டு போராட்டத்திற்கு நேர்மையாகப் காசைச் சேர்த்து, பின்னர் நடந்தவற்றை நினைத்து துயரப்படும் பாத்திரம் ஒன்றையும் படைத்திருக்கலாம் (கல்லெறிகளைத் தடுக்கத்தான் :icon_mrgreen: ) மொத்தத்தில் சாத்திரியின் முத்திரைக் கதை :)

Link to comment
Share on other sites

அப்பாத்துரைகள் களை எடுக்கப்பட வேண்டியவர்கள்.மக்களின் பணத்தை சுருட்டி திடீர் பணக்காரர்கள் ஆனவர்கள் நடைப் பிணமாக்கப்பட வேண்டும். யாரும் இவ் ஈனச்செயலை எதிர்காலத்தில் செய்யா வண்ணம் தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும் . பதிவுக்கு நன்றி, சாத்திரியார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாப் பல்குழல் எறிகணையும் கிழக்குச் சீமையை நோக்கி .....................................

Link to comment
Share on other sites

எரிகிற வீட்டில் திருடுகிற கூட்டம் பற்றி என்ன சொல்வது.

Link to comment
Share on other sites

ம்........

/[size=5]/எமது கைகளின் ஆயுதங்களை எதிரி மட்டுமல்ல துரோகிகளும் தீர்மானிக்கிறார்கள்.// உண்மை!![/size]

/[size=5]/எமது கைகளின் ஆயுதங்களை எதிரி மட்டுமல்ல துரோகிகளும் தீர்மானிக்கிறார்கள்.// உண்மை!![/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்........

/[size=5]/எமது கைகளின் ஆயுதங்களை எதிரி மட்டுமல்ல துரோகிகளும் தீர்மானிக்கிறார்கள்.// உண்மை!![/size]

/[size=5]/எமது கைகளின் ஆயுதங்களை எதிரி மட்டுமல்ல துரோகிகளும் தீர்மானிக்கிறார்கள்.// உண்மை!![/size]

ண்மை.... அலை.

Link to comment
Share on other sites

நல்ல கதை.ஆஅனால் முடிவு வன்முறையாய் இருக்குகொலை எதற்கும் தீர்வல்ல*இந்தக்கதை புலம்பெயர் தேசமெங்கும் இருக்கும் இந்தப் பிரசினைக்கு தீர்வு கொலை என்று மறைமுகமாக சொல்வதுபோல் இருக்கு. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அலை உங்களுக்கு வாசிக்க கடினமாக இருந்தால் போன் இல் வாங்கோ நான் கதை சொல்கிறேன்.

கதையில் சாத்திரி கொஞ்சத்தை விழுங்கிவிட்டார் போல் உள்ளது.

Link to comment
Share on other sites

எமது கைகளின் ஆயுதங்களை எதிரி மட்டுமல்ல துரோகிகளும் தீர்மானிக்கிறார்கள்.

பாத்தப்பு ..கவனம் யாராவது தூக்கிட போறாங்கள்:. கருத்துக்களிற்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல... அக்கறையான, நண்பர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல... அக்கறையான, நண்பர்கள்.

அக்கறை ,இக்கரை ,ஏக்கரை ஆனாலும் நாங்கள் நண்பர்களே

Link to comment
Share on other sites

சாத்து, இதைப்போன்ற ஒரு சம்பவம் எனது உறவினர் ஒருவருக்கு சுவிசில் நிகழ்ந்திருக்கிறது. உங்கள் கதையின் முடிவு போன்று அல்ல இப்போது அவர் மனநலம் குன்றியவராக இருக்கிறார் என்பது மிகவும் கசப்பான உண்மை. இந்தக்கதையை வாசிக்கும்போது மனம் கனக்கத்தான் செய்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம் இருக்குமல்லவா.... :(

இது எனது நண்பன் ஒருவனின் கதைதான் தற்சமயம் குடும்பம் விவாக ரத்து எடுத்து வாழ்கிறார்கள். கதையின் இறுதி பகுதிதான் என்னால் புனையப் பட்டது கருத்திற்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எனது நண்பன் ஒருவனின் கதைதான் தற்சமயம் குடும்பம் விவாக ரத்து எடுத்து வாழ்கிறார்கள். கதையின் இறுதி பகுதிதான் என்னால் புனையப் பட்டது கருத்திற்கு நன்றிகள்.

அழுகையைத் தவிர வேறொன்றும் வரவில்லை என்ன பாவம் செய்தோம்

Link to comment
Share on other sites

எல்லாப் பல்குழல் எறிகணையும் கிழக்குச் சீமையை நோக்கி .....................................

அதெங்கை கிழக்குச்சீமை ? பல்குழல் ?

Link to comment
Share on other sites

கதை நன்றாக இருக்கு... அமுதன் இடத்தில் நான் இருந்திருந்தால் இதைத் தான் செய்து இருப்பன்...

