Jump to content

கோடைகாலம் ...


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோடைகாலம் என்றாலே உணவு விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சொல்லித் தர வேண்டியதில்லை. அந்த எச்சரிக்கை உணர்விற்கு சில யோசனைகள் இங்கே:

இளநீர்

1. இளநீரில் இருப்பவை : சோடியம் குளோரைடு, பொட்டாசியம், தாது உப்புகள், நீர்ச்சத்து, கால்சியம், உப்புச்சத்து, வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன.

2. மருத்துவக் குணம் எப்படி?

தினமும் இளநீர் நம்மை இளமையாக வைத்திருக்கும். குறிப்பாக, கோடைகாலங்களில் உப்புச்சத்தும், நீர்ச்சத்தும், இன்னபிற பொதுவான சத்துக்களும் உடலில் இருந்து வியர்வை மூலமாக வெளியேறி விடுவதால், உடல் வெளிறிவிடும். மயக்கம், நாடித்துடிப்பு தளர்ந்து, தசைகள் இறுகுவது நடக்கும். இதற்கெல்லாம் முக்கியமான காரணம், உடலில் உள்ள உப்பு சுத்தமாக வெளியேறுவதுதான். இளநீரில் இருக்கின்ற உப்புச்சத்து, நம் உடலில் வெப்ப நிலையை சமச்சீராகப் பாதுகாப்பதோடு மட்டுமின்றி, உடலின் வெப்பநிலையை உள்வாங்கி, சரிவர வெளியே தள்ளுகிறது. இதனால் கோடையில் வரும் அவசர வேனல் பிடிப்பு, வேனல் அயர்ச்சி போன்ற தொந்தரவுகள் தொலைந்து போகிறது.

3. எப்படிச் சாப்பிடலாம்?

இளநீரை உடனடியாகக் குடித்துவிடுவதுதான் நல்லது. வாங்கி இதனை ஃபிரிட்ஜில் வைத்திருந்தோ அல்லது இரண்டு, மூன்று மணிநேரம் கழித்தோ குடிப்பது நல்லதல்ல. இளநீரின் மருத்துவக் குணம் மாறாமல் இருக்க வேண்டுமென்றால், அதனை வாங்கிய அரை மணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும். இதில் எதனையும் கலந்து குடிக்கக்கூடாது. சர்க்கரை நோயாளிகள் குறைவாகக் குடிக்கலாம். சிறுநீரகச் செயலிழப்பு நோயாளிகள் குடிக்கக்கூடாது. இதய நோயாளிகளுக்கு இளநீர் இதம்.

4. இளநீருக்கு மாற்று குளிர்பானமா?

குளிரூட்டப்பட்ட செயற்கை குளிர்பானங்களில் 'கார்பனேட்டட் வாட்டரும்', காற்றும்தான் செயற்கையாக அடைக்கப்படுகிறது. இதில் உடலுக்குத் தேவையற்ற கலோரிச் சத்துக்கள் அதிகமாக இருப்பதால், உடல் குண்டாகும். எலும்புகள் பலவீனமடையும். குடற்புண் உண்டாகும். இவையெல்லாம் தொடர்ந்து குடிப்பதில் உள்ள பக்க விளைவுகள்.

நீரின்றி அமையாது உடல்

1. தண்ணீரில் இருப்பவை : கோடையில் தண்ணீர் மிகவும் தரமான பொருள். ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், கால்சியம், மினரல்கள், உப்புகள், தண்ணீரில் தரம் குறையாமல் இருப்பவை.

2. மருத்துவக் குணம் எப்படி?

