Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

வாஸ்தவா வாஸ்து நிலையம்


Recommended Posts

கற்பனை : முகில்

கே.ஜே. அறுபதைத் தாண்டிய பெரியவர். (எல்லாரும் தெரிஞ்சிக்கிற அளவுக்கு பெரிய ஆளெல்லாம் கிடையாது.) ரிட்டையர்ட் ஆசாமி. வீட்டுல பொழுது போகாம தினமும் ஊர் சுத்துற பார்ட்டி. இன்னிக்கு அவரோட டார்கெட் அவங்க ஏரியாவுல புதுசா மொளைச்சிருக்கிற "வாஸ்தவா வாஸ்து நிலையம்'. அந்தக் கடையை (புறம்போக்கு நிலத்துல) ஆரம்பிச்சிருக்கிற நபர் பேர் (வாஸ்துப்படி) "வாஸ்த்துச் செம்மல்' செங்கல்வராயன். இதுக்கு முன்னாடி மேஸ்திரியா பல வருச சர்வீஸ். ஆனா, நம்ம கே.ஜே. கொஞ்சம் தற்போக்கான முற்போக்குவாதி. வாஸ்து மேல எல்லாம் சாஸ்திரத்துக்கு கூட நம்பிக்கையே இல்லாத ஆளு. "என்னடா இவன், நேத்து வரை மேஸ்திரி, இன்னிக்கு வாஸ்து சாஸ்திரி. ஊரை ஏமாத்தக் கௌம்பிருக்கானா? நான் விடமாட்டேன்' -இப்படி அடிமனசுல கொழுந்துவிட்டு எரியுற வெறியோட கௌம்பினார் கே.ஜே.

(வாஸ்தவா வாஸ்து நிலையம் முன்பு சென்று நிமிர்கிறார். சுற்றிலும் கண்ணாடிக் கதவுகள். ஆனால் எதையும் திறக்க முடியவில்லை. வெளியே இருந்து சவுண்ட் விடுகிறார்.)

கே.ஜே: ஏய்ய்... என்னப்பா இது? எதுவுமே திறக்க மாட்டீங்கு. எல்லாக் கதவையும் பூட்டிட்டு உள்ள என்னய்யா வியாபாரம் பண்ணுற?

(பூட்டிய கதவுக்குள் எதுவுமே கேட்காத செங்கல்வராயன் சைகையால் யூ டேர்ன் காட்டுகிறார்.)

கே.ஜே: என்னய்யா இது? உள்ள வர்ற வழி கேட்டா, உள்ள இருந்துக்கினு டான்ஸ் ஆடிக்காட்டுற? (என்றபடி கதவைப் பிடித்து உலுக்க ஆரம்பிக்கிறார்.)

"டிரெயினெஜுக்குள் இறங்கி வரவும்' என்றொரு போர்டை கடைக்குள்ளிருந்தபடி காட்டுகிறார் செங்கல்.

கே.ஜே: ஏய் இன்னாயா நினைச்சுக்கிட்டிருக்க. உன் கடைக்கு வர்ற கஸ்டமரை இப்படித்தான் சாக்கடைக்குள்ள குதிக்கச் சொல்லுவியா?

"வாஸ்துப்படி வாசலை அப்படி வைச்சிருக்கேன்' என செங்கல் இன்னொரு போர்டைக் காட்ட, வேறு வழியில்லாமல் படு சுத்தமான அந்த வாஸ்து டிரெயினேஜுக்குள் குதிக்கிறார் கே.ஜே. நீண்ட நேரம் கழித்து வியர்க்க, விறுவிறுக்க அண்டர்கிரவுண்ட் வழியாக கடைக்குள் நுழைகிறார்.

செங்கல்: வாங்கோஜி வாங்கோ. வாஸ்துப்படி கடை வாசலை டிரெயினேஜ் டைப்ல வைச்சா வியாபாரம் ஜொலி ஜொலிக்கும்ஜி.