றஷ்மி வரைந்த முதல் ஓவியத்தில் ஆணும் பெண்ணும் இருக்கின்றனர்..ஆனாள் விளங்கிக்கொள்ள முடியவில்லை.

சாத்து, எதுவரை இதழில் உங்கள் ஆக்கம் வரும் என்பது நான் எதிர்பார்க்காதது. பெளசர் மற்றும் றஷ்மி ஆகியோரின் தொடர்பு சரிநிகர் காலத்தில் இருந்து உங்களுக்கு ஏற்பட்டதா அல்லது இந்த இதழுக்காக ஏற்பட்டதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இப்படியான துயர் நிறைந்த அனுபவங்கள் உண்டு சாத்திரியார்.

ஆனால், இந்தச் சைபர்கள் போடுற மாதிரி, ஒண்டும் இதுவரையில் நடக்கவில்லை!

எமது இனத்தில், சுயநல வாதிகளின், விகிதாசாரம் மிகவும் அதிகம்!

அனுபவப் பகிர்வுக்கு நன்றிகள்!

Link to comment
Share on other sites

அலை உங்களுக்கு வாசிக்க கடினமாக இருந்தால் போன் இல் வாங்கோ நான் கதை சொல்கிறேன்.

கதையில் சாத்திரி கொஞ்சத்தை விழுங்கிவிட்டார் போல் உள்ளது.

[size=5]நன்றி சுமோ! பாருங்கோ எவ்வளவு அக்கறையான நண்பி!![/size]

[size=5]"நண்பி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!!![/size]"

அக்கறை ,இக்கரை ,ஏக்கரை ஆனாலும் நாங்கள் நண்பர்களே

[size=5]ம்ம்.. உண்மை!![/size]

அக்கறை ,இக்கரை ,ஏக்கரை ஆனாலும் நாங்கள் நண்பர்களே

[size=5]ம்ம்.. உண்மை!![/size]

இது எனது நண்பன் ஒருவனின் கதைதான் தற்சமயம் குடும்பம் விவாக ரத்து எடுத்து வாழ்கிறார்கள்.

:(

Link to comment
Share on other sites

கதை நன்றாக இருக்கு... அமுதன் இடத்தில் நான் இருந்திருந்தால் இதைத் தான் செய்து இருப்பன்...

றஷ்மி வரைந்த முதல் ஓவியத்தில் ஆணும் பெண்ணும் இருக்கின்றனர்..ஆனாள் விளங்கிக்கொள்ள முடியவில்லை.

சாத்து, எதுவரை இதழில் உங்கள் ஆக்கம் வரும் என்பது நான் எதிர்பார்க்காதது. பெளசர் மற்றும் றஷ்மி ஆகியோரின் தொடர்பு சரிநிகர் காலத்தில் இருந்து உங்களுக்கு ஏற்பட்டதா அல்லது இந்த இதழுக்காக ஏற்பட்டதா?

கருத்துக்களிற்கு நன்றி. சிவகுமாரை பல வருடங்களாக தெரியும்.பின்னர் அதனூடாக பெளசர். ஆனால் றஸ்மி இன்னமும் நேரடி பழக்கம் கிடையாது ஓவியத்தில் தந்தை அமுதன் இரு பிள்ளைகளையும் அணைத்து வைத்திருப்பது போல் கீறியிருக்கிறார்.

Link to comment
Share on other sites

பகிர்வுக்கு நன்றிகள் சாத்திரி.

தேசியத்தை அளவுகடந்து நேசித்தவர் பலரின் வாழ்க்கை நிலத்திலும் புலத்திலும் நரகமாக இருப்பதுக்கு சிங்களம் மட்டும் காரணமில்லை.

ஒரு சமூகம் மிக மோசமாக இருந்தால் அது காலப்போக்கில் தன்னைத் திருத்தி நல்ல சமூகமாக மாற்றிக்கொள்ளும் என்பது இயற்கையானது, இந்த இயற்கை விதி கூட எமக்கு விதிவிலக்கானது போலுள்ளது.

உண்மை சண்ட மாருதன் இன்னமும் தமிழையும் மக்களையும் உண்மையாக நேசிப்பவர்களை வைத்து அவர்களை உசுப்பி விட்டு அவர்களை வழி நடத்தும் போலிகள் சுகபோக வாழ்க்கை வாழ்கிறார்கள். இப்போதைக்கு அதில் மாற்றங்கள் ஏதும் வரும் என எதிர் பார்க்க முடியாது

Link to comment
Share on other sites

நீங்கள் திண்ணையிலும், முகநூலிலும் இந்தக் கதை பற்றி கொடுத்த விளக்கத்தால் கதையின் முடிவு தெரிந்து விட்டது. அதனால் சுவாரஸ்யமும் குறைந்து விட்டது. ஆயினும் நல்ல ஒரு கதை.

யாராவது இதைப் பார்த்து கத்தியை கையில் எடுத்தால், கொலையை தூண்டியதாக உங்கள் மீதும் குற்றம் சாட்டலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.