நீரின்றி அமையாது உடலும், உடல் உறுப்புகளும். தண்ணீரின் தலையாய வேலையே வெப்பத்தை / வெப்பத் தாக்குதலை தன்னுடன் கொண்ட தாதுப்பொருட்களைக் கொண்டு தவறாமல் காப்பதுதான். கோடையில் தொடர்ந்து கடினமான வேலை செய்யும் கட்டுமானத் தொழிலாளர்கள், இயந்திரங்களை இயக்குபவர்கள், நீண்ட தூரம் வாகனங்கள் ஓட்டும் டிரைவர்கள், 'ஷிப்ட்' முறையில் பணிபுரிபவர்கள் போன்றவர்களுக்கு, உடம்பில் தண்ணீரின் அளவு வெகுவாகக் குறைந்து சோர்ந்துவிடுவார்கள். தண்ணீரைக் குடித்தால் உடன் புத்துணர்ச்சி பெற்று, வேலைகளைச் செய்ய முடியும். நம் உடம்பின் செல்களும், திசுக்களும், சிறுநீரகமும் தண்ணீரால் புத்துணர்வு பெறுகின்றன. சிறுநீரகச் செயலிழப்பு உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனை பெறலாம்.

3. எவ்வளவு குடிக்கலாம்?

தினசரி கோடையில் குறைந்தது 3_4 லிட்டர் வரை குடிக்கலாம். ஒரே நேரத்தில் நிறையக் குடிப்பதற்குப் பதிலாக, சிறிது சிறிதாகத் தொடர்ந்து குடித்துக் கொண்டே வரலாம். ஒரு நேரத்தில் அரை லிட்டர் வரை அதிகபட்சமாக குடிக்கலாம். சாப்பிட்ட பிறகு, ஒரேயடியாக நிறையத் தண்ணீரைக் குடிப்பது செரிமான சிக்கலை உண்டு பண்ணும். வயிறு நிறைய தண்ணீரைக் குடிப்பதும், உடனே படுப்பதும் தவறுதான். இவையெல்லாம் தண்ணீரில் நாம் செய்யும் தலையாயத் தவறுகள். கோடையில் இரவில் இடைவெளிகளில் தண்ணீரைக் குடிப்பது, நார்ச்சத்துடன் சேர்ந்து காலையில் மலச்சிக்கலைத் தீர்க்கும். மாலையில் மனச்சிக்கலைத் தீர்க்கும். பெரிய 'மீட்டிங்' நடக்கும் போது முதலில் தண்ணீரை வைத்திருப்பதற்கான காரணம், Mood Relaxant. அது மனப்பதற்றத்தைக் குறைக்கும், மூளையின் வேதிப்பொருளை ஒழுங்குபடுத்தும். தண்ணீர், ஓர் உயிர் நீர்.

இயற்கைப் பழச்சாறுகள்

அதிக நீருள்ள பழங்கள், திராட்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, தர்ப்பூசணி, போன்றவற்றில் வைட்டமின் சத்துக்கள் குறிப்பாக, எல்லா வைட்டமின்களும் உள்ளன. மற்ற எல்லாப் பழங்களையும் சாப்பிடலாம்.

வெள்ளரிப்பழம் _ வெள்ளரிப்பிஞ்சு: வெல்லுமா கோடையை?

1. வெள்ளரியில் நீர்ச்சத்துடன், மாவுச்சத்தும் அதிகம் இருக்கிறது. குறிப்பாக, வெள்ளரிப் பழத்தில் நிறைய 'கார்போஹைட்ரேட்டுகளும்', 'புரோட்டீனும்', கால்சியமும், தாது உப்புக்களும் உள்ளன. வெள்ளரிப் பிஞ்சைவிட, வெள்ளரிப் பழம் கோடைக்கு மிகவும் உகந்தது. ஏனெனில், வெள்ளரிப் பிஞ்சில் நீர்ச்சத்து மட்டும்தான் உள்ளது. வெள்ளரிப் பழத்தில் உள்ள தித்திப்பான சர்க்கரைச் சத்து உடலுக்கு உடனடியாக கலோரிகளைக் கொடுத்து, வெப்பத் தாக்கலிலிருந்து வெளியேற உதவுகிறது.

2. மருத்துவக் குணம் எப்படி?