கே.ஜே: போயா, வாய்ல ஏதாவது வந்துறப் போவுது. வைச்சதுதான் வைச்ச. கொஞ்சம் குறைவான நீளத்துக்கு வைச்சிருக்கக் கூடாதா? வெளிய டிரெயினேஜ்ல இறங்கி உன் கடைக்குள்ள வர்றதுக்கே அரை மணி நேரம் ஆயிருக்கு. உள்ளேயே ரெண்டு கிலோ மீட்டருக்கு மேல தவழ்ந்திருக்கேன். ஏன்யா அவ்வளவு நீளத்துக்கு தோண்டி வைச்சிருக்க? போறேன் போறேன் போய்கிட்டே இருக்கு. விட்டா எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள்ள போயிருவேனோன்னு பயமாயிருச்சு. இதுல உள்ள ரெண்டு மூணு எலும்புக் கூடுங்க வேறு இருக்கு. என்னய்யா நெனைச்சுக்கிட்டிருக்க?

செங்கல்: அதை விடுங்கோஜி. வாஸ்துல இது சகஜம்ஜி. உங்களுக்கு நான் என்ன பண்ணனும்ஜி?

கே.ஜே: எனக்கு வாயுக்கோளாறு இருக்கு. வாஸ்துப்படி இன்னா பண்ணலாம்?

செங்கல்: உங்களுக்கு வாயுக்கோளாறு எங்க இருக்குஜி?

கே.ஜே: ஆங்.. பக்கத்து வீட்டுல. என்னய்யா கேள்வி கேக்குற? உடம்புலதான்யா இருக்கு.

செங்கல்: அச்சாஜி. இதுக்கு தீர்வா பிரபஞ்சங்களின் வரைபடத்தோட சாவியா பிரெஞ்சு தீர்க்கதரிசிகள் கருதி இருக்கிற "டிஸ்கான்' வாஸ்து சாஸ்திரத்தைப் பயன்படுத்தலாம்ஜி.

கே.ஜே: அப்படின்னா?

செங்கல்: அங்க பாருங்க ஜி. அது என்ன படம்?

கே.ஜே: ஒரு பாட்டி வடை சுட்டுக்கிட்டிருக்கா. பக்கத்துல காக்கா ஒண்ணு வடையை வெறிச்சுப் பாத்துக்கினு இருக்கு. அதுக்கென்ன?

செங்கல்: இந்தப் படம் சகல விதமான வாயுக்

கோளாறையும் நிறுத்திரும்ஜி. அவ்வளவு ஏன், பிராண வாயுல கோளாறு இருந்தாக்கூட நிறுத்திரும்ஜி. இதை உங்க வீட்டுல கிச்சன்ல இருக்கிற மொட்டை மாடில மாட்டி வைச்சாப் போதும்ஜி.

கே.ஜே: யோவ் கிச்சன்ல எப்படியா மொட்டை மாடி இருக்கும்?

செங்கல்: வாஸ்துப்படி இருக்கணுமே. இங்க இந்தப் படத்தைப் பாருங்கஜி.

கே.ஜே: என்னாது இது, நாலு வட்டம், உள்ள மூணு கட்டம், நடுநாயகமா ஒரு பட்டை நாமம் சாத்தியிருக்கு. இதை என்ன பண்ணனும்?

செங்கல்: இதை வீட்டுல நீங்க இருக்கிறப்ப உங்க முதுகுல ஆணி அடிச்சு மாட்டிக்கிட்டு அலைஞ்சிங்கன்னா, உங்களுக்கு லாரி ஆக்சிடெண்ட் நடக்காதுஜி.

கே.ஜே: யோவ், வீட்டுக்குள்ள ஏன்யா லாரி வருது?

செங்கல்: வந்துரக்கூடாதுல. அதான்ஜி. இங்க இந்தப் பொருளை பாருங்கஜி.

கே.ஜே: நீ கொட்டாவி விடுற மாதிரி ஒரு போட்டோ இருக்கு. அதென்னயா வாயில ஒரு பல்பை சொருகி வைச்சிருக்கிற?

செங்கல்: சுவிட்ச் போட்டா லைட் எரியும்ஜி

கே.ஜே: இது உனக்கே ரொம்ப ஓவராத் தெரியல. அது எங்களுக்குத் தெரியாதா?