கடுமையான கோடையில் தொடர்ந்து செய்த வேலையால், மயக்கமான நிலையில் இருப்பவர்கள் வெள்ளரிப் பழத்தை சாப்பிடலாம். இதிலிருக்கும், மாவும், சர்க்கரையும் நீரும் உடலுக்கு உடனே, புத்துணர்ச்சியைக் கொடுக்கும். ஆனால், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் ஒரு துண்டு அல்லது இரண்டு துண்டுக்கு மேல் வெள்ளரிப்பழத்தைச் சாப்பிடக்கூடாது. வெள்ளரிப்பிஞ்சை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

3. எப்படிச் சாப்பிடலாம்?

வெள்ளரிப் பிஞ்சைக் கழுவி அப்படியே சாப்பிடலாம். மிளகு உப்பு தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம். வெள்ளரிப்பழச் சாற்றுடன் சிறிதளவு சர்க்கரை கலந்தும் குடிக்கலாம்; இல்லை சாதாரண சர்க்கரையோடு வெள்ளரிப் பழத்தையும் சாப்பிடலாம். எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிடலாம். குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிப்பெண்கள் என அனைவரும் சாப்பிடலாம்.

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் மட்டும் வெள்ளரிப்பழம் மிகவும் இனிப்பாக இருந்தால், சாப்பிடுவதில் அக்கறை தேவை. 4. வெள்ளரியின் வெவ்வேறு வகைகள்:

இப்போது நாட்டு வெள்ளரி, சீமை வெள்ளரி என்று பிஞ்சிலும் சரி, பழத்திலும் சரி வெவ்வேறு வகைகள் வருகின்றன. எல்லா வகையும் ஒரே மாதிரியான தன்மையைக் கொண்டவை தான். சத்துக்கள் இரண்டு வகைகளிலும் சரிசமம் தான். விருப்பப்படி சாப்பிடலாம்.

நுங்கு _ பதநீர் கோடைக்கு எவ்விதம் ஏற்றது?

1. எதில் என்ன சத்து?

பதநீரில் நீர்ச்சத்து அரைப்பாகமும், உப்புச்சத்தும், கால்சியம் சத்தும், தாதுப்பொருட்களின் (Minerals) சத்தும் உள்ளது. கோடையின் வெப்பத்திற்கும், கோடையில் ஏற்படும் உஷ்ண தாக்குதலுக்கு சத்துக்கள் மிகவும் அவசியம்.

நுங்கு ஆக மாறும் போது, அதில் நீர்ச்சத்து குறைந்து, கால்சியம் மற்றும் கார்போஹைட்ரேட் என்ற மாவுப் பொருளின் அளவும், அடர்த்தியும் கூடி விடுகிறது. இது உடல் உஷ்ணத்திற்குச் சரியானக் குளிர்ச்சியைத் தரக்கூடிய காம்பினேஷன்.

இள நுங்காக இருக்கும்போது, நீர்ச்சத்து அதிகமாக இருக்கும். இது வெயிற்காலங்களில் வயிற்றுக்கோளாறைப் போக்கவும் பயன்படும். அல்சர், மூலம், குடற்புண் மற்றும் குடல் தொந்தரவு உஷ்ணத்தால் உண்டாகின்றவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். நுங்கு முற்றும்போது அதாவது, கடினமாக ஆகும்போது சத்துக்கள் அப்படியே இருந்தாலும் சிறிது செரிமானம் ஆக நேரம் ஆகும். மற்றபடி இது செரிமானக் கோளாறுகளை எல்லாம் உண்டாக்கவே உண்டாக்காது.

2. மருத்துவக் குணங்கள்:

இரைப்பை, குடல், மலக்குடல், மூலம், இரத்த மூலம் சம்பந்தப்பட்ட வயிறு மற்றும் மலக்குடல் வியாதி உள்ளவர்களுக்கு, நுங்கு மிகச்சிறந்த மருத்துவப் பொருள். மிகப்பெரிய மருந்து. அதுவும் உஷ்ணத்தால் உண்டாகின்ற அனைத்துப் பிரச்னைகளுக்கும் இதில் தீர்வு உண்டு.

3. யார் சாப்பிடலாம்?

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் இதனை வயது வித்தியாசமின்றி சாப்பிடலாம். எந்த மருத்துவ முறையில் மருந்துகளைச் சாப்பிடுவராக இருந்தாலும், நுங்கை சாப்பிடலாம். பதநீரோ அல்லது நுங்கோ மருந்தை முறிக்கும் என்பது, தவறான கண்ணோட்டம்.

கோடையில் என்னென்ன உணவுகளை எப்படிச் சாப்பிடலாம்?

1. சாப்பிடக்கூடிய உணவுகள்:

நிறைய கீரைகள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை முடிந்தளவு சேர்த்துக் கொள்ளலாம். கோடையில் சைவ உணவுகளே உகந்தது. அசைவ உணவாக இருப்பின், கடல் உணவுகள் விரைவில் செரித்துவிடக்கூடிய தன்மை வாய்ந்தவை. மற்ற உணவுகளை ஒப்பிடும்போது, இந்த வகைகளைச் சாப்பிடலாம். குளிர்ச்சியான உணவுகளில் கீரைகளும், பழங்களும் முதல் இடத்தைப் பெறுகின்றன. மிகவும் இனிப்பானவற்றைக் குறைத்து சாப்பிடலாம். குறைந்த இனிப்பு உள்ளவைகளை அதிகம் சாப்பிடலாம். சர்க்கரை நோயுள்ளவர்கள் அதிக இனிப்பான உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. ஆனால் பப்பாளி, சீத்தாப்பழம், எலுமிச்சை, தர்ப்பூசணி, அத்தி ஆகியவற்றை சாப்பிடலாம். இதனால் சர்க்கரை அதிகரிக்காது.

2. தவிர்க்க வேண்டியவை:

பச்சரிசி, நிலக்கடலை, தேங்காய், சேப்பங்கிழங்கு, உருளை போன்ற கிழங்கு வகைகள், வாழைக்காய், மரவள்ளி, கேரட் மற்றும் கட்டாயம் மதுவகைகளைத் தவிர்க்க வேண்டும். இனிப்பான வெல்லம், சர்க்கரை, தேன், ஜாம், வெண்ணெய், நெய், வனஸ்பதி, கோலா, Ice Cream, Cooldrinks, Cakes, கொழுப்பு மிகுந்த இறைச்சி, முட்டையின் மஞ்சள் கரு போன்றவை உகந்ததல்ல.

3. சேர்த்துக் கொள்ள வேண்டியவை:

அகத்திக்கீரை, தண்டுக்கீரை, முருங்கை, மனத்தக்காளி, டர்னிப், நூற்கோல், முள்ளங்கி, நீர்ப்பூசணி, முட்டைக்கோஸ், வாழைத்தண்டு, பீன்ஸ், கத்தரி, வெண்டை, புடலங்காய், பீர்க்கங்காய், வெள்ளரிக்காய், தக்காளி, பாகற்காய், வெங்காயம் நிறைய சேர்க்கலாம்.

பருப்பு வகைகளில் உளுந்து, பாசிப்பருப்பு, துவரம்பருப்பு, வறுத்த கடலை, புழுங்கல் அரிசி, கோதுமை, ராகி ஆகியவற்றை நிறைய சேர்த்துக் கொள்ளலாம்.

4. அறவே தவிர்க்க வேண்டியவை: கோடையில் அதிக எண்ணெய், காரம், மசாலா, அதிகம் வறுத்தது, உப்பு, புளிப்பு, துவர்ப்பு, கொழுப்பு முதலியவற்றைத் தவிர்க்க வேண்டும். ஆவியில் வெந்த உணவுகள் உகந்தது. வறுத்த, எண்ணெயில் பொரித்த உணவுகள் ஆகாது.

கோடையில் உடைகள்:

1. ஆள் பாதி, ஆடை பாதி என்பது போல, கோடையில் அரைக்கை, காட்டன் சட்டை போட்டுக் கொள்ளலாம். காட்டன் ஆடைகளையும், உள்ளாடைகளையும் பயன்படுத்தலாம். பாலியஸ்டர், நைலான் போன்றவற்றை தவிர்த்தல் நலம்.