செங்கல்: இந்தப் படத்தை உங்க வீட்டுல மாட்டி வைச்சீங்கன்னா ஆவித் தொல்லைகள் நீங்கும்ஜி. அவ்வளவு ஏன், இதை மாட்டுனதுக்கப்புறம் உங்களுக்கு கொட்டாவிகூட வராது. தண்ணீரைக் கொதிக்க வைச்சீங்கன்னா நீராவி கூட வராதுஜி. ஆனா ஒரு சின்ன கண்டிஷன்ஜி.

கே.ஜே: என்ன, அந்த பல்புல மண்ணெண்ணெய் ஊத்தி எரிக்கணுமா?

செங்கல்: இல்லஜி. படத்தை உங்க வீட்டுல மாட்டி வைக்கணும். ஆனா படத்துல பல்பு எரியறதுக்கான சுவிட்சை மட்டும், உங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்குற சுடுகாட்டு காம்பவுண்ட் சுவர் மேல பொருத்திக்கணும். டெய்லி நைட்டு அங்க போயி சுவிட்சை ஆன் பண்ணிக்கிட்டு வந்தீங்கன்னாப் போதும். நோ ஆவித் தொல்லைஜி!

கே.ஜே:யோவ், இது உனக்கே அநியாயமாத் தெரியல. நைட்டு நான் அங்க போயிட்டு வர்றதுக்குள்ளேயே பயத்துல ப்யூஸ் ஆயிருவேனே. அதுக்கு மேல என்னய்யா ஆவித் தொந்தரவு? என்ன விளையாடுறியா?

செங்கல்: அதுக்குத்தான் இந்த விஷ்ஷிங் தாத்தா சிலை இருக்குஜி.

கே.ஜே: என்னய்யா இது? சுமோ வீரன் கணக்கா இம்மாம் பெருசு இருக்கு. இதை என்ன பண்ணனும்?

செங்கல்: இந்தச் சிலையை உங்க பாத்ரும்ல அக்னி மூலைல வைச்சிக்கிட்டிங்கன்னா உங்க வீட்ல உள்ள எல்லோருக்கும் மன உறுதி பல மடங்கு கூடும்ஜி. பயம் எல்லாம் ஓடியேப் போயிரும்ஜி.

கே.ஜே: யோவ் உன் அழிச்சாட்டியத்துக்கு அளவே இல்லியா? குட்டி யானை சைசுல ஒரு சிலையைப் பாத்ரூமுக்குள்ள அதுவும் அக்னி மூலையாப் பார்த்து வைக்கச் சொல்லுற. எங்க வீட்டு பாத்ரூமே சில பல சென்டிமீட்டர்கள்தான் இருக்கும். அதுல இந்தச் சிலையை வைச்சா நாங்க எங்கிட்டுப் போயி குளிக்க? என்ன நக்கலா?

செங்கல்: அதுதான் வாஸ்துஜி. அதே மாதிரி நீங்க எந்தச் சூழ்நிலையிலயும் தைரியமாப் பேச ஒரு விஷயம் இருக்குஜி.

கே.ஜே: அதென்ன? அதையும் சொல்லித் தொலை.

செங்கல்:இந்தாங் க. ஸ்வக்கா தகடு.

கே.ஜே: என்னய்யா இது? பிளேடு மாதிரி ஷார்ப்பா இருக்கு.

செங்கல்: நீங்க பேசறப்போ உங்க வாயோட ஈசான மூலையில, இதைப் போட்டுக்கிட்டுப் பேசினாப் போதும். வார்த்தைகளில தைரியமும் நம்பிக்கையும் நர்த்தனமாடும்ஜி.

கே.ஜே: (வெலவெலத்துப் போய்) யோவ், படுபாவி. அப்படிச் செஞ்சா நாக்கு அறுபட்டு வெளிய தனியா வந்து விழுந்திரும்யா. நீ ஆளைக் கொன்னுடுவேடா சாமி. நான் தப்பிச்சுக்கிறேன்.

(உயிர் பிழைக்க, மீண்டும் டிரெயினேஜுக்குள் குதிக்காமல், ஆபத்துக்கு, பாவமில்லை எனக் கண்ணாடிக் கதவை உடைத்துக்கொண்டு, வெளியே விழுந்து அங்கிருந்து ஓடுகிறார் கே.ஜே.)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.