கடும் கோடையில் வியர்வையை உறிஞ்சக்கூடிய காட்டன் ஆடைகளே மற்ற எல்லாவற்றையும் விட, உகந்ததாகக் கருதப்படுகிறது. சூரிய ஒளி ஒவ்வாமை அதாவது அலர்ஜி உள்ளவர்கள் தேவைக்கேற்ப ஆடைகளைப் பயன்படுத்தலாம்.

2. கோடையில் குளியல்:

ஒரு நாளைக்கு காலை, மாலை அல்லது இரவு, வேலைக்கு தகுந்தாற் போல குளிக்கலாம். வியர்வை நாற்றம் போகும். ஒரு நாளைக்கு மேல் ஒரு உடையைப் பயன்படுத்தக்கூடாது. கோடையில்

உடையால் தொற்றுகள் பரவும். சொறி, சிரங்கு, அம்மை, அக்கி போன்ற தொந்தரவுகள் வரும். தனித்தனி சோப்புகள், ஷாம்புகள், சீப்புகள், துண்டுகள், கைக்குட்டைகளைப் பயன்படுத்த வேண்டும். தன் சுகாதாரம், பொது சுகாதாரம் பராமரிக்க வேண்டும். இதனால் நோய் வரும் முன்னர் காக்கவும், வந்த பின்னர் போக்கவும், பிறருக்குக் குறிப்பாகக் குழந்தைகளுக்குத் தொற்றாமலும் காக்கலாம்.

3. கோடையில் உறக்கம்:

கோடையில் உடம்பின் நீர்ச்சத்து கணிசமாகக் குறைந்துவிடுவதால், உடம்பு அடிக்கடி களைப்படையக்கூடும். இரவுகளில் ஆழ்ந்த உறக்கம் வரும். ஆனால், கடுமையானப் புழுக்கம் காரணமாகவும், வியர்வை காரணமாகவும் தூக்கம் தடைபடலாம். உறங்குகின்ற இடமே உஷ்ணமாகலாம். இதனைத் தவிர்க்க, நல்ல காற்றோட்டமுள்ள இடங்களில் உறங்க வேண்டும். இறுக்கமான உடைகளைத் தவிர்த்து, தளர்வான உடைகளைப் பயன்படுத்தலாம். கி/நீ யில் இருந்து கொண்டு அடிக்கடி வெளியே சென்று வியர்வையோடு உள்ளே நுழைபவர்களுக்குக் காற்றால் பரவக்கூடிய சுவாசத் தொற்றுகள் வரக்கூடும்.

A/c Temperature 25oநீக்குச் சமமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கும் கீழே குறைத்தால் மூக்கு, தொண்டை வறண்டு நுரையீரல் பிரச்னைகள் உருவாகும். கோடையில் உணவு, உடை, உறைவிடம் முக்கியம்.

http://www.kumudam.com/magazine/Health/200...6-05-15/pg2.php

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தம்பி உண்டியலான என்ன மருத்துவத்திற்கு வந்திட்டீர். ஆரோகரா! கோயில் உண்டியல் வருமானம் குறைஞ்சு போச்ச போலை! அது கிடக்க எனக்க கோடையிலை பிடிச்ச பானம் பியர் தான். அதுவும் இஞ்சை உள்ளுரிலை தாயரித்த ஏல் எண்டால் அது நல்லா சூட்டைக்குறைக்கும்!

அரோகரா!!!!!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவல் பகிர்விற்கு நன்றி ஜெயதேவன். :(

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அரோகரா அரோகரா என்ன அங்கிள் எல்லோரும் சேர்ந்து உங்களை இந்த நிலைக்கு ஆக்கிவிட்டார்களா

ஆனாலும் உங்களுக்கு நல்ல மூளை

நன்றி தங்கள் தகவலுக்கு மிகவும் பயனுள்ள தகவல்

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.